Logo

கையெழுத்து

Category: புதினம்
Published Date
Written by sura
Hits: 7052
kaiezhuthu

1

ன்டர்காம் மூலமாக வந்த கூர்மையான கோபக் குரலை யாரோ காதில் வாங்கினார்கள்.

             “யார் இந்த கே.ஆர்.கே.யின் மகள்?” -லூஸி உரத்த குரலில் கேட்ட பிறகும், பதில் கிடைக்காமல் அந்தக் கேள்வி வரிசையாக வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் மானிட்டர்களுக்கு மத்தியில் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தது.

“கே.ஆர்.கே.யின் மகளுக்குத் தொலைபேசி அழைப்பு” - லூஸி திரும்பத் திரும்ப கேட்டாள். அத்துடன் ஆர்வம் கலந்த ஒரு பரபரப்பும்... “யார் இந்தப் பெண், சினேகிதிகளே? தனக்கென்று சொந்தமாக ஒரு பெயர் இல்லாத பெண்.”

மானிட்டரின் பச்சை சதுரத்தில் நெளிந்து கொண்டிருக்கும் வெள்ளை நிறப் புழுக்களில் இருந்து கண்களை எடுத்து ராதிகா வேகமாக எழுந்தாள்.

“கே.ஆர்.கே.யின் மகள் நான்தான்” - அவள் சொன்னாள். “பி.ஆர்.ராதிகா.”

“ஓ... நீயா? - லூஸி சிரித்தாள்: “உனக்கு சொந்தமாக ஒரு பெயர் இருக்கிறதே? சரி... அது இருக்கட்டும். உன்னை சீனியர் வைஸ் பிரசிடெண்ட் பார்க்கணுமாம். உடனடியாக... சீனியர் வி.பி.பெர்சனல்...”

“எதற்கு?”

“எதற்கோ? அதெல்லாம் யாருக்குத் தெரியும்டா?” - லூஸி கொட்டாவி விட்டாள். “உடனடியாக உன்னை வரும்படி அவருடைய செக்ரட்டரி சொன்னாள்.”

லூஸியின் அடுத்த கொட்டாவி வெள்ளை நிற சதுரக் கட்டங்களின் தாளத்தில் கரைந்து போனது. கபோர்டில் மெல்லிய விரல்களின் பதிவுகள்... பச்சைப் பரப்பில் திடீரென்று முளைக்கும் சிறுசிறு வெள்ளை மொட்டுக்கள் அந்த தாளத்திற்கேற்ப புழுக்களாக மாறி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. 

இ.டி.பி. அறையின் குளிர்ச்சியை விட்டு ராதிகா வராந்தாவின் இளம் வெப்பத்திற்குள் வந்தாள்.

சீனியர் வி.பி.யின் செக்ரட்டரி திருமதி டிக்கோஸ்டா நகரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்தாள். கண்ணாடி வழியாக அவள் கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தாள்.

“கே.ஆர்.கே.யின் மகள். அப்படித்தானே?”

“பி.ஆர்.ராதிகா.”

“அதாவது - கே.ஆர்.கே.யின் மகள் இல்லையா?”

“ஆமாம்...”

“ஒரு வருடத்திற்கு முன்பு கம்பாஸனேட் மைதானத்தில்...”

“என்ன?”

“ஒரு நிமிடம் நில்லுங்க.”

டிக்கோஸ்டா இன்டர்காமின் சிவப்பு நிறக் கட்டையை அழுத்தி மெதுவான குரலில் சொன்னாள்: “அந்தப் பெண் வந்திருக்கிறாள் சார். கே.ஆர்.கே.யின் மகள். சரி... ஓ.கே.சார்.”

தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு மீண்டும் நகரத்தைப் பளபளப்பு செய்ய ஆரம்பிக்கும்போது, அவளுடைய குரல் மேலும் குளிர்ச்சியாக இருந்தது.

“போங்க...”

சற்று பயத்துடன் மெதுவாக கதவைத் திறந்து தயக்கத்துடன் பார்த்தவாறு ராதிகா உள்ளே தன் கால்களை எடுத்து வைத்தாள்.

சுழலக்கூடிய பெரிய நாற்காலியில் சீனியர் வி.பி. அமர்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் அவர் சற்று நகர்ந்து உட்கார்ந்தார்.

“உட்காரு” - வி.பி. அசைந்தபோது, ஒட்டுமொத்த நாற்காலியும் குலுங்கியது.

ராதிகா வணக்கம் செலுத்தியவாறு தள்ளி நின்றாள்.

“கே.ஆர்.கே.யின் மகள்தானே? வா... உட்காரு.”

வி.பி.யின் முகத்தில் நிறைய நெருக்கமான நட்பு வெளிப்பட்டது. எனினும் அவள் அமரவில்லை. தன்னைத்தானே ஒதுக்கிக்கொண்டு, தேவையற்ற ஒரு இடத்தை அடைந்துவிட்ட பதைபதைப்புடன் அவள் நின்றிருந்தாள்.

“கே.ஆர்.கேக்கு எப்படி இருக்கிறது?” - வி.பி. விசாரித்தார்.

“அப்படித்தான் இருக்கிறது சார்.”

“நடக்க முடிகிறதா? அதாவது மற்றவர்களின் உதவி இல்லாமல்.”

“கைத்தடியைப் பிடித்துக்கொண்டு நடப்பார். வீட்டிலும் வாசலிலும்... இருந்தாலும் சிரமம்தான்.”

வி.பி.யின் முகத்தில் மிகப்பெரிய கவலை படர்ந்துவிட்டிருந்தது. அது அப்படியே பெருகிப் பெருகி அந்த வட்டமான முகமெங்கும் வீக்கம் தெரியும்படி செய்தது. முகம் சிவப்பானது.

“ச்சோ... என்ன ஒரு மோசமான சம்பவம் அது” - அவருடைய கண்கள் சிறிதாயின. குரல் வறண்டது. “என்னால் அதை இப்போதுகூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. மழை பெய்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவு நேரத்தில் வரவேற்பறையின் தொலைபேசி மணி அடிச்சப்போ, நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். கே.ஆர்.கே.விற்கு... அதுவும் நம் எல்லோருக்கும் எல்லாமுமான கே.ஆர்.கே.விற்கு அப்படியொன்று... அதுவும் இந்தக் கம்பெனிக்கு உள்ளேயே... கஷ்டகாலம் என்று சொன்னால் கே.ஆர்.கே. அதை நம்பவே மாட்டாரே!”

ராதிகா எதுவும் சொல்லவில்லை. அவளுடைய கண்களுக்கு முன்னால் இருந்த பச்சைப்புல் பரப்பில் இப்போது ஓராயிரம் வெள்ளைநிறப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. கல்லூரியில் படிக்கும்போது அணிந்த கண்ணாடியை சமீபத்தில் மாற்ற வேண்டிய சூழ்நிலை அவளுக்கு உண்டானது. ஒருவேளை இனி மேலும்கூட கண்ணாடியின் அடர்த்தி அதிகமாகலாம். ஏழெட்டு மணி நேரங்கள் தொடர்ந்து பச்சைப் புல்வெளியில் நகர்ந்து கொண்டிருந்த வெள்ளைப் பொட்டுக்களையே வெறித்துப் பார்த்தவாறு அவள் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, கண்கள் வலிக்க ஆரம்பித்தன. தாமாகவே மூடிக்கொண்ட கண்களுக்குள் ஓராயிரம் சிறிய சிறிய பொட்டுக்கள் ஒன்று சேர்ந்து கோடுகளாகவும் அடையாளங்களாகவும் தெரிந்தன. எழுத்துக்களாக ஆயின. எண்களாக ஆயின.

வி.பி. இதற்கிடையில் எழுந்து கையைப் பின்னால் கட்டிக்கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நடக்க ஆரம்பித்தார். கடந்த காலத்தின் பாசிகளும் காளான்களும் நிறைந்த அகலம் குறைவான பாதைகளில் அவர் நடந்து கொண்டிருந்தார். அத்துடன் அவருடைய குரலுக்கு இனம்புரியாத மென்மைத் தனமும் ஆழமும் வந்து சேர்ந்தன.

கம்பெனியின் ஆரம்பத்தைப் பற்றி, முதலில் கைகொடுத்து வளர்த்த கோயம்புத்தூரைச் சேர்ந்த செட்டியார்களைப் பற்றி அவர் சொன்னார். “அவர்களுடைய காலத்தில் கம்பெனி நல்ல வளர்ச்சியில் இருந்தது. குறிப்பாக தியாகராஜ செட்டியார் தலைமை ஏற்றிருந்த காலத்தில், பிறகு குடும்பத்தில் உண்டான பிரச்சினைகளைத் தொடர்ந்து குரூப் நிறுவனங்களை கணக்குப் போட்டு நிறுத்த பாகம் பிரித்தபோது, நம்முடைய கம்பெனியில் இருப்பவர்களிலேயே மிகவும் ஊதாரித்தனமான குணத்தைக் கொண்ட இளைய மகனுக்குக் கிடைத்தது. அவரோ இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்ததுகூட இல்லை. குதிரைப் பந்தயம்... சில வேளைகளில் வெளிநாடுகளில் நடக்கும் காசினோக்கள்... அவருடைய ஈடுபாடு முழுவதும் அவற்றில்தான் இருந்தது. இறுதியில் எல்லாம் தாறுமாறாகி, பூட்ட வேண்டிய சூழ்நிலை உண்டானபோது, ஒரு கட்டளை என்பதைப்போல வடக்கிலிருந்து ஒரு மார்வாடி குரூப் இங்கே வந்தார்கள். மாணிக்சந்த் குப்தா குரூப். அவர்களுடைய பார்வை தெற்கு திசை நோக்கித் திரும்பியது. நம்முடைய அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டால் போதும்.


இதைப்போன்ற ஒரு வீழ்ச்சியடைந்த கம்பெனியில் ஒரு குரூப் சிறப்பாக எதையாவது அப்போது பார்த்திருக்க வேண்டும். அந்த வகையில் வியாபாரம் நடந்தது. கே.ஆர்.கே.விற்கு எல்லா விஷயங்களும் தெரியும். மாணிக்சந்த் குப்தாவின் குடும்பத்திற்கு தொழிலாளர்களின் ஆதரவைப் பற்றி வாக்குறுதி அளித்தது கே.ஆர்.கே.தானே? அத்துடன் சம்பளத்தை உறுதிப்படுத்துவதற்கும் செட்டில்மென்டை நீடிக்கச் செய்வதற்கும் சம்மதம் தந்தவர் அவர்தானே? இப்போது எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது அது நடக்காமல் இருந்திருந்தால் எத்தனையோ குடும்பங்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கும். குப்தாஜி நினைத்திருந்தால் குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு நபரை வேலையை விட்டுப் போகச் செய்திருக்கலாம். அன்றைய கணக்குப்படி நூற்றெண்பது பேர்களையாவது பணியை விட்டு வெளியேற்றியிருக்க முடியும். அதாவது நூற்று எண்பது குடும்பங்கள். அப்போதைய சூழ்நிலையில் அவர்கள் என்ன சொன்னாலும் சம்மதிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்த அளவிற்கு கம்பெனியின் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை இறுகப் பிடித்து மீண்டும் இரண்டு கால்களில் நிற்க வைக்க வேண்டுமென்றால், அவர்கள் கூறிய இடத்தில் கையெழுத்துப் போட்டே ஆகவேண்டும். எனினும் அவர்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை. காரணம்- கே.ஆர்.கே.யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். கம்பெனியின் முதல் குழுவில் கே.ஆர்.கே. ஆப்ரேட்டராக இருந்தவர். இங்குள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் எங்களைவிட கே.ஆர்.கே.விற்கு அதிகமாகத் தெரியும். இல்லாவிட்டாலும், கே.ஆர்.கே. எந்த சமயத்திலும் ஒரு முட்டாளாக இருந்தது இல்லையே.”

வி.பி. சற்று நேரம் தன்னுடைய பேச்சை நிறுத்தினார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து, என்னவோ நினைத்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

“நான் பழைய வரலாற்றை விளக்கிக் கூறி உன்னை சோர்வடையச் செய்துவிட்டேன்... அப்படித்தானே? ஆனால் கே.ஆர்.கே.விற்கு இந்த கம்பெனியுடன் இருக்கக்கூடிய ஆத்மார்த்தமான உறவைக் குறிப்பிடுவதற்காகத்தான் நான் அதை சொன்னேன். உங்களைப் போன்ற இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அது புரியாது. நம்முடைய  ஊரில் இப்போது நல்ல நிலையில் நடந்து கொண்டிருக்கும் பெரிய தொழிற்சாலைகள் எத்தனை இருக்கின்றன? விரல்களை மடக்கி எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. இருப்பவைகூட எவ்வளவு காலம் ஒழுங்காக செயல்படும் என்று யாருக்குத் தெரியும்? எல்லோரும் சேர்ந்து ஒரு நிலையில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்களே! அதாவது- தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், அரசியல்வாதிகளும், சங்கங்களின் தலைவர்களும், அதிகாரிகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டு செயல்படுகிறார்கள். இனிமேல் வடக்கிலிருந்து புதிதாக யாரும் இங்கு வருவார்கள் என்று ஆசைப்பட வேண்டாம். இருப்பவர்களே போதும். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், அவர்கள் செல்வதற்கு வேறு அருமையான இடங்கள் மற்ற மாநிலங்களில் இருக்கின்றனவே! இப்போதே நம்முடைய தேசிய நெடுஞ்சாலை வழியாக வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் போது, புகை வெளியே வரும்... அல்லது சத்தம் உண்டாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனைத் தொழிற்சாலைக் கட்டிடங்களை நம்மால் பார்க்க முடிகிறது? எல்லாம் குளங்களாக ஆகிவிட்டனவே!”

வி.பி. சற்று நிறுத்திவிட்டு, சிகரெட் துண்டை ஆஸ்ட்ரேயில் போட்டார்.

“ஓ... ஐயாம் ஸாரி...”

அவர் இன்டர்காமின் பொத்தானை அழுத்தினார்.

“மாக்கீ, கொஞ்சம் தேநீர் ப்ளீஸ்... பிறகு சிறிது நேரத்திற்கு என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். நாட் ஈவன் டெலிஃபோன் கால்ஸ்.”

“நீ இப்படி நின்றுகொண்டே இருப்பது மிகவும் கஷ்டமானது. அதேபோலத்தான் என்னுடைய இந்த நடையும்” - வி.பி. உரத்த குரலில் சிரித்தார். “அதனால்... இங்கு வந்து இந்த சோஃபாவில் உட்கார்.”

வி.பி. அறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த பெரிய சோஃபாவில் போய் உட்கார்ந்தார்.

“இங்கே வந்து உட்கார். பயப்பட வேண்டாம். கே.ஆர்.கே. எத்தனையோ தடவை உட்கார்ந்திருந்த சோஃபா. கே.ஆர்.கே.யின் அந்த அரைக் கை காதி சட்டையின் மணம் இப்போதுகூட இதில் இருக்கும்.”

இந்த முறை வி.பி.யின் சிரிப்பு சற்று அதிக நேரம் நீண்டு ஒலித்தது.

சோஃபாவின் ஒரு முனையில் சுருக்கிக்கொண்டு அமர்ந்திருந்த போது ராதிகாவிற்கு எதுவுமே புரியவில்லை. ‘எதற்காக இவர் இந்தப் பழைய வரலாற்றை என்னிடம் கூற வேண்டும்? எனக்கு இதில் என்ன ஆர்வம் இருக்கிறது?’ - அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

இதற்கிடையில் ட்ரேயில் தேநீர் வந்தது. வி.பி. தானே தேநீரைக் கோப்பையில் ஊற்றி, பாலை ஊற்ற ஆரம்பித்தபோது ராதிகா தயக்கத்துடன் முன்னால் வந்து கையை நீட்டினாள்.

“சார்... நான் செய்யிறேன்.”

“வேண்டாம். வேண்டாம். இட் ஈஸ் ஓகே. ஐ ஆம் தி ஹோஸ்ட். பிரச்சினை எதுவும் இல்லை. உனக்கு சர்க்கரை எத்தனைக் கட்டிகள் வேண்டும்? டூ ஆர் த்ரீ? அப்படியே இல்லாவிட்டாலும் எதற்கு கேட்க வேண்டும்? அப்படித்தானே? மூன்று கட்டிகள்... சரி... உன் பெயர் என்ன என்று சொன்னாய்?”

“பி.ஆர்.ராதிகா.”

“சரிதான். நான் அதை மறந்துட்டேன். அன்று வேலைக்கான பேப்பர்கள் வந்தபோது, கம்பாஷனேட் க்ரவுண்டில் நான் அதைப் பார்த்தேன். சரி... அது இருக்கட்டும். அதை இனி எதற்கு ஞாபகப்படுத்த வேண்டும்?”

தேநீர்க் கோப்பையை நகர்த்தி அருகில் வைத்துவிட்டு, அவர் மீண்டும் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தார்.

“எனக்குத் தெரியும். நான் இவற்றையெல்லாம் எதற்கு ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன் என்று நீ ஆச்சரியப்படலாம். சொல்கிறேன். அதில் ஒரு விஷயம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நீளமான முன்னுரை இல்லாமல் செய்யவும் முடியாது.

