Logo

திருப்பம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6548
thiruppam

கிழவர் கண்டப்பன் தன் மகனிடம் கேட்டார்:

"அவங்க சாணார் ஜாதியைச் சேர்ந்தவங்களாச்சே! அவங்க பெண்ணை நமக்குத் தருவாங்களா?"

"தருவாங்களா இல்லையான்றதை தெரிஞ்சிக்கணும்னா, நாம அவங்கக்கிட்டப் போயி கேட்க வேண்டாமா?"- கொச்சப்பன் முதலாளி தன் தந்தையிடம் இப்படியொரு எதிர் கேள்வியைக் கேட்டார்.

"அப்படிக் கேக்குறப்போ, தரமாட்டேன்னு அவங்க சொல்லிட்டா? அது நமக்கு அவமானமில்லையா?"

"நாம அங்கே போயி பொண்ணு கேட்க மாட்டோமான்னு இருக்காங்க அவங்க. போயி கேட்டா உடனே அவங்க பொண்ணை இங்கே கொண்டு வந்து விட்டுட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க"- கொச்சப்பன் முதலாளியின் மனைவி சங்கரிதான் இப்படிச் சொன்னாள்.

"அடியே சங்கரி... நீ அர்த்தமில்லாமப் பேசாதே. செத்தாலும் சாணார்களுக்குன்னு இருக்குற மரியாதையையும் மதிப்பையும் இன்னும் இழக்காம இருக்குறவர் வேலாயுதன் சாணார்"- கொச்சப்பன் முதலாளி தன் மனைவியைத் திட்டினார்.

"ஓ! சாணார்களுக்குன்னு இருக்குற மரியாதையாம்! மதிப்பாம்! கஞ்சி வச்சுக் குடிக்கிறதே எப்போதாவதுதான்.... சாணார்களுக்குன்னு இருக்குற மரியாதை, மதிப்பு எல்லாம் பழைய கதைகள்"- சங்கரி திருப்பி அடித்தாள்.

கிழவர் கண்டப்பன் சொன்னார்:

"கொச்சப்பா, ரவீந்திரனுக்குத் திருமணம் செய்ய வேறு யாராவது பொண்ணு கிடைக்கலையா? அவனுக்குப் படிப்பு இருக்கு. பணம் இருக்கு. பிறகு அவனுக்கு எங்கே இருந்தாவது பொண்ணு கிடைக்காதா என்ன?"

"சாணாரோட மகள்தான் வேணும்னு அவன் ஒத்தைக் கால்ல நிக்கிறான்."

"அவன் அந்தப் பொண்ணோட அழகுல மயங்கிப் போய் அப்படிச் சொல்றான். ஆனால், அவள் தன்னோட - தன் தந்தையோட- சாணார்களுக்குன்னு இருக்குற மிடுக்கோட வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா...."

கண்டப்பன் கூற வந்தது முழுவதையும் கூற சங்கரி விடவில்லை.

"வந்து நுழைஞ்சால் என்ன? இந்த வீட்டுக்குள்ளே அந்த மாதிரி மிடுக்கையும் கர்வத்தையும் வச்சிக்கிட்டு யாரும் வர முடியாது. அந்த குணத்தையெல்லாம் அவங்க தங்களோட வீட்டுல வச்சிக்கணும்."

கொச்சப்பன் முதலாளி தன் மனைவிக்கு அறிவுரை சொன்னார்:

"அடியே சங்கரி... அப்பா சொன்னது உண்மைதான். மாலேத்து சாணார்களைப் பற்றி உனக்குத் தெரியாது. கஞ்சிக்கு வழியில்லைன்னாலும், அவங்களோட கவுரவத்தை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்குறவங்க அவங்க. அப்பா மாலேத்து வீட்டுல வேலைக்காரனா இருந்தவரு."

ஆமாம். கண்டப்பன் மாலேத்துக் குடும்பத்தில் வேலைக்காரனாக இருந்தவர்தான். மாலேத்து சாணார்கள் ஊரில் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தார்கள் அந்தக் காலத்தில். அவர்கள் கொலை செய்யக் கூட அஞ்சமாட்டார்கள். அந்தக் காலத்தில் பல கொலைச் செயல்களையும் அவர்கள் செய்தவர்கள்தான்.

ஈழவ ஜாதியில் நம்பூதிரிமார்கள் என்றால் சாணார்களும் பணிக்கர்களும்தான். மாலேத்துக்காரர்கள் சாணார்களாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல-பெரிய பணக்காரர்களாகவும் இருந்தார்கள். அந்த ஊரிலிருந்த நிலங்களும் வீட்டு மனைகளும் பாதிக்கு மேல் அவர்களுக்குச் சொந்தமானவையாக இருந்தன.

ஏரிக் கரையிலிருந்த அந்த பெரிய மாளிகையைப் போன்ற வீடும், தானியங்கள் வைத்திருந்த கட்டிடமும், தொழுவமும் இப்போதும் அங்கு இருக்கத்தான் செய்கின்றன. வேலாயுதன் சாணாரும் அவருடைய பிள்ளைகளும் அங்குதான் வசிக்கிறார்கள். சங்கரி கூறியதைப் போல 'கஞ்சி குடிப்பது எப்போதாவது ஒருமுறைதான்' என்றாலும் சாணார்களுக்கென்றே இருக்கிற கவுரவ குணத்தை அவர்கள் இப்போதும் பத்திரமாக காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேலாயுதன் சாணாரின் முன்னோர்கள், பலரையும் ஏரியில் கட்டிப் போட்டு மூழ்கச் செய்திருக்கிறார்கள். அதை எதிர்ப்பதற்கான தைரியம் யாருக்கும் இல்லை. அப்படி யாருக்காவது தைரியம் இருந்தால், அவர்களின் குரல் வெளியே வந்ததே இல்லை.

கண்டப்பன் மாலேத்து குடும்பத்தில் வேலைக்காரனாக இருந்தான். அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வதுதான் அப்போதைய கூலி வழக்கமாக இருந்தது. கண்டப்பனும் அவன் குடும்பமும் மாலேத்து குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு நிலத்தில் குடியிருந்தார்கள்.

கண்டப்பன் மாலேத்திற்கு வேலைக்குப் போகும் போது, அவனுடைய மகன் கொச்சப்பனும் உடன் செல்வான். வாசலில் அவன் அமர்ந்திருப்பான். நாய்க்குக் கொடுப்பதில் அவனுக்கும் கொஞ்சம் பங்கு கிடைக்கும். அப்போது அவனுக்குப் பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும்.

வேலாயுதன் சாணாரும் கொச்சப்பனும் கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்டவர்கள். கொச்சப்பன் மாலேத்து வாசலில் உட்கார்ந்திருக்கும் போது, வேலாயுதன் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் எடுத்து அவன் மீது எறிவான். வலி தாங்காமல் கொச்சப்பன் அழுவான். வேலாயுதனின் மிகவும் பிடித்தமான விளையாட்டாக அது இருந்தது.

வேலாயுதன் சாப்பிட்டு முடித்ததும், மீதி இருப்பதைக் கொச்சப்பனுக்குக் கொடுப்பான். ஆனால் மென்று துப்பியது, மீனின் முற்கள் எல்லாவற்றையும் பாத்திரத்தில் இட்டு, அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்துதான் அவன் கொச்சப்பனிடம் தருவான். இறுதியாக அதில் துப்பவும் செய்வான். எனினும், கொச்சப்பன் அந்த எச்சில் பாத்திரத்தை வழித்து நக்குவான். வேலாயுதன் அதைப் பார்த்துக் கொண்டே கையைத் தட்டி சிரித்துக் கொண்டிருப்பான்.

ஒருநாள் கொச்சப்பன் வாசலில் நின்று கொண்டிருந்தபோது, வேலாயுதன் அம்மிக் குழவியை எடுத்துக் கொண்டு வந்து அவன்மீது வீசி எறிந்தான். கொச்சப்பனின் மார்பின் மீது அந்த அம்மிக் குழவி விழுந்தது. அவன் மயக்கமடைந்து தரையில் விழுந்தான். அதைப் பார்த்து கண்டப்பன் ஓடி வந்தான். தன் மகன் இறந்துவிட்டான் என்று நினைத்து அவன் உரத்த குரலில் அழ ஆரம்பித்தான். அப்போது வேலாயுதனின் தாய் சொன்னாள்:

"செத்துப் போயிருந்தான்னா, அவனை தரையில குழி தோண்டிப் புதைச்சிடு கண்டப்பா. இதுக்குப் போய் எதுக்கு இப்படிச் சத்தம் போட்டு கூப்பாடு போடுறே?"

கண்டப்பன் தன் மகனைத் தூக்கிக் கொண்டு நடந்தான். சிறிது நேரம் கழிந்ததும் கொச்சப்பனுக்கு சுய உணர்வு வந்துவிட்டது.

அதற்குப் பிறகு கொச்சப்பன் மாலேத்து வீட்டிற்குச் சென்றதில்லை. அவனுடைய தந்தையும் தாயும் அந்த வீட்டிற்குச் செல்ல அவனை அனுமதிக்கவும் இல்லை.

கண்டப்பன் மாலேத்து வேலைக்குப் போகும் போது அவனுடைய மனைவி தேங்காய் மட்டையிலிருந்து கயிறு பிரித்துக் கொண்டிருப்பாள். இப்படித்தான் அந்தக் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. நாற்றமெடுத்த தேங்காய் மட்டையை வாங்கிக் கொண்டு வந்து, அதை அடித்து, அதிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட கயிறை சாயங்கால நேர சந்தைக்கு கொண்டு போய் அவள் விற்பாள். அதில் கிடைக்கும் பணத்தில் உப்பும் மிளகாயும் மண்ணெண்ணெயும் மரவள்ளிக் கிழங்கும் வாங்குவாள்.

பச்சைத் தேங்காய் மட்டைக்கு விலை குறைவு. அதை நீரில் போட்டு வைத்தால், அதற்கு விலை கூடுதலாக இருக்கும். பச்சைத் தேங்காய் மட்டையை வாங்கி அதை அடித்து, அதிலிருந்து பிரித்துக் கயிறாக்கி விற்றால், பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்று கொச்சப்பன் நினைத்தான். அதைத் தன் தாயிடம் கூறி கொஞ்சம் காசு வாங்கி, தன் தந்தைக்கும் அதில் கொஞ்சம் கொடுத்தான். அதைக் கொண்டு அவன் பச்சைத் தேங்காய் மட்டைகள் வாங்குவதற்காகக் கிளம்பினான்.


பொழுது புலரும் போது, கொச்சப்பன் பச்சைத் தேங்காய் மட்டை வியாபாரத்திற்குக் கிளம்பிவிடுவான். மாலேத்து வீட்டைத் தவிர, மீதி இருக்கும் எல்லா வீடுகளுக்கும் அவன் செல்வான். வியாபாரியாக அல்ல. தெருவில் வெறுமனே சுற்றித் திரியும் பையனைப் போல செல்வான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் காசு கொடுத்தும் கொடுக்காமலும் அவன் பச்சைத் தேங்காய் மட்டையைச் சேகரிப்பான். அவனுடைய தோற்றமும் நடத்தையும் பேச்சும் பார்ப்பவர்கள் மத்தியிலும் கேட்பவர்கள் மத்தியிலும் அவன்மீது இரக்கத்தைக் கட்டாயம் உண்டாக்கும்.

அந்த வகையில் வீடுகளிலிருந்து சேகரித்துக் கொண்டு வந்த பச்சைத் தேங்காய் மட்டைகளை கொச்சப்பன் நீருக்குள் மூழ்கும்படிப் போடுவான். சில நாட்கள் கடந்த பிறகு, அவன் அவற்றை எடுத்து அடித்து நாறாக ஆக்குவான். அவனும் அவனுடைய தாயும் சேர்ந்து பிரித்து அதைக் கயிறாக மாற்றுவார்கள். அவன்தான் மாலை நேர சந்தைக்கு அதைக் கொண்டு போய் விற்பனையும் செய்வான்.

கயிறு விற்பனை செய்து கிடைக்கும் காசில் அவன் ஒரு பைசாவைக் கூட செலவழிக்கமாட்டான். அதைக் கொடுத்து திரும்பவும் பச்சைத் தேங்காய் மட்டைகளை வாங்குவான். அதை அடித்துப் பிரித்துக் கயிறாக்கி விற்பான். அதற்குப் பிறகும் பச்சைத் தேங்காய் மட்டைகளை வாங்குவான்.

சில நேரங்களில் கொச்சப்பனின் தாய் அவனிடம் காசு கேட்பாள்- உப்போ மிளகாயோ மண்ணெண்ணையோ வாங்குவதற்காக. அவன் தர மாட்டான். தாய்க்கும் மகனுக்குமிடையில் சண்டை நடக்கும். அப்போது கண்டப்பன் இடையில் தலையிட்டு சமாதானம் உண்டாகும்படி செய்வான். அவன் கூறுவான்:

"அடியே... நீ அவன்கிட்ட ஒரு காசு கூட கேட்காதே. அவன் தந்தால் மட்டும் வாங்கினால் போதும். இல்லாவிட்டால் எதுவுமே இல்லைன்றது மாதிரி இருந்துக்கோ."

சில வேளைகளில் கண்டப்பன் மாலேத்திலிருந்து வரும் போது, பச்சைத் தேங்காய் மட்டைகளைக் கொண்டு வருவான். அங்கு வீட்டுத் தேவைக்காக தினமும் ஐந்தோ, ஆறோ தேங்காய்களைப் பறிக்க வேண்டும். அந்தத் தேங்காய் மட்டைகளைக் கண்டப்பன் சில நேரங்களில் கேட்டும் கேட்காமலும் கொண்டு வருவான். அவற்றையும் கொச்சப்பனிடம் அவன் தருவான்.

அந்த வகையில் கொச்சப்பன் மூன்று வருடங்களில் அந்த ஊரில் ஒரு கயிறு வியாபாரியாக மாறிவிட்டிருந்தான். மற்ற கயிறு வியாபாரிகள் அவனைச் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். அவனுடைய காதில் விழாத மாதிரியும், விழுகிற மாதிரியும் அவர்கள் கூறுவார்கள்.

"சின்ன பாம்புக்கு விஷம் இருக்கு. கவனமா இருக்கணும்.."

கொச்சப்பன் அதைக் கேட்க நேர்ந்தாலும், காதில் விழுந்த மாதிரி காட்டிக் கொள்வதில்லை. எல்லோரையும் அவன் அண்ணன் என்றும் மாமா என்றும் அழைப்பான். அவனை யாராவது மோசமான வார்த்தைகளில் ஏதாவது சொன்னால், அவன் சிரித்துக் கொண்டே அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டு நின்றிருப்பான். இல்லாவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர்ந்துவிடுவான்.

கொச்சப்பனுக்கு இருபது வயதாகிவிட்டது. அந்த ஊரில் குறிப்பிட்டுக் கூறும்படியான கயிறு வியாபாரியாக அவன் ஆகிவிட்டிருந்தான். படகுகளில் கயிறை ஏற்றி ஆலப்புழைக்கும் கொச்சிக்கும் கொண்டு சென்று வியாபாரம் செய்யும் அளவிற்கு அவன் வளர்ந்திருந்தான். கண்டப்பன் மாலேத்து வீட்டில் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டான். கொச்சப்பன் தன் தந்தையிடம் சொன்னான்:

"அப்பா, இனிமேல் நீங்க கூலி வேலைக்குப் போக வேண்டாம். இங்கே இருக்குற வேலையை நீங்க பார்த்தால் போதும். என்னால குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்."

"மகனே, நீ இதை எப்போ சொல்வேன்னுதான் நான் காத்திருந்தேன்."

அதற்குப் பிறகு கண்டப்பன் மாலேத்து வேலைக்குப் போகவே இல்லை. தன் மகனின் கயிறு வியாபாரத்தில் அவனுக்கு உதவியாக அவன் இருந்தான்.

கொச்சப்பன், கொச்சப்பன் முதலாளியாக ஆனார். ஐம்பதிற்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் கொச்சப்பன் முதலாளிக்குக் கீழே வேலை பார்த்தார்கள்.

கயிறு வியாபாரம் மட்டும் போதாது என்று தோன்றியது. கொப்பரை வியாபாரம் ஆரம்பமானது.

எனினும், கொச்சப்பன் முதலாளி மாலேத்து சாணார்களின் நிலத்தில் குடி இருப்பவர். மாலேத்து சாணார்களைப் பார்த்தால், கொச்சப்பன் முதலாளி மரியாதையுடன் விலகி நிற்பார். அவருடைய மார்பில் அம்மிக் குழவியை எறிந்த சம வயதைக் கொண்ட வேலாயுதன் சாணாரைப் பார்த்தாலும், அதே மரியாதையை வெளிப்படுத்துவார்.

"ஹும்..." என்பார் வேலாயுதன் சாணார். மனதில் கோபம் உண்டாக முனகுவார். சாணாரின் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரனின் மகன் அவன். சாணாரின் எச்சிலைத் தின்றவன் அவன். சாணாரிடம் அடியையும் உதவியையும் வாங்கியவன் அவன். அவன் இப்போது, கொச்சப்பன் முதலாளியாக ஆகியிருக்கிறான்! சாணார் கொச்சப்பன் முதலாளியைப் பார்த்தால் வெறுமனே முனகிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்.

ஆனால், மாலேத்து குடும்பம் மோசமான நிலைமைக்குச் சென்று, அவர்களுக்குச் சொந்தமான நிலங்களும் கட்டிடங்களும் அவர்களை விட்டு போக ஆரம்பித்தன. அவற்றில் சிலவற்றை கொச்சப்பன் முதலாளி வாங்கினார்.

கொச்சப்பன் முதலாளி வாழ்ந்து கொண்டிருந்த இடம் அவருக்குச் சொந்தமானது. அங்கு அவர் ஒரு மாளிகையைக் கட்டினார். அந்த ஊரிலேயே பெரிய மாளிகை அதுதான்! மாலேத்து இல்லத்திலிருந்து பார்த்தால், அந்த மாளிகை தெரியும். மாளிகையின் மேலிருந்து சாளரத்தின் வழியாகப் பார்த்தால், மாலேத்து வீட்டின் வாசலும் முற்றமும் தெரியும்.

2

கொச்சப்பன் முதலாளியின் மகன் ரவீந்திரன் மாளிகை மேலிருந்து மாலேத்து இல்லத்தைப் பார்ப்பான்- வேலாயுதன் சாணாரின் மகள் சுசீலாவைப் பார்ப்பதற்காக. தினமும் அப்படிப் பார்த்தவாறு நின்றிருப்பான். அது ஒரு தவத்தைப் போல நடந்து கொண்டிருக்கும்.

சில நேரங்களில் வேலாயுதன் சாணார் ரவீந்திரன் அப்படி பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்ப்பார். அவர் சுசீலாவிடம் கேட்பார்:

"மகளே, அவன் எதற்கு அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்?"

"வேற வேலை எதுவும் இல்லாம இருக்கும் அப்பா."

"இருந்தாலும் அவன் அப்படி நிற்பதைப் பா£க்குறப்போ, ஒரு உதை கொடுக்கணும்போல இருக்கு."

"அந்த ஆளு பார்த்துட்டு போகட்டும் அப்பா. அதனால நமக்கு ஏதாவது இழப்பு இருக்கா என்ன?"

"மகளே, நீ அந்தப் பக்கம் பார்க்கக்கூடாது"-சாணார் அறிவுரை கூறுவார்.

ஆனால், சுசீலா பார்ப்பாள். தன்னைப் பார்க்கும் எல்லா இளைஞர்களையும் அவள் பார்ப்பாள். அவளுக்கு அதில் ஒரு சந்தோஷம், மதிப்பு! எல்லா இளைஞர்களும் அவளை வழிபடுகிறார்கள் என்ற எண்ணம்.

வேலாயுதன் சாணாருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு ஆணும் இரண்டு பெண்களும். மூத்த மகன் பாலசந்திரன் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இளையவர்கள் சுசீலாவும் பத்மாவும். அவர்களை நகரத்தில் உள்ள ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்து சாணார் படிக்க வைத்தார். ஐந்தாம் வகுப்பு படித்ததும், அவர்களின் படிப்பை நிறுத்திவிட்டார். மகனை சட்டக் கல்லூரியில் சேர்ப்பதற்காகத்தான் அவர் தன் பெண் பிள்ளைகளின் படிப்பை நிறுத்தியதே. மூன்று பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் படிக்க வைக்கக்கூடிய பொருளாதார நிலையில் சாணார் இல்லை.


மாலேத்து குடும்பத்தில் பாகப் பிரிவினை நடந்த போது, கொஞ்சம் நிலமும், கட்டிடமும், வயலும் வேலாயுதன் சாணாருக்குக் கிடைத்தன. அவருடைய மனைவி மரணத்தைத் தழுவி விட்டாள். சாணாரும் அவருடைய மூன்று பிள்ளைகளும் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்தே வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், தன் மகன் பாலசந்திரனை பி.எல். பட்டம் பெற்றவனாகவும் உத்தியோகத்தில் இருப்பவனாகவும் ஆக்க வேண்டும் என்பது சாணாருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தது.

பழைய மதிப்பையும் புகழையும் யாரும் சிறிது கூட நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் வேலாயுதன் சாணாரின் மனதை விட்டு அவை எதுவும் நீங்காமல் அப்படியே இருந்தன. மிகப்பெரிய மனிதரைப் போலத்தான் அவருடைய நடை, அமர்ந்திருக்கும் முறை, பேச்சு எல்லாமே இருந்தன.

தன் மகனுடைய படிப்பிற்காக பாகம் பிரிக்கும்போது கிடைத்த நிலத்தையும் மனையையும் சாணார் விற்றுவிட்டார். வீடும் வீடு இருக்கும் இடமும் மட்டுமே சொந்தமாக இருந்தன. சில நேரங்களில் அந்த வீட்டில் பட்டினி உண்டாவதுண்டு. எனினும், வெளியே யாருக்கும் அந்த விஷயம் தெரியவே தெரியாது. வேட்டியை நல்ல முறையில் சலவை செய்து அணிந்து கொண்டு தலையை உயர்த்திக் கொண்டு அவர் நடப்பார். பெண் பிள்ளைகள் விஷயத்திலும் சிறிது குறை கூற முடியாது. அவர்களும் மதிப்பிற்கு சிறிதும் குறைவு உண்டாகாமல்தான் நடந்து கொள்வார்கள்.

