Logo

தெய்வ மகன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6223
deiva-magan

ரு ஏழை விவசாயிக்கு ஒரு மகன் பிறந்தான். விவசாயி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். பையனுக்கு 'காட்ஃபாத'ராக இருக்கும்படி கேட்பதற்காக தன்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மனிதனைத் தேடிச் சென்றான். அந்த மனிதனோ ஒரு ஏழை மனிதனின் குழந்தைக்கு காட்ஃபாதராக இருப்பதற்கு மறுத்துவிட்டான். விவசாயி தன்னுடைய இன்னொரு பக்கத்து வீட்டுக்காரனிடம் போய் கேட்டான். அவனும் மறுத்துவிட்டான்.

அதற்குப் பிறகு அந்த ஏழைத் தந்தை கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கேட்டான். அவனுடைய மகனுக்கு காட்ஃபாதராக இருப்பதற்கு யாருமே தயாராக இல்லை. அதனால் அவன் இன்னொரு கிராமத்தைத் தேடிப் புறப்பட்டான். போகும் வழியில் அவன் ஒரு மனிதரைச் சந்தித்தான். அந்த மனிதர் விவசாயியைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்.

"வணக்கம், மனிதனே... நீ எங்கே போகிறாய்?"

"கடவுள் எனக்கு ஒரு குழந்தையைத் தந்திருக்கிறார்." விவசாயி கூறினான். "வாலிப வயதில் என் கண்களில் சந்தோஷம் குடி கொண்டிருப்பதற்காக... வயதான காலத்தில் ஆறுதல் அடைவதற்காக... மரணத்திற்குப் பிறகு என் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்வதற்காக... ஆனால், நான் ஏழை. என் கிராமத்தில் இருக்கும் யாரும் அவனுக்கு காட்ஃபாதராக இருப்பதற்குத் தயாராக இல்லை. அவனுக்கு ஒரு காட்ஃபாதரைத் தேடி வேறு இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்."

"நான் காட்ஃபாதராக இருக்கிறேன்". அந்த வழிப்போக்கர் கூறினார்.

விவசாயி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அந்த மனிதருக்கு நன்றி கூறினான். ஆனால், தொடர்ந்து கேட்டான்.

"சரி... 'காட்பாதராக இருப்பதற்கு நான் யாரைக் கேட்பது,"

"நகரத்திற்குச் செல்..." அந்த வழிப்போக்கர் பதில் சொன்னார்: "செவ்வக அமைப்புக்கு அருகில் நீ ஒரு கல்லாலான வீட்டைக் காண்பாய். அதன் முன்பகுதியில் கடைகளில் இருப்பது போன்ற சாளரங்கள் இருக்கும். வாசலில் நுழைந்தவுடன் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான கடைக்காரரைப் பார்க்கலாம். உன் குழந்தைக்கு காட்மதராக அவருடைய மகள் இருக்கும்படி அவரிடம் கேள்."

அந்த விவசாயி தயங்கினான்.

"நான் எப்படி ஒரு பணக்கார வியாபாரியிடம் போய் கேட்பது?" அவன் சொன்னான். "அவர் என்னை வாய்க்கு வந்தபடி திட்டிவிடுவார். தன் மகளை அனுப்புவதற்கு அவர் சம்மதிக்கவே மாட்டார்."

"அதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டாம். போய்க் கேள். நாளை காலைக்குள் எல்லாவற்றையும் தயார் பண்ணிவை... நான் ஞானஸ்நானம் செய்யும் இடத்திற்கு வந்துவிடுகிறேன்."

அந்த விவசாயி தன் வீட்டுக்குத் திரும்பி வந்தான். தொடர்ந்து நகரத்திற்குச் சென்று வியாபாரியைப் பார்ப்பதற்காக குதிரையில் புறப்பட்டான். குதிரையை லாயத்திற்குள் கொண்டு போய் நிறுத்தக் கூட இல்லை- வியாபாரி வெளியே வந்து கொண்டிருந்தார்.

"என்ன வேண்டும்?" அவர் கேட்டார்.

"அய்யா..."விவசாயி சொன்னான்: "வாலிப வயதில் என் கண்களில் சந்தோஷம் குடிகொண்டிருப்பதற்காகவும்... வயதான காலத்தில் நான் ஆறுதல் அடைவதற்காகவும்... மரணமடைந்த பிறகு என் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்வதற்காகவும் கடவுள் எனக்கு ஒரு மகனை அளித்திருக்கிறார். அவனுக்கு காட்மதராக உங்களுடைய மகள் இருப்பதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்."

"சரி... ஞானஸ்தானம் எப்போது?" வியாபாரி கேட்டார்.

"நாளைக்குக் காலையில்."

"நல்லது... நிம்மதியாகச் செல்லுங்கள்... நாளைக்குக் காலையில் உங்களுடைய நிகழ்ச்சியில் அவள் உங்களுடன் இருப்பாள்."

மறுநாள் அந்த காட்மதர் வந்தாள். காட்ஃபாதரும்... குழந்தை ஞானஸ்தானம் செய்து வைக்கப்பட்டான். அந்த நிகழ்ச்சி முடிந்தது தான் தாமதம்- காட்ஃபாதர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் யார் என்று யாருக்குமே தெரியவில்லை. அதற்குப் பிறகு அவரை யாரும் பார்க்கவும் இல்லை.

2

வனுடைய பெற்றோர் மகிழ்ச்சியடையும் அளவுக்கு பையன் வளர்ந்தான். அவன் பலசாலியாக இருந்தான். வேலை செய்வதற்குத் தயாராக இருந்தான். புத்திசாலித்தனம் கொண்டவனாக இருந்தான். பணிவுடையவனாக இருந்தான். அவனுக்கு பத்து வயது நடக்கும் போது, அவனுடைய பெற்றோர் அவனை எழுதுவதற்கும் படிப்பதற்கும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மற்றவர்கள் ஐந்து வருடங்களில் கற்றுக் கொள்வதை அவன் ஒரே வருடத்தில் கற்றான். வெகுசீக்கிரமே அவனுக்கு கற்றுத் தருவதற்கு அவர்களுக்கு எதுவும் இல்லை என்ற சூழ்நிலை உண்டானது.

ஈஸ்டர் பண்டிகை வந்தது. சிறுவன் தன்னுடைய காட்மதருக்கு தன்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைக் கூறுவதற்காகச் சென்றான்.

"அப்பா... அம்மா..." தன் வீட்டுக்குத் திரும்பி வந்தபிறகு அவன் கேட்டான். "என்னுடைய காட்ஃபாதர் எங்கே இருக்கிறார்? என்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை அவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

அதற்கு அவனுடைய தந்தை கூறினான்:

"உன்னுடைய காட்ஃபாதரைப் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாதடா, அன்பு மகனே. அதற்காக நாங்கள் எங்களுக்குள் அடிக்கடி வருத்தம் கொள்வோம். நீ ஞானஸ்தானம் பெற்ற நாளிலிருந்து நாங்கள் அவரைப் பார்த்ததே இல்லை. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவர் எங்கே வாழ்கிறார் என்பததே எங்களுக்குத் தெரியாது. சொல்லப்போனால்- அவர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா என்பதே எங்களுக்குத் தெரியாது."

பையன் தன் பெற்றோருக்கு முன்னால் தலையை குனிந்து கொண்டு நின்றிருந்தான்.

"அப்பா... அம்மா.." அவன் சொன்னான்:

"நான் போய் என் காட்ஃபாதரைக் கண்டுபிடிப்பதற்கு என்னை அனுமதியுங்கள். நான் அவரைக் கட்டயாம் கண்டுபிடித்து, என்னுடைய ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைக் கூற வேண்டும்."

அதைத் தொடர்ந்து அவனுடைய தந்தையும் தாயும் அவனைச் செல்வதற்கு அனுமதித்தார்கள். சிறுவன் தன்னுடைய காட்ஃபாதரைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டான்.

3

சிறுவன் வீட்டை விட்டுப் புறப்பட்டு சாலை வழியே நடந்து சென்றான். அவன் பல மணி நேரம் நடந்து சென்ற பிறகு, ஒரு வழிப்போக்கர் அவனைத் தடுத்து நிறுத்திக் கேட்டார்:

"சிறுவனே, இன்றைய நாள் உனக்கு நல்ல நாளாக இருக்கட்டும். நீ எங்கே போகிறாய்?"

அதற்கு பையன் பதில் சொன்னான்.

"நான் என் காட்மதரைப் பார்த்து ஈஸ்டர் வாழ்த்துகளைக் கூறினேன். வீட்டுக்குத் திரும்பி வந்து என் பெற்றோரிடம் என்னுடைய காட்ஃபாதர் எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். அவரையும் போய் பார்த்து ஈஸ்டர் வாழ்த்துகளைக் கூற வேண்டும் என்று நினைத்தேன். அவரைப் பற்றிய தகவல்  எதுவுமே தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டார்கள். எனக்கு ஞானஸ்தானம் முடிந்தவுடனேயே அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அவரைப் பற்றிய எந்தவித தகவல்களும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா என்ற விஷயம் கூட தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். ஆனால், நான் என்னுடைய காட்ஃபாதரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவரைத் தேடி நான் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன்."


அதற்கு அந்த வழிப்போக்கர் கூறினார்: "நான்தான் உன்னுடைய காட்ஃபாதர்..."

அதைக் கேட்டு சிறுவன் மிகுந்த சந்தோஷமடைந்தான். ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் தன் காட்ஃபாதரை மூன்று முறை முத்தமிட்ட அவன் அந்த மனிதரைப் பார்த்துக் கேட்டான்.

"நீங்கள் இப்போது எந்த வழியாகப் போகிறீர்கள், காட்ஃபாதர்? எங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் போவதாக இருந்தால், தயவு செய்து நீங்கள் எங்களின் வீட்டுக்கு வரவேண்டும். அதே சமயம் நீங்கள் உங்கள் வீட்டுக்குச் செல்வதாக இருந்தால், நான் உங்களுடன் சேர்ந்து வருகிறேன்."

"இப்போது எனக்கு அதற்கான நேரம் இல்லை." காட்ஃபாதர் பதில் கூறினார்: "உன் வீட்டுக்கு வருவதற்குத்தான்... பல கிராமங்களிலும் எனக்கு வேலைகள் இருக்கின்றன. நாளைக்குக் காலையில் நான் வீட்டுக்குத் திரும்பி வருவேன். அப்போது என்னை வந்து பார்."

"நான் எப்படி உங்களைக் கண்டுபிடிப்பது, காட்ஃபாதர்?"

