Logo

ஹரித்துவாரில் மணியோசை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6983
haridwaril-mani-osai

“முஸுரி, சிம்லா, நைனிட்டால்...” என்றான் ஸெஞ்யோர் ஹிரோஸி.

             வெள்ளிக்கிழமை சுதந்திர தினமாக இருப்பதால் அன்று விடுமுறை. சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் அலுவலகம் கிடையாது. மூன்று விடுமுறை நாட்கள். ஆனாலும் அதை நினைத்து மகிழ்ச்சி தோன்றவில்லை. மாறாக, பயம்தான் உண்டானது. இந்த மூன்று நாட்களையும் எப்படிச் செலவழிப்பது? எங்கேயாவது போனாலென்ன என்று நினைத்தான். அப்போது வேறொரு பிரச்சினை தலையை நீட்டியது. எங்கே போவது? ரமேஷன் பணிக்கருக்கு இந்த மூன்று நாட்களைச் செலவழிக்க இவ்வளவு பெரிய பூமியில் ஒரு இடம்கூட இல்லை.

“ஜெய்கல்மார், ஸாஜுராஹோ, அஜந்தா, புவனேஷ்வர்...” என்றான். ஸெஞ்யோர்.

முஸுரி, சிம்லா, நைனிட்டால் இந்த மூன்று இடங்களுக்கும் ரமேஷன் ஏற்கெனவே போயிருக்கிறான். ஜெய்ஸால்மாரின் காய்ந்து வறண்டு கிடக்கும் கழிவுகளுக்கு மத்தியில் அவன் அலைந்து திரிந்திருக்கிறான். கஜுராஹோவின் சுவர் சிற்பங்களும் அஜந்தா- எல்லோராவின் குகைச் சிற்பங்களும் அவனுக்கு கிட்டத்தட்ட மனப்பாடம் என்றே சொல்லலாம். கஜுராஹோவின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் சுவர்கள் அவனுடைய மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும். ஜெய்ஸால்மாரின் பரந்து கிடக்கும் மணல் வெளியிலிருந்து கிளம்பி வரும் வெப்பம் அவன் மனதின் வெப்பம் என்று சொல்லலாம். காஷ்மீரின் மலர்கள் நிறைந்த பள்ளத்தாக்குகள் அவன் இதயத்தின் கனவுகள் என்பதுதான் உண்மை.

“ஸெஞ்யோர், வேற ஏதாவது இடங்கள் இருந்தா...”

ஹிரோஸி தன்னுடைய கால்களை மேஜைமீது வைத்தவாறு தாடியைச் சொறிய ஆரம்பித்தான். அவன் இப்போது வேறு சில இடங்களின் பெயர்களை ஆலோசித்தான்.

“புண்ணிய இடங்களா இருந்தா பரவாயில்லையா?”

ஸெஞ்யோர் தாடியைச் சொறிவதை நிறுத்திவிட்டு, ரமேஷனைப் பார்த்தான்.

“பரவாயில்ல...”

“காசி...”

காசிக்கு இதுவரை ரமேஷன் சென்றதில்லை. மூன்று நாட்களில் அங்கு போய்விட்டு வரமுடியுமா? காசி சற்று தூரத்தில் அல்லவா இருக்கிறது? யமுனையிலிருந்து கங்கைக்குச் செல்லும் தூரம்.

“விமானத்துல போக வேண்டியதுதானே?” ஸெஞ்யோர் சொன்னான். விமானத்தில் போவதாக இருந்தால் மூன்று நாட்கள் தாராளமாக போதும். ஆனால், அப்போது வேறொரு பிரச்சினை தலையைக் காட்டியது. வங்கியில் பணம் இருக்கிறதா? ஒரு ஆயிரம் ரூபாயாவது வேண்டுமே! இல்லாவிட்டால் எப்படிப் போக முடியும்? ஸெஞ்யோரிடம் கேட்டால் கொடுப்பான்... எப்போது கேட்டாலும் கொடுக்கக்கூடிய ஆள்தான்.

“என்ன சொல்ற?”

“பரவாயில்ல...”

ஸெஞ்யோர் இண்டர்காமின் பட்டனை அழுத்தினான். ரிஷப்ஸனுடன் தொடர்பு கொண்டான்.

“வியாழக்கிழமை சாயங்காலமோ, வெள்ளிக்கிழமையோ பனாரஸுக்கு விமானம் இருக்குதான்னு பாரு!”

ஐந்து நிமிடங்களில் ரிஸப்ஷனிலிருந்து பதில் வந்தது.

“இருக்கை இல்ல...”

வாரக் கடைசியாக இருப்பதால் எல்லா விமானங்களிலும் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இனி என்ன செய்வது? மேஜை மேல் வைத்திருந்த தன்னுடைய கால்களை ஆட்டியவாறு ஸெஞ்யோர் பிறகும் யோசிக்க ஆரம்பித்தான். கைகளை முகத்தில் வைத்துக் கொண்டு ரமேஷனும் சிந்தனையில் ஆழ்ந்தான். பூமிக்கு மேலே மூன்று நாட்களைச் செலவழிக்க ஒரு இடம் தேடுகிறார்கள் அவர்கள்.

“ஹரித்துவார்...”

ரமேஷன் தலையை உயர்த்தினான்.

“நான் ஹரித்துவாருக்குப் போறேன் ஸெஞ்யோர்!”

“நல்லது.”

ஸெஞ்யோருக்கு இப்போது மிகவும் மகிழ்ச்சி. அவன் மேஜை மீது இருந்த தன்னுடைய கால்களைக் கீழே இறக்கினான். சிகரெட் டின்னைத்திறந்து ரமேஷனுக்கு நேராக நீட்டினான். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு சிகரெட்டை எடுத்துக் கொளுத்தினார்கள். யமுனையில் இருந்து கங்கைக்குச் செல்லும் தூரம்தான். இருந்தாலும் காசியைப் போல தூரத்தில்தான் அந்த இடம் இருக்கிறது. வண்டியில் போனால் ஏழு அல்லது எட்டு மணி நேரம் பயணம் செய்யவேண்டியது வரும்.

ஸெஞ்யோர் ஹிரோஸி முன்பே ஹரித்துவாருக்குச் சென்றிருக்கிறான். வெள்ளைக்காரனான அவன் காசிக்கும் திரிவேணிக்கும் புனிதப்பயணம் போய்க் கொண்டிருக்க, இந்தியனான ரமேஷன் பொழுதுபோவதற்கு ஏற்ற இடங்களைத் தேடிக்கொண்டிருந்தான். டில்லி குளிரில் மூழ்கிக் கிடக்கும்போது அவன் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களைத் தேடி ஓடுவான். டில்லிக்கு மேலே மணல் காற்று வீசும்பொழுது அவன் கம்பளிஆடைகளை எடுத்துக் கொண்டு குளிர்ப்பிரதேசங்களைத் தேடிப்போவான். அப்படித்தான் சிம்லாவின் மால் சாலை, டில்லியின் கர்ஸான் சாலையைப் போல அவனுக்கு நன்கு அறிமுகமானது. இருந்தாலும் டில்லிக்கு அருகில் இருக்கிற ஹரித்துவாரை அவன் எப்படியோ மறந்துவிட்டான். தக்ஷப்ரபிபதியின் நகரமே, மன்னித்து விடு!

வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் தாராளமாகப் போதும். பார்க்க வேண்டியவற்றையெல்லாம் பார்த்து விடலாம்.

“முடிவு பண்ணியாச்சா?”

ஸெஞ்யோர் தன்னுடைய பொன்நிற கிருதாக்களைக் கைகளால் தடவினான். அந்தக் கிருதாக்கள் அவனுடைய இரண்டு கன்னங்களிலும் நன்கு வளர்ந்திருந்தன.

“ம்...”

“அந்த முடிவுல மாற்றம் ஒண்ணுமில்லையே?”

“இல்ல...”

“நல்லது.”

எது எப்படியோ ஒரு பிரச்சினை முடிவுக்க வந்தது. விடுமுறை நாட்கள் என்ற சோர்வைத் தரும் விஷயத்திலிருந்து தப்பித்தாகி விட்டது. மூன்று நாட்கள் அலுவலகத்திற்குப் போகாமல் இருப்பது என்ற விஷயம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அலுவலகத்திற்குச் செல்வது என்பது ஒரு தப்பித்தல் என்றே சொல்லலாம். டெலிப்ரின்டர்களின் தாளகதிக்கு மத்தியில் தாள்களுக்கு இடையில் அமர்ந்திருக்கும்போது காலம் என்ற ஒன்றே மறந்து போகும். சொற்களையும் வார்த்தைகளையும் பத்திகளையும் மொழிபெயர்த்து சீராக்கும்பொழுது சோர்வு என்ற சாபத்திலிருந்து அவனுக்கு விடுதலை கிடைக்கும். அலுவலகம் இல்லை என்றால் ரமேஷனின் வாழ்க்கை ஒரு பாலைவனத்தைப் போல் ஆகிவிடும். ஸ்கந்த புராணமும், பத்ம புராணமும், சிவ புராணமும் பாடும் ஹரித்துவார். தக்ஷப்ரஜாபதி, தக்ஷேஸ்வர் ஆகியோரின் ஹரித்துவார். சதிதேவி, மானஸாதேவி, அஞ்சனா தேவி ஆகியோரின் ஹரித்துவார். தத்தாத்ரேய மகரிஷியின் ஹரித்துவார். சப்தரிஷிகளின் ஹரித்துவார்-

“திங்கட்கிழமை காலையில இங்க இருக்கணும்.”

ஸெஞ்யோர் ஞாபகப்படுத்தினான். ரமேஷன் இல்லாவிட்டால் அவனுக்கு வேலையே ஓடாது.

“ஞாயிற்றுக்கிழமை இரவு நான் திரும்பி வந்திடுவேன். போதுமா ஸெஞ்யோர்?”

“போதும்.” ஸெஞ்யோர் தலையை ஆட்டினான்.

திங்கட்கிழமை மாலையில் செஸ் விளையாட்டு இருக்கிறது. டில்லி மாநில சேம்பியன்ஷிப் போட்டியில் ரமேஷன் ஸெமிஃபைனல் வரை போயிருக்கிறான். அவன் நாளைய மாநில சாம்பியன் இல்லையென்று யாரால் கூறமுடியும்? ரமேஷன் பணிக்கர் எல்லா விஷயங்களிலும் சாம்பியனாயிற்றே! செஸ்ஸில் சாம்பியன். டென்னிஸில் சாம்பியன்... கேரம்ஸின் சாம்பியன்...

அலுவலகத்தில் எப்போதும் வேலைகள் இருந்து கொண்டேயிருக்கும். ஆங்கிலத்தில் தவறு எதுவும் இல்லாமல் எழுதத்தெரியாத ஸெஞ்யோருக்கு எப்போதும் ரமேஷனின் உதவி தேவைப்பட்டது. அவன் எழுதுவதெல்லாம் ஸ்பானிஷ் மொழியில். ஒவ்வொரு வார்த்தையையும் மொழி பெயர்க்கவேண்டும். மொழி பெயர்க்க ஆள் இல்லையென்றால் அவனுக்கு அன்று அலுவலகத்தில் ஒரு வேலையும் ஓடாது. ரமேஷன் ஸெஞ்யோருக்கு வலது கரம் மாதிரி என்றுகூடச் சொல்லலாம். அவனுடைய நாக்கு நாயின் நாக்கைப்போல சிவந்திருக்கும். ரமேஷன் அந்த நாக்க என்ன? ஸெஞ்யோரின் உடம்பு உப்பு பட்டதைப்போல் இருக்கும். அவனுடைய புகையிலைக் கறை படிந்த பற்களுக்கும் சிறிய நாக்குக்கும் இடையில்- அவனுடைய வாய்க்குள் ரமேஷன் கட்டுப்பட்டுக் கிடக்கிறான்.


அதை நினைத்துப் பார்த்தபோது ரமேஷனுக்குச் சிரிப்பு வந்தது. ரமேஷனின் பற்கள் வெண்மை  நிறத்தில் அழகாக இருக்கும்.

“உன் அப்பாவோட பற்கள்.”

அவனுடைய தாய் கூறுவாள். தந்தையின் பற்கள் இப்போது எங்கேயிருக்கும்? சிதையில் அவை கருகிப்போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நெருப்பில் எரியும்போது சிதறிப்போயிருக்க வேண்டும்.

“உனக்கு ஏதாவது வேணுமா?”

சாயங்காலம் அலுவலகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு ஸெஞ்யோர் ஹிரோஸி கேட்டான். சிகரெட்டோ, விஸ்கியோ வேண்டுமா என்று அதற்கு அர்த்தம். பிலிப்ஸ் மோரிஸ் என்ற விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் வீட்டில் இருக்கின்றன. கைவசம் இருக்கும் ட்யூட்டிஃப்ரீ புட்டியைக்கூட இன்னும் திறக்கவில்லை.

“எதுவும் வேண்டாம் ஸெஞ்யோர்.”

ஸெஞ்யோர் ரமேஷனுக்கு விஸ்கியும், சிகரெட்டும் மட்டும் தரவில்லை. வேறு பலவற்றையும்கூட கொடுப்பான். பல முறை ஒரு பெண்ணுக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இருவரும் படுத்து உறங்கியிருக்கிறார்கள். விஸ்கிமீது இப்போது ஆர்வமுமில்லை. அதற்குப் பதிலாக இப்போது பயன்படுத்துவது பங்க்தான். சிகரெட்டிற்குப் பதிலாக சரஸ். மதுவும் சிகரெட்டும் வெறுத்துப் போய் விட்டது. பெண்? மதுவிற்குப் பதிலாக பங்க்கும் சிகரெட்டிற்குப் பதிலாக சரஸும் உபயோகப்படுத்தலாம். பெண்ணுக்குப் பதிலாக இந்த உலகத்தில் என்ன இருக்கிறது - பெண்ணைத்தவிர?

மேஜையிலிருந்து புகையிலை டின்னையும் பைப்பையும் செக் புத்தகத்தையும் எடுத்தான். வங்கி அடைக்கப்பட்டிருக்கும் பரவாயில்லை. வீட்டு உரிமையாளர் கோஸ்லாவிடம் காசோலையைக் கொடுத்து கொஞ்சம் பணம் வாங்கிக் கொள்ளலாம். கோஸ்லாவின் அலமாரி நிறைய பண நோட்டுக்கள்தான்.

சாதாரணமாக அலுவலகத்தை விட்டு வெளியே வருவது சோர்வடைந்த மனத்தோடுதான். மனதில் ஒரு இலக்கும் இருக்காது. இப்போது ஒரு இலக்கு இருக்கிறதே! தக்ஷப்ப்ரஜாபதி, தத்தாத்ரேயா ஆகியோரின் ஊரில் இரண்டு மூன்று நாட்கள் செலவழிக்கலாமே என்ற இலக்கு. சாணக்யபுரியின் பிரதான சாலை வழியாக சீன தூதரகத்தின் சிவந்த நிழல்களைத் தாண்டி கைகளை பாக்கெட்டினுள் சொருகியவாறு ஹரித்துவாரைப் பற்றிய எண்ணங்களுடன் அவன் நடந்தான். ப்ரம்ம குண்டத்தையும், மலை உச்சியில் இருக்கும் மானஸா தேவி ஆலயத்தையும் பற்றி இதுவரை அவன் கேள்விதான் பட்டிருக்கிறான். இப்போது அவற்றை அவன் பார்க்கப்போகிறான். ஹரித்துவாரின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் தேடிப்பார்க்க வேண்டும். மனதில் தோன்றினபடியெல்லாம் அலைந்து திரிய வேண்டும். அதன்மூலம் ஹரித்துவாரிலும் என்னுடைய பாதச் சுவடுகள் பதியட்டும். இந்தக் காலடிச் சுவடுகள் மட்டும்தானே இந்த வாழ்வில் என்னுடைய சம்பாத்தியம்? - இப்படிப் பல வகைகளில் சிந்தித்தவாறு வானத்தை எட்டிப்பிடிக்க நின்று கொண்டிருக்கும் உயரமான கட்டிடங்கள் வழியாக ரமேஷன் நடந்தான். கர்ப்பப் பையிலிருந்து ஆரம்பித்து சிதையை நோக்கிச் செல்லும் நடை இந்த பூமியில் எனக்கென்று ஒரு சிதை இருக்குமல்லவா? ஒரு கட்டு விறகும் ஒரு தீக்குச்சியும் என்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அல்லவா?

சமீப காலமாக முன்பு எப்போதும் இல்லாத விதத்தில் மரணத்தைப் பற்றி அதிகமாகவே சிந்திக்கிறான் ரமேஷன். மரணத்தைப் பற்றிய கெட்ட கனவுடன்தான் இன்றுகூட அவன் படுக்கையை விட்டு எழுந்தான். அந்தக் கனவைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் அவன் காலையில் அலுவலகத்திற்கே சென்றான்.

“புவனோஸ் தியாஸ், அமிகோ.”

அதற்குப் பதிலாக அவன் சொன்னான்: “நான் மரணத்தின் காலடிச் சத்தத்தைக் கேக்குறேன், ஸெஞ்யோர்.”

“மரணத்திற்குக் கால்கள் உண்டா என்ன? ஹோ! ஹோ! ஹோ! ஸெஞ்யோரின் சதைப்பிடிப்பான கன்னங்கள் குலுங்கின.

“நாம இறக்குறதுக்கா பிறக்கிறோம்?”

“வாழறதுக்காகத்தான் மரணமடையறோம். மரணம் இல்லைன்னா வாழ்க்கை இல்லைன்றது உனக்குப் புரியலையா?”

“மரணமில்லைன்னாகூட வாழ்க்கை இருக்கும். மரணமில்லைன்னா மரணம் மட்டும்தானே இல்லாம இருக்கும்?”

சுஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவளிடம் சொன்னான்: “சுஜா நான் மரணத்தோட காலடிச் சத்தத்தைக் கேக்கறேன்.”

“அது என்னோட காலடிச் சத்தம்தான்...” அந்தப் பக்கத்திலிருந்து அவள் பதில் சொன்னாள்.

கார்கள் மட்டுமே சாலையில் ஓடிக்கொண்டிருந்தன. நடந்து செல்பவர்களைக் காணவேயில்லை. சாணக்யபுரியில் மனிதர்களுக்கு கால்கள் இருக்கவேண்டிய இடத்தில் சக்கரங்கள்தான் இருக்கின்றன. வேகமாய்ப் போய்க்கொண்டிருக்கும் கார்களில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களின் சிவந்த முகங்களைப் பார்க்கலாம். மஞ்சள் நிற சைனாக்காரர்களின் முகங்கள். சப்பை மூக்கு உள்ள ஜப்பான்காரர்கள். பிறகு - இரவின் அழகை கொண்ட நீக்ரோக்கள். நடந்து நடந்து சாணக்யபுரிக்கு வெளியின் அவன் வந்தான்.

சுஜாவிற்கு இன்று ஓவிய வகுப்பு இருக்கிறது. இல்லாவிட்டால் ஐந்து மணிக்கு முன்பே அலுவலகத்தின் வரவேற்பறையில் அவள் வந்து அவனுக்காகக் காத்திருப்பாள். அவள் உடனிருந்தாலும் என்ன, இல்லாவிட்டாலும் என்ன? மற்றவர்களுடன் இருக்கும்போதுதான் தனிமை என்ற நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதை அவன் உணர்ந்திருக்கிறான். ரிங் சாலையை அடைந்தபிறகு, அவனுக்கு நடக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஒரு வாடகைக் காரை அழைத்தான். மீட்டரைப் போட்ட டாக்ஸிக்காரன் அவன் முகத்தையே பார்த்தான்.

“சீதா சலோ!”

நேராகப் போகுமாறு கூறினான். எங்கே போவது? போவதற்கு எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. பார்ப்பதற்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்? டிஃபன்ஸ் பெவிலியனுக்குச் சென்று யாத்ரிக்கின் புதிய நாடகத்தைப் பார்க்கலாம். க்ளப்பிற்குச் சென்று செஸ் விளையாடலாம். நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்தலாம். ஏதாவதொரு சினேகிதியை அழைத்துக் கொண்டு போய் ராம்ப்லர் ரெஸ்ட்டாரெண்ட்டில் விரிந்து கிடக்கும் வானத்திற்குக் கீழே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாம். இவ்வளவு இருந்தும் எதுவுமே இல்லாததைப் போன்று ஒரு தோற்றம்.”

வீட்டிற்குப் போனால் என்ன? வீடு ஒரு கர்ப்பப்பையைப் போல அதன் இருட்டில், அதன் ஈரத்தில், அதன் வெப்பத்தில் தலை, கால்களுக்கு மத்தியில் சுருண்டு படுத்திருக்கலாம்.

“சௌத் எக்ஸ்டென்ஷன்.”

தெளிவான உத்தரவு கிடைத்த டாக்ஸிக்காரன் காரின் வேகத்தைக் கூட்டினான். டாக்ஸி உண்மையிலேயே கொடுத்து வைத்தது. அதற்கென்று இலக்கு இருக்கிறதே! முன்னால் முடிவு தெரியாத ரிங் சாலை. இந்தச் சாலைக்கு ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை. நகரத்தை வளைத்து உள்ளே போட்டிருக்கும் ரிங் சாலை வழியாகப் பயணம் செய்தால் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்து சேரலாம். ஒரு புதிய சிந்தனை அப்போது உதித்தது. டாக்ஸிக்காரனிடம் நேராக ஓட்டும்படி சொன்னாலென்ன? ஒன்றிரண்டு மணி நேரங்கள் டாக்ஸியில் அமர்ந்து நகரத்தைச் சுற்றலாமே!

சௌத் எக்ஸ்டென்ஷன் மார்க்கெட்டை அடைந்தவுடன், டாக்ஸியின் வேகம் குறைந்தது.

“நேராகப் போ.”

டாக்ஸியின் வேகம் மீண்டும் கூடியது. பேன்ட்டின் பின் பாக்கெட்டிலிருந்து ஒரு பொட்டலம் சரஸ்ஸை அவன் எடுத்தான். சரஸ் தயாரிப்பதற்கு ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. இரண்டு தீக்குச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு அவற்றுக்கு மத்தியில் சரஸ்ஸை வைத்து இறுகப் பிடிக்கவேண்டும்.


அதற்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தீக்குச்சியை எடுத்து உரசி சரஸ்ஸுக்குக் கீழே காட்ட வேண்டும். மூன்று குச்சிகளும் எரியும்போது, சரஸ்ஸிலிருந்து புகை கிளம்பி உயர்ந்தது. சூடான சரஸ்ஸை உள்ளங்கையில் வைத்து கையால் நசுக்கிப் பொடியாக்கி அதைப் புகையிலையுடன் கலந்து குழாயில் நிரப்பினான். சரஸ்ஸின் மனம் காரில் பரவியது. பாம்பு வாயைத் திறக்கும்போது உண்டாகும் வாசனை... டாக்ஸி அப்போது ஸ்ரீநிவாஸ்புரியை அடைந்துவிட்டிருந்தது. டாக்ஸிக்காரன் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

“நேராக...”

சரஸ்ஸின் மங்கலான புகைக்கு நடுவில் உட்கார்ந்திருந்த ரமேஷன் கடந்த காலத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தான். இருபத்து ஆறு வருடங்களுக்கு முன்னால் பயணம் செய்தபோது தன் தாயின் கர்ப்பப்பையை அவன் தனக்கு முன்னால் பார்த்தான். ஈரமான நரம்புகள் படர்ந்திருக்கும் சிவப்பு நிறச் சுவர்கள். மெல்லிய சிவந்த இருட்டு அவனைச் சூழ்ந்திருந்தது. அந்த இருட்டில் தலைகீழாக அவன் சுருண்டுப் படுத்திருக்கிறான். யமுனையின் நீளமான கரை வழியாக டாக்ஸி ஓடிக்கொண்டிருந்தது. முன்னாலும் பின்னாலும தெருவிளக்குகளின் ஊர்வலம். ஆஸாத் மார்க்கெட்டும் கிஷன் கஞ்ச்சும் ஹராய்ரோஹில்லாவும் கீர்த்தி நகரும் பின்னால் போய்க் கொண்டிருந்தன. கடைசியில் புறப்பட்ட இடத்திற்கே டாக்ஸி வந்து நின்றது.

“ஸாப்!”

டாக்ஸிக்காரன் அழைத்தான். குழாய் முழுமையாக அணைந்து போயிருந்தது. ரமேஷன் கண்களை உருட்டியவாறு நான்கு பக்கங்களிலும் பார்த்தான். மரணத்திற்கும் வாழ்விற்குமிடையில் ஒரு தவிப்பு இருக்கிறது. அதில் இருந்தான் ரமேஷன். யூஸஃப் ஸராயியில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய ஒரு உருண்டை சரஸ் மரணத்தைப் பற்றியும் கர்ப்பப்பையைப் பற்றியும் நினைப்பதற்குப் பயன்பட்டது. டாக்ஸியை விட்டு இறங்கிய ரமேஷன் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை வெளியில் எடுத்தான். மீதியை வாங்கவில்லை. டாக்ஸிக்காரன் அதனால் மகிழ்ச்சியடைந்திருப்பான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கையால் தொழுத அவன் புறப்பட்டான்.

மழைபோல வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்தன நிலான் விளக்குகள். ஐஸ்கிரீமை ருசித்தவாறு தொப்புளுக்குக் கீழே புடவை அணிந்த இளம்பெண்கள் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்கள். ஷகுஃபாவில் பேண்ட் இசை காதைக் கிழித்தது. வர்ணங்களும், சத்தங்களும் நிறைந்த மாய உலகத்தின் வழியாக ரமேஷன் வீட்டை நோக்கி நடந்தான். படுக்கையறையில் ஏர்கண்டிஷனரை ஆன் செய்தான். குளிர்ச்சி அறை முழுக்கப் பனியைப் போலப் படர்ந்தது. டேப் ரிக்கார்டரை ‘ஆன்’ செய்தான். சிதாரின் இனிய இசை அறைக்குள் ஒலித்தது. சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லை. மதியம் சாப்பிடாமல் இருந்தும் கூட பசி இல்லை. சாய்வு நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் ரமேஷன் சாய்ந்தான். சரஸ்ஸின் போதை, பசி, குளிர்ச்சி, சிதார் இசை!

கண்கள் தானாகவே மூடின.

2

மேஷன் படுக்கையை விட்டு எழுந்தான். மானஸா தேவியும் ப்ரம்ம குண்டமும் அவனை அழைப்பதைப் போல் இருந்தது. ஹரித்துவாரைப் பற்றி நினைத்துக் கொண்டே அவன் கண்களைத் திறந்தான். நினைவு முழுவதும் ஹரித்துவாரைப் பற்றியே இருந்தது. ஹரித்துவாரைப் பற்றி எதற்காக இப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? கடந்த நான்கைந்து வருடங்களாகவே அவன் பல இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறான். அந்தச் சமயங்களில் ஒருமுறைகூட அவனுடைய இதயம் இந்த அளவிற்கு அடித்துக் கொண்டதில்லை. உலகம் தன்னுடைய வீடு என்ற எண்ணம் எங்கு போனது?

மேட்ரிட்டிற்குச் செல்லும் நாளன்று பகல் முழுவதும் க்ளப்பில் உட்கார்ந்து செஸ் விளையாடுவதும் சரஸ் இழுப்பதுமாக இருந்தான். இரவு எட்டரை மணிக்கு விமானம். க்ளப்பை விட்டு வெளியே வரும்போது ஏழுமணி ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குச் சென்று பெட்டியில் எதையதையோ வாரிப் போட்டுக் கொண்டு விமான நிலையத்திற்குச் சென்றான். கொல்லத்திலிருந்து கோட்டயத்திற்குச் செல்லும் மதமதப்புடன் விமானத்தைப் பற்றியோ, ஸ்பெயினைப் பற்றியோ செய்யப்போகிற முக்கிய வேலையைப் பற்றியோ அப்போது சிந்திக்கவேயில்லை. செஸ்ஸில் மாவோவின் சிந்தனைகளைப் பற்றி பயன்படுத்துவதைப் பற்றி அவன் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தான். விமான நிலையத்தில் ஸெஞ்யோர் அகினோ ஹிரோஸியும் சுஜா மெஹ்ராவும் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

“நீ எங்கே போயிருந்தே?”

“கொஞ்சம் தாமதமாயிருச்சு, ஸெஞ்யோர்.”

“போதைப்பொருள் சாப்பிட்டுட்டு வர்ற, அப்படித்தானே?”

ஸெஞ்யோரின் முகத்தில் கோபம் தெரிந்தது.

“மாவோவின் சிந்தனைகளை செஸ்ஸில் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன்” -குரலைத் தாழ்த்திக் கொண்டு சுஜாவின் காதில் சொன்னான். கடைசியில் விமானத்தை நோக்கி அவன் ஓடவேண்டிய நிலை உண்டானது.

டில்லிக்கு மிகவும் அருகில் இருக்கும் ஹரித்துவாருக்குச் செல்லும் ரமேஷன் சரஸ்ஸைப் பற்றியோ செஸ்ஸைப் பற்றியோ சிறிதுகூட நினைக்கவில்லை. மனம் முழுக்க ஹரித்துவார் மட்டுமே இருந்தது. இதுவரை பார்த்திராத பிரகாசமான தீபங்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் உயர்ந்து எரிந்து கொண்டிருந்தன. இதுவரை கேட்டிராத மணியோசைகள் காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தன. ஹரித்துவார் தன்னை அழைக்கிறதோ என்று அவன் நினைத்தான்.

போர்வையை விலக்கிவிட்டு அவன் கட்டிலிலிருந்து எழுந்தான். அறைக்குள் குளிர்ச்சி நிறைந்திருந்தது. அவன் கையை நீட்டி ஏர் கண்டிஷனரை அணைத்தான். ஒரு முனகலுடனும் நடுக்கத்துடனும் அந்த இயந்திரம் நின்றது. திரைச்சீலையை சற்று இழுத்து விட்டபோது அறைக்குள் சற்று இருட்டு புகுந்தது. கான்க்ரீட் கட்டிடங்கள் வெளியே தெரிந்தன. கான்க்ரீட்டின்  ஆக்கிரமிப்பிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தே அவன் சென்றமுறை தன் சொந்த ஊருக்குச் சென்றான். அந்த ஊரில் கான்க்ரீட் இல்லை. அதற்குப் பதிலாக தென்னை மரங்கள் இருந்தன.

பார்க்குமிடமெல்லாம் தென்னை மரங்கள். தென்னை அவன் மனதில் ஒரு அலைபாயும் நிலையை உண்டாக்கியது. அந்த அலைபாயும் நிலை அவனுடன் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருப்பதுதான். ஊரில் இருந்தபோது தென்னை மரங்கள் அவனை அமைதியற்றவனாக ஆக்கியது. நகரத்தில் இருக்கும்போது அதையே கான்க்ரீட் கட்டிடங்கள் செய்தன.

“உன் அமைதியில்லாத மனதை நான் சரி பண்ணுறேன்.”

அவனுடைய தாயின் முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு. வெள்ளை வேட்டியையும் சட்டையையும் அணிந்து கொண்டு காலில் செருப்பு எதுவும் இல்லாமல் அவன் வயல் வரப்பு வழியாக நடந்தான்.

“இங்கே உட்காரு.”

கருங்கல்லுக்கப் பக்கத்தில் அவனுடைய தாய் அமர்ந்தாள். தாய் சொல்லைக் கேட்கும் ஒரு நல்ல பிள்ளையைப் போல தாயின் அருகில் அவன் அமர்ந்தான்.

“உன் கவலைக்குக் காரணம் என்ன மகனே?”

“எனக்குத் தெரியலம்மா!”

“உன் தாயை இப்பவும் நீ நம்பலையா?”

“உங்களை நான் நம்பலையா!”

“அப்ப நீ சொல்லு...”

அந்தத் தாய் தன் மகன் ரமேஷனின் கையை எடுத்து தன்னுடைய மடியில் வைத்தாள். எலும்புகள் தெரியும், முடிகள் வளர்ந்திருக்கும் கைகள். தாய்க்குத் தெரியாத விஷயம் எதுவும் அவனுடைய வாழ்க்கையில் இல்லை. சரஸ், பங்க் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, இளம்பெண்களுடன் நடந்து திரிவது எல்லாமே அவளுக்குத் தெரியும். எல்லா விஷயங்களையும் அவன் தன் தாயிடம் மறைக்காமல் கூறிவிடுவான்.


“அம்மாகிட்ட சொல்ல மாட்டியா?”

அவளின் குரலில் ஒரு வருத்தம் கலந்திருந்தது. ரமேஷனின் விரக்தியையும் வேதனையையும் அந்தத் தாய் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்! அவனுடைய பாதிக்கப்பட்ட உடல் நலத்தையும் கூடத்தான். ரமேஷனின் கடிதங்களைப் படித்துவிட்டு அவள் வாய்விட்டு அழுதிருக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் என்ன?

“ரமேஷா, சொல்லு மகனே. அம்மாகிட்ட இன்னமும் நீ எதையும் மறைக்கக் கூடாது.”

“எனக்கு ஒரு கவலையும் இல்லம்மா. ஒருவேளை என் கவலைக்குக் காரணம் அதுவா இருக்கலாம்.”

ரமேஷன் தன் தாயின் முகத்தைப் பார்த்தான். தான் சொல்வது தன் தாய்க்குப் புரியாமல் போகலாமோ என்று அவன் சந்தேகப்பட்டான். அவனுக்கு இருக்கும் அளவிற்கு அவனுடைய தாய்க்கும் கல்வியறிவு இருந்தது. நிறைய வாழ்க்கை அனுபவங்களும். அவன் படித்திருப்பதைவிட அதிகமான புத்தகங்களை அவனுடைய தாய் படித்திருக்கிறாள். இதுதவிர, எத்தனையோ அறிவாளிகள் உருவான ஒரு கல்லூரியில் ஒன்றரை வருடங்களாக அவள் பாடம் கற்பித்துக் கொண்டு இருக்கிறாள். இல்லை... அவனுடைய தாய்க்குப் புரியாமல் போகாது.

“அப்படின்னா உன் பிரச்சினை மெட்டாஃபிஸிக்கலா இருக்கும்னு நான் நினைக்கிறேன்”

அவனுடைய தாய் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தாள்.

“கவலையை வச்சுத்தான் உன்னோட கவலையை இல்லாம ஆக்க முடியும். அப்படித்தானே?”

“நீங்க சொல்றது உண்மைதானம்மா. கவலையால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். இந்த நெஞ்சுல சயம் வந்தா... இந்த தொண்டையில புற்றுநோய் வந்தா... இந்தக் கண்கள் பிதுங்கி வெளியே வந்துட்டா... அம்மா, நீங்க கோவிலுக்குப் போறது உண்டா?”

“இல்ல...”

“அம்மா, எனக்காக நீங்க ஒரே ஒரு தடவை கோவிலுக்குப் போயிட்டு வரணும். எனக்கு சயரோகம் வரணும்னு கடவுள்கிட்ட நீங்க வேண்டிக்கணும்.”

அவனுடைய தாய் எந்த பதிலும் கூறாமல் அவன் கையை இறுகப் பற்றியவாறு நடந்தாள். அவன் ஆவேசம் மனதில் குடிகொள்ள தாய்க்குப் பின்னால் நடந்தான்.

“இல்லாட்டி... புற்றுநோய். தொண்டையில புற்றுநோய் வந்து தண்ணிகூட குடிக்க முடியாம படுத்த படுக்கையாய் கிடந்து கஷ்டப்படுறப்போ எனக்கு சந்தோஷமா இருக்கும். அம்மா, இன்னைக்கே நீங்க கோவிலுக்குப் போங்க. எனக்குப் புற்றுநோய் தரணும்னு வேண்டிக்கங்க... வேண்டிக்கங்க...”

ரமேஷன் தன் தாய்க்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து அவளுடைய உள்ளங்கைகளில் தன்னுடைய முகத்தை வைத்தான்.

“ரமேஷா, பைத்தியம் மாதிரி பேசாதே.”

அவனுடைய தாய் அவனைக் கையைப் பிடித்து எழுந்திரிக்க வைத்தாள். எதுவுமே பேசாமல் நதிக்கரை வழியாக அவர்கள் நடந்தார்கள். சிறிது நேரம் கழித்து தான் அணிந்திருந்த வெள்ளைப் புடவையின் நுனியால் அவள் தன் கண்களைத் துடைப்பதை ரமேஷன் பார்த்தான்.

மறுநாளும் தாயும் மகனும் வயல் வரப்பு வழியாகவும் நதிக்கரை வழியாகவும் நடந்தார்கள்.

“இன்னொரு வருடம் எப்படி வேணும்னாலும் கெட்டு நாசமாகிப்போ. அதுக்குப்பிறகு உன்னை நான் சரிபண்ணுறேன்.”

அடுத்த வருடம் அவனுடைய தாய்க்கு பென்ஷன் கிடைக்க ஆரம்பிக்கும். அவளின் மனதில் மூன்று ஆசைகள் இருந்தன.

“உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்.”

“பிறகு?”

“நானும் டில்லிக்கு வருவேன். பிறகு உங்க ரெண்டுபேர்கூட நானும் தங்கிடுவேன்.”

“மூணாவது ஆசை என்னம்மா?”

“அது ரொம்பவும் சாதாரணமானது, ரமேஷா.  சாகுற வரைக்கும் உட்கார்ந்து படிக்க புத்தகங்கள் வேணும்.”

“சரி... நீங்க எதுக்கும்மா டில்லிக்கு வரணும்?”

“உனக்கு நல்ல சாப்பாடு போடுறதுக்கும், உன்னைக் குளிக்க வைக்கிறதுக்கும், உன்னை நல்லா தூங்க வைக்கிறதுக்கும்...”

“அதுக்குத்தான் அவள் இருக்காள்ல?”

“அவளும் உன்னைப் போல இருந்தா?”

அவனுடைய தாய் புன்னகைத்தாள்.

“சாப்பிட வைக்கவும் குளிக்க வைக்கவும் நீங்க வேணுமா அம்மா? நான் இப்போ குளிக்கலையா? தூங்கலையா?”

“நான் என்ன சொல்றேன்றதை நீ புரிஞ்சிக்கல, ரமேஷா?”

அவனுடைய தாய் ரமேஷனின் கையை இறுகப் பிடித்தவாறு நதிக்கரை வழியாக நடந்தாள். அவள் பேசியது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ அல்லது வேறு ஏதாவது மொழியிலோ அல்ல. அது ஒரு தாயின் மொழி.

“அன்புன்ற விஷயத்தை நீங்க நம்பறீங்களா அம்மா?”

ரமேஷன் கட்டிலில் காலை நீட்டிப் படுத்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான். தலைப்பகுதியில் அமர்ந்து அவன் தலைமுடியையும் நெற்றியையும் தடவி விட்டுக் கொண்டிருந்தாள் அவனுடைய தாய். அவனுடைய தந்தைக்கு இருக்கும் அதே நெற்றி... அதே மூக்கு...

“அன்புன்ற விஷயத்துல உங்களுக்கு நம்பிக்கை இருக்காம்மா?”

“இது என்ன கேள்வி, மகனே? இந்த உலகத்துல உன்னைவிட்டா எனக்கு வேற யாரு இருக்குறது? நீ ஏன் அதைப் புரிஞ்சிக்கவே மாட்டேங்கற?”

“அம்மா, என் கேள்விக்கு நீங்க பதிலே சொல்லல.”

“என்ன கேள்வி?”

“அன்பை நம்பறீங்களான்னு கேட்டேன்.”

“நம்பறேன்.”

ரமேஷன் இன்னொரு சிகரெட்டையும் கொளுத்தி தன்னுடைய தாயின் முகத்தை நோக்கிப் புகையை விட்டான். அவள் தன் முகத்தைத் திருப்பவில்லை. அவனுடைய தந்தையும் இதே மாதிரிதான் நடந்து கொள்வார்.

“அன்புன்னு ஒண்ணு இல்லவே இல்ல.”

“இது பலரும் சொன்னதுதான் ரமேஷா.”

“உறவுன்றது மட்டும்தான் இருக்கு. அம்மா, நீங்க என் மேல பாசம் வைச்சிருக்கிறதுக்குக் காரணம் நான் உங்க மகனாக இருக்கிறதுனாலதான். இல்லாட்டி என்மேல உங்களுக்கு அன்பு இருக்காதுன்றது மட்டுமில்ல- நீங்க என்னைப் பார்த்தால் பேச மாட்டீங்க. அதுதான் உண்மை. அல்லது என்னைப் பார்த்து நீங்க கேட்பீங்க; “என்ன? எங்கே?’ன்னு.”

அதற்கு அவனுடைய தாய் எதுவும் பேசாமல் அவனுடைய தலை முடியை கோதிவிட்டுக் கொண்டிருந்தாள்.

“அன்புன்ற ஒண்ணு இருக்குன்னு உங்களால நிரூபிச்சுக் காட்ட முடியுமா, அம்மா?”

“அது என்ன கஷ்டமான காரியமா ரமேஷா? சிங்கம் எவ்வளவு பயங்கரமானது. கண்ணுக்கு முன்னாடி பார்க்கற எந்த உயிராக இருந்தாலும் அதைக் கொன்னுட்டுத்தான் அது மறு வேலை பார்க்கும். தன்னைவிட உருவத்துல பெரிசா இருக்கிற யானையைப் பார்த்தால் கூட சிங்கம் கர்ஜனை பண்ணிக்கிட்டே அது மேல பாயும். அவ்வளவு பயங்கரமான சிங்கம் தன்னோட குட்டியைப் பார்க்கிறப்போ கர்ஜனை செய்யறது உண்டா? கொன்னு தின்னுறதுக்குப் பதிலா அது குட்டியைக் கொஞ்சவில்லே செய்யுது! அது எதனால?”

வெற்றி பெற்றுவிட்ட எண்ணத்துடன் அவனுடைய தாய் தொடர்ந்து சொன்னாள்: “அதுதான் ரமேஷா, அன்புன்றது...”

தன் தாய் சொன்னதைக் கேட்டு ரமேஷனுக்குச் சிரிப்பு வந்தது.

“சிங்கம் அதோட குட்டியைக் கொன்று தின்னாம இருக்கறதுக்குக் காரணம் அன்போ, பாசமோ இல்ல. அதோட சொந்தக் குட்டியா இருக்கறதுதான் காரணம். இந்த விஷயத்துல அன்புக்கு இடமில்ல. மாறாக உறவுதான் இருக்கும்மா.”


“உன்கிட்ட என்னால வாதம் செய்ய முடியாது.”

அவனுடைய தாய் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். ரமேஷனின் சிரிப்பில் அவளும் கலந்து கொண்டாள்.

ஊரில் அவன் இரண்டு வாரங்களே இருந்தான். டில்லியில் இருக்கும்பொழுது சொந்த ஊருக்குப் போக வேண்டும்போல் அவனுக்கு இருக்கும். ஊருக்குப் போய்விட்டால் உடனடியாக டில்லிக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிடும். அவனுடைய தாய் ஒரு நிழலைப்போல சதா நேரமும் அவனுடனே இருந்தாள். அவன் குளிப்பதற்காக அவள் நீரைச் சூடு பண்ணுவாள். திகட்டத் திகட்ட அவனைச் சாப்பிட வைப்பாள். தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வப்போது இடையில் வந்து போர்வையைச் சரியாகப் போர்த்தி விட்டுப் போவாள். ஊரில் இருக்கும்பொழுதும் ரமேஷன் மகிழ்ச்சி நிறைந்தவனாக இல்லை. அங்கு சரஸ்ஸோ, இளம் பெண்களோ கிடைக்கவில்லை என்பதல்ல அதற்குக் காரணம். அவை எந்தவித பிரச்சினையுமில்லாமல் கிடைக்கக் கூடிய டில்லியில் இருக்கும்பொழுது கூடத்தான். சந்தோஷமாக இல்லையே என்பதையும் அவன் நினைக்காமல் இல்லை. ஒரு இரவை அவன் இப்போதுகூட நினைத்துப் பார்க்கிறான். நள்ளிரவு நேரம் ஆன பிறகும் அவனுக்குச் சிறிதுகூட தூக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாகப் புரண்டு படுத்துக் கொண்டும், கால்கள் வலிக்கும்வரை அறையிலும், வாசலிலும் இங்குமங்குமாய் நடந்து கொண்டும் இருந்தான். அவனுடைய மனத்தில் ஒரு பாலைவனத்தின் மவுனம் நிலவிக் கொண்டிருந்தது. முழுமையாக வெறுமையுணர்வு அங்க குடிகொண்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குள் சென்றபோது மேஜையின்மீது அவனுடைய தாய் காய்கறி நறுக்குவதற்காகப் பயன்படுத்தும் கத்தி இருப்பதை அவன் பார்த்தான். கத்தியை எடுத்து தன்னுடைய விரலை அவன் அறுத்தான். ஒன்றல்ல, இரண்டு விரல்களை. ஏராளமான இரத்தம் வெளியேறியது. வலி பெரிதாக உண்டானபோது, மனத்திற்கு அமைதி கிடைத்ததைப்போல அவனுக்கு இருந்தது. தொடர்ந்து உறக்கம் வந்து அவனை அணைத்துக் கொண்டது.

அந்த நாட்களில் அவனுடைய தாய் மிகுந்த மகிழ்ச்சி கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். ஒரு குழந்தையைப் போல அவள் ரமேஷனைப் பார்த்துக் கொண்டாள். குளிக்க வைக்கவும், சாப்பிட வைக்கவும், தூங்க வைக்கவும் அவனுடைய தாய்க்கு வேறு யாரும் இல்லையே!

3

வனுடைய தாய்க்கு ஹரித்துவார், காசி போன்ற இடங்களுக்குப் போக வேண்டும் என்ற விருப்பம் உண்டு. டில்லிக்கு வந்தால் புண்ணிய இடங்களை ஒவ்வொன்றாகப் போய்ப் பார்க்க வேண்டும் என்று அவள் இப்போதே திட்டம் போட்டு வைத்திருக்கிறாள். “அம்மா... உங்க விருப்பத்தை நான் நிறைவேற்றுவேம்மா. ஹரித்துவார்ல இருக்கிற கோவில்கள்ல உங்களுக்காக நான் கடவுள்கிட்ட வேண்டிக்குவேன். தக்ஷேஸ்வரா, நான் வர்றேன்... என் தாய் வர்றதுக்கு வழியமைக்கப் போறேன்...”

கையில் கட்டியிருந்த கடிகாரம் ஓசை எழுப்பியது. மணி ஐந்தரை ஆகியிருந்தது. கான்க்ரீட் கட்டிடங்களுக்கு மேலே மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. சூரியன் உதிப்பதைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன! தினமும் அவன் தூங்கும்போது நள்ளிரவு தாண்டி விடுகிறது. காலையில் எழும்பும்போது சூரியன் சுள்ளென்று எரிந்து கொண்டிருக்கும். இன்று ஒரு நல்ல நாள். ஒரு புலர் காலைப் பொழுதைக் காணமுடிந்த நல்லநாள். ஹரித்துவாருக்குச் செல்லும் நல்ல நாள். ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு அவன் பற்களைத் துலக்கினான். உடம்பிலிருந்த ஆடைகளை நீக்கிவிட்டு பிறந்த மேனியுடன் அவன் ஷவருக்குக் கீழே போய் நின்றான். இரவிலேயே சவரம் செய்துவிட்டதால் இப்போது அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. சூட்கேஸில் தேவைப்படும் பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தான். பேன்ட்டுகள், சட்டைகள், தூங்கும்போது அணியவேண்டிய ஆடை, ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஒடிக்கலோன், பைப்புகள், ஒரு டின் புகையிலை, தூக்க மாத்திரைகள்... பெட்டியில் ஒன்று மட்டும்தான் இல்லை. சரஸ்... புகை வண்டி நிலையத்திற்குப் போகும் வழியில் யூஸஃப்ஸராயியில் வாங்கிக் கொள்ளலாம். ஹரித்துவாரில் ஒருவேளை சரஸ் கிடைக்காமற் போய்விட்டால்?