பாலசந்திரன் பி.எல். படிப்பில் தேர்ச்சி பெற்றுப் பெரிய வழக்கறிஞராக ஆவான். இல்லாவிட்டால் நீதிபதியாகவோ, மேஜிஸ்ட்ரேட்டாகவோ ஆவான். பெரிய வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்வான். பெண் பிள்ளைகளுக்கு உத்தியோகத்தில் இருக்கும் ஆண்கள் கணவன்மார்களாகக் கிடைப்பார்கள். இப்படிப் பல விதத்திலும் கனவு கண்டு கொண்டு தன் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார் சாணார்.

சுசீலாவுக்குப் பல திருமண ஆலோசனைகளும் வந்தன. அவர்களில் யாரும் உத்தியோகத்தில் இல்லை. சாணார்களும் இல்லை. ஊரில் புதிதாக உண்டான சிறு சிறு பணக்காரர்களாக அவர்கள் இருந்தார்கள். வேலாயுதன் சாணார் திருமண விஷயமாக வந்த எல்லோரிடமும் கூறிய பதில் ஒன்றே ஒன்றுதான்:

"அதற்காக வைத்த நீரை வாங்கிக் கொட்டிடுங்க."

சாணார்களாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருக்க வேண்டும். பெண் பிள்ளைகளின் கணவன்மார்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் இவைதாம். அந்த விஷயத்தில் சிறிது கூட மாற்றம் உண்டாக்க வேலாயுதன் சாணார் தயாராக இல்லை.

கொச்சப்பன், முதலாளியாக ஆன பிறகு திடீரென்று ஒரு பாதிப்பு உண்டானது. போர்க்காலத்தில் தான் அப்படிப்பட்ட ஒரு பாதிப்பு உண்டானது. கயிறு மற்றும் கயிறு கொண்டு உண்டாக்கப்பட்ட சரக்கு ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உண்டானது. அப்போது கயிறுக்கும் தேங்காய் மட்டைக்கும் மதிப்பே இல்லாமற் போனது. பலரும் கயிறு வியாபாரத்திலிருந்து விலகிப் போனார்கள்.

அந்தச் சூழ்நிலையில், கொச்சப்பன் முதலாளி தைரியமாகத் தன் வியாபாரத்தைப் பிடித்துக் கொண்டு நகராமல் இருந்தார். விற்க வேண்டிய கயிறு எதையும் அவர் விற்கவில்லை. அவற்றைக் கெடுதல் வராமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார். குறைந்த விலைக்கு அதற்குப் பிறகும் தேங்காய் மட்டைகளை வாங்கினார். அவற்றிலிருந்து கயிறு உண்டாக்கி பத்திரப்படுத்தினார். அப்போது முதலாளிக்குப் பண விஷயத்தில் மிகுந்த தட்டுப்பாடு உண்டாகியும், கயிறு வியாபாரத்தில் இருந்து அவர் சிறிதும் பின்வாங்கவில்லை.

போர் முடிந்தது. கயிறுக்குத் திடீரென்று விலை கூடியது. கொச்சப்பன் முதலாளி தான் சேர்த்து வைத்திருந்த கயிறு முழுவதையும் ஆலப்புழைக்கும் கொச்சிக்கும் கொண்டு போய் விற்றார். மிகப்பெரிய அளவில் லாபம் கிடைத்தது. அதைக் தொடர்ந்து கொச்சப்பன் முதலாளி ஒரு பெரிய முதலாளியாக ஆனார்.

அந்த ஊரிலிருந்த சாயங்கால சந்தையில் கொச்சப்பன் முதலாளி கடை உண்டாக்கினார். மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யக்கூடிய ஒரு பலசரக்குக் கடையை ஆரம்பித்தார். ஒரு ஜவுளிக் கடையும் ஆரம்பித்தார். முதலாளிக்குச் சொந்தமாக ஆறு பெரிய கட்டு மரங்களும் மூன்று மாட்டு வண்டிகளும் இருந்தன. கட்டு மரங்களும் மாட்டு வண்டிகளும் எப்போதும் பயணித்துக் கொண்டேயிருந்தன. சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வதற்கும், அவற்றை ஏற்றிக் கொண்டு வருவதற்கும் அவை பயன்பட்டன.

கொச்சப்பன் முதலாளிக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். எல்லோருக்கும் மூத்தவன் ரவீந்திரன். வேலாயுதன் சாணாரின் மகன் பாலசந்திரனும் ரவீந்திரனும் ஒரே வயதைக் கொண்டவர்கள். இருவரும் திருவனந்தபுரத்தில் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்களும் கூட. ஆனால், தாங்கள் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், பக்கத்துப் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற நெருக்கம் அவர்கள் இருவரிடமும் இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போது பார்ப்பது மாதிரியே காட்டிக் கொள்வதில்லை.

ரவீந்திரன் படிப்பு விஷயத்தில் அந்த அளவிற்கு ஆர்வம் கொண்டவனாக இல்லை. அவனுடைய தந்தை தாராளமாகப் பணம் அனுப்பி வைப்பார். அந்தப் பணத்தை அவன் ஊதாரித்தனமாக செலவழித்தான். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுடன் சேர்ந்து நாடகங்களும் திரைப்படங்களும் பார்த்துக் கொண்டு, மற்றவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான் ரவீந்திரன்.

பாலசந்திரனை எடுத்துக் கொண்டால் அவன் மிகவும் சிக்கனமாக வாழ்ந்து கொண்டிருந்தான். படிப்பு விஷயத்தில் அவன் மிகுந்த அக்கறையுடன் இருந்தான். அது மட்டுமல்ல- பாலசந்திரனுக்குக் கொஞ்சம் அரசியல் தொடர்புகளும் இருந்தன. கம்யூனிஸ்ட்காரர்களின் தலைமையில் இருந்த மாணவர்கள் அமைப்பில் பாலசந்திரன் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தான். அந்தச் சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியைச் சோந்த மாணவர்களுக்குமிடையில் பெரிய அளவில் வாதங்களும், எதிர் வாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாணவர்களின் கருத்தரங்குகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவன் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கூச்சலிடுவார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் பேசும் போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர்கள் கூச்சலிடுவார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர்களிடையே மிகவும் நன்றாக சொற்பொழிவு ஆற்றக்கூடியவனாக பாலசந்திரன் இருந்தான். கல்லூரியிலேயே மிகவும் அருமையாகக் கூச்சல் போடக் கூடியவனாக இருந்தான் ரவீந்திரன். அவனுடைய கூச்சலிடும் ஆற்றல் முழு அளவில் வெளிப்படுவது பாலசந்திரன் பேசும்போதுதான். பாலசந்திரனின் சொற்பொழிவு ஆற்றலின் உச்சம் வெளிப்படுவது ரவீந்திரன் கூச்சலிடும்போது தான்.

ஒரு முறை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பாலசந்திரன் பேச ஆரம்பித்த போது, ரவீந்திரனும் அவனுடைய நண்பர்களும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். பாலசந்திரன் அதற்காக சிறிதும் கவலைப்படாமல் தன் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தான். புதிய கோட்பாடுகளைக் கவிதைகள் நிறைந்த மொழியில் பாலசந்திரன் வெளிப்படுத்திக் கொண்டிருந்த போது, மாணவர்கள் எல்லோரும் மிகவும் ஈடுபாட்டுடன்அதைக் கேட்க ஆரம்பித்தனர். இறுதியில் கூச்சல் போடுவதற்கு ரவீந்திரன் மட்டுமே இருந்தான். மாணவர்கள் கோபத்துடன் ரவீந்திரனைப் பார்த்துச் சொன்னார்கள்:


"வெளியே போடா ஆந்தையே!"

ரவீந்திரனின் கூவல் சத்தம் நின்றது. அவன் அரங்கை விட்டு வெளியேறினான்.

ரவீந்திரன் இரண்டு தடவை பி.ஏ. தேர்வு எழுதினான். இரண்டு முறைகளும் அவன் தோல்வியையே சந்தித்தான். அத்துடன் அவன் தன் படிப்பை நிறுத்திக் கொண்டான்.

கொச்சப்பன் முதலாளி தன் மகனுக்கு ஒரு வியாபாரத்தைக் கண்டுபிடித்தார். பேருந்து சர்வீஸ் நடத்துவது- இதுதான் அந்த வியாபாரம். இரண்டு பேருந்துகளை வாங்கினார். அருகிலிருந்த நகரத்தில் அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டது. அதுவரையில் பேருந்து சர்வீஸ் இல்லாமலிருந்த இடங்கள் வழியாக பேருந்துகள் செல்ல ஆரம்பித்தன. அதனால் பயணிகள் ஏராளமாக இருந்தனர். நல்ல லாபமும் கிடைத்தது.

பேருந்து சர்வீஸைத் தொடர்ந்து பெரிய அளவில் ஒரு மோட்டார் ஒர்க் ஷாப்பையும் ஆரம்பித்தார். கார்களும் பேருந்துகளும் லாரிகளும் விற்பனை செய்யக்கூடிய ஏஜென்ஸியும் எடுத்தார். தனக்கென்று ஒரு காரும் வாங்கினார். அது மட்டுமல்ல, பல திருமண ஆலோசனைகளும் வந்து கொண்டிருந்தன.

ரவீந்திரன் வீட்டிலிருந்து நகரத்திலிருந்த அலுவலகத்திற்குச் செல்வதும், திரும்பி வருவதும் காரில்தான். மாலேத்து வீட்டு வாசற்படியைத் தாண்டித்தான் அவன் போவதும் வருவதும். ரவீந்திரன் முயற்சியால் அந்த சாலை தார் போட்ட சாலையாக மாறியது.

சில நேரங்களில் சுசீலா வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பாள். ரவீந்திரன் காரில் உட்கார்ந்து கொண்டே, சுசீலாவைப் பார்த்துச் சிரிப்பான். சுசீலாவும் சிரிப்பாள். சில வேளைகளில் சுசீலா படியின் அருகில் நின்றிருப்பாள். ரவீந்திரன் காரை நிறுத்துவான்.

"அப்பா இருக்காரா?"

"இருக்காரு."

"பாலசந்திரன் இருக்கானா?"

"இல்ல..."

"நான் போயிட்டு வர்றேன்"

அவன் வேண்டும் என்றே பேசுவான்- சுசீலாவை எதையாவது பேச வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!

சுசீலாவைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாக ரவீந்திரன் கொச்சப்பன் முதலாளியிடம் சொன்னான். கொச்சப்பன் முதலாளி வெறுமனே 'உம்' கொட்டினார். அவ்வளவுதான். ஆனால், அதற்குப் பிறகு அவர் அதை யோசித்துப் பார்த்தார். சிந்தித்துப் பார்த்தபோது தான் அவருக்கே தோன்றியது- அந்தத் திருமணத்தைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று.

மாலேத்து சாணான்மார்கள் ஊரை ஆட்சி செய்தவர்கள். வேலாயுதன் சாணார் மார்பில் அம்மிக் குழவியை எறிந்தவர். அவருடைய மகளைத் தன் மகன் திருமணம் செய்து வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். பிறகு அவளை 'சொன்னபடி' நடக்கச் செய்ய வேண்டும். இதுதான் அவர் தீர்மானித்த விஷயம்.

சுசீலாவை ரவீந்திரன் திருமணம் செய்ய வேலாயுதன் சாணார் சம்மதிப்பாரா என்ற கேள்வியே கொச்சப்பன் முதலாளியின் மனதில் உதயமாகவில்லை. பெரிய தொழிலதிபரும் பணக்காரனுமான தன்னுடைய மகன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஊரிலுள்ள இளம்பெண்கள் பலரின் தந்தைமார்களும் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் கொச்சப்பன் முதலாளியின் மனதில் இருக்கும் எண்ணம். கிழவர் கண்டப்பன்தான் முதல் தடவையாக அந்தக் கேள்வியைக் கேட்டார்:

"அவங்க சாணான்மார்கள் ஆச்சே! அவங்க தங்களோட பொண்ணை நமக்குத் தருவாங்களா?" என்று கண்டப்பன் கேட்டபோது, உண்மையாகவே அதிர்ந்து போய்விட்டார் கொச்சப்பன் முதலாளி. கேட்டாலும், பெண் கிடைப்பாளா என்ற விஷயத்தில் சந்தேகம் உண்டானது. எனினும், கேட்டுத்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தார்.

பெண் கேட்பதற்கு யார் போவது?- அது ஒரு பிரச்சினையாக இருந்தது.

3

ரு நாள் சுசீலாவும் அவளுடைய தங்கை பத்மாவும் மாலேத்து இல்லத்தின் கிழக்குப் பக்க வாசலில் நின்றிருந்தார்கள். திடீரென்று வாசற்படிக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்றது. இரண்டு பேரும் படி இருந்த பக்கம் பார்த்தார்கள்.

ரவீந்திரன் காரை விட்டு இறங்கி, படிகளில் ஏறினான். வாசலுக்கு வரவில்லை. தயங்கியவாறு நின்றிருந்தான். சுசீலா கேட்டாள்:

"என்ன?"

ரவீந்திரன் வாசலுக்கு வந்தான். அவர்களுக்கு அருகில் வந்து கேட்டான்:

"அப்பா இருக்காரா?"

"இல்ல..."

"பாலசந்திரன் இருக்கானா?"

"இல்ல..." என்னவோ கேட்க நினைப்பதைப் போல் அவன் நின்றிருந்தான். ஆனால், எதுவும் கேட்கவில்லை. சுசீலா கேட்டாள்:

"அப்பாவிடமோ, அண்ணனிடமோ ஏதாவது சொல்லணுமா?"

"சொல்லணும்... நான் பிறகு வர்றேன்."

அவன் போகவில்லை. அதற்குப் பிறகும் என்னவோ கூற இருப்பதைப் போல நின்றிருந்தான். ஆனால், எதுவும் கூறவில்லை. சுசீலாவும் பத்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் அமைதியாக தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். பத்மா அங்கிருந்து நகர்ந்தாள். ரவீந்திரன் கேட்டான்:

"பெண் கேட்டு யாராவது வந்தாங்களா?"

"எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது."

"பெண் கேட்டு யாராவது வந்தாங்கன்னா, உன்னிடம் விஷயத்தைச் சொல்வாருல்ல?"

"அப்பா அதையெல்லாம் என்கிட்ட சொல்றது இல்ல. நான் கேக்குறதும் இல்ல."

"யாராவது உன்கிட்ட கல்யாண விஷயமா பேசியிருக்காங்களா சுசீலா?"

"என்கிட்ட ஏன் பேசப் போறாங்க? அந்த மாதிரி விஷயத்தை என் அப்பாக்கிட்டதானே பேசுவாங்க?-"

"நானும் உன் அப்பாக்கிட்ட பேசினால் போதுமா?"

"கல்யாண விஷயமா?"

"ஆமா..."

சுசீலா வீட்டிற்குள் ஓடினாள். ரவீந்திரன் அங்கிருந்து வெளியேறினான்.

மறுநாள் கொச்சப்பன் முதலாளியின் கணக்குப் பிள்ளையான சங்கரப்பிள்ளை திருமண விஷயமாகப் பேசுவதற்காக வேலாயுதன் சாணாரைப் பார்க்கச் சென்றார்.

சங்கரப் பிள்ளையும் சொத்துக்களைக் கொண்ட மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர்தான். சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, வாழ்வதற்கு வேறு வழியே இல்லாத நிலைக்கு அவர் ஆளாகிவிட்டார். அப்போதுதான் கொச்சப்பன் முதலாளியின் கணக்குப் பிள்ளையாக அவர் போய்ச் சேர்ந்தார்.

வேலாயுதன் சாணாரும் சங்கரப் பிள்ளையும் முன்பிருந்தே நெருக்கமான நட்பைக் கொண்டவர்கள். பார்க்கும் போதெல்லாம் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். சங்கரப் பிள்ளை கொஞ்சம் ஜோதிடம் கற்றிருந்தார். சாணாரும் சங்கரப்பிள்ளையும் சந்திக்கும் போது முக்கியமாகப் பேசும் விஷயமே ஜோதிடம்தான்.

ஆனால், சங்கரப் பிள்ளை கொச்சப்பன் முதலாளியிடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரராக ஆனது குறித்து வேலாயுதன் முதலாளிக்குக் கோபம் இருக்கவே செய்தது. சாணார் கேட்டார்:

"யானை மெலிஞ்சு போயிருச்சுன்னா, தொழுவத்துல கட்ட முடியுமா சங்கரப்பிள்ளை?"

"வயிறு நிறைய வேண்டாமா சாணார்? என்னால பிச்சை எடுக்க முடியுமா?"

எனினும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருந்தார்கள்.

"வெற்றிலை இருக்குதா சாணார்?"- இப்படிக் கேட்டவாறு வீட்டிற்குள் வந்தார் சங்கரப்பிள்ளை.

வெற்றிலைப் பெட்டியை முன்னால் நகர்த்தி வைத்துவிட்டு சாணார் சொன்னார்:

"இதுல ஒண்ணும் இல்ல சங்கரப்பிள்ளை. காய்ந்த வெற்றிலை மட்டும்தான் இருக்கு."

"அப்படின்னா, என்கிட்ட இருக்கு"- தன் மடியிலிருந்து வெற்றிலைப் பொட்டலத்தை எடுத்தவாறு சங்கரப்பிள்ளை அமர்ந்தார். பொட்டலத்தைப் பிரித்து சாணாரின் முன்னால் வைத்தார்.

"சங்கரப்பிள்ளை, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் மகன் பாலசந்திரன் பி.எல். படிப்புல தேர்ச்சி அடைஞ்சிட்டான்."


மிகுந்த சந்தோஷத்துடன் சங்கரப்பிள்ளை சொன்னார்: "தேர்ச்சியடைஞ்சாச்சா, அப்படின்னா,  நான் ஒரு விஷயம் சொல்றேன். அதைச் சொல்றதுக்குத்தான் நான் இங்கே வந்தேன். என்ன விஷயம் தெரியுமா? இனிமேல் சாணார் உங்களுக்கு எல்லாமே வெற்றிதான். இந்த வெற்றியை விட பெரிய வெற்றி நான் சொல்லப் போற விஷயம்... சாணார், இப்போ உங்களுக்கு வயது ஐம்பத்தாறா? ஐம்பத்தேழா?"

"ஐம்பத்தேழு."

"அப்போ என் கணக்கு தப்பாகல சாணார். ஐம்பத்தேழுன்னா, கேது தசை முடிஞ்சது. வியாழ தசை ஆரம்பமாயிடுச்சு. சாணார், இனிமேல் நீங்க தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி பெற்று ஏறுநடை போடப் போறீங்க."

"பாலசந்திரன் பி.எல். படிப்புல தேர்ச்சியடைஞ்ச செய்தியைக் கேட்டவுடன், நான் சொன்னேன் என்னோட கேது தசை முடிஞ்சிடுச்சுன்னு."

"எல்லா காரியங்களும் வெற்றிபெறும்னு வியாழ தசையைப் பற்றி சொல்லியிருக்காங்க. எதிரிகள் எல்லாரும் நண்பர்களா ஆவாங்க. கிடைக்காததெல்லாம் கிடைக்கும். அதுதான் வியாழனின் பலம்..."- ஒரு வெற்றிலையை எடுத்து நரம்பைக் கிள்ளிவிட்டு சுண்ணாம்பு தேய்த்தவாறு சங்கரப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"சூரியன் உதயமாகி மேலே வர்றதுக்கு முன்னாடியே நமக்கு வெளிச்சம் கிடைச்சிடுதுல்ல! அதே மாதிரி வியாழன் இங்கே வந்து நுழையிறதுக்கு முன்னாடியே வியாழனின் குணங்கள் தெரிய ஆரம்பிச்சிடுது. வியாழன் இங்கே வந்து நுழைஞ்சிட்டா... சாணார், உங்க ஆட்சிதான். எல்லாரும் உங்களின் கால்களில் வந்து விழுவாங்க."

"என் மகனுக்கு ஒருவேலை கிடைச்சாச்சுன்னா, இந்தக் குடும்பம் எப்படியும் தப்பிச்சிடும் சங்கரப்பிள்ளை. முன்சீப்போ, மேஜிஸ்ட்ரேட்டோ ஆனால் கூட போதும். பிறகு கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி வரை ஆகலாமே!"

"அப்படின்னா நான் ஒரு விஷயம் சொல்றேன். சாணார், உங்க மகனைவிட அதிர்ஷ்டம் இருக்குறது உங்க மகளுக்குத்தான்."

"சுசீலாவைப பற்றித்தானே சொல்றீங்க! அவள் எல்லா வசதிகளுடனும் வாழுவாள்னு அவளோட ஜாதகத்திலேயே இருக்கே!"

"யாராவது பெண் கேட்டு வந்தாங்களா சாணார்?"

"பெண் கேட்டு வந்தாங்களான்னா... எல்லாரும் தான் வர்றாங்க. ஆனால், பெண் கேட்டு வந்தவுடனே, பெண்ணைப் பிடித்துக் கொடுத்துவிட முடியுமா சங்கரப்பிள்ளை? அவளுக்கும் பொருத்தமானவனா இருக்க வேண்டாமா?"

"கேளுங்க சாணார். ஒண்ணு- பெரிய பணக்காரனா இருக்கணும். இல்லாவிட்டால் உத்தியோகத்துல இருக்கணும்."

"பாலசந்திரனுக்கு வேலை கிடைச்சாச்சுன்னா, அவளுக்கு ஒரு உத்தியோகத்துல இருக்குற ஒருத்தன் கிடைக்கிறது கஷ்டமான விஷயமாக இருக்காது சங்கரப்பிள்ளை."