"வீட்டைவிட்டு நீ புறப்பட்டவுடன், நேராக உதயமாகிக் கொண்டிருக்கும் ஆதவனை நோக்கிச் செல். நீ ஒரு காட்டை அடைவாய். காட்டின் வழியே பயணம் செய்தால், ஒரு வெற்றிடத்தை அடைவாய். அந்த வெற்றிடத்தை அடைந்ததும், அங்கு உட்கார்ந்து சிறிது நேரம் ஓய்வெடு. உன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்று பார். காட்டின் எதிர்பக்கத்தில் ஒரு தோட்டம் இருப்பதை நீ பார்க்கலாம். அந்தத் தோட்டத்தில் தங்கத்தாலான கூரையைக் கொண்ட ஒரு வீடு இருக்கும். அதுதான் என்னுடைய வீடு. வீட்டின் வெளிவாசலுக்கு வந்து நின்றால் உன்னைச் சந்திப்பதற்கு நான் அங்கு நின்று கொண்டிருப்பேன்."

அதைக் கூறிய காட்ஃபாதர் தன்னுடைய தெய்வமகனின் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார்.

4

சிறுவன் தன்னுடைய காட்ஃபாதர் கூறியபடியே செய்தான். அவன் கிழக்குப் பக்கமாக ஒரு காட்டை அடையும் வரை நடந்தான். அதற்குப் பிறகு அவன் ஒரு வெற்றிடத்திற்கு வந்தான். வெற்றிடத்திற்கு மத்தியில் ஒரு பைன் மரம் நின்றிருப்பதைப் பார்த்தான். அதன் ஒரு கிளையில் கயிறு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் இன்னொரு முனை ஒரு பெரிய ஓக் மரத் துண்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்த மரக்கட்டைக்கு மிகவும் அருகில் வைக்கப்பட்டிருந்த மரத்தாலான கலத்தில் தேன் நிரப்பப்பட்டிருந்தது. சிறுவன் சிறிது நேரம் அங்கு ஏன் தேன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்த மரத்துண்டு அதற்கு மேல் ஏன் தொங்கவிடப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது காட்டில் ஒரு கிறீச்சிடும் சத்தத்தை அவன் கேட்டான். கரடிகள் சில நெருங்கி வந்து கொண்டிருந்தன. பெண் கரடியொன்று ஒரு வயதேயான ஒரு சிறிய கரடியுடனும், மூன்று சிறு குட்டிகளுடனும் வந்து கொண்டிருந்தது. காற்றில் முகர்ந்து பார்த்த பெண் கரடி நேராக மரக்கலத்தை நோக்கி சென்றது. மற்ற குட்டிகள் அதைப் பின்பற்றிச் சென்றன. அந்த பெண் கரடி வாய்ப் பகுதியை தேனுக்குள் நுழைத்து, மற்ற குட்டிகளையும் அதே மாதிரி செய்யச் சொன்னது. அவை தேனுக்குள் வாயை வைத்து, சுவைக்கஆரம்பித்தன. அவை அப்படிச் செய்து கொண்டிருந்த போது, பெண் கரடியின் தலைபட்டு, மேலே தொங்கிக் கொண்டிருந்த மரக் கட்டை சற்று விலகி அசைந்து திரும்பி வந்து, குட்டிகளின் மீது மோதியது. அதைப் பார்த்த பெண் கரடி தன்னுடைய கால் பாதத்தைக் கொண்டு அந்த மரக்கட்டையை விலக்கிவிட்டது. அது மேலும் விலகிச் சென்று மிகவும் வேகமாகத் திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்படி வந்து ஒரு கரடிக்குட்டியின் முதுகுப் பகுதியிலும் இன்னொரு கரடிக்குட்டியின் தலையிலும் மோதியது. வேதனையால் உரத்த குரலில் கத்திய கரடிக்குட்டிகள் அங்கிருந்து ஓடிச்சென்றன. தாய்க்கரடி கோபமடைந்து ஒரு பெரிய உறுமல் சத்தத்தை உண்டாக்கியவாறு தன்னுடைய முன்காலால் கட்டையை உதைத்து தன்னுடைய தலைக்கு மேலே உயர்த்திவிட்டது.

மரக்கட்டை நீண்ட தூரம் விலகிச் சென்றது. அது காற்றில் உயரத்தில் பறந்து சென்றது. அப்போது அந்த ஒரு வயதேயான கரடிக்குட்டி வேகமாக மரக்கலத்தை நோக்கி வந்து, தன்னுடைய வாய்ப்பகுதியை தேனுக்குள் நுழைத்து, அதை ஓசை உண்டாக்கிக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தது. மற்ற கரடிக் குட்டிகளும் அந்த கரடிக்குட்டியை நெருங்கி வந்தன. ஆனால், அவை மரக்கலத்திற்கு அருகில் வருவதற்கு முன்பே, மேலே தொங்கிக் கொண்டிருந்த மரக்கட்டை வேகமாகப் பறந்து வந்து, அந்த ஒரு வயதேயான கரடிக்குட்டியை தலையில் அடித்து, அதை இறக்கும்படி செய்தது. முன்பு செய்ததைவிட தாய்க் கரடி உரத்த குரலில் சத்தம் உண்டாக்கி,மேலே தொங்கிக் கொண்டிருந்த மரக்கட்டையை, தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி வேகமாகத் தள்ளிவிட்டது. தான் கட்டப்பட்டிருந்த கிளையையும் தாண்டி மேலே உயரத்திற்குச் சென்றது மரக்கட்டை. பெண் கரடி மரக்கலத்திற்குத் திரும்பி வந்தது. சிறிய கரடிக்குட்டிகள் அதைப் பின்பற்றி வந்தன. மரக்கட்டை மேலும் மேலும் உயரத்திற்குப் பறந்து சென்று, நின்று, கீழ்நோக்கி வர ஆரம்பித்தது. நெருங்கி வர வர அதன் வேகம் மிகவும் அதிகமானது. இறுதியில், தன்னுடைய முழு வேகத்துடன் அது பெண் கரடியின் தலையின் மீது வந்து மோதியது. பெண் கரடி கீழே விழுந்து புரண்டது. அதன் கால்கள் செயல்படாமல் போக, அது இறந்து போனது. கரடிக்குட்டிகள் காட்டுக்குள் ஓடிவிட்டன.

5

சிறுவன் இந்தக் காட்சிகள் அனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் அவன் பயணத்தைத் தொடர்ந்தான். காட்டை விட்டு வெளியே வந்து, அவன் ஒரு பெரிய தோட்டத்தை அடைந்தான். அந்தத் தோட்டத்திற்கு மத்தியில் ஒரு தங்கத்தாலான கூரை அமைக்கப்பட்ட மிகப்பெரிய அரண்மனை நின்றிருந்தது. அதன் வெளிவாசலில் நின்று கொண்டிருந்த அவனுடைய காட்ஃபாதர் புன்னகைத்தார்.

அவர் தன்னுடைய தெய்வமகனை வரவேற்றார். அவனை வெளிவாசலின் வழியாகத் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார். அப்படி ஒரு அழகை சிறுவன் தன் மனதில் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. அவன் தன்னைச் சுற்றி நிலவிக் கொண்டிருந்த சந்தோஷமான சூழ்நிலையை நினைத்துப் பார்த்ததுகூட இல்லை.

அவனுடைய காட்ஃபாதர் அவனை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றார். அது வெளியே இருந்ததைவிட மேலும் பல மடங்கு அழகு நிறைந்ததாக இருந்தது. உள்ளே இருந்த எல்லா அறைகளையும் காட்ஃபாதர் சிறுவனுக்குக் காட்டினார். ஒவ்வொரு அறையும் ஏற்னெவே பார்த்த அறையை விட பிரகாசமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. இறுதியாக அவர்கள் ஒரு கதவுக்கு அருகில் வந்தார்கள். அது சாத்தப்பட்டிருந்தது.


"இந்தக் கதவை நீ பார்..." அவர் சொன்னார்: "இந்தக் கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. வெறுமனே சாத்தப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான். இதைத் திறக்க முடியும். ஆனால், நீ இதைத் திறக்கக் கூடாது என்று தடை விதிக்கிறேன். நீ இங்கேயே இருக்கலாம். நீ எங்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாயோ, அங்கெல்லாம் செல்லலாம். இந்த இடத்தில் இருக்கும் சந்தோஷங்கள் அனைத்தையும் நீ அனுபவிக்கலாம். என்னுடைய ஒரே உத்தரவு என்னவென்றால்- அந்தக் கதவைத் திறக்கக் கூடாது. நீ எப்போதாவது அதைத் திறந்தால்...  காட்டில் என்ன பார்த்தாய் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்.

இதைக் கூறி விட்டு காட்ஃபாதர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். தெய்வமகன் அரண்மனையிலேயே தங்கி விட்டான். அந்த வாழ்க்கை மிகவும் சந்தோஷங்கள் நிறைந்ததாகவும் பிரகாசமானதாகவும் இருந்தது. அவன் தான் அங்கு மூன்று மணி நேரம் மட்டுமே இருந்ததைப் போல உணர்ந்தான். ஆனால், முப்பது வருடங்கள் அவன் அங்கு வாழ்ந்து விட்டிருந்தான். முப்பது வருடங்கள் கடந்தோடிய பிறகு, ஒருநாள் தெய்வமகன் சாத்தப்பட்டிருந்த கதவைத் தாண்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது. தன்னுடைய காட்ஃபாதர் எதற்காகத் தன்னை அந்த அறைக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்தார் என்பதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான்.

'நான் வெறுமனே உள்ளே சென்று அங்கு என்ன இருக்கிறதுஎன்பதைப் பார்க்கலாமே!' அவன் நினைத்தான். அந்த நினைப்புடன் கதவை மெதுவாகத் தள்ளினான். கதவு திறந்தது. தெய்வமகன் உள்ளே நுழைந்தான். மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் அழகானதாகவும் பெரியதாகவும் இருந்த ஒரு கூடத்தை அவன் அங்கு பார்த்தான். அந்த கூடத்தின் மையத்தில் ஒரு சிம்மாசனம் இருந்தது. அவன் அந்த கூடத்தில் இங்குமங்குமாக சிறிது நேரம் உலவினான். பிறகு, படிகளில் ஏறி சிம்மாசனத்தில் போய் உட்கார்ந்தான். அப்படி உட்கார்ந்தபோது, சிம்மாசனத்தின் மீது ஒரு செங்கோல் சாய்த்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். அதை அவன் தன்னுடைய கையில் எடுத்தான். அவன் அதைக் கையில் எடுத்ததுதான் தாமதம், கூடத்தின் நான்கு சுவர்களும் உடனடியா மறைந்துவிட்டன. தெய்வமகன் சுற்றிலும் பார்த்தான். முழு உலகத்தையும் அவனால் பார்க்க முடிந்தது. மனிதர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தான். அவன் முன்னால் பார்த்தான். கடல் தெரிந்தது. அதன் மீது கப்பல்கள் மிதந்து போய்க் கொண்டிருந்தன. தன்னுடைய வலப்பக்கம் பார்த்தான். அங்கு பழங்கால மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தன்னுடைய இடது பக்கம் பார்த்தான். அங்கு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மனிதர்கள்- ஆனால் ரஷ்யர்கள் அல்ல- வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான். நான்காவது பக்கம், தன்னைப் போன்ற ரஷ்ய மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.

