Logo

சாமக்கோழி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6541
saamakozhi

நான் ஒரு சாமக்கோழி. இரவு நேரத்தில் மொத்த சிறையும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய அறையில் விழித்துக் கொண்டிருப்பேன் - ஆந்தையைப் போல. ஆந்தை அல்லது சாமக்கோழி.

இந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கிறேன். சாமக்கோழியான எனக்கு இங்கே தனி மரியாதை இருக்கிறது. நான் ஒரு மனிதனைக் கொலை செய்தவன். நான் மரண தண்டனை விதிக்கப்பட்டவன்.

இங்கு இரவு நேரங்களில், நான் கொலை செய்த மனிதனின் ஆவி வருவதுண்டு. அப்போது நான் வியர்வையில் குளித்துப் போவேன். நரம்புகளில் பயத்தால் உண்டான குளிர் பரவும். நான் கயிற்றின் நுனியில் தொங்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய பயம் முடிவுக்கு வரும்.

எல்லோருக்கும் என்மீது ஏன் இந்தப் பச்சாதாபம்? எனக்கு இப்போது இருபத்து நான்கு வயது. அந்த வயதை நினைத்தா எல்லோரும் என்மீது பரிதாபப்படுகிறார்கள்? எனக்கு ஐம்பது வயது நடக்கிறது என்றால் யாராவது பரிதாபப்படுவார்களா?

இப்போது-

சிறை சூப்ரெண்ட்டின் பச்சாதாபம்... தலைமை வார்டருக்கும் மற்ற வார்டர்களுக்கும் பச்சாதாபம்... சிறை டாக்டருக்கு பச்சாதாபம்... அவ்வப்போது எனக்கு ஆறுதல் கூறுவதற்காக வரும் பாதிரியாருக்கு பச்சாதாபம்... இவற்றையெல்லாம்விட ஒருமுறை இங்கு வந்த சிறை ஐ.ஜி.கூட தன்னுடைய பரிதாப உணர்ச்சியை மறைத்து வைக்கவில்லை.

சிறை ஐ.ஜி. மிகவும் நல்லவர்.

மிடுக்கான ஒரு காவல்துறை அதிகாரி. ஒரு ஐ.பி.எஸ். படித்த மனிதர்.

ஒருநாள் காலையில் அவர் வந்தார். அவருடன் அவருடைய இரண்டு குழந்தைகளும் வந்திருந்தார்கள். ஏழெட்டு வயதைக் கொண்ட ஆண் குழந்தையும் நான்கைந்து வயது இருக்கக் கூடிய பெண் பிள்ளையும். பார்வையாளர்களில் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய சிறார்கள்.

சிறை ஐ.ஜி. கேட்டார்: ‘‘ஜோசப், நீ நல்லா இருக்கியா?’’

எனக்குச் சிரிப்பு வந்தது. நல்ல கேள்வி! மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்னிடம் கேட்கவேண்டிய கேள்விதான். சிரிப்பை அடக்கிக் கொண்டு நான் சொன்னேன்:

‘‘என்னுடைய நிலைமையில் இருக்கும் ஒரு ஆள் எந்த அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிக்கலாமோ, அந்த அளவுக்கு நான் சந்தோஷத்தை அனுபவிக்கிறேன், சார்.’’

‘‘உணவு?’’

‘‘புகார் சொல்ற அளவுக்கு இல்ல சார்.’’

‘‘சிறை அதிகாரிகளின் நடவடிக்கைகள்?’’

‘‘புகார் இல்லை சார்.’’

நான் இரும்புக் கம்பிகள் வழியாக என் கையை நீட்டினேன். நம்புங்கள். நான் ஒரு பாவம். அழகான எதையும் தொட விரும்புகிற பாவம்.

‘‘சார்...?’’

‘‘என்ன ஜோசப்?’’

‘‘உங்க பிள்ளைகள்தானே?’’

‘‘ஆமா...’’

‘‘நான் இவங்களைத் தொடலாமா சார்?’’

‘‘தாராளமா...’’ - ஐ.ஜி. புன்னகைத்தார். ஆனால், பிள்ளைகள் விலகி நின்றனர். அவர்களின் கண்களில் பயம் இருந்தது. நான் கொலைகாரன் என்ற விஷயம் அந்தப் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்குமோ? முன்கூட்டியே யாராவது அதைக் கூறியிருப்பார்களோ?

ஐ.ஜி. போனபிறகு தலைமை வார்டர் சங்குவண்ணன் என் சிறை அறைக்கு முன்னால் வந்தார். பெயர் சங்குப்பிள்ளை. எல்லோரும் சங்குவண்ணன் என்றுதான் அழைப்பார்கள். நரைவிழுந்த மீசைக்குச் சொந்தக்காரர்.

‘‘டேய் ஜோசப், நீ அந்தப் பிள்ளைகளை பயமுறுத்தினியா?’’

‘‘எந்தப் பிள்ளைகள்?’’

‘‘ஐ.ஜி.யோட பிள்ளைகளை. நான்தான் பார்த்தேனே! அழுதுகிட்டே போறாங்க.’’

‘‘கொஞ்சம் தொடட்டுமான்னு கேட்டேன்.’’

‘‘அது போதுமே! பிள்ளைகளுக்கு இன்னைக்கு காய்ச்சல் வரப்போகுது. நீ ஒருத்தனைக் கொலை செய்தவன்ற உண்மை பிள்ளைகளுக்குத் தெரியும்.’’

‘‘அது எப்படித் தெரியும் சங்கு வண்ணா?’’

‘‘ஐ.ஜி. முதல்ல அலுவலகத்துல ரெஜிஸ்டரையும் ஃபைலையும் பார்த்துக் கொண்டு இருந்தப்போ, பிள்ளைகளுக்குக் காட்சிகளைச் சுற்றிக் காட்டினது குட்டிக் குறுப்புதான் அவர் சொல்லியிருப்பார்.’’

குட்டிக் குறுப்பு என்ற வார்டரின் உண்மைப் பெயர் கருணாகரக் குறுப்பு. அவர் ஒரு ஒற்றை மனிதர். ஒரு பீமன் என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும். பெரிய உடம்பைக் கொண்டவர் என்பதால் யாரோ அவருக்கு குட்டிக் குறுப்பு என்று பெயரிட்டிருக்க வேண்டும்.

அவரைப் பார்க்கும்போது பயம் தோன்றும். ஆனால், குட்டிக் குறுப்பின் மனம் தும்பைப்பூவை ஒத்தது. சில நேரங்களில் எனக்கு ரகசியமாக பீடி தந்திருக்கிறார். வேறுசில சுதந்திரங்களையும் எனக்கு அவர் அனுமதித்திருக்கிறார். குட்டிக் குறுப்பு தந்த தாளில்தான் நான் எழுதுகிறேன். கொலைக் குற்றவாளியான நான் மற்ற குற்றவாளிகளுடன் பேசக்கூடாது என்றும்; அவர்களுடன் சேர்ந்து இருக்கக் கூடாது என்றும் சட்டம் கூறுகிறது. எனினும் அவர்களை வேலை செய்யக் கொண்டு செல்லும்போது, சில நேரங்களில் என்னையும் குட்டிக்குறுப்பு கொண்டு செல்வார். நான் நிலத்தைக் கொத்துவேன். புல் வெட்டுவேன். வேறு வேலைகளையும் செய்வேன். தனியாகச் சிறை அறைக்குள் கிடக்கும் எனக்கு சந்தோஷத்தை அளித்த நிமிடங்கள் அவை.

ஒருநாள் குட்டிக் குறுப்பு குற்றவாளிகளை வைத்துப் பூந்தோட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். நானும் அதில் இருந்தேன். நான் மிகவும் ஆர்வத்துடன் பாத்திகள் அமைத்தேன். விதைகளைத் தூவினேன். அப்போது வார்டர் ஹமீத் அங்கே வந்தார். ஹமீத் கேட்டார்: ‘‘டேய் ஜோசப், இது பூ பூத்து, அதைப் பார்க்குறதுக்கு நீ இருப்பியா?’’

நான் சொன்னேன்: ‘‘நான் இல்லைன்னா, வேற யாராவது பார்ப்பாங்க. அது போதாதா?’’

ஹமீத் சொன்னார்: ‘‘ஜோசப், உன்னை வருத்தப்பட வைக்கணும்ன்றதுக்காக நான் அந்தக் கேள்வியைக் கேட்கல தெரியுதா? இவையெல்லாம் பூத்தபிறகுதான் நீ போவே!’’

சங்கு வண்ணனுக்கும், குட்டிக் குறுப்பிற்கும் ஹமீத்திற்கும் சிறை சூப்ரெண்ட் கோமஸிற்கும் புரோகிதருக்கும் நான் ஒரு ஆச்சரியமான மனிதன். நான் இங்கு வந்து நூற்றி இருபது நாட்கள் ஆகி விட்டன. என்னுடைய முடிவுக்குப் பல நாட்கள் தீர்மானிக்கப்பட்டன. நடக்கவில்லை. என்னுடைய முடிவு மாறி மாறிப் போய்விட்டது. கடவுளின் சவுகரியக் குறைவு. என்னுடைய சிறு சிறு உடல்நலக் கேடுகள் - இவைதான் அதற்குக் காரணம்.

என்னுடைய முடிவு இப்படி நீண்டுகொண்டு போவது ஒரு ஆச்சரியமான விஷயம்தானே? வேறு காரணங்களைக் கொண்டும் நான் ஒரு ஆச்சரியமான பிறவியாக அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

நான் மலர்களை விரும்புகிறேன். சிறு குழந்தைகளைத் தொட ஆசைப்படுகிறேன். அவ்வப்போது பாட்டுகளை முணுமுணுக்கிறேன். நீல வானத்தைப் பற்றியும் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவதைப் பற்றியும் பேசுகிறேன். இப்படிப்பட்ட நான் ஒரு மனிதனை எப்படிக் கொலை செய்தேன். அதற்கான தைரியம் எனக்கு எப்படி வந்தது?

சங்கு வண்ணன் இருக்கும்போது ஹமீத் ஒருநாள் கேட்டார்: ‘‘எப்படி உனக்கு அந்த தைரியம் வந்தது?’’

வழக்கைப் பற்றிய முழுத் தகவல்களும் குட்டிக் குறுப்பிற்கும் சங்கு வண்ணனுக்கும் சூப்ரெண்ட் கோமஸுக்கும் நன்றாகத் தெரியும். அதாவது - நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்த தகவல்கள்.


நள்ளிரவிற்கும் ஒரு மணிக்கும் நடுவில் உள்ள நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜோசப், லட்சுமணப் பணிக்கரைத் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறான். இது நடந்தது பணிக்கரின் காட்டேஜில். அதற்கான தைரியம் எனக்கு எப்படி வந்தது?

இரவில் பணிக்கரின் ஆவியைப் பார்த்து பயப்படும் நான்...

எப்படி தைரியம் வந்தது? எனக்கே அது புரியவில்லை. நான் கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே நின்றிருந்தால், பணிக்கர் என்னைக் கொன்றிருக்க மாட்டாரா?

நான் அமைதியாக இருந்தபோது சங்கு வண்ணன் சொன்னார்: ‘‘பல நேரங்கள்ல எனக்குப் பலரையும் கொல்லணும்னு தோணியிருக்கு. இந்த உலகத்தில் வாழ எந்த வகையிலும் தகுதியே இல்லாத குப்பைகளை... ஆனால், உரிய நேரத்தில் கை செயல்படாது...’’

அப்படியென்றால் ஒரு ஆளைக் கொல்வதற்கு தைரியம் வேண்டுமா?

‘‘ஜோசப், நான் இங்கே தலைமை வார்டராக வந்த பிறகு நான்குபேரைத் தூக்குல போட்டிருக்கு. அவங்கள்ல ரெண்டுபேர் எந்தத் தப்பும் செய்யாத நிரபராதிகள்.’’

சங்குவண்ணன் இப்படிச் சொன்னதும் ஹமீத் என்னையே வெறித்துப் பார்த்தார்.

‘‘போலீஸ்காரர்கள் சாட்சிகளை வைத்து நடக்காததை நடந்ததா சொல்ல வைப்பாங்க. நீதிமன்றம் அதை நம்பும். பொய்யாக சாட்சி சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும்.’’

ஆனால், எனக்கு எதிராக சாட்சி சொன்ன சுமதியைக் குற்றம் கூற முடியுமா? தன்னுடைய தந்தையை மறக்கவும் என்னைக் காப்பாற்றவும் முதலில் அவள் தயாராகத்தான் இருந்தாள். பிறகு அவள் எனக்கு எதிராக ஆகிவிட்டாள் - நான் வேறு யாரோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாக அவள் நினைத்தபோது....

சங்குவண்ணன் விசாரித்தார்: ‘‘ஜோசப், உண்மையைச் சொல்லு. நீ லட்சுமணப் பணிக்கரைக் கொலை செய்தியா? இல்லாட்டி வேற யாருக்காகவாவது கொலைப்பழியை ஏத்துக்கிட்டியா?’’

‘‘நான்தான் கொலை செய்தேன்.’’

‘‘பணிக்கரின் மகளை நீ காதலிச்சியா?’’

