Logo

விண்வெளிப் பயணம்

Category: புதினம்
Published Date
Written by sura
Hits: 9497
vinveli-payanam

1

ஐம்பது வருடங்களுக்குப் பிறகு

தோ.... கடல் பரப்பு நிலப்பரப்பைவிட உயர்ந்து விட்டது. பூமியின் நான்கில் மூன்று பாகங்களும் நீருக்கடியில் போய்விட்டன.

மனிதர்கள் மலைகளின் உச்சியில் வசிக்க ஆரம்பித்து விட்டார்கள். வருடத்தில் இரண்டு கால நிலைகளே இருந்தன - கோடை காலமும் குளிர்காலமும். ஒன்பது மாதங்கள் வெப்பமாகவும் மூன்று மாதங்கள் குளிராகவும் இருந்தன.

கோடைகாலத்தில் மிகவும் பலமான நெருப்புக் காற்று அடித்துக் கொண்டிருந்தது. அதனால் பள்ளிக் கூடங்கள் குளிர்காலத்தில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஒன்பது மாதங்கள் விடுமுறை! நான்கு வருடங்கள் ஆகும்போது மட்டுமே ஒவ்வொரு வகுப்பிலும் தேர்வு நடக்கும். ஒரு மாணவன் எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெறுவதற்கு நாற்பது வருடங்கள் ஆகும். பி.ஏ.வில் தேர்ச்சி பெற ஐம்பத்தாறு வருடங்கள்.

பூமி முன்பு மாதிரியே சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் ஒருதடவை சுற்றுவதற்கு மூன்று நாட்கள் தேவைப்படும். பகலுக்கும் இரவுக்கும் முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு நீளம் அதிகமாக இருந்தது.

வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் மனிதர்களும் மிருகங்களும் பகல் நேரத்தில் தூங்குவார்கள். இரவில் கண் விழித்திருப்பார்கள். ஆந்தை, வவ்வால், நரி ஆகிய இரவு நேரத்தில் விழித்திருக்கும் உயிரினங்கள் பகலில் சுற்றித் திரிந்து விட்டு இரவு வேளையில் தூங்கின. மனிதர்களின் நிறம் அடர்த்தியான கருப்பு நிறமாக ஆனது. வெள்ளை நிறம் கொண்ட மனிதர்களையும் வெள்ளை நிறம் கொண்ட யானைகளையும் எங்கும் பார்க்க முடியவில்லை. புராண நூல்களில் வெள்ளை நிற மனிதர்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தன. அதனால் அப்படிப்பட்ட மனிதர்களும் ஒரு காலத்தில் இந்த உலகத்தில் இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

பாகிஸ்தானின் தலைநகரம் அப்டாபாத்தாகவும் இந்தியாவின் தலைநகரம் அல்மோராகவும் ஆனது. இலங்கை வானொலியின் சத்தமே எங்கும் கேட்கவில்லை. இலங்கை நீருக்குக் கீழே போய்விட்டது. அங்கு இருந்த மக்கள் கேரளத்திலிருந்த மலைகளிலும் காடுகளிலும் அபயம் தேடினார்கள். அவர்கள் சிங்கள மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமை கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

பிரிட்டிஷ் தீவுகளின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. ஸ்காட்லேண்டின் மலைகளில் ஆங்கிலேயர்கள் சிலர் வாழ்கிறார்கள். அவர்கள் ஆடுகளை மேய்த்துத்தான் தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பானும் நீருக்குக் கீழே போய்விட்டது. ஃப்யூஜியாமாவிற்கு அருகில் சில ஜப்பான்காரர்களைப் பார்க்க முடிந்தது.

காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தது. அரேபியர்கள் சுவிட்சர்லாண்டில் பேரீச்சம் பழத்தை விவசாயம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். எண்ணெய் கிணறுகளைக் கூறித்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்திப் போர்களே நடைபெற்றன. அந்த எண்ணெய் கிணறுகள் இப்போது நீருக்குக் கீழே இருந்தன.

பூமியின் மக்கள் தொகை ஒன்றரை கோடியாக சுருங்கியது. உலகத்திலேயே ஒரே ஒரு மொழிதான் இருந்தது - மலைவாழ் மக்களின் மொழி.

ராகம்கூட ஒன்றே ஒன்றுதான் - மலைவாழ் மக்களின் ராகம்! எல்லோருக்கும் சேர்த்து ஒரே ஒரு மதம்தான் இருந்தது - மலைவாழ் மக்களின் மதம்!

இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகள் நீருக்கு அடியில் போய்விட்டன. அதனால் மலைகளின் உச்சியில் அமைச்சர்களின் கார்கள் நின்று கொண்டிருந்தன. மனிதர்கள் மீன் வலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பம்பாய் நீருக்கடியில் இருந்தது. கராச்சி எங்கு இருக்கிறது என்று தகவலே கிடைக்கவில்லை. மீன் பிடிப்பவர்கள் வலைகளை எறியும்போது கிடைக்கக்கூடிய அழகான கார்களைப் பார்த்து அந்த இடங்களில் அமைச்சர்கள் வாழ்ந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். லாகூர் இருந்த இடத்திலிருந்து சுறா மீன்களும் கராச்சி இருந்த இடத்திலிருந்து அமெரிக்கன் சுறா மீன்களும் கிடைக்கின்றன. டில்லி இருந்த இடத்திலிருந்து கொம்பு முளைத்த சுறா மீன்களும் லக்னோ இருந்த இடத்தலிருந்து கவிதை பாடும் மீன்களும் கிடைக்கின்றன. அலிகார் பல்கலைக் கழகமும் பனாரஸ் பல்கலைக் கழகமும் தங்களின் கலாச்சாரங்களை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு நீருக்கடியில் இருக்கின்றன. அஞ்ஜுமன்தர்வி உருது அமைப்பின் அலுவலகத்தில் ஒரு மகர மீன் வசிக்கிறது. அகில இந்திய இந்தி இலக்கிய அமைப்பு அலுவலகத்தில் கடல் பாம்புகள் வசித்துக் கொண்டிருக்கின்றன.

மக்கள் தொகை ஒன்றரை கோடியாகக் குறைந்துவிட்டது என்றாலும், போர் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

2

இமயமலையில் பேராசிரியரும் நான்கு பிள்ளைகளும்:

நான்காவது பையன் இரும்பாலான சிறுவன்

லைகளின் உச்சியில் அணு நிலையங்களை அமைத்து அங்கிருந்து ராக்கெட்டுகளை அனுப்புகிறார்கள். உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குழு ‘உலகம் முழுவதும் எங்களுக்குத் தேவை’ என்று கூறுகிறது. ‘தர மாட்டோம்’ என்று எதிர் குழு கூறுகிறது. மூன்றாவது குழுவில் ஒரே ஒரு ஆள் மட்டுமே இருக்கிறான். தான் வாழ வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கம். ஆனால், மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மூன்றாவது பிரிவில் இருப்பவர் வயதான ஒரு பேராசிரியர், மிகப்பெரிய விஞ்ஞானி. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றி விட்டார்கள். பேராசிரியர் இமயமலையின் சிகரமான காஞ்சன் ஜங்காவில் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் உர்ஃபி (பதினேழு வயது), இரண்டாவது மகள் நாஸ் (பதினான்கு வயது), மூன்றாவது மகள் மோகினி (பன்னிரண்டு வயது), நான்காவது மகன் ஜிம்மி (எட்டு வயது). ஜிம்மி சாதாரணமானவன் அல்ல. பேராசிரியர் எட்டு வருடங்கள் மிகவும் சிரமப்பட்டு இரும்பால் உண்டாக்கிய குழந்தை அவன்.

ஜிம்மிக்கு எல்லா உறுப்புகளும் இருக்கின்றன. எல்லாமே இரும்பால் ஆனவைதான். அவனுக்கு இதயம் ஒன்றே ஒன்றுதான். இருந்தாலும் மூளை இரண்டு இருக்கின்றன. ஒரு மூளை செயல்படாமல் இருக்கும்போது, இன்னொரு மூளை வேலை செய்து கொண்டிருக்கும். அதேபோல இரண்டு வயிறுகள் இருக்கின்றன. ஒரு வயிற்றில் உணவுப் பொருட்களைச் சேர்த்து வைத்திருப்பான். இரும்பு மனிதன்தானே? பசி அதிகமாகத் தோன்றும். மின்சக்தி பயன்படுத்தித்தான் அவன் நடக்கிறான். மற்ற பிள்ளைகளைப்போல ஜிம்மியும் விளையாடுவான், சிரிப்பான், பள்ளிக்கூடத்திற்குச் செல்வான், படிப்பான். ஆசிரியர்களிடமிருந்து அடி வாங்கவும் செய்வான்.

அவனுக்கு அடி வாங்கியது மாதிரியே தெரியாது. இரும்பாயிற்றே! மூத்தவர்கள் கூட ஜிம்மியுடன் வம்பு தும்பு பேச பயப்படுவார்கள்.

அவனுடைய மூளையில் ஒரு சிறிய டைனமோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. டைனமோவிற்கு நூறு வருடங்கள் செயல்படுவதற்கான செயல்திறன் இருக்கிறது. அதனால் ஜிம்மியின் ஆயுட்காலம் நூறு வருடங்கள்.


புதிய டைனமோவை இணைத்தால் அதற்குப் பிறகும் நூறு வருடங்கள் வாழலாம். ஜிம்மியை எந்தவொரு நோயும் பாதிக்காது. அவனுடைய கண்களின் கருவிழிகள் டெலிவிஷனைப் போல இருக்கும். அதன்மூலம் மிகவும் தூரத்தில் நடக்கும் சம்பவங்களை அவனால் பார்க்க முடியும். காதில் ரேடார் இணைத்திருப்பதால் அசாதாரணமான கேட்கும் சக்தி அவனுக்கு இருக்கிறது. இளைய மகனான ஜிம்மி மீது பேராசிரியர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிறார். எட்டு வயதிலேயே அவனுடைய மூளையில் எல்லா அறிவியல் விஷயங்களையும் பேராசிரியர் நிறைத்துவிட்டார். ஜிம்மிக்கு பெரிய பேராசிரியர்களுக்குக்கூட பாடம் சொல்லிக் கொடுக்கும் திறமை இருந்தது. எவ்வளவு பெரிய பலசாலியையும் மண்ணைக் கவ்வ வைக்கக் கூடிய உடல் பலமும் அவனுக்கு இருந்தது. ஜிம்மியின் மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமே தோன்றும். அவன் ஒரு நல்ல இரும்பு மனிதனாக இருந்தான்.

பேராசிரியர் வீட்டிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்து, அதில் பல ஆராய்ச்சிகளையும் செய்து கொண்டிருந்தார். சந்திரனுக்குப் போகக்கூடிய ஒரு ராக்கெட்டை அவர் உண்டாக்கிக் கொண்டிருந்தார். பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, அவர்கள் தங்களின் தந்தைக்கு உதவியாக இருந்தார்கள். குறும்புத் தனங்கள் கொண்ட மோகினி கேட்டாள் :

“அப்பா, சந்திரனுக்குப் போய் நாம் என்ன செய்வோம்?”

“சந்திரனில் ஒண்ணுமே இல்லை. நீர், காற்று எதுவும் இல்லை. தூசிப்படலமும் நெருப்பு மலைகளும் மட்டுமே இருக்கின்றன. அப்படித்தான் எங்களுடைய அறிவியல் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆபத்தான இடத்திற்கு ஏன் போக வேண்டும்” - நாஸ் கேட்டாள்.

பேராசிரியர் பிள்ளைகளுக்கு விளக்கங்கள் கூறினார்.

“நம்முடைய தொலைநோக்குக் கருவி வழியாக சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும். அங்கு வெற்றிடம்தான் இருக்கிறது. சுற்றிலும் மணல் மட்டுமே. காற்றும் நீரும் தாவரங்களும் உயிரினங்களும் இல்லை. எனினும், நாம் பார்க்க முடியாத பகுதியில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.”

“அங்கே என்ன இருக்கு?”

“இப்போது எப்படி சொல்ல முடியும்? நான் அங்கே தேடிக் கொண்டிருக்கும் பொருள் கிடைத்துவிட்டால், என்னைவிட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இன்னொருவன் இருக்க முடியாது.”

“அது என்ன பொருள்?” - மோகினி தன் தந்தையின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கேட்டாள்.

“ராக்கெட் தயாராகி முடிக்கும்போது சொல்றேன்.”

“ராக்கெட் தயாராவது எப்போது முடிவடையும்?”

“நீ சொல்லு மகனே!” - பேராசிரியர் ஜிம்மியைப் பார்த்துச் சொன்னார்.

“இன்னும் பத்து நாட்கள் ஆகும். ராக்கெட்டின் நீளம் அறுபது மீட்டர். அகலம் ஆறு மீட்டர். எடை ஆயிரம் டன். மெர்க்குரியின் சக்தியால் செயல்படும் நான்கு ராக்கெட் பம்புகள் இருக்கும்.”

“சபாஷ்!” - பேராசிரியர் எல்லோரையும்விட இளைய மகனான ஜிம்மியின் தோளைத் தட்டிய பிறகு உர்ஃபியிடம் சொன்னார்: “பார்த்தியா, சின்ன தம்பி உன்னைவிட அறிவாளியாக இருக்கிறான்.”

உர்ஃபி கவலை கலந்த குரலில் சொன்னான் :

“அவன் இரும்பு மனிதனாச்சே!”

மோகினி நாக்கை வெளியே நீட்டி ஜிம்மியைக் கிண்டல் பண்ணினாள்: “நீ ஒரு பெரிய அறிவாளிதான்!”

ஜிம்மி கோபமாகத் தன் அக்காவின் பின்னால் ஓடியபோது அவர்களின் தந்தை தடுத்தார்: “ச்சீ! அக்காவுடனா சண்டை போடுறே?”

“அவள் என்னை ஏன் கிண்டல் பண்ணுறா? நான் எல்லோரையும்விட திறமைசாலி என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?”

“சரி... எல்லோரும் வெளியே போங்க. நான் வேலை செய்யணும்.”

பேராசிரியர் பிள்ளைகளை ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியே போகும்படிச் செய்தார்.

3

ராக்கெட் தயார்; ஆனால் பேராசிரியர் கைதாகிவிட்டார்...

ன்பதாவது நாள் ராக்கெட் தயாரிப்பது முழுமையடைந்தது. இரவில் பேராசிரியர் தன் பிள்ளைகளின் உதவியுடன் இயந்திரங்களை இயங்கச் செய்தார். ஏதாவது பிரச்சினை உண்டானால் ஜிம்மி முன்னால் வருவான். அதற்குக் காரணம் - அவனுடைய மூளை உருக்கு கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதும் மின்சக்தி மூலம் அவன் செயல்பட்டுக் கொண்டிருப்பதும்தான். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்கு மற்றவர்களுக்கு பத்து மணி நேரங்கள் வேண்டுமென்றால், ஜிம்மிக்கு ஒரு நிமிடம் போதும்.

இரவு வேலைகள் அனைத்தையும் முடித்து, ராக்கெட்டில் உணவுப் பொருட்களைக் கொண்டுபோய் வைத்தார்கள். பன்னிரண்டு மணிக்கு எல்லோரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

காலையில் சந்திரனுக்குப் புறப்படுவதாக திட்டம். பூமியிலிருந்து முதல் தடவையாக சந்திரனின் இன்னொரு பக்கத்திற்குச் செல்லக்கூடிய ராக்கெட் அதுதான். புதிய உலகத்தைப் பார்க்கப் போகும் உற்சாகத்தால் பிள்ளைகள் துள்ளிக் குதித்தார்கள்.

பேராசிரியரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். பூமியிலிருந்து சந்திரனின் இன்னொரு பக்கத்தை அடையப் போகிற முதல் மனிதர்!

வீட்டை அடைந்தபோது, வாசலில் போலீஸ்காரர்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். போராசிரியரைக் கைது செய்தவற்காக! பேராசிரியர் உலகத்தில் வாழ வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட ஒரே மனிதர் என்பதுதான் உண்மை.

“நீங்கள் வாழ வேண்டும என்ற கொள்கையை நம்பக் கூடியவரா?” காவல் துறை அதிகாரி கேட்டார்.

“ஆமாம்...”

“நீங்கள் இதுவரை ஒரு பிரிவின் போரிலும் பங்கு பெற்றது இல்லையா?”

“இல்லை.”

“நீங்கள் மிகவும் ஆபத்தான மனிதர் என்று தோன்றுகிறது. அரசாங்கம் உங்களைக் கைது பண்ணி இமயமலையில் சிறைக்குள் வைக்க முடிவு பண்ணியிருக்கு.”

“என் பிள்ளைகள்?”

“அரசாங்கம் வேறு யாரைப் பற்றிய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாது. பிறகு... நீங்கள் சந்திரனுக்குப் போவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைச்சிருக்கு. உங்களுடைய முயற்சி சட்ட விரோதமானது. எங்களுடைய அரசாங்க விஞ்ஞானிகள் நாளை காலையில் உங்களுடைய ஆராய்ச்சி நிலையத்தை தவிடுபொடியாக்கிவிடுவார்கள். கையை நீட்டுங்க! விலங்கை மாட்டுகிறேன்.”

“தயவு செய்து பிள்ளைகளிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகப் பத்து நிமிடங்கள் எனக்கு அனுமதிக்க முடியுமா?” - பேராசிரியர் கேட்டார்.

“கட்டாயமா...” - இன்ஸ்பெக்டர் பதில் சொன்னார்.

பேராசிரியர் தன்னுடைய பிள்ளைகள் நான்கு பேரையும் அறைக்குள் அழைத்துக் கொண்டு வந்தார். “பிள்ளைகளே! நான் பயப்பட்ட விஷயம் நடந்து விட்டது. என்னுடைய பல வருட கடுமையான உழைப்பு பிரயோஜனம் இல்லாம போகப் போகுது. இவர்கள் என்னை கைது செய்து விடுவார்கள். பிறகு... ராக்கெட்டையும் ஆராய்ச்சி நிலையத்தையும் அழிப்பாங்க. பூமியில் வாழவேண்டும் என்ற என்னுடைய இறுதி ஆசையும் ஒண்ணுமில்லாம போகப் போகுது.”


“அது எப்படி?” - உர்ஃபி பதைபதைப்புடன் கேட்டான்.

பேராசிரியர் தன்னுடைய மூத்த மகனின் தோளில் கையை வைத்துக் கொண்டு சொன்னார் : “மகனே! எனக்கு உன்னைவிட மிகவும் அதிகமான வயது. உலகத்தின் எல்லா பகுதிகளிலும மனிதர்கள் வாழ்ந்த ஒரு காலகட்டத்தை நான் பார்த்திருக்கிறேன். இப்போது நீர் ஆக்கிரமித்திருக்கும் இடமெல்லாம் அந்த காலத்தில் அழகான நகரங்களாகவோ கிராமங்களாகவோ இருந்தன. வயல்களும் தோட்டங்களும் தொழிற்சாலைகளுமாக இருந்தன. ஆனால், மனிதர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்து எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள். இப்போது சில மலைகள் மட்டுமே நீருக்கு மேலே இருக்கின்றன. இந்த போர் தொடர்ந்து நடந்தால், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் எவரெஸ்ட் சிகரமும் நீருக்கு அடியில் போய்விடும். பிறகு ஒரு மனிதன்கூட எஞ்சியிருக்க மாட்டான்.”

“நாங்கள் குழந்தைகள்தானே! நாங்க என்ன செய்ய முடியும்?”

“குழந்தைகளால் பலவற்றையும் செய்ய முடியும். கெட்ட குணங்களைக் கொண்ட வயதான மனிதர்களை நேர்மையான வழிக்குக் கொண்டுவர குழந்தைகளால்தான் முடியும்.”

“அது எப்படி?” - நாஸ் கேட்டாள்.

“நான் எதற்காக சந்திரனுக்குப் போக வேண்டும் என்று முடிவெடுத்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த ரகசியத்தை இன்றுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. உங்களிடம் சொல்கிறேன். அன்பான பிள்ளைகளே! ஒரு காலத்தில் இந்த பூமி இப்படி இல்லாமலிருந்தது. மனிதர்கள் இப்போது செய்வதைப்போல ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கவில்லை. எல்லோரும் ஒற்றுமையுடனும் மன அமைதியுடனும் நல்ல எண்ணங்களுடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் இந்த பூமியில் ஒரு பறவை இருந்தது. அது எந்நேரமும் சமாதானத்தை வலியுறுத்தும் பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரே ஒரு பறவைதான் இருந்தது. ஆனால், மனிதர்களுக்கு இடையில் நடைபெற்ற போரைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்தப் பறவை சந்திரனுக்குப் போயிடுச்சு. அந்தப் பறவை போன பிறகு பூமியில் போர் பெரிதாகிவிட்டது. ஒரு நிமிடம்கூட சண்டை நிற்கவில்லை. அந்தப் பறவை திரும்பி வருவது வரை உலகம் இப்படி அழிந்துகொண்டுதான் இருக்கும்.”

“அந்தப் பறவையைத் திரும்ப கொண்டு வருவதற்காகத்தான் நீங்க சந்திரனுக்குப் போகத் தீர்மானித்தீர்களா அப்பா?” - மோகினி கேட்டாள்.

“ஆமாம் மகளே.”

“அந்தப் பறவையின் அடையாளம் எப்படி இருக்கும்?” - நாஸ் கேட்டாள்.

“அது ஒரு வெள்ளை நிறத்தில் இருக்கும் புறா. தலையில் தாமரைப் பூவின் அளவில் ஒரு கிரீடம் இருக்கும். பிறகு...”

பேராசிரியர் தான் கூற வந்த வார்த்தைகளைக் கூறி முடிப்பதற்கு முன்பே போலீஸ்காரர் அறைக்குள் வந்துவிட்டார். “சீக்கிரமா வாங்க. மிகவும் தாமதம் ஆயிடுச்சு. பிள்ளைகளிடம் விடைபெறுவதற்கு உங்களுக்கு ஒரு ஆயுள்காலம் வேணுமா என்ன?”

4

பிள்ளைகள் சந்திரனை நோக்கி...

யதான மனிதரான பேராசிரியரை போலீஸ்காரர்கள் கைது செய்து அழைத்து கொண்டு சென்றார்கள். பிள்ளைகள் அழ ஆரம்பித்தார்கள். இரும்பாலான பையனான ஜிம்மியும் அழுதான். தேவைப்பட்டால் அவன் எல்லா போலீஸ்காரர்களையும் அடித்து, உதைத்து தன் தந்தையை அவர்களிடமிருந்து காப்பாற்ற முடியும். ஆனால் பேராசிரியர் தடுத்துவிட்டார்.

தங்களின் தந்தையைப் போலீஸ்காரர்கள் கைது செய்து அழைத்துக் கொண்டு போன பிறகு, உர்ஃபி தன் உடன் பிறப்புக்களிடம் கேட்டான் :

“உங்களுடைய கருத்து என்ன?  நாம சந்திரனுக்குப் போய் அந்தப் பறவையைத் திரும்பக் கொண்டு வருவோம்.”

“அப்பா இல்லாமல் நாம சந்திரனுக்குப் போவதா? நான் வரமாட்டேன்.” - மோகினி சொன்னாள்.

“நான் வர்றேன்.” - நாஸ் தயாரானாள்.

“நானும் தயார்” - ஜிம்மி.

“இவ்வளவு பெரிய ராக்கெட்டை எப்படிப் பறக்க வைப்பது?” - அதுதான் மோகினியின் பயம்.

“ஜிம்மியின் உதவியுடன் நான் பறக்க வைப்பேன்” -  உர்ஃபி தைரியத்துடன் சொன்னான்.

“சரி... இன்னைக்கு இரவே புறப்படுவோம். இல்லாவிட்டால், காலையில் அரசாங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ராக்கெட்டையும் ஆராய்ச்சி நிலையத்தையும் அழிச்சிடுவாங்க.”

பிள்ளைகள் நான்கு பேரும் இரவில் பதுங்கிப் பதுங்கி ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் வந்தார்கள். அறுநூறு அடி உயரத்தைக் கொண்ட ஏணியில் ராக்கெட் இணைக்கப்பட்டிருந்தது. மின்சார லிஃப்டின் உதவியுடன் நான்கு பேரும் ராக்கெட்டிற்குள் நுழைந்தார்கள். மூத்தவனான உர்ஃபி கேப்டனின் இருக்கையில் அமர்ந்தான். இரண்டாமவளான நாஸ் டெலிவிஷன், ரேடார் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். இளையவனும் இரும்புக் குழந்தையுமான ஜிம்மி ரக்கெட் பம்புகளின் பொறுப்பை வகித்தான். மூன்றாமவளான மோகினிக்கு சமைலறையில் வேலை கொடுக்கப்பட்டது. அவள் குறும்புத்தனம் கொண்டவளாகவும் எதுவுமே தெரியாதவளுமாக இருந்தாள்.

உர்ஃபி ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டான்:

“ரியாக்டர் ரெடி?”

“ரெடி” - ஜிம்மி பதில் சொன்னான்.

“ரியாக்டர் ஆன்க்ஸ் ரெடி?” - நாஸ் அறிவித்தாள்.

“ரொட்டித் துண்டு ரெடி” - மோகினி சொன்னாள்.

உர்ஃபி அவளைத் திட்டிவிட்டு மீண்டும் கேட்டான் : “ரியாக்டர் ஆன்க்ஸ் டூ ஃப்ளை.”

“ஷிப் மாஸ்டர் டூ ஃப்ளை!”

“ரெடி ஜிம்மி! ஸ்டார்ட் ஃபஸ்ட் பம்ப்!”

ஜிம்மி கைப்பிடியைத் திருப்பி முதல் பம்பை இயக்கினான். நெருப்பு, ஆவி ஆகியவற்றின் பலமான காற்றில் ராக்கெட் ஏணியை விட்டுப் பிரிந்து ஆகாயத்தில் உயர்ந்தது.

“செகண்ட் பம்ப் ஸ்டார்ட்!”

“தேர்ட் பம்ப் ஸ்டார்ட்!”

“ஃபோர்த் பம்ப் ஸ்டார்ட்!”

நான்காவது பம்ப் இயங்க ஆரம்பித்தபோது ராக்கெட் பூமியின் வட்டத்தைவிட்டு சந்திர மண்டலத்தை இலக்கு வைத்துப் போக ஆரம்பித்திருந்தது. அங்கிருந்து பார்க்கும்போது பூமி ஒரு பந்தைப்போலத் தெரிந்தது. கருப்பு நிறத்தில் காட்சியளித்த ஆகாயத்தில் ஒளிமயமான விளக்குகளைப்போல நட்சத்திரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ராக்கெட் மணிக்கு முப்பதாயிரம் மைல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் இருந்த கேபின் ஒரு உருண்டையைப்போல சுற்றிக் கொண்டிருந்தது. அதனால் ராக்கெட்டிற்குள் செயற்கையான ஈர்ப்பு நிலவிக் கொண்டிருந்தது. பூமியில் தங்களின் சொந்த வீட்டில் இருக்கிறோம் என்றே பயணம் செய்பவர்களுக்குத் தோன்றும். எடையில் எந்தவிதமான மாறுபாடும் தெரியாது. அதனால் வெற்று ஆகாயக் காலணிகள் அணியாமலே அவர்களால் ராக்கெட்டிற்குள் நடக்க முடிந்தது.


முன்பு பயணித்த ராக்கெட்டில் இருந்தவர்களுக்கு அது முடியாமல் போனது. ராக்கெட் பூமியின் வட்டத்தைவிட்டு புறப்பட்டவுடன், அதில் பயணம் செய்பவர்களின் எடை மிகவும் குறைய ஆரம்பித்துவிடும். அவர்கள் வெட்ட வெளியில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு இயந்திரத்திலிருந்து இன்னொரு இயந்திரத்தை அடைவதற்கு அதற்கென்று உள்ள காலணிகள் கட்டாயம் வேண்டும்.

சந்திரனை அடைவதற்கு முன்பே கேடு வந்து தகர்ந்த எத்தனையோ ராக்கெட்டுகள் வெட்ட வெளியில் கிடப்பதை பிள்ளைகள் பார்த்தார்கள். பூமி இப்போது மிகவும் சிறிய ஒரு உருண்டையாகத் தோன்றியது.

ஜிம்மி சொன்னான் : “ராக்கெட்டின் பயணிக்கும் திசையை முப்பத்தாறு டிகிரி மேற்குப் பக்கமாக திருப்பணும்!”

“எதற்கு?” - உர்ஃபி கேட்டான்.

“கிழக்குப் பக்கத்திலிருந்து ஒரு வால் நட்சத்திரம் வந்து கொண்டிருக்கிறது. அதன் மீது ராக்கெட் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.”

“என்னால எதையும் பார்க்க முடியலையே!”

ஜிம்மி கோபப்பட்டான் : “உங்களால் எப்படிப் பார்க்க முடியும்? ரேடார் எச்சரிக்கிறது. சீக்கிரமே திசையை மாற்றுங்க.”

மோகினி கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தாள் : “வேண்டாம் அண்ணா! நான் வால் நட்சத்திரத்தைப் பார்க்கணும். அதன் வால் மிகவும் நீளமாக இருக்குமா ஜிம்மி?”

“ஆமாம்...”

“நாயின் வாலைவிட நீளமாக இருக்குமா? குரங்கின் வாலைவிட நீளமாக இருக்கும் இல்லையா? நான் அதன் வாலில் வெடியைக் கட்டி நெருப்பு வைப்பேன். அப்போ தமாஷைப் பார்க்கலாம்.”

“பைத்தியக்காரி! வால் நட்சத்திரத்தின் வாலுக்கு எத்தனையோ ஆயிரம் மைல் நீளம் இருக்கும். அதன் வாலின்மிது பூமியின் அளவைக் கொண்ட ஏராளமான வெடிகளைக் கட்டலாம். அது நம்முடைய ராக்கெட்டிற்கு அருகில் எங்காவது கடந்து சென்றால் விபத்து நடக்கும். சீக்கிரமா ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மேற்குப் பக்கமாக மாற்றணும்!”

“ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மாற்றினால் சந்திரனை விட்டு விலகிப் போய்விட மாட்டோமா?” - உர்ஃபி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

ஜிம்மி ஓடி வந்து ராக்கெட் பயணிக்கும் திசையை மாற்றினான்.

“முதலில் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அதற்கப் பிறகு சந்திரனுக்குப் போவோம்.”

5

செம்பு மனிதர்களின் நகதரத்தில் உணவு - மின்சக்

ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மாற்றியதும், கருப்பு நிற ஆகாயம் பிரகாசமானதாக மாறியது. ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டு கடந்து சென்றன. ஜிம்மி ராக்கெட்டின் பயணிக்கும் திசையை மாற்றியபோது நாஸ் கேட்டாள் : “நீ என்ன செய்தாய்? ஆகாயம் தீபாவளியைக் கொண்டாடுவதைப் பார்க்க நீ விடவில்லை.”

“அதில் ஒன்றே ஒன்று நம் ராக்கெட்டின் மீது மோதினால் நாம் வெட்ட வெளியில் போய் கிடக்க வேண்டியதுதான். சந்திரனை அடைய முடியாமலே போய்விடும்” - ஜிம்மி விளக்கினான்.

“மிகவும் கஷ்டப்பட்டு வால் நட்சத்திரத்தின் பாதிப்பில் இருந்து தப்பினோம்” - உர்ஃபி மனதைத் தேற்றிக் கொண்டு சொன்னான்.

“அந்த பாழாய்ப் போன நட்சத்திரத்தின் வாலை நம்பக்கூடாது. அது மோதினால் நம்முடைய பூமிகூட தகர்ந்து போயிடும்” - ஜிம்மி சொன்னான்.

“வால் நட்சத்திரம் எப்போதும் நம்மை விட்டு விலகி இருக்கிறது என்பது நம்முடைய அதிர்ஷ்டம்” - நாஸ் சொன்னாள்.

“எனக்குப் பசிக்கிறது” - உர்ஃபி சொன்னான்.

“எனக்கும் பசிக்கிறது” - மோகினியும் சேர்ந்து கொண்டாள்.

“சமையலறையின் சொந்தக்காரி நீதான். நீ எங்கள் எல்லோருக்கும் உணவு தா! யாரும் இயந்திரத்தின் அருகில் இருந்து நகர முடியாது” - நாஸ் சொன்னாள்.

மோகினி உர்ஃபிக்கும் நாஸுக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுத்தாள். அவளும் சாப்பிட்டாள். ஜிம்மி பெட்ரோல், க்ரீஸ் ஆகியவற்றைத்தான் சாப்பிடுவான். ரொட்டியைச் சாப்பிடுவதற்கு மத்தியில் உர்ஃபி சொன்னான் : “மோகினி தயார் பண்ணின ரொட்டி நல்ல சுவையுடன் இருக்கு.”

ஜிம்மி பெட்ரோல் குப்பியைத் தன் உதட்டுடன் சேர்த்து வைத்துக் கொண்டு சொன்னான் : “பெட்ரோலும் நல்ல ருசியுடன்தான் இருக்கு. மணமும் இருக்கு. இதை எங்கேயிருந்து வாங்கினீங்க?”

“கால்டெக்ஸ் கம்பெனியில் இருந்து.”

“இல்லை... இல்லை... இது நெருப்பு மலையிலிருந்து வந்த பெட்ரோல்” - மோகினி சொன்னாள்.

ஜிம்மி வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

“என்ன ஆச்சு ஜிம்மி?” - நாஸ் பதைபதைப்புடன் கேட்டாள்.

ஜிம்மி அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அதே இடத்தில் அப்படியே அவன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

“ஜிம்மி! ஜிம்மி!” என்று அழைத்தவாறு உர்ஃபி இயந்திரத்திற்கு அருகிலிருந்து எழுந்து செல்வதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தான். அதற்குள் நீல கிரகணங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரம் ராக்கெட்டிற்கு நேர் எதிரில் வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்துவிட்டான். உர்ஃபி ராக்கெட்டின் போகும் திசையை மாற்ற முயற்சித்தான். அதற்குள் நட்சத்திரம் ராக்கெட்டை நெருங்கி விட்டிருந்தது.

