Logo

தேடித் தேடி...

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6284
thedi thedi

ருப்பு புள்ளிகளைக் கொண்ட ஒரு வெள்ளைநிற நாய் அங்கு இருந்தது. அவன் அப்போது என்னைப் பார்த்து பற்களைக் கடித்து இலேசாக முனகியபடி இருப்பான் தனிப்பட்ட முறையில் என்மீது அவன் கொண்ட வெறுப்பே அதற்குக் காரணம்.

அவனைத் தவிர வேறு நான்கு நாய்களும் அங்கு இருந்தன. அந்த ஐந்து நாய்களுமே ஒரே வயதைக் கொண்டவைகளாக இருந்தாலும் அந்த நாய்களில் எதற்கும் எச்சில் இலைகள் இருக்கும் பீப்பாய்களை நெருங்குவதற்கான தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம்- நாங்கள் அதற்குச் சம்மதித்தால்தானே! எங்களுக்கு வேண்டிய அளவிற்குச் சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் கிளம்பி விடுவோம். அதற்குப்பிறகு நான்கு பக்கங்களிலும் பயந்தபடி பார்த்தவாறு பதுங்கிப் பதுங்கி மற்ற நாய்கள் எச்சில் இலைகள் இருக்கும் இடத்தை  நோக்கி வருவார்கள்.

நாங்கள் என்று சொன்னால் யார் என்கிறீர்களா? நானும் என்னுடைய தாயும் அல்ல. நானும் என் தந்தையும் அல்ல. நானும் என் அண்ணனும் அல்ல. நானும் என் நண்பனும் அல்ல. நானும் என்னுடைய ஒரு நாயும்தான். ஆமாம்- அதைத்தான் 'நாங்கள்' என்று சொல்கிறேன்.

மற்ற எந்த நாய்களையும் விட இரண்டு மடங்கு பெரியவன் அவன். நல்ல தைரியசாலியாக வேறு இருந்தான். மற்ற எல்லா நாய்களும் அவனைப் பார்த்துப் பயந்தன. ஒருநாள் நான் இனிப்பான உணவுப் பொருட்கள் இருந்த ஒரு இலையை நக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய நாய் சற்று தூரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அப்படியொரு சம்பவம் நடந்தது. அந்த கருப்பு புள்ளிகளைக் கொண்ட வெள்ளை நிற நாய்க்கு பொறுமை எல்லை கடந்து போனது காரணமாக இருக்கலாம். என்மீது வேகமாகப் பாய்ந்து வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு புரண்டோம்.

வேறொரு மனிதக் குழந்தையாக இருந்திருந்தால், அந்தக் குழந்தையின் பிடரி நாயின் வாய்க்குள் போய், நரம்புகள் அந்த நாயின் வளைந்து காணப்படும் பற்களில் சிக்கிச் சிதறிப் போயிருக்கும். நான் நாய்களுடன் சேர்ந்து வளர்ந்தவன். என்னால் உருளமுடியும். தள்ளிப் போய் விழமுடியும், திரும்பக் கடிக்க முடியும். இப்படி எல்லாமே என்னால் முடியும். ஒரு சிறு நாய்க்குட்டியை ஒரு பெரிய நாய் கடிக்கும்போது, அது என்னவெல்லாம் செய்யுமோ, அதையெல்லாம் நானும் செய்வேன்.

அப்போது பயங்கர கோபத்துடன் வந்த அந்த நாய்கள் நான்கும் குதித்துக் கொண்டு என் மீது பாய்ந்தன.

நான் யாரை அழைத்து அழுவது? நான் அழுதேன். என்னுடைய நாய்க்கு அம்மா என்றோ- அப்பா என்றோ பெயரில்லை. அது மட்டுமல்ல-அதற்கு எந்தப் பெயரும் கிடையாது. இருந்தாலும், என்னுடைய அழுகைக்கும் நாய்களின் குரைக்கும் சத்தங்களுக்கும் மத்தியில் 'பௌ' என்ற கனமான ஒரு சத்தம் ஒரு பெரிய பாறையைப் போல வந்து ஒலித்ததை நான் கேட்கவே செய்தேன். அந்தச் சத்தத்தின் கம்பீரத்தை வாயால் சொல்லி விளங்கவைக்க உண்மையாகவே என்னால் முடியாது. என்னுடைய நாய்க்குள் இருந்துதான் அந்தச் சத்தம் வந்தது என்பதை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை.

மற்ற நாய்கள் வேகமாகப் பாய்ந்தன. அந்த கருப்பு புள்ளிகளைக் கொண்ட வெள்ளை நாயின் கழுத்து என்னுடைய நாயின் வாயில் இருந்தது. அவன் அந்த நாயின் மீது இருந்த பிடியைச் சிறிது கூட விடவில்லை. இருந்தும் எப்படியோ அந்த வெள்ளை நிற நாய் அந்தப் பிடியிலிருந்து உதறிக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட அவன் ஒருவழி ஆகியிருப்பான்.

நான் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய நாய் வாலை ஆட்டியவாறு மெதுவாக முனகிக் கொண்டே என் உடம்பை இங்குமங்குமாய் முகர்ந்து பார்த்தது. அவன் என்னிடம் பல கேள்விகளைக் கேட்க விரும்புகிறான் என்பதை நானும் அறிவேன்.

என் முதுகிலும் நெஞ்சிலும் நிறைய காயங்கள் இருந்தன. தொடையில் நாயின் பல் பட்டு உண்டான காயம் இருந்தது. அங்கு இரத்தம் லேசாக கசிந்து கொண்டிருந்தது. அதை அவன் பார்த்தான். அடுத்த நிமிடம் தன்னுடைய நீளமான நாக்கால் அதை நக்கித் துடைக்க ஆரம்பித்தான்.

ஹோட்டலுக்குப் பின்னால் இருக்கும் குறுகலான இடத்தில் நடந்த அந்தச் சம்பவம் இப்போதும் கூட பசுமையாக அப்படியே பதிந்து இருக்கிறது. அந்த 'பௌ' என்ற சத்தத்தை அதற்குப்பிறகும் பலமுறை நான் கேட்டிருக்கிறேன். சாம்பல் குவியலிலும் குப்பை மேட்டிலும் புதிதாகப் போட்ட குட்டிகளுடன் இருக்கும் தாய்நாய் மற்ற நாய்களைப் பார்க்கும்போதும், கல்லெறிய முயற்சிக்கும் சிறுவர்களைப் பார்க்கும் போதும் அப்படியொரு 'பௌ' சத்தத்தை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் கேட்ட 'பௌ' சத்தத்தில் இருந்த கடுமை மற்ற நாய்களின் 'பௌ' ஒலியில் இல்லை என்பதே உண்மை.

நான் என் உடம்பைப் பல நேரங்களில் 'பரபர'வென்று சொறிவேன். என்ன இருந்தாலும் எனக்கு இருப்பது மனிதக்குழந்தையின் தோல்தானே! அப்போது என்னுடைய நாய் என் உடலை நாவால் நக்கித் துடைக்கும். அப்படி அது நாவால் நக்கும்போது எனக்கு மிகவும் சுகமாக இருப்பது போல் தோன்றும்.

ஒரு நாள் அவன் அப்படி நக்கிக் கொண்டிருக்கும் போது ஹோட்டலுக்குப் பின்னால் கதவுக்குப் பக்கத்தில் நின்றவாறு இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன்.

"இங்க பார்த்தியா, அந்த நாய் அவனை எப்படி நாக்கால் நக்கி துடைக்குதுன்னு? அந்த நாய் தன் குட்டியை நக்குறது மாதிரி நக்குது பாரு..."

"அவனுக்கு ரொம்பவும் ஆனந்தமா இருக்கும் போல..."

அவர்களில் ஒருவன் சொன்னான். "அவன் உடம்புல இருக்குற உப்பு நாய்க்கு ரொம்பவும் பிடிச்சிருக்கும்!"

"அவன் உண்மையிலேயே கொடுத்து வச்சவன்தான்."

அவர்கள் பேசுவதற்கான அர்த்தம் எதுவுமே எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது அவர்களைப் பார்ப்பதாக இருந்தால் அவர்களைப் பார்த்து சில வார்த்தைகளாவது நான் நிச்சயம் பேசுவேன். மனிதன் எதற்காக அவனுடைய குழந்தைகளிடம் விளையாட்டு காட்டுகிறான்? அவர்களைப் பார்த்து நான் நிச்சயம் இந்தக் கேள்வியைக் கேட்பேன். என்னுடைய நாய்க்கும் அவர்கள் பேசியதன் அர்த்தம் புரிந்திருந்தால், அதுவும் அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கத்தான் செய்யும்.

அவர்கள் இருவரும் எங்களையே பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அடுத்த நிமிடம் அவர்களில் ஒருவன் என்னுடைய நாயை நோக்கி ஒரு கல்லை எடுத்து எறிந்தான். அந்தக் கல் பட்டதால் அவனுக்கு பயங்கர வேதனை உண்டாகியிருக்க வேண்டும். அவன் அப்படியே பின்னோக்கி வேகமாகக் குதித்தான். அவர்களில் ஒருவன் கண்களை ஒரு மாதிரியாக உருட்டியவாறு என்னைப் பார்த்து சொன்னான்:

"எந்திரிச்சு போடா..."


நான் எழுந்து நின்றேன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு மனிதன் தண்ணீரை எடுத்து என் தலை மீது ஊற்றினான்.

அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் என்னுடைய நாய் தலையிலிருந்த நீரை நாக்கால் நக்கி துடைத்துவிட்டது. என் தலையில் இருக்கும் நீரைத் துணியால் துடைத்து விடுவதற்கு யார் இருக்கிறார்கள்? அவன் ஒருவகை பயத்துடன் சுற்றிலும் பார்த்தான். தனக்கு அதிகாரமில்லாத ஒரு செயலை அல்லவா அவன் செய்து கொண்டிருக்கிறான்?

இரவு நேரம் வந்துவிட்டால் அவன் சுருண்டு படுக்க ஆரம்பித்துவிடுவான். அவனுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் நானும் சுருண்டு படுத்திருப்பேன். அவன் தாடை என் தலை மீது இருக்கும். அப்போது எனக்கு சிறிது கூட குளிர் தெரியாது. பயம் என்பதுகூட கொஞ்சமும் எனக்கு இருக்காது. இரவு நேரத்தில் ஒவ்வொரு முறையும் தூக்கம் கலைந்து எழுகிறபோதும், ஒரு மெல்லிய ஓசை என் காதுகளில் விழும். அதில் ஒரு பாட்டு கலந்திருக்கும். இப்போது கூட அந்தப் பாட்டு என் செவிகளுக்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அந்த ஹோட்டலில் ஒரு கறுத்து தடித்த ஆள் இருந்தான். அங்கு வேலை பார்க்கும் மனிதன் அவன். அவன் என்னையே வைத்த கண் எடுக்காது பார்த்தவண்ணம் நின்றிருப்பான். அவன் என்னை எதற்காக அப்படிப் பார்க்க வேண்டும்? ஒருவேளை அவனும் என்னைப் போல எச்சில் தொட்டியில் வளர்ந்தவனாக இருப்பானோ? என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிமிடங்களில் அவன் தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போயிருக்கலாம்.

அவனையும் ஒருவேளை இதைப்போல ஒரு நாய் வளர்த்திருக்குமோ?

ஒருநாள் அவன் என்னைப் பார்த்து அழைத்தான்.

"டேய், நாய்க்குட்டி..."

அவன் அழைத்ததை நான் சரியாக கேட்கவில்லை.

மீண்டும் அவன் ஒரு கவளம் சோற்றைக் கையில் வைத்துக் கொண்டு நீட்டியவாறு அழைத்தான்.

"நாய்க்குட்டி..."

நான் வேகமாக ஓடிச் சென்று அவன் கையிலிருந்த சோற்றை வாங்கினேன். அவன் என்னைப் பார்த்து பல்லைக் காட்டினான்.

வாழ்க்கையிலேயே முதல் தடவையாக எனக்கு ஒரு கவளம் சோற்றைத் தந்தது அவன்தான். அதை அவ்வளவு எளிதில் என்னால் மறக்க முடியுமா என்ன?

அதற்கடுத்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு கவளம் சோறு கிடைத்துக் கொண்டிருந்தது. 'நாய்க்குட்டி' என்று அழைக்கும் குரலை எதிர்பார்த்தவாறு நான் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு படுத்திருப்பேன்.

ஒருநாள் அந்த மனிதனைக் காணவேயில்லை. அதற்கடுத்த நாளும் என்னை 'நாய்க்குட்டி' என்று யாரும் அழைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்தப் பல் இளிப்பை நான் பார்க்கவேயில்லை.

எனக்கு நேருக்கு நேராக பழக்கமான முதல் மனிதன் அவன்தான் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மனிதனின் சோற்றைத் தின்றுதான் நான் வளர்ந்தேனென்றாலும், நான் தின்னவேண்டும் என்பதற்காக யாரும் இலையில் பிரத்தியேகமாக சோற்றை ஒதுக்கி வைக்கவில்லை. நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒரு கவளம் சோற்றை எனக்காக கையில் உருட்டிக் கொண்டு வந்த மனிதன் அவன்தான். அதை எப்படி என்னால் மறக்க முடியும்?

அதுவரை எனக்கென்று எந்தப் பெயரும் கிடையாது. நான் ஒரு மனிதனாக அப்போது இல்லை. என்னை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு என்னிடம் என்ன இருந்தது? அந்த மனிதன்தான் எனக்கு முதல் முறையாகப் பெயர் வைத்தான்! அவன் அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதற்காக நான் காத்துக்கிடந்தேன் என்பதுதான் உண்மை.

என்னுடைய பெயர் 'நாய்க்குட்டி'.

நான் என்னுடைய நாயின் அருகில் சுருண்டு படுத்திருந்தேன். நாய் என் உடம்பை நாவால் நக்கிக் கொண்டிருந்தது. அப்போதுகூட நான் யாராவது என்னை அழைக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்தேன். இந்த விஷயத்தை என்னுடைய நாய் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், அவன் என்ன நினைப்பான்? தான் மட்டுமே என் மேல் அன்பு வைத்திருக்க, வேறொரு மனிதனும் என்னைத் தட்டிப் பறித்திருக்கிறான் என்று அவன் எண்ணியிருப்பானோ! நான் இன்னொரு மனிதனுக்கு அன்பைக் கொடுத்துவிட்டேன் என்று அவன் நினைத்திருப்பானோ! இந்த மனித ஜந்து நன்றி கெட்டவன் என்று அவன் மனதில் நினைத்திருப்பானோ? அப்படி என்னுடைய நாய் நினைத்திருந்தால், அது உண்மைதானே! மனித அழைப்பிற்காகக் காத்திருந்த என்னுடைய முழு கவனமும் மனிதன் மீதுதானே!

என்னை இரண்டு கால்களும் இரண்டு கைகளும் கொண்ட ஒரு மனிதப் பெண்தான் பெற்றிருக்கிறாள். அப்படியென்றால் அந்த மனிதப் பெண் எங்கே போனாள்?

நான் இந்த வாழ்க்கை முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்த கேள்வி அது. அதற்காக எங்கெல்லாம் நான் தேடியிருக்கிறேன்!

ஒருவேளை சாப்பாடு கிடைக்குமிடத்தில் தன் குழந்தை இருக்கட்டுமே என்று என்னைப் போட்டு விட்டு அவள் போய்விட்டாளோ! அப்படியே அந்தக் குழந்தை வளர்ந்து கொள்ளட்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். அந்த வகையில் பார்க்கப்போனால் நான் வளர்ந்து பெரியவன் ஆக வேண்டும் என்று என் தாய் ஆசைப்பட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்!

நான் சற்று உரத்த குரலில் சொல்லட்டுமா?

"அம்மா... நான் வளர்ந்துட்டேன்..."

நான் இறக்கும் தருணத்திலும் உரத்த குரலில் கூறுவேன்.

"அம்மா... நான் இப்போ சாகப்போறேன்."

நான் எப்படி வளர்ந்தேன் என்ற கதையை என்னுடைய தாயைப் பார்க்க நேர்ந்தால் நான் கூறுவேன்? எதையெல்லாம் நான் என் தாயிடம் சொல்லலாம்? என் விஷயத்தில் சொல்லும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது? இதில் சில விஷயங்களை நான் சொல்லவே போவதில்லை. அப்படிச் சொல்லும் அளவிற்கு அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும் நடக்கும் கதையைக் கேட்டால் உங்களுக்கே அலுப்பு தட்டிவிடும். ஆனால் என் தாய் நிச்சயம் நான் சொல்லும் கதையை மிகவும் விருப்பத்துடன் கேட்பாள்.

ஒருவேளை தாயும் மகனும் உணவைத்தேடி இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கலாம். இங்கு இருக்கும்போது தாய் இறந்து போயிருக்கலாம். அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம். கதை இப்படி இருக்குமோ?

என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

இல்லாவிட்டால் இப்படிக்கூட இருக்கலாம். அந்தக் குழந்தை உணவின் வாசனையால் ஈர்க்கப்பட்டு சிறிது சிறிதாகத் தவழ்ந்து இந்த இடத்தை வந்து அடைந்திருக்கலாம். என்ன இருந்தாலும் மனிதக் குழந்தையாயிற்றே! அவனுக்கு சோறு, கறி ஆகியவற்றின் வாசனையோடு ஒருவித ஈர்ப்பு உண்டானதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இப்படிக்கூட அந்தக் கதை இருக்கலாமே!


ஆனால், கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். என் மனதில் முகிழ்க்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். எல்லா நாய்களும் என்னைக் குத்திக் குதறி ஒரு வழி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருந்தன. ஒரே ஒரு நாய் மட்டும் அதைப் போல இல்லாமல் என்னை அருகிலிருந்து காப்பாற்றி வளர்க்க முன்வந்ததற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நான் ஒரு கதை கூறுகிறேன்.

ஒரு ஊரில் ஒரு சிறு வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும், அப்பாவும், குழந்தையும், நாயும் இருந்தார்கள். அந்த நாய் நன்கு வளர்ந்த ஒரு நாயாக இருந்தது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் அந்த அப்பா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். சிறிது நாட்களில் அந்த அம்மாவும் இறந்துவிட்டாள். அந்தக் குழந்தையும் நாயும் மட்டும் தனியாக இருந்தார்கள். உணவைத்தேடி குழந்தை வீட்டை விட்டு வெளியே கிளம்பியது. நாயும் குழந்தையுடனே சென்றது. அந்தக் குழந்தை ஒரு ஹோட்டலுக்குப் பின்னாலிருக்கும் சந்து ஒன்றினை அடைந்தது. அங்கிருந்த பீப்பாயின் அருகில் அது சென்றது. நாயும் அருகில் போனது. இரண்டு பேருக்கும் அங்கு உணவு கிடைத்தது. அங்கேயே அவர்களின் எஞ்சிய வாழ்க்கை தொடர்ந்தது.

கதை எப்படி பரவாயில்லையா?

அந்த சோற்றுக் கவளத்தைத் தந்த மனிதன் என்னைப் பார்த்து ஏன் பற்களைக் காட்டி சிரிக்க வேண்டும்? என் மனதில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த ஒரு நாள் மட்டுமல்ல- அதற்குப்பிறகும் கூட எனக்குச் சோறு தந்த அந்த மனிதனை நான் என்னுடைய தந்தை என்றுதான் நினைக்க விரும்புகிறேன். அந்த மனிதன் எனக்கு சோறு தந்தான். அவன் என்னைப் பெயரிட்டு அழைத்தான். அப்படியென்றால் அவன் ஏன் எனக்கு தந்தையாக இருக்கக்கூடாது? அப்படி நினைத்துப் பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

என் தாயைப் பார்த்தால் இந்த விஷயத்தைப் பற்றி நான் நிச்சயம் கேட்டிருப்பேன்.

எது எப்படியோ அந்த மனிதனின் சிரிப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்கவே செய்தது. அவன் என் தந்தையாக இருந்தால், நானும் உரத்த குரலில் தைரியமாகச் சொல்ல முடியும்.

"எங்கப்பா எனக்கு சோறு தந்தாரு. எனக்குப் பேரு வச்சாரு. என்மேல அன்பு காட்டினாரு."

அதற்குப்பிறகு நான் தந்தை உள்ள ஒருவனாக ஆகிவிடுவேன். தந்தையிடமிருந்து ஒரு மகனுக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்கள்- அவை என்னென்ன என்பதை இன்று நன்கு தெரிந்து வைத்திருக்கிறேன்- அவை கிடைத்தவனாகவும் நான் இருப்பேன்.

அப்படியென்றால் முன்பு நான் சொன்ன கதையைச் சற்று மாற்றி எழுத வேண்டும்.

அப்படியென்ன மாற்றத்தை அதில் உண்டாக்க வேண்டும்? தன்னுடைய தந்தை யார் என்பதை மகன் தெரிந்து கொண்ட கதைதானே நல்ல கதையாக இருக்கும்?

அந்தப் பருமனான மனிதனை 'அப்பா' என்று இப்போதைக்கு நான் அழைக்கட்டுமா?

என்னுடைய தந்தையை நான் பார்க்க முடியாமற்போய், சிறிது நாள் கழித்து என்னுடைய நாயின் உடம்பில் இருந்த ரோமம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அவனுடைய கண்களில் பீளை உண்டாகத் தொடங்கியது. வாலில் ஒரு புண் தோன்றியது. அவன் நாளடைவில் எதையுமே தின்ன முடியாத அளவிற்கு ஆகிவிட்டான். எப்போது பார்த்தாலும் சுருண்டு படுத்த வண்ணம் கிடப்பான். வாலை அவ்வப்போது வாயால் கடிப்பான்.

ஒருநாள் இரவு சிறிது நேரம் என்னவோ முனகியபடி இருந்தான். சில நிமிடங்களில் அந்த முனகல் சத்தம் நின்றுவிட்டது. நானும் என்னை மறந்து உறங்கிவிட்டேன். அவன் உடம்பு பயங்கரமாக குளிர்ந்தது போல் இருந்தது. நான் தூக்கம் கலைந்து எழுந்தேன். அவனிடமிருந்து எந்த முனகல் சத்தமும் கேட்கவில்லை. நான் அவனைப் பிடித்து உலுக்கினேன். அவன் சிறிதுகூட அசையவே இல்லை.

பொழுது விடிந்தது. அவன் கால்களை விரைப்பாக நீட்டியபடி கிடந்தான். மற்ற நாய்கள் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. எனக்கு ஒரே பயமாகிவிட்டது. அந்த நாய்கள் மெதுவாக என்னை நெருங்கி வந்து கொண்டிருந்தன. நான் கற்களை எடுத்து அவற்றின் மேல் எறிந்தேன்.

என்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முதல் தடவையாக நான் செய்த காரியமே அதுதான். அன்று வரை அந்த நாய்களைப் பார்த்து உண்மையிலேயே நான் பயந்து கொண்ருந்தேன். கற்களை எடுத்து எறிய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்படி உதித்தது என்பது எனக்கே தெரியவில்லை. நான் பெரிய பெரிய கற்களாகப் பொறுக்கினேன். இருப்பினும் அந்த நாய்கள் என்னை நோக்கி வந்து கொண்டுதானிருந்தன.

சிறிது நேரம் கடந்தது. பீப்பாவில் இருந்து இலையை எடுத்துப்போடும் ஆட்கள் வந்தார்கள். அவர்கள் என்னுடைய நாயைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள். அவர்கள் அவனை வண்டியில் கொண்டு போய் போட்டார்கள். அவன் உடம்பின் மீது எச்சில் இலைகளையும், குப்பைகளையும் பல இடங்களிலிருந்தும் எடுத்துக் கொண்டு வந்து போட்டார்கள்.

அந்த வண்டிக்குப் பின்னால் நான் நடந்தேன். சிறிது நேரம் சென்றதும், எனக்கு வயிறு பசித்தது. நான் மீண்டும் திரும்பி நடந்தேன். அந்த நாய்கள் அனைத்தும் பீப்பாயைச் சுற்றி இருந்தன. அவற்றின் அருகில் செல்ல எனக்குப் பயமாக இருந்தது.

அன்றுதான் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக நான் உணவு கிடைக்காமல் அழுதது. அந்த நாய்கள் என்னைப் பார்த்து பற்களைக் காட்டி இளித்தன. என்னுடைய தந்தையை நான் அப்போது நினைத்துப் பார்த்தேன். அந்த மனிதன் தந்த சோற்றுக் கவளத்தையும் மனதில் ஞாபகப்படுத்திப் பார்த்தேன்.

அன்று முழுவதும் நான் எதுவுமே சாப்பிடவில்லை. எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

அந்த நாய்களுக்கு எவ்வளவு தின்றாலும் திருப்தி வரவில்லை. அவை அந்த இடத்தை விட்டு நகர்வதாகவேயில்லை.

சாப்பிட்டு முடித்து சிலர் இலையுடன் வந்தார்கள். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. என்னை ஏறிட்டும் அவர்கள் பார்ப்பதாகத் தெரியவில்லை. இலைகள் ஒவ்வொன்றையும் பீப்பாய்க்குள் போட்டார்கள். அன்று இரவிலும் நான் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.

எனக்கு உறக்கமே வரவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நாளை என்ற ஒன்றைப் பற்றி நான் அப்போதுதான் - வாழ்க்கையிலேயே முதல் தடவையாக நினைத்துப் பார்த்தேன். அன்று வரை எனக்கு அதற்கான அவசியமே இல்லாமலிருந்தது. நாய் வளர்த்த குழந்தையாக இருந்தாலும், நான் ஒரு மனிதக் குழந்தையாயிற்றே! எனக்கு நாளை என்ற ஒன்று இருக்கிறதே!

நாளை நான் எப்படி ஒரு கவளம் சோற்றைச் சம்பாதிப்பேன்?


2

துவுமே சாப்பிடக் கிடைக்காமல், அது கிடைப்பதற்கான வழியும் தெரியாமல், நான் அந்தச் சந்தை விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். எங்கெங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு நான் பகல் நேரத்தில் முல்லைக்கல் பகுதிக்கு வந்து ஒரு இடத்தில் படுத்துவிட்டேன். அப்படியே படுத்தவாறு அங்கு உறங்கியும் விட்டேன்.

ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டு எழுந்தேன். எனக்கு முன்னால் ஒரு பெண் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். எச்சில் இலை ஒன்று அவள் உடம்பில் தொங்கிக் கொண்டிருந்தது. வாயைப் பெரிதாகத் திறந்து வைத்து சிரித்துக் கொண்டிருந்தாள். கைகளால் தட்டினாள். இப்படியும் அப்படியுமாய்க் குதித்தாள். எல்லாமே என்னைப் பார்த்தபடியேதான். பிறகு என்னைப் பார்த்து அவள் சொன்னாள்:

"உயிரை காக்கா கொத்திக்கிட்டு போயிடும்."

அவள் என்ன சொல்கிறாள் என்பதற்கான அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. அவள் ஒரு பழைய துணித்துண்டை தன்னுடைய தோளிலிருந்து எடுத்து என்மீது போட்டாள். நான் மல்லாந்து படுத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் சொல்லிக் கொண்டிருந்தது எதுவுமே எனக்குப் புரியவில்லை.

அவள் என்னைக் கையைப் பிடித்து எழ வைத்தாள். அந்தப் பழைய துணியை என்னுடைய இடுப்பில் அவளே சுற்றிவிட்டாள். கடைசியில் வாசல் கதவுக்குப் பக்கத்தில் கிடந்த ஒரு சணலை எடுத்துக் கொண்டு வந்து துணிக்கு மேலே கட்டினாள்.

இப்படித்தான் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக எனக்கு துணி கிடைத்தது. நான் துணி என்ற ஒன்றை அணிந்ததே அப்போதுதான்.

"இதை அவிழ்த்திடக் கூடாதுடா மகனே... அவிழ்த்தேன்னா உயிரைக் காக்கா கொத்திட்டு போயிடும்..."

அடுத்த நிமிடம் அவளின் நடவடிக்கை மாறியது. அவள் அழத் தொடங்கினாள்.

"எதுவுமே சாப்பிடல. வயிறு ஒட்டிப்போய் இருக்கு. அய்யோ பாவம்! என் பிள்ளை நீ ஒண்ணுமே சாப்பிடலையா?"

இப்படிச் சொன்னவாறு அவள் ஓடினாள். என்னமோ வாயில் முணுமுணுத்தவாறு அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

பழைய துணியை இடுப்பில் சுற்றிய கோலத்துடன் நான் அந்த இடத்திலேயே சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.

நான் எதுவுமே சாப்பிடவில்லை. என்னுடைய வயிறு உடலோடு சேர்ந்து ஒட்டிக்கிடந்தது என்று என்னைப் பற்றி வாழ்க்கையிலேயே அக்கறைப் பட்டுப் பேசிய முதல் உயிர் அந்தப் பெண்தான். என்னை 'மகனே' என்று இதுவரை அழைத்ததுகூட அவள் மட்டும்தான். அவள் ஒரு பைத்தியக்காரி என்ற விஷயம் அப்போது எனக்குத் தெரியாது. அது மட்டுமல்ல; பைத்தியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே அப்போது எனக்குத் தெரியாது.

ஹோட்டலுக்குப் பின்னாலிருந்த இடைவெளியை விட்டு மனிதர்கள் மத்தியில் நான் நடந்தேன்.

நான் நடந்து போய்க் கொண்டேயிருந்தேன். எனக்கு சாப்பாடு எங்கே கிடைக்கும்? தேநீர் கடைகளில் இருக்கும் கண்ணாடியால் ஆன அலமாரிகளில் தின்னும் பொருட்கள் பலவும் இருக்கின்றன. உள்ளே ஆட்கள் அமர்ந்து அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலவற்றையும் அருந்துகின்றனர். சில கடைகளில் பழக்குலைகள் மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றன.

தேநீர் கடையின் வாசலிலும் பழம் தொங்கிக் கொண்டிருந்த கடையின் முன்னாலும் போய் நான் நின்றேன். கீழே கிடந்த பழத்தின் தோல்களை எடுத்துத் தின்றேன். நான் எப்போதும் இருக்கும் இடத்தைத் தாண்டி ஏன் இதுவரை வராமல் இருந்தேன் என்பதை பல நேரங்களிலும் நினைத்துப் பார்த்திருக்கிறேன். காரணம் என்னவென்பது எனக்கே தெரியவில்லை. நான் இதைப்பற்றி ஏன் கேள்வியே கேட்கவில்லை? நான் அந்த நிமிடம் வரை உணவு வேண்டும் என்று யாரிடமும் கேட்டவனுமல்ல.

ஒரு காப்பி கடையின் வாசலில் நின்றிருந்தபோது, என் மேல் தண்ணீரைக் கொண்டு கொட்டினார்கள்.

இந்த தேநீர் கடைக்குப் பின்னால் போனால் என்ன என்று எண்ணி அங்கு போக முயற்சித்தேன். நாய்கள் எல்லா இடத்திலும்தான் இருக்கின்றன. சில இடங்களில் சிறுவர்களும்.

மேற்குப் பக்கத்தில் இருந்த தெரு மூலையில் அந்தப் பைத்தியக்காரியை நான் பார்த்தேன். சிறுவர்கள் அவள் மீது கற்களை எடுத்து எறிந்து கொண்டிருந்தார்கள். அவள் திரும்பி நின்று அவர்களைப் பார்த்து வக்கணை காட்டினாள். அதைப் பார்த்து சிறுவர்கள் 'ஓ' என்று கூக்குரலிட்டார்கள். மண்ணை எடுத்து அவள் மேல் வீசினார்கள். அடுத்த நிமிடம் அவள் அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தாள்.

மாலை நேரம் நெருங்கிய போது ஒரு கடைத்திண்ணையில் போய் நான் அமர்ந்தேன். அங்கே மூன்று நான்கு சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். அவர்களை விட்டு விலகி நான் தனியாக ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.

அவர்கள் சிரித்தார்கள். பாட்டு பாடினார்கள். ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை 'கிச்சு கிச்சு' மூட்டினான். அவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான். அவ்வளவுதான். அடுத்த நிமிடம் இரண்டு சிறுவர்களும் கட்டிப் பிடித்து சண்டை போட ஆரம்பித்தார்கள். அங்கு அமர்ந்திருந்த மற்ற சிறுவர்களும் சண்டையில் இறங்கினார்கள். அவர்களுக்கு அது ஒரு உற்சாகமான விளையாட்டாக இருந்தது. நான் அவர்களின் சண்டையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.

"நாம போகணும்ல? சாப்பாட்டு நேரம் வந்திருச்சே!"

அவர்கள் எழுந்து நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் நடந்தேன். ஒருவன் இன்னொருவனின் தலையை இலேசாக கையால் தட்டிவிட்டு ஓடினான். தொடர்ந்து எல்லோரும் ஓடினார்கள். நானும் ஓடினேன். முதலில் ஓடியவனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; அவர்களுடன் நானும் போய்ச் சேர வேண்டுமே என்பதற்காகத்தான். ஆனால், என்னால் அந்த அளவுக்கு வேகமாக ஓட முடியவில்லை. சிறிது தூரம் சென்றதும் ஒரு இடத்தில் கும்பலாக நின்றார்கள். அப்போது நானும் அவர்களுடன் போய் நின்று கொண்டேன்.