‘‘உறுதியா சொல்ல முடியாது.’’

‘‘அவள் உன்னைக் காதலிச்சா... அப்படித்தானே?’’

‘‘காதலிச்சிருக்கலாம்...’’

ஹமீத் இடையில் புகுந்து சொன்னார்: ‘‘காதலிச்சா, இப்பவும் காதலிக்கிறா. அதனால்தானே அவள் ஓடி நடக்குறா?’’

‘‘ஓடி நடக்குறாளா? எதற்கு?’’ - நான் கேட்டேன்.

‘‘கருணை மனுவை ஏத்துக்கணும்னு. அதைப்பற்றி உன்கிட்ட சொல்றதுக்கு அவள் பார்வையாளர்கள் நேரத்துல இங்கே பல தடவைகள் வந்தாள். ஆனால் நீ அவளைப் பார்க்க சம்மதிக்கல. என்ன காரணம்?’’ - ஹமீத் கேட்டார்.

‘‘நான் கையெழுத்துப் போடாத கருணை மனுவா? கருணை மனுவில் கையெழுத்துப் போட அவளுக்கு என்ன உரிமை இருக்கு?’’ - நான் கேட்டேன்.

‘‘ஜோசப், நீ சில விஷயங்களை யாருக்கும் தெரியாம மறைச்சு வைக்கிறே. அவள் உன்னோட மனைவிதானே? ம்... எது எப்படி இருந்தாலும் காரியம் நடக்கும். தூக்குல தொங்கறதுல இருந்து விடுதலை கிடைக்கும். அதற்குப் பதிலாக ஆயுள் தண்டனை.’’ - சங்குவண்ணன் சொன்னார்.

‘‘அதனால் என்ன பயன்?’’ - நான் கேட்டேன்.

‘‘இது என்ன கேள்வி? கழுத்தில் கயிறு ஏறலைன்றது எவ்வளவு பெரிய விஷயம்! பிறகு... நல்ல நடத்தைகளின் காரணமா தண்டனை குறைக்கப்படும். அதிகபட்சம் போனால் எட்டோ ஒன்பதோ வருடங்கள் கிடைச்சா பெரிய விஷயம்! இதற்கிடையில் பல தடவைகள் பரோலில் போயிட்டு வரலாம்’’ - சங்கு வண்ணன் சொன்னார்.

‘‘வேண்டாம் சங்கு வண்ணா! அது ஆபத்தான விஷயம். பரோல்ல வெளியே போனால், நான் யாரையாவது கொன்னுடுவேன். ஒருவேளை, என் மனைவி என்று சொல்லப்படுகிற அந்தப் பெண்ணையேகூட...’’ - நான் சொன்னேன்.

2

வாரத்தில் ஒரு நாள் சிறை டாக்டர் நாயர் கைதிகளைப் பார்ப்பதற்காக வருவார். நல்ல மனிதர். நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். ஒருநாள் டாக்டர் கேட்டார்: ‘‘ஜோசப், அடுத்த பிறவியில் என்னவா ஆகணும்னு நீ ஆசைப்படுற?’’

‘‘அடுத்து ஒரு பிறவி இருக்குறது உண்மைன்னா, அதுல நான் ஒரு டாக்டரா ஆகணும்.’’

‘‘எஞ்சினியரா ஆனா போதாதா?’’

‘‘போதாது! எஞ்சினியரா ஆனா, மனிதர்களின் வேதனைகளை மாற்ற முடியுமா?’’

‘‘டாக்டர்களைப் பற்றி இந்த அளவுக்கு நல்ல அபிப்ராயம் பலருக்கும் இல்லை ஜோசப். நாங்க மனிதர்களைக் கொல்லுறவங்கன்னுல்ல பலரும் நினைச்சிட்டு இருக்காங்க.’’

‘‘அடுத்து ஒரு பிறவி... அப்படியொண்ணு இருக்குதா டாக்டர்?’’

‘‘நான் ஒரு இந்து... அந்த வகையில் பார்த்தால் மறுபிறவின்னு ஒண்ணு இருக்குன்னு தான் இருந்து மதம் சொல்லுது, ஜோசப் உனக்கு இன்னொரு பிறவி இருக்குதான்னு பாதிரியார் பீட்டருக்கு அனேகமா தெரியலாம்.’’

‘‘இல்லைன்னுதான் அவர் சொல்றாரு. சரி... அது இருக்கட்டும் டாக்டர். என்னைக் கடைசியா பார்க்குறவங்களோட கூட்டத்துல நீங்களும் இருப்பீங்கள்ல?’’

‘‘மரணச் சான்றிதழ் எழுத வேண்டியவன் நான்தான். நான் இருப்பேன்.’’

‘‘நல்லது... அப்போ என்னை மருத்துவக் கல்லூரியில சேர்க்க உங்களால முடியுமா?’’

‘‘என்ன சொல்ற?’’

‘‘என் பிணத்தை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்துடணும். வகுப்பறையில் மேஜைமீது கிடக்கிற என் இறந்துபோன உடலைச் சுற்றி மாணவர்கள கூட்டமா நிற்பாங்க. அவங்க படிப்பாங்க...’’

‘‘ஜோசப் இது நடக்க வழியில்ல...’’

‘‘காரணம்?’’

‘‘கருணை மனு ஏற்றுக் கொள்ளப்படும். அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். ஜோசப், அந்த இளம்பெண் உன் மனைவியா? அவள் ஏறி இறங்காத இடங்கள் இல்லை. தட்டாத கதவுகள் இல்லை.’’

சுமதி... என் மனைவியா?

எல்லோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? எனக்கு எதிராக சாட்சி சொன்ன சுமதி... நான் கொலை செய்தவனின் மகள்...

ஒருநாள் பாதிரியார் வந்தபோது நான் கேட்டேன்: ‘‘மரணத்திற்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் பிறப்பார்களா?’’

‘‘இல்லை’’ என்று உறுதியான குரலில் பாதிரியார் பீட்டர் சொன்னார்; ‘‘மறுபிறவி என்பது ஒரு மூடநம்பிக்கை. கிறிஸ்துவர்களின் ஆன்மா கர்த்தரிடம் போய்ச் சேர்ந்து விடுகிறது.’’

நான் கிறிஸ்துவனா?

நான் எங்கிருந்து ஆரம்பமானேன்? எனக்கே தெரியவில்லை.

விசாரணை நடக்கும்போது நீதிமன்றத்தின் பெஞ்ச் க்ளார்க் என் பெயரையும் என்னுடைய தந்தை - தாய் ஆகியோரின் பெயர்களையும் கேட்டான். என்னுடைய பெயரை மட்டும் நான் சொன்னேன். மீண்டும் தந்தை - தாய் ஆகியோரின் பெயர்களைக் கேட்டபோது, நான் ‘‘எனக்குத் தெரியாது’’என்று கூறினேன். நான் திமிர்த்தனத்தைக் காட்டுகிறேன் என்று அந்த பெஞ்ச் க்ளார்க் நினைத்திருப்பானோ? துளைக்கிற மாதிரி என்னைப் பார்த்துக கொண்டு அவன் தன் கேள்வியைத் திரும்பவும் கேட்டான்.

அப்போது நான் சொன்னேன்: ‘‘அப்பா பெயர் ராக்கி. அம்மாவின் பெயர் கத்ரீனா.’’

உண்மையைக் கூற வேண்டும். உண்மையை மட்டுமே கூறவேண்டும். உண்மையைத் தவிர வேறு எதையும் கூறக் கூடாது... இப்படிக் கூறும் நீதிமன்றத்திற்கு முன்னால் நான் பொய்யைச் சொன்னேன். ஆனால் நான் சொன்னது முழுமையான பொய் அல்ல. ராக்கி என்பது என்னுடைய வளர்ப்புத் தந்தையின் பெயர். கத்ரீனா என்பது என்னுடைய வளர்ப்புத் தாயின் பெயர்.

எனினும் கூறுகிறேன்... என்னுடைய பிறவிக்குக் காரணமானவர்கள் யார் என்று இப்போதுகூட எனக்குத் தெரியாது.


ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் நான் கிடந்திருக்கிறேன். ராக்கி ஒரு சலவைத் தொழிலாளி. கறுத்த நிறம். மெலிந்த உடல். எழுந்து நிற்கும் இடுப்பு எலும்புகள். புகையிலைக் கறை படிந்த பற்கள். ராக்கியை நான் ‘அப்பா’ என்று அழைத்தேன். கத்ரீனாவை நான் ‘அம்மா’ என்று கூப்பிட்டேன். தினமும் என் அம்மா கூடையைத் தூக்கிக் கொண்டு நடப்பாள். கோழி முட்டைகளையும் முந்தின நாள் சந்தையில் வாடிய காய்கறிகளையும் வீடுகளில் கொண்டுபோய் விற்பாள்.

தினமும் அப்பாவும் அம்மாவும் பிரார்த்தனை செய்வார்கள். என்னைப் பிரார்த்தனை செய்ய வைப்பார்கள்.

ரெயில்வே தண்டவாளத்தைத் தாண்டியிருந்த புறம்போக்கு நிலத்தில் நெருக்கமாக இருந்த குடிசைகளில் ஒன்றுதான் நாங்கள் இருந்தது. வறுமை. எனினும் அப்பாவும் அம்மாவும் சந்தோஷமாக இருந்தார்கள். அன்றைக்குத் தேவைப்படும் உணவை கடவுள்தான் தருகிறாரே!

அந்தப் புறம்போக்கு நிலத்தை, குடிசைகள் நிறைந்த அந்தப் பகுதியை, ‘பாதாளம் காலனி’ என்று முதலில் அழைத்தது யாராக இருக்கும்?

பாதாளம் காலனியில் எப்போதும் ஆரவாரம்தான். நிர்வாணமாக இருக்கும் குழந்தைகள், வாய்க்கு வந்ததைப் பேசும் பெண்கள், கள்ளச் சாராயம், மனைவிகளை அடிக்கும் கணவன்கள், அவ்வப்போது அங்கு வரும் போலீஸ்காரர்கள், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் தாண்டம்மா என்ற தடிச்சி...

அங்கு இருக்கும் சிறுவர்களில் ஒருவன் பத்ரோ. எப்போதும் கையில் கவண் வைத்துக் கொண்டு நடந்து திரிபவன் அவன். காகங்களின், நாய்களின் விரோதி. அவனை என்னால் மறக்க முடியாது.

அந்தக் காலனியில், வழக்கும் தேவையில்லாத பிரச்சினைகளும் நுழையாத ஒரேயொரு குடிசை எங்களுடையதுதான். அமைதி தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இடம்... ஒரு சிறு தீவு...

நான் ஆரம்பத்திலேயே ஒரு தனிமை விரும்பியாக இருந்துவிட்டேனோ? நான் பார்க்க நன்றாக இருக்கிறேன் என்று முதலில் சொன்னவள் தாண்டம்மாதான். கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னைத் தன்னுடைய குடிசைக்கு அழைத்த ஒரு சாயங்கால வேளையில்...

நான் எதற்காகப் போனேன்? அப்படி அங்கு என்னை ஈர்த்ததுதான் என்ன?

‘‘குடி, மகனே! நல்ல சுவையா இருக்கும்.’’ - தாண்டம்மா சொன்னார். அது - சாராயம். என் வயிறு பற்றி எரிந்தது. தலை சுற்றியது.

‘‘இன்னைக்கு நீ வீட்டுக்குப் போக வேண்டாம். நீ எங்கேயாவது போய் வாந்தி எடுத்தேன்னா, ராக்கி வாளை எடுத்துடுவாரு’’ -தாண்டம்மா சொன்னாள்.

அன்று இரவு அவளுடைய குடிசையில் என்ன நடந்தது? ஒன்று மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறது. அவ்வப்போது தாண்டம்மா என்னைத் தடவிக் கொண்டிருந்தாள். அடிக்கொருதரம் அவள் சொன்னாள்: ‘‘ஜோசப், நீ நல்லா இருக்கேடா. பார்க்க நீ நல்லாவே இருக்கே...’’

3

கல் முழுவதும் நான் தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருப்பேன். தேவரையிலிருந்து ஐலண்டில் இருக்கும் வார்ஃபுகள் வரை. கிடைக்கும் வேலையைச் செய்வேன். சுமை தூக்க வேண்டும் என்றால் தூக்குவேன். வண்டி இழுக்க வேண்டுமென்றால் இழுப்பேன். எப்படியாவது ஒரு துறைமுகத் தொழிலாளியாக ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். கப்பல்கள் வந்து நிற்பதையும் போவதையும் நான் பார்த்துக் கொண்டே நின்றிருப்பேன். வரும் கப்பல்களை, போகும் கப்பல்களை நம்பியிருக்கும் துறைமுகம் உற்சாகத்துடன் எழுகிறது. துறைமுகத்திற்குப் புத்துயிர் கிடைக்கிறது.

என்னென்ன சலனங்கள், சத்தங்கள்!

சில நேரங்களில் நான் டெர்மினஸ் ரெயில்வே ஸ்டேஷனில் சுற்றிக் கொண்டிருப்பேன்.

சுமப்பதற்கு ஒரு பெட்டி கிடைத்தால்...!

