Logo

உலக்கை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6448
ulakkai

ன்றரைக் கட்டு ஓலைகளையும் கொஞ்சம் மூங்கில் துண்டுகளையும் வைத்து கொச்சய்யப்பன் அந்த நிலத்தில் ஒரு குடிசையைக் கட்டினான். குனிந்து உள்ளே போனால், கொச்சய்யப்பன் சிரமப்பட்டு கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாம். அந்தக் குடிசை அந்த அளவிற்குத்தான் இருந்தது.

ஏரிக்கரையில் குண்டும் குழியுமாக இருக்கும் நிலப்பகுதி அது. ஏரியில் தண்ணீர் புரண்டு வந்தால், நிலம் முழுவதும் அதில் மூழ்கிவிடும். இங்குமங்குமாகப் புற்களும் முட்செடிகளும் வளர்ந்து காணப்பட்டன. ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு அதற்கு இருந்தது.

அதன் சொந்தக்காரரான மாடம்பி அந்த நிலத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. எப்போதாவது யாராவது அதைப்பற்றி ஞாபகப்படுத்தினால், அதைக் காதிலேயே அவர் போட்டுக் கொள்ள மாட்டார். அவருடைய முழுகவனத்தையும் பிடித்து வைத்திருக்கக்கூடிய அளவிற்கு பெரிய அளவில் தென்னந்தோப்புகளும் நெல் வயல்களும் இருந்தன.

ஏதோ ஒரு குடும்பத்தகராறு காரணமாகத் தன்னுடைய சகோதரர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு, கொச்சய்யப்பன் தனியாக வசிக்க முடிவெடுத்தான். மாடம்பியின் வீட்டிற்கு வெளியே ஒரு ஓரத்தில் பணிவாக நின்று கொண்டு அவன் வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டான். மாடம்பி அலட்சியமாக முனக மட்டுமே செய்தார்.

நீர் கரையேறி வந்தால் மூழ்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றிலும் இருந்த மண்ணை வெட்டி உயர்த்திய பிறகுதான் அவன் வீட்டையே உண்டாக்கினான். ஏரியின் கரையில் புற்கள், முட்செடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒரு பாறையைக் கொண்டு வந்து வைத்திருப்பதைப்போல கொச்சயப்பனின் வீடு இருந்தது.

கொச்சய்யப்பன் எப்போதும் வேலை செய்யக்கூடிய ஒருவனாக இருந்தான். நிலத்தைக் கொத்துவது, சுமைகள் தூக்குவது, படகு ஓட்டுவது என்று எந்த வேலையாக இருந்தாலும அவன் செய்வான்.

அப்போது கொச்சய்யப்பனுக்கு இருபத்து இரண்டு வயதுக்குமேல் இருக்காது. நல்ல பலமும் துடிப்பும் கொண்ட உடலை அவன் கொண்டிருந்தான். எவ்வளவு வேலைகள் செய்தாலும் அவனுக்கு சிறிதுகூட களைப்பு உண்டாகாது.

மாலை நேரத்தில் வேலை முடிந்து வந்தவுடன் கொச்சய்யப்பன் சமையல் செய்து சாப்பிடுவான். அதற்குப் பிறகு மண்வெட்டியையும் கூடையையும் எடுத்துக்கொண்டு ஏரியை நோக்கிச் செல்வான். நீருக்கடியில் இருந்து மண்ணை வெட்டிக் கூடையில் போட்டு நிலத்தில் கொண்டு வந்து போடுவான். அப்படி நள்ளிரவுவரை அவன் மண் சுமப்பான். மீதமிருக்கும உணவைச் சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வான்.

ஒரே வருடத்தில் நிலத்தில் இருந்த குழிகள் அனைத்தையும் அவன் மண்ணைக் கொண்டு மூடினான். புற்களையும் முட்செடிகளையும் வெட்டி, இல்லாமல் செய்தான். அதற்குப் பிறகும் அந்த நிலம் சுற்றிலும் இருந்த நிலங்களைவிட உயர்ந்ததாகத் தெரியவில்லை. ஏரியில் இருந்து மண்ணை எடுக்க வேண்டிய சிரமம் மேலும் அதிகமானது.

நிலத்திற்கு மத்தியில் வாய்க்கால் வழியாக உள்ளே படகைச் செலுத்திச் சென்றால் வேண்டுமளவிற்கு மண்ணைக் கொண்டு வரலாம். கொச்சய்யப்பன் குறைவான கூலிக்குப் படகை எடுத்து, நள்ளிரவு நேரம் வரை மண்ணைக் கொண்டு வருவான். நிலவு இருக்கும் இரவு நேரமாக இருந்தால் வடக்குப் பக்க வீட்டில் இருக்கும் அந்தோணியும் உடன் வருவான். கொச்சய்யப்பன் படகில் கொண்டு வரும் மண்ணை நிலத்தில் சுமந்து கொண்டு போய் போடுவதை வெறுமனே அவன் பார்த்துக்கொண்டு நின்றிருப்பான். இடையில் ஏதாவது அவன் கூறுவான். அவர்கள் இருவரும் ஒரே வயதைக் கொண்டவர்கள். அந்தோணிக்குத் திருமணமாகிவிட்டது - கொச்சய்யப்பனுக்குத் திருமணம் ஆகவில்லை என்ற ஒன்று மட்டும்தான் அவர்களுக்கிடையே இருந்த வித்தியாசம்.

சில நேரங்களில் அந்தோணி கேட்பான் : “கொச்சய்யப்பா, நீ எதற்கடா கண்டவனின் நிலத்திலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கே?”

அதற்கு கொச்சய்யப்பன் அலட்சியமாக பதில் கூறுவான்: “ கண்டவனின் நிலமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதாக இருந்தாலும் நாம் வசிக்கும் இடம் நன்றாக இருக்க வேண்டாமா அந்தோணி மாப்பிள்ளை?”

“நன்றாக வசித்துக் கொண்டிருக்கும்போது, வசிப்பதற்கு வேறு ஆட்கள் வருவார்கள்.”

கொச்சய்யப்பன் உறுதியான குரலில் கூறுவான்: “அந்த முதலாளி நெறிகளும் அறிவும் உள்ளவர்.”

அந்தோணி அதை எதிர்த்து எந்த வாதமும் செய்ய மாட்டான். அர்த்தம் நிறைந்த ஒரு முனகலுடன் அவன் அதை அத்துடன் முடித்துக் கொள்வான்.

மேலும் ஒரு வருடம் கடந்த பிறகு, அந்த நிலத்தைச் சுற்றிலும் நிறைய வீடுகள் இருந்தன.

ஒருநாள் எதிர்பாராத சூழ்நிலையில் ஆட்களுடன் அந்த வழியாகக் கடந்து சென்ற மாடம்பி, நிலத்தைப் பார்த்தார். அவர் கொச்சய்யப்பனை அழைத்துச் சொன்னார்: “பத்து தென்னங்கன்றுகளை நட்டு வைத்தால், நீ எப்போதாவது ஒரு இளநீரைக் குடிக்கலாமே கொச்சய்யப்பா?”

கொச்சய்யப்பன் தீர்மானித்திருந்த ஒரு விஷயம்தான் அது. அவன் பன்னிரண்டு தென்னங்கன்றுகளை விலைக்கு வாங்கி வீட்டைச் சுற்றி நட்டு வைத்தான். மூன்று வருடங்களில் அந்த நிலம் முழுக்க அவன் தென்னங்கன்றுகளை நட்டான். ஒவ்வொரு கன்றுக்கும் தனித்தனியாக வேலி அமைத்தான். அதற்கும் மேலாக, நிலத்தைச் சுற்றி பலமான வேலியையும் கட்டினான்.

அவன் தினமும் அதிகாலையில் எழுந்திருப்பான்.

ஒவ்வொரு தென்னங்கன்றையும் தனி கவனம் செலுத்திப் பார்ப்பான். அதற்கு செய்ய வேண்டியவற்றைச் செய்வான். வேலை முடிந்து வந்த பிறகும் அவன் தூக்கம் வரும் வரையில் தென்னங்கன்றுகளை விட்டு சிறிதும் நகர மாட்டான்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் நன்கு வளர ஆரம்பித்தன. வரிசையாக செழிப்பாக வளர்ந்து நின்றிருக்கும் கன்றுகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுடைய கண்கள் ஈரமாகிவிடும். அந்தத் தென்னங்கன்றுகளைப் பார்த்து, அந்த ஓலைகளைத் தடவிக் கொண்டிருக்கும் காற்றை அனுபவித்துக் கொண்டே அவன் அப்படியே நின்றிருப்பான். அதைத் தாண்டிய ஒரு சந்தோஷத்தை அவன் உணர்ந்ததேயில்லை.

மாடம்பியும் அவருடைய ஆட்களும் அதற்குப் பிறகும் அந்த வழியாகக் கடந்து சென்றார்கள். அவர் நிலத்திற்குள் கால் வைத்து தென்னங்கன்றுகளைப் பார்த்தார். தன்னுடன் இருந்த கணக்குப் பிள்ளைக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்தார். கொச்சய்யப்பனை அழைத்து தென்னை பயிர் செய்வதைப் பற்றி சில ஆலோசனைகளைச் சொன்னார்.

அதற்குப் பிறகு மாடம்பியின் கணக்குப் பிள்ளை மாதத்தில் ஒன்றோ இரண்டோ தடவை அங்கு வருவது என்பது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. கொச்சய்யப்பன் வேலைக்குப் போயிருக்கும் நேரத்தில் அந்த மனிதன் வருவதாக இருந்தால், தான் வந்த விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏதாவதொன்றை மாற்றி விட்டோ, கீழே விழ வைத்துவிட்டோ அவன் செல்வான். கொச்சய்யப்பன் இருக்கும் நேரத்தில் வந்துவிட்டால் சற்று அதிகாரத்தொனியில் அவன் ஒன்றிரண்டு கட்டளைகளைப் பிறப்பித்து விட்டுச் செல்வான்.

ஒருநாள் அந்தோணி கேட்டான்: “என்ன கொச்சய்யப்பா, முதலாளி வீட்டுல இருந்து அடிக்கடி வர்றாங்களே?”


கொச்சய்யப்பன் பதில் சொல்லவில்லை. அவன் மவுனமாக அலட்சியமாக நின்று கொண்டிருந்தான்.

இதற்கிடையில் ஏரியின் கிழக்குக் கரையில் ஒரு இடத்தைக் கைப்பற்றும் சம்பவமும், அதிலிருந்து வெளியேற்றியதும் நடந்தன. கொச்சய்யப்பனின் தூரத்து மாமாவான கண்டங்கோரனின் குடும்பம்தான் இருந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. அங்குள்ள ஒரு பெரிய நிலவுடைமைக்காரன் வைத்திருந்த ஏரிப் பகுதியை கண்டங்கோரன் சமநிலைப்படுத்தி தென்னங்கன்றுகளை நட்டான். தென்னை வளர்ந்து காய்கள் உண்டாகத் தொடங்கிய போது, கண்டங்கோரனை அங்கிருந்து விரட்டுவதற்கான முயற்சி நடந்தது. கண்டங்கோரன் அதை எதிர்த்து நிற்பதைப் பார்த்து நிலத்தின் சொந்தக்காரன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வந்து அங்கிருந்து அவனை விரட்டியடித்தான். அப்போது நடைபெற்ற சண்டையில் கண்டங்கோரனுக்கும் அவனுடைய ஒரு மருமகனுக்கும் காயம் உண்டாகவே, அவர்கள் மருத்துவமனையைத் தேடிச் சென்றார்கள்.

மாமாவைப் பார்ப்பதற்காக கொச்சய்யப்பனும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தான். மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த போது, கொச்சய்யப்பனின் முகத்தில் ஆழமான கவலை பரவி விட்டிருந்தது.

அந்தோணி கேட்டான். “என்ன கொச்சய்யப்பா, உனக்கும்...?” அவன் அர்த்தம் நிறைந்த அந்தக் கேள்வியை அத்துடன் நிறுத்திக் கொண்டான்.

கவலையை மறைக்க முயற்சித்தவாறு கொச்சய்யப்பன் சொன்னான்: “எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. அந்தோணி!”

“எல்லா பூனைகளும் எலியைப் பார்த்தால் விடுவது இல்லை கொச்சய்யப்பா...” -அந்தோணி திரும்பி நடந்தான்.

அன்று இரவு கொச்சய்யப்பன் தூங்கவேயில்லை. மருத்துவமனையில் தன் மாமா காயத்துடன் படுத்திருப்பதையும், அவனுடைய பாசத்திற்குரிய மகளான உண்ணுலி அருகில் உட்கார்ந்து கொண்டு தேம்பித் தேம்பி அழுவதையும் நினைத்து அவனுக்கு தூக்கமே வரவில்லை. ஆனால், அந்த நினைவுகள் அனைத்திற்கும் அடியில் ஒரு மிகப்பெரிய பயம் அலையடிக்கத் தொடங்கியிருந்தது. அந்த பயத்தை மறைப்பதற்கும் அதை விரட்டியடிக்கவும் அவன் கடினமாக முயற்சி செய்தான். ஆனால், அது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. மாடம்பியும், அவருடைய ஆட்களும் ஆயுதங்களுடன் வந்து அவனுடைய குடிசையையும் நிலத்தையும் வளைத்து நின்று கொண்டிருப்பதாக அவன் நள்ளிரவு வேளையில் கனவு கண்டான். மறுநாள் பகல் முழுவதும் அவன் அங்கிருந்து வெளியே எங்கும் செல்லவில்லை. மாடம்பியின் ஆட்கள் வருவார்கள் என்றும்; வந்தால் அங்கிருந்து போக முடியாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவன் நினைத்தான். தான் நட்டு வளர்த்த தென்னங்கன்றுகளைப் பத்திரமாகக் கவனிப்பதற்கும் அவற்றைப் பார்ததுக்கொண்டு நின்றிருப்பதற்குமான உரிமையைக் கெஞ்சிக் கேட்டு வாங்க வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான்.