"இப்போ உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு அப்படியொண்ணும் மதிப்பு இல்லை சாணார். அதெல்லாம் அந்தக் காலம். இப்போ பிசினஸ் பண்றவங்களுக்குத்தான் மதிப்பு. உத்தியோகத்துல இருப்பவர்களும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொழிலதிபர்கள் சொல்றபடிதானே நடக்குறாங்க! சாணார், உங்களுக்குத் தெரியுமா? நம்ம எம்.எல்.ஏ., கொச்சப்பன் முதலாளியின் சட்டைப் பைக்குள்ளேல்ல இப்போ கிடக்குறாரு!"

அதைக் கேட்டு சாணாரின் முகம் இருண்டு விட்டது. அதைப் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளாமலே சங்கரப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"தந்தையைவிட மகன் கெட்டிக்காரன். பேருந்து சர்வீஸ் தொடங்கியாச்சு. ஒர்க் ஷாப் ஆரம்பிச்சாச்சு. இப்போ ஓடு தயாரிக்கிற கம்பெனி ஆரம்பிக்கிறதா இருக்கு. அதோடு சேர்ந்து மர வியாபாரமும். பெரிய பெரிய உத்தியோகத்துல இருப்பவர்களெல்லாம் வந்து காத்து நிக்கிறாங்க... பார்த்துப் பேசுறதுக்கு."

சங்கரப்பிள்ளை மேலும் சற்று நெருக்கமாக உட்கார்ந்தார். தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு அவர் தொடர்ந்து சொன்னார்:

"சாணார், நான் உங்கக்கிட்ட ஒரு ரகசியத்தைச் சொல்றேன். ரவீந்திரனின் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இந்த விஷயம் தெரியாது."

"விஷயம் என்னன்னு தெளிவா சொல்லுங்க சங்கரப்பிள்ளை."

"ரவீந்திரனுக்கு ஏராளமான திருமண ஆலோசனைகள் வந்துக்கிட்டு இருக்குன்னு சாணார், உங்களுக்கு நல்லா தெரியும்ல?"

"அது எப்படி எனக்குத் தெரியும்? அவனோட கல்யாண விஷயத்தைப் பற்றி சொல்றதுக்கு இந்த இடம்தான் கிடைச்சதா?"

"சாணார், உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பெரிய உத்தியோகங்களில் இருப்பவர்களின் மகள்களையும் முதலாளிமார்களின் மகள்களையும் திருமணம் செய்வதற்கான ஆலோசனைகளுடன் ஆட்கள் வந்துக்கிட்டே இருக்காங்க."

"பிறகு ஏன் அவன் கல்யாணம் பண்ணாம இருக்கான் சங்கரப் பிள்ளை?"

"அதைத்தான் நான் சொல்லப் போறேன். என்ன விஷயமாக இருந்தாலும் அப்பாவும் பிள்ளையும் என்கிட்ட சொல்லிடுவாங்க. நான் சொல்றது மாதிரிதான் இப்போ காரியங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. தன்னைவிட வசதி படைத்த சொந்தம் உண்டாகுறது பொதுவாகவே ஆபத்தான விஷயம்னு நான் எப்பவும் சொல்வேன். அதனாலதான் பெரிய பெரிய உத்தியோகத்துல இருப்பவங்களோட பொண்ணுகளையும் முதலாளிமார்களின் பொண்ணுகளையும் திருமணம் செய்ய வேண்டாம்னு முடிவெடுத்தாச்சு."

"அப்படின்னா ஒரு ஏழைப் பொண்ணை அவன் கல்யாணம் பண்ணட்டும். தேங்காய் மட்டையை உரிச்சும், கயிறு பிரித்தும் வாழ்ற எவ்வளவு பெண்கள் நம்ம ஊர்ல இருக்காங்க!"

"பார்க்குறதுக்கு அழகா இருக்க வேண்டாமா சாணார்?"

"பார்க்குறதுக்கு நல்லா இருக்குற பெண்கள் தாராளமாக அவங்கள்ல இருக்காங்களே!"

"அப்படின்னா... நான் இப்போ சுற்றி வளைச்சு சொல்லாம விஷயத்தை நேரடியா சொல்லிடுறேன்."

"அதுதான் நல்லது."

"நான் யோசிக்கிறது ஒரு கலப்புத் திருமணம். அதாவது- உங்க மகளை கொச்சப்பன் முதலாளியின் மகன் திருமணம் செய்யணும். கொச்சப்பன் முதலாளியின் மகளை உங்க மகன் கல்யாணம் பண்ணிக்கணும்."

"அதற்காக வச்சிருக்கிற தண்ணியை வாங்கிக் கீழே கொட்டிடுங்க சங்கரப்பிள்ளை"- சாணார் எழுந்தார்.

"சாணார், கோபப்படாமல் உட்காருங்க. நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க."

சாணார் அமர்ந்தார். சங்கரப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"நான் சொல்றது முழுவதையும் கொஞ்சம் கேளுங்க சாணார். விருப்பமில்லைன்னா, நடத்த வேண்டாம். நான் சொல்ல வர்றது அதுதான்."

"அவன் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவனாச்சே சங்கரப்பிள்ளை! கொச்சப்பன் உங்க முதலாளி ஆச்சே! அவன் என்னோட எச்சிலைத் தின்னு வளர்ந்தவன்தானே? அவனுடைய தந்தை இங்கே வேலைக்காரனாக இருந்தவன்தானே? ஆனால், இப்போ... சங்கரப்பிள்ளை, சொன்னது நீங்கன்றதுனால நான் உங்களை மன்னிக்கிறேன்."-சாணார் மிகவும் சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கினார்.

"சாணார், உங்களுக்கு நல்லது நடக்கக்கூடிய ஒரு விஷயத்தைத் தான் நான் சொல்றேன். கொச்சப்பன் முதலாளி உங்க எச்சிலைத் தின்னிருக்கலாம். ஆனால், இப்போ அவர் முதலாளி. எம்.எல்.ஏ. அவரோட பைக்குள்ளே கிடக்குறாரு. பாலசந்திரனை நீதிபதியா ஆக்கணும்னு முதலாளி எம்.எல்.ஏ.க்கிட்ட சொன்னா போதும். ஒரே வாரத்துல பாலசந்திரன் நீதிபதியா ஆயிடுவான். சுசீலாவை ரவீந்திரன் கல்யாணம் பண்ணிட்டா, அவள் ராஜகுமாரியா ஆயிடுவா சாணார்- ராஜகுமாரியா!"

சாணார் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னார்:


"சங்கரப்பிள்ளை, நீங்க தரகர் வேலை பார்க்குற விஷயம் எனக்கே இப்போத்தான் தெரியுது. அவன் ஏதாவது தந்தான்னா, நீங்க வாங்கிக்கோங்க. ஆனால், இங்கே வந்து இப்படிப்பட்ட விஷயங்களைப் பேச வேண்டாம்."

"நான் தரகர் வேலை எதுவும் பார்க்கல சாணார். உங்கமேல பிரியம் இருக்குற ஒரே காரணத்தால் நான் இதைச் சொன்னேன்."

"இப்படிப்பட்ட பிரியம் எதுவும் இங்கே வேண்டாம் தெரியுதா? நான் கஷ்டத்துல இருக்குறவன்தான். ஆனால், மரியாதையை இழந்து அரிசி வாங்க நான் தயாராக இல்ல சங்கரப்பிள்ளை. போங்க... சங்கரப்பிள்ளை... போங்க."

சங்கரப்பிள்ளை எழுந்து கொண்டே சொன்னார்:

"பழைய பெருமைகள் இப்போ பயன்படாது சாணார்."

"அப்படின்னா ஒரு காரியம் செய்யுங்க சங்கரப்பிள்ளை. உங்களுக்கு மூணு, நாலு பெண் பிள்ளைகள் இருக்காங்கள்ல! பார்க்குறதுக்கு அவங்க அழகாகவும் இருக்காங்கள்ல! அவங்கள்ல ஒரு பொண்ணைப் பிடிச்சு அவனுக்குக் கொடுத்திடுங்க."

சங்கரப்பிள்ளை திரும்பி நடந்தார்.

4

வேலாயுதன் சாணாரின் சகோதரிதான் மாதவி சாணாட்டி. அவளின் கணவர் வாசுப்பணிக்கன். அவர்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். எல்லோருக்கும் இளையவனாக ஒரு மகனும் இருந்தான்.

மூத்த மகள் இந்திரா, சுசீலாவைப் போல அழகானவள் இல்லையென்றாலும், பார்ப்பதற்குப் பரவாயில்லை என்று கூறும் விதத்தில் இருப்பாள். அவள் எட்டாம் வகுப்புவரை படித்திருந்தாள்.

வேலாயுதன் சாணாரின் வீட்டை விட்டு வெளியே வந்த சங்கரப்பிள்ளை நேராகச் சென்றது மாதவிச் சாணாட்டியின் வீட்டிற்குத்தான். அவர்களின் பொருளாதார ரீதியான சிரமங்களை நன்கு தெரிந்திருப்பவர் சங்கரப்பிள்ளை. வேலாயுதன் சாணாரின் மகள் கிடைக்கவில்லையென்றால் அவருடைய சகோதரியின் மகள் கிடைப்பாளா என்று பார்க்க வேண்டும். அதுதான் சங்கரப்பிள்ளையின் நோக்கமாக இருந்தது.

மாதவிச் சாணாட்டிக்கு மாலேத்து குடும்பத்திலிருந்து பங்கு கிடைத்தது. அவளின் கணவரான வாசுப்பணிக்கனுக்கும் சிறிது சொத்து இருந்தது. வாசுப்பணிக்கன் ஒரு சுகவாசி. அதனால் தனக்கென்று இருந்த சொத்தையும் தன் மனைவியின் பெயரில் இருந்த சொத்தையும் இழந்துவிட்டார். அன்றாடச் செலவிற்கே அவர் மிகவும் கஷ்டப்பட ஆரம்பித்தார். மூத்த பெண் பிள்ளைகள் இருவரும் திருமண வயதை அடைந்துவிட்டார்கள். பெண் பிள்ளைகளுக்கு கணவர்களைத் தேடித்தர அவர்களின் தந்தையும் தாயும் எப்போதும் முயற்சித்த வண்ணம் இருந்தனர்.

இப்படி இருக்கும் போதுதான், சிறிதும் எதிர்பாராமல் சங்கரப்பிள்ளை அந்த வீட்டைத் தேடி வந்தார். சங்கரப்பிள்ளை சாதாரணமாக அங்கு செல்லக்கூடியவர் இல்லை. அதனால், சங்கரப்பிள்ளை அங்கு வந்தது அந்த வீட்டில் இருந்தவர்களின் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. மாதவி சாணாட்டி கவலை கலந்த குரலில் சொன்னாள்:

"எங்க எல்லோரையும் மறந்துட்டீங்க... அப்படித்தானே?"

"மறக்க முடியுமா சாணாட்டி? மாலேத்து சாணான்மார்கள் என்று சொன்னால், அவங்க ஊர்ல ராஜாக்களா இருந்தவங்களாச்சே!"

"அதெல்லாம் பழைய கதை. இப்போ பழைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தால்..."

அதைக் கேட்கும்போது சங்கரப்பிள்ளைக்கு ஆறுதலாக இருந்தது. வந்த விஷயத்தில் பாதி வெற்றி கிடைத்ததைப் போல இருந்தது. சங்கரப்பிள்ளை சொன்னார்:

"இருந்தாலும், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் எப்பவும் அவர்களின் குடும்ப குணத்தைக் காட்டுவார்கள்."

"உட்காருங்க"- சாணாட்டி புல்லாலான பாயை விரித்துப் போட்டாள்.

வாசுப்பணிக்கன் உள்ளேயிருந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார்.

"சங்கரப்பிள்ளை, உட்காருங்க."

சங்கரப்பிள்ளை அமர்ந்தார். வாசுப்பணிக்கனும் உட்கார்ந்தார். வாசுப்பணிக்கன் சொன்னார்:

"சங்கரப்பிள்ளை, ஒரு விஷய்ததைக் கேக்குறீங்களா? அந்தக் காலத்துல இவளோட வீட்டைச் சேர்ந்தவங்கதான் ஊரையே ஆண்டாங்க. என் வீட்டைச் சேர்ந்தவர்களும் மோசம் என்று கூற முடியாத அளவுக்கு இருந்தாங்க. ஆனால், பெரியவர்கள் யானைமேல ஏறி உட்கார்ந்தா, பேரர்களின் இருக்கையில் தழும்பு உண்டாகுமா?"

"அப்படிச் சொல்லுங்க வாசுப்பணிக்கர். காலம் மாறும் போது, நாமளும் மாறணும். அதுதான் தேவை."

"சங்கரப்பிள்ளை, இப்போ உங்களுக்கு நல்ல நேரமாச்சே! கொச்சப்பன் முதலாளி நீங்க சொல்றபடி கேப்பாருன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க"- மாதவி சாணாட்டி தந்திரத்தனமாக ஒரு வாக்கியத்தை எறிந்தாள். சங்கரப்பிள்ளையை உற்சாகம் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காகச் சொன்னது அது.

ஆனால், அதில் சிறது உண்மையும் இருக்கவே செய்தது. சங்கரப்பிள்ளை கொச்சப்பன் முதலாளியின் கணக்குப் பிள்ளை மட்டுமல்ல- அவருக்கு ஆலோசனைகள் கூறக் கூடியவரும்கூட. வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், வீட்டு விஷயங்களிலும் சங்கரப்பிள்ளை முதலாளிக்கு ஆலோசனைகள் கூறுவார். அப்படி கூறப்படும் ஆலோசனைகளில் பலவற்றை முதலாளி ஏற்றுக் கொள்ளவும் செய்வார். அதனால்தான் முதலாளியின் சம்மதத்தைக் கேட்காமலேயே, மாதவி சாணாட்டியின் வீட்டிற்குச் சென்று திருமண விஷயமாகப் பேசுவதற்கு சங்கரப்பிள்ளை தயாரானார்.

மாதவி சாணாட்டி கூறிய வார்த்தைகளுக்கு மேலும் பலம் சேர்ப்பதற்காக வாசுப்பணிக்கர் சொன்னார்:

"சங்கரப்பிள்ளை, உங்க ஆலோசனைகளைக் கேட்டதால்தானே கொச்சப்பன் முதலாளி இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறார்?"

"வாசுப்பணிக்கரே, ஒரு விஷயத்தைக் கேளுங்க. கொச்சப்பன் முதலாளி ரொம்பவும் நல்லவர். கஷ்டப்படுறவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறவர். தந்தையைப் போலவேதான் ரவீந்திரனும்."

"அது அப்படித்தான் இருக்கும்! தந்தையோட மகனாச்சே!"

சாணாட்டி இடையில் புகுந்து சொன்னாள்:

"அவங்க கஷ்டத்தை அனுபவிச்சவங்க. அதனால்தான் அவங்களுக்கு கஷ்டப்படுறவங்கமேல கருணை இருக்கு."

"ரவீந்திரன் விஷயத்தைக் கேளுங்க சாணாட்டி.. கல்யாணம் ஆன பிறகு நகரத்தில் இருக்க வைக்கணும் என்பதுதான் அவரோட முடிவு. நிலம் வாங்கி, வீடும் கட்டியாச்சு. புதிய மாதிரியில் இருக்கக் கூடிய ஒரு பெரிய வீட்டைக் கட்டி முடிச்சாச்சு. திருமண ஆலோசனைகளும் வர ஆரம்பிச்சிடுச்சு."

"அது வராம இருக்குமா, சங்கரப்பிள்ளை? பணக்காரன், இளைஞன், படிப்பு உள்ளவன்... ரவீந்திரனுக்கு யார் பெண் தராம இருப்பாங்க?"

"ஆனால், ரவீந்திரன் என்ன சொல்றார் தெரியுமா? பணக்காரர்களின் பொண்ணுகளோ, உத்தியோகத்துல இருப்பவர்களின் பொண்ணுகளோ தனக்கு வேண்டாவே வேண்டாம்னு சொல்றாரு அவர். பார்க்குறதுக்கு அழகாக இருக்கணும். நல்ல குணத்தைக் கொண்ட பொண்ணா இருக்கணும்- இதுதான் ரவீந்திரன் சொல்றது..."

மாதவி சாணாட்டி ஆர்வத்துடன் கேட்டாள்:

"அப்படின்னா, திருமண விஷயம் முடிஞ்சிடுச்சா?"

"முடிவாகல. ரவீந்திரனுக்குப் பொருத்தமான பொண்ணைப் பார்க்குற பொறுப்பை என்கிட்டதான் ஒப்படைச்சிருக்காங்க. அழகு இருக்கணும். நல்ல குடும்பத்துல பிறந்த பெண்ணாக இருக்கணும் என்பது கொச்சப்பன் முதலாளியின் கறாரான எண்ணம். அதனால்தான் நான் இங்கே வர முடிவெடுத்தேன்."

"சங்கரப்பிள்ளைக்கு தேநீர் கொடுக்க வேண்டாமா மாதவி?"- வாசுப்பணிக்கன் கேட்டார்.

"நான் போயி தேநீர் போட்டு எடுத்துட்டு வர்றேன்"- சாணாட்டி போக முற்பட்டாள்.

"வேண்டாம்... வேண்டாம்.. நான் தேநீர் குடிச்சிட்டுத்தான் வந்தேன். நான் சீக்கிரமா அங்கே போகணும். உங்க ரெண்டு பேரையும் பார்த்து இந்த விஷயத்தைச் சொல்ணும்ன்றதுக்காகத்தான் நான் இங்கே வந்தேன்."


"நாங்க..."-சாணாட்டி தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூறவில்லை. வாசுப்பணிக்கர் கண்களைச் சிமிட்டினார்.

"உங்க மகளோட பேர் இந்திராதானே?"- சங்கரப்பிள்ளை கேட்டார்.

"அவள் பெயர் இந்திராதான். எங்களோட மூத்த மகளைத்தான் இளைய மகளைவிட நல்லா வளர்த்தோம்."

கதவிற்குப் பின்னால் ஒரு இருமல் சத்தம்! இந்திராவின் முகம் கதவுக்குப் பின்னாலிருந்து தோன்றியது.

"அம்மா, தேநீர் போடவா?"

"இங்கே கொஞ்சம் வாம்மா... நான் கொஞ்சம் பார்த்துக்குறேன்"- சங்கரப்பிள்ளை பாசத்துடன் அழைத்தார்.

இந்திரா வெட்கப்பட்டுக் கொண்டே வெளியே வந்தாள். சாணாட்டி சொன்னாள்:

"இவள் கொஞ்சம் களைப்பா இருக்கா. இவளுக்கு காய்ச்சல் வந்ததுதான் காரணம்."

"அழகா இருக்கா. கொடுத்து வச்சவ. என்ன நட்சத்திரம்."

"மகம்."

"மகத்தில் பிறந்த பெண் ராஜகுமாரியா ஆவாள்... ராஜகுமாரியா!"

"இவளோட ஜாதகத்திலும் அப்படித்தான் இருக்கு."

"வயது?"

"கடந்து போன மகரத்தில் பதினெட்டு முடிஞ்சிடுச்சு."

"அப்படின்னா இப்போ திருமணத்தை நடத்தணுமே!"

வாசுப் பணிக்கன் சொன்னார்: "மகளே, நீ கொஞ்சம் உள்ளே போ. நாங்க இங்கே ஒரு ரகசிய விஷயத்தைப் பேசப் போறோம்."

இந்திரா தலையை குனிந்து கொண்டே உள்ளே சென்றாள். சாணாட்டி அவளை அழைத்துச் சொன்னாள்: "இப்போ தேநீர் வேண்டாம் மகளே."

"திருமண ஆலோசனைகளுடன் பலரும் வந்தாங்க. சங்கரப்பிள்ளை. அரசாங்க உத்தியோகத்துல இருக்குறவங்க. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவங்க. ஆனால், தூர இடத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாங்க. தூர இடங்களுக்கு அனுப்ப எங்களுக்குப் பிரியமில்லை. மூத்த மகளாச்சே! நாங்க ரெண்டு பேரும் இவளை தினமும் பார்த்தாகணும். இங்கே பக்கத்துல எங்காவதுதான் இவள் இருக்கணும் என்பதில் நாங்கள் குறியா இருக்கோம்."

"அப்படின்னா இப்போ எல்லா விஷயத்தையும் திறந்து நான் சொல்லுறேன். ரவீந்திரனுக்கு உங்க மகளைக் கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு விருப்பம் இருக்கான்னு தெரிஞ்சிக்கிறதுக்காகத்தான் நான் வந்ததே"- சங்கரப்பிள்ளை மிடுக்கான குரலில் சொன்னார்.

"எங்களுக்குச் சம்மதம்தான். பிறகு..."-சாணாட்டி தான் கூற வந்ததை முழுமையாகக் கூறவில்லை.

"உங்களுக்குச் சம்மதம் என்கிற போது பிறகு என்ன? வேற யாரு சம்மதிக்கணும்,"

"இவளுக்கு ஒரு மாமா இருக்காரே!"

சங்கரப்பிள்ளை குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டே சொன்னார்:

"வேலாயுதன் சாணாரைச் சொல்றீங்களா? அவர் சம்மதிப்பாருன்னா நீங்க நினைக்கிறீங்க? அவருக்கும் ஒரு மகள் இருக்காளே! நிலைமை அப்படி இருக்குறப்போ இந்த விஷயத்திற்கு அவர் சம்மதிப்பாரா?"

"இவர் சொல்றது உண்மைதான் மாதவி. ஏன்னா, தன் மகள் உலகத்திலேயே பேரழகின்னு மச்சான் நினைச்சிக்கிட்டு இருக்காரு. அப்படி இருக்குறப்போ அங்கே போகாமல், இங்கே திருமண விஷயமாக வந்தால் மச்சானுக்குப் பிடிக்குமா? மச்சான் அதற்குச் சம்மதிக்கத்தான் செய்வாரா?"

"வேலாயுதன் சாணாரிடம் இந்த விஷயத்தைப் பற்றிக் கலந்து ஆலோசித்தால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவர் கல்யாணத்தை நிறுத்திடுவாரு."-சங்கரப்பிள்ளை உறுதியான குரலில் கூறினார்.