நல்ல பசி எடுப்பதைப்போல் இருந்தது. நேற்று மதியமும் இரவிலும் எதுவும் சாப்பிடவில்லையே! ஃப்ரிட்ஜைத் திறந்து பார்த்தான். முட்டை இருந்தாலும், அதைச் சாப்பிட தயார் பண்ணுவதற்கு என்னவோ போல் இருந்தது. ஒரு மூலையில் கொஞ்சம் காக்டெயில் சாஸேஜ் இருந்தது. அதைக் கொண்டு சாண்ட்விச் தயாரித்து சாப்பிட்டான். பிறகு ஒரு கப் தேநீர். பசி அடங்கியதைப் போல் இருந்தது. பயணத்திற்குப் பொருத்தமான சிவப்புப் புள்ளிகள் போடப்பட்டிருந்த புஷ் சட்டையையும் பேண்ட்டையும் எடுத்து அணிந்தான். சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டு அறையைப் பூட்டிவிட்டு வெளியில் இறங்கினான். ‘தக்ஷப்ரஜாபதி, மானஸாதேவி, தத்தாத்ரேயா... நான் உங்களைப் பார்க்க வர்றேன்” - அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“வாட் ஆர் யூ அப் டூ?”

மின்னும் கவுனை அணிந்துகொண்டு நாயைக் கையில் பிடித்தவாறு ராகுல் கோஸ்லா வாசலில் உலவிக் கொண்டிருந்தார்.

“ஹரித்துவாருக்கு.”

“புனிதப் பயணமா?”

நளினி கோஸ்லாவும் வெளியே வந்தாள். அவள் அணிந்திருந்த கவுனின் கீழ் பொத்தான்கள் திறந்து கிடந்ததால் அவளுடைய உள் பாவாடையின் ஓரம் நன்கு தெரிந்தது. பாவாடைக்குக் கீழே அவளின் மென்மையான பாதங்கள் தெரிந்தன.

“ஹரித்துவார்ல இருந்து திரும்பி வர்றப்போ நான் உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும் தீதி?”

“ஒரு சங்கு.”

வரவேற்பறையை அலங்கரிப்பதற்காக இருக்கலாம்.

“உங்களுக்கு ராகுல் பய்யா?”

“எனக்கா?”

அவர் ஒரு நிமிடம் தயங்கி நின்றார்.

“கொஞ்சம் கங்கை நீர்...”

அவருடைய குரலில் இலேசான நடுக்கம் தெரிந்தது. அந்த இளம் வயதிலேயே ராகுல் கோஸ்லா ஒரு இதய நோயாளியாக இருந்தார். ஒரு நிமிடம் அவர்களுக்கிடையே அமைதி நிலவியது. ராகுல் பய்யா திறந்த கவுனுக்குள் கையை விட்டு மார்பைத் தடவியவாறு நின்றிருந்தார். நளினி தீதிதான் மவுன சூழ்நிலையை முதலில் கலைத்தாள்.

“தனியாவா போற?”

அவளுக்கு அது தெரியவேண்டும். ரமேஷன் ஒருமுறைகூட எங்கும் தனியாகப் போகும் வழக்கத்தைக் கொண்டவன் இல்லையே!

“நான் இந்த உலகத்துல ஒரு தனி மனிதன்தானே, தீதி?”

பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு ரமேஷன் வெளியே நடந்தான். முதலில் யூஸஃப்ராய்க்குப் போகவேண்டும். சரஸ் ஒரு விலக்கப்பட்ட கனி ஆயிற்றே! எல்லா இடங்களிலும் அது கிடைக்காது. அதிகமாக அதைக் கையில் வைத்துக்கொண்டு நடப்பது என்பதும் ஆபத்தான விஷயம். ரகசியமாக விற்பனை செய்யும் இடங்களிலிருந்து உருண்டை வடிவத்தில் வாங்கி சாக்ஸுக்குள் அதை மறைத்து வைத்திருப்பான். போன குளிர்காலத்தின்போது ஒரு ஹிப்பியிடமிருந்து அவன் ஒரே சமயத்தில் நூறு ரூபாய்க்கு சரஸ் வாங்கினான். அதனால் குளிர்காலம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உற்சாகமாகக் கழிந்தது.


யூஸஃப்ராயியில் அவன் டாக்ஸியை நிறுத்தினான். நந்து தன்னுடைய பின்பாகத்தைச் சொறிந்து கொண்டே எழுந்து வந்தான். அவன் கண்களைச் சிமிட்டியவாறு மவுன மொழியில் என்னவோ கேட்டான். சரஸ் வியாபாரிகள் பொதுவாகவே வாயைக் கொண்டு பேசுவதில்லை. அவர்கள் பேசுவது தங்களின் கண்களின் மூலமாகத்தான்.

“தஸ்...”

பத்து உருண்டைகள் போதாதா? தீர்ந்துவிட்டால் ஹரித்துவாரில் கிடைக்குமா என்று பார்க்கவேண்டியதுதான். பத்து ரூபாய் கொடுத்து பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது நந்து அவனை அவசரப்படுத்தினான். “பாபுஜீ...”

வேறு யாராக இருந்தாலும் பத்து உருண்டைகளை ஒரே நேரத்தில் கொடுத்திருக்க மாட்டான். ரமேஷ்ஷனை நந்துவிற்கு நன்றாகவே தெரியும். சரஸ் வியாபாரம் ஆரம்பிப்பதற்கு முன்பு அவன் ஜகதாரி என்னும் சாராயத்தை விற்றுக் கொண்டிருந்தான். அதோடு நிற்காமல் பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் ரமேஷன் அடிக்கடி அவனைத் தேடிவந்து ஜகதாரி குடிப்பதையும் விலை மாதர்களுடன் படுப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தான். அதனால் நந்துவிற்கு ரமேஷனை நீண்ட நாட்களாகவே தெரியும்.

டாக்ஸி புகை வண்டி நிலையத்தை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது. கனாட் ப்ளேஸின் வராந்தாக்களில் படுத்துக்கிடந்த ஹிப்பிகள் இப்போதுதான் கண் விழித்து எழ ஆரம்பித்திருந்தார்கள். தண்டவாளங்களில் இரயில் வண்டிகளின் ஓசை கேட்டது. சுற்றிலும் புகைப்படலம் படர்ந்து கறுப்பு நிறத்தில் காட்சியளித்தது. என்ஜின்களிலிருந்து சூடான நீராவி வெளியே வந்து கொண்டிருந்தது. ப்ளாட்ஃபாரத்தில் முஸூரி எக்ஸ்பிரஸ் ஓசை உண்டாக்கியவாறு நின்று கொண்டிருந்தது. வண்டிக்கு முன்னால் தூணொன்றில் சாய்ந்தவாறு சுஜா நின்று கொண்டிருப்பதை ரமேஷன் பார்த்தான். அவளின் காலுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய சூட்கேஸ் இருந்தது. ரமேஷனை தூரத்தில் பார்த்த அவள் கண்களிலும் கன்னங்களிலும் ஒரு மலர்ச்சி உண்டானது.

4

ரைச்சல் எழுப்பிக் கொண்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாற ஊர்ந்து செல்லும் ஒரு உயிரினத்தைப் போல முஸூரி எக்ஸ்பிரஸ் தண்டவாளங்களின் மேல் ஓட ஆரம்பித்தது. ஒவ்வொரு ஸ்டேஷன்களையும் வேகமாகக் கடந்து போய்க் கொண்டிருந்த வண்டி நிகம்போட் காட் என்ற இடத்தை அடைந்தது. யமுனை நதிக்கரையில் அணையாமல் எரிந்து கொண்டிருந்தன சிதைகள். ஒரு சிதை அணையும்போது வேறொன்று எரியத் தொடங்கும். நெளிந்து ஓடிக் கொண்டிருந்த நீரில் சிதைகளின் தூரத்து நிழல்கள் தெரிந்தன. செங்கோட்டையின் கனமான சுவர்களைத் தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது.

“செங்கோட்டையே, ஜுமாமஸ்ஜித்தே, விடை கொடுங்கள்...”

வெளியில் கையை நீட்டி வீசியவாறு சுஜா சொன்னாள். ரமேஷன் பைப்பையும் புகையிலையையும் வெளியே எடுத்தான். பைப்பின் வழியாக புகை விட்டவாறு அவன் வெளியே பார்த்தான். யமுனைக்கு மேலே புறாக்கள் பறந்து போய்க் கொண்டிருந்தன. சாந்தினி சவுக்கின் குருதுவாராவில் தானியங்களைத் தேடி அந்தப் புறாக்கள் பறந்து போய்க் கொண்டிருந்தன. வண்டி யமுனையின் மீது இருந்த நீளமான பாலத்தில் போய்க் கொண்டிருந்தது.

“விடை தா... விடை தா...” சுஜா பின்னால் அகன்று அகன்று போய்க் கொண்டிருந்த டில்லியை நோக்கி மெதுவான குரலில் சொன்னாள். “மூன்று நாட்களுக்கு எங்களுக்கு விடை கொடு. எல்லாம் முடிஞ்சதும் நாங்க திரும்பி வருவோம். ஜுமாமஸ்ஜித்தின் படிகளில் அமர்ந்து மீண்டும் பல கதைகளைப் பேசிக்கிட்டிருப்போம். செங்கோட்டையின் நிழலில் மீண்டும் நாங்கள் நடந்து திரிவோம். நாங்கள் நேசிக்கும் நகரமே, மூன்றே மூன்று நாட்களுக்கு எங்களை மறந்து இரு.”

அந்த மூன்று நாட்களும் அவர்களுக்கு ஹரித்துவார்தான் டில்லி. ப்ரம்மகுண்டம்தான் கனாட் ப்ளேஸ். வண்டி பாலத்தைக் கடந்தது. மதியநேரம் தாண்டியபோது வண்டி கங்கை நதிக்கு மேலே இருந்த பாலத்தில் போய்க் கொண்டிருந்தது. யமுனையிலிருந்து கங்கைக்குச் செல்லும் பயணம். வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் புகையை விட்டவாறு ரமேஷன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். எரிந்த புகையிலையின் வாசனை ‘குப்’பென்று அடித்தது. முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட் என்பதால் அதில் அதிக பயணிகள் இல்லை. ரமேஷனையும் சுஜாவையும் விட்டால் ஒரே ஒரு வெள்ளைக்காரன் மட்டும்தான் அந்தக் கம்பார்ட்மெண்ட்டில் இருந்தான். அவன் அடிக்கொரு தரம் கையிலிருந்த துவாலையால் தன் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டிருந்தான்.

“அவன் உன்னை பலாத்காரம் செய்தாலும் செய்வான் - வாய்ப்பு கிடைச்சா... கவனமா இருந்துக்கோ சுஜா.”

சுஜா வெள்ளைக்காரனைப் பார்த்தவாறு உட்கார்ந்துகொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அவன் மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்டான். தலையில் ஏராளமான முடி இருந்தது. சுஜா தன்னைப் பார்த்து சிரிப்பதைக் கண்டு அவன் ஒரு மாதிரி ஆகி தன்னுடைய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

“இவனைப் பார்க்கறப்போ பாரீஸ்ல பாலத்துக்குள் கீழேயிருந்து எழுந்து வந்த ஆள் மாதிரியே இல்ல... க்லோஷாரைப் போல...”

சுஜா வெள்ளைக்காரனின் முகத்திலிருந்து தன் கண்களைச் சிறிதும் அகற்றாமல் மீண்டும் குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள். அவ்வளவுதான்- அந்த மனிதனின் முகம் கஷாயம் குடித்தவனைப் போல் ஆகிவிட்டது. அவன் ஒரு சாதுவான மனிதனைப் போல் தோன்றினான். ரமேஷன் தன்னுடைய பைப்பை வேகமாக வெளியே எடுத்தான். பைப் அணைந்துவிட்டிருந்தது.

“சுஜா?”

“ம்...?”

அந்த மனிதனின் முகத்திலிருந்து தன் கண்களை எடுக்காமல் சிரித்துக் கொண்டிருப்பதற்கிடையில் அவள் ரமேஷன் தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்டாள்.

“அவன் உன்னைக் கற்பழிக்கிற மாதிரி நான் கற்பனை பண்ணிப் பார்க்கறேன்.”

“அப்படியா?”

சுஜா அந்த மனிதனின் முகத்திலிருந்த தன்னுடைய பார்வையை அகற்றவேயில்லை. அவன் எழுந்ததும் அவள் அவனைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரித்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. அந்த வெளிநாட்டுக்காரன் தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு என்னவோ மெதுவான குரலில் முணுமுணுத்தவாறு சற்று தூரத்திலிருந்த வேறொரு இருக்கையில் போய் அமர்ந்தான். ரமேஷன் முழுமையாக எரிந்து முடிந்திருந்த பைப்பிலிருந்து சாம்பலை வெளியே கொட்டினான். பைப்பை நன்றாகச் சுத்தம் செய்தான். வெள்ளைக்காரனைத் தோற்கடித்ததை நினைத்து சிறிது நேரம் சுஜா சிரித்துக் கொண்டிருந்தாள். பிறகு அவள் வெளியே பார்த்தவாறு டில்லியை பற்றிய நினைப்பில் ஆழ்ந்தாள்.

“எனக்கு ரொம்பவும் கவலையா இருக்கு - டில்லியை விட்டு வந்ததை நினைச்சு...”

சுஜா பிறந்தது, வளர்ந்தது எல்லாமே டில்லியில்தான். சுஜா மெஹ்ராவைப் பொறுத்தவரை டில்லியை பிரிந்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ரமேஷனுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. தன்னுடைய சொந்த கிராமத்தை விட்டு டில்லிக்கு வண்டி ஏறும்போது கூட அவன் கவலைப்படவில்லை.


அவனுடைய ஊர் கேரளமோ, டில்லியோ எதுவும் இல்லை. இந்த பூமிதான் ரமேஷனுக்கு பிறந்த ஊர். இருட்டில் பயணம் செய்யும் பயணி அவன். பயணத்துக்கு மத்தியில் வழிதவறி அவன் கர்ப்பப்பைக்குள் சென்று விடுகிறான். இப்படி எத்தனையெத்தனை கர்ப்பப்பைகளுக்குள் இதுவரை அவன் போய் வந்திருக்கிறான்!

“சுஜா, எனக்காக ஒரு சிதையைத் தயார் பண்ணிவைக்க உன்னால் முடியுமா?”

“அதுக்கு மின்சாரத் தகனம் செய்ய இடம்போதுமே?”

“மரணச் சான்றிதழ் இல்லாம அங்கே போக முடியாதே!”

“அங்கே இருக்குற ஆளுக்கு லஞ்சம் கொடுத்தா போதும்... எல்லாம் நடக்கும்.”

காக்கி உடையணிந்து, சிதையின் நிறத்தில் கண்களையும் உடம்பில் பிண வாடையையும் கொண்டிருக்கும் அந்த வெட்டியானின் பெயர் ஸ்ரீராம். சில நாட்களுக்கு முன்பு ஒருநாள் முழுவதும் மின்சாரத் தகனம் செய்யும் இடத்தில் போய் அவன் இருந்தான். பிணவண்டிகள் வருவதையும் போவதையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். பிணங்களின் வாயில் அரிசியும் திரியும் வைத்து புரோகிதர்கள் சடங்குகள் செய்வதை அவன் பார்த்தான். அதிகமான பிணங்களை அவன் பார்த்தது அன்றுதான். கொஞ்சம் பணம் கொடுத்தால் ஸ்ரீராம் தன்னை உயிருடன் எரிப்பதற்குத் தயாராக இருப்பானா? பணம் கொடுத்தால் முடியாதது என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லையே! ரமேஷன் தன்னுடைய எரியூட்டலைக் கற்பனை பண்ண ஆரம்பித்தான். ஸ்ரீராம் தன்னை பலகையின்மீது படுக்க வைப்பான். புரோகிதர் தன்னுடைய வாயில் வேக வைத்த அரிசியையும் கொளுத்திய திரியையும் வைப்பார். சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரத்தின் லிவரைப் பிடித்து கீழே இழுத்து தன்னை அடுப்பிற்குள் தள்ளி விடுவான் ஸ்ரீராம். உள்ளே போவதற்கு முன்பே தன்னுடைய ஆடைகளும் தலை முடியும் முழுமையாக எரிந்து முடிந்திருக்கும். சில விநாடிகளில் உடல் பற்றி எரிந்து ஒரு மாமிசப் பிண்டமாக மாறும். பிறகு எலும்புகள் வெடித்துச் சிதறும். கடைசியில்தான் ஒரு பிடி சாம்பலாக மாறிய பிறகு, ஸ்ரீராம் அடுப்பின் பின் பகுதியைத் திறந்து தன்னைத் தட்டிப் பார்த்து சட்டியில் இடுவான். அந்தச் சாம்பலை மண்சட்டியில் வைத்து அதற்கு மேலே மண்ணை நிரப்பி யாராவது யமுனையில் போய் கரைப்பார்கள்.

சுஜா பேகைத் திறந்து ஒரு ஃப்ளாஸ்க்கையும் ஒரு பொட்டலத்தையும் வெளியே எடுத்தாள். பேப்பர் டம்ளரில் சூடான தேநீரை ஊற்றினாள்.

“பொட்டலத்துல என்ன இருக்கு?”

“நீயே கற்பனை பண்ணிச் சொல்லு.”

“சேண்ட்விச்.”

சுஜா ஆச்சரியத்துடன் ரமேஷனின் முகத்தையே பார்த்தாள். அவனும் ஆச்சரியப்படாமல் இல்லை. தன்னால் எப்படி அவ்வளவு சரியாகச் சொல்ல முடிந்தது என்று அவனுக்கும் ஆச்சரியம்.

அவள் ஒரு சேண்ட்விச்சை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம். காலையில் இதைத்தான் நான் சாப்பிட்டேன்.”

“அது சாஸேஜ் சேண்ட்விச்தானே?”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

ரமேஷன் ஆச்சரியம் மேலோங்க சுஜாவின் முகத்தைப் பார்த்தான். அவளும் தன்னை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. தன்னால் எப்படி அதைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று அவள் வியந்தாள்.

“அவனுக்கும் ஒரு துண்டு கொடுக்கட்டுமா?”

சற்று தூரத்தில் இடம் பெயர்ந்து உட்கார்ந்திருந்த வெளிநாட்டுக்காரன் அவ்வப்போது அவர்களைக் கடைக்கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அந்த அப்பாவியை வெறுமனே விட்டுரு, சுஜா.”

அவர்கள் சேண்ட்விச்சை சாப்பிட்டுவிட்டு தேநீரைக் குடித்தார்கள். சேண்ட்விச்சிலிருந்த தக்காளியின் ருசியே அவனுக்குத் தெரியவில்லை. சரஸ் இழுத்து இழுத்து ருசி வேறுபாடே அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. இன்னும் சில நாட்கள் கழிந்து கண்களுக்கு நிறத்தில் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாமற் போகலாமல்லவா? காதுகளுக்கு ஒலிகளையும் மூக்கிற்கு வாசனைகளையும் புரிந்து கொள்ள முடியாமற் போகலாம் அல்லவா? சுஜா காலியான தெர்மோஃப்ளாஸ்க்கை மீண்டும் பேகிற்குள் வைத்தாள். ஒரு குழந்தையை உள்ளே வைத்திருக்கக் கூடிய அளவிற்கு பெரியதாக இருந்தது அவளுடைய பேக். பேகை மூடிவிட்டு முழங்கால்களைச் சுற்றி கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு அவள் கேட்டாள்.

“இனி என்ன செய்றது?”

அவளே அதற்கு பதிலும் சொன்னாள்: “சும்மா ஏதாவது சிந்திக்க வேண்டியதுதான்.”

சிந்திக்கலாம். ஆனால், எதைப் பற்றிச் சிந்திப்பது? சிந்தித்து சிந்தித்து வெறுப்பாகிப் போனதுதான் மிச்சம். இப்படி சிந்திக்க ஆரம்பித்து இருபத்தாறு வருடங்களாயிற்றே! ஒரு நிமிடமாவது எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடிந்தால்...? மனதில் ஆசைப்பட மட்டும்தான் முடிந்தது.

“ரமேஷ், நீ என்ன சிந்திக்கிறே?”

“சிந்திக்காம இருக்க முடியுமான்னு சிந்திக்கிறேன். நீ?”

“நானா? எனக்கே தெரியல.”

“சுத்த பொய்.”

“சத்தியமா சொல்றேன், ரமேஷ்.”

சிறிது நேரம் சென்ற பிறகு, ரமேஷன் கேட்டான்: “இப்போ நீ எதைப் பற்றி சிந்திச்சிக்கிட்டு இருக்கே?”

“என் தாயைப் பற்றி...”

“அவங்களைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு?”

அவள் தன் கால்களை இருக்கையின்மீது தூக்கி வைத்துக் கொண்டு தாடைப் பகுதியை முழங்காலின்மீது வைத்துக் கொண்டு அமர்ந்தாள். புடவையின் ஓரத்தை கீழ்நோக்கி இழுத்துவிட்டு தன்னுடைய வெண்மையான சிறு பாதங்களை மறைத்தாள். சுஜாவின் தாய்க்கு அவளை ரமேஷனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், சுஜா ரமேஷனின் அறைக்கு அடிக்கொருதரம் போவதையும் அவனுடன் பல இடங்களுக்கும் போய் வருவதையும் அவள் விரும்பவேயில்லை. ஹரித்துவாருக்குச் செல்ல வேண்டும் என்று சம்மதம் கேட்டு சுஜா வந்து நின்றபோது, ரமேஷன் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தான்.

“உன் அப்பாக்கிட்ட கேளு.”

அவள் குரல் வேறு மாதிரி ஒலித்ததை ரமேஷன் கவனிக்காமல் இல்லை. அவள் கட்டாயம் இந்த விஷயத்திற்கு ஒப்புக் கொள்ள மாட்டாளென்றும், தன்னுடைய ஹரித்துவார் போகும் திட்டம் தவிடு பொடியாகப் போவது உறுதி என்றும் நினைத்து அவன் பயந்தான். சுஜாவின் தந்தை அப்போது வீட்டில் இல்லை. அவர் எப்போதும் தொழில் விஷயமாக எங்காவது சுற்றிக் கொண்டிருப்பார்.

“அதுக்கு அப்பா என்ன இங்கேயா இருக்காரு?”

“வந்த பிறகு கேளு.”

சுஜாவின் தாயின் முகம் மிகவும் கறுத்துப் போயிருந்தது. வெளிநாடுகளில் ஏராளமான இடங்களைப் போய் அவள் பார்த்திருந்தாலும், ஒரு பெரிய அரசாங்க அதிகாரியின் மனைவியாக இருந்தாலும் அவளுடைய பழமையான பழக்க வழக்கங்கள் அவளை விட்டுப்போகாமலே இருந்தன. அவள் இப்போதும் பஞ்சாப்பின் கோதுமை வயல்களின் படைப்பாகவே தொடர்ந்து கொண்டிருந்தாள். ஆனால், அவளுடைய மகள் அவளுக்கு நேர் எதிர். அவள் ஹிப்பிகள் பிறப்பதற்கு முன்பே ஹிப்பியாகி விட்டாள். சேகுவாரா இறப்பதற்கு முன்பே, அவரைக் கதாநாயகன் ஆக்கியவள் அவள். இப்போது அவளுடைய சே மீதுகொண்ட ஈடுபாடு முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது அவள் ஒரு சூப்பர் சேயின் பிறப்பிற்காகக் காத்திருக்கிறாள்.


அவளுடைய தாய் சம்மதம் தரவில்லை.

“அம்மா, தங்க நீங்க சம்மதிக்கலைன்னாக் கூட நான் போவேன். வேற யார் கூடவும் கநான் போலியே! ரமேஷன் கூடத்தானே போறேன்?”

“கூட போறதுன்னாக்கூட கல்யாணம் முடிஞ்ச பிறகு போனா போதும்.”

“நான் கட்டாயம் போவேன்.”

“எங்கே அதையும்தான் பார்க்கறேனே!”

தன் தாயின் சம்மதம் இல்லாமலே பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள் அவள். சுஜா காலையில் படுக்கையை விட்டு எழுந்து குளிப்பதையும் சேண்ட்விச் தயாரிப்பதையும் கோபத்துடன் அவளுடைய தாய் பார்த்தவாறு நின்றிருந்தாள். குளித்து முடித்து ஒரு நீல நிற புடவையை அணிந்து கொண்டு நெற்றியில் பெரிதாக ஒரு பொட்டையும் வைத்துக் கொண்டு வீட்டுப் படியை விட்டு அவள் இறங்குவதைப் பார்த்தபோது... அதற்கு மேலும் அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

“அடங்காப் பிடாரி! உன் அப்பா இங்கு வரட்டும்...”

டிரைவர் காரை ஷெட்டை விட்டு எடுத்தான். வாசலுக்கு வந்த சுஜா திரும்பிச் சென்று தன் தாயின் கழுத்தைக் கைகளால் சுற்றிப் பிடித்தாள். சுப்பாரி மணத்துக்கொண்டிருந்த முகத்தில் அவள் முத்தங்களைப் பதித்தபோது, அவளுடைய தாய் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

“அம்மா, உங்கக்கிட்ட இருக்குற நல்ல விஷயங்களுக்கு என்னைக்குமே மரணம் கிடையாது.”

“சரி... உன் அப்பா என்னைக்கு திரும்பி வர்றாரு?”

“திங்கட்கிழமையோ, செவ்வாய் கிழமையோ வருவாரு. அப்போ நாம சம்மதம் வாங்கிக்குவோம். அதாவது ஹரித்துவாருக்கு போயிட்டு வந்த பிறகு...”

அவள் புன்னகைத்தாள். தன் தந்தைமீது அவளுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவர் தன் மகளைப் புரிந்து கொள்வதில் எப்போதும் தவறியதில்லை.

“உன்னை நான் கடத்திட்டேன்னு சொல்லி கேஸ் போட்டாங்கன்னா...?”

“நாம ஓடில்ல வந்திருக்கோம்?”

“ரெண்டும் ஒண்ணுதான். தன்னைத் தானே கடத்திக்கிறதுக்குப் பேர்தான் எலோப்மென்ட்.”

அவள் அவனுடைய கை விரல்களைப் பார்த்தாள். அவளுடைய கால் விரல்களுக்கு மேலேயும் காலின் கீழ்ப் பகுதியிலும் அவனுடைய விரல்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அவனுக்கு மட்டுமே அந்த மாதிரி வருடத் தெரியும். மந்திர சக்தி கொண்ட அவனுடைய விரல்கள் பாதங்களை விட்டு மேல்நோக்கி உயர்ந்தன. புடவைக்கு மேலே தொப்புளில், பின் கழுத்தில், தலை முடியில் அந்த விரல்கள் இந்திரஜாலம் புரிந்தன. ஷாம்புவின் மணம் வந்து கொண்டிருந்த அவளுடைய தலை அவனுடைய மார்பின்மீது இருந்தது.

“பேன் இருக்கான்னு பாரு.”

அவளின் தலை முடிக்குள் சரஸ்ஸின் கறை படிந்த கை விரல்கள் பேன்களைத் தேடி ஊர்ந்தன. அவள் அவனுடைய கை விரல்கள் உண்டாக்கிய ஹிப்னாட்டிக் வளையங்களில் தன்னை மறந்து கண்களை மூடினாள்.

“சுஜா...”

“ம்...”

“நீ என்ன யோசிக்கிற?”

“ரெஸீஸ் தெ ப்ரேயைப் பற்றி. நீ?”

“நானும் தெ ப்ரேயைப் பற்றி சிந்திக்கலாமே?”

பேனில் இருந்து கொரில்லா போரை நோக்கி ரமேஷனின் சிந்தனை மாறியது. மனதில் தெ ப்ரேயின் சிவந்த கண்களும் கறுத்த மீசையும் தோன்றின.

“நான் என் கண்டுபிடிப்பைப் பற்றி உன்கிட்ட சொன்னேனா?”

“என்ன கண்டுபிடிப்பு?”

“நகரம் ப்ராலிட்டேரியேட்டை பூர்ஷ்வாவாக மாற்றிவிடும்னு தெப்ரே சொல்லியிருக்கார்ல?”

“ஆமா...”

“கிராமம் பூர்ஷ்வாஸியை ப்ராலிடடேரியேட்டாக்கும்னும் அவர் சொல்லியிருக்கார்ல?”

“உண்மைதான்.”

“அப்படின்னா ரஷ்யப் புரட்சியை நடத்தியது பூர்ஷ்வாஸிதான்.”

சுஜா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

“தெ ப்ரே சொன்னது சரியாயிருந்தா பெட்ரோக்ராடில் ப்ராலிட்டேரியேட் பூர்ஷ்வாவா மாறியிருக்கணும்ல. பெட்ரோக்ராட் நகரம்தானே?”

“நீ சொல்றது சரிதான்.”

சுஜா தலையை ஆட்டி சம்மதித்தாள்.

“என் கண்டுபிடிப்பு இல்ல இது. சரஸ்ஸோடது...”

சரஸ் இழுக்கும்பொழுதுதான் மாவோவின் சிந்தனையை செஸ்ஸில் பயன்படுத்தலாம் என்பதை அவன் கண்டுபிடித்தான். விளையாட்டின் ஆரம்பத்தின் ஒன்றன் பின் ஒன்றாக எல்லா காய்களும் முன்னோக்கி வேகமாக நகரும். எதிரியின் காய் வெலவெலத்துப் போய், அந்த வெலவெலப்பிலேயே அழிந்தும் போகும். எதிரி புத்திசாலியாக இருந்தால் தன்னுடைய பலத்தை உயர்த்தி ஆக்கிரமிப்பை எதிர் ஆக்கிரமிப்பு செய்து நேரடியாக மோதும். அப்போது தோல்வியடைவதைத் தவிர வேறு வழியே இல்லை.

“வென் எனிமி அட்டாக்ஸ் யூ ரிட்ரீட்.”

வண்டி காஸியாபாத்தையும் மோடி நகரையும் கடந்து சந்திப்பில் வந்து நின்றது. ரமேஷனும் சுஜாவும் வண்டியைவிட்டு ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினார்கள்.

“எனக்கு ஒரு ஸுராயி வாங்கித் தர்றியா?”

ப்ளாட்ஃபாரத்தில் ஒரு கிழவன் அமர்ந்து ஸுராய் (மண்குடுவை) விற்றுக் கொண்டிருந்தான்.

“ஸுராயியா? எதுக்கு?”

“வேணும்.”

அவள் மண் சட்டிகளுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தாள். பல உயரங்களில் சிறிதும் பெரிதுமாக ஸுராயிகள் இருந்தன. சிங்க முக வாயுடன் உள்ள ஒரு ஸுராயியை சுஜா தேர்ந்தெடுத்தாள்.

“பணம் கொடு ரமேஷ்.”

அவன் பணம் கொடுத்தான். அவள் ஒரு நிமிடம் ஸுராயியின் அழகை ரசித்தவாறு நின்றிருந்தாள். பிறகு ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்திற்குச் சென்று, வாங்கிய அந்த மண் ஸுராயியை நிலத்தில் எறிந்து உடைத்தாள். சிதறிக்கிடக்கும் ஸுராயியின் துண்டுகளைப் பார்த்தவாறு அவள் சொன்னாள்:

“நான் என் கர்ப்பப்பைக்கு திரும்பிப் போகப் போறேன்.”

அவர்கள் திரும்பி வண்டியில் ஏறவும், வண்டி குலுங்கியவாறு மீட் கண்டோன்மென்ட்டை விட்டு புறப்படவும் சரியாக இருந்தது.

“உனக்கு கர்ப்பப்பைக்குத் திரும்பிப் போகணும்போல இருக்கா ரமேஷ்?”

“முதுமையை நோக்கிப் போகத்தான் எனக்கு விருப்பம்.”

பயப்பட வேண்டியதில்லை. முதுமையை நோக்கிய பாதையில் தான் அவன் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறான். சரஸ்ஸும் பட்டினியும் அந்தப் பாதையைத் தயார் செய்கின்றன.

கிராமங்கள் வழியாகவும், சிறுசிறு நகரங்களைத் தாண்டியும், வயல் வழியாகவும், மலைச்சரிவுகளைக் கடந்தும் வண்டி ரூர்க்கியை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. யமுனா நதியும் அந்த நதியின் கரையில் உள்ள டில்லியும் எவ்வளவோ தூரதத்ல் இருந்தன.

“ரமேஷ், நீ இப்போ எதை நினைச்சிக்கிட்டு இருக்கே?”

“உன் தாயைப் பற்றி. திரும்பிப் போறப்போ அவங்க உன்னை வீட்டுக்குள்ளே வரக்கூடாதுன்னு சொல்லிட்டா?”

“நான் ஒய் 14-க்கு வந்திடுவேன்.”

ஒய் 14 என்பது ரமேஷனின் வீடு. அங்கு படுத்து தூங்குவதற்கு ஒரு மெத்தையும், வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர்காலத்தில் வெப்பமும் தருவதற்கு ஏர் கண்டிஷனரும், பாட்டு கேட்பதற்கு டேப் ரிக்கார்டரும் நண்பர்களுடன் பேசுவதற்கு தொலைபேசியும் இருக்கின்றன. “ஒய் 14 உன்னை வரவேற்கிறது”- ரமேஷன் சொன்னான்.

“திரும்பிப் போறப்போ என் தாயோட கோபம் போயிருக்கும்.”

சுஜாவின் தாய்க்கு திடீரென்று கோபம் வரும். அதேபோல வந்த வேகத்திலேயே அது போகவும் செய்யும்.


உள்ளுக்குள் அவள் மிகவும் நல்லவள். ஆணும், பெண்ணுமாக அவளுக்கென்று இருக்கக்கூடிய ஒரே வாரிசு சுஜாதான். அமிர்தசரஸ் பொற்கோவிலில் அய்யாயிரத்தொரு ரூபாய் நேர்ந்து அதற்குப் பிறகு பிறந்தவள் அவள். பணம் கொடுத்து வாங்கப்பட்ட பெண் அவள்.

“நான் பகீரதனோட தேர் சத்தத்தைக் கேக்குறேன்”-  வண்டி ரூர்க்கியை அடைந்தபோது ரமேஷன் சொன்னான்.

நகரத்தின் வழியாக கங்கை கலங்கலுடன் ஓடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஓரத்தில் நகரவாசிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ரூர்க்கியை விட்டு ஹரித்துவாரை நோக்கி வண்டி மீண்டும் புறப்பட்டது. வண்டியின் இரைச்சலில் இப்போது யாக மந்திரங்களின் இனிமை இருந்தது. வண்டியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த புகை ஹோம குண்டங்களிலிருந்து வெளியேறும் புகையா என்ன? மலைகளின் அடிவாரத்தில் சங்கொலி ஒலிப்பதைப் போல் ரமேஷனுக்குத் தோன்றியது. அவன் மவுனமான மனிதனாக ஆனான்.

முஸுரி எக்ஸ்பிரஸ் ஹரித்துவாரில் மெதுவாக வந்து நின்றது.

5

றந்து கொண்டிருந்த தலைமுடியைச் சரிசெய்த சுஜா வண்டியை விட்டு கீழே இறங்கினாள். ஒரு கூலியாள் ஓடிவந்தான். சூட்கேஸை அவன் கையில் தந்த ரமேஷன் எதையாவது மறந்துவிட்டோமா என்று பார்த்தான். அவன் இழுத்து வீசி எறிந்த சிகரெட் துண்டுகள், சுஜா தின்று கீழே போட்ட சாக்லெட் பேப்பர்கள், அவர்கள் தேநீர் அருந்திய பிறகு போட்ட பேப்பர் டம்ளர்கள்... இவை தவிர அங்கு வேறெதுவும் இல்லை. ரமேஷனும் வண்டியை விட்டு இறங்கினான். அவன் ஹரித்துவார் மண்ணில் கால் வைத்தான்.

ரமேஷன் நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினான். ஹரித்துவாரைப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை அவனுடைய கண்களில் முழுமையாகத் தங்கியிருந்தது. ஹரித்துவாரின் வாசனையை முகர்ந்து பார்ப்பதற்காக அவனுடைய நாசித் துவாரங்கள் துடித்தன. ஹரித்துவாரின் ஒலியை கேட்பதற்காக அவனுடைய செவிகள் காத்திருந்தன. ரமேஷன் பார்த்தது ஒரு அசுத்தமான சிறு புகைவண்டி நிலையம். மசாலா சேர்ந்த கடலையை விற்றுக் கொண்டிருந்தான் ஒரு வயதான கிழவன். அழுகிப்போன பழங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான் ஒரு பழ வியாபாரி. தரையிலும் பெஞ்சிலும் இங்குமங்குமாய் சிதறிப்போய் பகல் வெப்பத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர் பிச்சைக்காரர்கள்.

வண்டியை ஆர்வத்துடன் பார்த்தவாறு கூலிகள் வந்து நின்றார்கள். ரமேஷனையும் சுஜாவையும் விட்டால் அங்கு வண்டியை விட்டு இறங்கியது நான்கைந்து கிராமத்து மனிதர்கள் மட்டுமே. அவர்களின் கையில் பெட்டிகள் எதுவும் இல்லை. சில மூட்டைகளை மட்டும் வைத்திருந்தார்கள். ப்ளாட்ஃபாரத்தில் சுவர்களில் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலும் அவை திரைப்பட விளம்பரங்கள்தான். மும்தாஜ், ஷர்மிளா, டாகூர், மாலா சின்ஹா, ஷம்மிகபூர்... ஹரித்துவாரையும் அலங்கரித்துக் கொண்டிருப்பவை திரைப்பட நட்சத்திரங்களின் படங்கள்தானா? அங்கு எந்த இடத்திலும் ஒரு கடவுள் படத்தைக் கூட பார்க்க முடியவில்லை.

“ஹரித்துவாரில் கடவுள்கள்.”

ரமேஷன் நடனமாடிக்கொண்டிருந்த ஷம்மிகபூரையும், குளியல் ஆடையுடன் நின்று கொண்டிருந்த மும்தாஜையும் சுட்டிக்காட்டி, “எங்கே போனாலும் இவங்களைப் பார்க்கலாம். டில்லியின் எல்லாத் தெருக்களிலும், சிறுநீர் கழிக்கும் இடங்களில், பஸ் நிலையங்களில்... எல்லா இடங்கள்லயும் இவங்க இருப்பாங்க” என்றான்.

“கடவுள்களை விட நமக்கு இன்னைக்கு தேவை திரைப்பட நட்சத்திரங்கள்தான், ரமேஷ். அவங்க நம்மை மகிழ்ச்சிப் படுத்துறாங்க. தெய்வங்கள் நம்மளை பயமுறுத்தவில்லே செய்யுது?”

சுஜா சொன்ன கருத்து உண்மைதானே! தெய்வங்கள் எப்போதும் மனிதர்களை ஏமாற்றவே செய்கின்றன. ஷம்மிகபூரும், மும்தாஜும் சந்தோஷம் உண்டாக்குகிறார்கள். ஷம்மிகபூர் நடனமாடும் போதும் மும்தாஜ் குளியல் கோலத்துடன் பாட்டு பாடும்போதும் ஒன்றுமில்லாதவர்களும் கஷ்டப்படுபவர்களும் தங்களின் அவல நிலையை மறக்கவல்லவா செய்கிறார்கள்?

ரமேஷனும் சுஜாவும் புகைவண்டி நிலையத்திற்கு வெளியே வந்தார்கள். வெளியே குண்டும் குழியுமாக ஒரு பாதை இருந்தது. அது தெருவில் இருந்த ஒரு கேட்டில் போய் முடிகிறது. கேட்டிற்கு வெளியே சைக்கிள் ரிக்ஷாக்காரர்களும் குதிரை வண்டிக்காரர்களும் வாடகைக் கார் ஓட்டுபவர்களும் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

“பாபுஜி, ரிக்ஷா...”

“பாபுஜி, டாக்ஸி...”

அவர்கள் ரமேஷனையும் சுஜாவையும் வந்து மொய்த்தனர். எல்லாரின் கண்களிலும் ஒரு பரிதாபத்தன்மை தெரிந்தது. சவரம் செய்யாத முகங்களும் பரட்டைத் தலைமுடியும் கொண்ட வறுமையின் பிடியில் சிக்கிய மனிதர்கள் அவர்கள். அவர்களின் எல்லா வாடகைக்கார்களிலும், குதிரை வண்டிகளிலும் ரிக்ஷாக்களிலும் ஏறி பயணம் செய்ய முடிந்திருந்தால்? அந்த வகையில் அவர்கள் எல்லாரையும் திருப்திப்படுத்த முடிந்திருந்தால்? உண்மையாகவே அப்படியொரு காரியம் நடக்கக்கூடாதா என்று ரமேஷன் மனப்பூர்வமாக விரும்பினான்.

“பாபுஜி, என்கூட வாங்க. அருமையான அறை. மின்விசிறி இருக்கு. அறைக்குள்ளேயே குளியலறை இருக்கு.”

பேன்ட்டும், புஷ் சட்டையும் அணிந்த பச்சை நிறக் கண்களைக் கொண்ட ஒரு இளைஞன் சொன்னான். ஏதோ ஒரு ஹோட்டலின் தரகராக அவன் இருக்கவேண்டும். ஆர்வத்துடன் அவன் ரமேஷனயும் சுஜாவையும் மாறி மாறிப் பார்த்தான். அதற்கிடையில் வேறு சில ஹோட்டல்கள், சத்திரங்கள் ஆகியவற்றின் தரகர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள். ஒருவரையொருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டார்கள்.

“தஃபா ஹோ ஜாவோ.”

சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு பின்னால் வந்த கூலியாள் பஞ்சாபியில் வாய்க்கு வந்தபடி அவர்களைத் திட்டினான். தரகர்களைக் கடந்து வெளியே வந்த அவன் கேட்டான். “ஒரு ஹோட்டல் காட்டட்டுமா பாபு?”

“எங்கே?”

“ஊப்பர் ஸடக்குக்குப் பக்கத்துல, பாபு.”

ஆனால், அந்த ஊப்பர் ஸடக் எங்கே இருக்கிறது?

“நதிக்குப் பக்கத்துலயா?”

“ஆமா, பாபு.”

ஹோட்டல் நதியின் கரையில் இருக்கிறது என்றால் உண்மையாகவே நல்ல விஷயம்தான். எப்போதும் நதியில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாமே! உண்ணும்போதும், உறங்கும்போதும் கங்கையின் இசை காதுகளில் முழங்கிக் கொண்டே இருக்கவேண்டும். கூலியாள் அவன் சொன்ன ஹோட்டலை நோக்கி பெட்டிகளைத் தலையில் வைத்துக் கொண்டு நடந்தான். ஹரித்துவார் மண்ணில் ரமேஷனும் சுஜாவும் அவனைப் பின்தொடர்ந்து நடந்தார்கள். அகலம் குறைவான மேடும் பள்ளமுமாக இருந்தது பாதை. பாதையின் ஒரு பக்கத்தில் அனாதைப் பிணங்களைப் போல ரிக்ஷாக்கள் கிடந்தன. இன்னொரு பக்கம் அழுக்கடைந்து போய்க் காணப்படும் சிறுசிறு கடைகள் நெருக்கமாக இருந்தன. கடைகளுக்கு முன்னால் பாப்டி, பல்லா போன்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். நடந்து செல்லும்போதே, சத்திரங்களின் தரகர்கள் மீண்டும் அவர்களை நெருங்கி வந்தார்கள். கூலியாள் அவர்களை வாய்க்கு வந்தபடி பேசி விரட்டினான்.

இதுதான் ஹரித்துவாரா? ரமேஷன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பிணங்களைப்போல பின்தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தத் தரகர்கள், நான்கு பக்கங்களிலும் அலைந்து கொண்டிருக்கும் இந்த ரிக்ஷாக்காரர்கள், இந்த ஒடுக்கலான கடைகள், இந்த மேடும் பள்ளங்களுமான பாதை...


“சுஜா, இதுதான் ஹரித்துவாரா?”

“ஆமா, ரமேஷ். நாம இப்போ ஹரித்துவார்லதான் இருக்கோம்.”

சுஜா ஒழுங்காக வாரி கட்டியிருந்த தலைமுடிகள் இப்போது தனித்தனியாகப் பிரிந்து அவள் கன்னங்களில் விழுந்து கிடந்தன.

“இந்த தெருவோட பேர் என்ன?”

“இதுக்கு பேர் இல்ல மேம் ஸாப்.”

இடது பக்கத்தில் காவி நிறத்திலிருந்த ஒரு கட்டிடத்தைச் சுட்டிக்காட்டினான் கூலியாள்.

“அதுதான், நம்மோட ஹோட்டல், ஸாப்.”

ஹோட்டலுக்கு முன்னால் ஒரு நிறம் மங்கிப்போன பெயர்ப் பலகை இருந்தது. ஸ்ரீகங்காஜீ ஹோட்டல். அது முதல் மாடியில் இருந்தது. கூலியாள் தன் தலையிலிருந்த பெட்டிகளை இறக்கி கையில் வைத்துக்கொண்டு படிகளில் ஏறினான். ஒரு மோட்டார் ஒர்க் ஷாப்பிற்கும் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடைக்கும் நடுவில் அந்தப் படிகள் இருந்தன. பிடிகள் மிகவும் ஈரமாக இருந்தன. அதில் சகிக்க முடியாத ஒரு நாற்றம் அடித்தது. ஒரு வெறும் தளத்தில் போய் அந்தப் படிகள் முடிந்தன. அங்கிருந்த திண்ணை மீது யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

“முனீம்ஜி, ஓ முனீம்ஜீ!”

கூலியாள் அந்த ஆளை எழுப்பினான். அவன் ஒரு வயதான கிழவன். அந்த மனிதனின் முகத்தைப் பார்த்ததும் ரமேஷனுக்கு வாந்தி வந்தது. அவனுடைய வலது கன்னத்தில் ஒரு ரூபாய் அளவுக்கு வட்டமாக இரத்தமும் சலமும் கொண்ட ஒரு பழுப்புப்புண் இருந்தது. அதன் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. கூலியாள் கிழவனின் காதில் மெதுவான குரலில் என்னவோ சொன்னான். முனீம்ஜி தலையணைக்கு அடியிலிருந்து ஒரு சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு தளத்தை நோக்கி நடந்தான்.

“அருமையான அறையா இருக்கணும், முனீம்ஜி... இவங்க டில்லியில இருந்து வர்றாங்க!”

