Logo

அந்த நாள் ஞாபகம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6025
Antha Naal Gnabagam

சுராவின் முன்னுரை

நான் மொழிபெயர்த்த முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பு ‘அந்த நாள் ஞாபகம்’.  இது கதை அல்ல; வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு. உலகப் புகழ் பெற்ற இலக்கியவாதியான தாஸ்தாயெவ்ஸ்கியிடம் (Dostoevsky) ஸ்டெனோ க்ராஃபராக வேலைக்குச் சேர்ந்த அன்னா (Anna) எழுதிய நூல் இது.

இளம் பெண்ணான அன்னாமீது நடுத்தர வயதைத் தாண்டிய- உடலில் பல நோய்களையும் கொண்ட – பலவகைப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தாஸ்தாயெவ்ஸ்கி கொண்ட காதலை மையக் கருவாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூலை நான் மிகுந்த ஈடுபாட்டுடன் மொழி பெயர்த்திருக்கிறேன்.

அன்னாவைப் போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட – இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண் நமக்கு காதலியாகக் கிடைக்கமாட்டாளா என்று தாஸ்தாயெவ்ஸ்கி ஏங்கியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

தாஸ்தாயெவ்ஸ்கிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அன்னாமீது இந்த நூலைப் படிக்கும் எல்லாருக்கும் ஒரு நெருங்கிய ஈடுபாடு உண்டாகும் என்பது மட்டும் நிச்சயம். இந்நூலை மொழி பெயர்த்ததற்குக் காரணமே அதுதான்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


1866,அக்டோபர் 3-ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு வழக்கம்போல் பி.எம். ஆல்கின் என்ற ஸ்டெனோக்ராஃபி ஆசிரியரின் வகுப்பிற்கு நான் சென்றேன். வகுப்பு இன்னும் ஆரம்பிக்கவில்லை. தாமதமாக வரும் மாணவர்களுக்காக அங்கிருந்தவர்கள் காத்திருந்தார்கள். நான் எப்போதும் உட்காரும் இடத்தில் அமர்ந்து என்னுடைய எழுதும் உபகரணங்களை வெளியே எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆல்கின் என்னருகில் வந்து நின்றார். நான் அமர்ந்திருந்த பெஞ்சில் எனக்குப் பக்கத்தில் அவர் அமர்ந்தார்.

“ஸ்டெனோக்ராஃபரா வேலை செய்ய உனக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. பண்ணுறியா?” அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். “ஒரு ஸ்டெனோக்ராஃபரோட உதவி எனக்குத் தேவைப்படுதுன்னு ஒரு ஆளு என்கிட்ட சொன்னாரு. அந்த வேலைக்கு நீ சரியா இருப்பேன்னு நான் நினைக்கிறேன்.”

“உண்மையிலேயே அப்படி ஒரு வேலையில் சேர்றதுக்கு நான் ரொம்பவும் ஆர்வமா இருக்கேன். ஒரு வேலையில் சீக்கிரம் சேரணும்ன்றதுதான் என்னோட திட்டமும். நான் இப்படியொரு வாய்ப்புக்காக எவ்வளவு காலமா காத்திருக்கேன் தெரியுமா? அந்த அளவுக்கு முழுமையா அந்த வேலையைச் செய்யிற அளவுக்கு நான் இந்த விஷயத்துல பயிற்சி பெற்றிருக்கிறேனான்றதுலதான் எனக்குச் சந்தேகமா இருக்கு.” -நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.

நான் இதுவரை ஸ்டெனோக்ராஃபியில் பெற்றிருக்கும் பயிற்சியே இப்போது நான் சேரப்போகும் வேலைக்குப் போதுமானது என்று சொன்னார் ஆல்கின்.

“நான் யாரிடம் வேலைக்குப் போறேன் சார்?” நான் கேட்டேன். “எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கிக்குத்தான் ஒரு ஸ்டெனோக்ராஃபர் தேவைப்படுது. ஒரு சுருக்கெழுத்து தெரிஞ்ச பெண்ணின் உதவியுடன் அவர் கதை எழுத விரும்புறாரு. சம்பளமா ஐம்பது ரூபிள் தருவார்.” ஆல்கின் சொன்னார்.

மிகவும் ஆர்வத்துடன் இந்த வேலையை நான் ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொன்னேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே எனக்கு மிகவும் நன்றாக அறிமுகமான ஒரு பெயர் தாஸ்தாயெவ்ஸ்கி என்பது. சொல்லப் போனால் நான் அவரின் தீவிர ரசிகை. என் தந்தைக்குக்கூட தாஸ்தாயெவ்ஸ்கி என்றால் உயிர். "மரண வீடு' என்ற அவரின் புதினத்தைப் படித்துவிட்டு குலுங்கிக் குலுங்கி நான் அழுதிருக்கிறேன். புகழ் பெற்ற ஒரு பெரிய எழுத்தாளருடன் அறிமுகமாகப் போகிறோம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவரின் படைப்புகளுடன் நேடியாகத் தொடர்பு கொள்வதற்கான அருமையான வாய்ப்பு. எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.

தாஸ்தாயெவ்ஸ்கியின் முகவரி எழுதப்பட்ட துண்டுச் சீட்டை ஆல்கின் எனக்கு முன்னால் நீட்டினார். அவர் சொன்னார்: “நாளைக்கு காலையில் பதினொண்ணரை மணிக்கு நீ தாஸ்தாயெவ்ஸ்கியோட வீட்டுல இருக்கணும். தாமதமா போயிடாதே. அதற்காக சொன்ன நேரத்துக்கு முன்னாடியும் போயிட வேண்டாம். அப்படித்தான் அவர் என்கிட்ட இன்னைக்குச் சொன்னாரு!”

கடிகாரத்தைப் பார்த்தவாறு ஆல்கின் தன்னுடைய மேஜைக்கு அருகில் போனார். அன்றைய வகுப்பில் எந்த விஷயத்திலுமே என் கவனம் போகவில்லை என்பதே உண்மை. இறுதியில் எத்தனையோ ஆண்டுகளாக நான் மனதில் நினைத்திருந்த ஒரு விஷயம் நடக்கப் போகிறது. எனக்கொரு வேலை கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி தரக் கூடிய அந்த விஷயத்தையே நான் திரும்பத் திரும்ப மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அதிகம் பேசாத எங்களின் ஸ்டெனோ க்ராஃபி ஆசிரியரான ஆல்கின்கூட சுருக்கெழுத்தில் எனக்கு இருக்கும் வேகத்தை மனம் திறந்து பல முறை பாராட்டியிருக்கிறார். என்னுடைய திறமையைப் பற்றி அவருக்கு இருந்த நல்லெண்ணம் காரணமாகவே அவர் தாஸ்தாயெவ்ஸ்கியிடம் என் பெயரைச் சிபாரிசு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அவர் தலையிடவே மாட்டார். நான் இதை நினைக்க நினைக்க என் திறமைமீது எனக்கே அதிக நம்பிக்கை வந்தது.

இப்போது என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சொந்தத் திறமையைக் கொண்டு பணம் சம்பாதிக்கிற அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்பதையும் தெரிந்து கொண்டேன். அதாவது- வாழ்க்கையில் ஒரு சுதந்திரப் பறவையாக மாறப்போகிறேன். விலை மதிக்க முடியாத இலட்சியமாக நான் மனதில் பூட்டி வைத்திருந்த ஒரு எண்ணம் அது. எல்லாவற்றையும்விட எனக்கு ஆச்சரியத்தையும் மன மகிழ்ச்சியையும் தந்த விஷயம் என்ன தெரியுமா? நான் சிறு பிராயத்திலிருந்து விரும்பிப் படிக்கும் எழுத்தாளரான தாஸ்தாயெவ்ஸ்கியின் அறிமுகம் நமக்குக் கிடைக்கப் போகிறது- அவருடன் இணைந்து படைப்புகள் உண்டாக்குவதில் நாமும் பங்களிக்கப் போகிறோம் என்பதுதான்.

கொஞ்சம்கூட எதிர்பார்க்காமல் என்னைத் தேடி வந்த அந்த வேலை வாய்ப்பை, வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் என் தாயிடம் சொன் னேன். நான் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று மனப் பூர்வமாக ஆசைப்படும் என் தாயருக்கு நான் சொன்ன செய்தி மிகவும் சந்தோஷத்தைத் தந்தது. இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. பலவித எண்ணங்களுடன் கண்களை மூடாமல் விழித்தே படுத்துக் கிடந்தேன். தாஸ்தாயெவ்ஸ்கி நேரில் பார்க்க எப்படி இருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். அவரைப் பற்றி பல்வேறு மாதிரி கற்பனை பண்ணிப் பார்த்தேன். அவர் என் தந்தையின் காலத்தைச் சேர்ந்த மனிதர் என்பதால், என் தந்தையின் வயதுதான் அவருக்கும் இருக்கும் என்று நான் கணக்கு போட்டேன். ஒரு நிமிடம் அவரை ஒரு வழுக்கைத் தலையைக் கொண்ட மனிதராக கற்பனை பண்ணி னேன். இன்னொரு நிமிடம் சற்று மெலிந்து ஒல்லியாகத் தெரியும் ஒரு மனிதராக அவரை நினைத்துப் பார்த்தேன். ஆனால் எப்படிஅவரை கற்பனை பண்ணிப் பார்த்தாலும், தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் மட்டும் பிரகாசமானதாகத் தோன்றியது. காரணம்- ஆல்கின் அவரைப் பற்றி என்னிடம் சொன்ன சில வர்ணனைகள். எல்லாவற்றையும்விட என்னிடம் சஞ்சலம் உண்டாக்கிய விஷயம்- தாஸ்தாயெவ்ஸ்கியுடன் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி நான் உரையாடுவது?அவரின் புதினங்களில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களைக்கூட நான்- சொல்லப்போனால்- மறந்துவிட்டிருந்தேன். தன்னுடைய படைப்புகளைப் பற்றி நிச்சயம் பேசுவார். என்னுடைய நண்பர்கள் வட்டத்தைப் பொறுத்தவரை சொல்லிக் கொள்கிற மாதிரி எழுத்தாளர்களாகவோ இல்லாவிட்டால் வேறு ஏதாவது கலை சம்பந்தப்பட்ட மனிதர்களாகவோ யாரும் இல்லை என்பதே உண்மை. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை ஒரு பிரத்யேக விசேஷப் பிறவிகளாக நினைத்தேன். அவர்களுடன் பேசுவது என்றால் அதற்கென தனியான ஒரு மொழிநடை வேண்டும். இப்போது அந்த நாட்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால் எவ்வளவு சிறு பிள்ளைத்தனமாக நான் சிந்தித்திருக்கிறேன் என்று எனக்கே வெட்கமாக இருக்கிறது.


2

றுதியில் அந்த நாள் வந்தது. மிகவும் உற்சாகத்துடன் படுக்கையை விட்டு நான் எழுந்தேன். அக்டோபர் 4. என் எதிர்கால கணவரான தாஸ்தாயெவ்ஸ்கியை முதல் தடவையாக நான் சந்தித்த நாள் அது. நான் சிறு வயது முதல் மனதில் கனவு கண்டு கொண்டிருந்த ஒரு விஷயம் நடைமுறையில் சாத்தியமான நாள் அது. வெறும் மாணவியாக மட்டும் இதுவரை இருந்த ஒரு பெண், இன்று முதல் ஒரு பணி செய்யும் பெண்ணாக மாறப்போகிறாள். தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு வேலையில் அவள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறாள்.

நான் நல்ல நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியே இறங்கி னேன். புதிதாக சில எழுதுபொருட்களை வாங்க வேண்டும், ஒரு புதிய ப்ரீஃப்கேஸ் வாங்க வேண்டும் என்பதையும் மனதில் கொண்டேன் அது என் கையில் இருக்கும் பட்சம், இளமைக்கு ஒரு கம்பீரத்தையும் புதிய தோற்றத்தையும் அது தந்தது மாதிரியும் இருக்கும். பதினொரு மணிக்கு முன்பே நான் வாங்க வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கி முடித்தேன். ஆல்கின் சொன்னபடி பதினொன்றரை மணிக்கு முன்போ பின்போ நான் அங்கு இருக்கக்கூடாது அல்லவா? நான் கடிகாரத்தை அடிக்கொரு தரம் பார்த்துக்கொண்டே தாஸ்தாயெவ்ஸ்கி வசிக்கும் இடத்தை லட்சியம் வைத்து நடந்தேன். அவர் இருக்கும்அந்த ஃப்ளாட்டிற்கு அலோன்கின் ஹவுஸ் என்று பெயர். வெளிக்கதவை அடைந்து, அங்கு நின்றிருந்த காவலாளியிடம் ஃப்ளாட் எண் 13 எங்கே இருக்கிறது என்று வினவினேன். இரண்டாம் மாடியில் இருப்பதாக அவன் சொன்னான். படிகளில் ஏறி நான் மேலே போனேன். அந்த குடியிருப்புக் கட்டிடத்தில் பெரும்பாலும் வர்த்தகர்களும் அலுவல கங்கள் வைத்துக் கொண்டிருந்தோரும் வாடகைக்கு இருந்தார்கள். நான் என்ன காரணத்தாலோ ரஸ்கால் நிக்கோஃப்பை அப்போது மனதில் நினைத்துப் பார்த்தேன். ("குற்றமும் தண்டனையும்" புதினத்தின் கதாநாயகன்). அவன் இதே மாதிரியான ஒரு அறையில்தான் வசித்திருப்பானோ?

நான் மணியை ஒலிக்கச் செய்தேன். 13-ஆம் எண் கொண்ட வீட்டின் வாசல் கதவு திறந்தது. பூப்போட்ட ஒரு சால்வையை தோளில் அணிந்த ஒரு வயதான மூதாட்டி வந்து நின்றாள். மர்மலதோவ் குடும்பத்தில் முக்கிய பங்கு வகித்த சால்வைதான் அந்தக் கிழவியின் தோளில் இப்போது கிடக்கிறதோ என்ற எண்ணம் எனக்கு உண்டானது. (மர்மலதோவ்: "குற்றமும் தண்டனையும்" நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்). நான் "குற்றமும் தண்டனை'யும் புதினத்தை சமீபத்தில்தான் படித்து முடித்திருந்தேன். நான் யாரைத் தேடி வந்திருக்கிறேன் என்று அந்த வயதான பெண் விசாரித்தாள். ஆல்கின் கூறி நான் வந்திருப்பதாகவும், அந்தக் கிழவியின் எஜமானர் இப்போது எனக்காகக் காத்திருக்கிறார் என்பதையும் நான் சொன்னேன். நான் இங்கு வரப்போகும் விஷயத்தை ஆல்கின் ஏற்கெ னவே தாஸ்தாயெவ்ஸ்கிக்கும் அறிவித்திருப்பார் அல்லவா?

இலேசாகக் கசங்கியிருந்த என் ஆடையை நான் சரிப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஹாலைத் தாண்டி இருந்த சிறிய அறைக்குள் இருந்த விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளைஞனின் உருவம் கண்ணில் பட்டது. கறுத்த முடி. மேலே அணிந்திருந்த சட்டையின் கழுத்துப் பகுதி திறந்து விடப்பட்டிருந்தது. திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஸ்தம்பித்து சிறிது நேரம் நின்றுவிட்ட அந்த இளைஞன், அடுத்த நிமிடம் பக்கவாட்டுக் கதவு வழியாகக் காணாமல் போனான். (தாஸ்தாயெவ்ஸ்கியின் வளர்ப்பு மகன் அவன். தாஸ்தாயெவ்ஸ்கியின் முதல் மனைவிக்கு- அதற்கு முன்பு இருந்த உறவின் மூலம் பிறந்த மகன். யாருக்கும் அடங்காத அந்த இளைஞனை வாழ்க்கையின் கடைசி காலம் வரை தாஸ்தாயெவ்ஸ்கி பார்த்துக் கொண்டார். இவனின் முழுப்பெயர் பாவல் அலெக்ஸான்ட்ரோவிச் இஸயேவ்).

கிழவி என்னைப் பக்கத்து அறையில் போய் அமரச் சொன்னாள். அது உணவு உண்ணும் அறை என்பதைப் பார்க்கும்போதே புரிந்துகொள்ள முடிந்தது. எது எப்படியோ, அறை மிகவும் ஒழுங்காகவும் அழகாகவும் வைக்கப்பட்டிருந்தது. எதிரே இருந்த சுவரில் மிகவும் பெரிய ஒரு கடிகாரம் தொங்கிக் கொண்டிருந்தது. அது அப்போது மணி பதினொன்றரை என்பதை அறிவித்தது. நான் சாப்பாட்டு அறையை நோக்கி நடக்கிறபோது இந்த கடிகாரத்தின் மணிச் சத்தம் ஒலித்தது. எனக்கு அப்போது சந்தோஷமாக இருந்தது.

ஒரு நிமிடத்தில் எஜமான் வந்துவிடுவார் என்றும், அதற்காகக் காத்திருக்கவும் என்றும் கிழவி சொன்னாள். அவள் சொன்னபடி இரண்டு நிமிடங்கள் கடந்திருக்கும். ஃபயதோர் தாஸ்தாயெவ்ஸ்கி அறைக்குள் வந்தார். அவர் என்னை படிக்கும் அறைக்குள் வரச்சொன் னார். மீண்டும் ஒரு நிமிடம் எங்கோ உள்ளே போனார். எனக்கு தேநீர் கொண்டு வரச் சொல்வதற்காக அவர் அப்போது போனார் என்பது பின்னால் எனக்குத் தெரிய வந்தது.

அந்த அறை விசாலமாக- இரண்டு சாளரங்களைக் கொண்டிருந்தது. வெயில் தேவைக்கும் அதிகமாகவே சாளரத்தின் வழியே அறைக்குள் வந்து கொண்டிருந்தது. அதே அறை பின்னர் பல நாட்கள் இருண்டுபோய், இனம் புரியாத அமைதி சூடிகொண்டதாய் எனக்கு இருந்திருக்கிறது.

அறையின் ஒரு பக்கத்தில் கட்டிலொன்று போடப்பட்டிருந்தது. அதில் இலேசாக நிறம் மங்கிப் போயிருந்த தவிட்டு நிறமுடைய ஒரு போர்வை விரிக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்கு அருகில் இடப்பட்டிருந்த ஒரு வட்ட வடிவமான மேஜைமேல் சிவப்பு வண்ணத்தில் ஒரு பருத்தித் துணி விரிக்கப்பட்டிருந்தது. மேஜைமேல் ஒரு விளக்கு இருந்தது. விளக்கின் அருகில் இரண்டு மூன்று புத்தகங்கள். அதைச் சுற்றி நாற்காலிகள் இருந்தன. மிகவும் மெலிந்துபோய் காணப்பட்ட ஒரு பெண்ணின் ஓவியம் கட்டிலுக்கு மேலே சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தது. ஓவியத்தில் இருந்த அந்தப் பெண் கறுத்த தொப்பியும், கறுப்பு வண்ணத்தில் ஆடைகளும் அணிந்திருந்தாள். "இதுதான் தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவி' என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அப்போது அவர் ஒரு மனைவியை இழந்த மனிதர் என்ற உண்மையை நான் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு ஜன்னல்களுக்கும் நடுவில் கறுப்பு வண்ணத்தில் சட்டமிடப்பட்ட ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது. வலது பக்கம் அது சற்று ஒதுங்கி இருந்ததால், அந்த இடம் சரியாகப் பராமரிக்கப்படாதது போல் இருந்தது. ஒவ்வொரு சாளரத்தின் பீடத்திலும் அழகான ஒரு சைனீஸ் பூந்தொட்டி இருந்தது. அறையின் இன்னொரு பக்கத்தில் வேறொரு சிறிய படுக்கையும், அதற்கு அருகில் ஒரு சிறு மேஜையும் போடப்பட்டிருந்தன. அந்த மேஜைமீது தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு கூஜா இருந்தது.


அதற்குப் பக்கத்தில் ஒரு டெஸ்க் இருந்தது. அதற்கு அருகில் இருந்துதான் பின்னர் தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லச் சொல்ல நான் நாவலைச் சுருக்கெழுத்தில் எழுதினேன். இந்த அறையைப் பொறுத்தவரை பெரிய அளவில் ஆடம்பரமாக ஒன்றுமில்லை. மிகவும் சாதாரணமாகவே இருந்தது. பெரிய வசதிகள் இல்லாத ஒரு மனிதரின் வீடு எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அந்த அறை.

படிப்பு அறைக்கு வெளியே ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காதைத் தீட்டிக்கொண்டு பார்த்தேன். ஒரு கைக்குழந்தையின் அழுகைக் குரலோ, பொம்மை, இல்லாவிட்டால் வேறு ஏதாவது விளையாட்டுப் பொருட்கள் எழுப்பும் ஓசை- இவை ஏதாவதோ காதில் விழாதா என்று காத்திருந்தேன். சற்று முன்பு நான் ஓவியமாகக் கண்ட பெண் ஏதாவதொரு கதவைத் திறந்து எந்த நேரத்திலும் இந்த அறைக்குள் நுழையலாம் என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன்.

ஆனால், தான் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகிவிட்டதற்காக மன்னிப்பு கேட்டவாறு தாஸ்தாயெவ்ஸ்கிதான் மீண்டும் அறைக்குள் வந்தார். நான் எவ்வளவு காலமாக சுருக்கெழுத்து பயின்று கொண்டிருக்கிறேன் என்று என்னைப் பார்த்து அவர் கேட்டார்.

“கடந்த ஆறு மாசமாகத்தான்.”- நான் பதில் சொன்னேன்.

“உங்களோட ஆசிரியர்கிட்ட நிறைய மாணவர்கள் இருக்காங்களா?”

“ஆரம்பத்துல கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் சுருக்கெழுத்து படிப்பதற்காகச் சேர்ந்தாங்க. ஆனா, இப்போ கத்துக்கிட்டு இருக்குறது இருபத்தஞ்சு பேர்கள்தான்!”

“ஏன்? என்னாச்சு?”

“அவங்கள்ல பெரும்பாலானவங்க நினைச்சிக்கிட்டு இருந்தது ஸ்டெனோக்ராஃபியை ரொம்பவும் சாதாரணமா, எந்தவித சிரமும் இல்லாம கத்துக்கலாம்னு. ஆனா, அவங்க நினைச்சது மாதிரி அது அவ் வளவு ஈஸியான விஷயம் இல்லைன்றது தெரிஞ்ச உடனே அவங்கஅதை விட்டுட்டுப் போயிட்டாங்க. அவ்வளவுதான்.”

“நம்ம ஆளுங்க எந்த ஒரு புதிய வேலையை ஒத்துக்கிட்டாலும் அவங்க போக்கு இப்படித்தான் இருக்கு.”- தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “எந்த விஷயத்திலயும் மக்கள் ரொம்பவும் வேகமாக- பயங்கரமான நம்பிக்கையுடன் காலைத் தூக்கி வைக்கிறாங்க. ஆனா, கொஞ்ச நாட்கள்லயே அந்த நம்பிக்கையை இழந்து, வந்த வேகத்துலயே விஷயத்தை விட்டுட்டு வேற வழியில போயிடுறாங்க. எந்தக் காரியத்திலயும் வெற்றி பெறணும்னா, அதற்கு முதல் தேவை கடுமையான உழைப்பு. இந்தக் காலத்துல கஷ்டப்பட்டு உழைக்கணும்னு யார் நினைக்கிறாங்க?”