"அப்படின்னா கேட்காமல் இருப்பதுதான் நல்லது"- சாணாட்டியும் ஒப்புக் கொண்டாள்.

கொச்சப்பன் முதலாளி மிகவும் பிடிவாதமாக இருந்தார். வேலாயுதன் சாணார் கூறியதைவிட சற்று அதிகமாகவே சங்கரப்பிள்ளை கொச்சப்பன் முதலாளியிடம் கூறினார். தான் ஒரு பெரிய பணக்காரன் என்ற மதிப்பிற்குக் குறைவு உண்டாகி விட்டதைப் போல் அவர் உணர்ந்தார். அவர் கர்ஜித்தார்.

"அவன் சாணார்களின் மதிப்பு, மரியாதையைப் பற்றி பேசினானா? இப்ப எங்க ஜாதிக்காரங்கக்கிட்ட வீட்டைப் பெருக்குற வேலையையும், பாத்திரம் கழுவுற வேலையையும் பார்த்துக் கொண்டு இருக்குறவங்கதான் சாணார்கள். அவனும் அவனோட மதிப்பு, மரியாதையும்! ஃபு...!"- முதலாளி காறித் துப்பினார்.

"அவரோட தங்கச்சிக்கிட்ட அந்த மாதிரியான கர்வம் கொஞ்சம் கூட இல்ல. அவருடைய மகளைவிட அவரோட தங்கச்சி மகள் ரொம்பவும் அழகா இருக்கா. ஒழுக்கமும் கொண்ட நல்ல ஒரு பொண்ணா அவ இருக்கா."

"சங்கரப்பிள்ளை, அப்படின்னா இந்த விஷயத்தை நான் கொஞ்சம் சிந்திச்சுப் பார்க்கணும். என் மகனுக்கு அந்த சாணாட்டியோட பொண்ணு கிடைப்பாளான்னு பார்க்கலாமே!"

"அதைப்பற்றி பெருசா ஆலோசனை செய்யணும்னு அவசியமில்லை முதலாளி. போய் சொன்னா, உடனடியா அவங்க சம்மதிப்பாங்க."

"அப்படின்னா அதையே முடிச்சிடுவோம் சங்கரப்பிள்ளை."

அந்த வகையில் அந்தத் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ரவீந்திரனும் அதற்கு ஒப்புக் கொண்டான். சொல்லப் போனால் கொச்சப்பன் முதலாளியை விட ரவீந்திரன்  மிகவும் பிடிவாதமாகக் கூறிவிட்டான். சுசீலா சாணாட்டி கிடைக்கவில்லையென்றால் இந்திரா சாணாட்டி.

திருமணம் முடிந்து, இந்திராவின் கையைப் பிடித்துக் கொண்டு மாளிகை உச்சியிலிருந்து மாலேத்து வீட்டை சாளரத்தின் வழியாகப் பார்க்க வேண்டும். சுசீலா சாணாட்டியும் அவளுடைய தந்தையும் அதைப் பார்க்க வேண்டும். மனதிற்குள் அப்படியொரு பிடிவாதமான எண்ணத்தை வைத்திருந்தான் ரவீந்திரன்.

திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்க போகிறது. கொச்சப்பன் முதலாளியின் மகன் ரவீந்திரனின் திருமண அப்படி விமரிசையாகத்தானே நடைபெற வேண்டும்! அமைச்சர் பெருமக்களை அழைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டும். நகரத்திலிருக்கும் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களையும், முக்கிய நபர்களையும் வரவழைக்க வேண்டும். அவர்கள் எல்லோரையும் வரவேற்று உபசரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மணப்பெண்ணின் வீட்டில்தான் திருமணம் நடைபெற வேண்டும்! இல்லாவிட்டால் சமுதாயத்தைச் சேர்ந்த குரு மண்டபத்தில் நடக்க வேண்டும். மணப்பெண்ணின் வீட்டில் அந்த அளவிற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை. அதனால் குரு மண்டபத்திலேயே திருமணத்தை நடத்துவது என்று முடிவெடுத்தார்கள்.

பெரிய அளவில் பணச் செலவு ஆகும். மணப்பெண்ணின் வீட்டைச் சேர்ந்தவர்களிடம் பணம் இல்லை. அதனால் திருமணச் செலவு முழுவதையும் மணமகனின் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் செய்கிறார்கள். ஆனால், அந்த விஷயம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கொச்சப்பன் முதலாளி திருமணச் செலவிற்கான பணத்தை சங்கரப்பிள்ளையின் கையில் கொடுத்தனுப்பினார். சங்கரப் பிள்ளை அதை வாசுப்பணிக்கனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். வாசுப்பணிக்கன் தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவழிப்பதைப் போல நினைத்து திருமணச் செலவுகளைப் பார்த்துக் கொண்டார்.

ஆனால், ரகசியம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. பணமே இல்லாத ஒரு மனிதர் தன்னுடைய மகளின் கல்யாணத்திற்காக சிறிதும் கூசாமல் பணத்தைச் செலவு செய்வதைப் பார்த்து பலரும் அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படித்தாஅந்த ரகசியம் பகிரங்கமாக வெளியே வந்தது. தேநீர்க்கடைகளில் அதைப் பற்றிப் பேசப்பட்டது. ஒரு ஆள் சொன்னான்:

"கல்யாணத்துக்கு மந்திமார்களெல்லாம் வர்றாங்களாம்."

"கொச்சப்பன் முதலாளி, முதலாளி ஆச்சே! பணக்காரர் ஆச்சே! நிலைமை அப்படி இருக்குறப்போ, அமைச்சர்கள் வராமல் இருப்பாங்களா?"

"மந்திரிகள் வர்றது கொச்சப்பன் முதலாளி பணக்காரரா இருக்கிறார் என்பதற்காக அல்ல. நம்மோட எம்.எல்.ஏ. சொல்லித் தான் மந்திரிகள் வர்றாங்க."


"எம்.எல்.ஏ. கொச்சப்பன் முதலாளியின் சட்டைப் பைக்குள்ள இல்ல கிடக்குறாரு!"

"எம்.எல்.ஏ. முதலாளியின் சட்டைப் பைக்குள்ளே கிடப்பதற்கு என்ன காரணம்? பணம் இருக்குறதுனாலதானே?"

"கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் பலமா இருக்கே! வாசுப்பணிக்கன் பணத்தை வாரி எறிஞ்சிக்கிட்டு இருக்காரு. அவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்தது?"

"தெரியாதா? அதுவும் கொச்சப்பன் முதலாளியோட பணம்தான்."

"கல்யாணத்திற்கான செலவைச் செய்ய வேண்டியது பொண்ணோட வீட்டைச் சேர்ந்தவர்கள்தானே?"

"பொண்ணு சாணாட்டி ஆச்சே! சாணாட்டியைத் திருமணம் செய்யணும்னா பணம் செலவழிச்சுத்தான் ஆகணும்."

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு வயதான மனிதர் சொன்னார்:

"மாலேத்து எச்சிலைத் தின்னு வளர்ந்தவர் கொச்சப்பன் இப்போ மாலேத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே இருக்காங்க? கொச்சப்பன் எங்கு இருக்கிறார்? மாளிகை மேல் ஏறிய மன்னனின் தோளில் மாராப்பைப் போடுறது. கடவுள்தான் என்பதைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?"

"அதுல கடவுள் கடவுள்னு சொல்றதுதான் பணம்."

வெளியே அதைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்த மாதவன் சொன்னான்:

"பணத்தின் மதிப்பு முன்பு இருந்திருக்கலாம். இனிமேல் அது செல்லுபடி ஆகாது."

5

"அவள்... அவள் என் தங்கச்சி இல்ல. அவளை என் தாய் பெறல. யாரோ ஒரு வடுகச்சோவனுக்குப் பிறந்த மகள் அவ"- வேலாயுதன் சாணார் உரத்த குரலில் கத்தினார். மாலேத்து இல்லத்தின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சத்தம் போட்டார் அவர்.

சுசீலா பதைபதைத்துப் போய் ஓடிவந்து சொன்னாள்:

"அப்பா, கொஞ்சம் பேசாம இருங்க. யார் காதுலயாவது விழுந்தால் நமக்குத்தான் கவுரவக் குறைச்சல்."

"இதைவிட கவுரவக் குறைவு வர்றதுக்கு இருக்காடி? அவளோட மகனை வடுகச்சோவன் கையில இல்ல பிடிச்சுக் கொடுக்கப் போற?"

"பிடிச்சுக் கொடுக்கட்டும் அப்பா. அதனால நமக்கு என்ன குறைச்சல் உண்டாகிடப் போகுது?"- பத்மாவும் சாணாரைத் தேற்ற முற்பட்டாள்.

"அவளும் தன்னை மாலேத்து சாணாட்டின்னுதானடி சொல்லிக்கிட்டு இருக்கா? அப்படின்னா அவளோட மகள் வடுகச்சோவன் கூட போனால், எனக்குக் குறைச்சல் இல்லையாடி?"

"அதற்காக இப்போ இங்கே இருந்து கொண்டு உரத்த குரல்ல சத்தம் போட்டால், குறைச்சல் இல்லாமப் போயிடுமா?"- சுசீலா கேட்டாள்.

அதற்குப் பிறகு வேலாயுதன் சாணார் சத்தம் போடவில்லை. அவர் வாசலுக்கு சென்று மனநிம்மதி இல்லாமல் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார். கொச்சப்பன் முதலாளியின் மாளிகை மேலிருந்து யாரோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்புச் சத்தமும் கேட்டது. சுசீலாவும் பத்மாவும் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள்.

நகரத்திற்குச் சென்றிருந்த பாலசந்திரன் சாயங்காலம் திரும்பி வந்தான். வேலாயுதன் சாணார் கேட்டார்:

"அந்தக் கல்யாணத்தை நிறுத்த ஏதாவது சட்டம் இருக்காடா பாலா?"

"ஒரு சட்டமும் இல்ல அப்பா. கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு, மாப்பிள்ளைக்கும் அவர்களின் தாய், தந்தைக்கும் சம்மதம்ன்னா, வேறு யாரும் அதைத் தடுப்பதற்கான சட்டம் இல்ல..."

"அப்படின்னா அது நடந்தே தீரும். அப்படித்தானே?"

"ம்... அவங்க அதை நடத்திடுவாங்க."

"நான் போயி அவளையும் அவளோட மகளையும் கொன்னுட்டா?"

"அதற்குப் பிறகு நீங்க என்ன செய்வீங்க அப்பா?"

"நானும் செத்துப் போவேன்."

"எதுக்கு அப்பா கொல்லணும், சாகணும்?"

"ஆளுங்க குறைச்சலா பேசுறதைக் கேட்டுக் கொண்டு எப்படி வாழ முடியும்?"

"என்ன குறைச்சல்?"

மாலேத்து குடும்பத்தைச் சேர்ந்த சாணாட்டியை கொச்சப்பனின் மகனுக்குக் கல்யாணம் பண்ணித் தர்றது கவுரவக் குறைச்சலான விஷயமில்லையா?"

"அப்படி கவுரவம், மதிப்போட இருந்தது எல்லாம் அந்தக் காலத்துல அப்பா. இப்போ அதெல்லாம் ஒண்ணுமில்ல. சாணாருன்னு சொல்றதுதான் குறைச்சல்."

"நீயும் அவங்ககூட சேர்ந்துக்கிட்ட அப்படித்தானே?"

"நான் யார் பக்கமும் சேரல அப்பா. சாணாரோட கவுரவம், மதிப்புன்னு இறுகக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு இருக்குறது நமக்கு நல்லது இல்லைன்னு நான் சொல்றேன்."

வேலாயுதன் சாணார் நீண்ட பெருமூச்சை விட்டார்.

இரண்டு நாட்கள் கடந்தன. சுசீலாவும் பத்மாவும் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் மாலேத்து இல்லத்தில் சமையல் வேலை செய்யும் பாரு கிழவி வாசற்படியைக் கடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் கேட்டாள்:

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கல்யாணத்துக்கு மந்திரிமார்கள் வர்றாங்களாம்."

"அதற்கு நாங்க என்ன செய்றது?"- சுசீலாவின் முகம் இருண்டது. பத்மாவின் முகமும்தான்.

"மந்திரிமார்கள் எல்லாரும் இங்கே வந்திருக்க வேண்டியவங்களாச்சேன்னு நான் கேட்டேன்"- கிழவி பாருவின் கேள்வியின் கவலை கலந்திருந்தது.

"மந்திரிகள் இங்கே ஏன் வரணும்?"- சுசீலாவிற்கு கோபம் வந்தது.

"கொச்சப்பன் முதலாளியின் மகனோட கல்யாணம் இங்கே நடந்திருந்தா, மந்திரிமார்கள் இங்கேதானே வந்திருப்பாங்க?"

"அந்த ஆளாட கல்யாணம் இங்கேயே நடக்கும்? அவரைக் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு என்ன இங்கேயா இருக்கா?"

"இங்கே இருக்குற பொண்ணைக் கொடுக்கும்படி கேட்டாங்களே!"

"இங்கேயிருந்து போங்க பாரு அம்மா."

"என் மேல கோபப்பட வேண்டாம். நான் போறேன்... பிறகு இன்னொரு விஷயம்... அது என்னன்னா... எதையும் அனுபவிக்கிறதுக்கு அதிர்ஷ்டம் என்ற ஒண்ணு வேணும். அதிர்ஷ

டம்!" கிழவி பாரு திரும்பி நடந்தாள்.

அக்காவும் தங்கையும் முகத்தைக் குனிந்து கொண்டு மவுனமாக நின்றிருந்தார்கள். வழியில் படிகள் இருந்த பக்கம் ஒரு இருமல்  சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

மாதவிச் சாணாட்டியின் மகள் இந்திராவும், அவளின் தங்கைகளும் அந்த வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மாலேத்து வீட்டின் படிகளுக்கு அருகில் வந்தபோது அவர்கள் வாசலில் நின்றிருந்த சுசீலாவையும் பத்மாவையும் பார்த்தார்கள். இந்திரா மெல்ல இருமினாள். அவள் அணிந்திருந்த புதிய புடவையையும் ப்ளவுஸையும் நகைகளையும் அவர்களிடம் காட்ட வேண்டுமல்லவா?

"அது என்னடி கோலம், பத்மா?"- அடங்காத வெறுப்புடன் சுசீலா கேட்டாள்.

பத்மா காறித்துப்பினாள். சுசீலாவும் காறித்துப்பினாள்.

இந்திராவும் அவளின் தங்கைகளும் தங்களுக்குள் என்னவோ மெதுவான குரலில் கூறிக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சுசீலாவும் பத்மாவும் காறித் துப்பினார்கள்.

குரு மண்டபத்தில், மிகப் பெரிய திருமணப் பந்தல் தயாரானது. நகரத்திலிருந்து திறமைவாய்ந்த விற்பன்னர்கள் வந்து திருமணப் பந்தலை அலங்கரித்தார்கள். வருபவர்கள் அமர்வதற்காக லாரியில் நாற்காலிகள் கொண்டு வரப்பட்டன.

எம்.எல்.ஏ.தான் எல்லா விஷயங்களையும் முன்னின்று நடத்தினார். எம்.எல்.ஏ.வுடன் எப்போதும் பத்து பன்னிரண்டு தொண்டர்கள் இருந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் கதர் ஜிப்பா அணிந்திருந்தார்கள். திருமணத்திற்கு அமைச்சர்களை அழைக்கச் சென்றதுதான் எம்.எல்.ஏ.வின் முக்கியமான பேச்சு விஷயமாக இருந்தது.


"எல்லா அமைச்சர்களும் என்னைப் பார்த்து பயப்படுறாங்க ஏன் தெரியுமா? நான் பிரச்சினைகளை உண்டாக்குவேன். அதனால் நான் என்ன சொன்னாலும், உடனே அவங்க அதை நிறைவேற்றிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க. நான் முதலமைச்சரின் அறைக்குள் நுழைஞ்ச உடனே அவர் சிரித்துக் கொண்டே 'என்ன விஷயத்தைக் கையில எடுத்துட்டு வந்திருக்கே?'ன்னு கேட்டார். நான், 'கொச்சப்பன் முதலாளியின் மகனுடைய திருமணத்திற்கு அழைக்க வந்திருக்கேன்'னு சொன்னேன். அப்போ ஒரு பிரச்சினை. அன்னைக்கு முதலமைச்சர் டில்லியில இருப்பாரு. டில்லியில் ஒரு கருத்தரங்கு. நேரு உட்பட முக்கியமானவர்கள் பலரும் பங்கு கொள்கிற கருத்தரங்கு. போக வேண்டாம்னு சொல்ல முடியுமா? மக்களின் விஷயமாச்சே! ஒரு திருமண வாழ்த்து அனுப்பி வைக்கிறதா முதலமைச்சர் என்கிட்ட சொன்னார்."

"போலீஸ் மந்திரி வர்றாரா?"- தொண்டர்களில் ஒருவன் கேட்டான்...

"நான் போய் சொன்ன உடனே மந்திரி ஒரு மாதிரி ஆயிட்டார். அன்னைக்கு அவருக்குத் திருவனந்தபுரத்தில் நான்கு நிகழ்ச்சிகள் இருக்கு. எந்த நிகழ்ச்சியையும் விட முடியாத நிலை. நான் சொன்னதை ஒதுக்கிவிட முடியுமா? ஒதுக்கினால் அமைச்சரவையில் இருக்க முடியுமா? கொஞ்ச நேரம் பேசாமல் அமைதியா இருந்துட்டு இறுதியில் மந்திரி 'வர்றேன்'னு சொல்லிவிட்டாரு. திருமணம் முடிஞ்ச உடனே திரும்பிப் போவதாகவும் சொன்னாரு."

"மற்ற எல்லா அமைச்சர்களும் வருவாங்களா?"- வேறொரு தொண்டன் கேட்டான். அமைச்சர்கள் மீது எம்.எல்.ஏ.விற்கு இருக்கும் செல்வாக்கைத் தெரிந்து கொள்ள வேண்டியது தொண்டர்களின் தேவை ஆயிற்றே.

"தொழில் அமைச்சரும் கல்வி அமைச்சரும் வர்றாங்க. அவங்களை நான் போய் சந்திக்கல. தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொன்னேன். 'வர்றோம்'னு சொல்லிட்டாங்க. கட்டாயம் வருவாங்க. அதற்குப் பின்னால் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரும் சாதாரண ஆளுங்கதானே! அவங்களை நான் அழைக்கவே இல்ல..."

"ஒரு மத்திய அமைச்சரையும் வரவழைக்க முடியுமா?"

"நான் டில்லிவரை போனால், ஒன்றல்ல, நான்கு மத்திய அமைச்சர்களைக் கூட இங்கே கொண்டு வந்திடுவேன். நான் போய் கூப்பிட்டா நேரு கூட வருவாரு. நேருவிற்குத் தெரியும்- காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு நான் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்கேன்னு. நான் போய்ச் சொன்னா, நேரு 'வர்றேன்'னு கட்டாயம் சொல்லுவாரு. வேறு எந்த நிகழ்ச்சி இருந்தாலும் அதை மாற்றி வெச்சிடுவாரு. ஆனால், இப்போ என்னால இங்கிருந்து போக முடியுமா? எப்படி இருந்தாலும் இனி நடக்க இருக்குற கல்யாணத்திற்கு கொச்சப்பன் முதலாளியோட மகளின் திருமணத்திற்கு நேருவைக் கட்டாயம் வரவழைப்பேன்."

"போலீஸ் அமைச்சர் வர்றப்போ ஒரு முக்கியமான விண்ணப்பம் கொடுக்கணும். இங்கே ஒரு போலீஸ் ஸ்டேஷன் வேணும்னு"-ஒரு தொண்டன் கூறினான்.

"நிறுத்து! நிறுத்து! அது இப்போ வேண்டாம். போலீஸ் அமைச்சரை நம்மோட வாசக சாலை ஆண்டு விழாவிற்கு வரவழைக்கிறேன். அப்போ இந்த ஊர்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்க வேண்டிய தேவையைப் பற்றி ஒரு மனு கொடுப்போம். ஊரில் கம்யூனிஸ்ட்காரர்களின் ஆதிக்கம் பலம் பெற்று வருவதால் மாநிலத்தின் பொதுவான பாதுகாப்பை மனதில் வைத்து, உடனடியா போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வரணும்னு மனுவில் சுட்டிக் காட்டுவோம்."

"கம்யூனிஸ்ட்காரர்கள் தினந்தோறும் ரகசியமாகக் கூட்டம் போடுறாங்க. அமைச்சர்கள் வர்றப்போ ஏதாவது குழப்பங்கள் உண்டாகுமோ என்னவோ?"

"அமைச்சர்கள் வர்றதுக்கு முன்னாடியே போலீஸ்காரர்கள் இங்கே வந்திடுவாங்க. குழப்பங்கள் உண்டாக்க வருபவர்களின் எலும்புகள் நொறுங்கும். நான் இன்னைக்கே டி.எஸ்.பி.யைப் பார்த்து விஷயத்தைச் சொல்லிடுறேன். எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி சொல்லிடுறேன்."

அந்த வகையில் எம்.எல்.ஏ.வின் பேச்சு நீண்டு கொண்டே சென்றது. அந்த ஊரிலிருக்கும் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல- நகரத்திலிருந்து வந்திருந்த காங்கிரஸ்காரர்களும் திருமணக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் பங்கு கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், அது ஒரு காங்கிரஸ் திருமணமாக ஆனது.

கணக்குப்பிள்ளை சங்கரப்பிள்ளை ஊர் முழுக்க நடந்து பிரச்சாரம் செய்தார்.

"அமைச்சர்கள் வர்றாங்க. எம்.எல்.ஏ.க்கள் வர்றாங்க. பெரிய முதலாளிகள் எல்லோரும் வர்றாங்க. பிறகு... காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் வர்றாங்க. கொச்சப்பன் முதலாளி காங்கிரஸ்காரராச்சே! அப்போ அவங்கள்லாம் வராம இருப்பாங்களா?"