"நான் பார்க்க வேண்டும்..."அவன் சொன்னான்: "வீட்டில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அறுவடை நன்றாக நடக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்."

அவன் தன்னுடைய தந்தையின் வயல்களைப் பார்த்தான். கதிர்கள் குவியல்களாக வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். ஒரு விவசாயி வண்டியை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். கதிர்கள் எவ்வளவு விளைந்திருக்கின்றன என்பதை அவன் எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான். இரவு நேரம் வந்தது. அந்த வேளையில் கதிர்களை வண்டியில் ஏற்றுவதற்காக தன்னுடைய தந்தைதான் வந்து கொண்டிருக்கிறார் என்று அவன் நினைத்தான்.

அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வாசிலி குட்ரயாஷோவ் என்ற திருடன் வயலுக்குள் நுழைந்து தன் வண்டியில் கதிர்களை ஏற்ற ஆரம்பித்தான். தெய்வமகனுக்கு அந்தச் செயல் கோபத்தை உண்டாக்கியது. அவன் உரத்த குரலில் கத்தினான்:

"அப்பா, நம் வயலில் இருந்த கதிர்கள் திருடு போய்க் கொண்டிருக்கின்றன."

இரவு நேரத்தில் குதிரைகளை மேய்ச்சலுக்காகக் கொண்டு சென்றிருந்த அவனுடைய தந்தை, திடுக்கிட்டு எழுந்தான்.

"கதிர்கள் திருடப்பட்டதைப்போல நான் கனவு கண்டேன்." அவன் சொன்னான்: "நான் இப்போதே குதிரையில் ஏறிச்சென்று பார்க்க வேண்டும்."

தொடர்ந்து அவர் குதிரையில் ஏறி வயலை நோக்கிச் சென்றான். அங்கு வாசிலி இருப்பதைப் பார்த்தான். பிற விவசாயிகளை உதவிக்கு வரும்படி அழைத்தான். வாசிலி அடித்து உதைக்கப்பட்டு, கட்டப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

பிறகு, தெய்வமகன் தன்னுடைய காட்மதர் வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்தைப் பார்த்தான். அவள் ஒரு வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய கணவன் எழுந்து வேறொரு பெண்ணை நோக்கிச் செல்வதைப் பார்த்தான். தெய்வமகன் அவளைப் பார்த்து கத்தினான்:

"எழுந்திரிங்க... எழுந்திரிங்க! உங்க கணவர் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்."

காட்மதர் வேகமாக எழுந்து ஆடைகளை எடுத்து அணிந்து தன் கணவன் எங்கே இருக்கிறான் என்பதைத் தேடிக் கண்டுபிடித்தாள். அவள் வாய்க்கு வந்தபடி திட்டி, அந்தப் பெண்ணை அடித்தாள். பிறகு தன் கணவனை விரட்டிவிட்டாள்.

தெய்வமகன் தன் தாய் எங்கே இருக்கிறாள் என்று பார்த்தான். அவள் தன்னுடைய குடிசைக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு திருடன் வீட்டுக்குள் நுழைந்து அவள் பொருட்களைப் பாதுகாத்து வைத்திருந்த பெட்டியை உடைக்க ஆரம்பித்தான். அவனுடைய அன்னை எழுந்து கூப்பாடு போட்டாள். அந்தத் திருடன் ஒரு கோடரியை எடுத்து தன் தலைக்குமேல் உயர்த்தி அவளைக் கொல்வதற்கு முயன்றான்.

தெய்வமகனால் செங்கோலை எடுத்து திருடனைத் தாக்காமல் இருக்க முடியவில்லை. செங்கோல் அவனுடைய முன் நெற்றியில் சாய்ந்து அந்த இடத்திலேயே அவனை இறக்கச் செய்தது.

6

தெய்வமகன் திருடனைக் கொன்று முடித்ததுதான் தாமதம்- சுவர்கள் மூடிக் கொண்டன. கூடம் முன்பு இருந்ததைப் போலவே ஆகிவிட்டது.

தொடர்ந்து கதவு திறந்தது. காட்ஃபாதர் உள்ளே வந்தார். தன் தெய்வமகனை நோக்கி வந்து, அவனுடைய கையைப் பற்றி, அவனை சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கச் செய்தார்.

"நான் கூறிய உத்தரவை நீ மதிக்கவில்லை". அவர் சொன்னார். "திறக்கக்கூடாது என்று விலக்கப்பட்ட கதவைத் திறந்தபோது நீ தவறு செய்துவிட்டாய். நீ செய்த இன்னொரு தவறு- நீ சிம்மாசனத்தில் போய் உட்கார்ந்து என்னுடைய செங்கோலை உன்னுடைய கைகளில் எடுத்தது. நீ இப்போது செய்திருக்கும் மூன்றாவது தவறு- அது உலகில் இருக்கும் பாவச் செயலை மேலும் அதிகமாக்கிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரம் நீ இங்கே உட்கார்ந்திருந்தால், நீ பாதி மனிதக் கூட்டத்தை அழித்து விட்டிருப்பாய்."

தொடர்ந்து காட்ஃபாதர் தன்னுடைய தெய்வமகனை திரும்பவும் சிம்மாசனத்திற்கு அருகில் அழைத்துச் சென்றார். அந்த செங்கோலை எடுத்து அவனுடைய கையில் தந்தார். அந்தச் சுவர்கள் மீண்டும் திறந்தன. எல்லா விஷயங்களும் நன்கு தெரிந்தன. காட்ஃபாதர் கூறினார்.


"நீ உன் தந்தைக்கு என்ன செய்திருக்கிறாய் என்பதைப் பார். வாசிலி கடந்த ஒரு வருடமாக சிறைக்குள் இருந்தான். எல்லவகையான அயோக்கியத்தனங்களையும் கற்றுக் கொண்டு, அவன் அங்கிருந்து திரும்பி வந்திருக்கிறான். அவனை இப்போது சகித்துக் கொள்ளவே முடியாது. பார்... அவன் உன்னுடைய தந்தையின் குதிரைகளில் இரண்டைத் திருடியிக்கிறான். தந்தையின் தானியக் கிடங்கிற்கு இப்போது அவன் நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறான். இவை அனைத்தும் நீ உன் தந்தைக்குக் கொண்டு வந்த செயல்கள்."

தெய்வமகன் தன் தந்தையின் தானியக் கிடங்கு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். ஆனால், காட்ஃபாதர் அந்த காட்சியை அவனிடமிருந்து மறைத்துவிட்டு அவனை இன்னொரு பக்கம் பார்க்கும்படி கூறினார்.

"இங்கேதான் உன்னுடைய காட்மதரின் கணவன் இருக்கிறான்." அவர் சொன்னார். "அவன் தன்னுடைய மனைவியை விட்டுப் பிரிந்து சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது அவன் பிற பெண்களுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் முன்பு தொடர்பு வைத்திருந்த பெண் மிகவும் கீழான நிலைக்குப் போய் விட்டாள். அவனுடைய மனைவியை ஆக்கிரமித்த கவலை, அவளைக் குடிகாரியாக ஆக்கிவிட்டது. இதுதான் நீ உன்னுடைய காட்மதருக்குச் செய்தது."

காட்ஃபாதர் அந்தக் காட்சியையும் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். அவர் தெய்வமகனுக்கு அவனுடைய தந்தையின் வீட்டைக் காட்டினார். அங்கு அவனுடைய தாய் தன்னுடைய பாவங்களுக்காக கண்ணீர் விட்டு அழுது, வருந்தியவாறு கூறினாள்:

"இதை விட அந்த இரவு நேரத்தில் அந்தத் திருடன் என்னைக் கொன்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் இந்த அளவுக்கு பெரிய பாவத்தைக் செய்திருக்க வேண்டியதில்லை."

"இதுதான்..."காட்ஃபாதர் கூறினார்: "நீ உன் அன்னைக்குச் செய்தது..."

அவர் அந்தக் காட்சியையும் அவனுடைய பார்வையிலிருந்து மறையச் செய்தார். அவர் கீழே கையைக் காட்டினார். ஒர சிறைச்சாலைக்கு முன்னால் இரண்டு காவலாளிகள் திருடனைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பதைத் தெய்வமகன் பார்த்தான்.

காட்ஃபாதர் கூறினார்.

"இந்த மனிதன் பத்து மனிதர்களைக் கொலை செய்துவிட்டான். அவனுடைய பாவங்கள் அவனைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், அவனைக் கொன்றதன் மூலம் நீ, அவனுடைய பாவங்களை உன் மீது ஏற்றிக் கொண்டாய். இப்போது அவனடைய எல்லா பாவங்களுக்கும் நீதான் பதில் சொல்ல வேண்டும்.

உனக்கு நீயே இப்படியொரு காரியத்தைச் செய்து கொண்டாய். பெண் கரடி மரக்கட்டையை ஒரு பக்கமாக ஒரு முறை தள்ளிவிட்டு, தன்னுடைய குட்டிகளுக்கு தொந்தரவு உண்டாக்கிக் கொடுத்தது. இன்னொரு முறை தள்ளிவிட்டு, தன்னுடைய ஒரு வயது குட்டியைக் கொன்றுவிட்டது. மூன்றாவது முறையாக அதைத் தள்ளிவிட்டு, தன்னைத்தானே சாகடித்துக் கொண்டது. நீயும் அதே காரியத்தைதான் செய்திருக்கிறாய். நான் இப்போது உலகத்திற்குள் செல்வதற்காக உனக்கு முப்பது வருடங்களை அளிக்கிறேன். திருடனின் பாவங்களுக்கு நீ போய் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அந்த பாவங்களுக்காக பிராயச்சித்தம் செய்யவில்லையென்றால், நீ அவனுடைய இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்."

"அவனுடைய பாவத்திற்கு நான் எப்படி பிராயச்சித்தம் செய்ய முடியும்?" தெய்வமகன் கேட்டான்.

அதற்கு காட்ஃபாதர் கூறினார்:

"நீ உலகத்தை எந்த அளவுக்கு விட்டுச் சென்றாயோ, அந்த அளவுக்கு நீ அதற்-குள் பாவச் செயல்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாய். நீ உன்னுடைய பாவச் செயல்களுக்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். திருடனின் பாவச் செயல்களுக்கம் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்."