அன்று இரவும் அவன் தூங்கவில்லை. நடு இரவு ஆனபோது, வெளியே ஒரு அசைவு கேட்பதைப்போலவும், ஆட்கள் நடப்பதைப்போலவும் அவனுக்குத் தோன்றியது. உடனடியாக அவன் வெட்டுக்கத்தியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி, வீட்டைச் சுற்றி பார்த்தான்; யாருமில்லை. நிலம் முழுவதும் நடந்து பார்த்தான்; யாருமில்லை. திரும்பி வந்து கட்டிலில் படுத்தான். அப்போதுதான் அவனுக்குத் தன் கையில் ஒரு வெட்டுக்கத்தி இருக்கிறது என்ற நினைப்பே உண்டானது.

அவன் சிந்தித்தான். அந்த இருட்டைப் பார்த்து அவன் முணுமுணுத்தான்: “அறுத்திடுவேன் நான்... அவர்கள் என் நிலத்தில் கால் வைத்தால், நான் கால்களை வெட்டிடுவேன்.”

அவன் வெட்டுக்கத்தியை காற்றில் இப்படியும் அப்படியுமாக வீசினான். அதைத் தலைப்பகுதியில் வைத்துக் கொண்டு அவன் படுத்தான். அவன் தூங்கியும் விட்டான். மறுநாள் அதிகாலையில் தைரியசாலியாக- ஒரு புதிய மனிதனாக அவன் எழுந்தான். அந்த நிலத்திற்கு எதிரான எந்தச் செயலையும் தனி மனிதனாக நின்று எதிர்க்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்.

வெட்டுக்கத்தியைத் தீட்டிக் கூர்மைப்படுத்தி, சுருட்டிய பாய்க்குள் வைத்துவிட்டு, குடிசையின் வாசலை பத்திரமாக அடைத்துவிட்டு, அவன் வேலைக்குச் சென்றான்.

ஒருநாள் அந்தோணி கொச்சய்யப்பனை மறைந்து நின்று பார்த்துக்கொண்டே சொன்னான் : “முதலில் வைத்த தென்னங்கன்றுகள் காய்க்கத் தொடங்கிவிட்டனவே கொச்சய்யப்பா?”

கொச்சய்யப்பன் மிடுக்கான குரலில் சொன்னான்: “காய்க்கும் அந்தோணி... தேங்காய்கள் உண்டாகும்... நான் அவற்றை வெட்டுவேன்.”

கொச்சய்யப்பனின் வார்த்தைகளில் இருந்த உறுதியையும் மிடுக்கையும் அந்தோணி உணராமல் இல்லை. ஆனால் அவன் அதற்குப் பிறகு எதுவும் கூறாமல் அங்கிருந்து திரும்பி நடந்தான்.

மாடம்பியின் கணக்குப்பிள்ளை வாரத்தில் ஒரு முறை நிலத்தைப் பார்ப்பதற்கு வருவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. கொச்சய்யப்பன் அவனைப் பார்த்ததாகவே காட்டிக்கொள்ள மாட்டான். சில நேரங்களில் கணக்குப்பிள்ளை பார்ப்பது மாதிரி, தீட்டிக் கூர்மைப்படுத்திய வெட்டுக்கத்தியை அவன் திண்ணையில் வைத்திருப்பான். சில வேலைகளில் வெட்டுக்கத்தியை எடுத்து சுழற்றியாறு அவன் கணக்குப்பிள்ளைக்கு முன்னால் நடந்து போவான்.

ஒருநாள் கணக்குப்பிள்ளைக்கு முன்னால் கொச்சய்யப்பன் பழுத்து நின்றிருந்த ஒரு தென்னைமட்டையை வெட்டினான். பழுத்த மட்டையும் அதற்கு அருகில் இருந்த பச்சைமட்டையும் கீழே விழுந்தன. வெட்டியபோது அவனுடைய முகத்தில் ஒரு கொடூரத்தனம் தெரிந்தது. கணக்குப்பிள்ளை அதைப் பார்த்தான். அவன் நடுங்கிவிட்டான்.

முதலில் நட்ட பன்னிரெண்டு கன்றுகள் தென்னை மரங்களாக மாறின. அவை காய்த்தன. குடிசையின் முன்பகுதியில், ஏரியின் கரையில் நின்றிருந்த தென்னை மரத்தில் காய்கள் தெரிந்த நாளன்று, கொச்சய்யப்பனுக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது.

ஏரியின் கிழக்குக் கரையில் இருந்து அது வந்திருந்தது. அவனுடைய மாமாவின் மகள்தான். கொச்சய்யப்பன் விருப்பப்பட்ட ஒரு விஷயமே அது. அதைப்பற்றி அதற்குமேல் சிந்திக்காமலேயே, திருமணம் முடிவு செய்யப்பட்டது.

கொச்சய்யப்பன் குடிசையை மேலும் சீர்செய்தான். அதை இன்னும் கொஞ்சம் உயர்த்தினான். மேலும் சற்று அகலமாக இருக்கும்படி செய்தான். ஒரு அறையையும் ஒரு சமையலறையையும் உண்டாக்கினான்.

வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை மாடம்பியின் முன்னால் கொண்டுபோய் வைத்தான். கொச்சய்யப்பன் தன் திருமணம் பற்றிய தகவலைச் சொன்னான். மாடம்பி அவனுக்கு ஒரு ரூபாயும் ஒரு வேட்டியும் ஒரு கறுப்பு கரைபோட்ட மேற்துண்டும் பரிசாகத் தந்தார்.

திருமணம் முடிந்து மணமக்கள் கிழக்குக் கரையிலிருந்து படகில் ஏறி மேற்குக் கரைக்கு வந்தபோது, புதுமணப் பெண்ணைப் பார்ப்பதற்காக பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் வந்தார்கள். உண்மையாக சொல்லப்போனால், உண்ணுலி அன்று ஒரு காட்சிப் பொருளாகவே இருந்தாள். கடைந்து எடுத்ததைப் போன்ற உடலமைப்பு. அவிழ்ந்து விட்டால் பின்பகுதியைத் தாண்டி தொங்கிக் கொண்டிருக்கும் அழகான முடி, கவர்ச்சியான கண்கள், நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் இளமை! பார்த்தவர்கள் எல்லோரும் கொச்சய்யப்பன் கொடுத்து வைத்தவன் என்று ஒரே மாதிரி சொன்னார்கள்.

அந்தோணி மட்டும் அதை ஒப்புக்கொள்ளவில்லை.


மறுநாள் கணக்குப்பிள்ளை வந்து காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த குலைகளை மிகுந்த அக்கறையுடன் பார்த்தான். பாரம் அதிகம் கொண்ட குலைகளைத் தாங்குவது மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று கொச்சய்யப்பனை அழைத்துச் சொன்னான். கொச்சய்யப்பன் நகைச்சுவையாக அதை நினைத்து வெறுமனே சிரித்துக் கொண்டான்.

கணக்குப்பிள்ளை போனபிறகு, உண்ணுலி கேட்டாள்: “யார் அது?”

கொச்சய்யப்பன் பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் கணக்குப்பிள்ளை சென்ற பாதையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

உண்ணுலியின் முகம் மங்கலானது. அவள் சிந்தனையில் மூழ்கினாள்.

மறுநாள் மாடம்பியின் மருமகன் வந்தான். அவன் நிலத்தை ஆராய்ச்சி பண்ணவில்லை. குலை தள்ளிய தேங்காய்களையும் பார்க்கவில்லை.

திருமணத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைக்காததற்கு அவன் கொச்சய்யப்பனிடம் வருத்தப்பட்டுக் கொண்டான். கிழக்குக் கரையில் தான் உண்ணுலியைப் பார்த்திருப்பதாகவும், தன் இளைய மாமாவின் மனைவி வீட்டுக்காரர்களின் நிலத்தில்தான் கண்டங்கோரன் இப்போது வசிக்கிறான் என்றும் ஏதோ நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு இருப்பதைப்போல, மிகுந்த ஆர்வத்துடன் அவன் பேசினான். நிலத்தில் வசிக்கும் ஏழைகளுக்குத் தன் மாமாவிற்குத் தெரியாமல் தான் பல உதவிகளையும் செய்வது உண்டு என்றும், கொச்சய்யப்பனுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சொன்னான்:

கொச்சய்யப்பன் உள்ளே பார்த்துக்கொண்டு சொன்னான்: “அடியே, அந்த வெட்டுக்கத்தியை இங்கே கொண்டு வா.”

மருமகன் அதிர்ந்து விட்டான்.

கொச்சய்யப்பன் தொடர்ந்து சொன்னான் :“தெற்குப்பக்க வேலி பிரிஞ்சு கிடக்குது. அதை சரி பண்ணப் போறேன்.”

வெட்டுக்கத்தியைக் கொண்டு வருவதற்காக காத்திருக்காமல் அவன் உள்ளே சென்றான். திரும்பி வந்தபோது மாடம்பியின் மருமகன் அங்கு இல்லை.

உண்ணுலி கேட்டாள் : “அது யார்?”

கொச்சய்யப்பன் கோபத்தை அடக்கிக் கொண்டு தட்டுத்தடுமாறி சொன்னான்: “அதுவா?... அதை நீ தெரிஞ்சிக்க வேண்டாம்.”

உண்ணுலியின் முகம் அதைக்கேட்டு சுருங்கிவிட்டது. அவள் சிந்தனையில் மூழ்கினாள்.

கொச்சய்யப்பன் வேலியைக் கட்டிக்கொண்டு நின்றபோது அந்தோணி வந்தான். அவன் கேட்டான்: “ஒவ்வொரு நாளும் நிலத்தின் சொந்தக்காரர்கள் வந்துகொண்டிருக்கிறார்களேடா கொச்சய்யப்பா!”

கொச்சய்யப்பன் அருகில் நின்றிருந்த பூஞ்செடியை ஓங்கி வெட்டினான். செடி துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது.

அந்தோணி சிரித்தான்.

நாட்கள் பல கடந்தன. ஒரு மாலை நேரத்தில் கொச்சய்யப்பன் ஏரிக்கரையில் நின்றுகொண்டு காய்கள் காய்த்து நின்று கொண்டிருக்கும் தென்னை மரங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான். அடர்த்தியான பச்சை நிறத்தில் இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்த தென்னங்கீற்றுகளுக்கு நடுவில் இளம் பச்சை நிறத்தில் காய்கள் முற்றிக் காணப்பட்டன. காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னங்கீற்றுகளைப் பார்த்து கொச்சய்யப்பனின் மனம் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தது.

முழுமையான மார்பகத்தை ரவிக்கைக்குள் இறுக இருக்குமாறு செய்துகொண்டு,  வலது கையில் ஒரு பீடியையும் இடது கையில் ஒரு நெருப்புக் குச்சியையும் வைத்துக் கொண்டு, காற்றில் ஆடிக் கொண்டிருந்த தலைமுடியைக் கைகளால் ஒதுக்கியவாறு உண்ணுலி மெதுவாகத் தன் கணவனை நோக்கி வந்தாள். அவன் பீடியையும், நெருப்புக் குச்சியையும் வாங்கி, பீடியைப் பற்ற வைத்தான். உண்ணுலி தன் கணவனுக்கு மிகவும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள்.

பீடியை இழுத்துப் புகையை விட்டவாறு கொச்சய்யப்பன் காய்த்து நின்றிருந்த தென்னை மரங்களையும், தன்னுடன் ஒட்டிக்கொண்டு நின்றிருந்த தன் மனைவியையும் காதலுடன், அன்புடன் மாறி மாறிப் பார்த்தான். அந்தப் பார்வையையும் அவன் நடந்து கொள்ளும் முறையையும் பார்க்கும்போது உலகத்திலுள்ள அழகிற்கும் நன்மைகளுக்கும் உரிமை உள்ளவனும் கைப்பற்றக்கூடிய தகுதிகள் கொண்டவனும் அவன்தான் என்பது மாதிரி தோன்றும்.

உண்ணுலி மெதுவான குரலில் கேட்டாள் : “இந்த நிலம் யாருக்குச் சொந்தமானது?”

“நீ... நீ யாருக்குச் சொந்தமானவள்?” - கொச்சய்யப்பன் ஆவேசத்துடன் கேட்டான்.

“யாருக்குச் சொந்தமானது நிலம்...” - அவள் மேலும் நெருங்கி நின்றாள்.

“என்னுடையது... நீ எனக்குச் சொந்தமானவள்... நீயும் இந்த நிலமும்...” அவனுக்கு மூச்சு அடைத்தது.

ஒரு நாள் உண்ணுலியின் தந்தையும் தாயும் கிழக்குக் கரையில் இருந்து விருந்திற்காக வந்தார்கள். அவர்களைப் படகில் ஏற்றித் திரும்பக் கொண்டுபோய் விடுவதற்காக கொச்சய்யப்பனும் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது. இரவில் நீண்ட நேரம் ஆனபிறகுதான் அவனால் திரும்பி வரமுடிந்தது.

நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு நேரமாக அது இருந்தது. கொச்சய்யப்பன் படகை படகுத் துறையில் கட்டிப் போட்டுவிட்டு வீட்டு வாசலுக்கு வந்தான். மூடப்பட்டிருந்த கதவிற்கு அருகில் ஒரு ஆள் நின்று கொண்டிருப்பதை கொச்சய்யப்பன் பார்த்தான். ஒரு காலை வாசலிலும் இன்னொரு காலை திண்ணையிலும் வைத்துக் கொண்டு அந்த மனிதன் நின்றிருந்தான். கொச்சய்யப்பன் மிகவும் மெதுவாக நடந்து, அவனுக்குப் பின்னால் போய் நின்றான். அவன் கேட்டான் : “யார் நிற்கிறது?”

ஒரு அதிர்ச்சியுடன் மாடம்பியின் மருமகன் திரும்பிப் பார்த்தான்.

கொச்சய்யப்பன் நெற்றியைச் சுளித்துக்கொண்டு, அதிகார தொணியில் கேட்டான் : “இரவு நேரத்தில் இங்கே என்ன வேலை?”

மாடம்பியின் மருமகன் தைரியமான குரலில் சொன்னான்: “இரவு நேரமாக இருந்தாலும், பகல் நேரமாக இருந்தாலும்... என்னுடைய நிலத்தைத் தேடி வருவதற்கு உன்னுடைய அனுமதி தேவையாடா?”