ஆனால், அங்க நிரந்தரமாக இருக்கும் போர்ட்டர்கள் என்னை வெறுப்புடன் பார்ப்பார்கள். அவர்கள் என்னை சுமை தூக்கவிட மாட்டார்கள். ஒரு நாள் புகை வண்டியிலிருந்து இறங்கி வந்த ஒரு வெளிநாட்டுக்காரனின் பெட்டியை நான் அவனிடமிருந்து வாங்கினேன். அப்போது சிவப்பு ஆடையும் பேட்ஜும் அணிந்த ஒரு போர்ட்டர் என் கைகளிலிருந்து அந்தப் பெட்டியைப் பிடுங்கினார். என்னை ஓங்கி ஒரு அடி அடித்தார். நான் அந்த மனிதரைத் திருப்பி அடித்திருக்கலாம். ஆனால், அடிக்கவில்லை. அவருக்கு முன்னால் நான் தவறு செய்தவன் ஆயிற்றே! அவருடைய தொழிலை நான் தட்டிப் பறிக்க முயற்சித்தேன் என்று அவர் நினைத்திருக்கலாம். நான் அமைதியாக நின்றிருந்தது அந்த போர்ட்டரின் மனதைத் தொட்டிருக்குமோ? இல்லாவிட்டால் எதற்கு ‘இங்கே நில்லு, நான் வர்றேன்’ என்ற அர்த்தத்தில் அவர் ஏன் சைகை காட்ட வேண்டும்? நான் அங்கேயே காத்திருந்தேன். திரும்பி வந்தபோது அவர் சொன்னார்:

‘‘மகனே, மன்னிச்சிக்கோ... வா... ஒரு தேநீர் அருந்துவோம்.’’

தேநீர் அருந்தும்போது அவர் சொன்னார்: ‘‘என் பேரு அடி. நீ...?’’

‘‘ஜோசப்.’’

‘‘ஜோசப், உனக்கு ஏதாவது கஷ்டம் வர்றப்போ, என்னைத் தேடி வந்திடு.’’

அப்படித்தான் அடி என் நண்பர் ஆனார்.

இது நடந்து சில வாரங்களுக்குள் அதே டெர்மினஸில் எனக்கு இன்னொரு நண்பர் கிடைத்தார். அவர் பெயர் எலியாஸ். அடர்த்தியான கண்ணாடி. தோளில் நீளமான வாரைக் கொண்ட பேக். வயது? வயது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மாதிரியான தோற்றம்.

ஒரு புத்தகக் கடைக்கு முன்னால் வைத்துதான் நான் எலியாஸைச் சந்தித்தேன். மாலை மங்கியிருந்தது. அன்று ஒரு தேநீரைத் தவிர, நான் வேறு எதையும் சாப்பிடவில்லை. கடுமையான பசி. புத்தகக் கடையில் இருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் எலியாஸ். எதிர்பாராமல் ஒரு புத்தகம் கீழே விழுந்தது. நான் அதை எடுத்துக் கொடுத்தேன். மேலட்டையில் அச்சடிக்கப்பட்டிருந்த விலையை நான் பார்த்தேன். என்னையே அறியாமல் நான் சொன்னேன்: ‘‘இரண்டு சாப்பாட்டுக்கான காசு...’’

‘‘என்ன?’’ - அவர் கேட்டார்.

‘‘இதோட விலையைச் சொன்னேன். பத்து ரூபாய்...’’

‘‘உன் பேர் என்ன?’’

‘‘ஜோசப்.’’

‘‘நீ இன்னைக்கு சாப்பிடல. அப்படித்தானே? ம்... என்கூட வா.’’

தான் தேர்ந்தெடுத்த புத்தகங்களை அவர் பைக்குள் வைத்தார். அப்போது புத்தகக் கடைக்காரன் சொன்னான்: ‘‘எலியாஸ் சார்... இதோடு நூற்று எழுபது ரூபாய்க்குமேல ஆயிடுச்சு...’’

எலியாஸ் சிரித்தார்: ‘‘தர்றேன் பிள்ளேச்சா... கணக்கை முடிச்சிடுறேன். புரட்சி வரட்டும்...’’

பிள்ளேச்சன் கேட்டான்: ‘‘இப்போ எதுவரை வந்திருக்கு!’’

‘‘பால்காட்டி அரண்மனை வரை’’ - தமாஷான குரலில் எலியாஸ் சொன்னார்.

நானும் எலியாஸும் நடந்தோம்.

முன்னால் பார்ப்பவற்றையெல்லாம் கையில் எடுப்பது மாதிரி கையை நீட்டியவாறு எலியாஸ் கேட்டார்: ‘‘ஜோசப் நாம பார்க்குறதெல்லாம் யாருக்குச் சொந்தமானது?’’

‘‘அரசாங்கத்துக்கு... இல்லாட்டி, முதலாளிகளுக்கு.’’

‘‘தப்பு! இவை எல்லாம் நமக்குச் சொந்தமானவை.’’

சாலையில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் கார்கள் - எங்கும் மின்விளக்குகளின் பிரகாசம்... நாங்கள் ஒரு பெரிய ஹோட்டல் ஓரமாக நடந்து கொண்டிருந்தோம்.


ஹோட்டலில் இருந்து பேண்ட் வாத்தியங்களின் இசை முழங்கிக் கொண்டிருந்தது. நான் எட்டிப் பார்த்தேன். கார்கள் வரிசை... நவநாகரீக ஆடைகள் அணிந்த ஆண்களும் பெண்களும்...

‘‘எலியாஸ் அண்ணே, இந்த ஹோட்டலும் நமக்கு சொந்தமானதா?’’

‘‘இப்போது அல்ல... நான் இதைக் கைப்பற்றுவேன். தற்போதைக்கு நாம் பிஸ்மில்லாவிற்குப் போய் ஒரு பிரியாணி வாங்குவோம்... அதைப் பங்கிடுவோம்.’’

எலியாஸ் ஒரு கனவு காணும் மனிதராக இருந்தார்.

நானும் எனக்கென்றிருக்கும் சிறிய சிறிய கனவுகளைக் காணத்தானே செய்கிறேன்? ஏதாவதொரு நிரந்தரத் தொழில் கிடைத்திருந்தால்...! நவநாகரீகமாக ஆடைகள் அணிந்து நடக்க முடிந்திருந்தால்...!

நான் எப்போதாவது ஒருமுறைதான் பாதாளம் காலனிக்குச் செல்வேன். அங்கு போய் என்ன பிரயோஜனம்?

ஒருநாள் என் அப்பா ராக்கி கேட்டார்: ‘‘நீ என்னடா செய்ற? உன்னைப் பார்க்கவே முடியலயே!’’

‘‘இங்குமங்குமாக சுத்துறேன். கிடைக்கிற எல்லா வேலைகளையும் செய்றேன். கர்த்தர் அன்னன்னைக்குத் தேவையான உணவைத் தர்றார் அப்பா!’’

‘‘அது போதும் மகனே. அதைத் தாண்டி எதுக்கு?’’ - என்றாள் அம்மா.

4

வார்ஃபில் நான் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அரை மதிலில் உட்கார்ந்து கொண்டு ஏரியையும் கடலையும் பார்த்து ரசித்தேன். கொச்சியின் இரவுநேர அழகை ரசித்து நடந்த நான் பல நேரங்களில் தெருவிலேயே படுத்து உறங்கிவிடுவேன்.

ஒரு இரவு. நான் திடுக்கிட்டு எழுந்தேன். என்னவோ சத்தங்கள். ஒரு சுங்க இலாகாவுக்குச் சொந்தமான படகு அலைகளைக் கிழித்துக் கொண்டு வேகமாகப் பாய்கிறது. தூரத்தில் நங்கூரம் இட்டு நின்றிருக்கும் கப்பல்களின் வெளிச்சங்கள். அரை மதிலுக்கு அப்பால் இரண்டு படகுகளின் நிழல். என்னவோ நடக்கிறது. என்னவென்று புரியவில்லை. இப்போது அரை மதில் மீது வந்து மோதும் அலைகளின் ‘ஃப்ளாம் ஃப்ளாம்’ சத்தங்கள் மட்டும் கேட்கிறது. நான் மீண்டும் படுத்தேன்... தலையை முழுமையாக மூடிக்கொண்டு.

யாரோ என்னைப் பிடித்துக் குலுக்கினார்கள்.

பார்த்தபோது எனக்கு முன்னால் ஒரு கையில் கத்தியையும் இன்னொரு கையில் ஒரு சுமையையும் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் நின்றிருந்தான். அவன் சட்டையும் நிக்கரும் அணிந்திருந்தான். ஈரத்தில் குளித்திருப்பதைப்போல் அவன் இருந்தான். அவன் தன் கையிலிருந்த சுமையை எனக்கு நேராக எறிந்தான். ‘‘டேய்... இதை பத்திரமா பிடிச்சுக்கிட்டுப் படுத்திரு... நான் பிறகு வர்றேன்...’’ - அவன் சொன்னான்.

‘‘இதுல என்ன இருக்கு?’’ - நான் கேட்டேன்.

‘‘உன் அம்மாவோட...’’ - அவன் கெட்ட வார்த்தையில் பேசினான்.

அப்போது போலீஸின் விஸில் சத்தம் கேட்டது. அவன் ஓடி மறைந்துவிட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் நான் அந்தச் சுமையை உள்ளே வைத்துக்கொண்டு சாய்ந்து படுத்தேன். உடுத்தியிருந்த துணியால் அதை நன்றாக மூடிக்கொண்டேன். பூட்ஸ் சத்தம் கேட்க ஆரம்பித்தது. போலீஸ்காரன் அருகில் வருகிறான். அவன் என் முகத்தில் டார்ச் விளக்கை அடித்தான். கையிலிருந்த லத்தியால் என்னைக் குத்தினான். ‘‘என்னடா? நாயோட மகனே...’’ என்று அவன் கேட்டான். ‘‘ஒண்ணுமில்ல எஜமான்.’’ என்று நான் சொன்னேன். என் நல்ல காலம். அவன் நகர்ந்து போய்விட்டான்.

பொழுது விடியும் நேரத்தில் அவன் வந்தான். சட்டையும் நிக்கரும் அணிந்த கத்தி வைத்திருந்த மனிதன். என்னைக் குலுக்கி எழுப்பிவிட்ட அவன் சொன்னான்: ‘‘நீ பரவாயில்லைடா... நான்தான் சொல்றேன். என் பேரு பப்பூஸ்...’’

போலீஸ்காரனிடம் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதை அருகிலிருந்த ஒரு தார் பீப்பாய்க்குப் பின்னால் மறைந்திருந்து அவன் பார்த்திருக்கிறான்.

அவன் எனக்கு இருபது ரூபாய் தந்தான். நான் ஒரு கைலியும் சட்டையும் வாங்கினேன். நான் ‘பம்போட்’ வியாபாரத்தில் பங்காளியாக ஆவேன் என்று அப்போது நினைக்கவில்லை.

பம்போட் வியாபாரம் பற்றிய பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தவன் பப்பூஸ்தான்.

கப்பல்கள் நங்கூரம் இட்டு நிற்கின்றன. படகில் ஏறி நாங்கள் அங்கே செல்கிறோம். சரக்கு ஏற்றப்பட்ட படகு. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொன்று. பாம்புத் தோல் என்றால் மிகுந்த விருப்பம். சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் அதற்கு நல்ல மார்க்கெட். செருப்பு, பெல்ட் ஆகியவற்றைத் தயாரிக்க பாம்புத் தோல் வேண்டும். அதை நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியாது. மிகப் பெரிய குற்றம் அது! அதைப் படகில் ஏற்றி நாங்கள் கொண்டு செல்கிறோம். சில நேரங்களில் டாலர்... சில நேரங்களில் விஸ்கி... சில வேளைகளில் பெர்ஃப்யூம்... சில வேளைகளில் ப்ரவுன் சுகர்... எது கிடைத்தாலும் எங்களுக்கு பெரிய லாபம்தான். எல்லாவற்றையும் விற்பனை செய்து பணம் தர எங்களுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். பாம்புத் தோல் என்ன, பாகற்காயை ஏற்றிக்கொண்டுபோய் கொடுத்தால்கூட பணம் தருவார்கள். இதில் ஆபத்து இருக்கிறதா என்று கேட்டால்... இருக்கிறது சிறிய அளவில். ஆபத்து இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியுமா? சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்தாலும் பிடிக்கலாம். போலீஸ்காரர்கள்கூட பிடிக்கலாம். பல நேரங்களில் அவர்களிடமிருந்து எளிதாகத் தப்பிவிடவும் செய்யலாம். சிலநேரங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டு இரண்டு வாரங்கள் உள்ளே கிடக்க வேண்டியதிருக்கும். ஆமாம்... சுங்க அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் தங்களின் வேலையை ஒழுங்காகச் செய்வதாகக் காட்டிக் கொள்ள வேண்டாமா?

பப்பூஸும் நானும் நண்பர்களாக ஆனோம். அவன் ஒரு ஜூனியர் ‘கேங்க்’கின் தலைவன் என்பதை நான் புரிந்துகொண்டேன். இரண்டு மூன்று தடவை நான் அவனுடன் சேர்ந்து படகில் சரக்கு ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறேன்.