"நான் உலகத்தில் இருக்கும் பாவத்தை எப்படி அழிப்பது?" தெய்வமகன் கேட்டான்.

"வெளியே செல்..." காட்ஃபாதர் பதில் கூறினார்: "உதயமாகிக் கொண்டிருக்கும் சூரியனை நோக்கி நடந்து செல். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு நீ ஒரு வயலை அடைவாய். அங்கு சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார். உனக்கு என்ன தெரியுமோ, அதை அவர்களுக்கு கற்றுக் கொடு. அதற்குப் பிறகு மேலும் நடந்து செல். நீ எவற்றையெல்லாம் பார்க்கிறாய் என்பதை கவனி. நான்காவது நாள் நீ ஒரு காட்டை அடைந்திருப்பாய். காட்டின் மையப் பகுதியில் ஒரு சிறிய கட்டடம் இருக்கும். அதற்குள் ஒரு துறவி இருப்பார். என்னவெல்லாம் நடைபெற்றனவோ, அவை அனைத்தையும் அவரிடம் கூறு. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் உனக்கு சொல்லிக் கொடுப்பார். அவர் உனக்கு என்னவெல்லாம் கூறுகிறாரோ, அவற்றையெல்லாம் நீ செய்து முடித்துவிட்டால், நீ உன்னுடைய பாவச் செயல்களுக்கும் திருடனின் பாவச் செயல்களுக்கும் பிராயச்சித்தம் செய்துவிட்டாய் என்று அர்த்தம்."

இதைச் சொன்ன காட்ஃபாதர், தன்னுடைய தெய்வமகனை வெளிவாசலுக்கு வெளியே போகும்படி செய்தார்.

7

தெய்வமகன் தன்னுடைய வழியில் நடந்தான். நடந்து செல்லும்போது அவன் தன் மனதில் நினைத்தான்:

'நான் எப்படி இந்த உலகத்தில் இருக்கும் கெட்ட செயல்களை அழிக்க முடியும்? மோசமான மனிதர்களுக்க தண்டனை தருவதன் மூலம் கெட்ட செயல்களை இல்லாமல் செய்யலாம். அவர்களை சிறைக்குள் அடைக்க வேண்டும். அல்லது அவர்களின் உயிரைப் போக்கும் வண்ணம் செய்ய வேண்டும். மற்றவர்களின் பாவங்களை என்மீது ஏற்றுக் கொள்ளாமல் நான் எப்படி மோசமான செயல்களை அழிக்க முடியும்?'

தெய்வமகன் இந்த விஷயத்தைப் பற்றி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டே வந்தான். ஆனால், இறுதிவரை அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வரவே முடியவில்லை. அவன் ஒரு வயலை அடையும் வரை நடந்து போய்க் கொண்டே இருந்தான். அங்கு தானியக் கதிர்கள் அடர்த்தியாகவும் நன்றாகவும் வளர்ந்து நின்றிருந்தன. அவை அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. ஒரு சிறிய கன்றுக்குட்டி தானியக் கதிர்களுக்குள் நுழைந்து விட்டிருப்பதை தெய்வமகன் பார்த்தான். சமீபத்தில் இருந்த சில மனிதர்கள் அதைப் பார்த்து, குதிரைகளின் மீது ஏறி அவர்கள் தானியக் கதிர்களுக்கு நடுவில் முன்னோக்கியும் பின்னோக்கியும் அதை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் கன்றுக்குட்டி தானியக் கதிர்களை விட்டு வெளியே வருவதைப் போல தோன்றும். அதற்குள் யாராவது குதிரை மீது ஏறி வருவதைப் பார்த்ததும், கன்றுக்குட்டி பயந்துபோய் மீண்டும் தானியக் கதிர்களுக்குள்ளேயே ஓடிவிடும். பிறகு அவர்கள் அதைப் பின்பற்றி குதிரைகளில் வேகமாகப் பயணிப்பார்கள். அப்போது கதிர்கள் கீழே சாயும். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒர பெண் உரத்த குரலில் கத்தினாள்.

"அவர்கள் விரட்டி விரட்டி என் கன்றுக்குட்டியை சாகடிக்கப் போறாங்க."

அப்போது தெய்வமகன் விவசாயிகளைப் பார்த்துச் சொன்னான்:


"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? தானியக் கதிர்களை விட்டு நீங்கள் எல்லாரும் வெளியே வாருங்கள். அந்தப் பெண் தன்னுடைய கன்றுக்குட்டியை வெளியே வரும்படி அழைக்கட்டும்."

அவன் சொன்னபடி அந்த மனிதர்கள் செய்தார்கள். அந்தப் பெண் தானியக் கதிர்கள் வளர்ந்திருந்த வயலின் வரப்பில் நின்றுகொணடு கன்றுக்குட்டியை அழைத்தாள்: ப்ரவ்னி... வா..." அந்த கன்றுக்குட்டி தன் காதுகளை உயர்த்தி, சிறிது நேரம் கூர்ந்து கவனித்துவிட்டு, அந்தப் பெண்ணை நோக்கி தன்னுடைய விருப்பப்படி வந்தது. தன்னுடைய தலையை அது அந்தப் பெண்ணின் ஆடைகளின் மீது வைத்து மோதியது. சொல்லப் போனால் அது அவளை மோதித் தள்ளிக் கொண்டிருந்தது. அந்த மனிதர்கள் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். அந்தப் பெண்ணும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அந்தச் சிறிய கன்றுக்குட்டியும் சந்தோஷக் களிப்பில் மூழ்கியது.

தெய்வமகன் அங்கிருந்து கிளம்பினான். நடந்து செல்லும் போது அவன் தனக்குள் சிந்தித்தான்:

'பாவம், பாவத்தைப் பரவச் செய்கிறது என்ற உண்மையை இப்போது நான் தெரிந்து கொண்டேன். பெரும்பாலான மனிதர்கள் பாவச் செயல்களை விரட்ட விரட்ட, பாவச் செயல்கள் அதிகமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. பாவச் செயல்களை பாவச் செயல்களால் அழிக்க முடியாது என்று தோன்றுகிறது. அப்படியென்றால் எந்த வழியில்தான் அதை அழிப்பது? எனக்குத் தெரியவில்லை. கன்றுக்குட்டி தன்னுடைய எஜமானிக்கு அடி பணிந்தது. எல்லா விஷயங்களும் நல்ல முறையில் நடந்து முடிந்து விட்டன. அதே நேரத்தில், அந்தக் கன்றுக்குட்டி அவள் கூறியபடி நடக்காமல் போயிருந்தால், அதை எப்படி நாம் அந்த தானியக் கதிர்கள் வளர்ந்திருக்கும் வயலுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்திருக்க முடியும்?'

தெய்வமகன் மீண்டும் சிந்தனையில் மூழ்கினான். ஆனால், அவனால் ஒரு இறுதி முடிவுக்கு வரவே முடியவில்லை. அவன் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

8

வன் ஒரு கிராமத்தை அடையும் வரையில் நடந்து கொண்டேயிருந்தான். கிராமத்தின் எல்லையை அடைந்ததும், அங்கிருந்த ஒரு வீட்டில் அன்றிரவு அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டான். வீட்டின் சொந்தக்காரி மட்டும் தனியாக அங்கு இருந்தாள். அவள் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அவள் அவனை உள்ளே வரும்படி சொன்னாள். தெய்வமகன் வீட்டுக்குள் நுழைந்து, செங்கற்களால் கட்டப்பட்ட அடுப்புக்கு அருகில் உட்கார்ந்து, அந்தப் பெண் என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அந்த அறையைச் சுத்தம் செய்துவிட்டு, மேஜையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அவள் மேஜையை ஒரு அழுக்குத் துணியால் சுத்தம் செய்ய முயல்வதை அவன் பார்த்தான். அவள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் வரை சுத்தம் செய்தாள். ஆனால், அவளால் அதைச் சுத்தமாக்கவே முடியவில்லை. அழுக்குத் துணி இங்குமங்குமாக அழுக்குக் கறையைப் படியச் செய்திருந்தது. அவள் அதை மீண்டும் துணியால் துடைத்தாள். முதலில் இருந்த கறை மறைந்துவிட்டது. ஆனால், அதற்கு பதிலாக வேறு கறைகள் வந்து சேர்ந்தன. பிறகு அவள் மேஜையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை துடைத்தாள். மீண்டும் அதேதான் நடந்தது. அழுக்குத் துணி மேஜையை நாசம் செய்தது. ஒரு கறையைத் துடைத்து நீக்கினால், அந்த இடத்தில் இன்னொரு கறை வந்து சேர்ந்து கொண்டிருந்தது-. தெய்வமகன் அந்தக் காட்சியையே சிறிது நேரம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் சொன்னான்:

"அம்மா, நீங்க என்ன செய்றங்க?"

"விடுமுறைக்காக நான் சுத்தம் செய்து கொண்டிருந்ததை நீ பார்க்கவில்லையா? இந்த மேஜையை மட்டும்தான் என்னால் சரியாக சுத்தம் செய்ய முடியவில்லை. அது சுத்தமாகவே ஆக மாட்டேன் என்கிறது. நானே மிகவும் களைத்துப் போய்விட்டேன்.

"நீங்க உங்களுடைய துணியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்." தெய்வமகன் சொன்னான்: "அந்தத் துணியைக் கொண்டு மேஜையைத் துடைப்பதற்கு முன்னால்..."

அவன் கூறியபடி அந்தப் பெண் செய்தாள். மேஜை சுத்தமாகிவிட்டது.

"எனக்கு இந்த விஷயத்தைக் கூறியதற்கு நன்றி". அவள் சொன்னாள்.

காலையில் அவன் அந்தப் பெண்ணிடம் விடை பெற்றுவிட்டு தன்னுடைய வழியில் பயணத்தைத் தொடர்ந்தான். நீண்ட தூரம் நடந்து சென்ற பிறகு, ஒரு காட்டின் எல்லைப் பகுதியை அடைந்து விட்டிருந்தான். அங்கு சில விவசாயிகள் வளைந்த மரத்துண்டுகளைக் கொண்டு சக்கரத்தின் ஆரங்களை அமைத்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். விவசாயிகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்களே தவிர, அவர்களால் மரத் துண்டை வளைக்க முடியவில்லை என்பதை அவன் அருகில் வந்து பார்த்து தெரிந்து கொண்டான்.