“டேய்...” - மருமகனின் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. அவனுடைய கை உயர்வதற்கு முன்னால் இன்னொரு அடியும் விழுந்தது.

“ஓடுடா! உன் நிலத்தை விட்டு ஓடுடா!” - கொச்சய்யப்பன் கட்டளையிட்டான்.

மாடம்பபியின் மருமகன் ஓடினான். உள்ளே சென்று நின்று கொச்சய்யப்பன் உரத்த குரலில் சொன்னான்: “படிப்பிக்கிறேன்டா.”

கதவைத் திறந்துகொண்டு உண்ணுலி வந்தாள். பதைபதைப்புடன் அவள் கேட்டாள்: ‘’என்ன இது?”

கொச்சய்யப்பன் பதிலெதுவும் சொல்லவில்லை.

குடிசையின் முன்னால், ஏரியின் கரையில் நின்றிருந்த தென்னை மரத்தில் காய்கள் காய்த்தன. கொச்சய்யப்பன் தென்னை மரத்தில் ஏறி காய்களை வெட்டினான். சிதறிக் கீழே விழுந்த தேங்காய்கள் அனைத்தையும் உண்ணுலி பொறுக்கி உள்ளே கொண்டு சென்றாள்.

மறுநாள் மாடம்பியின் கணக்குப்பிள்ளை வந்தான். தென்னை மரத்தில் காய்கள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அவன் கொச்சய்யப்பனை அழைத்தான். வெட்டுக்கத்தியை அலட்சியமாக சுழற்றியவாறு கொச்சய்யப்பன் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தான்.

கணக்குப்பிள்ளை கேட்டான் : “இந்த தென்னை மரத்தில் இருந்த காய்கள் எங்கே கொச்சய்யப்பா?”

“அது காய்ச்சிடுச்சு” - கொச்சய்யப்பன் - அலட்சியமாகச் சொன்னான்.

கணக்குப்பிள்ளை சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தான். இறுதியில் அவன் சொன்னான் : “அந்தக் காய்களை நீ எடுத்துக்கோ. நாற்றுகளை நட்டது நீதானே?”

கொச்சய்யப்பன் நகைச்சுவை என்பது மாதிரி வெறுமனே புன்னகைத்துக் கொண்டான்.


அதற்குப் பிறகு சில நாட்கள் கடந்து சென்ற பிறகு, வடக்குப் பக்கம் நின்றிருந்த ஒரு தென்னை மரத்தில் காய்கள் தோன்றின. கொச்சையப்பன் அவற்றையும் வெட்டினான்.

மறுநாள் கணக்குப்பிள்ளை வந்தான். தென்னை மரங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு, அவன் எதுவும் பேசாமல் மிடுக்காக அங்கிருந்து சென்றுவிட்டான்.

அதே நாளன்று சாயங்காலம் கணக்குப்பிள்ளை மாடம்பியை அழைத்துக் கொண்டு வந்தான். மாடம்பி மிடுக்கான குரலில் கேட்டார்: “கொச்சய்யப்பா, யாரிடம் கேட்டுடா தேங்காய்களை வெட்டினே?”

வெட்டுக்கத்தியைத் தடவிக்கொண்டே கொச்சய்யப்பன் சொன்னான் : “யாரிடம் கேட்கணும்?”

மாடம்பிக்கு கோபம் வந்தது. அவருடைய குரல் உயர்ந்தது: “யாரிடமும் கேட்க வேண்டாமாடா?”

கொச்சய்யப்பன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். “மண்ணைக் கொண்டு வந்து குண்டையும் குழியையும் சரி பண்ணி, இதை ஒரு நிலமாக ஆக்கியபோது யாரிடமும் கேட்கவில்லையே! நாற்றுகளை நட்டு கவனம் செலுத்தி வளர்த்தபோது யாரிடமும் கேட்கவில்லையே! அப்போ நான் நினைத்தேன் - தேங்காய்களை வெட்டுவதற்கும் யாரிடமும் கேட்க வேண்டாம் என்று...”

மாடம்பியின் முகம் பயங்கரமானது. அவர் கோபத்துடன் கத்தினார்:

“நிலத்தின் உரிமையாளரைப் பிடித்துக் கட்டும் காலம் வந்திருச்சாடா?”

“அதைத்தான் நானும் சொல்றேன் - நிலத்தின் சொந்தக்காரனைப் பிடித்துக் கட்டக்கூடாதுன்னு...”

“நீ நிலத்தின் சொந்தக்காரனாடா?” மாடம்பி உரத்த குரலில் கத்தினார்.

அதிகமான வெறுப்புடன் கொச்சய்யப்பன் அலட்சியமான குரலில் சொன்னான் : “பிறகு யார் சொந்தக்காரன்?”

“சொந்தக்காரன் யார்னு காட்டுறேன்டா” என்று உரத்த குரலில் கத்தியவாறு மாடம்பி சென்றார். கணக்குப்பிள்ளை அவரைப் பின்தொடர்ந்து சென்றான்.

கொச்சய்யப்பன் வெட்டுக்கத்தியைக் காற்றில் வீசினான். ஒரு தென்னங்கீற்று துண்டிக்கப்பட்டு கீழே விழுந்தது.

அந்தோணி வடக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சொன்னான்: “கவனமா இருக்கணும் கொச்சய்யப்பா?”

விழுந்து கிடந்த தென்னங்கீற்றை எடுத்து வெட்டுக்கத்தியால் அறுத்தவாறு கொச்சய்யப்பன் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான்: “இந்த மாதிரி அறுத்திடுவேன் அந்தோணி! என் நிலத்தில் கால் வைத்தால், அவன்கள் எல்லோரையும் நான் அறுத்திடுவேன்.”

இரவில் உண்ணுலி சொன்னாள் : “நமக்கு இவை எதுவும் வேண்டாம். நாம அக்கரையில போய் வசிப்போம்.”

கொச்சய்யப்பன் கேட்டான் : “பயந்து ஒளிந்து கொள்வதற்கு காடு இருக்குதாடீ?”

“எனக்கு யாரும் இல்லை” - உண்ணுலியின் தொண்டை இடறியது.

“நீ பயப்படாதேடி... பயப்படாதே. அவன்கள் எல்லோரையும் நான் அறுக்குறேன்”... அவன் அவளைத் தேற்றினான்.

இரவு உணவு சாப்பிட்டு முடித்து, விளக்கை அணைத்துவிட்டு இருவரும் கட்டிலில் போய் படுத்தார்கள். வெட்டுக்கத்தியை தலைக்குக் கீழே வைத்துக்கொண்டே கொச்சய்யப்பன் படுத்திருந்தான். அவன் தூங்க ஆரம்பித்தான்.

ஒரு விசும்பல் சத்தம் கேட்டு அவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். அவன் பதைபதைப்புடன் கேட்டான் : “நீ ஏன் அழுறே?”

“எனக்கு... எனக்கு இதுதான் இருக்கு!” - அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

அவன் ஆவேசத்துடன் சொன்னான் : “உனக்கு நான் இருக்கேன். உனக்கு நான் எப்போதும் இருப்பேன்.” அவளுடைய வயிற்றைத் தடவியவாறு அவன் தொடர்ந்து சொன்னான் : “இந்த வயிற்றில் இருப்பதும் நான்தான்.”

மறுநாள் காலையில் அந்தோணி வந்தான். அவன் மனக் கவலையுடன் சொன்னான் : “கவனமா இருக்கணும் கொச்சய்யப்பா.”

“நான் கவனமா இருக்கேன் அந்தோணி.”

“எதுக்கும்... உண்ணுலியை கிழக்கு கரையில கொண்டுபோய் விட்டுட்டு வா.”

“எதற்கு?” - சமையலறைக்குள்ளிருந்து உண்ணுலி வேகமாக வந்தாள்: “எதற்கு கிழக்குக் கரைக்கு கொண்டு போய் விடணும்? நான் எங்கும் போறதாக இல்லை. நான் இங்கே வசிப்பதற்காக வந்தவள்:”

கொச்சய்யப்பன் மதிப்புடன் தன் மனைவியைப் பார்த்தான்.

அந்தோணி அங்கிருந்து நகர்ந்தான். கொச்சய்யப்பன் வெட்டுக்கத்தியைச் சுழற்றிக்கொண்டு நிலத்தைச் சுற்றி நடந்தான்.

உண்ணுலி அரிவாளைத் தீட்டிக் கூர்மையை அதிகரித்தாள். அரிவாளைப் பிடித்துக்கொண்டு அவள் வாசலில் உலாத்தினாள்.

என்னவோ நடக்கப் போகிறது. ஆனால் என்ன நடந்தாலும், அந்த ஊரில் அதுவொன்றும் ஒரு புதிய விஷயமல்ல. இந்த மாதிரி பல விஷயங்களும் அங்கு நடப்பதுண்டு.

பக்கத்தில் இருப்பவர்கள் கொச்சய்யப்பனையும் உண்ணுலியையும்  பார்த்துப் பரிதாபப்பட்டார்கள். பரிதாபப்படுவதைத் தவிர, உதவி செய்ய யாராலும் முடியாது. அதை நன்கு தெரிந்திருக்கும் கொச்சய்யப்பன், யாரிடமும் உதவி செய்யும்படி கேட்கவேயில்லை.

மதிய நேரம் ஆகும்வரை எதுவும் நடக்கவில்லை. உண்ணுலி சமையலறைக்குள் நுழைந்து கஞ்சி தயார் பண்ணினாள். துவையல் உண்டாக்கினாள். பிறகு கஞ்சியைக் குடிப்பதற்காக கொச்சய்யப்பனை அழைத்தாள்.

அவன் சொன்னான் : “நீ குளிச்சிட்டு வா.”

உண்ணுலி ஏரியில் இறங்கிக் குளித்தாள். ஈரமான மேற்துண்டால் மூடிக்கொண்டு, அவள் ஏரியின் கரையில் நின்றுகொண்டு கூந்தலைக் காய வைத்துக்கொண்டிருந்தாள். கொச்சய்யப்பன் வாசலில் நின்றிருந்தான். அவன் உண்ணுலியையும் தென்னை மரங்களையும் மாறிமாறிப் பார்த்தான். அவளும் அந்த தென்னை மரங்களும் அவனுக்குச் சொந்தமானவர்கள். அவனுடைய மனமும் உடலும் அவர்களிடம் கலந்து விட்டிருந்தன.

திடீரென்று மேற்குத் திசையில் ஒரு சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து வேலியைப் பிரிக்கும் சத்தம்.

கொச்சய்யப்பன் நின்ற நிலையிலேயே சுற்றிலும் பார்த்தான். அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுச் சொன்னான் : “உண்ணுலி, அரிவாளை எடு!”

உண்ணுலி குடிசைக்குள் வேகமாக நுழைந்தாள்.

குடிசையைச் சுற்றிலும் ஆட்கள்! எமனின் தூதுவர்கள்!

கொச்சய்யப்பன் வெட்டுக்கத்தியை வேகமாக வீசினான். ஒரு உலக்கை அவனுடைய கையில் பாய்ந்து வந்து விழுந்தது. வெட்டுக்கத்தி கையிலிருந்து விழுந்தது.

“அவனை கட்டுடா!” பின்னாலிருந்து கர்ஜனை போன்ற குரல் கேட்டது.

ஏராளமான இரும்புக் கைகளுக்கு மத்தியில் கொச்சய்யப்பன் நெளிந்தான். அவனுடைய கை முஷ்டிகள் அடங்கின.

குடிசைக்குள் ஒரு அழுகைச் சத்தம்! மாடம்பியின் மருமகன் குருதி சிந்தியவாறு வெளியே வேகமாக ஓடி வந்தான்! அரிவாளைக் கையில் வைத்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் பத்ரகாளியைப் போல உண்ணுலி ஓடி வந்தாள்.

“அவனைக் கட்டுடா! தென்னையில் கட்டிப்போடு” - மாடம்பி உரத்த குரலில் கத்தினார்.

உண்ணுலி முன்னோக்கி வேகமாக வந்தாள். ஏராளமான இரும்புக் கைகள் அவளைத் தடுத்தன. அவளுடைய கையில் இருந்த அரிவாள் ஏரியில் போய் விழுந்தது.

கொச்சய்யப்பன் தென்னை மரத்துடன் சேர்ந்து இறுக்க் கட்டப்பட்டான். மூச்சு அடைக்க அவன் உரத்த குரலில் சொன்னான்: “உண்ணுலி, உனக்கு நான் இருக்கேன். உன் வயிற்றில் நான் இருக்கேன்.”


கொச்சய்யப்பனின் கையில் விழுந்த அந்த உலக்கை, மீண்டும் காற்றில் உயர்ந்தது. அது அவனுடைய தலைமீது வந்து விழுந்தது.

உண்ணுலி வாயைத் திறந்தாள். ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. உலகம் ஒருமுறை சுற்றிவிட்டு, திடீரென்று அசைவே இல்லாமல் நின்றது. பனிக்காலத்தின் மாலை நேரத்தைப்போல ஒரு மங்கல்! கொச்சய்யப்பன் மெதுவாக... மெதுவாக ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தான். உண்ணுலி தன் கணவனின் பாதங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தாள். அந்தக் குறைவான வெளிச்சத்தில் கணவனும் மனைவயும் ஆகாயத்தின் வெட்டவெளியை நோக்கி அமைதியாக உயர்ந்தார்கள். திடீரென்று கொச்சய்யப்பனுடைய காலின் பெருவிரல் ஒன்று அசையவே, உண்ணுலியின் பிடி கைவிட்டுப்போனது. அவள் பூமியில் தலைகுப்புற விழுந்தாள்.

மாலை நேரத்தின் குளிர்ந்த காற்றில் உண்ணுலி கண்களைத் திறந்தாள். அவள் வாசலில் மல்லாந்து கிடந்தாள். அவள் கண்களைத் திறந்து சுற்றிலும் பார்த்தாள். அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அந்த இடம் யாருமே இல்லாமல் இருந்தது. ஒருவரையும் காணவில்லை. எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.

அவள் எழுந்து தென்னை மரத்திற்கு அருகில் சென்றாள். கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டிருந்தது. அருகிலேயே உலக்கை கிடந்தது. தென்னை மரத்திலும் மண்ணிலும் ரத்தம் சிதறியிருந்தது.