ஒருநாள் பப்பூஸ் சொன்னான்: ‘‘ஒரு கிரேக்க நாட்டுக் கப்பல் வருது. அடுத்த மாதம்... நம்ம பழைய பார்ட்டிதான். ஆனால், இந்த முறை வியாபாரம் செய்ய பயமா இருக்கு.’’

காரணம் என்ன என்பதை பப்பூஸ் விளக்கினான்: இப்போது கழுகு என்றழைக்கப்படும் மூஸா தனக்கென்று ஒரு ‘கேங்க்’கை உண்டாக்கி வைத்திருக்கிறான். முன்னால் அவன் ஒன்றாக இருந்தவன் தனியாகப் பிரிந்து சென்றபிறகு அவன் தேவையில்லாமல் சண்டைகள் உண்டாக்கிக் கொண்டிருக்கிறான். ஒன்றிரண்டு முறை அவன் பிடிபட்டிருக்கிறான். அதனால் என்ன ஆனது? பலம் குறைந்துவிட்டது. தேவையில்லாமல் அடியும் குத்தும் நடந்தன. நடக்கின்றன. இங்கு பெரிய அளவில் கேங்குகள் இருக்கின்றன. அவர்களால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எங்களுடையதை ஒருவகையான சிறு பையன்களின் விளையாட்டு என்றுதான் அவர்கள் பொதுவாக நினைத்துக் கொள்வார்கள். பெரிய அளவில் இருக்கும் கேங்குகள் கோடிகளில் வியாபாரம் நடத்துவார்கள். எங்களுடையதோ வெறும் ஆயிரங்களில்...

இப்படிப் பல விஷயங்களையும் சொன்ன பப்பூஸ் லோனனின் கதைக்கு வந்தான். ‘‘லோனன் முன்பு இந்தத் துறைமுகத்தை அடக்கி ஆண்ட ஒரு ‘தாதா’.


பெரிய அளவில் வியாபாரம் பண்ணிய கடத்தல்காரன். இப்போது அவன் பற்கள்போன சிங்கம். ஒரு கேங்கிலும் அவன் உறுப்பினராக இல்லை. திருடினான். வெளியே போக வேண்டியதாயிடுச்சு. கேங்க்ல முன்னாடி இருந்த ஆட்கள் லோனனோட முதுகுல இன்னும் கத்தியைச் சொருகாம இருக்காகங்கன்னா, அதற்குக் காரணம் லோனனின் ஜாதக விசேஷம்தான். இப்போ அவன் ஒரு விலை மதிப்பை இழந்துவிட்ட குண்டன். அவன்கூட மூணு நாலு ஜால்ராக்கள் இருக்காங்க. இப்போ இந்த விலைமதிப்பு இல்லாதவன் நம்ம கேங்க்கிட்டயும் மூஸாவோட கேங்க்கிட்டயும் கப்பம் வாங்குறான். ஒவ்வொரு நாளும் அவனுக்கு நானும் மூஸாவும் ஐம்பது ரூபா வீதம் தந்தாகணும். என்ன... சரியா?’’

‘‘அந்த ஆளை நேருக்கு நேரா சந்திக்க வேண்டியதுதானே? தரமாட்டேன்னு சொல்ல வேண்டியதுதானே?’’ - நான் கேட்டேன்.

‘‘நடக்காத விஷயம்’’ என்று சொன்ன பப்பூஸ் தொடர்ந்து சொன்னான்: ‘‘இன்னைக்கு நம்மளை விரட்ட அவனால் முடியும். மட்டாஞ்சேரி நிறுத்தத்திற்கு அடுத்து இருக்குற சின்ன பாலத்துல அந்த தடியன் உட்கார்ந்திருக்குறதைப் பார்த்திருந்தால் ஒரு மாதிரியானவங்கள்லாம் பயந்து போயிடுவாங்க.’’

‘‘கழுகு மூஸா கூட?’’

‘‘லோனனோட பெயரைக் கேட்டால் அவனுக்கு காய்ச்சலே வந்துடும். தெரியுதா?’’

‘‘அந்த அளவுக்கு பயங்கரமான அந்த ஆளை... அந்த லோனனை... நான் பார்க்கணுமே பப்பூஸ்...?’’

‘‘போய் பாரு, ஜோசப்.’’

‘‘பார்ப்பேன். ஒரு வழி பண்ணுவேன்.’’ - நான் வீராவேசத்துடன் சொன்னேன்: ‘‘நான் லோனனை ஒரு வழி பண்ணினா என்ன தருவே?’’

‘‘என்ன வேணும்?’’

‘‘எதுவும் வேண்டாம். முன்னாடி இருந்தது மாதிரி நம்ம கேங்க்கும் மூஸாவோட கேங்க்கும் ஒண்ணு சேர்ந்தா போதும்.’’

5

லோனனைப் பார்ப்பதற்காக நான் புறப்பட்டேன்.

சாயங்கால நேரம்.

அந்தச் சிறிய பாலத்தில் அவன் உட்கார்ந்திருந்தான். மூன்று ஆட்கள் சேர்ந்தால் எப்படி இருக்கும்? அதைவிட பெரிய அளவு உடம்பைக் கொண்டவன். பெரிய மீசை. சிவந்த கண்கள். அவனுக்கு அருகில் மூன்று மனிதர்கள் நின்றிருந்தார்கள். பார்ப்பதற்கு ரவுடிகளைப் போல் இருந்தார்கள். லோனனின் ஜால்ராக்கள்.

சற்று தள்ளி நின்றுகொண்டு நான் லோனனைப் பார்த்தேன். நான் அவனுடைய கண்களில் பட்டேன்.

‘‘யார்டா அவன்?’’ - லோனன் ஜால்ராக்களிடம் கேட்டான்.

‘‘புதுமுகம்!’’ - ஒருத்தன் சொன்னான்.

‘‘அவனை இங்கு கூப்பிடுடா’’- லோனன் கட்டளையிட்டான். ஒரு ரவுடி என்னை நோக்கி ஓடிவந்தான். அவன் என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். லோனனுக்கு முன்னால் அவன் என்னைக் கொண்டுபோய் நிறுத்தினான்.

மீசையை முறுக்கிக் கொண்டே லோனன் என்னையே வெறித்துப் பார்த்தான். ‘‘டேய், ரப்பாயி! சரியான ஆளா இருப்பான் போல இருக்கே! ஆள் எப்படின்னு நான் பார்க்கணுமே!’’

என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவனும் இன்னொரு ரவுடியும் என்னுடைய பெல்ட்டைக் கழற்றினார்கள். நான் அணிந்திருந்த கால்சட்டையை கீழ்நோக்கி இழுத்தார்கள். என்னுடைய பின்பாகம் இப்போது வெளியே தெரிந்தது. எனக்கு வெட்கமும் கோபமும் உண்டாயின.

‘‘திருப்பி நிறுத்துங்கடா! நான் சரியா பார்க்கணும்’’- லோனன் உரத்த குரலில் சொன்னான்.

‘‘ச்சீ... நாய்களா!’’ - நான் துப்பினேன்.

அந்த நேரத்தில் என் அப்பா ராக்கி கேரியரில் வைக்கப்பட்டிருந்த சலவைத் துணிகள் அடங்கிய பெரிய கட்டுடன் அந்த வழியாக சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தார்.

தனக்கு முன்னால் பார்த்த காட்சி என் அப்பாவை பைத்தியம் பிடிக்கச் செய்துவிட்டதோ? சைக்கிளை நிறுத்திவிட்டு அப்பா கேட்டார்: ‘‘என்ன ஆச்சு ஜோசப்?’’

ரப்பாயி என்ற பெயரைக் கொண்டவன் என்னிடமிருந்து நகர்ந்து, என் தந்தையை நெருங்கினான்: ‘‘நீ யாரு?’’

‘‘ராக்கி... இவனோட அப்பா.’’

லோனன் குலுங்கி குலுங்கிச் சிரித்தவாறு உரத்த குரலில் சொன்னான்: ‘‘இந்தக் கருப்பன் இந்த வெளுத்த குண்டனோட அப்பனா? நம்பவே முடியல...’’

‘‘சரி... அது இருக்கட்டும். இந்தக் கிழவன் நமக்கு கப்பம் கட்டாமல் சரக்கு கொண்டு போறது சரியா?’’ - ரப்பாயியின் நண்பனான ரவுடி கேட்டான்.

‘‘கப்பத்தை வாங்குடா’’ - லோனன் உத்தரவு போட்டான்.

ரவுடிகள் என் தந்தையைப் பிடித்தார்கள். அவர் உரத்த குரலில் கத்தினார். அவர்கள் சைக்கிளைத் தரையில் வீசி எறிந்து மிதித்தார்கள். சலவைத் துணிகள் இருந்த கட்டை கீழே எறிய, அது பிரிந்து நாலா பக்கங்களிலும் சிதறியது. கையைக் கூப்பிக்கொண்டு அழுதவாறு நின்றிருந்த என் தந்தையின் வயிற்றிலும் தொடை இடுக்கிலும் அவர்கள் மிதித்தார்கள்.

அவர்களுக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்.

கப்பம்!

நான் அமைதியாக நின்றிருந்தேன்.

அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்! கப்பல்படை இருக்கும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மிலிட்டரி ஜீப் அந்த வழியே வந்தது. நான் அதன் முன்னால் கையை வீசியவாறு போய் விழுந்தேன்.

‘‘க்யா பாத்ஹே?’’- ஒரு மிலிட்டரி போலீஸ்காரன் கேட்டான். நான் எனக்குத் தெரிந்த இந்தியில் பதில் சொல்ல ஆரம்பித்தபோது லோனனும் அவனுடைய ஆட்களும் ஓடி மறைந்துவிட்டார்கள்.

லோனனை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்ந்து பிரயோஜனமே இல்லை. இந்த எண்ணம் வளர்ந்து என்னால் வெறுமனே இருக்க முடியவில்லை.

ஆனால், அந்த ஆபத்தான மனிதனை எப்படி அடக்குவது?

நான் பாதாளம் காலனியிலேயே இருந்தேன். ஆயிரம் வழிகளை நான் யோசித்தேன்.

திடீரென்று ஒருநாள் கண்களில் பிரகாசம் உண்டானது.

பத்ரோவும் அவனுடைய கவணும்தான் எனக்கு வழிகாட்டினார்கள். முன்பு எத்தனையோ தடவை பத்ரோ தன்னுடைய கவணைப் பயன்படுத்தி காகங்களை வீழ்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். எத்தனையோ தடவை தெரு நாய்களைக் கவண்மூலம் அவன் விரட்டுவதைக் கண்டிருக்கிறேன். கல் உடலில் பட்டவுடன் அவை ஊளையிட்டவாறு ஓடும். அப்போது பத்ரோ கைகளைத் தட்டிக் கொண்டு சிரிப்பான். ஒருநாள் அவன் தாண்டம்மாவின் அகலமான பின்பாகத்திலும் கவணைப் பயன்படுத்தினான். அய்யோ... தாண்டம்மா உரத்த குரலில் ஓலமிட்டதைப் பார்க்க வேண்டுமே! அவள் பத்ரோவைப் பிடித்து நன்கு உதைத்துவிட்டுத்தான் வேறு வேலைகளைப் பார்த்தாள்.

சமீபத்தில் பத்ரோ, கையில் கவணை வைத்துக் கொண்டு காகங்களுடன் போர் செய்தபோது, எனக்கு எது ஞாபகத்தில் வந்தது தெரியுமா? என் தந்தை எனக்குக் கூறிய பைபிள் கதைதான் - தாவீதும் கோலியாத்தும்.

நான் பத்ரோவை எளிதில் என் கைக்குள் கொண்டுவந்து, அவனை சம்மதிக்க வைத்தேன். கவணுக்கு விலை சொன்னேன். அவன் தரமாட்டேன் என்று கூறிவிட்டான். ‘‘அப்படின்னா, வாடகைக்குத் தா’’ என்றேன் நான். அரை ரூபாய் வாடகை. நான்கு மணி நேரம் கவண் எனக்குச் சொந்தமானது. பத்ரோ சம்மதித்தான். நான் கவணில் கல்லை வைத்துக் கண்களில் தெரிந்தவற்றையெல்லாம் எறிந்து பார்த்தேன்.


தென்னை ஓலை, காலி பீப்பாய்கள், அந்தப் பக்கம் இருந்த மரக்கட்டை, ரெயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த விளம்பரப் பலகைகள்...

எதிலும் கல் சரியாகப் படவில்லை.

பத்ரோ என்னைப் பார்த்துக் கிண்டல் பண்ணினான். கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்தான். ஒருநாள் அவன் சொன்னான்: ‘‘நான் கற்றுத் தர்றேன்.’’ நான் அவனுடைய சிஷ்யனாக ஆனேன். அவன் சொல்லித் தந்ததைக் கற்றேன். என்னுடைய குறி படிப்படியாக தேறிக் கொண்டிருந்தது. பரவாயில்லை என்பதைத் தாண்டிவிட்டேன் என்றுகூட கூறலாம்.