அவன் அங்கு நின்று பார்த்தபோது, மரத்துண்டு இணைக்கப்பட்டிருந்த மையப்பகுதி நிலையாக ஒரு இடத்தில் இருக்குமாறு பொருத்தப்படவில்லை என்பதை அவன் கவனித்தான். அதனால் அந்த மனிதர்கள் சுற்றி வந்தபோது, அந்த மரத்துண்டும் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது தெய்வமகன் சொன்னான்:

"நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், நண்பர்களே?"

"நீ நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்க்கவில்லையா? நாங்கள் சக்கரத்திற்கான ஆரங்களைத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இரண்டு முறை முயற்சி பண்ணிப் பார்த்துவிட்டோம். நாங்களே மிகவும் களைத்துப் போய்விட்டோம். ஆனால், மரம் வளையவே இல்லை."

"நீங்கள் மையப்பகுதியை நிலையாக ஒரு இடத்தில் பொருத்த வேண்டும், நண்பர்களே!" தெய்வமகன் சொன்னான்: "இல்லாவிட்டால் நீங்கள் சுற்றும்போது அதுவும் சுற்றும்."

விவசாயிகள் அவனுடைய அறிவுரையைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் அந்த மையப் பகுதியை சரியாகப் பொருத்த, வேலை நல்ல முறையில் முடிந்தது-.

தெய்வமகன் அன்று இரவை அவர்களுடன் கழித்துவிட்டு, தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் இரவும் பகலும் நடந்து, பொழுது புலர்வதற்கு சற்று முன்பு இரவில் தங்கியிருந்த சில இடையர்களைப் பார்த்தான். அவன் அவர்களுடன் சேர்ந்து படுத்துக் கொண்டான். எல்லா கால்நடைகளையும் ஒரு இடத்தில் இருக்கும்படி செய்துவிட்டு, அவர்கள் ஒரு நெருப்பை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் காய்ந்த சுள்ளிகளை எடுத்து வைத்து, அவற்றின் மீது நெருப்பை வைத்தார்கள். அந்தச் சுள்ளிகள் பற்றி எரிய ஆரம்பித்தவுடன், அவர்கள் ஈரமான விறகை நுழைத்து அதை அணையச் செய்து கொண்டிருந்தார்கள். ஈரமான விறகு ஓசை உண்டாக்கி நெருப்பு குறைந்து, படிப்படியாக அணைந்து கொண்டிருந்தது. பிறகு அந்த இடையர்கள் மேலும் கொஞ்சம் காய்ந்த விறகுகளைக் கொண்டு வந்து நெருப்பைப் பற்ற வைத்தார்கள். மீண்டும் ஈரமான விறகை உள்ளே வைத்தவுடன், திரும்பவும் நெருப்பு அணைந்துவிட்டது.


அவர்கள் நீண்ட நேரமாக அந்த நெருப்புடன் போராடிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகும் அவர்களால் நெருப்பை எரிய வைக்க முடியவில்லை. அப்போது தெய்வமகன் சொன்னான்:

'அவ்வளவு சீக்கிரமாக ஈர விறகை உள்ளே வைக்காதீர்கள். வேறு எதையும் உள்ளே வைப்பதற்கு முன்னால் அந்த காய்ந்த விறகுகள் முழுமையாக பற்றி எரிவதற்கு முதலில் விடுங்கள். நெருப்பு நன்கு பற்றி எரிந்த பிறகு, நீங்கள் எதை வேண்டுமானாலும் உள்ளே வைக்கலாம்."

இடையர்கள் அவனுடைய அறிவுரையைப் பின்பற்றினார்கள். ஈரவிறகை வைப்பதற்கு முன்னால் அவர்கள் நெருப்பை நன்கு எரிய விட்டார்கள். பிறகு அந்த விறகும் பற்றி, நல்ல நெருப்பு உண்டானது-.

தெய்வமகன் அவர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு, தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தான். நடந்து கொண்டிருக்கும் போதே, தான் பார்த்த மூன்று காட்சிகளின் மூலம் வெளிப்படும் அர்த்தம் என்ன என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தான். ஆனால், அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

9

தெய்வமகன் அன்றைய பகல் நேரம் முழுவதும் நடந்தான். மாலை நேரம் ஆனபோது, அவன் இன்னொரு காட்டை அடைந்தான். அங்கு அவன் ஒரு துறவி இருக்கும் சிறிய கட்டடத்தைப் பார்த்தான். அவன் அதைத் தட்டினான்.

"யார் அங்கே?" உள்ளேயிருந்து ஒரு குரலி கேட்டது.

"ஒரு பெரிய பாவம் செய்தவன்." தெய்வமகன் பதில் சொன்னான்: "மற்றவர்களின் பாவச் செயல்களுக்காகவும் என்னுடைய பாவச் செயல்களுக்காகவும் நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்."

அதைக் கேட்ட துறவி வெளியே வந்தார். "நீ ஏற்றுக் கொண்ட வேறொருவரின் பாவச் செயல்கள் என்றாயே! அது என்ன?"

தெய்வமகன் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னான். தன்னுடைய காட்ஃபாதரைப் பற்றி, குட்டிகளுடன் வந்த பெண் கரடியைப் பற்றி, அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த சிம்மாசனத்தைப் பற்றி, தன்னுடைய காட்ஃபாதர் அவனுக்குக் கூறிய உத்தரவுகளைப் பற்றி, தானியக் கதிர்களைக் கீழே சாய்த்துக் கொண்டிருந்த விவசாயிகளைப் பற்றி, தன்னுடைய எஜமானி அழைத்தவுடன் தானியக் கதிர்கள் வளர்ந்திருந்த வயலை விட்டு வெளியே ஓடி வந்த கன்றுக்குட்டியைப் பற்றி...

"ஒரு பாவத்தை இன்னொரு பாவத்தால் அழிக்கவே முடியாது என்பதை நான் தெரிந்து கொண்டேன்." அவன் சொன்னான்: "அதே நேரத்தில் அதை எப்படி அழிப்பது என்பதும் எனக்குத் தெரிய வில்லை. அதை எப்படிச் செய்வது என்பதை எனக்கு கற்றுத் தாருங்கள்."

"என்னிடம் கூறு..."துறவி பதில் கூறினார்: "நீ உன்னுடைய பாதையில் என்னவெல்லாம் பார்த்தாய் என்பதை..."

தெய்வமகன் சொன்னான்- மேஜையைச் சுத்தம் செய்த பெண்ணைப் பற்றி, வண்டிச்சக்கரங்களைச் செய்த மனிதர்களைப் பற்றி, நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருந்த இடையர்களைப் பற்றி...

துறவி அவன் கூறிய அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கேட்டார். பிறகு உள்ளே போய்விட்டார். தொடர்ந்து ஒரு பழைய கைப்பிடி போட்ட கோடரியுடன் திரும்பி வந்தார்.

"என்னுடன் வா." அவர் சொன்னார்.

சிறிது நேரம் அவர்கள் நடந்து சென்றதும், துறவி ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினார்.

"அதை வெட்டிக் கீழே சாய்த்து விடு." அவர் சொன்னார்.

தெய்வமகன் மரத்தைக் கீழே விழச் செய்தான்.

"இப்போது அதை மூன்று துண்டுகளாக ஆக்கு." துறவி கூறினார்.

தெய்வமகன் மரத்தை மூன்று துண்டுகளாக விக்கினான். தொடர்ந்து துறவி தன்னுடைய இருப்பிடத்திற்குள் திரும்பவும் சென்று, சில நெருப்புக் குச்சிகளுடன் திரும்பி வந்தார்.

"அந்த மூன்று மரத்துண்டுகளையும் எரியவை." அவர் சொன்னார்.

அவர் கூறியபடி தெய்வமகன் நெருப்பை உண்டாக்கி, மூன்று மரத்துண்டுகளையும் பற்றி எரியும்படி செய்தான். மூன்று கருந்துண்டுகள் எஞ்சி இருக்கும் வரை அவன் அவற்றை எரித்தான்.

"இப்போது நிலத்தில் பாதியாக இருப்பதைப் போல, அவற்றை நடு... இந்த மாதிரி..."

துறவி செய்து காட்டினார்.

"மலைக்குக் கீழே இருக்கும் நதியை நீ பார். அங்கிருந்து உன்னுடைய வாய்க்குள் நீரைக் கொண்டு வந்து, ஊன்றப்பட்ட மரத்துண்டுகளின் மீது ஊற்று. நீ அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறியதைப் போல, அந்த மரத்துண்டின் மீது நீரை ஊற்று. வண்டிச்சக்கரம் செய்து கொண்டிருந்தவர்களிடம் கூறியதைப் போல, இந்த மரத்துண்டின் மீது நீரை ஊற்று. அந்த இடையர்களுக்கு அறிவுரை கூறியதைப் போல, நீ இந்த மரத்துண்டின் மீது நீரை ஊற்று... இந்த மூன்று மரத்துண்டுகளும் வேர் பிடித்து... இந்தக் கருகிப் போன மரத்துண்டுகளிலிருந்து ஆப்பிள் மரங்கள் உருவாகி பெரிதாக வரும் போது, மனிதர்களிடம் இருக்கும் பாவச் செயல்களை எப்படி அழிப்பது என்பதை நீ தெரிந்து கொள்வாய். உன்னுடைய எல்லா செயல்களுக்கும் நீ அப்போது பிராயச்சித்தம் கண்டிருப்பாய்." இதைச் சொல்லிவிட்டு, துறவி தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டார். தெய்வமகன் நீண்ட நேரம் ஆழ்ந்த சிந்தனையுடன் நின்று கொண்டிருந்தான். துறவி என்ன அர்த்தத்துடன் அந்த வார்த்தைகளைக் கூறினார் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எது எப்படி இருந்தாலும், அவனுக்கு எப்படி சொல்லப்பட்டதோ, அதே மாதிரி அவன் செயல்பட ஆரம்பித்தான்.

10

தெய்வமகன் ஆற்றை நோக்கி கீழே இறங்கிச் சென்றான். தன்னுடைய வாய்க்குள் நீரை நிறைத்து, திரும்பி வந்தான். அதை கருகிப் போய்விட்டிருந்த ஒரு மரத்துண்டின் மீது கொப்பளித்தான் அதை அவன் திருப்ப திரும்பச் செய்தான். அந்த வகையில் மூன்று கருகிப் போன மரத்துண்டுகளையும் நனைத்தான். பசி ஏற்பட்டு மிகவும் களைப்பு உண்டானவுடன், அவன் துறவியின் இருப்பிடத்திற்கு- அந்த வயதான துறவியிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது உணவு இருக்குமா என்று கேட்பதற்காகச் சென்றான். அவன் கதவைத் திறந்தான். அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அந்த வயதான மனிதர் இறந்து கிடந்ததை அவன் பார்த்தான். உணவுக்காக தெய்வமகன் சுற்றிலும் பார்த்தான். கொஞ்சம் காய்ந்த ரொட்டி அங்கு இருந்தது. அதில் சிறிதளவை அவன் சாப்பிட்டான். தொடர்ந்து ஒரு குழி தோண்டும் கருவியை எடுத்த அவன் துறவியை அடக்கம் செய்வதற்கான வேலையில் இறங்கினான். இரவு வந்ததும், அவன் நீரைக் கொண்டு வந்து மரத்துண்டுகளின் மீது கொப்பளித்தான். பகல் வேளையில் அவன் குழியைத் தோண்டினான். குழி தோண்டி முடித்து, அவன் துறவியின் இறந்த உடலைப் புதைக்க இருந்த நேரத்தில், கிராமத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் அந்த வயதான துறவிக்கு உணவு கொண்டு வந்திருந்தார்கள்.