அவர்கள் ஹோட்டலுக்குப் பின்னால் போனார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து போனேன். அவர்கள் அங்கு போனதும், அங்கிருந்த நாய்கள் ஓடி மறைந்தன.

அவர்களுடன் போய் நின்று நானும் சாப்பிட்டு முடித்து வந்தவரின் கையிலிருந்த எச்சில் இலையை வாங்கினேன். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டோம்.

அவர்களுடன் சேர்ந்து நானும் திரும்பிச் சென்றேன். அவர்களுடன் சேர்ந்து நானும் ஒரு கடை வாசலில் படுத்து உறங்கினேன்.

அவர்களுடன் சேர்ந்ததால், நாய்களை எப்படி விரட்டியடிப்பது என்ற விஷயத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரம்பு எனக்குக் கிடைத்தது. எதையும் எப்படி கேட்டு வாங்குவது என்பதை நான் தெரிந்து கொண்டேன். அப்போது அவர்கள் நான்கு பேரல்ல, நாங்கள் மொத்தம் ஐந்து பேர் என்று ஆனோம்.


அதற்குப் பிறகு பலமுறை நான் அந்தப் பைத்தியக்காரியைப் பார்த்திருக்கிறேன். எல்லா சிறுவர்களும் அவள் மீது கற்களையும் மண்ணையும் எடுத்து எறிவார்கள். சில நேரங்களில் அவள் சிறுவர்களுக்குப் பின்னால் குச்சியை எடுத்துக் கொண்டு ஓடுவாள். நான் எங்கே அவள் அடித்துவிடப்போகிறாளோ என்று பயந்து ஓடுவேன். ஒரு முறை கூட நான் அவள் மீது கல்லையோ மண்ணையோ எறிந்தது இல்லை.

பின்பொருமுறை அதே முல்லைக்கல் நடைபாதையில் வைத்து அவள் எனக்கு இன்னொரு பழைய துணியைத் தந்தாள். நான் அங்கே நின்றிருந்தேன். அரிசியையும், தேங்காயையும் விற்பதற்காக வந்த பெண்கள் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவள் தூரத்தில் வரும்போதே என்னைப் பார்த்து சிரித்தவாறே அருகில் வந்தாள்.

"மகனே, அந்தத் துணியை கழட்டி எறிஞ்சிட்டியா?"

அவள் கேட்டாள். நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அவளின் தோளிலும் தலையிலும் நிறைய பழைய துணிகள் இருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து என்னிடம் தந்தாள். அப்போதும் அவள் 'உயிரை காகம் கொத்திக் கொண்டு போயிடும்' என்று சொன்னாள்.

அரிசி விற்கும் ஒரு பெண் அவளைப் பார்த்து கேட்டாள்:

"இவன் உன்னோட மகனா?"

அவள் தலையை ஆட்டினாள்.

"ஆமா... என் மகன்தான்..."

அப்போது வேறொரு பெண் கேட்டாள்:

"இவன் பேரு என்ன?"

அதற்கு எந்தப் பதிலும் சொல்லாத அவள் என்னைப் பார்த்து சொன்னாள்: "மகனே, அம்மான்னு கூப்பிடு!"

நான் கூப்பிடவில்லை. அவள் மீண்டும் சொன்னாள்:

"மகனே, அம்மான்னு கூப்பிடு."

அங்கிருந்த பெண்கள் எல்லோரும் எங்களையே பார்த்தார்கள்.

"என் தங்க மகனே, அம்மான்னு கூப்பிடு..."

அவளின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவள் அழுதாள்."

தேங்காய் விற்கும் ஒரு பெண் சொன்னாள்:

"இவன் இவளோட மகனாத்தான் இருக்கும்..."

இன்னொருத்தி சொன்னாள்:

"இவன் அம்மான்னு கூப்பிடலியே!"

"இவனுக்கு அம்மாவை அடையாளம் தெரியாதோ?"

மீண்டும் அவள் அழுது கொண்டே சொன்னாள்:

"அம்மான்னு கூப்பிடுடா, மகனே!"

நான் அழைத்தேன்:

"அம்மா..."

அவ்வளவுதான். அவள் துள்ளிக்குதித்துக் கொண்டு ஓடினாள்.

இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு ஒரு முறை அவள் ஒரு இலையில் கஞ்சியைக் கொண்டு வந்து என்னிடம் தந்தாள்.

சிறுவர்கள் எல்லோரும் அவளின் விரோதிகளாக இருந்தார்கள். என்னிடம் மட்டும் அவள் பிரியமாக இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

என்ன காரணம் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை அவன் என்னுடைய தாயாக இருப்பாளோ?

அவள் கஞ்சியைக் கொண்டு வந்து தந்துவிட்டு 'குடி மகனே குடி' என்று என்னைப் பார்த்து அவள் சொன்னதைச் சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவன் என்னிடம் கேட்டாள்:

"இவ உன்னோட அம்மாவா?"

"ஆ..." -நான் பதில் சொன்னேன்.

"பிறகு எதுக்கு இவ கஞ்சி கொண்டு வந்து தரணும்?"

அதற்கும் 'ஆ...' என்று பதில் சொல்லத்தான் என்னால் முடிந்தது. அவள் என்னுடைய தாயாக இருந்தாலும் இல்லையென்றாலும் நான் இதுவரை வாழ்க்கையிலேயே ஒருத்தியைத்தான் 'அம்மா' என்று அழைத்திருக்கிறேன். அதுஅவளை மட்டும்தான். ஒரே முறைதான் அவளை அப்படி அழைத்திருக்கிறேன். அந்த நடை பாதையில் வைத்து நான் அழைத்ததைத்தான் சொல்கிறேன்.

அதற்குப்பிறகு கூட நான் பல முறை சிந்தித்திருக்கிறேன். அந்தப் பைத்தியக்காரி உண்மையிலேயே என் தாய்தானோ?

அந்தச் சிறுவன் மற்றச் சிறுவர்களைப் பார்த்து நான் அந்தப் பைத்தியக்காரியின் மகன் என்ற விஷயத்தை சொன்னான். உடனே அவர்கள் எல்லோரும் என்னை 'பைத்தியக்காரியின் மகன்' என்று அழைத்தார்கள். அடுத்தநாளும் என்னை ஒருவன் அப்படி அழைத்தான்.

அவன் அப்படி அழைத்ததற்காக, நான் சிறிதும் எதிர்ப்பு காட்டவில்லை.

எது எப்படியோ- எனக்கு ஒரு தந்தையும் தாயும் கிடைத்துவிட்டார்கள். தந்தை எனக்கு சோற்றை உருட்டித் தந்தார். தாய் கஞ்சியைக் கொண்டு வந்து தந்தாள்; உடுத்த துணியும் தந்தாள்.

நான் என்னுடைய உணவை எப்படி சம்பாதிப்பது என்பதைத் தெரிந்து கொண்டேன். உடம்பில் எப்படி துணியை உடுத்துவது என்பதையும் அறிந்து கொண்டேன்.

அந்த நாயுடனே நான் வாழ்ந்து கொண்டிருந்தால் நான் இப்போது என்னவாகி இருப்பேன்? இதைப் பற்றி பின்னர் பல சமயங்களில் நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி நான் யோசிக்கும் போது என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியாது.

ஒருநாள் ஒருவன் என்னைப் பார்த்துக் கேட்டான்:

"நீ உங்கம்மாகிட்ட பால் குடிச்சிருக்கியா?"

நான் 'இல்லை' என்று தலையை ஆட்டினேன். பிறகு நான் அவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டேன். அவனும் குடிக்கவில்லையாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு தெரியும். அது தாயின் பால் மிகவும் ருசியாக இருக்கும் என்பது தாய்ப்பாலின் ருசியை அறியவேண்டும் என்ற வெறி எனக்கு உண்டானது. அந்த ஒரே ஆசைதான் என்மனதில் இருந்ததே. சொல்லப் போனால் என்னுடைய மனதில் தோன்றிய முதல் ஆசையே இதுதான்.

‘‘ஆமாம்... தாய்ப்பால் எங்கே கிடைக்கும்?’’

அந்தச் சிறுவனைப் பார்த்து நான் கேட்டேன். அவன் சொன்னான்:

‘‘ஏதாவது கடைத்திண்ணையில சின்னக் குழந்தையை வச்சிக்கிட்டு தாய்மார்கள் தூங்கிக்கிட்டு இருப்பாங்க. ராத்திரி நேரத்துல யாருக்கும் தெரியாம பதுங்கிப்போய் பால் குடிக்கவேண்டியதுதான்...’’

அந்தக் குழந்தை உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். விருப்பப்படும்போதெல்லாம் தாயிடமிருந்து பால் குடிக்கலாம்... அந்தப் பைத்தியக்காரியிடம் பால் இருக்குமா?

தாய்ப்பாலின் சுவையை அறியவேண்டும் என்ற ஆசை இப்போது கூட என்னை விட்டுப் போகவில்லை.

3

வ்வக்கரும், கேசுவும் நானும் நண்பர்களானோம்.

அவ்வக்கரும் கேசுவும் நல்ல புத்திசாலிகள். படகுத் துறையில் அவர்களுக்கு சுமை கிடைக்கும். படகு சமீபத்தில் வந்துவிட்டால் அவர்கள் வேகமாக ஓடி அதில் ஏறுவார்கள். அவர்களின் கையைப் பிடித்து இழுத்தாலும், அடித்தாலும் கூட அவர்கள் எதையும் பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான் கரையில் நின்றிருப்பேன். அவர்கள் படகில் இருந்து பெட்டி, படுக்கை ஆகியவற்றை எடுத்து தலையில் வைத்துக் கொள்வார்கள். சண்டை போட்டு கூலியைக் கேட்டு வாங்குவார்கள்.

நான் இப்போதுகூட ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்ப்பதுண்டு. ஒரு பெட்டியை அவ்வக்கர் தூக்கிக்கொண்டு போனான். அவன் பெட்டியைக் கொண்டு போனது துறைமுகத்திற்குத்தான். அங்கு போனதும் கூலி விஷயமாக பெரிய சண்டையே உண்டாகிவிட்டது. அவன் கேட்ட கூலியை தரமுடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் அந்த மனிதரின் கையை இறுகப் பிடித்தான். அந்த மனிதர் அவனைத் தள்ளி  நிற்கும்படி சொன்னார்.


அவன் "என்னோட கூலியைத் தரமுடியுமா? முடியாதா?" என்று உரத்த குரலில் கத்தியாவறு அவருடைய காலைப்பிடித்தான. அந்த இடத்தில் ஆட்கள் கூட்டம் சேர்த்துவிட்டார்கள். எல்லோரும் அந்த மனிதரைத் திட்டினார்கள். அவ்வக்கருக்குக் கிடைக்க வேண்டிய கூலி கிடைத்தது. இப்படிப்பட்டவன்தான் கேசுவும்.

இப்படியெல்லாம் நடக்க என்னால் முடியாது. எப்போதாவது தான் எனக்க தூக்குவதற்கு சுமையே கிடைக்கும். தருகின்ற கூலியை நான் வாங்கிக் கொள்வேன். கூலி சரியாகக் கிடைக்க வில்லையென்றால், திரும்பிப் போகும் போது நான் வாய்விட்டு அழுவேன். இப்படிப் பலமுறை நடந்திருக்கிறது.

 ஒருநாள் காலையில் நாங்கள் மூன்று பேரும் மூன்று தனித்தனி பாதைகளில் பிரிந்து சென்றோம். மாலையில் நானும் அவ்வக்கரும் சந்தித்தோம். கேசு வரவில்லை. அவனுக்கு பெரிய அளவில் ஏதோ அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம். அவன் வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம்.

அப்போது கேசு வந்தான். அவன் ஒரு நல்ல வேஷ்டியைக் கட்டியிருந்தான். அவனுக்கு நிரந்தரமான ஒருவேலை கிடைத்துவிட்டது.

நடந்த கதையை அவன் சொன்னான். படகுத் துறையிலிருந்து ஒரு முதலாளியுடன் அவரின் சுமையைத் தலையில் சுமந்தபடி கேசு போயிருக்கிறான். வழியில் அவனைப் பற்றி அந்த முதலாளி விசாரித்திருக்கிறார். வீட்டை அடைந்தவுடன், அவனை அங்கேயே தங்கிக் கொள்ளும்படி அவர் சொல்லியிருக்கிறார். நடந்த சம்பவத்தைச் சொன்ன கேசு எங்களைப் பார்த்துக் கூறினான்:

"இனிமேல் நாம ஒண்ணு சேர்ந்து இருக்க முடியாது."

நானும் அவ்வக்கரும் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை கேசு தொடர்ந்து சொன்னான்:

"என்னை ஒரு இடத்துக்குப் போயிட்டு வரச் சொல்லி முதலாளி அனுப்பியிருக்காரு. சீக்கிரம் போகச் சொல்லி அவர் சொல்லியிருக்காரு..."

கேசு சடந்தான். அவ்வக்கருக்கு அதைப் பார்த்து கோபம் வந்தது என்று நினைக்கிறேன்.  கேசுவை அழைத்து,

"டேய், பன்னி, இங்கே பாரு... உன்னை நான் ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்" என்றான்.

இப்படித்தான் நாங்கள் இருவரும் தனியானோம். அன்று எவ்வளவு முயற்சி செய்தும், எங்களுக்குத் தூக்கமே வரவில்லை. நான் சொன்னேன்: "அவ்வக்கர், நீயும் ஒருநாள் இப்படித்தான் என்னைத் தனியே விட்டுட்டு போகப்போறே!"

அவ்வக்கர், "ஏண்டா நாய்க்குட்டி அப்படி சொல்ற?" என்றான்.

"நீங்க புத்திசாலிங்கடா..."

அவ்வக்கர் சிறிது நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான். பிறகு "அவன் எப்படி பந்தாவா நடந்து போனான் பார்த்தியா?" என்ற அவ்வக்கர் தொடர்ந்து சொன்னான்:

"அவனை அடுத்த தடவை பார்க்குறப்போ, அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தாத்தான் எனக்கு மனசே ஆறும். அடிச்சிட்டு ஒரே ஓட்டமா ஓடிடுவேன்!"

நான் கேட்டேன்:

"அவனை எதுக்காக அடிக்கணும்?"

"அவனைக் கட்டாயம் அடிக்கணும். அவன் பெரிய மனுஷனா ஆயிட்டான்ல..."

நானும் அந்த மாதிரி ஒரு பெரிய மனிதனாக ஆனால் எப்படி இருக்கும் என்று மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தேன். இனிமேல் சுமை தூக்குகிற போது, அந்த சார்களிடம் என்னுடைய கதையைச் சொன்னால் கேசுவிற்கு அதிர்ஷ்டம் அடித்த மாதிரி எனக்கம் அடிக்காது என்பதென்ன நிச்சயம்? அப்படியென்றால் இனிமேல் கணக்கு பார்த்து  கூலி வாங்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

அவ்வக்கர் கேசுவை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவ்வக்கர் கேசுவிற்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறான். அவை ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லி அவன் கேசுவைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தான்.

மறுநாளும் அதற்கடுத்த நாளும் கேசுவைப் பார்க்க முடியவில்லை. கேசுவிற்குக் கிடைத்ததைப் போல ஒரு வசதியான வாழ்க்கை எனக்கும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் சொன்னால் அவ்வக்கர் நிச்சயமாக என்னை உதைப்பான் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

சில நாட்கள் சென்றபிறகு ஒருநாள் நான் கேசுவைப் பார்த்தேன். அவன் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தான். வெண்மையாக ஒரு நல்ல வேட்டியை அணிந்திருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் சிரித்தான். நான் அவன் அருகே சென்றேன். அவனை 'கேசு' என்று பெயர் சொல்லி அழைக்க எனக்கே தயக்கமாக இருந்தது. அவன் முன்பிருந்ததை விட வளர்ந்திருந்தான்.

அவன் கேட்டான்: "என்ன நாய்க்குட்டி?"

கேசுவின் குரல் முற்றிலும் மாறியிருந்தது. முன்பு கேட்காமல்விட்ட ஒரு கேள்வியை அவனிடம் நான் கேட்டேன்:

"எங்கே தங்கியிருக்குற?"

"கடப்புரத்துல."

அதற்குள் அவனுடைய முதலாளி வந்து விட்டார். அவர்கள் புறப்பட்டார்கள். நான் அவர்களையே பார்த்தவாறு சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.

அன்றே கேசு தங்கியிருக்கும் வீட்டை நான் கண்டுபிடித்தேன். ஆனால் நான் அங்கு போகவில்லை. இந்த விஷயத்தை நான் அவ்வக்கரிடம் கூறவும் இல்லை.

மூட்டை தூக்கி இங்குமங்குமாய் அலைந்து நாங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு விஷயம்தான் பெரிய பிரச்சினையாக இருந்தது. அவ்வக்கர் எதற்கெடுத்தாலும் சண்டை போடக்கூடிய ஒரு மனிதனாக இருந்தான். அதுவும் கேசு தனியாகக் போன பிறகு, எந்தச் சிறுவனைப் பார்த்தாலும் தேவையில்லாமல் வம்பு இழுப்பான்.

ஒருநாள் கற்பாலத்தைத் தாண்டியிருந்த கடைத் திண்ணையில் நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். அந்தப் பகுதியில் இருந்த ஏதோ ஒரு வீட்டில் ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருந்தது. நல்ல இருட்டு நேரத்தில் ஒரு அழுகைச் சத்தத்தைக் கேட்டு நாங்கள் நடுங்கிப் போய் எழுந்தோம்.

"அம்மா... அம்மா.. அம்மா..."

ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தXது.

உரத்த குரலில் உண்டான அழுகை என்று கூட அதைக் கூற முடியாது. ஒரு குழந்தை தன் தாயை அழைக்கிறது. விஷயம் அதுதான். நாங்கள் தூக்கத்தை விட்டு எழுந்தோம்.

குழந்தையின் அருகில் சென்றோம். அது எழுந்து நின்றிருந்தது.

"என் அம்மாவைக் காணோம்."

அது சொன்னது. தொடர்ந்து சற்று உரத்த குரலில் அது அழைத்தது:

"அம்மா... இங்க வா!"

அவளின் தாய் அந்த குழந்தை அழைத்ததைக் கேட்கவில்லை. அவள் வரவும் இல்லை. அவ்வக்கர் குழந்தையைத் தேற்றினான்:

"அம்மா வரும்... அழாம இரு."

அவள் தாய் வருவாளென்று நினைத்து நாங்கள் காத்திருந்தோம். நீண்ட நேரம் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தும், குழந்தையின் தாய் வரவே இல்லை.

நாங்களும் அந்தச் சிறு குழந்தையும் உறங்கவேயில்லை. பக்கத்தில் எங்காவது அவள் போயிருப்பாள் என்று முதலில் நினைத்தோம். பிறகு விருந்து நடக்கும் வீட்டைத் தேடி ஒருவேளை அவள் போயிருப்பாளோ என்று கூட நினைத்தோம். அந்தத் தாய் வரவேயில்லை. அவள் குழந்தையை அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டாள் என்று சொன்னான் அவ்வக்கர்.


பொழுது புலர்ந்தது. அந்தச் சிறு குழந்தை அழுதது. தன் தாயை அழைத்தது.

கடைக்காரன் கடையைத் திறப்பதற்காக வருவான். என்ன செய்வதென்றே எங்களுக்குத தெரியவில்லை. நாங்கள் எங்கள் போக்கில் போகமுடியுமா?

இந்த இடத்திற்கு நாங்கள் ஏன்தான் வந்தோமோ?

நான் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்தேன். இரவு முழுக்க அருகிலேயே இரந்ததால் அந்தக் குழந்தை கையை நீட்டியவுடன் என்னிடம் வந்தது. நான் குழந்தையைத் தூக்கிக கொண்டு முன்னால் நடக்க, அவ்வக்கர் பின்னால் நடந்து வந்தான்.

தூரத்தில் பெண் யாராவது நடந்து சென்றால், குழந்தை தலையை உயர்த்தி 'அம்மா' என்று அழைக்கும். அழும். என் கை விலித்தபோது அவ்வக்கர் குழந்தையைத் தூக்கினான்.

எதற்காக, எங்கே நாங்கள் அந்தக் குழந்தையைக் கொண்டு செல்கிறோம்? எங்களுக்கே தெரியாது. ஒருவேளை, நாங்களும் இந்தக் குழந்தையைப் போல் அனாதைகளாகத் தெருவில் விடப்பட்டவர்கள்தானே என்பது காரணமாக இருக்கலாமோ? அதனால்தான் இந்தக் குழந்தையைப் பார்த்ததும், எங்களுக்கு இரக்கம் பிறந்ததோ?

பல வழிகளிலும் நடந்து சென்று நாங்கள் ஒரு பாலத்தைத் தாண்டிப் போய் நின்றோம். பக்கத்தில் நடைபாதை இருந்தது. அவக்கரின் கையைவிட்டு குழந்தை கீழே இறங்கியது. அவளை நாங்கள் கீழே படுக்க வைத்தோம்.

நாங்கள் அந்தக் குழந்தையையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் முகம் மிகவும் வெளிறிப் போயிருந்தது. உதடுகள் கறுத்துப் போயிருந்தன. கண்களில் ஈரம் இருந்தது. அவள் உடம்பிலும் முகத்திலும் ஈக்கள் மொய்க்காமல் பார்த்துக் கொண்டேன். அவள் எங்கே தூக்கம் கலைந்து எழுந்து விடுவாளோ என்று பயந்தேன். திடீரென்று எழுந்து 'அம்மா' என்று அழைத்தால் நாங்கள் என்ன செய்வது?

அவ்வக்கர் சொன்னான்:

"தாய்ப்பால் குடிக்காததுனாலதான் இந்தக் குழந்தையோட உதடு இப்படி வறண்டு போய் கறுப்பா இருக்கு..."

தூக்கத்தில் அவள் இலேசாக இப்படியும் அப்படியுமாய் நெளிந்து கொண்டு உதடுகளைப் பிரித்தது. 'அம்மா' என்று அழைப்பது நோக்கமாக இருக்கலாம்.

பெற்ற தாய் தெருவில் அனாதையாகப் போட்டுவிட்டுப் போனாலும், குழந்தைகளுக்கு தாய் கட்டாயம் வேண்டும். பால் குடிக்கவில்லையென்றால், உதடு கறுத்துவிடும். எதற்காக ஒரு தய் தன் குழந்தையை வேண்டாமென்று தெருவில் போட்டுவிட்டுப் போகிறாள் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.

குழந்தை தூக்கம் கலைத்து எழும்போது, அவளுக்கு ஏதாவது தரவேண்டுமே! நாங்கள் அன்று வேலைக்கு எங்கும் போகவில்லை. நாங்கள் எதுவும் சாப்பிடவுமில்லை. ஏதாவது ஹோட்டலுக்குப் பின்னால் போய் ஏதாவது கொண்டு வரலாம் என்று அவ்வக்கர் சொன்னான். அவன் கிளம்பினான். நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

குழந்தையின் முகம், கை, கால்கள் ஒவ்வொன்றையும் பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்தக் குழந்தை எப்படி உண்டானது? இது எதற்காக மூச்சு விடுகிறது? எப்படி மூச்சு விடுகிறது? எப்படிக் காற்றை உள்ளே இழுக்கிறது? இந்த நிலை இந்தக் குழந்தைக்கு எவ்வளவு நாட்கள் நீடிக்கும்? இவள் வளர்ந்த பிறகு, இவளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? எதற்காக இவள் வளர வேண்டும்? வளர வேண்டிய அவசியம்தான் என்ன? ஆற்றங்கரையில் யாருக்குமே பயன்படாத எத்தனையோ செடிகள் அடர்ந்து வளர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. அவை யாருக்காக வளர்ந்து காணப்படுகின்றன? இவள் அந்தச் செடிகளைப் போலத்தானா?

அவள் மெதுவாகப் படுத்திருந்த இடத்தை வட்டு நெளிந்தாள்.

"அம்மா..."

நான் நடுங்கிவிட்டேன். ஆனால், அவள் மீண்டும் உறங்க ஆரம்பித்தாள்.

அவ்வக்கரும் சோறு, குழம்பு, கூட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

அன்று பகல் முழுக்க நாங்கள் மாறி மாறி அவளைக் கையில் எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் நடந்தோம். அன்று இரவு தோண்டன் குளக்கரையில் இருக்கும் ஒரு கடைத்திண்ணையில் நாங்கள் படுத்து உறங்கினோம்.

நான், அவ்வக்கர் இருவரும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. குழந்தையை நாங்கள் என்ன செய்வது? அவளை இப்படி கையில் வைத்துக் கொண்டு அலைந்தால் நாங்கள் எந்த வேலையையும் செய்ய முடியாது. பிறகு எப்படி நாங்கள் வாழ்வது?

அவ்வக்கர் சொன்னான்:

"கல்பாலம் பக்கத்துல இருந்த ஒரு கடைத்திண்ணையிலதான் இவ நமக்குக் கிடைச்சா. இவ அம்மாவுக்கு இவ வேண்டாம்னா நமக்கும்தான் வேண்டாம். இங்கேயே இவளை விட்டுட்டு போயிடுவோம்."

அவன் இப்படிச் சொன்னதை தூக்கத்திலிருக்கும் அந்தக் குழந்தை கேட்டிருக்கும் போல் இருக்கிறது... அது வாய்விட்டு அழுதது. நான் சொன்னேன்:

"அய்யோ, அப்படி செய்யவே கூடாது."

அவ்வக்கர் கேட்டான்: "என்ன செய்யக்கூடாது? நாம இதைத் தனியா விட்டுட்டுப் போயிட்டா, வேற யாராவது வந்து எடுப்பாங்க அவங்க இதை வளர்ப்பாங்க!"

"வேண்டாம்..." என்று சொல்ல மட்டுமே என்னால் முடிந்தது. அவ்வக்கர் தன்னுடைய கருத்தை மீண்டும் சொன்னான்.

"யாராவது எடுத்து வளர்ப்பாங்கன்னு நான் தான் சொல்றேனே."

நான் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தேன். அவ்வக்கர் சிறிது நேரம் கழித்துக் கேட்டான்:

"இது வளர்ந்து என்ன செய்யப்போகுது?" தொடர்ந்து அவன் சொன்னான்: "இது வளரக்கூடாது..."

ஒரு வித பிடிவாதத்துடன் நான் சொன்னேன்: "நான் வளர்ப்பேன்..."

"எதுக்கு வளர்க்கணும்னுதான் நான் கேக்குறேன்" அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்? தாய்க்கு அந்தக் குழந்தை தேவையில்லை அப்படியென்றால் எனக்கு அந்தக்குழந்தை எதற்கு என்ற அவன் கேள்வியில் ஒரு நியாயம் இருக்கவே செய்தது.

இப்படியெல்லாம் பேசினாலும் காலையில் அவ்வக்கர் ஒரு புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்தான். நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அவன் வேலைக்குப் போவான். எனக்கு சோறு, குழம்பு, கூட்டு ஆகியவற்றை அவன் கொண்டு வந்து தருவான். அதற்கு நானும் சரியென்று சம்மதித்தேன். நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டேன். அவ்வக்கர் வேலைக்குப் போனான்.

அவள் என்னுடைய மடியை விட்டிறங்கி இங்குமங்குமாய் நடந்து கொண்டிருப்பாள். ஒரு தாளையோ அல்லது துணித் துண்டையோ எடுத்துக் கொண்டு வந்து என்னுடைய கைகளில் தருவாள். என்னுடைய தலையைத் தன்னுடைய முகத்தோடு சேர்த்து வைத்து 'முத்தம்' என்று சொல்லியவாறு எனக்கு முத்தம் தருவாள். பிறகு என்னைப் பார்த்து சிரிப்பாள். என்னுடைய மடியில் மல்லாக்கப் படுத்தவாறு என் மூக்கிற்குள் தன் பிஞ்சு விரல்களை விடுவாள். நான் தலையை இலேசாக அசைத்தவுடன், அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாள். எதிர்பக்கம் கடையில் தொங்கவிடப்பட்டிருக்கும் பழக்குலையைக் கையால் சுட்டிக் காட்டியவாறு அவள் 'பழம்' என்பாள். நான் அவளைப் பார்த்துச் சொல்லுவேன்:


"அண்ணன் கையில அதை வாங்க காசு இல்லியே!"

அடுத்த நிமிடம் அவளும் தன் கையை விரித்தவாறு கூறுவாள்:

"காசு இல்லை..."

நான் அவளிடம் என்னை 'அண்ணா' என்று அழைக்கும்படி சொன்னேன். அவளும் நான் சொல்லியபடி என்னைத் தன்னுடைய மழலைக் குரலால் 'அண்ணா' என்று அழைத்தாள். நான் அவளுக்கு அன்று எத்தனை முத்தங்கள் தந்திருப்பேன் தெரியுமா?

இப்படி நேரம் போவதே தெரியாமல் அவளுடன் நான் விளையாடிக் கொண்டிருப்பேன். அவள் என்னவெல்லாம் படித்திருக்கிறாள்! அவளுக்கு முத்தம் கொடுக்க தெரியும். விளையாடத் தெரியும். நமக்கு சந்தோஷம் உண்டாகும்படி சிரிக்கத்தெரியும். கொஞ்சுவதற்கு தெரியும். எனக்கு ஒரே ஒரு முத்தம்தான் அவளிடமிருந்து கிடைத்திருக்கிறது. மற்றவர்கள் சந்தோஷம் அடையும்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் படித்துக் கொண்டேன். எல்லாம் எனக்குக் கற்றுத் தந்தது அவள்தான்.

இப்படி ஒரு குழந்தைக்கு முத்தம் தந்து, அதன் முத்தத்தை நான் அவளிடம் வாங்கி, அதைக் கொஞ்சி, சிரிக்கவைத்து, விளையாட வைத்து, 'அம்மா' என்று அழைக்கவைத்து அதை ஏன் அனாதையாக நடைபாதையில் விட்டுவிட்டு அந்தக் குழந்தையின் தாய் போகவேண்டும்? அந்தக் குழந்தைக்கு தாய்ப்பாலின் சுவை என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். என் நெஞ்சில் இருந்த முலை மொட்டை வாயில் வைத்துக் கடித்தவாறு அவள் சொன்னாள்!

"அண்ணா, பால் இல்ல... எனக்கு பால் வேணும்."

நான் எங்கிருந்து பாலைக் கொண்டு வந்து தருவேன்?

அவ்வக்கருடன் அவளுக்கு அந்தளவுக்கு பெரிய ஈடுபாடு இல்லை. அவனை அவ்வளவாக அவளுக்குப் பிடிக்காது. அது மட்டுமல்ல. அவனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது. அவளிடம் விளையாடத் தெரியாது. கிச்சு கிச்சு மூட்டத் தெரியாது. கொஞ்சத் தெரியாது. அதோடு நின்றால் பரவாயில்லை- சில நேரங்களில் அவள் காதில் விழும்படி அவன் கூறுவான்:

"இதை இப்படியே விட்டுட்டு நாம ஓடிடுவோம்."

அவன் அப்படிச் சொன்னதும் அவள் என்னுடைய கழுத்தை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு ஒருவித பயத்துடன் அவனையே பார்ப்பாள்.

நான் முத்தம் கொடுத்துவிட்டு கூறுவேன்:

"மாட்டேன்... மாட்டேன்... அண்ணன் உன்னை விட்டுப் போக மாட்டேன்."

அனாதையாக்கப்பட்டதன் அவலத்தை நன்றாக அறிந்த குழந்தை அவள். அவளுக்கு பயம் உண்டாகாமல் இருக்குமா?

தினமும் அவ்வக்கர் வேலைக்குப் போய் சாயங்காலம் எங்களுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் சொன்னான்:

"நான் இனிமேல் ஒண்ணும் கொண்டு வந்து தர்றதா இல்லை. நான் வேலை செய்யிறதே நான் சாப்பிடுறதுக்குத்தான்."

அவன் கூறியது உண்மைதானே? அவனிடம் நான் என்ன கூறுவேன்? நான் சொன்னேன்:

"அப்படின்னா நீ குழந்தையைப் பார்த்துட்டு இரு. நான் நாளையில இருந்து வேலைக்குப் போறேன்."

"என்னால அப்படி ஒரே இடத்துல இருக்க முடியாது. அந்தக் குழந்தையை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கல. அது அழுதுக்கிட்டு இருக்கும்."

சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான்: "நான் சொல்றது ஒருநாள் நடக்குதா இல்லையா பாரு. ஏதாவது வண்டியோ வேற ஏதாவதோ ஏறி இது சாகத்தான் போகுது. நேற்று கல்பாலத்துல இப்படித்தான் ஒரு குழந்தை செத்துக்கிடந்தது."

அவன் சொன்னது ஒருவிதத்தில் சரிதான். நான் கேட்டேன்:

"பிறகு இந்தக் குழந்தை எப்படித்தான் வளரும்?"

அவன் உறுதியான குரலில் சொன்னான்:

"வளரவே வேண்டாம். வளரணும்னு யார் சொன்னாங்க?"

இதற்குமேல் அவனிடம் என்ன பேசுவது?

அவன் சொன்னது ஒவ்வொன்றையும் என்னுடைய மடியில் படுத்துக்கொண்டு கேட்ட அந்தச் சிறு குழந்தை என் காதுக்குள் மெதுவான குரலில் சொன்னது:

"அண்ணா, என்னை விட்டு போகக் கூடாது."