காலி பீப்பாய்மீது பலகையை வைத்து, அந்தப் பலகைக்கு மேலே ஒரு சோடா புட்டியை வைத்து, அதன் தலையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து... கவணின் இரண்டு பக்கங்களுக்கு நடுவில் இருக்கும் இடைவெளி வழியாக அதைப் பார்த்து -

அடித்த அடியில் எலுமிச்சம் பழம் தெறிந்து விழுந்தது.

பயிற்சி தொடர்ந்தது.

பீப்பாயின் மேலே வைக்கப்பட்ட தேங்காய். குறி அதன் மூன்று கண்கள்.

குறி சரியாகப் போய்விட்டது.

பத்து தடவை முயன்றதில், பத்திலும் வெற்றி.

நான் கவணை எடுத்துக்கொண்டு லோனன் அமர்ந்திருக்கும் அந்தச் சிறிய பாலத்திற்குச் சென்றேன்- பல தடவை. அந்தப் பயங்கர மனிதனைக் காணவே முடியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தேன். பார்த்தேன்.

பாலத்தில் பழைய மாதிரியே லோனன். அருகில் ஜால்ராக்கள்.

நான் அவர்களுக்கு முன்னால்.

அவர்கள் கேலி வார்த்தைகள் காதுகளில் விழுந்தன. ‘‘அதோ நம்ம வெளுத்த குண்டன்...’’ என்றான் லோனன்.

நான் முன்னோக்கி நடந்தேன்.

என் குறியில் - இரண்டு கண்கள் மட்டும்!

கவண் சிறிதும் பிசகாமல் அஸ்திரமாக ஆனது.

லோனனின் ஓலம் இப்போதுகூட என் காதுகளில் கேட்கிறது. ரத்தம் வழிந்து கொண்டிருந்த கண்களை மூடிக்கொண்டு அவன் ஓடிய ஓட்டம் இப்போதுகூட எனக்கு அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. ஜால்ராக்கள் அவனைப் பின்தொடர்ந்து ஓடினார்கள்.

துறைமுகமும் சுற்று வட்டாரங்களும் நடந்த கதையை அறிந்தன.

தாதா லோனன், குண்டன் லோனன், யாருக்கும் பயப்படாத லோனன்... ஒற்றைக் கண்ணன் ஆகிவிட்டான்!

ஒரு விஷயம் தெரியுமா? இந்த தாதாக்கள், இந்தப் பெரிய குண்டர்கள் உள்ளுக்குள் கோழைகளே. அவர்களின் மேற்பூச்சையும், போலி தைரியத்தை வெளிப்படுத்தும் முகமூடியையும் நீக்கிவிட்டால், அவர்கள் மூலையில் போய் ஒளிந்து கொள்வார்கள். காயத்தைச் சரி பண்ணி, பழைய முகவரியை மீண்டும் அடைய அவர்களால் முடியாது. சட்ட விரோத வியாபார உலகத்தில் அவர்களுக்கு எந்தவொரு இடமும் இல்லாமற் போய்விடும்.

பத்ரோவின் கவணுக்கு நன்றி!

‘‘நடக்காத விஷயம்’’ என்று சொன்ன பப்பூஸ் வந்தான்.

எதிரியான கழுகு மூஸா வந்தான்.

நான் அவர்களைச் சமமாக மதித்தேன்.

அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள்.

கிரேக்க கப்பல் வந்தது. அதிலிருந்த ப்ரவுன் சுகரை இறக்குவதற்கான திட்டத்தை நடத்தியது நான்தான். நான் தனித்தே சென்றேன். பகல் நேரத்தில் எட்டு லட்சம் ரூபாய் விலை வரக்கூடிய சரக்கை நான் படகின் அடியில் அட்ஹெஸிவ் டேப்புகளைக் கொண்டு கட்டப்பட்ட வாட்டர் ப்ரூஃப் பேக்கில் கடத்திக் கொண்டு வந்தேன். யாருக்கும் சந்தேகம் உண்டாகவில்லை.

அந்தச் சம்பவம் என்னைப் பப்பூஸ், மூஸா இருவருக்கும் தலைவனாக ஆக்கியது.

எனக்குத் தேவையான பங்கை நான் கேட்கவில்லை. அரை லட்சம் ரூபாயில் நான் திருப்தியடைந்தபோது, அவர்களுக்கு என்மீது ஒரு தனிப்பட்ட அன்பு தோன்றியிருக்குமோ? நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். சிறிய அளவில் செய்யும் கள்ளக் கடத்தல்களில் நான் பங்குபெறுவதில்லை. பெரிய கடத்தல்கள் வரும்போது, நான் பொறுப்பு ஏற்பேன். அதற்கு பப்பூஸும் மூஸாவும் சம்மதித்தார்கள். அவர்களுக்கு ஒரு வற்புறுத்தல் இருந்தது. நான் அருமையான ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுக்க வேண்டும். மரியாதைக்குரிய மனிதனாக நான் பிறருக்குத் தெரிய வேண்டும். ஃப்ளாட்டில் பல வசதிகளையும் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

நான் நகரத்தில் மிகவும் வசதி படைத்த பணக்காரர்கள் இருக்கக் கூடிய பகுதியில் ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்தேன்.

என் தந்தைக்கும் தாய்க்கும் பத்ரோவிற்கும் தாண்டம்மாவிற்கும் கூட நான் பணம் அனுப்பினேன்.

டெர்மினஸில் இருக்கும் அபுவையும் புரட்சிக்காகக் காத்திருந்த எலியாஸையும் நான் பல தடவை மதிய உணவிற்கும் இரவு சாப்பாட்டிற்கும் அழைத்துச் சென்றேன் - உயர்ந்த ஹோட்டல்களுக்கு.

எனக்காக நான் என்ன செய்தேன்? கொஞ்சம் நல்ல ஆடைகள் வாங்கினேன். கொஞ்சம் ஷூக்களை வாங்கினேன். நல்ல ஆடைகள் மீது தணியாத தாகம் இருந்ததற்கு சிறு வயதில் நடைபெற்ற ஒரு சம்பவம் காரணமாக இருக்கலாம்.

என் தந்தை பல வசதி படைத்த குடும்பங்களின் சலவைக்காரராக இருந்தார். தாத்தா அணியும் ஆடைகளிலிருந்து சிறு குழந்தைகளின் ஆடைகள்வரை அந்தச் சுமையில் இருக்கும். அப்போது எனக்கு ஆறோ ஏழோ வயது நடந்து கொண்டிருந்தது. அந்தத் துணிக்கட்டில் நான் பார்த்த ஒரு சில்க் சட்டை என்னை மிகவும் கவர்ந்தது. நான் அதை வெளியே எடுத்தேன். குடிசைக்குப் பின்னால் சென்று, அந்தச் சட்டைக்குள் என் தலையை நுழைக்கும்போது முதுகில் ஒரு அடி விழுந்தது. தொடர்ந்து பல அடிகள். என் தந்தை ராக்கி என்னை அடித்துக் கொண்டிருந்தார். அடிப்பதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் ஒரு பழைய பெல்ட்...

தாள்கள் தீர்ந்துவிட்டன.

கருணை மனம் கொண்ட குட்டிக் குறுப்பு எனக்கு இனிமேலும் உதவாமல் இருக்கமாட்டார்.

6

நான் மீண்டும் எழுதத் தொடங்குகிறேன்.

இன்று எனக்குச் சிறிது சந்தோஷம். இன்று நான் மற்றக் கைதிகளுடன் சேர்ந்து வேலைகள் செய்தேன். நான் விதைத்த விதைகள் முளைத்திருக்கின்றன. வார்டர் ஹமீத் சொன்னார்: ‘‘பூக்கும்... நீ அதைப் பார்ப்பாய்.’’

இன்று ஆச்சரியப்படும் வகையில் ஒரு நல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. சிறை சூப்ரெண்ட் கோமஸ் எங்கள் எல்லோருக்கும் கேக் துண்டுகள் கொடுத்தார். இன்று அவருடைய பிறந்த நாளாம். இதற்கிடையில் குட்டிக் குறுப்பைப் பார்க்கவும், கண்களைச் சிமிட்டவும் எனக்கு முடிந்தது. தாள்கள் கிடைத்தன. கூர்மையாக்கப்பட்ட புதிய பென்சில் ஒன்றும் கிடைத்தது.

எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? சுமதியில் இருந்து... நான் இன்று உருண்டு விளையாடிக் கொண்டிருக்கிறேன். நான் இப்போதுகூட மிகவும் தீவிரமாக அவளைக் காதலிக்கிறேன் என்பது தானே உண்மை?

அவளுடைய காதலுக்கு ஒரு பைத்தியத்தின் ஆழம் இருந்தது. இப்போதும் அது கறைந்துவிட வில்லையே!

யாருக்காவது நன்றி சொல்ல வேண்டுமா? அப்படிக் கூறுவதாக இருந்தால், கூற வேண்டியது எலியாஸுக்குத்தான்.


நான் ஃப்ளாட் வாடகைக்கு எடுத்த விஷயம் எலியாஸ் அண்ணனுக்கு எப்படித் தெரியும்? எப்படியோ தெரிந்திருக்கிறது! தெரிந்ததுகூட நல்லதுதான் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். என்னுடன் தோழரும் புத்தகங்களும். எலியாஸ் நல்ல அறிவாளியாக இருந்தார். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உண்டான மாற்றத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அண்ணன் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒருநாள் அண்ணன் சொன்னார்: ‘‘இந்தச் சொத்து திருட்டுச் சொத்து.’’

‘‘அப்படின்னா?’’

‘‘முதலுக்குப் பின்னால் திருட்டுத்தனம் இருக்குன்னு அந்தக் காலத்துல ஒரு புரட்சியாளர் சொல்லியிருக்காரு.’’

அதற்குமேல் எலியாஸ் எதுவும் சொல்லவில்லை. தேவையில்லாமல் எதையும் கேட்கவும் இல்லை.

பாதாளம் காலனியில் இருந்த வீட்டில் நான் ஒரு பூனையை முன்பு வளர்த்தேன். அதுவாகவே வந்த பூனை. அப்போது எனக்குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது இருக்கும். நான் என் பூனையிடம் பல கேள்விகளையும் கேட்பேன். அதற்கு ஒரு வார்த்தைகூட அது பதில் கூறாது. ‘ம்யாவ்’ என்ற சத்தத்தைக் கூட எழுப்பாது.

அப்படிப்பட்ட பூனைதான் எலியாஸ் அண்ணன் என்று நான் முடிவு செய்தேன்.

சுமதியைப் பற்றிக் கூற ஆரம்பித்த நான் எலியாஸுக்கு நன்றி கூறுவது எதற்காக? சொல்லப் போனால் எலியாஸின் பசிக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

பகல் நேரத்தில் நல்ல சாப்பாடு வேண்டும் என்று கூறுவார் எலியாஸ். பகல் சாப்பாட்டுக்கு முன்னால் பீர் வேண்டும் என்பார். நானும் சரி என்று அதற்குச் சம்மதித்தேன்.

எலியாஸ் அண்ணன் மூன்று பீர்களைக் குடித்தார். நான் எதுவும் குடிக்கவில்லை. பாரிலிருந்து வெளியே வந்த நாங்கள் ரெஸ்டாரண்டிற்குச் சென்றோம். அங்கு அப்படியொன்றும் பெரிய கூட்டமில்லை. ஒரு மேஜையில் இரண்டு அழகான பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒருத்தி மிகச் சிறந்த அழகியாக இருந்தாள். இன்னொரு மேஜையில் இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்த இளம்பெண்களைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதைக் காதில் வாங்கிக் கொண்டே நாங்கள் அருகிலிருந்த மேஜையைத் தேடிச் சென்றோம். பரிமாறுபவன் வந்தான். எலியாஸ் நல்ல சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தார். அப்போதும் அந்த இளைஞர்களின் கிண்டல் தொடர்ந்து கொண்டிருந்தது. அது படிப்படியாக ஆபாசத்தில் போய் விழுந்தது. அந்த இளம்பெண்கள் இப்படியும் அப்படியுமாக நெளிந்தார்கள். எலியாஸுக்கு நியாயமான கோபம் உண்டானது. பீர் தன் வேலையைச் செய்தது.

எலியாஸ் என்னிடம் மெதுவான குரலில் முணுமுணுத்தார். ‘‘அந்த இளைஞர்களோட கிண்டல் பேச்சைக் கேட்டேல்ல? உன்னால அவன்களின் கிண்டலை நிறுத்த முடியாதா ஜோசப்?’’

‘‘தேவையா? நமக்கு அதுல என்ன சம்பந்தம் இருக்கு?’’

‘‘அப்படின்னா, நான் தலையிடுறேன்...’’ - எலியாஸ் எழுந்தார். அதை ஒரு தமாஷாகத்தான் நான் அப்போது எடுத்துக் கொண்டேன். ஆனால்...

எலியாஸ் மெதுவாக ஆடிக்கொண்டே அந்த இளைஞர்கள் உட்கார்ந்திருந்த மேஜையை நெருங்கினார்.

‘‘ஆபாசமா பேசுறதை நிறுத்துங்கடா’’ - எலியாஸ் உரத்த குரலில் கத்தினார்.