முதலில் பார்த்தவுடன் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு நடுத்தர வயதைக் கொண்ட மனிதர் என்பதாக என் மனதில் பட்டது. ஆனால் அவர் பேச ஆரம்பித்தவுடன் அவர் ஒரு இளைஞராக மாறிவிட்டதைப்போல் இருந்தது. முப்பத்தேழு வயதிற்குமேல் அவருக்கு இருக்க வாய்ப்பில்லை என்று அந்தச் சமயத்தில் நான் நினைத்தேன். நல்ல தேக பலத்தையும் சராசரியான உயரத்தையும் கொண்டிருந்தார். அவரின் அடர்த்தி குறைவான தவிட்டு நிறத் தலைமுடியயில் சிவந்த வண்ணத்தில் ஒரு பிரகா சம் தெரிந்தது. நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியை அவர் வாரி விட்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவரின் அந்தக் கண்கள்தாம். அவற்றில் ஒரு வித்தியாசம் தெரிந்ததைப் பார்த்தேன். ஒரு கண்ணின் கருமணி இன்னொன்றைவிடப் பெரியதாக இருந்தது. (வலிப்பு நோய் முற்றி தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு முறை எங்கோ கீழே விழுந்தபோது, கூர்மையான ஏதோ ஒரு பொருள் அவரின் கண்ணில் பட்டு இப்படி ஆகிவிட்டது). கண்களில் தெரிந்த இந்த வித்தியாசம் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு மாறுபட்ட தோற்றத்தைத் தந்தது. அவரின் முகம் மிகவும் வெளிறிப்போய் இருந்தது. உடல் நலக்கேடு அவரை ரொம்பவும் பாதித்து விட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவ ரின் முகத்தை எவ்வளவோ காலமாக நான் பல பத்திரிகைகளிலும் பலமுறை பார்த்திருப்பதால், எனக்கு அவரைப் பார்த்தவுடன் ஏதோ அதிக நாட்கள் பழகிய ஒரு மனிதரைப்போல அவர் தெரிந்தார். அடர்த்தியான நீலநிறத்தில் ஒரு மேலாடையை அவர் அப்போது அணிந்திருந்தார். காலர் வெண்மை நிறத்தில் இருந்தது.

இரண்டு டம்ளர்களில் பால் கலக்காத தேநீருடன் ஐந்து நிமிடங்களில் கிழவி அறைக்குள் வந்தாள். இன்னொரு பாத்திரத்தில் ரொட்டித் துண்டுகள் இருந்தன. அறைக்குள் கடுமையான வெப்பம் இருந்தாலும், எனக்கென்னவோ தாகம் எதுவும் எடுக்கவில்லை. தேநீர் இப்போது வேண்டாம் என்று சொன்னால் அவர் வேறு ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாரோ என்றெண்ணி நான் தேநீரை அருந்தினேன். புகை பிடித்தவாறு தாஸ்தாயெவ்ஸ்கி அறைக்குள் இப்படியும் அப்படியுமாய் நடக்கத் தொடங்கினார். ஏகப்பட்ட சிகரெட்டுகளை அவர் பிடித்தார், அணைத்தார்... மீண்டும் இங்குமங்குமாய் நடந்தார். திடீரென்று என்ன நினைத்தாரோ, ஒரு சிகரெட்டை எடுத்து என்னிடம் நீட்டினார். நான் வேண்டாம் என்று மறுத்தேன்.

“மரியாதைக் குறைவாக இருக்கும்னு சிகரெட் வேண்டாம்னு சொல்றீங்களா?” அவர் கேட்டார். நான் சிகரெட் பிடிப்பதில்லை என்றும், பெண்கள் புகைபிடிப்பதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை என்றும், நான் மிகவும் தீவிரமாக வெறுக்கக்கூடிய ஒரு விஷயம் அது என்றும் அவரைப் பார்த்துச் சொன்னேன்.

கொஞ்சம்கூட தொடர்பே இல்லாமல் நாங்கள் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு விஷயத்தைப் பேசுவோம். திடீரென்று அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு விஷயத்திற்குப் போய் விடுவோம்.

தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு விஷயத்தை விட்டு இன்னொரு விஷயத்திற்கு தாவிக்கொண்டே இருந்தார். அவருக்கு உடல் நலக்கேடு இருந்ததால், அவர் படும் சிரமத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சிறிது நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்த உடனே, தனக்கு அவ்வப்போது வலிப்பு வரும் என்றும், சமீபத்தில் அந்த நோயின் பாதிப்பிற்கு தான் உள்ளானதாகவும் தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் சொன்னார். அவர் அப்படி எந்தவித தயக்கமும் இல்லாமல் மனம் திறந்து கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றிஅவர் பேச ஆரம்பித்தார்.

“ம்... காரியங்கள் எப்படி நடக்குதுன்னு பார்ப்போம். நாம முதல்ல இதைச் சோதித்துப் பார்க்கணும். இதுனால வளர்ச்சி இருக்குமா இல்லையான்னு பார்க்கணும். என்ன சொல்றீங்க?”

நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதென்பது நடக்கப் போகிற ஒன்றல்ல என்றுதான் அப்போது நான் நினைத்தேன். தான் மனதில் நினைக்கிறபடி செயல் வடிவில் கொண்டு வர சுருக்கெழுத்தால் முடியுமா என்று அவர் சந்தேகம் கொள்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஏற்பாட்டை நிச்சயம் அவர் விரும்பப் போவதில்லை என்ற முடிவுக்கே நான் வந்தேன். எது எப்படியோ, அவரே சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற தீர்மானத்திற்கு வந்த நான் சொன்னேன்:


“சரி... நாம இதைக் கொஞ்சம் சோதனை பண்ணித்தான் பார்ப்போமே! என்னுடன் இணைந்து இந்தக் காரியத்தில் ஈடுபடுறது உங்களுக்குக் கஷ்டமா தெரிஞ்சதுன்னா, அந்த விஷயத்தை உடனடியா என்கிட்ட நீங்க சொல்லத் தயங்கக் கூடாது. நிச்சயமா நான் அதற்காக வருத்தப்பட மாட்டேன்...”

அவர் இந்த வெள்ளோட்டத்திற்குத் தயாரானார். "ரஷ்யன் ஹெரால்ட்' என்ற நாளிதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கட்டுரையை தாஸ்தாயெவ்ஸ்கி வாசித்தார். நான் அதை சுருக்கெழுத்தில் எழுதினேன். அவர் மிகவும் வேகமாக அந்த நாளிதழைப் படித்தார். கொஞ்சம் மெதுவாகப் படித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் தாழ்மையான குரலில் சொன்னேன் நான்.

பிறகு நான் அதை மிகவும் வேகமாக எழுதினேன். தாஸ்தாயெவ்ஸ்கியோ படுவேகமாக வாசித்தார். நான் மிகவும் மெதுவாக எழுதுகிறேன் என்று என்மீது குறை சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.

நான் அவரிடம் சொன்னேன்: “நான் இப்போ சுருக்கெழுத்துல நீங்க சொல்றதை எழுதுறேன். இதை வீட்டுக்குக் கொண்டு போய் ராத்திரி உட்கார்ந்து விரிவாக எழுதி நாளைக்குக் கொண்டு வர்றேன். அப்போ நீங்க இந்தக் குறையைச் சொல்ல மாட்டீங்க!”

நான் அவர் சொல்லச் சொல்ல எழுதியதில், ஒரு முக்கிய விஷயத்தை எழுதாமல் விட்டுவிட்டேன் என்பதை அவர் கண்டுபிடித்தார். பிறகு... நான் எழுதியதில் ஒரு எழுத்து தெளிவாக இல்லாமல் மிகவும் சிறியதாக இருப்பதாகச் சொன்னார். அவர் ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பதாக எனக்குப் பட்டது. அவரின் மன ஓட்டங்கள் சீரான நிலையில் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என் பெயர் என்ன என்று மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டுத் தெரிந்துகொண்டே இருந்தார் அவர். அறைக்குள் இப்படியும் அப்படியுமாய் நடந்துகொண்டே இருந் தார். நான் அங்கு இருப்பதையே அவர் மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அந்த மிகப் பெரிய இலக்கியவாதியின் சிந்தனை ஓட்டத்திற்கு நான் எங்கே தடைக்கல்லாக இருந்துவிடப் போகிறேனோ என்ற எண்ணத்துடன் நான் அங்கேயே அமைதியாக உட்கார்ந்திருந்தேன்.

மேலும் ஏதாவது சொல்லி எழுதும் அளவிற்கு தன் இப்போதைய மனநிலை இல்லை என்று சொன்ன தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் மீண்டும் இரவு எட்டு மணிக்கு வரமுடியுமா என்று கேட்டார். புதினத்தை அப்போது ஆரம்பிக்கலாம் என்றார். அது என்னால் முடியாத விஷயமாக எனக்குப் பட்டது. வீட்டுக்குத் திரும்பப் போய்விட்டு, மீண்டும் இரவில் வருவதென்றால்...? இருந்தாலும் நாவல் எழுதும் விஷயமாக இருக்கிறதே என்று அவர் சொன்னதற்கு வருகிறேன் என்று தலையை ஆட்டினேன்.

நான் புறப்படும்போது பின்னால் நின்றிருந்த தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “ஒரு பெண்ணை சுருக்கெழுத்து எழுதுறதுக்காகஅனுப்பி வைக்கிறேன்னு ஆல்கின் சொன்னப்போ, உண்மையிலேயே நான் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். அதற்கு என்ன காரணம் தெரியுமா?”

“தெரியாது. என்ன காரணம்?”

“ஆம்பளைன்னா என்கிட்ட வேலை பார்க்குறது ரொம்ப கஷ்டம்!”

என்னால் எளிதில் வேலை பார்க்க முடியுமா? எனக்கே தெரியவில்லை. இருந்தாலும், அந்த நேரத்திற்கு சிரித்து வைத்தேன்.

3

னம் இடிந்த நிலையில்தான் நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை விட்டு வெளியேறினேன். எனக்கு அவரைப் பிடிக்காமல் போக வாய்ப்பு இருப்பது மாதிரி என் மனதில் பட்டது. அவரின் நடவடிக்கைகள் எனக்கு அவ்வளவாகத் திருப்தியைத் தரவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து செய்த வேலை சிறப்பான ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும் என்ற என் கற்பனை இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோனதுபோல் உணர்ந்தேன். என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சந்தோஷத்துடன் இருந்த என் தாயின் மனம் இந்த விஷயத்தைத் தெரிந்தால் மிகவும் கவலையில் ஆழ்ந்துவிடுமே என்ற ஒரே வருத்தம்தான் அப்போது எனக்கு இருந்தது.

நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது மதிய நேரம் தாண்டியிருந்தது. அங்கிருந்து என் வீடு மிகவும் அதிகமான தூரத்தில் இருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவசிய மில்லாமல் மிகவும் அருகிலேயே வசித்துக் கொண்டிருக்கும் என் உறவினர்களைப் பற்றி அப்போது மனதில் நினைத்துப் பார்த்தேன். அவர்கள் வீட்டுக்குப்போய் உணவு அருந்திவிட்டு, மாலையில் திரும்ப வும் தாஸ்தாயெவ்ஸ்கியைப் பார்க்க நான் தீர்மானித்தேன்.

நான் சந்தித்த புதிய மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்ட என்னுடைய உறவினர்கள் நான் கூறியதை மிகவும் ஆர்வத்துடன் கேட்டனர். தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி அவர்கள் பல கேள்விகள் கேட்டனர். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரவு எட்டு மணி ஆனபோது நான் மீண்டும் தாஸ்தாயெவ்ஸ்கியின் வாடகை வீட்டைத் தேடி வந்தேன். ஃபெதோஸ்யா என்ற பெயரைக் கொண்ட அந்த வயதான வேலைக்காரிதான் அப்போது வந்து கதவைத் திறந்தாள். காலையில் காத்திருப்பதைப்போல, இப்போதும் சாப்பாட்டு அறையில் நான் தாஸ்தாயெவ்ஸ்கிக்காகக் காத்திருந்தேன். நான் வந்திருக்கும் செய்தியைக் கூறுவதற்காக வேலைக்காரி உள்ளே போனாள். சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்தக் கிழவி என்னைப் படிக்கும் அறைக்குள் போகச் சொன்னாள். நான் தாஸ்தாயெவ்ஸ்கியைத் தாண்டிப்போய் ஒரு சிறிய மேஜைக்கு அருகில் போய் அமர்ந்தேன். அப் படி நான் அமர்ந்தது தாஸ்தாயெவ்ஸ்கிக்கு வசதியாக இல்லை போல் பட்டிருக்க வேண்டும். அங்கிருந்த பெரிய மேஜைக்கு அருகில் போய் உட்காரும்படி என்னைச் சொன்னார். அங்கிருந்து எழுதுவதுதான்எனக்கு வசதியாக இருக்கும் என்றார் அவர். அவர் சொன்னதை எந்த வித பதிலும் இல்லாமல் நான் கேட்டுக் கொண்டேன். "குற்றமும் தண்டனையும்' போன்ற புகழ் பெற்ற நூல்களை அந்த மேஜையில் வைத்துதான் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.

தாஸ்தாயெவ்ஸ்கி சிறிய மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்க,அவர் எழுதும் மேஜைக்கு அருகில் நான் அமர்ந்தேன். என் பெயரை அப்போது அவர் மீண்டும் கேட்டார். என் குடும்பப் பெயரை நான் சொல்ல, சமீபத்தில் மறைந்துபோன இளம் எழுத்தாளரான ஸ்னத் கின், அவரின் ஞாபகத்தில் வந்தார். என்னுடைய சொந்தக்காரரா அவர் என்று தாஸ்தாயெவ்ஸ்கி கேட்டார். பெயர்களில் இவ்வாறு நெருங்கிய ஒற்றுமை இருப்பது கொஞ்சமும் எதிர்பார்க்காமலே இருப்பதுதான் என்று சொன்னேன் நான். தொடர்ந்து என் குடும்பத்தைப் பற்றி அவர் விசாரித்தார். நான் எங்கு பள்ளிப் படிப்பை படித்தேன் என்பதையும், சுருக்கெழுத்து பயில்வதற்கான ஆர்வம் எப்படி உண்டானது என்பதையும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.


அவர் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் எளிமையாக- அதே சமயம் சரியான பதில்களைச் சொன்னேன். நான் சொன்ன பதில்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன என்று பின்னர் ஒருநாள் அவர் என்னிடம் சொன்னார். தனியார் அலுவலகங்களில் வேலைக்குப் போகிறபோது எந்த மாதிரியெல்லாம் கட்டுப்பாடுகளுடன் நாம் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி எனக்கு நானே முன்கூட்டியே சில முடிவுகளை மனதிற்குள் எடுத்துக் கொண்டிருந்தேன். அதாவது- நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தொழில் ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். எதிர்காலத்தையே பாதிக்கிற மாதிரியான காரியங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யக் கூடாது என்பதில் திடமான கொள்கையைக் கொண்டிருந்தேன். அப்படி நாம் நடந்துகொள்ளும் பட்சம், யாராக இருந்தாலும் தங்கள் விருப்பப்படி நம்மிடம் நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? தாஸ்தாயெவ்ஸ்கியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகத்தில் ஒரு சிறு புன்னகையைக் கூட பார்க்க முடியாது. நான் அப்படி ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு நடந்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஒழுக்கத்துடன்- அதே சமயம் ஒருவித மரியாதையுடன் நடந்து கொண்ட விதத்தில் அவர் மிகவும் சலனமடைந்து போனார் என்பதை பின்னாட்களில் அவரே என்னிடம் கூறியிருக்கிறார். எதையுமே மறுத்துப் பேசும் ஏகப்பட்ட பெண்களை வாழ்க்கையில் சந்தித்த ஒரு மனிதர் தாஸ்தாயெவ்ஸ்கி. அப்படிப்பட்ட பெண்களிடம் வருத்தப் படும்படியான பல அனுபவங்கள் அவருக்கு ஏற்கெனவே கிடைத் திருக்கின்றன. அவர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு பெண்ணாக என்னை அவர் பார்த்தார். என்னுடன் உரையாடுவதில் பல நேரங்களில் அவர் தன்னையே இழந்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, ஃபெதோஸ்யா இரண்டு டம்ளர்களில் பால் கலக்காத தேநீர், ரொட்டி, எலுமிச்சம் பழம் ஆகியவற்றுடன் உள்ளே வந்தாள். ஒரு தட்டு நிறைய பலகாரங்களும் இருந்தன. தேநீர் அருந்திய பிறகு, எங்கள் உரையாடல் மேலும் சுவாரசியமும் சுவையும் கொண்டதாக மாறியது. ஆத்மார்த்தமான பேச்சாகவும் அது அமைந்தது. பல வருடங்களாக நமக்கு நன்கு அறிமுகமான ஒரு மனிதரைப்போல் தாஸ்தாயெவ்ஸ்கி திடீரென என் மனதிற்குத் தோன்றினார். மனதில் உண்டான அந்த மாற்றம் ஒரு வகையில் சந்தோஷத்தையே தந்தது.

எங்களின் உரையாடல் குறிப்பிட்ட ஒரு கட்டத்தை அடைந்தபோது, பெட்ரஷவ்ஸ்கி (தாஸ்தாயெவ்ஸ்கியும் அடங்கிய ஒரு புரட்சியாளர்கள் கூட்டம்) அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லி வந்தபோது, உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார் தாஸ்தாயெவ்ஸ்கி. அவர்களைப் பற்றி அவர் மிகவும் குறைப்பட்டுச் சொன்னார். “டெம்யா நாவ்ஸ்கி பரேட் மைதானத்தில் மற்ற குற்றவாளிகளுடன் நான் நின்று கொண்டிருந்த காட்சியை இப்போது நினைச்சுப் பார்க்கிறேன். எங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் தண்டனை கிடைக்கப் போகிறது. எனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கப்போவது ஐந்தே ஐந்து நிமிடங்களே. எனக்கு முன்னால் காலம் முடிவே இல்லாமல் கிடப்பதாக நான் உணர்ந்தேன். மரண உடைகள் எங்களுக்கு அணிவிக்கப்பட்டு விட்டன. மூணு வரிசையா எங்களை நிறுத்தியிருந்தாங்க. நான் மூணாவது வரிசையில் எட்டாவது ஆளா நின்றிருந்தேன். முதலில் இருந்த மூணுபேர்களை தூண்களோடு சேர்த்துக் கட்டியிருந்தாங்க. ரெண்டு மூணு நிமிடங்கள்ல முதல் இரண்டு வரிசையில் நின்றிருக்கும் நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவாங்க. அதற்குப் பிறகு எங்களின் வரிசை. நான் எந்த அளவுக்கு அப்போ வாழணும்னு துடிச்சேன் தெரியுமா? வாழ்க்கை எவ்வளவோ மதிப்பு கொண்ட ஒண்ணா அப்போ எனக் குப்பட்டது. ஒருவேளை உயிருடன் வாழ நேர்ந்தால், அதை எந்த அளவிற்குப் பயனுள்ளதாக, நன்மைகள் நிறைஞ்சதாக ஆக்கமுடியும்னு ஒரு நிமிடம் நினைச்சுப் பார்த்தேன். நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதைப்போலபழைய நினைவுகள் என் மனசுல கடந்து வந்துச்சு. மீண்டும் அதே அனு பவங்களுடன் வாழும் ஒரு வாழ்க்கைக்காக நான் ஏங்கினேன்... திடீர்னு ஒரு மாற்றத்தை என்னால் உணர முடிஞ்சது. என் இதயமே அப்போ நின்றுவிடும்போல் இருந்தது. என்னுடைய நண்பர்களின் கட்டுகள் நீக்கப்பட்டன. ஒரு புதிய தண்டனைச் சட்டத்தை அப்போ அங்கு வாசிச்சாங்க. நான்கு வருட கடுமையான வேலை எனக்கு தண்டனையாக அளிக்கப்பட்டது. அப்படியொரு சந்தோஷம் தரக்கூடிய ஒரு நாளை நான் வாழ்க்கையில் அதுவரை சந்திச்சதே இல்லைன்றதுதான் உண்மை. எனக்கு வாழ்க்கை திரும்பவும் கிடைச்சிருக்கு. அலெக்ஸியேவ் கோட்டையில் நான் என்னுடன் இருந்த ஒரு கைதியோடு சேர்ந்து என்னை மறந்து பாட்டு பாடினேன். சைபீரியாவுக்கு என்னைக் கொண்டு போறதுக்கு முன்னாடி என்னோட சகோதரன் மிகயீல்கிட்ட நான் விடை பெற்றேன். தண்டனை எனக்கு அளிக்கப்பட்ட நாளான்று நான் என்னோட அண்ணனுக்கும் மருமகனுக்கும் எழுதின கடிதங்களை இப்பவும் பத்திரமாக என்கிட்ட வச்சிருக்கேன்.”

அவர் சொன்ன அந்தச் சம்பவம் இதயத்தையே பிளப்பதுபோல் இருந்தது. அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு என் உடலே நடுங்கியது. எவ்வளவு திறந்த மனதுடன் தன் வாழ்க்கையில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தை மிகப் பெரிய மனிதரான தாஸ்தாயெவ்ஸ்கி என்னிடம் விளக்கிச் சொல்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவர் மேல் எனக்கு இனம் புரியாத மரியாதை உண்டானது. அன்று காலையில் தான் முதன்முறையாகப் பார்த்த பெண்ணிடம் தன் வாழ்க்கைச் சம்பவத்தை விவரித்து ஒரு மனிதர் கூறுவது என்றால்... அது சாதாரண விஷயமா என்ன? ஆரம்பத்தில் அதிகம் பேசாத, கர்வம் கொண்ட மனிதராக இருப்பார் தாஸ்தாயெவ்ஸ்கி என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் தன் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் விளக்கி என்னிடம் கூறியபோது, என்னால் ஆச்சரியப்படவே முடிந்தது. அப்போது அவர் வாழ்ந்து கொண்டிருந்த சூழலைப்பற்றி பின்நாட்களில் என்னிடம் கூறியபோதுதான் அவர் அப்படி மனம் திறந்து எல்லா விஷயங்களையும் பேசியதற்கான காரணமே எனக்குப் புரிந்தது. அவர் அப்போது தனிமனிதனாக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. கடன்காரர்களின் தொல்லையும், பகைவர்களின் தொந்தரவும்கூட அவரை ஒவ்வொரு நாளும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. யாரிடமாவது தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் அப்போது அவர் இருந்திருக்கிறார். மற்றவர்களின் விருப்பங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளக்கூடிய அதே நேரத்தில், தன்னுடைய சொந்தப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் கூறத் தயங்காத ஒரு மனிதராகவும் தாஸ்தாயெவ்ஸ்கி இருந்தார். நான் பார்த்த முதல் நாளிலேயே எந்தவித செயற்கைத்தனமான போர்வையும் இல்லாமல் திறந்த மனிதராக அவர் நடந்து கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் நாவல் எழுதும் வேலையை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இரவு நீண்டு கொண்டே இருந்தது. அதை உணர்ந்தபோது மனதில் பயம் உண்டானது. வீட்டிற்கு நான் சீக்கிரம் போயாக வேண்டும். என் தாய் நான் இன்னும் வீட்டுக்கு வராமல் இருப்பது குறித்து இப்போதே கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நேராக வீட்டிற்கு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். இங்கு நான் எதற்காக வந்திருக்கிறேன் என்பதை அவரிடம் எப்படிச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், அவருக்கே அது ஞாபகத்தில் வந்ததைப்போல அவரே திடீரென்று எழுந்து, அறைக்குள்ளேயே சிகரெட்டைப் புகைத்தவாறு, இப்படியும் அப்படியுமாய் நடக்கத் தொடங்கினார். அவர் நாவலைச் சொல்லத் தொடங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டு நான் அதைச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கத் தயாரானேன். கொஞ்ச நேரம் சொல்லிய பிறகு, நான் எழுதியதைப் படிக்கும்படி அவர் சொன்னார். சில வார்த்தைகள்தான் நான் வாசித்திருப்பேன். அதற்குள் அவர் என்னை நிறுத்தச் சொன்னார்:

“என்ன? நான் ரூளற்றின்பர்க் என்றா சொன்னேன்?”

“ஆமா... நீங்க அப்படித்தான் சொன்னீங்க!”