மறுநாள் காலையில் அவன் கிளம்பினான். சாயங்காலம் வர மாட்டான் என்று நினைத்தேன். இருப்பினும் வந்தான். எங்களுக்குச் சாப்பிட வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

ஆனால், காலையில் நாங்கள் படுக்கையைவிட்டு எழுந்தபோது, அவ்வக்கர் இல்லை. அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவே இல்லை.

4

நான் மீண்டும் ஹோட்டலின் பின்னால் போனேன். போகும் போது குழந்தையையும் தோளில் தூக்கிக் கொண்டே போனேன். நான் அவளைத் தூக்கிக் கொண்டு போவதை எல்லோரும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் தலையை உயர்த்தி புன்னகை செய்தவாறு அவள் நான்கு பக்கங்களிலும் பார்ப்பாள். அவளுக்குப் பயம் என்ற ஒன்று இல்லவே இல்லை. அவளுக்கு ஒரு பாதுகாப்பாளன் கிடைத்துவிட்டான்.

அவள் வளர வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் அப்போது எனக்கு இருந்ததா என்ன? அதைப் பற்றி எனக்கே தெரியாது. அவள் வளர்ந்த பிறகு அவளின் வாழ்க்கையைப் பற்றி நான் அப்போது மனதில் சிந்தித்துப் பார்த்திருப்பேனா? இல்லை என்றுதான் மனதுக்குத் தோன்றுகிறது. அவள் என்னவாக ஆக வேண்டும், எப்படி ஆக வேண்டும் போன்ற விஷயங்களை அப்போது நான் எண்ணிப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. நான் என்னவாக ஆக வேண்டும் எப்படி வளர வேண்டும் என்பதைப் பற்றியே இதுவரை எண்ணிப் பார்த்தது கிடையாதே!

அவள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அழவே கூடாது என்ற விஷயத்தில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன். அவள் அழுவது என்பது நான் பயப்படக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. நான் அவளை ஒரு நாளும் அழ வைத்ததில்லை.

பலரும் என்னைப் பார்த்துக் கேட்டார்கள்:

"இந்தக் குழந்தை உனக்கு யார்? உன் தங்கச்சியா? அவளை யார் என்று நான் சொல்லுவேன்? இதே மாதிரியான கேள்விகள் தொடர்ந்து பலராலும் கேட்கப்பட்டபோது, "ஆமாம்... இது என் தங்கச்சிதான்..." என்று நான் கூற ஆரம்பித்தேன். "பார்த்தீங்களா, ஒரு பையன் அவன் தங்கச்சியை எப்படி பாசமா இவங்களோட அம்மா செத்துப் போயிட்டா. இந்தக் குழந்தைக்கு இப்போ ஆதரவு இவன் மட்டும்தான்..." என்று பலரும் சொல்வதை நானே கேட்டிருக்கிறேன்.

அவள் சில நேரங்களில் பயங்கர பிடிவாதக்காரியாய் இருந்தாள். கையில் அவளைத் தூக்கித் தூக்கி பல நேரங்களில் என் கைகள் வலிக்க ஆரம்பித்துவிடும். அப்போது அவளைக் கை மாற்றலாம் என்றால், அவளைத் தூக்குவதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? அதனால் அவளை இறக்கி நான் தரையில் விடுவேன். அவ்வளவுதான் அவள் அழ ஆரம்பித்துவிடுவாள். நான் எந்த வழியில் நடந்து போகிறேனோ, அந்த வழி அவளுக்குப் பிடிக்காமல் போய்விடும். அவளுக்குப் பிடித்தமான வழியை அவள் விரலால் நீட்டிக் காட்டுவாள்.


நான் அந்த வழியே நடந்து போவேன். சில நேரங்களில் அவள் என்ன மனதில் நினைக்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியாது. எது எப்படியிருந்தாலும் நான் அவளை அழ விடமாட்டேன். அதற்கான சூழ்நிலையும் உண்டாகாது.

எனக்குக் கோபம் என்பதே வராது. இப்போது வரை எனக்கு கோபம் என்ற ஒன்று வந்ததே இல்லை. எதையும் சகித்து வாழ்வதற்காக உலகத்தில் பிறந்தவன் நான். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டேன். அப்படி இருக்கக் கூடிய ஒருவனுக்கு எப்படிக் கோபம் வரும்?

திரும்பிப் பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வாழ்க்கையில் ஒளிமயமான காலகட்டம் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும். சிரிப்பு, விளையாட்டு எல்லாம் நிறைந்திருந்தது. அப்போது மட்டும்தான். சிரிக்கவும் விளையாடவும் தெரிந்து கொண்டதே அப்போதுதானே! அந்த சந்தோஷமான நாட்கள் இனியும் ஒருமுறை வருமா?

ஒரு விஷயத்தை நான் இங்கு சொல்லியே ஆக வேண்டும். இரவில் நாங்கள் படுத்து உறங்கியது, நான் அவளைப் போல சிறு குழந்தையாக இருந்தபோது படுத்து உறங்கியதைப் போலவே இருந்தது. அந்த நாயைப் போல நான் அவளை என்னுடன் மிகவும் நெருக்கிப் போட்டுக் கொண்டு தூங்குவேன். என் கை வளையத்திற்குள் அவளை நான் படுக்க வைப்பேன். ஒரு குழந்தைக்கு வெப்பம் கொடுத்து படுப்பது எப்படி என்பதை இப்படித்தான் நான் தெரிந்து கொண்டேன்.

அப்படிப் படுத்திருக்கும் பொழுது, அவள் என்னுடைய கழுத்தைத் தன்னுடைய பிஞ்சு கைகளால் இறுகப் பற்றியபடி படுத்திருப்பாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கூட அந்தப் பிடி சற்றுகூட தளராது. தூங்கும்போது கூட நான் இலேசாக விலகினால், அவளின் அந்தப் பிடி மேலும் இறுகும். படுத்திருக்கும் நிலையிலிருந்து என்னால் கொஞ்சம் கூட விலகியிருக்க முடியாது. அப்படியே அசையாமல் நான் படுத்திருப்பேன்.

தன் தாயுடன் சேர்ந்து படுத்து அவளிடம் பால் குடித்திருப்பாள் அந்தக் குழந்தை. அப்போது தூங்கும்போது கூட அதற்குப் பயம் என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை. தன் தாய் தனக்குப் பக்கத்தில் படுத்திருக்கிறாள் என்பதுதான் அதற்கு நன்றாகத் தெரியுமே! சில நேரங்களில் அவள் படுக்கையை விட்டு உருண்டு வேறு பக்கம் போவாள். தாயும் அதே மாதிரி வேறொரு பக்கம் நகர்ந்து படுப்பாள். தூக்கம் கலைந்து 'அம்மா' என்று அழைத்தவாறு தன் தாயை நெருங்கி குழந்தை நகர்ந்து போவாள். அதற்குள் தாயும் தன் குழந்தையின் அருகில் நகர்ந்து செல்வாள். பிறகு தன் முலையை எடுத்து குழந்தையின் வாய்க்குள் அவள் வைப்பாள். இதுதான் உண்மையில் நடந்திருக்கும். ஒரு நாள் அப்படிப் படுத்திருந்தபோது தன் தாயை அழைத்தவாறு குழந்தை உருண்டாள். தாய் இல்லை. தாய் உருண்டு தன் குழந்தை இருக்குமிடத்திற்குப் போகவுமில்லை. அப்போது சிறு குழந்தையாக இருந்தாலும் அவளுக்கு இத்தகைய ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவள் என்னை இறுகப் பற்றிக் கொண்டு உறங்குவதே. தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நான் எங்கே அவளை அனாதையாக விட்டு ஓடிவிடப்போகிறேனோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்.

ஒருநாள் நான் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தேன். அவ்வளவு தான்- அழுதவாறு குழந்தையும் படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள். நான் சிறிதுதூரம் நடந்தேன். குழந்தையும் என்னைப் பின் தொடர்ந்து வந்தது. என் கால்களை அது இறுகப் பற்றிக் கொண்டது.

அந்தக் குழந்தையை நான் எப்படி அனாதையாக விடமுடியும்? அதை வளர்ப்பதற்கு என்னை விட்டால், வேறு ஏதாவது நாய் இருக்கிறதா என்ன?

எது எப்படியோ- அவள் வளர்ந்தால் போதும் என்று மனதில் நினைக்க ஆரம்பித்தேன். வளர்ந்த பிறகு அவளை ஒரு இடத்தில் இருக்க வைத்துவிட்டு நான் வேலைக்குப் போகலாம். ஆனால், அப்போது அது முடியாது. அவள் வளர்வது வரை ஹோட்டலுக்குப் பின்னால் பீப்பாயில் இருக்கும் எச்சில் இலைகளைப் பொறுக்கி நாங்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஒருநாள் இரவில் இறுக அணைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவளின் உடல் பயங்கரமாகத் தகித்தது. அவளைத் தொடவே முடியவில்லை! சிறிது நேரம் சென்றதும் அவள் வாந்தி எடுத்தாள். நான் அவளைச் சற்றுத் தள்ளி படுக்க வைத்தேன். அவள் என்னவோ முணுமுணுத்தாள். நான் அவளுக்கு முத்தம் தந்து கொண்டே கேட்டேன்:

"என்ன தங்கச்சி?"

அவள் அதற்கு வாய் திறக்கவேயில்லை. நான் அவளைத் தூக்கினேன். அதற்குப் பிறகும் அனத்திக்கொண்டே இருந்தாள். அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன்.

எப்படியோ பொழுது விடிந்தால் போதும் என்றிருந்தேன். மீண்டும் அவள் வாந்தி எடுத்தாள். அவளுக்கு வயிற்றுப்போக்கு உண்டாகியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். எங்களுக்கு மிகவும் அருகில் ஒரு உடைந்து போன மண்சட்டி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் பக்கத்திலிருந்த குளத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரலாமென்று பார்த்தால், அவள் என்னை அதற்கு விட்டால்தானே! இரவு நேரத்தில் அவளையும் தூக்கிக் கொண்டு காடென செடிகள் வளர்ந்திருக்கம் ஒரு இடத்திற்கு நான் எப்படிப் போக முடியும்?

பொழுது விடிந்தது. அவளின் முகமும் உதடும் மிகவும் வாடிப் போயிருந்தன. நான் முத்தம் தந்து அவளுக்கு கிச்சுக் கிச்சு காட்டிப் பார்த்தேன். அவள் சிரிக்கவில்லை. அவளுக்கு குடிக்க தண்ணீர் வேண்டும். நான் அவளையும் தூக்கிக் கொண்டு குளத்திற்குப் போய், அங்கு நீர் மொண்டு கொடுத்தேன்.

அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது, என் உடம்பிலேயே அவளின் வயிற்றுப்போக்கு போக ஆரம்பித்தது. வாந்தியையும் என் மேலேயே எடுத்தாள். என் தோளில் தன் தலையை வைத்து அவள் தளர்ந்து போய் படுத்திருந்தாள்.

என்ன செய்யவேண்டும் என்றே எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும் நான் ஹோட்டலுக்குப் பின்னால் சென்றேன். கிடைத்ததில் அவளுக்கும் கொஞ்சம் கொடுத்தேன். அவளை நான் பட்டினி போடவில்லை. இப்போது மட்டுமல்ல; எப்போதும் அவளைப் பட்டினி கிடக்கும்படி விடமாட்டேன்.

உடம்பின் ஒரு பக்கத்தில் மலம், இன்னொரு பக்கத்தில் வாந்தி ஆகியவற்றுடன் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்து செல்லும் என்னைப் பார்த்து எங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வயதான அம்மா கேட்டாள்:

"குழந்தைக்கு என்னடா...?"

நான் சொன்னேன்:

"வயிற்றுப்போக்கும்மா..."

"கடப்புரத்தில இருக்குற ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் மருந்து வாங்கிக் கொடுடா..."

கடப்புரத்தில் இருக்கும் மருத்துவமனையை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அதைப் பார்த்திருக்கிறேன். அங்கே நான் போனேன்.


எங்கு போய் நான் மருந்து வாங்குவது? நான் அங்கு யாரைப் பார்க்க வேண்டும்? எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஒரு இடத்தில் ஒரு மனிதர் வெள்ளைக்காரர்களைப் போல் மிடுக்காக ஆடையணிந்து உட்கார்ந்திருந்தார். அவர் உட்கார்ந்திருந்த அறையின் வாசலில் நிறைய ஆட்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நான் நினைத்தேன். நானும் அங்கு போய் நின்றேன். மெதுவாக நகர்ந்து நானும் சென்றேன். அந்த மனிதர் என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். தலையை உயர்த்தி என்னைப் பார்த்த அவர் கேட்டார்:

"என்னடா...?"

நான் சொன்னேன்: "குழந்தைக்கு வயிற்றுப்போக்கு."

"உன் சீட்டு எங்கே?"

அவர் என்ன சொல்கிறார் என்பதே எனக்குப் புரியவில்லை கோபத்துடன் அவர் சொன்னார்:

"போயி சீட்டு வாங்கிட்டு வா..."

அப்போதும் எனக்கு எதுவும் புரியவில்லை. நான் எதுவும் பேசாமல் அங்கேயே சில நொடிகள் நின்றிருந்தேன். அப்போது குழந்தை வாந்தி எடுத்தாள். வயிற்றுப்போக்கும் ஆரம்பித்தது. எல்லாவற்றையும் அவள் அங்கேயே கழித்தாள். அவ்வளவுதான்- அந்த மனிதர் மூக்கைப் பொத்திக் கொண்டு குதிக்க ஆரம்பித்துவிட்டார். உரத்த குரலில் என்னவோ அவர் சத்தம் போட்டார். நான் பயந்து போய் வெளியே வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு நான் இங்கேயும் அங்கேயுமாய் நடந்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் ஆட்களுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு போய் கேட்டேன்:

"இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் மருந்து தாங்க."

மருந்து தரும் ஆள் சொன்னார்:

"அந்தப் பக்கம் போயி எழுதி வாங்கிட்டு வா."

எனக்கு எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது. எல்லோரும் குப்பியில்தான் மருந்து வாங்கிக் கொண்டு போனார்கள். மருந்து வாங்குவதற்கு குப்பி நாம் கொண்டு வரவேண்டும். என் கையில் குப்பி எதுவும் இல்லை. அப்படியென்றால் எங்கிருந்தாவது ஒரு குப்பியை நான் உடனடியாகக் கொண்டு வரவேண்டும்.

நான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன். நான் அதற்கு மேல் என்ன செய்வேன்?

குளத்தின் கரைகளில் உடைந்துபோன குப்பிகள் கிடப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புதர்களுக்கு மத்தியில் நான் குப்பியைத் தேடி நடந்தேன். கடைசியில் கழுத்து உடைந்து போன ஒரு குப்பி எனக்குக் கிடைத்தது.

மறுநாள் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி வரவேண்டுமென்று நான் தீர்மானித்தேன்.

அந்தக் குழந்தையின் நிலைமை மிகவும் மோமசமாகிவிட்டது. அதன் தலை சரியாக நிற்கவில்லை. தோளில் நான் தூக்கிக் கொண்டு நடப்பது அதற்குப் பிடிக்கவில்லை. நான் அவளைப் படுக்க வைத்தேன். ஈக்கள் அவளை மொய்த்துக் கொண்டிருந்தன. நான் ஒரு சிறு குச்சியை எடுத்து ஈக்களை விரட்டிக் கொண்டிருந்தேன்.

அவள் என்னையே பார்த்தவாறு படுத்திருந்தாள். உதடுகளை இலேசாகக் கூட அசைக்கவில்லை.

"கொஞ்சம் சிரிடா கண்ணு..."

நான் சொன்னேன். அவள் சிரிக்கவில்லை. அவளால் சிரிக்க முடியவில்லை.

அவள் வாயைத் திறப்பாள்- தண்ணீர் வேண்டும் என்பதற்காக நான் குளத்திற்குப் போய் உடைந்த சட்டியில் நீர் மொண்டு கொண்டு வந்து சிறிது சிறிதாக அவள் உதட்டில் ஊற்றினேன்.

அன்று இரவு நான் சுருண்டு படுத்திருந்தேன். அவள் தன் கையால் என்னை கட்டிப்பிடித்து படுக்கவில்லை. நான் எழுந்து உட்கார்ந்தபோது அவள் எழவில்லை.

நான் கண் அயர்ந்து விட்டேன். 'அண்ணா' என்று என்னை அழைப்பது மாதிரி இருந்தது. நான் எழுந்து தொட்டுப் பார்த்தேன். பச்சைத் தண்ணீரைப் போல் அவள் குளிர்ந்து போயிருந்தாள். எனக்கு 'பளிச்' சென்று ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது. என்னுடைய நாய்கூட இப்படித்தான் அன்று குளிர்ந்து போயிருந்தது. அவள் கால்களை நன்றாக நீட்டியபடி படுத்திருந்தாள். நான் அவள் நெஞ்சில் கையை வைத்துப் பார்த்தேன். மூச்சை இழுக்கவில்லை. மூச்சை வெளியே விடவும் இல்லை. அன்று பாலத்தினருகில் நான் கைவைத்தபோது நான் உணர்ந்த அவளின் சுவாசம்- நின்று விட்டிருந்தது.

அவளின் குளிர்ந்து போன அவள் கையை எடுத்து என்னுடைய கழுத்தைச் சுற்றிலும் வைத்து நான் அவளுக்கு முத்தம் தந்தேன்.

அன்று இரவைப் போல நீண்ட ஒரு இரவை நான் பார்த்ததேயில்லை. பொழுது விடியவேயில்லை. பொழுது விடிந்த பிறகு அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

எப்படியோ ஒரு விதத்தில் பொழுது விடிந்தது. நான் அவளைப் பார்த்தேன். எனக்கு புரிந்து விட்டது. நான் என்ன செய்வது? என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை.

நான் அங்கிருந்து யாரும் பார்ப்பதற்கு முன்பு நகர்ந்தேன். பாதையில் நடந்து செல்லும் போது மனதில் நினைத்துப் பார்த்தேன். அவள் அங்கு எப்போது வரை கிடப்பாள்?

அன்று இரவு நான் அங்கே வந்தேன். அவள் அங்கேயேதான் கிடந்தாள். யாரும் அவளை எடுத்துக் கொண்டு போகவில்லை. இப்போது அவள் என்னை 'அண்ணா' என்று பாசம் பொங்க அழைத்தால் எப்படி இருக்கும்? இல்லை... அவள் இனிமேல் அப்படி அழைக்கப்போவதே இல்லை!

நான் பின்னால் பல நேரங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். எதற்காக இவள் பிறந்தாள்? எனக்குப் பல விஷயங்களையும் கற்றுத் தருவதற்காகத்தான் அவள் இந்த உலகத்தில் பிறவி எடுத்திருப்பாளோ? என்னைச் சிரிக்க வைப்பதற்கும், விளையாடச் செய்வதற்காகவும்தான் அவள் வந்திருப்பாளோ? இல்லாவிட்டால் அவள் பிறவி எடுத்தற்கு வேறு என்ன காரணத்தைக் கூற முடியும்? அவ்வக்கர் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருந்தான்.

அவள் வளர்ந்து பெரிய பெண்ணாகியிருந்தால் எப்படி இருக்கும்? இப்போது நான் திடமான குரலில் கூறுகிறேன். அவள் வளரவே கூடாது. வளர்வதாக இருந்தால் என்னுடன் இருந்தேதான் வளரவேண்டும். என்னுடன் இருந்து வளர்வதாக இருந்தால், அவளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

அவள் வளராமல் போனது ஒருவிதத்தில் நல்லதுதான். அவள் ஒரு அதிர்ஷ்டசாலி என்றுகூடச் சொல்லலாம். அதே நேரத்தில் அவள் என்னுடன் இருப்பதாக இருந்திருந்தால், என்னுடைய வாழ்க்கை எவ்வளவோ மாற்றங்கள் உள்ளதாக இருந்திருக்கும். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றும். அப்படி ஒரு எண்ணம் மனதில் இருந்தால், ஒருவேளை என்னுடைய வாழ்க்கையே வேறுமாதிரி ஆகியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நான் அடுத்த நாள் படகுத் துறைக்குக் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தில் நீரில் இறங்கி குளித்தேன். இப்படி ஒரு அத்தியாயம் என்னுடைய வாழ்க்கையில் முடிவுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் சிலர் என்னைப் பார்த்தபோது கேட்டார்கள்:

"உன் கையில இருந்த குழந்தையை எங்கே?"


நான் சொன்னேன்:

"அது இறந்திடுச்சு."

ஒருவன் சொன்னான்:

"இனிமேலும் அப்படியொரு குழந்தை கிடைக்குமான்னு தெருவுல அலைஞ்சு பாரு. கிடைச்சாலும் கிடைக்கும்!"

அவன் சொன்னது சரிதான். ஒருவேளை மீண்டும் என் கையில் ஒரு குழந்தை முன்பிரந்ததைப் போல் வந்து சேர்ந்தாலும் சேரலாம்.

அப்படியொரு குழந்தையை ஒருவேளை பார்க்க நேர்ந்தால், அதைக் கையில் நான் எடுப்பேனா?

எனக்குத் தெரியாது.

கையில் கனத்தை இழந்ததைப் போல் இருந்தாலும், மனதென்னவோ மிகவும் கனத்தது. அந்த மன கனத்துடனேயே நான் நடந்தேன்.

5

துறைமுகப் பகுதியில் ஒரு தேங்காய் கிடங்கில் எனக்கொரு வேலை கிடைத்தது. தேங்காய் காய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் இருந்தவாறு அங்கு வரும் காகங்களை நான் விரட்டவேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்த வேலை.

கிழக்கு திசையிலிருந்து நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தேங்காய்கள் வந்து கொண்டிருந்த நேரமது. நான்கு பக்கங்களிலும் சுவர்கள் அமைந்து மேலே கம்பியால் ஆன வலை கட்டப்பட்ட ஒரு கிடங்கு இருந்தது. தேங்காய்கள் அளவுக்கும் அதிகமாக வந்துவிட்டதால் தனியாக ஒரு இடத்தில் ஏராளமான தேங்காய்களை பரப்பி விட்டு காயப் போட்டிருந்தார்கள். நானும் இன்னொரு பையனும்தான் அங்கு காகங்களை விரட்டும் வேலையில் போடப்பட்டிருந்தோம்.

நாங்கள் செய்யும் வேலைக்கு எங்களுக்கு தினக்கூலி ஐந்து சக்கரம். அதிகாலையிலேயே வேலைக்கு வந்துவிட வேண்டும். தேங்காய்களை எடுத்துப் பிரித்துப் போட்டு காயவைக்க ஐந்தாறு பேர் வருவார்கள். காயப்போட்டபின், அவர்கள் போய்விடுவார்கள். அதற்குப் பிறகு காகங்களின் தொந்தரவுதான். ஒரு இடத்தில் நாங்கள் உட்கார முடியாது. இங்குமங்குமாய் ஓடி சத்தம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். சத்தம் போட்டு சத்தம் போட்டு நாங்கள் தளர்ந்து போய்விடுவோம். மாலையில் வெயில் போகும் வரை இதே கதைதான். ஆனால் நான்கைந்து பேர் வருவார்கள். காய்ந்து போயிருக்கும் தேங்காய்களை எடுத்து மூட்டையில் போட்டுக் கட்டுவார்கள்.

அவ்வப்போது முதலாளி வருவார். வெளுத்த தடித்த அந்த மனிதரின் தலையில் வழுக்கை விழுந்திருக்கும். எப்போது அந்த ஆள் வருவார் என்பதை யாராலும் சொல்ல முடியாது.

ஓடி ஓடி நாங்கள் களைப்படைந்து போனாலும், மதிய நேரத்தில் நாங்கள் அந்த இடத்தைவிட்டுப் போக முடியாது. காலையில் ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்தால், அதற்குப் பிறகு சாயங்காலம் தான் ஏதாவது சாப்பிட முடியும். ஆனால், நாங்கள் காயப் போட்டிருக்கும் தேங்காய்களில் ஒன்றிரண்டை எடுத்து சாப்பிட்டுவிடுவோம். சில தேங்காய்கள் மரத்தைப் போல கடிப்பதற்குக் கடுமையாக இருக்கும். சில தேங்காய்கள் தின்ன மிகவும் சுவையாக இருக்கும். அதைப் பார்த்தே நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். இப்படித் தேங்காய்களை எடுத்துத் தின்றே நாங்கள் மதிய நேரத்துப் பசியைத் தணிப்போம்.

என்னுடைய நண்பன் மிகவும் பொல்லாதவன் என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சநேரம் ஓடிவிட்டு, அவன் உட்கார ஆரம்பித்துவிடுவான். ஒன்றிரண்டு தேங்காய்த் துண்டுகளை காகங்கள் தூக்கிக் கொண்டு போனால் அவன் கூறுவான்:

"அந்தத் தடியனோட தேங்காய்தானே! தாராளமா காகம் கொண்டு போகட்டும்."

அங்கு ஏராளமானவர்கள் வேலை பார்க்கிறார்கள். பெரிய படகுகளிலிருந்து தேங்காய்களைச் சுமந்து கொண்டு வருவதற்கும் அதைப்பிரித்துப் போட்டு காயப்போடவும், காய்ந்தபின் எடுக்கவும், அதை எடை போடுவதற்கும் நிறைய பேர் அங்கு பணி செய்தார்கள். சம்பளம் தரும் நேரத்தில் பார்க்க வேண்டும்! ஒரு ரூபாய், ஒன்றே கால் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களும் இருப்பார்கள். பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்போது போக வேண்டும். கையெழுத்துப் போட வேண்டும். சம்பளத்தை வாங்க வேண்டும். போக வேண்டும். நானும் கையெழுத்துப் போடுவேன். ஒரு வட்ட பூஜ்யம். அப்போது என் மனதிற்குள் நான் நினைப்பேன்- இதே இடத்தில் ஒன்றே கால் ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஆளாக நான் வர வேண்டுமென்று அங்கு எடை போடுவதற்காக நின்று கொண்டிருப்பவன் முதலில் என்னைப் போல காகங்களை முன்பு விரட்டிக் கொண்டிருந்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும்!

அந்த மனிதனை முதலாளிக்கு மிகவும் பிடிக்கும். அவனை 'கேசவா' என்று அழைத்து, அவனுடன் பல விஷயங்களையும் மகிழ்ச்சி ததும்ப முதலாளி பேசிக் கொண்டிருப்பார். என்னுடைய நண்பன் சொன்னான்:

"முதலாளி பெரிய ஆளுகிட்டதான் அப்படி சிரிச்சு சிரிச்சு பேசுறாரு தெரியுமா? கிழக்குப் பக்கத்துல இருந்து தேங்காய்களைக் கொண்டு வந்தவங்க அந்த ஆளுக்கு ஏதாவது தனிப்பட்ட முறையில தர்றதா சொல்வாங்க. எடை போடுறப்போ ஏதாவது திருட்டுத்தனம் செய்யணும்ன்றதுக்காகத்தான் அது. ஆனா அந்த ஆளு அப்படிச் செய்ய ஒதுக்கவே மாட்டான்!"

எனக்கும் இதைப் போல ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்று மனதிற்குள் நான் ஆசைப்பட்டேன்.

ஒரு நாள் மதிய நேரத்தில் நாங்கள் ஆளுக்கொரு பாதி தேங்காயை எடுத்துத்தின்று கொண்டிருந்தோம். அப்போது முதலாளி அங்கு வந்தார். தின்று கொண்டிருந்த தேங்காய் போக, மீதியிருந்த தேங்காயை கீழே போட்டோம், முதலாளி அருகில் வந்து கேட்டார்:

"வாய்க்குள்ள என்னடா இருக்கு?"

என்னுடைய நண்பன் சொன்னான்:

"ஒண்ணுமில்ல..."

"ஒண்ணுமில்லையா? எங்கே வாயைத் திற பார்போம்."

நாங்கள் வாயைத் திறந்து காண்பித்தோம்.

எங்களுடைய திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிட்டது. முதலாளி கையிலிருந்த குச்சியால் எங்களுக்கு மூன்று, நான்கு அடிகள் தந்தார்.

அன்று சாயங்காலம் சம்பளம் தந்தபோது, மறுநாள் முதல் நாங்கள் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறினார் கணக்குப்பிள்ளை.

அதோடு என்னுடைய லட்சியம் தகர்ந்தது.

ஐந்து சக்கரமே சம்பளமாகக் கிடைத்தாலும் அப்போது அது நல்ல சம்பளம் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு சக்கரத்திற்கு சாப்பாடு கிடைக்கும். அரை சக்கரத்திற்கு ஒரு தேனீர் குடிக்கலாம். இரவில் படகுத் துறைக்குப் போய் நின்றால் சிறு சிறு சுமைகள் தூக்கும் வேலையும் கிடைக்கும்.

மீண்டும் நான் வேலையில்லாதவனாக ஆனேன்.

காலையில் சணல் அலுவலகத்தின் வாசலில் போய் நான் நிற்பேன். எவ்வளவு பேர் அங்கு வேலைக்கு உள்ளே போகிறார்கள் என்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றிருப்பேன். அவர்கள் ஒவ்வொருவரும் அங்கு என்ன வேலை செய்வதற்காகப் போகிறார்கள் என்று வியப்புடன் நான் பார்ப்பேன். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருப்பார்கள். வாசலில் நின்றிருப்போர்களில் பாதிப்பேர்களைத்தான் உள்ளே விடுவார்கள். உள்ளே போக முடியாதவர்கள் அங்கேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டு பின்னர் போய்விடுவார்கள்.

இப்படி ஏராளமானவர்கள் வேலை கிடைக்காமல் புறப்பட்டுப் போவார்கள்.

ஒருநாள் ஒரு நிறுவனத்தின் வாசலில் ஒரு பெரிய தகராறே நடந்து விட்டது.


ஐந்தாறு ஆட்களின் தலைகள் அங்கு நடந்த சண்டையில் உடைந்தே விட்டது. குறைவான சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல சிலர் தயாராய் இருந்தார்கள். அவர்களுக்குக் கம்பெனியில் வேலை கொடுக்கப்பட்டது. அதிகமான சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை வேண்டாம் என்று கம்பெனிக்காரர்கள் சொல்லிவிட்டார்கள். இதுதான் அங்கு நடந்த தகராறுக்கு காரணம். போலீஸ்காரர்கள் அடுத்தநிமிடம் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

அந்தப் பகுதியிலிருந்து மிளகு கிட்டங்கிகளில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று போய் பார்த்தேன். அங்கு தேவைக்கும் அதிகமாகவே பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு மிளகைச் சுமப்பதற்கும், அதைச் சாக்கில் போட்டுக் கட்டுவதற்கும் குறைந்த சம்பளத்திற்கு ஆட்களை வேலைக்கு எடுத்தாலும், நிறைய பேருக்கு அங்கு வேலையில்லை.

சாதாரண சிறு வேலையைச் செய்வதைக் காட்டிலும், பெரிய வேலையை என்னால் பார்க்க முடியும். ஆனால் எனக்கு வேலை தருவது யார்?

ஆலப்புழை நகரம் முழுக்க நான் நடந்தேன். எப்படி விதவிதமான தேங்காய்களையெல்லாம் அங்கு வந்து கொண்டிருக்கின்றன என்று பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். எல்லா கிடங்குகளிலும் தேங்காய்கள் மலையெனக் குவிக்கப்பட்டிருந்தன. எல்லா தேங்காய்களும் கடைசியில் எங்கு போய் சேர்கின்றன? ஆலைகளுக்குத்தான். ஆலைகளுக்கு அங்கு கணக்கேயில்லை. அங்கு தண்ணீரைப போல ஓடிக்கொண்டிருக்கிறது தேங்காய் எண்ணெய். கடலில் கப்பல்களில் வரும்போது கடப்புரம் என்ற அந்தப் பகுதியைப் பார்க்க வேண்டுமே! கப்பல்கள் பலவும் பாய், கூடை என்று பலவற்றையும் ஏற்றிக் கொண்டு செல்லும். அவை எல்லாமே மனிதர்கள் செய்தவைதான். எனினும், மனிதனுக்கு வேலை இல்லை.

சம்பளம் குறைவாக இருந்தாலும் எனக்கு ஒரு வேலை கிடைத்தால் போதுமென்று நினைத்தேன். நான் நன்றாக வேலை செய்வேன்; முதலாளியிடம் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வேன் என்றெல்லாம் வேலை கேட்டுப் போன இடங்களில் சொல்லவேண்டுமென்று மனதிற்குள் நினைத்தேன். ஆனால், எந்த முதலாளியிடமும் இவற்றைச் சொல்வதக்கான தைரியம் எனக்கு இல்லை. நான் ஒரே ஒரு முதலாளியிடம்தான் இதுவரை பேசியிருக்கிறேன். இன்னொரு ஆளின் உதவியில்லாமல் எந்த முதலாளியிடமும் இந்த விஷயங்களை என்னால் பேச முடியாது. அந்த அளவிற்கு எனக்கு உதவ இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்? யாருமே இல்லை என்பதுதான் உண்மை.

இப்படிப் பல விஷயங்களையும் மனதில் அசை போட்டுக் கொண்டு நடக்கும் போது, எனக்கு கேசுவைப் பற்றிய ஞாபகம் வந்தது. அவன் ஒரு முதலாளியிடம்தானே இருக்கிறான்!