சரி... அது இருக்கட்டும். நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? குப்தாஜி இந்தக் கம்பெனிக்குள் நுழைந்த விஷயம்... இப்போது எத்தனை வருடங்கள் கடந்து விட்டன! பதினைந்து வருடங்களுக்கும் அதிகமாக... இதற்கிடையில் பல உயர்வுகளையும் தாழ்வுகளையும் நாங்கள் பார்த்துவிட்டோம். கம்பெனி திரும்பவும் மோசமில்லாத லாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்தது. ஆறேழு வருடங்களுக்குள் நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றில் இருந்த கடன்களுக்கான வட்டிகளை அடைத்தன. இரண்டு சம்பள பட்டுவாடாக்களும் முடிந்தன. பெரிய அளவில் மோசம் என்று சொல்ல முடியாத அளவில் சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்குக் கிடைத்தது. இன்டன்ஸிவ் கேரில் இறுதி சுவாசத்தை விட்டுக்கொண்டு படுத்திருந்த ஒரு நிறுவனத்தை இப்போது ஒரு நூறு மீட்டர் தூரத்திற்காவது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்காமல் ஓடலாம் என்ற சூழ்நிலைக்குக் கொண்டு வந்தது எப்படி? அதுவும் மிகப்பெரிய ஒரு வரலாறுதான்.


முதலாவது- குப்தா குரூப்பின் வியாபார பாரம்பரியமும், பலமான பின்னணியும். குரூப் நிறுவனங்களின் பொதுவான வியாபார ஈடுபாடுகளுடன் இதை ஒன்று சேர்த்துக்கொண்டு போகக்கூடிய சாமர்த்தியம்... பிறகு எல்லாவற்றுக்கும் மேலாக கே.ஆர்.கே.யின் தலைமை கொடுத்த ஒத்துழைப்பின் செயல் அணுகுமுறை. அதாவது கே.ஆர்.கே.யின் நடைமுறை அறிவு எங்களுக்குள் வேறுபாடுகள் பல தடவை உண்டாகியிருக்கின்றன. ஒன்றும் இரண்டும் கூறிக்கொண்டு இந்த விஷயத்தில் கே.ஆர்.கே.யை குறை சொல்லி பிரயோஜனமில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். எங்களுடன் நின்றிருக்கும் இளைஞர்கள் ரத்தம் கொதித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஆகாயம்தான் எல்லை. எந்த விஷயமாக இருந்தாலும், பலன் உடனடியாகக் கிடைக்க வேண்டும். அதற்காக காத்திருக்கக்கூடிய பொறுமை கிடையாது. பிறகு... நம் மலையாளிகளுக்கென்றே இருக்கக்கூடிய பொதுவான குணமான சினிஸிஸம். என்னைக்  கடந்த பிறகுதான் யாரும் இருக்கிறார்கள் என்ற பொதுவான எண்ணம். சீனியர் குப்தாஜி கூறக்கூடிய ஒரு தமாஷ் உண்டு. ஒரு கம்பெனியில் எம்.டி.க்காக ஒரு மெர்ஸிடஸ் பென்ஸ் கார் வாங்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள். நம்முடைய தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்- ‘ஓ... என்னுடைய ரத்தமும் வியர்வையும் அதோ போய்க் கொண்டிருக்கிறது’ என்று. அதனால் முதலில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்திலேயே அந்த காரைக் கல்லை விட்டு எறிந்து உடைத்தால் மட்டுமே அவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். அதற்கு நேர்மாறாக, தமிழ்நாடாக இருந்தால், அங்குள்ள தொழிலாளர்களுக்கு அது பெரிய பெருமை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் கம்பெனியைச் சேர்ந்த நண்பர்களிடம் அவன் கர்வத்துடன் கூறுவான்- ‘எங்களுடைய முதலாளி லேட்டஸ்ட் பென்ஸ் வாங்கியிருக்கிறார்!’ என்று. ஒரு வகையில் பார்க்கப் போனால் முதலாளித்துவம் உண்டாக்கும் மன ரீதியான அடிமைத்தனம்... அப்படித்தானே?”

“சார்...” - ராதிகா மன வேதனையுடன் தாடையைச் சொறிந்தாள்- “நான்... எனக்கு... எனக்கு இங்கு...”

“டோன்ட் டெல் மீ தட்” - வி.பி.குலுங்கிச் சிரித்தார். சாந்தமான முகமும் இரட்டை நாடியும் சிவந்தன.

“அது இருக்கட்டும். என் முன்னுரை மிகவும் அதிகமாக நீண்டுவிட்டது. அப்படித்தானே? அது அவசியத் தேவை. உங்களைப் போன்றவர்களுக்கு அது கட்டாயம் தெரிந்தே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில், இப்படிப்பட்ட வரலாறு அதன் இடுப்பு எலும்புகள் என்று சொல்லலாம். நம் யாருடைய கையிலும் மந்திரக் கோல்கள் எதுவும் இல்லையே! உயர்வும் தாழ்வும் ஒரு வர்த்தகத்தில் சாதாரணமாக இருக்கக் கூடியவை. இடையில் ஒரு நிமிட நேரமாவது உட்கார்ந்து திரும்பிப் பார்த்து கணக்குப் போட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. சரி... அது இருக்கட்டும். நான் நீட்டி இழுக்கவில்லை. உனக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. நம்முடைய கம்பெனியின் இப்போதைய நிலைமை கொஞ்சம் மோசம்தான். வர்த்தக உலகில் பொதுவாகவே இருக்கக்கூடிய ரிசஷன் மட்டுமல்ல காரணம். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து வைத்த விரிவாக்கத்திற்காக சற்று அதிகமான கடனும் வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மார்க்கெட் கொஞ்சம் ‘டல்’ ஆகியிருக்கிறது. போதாதற்கு வடக்கில் இருக்கும் நம்முடைய ஒன்றிரண்டு முக்கியமான வாடிக்கையாளர்கள் ஏதோ பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பத்து இருபது வருடங்களாக நம்முடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பவர்கள். அவர்கள் இப்போது ஆர்டர்கள் தருவதில்லை. அது மட்டுமல்ல; நிறைய பணம் வரவேண்டியதிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் இந்த தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட விரிவாக்கத்தைச் செயல்படுத்துவதுகூட சந்தேகத்திற்கு இடமாகி இருக்கிறது. இவ்வளவு பணத்தையும் உள்ளே போட்டு துணிச்சலாகக் கால் வைத்துவிட்டு, திரும்பி செல்வது என்பது முடியாத விஷயமாயிற்றே! வட்டி அதிகமாகி, அதிகமாகி, கடன் தொகைகள் மிகவும் கூடியிருக்கின்றன. இந்த தடவை வந்திருக்கும் பேலன்ஸ் ஷீட் நஷ்டத்தில் முடிவதற்கான சாத்தியம் இருக்கிறது. விஷயங்கள் இப்படிப் போய்க் கொண்டிருக்க, அடுத்த சம்பள பட்டுவாடாவைப் பற்றிய விஷயம் மிகப்பெரிய சிக்கலுக்குரிய ஒன்றாக ஆகிக் கொண்டிருக்கிறது.”

வி.பி. தன்னுடைய பேச்சை சற்று நிறுத்திவிட்டு, எழுந்து சென்று மேஜை இழுப்பைத் திறந்து ஒரு சிவப்பு நிற ஃபைலை எடுத்துக் கொண்டு வந்தார்.

“என்னைப் பொறுத்தவரையில் இது கம்பெனி தொடர்ந்து இருப்பது பற்றிய பிரச்சினை. இழப்புகள் வழியாக மட்டுமே நாம் இந்த இக்கட்டான நிலையைக் கடந்து செல்ல முடியும். நான் சொல்லாமலே கே.ஆர்.கே.விற்கு விஷயங்களின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகச் சொன்னால், இப்போதைய நிலைமையில் இந்தக் கம்பெனியை நடத்திக் கொண்டு போவது என்பது, முக்கியமாக தொழிலாளர்களின் தேவையாக மட்டுமே இருக்கிறது. ஒரு மார்வாடி தொழிலதிபரைப் பொறுத்தவரையில் தன்னுடைய முதலீட்டை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் திரும்பி எடுக்க வேண்டியது எப்படி என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் அதை தேவையான அளவிற்கு செய்தும் விட்டிருக்கிறார். இப்போது இந்தக் கம்பெனி யாருக்கு வேண்டும்? அப்படித்தானே? கடன் தந்த நிதி நிறுனங்களுக்கும், வேறு வழியில்லாத தொழிலாளர்களுக்கும், பிறகு... முகம் இல்லாத சில முதலீட்டாளர்களுக்கும் மட்டுமே அது வேண்டும். இதை சிறிது காலத்திற்குப் பூட்டினால் இன்றைய நிலைமையில் குப்தாவின் குடும்பத்திற்கு ஒரு கேடும் வரப்போவதில்லை என்பதுதான் உண்மை. அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதுதான் விஷயமே.”

“சார்... எனக்கு அதில்... என்னிடம் எதற்கு அதையெல்லாம்...”

ராதிகா அப்போதும் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“ஆமாம்... ஆமாம்... நான் விஷயத்திற்குள் வருகிறேன் பெண்ணே” - வி.பி.யின் முகத்தில் பழைய சிரிப்பு இல்லை. முகம் மேலும் வீங்கிப் போய் சிவந்து காணப்பட்டது.

“இந்த விஷயங்கள் அனைத்தும் கே.ஆர்.கே.யின் சங்கத்திற்குத் தெரியாதவை அல்ல. ஐந்து யூனியன்களில் அவர்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது என்ற உண்மை உனக்குத் தெரியும் அல்லவா? ஆனால், என்னத்தைச் சொல்றது? தலையில் தேவையான அளவிற்கு பக்குவமோ அறிவுக் கூர்மையோ இல்லாத சில இளைஞர்கள்... அவர்களுக்குக் கேட்பதற்கு சந்தோஷத்தைத் தரக்கூடிய சில கோஷங்களில் அதிக ஆர்வம் இருக்கும். கே.ஆர்.கே.யின் அந்த நடைமுறை அறிவில் நூற்றில் ஒரு பகுதிகூட அவர்களிடம் இல்லை. வருவது, வராதது எதைப் பற்றிய அறிவும் இல்லை. விஷயம் முடிந்ததா? முன்பிருந்த எல்லா செட்டில்மென்டுகளையும் அதைப்போன்ற மற்ற விஷயங்களையும் மிகவும் திறமையாக, புத்திசாலித்தனமாக கே.ஆர்.கே. கையாள்வதை நான் ஆச்சரியப்பட்டுப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன்.


கல்லூரியில் கால் வைக்காத அவர் எங்களுடைய பெரிய சட்டம் படித்தவர்களைக்கூட தலைக்குனிய வைக்கச் செய்வதைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. உண்மையாக சொல்லப் போனால், அவரிடமிருந்து எத்தனையோ விஷயங்களை என்னால் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆரவாரமில்லை, கொண்டாட்டமில்லை, விரட்டல் இல்லை, மோதல் இல்லை. ஆனால், எப்போதும் தான் நினைத்திருந்த விஷயங்களைத்தான் கே.ஆர்.கே. செய்து முடிப்பார். ஒரு சதுரங்கம் விளையாடுபவனின் திறமைக்கு நிகரான காய் நகர்த்தல்கள். ஆங்காங்கே வேறொரு நபரை வைத்துக் காரியங்களை செய்பவர் அல்ல  நம்முடைய சீனியர் குப்தாஜி. அவருடைய பல கம்பெனிகளிலும் எத்தனையோ பெரிய பெரிய ஆட்களையும் அவர் கடந்து வந்தவர்தானே! ஆனால் கே.ஆர்.கே.யை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது என்று அவரே கூறுவார். தனக்குத் தேவையானதை அவர் தந்திரமாக எப்போதும் பெற்று விடுவார்.”

வி.பி. எழுந்து கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அறைக்குள் மீண்டும் சுற்றி நடக்க ஆரம்பித்தார். அவர் தனக்குள் என்னவோ தீவிரமாக கணக்குப் போடுவதைப்போல தோன்றியது. திரும்பி வந்து சோஃபாவிற்குப் பின்னால் கையை ஊன்றிக் கொண்டு உரத்த குரலில் சொன்னார்:

“அதனால்... அதனால்... நான் பல கோணங்களிலும் சிந்தித்தேன். விவாதங்கள் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பையன்கள் போராடுவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் என்னாலேயே புரிந்து கொள்ள முடியாத சில காய் நகர்த்தல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் இப்போதைய மோசமான நிலைமையில் இருந்து கம்பெனியைக் கரையேற்ற எனக்கு ஒரு வழிதான் தெரிகிறது. கே.ஆர்.கே.யின் கையெழுத்து... விலை கண்டுபிடிக்க முடியாத ஒரு கையெழுத்து... அதுதான் இறுதி முடிவு எடுக்கக்கூடிய கை. ஒப்புக் கொண்டால் ஒப்புக் கொள்ளும். இல்லாவிட்டால்... பிறகு... அரசியல்வாதிகள் பொதுவாக கூறுவதைப்போல குருக்ஷேத்திரத்தில் சந்திக்க வேண்டியதுதான்...”

ராதிகாவின் முகம் ஒரு மாதிரி ஆகியது.

“சார்... எனக்கு இது எதுவும் புரியவில்லை. எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது.”

“நான் மிகவும் சுருக்கமாகக் கூறுகிறேன். முன்பு யூனியன் என்று சொன்னால், அது கே.ஆர்.கே.தான். ஒரு ஆளிடம் மட்டும் பேசினால் போதும். இப்போது இங்கு வாளெடுத்தவர்கள் எல்லோரும் போர்வீரர்கள்தான். அவர்களுடன் எங்களால் முடிந்த அளவிற்குப் பேசிப் பார்த்தோம். சிறிதுகூட அவர்கள் நெருங்கி வரவில்லை. அவர்களுடைய கணக்கு கூட்டல் என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அணிகளை எடுத்துக் கொண்டால் விஷயங்களைப் பற்றிய உண்மையான நிலைமை சிறிதுகூட தெரியவில்லை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். சொல்லப்போனால் கே.ஆர்.கே. இல்லாமல் நடக்கும் முதல் செட்டில்மென்ட் இதுதான். குட்டித் தலைவர்கள் தங்களுடைய மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக முயற்சிக்கலாம். ஆனால், இந்தப் பிடிவாதம் தொடர்ந்து கொண்டிருந்தால், குப்தாஜி என்ன முடிவு எடுப்பார் என்ற விஷயத்தில் எனக்கு பயம் இருக்கத்தான் செய்கிறது. விஷயங்களை நாமே அந்த நிலைமையில் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமா என்பதுதான் பிரச்சினையே. என்னுடைய விஷயம் இருக்கட்டும். இன்னும் ஐந்தோ ஆறோ வருடங்கள் இருக்கப் போகிறேன். அப்படியே இல்லையென்றாலும் தேவைப்பட்டால் வேறு எங்காவது வேலை கிடைப்பதிலும் பிரச்சினை இருக்காது. ஆனால் ஆயிரத்து நூறு தொழிலாளர்களின் பிரச்சினை- உன்னையும் சேர்த்து... அதைக் கொஞ்சம் நினைத்துப் பார்...”

“சார், இந்த விஷயத்தைப் பற்றி அப்பாவிடம் நீங்கள் பேசலையா?”

“இரண்டு வாரங்களுக்கு முன்பு பேசினேன். மிகவும் சுருக்கமாக... தொலைபேசியில். ஆனால், என்ன காரணத்தாலோ கே.ஆர்.கே. நான் பேசிய எதையும் கேட்கக்கூடிய மனநிலையில் இல்லை என்பது மாதிரி தோன்றியது. ஒரு ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. நான் இப்போது யூனியனில் இல்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டு, தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டார். அப்படியே இல்லையென்றாலும், இவை அனைத்தும் நேரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள். ஆனால் நான் அங்கு வந்தால் அது தெரிந்து விடும். அது மேலும் பிரச்சினையை உண்டாக்கிவிடும். கே.ஆர்.கே.விற்கு அது பாதகமாகவும் ஆகிவிடும்.”

“அப்படியென்றால்... சார், நீங்க சொன்ன கையெழுத்து விஷயம்...”

“ஆமாம்... மிகவும் தெளிவாக சிந்திக்கும் திறனைக் கொண்ட, எதிர்காலத்தைக் கூர்ந்து பார்க்கக்கூடிய தொழிலாளர்களுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்... ஆரம்பத்திலிருந்தே இந்த கம்பெனியுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு மனிதர் என்ற நிலையில் கே.ஆர்.கே.யின் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்... இந்த போக்கு சரிதானா? இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை அடைத்து மூடுவது என்பது மிகவும் சாதாரணமாக நடக்கக் கூடியதுதான். இப்படிப்பட்ட ஒன்றை உண்டாக்க நாம் எந்த அளவிற்குப் பாடுபட்டிருக்கிறோம்! நெருப்புப் பொறி பறக்கப் பேசும் இளைஞர்கள் பரப்பிவிட்டிருக்கும் தகவல்களுக்கு அப்பால், உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை சாதாரண தொழிலாளர்களுக்கு இல்லையா? அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியில், விவேகத்துடன் விஷயங்களைக் கூறிப் புரிய வைப்பதற்கு ஒரு மனிதரால் மட்டுமே முடியும். கே.ஆர்.கே.யால் மட்டுமே...”

வி.பி. சற்று நிறுத்திவிட்டு மேஜைமீது மூடி வைக்கப்பட்டிருந்த குவளையிலிருந்து இரண்டு மடக்கு நீரைக் குடித்தார்.

“அப்படிப்பட்ட ஒரு திறந்த கடிதத்திற்கான ட்ராஃப்ட் நான் தயார் பண்ணி வைத்திருக்கிறேன். அது வெறுமனே ஒரு ட்ராஃப்ட் அவ்வளவுதான். கே.ஆர்.கே.விற்கு மொழியைக் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லையே! சில முக்கியமான குறிப்புகளைச் சுட்டிக் காட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு ட்ராஃப்ட் கே.ஆர்.கே. தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு கையெழுத்து... அது வேண்டும். அந்தக் குரலுக்கு மட்டுமே இங்குள்ள தொழிலாளர்களின் மனதிற்குள் இறங்கிச் செல்ல முடியும்.”

தொலைபேசி ஒலித்தது.