“நிச்சயமா இருக்க முடியாது!”

“மன்னிக்கணும்... அப்படிப்பட்ட பேர்ல ஒரு நகரம் உங்களோட நாவல்ல வருதா?”

“ஒரு சூதாட்ட மையத்தைப் பற்றியதுதான் கதை. அது இருக்குற இடத்தோட பேரு ரூளற்றின்பர்க்!”

“அதுதான் சொல்றேன்... நீங்கதான் அந்தப் பெயரைச் சொன்னீங்க. பிறகு எப்படி எனக்கு அந்த ஊரோட பேர் தெரியும்?”

“சரிதான்.” தாஸ்தாயெவ்ஸ்கி தன் நிலையை ஒப்புக்கொண்டார்: “நான் வேற ஏதோ சிந்தனையில் இருந்துட்டேன்!”

அந்தச் சம்பவம் அதோடு முடிந்துவிட்டது குறித்து உண்மையிலேயே நான் மகிழ்ச்சியடைந்தேன். தாஸ்தாயெவ்ஸ்கி அன்று மிகவும் களைப் படைந்து போயிருந்தாலும், மனக்குழப்பத்துடன் இருந்ததாலும் இப்பயொரு சம்பவம் நடந்திருக்கிறது என்று நானே என் மனதில் எண்ணிக் கொண்டேன். அவரே தன் நிலையைப் புரிந்து கொண்டதைப் போல, இதற்குமேல் இந்த வேலையைத் தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்றும், நான் இதுவரை சொன்னவற்றை விரித்து நாளை எழுதிக் கொண்டு வரவேண்டுமென்றும், மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு சந்திக்கலாம் என்றும் சொன்னார். சரியான நேரத்திற்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

இரவு பதினொரு மணிக்கான பெல் அடித்தது. நான் குடியிருப்பது பெஸ்கி மாவட்டத்தில் என்று சொன்னபோது, நகரத்தின் அந்தப் பகுதிக்கு தான் இதுவரை வந்ததே இல்லை என்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதுகூட தனக்குத் தெரியாது என்றார். வீடு அதிக தூரத்தில் இருக்கும் பட்சம், வேண்டுமானல் துணைக்கு ஒரு வேலைக்காரனை அனுப்பி வைக்கவா என்று கேட்டார். நான் தேவை யில்லை என்று மறுத்து விட்டேன். அவர் வாசற்படி வரை என்னுடன் வந்தார். வேலைக்காரி விளக்குடன் வந்து நான் வெளியே வரும்வரை உதவினாள்.

அன்று நடந்த விஷயங்களை என் அம்மாவிடம் நான் சொன்னேன். நானே விரும்பாத சில சின்னஞ்சிறு விஷயங்களை அவளிடம் சொல்ல வில்லை. தாஸ்தாயெவ்ஸ்கி எந்த அளவிற்கு மென்மையான மனதைக் கொண்ட மனிதராகவும், இதயசுத்தி உள்ள ஒரு நபராகவும் இருக்கிறார் என்பதை மட்டுமே நான் அம்மாவிடம் சொன்னேன். அதற்கு முன்பு நான் அப்படிப்பட்ட ஒரு மனிதரைச் சந்தித்ததில்லை அல்லவா? அத்தகைய ஒரு அனுபவத்தை நானே வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்ப்பதால், அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக திறமைசாலியும், கருணை மனம் கொண்டவரும், அதே நேரத்தில் சோகங்கள் கொண்டவராகவும், சதா நேரமும் கவலையில் ஆழ்ந்து போயிருக்கும் ஒரு மனிதராகவும் உள்ள ஒரு ஆளை அப்போதுதான் பார்க்கிறேன். மொத்தத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு நல்ல மனிதர் என்ற முடிவுக்கு நான் வந்தேன். வாழ்க்கையில் அப்படிப்பட்ட மனிதரைச் சந்தித்ததற்காக மனப்பூர்வமாக நான் சந்தோஷப்பட்டேன்.

களைப்பு அதிகமாக இருந்ததால் படுக்கையில் போய் விழுந்தேன். எப்போதும் எழுப்புவதைவிட சீக்கிரம் என்னைப் படுக்கையைவிட்டு எழுப்ப வேண்டும் என்று என் தாயிடம் சொன்னேன். சொன்ன நேரத்திற்குள் வேலையை முழுமையாக முடித்து தாஸ்தாயெவ்ஸ்கியைப் போய் பார்க்க வேண்டுமே!

4

றுநாள் நான் சீக்கிரமாகவே எழுந்து வேலையில் இறங்கினேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்ன கதையின் பகுதி அந்த அளவுக்கு எளிதாக இருக்கவில்லை. எனினும், அதை விரித்து எழுத எழுத எனக்கேமிகவும் ஆர்வம் பெருகியது. முடிந்தவரை சிறப்பாக அதை எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால், அதை நன்றாக முடிக்க வேண்டும் என்றால், அதற்கு நிறைய நேரம் பிடிக்கும். நான் எவ்வளவு வேகமாக முயற்சி செய்தும், தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை நான் அடைந்தபோது, அரை மணி நேரம் தாமதமாகி விட்டது.

தாஸ்தாயெவ்ஸ்கி பயங்கர மனக்குழப்பத்துடன் அப்போது அமர்ந் திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

“வேலை ரொம்பவும் கஷ்டமாக இருக்குன்னு அன்னா, நீங்க இதை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டீங்கனு நான் நினைச்சேன். உங்க வீட்டு முகவரியை வேற எனக்கு நீங்க தரல. நேற்றைக்கு நான் சொன்ன பகுதி வீணாயிடுமோன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன்.” அவர் சொன்னார்.

“தாமதமாக வந்ததுக்காக நான் வருத்தப்படுறேன்.” -நான் அவரி டம் மன்னிப்புக் கேட்டேன்: “ஒண்ணை மட்டும் நான் உறுதியா சொல்றேன். நான் இந்த வேலை வேண்டாம்னு சொல்லிட்டுப் போறதாஇருந்தால், அந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு, எழுதி முடிச்ச பகுதியை உங்க கையில சேர்த்துட்டுத்தான் போவேன். அதை நீங்க புரிஞ்சுக்கங்க!”

“நான் கவலைப்படுறதுக்குக் காரணம் இருக்கு.” தாஸ்தாயெவ்ஸ்கி விளக்கினார்: “நவம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னாடி இந்தப் புத்தகத்தை நான் முடிச்சே ஆகணும். ஆனா, உண்மை என்னன்னா... இந்த நிமிடம் வரை கதையோட அவுட் லைன் கூட தயாராகல...”

அதைப் பற்றி மேலும் விளக்கமாகக் கேட்ட பிறகுதான், அவர் எந்த அளவுக்கு ஒரு சதி வலையில் விழுந்து கிடக்கிறார் என்ற உண்மையே எனக்கு தெரிய வந்தது.

தாஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர் மிகயீல் ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். பத்திரிகையின் பெயர் "வ்ரெம்யா!' திடீரென்று அவர் மரணத்தைத் தழுவ, அவர் வாங்கியிருந்த கடன்கள் அனைத்தும் தாஸ்தாயெவ்ஸ்கியின் தலைமீது வந்து விழுந்தன. சகோதரனின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும் தாஸ்தாயெவ்ஸ்கியே ஏற்றுக் கொண்டார்.


கடன் பத்திரங்களில் கையொப்பமிட்டு கடன்கள் வாங்கப்பட்டிருந்தன. கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த கடன் தொகையால் தாஸ்தாயெவ்ஸ்கி மூச்சு விட முடியாமல் தடுமாறினார். அந்தக் காலத்தில் இருந்த முறையைப் பின்பற்றி கடனை ஒழுங்காக திருப்பித் தராததால், சிறைக்குள் தாஸ்தாயெவ்ஸ்கி அனுப்பப்படுவது உறுதி என்ற சூழ்நிலை உண்டானது.

உடனடியாக அடைக்க வேண்டிய கடன் தொகை மட்டும் மூவாயிரம் ரூபிள்கள் இருக்கும். தன்னால் முடிந்த வழிகளில் எல்லாம் அவர் பணத்தை திரட்ட முயற்சித்துப் பார்த்தார். ஆனால் எந்த வழியுமே ஒழுங்காகக் கைகூடி வரவில்லை. அப்படி நிலைகுலைந்து அவர் உட் கார்ந்திருந்தபோது, அவரின் உண்மையான சூழ்நிலையை பதிப்பகம் நடத்திக் கொண்டிருந்த ஸ்டெல்லோவ்ஸ்கி அறிய நேரிட்டது. தாஸ்தாயெவ்ஸ்கியை இந்தச் சூழ்நிலையில் எப்படியும் ஏமாற்றி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார் அவர். தாஸ்தாயெவ்ஸ்கியின் நூல்களை மூன்று தொகுதிகளாகத் தான் பிரசுரித்து வெளியிடுவதற்கு சன்மானத் தொகையாக மூவாயிரம் ரூபிள்கள் தருவதாகச் சொன் னார் ஸ்டெல்லோவ்ஸ்கி. ஒரு புதிய நாவலை நவம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னால் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதித் தர வேண்டும் என்ற நிபந்தனை வேறு. அதற்கு சன்மானம் எதுவும் கிடையாது.ஆனால், வாக்குக் கொடுத்தபடி நடக்காவிட்டால் தாஸ்தாயெவ்ஸ்கி அதுவரை எழுதியிருக்கிற நூல்களும் இனி எழுத இருக்கின்ற நூல்களும் ஸ்டெல்லோவ்ஸ்கிக்குச் சொந்தமாகிவிடும். அதுதான் தாங்க முடியாத ஒரு கொடுமை. தாஸ்தாயெவ்ஸ்கியின் நிலைமை அந்த அளவிற்குப் படுமோசமாக இருந்தது. யார் என்ன நிபந்தனை சொன்னாலும்அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் அப்போதைக்கு அவர்இருந்தார். இல்லாவிட்டால் சிறைக்குப் போவதைத் தவிரஅவருக்கு வேறு வழியே இல்லை. பணம் அவர் கையில் வந்ததுதான் தாமதம், கடன் கொடுத்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அதைத் தட்டிப் பறித்துக் கொண்டு போனார்கள். எழுதிக் கொடுத்த பல கடன் பத்திரங்களும் பொய்யானவையாக இருந்தன. எல்லாவற்றுக்கும் பின்னால் ஸ்டெல்லோவ்ஸ்கி நின்றிருந்தார். இசைக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் ஏமாற்றி, நயவஞ்சகம் செய்து ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருந்த ஒரு பயங்கரமான மனிதராக இருந்தார் ஸ்டெல்லோவ்ஸ்கி. இக்கட்டான நேரங்களில் ஆட்களை எப்படி வளைத்து வலையில் மாட்டுவது என்பதை நன்கு தெரிந்து செயல்பட்ட மனிதராக அவர் இருந்தார். தாஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள் அனைத்தும் மக்களின் ஒட்டுமொத்த வரவேற்பைப் பெற்றவையாக இருந்த அந்த நேரத்தில், அவர் கொடுத்த மூவாயிரம் ரூபிள்கள் என்பது மிக மிக சாதாரண தொகை என்பதே உண்மை. 1866-ஆம் வருடம் நவம்பர் முதல் தேதிக்கு முன்னால் ஒரு சிறிய நாவலை முழுமையாக எழுதித் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததுதான், அந்த ஒப்பந்தத்திலேயே கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் போடப்பட்டிருந்த ஒரு விஷயம். அதை மட்டும் தாஸ்தாயெவ்ஸ்கி செயல்படுத்தவில்லையென்றால், அவருக்குப் பலவிதத்திலும் பிரச்சினையே. அவரை இந்நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மோசடிக்காரரான அந்த பதிப்பாளரின் ஆசையே.

1866-ல் தாஸ்தாயெவ்ஸ்கி, "குற்றமும் தண்டனையும்' என்ற உலகப் புகழ் பெற்ற புத்தகத்தை எழுதினார். அதை எழுதுவதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. அந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்த பிறகு, மீண்டும் ஒரு நாவலை எழுதி முடிப்பது என்றால் சாதாரண விஷயமா என்ன?

மழைக் காலம் வந்தது. தாஸ்தாயெவ்ஸ்கி மாஸ்கோவில் இருந்து திரும்பி வந்தார். ஸ்டெல்லோவ்ஸ்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வர இன்னும் ஆறோ எட்டோ வாரங்கள்தான் மீதியிருந்தன. அதற்குள் திட்டமிட்டபடி புத்தகத்தை எழுதி முடிப்பது என்பது நிச்சயமாக முடியாத காரியமே என்ற முடிவுக்கு வந்துவிட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. அவரின் இந்த தர்மசங்கடமான நிலைமையை அறிந்த அவரின் சில நண்பர்கள்- மைக்கோவ், மில்யுக்கோவ், டால்கோமோஸ் ட்டியேவ் ஆகியோர் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை தாஸ்தாயெவ்ஸ்கியிடம் சொன்னார்கள். அதன்படி எல்லாரும் ஒன்று சேர்ந்து தனித் தனியாக ஒவ்வொருவரும் ஒரு அத்தியாயத்தை எழுதுவது- அதன்படி குறிப்பிட்ட கால அளவிற்குள் முழுப் புத்தகத்தையும் முடித்து ஸ்டெல்லோவ்ஸ்கியின் கையில் ஒப்படைத்து விடுவது- இதுதான் அவர்களின் திட்டம். இதில் தாஸ்தாயெவ்ஸ்கியின் வேலை என்னவென்றால், தன் நண்பர்கள் எழுதிய ஒவ்வொரு அத்தியாயத்தையும் பார்த்து, தேவையில்லாத விஷயங்களை நீக்கி புத்தகத்தைத் தயார் பண்ணுவதுதான். நண்பர்கள் சொன்ன அந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அவர். பிறர் எழுதும் ஒரு புத்தகத்தின் ஆசிரியர் என்று தன் பெயரைப் போட்டுக் கொள்வதைவிட, பேசாமல் ஸ்டெல்லோவ்ஸ்கியின் கடுமையான ஒப்பந்தத்திற்குக் கீழ்ப்படிந்து விடுவதே மேல் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். அப்போதுதான் அவரின் நண்பர்கள் ஒரு ஸ்டெனோக்ராஃபரை துணைக்கு வைத்து இந்த வேலையை எளிதில் முடிக்கலாமே என்ற எண்ணத்தை அவர்மனதில் ஊன்றியிருக்கிறார்கள். மில்யுக்கோவிற்கு நன்கு தெரிந்த ஸ்டெனோக்ராஃபி ஆசிரியர் திரு. ஆல்கின்.

ஆல்கின் தாஸ்தாயெவ்ஸ்கியைப் போய் பார்த்திருக்கிறார். ஸ்டெ னோக்ராஃபரை உடன் வைத்துக் கொண்டு புத்தகத்தை எழுதி முடிக்க முடியுமா என்ற தன் சந்தேகத்தை மிகவும் தயக்கத்துடன் ஆல்கினிடம் அவர் கேட்டிருக்கிறார். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் அவ ருக்கு சரியான நம்பிக்கையே வரவில்லை. எனினும், காலம் கடந்து கொண்டே இருந்ததால், உண்மை நிலைமையைப் புரிந்து கொண்டு இந்த ஒரு ஏற்பாட்டிற்கு சம்மதிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

உலக அனுபவங்கள் எனக்கும் அந்த நாட்களில் ஓரளவுக்கு கிடைத் திருந்தன என்றாலும், ஸ்டெல்லோவ்ஸ்கி நடந்து கொண்ட கடுமையான முறை எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

தேநீர் குடித்து முடித்ததும், தாஸ்தாயெவ்ஸ்கி நாவலைக் கூற ஆரம்பித்தார். தொடர்ந்து கதையைச் சொல்வதில் அவர் மனதில் ஏதோ தடுமாற்றம் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என்னவோ சிந்தனையில் ஆழ்ந்து போன அவர் அடிக்கொரு தரம் கதை கூறுவதை நிறுத்திக் கொண்டிருந்தார். அவ்வப்போது எழுதியதை மீண்டும் படித்துக் காட்டும்படி கேட்டார். ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். தான் மிகவும் களைப்படைந்து போய்விட்டதாகவும், சிறிது ஓய்வு எடுக்க தான் விரும்புவதாகவும் சொன்னார்.

முதல் நாள் பகல் நேரத்தில் பேசிக் கொண்டிருந்ததைப்போல, நாங்கள் பல விஷயங்களைப் பற்றியும் பேசத் தொடங்கினோம்.அவர் இயல்பாக இல்லை என்பது தெரிந்தது. ஒரு விஷயத்தை விட்டு இன்னொரு விஷயத்துக்கு தாவிக் கொண்டே இருந்தார். என் பெயர் என்ன என்று மீண்டும் என்னைப் பார்த்து கேட்டார். பிறகு அவரே அதைமறந்தும் போனார். நான் புகை பிடிப்பதில்லை என்று ஏற்கெனவே இரண்டு முறை கூறிய பிறகும், என்னைப் பார்த்து அவர் சிகரெட்டை எடுத்துக் கொள்ளும்படி நீட்டினார்.


நான் ரஷ்ய எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்டேன். அப்போதுதான் அவரால் இயல்பான நிலைக்கே வர முடிந்தது. எழுத்தாளர்களைப் பற்றி அவர் மிகவும் அமைதியான மனதுடன்- அதே நேரத்தில் உற்சாகம் மேலோங்கப் பேசினார். அவர் அப்போது பேசிய சில விஷயங்கள் இப் போதுகூட என் மனதில் அப்படியே பதிந்திருக்கின்றன.

கவிஞர் நெக்ரஸோவ், தாஸ்தாயெவ்ஸ்கியின் இளமைக் காலத்திலிருந்தே அவரின் நெருங்கிய நண்பராக இருந்தார். நெக்ரஸோவின் படைப்புகளை தாஸ்தாயெவ்ஸ்கி மனம் திறந்து பாராட்டிச் சொன் னார். "மைக்கோவ் ஒரு அருமையான கவிஞர் மட்டுமல்ல; நல்ல திறமைசாலி; நல்ல மனிதர்' என்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. துர்கனேவ் ஒரு மிகப்பெரும் எழுத்தாளர் என்றார் அவர். துர்கனேவ் வெளிநாட்டில் வசிப்பதால், ரஷ்யாவிற்கும் ரஷ்ய மக்களுக்கும் அவருடன் நேரடித் தொடர்பு இல்லாதது ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதை வருத்தத்துடன் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.

சிறிது இடைவேளைக்குப் பிறகு நாங்கள் மீண்டும் எழுத்து வேலையில் ஈடுபடத் தொடங்கினோம். மீண்டும் அவர் மனக் குழப்பத்தில் ஆழ்ந்து போனார். அதற்கு மேல் அவரால் கதையைச் சொல்ல முடியவில்லை. கொஞ்சமும் அறிமுகமில்லாத ஒருவருடன் இணைந்து புத்தகம் படைப்பது என்பது, அவருக்கு மிகவும் கஷ்டமான ஒரு காரியமாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான்கு மணி ஆனவுடன், நான் இருக்கையை விட்டு எழுந்தேன். இதுவரை எழுதியதை மறுநாள் பன்னிரண்டு மணிக்கு ஒழுங்குபடுத்தி விரித்து எழுதிக் கொண்டு வருவதாகச் சொன்னேன். வீட்டை விட்டு கிளம்புகிற நேரத்தில் அவர் தான் பயன்படுத்தும் ஒரு கட்டுத் தாள்களை என்னிடம் கொண்டு வந்து தந்தார்.

5

ப்படித்தான் நாங்கள் இருவரும் இணைந்து புத்தகம் எழுதும் வேலையில் ஈடுபட்டோம். தினமும் பகல் பன்னிரண்டு மணிக்கு நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டிற்கு வருவேன். நான்கு மணி வரை நாங்கள் தொடர்ந்து வேலை செய்வோம். மத்தியில் உணவு அருந்துவதற்காக கொஞ்சம் இடைவேளை விடுவோம். இடையில் ஒன்றிரண்டு முறை இளைப்பாறிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இடைவேளை விட்டுக் கொள்வதும் உண்டு. இந்த புதிய பாணியில் நாவல் எழுதும் பழக்கத்திற்கு தாஸ்தாயெவ்ஸ்கி தன்னைச் சரிப்படுத்திக் கொண்டதை எண்ணிய போது, உண்மையிலேயே நான் சந்தோஷப்பட்டேன். ஒவ் வொரு நாள் அதிகம் ஆக ஆக, அவரிடம் தளர்வு நிலை மாறிஅவர் நல்ல நிலைக்கு வந்து கொண்டிருப்பதை என்னால் காண முடிந்தது. இந்த முறையுடன் இணைந்து அவர் தன் வேலையைச் செய்ய பழகிக் கொண்டிருந்தார். பக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவருக்குஉற்சாகமும் மனதில் நம்பிக்கையும் உண்டாகத் தொடங்கின. குறிப்பிட்ட கால அளவிற்குள் இந்தப் புத்தகத்தை நாம் முடித்துவிட முடியும் அல்ல வா என்று பல முறை அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.

இடையில் நேரம் கிடைக்கிறபோது தன்னுடைய வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல உணர்ச்சிகரமான சம்பவங்களை அவர் என்னிடம் மனம் திறந்து கூறவும் செய்தார். அவரின் அந்த சோகக் கதைகளைக் கேட்டு என் இதயத்தில் அவர் மேல் ஒருவித இரக்கம் உண்டானது. அவருக்கு உண்டான அந்த துக்ககரமான நிகழ்ச்சிகளின் நினைவுகள் அவரை எந்த நேரமும் விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட வெளியே வரவில்லையே என்று முதலில் நான் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். அவ ரின் குடும்பப் பின்னணி எப்படி, அவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் அனைவரும் வேறு எங்காவது வசித்துக் கொண்டிருக்கி றார்களோ என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைத்தேன். அதைப்பற்றி எனக்கு- சொல்லப்போனால்- எதுவுமே ஆரம்ப நாட்களில் தெரியாமல் இருந்தது. நான் முதல் நாள் வந்தபோது வீட்டில் வைத்துப் பார்த்தேனே ஒரு இளைஞனை- அவனைத் தவிர அந்த வீட்டில் வேறு யாரையுமே பார்க்கவில்லை. ஒருநாள் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை விட்டு வெளியேறி நான் தெருவில் கால் வைத்து நடக்க ஆரம்பித்தபோது, ஒரு இளைஞன் என் முன் வந்து என்னைத் தடுத்து நிறுத்தினான். அவன் முதல் நாள் நான் வந்தபோது பார்த்த இளைஞன்தான். மிகவும் அருகில் அவனைப் பார்த்தபோது, பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு அவன் இருந்தான். வெளிறிப்போய் மஞ்சள் நிறத்தில் இருந்தான். கண்களில் மஞ்சள் புள்ளிகள். பற்கள் முழுக்க கறை.

“என்னைத் தெரிகிறதா?” அந்த இளைஞன் என்னைப் பார்த்துக் கேட்டான். தொடர்ந்து அவன் சொன்னான்:

“நான் உங்களை அப்பாவோட வீட்ல பார்த்திருக்கேன். நீங்க வேலை செய்யறப்போ, அங்கே நான் வர விரும்பல. ஆனால் ஸ்டெனோக் ராஃபியைப் பற்றி நான் தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். கொஞ்ச நாட்கள் கழிச்சு, நான் அதைப் படிக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு நீங்க அதைச் சொல்லித் தரமுடியுமா?” அவன் என் கையிலிருந்த ப்ரிஃப்கேஸை வெடுக்கென்று பிடுங்கி, அடுத்த நிமிடம் அதைத் திறந்து நான் எழுதிய தாள்களை எடுத்துப் பார்த்தான். அவனின் அந்தச் செயலைப் பார்த்து நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுவிட்டேன். அவனின் இந்த வினோத நடவடிக்கைக்குப் பதிலாக நான் எப்படி நடந்து கொள்வது என்றே எனக்குப் புரிபடவில்லை.