கூலியாள் பெட்டிகளைக் கையில் தூக்கிக் கொண்டு முனீம்ஜியைப் பின் தொடர்ந்தான். ரமேஷனும் சுஜாவும் டில்லியிலிருந்து வருகிறார்கள் என்பதை அவன் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். கிழவன் ஒரு அறையின் பூட்டைத் திறந்தான். அவன் கதவைத் திறக்கும்பொழுது மூலையில் வௌவால்களின் சிறகடிப்பு சத்தம் கேட்டது. ஜன்னல்களோ அலமாரியோ எதுவும் அறையில் இல்லை. மேல் பூச்சு உதிர்ந்து போய் காணப்பட்ட சிதிலமடைந்த சுவர்கள்.

“இதுதான் அறை.”

கூலியாள் தன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துணியை அவிழ்த்து, முகத்தையும் கழுத்தையும் துடைக்க ஆரம்பித்தான். அவனுடைய கண்களில் ஒரு தவிப்பு தெரிந்தது. மேலே ஒரு துருப் பிடித்த மின்விசிறி தொங்கிக் கொண்டிருந்தது. ரமேஷன் ஸ்விட்சை ‘ஆன்’ செய்தான். காற்றாடி ஓடவில்லை.

“மின்சாரம் இல்ல பாபுஜி.”

முனீம்ஜி தன் முழு புண்ணில் கையை வைத்து தடவியவாறு சொன்னான். அது பொய் என்பதைச் சொல்ல வேண்டியதில்லையே!

“டட்டி அதோ அங்கே இருக்கு!”

முனீம்ஜி கழிப்பறையைச் சுட்டிக் காட்டினான். கழிப்பறையும் குளியலறையும் ஒரே இடத்தில் இருந்தன. அங்கே செல்ல முடியவில்லை. மூக்கை அடைக்குமளவிற்கு நாற்றமடித்தது. திறந்திருந்த கதவுக்கப்பால் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன.

“முனீம்ஜி ரொம்பவும் நல்ல ஆள். நம்பிக்கைக்குரிய மனிதர். தேவைப்படுகிற எந்த உதவி வேணும்னாலும் செய்து தருவாரு.”

கூலியாள் சொல்லிக் கொண்டிருந்தான். முனீம்ஜி எண்ணெய் படிந்த ஒரு லெட்ஜருடன் வந்தான்.

“எவ்வளவு நாட்கள் தங்கி இருப்பீங்க, பாபு?”

ரமேஷன் எந்த பதிலும் சொல்லாமல் பாக்கெட்டிற்குள் கையை விட்டு இரண்டு ஒரு ரூபாய் நோட்டுகளை எடுத்து கூலியாளுக்கு முன்னால் திண்ணையில் வைத்தான். பெட்டிகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் படிகளில் இறங்கினான்.

“பாபுஜி.”

பின்னாலிருந்து கூலியாள் மார்பே வெடிக்கிற மாதிரி அழைத்தான். முனீம்ஜிக்கு இரண்டு ஆட்களைக் கொண்டுவந்து கொடுத்தால் அவனுக்குக் கிடைக்கும் பணத்தில் கமிஷன் கிடைக்கும். அது இப்போது கிடைக்காமல் போய்விட்டது. அவனுடைய மார்பே வெடிக்கிற மாதிரியான அழைப்பு ரமேஷனின் காதுகளில் ஆணிகளைப்போல் வேகமாகப் போய் அறைந்தது. முனீம்ஜி மெதுவான குரலில் என்னவோ சாபமிட்டான்.

“ஒரு பெட்டியை இங்கே தா. நான் வச்சுக்குறேன்.”

சுஜா கையை நீட்டினாள். ரமேஷன் கொடுக்கவில்லை. வாயில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுடன் இரண்டு கைகளிலும் பெட்டியை வைத்துக் கொண்டு அவன் நடந்தான். அவனுடன் சுஜாவும். அவர்களுக்கிடையில் கனமான அமைதி நிலவியது. முனீம்ஜியும் அவனுடைய ஹோட்டலும் அவர்கள் மனதில் ஒரு காயமான நினைவாகப் பதிந்தனர்.

“பாபுஜீ...”

பாதையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் யார் யாரோ அழைத்தார்கள். பிச்சைக்காரர்களோ, தரகர்களோ- யாராகவும் அவர்கள் இருக்கலாம். இரு பக்கங்களிலும் வரிசையாக சத்திரங்கள் இருந்தன. பெயரே இல்லாத தெருவும், ரயில்வே ஸ்டேஷன் சாலை சேருமிடத்தில் ஒரு ஹோட்டலின் பெயர்ப்பலகை இருந்தது. ரமேஷன் அங்கு சென்றான். பாதையோரத்தில் சுஜா பெட்டிகளுக்கு காவல் இருந்தாள்.

“வாங்க... வாங்க...”

ஹோட்டல் உரிமையாளர் லாலாஜி, ரமேஷனின் தோற்றத்தையும் நடந்து வரும் தோரணையையும் பார்த்து எழுந்து நின்றான். ரமேஷன் உள்ளே கண்களை ஓட்டினான். தண்ணீர் அந்த இடத்தில் தேங்கிக் கிடந்தது. அதன் இரு பக்கங்களிலும் அறைகள் இருந்தன. நடுவில் இருக்கும் வெற்றிடத்திற்குப் போகும் இடத்தில் தலைக்கு மேலே இரண்டு கோவணங்கள் உலரப் போடப்பட்டிருந்தன. சிறுநீரின் மஞ்சள் நிறம் அந்தக் கோவணங்களில் இருந்தன.

“வேற வழியே இல்ல,  சுஜா டியர்!”

“ஏதாவதொரு சத்திரத்தில் போய்த் தங்கலாம், ரமேஷ்!”

ஹோட்டல்களின் நிலை இதுவென்றால் சத்திரங்களின் கதை எப்படி இருக்கும்? ஹரிஹர் தர்மசாலை, கீதா தர்மசாலை, யதிசைதன்யா தர்மசாலை, காயத்ரிதேவி தர்மசாலை, ஸ்ரீகங்கா தர்மசாலை, கங்கோத்ரி தர்மசாலை- இப்படி எவ்வளவு தர்மசாலைகள்! இருபத்தைந்து காசுகள் கொடுத்தால் தலை சாய்ப்பதற்கு ஆறடி இடம் கிடைக்கும்.

“நீ தயாரா?”

“இல்ல...”

அவள் புன்னகைத்தாள்.

ஊப்பர் ஸடக்கின் இரு பக்கங்களிலும் கட்டிடங்கள் நிறைய இருந்தன. தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மர நிழலில் அமர்ந்து பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த ஊப்பர் ஸடக்கிற்கும் பழைய டில்லியின் தெருக்களுக்குமிடையே என்ன வேறுபாடு இருக்கிறது? ஒரே ஒரு வேறுபாடு மட்டும் இருக்கிறது. பழைய டில்லியின் தெருக்களுக்கு ஊப்பர் ஸடக் என்பதற்கு பதிலாக நயீ ஸடக் என்றோ கல்லீ காசிராம் என்றோ பெயர்கள் இருந்திருக்க வேண்டும். டில்லியின் கல்லீ காசிராம் சற்று மாறி வந்ததாக இருக்கும் இந்த ஊப்பர் ஸடக்! பழைய டில்லி சற்று மாற்றம் பெற்று வந்ததுதானே இந்த ஹரித்துவார்?

“ரமேஷ், நீ என்ன சிந்திக்கிறே?”

“நம்மோட பழைய டில்லி தோற்றம் மாறி வந்ததுதானே இந்த ஹரித்துவார்?”


அதைக்கேட்டு சுஜா விழுந்து விழுந்து சிரித்தாள். சிரிப்பது என்பது அவளுக்கு மிகவும் சாதாரணமாக வரக்கூடியது. சிலர் அழுவதற்காகவும், சிலர் சிரிப்பதற்காகவும் பிறக்கிறார்கள். இந்த இளம்பெண் இரண்டாவதாகச் சொல்லப்பட்டவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவள்.

அவர்கள் லால் டாட்டா  பாலத்தை அதற்குள் நெருங்கியிருந்தார்கள். பாலத்தின் கைப்பிடிகள் ஒடிந்து விழுந்திருந்தன. அதற்குக் கீழே ஓடிக் கொண்டிருப்பது கங்கை அல்ல, சாக்கடை. போலீஸ் குடையைத் தாண்டி ஒரு ஹோட்டல் கண்ணில் பட்டது. ஒரே பார்வையில் அது ஒரு சுத்தமான ஹோட்டல் என்பது தெரிந்தது.

“நான் இங்கே இருக்கிறேன்.”

சுஜா ஒரு சூட்கேஸின் மீது அமர்ந்தாள்.

“என்ன களைச்சுப் போயிட்டியா?”

பதிலெதுவும் கூறாமல் அவள் புன்னகைத்தாள். பயணமும் வெயிலில் நடந்ததும் அவள் முகத்தை மிகவும் சிறிதாக்கி விட்டிருந்தன. வியர்வை அரும்பிய நெற்றியிலும் பின் கழுத்திலும் முடி இழைகள் ஒட்டியிருந்தன. கன்னங்கள் சிவந்து போயிருந்தன.

ரமேஷனைப் பார்த்ததும் பேன்ட்டும் சட்டையும் அணிந்து டை கட்டிய ஒரு இளைஞன் மரியாதையுடன் எழுந்து நின்றான். அதே மரியாதையுடன் அவன் அறையையும் காட்டினான். கம்பளி விரிக்கப்பட்ட தரை, மின் விசிறிகள், அலமாரிகள், மேஜை விளக்கு, குளியலறையில் குளியல் தொட்டி... அந்த இளைஞன் அருமையான ஆங்கிலத்தில் தன்னுடைய ஹோட்டலைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்: “எல்லா வசதிகளும் இங்கு இருக்கு. தபால் நிலையமும் மருத்துவமனையும் ரொம்பவும் பக்கத்துலயே இருக்கு.”

“மருத்துவமனையா? எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே!”

அதைக்கேட்டு அந்த இளைஞன் உரத்த குரலில் சிரித்தான். சுஜா இருந்திருந்தால் அவனை விட உரத்த குரலில் சிரித்திருப்பாள். ரமேஷன் வெளியே பார்த்தான். தூரத்தில் பாதையோரத்தில் சூட்கேஸின் மீது தாடையைக் கையால் தாங்கியவாறு அவள் அமர்ந்திருந்தாள்.

“ஜஸ்ட் இன் தி மிடில் ஆஃப் தி ஸிட்டி... பிளஸன்ட் யூ ஹேவ் தி ஹில்ஸ் அன்ட் மானஸாதேவி டெம்பில்...”

அந்த இளைஞன் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அருமையான அறை. குளியலறை உள்ளேயே இருக்கு. சுஜா, வா...”

ரமேஷன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தான். அறையும் குளியலறையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. கடைசியில் ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட நிம்மதி சுஜாவின் முகத்தில் தெரிந்தது. நல்ல ஒரு ஹோட்டல் கிடைப்பதற்கு ஹரித்துவாரில் இத்தனை கஷ்டமா என்று அவள் ஆச்சரியப்பட்டாள்.

“சுஜா, இங்கே மனிதர்கள் விழா கொண்டாடுறதுக்காக வர்றது இல்லே. தங்களோட பாவங்களைக் கழுவுறதுக்குத்தான் வர்றாங்க. அவங்களுக்கு எதுக்கு ஹோட்டல்?”

அந்த இளைஞன் வருகைப் பதிவுடன் வந்தபோது ரமேஷன் அதில் எழுதினான்: ‘திரு அன்ட் திருமதி ரமேஷ் பணிக்கர், சுற்றுலா பயணி, ஒய்-14, தெற்கு விரிவு, புது டில்லி-49. மூன்று நாட்கள்...’ பதிவேட்டை வாங்கிய அந்த இளைஞன் சாவியை எடுப்பதற்காகச் சென்றான்.

அவர்கள் கணவனும் மனைவியுமாக ஆனது இது முதல் முறை அல்ல. ஐக்கிய நாடு தகவல் மையத்திலிருந்து வரும் எல்லா அழைப்பிதழ்களிலும் அவர்கள் கணவன்- மனைவிதான். ஒருமுறை இரண்டு நாட்கள் சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோதும் அவர்கள் கணவன்- மனைவி என்றே தங்களைச் சொல்லிக் கொண்டார்கள்.

“நாம அருமையான நடிகர்கள்.”

“ஒருநாள் நடிப்பு உண்மையாக ஆகும், சுஜா.”

“நான் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.”

அந்த நாள் வருவதைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் சுஜா.

“ரமேஷ், உனக்கு அந்த நாள் சீக்கிரம் வரணும்னு ஆசை இருக்கா?”

“கல்யாணம்ன்ற சடங்குக்கு எதிரான ஆளு நான்.”

திருமணம் என்ற சடங்குக்குள் அடங்கியிருக்கும் உறவை எப்போதும் விரும்பக்கூடியவன் நானில்லை என்பான் அவன்.

“ஃப்ரீ செக்ஸ் என்ற விஷயத்தை அனுமதிக்கிற ஒரு சமூகத்தை நான் சொர்க்கம்னே நினைக்கிறேன்.”

“அப்படின்னா குடும்பம்... ரமேஷ்?”

“குடும்பம்ன்ற ஒண்ணு இல்லைன்னா மனிதனால வாழமுடியாதா?”

“எனக்கு என் அப்பாவும் அம்மாவும் வேணும்.”

“சுஜா, கடைசி சுற்றுலா பார்த்தா, அப்பா, அம்மா யாருமே இருக்கமாட்டாங்க. ஆணும், பெண்ணும் மட்டும்தான் இருப்பாங்க. அதாவது நீயும் நானும்.”

வெள்ளை ஆடையணிந்த பணியாள் வந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு போனான்.

“ஐயாம் அவினாஷ் அரோரா!”

அந்த இளைஞன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனுக்குப் பின்னால் சுஜாவும் ரமேஷனும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தார்கள். அறை முதல் மாடியில் இருந்தது. அறைக்கு முன்னால் பிரம்பு நாற்காலிகள் போடப்பட்ட ஒரு சிறு வராந்தா இருந்தது.

“இங்கேயிருந்தே நீங்க ஹரித்துவாரைப் பார்க்கலாம்.”

அரோரா சொன்னான். வராந்தாவில் போய் நின்று ரமேஷன் வெளியே பார்த்தான். அரோரா சொன்னது உண்மைதான். தூரத்தில் கங்கை நன்றாகத் தெரிந்தது.

“குடிப்பதற்கு?”

அரோரா பணிவான குரலில் கேட்டான்.

“எனக்கு ஒரு கோக். ரமேஷனுக்கு தேநீர்.”

சுஜா சொன்னாள். அரோரா கொக்கோகோலாவுடன் வந்தான். அவனுக்குப் பின்னால் தேநீருடன் பணியாள் வந்தான். சுஜா கப்பில் தேநீரை ஊற்றினாள். சர்க்கரையையும் பாலையும் கலந்து கரண்டியால் கலக்கிவிட்டு அவள் கப்பை எடுத்து ரமேஷனிடம் நீட்டினாள்.

“ஸெஞ்யோருக்கு உண்மையிலேயே நன்றி சொல்லணும்.”

அவன் ஸெஞ்யோர் ஹிரோஸியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். அவன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? அனேகமாக அசோகா ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் பங்க் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருக்கலாம். அவனுக்கு பங்க் சாப்பிடக் கற்றுத்தந்தது ரமேஷன்தான். ரமேஷன் முதல்முறையாக ஹிரோஸி பங்க் சாப்பிட்ட நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தான். இருநூறு கிராம் பங்க் உள்ளே போன பிறகும், வெள்ளைக்காரனுக்கு எதுவும் உண்டாகவில்லை. மூன்று மணி நேரம் ஆன பிறகும், சிறிது கூட அவனுக்குப் போதை உண்டாகவில்லை.

“இதுதான் நீ பாடி புகழ்ற பங்க்கா?”

ஸெஞ்யோர் ஹிரோஸி அவனைக் கிண்டல் பண்ணினான். அவன் தன் காரை எடுத்துக்கொண்டு நேராக அசோகா ஹோட்டலின் நீச்சல் குளத்திற்குச் சென்றான். குளியல் ஆடையை எடுத்து அணிந்தான். தண்ணீரில் முதலையைப் போல் நீந்தினான். நீரில் கிடந்தவாறு அவன் பதினான்காயிரம் நிறங்களைக் கண்டான். வேறு யாரும் அருகில் இல்லாமற் போயிருந்தால் வெள்ளைக்காரன் அந்த நிறங்களில் மூழ்கியே இறந்து போயிருப்பான்.

“வேறு ஏதாவது?”

அரோரா பணிவுடன் கேட்டான்.

“நீங்க போகலாம்!”

அரோரா அந்த இடத்தைவிட்டு அகன்றான். வெளியே செல்லும்போது அவன் விசிலடித்துக் கொண்டே சென்றான். உயிர்ப்புடன் இருக்கும் இளைஞன். ரமேஷனும் சுஜாவும் அறையில் தனியாக இருந்தார்கள்.


“சுஜா, இந்த அறை உனக்குப் பிடிச்சிருக்கா?”

“கேட்கணுமா என்ன?”

“உன் அறையை விட நல்லா இருக்கு... அப்படித்தானே?”

“என் அறைக்கு என்ன குறை?”

“உன் அறைக்கு ஏர் கண்டிஷன் செய்யப்பட்டிருக்கா?” - அவள் அதற்கு பதில் சொல்லவில்லை.

“உன் அறையில திபெத்திய கார்ப்பெட் இருக்கா?”

“நாங்க ஏழைங்க...”

“நாங்க யாரு?” நாற்காலியில் தலையைச் சாய்த்து வைத்து தன்னுடைய நீளமான கால்களை விரித்து வைத்துக் கொண்டு ரமேஷன் கேட்டான்.

சிறிது நேரம் கழித்து “நீயும் நானும் மட்டும்தான் இருக்கிறோம்.”

“நான் குளிக்கப் போறேன்.”

அவள் எழுந்தாள்.

“வேண்டாம்.”

கண்களை மூடிக்கொண்டு சூடான தேநீரைச் சுவைத்தபடி அவன் சொன்னான்: “குளிக்காதே. தலையில் பேன்கள் நிறைய வரட்டும். உன் தலையில் இருக்கிற பேன்களை கூட்டு வச்சு சாப்பிடணும் போல இருக்கு. அதாவது- பீர் குடிக்கிறப்போ.”

தன்னுடைய சூட்கேஸைத் திறந்துகொண்டே அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் ஷாம்பு, துவாலை ஆகியவற்றை வெளியே எடுத்தாள். அதோடு சேர்த்து உள்பாவாடையும்.

“சுஜா, உன் பெட்டியில் என்னவெல்லாம் இருக்கு? சானிட்டரி டவல் இருக்கா?”

அவளுடைய முகம் அதைக்கேட்டு இரத்தச் சிவப்பாகிவிட்டது. “வேண்டாததெல்லாம் பேசாதே.”

அவள் பெட்டியை மூடிவிட்டு எழுந்தாள். கட்டியிருந்த கூந்தலை அவிழ்த்து விட்டாள். தோள்மீது அவளுடைய கருமையான கூந்தல் சிதறிக் கிடந்தது. அவள் குளியலறையை நோக்கிச் செல்லும்போது அவன் கேட்டான்: “நான் குளிப்பாட்டட்டுமா?”

“ஸெஞ்யோருக்குத்தான் நீ நன்றி சொல்லணும்.”

ஹிரோஸியின் மொழி சுஜாவுக்கும் சிறிது தெரியும். அவள் ஒரு பாட்டை மெதுவாக முணுமுணுத்தவாறு குளிக்கச் சென்றாள். உதட்டில் எரிந்து கொண்டிருக்கும் சிகரெட்டுடன் அவன் அறையில் தனியே இருந்தான். ‘நான் இதோ கடைசியில் ஹரித்துவாருக்கு வந்துட்டேன். பங்க்கின் பாலைவனங்களிலும், சரஸ்ஸின் காடுகளிலும் அலைந்து திரிஞ்ச பிறகு, பெண்ணிடம் நீந்தி முடிச்ச பிறகு, ஹரித்துவாரே... நான் இதோ உன் சன்னிதிக்கு வந்திருக்கிறேன். இந்தப் பயணத்தோட எல்லை எங்கே முடியுது? தட்சேஸ்வரா, சொல்லு... இனியும் எவ்வளவு தூரம் நான் அலைஞ்சு நடக்கணும்?’ தனக்குள் கேட்டான் ரமேஷன்.

பயணத்தாலும் வெயிலாலும் உண்டான களைப்பு கண்களை மூடியபடி படுத்திருந்த அவனுடைய சிந்தனைகள் முறிந்து நின்றன. காதுகள் வழியாகவும் கண்கள் வழியாகவும் தூக்கம் நீராவியைப் போல அவனுக்குள் நுழைந்தது.

ஷாம்புவும், நனைந்த தலைமுடியும் கலந்து உண்டாக்கிய மனதை மயக்கக்கூடிய நறுமணம் நாசித்துவாரத்துக்குள் நுழைந்தவுடன் அவன் கண்களைத் திறந்தான். பிரித்து விடப்பட்ட ஈரக்கூந்தலுடன் அவள் கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்தாள். இடையில் பச்சைப் நிறப் புடவையைச் சுற்றியிருந்தாள். புடவையின் மீதிப்பகுதி தரையில் கிடந்தது. ப்ளவ்ஸுக்கும் கழுத்துக்குமிடையில் வெறுமனே இருந்த தோளில் ப்ரேஸியரின் நாடா இருந்தது.

“குளிக்கலையா?”

ப்ரஷ் கொண்டு தலைமுடிய வாரிக் கொண்டிருப்பதற்கிடையில் கண்ணாடியைவிட்டு கண்களை எடுக்காமலே அவள் கேட்டாள்.

“இல்ல.”

“தூங்கப்போறியா?”

“இல்ல?”

“பிறகு?”

“கொஞ்சம் சரஸ் சாப்பிடலாம்னு நினைக்கிறேன். ஐ ஃபீல் லைக் இட்.”

“இங்கே கிடைக்காது.” முகத்தைத் திருப்பிக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவள் சொன்னாள்:

“இங்கே போதைப் பொருட்களும், மதுவும் கிடைக்காது உனக்கு இந்த விஷயம் தெரியாதா? புவர் யூ!”

“ஆனா, அது என் கையில் இருக்கு. வர்றப்ப நான் கையிலயே கொண்டு வந்துட்டேன். புவர் யூ!”

ஹரித்துவாரில் போதைப் பொருட்களும் மீன்களும் மாமிசமும் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டவை. மீனும் மாமிசமும் யாருக்குத் தேவைப்படும்? ஆனால், ஒரு துண்டு சரஸ்ஸோ ஒரு துளி பங்கோ இல்லாமல் மூன்று நாட்கள் அவனால் எப்படி இருக்க முடியும்? போதைப் பொருட்கள் என்பது சமீப காலமாக அவனுக்கு தினந்தோறும் கட்டாயம் வேண்டும். உப்பும் தண்ணீருமில்லாமல் கூட ரமேஷனால் வாழ்ந்துவிட முடியும். சரஸ்ஸோ, கஞ்சாவோ இல்லாமல் ஒருநாள்கூட அவனால் வாழ முடியாது.

“ரமேஷ், எனக்காக ஒண்ணு செய்வியா?”

ஒருமுறை அவர்கள் இருவரும் வியர்வையில் நனைந்துபோய் கிடக்கும்போது அவனுடைய நெஞ்சில் தன்னுடைய தலையால் மோதியவாறு அவள் கேட்டாள்.

“என்ன?”

“சத்தியம் பண்ணு. அப்படின்னாத்தான் சொல்வேன்.”

“என்ன விஷயம்னு முதல்ல சொல்லு.”

அவள் எதுவும் பேசாமல் சிறிது நேரம் அவனுடைய மார்பின்மீது தன்னுடைய தலையை வைத்தவாறு படுத்திருந்தாள். அடுத்த டிசம்பரில் டில்லியின் அவர்களின் திருமணத்தை நடத்துவதாக அன்று தீர்மானம் செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் விடுமுறையில் அதற்காக ஊரிலிருந்து அவனுடைய தாய் வர இருக்கிறாள். உண்மையிலேயே மகிழ்ச்சியான நாள்தான் அது.

“சொல்லு, டியர்.”

“இனிமேல் சரஸ் சாப்பிடக்கூடாது. எனக்கு எது கொஞ்சமும் பிடிக்கல. என்னால அதை பொறுத்துக்கவே முடியல...”

“அப்பாவியா பேசுறியா!”

அவளுடைய தலையில் அவன் முத்தங்கள் பதித்தான்.

“நான் உனக்காக எது வேணும்னாலும் செய்வேன். மூச்சு விடுறதைக் கூட நிறுத்துவேன். போதுமா?”

அவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இப்போது கூட அவன் சரஸ் உட்கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லைதான். இருந்தாலும், அவன் கூறும்போதெல்லாம் அவள் யூஸஃப்ஸராயிக்குச் சென்று நந்துவிடமிருந்து சரஸ் உருண்டைகளை அவள் வாங்கிக் கொண்டு வந்து தருவாள். ஒற்றைக் கையைக் கொண்ட நந்துவிற்கு ஒருமுறை ரமேஷன்தான் அவளை அறிமுகப்படுத்தி வைத்தான். ரமேஷனின் மனைவி அவள் என்றே அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் சரஸ் வாங்குவதற்காக வரும் ஒரே இளம்பெண் சுஜாதான். ஒருநாள் நந்து சொன்னான்: “உனக்குத் தெரியுமா சுஜா? வியாசன் மஹாபாரதம் எழுதினதே போதை மருந்து சாப்பிட்டுத்தான். அனேகமா பங்க்கா இருக்கலாம்.”

“நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடிச்சது பங்க் சாப்பிட்டுட்டுத்தான்னு ஏன் சொல்லல?” அவள் தலைமுடியைச் சீவிக்கொண்டே விளையாட்டாகச் சொன்னாள்.

பங்க் உட்கொள்ளாமல் எப்படி ஒரு குருக்ஷேத்திரத்தைப் படைக்க முடியும்? அஸ்திரத்தை எய்து நெருப்பு மழை பொழிய வைக்கும் வித்தையை மனரீதியான போதை இல்லாமல் எப்படி கற்பனை பண்ண முடியும்? எல்லா முனிவர்களும் மகரிஷிகளும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவங்கதான். இல்லாட்டி சூலத்தோட நுனியில் உட்கார்ந்து எப்படி தவம் செய்ய முடியும்?”

இந்தக் கதைகள் எப்போதும் கேட்கக்கூடிய கதைகள்தான். சுஜா கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு புடவையைச் சரி செய்தாள்.

“தேவர்களின், ரிஷிகளின் ஊரான ஹரித்துவாரில் போதைப் பொருட்களைத் தடை செய்யவே கூடாது.”

சுஜா தன் நெற்றியில் புடவைக்குப் பொருத்தமாக இருக்கும் வண்ணம் பச்சை நிறத்தில் பொட்டு வைத்தாள்.

“குளிக்கலைன்னா பரவாயில்ல. இந்த ஆடையையாவது மாற்றலாம்ல?”

“தேவையில்ல...”

அவன் குளிப்பதற்குத் தயாராக இல்லை. ஆடையை மாற்றவும் தயாராக இல்லை.


“உன்னை என்னால மாற்றவே முடியல ரமேஷ்!”

“நீ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”

“ம்...”

பேன்ட் பாக்கெட்டில் காலையில் யூஸஃப்ஸராயியில் வாங்கிய சரஸ் அப்படியே இருந்தது. அவன் ஒரு உருண்டையை வெளியே எடுத்தான்.

“இதைக்கொஞ்சம் நிரப்பித்தா. ப்ளீஸ்... பைப் சூட்கேஸ்ல இருக்கு!”

அவள் தரை விரிப்பின்மீது முழங்காலிட்டு அமர்ந்து சூட்கேஸிலிருந்து பைப்பையும் புகையிலையையும் வெளியே எடுத்தாள். கல்லைப் போல இறுகிப்போய்க் கிடந்த சரஸ்ஸை இரண்டு தீக்குச்சிகளுக்கு இடையில் நெருக்கமாக வைத்தவாறு தீப்பெட்டியை உரசி சூடாக்கினாள். சூடாக்கவில்லையென்றால் அது தூளாக மாறாது. தூளாக மாறிய சரஸ்ஸை புகையிலையுடன் சேர்த்து அவள் பைப்பில் நிரப்பினாள்.,

“இந்தா...”

அவன் பைப்பை வாங்கினான். சரஸ்ஸை எப்படி நிரப்புவது என்ற விஷயம் சுஜாவிற்கு நன்றாகவே தெரியும். அவள் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள். பொதுவாகவே அவள் நிறைய வாசிக்கக் கூடியவள்தான்.

அவனைப் பொறுத்தவரையில் சமீப காலத்தில் அவன் எதுவும் படிக்கவில்லை. படிக்கக்கூடிய காலத்தை அவன் கடந்துவிட்டான். இனிமேல் இருக்கும் காலம் தியானத்திற்குரியது. வெறுமனே வாசித்துக் கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது? புதிய புத்தகங்களைப் பற்றி அவன் தெரிந்து கொள்வதே சுஜா சொல்லிக் கேட்கும்பொழுதுதான்.

பைப்பை எடுத்துக் கொண்டு ரமேஷன் வராந்தாவின் கைப்பிடிக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு தன் கால்களை கைப்பிடியின் மீது வைத்தவாறு உட்கார்ந்தான். அப்படி உட்கார்ந்திருப்பது அவனுக்கு மிகவும் சுகமாக இருந்தது. பைப்பை வாயில் வைத்துக் கொண்டே அவன் அழைத்தான்: “சுஜா, தீப்பெட்டி...”

லைட்டர் கொண்டு வருவதற்கு அவன் மறந்துவிட்டான். அவள் எங்கிருந்தோ தீப்பெட்டியொன்றை தேடி எடுத்துக்கொண்டு வந்து தந்தாள். பைப் எரிந்தபோது சரஸ்ஸின் வாசனை வராந்தா முழுக்கப் பரவியது. அந்த வாசனையுடன் வேறு எந்த வாசனையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அவனை மிகவும் கவர்ந்த மணம் பெண்கள் உபயோகப்படுத்தும் நேஷனல் ஃபைவ் என்ற சென்ட்டுடையதுதான். தன்னுடைய ஒவ்வொரு மயிர்க்கால்களிலும் நெருப்பு உண்டாவதைப்போல் அவன் உணர்ந்தான்.

“யாராவது பார்த்தாங்கன்னா?”

சரஸ்ஸின் வாசனை அங்கு பரவியபோது யாரிடம் என்றில்லாமல் சுஜா கேட்டாள். அவள் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். அங்கு யாருமில்லை. கீழே பாதையில் மட்டுமே ஆட்கள் இருந்தார்கள். அரோராவோ வேறு யாருமோ அப்போது அங்கு வந்துவிட்டால்? ஹரித்துவாரில் இருந்துகொண்டு சரஸ் புகைப்பது என்பது சட்ட ரீதியான குற்றச் செயல் மட்டுமல்ல- அது பாவமும் ஆயிற்றே!

“வேண்டாம் ரமேஷ், வேண்டாம்.”

“பிறகு எதுக்கு, நீ பைப்புல நிரப்பித் தந்தே?”

“எனக்கு பயமா இருக்கு.”

“நான் சிறைக்குப் போயிடுவேன்னு பயப்படுறியா? முட்டாளே, கங்கைக் கரையிலே உட்கார்ந்து எவ்வளவு சன்னியாசிகள் கஞ்சா அடிக்கிறாங்கன்னு உனக்குத் தெரியுமா? போதைப் பொருட்களை ஹரித்துவாரில் தடை செய்திருக்கிறது சட்டம் மட்டும்தான். கடவுள் அதைத் தடை செய்யல. நான் கடவுள் பக்கம் இருக்கேன்.”

சுஜா உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்து மீண்டும் வாசிப்பதில் ஈடுபட்டாள். அவ்வப்போது தன்னுடைய கண்களை உயர்த்தி அவள் ரமேஷனைப் பார்த்தாள். அவன் பைப்பை பலமாக இழுத்துக் கொண்டு பாதையை நோக்கிக் கொண்டிருந்தான். பாதையில் படிப்படியாக ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தது. வெயில் குறைந்து கொண்டிருந்தது. மரங்களுக்கு அடியில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது. இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருக்கும் ரிக்ஷாக்காரர்கள்... மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு ஓடிக்கொண்டிருந்த குதிரை வண்டிகள்... பகல் நேரத்திலும் இருளடைந்து கிடக்கும் கட்டிடங்கள்...

இதுதான் ஹரித்துவாரா? மானஸாதேவி, இதுதான் உன்னுடைய ஊரா?

ரமேஷனின் கண்கள் மெதுவாக மூடின. பற்களுக்கிடையிலிருந்து அணைந்து போயிருந்த பைப் மடியில் விழுந்தது.

6

ட்டு மணி ஆனபோது அரோரா கதவைத் தட்டியவாறு அறைக்குள் வந்தான். அவனிடம் ஏதோ ஒரு வாசனை திரவியத்தின் வாசனை அடித்தது.

“டின்னர், சார்?”

“இங்கேயே பரிமாறிட்டா வசதியா இருக்கும்.”

“சரி, சார்...”

மரியாதையுடன் அவன் திரும்பிச் சென்றான். ரமேஷனை தட்சேஸ்வரனாகவும் சுஜாவை சதீதேவியாகவும் அவன் நினைப்பதைப் போலிருந்தது அவனுடைய செயலைப் பார்க்கும்போது.

ரமேஷன் இப்போதும் வராந்தாவில் சாய்வு நாற்காலியில்தான் உட்கார்ந்திருந்தான். அவனுடைய பற்களுக்கிடையில் இறுக்கமாகக் கடித்துப் பிடித்திருந்த பைப் இருந்தது. சரஸ்ஸின் வெள்ளைப் புகை அதிலிருந்து எப்போதும் புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது. சுஜா இப்போதும் படித்துக்கொண்டேயிருந்தாள்.

அரோரா மீண்டும் திரும்பி வந்தான். அவன் கையில் மெனு இருந்தது. சுஜா அதை வாங்கிப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான சிக்கன் ஸ்டீக்கோ, அஸ்பராகஸ் சூப்போ அதில் இல்லை. அதற்குப் பதிலாக நானும் சீஸ் குருமாவும் பூரியும் பாஜியும் இருந்தன.

“நானும் சீஸ் குருமாவும்.” சுஜா அரோராவிடம் சொன்னாள். பிறகு அவள் வராந்தா பக்கம் பார்த்து கேட்டாள்: “ரமேஷ், உனக்கு?”

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

“பசிக்கலையா?”

“இல்ல...”

“எதுவும் சாப்பிடாம இப்படியே இருந்தா?”

அவள் எழுந்து அவனுக்கு அருகில் சென்றாள். இப்போது அவள் அவனுடைய காதலியோ, எதிர்கால மனைவியோ அல்ல. அவனுடைய தாய் அவள்.

“எதுவும் வேண்டாம்.”

“ஒரு சாண்ட்விச்சாவது?”

“வேண்டாம்னு சொல்றேன்ல!”

அவனுடைய குரல் மிகவும் கடுமையாக இருந்தது. அவன் இப்போது அவளுடைய காதலன் அல்ல. பிடிவாதம் பிடிக்கக் கூடிய ஒரு சிறுவன். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சுஜா அந்த மெனு அட்டையைத் திருப்பிக் கொடுத்தாள். அரோரா அதை வாங்கிக் கொண்ட திரும்பிச் சென்ற பிறகு அவள் மீண்டும் தான் அமர்ந்திருந்த நாற்காலிக்குச் சென்று புத்தகத்தைத் திறந்தாள். ஆனா, அவளுக்கு வாசிப்பதில் நாட்டம் செல்லவில்லை.

உணவு பரிமாறுபவன் உணவு கொண்டு வந்தான். தட்டுகளையும் மற்ற பொருட்களையும் டீப்பாயின் மீது வைத்து தள்ளிக் கொண்டு வந்த அவன் சுஜாவின் முன்னால் அதை வைத்தான்.

“ரமேஷ்...”

மீண்டும் அவள் அழைத்தாள். அவன் அவள் அழைத்ததைக் கேட்கவில்லை. அவளுக்குத் தன்னுடைய முதுகைக் காட்டியவாறு கால்களை வராந்தாவின் கைப்பிடியின் மீது தூக்கி வைத்துக் கொண்டு அவன் இப்போதும் புகைபிடித்துக் கொண்டிருந்தான்.

சுஜா நாப்கின்னை எடுத்து தன்னுடைய மடியில் விரித்துக் கொண்டு உணவைச் சாப்பிட ஆரம்பித்தாள். அவளுக்கு நல்ல பசி எடுத்தது. பசி எடுக்கும்போது அவள் சாப்பிடாமல் இருப்பதில்லை. ரமேஷனை எடுத்துக்கொண்டால் அவனுக்குப் பட்டினி கிடப்பதென்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விஷயம். அவனுக்கு மிகவும் பிடிக்காத ஒரு விஷயம் உணவு சாப்பிடுவது.


சாப்பிட்டு முடிந்தவுடன் கொஞ்சம் ஒடிக்கொலானை எடுத்து கையிலும் வாயிலும் தேய்த்துக்கொண்ட அவள் வராந்தாவிற்கு வந்தாள்.

“ரமேஷ்!”

“ம்...?”

“இப்படியே உட்கார்ந்துக்கிட்டு இருந்தா எப்படி?”

“ம்...?”

“ஒரு சாயங்காலப் பொழுதை நீ வீணாக்கிட்டே, ரமேஷ்!”

மொத்தம் மூன்று நாட்கள்தான். விலை மதிப்புள்ள ஒரு மாலை நேரம் இழக்கப்பட்டிருக்கிறது. இப்படி சரஸ் புகைத்துக் கொண்டே உட்கார்ந்திருப்பது என்றால் அதற்கு டில்லியிலேயே இருந்திருக்கலாமே! ஹரித்துவாருக்கு வந்திருக்கவே வேண்டாமே!”

“இனியும் ரெண்டு நாட்கள் இருக்கே!”

“சரி... எழுந்திரு. நாம எங்கேயாவது கொஞ்சம் நடந்துபோயிட்டு வரலாம்.”

“ம்...”

ஆனால், அவன் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை. பேசும்போது அவனுடைய குரலில் அதிகமான பதற்றம் தெரிந்தது. பைப்பை வாயிலிருந்து எடுக்கும்பொழுது கைகள் நடுங்கின. சரஸ் அதிகமாக உள்ளே போகும்போது இப்படி குரலில் பதற்றம் இருப்பதும் கைகள் நடுங்குவதும் இயற்கையாகவே இருக்கக் கூடியதுதான்.

உணவு பரிமாறுபவன் வந்து பாத்திரங்களை எடுத்துச் சென்றான். சுஜா முழுவதையும் சாப்பிடவில்லை. கண்ணாடிப் பாத்திரத்தில் குருமாவும் மற்ற உணவுப் பொருட்களும் ஏராளமாக மீதியிருந்தன. பணியாள் கொண்டு வந்த டஸ்ஸர்ட்டிலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவள் அறுத்து ரமேஷனுக்கு நேராக நீட்டினாள்.

“இதையாவது?”

“இனிப்பு எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?”

“ஒரே ஒரு துண்டு.”

அவள் கெஞ்சினாள். அவன் அதைச் சிறிதும் கவனிக்காதது மாதிரி இன்னொரு பைப் சரஸ் புகைப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தான். சுஜா சிறிது நேரம் அவனுக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தாள். அவன் எதுவும் பேசவில்லை. அவள் கீழே இருக்கும் பாதையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். தூரத்தில் மலை உச்சியில் இருக்கும் மானஸாதேவி ஆலயத்தில் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. பாதையில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைந்து போயிருந்தது. மங்கலான இருட்டும் வெளிச்சமும் இரண்டற அங்கு கலந்திருந்தன. ஆள் எதுவும் இல்லாத ரிக்ஷாக்களுடன் ரிக்ஷாக்காரர்கள் தங்களின் வீடுகளை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருநாள் முடிகிறது...

சுஜா நாற்காலியில் போய் அமர்ந்தாள். மீண்டும் புத்தகத்தைத் திறந்தாள். பத்துமணி வரை அவள் அமர்ந்து படித்தாள். அரோரா வந்து ஏதாவது வேண்டுமா என்று விசாரித்தான்.

“தண்ணி...”

ரமேஷன் முணுமுணுத்தான்.

“கொடுத்து அனுப்புறேன், சார். குட் நைட்...”

அரோரா இறங்கிச் சென்றான். பணியாள் நீர் கொண்டுவந்தான். ஒரு மூடியால் அதை மூடி வைத்து விட்டுச் சென்றான்.

“ரமேஷ், நீ வரலையா?”

சுஜா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ரமேஷனைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். எப்போதாவது ஒருமுறைதான் இப்படி ஒன்றாக ஒரு இரவு நேரத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பு வரும். ஒவ்வொரு நிமிடமும் மிகவும் விலை மதிப்பானது. ஆனால், அவன் அதைப் பற்றி சிந்திக்கிறானா? ஐந்தாறு மணி நேரங்களாக அவன் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். இன்னொரு ஆள் தன்னுடன் இருக்கும் நினைப்பே அவனுக்குக் கொஞ்சமும் இல்லையே!

சுஜா கொட்டாவி விட்டவாறு நாற்காலியை விட்டு எழுந்தாள். அழகான விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும் இரட்டை மெத்தை, தலைப் பகுதியில் பாத்திக் ஷேட் உள்ள பெடஸ்டல் விளக்கு இருந்தது. படுத்துக் கொண்டே அதை அணைக்கவோ, எரிய வைக்கவோ செய்யலாம். ஆடையை மாற்றாமலே சுஜா கட்டிலில் படுத்தாள். பச்சை நிறப் புடவையின் மீது அவிழ்ந்த கூந்தல் சிதறிக் கிடந்தது.

“ரமேஷ்...”

மீண்டும் அவள் அவனை அழைத்தாள். அந்தப் பெரிய கட்டிலில் அவள் தான்மட்டும் தனியே இருப்பதைப்போல் உணர்ந்தாள். அவள் அழைப்பதைக் கேட்காமலே அவன் வாயில் கடித்து பிடித்திருந்த பைப்பின் நுனியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிறிதுகூட அசைவே இல்லாமல் இருந்தன.

அவன் வரமாட்டான். அவனை அழைப்பதே வீண். அதைப் புரிந்து கொண்ட அவள் சுவருக்கு முகத்தைக் காட்டியவாறு சாய்ந்து படுத்தாள். கண்களை மூடிக்கொண்டு ஒரு மீனைப்போல அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு அவள் படுத்திருந்தாள். ஒரு பக்கமாக அவள் சாய்ந்து படுத்திருக்கும்பொழுது கடைந்தெடுத்ததைப் போல் இருந்த இடுப்பிற்கு அழகு கூடியதைப் போல் இருந்தது....

ரமேஷன் அவளைக் கவனிக்கவேயில்லை. அவனுடைய பார்வை முழுவதும் பைப்பின் முனையிலேயே இருந்தது. ஆணியால் அடிக்கப்பட்டதைப்போல் ஒரு பார்வை. சிறிது நேரம் சென்றதும் அணைந்துபோயிருந்த பைப் வாயிலிருந்து கீழே விழுந்தது. அவன் கண்களை மூடியிருந்தான்.

சிறிது நேரம் கடந்தவுடன் அவன் மீண்டும் கண்களைத் திறந்தான். நடுங்கிக் கொண்டிருந்த கை விரல்களை பாக்கெட்டிற்குள் நுழைத்து இன்னொரு பொட்டலத்தை எடுத்தான். டில்லியிலிருந்து கொண்டு வந்ததில் பாதிக்குமேல் இதற்குள் அவன் இழுத்து முடித்திருந்தான். ஐந்தோ, ஆறோ நாட்கள் நிதானமாக உட்கார்ந்து இழுக்க வேண்டிய சரக்கை அவன் ஒரே இருப்பில் உட்கார்ந்து இழுத்து முடித்திருந்தான்.

சரஸ்ஸை சூடு பண்ண வேண்டும் என்றோ, தூளாக்கவேண்டும் என்றோகூட அவன் முயற்சி செய்யவில்லை. புகையிலையைக் கூட அவன் சேர்க்கவில்லை. பொட்டலத்தைப் பிரித்து அதிலிருந்த முழுவதையும் சரஸ் பைப்பிற்குள் அழுத்தி அழுத்தி திணித்தான். அதைப் பற்றவைக்க பத்து, பன்னிரண்டு தீக்குச்சிகளை உரசவேண்டி வந்தது. வலது கையன் சுண்டு விரலில் நெருப்பு பட்டதைக் கூட அவன் கவனிக்கவில்லை. விரல் மட்டுமல்ல- அவனுடைய உடம்பே எரிந்து கொண்டுதானிருந்தது.

புகையிலை கலக்காத பச்சை சரஸ்ஸின் புகை மூச்சுக்குழாய் வழியே உள்ளே சென்றபோது அவனுடைய கண்கள் பிதுங்கின. தலையும் மூக்கும் பற்றி எரிவதைப்போல் இருந்தன. தொண்டையிலும் ஒரு பாலைவனத்தின் வறட்சி இருந்தது.

சிறிது நேரம் சென்றதும் அந்த பைப்பும் வாயிலிருந்து கீழே விழுந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தோம் என்று அவனுக்கே தெரியாது. கடைசியில் நாற்காலியை விட்டு அவன் மெதுவாக எழுந்தான். கால்கள் ஒன்றோடொன்று பின்னியதால் அவனால் நடப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. விளக்கை அணைத்து விட்டு வராந்தாவிற்கு செல்லும் கதவை அடைத்தான். பாத்திக் ஷேடின் வழியாக வந்த வெளிச்சத்தில் சுஜா ஒரு பக்கம் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தாள் - புடவையை மாற்றாமல் கூந்தலைக் கட்டாமல்.

சாவி துவாரத்தில் இரண்டு சாவிகள் இருந்தன. வளையத்திலிருந்து ஒரு சாவியை மட்டும் அவன் பிரித்து எடுத்தான். விளக்கை அணைத்தபோது சுஜா மட்டும் காணாமல் போனாள். அவள் மூச்சு விடும் சத்தம் மட்டும் அறையில் கேட்டது.

அவன் அறையைவிட்டு வெளியே வந்து கதவின் வெளிப்பகுதியைப் பூட்டினான். எல்லா அறைகளும் இருட்டில் மூழ்கியிருந்தன. எல்லாரும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். கைப்பிடியைப் பிடித்தவாறு மெதுவாக அவன் படிகளில் இறங்கினான். அங்கும் நல்ல இருட்டு ஆக்கிரமித்திருந்தது. விளக்கின் ‘ஸ்விட்ச்’ எங்கே இருக்கிறது?


தட்டுத் தடுமாறி அவன் கீழேயிருந்த பாதைக்கு வந்தான். அங்கு பகலில் பார்த்த ஆட்களின் கூட்டமோ ஆரவாரமோ எதுவும் இல்லை. பாதை எந்தவித சந்தடியும் இல்லாமல் அமைதியாக இருந்தது. ஒரு ஓரத்தில் அனா         தையாக இரண்டு மூன்று ரிக்ஷாக்கள் கிடந்தன. நாவல் மரங்களுக்கு அடியில் பிச்சைக்காரர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் ஊப்பர் ஸடக் வழியாக அவன் நடக்க ஆரம்பித்தான்- எங்கு போகிறோம் என்பது தெரியாமல். அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்த அவனுடைய காலடிச் சத்தத்தைக கேட்ட மரங்களின் உச்சியில் தூங்காமல் விழித்திருந்த சில பறவைகள் ஆரவாரித்தன.