அந்த வயதான துறவி இறந்துவிட்டார் என்பதையும், தன்னுடைய ஆசீர்வாதங்களை தெய்வமகனுக்கு அவர் தந்து சென்றிருக்கிறார் என்பதையும், தன்னுடைய இடத்தில் அவர் அவனை விட்டுச் சென்றிருக்கிறார் என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் வயதான துறவியைப் புதைத்துவிட்டு, தாங்கள் கொண்டு வந்திருந்த ரொட்டியை தெய்வமகனிடம் கொடுத்தார்கள். அவனுக்கு மேலும் உணவு கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

தெய்வமகன் வயதான துறவியின் இருப்பிடத்திலேயே தங்கிவிட்டான். அவன் அங்கேயே தன் வாழ்வைத் தொடர்ந்தான். கிராமத்து மக்கள் அவனுக்குக் கொண்டு வந்து தந்த உணவைச் சாப்பிட்டான். அவனுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை அவன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். ஆற்றிலிருந்து வாய்க்குள் நீரை மொண்டு கொண்டு வந்து கரிந்து போன மரத்துண்டுகளின் மீது கொப்பளித்துக் கொண்டிருந்தான்.

அவன் இந்த மாதிரி அந்த இடத்தில் ஒரு வருடம் வாழ்ந்தான். ஏராளமான பேர் அவனை வந்து பார்த்தார்கள். அவனுடைய பெயர் தூர இடங்களுக்கும் போய் பரவியது. காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆன்மிக மனிதன் என்றும், மலைக்குக் கீழேயிருந்து தன் வாய்க்குள் நீரைக் கொண்டு வந்து கரிந்து போன மரத்துண்டுகளுக்கு தன்னுடைய ஆன்மாவை சந்தோஷப்படுத்துவதற்காக நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறான் என்றும் செய்தி பல இடங்களுக்கும் பரவிக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவனைப் பார்த்தார்கள். வசதி படைத்த வியாபாரிகள் குதிரைகளில் பயணம் செய்து வந்தார்கள். வரும்போது அவனுக்கு பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்தார்கள். ஆனால், அவன் தனக்கு அவசியம் தேவை என்பதை மட்டுமே வைத்துக் கொண்டான். எஞ்சியவற்ற¬ அவன் ஏழை மக்களிடம் கொடுத்துவிடுவான்.

இந்த வகையில் தெய்வமகனின் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அவன் தன் வாய்க்குள் நீரை மொண்டு கொண்டு வந்து பாதி நாள் மரக் கட்டைகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தான். மீதி பாதி நாளை அவன் ஓய்வு எடுப்பதிலும் தன்னை பார்க்க வரும் மக்களை சந்திப்பதிலும் செலவிட்டான். இந்த மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் தனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும், அதன் மூலம் தான் பாவத்தை அழிக்க முடியும் என்பதையும், தன்னுடைய பாவச் செயல்களுக்கு பரிகாரம் காண முடியும் என்பதையும் அவன் சிந்தித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.

இந்த மாதிரியான வாழ்க்கையை அவன் இரண்டு வருடங்கள் வாழ்ந்தான். ஒருநாள் கூட மரத் துண்டுகளுக்கு நீர் ஊற்றுவதை அவன் தவிர்த்ததே இல்லை. எனினும், அவற்றில் ஒன்று கூட முளைக்கவில்லை.

ஒருநாள் அவன் தன்னுடைய அறைக்குள் உட்கார்ந்திருந்த போது, வெளியே ஒரு மனிதன் குதிரை மீது ஏறி கடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். அப்படிப் போகும்போது அவன் பாடியவாறு சென்றான். தெய்வமகன் அப்படிச் செல்லும் மனிதன் யாராக இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக வெளியே வந்தான். ஒரு திடகாத்திரமான, நன்கு ஆடைகள் அணிந்திருந்த ஒரு இளைஞன் ஒரு அழகான, முறையான அமைப்புகளைக் கொண்ட குதிரையின் மீது ஏறி பயணித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

தெய்வமகன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அவன் யார் என்பதையும் எங்கு போய்க் கொண்டிருக்கிறான் என்பதையும் கேட்டான்.

"நான் ஒரு கொள்ளைக்காரன்". அந்த மனிதன் கடிவாளத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டே சொன்னான்: "நான் வழியில் பயணம் செய்து கொண்டே மனிதர்களைக் கொல்வேன். எந்த அளவுக்கு அதிகமாக மனிதர்களைக் கொல்கிறேனோ, அந்த அளவுக்கு சந்தோஷமாக நான் பாடல்களைப் பாடுவேன்."

தெய்வமகன் அதைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானான். அவன் தன் மனதில் நினைத்தான்.

'இந்த மாதிரியான ஒரு மனிதனிடமிருந்து பாவச் செயலை எப்படி அழிக்க முடியும்? என்னை அவர்களாகவே தேடி வந்து தங்களுடைய பாவங்களை ஒத்துக் கொள்ளக்கூடிய மனிதர்களிடம் மிகவும் சாதாரணமாகப் பேசிவிட முடியும். ஆனால், இந்த மனிதன் தான் செய்யக்கூடிய பாவச் செயல்களைப் பற்றி தானே பெருமைப்பட்டுக் கொள்கிறோனே!"

அதனால் அவன் எதுவும் கூறாமல், மீண்டும் சிந்தனையில் மூழ்கினான்: "நான் இப்போது என்ன செய்வது, இந்த கொள்ளைக்காரன் இங்கிருந்து குதிரைமீது ஏறிச் சென்றுவிடுவான். போகும் வழியில் பார்க்கும் மனிதர்களை பயமுறுத்தி விரட்டுவான். அவர்கள் எல்லாரும் என்னிடம் வருவதை நிறுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு அது ஒரு இழப்பாக இருக்கும். எப்படி வாழ்வது என்று எனக்குத் தெரியாமல் போய்விடும்."

தொடர்ந்து தெய்வமகன் திரும்பி கொள்ளைக்காரனைப் பார்த்துச் சொன்னான்:

"தாங்கள் செய்த பாவச் செயல்களைப் பெருமையாக நினைத்துக் கொண்டு என்னை இங்கு பார்க்க வருபவர்கள் வருவதில்லை. தங்களுடைய பாவச் செயல்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டும், அவற்றுக்கு மன்னிப்பு தேடிக் கொண்டும்தான். அவர்கள் வருகிறார்கள். நீ கடவுளுக்கு பயப்படுவதாக இருந்தால், உன்னுடைய பாவச் செயல்களுக்காக வருத்தப்படு. அதே நேரத்தில் உன்னுடைய பாவச் செயல்களுக்காக உன் இதயத்தில் நீ சிறிது கூட வருத்தப்படவில்லையென்றால், நீ உன் வழியில் போய்க் கொண்டே இருக்கலாம். நீ இந்தப் பக்கம் மீண்டும் எந்தச் சமயத்திலும் வரவே வேண்டாம். என்னைத் தொந்தரவு பண்ணாதே. மக்களை பயமுறுத்தி அவர்களை என்னிடமிருந்து விலகி ஓடச் செய்யாதே. நீ இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால், கடவுள் உனக்கு தண்டனை அளிப்பார்."

அதைக் கேட்டு கொள்ளைக்காரன் சிரித்தான்.

"நான் கடவுளுக்கு பயப்படவே இல்லை. அதே நேரத்தில் நீங்கள் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. நீங்கள் என்னுடைய குருநாதர் இல்லை." அவன் சொன்னான்: "நீங்கள் உங்களுடைய பக்தியை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நான் என்னுடைய கொள்ளையடிக்கும் செயலை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் எல்லாரும் வாழ்ந்தாக வேண்டும். நீங்கள் உங்களைத் தேடிவரும் வயதான கிழவிகளுக்கு அறிவுரை கூறலாம். ஆனால், எனக்குக் கற்றுத் தருவதற்கு உங்களிடம் எதுவுமே இல்லை. நீங்கள் என்னிடம் கடவுளைப் பற்றி ஞாபகப்படுத்தியதற்காகவே, நாளைக்கு நான் இரண்டு மனிதர்களை அதிகமாகக் கொல்ல வேண்டும். நான் உங்களைக் கொல்லலாம். ஆனால், என்னுடைய கைகளை இப்போது கறைப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. எதர்காலத்தில் என்னுடைய பாதையில் நீங்கள் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்."

இந்த பயமுறுத்தும் வார்த்தைகளைக் கூறிவிட்டு, கொள்ளைக்காரன் குதிரையுடன் அங்கிருந்து கிளம்பினான். அவன் மீண்டும் அந்தப் பக்கம் வரவே இல்லை. தெய்வமகன் முன்பு இருந்ததைப் போலவே முழுமையான மன நிம்மதியுடன் மேலும் எட்டு வாழ்ந்தான்.