அவன் மீண்டும் தாள்களை இருந்தபடியே வைத்துவிட்டு, “ம்... சும்மா விளையாட்டுக்காகப் பண்ணினேன்” என்று சொன்னான். மிகப் பெரிய மனிதரான தாஸ்தாயெவ்ஸ்கிக்கு இந்த மாதிரியான சிறு பிள்ளைத்தனமான குணத்தைக் கொண்ட ஒரு பையன் எப்படிப் பிறந்தான் என்று ஆச்சரியத்துடன் நான் நின்றேன்.

ஒவ்வொரு நாளும் என்னிடம் தாஸ்தாயெவ்ஸ்கி பழகும் முறையிலும் நடந்து கொள்ளும் விதங்களிலும் ஒருவிதமான நெருக்கமும் தெளிவான அணுகுமுறையும் தெரிந்தது. "சின்ன மாடப்புறா' என்றோ, "சின்ன தேவதை' என்றோ, "அன்புள்ள அன்னா' என்றோ என்னை அழைத்து, தான் என்மீது கொண்டிருக்கும் அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தினார். ஒரு குழந்தைமீது ஒரு மனிதன் கொண்டிருக்கும் பாசமும் வாஞ்சையுமே அது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்ன இருந்தாலும், ஒரு பள்ளி மாணவியைவிட கொஞ்சம் வளர்ந்திருக்கும் ஒருத்திதானே நான்!

நான் இருப்பதால், அவரின் மனதில் இருந்த பாரம் சற்றாவது குறைந்து போயிருந்ததில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியே. நாவல் எழுதும் வேலை படுவேகமாகப் போய்க் கொண்டிருந்ததாலும், வெகு சீக்கிரமே இதை முடித்துவிட முடியும் என்று நான் உறுதியான குரலில் கூறி இருந்ததாலும் அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார்.


நான் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு எழுத்தாளருக்கு அவரின் படைப்பு வேலையில் உதவுகிறேன் என்பது மட்டுமல்ல; அவரின் இழந்துபோன மன தைரியத்தை அவருக்கு மீண்டும் வரச் செய்வதற்கும் நான் ஒரு வகையில் காரணமாக இருந்தேன். இந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது, எனக்கே என்மீது பெருமையாகக்கூட இருந்தது.

புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரைப் பற்றி நான் கொண்டிருந்த அச்சம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டிருந்தது. ஒரு மாமாவுடனோ,இல்லாவிட்டால் ஒரு பழைய நண்பருடனோ எப்படி நாம் பழுகுவோமோ, அந்த மாதிரி எந்தவித தயக்கமும் இல்லாமல் நெருக்கமாக நான் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் பழகினேன். அவரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல திருப்பமான நிகழ்ச்சிகளைப் பற்றி அவரிடம் நான் கேட்டேன். நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லத் தயா ராக இருந்தார். பீட்டர்பால் கோட்டையில் தான் எட்டுமாத காலம் இருட்டறையில் கைதியாக அடைக்கப்பட்டிருந்ததையும், சிறைச் சுவருக்கு வெளியே கைதிகள் எப்படி ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள் என்பதையும் எனக்கு விவரித்தார் அவர். கடுமையான குற்றவாளிகளுடன் சைபீரியா சிறைகளில் தான் இருந்த நாட்களை என்னிடம் அவர் விளக்கமாகக் கூறினார். தன்னுடைய வெளிநாட்டுப் பயண அனுபவங்களைப் பற்றியும், பிறநாட்டு மக்களைப் பற்றியும்அவர் எனக்கு விவரமாகச் சொன்னார். மாஸ்கோவில் அவருக்கு உறவி னர்கள் இருக்கிறார்கள் என்றார். ஒரு கட்டத்தில் தான் திருமணம் ஆன மனிதர் என்பதையும், மூன்று வருடங்களுக்கு முன்புதான் அவ ருடைய மனைவி மரணத்தைத் தழுவியதாகவும் சொன்னார். இறந்து போன மனைவியின் ஓவியத்தை அவர் என்னிடம் காட்டினார். அந்த ஓவியம் என் மனதில் பெரிய பதிவு ஒன்றையும் உண்டாக்கவில்லை. மரணத்திற்கு முன்பு நோய்வாய்ப்பட்டுக் கிடந்திருந்த வேளையில், அந்தப் பெண்ணை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மரணமடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால், கிட்டத்தட்ட அவர் ஒரு நடமாடும் பிணத்தைப்போல இருந்த காலகட்டத்தில் அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. நான் கொஞ்ச மும் விரும்பாத அந்த இளைஞன் தாஸ்தாயெவ்ஸ்கிக்குப் பிறந்த மகன் அல்ல என்பது தெரிந்தபோது, ஒருவிதத்தில் அந்தச் செய்தி என் மனதில் நிம்மதியையே தந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவிக்கு இருந்த முதல் கணவனுக்குப் பிறந்த மகன்தான் அந்த முட்டாள்தனமான இளைஞன். அவன் தரும் தொல்லைகளையும், கண்டபடி உண்டாக்கும் கடன்களையும் தாஸ்தாயெவ்ஸ்கி பலவித பிரச்சினைகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு தாங்கிக் கொண்டார். பணம் சம்பாதிப்பதற்காக அந்த இளைஞன் எந்த மாதிரியெல்லாம் தவறான வழிகளில் சென்றிருக்கி றான் என்பதைப் பின்னாட்களில்தான் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியின் கதைகள் முழுவதும் சோகமயமானவையே. ஒருமுறை அவரைப் பார்த்து நான் கேட்டேன்: “நீங்க ஏன் எப்பவுமே சோகமயமான சம்பவங்களை மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? வாழ்க்கையில நாம மனம் திறந்து சொல்ற அளவுக்கு எவ்வளவு மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் இருக்கு!”'

“மகிழ்ச்சி! அப்படிப்பட்ட ஒண்ணை நான் வாழ்க்கையில் இதுவரை அறிந்ததே இல்லை. நான் மனதில் அடையணும்னு ஆசைப்பட்ட சந்தோஷத்தை இதுவரை அடைஞ்சதே இல்லைன்றதுதான் உண்மை. இப்பக்கூட சொல்லப்போனால்- நான் அதற்காக காத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நான் என்னோட நண்பர் ராம்கலுக்கு (சைபீரியாவில் இருந்தபோது, தாஸ்தாயெவ்ஸ்கிக்கு உதவிய கவர்னர்) ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதுல இவ்வளவு சோகங்கள் வாழ்க்கையில் நடந்த பிறகும், ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்த பிறகும்... வாழ்க்கையில் இனியும் நல்லது நடக்கும்ணும், மகிழ்ச்சியான நிமிஷங்கள் கட்டாயம் வரவே செய்யும்ணும் நான் குறிப்பிட்டிருந்தேன்.”

தாஸ்தாயெவ்ஸ்கியின் அந்த வார்த்தைகளில்தான் எந்த அளவிற்கு கவலை இழையோடியிருக்கிறது! அவர் கனவு கண்ட ஆனந்தமயமான வாழ்க்கை அவர் பாதி தூரத்தைக் கடந்த பிறகும் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் முழுமையான நம்பிக்கையுடன் அந்த சந்தோஷமான வாழ்க்கைக்காக அவர் இப்போதும் காத்திருக்கவே செய்கிறார்.

ஒருநாள் மிகவும் மனதில் வேதனை மண்டிவிட்டிருந்த வேளையில் அவர் என்னிடம் சொன்னார்: “அன்னா, இப்போதைக்கு என்னோட வாழ்க்கையில மூணு வழிகள் தெரியுது. ஒரு வழி- ஜெருசலேமுக்கு புனித யாத்திரையா போயிடறது. இரண்டாவது வழி- ஐரோப்பாவுக்கு சூதாட்டக்காரனா போறது. மூணாவது வழி- இன்னொரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு வாழுறது!”

இந்த வழிகளில் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும், வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் பிறக்கப்போவது உறுதி என்ற திடமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. என்னுடன் ஒரு நெருங்கிய நட்புணர்வு தோன்றியதால், இதைப் பற்றி என்னுடைய கருத்தைக் கூறும்படி அவர் கேட்டார்.

கள்ளங்கபடமில்லாமல் திறந்த மனதுடன் அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது என்பது குழப்பமான ஒரு விஷயம் என்று என் மனதில் பட்டது. ஜெருசலேமுக்கு புனித யாத்திரை போவதும், சூதாட்டத்தில் மீண்டும் தன்னை இணைத்துக் கொள்வதும் சாத்தியமான விஷயங்கள் என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய நண்பர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் ஆனந்தம் ததும்பும் சூழ்நிலைகளை நான் பார்த்திருப்பதால், மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுப்பதே சரியான ஒரு விஷயமாக இருக்கும் என்ற என் அபிப்ராயத்தைச் சொன்னேன் நான். மீண்டும் ஒரு திருமணத்தைச் செய்து அருமையான ஒரு குடும்ப வாழ்க் கையை வாழ்வது- இதுதான் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு நான் கூறிய மொழி.

“நான் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னா நீங்க சொல்றீங்க? என்னை யார் திருமணம் செய்ய சம்மதிப்பாங்க? நான் எந்த மாதிரியான ஒரு பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுப்பது? ஒரு அறிவாளியையா, இல்லாட்டி ஒரு அமைதியான பெண்ணையா?” தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் பார்த்துக் கேட்டார்.

“கட்டாயம் ஒரு அறிவாளியான பெண்ணை...”'

“நிச்சயமா முடியாத விஷயம். நான் அமைதியான குணத்தைக் கொண்ட ஒரு பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பேன். அவள்தான் என்னை அன்போட பார்த்துக்குவா!”

இதற்கிடையில் அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்- எனக்கு திருமண ஆலோசனை வந்திருக்கிறதா என்று. இதற்கு முன்பு இரண்டு இளைஞர்கள் என்னைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நான் அவருக்கு பதில் சொன்னேன்.

“காரணம்- அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், காதலிக்க வில்லை” என்றேன்.

“காதல்... நீங்க சொல்றது சரிதான். வெறும் மதிப்பை மட்டும் வச்சிக்கிட்டு, எப்படி ஒரு மனிதனைத் திருமணம் செய்ய முடியும்?” தாஸ்தாயெவ்ஸ்கி உரத்த குரலில் சொன்னார்.


6

சில நாட்கள் சென்ற பிறகு அக்டோபர் மாதத்தின் மத்தியில் நாங்கள் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அப்போது படிப்பு அறையின் வாசல் படியில் கவிஞர் மைக்கோவ் வந்து நின்றார். நான் அவரின் படங்களைப் பார்த்திருப்பதால் அவரை உடனே என்னால் அடையாளம் காண முடிந்தது.

“உங்களின் வீடு என்னை மிகவும் நன்றாக வரவேற்கிறது. முன் கதவு திறந்து கிடக்குது. ஒரு வேலைக்காரனைக்கூட காணோம். யார் வேண்டும்னாலும் உள்ளே நுழைஞ்சு இங்கே இருக்குற மொத்த சாமான்களையும் எடுத்துக் கொண்டு போயிடலாம்!”

மைக்கோவைப் பார்த்ததும் அவருக்கு என்னை தாஸ்தாயெவ்ஸ்கி அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை தன்னுடைய தொழில்மீது சிரத்தை கொண்ட பார்ட்னர் என்று அவர் சொன்னார். அவர் என்னை அதிகம் புகழ்கிறாரோ என்று நான் நினைத்தேன். எல்லா எழுத்தாளர்களும் நான் அறிமுகமானவுடன் கேட்கிற அதே கேள்வியை மைக்கோவும் கேட்டார். சமீபத்தில் மரணமடைந்த எழுத்தாளரான ஸ்னத்கின் என்னு டைய சொந்தக்காரரா என்ற கேள்வியே அது. எங்களின் வேலைக்கு தான் தொந்தரவாக இருக்கப் போவதில்லை என்றும், சீக்கிரமே தான் போய்விடுவதாகவும் சொன்னார் மைக்கோவ். அப்படியென்றால் சிறிது இடைவேளை விடலாம் என்று தாஸ்தாயெவ்ஸ்கியிடம் சொன்னேன் நான். மைக்கோவும் தாஸ்தாயெவ்ஸ்கியும் பக்கத்து அறைக் குள் போனார்கள். சுமார் இருபது நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, நான் இதுவரை சுருக்கெழுத்தில் எழுதியவற்றை விரிவுபடுத்தி எழுத ஆரம்பித்தேன்.

மைக்கோவ் என்னிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக படிப்பு அறைக்குள் வந்தார். அவர் முன்னிலையில் நாங்கள் ஏதாவது எழுத வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அந்தச் சமயத்தில் ஸ்டெனோ க்ராஃபி என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பாக இருந்ததால், பொதுவாக எல்லாருக்குமே அதன்மீது ஒரு மோகம் இருந்தது. மைக்கோவின் ஆசையை நிறைவேற்றத் தீர்மானித்தார் தாஸ்தாயெவ்ஸ்கி. ஒரு அரை பக்க கதையை நான் மைக்கோவின் முன்னிலையில் சுருக்கெழுத்தில் எழுதினேன். தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னதை, பின்னர் விரித்து நான் கூறினேன். நான் சுருக்கெழுத்தில் எழுதியிருந்ததைப் பார்த்த மைக்கோவ் சிரித்தார். “எனக்கு இதோட வாலும் புரியவில்லை, தலையும் புரியவில்லை” என்றார் அவர்.

எனக்கு மைக்கோவைப் பற்றி நல்ல ஒரு அபிப்ராயம் உண்டானது. அவரின் கவிதைகளை ஏற்கெனவே நான் படித்திருக்கிறேன். மைக்கோவைப் பற்றி தாஸ்தாயெவ்ஸ்கியும் உயர்வான ஒரு எண்ணத்தையே கொண்டிருந்தார். அதனால் மைக்கோவைப் பற்றி என் மனதில் இருந்த மரியாதை மேலும் கூடியது. காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது. தாஸ்தாயெவ்ஸ்கி "சூதாட்டக்கார'னின் வேலையில் முழுமையாக ஆழ்ந்து போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குஅந்நாவலில் மிகவும் சிறப்பாகத் தோன்றிய சில கதாபாத்திரங்களை தாஸ்தாயெவ்ஸ்கி விரும்பவே இல்லை. நேராகக் கதையைச் சொல்லும் போக்கை மாற்றி இரவு நேரங்களில் தான் எழுத நினைத்திருப்பதை சிறிய சிறிய குறிப்புகளாக நோட்டில் அவர் எழுதி, மறுநாள் நான் வந்திருக்கும்போது அவற்றை எனக்குப் படித்துக் காட்டும் வழக்கத்தை அவர் பின்பற்றினார். எங்களின் உழைப்பு சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததை எங்களால் உணர முடிந்தது. ஸ்டெல்லோவ்ஸ்கி முடி வாகக் கூறியிருக்கிற நாளுக்கு முன்பே, நம்மால் இந்த நாவலை முழுமையாக முடித்து அந்த ஆளின் கையில் தந்துவிட முடியும் என்ற நம்பிக்கைஎனக்கு இருப்பதாக நான் சொன்னபோது, தாஸ்தாயெவ்ஸ்கியின் முகத் தில் தெரிந்த பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே! தன்னுடைய சம்பாத்தியம் முழுவதையும் சூதாட்டத்தில் இழந்து நிற்கும் வயதான பாட்டியின் கதாபாத்திரம்தான் "சூதாட்டக்காரன்' நாவலிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. பவ்ளின் என்ற கதாபாத்திரத்தையும், சூதாட்டக்காரனையும் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் கதாநாயகனின் சூதாட்ட மோகத்தையும், அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் நான் விரும்பினேன். ஆனால், தாஸ்தாயெவ்ஸ்கியோ முழுமையாக சூதாட்டக் காரனின் பக்கமே நின்றிருந்தார். சூதாட்டக்காரனின் பல உணர்வுகளும், அனுபவங்களும் தன்னுடையவையே என்று சொன்னார் அவர்.

நாவலைப் பற்றிய என்னுடைய அபிப்ராயங்களை கொஞ்சமும் மறைக்காமல் நான் சொன்னேன். சிறுபிள்ளைத்தனமாக நான் சொன்ன அபிப்ராயங்களையும் கருத்துக்களையும் அந்த மிகப் பெரும் எழுத் தாளர் கவனத்துடன் கேட்டார். நாவல் எழுதும் வேலையில் இறங்கி மூன்று வாரங்கள் ஓடிய பிறகுதான், நானே என்னைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். என்னுடைய பழைய தொடர்புகள் எல்லாமே கிட்டத் தட்ட நின்று போயிருந்தன. ஆல்கினிடம் சொல்லிவிட்டு, அவரின் ஒப்புதலுடன் தற்காலிகமாக ஸ்டெனோக்ராஃபி படிப்பை நிறுத்தி வைத்தேன். என்னுடைய சினேகிதிகளில் குறிப்பிட்ட ஒருசிலரை மட்டுமே என்னால் சந்திக்க முடிந்தது. கதை எழுதும்போது உண்டாகும் தீவிரமான கருத்துப் பரிமாற்றத்திலும், அதை எழுதுவதிலும் மட்டுமே என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். மிகவும் அக்கறையுடன் என் வேலையில் என்னை பூரணமாக மூழ்க வைத்தேன். நான் இதுவரை பழகியிருக்கும் இளைஞர்களை தாஸ்தாயெவ்ஸ்கியுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஒரு உண்மை புரிந்தது. அந்த இளைஞர்களின் எண்ணங்களும் பேச்சும் எந்த அளவிற்கு மேலோட்டமாகவும் அர்த்தமில்லாதவையாகவும்இருக்கின்றன என்பது தெரிந்தது. அதே நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் எந்த அளவிற்கு உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு இருக்கிறது என்பதும் தெரிந்தது.

தலைக்குள் ஏகப்பட்ட புதிய விஷயங்களை ஏற்றிக் கொண்டு அங்கே யிருந்து கிளம்பி வீட்டிற்கு வரும் நான், நிலை கொள்ளாமல் தவிப்பேன். சீக்கிரம் பொழுது விடியாதா என்று நினைப்பேன். நாவல் சீக்கிரம் முடியப் போகிறதே என்பதை எண்ணியபோது, என் மனதில் கவலை உண்டாக ஆரம்பித்தது. எனக்கும் தாஸ்தாயெவ்ஸ்கிக்கும் இடையே உண்டான நட்பு ஒரு நினைவுக் குறிப்பாக மட்டுமே ஆகிவிடுமோ என்பதை நினைக்கும்போது, எனக்கு என்னவோபோல் இருந்தது. நான் நினைத்ததையேதான் தாஸ்தாயெவ்ஸ்கியும் நினைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

“அன்னா, உன்ச்னுடன் நான் செலவழித்த நாட்களை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. நாம ரெண்டு பேரும் பேசிய பேச்சுக்கள் என் மனசுல என்னைக்கும் பசுமையா இருக்கும். இந்த நாவல் முடிந்தவுடன், நம்ம ரெண்டு பேருக்குமிடையே உண்டாகியிருக்கிற இந்த நட்புக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும்ன்றதை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல. உன்னால இதைத் தாங்கிக்க முடியுதா? உண்மை யிலேயே இதை நினைச்சுப் பார்க்குறப்போ, மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? இந்த நாவல் முடிஞ்சாச்சுன்னா, நான் உன்னைப் பார்க்க முடியாது. இதுக்குப் பிறகு அன்னா, நான் உன்னை எங்கே பாக்குறது?”


“நாம பார்க்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?”- நான் கேட்டேன்.

“சரி... எங்கே வச்சு பாக்குறது? நீயே சொல்லு...”

“ஏதாவது ஒரு நண்பரோட வீட்ல... நாடக சாலையில்... சங்கீத சாலையில்...”

“அன்னா, உனக்குத் தெரியாதா நான் அதிகமா வெளியே போறதில்லைன்னு? நாடகத்திற்கோ இசையைக் கேட்பதற்கோ நான் போறதுன்றது ரொம்பவும் அபூர்வமான ஒண்ணு. வெளியே அப்படியே சந்திச்சாலும், ஒண்ணோ ரெண்டோ வார்த்தைகள்தாம் நாம பரிமாறிக்க முடியும். அதை நான் விரும்பல. அன்னா, நீ ஏன் உன்னோட வீட்டுக்கு என்னைக் கூப்பிடக் கூடாது? உன் குடும்பத்தைச் சேர்ந்தவங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கக் கூடாது?”

“கட்டாயம் நீங்க என் வீட்டுக்கு வரணும். அப்படி நீங்க வர்ற விஷயம் நாங்க மிகவும் மகிழ்ச்சியடைகிற ஒண்ணுன்றது மட்டும் உண்மை. ஆனாஒரே ஒரு விஷயத்திற்காகத்தான் நான் பயப்படுகிறேன். நானும் என் தாயும் உங்களை வீட்டுக்குக் கூப்பிடுற அளவுக்குத் தகுதியுள்ளவர்கள் இல்லை...”

“நான் எப்போ வீட்டுக்கு வரணும்?”

“முதல்ல நாவல் முடியட்டும். அதற்குப் பிறகு நாம இந்த விஷயத்தைத் தீர்மானிக்கலாம்.” நான் சொன்னேன்.

“இப்ப நம்ம முன்னாடி இருக்குற முக்கிய விஷயம் நாவலை முடிக்கிறதுதான் இல்லியா?”

ஸ்டெல்லோவ்ஸ்கிக்கு நாவலை முடித்துத் தர வேண்டிய இறுதி நாளான நவம்பர்- 1 விரைவில் நெருங்கிக் கொண்டிருந்தது. தன் கையெழுத்துப் பிரதியை வாங்கிக் கொள்ளாமல் ஸ்டெல்லோவ்ஸ்கி ஏதாவது சாக்குப் போக்குகள் சொன்னாலோ, இல்லாவிட்டால் தான் போகும் நேரத்தில் அங்கு இல்லாமல் வேறெங்காவது போய் அந்த ஆள் ஒளிந்து கொண்டாலோ என்ன செய்வது என்பதையும் தாஸ்தாயெவ்ஸ்கி நினைத்துப் பார்க்காமல் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால், தன்னுடைய எதிர்காலம் மிகவும் கேள்விக் குறியான ஒன்றாகிவிடும் என்பதை எண்ணி ஒருவித பதைபதைப்பு அவ ரிடம் உண்டானது. அவர் சந்தேகப்படுவது மாதிரி ஏதாவது நடந்தால், அப்படி நடப்பதிலிருந்து தன்னை அவர் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது என்பது பற்றி வெளியே விசாரித்து அவருக்கு வழிகள் சொல்வதாக நான் கூறினேன். மாலையில் வீட்டுக்குப் போனதும், எனக்கு நன்கு தெரிந்த ஒரு வக்கீலைப் பார்த்துவிட்டு வரும்படி என் தாயை அனுப்பினேன். ஒரு வக்கீலிடமோ மாவட்ட அளவில் உள்ள ஒரு காவல் துறை அதிகாரியிடமோ நாவலின் கையெழுத்துப் பிரதியை ஒப்படைக்க வேண்டும். (ஸ்டெல்லோவ்ஸ்கி வசிக்கும் பகுதியாக அது இருக்க வேண்டும்). கையெழுத்துப் பிரதியை யார் வாங்கினாலும், அவர்களிடமிருந்து முறையான ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் தெரிந்து கொண்ட இந்த வழிகள் சரியானவையாக எனக்குப் பட்டன. தாஸ்தாயெவ்ஸ்கி இது பற்றி வெளியே விசாரித்த நபர்களும் இதே வழிகளைக் கையாளச் சொல்லி இருக்கிறார்கள்.