வி.பி. கேட்டார்:

“என்ன மாக்கீ, முக்கியமான விஷயமா? யார் கூப்பிடுறாங்க? பத்து நிமிடங்கள் கழித்து நான் பேசுறேன் என்று சொல்லு. பரோடாவில் அவர்களின் தொலைபேசி எண்ணைச் சோதித்துப் பார்.”

வி.பி. மீண்டும் சோஃபாவிற்கு வந்தார். அவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்.

“இனி சற்று ரகசியமான விஷயம். அதுவும் எனக்கும் கே.ஆர்.கே.விற்கும் இடையில் மட்டுமே இருப்பது... வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது. இங்கு எவ்வளவோ வதந்திகள் காற்றில் பரவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று இது. குப்தா குரூப் குஜராத்தில் தங்களுடைய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தப் பார்க்கிறது. கர்நாடகத்திலும் அவர்களுக்கு சிறிய அளவில் ஒரு கண் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னால் அவர்களிடமிருந்து கருத்து வேறுபாடு உண்டாகி பிரிந்த ஒரு தூரத்து உறவினருக்கு இந்த கம்பெனி மீது ஈடுபாடு இருக்கிறதாம்.


ஒருவேளை, நிலைமைகள் ஒத்து வந்தால் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் இந்தக் கம்பெனியை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவர்களுக்கு விற்பனை செய்தாகிவிட்டது என்ற நிலையும் உண்டாகும். தொழில் விவாத சட்டத்தின் வகுப்பின்படி அது சாத்தியமான ஒன்று என்பதம் தெரிந்து விட்டது. நமக்கு முன்னாலேயே சில உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி ஒரு விற்பனை நடைபெற்றால், இப்போதைய தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் புதிய நிர்வாகத்திற்கு இல்லை. மேனேஜ்மென்டின் உறுப்பினர் என்ற நிலையில் நான் இதைக் கூறக்கூடாது. எல்லாம் கேள்விப்பட்டவைதான். ஆனால், அதைக் கூறாமல் என்னால் இருக்க முடியாதே!”

வி.பி. ஒரு கவரை நீட்டினார். “இதில் அந்தக் கடிதம் இருக்கிறது. இங்கு நேரம் என்பது மிகப்பெரிய ஒரு பிரச்சினை. உரிய நேரத்தில் எதையாவது செய்யாவிட்டால், பிறகு காரியங்கள் கைப்பிடியிலிருந்து போய்விட்டன என்றாகிவிடும்.”

ராதிகா எழுந்து, கவரை வாங்கிக் கொண்டு வணங்கினாள். “நான் கொடுத்து விடுகிறேன் சார். அப்பா என்ன சொல்வார் என்று எனக்குத் தெரியாது.”

வி.பி. மீண்டும் தன்னுடைய இருக்கைக்குத் திரும்பி வந்தார்.

“சரி... கொஞ்சம் முயற்சி செய்து பார் பெண்ணே. இதற்கிடையில் உங்களுடைய தொலைபேசியை சரண்டர் செய்யாமல் இருந்திருந்தால், நான் இன்னொரு முறை கே.ஆர்.கே.யுடன் பேசியிருப்பேன். எது எப்படியோ... இது உங்களுடைய விஷயமும்கூட என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கே.ஆர்.கே.விற்கு தர்மசங்கடமாக இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தேவைப்படுபவனுக்கு சிந்திக்கத் தெரியலையே! அதனால் அப்பாவிடம் விஷயத்தை விளக்கிச் சொல்லணும்.”

ராதிகா தலையை ஆட்டினாள். மெதுவாக சிரிக்கவும் செய்தாள்.

வணங்கிவிட்டு மெதுவாக வெளியேறி, கதவை அடைத்தாள்.

2

சாய்வு நாற்காலியில் அமர்ந்து தளர்ந்து போன இடதுகாலைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார் கே.ஆர்.கே.

அவருடைய முகத்தில் இருந்த அந்த இறுக்கம் சற்று மறைவதற்காகக் காத்திருந்தாள் ராதிகா.

கே.ஆர்.கே.யின் குரல் உயர்ந்தது.

“அந்த ஆள் இப்படிப் பழைய புராணத்தைப் பாட ஆரம்பித்தவுடன், நீ அதிலிருந்து விலகிப் போயிருக்க வேண்டாமா? தேவையில்லாத விஷயங்களில் நீ ஏன் தலையை நுழைக்கிறாய்?”

“அது எப்படி அப்பா? வி.பி. அழைத்தால் என்னால் போகாமல் இருக்க முடியுமா?”

“சரி... இருக்கட்டும். அந்தக் கடிதத்தை அங்கே வை. நான் அதைப் பார்க்கவே விரும்பவில்லை. அதில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பது வாசிக்காமலே எனக்கு நன்றாகத் தெரியும். கோவிந்தன் குட்டியின் ஆங்கிலத்தின் கூர்மை ஒருவேளை அந்த மலையாள வரிகளில் இல்லாமல் இருக்கலாம். எனினும் அவருடைய மனதின் போக்கு எந்த வழியில் இருக்கும் என்பதைக் கற்பனை பண்ணிவிட முடியும். திறமைசாலி- மிகவும் திறமைசாலி. என்மூலம் ஒரு வேண்டுகோளை வெளியே வரும்படி செய்து, தொழிலாளர்களைப் பிரிவுபடுத்தி ஒரு விளையாட்டு விளையாடுவது... நான் இதில் கையெழுத்துப் போடுவேன் என்று அந்த மடையன் நினைக்கிறானா? அந்த அளவிற்கு நான் தளர்ந்து போய்விட்டேனா? என்னுடைய ஒரு காலுக்கு மட்டும்தானே தளர்ச்சி உண்டாகியிருக்கிறது? என்னுடைய குணத்தைப் பற்றி வேறு யாரையும்விட கோவிந்தன் குட்டிக்கு நன்றாகத் தெரியும். எத்தனையோ வருடங்களாக எங்களுக்கிடையில் இப்படி எலியும் பூனையும் விளையாட்டு ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது! எனினும், இது சாதாரணமாக செய்யப்பட்ட ஒரு செயல் அல்ல. இதற்குப் பின்னால் கோவிந்தன் குட்டியின் குருட்டு அறிவில் இருந்து வந்த ஏதாவது செப்படி வித்தைகள் இருக்கும்.”

“அப்பா, உங்களைப் பற்றி சீனியர் வி.பி.க்கு மிகப்பெரிய கருத்து இருக்கிறது.”

“சீனியர் வி.பி...!” - கே.ஆர்.கே. சத்தம் போட்டு சிரித்தார். “கோவிந்தன் குட்டியைப் பற்றிக் கூறும்போதெல்லாம் ஞாபகத்தில் வருவது, அந்த ஆளின் விரல்களின் அந்தப் பழைய திறமைதான். விருந்தினர் மாளிகையில் செட்டியார்மார்களுக்கு விஸ்கி ஊற்றித் தரும்போது, புட்டியை சற்று சாய்த்து விரலால் ஒரே ஒரு தட்டு... மிகவும் சரியாக ஒரு லார்ஜ் விழும். பெக்கை அளவிடுவதைவிட, மிகவும் சரியாக அது இருக்கும். செட்டியார்களுக்கு எடுபிடி வேலை செய்வதில் இருந்து மார்வாடிகளின் சீனியர் வி.பி.க்கான படிகளை கோவிந்தன் குட்டி தாண்டிச் சென்றது எப்படி என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். அவற்றில் சிலவற்றை உன்னிடம் கூற முடியாது. குப்தாஜி இந்த ஆளுக்காக சீனியர் வி.பி. என்ற பதவியை உண்டாக்கித் தந்தார். மற்ற வி.பி.க்களைவிட உயர்வாக இருப்பது மாதிரி... ஒருவேளை இனிமேல் அந்த ஆள் இந்தக் கம்பெனியின் தலைவராக ஆனால்கூட, அதில் எனக்கு சிறிதும் ஆச்சரியம் உண்டாகாது. அந்த அளவிற்கு கோவிந்தன் குட்டி திறமைசாலி! அதிர்ஷ்டசாலியும்கூட...”

ராதிகா நாற்காலியை நகர்த்திப் போட்டு அருகில் உட்கார்ந்தாள். அவள் சொன்னாள்:

“கம்பெனியின் இப்போதைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று அவர் சொன்னார். அப்படியென்றால் இவ்வளவு தொழிலாளர்களின் நிலைமை...”

கே.ஆர்.கே. மெதுவாக தாடையைத் தடவ ஆரம்பித்தார்.

“அந்த ஆள் சொன்னதில் சில உண்மைகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. கம்பெனியின் எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் அந்த ஆளின் அக்கறையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்துடன் வளர்ந்த ஒரு ஆள் வேறு மாதிரி இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. சரிதான்... ஒருவேளை மார்வாடிகள் வாய்ப்பு கிடைக்கும்போது இதை விட்டெறிந்துவிட்டு போவதற்குத் தயாராக இருப்பார்கள். அதற்கப்பால் உணர்வுப்பூர்வமான ஒரு ஈடுபாடு எதுவும் அவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. இறுதியில் புலியின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் வங்கிகளும் தொழிலாளர்களும் மட்டும்தான். இது மிகவும் சாதாரணமான ஒரு விளையாட்டுதான். அவர்களின் முதலீட்டுத் தொகையைவிட எத்தனையோ மடங்குகளை அவர்கள் எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். எல்லா குரூப் கம்பெனிகளையும் இணைத்துக் கொண்டிருக்கும் ஒரு சர்க்கஸ் விளையாட்டில் பணம் அங்குமிங்குமாகப் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதைத் தாளில் பார்க்கும்போது சுவாரசியமாக இருக்கும். ஒரு நிறுவனத்தைப் பொறுத்தவரையில் விரிவாக்கம் மிகவும் அவசியத் தேவைதான். ஆனால், அவர்களுடைய ஆர்வம் என்னவாக இருந்தது? பெரிய அளவில் உள்ள முதலீடு தேவைப்படும்போது, பணத்தை வெளியே கொண்டு போகக்கூடிய ஏராளமான வழிகளும் இருக்கும். ஊதிப் பெரிதாக்கிய திட்டத்திற்கான செலவுத் தொகையில் அவர்களுடைய கால் காசுகூட இறங்காது. நிதி நிறுவனங்களில் இருந்து வரும் மிகப்பெரிய கடன்...


பிறகு ஒரு பங்கு இஷ்யூ... இனிமேல் விரிவாக்கம் நீருக்குள் போனால்கூட அவர்களுக்கு என்ன நட்டம்? அவர்களுக்குத் தேவையானவற்றைக் கடத்திக்கொண்டு போயாகிவிட்டதே! ஒவ்வொரு வாங்கலும் விற்பதும் அவர்களுடைய குரூப் நிறுவனங்கள் மூலம்தான் நடக்கும். கணக்குகளில் இருக்கும் ஏராளமான தில்லுமுல்லுகள்!”

“இந்த முறை நஷ்டம் ஆகுமா என்று கேட்கிறேன்.”

“கணக்குகளில் நஷ்டத்தைக் காட்டுவதற்குத் திறமைசாலிகளான இளம் அடிவருடிகளை அவர்கள் அங்கு வேலைக்கு வைத்திருக்கிறார்கள் அல்லவா? எது எப்படி இருந்தாலும், கோவிந்தன் குட்டி இந்த அளவிற்குக் கீழே இறங்கிப் போய் காரியங்களை செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னை சந்திப்பதற்கு தைரியமில்லாததால், எதுவுமே தெரியாத உன்னை அறைக்குள் வரவழைத்து, இந்த ராமாயணம் முழுவதையும் கூறியிருக்கிறான். அதனால் என்ன பிரயோஜனம்? முன்பு இதே விஷயம் நடந்திருந்தால், நான் அந்த ஆளின் முகத்தைப் பார்த்து நாலு வார்த்தைகள் கேட்டிருப்பேன்.”

திடீரென்று இருமல் வந்தது.

மடிக்குள்ளிருந்து பீடியைத் தடவி எடுத்து உதட்டில் வைத்து ஊன்றுகோலின் உதவியுடன் கால்களை நகர்த்தியவாறு அவர் வாசலுக்கு வந்தார்.

ராதிகா அவருக்குப் பின்னால் நடந்தாள்.

முற்றத்தின் தெற்கு மூலையில் இருந்த ஒட்டு மாமரத்திற்குக் கீழே அவர் சிறிது நேரம் அப்படியே நின்றார். மீண்டும் இருமல் வந்தபோது, எரிச்சலுடன் பீடியை  விட்டெறிந்தார். அவர் எதைப் பற்றியோ நினைத்துக் கொண்டிருந்தார். சற்று நீர் வற்றிப்போன கழுத்திலிருந்த நரம்புகள் முறுக்கேறி நின்று கொண்டிருந்தன.

“கோவிந்தன்குட்டி சொல்வதிலும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இல்லையா மகளே?” சிறிது நேரம் கடந்ததும், அவர் மெதுவான குரலில் சொன்னார்: “ராகவனும் மற்றவர்களும் ஒரு மோதலுக்குத் தயாராகிறார்கள் என்றால் அது அந்த அளவிற்கு புத்திசாலித்தனமான காரியமாக இருக்காது. இப்போதைய சூழ்நிலைகளில், கோவிந்தன்குட்டி கூறுவது சரியாக இருக்கும் பட்சம், நம்முடைய பொருட்களை வாங்கக்கூடிய வட இந்தியாவைச் சேர்ந்த பார்ட்டிகள் மோசமான நிலைமையில் இருப்பதாக இருந்தால், சிறிது காலத்திற்கு இதைப் பூட்டுவதற்கு குப்தாஜி தயங்கவே மாட்டார். அப்படி செய்வதுதான் அவர்களுக்கு லாபமாகவும் இருக்கும். அது மட்டுமல்ல- ஒரே அடியில் பலரையும் ஓரம்கட்டிவிட முடியும். இங்கு இப்போது வழக்கு தொடுத்தவரே அதற்கு எதிரானவராகவும் ஆகியிருக்கிறார். இனிமேல் பணியாட்களை கோபம் கொள்ள செய்வது மேனேஜ்மென்ட்டாகத்தான் இருக்கும். எப்படியாவது ஏதாவது கூறி, சாதாரண காரியத்திற்கு அவர்களைக் கிளர்ந்தெழச் செய்து, அசைத்து, போர்க்களத்தில் கொண்டு போய் நிறுத்துவது... நம்முடைய ஆட்களின் புகழ்பெற்ற ‘கிங்சைஸ் ஈகோ’வைக் கணக்கில் எடுக்கும்போது அது சற்றும் சிரமமே இல்லாத விஷயம்தான். அந்தத் தூண்டிலில்தான் ராகவனும் மற்றவர்களும் போய் விழப் போகிறார்கள். மேனேஜ்மெண்டின் ஒத்துழைப்புடன் ஒரு போராட்டம்.”

“ஒருவேளை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இந்தக் கம்பெனியை விற்றுவிட்டால்...?”

கே.ஆர்.கே. திடீரென்று நின்றார். தன் மகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு கேட்டார்:

“அப்படிச் சொன்னாரா கோவிந்தன்குட்டி?”

“கேள்விப்பட்ட விஷயம்... சில நேரங்களில் சரியாகக்கூட இருக்கலாம்.”

தாடையைத் தடவிவிட்டுக் கொண்டே கே.ஆர்.கே. ஒரு நிமிடம் சிந்தனையில் மூழ்கினார். சிறிது நேரம் கழித்து அவர் தனக்குத்தானே கூறிக் கொள்வதைப்போலக் கூறினார்.

“பெரிய விலை கிடைப்பதற்கு தொழிற்சாலை இருக்கும் இடமும், கட்டிடங்களுமே போதும். பிறகு... இப்போது தற்காலிகமாக சில பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கக்கூடிய துறை. விஷயம் தெரிந்தவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.”

ராதிகா எதுவும் சொல்லவில்லை. ஊன்றுகோலைப் பிடித்துக் கொண்டு வேக வேகமாக மூச்சு விட்டவாறு கே.ஆர்.கே. மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

மாலை நேரமானது. கிளிகள் கூட்டமாக சத்தம் உண்டாக்கியவாறு மரக்கிளைகளில் வந்து சேர ஆரம்பித்த போது, அதைக் காதில் வாங்கியவாறு அவர் நின்று கொண்டிருந்தார். மேற்கு திசையின் ஓரத்தில் இருண்டு இருண்டு வரும் சிவப்பு. பரவிப் பெருகும் மெல்லிய இருளின் புகைச் சுருள்களில் அதுவரை காணாத அர்த்தங்களை அவருடைய மனம் தேடிக்கொண்டிருந்தது. கண்களுக்கு முன்னால் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த பலவும் மறதி என்ற சேற்றுக்குள் ஒவ்வொன்றாக நழுவி விழுந்து விட்டிருந்தன. பழைய நினைவுகளைத் தூசு தட்டிப் பார்க்கும்போது எத்தனையோ சந்தேகங்கள் கிளம்பி வந்தன. காலத்தின் புகைக் கறையும் சக்தியும் புரண்ட கோட்டோவியங்கள்...

ஒருநாள் தியாகராஜன் செட்டியார் கண்களை சுருக்கிக் கொண்டு சொன்னது ஞாபகத்தில் வந்தது. “மிஸ்டர் கே.ஆர்.கே. உங்களுக்கு இரவும் பகலும் இந்தக் கம்பெனியைப் பற்றி மட்டுமே நினைப்பு இருக்கிறது! இந்த நல்ல இளமையில், இந்த அழகான உலகத்தில் நினைப்பதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன!” பிறகு, முகத்தில் ஒரு போலித்தனமான சிரிப்பு - “இந்த அளவிற்கு அக்கறையும் ஆர்வமும் சிரமப்பட்டு பணத்தை முதலீடு செய்திருக்கும் எங்களுக்குக்கூட இல்லையே!”