உர்ஃபி ராக்கெட்டை நட்சத்திரத்திற்கு அருகிலிருந்து விலக்கிக் கொண்டு செல்வதற்கு மிகவும் தீவிரமாகப் போராடினான். ஆனால், ராக்கெட் நட்சத்திரத்தின் ஈர்ப்பில் சிக்கிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தது.

மோகினி உரத்த குரலில் சிரித்தாள்.

“அமைதியாக இரு” - நாஸ் அவளைத் திட்டினாள்: “வாழ்க்கை ஆபத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும் தருணத்திலா சிரிப்பது?”

மோகினி சிரித்துக் கொண்டேயிருந்தாள். சிறிது நேரம் கழித்து நாஸும் சிரிக்க ஆரம்பித்தாள். உர்ஃபிக்கு எதுவுமே புரியவில்லை. ஒருவேளை அவர்களின் அந்தச்சிரிப்பு இயல்பான ஒன்றாக இல்லாமல் இருக்குமோ? நட்சத்திரத்தின் பாதிப்பால் அந்தச் சிரிப்பு உண்டாகியிருக்கலாம். உர்ஃபி அடுத்த நிமிடம் பொத்தானை அழுத்தினான். அடுத்த சில நிமிடங்களில் ஒரு வெளிச்சட்டை ராக்கெட்டை மூடியது. அந்த வெளிச்சட்டை உலோகங்களால் செய்யப்பட்டது. வெளிச்சட்டையை அணிந்தவுடன் ராக்கெட்டிற்குள் இருட்டு வந்து பரவியது. இன்னொரு பொத்தானை அழுத்தியவுடன், பல்புகள் எரிய ஆரம்பித்தன. அப்போது ஜிம்மி வாயை மூடிக்கொண்டிருந்தாலும், அவனுடைய  கண்களில் பிரகாசம் சிறிதும் இல்லாமலிருந்தது. உடனடியாக உர்ஃபி ஸ்பானரைக் கொண்டு வந்து தன் தம்பியின் மண்டை ஓட்டைத் திறந்து பார்த்தான். டைனமோவின் செயல்பாடு நின்று போயிருந்தது. மின்சக்தியைக் கொண்டு டைனமோவை இயங்கச் செய்தான. ஜிம்மி மீண்டும் கண்களைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தான்.


“உனக்கு என்ன ஆச்சு?” - உர்ஃபி கேட்டான்.

“எப்போது? என்ன?” - ஜிம்மிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“சிறிது நேரத்திற்கு முன்னால்...” - மோகினி அவனுக்கு ஞாபகப்படுத்த முயற்சித்தாள்: “நீ பேசவோ கேள்விக்கு பதில் சொல்லவோ இல்லை.”

“நீயும் சிறிதுகூட நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தாய் அல்லவா?” - நாஸ் மோகினியிடம் கேட்டாள்.

“நட்சத்திரத்தின் பாதிப்பு காரணமாக இருக்கலாம். யாரோ தலையில் சுத்தியால் அடித்ததைப்போல இருந்தது. அதற்குப் பிறகு எதுவும் ஞாபகத்தில் இல்லை. நாம் தவறு செய்து விட்டோம். ராக்கெட்டின் மேற்சட்டையை அணிந்த பிறகு, நாம் பணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். பயணத்தில் எப்படிப்பட்ட விபத்துக்களையெல்லாம் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று யாருக்குத் தெரியும்?” - ஜிம்மி டெலிவிஷனைப் பார்த்துவிட்டு மீண்டும் சொன்னான்: “வடக்கு திசையை நோக்கி ஒரு சூறாவளி காற்று நகர்ந்து கொண்டிருக்கிறது. ராக்கெட்டின் திசையை தெற்கு நோக்கி மாற்ற வேண்டும்.”

“வடக்கு திசையில் நீல கிரகம் சுற்றிக் கொண்டிருக்கிறது.”

“நாம் நீல கிரகத்திற்குச் செல்வோம். சந்திரனுக்குப் போக வேண்டிய தேவை என்ன?” - நாஸ் கேட்டாள்.

“அங்கு போய்ச் சேருவதற்கு நாட்கள் ஆகும். நம்மிடம் ஐந்து நாட்கள் பயணம் செய்வதற்குத் தேவைப்படும் பொருட்களே இருக்கின்றன.” - ஜிம்மி சொன்னான்.

“நீ சிரித்துச் சிரித்து வாய் பிளந்து போயிருக்கும்” - மோகினி சொன்னாள்.

“சரியாக இருக்கலாம். சுழல் காற்றின் எல்லை நான்காயிரம் மைல்வரை இருக்கிறது. அடுத்த எட்டு நிமிடங்களுக்குள் நாம் அதில் இருந்து தப்பிக்க வேண்டும்” - ஜிம்மி ரேடாரைப் பார்த்துச் சொன்னான்.

“ஜன்னல்களில் இருக்கும் துணிகளை அகற்றுங்கள்! வெளியில் இருக்கும் காட்சிகளை நான் பார்க்க வேண்டும்” - மோகினி சொன்னாள்.

உர்ஃபி கூறியதைப் பின்பற்றி நாஸ் ஜன்னல்களில் இருந்து துணிகளை அகற்றினாள். அப்போது வெளியே ஒரு அற்புத நகரம் கண்களில் பட்டது. நகரத்திற்கு மேலும் கீழும் ஆகாயம் இருந்தது!

“அது எப்படிப்பட்ட நகரம்?” - நாஸ் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“ராக்கெட்டை நிறுத்துங்க. நாம அந்த நகரத்திற்குப் போகணும்!” மோகினி சொன்னாள்.

ராக்கெட் மிகவும் தூரத்தில் போய் விட்டிருந்தது. தன் சகோதரி கூறினாள் என்பதற்காக உர்ஃபி ராக்கெட்டைப் பின்னோக்கி திருப்பிக் கொண்டு வந்து அற்புத நகரத்தின் விமான நிலையத்தில் இறக்கினான்.

விமான நிலையம் மிகவும் வினோதமாக இருந்தது. முத்துக்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களும் தூண்களும்.... தூண்களின் உச்சியில் சிவப்பு பல்புகள் மின்னிக் கொண்டிருந்தன.

ராக்கெட் தரையிறங்கிய அடுத்த நிமிடம் பூமியிலிருக்கும் மோட்டார் அளவைக் கொண்ட ஒரு வேன் சீறிப் பாய்ந்து கொண்டு அருகில் வந்தது. வேனில் இருந்து செம்பு நிறத்தைக்கொண்ட ஒரு சிறுமி இறங்கி வந்து ராக்கெட்டின் கதவைத் திறந்து கொண்டு சொன்னாள் :

“நல்வரவு! என்னுடைய பெயர் புத்லி.”

பிள்ளைகள் தங்களை அவளுக்கு அறிமுகம் செய்து கொண்டார்கள். புத்லி மூன்று பேருக்கும் கை கொடுத்துவிட்டு ஜிம்மியைப் பார்த்தாள் : “அவலட்சணமான இந்தப் பையன் யார்?”

“இவன் ஜிம்மி!”

“இவன் இரும்பு மனிதன்!” உர்ஃபி சொன்னான்.

புத்லி வெறுப்புடன் சொன்னாள் : “எங்களுடைய நகரத்தில் இரும்பு கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பொருள்கூட இல்லை. இங்குள்ள எல்லோரும் செம்பு கொண்டு உருவாக்கப்படடவர்கள். இரும்பு அழகற்ற உலோகம். இவனுடைய நிறத்தைப் பாருங்க!  என் நிறத்தை பாருங்க!”

புத்லி மிகவும் அழகானவளாக இருந்தாள். செம்பு நிறத்தைக் கொண்ட தலைமுடி, செம்பு நிறத்தில் இருந்த கன்னங்கள்... அவள் அணிந்திருந்த பாவாடையும் சட்டையும் செம்பு கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. சில நிமிடங்களிலேயே ஜிம்மிக்கு அவள்மீது ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது.

“நாங்கள் உங்களுடைய நகரத்தைப் பார்க்க விரும்புகிறோம்” - உர்ஃபி சொன்னான்.

“மிகவும் மகிழ்ச்சி பாருங்கள்...”

“இந்த நகரத்தின் பெயர்?”

“மோத்தி நகர்...”

உண்மையிலேயே அது மோத்தி நகரம்தான். கட்டடங்களும் சாலைகளும் பால் நிறத்தைக் கொண்ட முத்துக்களால் உருவாக்கப்பட்டிருந்தன. தாஜ்மஹாலைப் போன்ற அழகான கட்டடங்கள்! டெலிஃபோன், டெலிவிஷன், மேஜை, நாற்காலியிலிருந்து அனைத்து பொருட்களும் முத்துக்களால் உருவாக்கப் பட்டவையென்றாலும், மனிதர்கள் செம்பு கொண்டு உருவாக்கப்பட்டிருந்தார்கள். ஆண்களை அந்த அளவிற்கு நல்ல செம்பு கொண்டு தயார் பண்ணவில்லை. ஆனால் பெண்களை பாலீஷ் பண்ணி மினுக்கிய செம்பு கொண்டு உருவாக்கியிருந்தார்கள்.

“இங்கு மாமிசமும் எலும்பும் கொண்டு உருவாக்கப்பட்ட மனிதர்கள் இல்லையா?” நாஸ் கேட்டாள்.

“ஒரு காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் இங்கு இருந்தார்கள். இப்போது இல்லை. ஒரு காலத்தில் அவர்கள்தான் இந்த நகரத்தை ஆட்சி செய்தார்கள். அப்போது இந்த நகரம் மோதி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்குப் பிறகு இங்கு செம்பு மனிதர்கள் வசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.”

“இரும்பு மனிதர்களை ஏன் உருவாக்கவில்லை?”

“செம்பு கொண்டு படைக்கப்பட்ட மனிதர்களிடம் மிகவும் வேகமாக மின்சக்தி பரவும். அவர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் வேலைகளைச் செய்வார்கள். இரும்பு கொண்டு மனிதர்களை உருவாக்கினால், மிகவும் சீக்கிரமே அவர்கள்மீது துரும்பு பிடித்துவிடும். அவர்கள் அழகாகவும் இருக்க மாட்டார்கள். முத்து நட்சத்திர நகரத்தில் இருக்கும் மனிதர்கள் உல்லாச விஷயங்களில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாகவும், சந்தோஷத்தை தேடக் கூடியவர்களுமாக ஆகிவிட்டார்கள். எல்லா வேலைகளையும் இயந்திரங்களின் மூலம் செய்ய ஆரம்பித்தார்கள். இயந்திரத்தில் அறிவையும் ஞாபக சக்தியையும் சந்தோஷத்தையும் நிறைத்தவுடன் அவை வளர்ச்சியடைந்த மனிதர்களாக ஆகிவிடுகின்றன.”

“ஜிம்மியைப் போல...” மோகினி சொன்னாள்.

“எல்லா விஷயங்களும் மிகவும் மெதுவாகத்தான் நடந்தன. மனிதர்கள் சோம்பேறிகளாக ஆகிவிட்டார்கள். அப்போது இயந்திரங்கள் ஒன்று சேர்ந்து யோசித்தன. ‘வேலைகள் முழுவதையும் நாம் செய்கிறோம்! பிறகு எதற்காக மனிதர்களிடம் அடிமையாக நாம் இருக்க வேண்டும்’ என்று அவை சிந்திக்க ஆரம்பித்தன. அந்த வகையில் இயந்திரங்களிடம் புரட்சி எண்ணம் வளரத் தொடங்கியது. செம்பு மனிதர்களுக்குக் கோபம் அதிகமாகி வரும். மின்சக்தி அதிகமாக பரவியிருக்கிறது அல்லவா?


ஒருநாள் இரவு நேரத்தில் எல்லா இயந்திரங்களும் ஒன்றாகச் சேர்ந்து புரட்சி பண்ணி, மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்தன. அதற்குப் பிறகு மின்சக்தியின் உதவியுடன் இந்த நகரத்தை மோதி நட்சத்திரத்திலிருந்து இங்கே கொண்டு வந்தன. இப்போது இது எங்களுடைய நகரம். செம்பு கொண்டு உண்டாக்கப்பட்ட மனிதர்களின் நகரம்! அந்தச் சம்பவம் நடைபெற்று எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.”

“உங்களுக்கு சொந்த ஊரின் ஞாபகம் வரவில்லையா?”

“ஊர் என்று சொன்னால் என்ன?”

“சொந்த ஊரின் மண் ஞாபகத்தில் வரவில்லையா?”

“மண் என்று சொன்னால் பூமியா? அதன்மீது எங்களுக்கு மிகப் பெரிய வெறுப்பு இருக்கிறது. நாங்கள் எங்களுடைய நகரத்திலிருந்த மண்ணை அகற்றிவிட்டோம். மண்ணால் என்ன பிரயோஜனம் இருக்கு? மண் இருப்பதால் அழுக்கு சேரும். எப்போதும் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான தேவை என்ன இருக்கிறது? எங்களுடைய நகரத்தில் மின்சக்தியால் செயல்படும் மோட்டார்களும் விமானங்களும் இருக்கின்றன.”

“மின்சக்தியை எங்கே இருந்து பெறுகிறீர்கள்?”

“நாங்கள் எங்களுக்குத் தேவையான மின்சக்தியை சூரிய வெளிச்சத்திலிருந்து எடுத்துக்கொள்கிறோம்.”

“நீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள்?”

“மின்சக்தியை! எல்லா வீடுகளிலும் மின்சக்தி வரும் குழாய் இருக்கு. நாங்கள் காலையில் கண் விழித்தவுடன் வயிற்றில் மின்சக்தியை நிறைத்துக் கொள்வோம். பிறகு வேலை செய்வோம்.”

“நீங்க என்ன வேலை செய்றீங்க?”

“சரிதான்... இவ்வளவு பெரிய நகரத்தில் வேலைக்கா பஞ்சம்? நீங்கள் என் வீட்டுக்கு வாங்க. எங்களுடைய வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளலாம்.”

6

குழந்தைகளை பணிமனையில் உருவாக்குகிறார்கள்.

மேயருக்கு மூன்று தலைகள்

பிள்ளைகள் நான்கு பேரும் ஒன்றாகக் கூடிப் பேசி, ஒருநாள் அந்த நகரத்தில் தங்கத் தீர்மானித்தார்கள். அங்கிருந்து சில மணி நேரங்கள் பயணம் செய்தால் சந்திரனை அடையலாம். எல்லோரும் விண்வெளியில் பயன்படுத்தக்கூடிய சூட் அணிந்து புத்லியின் வேனில் ஏறினார்கள். வேன் சில நிமிடங்களில் அவளுடைய வீட்டிற்கு முன்னால் போய் நின்றது.

“நீங்க குளிக்கணுமா?” - புத்லி கேட்டாள்.

“ஆமாம் சகோதரி! நீங்க நல்ல விஷயத்தைக் கேட்டீங்க...” நாஸ் சொன்னாள்.

புத்லி நாஸையும் மோகினியையும் குளியலறைக்கு அழைத்துச் சென்றாள். முத்து கொண்டு உண்டாக்கப்பட்ட குளியலறை. கண்ணாடிகூட முத்து கொண்டு உண்டாக்கப்பட்டிருந்தது.

“உங்களுக்கு குளிப்பதற்கு ஏ.சி. வேணுமா, இல்லாவிட்டால் டி.சி. வேணுமா?”

“அப்படின்னா என்ன?” - மோகினி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

புத்லிக்கு மோகினியின் குழப்பம் புரிந்தது. “இங்கு சிலர் ஏ.சி. மின்சக்தியில் குளிப்பார்கள். சிலர் டி.சி. மின்சக்தியில் குளிப்பார்கள். உங்களுக்கு எதில் விருப்பம்?”

“மின்சக்தியில் குளிப்பதா? அய்யய்யோ! இங்கு தண்ணீர் இருக்காதா?”

“தண்ணீரா? அப்படின்னா என்ன?”

நாஸும் மோகினியும் திகைத்துப் போய் நின்றுவிட்டார்கள் அவர்கள் செம்பு கொண்டு உருவாக்கப்பட்ட சிறுமியிடம் என்ன கூறுவார்கள்? அவர்கள் குழாயைக் சுட்டிக் காட்டியவாறு கேட்டார்கள் : “அது என்ன?”

“பொத்தானை அழுத்திப் பாருங்க!”

குழாயிலிருந்து நீர் துளிகளைப்போல கனம் குறைவான முத்துக்கள் கொட்ட ஆரம்பித்தன.

“சிலர் ஷவர் பாத்தை விரும்புவார்கள். முத்துமணிகள் உடல்மீது வந்து விழும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கும். நீங்கள் ஷவர்பாத்தில் குளியுங்கள்.”

நாஸும் மோகினியும் பதிலெதுவும் கூறவில்லை. அவர்கள் கண்ணாடிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ப்ராஸ்ஸோ (செம்பு பித்தளை ஆகியவற்றை மினுமினுப்பு ஆக்குகிற பாலிஷ்) குப்பியைப் பார்த்து கேட்டார்கள் : “அது என்ன?”

“ப்ராஸ்ஸோ! நீங்கள் ப்ராஸ்ஸோவைப் பார்த்தது இல்லையா? நாங்கள் குளித்து முடித்தவுடன் ப்ராஸ்ஸோவால் உடலை பளபளப்பு ஆக்குவோம். இங்குள்ள நவநாகரீகப் பெண்கள் தினமும் மூன்று நான்கு முறை ப்ராஸ்ஸோவைப் பயன்படுத்துவார்கள்.”

“நாங்கள் சோப்பைத்தான் பயன்படுத்துவோம்.”

“அப்படியென்றால் என்ன?”

“ஒருவகை ப்ராஸ்ஸோ” - நாஸ் சொன்னாள்.

“ஒவ்வொரு ஊரிலும் மாறுபட்ட முறை இருக்கு. இங்குள்ளவை இவை எல்லாம். முத்து ப்ரஷ், முத்து சீப்பு, முத்து துவாலை! நாங்கள் செம்பு கொண்டு உருவாக்கப்பட்ட சாதாரண மனிதர்கள். எனினும் விருந்தினர்களை உபசரிப்பதில் நாங்கள் யாரையும் விட பின்னால் இல்லை.”

நாஸும் மோகினியும் சிறிது நேரம் சென்றதும் குளியலறையை விட்டு வெளியே வந்தார்கள். அதற்குள் புத்லி மேயரை ஃபோன் பண்ணி அங்கு வரும்படிச் செய்திருந்தாள். மேயரும் செம்பு கொண்டு உண்டாக்கப்பட்ட மனிதர்தான். ஆனால், அவருக்கு மூன்று தலைகள் இருந்தன. இரண்டு தலைகளுக்கு ஏதாவது பிரச்சினை உண்டானால், மூன்றாவது தலையைக் கொண்டு அவர் சிந்திப்பார். சில வேளைகளில் மூன்று தலைகளையும் பயன்படுத்திச் சிந்திப்பதும் உண்டு.

மேயர் பிள்ளைகள் நான்கு பேரையும் நகரத்தைச் சுற்றிக் காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு சென்றார். அவர்களுக்கு குழந்தைகளுக்கான பூங்கா மிகவும் பிடித்திருந்தது. அங்கு முத்துக்களாலான செடிகளும் கொடிகளும் பூக்களும் இருந்தன. நாஸும் மோகினியும் கொஞ்சம் பூக்களைப் பறித்துத் தங்களின் கூந்தலில் சூடிக் கொண்டார்கள். பூங்காவில் சில செம்பு கொண்டு உருவாக்கப்பட்ட பெண்கள் செம்பாலான குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.

“உங்களுடைய நகரத்திலும் குழந்தைகள் பிறக்கிறார்களா?” உர்ஃபி கேட்டான்.

“ஏன் பிறக்கவில்லை? நாங்கள் செம்பு கொண்டு படைக்கப்பட்டவர்கள் என்பதால் இதயம் இல்லாதவர்கள் என்று நினைத்துவிட்டீர்களா?” - மேயர் எதிர்கேள்வி கேட்டார்.

“இதயம் இருக்கிறதா?”

“இருக்கு. மின்சக்தியின் உதவியால் செயல்படுகிறது. குழந்தைகள்மீது பாசமும் உண்டு.”

“உங்களுக்குக் குழந்தைகளைப் பிடிக்குமா?” ஜிம்மி புத்லியிடம் கேட்டான்.

“எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். திருமணத்திற்குப் பிறகு நான் பணிமனையிலிருந்து இரண்டு குழந்தைகளை விலைக்கு வாங்குவேன்.”

“இங்கு பணிமனையிலா குழந்தைகளை உண்டாக்குகிறார்கள்?” உர்ஃபி கேட்டான்.

“பிறகென்ன? ஆகாயத்தில் இருந்தா விழுவார்கள்?” புத்லி சிரித்தாள்: “பனிமனைக்குப் போனால், எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமென்றாலும் கிடைக்கும். வசதி படைத்தவர்கள் தனிப்பட்ட முறையில் முன்கூட்டியே ஆர்டர் பண்ணி குழந்தைகளை உண்டாக்கச் செய்வார்கள்.”

“உங்களுடைய நகரத்தில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருப்பார்கள் அல்லவா?”

“குழந்தைகள் குழந்தைகளாகவும், வயதானவர்கள் வயதானவர்களாகவும் இருப்பார்கள். உங்கள் நாட்டில் எப்படி?” - மேயர் கேட்டார்.

உர்ஃபி பூமியில் இருக்கும் நிலைமைகளை விளக்கிக் கூறினான்.


7

சந்திரனில் பச்சை நிறத்தில் இருக்கும் கட்டிடம்

பூமியில் இருக்கும் நிலைமைகள் அனைத்தையும் விளக்கமாக கேட்டுவிட்டு மேயர் சொன்னார்: “எலும்பும் மாமிசமும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செய்த காலத்தில், இந்த நகரத்தின் நிலைமையும் அப்படித்தான் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நாங்கள் அந்த வாழ்க்கை முறையை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டோம். இங்கு இப்போது எல்லா விஷயங்களும் திட்டமிட்டபடி உருவாக்கப்படுகின்றன. தேவைக்கும் அதிகமாக ஒரு குழந்தையைக்கூட பணிமனையில் உருவாக்குவதில்லை. இங்கு யாரும் பட்டினி கிடக்கக்கூடாது. தொழில் இல்லாமலும் யாரும் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சாப்பிட மின்சக்தியும் அணிவதற்கு முத்துக்களும் இருக்கின்றன.”

“அப்படியென்றால் நீங்கள் முழுமையான திருப்தியை அடைந்து விட்டீர்களா?”

நாஸின் கேள்வியைக் கேட்டு மேயரின் முகம் அமைதியானது. “செம்பு மனிதர்களின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டம் இல்லை. அதே நேரத்தில் எங்களுக்கு எல்லாம் இருக்கின்றன. எதற்கும் குறைவில்லை. இங்கு எல்லோருக்கும் உணவும், உடையும், இருப்பிடமும் இருக்கின்றன. நாங்கள் எதுவுமே தெரியாத முட்டாள்களாக இருக்கும் மனிதர்களைப் படைப்பதில்லை. அவலட்சணமானவர்களையும் உருவாக்குவதில்லை. எங்களுடைய நகரத்தில் பெண்கள், ஆண்கள் எல்லோரும் அழகானவர்களாக இருப்பார்கள். இங்கு யாருக்கும் நோய்கள் இருக்காது.”

“நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.”

“இந்த நகரம் அதிர்ஷ்டக் குறைவானது. நட்சத்திரங்களுடைய பாதிப்பால் இந்த நகரம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. அடுத்த நூற்றாண்டுக்குள் இந்த நகரம் முழுமையாக அழிந்து விடும். எங்களுடைய செம்பு நாகரீகம் வெறும் பெயரளவில் இருக்கும். இங்கு செம்பு கொண்டு உண்டாக்கப்பட்ட மனிதர்கள் வாழந்தார்கள் என்று யாரும் நினைத்துப் பார்க்கக்கூட மாட்டார்கள்.”

மேயர் கண்ணீர் சிந்துவதைப் பார்த்துப் பிள்ளைகளுக்கு வருத்தம் உண்டானது. ஜிம்மி புத்லியின் பக்கம் திரும்பினான். “நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ. நான் உன்னை எங்களுடன் அழைத்துச் செல்கிறேன்” என்றான் அவன்.

புத்லிக்கு அதைக் கேட்டுக் கோபம் வந்துவிட்டது. அவள் சொன்னாள் : “நான் எதற்கு உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? நீ இரும்பு கொண்டு உண்டாக்கப்பட்டு அவலட்சணமான மனிதன். நான் செம்பு கொண்டு படைக்கப்பட்ட அழகான பெண்! உன்னுடைய முகத்தையும் நிறத்தையும் கண்ணாடியில் பார்த்துப் புரிந்து கொள். நம் இருவருக்குமிடையே ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா?”

“நான் உனக்கு தரமான பெட்ரோலைக் குடிப்பதற்காகத் தருகிறேன்.”

“ச்சீ... கெட்ட நாற்றம் எடுக்கும் பெட்ரோலை யார் குடிப்பார்கள்? நான் மின்சக்தியைக் குடிப்பவள்.”

ஜிம்மிக்கு அதைக் கேட்டதும் ஒருவித தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிட்டது. தானும் ஒரு செம்பால் உண்டாக்கப்பட்ட மனிதனாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் நினைக்க ஆரம்பித்துவிட்டான். அடுத்த நிமிடம் மேயருக்கு ஒரு ஃபோன் வந்தது.

ஒரு நட்சத்திரம் நகரத்திற்கு நேர் எதிராக நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நகரத்தை வேறு ஏதாவதொரு இடத்திற்குக் கட்டாயம் மாற்றியாக வேண்டும்.

“நீங்கள் நகரத்தை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவீர்களா?” - ஜிம்மி கேட்டான்.

“நட்சத்திரங்களுடைய நடமாட்டத்தை அனுசரித்து நகரத்தையும் வேறொரு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.”

ஜிம்மி தன்னுடைய டெலிவிஷன் கண்களால் தூரத்தில் பார்த்தான். அவன் உரத்த குரலில் கத்தினான். “ஓடிடுங்க!”

உடனடியாக மேயர் தொலைபேசி மூலம் போலீஸுக்கும் ராணுவத்திற்கும் உத்தரவுகள் பிறப்பித்தார். நகரத்தை வேறொரு இடத்திற்கு மாற்றும்படி முதன்மை பொறியியல் வல்லுநருக்குக் கட்டளையிட்டார். அதற்குள் புத்லி விருந்தினர்கள் நான்கு பேரையும் வேனுக்குள் ஏற்றி விமான நிலையத்தை நோக்கி அதைப் போகும்படி செய்தாள். அடுத்த நிமிடம் உர்ஃபி ராக்கெட்டைக் கிளப்பினான். புத்லி வாசலில் நின்றவாறு விருந்தாளிகளுக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நிமிடமே ஜிம்மி கதவை அடைத்தான்.

“கதவைத் திற! கதவைத் திற!” - புத்லி பதைபதைப்பு கலந்த குரலில் கத்தினாள்.

“இனி சந்திரனை அடைந்த பிறகுதான் கதைவையே திறப்போம்” - ஜிம்மி புன்னகைத்தவாறு சொன்னான்.

புத்லி கதவைத் திறக்க முயற்சித்தாள். ஆனால் அவள் செம்பால் உண்டாக்கப்பட்ட சிறுமியாக இருந்தாள். ஜிம்மி இரும்பால் உண்டாக்கப்பட்டவனாக இருந்தான். தோல்வியைத் தழுவிய புத்லி அழ ஆரம்பித்தாள்.

மோகினி அவளைத் தேற்றினாள் : “அழ வேண்டாம். நாம் மூவரும் சகோதரிகளாக வாழ்வோம். நாங்கள் உனக்குப் புதிய நாடுகளைக் காட்டுகிறோம். அந்த நாடுகளை நீ வாழ்க்கையில் ஒருமுறைகூட பார்த்திருக்க மாட்டாய்.”

“உனக்கு சந்தோஷம் உண்டாகவில்லையென்றால், நாங்கள் உன்னை உன்னுடைய நகரத்திற்கே திரும்பக் கொண்டு வந்து விட்டு விடுகிறோம்” - நாஸ் உறுதி தந்தாள்.

அதற்கு புத்லி சம்மதித்தாள். “நான் அவலட்சணமான இந்த பையன்கூட பேசவே மாட்டேன்.”

“ஜிம்மியுடனா? அவ்ன ஒரு கழுதை. நீ என் அருகில் வந்து உட்காரு. நாம ரேடாரை இயக்குவோம். வா!”

நாஸ் அழைத்தாள்.

புத்லி ஜிம்மியைப் பார்த்து வக்கனை காட்டியவாறு நாஸுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள். உர்ஃபி உரத்த குரலில் சொன்னான் : “சந்திரனில் இருந்து சிக்னல் வந்துகொண்டிருக்கிறது. விமான நிலையம் நெருங்கிவிட்டது.”

மோகினி சந்தோஷத்துடன் மைக்ரோஃபோனின் பொத்தானை அழுத்தினாள். “ஹலோ! பூமியிலிருந்து வந்திருக்கும் ராக்கெட்!”

“ஹலோ! ஹலோ! எங்களுடன் பேசுங்கள்! சந்திரன் விமான நிலையம்!”

ஜிம்மி டெலிவிஷன் மூலம் எல்லாவற்றையும் பார்த்தான். சந்திரனிலிருந்த விமான நிலையத்தின் பல்புகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. உர்ஃபி உரத்த குரலில் சொன்னான்: “ரியாக்டர் டூ லேண்ட்? எலெக்ட்ரானிக்ஸ் டூ லேண்ட்! ஷிப் மாஸ்டர் டூ லேண்ட்!”

“ரெடி!”

எல்லோரும் அவரவர் பொறுப்பேற்றிருக்கும் இயந்திரங்களைக் கட்டுப்படுத்தினார்கள். உர்ஃபி ப்ரேக்கைத் திருப்பினான். ராக்கெட்டின் வேகம் குறைந்தது. மோகினி கேபினின் ஜன்னலை திறந்து பார்த்தாள்.

ராக்கெட் மெதுவாக சந்திரனின் விமான நிலையத்தில் இறங்கியது.

ராக்கெட் சந்திரனிலிருந்த விமான தளத்தில் இறங்கியவுடன் பிள்ளைகள் சந்தோஷத்துடன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்கள். அவர்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக சந்திரன் மாமாவைப் பற்றிய கதைகளைக் கேட்டு வந்தவர்கள். சந்திரன் மாமாவைக் கையில் பிடிக்க வேண்டும் என்ற விருப்பத்தைப் பிஞ்சு இதயங்களில் அவர்கள் வைத்துக் கொண்டும் இருந்தார்கள். பிள்ளைகள் குளங்களிலும் நதிகளிலும கடலிலும் சில வேளைகளில் கண்ணாடியிலும் சந்திரன் தெரிவதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். ஆனால், சந்திரனை அடைய அவர்களால் முடியவில்லை.


ஏனென்றால் மனிதர்கள் சந்திரனை அடைவதற்கு உதவியாக இருக்கக்கூடிய விமானங்கள் எதுவும் இதுவரை உண்டாக்கப்படவில்லை. இப்போது அந்த நிறைவேற முடியாத விஷயம் நிறைவேறியிருக்கிறது. மனிதக் குழந்தைகள் சந்திரனில் கால் வைத்திருக்கிறார்கள். பிள்ளைகள் சந்திரனில் வாழக்கூடிய மிருகங்களையும் மனிதர்களையும் பார்ப்பதற்காக அவசரப்பட்டார்கள். அரைமணி நேரம் தாண்டியும், தங்களை வரவேற்பதற்கு யாரும் வராமல் இருப்பதைப் பார்த்து, பிள்ளைகளுக்கு ஆச்சரியம் உண்டானது.

புத்லி கோபமான குரலில் சொன்னாள் : “இங்குள்ள மக்கள் எந்த அளவிற்கு பண்பாடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்! எவ்வளவு தூரத்திலிருந்து நாம் வந்திருக்கிறோம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?”

“உங்களை யார் அழைத்தது?” - ராக்கெட்டிற்குள் இருந்த மைக்ரோஃபோன் கர்ஜித்தது. பிள்ளைகள் அதிர்ச்சியடைந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தார்கள். ஆனால், யாரையும் காணோம். அது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தது! அந்தக் குரல் எங்கிருந்து வந்தது? ராக்கெட் கீழே இறங்க விமான நிலையத்திருந்து முறைப்படியான கட்டளைகள் கிடைத்தன. இப்போது எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. உர்ஃபி ராக்கெட்டில் இருந்த மைக்ரோஃபோன் மூலமாக பேசிப் பார்த்தான் : “ஹலோ! ஹலோ! சந்திரன் விமான நிலையம்! எங்களுடன் பேசுங்கள்!”

யாரும் பதில் கூறவில்லை. விமான நிலையம் வெறிச்சோடிப் போய் காணப்பட்டது. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு உர்ஃபி சொன்னான் : “நாம் கீழே இறங்கித் தேடிப் பார்ப்போம். நீங்கள் அவரவர்களுக்குரிய விண்வெளி ஆடைகளை அணியுங்கள். ஆக்சிஜன் குழாய்களைப் பாக்கெடடிற்குள் வைத்துக்கொள்ளுங்கள். சந்திரனில் காற்று இல்லை.”

சந்திரனின் மண்ணில் கால்களை வைத்தபோது பிள்ளைகளுக்கு வினோதமாக இருந்தது. ஒவ்வொருவருடைய எடையும் நான்கில் ஒரு மடங்காகக் குறைந்துவிட்டிருந்தது. தான் மிகவும் எடையில் குறைந்தவன் என்று ஜிம்மிக்குத் தோன்றியது. அவன் ஒன்றிரண்டு முறை குதித்தபோது இருபதடி உயரம் வரை போனான். அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. உடலின் எடை காரணமாக ஜிம்மி பூமியில் ஒரு அடி உயரம்கூட குதிக்க முடியாமல் இருந்தான். ஜிம்மி குதிப்பதைப் பார்த்து மற்றவர்களும் குதிக்க ஆரம்பித்தார்கள். மனிதக் குழந்தைகள் தவளைகளைப்போல குதித்துப் கொண்டிருந்தார்கள்.