7

க்டோபர் 29-ஆம் தேதி- நாங்கள் நாவலை எழுதுவதற்காக வேலை செய்த கடைசி நாள். "சூதாட்டக்காரன்' முழுமையாக முடிந்தது. அக்டோபர் 4 முதல் 29 வரை- மொத்தம் 26 நாட்கள். புத்தகம் வெற்றிகரமாக முடிந்ததால், அதைக் கொண்டாடும் வகையில், ஒரு ரெஸ்டாரெண்டில் நண்பர்களுக்காக (மைக்கோவ், மில்யுக்வோவ் போன்றவர்கள்) ஒரு விருந்து ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் காலையிலேயே கூறிவிட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி.

“ஏதாவது ரெஸ்டாரெண்டுக்கு இதற்கு முன்னாடி ஏதாவது விஷயத்திற்காக...?”- தாஸ்தாயெவ்ஸ்கி கேட்டார்.

“இல்லை. ஒருநாளும் போனதில்லை.”

“ஆனா... இந்த விருந்துக்கு அன்னா, நீ கட்டாயம் வரணும். வருவே இல்ல? என்னோட பார்ட்னர் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்ன்றதுக்காக நான் குடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பிட்ட நாள்ல நாவல் முடிவடைஞ்சதுன்னா, அதற்குக் காரணம் அன்னா, நீதான்... அதனால அன்னா... நீ கட்டாயம் வந்தே ஆகணும். வருவே இல்ல?”

என் தாயிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று இதற்கு நான் பதில் சொன்னாலும், அந்த இடத்திற்குப் போவதாக இல்லை என்று நான் ஏற்கெனவே மனதில் தீர்மானம் எடுத்துவிட்டேன். அமைதியான குணத்தைக் கொண்டவளும், கூச்ச சுபாவம் உடையவளுமான நான் அந்த இடத்திற்குப் போவதற்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாதவள் என்பது எனக்குத் தெரியும்.

அக்டோபர் 30-ஆம் தேதி நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் வீட்டை அடைந்தபோது, என்றைக்கும் இல்லாத மாதிரி அன்று விசேஷமான முறையில் என்னை அவர் வரவேற்றார். நான் அறைக்குள் நுழைந்தபோது, அவரின் முகம் வழக்கத்தைவிட மிகவும் பிரகாசமாக இருந்தது. நான் அன்று எழுதிக் கொண்டு வந்த பாகம் நாங்கள் கணக்குப் போட்டிருந் ததைவிட அதிகமாக இருப்பது தெரியவரவே, நாங்கள் மிகவும் சந்தோஷமடைந்தோம். நாவல் முற்றிலும் முடிவடைந்து விட்டது என்றும், அதை முதலிலிருந்து ஒரு தடவை படித்துப் பார்த்துவிட்டு ஏதாவது சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தால் செய்துவிட்டு,அதை ஸ்டெல்லோவ்ஸ்கியிடம் கொடுக்க வேண்டும் என்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. பேசிய முறைப்படி என் கையில் ஐம்பது ரூபிளை அவர் என்னிடம் கொடுத்தார். என் கைகளை அன்புடன் பிடித்துக் குலுக்கினார். மனம் திறந்து நான் செய்த உதவிக்கு நன்றி கூறினார்.

அன்று தாஸ்தாயெவ்ஸ்கியின் பிறந்த நாள் என்பது எனக்குத் தெரியும். என்றைக்கும் இல்லாதது மாதிரி அன்று நான் சில்க்கால் ஆன ஆடை அணிந்திருந்தேன். நீளமாக இருக்கும் அந்த ஆடை எனக்கு மிகவும் நன் றாக இருப்பதாகவும், அந்த ஆடையில் நான் உயரமாகத் தெரிவதாகவும், அந்த ஆடையில் நான் மிகவும் அழகாக இருப்பதாகவும் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி. அவர் அப்படி என்னைப் பாராட்டியதைக் கேட்டு உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த நல்ல நிமிடங்கள் அடுத்த சில நொடிகளிலேயே இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தன. தாஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர் மிகயீலின் மனைவி எமிலியா அப்போது அங்கு வந்தாள். தாஸ்தாயெவ்ஸ்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக அவள் வந்திருந்தாள். தன்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் இருந்து மீட்டவள் என்று என்னை எமிலியாவிற்கு தாஸ்தாயெவ்ஸ்கி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த அளவிற்கு உயர்வாக என்னைப் பற்றி அவர் கூறியும், எமிலியா அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவளின் பார்வையும் நடத்தையும் நான் விரும்பக்கூடிய அளவிற்கு இல்லை என்பதே உண்மை. அவள் அப்படி நடந்து கொண்டதைப் பார்த்து ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டேன். அவளின் நடத்தையை நினைத்து மனதிற்குள் மிகவும் நான் வருத்தம் கொண்டேன் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். தாஸ்தாயெவ்ஸ்கி, எமிலியா அங்கு இருப்பதையே கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் என்னுடன் நெருங்கிய நட்புணர்வுடன் பேசிக் கொண்டிருந்தார்.


ஒரு புதிய புத்தகத்தை என் கையில் தந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி சொன்ன தாஸ்தாயெவ்ஸ்கி, எமிலியாவை சுவருக்கு அருகில் நிற்க வைத்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மைக்கோவ் அங்கு வந்தார். அவர் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னாலும், என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். சகோதரரின் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த தாஸ்தாயெவ்ஸ்கி, “நாவல் எப்படி போய்க்கிட்டு இருக்கு?” என்று மைக்கோவ் கேட்டதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. அதற்கு நான்தான் பதில் சொன்னேன். நேற்றே நாவல் முற்றிலுமாக முடிவடைந்து விட்டது என்றும், நாவலின் கடைசி பாகத்தை இப்போது தான் தாஸ்தாயெவ்ஸ்கியின் கையில் கொண்டு வந்து கொடுத்தேன் என்றும் சொன்னேன் நான். அவ்வளவுதான்- என் பக்கம் வேகமாக ஓடி வந்த மைக்கோவ் என்னை இதுவரை அடையாளம் தெரியாமல் இருந்ததற்காக மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். தன் கண்களில் உள்ள பிரச்சினையே இதற்குக் காரணம் என்றார் அவர். உண்மையிலேயே அவரின் கண்களில் சில பிரச்சினைகள் இருந்தன. நான் அணிந்திருந்த புதிய ஆடையில் என்னை அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நாவலைப் பற்றி என்னிடம் திரும்பத் திரும்ப பல கேள்விகளையும் கேட்டார் மைக்கோவ். நாவலைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்பினார். "சூதாட்டக்காரன்' என்னை மிகவும் கவர்ந்த ஒரு நாவல் என்பதால், மனம் திறந்து அதைப் பாராட்டி நான் சொன்னேன். சாதாரணமாக, நாம் பார்க்க முடியாத மிகவும் அற்புதமான கதாபாத்திரங்கள் (பாட்டியைப்போல) பலவும் அருமையான உயிரோட்டத்துடன் நாவலில் படைக்கப்பட்டிருக்கின்றன என்றேன் நான். சுமார் இருபது நிமிடங்கள் நானும் மைக்கோவும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த எளிமையான, யாரும் விரும்பக்கூடிய குணத்தைக் கொண்ட கவிஞருடன் என்னால் எந்தவித தடங்கலும் இல்லா மல் உரையாட முடிந்தது. மைக்கோவ் என்னிடம் நடந்து கொண்ட முறையைப் பார்த்து, சிலையென நின்று விட்டாள் எமிலியா. சுருக்கெழுத்து எழுதக்கூடிய ஒரு சாதாரண பெண்ணுடன் இந்த அளவிற்கு அவர் ஏன் மரியாதையுடன் நடந்து கொள்கிறார் என்று அவள் நினைத்திருப்பாள் என்று நினைக்கிறேன்.

மைக்கோவ் அங்கிருந்து போனவுடன், எமிலியாவை எதற்குத் தேவை யில்லாமல் மனக்கிலேசத்திற்கு ஆளாக்க வேண்டும் என்று நினைத்த நான், அங்கிருந்து நீங்கலாமா என்றெண்ணினேன். தன்னுடைய சகோதரரின் மனைவியின் நடத்தை காரணமாகவே நான் புறப்பட எண்ணுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. நான் இப்போது போக வேண்டாம் என்று என்னை கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். தன்னுடைய சகோதரரின் மனைவியின் நடவடிக்கையால் என் மனதில் உண்டான வருத்தத்தை மாற்றும் வேலையில் அவர் இறங்க முயற்சிப்பது தெரிந்தது. வாசற்படி வரை வந்த அவர் தன்னை என்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்கும் விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தினார். நான் அவரை அழைத்திருப்பதை மறக்கவில்லை என்றேன்.

“அப்போ நான் நாளைக்கு வரலாமா?”

“நாளைக்கு நான் வீட்ல இருக்கமாட்டேன். பழைய ஒரு தோழியோட வீட்டுக்குப் போறேன்...”

“அதற்கு அடுத்த நாள்?”

“அன்னைக்கு எனக்கு ஒரு ஸ்டெனோக்ராஃபி லெக்சர் இருக்கு...”

“அப்படின்னா நவம்பர் ரெண்டாம் தேதி?”

“அதாவது புதன்கிழமை. அன்னைக்கு நான் ஒரு நாடகத்துக்குப் போக வேண்டியதிருக்கே!”

“கடவுளே! இந்த வாரம் முழுவதும் உனக்கு வேலைகளா? இதெல்லாம் வேணும்னே சொல்ற சாக்குப் போக்குகள்னு என் மனசுல ஒரு சந்தேகம்... அன்னா, நான் உன் வீட்டுக்கு வர்றதை நீ விரும்பலியா? இப்போவாவது உண்மையைச் சொல்லு...”

“நிச்சயமா இல்ல. நீங்க எங்களோட வீட்டுக்கு வர்றதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும். நவம்பர் மூணாம் தேதி வாங்க. வியாழக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு. சரியா?”

“வியாழக் கிழமைக்கு முன்னாடி முடியாதா? வியாழக்கிழமை வர்றதுக்கு இன்னும் எவ்வளவு நாட்கள் இருக்கு! அவ்வளவு நாளும்அன்னா, உன்னை நான் பார்க்காமல் எப்படி இருக்குறது?”

உண்மையாகவே தாஸ்தாயெவ்ஸ்கி அப்போது அப்படிச் சொன் னதை- வெறும் மரியாதை நிமித்தமான ஒன்றாகவே நினைத்தேன்.

8

ந்த இனிமையான நாட்கள் முடிந்துவிட்டன. தாஸ்தாயெவ்ஸ்கி யுடன் நான் பேசிய சம்பவங்களும் உரையாடிய நிகழ்ச்சிகளும் அவ ருடன் நான் நாவலை உருவாக்க செலவழித்த நிமிடங்களும் என் மனதின் அடித்தளத்தில் வலம் வந்து எனக்கு தாங்க முடியாத ஒரு ஆனந்தத்தை அளித்துக் கொண்டிருந்தன. நான் மீண்டும் என்னுடைய ஸ்டெனோக்ராஃபி வகுப்பிற்குள் நுழைந்தேன். எனினும், முன்பு மாதிரி என்னால் அந்த வகுப்பில் முழுமையாக ஒன்ற முடியவில்லை. ஏதோ பாலைவனத்தில் என்னை விட்டதைப்போல் நான் உணர்ந்தேன். தாஸ்தாயெவ்ஸ்கி என் வீட்டிற்கு வருவதாகச் சொன்ன விஷயம் மட்டுமே அப்போது என் மனதில் இருந்தது. நானோ என் தாயோ நிச்சயம் தாஸ்தாயெவ்ஸ்கியை வீட்டிற்கு வரவழைக்கக்கூடிய அள விற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை என் மனதில் கொண்டு வந்தேன். நிச்சயம் அந்த அளவிற்கு மிகப்பெரிய மனிதர் அவர்! நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எல்லாமே அந்த நாவலைச் சுற்றிய விஷயங்களைத்தாம். ஆனால், இப்போது எங்கள் வீட்டிற்கு தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு விருந்தாளியாக வருகிறார். அவரை நாங்கள் எந்தவித குறைவும் இல்லாமல் வரவேற்று, பார்க்க வேண்டி இருக்கிறது. அவர் வீட்டிற்கு வரும்போது அவரிடம் என்ன பேசுவது என்று இப்போதே பலவிதத்திலும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிராமப் புறத்தில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வருவதென்றால் மிகவும் கஷ்டப்பட்டு பயணம் செய்தே அவர் வரவேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தபோது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மிகவும் களைத்துப்போய் அவர் எங்கள் வீட்டிற்கு வரப் போகிறார் என்பதையும், என்னுடன் செலவழித்த தருணங்களை மனதில் அசை போட்டுப் பார்த்து, இந்த அளவிற்குத் தன்னுடன் பழகத் தகுதியில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணுடன் தனக்கு அறிமுகம் உண்டாகிவிட்டதே என்பதற்காக அவர் வருத்தப்படப் போவது நிச்சயம் என்பதையும் இப்போதே மனதில் நான் எண்ணிப் பார்த்தேன். தாஸ்தாயெவ்ஸ்கியை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் அடித்தளத்தில் அரும்பினாலும், ஒருவேளை அவர் எங்கள் வீட்டிற்கு வரப்போகும் விஷயத்தை ஒரேயடியாக மறந்து போனாலும் போயிருக்கலாம் என்ற எண்ணமும் அதே நேரத்தில் எழாமல் இல்லை.


இயற்கையாகவே நல்ல விஷயங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்பதை மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் பெண் நான் என்பதால், எதற்குத் தேவையில்லாமல் கண்டபடி மனதைப் போட்டு அலைக்கழிக்க வேண்டும் என்று நினைத்து, அவ்வகை சிந்தனைகள் மனதில் எழாமல் பார்த்துக் கொண்டேன். முன்பு என்னுடன் பள்ளியில் படித்த ஒரு சினேகிதியைப் பார்க்கப் போனேன். அடுத்த நாள் நாடகம் பார்ப்பதற்காகப் போனேன். ஸ்டெனோக்ராஃபி வகுப்புக்கும் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். நாவலை வெற்றிகரமாக முடித்ததற்காக ஆல்கின் என்னை மனம் திறந்து பாராட்டினார். என்னை சிபாரிசு செய்ததற்காகப் பாராட்டி ஆல்கினுக்கும் தாஸ்தாயெவ்ஸ்கி கடிதம் எழுதியிருந்தார். என்னுடைய பூரணமான ஒத்துழைப்பு இருந்ததால்தான் குறிப்பிட்ட கால அளவிற்குள் நாவலை எழுதி முடிக்க முடிந்தது என்றும், சுருக்கெழுத்து உதவியுடன் நாவல் எழுதும் இந்த உத்தியை தான் மிகவும் விரும்புவதாகவும், இனி வரும் காலத்திலும் இதே உத்தியைத் தொடர தான் உத்தேசிப்பதாகவும் தாஸ்தாயெவ்ஸ்கி ஆல்கினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நவம்பர் மூன்றாம் தேதி காலையில் இருந்தே நான் தாஸ்தாயெவ்ஸ்கியை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் முழு மூச்சாக இறங்கிவிட்டேன். பல சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு வாங்கித் தந்த பலகாரங்களையும், அவருக்கு மிகவும் விருப்பமான மிட்டாய்களையும் அவருக்காக எடுத்து வைத்தேன். அந்த முழு நாளும் நான் ஏகப்பட்ட பரபரப்புடன் இருந்தேன். ஏழு மணி ஆனவுடன், என்னிடம் ஒருவித பதைபதைப்பு வந்து தொற்றிக்கொண்டது. மணி ஏழரை அடித்தது. எட்டானது.தாஸ்தாயெவ்ஸ்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. ஒருவேளை அவர் மனம் மாறியிருக்கலாம்- இல்லாவிட்டால் இங்கு வரப்போகும் விஷயத்தையே முற்றிலுமாக மறந்து போயிருக்கலாம். இப்படிப் பல விதத்திலும் நான் சிந்தித்தவாறே ஒருவித குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தேன். சரியாக எட்டரை மணிக்கு வாசற்கதவில் பொருத்தியிருந்த அழைப்பு மணி அடித்தது. நான் கதவை நோக்கி வேகமான ஓடிச்சென்றேன்.

“ஓ... இந்த வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“அப்படித் தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சது எனக்கு மிகவும் பிடிச் சிருந்தது. நான் இங்கே வந்ததால் அன்னா, உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே! ஒவ்வொரு வீடா நான் ஏறி இறங்கி இந்த முகவரி எங்கே இருக்குன்னு கேட்டேன். யாருக்குமே இந்தத் தெரு எங்கே இருக்குன்னு தெரியல. கடைசியில் ஒரு நல்ல மனிதர் என்னோட வாடகைக் கார்ல ஏறி இங்கே வந்து இந்த வீட்டை காட்டித் தந்தாரு...”

தாஸ்தாயெவ்ஸ்கி பேசிக்கொண்டிருந்தபோது என் தாயார் அங்கு வந்தாள். என் தாய்க்கு தாஸ்தாயெவ்ஸ்கியை அறிமுகப்படுத்தி வைத்தேன். பெண்களிடம் மரியாதை செலுத்தும் நிமித்தமாக அவர் என் தாயின் கையில் முத்தமிட்டார். ஸ்டெல்லோவ்ஸ்கிக்கு குறிப்பிட்ட கால அளவிற்குள் நாவலை முடித்துத் தரவேண்டும் என்பதற்காக தான் மனக்கிலேசத் தில் சிக்கிக் கிடந்ததையும், இந்த விஷயத்தில் நான் செய்த உதவிக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என்றும் என் தாயிடம் கூறினார் தாஸ்தாயெவ்ஸ்கி.

நாங்கள் முன்கூட்டியே நினைத்தது போலவே பல தகிடுதத்த வேலை களைச் செய்ய ஆரம்பித்தார் ஸ்டெல்லோவ்ஸ்கி. தாஸ்தாயெவ்ஸ்கி நாவலுடன் அந்த மனிதரைத் தேடிச் சென்றபோது, அவர் தன்னுடைய முகவரியில் இல்லாமல் வேறு எங்கோ போயிருந்தார். அந்த ஆள் எப்போது திரும்பி வருவார் என்ற விஷயம் அவரின் வேலைக் காரனுக்குக்கூட தெரியவில்லை. தாஸ்தாயெவ்ஸ்கி அடுத்த நிமிடம் ஸ்டெல்லோவ்ஸ்கியின் அலுவலகத்திற்கு ஓடினார். அந்த அலுவலகத் தின் குமாஸ்தா கையெழுத்துப் பிரதியை தன் கையில் வாங்கத் தயாராக இல்லை. தனக்கு அதைப் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டான் அவன். மிகவும் தாமதமாக வந்த தாஸ்தாயெவ்ஸ்கி அந்தக் கையெழுத்துப் பிரதியுடன் வக்கீலின் அலுவலகத்தைத் தேடிப் போயிருக்கிறார். கையில் கொண்டு போயிருந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை அங்கே கொடுத்துவிட முயற்சித்திருக்கிறார். அங்கு காரியம் நடக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் அங்கு முக்கியமான ஒரு அதிகாரியைக்கூட பார்க்க முடியவில்லை. நாள் முழுக்க தாஸ்தாயெவ்ஸ்கி படாதபாடுபட்டிருக்கிறார். கடைசியில் இரவு பத்து மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஒரு போலீஸ்காரர் நாவலை வாங்கிக் கொண்டு ஒரு ரசீதை அவர் கையில் தந்திருக்கிறார்.

முன்பு எப்போதும் இருப்பதைப்போல சாதாரணமாக அமர்ந்து நாங்கள் தேநீர் குடித்தோம். நான் மனதில் இப்படி நடக்க வேண்டும், அப் படி நடக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருந்ததை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தேன். எவ்வளவோ விஷயங்கள் மனதில் அரும்பி பொங்கி தலைகாட்டியது. தாஸ்தாயெவ்ஸ்கியின் நடத்தை என் தாயை மிகவும் கவர்ந்துவிட்டது. மிகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வரப்போகிறார் என்பதை அறிந்து என் தாய் மிகவும் பதைபதைப்புடன் இருந்ததென்னவோ உண்மை. ஆனால், தாஸ்தாயெவ்ஸ்கி சாதாரண மக்களுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருந்த ஒரு மனிதராக இருந்தார். முன்னேற்பாட்டுடன் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் ஆரம்பத்தில் பழகும் நபர்கள் காலப்போக்கில் எப்படி அவருடன் மிகவும் நெருக்கமாய் பழகி விடுகிறார்கள் என்பதைப் பின்னர் பல நேரங்களில் தெரிந்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

ஒரு வார இடைவேளைக்குப் பிறகு தான் "குற்றமும் தண்டனையும்' என்ற நூலின் தொடர்ச்சியைப்போல ஒரு புதிய நூலை எழுதத் திட்டமிட்டிருப்பதாகவும், அதை எழுதுவதற்கு என்னுடைய ஒத்து ழைப்பு கட்டாயம் தேவை என்றும் பேச்சுக்கு நடுவே குறிப்பிட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. இனி தான் எழுத இருக்கும் எல்லா படைப்புகளுக்கும் என்னுடைய உதவி கட்டாயம் தேவை என்றும், நானும் உடன் இருக்க நாவல் எழுதுவது என்பது மிகவும் எளிதான வேலையாக இருக்கிறது என்றும், இந்தக் கூட்டு முயற்சி தன் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதால், இந்த ஒத்துழைப்பை இனி வரும் நாட்களிலும் நான் கட்டாயம் தரவேண்டும் என்றும் மிகவும் கெஞ்சி என்னை கேட்டுக் கொண்டார் அவர்.

“நானும் அப்படி உங்களோடு சேர்ந்து வேலை செய்றதுக்காகச் சந்தோஷப்படுறேன்.” நான் சொன்னேன்: “ஆனா, ஆல்கின் இதைப்பற்றி என்ன நினைப்பார்னு எனக்குத் தெரியல. புதிய வேலைக்கு அவர் வேற யாராவது ஒரு மாணவியை அனுப்பிட்டார்னா?”

“அன்னா, நான் உன்னோட வேலை செய்ற பாணியோடு பழகிப் போயிட்டேன். நீ வேலை செய்ற முறை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நிலைமை அப்படி இருக்குறப்போ, உனக்குப் பதில் இன்னொரு மாணவியை என்கிட்ட ஆல்கின் அனுப்பி வைப்பார்னு நான் நினைக்கல. அன்னா,உனக்கு இந்த வேலையில தொடர்ந்து ஈடுபட விருப்பமில்லைனாஅதை இப்பவே சொல்லிடு. அப்படி உனக்கு இஷ்டமில்லைன்னா, நிச்சயம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்!”


தாஸ்தாயெவ்ஸ்கியின் மனம் சுருங்கிப் போய்விட்டதை என்னால் உணர முடிந்தது. ஆல்கின் பெரும்பாலும் என்னைத்தான் அவரிடம் அனுப்பி வைப்பார் என்று சொல்லி அவரின் கவலையைப் போக்க நான் முயன்றேன். ஆனால், முன்கூட்டியே அவரிடம் இதைப் பற்றி சூசகமாகச் சொன்னதுகூட ஒருவிதத்தில் சரி என்றே நினைத்தேன்.

இரவு பதினொரு மணி ஆனபோது தாஸ்தாயெவ்ஸ்கி எங்களிடம் விடைபெற்றுக் கொண்டார். ஆல்கினிடம் அனுமதி வாங்கிக் கொண்டு புதிய நூல்கள் எழுதுவதில் அவருக்கு உதவியாக நான் கட்டாயம் பணியாற்ற வரவேண்டும் என்று என்னிடம் அவர் சத்தியம் வாங்கிக் கொண்டார். அவர் சென்ற பிறகு, நான் சாப்பாட்டு அறைக் குள் வந்தேன். என் இதயம் முழுமையான நிறைவுடன் இருந்தது. எங்களின் உரையாடல் அந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருந்தது. சிறிது நேரம் சென்ற பிறகு, வேலைக்காரி ஒரு செய்தியுடன் வந்தாள். தாஸ்தாயெவ்ஸ்கி வந்த காரில் இருந்த இருக்கையை, அதன் டிரைவர் பக்கத்தில் எங்கோ போயிருந்த நிமிடத்தில் யாரோ திருடி எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அதற்கு நஷ்டஈடு தருவதாக தாஸ்தாயெவ்ஸ்கி வாக்களித்த பிறகுதான் அந்த டிரைவர் அமைதியாக இருந்திருக்கிறான்.