ஊப்பர் ஸடக் ரமேஷனுக்கு முன்னாலும் பின்னாலும் நீண்டு கிடந்தது. முன்பகுதி ஹர்கிபவ்டியிலும் பின்பகுதி காடி ஹட்டாவிலும் முடிகிறது. புகைவண்டி நிலையத்தை தாண்டினால் ஊப்பர் ஸடக் பெயர்மாற்றம் பெற்று ஜ்வாலாப்பூருக்கும் அங்கிருந்து ரிஷிகுலத்திற்கும் அங்கிருந்து குருகுலத்திற்கும் நீண்டு போகிறது. பின்னால் போலீஸ் ஸ்டேஷனும் தபால் நிலையமும் வால்தாரா பாலமும் இருக்கின்றன. பின்னால் என்ன இருக்கின்றன என்பது தெரியும். முன்னால்?

நடப்பதற்கு கால்கள் ஒத்துழைக்கவில்லை. கண்கள் அடிக்கொரு தரம் மூடின. உடம்பின் ஒவ்வொரு உறுப்பிலும் சரஸ்ஸின் நெருப்பு இப்போதும் பலமாக எரிந்து கொண்டிருந்தது. எனினும், அவன் நடந்தான்- கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கி; பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி; கர்ப்பப்பையிலிருந்து சிதையை நோக்கி.

கடைவாசலில் உறங்காமல் படுத்திருந்த ஒரு பிச்சைக்காரி ரமேஷனைப் பார்த்ததும் எழுந்திருந்து இருட்டில் தன்னுடைய பிச்சைப் பாத்திரத்தை தேடி எடுத்து அவனுக்கு முன்னால் நீட்டினாள்.

“பாபுஜி, ஒரு பைசா...”

அவளுக்குத் தேவை ஒரு பைசா. ஒரு பைசா மட்டும். பேண்ட் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு அவன் சில நாணயங்களை எடுத்து அவளுடைய பிச்சைப் பாத்திரத்தில போட்டான். நாணயங்களைப் பாக்கெட்டிற்குள்ளிருந்து பொறுக்கி எடுக்க சில நிமிடங்கள் ஆயின.

ஒரு அனாதைப் பிணத்தைப் போல வெறிச்சோடிப்போயிருந்த அந்தப் பாதையில் அவன் நடந்து கொண்டிருக்கும்போது பின்னால் பல குரல்கள்:

“பாபுஜி, ஒரு பைசா...”

“மகாராஜ்...”

“மகனே...”

அவனை நோக்கி நீட்டப்பட்ட பல பிச்சைப் பாத்திரங்கள்...”

“உஷ்... அமைதி...”

அவன் விரலை உதட்டில் வைத்தவாறு சொன்னான். தன்னுடைய கை விரல்களை பேன்ட் பாக்கெட்டிற்குள் விட்டான். பிச்சைப் பாத்திரங்களில் நாணயங்கள் விழுந்தபோது பிச்சைக்காரர்கள் கடவுள்களின் பெயர்களை சொல்லி அவனை ஆசீர்வதித்தார்கள்.

நிலவு உதித்தது. ஓரங்களில் இருந்த கட்டடங்களின் நிழல்கள் பாதையின் நடுவில் விழுந்தன. தளர்ந்துபோன தன்னுடைய கைகளை பாக்கெட்டிற்குள் விட்டவாறு அவன் பயணத்தைத் தொடர்ந்தான். உயிரற்ற நிழல்களுக்கு மத்தியில் உயிர்ப்புள்ள ஒரே நிழலாக அவன் இருந்தான். நீண்டு கிடக்கும் பாதையில் நடந்து நடந்து ஒரு சோர்வு உண்டானபோது, போகும் பாதையை மாற்றினால் என்ன என்று அவன் நினைத்தான்.

பாதையின் இரு பக்கங்களிலும் கட்டடங்கள் இருந்தன. கட்டடங்களுக்கு இடையில் வெற்றிடங்களும் இருந்தன. முதலில் பார்த்த ஒரு கட்டிடத்தை நோக்கி அவன் திரும்பினான். அது வலது பக்கத்தில் இருந்தது. ஒடுக்கலான இருளடைந்து காணப்பட்ட ஒரு பாதை தெரிந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த நிறம் மங்கலான கட்டடங்களின் ஜன்னல்கள் இல்லாத சுவர்கள்... சிறுநீரின் தாங்கமுடியாத வாடை... விளக்குகள் இல்லாத கட்டடங்களின் மீது நிலவு வெளிச்சம் விழாமல் இருந்தது. ஒரே இருள்!

இருட்டில் தட்டுத் தடுமாறி அவன் முன்னோக்கி நடந்தான். காலில் ஏதோ இடறிய மாதிரி இருந்தது. எழுந்தார்கள். கண்களைத் திறந்து பார்ப்பதைப்போல் இருந்தது. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இருட்டில் ஏதோவொன்று அசைவதைப்போல் இருந்தது. வெறுமனே அப்படித் தோன்றுகிறதா என்ன? இருட்டு மூச்சு விடுமா? பெருமூச்சு விடும் சத்தம் நன்றாகவே கேட்டது. இங்கு இருட்டிற்கு உயிர் இருக்கிறதா என்ன? இயற்கைக்கும் உருவம் இருக்கிறதா?

“ஹூம்...”

ஒரு முணுமுணுப்புடன் யாரோ தட்டுத்தடுமாறி கால்களை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வைத்து அவன் முன்னோக்கி நடந்தான். யாரோ அவனைப் பின்தொடர்ந்தார்கள். அவனுக்கு மிகவும் அருகில் காலடிச் சத்தம் கேட்டது.

தக்ஷப்ரஜதிபதி, நீயா? தத்தாத்ரேயா, நீயா? இல்லாட்டில் பகீரதா, நீயா? நான் உங்களைத் தேடிக்கிட்டிருக்கேன். புகைவண்டி நிலையத்தில் உங்களில் யாரையும் நான் பார்க்கலை. திரைப்பட நட்சத்திரங்களை மட்டுமே நான் பார்த்தேன். ஊப்பர் ஸடக்கை எடுத்துக்கிட்டா அங்கே தரகர்களையும் ரிக்ஷாக்காரர்களையும் மட்டும்தான் என்னால் பார்க்க முடிஞ்சது. நீங்க இந்த இருளடைஞ்சு போய் கிடக்குற கட்டடங்களுக்குள்ளே ஒளிஞ்சிருக்கீங்களா? நான் உங்களைத் தேடிக்கிட்டிருக்கேன், தெரியுமா? அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

கட்டடங்களின் எல்லையில் தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. தெரு விளக்காக இருக்கலாம். அந்த வெளிச்சத்தை நோக்கி அவன் நடந்தான். பின்னால் அவனைப் பின் தொடர்ந்த காலடிச் சத்தம் வேகமானது.

லோவர் ஸடக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவன் போய் நின்றபோது, அவனுடைய தோளில் யாரோ தொட்டார்கள். திரும்பிப் பார்த்தபோது அவனுக்கு உடம்பே நடுங்கி விட்டது.

“நீ யார்?”

பாதம் முதல் தலை வரை அணியப்பட்ட கருப்பு நிற ஆடை மார்பு வரை தொங்கிக் கொண்டிருந்த அவிழ்த்துவிடப்பட்ட தலைமுடி. வெளியே நீட்டிக் கொண்டிருந்த இரத்தம் வழியும் நாக்கு. கையில் தூக்கிப் பிடித்த திரிசூலம்.

யாரென்று அவன் கேட்டதற்கு பதிலேதும் சொல்லாமல் அந்த உருவம் ரமேஷனுக்கு முன்னால் வந்து நின்றது. அப்போது அதன் கழுத்தில் அணிந்திருந்த கபாலத்தை அவன் பார்த்தான்.

“உனக்கு என்ன வேணும்?”

அந்த உருவம் எதுவும் பேசாமல் தன்னுடைய கையை நீட்டியது. ரமேஷன் ஒரு அடி பின்னால் தள்ளி நின்றான். எதற்காக அது கையை நீட்ட வேண்டும்? ஒரு வேளை தன்னுடைய குருதியை அது கேட்கிறதோ? விளக்கு கம்பத்தின் மீது சாய்ந்து நின்றவாறு மீண்டும் அவன் கேட்டான்.

“உனக்கு என்ன வேணும்?”

அதற்கு பதில் இல்லை. நீட்டிய கை அப்படியே இருந்தது. ஒருவேளை அது பணம் கேட்கிறதோ? அப்படியொரு எண்ணம் மனதில் தோன்றவே, பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு ரூபாயை எடுத்து நீட்டிய கையில் அவன் வைத்தான். அந்த உருவம் தன் கழுத்தில் அணிந்திருந்த கபாலத்திலிருந்து பூ இதழ்களை எடுத்து அவன் மீது எறிந்தது.

அதற்குப் பிறகு அந்த உருவம் அங்கு நிற்கவில்லை. திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தவாறு இருட்டினூடே வேகமாக அது நடந்து சென்றது.


அதனுடைய இருப்பிடம் இருட்டாக இருக்கலாம். அந்த உருவம் கண்ணை விட்டுப் போய்விட்டாலும், அதனுடைய நீளமான நாக்கும் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த மண்டை ஓடும், திரிசூலமும் அவனுடைய கண்களை விட்டு மறையவே இல்லை. பூதம், பேய் போன்றவற்றில் பொதுவாக அவனுக்கு நம்பிக்கை இல்லை. அது பேயோ பிசாசோ எதுவுமில்லை. அப்படியிருந்தால் அது காசு கேட்டிருக்குமா? பணம் தேவைப்படுபவன் மனிதன் மட்டும்தான். அப்படியென்றால் அந்த உருவம் வேறு யாருமாக இருக்க வாய்ப்பேயில்லை. நிச்சயம் அது ஒரு மனிதன்தான்.

சில நிமிடங்களுக்கு முன்பு நடந்துபோன உருவத்தை தேடினால் என்ன என்று அவன் நினைத்தான். ஹரித்துவாரின் ஒரு முகத்தை அவன் தெரிந்து கொண்டுவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்பட நட்சத்திரங்களின் படங்களும் ரிக்ஷாக்களும் மட்டுமல்ல அங்கு இருப்பது என்பதை அவன் நன்கு தெரிந்து கொண்டான்.

ரமேஷன் தன் பயணத்தை தொடர்ந்தான்.

லோவர் ஸடக் ஊப்பர் ஸடக்கை விட அகலம் குறைவாக இருந்தது. இரு பக்கங்களிலும் வரிசையாக சிறுசிறு கடைகள் இருந்தன. கண்ணாடிக் கூடுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகள் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒளிமயமாகக் காட்சியளித்தன. ஆள் நடமாட்டமில்லாத லோவர் ஸடக்கின் வழியாக முன்னோக்கி நடந்தபோது பாதை படிப்படியாக மிகவும் குறுகிப்போனது. ஒரு ஒற்றையடிப் பாதை அளவே அது இருந்தது.

தூரத்தில் பாதையின் நடுவில் வெள்ளையாக ஏதோ தெரிந்தது. மங்கலான வெளிச்சத்தில் வெள்ளை நிறத்தில் என்னவோ எந்தவிதமான அசைவுமில்லாமல் கிடந்தது. இன்னொரு உருவமா? இந்த முறை வெள்ளை நிற உருவம்?

அருகில் நெருங்கியபோது, அந்த உருவத்தின் அளவு பெரிதாகத் தெரிந்தது. பாதையை முழுமையாக அந்த உருவம் மறித்திருந்தது. தன் கண்களை மீண்டும் மீண்டும் கசக்கிக்கொண்டு அவன் பார்த்தான். கண்ணில் கண்ட காட்சி அவனை நடுங்க வைத்தது. அறிவு வேலை செய்ய மறுத்தது. சரஸ்ஸின் நெருப்பு பட்டு அது எரிந்து கொண்டிருந்தது. கருப்பு உருவத்தை தான் கண்ணால் பார்த்தது உண்மையா என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். அந்த இரத்தம் வழியும் நீளமான நாக்கும் அவிழ்த்து விடப்பட்ட தலைமுடியும் திரிசூலமும் பலவீனமான ஒரு மனதின் கற்பனையாக இருக்கலாம். தனக்கு முன்னால் தூரத்தில் பாதையின் குறுக்காகக் கிடக்கும் இந்த வெள்ளை உருவம்கூட சரஸ்ஸின் ஒரு உருவாக்கம்தான் என்பதாக அவன் நினைத்தான்.

‘எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். கனவுகளும் உண்மைகளும் என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே ஒன்றுதான்.’ - அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

அவன் மேலும் சற்று தூரம் முன்னால் நடந்தால் கடைத் திண்ணைக்கு அருகில் ஒதுங்கி நின்றவாறு தன் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டுமொருமுறை அவன் பார்த்தான். எந்தவித அசைவும் இல்லை. சத்தமும் இல்லை. கூர்ந்து பார்த்தபோது மூச்சு விடுவது தெரிந்தது. பெரிய அந்த வெள்ளை உருவம் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னோக்கி நடந்தான்.

அந்த வெள்ளை உருவம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஒரு மிருகத்தின் உருவம் அது. உடல் அலையைப் போல உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அதற்கு மிகவும் நெருக்கமாகச் சென்று குனிந்து அதைப் பார்த்தான். தலையில் கொம்புகள் இருந்தன. வால் இருந்தது. கையை நீட்டித் தொட்டுப் பார்த்தான். மென்மையான முடி மெதுவாக முதுகிலும் வயிற்றிலும் தடவினான்.

பசு இலேசாக அசைந்தபோது அதன் கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலித்தது. அது முழங்காலைத் தரையில் ஊன்றி எழுந்து நின்று அவனைப் பார்த்தது. அது நந்தினியா? இல்லாவிட்டால் காமதேனுவா?

வெள்ளைப் பசுவைத் தாண்டி அவன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். உடம்பு வியர்வையில் நனைந்திருந்தது. கட்டிடங்களுக்கு அப்பால் கங்கையில் வீசிக் கொண்டிருந்த காற்று இங்கு வரவில்லை. லோவர் ஸடக்கிலிருந்து வலது பக்கம் பிரிந்து போகும் வேறொரு பாதையில் அவன் இறங்கி நடந்தான். அங்கு இரண்டு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. சிதிலமடைந்து போன பழைய சுவர்கள். தரையில் நீர் தேங்கிக் கிடந்தது. எங்கேயோ தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

ஒரு தெருவைத் தாண்டி வேறொரு தெருவிற்குள் அவன் கால் வைத்தான். அடுத்தடுத்து இருந்த தெருக்கள் ஒவ்வொன்றாக அவன் தாண்டினான். பல்லா சாலையை அடைந்தபோது இருட்டில் ஒரு மணியோசை கேட்டது. மிகவும் அருகில் இருந்த ஒரு தெருவிற்குள் இருந்து வெள்ளைப்பசு வந்து கொண்டிருந்தது. அவனைப் பார்த்ததும் பசு காதுகளை உயர்த்தி கழுத்தை உயர்த்தியது. ‘பசுவே, என்னை மாதிரி உனக்கும் உறக்கம் வரலையா? என்னை மாதிரி நீயும் எங்கே போகணும்னு தெரியாத பிரேதமா என்ன?’ என்று தனக்குள் அவன் சொல்லிக் கொண்டான்.

அரைமணி நேரம் சென்றதும் மீண்டும் வெள்ளைப் பசுவை அவன் பார்த்தான். பிர்லா சாலைக்கு அருகில் ஒரு இடத்தில் சுவரில் சாய்ந்தவாறு அது நின்றிருந்தது. காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு எதற்காகவோ காத்திருப்பதைப் போல் அது இருந்தது.

நடந்து நடந்து களைத்துப் போன அவன் ஒரு கடைத்திண்ணையில் அமர்ந்தான். களைப்பு மாறியவுடன் மீண்டும் தெருவில் இறங்கி நடந்தான். எந்த வழியில் போகிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. ஒரு பாதை இன்னொரு பாதையில் போய் சேர்ந்தது. அது வேறொரு பாதையில் போய் முடிந்தது. சேர்வதும் பிரிவதுமாக இருந்தன அந்தப் பாதைகள். அப்படியென்றால் நகரத்தின் பாதைகள் எப்படி இருக்கும்?

தன்னுடைய ஹோட்டல் எந்த இடத்தில் இருக்கிறது? ஊப்பர் ஸடக்கை அடைந்தால் ஹோட்டல் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், ஊப்பர் ஸடக் எங்கே இருக்கிறது? ஹரித்துவாரின் பூகோளத்தைப் பற்றி எதுவும் தெரியாத அவன் கரடுமுரடான பாதைகள் வழியே நடந்து திரிந்தான். இனிமேல் ஒரு அடி கூட வைக்க முடியாது என்ற நிலை உண்டானது. நடக்க என்றில்லை, உட்காரக்கூட அவனால் முடியாது. எங்கேயாவது கொஞ்சம் தலையைச் சாய்த்துப் படுத்து உறங்க வேண்டும்போல இருந்தது. ஆனால், எங்கே படுப்பது?

தளர்ந்துபோன கால்கள் அவனை மீண்டும் ஸப்ஜி மண்டியில் கொண்டுபோய் விட்டன. மங்கலாக எரிந்துகொண்டிருந்த ஒரு தெருவிளக்குக்கு அடியில் கையில் திரிசூலத்துடன் ஒரு உருவம் நின்று கொண்டிருப்பதை அவன் மீண்டும் பார்த்தான். மங்கலான அந்த வெளிச்சத்தில் அந்த உருவத்தின் கண்கள் நெருப்புக் கட்டையைப் போல அவனுக்குத் தோன்றியது. திரிசூலத்தின் முனை மின்னியது...


“ஊப்பர் ஸடக் எங்கே இருக்கு?”

அந்த உருவம் சுட்டிக்காட்டிய வழியில் அவன் நடந்தான். அவன் நடந்துவந்த பாதை ஊப்பர் ஸடக்கில் முடிந்தது. அவன் சாலையில் நுழைந்து ஹோட்டலை நோக்கி வேகமாக நடந்தான்.

ஊப்பர் ஸடக்கில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. எங்கேயோ ஒரு சேவல் கூவியது. மானஸாதேவியின் மலைக்கு அப்பால் ஆகாயம் சிறிதுசிறிதாக விடிந்து கொண்டிருந்தது.

கைப்பிடியை இறுகப் பிடித்தவாறு அவன் மேலே ஏற முயற்சித்தான். ஆனால், முடியவில்லை. எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று அவன் நினைத்தான். ஒவ்வொரு படியாக ஏறி அவன் எப்படியோ மேலே வந்து விட்டான். நின்று மேல்மூச்சு, கீழ்மூச்சு விட்டுக்கொண்டிருக்க, யாரோ விளக்கைப் போட்டார்கள்.

“நீங்க எங்கே போயிருந்தீங்க?”

இடுப்பில் ஒரு துவாலையை மட்டும் கட்டிக் கொண்டு உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நின்றிருந்தான் அரோரா. அவன் ரமேஷனின் முகத்தையே வியப்புடன் பார்த்தான். முதல் நாளன்று பார்த்த ரமேஷனில்லை தற்போது நின்று கொண்டிருக்கும் ரமேஷன். ஒரே இரவில் அவனுடைய கன்னங்கள் உள்ளே போயிருந்தன. கண்கள் குழி விழுந்து போயிருந்தன. செருப்பிலும் பேன்ட்டிலும் சேறும் தண்ணீரும் பட்டிருந்தன.

“என்ன ஆச்சு? சொல்லுங்க...”

அரோரா பதைபதைப்புடன் காணப்பட்டான். ரமேஷனால் எந்த பதிலும் கூறமுடியவில்லை. அவனுக்குப் பேச நாக்கே வரவில்லை. நான்கைந்து பேர் உட்கொள்ள வேண்டிய சரஸ்ஸை அவன் ஒரே இடத்தில் உட்கார்ந்து இழுத்து முடித்திருந்தான். அவன் சாப்பிட்டு இருபத்து நான்கு மணிநேரங்கள் ஆகிவிட்டன. இரவில் ஒரு பொட்டு கூட கண்மூடவில்லை. எவ்வளவு தூரம் அவன் அலைந்து திரிந்திருக்கிறான்! அவன் எதற்காக இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?

எதற்காகப் பிறக்கவேண்டும்? எதற்காக வாழ வேண்டும்?

“இரவு நேரத்துல இப்படி தன்னந்தனியா போகாதீங்க. திருடர்களும் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் சர்வ சாதாரணமா சுற்றித் திரிவாங்க. எச்சரிக்கையா இருக்கணும்?”

அரோரா என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான்.

பாக்கெட்டிற்குள் கையை விட்டு சாவியை எடுத்து அவன் கதவைத் திறந்தான். உள்ளே நல்ல வெளிச்சம் இருந்தது. கட்டிலில் ஒரு சிலையைப் போல சுஜா உட்கார்ந்திருந்தாள். புலர்காலைப் பொழுதின் வெளிச்சத்தில் அவள் கண்களில் வழிந்த நீர் ஒளிர்ந்தது.

கைகளால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்ட அவள் தேம்பித்தேம்பி அழுதாள்.

7

ரித்துவார் தூக்கம் கலைந்து எழுந்தது. மானஸாதேவியின் மலைக்கு மேலே பனிமூட்டம் ஆவியைப் போல பரவியிருந்தது. மலை அடிவாரத்தில் நல்ல வெயில் தெரிந்தது. வெயிலில் மரங்களின் பச்சை நிறம் பளிச்சிட்டது. எரிந்து கொண்டிருந்த நெய் விளக்குகளின் வாசனை காற்றில் கலந்திருந்தது. சுஜா ஜன்னலருகில் நின்றவாறு ஹரித்துவாரின் அதிகாலை நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரமேஷன் கட்டிலில் எந்தவிதமான அசைவுமில்லாமல் படுத்திருந்தான். இறந்தவனைப்போல அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய அழுக்கடைந்துபோன பேண்ட்டையும் சட்டையையும் கழற்றிய அவள் ஒரு போர்வையால் அவனை மூடினாள். அவனுடைய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய கண்களில் நீர் கசிந்தது. விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைப் போல அவன் தெரிந்தான்.

அவள் குளித்து ஆடை மாற்றினாள். அவினாஷ் அரோரா எங்கிருந்தோ கொஞ்சம் முல்லை மலர்களைக் கொண்டுவந்தான்.

“உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.”

பூக்களை நீட்டிய அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

வாயில் புடவையை அணிந்து ஈரமான கூந்தலில் மலர்களைச் சூடி ரமேஷன் தூக்கம் கலைந்து எழுவதற்காக அவள் காத்திருந்தாள். அவன் துயில் கலைந்து எழும்போது பத்து மணி கழிந்திருந்தது.

“ரமேஷ், உனக்கு இப்போ எப்படி இருக்கு? ஹவ் டூ யூ ஃபீல்?”

அவன் கண்களைத் திறந்ததைப் பார்த்ததும் அவள் அவனுக்கு அருகில் போய் அமர்ந்தாள். அவன் தன்னுடைய உள்ளங்கைகளில் முகத்தை வைத்தவாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். தன்னுடைய தலை கருங்கல்லால் ஆனதைப்போல அவன் உணர்ந்தான். அந்த அளவிற்கு மிகவும் கனப்பதைப்போல் இருந்தது அது.

“குளிச்சிட்டு வா. குளிச்சா நல்லா இருக்கும்.”

அவள் சொன்னாள் சொன்னதைக் கேட்கும் ஒரு குழந்தையைப் போல அவன் எழுந்து குளியலறையை நோக்கி நடந்தான். பெண்ணே, என்னை மன்னிச்சிடு. ஹரித்துவார்ல கூட உன்னை அழ வச்சுட்டேன். எவ்வளவு தடவை உன்னை நான் அழ வச்சிருக்கேன்...! என்னை மன்னிச்சுடு’ - அவன் மனதிற்குள் சொன்னான்.

ஷவரிலிருந்து மழை பொழிவதைப்போல குளிர்ச்சியான நீர் அவனுடைய தலைமீது விழுந்தது. உடம்பிலிருந்த வலி நன்கு பிழிந்து வெளியே போய்க் கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். குளியலறையை விட்டு வெளியே வந்தபோது உடம்பில் தளர்ச்சி இருந்தாலும், உற்சாகம் இருப்பதை அவனால் உணர முடிந்தது.

“உனக்குப் பசிக்கலையா? நீ சாப்பிட்டு எவ்வளவு நேரமாச்சு?”

“ஒரு யானையைச் சாப்பிடுற அளவுக்கு எனக்குப் பசி எடுக்குது.”

அவன் சிரித்தான். சிரிப்பு அவனுடைய முகத்திற்கு திரும்ப வந்திருக்கிறது. நான்கு மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு குளித்து புதிய புஷ் சட்டையும் பேண்ட்டும் அணிந்து அவன் ஒரு புதிய மனிதனாக மாறினான். குழிவிழுந்த கண்களில் ஒரு புதிய பிரகாசம் உண்டானது.

ஹோட்டலின் கீழ்தளத்தில் மேஜைக்கு எதிரெதிரே அவர்கள் அமர்ந்தார்கள். கூஜாக்களும் கோப்பைகளும் பாத்திரங்களும் மேஜையில் நிறைந்திருந்தன.

“காண்டாமிருகம், யானை- இது ரெண்டுல யாருக்கு எடை அதிகம்?”

“காண்டா மிருகத்துக்கு...”

“இல்ல...” அவள் மறுத்தாள். “யானைக்குத்தான் எடை அதிகம்.”

“காண்டாமிருகம்தான்.”

“யானைதான்...”

காண்டாமிருகம் யானை அளவுக்கு பெரிதல்ல. எனினும் யானையைவிட அதற்கு எடையும், பலமும் உண்டு.

“யானைக்குத்தான் அதிக எடையும், பலமும் இருக்கும்.”

“வாட் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்?”

அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு அரோரா அங்கு வந்தான்.

“காண்டாமிருகம்தான்.”

“யானைக்குத்தான்... மிஸ்டர் அரோரா, நீங்களே சொல்லுங்க, எதுக்கு பலமும் எடையும் அதிகம்?”

சுஜா அரோராவின் பக்கம் திரும்பினாள். அவன் வழக்கம்போல நல்ல ஆடைகளை அணிந்திருந்தான். வெள்ளை நிற சட்டையில் இளம் சிவப்பு நிறத்தில் டையும் கட்டியிருந்தான். அவளின் கேள்வியைக் கேட்டு அவன் திகைத்து நின்றான். உண்மையிலேயே எதற்கு அதிகமான எடையும் பலமும் இருக்கின்றது என்ற விஷயம் அவனுக்கே தெரியாது.

“பதில் பாரபட்சமில்லாம நடுநிலைமையில இருக்கணும், மிஸ்டர் அரோரா!”

அவன் என்னவோ சொல்வதற்காக உதடுகளை நனைத்தபோது சுஜா சொன்னாள்: “அரோரா ஒரு ஆண். அவர் வேணும்னே ஆண்கூட சேர்ந்துக்கலாம்ல...”

நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு அரோரா தன் முடிவைச் சொன்னான்.

“யானைக்குத்தான் பலம் அதிகம். அதிக எடை காண்டாமிருகத்துக்குத்தான்.”


“யூ ஆர் வெரி மச் டிப்ளமேட்டிக், மிஸ்டர் அரோரா.”

சுஜா கஞ்சி இருந்த கோப்பையைத் தனக்கு முன்னாலிருந்து தள்ளி வைத்தாள்.

“என்னை அவினாஷ்னு கூப்பிட்டா போதும், மிஸஸ் ரமேஷ்.”

அவன் கேட்டுக் கொண்டான்.

“ஆனா, உங்களோட பேரு என்ன அவினாஷ்?”

அதைக் கேட்டு அவினாஷ் அரோரா விழுந்து விழுந்து சிரித்தான்.

“என்ன சுஜா, நீ சிரிக்கவே இல்ல?”

“அது ஜோக் இல்ல. கடி...”

“ஹோ ஹோ ஹோ?”

அவினாஷ் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தான். சுஜா சொன்னாள். “லயர்...”

“என்ன சொன்னீங்க?” சுஜாவைப் பார்த்து புன்னகைத்தவாறு அவன் திரும்பிச் சென்றான். சுஜா இரண்டு கப்புகளில் தேநீரை ஊற்றினாள். வழக்கம்போல அவனுக்கு ஒரு சர்க்கரை கட்டியையும் தனக்கு மூன்று சர்க்கரைக் கட்டிகளையும் போட்டாள். ரமேஷனுக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காது.

“நான் ஒரு நார்க்கோட்டிக் அடிக்ட்...”

இனிப்பு விரும்பாததற்கு ரமேஷன் கண்டுபிடித்த காரணமது.

“நான் ஒரு நார்க்கோட்டிக் அடிக்ட் இல்ல.”

இனிப்பை விரும்புவதற்கு அவளுக்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா?

“சரி... இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்?”

தேநீர் அருந்திவிட்டு மேலே ஏறும்போது அவினாஷ் அங்கு இருந்தான். “வசதி இருந்தா நீங்க என் வீட்டுக்கு வரலாம்.”

“நாங்க மானஸாதேவியைப் பார்க்கப் போறோம், அவினாஷ்.”

சுஜா சொன்னாள். காலையிலேயே மானஸாதேவியின் மலைமீது ஏறுவதற்காக அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். ரமேஷனுக்கு அந்த விஷயத்தில் பெரிய அளவில் ஆர்வம் எதுவும் இல்லை. மலை மீது ஏறுவதற்கான தெம்பு அவனிடம் இருக்கிறதா என்ன?

“உங்க வீடு எங்கேயிருக்கு?”

“ஜ்வாலாப்பூர்ல...”

ஜ்வாலாப்பூர் ஹரித்துவாரிலிருந்து அதிகமான தூரத்திலில்லை. சொல்லப்போனால் அதையே ஹரித்துவார் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

“வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க அவினாஷ்?” சுஜா கேட்டாள்.

“அப்பா, அம்மா, தாத்தா, மனைவி, மூணு பிள்ளைங்க, தங்கச்சி, வேலைக்காரர்கள், எருமைகள், பசுக்கள், நாய்... சொல்லப்போனால் என் குடும்பம் ரொம்பவும் பெரிசு.”

“நாய் மட்டும்தான் இருக்கா? பூனை இல்லையா?” அவள் கேட்டாள்.

“இல்ல... பூனை இல்ல...” அவன் தலையை ஆட்டினான்.

“உங்களுக்குப் பூனையைப் பிடிக்காதா?”

“பூனை திருடும்.”

“நாயும்தான்.”

“இல்ல... எங்க நாய் திருடாது.”

“அப்படின்னா உங்க பூனையும் திருடாது.”

“அதுக்கு அவினாஷ்கிட்ட பூனை இல்லையே சுஜா?”

ரமேஷன் இடையில் புகுந்து சொன்னான். அவினாஷ் அவர்களுடன் சேர்ந்து மேலே ஏறிவந்தான். அவன் டில்லியைப் பற்றி கூற ஆரம்பித்தான். அங்கு பல தடவை போயிருக்கிறான். அவினாஷுக்கு ஹரித்துவாரை விட டில்லி மீதுதான் அதிக விருப்பம். அங்கு ஷகூஃபாக்களும் டிஸ்கொதேக்களும் இருக்கின்றன. மலர் கண்காட்சியும் ஸ்ட்ரிப்டீஸும் உள்ள ஹோட்டல்களும் இருக்கின்றன.

“இந்த ஹரித்துவார்ல எதுவுமே இல்ல. சோர்வு தரக்கூடிய ஊர் இது. இந்த ஹரித்துவார்ல இருந்து இருந்து எனக்கே அலுத்துப் போச்சு.”

“டில்லியில இருந்து தப்பிக்கிறதுக்கு என்ன வழின்னு பார்த்துக்கிட்டு இருக்கோம் நாங்க.”

ரமேஷனும் சுஜாவும் சொன்னார்கள். அவினாஷுக்கு கேட்பதற்கு அது ஆச்சரியமாக இருந்தது.

“அதை நான் நம்ப மாட்டேன்.”

“நீங்க சிட்டோமானியாக், அவினாஷ். நாங்க சிட்டோ ஃபோபிஸ்ட்டுகள்.”

“சுஜா சொன்னது உங்களுக்குப் புரிஞ்சதா அவினாஷ்?”

“அவினாஷ், நீங்க கிஸ்ஸோ ஃபோபா இல்லாட்டி கிஸ்ஸோ ஃபிலா?”

எதுவும் புரியாமல் திணறினான் அவினாஷ். ரமேஷன் சொன்னான்:

“நான் கிஸ்ஸோ ஃபோன்.”

“கிஸ்ஸோ ஃபோனா?”

சுஜா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது அந்த அறையெங்கும் கேட்டது.

“என்ன நீ சிரிக்கிறே? முத்தம்ன்றது ஒரு மொழிதானே?”

முத்தம் மலையாளத்தைப் போலவோ ஆங்கிலத்தைப் போலவோ உள்ள ஒரு மொழிதான்.

“எறும்புகள் கிஸ்ஸோ ஃபோன்கள். முத்தங்கள் மூலம்தான் அது ஒண்ணோடொண்ணு பேசிக்குது. நீ எறும்புகள் எப்படி நடந்துக்குதுன்னு பார்த்திருக்கியா, சுஜா?”

அவினாஷ் சுஜா, ரமேஷன் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான்.

“அப்போ... ஜ்வாலாப்பூருக்கு எப்ப வரப் போறீங்க?”

“எப்போ வேணும்னாலும்...”

“இன்னைக்கு ராத்திரி...?” அவினாஷ் ஆர்வத்துடன் கேட்டான்.

“சரி.” ரமேஷன் சொன்னான்.

“சரி.” சுஜாவும் சொன்னாள்.

“அப்படின்னா இன்னைக்கு டின்னர் ஜ்வாலாப்பூர்லதான்.”

அவினாஷ் மகிழ்ச்சி பொங்க சொன்னான். விசிலடித்தவாறு அவன் மூன்று மூன்று படிகளாகத் தாண்டி கீழே இறங்கிப் போனான். சிறிது நேரம் சென்றதும் அவன் மீண்டும் திரும்பி வந்தான்.

“மானஸாதேவியைப் பார்க்க போகணும்னா, வெயில் வர்றதுக்கு முன்னாடி கிளம்புங்க. மதிய நேரம் ஆயிடுச்சுன்னா மலைமேல உங்களால ஏறமுடியாது.”

விசிலடித்தவாறு அவன் அறையில் நடந்தான். மானஸாதேவியின் ஆலயம் மலை உச்சியில் இருந்தது. தேவியைப் பார்க்கப் போகும் பக்தர்கள் காலை நேரத்திலேயே மலைமீது ஏறிவிடுவார்கள்.

“நாங்க இதோ புறப்படுறோம். ரொம்பவும் நன்றி அவினாஷ்.”

மலைமீது ஏறிச் செல்ல வேண்டுமென்பதால் சுஜா புடவைக்குப் பதிலாக சுரிதாரும் குர்த்தாவும் அணிந்து கொண்டாள். ரமேஷன் தன் சொந்தக் கைகளால் வண்ணம் பூசிய அந்த குர்த்தாவை அவளுடைய கடந்த பிறந்த நாளுக்குக் கொடுத்திருந்தான்.

“பாத்திக் செய்யிறது எளிதா?”

அவினாஷ் அதைத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தான். டில்லியில் எல்லாருக்குமே பொதுவாக பாத்திக் வைத்தியம் உண்டு. கல்லூரிகளிலும் விருந்துகளிலும் பாத்திக் புடவைகளும் குர்த்தாக்களும் சர்வசாதாரணம்.

“கொஞ்சம் கெமிஸ்ட்ரி தெரிஞ்சா போதும். செய்யிறது எளிதுதான்.”

“அப்படின்னா எது கஷ்டமானது?”

“பெயின்ட் பண்ணுறதுதான். அதுக்கு கற்பனை அறிவு இருக்கணும்.”

ரமேஷனும் சுஜாவும் வெளியே கிளம்பினார்கள். வெளியே நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. தார் போட்ட பாதையில் வெள்ளிப் பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. வெப்பம் நிறைந்த ஊப்பர் ஸடக்கின் வழியாக டோங்காக்களை இழுத்துப் போய்க் கொண்டிருந்த குதிரைகள் மூச்சிரைத்துக் கொண்டிருந்தன.

“ஸப்ததாரா சார் ருப்யா.”

“கங்கல் தஸ் ருப்யா பச்சாஸ் பைசா.”

டோங்கா ஓட்டுபவர்களும் ரிக்ஷாக்காரர்களும் அழைத்து கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஏமாறச் செய்துவிட்டு ரமேஷனும் சுஜாவும் ஊப்பர் ஸடக்கின் வழியாக நடந்தார்கள்.

“பாபுஜீ... மெம்ஸாப்...”

ஒரு ரிக்ஷாக்காரன் அவர்கள் பின்னால் ஓடிவந்தான். லுங்கி அணிந்து, கழுத்தில் புலி நகம் கோர்த்த டாலர் ஒன்றை அவன் அணிந்திருந்தான்.

“நஹி சாஹியே நஹி.”

ரமேஷன் சொன்னதைக் கேட்காமல் அவனுக்குப் பின்னால் ரிக்ஷாவை மிதித்துக்கொண்டு அவன் வந்தான்.

“பாபுஜி- மெம்ஸாப்...”

மந்திரம் சொல்வதைப்போல அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் ஒரு இளைஞன்தான். ஒரு குதிரையின் பலம் அவனுக்கு இருந்தது. ஒரு ஃபர்லாங் தூரம் அவன் ரமேஷனையும், சுஜாவையும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.


“சொல்லுற இடத்துக்கு வருவியா?”

“நிச்சயமா, பாபுஜி.”

ரிக்ஷாக்காரன் கீழே வேகமாக இறங்கி ரமேஷனைப் பார்த்து தொழுதான். சுஜாவையும் தான். அவன் ரிக்ஷாவின் இருக்கையைத் துடைத்து சுத்தம் செய்தான்.

“விருப்பப்படுற காசைக் கொடுத்தா போதும், பாபுஜி.”

“ஏறு...”

“ரமேஷ்!”

சுஜா தயங்கி நின்றாள். ரமேஷன் ரிக்ஷாவில் ஏறிய பிறகு, அவளைக் கையைப் பிடித்து தூக்கி தனக்கு அருகில் உட்கார வைத்தான்.

“எங்கே போகணும் பாபுஜி?”

ரமேஷன் மானஸா தேவியின் மலை உச்சியைச் சுட்டிக் காட்டினான்.

“நாங்க அங்கேதான் போகணும்.”

“பாபுஜி!”

“சொல்ற இடத்துக்கு வர்றேன்னு சொன்னேல்ல...”

ரிக்ஷாக்காரன் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெலவெலத்து நின்றான். அவன் எங்கே அழுதுவிடப் போகிறானோ என்பது மாதிரி இருந்தது. ரமேஷனும் சுஜாவும் ரிக்ஷாவை விட்டு கீழே இறங்கினார்கள். பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து நீட்டியவாறு ரமேஷன் கேட்டான்:

“நாம் க்யா ஹெ தேரா?”

“ஹனுமான்.”

சுஜா அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ஹனுமான் ரூபாயை வாங்கித் தயங்கியவாறு நின்றான்.

“வாங்கிக்கோ ஹனுமான்.”

சுஜா அன்புடன் சொன்னாள். அவன் பணத்தை வாங்கி தன் மடியில் வைத்தான்.

“நீ இந்த ஊர்க்காரனா?”

“ஷோலாப்பூர்தான் என் ஊரு.”

ரமேஷனையும் சுஜாவையும் மாறி மாறி தொழுதவாறு ஹனுமான் அங்கிருந்து புறப்பட்டான்.

“டூ நாட்டி ஆஃப் யூ.”

ஹனுமான் போனபிறகு சுஜா ரமேஷன்மீது குற்றம் சொன்னாள். தொடர்ந்து உரத்த குரலில் அவள் சிரித்தாள்.

அவர்கள் ஊப்பர் ஸடக்கை விட்டு மானஸாதேவியின் மலைக்குச் செல்லும் பாதையில் திரும்பினார்கள். அந்தப் பாதையிலிருந்தே மேலே செல்லும் படிகள் ஆரம்பித்தன. சில படிகளைத் தாண்டிய பிறகு சிறிது தூரம் சமதளத்தில் பாதை போனது. மீண்டும் படிகள். மீண்டும் பாதை. மீண்டும் படிகள்... படிகளின் இரண்டு பக்கங்களிலும் வியாபாரம் செய்பவர்கள் நிறைந்திருந்தார்கள். ஒரு தட்டு நிறைய மலர்களுடன் ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். தேங்காயும், பத்தியும் விற்பனை செய்பவர்கள்... கடலை விற்பவர்கள்... இப்படி பலரும். மலர்களும் வாசனைப் பொருட்களும் மானஸா தேவிக்குத்தான். கடலை குரங்குகளுக்கு.

“மானஸாதேவிக்கு பூக்கள்...”

“மானஸாதேவிக்கு தேங்காய்...”

இரு பக்கங்களிலிருந்தும் வியாபாரிகள் அழைத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு குஷ்ட ரோகியும் இருந்தான். பாதிக்கு மேல் இல்லாமற் போன விரல்களால் பூக்களைக் கிள்ளி இலைகளில் அவற்றைப் பொருத்திக் கொண்டிருந்தான்.

“நல்ல குஷ்டரோகி. அவன் பிச்சை எடுக்கலையே?” சுஜா சொன்னாள்.

குஷ்டரோகியின் பூக்களையும் பக்தர்கள் வாங்கினார்கள். அங்கு அவலட்சணத்திற்கும், நோய்க்கும் இடமில்லை. அங்கு இருந்தது பக்தி மட்டும்தான்.

“பேட்டா!”

படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் யாரோ அழைத்தார்கள். ரமேஷன் திரும்பிப் பார்த்தான். ஒரு வயதான கிழவி நின்றிருந்தாள். நடுங்கிக் கொண்டிருந்த கைகளில் பூங்கொத்துடன் அவள் வந்து கொண்டிருந்தாள்.

“தேவிக்கு இதை கொடு மகனே. அம்மா என்னால மலைமேல் ஏறிவர முடியாது.”

அவள் பூங்கொத்தை அவனிடம் நீட்டினாள். கிழவி மலை உச்சியில் இருக்கும் தனக்கு மிகவும் பிடித்த மானஸாதேவியின் ஆலயத்திற்கு நேராகப் பார்த்து தன்னுடைய கைகளைக் கூப்பி என்னவோ மந்திரங்களைச் சொன்னாள். அப்போது அவள் தொண்டை நடுங்கியது. கண்கள் கலங்கின. சிறிது நேரம் கழித்து கண்களைக் கைகளால் ஒற்றிக்கொண்டு அவள் திரும்பி நடந்தாள். அவள் மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ரமேஷன். அவள் மனதில் என்னவோ பெரிய கவலை இருக்கிறது. இந்த வயதிலும்...

ரமேஷனும் சுஜாவும் படிகளில் ஏற ஆரம்பித்தார்கள்.

“ரமேஷ், மானஸாதேவிகிட்ட நாம என்ன வேண்டிக்கணும்?”

“மன அமைதி தரும்படி...”

பணமோ நீண்ட ஆயுளோ எதுவும் வேண்டாம். கொஞ்சம் மன அமைதி.... அது மட்டும் போதும்.

“இருபது, இருபத்தொண்ணு, இருபத்திரெண்டு...”

படிகளில் ஏறும்போது சுஜா எண்ணிக் கொண்டிருந்தாள். முதல் படிகளில் ஏறி முடிந்தபிறகு சமதளத்தை அவர்கள் அடைந்தார்கள். அங்கு தேவிக்காக மலர்கள் வாங்கினார்கள். ‘மானஸாதேவி, நாங்க வந்துக்கிட்டு இருக்கோம். மலர்கள், வாசனை திரவியங்கள் இவற்றோடு நாங்க உன்னோட சந்நிதியைத் தேடி வர்றோம்.” - அவர்கள் தங்கள் மனதிற்குள் கூறிக்கொண்டார்கள்.

அவர்களுக்குப் பின்னால் வேறு சில பக்தர்களும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கிராமத்து மனிதர்களும் நகரவாசிகளும் கலந்திருந்தார்கள். வயதானவர்களும் குழந்தைகளும் இருந்தார்கள். உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள்… இப்படிப் பலரும் அங்கு இருந்தார்கள். கைகளில் பிரசாதத்தை ஏந்தியவாறு உதடுகளில் பிரார்த்தனையுடன் அவர்கள் மலையில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

அதிகாலை நேரத்திலேயே மலைமீது ஏறிச் சென்றவர்கள் மானஸாதேவியைத் தொழுதுவிட்டு, கூட்டமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

“முப்பத்தொண்ணு, முப்பத்திரெண்டு, முப்பத்து மூணு...”

சுஜா படிகளை எண்ணிக் கொண்டிருந்தாள். இரு பக்கங்களிலும் பிச்சைக்காரர்கள் ஏராளமாக இருந்தார்கள். தீராத நோய்களைக் கொண்டவர்களும் வயதானதால் பாதி இறந்த நிலையில் இருந்தவர்களும் அவர்கள் மத்தியில் இருந்தார்கள். அங்கு அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களின் பிச்சை பாத்திரங்களில் நாணயங்களைப் போட்டவாறு ரமேஷனும் சுஜாவும் மலையில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

மலை மீது ஏறிச் செல்லும் பக்தர்களின் கோஷங்களும் மலையிலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் எழுப்பிய கோஷங்களும் அங்கு கேட்டன. அவர்களுக்கு மத்தியில் யாருக்கும் தெரியாதவர்களான அவர்களின் புனிதப்பயணம் தொடர்ந்தது.

“பாரு... பாரு...”

சுஜா சுட்டிக் காட்டினாள். தூரத்தில் ஆலயம் இருக்குமிடத்தில் ஒரு மரம் இருந்தது. அந்த மரம் இரத்த சிவப்பு நிறத்தில் இருந்தது. அடிமரம், கிளைகள் எல்லாமே சிவப்பு நிறத்தில்தான் இருந்தது. சிவப்பு மரத்தைப் பற்றி தாவரவியலில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா?

மானஸாதேவியின் மலை பச்சை நிறத்தால் போர்த்தப் பட்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வளர்ந்து கம்பீரமாக நின்றிருக்கும் மரங்களும், செடி, கொடிகளும் தெரிந்தன. பரந்து கிடக்கும் பச்சை நிறத்திற்கு மத்தியில் அந்தச் சிவப்பு மரம் தனியாகத் தெரிந்தது. ‘மலை உச்சியை அடைந்ததும், முதலில் அந்த மரத்தைப்போய் பார்க்கணும். அதோட இரத்தச் சிவப்பு இலைகளைப் பறிச்சிட்டு வரணும். முடிஞ்சா அந்த மரத்தோட கம்புகளையும்தான்...’  - அவர்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டார்கள்.

ஹரித்துவாரில் முதலில் பார்த்தது அசாதாரணமான காட்சி. திரிசூலமேந்தி மண்டை ஓட்டை அணிந்து கொண்டிருந்த அந்த உருவம் இரண்டாவது காட்சி- இந்த சிவப்பு மரம்.