11

ரு இரவு வேளையில் தெய்வமகன் மரத்துண்டுகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தான். நீரைக் கொப்பளித்து விட்டு, தன்னுடைய இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் ஓய்வெடுப்பதற்காக உட்கார்ந்து கொண்டு யாராவது வருகிறார்களா என்று ஆச்சரியத்துடன் நடைபாதையைப் பார்த்தான். ஆனால், அன்று முழுவதும் யாருமே வரவில்லை. சாயங்காலம் வரை அவன் மட்டுமே தனியாக உட்கார்ந்திருந்தான். தனிமையாக உட்கார்ந்திருந்ததால் உண்டான சோர்வுடன், அவன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான். அந்த கொள்ளைக்காரன் தன்னுடைய பக்தியை வைத்து தான் வாழ்ந்து கொண்டிருப்பதை எப்படி கிண்டலாகக் கூறினான் என்பதையும் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி அவன் என்ன கூறினான் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். 'துறவி என்ன சொன்னாரோ அதன்படி நான் வாழவில்லை'. அவன் நினைத்தான்: 'அந்தத் துறவி எனக்கு ஒரு தண்டனைத் தந்துவிட்டார். நான் வாழவும் செய்திருக்கிறேன். அதன் மூலம் புகழையும் அடைந்திருக்கிறேன். அந்தப் புகழாசை என்னை அதிகமாகவே ஆட்டிப்படைத்து விட்டிருக்கிறது. என்னைத் தேடிவ மனிதர்கள் யாரும் வரவில்லை என்பதை நினைத்து நான் இப்போது சோர்வடைந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னைத் தேடி வருவதைப் பார்த்ததும், நான் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன். அதற்குக் காரணம்- அவர்கள் என்னுடைய புனிதத் தன்மையைப் பற்றி புகழ்ந்து கூறுகிறார்கள். ஒரு மனிதன் அந்த மாதிரி வாழக் கூடாது. புகழ்ச்சியின் மீது கொண்ட ஈர்ப்பால், நான் என்னுடைய வாழ்க்கையைத் தாறுமாறாக வாழ்ந்திருக்கிறேன். நான் என்னுடைய கடந்த கால பாவச் செயல்களுக்கு பரிகாரம் காண வில்லை. சொல்லப் போனால்- நான் புதிய பாவச் செயல்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். நான் காட்டின் இன்னொரு பகுதிக்குச் செல்லப்போகிறேன். அங்கு மனிதர்கள் என்னைப் பார்க்க வர மாட்டார்கள். நான் அங்கு என்னுடைய பழைய பாவச் செயல்களுக்கு பரிகாரம் தேடி மட்டும் வாழ்வேன். இனி புதிதாக பாவச் செயல்களைச் சேர்க்காமல் இருப்பேன்.'

இந்த முடிவிற்கு வந்தவுடன், தெய்வமகன் ஒரு பையில் காய்ந்த ரொட்டியை எடுத்துப் போட்டுக் கொண்டு, குழி தோண்டக் கூடிய கருவியைக் கையில் எடுத்துக் கொண்டு, தான் இப்போது தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறி ஒரு சிற்றோடையை நோக்கி நடந்தான். அவனுக்குத் தெரிந்த அந்த சிற்றோடை தனிமையான ஒரு இடத்தில் இருந்தது. அங்கு தனக்கென்று ஒரு குகையை அமைத்துக் கொண்டு, அவன் மற்ற மனிதர்களிடமிருந்து தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ள முடியும்.

அவன் கையில் பையுடனும் குழி தோண்டும் கருவியுடனும் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, தன்னை நோக்கி குதிரையில் அந்த கொள்ளைக்காரன் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். தெய்வமகன் அவனைப் பார்த்து பயந்து போய், அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். ஆனால், அந்த கொள்ளைக்காரன் அவனைக் கடந்து அவனுக்கு முன்னால் போய் நின்றான்.

"நீங்க எங்கே போறீங்க?" கொள்ளைக்காரன் கேட்டான்.

மனிதர்களிடமிருந்து முழுமையாக விலகிப் போக வேண்டும் என்று தான் நினைப்பதையும் யாருமே தன்னைப் பார்க்க வராமல் இருக்கக் கூடிய அமைதியான ஒரு இடத்தைத் தேடிச் சென்று தான் வாழப் போவதையும் அவன் கூறினான். அந்த விஷயம் கொள்ளைக்காரனை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

"மக்கள் உங்களைப் பார்க்க வரவே இல்லையென்றால், நீங்கள் எப்படி உயிருடன் வாழ்வீர்கள்?" அவன் கேட்டான்.

தெய்வமகன் அதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை. ஆனால், கொள்ளைக்காரனின் கேள்வி உணவு எந்த அளவுக்கு அவசியம் என்ற சிந்தனையை அவனிடம் உண்டாக்கியது.

"கடவுள் எனக்கு எதைக் கொடுக்க நினைக்கிறாரோ, அது கிடைக்கட்டும்." அவன் சொன்னான்.

கொள்ளைக்காரன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. அங்கிருந்து குதிரையில் வேகமாகக் கிளம்பிச் சென்றுவிட்டான்.

'நான் ஏன் அவனுடைய வாழ்க்கை முறையைப் பற்றி எதுவுமே அவனிடம் கூறவில்லை?' தெய்வமகன் தன் மனதிற்குள் நினைத்தான்: 'அவன் இப்போது வருத்தப்படலாம். இன்று அவன் மென்மையான மனிதனாக இருப்பதைப்போல தோன்றியது. என்னைக் கொலை செய்வதாக அவன் மிரட்டவில்லை.'

அவன் கொள்ளைக்காரனைப் பார்த்து உரத்த குரலில் கத்தினான்:

"உன்னுடைய பாவச் செயல்களுக்காக நீ இன்னும் வருத்தப்பட வேண்டும். நீ கடவுளிடமிருந்து தப்பவே முடியாது."

அந்த கொள்ளைக்காரன் தன்னுடைய குதிரையைத் திருப்பி, தன்னுடைய உறையிலிருந்து ஒரு கத்தியை உருவி துறவியை அதைக் கொண்டு மிரட்டினான். துறவி அதிர்ச்சியடைந்து இன்னும் சிறிது தூரம் காட்டுக்குள் வேகமாக ஓடினான்.

கொள்ளைக்காரன் அவனைப் பின்பற்றிச் செல்லவில்லை. ஆனால் உரத்த குரலில் கத்தினான்.

"உங்களை இரண்டு முறைகள் வெறுமனே விட்டிருக்கிறேன் பெரியவரே! ஆனால், அடுத்த முறை நீங்கள் என்னுடைய வழியில் வந்தால், நான் உங்களைக் கொன்றுவிடுவேன்."

இதைக் கூறிவிட்டு, அவன் வேகமாக குதிரையில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான். மாலை நேரத்தில் தெய்வமகன் தன்னுடைய மரத்துண்டுகளுக்கு நீர் ஊற்றுவதற்காகச் சென்ற போது, அவற்றில் ஒன்றில் முளை விட்டிருப்பதை அவன் பார்த்தான். ஒரு சிறிய ஆப்பிள் மரம் அதிலிருந்து வளர ஆரம்பித்திருந்தது.

12

ல்லாரிடமிருந்தும் மறைந்திருக்க வேண்டும் என்று நினைத்த பிறகு, தெய்வமகன் அவன் மட்டும் தனியாக வாழ்ந்தான். அவனுக்கு வர வேண்டிய ரொட்டி நின்று போனவுடன், அவன் தன் மனதில் நினைத்தான்:

'இப்போது நான் வெளியே சென்று சாப்பிடுவதற்கு ஏதாவது கிழங்குகள் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.' அவன் சிறிது தூரம் கூட போயிருக்க மாட்டான்- ஒரு மரத்தின் கிளையில் காய்ந்த ரொட்டி அடங்கிய ஒரு பை தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அதைக் கீழே எடுத்து, எவ்வளவு நாட்கள் அதை சாப்பிட முடியுமோ, அத்தனை நாட்கள் அதைச் சாப்பிட்டு வாழ்ந்தான்.

அவன் அந்த ரொட்டி முழுவதையும் சாப்பிட்டு முடித்தவுடன், இன்னொரு பை அதே மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அதை வைத்துக் கொண்டு அவன் வாழ்ந்தான். கொள்ளைக்காரன்மீது கொண்ட பயம் மட்டுமே அவனுக்கு தொந்தரவான ஒரு விஷயமாக இருந்தது. கொள்ளைக்காரன் அந்த வழியே கடந்து செல்லும் ஓசை எப்போதெல்லாம் கேட்கிறதோ, அப்போது அவன் தன்னை மறைத்துக் கொள்வான். அந்தச் சமயத்தில் அவன் சிந்திப்பான்.

'நான் என்னுடைய பாவச் செயல்களுக்கு பிராயச்சித்தம் செய்வதற்கு முன்பே அவன் என்னைக் கொன்றுவிடலாம்.'

அதே நிலையில் அவன் மேலும் பத்து வருடங்கள் வாழ்ந்தான். ஒரே ஒரு ஆப்பிள் மரம் மட்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. மற்ற இரண்டு மரத்துண்டுகளும் அதே நிலையிலேயே இருந்தன.

ஒருநாள் காலையில் அவன் வெகுசீக்கிரமே படுக்கையை விட்டு எழுந்து தன் வேலைகளைப் பார்ப்பதற்காகக் கிளம்பினான். மரத்துண்டுகள் இருந்த நிலத்தை முழுமையாக நீர் ஊற்றி நனைத்து முடித்தபோது, அவனுக்கு மிகுந்த களைப்பு உண்டாகிவிட்டது. அதனால் ஓய்வு எடுப்பதற்காக அவன் அதே இடத்தில் உட்கார்ந்து விட்டான். அப்படி உட்கார்ந்திருந்தபோது, அவன் தனக்குத்தானே நினைத்தான்.

'நான் பாவம் செய்துவிட்டேன். மரணத்தைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டேன். மரணத்தைத் தழுவுவதன் மூலம் நான் பாவச் செயல்களிலிருந்து விடுபடும் மனிதனாக ஆக முடியும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்.'

இந்தச் சிந்தனை அவனுடைய மனதிற்குள் நுழைந்தபோது, அந்த கொள்ளைக்காரன் குதிரையில் பாய்ந்து வரும் ஓசை கேட்டது. எதையோ அவன் அடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் துறவியின் மனம் நினைத்தது.

'நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும், அது வேறு யார் மூலமும் எனக்கு வராது. கடவுளிடமிருந்து மட்டுமே வரும்.'

அவன் அந்த கொள்ளைக்காரனைச் சந்திப்பதற்காகச் சென்றான். அவன் போய் பார்த்தபோது, கொள்ளைக்காரன் மட்டும் தனியாக இருக்கவில்லை. அவனுக்குப் பின்னால் குதிரையின் மீது இன்னொரு மனிதனும் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. அந்த மனிதன் எதுவும் செய்யவில்லை. ஆனால், அந்த கொள்ளைக்காரன் அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் கொண்டு பலமாக திட்டிக் கொண்டிருந்தான். தெய்வமகன் அருகில் சென்று, குதிரைக்கு முன்னால் போய் நின்றான்.

"இந்த மனிதனை நீ எங்கே கொண்டு போகிறாய்?" அவன் கேட்டான்.

"காட்டுக்குள்..."கொள்ளைக்காரன் சொன்னான்: "இவன் ஒரு வியாபாரியின் மகன். தன் தந்தையின் பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குக் கூற மாட்டேன் என்கிறான். இவன் உண்மையைக் கூறும் வரை, நான் இவனை அடித்து உதைக்கப் போகிறேன்."