அது சரிதான். சிறிதும் பொருத்தமே இல்லாத வயது குறைவானவனை, இளம் வயதிலேயே ஒரு அந்தி மாலைப் பொழுதில் யாரோ அந்தக் கம்பெனியின் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதற்குப் பிறகு அது மட்டுமே அவனுடைய உலகமாக ஆகிவிட்டது. விலை மதிப்புள்ள ஒரு பிறவி முழுவதும் வெளிச்சம் நுழைந்திராத அந்த சிறிய அறைக்குள்ளேயே அடங்கிவிட்டது. ஹமீதியா ஹோட்டலின் மாடியில் இருக்கும் யூனியன் அலுவலகம்... காலுக்குக் கீழே முணுமுணுக்கும் படிகளில் ஏறிச் செல்லும்போது, கரி படர்ந்த சுவர்கள்... பெரிய ஒரு அழுகையுடன் திறக்கும் சாளரத்தின் கதவுகள்... திருமணம் நடக்கும் வரை இரவு வேளைகளில் படுத்துக் கிடந்ததும் கிட்டத்தட்ட அங்குதான். இரண்டு பெஞ்சுகளை சேர்த்துப் போட்டு அதில் ஒரு பாயை விரித்து கண்களைத் திறந்து கொண்டு அவர் மல்லாக்கப் படுத்திருப்பார். கீழே ஹோட்டலின் ஆரவாரம் அடங்குவதுவரை அதே நிலைதான். தலைக்கு அடுத்து இருக்கும் ஜன்னலையும் திறக்க முடியாது... ஆரவாரம் முடிவது வரைக்கும். நேர் கீழே சமையலறையின் பின்பகுதி இருக்கிறது. அங்கிருந்து வரும் நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாது. அறையில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் நாளடைவில் பழக்கமாகிவிட்டன என்றாலும், கொசுக்கடியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற சூழ்நிலை உண்டானபோது, ஒரு மேஜை விசிறி வாங்குவதற்காக சொசைட்டியில் இருந்து கடன் வாங்கவேண்டிய நிலை அவருக்கு உண்டானது.

அப்படி இருக்கும்போது, சரஸ்வதி அவருடைய வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தாள். யாரெல்லாமோ சேர்ந்து வற்புறுத்தி நடத்தி வைத்த திருமணம். பிறகு... அவருக்கென்று கொஞ்சம் பிடிவாத குணம் இருந்தது. உலகம் தெரியாத அசல் கிராமத்துப் பெண்.


முதலில் சிறிதுகூட சரஸ்வதியால் இணைந்து போக முடியவில்லை. எதையும் திரும்பக் கூறும் தைரியம் இல்லாததால், ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு அவள் அவ்வப்போது அழுவாள். படிப்படியாக வேறு ஒரு வழியும் இல்லாமல், பூமாதேவியின் பொறுமையுடன் அவள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டாள்.

ஆனால் எட்டு மாத கர்ப்பமாக அவள் இருந்தபோது, ஒருநாள் எப்போதும்போல அவர் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்தபோது, அவள் முதல் தடவையாக வெடித்தாள். அப்போது முதல்முறையாக அவளுடைய நாக்கிலிருந்து வெளியே வந்திராத வார்த்தைகள் தொடர்ந்து வெளியே வந்தன. அவள் சொன்னாள்: “இந்த கழுத்தில் கிடக்கும் தாலியை அறுத்தெறிய உங்களுக்கு சிரமமாக இருக்காது என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்களுடைய அந்த அலுவலக அறையில் கட்டப்பட்டிருக்கும் தாலியை...?”

தாங்க முடியாமல் அவளை அதைக் கூறிவிட்டாள் என்றாலும், அது என்னவோ உண்மைதான். அந்தக் கட்டிடத்தின் அறையுடன் கொண்டிருந்த தாலி உறவு அந்த அளவுக்கு பலமுள்ளதாக இருந்தது.

“என்ன அப்பா, அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க?”

ராதிகாவின் குரல் கேட்டதும், அவர் நினைவுகளிலிருந்து விடுபட்டு சுய உணர்விற்கு வந்தார்.

அவள் வாசலில் குத்து விளக்கை ஏற்றி வைத்திருந்தாள். அவர் மெதுவாக உள்ளே சென்றார்.

தன் மகளின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவர் மெதுவான குரலில் சொன்னார்:

“எது எப்படியோ, நீ ஒரு காரியம் செய் மகளே. ராகவனிடம் கொஞ்சம் இங்கே வருமாறு கூறு. முடிந்தால் நாளைக்கே. தாமதிக்க வேண்டாம். அவனை நான் பார்த்து எவ்வளவோ நாட்கள் ஆச்சே!”

ராதிகா தலையை ஆட்டினாள்.

மின்விசிறியின் வேகத்தை அதிகரித்துவிட்டு, அவர் சாய்வு நாற்காலியில் வந்து படுத்தார். சிறிது நேரம் கண்களை மூடிக் கிடக்க வேண்டும்போல் அவருக்கு இருந்தது.

3

ராகவன் வந்தபோது இரவு எட்டு மணியை தாண்டிவிட்டிருந்தது. பேகம் அக்தரின் ஒரு பழைய பாடலைக் கேட்டுக் கொண்டே கே.ஆர்.கே. சாய்வு நாற்காலியில் கண்களை மூடியவாறு படுத்திருந்தார். வெளியே பைக்கின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டவுடன், ராதிகா சாளரத்தின் வழியாகப் பார்த்துவிட்டுச் சொன்னாள்: “ராகவன் அண்ணன்தான் வருகிறார் என்று நினைக்கிறேன்.”

அவர் டேப் ரிக்கார்டரை ஆஃப் செய்துவிட்டு தலையை சாய்த்துக்கொண்டு பார்த்தார்.

ராகவன் சற்று தடித்துவிட்டிருந்தான். முகம் சற்று சிவந்திருந்தது. கண்களுக்குக் கீழே சதை மடிப்புகள் விழுந்திருந்தன. பெரிய கட்டங்கள் போட்டு மின்னிக் கொண்டிருந்த ஒரு சிவப்பு நிற டெர்லின் சட்டையையும் சாம்பல் நிறத்தைக் கொண்ட ஒரு கால் சட்டையையும் அவன் அணிந்திருந்தான். அவன் டேப் ரிக்கார்டரையே ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் சொன்னான்: “இப்போது இசையின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.”

ராகவன் நாற்காலியை இழுத்துப் போட்டு மிகவும் அருகில் உட்கார்ந்தான்.

“உன்னைப் பார்த்து எவ்வளவோ நாட்களாயிடுச்சேடா! என்ன, இந்தப் பக்கம் வர்ற தூரம் அந்த அளவுக்கு அதிகமாயிடுச்சா?” - கே.ஆர்.கே.யின் முகத்தில் பாசம் இருந்தது.

“ஹோ... எதுவும் சொல்ல வேண்டாம். நின்று திரும்புவதற்கே நேரம் கிடைக்கவில்லை. நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்துல கோழிக்கோட்டில் ஒரு மாநாடு. போகாமல் இருக்க முடியவில்லை. சொற்பொழிவாளர்களில் நம்பியார் சார் இருந்தார். இன்றைக்குக் காலையில்தான் திரும்பி வந்தேன்.”

ராகவன் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். சட்டையின் காலரைப் பின்னோக்கித் தள்ளிவிட்டு, கழுத்தைத் துடைத்தான்.

“ஓ... என்ன ஒரு வெப்பம்!” - அவன் தன் கையிலிருந்த பத்திரிகையை மடித்து வீச ஆரம்பித்தான்.

“அது இந்த சட்டையால்தான். நம்முடைய தட்பவெப்ப நிலைக்கு இப்படிப்பட்ட துணிகள் சரியாக இருக்காது. இவற்றைக் கழற்றி வைக்கப் பார்” - கே.ஆர்.கே. மெதுவான குரலில் சொன்னார்.

ராகவன் எதுவும் சொல்லாமல் மேலே பார்த்தான்.

“சீக்கிரம் நான் திருவனந்தபுரம் போக வேண்டியது இருக்கு. கே.ஆர்.கே., நீங்க அழைச்சதால் இப்போ... இந்த நேரத்தில் இங்கு வந்தேன்.”

‘கே.ஆர்.கே.’-

தனக்குள் எழுந்த குறும்புத்தனமான சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டார் கே.ஆர்.கே.

நேற்றுவரை நான் இவனுக்கு கே.ஆர்.கே. அண்ணனாக இருந்தேன். இப்போது அது வெறும் கே.ஆர்.கே. காலத்திற்கேற்றபடி வளர்ந்திருக்கிறான். பல வருடங்களுக்கு முன்பு ஹமீதியா ஹோட்டலில் சுற்றிக் கொண்டிருந்த எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் பையன்... யூனியன் அலுவலகத்தின் மேற்குப் பக்க சாளரத்திற்கு அருகில் நின்றுகொண்டு கைகளைத் தட்டி விரல்களை நீட்டி எண்ணிக்கையைக் காட்டினால், இரும்பாலான வளையங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் தேநீர்க் குவளைகளுடன் ஓடிவரும் பையன்... இரவு வேளைகளிலும் சில நேரங்களில் சாப்பிட எதையாவது வாங்கிக்கொண்டு வருவான். சில நேரங்களில் அங்கேயே படுத்துவிடுவான். தனியாக இருக்கும்போது, அவனுக்குக் கூறுவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது. ‘அண்ணா, ஏதாவதொரு வேலை... இந்தக் கம்பெனியில் இல்லாவிட்டால்... அண்ணா, நீங்க சொன்னால் கேட்கக்கூடிய ஏதாவது ஒரு இடத்தில்... அண்ணா, நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.  நானூற்றைம்பது மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறேன். சர்ட்டிஃபிகேட் புத்தகத்தில் கணக்கு மார்க் போட்டதில் தவறு உண்டாகிவிட்டது அண்ணா. இல்லாவிட்டால் நானூற்று அறுபது மதிப்பெண்கள் கிடைத்திருக்கும்.’

இறுதியில் முதல் முறையாக கோவிந்தன் குட்டியிடம் பல விஷயங்களையும் சொல்லி கேண்டீன் பையனாகச் சேர்த்துவிட்டது எந்த வருடம்? அது முடிந்து ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அவனை ப்ளான்ட்டிற்கு மாற்றி சீருடையை அணிய வைத்தார். ராகவன் திறமைசாலியாக இருந்தான். பிரைவேட்டாக பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றான். இப்போது வட இந்தியாவில் இருக்கும் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.க்கு படித்துக் கொண்டிருக்கிறான்.

“அப்படியென்றால்... கே.ஆர்.கே., என்ன விஷயமாக...”

“ராகவன், உனக்கு மிகவும் அவசரம்... அப்படித்தானே?”

ராகவன் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான்.

“ஓ... அப்படியொண்ணும் இல்லை. என்னதான் வேலைகள் இருந்தாலும் இங்கே வராமல் இருக்க முடியுமா? இது எங்களுடைய குருகுலம் ஆச்சே!”

“மகளே... தேநீர்...” -கே.ஆர்.கே. உள்ளே பார்த்துக்கொண்டு சொன்னார்.

“சர்க்கரை வேண்டாம் ராதிகா” - ராகவன் சொன்னான்.


“ஏன்டா? உனக்கு இந்த வயதில் சுகரா?” -கே.ஆர்.கே. நம்பிக்கை இல்லாததைப்போல பார்த்தார்.

“ஓ... எதுவும் சொல்ல வேண்டாம் என் கே.ஆர்.கே. இந்த அலைச்சல்தானே எப்போதும். ஒழுங்காக... சரியான நேரத்திற்கு சாப்பிடவும் தூங்கவும் முடிகிறதா என்ன?”

கே.ஆர்.கே. ஒரு நிமிடம் கண்களை மூடியவாறு உட்கார்ந்திருந்தார்.

எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? என்ன காரணமோ தெரியவில்லை- ராகவனின் இப்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் எங்கோ அறியாமலேயே ஒரு விலகல் தோன்றுகிறது. முன்பு எப்போதும் தோன்றியிராத ஒரு அந்நியத்தன்மை இது. முகத்தோடு முகமாக உட்கார்ந்துகொண்டு உரையாடும் போது, வார்த்தைகளுக்காகத் தடவித் தேட வேண்டியதிருக்கிறது. அப்படியே இல்லையென்றாலும் இவ்வளவு நேரமான பிறகும் ஒரு சடங்கு என்பதற்காகக்கூட, நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்க அவனுக்குத் தோன்றவில்லையே!

சிறிது நேரம் கழித்து அவன் பேசத் தொடங்கினான். “எதுவும் சொல்ல வேண்டாம் என் கே.ஆர்.கே. மொத்தத்தில் அங்கு காரியங்கள் அந்த அளவுக்கு நன்றாக இல்லை. மேனேஜ்மெண்ட் இப்போது பழைய மாதிரி இல்லை. எல்லா விஷயங்களிலும் தேவையே இல்லாத சில பிடிவாதங்கள்... சின்னச் சின்ன காரியங்களில்கூட பிரச்சினைகளும் திருட்டுத்தனங்களும் அவர்களுக்கு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம்தான் இருக்கிறது. அதற்காக எதைச் செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. அந்தக் காலமெல்லாம் கடந்துபோய் விட்டன. இன்றைய தலைமுறையிடம் முன்பு செய்த இந்த சோப்பு போடும் தந்திரங்கள் செல்லுபடியாகாது என்ற விஷயத்தை அவர்கள் புரிந்து கொள்ளத்தான போகிறார்கள்.”

“லாபம்...” - கே.ஆர்.கே. சற்று நிறுத்தி முணுமுணுத்தார். “சொல்லப் போனால்... லாபம் உண்டாக்க வேண்டும் என்பதற்குத்தானே அவர்கள் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்? இல்லாவிட்டால் மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து அவர்கள் இங்கு வந்து சேர்ந்திருப்பது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக இல்லையே!”

“ஆனால் அதை அப்பாவித் தொழிலாளர்களின் ரத்தத்தை நீராக்கி உண்டாக்குகிறார்கள் என்ற உண்மையை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இப்போது கணக்குகள் போட்டு விளையாடுகிறார்கள். செட்டில்மென்ட் தருவதற்கான கால அளவு முடிவடைந்து பதினொரு மாதங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு காரணமாகச் சொல்லி நீட்டி நீட்டி இங்குவரை கொண்டு வந்துவிட்டார்கள். எதையும் முடிக்கிற மாதிரி தெரியவில்லை. அது மட்டுமல்ல- நஷ்டத்தை அதிகமாகக் காட்டி செட்டில்மென்ட் விஷயத்தில் ஓட்டை உண்டாக்கப் போகிற தந்திரம் தான் அவர்களின் கையில் இப்போது இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது.”

“அவையெல்லாம் எல்லோரும் விளையாடக்கூடிய விளையாட்டுத்தானே ராகவா? இதில் என்ன புதுமை இருக்கிறது?”

“ஆனால் இனிமேல் அது விலை போகாது.”

“உங்களுடைய முடிவு என்ன?”

ராகவன் சற்று நகர்ந்து உட்கார்ந்தான். கே.ஆர்.கே.யின் முகத்தைச் சந்தேகத்துடன் ஒருமுறை கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு வேகமான குரலில் சொன்னான்:

“எதையும் தீர்மானிக்கவில்லை. ஒரு செயற்குழு உண்டாக்கப்பட்டிருக்கிறது. இந்த தடவை எது வந்தாலும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. இங்கே சற்று விட்டுக் கொடுத்தால், இந்தத் தொழிற்துறையில் இருக்கும் எல்லா தொழிற்சாலைகளிலும் இதே விளையாட்டுதான் நடக்கும்.”

“நாம் அதிகமாகப் பார்க்க வேண்டியது நம்முடைய விஷயத்தைத் தானே?”

“அது முன்பு நடந்த கதை...”

ராகவன் உரத்த குரலில் அதைச் சொன்னான்: “பிச்சைக்காசுகளை வீசியெறிந்து, ஒன்றுபட்ட தொழிலாளி இனத்தைப் பிரிப்பதற்கு இனிமேல் முடியாது. தொழில்துறையில் கூட்டுக்குழு ஒன்றாக உட்கார்ந்து விவாதித்துதான் இப்போது பல விஷயங்களையும் தீர்மானிக்கிறது. கூட்டாக விலை பேசுவதன் வலிமையைப் பற்றி இப்போதைய தொழிலாளி முன்பிருந்த தொழிலாளியைவிட நன்கு தெரிந்து வைத்திருக்கிறான். தெளிவான அரசியல் பார்வை கொண்ட பல யூனியன்கள் இருக்கக்கூடிய சூழ்நிலைகளிலும், முக்கியமான காரியங்களில் ஒரு பொதுவான முடிவை எடுக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.”

“அதெல்லாம் நல்லதுதான்” - கே.ஆர்.கே. சிரிக்க முயற்சித்தார்.

தேநீர் வந்தது. ஸ்டீல் டம்ளரில் சர்க்கரை போடாத சூடான தேநீரை ராகவன் ஊதி ஊதிக் குடிப்பதை கே.ஆர்.கே. ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“சரி... அது இருக்கட்டும். கம்பெனியின் விரிவாக்கம் எந்த நிலையில் இருக்கு?”