அந்த உருவத்தை சுஜா பார்க்கவில்லை. அதைத் தேடிப் பிடித்து அவளுக்குக் காட்ட வேண்டும். ஒன்றியிருந்து ஏராளமாகக் கிளை விட்டுப் பிரிந்து செல்லும் பாதைகளில் ஏதாவதொன்றில் எங்காவது ஒரு இடத்தில் நீளமான நாக்கை வெளியே தொங்க விட்டுக் கொண்டு, திரிசூலமேந்தி, மண்டையோடு அணிந்து அந்த உருவம் இப்போது நடந்து கொண்டிருக்கும்.

“நூற்றுப் பதினெட்டு, நூற்றுப் பத்தொன்பது, நூற்றி இருபது...”

சுஜா இப்போதும் படிகளை எண்ணிக் கொண்டிருந்தாள். எந்த வித பிசகும் இல்லாமல் தனக்கு முன்னால் இருக்கும் இந்தப் படிகள் அவ்வளவையும் அவளால் சரியாக எண்ணிவிட முடியுமா? அவர்கள் மிதித்து ஏறிக் கொண்டிருந்த படிகளில் மற்றவர்கள் ஏறி வந்து கொண்டிருந்தார்கள். கீழே ஹரித்துவார் கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகிக் கொண்டு வந்தது. எங்கு பார்த்தாலும் பரந்து கிடக்கும் கட்டடங்களின் மேற்கூரைகள் தெரிந்தன.

“இருநூறு...”

சுஜா ஒரு படி மீது அமர்ந்தாள். கையில் பிடித்திருந்த பூங்கொத்தை மடியில் வைத்தவாறு அவள் சொன்னாள். “என்னால முடியாது.”

அவளைவிட சில படிகள் பின்னாலிருந்த ரமேஷன், அவளுக்கு அருகில் வந்ததும் நின்றான். மூச்சிரைத்ததால் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்த அவள் முதுகை அவன் தன் விரல்களால் வருடினான். அப்போது குர்த்தாவுக்குள் அவள் அணிந்திருந்த பிரேஸியர் அவள் விரல்களில் பட்டது.

மானஸாதேவியின் ஆலயம் மலை உச்சியில் தூரத்தில் தெரிந்தது. இன்னும் எத்தனையோ படிகளை அவர்கள் கடக்க வேண்டும். இன்னும் எவ்வளவு தூரம் அவர்கள் நடக்க வேண்டி இருக்கிறது.

“எழுந்திரு...”

அவன் அவள் கையைப் பிடித்து எழ வைத்தான். மடியிலிருந்த பூங்கொத்தை எடுத்து கையில் வைத்தவாறு மீண்டும் அவள் படிகளில் ஏற ஆரம்பித்தாள்.

“இருநூற்றாண்ணு, இருநூற்று ரெண்டு, இருநூற்று மூணு.”

பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். இனி எங்கு அமரக்கூடாது. இனி ஓய்வு என்றால் அது தேவியின் சந்நிதியில் மட்டுமே.

கீழே கங்கை நதி கயிறைப் போல நீளமாகத் தெரிந்தது.

படிகள் முடிந்தன. இனிமேல் மரங்களுக்கு நடுவிலும் பாறைக் கூட்டங்களுக்கு நடுவிலும் போய்க் கொண்டிருக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்து போகவேண்டும். படிகள் முடியும் இடத்தில் ஒரு ஆள் சிவப்புக் கயிறுகள் விற்றுக் கொண்டிருந்தான். ரமேஷனும் சுஜாவும் ஆளுக்கொரு கயிறை வாங்கினார்கள்.

மரங்களுக்குக் கீழே பர்ணசாலைகள் அமைத்து சன்னியாசிகள் இருந்தார்கள். சிலர் தேவியின் படங்களை வைத்துக் கொண்டு பிச்சை கேட்டார்கள். மேலே எங்கோ யாரோ சமஸ்கிருதத்தில் சுலோகங்களைக் கூறிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. மலைமீது ஏறிக்கொண்டிருந்த சன்னியாசிகளும் மலைமேலிருந்து கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்த சன்னியாசிகளும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்ளும்போது “ஜெய்சங்கர்!” என்று சொல்லிக் கொண்டார்கள்.

மரக்கிளைகளில் குரங்குகள் இங்குமங்குமாகத் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. ஆட்களைப் பார்க்கும்போது அவை குதித்து கீழே இறங்கின. சுஜா ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டு குதித்து கீழே இறங்கின. சுஜா ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டு குரங்குகளுக்கு கடலையைத் தின்னக் கொடுத்தாள். அவை அவளைச் சுற்றி நடந்தன. அவள் ஒரு குரங்குக் குட்டியைத் தூக்கி மடியில் வைத்துக் கொஞ்சினாள்.

“ரிகர்சல் பார்க்குறியா?”

“வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. தெரியுதா?”

சுஜாவின் முகம் சிவந்தது. குரங்குக் குட்டியை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவள் ஏதோ ஒரு தாலாட்டுப் பாடலின் ஆரம்ப வரிகளை முணுமுணுத்தாள்.

அவர்கள் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தபோது சமஸ்கிருத ஸ்லோகங்கள் தெளிவாகக் கேட்டன.

“மாம் ச யோவ்யபிசாரேண...”

மேலே பாம்புகளைப் போல பின்னிக்கிடந்த கொடிகளுக்குக் கீழே ஒரு வயதான சன்னியாசி அமர்ந்திருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அந்த மனிதரின் தலைமுடி சிக்குப் பிடித்துக் காணப்பட்டது. ஒல்லியாக இருந்த அவருடைய உடம்பில் கோவணத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. நடுங்கிக் கொண்டிருந்த அவருடைய கைகளில் ஏதோ ஒரு பழைய நூல் இருந்தது.

‘ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹ

மம்ருதஸ்யாவ்யயஸ்ய ச

சாஸ்வதஸ்ய ச தர்மஸ்ய

சுகஸ்வை காந்திகஸ்ய ச’

நடுங்கிக் கொண்டிருந்தாலும் இனிமையான குரல் அவருடையது. முன்னால் விரித்திருந்த காவித்துணியில் பணத்தைப் போட்டவாறு பக்தர்கள் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சன்னியாசிக்கு முன்னால் மண்ணோடு சேர்ந்து இருந்த ஒரு பாறை மீது ரமேஷனும் சுஜாவும் அமர்ந்தார்கள். சன்னியாசி அவர்களைக் கவனிக்கவில்லை. இந்த பூமியில் தன்னுடைய வேலை எதுவுமில்லை- பழமையான அந்த நூலிலிருந்து சுலோகங்களை வாசிப்பதைத் தவிர என்பது மாதிரி இருந்தது சன்னியாசியின் செயல். தளர்ந்துபோன தொண்டைக்குள்ளிருந்து நடுங்கும் குரலில் சுலோகங்கள் புறப்பட்டு வந்தன.

‘ந தத் பாஸயதே ஸூர்யோ

ந சஸாங்கோ ந பாவகஹ்

யத் கத்வா ந நிவர்த்தந்தே

தத்வாம பரமம் மம’

புருஷோத்தம யோகம் முடிந்தவுடன் அவர்கள் எழுந்தார்கள். இனியும் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய தூரம் அதிகமிருந்தது. ஒற்றையடிப்பாதை வழியாக மேல் நோக்கி ஏறும்போது பாறைகளில் காலடிச் சுவடுகள் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். எண்ணிக்கையில் அடங்காத பக்தர்கள் பாறைகளின் மேல் தங்களின் காலடிச் சுவடுகளைப் பதித்துவிட்டிருந்தார்கள்.

வெயிலில் கறுத்துப்போன முகத்துடன், வியர்வையில் நனைந்து கடைசியில் அவர்கள் மானஸாதேவி ஆலயத்தை அடைந்தார்கள். கடைசியாக இருந்த படிகளைக் கடந்தவுடன் ஒரு தளர்ந்துபோன குதிரையைப் போல ரமேஷன் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் மலைமீது ஏறி வந்ததால் தளர்ந்து போய்க் காணப்பட்ட பக்தர்கள் இங்குமங்குமாய் சிதறிக் கிடந்தார்கள். கடலைக்காக குரங்குகள் ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தன.

மலர்களுடனும் வாசனைப் பொருட்களுடனும் அவர்கள் ஆலயத்திற்கு முன்னால் போய் நின்றார்கள். ‘மானஸாதேவி, இதோ நாங்க வந்துட்டோம். நகரங்களையும், கிராமங்களையும் கடந்து, நதிகளைக் கடந்து மலை மேல ஏறி, இதோ நாங்க உன்னோட திருச்சந்நிதியில் நின்னுக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு வழியைக் காட்டு’ - அவர்கள் மனதிற்குள் வேண்டினார்கள். எரிந்து கொண்டிருந்த தீபங்களுக்கப்பால் கருணை பொழியும் கண்களில் நிரந்தரப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் மானஸாதேவி. ஹோம குண்டத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் மலர்களை தேவியின் திருவடிகளில் சமர்ப்பித்தார்கள். வாசனைப் பொருட்களை ஹோம குண்டத்தில் போட்டார்கள். ஆலயத்தில் மணிகள் ஒலித்தன. பக்தர்கள் வெள்ளத்தில் அறியப்படாத இரண்டு நிழல்களாக அவனும் அவளும் ஆலயத்தைச் சுற்றி வந்தார்கள்.


ரமேஷன் டில்லியைப் பற்றி நினைக்கவில்லை. எங்கோ தூரத்தில் அவனுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய தாயையும் எந்நேரமும் தன்னுடைய நிழலாக தன்னுடனேயே இருக்கும் இளம்பெண்ணையும் அவன் மறந்துபோனான். தன்னையே மறந்துவிட்ட அந்த நிமிடத்தில் அவனுடைய மனதில் ஹோம குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பும் மணியோசையும் மட்டுமே இருந்தன. தன்னுடைய கால்கள் தடுமாறுவதைப்போல் அவன் உணர்ந்தான்.

“பாரு...”

ஹோம நெருப்பிலும் மணியோசையிலும் மூழ்கி எல்லாவற்றையும் மறந்துவிட்டு நின்றிருந்த அவனை அவளுடைய குரல் சுயஉணர்வுக்குக் கொண்டுவந்தது.

“ம்...?” திடுக்கிட்டு அவன் கேட்டான்.

“பாரு...”

தன்னுடன் மிக நெருக்கமாக நடந்து கொண்டிருக்கும் இளம்பெண்ணை யார் என அவன் அறிந்து கொண்டான். அவள் சுட்டிக்காட்டிய பக்கம் அவன் பார்த்தான். சிவப்பு மரம்...

எண்ணெய்க் கறை படிந்த படிகளில் இறங்கி அவர்கள் மரத்தை நோக்கி நடந்தார்கள். மலைச்சரிவில் நடந்து வரும்போது ஆச்சரியத்துடன் பார்த்து நின்ற சிவப்பு நிற மரம் இதோ அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. அது ஒரு சாதாரண மரம்தான். எல்லா மரங்களையும் போல அதுவும் பச்சை நிறத்தில் தான் இருந்தது. ஆனால், காலம் காலமாக பக்தர்கள் கட்டிய சிவப்பு கயிறுகள் மரத்திற்கு சிவப்பு நிறத்தை தந்தன. கீழிருந்து உச்சிவரை சிவப்புக் கயிறுகள் கட்டப்பட்ட மரம்.

மரத்தடியில் தேவியின் சிலை இருந்தது. எண்ணெயின் பளபளப்பு தெரிந்த சிலையின் மீதும் சிவப்பு கயிறுகள்...

மலைச்சரிவில் வரும்போது வாங்கிய சிவப்பு கயிறுகளை அவன் வெளியே எடுத்தான். அவர்கள் கயிறுகளுடன் மரத்திற்கருகில் நெருங்கி நின்றார்கள்.

“நாம என்ன வேண்டி பிரார்த்திப்பது?”

ரமேஷன் கேட்டான். கயிறை அந்தப் புனித மரத்தில் கட்டும்போது மனதில் எதையாவது நினைக்கவேண்டும். அப்படி நினைக்கும் காரியத்தை தேவி கட்டாயம் நிறைவேற்றுவாள் என்பது பொதுவான நம்பிக்கை.

“சொல்லு சுஜா.”

அவள் பதிலேதும் கூறாமல் தலையைக் குனிந்து நின்றிருந்தாள். தேவியிடம் எதை வேண்டி நிற்க வேண்டும் என்பதை அவள் முன்கூட்டியே தீர்மானம் செய்யாமலா இருந்திருப்பாள்? அது என்னவாக இருக்கும்? தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதாக இருக்குமா? தன் தந்தையைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அல்சர் நோயை இல்லாமற் செய்ய வேண்டும் என்பது அவளின் வேண்டுகோளாக இருக்குமா?

“நீ எதையாவது மனசுல நினைச்சு வச்சிருக்கியா?”

அப்போதும் அவள் மவுனமாக தலைகுனிந்து கொண்டுதான் இருந்தாள். அவள் முகத்தில் அவன் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு வெளிப்பாட்டைப் பார்த்தான். மயிலிறகையொத்த அழகான அவள் கண்கள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகளின் ஓரத்தில் வெட்கத்தின் தோற்றம் தெரிந்தது.

தான் எதை மனதில் நினைத்து பிரார்த்திப்பது? ஒரு நிமிடம் அவன் யோசித்தான். ‘எங்கோ ஒரு மூலையில் தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்தாய்... எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய்... அவங்களுக்காக இல்லாம வேற யாருக்காக நான் பிரார்த்திப்பேன்?’- அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

“நான் என் தாய்க்காக வேண்டிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.”

அப்போதும் அவள் பேசாமல் இருந்தாள். கையில் சிவப்பு நிற கயிறை வைத்துக் கொண்டு அவள் மரத்தடியில் நின்றிருந்தாள். கையை உயர்த்தி மரத்தில் எட்டும் தூரத்திலிருந்த ஒரு கிளையில் அவள் கயிறைக் கட்டியபோது, அவள் உதடுகள் மெதுவான குரலில் முணுமுணுத்தன. கண்கள் மூடிக் கொண்டன.

“நீ என்ன வேண்டிக்கிட்டே?”

அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அவளின் தோளில் கை வைத்து அவன் வற்புறுத்திக் கேட்டான்: “சொல்லு... உன் அப்பாவுக்காக வேண்டினியா?”

“இல்ல” என்று அவள் தலையை ஆட்டினாள்.

“தேர்வுல முதல் வகுப்புல தேர்ச்சி பெறணும்னு வேண்டினியா?”

“இல்ல...”

“பிறகு?”

அவள் மெதுவாகத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். மை இட்டு கறுப்பாக்கிய கண்களில் எரிந்து கொண்டிருந்த தீபங்கள் தெரிந்தன.

“எனக்குப் புரியுது. முட்டாள் பெண்ணே!”

தலைகுனிந்து நின்றவாறு அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

கையில் கயிறை வைத்துக் கொண்டு அப்போதும் ரமேஷன் தயங்கியவாறு நின்றிருந்தான். தேவியிடம் வேண்டிக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. எல்லாவற்றையும் எப்படி தேவியிடம் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தன் தாய்க்கு வேண்டியோ சுஜாவிற்கு வேண்டியோ தேவியிடம் வேண்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.

“சீக்கிரம் ரமேஷ்.”

சுஜா அவனைப் பார்த்துச் சொன்னாள். ஆட்கள் கயிறுகளுடன் அடுத்தடுத்து வருவதும் போவதுமாக இருந்தனர். உதட்டில் பிரார்த்தனையைச் சொல்லியவாறு அவர்கள் கயிறுகளைக் கட்டினார்கள். இலட்சக்கணக்கான கயிறுகளின் எடையைத் தாங்க முடியாமல் மரத்தின் கிளைகள் தரையை நோக்கி வளைந்தன.

“தேவி, வியட்நாம்லயும் பயாஃப்ராய்லயும் இரத்தம் சிந்துவதை நிறுத்தக்கூடாதா?

ரமேஷன் கயிறைக் கட்டினான்.

ஒற்றையடிப் பாதை வழியாக படர்ந்து கிடக்கும் வேர்களைத் தாண்டி, பாறைகளுக்கு மத்தியில் அவர்கள் மெதுவாகக் கீழே இறங்கினார்கள். ‘மானஸாதேவி, விடைகொடு என்றைக்காவது இன்னொருமுறை நான் உன்னோட சந்நிதிக்கு வருவேன். இந்தப் பிறவியில் அல்லது இன்னொரு பிறவியில் மனிதனாக இல்லைன்னா வேற ஏதாவது ஒரு பிறவியா... கட்டாயம் நான் வருவேன்!”

‘த்யாயதோ விஷயான் பும்ஸஹ்

சம்கஸ்தேஷபுஜயத்ரே

சம்கால் சஞ்ஜாயதே காமஹ்

காமால் க்ரோதோபி ஜாயதே’

கீழே சன்னியாசி இப்போதும் சுலோகங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சுலோகங்களைச் சொல்லிச் சொல்லி அவருடைய தொண்டை வற்றிப் போயிருந்தது. சுலோகங்கள் பலவீனமான குரலில் வந்து கொண்டிருந்தன.

“அவர் இப்போ சொன்ன சுலோகத்துக்கு அர்த்தம் என்ன?”

அவன் கையைப் பிடித்துக் கொண்டு மிகவும் இறக்கமாக இருந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கும்போது அவள் கேட்டாள்.

‘அந்த ஸ்லோகத்தின் அர்த்தமா, இளம்பெண்ணே? எவ்வளவோ வருடங்களாக அது என் நாக்கு நுனியில இருந்துக்கிட்டு இருக்கு. பல வருடங்களுக்கு முன்னாடியே என் தாய் அந்த ஸ்லோகங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்காங்க’ என்று எண்ணிக்கொண்ட அவன் சொன்னான்:

“எனக்குத் தெரியாது. நீ தெரியாமலே இருக்குறதுதான் நல்லது.”


8

மானஸாதேவி மலை அடிவாரத்தின் வழியாக ஏதோ ஒரு வண்டி ஓசை எழுப்பியவாறு கடந்து போய்க் கொண்டிருந்தது. அப்போது மரக்கிளைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிளிகள் கூட்டமாக பறந்து வானத்தில் சென்றன. பறவைகளின் சிறகடிப்பு சத்தம் கேட்டது. ஆலயத்திலிருந்து வரும் பாதைக்கு தூரத்தில் மனிதர்களின் காலடிகள் பதிந்திராத அடர்ந்த புதர்கள் ஒன்றில் புற்களின் மீது படுத்திருந்த ரமேஷன் தன் கண்களைத் திறந்தான்.

“சுஜா!”

“ம்...?”

“ஏதோ ஒரு வண்டி...”

“ம்...”

புற்பரப்பை விட்டு அவள் எழுந்து நின்றாள். அவள் முகம் வியர்த்திருந்தது. தலைமுடி அவிழ்ந்து சிதறிக் கிடந்தது. அவள் கழுத்திலும் கூந்தலிலும் அவனுடைய ஆஃப்டர் ஷேவ் லோஷனின் வாசனை அடித்தது. அவனுடைய மார்பில் அவள் பயன்படுத்தும் ஷாம்பு வாசனை வந்தது.

“மானஸாதேவி மன்னிப்பாளா?”

“தேவிக்கு விருப்பமில்லாதது எதையும் நாம செய்திடலையே சுஜா!”

ஒரு புன்னகையுடன் அவள் எழுந்து சற்று தூரத்தில் போய் அமர்ந்தாள். கொடிகளையும் மரக்கிளைகளையும் கொண்டு இயற்கை உண்டாக்கிய ஒரு பர்ணசாலை அங்கு இருந்தது. அங்கு அமர்ந்துகொண்டு அவள் தன் தலைமுடியை வார ஆரம்பித்தாள்.

‘த்யாயதோ விஷயான் பும்ஸஹ்’

மல்லாக்கப் படுத்தவாறு சிகரெட் புகையை மேலே பரவவிட்டுக் கொண்டு ரமேஷன் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

“நான் டில்லியை நினைக்கிறேன்.”

மலையின் அடிவாரத்தில் வண்டி போய்விட்டாலும் அதன் இரைச்சல் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. முஸூரியிலிருந்தோ டேராடூனிலிருந்தோ டில்லிக்குப் போகும் வண்டியாக அது இருக்கும். அந்த வண்டி நகரத்தைப் பற்றிய நினைவுகளை அவனிடம் எழுப்பியது.

“ரமேஷ்!”

“ம்...?”

“ஹரித்துவார், டில்லி- இதுல உனக்கு எது ரொம்பப் பிடிச்சிருக்கு?”

அவனிடமிருந்து சற்று தூரத்தில் பச்சைப் புல் வெளியில் அமர்ந்து கொண்டு அவள் கேட்டாள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்வது சற்று சிரமமான விஷயம்தான். சில நேரங்களில் டில்லியை மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் அதைப் பிடிக்கவே பிடிக்காது. ஹரித்துவாருக்கு இப்போதுதானே அவன் வந்திருக்கிறான். அதனால் அதை வெறுக்கக்கூடிய அளவிற்கு அவன் இன்னும் போகவில்லை. இரண்டு நாட்கள் முழுமையாக அவன் அங்கு இருந்தால், ஹரித்துவாரை வெறுத்தாலும் வெறுக்கலாம். “நான் இந்த உலகத்துல நிரந்தரமா விரும்புற ஏதாவது இருக்கா?” - சிகரெட் புகையை ஊதி சுற்றிலும் பரவவிட்டவாறு அவன் யோசித்தான். தன் தாயைப்பற்றி நினைக்கும்பொழுது சில நேரங்களில் பாசஉணர்வில் சிக்கி அவன் நிலைகுலைந்து போய் விடுவதும் உண்டு. சில நேரங்களில் எதுவுமே தோன்றாது. மனதில் வெறுப்பு மண்டிக்கிடக்கும்? சுஜா? நாளை அவளைப் பற்றி நினைக்கும்போதுகூட வெறுப்பு தோன்றலாம். ‘என்னை என்னாலயே புரிஞ்சிக்க முடியலையே!’- அவன் புற்களின் மீது குப்புறப்படுத்தவாறு அவளைப் பார்த்தான். ‘ஆனா, இந்த நிமிடத்துல நான் உன்னை விரும்புறேன். இந்த பூமியிலேயே நான் ரொம்ப விரும்புற மனிதப்பிறவி நீதான்’ என்றான் அவன்.

“இந்த வாழ்க்கையில நான் சம்பாதிச்சது என்ன?’ - பச்சைப் பசேலென விரிந்து கிடந்த புற்களின் மீது படுத்துக் கொண்டு நீலப்புகையில் மூழ்கிக் கிடந்த அவன் யோசித்தான். ‘சம்பாதிச்சது என்ன? ஆயிரத்து நானூறு ரூபா சம்பளம் கிடைக்கிற ஹிரோஸியோட வேலையா? வாங்கப்போற காரா? போன குளிர்காலத்துல லத்தீன்’ அமெரிக்காவுக்குப் போய் வந்த பயணமா? அம்மாவோட அன்பா?’ - அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

“ரமேஷ், நீ என்ன சிந்திக்கிறே?”

பச்சைப் புற்களின் மீது பரவிக் கொண்டிருந்த சிகரெட் புகையிலிருந்து முகத்தை உயர்த்தாமல் அவன் சொன்னான்: “உன்னைப் பற்றித்தான்...”

“என்னைப்பற்றியா?”

“ஆமா... என் வாழ்க்கையிலேயே என்னோட ஒரே சம்பாத்தியம் நீதான்.”

பர்ணசாலையைவிட்டு அவள் எழுந்து ஓடிவந்தாள். அவளுடைய கண்கள் எப்போதும் விரிவதைவிட பெரிதாக விரிந்தன. வியர்வை அரும்பியிருந்த தன்னுடைய முகத்தை அவனுடைய பின்கழுத்தில் வைத்து அவள் அழுத்தினாள். ‘இல்ல... நான் எதையும் சம்பாதிக்கல. இந்த வாழ்க்கையில நான் ஒண்ணுகூட சம்பாதிக்கல’ - அவனுக்குத் தோன்றியது. ‘நான் அடைய விரும்பினேன். அவ்வளவுதான். அடைஞ்சேன்னு நினைக்கிறது ஒரு தோணல். அதுதான் உண்மை’ - அதைச் சொல்வதற்காக அவன் தயாரானபோது உப்பு படர்ந்திருந்த அவளுடைய முகம் அவனுடைய வாயை முழுமையாக மூடி முடித்திருந்தது.

“ரமேஷ், உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.”

அது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆயிரம் முறைகளாவது அதை அவனிடம் கூறியிருப்பாள். அதற்கேற்றபடி நடந்தும் காட்டியிருப்பாள். அவனிடமிருந்து எழுந்த அவள் சற்று தூரத்திலிருந்த ஒரு மரத்திற்குக்கீழே போய் நின்றுகொண்டு சொன்னாள்: “ரமேஷ், உன்னை எனக்கு ரொம்பவும் பிடிக்குது.”

‘அப்பாவிப் பொண்ணு!’

அவன் தனக்குள் கூறிக்கொண்டான். வானத்தைப் பார்த்தவாறு படுத்தவாறு இன்னொரு சிகரெட்டை எடுத்து அவன் கொளுத்தினான். மேலே வானம் அடர்த்தியான நீல நிறத்தில் காட்சியளித்தது. மெதுவாகப் புகையை ஊதியவாறு படுத்திருந்த அவன் விருப்பப்பட்டான்: ‘இந்த வானத்தோட ஒரு பகுதியா நான் இருக்கக்கூடாதா? இந்த நீலக் கடலோட ஒரு துளியா நான் இருக்கக்கூடாதா?’

அவனுடைய கண்கள் மீண்டும் மூடின. எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு, குரங்குகளுடனும் கிளிகளோடும் பேசி முடித்துவிட்டு திரும்பிவந்த சுஜா அவனுக்கருகில் முழங்காலிட்டு அமர்ந்து சொன்னாள்: “ரமேஷ், நீ என் உயிர்...”

பசி தோன்றியபோது அவர்கள் புதரைவிட்டு வெளியே வந்து ஒற்றையடிப்பாதை வழியாக அடிவாரத்தை நோக்கி நடந்தார்கள். அப்போது ஒன்றோடொன்று நெருக்கமாக நின்றிருந்த இரண்டு சிவலிங்கங்களை அவர்கள் பார்த்தார்கள். மஞ்சளும், எண்ணெயும் படிந்திருக்கும் சிவலிங்கங்களுக்கு முன்னால் ஒரு கரிந்துபோன மண்விளக்கு இருந்தது.

“இது நானும் நீயும், ரமேஷ்...”

அவள் சிவலிங்கங்களுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தாள். தயங்கியவாறு அந்த சிவலிங்கங்களில் ஒன்றின் மீது அவள் தன் கையை வைத்தாள். “நானும் நீயும்தான் இந்த சிவலிங்கங்கள்...” என்று கூறியவாறு அவள் அவற்றை இறுக அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பில் முழுமையான அன்பு இருந்தது.

மலையைவிட்டு எவ்வளவு இறங்கினாலும், அது முடிவது மாதிரியே தெரியவில்லை. கீழே இறங்குவது மேலே ஏறுவதைவிட மிகவும் கஷ்டமாக இருந்தது. சிறிது சறுக்கினால்கூட தலைகீழாக கவிழ்ந்து மலையின் அடிவாரத்தில் போய் விழுந்து உயர்விட வேண்டிய சூழ்நிலைதான் உண்டாகும். எண்ணிக்கையிலடங்காத பக்தர்களின் பாதச்சுவடுகள் பதிந்த ஒற்றையடிப்பாதை வழியாக அவர்கள் கீழ்நோக்கி இறங்கினார்கள். ஹரித்துவாரின் கட்டடங்கள் இங்கிருந்து நன்றாகத் தெரிந்தன. தூரத்தில் உச்சி வெயிலில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதி... மரங்களுக்கப்பால் அது வெயிலில் தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.

“ஒண்ணு, ரெண்டு, மூணு...”

படிகளில் இறங்கும்போது சுஜா எண்ணத் தொடங்கினாள்.

கடைசி படியில் இறங்கி அவள் பாதையில் நடந்தபோது ஒரு பரிதாபமான குரல் கேட்டது.

“பிள்ளைகளே...”

அவர்கள் முன்பு பார்த்த வயதான கிழவிதான். பாதையோரத்தில் நின்று கொண்டிருந்த அந்தக் கிழவி அவர்களை நெருங்கி வந்தாள்.,

“தேவிக்கு பூக்களைக் கொடுத்தாச்சா பிள்ளைகளே!”

முணுமுணுக்கும் பலவீனமான, நடுங்கும் குரல்.

“ஆமா, அம்மா.”


அந்தக் கிழவி முதுகைச் சிறிது உயர்த்தி ரமேஷனையும் சுஜாவையும் பார்த்த அவள் வாழ்த்துவதைப் போல கைகளை உயர்த்தினாள்.

“பிள்ளைகளே, உங்களை தேவி காப்பாற்றட்டும்.”

மலை உச்சியில் தெரிந்த மானஸாதேவியின் ஆலயத்தைப் பார்த்தவாறு ஒரு நிமிடம் அவள் நின்றாள். குழி விழுந்த கண்களில் மெதுவாகக் கண்ணீர் திரண்டு சுருக்கங்கள் நிறைந்த கன்னங்களில் வழிந்தது.

“அம்மா!”

“ஒண்ணுமில்ல... ஒண்ணும்...” தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்த அந்தக்கிழவி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அந்தக் கிழவி யார்? அவளுக்கு என்ன கவலை? அவள் நடந்து போவதை ரமேஷனும், சுஜாவும் பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.

மீண்டும் ஊப்பர் ஸடக். குதிரைகளின், மனிதர்களின் வியர்வை விழுந்து கொண்டிருந்த பாதை. தளர்ந்துபோன ரிக்ஷாக்காரர்களும், குதிரைகளும். இனி எந்தப் பக்கம் போவது என்ற சிந்தனையுடன் அவர்கள் பாதையோரத்தில் நின்றிருந்தார்கள். பார்ப்பதற்கு இனியும் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. குஸாகாட், நீலதாரா, சப்தரிஷி ஆஸ்ரமம், சப்ததாரா, பீம்கோடா, சர்வணநாதா ஆலயம், அஞ்சனாதேவி ஆலயம், ஸதீதேவி ஆலயம், ரக்ஷா ஆலயம்- சொல்லப்போனால் பிரம்ம குண்டத்தைக் கூட அவர்கள் இன்னும் பார்க்கவில்லை.

எல்லாவற்றையும் பார்ப்பதற்கு இனியும் ஒன்றரை நாட்கள் மட்டுமே இருக்கின்றன. நாளை இரவு முஸூரி எக்ஸ்பிரஸ் அவர்களைத் தேடி ஹரித்துவாரில் வந்து நிற்கும். அதற்கு முன்பு அவர்கள் எல்லாவற்றையும் பார்த்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புள்ளது.

“பீம்கோடாவைப் பார்க்கப் போகலாம்.”

ரமேஷன் தீர்மானித்தான். பீம்கோடா அங்கிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்தது- ரிஷிகேஷ் போகும் சாலையில் ஏதாவது சாப்பிட்டு பசியை அகற்றிவிட்டு அங்கு போகலாம் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

பாதையைக் குறுக்காகக் கடக்கும்பொழுதுதான் அவர்கள் ஹனுமானைப் பார்த்தார்கள்.

“பாபுஜீ...”

அவர்களைப் பார்த்ததும் ஹனுமானின் பற்கள் பிரகாசித்தன. ரிக்ஷாவின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அவன் அவர்களுக்கு அருகில் வந்து நின்றான். வண்டியில் தடிமனான ஒரு சேட் உச்சி வெயிலில் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்.

“தேவிஜியைப் பார்த்தீங்களா?”

ஏதோ நன்கு பழகியவர்களுடன் உரையாடுவதைப் போல அவன் பேசத் தொடங்கினான்.

“நீ எங்கே போறே ஹனுமான்?”

“காந்திஹட்டா வரை நீங்க எங்க போறீங்க மேம்ஸாப்?”

“நீ எங்களை பீம்கோடாவுல விட முடியுமா?”

“அதைக் கேட்கணுமா மேம்ஸாப்?”

ஹனுமான் உற்சாகத்துடன் சொன்னான். சேட் இப்போதும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவரைப் புகைவண்டி நிலையத்தில் இறக்கிவிட்டு, திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டு ஹனுமான் ரிக்ஷாவை மிதித்தவாறு வேகமாகச் சென்றான்.

ஹோட்டலுக்குப் போகவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. பாதையோரத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். மசாலா சேர்த்து வேக வைத்த கடலையையும், பட்டூராவையும் பார்த்தபோது சுஜாவின் வாயில் நீர் ஊறியது. நான்கு கால்களைக் கொண்ட ஒரு ஸ்டாண்டின் மீது கடலை நிறைக்கப்பட்ட பாத்திரம் இருந்தது. பாத்திரத்தில் நெடுங்குத்தாக பச்சை மிளகாய்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு அலுமினிய பாத்திரத்தில் நெய் கலந்த பட்டூரா இருந்தது. ஒன்றிரண்டு ரிக்ஷாக்காரர்கள் தரையில் உட்கார்ந்து சோலாவும் பட்டூராவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ஒன்றிரண்டு பிச்சைக்காரர்களும் இருந்தார்கள்.

“ரெண்டு பிளேட், பாய்...”

பட்டூரா விற்றுக் கொண்டிருந்த மனிதன் ரமேஷனையும் சுஜாவையும் மாறி மாறி பார்த்தான். அவனுடைய பார்வையில் சிறிது அவநம்பிக்கை தெரிந்தது. அவர்களுடைய தோற்றத்தையும், அணிந்திருந்த ஆடைகளையும் பார்த்தபோது பாதையோரத்தில் பார்க்கும் பொருட்களை வாங்கிச் சாப்பிடக்கூடியவர்கள் மாதிரி தெரியவில்லை. பழைய டில்லி, காந்தி ஹட்டா பகுதியைச் சேர்ந்த சாதாரண மனிதர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டு, பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியங்களுக்கும் மத்தியில் இருந்துகொண்டு நாலணா விலையுள்ள சோற்றையும் உருளைக்கிழங்கு குழம்பையும் இலையில் வாங்கிச் சாப்பிட்டவர்கள் அவர்கள் என்ற உண்மை ஹரித்துவாரில் பட்டூரா விற்கும் மனிதனுக்கு எப்படித் தெரியும்?

பட்டூராவையும் கடலையையும் சாப்பிட்டு பசியைப் போக்கியபிறகு அவர்கள் ஹனுமானை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஐந்து நிமிடங்கள்கூட கடந்திருக்காது, ஹனுமான் அங்கு வந்தான். அவனுடைய நெற்றியின் நரம்புகள் வெயிலின் காரணமாக பளபளத்துக் கொண்டிருந்தன. புலி நகமணிந்த கழுத்துப் பகுதியில் வியர்வை ஆறாக ஒழுகிக் கொண்டிருந்தது.

“ஹனுமான், நீ மதிய சாப்பாடு சாப்பிட்டாச்சா?”

“இல்ல... அதனால ஒண்ணுமில்ல...”

சாப்பிடும் விஷயத்தில் ஹனுமான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சுஜாவையும் ரமேஷனையும் பார்த்ததே அவனுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமாயிற்றே! ஹனுமான் ரிக்ஷாவின் இருக்கையைத் துடைத்து சுத்தம் செய்தான். சேட்டின் பருமனான உடம்பு உண்டாக்கிய அடையாளங்கள் அங்கு இப்போதும் இருந்தன.

தயங்கிக்கொண்டே ஹனுமான் பட்டூராவையும் கடலையையும் கையில் வாங்கினான். ஆர்வத்துடன் அவன் அதை வேகமாக சாப்பிட்டான். ஒருவேளை, அவன் காலையிலிருந்து இதுவரை எதுவும் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீர் உள்ளே போனதும், ஹனுமானின் வயிறு வீங்கினதைப் போல் ஆனது. அவனுடைய நெஞ்சின் மீது வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

பசியைப் போக்கிய ஹனுமான் பல மடங்கு அதிகமான பலத்துடன் வெயிலைக் கிழித்துக் கொண்டு ரிக்ஷாவை முன்னோக்கி மிதித்தான். பிரம்ம குண்டத்திற்குப் பின்னால் ரிக்ஷா போய்க் கொண்டிருந்தது. ஹர்கீபௌடியிலிருந்து பார்த்தால் தூரத்தில் மலைகள் வரிசையாக இருப்பது தெரியும். மலையை இரண்டாகப் பிளந்துகொண்டு கங்கை நதி ஹரித்துவாருக்குள் நுழைகிறது. ரிக்ஷா இடது பக்கம் திரும்பி மானஸாதேவியின் மலையின் இன்னொரு பக்கம் வழியாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ரிஷிகேசத்திற்கும் பத்ரிநாத்திற்கும் கைலாசத்திற்கும் போகும் பாதை அது. கைலாசத்திற்கு... வைகுண்டத்திற்கு... சொர்க்கத்திற்குப் போகும் பாதை அது.

பீம்கோடாவிற்கு அருகில் ஹனுமான் ரிக்ஷாவை நிறுத்தினான். ரமேஷனும் சுஜாவும் கீழே இறங்கினார்கள். ஹனுமான் ரிக்ஷாவை பாதையின் ஓரத்தில் தள்ளி நிறுத்தினான்.

“நான் இங்கே காத்திருக்கிறேன், ஸாப்!”

அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.

ரமேஷனும், சுஜாவும் பீம்கோடாவை நோக்கி நடந்தார்கள். அந்த வழியில்தான் பஞ்ச பாண்டவர்கள் சொர்க்கத்திற்குப் பயணம் செய்தார்கள். யுதிஷ்டிர சக்கரவர்த்தி நடந்துபோன வழியில்தான் தாங்கள் நடக்கிறோம் என்பதை நினைத்தபோது ரமேஷனின் பாதங்களில் இனம்புரியாத ஒரு உணர்வு உண்டானது. பாண்டவர்களின் பாதச்சுவடுகளுக்கு மேலே தான் நடப்பதை நினைக்கும்பொழுது பாதங்களுக்கு எப்படி உற்சாகம் உண்டாகாமல் இருக்கும்?

மலைப் பொந்துகளில் தோண்டி உண்டாக்கப்பட்ட குகைகளில் கூடு கட்டி சன்னியாசிகள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பகல் வேளையில் கூட சூரிய ஒளி உட்புகாத குகைகளில் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். குளத்தின் கரையில் ரமேஷனும் சுஜாவும் நின்றார்கள். தெளிவான நீரில் கரையிலிருக்கும் கோவிலும், மலையும் தெரிந்தன.


அவர்கள் தங்களின் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு குளத்தின் படியில் அமர்ந்தார்கள். ஐந்து படிகளுக்குக் கீழ்வரை தண்ணீர் தேங்கிக் கிடந்தது. கண்ணாடியைப் போல தெளிந்த நீர் புனித நீர் அது. பீமசேனன் உண்டாக்கிய நீர். நீரைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது குருக்ஷேத்ரத்தைப் பற்றிய வரைபடம் ரமேஷனின் மனக்கண்களில் தெரிந்தது. தூரத்தில் எங்கிருந்தோ அர்ஜுனனின் பாஞ்சஜன்யம் ஒலிப்பதைப் போல் அவன் உணர்ந்தான்.

‘ஸன்யாஸம் கர்மமணாம் கிருஷ்ண

புனர்யோகம் ச சம்ஸஸி

யச்சரேய ஏதயோரேகம்

தன்மே ப்ருஹி ஸுனிஸ்சிதம்’

குருக்ஷேத்திரத்திலிருந்து மிகுந்த கவலையில் துடித்துக் கொண்டிருந்த அர்ஜுனனின் புலம்பலை அவன் கேட்டான். தேவதத்தத்தின், பௌண்ரத்தின் குரல்கள் அவனுடைய காதுகளில் எதிரொலித்தன.

மரணப் படுக்கையில் காயம்பட்டு விழுந்து கிடக்கும் வயதான பெரியவர்...

காலம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. பூமியில் கடமைகள் முடிந்துவிட்டன. சொர்க்கத்திற்குச் செல்லும் பயணத்தில் பாண்டவர்கள் ஹரித்துவாருக்கு வருகிறார்கள். சொர்க்கம், பூமி ஆகியவற்றின் எல்லையான ஹரித்துவார். தான் அந்த ஊரைத் தாண்டிப் போனதன் நினைவாக இருக்கட்டுமே என்று ஹரித்துவாரில் ஒரு ஞாபகச் சின்னம் உண்டாக்க நினைத்தான் பீமசேனன். அவன் முழங்காலை பூமிக்குள் விட்டு ஒரு குளம் உண்டாக்கினான். தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த கங்கை நீர் பூமிக்குக் கீழே ஓடி குளத்தில் வந்து நிறைந்தது. பீமசேனனின் முழங்காலைப் போலவே தோற்றத்தில் இருக்கும் அந்தக் குளத்திற்கருகில்தான் ரமேஷனும் சுஜாவும் அமர்ந்திருந்தார்கள்.

அவர்கள் படிகள் வழியாகக் கீழே இறங்கி ஐந்தாவது படியில் போய் அமர்ந்தார்கள். அங்கே எண்ணெயும், அழுகிய மலர்களும் கிடந்தன. நீர் முழுக்க மலர்கள் இருந்தன. அவர்கள் கைகளால் கங்கை நீரை அள்ளிப் பருகினார்கள். பீமசேனன் உடலின் உப்பு ருசியைக் கொண்ட நீர்...

“நாம இன்னையில இருந்து பாவத்துல விடுபடுறோம்.”

“அதுக்கு நாம என்ன பாவம் செய்திருக்கோம் ரமேஷ்?”

“வாழ்றதுதான் பாவம்.”

ஒரு சிகரெட்டைக் கொளுத்தினால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டான் ரமேஷ். ஆனால், அங்கு அமர்ந்து புகை பிடிக்கலாமா? அந்தப் புனித பூமியில் இருந்து கொண்டு? நேற்று அந்தப் புனித பூமியில் அமர்ந்து சரஸ் உட்கொண்டவன் இன்று சிகரெட் புகைக்கத் தயங்குகிறான். கடவுள்களை வெறுத்தவன் மனிதர்களான பாண்டு புத்திரர்களை ஆதரிக்கிறான்.

குளத்தின் இன்னொரு பகுதியில் சில பக்தர்கள் வந்து நின்றிருந்தார்கள். அவர்கள் மத்தியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இருந்தனர். அவர்கள் குளத்தில் மூழ்கி குளித்தார்கள்.

பாவத்தைக் கழுவியாகிவிட்டது என்ற மன நிறைவுடன் அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

"பாபுஜி..."

ஹனுமானின் குரல்... காத்திருந்து காத்திருந்து சோர்வடைந்துபோன அவன் ரமேஷனையும் சுஜாவையும் தேடி அங்கேயே வந்துவிட்டான். அவனுடைய குரலைக் கேட்டு ரமேஷன் சுய நினைவிற்கு வந்தான்- யுகங்களாக நீண்டு கொண்டிருந்த ஒரு தூக்கத்திலிருந்து எழுந்ததைப் போல.

"போக வேண்டாமா பாபுஜி?"

"போகலாம் ஹனுமான்."

அவர்கள் படியை விட்டு எழுந்தார்கள். அவர்களின் ஆடைகளில் எண்ணெய்க் கறையும் அழுக்கும் படிந்திருந்தன. ரமேஷனின் பேண்ட்டும் சுஜாவின் சுரிதாரும் பாதி நனைந்திருந்தன. அவர்கள் ஹனுமானுடன், சேர்ந்து ரிக்ஷா இருக்குமிடத்தை நோக்கி நடந்தார்கள்.

இருண்ட குகைகளில் எரிந்து கொண்டிருந்த தீபங்களின் வெளிச்சத்தில் இந்த உலக வாழ்க்கையை விட்டு தியானத்தில் மூழ்கியிருந்த ரிஷிகள் தெரிந்தார்கள். குகைப் பகுதிகளில் இருந்த மரங்களின் வேர்களைப் போல இருந்தன- அவர்களின் நீளமான தலைமுடிகள். மண்ணுக்குக் கீழே போகத் துடித்துக் கொண்டிருந்தன அவர்களின் முதுமையடைந்த கைகளும் கால்களும்.

"எங்கே போகணும் பாபுஜி?"

"நீ விருப்பப்படுற இடத்துக்குப்"

ஹனுமான் தன்னுடைய உறுதியான பற்களை வெளியே காட்டிச் சிரித்தான்.

"ஊப்பர் ஸடக், பாபுஜி?"

"ம்..."

ஊப்பர் ஸடக்கிலிருந்துதானே அவர்கள் வந்தார்கள். அங்கேயே திரும்பிச் செல்லலாம். தகித்துக் கொண்டிருந்த வெயிலில் உடல் தசை அசைய ஹனுமான் ரிக்ஷாவை மிதித்து ஓட்டினான். ஹர்கீ பௌடியைத் தாண்டி ஊப்பர் ஸடக்கை அடைந்தபோது அவன் ரிக்ஷாவின் வேகத்தைக் குறைத்தான்.

"பாபுஜி, நீங்க பகவான் மிருத்யுஞ்ஜயனோட சிலையைப் பார்த்திருக்கீங்களா?"

"இல்லையே!"

"காட்டட்டுமா?"

"தூரத்துல இல்லாமலிருந்தா..."

அவர்களுக்கு அதில் மாறுபட்ட கருத்து இல்லை. எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்றுதானே அவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள்! அதனால் பார்க்க முடிந்தவரை பார்க்க வேண்டியதுதான்.

பல்லா சாலையும் பிர்லா சாலையும் சேரும் சந்திப்பைத் தாண்டி ரிக்ஷா ஓடியது. வியர்வையில் தெப்பமாக நனைந்த தன் பனியனைக் கழற்றிய ஹனுமான் அதை ரிக்ஷாவின் படியின் மீது போட்டான். அவனுடைய வெறும் முதுகில் ஆயிரம் சூரியன்கள் தெரிந்தன. பாதை ஆட்கள் நிறைந்து காணப்பட்டது. கூட்டம் கூட்டமாக மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இரைச்சலிட்டவாறு குதிரை வண்டிகளும் ரிக்ஷாக்களும். மக்கள் கூட்டத்தில் நவநாகரீகத் தோற்றம் கொண்ட யாருமே கண்ணில் படவில்லை. ஒரு பெல்பாட்டம் பேன்ட்டோ ஒரு கோகோ குர்தாவோ அங்கு கண்ணில் படவேயில்லை.

"பாருங்க பாபுஜி... பாருங்க மேம்ஸாப்..."

ஹனுமான் சுட்டிக் காட்டினான். கல்லால் செய்யப்பட்ட ஒரு பெரிய தாமரை இருந்தது. கல்லில் அதன் இதழ்கள் விரிந்து கிடந்தன. தாமரையில் பகவான் மிருத்யுஞ்ஜயன் அமர்ந்திருந்தார். அவரின் கழுத்தில் நாக்குகளை நீட்டிக் கொண்டு பாம்புகள் இருந்தன. இருந்த நான்கு கைகளுள் இரண்டு கைகளில் கிருஷ்ண மிருகமும் ருத்ராட்ச மாலையும் இருந்தன. தலைக்கு மேலே உயர்த்தியிருக்கும் கைகளில் கமண்டலத்திலிருந்து தலைமீது எப்போதும் விழுந்து கொண்டிருக்கும் நீர்... அந்த நீர் கல்லால் ஆன தாமரையில் தேங்கி இருக்கிறது.