புத்லியால் ஜிம்மியைவிட உயரத்தில் குதிக்க முடிந்தது. அவள் அவனைக் கோபம் கொள்ளச் செய்வதற்காகச் சொன்னாள் : “நீ இரும்பால் உண்டாக்கப்பட்ட பையன்! உனக்கு எப்படி குதிக்க முடியும்?”

“சந்திரனை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” - மோகினி புத்லியிடம் கேட்டாள்.

“இங்கு உடலின் எடை குறைகிறது என்ற காரணத்தால் எனக்குப் பிடிக்கிறது. எங்களுடைய நகரத்தில் இந்த அளவிற்கு வேகமாக நடக்க என்னால் முடியாது. ஆனால், நம்மை வரவேற்பதற்கு ஏன் யாருமே வரவில்லை? விமான நிலையம் வெறிச்சோடிப் போய் யாருமே இல்லாமல் இருக்கிறதே!”

மனிதர்களோ, மனிதர்களைப் போன்ற மிருகங்களோ, வேறு உயிரினங்களோ எங்கும் கண்களில் படவில்லை. விமான நிலையத்தின் தரை நீல நிறத்தாலான ஸ்படிகத்தால் உண்டாக்கப்பட்டதைப்போல் இருந்தது. உர்ஃபி உற்றுப் பார்த்துவிட்டு உரத்த குரலில் சொன்னான் : “இது இந்திர நீலக் கல்லால் உண்டாக்கப்பட்டது.”

“இந்திர நீலமா?”

“ஆமாம்... பாருங்க!”

கண் பார்வை போகும் தூரம் வரையிலும் இந்திரக்கல் தெரிந்தது. சந்திரனின் ஒளிபட்டு மின்னிக் கொண்டிருந்ததால் கண்கள் கூசும்! பிள்ளைகள் ஆச்சரியத்துடன் முன்னோக்கி நடந்தபோது, பச்சை நிறத்தில் இருந்த ஒரு கட்டிடத்தைப் பார்த்தார்கள். கனம் குறைவாக இருக்கும் கற்களை வைத்துக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அதனால் வெளியில் இருந்து பார்க்கும்போது உள்ளே இருப்பவை அனைத்தையும் பார்க்க முடிந்தது. கட்டிடத்தின் முக்கிய அறையில் ஆறு தூண்கள் இருந்தன. நூற்றுக்கணக்கான அடிகளை உயரமாகக் கொண்ட மேற்கூரையை தாங்கிக் கொண்டிருந்தது அந்தத் தூண்கள்தான். ஜிம்மி ஒரு தூணைத் தடவிக்கொண்டே சொன்னான் : “இது ரத்தினம் கொண்டு உண்டாக்கப்பட்டிருக்கிறது.”

“ஆஹா! மேலே பாருங்க!” - மோகினி சொன்னாள். பிள்ளைகள் எல்லோரும் மேலே பார்த்தார்கள். பால் நிறத்தைக் கொண்ட மேற்கூரையில் ரத்தினத்தால் உண்டாக்கப்பட்ட ஸ்படிக விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ரத்தினமும் கோஹினூர் வைரத்தைவிடப் பெரியதாகவும், விலை மதிப்புள்ளதாகவும் இருந்தது.

சந்திரனில் விமான நிலையம் உண்டாக்கத் தேவைப்பட்ட ரத்தினம் அளவிற்கு அவை பூமியின் மொத்த இடங்களிலும்கூட இல்லை என்பதுதான் உண்மை. உர்ஃபி நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டுச் சொன்னான் : “ஆனால், இங்கு யாரும் இல்லையே!”

மோகினி ஏமாற்றத்துடன் உரத்த குரலில் சொன்னாள் :

“ஹலோ சந்திரன் மாமா!”

யாரும் பதில் கூறவில்லை.

8

பூ நிலவு கொண்டு படைக்கப்பட்ட மனிதர்கள் !

பிள்ளைகள் அந்தக் கட்டிடத்தின் எல்லா அறைகளிலும் மேஜையும் நாற்காலியும் பேப்பரும் பேனாவும் பென்சிலும் மைப்புட்டியும் ஃபில்லரும் இருப்பதைப் பார்த்தார்கள். ஆனால், மனிதர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. அவர்கள் சுற்றித் திரிந்து கேன்டீனை அடைந்தார்கள். அங்கும் ஆட்கள் யாரும் இல்லை. சிறிய பிளேட்டுகளில் பலதரப்பட்ட ரத்தினங்களும் வைக்கப்பட்டிருந்தன.

மோகினி சத்தம் போட்டுச் சொன்னாள்: “ஒரு கப் தேநீர் கொண்டு வா!” அவளுடைய உதடுகள் அசைவதைப் பார்க்க முடிந்தது என்பதைத் தவிர, அவளுடன் இருந்தவர்களுக்குக்கூட அவளுடைய குரலைக் கேட்க முடியவில்லை.

ஜிம்மி கேட்டான்: “நீங்க என்ன சொல்றீங்க? உங்களுடைய உதடுகள் அசைவது மட்டும் தெரிகிறது. குரல் வெளியே கேட்கவில்லை.”

உர்ஃபி சொன்னான்: “மோகினி, யாரிடமாவது பேச வேண்டுமென்றால் அவர்களுடைய காதுக்கு மிகவும் அருகில் முகத்தை வைத்துக்கொண்டு பேசணும். இங்கு காற்று இல்லை. அதனால் குரல் துப்பாக்கிக் குழாயிலிருந்து குண்டு வெளியே வருவதைப்போல நேராகத்தான் போகும்.”

“அப்படியென்றால் நம்முடைய குரல் எங்கே போகிறது?”-மோகினி கேட்டாள்.

“ஒரு நொடியில் ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி அது போகிறது”

“எனக்கு ஒரு கப் தேநீர் வேணுமே! இங்கு ரத்தினத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை.”

“வாங்க... வெளியே போய் சந்திர தேசத்தைப் பார்ப்போம்”-ஜிம்மி சொன்னான்.

கட்டிடத்திற்கு வெளியே சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு சாலை இருந்தது. பாறைகள், மலைகள், அடிவாரம் ஆகியவற்றுக்கு நடுவில் அந்தச் சாலை போய்க் கொண்டிருந்தது. பிள்ளைகள் அந்த சாலை வழியாக முன்னோக்கி நடந்தார்க்ள. எங்கும் யாரையும் பார்க்க முடியவில்லை. மரங்களும் இல்லை. செடிகளும் இல்லை. கருப்பு, மஞ்சள் நிறங்களில் எரிமலைக் குழம்பு உறைந்து கிடந்தது. தங்க நிறத்தைக் கொண்ட ஒரு பலூனைப் போல அது இருந்தது. நாஸ் ஒரு பிடி மண்ணை எடுத்துப் பார்த்துவிட்டு உரத்த குரலில் சொன்னாள்: “இது தங்கமாச்சே!”


பிள்ளைகள் மண்ணைக் கையில் எடுத்தார்கள். அது தங்கத்தைப்போல மின்னியது. உர்ஃபி தன் பேன்ட்டின் ஒரு பையில் தங்கநிற மண்ணையும், இன்னொரு பையில் ரத்தினங்களையும் போட்டு நிரப்பினான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். மதிய நேரம் ஆனது. நீளமாக போய்க் கொண்டிருந்த சாலை... எங்கும் வளைவோ திருப்பமோ இல்லை. ஆகாயம் நீல நிறத்தில் இருந்தது. விண்வெளியில் தூசிப் படலம் தங்கியிருந்த காரணத்தால், அது தங்க நிறத்தில் காட்சியளித்தது. சூரியனின் கதிர்கள் படும்போது அது மின்னியது. சாயங்காலம் ஆனது. சூரியன் அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டு ஒரு கடலுக்குள் மூழ்கியது. திடீரென்று இருட்டு பரவியது. லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் மின்மினிப் பூச்சிகளைப்போல கண் சிமிட்ட ஆரம்பித்தன. பிள்ளைகள் ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு இருட்டில் நடந்தார்கள். அவர்கள் இருபது மைல்களுக்கும் அதிகமாக நடந்தார்கள். உடலின் எடை குறைந்த காரணத்தால் களைப்பு தோன்றவில்லை. பூமியில் அவ்வளவு தூரம் நடந்திருந்தால், களைத்துப்போய் அவர்கள் எதுவுமே செய்ய முடியாத அளவிற்கு ஆகியிருப்பார்கள்.

சிறிது தூரம் அப்படியே நடந்து சென்றபோது, உர்ஃபியின் தலை ஒரு சுவரில் மோதியது. அவன் அடுத்த நிமிடம் தன்னுடைய உடன் பிறப்புகளை எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னான். “இங்கே நில்லுங்க!” - அவன் சொன்னான். மற்றவர்கள் அவனுக்குப் பின்னால் நின்றார்கள். உர்ஃபி கவரைத் தடவிப் பார்த்தான். விரல் ஒரு பொத்தானில் பட்டது. உர்ஃபி பயந்து கொண்டே அந்தப் பொத்தானை அழுத்தினான்.

அடுத்த நிமிடம் இருட்டு நீங்கியது. பால் நிறத்தைக் கொண்ட ஒளி பரவியது. சுவரில் மிகவும் அழகான ஒரு கதவு தெரிந்தது. கதவில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது: ‘சந்திர தேசம்.’

சில நிமிடங்களில் அந்தக் கதவு மெதுவாகத் திறந்தது. இதயத்தைக் கவரக்கூடிய ஒரு ராகம் கேட்டது. பிள்ளைகளின் தலைகளில் வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் ஆன கம்பிகள் விழ ஆரம்பித்தன. அவர்கள் வேகமாக ஓடிக் கதவைத் தாண்டினார்கள். அழகான ஒரு உலகம் இருப்பதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்று விட்டார்கள். பால் நிறத்தைக் கொண்ட வெளிச்சத்தில் நீலநிற வானம் தெரிந்தது. சந்திர பூமியில் மரங்களும் செடிகளும் இருந்தன. ஆனால், அவற்றின் இலைகளும் கிளைகளும் மரங்களும் வெள்ளியால் உண்டாக்கப்பட்டிருப்பதைப்போல் இருந்தது. அருகில் தெளிந்த நீரின் நிறத்தைக் கொண்ட ஒரு மலை இருந்தது. அதன் உச்சியிலிருந்து வெள்ளி உருகி, அருவியாக விழுந்து கொண்டிருந்தது.

பிள்ளைகள் அங்கு நிறைய பெண்கள் இருப்பதைப் பார்த்தார்கள். மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்த அந்தப் பெண்களின் தோள்களில் பால் நிறத்தைக் கொண்ட சிறகுகள் இருந்தன. அவர்கள் பூ நிலவு கொண்டு படைக்கப்பட்டவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் நடக்கும்போது வெள்ளிச் சலங்கைகள் ஒலிக்கும் சத்தம் கேட்டது. பேசும்போது சந்திர கிரணங்கள் வெளிப்படுவதைப்போல் இருந்தது. அவர்களுக்கு மத்தியில் ஒரு ஆண் இருந்தான். அவனுக்கும் சிறகு இருந்தது. வெள்ளியால் உண்டாக்கப்பட்ட உடல். அங்குள்ள எல்லா பொருட்களும் பூ நிலவின் நிறத்தைக் கொண்டனவாகவும் அழகானவையாகவும் இருந்தன. காற்றில் பரவி வந்த நறுமணம் கண்களில் தூக்கத்தை வரவழைத்தது. அது சந்திர தேசம் அல்ல மிகவும் அழகான பூ நிலவின் கனவு என்று பிள்ளைகளுக்குத் தோன்றியது.

“ஹா! சந்திர தேசம் எவ்வளவு அழகாக இருக்கிறது!” - நாஸ் சொன்னாள்.

“இங்குள்ள மனிதர்கள் எவ்வளவு அழகானவர்களாக இருக்கிறார்கள்! இந்த அளவிற்கு அழகான மனிதர்கள் பூமியில் இருக்க மாட்டார்கள்!”- இதைச் சொன்ன புத்லி ஜிம்மி இருக்கும் பக்கம் திரும்பினாள்: “அவலட்சணம் பிடித்த இரும்பே, நீ எவ்வளவு அசிங்கமாக இருக்கே! என் கையை விடு...”

ஜிம்மிக்கு கோபம் வந்தாலும் அவன் எதுவும் கூறவில்லை. அதற்குள் சந்திர தேசத்தைச் சேர்ந்த மிகவும் அழகான ஆண் புத்லிக்கு அருகில் வந்து சேர்ந்திருந்தான். அவன் புன்னகைத்துக் கொண்டே புத்லியுடன் உரையாட ஆரம்பித்தான்.

அந்தப் பெண்கள் கூட்டத்திற்கு முன்னால் நடந்து செல்லும், இருப்பவர்களிலேயே மிகவும் அழகான பெண்தான் சந்திர தேசத்தின் அரசி என்பது தெரிந்தது. அவள் உர்ஃபியின் கையைப் பிடித்துச் சொன்னாள்:

“நல்வரவு! பூமியிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளே! சந்திர தேசத்திற்கு வந்ததற்காக உங்களை வரவேற்கிறேன். வருக! நாங்கள் உங்களை மதிக்கும் வகையில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.”

வெள்ளியில் உண்டாக்கப்பட்ட ஒரு விரிப்பில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அரசி தன்னுடைய கையில் இருந்த வெள்ளியாலான குச்சியால் தரை விரிப்பைத் தொட்டாள். தரை விரிப்பு எல்லோரையும் சுமந்து கொண்டு மெதுவாகப் பறந்தது.

பிள்ளைகள் சந்திர தேசத்தில் பயணம் செய்ய ஆரம்பித்தார்கள். அழகான கட்டிடங்கள், கோட்டைகள், நகரங்கள், நதிகள், கிராமங்கள், வயல்கள், மைதானம், தோட்டம், மலைகள், காடுகள் எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். எல்லாவற்றின் நிறமும் பாலின் நிறத்திலேயே இருந்தன.

இருபது நிமிடங்கள் பயணம் செய்த பிறகு அரசி மீண்டும் வெள்ளியாலான குச்சியால் தரை விரிப்பைத் தொட்டாள். விரிப்பு மெதுவாக ஒரு தோட்டத்தில் இறங்கியது. அங்கிருந்த செடிகளும் மரங்களும் வெள்ளியால் உண்டாக்கப்பட்டிருந்தன. நீர் வரும் இயந்திரத்தின் மூலம் வெளியே வந்து கொண்டிருந்தது கூட வெள்ளி திரவமாக இருந்தது. மோகினி ஒரு மலரைப் பறித்து கூந்தலில் சூட ஆசைப்பட்டாள். ஆனால், அவளால் மலரைப் பறிக்க முடியவில்லை. மலர் சந்திரனின் வெளிச்சத்தைப்போல மோகினியின் விரல்கள் வழியாகக் கடந்து சென்றது. நாஸ் நீர் வரும் இயந்திரத்தின் வழியாக வெளியே வந்து கொண்டிருந்த நீரைக் கையில் எடுக்க முயற்சித்தாள்.ஆனால், அவளுடைய கை நனையவில்லை. சந்திர தேசத்திலிருந்த ஆண் புத்லியின் கையைப் பிடித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஜிம்மி கோபப்பட்டான். அவன் கோபத்துடன் அந்த மனிதனைத் தன்கையைச் சுருட்டிக்கொண்டு குத்தினான். என்ன ஆச்சரியம்! ஜிம்மியின் கை அந்த மனிதனின் உடலைத் துளைத்துக் கொண்டு அந்தப் பக்கம் போய் விட்டிருந்தது. அதற்குப் பிறகும் அந்த பஞ்சைவிட மென்மையாக இருக்கும் ஏதோ ஒரு பொருளைத் தொட்டதைப்போல் ஜிம்மி உணர்ந்தான். குத்து வாங்கிய சந்திர மனிதன் ஜிம்மியைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னான். “சகோதரா! பூ நிலவு கொண்டு நான் படைக்கப்பட்டிருக்கிறேன் உங்களுடைய முரட்டுத்தனம் என் உடலை ஒன்றும் செய்யாது நம்ப முடியவில்லையென்றால், இனிமேலும்கூட குத்திப் பாருங்க...”

ஜிம்மி மீண்டும் அந்த மனிதனைக் குத்தினான். பத்து பன்னிரண்டு முறை பலமாகக் குத்தியும், அந்த மனிதனுக்கு எந்தவொரு காயமும் உண்டாகவில்லை.


“விமான நிலையத்தில் எங்களை வரவேற்க வராமல் இருந்ததற்கான காரணம் புரியவில்லை”- உர்ஃபி சொன்னான்.

“நாங்கள் எல்லோரும் அங்கு வந்திருந்தோம்”

அரசி சொன்னாள்:

“ஆனால், நாங்கள் யாரையும் பார்க்கவில்லையே!”

அரசி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு தொடர்ந்து சொன்னாள்: “எங்கள் எல்லோரையும் பூநிலவு கொண்டு படைத்திருக்கிறார்கள். பகல் நேரத்தில் நிலவைப் பார்க்க முடியாது. எங்களுடைய குரலை பூமியில் கேட்கவும் முடியாது. அந்த காரணத்தால்தான் நாங்கள் இன்று பகல் நேரத்தில் சத்தம் போட்டு வரவேற்பு சொல்லியும், உங்களால் அதைக் கேட்க முடியவில்லை. எங்களை இரவு நேரத்தில் மட்டுமே பார்க்க முடியும். இரவு நேரம்தான் எங்களுடைய பகல்! பகல் நேரத்தில் நாங்கள் எந்த வேலையும் செய்ய மாட்டோம். தூங்குவதுதான் எங்களுடைய பழக்கம். எங்களுடைய தேசத்தில் இரவு நேரத்தில் வேலை செய்வோம். பகல் நேரத்தில் தூங்குவோம்”

“இங்கு இருக்கும் எல்லா பொருட்களும் பூநிலவு கொண்டு உண்டாக்கப்பட்டவையா?”... நாஸ் கேட்டாள்.

“ஆமாம்! இப்போது நாம் பார்க்கும் மரங்களும், செடிகளும், மலர்களும், காய்களும், இலைகளும், அருவியும், ஏரியும், மலைகளும் சந்திரனின் ஒளியால் உண்டாக்கப்பட்டவையே.”

9

நட்சத்திரங்களே, ஒன்று சேருங்கள் !

சிறிது நேரத்திற்குப் பிறகு வெள்ளி கொண்டு உண்டாக்கப்பட்ட மேஜைகளில் வெள்ளித் தட்டுகளைக் கொண்டு வைத்தார்கள். பல வகையான பலகாரங்களையும் அதில் பரிமாறினார்கள். பிள்ளைகள் பூமியில் இருக்கும்போது சாப்பிட்டிருக்கும் உணவுப் பொருட்கள்தான். ஆனால், அனைத்தும் பூ நிலவின் நிறத்தைக் கொண்டிருந்தன என்பது மட்டுமே வேறுபாடு! வெள்ளியால் உண்டாக்கப்பட்ட குவளையில் கொண்டு வந்து வைக்கப்பட்ட நீருக்கும் பூ நிலவின் நிறம் இருந்தது. நீரைப் பருகியபோது, அதைக் குடித்தோம் என்ற உணர்வே உண்டாகவில்லை. குவளை காலியானதென்னவோ உண்மை. லட்டு, கேக் போன்றவற்றை வாயில் போட்டு மென்றார்கள். எனினும், எதையும் சாப்பிட்டது மாதிரியே தோன்றவில்லை. பிள்ளைகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. சாப்பிடும்போது இப்படியும் இருக்குமா என்ன? உணவைச் சாப்பிடவும் பசி சிறிதும் குறையவில்லை.

உர்ஃபி அதற்கான காரணத்தைக் கேட்டதற்கு அரசி விளக்கமாகச் சொன்னாள்: “உணவுப் பொருட்கள் அனைத்தும் பூ நிலவு கொண்டு உண்டாக்கப்பட்டவை. நாங்களும் பூ நிலவு கொண்டுதான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நிலவு சாப்பிட்டு பசியை ஆற்றிக் கொள்கிறது. நீங்கள் மாமிசமும் எலும்பும் குருதியும் கொண்ட மனிதர்கள். உங்களுடைய குழுவில் இருக்கும் இரண்டு பேர் இரும்பும் செம்பும் கொண்டு உண்டாக்கப்பட்டிருப்பவர்கள்! பிறகு நாங்கள் என்ன செய்வது? இங்குள்ள பெரிய பிரச்சினையே இதுதான். இங்கு வெவ்வேறு கிரகங்களைச் சேர்ந்த மனிதர்களையும் வெவ்வேறு கிரகங்களைக் கொண்டு படைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் மாறுபட்டு இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் தேவாலயத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் இங்கு வேறுபாடுகள் நிறையவே இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நான் சிரமப்படுகிறேன். இந்த பிரபஞ்சத்தில் ஒரு புரட்சி நடத்த வேண்டிய அவசியம் உடனடி தேவையாக இருக்கிறது. எல்லா நட்சத்திரங்களையும் கிரகங்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதற்காக நான் உண்டாக்கிய கோஷம் இதுதான் - ‘பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களே! ஒன்று சேருங்கள்!”

“ஹியர்! ஹியர்!” - புத்லி அரசியைப் பாராட்டியவாறு சொன்னாள்: “தெரிந்துகொள்ள வேண்டும்! நான் ஒரு மிகச் சாதாரணமான நகரத்தைச் சேர்ந்தவள். எனினும் எங்களுடைய நகரம் மிகவும் அழகானதாகவும், முத்துக்கள் கொண்டு உண்டாக்கப்பட்டதாகவும் இருக்கும். ஆனால், எல்லா நேரங்களிலும் விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எங்களுடைய நகரத்தில் தினமும் நான்கோ ஐந்தோ தடவை சுழற்காற்றும் சூறாவளியும் வால் நட்சத்திரங்களின் பாதிப்பும் இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு தடவையும் நாங்கள் நகரத்தை வேறொரு இடத்திற்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் எந்த நகரமும் முன்னேற முடியுமா?”

“வால் நட்சத்திரத்தின் பாதிப்பிற்கு ஒரு முடிவே இல்லை. பைத்தியம் பிடித்த ஒட்டகத்தைப்போல அது விருப்பப்படும் இடங்களிலெல்லாம் தன்னுடைய தலையை நீட்டுகிறது. வழியில் நாங்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் வால் நட்சத்திரத்தின் பாதிப்பில் இருந்தே தப்பித்தோம்”- ஜிம்மி சொன்னான்.

“ஹைட்ரஜன் வாயுவும் எங்களுக்கு ஒரு சாபமாக இருக்கிறது. சூரியனைவிட லட்சம் மடங்கு பெரிதாக இருக்கும் சில நட்சத்திரங்கள் வெடித்து விழும். அப்போது எத்தனையோ சிறிய சிறிய நட்சத்திரங்கள் அழிந்து விடும். அவை பின்னர் நகரும் நட்சத்திரங்களாக மாறும். அவை சில நேரங்களில் எங்களுடைய பூமிக்கு நேராக வரும் கடலில் இருந்து மேலே செல்லும் கரிய மேகங்கள் கர்ஜிக்கும். மரங்களும், செடிகளும், மிருகங்களும் உண்டாகின்றன. மனிதர்களைப் போன்ற அறிவு கொண்ட உயிரினங்களும் தோன்றுகின்றன. ஆனால், ஹைட்ரஜன் வெடிப்பு அனைத்தையும் அழித்து விடுகின்றன” - உர்ஃபி சொன்னான்.

“மலர் மொட்டிடம் பலவகைப்பட்ட ஆயுதங்களும் இருந்தன. ஆனால், மலர்வதற்கு முன்பே அது வாடிப்போய்விட்டது”- நாஸ் கவலை கலந்த குரலில் சொன்னாள்: “உண்மையாக சொல்லப்போனால், இந்த பிரபஞ்சத்தில் மிகப்பெரிய அநீதி நடந்து கொண்டிருக்கிறது.”

புத்லியின் கையைப் பற்றிக் கொண்டிருந்த சந்திர மனிதன் சிரித்துக் கொண்டே சொன்னான்: “இந்த குற்றச்சாட்டுகளையும் கவலைகளையும் விட்டெறிந்துவிட்டு, சந்தோஷம் அளிக்கக்கூடிய விஷயங்களைப் பேசுங்கள்.”

அரசி சிரித்துக்கொண்டே சொன்னாள்: “சந்திரன்! நீங்க சொன்னது உண்மையாகவே சரியான விஷயம். சீக்கிரமா நடன நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கச் சொல்லுங்க.”

சந்திரன் கைகளால் சைகை செய்த அடுத்த நிமிடம் மேடையில் இருந்த திரைச்சீலை விலகியது. நடனமும் பாடலும் ஆரம்பமாயின. இதற்கு முன்பு எங்கேயோ கேட்டிருக்கும் ராகங்களும் தாளங்களும்! உர்ஃபி கேட்டதற்கு அரசி கொன்னாள்: “எங்களுடைய கலாச்சாரத்திற்கும் வாழ்க்கை முறைக்கும், பூமியில் இருக்கும் மனிதர்களின் கலாச்சாரத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் இடையில் ஒற்றுமை இருக்கிறது. ஒரு காலத்தில் சந்திரனும் பூமியின் ஒரு பகுதியாக இருந்தது.”

பாடல்கள் மிகவும் இனிமை கொண்டவையாகவும் நடனம் மனதைக் கவரக் கூடியதாகவும் இருந்தன. ராகங்கள் வெறி கொள்ளச் செய்தன. அந்த இன்ப போதையில் பிள்ளைகள் தூங்கிவிட்டார்கள்.


பிள்ளைகள் காலையில் கண் விழித்தபோது, அங்கு தோட்டமோ மரங்களோ செடிகளோ எதுவும் இல்லை. அரசியையும் மற்றவர்களையும் காணோம். தலைக்கு மேலே கடுமையான வெயில்! பிள்ளைகள் ஒரு பள்ளத்தில் கிடந்தார்கள். நான்கு பக்கங்களிலும் பாறைகளும் மலைகளுமாக இருந்தன. பிள்ளைகள் அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். யாருமே இல்லாத, உயிர்ப்பற்ற சூழ்நிலை! அவர்களுக்கு சந்திரன்மீது வெறுப்பு உண்டானது. சந்திரதேசம் அவர்களுக் கு சிறிதுகூட பிடிக்கவில்லை.

“மனிதர்களும் வேறு உயிரினங்களும் இல்லாத தேசத்தில் ரத்தின மலைகளே இருந்தாலும் என்ன பிரயோஜனம்?” - உர்ஃபி சொன்னான்.

“நாம் எப்படிப்பட்ட தேசத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம்! இந்த சந்திர தேசத்தில் இருக்கும் மனிதர்களும் வினோதமான பிறவிகளாகவே இருக்கிறார்கள். இரவில் தெரிவார்கள். பகலில் தெரிய மாட்டார்கள்”-புத்லி சொன்னாள்.

குறும்புக்காரியான மோகினியும் வெறுமனே இருக்கவில்லை. அவள் சொன்னாள்: “என் கண்கள் ஆந்தை, பூனை ஆகியவற்றின் கண்களைப்போல இருந்திருந்தால், நான் சந்திரனில் இருப்பவர்களைப் பகல் நேரத்திலும் பார்த்திருப்பேன்.”

“உர்ஃபி அண்ணா! நாம் சந்திரனின் இன்னொரு பக்கத்திற்குப் போய் பார்த்தால் என்ன? அங்கு என்ன இருக்கிறது என்று பார்ப்போம். சந்திரனின் இந்தப் பக்கம் நாம் பூமியிலிருந்து பார்க்கும் அளவிற்கு அழகானதாக இல்லை”- ஜிம்மி சொன்னான்.

எல்லோரும் ஜிம்மியின் கருத்தை ஒப்புக் கொண்டார்கள். கட்டாயம் சந்திரனின் மறுபக்கத்திற்குப் போகவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

“நாம் சந்திரனுக்கு எத்றகாக வந்திருக்கிறோம் என்ற விஷயத்தை மறந்துவிடக்கூடாது” - நாஸ் ஞாபகப்படுத்தினாள்.

“சமாதானப் புறாவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.”

மோகினி சொன்னாள்:

“எனக்கு எல்லாம் ஞாபகத்தில் இருக்கு. ஆனால் உயிரினங்களும் மரங்களும் செடிகளும் இல்லாத இந்தப் பாலைவனத்தைத் தேடி நம்முடைய புறா எதற்காக வருகிறது?”

பிள்ளைகள் சிறிது நேரம் அதைப்பற்றி விவாதம் செய்துவிட்டு விமான தளத்திற்குத் திரும்பினார்கள்.

பிறகு தங்களுடைய ராக்கெட்டில் ஏறி அவர்கள் சந்திரனின் இன்னொரு பக்கத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தார்கள்.

10

பொய் நகரம்

ன்புள்ள நண்பர்களே! சந்திரனின் மறுபக்கத்தைப் பற்றி என்ன கூறுவது? நம்முடைய பூமியிலிருந்து பார்த்தால் தெரியக்கூடிய பகுதி ஆள் அரவமற்ற பாலைவனம் என்றால், சந்திரனின் இன்னொரு பக்கம் மிகவும் அழகான தோட்டமாக இருந்தது. நீலநிறத்தைக் கொண்ட புற்கள் நிறைந்த தரை! தவிட்டு நிறத்தில் இருக்கும் மண் எந்த இடத்திலும் இல்லை. இடையில் ஆங்காங்கே அழகான மரங்களும், கொடிகளால் ஆன பந்தல்களும் இருந்தன. ஒவ்வொரு மரத்திற்கும் பன்னீர் மலரின் நறுமணம் இருந்தது. என்றாலும், சில மரங்களுக்கு முல்லை மலரின் நறுமணம் இருந்தது. எல்லா மரங்களின் இலைகளும் பொன் நிறத்தில் இருந்தன. மலர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. நதிகளிலும் ஏரிகளிலும் வெள்ளி உருகி ஓடிக் கொண்டிருந்தது. கார்மேகம் ரோஜா நிறத்தைக் கொண்டிருந்தது. கார்மேகங்கள் மரங்களின் கிளைகளை வருடியவாறு நகர்ந்து கொண்டிருந்தன. பூமியில் இருப்பதைப்போல அவை மிகவும் உயரத்தில் இல்லை. கார்மேகம் நீருக்கு பதிலாக இசையைப் பொழிந்து கொண்டிருந்தது. இனிமையான பாடல்கள் மென்மையான ஸ்வரத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. இசைமழை பொழிய ஆரம்பித்துவிட்டால், விவசாயிகள் வயல்களை உழுது தயார் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் இசைச்செடிகள் வளரும். அங்குள்ள விவசாயிகள் தானியங்களை விளைவிக்க அதிகமாக வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. செடிகள் தாமாகவே வளர்ந்து கொள்ளும். ஒவ்வொரு விவசாயியும் அவனவனுடைய வயலில் தினமும் மூன்று தடவை வீதம் புல்லாங்குழல் வாசிப்பார்கள். புல்லாங்குழலின் இசையைக் கேட்டுச் செடிகள் வளர்ந்து கொண்டிருக்கும். சில விவசாயிகள் ஜலதரங்கம் வாசிப்பார்கள். சிலர் சிதார் வாசிப்பார்கள்.

நம்முடைய பூமியில் பலவகைப்பட்ட தானியங்கள் விளைவதைப் போல, சந்திரனில் பலவகைப்பட்ட ராகங்கள் வளர்கின்றன. சுஹாக், புரியா மல்லார், தர்பாரி, கயால் டும்ரி! நம்முடைய பூமியில் சிலர் அரிசியாலான உணவைச் சாப்பிடுகிறார்கள். சிலர் கோதுமையாலான உணவைச் சாப்பிடுகிறார்கள். அதேபோல அங்கிருக்கும் மக்கள் அவரவர்களுக்கு விருப்பமான ராகத்தைச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் காதுகள் வழியாகத்தான் உணவைச் சாப்பிடுகிறார்கள். பொய் சொல்வதற்கு மட்டுமே வாயைப் பயன்படுத்துகிறார்கள்.

ராக்கெட் சந்திரனின் மறுபக்கத்தில் இறங்கியபோதே பிள்ளைகளுக்கு அந்த விஷயம் புரிந்து விட்டது. அவர்கள் முதலில் பார்த்ததே கிழிந்துபோன ஆடைகளை அணிந்திருக்கும் சில மனிதர்களைத்தான். அந்த மனிதர்கள் பிள்ளைகளைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தார்கள். “சீக்கிரம் இங்கிருந்து கிளம்புங்கள்! இல்லாவிட்டால் கொன்று விடுவோம். எங்களுடைய மண்ணில் கால் வைப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? பூமியிலிருக்கும் கழுதைகளே! எங்களுடைய சந்திரனை கெட்ட ஆசை நிறைந்த பார்வையால் அசுத்தப்படுத்தாதீர்கள். சீக்கிரமா இங்கிருந்து புறப்படுங்கள்!”

அந்த நாட்டில் விருந்தாளிகளை வரவேற்கும் முறை இதுதான் என்றால், திரும்பிப் போய் விடுவதுதான் நல்லது என்று பிள்ளைகள் நினைத்தார்கள். அவர்கள் ராக்கெட்டை நோக்கித் திரும்பப் போவதற்குத் தயாரானபோது, மிகவும் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்ட, ஆதிவாசியைப் போல இருந்த ஒரு மனிதர் அவர்களுக்கு அருகில் வந்து உர்ஃபியிடம் சொன்னார்: “நீங்கள் திரும்பிப் போகிறீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது! நாங்கள் உங்களை வரவேற்பதற்காகக் காத்து நின்றிருக்கிறோம்.”