“ஓ... அவை அனைத்தும் வெறும் கண்ணாமூச்சு விளையாட்டுகள்தானே! அதனால் ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருக்கும் என்று நாங்கள் எல்லாரும் முதலில் நினைத்தோம். எல்லாம் ஏமாற்று வேலைதான். அவர்கள் மிகப்பெரிய இயந்திரங்களை இறக்குமதி செய்து வைத்திருக்கிறார்கள். அவற்றை கம்ப்யூட்டர்கள் இயக்குகின்றன. இனிமேல் சீருடை அணிந்த ஆப்ரேட்டர்கள் யாருக்கு வேண்டும்? மனிதனின் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் கைகளுக்கு பதிலாக ரோபோக்கள்தான் இனி வரும் காலத்தில் பலவற்றையும் செய்யும். எது எப்படியோ, தொழிலாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறைந்து வரப்போகிறது. வேலையை விட்டுப் போகச் செய்தை தற்காலிகமாக நாங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டாலும் எதிர்காலத்தில் காலியிடங்கள் அப்படியேதான் இருக்கும்.”

“வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப விஷயங்களைப் பயன்படுத்துவதால் கம்பெனியின் செயல்பாடு மொத்தமாகப் பார்க்கும்போது குறிப்பிட்டுக் கூறும்படி இருக்கிறது அல்லவா? நம்முடைய உற்பத்தியின் அளவிலும் விலையிலும் மற்றவர்களுடன் நம்மால் போட்டி போட முடியலையா?”

“ஹே... அதெல்லாம் வெறும் மேல்பூச்சு...” -ராகவன் தோளைக் குலுக்கினான். “எந்த வழியில் போவதாக இருந்தாலும் காசு சம்பாதிப்பதற்கான தந்திரம்தான். இப்போது விரிவாக்கம் என்ற பெயரில் இந்த வருடம் நஷ்டத்தைக் காட்ட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”

“எதற்கு?”

“எதற்கு என்று யாருக்குத் தெரியும்? ஒருவேளை... எங்களுடைய சம்பள ஒப்பந்தத்தை ஒண்ணுமில்லாமல் செய்வதற்காக இருக்கலாம்.”

“அது மட்டும்தான் காரணமாக இருக்குமா? அதையும் தாண்டி அவர்களுக்கு வேறு சில நோக்கங்கள் இருக்காதா என்ன?”

“பொருட்களின் விலையை எடுத்துக்கொண்டால், அது குதித்து உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏழைத் தொழிலாளி எப்படி வாழ்கிறான் என்பதை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? அவர்களுக்கு மிகப்பெரிய ஏர்கன்டிஷன் வசதிகள் கொண்ட பங்களாக்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும் இருந்தால் போதும். ஆனால் கேன்டீனில் உணவுக்கான சப்ஸிடியை ஒரு பத்து பைசாவாவது கூட்ட வேண்டும் என்று சொன்னால், அதை செயல்படுத்தாமல் இருப்பதற்கு நூறாயிரம் காரணங்களைக் கூறுவார்கள்.”

“ராகவன், நீ சொல்லும் விஷயங்கள் சரிதான்” - கே.ஆர்.கே. அமைதியான குரலில் சொன்னார்: “ஆனால், ஒரு விஷயத்தை நீ மறந்து விடுகிறாய். அவர்களுடைய கணக்குகளில் தொழிலாளர்களின் சம்பளமும் மற்ற வசதிகளும் கம்பெனியின் மொத்த செலவல் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே வரும். அது ஒரு பெரிய விஷயம் அல்ல என்பதல்ல நான் கூறுவது. ஆனால் அதைவிட அதிகமாக அவர்களுக்கு ஆர்வம் இருக்கும் எவ்வளவோ மிச்சம் வரக்கூடிய மற்ற துறைகள் இருக்கின்றனவே.


குறிப்பாக நம்முடைய கம்பெனியில்... உதாரணத்திற்கு... கம்பெனி நஷ்டத்தை அடைந்து ஒரு ‘சிக்’ கம்பெனி என்று ஆகிவிட்டால், கடன் தந்த நிதி நிறுவனங்களில் இருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல பெரிய தள்ளுபடிகளைப் பெறலாம். கடன் தொகையைத் திருப்பித் தரக்கூடிய கால அளவை நீட்டிக்கச் செய்யலாம். வட்டியும் ஓரளவுக்குக் குறையும். வரிச்சலுகைகள் வேறு...”

“இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்த விஷயங்கள்தான்” - ராகவன் விருப்பப்படாதது மாதிரி சொன்னான்.

அதை கவனிக்காமல் கே.ஆர்.கே. தொடர்ந்து சொன்னார்:

“ஒருவேளை அப்படிப்பட்ட அணுகுமுறைக்குப் பின்னால் வேறு சில நோக்கங்களும் இருக்கலாம். ஏதாவது காரணங்களால் ஒருவேளை அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள் சந்தையில் முன்பைப்போல விற்பனை ஆகாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் கச்சாப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கலாம். உலக சந்தையில் உற்பத்திப் பொருட்களின் விலை குறைவு... இப்படிப் பல விஷயங்கள் இருக்கலாம். இல்லாவிட்டால் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கொண்டு வரும் அதே வரிசையில் அமைந்த வேறு உற்பத்திப் பொருட்கள் இன்றைய சூழ்நிலையில் லாபத்துடன் விற்பனை செய்வதற்கு ஏதாவது சிரமங்களை அவர்கள் சந்திக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நிலைமை கொஞ்சம் நன்றாக ஆகட்டும் என்பதற்காக அவர்கள் வெறுமனே நின்று கொண்டிருக்கலாம் அல்லவா?”

“அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்களுக்கு அது ஒரு பிரச்சினையே அல்ல. எதுவாக இருந்தாலும், நாங்கள் முன்னால் வைத்திருக்கும் கோரிக்கைகளிலிருந்து சிறிதுகூடப் பின்னோக்கி நகர்வதற்கான வாய்ப்பே இல்லை. அது மட்டும் உறுதி. ஒப்பந்தத்தை இனிமேலும் நீடித்துக்கொண்டு செல்வதற்கு நாங்கள் சம்மதிப்பதாக இல்லை. சிறு சிறு விட்டுக்கொடுத்தல்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு வகையான நன்கு தெரியக்கூடிய குழப்பம்தான். இந்த விஷயத்தில் எங்களுடைய அணுகுமுறையுடன் வேறு நான்கு யூனியன்களும் பொதுவாகவே ஒத்து செல்கின்றன. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வேறு ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.”

“அது பிடிவாதமாச்சே ராகவா?”

“இருக்கட்டும். அப்படி நினைத்தாலும் பிரச்சினை இல்லை. தொழிலாளி வர்க்கத்தின் இப்படிப்பட்ட சிறு சிறு பிடிவாதங்களின் மூலமாகத்தான் வரலாறு பல நேரங்களில் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது.”

“அப்படியென்றால், மீண்டும் ஒரு மோதல்... அப்படித்தானே? முன்பு உண்டான இரண்டு செட்டில்மென்ட் சமயத்திலும் அது தேவைப்படவில்லை.”

“காலம் மாறிவிட்டது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். மேனேஜ்மென்டின் கைப்பிடியில் இருக்கக்கூடிய ஒரு யூனியன் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்று அவர்கள் ஆசைப்பட முடியாதே!”

கே.ஆர்.கே. அடுத்த நிமிடம் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“ராகவா!” - கே.ஆர்.கே.யின் குரல் உயர்ந்தது: “நீ என்ன சொன்னே? அதை இன்னொரு தடவை சொல்ல முடியுமா? அதற்கான தைரியம் உனக்கு இருக்கிறதா?”

அவருடைய கண்கள் நெருப்பென எரிந்து கொண்டிருப்பதை ராகவன் பார்த்தான். அந்தப் பார்வையைச் சந்திக்க முடியாமல் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு அவன் மெதுவான குரலில் சொன்னான்:

“உண்மையாகச் சொல்வதாக இருந்தால் கே.ஆர்.கே... உங்களைப் போன்ற ஒருவர் இப்போது இப்படி அலட்சியமாகப் பேசுவதைப் பார்க்கும்போது மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. ட்ரேட் யூனியனிஸத்தின் ஆரம்ப பாடத்தை இந்தப் பகுதியில் இருக்கும் தொழிலாளிகளுக்குக் கற்றுத் தந்ததே நீங்கள்தான். ஆனால் இப்போது ஒரு மாதிரியான... மேலோட்டமான பேச்சு...”

கே.ஆர்.கே. அடுத்த நிமிடம் அமைதியாக மாறி பலவற்றையும் நினைத்துக்கொண்டு தாழ்வான குரலில் சொன்னார்:

“எனக்கு யாரும் கற்றுத் தரவில்லை ராகவா. ஆனால் பத்து முப்பத்தைந்து வருட அனுபவங்களிலிருந்து நான் பலவற்றையும் கற்றுக்கொண்டேன். ஒரு ஆபத்தான குழியின் அருகில் வரும்போது கால்கள் தானே நின்று விடுகின்றன. ஆறாவது அறிவு கண் விழிக்கிறது. தலைக்குள் ஆபத்தை முன்கூட்டியே கூறி எச்சரிக்கும் என்னவோ மின்னுகிறது. இவை அனைத்தும் எந்தவொரு உயிரினத்திடமும் சாதாரணமாக இருக்கக்கூடிய விழிப்புணர்வுதான்.”

“என்னதான் ஆனாலும் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பது என்ற பிரச்சினையே இல்லை கே.ஆர்.கே. இங்கு தோற்றால் வேறு எல்லா இடங்களிலும் நாம் தோற்போம். இந்தப் பகுதியில் இருக்கும் வேறு மூன்று கம்பெனிகளிலும் இப்போது எல்.டி.எஸ். பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இங்கு தோல்வியைச் சந்தித்தால்...”

“அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு அளவுக்கு மேலே இப்படிப்பட்ட கூட்டுச் செயல்களுக்கு முக்கியத்துவம் தந்தால் சில நேரங்களில் அது ஒரு வலைக்குள் மாட்டிக் கொண்டதைப் போல ஆகிவிடும். ஒவ்வொரு கம்பெனிக்கும் அதற்கென்று இருக்கும் பலமும் பலவீனமும் உண்டு. அவர்களுக்கு மட்டுமே இருக்கும் ஏதாவது குறிப்பிட்ட சூழ்நிலைகளில், சில நேரங்களில் பின்வாசலில் அவர்கள் இடத்தை மாற்றி மிதித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள் என்ற நிலை வரலாம். அந்த மாதிரி விஷயங்களை நான் ஏராளமாகப் பார்த்திருக்கிறேன். அது மட்டுமல்ல... இப்படிப்பட்ட காய் நகர்த்தல்களுடன் அதிக வேகத்துடன் முன்னோக்கிச் செல்லும்போது, நமக்கென்று தனியாகத் தப்பித்துச் செல்லும் பாதையை முன்கூட்டியே போட்டு வைத்திருக்க வேண்டும்... எப்போதும். நிலைமை மோசமானால், முகத்தை இழக்காமல் பின்னோக்கி வருவதற்கு குறுக்கு வழி... அதைத்தான் கூறுகிறேன். சில நேரங்களில் மேனேஜ்மென்டே தந்திரமாக அதை உண்டாக்கித் தரும். ஆனால் எப்போதும் அதை எதிர்பார்க்கக்கூடாது.”

ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, கே.ஆர்.கே.யின் முகத்தையே வெறித்துப் பார்த்துவிட்டு, ராகவன் தாழ்வான குரலில் சொன்னான்:

“இல்லை... எனக்கு கொஞ்சம்கூட புரிந்து கொள்ள முடியவில்லை. எங்களுடைய பழைய கே.ஆர்.கே.யா இதையெல்லாம் சொல்றாரு?”

“ஒருவேளை வயதானதால் இருக்கலாம்” - கே.ஆர்.கே. சொன்னார்: “கேன்டீனில் அப்பளத்தின் அளவு குறைந்துவிட்டது என்பதற்காக வேலை நிறுத்தம் செய்த ஒரு வரலாறு இந்தப் பகுதியில் ஒரு கூட்டத்திற்கு இருக்கிறதே! அதுவும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில். அதில் இருந்த தமாஷைக்கூட இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை. அதுவும் வயதானதால் இருக்கலாம்.”

கே.ஆர்.கே. சிரிக்க முயற்சித்தார்.

“அது மட்டும்தானா?” - ராகவனின் முகத்தில் சந்தேகம் நிறைந்திருந்தது.

“சில நேரங்களில் உங்களுடைய அணுகுமுறை சரியாகக்கூட இருக்கலாம். மேனேஜ்மென்டின் இன்றைய செயல்பாடுகளைப் பற்றி எனக்கு சரியாகத் தெரியாதே! இல்லாவிட்டாலும் இனி அதில் ஒன்றுமே இல்லை என்று ஒன்றரை வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து நிறுத்திக் கொண்டேன். ஆனால், ஒரு விஷயம்... நீங்கள் ஒரு வலையில் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அவ்வளவுதான்.”

“என்ன வலை?”


“நீங்கள் ஒரு மோதலுக்குத் தயாராகி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் சிறிது நாட்களுக்குத் தொழிற்சாலையை மூடிவிடக்கூடிய சூழ்நிலைகளை உண்டாக்கி விட்டால்..? இல்லாவிட்டால் ரகசியமாக விற்றுவிட்டால்...?”

“அதை அவர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?”

“எதனால் முடியாது? நான் முன்பே சொன்ன காரணங்கள்தான். ஒருவேளை அது அவர்களுக்குத் தேவைப்படலாம். இப்போதைய காரியங்களின் நீக்கங்களைப் பார்க்கும்போது, எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இதில் ஏதோ பெரிய விளையாட்டு இருக்கிறது. நம்மைவிட குப்தாஜிக்கு ஒன்றரை மைல் தூரம் பார்க்கக்கூடிய சக்தி இருக்கிறது. அதை மறந்துவிடக்கூடாது.”

“அப்படியொரு நிலைமை வந்தால் அப்போது பார்த்துக் கொள்வோம். இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு முன்னால் ஒன்று சேர்ந்திருக்கும் தொழிலாளி வர்க்கம் மூலையில் உட்காரும் பிரச்சினையே இல்லை.”

“இதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் முழக்கங்கள் மட்டும்தானே ராகவா? நமக்குள் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசிக்கொள்ள வேண்டுமா என்ன? எது எப்படி இருந்தாலும், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு அவர்கள் தொழிற்சாலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று வைத்துக்கொள். அப்போது ஆயிரத்து நூறு குடும்பங்களின் நிலைமை என்ன ஆவது? இந்த விஷயங்களையெல்லாம் நம்மைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! வீட்டிலிருக்கும் பெண்களிடம் இறுதியாக இருக்கும் சிறிய தங்கமும் அடகு வைக்கப்படும்போது, கொள்ளை வட்டிக்கு வாங்கிய கடன் தொகைக்கான வட்டியைக்கூட கொடுக்க முடியாத நிலைமை வரும்போது... இவற்றை ஏன் கூற வேண்டும்? நினைத்துப் பார்க்க முடியாத வட்டிக்கு தொழிலாளிகளுக்குக் கடன் தரும் குட்டித் தலைவர்களும் இந்தப் பகுதியில் இருக்கத்தானே செய்கிறார்கள்? அவர்களுடைய பெயர்கள் உனக்கும் தெரியுமே?”

“அப்படி எவ்வளவு நாட்களுக்கு மேனேஜ்மென்ட் தொழிற்சாலையை மூடி வைக்க முடியும்?”

“அவர்களுக்குத் தேவைப்படும் காலம்வரை. சொல்லப்போனால் இந்த வர்த்தகத்தின் சூழ்நிலை அவர்களுக்குச சாதகமாக வரும்வரை. தந்திரத்தனமாக தொழிற்சாலையை விற்றுவிட்டால், தொழிலாளர்களின் நிலைமை புலியின் வாலைப் பிடித்த கதையாகிவிடும். புதிய முதலாளி அவர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதில்லை. அந்த வகுப்பு உனக்குத் தெரியுமல்லவா?”

“அப்படியென்றால் இந்தத் தொழிலையே நாங்கள் செயல்படாமல் நிறுத்திவிடுவோம்” - ராகவனின் முகத்தில் கடுமையான பிடிவாதம் தெரிந்தது.

“அதெல்லாம் வெறும் தோற்றம் ராகவா. அதிகபட்சம் போனால் நகரத்தின் சாலைகளில் இரவு நேரத்தில் ஒரு பந்தத்தை எரிய விட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவீர்கள். தொழிற்சாலையின் வாசலில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடக்கும். சில ஆக்ரோஷமான சொற்பொழிவுகள் நடக்கும். உண்ணாவிரதம் இருப்பவர்களின் கழுத்தில் பெயர் எழுதப்படாத மலர் வளையங்களைப் போல நண்பர்கள் அமைப்புகளின் வாழ்த்துக்களுடன் விழும் சிவப்பு நிற மாலைகள்... முடிந்தது. அதைத் தாண்டி வேறு யாரும் கிடைப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் டி.வி.யில் மலையாளத் திரைப்படம் போடும்போது ஒரு பொதுக்கூட்டத்தை நடத்திப் பாருங்கள். நம் ஆட்களின் வர்க்க உணர்வு என்னவென்று அப்போது தெரியும். முன்பு இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் தொழில் பிரச்சினை நீண்டு கொண்டு போனபோது, ஒருநாள் ‘பந்த்’ நடத்த நாங்கள் முயற்சித்தோம். ஒத்துழைப்பு கேட்டு வர்த்தகர்கள் சங்கத்தில் இருக்கும் ஆட்களைப் போய் பார்த்தபோது, அவர்கள் எங்கள்மீது கை வைக்காததுதான் குறை. “உங்களுடைய கம்பெனியைக் குட்டிச் சுவராக்கி விட்டீர்கள். இனி எங்களுடைய வயிற்றுப் பிழைப்பிலும் கையை வைக்கப் பார்க்கிறீர்களா?” என்று அவர்கள் கேட்டார்கள்.

ராகவன் சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தான்.

“அப்படி நீண்ட நாட்களுக்கு அவர்கள் கம்பெனியைப் பூட்டி விடுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” - அவன் கேட்டான்.