மார்பில் கையை இறுகக் கட்டிக்கொண்டு அந்தோணி ஏரிக்கரையில் வந்து நின்றான்.

உண்ணுலி தலையை உயர்த்தினாள். அவள் கேட்டாள் : “எங்கே?”

“எரிந்து சாம்பலாக ஆயிட்டான்” - அந்தோணி மெதுவான குரலில் சொன்னான்.

உண்ணுலி அழவில்லை. அவளுடைய உடல் நடுங்கவில்லை. உலக்கையையும் கயிறையும் கையில் எடுத்துக்கொண்டு அவள் குடிசைக்குள் சென்றாள்.

குட்டனுக்கு வயது ஏழு முடிந்தது. அவன் தன் தாய்க்கு அருகில், அந்த கட்டிலில் படுத்துத்தான் தூங்குவான். அதிகாலையில் எழுந்தவுடன் தன் தாயுடன் சேர்ந்து அவனும் கட்டிலுக்கு மேலே நீளமாகக் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும உலக்கையைத் தொட்டு நெற்றியிலும் கண்களிலும் ஒற்றிக்கொள்வான். அவன் குழந்தையாக இருந்தபோது உண்ணுலி அவனைத் தூக்கியெடுத்து உலக்கையை தொடச் செய்வாள். பிறகு அவன் கட்டிலில் எழுந்து நின்று தன் கையை உயர்த்தி உலக்கையைத் தொட்டு நெற்றியிலும் கண்களிலும் ஒற்றிக்கொள்வான். அந்தச்செயல் அவனுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. அது ஒரு நிரந்தர செயலாகிவிட்டது.

ஆனால், தான் ஏன் அதைச் செய்கிறோம் என்பதற்கான காரணம் அவனுக்குத் தெரியாது. ஒருநாள் அவன் உண்ணுலியிடம் கேட்டான்: “எதுக்கும்மா நாம உலக்கையைத் தொட்டு நெற்றியில ஒத்திக்கிறோம்?”

உண்ணுலி பதில் சொல்லவில்லை. அவளுடைய கண்கள் தானாகவே மூடிக்கொண்டன.

அதற்குப் பிறகும் குட்டன் கேட்டான் : “அது நம்ம தெய்வமா?”

“ம்... அது நம்ம தெய்வம்தான்” - அவள் எழுந்து சென்றாள்.

குட்டனின் ஆர்வம் நிற்கவில்லை என்பது மட்டுமல்ல- அது மேலும் அதிகரிக்கவும் செய்தது. அவன் அடிக்கடி உலக்கையைக் கூர்ந்து பார்ப்பான். சில நேரங்களில் தொட்டுப் பார்ப்பான். சில வேளைகளில் எட்டிப் பார்ப்பான். அவன் அதற்குப் பிறகும் கேள்விகளால் உண்ணுலியைத் தொந்தரவு செய்தான்.

ஒருநாள் ஏரியின் கரையில் கடந்து சென்ற அந்தோணியிடம் உண்ணுலி என்னவோ சொன்னாள். அந்தோணி சிறிது நேரம் சிந்தித்தவாறு நின்றுவிட்டு, மெதுவாக முனகியவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

உண்ணுலி குட்டனிடம் சொன்னாள் : “மகனே, நீ அந்தோணியின் வீட்டுக்குப் போ.”

“எதற்கும்மா?”

“அவர் உனக்கு தர்றதுக்காக என்னவோ வச்சிருக்காரு.”

குட்டன் வடக்குப் பக்கம் இருந்த வீட்டிற்குச் சென்றான். உண்ணுலி கட்டிலில் போய் படுத்தாள்.

சிறிது நேரம் கடந்த பிறகு, வெளியே ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. குட்டன் உள்ளே வந்தான்.

“என் அப்பாவை... என் அப்பாவை” - அவன் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு தன் தாயின் மார்பின்மீது சாய்ந்தான்.

உண்ணுலி அசையவே இல்லை. அவளுடைய முகத்தில் வெறுப்பு, கோபம் ஆகியவை நிழலாடிக் கொண்டிருந்தன.

“என் அப்பாவை அவர்கள் அந்த உலக்கையால் அடித்துக் கொன்னிருக்காங்க” - அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

“அந்தப் பக்கமா தள்ளி நில்லுடா” - உண்ணுலி உத்தரவிட்டாள்.

அவளுடைய உதடுகள் நடுங்கின. தன் மகனைத் தள்ளி நிற்குமாறு செய்துவிட்டு அவள் எழுந்தாள்.

“எதற்குடா நாயைப்போல ஊளையிடுறே” உலக்கையைச் சுட்டிக்காட்டிக் கொண்டு தொடர்ந்து அவள் சொன்னாள்: “அதை வச்சுத்தான் அவர்கள் அடிச்சுக் கொன்றார்கள்.” அவளுடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. “நாயைப்போல ஊளையிடாதே. உன் அப்பா என்கிட்ட சொன்னாரு - நான் உன்கூட இருக்கேன்னு... என் வயிற்றில் இருக்குறதா.” அவளுடைய கண்கள் ஈரமாயின. அந்த ஈரம் வெகு சீக்கிரமே உலரவும் செய்தது.

அவள் வெளியே சென்றாள். சிறிது நேரம் கழித்து, உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவள் மீண்டும் குடிசைக்குள் வந்தாள். குட்டன் அப்போதும் உலக்கையையே எந்தவித அசைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். உண்ணுலி மெதுவாக அவனுக்கு அருகில் சென்றாள். அவனுடைய தோளில் கையை வைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “மகனே, உனக்குத் தருவதற்குத்தான் நான் அதை எடுத்து வச்சிருக்கேன்.”

குட்டன் எதுவும் பேசாமல் வெளியே சென்றான்.

அந்த உலக்கை உண்ணுலியின் அன்பு, பழிவாங்கும் எண்ணம் ஆகியவற்றின் சின்னமாக இருந்தது. அன்றைய அந்த சம்பவத்திற்குப் பிறகு அவள் எந்தச் சமயத்திலும் அந்த உலக்கையை விட்டு விலகி இருந்ததே இல்லை. கட்டிலில் அந்த உலக்கைக்குக் கீழே உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கிடந்தும் அவள் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

குளிர்ச்சியான அந்தக் கண்களில் சோகமயமான ஒரு குரூரம் நிழலாடிக் கொண்டிருந்தது. முகத்தில் இங்கும் அங்குமாக சுருக்கங்கள் விழுந்திருந்தன. அழகான அந்தக் கூந்தல் உதிர ஆரம்பித்திருந்தது.

அவளுடைய தந்தையும் தாயும் கிழக்குக் கரையில் தங்களுடன் வந்து வசிக்கும்படி அவளுக்கு அறிவுரை கூறினார்கள். அவள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவள் உறுதியான குரலில் சொன்னாள்: “நான் இங்கே வசிப்பதற்காக வந்தவள். நான் இங்குதான் இருப்பேன்.”

தேங்காய் மட்டையை உடைத்தும், கயிறு திரித்தும் அவள் நாட்களை ஓட்டினாள். அவளுடைய தந்தையும் தாயும் எப்போதாவது அவளுக்கென்று எதையாவது கொடுத்தனுப்புவார்கள்.

குட்டனைப் பெற்றெடுத்த சமயத்தின்போது மட்டும் அவளுடைய தாய் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தாள்.


அன்றைய அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாடம்பியும் அவனுடைய மருமகனும் அந்த நிலத்தில் கால் வைக்கவே இல்லை. கணக்குப்பிள்ளை ஒவ்வொரு மாதமும் தேங்காய்களை வெட்டுவதற்காக மட்டும் வருவான். அந்தச் சமயங்களில் உண்ணுலி வீட்டிற்குள் இருந்து கொண்டு கதவை மூடிக் கொள்வாள். அவளால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவளுடைய கணவனின் ரத்தத்திலும் வியிர்வையிலும் நட்டு வளர்க்கப்பட்ட தென்னை மரங்களில் இருந்து தேங்காய்களை வெட்டிக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருக்க அவளால் முடியாது.

இப்படியே ஒரு வருடம் ஓடி முடிந்தபோது, மாடம்பி அந்த நிலத்தை இன்னொரு மனிதருக்கு விற்றுவிட்டார்.

நகரத்தின் கயிறு வர்த்தகம் கிராமங்களைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. கிராமங்களில் இருந்து மூலப் பொருட்களையும் தொழிலாளிகளையும் குறைந்த விலைக்கு வாங்குவதற்கென்றே அந்த ஆக்கிரமிப்பு ஆரம்பமானது என்பது மட்டுமல்ல - நகரத்தில் ஒன்று சேர்ந்திருந்த தொழிலாளர்களின் உரிமைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று முதலாளிகள் அப்போது நினைத்திருந்தார்கள். அதன் மூலம் கிராமப் பகுதிகளில் பல கயிறு தொழிற்சாலைகளும் உண்டாயின.

கிராமப்புறங்களைத் தேடி வந்த முதலாளிகள் ஜமீன்தார்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்கள் நிலங்களின் சொந்தக் காரர்களாகவும் ஆனார்கள். அப்படி ஆன ஒரு முதலாளி ஜமீன்தார் தான் உண்ணுலி வசித்துக் கொண்டிருந்த நிலத்தை மாடம்பியிடமிருந்து விலைக்கு வாங்கினார்.

ஏரிக்கரையில் இருந்து சுமார் மூன்று பர்லாங் தூரத்தில், சாலைக்கு அருகில் முதலாளியின் கயிறு தொழிற்சாலை இருந்தது. நகரத்தில் இருந்த பெரிய தொழிற்சாலையின் ஒரு கிளை என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். ஆனால், உற்பத்திச் செலவு குறைவாக இருந்த காரணத்தால் நகரத்தில் இருப்பதைவிட அதிகமான வேலை கிராமத்தில்தான் நடந்து கொண்டிருந்தது.

வாரத்தில் இரண்டோ மூன்றோ தடவை அவர் கிளையைப் பார்ப்பதற்காக வருவார் அந்தச் சமயத்தில் புதிதாக வாங்கியிருக்கும் நிலங்களைப் பார்ப்பதற்கும் அவர் வருவார்.

முதலாளி நிலங்களைப் பார்ப்பதற்கு காரில்தான் வருவார். கார் வருவதற்காக, அது வரும் வழிகளில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காரில் முதலாளி வந்து இறங்கிவிட்டால்… அதற்கப் பிறகு ஒரு திருவிழாக் கோலம்தான். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் காரைப் பார்ப்பதற்காக, அதைச் சூழ்ந்து கொள்வார்கள்.

சில நாட்கள் கடந்த பிறகு, அந்த நிலத்தில் மேலும் இரண்டு குடிசைகள் உண்டாயின - உண்ணுலியின் குடிசையின் தெற்குப் பக்கத்திலும் வடக்குப் பக்கத்திலும்.

தெற்குப் பக்கம் இருந்த வீட்டில் வசிப்பதற்காக வந்த மாதவன் ஒரு இளைஞனாக இருந்தான். சிறிது நாட்கள் அவன் நகரத்திலிருந்த கயிறு தொழிற்சாலைகளில் வேலை செய்திருந்தான். என்ன காரணத்தாலோ அவனுக்கு கிராமங்களைத்தான் மிகவும் பிடித்திருந்தது. அவன் அந்த நிலத்தின் சொந்தக்காரரான முதலாளியின் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்தான். வயதான தன்னுடைய தாயுடன் அந்த நிலத்தில் அவன் வசிக்க ஆரம்பித்தான்.

அதே தொழிற்சாலையில் வேலை செய்யும் நடுத்தர வயதைக் கொண்ட பப்பு வடக்குப் பக்கம் இருந்த வீட்டில் வசித்தான். அவன் பொறுப்புகள் கொண்ட ஒரு மனிதனாக இருந்தான். நோயாளியும் கோப குணம் கொண்டவளுமாக இருந்த ஒரு மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அவன் காப்பாற்ற வேண்டியதிருந்தது. அது ஒரு துன்பமான வாழ்க்கையாக இருந்தது.

உண்ணுலிக்கு புதிதாக வந்து வசித்துக் கொண்டிருப்பவர்களுடன் மட்டுமல்ல - பக்கத்தில் இருப்பவர்கள் யாருடனும் நெருக்கம் இல்லாமல் இருந்தது. அந்தோணி மட்டுமே அவ்வப்போது வீட்டு வாசலில் வந்து நிற்பான். ஏதாவது கேட்பான். அங்கிருந்து போகவும் செய்வான். வேறு யாராவது குடிசைக்குள் நுழைவதையும், கட்டிலுக்கு மேலே கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் உலக்கையைப் பார்ப்பதையும் உண்ணுலி விரும்பவில்லை.

மாதங்களும் வருடங்களும் சில கடந்தன. குட்டனுக்கு பதினெட்டு வயது ஆனது. அவனும் முதலாளியின் கயிறு தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனிடம் இளைஞர்களிடம் இருக்கக்கூடிய விளையாட்டு. சிரிப்பு எதுவும் இல்லாமல் இருந்தன. அவனுக்கு நண்பர்கள் கூட கிடையாது.

சம்பளம் கிடைத்தவுடன் அவன் தன் தாயின் கையில் அதைக் கொண்டு போய் கொடுத்துவிடுவான். உண்ணுலியும் கயிறு திரித்து, ஏதாவது சம்பாதிப்பாள். அந்த வகையில் சொல்லிக் கொள்கிற மாதிரி பட்டினி எதுவும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

இரவு உணவு சாப்பிட்டு முடித்து, தாய் கட்டிலிலும் மகன் கட்டிலுடன் சேர்ந்து தரையிலும் படுப்பார்கள். அதிகாலை நேரத்தில் இருவரும் எழுந்து உலக்கையைத் தொட்டு நெற்றியிலும் கண்களிலும் ஒற்றிக் கொள்வார்கள்.