நான் ஒன்றிரண்டு நாட்கள் அந்த வீட்டின் முன்னாலிருக்கும் சாலையில் போய் நின்றேன். அவனைக் காணவில்லை. உள்ளே போவதற்கு எனக்கு பயமாக இருந்தது.

அந்த வீட்டுக்கருகில் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. நான் அந்தக் கடைக்காரனிடம் கேசுவைப் பற்றி விசாரித்தேன். கேசு இப்போது பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பதாக அந்த ஆள் சொன்னான்.

மேலும் அவன் சொன்னான்,

"அவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும். அவனைப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கிற மாதிரி முதலாளி பார்த்துக்கிறாரு."

நான் கேட்டேன்:

"அவன் நல்லா வளர்ந்திருக்கானா?"

"வளர்ந்துட்டானாவா? சரிதான்... அவன் இப்போ பெரிய ஆளு மாதிரி இருக்கான்!"

அந்தக் கடையில் நின்றிருந்த இன்னொரு ஆள் சொன்னான்:

"அவனோட நிறத்தை இப்போ பார்க்கணுமே! பூவன் பழத்தைப் போல அவன் ஆயிட்டான். இந்த நிறம் அவன்கிட்ட எப்படி வந்துச்சுன்னே தெரியல..."

கடைக்காரன் சொன்னான்:

"முதலாளி அந்த அளவுக்கு அவனைப் பார்த்துக்கிறாரு. அவனைப் பட்டுத் துணியில மூடி வச்சுக்கிறது மாதிரி வச்சுக்கிறாரு."

அதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டு நின்று விட்டேன். உண்மையிலேயே கேசு அதிர்ஷ்டசாலிதான்!

கடைக்காரன் என்னைப் பார்த்துக் கேட்டான்:

"ஆமா... நீ ஏன் இதையெல்லாம் கேக்குற?"

ஒரே ஒர வரியில் இநத் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியுமா? ஒரு வாழ்க்கை வரலாற்றையே நான் கூறியாக வேண்டுமே! அதனால் என்ன சொல்வது என்று அறியாமல் குழம்பிப் போய் நின்றேன். கடையில் நின்றிருந்த அந்த ஆள் என்னையே கால் முதல் தலைவரை பார்த்தவாறு இருந்துவிட்டு, சொன்னான்:

"இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஊரைச் சுத்தியிருப்பாங்க."

கடைக்காரன் கேட்டான்: "அப்படியாடா?"

"ஆமா...!"

அப்போது கடையில் நின்றிருந்த அந்த ஆள் சொன்னான்:

"அப்ப நீயும் யாராவது ஒரு முதலாளியைப் பார்த்து போக வேண்டியதுதானே?"

கடைக்காரன் சொன்னான்:

"இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அட்டையைப் போல கறுத்துப் போன உதடுகளை வச்சிக்கிட்டு, இவனை எந்த முதலாளி கூட வச்சிக்குவாரு?"

எதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்பது எனக்கே புரியவில்லை. என்னுடைய உதடுகள் கறுப்பாக இருந்தால் அதற்கென்ன?

அதற்குப்பிறகு அவர்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேரும் மீண்டும் 'கேசு ஒரு அதிர்ஷ்டசாலி' என்ற தங்களின் கருத்தைச் சொன்னார்கள்.

"சாயங்காலம் வந்துவிட்டால் கேசுவும் முதலாளியும் சேர்ந்து கடைவீதிக்கு வருவாங்க... அவர்களை அந்தச் சமயத்துல கொஞ்சம் தள்ளி நின்னு பார்க்கணுமே! பார்க்குறதுக்கே ரொம்ப வேடிக்கையாக இருக்கும். ஒருத்தரையொருத்தர் கையைப் பிடிச்சிக்கிட்டு இழுத்துக்கிட்டு, முத்தம் தந்துக்கிட்டு... இப்படி எத்தனையோ விஷயங்கள்!"

அவர்கள் பேசியதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருநாள் அவனைப் படித்துறையின் அருகில் பார்த்தேன். அருகில் ஓடிச் சென்றேன்.

கேசுவிற்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

அந்த வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் சொன்னது சரிதான். அவன் நன்கு வெளுத்திருந்தான். எப்படி அவன் இந்த அளவிற்கு மாறினான் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.

அவனுக்கு மிகவும் அருகில் செல்ல எனக்கே பயமாக இருந்தது.

அவனுடைய இந்த மாற்றத்திற்குக் காரணம் எதுவாக இருக்கும்? அதிர்ஷ்டமா? ஒரு வேளை அந்த முதலாளியின் மகனாக இருப்பானோ? அவர் தன்னுடைய மகனை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்திருப்பாரோ? அந்த ஹோட்டலுக்குப் பின்னால் இருந்தவாறு என்னை பெயர் சொல்லி அழைத்து ஒரு கவளம் சோறு தந்த மனிதர் என்னுடைய தந்தையாக இருக்கும் பட்சத்தில், அவர் ஏன் கேசுவின் தந்தையாக இருக்கக்கூடாது? அந்த மனிதருக்கு ஒரே ஒரு கவளம் சோறு தர மட்டும்தான் முடிந்தது. முதலாளியால் சேகுவைத் தங்கத்தைப் போல போற்றிப் பாதுகாத்து வாழ வைக்க முடியும். இதுதான் இந்த இரண்டுக்குமிடையில் இருக்கும் வித்தியாசம். அவனைப் பார்த்தபோது என் மனம் இப்படித்தான் ஒப்பிட்டுக் கொண்டிருந்தது.

அவன் என்னையே உற்றுப் பார்த்தான். நான் இரண்டு, நான்கு அடிகள் முன்னால் வைத்தேன்.


"கேசு, என்னை உனக்குத் தெரியலையா?"

அவன் எதுவும் பேசவில்லை. நான்

தொடர்ந்து சொன்னேன்:    

"நான் தான்... நாய்க்குட்டி."

சிறிது நேரம் கழித்து அவன் கேட்டான்: "உனக்கு என்ன வேணும்?"

நான் எனக்குத் தேவையானதைச் சொன்னேன்.

"எனக்கு இப்போ எந்த வேலையும் இல்ல. ஒரு வேலையை எனக்கு உடனடியா வாங்கித்தரணும். யாராவது சிபாரிசு செய்யலைன்னா, வேலை கிடைக்கவே கிடைக்காது. வேலை இல்லாதவங்க ஏராளமான பேர் இருக்காங்க."

நான் சொல்ல நினைத்ததை ஒரே மூச்சில் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு அவன் இலேசாக தன் முகத்தைச் சுளித்தான்.

"இங்கே வேலை எதுவும் காலி இல்லையே."

சிறிது நேரம் கழித்து அவன் தொடர்ந்து சொன்னான்:

"அந்தப் பன்னியோட மகனுக்கு நான் பண்டகசாலையில் வேலைவாங்கிக் கொடுத்தேன். அவன் பசங்ககூட சேர்ந்துக்கிட்டு முதலாளிக்கு எதிரா சத்தம் போட்டுக்கிட்டு இருக்கான். நான் அவனைப் பார்த்துக்குறேன்..."

நான் கேட்டேன்:

"யாரை சொல்லுற?"

கேசுவிற்கு கோபம் வந்துவிட்டது. முகம் சிவக்க, அவன் சொன்னான்:

"அவன் தான்... அந்தப் பன்னி... அவ்வக்கர்..."

நான் சொன்னேன்:

"கேசு, நான் அவ்வக்கரைப் போல நிச்சயம் இருக்கமாட்டேன். நான் நன்றியுள்ளவன். என்ன சம்பளம் கொடுத்தாலும் சரி... நான் இப்போ அவ்வக்கர் கூட இல்ல... நான் யார் கூடவும் இல்ல..."

கேசு சொன்னான்:

"நான் இப்போ கேசு இல்ல. என் பேரு இப்போ சம்சுதீன்..."

அவன் திரும்பி நடந்தான்.

நான் அவனிடம் மேலும் பல விஷயங்களைச் சொல்ல நினைத்திருந்தேன். நான் நல்லவனென்று சொல்லி, அவனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் தான் போய்விட்டானே! கேசு மீது எனக்கு கோபம் தோன்றவில்லை. என் மனதில் இருந்தது ஒரே ஒரு வருத்தம்தான். நான் இனிமேல் யாரைப் பார்த்து ஒரு வேலையை வாங்குவேன்? அதற்கு எனக்கு ஒரு ஆள் இல்லையே!

6

ருடங்கள் பல கடந்தன. நான் வாலிபப் பருவத்தை அடைந்தேன். எனக்கு தாடியும் மீசையும் முளைத்தது. இருந்தாலும் எனக்கென்று ஒரு நிரந்தர வேலை கிடைக்கவே இல்லை. இப்படியும் அப்படியுமாய் ஏதோ வாழ்ந்தேன் என்பதே உண்மை.

கைரிக்ஷா இழுக்கும் கொச்சு சாக்கோ அண்ணன் என்மீது மிகவும் பாசம் கொண்ட ஒரு மனிதர். எனக்கு எதுவும் கிடைக்காத நாட்களில் அவர் ஏழோ எட்டோ சக்கரங்கள் எனக்குக் கடனாகத் தருவார். எனக்கு சக்கரம் கிடைக்கும்போது நான் அவற்றை அவருக்குத் திருப்பித் தருவேன். எனக்கு ஏதாவது வேலை பார்த்துத் தரும்படி கொச்சு சாக்கோ அண்ணனிடம் நான் கூறுவேன். வேலை கிடைப்பது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை கொச்சு சாக்கோ அண்ணன் என்னிடம் கூறுவார். பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை ஒவ்வொரு நாளும் விலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது. யாருக்கும் பாயும், கூடையும் வேண்டாம் போலிருக்கிறது! அதனால் அலுவலகங்களில் யாருக்கும் வேலை இல்லை என்ற நிலை உண்டாகிறது. ஆர்யாட்டு, புன்னப்ரா ஆகிய இடங்களில் உள்ள ஏராளமான ஏற்றுமதி நிறுவனங்கள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. சில இடங்களில் சரக்கு மழையில் நனைந்து ஒன்றுமில்லாமல் போகிறது. அதை நானே கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அப்படியென்றால் எனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைக்கவே கிடைக்காதா, என்னுடைய மனம் எப்போதும் இந்த ஒரே விஷயத்தைப் பற்றித்தான் சிந்தித்த வண்ணம் இருந்தது.

ஒருநாள் சாக்கோ அண்ணன் சொன்னார்:

"டேய், உன்கிட்ட இளமையும் சக்தியும் இருக்கு. ஒரு ரிக்ஷாவை வாடகைக்கு எடுத்து இழுத்தா என்ன?"

நான் எந்த வேலையையும் செய்ய தயாராகவே இருந்தேன்.

சாக்கோ அண்ணன் வாடகைக்கு ஒரு ரிக்ஷா வண்டியை ஏற்பாடு பண்ணித் தந்தார்.

சேட் ஒருவரை உட்கார வைத்து முதன்முதலாக நான் ரிக்ஷாவை இழுத்தேன். படகை விட்டு இறங்கி வந்த அவர் என்னுடைய வண்டியில் வேகமாக வந்து ஏறினார். கூலி எவ்வளவு என்பதைப் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நான்அவரை உட்கார வைத்து வண்டியை இழுத்துக் கொண்டு ஓடினேன்.

வெயில் பயங்கரமாக காய்ந்து கொண்டிருந்தது. நான் அப்போதுதான் முதல்தடவையாக வண்டி இழுக்கிறேன்! அவர் மிகவும் அவசரப்பட்டார். "சீக்கிரம்... சீக்கிரம்..." என்று என்னைப் பார்த்து அவர் சொல்லிக் கொண்டிருந்தார். நான் முடியாமல் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டேன். நான் போகும் வேகம் போதாது என்று என்னைப் பின்னால் குத்திக் கொண்டிருந்தார் அந்த மனிதர். கஷ்டப்பட்டு முப்பாலம் வரை நான் வண்டியை இழுத்துக் கொண்டு ஓடினேன். அந்த மனிதர் போக வேண்டிய இடம் அதுதான்.

அவர் ஒரு ரூபாயை எடுத்து என்னிடம் தந்துவிட்டு "திறமைசாலி! திறமைசாலி!" என்று சொல்லியவாறு ஒரு வீட்டிற்குள் வேகமாக நுழைந்தார். சேட்டை மீண்டுமொருமுறை பார்த்துப் பழகிக் கொள்ளவேண்டுமென்று நான் மனதில் நினைத்தேன். நான் வேகமாக வண்டியை இழுத்தது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது அது ஒரு நல்ல சந்தர்ப்பமாக எனக்குப் பட்டது. நான் மனதில் நினைத்திருந்த விஷயத்தைச் செயல்வடிவில் கொண்டு வருவதற்கான ஒரு வழி கிடைத்து விட்டதைப் போல் நான் உணர்ந்தேன்.

சேட் வெளியே வரவில்லை.

வாழ்க்கையிலேயே முதல் தடவையாக முழுதாக ஒரு ரூபாய் என் கையில் கிடைத்தது அன்றுதான்.

நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். அதற்குப் பிறகு அன்று நான் ரிக்ஷா இழுக்கவில்லை. என்னால் அதற்கு மேல் இழுக்க முடியாது என்பதே உண்மை.

அந்த நாளைப் பற்றி இவ்வளவுதான் என்னால் கூறமுடியும். இருந்தாலும், அது என் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு நாள் அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.

ஒரு சவாரியை ஏற்றிக் கொண்டு போய் விட்டவுடன், நான் மிகவும் களைத்துப் போய் விடுவேன். என்னால் அதற்கு மேல் வண்டியை இழுக்க முடியாது என்ற அளவிற்கு நான் ஆகிவிடுவேன். அருகில் ஏதாவது நிழல் இருந்தால், வண்டியைக் கொண்டு போய் அங்கே நிறுத்திவிட்டு அதிலேயே சுருண்டு படுத்து தூங்க ஆரம்பித்துவிடுவேன். சாயங்காலம் கூலியைக் கொண்டு போய் கொடுக்கும் போது, சாக்கோ அண்ணன் கணக்கு கேட்பார். நான் உண்மையைச் சொல்லுவேன். அப்போது சாக்கோ அண்ணன் கூறுவார்:

"பரவாயில்ல... இவ்வளவு சம்பாதிச்சா போதும். தேவையில்லாம உடம்பை ஏன் கெடுத்துக்கணும். உன்னோட ஒரு சாண் வயிறு நிறைஞ்சா போதுமே!"


ஒருநாள் நான் வழக்கத்தை விட அதிகமாக வண்டியை இழுத்தேன். என்னுடைய கால்கள் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தன. அந்த அளவிற்கு இதற்கு முன்பு எனக்கு கால்கள் வலித்ததேயில்லை. நான் சாக்கோ அண்ணனிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் சொன்னார்:

"வா... அதுக்கு மருந்து இருக்கு."

அடுத்த நிமிடம் அவர் என்னை கிடங்ஙாம் பறம்பு என்ற இடத்தில் இருக்கும் கள்ளுக் கடைக்குக் கூட்டிக் கொண்டு போனார். அன்றுதான் வாழ்க்கையிலேயே முதல்தடவையாக நான் கள்ளு குடித்தேன். உடல்வலியை மறந்து வண்டியிலேயே சாய்ந்து நான் உறங்கவும் செய்தேன்.

அதற்குப்பிறகு நாங்கள் பலமுறை கிடங்ஙாம் பரம்பிற்குப் போயிருக்கிறோம். ஒர நாள் சாக்கோ அண்ணனுக்கும் அந்தக் கடைக்காரருக்கு மிடையே சிறு சண்டை உண்டானது. காரணம்- கள்ளு தண்ணீரைப் போல இருந்ததுதான்! அப்போது நீர்கிணறு அருகில் உள்ள கடையில் அருமையான கள்ளு கிடைப்பதாக தகவல் கிடைத்தது. கள்ளுக் கடையிலிருந்த விற்பனை செய்யும் கிழவி சொன்னாள்:

"அங்கே கிடைக்கிறது ஒண்ணும் நல்ல கள்ளு இல்ல..."

சாக்கோ அண்ணன் கேட்டார்:

"பிறகு என்ன கிடைக்குது?"

"அங்கே சின்னப் பொண்ணுங்க கள்ளை எடுத்துத் தருவாங்க. அது நல்ல கள்ளு மாதிரி மத்தவங்களுக்குத் தோணும்."

"சின்னப் பொண்ணுங்க கள்ளை எடுத்துத் தந்தா, அது நல்லது மாதிரி தோணுமா என்ன?

உள்ளே போன அந்தக் கிழவி ஒரு பாத்திரத்தில் நல்ல தரமான கள்ளைக் கொண்டு வந்து தந்தாள்.

அப்போதே எனக்கு நீர்கிணற்றுக்கு அருகில் உள்ள கள்ளுக்கடைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உண்டாகிவிட்டது. ஆனால், என்னுடைய ஆசையை நான் சாக்கோ அண்ணனிடம் வெளிப்படுத்தவில்லை. அவருக்கு என்னுடைய மனதில் இருக்கும் ஆவல் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைத்தேன்.

நான்கைந்து நாட்கள் சரியாக வண்டி ஓடவில்லை. அடுத்த நாள் மூன்று ரூபாய் கிடைத்தது. நான் அன்று வண்டி சொந்தக்காரரைப் போய்ப் பார்த்து, வண்டியை ஒப்படைத்தேன். மறுநாள் காலையில் வந்து அதை எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.

நல்ல இரவு நேரம். எல்லா அறைகளிலிருந்தும் பெரும்பாலும் ஆட்கள் போய் விட்டிருந்தனர். ஒரு அறையின் வாசலில் சற்று உள்ளே நின்றவாறு ஒரு இளம்பெண் தன்னுடைய காதுக்கு அருகில் கையை வைத்தவாறு என்னை அழைத்தாள். அந்த அழைப்பில் என்னை உணர்ச்சி வசப்பட வைத்த ஏதோவொன்று மறைந்திருந்தது. என்னுடைய நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது மாதிரி இருந்தது.

நான் உள்ளே நுழைந்தேன்.

அங்கு யாருமில்லை. நானும், அவளும் மட்டுமே!

நான் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். பெஞ்சுக்கு முன்னால் அதைவிட உயரமான ஒரு பெஞ்ச் இருந்தது. அவள் அந்த பெஞ்சில் மேல் சாய்ந்து நின்றவாறு கேட்டாள்:

"தின்றதுக்கு என்ன வேணும்? கருவாடு இருக்கு. கப்பை இருக்கு. மீன் வறுவல் இருக்கு. வறுத்த அப்பளம் இருக்கு. உனக்கு என்ன வேணும்?"

அவளைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் உட்கார்ந்திருந்ததால், நான் அந்த நிமிடத்தில் உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை. கல்லைப்போல சிறிதும் அசையாமல் நான் உட்கார்ந்திருந்ததால், என் கையில் காசு இல்லை என்று அவள் நினைத்துவிட்டாள் போலிருக்கிறது அவள் கேட்டாள்:

"கையில காசு இருக்கா? ஒரு குப்பி கள்ளோட விலை ஏழு சக்கரம்."

என் கையில் காசு இருக்கிறதென்று நான் சொன்னேன். அவளுக்கு நம்பிக்கை வரவில்லை.

"எங்கே காட்டுப் பார்ப்போம்."

என் பெல்ட்டைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு உறையை நான் அவளுக்குக் காட்டினேன்.

என் கன்னத்தில் தன்னுடைய சுண்டு விரலால் ஒரு குத்து குத்திய அவள் திரும்பி நடந்தாள். அவளின் பின்பக்கம் எனக்குள் அடக்க முடியாத ஒரு உணர்ச்சியை உண்டாக்கியது.

ஒரு குப்பி கள்ளுடன் அவள் ஒயிலாகத் திரும்பி வந்தாள். அதை எனக்கு முன்னாலிருந்த பெஞ்சின் மேல் வைத்துவிட்டு "கப்பையும் மீன் குழம்பும் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டாள். என் வாயில் எச்சில் இல்லை. நான் சொல்லாமலே அவற்றைக் கொண்டு வந்தாள்.

அடுத்த நிமிடம் அவள் கள்ளை எடுத்து ஊற்றினாள். கப்பையை எடுத்து மீன் குழம்பில் புரட்டி அவள் எனக்கு ஊட்டி விட்டாள். நான் இரண்டாவது தடவை வாயைத் திறந்தபோது, அவள் எனக்கு ஊட்டவில்லை.

மீண்டும் அவள் நடந்து போனாள். சிறிது நேரம் கழித்து அவள் திரும்பி வந்தாள். கள்ளு முழுவதையும் நான் குடித்து முடித்திருந்தேன். அவள் கேட்டாள்:

"வேற என்ன வேணும்?"

நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். என்ன வேண்டும் என்று சொல்ல எனக்குத் தெரியாது. நான் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ம்... என்ன என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே?"

அதற்குப்பிறகும் நான் வாயைத் திறக்கவில்லை.

பெஞ்சின் மீது தன்னுடைய கையை ஊன்றிக் கொண்டு என்னுடைய முகத்துடன் அவளுடைய முகம் தொட்டுக் கொண்டிருக்கிறதோ இல்லையோ என்ற அளவிற்கு மிகவும் நெருக்கமாக நின்றவாறு அவள் கேட்டாள்:

"ஆமா... கையில் எவ்வளவு ரூபா இருக்கு?"

நான் சொன்னேன்:

"மூணு ரூபா."

"மூணு ரூபாயா? அப்படின்னா போயி..."

அவள் என்னவோ சொன்னாள். அது என் காதுகளில் விழவில்லை.

தொடர்ந்து அவள் சொன்னாள்:

"பத்து ரூபா கொண்டு வா. அப்படின்னாத்தான் முடியும்."

அவள் மேலும் எனக்கு கள்ளு வேண்டுமா என்று கேட்டாள். எனக்கு இதற்கு மேல் கள்ளு தேவையில்லை என்பது மாதிரி இருந்தது.

"காசை எடு."

நான் பெல்ட்டின் உறையிலிருந்த பணத்தை எடுத்தேன். அப்போது அவள் சொன்னாள்:

"இருக்கற பணம் முழுவதையும் எடு. ஏனனா ஒரு விஷயம் இருக்கு..."

நான் கையிலிருந்த பணம் முழுவதையும் எடுத்து அவள் கையில் தந்தேன்.

அவள் எனக்கு ஒரு முத்தம் தந்தாள்.

ஒரு பெண்ணின் உடல் என் மீது பட்டது வாழ்க்கையிலேயே அதுதான் முதல்முறை.

அவள் சொன்னாள்:

"போயி பத்து ரூபா கொண்டு வா."

என்னை அவள் அனுப்பினாள்.

பத்து ரூபாய் சம்பாதிக்க வேண்டும்!

அன்று நான் உறங்கவேயில்லை. தூக்கம் வரவேயில்லை.

அடுத்த நாள் சிறிதுகூட ஓய்வே இல்லாமல் வண்டியை இழுத்தேன். ஒரு இடத்தில் உட்காரக்கூட இல்லை. எனக்கு கொஞ்சம் கூட களைப்பு என்பதே உண்டாகவில்லை. எப்படியாவது கஷ்டப்பட்டு பத்து ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் என் மனதில் இருந்தது.


 மற்ற ரிக்ஷாக்காரர்கள் என்னைப் பார்த்து சண்டை போட்டார்கள். மற்றவர்கள் சொல்லக்கூடிய கூலியை விட நான்கு சக்கரங்கள் குறைவாக நான் சொன்னேன்.  தொடர்ந்து ரிக்ஷாவை இழுத்து ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு நிமிடத்தைக் கூட வீண் பண்ணாமல் வண்டியை இழுத்தால் அதிகமாக சவாரி கிடைக்குமல்லவா?

சாக்கோ அண்ணன் கேட்டார்:

"என்னடா பையா, செத்துப்போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"

நான் சாக்கோ அண்ணனிடம் எந்த விஷயத்தையும் கூறவில்லை. அதை அவரிடம் சொல்வதும் நல்லதல்ல என்று நான் நினைத்ததே காரணம்.

இரவு வந்ததும் அன்று கிடைத்த பணம் முழுவதையும் எடுத்து எணணிப் பார்த்தேன். பத்து ரூபாய் இல்லை!

எனக்கு அதைப் பார்த்ததும் ஒரே வருத்தமாகி விட்டது. எப்படி பத்து ரூபாய்க்கு வழி பண்ணுவது?

நான் பணம் கொண்டு வருவேனென்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள் என்று என் மனம் சொன்னது. பத்து ரூபாய் இல்லாமற்போனால் அவள் இருக்கும் பணத்தை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு முதல்நாள் செய்தது மாதிரி இப்போதும் என்னை வெறுமனே கட்டிப்பிடித்து அனுப்பிவிடுவாள். இன்றும் அந்த அளவிற்கு இருந்தால் போதுமா? அப்படியென்றால் மீண்டும் பத்து ரூபாய்க்கு நான் முதலிலிருந்து முயற்சி பண்ண வேண்டும்.

சாலையிலேயே பல தடவைகள் இங்குமங்குமாய் நான் நடந்து திரிந்தேன்.

அன்று நன்கு இருட்டும் வரை அந்தக் கள்ளுக் கடையில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்தது. ஆட்கள் முழுமையாக இல்லாமற்போனவுடன், நான் உள்ளே நுழைந்தேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

"என்ன, ரூபா கொண்டு வந்தியா?"

அவள் என்னை மறக்கவில்லை. நான் சொன்னேன்:

"இல்ல... பணம் கிடைக்கல."

"கள்ளு வேணுமா?"

"வேண்டாம்"- நான் சொன்னேன்.

"பிறகு எதற்கு வந்தே?"

நான் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் சென்றதும், நான் சொன்னேன்:

"நான் நாளைக்கு வர்றேன்."

"வா... ஆனா, பதினைஞ்சு ரூபா கொண்டு வரணும்."

நான் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். பத்துரூபாய்தானே அவள் முன்பு கேட்டிருந்தாள்! இன்று அது எப்படி பதினைந்து ரூபாயாக மாறியது? திரும்பி வந்து அவள் கேட்டாள்:

"என்ன, ஒரு முத்தம் வேணுமா?"

அப்போது யாரோ கள்ளு குடிப்பதற்காக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

நான் வேகமாக பாய்ந்து வெளியேறினேன்.

7

றுநாளும் நான் சூறாவளியைப் போல் சுழன்று கொண்டிருந்தேன். கையிலிருக்கும் பணத்திற்கு மேலாக தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது கஷ்டப்பட்டு பதினைந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அது மட்டும் போதாதே! கள்ளு, கப்பைப்கிழங்கு ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் தயார் பண்ண வேண்டும். என்னை நகரத்தின் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம். நான் ஓடிக் கொண்டே இருந்தேன். தலையைக் குனிந்து கொண்டு ஓடும்போது கூட, அவள் பேசியது மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.

நேற்று நடந்து கொண்டதைப்போல எதவும் பேசாமல் மௌனமாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதைப் புரிந்த கொண்டேன். நான் சரியான ஒரு மடையன் என்று அவள் நினைத்திருக்கலாம். அப்படி அவள் நினைத்துக் கெகண்டிருந்தால், அது எவ்வளவு பெரிய மோசமான விஷயம் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அவளிடம் என்ன பேசுவது? நான் பேசுவதால் அவளுக்குக் கோபம் உண்டாகிவிடக்கூடாது. என் மீது விருப்பமும் சந்தோஷம் அவளுக்கு உண்டாக வேண்டும். அந்தக் குழந்தையைக் கொஞ்சியதைப் போல- அவளை விளையாட்டுக் காட்டி சிரிக்க வைத்ததைப் போல இவளையும் கொஞ்சி விளையாட்டு காட்டி சிரிக்க வைத்தாலென்ன? இவள் ஒரு இளம்பெண்ணாயிற்றே! இருந்தாலும் இவளை எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வது என்பதைப் பற்றி என்னால் சிந்திக்க முடிந்தது. அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு தெளிவான தீர்மானம் எடுத்தேன்.

பிற்பகல் நேரத்தில் சாக்கோ அண்ணனை நான் பார்த்தேன். அவர் என்னை வலை போட்டுத் தேடியிருக்கிறார். அவருக்கு அவசரமாய் ஐந்து ரூபாய் தேவைப்பட்டதே காரணம். வீட்டுச் செலவுக்கு அந்தப்பணம் கட்டாயம் அவருக்குத் தேவைப்பட்டது. அந்த அளவிற்கு பணம் அன்று அவருக்குக் கிடைப்பதாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு நல்ல சவாரி என்ற விஷயம் சாக்கோ அண்ணனுக்கு நன்றாகவே தெரியும்.

நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டேன். சாக்கோ அண்ணன் பணம் வேண்டும் என்று கேட்கும்போது, கொடுக்காமல் இருக்கமுடியாது. எனக்கு சொந்த பந்தம், நண்பர் எல்லாமே அவர் தான். அவரை விட்டால் உலகத்தில் எனக்கு வேறு யாருமில்லை என்பதே உண்மை. அவர் மூலம்தான் நான் இந்த நிலைக்கே வந்தேன். எவ்வளவு தடவைகள் அவர் எனக்கு பணம் தந்து உதவியிருக்கிறார்! அவருக்குப் பணம் தந்தால் நான் கள்ளு கடைப்பக்கம் போக முடியாது. நான் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் நின்றேன்.

இப்படியொரு இக்கட்டான நிலை எனக்கு அதற்கு முன்பு எப்போதும் உண்டானதேயில்லை. 'இல்லை' என்ற வார்த்தை என்னுடைய நாக்கு நுனியில் வந்து நின்று கொண்டிருந்தது. அது மட்டும் வெளியே வந்து விழுந்திருந்தால், சாக்கோ அண்ணன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார். என் கையில் காசு இருக்கிறது என்ற உண்மை சாக்கோ அண்ணனுக்கு நன்றாகவே தெரியுமே!

சாக்கோ அண்ணன் சொன்னார்:

"கவலைப்படாதே, நாளைக்கோ நாளை மறுநாளோ கட்டாயம் திருப்பித் தந்திடுவேன்."

நான் சொன்னேன்:

"சாக்கோ அண்ணே, என்ன வார்த்தை சொல்றீங்க? கவலைப்படாதேன்னா சொல்றீங்க. சரிதான்... நீங்க இதைத் திருப்பிக் கொடுக்கவேணுமா என்ன?"

நான் பணத்தை எடுத்து அவர் கையில் தந்தேன்.

அன்று நான் மனதிற்குள் போட்டு வைத்திருந்த திட்டம் இப்படி முடிந்துவிட்டது. மீண்டுமொரு நாளைக்கு நிகழ்ச்சியை மாற்றி வைக்க வேண்டியதுதான். ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை இல்லாமல் இல்லை. இனியொரு முறை போகும்போது, அவள் பதினைந்து ரூபாய்க்குப் பதிலாக இருபது ரூபாய் வேண்டும் என்று கேட்டுவிடுவாளோ? சொன்னாலும் சொல்லலாம். அது மட்டுமல்ல- அவள் எனக்காக காத்திருந்தாலும் காத்திருக்கலாம்.

அன்றே சாக்கோ அண்ணனுக்குத் தந்த ஐந்து ரூபாயையும் சம்பாதித்துக் கொண்டு போய் அவளைப் பார்த்தால் என்ன என்று மனதில் நினைத்தேன்.

கடைவீதிக்குப் போவதற்கான ஒரு சவாரி எனக்குக் கிடைத்தது. அது ஒரு நல்ல சவாரிதான். திரும்பி வரும்போது விருந்தினர் மாளிகைக்கு அருகில் நின்று என்னை ஒரு ஆள் நிறுத்தினான். அப்போது இரவு மணி எட்டு ஆகியிருந்தது. அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்:


"புலயன்வழி வரை போயிட்டு இங்கே திரும்பி வரணும். என்ன காசுடா வேணும்?"

"அங்கே நேரமாகுமா சார்?"

"அரை மணி நேரம் ஆகும்."

"மூணு ரூபா தாங்க சார்."

"போ... போ... ரிக்ஷாவே வேண்டாம்."

எனக்குத் தேவைப்படுவதென்னவோ கொஞ்சம் அதிகம்தான். நிச்சயம் இந்த சவாரியை நான் வேண்டாமென்று விட்டுவிடக்கூடாது. நான் கேட்டேன்:

"நீங்க எவ்வளவு தர்றீங்க, சொல்லுங்க சார்?"

"உங்கிட்ட நான் என்னத்தைப் பேசறது? நீ என்கிட்ட மூணு ரூபாய்ல கேக்குற?"

"இரண்டு மைல் போகணும். பின்னாடி திரும்பி வரணும். அங்கே அரைமணி நேரம் நிக்கணும். போயிட்டு வர்றதுக்கு எப்படியும் பத்து, பதினோரு மணி ஆயிடும் சார்."

நான் சுற்றிலும் பார்த்தேன். வேறு வண்டிக்காரர்கள் யாரும் இல்லை. நான் கேட்டேன்:

"நீங்க எவ்வளவு தர்றீங்க சார்?"

அவன் சொன்னான்:

"ஒண்ணரை ரூபா தர்றேன்."

"ரொம்பவும் கம்மி சார். ரெண்டு ரூபாயாவது தாங்க சார்."

"முடியாது."