இந்தச் சம்பவத்தைக் கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு எங்கள் மேல் தேவையில்லாத ஒரு வெறுப்பு உண்டாகியிருக்கலாம். அவர் நிச்சயம் இந்த குக்கிராமத்தைத் தேடி இனி வரப்போவதில்லை என்று நினைத்திருக்கலாம் அல்லவா? சந்தோஷம் இழையோடிக் கொண்டிருந்தஅந்த மாலை நேரம் விரும்பத்தகாத இந்தச் சம்பவத்தால் கறை படிந்து போனபோது, என்னுடைய இதயம் கவலையில் மூழ்கி விட்டது.

9

தாஸ்தாயெவ்ஸ்கி எங்கள் வீட்டிற்கு வந்துபோன மறுநாள் நான் என் சகோதரியின் வீட்டிற்குச் சென்றேன். அவளின் பெயர் மரியா ஸ்வாத்கோவ்ஸ்கயா. அவளின் கணவர் பெயர் க்ரிகோரியேவிச். அவர்களிடம் நானும் தாஸ்தாயெவ்ஸ்கியும் இணைந்து எப்படி நாவல் எழுதுவதில் ஈடுபட்டோம் என்பதைச் சொன்னேன். ஒருமாத காலமாக நான் நாவல் எழுதும் வேலையில் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் ஈடுபட்டதால் எப்போ தாவது ஒருமுறைதான் அவர்களைப் பார்க்கவே என்னால் வரமுடிந்தது. அதனால் அவர்களிடம் சொல்வதற்கான விஷயங்கள் என்னிடம் நிறைய இருந்தன. நான் வாய்க்கு வாய் அவர்களிடம் தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிச் சொன்னேன். இடையில் என் சகோதரி சில சந்தேகங்களைக் கேட்டாள். நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் கவனத் துடன் அவள் கேட்டாள். நான் எந்த அளவிற்கு தாஸ்தாயெவ்ஸ்கியின் மனதில் என் வேலையின் மூலம் இடம் பிடித்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்ட என் சகோதரி, நான் புறப்படுகிற நேரத்தில் என்னிடம் சொன்னாள்: “தாஸ்தாயெவ்ஸ்கி மேல நீ இந்த அளவுக்கு ஆசை வச்சிருக்கிறது உண்மையிலேயே நல்லது இல்ல. நீ மனசுல கனவு கண்டுக்கிட்டு இருக்குற எந்த விஷயமும் நடைமுறையில் சாத்தியமாகப் போறது இல்ல. கடவுளே... நீ சொல்ற மாதிரி அந்த மனிதர் ஏகப்பட்ட பிரச்சினைகள்ல சிக்கிக்கிட்டு இருக்குறவராகவும், உறவுக்காரங்களோட தொல்லைகளைக் கொண்ட ஆளாகவும் இருந்தார்னா...”

தாஸ்தாயெவ்ஸ்கிமீது அப்படியெல்லாம் ஆசைகள் எதுவும் நான் வைக்கவில்லை என்றும், அப்படிப்பட்ட கனவுகளெல்லாம் என்னிடம் இல்லவே இல்லையென்றும், புகழ்பெற்ற அந்த எழுத்தாளருடன் இணைந்து பணியாற்றினோமே என்ற சந்தோஷமும், அவர் என்னுடைய திறமையைப் பார்த்துப் பாராட்டின விஷயமும் மட்டுமே தற்போதைக்கு என்னுடைய மனதில் இருக்கின்றன என்பதையும் என் சகோதரியிடம் தெளிவாக விளக்கிச் சொன்னேன்.

இருந்தாலும், என் சகோதரி சொன்ன அந்த வார்த்தைகள் நான் அவ ளின் வீட்டை விட்டுத் திரும்பி வருகிறபோது, என் மனதைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. என் வீட்டை அடைந்த பிறகு கூட நான் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை என் சகோதரி கூறியது உண்மைதானா? நான் தாஸ்தாயெவ்ஸ்கியின் மீது ஆசை வைத்திருக்கிறேனா என்ன? அவர்மீது காதல் என்ற உணர்வு என்னிடம் அரும்பி விட்டிருக்கிறதா? நான் இதுவரை சந்தித்திராத உணர்வு அலைகள் எனக்குள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனவா? என் மனதிற்குள் அப்படிப்பட்ட கனவுகள் உண்டாகி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனவா? இப்படிப்பட்ட ஒரு விஷயம் வாழ்க்கையில் சாத்தியமாகக் கூடியதுதானா? இதுதான் காதல் என்ற உணர்வு என்றால், நான் இப்போது என்ன செய்வது? நான் இனிமேலும் நாவல் எழுதும் வேலையில் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு உதவியாக இருக் கலாமா? இல்லாவிட்டால் அவரே நம்புகிற மாதிரி ஏதாவது காரணத்தைச் சொல்லி, அந்த வேலையிலிருந்து என்னை நானே விலக்கிக் கொள்ளலாமா? தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், அவரை நேரில் கொஞ்ச நாட்களுக்குப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் அவரைப் பற்றிய நினைவுகள் மனதை விட்டு நாளடைவில் மறைந்து போகவே செய்யும். புதிய வேலைகளில் கவனத்தைச் செலுத்தும் பட்சம், என்னுடைய பழைய மனநிலைக்கு என்னால் மீண்டும் வரமுடியும். என் மனதில் எப்படி இப்படியொரு மாற்றம் உண்டானது? ஒருவேளை என் சகோதரி சொன்னதில் தவறு இருக்குமோ? தாஸ்தாயெவ்ஸ்கியுடன் நான் கொண்ட பழக்கம் என் மனதில் என்ன பாதிப்பை உண்டாக்கி விட்டிருக்கிறது? இதனால் விபரீத விளைவு ஏதாவது உண்டாகுமோ? என்னுடைய வேலை ஸ்டெனோக்ராஃபராகப் பணியாற்றுவது. நான் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தது உண்மை. தொழிலில் ஈடுபடுவதுடன், பல விதப்பட்ட உயர்ந்த விஷயங்களையும் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் பணியாற்றியதன் மூலம் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படி யென்றால் நான் எப்படி பாழாய்ப் போய்விட்டதாக எண்ண முடியும்? ஒரு ஸ்டெனோக்ராஃபர் என்ற வகையில் தாஸ்தாயெவ்ஸ்கியை விட்டு விலகுவது என்பது அவ்வளவு நல்ல ஒரு செயலாக எனக்குப் படவில்லை. எனக்குச் சமமான திறமையைக் கொண்ட இரண்டு மாணவிகள் தங்களுக்கு வேலை கிடைத்ததும், ஸ்டெனோக்ராஃபி படிப்பையே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தாஸ்தாயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை சுருக்கெழுத்து உதவியுடன் நாவல் எழுதுவதையே இனி பின்பற்றுவது என்ற முடிவில் இருக்கிறார்.

எந்தவொரு முடிவுக்குமே என்னால் வர முடியவில்லை. எந்த வழியில் போவது என்று முடிவெடுக்க முடியாமல் நான் குழம்பிப் போய் நின்றேன்.

மறுநாள் நவம்பர் ஆறாம் தேதி என்னுடைய பெரியம்மாவின்பிறந்தநாள். நான் அவருடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கவில்லை என்றாலும், அவ்வப்போது வேலை இல்லாத நேரங்களில் அவரைப் போய் பார்ப்பதுண்டு. அந்தப் பெரிய வீட்டில் எப்போது பார்த்தாலும் விருந்தினர்கள் கூட்டமாகவே இருக்கும். அங்கே போய் சிறிது நேரம் இருந்தால், சில நாட்களாக என்னைப் போட்டு அலைக்கழித்துக் கொண்டிருக்கும் விஷயங்களில் இருந்து கொஞ்ச நேரமாவது விடுதலை பெற்று இருக்க முடியும் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.


என்னுடைய வீட்டில் இருந்து அவர்களின் வீடு மிகவும் தூரத்தில் இருந்தது. இரவு வருவதற்கு முன்பு நான் அந்த வீட்டுக்குப் போய் விடவேண்டும் என்று நினைத்தேன். ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு வரும்படி ஒரு ஆளை அனுப்பிவிட்ட பிறகு, பியானோவிற்குப் பக்கத்தில் வந்து நான் அமர்ந்தேன். பியானோவின் ஓசையில் வாசல் மணி ஒலித்தது என் காதில் கேட்கவில்லை. திடீரென்று ஒரு மனிதர் வீட்டுக்குள் நுழைந்த காலடிச் சத்தம் என் காதுகளில் விழுந்தது. யாரென்று நான் திரும்பிப் பார்த்தேன். அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டேன். தாஸ்தாயெவ்ஸ்கி வீட்டிற்குள் நின்றிருந்தார். என்னுடைய மனதில் அப்போது உண்டான சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவரின் முகத்தில் இனம் புரியாத ஒரு பதட்டமும் வெட்கமும் தெரிந்ததை என்னால் காண முடிந்தது. நான் அவரை வரவேற்பதற்காக எழுந்து நின்றேன்.

“அன்னா, நான் என்ன செய்தேன்னு உனக்குத் தெரியுமா? நீ இல்லாம நான் இவ்வளவு நாட்களா எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டுட்டேன் தெரியுமா? இன்னைக்குக் காலையில நான் நினைச்சேன்- இங்கே வந்து உன்னைப் பார்க்குறதுன்றது சரியான ஒரு செயலாக இருக்குமான்னு. இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது தடவையா வீட்டுக்கு நான் வர்றதைஉங்கம்மா விரும்புவாங்களான்னு நான் சந்தேகப்பட்டேன். போன வியாழக்கிழமை நான் இங்கே வந்தேன். இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. இதோ இன்னொரு தடவை இங்கே வந்திருக்கேன். நான் இங்கே வரக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா, பாரு... இங்கே என்னையும் மீறி வந்து நின்னுக்கிட்டு இருக்கேன்.”- என் கரத்தைப் பற்றி அழுத் தமாக குலுக்கியவாறு தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்.

“ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க? நீங்க எப்போ வேணும்னா லும் இந்த வீட்டுக்கு வரலாம். எனக்கும் அம்மாவுக்கும் உங்களோட வரவு சந்தோஷத்தையே தரும்...”

நான் ஏற்கெனவே மனதில் உருவாக்கி வைத்திருந்த தீர்மானங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் நொறுங்கிக் கீழே விழுந்தன. என் மனதில் உண்டான மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. நாங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறைக்குள் குளிர் காய்வதற்கேற்ற வசதி இல்லாமல் இருந்தது. அறை மிகவும் குளிர்ச்சியடைந்துபோய் இருந்தது. தாஸ்தாயெவ்ஸ்கியும் இதை உணர்ந்தார்.

“இந்த அறை ரொம்பவும் குளிருது. இன்னைக்கு சொல்லப்போனா குளிர் அதிகம். அன்னா, நீகூட இன்னைக்கு ரொம்பவும் அமைதியாவே தெரியிற...” சாம்பல் நிறத்தில் இருந்த என்னுடைய சில்க் ஆடையைப் பார்த்தவாறு தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “வேற எங்காவது புறப் பட்டுக்கிட்டு இருந்தியா?”

நான் பெரியம்மாவைப் பார்க்கப் போகும் விஷயத்தைச் சொன்னதும், அங்கு போவதற்குத் தான் தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை என்றும், அங்குவரை தானே வண்டியில் கொண்டுபோய் விடட்டுமா என்றும் என்னிடம் அவர் கேட்டார். நான் அதற்குச் சம்மதித்தேன். நாங்கள் இருவரும் புறப்பட்டோம். வண்டி ஒரு வளைவில் திரும்பிய போது, தாஸ்தாயெவ்ஸ்கி நான் எங்கே கீழே விழுந்துவிடப் போகிறேனோஎன்று என்னுடைய இடுப்பில் தன் கைகளால் சுற்றிப் பிடித்தார். தொடர்ந்து என் கைகளில் முத்தமிட்டார். இடையை வளைத்துப் பிடித்தது, கைகளில் முத்தமிட்டது எல்லாவற்றையும் ஒன்றுமே கூறா மல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். “பயப்படாதீங்க... நான் கீழே விழுந்திட மாட்டேன்.”- நான் சொன்னேன்.

“நீ இந்த வண்டியில இருந்து கீழே விழுந்தா அவ்வளவுதான்.” -தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்.

நான் அதற்கு விழுந்து விழுந்து சிரித்தேன். தொடர்ந்து எங்களுக் கிடையே இருந்த திரை விலகியது. யாத்திரை தொடர்ந்தது. பயணம் முழுக்க நாங்கள் இருவரும் படு உற்சாகத்தில் இருந்தோம். என் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் எங்குபோய் மறைந்தனவோ தெரியவில்லை. பிரிகிற நேரத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி என் கைகளைப் பிடித்து அன்புடன் குலுக்கியவாறு சொன்னார்: “ரெண்டு நாட்கள் கழிச்சு, புதிய ஒரு நாவல் எழுத உதவி செய்ய நீ கட்டாயம் வரணும்...”

10

ன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்- 1866 நவம்பர் 8. அன்றுதான் என்மீது கொண்டிருந்த காதலை தாஸ்தாயெவ்ஸ்கி மனம் திறந்து கூறி, என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்பும் விஷயத்தைச் சொன்னார். அந்த நாள் கடந்துபோய் இப்போது ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. அந்த அன்பு இழையோடிய நாளைப் பற்றிய நினைவுகள் இத்தனை ஆண்டுகள் கடந்துபோன பிறகும் இப்போதுகூட அப்படியே பசுமையாய் மனதில் ஊர்வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்புதான் எல்லாமே நடந்தது என்பது மாதிரி தோன்றுகிறது எனக்கு.

அது நல்ல பிரகாசமான ஒருநாள். நல்ல குளிர் வேறு இருந்தது. சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் தாண்டித்தான் என்னால் தாஸ்தாயெவ்ஸ்கி வீட்டிற்கே போய் சேர முடிந்தது. ஒரு பித்துப் பிடித்த மனிதரைப்போல அவர் எனக்காகக் காத்து அமர்ந்திருக்கிறார். நான் வந்திருக்கும் ஓசையைக் கேட்டதுதான் தாமதம், அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து ஓடி வந்தார் தாஸ்தாயெவ்ஸ்கி.

“கடைசியில நீ வந்துட்டே...” அவர் என் தலையில் இருந்த துணியை அகற்றவும், அணிந்திருந்த கோட்டைக் கழற்றவும் உதவியவாறு சொன் னார். நாங்கள் இருவரும் அவரின் படிக்கும் அறைக்குள் நுழைந்தோம். அறையில் நல்ல வெளிச்சம் இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை- தாஸ்தாயெவ்ஸ்கி மிகவும் உற்சாகமான ஒரு மனிதராக இருந்தார். முகத்தில் நல்ல ஒளி தெரிந்தது. மகிழ்ச்சி நிரம்பிய மனிதராக அவர் இருப்பதைப் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடிந்தது. எப்போதும் இருப்பதைவிட அன்று அவரின் ஒவ்வொரு அசைவிலும் இளமை தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

“நீ வந்ததை நினைச்சு நான் எவ்வளவு சந்தோஷப்படுறேன் தெரியுமா? நீ சொன்ன வாக்கை ஒருவேளை மறந்துட்டியோன்னு நான் நினைச்சிட்டேன்...”

“அப்படியொரு எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சு? நான் பொதுவா வாக்குறுதி கொடுத்தா, அதை எந்தக் காலத்திலும் மீற மாட்டேன்...”

“மன்னிக்கணும். எனக்குத் தெரியும், நீ சொன்ன வாக்குப்படி நடப்பேன்னு. உன்னைத் திரும்பவும் இங்கு பார்க்க நேர்ந்ததுக்காக நான் எவ்வளவு சந்தோஷப்படுறேன் தெரியுமா?”

“உங்களைப் பார்க்குறதுக்கு நானும்தான் சந்தோஷப்படுறேன். நீங்க இப்போ ரொம்பவும் உற்சாகமா இருக்கீங்க. ஏதாவது புதுசா சொல்லப் போறீங்களா என்ன?”

“நிச்சயமா சொல்லத்தான் போறேன். நான் ஒரு கனவு கண்டேன். ரொம்ப ரொம்ப அதிசயமான ஒரு கனவு. அந்த மூலையில் இருக்குற பெட்டியைப் பார்த்தியா? ஒரு சைபீரிய நண்பர் எனக்குப் பரிசாகத் தந்த பெட்டி அது. என்னோட கையெழுத்துப் பிரதிகளையும், எனக்கு வர்ற கடிதங்களையும் அதுல போட்டு வச்சிருக்கேன்.


நான் கண்ட கனவுல இந்தப் பெட்டிக்குப் பக்கத்துல உட்கார்ந்து நான் தாள்களைப் பொறுக்கி கட்டிக்கிட்டு இருக்கேன். தாள்களுக்கு மத்தியில் ஒளி வீசிக்கிட்டு இருக்கிற ஒரு பொருளைப் பார்த்தேன். ஒளி வீசிக்கிட்டிருக்கிற ஒரு சிறு நட்சத்திரத்தைப் போல அது இருந்துச்சு. அதைக் கையை நீட்டிப் பிடிக்க முயற்சித்தேன். ஆனா, அது கையில சிக்காம வழுக்கி வழுக்கி போய்க்கிட்டே இருந்துச்சு...”

“பிறகு?”

“அதுதான் பிரச்சினையே. அதற்குப் பிறகு அந்தக் கனவு எனக்குஞாபகத்துல இல்ல. தொடர்ந்து பல கனவுகள். கனவுல ஏன் அப்படிநடந்துச்சுன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. ஆனா, ஒரு வித்தியாச மான கனவு அதுன்றது மட்டும் உண்மை!”

“ஆளுங்க பொதுவாகக் சொல்வாங்க- கனவுகளுக்கு நேர் மாறாகத்தான் வாழ்க்கையில சம்பவங்கள் நடக்கும்னு.” ஏதோ வாய்க்கு வந்த படி நான் கூறிவிட்டேனே தவிர, அப்படிக் கூறியதற்காக நான் உண்மை யிலேயே வருத்தப்பட்டேன். நான் இவ்வாறு கூறிய அடுத்த நிமிடம் தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் இருண்டு போய்விட்டது.

“அப்போ என்னோட வாழ்க்கையில சந்தோஷமான நிகழ்ச்சிகள் எதுவுமே நடக்க வாய்ப்பே இல்லைன்னு நீ சொல்றியா? என் கனவுகள் எல்லாமே தேவையில்லாத ஒரு வீண் எதிர்பார்ப்பு மட்டும்தானா?” -வருத்தம் தோய்ந்த குரலில் அவர் கேட்டார்.

“எனக்கு கனவுகளைப் பற்றி என்ன தெரியும்? சொல்லப்போனால், கனவுகள்ல எனக்கு நம்பிக்கையே இல்லை...”

தாஸ்தாயெவ்ஸ்கியின் உற்சாகமான மனநிலை என்னால் மாறிப் போனதற்காக நான உண்மையிலேயே வருத்தப்பட்டேன். அவர் இழந்த அந்த உற்சாக நிமிடங்களை மீண்டும் அவரிடம் கொண்டு வருவதற்காக நான் முயன்றேன். எனக்கு வரக்கூடிய கனவுகளைப் பற்றி அவர் கேட்டதற்கு, நான் சொன்னேன்: “என் கனவுல என்னோட ஒரு பழைய ஹெட்மிஸ்டரஸ் அடிக்கடி வருவாங்க. எப்போ பார்த்தாலும் அவங்க என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதற்குப் பிறகு... எங்களோட பூந்தோட்டச் சுவர்ல இருந்து என் மேல வேகமா பாய்ந்து வந்து விழுற பூனை.. ஓ... உயிரே என்னை விட்டுப் போறது மாதிரி நான் பயந்து போயிடுவேன்...”

“சரிதான்... நீ சரியான ஒரு குழந்தை... உண்மையிலேயே ஒரு குழந்தைதான் நீ...” அன்பான ஒரு பார்வையுடன் தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் பார்த்துச் சிரித்தார்: “சரி... பெரியம்மாவோட பிறந்தநாள் விருந்து எப்படி இருந்துச்சு?”

“நல்லா பொழுது போச்சு. விருந்து முடிஞ்சவுடனே, வயசான கிழவர்களெல்லாம் சீட்டு விளையாட ஆரம்பிச்சாங்க. இளைஞர்கள் படிப்பு அறையில் உட்கார்ந்து பல விஷயங்களையும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அங்கே பார்க்குறதுக்கு அழகான இரண்டு இளைஞர்கள் வேற இருந்தாங்க...”

இன்னொரு முறை தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் இருண்டது. இதுவரை இருந்த சமநிலை லேசாக அவரிடம் மாறிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. வலிப்பு என்பதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது நேரடியாக எனக்குத் தெரியாது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு நோய் வருவதற்கான அறிகுறிகள்தான் இப்போது உண்டாகிக் கொண்டிருக்கின்றனவோ என்று நான் சந்தேகப்பட்டேன். அவ்வளவு தான்- ஆடிப் போனேன்.

நான் எப்போது அந்த வீட்டிற்குப் போனாலும், கடைசியாக அந்தவீட்டை விட்டுப் போனபிறகு நான் என்னவெல்லாம் செய்தேன்,. எதைப் பற்றியெல்லாம் சிந்தித்தேன் என்று தாஸ்தாயெவ்ஸ்கியிடம் விளக்கிச் சொல்வது எனக்கு வாடிக்கையான ஒன்றாக இருந்தது. கடந்துபோன நாட்களில் அவர் என்ன செய்தார் என்று அவரை நான் விசாரித்தேன்.

“ஒரு புதிய நாவலுக்கான கரு என் மனசுல உதிச்சது...” அவர் சொன்னார்.

“அப்படியா? நல்ல கருவா?”

“நான் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா.. ஒரு விஷயம். நாவலை எப்படி முடிக்கிறதுன்னுதான் தெரியல. ஒரு திருமணமாகாத பெண் ணோட எண்ணங்கள்தான் அந்த நாவலோட முக்கியமான விஷயம். நான் மாஸ்கோவில் இருந்தா, மருமகள் சோனியாகிட்ட இதைப்பற்றி கேட்டிருப்பேன். ஆனா, இங்க... அன்னா, உன்கிட்டதான் கேட்க வேண்டியிருக்கு...”

ஒரு பெரிய எழுத்தாளர் கேட்கப் போகும் விஷயத்திற்குப் பதில் சொல்ல நான் தயாரானேன்.

“இந்த நாவல்ல யார் கதாநாயகன்?”

“இளமையின் முதல் கட்டத்தைத் தாண்டிய ஒரு கலைஞன்தான் கதாநாயகன். கிட்டத்தட்ட என்னோட வயசுன்னு வச்சுக்கயேன்...”

“தயவு செய்து முழுக் கதையையும் சுருக்கமாகச் சொல்றீங்களா?” நான் புதிய நாவலின் கதையைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

என்னுடைய கேள்விக்குப் பதிலாக அவர் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்தவரை அது சுயசரிதை என்றுதான் நான் சொல்வேன். கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும் மட்டும் மாற்றப் பட்டிருந்தன. என்னிடம் அவர் இதற்கு முன்பு பேசிய பல விஷயங்களும் நாவலில் முழுமையாக இடம் பெற்றிருந்தன. தன்னுடைய முதல் மனைவியைப் பற்றியும், மற்ற சொந்தக்காரர்களைப் பற்றியும் மிகவும் விளக்கமாக தன் கதையில் வெளிப்படுத்தி இருந்தார் தாஸ்தாயெவ்ஸ்கி.