“நீங்கள் விருந்தினர்களை இப்படித்தான் வரவேற்பீர்களா?” உர்ஃபி கோபமான குரலில் கேட்டான்.

“நீங்கள் கோபிக்கக் கூடாது” - அந்த மனிதர் பணிவான குரலில் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். “இங்குள்ள பழக்கம் இதுதான். நீங்கள் பொய் பேசுபவர்களின் நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். ‘பொய் நகரம்’ என்பது இந்த ஊரின் பெயர். தன்னுடைய ஊரில் ஒரு ஆள்கூட உண்மை பேசக்கூடாது என்பது எங்களுடைய மன்னரின் உத்தரவு. பொய் மட்டுமே கூற வேண்டும்! அதனால் நாங்கள் உங்களைப் பார்த்து ‘கிளம்புங்கள் என்று கூறினால் ‘வாருங்கள்’ என்று கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டும். வடிகட்டிய முட்டாள் என்று கூறினால் மிகச் சிறந்த புத்திசாலி என்று குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும்.”

“நீங்களும் உங்களுடைய மன்னரும் சரியான கழுதைகளாக இருப்பீர்கள் போலிருக்கே!”

“ஆஹா! நீங்கள் எங்களுடைய மன்னரை எந்த அளவிற்குப் புகழ்கிறீர்கள்! இதைக் கேட்டால் அவர் மிகவும் சந்தோஷப்படுவார்.”

“இங்கு யாராவது உண்மை பேச வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?” - ஜிம்மி கேட்டான்.


“உண்மையைக் கூறுவதற்கு ரேஷன் கார்டு வாங்க வேண்டும். நாளொன்றுக்கு மூன்று தடவைகளுக்கும் அதிகமாக உண்மை பேசக்கூடாது. காலை, மதியம், மாலை நேரங்களில் ஒவ்வொரு உண்மையைப் பேசலாம். ரேஷன் மிகவும் குறைவு. அதனால் இங்குள்ள மக்கள் உண்மையைக் கூறுவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

“நீங்கள் இப்போது உண்மையை எப்படிக் கூறுகிறீர்கள்?”

“நான் இந்த நாட்டின் வெளி விவகார அமைச்சர். நான் விருப்பப்படும்போது உண்மையைப் பேசுவதற்கும் பொய் கூறுவதற்கும் உண்மையையும் பொய்யையும் கலந்து பேசுவதற்கும் மன்னர் அனுமதி தந்திருக்கிறார்.”

“உங்களுடைய மன்னர் பெரிய அறிவாளியாக இருப்பார் போலிருக்கிறதே!” - ஜிம்மி சொன்னான்.

“அய்யய்யோ! எங்களுடைய மன்னரைப் பற்றி எதற்காக மோசமாகப் பேச வேண்டும்? படைவீரர்கள் யாராவது கேட்டால் பிரச்சினை ஆயிடும்” - அமைச்சர் பயம் கலந்த குரலில் சொன்னார்.

“மன்னிக்க வேண்டும்! தவறு நேர்ந்து விட்டது. இல்லை.... இல்லை.... மன்னிக்கக் கூடாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை” - ஜிம்மி சொன்னான்.

“இப்போது சரியாகி விட்டது” - அமைச்சர் சந்தோஷமான குரலில் சொன்னார்: “முயற்சி செய்தால் நீங்கள் பொய் பேச விரைவில் கற்றுக் கொள்ளலாம்.”

அமைச்சருடைய வேண்டுகோளை ஏற்று பிள்ளைகள் பொய் மன்னர் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டார்கள். போகும் வழியில் அவர்கள் அமைச்சரிடம் கூறினார்கள். “எங்களுக்கு பொய் பேசி பழக்கமில்லை. அதனால் உண்மையைக் கூறுவதற்கு ரேஷன் கார்டு தரவேண்டும்.”

அமைச்சர் அவர்களை சமாதானப்படுத்தினார்: “வெளி இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அதற்கான தேவை இல்லை. நாங்கள் பொய் பேசினாலும் வெளியிலிருந்து வருபவர்கள் உண்மை பேச வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்.”

“அதற்குப் பெயர்தான் டிப்ளமஸி” - ஜிம்மி சொன்னான்.

“உண்மைதான்” - அமைச்சர் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னார்: “அந்த விஷயத்தைச் சரி பண்ணுவதுதான் என் பொறுப்பு. ஆனால் நீங்கள் குறைந்தபட்சம் எங்களுடைய மன்னருக்கு முன்னால் இருக்கும்போதாவது உண்மை பேசுவதில்லை என்று சத்தியம் பண்ணிக் கூற வேண்டும். எங்களுடைய மன்னருக்கு உண்மையைச் சிறிதுகூட பிடிக்காது.”

“சத்தியம் பண்ணுகிறோம்” - நாஸ் சொன்னாள். உர்ஃபி அதற்கு கோபித்தான் : “நீ எப்படி சத்தியம் பண்ணுவே? நீ எல்லா நேரங்களிலும் பொய் சொல்லிக் கொண்டிருப்பவள். உனக்கு சத்தியம் பண்ணுவது என்பது கஷ்டமான விஷயமே அல்ல.”

நாஸ் உர்ஃபியை அடிப்பதற்காக முன்னோக்கி வந்தாள். அதற்குள் புத்லி அவளைத் தடுத்துவிட்டாள். பிள்ளைகள் எல்லோரும் அரசரின் அரண்மனையை நோக்கி நகர்ந்தார்கள்.

அன்புள்ள நண்பர்களே! மகாராஜா தரோரின் தர்பாரைப் பற்றி என்ன கூறுவது? வாசலில் இருந்து மன்னரின் சந்நிதியை அடைய ஒரு மணி நேரம் ஆனது. அந்த அளவிற்கு மிகப் பெரிய இடமாக அது இருந்தது. மன்னரும் தர்பார் அரங்கத்தில் இருப்பவர்களும் மைக்ரோஃபோனின் உதவியுடன்தான் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். மன்னரின் ஆடை, அணிகலன்கள் மிகவும் அழகாக இருந்தன. தர்பார் அரங்கத்தில் இருந்த மற்றவர்களின் ஆடைகள் கிழிந்து போனவையாகவும், ஒட்டு போட்டுத் தைத்தவையாகவும் இருந்தன. தன்னைத் தவிர, வேறு யாரும் நல்ல ஆடைகளை அணியக்கூடாது என்பதுதான் பொய் நகரத்தின் மன்னரின் கட்டளையாக இருந்தது. எல்லோரும் நல்ல ஆடைகளை அணிய ஆரம்பித்தால், பிறகு மன்னருக்கும் மக்களுக்குமிடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும். நல்ல ஆடைகளை அணியக்கூடாது என்பது மட்டுமல்ல - நல்ல உணவுகளைச் சாப்பிடுவதற்கும், நல்ல வீட்டில் வசிப்பதற்கும், நல்ல விஷயங்களைப் பற்றி சிந்திப்பதற்கும்கூட அங்குள்ள மக்களுக்கு உரிமை இல்லாமல் இருந்தது. தர்பார் கூடத்தின் மேற்கூரை மிகவும் உயரத்தில் இருந்தது. நெருங்கிப் பார்த்தபோது, தலைப்பாகையும் தொப்பியும் கீழே விழுந்து கிடந்தன. ஆகாயத்தில் எந்த அளவிற்கு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு தர்பார் கூடத்தில் விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. மன்னரின் சிம்மாசனம் பச்சை நிறத்தைக் கொண்ட ரத்தினத்தால் செய்யப்பட்டிருந்து. பிள்ளைகள் தர்பாரின் வாசலை அடைந்தபோது, மகாராஜா தரோர் அவையிலிருந்த ஒரு மனிதனை சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார்.

“வலி இல்லையே?” - மன்னர் இடையில் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தார்.

அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த மனிதனின் முதுகிலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. எனினும், அவன் சிரிக்க முயற்சித்தான். “ஆஹா... மன்னரே, இன்னும் அடியுங்கள்! எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” - அவன் சொன்னான்.

தர்பாரில் இன்னொரு மனிதனை சிலுவையில் ஆணியடித்து நிறுத்தியிருந்தார்கள். அவன் ஒரு கவிஞன். அந்தக் கவிஞன் மன்னரைப் புகழ்ந்து கவிதைகளைக் கூறிக் கொண்டேயிருந்தான்.

பிள்ளைகள் தர்பாருக்குள் நுழைந்தபோது, அங்கு இருந்தவர்கள் எழுந்து நின்று அவர்களைத் திட்டினார்கள்: “பூமியில் இருந்து வந்திருக்கும் பிள்ளைகளே! நீங்கள் நாசமாகப் போக வேண்டும்!”

“நீங்களும் நாசமாகப் போக வேண்டும்! பொய் நகரத்தைச் சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளே!” - உர்ஃபி திட்டினான்.

வெளிவிவகார அமைச்சர் பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளை மன்னருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். “அக்கிரமங்கள் செய்யும் தரோர் மன்னரே! பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் உங்கள் முன்னால் நின்றிருக்கிறார்கள்!”

மன்னர் பிள்ளைகளையே கூர்ந்து பார்த்தார்: “நீங்கள் அவலட்சணமாக இருக்கிறீர்கள்!”

மன்னர் பாராட்டியதைக் கேட்டு உர்ஃபி கைகளைத் தட்டினான்: “அவலட்சணம் உங்களுடன் முடிந்துவிட்டது.”

“மதிப்பிற்குரிய மன்னரே, உங்களின் முகத்தில் துப்ப வேண்டும்போல இருக்கிறது. சந்திரனுக்கு நேராக துப்பினால் நம் முகத்திலேயே துப்பியது வந்து விழும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்காங்களே!” - ஜிம்மி சொன்னான்.

“இந்தக் கருத்தைச் சொன்னவர்கள் சரியான முட்டாள்கள்” - மன்னர் சிரித்துக் கொண்டே அமைச்சர் பக்கம் திரும்பினார்: “இவர்களை வெளியே கொண்டு போய் நிறுத்தி பட்டினி போட்டு ஒரு வழி பண்ணு!”

மோகினி அதைக் கேட்டு பதைபதைத்துப் போய் விட்டாள். அவள் சொன்னாள் : “மதிப்பிற்குரிய அமைச்சரே! நீங்கள் எங்களை அரண்மனைக்கு வெளியில் கொண்டுபோய் நிறுத்தி பட்டினி போட்டு துன்பப்படும்படி செய்வீர்களா?”

“அதற்கு அர்த்தம் - உங்களை அரண்மனைக்கு அழைத்துச் சென்று மிகவும் நன்றாக உபசரிக்க வேண்டும் என்பதுதான்.”

“நன்றி!” - உர்ஃபி மன்னரைப் பார்த்து சொன்னான். திடீரென்று என்ன நினைத்தானோ, தன்னைத் தானே திருத்திக் கொண்டான்:

“நன்றிகெட்ட செயல்! நாங்கள் போகிறோம். அதாவது - நாங்கள் இப்போது வருவோம்.”


“இது ஹைதராபாத் மொழியாச்சே!” - மோகினி சொன்னாள்.

“அங்கு இப்படித்தான் சொல்வார்கள். நான் போகிறேன் என்று கூறுவதற்கு பதிலாக நான் வரட்டுமா என்று சொல்வார்கள்.”

“எங்களுடைய முன்னோர்களில் யாராவது அந்த ஊருக்கு வந்திருப்பார்கள். வாருங்கள்! உங்களுக்கு மன்னரின் அரண்மனையைச் சுற்றிக் காட்டுகிறேன்” - அமைச்சர் அழைத்தார்.

மன்னரின் அரண்மனை மிகவும் அழகாக இருந்தது. ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கதவுகளும் ஜன்னல்களும்! வெள்ளியும் தங்கமும் கொண்டு உண்டாக்கப்பட்ட தூண்கள்! அரண்மனையின் கோபுரங்களும் அதன் நுனிகளும் நவரத்தினங்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருந்தன. தோட்டத்தில் அழகான மரங்கள் இருந்தன. அதன் கிளைகளில் உட்கார்ந்து கொண்டு பறவைகள் ஓசைகளை எழுப்பிக் கொண்டிருந்தன. புல் பரப்பில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வெள்ளைநிற நாய்க்குட்டி பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தது. நல்ல தோற்றத்தைக் கொண்ட நாய்க்குட்டி அது. மோகினிக்கு நாய்க்குட்டிகளை மிகவும் பிடிக்கும். அவள் ஒடிச் சென்று நாய்க் குட்டியின் தலையைத் தடவினாள். அது வாலை ஆட்டியபோது மோகினி அதைப் பிடித்துத் தூக்க முயற்சித்தாள். ஆனால் நாய்க்குட்டி தரையை விட்டு மேலே வரவில்லை. கூர்ந்து பார்த்தபோதுதான் அதன் கால்கள் தரைக்குள் இருப்பதே தெரிந்தது.

“இந்த நாய் தரையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறதே!” - மோகினி சொன்னாள்.

“பிணைக்கப்படவில்லை. முளைத்து வந்திருக்கிறது” - அமைச்சர் சொன்னார்.

“என்ன?” - நாஸ் நாய்க்குட்டியின் அருகில் சென்று கூர்ந்து பார்த்தாள். நான்கு கால்களும் முளைத்து வந்திருப்பதைப்போல தோன்றின.

“எங்களுடைய நாட்டில் பசு, காளை, எருமை, ஆடு, நாய் ஆகிய மிருகங்கள் பூமியிலிருந்து முளைத்து வருவதுதான் வழக்கம். பறவைகளும்கூட அப்படித்தான்! மரங்களின் கிளைகளில் இருந்து கொண்டு ஓசை எழுப்பும் பறவைகளைப் பார்க்கிறீர்கள் அல்லவா? அவை எதுவும் பறக்காது” - அமைச்சர் விளக்கிச் சொன்னார்.

“சரிதான்....” - ஜிம்மி சொன்னான்.

“இந்தப் பறவைகள் மரங்களில் காய்க்கின்றன. இங்கு மரங்களில் பழங்கள் விளைவது இல்லை. அதற்கு பதிலாக பறவைகள் விளைகின்றன. காக்கை மரத்தில் காகங்கள் உண்டாகின்றன. மயில் மரத்தில் மயில்கள் உண்டாகின்றன. அதோ! மயில் மரம் தெரிகிறதா?”

ஆச்சரியமான உலகம்! அங்கு மிருகங்கள் தரையில் விளைகின்றன. பறவைகள் மரங்களில் உண்டாகின்றன. அங்குள்ள மிருகங்கள் நடப்பதில்லை. பறவைகள் பறப்பதில்லை. அங்குள்ள பறவைகளும் மிருகங்களும் பூமியில் இருக்கும் பறவைகளையும் மிருகங்களையும் போலவேதான் இருக்கின்றன. தோற்றத்தில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. தோட்டத்தில் மூன்று நான்கு பசுக்கள் நிற்பதைப் பார்த்து பால் எடுப்பவர்கள் அவற்றிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார்கள்.

“சந்திரனில் இருக்கும் பசுக்கள் நல்லவை. பால் கறக்கும்போது மிதிப்பதோ, முட்டுவதோ இல்லை.”

“இந்தப் பசு விவசாயத்தை பூமியிலும் செய்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது” - மோகினி சொன்னாள்.

“எங்களுடைய நாட்டில் பறவைகள் பறக்கும்” - ஜிம்மி சொன்னான்.

“நீங்கள் பொய் கூறுகிறீர்களா? இல்லாவிட்டால் உண்மையைக் கூறுகிறீர்களா?” - அமைச்சர் ஆச்சரியத்துடன் கேட்டார்.

“உண்மையைத்தான் கூறுகிறேன்.”

“நடக்காத விஷயம்! பறவைகளால் எப்படிப் பறக்க முடியும்? அவை மரங்களில் காய்ப்பவைதானே?”

“எங்களுடைய பூமியில் மிருகங்களும் மனிதர்களைப்போல நடக்கும்!” - நாஸ் சொன்னாள்.

அமைச்சர் திகைத்துப் போய் நின்றுவிட்டார். “அது எப்படி முடியும்? தயவுசெய்து இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லாதீர்கள்.”

நாங்கள் காது மூலமாக அல்ல - வாய் மூலமாகத்தான் உணவு சாப்பிடுகிறோம்” - உர்ஃபி சொன்னான்.

“ஹ...ஹ...ஹ...!” - அமைச்சர் உரத்த குரலில் சிரித்தார்: “பொய் பேசுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது. வாயின் வழியாக உணவு சாப்பிடுகிறார்களாம்! ஹ...ஹ...ஹ.....! இவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லக் கூடாது. நாங்கள் இறந்து விடுவோம். பூமியில் இருக்கும் மனிதர்கள் சந்திரனில் இருக்கும் மனிதர்களைவிட பொய் பேசக் கூடியவர்கள் என்ற விஷயத்தை நான் மன்னரிடம் கூறப் போகிறேன்.”

“இது பொய் அல்ல. உண்மை!” நாஸ் கோபம் கலந்த குரலில் சொன்னாள்: “நாங்கள் உங்களைப்போல அல்ல. நாங்கள் உண்மை மட்டும்தான் பேசுவோம். எங்களுடைய நாட்டில் அரசியல் தலைவர்கள் மட்டும்தான் பொய் பேசுவார்கள்.”

“அரசியல்வாதிகள் மட்டுமா? ஹ... ஹ... ஹ...! ஏய் நாஸ்! இந்த அளவிற்குப் பொய் சொல்லக் கூடாது. நீங்கள் பொய் நகரத்தைச் சேர்ந்த எங்களையே தோற்கடித்துவிட்டீர்கள். மன்னரின் கட்டளைப்படி நாங்கள் ஒவ்வொருவரும் பொய் பேசியாக வேண்டும். அதற்காக...” - அமைச்சர் சொன்னார்.

“எங்களுடைய நாட்டில் பொய் பேசலாம் என்ற எந்தவொரு சட்டமும் இல்லை.”

அமைச்சர் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னார்: “நீங்கள் மிகப்பெரிய சாமர்த்தியசாலிகள்தான். பூமியில் இருக்கும் உண்மையான நிலைமையை எங்களிடம் கூற மறுக்கிறீர்கள். உங்களுடைய நாட்டில் பொய் பேச வேண்டும் என்ற சட்டம் இல்லையா? பொய் பேசாமல் ஒரு நாளாவது நாட்டை ஆள முடியுமா? உங்களுடைய நாட்டில் மலர்கள் உதட்டுச் சாயத்தை பயன்படுத்துவது இல்லை என்று நாளைக்கே நீங்கள் கூறலாம்.”

“உதட்டுச் சாயமா?” - நாஸ் ஆச்சரியத்துடன் கேட்டாள்: “மலர்களுக்கும் உதட்டுச் சாயத்திற்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது?”

“அதோ பாருங்கள்!” - அமைச்சர் தோட்டத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டினார். பிள்ளைகள் அந்தப் பக்கத்தைப் பார்த்தார்கள். ஒரு இடத்தில் வெள்ளை நிறத்தில் மலர்கள் மலர்ந்து நின்று கொண்டிருந்தன. தோட்டங்கள் அந்த மலர்களில் உதட்டுச் சாயத்தைப் பூசி சிவப்பாக்குகின்றன.

“இது என்ன புது விஷயமாக இருக்கு!” - ஜிம்மி கேட்டான்.

“எங்களுடைய நாட்டில் இதுதான் நடக்கிறது. வெள்ளைநிற மலர்கள் மலரும்போது, தோட்டங்கள் உதட்டுச் சாயத்தைப் பூசி அவற்றைச் சிவப்பாக்கிவிடும்.”

“எங்களுடைய நாட்டில் மலர்களுக்கு உதட்டுச் சாயம் பூசுவது இல்லை. பெண்கள்தான் உதட்டுச் சாயத்தைப் பூசிக் கொள்வார்கள்.”

“பெண்கள் உதட்டுச் சாயத்தை பயன்படுத்துகிறார்களா?” - அமைச்சர் ஆச்சரியப்பட்டு சில நிமிடங்கள் இருந்துவிட்டு சொன்னார்: “நீங்கள் பொய் பேசுபவர்களின் அரசியாக இருப்பதற்கு முழு தகுதியும் உங்களுக்கு இருக்கிறது. பாருங்க... நீங்கள் விரும்புகிற அளவிற்குப் பொய் பேசலாம். ஆனால் இந்த அளவிற்குப் பொய் பேசக்கூடாது. நீங்கள் எங்களுக்கு பூமியில் இருக்கும் உண்மையான நிலைமையை விளக்கிக் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.”

“நாங்கள் உண்மையைத்தான் கூறுகிறோம்.”


“நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எனக்கு எது உண்மை, எது பொய் என்று பிரித்துப் பார்க்க முடியாது என்று நினைத்தீர்களா? பூமியில் மலர்கள் அல்ல - பெண்கள்தான் உதட்டுச் சாயத்தை பயன்படுத்துகிறார்கள் என்று நான் நம்ப வேண்டும்! அங்கு மிருகங்கள் மனிதர்களைப் போல நடப்பார்கள். பறவைகள் பறக்கும். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் முட்டாள் என்று நினைத்தீர்களா?” - கோபத்தில் அமைச்சரின் வாயில் நுரையும் எச்சிலும் வர ஆரம்பித்தன. அமைச்சர் கைகளைத் தட்டியவுடன் துப்பாக்கிகளை வைத்திருந்த எட்டு பத்து தடிமனான உடலைக் கொண்ட மனிதர்கள் அங்கு வந்து நின்றார்கள்.

அமைச்சர் தடிமனான மனிதர்களைப் பார்த்துச் சொன்னார் : “இவர்களை ஒரு நிமிடம்கூட பொய் நகரத்தில் இருக்க வைக்கக் கூடாது. இவர்களுடன் நட்பு கொள்வதன் மூலம் நம்முடைய நாட்டு மக்களின் குணம் மோசமாகிவிடும். அதனால் சீக்கிரமா இவர்களைப் படகில் ஏற்றி ஆற்றில் போக விடுங்கள்!”

பருத்த மனிதர்கள் பிள்ளைகளைக் கைது செய்வதற்காக முன்னோக்கி வந்தார்கள். ஜிம்மியும் உர்ஃபியும் தைரியத்துடன் அவர்களை எதிர்த்து நின்றார்கள். நாஸும், மோகினியும், புத்லியும், ஜிம்மிக்கும், உர்ஃபிக்கும் உதவியாக இருந்தார்கள். ஜிம்மி பலரையும் இடித்தே கொன்றான். எனினும் எல்லோரும் பிள்ளைகள்தானே! எவ்வளவு நேரம் அவர்களால் போரிட முடியும்! இறுதியில் பிள்ளைகள் கைது செய்யப்பட்டார்கள். தடிமனான மனிதர்கள் அவர்களை இரும்புச் சங்கிலியால் கட்டி படகில் ஏற்றி, ஆற்றில் போக விட்டார்கள். படகு நகர ஆரம்பித்தது. பொய் நகரம் பிள்ளைகளின் பார்வையிலிருந்து மறைந்தது!

பிள்ளைகள் கட்டுக்களை அவிழ்ப்பதற்காகக் கடினமாகப் போராடினார்கள். இரும்பு மனிதனான ஜிம்மியால்கூட சங்கிலியை அறுக்க முடியவில்லை. பிள்ளைகள் களைத்துப் போய் படகில் கிடந்தார்கள்.

11

கழுகின் சிறை

ச்சி வேளை ஆனது. சூரியன் தலைக்கு மேலே வந்து நெருப்பைத் துப்ப ஆரம்பித்தது. மோகினியும் நாஸும் பசியையும் தாகத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்தார்கள்.

“உர்ஃபி அண்ணன் ஒரு காட்டுப்புறாவுக்காக தேவையில்லாமல் எங்களை சந்திரனுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்” - மோகினி குறைப்பட்டாள்.

“இந்த வெயில் நம்மைச் சாம்பலாக்கி விடும்” - நாஸ் சொன்னாள்.

“நான் எங்களுடைய முத்து நகரத்தில் எந்தவித கவலையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். இப்போது பனியின் காரணமாக என் உடல் கொதிக்கிறது” - புத்லி சொன்னாள்.

“பனி இல்லை, முட்டாள் பெண்ணே! இது வெயிலால் உண்டாகும் சூடு...” - ஜிம்மி சொன்னான்.

“நீதான் முட்டாள்!” - புத்லி கோபத்துடன் சொன்னாள்.

“நமக்குள் சண்டை போட்டு என்ன பிரயோஜனம்? நாம் கட்டுக்களில் இருந்து தப்பிக்கப் பார்க்கணும்” - உர்ஃபி சொன்னான்.

“எப்படி?”

“எல்லோரும் ஒரே நேரத்தில் சத்தம் போட்டுச் சொல்லணும். மூழ்கி சாகப் போகிறோம் என்று கூறிக் கொண்டே அழணும்.”

“இது பொய் பேசுபவர்களின் நகரம். நாம் சத்தம் போட்டு சொன்னால், யார் நம்புவார்கள்?” - புத்லி சொன்னாள்.

ஜிம்மி சிறிது நேரம் சிந்தித்து விட்டு சொன்னான்: “எங்களைக் காப்பாற்றக் கூடாது! நாங்கள் மூழ்கி இறக்க மாட்டோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்லுவோம்.”

“நாம் பொய் நகரத்தின் எல்லையைத் தாண்டிப் போய்விட்டிருந்தால்...? நாம் கூறுவதை யாராவது கேட்பார்களா?” - நாஸ் கேட்டாள்.

“பெரிய பிரச்சினைதான்! என்னால் பசியை அடக்க முடியவில்லை!” - மோகினி சொன்னாள்.

“நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் சத்தம் போட்டுக் கூறுவோம். யாராவது நமக்கு உதவி செய்ய வராமல் இருக்க மாட்டார்கள்” - உர்ஃபி சொன்னான்.

பிள்ளைகள் கட்டப்பட்ட நிலையில் படகில் படுத்துக் கொண்டே சத்தம் போட்டுக் கூறினார்கள். ஆனால், யாரும் அவர்களுக்கு உதவி செய்ய வரவில்லை. பிள்ளைகள் அழுது அழுது களைத்துப் போய்விட்டார்கள். வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. படகு மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. பிள்ளைகள் சோர்வடைந்து போயினர். சிறிது நேரம் கடந்ததும் ஆகாயத்தில் ஒரு பெரிய கழுகு வட்டமிட்டுப்  பறந்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள்.

“அதோ! விமானத்தைவிட பெரிதாக இருக்கும் ஒரு கழுகு!”

கழுகு மெதுவாக கீழே இறங்கி வந்தது. அதன் உதடு மிகவும் நீளமாக இருந்தது. மிகவும் நீளமான சிறகுகள்! அதன் நகங்கள் வாள்களைப்போல நீண்டிருந்தன. கழுகு நேராக மேலே வந்தபோது ஆகாயத்தில் கார்மேகம் திரண்டிருப்பதைப்போல இருந்தது.

“அய்யோ! இனி என்ன செய்வது?” - நாஸ் பயந்துபோய் கண்களை மூடிக் கொண்டாள்.

கழுகு ஒரே பாய்ச்சலில் படகைத் தன் அலகில் தூக்கிக் கொண்டு ஆகாயத்தை நோக்கி உயர்ந்தது. பிள்ளைகள் இரும்புச் சங்கிலியால் படகோடு சேர்த்து கட்டப்பட்டிருந்ததால் அவர்கள் கீழே விழவில்லை. அவர்களுக்கு கழுகின் சிறகுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. கண்கள் நெருப்பு குண்டத்தைப்போல ஜொலித்துக் கொண்டிருந்தன.

“எனக்கு இந்தக் கழுகின் கண்களைப் பார்க்குறப்போ பயமா இருக்கு” - புத்லி சொன்னாள்.

“இந்தச் சூழ்நிலையில் கழுகின் அலகில் இருந்து படகு கீழே விழுந்தால், சந்திர தேசத்தின் தரையில் விழுந்து துண்டு துண்டா சிதறிப் போயிடுவோம். நம்முடைய எலும்புகூட கிடைக்காது” - ஜிம்மி சொன்னான்.

ஜிம்மி தான் சொல்லிக் கொண்டிருந்ததை முடிக்கக்கூட இல்லை. அதற்குள் கழுகு படகைக் கீழே போட்டது. படகு இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டே மிகவும் வேகமாக கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பிள்ளைகளைப் படகோடு சேர்த்துக் கட்டாமல் விட்டிருந்தால் நிலைமை என்னவாக ஆகியிருக்கும்! கழுகு காற்றின் வேகத்தில் கீழ்நோக்கி வந்தது. படகைத் தன்னுடைய நகங்களுக்கு நடுவில் பிடித்துக் கொண்டு அது மீண்டும் மேல்நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

பிள்ளைகளின் மூச்சு நின்று விட்டிருந்தது. உர்ஃபி மிகவும் சிரமப்பட்டு சொன்னான் : “மரணத்தின் வாயிலிருந்து கஷ்டப்பட்டு தப்பிச்சிருக்கோம்.”

“என் மூளைக்குள் இருந்த பேட்டரியின் செயல்பாடு நின்றுபோய்விட்டது” - ஜிம்மி சொன்னான்.

“இந்த கழுகு பூமியைச் சேர்ந்த உயிரினமாக இருக்க வேண்டும். நம்முடைய மொழி இதற்குப் புரிகிறது என்று நான் நினைக்கிறேன்.” - புத்லி சொன்னாள்.

“இந்த நாசமாப் போற கழுகு நம்மை எங்கே கொண்டு போகுது?” - மோகினி கேட்டாள்.


அடுத்த நிமிடம் கார்மேகம் கர்ஜிப்பதைப்போல இருந்தது. கழுகு நாக்கைத் திறந்தது.

“நான் உங்களை கழுகு ராஜாவின் சந்நிதிக்குக் கொண்டு போகிறேன்.”

கழுகு படகைத் தன்னுடைய நகங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. கழுகு ஒரு நிமிடம்கூட ஓய்வு எடுக்கவில்லை. சூரியன் மறைய ஆரம்பித்தபோது, பறக்கும் வேகம் குறைந்தது. பிறகு கழுகு மெதுவாக கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது. உர்ஃபி ஜிம்மியைப் பார்த்துச் சொன்னான்: “நீ படகின் அருகில்தானே இருக்கிறாய்? நாம் இப்போது எங்கே வந்திருக்கிறோம் என்பதைக் கீழே பார்த்துச் சொல்லு.”

“நாம் எங்கு வந்திருக்கிறோம் என்று எனக்குப் புரியவில்லை. கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நான்கு பக்கங்களிலும் மிகப்பெரிய மலைகள் தெரிகின்றன. அழகான அடிவாரம் தெரிந்தாலும், வயல்கள் கண்களில் படவில்லை. எங்கு பார்த்தாலும் காடுகள்தான் தெரிகின்றன. இல்லை... இல்லை.... இப்போது வயலும் தெரிகிறது. இங்கே நதியும் இருக்கிறது. விவசாயிகளும் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.”

அதற்குமேல் ஜிம்மியால் எதுவும் பேச முடியவில்லை. கழுகு மிகவும் வேகமாக வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெரிய ஒரு கதவின் வழியாகப் பறந்து சென்று ஒரு பெரிய பாறையில் உட்கார்ந்துகொண்டு படகைக் கீழே போட்டது. படகு பாறையில் மோதியது. இரும்புச் சங்கிலிகள் விடுபட்டன. பிள்ளைகள் மெதுவாக வெளியே வந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தார்கள். மிகப்பெரிய ஒரு பாறையில் ஆஜானுபாகுவான ஒரு கழுகு அமர்ந்திருந்தது. படகைத் தூக்கிக்கொண்டு வந்த கழுகைவிட மூன்று மடங்கு பெரியதாக அந்தக் கழுகு இருந்தது. பாறையின் ஒரு பக்கம் அரசாங்கத்தின் கொடி பறந்து கொண்டிருந்தது. கழுகு பிள்ளைகளைப் பார்த்துச் சொன்னது : “கழுகு மகாராஜாவை வணங்குங்கள்.” பிள்ளைகள் கழுகு மகாராஜாவை வணங்கினார்கள்.

கழுகு ராஜாவுக்கு முன்னால் இருந்த பெரிய ஒரு கருங்கல்லாலான தட்டில் என்னவோ வைக்கப்பட்டிருந்தது. கழுகு அவ்வப்போது தன்னுடைய உதட்டால் தட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்தது. ஈக்கள் உண்டாக்கும் சத்தமும் கேட்டது.

“தட்டில் என்ன இருக்கு?” - மோகினி ஆர்வத்துடன் கேட்டாள்.

கழுகு ராஜா உரத்த குரலில் சிரித்தார். பிறகு உர்ஃபியைக் கொத்தித் தட்டில் விட்டார்.

உர்ஃபி திகைத்துப் போய்விட்டான். அந்த தட்டில் சுமார் அறுபது மனிதர்கள் இருந்தார்கள். மனிதர்கள் அல்ல; மனித ஜாடையில் இருந்த மிருகங்கள்! அதிகபட்சம் போனால் அவர்களுக்கு பத்து அங்குலம் உயரம் இருக்கும். தோற்றத்தில் மனிதர்களைப் போலவே இருந்தார்கள்.

பயத்தாலும் ஆச்சரியத்தாலும் உர்ஃபி அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான். சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்து விட்டு உர்ஃபி மெதுவான குரலில் கேட்டான்: “நீங்கள் மனிதர்களா?”

தட்டில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் உர்ஃபியைப் பார்த்தார்கள். இறுதியில் அவர்களில் மிகவும் வயதான மனிதன் கவலை கலந்த குரலில் சொன்னான்: “ஒரு காலத்தில் நாங்களும் மனிதர்களாகத்தான் இருந்தோம்.”

“அப்படியென்றால் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு எப்படி ஆளானீர்கள்? உயரம் குறைவானது எப்படி? ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் இப்படிக் குள்ளர்களாகத்தான் இருந்தீர்களா?”