ஒரு இரவு, நேரத்தில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த உண்ணுலி திடுக்கிட்டு கண்விழித்தாள. அவள் தன்னுடைய கையை உயர்த்திக் காற்றில் துலாவினாள். மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த உலக்கை அந்த இடத்தில் இல்லை. அவள் பதைபதைப்புடன் வேகமாக எழுந்து மண்ணெண்ணெய் விளக்கைப் பற்ற வைத்தாள். உலக்கையையும் காணோம். குட்டனையும் காணோம்.

விளக்கை அணைத்துவிட்டு அவள் வாசலில் வந்து நின்றாள். விடிகாலைப் பொழுதாக அது இருந்தது. குட்டன் உலக்கையைத் தோளில் வைத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான்.

உண்ணுலி கேட்டாள் : “இதை எடுத்துக்கொண்டு எங்கே போனாய்?”

குடடன் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அவன் தனக்குத்தானே கூறிக்கொள்வது மாதிரி முணுமுணுத்தான்: ‘அவனை நான் கொல்வேன். இந்த உலக்கையால் அவனை நன் கொல்வேன்’.

குட்டன் வீட்டிற்குள் சென்றான். உண்ணுலி புன்னகைத்தாள்.

பகவதி ஆலயத்தில் திருவிழா. அந்த நாளில் பெரிய அளவில் கலாட்டா நடக்கும் என்று முன்கூட்டியே செய்தி பரவிவிட்டிருந்தது. ஜாதியை முன்வைத்து இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பிரச்சினைக்கான ஆயத்தங்களைச் செய்திருந்தார்கள். ஒரு பக்கத்தில், மாடம்பிகளும் பெரிய நிலக்கிழார்களும் அவர்களுடைய ஆட்களும் தயார் நிலையில் நின்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் சாதாரண கூலி வேலை செய்பவர்களும் உழைப்பாளிகளும் பொருட்களை இழந்தவர்களும் அணி திரண்டு நின்றிருந்தார்கள்.

திருவிழா நாளன்று சாதாரணமான ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்துச் சண்டை ஆரம்பமானது. சாயங்காலத்திற்கு முன்னால் ஆரம்பித்த சண்டை நள்ளிரவு தாண்டிய பிறகும் முடிவடையவில்லை.

குட்டன் தன் தாயிடம் அனுமதி எதவும் கேட்காமலேயே, உலக்கையை எடுத்துக்கொண்டு சண்டையில் இறங்கினான். நள்ளிரவு நேரம் ஆனபோது காயம் உண்டான உடலுடன் உலக்கையையும் தாங்கிக்கொண்டு அவன் திரும்பி வந்தான்.

உண்ணுலி தன் மகனின் காயங்களுக்குக் கட்டுப் போட்டாள். அவன் தனக்குத்தானே கூறிக் கொள்வதைப்போல சொன்னான்: “அவன் ஓடி விட்டான். இல்லாவிட்டால்... இல்லாவிட்டால்... ஹும்.. அவன் திரும்பவும் என் கையில் கிடைப்பான்.”


உண்ணுலி எதுவும் சொல்லவில்லை. அவள் வெறுமனே புன்னகைத்தாள்.

தெற்குப் பக்க வீட்டில் வசிக்கும் மாதவனும் சண்டையில் பங்கெடுத்துக் கொண்டான். மறுநாள் மாதவன் குட்டனைப் பார்த்தபோது, சண்டையைப் பற்றி உரையாடுவதற்குத் தயங்கவில்லை. ஆனால் அவன் ஏமாற்றத்துடன் பேசினான்.

குட்டன் சொன்னான் : “நான் நினைச்சது நடக்கலையேடா?”

மாதவன் கேட்டான் : “நீ என்ன நினைச்சே?”

“இந்த நிலத்தின் முன்னாள் சொந்தக்காரனை உனக்குத் தெரியுமா?”

“ம்.... கேள்விப்பட்டிருக்கேன். உன் அப்பாவை உலக்கையால்...”

குட்டனின் முகம் கோபமானது.

“அந்த உலக்கையை எடுத்துக்கொண்டு நான் அங்கே போனேன். அவனை.. அவனை...” கோபம் அவனுடைய வார்த்தைகளைத் தடை செய்தது.

குட்டனின் தந்தையை உலக்கையைக் கொண்டு அடித்துக் கொன்ற கதையை மாதவன் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான். ஆனால், அந்த உலக்கையை இப்போதும் பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தையும், அந்தப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற நெருப்பு பயங்கரமாகக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் அவன் அப்போது மட்டுமே தெரிந்துகொண்டான். 

ஏரியின் கரையிலிருந்து மீன் வாங்கிக் கொண்டு வந்த பப்புவும் அந்த உரையாடலில் பங்கு கொண்டான். அவன் சொன்னான் : “இது ஒண்ணும் புதிய விஷயம் இல்லையடா குட்டா. என் பொண்டாட்டியின் மூத்த அண்ணன் பசி இருந்த காரணத்தால், ஒரு இளநீரைப் பறிச்சுக் குடிச்சிட்டாருன்னு தென்னை மரத்துல பிடிச்சுக் கட்டி, உலக்கையால அடிச்சே கொன்னுட்டானுங்க. அந்த மாதிரி தென்னை மரத்துல பிடிச்சுக் கட்டி வச்சு, உலக்கையால எவ்வளவு பேரை அடிச்சுக் கொன்னுருப்பாங்க தெரியுமா?”

அந்த உரையாடல் அப்படியே நீண்டு கொண்டு சென்றது. பணக்காரர்களின் கொடுமைகளைப் பற்றி பப்பு பற்பல கதைகளையும் சொன்னான்.

குட்டன் கேட்டான் : “அப்படியென்றால் அரசாங்கத்துக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியாது. அப்படித்தானே பப்பு அண்ணே?”

பப்புவும் மாதவனும் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். மாதவன் சொன்னான்: “இந்த விஷயத்தை அரசாங்கம் தெரிந்து என்ன ஆகப்போகிறது? அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு முன்னாடியே, பிணத்தை எரித்து சாம்பலாக ஆக்கிடுவாங்க. தெரியுமா? அவர்கள் வர்றப்போ ஒரு விருந்தைக் கொடுத்து, பல விஷயங்களையும் பேசி, சிரிச்சு விளையாடி அனுப்பி வைப்பார்கள்; கை நிறைய கொடுத்தும் அனுப்புவாங்க.”

நகரத்திலிருக்கும் தொழிற்சாலைகளில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிக் கூறுவதற்கு மாதவனிடமும் சில கதைகள் இருந்தன. ஆனால், அவர்கள் எல்லோரும் அவற்றைவிடக் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு வேலை செய்பவர்களாக இருந்ததால், நகரத்தின் கதைகள் எதுவும் அவர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இறுதியில் மாதவன் சொன்னான்: “இப்போதைய கதைகள் வேறு... இப்போ உதைப்பது, காறித் துப்புவது, அடிப்பது, மிதிப்பது எல்லாம் குறைஞ்சிடுச்சு. வேலை செய்பவர்களுக்கென்று சங்கம் இருக்கு.”

அதற்குப் பிறகும் சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் பக்கத்து வீடுகளில் உள்ள அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது. அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்கினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வார்கள். ஒன்றாகச் சேர்ந்தே திரும்பி வருவார்கள்.

இரவில் சாப்பிட்டு முடித்த பிறகு, அவர்கள் மூன்று பேரும் மாதவனின் வீட்டில் கூடுவார்கள். முதலாளிகள், பணக்காரர்கள் ஆகியோரின் கொடுமைகளைப் பற்றியும், குறைவான கூலியைக் கொடுப்பதைப் பற்றியும், வேலையின் கடுமையைப் பற்றியும், ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

மாதவன் கூறுவான்: “நகரத்தில் இருக்கும் தொழிலாளிகளைப் போல நமக்கும் சங்கம் வேணும்டா குட்டா.”

குட்டனின் நட்பு வட்டாரம் உண்ணுலிக்குப் பிடிக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையைப்போல குட்டனின் வாழ்க்கையும் அந்த உலக்கையுடன் கலந்துவிட வேண்டும் என்றும்; தன் கணவனைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்கிவிட்டு மரணமடைய வேண்டுமென்றும் அவள் விருப்பப்பட்டாள். அவளுடைய முகத்தில் சுருக்கங்கள் மேலும் அதிகமாகவே வெளியில் தெரிந்தன. தலையில் இருந்த முடி நரைக்க ஆரம்பித்தது. அந்தக் கண்களில் இருந்த மென்மைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. சில நேரங்களில் மட்டும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பதைக் காட்டும் நெருப்புக் கொழுந்துகள் கண்களில் தெரியும். அவள் பெரும்பாலான நேரங்களிலும் அந்தக் கட்டிலிலேயே இருப்பாள். உலக்கைக்கு அடியிலேயே அவள் தன் நேரத்தைச் செலவிடுவாள்.

ஒருநாள் உண்ணுலி குட்டனிடம் அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னாள்.

“உனக்கு ஒரு பொண்ணு வேணும்” - அவள் சொன்னாள்.

குட்டன் வெறுமனே ‘உம்’ மட்டும் கொட்டினான்.

சில நாட்கள் கடந்த பிறகு, குட்டன் திருமணம் செய்வதற்கு தான் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருப்பதாகச் சொன்னான்.

“அம்மா நீங்க அவளைப் பார்க்கணும்.”

“நான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவள் இங்கே வந்த பிறகு, நான் பார்த்தாலே போதும்.”

திருமணம் முடிந்து, கல்யாணி தன் கணவனின் வீட்டில் வசிப்பதற்காக வந்தாள். ஒரு சாதாரணப் பெண்ணாக அவள் இருந்தாள். அழகி அல்ல; அழகற்றவளும் அல்ல. அவளுக்கு பெரிய ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ இல்லை. வெறுக்கத்தக்க அடியோ, உதையோ வாழ்க்கையில் இல்லாமல் இருக்க வேண்டும். கவலைகள் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு இருக்க வேண்டும். அவள் விருப்பப்பட்டது அவ்வளவுதான்.

இதற்கிடையில் தொழிற்சாலையில் பிரச்சினைகள் உண்டாயின.

முதலாளி கூலியைக் குறைத்தார். அதைத் தொழிலாளிகளில் யாரும் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. எல்லோரும் கவலையுடன் அதற்க சம்மதித்தார்கள். ஆனால், அந்தக் குறைந்த கூலிகூட உரிய நேரத்தில் கிடைக்காமல் இருந்தது. தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பங்களும் பட்டினி கிடந்தன.

ஒருநாள் ஒரு தொழிலாளி பசி, துன்பங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடித்தவனைப்போல முதலாளியின் அறைக்குள் நுழைந்து சென்று, கூலியைத் தரவேண்டும் என்று சொன்னான். அந்த தைரியச் செயலுக்கு அப்போதே அவனுக்குத் தண்டனையும் கிடைத்தது. இரண்டு கன்னங்களிலும் அடியும் பிடறியில் ஒரு தள்ளும் கிடைத்தன.

எல்லோரும் கவலையுடன் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்; யாரும் எதிர்க்கவில்லை.

அன்று சாயங்காலம் முதலாளியின் பாதுகாவலனான ஒரு ரவுடி அந்தத் தொழிலாளியை மீண்டும் கடுமையாகத் தாக்கினான்.

மறுநாள் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இடையில் அழுத்தப்பட்ட ஒரு ‘முணுமுணுப்பு’ உண்டானது. சதுப்பு நிலத்திலிருந்து வெப்பமான நீராவி கிளம்பி மேலே வருவதைப்போல அந்த முணுமுணுப்பு படிப்படியாகக் கிளம்பி மேலே உயர்ந்தது. ஆனால், யாரும் வெளிப்படையாக  எதுவும் சொல்லவில்லை.


வேலை முடிந்து வெளியே வந்த தொழிலாளர்கள் இங்குமங்குமாக ஒன்று சேர்ந்து நின்றுகொண்டு முணுமுணுத்துக் கொண்டார்கள். இரவு வேளையில் எல்லா வீடுகளிலும் அந்த முணுமுணுப்பு எதிரொலித்தது.

தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களின் கூட்டத்தில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் மாதவனின் வீட்டில்தான் தங்கியிருந்தான். அவன் அருமையான மொழியில் பேசுவான். எங்கிருந்தெல்லாமோ பத்திரிகைகளையும் மாத இதழ்களையும் கொண்டுவந்து படிப்பான்.

நகரத்திலிருந்து வந்திருக்கும தொழிலாளி அவன் அவனுடைய பெயர் கிருஷ்ணன்.

சில நாட்கள் கடந்ததும், அங்கு ஒரு தொழிலாளர்களின் சங்கம் உண்டானது.

கல்யாணி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு கோபாலன் என்று பெயர் வைத்தார்கள்.

பிரச்சினைகள், சவால்கள் எல்லாம் நிறைந்த ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமானது. அந்த கிராமத்தின் சுடுகாட்டு அமைதி நிரந்தரமாக மறைந்து போனது.

பெரிய பொதுக்கூட்டங்கள், மணல் துகளுக்குக்கூட உயிர் தரக்கூடிய சொற்பொழிவுகள், கோஷங்கள் கொண்ட ஊர்வலங்கள்! இப்படி அந்தப் புதிய வாழ்க்கை புரட்சி வாசனை கொண்டதாக இருந்தது. பழையன எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டு, புதிய வாழ்க்கையைச் சுருட்டி வைத்துக்கொண்டு முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

வேலை நிறுத்தங்கள், கைதுகள், காவல்துறை தாக்குதல்கள்! இவை அனைத்தும் தினந்தோறும் நடைபெறக்கூடிய சம்பவங்களாக ஆயின. குட்டன் அந்த வேகமான மாறுதலில் முன்வரிசையில் நின்றிருந்தான்.

அந்த செயல்பாடுகள் உண்ணுலியையும் பாதித்தன. அந்தப் போராட்டக் குரல் அவளுடைய காதுகளிலும் விழுந்தது. தன்னுடைய கணவனை உலக்கையால் அடித்துக் கொன்ற செயலுக்கு, பழிக்குப் பழி வாங்கக்கூடிய சத்தமும் வடிவமும் உண்டாகியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தச் சத்தத்துடன் தன்னுடைய சத்தத்தையும் எழுப்ப வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு உண்டானது.

ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. அவள் ஒரு கிழவியாகிவிட்டிருந்தாள். அவளுடைய தலைமுடி முற்றிலும் நரைத்துவிட்டது. அது உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தது. குழிக்குள் விழுந்து கிடந்த கண்கள் உயிர்ப்பற்றவையாக இருந்தன. பற்கள் விழுந்து விட்டன.

எனினும், உண்ணுலி அமைதியாக இருந்தாள். அவள் எல்லோருடனும் பேசுவாள். அருகில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் செல்வாள். உலக்கையைப் பற்றிய கதையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் எல்லோரிடமும் அந்த விஷயத்தை விளக்கிக் கூறுவாள். ஆனால், அதைக்கூறத் தொடங்கியவுடன், அவளுடைய குழிக்குள் கிடக்கும் கண்கள் வெறித்துப் பார்க்கும். உதடுகள் நடுங்கும். பற்கள் இல்லாத வாயின் உட்பகுதியைக் கடித்து மூடிக் கொள்வாள்.

குட்டனின் நண்பர்கள் எல்லோரையும் அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களைத் தன் குடிசைக்கு அவள் வரும்படிச் சொன்னாள். குடிசைக்குள் மேலே கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த உலக்கையை அவர்கள் எல்லோருக்கும காட்டி, அதன் கதையை அவர்களிடம் அவள் சொன்னாள். அந்தக் கதையைக் கேட்டு அவர்கள் உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்து அவள் மனதில் மகிழ்ச்சி அடைந்தாள்.

உண்ணுலியின் கதையை மிகுந்த ஈடுபாட்டுணர்வுடன் கேட்ட கிருஷ்ணன் சொன்னான்: “இப்படிப்பட்ட உலக்கை எல்லோருடைய மனங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.”-

“உண்மைதான் மகனே... உண்மைதான். அந்த எல்லா உலக்கைகளும் ஒன்று சேர்ந்து அங்கே திரும்பப் போகணும்” - உண்ணுலி ஆவேசத்துடன் சொன்னாள்.

மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காலம் வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. மாதங்களும் வருடங்களும் கடந்தன.

கோபாலனுக்கு - குட்டனின் மகனுக்கு - பதினாறு வயது முடிந்தது. அவனுடைய தங்கை பார்கவிக்கு பதின்மூன்று வயது.

கோபாலனைப் பார்த்துக்கொண்டே உண்ணுலி கூறுவாள்: “தாத்தாவைப் போலவே இவன் இருக்கான். அதேமாதிரி நிற்கிறான்... நடக்கிறான். பார்க்குறதுகூட அதே மாதிரிதான்.”

அது உண்மைதான். உடல் அமைப்பிலும் தோற்றத்திலும் கோபாலன் கொச்சய்யப்பனுடன் மிகவும் நெருங்கி இருந்தான். ஆண்மைத்தனம் துள்ளிக் கொண்டிருந்த ஒரு மிடுக்கான போக்கை அவன் கொண்டிருந்தான். யாரைப் பார்த்தும் சிறிதும் கூச்சப்படாத குணமும் நடத்தையும் பார்வையும் அவனிடம் இருந்தன.

எல்லா தொழிலாளர்களின் கூட்டத்திற்கும் அவன் செல்வான். எல்லா ஊர்வலங்களிலும் அவன் பங்கெடுத்துக் கொள்வான். அவன் எல்லா பத்திரிகைகளையும் படிப்பான். தன்னுடைய நண்பர்களுடன் உரையாடவும் செய்வான்.

உலக்கையைப் பற்றிய கதையைத் தன்னுடைய பாட்டி கூறுவதை அவன் பல நேரங்களில் கேட்டிருக்கிறான். ஆனால், அவன் அதைப்பற்றி எதுவும் யாரிடமும் கூறுவதில்லை.

முதல்முறையாகக் குட்டனைக் கைது செய்த செய்தியை கோபாலன்தான் உண்ணுலியிடம் சொன்னான். மக்கள் கூட்டத்திற்கு எதிராக நீண்ட நேரம் நடத்தப்பட்ட லத்தி சார்ஜைத் தொடர்ந்து போலீஸ்காரர்கள் குட்டனைக் கைது செய்தார்கள். கோபாலன் அடி வாங்கி விழுந்து கிடந்தான். குட்டனை போலீஸ்காரர்கள் அழைத்துக் கொண்டுபோன பிறகு, கோபாலன் மிகவும் சிரமப்பட்டு எழுந்தான். சிரமங்கள் எதையும் பொருட்படுத்தாமல் அவன் வீட்டை அடைந்தான்.

அவன் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொன்னான் : “பாட்டி... அப்பாவைப் போலீஸ்காரர்கள் கைது பண்ணிக்கொண்டு போயிட்டாங்க.”

அதைக்கேட்டு கல்யாணி பதைபதைப்பு அடைந்து, வாயைப் பிளந்துகொண்டு நின்றுவிட்டாள். உண்ணுலி குழிக்குள் விழுந்து கிடந்த கண்களால் வெறித்துப் பார்த்தாள். அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். எங்கோ தூரத்தை உற்றுப் பார்த்தவாறு அவள் முணுமுணுத்தாள்: “அவன் போகணும்... அவனுடைய தந்தையின் காலத்தில் இதெல்லாம் இல்லை. இருந்திருந்தால் போயிருப்பாரு.”

ஒன்பது மாதங்கள் கடந்தபிறகு, குட்டன் சிறையிலிருந்து வந்தபோது உண்ணுலி சொன்னாள்: “இனிமேலும் போகணும். நாம எல்லாரும் சிறைக்குப் போகணும்.” அந்தக் கண்கள் வெறித்துப் பார்த்தன. உதடுகள் துடித்தன. வாயின் உட்பகுதியைக் கடித்து அவள் மூடிகொண்டாள்.

முன்னோக்கி வேமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருந்த வாழ்க்கை யாருக்குமே தெரியாமல் ஒரு முடிவான கட்டத்தை நெருங்கியது. வேலைக்கான கூலி குறைந்து போய்க் கொண்டிருந்தது. அத்துடன் வேலையும் குறைந்து கொண்டிருந்தது. உணவுப் பொருட்களின் விலை மிகவும் அதிகமானது. உணவுப் பொருட்கள் கிடைப்பது என்பதே மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.

பஞ்ச தேவதை பயங்கரமான பேயாட்டாம் ஆட ஆரம்பித்தாள். பட்டினி, மரணத்தின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருந்தது.

சாலைகளில் எலும்புக் கூடுகள் பற்களை இளித்துக் கொண்டு, கையை நீட்டிப் பயணிகளை பயமுறுத்திக் கொண்டிருந்தன. குடிசைகள் பிணங்கள் இருக்கும் குழிகளாக ஆயின. மரங்களின் நிழல்களில் எமனின் தூதுவர்கள் மறைந்து நின்று கொண்டிருப்பதைப்போல இருந்தது.

ஒரு இரைச்சல் சத்தம்! எங்கிருந்து என்று தெரிந்துகொள்ள முடியாத ஒரு சத்தம்! கடலின் அலைகளிலிருந்து, ஏரியின் சிறு நீரலைகளிலிருந்து, குளங்களின் நீரசைவுகளிலிருந்து, கொடியின் அசைவுகளிலிருந்து, பறவைகளின் சிறகடிப்பிலிருந்து, மூச்சுகளிலிருந்து அந்த இரைச்சல் சத்தம் உயர்ந்து கொண்டிருந்தது.

இரைச்சல்!  - பதைபதைப்பு நிறைந்த, பயங்கரமான ஒரு சத்தம்! மணல் துகள்கள்கூட நெளிவதைப்போலத் தோன்றின.


பணக்காரர்களும் முதலாளிகளும் அதிர்ச்சியடைந்து நடுங்கினார்கள். பயம், பைத்தியமாக மாறியது.

நெருப்பு மலை புகைந்து கொண்டிருந்தது.

உண்ணுலி எழுந்து கண்களைத் திறந்தாள். மேலே கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்த உலக்கையைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, அவள் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

எப்போதும் இல்லாத பேரமைதி!

ஏரியில் மீன் பிடிப்பவர்கள் உண்டாக்கும் சத்தங்களும் ஆரவாரங்களும் அன்று கேட்கவில்லை. வடக்குப்பக்க வீட்டில் இருக்கும் பப்புவின் மனைவி அடிக்கடி ஏப்பங்கள் விடுவதும், பிள்ளைகளையும் கணவனையும் திட்டுவதும் கேட்கவில்லை. அதற்கடுத்த வீட்டில் இருந்து கிழவனான அந்தோணியின் சத்தம் கேட்கவில்லை. மேற்குப்பக்க வீட்டில் பாரு தென்னை மட்டையை உரிக்கும் சத்தமும் கேட்கவில்லை. தெற்குப்பக்க வீட்டில் சத்தமும் இல்லை; அசைவும் இல்லை.

எப்போதும் இல்லாத அமைதி!

உண்ணுலி மீண்டும் கண்களைத் திறந்தாள். அவள் மெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தாள். உலக்கையைத் தொட்டு நெற்றியிலும் கண்களிலும் ஒற்றிக்கொண்டாள். வாழ்க்கையின் இரக்கமற்ற கைகள் பதிவு செய்த பள்ளங்களும் வாய்க்கால்களும் அந்த முகத்தில் தெளிவாகத் தெரிந்தன. அந்தப் பள்ளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் குழிக்குள் விழுந்து கிடந்த உயிர்ப்பற்ற கண்களில் நொடிப்பொழுதிற்கு ஒரு மின்னல் தோன்றியது. வாயின் உட்பகுதியைக் கடித்துக்கொண்டே அவள் கட்டிலை விட்டு எழுந்தாள்.

பொழுது புலர்ந்துவிட்டிருந்தது. ஓலைகளின் இடைவெளிகளின் வழியாக உள்ளே நுழைந்த சூரிய வெளிச்சம் கிழவியின் முகத்திலும் கட்டிலிலும் தரையிலும் பொற்காசுகளைச் சிதறவிட்டது. சமையலறையில் கூடைக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிக்குஞ்சுகள் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கியிருந்தன.

உண்ணுலியின் உதடுகள் அசைந்தன. ஆனால், சத்தம் வெளியே வரவில்லை. அவள் மிகவும் மெதுவாக சமையலறையை நோக்கிச் சென்றாள்.

சிறிது நேரம் சென்றதும் ‘கீய கீய’ என்று சத்தமிடம் ஆறேழு கோழிக்குஞ்சுகள் அந்தக் குடிசையின் உட்பகுதியை நிறைத்தன. ‘கொக்கோ கொக்கக்கோ’ என்று உத்தரவுகள் பிறப்பித்தவாறு ராணியைப் போல தாய்க்கோழி, குஞ்சுகளுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தது.

உண்ணுலி மீண்டும் கட்டிலுக்கு அருகில் சென்றாள். வெளியில் இருந்து குடிசையின் கதவு திறக்கப்பட்டது. கோழிக்குஞ்சுகளும் தாய்க்கோழியும் வெளியே வேகமாகச் சென்றன.

பார்கவி உள்ளே வந்தாள். மேலும் கீழும் மூச்சு விட்டவாறு அவள் சொன்னாள் : “பாட்டி, பட்டாளம்...! பட்டாளம் வந்திருக்கு!”

குழிக்குள் விழுந்து கிடந்த அந்தக் கண்கள் வெறித்துப் பார்த்தன.

அந்தக் கண்களில் ஒரு மின்னல் தோன்றியது.

“எங்கே வந்திருக்கு?” அந்தக் குரலில் அசாதாரணமான தெளிவு இருந்தது.

“வண்டியில் வந்திருக்கு. மூணு வண்டிகள் நிறைய ஆட்கள்.... சாலையில் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருக்காங்க.”

“நீ பார்த்தியா?”

“அண்ணன்தான் சொன்னான். அவன் பார்த்தானாம்.”

“பிறகு அவன் எங்கே போனான்?”

“பாட்டியிடம் சொல்லுன்னு சொன்னான். பிறகு... அங்கேதான் போயிட்டான்.”

“ஹும்...” மீண்டும் அந்தக் கண்கள் வெறித்தன. அவற்றில் ஒரு மின்னல் தோன்றியது.

பார்கவி சமையலறைக்குள் சென்றாள். உண்ணுலி வாசலை நோக்கிச் சென்றாள்.

தெற்குப் பக்க வீட்டின் வாசலில் கல்யாணியும் மாதவனின் தாயும் வேறு இரண்டு பெண்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஏரியின் கரையில் ஐந்தாறு இளைஞர்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்களும் என்னவோ மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். மேற்குப்பக்க வீட்டில் பாருவைச் சுற்றி நின்றிருந்த சில பெண்களும் குழந்தைகளும் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

எல்லோரும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். யாரும் எதுவும் சொல்லவில்லை.

ஏரியில் மீன் பிடிப்பவர்கள் இல்லை. படகுகளும் இல்லை.

இதற்கு முன்பு இல்லாத அமைதி! பதைபதைப்பு நிறைந்த ஒரு பேரமைதி!

உண்ணுலி ஏரியின் கரையில் போய் நின்றாள். அவள் கிழக்குக் கரைப் பக்கம் வெறித்துப் பார்த்தாள்.

அக்கரையிலிருந்து ஒரு சிறிய படகு ஏரியில் வந்து கொண்டிருந்தது. அது பதைபதைப்பு நிறைந்த ஒரு அமைதியைக் கிழித்துக்கொண்டு ஏரியின் மையப் பகுதியை நோக்கி மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தது. உண்ணுலி அந்தச் சிறிய படகையே பார்த்துக்கொண்டு ஏரியின் கரையில் நின்றிருந்தாள்.

பின்னால் சற்று தூரத்தில், சாலையில், மோட்டார் இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கும் சத்தமும், ஹார்ன் அழைப்புகளின் சத்தங்களும் ஏரியில் எதிரொலித்தன.

தெற்குப்பக்க வீட்டில் இருந்த கிழவியும் கல்யாணியும் ஏரியின் கரைக்கு வந்தார்கள். அசைவே இல்லாமல் இருந்த ஏரி நீரில் மெதுவாக நகர்ந்து நகர்ந்து வந்து கொண்டிருந்த சிறிய படகைப் பார்த்துக் கொண்டே கல்யாணி மெதுவான குரலில் சொன்னாள்: “கோபாலனின் அப்பா... கூட இன்னொரு ஆளும் இருக்காரு.”