நான் அதற்குப் பிறகும் அவனிடம் சொல்லிப் பார்த்தேன். கடைசியில் நான் சொன்னேன்:

"சரி... ஏறுங்க சார்."

அவன் உள்ளே போய்விட்டு வந்து வேகமாக வண்டியில் ஏறினான்.

வெளியே கம்பி வலையால் வேலி அமைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. அங்கு ஒரே மாதிரி அமைந்த பத்து பனிரெண்டு சிறுவீடுகள் வரிசையாக இருந்தன. அந்த வளைவில் செல்லும்போதே கேட்டினருகில் வண்டியை நிறுத்தும்படி அந்த மனிதன் சொன்னான். அவன் வண்டியை விட்டு கீழே இறங்கினான். வண்டியை சற்று தள்ளி நிறுத்தச் சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றான்.

அரை மணி நேரமல்ல,அதைவிட அதிகமாக நான் அங்கேயே வண்டியுடன் காத்திருந்தேன். அங்குள்ள வீடுகள் ஒவ்வொன்றும் அச்செடுத்ததைப் போல் ஒரே மாதிரி இருந்தன. அங்கிருந்த எல்லோரும் கிட்டத்தட்ட உறங்கிவிட்டனர். வண்டியில் வந்த ஆள் எங்கு போனான் என்பதே எனக்குத் தெரியவில்லை. அவன் எங்கு போயிருப்பான்? அவனிடம் காசு வாங்காமற்போனது எவ்வளவு பெரிய தப்பு என்று எனக்குத் தோன்றியது. அவன் இந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். அதற்காக அவன் என்னைப் பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்டானோ? அவனை மீண்டும் பார்த்தால்கூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாது. நான் கேட்டை நோக்கி வண்டியை இழுத்துக் கொண்டு போனேன். சாலையில் ஒரு ஆளாவது இருக்க வேண்டுமே!

எதற்காக இப்படி முட்டாள்தனமாக இந்த இடத்திற்கு வந்தோம் என்று என் மீதே நான் குறைப்பட்டேன். மீண்டும் திரும்பிச் சென்றால் என்ன என்று கூட நான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை நோக்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தி ஒரு இளம்பெண். அவள் வண்டிக்குள் ஏறினாள்.

"திரும்பவும் வண்டியை விருந்தினர் மாளிகைக்குக் கொண்டு போடா. நானும் கூட வர்றேன். முன்னாடி இருக்குற துணியை கீழே இழுத்துவிடு."

நான் வண்டியைத் துணியால் மூடினேன். வண்டியை இழுக்க ஆரம்பித்தேன். அவன் சற்று தள்ளி பின்னால் உட்கார்ந்திருந்தான்.

வண்டியை விருந்தினர் மாளிகையின் வெளிவாசல் வழியாக உள்ளே இழுத்துக்கொண்டு போனேன். வண்டியை நிறுத்திவிட்டு, முன்னாலிருந்து துணியை மேலே ஏற்றினேன். அவள் வேகமாக வண்டியை விட்டு இறங்கி சூறாவளியைப் போல் படுவேகமாக உள்ளே போனாள். அவளை நான் சரியாக பார்க்கக்கூட இல்லை.

அந்த மனிதன் அடுத்த நிமிடம் திரும்பி வந்தான். அவன் சொன்னான்:

"நீ போயிடாதே, இங்கேயே வெளியே இரு. ரெண்டு, மூணு மணிக்கு இவளைக் கொண்டு போய் விடணும்."

"காசு?"

"கடைசியில் தந்தா போதாதா?"

"இப்பவே வேணும்."

"டேய், இங்கே காத்து கிடக்கிறதுக்கு... திரும்ப கொண்டு போய் விடுறதுக்கு... எல்லாத்துக்கும் சேர்த்து எவ்வளவு ரூபா வேணும்?"

இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

"அஞ்சு ரூபா..."

"அஞ்சு ரூபாயா?"

"நான் இங்கே காத்திருக்கவேண்டியிருக்கு..."

அவன் சொன்னான்:

"சரி... அப்படின்னா உன் கணக்கை இப்பவே முடிக்க வேண்டியதுதான். ரிக்ஷாக்காரங்க இங்கே வேற யாரும் இல்லைன்னு நினைச்சியா? கொஞ்சம் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நடந்து தேடணும்- அவ்வளவுதான்."

நான் கேட்டேன்:

"சார் நீங்க எவ்வளவு தர்றீங்க?"

"மூணரை ரூபா தர்றேன்."

நான் அதற்குச் சம்மதித்தேன். அதாவது கிடைக்கிறதே!

நான் விருந்தினர் மாளிகையின் வாசலிலேயே காத்துக்கிடந்தேன்.

பல விஷயங்களையும் அப்போது மனதில் அசை போட்டுப் பார்த்தேன். அந்தப் பகுதியில் சிறு வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு விருந்தினர் மாளிகையில் என்ன வேலை? இரவு நேரத்தில் வருவது, பொழுது புலர்வதற்கு முன் திரும்பிப் போவது... அவளை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டு வருவது... இது நிச்சயம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம்தான். விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பவர்கள் சாதாரணமானவர்களில்லை என்ற விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும். பெரிய பதவியில் இருப்பவர்களும் முதலாளிமார்களும் மட்டுமே அங்கு தங்க முடியும். அப்படியென்றால் அவர்களுக்காகவா அவளை அந்த ஆள் கொண்டு வந்தார்?

இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவளை அழைத்துக் கொண்டு என்னுடன் வந்த மனிதன் யாராக இருக்கும்? அந்த அறையில் தங்கியிருப்பது யார்? அப்படியென்றால் வசதிபடைத்த இந்த மனிதர்கள் சிறு வீடுகளில் வசிக்கும் பெண்களைத் தேடிப் போவார்களா என்ன? அந்தப் பெண்களுக்கு முதலாளிமார்களையும், அதிகாரிகளையும் நன்றாகவே அறிமுகமுண்டோ? அப்படியென்றால் அவர்களுக்கிடையே மிகவும் நெருக்கமான ஒரு உறவு இருக்கும். அவர்கள் அந்தப் பெண்களுக்கு முத்தம் தருவார்கள். கொஞ்சுவார்கள். அவர்களுடன் விளையாடுவார்கள். அந்தப் பெண்கள் அந்தப் பெரிய மனிதர்களின் கன்னங்களில் தங்களின் சுண்டுவிரல்களால் குத்துவார்கள்... பிறகு எதற்கு அவர்கள் சணல் கம்பெனிகளின் படிகளில் வேலை தேடி வந்து மணிக்கணக்காகக் காத்திருந்துவிட்டு திரும்பிப் போக வேண்டும்? மிளகு தொழிற்சாலைகளில் அவர்கள் ஏன் வேலை தேடிப்போய் நிற்க வேண்டும்?

இப்படிப் பல விஷயங்களையும் யோசித்து உட்கார்ந்திருக்கும் போது என்னை மறந்து தூங்கிவிட்டேன். திடீரென்று நான் சிலிர்த்துப்போய் கண்விழித்தேன். யாரும் வரவில்லை. எனக்கு அந்தப் பெண்ணின் நினைவு வந்தது. கள்ளுக்கடையில் அந்தப் பெண் எனக்காகக் காத்திருந்து வெறுப்படைந்து போயிருப்பாள். நாளைக்குப் போய் கட்டாயம் அவளைப் பார்க்க வேண்டும்.

விளக்கு மரத்திலிருக்கும் மணி பன்னிரெண்டு, ஒன்று, இரண்டு- இப்படி அடித்துக் கொண்டே இருந்தது. அந்த அறையை நோக்கி என் பார்வை சென்றது. உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.


இப்போது அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும்?

இந்த இரவில் வசதி படைத்த முதலாளிமார்களுடன் இருந்து விட்டு, நாளைக் காலையிலிருந்து மிளகு தொழிற்சாலையில் வேலை!

நான் கேட் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். வராந்தாவில் அவளை அழைத்துக் கொண்டு வந்த மனிதன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழிந்த பிறகு, கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கதவு திறந்தது. வராந்தாவில் படுத்துக் கிடந்த அந்த மனிதன் எழுந்தான். நான் வண்டியை கேட்டிற்குள் கொண்டு சென்றேன். எல்லா விஷயங்களும் இயந்திரகதியில் நடந்தன.

வராந்தாவில் படுத்திருந்த மனிதன் அறைக்குள் சென்றான்.

நான் அறைக்குள் பார்வையைச் செலுத்தினேன். யார் அந்தப் பெரிய மனிதர் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆள் நடந்து போவது கதவு வழியாக எனக்குத் தெரிந்தது. குன்னும்புரத்து முதலாளியின் மகன். பேபிக்குட்டி என்றும் சின்ன முதலாளி என்றும் அவரை அழைப்பார்கள். நான் உள்ளே பார்த்த ஆள் அவர்தான்.

வராந்தாவில் படுத்திருந்த மனிதன் முன்னே நடக்க, அவள் பின்னால் நடந்து வந்தாள். அவளை நான் பார்த்தேன். அவளை இதற்கு முன்பும் நான் பார்த்திருக்கிறேன்.  சேட் ஒருவருக்குச் சொந்தமான மிளகு தொழிற்சாலையில் அவளை நான் பார்த்ததாக ஞாபகம். அங்குதான் அவளுக்கு வேலையாக இருக்க வேண்டும். நல்ல அடர்த்தியான கூந்தலையும் சிவந்த உதடுகளையும் கொண்ட ஒரு இளம்பெண் அவள்.

அவள் வண்டியில் ஏறினாள். அந்த மனிதன் வண்டிக்கான கூலியைத் தந்தான். நான் எண்ணிப் பார்க்க முயன்றபோது, அவன் என்னை அவசரப்படுத்தினான். துணியைக் கீழே இறக்கி மூட வேண்டுமா என்று நான் கேட்டேன். சாலையில் யாரும் இருக்க மாட்டார்களென்றும், அதனால் அது தேவையில்லையென்றும் இரண்டுபேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

அவன் கேட்டான்: "நான் வரணுமா?"

"வேண்டாம்."

நான் வண்டியை இழுத்தேன்.

எனக்கு அவளுடன் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால், நான் அவளுடன் எதைப் பற்றிப் பேசுவது? பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. பேசாமல் வெறுமனே போவதற்கும் என்னால் முடியவில்லை. இந்தநிலை எனக்கு எதனால் வந்தது?

நான் சொன்னேன்:

"எனக்கு கூலி ரொம்பவும் குறைவு."

அவள் சொன்னாள்.

"அந்த ஆள்கிட்ட இருந்து ஒழுங்கா பேசி காசு வாங்கியிருக்க வேண்டியதுதானே! இது கூடவா வண்டி இழுக்கிற ஆளுக்குத் தெரியல. கறாரா பேசியிருந்தா நல்ல காசு கிடைச்சிருக்கும்!"

"நான் அவர் கிட்ட கூலி பேசி, அவர் எனக்குத் தந்தாலும், உங்களையும் உட்கார வச்சுல்ல நான் வண்டியை இழுத்திருக்கேன்!" அவள் கன்னத்தில் அடித்ததைப் போல் அதிர்ச்சியடைந்து கேட்டாள்:

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

அவள் அப்படிச் சொன்னதும், நான் சொன்னேன்:

"இப்படிப் பேசுறது சரியா?"

அவள் சொன்னாள்:

"தேவையில்லாம ஏன் என்கிட்ட வம்புக்கு வரணும்?" என்றாள்.

நான் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

வண்டி அந்த கேட்டை அடைந்தது. அவள் வண்டியை விட்டு கீழே இறங்கினாள். வீடு வரை கொண்டு வந்து விட வேண்டுமா என்று அவளைப் பார்த்து கேட்டேன். தேவையில்லை என்று அவள் சொன்னாள். அவள் தன் கையிலிருந்த ஒரு பேப்பர் பொட்டலத்தைப் பிரித்து சக்கரத்தை எடுத்து நீட்டினாள். நான் வாங்கவில்லை.

"எனக்குத் தேவையில்ல..."

"அப்படின்னா வேண்டாம்."

அவள் நுழைந்த வீட்டை நான் தெரிந்து கொண்டேன்.

8

றுநாள் நான் சாக்கோ அண்ணனைப் பார்த்தேன். அவர் கேட்டார்: "நீ கொடுத்த பணம் இன்னைக்கு வேணுமா?"

"கையில இல்லைன்னா வேண்டாம்."

"இன்னைக்குக் கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு."

எனக்கு அப்படியொன்றும் அது தேவையில்லைதான். ஒரு வகையில் நான் மனதில் நினைத்திருந்த தொகை கைகூடி வருவது மாதிரி இருந்தது. நான் முதல் நாள் நடந்த கதையை சாக்கோ அண்ணனிடம் கூறவில்லை. விருந்தினர் மாளிகைக்கு அருகில் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினால், நல்ல சவாரி கிடைக்கும் என்ற விஷயத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்று நான் நினைத்ததே காரணம். அங்கு போய் வண்டியை நிறுத்தினால் நிச்சயம் நல்ல பணம் கிடைக்கும் என்பது உண்மைதானே!

சாக்கோ அண்ணன் சொன்னார்,

கொஞ்ச நாட்களாகவே நீ நல்லா வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன்னு தோணுதடா..."

நான் சொன்னேன்:

"ஏதோ சவாரி நல்லா கிடைச்சிக்கிட்டு இருக்கு."

"ஆனா, தொடர்ந்து இப்படி ஓட்டிக்கிட்டு இருந்தா, நீ ஒரேயடியா படுத்திடுவ. ஆளே பாதியா ஆயிட்டேடா."

"சவாரி கிடைக்கிறப்போ வேண்டாம்னு நான் எப்டி ஒதுங்கி இருக்க முடியும் சாக்கோ அண்ணே?"

நான் சொல்வது உண்மைதான் என்பதை சாக்கோ அண்ணனும் ஒப்புக் கொண்டார். அவர் தொடர்ந்து சொன்னார்:

"இருந்தாலும் ஒரு விஷயம்... நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கணும். இல்லாட்டி முதலுக்கே மோசமாயிடும்."

நான் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தூங்கவேயில்லை என்பதை நான் சொன்னேன். ஆனால், ஏன் எனக்கு உறக்கமே வரவில்லை என்பதை அவரிடம் சொல்லவில்லை.

சாக்கோ அண்ணன் சொன்னார்: "அப்படித் தூங்காம இருக்குறது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? பகல் முழுக்க இந்த வேகாத வெயில்ல வண்டியை இழுத்துக்கிட்டு ஓடுறது... ராத்திரி நேரத்துல தூங்குறது இல்ல... இது நல்லதா?"

"வண்டியில சாய்ஞ்சு உட்கார்ந்தா, தூக்கமே வரமாட்டேங்குதுன்னே..."- நான் சொன்னேன்.

சாக்கோ அண்ணன் சிறிது நேரம் என்னவோ யோசித்துவிட்டு சொன்னார்:

"அப்படி தூங்காம இருக்குறது சரியா வராது. நீ இப்படியே இருக்கக்கூடாது. சொந்தம்னு யாரையும் சொல்லிக்க முடியாத நிலையில இருக்கிறவன் நீ. இப்படியே வாழ்க்கை முழுக்க இருக்க முடியுமா என்ன? வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா கொஞ்சம் வெந்நீரை உடம்பு மேல ஊற்றி, எதையாவது ருசியா சாப்பிட்டு பாயில படுத்து உடம்பு அசதி போறது மாதிரி தூங்கணும். அப்படி இல்லாம இருந்தா அது நல்லதே இல்ல..."

நான் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தேன். சாக்கோ அண்ணன் கேட்டார்:

"உனக்கு ஒரு பெண்ணைக் கட்டி வச்சிடலாமாடா?"

அதுவரை நான் அந்த விஷயத்தை மனதில் நினைத்துப் பார்த்ததேயில்லை. சாக்கோ அண்ணன் என் முகத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் கேள்வியும் அதோடு சேர்ந்த அவரின் பார்வையும் என் உடம்புக்குள் நுழைந்து என்னை என்னவோ செய்தது. இப்போதுகூட அவரின் அந்தக் கேள்வியையும் பார்வையையும் என்னால் மறக்கவே முடியவில்லை. இப்போதும் அவரின் அந்தக் கேள்வி என்னுடைய காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது.


ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பதைப் பற்றி நான் ஒருநாள் கூட சிந்தித்துப் பார்த்தது இல்லை. இந்த விஷயத்தைப் பற்றி மனதில் எண்ணிப் பார்க்கும் அளவிற்கு எனக்கு நேரம் இருக்கிறதா என்ன? ஒரு கணவனாக இருப்பது எப்படி என்பதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அதை இதுவரை நான் எங்கும் பார்த்ததும் இல்லை. ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அதையும் நான் எங்கும் பார்த்ததுஇல்லை. ஒரு கணவனின் கடமைகள் என்னென்ன என்பது தெரியாமல், ஒரு மனைவியின் கடமைகள் என்னென்ன எனபது தெரியாமல் நான் எப்படித் திருமணம் செய்து கொள்வது, இருந்தாலும் இரத்தமும், சதையும் எலும்பும் உள்ள மனிதனாக நான் இருப்பதால், ஒரு பெண் எனக்கென்று கிடைத்தால் நன்றாகத்தான் இருக்குமென்று எண்ணிக் கொண்டேன். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை ஒன்று மட்டுமே எனக்கு இருக்கும் தகுதி. அதைத் தாண்டி வேறு ஏதாவது தகுதிகள் வேண்டுமா என்ன?

சாக்கோ அண்ணன் சற்று முன் பார்த்ததைப் போலவே என்னை உற்று நோக்கியவாறு கேட்டார்:

"என்னடா, ஒரு பெண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?"

அவர் இந்த விஷயத்தைப் பெரிதாக நினைக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர் தொடர்ந்து சொன்னார்:

"டேய், நீ தொழில் விஷயமா வெளியே வந்துட்டேன்னு வச்சுக்கோ, நீ வெளியே கிளம்புறதைப் பார்த்துக்கிட்டே ஒருத்தி நின்னிருப்பா. அவள் படிவரை உன் கூட வருவா. உனக்கும் மனசுல நினைச்சுப் பார்க்குறதுக்கு ஒருத்தி இருப்பா. அப்படிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும்ன்ற? இப்ப இருக்குறதைப் போல பீடி குடிச்சிக்கிட்டு, தேநீர் குடிச்சிக்கிட்டு கையில இருக்கிற காசை முழுசா செலவழிச்சிக்கிட்டு... அப்படியொரு வாழ்க்கை வந்தபிறகு நிச்சயமா நீ இதுமாதிரி இருக்கமாட்டே. அது மட்டுமல்ல நீ ராத்திரி எவ்வளவு நேரம் கழிச்சு வீட்டுக்குப் போனாலும், ரெண்டு கண்கள் உன்னை எதிர்பார்த்து விளக்கை எரிய வச்சிக்கிட்டு காத்திருக்கும்..."

சாக்கோ அண்ணன் திருமணம் முடிந்தபிறகு உள்ள விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். திருமணம் செய்வதைப் பற்றியுள்ள விஷயங்களை அல்ல. இருந்தாலும், அவற்றைக் கேட்க எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது. ஒரு கணவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நானும் தெரிந்து கொள்ள வேண்டுமே! சாக்கோ அண்ணன் தொடர்ந்து சொன்னார்:

"காலாகாலத்துல நாம கல்யாணம் பண்ணிக்கணும். எவ்வளவு காலம் நாம உயிரோட இருப்போம்னு நம்மால சொல்ல முடியாது. வாழப்போறதே கொஞ்ச காலத்துக்குத்தான். திடீர்னு ஒருநாள் நமக்கு உடம்புக்கு முடியாம போயிடும். கல்யாணம் பண்ணி நமக்குன்னு குழந்தைங்க இருந்தாத்தான் அந்த நேரத்துல குடிக்கிறதுக்கு கொஞ்சம் தண்ணியாவது கிடைக்கும்."

அவர் சொன்னது ஒருவிதத்தில் சரிதான். என்னப் பார்த்து சாக்கோ அண்ணன் கேட்டார்:

"என்னடா ஒண்ணும் பேசாம இருக்கே?"

"நான் என்ன சொல்லணும்?"

"ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சிக்கோ. நான் சொல்றதுதான் உண்மை. பிறகு... இன்னொரு விஷயம்... பொறுப்புனனு ஒண்ணு இருந்தாத்தான் மனிதனுக்கு வேலை செய்யணும்ன்ற எண்ணமே வரும்."

நான் கேட்டேன்: "பெண் எங்கே இருக்கா சாக்கோ அண்ணே?"

நான் இப்படிக் கேட்டதைக் கேட்ட சாக்கோ அண்ணன் விழுந்து விழுந்து சிரித்தார்.

"பெண் எங்கே இருக்கான்னு கேக்குறியா? என் பிள்ளையே, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? டேய், இந்த உலகத்திலேயே ஆண்களை விட பெண்கள்தான் அதிகம். உனக்கு எத்தனை பெண்கள் வேணும்?"

"எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னா, நான் கல்யாணம் பண்ணின பெண்ணைக் கொண்டு போய் வைக்கிறதுக்கு என்கிட்ட வீடா இருக்கு சாக்கோ அண்ணே?"

"நீ கட்டப்போற பொண்ணு என்ன வீடு இல்லாதவளா? அப்படிப்பட்ட ஒரு பொண்ணையா நாம பார்ப்போம்? வீடும் தாயும், தகப்பனும் அண்ணன், தம்பிமார்களும் இருக்கிறமாதிரியான ஒரு பொண்ணைத்தானே நாம பார்ப்போம்! அதுக்குப் பிறகு ஒரு வீடு தயார் பண்ணணும். அந்த வீட்டுக்கு குடி புகணும். இதுதான் நாம செய்ய வேண்டியது. அதற்கான வழிகளை நாம செய்யணும்டா குழந்தை..."

தொடர்ந்து சாக்கோ அண்ணன் ஒவ்வொரு விஷயங்களாக விளக்கினார். முதலில் ஒரு வண்டியைச் சொந்தத்தில் வாங்க வேண்டும். அதற்குப் பிறகு கையில் கொஞ்சம் பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டும். பெண்ணொருத்தியைத் திருமணம் செய்ய வேண்டும். அவள் பக்கமிருந்து கொஞ்சம் பணம் கிடைக்கும். எல்லாவற்றையும் வைத்து ஒரு வீடு வாங்க வேண்டும். அதற்குப் பிறகு அங்கிருந்து வாழ்க்கையைத் தொடர வேண்டும்.

அன்று பகல் முழுக்க வண்டிய இழுத்து ஓடிக் கொண்டிருக்கும்போது கள்ளுக்கடையும் வீடும் மாறி மாறி என்னுடைய மனதில் வலம் வந்து கொண்டேயிருந்தன.

அன்று சாயங்காலம் நான் கள்ளுக்கடைக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்தேன். பதினைந்து அல்ல; இருபது ரூபாய் என் கைகளில் இருந்தது. அன்றும் விருந்தினர் மாளிகை முன்னால் வண்டியுடன் காத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல சவாரி கிடைக்கும் என்று என் மனதிற்குத் தோன்றியது. இருந்தாலும் கள்ளுக் கடைக்குப் போக வேண்டும் என்ற ஆசைதான் இறுதியில் வெற்றி பெற்றது. அங்கு சென்ற பிறகு எப்படியெல்லாம் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதைப் பற்றி முன்கூட்டியே ஒரு தீர்மானம் செய்து வைத்திருந்தேன். இந்த முறை நான் நிச்சயம் முட்டாளாக நடந்து கொள்ள மாட்டேன் என்பது மட்டும் நிச்சயம்.

நான் போகும்போது கள்ளுக்கடையில் ஆளே இல்லை. அவள் வாசலில் நின்றிருந்தாள். நான் உள்ளே நுழைந்தேன். அவள் கேட்டாள்:

"என்ன, ரூபா கொண்டு வந்தியா?"

நான் அமைதியாகச் சொன்னேன்.

"ம்..."

"அப்படின்னா அந்த பெஞ்ச்ல உட்காரு. நான் கள்ளு கொண்டு வர்றேன்."

அவள் போய் கள்ளு கொண்டு வந்தாள். உண்மையில் எனக்கு கள்ளு குடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அவள் கொண்டு வந்த கள்ளை மேஜைமேல் வைத்தாள். ஒரு குவளையில் கள்ளை ஊற்றி என் உதட்டுக்கு அருகில் அதைக் கொண்டு வந்தாள். நான் அதைக் குடித்தேன்.

அவள் புத்திசாலித்தனமாக சொன்னாள்:

"நாம கடையை அடைச்சிட்டு என் வீட்டுக்குப் போகலாம். இங்கே ஒரு வசதியுமில்ல..."

அப்படியென்றால் அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

"என் வீடு புலயன்வழியில இருக்கு. கள்ளு குடிச்சு முடிச்சிட்டு நீ மெதுவா முன்னால் நட நான் காண்ட்ராக்டர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பின்னாடி வர்றேன்."

நான் கள்ளுக்கான காசை எடுத்து நீட்டினேன்.


"வேண்டாம். அங்கே வந்து தனியா என்கிட்ட தந்தா போதும்."

நான் வெளியில் இறங்கி மெதுவாக நடந்தேன். அன்று பகல் முழுக்க என்னுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு விஷயமும் கள்ளு உள்ளே போனவுடன் ஒரு தெளிவிற்கு வந்த மாதிரி தெரிந்தது. அவளுக் கென்று ஒரு வீடு இருக்கிறது. எனக்குத் திருமணம் செய்ய ஒரு பெண் வேண்டும். வீடு சொந்தத்தில் வரும்வரை ஒரு வீடு எனக்குத் தேவை. எனக்கு ஒரே ஒரு பெண்தான் இதுவரை சம்மதம் தந்திருக்கிறாள். அது இவள்தான். இனியொரு பெண் என்னைப் பார்த்து சம்மதிப்பாள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? சாக்கோ அண்ணன் சொன்ன அந்த வீட்டை நான் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தேன். அங்கு மண்ணெண்ணெய் விளக்கை எரிய வைத்துக் கொண்டு அவள் எனக்காக காத்திருக்கிறாள். கையில் கிடைக்கும் காசு ஒவ்வொன்றையும் நான் அவள் கையில் கொண்டு போய் கொடுக்கிறேன்... ஒரு குழந்தையைக் கையில் தூக்கிக் கொண்டு நான் நடக்கிறேன்... அந்தக் குழந்தையை நான் கொஞ்சுகிறேன். விளையாட்டு காட்டுகிறேன். சிரிக்க வைக்கிறேன். பிறகு அதை அவள் கையில் தருகிறேன். அந்தக் குழந்தை என்னை 'அண்ணா' என்றல்ல; 'அப்பா' என்று அழைக்கிறது.

இப்படி என் கற்பனை நீண்டு கொண்டிருந்தது.

அவள் எனக்கு மிகவும் நெருங்கி வந்தாள். ஆள் நடமாட்டமே இல்லாத ஒற்றையடிப்பாதை வழியாக நாங்கள் நடந்தோம். அவள் முன்னால் நடக்க, சிறிது தள்ளி பின்னால் நான் நடந்தேன்.

முதல்நாள் நான் போன அதே இடம்தான். அந்தப் பகுதியில் நாங்கள் நுழைந்தவுடன், இங்குமங்குமாய் நின்றிருந்த நாய்கள் கூட்டமாக குரைக்க ஆரம்பித்தன. வீடுகளில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு வீட்டின் முன்னால் ஒரு பெண் அமர்ந்து நெருப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு வீட்டின் முன்னால் போய் அவள் நின்றாள். நான் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தேன். அடுத்த நிமிடம் அவள் உள்ளே நுழைந்தாள். அவளுக்குப் பின்னால் நானும்.

வீட்டிற்குள் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஒரு கிழவி அந்த விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருந்தாள். அவள் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள்.

என்னுடைய உடல் 'கிடுகிடு'வென நடுங்க ஆரம்பித்தது. கிழவி அமர்ந்திருந்த இடத்தைத் தாண்டி ஒரு அறை இருந்தது. அதற்குள் அவள் நுழைந்தாள். ஒரு பாயை எடுத்து தட்டி கீழே விரித்து, அங்கு வரும்படி என்னை அவள் அழைத்தாள். என்னை அப்போதும் அந்தக் கிழவி உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள். நான் அந்த அறைக்குள் நுழைந்தேன். என்னை பாயில் உட்கார வைத்துவிட்டு அவள் வெளியே வந்தாள்.

அப்போதும் என் உடம்பில் இருந்த நடுக்கம் சிறிதும் குறையவில்லை. சில நொடிகளுக்குப் பிறகு அவள் திரும்பி வந்தாள். நான் நடுங்கிக் கொண்டிருப்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

"பயப்படாதே. எதற்கு பயப்படணும்? இங்கே யாரும் வரமாட்டாங்க."

நான் வெறுமனே பதில் சொன்னேன்: "நான் பயப்படல..."

அவள் கேட்டாள்: "சோறு சாப்பிடுறியா?"

அவள் கேட்ட அந்தக் கேள்வியை கிழவி கேட்டிருப்பாள் என்று நினைக்கிறேன். காரணம்- அடுத்த கேள்வி அந்தக் கிழவியிடமிருந்து வந்தது. கிழவி கேட்டாள்:

"என்னடி இது?"

அவள் கிழவியின் அருகில் நடந்து சென்று விளக்கைத் தன் கையில் எடுத்தாள். தொடர்ந்து கேட்டாள்:

"என்ன?"

கிழவி சொன்னாள்:

"நான் என்ன கேக்குறேன்னா, நீ அவனைச் சாப்பிடக் கூப்பிடுற... மரியாதை கொடுத்து உட்கார வைக்கிற... அதுக்கான காரணம் என்னன்னு தெரியாம நான் கேக்குறேன்..."

அவள் கோபத்துடன் சொன்னாள்:

"உங்க வேலையை நீங்க பாருங்க..."

கிழவியும் கோபத்துடன் சொன்னாள்:

"ஒரு வேளை நீ அவனை உன் புருஷனாக்கிக்கிட்டியா என்ன?"

அதற்கு அவள் எந்த பதிலும் கூறவில்லை. அவர்களுக்குள் நடந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நான் சொன்னேன்:

"எனக்கு சோறு வேண்டாம்."

அவள் சொன்னாள்:

"அப்படின்னா நான் போயி கொஞ்சம் சோறு சாப்பிட்டுட்டு வந்திடுறேன்."

அவள் அடுப்பிற்கருகில் சென்றாள். அந்தக் கிழவியின் வார்த்தைகள் என் மனதில் திரும்பத்திரும்ப வலம் வந்து கொண்டிருந்தது. எனக்கு அந்தக் கிழவி அப்படிச் சொன்னது ஒரு மாதிரி இருந்தது. அவள் ஒருவேளை இந்த விஷயத்திற்கு சம்மதிக்கமாட்டாளோ? ஆனால், அந்தப் பெண் ஒரு தைரியசாலியாயிற்றே!

அவள் சாப்பிட்டு முடித்து வெளியே சென்றாள். பக்கத்து வீட்டு பெண்ணிடம் குசலம் விசாரித்தாள்:

"கௌரி அக்கா, சாப்பாடு ஆச்சா?"

"சாப்பிட்டாச்சு. நீ இப்பத்தான் கடையில இருந்து வர்றியா?"

"ஆமா..."

அடுத்த சில நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சணல் தொழிற்சாலையில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு அன்று மிகவும் சிரமப்பட்டு வேலை கிடைத்ததாம். அவர்களின் பேச்சை என்னால் பொறுமையாக கேட்க முடியவில்லை.

அநத்க் கிழவி உட்கார்ந்த இடத்திலேயே சுருண்டு படுத்துவிட்டாள்.

அந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் எந்த விதத்தில் பார்த்தாலும் ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. நான்கு பக்கங்களிலும் சுவர்களும் மேலே கூரையும் உள்ள ஒரு வீட்டின் உட்பக்கம் எப்படி இருக்கும் என்பதை இதுவரை நான் பார்த்ததில்லை. அன்றுதான் அப்படிப்பட்ட ஒரு வீட்டிற்குள்ளேயே முதல் தடவையாக நான் இருக்கிறேன். அதில் இருப்பது ஒரு விதத்தில் சுகமாகவே இருந்தது. அங்கேயே படுத்து தூங்கினால் பொழுது விடிந்த பிறகு கூட நிச்சயம் நான் படுத்திருக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்.

எனக்காக ஒரு பாயை அவள் விரித்தாள். சோறு சாப்பிடுகிறாயா என்று ஒருத்தி என்னைப் பார்த்துக் கேட்கிறாள். அவள் கேட்டவுடன் நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லியிருந்தால் அந்தச் சாப்பாட்டு ருசியையும் நான் எப்படி என்று பார்த்திருக்கலாம். எல்லாம் அந்தக் கிழவியால் வீணாகி விட்டது.

அந்த வீடு என்னுடைய வீடாக இருந்தால்... அவள் என்னுடைய மனைவியாக இருப்பாளோ?

எதற்காக நான் அந்த இருபது ரூபாயைச் சம்பாதித்தேனா, அது எனக்கு ஒரு பெரிய விஷயமல்ல. அதைப் பற்றி இப்போது நான் நினைக்கவும் இல்லை. அவளிடம் நான் கேட்க நினைப்பதும் அதுவல்ல.