இந்தப் புதிய நாவலில் துன்பங்கள் நிறைந்த இளம் பிராயத்து வாழ்க்கையும், மரியாதைக்குரிய ஒரு தந்தையின் அகால மரணமும் உண்டு. விதியின் சில விளையாட்டுகளால் (அவற்றில் ஒரு நோயும் அடக்கம்) கதாநாயகன் தன்னுடைய கலை உலக வாழ்க்கையை விட்டு பத்து வருட காலம் விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அதற்குப் பிறகு அவன் மீண்டும் வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறான். (ஒரு கலைஞனின் புதிய பிறவி). அவன் ஒரு இளம்பெண் மீது காதல் கொள்கிறான். முதல் மனைவியின் மரணம், சொந்தங்களின் மரணம்(அன்பு கொண்ட ஒரு சகோதரியின்), வாழ்க்கையில் சந்தித்த பல வேதனையான நிகழ்ச்சிகள், கடன்கள், வறுமை... இப்படி நாவல் நீண்டு போய்க் கொண்டிருக்கிறது.

நாயகனின் மனநிலை, அவனின் தனிமை வாழ்க்கை, குடும்பத்தில் இருந்தும் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் கிடைத்த கசப்பான அனுபவங்கள், ஒரு புதிய வாழ்க்கை வாழவேண்டும் என்ற வேட்கை, அன்பிற்கான ஏக்கம், புதிய மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் அவனின் கடுமையான அலைச்சல்கள்- எல்லா விஷயங்களும் மிகப்பெரிய ஒரு கலைஞனின் பார்வையில் தெளிவாகவும் விரிவாகவும் கூறப்பட்டிருந் தன. கதாசிரியர் தன் சொந்த வாழ்க்கையின் கண்ட சம்பவங்களின் ஒட்டுமொத்த சாரமே இந்த நாவல் என்பதைக் கதையைப் படித்த நிமிடத்திலேயே யாரும் புரிந்து கொள்ள முடியும்.

தன்னுடைய நாயகனைச் சித்தரிக்கிறபோது, தேவையில்லாமல் அவர்அந்தக் கதாபாத்திரத்தை இருளடைந்து போன ஒன்றாகப் படைக்க வில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் வயது நாவலாசிரியரின் வயதைவிடகூடுதலாக இருந்தது. வாதம் பாதிக்கப்பட்டு தளர்ந்துபோன ஒரு கையுடன்வாழ்கிறான் அந்த ஓவியன்.


சந்தேகப் புத்தி கொண்ட ஒரு மனிதன் அவன். அதே நேரத்தில் அவனின் இன்னொரு பக்கம் மிகவும் மென்மையானதாக இருக்கிறது. ஒரு ஓவியன் என்ற வகையில் அவனிடம் ஏகப்பட்ட திறமைகள் இருந்தாலும், அதிர்ஷ்ட தேவதை எந்தக் காலத்திலும் அந்தமனிதனுக்கு அருள் செய்யவே இல்லை என்பதே உண்மை. அவன் தான் கண்ட கனவுகளை கேன்வாஸில் வரையலாம் என்று பார்த்தால், அவனால் அது முடியவே இல்லை. விளைவு- அவன் ஒரு வகையான விரக்தியுணர்வில் மூழ்கிப்போய் உட்கார்ந்து விடுகிறான்.

கதாநாயகன் தாஸ்தாயெவ்ஸ்கிதான் என்பது உறுதியாகத் தெரிந்த வுடன் என்னால் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. “ஆனால், மிஸ்டர் தாஸ்தாயெவ்ஸ்கி, நீங்கள் இந்தக் கதாநாயகனோடு இவ்வளவு ஈடுபாட்டுடன் இருப்பதற்கான காரணம்?”

“உனக்கு அந்த ஆளைப் பிடிக்கலைன்னு எனக்குத் தெரியும்...”

“ஆனா, உண்மை நீங்க சொல்றதுக்கு நேர் எதிரானது. நான் அந் தக் கலைஞனை மிகவும் விரும்புகிறேன். அவன் நல்ல இதயத்துக்குச் சொந்தக்காரன். எவ்வளவு தூரம் அவன் மனம் கஷ்டங்களாலும் கசப்பான அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டிருக்கு! அதையெல்லாம் தாங்கிக்கொண்டு அவன் எந்த அளவிற்கு வாழ்க்கையைச் சந்திக்கி றான்! வேற யாராவது இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தா, நிச்சயம் கடுமையான மனம் கொண்டவர்களாக மாறிடுவாங்க. ஆனா... உங்களுடைய கதாநாயகன் இப்போதும் மற்றவர்கள்மேல் அன்பு செலுத்துறான். அவர்களுக்கு உதவி செய்யவும் தயாரா இருக்கான். ஓ... நீங்க அந்த அப்பாவி மனிதன்கிட்ட ரொம்பவும் கொடூரமா நடந்துக்கறீங்க...”

“சரிதான். நான் ஒத்துக்கறேன். அவனுக்கு மென்மையான ஒரு இதயம் இருக்கு. நீ அதைப் புரிஞ்சுக்கிட்டதுக்காக நான் எந்த அளவுக்கு சந்தோஷப்படுறேன் தெரியுமா? அந்தக் கலைஞனின் வாழ்க்கையில் ஒரு இளம் பெண் திடீர்னு வந்து நிற்கிறா. இது அந்தக் கதாநாயகனைப் பொறுத்தவரை விதியே நிர்ணயிச்ச ஒண்ணுன்னுதான் சொல்லணும். அந்தப் பெண்ணுக்கு அன்னா, உன்னோட வயசு... இல்லாட்டி உன்னை விட ரெண்டு வயசு அதிகமா இருக்கும். அவ்வளவுதான். நாமவேணும்னா அவளை "அன்னா'ன்னே கூப்பிடுவோம். கதாநாயகின்னு அவளை இனி நாம் சொல்லக் கூடாது. "அன்னா'ன்ற பேரு எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு...”

அவர் இப்படிச் சொன்னதும் எனக்கு ஞாபக்தில் வந்தது அன்னா கார்வின் க்ருக்கோவ்ஸ்கயாவைத்தான். கொஞ்சகாலம் தாஸ்தாயெவ்ஸ்கியின் மனைவியாக இருந்தவர் அந்தப் பெண். இருவருக்கும் ஒத்துவராத விஷயங்கள் நிறைய இருப்பது தெரிய வரவே, தாஸ்தாயெவ்ஸ்கியுடன் இணைந்து வாழும் வாழ்க்கை தனக்குசரிப்பட்டு வராது என்று சொல்லி, அவரிடமிருந்து அந்தப் பெண் விவாகரத்து வாங்கிப் பிரிந்து விட்டார். அந்தச் சமயத்தில் என் பெயரும் "அன்னா'தானே என்பதை நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. தாஸ்தாயெவ்ஸ்கி சொன்ன கதையில் எனக்கும் பங்கு இருக்கிறது என்பதை என்னவோ நான் எண்ணவே இல்லை. அன்னாகார்வின் க்ருக்கோவ்ஸ்கயாவிடமிருந்து சில நாட்களுக்கு முன்பு தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்திலிருந்துதான் இந்த நாவலுக்கான கருவை தாஸ்தாயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார் என்று நான் தவறுதலாகப் புரிந்து கொண்டேன். அந்தக் கடிதத்தைப் பற்றி முன்பொரு முறை என்னிடம் தாஸ்தாயெவ்ஸ்கியே கூறியிருக்கிறார்.

கதாநாயகனை அவர் எப்படி உருவாக்கினாரோ, அப்படி அவர் கதாநாயகியைப் படைக்கவில்லை. கதாநாயகி அன்னா வசீகரமாகவும், எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதாகவும், பிறரிடம் பேசும்போது புத்திசாலித்தனமான பெண்ணாகவும் இருந்தாள். அந்தக் காலத்தில் நான் பெண்களின் புற அழகிற்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருந்ததால், என்னையும் அறியாமல் நான் அவரிடம் கேட்டேன்:

“உங்களின் கதாநாயகி நல்ல அழகியா?”

“அவள் அழகி அல்ல. ஆனால் அவள் யாரையும் ஈர்க்கக் கூடியவள். அதைத்தான் என்னால சொல்ல முடியும். அவளோட முகம் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு...”

தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு ஏமாற்று வேலை செய்து கொண்டிருக்கி றார் என்று நான் நினைத்தேன். என் இதயம் பலவித சிந்தனைகளால் மிகவும் குழம்பிப்போய் கல்லாகி விட்டிருந்தது. அன்னா கார்வின் க்ருக்வோவ்ஸ்கயாவிற்கு எதிராக என் மனதில் ஒரு பயங்கர திரை திடீரென்று உருவாகி எழுந்தது. நான் சொன்னேன்: “உங்களுக்குஅன்னாவை ரொம்பவும் பிடிச்சிருக்கு. நீங்க கதையில் சித்தரிக்கிற மாதிரிஅவள் உண்மை வாழ்க்கையில் இருக்காளா என்ன?”

“நிச்சயமா... நான் அவளை கவனமாகப் பார்த்து, அவளின் ஒவ்வொருநடவடிக்கையையும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கேன். அந்த கலைஞன் அவள் ஓவியம் கத்துக்க வர்றப்போ அவளைப் பார்ப்பான். அவன்ஒவ்வொரு முறை அவளைச் சந்திக்கிறப்பவும், அவள் தனக்குச் சொந்த மானவள்ன்ற எண்ணம் அவன் மனசுல உண்டாகும். அவளிடம் மட்டுமே தன் வாழ்க்கையின் ஆனந்தம் அடங்கியிருக்கு என்று உறுதியாக நம்பி னான் அந்த ஓவியன். ஆனா, தன்னோட மனசுல இருக்குற எண்ணத்தை எப்படி அவன் வாழ்க்கையில நடைமுறைக்குக் கொண்டு வர்றது? அதுதான் அவனுக்குத் தெரியல. நடுத்தர வயதைக் கொண்டவனும், நோய்கள் உள்ளவனும், பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப் பவனுமான அந்த ஓவியனால் சந்தோஷத்துடன் துள்ளித் திரியிற, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிற ஒரு இளம் பெண்ணை எப்படி அடைய முடியும்? அந்த ஓவியனைக் காதலிக்கிறதுன்னா, அந்த இளம் பெண்ணைப் பொறுத்தவரை, அதை ஒரு பெரிய தியாகம்னுதான் சொல்ல முடியும். அந்த ஓவியனுடன் வாழும் வாழ்க்கையை நினைச்சுப் பார்த்து ஒருநாள் அவள் வருத்தப்படப் போவதென்னவோ நிச்சயம். அவள் அந்த ஓவியனைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதுன்றது நடைமுறையில் சாத்தியமான ஒண்ணுதானா? நான் அப்படி நாவலைப் படைக்கிற பட்சம், மனரீதியாக நான் ஒரு மிகப் பெரிய தவறைச் செஞ்சிட்டேன்னு பலரும் என்னைப் பார்த்து திட்ட மாட்டாங்களா? இந்த விஷயத்துலதான் அன்னா, எனக்கு நீ உதவணும். நான் இதுக்கு மேலே என்ன செஞ்சா நல்லா இருக்கும்? சொல்லு...”

“இதுல என்ன இருக்கு? நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? நீங்க சொல்றபடி அன்னா ஒரு தெளிவான சிந்தனை கொண்ட பெண்ணுன்னா,அந்த ஓவியனை அவள் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமே! இதுல என்ன தப்பு இருக்கு? அந்த ஓவியன் ஒரு நோயாளியாகவோ பணமில்லாதவனாகவோ இருந்துட்டுப் போகட்டும். புற அழகையும் சொத்தையும் பார்த்துத்தான் காதல் உருவாகுதுன்னு நீங்க நினைக் கிறீங்களா? நிச்சயமா கிடையாது. இதுல தியாகத்துக்கு எங்கே இடம் இருக்கு? அவள் உண்மையாகவே அந்த ஓவியனைக் காதலிக்கிறதா இருந்தா, இதுல வருத்தப்பட்டு நிக்கிறதுக்கு இடமே இல்லை...”

நான் இவ்வளவு விஷயத்தையும் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னேன். தாஸ்தாயெவ்ஸ்கி என்னையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தார். “அவளால் வாழ்க்கை முழுவதும் அந்த ஓவியனைக் காதலிக்க முடியும்னு நீ நம்புறியா, அன்னா?”


இந்தக் கேள்வியைக் கேட்டதும் அதற்குமேல் கேள்வியைத் தொடராமல் தனக்குத்தானே ஒரு கட்டுப்பாடு போட்ட மாதிரி நின்றிருந்தார் தாஸ்தாயெவ்ஸ்கி. இந்தக் கேள்வியை சொல்லப் போனால் அவர்மிகவும் தாழ்ந்த குரலிலேயே கேட்டார். “அந்த ஓவியன் நான்தான்னு வச்சுக்கோ. நான் உன்னைப் பார்த்து என்னோட காதலை வெளிப் படுத்துறேன்னு வச்சுக்கோ. அப்போ நீ வாழ்க்கை முழுக்க என்னுடன் இருப்பியா? சொல்லு... உன்னோட பதில் என்ன?” என்று கேட்டபோது, தாஸ்தாயெவ்ஸ்கியின் முகம் பலவித குழப்பங்களுடன் இருப்பது தெரிந்தது. நாங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்பதையும், நான் சொல்லக்கூடிய பதில் தாஸ்தாயெவ்ஸ்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இல்லையென்றால், மனரீதியாக அந்த மனிதர் தகர்ந்து போகப் போவது நிச்சயம் என்பதையும் நான் அறியாமல் இல்லை. எனக்கு மிகவும் விருப் பமான அந்த முகத்தைப் பார்த்தவாறு நான் சொன்னேன்: “நான் சொல்ற பதில் இதுதான். நான் உங்களைக் காதலிப்பேன். அந்தக் காதல் வாழ்க்கையின் இறுதி வரை கட்டாயம் இருக்கும்!”

அதற்குப் பிறகு தாஸ்தாயெவ்ஸ்கி காதல் மேலோங்க என்னிடம் சொன்ன வார்த்தைகளை என்னால் இங்கு வெளிப்படுத்த முடியவில்லை. நான் என் காதலை அவரிடம் வெளிப்படுத்திய பிறகு நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றவை என்பது மட்டும் உண்மை.

என் வாழ்க்கையில் நடைபெற்ற அந்தச் சம்பவத்தால் நான் சிலை என ஆகிவிட்டேன். அடக்க முடியாத அளவிற்கு எனக்குள் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடியது. என்னால் ஒருவிதத்தில் இதையெல்லாம் நம்பக்கூட முடியவில்லை. ஒரு மணிநேரம் கழிந்த பிறகு தாஸ்தாயெவ்ஸ்கி தன்னுடைய எதிர்காலத் திட்டங்களைச் சொல்லி, அதற்கு என்னுடைய அபிப்பிராயம் என்ன என்பதைக் கேட்டார். நான் சொன்னேன்:”அதைப் பற்றி இப்போ எப்படி என்னால சொல்ல முடியும்? நான் இப்போ சந்தோஷத்துல திக்கு முக்காடிப்போய் இருக்கேன்...”

அடுத்தடுத்து என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு தெளிவான தீர்மானம் மனதில் உண்டாகாததாலும், எப்போது திருமணம் செய்து கொள்வது என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாததாலும் காதல் விஷயத்தை யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பது என்ற முடிவுக்கு நாங்கள் இருவருமே வந்தோம். என் தாயிடம் மட்டும் உண்மையைச் சொல்லி விடுவது என்று தீர்மானித்தோம். அடுத்த நாள் மாலையில் எங்கள் வீட்டிற்குத் தான் வருவதாகவும், அந்த நிமிடத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் என்னிடம் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.

அவர் ஹாலுக்கு என்னுடன் வந்தார். கோட்டை அணிய எனக்கு அவர் உதவினார். நான் வெளியே புறப்பட்டபோது என்னைத் தடுத்து நிறுத்திய தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “அன்னா... இப்போ எனக்கு புரிஞ்சிருச்சு- அந்த சின்ன வைரக்கல்லுக்கு என்ன ஆச்சுன்னு...”

“என்ன சொல்றீங்க? அந்தக் கனவோட முடிவு உங்களுக்கு இப்போ ஞாபகத்துல வந்துருச்சா?”

“இல்ல... நான் அந்தக் கனவைப் பற்றி இப்போ ஒண்ணும் நினைக்கல. ஆனா, நான் கடைசியில அந்தச் சிறு வைரத்தைத் தேடிப் பிடிச் சிட்டேன். அந்த வைரத்தை என்னோட வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை பத்திரமா என்கிட்டயே வச்சு பாதுகாப்பேன்...”

“நீங்க தப்பா நினைக்கிறீங்க. அது வைரக்கல் ஒண்ணுமில்ல... சாதாரண கூழாங்கல் அது...”

நான் உரத்த குரலில் சொன்னேன்.

“இல்ல. இந்தத் தடவை என்கிட்ட எந்த தப்பும் நடக்கலைன்னு என்னால உறுதியான குரல்ல சொல்ல முடியும்.” கம்பீரமான குரலில் சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.

11

ரு மாலை நேரத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் பார்த்துக் கேட்டார்:

“அன்னா, நீ என்னைக் காதலிப்பதாக உனக்குத் தோன்றிய முதல் நாள் உனக்கு ஞாபகத்துல இருக்கா?”

நான் சொன்னேன்: “உங்களுக்குத் தெரியாதா? நான் சின்னப் பிள்ளையாயிருந்த காலத்திலிருந்தே தாஸ்தாயெவ்ஸ்கின்ற பேரு எனக்கு நல்லா தெரிஞ்ச பேரு. பதினஞ்சு வயசுல இருந்தே நான் உங்களுடனேஇல்லாட்டி நீங்க படைச்ச உங்களோட கதாபாத்திரத்துடனோ காதல் கொண்டுதான் இருக்கேன்...”

நான் இப்படிச் சொன்னதும் தாஸ்தாயெவ்ஸ்கி விழுந்து விழுந்து சிரித்தார். அவர் நான் கூறியதை மிகவும் ரசித்தார். அதே நேரத்தில் என்னைக் கிண்டல் பண்ணினார்.

“மனசுல என்ன இருக்கோ, அதைத்தான் நான் உங்ககிட்ட சொன்னேன். என்னோட தந்தை ஒரு புத்தகப் பிரியர். சமகால இலக் கியத்தைப் பற்றி பேசறப்ப அவர் சொல்வார்: "இன்னைக்கு நமக்கு மத்தியில இருக்குற எழுத்தாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? என் காலத் தில் புஷ்கினும் கோகோளும் ஷுக்கோவ்ஸ்கியும் இருந்தாங்க. இளைஞர் கள் மத்தியில் தாஸ்தாயெவ்ஸ்கி நல்ல பெயருடன் இருந்தார். அவரோட "ஏழைகள்' நூலுக்கு அப்படிப்பட்ட ஒரு பேரு! ஏதோ ஒரு அரசியல் குற்றத்திற்காக சைபீரியாவில் தண்டனை அனுபவிச்சிக்கிட்டு இருக் காராம் அவர்! நினைச்சுப் பார்க்கவே ரொம்ப அவமானா இருக்கு. அவரைப் பற்றி இப்போ எந்தவித தகவலும் இல்லாமலே போச்சு!”.

தாஸ்தாயெவ்ஸ்கியின் சகோதரர்கள் "வ்ரெம்யா' என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிப்பதைத் தெரிந்த என்னுடைய தந்தை எந்த அள விற்குச் சந்தோஷப்பட்டார் தெரியுமா? கடைசியில் தாஸ்தாயெவ்ஸ்கி திரும்பி வரப்போகிறார் என்பது தெரிந்து என் தந்தை அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை. தாஸ்தாயெவ்ஸ்கி இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக அவர் கடவுளுக்கு நன்றி சொன்னார்.

1861-ஆம் ஆண்டு கோடை காலத்தில் நாங்கள் "பெதர்ஹோஃபி' என்ற இடத்தில் இருந்தோம். என் தாய் வெளியே போகிறபோது "வ்ரெம்யா' இதழை வாங்கிக் கொண்டு வரும்படி நானும் என் சகோதரி யும் அவளிடம் கெஞ்சுவோம். அப்படி அம்மா வாங்கிக்கொண்டு வந்த வுடன் என் தந்தைதான் முதலில் அதைப் படிப்பார். அந்த அப்பிராணி மனிதர் அந்தக் காலகட்டத்தில் ஒரு நோயாளியாக இருந்தார். உணவு உண்ட பிறகு படித்துக் கொண்டிருக்கும்போதே அவர் உறங்கி விடுவார். நான் அவருக்கு அருகில் மெதுவாக ஊர்ந்துபோய் அவரின் மடிமேல் கிடக்கும் பத்திரிகையை எடுத்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி ஓடுவேன். யாருடைய தொந்தரவும் இல்லாமல் தாஸ்தாயெவ்ஸ்கியின் கதையை எங்காவது ஒரு மூலையில் போய் அமர்ந்து நான் படிக்க முயற்சிப்பேன். ஆனால், அப்படி நான் நினைப்பேனே தவிர, நடைமுறை யில் அது சாத்தியமே இல்லாமல் போய்விடும். என்னுடைய அக்கா மரியா ஓடிவந்து, என்னைவிட மூத்தவள் என்ற அந்தஸ்தைப் பயன் படுத்தி என் கையில் இருந்த அந்தப் பத்திரிகையை அவள் பிடுங்கிக் கொள்வாள். அந்த இதழில் பிரசுரமாகியிருக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியின் தொடர்கதையைப் படிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை அவள் தன் காதுகளிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள்.


அந்தக் காலத்தில் நான் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக இருந்தேன். நாவலில் வரும் கதாபாத்திரங்களை உயிருள்ள வர்களைப்போலவே நினைப்பேன். ப்ரின்ஸ் வால்கோவ்ஸ்கியை (அந்த நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம்) எனக்குப் பிடிக்கவே பிடிக் காது. அலக்ஸியை நான் வெறுப்புடன் பார்ப்பேன். கிழவனான இக்மனேவ் மேல் பரிதாபம் கொள்வேன். ஆதரவே இல்லாமல் நிர்க்க தியாக நின்று கொண்டிருக்கும் நெல்லியை இதயம் முழுக்க அன்புடன் நான் பார்ப்பேன். நஸ்தாஷாவிடம் எனக்கு அன்பு என்ற ஒன்றே பிறக் கவில்லை.

இவ்வளவு விஷயங்களையும் நான் தாஸ்தாயெவ்ஸ்கியிடம் சொன்னேன்.

“எனக்கு அவங்க யாரையும் ஞாபகத்துலயே இல்ல. நீ சொல்ற நாவலோட கதை என்னன்றதைகூட மறந்துட்டேன்”- தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்.

“இல்ல. நிச்சயமா இருக்க முடியாது.”- நான் உரத்த குரலில் சொன்னேன்.

“என்ன வெட்கக்கேடு! கதை சொல்லிக்கிட்டு இருந்த இவான் பெட்ரோவிச்சை நான் முழு மனதுடன் விரும்பினேன். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை வேண்டாம்னு சொல்லிட்டு நஸ்தாஷா எப்படி கெட்டவனான அலக்ஸியைத் தேர்ந்தெடுத்தாள்? இதற்காக நான் எந்த அளவிற்குக் கவலைப்பட்டேன் தெரியுமா? "அவளுக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது' என்று அந்த நாவலை நான் படிச்ச காலத்துல நினைச்சேன். சொந்தத் தந்தையின் பாசத்தை அவள் நிராகரித்தாள். இவான் பெட்ரோவிச் உண்மையில் நீங்கதான்றதை நான் கண்டுபிடிச்சேன். நிராகரிக்கப்பட்ட தன்னுடைய காதலைத்தான் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு நாவலா எழுதியிருக்கார்னு நான் அப்பவே நினைச்சேன். நீங்க அந்த நாவலை மறந்துட்டீங்களா? அப்படின்னா இன்னொரு தடவை படிங்க...”