“என்னுடைய மாதவனாக இருக்கணும்” - தெற்குப்பக்க வீட்டின் கிழவி சொன்னாள்.

உண்ணுலி கல்யாணியிடம் சொன்னாள்: “நீ அங்கே போ. சமையலறைக்கு.”

“அரிசி இல்லாமல் எதற்கு சமையலறைக்குள் போகணும்?”

“சின்ன குடத்தில் அரைநாழி அரிசி இருந்துச்சே! அது எங்கே?”

“அரைநாழி அரிசியை வச்சு என்ன செய்றது?”

“பெரிய குடத்தில் இருக்குற கோதுமையையும் அரிசியையும் ஒன்றாகச் சேர்த்து உரலில் போட்டு இடி. பிறகு ரொட்டி தயார் பண்ணு.”

கல்யாணி அங்கிருந்து நகர்ந்தாள்.

மாதவனின் தாய் உண்ணுலிக்கு அருகில் நின்றுகொண்டு மிகுந்த ஆர்வத்துடன் முணுமுணுத்தாள்: “பட்டாளம் வந்திருக்கு!”

“ம்...!” ஒரு பெரிய முனகலாக அது இருந்தது, ஏரியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்களில் ஒரு மின்னல் தோன்றியது.

“நம்ம பிள்ளைகள்...” மாதவனின் தாயின் தொண்டை தடுமாறியது.

உண்ணுலி அடுத்த நிமிடம் முகத்தைத் திருப்பினாள்: “நீங்க ஏன் இப்படிக் கவலைப்படுறீங்க? பட்டாளம் வந்தால் என்ன? விழுங்கிடுமா?”

மாதவனின் தாய் பதைபதைப்பை அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்து வைத்திருப்பதைப்போலச் சொன்னாள்: “அவங்க துப்பாக்கிகளுடன் வந்திருப்பாங்க. ஒரு தடவை சுட்டால், பத்துபேர் செத்துப் போயிடுவாங்களாம்!”

“உலக்கையால் அடித்துக் கொல்வதைவிட, துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது நல்லதுதானே?”

“அப்படியென்றால் நாம எதற்குப் பெற்று வளர்த்தோம்.”

“எதற்கு? சொல்லுங்க... எதற்கு? - உண்ணுலியின் கண்கள் முன்பு இருந்ததைவிட வெறித்தன. அவளுடைய உதடுகள் துடித்தன. “சொல்லுங்க... நாம எதற்காக பெற்று வளர்த்தோம்? நாயைப்போல வாலை ஆட்டிக்கொண்டு நிற்பதற்கா? தலையை மிதிக்கிறப்போ, கால்களை நக்குவதற்கா?” - பற்கள் இல்லாத ஈறுகளைக் கடித்துக் கொண்டு அவள் சொன்னாள்: “சாகட்டும்! எல்லாவற்றையும் சுட்டுக் கொன்னுட்டு அவங்க வாழட்டும்!”


படகு கரையை நெருங்கியது. குட்டனும் மாதவனும் கரையில் கால் வைத்தார்கள்.

“மகனே!” - மாதவனின் தாய் ஆவேசத்துடன் அழைத்தாள்.

“பேசாம இருங்க...” - உண்ணுலி கோபத்துடன் சொன்னாள். குட்டனும் மாதவனும் நடந்தார்கள். கிழவிகள் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.

“டே... டே... டே...” - தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம்! ஒவ்வொரு குண்டும் காற்றில் ஒவ்வொரு முழக்கத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு முழக்கமும் ஏரியின் அக்கரையில் எதிரொலித்தது. ஏராளமான காகங்களும் கழுகுகளும் உயிர் போகும் வேதனையில் துடிப்பதைப்போல சத்தங்கள் எழுப்பிக் கொண்டு ஆகாயத்தில் நாலா திசைகளிலும் பறந்து கொண்டிருந்தன.

மாதவனின் தாய் ஆவேசத்துடன் கேட்டாள் : “என்ன அது?”

“பட்டாளம் துப்பாக்கியால சுடுகின்றது” உண்ணுலி பதில் சொன்னாள்.

சில நிமிடஙக்ள்! மூச்சை அடக்கக்கூடிய ஒரு பேரமைதி!

குட்டனும் மாதவனும் குடிசைக்குள் நுழைந்தார்கள். கிழவிகள் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். குட்டனும் மாதவனும் தரையில் உட்கார்ந்தார்கள். கிழவிகள் கட்டிலில் உட்கார்ந்தார்கள்.

சமையலறைக்குள் இருந்தவாறு கல்யாணியும் பார்கவியும் எட்டிப் பார்த்தார்கள்.

“கோபாலன் எங்கே?” - குட்டன் அந்த மூச்சை அடைத்துக் கொண்டிருந்த அமைதியைக் கிழித்தான்.

பார்கவி சொன்னாள் : “காலையில் இங்கே வந்து பட்டாளம் வந்திருக்குன்னு பாட்டியிடம் சொல்லுன்னு சொல்லிவிட்டு, பிறகு அங்கேயே போயிட்டான்.”

மீண்டும் மூச்சை அடைக்கச் செய்யும் அந்தப் பேரமைதி!

வடக்கு வீட்டில் இருக்கும் பப்புவின் மனைவி நீண்ட நேரம் ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தாள். கர்ப்பத்தால் வாயு மேலே வந்து கொண்டிருக்கிறது. அணை உடைந்து ஓடுவதைப்போல, அதற்குப் பிறகும் ஏப்பங்கள் வந்து கொண்டேயிருந்தன.

“டே... டே... டே...” துப்பாக்கிகள் துப்பிக் கொண்டிருந்தன. வடக்குப்பக்க வீட்டில் வந்துகொண்டிருந்த ஏப்பம் திடீரென்று நின்றுவிட்டது.

அதற்குப் பிறகும் மூச்சை அடைக்கக்கூடிய அந்தப் பேரமைதி!

மேற்குப்பக்க வீட்டில் இருக்கும் பாரு மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு குடிசைக்குள் வந்தாள். “பையனை.... பையனை... இங்கே கூப்பிடுங்க. அவன் கற்களை எறிந்து கொண்டிருக்கிறான். பட்டாளம் இருக்குற இடத்துக்குப் போய் பிடித்துக் கொண்டு வாங்க.”

“கொல்லட்டும்!” - உண்ணுலி உரத்த குரலில் சொன்னாள். அவள் கட்டிலை விட்டு எழுந்தாள். மேலே கட்டித் தொங்க விடப்பட்டிருந்த உலக்கையைப் பிடித்துக்கொண்டு அந்தப் பெண் சிங்கம் அதற்குப் பிறகும் கர்ஜித்தது: “கொல்லட்டும்! கொன்று விட்டு அவர்கள் வாழட்டும்!”

குட்டன் தலையை உயர்த்தினான். உலக்கையைப் பார்த்துக் கொண்டே அவன் புன்னகைத்தான். பல வருடங்களாக நடந்து வரும் கொடுமைகளுக்கு எதிராகப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அந்தப் புன்னைகையில் தெரிந்தது.

அவன் எழுந்து ஆடைகளுக்கு மத்தியில் இருந்து ஒரு நீளமான வெட்டரிவாளை எடுத்தான். தனி கவனம் செலுத்தி செய்யப்பட்டிருந்த ஒரு அரிவாள் அது.

அவன் கட்டிலுக்கு அருகில் வந்தான். மேலே கட்டப்பட்டிருந்த உலக்கையை அவிழ்த்தான். உலக்கையின் ஒருமுனையில் அரிவாளைக் கட்டினான். உலக்கையைப் பார்த்து அவன் மீண்டும் புன்னகைத்தான். பயங்கரமான ஒரு புன்னகை!

“வா மாதவா, வா” - அவன் வெளியே செல்ல முயன்றான். மாதவன் எழுந்தான்.

“ரொட்டி” - கல்யாணி அவனை அழைத்துச் சொன்னாள். அவள் ஒரு துண்டு இலையில் இரண்டு ரொட்டிகளைக் கொண்டு வந்தாள்.

“ரொட்டியைச் சாப்பிடு மகனே!” - உண்ணுலி சொன்னாள்.

குட்டனும் மாதவனும் ஒவ்வொரு ரொட்டியை எடுத்துக்கொண்டார்கள். இயந்திரங்களைப்போல அதை கடித்து இறக்கிவிட்டு, இருவரும் குடிசையை விட்டு வெளியேறினார்கள்.

அமைதியாக இருந்த ஏரிப்பரப்பில் அந்தச் சிறிய படகு நகர்ந்து நகர்ந்து விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தது. கிழவிகள் ஏரியின் கரையில் அதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

மதியத்திற்குப் பிறகு உண்ணுலி கட்டிலில் படுத்திருந்தாள். கல்யாணியும் பார்கவியும் வாசல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. எங்கும் ஒரு சத்தம்கூட கேட்கவில்லை. மோட்டார் இயந்திரங்கள், ஹார்ன் சத்தம் ஆகியவற்றின் எதிரொலிகள்கூட இல்லை. குண்டுகளின் சத்தம் மட்டும் அந்தச் சமயத்திலும் ஆகாயத்தின் அடர்த்தியில் எதிரொலிப்பதைப்போல இருந்தது.

உண்ணுலியின் உதடுகள் அசைந்தன: “கோபாலன் வந்துட்டானாடீ?”

“இல்ல...” கல்யாணியின் வறண்டுபோன தொண்டையில் இருந்து பதற்றத்துடன் சத்தம் வந்தது.

மேற்கு திசையிலிருந்து வந்த காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. ஏரியில் நீர்  வளையங்கள் உண்டாயின. ஏரி நீர் கோபமுற்ற பாம்பைப் போல தலையை உயர்த்தி குதித்துப் பாய்ந்து கொண்டிருந்தது.

காற்றின் கோபமும் அலைகளின் ஆரவாரமும்! அதற்கு நடுவில் ‘டக் டக் டக்’ என்றொரு சத்தம்! தொடர்ந்து ஏராளமான ‘டக் டக் டக்’ சத்தங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய இரைச்சல் சத்தத்தை உண்டாக்கின.

“கேக்குறது என்ன?” - உண்ணுலி கேட்டாள்.

“படகு சத்தம்” - பார்கவி பதில் சொன்னாள்.

“உண்ணுலி தங்கச்சி எங்கே?” - ஏரியின் கரையில் நின்று கொண்டு கிழவனான அந்தோணி உரத்த குரலில் கேட்டான்.

“இங்கே இருக்காங்க” - கல்யாணி பதில் சொன்னாள்.

உண்ணுலி கேட்டாள் : “யார் அது?”

“அந்தோணி அய்யா.”

“இங்கே வரச் சொல்லு” - அவள் எழுந்து உட்கார்ந்தாள்.

“இங்கே வருவீங்களாம்...” - பார்கவி உரத்த குரலில் சொன்னாள். அவர்கள் இருவரும் கதவுக்கருகில் இருந்து எழுந்து தள்ளி உட்கார்ந்தார்கள்.

அந்தோணி அன்று முதல்முறையாக அந்த குடிசைக்குள் வந்தான். உண்ணுலி எழுந்து நின்றாள்: “உட்காருங்க... உட்காருங்க... அந்தோணி.”

அந்தோணி உட்காரவில்லை. அவன் சொன்னான்: “பட்டாளம் அக்கரைக்குப் போயிருக்கு. பட்டாளம் போன படகின் சத்தம்தான் கேக்குறது.”

மூச்சை அடைக்கக்கூடிய அளவிற்கு அந்தப் பேரமைதி!

அந்தோணி குடிசையை விட்டு வெளியே வந்தான். அவனுக்குப் பின்னால் உண்ணுலியும்.

“நில்லுங்க...” - உண்ணுலி சொன்னாள்.

அந்தோணி திரும்பி நின்றான். உண்ணுலி என்னவோ மெதுவான குரலில் சொன்னாள். அந்தோணி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியவாறு நின்றுவிட்டு மெதுவாக முனகினான். தொடர்ந்து திரும்பி சென்றான்.

ஏரி அமைதியானது. ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அந்த விசும்பிக் கொண்டிருந்த நீர்ப் பரப்பின் வழியாக படகு கரையை நெருங்கத் தொடங்கியது. அந்தோணியின் நடுங்கிக் கொண்டிருந்த கைகள் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தன. படகின் தலைப்பகுதியில் செதுக்கப்பட்ட சிலையைப்போல உண்ணுலி எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள்.


கீழே சாய்ந்து, சுருங்கிப் போய் இருந்த மார்பகத்தை அவள் ஒரு மேற்துண்டால் மறைத்திருந்தாள். நரைத்து, உதிர்ந்து, ஈர்க்குச்சியைப்போல ஆகிவிட்ட முடி தலையைச் சுற்றிலும் பறந்து கொண்டிருந்தது. நீருக்கு அடியில் எதையோ உற்றுப் பார்ப்பதைப்போல அந்தக் கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. ஈறுகளை அவள் கடித்து மூடியிருந்தாள்.

மேற்குப்பக்கக் கரையில் தென்னந்தோப்புகளைத் தாண்டி, வெண்மேகங்களால் மறைக்கப்பட்ட நிலவின் வெளிச்சம் கடலுக்குள் விழுந்து கொண்டிருந்தது. அங்கு எங்கோ நாயொன்று இரண்டு மூன்று முறை குரைத்துவிட்டு, திடீரென்று அதை நிறுத்திக்கொண்டது. எங்கிருந்தோ அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு பதறிய சத்தம் ஒன்று கேட்டது. வேறு எங்கோ அந்த சத்தத்திற்கு எதிர் சத்தம் கேட்டது. இரண்டு சத்தங்களும் கரையில் ஒரு பயங்கர முழக்கத்தை உண்டாக்கின.

கரையில் முட்செடிகளும் மூங்கிலும் கற்றாழையும் இடைவிடாமல் வளர்ந்து நின்றிருக்கும் ஒரு காட்டிற்குள் அந்தோணி படகைச் செலுத்தினான்.