‘‘போடா கிழவா! அந்தப் பெண்கள் உன் பிள்ளைகளாடா? அப்படின்னா, அவங்களை எங்கக்கிட்ட அனுப்பி வை’’ ஒரு இளைஞன் சொன்னான். அதைக் கேட்டு இன்னொரு இளைஞன் உரத்த குரலில் சிரித்தான்.

நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து அந்த அழகான இளம்பெண்கள் பயந்திருக்க வேண்டும். உணவை முழுமையாக சாப்பிட்டு முடிக்காமலேயே அவர்கள் உணவு பரிமாறும் மனிதனை அழைத்து, பில் கொண்டுவரும்படிக் கூறினார்கள்.

‘‘தங்கச்சிகளே! நாங்க பணம் தர்றோம்...’’ - அந்த இளைஞர்கள் கிண்டலான குரலில் சொன்னார்கள்.

நிலைமை இந்த அளவுக்கு ஆனவுடன், நான் எழுந்தேன். அந்த இளைஞர்கள் அமர்ந்திருந்த மேஜையை நெருங்கிய நான் மிகுந்த கோபத்தில் இருந்தேன்.

‘‘எழுந்திரிங்கடா கேடுகெட்ட பசங்களா’’ - நான் உரத்த குரலில் கத்தினேன்.

ஒருவன் பதைபதைப்புடன் எழுந்து நின்றான். இன்னொருவன் என்னையே வெறித்துப் பார்த்தவாறு ‘‘மிஸ்டர்... எங்களை எழுந்திரிக்கச் சொல்றதுக்கு நீங்க யாரு?’’ என்றான்.

‘‘உன் அப்பன்’’ என்று சொன்னேன் நான். அத்துடன் நிற்கவில்லை. பாதி சாப்பிட்டு வைத்திருந்த சூப் தட்டை எடுத்து அவனுடைய தலையில் வீசி எறிந்தேன்.

உணவு பரிமாறுபவர்களும் திடீரென்று அங்கு வந்து நின்ற ஃப்ளோர் மேனேஜரும் திகைத்துப்போய் நின்றார்கள்.

நான் ஓரக் கண்களால் பார்த்தேன். இளம்பெண்களுக்கு இனம்புரியாத சந்தோஷம். இரண்டு பெண்களில் பேரழகியாக இருந்தவள் என்னையே வெறித்துப் பார்த்தாள். அவளின் கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.

நனைந்த கோழிகளைப்போல நின்றிருந்த அந்த இளைஞர்களை நான் அடித்து வெளியேறும்படி செய்தேன்.

எலியாஸுடன் எங்களுடைய மேஜைக்கு வந்த நான் ஃப்ளோர் மேனேஜரிடம் சொன்னேன்: ‘‘அந்தக் கேடுகெட்ட பசங்களோட பில் பணத்தை நானே தர்றேன்.’’

அப்போது கை துடைக்கும் பேப்பர் நாப்கினில் எழுதிய ஒரு செய்தி எனக்கு கிடைத்தது. ‘நன்றி... சுமதி.’

நான் திரும்பிப் பார்த்தேன். பேரழகி சிரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோழியும்.

அவர்கள் எழுந்தபோது நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். ரெஸ்ட்டாரெண்ட் வாசல்வரை, அதோ... வெளியே கார் நின்றிருந்தது.

சுமதி ட்ரைவிங் இருக்கையில். அவளுக்கருகில் தோழி.

நான் திரும்பி வந்தபோது எலியாஸ் கட்லட்டுகளை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்.

சுமதியை நான் கனவு காண ஆரம்பித்தேன். சதா நேரமும் நான் அவளை நினைத்துக் கொண்டேயிருந்தேன். அவளை இனி எப்போது பார்க்க முடியும்? மாலை நேரங்களில் நான் பூங்காக்களிலும் திரைப்பட அரங்குகளிலும் சுற்றித் திரிந்தேன். அவளை என்னால் பார்க்க முடியவில்லை.

அவளைப் பற்றி நான் பப்பூஸிடமும் மூஸாவிடமும் சொன்னேன். அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர்கள் அந்த ரெஸ்ட்டாரெண்டில் விசாரித்தார்கள். அவளைப் பற்றிக் கொஞ்சம் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

லட்சுமணப் பணிக்கர் என்ற பெரிய வியாபாரியின் மகள்தான் சுமதி. அன்று அவளுடன் இருந்தவர் கலெக்டர் அலுவலகத்தில் க்ளார்க்காக பணியாற்றும் பத்மா. பணிக்கர் பெரிய பணக்காரர்... இன்று.

ஆரம்பத்தில் அவர் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குப் பெரிய மனிதர் இல்லை. தங்கக் கடத்தலில் ஈடுபட்ட பிறகுதான் அவர் பணக்காரராக ஆனார். பல வருடங்களுக்கு முன்னால் அவர் சிறையில் இருந்திருக்கிறார். இப்போது அந்த விஷயங்களையெல்லாம் யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? இன்று கலெக்டரும் போலீஸ் சூப்ரெண்ட்டும் பணிக்கரின் நட்பை விரும்பும் நண்பர்களாக இருக்கின்றனர்.

ஒரு செய்தியைக் கொண்டுசெல்லும் மனிதராக எலியாஸ் அண்ணனை கலெக்டர் அலுவலகத்திற்க அனுப்பினால் என்ன? பத்மாவைப் பார்க்க முடிந்தால்...


‘‘ஜோசப், உன் காதல் ஆபத்தை வரவழைக்கும் என்று எனக்குப் படுது. உன்மேல அவளுக்குக் காதல் எதுவும் இல்லை என்றால்....?’’ - எதிர் வாதங்களைப் படைக்க எலியாஸ் தயாரானார். எனினும், இறுதியில் நான் சொன்னதற்குக் கீழ்படிந்தார்.

நான்கே நான்கு நாட்களுக்குள் என் இதயத்தைக் குளிரச் செய்யும் செய்தியுடன் எலியாஸ் திரும்பி வந்தார்.

‘‘எனக்கு டி.எ.டி.எ. வகையில் நீ பெரிய அளவுல பணம் தர வேண்டியதிருக்கும் மகனே. எது எப்படியோ, நான் கண்டேன் பத்மாவை... அவள் மூலம் நான் சுமதியைச் சந்தித்தேன். நீ கிறிஸ்துவனா இருந்தாலும், சுமதிக்கு உன்மேல தாங்க முடியாத காதல் இருக்கத்தான் செய்யுது. புரியுதா? ஒவ்வொரு நாளும் அவள் உன்னைத் தேடி அலைஞ்சிருக்கா. இதோ... அவளுடைய கடிதம்...’’ - எலியாஸ் சுமதியின் கடிதத்தை என்னிடம் தந்தார்.

இப்படித்தான் காதல் தொடங்கியது - எலியாஸ், பத்மா ஆகியோரின் உதவியுடன்.

என்னுடைய ப்ளாட்டில் நானும் சுமதியும் சந்தித்தோம். என் ஜாதி, நான் சிறிதளவில் வெளிப்படுத்திய என்னுடைய வாழ்க்கைச் சூழல்... இவை எதுவும் அவளுக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை.

ஆனால், தன் தந்தை பணிக்கரிடம் அவளுக்கு மிகுந்த பயம் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அந்த விஷயத்தை நான் கூறியபோது, நான் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக அவள் சிரித்து என்னிடமிருந்து நகர்ந்து சென்றாள்.

‘‘நான் உன் அப்பாவைப் பார்க்கணும். என்ன சொல்ற?’’ - நான் ஒருநாள் கேட்டேன்.

‘‘அதனால் என்ன?’’ - அவள் சொன்னாள்.

ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் தன் தந்தை பணிக்கருடன் அவள் என் ப்ளாட்டிற்கு வந்தாள். நான் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றேன்.

தரை டிக்கெட் அளவில் இருக்கும் ஒரு மனிதன் பணக்கார வேடம் போட்டால் எப்படி இருக்கும்? அப்படியிருந்தார் பணிக்கர். குள்ளமான மனிதர். கைகளில் தடித்துக் காணப்பட்ட நரம்புகள்...

அவர் என்னை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறாரோ?

உரையாடல் மிகவும் நட்புணர்வுடன் இருந்தது என்பதைக் கூறித்தான் ஆகவேண்டும்.

பணிக்கர் சொன்னார்: ‘‘நான் முன்னாடியே வந்திருக்கணும். ரெஸ்ட்டாரெண்டில் நடைபெற்ற சம்பவங்களை சுமதி என்கிட்ட சொன்னாள். எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்குத் தெரியல. உங்களைப் போன்ற தைரியம் உள்ள இளைஞர்கள் பத்து பேர் இருந்தாங்கன்னா, இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும்! என்னைப் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்... எனக்குச் சில வியாபாரங்கள் இருக்கின்றன. நாம முதல் தடவையாகப் பார்க்கிறோம். ம்... பேர் என்ன?’’

‘‘ஜோசப்.’’

ஜோசப் என்ற பெயரைக் கேட்டபோது, பணிக்கரிடம் ஏதோ வேறுபாடு தெரிந்ததோ? ஒருவேளை எனக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.

நாங்கள் பலவற்றைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். என் தொழில், குடும்ப உறவுகள் போன்றவற்றைப் பற்றி பணிக்கர் என்னிடம் கேட்டபோது, நான் தெளிவற்ற பதில்களைக் கூறினேன். மறுநாள் தன்னுடைய பங்களாவிற்கு டின்னர் சாப்பிட வரவேண்டுமென்று பணிக்கர் அழைத்தார். விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட பணிக்கரையும் சுமதியையும் லிஃப்ட்டில் தரைத் தளம் வரை நான் கொண்டுபோய் விட்டேன்.

‘‘நானோ சுமதியோ வர்றோம்... அழைச்சிட்டுப் போறதுக்கு...’’ - பணிக்கர் சொன்னார்.

‘‘நல்லது. எனக்கு வழி தெரியாதே! என் கார் ஒர்க் ஷாப்ல வேற இருக்கு’’ - நான் பொய் சொன்னேன்.

7

ணிக்கரும் சுமதியும் காரில் ஏறினார்கள். சுமதிதான் காரை ஓட்டினாள்.

விளக்கங்கள் வேண்டாம் என்று தவிர்க்கிறேன்.

எங்களுடைய காதல் நன்கு வளர்ந்து கொண்டிருந்தது என்பதை மட்டம் கூறுகிறேன். இதற்கிடையில் பப்பூஸும் மூஸாவும் என்னுடன் சண்டை போட்டார்கள். இந்தக் காதல் உறவை கூறித்தான்.

அவர்கள் தங்களுக்கென்று சில நியாயங்களைக் கொண்டிருந்தார்கள். லட்சுமணப் பணிக்கர் சாதாரண ஒரு ஆள் அல்ல. அவருக்கு ஆயிரம் கண்களும் காதுகளும் இருக்கின்றன. தன் மகளின் காதல் விஷயத்தைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால், அவர் வெறுமனே இருப்பாரா? அவர் எதையும் செய்யத் தயங்காதவர். சுமதியின் தாயை சில வருடங்களுக்கு முன்னால் அவர் அடித்துக் கொன்று விட்டார் என்றொரு கதை வேறு இருக்கிறது. வழக்கையும் குற்றச்சாட்டுக் கூறியவர்களையும் ஒன்றுமில்லாமல் செய்யவும் அவரால் முடிந்தது. அவருக்கு ஒரு மகன் இருந்தான். சுமதியின் அண்ணன் சொந்தத்தில் பிசினஸ் தொடங்க அவன் விருப்பப்பட்டபோது, பணிக்கர் என்ன செய்தார் தெரியுமா? சாதாரணமான ஒரு தொகையைக் கொடுத்து அவனைப் பாண்டிச்சேரிக்கு விரட்டி விட்டார். பணிக்கரின் ஐலேண்ட் அலுவலகத்தில் பணி செய்யும் சுவாமி, வருமான வரி அதிகாரிகளுக்குச் சில தகவல்களைத் தந்துவிட்டார் என்று பணிக்கர் சந்தேகப்பட்டார். அதற்குப் பிறகு சுவாமியின் இறந்துபோன உடலை பலரும் பார்த்தது, கொச்சி துறைமுகத்தில் இருக்கும் பாஸ்தியார் பங்களாவிற்குப் பின்னாலிருக்கும் கடலில்தான். கள்ளக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சீனியர்கள் அனைவரும் பணிக்கரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்தான்.

‘‘ஜோசப்... இந்தப் பொண்ணை மறந்திடு. இல்லாட்டி நாம ஒட்டுமொத்தமா அழிஞ்சிடுவோம்.’’ - பப்பூஸ் உறுதியான குரலில் சொன்னான்.

‘‘முடியாது. என்னால அவளை மறக்க முடியாது.’’ - நான் முடிவான குரலில் சொன்னேன்.

இன்னொரு சூழ்நிலையில் எங்களின் காதலின் ஆரம்பத்தைப் பற்றி எலியாஸ் அண்ணனும் எனக்கு எச்சரிக்கை தந்தார். ‘‘இந்தக் காதல் தேவையா மகனே? இந்த உலகத்துல வேற எவ்வளவோ நல்ல இளம்பெண்கள் இருக்குறாங்க. அந்தப் பணிக்கர் பிரச்சினையான ஆளு!’’