“இல்லை சகோதரா! ஒரு காலத்தில் நாங்களும் உங்களைப்போல உயரமான மனிதர்களாகத்தான் இருந்தோம். இந்த பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன. இந்த நாட்டை நாங்கள்தான் ஆட்சி செய்தோம். ஆனால்...”

கிழவனால் அதற்குமேல் எதுவும் பேச முடியவில்லை. கழுகு அதற்குள் அவனைக் கொத்தி விழுங்கிவிட்டது. தொடர்ந்து அதே உதட்டால் உர்ஃபியைக் கொத்தியெடுத்து பிள்ளைகளுடன் விட்டது. நாஸ் பயந்து நடுங்கி அழ ஆரம்பித்தாள். கழுகு எங்கே உர்ஃபியைக் கொத்தி விழுங்கிவிடுமோ என்று அவள் நினைத்தாள்.

கழுகு ராஜா கழுகிடம் கேட்டது: “இந்த மனிதர்கள் உனக்கு எங்கே கிடைத்தார்கள்? இவர்கள் நம்முடைய நாட்டைச் சேர்ந்த மனிதர்கள் இல்லை என்று நினைக்கிறேன். இவர்கள் தடித்துக் கொழுத்துப் போய் காணப்படுகிறார்கள். இவர்களில் சிலர் பெண்களாகவும் இருக்கின்றனர்.”

“மன்னா! நான் எல்லையில் பறந்து கொண்டிருந்தேன். பொய் பேசுபவர்களின் நாட்டில் ஓடிக் கொண்டிருக்கும் நதியில் ஒரு படகைப் பார்த்தேன். இவர்கள் அந்தப் படகில் கட்டப்பட்டுக் கிடந்தார்கள்” - கழுகு சொன்னது.

“நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்?” - கழுகு ராஜா பிள்ளைகளைப் பார்த்து கேட்டது:

“நாங்கள் பூமியிலிருந்து வர்றோம்.”

“சரிதான்.... சரிதான்.... புரிந்துவிட்டது. எங்களுடைய சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியிலிருந்து... அப்படித்தானே?”

“பூமி சுற்றவில்லை... சந்திரன்தான் எங்களுடைய பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது” - ஜிம்மி சொன்னான்.

“என்ன புலம்புகிறாய்?” - கழுகு ராஜா கோபத்துடன் கேட்டது: “உங்களுடைய பூமி ஒரு உருண்டை அளவுதான் இருக்கிறது. அதற்கு எங்களுடைய சந்திரனுடன் என்ன ஒற்றுமை இருக்கிறது?” சந்திரன் பூமியைவிடப் பெரியது.”

“சந்திரன் இல்லை. பூமிதான் பெரியது.”

“இல்லை. எங்களுடைய சந்திரன்தான் பெரியது. சுத்தமாகவும் பிரகாசமாகவும் இருக்கும். நீங்கள் வருடந்தோறும் கிரகணம் வரும் பூமியில் வாழ்பவர்கள்தானே?”

“இல்லை சார்!” - மோகினி விரலால் சொடக்குப் போட்டவாறு சொன்னாள்: “எங்களுடைய பூமியை அல்ல... உங்களுடைய சந்திரனைத்தான் வருடந்தோறும் கிரகணம் பாதிக்கின்றது.”

“அதிகம் பேசினால் கொத்தி விழுங்கிடுவேன்.”

கழுகுராஜா வாயைத் திறந்தது. ஒரு கிணறு திறந்ததைப்போல மோகினிக்குத் தோன்றியது. அதில் இருந்த இருட்டுக்குள்ளிருந்து நீளமான நாக்கு மோகினியின் குருதியைக் குடிப்பதற்காக வெளியே நீண்டு வந்தது. மோகினி பயந்துபோய் பின்னோக்கி நகர்ந்தாள்.

கழுகு ராஜா கழுகைப் பார்த்துப் கட்டளையிட்டது: “இவர்களைக் கொண்டு போய் சிறையில் அடை. நாளைக்குக் காலையில் நான் இவர்களை உணவாகச் சாப்பிட வேண்டும். நான் ஆண்களைச் சாப்பிடுகிறேன். ராணி பெண்களைச் சாப்பிடுவாள். நாளைக்குக் காலையில் சாப்பிடும் நேரத்தில் சந்திரன் பெரியதா இல்லாவிட்டால் பூமி பெரியதா என்பதை இவர்களுக்குக் காட்டுகிறேன். மனிதன் பெரியவனா இல்லாவிட்டால் கழுகு பெரியதா? ஹ... ஹ... ஹ... ”

கழுகுராஜா சிறிது நேரத்தில் தட்டில் இருந்த எல்லா மனிதர்களையும் கொத்தி விழுங்கிவிட்டு, அரண்மனையை நோக்கிப் பறந்து சென்றது.

கழுகு ராஜா போன பிறகு, கழுகு மனிதர்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த குள்ளர்களுக்குக் கட்டளை இட்டது: “பூமியிலிருந்து வந்திருக்கும் இந்த மனிதர்களை அரசு சிறையில் அடையுங்கள்!”


மரம் கொண்டு உண்டாக்கப்பட்ட ஒரு வண்டி வந்தது. குதிரைக்கு பதிலாக குள்ள மனிதர்களை அந்த வண்டியில் கட்டியிருந்தார்கள். உர்ஃபி, நாஸ், மோகினி, புத்லி, ஜிம்மி ஆகியோரை கழுகு தன்னுடைய அலகில் கொத்தி எடுத்துக் கொண்டு போய் வண்டியில் போட்டுவிட்டுக் கதவை அடைத்தது. ஒரு கழுகு குஞ்சு சாட்டையைக் கொண்டு அடித்து வண்டியை ஓட்டியது. குள்ளர்கள் வண்டியை இழுத்துக் கொண்டு சிறையை நோக்கிச் சென்றார்கள்.

குழந்தைகளுக்கு இரவில் உறங்க முடியவில்லை. எப்படி உறங்க முடியும்? காலையில் கழுகு ராஜா அவர்களைச் சாப்பிட ஆரம்பித்து விடும். சிறையில் காவல் காத்துக் கொண்டிருந்த குள்ள மனிதர்கள் அவர்கள் சாப்பிடுவதற்காக கொஞ்சம் புற்களைப் போட்டு விட்டுச் சென்றிருந்தார்கள். அந்தப் புல் தங்களுக்குத்தான் போடப்பட்டிருக்கிறது என்ற விஷயம் பிள்ளைகளுக்கே தெரியாது. சிறையில் இருந்த ஒரு குள்ள மனிதன் புல்லைத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்தபோது, அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“நீங்கள் மனிதராக இருந்தும், புல்லைத் தின்னுகிறீர்களோ?” - அவர்கள் கேட்டார்கள்.

“பிறகு எதைத் தின்பது?” - குள்ள மனிதனுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“ரொட்டியைச் சாப்பிட வேண்டியதுதானே!”

“ரொட்டியா? அப்படியென்றால் என்ன?”

அந்தக் குள்ள மனிதனுக்கு அருகில் வெள்ளை நிறத்தில் தாடியைக் கொண்ட ஒரு கிழவன் இருந்தான். ரொட்டி என்ற வார்த்தையைக் கேட்டதும், அவன் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய உடல் நடுங்கியது. சிறிது நேரம் கழித்து அந்த கிழவன் குழந்தையைப்போல தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். பிள்ளைகள் அவனுக்கு ஆறுதல் கூற முயற்சித்தார்கள். அழுவதற்கான காரணம் என்ன என்று அவர்கள் கேட்டாரகள்.

கிழவன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சொன்னான்: “இது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நிறைந்த கதை. ஆபத்தான இந்தக் கழுகின் உதட்டிலிருந்து எப்படியாவது தப்பித்து உங்களுடைய கடுமையான முயற்சியால் திரும்பிப் போக உங்களால் முடியும் என்று நினைத்துத்தான் நான் இந்தக் கதையைக் கூறுகிறேன். அன்புள்ள நண்பர்களே! குள்ளர்களான நாங்களும் ஒரு காலத்தில் உங்களைப்போல சராசரி உயரத்தைக் கொண்ட மனிதர்களாகத்தான் இருந்தோம். ஒரு காலத்தில் நாங்களும் சுதந்திரமானவர்களாக இருந்தோம். இந்தப் பள்ளத்தாக்கில் எல்லா இடங்களுக்கும் போவதற்கான சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. ஆட்சி, சட்டம், நியாயம், நேர்மை ஆகிய விஷயங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் நன்மைக்காக செயல்படுவான். எங்களுடைய இந்த நாட்டில் பொய், துரோகம், திருட்டு, கொலை எதுவுமே இல்லாமல் இருந்தது. இங்கிருந்த பூமி மிகவும் செழிப்பானதாக இருந்தது. அதனால் ஒவ்வொரு மனிதனுக்கும் வயிறு நிறைய உணவு கிடைத்துக் கொண்டிருந்தது. யாருக்கும் யார் மீதும் வெறுப்போ பொறாமையோ இருந்ததில்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு ராணுவம் கிடையாது. ராணுவம் இல்லாமல் இருந்ததால் ஆயுதங்களும் தேவைப்படவில்லை. எங்களுடைய சமுதாயம் இப்படியே ஐயாயிரம் வருடங்கள் விவசாயம் செய்து அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்தது.

பிறகு இயற்கைக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. எங்களுடைய நாட்டிற்கு இரண்டுபேர் வந்தார்கள். அவர்களில் ஒன்று தன்னைக் கழுகுராஜா என்றும்; இன்னொன்று தன்னைக் கழுகு என்றும் கூறிக் கொண்டன. அவை ரத்ததாகம் கொண்டவையாக இருந்தன. எல்லா நேரங்களிலும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தன. அதற்கு முன்பு எங்களுடைய நாட்டிலிருந்த யாரும் கழுகைப் பார்த்தது இல்லை. அதனால் நாங்கள் குறிப்பிடத்தக்க பறவை என்று நினைத்து அவற்றிற்கு தானியத்தைத் தின்பதற்காகக் கொடுத்தோம். ஆனால், இரண்டு கழுகுகளும் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கூறின: ‘நாங்கள் கழுகுக் குஞ்சுகள். நாங்களே இரையை வேட்டையாடி சாப்பிடுவோம்’ என்று. தொடர்ந்து அவை இரண்டும் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறக்க ஆரம்பித்தன. இறுதியில் ஒரு கழுகு மனிதக் குழந்தையைக் கொத்தி எடுத்தது. அந்தக் குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தன.

இன்னொரு கழுகும் அதே காரியத்தைச் செய்தது. அவற்றின் அக்கிரமத் தனமான செயல்களும் தைரியமும் எங்களுடைய இளைஞர்களின் மனதை மிகவும் பாதித்துவிட்டன. சமுதாயம் இரண்டு பிரிவாகப் பிரிந்தது. ஒரு பிரிவினர் கழுகு ராஜாவையும் இன்னொரு பிரிவினர் கழுகையும் வழிபட ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் இடையே சண்டையும் போரும் அதிகரிக்க ஆரம்பித்தன. பூமி, மரம், வயல், நீர், காற்று என்று ஒவ்வொன்றுக்காகவும் ஆரம்பித்த போர் அச்சமடையக்கூடிய அளவிற்குப் பெரிதானது. இந்தப் பள்ளத்தாக்கில் ஐயாயிரம் வருடங்கள் போர் நடந்தது. அந்தக் காலம் முழுவதும் நாங்கள் தொடர்ந்து கழுகுகளை வழிபட்டுக் கொண்டிருந்தோம். அவற்றை புண்ணிய உயிராக நினைத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் அடிமைகளின் ரத்தத்தையும் மாமிசத்தையும் அவற்றுக்குப் படையலாகப் படைத்தோம். கழுகுகள் அதைச் சாப்பிட்டு தடித்துக் கொழுத்தன. இறுதியில் ஒருநாள் கழுகு வம்சம் மனித சமுதாயத்தை தோல்வியடையச் செய்தது. அன்று முதல் இங்கு கழுகின் ஆட்சி செயல்பட ஆரம்பித்தது. அவை எங்களை வளர்த்து சாப்பிடுகின்றன. மனித வம்சம் மிகவும் மோசமான நிலைமையை அடைந்து குள்ளர்களை விட சிறியதாக ஆகிக் கொண்டிருக்கிறது. எங்களால் இப்போது விவசாயம் செய்ய முடியவில்லை. கழுகுகள் எங்களை வயலில் இருக்கும்போது பிடித்துத் தின்கின்றன. பள்ளத்தாக்கு காடாக மாறிவிட்டது. நாங்கள் புற்களைத் தின்று மீதமிருக்கும் உயிரைக் காப்பற்றிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு காலை உணவாக அனேகமாக நான்தான் இருப்பேன்.”

கிழவன் அழ ஆரம்பித்தான். அவனுடைய கதையைக் கேட்டு மோகினி, நாஸ், புத்லி ஆகியோரும் பயந்து நடுங்கி அழ ஆரம்பித்தார்கள்.

“புறாக்களை அடித்து வீழ்த்துவதுதானே கழுகுகளின் வேலை?” - ஜிம்மி கேட்டான்.

‘புறாக்களை அடித்து வீழ்த்துவதில் ஆனந்தம் குறைந்தபோது மனிதர்களை வீழ்த்த அது ஆரம்பித்திருக்கலாம். இன்னொரு உயிரை வீழ்த்துவதில்தான் ஆனந்தம் என்னும்போது பிறகு அது புறாவுடன் மட்டும் என்று எப்படித் தன் செயலை நிறுத்திக் கொள்ளும்?” - உர்ஃபி சொன்னான்.

“உங்களுடைய அறிவை வைத்து இங்கு எதுவும் பண்ண முடியாது. நீங்கள் நாளைக்கு காலையில் கழுகுக்கு உணவாவது உறுதி” - கிழவன் சொன்னான்.

“வேண்டிக்கோங்க பெரியவரே!” - ஜிம்மி சொன்னான்: “நாங்கள் கள்ளங்கபடமில்லாத பிள்ளைகள். நாங்கள் சிறிய ஒரு புறாவைத் தேடித்தான் வந்தோம். நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்ய நினைக்கவில்லை. அதனால் எங்களுக்கும் கேடு செய்ய வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.”


“யாராவது நினைத்தால்...?” - கிழவன் கேட்டான்.

“அவரவர்களின் கெட்ட செயலுக்கு அவர்களே அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும்” - ஜிம்மி மிடுக்கான குரலில் சொன்னான். அவனுடைய விரல்கள் உருக்குக் கம்பிகளைப்போல இருந்தன.

குழந்தைகள் அன்று சிறிதுகூட தூங்கவில்லை. கண் விழித்துக் கொண்டும் இல்லை. வினோதமான ஒரு சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஜிம்மி யோசித்து ஒரு திட்டம் தீட்டினான். அவர்களை அடைத்து வைத்திருந்த அறையில் நிறைய கயிறுகள் இருந்தன. கைதிகளைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் கயிறு அது ஜிம்மி அந்தக் கயிறுகளை எடுத்து ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து பெரிய கயிறாக ஆக்கினான். கயிறு தயாரான பிறகு, சிறிது இடைவெளி விட்டு நின்று கொண்டு ஒவ்வொருவரும் அந்தக் கயிறைத் தங்களுடைய இடுப்பில் கட்டிக் கொண்டார்கள். கயிறின் ஒரு முனையில் ஜிம்மி, அவனுக்குப் பின்னால் நாஸ், பிறகு மோகினி, அவளுக்குப் பின்னால் புத்லி, எல்லோருக்கும் கடைசியாக உர்ஃபி. எல்லோரும் ஒரே கயிறில் கட்டப்பட்டுவிட்ட பிறகு ஜிம்மி மற்றவர்களிடம் நிம்மதியாகத் தூங்கும்படி சொன்னான். ஆனால், யாருக்கும் தூக்கம் வரவில்லை. கழுகின் கூர்மையான உதடு அவர்களின் கண்களுக்கு முன்னால் தெரிந்தது.

சூரியன் உதயமானவுடன்,  சிறையின் கதவு திறக்கப்பட்டது. குழந்தைகளை மீண்டும் அந்த வண்டியில் எற்றிக் கொண்டு போய் ஒரு தட்டில் இருக்கச் செய்து, கழுகு ராஜாவுக்கு முன்னால் கொண்டுபோய் வைத்தார்கள்.

“இரவை எப்படிச் செலவழித்தீர்கள்?” - கழுகு சிரித்துக் கொண்டே கேட்டது.

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இரவைக் கழித்தோம்” - ஜிம்மி அமைதியான குரலில் சொன்னான்.

“சிறிது நேரம் கழித்து நீங்கள் நிரந்தரமாக உறங்கலாம்” - கழுகு கேலி கலந்த குரலில் சொன்னது.

“நாங்கள் உங்களுக்கு சமாதானத்தைப் பற்றிய செய்தியைக் கூறுவதற்காக வந்தோம். நீங்கள் பெரிய கழுகு. சாதாரண மனிதர்களை ஆக்கிரமிப்பது உங்களுக்குப் பெருமை அல்ல.”

“ஒரு பலமானவன் இன்னொரு பலவீனமானவனை தனக்குக் கீழே கொண்டு வருவதில் ஆக்கிரமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது உலகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியது தான்” - கழுகு சொன்னது.

“உலகத்தில் இதற்கு நேர்மாறாகக்கூட நடக்கலாம். இதைவிடப் பெரிய அளவில்...”

கழுகு தன்னுடைய அலகால் ஜிம்மியைக் கொத்திக் தூக்கியது. ஜிம்மியுடன் சேர்ந்து மற்ற பிள்ளைகளும் ஒரே கயிறில் கட்டப்பட்டிருந்ததால் அவர்களும் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

“இந்த கயிறு ஏன் கட்டப்பட்டிருக்கிறது?” - கழுகு கேட்டது.

“வாழும்போது ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம். இறக்கும்போது ஒன்றாகச் சேர்ந்து இறப்போம்” - ஜிம்மி பதில் சொன்னான்.

கழுகு தன்னுடைய அலகை மெதுவாக அசைத்தது. ஜிம்மி கழுகின் வயிற்றுக்குள் போனான். வயிற்றை அடைந்தவுடன் ஜிம்மி தன்னுடைய கைகளை விரித்தான். கழுகு எல்லா பிள்ளைகளையும் விழுங்கியது. ஆனால் ஜிம்மி தன்னுடைய கைகளை விரித்துப் பிடித்திருந்ததால், கழுகால் பிள்ளைகளை சாப்பிட முடியவில்லை. ஜிம்மி தன் உடன் பிறப்புகளை எச்சரித்தான்: “கழுகை வெளியில் இருந்துகொண்டு நம்மால் எதிர்த்து நிற்க முடியாது. உள்ளே இருந்துகொண்டு நம்மால் மோத முடியும்.”

“அது எப்படி?”

“கழுகு நம்மை வயிற்றுக்குள் கொண்டு வந்து ஜீரணிக்க முயற்சிக்கும். அதன் அலகு உருக்கைவிட பலமானது. அலகிற்குள் வைத்து மென்றால் நாம் சட்னி ஆகிவிடுவோம். நீங்கள் என் பின்னால் வாங்க. நான் கையை ஆட்டும்போது கழுகு தன் அலகை அசைக்கும். அதற்குள் நாம் அதன் வயிற்றுக்குள் போக வேண்டும்.”

“ஒன்று... இரண்டு... மூன்று...” என்று கூறி ஜிம்மி தன் கையைத் தாழ்த்தினான். தொடர்ந்து கயிறைப் பிடித்து இழுத்துக்கொண்டு வயிற்றுக்குள் அவன் வேகமாக குதித்தான். மீதி இருந்தவர்களும் வயிற்றுக்குள் சென்றார்கள்.

தாங்கள் ஒரு பெரிய குகைக்குள் இருப்பதைப்போல் பிள்ளைகள் உணர்ந்தார்கள். ஆழமான கிணற்றுக்குள் குதித்த உணர்வு அவர்களுக்கு உண்டானது. பாதங்கள் எதையும் தொடவில்லை. ஜிம்மி நீந்தியவாறு சொன்னான் : “இது கழுகின் வயிறு. நான் இதை உருக்கு விரல்களால் கிழிக்கிறேன்.”

கழுகு வேதனையால் இப்படியும் அப்படியுமாக உருள ஆரம்பித்தது. “அய்யய்யோ! என் வயிற்றுக்கு என்ன ஆனது?” - அது கத்தியது.

12

மந்திரவாதிகளின் நாடு

ஜிம்மி தன்னுடைய செயலைத் தொடர்ந்தான். புத்லி செம்பு கொண்டு உண்டாக்கப்பட்டவள் அல்லவா? அவளும் ஜிம்மிக்கு உதவினாள். அவர்கள் இருவரும் சேர்ந்து கழுகின் வயிற்றைக் கிழித்தார்கள். தொடர்ந்து இதயத்தையும் கிழித்துத் துண்டு துண்டாக்கினார்கள். பிறகு வயிற்றைப் பிளந்து குழந்தைகள் எல்லோரும் வெளியே வந்தார்கள். கழுகு ராஜா அவர்களின் கண்களுக்கு முன்னால் துடிதுடித்து இறந்தது.

“எல்லா ஆக்ரமிப்பாளர்களும் வெளியிலிருந்து பார்க்கும்போது மிகவும் பலம் கொண்டவர்களைப் போலத் தோன்றுவார்கள். ஆனால் உள்ளுக்குள் அவர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருப்பார்கள்” - ஜிம்மி தொடர்ந்து அடுத்த கழுகைப் பார்த்தான். “உங்களுடைய முடிவு என்ன? எங்களைச் சாப்பிடணுமா?” என்று கேட்டான்.

கழுகு தன் அலகைத் திறந்து வைத்துக்கொண்டு ஜிம்மியையே பார்த்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக அதன் கண்களில் பயத்தின் நிழல் படர்ந்தது. தன்னுடைய ராஜாவின் இறந்த உடலைப் பார்த்த கழுகு தன் தலையைக் குனிந்து கொண்டது. பிறகு குழந்தைகளுக்கு முன்னால் நின்று கொண்டு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டது.

ஜிம்மி அதற்குப் பிறகும் வெறுமனே இருக்கவில்லை. அவன் சொன்னான் : “நீங்கள் எங்களைச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

கழுகு சிறகுகளை விரித்துக்கொண்டு சொன்னது : “நான் புறப்படுகிறேன். இனி ஒருமுறைகூட இந்தப் பக்கம் நான் வர மாட்டேன்.” கழுகு வானத்தில் பறந்தது. தொடர்ந்து பார்வையிலிருந்து அது மறைந்தும் போனது.

கழுகுகளின் தோல்விச் செய்தி காட்டுத் தீயைப்போல பள்ளத்தாக்கில் பரவியது. காட்டில் மறைந்திருந்த மனிதர்கள் சுதந்திர கோஷங்களை எழுப்பியவாறு வெளியே வந்தார்கள். எல்லோரும் குழந்தைகளைப் புகழ ஆரம்பித்தார்கள். சிறையறைகளின் கதவுகள் திறக்கப்பட்டன. பல வருடங்களாக ஒரு மணி அளவில்கூட தானியம் விளையாமலிருந்த வயல்களில் வேலைகள் தொடங்கின.

கிழவன் ஜிம்மியையும் மற்ற குழந்தைகளையும் பாராட்டிக் கொண்டு சொன்னான் : “அடிமைத்தனம் எங்களைக் குள்ளர்களாக ஆக்கிவிட்டது. மிகவும் சீக்கிரமே மீண்டும் மனிதர்களுக்கு நிகரானவர்களாக வந்துவிடுவோம்.”

பள்ளத்தாக்கில் ஏழு நாட்கள் சுதந்திர நாளைக் கொண்டாடினார்கள். அவ்வளவு நாட்களும் குழந்தைகள் அந்த நாட்டு மக்களின் விருந்தாளிகளாகத் தங்களுடைய நாட்களைச் செலவிட்டார்கள். அதற்குப் பிறகு உர்ஃபி அந்தக் கிழவனிடம் சொன்னான்:


“இனிமேல் எங்களைப் போக அனுமதிக்க வேண்டும். நாங்கள் அமைதியை வலியுறுத்தும் புறாவைத் தேடித்தான் இங்கே வந்தோம். அது எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத தெரியுமா? உங்களுடைய நாட்டில் இருப்பவர்களில் யாராவது அந்தப் புறாவைப் பார்த்திருக்கிறார்களா?”

“ஒரு புறா இங்கே வந்தது. அதன் பாட்டு மிகவும் இனிமையானதாகவும் சோகம் நிறைந்ததாகவும் இருந்தது. அதனுடைய பாட்டைக் கேட்டு நாங்கள் அழுதுவிட்டோம். எங்களுடைய இதயத்தில் முன்னால் நாங்கள் இருந்த நிலைமை தோன்ற ஆரம்பித்தது. நாங்களும் சுதந்திரமாக வாழ்ந்த காலத்தின் நினைவுகள்! அந்தப் புறா ஒரு இரவு வேளையில் இங்கிருந்த சிறையறையிலும் இருந்தது. அதற்கு எந்த இடத்திற்குச் செல்லவும் தடையில்லை. ஒரு கதவுகூட அதற்கு அடைக்கவில்லை. நாங்கள் அழுதுகொண்டே அதை இங்கேயே இருக்க வைக்க முயற்சித்தோம். ஆனால், அந்தப் புறா நாங்கள் சொன்னதைக் கேட்கவில்லை. “உங்களுடைய பள்ளத்தாக்கில் அக்கிரமங்களும் போரும் இருக்கின்றன. அக்கிரமங்களும் அடிமைத்தனமும் இருக்கும் இடத்தில் என்னால் வாழ முடியாது” என்று கூறிவிட்டு அது இங்கிருந்து போய்விட்டது. தெற்கு திசையை நோக்கி அது சென்றது.”

“தெற்கு திசையில் என்ன நாடு இருக்கிறது?” - உர்ஃபி கேட்டான்.

“தெற்கு திசையில் எந்தச் சமயத்திலும் போகக்கூடாது” - கிழவன் பயம் கலந்த குரலில் தொடர்ந்து சொன்னான்: “தெற்கு திசையில் மந்திர வாதிகளின் நாடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். வெளியில் இருந்து வருபவர்களை மந்திரங்களின் உதவியுடன் கருங்கல்லாக மாற்றி விடுவார்களாம். அங்கு போனவர்களில் யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை.”

“புறா அங்கு போயிருப்பதாக இருந்தால் நாங்களும் போவோம். எந்த வேலைக்காக நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தோமோ அந்த வேலையை முடிக்காமல் இருக்க முடியாது” - உர்ஃபி உறுதியான குரலில் சொன்னான்.

குழந்தைகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் கிழவன் சொன்னதைக் கேட்கவில்லை. கிழவன் அறிவுறுத்திக் கூறிய பிறகும், சமாதானப் புறாவைத் தேடி குழந்தைகள் மந்திரவாதிகளின் நாட்டிற்குப் போக முடிவு செய்தபோது, கழுகுப் பள்ளத்தாக்கில் இருந்த மக்கள் அவர்களுக்கு நன்றி கூறினார்கள். அவர்கள் பூமியிலிருந்து சந்திரனுக்கு வந்து அங்கிருந்த மக்களை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்தார்கள். பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் விருந்தாளிகளைத் தங்களுடைய நாட்டின் எல்லைவரை கொண்டு போய் விடுவதற்காக ஏழு குதிரைகளைப் பூட்டக்கூடிய ரதத்தைத் தயார் பண்ணினார்கள். அதில் உணவு வகைகளையும் பொருட்களையும் கொண்டு வந்து நிறைத்தார்கள்.

ரதம் ஐந்து பகலிலும் ஐந்து இரவு வேளைகளிலும் பள்ளத்தாக்கு வழியாகப் பயணம் செய்தது. இறுதியில் எல்லையை அடைந்தது. அங்கு கழுகுப் பள்ளத்தாக்கு முடிவடைந்தது. அத்துடன் செழிப்பானதும், கனிகள் நிறைந்ததுமான பகுதி முடிவுக்கு வந்தது. இப்போது குழந்தைகளுக்கு முன்னால் பாலைவனம் மட்டுமே இருந்தது. அதன் இன்னொரு பக்கத்தைப் பார்க்கவே முடியவில்லை. எனினும், அந்த பாலைவனத்தில் மண்ணும் மணலும் இல்லை. எங்கு பார்த்தாலும் வெள்ளி கொண்டு உண்டாக்கப்பட்ட மணல் விரிக்கப்பட்டதைப்போல இருந்தது. மோகினி ஒரு பிடி மணலை வாரி எல்லோரிடமும் கொடுத்தாள்: “இதோ, வெள்ளி மணல்!”

“இந்தப் பகுதியின் பெயர் என்ன?” - உர்ஃபி கேட்டான்.

“இது சந்திரப் பாலைவனம். இந்தப் பாலைவனம் முடிவடையும் இடத்திலிருந்து மந்திரவாதிகளின் நாட்டின் எல்லை ஆரம்பிக்கிறது” - ரதத்தை ஓட்டிக் கொண்டிருந்த கிழவன் சொன்னான்.

இந்தப் பாலைவனத்தைக் கடப்பதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?

ஏழு நாட்கள் பயணம் செய்து மந்திரவாதிகளின் நாட்டின் எல்லையை அடையலாம். இனியும் இரவு மீதமிருக்கிறது. சூரியன் உதிக்கவில்லை. சந்திரப் பாலைவனம் முடியும் இடத்தில் பெரிய ஒரு கேட் இருந்தது. அதன்மேல் மின்னிக் கொண்டிருக்கும் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது: ‘மந்திரநாடு - எங்களுடைய நாட்டிற்குள் நுழைய வேண்டுமென்றால் கீழே எழுதப்பட்டிருக்கும் சட்டங்களை மிகவும் கவனமாகப் படியுங்கள்!

1. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவது சட்ட விரோதமானது.

2. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைபவர்கள் ஈக்களாக மாற்றப்படுவார்கள்.

3. தீப்பெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பொருட்களை அதாவது நெருப்பு பற்றக்கூடிய பொருட்களை சுங்க இலாகா பறிமுதல் செய்துவிடும்.

4. பகல் நேரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நீங்கள் சுற்றலாம். இரவு வேளையில் காவல் நிலையத்தில் தூங்க வேண்டும்.

5. எவ்வளவு நாட்கள் தங்குகிறீர்களோ அவ்வளவு நாட்களுக்குத் தேவையான உணவை வரும்போதே கொண்டு வரவேண்டும்.

6. இந்த நாட்டுக்குள் நுழைய ஏதாவதொரு வித்தையைத் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். வித்தை தெரிந்திராதவர்கள் காதைப் பிடித்து முயல்களாக மாற்றப்படுவார்கள்.

7. பெண்களுக்கு வித்தை தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. காரணம் ஒவ்வொரு பெண்ணுமே வித்தைக்காரிகள்தான். அதனால் அவர்களுடைய நுழைவு இலவசமாக்கப்படுகிறது.

மந்திர அரசாங்கத்திற்காக

சர்வாதிகாரி (கையொப்பம்)

“ஹ... ஹ... ஹ..! அற்புதம்!” - மோகினி சட்டங்களை வாசித்து விட்டுச் சொன்னாள்: “பெண்களாகிய நாங்கள் மந்திர வித்தைகளைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆண்களாகிய உங்களுக்கு மந்திர வித்தை தெரியாமலிருந்தால், உள்ளே நுழைய முடியாது.”

“பார்ப்போம்...” - உர்ஃபி சொன்னான். “முன்னோக்கிப் போங்க...”

“நில்லுங்க...”

குழந்தைகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். கேட்டில் ஒரு சந்நியாசி நின்றிருந்தார். அவருடைய கையில் தண்டும், கமண்டலமும், மந்திர மாலையும் இருந்தன. முழங்கால்வரை இருக்கும் வெள்ளை நிற தாடி! வெள்ளியாலான ஆடையை அணிந்திருந்தார். பாதங்கள் நிர்வாணமாக இருந்தன. சந்நியாசியின் பாதங்களைப் பார்த்து நாஸ் பயந்துவிட்டாள். பாதங்கள் கருங்கல்லால் உண்டாக்கப்பட்டிருந்தது.

“இவை ஏன் இப்படி இருக்கின்றன?” - உர்ஃபி சந்தியாசியிடம் கேட்டான்.

சந்நியாசி தன்னுடைய கடந்தகால வரலாற்றைக் கூற ஆரம்பித்தார்: “நீங்கள் கடந்து வந்த பாலைவனம் நூறு வருடங்களுக்கு முன்னால் நல்ல செழிப்பான பகுதியாக இருந்தது. இங்கு பகல் வேளைகளில் சூரியன் உதித்துக் கொண்டிருந்தது. நான் இந்த நாட்டின் மன்னராக இருந்தேன். மகாத்மா என்பது என்னுடைய பெயர். ஒருநாள் இரவு நான் என்னுடைய இருபத்து இரண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தேன்.  நான்கு பக்கங்களிலும் பூமியின் மங்கலான வெளிச்சம் பரவியிருந்தது. ஒரு நடனப் பெண் மிகவும் அழகாக நடனமாடுவதை நான் பார்த்தேன். அவள் சந்திர தேசத்தைச் சேர்ந்தவள் என்று அப்போதே தோன்றியது. இல்லாவிட்டால் பூமியைச் சேர்ந்த அப்சரஸாக இருக்க வேண்டும்” - சந்நியாசி நாஸ், மோகினி ஆகியோரைப் பார்த்துக்கொண்டே சொன்னார் : “அந்தப் பெண் உங்களைப்போல அழகற்றவளாக இல்லை.”


“மகாத்மா, நீங்க என்ன சொல்றீங்க? நாங்கள் பூமியில் இருந்து வந்திருக்கோம்” - மோகினி கோபமான குரலில் சொன்னாள்.

“சுத்த பொய்?” - சந்நியாசியும் கோபத்துடன் சொன்னார்: “பூமியில் இருப்பவர்கள் அப்சரஸைப்போல இருப்பார்கள். என்னுடைய பாட்டி அங்குள்ள கதைகளை எனக்குக் கூறியிருக்கிறாள்.”