“உண்ணுலி சகோதரி” - அந்தோணி மெதுவாக அழைத்தான்.

“ம்?” - அந்த முனகல் ஒலித்தது.

காட்டிற்குள் ஒரு நீண்ட பெருமூச்சு.

அந்தோணி சொன்னான் : “அங்கே இறங்குங்க. விழாமல்... அந்தச் செடியைப் பிடிச்சுக்கங்க.”

காட்டில் ஒரு அசைவு.

உண்ணுலி எழுந்தாள். செடியைப் பிடிக்காமலே அவள் கரையில் இறங்கினாள். கட்டளைக் குரலில் அவள் சொன்னாள் : “படகை எடுத்துக்கொண்டு நீங்க போயிடுங்க அந்தோணி.”

காட்டில் ஒரு காலடிச் சத்தம்.

“நீங்க அங்கே போயிடுங்க அந்தோணி.”

“அப்படின்னா... உண்ணுலி தங்கச்சி, நீங்க என்ன செய்வீங்க?”

“நானா? நான்...”

காட்டில் ஒரு முனகல் சத்தம்.

அந்தோணி கேட்டான்: “என்ன அது?”

உண்ணுலி கேட்டாள்: “யார் அது?”

“என்னையும்... என்னையும்...” – சோர்வடைந்த, தெளிவற்ற ஒரு சத்தம்.

அந்தோணி படகிலிருந்து கரையில் இறங்கினான். “என்னையும், என்னையும்...” என்று தெளிவில்லாமல் முனகியவாறு ஒரு மனிதன் மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.

“யார் அது?” - அந்தோணியின் குரலில் பதற்றம் இருந்தது.

“பிடிங்க அந்தோணி” - உண்ணுலியின் குரல் முன்பு இருந்ததைவிட சத்தமாக ஒலித்தது: “பிடித்துப் படகில் ஏற்றுங்க.”

ஒரு கையை இழந்து, ரத்தத்தைச் சிந்திக்கொண்டிருந்த ஒரு மனிதனை அந்தோணி தாங்கிப் பிடித்துக் கொண்டான். அந்த உடல் தளர்ந்துபோய் விட்டிருந்தது. “என்னை... என்னை...” என்பது மட்டும் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்தோணி அந்த மனிதனை வாரித் தூக்கிப் படகில் படுக்க வைத்தான்.

உண்ணுலி சொன்னாள் : “அங்கே கொண்டு போங்க.”

“நான் போயிட்டா, பிறகு..?”

“நீங்க போங்க... போங்கன்னு சொல்றேன்” - அது ஒரு கட்டளையாக இருந்தது.

அந்தோணி படகில் ஏறினான். விசும்பிக் கொண்டிருந்த ஏரியின் பரப்பின் வழியாக படகு மெதுவாக, மெதுவாக நகர்ந்து முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. படகில் இருந்து அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்த முனகல் சத்தம் ஏரியின் விசும்பல் சத்தத்தில் காணாமல் போனது.

ஏரியின் அக்கரையில் தென்னந்தோப்புகளுக்கு அப்பால், நிலவு வெளிச்சம் இல்லாமல் போயிருந்தது.

உண்ணுலி இருட்டில் நடந்தாள். குழிக்குள் விழுந்து கிடந்த அந்த கண்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. இருட்டைத் துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது அந்தப் பார்வை!

மணலில் ஒரு ஈரம்! உண்ணுலியின் காலில் ஏதோ பட்டது. திடீரென்று காலை யாரோ பிடிப்பதைப்போல இருந்தது.

உண்ணுலி குனிந்து பார்த்தாள். ஒரு தாங்க முடியாத வாசனை! ரத்தமும் மண்ணும் கலந்து உண்டாக்கிய ஒரு வாசனை! ஒரு மனிதன் அந்த மண்ணில் கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருக்கிறான். ஒரு சிறிய முனகல் சத்தம் மட்டும்!

“யார் அது!” உண்ணுலி கேட்டாள்.

“தண்ணி.. தண்ணி...” அந்தத தலை அடுத்த நிமிடம் உயர்ந்து, திடீரென்று மண்ணில் விழுந்தது. முனகல் சத்தம் நின்றுவிட்டது. உண்ணுலியின் காலைப் பிடித்திருந்த பிடி விட்டது.

உண்ணுலி நிமிர்ந்து நின்றாள். அவள் அமைதியாக இருந்தாள். ஆகாயத்தில் வெண் மேகங்களுக்கு மத்தியில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன.

உண்ணுலி நடந்தாள். அவளுடைய உடல் நடுங்கவில்லை. கால்களில் பதற்றமில்லை. ஈறுகளைக் கடித்து அழுத்திக்கொண்டு வெறித்துப் பார்த்தவாறு அவள் நடந்தாள்.

ஒரு மெல்லிய மூச்சு விடும் சத்தம்! உண்ணுலி குனிந்தாள். அவள் கேட்டாள் : “குட்டனா? என் மகனா?”

“இங்கி... இங்கி... இங்கிலாப்...” அந்தக் குரல் அத்துடன் நின்றுபோனது.

மூக்கிற்குள் நுழைந்து கொண்டிருந்த வாசனை! ரத்தமும் மண்ணும்!

உண்ணுலி நிமிர்ந்து நடந்தாள்.

மண்ணில் விழுந்த ரத்தத்தை மீண்டும் எடுக்க முயல்வதைப்போல கவிழ்ந்து கிடந்த ஒரு உடலுக்கு முன்னால் அவள் குனிந்தாள்: “குட்டனா? குட்டா... குட்டா...”

மணல் துகள்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தபோது, தெளிவற்ற வார்த்தைகளும் முனகல்களும் கேட்டுக் கொண்டே இருந்தன. அவள் நிமிர்ந்து நின்று பார்த்தாள். நிறைய மனித உடல்கள் அந்த மணல் பரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் வாழ்க்கையைப் பிய்த்துக் கிழித்து எறிந்திருந்தது. சில உடல்கள் முனகிக் கொண்டிருந்தன. சில உடல்களில் இருந்து மெல்லிய சத்தம் வந்து கொண்டிருந்தது.

“குட்டா! மகனே...” - உண்ணுலி ஒவ்வொரு உடலுக்கு முன்னாலும் சென்று குனிந்து பார்த்தாள்.

“குட்டா! குட்டா!” - அவளுடைய குரல் உயர்ந்தது. “என் உலக்கை... என் உலக்கை எங்கே மகனே?” - அவள் ஒவ்வொரு இறந்த உடலையும் பார்த்துக் கேட்டாள். ஒவ்வொரு முகத்தையும் உற்றுப் பார்த்தாள். ஒவ்வொரு கொம்புகளையும் எடுத்துப் பார்த்தாள்.

“குட்டா...! உலக்கை! என் உலக்கை...” - அவள் அந்தப் பிணங்களுக்கு மத்தியில் தேடி நடந்தாள்.

“பாட்டி...!” சற்று தூரத்தில் ஒரு அழைப்பு கேட்டது.

உண்ணுலி தலையை உயர்த்தினாள். ஆர்வத்துடன், ஆவேசத்துடன் அவள் கேட்டாள்: “யார் அது? யார் கூப்பிட்டது?”

“நான்தான் பாட்டி!”

“கோபாலனா? பேரனே! என் உலக்கை... என் உலக்கை எங்கே?”

“இதோ... இதோ இருக்கு உலக்கை!”

பிணங்களையும், உயிருள்ள பிணங்களையும் மிதித்துக்கொண்டு உண்ணுலி பாய்ந்து சென்றாள். கோபாலனின் கையிலிருந்து உலக்கையை வாங்கி அவள் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

“அப்பா! பாட்டி அப்பா!”

“எங்கே? என் குட்டன் எங்கே?” - அவள் சிரித்தாள். ஒரு பிணத்தின் சிரிப்பாக அது இருந்தது.


அவள் மண்ணில் உட்கார்ந்தாள் : “என் குட்டன்! என் மகன்...” - அவள் அந்த இறந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்: “அன்றைக்குச் சொன்னாரு... என் வயிற்றில் இருக்குறதா... என் வயிற்றில் இருந்ததுதான்... என் குட்டன்... என் மகன்!”

குண்டடிப்பட்டுப் பிளந்த அந்த மார்பிலிருந்து அவள் உறைந்து போயிருந்த ரத்தத்தை வாரி எடுத்தாள்: “என் மகன்.. இவனுடைய சங்கில் ரத்தம்!”

அவள் அந்த ரத்தத்தை முகத்தில் தேய்த்தாள், அவளுடைய முகத்தில் வாழ்க்கை குத்தி உண்டாக்கிய குழிகளிலும் வாய்க்கால்களிலும் மகனின் இதய ரத்தம் நிறைந்து நின்றது.  அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பேய்த்தனமான ஒரு தொடர் சிரிப்பு அது!

“பாட்டி!” - கோபாலனின் குரலில் முதல் தடவையாக ஒரு பதற்றம் இருந்தது.

“பேரனே!” - உண்ணுலி எழுந்தாள். மகனின் ரத்தம் தோய்ந்திருந்த அந்த முகம், பேரனின் முகத்துடன் நெருங்கியது. அவள் அவனுடைய நெற்றியிலும் தலையிலும் முத்தமிட்டாள்.

“வா... வா... மகனே வா...” அவள் நடந்தாள். வலது கையில் உலக்கையும் இடது கையில் கோபாலனின் கையும் இருந்தன.

சற்று தூரத்தில் ஒரு வெளிச்சம்! பாட்டியும் பேரனும் அதைப் பார்க்கவில்லை.

அவர்கள் நடந்து ஒரு குளத்தின் கரையை அடைந்தார்கள். செடிகளும் புற்களும் நிறைந்த ஒரு கவனிப்பாரற்ற குளமாக இருந்தது அது.

உண்ணுலி குளத்தின் கரையில் நின்றாள். அவள் சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்து சிந்தனையில் மூழ்கினாள். அப்போதும் நட்சத்திரங்கள் இடைவிடாமல் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன.

அதற்குப் பிறகும் தூரத்தில் அந்த வெளிச்சம்!

“மகனே, இதை வச்சிரு... இதை பத்திரமா வச்சிருக்கணும்!” - அவள் உலக்கையை கோபாலனின் கையில் கொடுத்தாள். அவளுடைய குரல் மிகவும் சன்னமாக இருந்தது. அதில் ஒரு சோகம் கலந்திருந்தது.

“தாத்தாவின் உலக்கை... பத்திரமா வச்சிருக்கணும். தொலைச்சிடக்கூடாது... தொலைச்சிடக் கூடாது மகனே! தொலைச்சிடக் கூடாது...” சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். சிந்தனையில் மூழ்கியவாறு நின்றுவிட்டு மிடுக்கான குரலில் அவள் சொன்னாள்: “மகனே, நீ கல்யாணம் பண்ணிக்கணும். உனக்கு ஒரு மகன் பிறக்கணும். இந்த உலக்கையை அவனிடம் கொடுக்கணும்.”

அந்த வெளிச்சம்! அது நெருங்கி வந்து கொண்டிருந்தது.

கோபாலன் சொன்னான் : “பட்டாளம்! அதோ வர்றது பட்டாளம்தான் பாட்டி!”

“அப்படின்னா மகனே, நீ போ...” - உண்ணுலியின் குரலில் பதைபதைப்பு இருந்தது.

கோபாலன் நெற்றியைச் சுளித்தான். “பட்டாளம் வருதுன்னா நான் ஏன் போகணும்?”

வெளிச்சம் குளத்தைத் தாண்டி இருந்த மாமரத்தில் விழுந்தது.

உண்ணுலி முன்பு இருந்ததைவிட பதைபதைப்புடன் சொன்னாள் : “என் பேரனே, போ...”

கோபாலன் போகவில்லை. அவன் உலக்கையில் கட்டப்பட்டிருந்த அரிவாளைச் சோதித்துப் பார்த்துவிட்டு, உலக்கையை நீட்டிப் போருக்குத் தயாரானான்.

உண்ணுலி உலக்கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்: “போ! போகச் சொன்னேன்... இல்லாவிட்டால் உன் பாட்டி நான் உன்னைக் கொல்லப் போறேன். போ..போ...”

கோபாலன் யோசித்தான். உலக்கையைத் தோளில் வைத்துக் கொண்டு அவன் அங்கிருந்து ஓடினான்.

உண்ணுலி விழுந்து விழுந்து சிரித்தாள். பேய்த்தனமான ஒரு தொடர் சிரிப்பு!

திடீரென்று வெளிச்சம் அவளுடைய ரத்தம் தோய்ந்த முகத்தில் விழுந்தது.

அந்த வெளிச்சத்திற்குப் பின்னாலிருந்து ஒரு ஆள் உரத்த குரலில் சொன்னான் : “ரத்தக் காளிடா! ரத்தத்தைக் குடிக்கிறதுக்காக வந்திருக்கு!”

“சுட வேண்டியதுதான்” - இன்னொரு ஆள் சொன்னான்.

வெளிச்சம் முன்பைவிட அதிகமாக அவளுடைய முகத்தில் விழுந்தது. அது ஒரு மின்சாரத்தால் ஆன பந்தமாக இருந்தது!

“சுடுடா... சுடு...” உண்ணுலி கத்தினாள். மின்சார பந்தத்திற்குப் பின்னாலிருந்து ஒரு உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது.

“கொச்சய்யப்பனின் மனைவிடா... நான் குட்டனின் தாய்டா...” உண்ணுலி ஆவேசத்துடன் உரத்த குரலில் சொன்னாள்:

உதட்டில் பட்டிருந்த ரத்தத்தை நக்கியவாறு அவள் கோபத்துடன் சொன்னாள்: “உன் துப்பாக்கியை இந்தப் பக்கம் நீட்டுடா... சுடு!”

மின்சார விளக்கிற்குப் பின்னால் ஒரு உரத்த சிரிப்புச் சத்தம்! ஒரு குண்டு முன்னோக்கிப் பாய்ந்தது.

‘டே!’ - ஒரு வெடிப்பு!

“ஹூம்!” - ஒரு சத்தம்.

விளக்கு அணைந்துவிட்டது.

குளத்திற்குள் ஏதோ சாய்ந்து விழுந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.