பப்பூஸும் மூஸாவும் எலியாஸ் அண்ணனிடம் இப்படிக் கூறும்படிக் கூறியிருப்பார்களோ?

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சிறிதும் நினைத்துப் பார்க்காதது நடந்தது.

சுமதியை என்னுடைய ஃப்ளாட்டிலிருந்து கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு நான் அழைத்துக் கொண்டு போன நேரம்.

அவளுடைய காருக்கு அருகில் ஒரு ஆள் நின்றிருந்தான். ஒரு கண்ணில் கருப்புத் துணியை அவன் சிறிய வட்ட வடிவத் துண்டாகக் கட்டியிருந்தான்.

லோனன்!

நான் அதிர்ந்து போய்விட்டேன். அவனுடைய ஒற்றைக் கண்ணும் என் கண்களும் ஒன்றோடொன்று சந்தித்தன. அவன் பின்னால் திரும்பி நடக்க ஆரம்பித்தான். அவன் அங்கு காத்திருந்த விஷயத்தை சுமதி கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் காரை ஓட்டிக்கொண்டு சென்றாள்.

இவ்வளவு நாட்களும் லோனன் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருந்திருப்பானோ?

சுமதி போன பிறகு நான் அந்த இடத்தைச் சுற்றி நடந்தேன். லோனன் இருக்கும் அறிகுறியே தெரியவில்லை.

லோனனின் வரவு என்னைக் குழப்பமடையச் செய்தது என்பதைக் கூறாமல் இருக்க முடியாது. பப்பூஸும் மூஸாவும் சொன்ன விஷயங்களை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன்.


இந்த அபாயம் நிறைந்த மனிதன் என்னைத் தேடுகிற மாதிரி அங்கு வந்து தோன்றிய விஷயம் என்னுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாகத் தெரியவேண்டும் என்று நான் நினைத்தேன். நான் மதியத்திற்குப்பின் ஓய்வு எடுப்பதற்காகத் தீவிற்குச் சென்றேன். வார்ஃபுகளைச் சுற்றி நடந்தேன். பப்பூஸ் எங்கே? கழுகு மூஸா எங்கே? எப்போதும் இருக்கும் இடங்களில் அவர்கள் இல்லை. நடந்து நடந்து டெர்மினஸுக்குச் சென்று, அங்கு அபுவைத் தேடினேன். அபுவும் இல்லை. இரவு ஒன்பது மணி ஆகியிருக்கும். நல்ல பசி எடுத்தது. நான் சஃபயர் ஹோட்டலை நோக்கி நடந்தேன்.

அங்கு கேபரே நடக்கும் நேரம்.

வெளிச்சம் நன்கு இருந்தபோது, சில மேஜைகளுக்கு அப்பாலிருந்து ஒருவன் கைவீசிக் காட்டுவதைப் பார்த்தேன். முதலில் எதுவும் புரியவில்லை. அந்தக் கையை வீசிக் காட்டும் செயல் எதுவும் புரியவில்லை. அந்தக் கையை வீசிக் காட்டும் செயல் அப்போதும் தொடர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று நான் அந்த மனிதன் யார் என்பதைப் புரிந்து கொண்டேன் - லட்சுமணப் பணிக்கர்.

நான் அவர் இருந்த மேஜையை நோக்கி நடந்தேன். பணிக்கர் என்னை அன்புடன் வரவேற்றார். அவர் நன்கு குடித்திருந்தார். நல்ல குணத்தைக் கொண்ட ஒரு ‘அங்கிளை’ப் போல அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார்: ‘‘ஏதாவது குடி...’’

நான் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மனிதன் இல்லை என்று சொன்னவுடன், என் முதுகில் தட்டிக் கொண்டே பணிக்கர் சிரித்தார்: ‘‘வழக்கம் ஆக்கணும்னு யார் சொன்னது? ஒரு பெக் இல்லாட்டி ரெண்டு பெக் குடிக்கிறதுல கேடு ஒண்ணும் வந்திடாது.’’

அவர் என்னை ‘அளந்து பார்க்கிறார்.’ நான் எதற்குச் சிறு பிள்ளையாக இருக்க வேண்டும்? நான் அவர் சொன்னபடி செய்தேன்.

பேண்ட் வாத்திய இசை.

விளக்குகள் மங்கலாகின்றன.

அறிவிப்பு: ‘தி ஃபென்டாஸ்டிக், ஃபன் லவிங் சில்வியா!’

நான் சில்வியாவின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்போது எனக்குத் தெரியாமலே என் கண்ணாடிக் குவளையில் பணிக்கர் மதுவை ஊற்றிவிட்டாரோ?

தலையும் கால்களும் மேகக் கூட்டத்திற்குள்.

சாப்பிட்ட உணவு? ஞாபகத்தில் இல்லை.

பணிக்கரின் வார்த்தைகள் மட்டும் ஞாபகத்தில் இருக்கின்றன. ‘‘வா, ஜோசப்... கார் இப்பவும் ஒர்க் ஷாப்பில்தானே இருக்கு? நான் ட்ராப் பண்ணுறேன்.’’

கார் எங்கெல்லாம் ஓடியது? எவ்வளவு நேரம்? நான் வாந்தி எடுத்தேனோ? தூங்கிவிட்டேனா? கண் விழித்தபோது -

நான் தரையில் கிடந்தேன். ஒரு கோடௌனில்... பெரிய மூட்டைகளுக்கும் பெரிய பீப்பாய்களுக்கும் மத்தியில்.

எனக்கு முன்னால் லட்சுமணப் பணிக்கர்.

அவருடன் லோனனும் இருந்தான். லோனனின் கையில் உயிருள்ள பாம்பு... இல்லை சாட்டை வார்.

பணிக்கர் உரத்த குரலில் கத்தினார்.

‘‘நாயோட மகனே! குடும்பத்தில் பிறந்த பெண்ணை நாசம் பண்ண பார்க்குற ஈனப் பிறவியே! உன்னை இப்போ கொன்னு கடல்ல போட்டால், கடவுளுக்குக்கூட தெரியாது. நான் அந்தக் காரியத்தை ஏன் செய்யல? ஒரு தடவை நீ இந்தப் பணிக்கரோட மானத்தைக் காப்பாற்றியிருக்கே! அந்த ஹோட்டல்ல வச்சு. ஆனா, நீ அதைக் காரணமா வச்சிக்கிட்டு காய்களை நகர்த்தலாம்னு பார்த்தே... உன்னைக் குருடனாக்கி விடணும்னு இந்த லோனன் சொல்றான். லோனன், என் நாயே! டேய் லோனா... நீ ஒண்ணு செய்... இவன் மறக்காத மாதிரி ஒரு விஷயத்தைச் செய்... அதற்குப் பிறகும் இந்தத் தெருப் பொறுக்கிப் பயல் என் மகளைப் பார்க்க முயற்சி செய்தால்... கதையே மாறிடும்.’’

லோனன் என்னைச் ‘சரியாக கவனித்தான்.’

பிறகு நினைவு வந்தபோது, நான் அரை நிர்வாணக் கோலத்தில் கிடந்தேன். டெர்மினஸ் ஃப்ளாட்ஃபாரத்தில்.

காதில் விழுந்த சத்தம் என்ன? புகை வண்டியின் கூக்குரலா? பத்ரோவின் காகங்கள் உண்டாக்கும் ஓலமா?

என்னைப் பார்த்தது போர்ட்டர் அபுதான். என்னை பாதாளம் காலனியில் கொண்டுபோய் சேர்த்ததும் அபுதான்.

என் தந்தை ராக்கியும் தாய் கத்ரீனாவும் என்னிடம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டிருப்பார்கள். ஒரு கேள்விக்குக்கூட நான் ஒழுங்கான பதிலைச் சொல்லவில்லை. என் உடம்பில் ஏராளமான காயங்களும் நீளமான கீரல்களும் இருந்தன. தாண்டம்மா என்னைக் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். பிறகு பப்பூஸ் வந்தான். மூஸா வந்தான். அவர்கள் என்னை ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டுபோய் சேர்த்தார்கள். அதற்குப் பிறகு மூன்று வாரங்கள் கழித்து நான் ஃப்ளாட்டிற்குத் திரும்பி வந்தேன்.

நடந்த விஷயங்களை எலியாஸ் தெரிந்து வைத்திருந்தார். அபு கூறியிருக்கலாம். என்னை ஒன்றிரண்டு தடவைகள் பத்மா தேடி வந்தாளாம். ‘ஏன் அது?’ என்று எலியாஸின் கேள்விக்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

நான் ஒரு விஷயத்தை ஏற்கெனவே முடிவு செய்திருந்தேன்.

பணிக்கரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும்.

எப்படி?

அந்த மனிதருக்குத் தெரியாமலே சுமதியை...

இந்த விஷயத்தைச் சொன்னபோது எலியாஸ் தடுத்தார்:

‘‘வேண்டாம்... ஆபத்தானது...’’

ஆபத்து! அப்படியொன்று இல்லையென்றால் வாழ்க்கைக்கு அர்த்தம்தான் என்ன? நான் எல்லோரையும் மீறினேன்.

பணிக்கரின் பங்களாவிற்கு இரவு நேரத்தில் நான் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சென்றேன். குரைத்துக் கொண்டிருந்த நாயும் தூங்கிக் கொண்டிருந்த கூர்க்காவும் மட்டும்தான் அங்கு இருந்தார்கள்.

சுமதியும் பணிக்கரும் எங்கு போனார்கள்? அவளை அவர் வேறு ஊருக்குக் கடத்திச் சென்றுவிட்டாரோ?

ஃப்ளாட்டிற்கு மீண்டும் வந்த பத்மாதான் விஷயத்தைச் சொன்னாள். களமசேரிக்கு அருகில், நான்கு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலத்தில் பணிக்கருக்கு ஒரு காட்டேஜ் இருக்கிறது. அங்கு சுமதி மட்டும் தனியாக கைதியைப் போல் வைக்கப்பட்டிருக்கிறாள்.

பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியின் அளவு குறைந்தது.

சுமதியைப் பார்க்க வேண்டும். அவளை அங்கிருந்து விடுதலை செய்ய வேண்டும்.

நான் தேடினேன். காட்டேஜைக் கண்டுபிடித்தேன். மாமரங்களுக்கும், தென்னை மரங்களுக்கும் மத்தியில் இருக்கும் சிறை.

8

ரவு நேரத்தில் சாளரத்தை உடைத்துதான் நான் காட்டேஜுக்குள் நுழைந்தேன். சுமதி திகைத்துப் போய் நின்றாளா இல்லாவிட்டால் சந்தோஷம் கொண்டாளா?

பல மணி நேரங்கள் கடந்தன.

ஒரு காரின் சத்தம்.

அது பணிக்கரின் கார்தான் என்பதை சுமதி அதன் சத்தத்தை வைத்துக் கண்டுபிடித்தாள். அங்கிருந்து தப்பித்துச் செல்லும்படி என்னை அவள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். நான் பிரித்த சாளரத்தின் வழியாக வெளியே போயிருக்க முடியாதா? என்ன காரணத்தாலோ, அந்த எண்ணம் எனக்குத் தோன்றவில்லை.

கதவில் சாவியை நுழைக்கும் சத்தம்.

கதவு திறக்கப்படுகிறது.


பணிக்கர் உள்ளே வருகிறார். அவர் மட்டும் தனியாக.

ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் நின்றிருந்த நான் முன்னால் வந்தேன்.

காயம்பட்ட காட்டு எருமையைப் போல அவர் என்மீது பாய்ந்தார். அந்த மல்யுத்தத்தில் என்னால் அடங்கிப் போகத்தான் முடிந்தது. அப்போது அருகிலிருந்த ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேஜையில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு முழ நீளம் இருக்கக்கூடிய உலோகத்தாலான சிலையை அவர் கையில் எடுத்தார். அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த அவர் முயன்றார்.

சுமதி கூப்பாடு போட்டாள்.

திரும்பிப் பார்த்துக் கொண்டு ‘‘ச்சீ...’’ என்று அவர் உரத்த குரலில் கத்தினார். எனக்குக் கிடைத்த விலை மதிப்புள்ள நிமிடம் அது. நான் கீழே விழுந்து உருண்டேன். நான் அந்தச் சிலையை அவரிடமிருந்து பிடுங்கினேன். சாலிட் மெட்டல்! நான் பணிக்கரின் தலையில் ஓங்கி அடித்தேன். தலையின் பின்னாலும் கழுத்திலும் இரண்டு முறை அடித்தேன். அவர் சுய நினைவு இழந்து கீழே விழுந்தார்.

இறந்துவிட்டாரோ?

பயந்து நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள் சுமதி. அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் நானும் சில நிமிடங்கள் நின்றுவிட்டேன்.

திறந்து கிடந்த குளியலறையின் கதவு வழியாகக் குளியல் தொட்டி தெரியவே, எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் பணிக்கரின் உடலைக் குளியலறைக்கு இழுத்துக் கொண்டு சென்று, குளியல் தொட்டியில் அதைப் போட்டு குழாயைத் திறந்து விட்டேன்.

பிறகு நான் வெளியேறி ஓடினேன்.