நான் சொன்ன விஷயங்கள் அவரிடம் ஒருவித மாற்றத்தை உண்டாக் கின. நேரம் கிடைக்கிறபோது, தான் மீண்டும் அந்தப் புத்தகத்தைக் கட்டாயம் படிப்பதாக என்னிடம் சொன்னார்.

“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? நான் உங்களை ஆரம்பத்துல பார்த்தப்போ என்னைப் பார்த்து நீங்க கேட்டீங்க- நான் எப்போதாவது யாரையாவது காதலிச்சிருக்கேனான்னு. ரத்தமும் சதையும் உள்ள ஒரு மனிதனுடன் நான் இதுவரை காதல் உறவு கொண்டதில்லைன்னு அன்னைக்குப் பதில் சொன்னேன். ஆனால், பதினஞ்சு வயசுல படிச்ச புத்தகத்துல இருந்த ஒரு கதாபாத்திரத்தை காதலிச்சேன்னு நான் சொன்னேன். அப்ப நீங்க கேட்டீங்க- அது எந்தப் புத்தகம்னு. நான் உடனடியா அப்ப விஷயத்தை மாத்திட்டேன். அந்தப் புத்தகம் நீங்க எழுதினதுன்றதுனால, அதை நாம சொன்னா நல்லா இருக்காதுன்னு நானே வேணும்னு மறைச்சேன். இலக்கிய உலகில் பணியாற்ற வந்திருக்கிற ஒரு இளம் பெண்ணின் மனசுல இருக்குற விஷயங்களை அவளைக் கொண்டே சொல்ல வைக்கலாம்னு நினைச்சு நீங்க கேள்வி கேட்க, நான் பதில் சொல்லியிருந்தா நிச்சயம் நீங்க என்னைத் தப்பா நினைச்சிருப்பீங்க. ஆனா, நான் அப்பக்கூட சுதந்திரமான ஒரு பெண்ணா நிற்கத்தான் விரும்பினேன்...

"மரண வீடு' படிச்சிட்டு நான் எந்த அளவுக்கு கண்ணீர் விட்டு அழு தேன் தெரியுமா? சைபீரியன் சிறையில் வருஷக்கணக்கா அடைஞ்சு கிடந்த தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் படிச்சப்போ, என் மனசுல அந்த மனிதர்மீது பரிதாபம்தான் தோணுச்சு. மனசுல அலைமோதின அந்த உணர்வுகள் கொஞ்சம்கூட குறையாமத்தான் உங்களுக்கு உதவ நான் முதல் தடவையா இங்கே காலடி எடுத்து வச்சேன். உங்களுக்கு உதவ நான் ரொம்பவும் ஆர்வமா இருந்தேன். சின்ன வயசுல இருந்து நான் மனசுல வழிபட்ட ஒரு எழுத்தாளரின் கஷ்டத்தை ஓரளவுக்கு நம்மால் குறைக்க முடியாதா என்று மனப்பூர்வமாக எண்ணினேன். வேறு யாரையும் நியமிக்காமல் சுருக்கெழுத்து எழுதுறதுக்கு என்னை ஆல்கின் தேர்வு செய்தப்போ, நான் கடவுளுக்குத் திரும்பத் திரும்ப நன்றி சொன்னேன்.”

"மரண வீடு' நூலைப் பற்றி நான் சொன்ன விஷயம் அவரைக் கவலை யில் மூழ்கச் செய்துவிட்டது என்பது தெரிந்ததும், நான் பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன்.

“உங்களுக்குத் தெரியுமா? உங்களோட மனைவியாக என்னைத் தேர்வு செய்ததே விதிதான். பதினாறு வயசு முதல் என்னை "நெடோச்கா நெஸ்வனோவா' ன்னு(தாஸ்தாயெவ்ஸ்கியின் முழுமையடையாத ஒரு நாவலின் பெயர்) என்னைப் பலரும் கூப்பிடுறது உண்டு. தாஸ்தாயெவ்ஸ்கி யின் நூல்களுடன் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை இப்படி அழைச்சு என்னைக் கேலி பண்ணுவாங்க. நீங்ககூட என்னை "நெடோச்கா'ன்னு செல்லமா கூப்பிடலாம்.” நான் சொன்னேன்.

“இல்ல...” அவர் பதில் சொன்னார்.

“என்னுடைய நெடோச்கா அனுபவிச்ச தொல்லைகளும், துயரங் களும் எவ்வளவு தெரியுமா? நீ எப்பவும் சந்தோஷமான பெண்ணாக இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். நான் உன்னை "ஆன்யா'ன்னு கூப்பிடுறேன். அப்படி உன்னை அழைக்கிறதைத்தான் நான் விரும்புறேன். "ஆன்யா' என்ற பெயரை எப்பவும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.”

மறுநாள் மாலையில் கேள்வி கேட்க ஆரம்பித்தது நான். தாஸ்தாயெவ்ஸ்கியிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், நாணம் காரணமாக அவரிடம் அந்தக் கேள்வி யைக் கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை. எப்போது அவருக்கு என்மீது முதல் தடவையாகக் காதல் தோன்றியது என்றும்; எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது என்றும் அவரிடம் கேட்க நினைத்தேன். முதலில் இந்தக் கேள்வியைக் கேட்க நான் தயங்கினாலும், பின்னர் எப்படியோ அவரிடம் கேள்வி யைக் கேட்டே விட்டேன்.

அவர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு எனக்கே பெரிய நிராசை தோன்றுகிற விதத்தில் அவர் என்ன பதில் சொன்னார் தெரி யுமா? முதல் வாரத்தில் அவர் என் முகத்தைப் பார்க்கவேயில்லையாம்.

“பார்க்கவே இல்லையா? என்ன சொல்றீங்க?” நான் கேட்டேன்.

“யாருடனாவது நீ முதல் தடவையா பழக நேரிடுகிறபோது, கொஞ்ச நாட்களாகத்தான் அந்த மனிதரோடு பழகறேன்னு வச்சுக்கோ, அப்ப நீ அவரோட முகத்தை தீவிரமா பார்ப்பியா என்ன? நிச்சயமா இருக்க வாய்ப்பே இல்ல. நான் பொதுவாக யாரோட முகத்தையும் அப்படிப் பார்க்க மாட்டேன். அதைப்போலத்தான் உன்னையும் நான் பார்க்கல. நான் உன்னோட முகத்தைப் பார்த்துப் பேசினாக்கூட, நீ போயிட்டேன்னு வச்சுக்கோ... உன் உருவமே என் ஞாபகத்துல இருக்காது. உன்னைப் பற்றி யாராவது விசாரிச்சாங்கன்னா உன்னோட உடலமைப்பு இப் படின்ற மாதிரியெல்லாம் என்னால விவரிக்க முடியாது. அக்டோபர் கடைசியிலதான் நான் உன்னோட ஈர விழிகளையும், பிரகாசம் ததும்பும் புன்னகையையும் பார்க்குறேன். ஆமா... அதற்குப் பிறகு உன் முகம் எனக்கு விருப்பமான ஒண்ணாயிடுச்சு.


உன்னை அதிகமா பார்க்கப் பார்க்க என்னோட விருப்பமும் கூடிக்கிட்டே இருந்தது. இன்னைக்கு இந்த உலகத்திலேயே உன் முகம் அளவுக்கு நான் விருப்பப்படுறது ஒண்ணுமே இல்ல. எனக்கு நீ ஒரு உலக அழகி. எனக்கு மட்டுமில்ல...” குழந்தையைப்போல மனம் திறந்து சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி.

“முதல் நாள்ல இருந்தே உன்னோட நடவடிக்கைககள் ஒவ்வொண்ணை யும் நான் மிகவும் கவனமாகப் பார்த்துக்கிட்டே இருந்தேன். தனக் குள்ளே ஒரு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு மரியாதையுடன் எல்லா விஷயங்கள்லயும் நீ நடப்பதை நான் தவறாம கவனிச்சேன். எந்த அளவிற்கு நாகரீகமாக- எல்லாரும் மதிக்கிற மாதிரி நடந்து காட்டும் பெண்ணாக இவள் இருக்கிறாள்னு நானே உன்னை ஆச்சரியத்துடன் பார்ப்பேன். இப்படியொரு இளம் பெண்ணும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்கிறாள்ன்றதை நினைச்சுப் பார்க்குறப்போ எனக்கே ரொம்பவும் சந்தோஷமா இருக்கும். பேச்சுக்கு நடுவே கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் என்னுடைய வாயிலிருந்து ஒரு வார்த்தை தேவை யில்லாமல் வந்து விழவே, உன்னுடைய முகபாவம் அந்த நிமிடமே மாறிப் போனதை நான் கவனிக்காம இல்ல... நீ என்னையே உற்றுப் பார்த்தே. அதற்குப் பிறகு நான் உன்னுடன் பேசுறப்பல்லாம் ரொம்பவும் கவனமா இருந்துதான் பேசுவேன். நான் ஏதாவது பேசி, உனக்கு அது பிடிக்காமப் போயி... எதற்கு வீண் வம்புன்னு மிக மிக எச்சரிக்கையா இருப்பேன்- உன்கிட்ட பேசறப்ப மட்டும். நீ என்னுடைய பிரச்சினைகளை உணர்ந்து அதில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதையும், எனக்குக் கட்டாயம் உதவி செஞ்சே ஆகணும்னு மனப்பூர்வமா நினைச்சு செயல் பட்டதையும் பார்த்து நான் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போயிட்டேன். என்னோட தலைக்குமேல தொங்கிக்கிட்டு இருந்த ஆபத்தைப் பார்த்து உன் முகத்துல என் மேல எந்த அளவுக்கு இரக்கம் தெரிஞ்சதுன்றதை நான் பார்த்தப்போ... அப்பப்பா... உண்மையாவே சொல்றேன்... ஆடிப் போயிட்டேன். நான் எனக்குள்ளேயே கேட்டுக் கிட்டேன்... என்னோட நண்பர்கள் பலரும் உறவுக்காரங்களும் என் மேல அன்பு வச்சிருக்குறவங்களும் எனக்கு உதவி செய்றதா பல முறை சொல்லியிருக்காங்க. ஆனா... அவங்க எல்லாருமே வாயால பேசுறதோட நின்னுக்கிட்டாங்க. வெறும் வார்த்தைகள் மட்டுமே... எல்லாத்தையும் இழந்து நிற்கிறதுக்காக என்னை அவர்கள் பழி சுமத்தினாங்க. எனக்கு அந்த ஆபத்துல இருந்து தப்பிக்கிறதுக்கு வேற என்னதான் வழி இருக்கு? அவுங்க யாருமே என்னோட உண்மையான மனசைப் புரிஞ்சுக்கல. அப் படி இருக்குறப்போதான்... எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு இளம்பெண், அதைச் செய்றேன் இதைச் செய்றேன்னு வார்த்தைகளை அள்ளி வீசாமல்... என்னைப் பற்றி அது இதுன்னு குற்றம் சொல்லாமல்... எனக்காக உண்மையிலேயே உதவ முன்வந்தாள்... அவள் வார்த்தைகளை வச்சு என்கிட்ட விளையாடல. நாவல் முடியிற கட்டத்தை நெருங்கிக்கிட்டு இருந்தப்போ விரக்தியடைஞ்சு போயிருந்த என்னோட இதயத்துல ஒரு வெளிச்சம் தோண ஆரம்பிச்சுச்சு. குறிப்பிட்ட நாள்ல புத்தகம் முடிவடையப் போறது உறுதின்னு மனசுல பட ஆரம்பிச்சது. ஒவ்வொரு நாளும் நீ முடிச்சுக் கொண்டு வர்ற பக்கங்களை நாம எண்ணிப் பார்ப் போம்- உனக்கு ஞாபகத்துல இருக்கா? நாம இந்த முயற்சியில நிச்சயம் வெற்றி பெறுவோம்னு அப்பப்போ நீ சொல்றப்போ நான் எந்த அள வுக்குப் பலமுள்ள மனிதனா மாறினேன்னு உனக்குத் தெரியுமா? உன்னு டைய இதயம்தான் எந்த அளவிற்கு கருணையின் வடிவமா இருக்குன்னு நான் ஆச்சரியப்பட்டு நின்னிருக்கேன். நீ எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சு செயல்பட்டது ஆத்மார்த்தமானது. நீ என்னை முழுமையான அழிவுல இருந்து காப்பாத்துறதுக்காகப் பாடுபட்டே. நான் ஒரு தனி மனிதனா தத்தளிச்சிக்கிட்டு இருந்தப்போ... நீ செஞ்ச அந்த உதவி... நீ காட்டின அந்த அன்பு... அடடா... சத்தியமா சொல்றேன், நான் மனம் நெகிழ்ந்து போயிட்டேன். உன்னுடைய செயல் என் மனசுக்கு எவ்வளவு ஆறுதலா இருந்துச்சு தெரியுமா?

அப்போத்தான் என் மனசுல உன் மேல காதல்ன்ற ஒண்ணு உண்டாக ஆரம்பித்தது. உன்னுடைய அழகான முகத்தை நான் நினைச்சுப் பார்ப்பேன். உன்னைப்பற்றி பல விதங்கள்லயும் சிந்திச்சுப் பார்ப்பேன். "சூதாட்டக்காரன்' முடியுறப்பதான் நாம ஒவ்வொரு நாளும் பார்த்துக் கிட்டு வர்றது ஒரு முடிவுக்கு வரப் போகுதுன்றதையே நான் உணர்ந் தேன். இரண்டு பேரும் பார்க்கவே முடியாம பிரியறதா? அதை என் னால நினைச்சுப் பார்க்கவே முடியல... நீ இல்லாம என்னால வாழவே முடியாதுன்றதை நான் உணர்ந்தேன். அதற்குப் பிறகுதான் உன்னைத் திருமணம் செய்துக்கணும்ன்ற முடிவுக்கு நான் வந்தது...”

“நீங்க எதற்காக என்கிட்ட நேரடியா உங்க காதலைச் சொல்லல...? எதற்காக இன்னொரு கதையைச் சொல்லி சுத்தி வளைச்சு என்கிட்ட இந்த விஷயத்துக்கு வரணும்?”- நான் அவரைப் பார்த்துக் கேட்டேன்.

“என்னுடைய அன்பான அன்னாவே...” உணர்ச்சிவசப்பட்ட நிலை யில் தாஸ்தாயெவ்ஸ்கி சொன்னார்: “நீ எந்த அளவிற்கு எனக்குப் பொருத்தமானவளா இருக்கேன்றதை நினைச்சுப் பார்த்தப்போ எனக்கு மனசுல வெறுப்புதான் உண்டாச்சு. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கணும்னு நான் நினைக்கிறதே ஒரு தப்பான எண்ணம்னு என் மனசுல பட ஆரம்பிச்சது. நம் ரெண்டு பேருக்குமிடையே இருக்கும் வயது வித்தியாசத்தை நீயே நினைச்சுப் பாரேன்... நாம ரெண்டு பேருமே எந்த அளவுக்கு மாறுபட்ட நிலையில் நின்னுகிட்டு இருக்கோம்ன்றதை ஒரு நிமிடம் நினைச்சுப் பாரு... சொல்லப்போனா... நான் ஒரு மனப் போராட்டத்துல சிக்கிக்கிட்டேன்.. என்ன செய்றதுன்னு தெரியாம, என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியாம அல்லாடுறேன். என்னைப் பற்றி நினைக்கிறப்போ எனக்கே வெறுப்பா இருக்குது. நோய்களோட போராடிக்கிட்டு... தனிமையா, விரக்தியடைஞ்ச மனநிலையில் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு... இதுதான் நான்! ஆனால் நீ? உயிரோட்டத் துடன் இருக்கே நீ. துடிப்பான இளமை! நான் என்னோட வாழ்க்கையைப் பெரும்பாலும் வாழ்ந்து முடிச்சிட்டேன். எவ்வளவு கஷ்டங்கள் அனுபவிக்கணுமோ அவ்வளவு கஷ்டங்களையும் நான் பார்த்தாச்சு. உன்னோட வாழ்க்கை சந்தோஷமய மானதுன்றது மட்டுமில்ல... வாழ்க்கை பலவித ஆனந்த நிலைகளுடன் உனக்கு முன் னாடி திறந்து கிடக்குது. எல்லாத்துக்கும் மேலே நான் பணம் அத்தனையும் இழந்து, வறுமையில சிக்கிக்கிட்டு, கழுத்தை நெரிக்கிற கடன் பிரச்சினைகள்ல மாட்டிக்கிட்டு... இப்படிப்பட்ட ஒரு அவல நிலையில் இருக்கேன் நம்மோட எதிர்காலம் எப்படி இருக்கும்? வேணும்னா கஷ்டங்களை அனுபவிச்சிக்கிட்டு வாழலாம்... கொஞ்ச நாட்கள் கழிச்சு ஒருத்தரையொருத்தர் குறை சொல்லிக்கிட்டு பிரியலாம். இல்லாட்டி அதற்கு நேர்மாறாக... உண்மையான காதலுடன் ஒருவரையொருவர் மனப்பூர்வமா விரும்பி வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை சந்தோஷத்துடன் வாழலாம்.”


ஆத்மார்த்தமான அந்த வார்த்தைகள் தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து வந்து விழுந்ததை நான் சிறிதுகூட விரும்பவில்லை. நான் பலமாக அதை எதிர்த்தேன். “இங்க பாருங்க... நீங்க எல்லாத்தையுமே ஆச்சரியம் கலந்து அதிசயமா பாக்குறீங்க. நம்ம ரெண்டு பேருக்குமிடையே எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கல. நாம ஒருவரையொருவர் மனப்பூர்வ மாகக் காதலிச்சா- உண்மையான அன்புடன் இருந்தா... நம்மைப் பொறுத்தவரை நாம ரெண்டு பேருமே நெருங்கிய நண்பர்களாக இருப்போம். விளக்கங்கள் தேவையில்லாத சந்தோஷத்தை நாம் அனு பவிக்கலாம். நான் இன்னொரு விஷயத்துக்குக்கூட பயப்படுறேன். இந்த அளவுக்கு அறிவாளியான, புகழ்பெற்ற, மிகப்பெரிய திறமைசாலியான ஒரு எழுத்தாளர் தலைக்குள் எதுவுமே இல்லாத ஒரு சாதாரண பெண்ணுடன் எப்படி வாழ்கிறார்? உங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கு றப்போ, என்னோட கல்வியைப் பற்றி சொல்றதுக்கு என்ன இருக்கு? ஒரு வெள்ளி மெடல் வாங்கி பட்டம் பெற்றிருக்கேன். அவ்வளவுதான். அதை வச்சு உங்க கையைப் பிடிச்சு வாழ்க்கையில் நடக்குற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்கு? உங்களின் எண்ணங்களைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு என்னால முடியாமப்போய், அதனால நீங்க மனதால் வெறுக்க ஆரம்பிச்சிடுவீங்களோன்னு எனக்கு ஒருவிதத்துல பயமா இருக்கு. சொல்லப்போனா நம்ம ரெண்டு பேருக்குமிடையே இருக்குற இந்த இடைவெளியை நினைச்சாத்தான்...”

தாஸ்தாயெவ்ஸ்கி என்னைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து என் மனதில் இருந்த அந்த அபிப்ராயத்தை மாற்ற முயற்சித்தார். என்னை முழுமையாகத் தன்மீது நம்பிக்கை கொள்ள வைக்க பலவிதத்திலும் முயன்றார். அதற்குப் பிறகு நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லும் விதமாக- எப்படி என்னை அவர் திருமணம் செய்துகொள்ளத் தீர் மானித்தார் என்பதைச் சொன்னார்:

“நான் திருமணம் செய்து கொள்ளணும்ன்ற முடிவை ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் எடுத்தேன். இளமையின் மகத்துவத்தை அனுபவிக்க முடியாதவனும், அழகற்றவனுமான ஒரு மனிதன் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்பதுன்றது விரும் பக் கூடிய செயல்தானா? கேலிக்குரிய ஒண்ணா அது இருக்காதா? நான் என் மன விருப்பத்தை உன்கிட்ட சொன்ன பிறகு, நீ அதை நிராகரிச் சுட்டேன்னு வச்சுக்கோ... அதை என்னால் தாங்கிக்க முடியுமா? அதற் குப் பிறகு உன் கண்களால் என்னை எப்படி நல்ல மனிதன்னு நினைச் சுப் பார்க்க முடியும்? இன்னொரு ஆளை நீ காதலிக்கிறதா ஒருவேளை என்னைப் பார்த்துச் சொல்லலாம். அப்படி நீ சொல்ற பதில் நம்ம ரெண்டு பேருக்குமிடையே ஒருவித இடைவெளியையும், வெறுமை உணர்வையும் உண்டாக்கும். இதுவரை நம்ம ரெண்டு பேருக்கும் மத்தியில் நிலவிக்கிட்டிருந்த நட்பு இருந்த இடம் தெரியாமல் போக, அந்த ஒரே ஒரு பதில் போதும். நான் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த நாட் களில் நான் பார்த்த இதயப்பூர்வமான ஒரு நல்ல தோழியை எப்படி நான் இழக்க முடியும்? திரும்பத் திரும்பச் சொல்றேன்- நான் அந்த அளவுக்கு தனி மனிதனா- விரக்தியடைந்து வாழ்ந்துக்கிட்டு இருந்த காலமது. அப்படிப்பட்ட நிலையில எனக்கு அதைத் தாங்குற மன சக்தி கிடையவே கிடையாது. ஒரு நாவலுக்கான கதை அப்படீன்னு திருமண விஷயத்தை உன்கிட்ட சொல்லி, உன்னோட மனசை அறிய வாய்ப்பு இருக்குதான்னு பார்க்கலாம்னு நினைச்சேன். சொல்லப்போனா... அந் தக் கதையை உன்கிட்ட சொல்வதன் மூலம் உன் மனசைப் பரிசோதனை செய்ய நினைச்சேன். அதன்மூலம் நீ இந்தக் காதலை நிராகரிக்கிறேன் றதை நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு வச்சுக்கோ... அந்த ஏமாற்றத்தை ஓரளவுக்கு எளிதா என்னால ஏத்துக்க முடியும். காரணம்- நாம அப்போ பேசிக்கிட்டு இருந்தது நாவல்ல வர்ற கதாபாத்திரங்களைப் பற்றித் தானே தவிர, நம்மைப் பற்றி இல்லையே!”

அவர் அந்த நாவலின் கதையை என்னிடம் விவரித்தபோது, என் மனதில் இருந்த தவறான எண்ணங்களையும் அன்னா கார்வின் க்ருக்வோவ்ஸ்கயா மேல் நான் கொண்ட பொறாமையைப் பற்றியும் அவரிடம் மனம் திறந்து சொன்னேன்.

நான் சொன்னதைக் கேட்ட தாஸ்தாயெவ்ஸ்கி தெளிவான குரலில் சொன்னார்: “உனக்கே தெரியாமல் உன்னோட சம்மதத்தை நான் வாங்கிட்டேன்னு அதற்கு அர்த்தம். அந்த நேரத்துல நான் மனசுல எழுதின அந்த நாவல்தான் நான் இதுவரை எழுதிய என் படைப்பு களிலேயே மிகப் பெரிய வெற்றின்னு நான் சொல்வேன். காரணம்- அதோட பலன் என்னன்னு அப்பவே எனக்குத் தெரிஞ்சிடுச்சு. நான் எது எனக்குக் கிடைக்கணும்னு மனப்பூர்வமா ஆசைப்பட்டேனோ, அது எனக்குக் கிடைச்சிருச்சு.”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.