கொள்ளைக்காரன் குதிரையைக் கிளப்பினான். ஆனால், தெய்வமகன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து, அவனை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் செய்தான்.

"அந்த மனிதனைப் போக விடு." அவன் சொன்னான்.

கொள்ளைக்காரனுக்கு அதிகமான கோபம் உண்டானது. அவன் துறவியை அடிப்பதற்காக கையை உயர்த்தினான்.

"நான் இந்த மனிதனுக்கு எதைத் தரப்போகிறேனோ, அதை நீங்களும் கொஞ்சம் சுவை பார்க்க வேண்டுமா? நான் உங்களைக் கொன்றுவிடுவேன் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன் அல்லவா? ஒழுங்கா போயிடுங்க..."

தெய்வமகன் சிறிதும் பயப்படவில்லை.

"நீ போகக்கூடாது." அவன் சொன்னான்: "உன்னைப் பார்த்து நான் பயப்படவில்லை. கடவுளுக்கு மட்டும்தான் நான் பயப்படுவேன். வேறு யாருக்கும் பயப்பட மாட்டேன். உன்னை நான் விடக்கூடாது என்று கடவுள் விரும்புகிறார். அந்த மனிதனை வெறுமனே விட்டுவிடு."

கொள்ளைக்காரன் கீழே குனிந்து, இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து, வியாபாரியின் மகனைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்து, அவனைப் போகவிட்டான்.

"நீங்கள் இருவரும் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள்." அவன் சொன்னான்: "என்னுடைய பாதையில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்."

வியாபாரியின் மகன் குதிரையிலிருந்து கீழே இறங்கி ஓடியே போனான். கொள்ளைக்காரன் குதிரையைச் செலுத்துவதற்கு தயாரானான். ஆனால் தெய்வமகன் அவனை மீண்டும் தடுத்து நிறுத்தினான். அவனிடம் திரும்பவும் மோசமான வாழ்க்கையை விட்டுவிடும்படி அவன் கேட்டுக் கொண்டான். கொள்ளைக்காரன் அந்தப் பேச்சை இறுதி வரை அமைதியாக இருந்தவாறு கேட்டான். தொடர்ந்து ஒரு வார்த்தைகூட கூறாமல் அங்கிருந்து குதிரையில் கிளம்பினான்.

மறுநாள் காலையில் தெய்வமகன் தன்னுடைய மரத்துண்டுகளை நீர் ஊற்றி நனைப்பதற்காகச் சென்றான். அடடா! அந்த இரண்டாவது மரத்துண்டு முளைக்க ஆரம்பித்திருந்தது. இரண்டாவது இளம் ஆப்பிள் மரம் வளரத் தொடங்கியிருந்தது.

13

ன்னொரு பத்து வருடங்கள் கடந்து சென்றன. தெய்வமகன் ஒருநாள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தான். எதற்கும் ஆசைப்படவில்லை. எதற்கும் பயப்படவில்லை. அவனுடைய இதயம் முழுமையான சந்தோஷத்தில் திளைத்திருந்தது.

'கடவுள் மனிதர்கள் எப்படியெல்லாம் ஆசீர்வாதங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறார்!' அவன் நினைத்தான்: 'எனினும், அவர்கள் எப்படியெல்லாம் தங்களைத் தாங்களே தொந்தரவுகளுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள்? சந்தோஷமாக வாழ்வதிலிருந்து அவர்களை எது தடுக்கிறது?'

மனிதர்களிடம் இருக்கும் எல்லா பாவச் செயல்களையும், தங்களுக்குத் தாங்களே அவர்கள் வரவழைத்துக் கொள்ளும் தொல்லைகளையும் நினைத்துப் பார்த்து அவனுடைய உள்ளம் கவலைகளால் நிறைந்தது.

'நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் முறையே தவறானது'. அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான். 'நான் என்ன கற்றிருக்கிறேனோ, அவற்றை வெளியே சென்று மற்றவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.'

இதை அவன் நினைத்துக் கெகண்டிருந்தபோது, கொள்ளைக்காரன் வந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவன் தன் வழியில் போகட்டும் என்று அவன் நினைத்தான்:

'அவனிடம் பேசுவதில் பிரயோஜனமே இல்லை அவன் புரிந்து கொள்ள மாட்டான்.'

முதலில் அவன் அப்படித்தான் நினைத்தான். பிறகு தன் மனதை மாற்றிக் கொண்டு, வெளியேறி சாலைக்குச் சென்றான். அங்கு கொள்ளைக்காரன் மிகவும் இருளடைந்து போய், கண்களைக் கீழ் நோக்கி வைத்துக் கொண்டு குதிரையில் வந்து கொண்டிருந்தான். தெய்வமகன் அவனைப் பார்த்து, அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை நோக்கி ஓடி, தன்னுடைய கையை அவனின் முழங்காலில் வைத்தான்.

"அன்பு சகோதரனே!" அவன் சொன்னான்: "உன் ஆன்மா மீது சிறிது இரக்கம் காட்டு. கடவுளின் ஆவி உனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீ துன்பப்படுகிறாய். பிறரைத் துன்பத்திற்குள்ளாக்குகிறாய். எதிர்காலத்திற்கு மேலும் மேலும் அதிகமான துன்பங்களைச் சேர்த்து வைக்கிறாய். எனினும், கடவுள் உன்மீது அன்பு வைத்திருக்கிறார். உனக்காக அப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பொழிவதற்கு தயாராக இருக்கிறார். உன்னை நீயே முழுமையாக அழித்துக் கொள்ளாதே. உன் வாழ்க்கையை மாற்றிக் கொள்!"

அந்தக் கொள்ளைக்காரன் குனிந்து தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

"என்னைத் தனியாக விட்டு விடுங்கள்!" அவன் சொன்னான்.

ஆனால், தெய்வமகன் கொள்ளைக்காரனை மேலும் பலமாகப் பற்றிக் கொண்டு, அழ ஆரம்பித்தான்.

தொடர்ந்து கொள்ளைக்காரன் தன்னுடைய கண்களை உயர்த்தி தெய்வமகனைப் பார்த்தான். அவனையே அவன் நீண்ட நேரமாகப் பார்த்தான். பிறகு குதிரையிலிருந்து கீழே இறங்கி, முழங்காலிட்டு தெய்வமகனின் பாதங்களில் விழுந்தான். 

"நீங்கள் என்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள், பெரியவரே!" அவன் சொன்னான். "கடந்த பத்து வருடங்களாக நான் உங்களை எதிர்த்தே வந்திருக்கிறேன். ஆனால், இப்போது நீங்கள் என்னை வெற்றி பெற்றுவிட்டீர்கள். நீங்கள் என்னை என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள். என்னிடம் இதற்குமேல் சக்தியே கிடையாது. நீங்கள் என்னை முதன்முதலாக குத்திக் காட்டியபோது, எனக்கு அதிகமான கோபம் மட்டுமே வந்தது. நீங்கள் உங்களை மற்ற மனிதர்களிடமிருந்து மறைத்துக் கொண்டு வாழ முயற்சித்த போதுதான், நான் உங்களின் வார்த்தைகளை கவனிக்க ஆரம்பித்தேன். நீங்கள் உங்களுக்காக எதையும் கேட்டுக் கொள்ளவில்லை என்பதையும் கவனித்தேன். அந்த நாளிலிருந்து நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்தேன். அதை மரக்கிளையில் தொங்கவிட்டேன்."

அப்போது தெய்வமகன், அந்தப் பெண் தன்னுடைய துணியைச் சுத்தம் செய்த பிறகுதான் அவளால் அந்த மேஜையை முழுமையாக சுத்தம் செய்ய முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தான். அதேபோல, தன்னைப் பற்றி அவன் அக்கறை செலுத்துவதை நிறுத்தி, தன்னுடைய இதயத்தையே சுத்தம் செய்த பிறகுதான், மற்றவர்களின் இதயங்களை அவனால் சுத்தம் செய்ய முடிந்திருக்கிறது.

கொள்ளைக்காரன் தொடர்ந்து சொன்னான்:

"நீங்கள் மரணத்தைப் பார்த்து பயப்படவே இல்லை என்பதைப் பார்த்த பிறகு என்னுடைய மனம் மாறிவிட்டது."

அப்போது தெய்வமகன் அந்த வண்டிச்சக்கரத்தைச் செய்து கொண்டிருந்தவர்களால் அந்த மரத்துண்டின் மையப் பகுதியைப் பொருத்தாமல் ஆரத்தை வளைக்கவே முடியாமல் போனதை நினைத்துப் பார்த்தான். அதே போல மரணத்தைப் பற்றிய பயத்தை தூக்கியெறிந்து விட்டு, தன்னுடைய வாழ்க்கையை கடவுளிடம் அர்ப்பணம் செய்யும் வரை அவனால் இந்த மனிதனின் கட்டுப்பாடற்ற மனதை மாற்றவே முடியவில்லை."

"ஆனால், என் இதயம் சிறிதுகூட இளகவில்லை." கொள்ளைக்காரன் தொடர்ந்து சொன்னான்:

"நீங்கள் எனக்காகப் பரிதாபப்பட்டு, எனக்காக அழும்வரை..."

தெய்வமகன் முழுமையான சந்தோஷத்தில் மூழ்கி, கொள்ளைக்காரனை அந்த மரத்துண்டுகள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் அங்கு போய்ச் சேர்ந்த நேரத்தில், மூன்றாவது மரத்துண்டிலிருந்து ஒரு ஆப்பிள் மரம் வளர ஆரம்பித்திருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அப்போது தெய்வமகன் அந்த இடையர்களால் நெருப்பு முழுமையாக எரியாமல் இருந்தது வரை, ஈர விறகைப் பற்ற வைக்க முடியாமற் போனதை நினைத்துப் பார்த்தான். அதே போல அவனுடைய இதயம் பிரகாசமாக எரிந்த பிறகுதான், அதனால் பிற இதயங்களைப் பிரகாசத்துடன் இருக்கச் செய்ய முடிந்தது.

இறுதியில் தன்னுடைய பாவச் செயல்களுக்குப் பரிகாரம் கண்டுவிட்டதை நினைத்து தெய்வமகன் முழுமையான சந்தோஷத்தை அடைந்தான்.

அவன் எல்லா விஷயங்களையும் கொள்ளைக்காரனிடம் கூறிவிட்டு, இறந்துவிட்டான். அந்த கொள்ளைக்காரன் அவனைப் புதைத்தான். தெய்வமகன் அவனுக்கு என்ன கூறினானோ, அதன்படி அவன் வாழ்ந்தான். தெய்வமகன் அவனுக்கு கற்றுத் தந்ததை, அவன் மற்றவர்களுக்கு கற்றுத் தந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.