நாராயணன் நாயரின் தேநீர்க் கடைக்கு முன்னால் நின்று கொண்டு நடத்திய பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் தேநீர்க் கடையிலிருந்து வெளியேறி வந்து கேட்டான்:

"கொச்சப்பன் முதலாளி பணக்காரரா இருக்கிறதுனாலதானே எல்லாரும் வர்றாங்க?"

"பிறகு என்ன? பணம்தான் முக்கியம். பணம் இல்லாதவனை யாரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டாங்க. ஒரு விஷயத்தைக் கேக்குறியா? இது ரகசியமான விஷயம். நம்ம எம்.எல்.ஏ.வுக்குத் தெரியக்கூடாது. ஒரு வருடம் ஆன பிறகு தேர்தல் வரும். நம்ம சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யாருன்னு தெரியுமா?"

"யாரு?"

"கெ.ரவீந்திரன். இந்த விஷயத்தை ரகசியமா வச்சிருக்காங்க. ரவீந்திரன் எம்.எல்.ஏ. ஆயிட்டா, உடனடியா அமைச்சரா வந்திடுவாரு. அமைச்சரா ஆன உடனே..."

"இந்த ஊர்ல சில ஏழைகளும் இருக்காங்கன்றதை நினைச்சுப் பார்க்கணும்!"

இடையில் ஒரு குரல் வந்தது.

"ஓட்டுப் பிடிக்கிற வேலை ஆரம்பமாயிருச்சாடா?"- வேறொரு ஆள்.

"தேர்தல்ல நின்னா, கட்டிய பணம் கிடைக்காது. ஞாபகத்துல வச்சுக்கோங்க"- வேறொரு ஆள்.

"காங்கிரஸ் அமைச்சர் வர்றப்போ கூச்சல் போடணும்டா... கூச்சல்!"- இன்னொரு ஆள்.

சங்கரப்பிள்ளை அங்கிருந்து வேகமாக நடந்தார்.

6

பொன்னெழுத்துக்களில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் ஊரிலிருந்த சிலருக்கு கிடைத்தது- பெரிய மனிதர்களுக்கு மட்டும். பெரும்பாலும் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்களுக்கும், முதலாளிகளுக்கும்தான் அனுப்பப்பட்டன.

திருமணத்திற்கு முந்தின நாள் பொழுது விடிந்தபோது ஊர் முழுவதும் ஒரு நோட்டீஸ் பரவலாகக் கொடுக்கப்பட்டது. சிவந்த மையில் அச்சடிக்கப்பட்ட ஒரு நோட்டீஸ்! காலையில் வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களின் கையில் அந்த நோட்டீஸ் இருந்தது. தேநீர்க் கடைகளிலும் வெற்றிலை பாக்கு கடைகளிலும் அந்த நோட்டீஸ் வாசிக்கப்பட்டு பலரும் அதைக் கேட்டார்கள். வயலில் வேலை செய்பவர்களும், கயிறு பிரிப்பவர்களும், தேங்காய் மட்டை உரிப்பவர்களும், ஏரியில் படகு ஓட்டுபவர்களும் நோட்டீஸைப் பற்றிப்பேசினார்கள்.

‘அமைச்சர்களே! திரும்பிச் செல்லுங்கள்!’ - இதுதான் நோட்டீஸில் இருந்த தலைப்பு. கயிறு பிரிக்கும் தொழிலாளர்களின் சங்கமும் விவசாயத் தொழிலாளிகளின் சங்கமும் இணைந்து நடத்தும் மிகப் பெரிய எதிர்ப்புக் கூட்டத்தைப் பற்றிய நோட்டீஸ் அது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் காலில் போட்டு மிதித்து, சிறையில் போட்டு அடைக்கும் அமைச்சர்கள், முதலாளியின் திருமணத்தில் கலந்துகொள்ள வருவது குறித்து ஊர்க்காரர்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம். கூட்டத்திற்குத் தோழர் மாதவன் தலைமை தாங்க, தோழர்கள் ஜோசப், சுரேந்திரன், கோபிநாத் பிள்ளை ஆகியோர் பேசுகிறார்கள்.


தோழர் மாதவன்தான் அந்த ஊரின் தொழிலாளர்களின் தலைவர். அவர் ஆலப்புழையிலும் கொல்லத்திலும் நடைபெற்ற பல தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த தலைவர். போலீஸிடம் அடி, உதைகள் வாங்கி சிறைத் தண்டனையை அனுபவித்திருப்பவரும்கூட கூட்டத்தில் பேச இருப்பவர்கள் தோழர் மாதவனின் சக செயல்வீரர்கள். கயிறு பிரிக்கும் தொழிலாளர்கள் சங்கத்தையும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தையும் உருவாக்கியவர்களே அவர்கள்தான்.

சில நாட்களுக்கு முன்னால் அங்கு கயிறு பிரிக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடந்தன. அவர்களுடன் சேர்ந்து விவசாயத் தொழிலாளர்களும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆர்ப்பாட்டமும், கோஷங்கள் அடங்கிய ஊர்வலமும் நடந்தன. சம்பவம் நடைபெற்ற இடத்திற்குப் போலீஸ் வந்தது. லத்தி சார்ஜ் நடைபெற்றது. நிறைய பேருக்கு அடி விழுந்தது. சிலரைப் பிடித்துக் கொண்டுபோய் லாக்-அப்பில் அடைத்தார்கள். வேலை நிறுத்தம் தற்காலிகமான உடன்பாட்டின் அடிப்படையில் முடிவுக்கு வரவும் செய்தது.

வேலை நிறுத்தம் நடைபெறாமல் செய்வதற்கு அதற்கு முன்பே போலீஸை வரவழைத்தது ரவீந்திரன்தான். எம்.எல்.ஏ. நடுநிலையில் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும் யாருக்கும் தெரியாமல் அவர் உதவவே செய்தார். அந்த விஷயம் அனைத்தும் ஊர்க்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள் அல்லாதவர்களுக்கும் போலீஸின் அடி, உதை கிடைத்தன. ஆண்களுக்கு மட்டுமல்ல- பெண்களுக்கும் அடி விழுந்தது. அடியால் உண்டான வலி குறையவில்லை. அதைப் பற்றிய நினைவுகள் இல்லாமற் போய்விடவில்லை. எதிர்ப்பைத் தெரிவிக்கும் கூட்டம் பற்றி நோட்டீஸை வாசித்த எல்லோரும் ஆவேசம் கொண்டார்கள்.

‘‘அமைச்சர்களே! திரும்பிச் செல்லுங்கள்’’ - பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்த மாணவர்கள் முழங்கினார்கள்.

தேங்காய் மட்டையை நசுக்கிக் கொண்டிருந்த நளினி பார்கவியிடம் சொன்னார்:

‘‘பார்கவி அக்கா, மந்திரிமார்கள் வர்றப்போ செண்டை அடித்து கூப்பாடு போடணும்.’’

‘‘போலீஸ்காரர்கள் வந்து குழுமி நிற்பாங்களாம். அதற்குப் பிறகுதான் மந்திரிமார்களே வருவாங்களாம். கோஷம் போட்டாலும், கூச்சல் போட்டாலும் போலீஸ்காரர்கள் அடிப்பாங்களாம்.’’

‘‘அடிக்கட்டும் பார்கவி அக்கா, அடிக்கட்டும். எல்லாரையும் அடிச்சுக் கொல்லட்டும். பிறகு அவர்கள் மட்டுமே வாழ்ந்து கொள்ளட்டும்.’’

‘‘உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி நளினி?’’

‘‘என்ன?’’

‘‘வேலாயுதன் சாணாரின் மகன் இருக்காரே, பாலசந்திரன் கல்லூரிக்குப் போய் படிச்சு வக்கீல் தேர்வுல வெற்றி பெற்று வந்திருக்காரு. அந்த ஆளு இப்போ நம்ம பக்கமாக்கும்.’’

‘‘அப்படின்னா? பார்கவி அக்கா, உங்களை அந்த ஆளுக்குப் பிடிக்குமா?’’

அதைக் கேட்டு பார்கவிக்கு வெட்கம் வந்துவிட்டது.

‘‘சும்மா இருடி நளினி. நான் சொன்னதற்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?’’

‘‘என்ன?’’

‘‘அவர் தோழராக்கும்.’’

‘‘அப்படியா?’’

‘‘பிறகென்ன? கல்லூரியிலிருந்து வெளியே வந்தப்போ தோழராத்தான் வந்திருக்காரு.’’

‘‘இன்னைக்கு நடக்குற எதிர்ப்புக் கூட்டத்தில் அவர் பேசுகிறாரா?’’

‘‘பேசுவார்னு நினைக்கிறேன்.’’

‘‘நோட்டீஸ்ல பெயர் இல்லையே!’’

‘‘நோட்டீஸ்ல பெயர் இல்லைன்னாலும் தோழர் பாலசந்திரன் பேசுவார்னு சுரேந்திரன் அண்ணன் சொன்னாரு.’’

‘‘அப்படின்னா, அது நல்லதுதான் பார்கவி அக்கா. மாதவி சாணாட்டியோட மகளின் திருமணத்திற்குத்தானே மந்திரிமார்கள் வர்றாங்க! அப்படின்னா, வேலாயுதன் சாணாட்டியின் மகன் நம்ம கூட்டத்தில் வந்து பேசுறது நல்ல விஷயம்தான். ஆனால், வேலாயுதன் சாணார் அதற்கு சம்மதிப்பாரா பார்கவி அக்கா?’’

‘‘அதுல ஒரு விஷயம் இருக்குடி நளினி. என்னன்னு தெரியுமா?’’

‘‘என்ன?’’

‘‘மாதவி சாணாட்டியோட மகளை கொச்சப்பன் முதலாளியின் மகன் கல்யாணம் பண்ணுறதை வேலாயுதன் சாணார் விரும்பல.’’

‘‘ஏன் அதுல விருப்பம் இல்ல?’’

‘‘சாணாரா இல்லைன்றதுதான் விஷயம்! சாணாட்டியைக் கல்யாணம் பண்ணுறது சாணாராகவோ, பணிக்கனாகவோ இருக்கணும்னு வேலாயுதன் சாணார் நினைக்கிறாரு.’’

‘‘சாணார்கள் வாயைப் பார்த்து நடக்குறாங்களே!’’

‘‘வாயைப் பார்த்துக்கிட்டு இருந்தாலும், சாணாரா இருக்கணும்னு அவர் சொல்றாரு.’’

‘‘பிறகு ஏன் மாதவிச் சாணாட்டியோட மகளைக் கொச்சப்பன் முதலாளியோட மகனுக்குக் கொடுக்கிறாங்க?’’

‘‘அவங்களுக்கு அந்த விஷயம் முக்கியம் இல்ல. பணம் இருந்தா போதும். அதுனால இப்போ அண்ணனும் தங்கையும் பாம்பும் கீறியும்போல ஆயிட்டாங்க.’’

‘‘அப்படி ஆயிடுச்சா விஷயம்?’’

நாராயணன் நாயரின் தேநீர்க் கடையில் அமைச்சர்கள் வருவதைப் பற்றியும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடக்கப் போகும் கூட்டத்தைப் பற்றியும் நீளமான விவாதங்கள் நடந்தன. ஒரு கயிறு பிரிக்கும் தொழிலாளியான பப்பன் சொன்னான்:

‘‘இரண்டு கட்சிகளா பிரிஞ்சு நின்னாச்சு. கயிறு முதலாளிமார்கள் எல்லாரும் ஒரு கட்சி. தொழிலாளிகள் எல்லாரும் ஒரு கட்சி.’’

‘‘இந்த விஷயத்துல அப்படி பிரிஞ்சிருக்குறதா சொல்ல முடியாது பப்பா. கயிறு முதலாளிமார்களில் சிலர் நம்ம பக்கம் இருக்காங்க’’ - தொழிலாளர்களின் தலைவர்களில் ஒருவனான ஜோசப்தான் இப்படிச் சொன்னான்.

பப்பன் அதை நம்பவில்லை. அவன் சொன்னான்:

‘‘தோழர், நீங்க இப்படிச் சொல்றதை என்னால் நம்ப முடியல. முதலாளி, தொழிலாளர்கள் இருக்கும் பக்கம் இருப்பாங்களா?’’

‘‘இருப்பாங்க பப்பா. சில நேரங்களில் அப்படியும் நடக்கும்.’’

‘‘அப்படின்னா?’’

‘‘அப்படின்னா - ஒரு முதலாளி தொழிலாளிகளைத் தின்று தின்று கொழுத்த பிறகு மீதி இருக்கும் முதலாளிகளைத் தின்ன ஆரம்பிப்பாங்க. அப்போ, அவங்க எல்லாரும் முதலாளியின் எதிரியா மாறிடுவாங்க.’’

‘‘அது உண்மைதான்’’ - கொச்சப்பன் சொன்னான்.

ஜோசப் கூறியது உண்மைதான். கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும்தான் அந்த ஊரிலேயே மிகப் பெரிய முதலாளிகளாக இருந்தார்கள். கோவிந்தன் முதலாளி கயிறு முதலாளியாக இருந்தார். சாக்கோ முதலாளி கொப்பரை முதலாளியாக இருந்தார்.

கொச்சப்பன் முதலாளியின் படுவேகமான, ஆச்சரியப்பட வைக்கும் வளர்ச்சி கோவிந்தன் முதலாளியையும் சாக்கோ முதலாளியையும் சோர்வடையச் செய்தது. விற்பதற்குத் தேங்காய் வைத்திருந்தவர்களைக் கொச்சப்பன் தன் கையில் போட்டுக் கொண்டார். முன்கூட்டியே பணத்தைக் கொடுத்து அவர்களைத் தன் பக்கம் அவர் இழுத்து விடுவார். அப்படித்தான் கொச்சப்பன் முதலாளி எல்லோரையும் கவர்ந்தார். அதே நேரத்தில் முன்கூட்டியே பணம் கொடுப்பதும் அவர்களைத் தன் பக்கம் இழுத்ததும் கொச்சப்பன் முதலாளிக்கு எப்போதும் லாபம் அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்தது. கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் மட்டையையும் தேங்காய்களையும் பத்து ரூபாய்க்கு வாங்கினால் கொச்சப்பன் முதலாளி எட்டு ரூபாய்க்கே வாங்கிவிடுவார்.

கொச்சப்பன் முதலாளி தரும் கூலி மற்ற முதலாளிகள் தரும் கூலியைவிடக் குறைவாக இருந்தது. இருந்தாலும், தொழிலாளர்களுக்கு கொச்சப்பன் முதலாளியிடம் வேலை பார்க்கும் தொழிலாளியாக இருப்பதில்தான் விருப்பம். முதலாளியின் பலசரக்குக் கடையில் இருந்தும், துணிக்கடையில் இருந்தும் தொழிலாளர்களுக்குக் கடன் கொடுப்பார்கள். அவசரத்திற்கு ஓடிச் சென்றால், நான்கோ, ஐந்தோ ரூபாய்கள் கடனாகக் கொடுப்பார்கள். கடன் கொடுக்கும் பணத்தை இரண்டு மடங்காக முதலாளி, தொழிலாளிகளிடமிருந்து வாங்குவாரென்றாலும், கடன் கிடைப்பது என்பது ஒரு முக்கியமான விஷயம் ஆயிற்றே!


ஊர்க்காரர்கள் எல்லோரும் இப்படிக் கூறுவார்கள்.

‘‘கொச்சப்பன் முதலாளிக்குத் தண்ணி அடிக்கிற பழக்கமும், பொம்பளை விஷயமும் இல்ல. என்ன பணிவு! என்ன அன்பு!’’

அந்த வகையில் அவர் ஊரிலேயே மிகப் பெரியபணக்காரராக ஆனார். பொதுமக்கள் ஏற்றுக் கொண்ட மனிதராக ஆனார். கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் வீழ்ச்சியைச் சந்தித்தார்கள்.

தோழர் மாதவன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தொழிலாளர்களை ஒன்று திரட்டி, வேலை நிறுத்தம் செய்தபோதுதான் கொச்சப்பன் முதலாளியின் எச்சரிக்கை நடவடிக்கைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. வேலை நிறுத்தம் செய்தபோது, தொழிலாளர்கள் போட்ட கோஷங்களில் இதுவும் ஒன்று.

‘கொச்சப்பன் முதலாளி

திருட்டு வியாபாரி.

நிறுத்திக்கோ நிறுத்திக்கோ

சுரண்டலை நிறுத்திக்கோ!’

கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் வேலை நிறுத்தம் செய்தவர்களுக்கு ரகசியமாக உதவினார்கள். இறுதியில் உடன்பாடு பற்றிய ஆலோசனை ஆரம்பித்தபோது, உடன்பாடு உண்டாகாமல் இருக்க அவர்கள் சில தந்திரங்களைக் கையாண்டார்கள். எனினும், எம்.எல்.ஏ. தலையிட்டு உடன்பாடு உண்டாகிவிட்டது.

கொச்சப்பன் முதலாளியின் வளர்ச்சியைவிட படுவேகமான வளர்ச்சியாக இருந்தது ரவீந்திரனின் வளர்ச்சி. அவன் பேருந்து சர்வீஸ் ஆரம்பித்தான். ஒர்க்ஷாப் தொடங்கினான். ஓடு கம்பெனி ஆரம்பித்தான். தொடர்ந்து வேறு என்னவெல்லாமோ ஆரம்பிக்கப் போகிறான். அடுத்து வரப்போகும் தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போகிறான் என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். இப்படியே மேலே போய்க் கொண்டிருந்தால் எங்கு போய் நிற்பான்? கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் மட்டுமல்ல - ஊரில் இருக்கும் பலரும் இந்த கேள்வியைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

ரவீந்திரனின் திருமணத்திற்கு அமைச்சர்கள் வர இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும், பிரச்சினை பெரிதாகிவிட்டது. இந்திராவும் அவளுடைய தங்கைகளும் தினமும் கோவிலுக்குப் போக ஆரம்பித்தார்கள். விலை அதிகமுள்ள புடவைகளும் ப்ளவ்ஸ்களும் அணிந்து, நகைகளை மாட்டிக் கொண்டுதான் அவர்கள் கோவிலுக்குச் செல்வார்கள். மாலேத்து வாசற்படியைத் தாண்டிச் செல்லும்போது, அவர்களிடம் ஒரு கேலிச் சிரிப்பு வெளிப்படும்.

ஒருநாள் சாயங்காலம் ரவீந்திரனின் கார் மாதவி சாணாட்டியின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. காரில் ரவீந்திரன் இல்லை. இந்திராவும் அவளுடைய தங்கைகளும் நன்கு ஆடைகள் உடுத்தி காரில் போய் உட்கார்ந்தார்கள். அப்போது அந்த வழியே வந்த ஒரு வயதான கிழவி கேட்டாள்:

‘‘நீங்க எங்கே போறீங்க?’’

‘‘நாங்க நகரத்திற்குத் திரைப்படம் பார்க்கப் போகிறோம்.’’

இந்திரா மிடுக்கான குரலில் பதில் சொன்னாள்.

‘‘இது யாரோட காரு?’’

‘‘முதலாளியின் வீட்டுல இருந்து வந்திருக்கு.’’

‘‘ரவீந்திரன் அய்யாவுக்கு சொந்தமானதுதானே?’’

‘‘ஆமா.’’

‘‘கல்யாணம் ஆயிடுச்சா?’’

‘‘நாளைக்கு மறுநாள்தான் கல்யாணம்.’’

‘‘அப்படியா?’’ -கிழவி அர்த்தம் நிறைந்த ஒரு சிரிப்பை வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மாலேத்து இல்லத்தின் வாசற்படியில் வேலாயுதன் சாணார் நின்றிருந்தார். வேறு இரண்டு பேர்களிடம் இந்திராவின் திருமண விஷயத்தைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இந்திராவும் அவளுடைய தங்கைகளும் உட்கார்ந்திருந்த கார் அந்தப் பக்கமாக வந்தது. அருகில் வந்ததும், காரின் வேகம் குறைந்தது. ஹாரன் முழங்கியது. இந்திரா தன் தலையை வெளியே நீட்டி மிடுக்காகப் பார்த்தான்.

‘‘பார்த்துட்டேன்டி... பார்த்துட்டேன்... போ... போ...’’ - சாணார் சொன்னார். அந்த வார்த்தைகளில் வெறுப்பும் கோபமும் நிறைந்திருந்தன.

ரவீந்திரனின் காரில் இந்திராவும் அவளுடைய தங்கைகளும் திரைப்படம் பார்க்கச் சென்றது ஊர் முழுக்கப் பரவியது. பலரும் பலவாறாகப் பேசினார்கள். தேங்காய் மட்டையை அடித்து உரித்துக் கொண்டிருந்த பார்கவி நளினியிடம் சொன்னாள்:

‘‘கல்யாணம் ஆகலைன்னாலும், ஆகிவிட்டதைப் போலவே அவங்க நடவடிக்கைகள் இருக்கு.’’

‘‘அப்பா, அம்மா, பிள்ளைகள் எல்லாருமே ரவீந்திரனை மயக்கிட்டாங்க.’’

‘‘பணம் இருக்கே பார்கவி அக்கா! பணம்தானே பெரிசு! மந்திரிகள் எதற்காகக் கல்யாணத்துக்கு வர்றாங்க? பணம் இருக்குறதுனாலதானே?’’

‘‘உண்மைதான். ஆனால், பணம் இருக்குன்றதுக்காக எப்படி வேணும்னாலும் நடக்கலாம்னு நினைச்சால், அது தப்பான விஷயம்.’’

‘‘பணம் இருந்தா தப்புகூட சரியா ஆயிடும் பார்கவி அக்கா.’’

‘‘அதுவும் உண்மைதான்.’’

7

திருமணம் நடைபெறுவதற்கு இரண்டுநாட்களுக்கு முன்னால் இரவு நேரத்தில் கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் சேர்ந்து வேலாயுதன் சாணாரைப் பார்க்கச் சென்றார்கள். சாக்கோ முதலாளி கேட்டார்:

‘‘இப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருந்தா எப்படி சாணார்?’’