அவள் என்னருகில் வந்து உட்கார்ந்து தன்னுடைய கூந்தலை அவிழ்த்துக் கட்டினாள். தொடர்ந்து 'ஸ்... கசகசன்னு இருக்கு' என்றவாறு தன்னுடைய ப்ளவ்ஸைக் கழற்றினாள். அடுத்த நிமிடம் எழுந்து நின்று தான் அணிந்திருந்த புடவையைக் கழற்றி கீழே போட்டாள்.


முன்பு அவள் என்னுடைய நரம்புகளில் மின்சாரம் பாயச் செய்திருக்கிறாள். அவளின் பின்பக்கத்தைப் பார்த்து அடக்க முடியாத அளவிற்கு நான் உணர்ச்சி வசப்பட்டு நின்றிருக்கிறேன். பெஞ்சின் மேல் கையை ஊன்றிக் கொண்டு எனக்கு முன்னால் அவள் ஒயிலாக நின்றபோது, நான் அவளின் ப்ளவ்ஸுக்குள் பார்வையைச் செலுத்தி மெய்மறந்து அமர்ந்திருக்கிறேன். இப்போது? எனக்கே தெரியவில்லை.

ஒருவேளை அவள் தன்னுடைய ப்ளவ்ஸைக் கழற்றியதும் புடவையை அவிழ்த்து எறிந்ததும் என்னை உணர்ச்சி வசப்படச் செய்வதற்காக இருக்கலாம்.

எனக்கு மிகவும் நெருக்கமாக அவள் வந்து அமர்ந்தாள். தொடர்ந்து மெதுவாக சிரித்தபடி அவள் கேட்டாள்:

"ரூபாய் எங்கே?"

நான் என்னுடைய பெல்ட்டின் உறைக்குள்ளிருந்து இருந்த ரூபாய் முழுவதையும் எடுத்து அவள் கையில் தந்தேன்.

"இதுல எவ்வளவு இருக்கு?"

"இருபது..."

"இருபதா..."

அவள் எண்ணிப் பார்த்தாள். சரியாக இருந்தது. அடுத்த நிமிடம் அவள் என் கழுத்தில் தன்னுடைய கைகளால் சுற்றியவாறு எனக்கு ஒரு முத்தம் தந்தாள்.

அவள் அந்த விளக்கை வாயால் ஊதி அணைத்தாள்.

ஒரு பாயில் நானும் அவளும் படுத்திருந்தோம். அவள் என் உடம்பை தன் விரல்களால் தடவினாள். என்னுடைய முகத்துடன் தன்முகத்தைச் சேர்த்தவாறு அவள் கேட்டாள்:

"என்ன இது...?"

"ம்... என்ன?"

"இது ஒரு பெரிய விஷயம்தான். பயப்படாதே!"

சிறிது நேரம் கழித்து அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

"ம்... பேரு என்ன?"

அவளின் அந்தக் கேள்வி எனக்குள் எங்கேயோ சென்றது. இப்படியொரு கேள்வியை இதற்கு முன்பு என்னிடம் யாரும் கேட்டதில்லை. அப்படியே யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும், என்னுடைய பெயரைச் சொல்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இருந்திருக்காது. முன்பு ஹோட்டலுக்குப் பின்னாலிருந்தவாறு அந்த கறுத்துத் தடித்துப் போயிருந்த ஆள் பெயர் சொல்லி என்னை அழைத்ததை மனதில் இப்போதும் நினைத்துப் பார்த்தேன். அந்தக் குரல் இப்போது கூட என் காதுகளுக்குள் முழங்கிக் கொண்டே இருந்தது.

"நாய்க்குட்டி!"

அந்த ஆள் வேறு ஏதாவது பெயர் சொல்லி அழைத்திருந்தால்...! உண்மையாகவே நான் நாயின் மகனாக இருந்தாலும், எனக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை என்பதே உண்மை.

என்னுடைய பெயர் நாய்க்குட்டி என்று சொன்னால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? நாயின் மகனைத் திருமணம் செய்வதற்கு எந்தப் பெண் சம்மதிப்பாள்? நான் அந்தக்கதையை முழுமையாக அவளிடம் சொல்ல வேண்டுமா என்ன? அவ்வளவுதான்-  அதற்குப் பிறகு அவள் எந்தக் காலத்திலும் என்னுடைய மனைவியாக வர ஒப்புக்கொள்ளவே மாட்டாள்.

நான் சொன்னேன்:

"எனக்குப் பேரே கிடையாது."

"என்ன? பேர் இல்லாம யாராவது உலகத்துல இருப்பாங்களா?"

"அது இருக்கட்டும்... உன்னோட பேர் என்ன?"

"இப்ப சொல்ல மாட்டேன்."

சில நொடிகள் அமைதி நிலவியது.

அவள் கேட்டாள்:

"ஆமா... நீ என்ன ஜாதி?"

சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன்:

"நான் எந்த ஜாதியும் இல்லை."

"நீ சொல்றது பொய்."

"இல்ல... நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?"

"என்ன?"

"நீ என் மனைவியா இருக்க முடியுமா?"

அவள் அடுத்த நிமிடம் சொன்னாள்:

"முடியாது. நீ அந்த எண்ணத்தோடதான் இங்கே வந்திருக்கியா?" அதற்குப் பிறகு வேறெதுவும் கேட்க எனக்குத் தோன்றவில்லை.

அவள் சொன்னாள்:

"எனக்கு தூக்கம் வருது."

சிறிது நேரம் சென்றதும் அவள் சொன்னாள்:

"எனக்கு கண்களை மூடிக்கணும்போல இருக்கு..."

அதற்குப் பிறகு அவள் சொன்னதற்குப் பின்னாலிருக்கும் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் சொன்னாள்:

"சொந்த வீட்டுல இருக்குறது மாதிரி இங்கே நீ ராத்திரி முழுவதும் படுத்து உறங்க முடியாது."

அந்தக் கிழவியின் குரல் அப்போது கேட்டது:

"அங்கே என்னடி? படுத்துத் தூங்கிட்டானா? காலைப் பிடிச்சு இழுத்து வெளியே போடு."

நான் எழுந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் சொன்னாள்:

"என்ன கிளம்பிட்டியா? இது வீணாயிடுச்சே!"

நான் எழுந்து கிழவியைத்தாண்டி வெளியேறினேன்.

9

ன்னுடைய வேலை பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் என்று காலப்போக்கில் ஆகிவிட்டது. பகலில் இந்த வேகாத வெயிலில் ஓடி ஓடி பெரிய அளவில் பிரயோஜனம் எதுவுமில்லை என்பதை நானே புரிந்து கொண்டேன். எட்டு அணா சம்பாதிப்பதற்காக நான்கு மைல்கள் வண்டியை இழுத்துக் கொண்டு போக வேண்டும். உண்மையிலேயே அது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். பகல் நேரத்தில் நான் ஏதாவது நிழல் இருக்கும் இடமாகப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு தூங்குவேன். இரவில் வண்டியை ஓட்டுவது என்பது ஒரு சுகமான அனுபவம். நான் நினைத்திருப்பதற்கும் மேலாக சில நேரங்களில் நமக்குக் காசு கிடைக்கும். வெயிலின் தொந்தரவு இருக்காது. பெரிய அளவில் கஷ்டங்கள் எதுவும் இருக்காது. ஆனால், வண்டி ஓட்ட ஆரம்பித்தவுடன், நம்முடைய கையில் காசு வந்து சேர்ந்து விடும் என்று கூறிவிடுவதற்கில்லை. வெறுமனே ரிக்ஷா ஓட்டுவதால் மட்டும் அந்தக் காசு நமக்கு கிடைத்துவிடாது. அதற்கு சில தகிடுதத்த வேலைகள் எல்லாம் நாம் செய்தாக வேண்டும். இந்த விஷயத்தில் நல்ல பயிற்சி ஒரு ஆளுக்கு இருக்க வேண்டும். சில இடங்களில் மிகவும் ரகசியமாக வண்டியைக் கொண்டு போய் நிறுத்தவேண்டும். அதற்குப் பிறகு சவாரி நம்மைத்தேடி வரும். எல்லா மனிதர்களாலும் முடியக்கூடிய காரியமில்லை இது.

ஆலப்புழையில் இருக்கும் பெரும்பாலான முதலாளிமார்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். "நீதான் நாய்க்குட்டியாடா?" என்று சில முதலாளிமார்கள் அவர்களாகவே என்னிடம் வந்து பேசுவார்கள். ஒருநாள் இதேமாதிரிதான் ஒரு சம்பவம் நடைபெற்றது. நான் 'ஆமாம்' என்று சொன்னேன். மாலை நேரம் வந்ததும் அந்த முதலாளி தன்னுடைய தொழிற்சாலையின் வாசலில் வந்து நிற்கும்படி சொன்னார். நானும் அவர் சொல்லியபடி போய் நின்றேன். உண்மையிலேயே அன்று இரவு எனக்கு நல்ல வருமானம்தான் என்று சொல்ல வேண்டும். முதலாளிமார்கள் மட்டுமல்ல, பெரிய பெரிய அதிகாரிகளும் பதவியில் இருப்பவர்களும் கூட எனக்கு நல்ல நெருக்கமான தொடர்புடையவர்கள்தான். வழியில் என்னைப் பார்க்கும்போது அவர்கள் புன்னகைப்பார்கள்.

ஒருநாள் குன்னுப்புறத்து பெரிய முதலாளி என்னை அழைத்து ஒரு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அதன்படி புலயன்வழியில் இருக்கும் வீட்டிலிருந்து முதலாளிக்கு ஏற்கனவே பழக்கமான அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் கடைவீதியில் உள்ள முதலாளிக்குச் சொந்தமான காலியாகக் கிடக்கும் பங்களாவில் விடவேண்டும். அப்படி நான் கொண்டுபோகும் பெண் வேறு யாருமல்ல.


அன்று நான் ஏற்றிக் கொண்டு போன அதே பெண்தான். பிறகு எத்தனையோ தடவைகள் அதே பெண்ணை நான் பெரிய முதலாளிக்காவும், சின்ன முதலாளிக்காகவும் கொண்டு சென்றிருக்கிறேன். பெரிய முதலாளி சொல்லும்போது கடைவீதியில் இருக்கும் பங்களாவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

அவள் பெயர் கொச்சு மரியம். பெரிய முதலாளி அவளைத் தனக்கென வைத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் நான் கொச்சுமரியத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டு போனேன். யாருக்காக கொண்டு போனேன் தெரியுமா? ஒரு போலீஸ்காரருக்குத்தான். அந்தப் போலீஸ்காரர் என்னை அழைத்து என்னைப் பற்றி விசாரித்தார். யாரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

இப்படி எவ்வளவு எஜமான்மார்களை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? எவ்வளவோ முதலாளிமார்களை நான் இதன் மூலம் தெரிந்து வைத்திருக்கிறேன்!

மிளகு வியாபாரம் ஜரூராக நடக்கும் காலத்தில் எனக்கு நல்ல வருமானம் என்பதென்னவோ உண்மை. பாலாவில் இருந்தும் கோட்டயத்தில் இருந்தும் காரப்பள்ளியிலிருந்தும் பெரிய பெரிய முதலாளிகளெல்லாம் இங்கு வருவார்கள். இருபது மூடை, இருபத்தைந்து மூடை என்று மிளகை விற்பதற்காகக் கொண்டு வருவார்கள். மிளகு மொத்த வியாபாரிகள் மட்டும்தான் இங்கு வருவார்கள் என்றில்லை. தங்களின் சொந்த தோட்டத்திலிருந்து மிளகைக் கொண்டு வருகிறவர்களும்கூட வருவார்கள். அப்படி அவர்கள் இங்கு வரும் நேரத்தில் எனக்குக் கொண்டாட்டம்தான். ஒவ்வொரு நாளும் எனக்கு எவ்வளவு கிடைக்கும்  என்பதைப் பற்றி உறுதியாக சொல்லவே முடியாது. அவர்கள் எல்லாமே அப்படித்தான். பணத்தைப் பெரிதாக நினைக்கவே மாட்டார்கள். அவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் நம்முடைய ஆலப்புழையில் இருக்கும் முதலாளிமார்கள் பிச்சைக்காரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்றிரண்டு பேர் திருமலைப் பகுதியில் செலவுக்குப் பணம் கொடுத்து பெண்களைத் தங்க வைத்திருந்தார்கள். அவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு விட வேண்டும். கள்ளோ, விஸ்கியோ வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். இதை நான் செய்தால் போதும். சில நேரங்களில் நான் செய்யும் வேலைக்கு கூலியாக ஐந்து ரூபாய் கிடைக்கும். சில நேரங்களில் பத்து ரூபாய் கிடைக்கும். ஆனால், உரிய நேரம் பார்த்து அவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம். அந்தப் பெண்களுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அவர்களை, முதலாளிமார்கள் தங்க வைத்திருந்தாலும் அந்தப் பெண்கள் அவர்களிடம் செல்லும்போது தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தைக் கறந்துவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் சொந்தமாக வீடே கட்டிவிட்டாள். ஒருவருடம் பாலாவைச் சேர்ந்த முதலாளி அவளிடம் போய் வந்து கொண்டிருந்தான். அதற்குப் பிறகு அந்த ஆள் வரவேயில்லை. வேறெங்கும் பார்க்க முடியவில்லை. அனேகமாக அவர் செத்துப் போயிருக்கலாம்.

அந்தப் பெண்களுக்கும் எனக்குமிடையே ஒருவித உடன்பாடு இருக்கும். அப்படி இருந்தால்தான் எல்லாவிஷயங்களும் சரியாக வரும். முதலாளி வராத நாட்களில் வேறு யாராவது ஆட்களைக் கொண்டுபோய் நான் விடுவேன். சில நேரங்களில் பாலாவைச் சேர்ந்த ஒரு ஆள் அவளிடமிருந்து போய்விட்டால், அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு ஆளை நான் கொண்டு போய் அவர்களிடம் விட வேண்டும். அப்படி பலமுறை நடந்திருக்கவும் செய்கிறது.

மிளகு வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும் காலத்தில் மிளகு விற்றப் பணம் ஏராளமாக கையில் வைத்திருந்தால், வியாபாரி தன் பையிலிருந்து தாராளமாக பணத்தை வெளியே எடுப்பான். அவனை ஏதாவது ஒரு பெண்ணிடம் நான் அழைத்துச் செல்ல வேண்டும். ஆளிசேரியிலும், தும்போலியிலும் இருக்கிற பெண்கள் என்னைப் பார்த்துவிட்டால், எனக்கு ஒரே தொந்தரவுதான். அவர்கள் தங்கள்  பிரச்சினைகளைச் சொல்லி புலம்பத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், இந்தப் பெண்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அந்த முதலாளிமார்கள் அவர்களுக்கு வேண்டிய அளவு பணத்தை வாரிக் கொடுப்பார்கள். இருந்தாலும், அவர்கள் யாருக்கும் தெரியாமல் பணத்தைத் திருடுவார்கள்.

ஒருமுறை அப்படிப்பட்ட ஒரு சம்பவம் மிகப்பெரியதாகி விட்டது. போலீஸ்காரர்கள் வரை விஷயம் போய் விட்டது.

கிழக்கு திசையிலிருந்து வரும் முதலாளிகளைத் தெரிந்து வைத்திருப்பதில் இன்னொரு ஆதாயம் இருக்கிறது. நம்முடைய ஆலப்புழையில் இருக்கும் முதலாளிமார்களின் வியாபாரத்தில் அவர்களையும் இணைத்துவிட வேண்டும். இதையே மற்ற தரகர்கள் செய்தால், அவர்களுக்கு இவர்கள் கமிஷன் தரவேண்டும். நான் என்றால் அவ்வளவு தரவேண்டிய அவசியமில்லை.

இப்படித்தான் குன்னும்புறத்து முதலாளிக்கு நான் கிழக்கு திசையிலிருந்து வந்த ஒரு முதலாளியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தேன். நூற்றைம்பது மூடை மிளகு... அந்த மிளகு வியாபாரம் நடந்து முடிந்தது. மிளகைக் காயப் போட்ட போது, பெரிய அளவில் மிளகுக்கு விலை உயர்வு உண்டானது. பள்ளாத்துருத்தியில் இருக்கும் வீடும் நிலமும் அதில் கிடைத்த லாபத்தில் வாங்கியதுதான்.

அந்த நிலத்தை வாங்கிவிட்டு, முதல் தடவையாக அந்த நிலத்தில் விளைந்த தேங்காய்களைப் பறிப்பதற்காகச் சென்றபோது முதலாளி தன்னுடன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்னார்:

"டேய், நாய்க்குட்டி. நீ கொண்டு வந்த வியாபாரத்துல சம்பாதிச்ச காசுல வாங்கின இடம்டா இது..."

அதே போல் என்னை தேங்காய் தின்றதற்காக உதை தந்து வேலையிலிருந்து போகச் சொன்ன முதலாளிக்கு பாலாவிலிருந்து தேங்காய்கள் வந்து சேருமாறு செய்தேன். அப்போது தேங்காய் கிடைப்பதே படு கஷ்டமாக இருந்த காலம். அதைச் செய்ததற்காக அந்த முதலாளி எனக்குப் பத்து ரூபாய் தந்தார்.

அப்போது நான் அந்தப் பழைய கதையை அவரிடம் சொன்னேன். அதைக் கேட்டு முதலாளி விழுந்து விழுந்து சிரித்தார்.

பாலாவில் இருந்து மட்டுமல்ல, உல்லாசமாக இருந்துவிட்டுப் போகலாமென்ற சில வேளைகளில் கொச்சியிலிருந்தும் பல முதலாளிமார்கள் வருவார்கள். அவர்கள் வந்தாலும் எனக்கு நல்ல வேட்டைதான்.

ஒரு விஷயத்தை என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. இந்த முதலாளிமார்களுக்கு இரக்கம் என்பது மருந்துக்குக் கூட கிடையாது. குன்னும்புறத்து முதலாளி கொச்சு மரியத்தைக் கொண்டு வந்து வீடு எடுத்துத் தங்க வைத்தார். அவள் முதலாளியுடனும், அவருக்குத் தெரியாமல் சின்ன முதலாளியுடனும், பிறகு அவர்கள் சொல்லுகிற மற்றவர்களுடனும் மட்டுமே தொடர்பு வைத்திருந்தாள் என்ற உண்மை எனக்கு நன்றாகவே தெரியும். தனக்கென்று தனிப்பட்ட முறையில் அவள் யாரையும் வைத்துக் கொண்டதே இல்லை. சிறிது நாட்கள் கழித்து, அவர்கள் அவளை முழுமையாக மறந்து போனார்கள். பெரிய முதலாளி காண்ட்ராக்டரின் வீட்டைத் தேடியோ அல்லது வேறு எங்கேயோ போய்விட்டார்.


சின்ன முதலாளியின் வயது குறைவுதானே! சொந்தமாக பணம் சம்பாதித்து நண்பர்களுடன் சேர்ந்து அவர் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். பாவம் கொச்சு மரியம்! அவள் நேர்மையானவள். நித்தமும் அவள் பட்டினி கிடந்தாள். நான் இரண்டு மூன்று முறை இந்த விஷயத்தை முதலாளியிடம் சொன்னேன். அதனால் எந்த பிரயோஜனமும் உண்டாகவில்லை. அதற்குப் பிறகு சில ஆட்களை அவளிடம் அழைத்துக் கொண்டு சென்றேன். அப்போது அவள் கர்ப்பமாக இருந்தாள்.

அந்தக் கள்ளுக்கடைப் பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கௌரி ஒரு நாள் என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னாள். அந்தக் கள்ளுக்கடைப் பெண்ணுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று அவள் கேட்டுக் கொண்டாள். அவளுக்கு வேலை போய்விட்டதாம். மிளகு தொழிற்சாலைகளிலும் சணல் தொழிற்சாலைகளிலும் வேலை தேடி அலைந்திருக்கிறாள். ஆனால், வேலை கிடைப்பதாக இல்லை. கள்ளுக் கடைகளிலும் வேலை கிடைக்கவில்லை. அதன் விளைவு- பட்டினி கிடக்கிறாள்.

நான் கேட்டேன்:

"என்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லச் சொல்லி அவள் சொன்னாளா?"

"அவள் சொல்லல. ஏதாவது வழி பண்ணித் தர்றேன்னு அவள்கிட்ட நான் சொன்னேன்."

"அவளுக்கு உதவி செஞ்சு என்ன பிரயோஜனம்? அவள் அவ்வளவு நல்லவ இல்லியே?"

அவள் அப்படியொன்றும் மோசமானவள் இல்லை. இருந்தாலும் அவளைப் பற்றி கௌரியிடம் இப்படிச் சொன்னால்தான் சரியாக இருக்கும்.

நிலைமை, இப்படியிருக்க ஒரு முதலாளியிடமிருந்து எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. வெளியூரிலிருந்து வந்திருக்கும் ஆள்தான். வியாபாரத்தில் அந்த ஆள் இறங்கியே கொஞ்ச நாள் தான் ஆகிறது. ஒன்றுமில்லாமல் இருந்து முயற்சியால் நல்ல ஒரு வியாபாரியாக முன்னுக்கு வந்த மனிதர் அவர். அடிக்கடி அவர் என்னைத் தேடுவார். என்னைப் பற்றி மற்றவர்களிடம் விசாரிப்பார்.

அந்தக் கள்ளுக்கடைப் பெண்ணை அவரிடம் அழைத்துக் கொண்டு போவது என்று நான் முடிவெடுத்தேன்.

அவளை வண்டியில் உட்காரவைத்து இழுத்துக் கொண்டு போகும்போது நான் கேட்டேன்:

"நான் யார்னு உனக்குத் தெரியுதா?"

"தெரியல..."

"உனக்குத் தெரியாது. நீ தெரிஞ்சுக்கணும்னும் அவசியமில்ல..."

நான் மிகவும் வருத்தத்துடன் இந்த வார்த்தைகளைச் சொல்வதாக அவள் நினைத்துக் கொண்டாள்:

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

நான் சொன்னேன்:

"நீ என்னோட இருபது ரூபாயை வாங்கிட்டு என்ன விரட்டி விட்டவ. அந்த விஷயம் உனக்கு ஞாபகத்தில் இருக்கா?"

அவளுக்கு ஞாபகத்தில் இருக்கும். இல்லாமலிருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அவளுடைய வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் நடந்திருக்கும். அவள் சொன்னாள்:

"அய்யோ! அது நீங்களா?"

"ஆமா... நான்தான்."

"நான் அன்னைக்கு முடியாதுன்னு சொல்லலியே! நான் எல்லாத்துக்கும் தயாராகத்தான் இருந்தேன். ஆனா, நீங்கதான் வேணாம்னு போய்ட்டீங்க. நான் உங்களைச் சோறு சாப்பிடக்கூட அழைச்சேன்ல?"

"அன்னைக்கு நான் வந்தது உன்னை என்னோட மனைவியா ஆக்கிக்கிறதுக்கு..."

சிறிது நேரம் கழித்து எதையோ நினைவில் கொண்டு வந்த மாதிரி அவள் சொன்னாள்:

"ஆமா... நீங்க இதைப்பற்றி என்கிட்ட கேட்டீங்க."

அன்று அவள் அதற்கு சம்மதித்திருந்தால், நான் ஒருவேளை என் மனைவியாக ஆக்கிக் கொண்டிருக்கலாம். வண்டியைச் சொந்தத்தில் வாங்கியிருக்கலாம். இன்று எனக்கு ஒரு வீடும் குழந்தைகளும் இருந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் இப்படித் தேவையில்லாமல் இரவு நேரத்தில் வண்டியை இழுத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கு நேர்ந்திருக்காது. சீக்கிரம் வீட்டிற்குப் போக வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் இருந்திருப்பேன். அவள் மட்டும் அன்று சரியென்று சம்மதித்திருந்தால், என் வாழ்க்கை எந்த அளவிற்கு மாறிப்போயிருக்கும். அவளும் இப்படியெல்லாம் போக வேண்டிய அவசியமே உண்டாகியிருக்காதே!

வாழ்க்கையில் இந்த மாற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். யோசித்துக் கொண்டே வண்டியை இழுத்துக் கொண்டிருந்தேன். என்னுடன் உல்லாசமாக இருக்க முதன்முதலில் சம்மதித்த பெண் அவள். அவளை அவ்வளவு எளிதில் என்னால் மறந்துவிட முடியுமா? அவளும் இதே விஷயத்தைப் பற்றி தற்போது நினைத்துக் கொண்டிருக்கலாம்.

சிறிது நேரம் சென்றதும் அவள் சொன்னாள்:

"நாம ரெண்டு பேரும் என் வீட்டுக்குப் போவோம்."

நான் தீவிர சிந்தனையில் இருந்ததால் அவள் சொன்ன வார்த்தைகள் ஏதோ காதில் விழுந்தன, அவ்வளவுதான். அவள் வார்த்தைகள் என் மூளைக்குள் நுழையவேயில்லை. நான் வண்டியை இழுத்தவாறு போய்க் கொண்டிருந்தேன்.

இழுத்துக் கொண்டிருந்த வண்டியிலிருந்து அவள் கீழே இறங்க முயற்சித்ததைத் தொடர்ந்து, வண்டி மெதுவாக குலுங்கியது. அவள் சொன்னாள்:

"நாம என் வீட்டுக்குப் போவோம். அங்கே போக வேண்டாம்."

அவள் சொன்ன இரண்டாவது வாக்கியம் என் காதில் தெளிவாக விழுந்தது. என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் வண்டியை நிறுத்தினேன். அவள் வண்டியை விட்டுக் கீழே இறங்கினாள். நான் கேட்டேன்:

"நீ என்ன சொல்ற?"

"நாம திரும்பிப் போவோம்."

"நான் முதலாளிகிட்ட உன்னைக் கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் நமக்காகக் காத்திருப்பாரு."

அவள் சொன்னாள்:

"நான் அங்கே வரமாட்டேன். நான் உங்க மனைவியா இருக்கத் தயார். நாம ரெண்டு பேரும் என் வீட்டுக்குப் போவோம்."

எனக்குப் புரிந்துவிட்டது. அவள் சொன்னதைக் கேட்டு நான் சிரித்துவிட்டேன். நான் சொன்னேன்:

"ஓ... இதுதான் விஷயமா? எனக்கு இனிமேல் மனைவின்ற ஒருத்தி தேவையே இல்ல..."

அவள் என்னுடைய கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள். நான் முன்பு சொன்னபோது அவள் நான் சொன்னதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ பொழுது போக்கிற்காக நான் பேசுகிறேன் என்று அவள் அப்போது நினைத்துக் கொண்டாள். இதுதான் விஷயமே. அப்போது கூட அவள் என்னுடைய மனைவியாக இருக்கத் தயாராகத்தான் இருந்தாள்.

என் மனம் கூட சற்று இளகிவிட்டதென்னவோ உண்மை. அவள் சொன்னது உண்மையாக இருக்கலாம்! இருந்தாலும் எனக்கு மனைவி என்ற ஒருத்தி தேவையே இல்லை. சாக்கோ அண்ணன் சொன்ன அறிவுரைகளெல்லாம் நான் ஒரு ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டேன். இப்போது சாக்கோ அண்ணன் கூட அறிவுரை சொல்வதில்லை என்பதே உண்மை.

அவள் என் கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

"நாம திரும்பிப் போவோம். நான் அன்பான ஒரு மனைவியா உங்களுக்கு இருப்பேன்."

"ம்... பார்க்கலாம். நீ முதல்ல வண்டியில ஏறு. பிறகு இந்த விஷயத்தைப் பற்றி யோசிப்போம்."

நான் வெறுமனே இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. மீண்டும் இந்த விஷயத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று என் மனதிற்குள் நான் நினைத்தேன். எனினும், நேரம் ஓடிக் கொண்டிருந்தது. முதலாளி பொறுமையைத் தாண்டி எங்களுக்காகக் காத்திருக்கிறார்.


அவள் வண்டியில் ஏறவில்லை. நான் அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இழுப்பதைத்தான் விரும்பவில்லை என்றாள் அவள். நான் அவளுடைய வீட்டிலிருந்த அந்தக் கிழவியின் கேள்வியை அவளைப் பார்த்துக் கேட்டேன்:

"அப்படின்னா நீ என்னை உன் கணவனா ஆக்கிக்கிட்டியா என்ன?"

அவள் அதைக் கேட்டுச் சிரிக்கவில்லை.

"ஆமா... இந்தப் பிறவியில என்னோட கணவன் நீங்கதான்."

அவளின் குரல் இதற்கு முன் இருந்ததைவிட, மிகவும் அசாதாரணமாக இருந்தது. உண்மையாக சொல்லப்போனால், அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்  எனக்குள் புகுந்து என்னை என்னவோ செய்தன. நான் சொன்னேன்:

"நீ சரியான திருடிதான்..."

"நான் திருடியும் இல்ல... ஒண்ணுமில்ல... அதற்கு சாட்சி கடவுள்தான்."

அவள் நடந்தாள். நான் வெறும் வண்டியை இழுத்தேன். நாங்கள் முதலாளி இருந்த இடத்தை அடைந்தோம். முதலாளி மது அருந்தி முடித்து, பயங்கர போதையில் நின்றிருந்தார். இருந்த இடத்தில் நின்றவாறு அவர் ஆடிக் கொண்டிருந்தார்.

அவள் ஒரு மரத்திற்குக் கீழே நின்றிருந்தாள். என்னைப் பார்த்தவுடன் முதலாளிஓடிவந்து என்னை இறுக கட்டிப்பிடித்தார். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுவாக முதலாளிமார்கள் இந்தமாதிரிதான் நடப்பார்கள். நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. எதுவும் போசமல் வெறுமனே 'ம்... ம்...' என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தேன.

"ம்... எங்கடா அவ?"

நான் அவளை அழைத்தேன். அவள் நடந்து வந்தாள். தன்னுடைய பெரிய கண்களால் முதலாளி அவளைப் பார்த்தார். அவர் அவளைப் பார்க்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி எனக்கே சந்தேகமாக இருந்தது.

முதலாளி சொன்னார்:

"ம்... பக்கத்துல வாடி..."

அவள் தயங்கி நின்றாள். முதலாளியின் அருகில் செல்லும்படி நான் சொன்னேன். அதற்குப் பிறகும் முதலாளி அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சாடி?"

அந்த ஆள் குடிபோதையில் சொன்னாலும், அந்த கேள்வியைப் புரிந்து கொண்டு அவள் சொன்னாள்:

"ம்... ஆயிடுச்சு..."

நான் இடையில் புகுந்து சொன்னேன்:

"இல்ல முதலாளி... இவள் இதுவரை குழந்தை எதையும் பெத்தெடுக்கல..."

கையால் என்னைத் தடுத்ததைப் போல் சைகை காட்டிய முதலாளி சொன்னார்:

"அது போதாது... போதாது..."

தொடர்ந்து அவள் முகத்தை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு முதலாளி தொடர்ந்தார்:

"நீ எனக்கு வேண்டவே வேண்டாம். தெரியுதா? எவ்வளவோ பெண்களை நான்..."

அப்போது போதையில் முதலாளி தடுமாறி கீழே விழுந்து விடுவார் போல் இருந்தது. பிறகு அவரே தொடர்ந்தார்:

"நான்... இந்த... நான்..."- முதலாளி நெஞ்சிலடித்துக் கொண்டே சொன்னார்: "முதலாளியா இருந்தப்போ எவ்வளவோ... எவ்வளவோ பெண்களை... புரியுதா? இப்ப நான் முதலாளியுமில்ல... ஒண்ணுமில்ல... இப்போ பன்னிரெண்டு மணி... புரியுதா, பன்னிரெண்டு மணிமுதல் நான் ஒரு பாப்பர்.... உன்னைப் போல! தெரியுதா? அடியே... நீ என் தங்கச்சி... நான் முதலாளி இல்ல..."

தொடர்ந்து சட்டை பாக்கெட்டுக்குள்ளிருந்து சில ரூபாய் நோட்டுக்களை வெளியே எடுத்த முதலாளி, அதை அவளின் கையில் தந்தார். சில நோட்டுக்களை என்னிடமும் தந்தார். அவளிடம் முதலாளி சொன்னார்:

"நீ கிளம்பு.. நீ கிளம்பு..."

அவள் அந்த மரத்தடியை நோக்கி நடந்தாள்.

என்னைப் பார்த்து முதலாளி சொன்னார்:

"நான் செய்த தப்புகளுக்கு இப்போ பிராயச்சித்தம் செய்கிறேன். அதனாலதான் அவளுக்குப் பணம் கொடுத்தேன்."

கையை மேலே உயர்த்தி காட்டியவாறு முதலாளி சொன்னார்:

"இப்போ என் கையில ஒரு காசுகூட கிடையாது."

அவளை அழைத்துக் கொண்டு போகும்படி முதலாளி சொன்னார். அவள் நடந்தாள். நான் வெறும் வண்டியை இழுத்துக் கொண்டு நடந்தேன். நாங்கள் அவள் வீட்டை அடைந்தோம்.

அவள் என் கையை இறுகப் பற்றினாள்.

"கடவுள் உண்மையானவர். எனக்கன்னு ஒரு புருஷன் வந்தவுடனே, கடவுள் என்னை எப்படி காப்பாத்திட்டார் பார்த்திங்களா?"