ரமேஷனும், சுஜாவும் தாமரையிலிருந்த தண்ணீரைக் கையால் எடுத்து முகத்தைக் கழுவினார்கள்.

"மிருத்யுஞ்ஜயா விடை கொடு..."

ஹோட்டலுக்கு முன்னால் போனபோது சுஜா கைப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ஹனுமானிடம் நீட்டினாள்.

"சில்லறையில்லையே மேம்ஸாப்..."

"பரவாயில்ல..."

அவள் நோட்டை அவன் கைகளில் தந்தாள். ஹனுமானின் கைகள் ஜுரம் வந்ததைப் போல நடுங்கின.

"இன்னைக்கு நீங்க விரதமா என்ன?"

அவர்களை எதிர்பார்த்து நின்றிருந்த அவினாஷ் வெளியே வந்து கேட்டான்.

"நாங்க பட்டூராவும் சோலாவும் சாப்பிட்டோம்."

சுஜா படிகளில் ஏறும் போது சொன்னாள். அதைக் கேட்டு அவினாஷின் நெற்றி சுருங்கியது.

"வயிற்றுப் போக்கை நீங்களே வரவழைச்சிக்காதீங்க, புரியுதா?"

அவன் அன்புடன் சொன்னான்.

அறைக்குச் சென்று, கதவை அடைத்து, மின் விசிறியை முழு வேகத்தில் வைத்துவிட்டு ரமேஷன் கட்டிலில் விழுந்தான். அவனுடன் சுஜாவும்.


9

"மே ஐ கமின் ப்ளீஸ்?"

கதவுக்கப்பால் நின்றுகொண்டு அவினாஷ் கேட்டான்.

"ஒரு நிமிடம்..."

ரமேஷன் சொன்னான். சுஜா புடவை உடுத்திக் கொண்டிருந்தாள். அவன் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து புடவையில் சுருக்கங்களைச் சரி செய்து கொண்டிருந்தான்.

"கமின் ப்ளீஸ்..."

சுஜா புடவ்யின் நுனியை இடுப்பில் சொருகினாள். ரமேஷன் தன்னுடைய நாற்காலியில் போய் சாய்ந்து உட்கார்ந்தான். நன்றாக ஆடை அணிந்திருந்த அவினாஷ் உள்ளே வந்தான். டெர்லின் பேண்ட்டும் சட்டையும்... அதோடு எப்போதும் போல டை இந்தக் கடுமையான வெயிலில் அவன் எதற்காக டை அணிகிறானோ?"

"நீங்க இன்னும் ரெடியாகலையா?"

ரமேஷன் வெறும் பேண்ட் மட்டுமே அணிந்திருந்தான். நெஞ்சில் எலும்புகள் வெளியே தெரிந்தன. அங்கிருந்து தொப்புளைத்தாண்டி கீழே இறங்கிச் செல்லும் ரோமவரிசை. அவினாஷ் அரோராவின் முகத்திலோ, கை, கால்களிலோ சிறிது கூட ரோமம் இல்லை. ஒரு பெண்ணின் முகத்தைப் போல மினுமினுப்பாக இருந்தது அவனுடைய முகம்.

"சீக்கிரம்!"

அவன் அவசரப்படுத்தினான்.

ரமேஷன் எழுந்து வாஷ்பேஸினுக்கு அருகில் சென்று முகத்தைக் கழுவி, கையிடுக்குகளிலும் மார்பிலும் ஓடிக் கொலானை எடுத்து ஸ்ப்ரே செய்தான்.

"இது இறக்குமதி சரக்கா?"

அவினாஷ் ஓடிக்கொலான் புட்டியை எடுத்துப் பார்த்தான். ரமேஷனின் ஒவ்வொரு அசைவையும் அவன் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய நீளமான உடம்பு, தோற்றம், பேச்சு எல்லாமே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவன் ரமேஷனை ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

"யூ ஆர் வெரிமச் மேன்லி!"

அவன் ஒரு முறை சொன்னான்.

"அவினாஷ், உங்க மனைவி நல்ல அழகியா?" நெற்றியில் பொட்டு வைப்பதற்கிடையில் சுஜா கேட்டாள்.

"உங்க அளவுக்கு இல்ல..."

இளம் நீல நிறத்தில் ஷிஃபான் புடவை. நெற்றியில் புடவைக்குப் பொருத்தமாக இருக்கும் வண்ணம் இளம் நீல நிறத்தில் பொட்டு, மை எழுதப்பட்ட கண்கள். அவளுடைய முகத்தைவிட்டு கண்களை எடுக்க அவினாஷால் முடியவில்லை. ரமேஷனும் அதைக் கவனித்தான். அவன் வாடகைக்காரை அழைப்பதற்காக வெளியே சென்றபோது அவன் சிரித்தவாறு சொன்னான்: "ஹி ஹஸ் ஃபாலன் ஃபார் யூ!"

"டாக்ஸி ஈஸ் ஹியர்."

படிகளுக்குக் கீழிருந்து அவினாஷின் குரல் கேட்டது. அவள் தன் கைப்பையையும் அவன் புகையிலை டின்னையும் எடுத்துக் கொண்டு அறையைப் பூட்டிவிட்டு கீழே இறங்கினார்கள்.

"லேடி ஃபஸ்ட்."

அவினாஷ் சுஜாவிறகாக கார் கதவைத் திறந்துவிட்டான். அவனுக்கும் ரமேஷனுக்கும் நடுவில் அவள் அமர்ந்தாள். கார் மிருத்யுஞ்ஜயனின் சிலைக்கு முன்னால் ஜ்வால்பூரை நோக்கி ஓடியது.

காரிலிருந்தவாறு அவினாஷ் அரோரா தன்னுடைய கதையைச் சொன்னான்.

அவனுக்கு ஹரித்துவாரில் ஒரு ஹோட்டல் நடத்தி வாழ்க்கை முழுவதும் இருப்பதற்கு சிறிது கூட விருப்பமில்லை. டில்லி, பம்பாய் போன்ற ஒரு பெரிய நகரத்தில் ஒரு உத்தியோகம் பார்க்கும் மனிதனாக வாழ்வதில்தான் அவனுக்கு விருப்பம்.

"டில்லியில வாழ்க்கை இருக்கு. இங்கே ஒண்ணுமே இல்ல. நத்திங் அட்டால்."

அவனுடைய முகம் கஷாயம் குடித்ததைப் போலிருந்தது- அதைச் சொல்லும்போது.

"வெளிப்படையா சொல்லணும்னா, எனக்கு ஹரித்துவாரை கொஞ்சம் கூட பிடிக்கல."

ஹரித்துவாரில் வாழ்க்கை இல்லையா? ஹரித்துவார் மீது வெறுப்பா? ரமேஷனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். என்னென்னவோ மொழிகளைப் பேசுபவர்கள்! பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்! பலதரப்பட்ட அனுபவங்களைக் கொண்டவர்கள்! அந்த ஹரித்துவாரையா அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது?

"பெரிய நகரங்களில் ஒண்ணுமேயில்ல, அவினாஷ். வெளியில பார்க்க மினுமினுப்பா இருக்குமே தவிர, அங்கே வாழ்க்கை இல்ல. நாடகம் மட்டுமே இருக்கு. எங்களைப் போல நகரத்துல இருக்கிறவங்க சும்மா நடிச்சிக்கிட்டு இருக்கோம்."

"எனக்கு அப்படி நடிக்கிறதுதான் பிடிக்கும்."

காரின் ஸ்பீடாமீட்டரையே பார்த்துக் கொண்டிருந்தான் அவினாஷ் அரோரா. அவனுடைய மன வேதனையை ஒரே நிமிடத்தில் ரமேஷனால் புரிந்து கொள்ள முடிந்தது. 'சில நேரங்கள்ல நானும் கூட இந்த ஆளை மாதிரி சிந்திச்சிருக்கேனே! ஊர்ல இருக்கிறப்போ டில்லிக்குப் போகணும்னு நினைப்பேன். டில்லிக்கு வந்துட்டா எப்படியாவது கிராமத்துக்குப் போனால் போதும்னு தோணும். இந்த அவினாஷ் அரோரா டில்லியில இருந்தா என்ன சொல்லுவான்? - சிந்தனையில் ஆழ்ந்த ரமேஷன் தனக்குள் சொல்லிக் கொண்டான்:

“ஐ ஹேட் திஸ் டில்லி. இங்கே வாழ்க்கையே இல்ல...”

இன்று காலை முதல் ரமேஷன் ஹரித்துவாரை விரும்ப ஆரம்பித்திருக்கிறான். அசோகா ஹோட்டலைவிட அவன் இப்போது விரும்புவது பர்ணசாலைகள் சிதறிக்கிடக்கும், வேத மந்திரங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் மானஸாதேவியின் மலையைத்தான்.

ரமேஷனும், அவினாஷும் இரண்டு வெவ்வேறு துருவங்களில் இருந்தார்கள். எனினும், அவர்கள் வெகு சீக்கிரமே நெருக்கமானவர்களாக ஆனார்கள்.

கார் ஜ்வால்பூர் நகரை அடைந்தது. ஹரித்துவாரின் வியாபார நகரம் அதுதான். கோதுமை மூட்டைகள் ஏற்றப்பட்ட லாரிகள் வருவதும் போவதுமாக இருந்தன.

இரு பக்கங்களிலும் கோதுமை வயல்கள் இருந்தன. வயல்களுக்கு மேலே இளம் வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கண்கள் பனி விழுந்ததைப்போல் குளிர்ந்தன. காரைவிட்டு இறங்கிப் பசுமையான வயல்களுக்கு நடுவில் ஓடவேண்டும்போல் இருந்தது சுஜாவிற்கு.

“உங்க வீடு வயல் பக்கத்துலதானே இருக்கு, அவினாஷ்?”

“ஆமா...”

அவன் மெதுவான குரலில் சொன்னான். அவனுக்கு வயல் போன்ற விஷயங்களில் ஆர்வம் எதுவும் இல்லை. சுஜாவுக்கு அவன் மீது பொறாமை உண்டானது. அவன் தினமும் இந்தப் பசுமையான வயல்களைப் பார்த்துக்கொண்டே காலையில் கண்விழிக்கலாம். ஓய்வு நேரங்களில் இந்தப் பசுமைக்கு மத்தியில் அலைந்து திரியலாம். இரவு நேரங்களில் வயல்களின் மணம் கலந்து வரும் காற்றை சுவாசித்தவாறு படுத்து உறங்கலாம்.

“நான் தினமும் வீட்டுக்கு வர்றது இல்ல. வாரத்துல ஒருநாள்தான் வருவேன்.”

அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ‘அவினாஷ், நீங்க ஒரு கொடூரமான ஆள்’ - அவள் தனக்குள் கூறினாள்.

அவனிடம் ஸ்கூட்டர் இருக்கிறது. அரைமணி நேரத்தில் அவன் வீட்டிற்கு வரலாம். இருப்பினும் எப்போதாவதுதான் அவன் வீட்டிற்கு வருகிறான். அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அதை அவன் விளக்கிச் சொன்னான். வீட்டில் குளிப்பதற்கு தொட்டி இல்லை. வெளிநாட்டு பாணியில் சமையல் செய்த உணவு இல்லை. சொல்லப்போனால் மின்சாரம் கூட இல்லை.


நீர் வற்றிப்போன ஒரு குளம். சிதிலமடைந்த ஒரு தூணில் ‘உள்ளே நுழையக்கூடாது’ என்று எழுதி வைக்கப்பட்ட ஒரு பலகை. கார் அங்கே நின்றது. இனி அங்கு நடந்துதான் செல்ல வேண்டும். ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக அவர்கள் நடந்தார்கள். மண்ணில் சக்கரங்களின் அடையாளங்கள் தெரிந்தன. சென்ற வாரம் அவினாஷ் ஓட்டிய ஸ்கூட்டர் சக்கரங்கள் உண்டாக்கிய அடையாளங்கள் அவை.

உயரமாக வளர்ந்திருக்கும், சிறு இலைகளைக் கொண்ட ஒருவகை செடிகள் எங்கும் இருந்தன.

“இது என்ன செடி?”

சுஜா கேட்டாள்.

“பன்.”

துணி உண்டாக்கப் பயன்படும் ஒருவகை பஞ்சின் பெயர்தான் பன். அவினாஷ் சொன்னான். பஞ்சாபியான சுஜாவிற்கு அது தெரியாமல் போனது ஆச்சரியம்தான். பன் செடிகள் இன்னும் பூக்கவில்லை. உதட்டில் ஒரு ஃபிலிப் மோரீஸுடன் ரமேஷன் செடிகளின் நிழலில் நடந்தான். காற்றில் சுஜாவின் ஷிஃபான் புடவை பறந்து கொண்டிருந்தது. எந்த நிமிடத்தில் காற்று அவளின் புடவையை அவிழ்த்து அவளை நிர்வாணமாக்கிவிடுமோ என்று ரமேஷன் பயந்தான்.

“உலகம் எவ்வளவு அழகா இருக்கு!” கூந்தலையும் ஆடைகளையும் காற்றில் பறக்கவிட்டவாறு வயல்வரப்பு வழியாக நடந்து சென்ற சுஜா.

“உங்க அளவுக்கு அழகு...” அவினாஷ் சொன்னான்.

வழியில் ஆங்காங்கே கொய்யா மரங்கள் இருந்தன. தாழ்ந்து கிடக்கும் கிளைகளில் கொய்யா கனிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவினாஷ் கொய்யாப் பழங்கள் சிலவற்றைப் பறித்து சுஜாவிடம் நீட்டினான். குளிர்ச்சியான கொய்யாப் பழங்களை அவள் தன்னுடைய அழகான பற்களால் கடித்துத் தின்றாள். ரமேஷன் அவற்றைத் தின்னவில்லை. அவனுக்குப் பழங்கள் பொதுவாகப் பிடிக்காது. அங்கு எங்காவது காந்தாரிச் செடிகள் இருந்தால் அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான்!

“என் வீடு...” அவினாஷ் சுட்டிக் காட்டினான். கனமான மதில்களால் சூழப்பட்ட பெரிய வீடு. கிராமத்திலிருந்த மண் வீடுகளிலிருந்து பெண்களும் குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே திண்ணைகளில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆண்கள் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு வந்திருக்கும் விருந்தினர்களைப் பார்த்தார்கள். சில சிறுவர்களும், சிறுமிகளும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். ரமேஷனும் சுஜாவும் அவர்களுக்கு வேறு ஏதோ ஒரு கிரகத்திலிருந்து வந்திருப்பவர்களைப் போல் தெரிந்தார்கள்.

யாரோ ஓடிவந்து கேட்டைத் திறந்தார்கள். மதிலுக்குள் மைதானம் போல விசாலமான முற்றம் இருந்தது. அந்த இடத்தில் காளைகள் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. உயர்ந்து நிற்கும் திமிலைக் கொண்ட காளைகள் அவை.

“ஒண்ணு, ரெண்டு, மூணு...”

சுஜா காளைகளை எண்ணினாள். நடந்து நடந்து போயும் முற்றம் முடிந்தபாடில்லை.

“ஒண்ணு, ரெண்டு, மூணு...”

வாசலுக்குச் செல்லும் படிகளையும் சுஜா எண்ணினாள். வாசலில் கலை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய கட்டில் போடப்பட்டிருந்தது. அதில் மூன்று, நான்கு தலையணைகளில் சாய்ந்து படுத்துக் கொண்டு ஒரு வயதான பெரியவர் ஹுக்கா இழுத்துக் கொண்டிருந்தார்.

“என் அப்பா!”

அவினாஷ் அறிமுகப்படுத்தினான். கிழவர் கரையான் புற்றுகளைப் போன்ற கண்களைத் திறந்து ரமேஷனையும் சுஜாவையும் பார்த்தார். அவர் அவர்களைப் பார்த்து கைகளைக் கூப்பினார்.

“நமஸ்தே, பிள்ளைகளே!”

“டில்லியில இருந்து வந்திருக்காங்க. நம்ம ஹோட்டல்லதான் தங்கியிருக்காங்க.”

மரியாதையான தொனியில் அவினாஷ் அதைச் சொன்னான். கிழவர் பல் இல்லாத தன்னுடைய வாயைத் திறந்து சிரித்தார். உள்ளேயிருந்து யாரோ இரண்டு, மூன்று நாற்காலிகளைக் கொண்டு வந்தார்கள். உட்காருவதற்கு முன்பு பெரிய பீங்கான் டம்ளர்கள் நிறைய லஸ்ஸி வந்து சேர்ந்தது. லஸ்ஸியைச் சுவைத்துக் குடித்தவாறு ரமேஷன் நான்கு பக்கங்களிலும் தன்னுடைய கண்களை ஓட்டினான். மேற்கூரை நல்ல கலை வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது. அதைத்தாங்கிக் கொண்டு மரத்தால் ஆன நான்கு பெரிய தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணும் ஒரு மரத்தால் செய்யப்பட்டிருக்கவேண்டும். உள்ளே செல்லும் கதவு கூட கனமான மரத்தால் செய்யப்பட்டதுதான்.

“அவினாஷ், உங்க வீடு ஒரு அரண்மனைதான்.”

“அரண்மனையா? இங்கே மின்சாரம்கூட கிடையாது.”

இந்த கடைந்தெடுத்த கதவுகள், கனமான தூண்கள், மேற்கூரைகள், மைதானத்தைப் போன்று அகலமான முற்றம்- எதற்கு இங்கு மின்சாரம்?”

“வாங்க... உள்ளே வாங்க...”

விசாலமான ஒரு தளம் இருந்தது. தரையில் நிறம் மங்கிப்போன ஒரு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. தளத்தின் நான்கு பக்கங்களிலும் திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருக்கும் அறைகள். தலைக்கு மேலே பழமையான ஒரு பெரிய சரவிளக்கு. சுவர்கள் நிறைய எண்ணெய் சாய ஓவியங்களும் புகைப்படங்களும்...

“ஃபூல்ராணி!”

அவினாஷ் உள்ளே நுழைந்தான். தூரத்தில் எங்கோயிருந்து அந்த அழைப்பு வருவதைப்போல் அவளுக்கு இருந்தது. திரைச்சீலைகளுக்குப் பின்னால் எங்கோயிருந்து ஒரு குழந்தையின் மெல்லிய அழுகைக் குரல் கேட்டது.

“என் மனைவி. இது என்னோட இளைய மகள்.”

“ஃபூல்ராணி குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு வந்தபோது அவினாஷ் அறிமுகப்படுத்தினான். அவள் பழைய பாணியில் தைக்கப்பட்ட கசங்கிப்போன சில்க் சல்வாரும் கம்மீஸும் அணிந்திருந்தாள். கழுத்திலும் கையிலும் நிறைய நகைகள் அணிந்திருந்தாள். வெளிறிப்போன, சத்து குறைவாக இருக்கும் ஒரு இளம்பெண். ஃபூல்ராணியைப் பார்க்கும்போது மூன்று குழந்தைகளைப் பெற்றவள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

சில்க் துணியால் போர்த்தப்பட்ட, நகைகளால் மூடப்பட்ட ஃபூல்ராணி ஏதோ ஒரு ராஜகுமாரியின் பிரேதம்போல் ரமேஷனுக்குத் தெரிந்தாள்.

“புடவை கட்டச் சொன்னா கேட்க மாட்டேங்குறா.”

மனதிற்குள் தோன்றிய திருப்தியின்மையை மறைத்து வைத்துக் கொண்டு அவினாஷ் சிரித்தான். ஃபூல்ராணி எதுவும் பேசவில்லை. குழந்தையின் முதுகை இறுகப் பிடித்துக்கொண்டு அவள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தபோது திரைச்சீலைகளுக்குப் பின்னால் அவள் மறைந்து விட்டாள்.

“சரண்பூரில் அஞ்சு ட்ராக்டர்கள் வச்சிருக்கிற ஒரு பெரிய நிலச்சுவான்தாரோட மகள் இவ. பார்த்தா அப்படி தெரியுதா?”

“தோணுது அவினாஷ். உங்க மனைவி ஒரு ராணிதான்.”

சுஜாவின் கண்களில் அவள் ஒரு ராணியாகவே தோன்றினாள். ஃபூல்ராணி- மலர்களின் அரசி. என்ன அர்த்தமுள்ள பெயர்! அவள் ஒரு ராணி... இந்த வீடு ஒரு அரண்மனை ரமேஷன் சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்த, கலை வேலைப்பாடுகள் நிறைந்த மேற்கூரையையே பார்த்தவாறு நின்றிருந்தான். மரத்தால் செய்யப்பட்ட மேற்கூரை. மரத்தால் ஆன உறுதியான கதவுகள். கலை வேலைப்பாடுகள் நிறைந்த உறுதியான மரத்தூண்கள். திரைச்சீலைகளால் மூடப்பட்ட ஏராளமான அறைகள்...

அந்த அறைகளின் திரைச்சீலைகள் ஒவ்வொன்றையும் விலக்கி, தான் கடந்து போவதைப்போல் சுஜா கற்பனை பண்ணிப் பார்த்தாள்.

ஒரு திரைச்சீலைக்குப் பின்னால் கொலுசுச் சத்தம் கேட்டது. திரைச்சிலைக்குக்கீழே பாதங்கள் தெரிந்தன. திரைச்சீலைக்கு வெளியே கதவின் மீது இறுகப் பற்றியிருக்கும் வெண்மையான கைவிரல்கள்...


“என் தங்கச்சி- ஊர்மிளா...”

அவினாஷ் அறிமுகப்படுத்தினான். கை விரல்களையும் பாதங்களையும் தவிர ரமேஷன் வேறெதையும் பார்க்கவில்லை.

முற்றத்திலிருந்த வேப்ப மரங்களுக்குக் கீழே போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல கோதுமை வயல்கள் இருளத் தொடங்கின. பன் செடிகளும் கொய்யா மரங்களும் நிழல்களாக மாறின. உறுதியான மரத்தூண்களுக்கும் கதவுகளுக்கும் இடையில் சரவிளக்குகளிலிருந்து வரும் வெளிச்சம் தெரிந்தது.

அவினாஷ் எதற்காகவோ எழுந்துபோனான்.

“சுஜா, நாம் கடந்த காலத்தில் இருக்கோம். நாம பின்னாடி போறோம். சர விளக்குகள் ஒளி சிந்துற இந்த மாளிகை கடந்த காலத்தின் ஞாபகச் சின்னம். இங்கே இருக்கிற தூண்கள், இந்தக் கதவுகள், மேற்கூரைகள்- இவை எல்லாமே கடந்த காலத்தை நோக்கி நம்மைக் கொண்டுபோகுது. இந்தத் திரைச்சீலைகளுக்கு அப்பால் காலம் தங்கி இருக்கிறதை உன்னால உணர முடியுதா, சுஜா?”

“என்னால பார்க்க முடியுது, ரமேஷ்.”

ஃபூல்ராணி எப்பவோ செத்துப்போயிட்டா. தலையணைகளுக்கு நடுவுல உட்கார்ந்து ஹுக்கா இழுக்குற இந்தப் பெரியவரும் செத்துப்போனவர்தான். திரைச்சீலைகளுக்கு அப்பால் நின்னுக்கிட்டு கொலுசுகள் சத்தம் உண்டாக்க நின்ற இளம் பெண்ணும் செத்துப்போனவதான். நான் சொல்றதை நீ கேக்குறியா சுஜா?”

“ம்... கடந்த காலத்தைச் சேர்ந்த ஒரு மாளிகையில் கொலுசுகளும் துப்பட்டாக்களும் அணிந்த பிரேதங்களுக்கு மத்தியில் நாம் - அப்படித்தானே ரமேஷ்!”

“ஆமா... நாமளும் இறந்தவர்களா இருந்தா...”

“கொலுசுகள் அணிஞ்சு திரைச்சீலைகளுக்குப் பின்னால வந்து நிற்கணும் போல எனக்கும் ஆர்வமா இருக்கு ரமேஷ்.”

“தலையணைகளுக்கு நடுவுல உட்கார்ந்து சுருக்கங்கள் விழுந்த கண்களை மூடிக்கிட்டு ஹுக்கா இழுக்கணும் போல எனக்கும் இருக்கு!”

கையில் ஒரு பெரிய ஹுக்காவுடன் தூண்களுக்கு மத்தியிலிருந்து அவினாஷ் அரோரா நடந்து வந்தான்.

“ஜஸ்ட் ட்ரை திஸ்.”

அவன் ஹுக்காவை ரமேஷனுக்கு நேராக நீட்டினான். வெள்ளியால் ஆன பழமையான ஹுக்கா. எவ்வளவோ தலைமுறைகள் இழுத்து அனுபவித்த ஹுக்கா. ரமேஷன் அந்த ஹுக்காவை வாங்கினான். எத்தனையோ இறந்துபோன சிரிப்புகள் பதிந்திருக்கும் அதன் குழல் வழியாக அவன் புகையை உள்ளே இழுத்தான்.

“எனக்கு எதுவும் இல்லையா?”

“பெண்கள் ஹுக்கா இழுக்கக்கூடாது. புட்டா தின்னலாம்.”

ஒரு வேலைக்காரன் பிரம்பு கூடையில் சோளக்கதிர்களுடன் வந்தான். நெருப்பில் காட்டி சூடாக்கிய சோளக் கதிர்கள் பொன் நிறத்தில் இருந்தன.

பழமையான ஒரு மாளிகை. சர விளக்குகளின் வெளிச்சம் விழுந்திருக்கும் ஒரு முற்றம். அங்கே நீல நிற ஷிஃபான் புடவை அணிந்திருக்கும் ஒரு இளம்பெண். அவளின் கையில் பொன்நிறத்தில் சோளக்கதிர்.

சுவருக்குப் பக்கத்தில் வரிசையாக உட்கார்ந்திருந்த வெள்ளைக் காக்கைகளின் கழுத்தில் மணிச்சத்தம் ஒலித்தது.

“சுஜா, இங்கே நீயும் நானும் தனியா இருந்தா...”

“தனியா இருந்தா?”

“இந்த உறுதியான தூண்களுக்கு மத்தியில், இந்த சிதிலமடைந்த சுவர்களுக்கு இடையில் இந்த வெளிறிப்போன திரைச்சீலைகளுக்கு இடையில், இந்த நிறம் மங்கலாகிப்போன தரை விரிப்புக்கு மேலே - எந்த நேரமும் உன்னை நான் காதலிச்சுக்கிட்டிருப்பேன்.”

“இனி சாப்பிட்டு முடிச்சிட்டு...”

அவினாஷ் வந்து ரமேஷனின் கையிலிருந்த ஹுக்காவை வாங்கி கீழே வைத்தான். அவர்கள் தளத்தை நோக்கி நடந்தார்கள். மேஜையின் மீது பாத்திரங்களும், கூஜாக்களும் நிறைந்திருந்தன.

திரைச்சீலைக்குக் கீழே வேகமாக நடந்து கொண்டிருக்கும் கொலுசுகள் அணிந்த கால்கள்...

“அவினாஷ், ஊர்மிளாவை நான் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?”

“மாறுபட்ட கருத்து இல்ல...”

அவன் சுஜாவைப் பார்த்து சிரித்தான்.

“அப்போ இவங்களை நீங்க என்ன செய்வீங்க, ரமேஷ்?”

“கழுத்தை நெரிச்சு கொல்ல வேண்டியதுதான்.”

“இந்த அப்பாணிப் பெண்ணையா?”

சோளக் கதிரைத் தின்று கொண்டிருப்பதற்கிடையில் சுஜா அவர்கள் பேசுவதைக் கேட்டு சிரித்தாள்.

“போதும்.”

அவினாஷ் அவளின் கையிலிருந்து புட்டாவை வாங்கி மேஜையின் ஒரு மூலையில் வைத்தான். அவர்கள் மேஜையைச் சுற்றி உட்கார்ந்தார்கள். ஒரு வேலையாள் வந்து கூஜாவிலிருந்த பன்னீரின் வாசனை வந்து கொண்டிருந்த நீரை டம்ளர்களில் ஊற்றினான். அவர்கள் சாப்பிட ஆரம்பிக்க, திரைச்சீலைகள் அசைய, அவற்றுக்கப்பால் கொலுசுகளணிந்த கால்கள் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன.

பீங்கான் பாத்திரங்களிலும், கண்ணாடி கூஜாக்களிலும் மேலே எரிந்து கொண்டிருந்த சர விளக்குகளின் ஒளி தெரிந்தது அவினாஷ். தட்டில் மஞ்சள் நிறத்தைக்கொண்ட காரெட்டும் நெய்யும் மணத்துக் கொண்டிருந்த புலவை எடுத்துப் பரிமாறினான்.

“சாப்பிடுங்க, அன்பு நெஞ்சங்களே...”

கூட்டுகள் வைக்கப்பட்டிருந்த கணக்கற்ற கண்ணாடிப் பாத்திரங்கள் வழியாக அவனுடைய கைகள் நீண்டன.

சாப்பிட்டு முடித்ததும், குல்ஃபியும், ரஸகுல்லாவும்.

“அவினாஷ், உங்க குல்ஃபிக்கு மோத்தி மஹால்ல இருக்கிற குல்ஃபி கப்பம் கட்டணும்.”

இனிப்பு மீது அவ்வளவாக விருப்பமில்லாத ரமேஷன் இனிப்பான குல்ஃபியை வெள்ளிக் கரண்டியால் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான்.

திரைச்சீலைகளுக்கப்பால் எங்கிருந்தோ ஒரு குழந்தை அழுதது. ஒரு தாலாட்டுப் பாட்டின் வரிகள் அங்கு எங்கோ கேட்டது. தூரத்தில் போவதும் அருகில் வருவதுமாய் இருக்கும் கொலுசுகளின் ஓசை... வெளியே நிலவு உதித்துக் கொண்டிருந்தது...

“சாப்பாடு பிரமாதம், அவினாஷ்.”

நிலவும் நட்சத்திரங்களும் நிறைந்திருந்த ஆகாயத்துக்குக் கீழே பிரம்பு நாற்காலியில் வெள்ளியால் ஆன ஹுக்காவுடன் ரமேஷன் உட்கார்ந்திருந்தான். அவினாஷுக்கு ஒரே ஒரு வருத்தம்தான். சாப்பாட்டில் மீனோ, மாமிசமோ இல்லாமற்போய்விட்டதே என்பதுதான் அது. அந்த வீட்டில் உள்ள எல்லாருமே சைவ உணவு சாப்பிடுபவர்களாக ஆகிப்போனதே காரணம்.

கொய்யா மரங்களையும், பன் செடிகளையும் தாண்டி அந்தப் பக்கத்திலிருந்து காரின் ஹார்ன் சத்தம் கேட்டது.

“எனக்கு இங்கேயிருந்து போகணும்னே தோணலை, சுஜா!”

“எனக்கும்தான் ரமேஷ்.”

“இந்த நாற்காலியை விட்டு நான் இனிமேல் எழுந்திரிக்கவே மாட்டேன்.”

ரமேஷன் தன்னுடைய நீளமான கால்களை விரித்து வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து படுத்தான். சுஜா முன்பு பாதி தின்று வைத்த சோளக் கதிரை மீண்டும் கையில் எடுத்தாள்.

காரின் ஹார்ன் சத்தம் மீண்டும் கேட்டது. அவினாஷ் ஆடையணிந்து வெளியில் வந்தான். அவன் டை கட்டியிருந்தான். தலையில் ஹேர் ஆயில் தேய்த்திருந்தான். ரமேஷன் ஹுக்காவைக் கீழே வைத்தான். சுஜா நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள். அவர்கள் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

“நாங்க வரட்டுமா?”

அவர்கள் விடை பெறுவதற்காக நின்றிருந்தார்கள். துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்தவாறு நின்றிருந்த ஃபூல்ராணி தலையை ஆட்டினாள். திரைச்சீலைக்குக் கீழே ஊர்மிளாவின் வெளிறிப்போன பாதங்கள் வந்து நின்றன. கிழவர் தூக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை.


“இனி எப்பவாவது நீங்க இங்கே வருவீங்களா?”

நடந்து கொண்டிருக்கும்பொழுது ரமேஷனின் தோள்மீது கையைப் போட்டவாறு அவினாஷ் கேட்டான்.

“நாங்க இனியும் வருவோம். ஒரு நாள்...”

“எப்போ?” அவினாஷ் ரமேஷனைத் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

“தேன்நிலவுக்கு...”

ரமேஷனின் தோளில் சுற்றியிருந்த தன்னுடைய கையை அடுத்த நிமிடம் அவினாஷ் எடுத்தான். அவன் அதே இடத்தில் அப்படியே நின்றான்.

உங்களுக்குத் திருமணம் ஆகலையா?”

“இல்லை...”

“அப்படின்னா பதிவேட்டில் எழுதினது...?”

ஆமாம்... பதிவேட்டில் மிஸ்டர் அன்ட் மிஸஸ் ரமேஷன் பணிக்கர் என்றுதானே எழுதப்பட்டது?

“எதிர்காலத்துல இருந்தகொண்டு நான் அதை எழுதினேன், நண்பனே!”

அவர்கள் காரில் ஏறினார்கள். சரவிளக்குகளே, திரைச்சீலைகளே, கொலுசுகள் அணிந்த காற்பாதங்களே விடை தாருங்கள்.

10

“இது என்ன ரமேஷ்?” ஒட்டப்பட்ட ஒரு கவருடன் வராந்தாவில் வந்து நின்ற சுஜா கேட்டாள். ரமேஷனின் சூட்கேஸில் அந்த கவர் இருந்தது. கவரின் மீது முகவரி எதுவும் எழுதப்படவில்லை.

“பிரிச்சுப் படிக்கலாம்.”

பைப்பை வாயிலிருந்து எடுக்காமல் அவன் சொன்னான். சில நாட்களுக்கு முன்பு அவன் தன் தாய்க்கு எழுதிய கடிதமது. அவளிடம் அந்தக் கடிதத்தை காட்டிவிட்டு தபாலில் போடலாம் என்று அவன் நினைத்திருந்தான். ஹரித்துவாருக்கு வரும் அவசரத்தில் அவன் அதை மறந்துவிட்டான்.

“நான் படிக்கலாமா?”

“நிச்சயமா...”

அதைப் படிக்கும்பொழுது அவளுடைய முகத்தில் தெரியும் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? கண்களில் ஒரு மலர்ச்சி இருக்குமே! மகிழ்ச்சியால் அவள் துள்ளிக் குதித்துவிட மாட்டாளா?

“என் அன்பான அம்மாவுக்கு...” சுஜா கவரைப் பிரித்து படிக்கத் தொடங்கினாள். “கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது நான் கிராமத்திற்கு வந்து அம்மா, உங்களை இங்கு அழைத்து வருவதாக இருக்கிறேன். என்னாலும் சுஜாவாலும் இனிமேலும் காத்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் வந்து அந்தச் சடங்குகளை மங்களகரமாக நடத்தித் தர வேண்டும். சுஜாவின் தந்தை இந்த விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தனியாக எழுதுவார்.”

கடிதத்தைப் படித்த அவள் கண்கள் மலர்வதை அவன் பார்த்தான்.

“ஏன் இந்தக் கடிதத்தை போஸ்ட் பண்ணல?”

“உன்கிட்ட காட்டிட்டு போடலாம்னு நினைச்சேன்.”

அவன் கடிதத்தைத் திரும்பவாங்கி அதற்குக் கீழே இதைச் சேர்த்தான்: “நான் நேற்று ஹரித்துவாருக்கு வந்தேன். என்னுடன் சுஜாவும் இருக்கிறாள் என்பதைச் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கே நான் என்னுடைய எல்லா பாவங்களையும் கழுவப்போகிறேன். ‘வீரமித்ரோதய’த்தில் சொன்னது அம்மா, உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா?

‘கங்காத்வாரே குஸாவர்த்தே பில்வகே நீலபர்வதே

தீர்த்தோதகே கலு ஸ்னாதா புனர்ஜன்ம ந வித்யதே!’

இன்று இரவு நான் குஸாகாட்டிற்குச் செல்கிறேன். இறந்து போனவர்களுக்குச் சொந்தமான இடம் அது. அங்கே உட்கார்ந்து நான் என் தந்தையை நினைப்பேன்...”

கடிதத்தை இன்னொரு கவரில் போட்டு ஒட்டி முகவரியை எழுதியபோது அவள் கேட்டாள் “நான் போய் போஸ்ட் பண்ணட்டுமா?”

அருகிலேயே ஒரு தபால்பெட்டி இருந்தது. கடிதத்தைக் கையில் பிடித்தவாறு அவள் நடந்து செல்வதை வராந்தாவில் உட்கார்ந்து அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் மலை அடிவாரத்தில் முஸுரி எக்ஸ்பிரஸ் போய்க் கொண்டிருக்கும் சத்தம் இங்கு கேட்டது. நேரம் விலை மதிப்புள்ளது. நாளை இதே எக்ஸ்பிரஸ்ஸில் டில்லிக்குத் திரும்பச் செல்ல வேண்டும். ஹரித்துவாரில் வெறுமனே உறங்கி நேரத்தை வீணடித்து விடக்கூடாது.

“ஐ ஃபீல் லைக் கோயிங் அவுட்...”

அவன் எழுந்து புஷ் சட்டையை எடுத்து அணிந்தான். பெடஸ்டல் விளக்கிற்கு அருகில் பீட்டர் ஹாண்டேயின் ஒரு நாடகத்தைப் படித்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். பாத்திக்ஷேடின் வழியாக வந்த வெளிச்சத்தில் அவளின் தலைமுடி பொன்நிறத்தில் மின்னியது.

“இந்த நேரத்துல வெளியே போகணுமா, ரமேஷ்? உறங்கலையா?

முதல்நாள் இரவிலும் அவன் உறங்கவில்லை. பகல் முழுவதும் அலைந்து நடந்து கொண்டிருந்தான். மானஸாதேவியின் மலைமீது ஏறிய களைப்பு இன்னும் போகவில்லை.

“இது ஹரித்துவாரில் நம்மோட கடைசி இரவு. வா சுஜா.”

“எங்கே ரமேஷ்?”

“குஸாகாட்டுக்குப் போவோம். என் அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்யணும்.”

அவள் புத்தகத்தை மூடி வைத்தாள். அவிழ்த்துவிடப்பட்ட தலைமுடியுடன், காலில் செருப்புகூட அணியாமல் அவள் அவனுடன் வெளியிலிறங்கினாள். டில்லியில் இருக்கும்போதுகூட சில நேரங்களில் அவள் இப்படி நடப்பதுண்டு. அந்தச் சமயத்தில் சாந்திநிகேதனில் எங்கேயோ பார்த்த ஏதோ ஒரு வங்காள இளம்பெண் அவள் என்று அவனுக்குத் தோன்றும்.

நேரம் நள்ளிரவாகிவிட்டது. ஹரித்துவார் முழுவதும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. ஆள் அரவமே இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கும் பாதை. நேற்று சரஸ்ஸின் போதையில் அலைந்து நடந்த இரவு மீண்டும் வந்திருக்கிறது.

குஸாகாட் லோவர் சாலைக்கு அப்பால் எங்கோ இருந்தது. வழி தெரியவில்லை. நேராக நடந்தால் அங்கு போய் சேராமல் இருக்க முடியாது. அதுவரை ஒன்றிலிருந்து வேறொன்றிற்கு கிளைவிட்டுப் போகும் தெருக்கள் வழியே நடக்க வேண்டும். குஸாகாட்டை இலக்கு வைத்து அந்தப் பின்னிரவு நேரத்தில் அவர்கள் நடந்தார்கள். ‘தத்தாத்ரேய மகரிஷியே, நாங்க வர்றோம்’ - அவர்கள் மனதிற்குள் கூறிக் கொண்டார்கள்.

ஊப்பர் ஸடக்கையும் லோவர் ஸடக்கையும் இணைக்கக்கூடிய தெரு ஒன்றில் அவர்கள் திரும்பினார்கள். அடர்த்தியான இருட்டு, இரு பக்கங்களிலும் சிதிலமடைந்த சுவர்கள்.

“ரமேஷ், நீ என்னை எங்கே கொண்டுபோற?”

அவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். இதே தெருவிலும் அவன் நேற்று இரவு அலைந்து திரிந்திருக்கிறானே!

இருட்டில் என்னவோ அசைவதைப்போல இருந்தது.

“என்ன அது?”

அவனுடைய கையைப் பிடித்திருந்த அவளின் பிடி இறுகியது. ஒரு கருத்த உருவம் இருட்டில் எழுந்து நின்றது. திரிசூலத்தின் நுனி மின்னியது. திரிசூலத்தை உயர்த்திப் பிடித்தவாறு அது அவர்களுக்கு நேராகத் திரும்பியது.

“ரமேஷ்...”

இருட்டில் அவர்களுடைய முகத்தில் இரத்தம் சுண்டிப்போனதை அவன் பார்க்கவில்லை. நேராகத் திரும்பி அவன் கேட்டான்.

“என்னை ஞாபகத்துல இருக்கா?”

ஒரு நிமிடம் பயங்கர அமைதி நிலவியது. உருவத்திற்கு என்னவோ சொல்லவேண்டும்போல் இருந்தது. வெளியில் தொங்கிக் கொண்டிருந்த நீளமான நாக்கு அதற்கு வழிவிட்டால்தானே!

சுஜாவின் தோளைப் பிடித்துக் கொண்டு பாதையின் ஓரத்தில் ரமேஷன் நடந்தான். உயர்த்திப் பிடித்த திரிசூலத்துடன் அந்த உருவம் அவர்களைப் பின்தொடர்ந்தது.

“யாருன்னு தெரியுதா?”

“நேற்று பார்த்தேன்னு சொன்ன உருவம்... அதுதானே?”

அவளுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது.

லோவர் சாலையில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த உருவத்தின் மீது வெளிச்சம் விழுந்தது. சுஜா உருவத்தைத் தெளிவாகப் பார்த்தாள்.


‘பாவத்தின் சின்னம்தான் இந்த உருவம். ஹரித்துவாரில் மனிதர்கள் தினமும் வந்து கழுவுற பாவம் மனித வடிவத்துல இருக்கிறதுதான் இந்த உருவம்.’

தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரமேஷன்.

அந்த உருவம் அவர்களை நோக்கி கையை நீட்டியது. ரமேஷன் தன் பாக்கெட்டிற்குள் கையைவிட்டு ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை வெளியே எடுத்தான். அதைப் பார்த்து அந்த உருவத்தின் இரத்தக் கண்கள் ஒளிர்ந்தன. உருவம் பணத்தை வாங்கிக் கொண்டு கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மண்டையோட்டிலிருந்து சில பூக்களை எடுத்து சுஜாவுக்கு நேராக நீட்டியது. பூக்களை வாங்கியபோது சுஜாவின் கை நடுங்கியது.

அந்த உருவம் இருட்டைக் கிழித்துக் கொண்டு பாதையில் ஏறியது. இருட்டில் வசிக்கிறது, இருட்டில் அலைகிறது...

தேவர்களின் ஊரான இதே ஹரித்துவாரில் சொர்க்கத்தின் நுழைவாயிலான இந்த ஹரித்துவாரில், கடவுள்களுடன் ஒரு பூதமும் நடக்கிறது. தெய்வங்கள் குளிர்ந்துபோன சிலை வடிவில் இருக்கிறார்கள். பூதமோ இரத்தமும் சதையும் கொண்டு வாழ்வதுடன் உணவுக்காக யாசித்தும் திரிகிறது. குளிர்ந்துபோய் அசைவே இல்லாமல் இருக்கும் சிலைகளைவிட அவன் உயிருள்ள பூதத்தை மிகவும் விரும்பினான். ‘திருமூர்த்திகளே... மஹாமுனிவர்களே... என்னை மன்னித்து விடுங்கள்...’ - அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஒடுக்கலான லோவர் சாலையின் வழியாக அடைக்கப்பட்ட கடைகளைத் தாண்டி அவர்கள் நடந்தார்கள். எங்கும் பயங்கரமான அமைதி நிலவியது. தூரத்தில் கங்கை நதி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

“ரமேஷ், நாம திரும்பிப் போவோம்.”

சுஜாவிற்கு உள்ளில் பயம் தோன்றியது. நள்ளிரவு தாண்டிய நேரம். வெறிச்சோடிப் போன, அறிமுகமில்லாத பாதை.

“பயப்படாதே, சுஜா.”

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அவளைத் தன் உடம்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவன் பயணத்தைத் தொடர்ந்தான். ஹரித்துவாருக்கு தினந்தோறும் எண்ணிக்கையிலடங்காத பக்தர்கள் வருகிறார்கள், போகிறார்கள். அவர்கள் கங்கையில் மூழ்கி ஆலயங்களைப் பார்த்துவிட்டு திரும்பிப் போவதுதான் எப்போதும் நடப்பது. அவர்களில் எத்தனைப் பேர் ஹரித்துவாரைப் பார்க்க முயற்சி செய்திருப்பார்கள்? அவர்களில் எத்தனைப் பேர் அந்த உருவத்தைப் பார்த்திருப்பார்கள்? ஹரித்துவாருக்கு பல முகங்கள் இருக்கின்றன. பகலில் இருப்பது ஒன்று. இரவில் இருப்பது வேறொன்று. ப்ரம்மகுண்டத்தில் காணும் முகமல்ல ஸப்ஜிமண்டியில் காணும் முகம்.

டில்லிக்குத் திரும்பிப் போவதற்கு முன்பு ஹரித்துவாரின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பார்க்க வேண்டும். யாரும் பார்த்திராத இந்த தெய்வ உலகத்தின் முகங்கள் எல்லாவற்றையும் காண வேண்டும் என்று முடிவெடுத்தான் ரமேஷன். நேரம் செல்லச் செல்ல சுஜாவின் பயம் மாறியது. ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு பாதைகளில் அவர்கள் நடந்தார்கள்.

பாதையின் இடது பக்கத்தில் கங்கை நதி ஓடிக் கொண்டிருந்தது. நதி பாதையைத் தொட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. வலது பக்கத்திலிருந்து வந்த ஒரு சாக்கடை பாதையைக் கடந்து நதியில் கலந்து கொண்டிருந்தது. நதியும் சாக்கடையும் ஒன்று சேரும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் உயர்ந்து நிற்கும் சுவர்களுக்கு இடையில் கோவில் இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். யாருடைய கோவில் அது? அவர்கள் அந்த ஆலயத்தை நோக்கி நடந்தார்கள்.

சுவரிலிருந்த கதவு திறந்து கிடந்தது. கற்கள் பதித்த ஒரு நீளமான முற்றம். இங்குமங்குமாய் யாரெல்லாமோ அங்கு உறங்கிக் கொண்டிருந்தார்கள். நதியைப் பார்த்துக் கொண்டு மூன்று ஆலயங்கள் இருந்தன.

முற்றத்தின் வழியாக நடக்கும்போது தங்களின் காலடிச்சத்தமே பெரும் பறை போல் ஒலிப்பதை அவர்களே உணர்ந்தார்கள்.