‘‘பிறகு நான் என்ன செய்யறது? ஓடணுமா?’’

‘‘யாரோட கல்யாணம்?’’

‘‘சாணார், அது உங்களுக்குத் தெரியாதா? உங்கக்கிட்ட அதைப் பற்றி கேட்கலையா?’’

‘‘நீ என்னடா சொல்ற கோவிந்தா? சொல்றதைத் தெளிவாச் சொல்லு.’’

‘‘நாளைக்கு உங்க மருமகளோட கல்யாணமாச்சேன்னு கேட்டேன்.’’

‘‘என் மருமகளோட கல்யாணமா? உனக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்காடா கோவிந்தா?’’

‘‘சாணார், உங்க தங்கச்சிதானே மாதவிச் சாணாட்டி?’’ - சாக்கோ முதலாளி கேட்டார்.

‘‘அவள் என் தங்கச்சின்னு யார் சொன்னது?’’

‘‘யாரும் சொல்லணுமா? எங்களுக்குத்தான் நல்லா தெரியுமே!’’

‘‘அப்படின்னா உங்களுக்கு மூளை குழம்பிப் போச்சுன்னு அர்த்தம். அவள் என் தங்கச்சி இல்ல.’’

‘‘அப்படின்னா வேண்டாம். நாளைக்கு குரு மண்டபத்தில் ஒரு கல்யாணம் நடக்குறது உங்களுக்குத் தெரியுமா?’’

‘‘யாரோ சொன்னது காதுல விழுந்தது.’’

‘‘கல்யாணம் பண்ணுறது கொச்சப்பன் முதலாளியின் மகன் ரவீந்திரன்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா சாணார்?’’

‘‘அதுவும் யாரோ சொல்லிக் காதுல விழுந்தது.’’

‘‘கல்யாணத்துல கலந்துக்க மந்திரிமார்களும் எம்.எல்.ஏ.க்களும் வர்றாங்கன்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா சாணார்?’’ - கோவிந்தன் முதலாளி கேட்டார்.

‘‘அவன்க வருவாங்கன்னு சின்னப் பசங்க வழியில பேசிக்கிட்டு போறதை நானும் கேட்டேன்.’’

‘‘கல்யாணத்திற்கு உங்களை அழைக்கலையா சாணார்?’’

‘‘என்னை ஏன் அழைக்கிறாங்க? நான் என்ன மந்திரியா? எம்.எல்.ஏ.வா?’’

‘‘இருந்தாலும் உங்களை அழைச்சிருக்கணுமே சாணார்?’’

‘‘எதுக்கு? நான் அவங்களுக்குச் சொந்தமா என்ன?’’

‘‘இருந்தாலும் மாலேத்து வேலாயுதன் சாணாரை அழைக்காமல் இந்த ஊர்ல ஒரு கல்யாணம்...’’

‘‘கொஞ்சம் சும்மா இருடா கோவிந்தா. அந்தக் கல்யாணத்துக்கு என்னை அழைக்க ஒருவனோ ஒருத்தியோ இந்த வீட்டு வாசற்படியில் கால் வைக்க முடியாது தெரியுதா? சொத்து, பணம் எல்லாம் போயிட்டாலும், மாலேத்து சாணார் இப்பவும் மாலேத்து சாணார்தான்!’’

‘‘மந்திரிமார்கள் வந்தவுடன், மாலேத்து வேலாயுதன் சாணார் எங்கேன்னு கேட்க மாட்டாங்களா?’’

‘‘கேட்கட்டும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? மந்திரிமார்களும் எம்.எல்.ஏ.க்களும் எனக்குப் புல் மாதிரி.’’

‘‘சாணார், நீங்களும் கம்யூனிஸ்ட்காரரா ஆயிட்டீங்களா?’’- சாக்கோ முதலாளி கேட்டார்.

‘‘நான் கம்யூனிஸ்ட்காரனும் இல்ல... ஒண்ணும் இல்ல. ஆனால், கம்யூனிஸ்ட்காரங்க நல்லவங்க. சிந்திக்கத் தெரிஞ்சவங்க.’’

‘‘நாளைக்கு மந்திரிமார்கள் வர்றப்போ, கம்யூனிஸ்ட்காரங்க கறுப்புக் கொடியைக் கையில பிடிச்சிக்கிடடு பிரச்சினையை உண்டாக்குவாங்களே!’’


‘‘உண்டாக்கட்டும்... உண்டாக்கட்டும். கொச்சப்பனோட மகனின் கல்யாணத்துக்குத்தானே அவன்க வர்றாங்க. அவன்க சொல்லி அனுப்பி வச்ச போலீஸ்காரங்கதானே இங்கே வந்து ஆண்களையும் பெண்களையும் அடிச்சது! நிலைமை அப்படி இருக்குறப்போ, அவன்க வர்றப்போ பிரச்சினை உண்டாகாமல் இருக்குமா? கம்யூனிஸ்ட்காரர்கள் சிந்திக்கக் கூடியவங்க.’’

‘‘ஹியர்! ஹியர்!’’ - எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு நின்றிருந்த பாலசந்திரன் தன்னை மறந்து கூறினான்.

‘‘கம்யூனிஸ்ட்காரர்கள் சிந்திக்கத் தெரிஞ்சவங்க, சாணார் சிந்திக்க தெரிஞ்சவங்க’’ - சாக்கோ முதலாளி சொன்னார்.

‘‘மந்திரிமார்கள் வர்றப்போ, கறுப்புக் கொடி காட்ட வேண்டியது தான். கூச்சல் போட வேண்டியதுதான். ஏன்னா...’’

பொறுமையை இழந்த கோவிந்தன் முதலாளி இடையில் புகுந்து சொன்னார்:

‘‘மகனோட கல்யாணம்னு சொல்லி மந்திரிமார்களை அழைச்சிட்டு வர்றதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா சாணார்? மந்திரிமார்களைக் காட்டி நம்மளை எல்லாம் அவர் பயமுறுத்துறாரு. அவர் இந்த ஊருக்கு ராஜான்னு மந்திரிகளுக்குக் காட்டணும்னு நினைக்கிறாரு. நிலைமை அப்படி இருக்குறப்போ, அவரோட இந்த வேலைகள் எதுவும் இந்த ஊர்ல வேகாதுன்னு நாம காட்ட வேண்டாமா?’’

‘‘அதைத்தான் நானும் சொன்னேன். மற்றவர்களும் இந்த ஊர்ல வாழ வேண்டாமா? என்னன்னு நானும் கேட்கிறேன்’’- சாக்கோ முதலாளி சொன்னார்.

கோவிந்தன் முதலாளி ஆவேசத்துடன் சொன்னார்.

‘‘சாணார், கொஞ்சம் கேக்குறீங்களா? மாநில காங்கிரஸ் காலத்துல இருந்தே நான் காங்கிரஸ்காரனாக இருப்பவன். ஆனால், கொச்சப்பன் முதலாளி காங்கிரஸ்காரர்னா, நான் காங்கிரஸ்காரன் இல்ல.’’

‘‘அப்படிச் சொல்லு கோவிந்தா, என் தங்கச்சியும், மச்சினனும், கொச்சப்பனும் காங்கிரஸ்காரர்கள்னா, நான் காங்கிரஸ்காரன் இல்ல. நான் கம்யூனிஸ்ட்...’’

‘‘சாணார், இன்னொரு விஷயத்தை கேக்குறீங்களா? என் மகளோட கல்யாணம் கடந்த சிங்க மாதத்தில்தானே நடந்தது! அந்தக் கல்யாணத்துக்கு ஒரு மந்திரியை அழைச்சிட்டு வரணும்னு நான் எம்.எல்.ஏ.க்கிட்ட சொன்னேன். எம்.எல்.ஏ. என்ன சொன்னார் தெரியுமா? மந்திரிமார்களுக்கு கல்யாணத்துக்கு வர நேரம் இல்லைன்னு சொல்லிட்டார். கொச்சப்பன் முதலாளியின் மகனோட கல்யாணத்துக்கு வர்றதுக்கு மூணு மந்திரிமார்களுக்கு எப்படி நேரம் கிடைச்சது சாணார்?’’

வேலாயுதன் சாணார் தன்னுடைய கோபத்தை அடக்க முயற்சித்தும், அது அடங்காமல் வெளியே குதித்தது.

‘‘அவன்... அவன் என் எச்சிலைத் தின்னு வளர்ந்தவன். அவன் இப்போ லட்சாதிபதி! அவன் விரலைச் சுண்டினால் மந்திரிமார்கள் ஓடி வர்றாங்க. ஹூம்! அவனோட பணமும் செல்வாக்கும் கம்யூனிஸ்ட்காரங்ககிட்ட ஒண்ணுமே பண்ண முடியாது தெரியுதா? அவனுக்கு... அவனுக்கு ஒரு பாடம் கற்றுத் தரணும்டா கோவிந்தா’’ - சாணார் தன் கைகளைக் கோர்த்துப் பிசைந்தார்.

‘‘நாங்கள் கம்யூனிஸ்ட்காரங்க இல்ல சாணார். ஆனால், நாங்க இப்போ அவங்க பக்கம்தான் இருக்கோம். அவங்க நிதி கேட்டு வந்தப்போ நாங்கள் பணம் தந்தோம். அதற்காக நாங்கள் அவங்ககூட சேர்ந்து கறுப்புக் கொடி காட்ட முடியாது.’’

‘‘அவனும், அவனோட பணமும், அவனின் மந்திரிகளும்! ஹூம்!’’- சாணார் கர்ஜித்தார்.

திருமணத்திற்கு முந்தின நாள் சாயங்காலம் ஏரிக் கரையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெரிய கூட்டம் கூடியது. கூட்டம் கூடுவதற்கு முன்பே அந்த இடம் ஆட்களால் நிறைந்தது. அதற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்தது. நோட்டீஸில் பெயர் போட்டிருந்தவர்கள் மட்டுமல்ல அங்கு பேசப்போவது. ஒரு கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வும் இன்னொரு கம்யூனிஸ்ட் தலைவரும் பேச இருக்கிறார்கள். அவர் பேசுகிறார்கள் என்று எழுதிய அறிவிப்புப் பலகைகள் எல்லா மூலைகளிலும் வைக்கப்பட்டிருந்தன. அதனால் முன்கூட்டியே ஏராளமான ஆட்கள் வந்து கூடிவிட்டார்கள்.

தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் தலா ஒரு கோஷம் அடங்கிய ஊர்வலம், கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. தெற்கு திசையிலிருந்து வந்தது கயிறு பிரிக்கும் தொழிலாளிகள் சங்கத்தின் ஊர்வலம். அதில் பெரும்பாலும் பெண்கள் இடம் பெற்றிருந்தார்கள். ஊர்வலத்திற்கு முன்னால் வேலாயுதன் சாணாரின் மகள்கள் நின்றிருந்தார்கள்- சுசீலாவும் பத்மாவும். இரண்டு பேரும் கம்பீரமாக கோஷம் போட்டார்கள்.

"இன்குலாப் ஜிந்தாபாத்."

வடக்கிலிருந்து வந்த ஊர்வலத்தில் விவசாயத் தொழிலாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். செங்கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலத்திற்கு முன்னால் வேலாயுதன் சாணாரின் மகன் பாலசந்திரன் நடந்து வந்து கொண்டிருந்தான். பாலசந்திரன் ஆவேசத்துடன் கோஷம் போட்டான்:

"தொழிலாளிகளைத் தொட்டு விளையாடினால், அமைச்சர் பதவி இல்லாமல் போகும்."

தோழர் மாதவனின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. தலைமைச் சொற்பொழிவு மிகவும் ஆவேசம் கொண்டதாக இருந்தது. கயிறு பிரிக்கும் தொழிலாளிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகளின் வறுமையையும் கஷ்டங்களையும் தலைவர் தன் சொற்பொழிவில் படம் பிடித்துக் காட்டினார். அந்தக் கஷ்டங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தை அவர் விளக்கிக் கூறினார். அந்த வேலை நிறுத்தத்தை மிதித்து நசுக்கும் வகையில் போலீஸ் நடத்திய நர வேட்டையைப் பற்றித் தெளிவாக அவர் விவரித்தார். தோழர் மாதவன் தொடர்ந்து சொன்னார்:

"தோழர்களே, போலீஸின் மிருகத்தனமான தாக்குதலுக்கு நாம் எல்லோரும் இரையாகி இருக்கிறோம். இந்த நர வேட்டையை இந்த ஊரில் உள்ள எல்லோரும் பார்க்கவும், அனுபவிக்கவும் செய்திருக்கிறார்கள். அப்போது நடைபெற்ற கடுமையான தாக்குதல்களுக்கெல்லாம் காரணகர்த்தாக்களாக இருக்கும் அமைச்சர்கள் நாளைக்கு இங்கு வர இருக்கிறார்கள். மோசமானவரும் கொள்ளையடிப்பவருமான முதலாளியின் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக அமைச்சர்கள் வருகிறார்கள். அமைச்சர்களை வரவழைத்துக் காட்டி, நம் எல்லோரையும் பயமுறுத்துவதற்காகத்தான் கொள்¬¬க்காரரான முதலாளி அமைச்சர்களை இங்கு கொண்டு வருகிறார். அமைச்சர்களைப் பார்த்தால் நாம் பயந்து விடுவோமா?"

"இல்லை... இல்லை..."- கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

"அமைச்சர்கள் வரும் போது நாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கறுப்புக்கொடியை அசைக்க வேண்டும். 'கொலைகார அமைச்சரே, திரும்பச் செல்' என்று கோஷம் போட வேண்டும்."

"கொலைகார அமைச்சரே, திரும்பிச் செல்"- கூட்டம் கோஷம் போட்டது.

அதுவரையில் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு ஒரு தென்னை மரத்தில் சாய்ந்தவாறு நின்றிருந்த வேலாயுதன் சாணார் உரத்த குரலில் கத்தினார்:

"செல்ல வேண்டும்- கொலைகார அமைச்சர் திரும்பிச் செல்ல வேண்டும்."

எல்லோரின் கவனமும் வேலாயுதன் சாணார் இருந்த பக்கம் திரும்பியது. சாணார் அங்கு நின்று கொண்டே கத்தினார்:

"அமைச்சர்கள் யாரும் இந்த ஊர்ப்பக்கம் வரவேண்டாம். ஏன்னா, அவன்க கொச்சப்பன் முதலாளியின் கையிலிருந்து ரூபாய்களை வாங்கிக் கொண்டு, போலீஸ்காரர்களை அனுப்பி இந்த ஊரில் இருக்கும் ஆண்களையும் பெண்களையும் அடிக்க வச்சிருக்காங்க."

"வேலாயுதன் சாணார், நீங்கள் மேடைக்கு உடனடியாக வரவேண்டும். இங்கு வந்து நின்று மைக் வழியாகப் பேச வேண்டும்"- தோழர் மாதவன் சாணாரை அழைத்தார்.

சாணார் மேடைக்கு வந்தார். கூட்டம் கைகளைத் தட்டியது. வேலாயுதன் சாணார் பேசினார்:


"எனக்கு மேடையில் பேசத் தெரியாது. நான் சொல்ல நினைக்கிற விஷயம் என்னவென்றால், கொச்சப்பனின் மகனோட திருமணத்திற்கு மந்திரிமார்கள் வர்றாங்கன்ற விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்தே நான் சரியாக தூங்கல. ஏன் தெரியுமா? போலீஸ்காரர்கள் இங்கே வந்து நாயை அடிக்கிறதைப் போல மனிதர்களை அடிக்கிறதை நேரில் பார்த்தவன் நான். மந்திரிமார்கள் சொல்லித்தானே போலீஸ்காரர்கள் இங்கே வந்து அடிச்சிருக்காங்க? மந்திரிமார்கள் போலீஸ்காரர்களை அடிக்கும்படி சொன்னதற்கு என்ன காரணம்? கொச்சப்பனின் கையில் பணம் இருக்குறதால... அப்போ என்ன அர்த்தம்? பணம் இருந்தால் என்ன வேணும்னாலும் செய்யலாம்ன்றதுதானே! அதுவும் இந்த ஊரில்... நம்மக்கிட்ட அந்த வேலை நடக்காதுன்னு நாம அவங்களுக்குக் காட்டணும். இல்லாட்டி நாம யாரும் இங்கே வாழ முடியாது. எனக்கு மந்திரிமார்களைப் பார்த்து பயமில்ல. உங்களுக்கும் பயம் கிடையாதுன்னு எனக்குத் தெரியும். அதனால நாம பயப்படாம இந்த விஷயத்துல உறுதியா நிற்கணும். மந்திரிமார்கள் வர்றப்போ, நாம கறுப்புக் கொடியைக் காட்டணும். திரும்பிப் போ திரும்பிப் போன்னு சத்தம் போட்டுச் சொல்லணும். நானும் என் பிள்ளைகளும் உங்ககூட நிற்போம்."

"தோழர் வேலாயுதன் சாணார் ஜிந்தாபாத்"- கூட்டம் உரத்த குரலில் சத்தம் போட்டது.

8

திருமணத்தில் கலந்து கொள்வதற்குத்தான் அமைச்சர்கள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் அமைச்சர்கள். மக்களின் பிரதிநிதிகள். அப்படியென்றால் அவர்களுக்கு ஊரைச் சேர்ந்தவர்கள் சார்பாக ஒரு வரவேற்பு அளிக்க வேண்டாமா? மாலைகள் அணிவிக்க வேண்டாமா? 'ஜே' போட வேண்டாமா?

கொச்சப்பன் முதலாளியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கொச்சப்பன் முதலாளியின் ஊருக்கு அமைச்சர்கள் வருகிறார்கள். அப்போது கொச்சப்பன் முதலாளிக்குத் தன்னுடைய சொந்த ஊரில் பெரிய மதிப்பு இருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டாமா? பலவிதப்பட்ட ஜாதி, மதத்தைச் சேர்ந்தவர்களும் கொச்சப்பன் முதலாளிமீது மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அமைச்சர்களுக்குக் காட்ட வேண்டாமா? ஊர் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால், கொச்சப்பன் முதலாளியை மகிழ்ச்சியடையச் செய்தால் போதும் என்று அமைச்சர்களுக்குத் தோன்ற வேண்டாமா?

ரவீந்திரனின் திருமணம் ஒரு சாதாரண திருமணம் அல்ல. ஒரு பலப்பரீட்சை என்று கூறுவதே சரியானது. அமைச்சர்கள் வரும் போது காங்கிரஸ்காரர்களை ஒன்று சேர்த்து, கொச்சப்பன் முதலாளியின் செல்வாக்கைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பமாக அது அமைந்துவிட்டது. கணக்குப்பிள்ளை சங்கரப்பிள்ளை சொன்னார்:

"கம்யூனிஸ்ட்காரர்கள் எதையும் செய்யத் தயங்காதவர்கள். நாமளும் எச்சரிக்கையா இருக்கணும்."

மந்திரிமார்களை வரவழைத்து, அவர்களுக்கு அவமானம் உண்டானால் நமக்குத்தான் கெட்ட பெயர்."

கொச்சப்பன் முதலாளிக்கு பதைபதைப்பு இருக்கவே செய்தது. அவர் சொன்னார்:

"பணம் எவ்வளவு வேணும்னாலும் செலவழிக்கலாம் சங்கரப்பிள்ளை. காங்கிரஸ்காரர்கள் எல்லாரையும் அழைத்துக் கூட்டம் சேர்க்கணும். எல்லாரும் காங்கிரஸ் கொடியைக் கையில் பிடித்து 'ஜே' கோஷம் போட்டுக் கொண்டு வரணும். சங்கரப்பிள்ளை, நீங்க இந்த விஷயத்துல இறங்கினால்தான் எல்லாரையும் ஒன்று சேர்த்துக் கொண்டு வர முடியும்."

"முதலாளி, கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்குறேன்."

சங்கரப்பிள்ளை கோவிந்தன் முதலாளியையும் சாக்கோ முதலாளியையும் போய்ப் பார்த்தார். அவர்கள் இருவரும் அந்த ஊரின் முக்கியமான காங்கிரஸ்காரர்கள். தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக முன்னால் நின்று பாடுபட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்காக தங்களின் சொந்தப் பணத்தைச் செலவிட்டவர்கள்.

ஆனால், கொச்சப்பன் முதலாளி கயிறு வியாபாரத்திலும் கொப்பரை வர்த்தகத்திலும் மிகப்பெரிய நபராக ஆன போது, கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். அத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொச்சப்பன் முதலாளியின் கைப்பிடிக்குள் தன்னை ஒதுக்கிக் கொண்டார். அப்போது கோவிந்தன் முதலாளியும் சாக்கோ முதலாளியும் காங்கிரஸை விட்டு விலகி நின்றார்கள்.

ரவீந்திரனின் திருமண அழைப்பிதழ் அவர்கள் இருவருக்கும் வந்தன. ஆனால், அமைச்சர்கள் வரும் விஷயத்தைக் கொச்சப்பன் முதலாளி அவர்களிடம் நேரில் கூறவில்லை. திருமணத்திற்குப் போகாமல இருந்தால் என்ன என்று அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அது மட்டுமல்ல- அமைச்சர்கள் அங்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தயாராக நின்று கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை அவாகள் யாருக்கும் தெரியாமல் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

சங்கரப்பிள்ளை முதலில் கோவிந்தன் முதலாளியின் வீட்டிற்குத்தான் சென்றார். முதலாளி மிடுக்கான குரலில் கேட்டார்:

"சங்கரப்பிள்ளை, என்ன என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு இங்கே வந்திருக்கிறீங்க?"

சங்கரப்பிள்ளை ஒரு பச்சைச் சிரிப்பை வெளிப்படுத்தினாரே தவிர, எந்த பதிலையும் சொல்லவில்லை.

"சங்கரப்பிள்ளை, நல்லா இருக்கீங்களா?"

"ஏதோ இருக்கேன் முதலாளி- உங்க அருளால்."

"சங்கரப்பிள்ளை, என் அருளாலொண்ணும் நீங்க வாழல. உங்களோட தெய்வம் கொச்சப்பன் முதலாளிதானே?"