நானும்அதைக் கேட்டு ஒருமாதிரி ஆகிவிட்டேன். இப்படியொரு சம்பவத்தை என் அனுபவத்தில் இதுவரை பார்த்ததில்லை. அவளின் பிரார்த்தனைக்குக் கிடைத்த பலனாக அது இருக்குமோ?

அவள் சொன்னாள்:

"நாம உள்ளே போவோம்."

நான் அவள் கையை விட்டுவிட்டு நடந்தேன். "என் கடவுளே!" என்று சொல்லியவாறு அவள் அமர்ந்தாள். தூரத்தில் சென்று நான் திரும்பிப் பார்த்தேன். அப்போதும் அவள் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலையில் ஒரு செய்தி நகர் முழுக்கப் பரவியது. அந்த முதலாளி எங்கோ ஓடிவிட்டார். அவர் கப்பலில் அனுப்பி வைத்த மிளகை அமெரிக்காவில் உள்ளவர்கள் எடுக்கவேயில்லை. பாதிக்கு மேல் கலப்படமாக இருந்ததே காரணம். சரக்கு அங்கு போய் சேர்வதற்கு முன்பே ஆலப்புழையில் இருக்கும் யாரோ சில முதலாளிமார்கள் அங்கு தந்தியடித்து விஷயத்தைச் சொல்லி விட்டார்கள்.

அந்த முதலாளியின் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது.

நேற்று அவர் சொன்னதன் அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன்.

10

??மூன்று நான்கு நாட்களாகவே சாக்கோ அண்ணனைப் பார்க்க முடியவில்லை. இன்று வருவார் நாளை வருவார் என்று நினைத்து நினைத்தே இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. ஆனால், ஆள் மட்டும் வரவேயில்லை. மற்ற வண்டிக்காரர்கள் என்னைப் பார்த்துக் கேட்டார்கள். நான் வாடைக்கல் பகுதிக்குச் சென்றேன். அங்குதான் சாக்கோ அண்ணன் வசிக்கிறார். இதற்கு முன்பு நான் அங்கு போனதில்லை.

சாக்கோ அண்ணன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தார். அவரைப் பார்த்தபோது அவருக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சலாகத் தோன்றவில்லை. சற்று கடுமையான காய்ச்சல்தான். கால்முதல் தலை வரை போர்வையால் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். என்னைப் பார்த்ததும் சொன்னார்:

"குழந்தை, என் வாழ்க்கை இப்போ முடியப் போகுதடா."

அது ஒரு சிறிய வீடு. அண்ணனுக்கு மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். அவரின் மனைவியின் பெயர் க்ளாரா. பார்ப்பதற்கு நன்றாக இருக்கக்கூடிய பெண் அவள். அவர்களின் மகளுக்கு இப்போது மூன்று வயது நடக்கிறது. ஒரு அருமையான குழந்தை அவள். பெயர் த்ரேஸ்யாகுட்டி. வீடுகூட பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

நான்கு நாட்கள் சாக்கோ அண்ணன் வேலைக்குப் போகாததால், வீட்டின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டிருந்தது. நான் போனபோது வீட்டில் எதுவும் இல்லை. முதலில் கடப்புரத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொண்டு வந்து பார்த்திருக்கிறார்கள். அதனால் எந்த பிரயோஜனமும் உண்டாக வில்லை. அடுத்து அருகிலிருந்த ஒரு டாக்டரிடம் போயிருக்கிறார்கள். அவர் ஒரு நல்ல டாக்டர்தான். இருப்பினும் சாக்கோ அண்ணனின் உடல்நிலையில் என்னவோ விரும்பக்கூடிய மாற்றம் உண்டாகவில்லை.


எனக்கு மேலும் ஒரு பொறுப்பு வந்து சேர்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உலகத்திலேயே என்மீது பாசம் வைத்திருக்கும் ஒரே மனிதர் சாக்கோ அண்ணன்தான். நான் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு ஆட்களுடன் நான் பழகியிருக்கிறேன். இருந்தாலும் என்மீது உண்மையான பாசம் கொண்ட மனிதர் ஒரே ஒருவர்தான்!

அப்போது கையில் வைத்திருந்த பணத்தை சாக்கோ அண்ணனிடம் கொடுத்து விட்டு நான் வேலைக்குக் கிளம்பினேன். இரவில் திரும்பி வந்தேன். அவர்கள் வீட்டிலேயே அன்று நான் படுத்துவிட்டேன்.

இரவு முழுவதும் சாக்கோ அண்ணனின் மனைவி அவரின் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள். குழந்தை நன்கு தூங்கிக் கொண்டிருந்தது. அவ்வப்போது சாக்கோ அண்ணனுக்கு க்ளாரா வெந்நீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். இரவு முழுக்க அவள் உறங்கவேயில்லை. மனைவி என்ற ஒருத்தி இருப்பது, விளக்கு ஏற்றி வைத்துக் கொண்டு இரண்டு கண்களால் பார்த்தவாறு அமர்ந்திருப்பது- சாக்கோ அண்ணன் சொன்ன இந்த விஷயங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான்தான் அதை நேரடியாகப் பார்க்கிறேனே! அப்போது என் மனதிற்குள் நான் நினைத்தேன்- இதே மாதிரி காய்ச்சல் வந்து நான் படுத்த படுக்கையாய் கிடந்தால், என்னை இப்படி அருகிலிருந்து பார்ப்பதற்கு யார் இருக்கிறார்கள்? யாருமே இல்லை என்பதுதான் உண்மை. என்னைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நான் வாழ்வதால் யாருக்கு என்ன பிரயோஜனம்? நான் யாருக்கும் சொந்தமானவனல்ல.

ஒரு பெண்ணை எனக்குச் சொந்தமாக்குவதைப் பற்றி மீண்டும் அன்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவோ பெண்களை எனக்குத் தெரியும். அவர்கள் யாருமே எனக்கு வேண்டாம். அவர்களில் யாரும் என்னை இந்த மாதிரி சிரத்தையெடுத்துப் பார்ப்பார்களா? பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதும் கிடையாது. க்ளாரா சாக்கோ அண்ணனை இந்த அளவிற்கு கவனம் செலுத்திப் பார்ப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்? அவள் சாக்கோ அண்ணனுக்குச் சொந்தமானவள். சாக்கோ அண்ணன் க்ளாராவிற்குச் சொந்தமானவர். எனக்கு நன்கு பழக்கமான ஒவ்வொரு பெண்ணையும் மனதில் கொண்டு வந்து அசைபோட்டுப் பார்த்தேன். எந்தப் பெண்ணும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தமானவள் இல்லை. ஒருத்தி ஒருவனுக்காகவும் இல்லை. ஒருவன் ஒருத்திக்கு மட்டுமே என்றும் இல்லை.

ஒருவனுக்கு மட்டுமே சொந்தமான ஒருத்தியை நான் தேடினேன். க்ளாரா வேறொருவனுக்குச் சொந்தமானவளாக இருப்பாளா? என்னிடம் இப்படியொரு நம்பிக்கைக் குறைவு! அப்படி அது உண்டாவது கூட இயல்பான ஒன்றுதானே!

எனக்கென்று ஒருத்தியைக் கண்டுபிடித்துத் தரவேண்டிய சாக்கோ அண்ணன் படுத்த படுக்கையில் கிடக்கிறார்.

நான் தினமும் காலையில் வேலைக்குக் கிள்மபி விடுவேன். இரவில் திரும்பி வருவேன். இருட்டிய பிறகுதானே வேலையிலிருந்து திரும்பி வரமுடியும்? இருட்டிய பிறகு நான் திரும்பி வந்தாலும் எனக்காக சாப்பாடு தயாரித்து வைத்துக் கொண்டு க்ளாரா காத்திருப்பாள். எனக்காகக் காத்திருந்து நான் வந்ததும் அவளே பரிமாறுவாள். "கொஞ்சம் மீன் வைக்கட்டுமா?" "இன்னும் கொஞ்சம் சோறு போடுறேன்" "அய்யோ.... சரியாவே சாப்பிடலியே!" என்றெல்லாம் அவள் சொல்லும்போது எனக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. என்னை ஒரு உயிர் அருகிலிருந்து சாப்பிட வைக்கிறது. உள்ளே படுத்திருக்கும் சாக்கோ அண்ணன் கூறுவார்:

"அவனுக்குப் பிடித்தமானது எதுவோ, அதை சமையல் பண்ணிக் கொடு க்ளாரா."

க்ளாரா அதற்கு சொல்லுவாள்:

"ம்... எதையும் சரியா சாப்பிட்டாத்தானே!"

"டேய் குழந்தை, நல்ல சாப்பிடு. பிறகு எப்படி ஓடி ஓடி உன்னால வண்டி இழுக்க முடியும்?"

நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. சாக்கோ அண்ணனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் உண்டாகவில்லை. க்ளாரா மிகவும் மனக்கவலையுடன் இருக்கிறாள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கு கஷ்டங்கள் இல்லாமல் இருக்க நான் பார்த்துக் கொண்டேன். அது எனக்கு ஒரு சிரமமான விஷயமாகவும் இல்லை.

எனக்கெதற்கு பணம்? கொண்டு போய் கொடுப்பதற்கு எனக்கென்று ஏதாவது ஒரு இடம் இருக்கிறதா என்ன? அது மட்டுமல்ல- இன்று வரை அனுபவித்திராத ஒரு சுகம் இங்கே எனக்குக் கிடைத்திருக்கிறது.

இரவில் வீட்டுக்கு வரும்போது இருக்கும் பணத்தை க்ளாராவின் கையில் தருவேன். காலையில் வேலைக்குக் கிளம்பிவிடுவேன். எனக்காக சோறு வீட்டில் காத்திருக்கிறது. என்னை எதிர்பார்த்து க்ளாரா வீட்டில் காத்திருக்கிறாள். எனக்கு பீடி வாங்கி வைத்திருப்பாள். பாய் விரித்து மேலே துணியை விரித்து வைப்பாள். என்னுடைய லுங்கியைத் துவைத்து காயப்போட்டிருப்பாள். பெரும்பாலான இரவுகளில் வண்டியை அவளே கழுவி சுத்தமாக வைத்துவிடுவாள்.

இந்த விஷயங்களெல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருப்பதற்குக் காரணம்-அது என்னுடைய வீடு என்பதாலா? இல்லை... அது என்னுடைய வீடு இல்லை. எல்லாமே நான் கொடுப்பதால் நடக்கிறது. அதாவது - நான் கொடுத்ததிற்கான விலை எனக்குக் கிடைக்கிறது.

க்ளாரா எவ்வளவு கவனம் செலுத்தி என்னுடைய ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கிறாள்!

ஒருநாள் இரவு நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது க்ளாரா சொன்னாள்:

"குழந்தை இப்பத்தான் தூங்கினா. மாமா கூட உட்கார்ந்து சாப்பிடணும்னு இதுவரை உட்கார்ந்திருந்தா."

"அப்படின்னா, அவளை எழுப்பு."

"ம்... இப்போ வேண்டாம்."

சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்:

"பகல் முழுவதும் உங்களைப் பற்றியேதான் குழந்தை பேசிக்கிட்டு இருந்தா."

அவள் என்னைப் பார்த்ததில்லை. அவள் தூக்கம் கலைந்து எழுவதற்கு முன்பு, நான் கிளம்பி விடுவேன். அவள் உறங்கிய பிறகுதான் நான் திரும்ப வீட்டிற்கு வருவேன். இதுதான் ஒவ்வொரு நாளும் நடப்பது.

நான் கேட்டேன்:

"என்னை அவள் பார்த்ததே இல்லையே! பிறகு எப்படி அப்படி சொன்னா?"

க்ளாரா சொன்னாள்:

"தனக்கு சோறு போடுற ஆளை அவளுக்குத் தெரியாமல் போகுமா என்ன?"

என்னைப் பற்றி அவள் தாய் அவளுக்குச் சொல்லியிருக்கலாம்.

அன்று நான் இரவில் வரும்வரை த்ரேஸ்யாக்குட்டி எனக்காக கண்விழித்திருந்தாள். நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவள் ஓடிவந்து என்னை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். நான் வெந்நீரில் உடம்பைக் கழுவிக் கொண்டிருந்தபோது, வாயே வலிக்கும்படி 'வளவள'வென்று அவள் என்னென்னவோ சொல்லிக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். அவள் எப்போதுமே இப்படித்தானாம். ஆனால், சாக்கோ அண்ணன் அவள் தூங்குவதற்கு முன்பு- அதாவது நான் பொதுவாக வரும் நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார். இது ஒன்றுதான் வித்தியாசம்.

என்னுடன் அமர்ந்து குழந்தை சாப்பிட்டாள். நான் அவளுக்கு சாதத்தைப் பிசைந்து ஊட்டினேன்.


அது எனக்கு நன்கு தெரிந்த ஒரு விஷயமே! நான் ஏற்கனவே முன்பு இதைச் செய்திருக்கிறேன். சாப்பிட்டு முடிந்ததும், த்ரேஸ்யா எனக்காக விரித்திருந்த பாயில் போய் படுத்தாள்.

"நான் இப்போ இங்கேயே படுக்கப்போறேன்."

அவள் என்னிடம் அனுமதி கேட்பது மாதிரி இருந்தது அது.

நானும் அவளுடன் சேர்ந்து படுத்தேன்.

சாக்கோ அண்ணன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவரின் தலைப்பக்கத்தில் அமர்ந்து க்ளாரா கயிறு பிரித்துக் கொண்டிருந்தாள். அவள் எவ்வளவு கவனமெடுத்து கயிறு பிரித்துக் கொண்டிருக்கிறாள்! நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் அவளைப் பார்க்கலாம்.

அவள் கறுப்பாக இருந்தாலும், பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். சுருண்ட தலைமுடி மிகவும் அடர்த்தியாக இருந்தது. அழகான கண்கள். சிவந்த உதடுகள். அளவெடுத்தாற்போல் அமைந்த உடலமைப்பு. அவள் கழுத்துக்குழியில் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தாலி சாக்கோ அண்ணன் தேவாலயத்தில் வைத்துக் கட்டியது. அவள் வேறு யாருடனும் போயிருப்பாளோ?

அவள் மனதில் என்ன நினைப்பாள் என்று நான் யோசித்துப் பார்த்தேன். என்னால் அதைப்பற்றி ஒரு முடிவுக்கும் வரமுடிய வில்லை. நான் மெதுவாக நடந்து சென்று சாக்கோ அண்ணனை எழுப்பாமல் 'இங்கே வாயேன்' என்று அழைப்பேன் என மனதில் நினைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாளோ? அப்படியென்றால் சாக்கோ அண்ணன் உறங்கிவிட்டாரா என்று கவனமாகப் பார்த்து விட்டு எழுந்து என்னை நோக்கி அவள் வருவாளோ? இந்த விஷயத்தைக் கொஞ்சம் நடைமுறைப்படுத்திப் பார்த்தாலென்ன என்ற ஆசை மிகவும் பலமாக என்னுடைய மனதில் தோன்றி என்னைப் பாடாய்ப்படுத்தியது. ஒருவேளை அவள் வந்தாலும் வரலாம். நான் அவளுக்குச் சோறு போடுபவன் ஆயிற்றே! நானல்லவா அவளை அழைக்கிறேன்? நான் எது சொன்னாலும் அதை நிறைவேற்ற வேண்டியது அவள் கடமையல்லவா? நான் எங்கே கோபித்துக் கொண்டு போய்விடப்போகிறேனோ என்று அவள் பயப்படலாம். தாலி கழுத்தில் கிடந்தாலும் அவளும் பெண்தானே! வேண்டாம்... எதற்காக சோதித்துப் பார்க்க வேண்டும்? என்னைப் பொறுத்தவரை இது ஒரு சோதனை மட்டுமே. ஆனால், அவளின் இன்றைய நிலை சர்வசாதாரணமாக அவளைச் சோதனை என்ற வலையில் விழ வைக்கலாம். அவள் மட்டுமல்ல, எவ்வளவு நல்ல பெண்ணாக இருப்பவளும் விழத்தான் செய்வாள். எதற்காக நான் அவளைப் பாழ் செய்ய வேண்டும? அதற்குப் பிறகு எனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவள் க்ளாராவாக இருக்காது, வேறொருத்தியாகத்தான் இருக்கும். அப்படியொரு சம்பவம் நடக்குமானால், அதற்குப் பிறகு இங்கு வரவேண்டும் என்ற எண்ணமே எனக்கு உண்டாகாது. நான் வரவும் மாட்டேன். எனக்கு ஏற்கனவே பழக்கமாகியிருக்கும் ஆயிரம் பெண்களில் அவளும் ஒருத்தி... அப்படியே நான் வந்தாலும், அவளை வண்டியில் ஏற்றி ஏதாவதொரு இடத்திற்குக் கொண்டு போகத்தான் நான் வந்திருப்பேன். என் தர்மசங்கடமான நிலை அது. அதற்குப் பிறகு எனக்கு வீடு என்ற ஒன்று இல்லாமற் போகும். ஒருத்தி படுகுழியில் போய்விழுவாள். நான் அழைப்பேன் என்ற நினைப்புடன் ஒருத்தி அமர்ந்திருக்கிறாள் என்று நான் ஏன் நினைக்க வேண்டும்? அப்படி நினைக்கத்தான் என்னால் முடியும் என்பதே உண்மை. அவள் தன் மனதில் சாக்கோ அண்ணன் உடல்நலம் பெற வேண்டும் என்று தற்போது வேண்டிக் கொண்டிருக்கலாம்.

இந்த நிமிடம் வரை எல்லையைத் தாண்டி ஒரு அடி கூட அவள் முன்னால் தன் கால்களை வைத்ததில்லை. எல்லா இரவுகளிலும் நாங்கள் இருவரும் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறோம். அப்படியொரு பேச்சுகூட எங்களுக்கிடையே இருந்ததில்லை. நான் நினைத்தால் அவள் எந்தவித மறுப்பும் இல்லாமல் ஒத்துழைப்பாள். நான் என்ன செய்யச் சொல்கிறேனோ, அதைச் செய்வாள்.

இல்லை... நான் அவளைப் பாழ் செய்ய மாட்டேன்.

தனியாக இருக்கும் இரவு நேரத்தில் சொல்வது எதையும் செய்யக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தால்... என்ன இருநத்தாலும் ஆணும் பெண்ணும்தானே! அவர்களுக்கும் இரத்தம், சதை எல்லாம் இருக்கின்றனவே! என்னுடைய தொழில் பெண்களை மற்றவர்களுக்கு கூட்டிக் கொடுப்பது. நானும் எவ்வளவு பெண்களும் தனியாக இருந்திருக்கிறோம்! நான் என்னவெல்லாம் பார்த்திருப்பேன்! அப்படியே என் வாழ்க்கையை நான் தொடரலாமே!

அடுத்த நாள் அவள் என்னிடம் கேட்டாள்:

"உங்க ரெண்டு பேருக்குமிடையே என்ன உறவு?"

நான் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

"யாருக்கிடையே? எனக்கும் சாக்கோ அண்ணனுக்கும் இடையிலையா?"

"ஆமா."

எடுத்தவுடன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிடமுடியுமா என்ன? நான் சொன்னேன்:

"அவர் என் சாக்கோ அண்ணன்."

அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என்றெல்லாம் சொல்வதைப் போல என்னுடைய சாக்கோ அண்ணன்! அப்படியில்லாமல் நான் அவரை வேறு எப்படி அழைப்பேன்?

நான் கேட்டேன்: "சாக்கோ அண்ணன் ஒண்ணும் சொல்லலியா?"

முன்னாடி ஒருநாள் சொன்னாரு. பிறகு இன்னைக்கு சொன்னாரு."

அவர் என்ன சொன்னார் என்பதை நான் கேட்கவில்லை. எதற்காக கேட்க வேண்டும்?

இருந்தாலும் எதற்காக அந்தப் பெண் அந்தக் கேள்வியைக் கேட்டாள் என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒருவேளை எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு இப்படி எதற்காக ஒரு மனிதன் வாழ வேண்டும் என்று அவள் மனதில் நினைத்திருக்கலாம். இரவு நேரத்தில் நான் அழைப்பேன் என்ற எதிர்பார்ப்புடன் அவள் படுக்கையில் படுத்திருக்கலாம். இப்படி எந்தவித உறவும் இல்லாமல் இருந்தால் ஒருவேளை நான் அவளை மறந்து விடுவேனோ என்று கூட அவள் நினைத்திருக்கலாம். சாக்கோ அண்ணன் கூட இந்த விஷயத்தில் அவளுக்கு அனுமதி தந்திருக்கலாம். அவளும் பெண்தானே! சாக்கோ அண்ணன் படுத்த படுக்கையாய் கிடக்கிறார். இப்படியே எத்தனை நாட்கள் அவளால் இருக்க முடியும்?

நான் சாப்பிட்டு முடித்ததும், அவள் சாக்கோ அண்ணனின் அருகில் சென்றாள். நான் வெளியே ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே சாக்கோ அண்ணனும் க்ளாராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்படி என்ன பேசுவார்கள்? சாக்கோ அண்ணனை எழுப்பி அவள் பேசுகிறாள் என்பதே என் எண்ணம். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், அவர்கள் பேசுவது எதுவும் என் காதில் விழவில்லையே!

சிறிது நேரம் கழித்து அவள் வந்து சொன்னாள்:

"கூப்பிடறாரு."

நான் உள்ளே சென்றேன்.

சாக்கோ அண்ணன் மிகவும் களைத்துப் போயிருந்தார். என்னைப் பார்த்ததும், அவர் கண்களில் நீர் அரும்பிவிட்டது. நான் கீழே உட்கார்ந்தேன்.

"சாக்கோ அண்ணே, அழாதீங்க..."

சாக்கோ அண்ணன் குமுறிக் குமுறி அழுதார்.


வாசலில் நின்றவாறு க்ளாராவும் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். அவள் தலையைக் குனிந்தவாறு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. சில நிமடங்கள் சென்றதும், சாக்கோ அண்ணன் சொன்னார்:

"நீ வேலை செஞ்சு கிடைக்கிற காசையெல்லாம் இங்கே கொண்டு வந்து செலவழிச்சிக்கிட்டு இருக்கியே!"

"அதுனால என்ன சாக்கோ அண்ணே? உங்களை விட்டா உலகத்துல எனக்கு யார் இருக்காங்க?"

சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு சாக்கோ அண்ணன் சொன்னார்:

"எல்லாம் கடவுள் தீர்மானிச்ச விஷயங்கள். க்ளாரா, தெரியுதா? எல்லாம் கடவுள் தீர்மானிச்சது..."

சிறிது நேரம் கழித்து சாக்கோ அண்ணன் தொடர்ந்தார்.

"நாய்க்குட்டி... க்ளாரா பாவம். த்ரேஸ்யாக்குட்டி ஒரு பச்சைப்புள்ளை. அவங்களை உன்கிட்ட நான் ஒப்படைக்கிறேன். உன்னை விட்டா எனக்கு வேற யாருமில்ல."

தொடர்ந்து க்ளாராவிடம் சாக்கோ அண்ணன் சொன்னார்:

"க்ளாரா, இவனை நீ நல்லா பார்த்துக்கணும். அவனுக்குன்னு இந்த உலகத்துல யாருமில்ல..."

நானும் க்ளாராவும் 'சரி' என்று தலையை ஆட்டினோம். இப்படியெல்லாம் அவர் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. இப்படியொரு சூழ்நிலை ஏன் வந்தது? இப்படியொரு காட்சியை க்ளாரா ஏன் உருவாக்கினாள் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சாக்கோ அண்ணன் சொல்லவில்லையென்றாலும் நான் அவர்களை என்னுடைய சொந்தமென நினைத்துப் பார்க்கத்தான் செய்வேன். அதே மாதிரி அவளும் என்னைக் கவனமாக பார்த்துக் கொள்வாள்.

மறுநாள் நான் வேலைக்குச் செல்லவில்லை. சாக்கோ அண்ணனின் நிலைமை படுமோசமாக இருந்தது. அன்று அவர் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக நீங்கி விட்டார்.

அவரின் பிணத்தைப் பெட்டிக்குள் வைத்து தேவாலயத்திற்குக் கொண்டு செல்லும்போது, த்ரேயாக்குட்டி க்ளாராவிடம் கேட்டாள்:

"அம்மா, அப்பாவை எங்கே கொண்டு போறாங்க?"

க்ளாரா பதில் எதுவும் சொல்லாததால், அதே கேள்வியை அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.

சவ அடக்கம் முடிந்தது. நானும் ஒரு கை மண்ணை எடுத்து அந்தக் குழிக்குள் போட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒருவரின் இறுதிச் சடங்கை மட்டுமே நான் செய்திருக்கிறேன். அது-சாக்கோ அண்ணனின் இறுதிச் சடங்குதான். அதற்கு முன்பு வேறு யாருடைய இறுதிச் சடங்கையும் செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

நாங்கள் சவ அடக்கம் முடிவடைந்து திரும்பி வந்தோம்.  த்ரேஸ்யாக்குட்டி என்னை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னாள்:

"மாமா, நீங்க எங்களை விட்டுப் போயிட மாட்டீங்களே?"

மறுநாள் காலையில் நான் வேலைக்குப் புறப்பட்டேன். தாயும் மகளும் என்னையே பார்த்தவாறு நின்றிருந்தார்கள். நான் மீண்டும் திரும்பி வருவேனா என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம். நான் சொன்னேன்:

"த்ரேஸ்யாக்குட்டி சாயங்காலம் சீக்கிரம் வந்திடுறேன், என்ன?"

நாட்கள் பல கடந்தன. சாக்கோ அண்ணன் படுத்திருந்த அறையில்தான் நான் படுக்கிறேன். அதற்கடுத்த அறையில் அவள் இந்த இரண்டு அறைகளுக்குமிடையில் கதவு இருக்கிறது. எப்போதும் இரவில் படுப்பதற்கு முன்பு, அந்தக் கதவைத் தாழ் போட்டுப் பூட்ட நான் மறந்ததே இல்லை.

இருந்தாலும் அது என்னுடைய வீடுதான். அவர்கள் என்னுடையவர்கள்தான்.

கையில் என்ன கிடைத்தாலும், அதைக் கொண்டு வந்து க்ளாராவிடம் கொடுத்து விடுவேன். அவள் என்னுடைய வீட்டு சொந்தக்காரியாக இருந்தாள்.

இரவு நேரத்தில் அந்தக் கதவைத் திறக்கலாமா என்று நினைத்து அவள் அதை மெதுவாகத் தள்ளி பார்ப்பாளோ?

11

சாக்கோ அண்ணன் மரணத்தைத் தழுவி அதிக நாட்கள் ஆகவில்லை. அப்போது முதல் என்னுடைய மனதில் ஒரு எண்ணம் இருந்தது. எப்படியும் ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதே அது. ஒருநாள் நான் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது, ரஹ்மான் முதலாளி காரில் வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் வரும்படி அழைத்தார். பின்னாலேயே தன்னுடைய கடைக்கு வரும்படி என்னிடம் அவர் சொன்னார். மிகவும் முக்கியமான ஏதோ ஒரு விஷயம் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரைத் தொடர்ந்து கடைக்குப் போனேன். ஏதோ பெரிய அளவில் நமக்குக் கிடைக்கப் போகிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

ரஹ்மான் முதலாளி மலைகளில் விளையும் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பெரிய வியாபாரி. அவரிடம் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. குடிசைகளில் குடியிருக்கும் சில பெண்களை அவர் நேரடியாக போய்ப் பார்ப்பார். இங்குமங்குமாய் அவருக்குக் குழந்தைகள் இருக்கின்றன என்று பொதுவாகவே எல்லோரும் சொல்வார்கள். சில நேரங்களில் அவரே பயங்கர தர்மசங்கடமான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு. எந்த விஷயத்தையும் அவர் ரகசியமாக வைப்பதில்லை. அவரின் நிலங்களில் வேலை செய்யும் பெண்களில் யாராவது பிரசவமாகி விட்டால், அந்த விஷயம் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்துவிடும். ஏதாவதொரு பெரிய வக்கீலோ அல்லது அவரின் குமாஸ்தாவோ அவளைக் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். ஒரு நோட்டீஸ் விடுவார்கள். தொடர்ந்து வழக்கு நடக்கும். அவ்வளவுதான்- முதலாளி பயந்து போய் ஓட ஆரம்பித்துவிடுவார். முதலாளி இந்த மாதிரி சமயங்களில் பயந்து ஓடக்கூடிய மனிதர் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. பெரிய அளவில் பணம் செலவாகும். ஆனால், பொதுவாக பெண்ணுக்கு பெரிதாக எதுவும் இந்த விஷயத்தில் கிடைத்துவிடாது. வக்கீலோ அல்லது அவரின் குமாஸ்தாவோதான் நிறைய இதில் சம்பாதிப்பார்கள். ஒரு தடவையோ, இரண்டு தடவையோ, மூன்று தடவையோ, பத்து தடவையோ கூட தவறு நடக்கலாம். அதற்குப் பிறகாவது கூட அவர் சரியான ஒரு மனிதராக இருக்க வேண்டாமா? அதுதான் கிடையாது. அதற்குப் பிறகும் தவறுகளைத் தொடர்வார். பணம் பறிப்பதற்காக சதா நேரமும் முதலாளியைக் கண்காணித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதுவே அவர்களின் பிழைப்பாக இருக்கும்.

ஆனால் எவ்வளவு செலவுகள் வந்தால் என்ன? அவவரப் போல லாபம் சம்பாதிக்கக்கூடிய ஒரு வியாபாரியைப் பார்க்கவே முடியாது. பணம் அவரிடம் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கிறது.

முதலாளியிடம் ஒரு நடுக்கம் தெரிந்தது. அதை நான் எப்படியோ கண்டுபிடித்து விட்டேன். அவரைப் பார்ப்பதில் பெரிய அளவில் நமக்க வரவு இருக்கிறது என்பதையும் என்னால் உணர முடிந்தது.

மற்றொரு மிளகு வியாபாரியான கோபாலன் முதலாளியும் அதே பகுதியில் இருக்கிறார். அவரை நான் அவமானப்படுத்த வேண்டும் இதுதான் விஷயமே. நான் 'சரி'யென்று சம்மதித்தேன்.


"அதைப்பண்ணிடலாம் முதலாளி. ஆனா, நான் எதுக்கு அந்த முதலாளியை அவமானப்படுத்தணும்? அவரும் எனக்கு ரொம்பவும் வேண்டியவர்தான். அது மட்டுமல்ல- அவர் எனக்கு பல நேரங்கள்ல உதவி செஞ்சிருக்காரு."

முதலாளி கேட்டார்:

"அப்போ நான் உனக்கு உதவி செய்யலியா என்ன?"

"அய்யோ, முதலாளி... நீங்க செய்த உதவிகளை மறக்க முடியுமா?"

உனக்கு என்ன வேணும்னாலும் தர்றேண்டா. வேணும்னா அஞ்சாறு பேரைக் கூட வச்சிக்கோ."

"நான் என்ன செய்யணும்? கோபாலன் முதலாளியை ரோட்ல வச்சு அடிக்கணுமா?"

"நீ என்ன வேணும்னாலும் செய். அவனை அவமானப்படுத்தணும். அவ்வளவுதான்."

"அய்யோ! அடிதடின்னு போறப்போ... என் நிலைமை என்ன ஆகுறது? போலீஸ்காரங்க..."

"அந்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன்" முதலாளி தன் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் எடுத்துத் தந்தார். அதை எண்ணிப் பார்த்த நான் அதை அவரிடமே நீட்டியவாறு சொன்னேன்:

"இது பத்தாது முதலாளி. முல்லைக்கல்ல வச்சு அவரை உதைக்கலாம். அதுக்கு இந்தப் பணம் போதாது."

"டேய், இனியும் நான் ரூபா தர்றேன்."

"சரியா வராது. என்னால் முடியாது. நான் எதுக்கு பெரிய ஆளுகளை விரோதிகளா ஆக்கிக்கணும்? அதுவும் கோபாலன் முதலாளியை? தேவையே இல்ல. பார்க்குறப்பல்லாம் அஞ்சு ரூபா தர்ற தங்கமான முதலாளி நீங்க. இந்தப் பணத்தை நீங்களே எடுத்துக்குங்க, முதலாளி."

"முதலாளி அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டார். முதலாளி கேட்டார்:

"அப்படியா என்ன வேணும்-சொல்லு?

"பத்து பேரு கூட வேணும் முதலாளி. பிறகு- அங்கே ட்யூட்டி நிற்கிற போலீஸ்காரர்களைப் பார்க்கணும்."

"அதை நான் பார்த்துக்கறேன்."

"அது வேற விஷயம். நான் பார்க்க வேண்டியதை நான் தான் பார்க்கணும்."

முதலாளி படு அவசரத்தில் இருந்தார்.

"பிறகு என்ன வேணும்?"

"தற்போதைக்கு இருநூறு ரூபா வேணும். பிறகு என்ன வேணும்னு நான் சொல்றேன்."

"சரி... தொலையட்டும், இந்தா..."

இன்னொரு நூறு ரூபாயை எடுத்து என்னிடம் தந்தார் முதலாளி. நான் எண்ணிப் பார்த்துவிட்டு செலவு கணக்குப் போட்டேன். "ஒரு பத்தும் அஞ்சும்... பதினைஞ்சு ரூபா அதிகமா வேணும் முதலாளி."