நதிக்கும் ஆலயங்களுக்கும் நடுவில் அவர்கள் நின்றார்கள். வலது பக்க எல்லையில் இருந்த ஆலயம் பாசி பிடித்திருந்தது. எனினும், சுவர் ஓவியங்கள் முழுவதும் அழிந்துபோய் விடவில்லை. கொக்குகளுடன் சேர்ந்து காணப்படும் புறாக்கள், இன்னொரு இடத்தில் ஒன்றையொன்று கொத்துவதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் மயில்கள்... சிறகை விரித்து ஆடும் மயில்களைத் தானே பொதுவாகப் பார்க்க முடியும்? கண்களில் கோபம் தெரிய நின்றிருக்கும் மயில்களை அவர்கள் முதல் முறையாக அப்போதுதான் பார்க்கிறார்கள்.

உறுதியான கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் விக்கிரகங்களைப் பார்க்க முடியவில்லை. நடுவிலிருக்கும் சிறிய ஆலயத்திலும் விக்கிரகத்தைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் இடது பக்கமிருந்த கோவிலுக்குள் சென்றார்கள். அங்கு சுவர் ஓவியங்களோ கொத்து வேலைப்பாடுகளோ எதுவும் இல்லை. கோவிலுக்குள் ஒரு பழைய விக்கிரகம் மட்டும் இருந்தது. முகமும் தலையும் தேய்மானம் ஆனதால், அந்த விக்கிரகத்தில் இருப்பது யார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. யாரென்று தெரியாத தெய்வமே, உன்னை நாங்கள் வணங்குகிறோம் -அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.

ஆள் அரவமற்ற ஆலயங்களுக்கு முதுகைக் காட்டியவாறு அவர்கள் அமர்ந்தார்கள். முன்னால் நிலவொளியில் நதி நன்கு தெரிந்தது. நீரில் மீன்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. முழங்காலில் முகத்தை வைத்தவாறு கங்கை நதியைப் பார்த்தவாறு அவர்கள் அமர்ந்திருந்தார்கள். ‘சாகர மன்னரின் பத்தாயிரம் மகன்களையும் பாவத்திலிருந்து விடுவித்த கங்கையே, நீ என்னோட சின்னச் சின்ன பாவங்களை கழுவித் துடைப்பேல்ல? பகீரதனின் தேர்ச் சக்கரங்கள் உண்டாக்கிய தடங்களுக்கு மேலே ஓடிக் கொண்டிருக்கும் நதியே, நீ சிரிக்கிறியா?” - தனக்குள் பேசிக் கொண்டான் ரமேஷன்.

“ரமேஷ்...”

“ம்...?”

“நீ என்ன எதுவுமே பேசாம இருக்கே?”

“நான் சிந்திச்சிக்கிட்டு இருந்தேன்.”

அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். ‘எந்த மாதிரியான அனுபவங்களையெல்லாம் நான் கடந்து வந்திருக்கேன்? எட்டு வயசுல நான் என் தந்தையோட சிதைக்கு நெருப்பு வச்சேன். ட்ரவுசர் அணிஞ்ச வயசுல நான் கஞ்சா இழுத்தும் விலை மாதர்கள்கிட்ட போயும் என் அம்மாவை இடைவிடாம அழவச்சேன். போன குளிர் காலத்துல ஸெஞ்யோர் ஹிரோஸியோட ஊர்ல இருந்த ஒரு மதுக் கடையில் நான் தேவையில்லாம பிரச்சினைகள் உண்டாக்கினேன். ஆறு மாதங்களுக்கு முன்னாடி ஒரு நாள் அளவுக்கதிகமா பங்க் சாப்பிட்டுட்டு மூணு நாட்கள் மருத்துவமனையில் மரணத்தோட போராடிக்கிட்டு கிடந்தேன். அப்படியெல்லாம் நடந்தது நான்தான். இப்போ அதே நான் ஹரித்துவார்ல, நள்ளிரவு நேரத்துல, ஆள் அரவமில்லாத கோவில்களுக்கு முன்னால் ஒரு இளம்பெண்ணுடன் சேர்ந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.”

எப்படிப்பட்ட நான்!

“இப்படி இருந்தா நான் தூங்கிடுவேன்.” சுஜாவின் தலை ரமேஷனின் மார்பின்மீது சாய்ந்தது.

“பேன் இருக்கான்னு பாரு.”

அவளுடைய தலையில் இல்லாத பேன்களைத் தேடியவாறு அவன் உட்கார்ந்திருந்தான். அவள் மெதுவான குரலில் ஒரு பாட்டைப் பாடினாள். கங்கை நதி அமைதியாக அவர்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. நிலவில் மூழ்கிய அமைதியான கோவில்கள்.


அவர்கள் வழி தவறி வந்த ஆண் பேயும், பெண் பேயும். பேன்களைத் தேடிய அவனுடைய கை விரல்கள் அவளின் மென்மையான முடி இழைகள் தொங்கிக் கொண்டிருந்த பின்கழுத்தில் இறங்கியது. ப்ளவ்ஸுக்குள்ளிருந்த அவளுடைய முதுகு எலும்புகளை அவன் தடவினான். ‘அருமையான சொந்த மணத்தை நான் உணரும் உன் உடம்பு...’ - அவன் தனக்குள் கூறிக் கொண்டான்.

கங்கைக்கும் ஆள் அரவமில்லாத கோவில்களுக்கும் நடுவில் நிலவொளியில் ஆண் பேயும் பெண் பேயும் ஒன்றானார்கள். “பெயர் தெரியாத தெய்வங்களே! கங்கா தேவியே! எங்களை மன்னியுங்கள்...!” - அவர்கள் கூறினார்கள்.

“சுஜா, தத்தாத்ரேயர் என்னை அழைக்கிறார். நான் என் அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்யணும்...”

திறந்து கிடந்த கதவு வழியாக ரமேஷன் வெளியே வந்தான். அவனுடன் அவனுடைய நிழலான சுஜாவும். பாதைகள் வழியாக மீண்டும் பயணம். பாதையின் மங்கலான இருட்டில் எங்கோ ஒரு மணியோசை கேட்டது. ஒரு நிழல்... வெள்ளைப் பசு மெதுவாக நடந்து வந்து சுவருக்கருகில் நின்றது.

"பசுவே, நீ தூங்கலையா? அந்த உருவத்துக்கு நான் பணம் கொடுத்தேன். உனக்கு நான் என்ன தரணும்?"

பசு காதுகளை விறைத்துக் கொண்டு, அவனுக்கு நேராகத் தன் முகத்தை உயர்த்தியது.

"நேற்று நீ பார்த்ததா சொன்ன பசு இதுதானா?"

"ஆமா... ஆனா, இது பசு இல்ல. நன்மையின் சின்னம்."

ஹரித்துவாரின் ஆத்மாவான வெள்ளைப்பசு தன் கழுத்தில் அணிந்திருந்த பூஜை மணிகள் ஒலிக்க இரவைக் கிழித்துக் கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தது.

குஸாகாட்டின் தூண்களின் கீழே அவர்கள் நின்றார்கள். படிகளில் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தனர் மனிதர்கள். பிண்டமும், பித்ரு தானமும் நடத்தப்படும் கரை. இங்கு எவ்வளவோ மனிதர்களின் சாம்பல்கள்! அணைந்து போன குத்துவிளக்குகள் நீரில் இப்போதும் சிதறிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

"ஒரு மாலை நேரத்தில் நரம்புகள் வெடிச்சு, இரத்தம் ஒழுகி மரணமடைஞ்ச என் அன்பான தந்தையே, உங்களை நான் நினைக்கிறேன். உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்."ரமேஷன் சொன்னான்.

தூணுக்குக் கீழே நதியைப் பார்த்தவாறு அவர்கள் அமர்ந்தார்கள். தூரத்தில் பகீரதனின் தேரொலிகள்! கங்கா தேவியின் குரல்!

"தர்சயஸ்வமஹாராஜா, மார்க்கம் கேன வ்ரஜா ம்ருஹம்..."

"மகாராஜா, எனக்கு முன்னாலிருக்குற பாதையைக் காட்டித் தந்தது."

கைலாசத்தின் அடிவாரத்தின் வழியாக தேரோட்டிக் கொண்டு வரும் பகீரதனை கங்காதேவி பின்தொடர்ந்தாள். ஹரித்துவாரில் கதி கிடைக்காமல் அலையும் சாகர மன்னரின் மகன்களுக்கு இதோ மோட்சம் கிடைத்துவிட்டது.

ரிஷிகேஷில் திருவேணியையும் தாண்டி பகீரதனின் சேதர் ஹரித்துவாரை அடைந்தது. எத்தனையோ வருடங்களாக ஒற்றைக் காலில் நின்றுகொண்டு கடுமையான தவத்தைச் செய்து கொண்டிருக்கும் தத்தாத்ரேய மகரிஷியை பகீரதனோ, கங்காதேவியோ பார்க்கவில்லை. ஓசை உண்டாக்கியவாறு பகீரதனின் தேர் மகரிஷியைத் தாண்டிச் சென்றது. தத்தாத்ரேயன் ஹோம கர்மங்களுக்காகச் சேர்த்து வைத்திருந்த புல் கங்கை நீரோடு போய்விட்டது. கண்களைத் திறந்த பகவான் தத்தாத்ரேயர் புல்லையும் அதை இழுத்துக் கொண்டு போகும் கங்கையையும் பார்த்தார். பகவானின் கோபப் பார்வையைப் பார்த்து கங்காதேவி நடுங்கிப்போனாள். தத்தாத்ரேயர் தேவியை தவ சக்தி கொண்டு சுட்டெரிக்க முயலும்போது, பகீரதன் ப்ரம்மதேவனின் கால்களில் போய் விழுந்தான். கங்கை அழிந்துவிட்டால், சாகர மன்னரின் பத்தாயிரம் மகன்களுக்கும் எந்தக் காலத்திலும் சாப மோட்சமே கிடைக்காமற் போய்விடுமே!

"இந்த முறை மன்னிக்க வேண்டும்."

பூமிக்கு இறங்கி வந்த ப்ரம்மதேவன் தத்தாத்ரேயரிடம் கெஞ்சினான்."

"உங்களின் தவம் முடியும்வரை திருமூர்த்திகள் உங்களுக்காகக் காவல் இருப்பார்கள்- தவம் கடைசிவரை நடப்பதற்காக."

கோபத்திற்கு ஆளாகி பின்னர் தணிந்த தத்தாத்ரேயர் கங்காதேவிக்கு மன்னிப்பு கொடுத்தார். திருமூர்த்திகள் ஆயிரத்தொரு வருடங்கள் நீண்டு நின்ற பகவானின் தவம் முடியும்வரை குஸாகாட்டில் அவருக்குக் காவல் இருந்தார்கள்.

'தத்தாத்ரேய மகரிஷி ஆயிரத்தொரு வருடங்கள் தவம் செய்த இடத்தில்தான் நான். இப்போ நின்னுக்கிட்டு இருக்கேன். திருமூர்த்திகளின் பாதங்கள் தொட்ட மண்ணில்தான் நான் இப்போ நின்னுக்கிட்டு இருக்கேன்...'- மனமும் உடம்பும் புத்துணர்ச்சி அடைய, ரமேஷன் அமைதியாக நின்றிருந்தான்.

"எனக்குள் எல்லா பாவங்களும் ஜுவாலை விட்டு எரியுது சுஜா. இந்த நெருப்போட வெப்பத்தை என்னால தாங்க முடியல..."

கங்கையிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றிலும் அவன் வியர்வை வழிய நின்றிருந்தான்.

"வா... நாம போவோம்."

ஊப்பர் ஸடக்கை அடையும்போது வானம் வெளுத்திருந்தது. எங்கோ சங்கொலி ஒலித்தது.

11

னுமான் கம்ஹலி நோக்கி ரிக்ஷாவை மிதித்தான். ரிக்ஷாவில் ரமேஷனும் சுஜாவும் உட்கார்ந்திருந்தார்கள். ஹனுமான் பெடல்களில் நின்றவாறு ரிக்ஷாவை மிதிப்பதைப் பார்க்கும் போது அவன் ஒரு குதிரையோ என்று எண்ணத் தோன்றும்; சிறு முடிகளை அசைத்தவாறு குளம்பொலிக்க ஓடும் குதிரை.

"ஹனுமான்!"

"என்ன மேம்ஸாப்?"

"நீ இறந்துட்டே."

ஒரு அதிர்ச்சியுடன் ஹனுமான் சுஜாவைத் திரும்பிப் பார்த்தான்.

"நீ எப்படி இறந்தேன்னு தெரியுமா? இரத்தப் புற்று நோய் வந்து..."

"அப்படியெல்லாம் சொல்லாதீங்க, மேம்ஸாப். நான் பாவம். பொண்டாட்டியும், பிள்ளைகளும் எனக்கு இருக்காங்க."

அவன் கெஞ்சினான்.

"உன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நான் செலவுக்குக் கொடுக்குறேன். போதுமா?"

"மேம் ஸாப்..."

அவனுடைய குரல் மிகவும் பரிதாபமாக ஒலித்தது.

"நீ செத்துப் போயிட்டா உனக்கு எப்படி மனைவியும் பிள்ளைகளும் இருப்பாங்க? இறந்து போனவர்களுக்கு குடும்பம் இல்ல. யாருமே இல்ல. மரணம் சுதந்திரமானது, ஹனுமான். இறந்து போன நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி!"

ஹனுமான் அடுத்த நிமிடம் ப்ரேக் போட்டான். ரிக்ஷா பயங்கரமாகக் குலுங்கியது. சொல்லப் போனால் அது ஒரு குதிரை வண்டியின் மீது இடித்தது. ஹனுமான் பதைபதைத்துப் போய் நின்றான். குதிரை வண்டிக்காரன் அவனை வாய்க்கு வந்தபடி திட்டினான்.

"என்ன ஹனுமான் இது?"

"அவனைக் குறை சொல்லக்கூடாது. அவன்கிட்ட நீ செத்துப் போயிட்டேன்னு சொன்னா, யார்தான் பதைபதைப்பு அடையமாட்டாங்க, சுஜா?"

ஹனுமான் மீண்டும் ரிக்ஷாவை மிதிக்கத் தொடங்கியபோது, சுஜா அவனைத் தேற்றினாள்.

"ஹனுமான், நீ இறக்கல...கேட்டுதா?"

கங்ஹலில் தக்ஷேஸ்வர மகாதேவர் ஆலயத்திற்குச் சற்று தூரத்தில் ரிக்ஷா நின்றது. ரிக்ஷாவை விட்டு இறங்கி அவர்கள் நான்கு பக்கங்களிலும் பார்த்தார்கள். 'தக்ஷேஸ்வரா, உன்னோட திருச்சந்நிதியில நாங்க நின்னுக்கிட்டு இருக்கோம்...' - அவர்கள் மனதிற்குள் கூறிக் கொண்டார்கள்.

மிகவும் பழமையானது. தக்ஷேஸ்வர மகாதேவரின் கோவில். நுழைவாயில் மிகவும் ஒடுக்கலாக இருந்தது. ஆலயத்திற்குள் பழமையான சிவலிங்கத்தை மங்கலான இருட்டில் அவர்கள் பார்த்தார்கள். தக்ஷேஸ்வர லிங்கத்தின் மீது அவர்கள் மலர்களைத் தூவினார்கள்.


"தக்ஷேஸ்வரா, சதிதேவியை நாங்கள் மறக்கல. உன்னோட அன்புக்குப் பாத்திரமான சதிதேவிக்கு தனியா நாங்கள் பூக்கள் வச்சிருக்கோம். தக்ஷேஸ்வரா, எங்களுக்கு விடை கொடு. தக்ஷப்ரஜாபதி, நாங்க வர்றோம்"- அவர்கள் கூறினார்கள்.

கும்ப வடிவில் உள்ள கோபுரத்தைக் கொண்ட ஒரு சிறு கோவில். சுற்றிலும் நுழைவாயில்கள். அவர்கள் ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தார்கள்.

'தக்ஷப்ரஜாபதி... புராணங்களும் வேதங்களும் உன்னை வெறுக்கலாம். நான் உன்னை வெறுக்கல. உன்னோட கர்வம் மனிதப் பிறவியோட கர்வம். யுகங்கள் எவ்வளவோ கடந்தும் உன்னோட மனம் எனக்குள் அப்படியே இருக்கு. சிவ மந்திரங்கள் என்னைச் சுற்றிலும் ஒலிப்பதை நான் கேக்குறேன். தக்ஷப்ரஜாபதி! என் விதி மனிதனோட விதி. உன்னோட விதிதான். உன்னோட தவம் முழுமையடையாமல் இருக்குறதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. என் வாழ்க்கை முழுமையடைய முடியாத தவங்களால் ஆனது. ப்ரம்மபுத்திரனே, மனிதப் பிறவியோட வித்தான உன்கிட்ட நாங்க இப்பவும் சரியானபடி நடக்குறோம். அதோ வியட்நாம், அதோ பயாஃப்ரா, அதோ அரேபியர்களும் யூதர்களும்... நாங்கள் எங்களோட அழிவிற்காக கைலாச மலையைப் பார்த்துக்கிட்டு இருக்கோம்- வீரபத்திரனையும் சிவ கணங்களையும் எதிர்பார்த்து. யாக நெருப்பில் சதிதேவிமார்கள் பற்றி எரியட்டும். எங்களின் விதி அதுதான்...' - அவன் மனதிற்குள் சொன்னான்.

கங்ஹலுக்குச் செல்லும் பயணம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் பயணமல்ல என்பதை ரமேஷன் உணர்ந்து கொண்டான். மாறாக, காலத்திற்குள் செல்லும் பயணம். இரு வேறு காலங்களுக்கு மத்தியில் தன்னை இழந்தபடி ரமேஷன் நடந்தான்.

கங்ஹல் ஜ்வாலாப்பூர் வழியாக ரிக்ஷா மீண்டும் ஓடியது. சதீகுண்டம் வந்தவுடன் அது நின்றது. அங்குதான் தக்ஷப்ரஜாபதியின் தவம் நடந்தது. அங்குதான் சதீதேவி நெருப்பில் குதித்தது...

ஒரு மர நிழலில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். ஹனுமான் ஒரு பீடியைப் புகைத்துக் கொண்டு ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்தான்.

சதீகுண்டத்தில் உட்கார்ந்தவாறு சுஜாவைத் தன்னுடைய மடியில் அமர்த்திக் கொண்டு ரமேஷன் கேட்டான்: "கந்துமகரிஷியின் கதை உனக்குத் தெரியுமா?"

"கந்து மகரிஷியா? யார் அது?"

"எத்தனையோ வருடங்களாக தண்ணிக்குள்ளே மூழ்கிக்கிட்டு கந்து மகரிஷி தவம் செய்துக்கிட்டு இருந்தார். தவத்தைக் கலைக்கணும்ன்றதுக்காக தேவர்கள் ப்ரம்லோசா என்ற பேரழகியை மகரிஷிகிட்ட அனுப்பி வச்சாங்க. பேரழகியா இருந்த ப்ரம்லோசா கந்துவை வசீகரம் செய்து தவத்தைக் கலைக்குறதுல வெற்றியடைஞ்சிட்டா. அதோட நிற்காம அவர் கூட தொள்ளாயிரத்து ஏழு வருடங்கள் காம லீலைகள்ல ஈடுபட்டா. தொள்ளாயிரத்து ஏழு வருடங்கள், ஆறு மாதங்கள், மூன்று நாட்கள் கடந்தது. ப்ரம்லோசா தேவலோகத்திற்குத் திரும்பப் போவதற்கான நேரம் வந்திடுச்சு. அந்த விஷயத்தைத் தெரிஞ்ச காமவயப்பட்டுக் கிடந்த கந்து சோகமயமா மாறிட்டாரு. தேவலோகத்துக்குப் போகக்கூடாதுன்னு ப்ரம்லோசாக்கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கிட்டாரு. ஆனா, அவ போகாம இருக்க முடியாது. ப்ரம்லோசாவோட பிடிவாதத்தைப் பார்த்து பயங்கர கோபத்துக்கு ஆளாயிட்டாரு கந்து. அவர்கிட்ட இருந்து நெருப்பு கிளம்பிச்சு. பயந்துபோன ப்ரம்லோசா வாயு மார்க்கமா தேவலோகத்துக்கு ஓடிட்டா. மர இலைகள் அவளோட வியர்வையை ஒத்தி எடுத்தன. அப்போ கர்ப்பவதியான ப்ரமலோசாவோட கர்ப்பம் இலைகளுக்கு மாறியது. வாயு, சந்திரன்- ரெண்டும் மர இலைகளில் சேர்ந்த கர்ப்ப சக்தியைச் சேகரித்து மாரிஷான்ற அழகியைப் படைச்சாங்க."

தன்னுடைய மடியில் படுத்திருந்த இளம் பெண்ணின் கூந்தலை கன்னத்தின் பக்கம் ஒதுக்கிவிட்டவாறு அவன் கதையை முடித்தான்.

"மாரிஷாவோட மகன்தான் தக்ஷப்ரஜாபதி."

களைப்பு மாறியவுடன் அவர்கள் மீண்டும் எழுந்து நடந்தார்கள்- சதீதேவியின் பாத முத்திரை பதிந்த மாயாபுரி வழியாக.

"எல்லாத்தையும் பார்த்தாச்சா பாபுஜீ?"

ரிக்ஷாவில் உட்கார்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்த ஹனுமான் தூக்கம் கலைந்து எழுந்து கேட்டான்:

"எல்லாத்தையும் பார்த்தாச்சு, நண்பனே! வீரபத்திரன் தன்னோட முடியில இருந்து படையை உண்டாக்குறதைப் பார்த்தோம். கீழே அறுந்து விழுந்த தக்ஷனோட தலையையும் ஆட்டு தலை உள்ள உடலையும் பார்த்தோம். இடிஞ்சு விழுந்த தக்ஷனோட அரண்மனையைப் பார்த்தோம்."

ரிக்ஷா மீண்டும் ஓடியது. "நான் இதோ ஒரு காலகட்டத்தில இருந்து இன்னொரு காலகட்டத்துக்கு வர்றேன்."- ரமேஷன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

தொடர்ந்து அவர்கள் அஞ்சனாதேவி ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கிருந்து தூரத்திலிருந்த சத்யநாராயணா ஆலயத்திற்கு.

எவ்வளவு ஆலயங்கள்! எவ்வளவு தேவர்கள், தேவதைகள்!

"சுஜா, ஹரித்துவாரில் மனிதர்களைவிட அதிகமா இருக்கிறவங்க தேவர்களும் தேவதைகளும்தான்."

"ரமேஷ், நீ ஒரு தேவனாகவும் நான் ஒரு தேவதையாகவும் இருந்தா..."

அவள் அப்படி இருக்கக் கூடாதா என்று விரும்பினாள்.

அரோராவின் ஹோட்டலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் இருந்தது சத்யநாராயணா ஆலயம். வெயில் படிப்படியாகக் கூடிக் கொண்டிருந்தது. அடர்த்தியான நீல நிறத்திலிருந்த வானத்திற்குக் கீழே, வெயிலில் பிரம்மாண்டமான ஆலயங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து நின்று கொண்டிருக்கின்றன. ஹரித்துவாரில் பார்த்த மற்ற எல்லா ஆலயங்களையும்விட அளவில் பெரியனவாகவும் அழகானவையாகவும் இருந்தன அந்தக் கோவில்கள்.

“சுஜா, சத்யநாராயணா ஆலயங்களோட கம்பீரத்தைப் பார்த்து நான் உண்மையிலேயே அசந்து போனேன்.”

“எனக்கு ரொம்பவும் பிடிச்சது அஞ்சனாதேவி ஆலயம்தான்.”

ஆள் அரவமில்லாத, பூஜையும் பூக்களும் இல்லாத அஞ்சனாதேவி ஆலயம்...

“எனக்காக ஒரு கோவிலை யாராவது உண்டாக்கினா?”

“அப்பவும் அஞ்சனாதேவி ஆலயம்தான் எனக்குப் பிடிக்கும்.”

“அப்படின்னா என்னைவிட உனக்குப் பெரியவ அஞ்சனாதேவியா?”

“ரமேஷ், நீ என்னோட ஒரு பகுதியாச்சே? எனக்குப் பிடிச்ச கோவில் உனக்கும் பிடிக்கணும்ல?”

“எனக்கு ரொம்பவும் பிடிச்சது தக்ஷ ஆலயம்தான்!”

“ரமேஷ், உன்னோடது ஒரு டூவல் எக்ஸிஸ்டன்ஸ்... எனக்குள்ளும் உனக்குள்ளும் நீ ஒரே நேரத்துல வாழ்ற...”

“யாருக்கும் அவங்க மட்டுமே உள்ள எக்ஸிஸ்டன்ஸ் இல்ல...”

“இருக்கு...”

“இல்ல...”

“இருக்கு. உலகத்துல என்னைத் தவிர வேற யாருமே இல்லைன்னு வச்சுக்கோ. அப்போ என்னோட எக்ஸிஸ்டன்ஸ் என்னோடது மட்டும்தானே?”

“காற்றை எதிர்த்து நீ நிக்கிறப்போ நீ காற்றோடு சேர்ந்து இருக்கேல்ல? காற்றை சுவாசிக்கிறப்போ காற்றோட வாழ்க்கையில நீ பங்கு பெறுகிறாயா இல்லையா? நீ நடக்குறப்போ உன் காலடிகள் பட்டு சிறு உயிரினங்கள் நசுங்கி சாகுறப்போ, அவங்க கூடவும் நீ எக்ஸிஸ்ட் செய்றியா இல்லியா? முட்டாளே, நீ என்கிட்ட வாதம் பண்ண வர்றியா?

“நான் தோத்துட்டேன்.”

அவள் அவனுடைய தோள்மீது தன் தலையைச் சாய்த்தாள்.


12

கொஞ்சம் கஞ்சாவோ, சரஸ்ஸோ வேண்டும். போதை மருந்து பயன்படுத்தி இருபத்து நான்கு மணி நேரங்களுக்கும் மேலாகிவிட்டது. சமீப காலத்தில் இப்படி ஒரு சம்பவம் உண்டானதே இல்லை. ரமேஷனால் இருக்க முடியவில்லை.

ஹரித்துவாரில் போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன என்ற விஷயம் தெரியாத ஒன்றல்ல. டில்லியில் கூடத்தான் தடை செய்திருக்கிறார்கள். அதனால என்ன? சரஸ்ஸோ, கஞ்சாவோ, அபினோ எங்கு வேண்டுமென்றாலும் கிடைக்கத்தானே செய்கிறது? ஹரித்துவாரில் மட்டும் அது கிடைக்கவே கிடைக்காது என்பதை நம்புவதற்கு அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே!

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாமல் அவன் வராந்தாவில் இங்குமங்குமாக நடந்தான். கடைசியில் எந்தவித யோசனையும் இல்லாமல் வெளியே வந்தான். ‘ஸப்ஜிமண்டி வரை போய் பார்க்கலாம். கிடைச்சா சரி.  எதுவும் கிடைக்கலைன்னா பட்டைச் சாராயம் கிடைச்சா கூட போதும். தொண்டையைக் கொஞ்சம் நனைக்கணும். விஷயம் அவ்வளவுதான். அதைச் செய்ய முடியலைன்னா பைத்தியம்தான் பிடிக்கும்’ - அவன தனக்குள் சொல்லிக் கொண்டான்.

வெயில் ‘சுள்’ளென்று அடித்துக் கொண்டிருந்தது. பாதையில் கால் வைத்ததுதான் தாமதம் தோளும் கையிடுக்கும் வியர்வையில் நனைந்துவிட்டன. அஞ்சல் அலுவலகத்திற்கு முன்னால் அவன் ஒரு ஹிப்பியைப் பார்த்தான். தன்னுடைய கூட்டத்தை விட்டு தவறி நின்று கொண்டிருந்த ஒரு தனி ஹிப்பி. ஒரு வித பதைபதைப்புடன் இரண்டு பக்கங்களிலும் மாறி மாறி பார்த்தவாறு அவன் நடந்து கொண்டிருந்தான். ‘அவனிடம் ஏதாவது இல்லாமல் இருக்காது’ - ரமேஷன் நினைத்தான்.

கேட்டபோது ஏமாற்றம்தான் கிடைத்தது. அவனிடம் எதுவும் இல்லை.

“சும்மா தரவேண்டாம். நான் பணம் தர்றேன்.”

எதைக் கொடுக்கவும் தயாரான நிமிடம். ஒரு துண்டு கஞ்சா தருபவனுக்கு கையில் கட்டியிருக்கும் நானூறு ரூபாய் விலை வரக்கூடிய கடிகாரத்தைக் கழற்றிக் கொடுக்கவும் அவன் தயார்தான். ஆனால், ஹிப்பி கையை விரித்துவிட்டான்.

பாதையில் மரங்களின் நிழலில் அவன் நடந்தான். அவன் நடந்து சென்றதுதான் முக்கியமான சாலை. ஏராளமான மனிதர்கள், காவல் காத்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்கள்... அங்கு நிச்சயம் கிடைக்க வாய்ப்பில்லை.

பல்லா சாலை வழியாக ஹரித்துவாரிலிருக்கும் இருண்டு கிடக்கும் பகுதிக்கு அவன் நடந்தான். இருளில் மூழ்கிக் கிடக்கும் அந்தப் பகுதியில் யாராவது கஞ்சா பயிர் செய்யலாம். அந்தத் தெருக்கள்தான் எத்தனை எத்தனை ரகசியங்களை தங்களுக்குள் வைத்திருக்கின்றன!

யாரிடமாவது கேட்க வேண்டும். அதற்காக அவன் தேர்வு செய்தது இனிப்புப் பலகாரங்கள் விற்பனை செய்யும் ஒரு லாலாவை. அவனுடைய கண்கள் ஒரு பங்க் அடிக்ஷன் கண்களைப் போலவே இருந்தன.

“லாலாஜீ!”

அந்த மனிதனின் கண்கள் ரமேஷனைப் பார்த்தன.

“ஆயியே! லாலா அழைத்தான். அவன் தராசைக் கையிலெடுத்து சுருண்டு கிடந்த அதன் கயிறுகளைச் சரி செய்தான்.

“லாலாஜி, கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. எனக்கு கொஞ்சம் கஞ்சா வேணும்.”

லாலா தராசைத் திரும்பவும் மடியில் வைத்தான். அவனுடைய முகம் கோபத்தில் சிவந்தது. அப்போதுதான் அவன் கடை நிறைய இருந்த கடவுள்களின் படங்களையும், விக்கிரகங்களையும் பார்த்தான். பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகங்காஜியின் படத்திற்கு முன்னால் ஒரு சிவப்பு பல்ப் எரிந்து கொண்டிருந்தது.

“ஸூப்பர்!”

திரும்பி நடந்தபோது அவன் பின்னாலிருந்து சொன்னது காதில் விழுந்தது. “பன்றி...” - ஆமாம். நான் ஒரு கேவலமான பன்றிதான். - ரமேஷன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“போலீஸ்... போலீஸ்... பிடிங்க அவனை.”

லாலாவின் குரல். ஆட்களின் கவனம் தன்னை நோக்கித் திரும்புவதற்குள் அவன் வேறொரு பாதைக்குள் நுழைந்திருந்தான்.

ஸப்ஜிமண்டியில் ஒரு மருந்துக் கடை இருந்தது. அங்கு கட்டுக் கட்டாக வேர்களும் இலைகளும் இருந்தன. அலமாரியில் பல்வேறு நிறங்களில் மருந்து நிரப்பப்பட்ட புட்டிகள் இருந்தன. அத்துடன் லேகியங்களும்.

‘இங்கு இல்லாமலிருக்காது. கஞ்சா இல்லைன்னாலும், சாராயமாவது கட்டாயம் இருக்கும்.’ - ரமேஷன் நினைத்தான்.

ஸெர்வாணி அணிந்த வைத்தியர் மரியாதை நிமித்தமாக அவனை அமரும்படி சொன்னார். உட்காராமல் வந்த விஷயத்தைச் சொன்னான். வைத்தியர் வெள்ளெழுத்து கண்ணாடி வழியாக ரமேஷனை கண்களால் அலசினார்.

“மகனே, இது ஹரித்துவார்.”

“உங்க கையில ஒண்ணும் இல்லியா? மருந்துக் கடைக்காரர்கள் மருந்து சேர்க்குறதுக்காக பங்க் வச்சிருப்பாங்களே! அதையாவது கொஞ்சம் எடுத்துத் தாங்களேன்...”

“பகவான் உன்னை மன்னிக்கட்டும்!” வைத்தியர் கண்ணாடியைக் கழற்றி மடியில் வைத்தார்.

அங்கிருந்து இறங்கி அவன் நடந்தான். அந்த மனிதர் போலீஸை அழைக்கவில்லையே! அந்த அளவில் பரவாயில்லை.

ஹர்கீபௌடிக்குப் பின்னால் பாதையோரத்தில் ஒரு சன்னியாசி அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் காயத்ரி தேவியின் கண்ணாடி போட்ட படம். அவர் மெதுவான குரலில் என்னவோ ராகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார். தரையில் விரிக்கப்பட்ட காவித் துணியில் நாணயங்கள் கிடந்தன.

பாக்கெட்டிற்குள் கையைவிட்டு ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து துணியில் போட்டவுடன், சன்னியாசியின் பாட்டு நின்றது.

“சுவாமிஜி!”

“சொல்லு மகனே.”

சுவாமிக்கு முன்னால் குனிந்து நின்று குரலைத் தாழ்த்திக் கொண்டு அவன் கேட்டான்.

“உங்கக்கிட்ட கஞ்சா இருக்குதா?”

“பகவான் சங்கர் பாவப்பட்ட எண்ணங்கள்ல இருந்து உன்னைக் காப்பாற்றட்டும்!”

சுவாமி கமண்டலத்திலிருந்து ஒரு கை நீரை எடுத்து ரமேஷனின் முகத்தின் மீது எறிந்தார்.

துவாலையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு அவன் மீண்டும் நடந்தான். ஹர்கீபௌடிக்கு அருகில் மிகவும் நெருக்கமான ஒற்றையடிப் பாதைகள் இருந்தன. இரு பக்கங்களிலும் ஏராளமான கடைகள் இருந்தன. கவரிங் நகைகள், கண்ணாடி வளையல்கள், செந்தூரம், விக்கிரகங்கள், வாள்கள், சூலங்கள், சங்குகள், மணிகள்...

அவன் எதையும் பார்க்கவில்லை. ஊர்வலம் போல நடந்து போய்க் கொண்டிருந்த ஆட்கள் மேல் பட்டதைப் பொருட்படுத்தவில்லை. அவன் மனதில் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே இருந்தது. ஒரு துண்டு கஞ்சா... இல்லாவிட்டால் ஒரு துளி சாராயம்.

லோவர் ஸடக்கிலிருந்து மலை மீது போகும் படிகள் ஒன்றில் ஒரு மத்திய வயதைக் கொண்ட மனிதன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தைப் பார்த்தபோது மனதில் மகிழ்ச்சி தோன்றியது. டில்லியில் ஜி.பி. சாலையில் பார்த்திருக்கும் முகச்சாயல். எல்லா தரகர்களின் முக வெளிப்பாடும் ஒரே மாதிரிதான். பழக்கமுள்ளவர்களுக்கு அத்தகைய மனிதர்களை எவ்வளவு பெரிய கூட்டத்திலும் அடையாளம் கண்டு பிடித்துவிட முடியும்.

“ஆயியே, பாபுஜீ!”

அவனுடைய குரல் பெண்ணின் குரலைப் போலிருந்தது. அவனைப் பின்பற்றி ரமேஷன் நடந்தான். ஆள் நடமாட்டமில்லாத ஒரு பாதையை அடைந்தவுடன், அந்த மனிதன் பின்னால் திரும்பி நின்று கேட்டான்:


“க்யா சீஸ்?”

“க்யா க்யா சீஸ் ஹை தேரே பாஸ்?”

அவன் ஒரு நிமிடம் மவுனமாக இருந்தான். பிறகு தன் பெண் குரலில் அவன் சொன்னான்: “கிளி மாதிரி இளம்பெண்கள் இருக்காங்க.”

“குடிக்கிறதுக்குக் கிடைக்குமா?”

“என்ன வேணும், பாபு?”

“பங்க்...” அப்படிச் சொல்லத்தான் அவனுக்குத் தோன்றியது.

“ஆயியே...”

நரகத்தை ஞாபகத்திதல் கொண்டு வரும் ஒரு பாதை. ஒரு வெற்றிலை பாக்கு கடைக்கு உள்ளே நுழைந்துபோகும் வழி... வாசலில் அழுக்குப் பிடித்த ஒரு திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. தரகனைப் பின்பற்றி அவன் உள்ளே நடந்தான்.

“கோலி எங்கே? அந்த பாழாய் போன பொண்ணு! கோலீ!”

ஒரு இளம்பெண் உள்ளே வந்து நின்றாள். அவளுக்கு பதினைந்தோ பதினாறோ வயதுதான் இருக்கும். மார்பு மொட்டாக இருந்தது.

“கிளி போல பொண்ணு பாருங்க பாபுஜீ!”

தரகன் கோலியை ரமேஷனுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான். தலையை மூடியிருந்த புடவைத் தலைப்பு கீழே விழுந்தபோது அவளின் நெற்றியில் மஞ்சள் பொட்டு இருப்பதை அவன் பார்த்தான். வெளுத்த கன்னங்களும் பான்பராக் தின்று சிவந்து போன உதடுகளும்... கால்களில் கொலுசுகள் இருந்தன.

“பக்கத்துல கூப்பிடுங்க பாபுஜீ!”

ரமேஷன் தன் கையை நீட்டி சிவப்பு கண்ணாடி வளையல்கள் அணிந்த அவள் கையைத் தொட்டான்.

“எனக்குன்னு இருக்குற ஒரே மகள் இவதான். பாபுஜி, நீங்க தப்பா நினைக்கக் கூடாது. வேற வழி இல்லாமத்தான்...”

“நீங்க போங்க...”

“மகளே, பாபுஜி சந்தோஷமா இருக்குற மாதிரி செய்யணும். சேகரிலிருந்து வந்திருக்காரு. ஏராளமான பணமும் படிப்பு உள்ள ஆளு...”

அவன் மெதுவாகப் பின்னோக்கி நடந்தான். வாசற்படியில் நின்று கொண்டு மறைவதற்கு முன்னால் அவன் அழைத்துச் சொன்னான்:

“பீனே கா சீஸ் இப்போ தயாராயிடும். ஐந்தே நிமிடங்கள்...”

“இங்கே உட்காரு...”

கோலி தலையை உயர்த்தாமல் புன்னகைத்தாள். அவள் கடைக் கண்ணால் ரமேஷனைப் பார்த்தாள். புடவையின் தலைப்பை எடுத்து மீண்டும் தன் தலையை மறைத்துக் கொண்டாள்.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் கஞ்சா விஷயத்தையே அவன் மறந்துவிட்டான். மடியில் உட்கார வைத்து, மண்ணின் வாசனை வந்துகொண்டிருந்த அவளுடைய தலைமுடியை வருடினான். தலை முடிக்கு மட்டுமல்ல அவளுக்கே புதுமழை பொழிந்து நனைந்த மண்ணின் மணம் இருந்தது. மண் வாசனை கொண்ட இளம்பெண்.

“கோலீ, இதை பாபுஜிக்கிட்ட கொடு.”

“திரைச்சீலைக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் குரல்.

“வர்றேன் வாப்பு.”

தரையில் கிடந்த புடவையை வாரிச் சுருட்டிக் கொண்டு அவள் சென்றாள். ஓரம் உடைந்த ஒரு பெரிய கோப்பையில் பச்சை நிறத்திலிருந்த திரவத்துடன் அவள் திரும்பி வந்தாள். அதைப் பார்த்தவுடன் நீரைப் பார்த்த ஆம்பல் மலரைப் போல அவன் உற்சாகமடைந்தான்.

கண்களை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் கோப்பையை அவன் காலி செய்தான். பாலும் பாதாமும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிரச் செய்த பங்க் அல்ல அது. கோலியின் வாப்பு இதை எப்படி தயாரித்தாள்? கோப்பையைக் கீழே வைத்தபோது குடல் முழுவதும் வெளியே வந்துவிடுவதைப் போல் அவன் உணர்ந்தான். கையால் வாயைத் துடைத்து அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

அப்போது கோலி எழுந்தபோய் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு வந்தாள்.

பாயில் படுத்திருந்த ரமேஷனின் சட்டைப் பொத்தான்களை அவள் மெதுவாகக் கழற்ற ஆரம்பித்தாள். அவனுடைய போன பிறந்த நாளின்போது சுஜா வாங்கிக் கொடுத்த, சிவப்பில் கருப்பு புள்ளிகள் போட்ட புஷ் ஷர்ட்...

பாய் ஓசை உண்டாக்கியபோது அடைக்கப்பட்டிருந்த கதவுக்கப்பாலிருந்து பெண் குரல்.

“பாபுஜியை சந்தோஷப்படுத்துறியா மகளே?”

“ஆமா வாப்பு.”

தொண்டை வறட்சி ஆவதையும் உடம்பும் பயங்கரமாக வலிப்பதையும் அவன் எதிர்பார்த்தான். ஆனால், அது எதுவுமே நடக்கவில்லை. வாயில் மனதைப் புரட்டி எடுக்கக் கூடிய பங்க்கின் கசப்பு மட்டும் போகாமல் அப்படியே இருந்தது. ‘அந்த மனிதன் தனக்குக் குடிக்கக் கொடுத்தது பங்க்தானா? இல்லாவிட்டால் அவன் தன்னை ஏமாற்றிவிட்டானா?’

உச்சி வெயிலில் காய்ந்தவாறு அவன் நடந்தான். எதுவும் உண்டாகவில்லை. திரும்பச் சென்று இன்னொரு கோப்பை வாங்கிக் குடித்தாலென்ன என்று அவன் நினைத்தான். ஒவ்வொரு நிமிடம் கடக்க கடக்க மனதில் அமைதியற்ற தன்மை அதிகமாகிக் கொண்டிருந்தது. மூலையில் எங்கோ ஒரு விஸில் சத்தம் கேட்டது. போதைப் பொருளோ, மதுவோ பயன்படுத்தாமல் இருக்கும்பொழுது உண்டாகக் கூடிய வெறுமை நிலையின் விஸில் சத்தம் அது. வெறுமையின் ஆரம்பம்.

பாதையோரத்தில் கொஞ்சம் லட்டு வாங்கி சாப்பிட்டான். பங்க்கிற்கு இனிப்பு உரம் மாதிரி. அதற்குப் பிறகும் எதுவும் நடக்கவில்லை. “தெய்வமே! இப்படி இருந்தா எனக்கு பைத்தியம் பிடிச்சிடுமே...!” - அவன் தனக்குள் சொன்னான்.

“பாபுஜீ, நீங்க இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

ரிக்ஷாவை மிதித்தவாறு ஹனுமான் ரமேஷனுக்கு அருகில் வந்தான்.

“ஹனுமான்! சொல்லு... எனக்குக் கொஞ்சம் சாராயம் வேணும். எங்கே கிடைக்கும்?”

“பாபுஜீ”

“நான் பங்க் சாப்பிட்டுட்டு வர்றேன், ஹனுமான். ஆனா, எனக்கு எதுவுமே தோணல. அந்த கோலியோட வாப்பு என்னை ஏமாற்றியாச்சு. ஹனுமான், எனக்கு ஏதாவது குடிக்கணும்போல இருக்கு. சொல்லு... எங்கேபோனால் கொஞ்சம் சாராயம் கிடைக்கும்?”

“பாபுஜீ...!”

ரமேஷன் ரிக்ஷாவில் ஏறி அமர்ந்தான். உச்சிப்பொழுது வெயில் அவனுடைய தலைக்குள் எரிந்து கொண்டிருந்தது. சுவாசிக்கும் காற்றுக்கும் நெருப்பின் வெப்பம் இருந்தது.

ஹனுமான் ரிக்ஷாவை நேராக மிதித்தான். பழக்கமில்லாத பாதைகள்... மெதுவாக ஒரு தெருவுக்குள் நுழைந்தது ரிக்ஷா, ஹனுமான் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.

பச்சை நிறத்தில் இருக்கும் திரவம்.

“இதை நாங்க பக்டான்னு சொல்லுவோம் பாபுஜி.”

ஹனுமான் விளக்கிச் சொன்னான். மாலை நேரத்தில் நிறம் ஆரஞ்சு என்றால் பக்டாவின் நிறம் பச்சை. ஹனுமான் புட்டியை டம்ளரில் சாய்த்தான். டம்ளரை உதட்டோடு சேர்த்து வைத்தபோது - தொண்டை வறண்டது. கை, கால்கள் குழைந்தன. தாமதமாக இருந்தாலும் பங்க் வேலை செய்ய ஆரம்பித்தது.

ஹனுமான் பெயருக்கு மட்டுமே குடித்தான். புட்டியைக் காலி செய்தது ரமேஷன்தான்.

“வாங்க, பாபுஜீ, ஹோட்டல்ல கொண்டுபோயி விடுறேன்.”

ஹனுமான் ரிக்ஷாவை நோக்கி நடந்தான்.

“நான் ஹோட்டலுக்கு வரல. நான் தனியா அலைஞ்சு நடக்கணும், ஹனுமான்.”

“பாபுஜீ!”

“நீ போ...”

ரிக்ஷா அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததும், பின்னாலிருந்து உரத்த குரலில் ரமேஷன் அழைத்து சொன்னான்: “நன்றி ஹனுமான்! ரொம்ப ரொம்ப நன்றி!”

ஆனால் குரல் வெளியே வந்ததா?


எந்தெந்த பாதைகளில் தான் நடக்கிறோம் என்பதே ஞாபகத்தில் இல்லை. எத்தனையோ தெருக்களைத் தாண்டியாகிவிட்டது. ஹர்கீ பௌடியில் இருந்த மக்கள் கூட்டத்தை ஒரு கனவைப் போல அவன் பார்த்தான்.

நினைவு வந்தபோது அவன் பீம்கோடாவுக்கு அருகில் நின்றிருந்தான். ஒரு நிமிடம் ஆகவில்லை. மீண்டும் நினைவு தப்பியது. சுய நினைவில்லாமல் நடந்த இந்த நடை அவனை எங்கெல்லாமோ கொண்டுபோய் சேர்த்தது. ஒருமுறை நினைவு வந்தபோது ரிஷிகேஷ் சாலையில் ஒரு இடத்தில அவன் மைல் கல்லின் மீது அமர்ந்திருந்தான். உடம்பில் கருங்கல்லின் பாரம் இருப்பதை அவன் உணர்ந்தான். ‘நான் என்ன சிலையா?’ தன்னைத் தானே அவன் கேட்டுக் கொண்டான். அவனால் உடலை அசைக்கவே முடியவில்லை. கையை அசைத்துப் பார்த்தான். அதற்கும் முடியவில்லை. கருங்கல்லைப் போன்ற விரல்கள் அசைய மறுத்தன.