"நன்றி வேணும்ல முதலாளி?"

"நன்றி வேண்டாம்னு நான் சொன்னேனா? பிறகு.. நீங்க என்ன விஷயமா இங்கே வந்திருக்கீங்க சங்கரப்பிள்ளை?"

"நாளைக்குக் கொச்சப்பன் முதலாளியின் மகனோட கல்யாணமாச்சே?"

"ஆமா..."

"அழைப்பிதழ் கிடைச்சதுல்ல?"

"கிடைச்சது."

"மூணு மந்திரிமார்கள் வர்றாங்க."

"ம்..."

"பிறகு... நகரத்தில் இருக்குற பெரிய முதலாளிமார்கள் வருவாங்க. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருவாங்க. பெரிய அதிகாரிகள் வருவாங்க."

"ம்..."

"அவர்கள் எல்லோரையும் வரவேற்று உட்கார வைக்கணும்... உபசரிக்கணும்..."

"கட்டாயம் செய்யணும்."

"முதலாளி, நீங்க முன்கூட்டியே அங்கே வந்தாத்தான் அதெல்லாம் ஒழுங்கா நடக்கும்."

"யாரு? நானா? பொன்னை உருக்குற இடத்துல பூனைக்கு என்ன வேலை?"

"முதலாளி, நீங்க அப்படி சொல்லக்கூடாது. மந்திரிமார்கள் வர்றப்போ, நீங்கதான் அவர்களுக்கு மாலை போட்டு வரவேற்கணும். முதலாளி, நீங்கதானே இங்கே காங்கிரஸ்ஸே!"

"அதெல்லாம் வேண்டாம் சங்கரப்பிள்ளை. மந்திரிகள் வர்றப்போ, கொச்சப்பன் முதலாளி மாலை அணிவித்தால் போதும். இல்லாட்டி எம்.எல்.ஏ. மாலைகளை அணிவிக்கட்டும்."

"கொச்சப்பன் முதலாளியும் எம்.எல்.ஏ.வும் சேர்ந்து முடிவு செய்த விஷயம்தான் நீங்க மாலை இடணும்னு. அவங்க ரெண்டு பேரும் நேரடியா இங்கே வர்றதா இருந்தாங்க. அப்போ... திடீர்னு ஒரு முக்கியமான விஷயமா நகரத்திற்குப் போக வேண்டியதாயிடுச்சு. என்னை இங்கே அனுப்பிட்டு அவங்க நகரத்துக்குப் போயிட்டாங்க."

"கல்யாணத்துக்கு நான் வந்திடுறேன் சங்கரப்பிள்ளை. மந்திரிமார்களுக்கு மாலை அணிவிக்கிறதை அவங்களே செய்யட்டும். ஏன்னா..."முதலாளியின் வார்த்தைகளுக்கு பலம் குறைந்தது. வேண்டாம் என்று கூறுவது, மேலும் வற்புறுத்துவதற்குத்தான் என்பதை சங்கரப்பிள்ளை புரிந்து கொண்டார்.

"யார் மாலை போட்டாலும், நீங்க மாலை போடுறதுல இருக்குற மதிப்பு இருக்குமா முதலாளி?"

"ஆனா..."

"ஏதாவது தவறுகள் இருந்தால் முதலாளி, நீங்கதான் பொறுத்துக்கணும்."

"இருந்தாலும் என்னை மழுசா மறந்திடலாம்னுதானே அவர் நினைச்சாரு?"

"அது கொச்சப்பன் முதலாளியோட தப்பு இல்ல முதலாளி. அவர் பாவம்...சுத்தமான மனசு உள்ளவர்.


பல வேலைகளாச்சே! பலதரப்பட்ட ஆளுங்க கூடவும் பழக வேண்டியதிருக்கு. அப்படிப்பட்ட சூழ்நிலையில சில விஷயங்கள் மறந்து போயிடும்..."

கோவிந்தன் முதலாளி தன் மதிப்பு சிறிதும் குறைந்துவிடாமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருந்தார். எனினும், மகிழ்ச்சி அவருடைய மனதை அடிமையாக்கிவிட்டது என்பதை சங்கரப்பிள்ளை புரிந்து கொண்டார். மிகவும் சிரமப்பட்டு தன் மதிப்பை காப்பாற்றுவதைப் போல் நடித்துக் கொண்டு சங்கரப்பிள்ளையிடம் அவர் சொன்னார்:

"நாளைக்கு ஒரு முக்கியமான விஷயமா நான் நகரத்திற்கு போக வேண்டியதிருக்கு. மந்திரிமார்கள் எப்போ வர்றாங்க."

"ஒன்பது மணிக்கு சந்தை சந்திப்பில் வருவாங்க. அந்த இடத்தில்தான் முதல் வரவேற்பு. அங்கே தான் நீங்க மந்திரிகளுக்கு மாலைகள் அணிவிக்கணும். அது முடிஞ்சவுடன் மந்திரிமார்களுடனே நீங்க கல்யாணப் பந்தலுக்கு வந்துவிட வேண்டியதுதான்."

கோவிந்தன் முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது. முதல் தடவையாக அந்த ஊருக்கு வரும் அமைச்சர்களுக்கு மாலை அணிவிக்கக்கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைத்தது குறித்து. அவர்களுடன் சேர்ந்தே திருமணப் பந்தலுக்குச் செல்வது வேறு! சிறிதும் எதிர்பார்க்காமல் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாயிற்றே அது!

"சங்கரப்பிள்ளை, சரியா கேட்டுக்கோங்க. எட்டு மணி தாண்டியவுடனே நான் சந்தை சந்திப்புக்கு வந்திடுறேன்."

"அப்போ மாலைகளுடன் நாங்கள் அங்கே வந்து சேர்ந்திடுறோம். பிறகு... இன்னொரு விஷயம்! சாக்கோ முதலாளியும் மந்திரிமார்களுக்கு மாலை அணிவிக்கிறது நல்ல விஷயமில்லையா?"

"அதுவும் நல்லதுதான். நான் மாலை அணிவிச்சு முடிந்தவுடன், சாக்கோ முதலாளி மாலை அணிவிக்கட்டும்."

"அப்படித்தான் முடிவு செய்யப்பட்டிருக்கு."

எல்லாம் நன்கு முடிந்தது. அந்த வகையில் மகிழ்ச்சியே.

தொடர்ந்து சங்கரப்பிள்ளை சாக்கோ முதலாளியைப் போய்ப் பார்த்தார். சாக்கோ முதலாளியும் ஒப்புக் கொண்டார். சங்கரப்பிள்ளை தன் முயற்சியில் வெற்றி பெற்றார்.

சந்தை சந்திப்பில் புதிதாக ஒரு வாசக சாலை தொடங்கப்பட்டிருக்கிறது- ஒரு சிறிய கடை அறையில். இரண்டு பெஞ்சுகளும் பலகையால் செய்யப்பட்ட ஒரு சிறிய அலமாரியும் அங்கு இருந்தன. அலமாரியில் சுமார் இருபது கிழிந்த புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முந்தின நாள் வெளிவந்த நாளிதழ்களும், முந்தைய வாரம் வெளியான வார இதழ்களும் அங்கு இருந்தன. ஐந்தாறு இளைஞர்கள் தினமும் மாலை வேளைகளில் அங்கு வந்து உட்கார்ந்து படித்து கொண்டிருப்பதும், அரசியல் மற்றும் இலக்கிய விஷயங்களை அலசிக் கொண்டிருப்பதும் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.

சங்கரப்பிள்ளை அந்த வாசக சாலைக்குச் சென்றார். செக்ரட்டரியிடம் சென்று வாசக சாலையை மேலும் சிறந்ததாக ஆக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அங்கு கூடியிருந்த இளைஞர்கள் எல்லோரும் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டார்கள். 'எப்படி மேலும் சிறந்ததாக ஆக்குவது?' என்று அந்த இளைஞர்கள் கேட்டார்கள். சங்கரப்பிள்ளை தன் மனதில் இருக்கும் எண்ணங்களைக் கூறினார்.

முதலாவதாக பெரிய நிலையில் இருக்கும் யாரையாவது வாசக சாலையின் தலைவராக ஆக்க வேண்டும். அந்தத் திட்டத்தை இளைஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அப்போது ஒரு கேள்வி எழுந்தது- வாசக சாலையின் தலைவராக இருப்பதற்குத் தயாராக இருக்கும் பெரிய மனிதர் யார்? சங்கரப்பிள்ளை சொன்னார்- ரவீந்திரன்! இளைஞர்கள் அதை ஒப்புக் கொண்டார்கள். அந்த நிமிடமே சங்கரப்பிள்ளை அறிவித்தார்- வாசக சாலைக்கு ரவீந்திரன் ஐம்பது ரூபாய் நன்கொடை தந்திருக்கிறான் என்ற விஷயத்தை. அதைக் கேட்டு இளைஞர்கள் உற்சாகமடைந்தார்கள்.

சங்கரப்பிள்ளை கூறிய இரண்டவாது விஷயம்: அந்த ஊருக்கு அமைச்சர்கள் வரும் போது, வாசக சாலையின் சார்பாக ஒரு வரவேற்பு அளிக்க வேண்டும். அதாவது- வாசக சாலையைச் சேர்ந்த உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அமைச்சர்களை வரவேற்று மாலைகள் அணிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் கிடைக்கும் லாபம் என்ன? அந்தக் கேள்விக்கு சங்கரப்பிள்ளை பதில் சொன்னார். வாசக சாலைக்கு அரசாங்கத்திடமிருந்து பண உதவி கிடைக்கும். அதைக் கேட்டு இளைஞர்கள் சந்தோஷப்பட்டு அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்க சம்மதித்தார்கள்.

அந்த வகையில் விஷயமும் பலித்தது. ரவீந்திரனுக்காக அப்போதே சங்கரப்பிள்ளை ஐம்பது ரூபாயை வாசக சாலைக்கு நன்கொடையாக செக்ரட்டரியிடம் அளிக்கவும் செய்தார்.

சங்கரப்பிள்ளை அங்கிருந்து நேராக எஸ்.என்.டி.பி. அமைப்பின் தலைவரைக் காணச் சென்றார் அதன் தலைவராக இருந்தவர் குமாரன். சங்கரப்பிள்ளையைப் பார்த்ததும் குமாரன் கேட்டார்:

"என்ன சங்கரப்பிள்ளை, கம்யூனிஸ்ட்காரர்கள் பிரச்சினை உண்டாக்குவார்களோ?"

"போலீஸ் முன்கூட்டியே இங்கு வந்து சேர்றதா சொல்லியிருக்காங்க. டி.எஸ்.பி., சர்க்கிள் எல்லாரும் வந்திருவாங்க. பிரச்சினையை உண்டாக்க வருபவன் ஒவ்வொருவனையும் பிடிச்சு, வேன்ல ஏற்றி அவங்க கொண்டு போயிடுவாங்க."

"இருந்தாலும் மிகவும் கவனமா இருக்கணும் சங்கரப்பிள்ளை. கொச்சப்பன் முதலாளிக்கு மதிப்பு குறைச்சல் உண்டாகிவிடக் கூடாது. கொச்சப்பன் முதலாளின்னு சொன்னால், ஈழவர்களுக்கு ஒரு மதிப்புத்தான். எங்க ஜாதி சம்பந்தப்பட்டது தானே குரு மண்டபம். அங்குதானே அவர் கல்யாணத்தை நடத்துறாரு! நிலைமை அப்படி இருக்குறப்போ அந்தக் கல்யாணத்துல ஏதாவது பிரச்சினைகள் உண்டானால், அது எங்க ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே அவமானம்னுதான் அர்த்தம். அதனால் தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் செய்யணும். மந்திரிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கணும்."

"சந்தை சந்திப்பில்தான் முதல் வரவேற்பு. அங்கு எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளுக்கு மாலை அணிவிக்கணும். எஸ்.என்.டி.பி. அமைப்பின் தலைவரான நீங்கதான் முதல்ல மாலை அணிவிக்கணும்."

"நான் மாலைகள், பூச்செண்டு எல்லாம் வாங்கித் தயாரா வச்சிருக்கேன் சங்கரப்பிள்ளை. நான்தானே இந்த அமைப்பின் தலைவர்! என் சமுதாயம் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே! நாயர்கள் வருவார்களா சங்கரப்பிள்ளை?"

"வருவாங்கன்னுதான் நினைக்கிறேன். மந்திரிகள் வர்றப்போ, வரவேற்க நாயர்கள் இல்லைன்னா..."

"நான் ஒரு விஷயம் சொல்றேன், சங்கரப்பிள்ளை, நீங்ககூட நாயர்தான். இருந்தாலும் நான் ஒரு விஷயத்தை மனம் திறந்து சொல்றேன். நாயர்களுக்கு ஈழவர்களைப் பார்த்துப் பொறாமை. நாங்க நல்லா வர்றதை அவர்களால் பொறுத்துக்க முடியவில்லை."

"அதுதான் உலகம்! ஒருத்தன் நல்லா வர்றது இன்னொருத்தனுக்குப் பிடிக்காது. அதற்காக இப்போ நல்லா வராம இருக்க முடியுமா?"

"அப்படிச் சொல்லுங்க சங்கரப்பிள்ளை."

"மந்திரிகள் ஒன்பது மணிக்கு சந்தை சந்திப்புக்கு வந்து சேர்றாங்க. உங்க ஆட்கள் மாலைகளுடன் அங்கே வந்து சேர்ந்தால் போதும்."

"எட்டரை மணிக்கெல்லாம் நாங்க வந்திடுறோம்."

அந்த விஷயமும் நினைத்ததைப் போல முடிந்துவிட்டது. அங்கிருந்து சங்கரப்பிள்ளை நேராக நாயர்கள் அமைப்பின் தலைவர் நீலகண்ட குறுப்பைத் தேடிச் சென்றார்.

"குறுப்பு அவர்களே, எல்லா விஷயமும் தெரியும்ல?"- இப்படிக் கேட்டவாறுதான் சங்கரப்பிள்ளை அங்கு நுழைந்தார்.

"என்ன விஷயம்?"


"மந்திரிகள் வர்றாங்க- மூணு மந்திரிகள்."

"அவங்க ஏன் வர்றாங்க?"

"கொச்சப்பன் முதலாளியோட மகனின் திருமணத்திற்கு."

"வரட்டும்.. வந்திட்டு போகட்டும். அதற்கு நான் என்ன செய்யணும்?"

"இந்த காரணத்தால்தான் நாயர்களுக்கு முன்னேற்றமே உண்டாகாமல் இருக்கு!"

"அதற்காக நாயர்களை என்னடா செய்யச் சொல்ற சங்கரப்பிள்ளை? மந்திரிகள் வர்றாங்கன்ற விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே, தலையை மண்ணுக்குள்ள புதைச்சிக்கிட்டு நிக்கணுமா என்ன?"

"தலையைப் பு¬ச்சிக்கிட்டு நிக்கவெல்லாம் வேண்டாம். மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவங்களெல்லாம் போய் வரவேற்பதும், மாலைகள் அணிவிப்பதுமாக இருக்கும் போது, நாயர்கள் மட்டும் போகாமல் இருந்தால்..."

"போகாமல் இருந்தால்...?"

"போகாமல் இருந்தால் இருக்குற வேலைகளிலெல்லாம் மற்றவர்கள் போய் உட்கார்ந்துக்குவாங்க. உங்க மூத்த மகன் பி.எல். படிச்சவர்தானே? இரண்டாவது மகன் எம்.ஏ. படிச்சவர்தானே! இருந்தும் ஏன் வேலை கிடைக்கல?"

நீலகண்டக் குறுப்பு அதற்கு பதில் சொல்லவில்லை. அவர் சிந்தனையில் மூழ்கினார். சங்கரப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"அவ்வப்போது மந்திரிகளைப் போய் பார்க்கணும். குறுப்பு அவர்களே! அவர்களை அழைச்சிட்டு வந்து வரவேற்பு, விருந்துன்னு எதையாவது நடத்தணும். அவங்க வர்ற இடத்துக்கெல்லாம் மாலைகளை வாங்கிட்டு நாமும் போகணும்."

"அது உண்மைதான்டா சங்கரப்பிள்ளை. மந்திரிகள் எப்போ வர்றாங்க? எங்கே வர்றாங்க? நானும் வர்றேன்."

"நாளைக்கு ஒன்பது மணிக்கு மூணு மந்திரிகள் நம்ம சந்தை சந்திப்புக்கு வர்றாங்க. நீங்க அங்கே வந்தால் போதும். நான் மாலை தர்றேன்."

"அப்படின்னா நான் அங்கே வர்றேன்."

அந்த விஷயமும் நல்ல முறையில் முடிந்தது. சங்கரப்பிள்ளை, கொச்சப்பன் முதலாளியைப் பார்த்து எல்லா விஷயங்களையும் சொன்னார்.

"எல்லோரும் வந்து மந்திரிகளுக்கு மாலைகள் அணிவிப்பாங்க முதலாளி. பயப்படுறதுக்கு எதுவும் இல்ல."

9

மாலை மயங்கி, வாசுப்பணிக்கன் நகரத்திலிருந்து வந்தபோது, அவருடன் சற்று பெரிய அளவில் இருந்த ஒரு தோலாலான பெட்டியைத் துக்கி கொண்டு ஒரு சுமை சுமப்பவனும் இருந்தான். சுமை தூக்குபவன் பெட்டியை இறக்கி வைத்துவிட்டு, கூலியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான். மாதவி சாணாட்டி கேட்டாள்:

"எனக்கு முண்டும் மேல் துண்டும் வாங்கினீங்களா?"

"எல்லாருக்கும் வாங்கியாச்சு. திறந்து பாரு."

மாதவிச் சாணாட்டி தோல்பெட்டியைத் திறந்தாள். பிள்ளைகள் எல்லாரும் சுற்றி நின்றார்கள். ஒரு முண்டை எடுத்து விரித்துப் பார்த்துவிட்டு, சாணாட்டி சொன்னாள்:

"இது என்ன முண்டு? சாக்கு மாதிரி இருக்கே!"

"இது கதர்டி.. கதர்..."

"இது யாருக்கு?"

"எனக்கு. உனக்கு வேண்டிய முண்டையும் கதர்லதான் வாங்கியிருக்கேன்."

"மேற்துண்டு?"

"மேற்துண்டும் கதர்லதான்."

"ரவிக்கை?"

"ரவிக்கையும் கதர்தான்."

"அய்யய்யோ! இந்த சாக்கை உடுத்திக்கிட்டு என்னால நடக்க முடியாது."

"எனக்குப் புடவை வாங்கினீங்களா அப்பா?"

"மகளே, உன் புடவையும் கதர்தான். ரவீந்திரன் வாங்கியிருக்கிற திருமணப் புடவையும் கதர்தான்."

"இது என்ன சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு!"- மாதவிச் சாணாட்டிக்குப் கோபம் வந்தது.

"என்னா, இப்போ நாம எல்லாரும் காங்கிரஸ்காரங்க. புரியுதா? கொச்சப்பன் முதலாளியோட வீட்டில் எல்லாரும் கதர்தான் வாங்கியிருக்காங்க. நகரத்தில் இருக்கும் கதர் முழுமையா தீர்ந்திடுச்சு. இப்போ ரவீந்திரன் திருவனந்தபுரத்திற்குப் போயிருக்காரு- கதர் புடவை வாங்க- கல்யாணப் புடவை."

மாதவிச் சாணாட்டிக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. அவள் சொன்னாள்:

"இதை முதல்லயே சொல்ல வேண்டாமா? நாம எல்லாரும் காங்கிரஸ்காரங்களா ஆயிட்டோம்ன்ற விஷயத்தை."

"அடியே... உன் அண்ணனும் அண்ணனோட பிள்ளைகளும் கம்யூனிஸ்ட்காரங்களா ஆயிட்டாங்க. நிலைமை அப்படியிருக்குறப்போ, நாம காங்கிரஸ்காரங்களா ஆகாம இருக்க முடியுமா?"

"சுசீலாவும் பத்மாவும் கம்யூனிஸ்ட்காரர்கள்கூட சேர்ந்து கொடி பிடிக்கப் போவாங்கன்னு கேள்விப்பட்டேன் அப்பா. அது உண்மைதானா?"- இந்திரா கேட்டாள்.

"கொடியைப் பிடிச்சுக்கிட்டு கோஷம் போட்டுக் கொண்டு -ஊர்வலத்துக்கு முன்னால் நின்னுக்கிட்டு, 'அமைச்சர்களே வரக்கூடாது... வரக் கூடாது'ன்னு சத்தம் போட்டு சொன்னதே அவங்கதான்."

"பொறாமை... நாம நல்லா ஆகுறதை நினைச்சுப் பொறாமை"- சாணாட்டி ஆவேசத்துடன் சொன்னாள்.

"பொறாமை உள்ளவங்களுக்கு வாழ்க்கையில எந்தவித முன்னேற்றமும் உண்டாகாதுடி... கேளு... ஒவ்வொருத்தரும் ஒண்ணொண்ணு சொல்றதை... கம்யூனிசம் அது இதுன்னு பேசிக்கிட்டு இளைஞர்கள் நுழைஞ்சு மாலேத்து வீட்டுக்குள்ளேயே தங்கிடுறாங்களாம். சுசீலா போன மாதம் குளிக்கவே இல்லையாம்..."

"அதெல்லாம் ஒண்ணுமே இல்ல... இனிமேதான்அப்படி நடக்கப் போகுது"- இந்திரா கோபத்துடன் சொன்னாள்.

மாதவிச் சாணாட்டி எதையோ யோசித்துக் கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

"என்ன செய்றது? எங்க அம்மாதானே பெற்றது! மற்றவங்க பேசுறது மாதிரி என்னால பேச முடியுமா?"

"அப்படின்னா நீ போயி அறிவுரை சொல்லுடி"- வாசுப்பணிக்கன் கிண்டல் பண்ணினார்.

"என்ன இருந்தாலும் என் அண்ணன் என்கிட்ட இப்படி நடந்துக்கிட்டாரே!" சாணாட்டியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

அதற்குப் பிறகு சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. இந்திரா அமைதியாக இருந்தாள்.