“ஏன் இருக்கக்கூடாது? குப்தா குரூப்பில் இருக்கும் சில கம்பெனிகளின் வரலாறே அப்படித்தான். சந்தை நிலவரம் நன்றாக இருக்குறப்போ, அங்கு உற்பத்தி நூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும். மார்க்கெட் நிலைமை மோசமாகும்போது தொழில் போராட்டம், கெரோ, வரி ரெய்டு, நீதிமன்ற வழக்குகள்... எந்த சூழ்நிலையிலும் நான்கு கால்களில் விழுவதற்கு அவர்களுக்குத் தெரியும். டில்லியிலும் தேவைப்படும் ஆதரவு இருக்கிறது என்று வைத்துக்கொள். வேறு காரணங்களால் இந்தக் கம்பெனி ஒரு வருடத்திற்கு அடைக்கப்பட்டாலும், அவர்களுக்கு எந்தவொரு இழப்பும் உண்டாகப் போவதில்லை. தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கு நூறாயிரம் சட்டங்கள் இருக்கும். ஆனால் அவற்றில் இருக்கும் ஓட்டைகளைப் பற்றி நமக்கு சிறிதுகூட தெரியாது. பல வேளைகளில் நாம் எல்லோரும் சிறு சிறு விஷயங்களுக்குப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்போம். பிறகு அது தானாகவே பெரியதாகி நம்முடைய பிடியை விட்டு விலகிப் போவதை உரிய நேரத்தில் நாம் அறிந்திருக்க மாட்டோம். முன்பு ஒருமுறை ஒரு கம்பெனியில் என்னுடைய அமைப்பில் ஒரு பிரச்சினை உண்டானது. ஒரு சிறிய விஷயம். இயந்திரங்களை மாற்றிக்கொண்டு வருவதால் ஒரு டிவிஷனில் பத்து தொழிலாளர்கள் அதிகமானார்கள். அவர்களை இன்னொரு டிவிஷனில் பயன்படுத்த முயன்றபோது, பிரச்சினை உண்டானது. தகராறு ஏற்பட்டது. இதில் மேனேஜ்மென்டின் பக்கம் எந்தவொரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், உடன் இருப்பவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டாமா? அந்த சிறிய விஷயம் பெரிதாகி பெரிதாகி கெரோவில் போய் முடிந்தது. கண்ணாடிகள் கல் அடித்து நொறுக்கப்பட்டன. ஆர்ப்பாட்டம் உண்டானது. இறுதியில் மூன்று மாத காலத்திற்கு கம்பெனி மூடப்பட்டது. சிலர்மீது காவல்துறை வழக்கு போட்டது. எனக்கும் கெட்டப் பெயர் கிடைத்தது.”

“என்ன இருந்தாலும் இங்குள்ள மேனேஜ்மென்ட் அப்படி பிடிவாதம் பிடிப்பதாக இருந்தால், அப்போது அங்கு நாமும்தான் பார்த்து விடுவோமே! நம்முடைய கையிலும் சில திட்டங்கள் இருக்குமல்லவா?”

அப்படி சொன்னாலும் ராகவனின் குரலில் சற்று தடுமாற்றம் இருப்பதை கே.ஆர்.கே. உணர்ந்தார்.

“என்ன திட்டங்கள்?” - கே.ஆர்.கே. கேட்டார்.

“இது வெள்ளரிக்காய் நகரம் ஒன்றுமில்லையே! வேறு வழியே இல்லாவிட்டால், அரசாங்கத்திடம் கூறி கம்பெனியை எடுத்துக்கொள்ள வைக்க வேண்டியதுதான். அதற்காக ஒரு பொதுமக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும்.”

“நீ என்ன சொல்றே? கம்பெனியை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும் என்றா? கலக்கிட்டே...”

கே.ஆர்.கே. திடீரென்று சிரிக்க ஆரம்பித்தார். குலுங்கிக் குலுங்கி சிரித்தார். சிரித்து சிரித்து தொண்டை வலித்தது. கண்களில் இருந்து நீர் வழிந்தது. தொண்டையில் இருமல் வந்த போது, அவர் கழுத்தைத் தடவினார். சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஊன்றுகோலைப் பற்றிக் கொண்டு மெதுவாக எழுந்திருக்க முயற்சித்தார். அவரைத் தாங்குவதற்காக ராகவன் முன்னோக்கி வந்தபோது, வேண்டாம் என்று சைகையால் சொன்னார்.


“சமீப காலத்தில் நான் கேட்ட மிகப்பெரிய நகைச்சுவை... ராகவா, உன்னைப் பற்றி நான் இப்படி நினைத்திருக்கவில்லை. தெரியுதா?”

கே.ஆர்.கே.விற்கு அப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆரவாரத்தைக் கேட்டு ராதிகா கதவிற்கு அருகில் வந்து பார்த்தாள்.

“மகளே... கொஞ்சம் தேநீர் கொண்டு வந்து தர்றியா? பால் இல்லையென்றால், வெறும் தேநீரைக் கொண்டு வா.”

“இப்போ வேண்டாம் கே.ஆர்.கே. நேரம் அதிகமாயிடுச்சு. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலைகள் இருக்கு.”

ராகவன் சொன்னான்.

ராகவனின் முகத்தைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு கே.ஆர்.கே. வேகமாக மூச்சுவிட்டவாறு முன்பக்க கூடத்தை நோக்கி நடந்தார்.

“இல்லை... நாங்கள் அப்படி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை தெரியுதா?” -ராகவன் அவசரமாகச் சொன்னான்: “சொல்லப் போனால் அவர்களுடைய காய் நகர்த்தல்களுக்காக காத்திருக்கிறோம். பிறகு... இதுவரை நம்பியார் சாருடன் விளக்கமாகப் பேச முடியவில்லை.”

“நம்பியார்...?”

கே.ஆர்.கே. முகத்தைத் திருப்பிக் கொண்டு கேள்வி கேட்கிற மாதிரி பார்த்தார்.

“அந்த ஆள் இப்போதும் உங்களுடைய யூனியன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுகிறாரா?”

“அந்த அளவிற்கு நேரடியாக தலையிடுகிறார் என்று கூறுவதற்கில்லை. எனினும், இந்த மாதிரியான முக்கியமான விஷயங்கள் என்று வரும்போது, பார்ட்டியுடன் கலந்து பேசாமல் எப்படி இருக்க முடியும்? அவர்களுடைய ஆதரவு சில நேரங்களில் தேவைப்படுகிறதே! அதனால் அதை தலையிடுவதாகக் கூற முடியாது.”

வராந்தாவிற்கு முன்னால் சாய்ந்து நின்று கொண்டு, முன்னால் இருந்த இருட்டையே கே.ஆர்.கே. வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஒரு விஷயத்தை மனம் திறந்து கூறுகிறேன் ராகவா. எனக்கு சில உறுதியான அரசியல் நம்பிக்கைகள் இருக்கு. அது அப்போதும் இப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கு. எந்தவொரு மாற்றமும் இல்லை. ஆனால் யூனியன் விஷயங்களில் பார்ட்டியின் தலைவர்கள் தலையிடுவதற்கு நான் எந்த சமயத்திலும் சம்மதித்தது இல்லை. இந்த நிமிடம் வரை... நான் இருந்தபோது அவர்களுக்கு அதற்கான தைரியம் இருந்ததும் இல்லை. கட்சியை சேர்ந்தவர்களுக்கு மேனேஜ்மென்ட்டுடன் சில சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பல விஷயங்களிலும்... ஒன்று... ஏதாவது மாநாட்டிற்காக வாங்கி நன்கொடை பணம் சற்று குறைவாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது கட்சியை நம்பி இருப்பவரின் வேலை பிரச்சினையாக இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால் கட்சி அலுவலகத்திலிருந்து தனிப்பட்ட முறையில் வற்புறத்திக் கூறியும், ஒரு தொண்டனுக்கு கான்ட்ராக்ட் தரவில்லை என்ற கோபம் இருக்கலாம். அரசியலில் தலைமைத் தன்மை பெரிய அளவில் உண்டாவது சிபாரிசுகளின் மூலம் காரியங்களை சாதித்துக் கொடுப்பதால்தானே? ஆனால் ஒன்றை மட்டும் கூறுகிறேன். என்னுடைய அரசியல் நம்பிக்கைகள் என்னுடன் மட்டுமே இருக்கும. அதை யூனியன் சம்பந்தப்பட்ட விஷயங்களுடன் போட்டு குழப்பிக் கொள்ள எந்த சமயத்திலும் நான் சம்மதித்ததே இல்லை. யூனியனை கட்சியின் வளர்ச்சிக்காகப் பயன்படும் வெறும் கருவியாகத் தரம் தாழ்த்த நான் அனுமதித்ததும் இல்லை. ஒருவேளை அந்தக் காரணத்தால்தான் காலம் காலங்களாக அப்போதப்போது இருக்கும் மேனேஜ்மென்டும் சில அரசியல் கட்சிகளும் நம்முடைய ஆட்களை இழுத்துச் சென்று தங்களுடைய சொற்களைக் கேட்கும் யூனியன்களை வளர்க்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறாமல் போய்விட்டது. அரசியல் நம்பிக்கைகளைத் தாண்டி நம்முடைய ஆட்கள் எப்போதும் என்னுடன் இருந்திருக்கிறார்கள்.”

ராகவன் எதுவும் கூறவில்லை.

“உனக்குத் தெரியுமா? ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த ஆறு கம்பெனிகளில் பெரிய யூனியன்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. நான் கையை அசைத்தால் இந்தப் பகுதியே செயலற்று நின்றுவிடும். நான் சொல்வதைத் தாண்டி ஒரு அங்குலம்கூட இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ அவர்கள் அசைய மாட்டார்கள். அப்போது அரசியலில் தொழில் ரீதியான தலைவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. என்னை ஓரம் கட்டுவதற்கு முடிந்த அளவிற்கு வேலைகளை அவர்கள் செய்து பார்த்தார்கள். முதலில் ஊழல் குற்றச்சாட்டுகள்... அது வேலை செய்யவில்லை என்றவுடன் ஒரு பெண் வழக்கு. யாருடைய நெற்றியிலும் மிகவும் எளிதாக ஒட்டி விடக்கூடிய ஒரு லேபில்தானே அது. எது எப்படியோ அதுவும் நல்லதாகப் போய்விட்டது. அத்துடன் எங்கிருந்தோ சரஸ்வதி என்ற பெண் என்னுடைய வாழ்க்கைக்குள் நுழைந்தாள். எனக்கே தெரியாமல், ஏதோ இருந்த இடத்தில் சிறிது காலத்திற்கு மட்டும் கிடைத்த துணை... பின்வாசல் வழியாக எங்கிருந்தோ வந்து நுழைந்ததைப் போலவே, ஒருநாள் அவள் போகவும் செய்தாள்.”

கே.ஆர்.கே.யின் தொண்டை அடைத்தது. முகத்தைக் குனிந்து நின்று கொண்டிருந்தபோது, அதை நினைத்துப் பார்த்திருக்க வேண்டியதில்லை என்று அவருக்குத் தோன்றியது. ‘திடீரென்று சிறிய ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். எனக்கு சமீபகாலமாக என்ன ஆச்சு? நான் இப்படியெல்லாம் நடந்தது இல்லையே!’

அவர் கூற ஆரம்பித்தார் - விஷயத்தை மாற்றுவதற்காக.

“அப்போது நான் சொல்ல வந்தது அந்தப் பழைய யூனியன் தொடர்புகளைப் பற்றி... அப்படித்தானே? படிப்படியாக ஒவ்வொன்றையும் கை கழுவிவிட்டேன். நானேதான்... வெறுமனே விலை பேசுவதற்காக மட்டுமல்ல; நான் தொடர்பு கொண்டிருக்கும் அமைப்பின் செயல்பாட்டில் மனப்பூர்வமாக நூறு சதவிகிதம் இரண்டறக் கலந்திருக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் எனக்குத் தோன்றியது அப்போதுதான். தொழிலாளிகளின் அமைப்பைப் பற்றி எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அறிவாக அது இருந்தது. அத்துடன் இப்படிப்பட்ட ஒரு கமிட்மென்ட் இருந்தால் மட்டுமே ஒரு அமைப்பைக் கையில் எடுக்க முடியும் என்ற உறுதியான முடிவுக்கு நான் வந்தேன். உனக்குத் தெரியும் அல்லவா? எல்லோருக்கும் தேவையானது தற்காலிக லாபம் மட்டும்தான். டைரக்டர் போர்டில் யூனியனுக்கு முக்கியத்துவம் தருவதாக ஒரு நல்ல கம்பெனியின் மேனேஜ்மென்ட் சொன்னது. அப்போது அதை வேண்டாம் என்று சொன்னவர்கள் நம்முடைய ஆட்கள்தான். அது ஒரு பெரிய வரையறையாகவும் உரிமையாகவும் இருந்திருக்கும். கடுமையான தந்திரங்களைப் பயன்படுத்தியபோது இப்படிப்பட்ட புலிவால்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதுதான் நல்லது என்பது அவர்களுடைய கருத்தாக இருந்தது. எது எப்படி இருந்தாலும் படிப்படியாக ஒவ்வொன்றையும் கைவிட்டு நம் அமைப்பை விட்டுப் போனார்கள். கொஞ்சம் சிந்திக்கும்போது, அது நல்லதும்கூட. பெரும்பாலானவர்களுக்கு யூனியனின் தலைப்பில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு மனிதனின் பெயர் இருந்தால் மட்டும் போதும். போராட்ட தந்திரங்களுக்காக அந்தந்த சூழ்நிலையில் மிகவும் பயன்படக்கூடிய ஒரு பெயர்.


ஏதாவதொரு அரசியல் கட்சியின் உச்ச நட்சத்திரம். ஒருவேளை அந்த மனிதனுக்கு கம்பெனியின் உற்பத்திப் பொருள் சாயப் பொடியா அல்லது கம்ப்யூட்டரின் உதிரி பாகங்கள் என்பதுகூட தெரியாமல் இருக்கலாம். வருடத்திற்கொருமுறை பொதுக்கூட்டத்தில், நட்சத்திரம் தன்னுடைய முகத்தைக் காட்டினால் அதிர்ஷ்டம். சில நேரங்களில் அந்த முகம் காட்டல் நடக்காமலும் போகலாம். ஆனால் அதனால் பிரச்சினை இல்லை. காரியங்களை நடத்துபவர்கள் மற்றவர்கள்தானே!”

ராகவன் எதுவும் கூற முடியாமல் முகத்தை குனிந்துகொண்டு நின்று கொண்டிருந்தான். உரையாடல் இந்தப் பக்கமாகத் திரும்பியது தவறாகப் போய்விட்டது என்பது அவனுடைய முகத்தில் தெரிந்தது. ஒருவேளை நீண்ட நாட்களாக சிந்தித்து, கே.ஆர்.கே. யாருடைய முகத்திலாவது வீசி எறிவதற்காக திட்டமிட்டு வைத்திருந்த வார்த்தைகளாக அவை இருக்கலாம்.

“கே.ஆர்.கே. நான்...”- ராகவன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

அதைக் காதில் வாங்காமல் வெளியே நிறைந்திருந்த இருட்டையே பார்த்துக் கொண்டு கே.ஆர்.கே. தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“உனக்குத் தெரியும்ல! எனக்கு இது ஒரு தொழில் அல்ல. இவ்வளவு காலப் பொதுத் தொண்டுக்குப் பிறகும், நான் இப்போதும் ஒரு வாடகைக் கட்டிடத்தில்தான் இருக்கிறேன். பலரின் விஷயங்களும் அப்படி இல்லையே! பலருக்கும் பல லாபங்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக இடையில் அவ்வப்போது சர்வதேச மாநாடுகளில் பிரதிநிதியாகக் கலந்து கொள்வது... ஜெனீவாவிலோ, வியன்னாவிலோ, டோக்யோவிலோ அது நடக்கலாம். அத்துடன் நீண்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய பயணம். பிள்ளைகளுக்கு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் நுழைய வாய்ப்பு உண்டாக்குதல்... குறைந்தபட்சம் ஒரு ஐந்தெட்டு முறைகளாவது உலகத்தைச் சுற்றிப் பார்க்காத ஏதாவதொரு பெரிய தொழிலாளர்களின் தலைவரை உன்னால் சுட்டிக் காட்ட முடியுமா? இந்த விஷயத்தில் எல்லாக் கட்சிகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. நான் பார்த்த மிகப்பெரிய வெளியூர் நகரம் எது என்று உனக்குத் தெரியுமா? கல்கத்தா. அதுகூட கட்சியின் மாநாட்டிற்காகப் போனபோது நான் பார்த்தது தான். அங்கிருந்து நான் வாங்கிக் கொண்டு வந்த பொருட்கள் - இரண்டு கதர் குர்தாக்கள், ஒரு ஜோடி செருப்பு... பிறகு... என் தாய்க்கு ஒரு கம்பளிப் போர்வை.”

என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றிருந்தான் ராகவன். எப்படியாவது விஷயத்தை மாற்றிவிட வேண்டும் என்பதற்காக அவன் சொன்னான்:

“நம்முடைய யூனியனைப் பிளப்பதற்காக ஒரு முயற்சி நடக்கிறது. கோவிந்தன்குட்டி சார்தான் அதற்குப் பின்னால் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.”

“அது முன்பு நடந்தது ஆச்சே!”

“அது மாதிரி இல்லை. இந்தத் தடவை அவர் பிடிவாதமாக இருக்கிறார்.”

ராகவன் மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி... நான் புறப்படட்டுமா கே.ஆர்.கே. அண்ணா? நேரம் அதிகமாயிடுச்சு. காலை வண்டிக்குப் போகணும் - திருவனந்தபுரத்திற்கு...”

அண்ணன்!

இவ்வளவு நேரமும் அவனுடைய நாக்கில் இருந்து வர சம்மதிக்காத பெயர்!