ஆமாம்- அவன் ஒரு சிலைதான் ஏதோ ஒரு முனிவரின் சாபத்தால் அவன் கல்லாக மாறியிருக்கிறான். ரமேஷனுக்குத் தாங்க முடியாத பயம் தோன்றியது. வாழ்க்கை முழுவதும் இப்படியே ஒரு சிலையாக இருக்க வேண்டிய நிலை தனக்கு உண்டாகிவிடுமோ? இந்த நிலையை எப்படி மாற்றுவது?-

சுஜா தனக்காகக் காத்திருப்பாளே! திரும்பி வரவில்லை என்கிறபோது, அவள் கவலையில் மூழ்கிவிடமாட்டாளா? இரவு பத்து மணிக்கு செல்லும் விரைவு வண்டியில் டில்லிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். தன்னைக் காணவில்லை என்றதும் கடைசியில் அவளே தேடி வந்து விடுவாளே! ரிஷிகேஷ் சாலையில் ஒரு இடத்தில் இப்படி சிலையைப் போல் உட்கார்ந்திருக்கும் தன்னைப் பார்த்தால் அவள் தலையிலடித்துக் கொண்டு அழமாட்டாளா? - ரமேஷன் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

தொண்டை தாகத்தால் தவித்தது. நீர் குடித்தாக வேண்டும். எங்கேயாவது தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும். ஆனால், அவனால் நாக்கை அசைக்கவே முடியவில்லை. தன்னுடைய தலைவிதி இப்படி ஆகிவிட்டதே! - பேசவும், அசையவும் முடியாமல் கற்சிலையைப் போல வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டிய ஒரு நிலை தனக்கு உண்டாகிவிட்டதே என்று அவன் மனதில் குமைந்து கொண்டிருந்தான்.

தான் பங்க்கும் அதற்கும் மேலாக சக்தி படைத்த பக்டா என்ற சாராயத்தையும் உட்கொண்டிருக்கிறோம் என்பது ரமேஷனுக்கு ஞாபகத்தில் வந்தது. சிலையாகி விட்டோம் என்ற தோணல் வெறும் கற்பனை! அவனுடைய எண்ண ஓட்டம் முழுமையடையவில்லை. அதற்குள் வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. பாதையோரத்தில் அவன் போய் அமர்ந்தான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எழுந்தபோது, தாடியிலும் மார்பிலும் அவன் வாந்தி எடுத்திருந்தான்.

எந்தவித இலக்கும் இல்லாமல் ரிஷிகேஷ் சாலையின் வழியாக அவன் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அடிக்கொரு தரம் பாதையோரத்தில் உட்கார்ந்து கொள்வான். அவனுக்கு மிகவும் நெருக்கமாக பத்ரிநாத்திற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் தாண்டிச் சென்றன.

காதுகளில் மணியோசை கேட்டது. “எதற்காக, எப்படி நான் இந்த இடத்திற்கு வந்தேன்? சப்தரிஷிகளே! நீங்க என்னை அழைச்சீங்களா? – அவன் கேட்டான். காலிலிருந்த செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு பரமார்த்தாஸ்ரமத்திற்குள் நுழைந்தான். ஆலயங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கினான். துர்க்கை கோவிலுக்கு முன்னால் நின்றபோது கீழே விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுவரை பலமாகப் பிடித்துக் கொண்டான். நான்கு பக்கங்களிலும் கண்ணாடியால் ஆன சுவர்கள் ஜொலித்துக் கொண்டிருந்த தொங்கு விளக்குகள் கண்ணாடி சுவர்களுக்கிடையில் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. மஹாமாயாவின் விக்கிரகம். இரத்தம் படிந்த சூலம். கர்ஜிக்கும் சிங்கம்.

ஆலயத்திற்குள் அனுமதி இல்லை. கைகளை அரைச்சுவரின் மீது ஊன்றி உள்ளே தலையை விட்டுப் பார்த்தான். தலை சுற்றுவதைப் போல் இருந்தது. இரு பக்கங்களிலும் ஏராளமான விக்கிரகங்கள் இருந்தன. விளக்குகள் ஒரு பெரிய வெளிச்சக் கடலையே அங்கு உண்டாக்கின. இரு பக்கங்களிலும் முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும் விக்கிரகங்களின், விளக்குகளின் அணிவகுப்பு... கண்ணாடி கொண்டு உண்டாக்கிய ஒரு வித்தை அது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சிந்தனையும் அறிவும் உறங்கிக் கொண்டிருக்கின்றனவே!

மீண்டும் மணியோசை காதுகளில் விழுந்தது. சப்த ஆலயத்திற்குள் நுழைய, மணியோசை மிகவும் நெருக்கமாகக் கேட்டது. கோவிலுக்குள் ஏராளமான மகாமுனிவர்களின் விக்கிரகங்கள் வரிசையாக இருந்தன. ஹோமகுண்டம் எரிந்து கொண்டிருந்தது.

மனதில் பயத்தை உண்டாக்கும் பேரமைதி. செம்மண் பாதையில் மனிதர்களோ, குதிரைகளோ யாருமில்லை. ஆழமாகப் பதிந்த அவர்களின் பாதச் சுவடுகள் மட்டும் தெரிந்தன. முடிவே இல்லாமல் நீண்டு போகும் ரயில் தண்டவாளங்கள்.

ஆதிமூலவர்க்கத்தில் முதல் மனிதப் பிறவி க்ரௌஞ்ச தீவில் பிறப்பதை ரமேஷன் பார்க்கிறான். ஆவிகளின் சாயலில் உண்டான காற்று வடிவத்திலுள்ள ஆத்மா க்ரௌஞ்ச தீவிலிருந்து குச தீவிற்கும் அங்கிருந்து சாத்மலதீவிற்கும் சென்றது. யுகங்கள் கடந்தன.

“எழுபத்தியொரு சத்திய யுகங்களும், எழுபத்தியொரு த்ரேதா யுகங்களும், எழுபத்தியொரு த்வாபரயுகங்களும் கடந்து இருபத்தொரு கலியுகங்களுக்கு நடுவில் அலைந்து, க்ரௌஞ்ச தீவில் பிறந்த மனித ஆத்மா இதோ, மகா முனிவர்களே, ரமேஷ் பணிக்கர் என்ற பெயரில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். போன பிறவியில் மந்திரத்யூம்னனின் அரண்மனையில் நான் யாராக இருந்தேன்? என்ன பெயரைக் கொண்டிருந்தேன்? சப்தரிஷிகளே உங்கள் பாதம் பணிகிறேன். கூறுங்கள். நாற்பத்து மூன்று கலியுகங்களைக் கடக்கக் கூடிய சக்தி என்னுடைய கால்களுக்கு இல்லை. எனக்கு மோட்சத்தை இப்போதே தாருங்கள்...”

காலத்தின் பேரமைதியில், ஞானத்தின் இருட்டில், புனித கத்னார் மரத்திற்குக் கீழே பாதி நினைவுடன் இருந்த ரமேஷன் உட்கார்ந்திருந்தான். இக்ஷ்வாகுவின் யுகத்திலிருந்து கபிலமகரிஷியின் சாப வார்த்தைகள் அவனுடைய காதுகளில் விழுந்து கொண்டிருக்கின்றன. பகீரதனைப் பின்தொடர்ந்து ஹரித்துவாருக்குள் நுழைந்த கங்கை இங்குதான் சப்தரிஷிகளின் கட்டுக்குள்ளானது. பகீரதன் மகாமுனிவர்களின் கால்களில் போய் விழுந்தான். “பெரிய மகான்களின் சாப மோட்சத்திற்காக நான் செய்த கடும் தவத்தைக் கலைத்துவிட வேண்டாம்” -அவன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். மனமிரங்கிய சப்தரிஷிகள் கங்கையை விடுதலை செய்தார்கள். பகீரதன் கங்கையை அழைத்துக்கொண்டு ஹரித்துவாருக்குள் நுழைய, கங்கை நீர் பட்ட சகரபுத்திரர்கள் பாவ மோட்சம் பெற்று சொர்க்கத்திற்குச் சென்றார்கள்.

யுகங்கள் கடந்தன.

இப்போதும் கங்கை நதி சப்தரிஷிகளின் இடத்தை அடையும் போது ஏழாகப் பிரிந்து ஏழு ஆஸ்ரமங்களையும் தொடுகிறது. அதற்குப் பிறகு மீண்டும் ஒன்றாகி ஹரித்துவாருக்குள் ஓடுகிறது.

இந்த நாடகத்திற்கு சாட்சியாக இருக்கும் மண்ணில்தான் இப்போது ரமேஷன் நின்றிருக்கிறான். அவனுக்கு முன்னால் ஏழு கங்கை நதிகள் இரைச்சலிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன.


நதிக் கரையோரம் மனதில் பயத்தை உண்டாக்கும் இருட்டில் அவன் திரும்பி நடந்தான். வழியில் தியானத்திலிருந்த சந்நியாசிகளை மட்டும் பார்த்தான். ஊப்பர் ஸடக்கும் அவினாஷின் ஹோட்டலும் சுஜாவும் எங்கோ தூரத்தில் இருந்தார்கள். ‘நான் அங்கு போய் சேர்வேனா?’ என்று அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அவனுடைய காதுகளில் இப்போதும் மன்வந்தர சக்கரவர்த்திகளின் தேர்ச் சத்தம் ஒலித்தது. த்ரேதாயுகங்கள் முடியும்போது த்வாபரயுகங்கள் பிறக்கின்றன. புதிய புதிய யுகங்கள்; புதிய புதிய அவதாரங்களும் சப்தரிஷிகளும் யுகங்கள் மஹாயுகங்களாகின்றன.

‘இந்த மகாநாடகத்தின் முடிவு எங்கே? என் தெய்வமே!’ - கால்கள் குழைந்தபோது தொண்டையில் வெளிவராத ஒரு முனகலுடன் அவன் பாதையில் விழுந்தான்.

13

சுஜா சூட்கேஸில் மற்ற ஆடைகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பாதி மூடிய கண்களுடன் ரமேஷன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எதுவும் செய்ய முடியாது. உறங்கக்கூட முடியாத நிலையில் இருந்தான்.

கட்டிலில் கிடந்த சாம்பல் நிற பேண்ட்டையும் கைத்தறி சட்டையையும் சுட்டிக் காட்டி சுஜா சொன்னாள்:

“ரமேஷ், நீ இப்போ அணிய வேண்டிய ஆடைகள்...” சூட்கேஸ்கள் இரண்டையும் பூட்டினாள். அவள் சொன்னதை அவன் கேட்டானோ என்னவோ!

ஹரித்துவாரில் இனி அவர்கள் இருக்கப்போவது சில மணி நேரங்கள் மட்டுமே. எவ்வளவு வேகமாக மூன்று நாட்களும் கடந்தோடியிருக்கின்றன! மூன்று மணி நேரத்தைவிட வேகமாக ஓடி முடிந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு இந்த அறைதான் அவர்களின் வீடாக இருந்தது. இந்த அறை எதற்கெல்லாம் சாட்சியாக இருந்திருக்கிறது! இந்த சுவர்களுக்கு இடையில் இப்போதும் எரிந்த சரஸ்ஸின் மணமிருக்கிறதே! இந்த அறை அவர்களின் காதல் நாடகங்களைப் பார்த்தது. அவர்களின் கண்ணீர் விழுந்ததுதான் இந்த தரைவிரிப்பு.

ரமேஷனும் சுஜாவும் போய்விட்டபிறகு வேறு யாராவது இந்த அறைக்கு வருவார்கள். ஆனால், அவர்கள் ஆடிய நாடகத்தை வேறு யாராவது இங்கு ஆடுவார்களா? இங்கு இனியும் ஒரு பெண்ணின் கண்ணீர் விழுமா? இந்தச் சுவர்களுக்கிடையில் இனியும் சரஸ்ஸின் புகை நிறைந்திருக்குமா?

கீழே பாதையில் தன்னுடைய சைக்கிள் ரிக்ஷா மீது சாய்ந்தவாறு ஹனுமான் நின்று கொண்டிருக்கிறான்.

“ரமேஷ்...”

அவன் கண்களைத் திறக்க முயற்சித்தான்.

“ஆடையை மாற்று. ஹனுமான் காத்து நின்னுக்கிட்டு இருக்கான்.”

அவள் வற்புறுத்தியபோது எதுவும் பேசாமல் அவன் பேன்ட்டையும் சட்டையையும் எடுத்து அணிந்தான். படிகளில் இறங்கும் போது கைப்பிடியை பலமாகப் பிடித்துக் கொண்டான்.

“எட்டு மணிக்கு முன்னாடி திரும்பி வரணும்.” அவினாஷ் ஞாபகப்படுத்தினான். “பத்து மணிக்கு வண்டி... எட்டு மணிக்கு முன்னாடி வந்துட்டா சாப்பிட்டு முடிச்சு நிதானமா ஸ்டேஷனுக்குப் போகலாம்.”

அவன்தான் டேராடூன் எக்ஸ்பிரஸ்ஸில் டில்லிக்கு இரண்டு இருக்கைகள் ‘புக்’ செய்தான்.

ரிக்ஷா ஹர்கீபௌடியை நோக்கி ஓடியது. ஹோட்டலிலிருந்து ப்ரம்மகுண்டத்திற்கு நடக்கக்கூடிய தூரம்தான். மூன்று நான்கு ஃபர்லாங் தூரம் வரும். ஆனால், ரமேஷனால் ஒரு அடிகூட நடக்க முடியாது.

“ரமேஷ், நீ தூங்குறியா?”

அவள் அவனைக் குலுக்கி அழைத்தாள். எதுவும் சொல்லாமல் பாதி திறந்த கண்களுடன் அவன் அமர்ந்திருந்தான். மதியம் வெளியே செல்லும்போது பார்த்த ரமேஷனல்ல இது. முகம் மிகவும் சிறுத்துப்போயிருந்தது. கண்கள் உள்ளே போயிருந்தன.

“உனக்கு என்னாச்சு ரமேஷ்?”

அவள் அவனுடைய கையை எடுத்து மடியில் வைத்து அதை மெதுவாகத் தடவினாள். அவன் என்னவோ சொல்ல நினைத்தான். ஆனால், நாக்கு வரவில்லை. அவளுடைய மடியில் இருந்த அவனுடைய கை நடுங்கிக் கொண்டிருந்தது.

இந்த அளவிற்கு செயல்படமுடியாதவனாக அவனை அவள் ஒருமுறைகூடப் பார்த்ததில்லை.

“ரமேஷ்...”

“ம்...?”

அவளுக்குள் என்னவோ கூறவேண்டும்போல் இருந்தது. ‘என்னை இப்படி வைக்கக்கூடாது’ என்னை இப்படி கண்ணீர்விட வைக்கக் கூடாது’ என்று அவள் கூற நினைத்தாள். ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்ததும் அவளுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவனுடைய கையை தன்னுடைய கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

“எத்தனை மணிக்கு வண்டி மேம்ஸாப்?”

ரிக்ஷா மிதிப்பதற்கிடையில் ஹனுமான் கேட்டான்.

ரிக்ஷா ஹர்கீபௌடியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“பத்து மணிக்குத்தான் ஹனுமான்.”

“இன்னைக்கே போறீங்களா மேம்ஸாப்?”

“ஆமா...”

அவளுடைய தாய் அவளுக்காகக் காத்திருப்பாளே! அவளுடைய தந்தை வந்திருப்பான். ரமேஷனுக்காக ஸெஞ்யோர் ஹிரோஸி காத்திருப்பார். திங்கட்கிழமை அவன் அலுவலகத்திற்குப் போகவில்லையென்றால் அவனுடைய வேலை மிகவும் பாதிக்கும். தவிர நாளை சாயங்காலம் செஸ் விளையாட்டு வேறு இருக்கிறது. ஸெமி ஃபைனல் வரை போயாகிவிட்டதே! யாருக்குத் தெரியும்... இந்த வருடத்தின் டில்லி மாநில சேம்பியன் அவனாகக் கூட இருக்கலாம்!

டில்லி அவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஒருநாள்கூட தாமதமாகக் கூடாது.

நாளை இந்த நேரத்தில் அவர்கள் டில்லியில் இருப்பார்கள். அவள் ஓவிய வகுப்பில் இருப்பாள். அவன் அமீர் ஸயீத்கானுடன் செஸ்போர்டில் படைகளை வெட்டிக் கொண்டிருப்பான்.

“இனியும் ஹரித்துவாருக்கு வருவீங்களா மேம்ஸாப்?”

ஹனுமானின் குரலில் கவலை தெரிந்தது. ‘கவலைப்படுறதுக்கு என்ன இருக்கு ஹனுமான்? இந்த வாழ்க்கையில எவ்வளவு பேரை நாம இப்படி பார்க்கிறோம்? மறக்கவும் செய்யிறோம்!’ - அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

“மேம்ஸாப், நீங்க கடிதம் எழுதுவீங்களா?’

“உனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாதே!”

அதை யோசிக்காமல் ஹனுமான் அப்படியோ கேள்வியைக் கேட்டான். அடுத்த நிமிடம் அவனுடைய முகம் வாடியது.

ஹர்கீபௌடியில் ரிக்ஷா நின்றது. வாகனங்கள் அதற்குமேல் போவதை தடை செய்திருக்கிறார்கள். ப்ரம்மகுண்டத்திற்குப் போகும் நபர்கள் ஹர்கீபௌடியில் பிரதான சாலையில் இறங்கி கால்நடையாக நடந்து செல்லவேண்டும்.

“ரமேஷ்!”

பேசாமலிருந்தாலும் அவன் தூங்கவில்லை. அவனுடைய கண்களுக்கு முன்னால் இப்போதும் கடந்து போய்க் கொண்டிருக்கும் யுகங்கள்தான் தெரிந்தன. காதுகளில் மன்வந்தர சக்கரவர்த்திகளின் தேரொலிகள்!

‘தமேவ சரணம் கச்ச

சர்வபாவேன பாரத

தல்ப்ரஸாதால் பராம் சாந்திம்

ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி சாஸ்வதம்...’

மானஸாதேவியின் மலையின் உச்சியில் கேட்ட சன்னியாசியின் முனகல் சத்தம் காதுகளில் மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தது.

“ரமேஷ், உனக்கு என்ன ஆச்சு?”

அவள் அவனைக் குலுக்கி அழைத்தாள். அவன் ரிக்ஷாவை விட்டு கீழே இறங்கினான்.

“நான் காத்திருக்கவா?”

“வேண்டாம், ஹனுமான். ஹோட்டலுக்கு நாங்க நடந்தே போயிடுவோம்.”

அவள் கைப்பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.

“வேண்டாம், மேம்ஸாப் வேண்டாம்.”

அவள் பணத்தை நீட்டியபோது, அவன் அதை வாங்க மறுத்தான். பணத்தை வாங்காமலே ஹனுமான் ரிக்ஷாவில் ஏறி மக்கள் கூட்டத்தில் மறைந்தான்.


தூரத்தில் மலைகளில் சிவப்பு படர்ந்திருந்தது. மானஸாதேவியின் மலைக்குப் பின்னால் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. லோவர் ஸடக் வழியாகவும் ஊப்பர் ஸடக் வழியாகவும் ஆட்கள் ப்ரம்மகுண்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

மஹாவிஷ்ணுவின் இடமான விஷ்ணுகாட்டில் அவர்கள் நின்றார்கள். இங்குதான் துர்வாசர் தர்மத்வஜன் என்ற சூரிய வம்ச மன்னனை சாபத்தால் பாம்பாக மாற்றினார். எல்லா கிருஷ்ண சதுர்த்திக்கும் பாம்பு விஷ்ணுகாட்டிற்கு குளிக்கவரும்.

கவூகாட்டில் பசுவைக் கொன்றவர்கள் பாவ நிவர்த்திக்காக கடலில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு என்று ரமேஷன் நடந்து கொண்டிருந்தான். இந்த இடங்களைத் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதையே அவன் மறந்துவிட்டான். இடம், காலம் எதைப்பற்றியும் அவனுக்கு நினைவு இல்லை. ஆத்மஜுரத்துடன் அவன் முன்னோக்கி நடந்தான்.

மரங்களுக்குக் கீழே மேய்ந்தபடி நடந்து கொண்டிருந்த ஒரு வெள்ளைப் பசுவின் உடல் முழுக்க வண்ணத் துணிகளைப் போர்த்திருந்தது. கழுத்தில் மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. சன்னியாசிகள், பக்தர்கள் ஆகியோருக்கு நடுவில் மணிகள் ஒலிக்க வெள்ளைப்பசு மேய்ந்து கொண்டிருந்தது- பாவ மோட்சம் கிடைத்த ஆத்மாவைப் போல.

ஒரு வெள்ளைப் பசுவின் ஆத்மசுத்திக்காக ரமேஷனின் மனம் அவனுக்குள் தாங்க முடியாத வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது. அவனுக்குள் பாவம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. குழி விழுந்த கண்களில் தெரிவது பாவத்தின் சிதைகள்தானே!

“ரமேஷ், உனக்கு காய்ச்சல் அடிக்குதுல்ல?”

ரமேஷனின் கையைப் பிடித்தபோது அவளின் கை பலமாகச் சுட்டது. அவனுடைய ஆத்மாவிலிருந்து ஜுரம் உடலுக்குப் படர்ந்து கொண்டிருந்தது.

“நாம திரும்பிப்போவோம்.”

ஒவ்வொரு நிமிடமும் உள்ளே போய்க்கொண்டிருந்த அவனுடைய கண்கள் அவளைப் பயமுறுத்தின.

“எங்கு போவது? இந்த பாதைகள், ஆலயங்கள்- இவற்றை விட்டு நான் எங்கு போவது?” - அவன் நினைத்தான்.

வெளியில் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு அவர்கள் ப்ரம்மகுண்டத்திற்குள் நுழைந்தார்கள். விக்கிரமாதித்தன் உண்டாக்கிய பௌடிகள். அங்கு ஏராளமான பக்தர்கள் மூழ்கி குளித்துக் கொண்டிருந்தார்கள். நீரில் பேல்ப்பத்தி என்ற புனித இலைகளும் மலர்களும் மிதந்து கொண்டிருந்தன. நீரிலும், கரையிலும் அடுத்தடுத்து இருந்த கோவில்களில் பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. நதிக்கு நடுவிலிருந்த தீவில் ஹோமகுண்டம் எரிந்து கொண்டிருந்தது. நெருப்பில் நெய்யையும் மற்ற பொருட்களையும் எரித்துக்கொண்டு சன்னியாசிகள் காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

தூரத்தில் மலைகள் இருண்டன. வானத்திலிருந்த சிவப்பு நிறம் மறைந்துவிட்டது. அப்போது நதியின் மேற்பகுதி ஜொலித்துக் கொண்டிருந்தது. பக்தர்கள் மலர்களையும், எரிந்து கொண்டிருக்கும் நெய் விளக்குகளையும் நதியில் வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். நதியின் கரைகளில் கூடியிருந்த பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொல்லிக் கடவுள் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் சத்தம் ஒரு புலம்பலைப்போல நதியில் தங்கி நின்றது.

பூஜை முடிந்தது. நதியில் மலர்களும், நெய் திரிகளும் மிதந்து கொண்டிருந்தன. கோவிலைவிட்டு வெளியே வந்த புரோகிதர்கள் இரு கைகளிலும் உயர்த்திப் பிடித்த தீபங்களுடன் படிகளில் இறங்கினார்கள். கடைசி படியில் அவர்கள் வரிசையாக நின்றார்கள்- தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்த தீபங்களுடன், ஆகாயத்தை நோக்கிப் பார்த்த கண்களுடன்.

அப்போது ஹரித்துவாரிலிருக்கும் எண்ணிக்கையிலடங்காத கோவில்களிலிருந்து ஒரே நேரத்தில் மணிகள் ஒலித்தன. சங்கொலிகள் நதிக்கு மேலே கேட்டன. பக்திப் பரவசத்தால் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுத பக்தர்களில் சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்கள்.

ரமேஷன் எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தான். காதுகளில் அலைகளைப் போல வந்து மோதும் மணியோசையும் சங்கொலியும் வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்த தீபங்களின் வெளிச்சமும் அவனை அமைதியானவனாக ஆக்கின. அவன் ஒரு ஹோமகுண்டத்தைப் போல பற்றி எரிந்து கொண்டிருந்தான்.

கோவிலின் தீபங்கள் எரிந்து முடியும் நிலையில் இருந்தன. நதியில் மிதந்து சென்ற மலர்களும் குறைந்து கொண்டிருந்தன. அந்த இடம் ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.

மணி எட்டரை ஆகியிருந்தது.

“ரமேஷ்!”

சுஜா அவனைக் குலுக்கி அழைத்தாள். ஹரித்துவாரில் அவர்கள் இன்னும் ஒன்றரை மணி நேரமே இருக்க முடியும். ஹோட்டலுக்குத் திரும்பச் செல்ல வேண்டும். அவனுக்கு இப்போதும் நல்ல காய்ச்சல் அடித்தது. ஏதாவதொரு மாத்திரையை உட்கொள்ளச் செய்ய வேண்டும். பிறகு நேராக ஸ்டேஷனுக்குப் போக வேண்டும்.

“இப்படி உட்கார்ந்திருந்தால் வண்டியைத் தவறவிட்டுட மாட்டோமா ரமேஷ்?”

அவள் ஞாபகப்படுத்தினாள். அவனுடைய தோளில் கையை வைத்தபோது, கழுத்தில் நெருப்பின் வெப்பம் இருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் எந்தவித அசைவும் இல்லாமல் நதியைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். கண்களுக்கு முன்னால் இப்போதும் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. காதுகளில் மணிகளின் ஓசையும் சங்கொலியும், அலைகளின் சத்தமும்... இப்போதும்.

‘இப்படி இருந்தால் காய்ச்சல் அதிகமாகும்ல, அடக் கடவுளே!”

சுஜா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ப்ரம்மகுண்டத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. மலர்களும், நெய் விளக்குகளும் நதியில் கொஞ்சம் மிதந்து போய்க் கொண்டிருந்தன. நதிநீரில் போகாத சில தீபங்கள் படிகளின் ஓரத்தில் கிடந்தன- காற்றில் நடுங்கிக் கொண்டிருந்த நெருப்பு நாக்குடன்.

“ரமேஷ், எழுந்திரு...”

“நாம நாளைக்குப் போவோம்”

அவளுக்கு நன்கு பழக்கமான அவனுடைய குரல் அல்ல அது. அவள் பதைபதைப்புடன் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

“என்னை கஷ்டப்படுத்தாதே ரமேஷ்”

“நீ போ!”

“நான் எங்கே போறது ரமேஷ்? நீ இல்லாம நான் எங்கே போறது?”

அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

அவன் எதுவும் பேசாமல் தூரத்தில் எங்கோ பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். கோவில்களில் விளக்குகள் முழுமையாக அணைந்து கொண்டிருந்தது. அணைந்து போன நெய் விளக்குகள் நதியில் ஏராளமாகக் கிடந்தன.

“ரமேஷ்!”

அவளுடைய குரல் அழுகையாக மாறியது.

அவன் ஒரு சிலையைப்போல அசைவே இல்லாமல் உட்கார்ந்திருந்தான். என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாமல் அவள் திகைத்துப்போய் நின்றிருந்தாள் - நீண்டநேரமாக. பிறகு அவளும் ஒரு படியில் அவனுக்கு அருகில் அமர்ந்தாள். ஆள் அரவமற்று வெறிச்சோடிப் போயிருந்த அந்த இடத்தில் அவளுடைய அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டது.

சிறிது நேரம் சென்றதும் டேராடூன் எக்ஸ்பிரஸ் மலை அடிவாரத்தில் ஓசை எழுப்பியவாறு கடந்து போனது.


14

ரித்துவாருக்கு மேலே சூரியன் உதித்தது. ஹோட்டல் பையன் பெட்டிகளைத் தூக்கியெடுத்துக் கொண்டு டாக்ஸியை நோக்கி நடந்தான். அவினாஷ் காருக்கருகில் நின்றிருந்தான். அவன் கழுத்தில் ஒரு மஃப்ளரைச் சுற்றியிருந்தான். ஹரித்துவாரின் காலைநேரம் எப்போதுமே குளிர்ச்சியாக இருக்கும்.

சுஜா தன்னுடைய கைப்பையை எடுத்தாள். அவள் குளித்து முடித்திருந்தாள். சரியாக உலர்ந்திராத தலைமுடியைச் சுதந்திரமாக விட்டு பின்னால் கட்டியிருந்தாள். நெற்றியில் எப்போதும்போல ஒரு பெரிய பொட்டு இருந்தது.

வெளியே செல்வதற்காக அவள் ரமேஷனுக்காக காத்திருந்தாள். அவன் குளிக்கவோ பல் துலக்கவோ இல்லை. கட்டிலைவிட்டு எழுந்து வாஷ்பேஸினுக்கருகில் சென்று முகம் கழுவிவிட்டு வந்து, ஒரு புஷ் சட்டையை எடுத்து அணிந்தான். எல்லா வேலைகளையும் அவள்தான் செய்தாள். பெட்டிகளைத் தயார் பண்ணி வைத்தது, ஹோட்டலின் கணக்குகள் தீர்த்தது- எல்லாமே அவள்தான்.

ரமேஷன் தயாரானவுடன் அவள் கைப்பையிலிருந்து ஒரு ஸ்கார்ஃபை வாங்கி அவன் கழுத்தில் சுற்றினான். அவனை மேலும் அழகானவளாக ஆக்கியது அந்த பச்சையும் சிவப்பும் நிறங்களிலிருந்த காஷ்மீர் ஸ்கார்ஃப். கைப்பிடியைப் பிடித்தவாறு அவன் படிகளில் இறங்கினான். அப்போதுதான் அவள் கவனித்தாள்- அவனுடைய காலில் செருப்பில்லை.

“ரமேஷ், உன் செருப்புகளை எங்கே?”

அவனால் ஞாபகப்படுத்திச் சொல்ல முடியவில்லை. அவள் திரும்பிச் சென்று வாஷ்பேஸினுக்குக் கீழே கிடந்த அவனுடைய தோலாப்பூர் செருப்புகளை எடுத்துக் கொண்டு வந்து அவனுடைய கால்களின் அருகில் வைத்தாள்.

அவினாஷ் காரின் கதவைத் திறந்து விட்டான்.

“டில்லிக்குப் போய்ச் சேர்ந்தவுடன், டாக்டரைப் பார்க்கணும். ஆஸ்பிரின் சாப்பிட்டதுனால இல்ல...”

அவன் ஞாபகப்படுத்தினான். இரவு முழுவதும் ரமேஷனுக்கு நெருப்பைப் போல உடம்பு பயங்கர உஷ்ணமாக இருந்தது. பொழுது புலரும் நேரத்தில்தான் காய்ச்சல் குறைந்தது. தூக்கத்திற்கு விடுதலை கொடுத்துவிட்டு அவள் அவனுடைய வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தாள். இடையில் அவ்வப்போது குடிப்பதற்கும் ஏதாவது கொடுத்தாள். காய்ச்சலால் அவன் மிகவும் சோர்வடைந்து போயிருந்தான். கண்களுக்கு கீழே கருப்பு வளையங்கள் தெரிந்தன. ஏற்கெனவே குழி விழுந்து போயிருந்த கண்கள் இனிமேல் உள்ளே போக வழியில்லை.

ஹோட்டலுக்கு முன்னால் பணியாட்கள் வந்து நின்று அமைதியாக அவர்களுக்கு விடை கொடுத்தார்கள். கார் ஸ்டேஷனை நோக்கி நகர்ந்தது. பெட்டிகளுடன் நடந்த போர்ட்டர்களுக்குப் பின்னால் எதுவும் பேசாமல் அவினாஷ் நடந்தான். சுஜா ரமேஷனின் கையை இறுகப் பிடித்திருந்தாள்- அவன் எங்கேயாவது ஓடி விடுவானோ என்று பயந்ததைப் போல அவனுடைய உள்ளங்கைக்கு பனியின் குளிர்ச்சி இருந்தது.

ப்ளாட்ஃபாரத்தில் ஒரு பீடியைப் பிடித்தவாறு ஹனுமான் நிற்பதை அவர்கள் பார்த்தார்கள். சுஜாவையும் ரமேஷனையும் பார்த்தவுடன் பீடியைக் கீழே போட்டு அணைத்துவிட்டு அவன் அவர்களுக்கருகில் வந்தான். அவனும் எதுவும் பேசவில்லை. அமைதியாக எல்லாரும் ரயில் தண்டவாளத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

“சிவராத்திரிக்கு வருவீங்களா?”

அவினாஷ் கேட்டான். ரமேஷன் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. பேசும் சக்தியை இழந்துவிட்டதைப் அவன் நின்றிருந்தான்.

“வருவோம் அவினாஷ்” சுஜா சொன்னாள்.

“அடிக்கடி கடிதம் எழுதுங்க.”

“எழுதுறோம்.”

சிக்னல் கீழே விழுந்தது. தூரத்தில் வண்டியின் இரைச்சல் சத்தம் கேட்டது.

“ஐ வில் ரியலி மிஸ் யூ”

வண்டி ப்ளாட்ஃபாரத்தில் வந்து நின்றபோது அவினாஷ் ரமேஷனின் தோளில் கை வைத்துக் கொண்டு சொன்னான். அவனுடைய குரலில் கவலை கலந்திருந்தது. அவினாஷும் ஹனுமானும் ப்ளாட்ஃபாரத்தில் நின்றவாறு அமைதியாக கைகளை ஆட்டினார்கள்.

வண்டி அதனுடைய ஏராளமான சக்கரங்களில் உருண்டு ஓடியது.

சுஜா வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜ்வாலாப்பூருக்குச் செல்லும் நீண்ட சாலைக்குப் பக்கவாட்டில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது- டில்லியை இலக்கு வைத்து. அவளிடமிருந்து அவளையும் மீறி ஒரு நீண்ட பெருமூச்சு கிளம்பி வெளியே வந்தது. மனதில் ஏதோ ஒரு மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பி வந்துவிட்ட நிம்மதி இருந்தது.

“டாடி திரும்பி வந்திருப்பார். அம்மா வெளியே என்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பா. அதிகாலை வண்டிக்கு வர்றதாதானே அவகிட்ட நான் சொல்லியிருந்தேன்! இதுவரை வராம இருக்கறதைப் பார்த்து அவங்க பதைபதைச்சிருக்க மாட்டாங்களா?”

வெகுசீக்கிரமே தன்னுடைய தந்தை, தாய் இருவரையும் பற்றிய சிந்தனை அவளுடைய மனதைவிட்டு மறைந்தது. தனக்கு அருகில் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த ரமேஷன் மீது அவளுடைய கவனம் திரும்பியது. கண்கள் திறந்திருந்தாலும் எதையும் பார்க்கவில்லை என்பது மாதிரி இருந்தது. அவனுடைய முகம் அப்படி. அவன் எதைப்பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான்? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் பார்வை அவளை பயமுறுத்தியது.

“ரமேஷ்!”

அவள் அவனுடைய மடியில் கையை வைத்து அழைத்தாள். அவன் அவள் அழைத்ததைக் காதிலேயே வாங்கவில்லை.

“என்னை பயமுறுத்தாம இரு, ரமேஷ்.”

அவனுடைய மவுனம் அவளைப் பயப்பட வைத்தது. நேற்று ப்ரம்மகுண்டத்தில் ஆரம்பித்த மவுனம். அவன் ஏதாவது சொல்லியிருந்தால்...

அவள் அவனுடைய தோளில் தலையை வைத்து அமர்ந்திருந்தாள். பக்கத்தில் வேறு யாருமில்லை. இப்படியொரு சூழ்நிலை அமைந்தால் சாதாரணமாக அவன் பேசாமல், அசையாமல் இருப்பானா? சிறிது நேரத்தில் அவள் தன்னை மறந்து தூங்கிவிட்டாள்.

வண்டியின் வேகத்துடன் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. சக்கரங்கள் இரும்புத் தண்டவாளங்களில் இலட்சம் தடவை உருண்டன. முடிவே இல்லாத தண்டவாளங்கள் வழியாக, நதிக்கரை வழியாகப் பயணம் செய்து ரூர்க்கியையும் கடந்து வண்டி டில்லியை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

ரமேஷனின் தோள்மீது தலையை வைத்திருந்த சுஜா தூக்கத்தில் மூழ்கியிருந்தாள். நேற்று இரவு அவள் ஒரு பொட்டு கூட கண்களை மூடவில்லை. ரமேஷன் தூங்கவில்லை. திறந்த கண்களுடன் அவன் அமர்ந்திருந்தான். எவ்வளவோ மணி நேரங்களாக அவன் இதே மாதிரிதான் உட்கார்ந்திருக்கிறான்! இதற்கிடையில் ஒரு சிகரெட் பற்ற வைப்பதற்குக் கூட அவன் எழவில்லை. சிலையைப் போல அவன் உட்கார்ந்திருந்தான். இப்போதும் யுகங்களுக்கிடையில் அவன் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனம் இப்போதும் ஒரு ஹோமகுண்டம்தான்.

சுஜா ஒருமுறை திடுக்கிட்டு எழுந்தாள். அவள் அவனுடைய மடியில் தலைவைத்துப் படுத்தாள். அதற்கு மேல் அவளால் தூங்க முடியவில்லை. அவளுடைய முகத்திற்கருகில் அவனுடைய கைகள் குளிர்ந்து கிடந்தன. அந்தக் கைகள் இலேசாக அசைந்தால்... தன்னுடைய தலைமுடியில் அந்த விரல்கள் பயணித்தால்...

வண்டி மீரட்டை அடைந்தபோதும் அவன் பழைய மாதிரியே திறந்த கண்களுடன்தான் உட்கார்ந்திருந்தான்.

“ரமேஷ்!”

ஃப்ளாஸ்க்கிலிருந்து அவள் தேநீர் ஊற்றிக் கொடுத்தாள். அவன் தேநீரை வாங்கி ஒரு மடக்குக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தான்.


யமுனையின் மீது இருக்கும் நீளமான பாலம். தோபிகாட். நிகம் போத்காட்டில் சிதைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பின்னால் அகன்று அகன்று போய்க் கொண்டிருக்கும் செங்கோட்டை.

அவள் முடியை வாரவோ, முகத்தைக் கழுவவோ செய்யவில்லை. மனதில் இருந்த பயம் அவளை மூச்சு விட முடியாமற் செய்தது. சிதறிக்கிடந்த தலைமுடியுடனும், நீர் நிறைந்த கண்களுடனும் அவள் வண்டி ஸ்டேஷனில் நிற்பதற்காகக் காத்திருந்தாள்.

ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்த டிரைவர் ஷ்யாம்லாலை அவள் பார்த்தாள். அவன் ஓடிவந்து பெட்டிகளை எடுத்தான்.

“இறங்கு ரமேஷ்.”

“எதுக்கு?”

அர்த்தமில்லாத கேள்வி. நேற்று ப்ரம்மகுண்டத்தில் இருக்கும்பொழுது கேட்ட, ஒரு மாதிரியான, இதற்கு முன்பு கேட்டிராத அதே குரல்.

அவள் அவனுடைய கையைப் பிடித்து வெளியில் இறக்கினாள்.

“ரமேஷுக்கு சுகமில்ல... காய்ச்சல்...”

தன்னையும் ரமேஷனையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாம்லாலைப் பார்த்து அவள் சொன்னாள்.

டில்லி மண்ணில் கால் வைத்த பிறகுதான் அவளுக்கு நிம்மதியே பிறந்தது. அவளுக்கு ஹரித்துவார் ஒரு பயமுறுத்தும் கனவாக இருந்தது.

“டாடி வந்துட்டாரா ஷ்யாம்லால்?”

“வந்துட்டாரு, சோட்டி மேம்ஸாப்”

ஸ்டேஷனிலிருந்து வெளியே நடக்கும்போது அவன் சொன்னான்: “காலையில நான் கார் கொண்டு வந்திருந்தேன்.”

“ரமேஷனுக்கு உடல் நலமில்ல... அம்மா இப்பவும் கோபமா இருக்காங்களா?”

“இல்ல, சோட்டி மேம்ஸாப். காலையில இருந்து வெளியே வெளியே பார்த்துக்கிட்டே இருக்காங்க.”

டாக்டர் நந்ததாவின் க்ளினிக்கை அடைந்தபோது அவள் காரை நிறுத்தினாள். அவள் ரமேஷனையும் அழைத்துக் கொண்டு க்ளினிக்கிற்குள் நடந்தாள். அவருக்கு அவர்களை ஏற்கெனவே நன்கு தெரியும்.

“ரெண்டு பேரும் எங்கேயிருந்து வர்றீங்க?”

ரமேஷனையும் சுஜாவையும் மாறி மாறிப் பார்த்தவாறு டாக்டர் நந்தா கேட்டார்.

“ஹரித்துவாருக்குப் போயிருந்தோம்.”

“மகரிஷி மகேஷ் யோகியைப் பார்த்தீங்களா?”

“ரிஷிகேஷுக்குப் போக நேரம் கிடைக்கல, டாக்டர்.”

“எங்கே, நேரம் கிடைக்கும்?”

அவர் சுஜாவைப் பார்த்து கண்களைச் சுருக்கிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தார். ரமேஷனை அவர் திரைச்சீலைக்கப்பாலிருந்து அவர் அழைத்துக் கேட்டார்.

“வந்துட்டாரு டாக்டர்.”

“ஹௌ டூ யூ ஃபைன்ட் ஹரித்துவார்?”

அவள் பதில் சொல்லவில்லை. ஹரித்துவாரைப் பற்றி மனதில் சிந்தித்துப் பார்க்கக்கூட அவளுக்கு இப்போது பயமாக இருந்தது.

“மியர் எக்ஸோஸ்ஷன்.”

திரைச்சீலைக்கு வெளியே வந்து டாக்டர் சொன்னார். திறந்து கிடக்கும் சட்டையுடன் ரமேஷன் அவருக்குப் பின்னால் வந்தான். ஒரு ஊசியும் சில மாத்திரைகளும்.

“முதல்ல சவுத் எக்ஸ்டன்ஷன், ஷ்யாம்லால்.”

“அம்மா காத்திருப்பாங்களே!”

“உடனே திரும்பி வந்துடலாம். பத்தே நிமிடங்கள்.”

கார் நகர்ந்தவுடன் அவள் ரமேஷனின் திறந்து கிடந்த சட்டை பொத்தான்களைப் போட்டு விட்டாள். அவனுடைய கைகளில் ஊசி போட்ட இடத்தை இலேசாக ஊதிவிட்டு, அவள் அவனுடைய காதுகளில் முணுமுணுத்தாள்: “வலிக்குதா?”

“இல்லை” என்று அவன் தலையை ஆட்டினான்.

கார் ரமேஷனின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. ஷ்யாம்லால் அவனுடைய பெட்டியை எடுத்து மேலே வைத்தான். சுஜா அலமாரியைத் திறந்து அவன் அணிவதற்காக ஒரு பைஜாமாவை வெளியில் எடுத்து வைத்தாள். சமையலறைக்குச் சென்று அவள் தேநீர் தயாரித்தாள். ஆவி வந்து கொண்டிருந்த தேநீருடன் சேர்த்து மாத்திரைகளையும் அவனை அவள் உட்கொள்ள வைத்தாள்.

“ஹிரோஸிக்கு நான் ஃபோன் செய்யறேன். எங்கேயும் போகக்கூடாது. கட்டிலைவிட்டுக் கீழே இறங்கவேண்டாம்.”

நீட்டிப் படுத்திருந்த ரமேஷனை கழுத்துவரை அவள் போர்வையால் மூடிவிட்டாள். அதற்குப் பிறகு கட்டிலுக்கருகில் முழங்காலிட்டு அமர்ந்து அவனுடைய முகத்தில் தன்னுடைய முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டு அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “நான் உடனே திரும்பி வருவேன். அரை மணி நேரத்துல...”

ஷ்யாம்லால் வெளியே பொறுமையுடன் காத்திருந்தான். உதட்டில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறு அவள் படிகளில் இறங்கி வந்தாள்.

சுஜா போனவுடன், ரமேஷன் அறையில் தனியாகப் படுத்திருக்க, தேரொலிகள் அவனுடைய காதுகளில் மீண்டும் கேட்க ஆரம்பித்தன. யுகங்களுக்கிடையில் அமைதியும் வெறுமையும் அவனை வந்து அணைத்துக் கொண்டன. அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். உட்கார முடியவில்லை என்று ஆனபோது, அவன் அறைக்குள் இங்குமங்குமாக நடந்தான். உட்காரவும் படுக்கவும் நடக்கவும் முடியாமல் ஒரு பைத்தியக்காரனைப் போல அவன் அறையைச் சுற்றி நடந்தான். கடைசியில் கதவைத் திறந்து வெளியேறினான்.

அறையில் தொடர்ச்சியாக தொலைபேசி மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. பின்னாலிருந்து யாரோ என்னவோ சொன்னார்கள். யாரோ அழைத்தார்கள். எதையும் காது கொடுத்துக் கேட்காமல் வெறும் பைஜாமா மட்டும் அணிந்துகொண்டு கால்களில் செருப்பு இல்லாமல் அவன் நடந்தான். காதுகளில் ப்ரம்மகுண்டத்தின் மணியோசை கேட்டது. சங்கொலி முழங்கியது. வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்த தீபங்களைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் கண்களுடன் அவன் முன்னோக்கி நடந்தான்.

டில்லியில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது.

நினைவு வரும்போது அதிகாலை நேரம் ஹரித்துவாருக்குச் செல்லும் ஏதோ ஒரு பாசஞ்சர் வண்டி. அதில் அவன் தரையில் சுருண்டு படுத்திருந்தான். அவனைச் சுற்றிலும் சன்னியாசிகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்று நின்று மேலும் அதிகமான பயணிகளை நிறைத்துக் கொண்டு வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

தாகத்தால் தொண்டை எரிந்தது. குடிப்பதற்கு ஒரு துளி நீர்... மீண்டும் அவனுக்கு நினைவு இல்லாமற் போனது.

ஹரித்துவாரை வண்டி அடைந்தபோது, மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. மீண்டும் அவன் ஹரித்துவார் மண்ணில் கால் பதித்தான். இந்த முறை அவன் நகரத்திலிருந்து வந்திருக்கும் பணக்காரனோ நவநாகரீக மனிதனோ அல்ல. எல்லாவற்றையும் வேண்டாமென்று உதறிவிட்டு வந்த பிச்சைக்காரன்...

பிரம்மகுண்டத்தை நோக்கி நடைபழகும் ஒரு குழந்தையைப்போல அவன் நடந்தான். லோவர் ஸடக்கிற்கு அருகில் வெறிச்சோடிப் போயிருந்த ஒரு பாதையை அடைந்ததும் அவன் நின்றான். கண்கள் ஒன்றிரண்டு முறை மூடித் திறந்தன. விளக்கு மரத்திற்குக் கீழே அந்த உருவம் மல்லாக்கப் படுத்திருந்தது. இரத்தம் வழியும் நாக்கு அறுந்து கீழே கிடந்தது. தூரத்தில் திரிசூலம் தனியாகக் கிடந்தது. வாய்க்கு மேலும் பாதி திறந்த கண்களிலும் எறும்புகள்...

இறந்து கிடக்கும் அந்த உருவத்தைத் தாண்டி வேகவேகமாக அவன் ப்ரம்ம குண்டத்தை நோக்கி நடந்தான்.

நதியில் ஏராளமான மலர்களும், தீபங்களும் யாக நெருப்பைச் சுற்றிலும் உயர்ந்து மேலெழும் வேதமந்திரங்கள்... நெஞ்சிலடித்துக் கொண்டு அழும் பக்தர்கள்...

புரோகிதர்கள் உயர்த்திப் பிடித்த தீபங்களுடன் கோவில்களை விட்டு வெளியே வருகிறார்கள். சங்கொலிகள் முழங்குகின்றன. ப்ரம்மகுண்டத்தில் மணியோசை தொடர்ந்து ஒலிக்கிறது.

இந்த தீபங்களிலிருந்தும் இந்த மணியோசையிலிருந்தும் ரமேஷனுக்கு விடுதலையேயில்லை.

நிரந்தரமாக.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.