"அப்பா, ஒரு விஷயம் கேள்விப்பட்டீங்களா?"

"என்ன மகளே?"

"இனி தேர்தல் வர்றப்போ, காங்கிரஸ்காரர்களின் வேட்பாளர்..."-வெட்கத்தால் இந்திரா தான் கூற வந்ததை முழுவதுமாகக் கூறவில்லை.

"இனி நம்ம ஊரு எம்.எல்.ஏ.வா ஆகப் போறது ரவீந்திரன்தான் மகளே."

"எம்.எல்.ஏ.வா ஆயிட்டா மந்திரியா ஆயிடலாம்ல?"

"பிறகு என்ன? காங்கிரஸ்காரர்கள் எல்லாரும் சொல்றாங்க... ரவீந்திரன் மந்திரியா வந்திடுவான்னு. எல்லாம் உன்னோட அதிர்ஷ்டம் மகளே!"

மாதவிச் சாணாட்டி கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னாள்:

"நான் யாருக்கும் எந்தவொரு துரோகமும் செய்தது இல்ல. நல்லது தான் செய்திருக்கேன். நிலைமை அப்படியிருக்குறப்போ, என் பிள்ளைகளுக்கு நல்லது நடக்காம இருக்காது."

"பிரச்சினைகளை உண்டாக்க ஏதாவது வழி கிடைக்காதான்னு தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்குறவங்க கம்யூனிஸ்ட்காரங்க. நாம அதையே பார்த்துக்கிட்டு இருக்க முடியுமான்னுதான் நான் கேட்கிறேன். குரைக்க இருந்த நாயின் தலையில் தேங்காய் விழுந்ததைப் போல, இப்போ நிலைமை ஆயிடுச்சே!"- பெரியவர் கண்டப்பன் தன் மகன் கொச்சப்பனுக்கு அறிவுரை சொன்னார்.

"நான் என்ன செய்திட்டேன்னு இதைச் சொல்றீங்க அப்பா... கம்யூனிஸ்ட்காரங்க அவங்க விருப்பப்படி நுழைஞ்சு பிரச்சினைகளை உண்டாக்க ஆரம்பிக்கிறப்போ, நம்ம விஷயத்தை நாம பார்க்காம இருக்க முடியுமா?"

"நான் அன்னைக்கே சொன்னேன்ல... மந்திரிகளை அழைக்க வேண்டாம்னு! மந்திரிகள் வர்றதுனாலதானே கம்யூனிஸ்ட்காரங்க பிரச்சினைகளை உண்டாக்க வர்றாங்க? மந்திரிகள் இல்லைன்னா, கல்யாணம் நடக்காதா என்ன?"

"மந்திரிகள் இல்லைன்னா கூட கல்யாணம் நடக்கும். யாருமே வரலைன்னாலும் கல்யாணம் நடக்கும். பெண் கழுத்துல இளைஞன் தாலியைக் கட்ட, இளைஞனின் கழுத்தில் பெண் ஒரு மாலையைப் போட்டுட்டான்னா திருமணம் முடிஞ்சிடுச்சுன்னு அர்த்தம். ஆனா, அப்படி ஒரு கல்யாணம் நடந்தா போதுமான்னு நான் கேக்குறேன். நம்ம நிலைமையையும் மதிப்பையும் பார்க்க வேண்டாமா அப்பா?"


"கம்யூனிஸ்ட்காரங்க கறுப்புக் கொடியைக் கையில பிடிச்சுக்கிட்டு 'போ... போ...'ன்னு சொல்லிக்கிட்டு கல்யாணப் பந்தலுக்குள்ளே நுழைஞ்சாங்கன்னா, நாம என்ன செய்றதுன்னுதான் நான் கேக்குறேன்."

"கல்யாணப் பந்தலுக்குப் பக்கத்துல அப்படியெல்லாம் அவன்க வரமுடியாது அப்பா. போலீஸ்காரங்க அவன்களை அப்படியே அள்ளி எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. தெரியுதா?"

"அப்படின்னா சரி."

"பிறகு இன்னொரு விஷயம் தெரியுமா?"

‘‘என்ன?’’

‘‘சாணாரும், சாணாரோட பிள்ளைகளும் கறுப்புக் கொடியைக் கையில பிடிச்சுக்கிட்டு நடந்து வருவாங்கன்ற விஷயம்...’’

‘‘அப்படின்னா... அது பார்க்க வேண்டிய ஒரு காட்சிதான்! சாணாருக்கு மந்திரிமார்கள் மீது ஏன் இப்படியொரு பகை?’’

‘‘பகை மந்திரிமார்கள் மீது இல்ல அப்பா... நம்ம மீதுதான்...’’

‘‘நாம அவங்களுக்கு ஏதாவது துரோகம் செய்தோமா என்ன?’’

‘‘நாம சாணான்மார்களா இல்லைன்றதுதான் விஷயம்.’’

‘‘கம்யூனிஸ்ட்காரர்கள் சாணான்மார்களா?’’

‘‘அவங்க நம்மோட பகைவர்கள் ஆச்சே அப்பா! நம்ம பகைவர்கள் எல்லாரும் வேலாயுதன் சாணாருக்கு உறவினர்கள்தான்.’’

‘‘மாதவிச் சாணாட்டி, சாணாட்டிதானே? வேலாயுதன் சாணாரின் தங்கச்சிதானே? கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு சாணாரின் மருமகள்தானே?’’

‘‘அவங்க இப்போ நமக்கு சொந்தமா ஆயிட்டாங்கள்ல அப்பா. நம்ம சொந்தக்காரர்கள் சாணாருக்கு விரோதிகள்...’’

‘‘விஷயம் அப்படிப் போகுதா?’’

திருமண நாளன்று பொழுது விடிந்தது. மாதவிச் சாணாட்டியின் வீட்டில் சந்தோஷம் கரைபுரண்டு கொண்டிருந்தது. தந்தையும் பிள்ளைகளும் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இருந்தனர். மாதவிச் சாணாட்டியும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால், முகத்தில் ஒரு தெளிவு இல்லை. என்னவோ ஒரு குழப்பம்! வாசுப் பணிக்கன் கேட்டார்:

‘‘உன்முகத்துல என்னடி ஒரு சந்தோஷமே இல்லாம இருக்க?’’

‘‘நான்... நான்...’’

‘‘என்னன்னு சொல்லு.’’

‘‘நான்... நான்... அங்கே கொஞ்சம் போயிட்டு வர்றேன்.’’

‘‘எங்கே?’’

‘‘மாலேத்து வீட்டுக்கு.’’

‘‘எதுக்கு?’’

‘‘நேர்ல வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்னு கேக்கப் போறேன்.’’

‘‘போ... போ...! நீ போய் சொன்ன அடுத்த நிமிடமே அவர் வந்திடுவாரு...’’ - வாசுப் பணிக்கன் கேலிச் சிரிப்புடன் சொன்னார்.

‘‘வந்தாலும் வரலைன்னாலும் நான் போய் சொல்லத்தான் போறேன். இந்திரா, நீயும் என்கூட வா மகளே. மாமாவோட காலைத் தொட்டு வணங்கிட்டுத்தான் கழுத்துல தாலி கட்டிக்கணும்.’’

‘‘நான் வரல’’- இந்திரா உறுதியான குரலில் சொன்னாள்.

‘‘அம்மா போக வேண்டாம்’’- பிள்ளைகள் எல்லோரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

‘‘நான் போகணும். என் அண்ணனாச்சே! நான் போய் சொல்லுவேன்- என் மகளின் கல்யாணத்துக்கு வரணும்னு...’’

‘‘அப்படின்னா போ...’’ - வாசுப்பணிக்கன் சிரித்தார்.

மாதவிச் சாணாட்டி வேகமாக வெளியே நடந்தாள். பாதையில் நடந்து போகும்போது ஒருவன் கேட்டான்.

‘‘சாணாட்டி, எங்கே போறீங்க?’’

‘‘நான் என் அண்ணனைக் கொஞ்சம் பார்த்துட்டு வரலாம்னு போறேன்.’’

‘‘ம்... போங்க... போங்க...’’ - அவனும் சிரித்தான்.

மாதவிச் சாணாட்டி மாலேத்து வீட்டின் படிகளைக் கடந்தபோது, வேலாயுதன் சாணார் வாசலைத் தாண்டி படுவேகமாக முற்றத்திற்கு வந்து உரத்த குரலில் கத்தினார்:

‘‘நீ ஏண்டி இங்கே வந்தே? உனக்கு இங்கே என்னடி வேலை?’’

‘‘இங்கே இருக்குறவரின் கூடப் பிறந்தவள்ன்ற முறையில் நான் வந்தேன்.’’

‘‘இங்கே இருக்குறவன் நான்தான்டி! நான் உன்கூட பிறந்தவன் இல்லைடி! உன்னை என் தாய் பெறலடி... உன் மகளை வடுகச் சோவனுக்குத் தானேடி கொடுக்கப் போறே? நீ வடுகச் சோவத்திதானேடி?’’

‘‘சரி... வடுகச்சோவன்மாரோடும், ஊர் சுத்துற சோவன்மாரோடும் சேர்ந்து கம்யூனிசம் பேசிக்கிட்டு திரியிறது யாரு?’’

‘‘அது என் விருப்பம்டி...’’

‘‘அப்படின்னா, அது என் விருப்பம்.’’

‘‘வெளியே போடீ...’’

‘‘ம்... நான் போறேன். பொம்பளை பிள்ளைகளை ஊர் சுத்தறவங்களோட பழக விட்டுட்டு...’’

‘‘வெளியே போடீ...’’ - முற்றத்தில் கிடந்த ஒரு தென்னை மடலை எடுத்த சாணார் முன்னோக்கிப் பாய்ந்தார்.

மாதவிச் சாணாட்டி படிகளைக் கடந்து ஓடினாள்.

10

மைச்சர்கள் வர இருக்கிறார்கள். நகரத்தின் எல்லையிலிருந்து திருமணப் பந்தல்வரை உள்ள சாலை, கொடிகளாலான தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. போலீஸ்காரர்கள் வரிசையாக நின்றிருக்கிறார்கள். போலீஸ்காரர்களுக்குப் பின்னால் ஆர்வம் நிறைந்த மனங்களுடன் ஊர்க்காரர்கள் - பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று திரண்டு கூடியிருக்கிறார்கள்.

நகரத்திலிருந்து கார்களின் அணிவகுப்பு ஆரம்பமானது. அதிகாரிகளும், எம்.எல்.ஏ.க்களும் முதலாளிகளும்!

சந்தை சந்திப்பில் ஒரு மேடை அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்குதான் ஊர்க்காரர்களின் சார்பாக அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஊர்க்காரர்கள் சார்பாக பலரும் அமைச்சர்களுக்கு மாலைகள் அணிவிப்பது அங்குதான்.

மேடையைச் சுற்றி போலீஸ்காரர்கள் காவல் காத்து நிற்கிறார்கள். கோவிந்தன் முதலாளி, சாக்கோ முதலாளி, வாசக சாலை செக்ரட்டரி, தேநீர்க் கடை நாராயணன் நாயர், ஈழவர்கள் அமைப்பின் தலைவர், நாயர்கள் அமைப்பின் தலைவர் ஆகியோர் இலையில் காட்டப்பட்ட மாலைகளுடன் அங்கு அமைச்சர்களை எதிர்பார்த்து நின்றிருக்கிறார்கள்.

ஆரவாரம் கேட்கிறது! ஏரிக்கரையிலிருந்து புறப்பட்ட எதிர்ப்புகோஷங்கள் நிறைந்த ஊர்வலம், சந்தை சந்திப்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கோஷங்களின் முழக்கம் கேட்கிறது.

‘‘காவல் துறை அமைச்சரே, திரும்பிச் செல்.’’

‘‘கொலைகார அமைச்சரே திரும்பிச் செல்.’’

‘‘அமைச்சர்கள் கொள்ளைக்காரர்கள். ரத்தம் குடிப்பவர்கள். ஊர்க்காரர்களைக் கொல்வதற்கு ஊர் சுற்றுபவர்கள்.’’

‘‘பெண்ணைக் கட்டும் முதலாளி, லத்தி சுழற்றும் போலீஸ்... சேர்ந்து விளையாடும் விளையாட்டை நாங்கள் பார்த்துவிட்டோம். கவனம்!’’

‘‘இன்குலாப் ஜிந்தாபாத்...’’

‘‘வேலாயுதன் சாணார், ஜிந்தாபாத்!’’

கோஷங்கள் அடங்கிய ஊர்வலம் சந்தை சந்திப்பை வந்து அடைந்தது. வேலாயுதன் சாணாரும் பாலசந்திரனும் சுசீலாவும் பத்மாவும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்தினார்கள்.

போலீஸின் விசில் சத்தம்!

அமைச்சர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்!

‘‘கொலைகார அமைச்சரே, திரும்பிச் செல்’’ - பாலசந்திரன் கோஷம் போட்டவாறு, கறுப்புக் கொடியை அசைத்துக் கொண்டே முன்னோக்கி வேகமாக ஓடினான்.

கோஷங்கள் உரத்த குரலில் முழங்கின.

கறுப்புக் கொடிகள் சுற்றிலும் தெரிந்தன.

கோஷங்கள் நிறைந்த ஊர்வலம், அமைச்சர்மார்களின் காரை நோக்கி வேகமாகச் சென்றது.

அமைச்சர்களைச் சுற்றி போலீஸ்காரர்கள் கோட்டை அமைத்து நின்றார்கள்.

அடி, அடி, அடி!

மக்கள் கூட்டம் சிதறி ஓடியது!

அமைச்சர்கள் மேடையில் போய் உட்கார்ந்தார்கள். கோவிந்தன் முதலாளி அமைச்சர்களுக்கு மாலைகள் அணிவித்தார். சாக்கோ முதலாளி மாலைகள் அணிவித்தார். ஈழவர்கள் அமைப்பின் தலைவர், நாயர்கள் அமைப்பின் தலைவர், வாசக சாலையின் செக்ரட்டரி, தேநீர்க் கடை நாராயணன் நாயர் - எல்லோரும் மாலைகள் அணிவித்தனர்.

அமைச்சர்கள் உரையாற்றினார்கள். அதைக் கேட்டவர்கள் கைகளைத் தட்டினார்கள்.

அமைச்சர்களை வரவேற்பதற்காகச் சென்ற ஊர்வலம், திருமணப் பந்தலை நோக்கித் திரும்பியது. பந்தலின் வாசலில் ரவீந்திரன் அமைச்சர்களுக்கு மாலைகள் அணிவித்து வரவேற்றான்.


வாசுப்பணிக்கன் மாதவிச் சாணாட்டியின் காதில் முணுமுணுத்தார்.

‘‘பார்த்தியாடி! பாரு...’’

‘‘எல்லாம் அவளோட அதிர்ஷ்டம்!’’

முகூர்த்த நேரம் வந்தது. வாத்தியக் கருவிகள் முழங்குவதற்கு மத்தியில் ரவீந்திரன் இந்திராவின் கழுத்தில் தாலியைக் கட்டினான். இந்திரா ரவீந்திரனின் கழுத்தில் மலர் மாலையை அணிவித்தாள்.

அமைச்சர்கள் புதுமணத் தம்பதிகளை நல்ல உடல் நலத்துடனும், வசதிகளுடனும் நீண்ட காலம் குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.

சந்தை சந்திப்பிலிருந்து ஒரு போலீஸ் வேன் நகரத்தை நோக்கிச் சென்றது. வேனுக்குள்ளிருந்தவாறு பாலசந்திரன் மற்றும் அவனுடைய நண்பர்களின் கோஷ முழக்கம் கேட்டது.

‘‘கொலைகார அமைச்சரே, திரும்பிச் செல்!’’

11

று மாதங்கள் கடந்தன.

அமைச்சரவை கவிழ்ந்தது.

கவிழ்ந்ததா? கவிழ்க்கப்பட்டதா?

கவிழ்க்கப்பட்டது. கவிழ்ந்தது.

குடியரசுத் தலைவரின் ஆட்சி வந்தது.

தேர்தல் வந்தது.

பாலசந்திரன் வேட்பாளர்.

ரவீந்திரன் வேட்பாளர்.

போட்டி - முற்போக்குக் கட்சிக்கும் பிற்போக்குக் கட்சிக்குமிடையே பலமான போட்டி!

முற்போக்குக் கட்சி வெற்றி பெற்றது.

பாலசந்திரன் வெற்றி பெற்றார்.

முற்போக்குக் கட்சி அமைச்சரவை அமைத்தது.

பாலசந்திரன் அமைச்சராக ஆனார்.

அமைச்சரின் தந்தை வேலாயுதன் சாணார்.

அமைச்சரின் சகோதரிகள் சுசீலாவும் பத்மாவும்.

சுசீலா மற்றும் பத்மாவின் திருமணம் - ஒரே முகூர்த்தத்தில் மாலேத்து இல்லத்தில்.

யார் மருமகன்கள்?

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்! ஐ.ஏ.எஸ். படித்தவர்கள்! மாலேத்து வீட்டிலிருந்து பெரிய பந்தல் கட்டப்பட்டது. ரவீந்திரனின் திருமணப் பந்தலைவிடப் பெரிய பந்தல்! பந்தலை அலங்கரிப்பதற்குத் திருவனந்தபுரத்திலிருந்து விற்பன்னர்கள் வந்திருந்தார்கள்.

ஊர்க்காரர்கள் எல்லோருக்கும் விருந்து, அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் அதிகாரிகளுக்கும், முதலாளிமார்களுக்கும், குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேநீர் விருந்து.

அமைச்சர் வருகிறார்!

அமைச்சர்கள் வருகிறார்கள்.

‘ஊர்க்காரரான அமைச்சருக்கு. ஊர்க்காரர்களின் வரவேற்பு!’- கயிறு பிரிக்கும் தொழிலாளிகள் சங்கத்தின் நோட்டீஸ் அது.

‘மக்களுக்கான அமைச்சர்களுக்கு, மக்கள் அளிக்கும் வரவேற்பு!’ - விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் நோட்டீஸ்.

‘மக்கள் வாசக சாலையின் முதல் வருட விழாவை அமைச்சர் பாலசந்திரன் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் தலைமை தாங்குகிறார். வாசக சாலையின் தலைவர் ரவீந்திரனின் வரவேற்புரை’ - இது இன்னொரு நோட்டீஸ்.

அமைச்சர்களை வரவேற்க, சந்தை சந்திப்பில் மேடை தயாரானது. மக்கள் வாசக சாலையின் வருட கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் முடிந்தன.

திருமண நாளன்று பொழுது புலரும் நேரத்திலிருந்து ஊர் முழுக்கத் திருவிழாக் கோலம் தெரிந்தது. பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் சந்தை சந்திப்பில் கூடினார்கள்.

போலீஸ்காரர்கள் திரண்டு நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார்கள்.

போலீஸ் விசில்! அமைச்சர்களின் கார்கள் வந்து கொண்டிருந்தன. மக்கள் ‘ஜிந்தாபாத்’ முழங்கினார்கள்.

அமைச்சர்கள் மேடையில் போய் உட்கார்ந்தார்கள். மாலை அணிவிப்பு ஆரம்பமானது.

முதலில் கொச்சப்பன் முதலாளி மாலை அணிவித்தார். மக்கள் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.

இரண்டாவதாக சாக்கோ முதலாளி.

மூன்றாவதாக கோவிந்தன் முதலாளி.

நாயர்கள் அமைப்பின் தலைவர்.

ஈழவர்கள் அமைப்பின் செக்ரட்டரி.

வாசக சாலையின் செக்ரட்டரி.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் செக்ரட்டரி.

கயிறு பிரிக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் செக்ரட்டரி.

தொடர்ந்து கைதட்டல்கள். தொடர்ந்து ஜிந்தாபாத்.

பொது வரவேற்பு முடிந்து அமைச்சர் வாசக சாலையின் வருடக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். வாசக சாலையின் தலைவர் ரவீந்திரன் வரவேற்றான். ஒவ்வொரு அமைச்சர்களையும் தனித்தனியாக கூறி வரவேற்றான். இறுதியில், அமைச்சர் பாலசந்திரனை வரவேற்றான்.

‘‘நம்முடைய ஊர்க்காரரும், நம்முடைய சந்தோஷத்திலும் கவலையிலும் பங்குகொள்ளக் கூடியவரும், மாலேத்து வேலாயுதன் சாணாரின் ஒரே மகனும், நம்முடைய மதிப்பிற்கு உரியவருமான அமைச்சர் பாலசந்திரனை இந்த வாசக சாலையின் சார்பாகவும், என் சார்பாகவும், இந்த ஊர்க்காரர்களின் சார்பாகவும் நான் வரவேற்கிறேன்.’’

கைத்தட்டல் நீண்டநேரம் நீடித்தது.

அமைச்சர் பாலசந்திரன் தன்னுடைய தொடக்க விழா உரையில் இப்படிக் கூறினார்:

‘‘என் பக்கத்து வீட்டுக்காரரும், கொச்சப்பன் முதலாளியின் தலைமகனும், என்னுடைய நண்பரும், மிகவும் நெருங்கிய சொந்தக்காரருமான ரவீந்திரன் என்னைப் பற்றிக் கூறிய நல்ல வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.’’

கைத்தட்டல் நீண்டநேரம் நீடித்தது.

கணக்குப் பிள்ளை சங்கரப் பிள்ளைக்கு அருகில் நின்றிருந்த ஒரு மனிதன் மெதுவான குரலில் கேட்டான்:

‘‘அவங்க இப்போ சொந்தக்காரர்கள் ஆயிட்டாங்க... அப்படித்தானே?’’

‘‘ஆமா... அது அப்படித்தானே?’’

‘‘முன்னாடி அவங்க ஒருத்தருக்கொருத்தர் பெரிய எதிரிகளாக இருந்தார்களே!’’

‘‘அதுதான் அரசியல்... அரசியல்!’’

‘‘அரசியல்னு சொல்லப்படுறது இதுதான்... அப்படித்தானே?’’

‘‘பிறகு என்ன?’’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.