“எங்களுடைய பாட்டிமார்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?” நாஸ் கோபத்துடன் சொன்னாள்: “சந்திரனில் அப்சரஸ்கள் வசிக்கிறார்கள் என்று எங்களுடைய பாட்டிமார்கள் சொல்லி இருக்கிறார்கள். தூரத்திலிருந்து வரும் வாத்திய இசையைக் கேட்பதைப்போல! இங்கு வந்த பிறகுதான் அப்சரஸ்கள் எப்படி இருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது - கருங்கல்லாலான பாதங்களும் முழங்கால் வரை இருக்கும் தாடியும்...”

சந்நியாசி மெதுவான குரலில் சொன்னார் : “என்னை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தது அந்த நாசமாப் போன மந்திரவாதிகள்தான்.”

“அது எப்படி?” - ஜிம்மி கேட்டான். சந்நியாசி ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே தொடர்ந்து சொன்னார்: “நான் அந்த நாசமாப் போன நடனப் பெண்ணுக்குத் திருமண விஷயமாக செய்தி அனுப்பினேன். அவள் அதை நிராகரித்துவிட்டாள். நான் மிகவும் வற்புறுத்தவே அவள் ஒரு நிபந்தனையின் பேரில் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள். அந்த நிபந்தனை என்ன என்று நான் கேட்டேன்.”

‘உங்களுக்குச் சொந்தமான நாட்டை மந்திர வித்தைக்காரனுக்கு எழுதிக்கொடுத்தால், திருமணத்துக்கு சம்மதிக்கிறேன்’ - நடன மங்கை சொன்னாள்.

‘இந்த நாடு என்னுடையதல்ல. மக்களுக்குச் சொந்தமானது. நான் இதை வேறொரு மனிதனுக்கு எப்படி எழுதித் தர முடியும்?’

‘மந்திர சக்தியால் உங்களுடைய மக்களை மாற்ற எனக்கு அனுமதி தாருங்கள்’ - நடனப்பெண் சொன்னாள்.

‘அது நடக்காத விஷயம். மக்கள் மாறினால் நான் ஆட்சி அதிகாரத்தை இழக்க வேண்டியதிருக்கும்.’

‘அப்படியென்றால் எனக்கு தங்கத்தாலான ஒரு லட்சம் டாலர்களைத் தாருங்கள்.’

‘என்னுடைய நாட்டில் வெள்ளி மட்டுமே இருக்கிறது. தங்கம் எங்கேயிருந்து கிடைக்கும்?’

‘சரி... அது இருக்கட்டும். உங்களை மனப்பூர்வமாகக் காதலித்தால், நீங்கள் எனக்காக என்ன செய்வீர்கள்?’

‘உனக்காக அழ என்னால் முடியும்.’

‘வேறு என்ன செய்ய முடியும்?’

‘உன்னைக் காதலிக்க முடியும்.’ - என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு சிறிது நேரம் சிந்தித்த அவள் கேட்டாள்: ‘என்னுடைய நாட்டிற்கு வந்து எல்லோருக்கும் முன்னால் இருந்துகொண்டு இந்த வார்த்தைகளைக் கூற முடியுமா?’

‘கட்டாயம் கூறுகிறேன்’- நான் சொன்னேன்.

அதைக்கேட்டு அவள் புன்னகைத்துக் கொண்டே நடனமாட ஆரம்பித்தாள். நடனம் ஆடிக்கொண்டே அவள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய அற்புதமான நடனத்தையும் அழகான முகத்தையும் பார்த்து மதிமயங்கிப் போய் அவளுடன் மந்திர நாட்டை அடைந்தேன். நான் எங்கு இருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நடன மங்கை என்னைத் தன்னுடைய நாட்டிற்கு அழைத்துச் சென்று நகரத்தின் மிகப்பெரிய வீதியில் இருந்து கொண்டு சொன்னாள் : ‘நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறுங்கள்.’

நான் நான்கு திசைகளிலும் பார்த்தேன். மந்திர நாட்டில் ஏராளமான அழகிய பெண்கள் இருந்தார்கள். அப்சரஸ்களைப் போன்ற இளம்பெண்கள்! காரணம் - எல்லோரையும் மந்திர சக்தியைக் கொண்டுதானே படைத்திருக்கிறார்கள்! அதனால் மிகவும் அழகானவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அவர்களுக்கு முன்னால் அந்த நடனப்பெண் அழகற்றவளைப்போல இருந்தாள். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று கூற என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை. சத்தியம் பண்ணி அதைக் கூற வேண்டும் என்று அவள் என்னைக கட்டாயப்படுத்த அரம்பித்தாள். அதனால் நான் மனமே இல்லாமல் சொன்னேன் - ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று. அடுத்த நிமிடம் வெட்ட வெளியிலிருந்து ஒரு குரல் கேட்டது.

‘வஞ்சகன்! ஏமாற்றுப் பேர்வழி! எங்களுடைய நாட்டின் கள்ளங்கபடமற்ற பெண்ணை ஏமாற்றவதற்காக வந்திருக்கிறாயா? உன்னை அம்மிக்கல்லாக ஆக்கியிருக்கிறேன். உனக்கு எந்த அளவிற்கு காதல் உணர்வு இருக்கிறதோ அந்த அளவிற்கு கல்லாக ஆக்கியிருக்கிறேன்.’

13

கடம் படம் பா !

ந்த நேரத்தில் என்னுடைய பாதங்கள் கல்லாக மாறின. என்னுடைய நிலையைக் கண்டு அந்த நடனப் பெண் அழ ஆரம்பித்தாள். ‘உங்களுடைய காதல் உண்மையானது அல்ல. உண்மையானதாக இருந்திருந்தால், உங்களை நான் என்னுடைய வீட்டிற்குக் கொண்டு போயிருப்பேன்.’

‘அது எப்படி?’ - நான் கேட்டேன்.

‘உங்களுடைய காதல் உண்மையானதாக இருந்திருந்தால் அந்த வார்த்தைகளைக் கூறிய கணத்திலேயே உங்களுடைய பாதம் முதல் தலை வரை கல்லாக மாறியிருக்கும். நான் உங்களை எடுத்து வீட்டிற்குக் கொண்டுபோய் கணவனாக நினைத்து வழிபட்டிருப்பேன். ஆனால் நீங்கள் ஒரு வஞ்சகன்! உங்களுடைய பாதங்கள் மட்டுமே கல்லாக மாறியிருக்கிறது.’

‘உங்களுடைய கணவன்மார்கள் கருங்கல்லாக இருப்பார்களா?’

‘அது அவர்களின் காதலையும் நம்பிக்கைத் தன்மையையும் பொறுத்தது. சில கணவன்மார்கள் முழுங்கால்வரை கருங்கல்லாக இருப்பார்கள். சிலர் இடுப்புவரை இருப்பார்கள். சிலர் கழுத்துவரை. முழுமையான நம்பிக்கைக்குரியவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தால், பாதம் முதல் தலைவரை கல்லாக இருப்பது உறுதி! நாங்கள் அப்படிப்பட்டவர்களை எடுத்துக் கொண்டு போய் சுவரில் வைத்து வழிபடுவோம்.’

‘இப்போ நீ என்ன தண்டனை தருவாய்?’

நடனப்பெண் தன்னுடைய கைகளைத் தட்டினாள். இரண்டு மந்திர வித்தைக்காரர்கள் வந்து என்னை வெளியே கொண்டு போய் விட்டார்கள். நான் வெளியே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தண்டனையை அனுபவிக்கிறேன். மந்திர வித்தைக்காரர்கள் மந்திர சக்தி கொண்டு என்னுடைய நாட்டை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். என்னால் நடக்க முடியவில்லை. அதனால் இங்கு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். மந்திர வித்தைக் காரர்களின் நாட்டிற்குச் செல்பவர்களைத் தடுக்கிறேன். நூறு வருடங்களாக நான் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்.”

“இந்த தண்டனையில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?” - ஜிம்மி பாசம் கலந்த குரலில் கேட்டான்.

“ஏதாவதொரு பெண், பூமியைச் சேர்ந்த பெண் எனக்காக அழுது இரண்டு துளி கண்ணீரை என் பாதத்தில் விழும்படிச் செய்தால் என் கால்கள் முன்பு இருந்த மாதிரி ஆகிவிடும். என்னால் நடக்கவும் முடியும்.” சந்நியாசி நாஸ், மோகினி இருவரையும் பார்த்தார்.

“உங்களைப் போன்ற வஞ்சக மனிதருக்காக எந்தப் பெண் அழுவாள்? நாம் கிளம்புவோம்” - நாஸ் கோபமான குரலில் சொன்னாள்.


மோகினி நாஸ் சொன்னதை ஆமோதித்தாள் : “நீங்க சொன்னது முழுமையாகச் சரியானது.”

“நான் செம்பு கொண்டு உண்டாக்கப்பட்டவள். என்னால் அழ முடியாது” - புத்லி சொன்னாள்.

“வயதான ஒரு சந்நியாசியை எதற்குத் தொந்தரவு செய்கிறீர்கள்? வாங்க... உள்ளே போவோம்” - உர்ஃபி தன்னுடைய உணவிலிருந்து ஒரு பகுதியை எடுத்து சந்நியாசியின் பிச்சைப் பாத்திரத்தில் போட்டுவிட்டு, முன்னோக்கி நடந்தான்.

சந்நியாசி நன்றியை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னார் : “குழந்தை, நீ நல்ல அன்பு உள்ளவன் என்பது தெரிகிறது என்னுடைய அறிவுரையைக் கேள். அங்குள்ள பெண்கள் அப்சரஸ்களாக இருந்தாலும், ஆண்களைக் கருங்கல்லாக ஆக்கி விடுவார்கள்.”

“உங்களுடைய கதையைக் கேட்ட பிறகு, இனிமேல் யாருடைய வஞ்சனையிலும் நாங்கள் சிக்க மாட்டோம்” - உர்ஃபி சந்நியாசியிடம் சொன்னான்.

சந்நியாசி தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டுக் கொண்டு சொன்னார்: “போவதாக இருந்தால் போய்க் கொள்ளுங்கள். ஆனால் ஒரு தாயத்தை எடுத்துச் செல்லுங்கள்.”

சந்நியாசி ஒரு சிறிய தாயத்தை உர்ஃபியிடம் கொடுத்தார். உர்ஃபி அதை வாங்கித் தன் பாக்கெட்டிற்குள் வைத்தான். “இதை எப்படி பயன்படுத்துவது?” - அவன் கேட்டான்.

“ஏதாவது ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டால், பாக்கெட்டிற்குள்ளிருந்து இந்த தாயத்தை எடுத்து மூன்று முறை முத்தமிட வேண்டும். பிறகு மூன்று முறை நெற்றியில் இதைப் படும்படி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு செருப்பால் தலையில் ஏழு முறை அடித்துக் கொண்டு இப்படிக் கூற வேண்டும். ‘கடம் படம் பா! கடம் படம் பா!’ (என்னுடைய உதவிக்கு வா! என்னுடைய உதவிக்கு வா!) அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஆனால் தலையில் செருப்பால் ஏழு முறை அடிக்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.’

“சரிதான்!” - உர்ஃபி தன் உடன் பிறப்புக்களை அழைத்துக் கொண்டு மந்திரவாதிகளின் நாட்டிற்குள் நுழைந்தான்.

14

பேப்பர் நகரம்

14குழந்தைகளை சுங்க இலாகாவைச் சேர்ந்தவர்கள் தடுத்தார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். தீப்பெட்டியை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். சுங்க இலாகா அதிகாரி எந்தவித விளக்கங்களும் கூறவில்லை. அவர் சொன்னார் : “இனி நீங்கள் எங்களுடைய நாட்டிற்குள் நுழையலாம். அதற்கு முன்பு மந்திர வித்தையைச் செய்து காட்ட வேண்டும்.”

“எப்படிப்பட்ட மந்திர வித்தை?” - ஜிம்மி கேட்டான்.

“ஏதாவதொரு விளையாட்டு.”

“முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள்!”

சுங்க இலாகா அதிகாரி ஜிம்மியின் தலையைத் தடவினார். அவருடைய கையில் மூன்று கோழி முட்டைகள் இருந்தன!

ஜிம்மி சுங்க இலாகா அதிகாரியின் தலையைத் தடவினான். அப்போது அவனுடைய கையில் ரேடியோவின் வால்வ் இருந்தது.

“இது என்ன?” - சுங்க இலாகா அதிகாரி கேட்டார்.

“ஸ்படிக முட்டை.”

சுங்க இலாகா அதிகாரி ஆச்சரியத்துடன் ரேடியோ வால்வையே பார்த்தார்.

“நீங்கள் உள்ளே போகலாம்.”

அடுத்து உர்ஃபி. “மந்திர வித்தையைச் செய்து காட்டுங்க!” - சுங்க இலாகா அதிகாரி சொன்னார்.

“முதலில் நீங்கள் செய்து காட்டுங்க.”

சுங்க இலாகா அதிகாரி மேஜை மேலிருந்து ஒரு பேப்பரை எடுத்தார். “பார்த்தீங்களா? இது வெள்ளை நிறப் பேப்பர்தானே?” - அவர் கேட்டார்.

“ஆமாம்.”

சுங்க இலாகா அதிகாரி அந்தப் பேப்பரை மூன்றாகக் கிழித்து மடித்தார். பிறகு வாய்க்குள் போட்டு மென்று விழுங்கினார். அதற்குப் பிறகு உர்ஃபியிடம் சொன்னார். “ஒன்று... இரண்டு... மூன்று என்று எண்ணுங்கள்.”

“ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு...”

நான்கு என்று சொன்னவுடன் சுங்க இலாகா அதிகாரி தன் வாய்க்குள்ளிருந்து பேப்பராலான ஒரு குழலை வெளியே எடுத்தார். அதன் நிறம் அடர்த்தியான சிவப்பாக இருந்தது.

“இது என்ன விளையாட்டு! என்னுடைய மந்திர வித்தையைப் பாருங்கள்!” - உர்ஃபி தன்னுடைய வெற்றிலை, பாக்கு பெட்டிக்குள்ளிருந்து ஒரு வெற்றிலையை எடுத்தான். அவன் கேட்டான் : “இதன் நிறம் என்ன?”

“பச்சை...”

உர்ஃபி வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொண்டு சொன்னான்: “எண்ணுங்க...’

சுங்க இலாகா அதிகாரி எண்ண ஆரம்பித்தார். “ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு...”

“இன்னொரு முறை எண்ணுங்க.”

“ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு...”

உர்ஃபி வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அடர்த்தியான சிவப்பு! “என்னுடைய மந்திர வித்தையைப் பார்த்தீர்களா? பச்சை இலையை வாய்க்குள் போட்டேன. துப்பியது என்ன? ரத்தத்தின் நிறத்தில் இருக்கும் நீர்...”

சுங்க இலாகா அதிகாரி ஆச்சரியப்பட்டார். “நீங்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறீர்கள்?”

“நாங்கள் பூமியில் இருந்து வருகிறோம்” - நாஸ் சொன்னாள்.

“பூமியில் இருந்தா? அங்குள்ள மந்திர வித்தைகள் மிகவும் சிரமமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேனே! அங்குள்ள மக்களுக்கு காற்றில் பறக்கவும், நீரில் நடக்கவும் முடியும் என்று கூறப்படுவது உண்மையா?”

“உண்மைதான்” - மோகினி பெருமையுடன் சொன்னாள்.

“அங்குள்ள மந்திர வித்தைக்காரர்கள் நெருப்பு பற்றாத கட்டிடத்தை உண்டாக்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே!”

“ஆமாம்... செங்கற்களால் ஆன வீடுகளைக் கட்டுகிறார்கள். உங்களுடைய நாட்டில் செங்கற்களால்தானே வீட்டைக் கட்டுகிறீர்கள்!” நாஸ் கேட்டாள்.

“செங்கல் என்றால் என்ன? எங்களுக்கு அப்படிப்பட்ட மந்திர வித்தைகளைத் தெரியாது. எங்களுடைய நாட்டில் பேப்பரைப் பயன்படுத்தித்தான் வீட்டைக் கட்டுகிறோம்.”

உண்மையிலேயே சுங்க இலாகா அலுவலகம் பேப்பரைக் கொண்டுதான் உண்டாக்கப்பட்டிருந்தது. கட்டிடம் மட்டுமல்ல; அதிகாரியும் பேப்பரால்தான் உண்டாக்கப்பட்டிருந்தார். பழைய செய்தித்தாள்களால் ஒட்டப்பட்டு அவர்கள் உண்டாக்கப்பட்டிருந்தார்கள். மந்திர சக்தியால் அவர்கள் நடக்கவும் பேசவும் செய்தார்கள். நகரத்தை அடைந்தபோது, குழந்தைகளின் ஆச்சரியம் அதிகமானது. சாலையும் நடைபாதையும் பேப்பரைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருந்தது. எல்லா விஷயங்களும் பேப்பரால்தான் உண்டாக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் மந்திர நாட்டைப் பார்ப்பதற்காக சுங்க இலாகா அலுவலகத்திலிருந்து ஒரு வழிகாட்டியை சம்பளம் தருவதாகச் சொல்லி அழைத்திருந்தார்கள். அந்த வழிகாட்டி மிகவும் ஏழையாக இருந்தான். பழைய பேப்பர்களால் அவன் உண்டாக்கப்பட்டிருந்தான். அவனுடைய நிறம் சில இடங்களில் மஞ்சளாகவும், சில இடங்களில் தவிட்டு நிறத்திலும், சில இடங்களில் கருப்பாகவும் இருந்தன. வார்னீஷ் அழிந்து விட்டிருந்தது. பேப்பரில் இருந்த தலைப்புச் செய்திகள் வெளியே தெரிந்தன.

மோகினி வழிகாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள் : “கைடு சார்! எங்களுக்கு நகரத்தைச் சுற்றிக் காட்டுங்கள்!”


வழிகாட்டி அடுத்த நிமிடம் பின்னோக்கி நகர்ந்தான். மோகினி அவனுடைய கையைப் பிடித்திருந்ததை விட்டாள். வழிகாட்டியின் கை நடைபாதையில் விழுந்துவிட்டது. வழிகாட்டி உடனடியாக அதை எடுத்தான். பிறகு கோட் பாக்கெட்டிற்குள்ளிருந்து பசை குப்பியை எடுத்து புரட்டி கையை அவன் ஒட்டினான். தொடர்ந்து அவன் சொன்னான் : “மன்னிக்க வேண்டும். நான் மிகவும் பழைய பத்திரிகையைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருப்பவன். எண்பது வருடங்களுக்கு முன்னால் லாகூர் நகரத்திலிருந்து பிரசுரிக்கப்பட்ட பத்திரிகைதான் என்னுடைய உடல்! அதனால் தொட்டால் என்னுடைய உடல் சிதைந்துவிடும். என்னைத் தொடாதீர்கள்!”

“இது என்ன? இங்குள்ள எல்லா பொருட்களும் பேப்பரைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருக்கின்றனவே! அதுவும் பழைய செய்தித்தாள்களைக் கொண்டு!”

வழிகாட்டி நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னான் : “மதிப்பிற்குரிய விருந்தினர்களே! நண்பர்களே! இந்தக் கதை மிகவும் பழமையானது. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் சீனாவில் மந்திர வித்தைக்காரர்கள் முதல் முறையாக பேப்பரைக் கண்டு பிடித்தபோது நடந்த கதை! அந்த மந்திர வித்தைக்காரர்கள்தான் இந்த உலகத்தை உண்டாக்கினார்கள். அவர்களுக்கு பேப்பர்மீது மிகவும் விருப்பம். அவர்கள் இங்கு வந்து எல்லா பொருட்களையும் பேப்பரைக் கொண்டு உண்டாக்கினார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டு உலகத்தில் உள்ள எல்லா பேப்பர் மந்திர வித்தைக்காரர்களும் இங்கு வர ஆரம்பித்தார்கள். இப்போதைய நிலைமை இதுதான். உலகத்தில் எந்த இடத்திலிருக்கும் பத்திரிகைகளுக்கும் செய்திகள் கிடைப்பது இங்கிருக்கும் பேப்பர் மந்திரவாதிகள் மூலமாகத்தான். போர், புரட்சி, சமுதாய கலவரம் போன்ற எல்லா வகைப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட செய்திகளும் பூமியில் இருக்கும் பத்திரிகைகளுக்கு இங்கிருந்துதான் கிடைக்கின்றன. இங்குள்ள மந்திரவாதிகளுக்கு வேறு எந்த ஒரு வேலையும் இல்லை. தனி மனிதர்களுக்கு இடையே, சமுதாயங்களுக்கிடையே, நாடுகளுக்குக்கிடையே சண்டைகள் உண்டாக்குவது - இவைதான் அவர்களுடைய வேலையாக இருக்கிறது. இங்குள்ள மக்களுடைய ஆடைகளும் படுக்கையும்கூட பத்திரிகைகள்தான். பத்திரிகைகளைச் சாப்பிடுகிறார்கள். பத்திரிகைகளைக் குடிக்கிறார்கள். வாசிக்கிறார்கள். பூமியில் என்றைக்காவது ஒருநாள் பத்திரிகை வெளியே வரவில்லையென்றால் அன்று இங்கு ஏதாவதொரு மந்திரவாதி இறந்துவிட்டார் என்று அர்த்தம். அந்தச் சமயத்தில் நாங்கள் பூமியில் இருக்கும் பத்திரிகைகளையும், புத்தகத்தின் தாள்களையும், கோப்புகளையும் இங்கே வரவழைத்து மந்திர சக்தியால் அவற்றை மனிதர்களாக மாற்றி விடுவோம். மற்ற பொருட்களையும் உண்டாக்குவோம். இந்த மேஜைமீது இருந்த பேப்பர் எங்கே போனது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அலமாரியில் வைத்திருந்த புத்தகங்கள் எங்கே போயின? பழைய பத்திரிகைகளும் காணாமல் போய்விட்டன. அவை அனைத்தும் நிமிட நேரத்தில் இங்கு வந்து சேர்ந்துவிடும்.”

“அப்படியென்றால் நேஷனல் புக் ட்ரஸ்ட்டின் புத்தகங்கள்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட மனிதர்களும் இங்கு இருக்கிறார்களா?"  நாஸ் ஆர்வத்துடன் கேட்டாள்.

“கட்டாயமா.”

“எங்களை அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.”

வழிகாட்டி அப்போது அந்த வழியாக கடந்து சென்ற ரிக்ஷா வண்டிக்காரர்களைச் சைகை காட்டி அழைத்தான். ரிக்ஷா வண்டிகளும் அதை இழுத்துக் கொண்டு செல்பவர்களும் பேப்பர் கொண்டு உண்டாக்கப்பட்டிருந்தார்கள். முதலில் அருகில் வந்த ரிக்ஷாவில் ஜிம்மி குதித்து ஏறினான். ரிக்ஷா தகர்ந்து விழுந்து விட்டது. ரிக்ஷாக்காரன் வேதனையில் முனகினான். அவனுடைய உடல் இரண்டு துண்டுகளாக தரையில் விழுந்து கிடந்தது. அதைத் தொடர்ந்து ஏராளமான பேப்பர் மனிதர்கள் அங்கு வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்தார்கள். சிலர் குழந்தைகளை நோக்கிக் கைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு பயமுறுத்தினார்கள்.

ஜிம்மி அவர்களை நோக்கித் தன் கையை உயர்த்திக் கொண்டு சொன்னான் : “நான் இரும்பால் உண்டாக்கப்பட்ட மனிதன். என்னைக் கையைச் சுருட்டி விட்டுக்கொண்டு பயமுறுத்த வேண்டாம். ஒரே குத்தில் பேப்பர் பயில்வான்களின் மந்திர சக்தியை நான் வெளியே கொண்டு வந்துவிடுவேன்.”

அதைக் கேட்டவுடன் பேப்பர் மனிதர்களின் கோபம் அதிகமாகியது. அவர்கள் குழந்தைகளை வளைத்துக் கொண்டார்கள். அப்போது போலீஸ் அங்கு வந்து சேர்ந்தது. “என்ன நடந்தது?” - போலீஸ்காரர் கேட்டார்.

“ஆக்ஸிடெண்ட்... ரிக்ஷாக்காரன் இறந்துவிட்டான். ரிக்ஷாவும் பாழாகிவிட்டது. பூமியில் இருந்து வந்திருக்கும் பயணிகளின் பொறுப்பற்ற செயல்.”

“உல்லாசப் பயணிகள் என்று கூறிக் கொண்டு இங்கு வந்து வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள்.”

“பூமி ஒழிக!”

“மந்திர நாடு வாழ்க!”

“பூமி ஒழிக!”

போலீஸ் மனிதர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தியது. ரிக்ஷாவின் எண்ணையும், வழிகாட்டியின் எண்ணையும் குறித்துக் கொண்ட அவர் வழிகாட்டியிடம் கூறினார் : “இந்தப் பயணிகளை இன்று இரவு பத்து மணிக்கு அரசிக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்த வேண்டும்.”

“சரி.”

வழிகாட்டி குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அந்தக் கட்டிடம் மிகவும் பெரியதாக இருந்தது. கீழேயும் மேலேயுமாக ஏழு மாடிகள் இருந்தன. ஏராளமான அறைகளும். குழந்தைகளுக்காக உலகத்தின் எல்லா இடங்களிலும் இருந்தும் பிரசுரமாகும் மாத இதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றின் பேப்பரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குழந்தைகளும் அங்கே இருந்தார்கள். மோகினியும் ஜிம்மியும் கேட்டுக் கொண்டதற்காக வழிகாட்டி அவர்களை முதலில் கிழக்குப் பக்கத்தில் இருந்த மூன்றாவது அறைக்கு அழைத்துச் சென்றான். அது மிகவும் பெரிய அறையாக இருந்தது. அது மந்திர வித்தையால் உண்டாக்கப்பட்ட அறையாக இருந்ததால், மிகவும் சிறியதாக அது இருக்க வேண்டும் என்று நினைத்தால், அறை அந்த அளவிற்கு சிறியதாக ஆகிவிடும். பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அந்த அளவிற்கு பெரியதாக அது ஆகிவிடும். அங்கு அயிரக்கணக்கான தாள்களாலான குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆரவாரம் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். பத்து, பன்னிரண்டு வயது உள்ள அழகான ஒரு சிறுவன் அரைக்கால் சட்டையும், மேல் சட்டையும் அணிந்து ஒரு மேஜைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு மிகவும் கவனத்துடன் எதையோ படித்துக் கொண்டிருந்தான். மோகினி அவன் என்ன படிக்கிறான் என்று எட்டிப் பார்த்தாள். அவன் ‘சிறுவர் உலகம்’ என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையைப் படித்துப் கொண்டிருந்தான்.

வழிகாட்டி அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தான். அந்தச் சிறுவன் பூமியிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது குறித்து மகிழ்ச்சியடைந்தான். குழந்தைகளுக்கான மாத இதழான ‘சிறுவர் உலகம்’ பிரசுரமாகும் நாட்டில் இருந்து அந்த பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடன், அவனுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் ஆகிவிட்டது. அவன் கேட்டான் : “நீங்கள் பத்திரிகை ஆசிரியரையும் உங்களுடன் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமே! அவரைப் பார்க்க நான் மிகவும் ஆவலுடன் இருந்ததேன்.”


“அவர் ஸ்விட்சர்லாந்திற்குப் போயிருக்கிறார்” - உர்ஃபி சொன்னான்.

“உதவி ஆசிரியர் என்ன செய்கிறார்?”

“அவர் மூன்று மாத காலமாக அமெரிக்கா, இங்கிலாண்ட் ஆகிய நாடுகளில் பயணம் செய்து அங்கிருக்கும் குழந்தைகளைச் சந்தித்து உரையாடிவிட்டு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். இப்போது அவர் வேலையில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.”

“உதவி ஆசிரியரை அழைத்துக் கொண்டு வந்திருந்தால், இங்கு குழந்தைகளுக்கான பத்திரிகைகளை வைத்து நாங்கள் பலவகைப்பட்ட மந்திர வித்தைகளைச் செய்வதை அவருக்குக் காட்டியிருக்கலாம். இந்த கூடத்தில் பார்க்கும் எல்லா பேப்பர் குழந்தைகளும் இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் வரும் குழந்தைகளுக்கான மாத இதழ்களைக் கொண்டு தாயரிக்கப்பட்டவர்களே. குழந்தைகள் மட்டுமல்ல - மாத இதழ்களில் வரும் கதைகளின் கதாபாத்திரங்களும் இங்கு உண்டாக்கப்படுகிறார்கள்.”

“உண்மையாகவா?” - மோகினி மகிழச்சியுடன் துள்ளிக் குதித்தாள்.

பேப்பர் சிறுவன் சுட்டிக் காட்டினான்: “பார்த்தீர்களா? ஹதர் தவாவானாவின் நவ்னிஹால் சிறுவன் புத்திசாலியான முயலை உண்டாக்கிக் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தை பீயாம் தஹலிமில் இருந்து நகைச்சுவைத் துணுக்குகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறது. இன்னொரு சிறுவன் ‘நிலா மாமா’வில் மந்திர வித்தை கதையைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் நிலா மாமாவின் தாள்களால் உருவாக்கப்பட்டவனே.”

ஆச்சரியமான உலகம்தான். எல்லா நாடுகளையும் சேர்ந்த, எல்லா மொழிகளிலும் உள்ள குழந்தைகளுக்கான மாத இதழ்களும், வார இதழ்களும், அவற்றால் உண்டாக்கப்பட்ட குழந்தைகளும் அங்கு இருந்தார்கள். அந்தப் புத்தகங்களில் வரும் கதைகளில் குழந்தைகளுக்கு விருப்பமான கதாபாத்திரங்களும் அங்கு இருந்தார்கள். பேப்பரால் உண்டாக்கப்பட்ட ‘டார்ஸான்’ அங்கு இருந்தான். பூமியின் டார்ஸானின் அதே உருவம்! மந்திர வித்தை சிறுவர்கள் டார்ஸானைப் பார்த்து பயந்தார்கள். டார்ஸான் அந்தக் குழந்தைகளை காரணமே இல்லாமல் கொடுமைப்படுத்தியிருந்தான்.

டார்ஸான் பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. அவன் பேப்பரால் ஆன ஒரு மரத்திற்கு மேலே உட்கார்ந்து கொண்டு ‘காமிக்’ என்ற மாத இதழை வாசிக்க ஆரம்பித்தான்.

“டார்ஸான் சார்! கொஞ்சம் கீழே இறங்கி வாங்க. நாங்க உங்களைச் சிறிது பார்க்க வேண்டும்!” - நாஸ் சொன்னாள்.

“போஹோம்!” - டார்ஸான் உரத்த குரலில் கத்தினான்: “என்னால் முடியாது” - மீண்டும் ‘காமிக்’ புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தான்.

உர்ஃபி சிரித்துக் கொண்டே ஜிம்மிக்கு நேராக விரலை நீட்டியவாறு சொன்னான் : “கொரில்லாக்களின் அரசன் உங்களுடன் சண்டை போடுவதற்காக வந்திருக்கிறார்.”

“போறோம்?” - டார்ஸான் கர்ஜித்தவாறு காமிக் புத்தகத்தை ஜிம்மியை நோக்கி எறிந்தான். தொடர்ந்து அவன் பேப்பரால் ஆன கயிறில் தொங்கியும், தாவியும் கீழே வந்து ஜிம்மி மீது மோதினான்.

ஜிம்மி சத்தம் போட்டு சிரித்தான்.

டார்ஸான் தன்னுடைய கையை உற்றுப் பார்த்தான். வலது கை ஒடிந்து சிதைந்து விட்டிருந்தது. டார்ஸான் இடது கையால் ஜிம்மியின் முகத்தில் குத்தினான். ஜிம்மி வாயைத் திறந்தான். டார்ஸானின் இடது கை அவனுடைய வாய்க்குள் சிக்கிக் கொண்டது. டார்ஸான் பின்னோக்கி நகர்ந்தபோது, ஜிம்மி அவனுடைய கையை மென்று துப்பினான்.

டார்ஸான் ஆச்சரியப்பட்டான் : “இது என்ன மந்திர வித்தையாக இருக்கிறது! இந்தச் சிறிய பையன் என்னைத் தோல்வியடையச் செய்திருக்கிறான். இதுவரை இந்த உலகத்தில் உள்ள யாராலும் என்னைத் தோல்வியடையச் செய்ய முடியவில்லை.”

வழிகாட்டி அறிவுறுத்தினான் : “மதிப்பிற்குரிய டார்ஸான் சார்! சிறிது சுய உணர்வுடன் பேசுங்கள். இந்தப் பிள்ளைகளின் தைரியம் தான் உங்களை இந்த அளவிற்கு தைரியசாலியாக ஆக்கியது. இல்லாவிட்டால் நீங்கள் என்ன? இனிமேல் அடங்கி இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த மாதத்திற்கான இதழ் வரும்போது, உங்களுக்கு இரண்டு கைகளும் கிடைக்கும்.”

வழிகாட்டி பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளைக் கட்டிடத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு வந்தான்: “வாருங்கள்! உங்களுக்கு நகரத்தின் மற்ற பகுதிகளைச் சுற்றிக் காட்டுகிறேன்” - அவன் சொன்னான்.

வழிகாட்டி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வெளியே வந்த போது ஒரு பட்டாளக்காரன் அவர்களை எதிர்பார்த்து அங்கு நின்றிருந்தான்.

“அரசி உங்களை வரும்படி அழைத்திருக்கிறார்” - பட்டாளக்காரன் சொன்னான்.

“நாங்கள் வரவில்லையென்றால்..?” - ஜிம்மி கேட்டான்.

“போகலாம்! போகலாம்! பேப்பர் நாட்டின் பேப்பரால் ஆன அரசியை நாம் பார்க்கலாமே!” - நாஸ் சொன்னாள்.