கே.ஆர்.கே. ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டார். பிறகு மெதுவாக நகர்ந்து, தன் கையை ராகவனின் தோளில் போட்டு தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டார்.

“உன்னிடம் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் கூற விரும்புகிறேன். இவ்வளவு கால அனுபவங்களையும் வைத்து நான் கூறுவது என்று மட்டும் நினைத்தால் போதும். இரும்பு பழுத்து இருக்கும்போதே அதை அடிப்பதற்குப் பார். இல்லாவிட்டால் சில வேளைகளில் குடம் உடைந்துவிட்டது என்பதுதான் மிச்சமாக இருக்கும். எந்த விஷயத்திலும் டைமிங் என்பது மிகவும் முக்கியம். செயல்படுத்தப் போவதை அணுகுவது என்பது தோல்வி அல்ல. இறுதியில் பயன்தரக் கூடிய ஒன்று அது. சற்று தாமதமானாலும் மிகவும் முக்கியமானது அது. சில காரியங்களிலாவது கல்கத்தாவில் இருக்கும் தோழர்களின் இப்போதைய செயல்பாட்டை நாம் பார்க்கவே இல்லை என்று நடித்தால், ஒருவேளை எதிர்காலத்தில் வரலாறு நம் எல்லோரையும் குற்றவாளிகளின் கூண்டில் நிறுத்தி நீண்ட நேரம் விசாரிக்கும் சூழ்நிலை உண்டாகலாம். நாம் எல்லோரும் எப்போதும் இரண்டு மொழிகளில் பேசுவதில் திறமைசாலிகள். இல்லையா? நடைபாதையில் கைத்தட்டல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு பேச்சு. சற்று விலகி நின்று தனிப்பட்ட உரையாடல்களில் வேறொரு பேச்சு... அது ஒரு தந்திரமாக இருக்கலாம். எனினும் எவ்வளவு காலம் இந்த திருட்டு விளையாட்டை நடத்திக் கொண்டிருக்க முடியும்? அது இருக்கட்டும். யார் என்ன சொன்னாலும், பெரிய முடிவுகளை எடுக்கும் போது, உன்னை மட்டுமே நம்பியிருக்கும் ஆயிரத்தொரு குடும்பங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு வருத்தப்படுவதற்கான வாய்ப்பு வராது. இந்த கம்பெனியை அவர்கள் தந்திரமாக விற்றுவிட்டால் கம்பெனியின் வாசலில் பெரிய ஒரு நோட்டீஸ்... தொழிலாளிகளுக்கு தபாலில் வரும் காசோலைகள்... அத்துடன் எல்லாம் முடிந்துவிடும்.”

திடீரென்று தொண்டை தடுமாறியது. கண்களில் நீர் நிறைந்தது.

“அண்ணா, என்ன இது?”

“ஓ... பரவாயில்லை...”

கே.ஆர்.கே. கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“வயசாகிட்டு வருதுல்ல! ரத்தம் குளிர்ந்து போயிருக்கும்.”

ராகவன் வாசலில் கால் வைத்தபோது, திடீரென்று கே.ஆர்.கே. கேட்டார்:

“கேட்டுத் தெரிந்து கொண்ட கோஷங்களிலிருந்து கிடைத்த தாள உணர்வையாவது நம்மால் பத்திரமாகக் காப்பாற்றி வைக்க முடியாதா ராகவா?”

ராகவன் எதுவும் கூறவில்லை. சற்று சிரிக்க முயற்சித்தான். அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணி இரைச்சலை உண்டாக்கியபோது, கே.ஆர்.கே. என்னவோ சொல்ல முயற்சிக்க, அது அந்த பெரிய சத்தத்தில் கரைந்து போனது.

பைக் இரைச்சல் சத்தத்துடன் வாசலைக் கடந்து இருட்டுக்குள் மறைந்தபோது, அதன் பின்னால் இருந்த சிவப்பு வெளிச்சம் மறைந்து இல்லாமல் போவதை கே.ஆர்.கே. பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்.

திரும்பியபோது, பின்னால் ராதிகா.

“ராகவன் அண்ணன் என்ன சொன்னார்?”

“ஓ... சொல்றதுக்கு என்ன இருக்கு? இப்போது கயிறுகள் அவனுடைய கையில் இல்லை என்று தெரிகிறது. பின்னால் இருந்து கொண்டு கயிறை இழுப்பவர்களுக்கு அவர்களுடைய பல நோக்கங்கள் இருக்கும். ஒருவேளை சில தியாகிகளை உண்டாக்கினாலும் உண்டாக்கலாம். எது நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஆயிரம் குடும்பங்கள் என்று கூறும்போது, மிகவும் சுருக்கமாகப் பார்த்தால்கூட இரண்டாயிரத்து ஐந்நூறு வாக்குகள்! ஒரு சட்டமன்றத் தொகுதியை தலைகீழாகப் புரட்டி எடுக்க அது போதும். அது மட்டுமல்ல; ரத்தம் சிந்துவது எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகக்கூட இருக்கலாம்.”

“அப்படியென்றால் வி.பி. சொன்ன விஷயம்?”

ராதிகா தயங்கித் தயங்கி அதைக் கேட்டாள்.

“அது அங்கேயே இருக்கட்டும். நான் கொஞ்சம் சிந்திக்கணும்.”

“நாளைக்கு அவர் என்னை அழைத்துக் கேட்டால்...?”


“என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளச் சொல்.”

அதற்குப் பிறகு எதையும் கூறுவதற்கு நிற்காமல் அவள் சமைலறையை நோக்கி நடந்தாள்.

மீண்டும் சாய்வு நாற்காலியை நோக்கி...

சிறிது நேரம் கண்களை மூடி முகத்தைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

எதற்கும் ஆசைப்பட்டு இந்தத் துறைக்கு வரவில்லை. அப்படி ஆசைப்படக்கூடிய சூழ்நிலைகளும் அந்தக் காலத்தில் இல்லை. சில நண்பர்களின் சிறு சிறு சிரமங்களின் முடிச்சுகளை அவிழ்க்கக்கூடிய முயற்சியில் தன்னையே அறியாமல் இதற்குள் வந்து மாட்டிக் கொண்டார். காலப்போக்கில் அது ஒரு மாலையாக மாறியது. அவ்வளவு பெரிய காம்பவுண்டின் ஒவ்வொரு முக்கிலும் மூலையிலும் உண்டாகக்கூடிய ஒவ்வொரு சத்தத்தையும் காதுகளைக் கொடுத்துக் கேட்டார். செட்டியார்களின் காலத்தில் பழைய டெக்னாலஜியில் சில மாற்றங்களை உண்டாக்கி, நவீன தொழில்நுட்பம் வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறியது அவர்தான். அதற்காக எவ்வளவோ புத்தகங்களை அவர் படித்தார். குஜராத்தில் இருந்த இரண்டு கம்பெனிகளுக்குப் போய், அங்குள்ளவர்களுடன் நீளமான விவாதங்கள் நடத்தினார். ப்ளான்ட்டில் மின் சக்தியின் பயன்பாட்டைக் குறிப்பிட்ட அளவுக்கு குறைப்பதற்கான வழி கிடைத்தது அவர்களுடைய தொழில்நுட்ப அறிவில் இருந்துதான்.

அப்போது தியாகராஜன் செட்டியார் தமாஷாகக் கூறியது ஞாபகத்தில் வந்தது. “கே.ஆர்.கே. நீங்கள் மேனேஜராக இருக்க வேண்டிய ஆள். வழி தவறி வேறு எங்கோ போய்விட்டீர்கள்.”

அப்போது அவர் சொன்னார்:

“ஒரு யூனியனில் இருப்பவனால் நிர்வாகத்திற்கு ஏதாவது அளிக்க முடிகிறது என்றால் அது நல்ல விஷயம்தானே! கிரியேட்டிவிட்டி சிறிதும் இல்லாத வெறும் முரடர்கள் என்று எங்களை நினைத்து விட்டீர்களா?”

மேனேஜர் - அதை நினைத்தபோது சிரிப்பு வந்தது. அவர்களின் கண்களில் வர்க்க எதிரியான, குத்தகை முதலாளித்துவத்தின் தந்திரத்தனமான பின்னோக்கி இழுக்கும் செயல்.

அக்கவுண்ட்ஸில் முன்பு ராஜாராம் என்ற ஒரு இளைஞன் இருந்தான். உறுதியான கட்சித் தொண்டன். அவன் கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் கால்குலேட்டரைக்கூட பயன்படுத்த மாட்டான். விரல்களை மடக்கிக் கூட்டுவான், குறைப்பான். கால்குலேட்டரைப் பயன்படுத்துவது என்பது அழிவைத் தரும் இயந்திரமயமாக்குதலுக்கான ஆரம்ப கால்வைப்பு என்று அவன் உறுதியாக நம்பினான். ஸ்டோரில் முதல் தடவையாக இன்வென்டரி கணக்கைப் பத்திரமாக வைப்பதற்காக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கியபோது, எம்.டி.யின் அறைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவன் பயமுறுத்தினான். ஸ்டோரில் இயந்திர மயமாக்கலை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவருக்கு அவன்மீது பரிதாப உணர்ச்சிதான் தோன்றியது. ஸ்டடி வகுப்புகளில் யாரோ கற்றுத் தந்தது, அந்த அளவிற்கு அவனுக்குள் ஆழமாக நுழைந்திருந்தது.

“நேரம் எவ்வளவோ ஆயிடுச்சு. அப்பா சாப்பிடலையா?”

“ம்... சாப்பிட வேண்டியதுதான்.”

கே.ஆர்.கே. மெதுவாக எழுந்தார். வாஷ் பேஸினை நோக்கி நடந்தபோது, கால் இடறியதைப்போல இருந்தது. ராதிகா அவரைப் பிடித்துத் தாங்கிக் கொண்டு நிறுத்தினாள்.

“என்ன அப்பா?”

“ஒண்ணுமில்லை...”

“முடியலைன்ற மாதிரி இருக்கா?”

அவர் முகத்தைக் கழுவிவிட்டு, மேஜைக்கு அருகில் வந்து உட்கார்ந்தார்.

“ராதிகா தட்டில் கஞ்சியைப் பரிமாறினாள்.

“அப்பா, ஏன் இப்படி தலையைப் புண்ணாக்குகிறீர்கள். இவ்வளவு காலமா சுமந்து கொண்டு நடந்தீங்கள்ல! இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டுமே!”

“உனக்கு அது புரியாது மகளே. என் கண்களுக்கு முன்னால்தான் கம்பெனி வளர்ந்து இந்த நிலைமைக்கு வந்தது. சொல்லப்போனால் நீ வளர்ந்ததைவிட வேகமாக... சரஸ்வதி கூறுவதைப்போல ஒரு காலத்தில் எனக்கு உங்கள்மீது இருந்ததை விட நெருக்கம் கம்பெனியுடன்தான் இருந்தது. முதல் உற்பத்தியின் முதல் கன்சைன்ட்மென்ட்டை வெளியே அனுப்பி வைத்த நாளன்று உண்டான சந்தோஷத்தை இப்போதுகூட நினைத்துப் பார்க்கிறேன். பல நாட்களின் உழைப்பால் உண்டான பலன்... அதை மார்க்கெட் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்... சொல்லப் போனால் உன்னுடைய பிஞ்சு முகத்தை முதல் முறையாகப் பார்த்தபோதுகூட மனதிற்குள் அந்த அளவிற்கு துள்ளிக் குதித்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.”

ராதிகா எதுவும் பேசவில்லை.

கே.ஆர்.கே. சிறிது நேரம் அதே நிலையில் உட்கார்ந்திருந்தார்.

தான் எல்லாம் தந்து வளர்த்த யூனியனைச் சேர்ந்தவர்கள் இப்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடன் உரையாடல் நடத்துவதற்குக்கூட தயாராக இல்லையே! நம்பியாருக்கு நேரம் கிடைப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்!

எதுவும் சாப்பிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. சிறிது கஞ்சியை அள்ளிக் குடித்துவிட்டு, கே.ஆர்.கே. எழுந்தார். ஒரு பீடியைப் பற்ற வைத்தவாறு, முன்னால் இருந்த அரைத் திண்ணையில் போய் உட்கார்ந்தார்.

சுற்றிலும் அடர்த்தியான இருட்டு. வானத்தில் ஒரு நட்சத்திரம்கூட இல்லை. மழை மேகம் மூடியிருப்பதைப் போல இருந்தது. அதிகமான புழுக்கம் இருந்தது.

மீன மாதத்தின் இறுதியில் ஒரு மழை எப்போதும் இருக்கும்- அவர் நினைத்தார். எப்போது மழை பெய்யும்? ஒருவேளை இன்று இரவு... இல்லாவிட்டால் நாளை.

ஒருவேளை மழை பெய்தால், வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

வேலியைத் தாண்டி இருந்த நிலத்தில் இருந்த தவளைகள் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தன.

வானத்தின் தெற்கு மூலையில் சிறிய ஒரு மின்னல். அத்துடன் மெல்லிய காற்றும்...

ஒருவேளை மழை பெய்யலாம். பெய்யாமல் இருக்காது. மீன மாதத்தின் இறுதியில் மழை...

அவர் காத்திருந்தார்.

4

கே.ஆர்.கே. மனக் குழப்பத்துடன் இருந்தார். இருண்டு வந்து கொண்டிருந்த சாயங்கால வேளையில் ஊன்றுகோலைப் பிடித்தவாறு கால்களை இழுத்து இழுத்து வாசலில் அங்குமிங்குமாக அவர் நடந்து கொண்டிருந்தார்.

ராதிகா நடைக் கல்லை தாண்டி அரைத் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள்.

நம்பிக்கை வராததைப்போல அவர் இன்னொரு முறை கேட்டார்.

“அப்படியென்றால் அவர்கள் போருக்குத் தயாராகிவிட்டார்கள். அப்படித்தானே?”

ராதிகா முனகினாள். அவள் சொன்னாள்:

“கேட்டிற்கு அருகில் ஏராளமான கொடிகளும் தோரணங்களும் இருக்கின்றன. போராட்டம் நடைபெறும் பந்தலை உண்டாக்கத் தொடங்கி விட்டார்கள். சாயங்காலம் நான் புறப்பட்டபோது, மொத்தத்தில் ஒரு திருவிழாவிற்கான சூழ்நிலை உண்டாகிவிட்டிருந்தது.”

“திருவிழா பந்தலின் கால் நடும் நிகழ்ச்சியை நடத்துவது யாராக இருக்கும்? போருக்கான நேரத்தை முடிவு செய்தது யாராக இருக்கும் என்பது தெரியும்.”

தன்னுடைய குரல் வெளியே கேட்காமல் இருக்க மிகவும் சிரமப்பட்டார் அவர்.

“வி.பி. இன்றும் என்னை அழைத்தார்.”

“என்ன சொன்னார்?”

“அவர் சத்தம் போட்டுப் பேசினார். இப்போ மிகவும் தாமதமாயிடுச்சாம். இனிமேலும் தாமதமானால் அப்பா... உங்களின் அப்பீலுக்கான தேவையே இருக்காது என்று சொன்னார். நான் எதுவும் பேசவில்லை. அவர் சொன்னதை ‘உம்’ கொட்டி காதில் வாங்கினேன்.


கே.ஆர்.கே. மெதுவான குரலில் முனகினார்.

“ராகவன் அண்ணன் அதற்குப் பிறகு என்னவோ கேட்பதற்காக...” - தன் தந்தையின் முக வெளிப்பாடு மாறுவதைப் பார்த்ததும், ராதிகா தான் கூற வந்ததை உடனடியாக நிறுத்தினாள்.

“இனிமேல் நான் அவர்களுக்குத் தேவையில்லை மகளே. போர்க்களத்தில் குதிப்பதற்குத் தயாராக நின்று கொண்டிருப்பவர்களுக்கு வழியைத் தடுக்கும் கிழவன் ஒரு தொல்லையாகத்தான் தெரிவான். பெரிய ஒரு தவறு...”

இருட்டு நன்கு பரவிவிட்டிருந்தது.

கே.ஆர்.கே. திண்ணையில் ஏறி தூணில் சாய்ந்து உட்கார்ந்தார்.

புழுக்கம் அதிகரித்து விட்டிருந்தது. கார்மேகங்கள் சூழ்ந்திருந்த ஆகாயத்தில் மழை வருவதற்கான அறிகுறி தோன்றி சில நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் மழை இதுவரை பெய்யவில்லை. மீன மாதத்தின் இறுதியில் திடீரென்று பெய்யும் மழை...

“மகளே! அந்த டேப் ரெக்கார்டரைக் கொஞ்சம் இங்கே எடுத்துக் கொண்டு வா.”

ராதிகா அதைக் கொண்டு வந்து, முன்னாலிருந்த சுவரில் காணப்பட்ட ப்ளக்கில் சொருகி, ‘ஆன்’ செய்தாள். தீம் சென் ஜோஷியின் அருமையான குரல்... புகழ்பெற்ற ஒரு இந்துஸ்தானி ராகம். ‘இதற்கு முன்னால் நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன்’ - அவர் நினைத்துக் கொண்டார்.

உயரங்களில் - யாராலும் போய்ச் சேர முடியாத இடங்களில் ஒரு நனைந்த இறகைப்போல பறந்து திரியும் போது, நான்கு பக்கங்களிலும் ஆகாயத்தின் எல்லைகள் இல்லாமல் போய்விடுகின்றன. இல்லாத சிறகுகளை வீசிக்கொண்டு அவர் பறந்து போகிறார்.