பணிக்கர் எப்படி இறந்தார்? நான் தலையில் அடித்ததாலா? இல்லாவிட்டால் குளியல் தொட்டி நீரில்...

சுமதி காட்டேஜிலிருந்து கொச்சிக்கு எப்படித் திரும்பி வந்தாள்- பணிக்கரின் காரில்...?

9

ட்சுமணப் பணிக்கருடைய மரணம் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிய சம்பவமாக ஆகிவிட்டது.

‘எதிர்பாராத மரணம்’ என்றுதான் எல்லோரும் முதலில் பேசினார்கள். குளியல் தொட்டியில் இறந்துபோன உடல் கிடந்தது அல்லவா? நன்கு குடித்துவிட்டு குளிப்பதற்காகத் தொட்டியில் படுத்தபோது... இப்படித்தான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், போஸ்ட் மார்ட்டம் முடிந்தபோது, கதையே மாறிவிட்டது. தலையில் காயம்பட்டிருக்கிறது. கனமானதும் கூர்மை கொண்டதுமான ஏதோ ஒரு ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார்.

போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

சம்பவத்தை நேரில் பார்த்த சுமதி என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட போலீஸ் அதிகாரிகளிடம் கூறவில்லை.

என்னைத் தேடி போலீஸ்காரர்கள் வந்தார்கள். லோனன் செய்த வேலையாக அது இருக்க வேண்டும். என்னை ஃப்ளாட்டிலும் ஸ்டேஷனிலும் வைத்து போலீஸ்காரர்கள் கேள்விகள் கேட்டார்கள். நான் நிரபராதியாக நடித்தேன். அது பலன் தந்தது. இறந்துபோன பணிக்கரின் மகளுக்கும் எனக்குமிடையே காதல் இருந்தது என்பதைக்கூட போலீஸ்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

வாரங்கள் ஓடின. போலீஸ் விசாரணை நின்றது. உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளின் பட்டியலில் அந்தச் சம்பவமும் சேர்ந்தது.

ஒரு சாயங்கால நேரத்தில் சுமதி என்னுடைய ஃப்ளாட்டிற்கு வந்தபோது, நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன். எலியாஸ் இல்லாத நேரம். அவள் சத்தியம் பண்ணிச் சொன்னாள்: ‘‘உங்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. இனியும் சொல்ல மாட்டேன். உங்களை ஒரு கொலைகாரனாக நான் எந்தச் சமயத்திலும் நினைக்கவில்லை. நான் உங்களை உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்’’ என்று.

தொடர்ந்து அவள் என்னென்னவோ கூறினாள்.

இறுதியில் சொன்னாள்: ‘‘நம்ம திருமணம் உடனடியா நடக்கணும்.’’

நான் அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கினேன். நான் என் தரப்பு நியாயங்களைச் சொன்னேன். ‘‘போலீஸ் வழக்கை முழுமையாக முடித்துவிட்டார்கள் என்று கூறிவிட முடியாது. இப்போதுகூட அவர்கள் என்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். அந்த லோனன் பிரச்சினைகளை உண்டாக்கலாம். இறந்துபோன பணிக்கருடைய மகளுடன் எனக்குக் காதல் இருந்தது என்பதை உண்டாக்க போலீஸ்காரர்கள் எவ்வளவு பாடுபட்டார்கள் தெரியுமா? அந்த நிலையில்... நாம் இப்போது திருமணம் செய்துகொண்டால், போலீஸ் விசாரணை மீண்டும் தொடர ஆரம்பிக்கும். நான் மாட்டிக் கொள்வேன்...’’

சுமதி நான் சொன்னதைக் கேட்டுக் கதறி அழுதாள். அவள் போன பிறகு என் மனதிற்குத் தோன்றியது - என்னுடைய விளக்கங்களை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அதற்குப் பிறகு இடையில் ஒரு விளையாட்டு எப்படி நடந்தது? யாருடைய மூளையில் உதயமான தந்திரம் அது? பப்பூஸும் மூஸாவும் செய்த வேலைகளா? எலியாஸ் மூலமாக...?

நான் பத்மாவைக் காதலிக்கிறேன் என்ற கதையை எப்படி சுமதி நம்பினாள்?

அதன் மூலம் உண்டான பொறாமைதான் அவளை போலீஸுக்கு முன்னால் கொண்டுபோய் நிறுத்தியதா?

நீதிமன்றத்தில் எனக்கு எதிராக இரண்டு பேர் சாட்சி சொன்னார்கள். லோனனும் சுமதியும்.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி சுமதி மட்டுமே.

லட்சுமணப் பணிக்கருக்கு, சுமதி மீது நான் கொண்டிருந்த காதல் சிறிதும் பிடிக்கவில்லை. அந்த விஷயத்திற்காக பணிக்கருக்கும் எனக்குமிடையே மோதல் நடந்திருக்கிறது என்று லோனன் நீதிமன்றத்தில் சொன்னான்.

சுமதி சம்பவத்தைப் பற்றிச் சொன்னாள்.

‘‘போலீஸ் முதலில் விசாரணை நடத்தினப்போ, இந்த விஷயத்தை ஏன் சொல்லல?’’ - நீதிமன்றம் கேட்டது.

‘‘பயத்தால்...’’ - அவள் சொன்னாள்.

‘‘யாருக்கு? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜோசப்பிற்கா?’’ - மீண்டும் நீதிமன்றம் கேட்டது.

அதற்கு அவள் பதில் கூறவில்லை.

சுமதி அப்படிச் சொன்னதற்காக நான் ஏன் பயப்பட வேண்டும்?

எனினும், அவள் இல்லாத ஒரு விஷயத்தைக் கூறிவிட்டாளே! சொல்ல வேண்டியதை முழுமையாகச் சொல்லவில்லை என்று வேண்டுமானால் அவளைக் குற்றம் சொல்லலாம். பணிக்கர் என்னைத் தாக்காமல் இருந்திருந்தால், நான் அவரைக் கொன்றிருப்பேனா? என் பக்கம் ‘தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை’ என்ற டிஃபென்ஸ் இருந்தது என்று என்னுடைய வழக்கறிஞர் பிறகு என்னிடம் கூறினார். எது எப்படியோ, சுமதி எனக்கு எதிராக சாட்சி கூறியவுடன், வழக்கில் தீவிரமாக வாதாட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஆமாம்... அதுதான் உண்மையான விஷயம். அந்தக் காரணத்தால்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நான் மறுத்துவிட்டேன். வழக்கறிஞர் வற்புறுத்திக் கூறியும், ஒரேயொரு சாட்சி சொன்ன வார்த்தைகளை வைத்து மரணதண்டனை அளிக்கப்பட்டது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.


10

ருணை மனுவுடன் சுமதி இப்போது எதற்காக ஓடிக் கொண்டிருக்கிறாள். அவள் எனக்கு யார்? மனைவி அல்ல என்ற விஷயம் எனக்கும் அவளுக்கும் நன்றாகத் தெரியும்.

அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று குட்டிக் குறுப்பு கூறுகிறார். மனுவில் என் தந்தை ராக்கியும் என் தாய் கத்ரீனாவும் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.

ஃபைல் ஹோம் செக்ரட்டரிக்கு முன்னால் இருக்கிறது என்று சிறை சூப்பிரெண்ட் கூறுகிறார். என் வயதைக் கணக்கில் எடுத்து, அவர் எனக்குச் சாதகமாக தன் கருத்தை எழுதுவார் என்கிறார் அவர். கவர்னர் இரக்க குணம் கொண்டவர் என்றும், அவர் மரண தண்டனையைக் கட்டாயம் ரத்து செய்துவிடுவார் என்றும் சூப்ரெண்ட் கோமஸ் உறுதியாக நம்புகிறார்.

மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாறும்.

எனக்கு ஏன் இந்த தண்டனைக் குறைப்பு?

இனியும் பல வருடங்கள் இந்தச் சிறை அறைக்குள் ஆந்தையாக வாழ்வதற்கா?

பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் என்னைப் பார்க்க என் தந்தையும்- தாயும் ஏன் வரவில்லை?

பப்பூஸும் மூஸாவும் வரவில்லை.

அவர்கள் சுங்க அதிகாரிகள் அல்லது போலீஸ்காரர்களிடம் பிடிபட்டிருப்பார்களோ?

அபுவும் எலியாஸும் வரவில்லை.

சுமதி மட்டும் வந்தாள். எனினும், நான் அவளைப் பார்க்க மறுத்துவிட்டேன்.

நான் என்னுடனே நாடகம் ஆடுகிறேனா? நான் அவளைக் காதலித்தவன்தானே? இப்போதும் நான் அவளைக் காதலிப்பது உண்மைதானே?

அன்று திருமணத்தைப் பற்றி அவள் வற்புறுத்திக் கூறியதற்கு காரணம் என்னவாக இருக்கும்? எனக்கு அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் எனக்கு எதிராக சாட்சி சொல்லக் காரணம் என்ன?

இன்று டாக்டர் நாயர் வந்தார். அவர் இப்போதும் நல்ல முடிவையே எதிர்பார்க்கிறார். என்னுடைய பிணம் கல்லூரியின் அறுத்துப் பார்க்கும் மேஜைக்கு வரவே வராது...

இன்று பாதிரியார் பீட்டரும் வந்திருந்தார்.

ஒரு சிறு குழந்தையைக் கோபிக்கிற மாதிரி அவர் என்னிடம் சொன்னார்: ‘‘அன்பு செலுத்துபவர்கள் தேடி வர்றப்போ, அவர்களை நிராகரிக்கக் கூடாது. பொறுப்புகளில் இருந்து பின்வாங்கக் கூடாது.’’

அவர் கூற நினைத்தது என்ன?

இன்று பார்வையாளர்கள் இங்கு வரலாம்.

யாரையும் நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஆச்சரியம்! எலியாஸ் வந்து மன்னிப்பு கேட்டார். ‘‘சுமதியைப் பற்றி நான்தான் தப்பா நினைச்சிட்டேன். அதன் விளைவு இப்படி ஆகும் என்று யார் நினைச்சது? நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பத்மாவும் நானும் தவறாக நினைத்ததை சரி செய்ய முயன்றோம். மன்னிச்சிக்கோ ஜோசப். சுமதியும் நீயும் ஒண்ணுசேர வேண்டியவங்க. கடவுள் என்று ஒருவர் இருந்தால்... உங்களைக் காப்பாற்றுவார்!’’

எலியாஸ் சென்றவுடன், குட்டிக் குறுப்பு வந்தார். ‘‘ஜோசப், இன்னும் ரெண்டு ஆட்கள் வந்திருக்காங்க. பார்வையாளர்கள் நேரம் முடிந்துவிட்டாலும் நீ அவங்ககூட பேசலாம்.’’

என் தந்தை ராக்கியையும் சுமதியையும் பார்த்ததும் என்னுடைய மனம் உடைந்து நொறுங்கிய கண்ணாடியைப் போல் ஆகிவிட்டதா? பலவிதப்பட்ட உணர்ச்சிகளால் உந்தப்பட்ட களமாகிவிட்டதா அது? கண்களில் ஒருவகை எரிச்சல் உண்டானதா?

கல் எறிவதைப்போல என் தந்தை வார்த்தைகளை எறிந்தார். - சுமதியைத் தொட்டுக்கொண்டே.

‘‘ஜோசப் உனக்கு இருப்பது வளர்ப்புத் தந்தைதான். ஆனால், உன் மகனுக்கு அப்பன் வேண்டாமா?’’

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

இரும்புக் கம்பிகளுக்கு நடுவில் கையை நீட்டி நான் சுமதியைத் தொட்டேன்.

எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவளுக்கும்தான்.

இறுதியில் நான் சொன்னேன்.

‘‘சுமதி, நாளைக்கு நான் உன்னைத் திருமணம் செய்றேன்.’’

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்: ‘‘சத்தியமா?’’

‘‘சத்தியமா...’’ - நான் மெதுவான குரலில் சொன்னேன்.

இப்போது இரவுநேரம்.

நான் இப்போது சாமக்கோழி அல்ல.

தன்னம்பிக்கை கொண்ட - பல நிறங்களைக் கொண்ட பறவை.

கருணை மனு ஏற்றுக் கொள்ளப் படட்டும். நிராகரிக்கப்படட்டும். எது வேண்டுமானாலும் நடக்கட்டும்.

இங்கு என்மீது மட்டுமல்ல. சுமதி மீதும் எல்லோருக்கும் இரக்கம் இருக்கிறது. சிறை சூப்ரெண்ட் கோமஸும் சங்கு வண்ணனும் குட்டிக் குறுப்பும் ஹமீதும் உதவியாக இருப்பார்கள். உதவிப் பதிவாளர் இங்கு வருவார். சுமதியும் நானும் கையெழுத்திடுவோம்.

வாழ்க்கை...

அது இன்னும் முன்னோக்கி நகரும்.

என் மூலமாக... என்னுடைய மகன் மூலமாக...

யாருக்குத் தெரியும்? யார் பார்த்தார்கள்?

நான் எறிந்த விதைகள் பாத்தியில் பூத்து நின்று கொண்டிருக்கலாம்.

ஹமீத்திடம் கேட்க வேண்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.