அரசி வசிக்கும் தாள்களால் ஆன அரண்மனை மிகவும் அழகாக இருந்தது. தேவகன்னிகளின் கதை புத்தகத்தில் இருக்கும் படங்களில் காண்பதைப்போல மிகவும் அருமையாக அந்த அரண்மனை இருந்தது. தோட்டத்தில் பேப்பர் மலர்கள், பேப்பரால் ஆன நீர் வரவைக்கும் இயந்திரம்! அரண்மனையில் இருந்த அனைத்துப் பொருட்களும் பேப்பரால் உண்டாக்கப்பட்டவையே. புத்தகங்களிலிருக்கும் ஓவியங்களில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தவர்களைப்போல அரசி இருந்தாள்.

“நீங்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்? பூமியைச் சேர்ந்த பிள்ளைகள் பேப்பர் நகரத்தில் இருப்பது மிகவும் ஆபத்தான விஷயம். அதனால் நீங்கள் உடனடியாக என்னுடைய நாட்டை விட்டுச் செல்ல வேண்டும்” - அரசி கட்டளையிட்டாள்.

“எங்களுக்கு எங்களுடைய புறா வேண்டும்” - ஜிம்மி சொன்னான்.

“அந்தப் பறவை இங்கே இல்லை. அது இங்கிருந்து நேரெதிர் நாட்டிற்குப் போய்விட்டது. நீங்கள் அங்கே போய்த் தேடுங்கள்!”

“மதிப்பிற்குரிய மகாராணியே! நாங்கள் நேரெதிர் நாட்டிற்கு எப்படிப் போவது? நாங்கள் எங்களுடைய ராக்கெட்டை மிகவும் பின்னால் விட்டுவிட்டு வந்திருக்கிறோமே!” - மோகினி சொன்னாள்.

“நீங்கள் போவதற்கான ஏற்பாட்டை நான் செய்து தருகிறேன்” - அரசி தன் கைகளைத் தட்டினாள். அடுத்த நிமிடம் ஒரு பேப்பர் மந்திரவாதி அங்கு வந்து நின்றான்.

“இவர்களை உடனடியாக நேரெதிர் நாட்டில் கொண்டு போய் விடு!” - அரசி கட்டளையிட்டாள்.

மந்திரவாதி பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளைப் பேப்பரால் ஆன ஒரு விரிப்பில் அமர வைத்து, ஏதோ மந்திரத்தைக் கூறினான். விரிப்பு காற்றில் பறக்க ஆரம்பித்தது. படிப்படியாக அதனுடைய வேகம் அதிகரித்தது. கண்களை மூடித் திறந்தபோது, பிள்ளைகளை ஏற்றிய விரிப்பு பல்லாயிரம் மைல்களைத் தாண்டி விட்டிருந்தது. பிறகு அது மெதுவாகக் கீழே இறங்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து அது நேரெதிர் நாட்டின் மிகப்பெரிய நகரத்தை அடைந்தது. மந்திரவாதி விரிப்பில் ஏறித் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.


15

நேரெதிர் நாட்டில்

நேரெதிர் நாட்டில் எல்லா விஷயங்களும் தலை கீழாக நடந்து கொண்டிருந்தன. மனிதர்கள் தலை கீழாக நடந்து கொண்டிருந்தார்கள். வாகனங்கள் முன்னோக்கிச் செல்வதற்கு பதிலாக பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன. பள்ளிகூடங்களில் வரை படங்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஆசிரியர் தலைகீழாக இருந்துகொண்டு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் புத்தகங்களைத் தலைகீழாகப் பிடித்தவாறு படித்துக் கொண்டிருந்தார்கள்.

“இப்படி ஏன் செய்கிறீர்கள்?” - மோகினி ஒரு மாணவனிடம் கேட்டாள்.

“இப்படிப் படித்தால் பாடம் நல்ல முறையில் மனதில் ஏறும்” - மாணவன் சொன்னான்.

“அதனால்தான் என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. நம்முடைய பூமியில் இருக்கும் கல்வி முறையில் சில பிரச்சினைகள் இருக்கின்றன” - மோகினி நாஸிடம் சொன்னாள்.

“நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள்?” - நேரெதிர் நாட்டைச் சேர்ந்த சிறுவன் கேட்டான்.

“நாங்கள் புத்தகத்தை நேராக வைத்துக் கொண்டுதான் படிப்போம்.”

“பிறகு எப்படி அறிவு வளரும்? மண்ணாங்கட்டி..” - அந்தச் சிறுவன் கிண்டல் கலந்த குரலில் கூறிவிட்டு வகுப்பறைக்குள் ஓடிவிட்டான்.

நேரெதிர் நாட்டில் இருந்த மருத்துவமனையில் நிலவிய நிலைமையைப் பார்த்து பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் ஆச்சரியப்பட்டார்கள். உடலை பாதித்திருக்கும் நோயை விரட்டுவதற்காக நோயாளிகளை மலேரியா கொசுக்களைக் கொண்டு கடிக்க வைத்தார்கள். பென்சிலின் நோயால் சிரமப்படுபவர்களை காயத்தில் இருக்கும் மேற்தோலைத் தின்ன வைத்தார்கள். சளியின் தொல்லையை குணப்படுத்த வயிற்று வலி நோய்க்கான அணுக்களை ஊசி மூலம் செலுத்தினார்கள். ஒரு நோயாளி டாக்டரிடம் குறைப்பட்டான்:

“டாக்டர்! நான் கடுமையான நோயால் சிரமப்படுகிறேன்.”

“உங்களுக்கு என்ன நோய்?”

“நூறு வருடங்களாக எனக்குக் காயச்சலே வரவில்லை. இனி என்ன செய்வது? நான் இறந்து விடுவேன்.”

“இந்த மனிதர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாரே டாக்டர்?” - நாஸ் கேட்டாள்.

“இதுதான் ஆபத்தே இவருக்கு நூறு வருடங்களாக ஆரோக்கிய நோய் பாதித்திருக்கிறது” - டாக்டர் சொன்னார்.

டாக்டர் அந்த நோயாளியின் நாடித்துடிப்பைச் சோதித்துப் பார்த்துவிட்டு கம்பவுண்டரிடம் சொன்னார்: “இவருக்கு நூற்று நான்கு டிகிரி காய்ச்சல் வரக்கூடிய மிக்சரைக் கொடு.”

“அது எதற்கு டாக்டர்?” - ஜிம்மி கேட்டான்.

“இந்த மருந்தைக் குடித்தால் இந்த ஆளுக்கு நூற்று நான்கு டிகிரி காய்ச்சல் உண்டாகும். அப்போது நோய் குணமாகிவிடும்.”

டாக்டர் தொடர்ந்து பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் இருந்த பக்கம் திரும்பினார்.

“நீங்கள் ஏன் கால்களால் நிற்கிறீர்கள். மரியாதைக்காரர்களைப் போல ஏன் நேராக நிற்கவில்லை?”

“டாக்டர்! நாங்கள் பூமியில் கால்களால்தான் நிற்கிறோம், நடக்கிறோம்” - நாஸ் சொன்னாள்.

அதைக் கேட்டு டாக்டர் தன் கவலையை வெளிப்படுத்தினார்: “இது மிகவும் கொடிய நோய். உங்களை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” டாக்டர் மருத்துவமனையிலிருந்த உதவியாளர்களை அழைத்தார்.

உதவியாளர்கள் ஓடி வந்ததைப் பார்த்து, நாஸும் மோகினியும் அழுதார்கள். அதே நேரத்தில் ஜிம்மியும் உர்ஃபியும் புத்லியும் தைரியத்துடன் நடந்து கொண்டார்கள்.

உதவியாளர்கள் தலைகீழாக நடந்து கொண்டு பிள்ளைகளைப் பிடிப்பதற்காக வந்தார்கள். பிள்ளைகளால் வேகமாக ஓட முடிந்தது. அவர்கள் சிறிது தூரம் சென்று ஓய்வெடுக்கத் தொடங்கியபோது, போலீஸின் விஸில் சத்தம் கேட்டது. மோட்டார் கார்களும் வந்து சேர்ந்தன. ஆனால், கார்கள் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தன. அதனால் பிள்ளைகளால் அதிக தூரத்திற்கு அப்பால் போக முடிந்தது. அவர்கள் ஒரு வயலை அடைந்து ஓய்வெடுத்தார்கள்.

என்ன ஆச்சரியம்! வயலில் இருந்த கதிர்கள் தலைகீழாக நின்று கொண்டிருந்தன. செடிகளின் அடிப்பகுதி காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. மரங்களுடைய நிலைமையும் அதுதான். வினோதமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, சிங்கம் ஒன்று ஓடி வருவதைக் கண்டு பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகள் பயந்து விட்டார்கள். ஆனால் சிங்கமும் பயப்பட்டது. அது மிகவும் சிரமப்பட்டு ஒரு மரத்தின் மேலே ஏறி நடுங்கிக் கொண்டிருந்தது.

“காட்டு ராஜா இப்படி ஏன் பதைபதைப்பு அடைய வேண்டும்?”

“எனக்குப் பின்னால் ஒரு ஆடு ஓடி வருவதை நீங்கள் பார்க்கவில்லையா? அது என்னைப் பிடித்துத் தின்றுவிடும்.”

“ஆடு சிங்கத்தைப் பிடித்துத் தின்பதா?” - நாஸ் சத்தம் போட்டுச் சிரித்தாள். அப்படி நடக்குமா?

“எங்களுடைய நாட்டில் உள்ள நிலைமை இதுதான்” - சிங்கம் அழுதுகொண்டே சொன்னது : “இங்குள்ள ஆடுகள் மிகவும் மோசமான மிருகங்கள். அவை சிங்கத்தை வேட்டையாடும்.”

சிங்கம் அழுதுகொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ பூனை ஒன்று அங்கு ஓடி வந்தது. அதுவும் அந்த மரத்தில் ஏறியது. பூனையும் பயத்தால் அழ ஆரம்பித்தது.

“உங்களுக்கு என்ன கவலை பூனை?”

“எலி...” - பூனை பயம் கலந்த குரலில் சொன்னது: “தடிமனான ஒரு எலி என்னைப் பிடித்துத் தின்பதற்காக வந்து கொண்டிருக்கிறது.”

ஒரு எலி தன்னுடைய பற்களை வெளியே காட்டிக் கொண்டு பூனையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பிள்ளைகள் பார்த்தார்கள். அருகிலேயே நின்றிருந்த ஒரு ஆடு தரையை ஓங்கி மிதித்தவாறு சிங்கத்தை பயமுறுத்திக் கொண்டிருந்தது. “கீழே இறங்கி வா... உன்னை நான் பச்சையாகவே சாப்பிடப் போகிறேன்”- ஆடு சொன்னது.

பூமியில் இருந்து வந்த பிள்ளைகள் அந்தச் செயல்களைப் பார்த்து பரபரப்பு அடைந்தார்கள். இது என்ன நேர் மாறான நாடு! எல்லாமே தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன! ஒரு கிழவன் ஒரு குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வருவதை அவர்கள் பார்த்தார்கள்.

உர்ஃபி அந்தக் கிழவனிடம் கேட்டான் : “தாத்தா! இது உங்களுடைய மகனா?”

“இல்லை. நான் இவருடைய மகன்” - கிழவன் சொன்னான்.

அதைக் கேட்டு உர்ஃபி அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். அந்தக் கிழவன் என்ன புலம்புகிறான்!

கிழவனுக்கு அருகில் நின்றிருந்த குழந்தை பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறினான்: “எங்களுடைய நாட்டில் எல்லோரும் பிறக்கும்போது கிழவர்களாகத்தான் பிறப்பார்கள். பிறக்கும்போது அவர்களுக்கு நரைத்த முடியும் தாடியும் இருக்கும். வாயில் பற்கள் இருக்காது. வயது கூடக்கூட, கிழவன் நடுத்தர வயது மனிதனாக ஆவான். நடுத்தர வயது மனிதன் இளைஞனாக ஆவான். இளைஞன் சிறுவனாக மாறுவான். சிறுவன் குழந்தையாக ஆவான். பிறகு படிப்படியாக வயது குறையத் தொடங்கும். உயரமும் குறையும். இறுதியில் ஒருநாள் வயதான குழந்தையாக ஆனவுடன் அவன் மரணத்தைத் தழுவுவான். அதாவது பிறக்கும்போது நூறு ஆண்டுகள் வயது இருக்கும். இறக்கும்போது ஒருநாள் வயது இருக்கும்.”


“உங்களுக்கு இப்போது வயது என்ன?” - நாஸ் கேட்டான்.

“தொண்ணூற்றைந்து.”

“உங்களுடைய அப்பாவுக்கு...? மன்னிக்கணும். உங்களுடைய மகனுக்கு?”

குழந்தை கிழவனுக்கு நேராக விரலை நீட்டியவாறு சொன்னான்: “என்னுடைய மகன் மிகவும் வயதில் இளையவன். ஏழு வயதுதான் ஆகிறது.”

“ஓடிப் போகலாம்! ஒடிப் போகலாம்!” - ஜிம்மியும் உர்ஃபியும் ஒரே நேரத்தில் சொன்னார்கள். “இது நேரெதிர் நாடு. நம்முடைய பறவையால் ஒருநாள்கூட இங்கு வாழ முடியாது. நாம் வேறு எங்காவது போய் அதைத் தேடுவோம்” - அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

“நில்லுங்க! நீங்கள் எங்களுடைய விருந்தாளிகள். உணவு சாப்பிட்டுவிட்டுப் போங்க” - குழந்தை சொன்னான்.

“நீங்கள் எப்படி உணவு சாப்பிடுகிறீர்கள்?” - உர்ஃபி கேட்டான்.

குழந்தை வயல் பக்கமாக விரலை நீட்டியவாறு சொன்னான்: “பாருங்க! வயலில் தெரிவதெல்லாம் என்ன?”

தலை கீழாக நின்று கொண்டிருந்தன கோதுமைச் செடிகள்! அதன் அடிப்பகுதியில் தங்கத்தின் நிறத்தில் கோதுமை ரொட்டிகள் விளைந்து கிடந்தன.

நேரெதிர் நாட்டின் குழந்தை விளக்கிச் சொன்னான்: “எங்களுடைய வயல்களில் அப்பம் விளையும். அதைப் பறித்து செக்கில் இட்டு தூள் தூளாக்குவோம். அந்தத் தூளை தொழிற்சாலைக்கு அனுப்புவோம்.”

“தொழிற்சாலைக்கு ஏன் அனுப்ப வேண்டும்? அப்பத்தைப் பறித்துத் தின்ன வேண்டியதுதானே?”

“நீங்கள்... பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் முழுமையான முட்டாள்களாக இருக்கிறீர்களே! இருநூறு வருடங்களுக்கு முன்னால் எங்களுடைய நாட்டில் இருந்த மனிதர்களும் உங்களைப் போலவே காட்டு மனிதர்களாகவும் நாகரீகமற்றவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அப்பத்தைப் பச்சையாக செடிகளில் இருந்து பறித்துச் சாப்பிட்டார்கள். ஆனால், நாங்கள் மிகவும் அதிகமாக முன்னேற்றம் அடைந்துவிட்டோம். நாங்கள் உணவைச் சமையல் செய்யக்கூடிய தொழிற்சாலையை உண்டாக்கினோம். அங்கு இந்த அப்பத்தைத் தூள் தூளாக்கி மாவு தயாரிக்கிறோம். பிறகு நீரை ஊற்றி மாவைத் குழைப்போம். அதற்குப் பிறகு அந்த மாவை அதற்கென்று இருக்கும் இயந்திரத்தில் போட்டு கோதுமை மணிகளாக மாற்றுவோம்.”

“அப்பத்தில் இருந்து கோதுமை மணிகள்! நேரெதிர் விஷயம்! எங்களுடைய நாட்டில் கோதுமை மணிகளைத் தூளாக்கித்தான் அப்பத்தையே உண்டாக்குகிறோம்.”

“பொய்! அப்பத்தில் இருந்துதான் கோதுமை மணிகள் உண்டாகின்றன!”

“எங்களுடைய நாட்டில் சிங்கங்கள், ஆடுகளைப் பிடித்துச் சாப்பிடும்” - நாஸ் சொன்னாள்.

“உங்களுடைய நாடு எந்த அளவிற்கு நேர்மாறான ஒன்றாக இருக்கிறது! இந்த நிலைமையில் நீங்கள் சொல்வீர்கள் - பூனை, எலியைப் பிடித்துத் தின்னும் என்று.”

“எங்களுடைய பூமியில் அப்படித்தான் நடக்கிறது. பூனை, எலியைப் பிடிக்கும்.”

“நாம் போகலாம். இந்த நேரெதிர் நாட்டில் ஒரு நிமிடம்கூட இருக்கக்கூடாது” - ஜிம்மி சொன்னான்.

நேரெதிர் நாட்டைச் சேர்ந்த குழந்தை உரத்த குரலில் சிரித்தான். பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகள் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் காட்டையும் மேட்டையும் வயலையும் கடந்து இறுதியில் ஒரு பாலைவனத்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒரு பறக்கும் தட்டைப் பார்த்தார்கள். பறக்கும் தட்டில் ஏறுவதற்கு ஏணி இருந்தது. பிள்ளைகள் ஆச்சரியத்துடன் அந்த பறக்கும் தட்டையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். பிறகு அதில் அவர்கள் ஏறினார்கள். தட்டின் நடுவில் ப்ளாஸ்ட்டிக்கால் ஆன கைப்பிடி இருந்தது. ஜிம்மி அந்த கைப்பிடியை என்னவென்று சோதித்துப் பார்த்தான். அந்த நேரத்தில் பாலைவனத்தின் ஒரு பகுதியில் சுழல்காற்று உண்டாவதை அவர்கள் பார்த்தார்கள். ஐம்பது அடி உயரம் உள்ள ஒரு மனித வடிவத்தைக் கொண்ட மிருகம் பறக்கும் தட்டை நோக்கி ஓடிவருவதை அவர்கள் பார்த்தார்கள்.

“அய்யய்யோ! அரக்கன்! அவன் நம்மைப் பச்சையாகவே தின்று விடுவான் போலிருக்கிறதே!” - மோகினி பயம் கலந்த குரலில் சொன்னாள்.

16

வெறுப்பு இல்லாத நாட்டில்

ஜிம்மி நான்கு பக்கங்களிலும் பார்த்தான். தப்பிப்பதற்கு ஒரு வழியும் தெரியவில்லை. அரக்கன் மிகவும் அருகில் வந்துவிட்டான். அவன் வாயைத் திறந்து வைத்திருக்கிறான். பற்கள் யானையின் பற்களைவிடப் பெரியவனவாகவும் நீளமானவையாகவும் இருந்தன.

அடுத்த நிமிடம் ஜிம்மி பறக்கும் தட்டின் கைப்பிடியைத் திருப்பினான். உடனடியாக ஒரு வினோதமான ஓசையை உண்டாக்கியவாறு பறக்கும் தட்டு ஆகாயத்தில் உயர ஆரம்பித்தது. பிள்ளைகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். பறக்கும் தட்டிற்குள்ளிருந்து சத்தம் கேட்டது: “கவனம்! ஆகாயக் கப்பல் சந்திரனை நோக்கிப் புறப்படுகிறது.”

“கவனம்! கைப்பிடியை இடது பக்கமும் வலது பக்கமும் மீண்டும் திருப்ப வேண்டும்! மூன்று தடவை சக், சக் என்று கூற வேண்டும்.”

கட்டளைப்படி ஜிம்மி கைப்பிடியைத் திருப்பினான். மூன்று முறை ‘சக், சக்’ சொன்னான். அடுத்த நிமிடம் பறக்கும் தட்டின் ஒரு பகுதி கீழே விழுந்தது. பிள்ளைகள் எல்லோரும் தட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். வெள்ளித்தட்டு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு லட்சம் மைல் வேகத்தில் செவ்வாயை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

இரண்டு மணி நேரங்கள் பறந்த பிறகு, பறக்கும் தட்டு ஒரு இடத்தை அடைந்தது. அங்கே இருந்து கீழே பார்த்தால் நீல நிறத்தில் தெரிந்த நீரில் வளையங்கள் தெரிந்தன. மோகினி சந்தோஷத்துடன் கைகளைத் தட்டிக்கொண்டு சொன்னாள்: “ஆஹா! தண்ணீர் தண்ணீர்!”

“ஏதோ கடலைப் போல தோன்றுகிறது” - உர்ஃபி சொன்னான்.

மிகவும் தூரத்தில் இருப்பதைப் பார்க்கும் சக்தி கொண்ட ஜிம்மி சொன்னான்: “கடல் அல்ல. ஒரு ஏரி... அதன் நடுவில் ஒரு தீவு இருக்கிறது.”

“வேறு என்ன தெரிகிறது?” - மோகினி கேட்டாள்.

“இவ்வளவு தூரத்தில் இருந்து வேறு எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் தீவின் நிறம் பச்சையாக இருக்கிறது.”

“அப்படியென்றால் பறக்கும் தட்டைச் சிறிது கீழே இறக்கு!”

பறக்கும் தட்டைச் சற்று கீழ் நோக்கி இறக்கியபோது, ஏரியின் நடுவில் இருந்த அழகான தீவு கண்களில் தெரிந்தது. மிகவும் அழகான மரங்களும் செடிகளும் நிறைந்த பகுதி! வயல்களும் பூந்தோட்டங்களும் விளையாட்டு மைதானங்களும் இருந்தன. சிறிய மலையின் சரிவுகளில் கிராமங்கள்! ஏரியின் நான்கு பக்கங்களிலும் கோட்டையைப்போல சுவர் கட்டப்பட்டிருந்தது. அதற்கு நான்கு வாசல்கள் இருந்தன. உள்ளே நான்கு படகுக் துறைகள். படகுத் துறையில் சிறிய படகுகள் வரிசையாக நின்றிருந்தன. பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகளின் வயதைக் கொண்ட சில பிள்ளைகள் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பேண்ட் வாத்தியத்தை இசைத்துக் கொண்டிருந்தார்கள். நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.


காட்சிகளைப் பார்த்துவிட்டு மோகினி பிடிவாதம் பிடித்தாள்: “நாம் இந்தத் தீவில் இறங்கியே ஆக வேண்டும். பறக்கும் தட்டைக் கீழே இறக்கு! சீக்கிரம்!”

ஜிம்மி பறக்கும் தட்டை தீவுக்கு நேராகத் திருப்பினான். அது சுவருக்குள் நுழைந்து நீருக்கு மேலே பறக்க ஆரம்பித்தது. ஏரியில் இருந்த எல்லா படகுகளும் மேலே உயர்ந்து பறக்கும் தட்டைச் சுற்றிப் பறக்க ஆரம்பித்தன. படகுகளில் இருந்து சத்தம் கேட்டது: “தீவில் இறங்கக் கூடாது. முதலில் சுங்க இலாகா வாசலுக்குச் செல்லுங்கள்! பறக்கும் தட்டைத் திருப்பிக் கொண்டு செல்லுங்கள்!”

குரல் இனிமையானதாகவும் பணிவானதாகவும் இருந்தது. பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் அந்த நிமிடமே பறக்கும் தட்டை ஒரு வாசலை நோக்கித் திருப்பினார்கள். ஜிம்மி அதைக் கீழே இறக்கினான். உயரம் அதிகமாகக் கொண்டதும் ஆர்ச்சைப்போல வளைந்தும் இருந்த வாசலுக்கு மேல் பொன் நிற எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது: ‘வெறுப்பு இல்லாத நாடு... நல்வரவு!’

பிள்ளைகள் சந்தோஷத்துடன் முன்னோக்கி நகர்ந்தார்கள். வளைந்த வாசலை அடைந்தபோது, பத்து பதினைந்து பிள்ளைகள் பாடல் பாடி அவர்களை வரவேற்றார்கள். அந்தப் பிள்ளைகளின் நிறம் மிகவும் வினோதமாக இருந்தது. எல்லோரின் நிறமும் பச்சையாக இருந்தது. பச்சை இலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவர்களைப்போல இருந்தார்கள்! பற்கள் முல்லை மலர்களைப்போல பிரகாசமாக இருந்தன. கண்கள் தாமரை இதழ்களைப்போல இருந்தன!

பச்சை நிறத்தைக் கொண்டிருந்த ஒரு குழந்தை முன்னால் வந்து உர்ஃபியைப் பார்த்து கேட்டது:

“மகாத்மாக்களே! நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள்?”

“பூமியில் இருந்து...”

“அப்படியென்றால் முதலில் சுங்கத்தில் பெயரையும் முகவரியையும் எழுதுங்கள். இங்கு உங்களைச் சோதனை செய்வார்கள்.”

எல்லா பிள்ளைகளும் அவரவர்களுடைய பெயரையும் முகவரியையும் எழுதினார்கள். ஆனால் சோதனை செய்த முறை அவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. ஒரு பச்சை நிறத்தைக் கொண்ட குழந்தை முன்னால் வந்து எல்லோரையும் முகர்ந்து பார்க்க ஆரம்பித்தது. எல்லோருக்கும் முன்னால் உர்ஃபியை முகர்ந்து பார்த்துவிட்டு அவன் தன்னுடைய நண்பனிடம் சொன்னான்: “இவனிடமிருந்து வெறுப்பின் வாசனை வரவில்லை.”

“இவளும் சரிதான்...” - நாஸை முகர்ந்து பார்த்துவிட்டு அவன் சொன்னான்.

மோகினி கோபமான குரலில் சொன்னாள் : “அசிங்கம்! என்னை யாரும் முகர்ந்து பார்க்கக்கூடாது. சோதனை செய்ய வேண்டுமென்றால் சோதித்துக் கொள்ளுங்கள். மிருகங்களைப்போல ஏன் முகர்ந்து பார்க்க வேண்டும்?”

“இவள் குறும்புத்தனமும் பிடிவாதமும் கொண்டவளாக இருக்கிறாள் - பச்சை நிறத்தைக் கொண்ட சிறுவன் தன்னுடைய நண்பனிடம் சொன்னான் : “இவளை நம்முடைய ஏரியில் இரண்டு முறை மூழ்க வைத்து எடுங்கள்!”

இரண்டு சிறுவர்கள் மோகினியை ஏரியில் தள்ளிவிட்டார்கள். இரண்டு மூன்று தடவை மூழ்க வைத்த பிறகு, அவள் கரையில் ஏறினாள். அப்போது மீண்டும் முகர்ந்து பார்த்துவிட்டு சிறுவன் சொன்னான் : “இப்போது இதயத்தில் வெறுப்பு இல்லை.”

“இது என்ன தமாஷ்?” - ஜிம்மி கேட்டான்.

“இது வெறுப்பு இல்லாத நாடு. இதயத்தில் வெறுப்பு இல்லாதவர்கள் மட்டுமே இங்கு வரவும் தங்கவும் முடியும். மற்றவர்களை நாங்கள் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம்.”

“யாராவது அப்பிராணியின் மனதில் வெறுப்பு இருந்தால், அவளை என்ன செய்வீர்கள்?”

“அப்படி இருப்பவர்களை நாங்கள் ஏரியில் இருக்கும் நீருக்குள் மூழ்க வைத்து எடுப்போம். சிறிதளவே வெறுப்பு இருந்தால், அது கழுவும்போது போய்விடும். பிறகு நாங்கள் தீவுக்குள் நுழையச் செய்வோம்.”

“கழுவியும் வெறுப்பு போகவில்லையென்றால்...?”

“உள்ளே நுழைய விடமாட்டோம்.”

தீவில் இருக்கும் சட்டங்களைப் பார்த்து பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் சந்தோஷப்படவும் செய்தார்கள். அவர்களிடம் வெறுப்பு இருப்பதாக யாரும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் தீவுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.

பூமியில் இருந்து வந்திருக்கும் பிள்ளைகள் உண்மையான பிள்ளைகள் என்பதைத் தெரிந்துகொண்டவுடன் பச்சை நிறத்தைக் கொண்டிருந்த பிள்ளைகள் அவர்கள் ஒவ்வொருவருடைய கையையும் பிடித்து முத்தமிட்டார்கள். தொடர்ந்து அவர்களைச் சுற்றி நின்றுகொண்டு பாடல்களைப் பாடினார்கள், நடனமாடினார்கள். நடனம் முடிந்தவுடன், அவர்களை ஒரு படகில் ஏற்றித் தீவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

கரையை அடைந்தவுடன் பச்சை நிறத்தில் இருந்த ஒரு சிறுவன் அவர்களிடம் சொன்னான் : “இனி நீங்கள் போகலாம்.”

“எங்கே?”

“உங்களுக்கு விருப்பமுள்ள இடத்திற்கு. இந்த தீவில் எந்த இடத்திலும் யாரும் உங்களைத் தடுக்க மாட்டார்கள்.”

பிள்ளைகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எப்படிப்பட்ட தீவு! அவர்கள் ஐந்து பேரும் ஒரு சிறிய பாதையின் வழியாக நடந்து சென்றார்கள். பாதையின் இரு பக்கங்களிலும் மலர்கள் விரிந்து நின்றிருந்தன. மிகவும் அழகான ஒரு பள்ளத்தாக்கின் மத்தியில் அந்த பாதை போய்க் கொண்டிருந்தது. நறுமணம் பரப்பிக் கொண்டிருந்த மலர்களைக் கண்டு மோகினியால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவள் ஒரு மலரைப் பறித்துக் கூந்தலில் சூடிக் கொண்டாள்.

மோகினி சிறிது முன்னோக்கி நடந்தபோது, பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது : “எனக்கு நீங்கள் நன்றி கூறவில்லை.”

மோகினி அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தாள். பின்னால் யாரையும் காணோம். அவள் பதைபதைப்புடன் மேலும் நடந்தாள். மீண்டும் குரல் கேட்டது: “எனக்கு நன்றி கூற மாட்டீர்களா?”

மோகினி அங்கேயே நின்றுவிட்டாள். செடிதான் பேசியது: “நீங்கள் யாரிடமிருந்தாவது எதையாவது வங்கினால், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது எங்களுடைய நாட்டின் சட்டம்.”

“நன்றி! இது ஒரு வினோதமான நாடுதான். இங்குள்ள செடிகளும் மலர்களும்கூட பேசுகின்றன. நன்றி கூற மறந்துவிட்டால், ஞாபகப்படுத்தும்!”

“எனக்குத் தீவில் இருக்கும் இந்த குணம் மிகவும் பிடித்திருக்கிறது” - ஜிம்மி சொன்னான்.

பிள்ளைகள் முன்னோக்கி நடந்தார்கள். சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய மரத்திற்குக் கீழே அழகான ரெஸ்ட்டாரெண்ட் இருந்தது. அங்கு பல வகைப்பட்ட சாக்லேட்டுகளும், டாஃபியும், பழங்களும் இருந்தன. ஒரு பக்கத்தில் பல வண்ணங்களைக் கொண்ட சர்பத் நிரப்பப்பட்ட சோடா! சிறிய பிள்ளைகள் மேஜைக்கு அருகில் அமர்ந்து சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவரோடொருவர் விளையாட்டாகப் பேசி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அழகான அந்த ரெஸ்ட்டாரெண்டில் பலவித நிறங்களைக் கொண்ட குழந்தைகள் சாப்பிடவும் அருந்தவும் செய்து கொண்டிருந்தார்கள். பூமியிலிருந்து வந்த பிள்ளைகளுக்கும் பசி உண்டானது. அவர்கள் ரெஸ்ட்டாரெண்டின் கவுண்டரை நோக்கி நடந்தார்கள். அங்கு அமர்ந்திருந்த பச்சை நிறத்தில் இருந்த ஒரு சிறுவன் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.


“நல்வரவு!”

“எங்களுக்குப் பசிக்கிறது!” - மோகினி சொன்னாள்.

“எல்லாம் தயாராக இருக்கிறது. விருப்பமுள்ளதைச் சாப்பிடலாம்.”

பச்சை நிறச் சிறுவன் சொன்னான்.

பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் சாக்லேட்டுகளையும் டாஃபியையும் மற்ற மிட்டாய்களையும் கொண்டு தங்களுடைய பாக்கெட்டுகளை நிரப்பினார்கள். சர்பத்தையும் குடித்தார்கள். அதற்குப் பிறகு உற்சாகமடைந்து நடக்க ஆரம்பித்தபோது, பச்சை நிறச் சிறுவன் சொன்னான் :

“பில்லுக்கான பணத்தைத் தரவில்லையே!”

“நாங்கள் எடுத்த பொருட்களுக்கு என்ன விலை இருக்கும்?” ஜிம்மி கேட்டான்.

“ஐம்பது முத்தங்கள்.”

“ஐம்பது முத்தங்களா?” - நாஸ் பயம் கலந்த குரலில் கேட்டாள்: “இது என்ன புதுசா இருக்கு?”

“எங்களுடைய நாட்டில் இந்த வகையில்தான் பொருட்களின் விலையை வாங்குவோம். ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்தனி முத்தம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் இருபத்தைந்து மிட்டாய்களை எடுத்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு விலையாக ஐம்பது முத்தங்களைத் தர வேண்டியது இருக்கும். ஒரு மிட்டாய்க்கு இரண்டு முத்தங்கள் விலை.”

“நான் இரண்டு முத்தங்கள் தரவேண்டுமா?”

“ஆமாம்... நீங்கள் என்னுடைய மூக்கில் இரண்டு முத்தங்கள் தரணும்.”

“உங்களுடைய பக்கோடாவைப்போல இருக்கும் மூக்கில் ஒரு முத்தம்கூட தர முடியாது” - நாஸ் கோபத்துடன் முன்னோக்கி நடந்தாள். மற்றவர்களும் அதே மாதிரி முன்னோக்கி நடந்தார்கள்.