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அதே இடத்தில் உட்கார்ந்தார். சுற்றிலும் இரவு மேலும் அதிகமாகக் கறுத்ததையும், தெற்கு மூலையிலிருந்து இளம் உஷ்ணத்தைக் கொண்ட சிறிய ஒரு காற்று வீசிக் கொண்டிருப்பதையும் அவர் உணரவில்லை. கண்களை மூடிக்கொண்டு, காதுகளை அடைத்துக்கொண்டு, ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருந்த அந்த நிலை நீண்ட நேரம் தொடர்ந்தது. வழி தெரியாமல் இருக்கும்போது, வெளிச்சத்தின் ஒரு கீற்றாவது தெரியாதா என்பதற்காக இப்படி சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு அவர் பல நேரங்களிலும் உட்கார்ந்து கொண்டிருப்பதுண்டு. தியானம்? இருக்கலாம். யாருக்குத் தெரியும்? என்ன பெயரைச் சொல்லி அழைத்தாலும் புலன்களின் எல்லா வாசல்களையும் இறுக மூடிக் கொண்டு மனதை தனக்கே தெரிந்திராத புள்ளியில் கொண்டு போய் நிறுத்தி அமர்ந்திருக்கும் அந்த நிலை... அது சில வேளைகளில் நீண்ட நேரம் நீடிக்கவும் செய்யும். எல்லாம் முடிந்ததும், மிகப்பெரிய பனிமலை உருகி முடித்ததைப்போல - உள்ளுக்குள் பாரம் இறங்கியிருப்பதைப்போல தோன்றும். அதுவரை உணர்ந்திராத ஏராளமான சாளரங்கள் திறந்து கிடப்பதைப்போல இருக்கும். ஆனால் இப்போது என்ன காரணத்தாலோ மனதிற்குள் ஒரேயடியாக பதட்டம் காணப்பட்டது. அது தேவையற்ற ஒன்று என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு நாட்கள் மனதிற்குள் தியானம் செய்தது வெறும் ஒரு சங்கத்தைப் படைப்பதற்காக அல்ல. கவனிக்காமல் விடப்பட்டுக் கிடந்த பல மனிதர்களுக்கு அவர்களுடைய திறமையைப் பற்றிக் கூறி புரிய வைப்பதற்குத்தான். இங்கு வேண்டியது முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்திருந்த சில பழைய தத்துவ சாத்திரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது அல்ல. அதற்கு மாறாக, அவற்றுக்கு இருக்கும் புதிய மதிப்பைக் கண்டுபிடிப்பதுதான். அதற்குத் தேவை சில அடிப்படையான உணர்ச்சிகள். அன்பு, ஏராளமான அன்பு, கருணை, எல்லாவற்றுக்கும் மேலாக சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் வாஞ்சை, எம்பதி... எம்பதிதான்.

கே.ஆர்.கே. கண்களைத் திறந்தார். திண்ணையை விட்டு இறங்கினார். வாசலை நோக்கி நடந்தார்.

“மகளே!” - அவர் மெதுவான குரலில் அழைத்தார்.

“என்ன அப்பா?” - ராதிகா அவரை நெருங்கி வந்தாள். அவள் டேப் ரெக்கார்டரை ‘ஆஃப்’ செய்து கழற்றி எடுத்தாள்.

சிறிது நேரத்திற்கு எதுவும் பேச முடியாமல் அவர் முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

“என்ன அப்பா?”

“சுவர் அலமாரியின் மூலையில், அந்தப் புட்டியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்.”

அவர் தயங்கித் தயங்கித்தான் அதைச் சொன்னார்.

ராதிகாவால் சிறிதுகூட நம்ப முடியவில்லை. அதை நிறுத்தி எவ்வளவு காலம் ஆகிவிட்டது! மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால் பழைய ஒரு நண்பரான குமாரன் அண்ணன் இதைப் போன்ற ஒரு மாலை நேரத்தில் ஒரு பொட்டலத்துடன் வந்தபோது, உடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குவளை குளிர்ந்த நீருடன் அவருடைய தந்தை நீண்ட நேரம் அவருடன் உட்கார்ந்திருந்தார்.

“அன்று குமாரன் கொண்டு வந்ததில், மீதி இருக்கும்” - அவர் மீண்டும் சொன்னார்.

மென்மையான குரலில் கெஞ்சுகிற மாதிரி.

ராதிகா சுவர் அலமாரியைத் திறந்தாள். பத்திரிகைத் தாளில் சுற்றப்பட்டு, ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த புட்டியில் இன்னும் கொஞ்சம் மீதம் இருந்தது.

ஒரு சிறு குழந்தையின் சந்தோஷத்துடன் கே.ஆர்.கே.யின் கண்கள் மலர்வதைப் பார்த்தபோது ராதிகாவின் உள்மனம் கலங்கியது. தேவையில்லாதது. மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பித்து வைத்தால், ஒருவேளை இனிமேல் பிடியை விட்ட போக்கில் அவர் போனாலும் போய்க் கொண்டிருக்கலாம். குறிப்பாக வேறு எதுவும் செய்வதற்கு இல்லை என்ற சூழ்நிலையில்.

அவள் எதுவும் பேசாமல் ஒரு பாத்திரத்தில் நீருடனும் தட்டில் வறுத்த பலாத் துண்டுகளுடனும் மேஜைக்கு அருகில் வந்தாள்.

“உனக்கு புரியவில்லை” - கே.ஆர்.கே. சொன்னார்: “இவ்வளவு கால பொதுப் பணிக்குப் பிறகு முதல் தடவையாக நான் ஒரு கெட்ட செயலை செய்யப் போகிறேன். ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியின் தலைகீழான செயலைப்போல... அப்படித்தானே? நிறைய சிந்தித்த பிறகுதான்... மனதிற்குள் நீண்ட நேர சிந்தனையும் போராட்டங்களும் முடிந்திருக்கின்றன. என்னுடைய இந்தக் கைகளால் உண்டாக்கிய யூனியன்... உன்னைவிட அதிகமாகக் கொஞ்சியது அதைத்தான். என்னுடைய நல்ல இளமை முழுவதையும் அதற்குத் தாரை வார்த்தேன். எனக்கு அதைப் பற்றி வருத்தம் இல்லை. எதற்கும் ஆசைப்பட்டு நான் அதை செய்யவில்லையே! இது துரோகம் என்று எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும் என்னுடைய நேர்மையை நம்பி இவ்வளவு காலமாக என்னுடன் நின்ற கொஞ்சம் பேரிடமாவது உண்மையைத் திறந்து கூற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது அல்லவா?”

குவளையில் முதலில் ஊற்றியது முழுவதையும் அவர் ஒரே மடக்கில் குடிப்பதை ராதிகா தாங்க முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.


“எனக்குத் தெரியும் மகளே. இது பெரிய ஓசையை உண்டாக்கும். கோவிந்தன் குட்டி கணக்கு போடுவதைப் போல யூனியனில் பிளவை ஏற்படுத்தலாம். அந்த ஆளுக்கு தேவைப்படுவது அதுதான் என்று எனக்குத் தெரியும். கொஞ்சம் பேர்களையாவது மெனேஜ்மெண்டை ஆதரிக்கும், பொய்க் காலில் நின்று கொண்டிருக்கும் யூனியனின் பக்கம் இழுப்பது... ஆனால் இது கோவிந்தன் குட்டிக்காக அல்ல, யூனியனுக்காக அல்ல, எனக்காகக்கூட இல்லை... நீ நினைக்கலாம்... என்னுடைய அந்த பெரிய இமேஜுக்கு என்ன நடக்கும் என்று. என்ன இமேஜ்!, ஃபூ...!”

அவர் மீண்டும் குவளையை நிறைப்பதைப் பார்த்தவாறு சுவரில் சாய்ந்து, மரத்துப் போனதைப் போல மகள் நின்றிருந்தாள்.

நிகழ்ச்சிகளில் அவர்கள் என்னை எப்படிக் குறிப்பிடுவார்கள்? ட்ரேட் யூனியன் துறையின் பீஷ்மாச்சாரியார் என்று... அப்படித்தானே? ஃபூ...! என்ன அர்த்தமில்லாத வார்த்தை. இல்லாவிட்டால்... ஒரு அர்த்தத்தில் அது சரிதான். இரண்டு கால்களில் ஆண்களைப் போல நிமிர்ந்து நிற்க முடியாமல், என்னை இங்கு அம்புகளாலான படுக்கையில் படுக்க வைத்திருக்கிறார்களே!”

சாளரத்தின் வழியாக சிறிய ஒரு காற்று உள்ளே வந்து கொண்டிருந்தது.

“கதவை நன்றாகத் திறந்து வை. காற்று உள்ளே வரட்டும். என்னவொரு வெப்பம்!” - அவர் முணுமுணுத்தார்.

சிவப்பு நிற திரவத்தின் இறுதித் துளியும் தீர்ந்தவுடன், அவர் முகத்தைத் துடைத்துக்கொண்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தார். நாற்காலியை மேஜைக்கு அருகில் கொண்டு வந்தார். அந்த தாளை விரித்து அதன்மீது கண்களை ஓட்டினார்.

“கோவிந்தன் குட்டியின் ஒரு கிளிப் பேச்சு!” - அவர் முணுமுணுத்தார். “அந்த உயிரற்ற வரிகள் மூலமாக அந்த ஆள் அப்பிராணித் தொழிலாளர்களின் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்ய பாடுபடுகிறார். இங்கு வேண்டியது அது அல்ல. உண்மையை அப்படியே திறந்து கூற வேண்டியதுதான் தேவை. ஒவ்வொருவனுக்கும் புரியக்கூடிய தெளிவான மொழியில்... எந்தவொரு கருத்தையும் அவர்கள் மீது படைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறிய முன்னெச்சரிக்கைகூட கொடுக்க வேண்டியதில்லை. காரியங்களை அதன் சரியான நிலையில் வைத்து மதிப்பிட்டு, தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் அவர்கள்தான். புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலை அவர்களுக்குத் தருவதற்காகத்தானே நான் இவ்வளவு காலமாக பாடுபட்டிருக்கிறேன்!”

அவர் சற்று நிறுத்தினார்.

சிறிது நேரம் கண்களை மூடி உட்கார்ந்து இருந்துவிட்டு, அவர் பேனாவைக் கையில் எடுத்தார். தாளில் உயிரற்ற வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தார்.

நீண்ட நேரம் ஆனதும் மேஜைமீது கையை ஊன்றி எழுந்தவாறு அவர் சொன்னார்:

“மகளே, சாப்பிட்டு முடித்து படு.”

“அப்பா, நீங்க சாப்பிடலையா?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம். நான் படுக்கணும்...”

“அதைக் குடிச்சிட்டு, எதுவும் சாப்பிடாமல் படுத்தால்...”

“பரவாயில்லை...”

“கொஞ்சம் கஞ்சியாவது...”

அவர் ‘வேண்டாம்’ என்று தலையை ஆட்டினார்.

படுக்கையறையை நோக்கிப் போகும்போது தளர்ந்த குரலில் அவர் சொன்னார்:

“கோவிந்தன் குட்டிக்குத் தேவைப்பட்ட தாளை அந்த கவருக்குள் வைத்திருக்கிறேன். நாளைக்கே கொடுத்திடு.”

விளக்கை அணைத்துவிட்டு அவர் படுத்தார்.

ஜன்னல் கம்பிகள் பிரித்து விட்டிருக்கும் கறுத்த இரவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அவர் படுத்திருந்தார். மேற்கு திசையிலிருந்து காற்று அடித்து உள்ளே வந்து கொண்டிருந்தது. காற்றில் சிறிய அளவில் குளிர்ச்சி கலந்திருப்பதாகத் தோன்றியது. எங்கோ மழை விழுந்து கொண்டிருக்கலாம்.

வெளியிலிருந்து ஜன்னலின் திரைச்சீலைகளைப் பறக்க விட்டவாறு வந்த காற்றில் ஐந்தாறு நீர்த்துளிகள் வேகமாக வந்து முகத்தில் விழுந்தது. மீன மாதத்தின் இறுதியில் மழை... விஷூ வருவதற்கு முன்பாக ஒரு மழை...

செடிகளில் ஒட்டியிருந்த மின்மினிப் பூச்சிகள் காற்றின் வேகத்தில் தெறித்துப் போவதை அவர் பார்த்தார். வெளிச்சப் பொட்டுகள் நான்கு திசைகளிலும் சிதறுகின்றன. புதர்களில் மறைந்திருந்த ஏராளமான சிறுசிறு காற்று வீசி வரும்போது, அதன்மீது நீர்த்துளிகள் சிதறி விழத் தொடங்கின.

எங்கோ ஜன்னல் கதவுகள் பெரிய ஒரு சத்தத்துடன் மூடுகிறது. காதுகளில் காற்றின் பெருகி வரும் இரைச்சல். இடைவேளைகளில் நீர்த்துளிகள் உள்ளே தெறித்து விழுகின்றன. இருளின் நரைத்த புடவைகளைப் பறக்க விட்டவாறு, இரண்டு மடங்கு அதிகமான உற்சாகத்துடன் காற்று உள்ளே வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழையும்...

ஓட்டின்மீது தப்புத் தாளங்களுடன் மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது, கே.ஆர்.கே. மெதுவாகத் தன் கண்களை மூடினார். கொஞ்சம் உறங்க வேண்டும்...

அந்த நிலையில் எப்போதோ அவர் உறங்கிவிட்டார். பாரம் அதிகமாக இருந்த தலைக்குள்ளே இருந்து முளைத்த ஏராளமான பயங்கர கனவுகள் அப்போது அவரை வேட்டையாட ஆரம்பித்தன.

பெரிய ஒரு கூச்சலுடன் அவர் திடுக்கிட்டு எழுந்தார். கண்களைத் திறந்து பார்த்தபோது, சுற்றிலும் அடர்த்தியான இருட்டு... மின் விசிறி சுழலவில்லை. மின்சாரம் போயிருக்க வேண்டும். உடம்பு வியர்வையில் குளித்திருந்தது. பனியன் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது.

வெளியே மழை நின்று விட்டிருந்தது. காற்று சிறிதும் இல்லை. குளிர்ச்சி நிறைந்த காற்று சுற்றிலும் நின்றிருந்தது. தன்னுடைய உடல் மெல்ல நடுங்குவதை அவர் உணர்ந்தார். பயமுறச் செய்யும் பல காட்சிகள் வழியாக அவர் இவ்வளவு நேரமாக கடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என்னவெல்லாம் பார்த்தார்? ஒரு முழுப் பிறவியிலும் பார்த்து முடிக்க முடியாத காட்சிகள்... உடம்பெங்கும் ஒரு நூறாயிரம் முறிவுகளும் காயங்களும்... நகர்ந்து செல்ல முயற்சிக்கும்போது, நீலம் படர்ந்த இடங்களில் ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. அவர் தலையைத் தடவினார். கனவுகளின் கட்டுகளில் இருந்து விடுபட்டு, தன்னை இறுகக் கட்டியிருக்கும் இருண்ட நிழல்களில் இருந்து விலகி ஓடப் பார்த்தார்.

அவர் மெதுவாக எழுந்தார். கட்டிலின் தலைப் பகுதியில் வைத்திருந்த ஊன்றுகோலைத் தடவி எடுத்துக் கொண்டு, நிமிர்ந்து நிற்க முயற்சித்தார். கால் தரையில் நிற்க மறுத்தது. உடல் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டிருந்தது.

ஒரு கையால் இருட்டைத் தடவியவாறு வாசலை நோக்கி நகர்ந்தபோது எதிலோ மோதினார். பெரிய ஒரு சத்தத்துடன் சுவருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்டூல் சாய்ந்து விழுந்தது. அத்துடன் பருகுவதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் இருந்த புட்டியும் உடைந்து சிதறியது.

தட்டுத்தடுமாறி அவர் ஒரு விதத்தில் கதவிற்கு அருகில் வந்தார். படிகளில் கால்களை கவனமாக எடுத்து வைத்து முன்னறைக்கு வந்தார்.

மேஜைக்கு அருகில் வந்தபோது, திடீரென்று பின்னால் மங்கலான வெளிச்சம் தெரிந்தது.

“அப்பா, இந்த இருட்டுல ஏன் எழுந்து போறீங்க? அங்கே என்ன விழுந்தது?”

பின்னால் சிம்னி விளக்குடன் ராதிகா நின்றிருந்தாள். அவளுடைய முழுமையான பதைபதைப்பு நிறைந்த குரல்...


“ஒண்ணுமில்ல...” - அவர் எதையோ மறைக்க முயற்சிப்பதைப்போல சொன்னார்.

அதற்குள் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் அவர் மேஜை மீது இருந்து அந்த கவரை எடுத்து வைத்திருந்தார்.

ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், ராதிகா திகைத்துப் போய் நிற்க, அவர் அந்தக் கடிதத்தை எடுத்து பல துண்டுகளாகக் கிழித்து, சுருட்டி ஒன்று சேர்த்து ஜன்னல் கம்பிகளுக்கு நடுவில் இருந்த இடைவெளி வழியாக அவற்றை வெளியே எறிந்தார்.

ராதிகா கூறுவதற்கு எதுவும் இல்லை. தொண்டை வறண்டு போயிருந்தது.

கே.ஆர்.கே. திரும்பி சுவரைப் பிடித்துக் கொண்டார். அவருடைய முகம் அப்போது இருட்டில் இருந்தது.

“மகளே போய்ப் படு. இனிமேல் நான் கொஞ்சம் உறங்கணும் சுகமாக...”

அப்போது அவருடைய குரல் முற்றிலும் உணர்ச்சிகளற்று இருந்தது.

தொடர்ந்து அவர் தன் கால்களை இழுத்தவாறு படுக்கையறையை நோக்கி நடந்தார்.

ராதிகா அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருக்க, திடீரென்று வெளிச்சம் வந்தது. பெரிய ஒரு சத்தத்துடன் மின் விசிறிகள் சுழல ஆரம்பித்தன.

ராதிகா சிம்னி விளக்கை ஊதி அணைத்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.