பச்சை நிறத்தைக் கொண்ட சிறுவன் அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் இருப்பதைப் பார்த்தபோது, பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மேலும் சற்று முன்னோக்கி நடந்தபோது, அவர்களுக்கு முன்னால் முள்ளாலான வேலிகள் உண்டாயின. அதற்குமேல் அவர்களால் முன்னோக்கிப் போக முடியவில்லை. எங்கு திரும்பினாலும் அவர்களுக்கு முன்னால் முள்வேலி எழுந்து நின்றது. பிள்ளைகள் பிரச்சினைக்குள்ளாகி விட்டார்கள். இறுதியில் அவர்கள் பின்னோக்கி நடந்து ரெஸ்ட்டாரெண்டின் கவுண்டரை அடைந்தார்கள். பச்சை நிறச் சிறுவன் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“என்னுடைய மூக்கின்மீது முத்தமிட வேண்டும் என்று நான் முன்பு கூறவில்லையா?”

பிள்ளைகள் வேகமாக ஐம்பது முத்தங்கள் தந்தார்கள். அதைத் தொடர்ந்து வழியில் உண்டான முள் வேலி இல்லாமல் போனது. அந்த இடத்தில் மலர்கள் மலர்ந்து நின்றன.

“அய்யய்யோ! இது என்ன நாடு?” - மோகினி கவலையுடன் கேட்டாள்.

“இவர்களின் தண்டனை எனக்குப் பிடித்திருக்கிறது” - ஜிம்மி சொன்னான்.

பிள்ளைகள் நடக்க ஆரம்பித்தார்கள். பாதையின் வழியாக ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் அவர்கள் தாண்டினார்கள். பாதை முடியவே இல்லை. ஒரு வாகனத்தையும் காணவில்லை. இடையில் ஆங்காங்கே வயல்கள் இருந்தன. சிறிய குழந்தைகள் இயந்திரத்தின் உதவியுடன் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள்.

பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகள் நடந்து நடந்து களைத்துப் போனார்கள். அவர்கள் ஒரு வயலின் கரையில் உட்கார்ந்திருந்தார்கள். அங்கு ஒரு சிறுவன் சோளம் சுட்டு விற்றுக் கொண்டிருந்தான்.

“ஒரு சோளம் என்ன விலை?”  - உர்ஃபி கேட்டான்.

“நான்கு முத்தங்கள்” - அந்தச் சிறுவனின் மூக்கு மிகவும் பெரியதாக இருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அது காளி ஃப்ளவரைப்போல இருந்தது.

“நான் ஒரு முத்தம்தான் தருவேன்” - மோகினி சொன்னாள்.

“நான் உங்களிடமிருந்து பத்து முத்தங்கள் வாங்குவேன்.”

“எதனால்?”

“விலை பேசுகிறவர்களிடம் அதிகமான விலையை வாங்க வேண்டும் என்பது இங்குள்ள சட்டம்.”

மற்ற பிள்ளைகளுக்கு நான்கு முத்தங்களுக்கு ஒரு சோளம் கிடைத்தபோது, மோகினி ஒரு சோளத்திற்கு விலையாக பத்து முத்தங்கள் தர வேண்டியதிருந்தது. அதனால் மற்றவர்கள் அவளைக் கிண்டல் பண்ணி சிரித்தார்கள்.

“இங்கு மோட்டார் கார் இல்லையா?” - உர்ஃபி கேட்டான்.

“இல்லை.”

“குதிரை வண்டி இருக்கிறதா?”

“இல்லை.”

“ரிக்ஷா?”

“அதுவும் இல்லை.”

“அப்படியென்றால் நடக்க வேண்டுமா?”

“எல்லோரும் நடக்கத்தான் செய்கிறார்கள்.”

“களைப்பு உண்டாகாதா?”

“இல்லை.”

“இங்கே இருந்து முதலில் இருக்கும் கிராமத்திற்கு எவ்வளவு தூரம் இருக்கும்?”

“நூறு மைல்கள்.”

“நூறு மைல்களா? என் தாயே!” - நாஸ் பயந்துவிட்டாள்: “நூறு மைல்கள் எப்படி நடந்து செல்ல முடியும்?”

“மிகவும் சாதாரண வழி இருக்கு” - சோளம் விற்றுக் கொண்டிருந்த சிறுவன் சொன்னான் : “அடுத்த சந்திப்பிற்குச் சென்றால் ஒரு மைல்கல் இருப்பதைப் பார்க்கலாம். அதன்மீது எல்லா கிராமங்களின் பெயர்களும் மைல்களும் எழுதப்பட்டிருக்கும். எந்த கிராமத்திற்குப் போக வேண்டுமோ, அந்த கிராமத்தின் பெயருக்குக் கீழே இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். உடனடியாக காரியம் நடக்கும்.”

“என்ன காரியம் நடக்கும்? எங்களை ஏதாவது பறக்க வைத்துக் கொண்டு போகுமா?” - ஜிம்மி கேட்டான்.

“நீங்கள் பட்டனை அழுத்திப் பாருங்க...”

பிள்ளைகள் அடுத்த சந்திப்பிற்குச் சென்றபோது டெலிவிஷன் செட்டைப்போல ஒரு மைல்கல் இருப்பதைப் பார்த்தார்கள். அதன்மீது எழுதப்பட்டிருந்தது.

எங்களுடைய கிராமம் - 100 மைல்கள்

பிரியமுள்ள கிராமம் - 250 மைல்கள்

செல்லமான கிராமம் - 300 மைல்கள்

தலைநகரம் - 500 மலைகள்

“சொல்லுங்கள் சகோதரி, சகோதரர்களே! எந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய பட்டனை அழுத்த வேண்டும்?” - ஜிம்மி கேட்டான்.

“பட்டனை அழுத்தும்போது முள்வேலி தோன்றினால்...?” -  மோகினி தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

“நேராக தலைநகரத்திற்குப் போவதுதான் நல்லது என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பசிக்கிறது. இங்கு எந்த இடத்திலும் முத்துக்கள் இல்லை”-  புத்லி சொன்னாள்.

ஜிம்மி தலை நகரத்திற்கான பட்டனை அழுத்தினான். ஒரு எதிர்வினையும் இல்லை. ஜிம்மி மீண்டும் பட்டனை அழுத்தினான். அதற்குப் பிறகும் எந்தவொரு அசைவும் இல்லை.

“அந்தக் குறும்புக்காரச் சிறுவன் விளையாட்டுக்காகக் கூறிவிட்டான் என்று நினைக்கிறேன்.”

“இல்லை” - மைல்கல்லில் இருந்து சத்தம் வந்தது: “நீங்கள் எனக்கு நன்றி கூறவில்லை. இங்கு பலன் இல்லையென்றால் ஒரு வேலையும் நடக்காது.”

“நன்றி! நன்றி!” - புத்லி நன்றி கூறினாள்.

அடுத்த நிமிடம் சாலைக்குக் கீழே இருந்து சத்தம் எழுந்தது. சக்கரம் மிகவும் வேகமாகச் சுற்றுவதைப்போல, சாலை நிமிடத்திற்கு நூறு மைல்கள் வேகத்தில் ஓட ஆரம்பித்தது. பிள்ளைகள் விழுவதில் இருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டார்கள்.

“அய்யய்யோ! சாலை ஓடுகிறது!” - நாஸ் சந்தோஷத்துடன் சொன்னாள். பச்சை நிறத்திற்கு மேலே நீளமான துணி இழுக்கப்படுவதைப்போல சாலை மிகவும் வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.


“அற்புதத் தீவு!” உர்ஃபி சொன்னான்: “இங்குள்ள சாலையும் ஓடுகிறது. விருப்பமிருந்தால் நடக்கவும் செய்யும். களைப்படையும்போது பட்டனை அழுத்தி சாலையை ஓடச் செய்யலாம்.”

“எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தத் தீவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” - ஜிம்மி சொன்னான்.

ஐந்தே நிமிடங்களில் சாலை ஐந்நூறு மைல்களைத் தாண்டி விட்டது. பூமியைச் சேர்ந்த பிள்ளைகளை அது தலைநகரில் கொண்டுபோய் விட்டது.

தலைநகரம் சிறிய மலைகளின்மீது உண்டாக்கப்பட்டிருந்தது. நவநாகரிகமான நகரத்திற்கு பதிலாக விசாலமான நவீன கிராமம்! அழகான சிறிய வீடுகள்! ஒவ்வொரு வீட்டிற்கு முன்பும் அழகான பூந்தோட்டமும், குழந்தைகள் விளையாடக்கூடிய மைதானமும் இருந்தன. நகரத்தின் எல்லா சாலைகளும் தெருக்களும் தாங்களாகவே ஓடிக் கொண்டிருந்தன. சந்திப்புக்களை அடையும்போது அவை நிற்கும். அங்கிருந்து எந்த சாலை முன்னால் வந்தது என்பதை அனுசரித்து முன்னோக்கிப் போவதற்கான வழி கிடைக்கிறது. பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் ஒரு சந்திப்பில் வந்து நின்றார்கள். ஐந்து சாலைகள் ஒரே இடத்தில் சேரும் சந்திப்பு! இனி எந்தப் பக்கம் போவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தார்கள். அடுத்த சாலையில் சில பிள்ளைகள் நின்றிருந்தார்கள். அவர்கள் பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகள் போகும் பகுதிக்கு எதிர்ப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் புன்னகைத்துக் கொண்டே கேட்டான் : “நீங்கள் எங்கே போக வேண்டும்?”

பூமியிலிருந்து லட்சக்கணக்கான தூரத்தைத் தாண்டி இருந்த அந்தச் சிறுவன் உருது மொழி பேசுவதைக் கேட்டு ஜிம்மியும் உர்ஃபியும் மற்ற பிள்ளைகளும் ஆச்சரியப்பட்டார்கள். நாஸால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் கேட்டாள்:

“உங்களுக்கு எங்களுடைய மொழி எப்படித் தெரியும்?”

“என்னுடைய சகோதரியிடமிருந்து...”

“உங்களுடைய சகோதரி எங்கிருந்து படிச்சாங்க?”

“உங்களுடைய நாட்டில் இருந்து படித்துக் கொண்டு வந்தாள்.”

“உங்களுடைய சகோதரி எங்களுடைய நாட்டிற்கு வந்திருக்காங்களா?” - மோகினி கோபமான குரலில் சொன்னாள்: “நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.”

“இல்லை. நான் உண்மையைத்தான் சொல்றேன்.”

“உங்களுடைய சகோதரி எங்கே இருக்காங்க? எங்களுக்குக் காட்டுங்க.”

“நான் நின்று கொண்டிருக்கும் சாலைக்கு வாங்க. அப்படியென்றால் காட்டுகிறேன்.”

“பூமியைச் சேர்ந்த பிள்ளைகள் அவன் நின்றிருந்த சாலைக்கு வந்தார்கள். சாலை ஓட ஆரம்பித்தது.”

“உங்களுடைய பெயர் என்ன?” - மோகினி கேட்டாள்.

“பிலு.”

“உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?” - நாஸ் கேட்டாள்.

“பத்து மொழிகள்.”

“பத்து மொழிகளா?” - ஜிம்மிக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு இளம் வயதில் நீங்கள் இத்தனை மொழிகளையும் எப்படிப் படித்தீர்கள்?

“என் சகோதரி சொல்லித் தந்தாங்க. அவங்களுக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் தெரியும்.”

“எது எப்படி இருந்தாலும் இந்த சின்ன வயதில் பத்து மொழிகளைத் தெரிந்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. உங்களுடைய சகோதரி ஏதாவது பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லித் தருகிறார்களா?” - உர்ஃபி கேட்டான்.

“இல்லை. அவங்க எங்கும் பாடம் சொல்லித் தரவில்லை. எங்களுடைய நாட்டில் பள்ளிக்கூடம் கிடையாது.”

“பள்ளிக்கூடம் கிடையாதா? அப்படியென்றால் நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள்?” நாஸ் கேட்டாள்.

“தலையணையில் இருந்து”

“அது எப்படி?” - மோகினிக்கு எதுவும் புரியவில்லை.

“என் வீட்டிற்கு வந்தால் எல்லாவற்றையும் காட்டுகிறேன்.”

பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளுக்கு பிலுவின் வீட்டைக் காண வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. பிலு அவர்களைப் பல சாலைகள் வழியாகவும் சுற்றிப் பயணம் செய்ய வைத்து, நகரத்தின் பல பகுதிகளையும் காட்டிவிட்டு, இறுதியாக அங்கு இருப்பவற்றிலேயே மிகவும் உயரமாக இருக்கும் மலையின் உச்சிக்கு அவர்களை அழைத்துச் சென்றான். மலையின் உச்சியில் அழகான ஒரு வீடு இருந்தது.

எல்லாம் தானாகவே நடந்து கொண்டிருக்கும் வீடு! கால் சத்தம் கேட்டவுடன் கதவு அதுவாகவே திறந்தது. தானே அடைத்துக் கொள்ளவும் செய்தது. வெளிச்சம் வந்ததும் அப்படித்தான். பகல் சிறிது சிறிதாக குறைவதை அனுசரித்து, அறையில் வெளிச்சம் அதிகமாகும். மின் கம்பியோ பல்போ அங்கு இல்லை. தூங்கும்போது இருட்டு வேண்டுமென்றால் பட்டனை அழுத்த வேண்டும். பலவகைப்பட்ட பட்டன்கள் இருக்கின்றன. மிகவும் குறைவான இருட்டு, அதைவிட கூடுதலான இருட்டு, கடுமையான இருட்டு!

பிலு பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளை ஒரு பெரிய அறைக்கு அழைத்துக் கொண்டு போய் ஒரு பெரிய மேஜையைச் சுற்றி உட்கார வைத்தான். அதற்குப் பிறகு ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்டான்: “பருகுவதற்கு என்ன வேணும்?”

“பெட்ரோல்” - ஜிம்மி சொன்னான்.

“நான் மின்சாரத்தால் படைக்கப்பட்டவள். அதனால் நான் முத்துக்களை மட்டுமே சாப்பிடுவேன்” - புத்லி சொன்னாள்.

“எனக்கு ஆரஞ்சு ஜூஸ் வேணும்” - நாஸ் சொன்னாள்.

“எனக்கு அன்னாச்சிப் பழ ஜூஸ் போதும்” - மோகினி சொன்னாள்.

“நான் மாம்பழ ஜூஸ் குடிக்கிறேன்” - உர்ஃபி சொன்னான்.

பிலு மேஜையின் ஓரத்திலிருந்த மூன்று பட்டன்களை அழுத்திவிட்டு சொன்னான்: “பெட்ரோலும் முத்தும் வந்து சேர கொஞ்சம் தாமதமாகும். மீதி விஷயங்கள் இப்போ வந்திடும்.”

“அது ஏன்?” - ஜிம்மி கேட்டான்.

“இங்கு யாரும் பெட்ரோல் பருகுவது இல்லை. நீங்க பார்த்தீர்கள் அல்லவா? எங்களுடைய நாட்டில் ஒரு கார்கூட கிடையாது.”

“ஏன், கார் தயாரிக்கவில்லையா?” - மோகினி கேட்டாள்.

“கார் விபத்துக்களை உண்டாக்கும். முன்பு இங்கு கார் விபத்துக்களால் ஏராளமான ஆட்கள் இறந்துவிட்டார்கள். அதனால் நாங்கள் வாகனங்களுக்கு பதிலாக சாலைகளை ஓடச் செய்துட்டோம். இப்போது எந்தவொரு விபத்தும் நடப்பது இல்லை.”

“கார் விபத்து என்ற விஷயமும் பழமையான ஒரு விஷயமாகி விட்டது” - புத்லி சொன்னாள் : “இதுவரை யாரும் அந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தது இல்லை.  வாகனங்களுக்கு பதிலாக ஓடக்கூடிய சாலைகளை உண்டாக்கி, பூமியில் இறங்குவதற்கு ஓடக்கூடிய ஏணிகளை உண்டாக்கினால் பயணம் மிகவும் பாதுகாப்பாகவும் சிரமம் இல்லாததாகவும் இருக்கும்.”

“உங்களுடைய நகரம் வினோதமானதாக இருக்கிறது. நாங்கள் உங்களுடைய நகரத்தில் ஒரு கடை வீதியைக்கூட பார்க்கவில்லை” - உர்ஃபி சொன்னான்.

“கடை வீதிக்கான தேவை என்ன இருக்கிறது? இங்கு பட்டனை அழுத்தினால், எல்லா பொருட்களும் தானே வந்து சேர்ந்துவிடும்” - பிலு சொன்னான்.

“எங்கேயிருந்து?”


“எங்களுடைய நகரத்துக்குக் கீழே பெரிய பெரிய தொழிற்சாலைகளும் டிப்பார்ட்மெண்டல் கடைகளும் இருக்கின்றன. அங்கிருந்து எல்லா பொருட்களும் வரும்.”

“தொழிற்சாலையில் என்ன தயார் பண்ணுகிறீர்கள்?”

“உணவுப் பொருட்கள், ஆடைகள், வீடு கட்டப் பயன்படும் பொருட்கள், திரைப்படப் புத்தகங்கள்...”

“திரைப்படப் புத்தகமா? எங்களுடைய நாட்டில் கிடைப்பதைப் போன்ற ஒரு அணா விலை இருக்கக்கூடிய திரைப்படப் பாடல் புத்தகங்களாக இருக்கும். அப்படித்தானே?” - மோகினி கேட்டாள்.

“இல்லை... இது புத்தகம். இதை வாசிப்பதற்கு பதிலாக பார்ப்போம்.”

பிலு மேஜையில் இருந்த பட்டனை அழுத்தினான். அடுத்த நிமிடம் பக்கத்து அறையிலிருந்து ஒரு ட்ரே அவனுக்கு முன்னால் வந்து நின்றது. அதில் ஒரு புத்தகம் இருந்தது. புத்தகத்தைத் திறந்தவுடன், திரைப்படம் ஆரம்பமானது. புத்தகம் திரைப்படங்களாகக் காட்டவும் பேசவும் செய்தது. பிள்ளைகள் புத்தகத் திரைப்படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

“எங்களுடைய நாட்டில் எல்லா வகைப்பட்ட திரைப்படப் புத்தகங்களும் கிடைக்கும். அதனால் வீட்டில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் படிக்கலாம். திரைப்படப் புத்தகத்தைக் கொண்டு படிக்க முடியாதவர்கள் தலையணையைக் கொண்டு படிக்கலாம்” - பிலு சொன்னான்.

“தலையணையைக் கொண்டு எப்படிப் படிக்கிறீர்கள்?” - மோகினி கேட்டாள்.

அதற்குகள் எல்லோருக்கும் பருகுவதற்கான விஷயங்கள் மேஜைக்கு உள்ளே இருந்து வெளியே வந்தது. முத்தும் பெட்ரோலும்கூட இருந்தன.

“நீங்கள் சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு சிறது நேரம் ஓய்வு எடுங்கள்! அதற்குப் பிறகு நான் உங்களை என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.”

“உங்களுடைய சகோதரி எங்கே இருக்கிறார்கள்?”

“வெளியே... தோட்டத்தில் இருக்காங்க. முதலில் நீங்க ஓய்வெடுத்து உற்சாகத்தை மீண்டும் பெறுங்கள்! அதற்குப் பிறகு என் சகோதரி இருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். என் சகோதரி பல வேளைகளிலும் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவங்க. அதனால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அவங்களைப் பார்க்க முடியும்.”

பிலு விருந்தாளிகளை வேறு வேறு அறைகளுக்கு அழைத்துச் சென்றான். படுக்கையில் படுத்ததுதான் தாமதம், மிகவும் அருமையான பாடல்கள் கேட்க ஆரம்பித்தன. சிறிது நேரத்திற்குள் பிள்ளைகள் தூங்கிவிட்டார்கள்.

பிலு அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தான். நன்றாகத் தூங்கி விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன், அவன் ஒவ்வொருவரின் தலையணையின் அருகிலும் சென்று ஒவ்வொரு பட்டனாக அழுத்தி, மெதுவான குரலில் சொன்னான்:

“தூக்கத்தில் இருக்கும்போது இவர்களுக்கு நம்முடைய தீவின் மொழியைக் கற்றுக் கொடு.”

இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகள் கண் விழித்தார்கள். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இப்போது உருது மொழியைப் பேசவில்லை - அந்தத் தீவின் மொழியைப் பேசினார்கள்.

“இது எப்படி நடந்தது?” - உர்ஃபி ஆச்சரியத்துடன் கேட்டான்.

“எங்களுடைய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு இது. தூங்கி கொண்டிருக்கும் பிள்ளைகளின் மூளையில் எதையாவது கூறினால் அது எப்போதும் இருப்பது மாதிரி அவர்களுக்கு மனப்பாடமாகி விடும். எந்தச் சமயத்திலும் மறக்கவே மறக்காது. அதனால் நாங்கள் எழுத்தையும் வாசிப்பையும் கற்றுத் தரக்கூடிய புதிய முறையைக் கண்டுபிடித்தோம். கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயத்தை மின் அலைகள் மூலம் தலையணைக்குள் கொண்டு செல்வோம். தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனின் மூளைக்கு அதை மாற்றுவோம். அதன்மூலம் இரண்டே மணி நேரங்களில் ஒவ்வொரு மொழியையும் கற்றுத் தருகிறோம்” – பிலு விளக்கிச்  சொன்னான்.

“ஆச்சரியமான விஷயம்தான்!” - நாஸ் சொன்னாள்.

“இந்த வகையில் எங்களுடைய நாட்டைச் சேர்ந்த பிள்ளைகள் நிறைய மொழிகளையும் பல விஞ்ஞான விஷயங்களையும் படிக்கிறார்கள். இந்த தீவில் இருக்கும் பிள்ளைகள் நன்கு படித்தவர்களாகவும் திறமைசாலியாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதரும் அவரவர்களுடைய விருப்பத்திற்கேற்றபடி ஆறு அல்லது ஏழு வேலைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். பூமியில் இருக்கும் மனிதர்களால் ஐம்பது வருடங்களில் கற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை இங்குள்ளவர்கள் எட்டு வயதிற்குள் கற்றுக் கொள்கிறார்கள்.”

உர்ஃபி விஷயத்தை மாற்றினான்: “நீங்கள் பகல் நேரத்தில் எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள்?”

“நாங்கள் நேரத்திற்கு அடிமைகளாக இல்லை. விருப்பம்போல செயல்படலாம். தேவைப்பட்டால் பன்னிரண்டு நிமிடங்கள் வேலை செய்தாலும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.”

“இது என்ன சட்டம்! எல்லோரும் பன்னிரண்டு நிமிடங்களில் வேலை சேய்வோம் என்று முடிவெடுத்தால் தீவில் இருக்கும் மக்களுடைய வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகி விடாதா?” உர்ஃபி கேட்டான்.

“இல்லை. குறைவான நேரம் வேலை செய்தாலும் தீவில் இருக்கும் மக்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் உண்டாகாது. அப்படிப்பட்ட ஒரு நிலைமைதான் இங்கே இருக்கிறது.”

“அது எப்படி?”

“இந்த தீவில் இருக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை தானே செயல்படும் தொழிற்சாலைகளில் நாங்கள் உண்டாக்குகிறோம். ஆடைகளும் மற்ற பொருட்களும் அதே மாதிரிதான் உண்டாக்கப்படுகின்றன. அதற்கு ஒரு மனிதன்கூட தேவையில்லை. எல்லா விஷயங்களும் ரசாயன விஞ்ஞானத்தின் உதவியுடன் மண்ணைக் கொண்டு தொழிற்சாலையில் உண்டாக்கப்படுகின்றன. ஐம்பது வருடங்களில் ஒருமுறைகூட அந்த இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.”

“அதனால் நீங்கள் யாரும் வேலை செய்ய வேண்டியதில்லையா?”

“நாங்கள் தினமும் சில மணி நேரங்கள் வேலை செய்வோம். ஆனால் நாங்கள் இப்போது வேலைகளின் அடிமைகள் அல்ல. வேலை எங்களைப் பொறுத்தவரையில் விளையாட்டு. ஒரு பொழுதுபோக்கு.”

“உங்களுடைய நகரத்தில் போலீஸையோ, ராணுவத்தையோ காணோமே?” - ஜிம்மி சொன்னான்.

“ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வெறுக்கக்கூடிய நாட்டில் ராணுவம் தேவைதான். இது வெறுப்பு இல்லாத நாடு. இங்கு யாருக்கும் இன்னொருவருக்குச் சொந்தமானதைத் தட்டிப் பறிக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் அவரவர்களுக்குத் தேவையான பங்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.”

“ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானால்...?” - ஜிம்மி கேட்டான்.

“எதற்காகக் கொல்ல வேண்டும்? இங்கு எந்தச் சமயத்திலும் கொலைச் செயல் நடக்கவே நடக்காது.”

“வெளியில் இருந்து வந்த நான் உங்களை ஆட்டிப்படைக்க முயற்சித்தால்...?”

“நீங்கள் எதற்கு ஆட்டிப் படைக்க வேண்டும்? உங்களுக்கு என்ன வேண்டும்? வீடா? அதை நாங்கள் இலவசமாகவே தருவோம். உணவு வேண்டுமா? எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஆடை வேண்டுமா? விருப்பப்படும் ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். கல்வி வேண்டுமா? அதுவும் இங்கு இலவசமாகவே கிடைக்கிறது. இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்?”

“அதிகாரம்” - ஜிம்மி கையைச் சுருட்டிக் காண்பித்தான்.


“அதிகாரம் என்று சொன்னால் என்ன? எங்களுக்கு அது என்ன என்று தெரியாது. நாங்கள் வெறுப்பில்லாத நாட்டின் குடிமகன்கள். எங்களுக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும்.”

ஜிம்மி வெட்கப்பட்டு தலையைக் குனிந்து கொண்டான். அவன் மெதுவான குரலில் சொன்னான் : “அற்புதமான நாடு! நீங்களும் அற்புதமான மனிதர்கள்!  இனி எங்களை உங்களுடைய சகோதரியிடம் அழைத்துச் செல்லுங்கள்!”

“அவங்க எனக்கு மட்டும் சகோதரி அல்ல.”

பிலு பெருமையுடன் சொன்னான் : “நீங்கள் இங்கு நில்லுங்கள். நான் அவர்களிடம் சந்திப்பதற்கான நேரத்தைக் கேட்டுவிட்டு வருகிறேன்.”

சிறிது நேரத்திற்குப் பிறகு பிலு திரும்பி வந்து மகிழ்ச்சியுடன் தன் கைகளைத் தட்டிக் கொண்டு சொன்னான்: “என் சகோதரி உங்களைக் கூப்பிடுறாங்க. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். சகோதரி இந்த நிமிடமே உங்களைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார். இல்லாவிட்டால் அவர்களைப் பார்ப்பதற்கு நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும்.”

அழகான பூச்செடிகளுக்கு நடுவில் நடந்து அவர்கள் ஒரு ஆப்பிள் மரத்திற்குக் கீழே போய் நின்றார்கள். அந்த மரத்தைச் சுற்றி அழகான மலர்களைக் கொண்ட செடிகள் நன்கு வளர்ந்து நின்றிருந்தன. அங்கு போடப்பட்டிருந்த சிறிய பெஞ்சுகளில் நிறைய பிள்ளைகள் அமர்ந்திருந்தார்கள். அங்கு மென்மையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் நீரைப் பொழியச் செய்யும் சிறிய இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.

பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகள் பிலுவுடன் சேர்ந்து முன்னோக்கி நடந்தார்கள்.

“உங்களுடைய சகோதரி எங்கே?”  - உர்ஃபி கேட்டான்.

“அதோ பாருங்கள்!” - பிலு ஆப்பிள் மரத்தின் ஒரு கிளைக்கு நேராகத் தன்னுடைய விரலை நீட்டினான்.

பிள்ளைகள் பரபரப்புடன் மேலே பார்த்தார்கள். அவர்களுக்கு பிலுவின் சகோதரி தெரியவில்லை. ஆனால் ஆப்பிள் மரத்தின் கிளையில் ஒரு வெள்ளை புறா அமர்ந்திருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அதன் தலையில் தாமரைப் பூவாலான கிரீடம் இருந்தது. அதன் குஞ்சுகள் என்று தோன்றக்கூடிய இரண்டு சிறிய புறாக்கள் இடது பக்கத்திலும் வலது பக்கத்திலும் உட்கார்ந்திருந்தன. அந்தப் புறாக் குஞ்சுகளும் வெள்ளை நிறத்தையே கொண்டிருந்தன. தலையில் கிரீடமும் இருந்தது.

மோகினி உரத்த குரலில் சொன்னாள் : “நம்முடைய புறா!”

“சமாதானப் புறா!”

“இதைத் தேடித்தான் நாம் இங்குவரை வந்திருக்கிறோம்?” - உர்ஃபி சொன்னான்.

“இதுதான் என்னுடைய சகோதரி” - பிலு பொருமையுடன் சொன்னான்.

“இது எல்லா குழந்தைகளுக்கும் சகோதரிதான்... அதாவது நம்முடைய சகோதரி!”

ஜிம்மி மெதுவான குரலில் சொன்னான் : “சகோதரி! நாங்கள் உங்களை அழைத்துக் கொண்டு போக வந்திருக்கிறோம். நீங்கள் எங்களுடன் கோபித்துக் கொண்டு கிளம்பி வந்த நாளிலிருந்து பூமி நாசமாக ஆரம்பித்துவிட்டது.”

“எங்களுடைய சகோதரி எங்களை விட்டுப் போனால் நாங்கள் அழிந்துவிடுவோம்” - பிலு கண்ணீர் வழியச் சொன்னான்: “நீங்கள் எங்களை விட்டுப் போகக் கூடாது!”

“நீங்கள் எங்களுடன் சேர்ந்து வரவில்லையென்றால், பிரியமுள்ள பூமியில் ஒரு மனிதன்கூட உயிருடன் இருக்கமாட்டான்” - நாஸ் பணிவான குரலில் சொன்னாள்.

“நான் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொண்டு என்னை அங்கிருந்து அவசியம் கிளம்பியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்...” - புறா சொன்னது.

“நான் வெட்கப்படுகிறேன்” - ஜிம்மி தலையைக் குனிந்து கொண்டு சொன்னான் : “இனி எந்தச் சமயத்திலும் நீங்கள் கூறுவதைக் கேட்காமல் இருக்க மாட்டோம். எந்தச் சமயத்திலும் ரத்தம் சிந்துவது இருக்காது. எங்களுடன் சேர்ந்து வாருங்கள்! எங்களுடைய பூமியை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்!”

“எங்களுடைய வெறுப்பு இல்லாத நாடு அழியட்டும் என்கிறீர்களா?” - பிலு விரக்தியுடன் சொன்னான்.

“இந்த வெறுப்பு இல்லாத நாடு என்னுடையது. நான் என்னுடைய உயிரைவிட இதன்மீது அன்பு வைத்திருக்கிறேன். எனினும் பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் அல்லவா? பிள்ளைகளின் வேண்டுகோளை நிராகரிக்க என்னால் முடியாது.”

“ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளில் எப்படி வாழ முடியும் சகோதரி?” - பிலு கேட்டான்.

புறா அமைதியாக இருந்தது. சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு அது சொன்னது: “பூமியிலிருந்து வந்திருக்கும் பிள்ளைகளே! நீங்கள் என்னுடைய குஞ்சுகள் இரண்டையும் அழைத்துக் கொண்டு செல்லுங்கள். ஒரு குஞ்சு சமாதானத்திற்கானது. இன்னொரு குஞ்சு செல்வத்திற்கானது. நீங்கள் முதலில் இவர்களைக் கொண்டு செல்லுங்கள். இவர்கள் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் இவர்கள் சொல்வதைக் கேட்டு வாழ்ந்தால், நானும் ஒருநாள் உங்களைத் தேடி வருவேன்.”

பெரிய புறா குஞ்சுகளைப் பார்த்தது. அடுத்த நிமிடம் ஒரு புறா மோகினியின் தோளிலும் இன்னொரு புறா உர்ஃபியின் தோளிலும் பறந்து வந்து உட்கார்ந்தது. புறாக் குஞ்சுகள் சிறகடித்தவுடன் ராகம் ஒன்று எழுந்தது. தாங்கள் அந்த ராகத்தின் காற்றில் பறந்து தீவிலிருந்து புறப்படுவதைப்போல் பூமியிலிருந்து வந்திருந்த பிள்ளைகள் உணர்ந்தார்கள்.

அவர்கள் மிகவும் வேகமாகப் பறக்கும் தட்டிற்கு வந்தார்கள். பிள்ளைகள் புறாக் குஞ்சுகளுடன் சேர்ந்து மணிக்கு லட்சம் மைல் வேகத்தில் பூமிக்குத் திரும்பினார்கள்.

அவர்கள் பயணம் செய்த வழியெங்கும் இனிய பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. நான்கு பக்கங்களிலிருந்தும் மலர்கள் சொரிந்த வண்ணம் இருந்தன.

எவரெஸ்ட் சிகரத்திற்குத் திரும்பி வந்தபோது, புறாக் குஞ்சுகளும் அவர்களுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தன. சமாதானம், செல்வம், நீதி ஆகியவற்றைப் பற்றிய பாடல்!

அதைக் கேட்டவுடன் பூமியிலிருக்கும் மனிதர்களின் இதயங்களிலிருந்து வெறுப்பும் கெட்ட எண்ணங்களும் மறைந்துவிட்டன. பாடலின் வரிகள் உயர உயர நீரும் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. படிப்படியாகக் குன்றுகளும் மலைகளும் வயல்களும் மைதானங்களும் மேலே வர ஆரம்பித்தன. வயல்களில் விவசாய வேலை தொடங்கியது. நதிகளில் படகுகள் பாய்ந்து செல்ல ஆரம்பித்தன. சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கின. தரிசாகக் கிடந்த பூமி செழிப்பாக ஆனது. காய்ந்து போயிருந்த மரக்கிளைகள் துளிர்த்தன. உலகம் என்ற தோட்டம் அன்பு உள்ள மனிதர்களைக் கொண்டு நிறைந்திருந்தது. சமாதானமும் செல்வமும் நிறைந்த புதிய உலகத்தில் நம்முடைய பிள்ளைகள் ஜிம்மி, உர்ஃபி, நாஸ், மோகினி, புத்லி - மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.