அதையும் கையில் வாங்கினேன், நான் கேட்டேன்:

"விஷயம் என்ன முதலாளி? உண்மையைச் சொல்லுங்க."

முதலாளி சொன்னார்:

"அதுவா? அந்த கோபாலன் ஒரு ஆணவம் பிடிச்ச ஆளு. அவனுக்கு தெக்கன் சூர்யாட்ல ஒரு பொம்பளை கூட தொடர்பு இருக்கு. அவ பேரு தங்கம்மா. அவளை கர்ப்பமடைய வச்சது நான்தான்னு எஸ்.என்.டி.பி.க்காரங்க பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அந்த கோபாலன்தான் எஸ்.என்.டி.பி.யோட தலைவர். அவன் ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சிருக்கணும். நானும் மிளகு வியாபாரம் அவனும் மிளகு வியாபாரம். அவனும் நானும் சேம்பர்ல அடிக்கடி பார்க்க வேண்டியதிருக்கும். அடிக்கடி ஃபோன்ல மிளகோட விலையைப் பற்றி பேசிக்குவோம். அப்போ அவன் என்ன செஞ்சிருக்கணும்? என்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கணும். அதைச் செய்யாம அவள் ஆளுங்களைக் கூட்டி ஒரு முஸ்லிமான நான் இந்துப் பெண்ணை கர்ப்பமாக்கிட்டேன்னு பகிரங்கமாகப் பேசினா, அது நல்ல விஷயமா, சொல்லப்போனா என்னாலதான் அவன் வியாபாரியாவே ஆனான்..."

முதலாளி சொன்னதெல்லாம் சரிதானென்று நானும் ஒப்புக் கொண்டேன். கோபாலன் முதலாளி உண்மையிலேயே ஆணவம் பிடித்த மனிதர்தான். 'இன்றே விஷயத்தைச் சரி செய்ய வேண்டும்' என்று சொன்னார் முதலாளி. எவ்வளவு செலவாகும் என்று சொன்னால் போதும். முதலாளி அந்தப் பணத்தைத் தந்து விடுவார். அது இல்லாமல் தனியாக பரிசு வேறு. நான் அவர் சொன்னதற்கு சம்மதித்து வெளியேறினேன்.

கோபாலன் முதலாளியை நான் எதற்கு அவமானப்படுத்த வேண்டும்? அவரின் கையிலிருந்து நான் பணம் வாங்கியிருக்கிறேன். இந்த ஆள் யாராவது ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கியிருப்பார். அவளுக்குத் தரவேண்டியதை இவர் தரட்டுமே! நான் மனதில் நினைத்த விஷயம் இதுதான்.

நான் நேராக வாடைக்கல்லை நோக்கி நடந்தேன். எப்படி இப்படியெல்லாம் என்னால் முதலாளியிடம் பேச முடிந்தது என்பதையும் அவரிடமிருந்து இவ்வளவு பணத்தை எப்படி என்னால் பிடுங்க முடிந்தது என்பதையும் நினைத்து உண்மையிலேயே நான் ஆச்சர்யப்பட்டேன். நான் எந்த முதலாளியையும் இதுவரை ஏமாற்றியதில்லை. கையிலிருந்த பணம் முழுவதையும் நான் க்ளாராவிடம் கொடுத்தேன்.

"இதை பத்திரமா வச்சிருக்கணும். இதை முதலா வச்சு நாம உருப்படியா ஏதாவது செய்யணும். குழந்தை வயசுக்கு வந்த பிறகு கல்யாணம் பண்ணித் தரணும்."

அவள் பணத்தைக் கொண்டு போய் உள்ளே வைத்துவிட்டு திரும்பி வரும்போது அவள் கண்கள் நனைந்திருப்பதை நான் பார்த்தேன். அவள் இவ்வளவு பணத்தை வாழ்க்கையில் ஒரே நேரத்தில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இப்போது தன் கையில் அந்தத் தொகை இருக்கிறதென்றால் யாருக்குத்தான் சந்தோஷம் உண்டாகாமல் இருக்கும்?

நான் மதியம் வரை எங்கும் போகவில்லை. வீட்டிலேயே படுத்து உறங்கினேன். தூக்கம் கலைந்து எழுந்தபோது வேறொரு யோசனை மனதில் வந்தது. ரஹ்மான் முதலாளியை மீண்டும் பார்த்து இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்று கேட்டாலென்ன என்ற சிந்தனையே அது. அதற்காக அவரிடம் ஏதாவது காரணங்களைச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் கோபாலன் முதலாளியைப் பார்த்து எல்லா விஷயங்களையும் முன்கூட்டியே சொல்லிவிட்டால் என்ன என்று கூட சிந்தித்தேன். அந்த ஆள் பயங்கரமான ஒரு திருடன். அவரிடமிருந்து அப்படியொன்றும் கறக்க முடியாது. ரஹ்மான் முதலாளியைப் பார்ப்பதுதான் சரி என்ற முடிவுக்கு இறுதியில் வந்தேன்.

கடப்புரம் வழியாக ஆலப்புழைக்குக் கிளம்பினேன். விருந்தினர் மாளிகையின் வாசலில் கோபாலன் முதலாளி வாவாவுடன் பேசிக் கொண்டிருந்தார். வாவாவின் கையிலும் சில முதலாளிமார்கள் இருக்கிறார்கள். அவன் ஆலிசேரி, கொம்மாடி, தும்போளி, ஆகிய இடங்களில் சுற்றிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் ஒரு போக்கிரி. பெண்களுக்குத் தரவேண்டிய பணத்தை அவன் நேரடியாக வாங்குவான். பிறகு முதலாளியும் பெண்களும் அவனுக்குக் கமிஷன் கொடுக்க வேண்டும். அப்படி சில பெண்கள் அவன் மேற்பார்வையில் இருக்கிறார்கள்.

கோபாலன் முதலாளி ஏதோவொரு விஷயத்தை தீவிரமாக அவனுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். யாரைப் பற்றிய விஷயம் என்பது மட்டும் தெரிந்தால், வாவாயே விரலை விட்டு ஆட்டலாம் என்று நான் நினைத்தேன். பெரிதாக ஒன்றும் பண்ணாமலேயே ரஹ்மான் முதலாளியிடமிருந்து இன்னும் கொஞ்சம் பணம் வாங்குவதற்கு இந்த விஷயம் கூட உதவியாக இருக்கலாம்.

வாவா கொம்பாடி பகுதிக்குச் சென்றான். எனக்கு அந்தப் பகுதியில் அவ்வளவு பழக்கமில்லை. அப்படியிருக்கும்பொழுது நம் விஷயம் அங்கு சரியாக எப்படி நடக்கும்? இருந்தாலும் நான் நடந்தேன்.


அவன் ஒன்றிரண்டு வீடுகளில் கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.

மாலை நேரம் வந்ததும் வாவா கோபாலன் முதலாளியின் கடைக்குச் சென்றான். நான் நேராக ரஹ்மான் முதலாளியின் கடைக்குச் சென்றேன்.

என்னைப் பார்த்தவுடன் 'நாய்க்குட்டி' என்று அழைத்தவாறு முதலாளி வந்தார்.

"எல்லாம் சரி பண்ணிட்டேன் முதலாளி. நாளைக் காலையில உங்களுக்கு செய்தி வரும். கொம்மாடி பகுதியில கோபாலன் முதலாளிக்கு அடி விழுந்ததுன்னு..."

அதைக் கேட்டு ரஹ்மான் முதலாளி உற்சாகமடைந்து பயங்கரமாக சிரித்தார். அவரிடமிருந்த உற்சாகத்தைப் பார்த்தால் கோபாலன் முதலாளி ஏற்கனவே நன்றாக அடி வாங்கிவிட்டார் என்று கூட யாரும் நினைத்து விடுவார்கள்.

"பிறகு... பிறகு... என்னடா நாய்க்குட்டி-?"

"முதலாளி... இன்னைக்கு ராத்திரியிலதான் காரியத்தைச் செய்யணும். ஆனா..."

"என்னடா ஆனான்னு இழுக்குற?"

"கொஞ்சம் பணம் வேணும் முதலாளி..."

"இனியுமாடா?"

"ஆமா, முதலாளி. விஷயம் கொஞ்சம் பெரிசானதாச்சே. பணம் செலவு செஞ்சாத்தான் சரியா வரும்."

"டேய்... நான் ஏற்கனவே 215 ரூபாய் தந்திருக்கேனே..."

"பணம் இல்லைன்னா, நான் ஒண்ணும் செய்ய முடியாது."

முதலாளி தன்னைத்தானே திட்டியவாறு சந்தேகத்துடன் நின்றார். நான் சொன்னேன்:

"இப்போ நூற்றம்பது ரூபாய் இல்லைன்னு வச்சிக்கோங்க. அவ்வளவுதான்... நான் ஏற்பாடு செய்த ஆளுங்க எல்லா விஷயத்தையும் கோபாலன் முதலாளியைப் பார்த்து சொல்லிடுவாங்க. இதுதான் நடக்கப்போகுது..."

ரஹ்மான் முதலாளி அதைக் கேட்டு பயந்து விட்டார்.

"டேய்... விஷயம் அப்படிப்போனா தேவையில்லாத பிரச்சினைகள் வரும். நில்லு... நில்லு..."

முதலாளி உள்ளே போய் திரும்பி வந்தார். கையில் நூற்றைம்பது ரூபாய் இருந்தது. அப்போது நான் மனதிற்குள் நினைத்தேன்- இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று. அதே நேரத்தில் மனதில் எனக்கொரு குற்ற உணர்வும் உண்டானது. நான் இப்போது நடந்து கொண்டிருக்கும் முறை நல்லதுதானா? எப்படியெல்லாம் நான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்! முதலாளிமார்களால்தான் நான் வாழ்ந்து கொண்டிருப்பதே. நான் ஏமாற்றிக் கொண்டிருப்பது மட்டும் அவர்களுக்குத் தெரிந்தால்... அவர்கள் என்னை ஒரு நன்றி கெட்ட மனிதன் என்று நினைக்கமாட்டார்களா?

நான் நேராக வாடைக்கல் பகுதிக்குச் சென்றேன். கையிலிருந்த பணத்தை க்ளாராவிடம் தந்தேன். என்னிடமிருந்து பணத்தை வாங்கிய க்ளாரா சிறிது நேரம் என்னையே பார்த்தவாறு தூணைப் போல அசையாமல் நின்றாள். அவளுக்கு ஒரு சந்தேகம் என்னிடம் அவள் கேட்டாள்:

"நீங்க எங்கேயிருந்து பணம் கொண்டு வர்றீங்க? முன்னாடி இருநூறு ரூபா கொடுத்தீங்க. இப்போ நூற்றைம்பது எங்கிருந்து பணம் வருது?"

ஒரு ரிக்ஷாக்காரன் இப்படி பணம் கொண்டு வருகிறான் என்றால், யாருக்குமே நிச்சயம் சந்தேகம் வரத்தான் செய்யும். யாரும் இப்படியொரு கேள்வியைக் கேட்கத்தான் செய்வார்கள். அவன் கொண்டு வரும் பணத்திற்கு ஒரு எல்லை இருக்கிறது. காலையில் கொண்டு வந்து தந்த பணம் அதிகம்தான். அவள் கேட்ட கேள்வி நியாயமானதுதான்.

நான் சொன்னேன்:

"பயப்படாதே. எங்கேயிருந்தும் நான் திருடிட்டு வரல. யாரையும் ஏமாற்றவுமில்ல... இதுனால நமக்கு எந்த ஆபத்தும் இல்ல..."

இலேசாக சிரித்தபடி அவள் சொன்னாள்:

"அப்படி வர்ற காசு நமக்குத் தேவையே இல்ல. ஒரு நேரமோ ரெண்டு நேரமோ சாப்பிடுற அளவுக்கு நமக்கு ஏதாவது வந்தா போதும்."

நான் மீண்டும் சொன்னேன்:

"பயப்பட வேண்டாம்னு நான் தான் சொல்றேனே?"

அவள் உள்ளே சென்றாள்.

நான் எப்போதும் கொண்டு வருவதை விட அதிகமாக பணம் கொண்டு வந்தால், எங்கிருந்து அந்தப் பணம் வருகிறது என்று ஒருத்தி கேட்கிறாள். அப்படிக் கேட்க ஒரு ஆள் இருக்கிறது என்பது எவ்வளவு நல்ல விஷயம். பயப்படுவதற்கு ஒரு இடம் இருப்பது எப்போதுமே நல்லதுதானே! அது எனக்கு ஒரு விதத்தில் ஆறுதலாகக் கூட இருந்தது.

இரவு சாப்பாடு முடிந்து வெளியே ஒரு பீடியைப் புகைத்தபடி நான் உட்கார்ந்திருந்தேன். த்ரேஸ்யாக்குட்டி உறங்கிக் கொண்டிருந்தாள். க்ளாரா தன்னுடைய தலைமுடியை அவிழ்த்துக் கட்டியபடி எனக்கு அருகில் வந்து நின்றாள். நான் கேட்டேன்:

"பிறகு என்ன? போய் தூங்க வேண்டியதுதானே?"

அவள் சொன்னாள்:

"அடேயப்பா... நான் கொஞ்சம் பக்கத்துல வந்து உட்காரக் கூடாதா என்ன?"

"தாராளமா உட்காரு..."

அவள் அங்கிருந்த மணலில் உட்கார்ந்தாள். ஒருவித கெஞ்சலுடன் அவள் கேட்டாள்: "நான் கேக்குறேன்னு கோபிக்கக்கூடாது.அந்த ரூபா எங்கேயிருந்து கிடைச்சது?"

"நான் திருடலைன்னு ஏற்கனவே சொன்னேனே! நமக்கு அதுனால ஒரு ஆபத்தும் இல்ல."

"இருந்தாலும் அது எங்கேயிருந்து கிடைச்சதுன்னு என்கிட்ட சொல்லக்கூடாதா? என்கிட்ட சொல்லலைன்னா வேற யார்கிட்ட சொல்லுவீங்க?"

"அந்தப்பணத்தை ஒரு முதலாளி தந்தாரு."

"முதலாளிமாருங்க இவ்வளவு ரூபாய்களை கொடுப்பாங்களா என்ன?"

நான் அந்தக்கதை முழுவதையும் அவளிடம் சொன்னேன். மிகவும் கவனத்துடன் கேட்ட அவள் சொன்னாள்:

"இது தேவையா? நீங்க செஞ்சது விளையாட்டுத்தனமா தெரியலியா?"

அவள் நன்கு புரிந்து கொண்டுதான் இதைச் சொன்னாள். அவள் சொன்னதை நானும் புரிந்து கொண்டேன்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இந்த விஷயத்தில் நான் சென்றிருக்கிறேன் என்பதை நானும் புரிந்து கொள்ளாமல் இல்லை.

நான் சொன்னேன்:

"சரி... விஷயம் அப்படிப் போயிடுச்சு. இப்போ அதை நினைச்சு என்ன பிரயோஜனம்?"

அவள் மெதுவான குரலில் கேட்டாள்:

"கோபாலன் முதலாளியைத் தாக்கப் போறீங்களா?"

"நான் எங்கேயும் போறதா இல்ல. எனக்கு இப்போ தூக்கம் வருது. அந்தப் பாயை எடுத்து விரி."

"பாயை ஏற்கனவே விரிச்சுப் போட்டாச்சு. நாளைக்கு ரஹ்மான் முதலாளியைப் பார்க்கிறப்போ என்ன சொல்வீங்க?"

"நாளைக்கு அந்த ஆளைப் பார்க்க மாட்டேன். அதுனால என்ன? அந்த ஆளு பயத்துல இருப்பாரு."

சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன்:

"ஐந்நூறு ரூபாய் உடனடியா சம்பாதக்கணும்னு நினைச்சேன். அதுல முன்னூற்றைம்பது ரூபாய் சம்பாதிச்சுட்டேன்."

அப்போது அவள் சொன்னாள்:

"இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டாம். கடவுள் நமக்கு தருவார். செய்ற வேலையை ஒழுங்கா செய்தா போதும்."

இலேசான மனவருத்தத்துடன் நான் போய்ப் படுத்தேன். பொழுது விடிந்தவுடன் எழுந்து ஆலப்புழையை நோக்கி நடந்தேன். முதலில் என் காதில் வந்து விழுந்த செய்தி என்ன தெரியுமா? கோபாலன் முதலாளியை சிலபேர் சேர்ந்து கொம்மாற பகுதியில் வைத்து அவமானப்படுத்திவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

முதலாளி காரில் அமர்ந்து சாலையில் இருந்திருக்கிறார். வாவா போய் ஒரு பெண்ணைக் கொண்டு வந்திருக்கிறான். பெண்ணும் வாவாவும் காரில் ஏறியிருக்கிறார்கள். ஒளிந்திருந்த ஆட்கள் காரை வளைத்திருக்கிறார்கள்.


அடுத்த நிமிடம்- அங்கு ஒரே ஆர்ப்பாட்டம்தான். முதலாளி கொஞ்சம் பணத்தைத் தந்திருக்கிறார்.

நான் நேராக ரஹ்மான் முதலாளியைத் தேடி ஓடினேன். எனக்கு அவரிடமிருந்து மேலும் ஐம்பது ரூபாய் கிடைத்தது. ஆனால், க்ளாராவுக்கு பயந்து அந்தப் பணத்தை நான் வாடைக்கல்லுக்குக் கொண்டு போகவில்லை. அந்தப் பணத்தை நான் அந்தக் கள்ளுக்கடைப் பெண்ணுக்குக் கொடுத்தேன்.

12

தினாறு வயது இருக்கக்கூடிய ஒரு இளம் பெண் தினமும் வேலைக்குபோவதை நான் பார்த்திருக்கிறேன். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். ஒரு குஜராத்தி சேட்டின் மிளகு தொழிற்சாலையில் மிளகு சுத்தம் செய்வதுதான் அவளின் வேலை. பூங்காவு பகுதியில் எங்கேயோ அவளின் வீடு இருக்கிறது.

ஒருநாள் என்னுடைய சின்ன முதலாளி வேலை முடிந்து போய்க் கொண்டிருந்த அவளைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டான்:

"அவள் யார்டா நாய்க்குட்டி?"

நான் அவள் பின்னால் போய் அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்தேன். தாயும் மகளும் மட்டும்தான் அந்த வீட்டில் இருந்தார்கள். தாய் முன்பு ஒரு விலைமாதாக இருந்தவள்தான். ஆனால், இப்போது அவளுக்கு மதிப்பில்லை. அவளின் மகள் தாய் வழயில் போகவில்லை என்பது போல் தோன்றியது. என்ன இருந்தாலும், தாயின் வித்துதானே?

நான் தாயிடம் அறிமுகப்படுத்திக்¢ கொண்டேன். பேபிக்குட்டி முதலாளியிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கி அந்தத் தாயிடம் கொடுத்தேன். அவள் மகளுக்கு ஒரு புடவையும் வாங்கிக் கொடுத்தேன்.

இதில் நான் விரும்பாத ஒரு விஷயம் இருக்கிறது. அந்தப் பெண் 'மாமா' என்றுதான் என்னை அழைப்பாள். அவள் 'மாமா' என்று என்னைக் கூப்பிடும்போது என் நெஞ்சில் பயங்கர வேதனை உண்டாகும்.

என்னை 'மாமா' என்று அழைப்பது அவள் மட்டும்தான். அவள் 'மாமா' என்று அழைக்கும் போது த்ரேஸ்யாக்குட்டி எனக்கு முன்னால் வந்து நிற்பது போல் எனக்குத் தோன்றும். எனக்கு முன்னால் நிற்பது அந்தப் பெண்தான் என்றாலும், நான் காண்பதென்னவோ என்னுடைய த்ரேஸ்யாக்குட்டியைத்தான்.

நான் அவளிடம் என்னை 'மாமா' என்று அழைக்கக்கூடாதென்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். இருந்தாலும், அவள் அதைக் காதில் போட்டால்தானே!

பேபிக்குட்டி முதலாளி ஒருநாளை நிச்சயித்தார். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு நான்கு நாட்கள் கழித்து அவரின் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு அந்தப் பெண் கட்டாயம் தனக்கு வேண்டும் என்றொரு பிடிவாதம் அவருக்கு.

"திருமணத்திற்கு எவ்வளவோ செலவழிக்கிறோம்.அதுல இந்தச் செலவையும் சேர்த்துக்க வேண்டியதுதாண்டா, நாய்க்குட்டி."

நான் கொஞ்சம் பணத்தைக் கொண்டு சென்றேன். அந்தப் பெண்ணின் தாய் சம்மதித்துவிட்டாள். எல்லா விஷயங்களும் சரியாக நடக்க வேண்டுமென்று அந்தத் தாயிடம் நான் சொன்னேன். அன்று இரவு பத்து மணிக்கு நான் செல்வேன். பெண்ணை என்னுடன் அந்தத்தாய் அனுப்பி வைக்க வேண்டும். பொழுது விடிவதற்கு முன்பு நான் திரும்பவும் பெண்ணைக் கொண்டு வந்து விட்டு விடுவேன். எங்களுக்குள் நடந்த உடன்பாடு இதுதான்.

நான் சொன்ன நேரத்திற்கு அவள் வீட்டை அடைந்தேன். உள்ளே தாயும் மகளும் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. நான் வீட்டுக்குப் பின்னால் நின்றவாறு அவர்களின் பேச்சைக் கேட்டேன்.

மகள் சொன்னாள்:

"இதைச் செய்யச் சொல்றதைவிட நீங்க என்னைக் கொன்னுடலாம்."

தாய் அவளைத் திட்டினாள்.

மகள் கேட்டாள்: "என் வயிறு பெரிசானா என்ன செயறது, அவங்க பாட்டுக்கு போயிடுவாங்க."

அதற்கு அவள் தாய் எந்த பதிலும் கூறவில்லை. அவளுக்கு உண்மையிலேயே ஒரு தர்மசங்கடமான நிலைதான். என்னிடம் என்ன சொல்வது என்ற குழப்பநிலை தாய்க்கு. மகள் சொன்னாள்:

"அந்தக்காளை மாடன் இந்த விஷயத்துக்காகத்தான் தினந்தோறும் நம்ப வீட்டுக்கு வர்றான்ற விஷயம் எனக்கு தெரியாமப் போச்சு. நான் அந்த ஆளை 'மாமா'ன்னு கூப்பிட்டேன். சரியான மாமாதான். அந்த ஆளு இப்போ இங்கே வரட்டும். தூக்கு போட்டு சாகுற மாதிரி நாலு வார்த்தை கேக்குறேன்."

அவள் என்னைப் பார்த்து என்ன கேள்விகள் கேட்பாள்? அதைப்பற்றி எனக்கொன்றும் பிடிபடவில்லை.

தன்னுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள விரும்புகிறாள் என்பதை மகள் அந்தத்தாயிடம் சொன்னாள். அவள் வேலை செய்து கிடைக்கிற பணத்தில் வாழ்க்கை நடத்தினால் போதும் என்றாள். பிச்சை எடுக்கும் நிலை வந்தால், பிச்சை எடுக்கக்கூட தான் தயார் என்றாள். எவ்வளவு கஷ்ட சூழ்நிலை வந்தாலும், இந்த மாதிரியான விஷயங்களுக்கு தான் ஒரு போதும் சம்மதிக்கப் போவதில்லை என்றாள். அவள் தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்:

"அம்மா... உனக்கே வெட்கமா இல்லையா? என்னைப் பார்த்து இப்படி சொல்றது உனக்கே அசிங்கமா தோணலியா? நல்ல பாசமுள்ள அம்மாதான் நீ."

"அப்படின்னா இங்கே செலவழிச்ச பணத்தை நாம திருப்பித்தரணும்."

"நான் அந்தப்புடவையை அந்த ஆள் மூஞ்சியிலே விட்டெறியறேன்..."

நான் வந்ததையே காட்டிக்கொள்ளாமல் திரும்பிவிட்டேன்.

சாலையில் சொன்ன இடத்தில் முதலாளியின் கார் நின்றிருந்தது.

பேபிக்குட்டி கேட்டார்: "அவள் எங்கேடா?"

நான் சொன்னேன்:

"அவள் வரமாட்டேன்னு சொல்லிட்டா. அவளை விட அழகா இருக்கிற வேற ஒரு பெண்ணைப் பிடிப்போம்."

நான் சொன்னதைக் கேட்டு பேபிக்குட்டிக்கு கோபம் வந்து விட்டது.

"அவளை எங்கேன்னு நான் கேட்டேன்."

அந்தப் பெண் தன் தாயிடம் கூறிய ஒவ்வொன்றையும் மெதுவாக நான் கூற நினைத்தேன். அவள் சொன்ன ஒவ்வொன்றையும் பேபிக்குட்டி மட்டுமல்ல, எல்லா முதலாளிகளுமே தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். நான் எல்லாவிஷயத்தையும் தயங்கித் தயங்கி சொன்னேன்.

"பெரிய பத்தினி அவ..."

பேபிக்குட்டியுடன் வேறொரு ஆளும் இருந்தான். பேபிக்குட்டி திருமணம் செய்யப்போகும் பெண்ணின் அண்ணன் அவன். அந்த ஆள் கேட்டான்:

"அப்படியொரு கொள்கை அவளுக்கு இருக்கிறது தப்பா என்ன?"

அதைக் கேட்டு பேபிக்குட்டிக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. அவர் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்:

"இவன் ஒரு திருட்டுப்பய. இவன் நம்ளை நல்லா ஏமாத்திட்டான். யாரும் தொடாம வேற யாருக்கோ அவளைக் கொடுக்கணும்னற்து இவனோட எண்ணம்."

"அய்யோ...! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. அவள் என்னை 'மாமா'ன்னு கூப்பிடுறா."

பேபிக்குட்டி கையை நீட்டி என் கன்னத்தில் பலமாக ஒரு அடி கொடுத்துவிட்டு காரில் ஏறி வேகமாகப் புறப்பட்டார்.

அடி விழுந்ததும் என் கண்களில் இருந்து நெருப்புப்பொறி பறந்தது. நான் எதற்குமே முடியாமல் உட்கார்ந்து விட்டேன்.


சிறிது நேரத்திற்குப் பிறகு தான் என்னால் எழுந்து நடக்கவே முடிந்தது.

ஒருவேளை ஆரம்பத்தில் எல்லாப்பெண்களும் இப்படி இருப்பார்களோ? எனக்கு அறிமுகமான பெண்கள் எல்லாம் சற்று தாமதமாக பார்த்தவர்களே. எது உண்மையோ, யாருக்குத் தெரியும்? இந்தப் பெண்ணும் அதே மாதிரி காலப்போக்கில் மாறி விடுவாளோ?

நான் ஒரே ஒரு பெண்ணுக்கு பயந்தேன் என்றால் அது அந்த இளம் பெண்ணுக்குத்தான். அவள் வழக்கம் போல மிளகு தொழிற்சாலைக்குப் போகும்போது, நான் பக்கத்தில் எங்காவது ஒளிந்து கொள்வேன். அவள் முன்பைவிட இப்படியும் அப்படியுமாய் நெளிந்து நடப்பதைப்போல எனக்குத் தோன்றியது. அவளுக்குத் தைரியம் இருக்கிறது. அவளுடைய முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்?

பேபிக்குட்டி என்னை அடித்துவிட்டார். இருந்தாலும் மலைப்பகுதியில் இருந்து வந்த முதலாளிமார்களில் ஒருவர்தானே என்னை அடித்திருக்கிறார். அவர் அவரின் சோற்றின் மீது அடித்திருக்கிறார். அவ்வளவுதான்.

பேபிக்குட்டியின் திருமண வேலைகள் துரிதகதியில் நடந்து கொண்டிருந்தன. இப்படியொரு திருமணம் ஆலப்புழையில் இதற்கு முன்பு நடந்ததில்லை என்கிற அளவிற்கு எல்லாமே படு அமர்க்களமாக இருந்தன. பெண் காரப்பள்ளியைச் சேர்ந்தவள். வரதட்சணை மட்டும் இரண்டு லட்சமோ மூன்று லட்சமோவாம்.

என்னை அடித்த மறுநாளுக்கு மறுநாள் பேபிக்குட்டியை நான் பார்த்தேன். எதுவுமே நடக்காததைப் போல் என்னைப் பார்த்ததும் பேபிக்குட்டி சிரித்தார். நான் அருகில் சென்றேன். அவர் மட்டுமே நின்றிருந்தார். நான் சொன்னேன்:

"இனி இந்த நாய்க்குட்டி உங்களுக்கு தேவை இல்லியே!"

"ஏண்டா அப்படிச் சொல்ற?"

"இல்ல... கல்யாணம் ஆயிடுச்சுன்னா..."

"கல்யாணம் ஆனா என்னடா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா, மனிதன் உடனே மனிதனா இல்லாமப் போயிடுவானா?"

"இருந்தாலும் சின்னம்மா உங்களை விடணுமே!"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைடா. இருந்தாலும் தொந்தரவுதான்."

பேபிக்குட்டி மெதுவான குரலில் என்னிடம் சொன்னார்:

"அந்த கொம்மாடியில இருக்கிற பொண்ணு விஷயம்... நீ திரும்ப ஒரு முறை முயற்சி பண்ணிப் பாரேன்."

நான் எதுவும் பேசவில்லை. பேபிக்குட்டிக்கு அந்தப் பெண் மீது ஒருவகை பைத்தியம் ஏற்பட்டுவிட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

தேவாலயத்தில் திருமணம் நடந்தபோதுதான் பேபிக்குட்டியின் மனைவியை நான் பார்த்தேன். நல்ல பொன்நிறத்தில் இருந்தாள். அவளைப் பார்த்தால் நம்முடைய கண்களே கூசும். அந்த அளவிற்கு அவள் பேரழகியாக இருந்தாள்.

அந்தத் திருமணச் சடங்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது, கடந்தக் காலத்தில் பேபிக்குட்டியுடன் எனக்கு உண்டான அனுபவங்களை நான் நினைத்துப் பார்த்தேன். அவருக்கு அழைத்துக் கொண்டு போய்விட்ட பெண்களின் முகங்கள் அடுத்தடுத்து என் மனக் கண்களில் வலம் வந்தன. அவருடைய தந்தை என்னவோ ஒரு மொழியில் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். மணியை அடித்துக் கொண்டிருந்தார். தலையைக் குனிந்து கொண்டிருக்கும் அந்த இளம் பெண்ணுக்கு தன்னுடைய கணவன் எப்படிப்பட்டவன் என்ற உண்மை தெரியுமா? பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வசிப்பார்கள். இருப்பினும், அவளுடைய கணவன் எங்கே இருப்பான? அவள் தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டு அரண்மனை போன்ற வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பாள்.

திடீரென்று ஒரு தீர்மானம் என் மனதில் தோன்றியது. மாட்டேன். நான் பேபிக்குட்டிக்கு இனியொருமுறை ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் விடமாட்டேன். அது மட்டும் நிச்சயம்.

எல்லா சடங்குகளும் முடிந்தன. எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அந்த மணப்பெண்ணிடம் கூறிவிடவேண்டும் போல் இருந்தது. பாவம் அந்தப் பெண்! எதற்காக இந்தப் பெரிய வீட்டிற்கு அவள் மணப்பெண்ணாக வரவேண்டும்?

திருமணம் முடிந்து சில நாட்கள் கழிந்தன. நான் பேபிக்குட்டியைப் பார்க்கவில்லை. ஒருநாள் விருந்தினர் மாளிகையில் நாங்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தது. "என்னை பார்த்தவுடன் கேட்டார். 'மனதிற்குள் திட்டம் போட்டுத்தான்' என்று நான் பதில் சொல்ல முடியுமா?

பேபிக்குட்டி என்னருகில் வந்து கேட்டார்:

"என்னடா, அவள் கிடைப்பாளா?"

"அவளைப் பற்றி இப்போ எதுக்கு நினைப்பு? அது நடக்காத விஷயம்..."

"ஏன்டா அப்படிச் சொல்ற?"

நான் சொன்னேன்: "அவள் வரமாட்டா."

பேபிக்குட்டி விழுந்து விழுந்து சிரித்தார்.

நான் சொன்னேன்: "அவள் முகத்தைப் பார்த்த நீங்க இப்படிக் கேட்க மாட்டீங்க. அவள் அப்படிப்பட்ட ஒரு பொண்ணு இல்ல."

"அவள் அநத் அளவுக்கு சுத்தமான கன்னியா என்ன? அது உண்மைதானான்னு நானும் தான் பார்க்கிறேனே!"

நான் சொன்னேன்:

"சரி, பாருங்க..."

எனக்குள்ளும் ஒருவகை பிடிவாதம் தோன்றியது. பேபிக்குட்டி தொடர்ந்து சொன்னார்: "சரி... என்ன நடக்குதுன்னு நீ பாரு."

அன்று எனக்கு பேபிக்குட்டி ஐந்து ரூபாய் தந்தார்.

வாடைக்கல்லுக்குத் திரும்பும்போது மனதிற்குள் நினைத்தேன்- அந்த அளவிற்கு பிடிவாதமாக நான் நடந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையென்று. அந்த மோசமான மனிதர் அந்த அப்பிராணிப்பெண்ணை எந்த விதத்திலாவது தன் வலையில் விழ வைக்க வாய்ப்புண்டு. காரணம்- அந்த ஆளிடம் பணம் இருக்கிறது. செல்வாக்கு இருக்கிறது. இவை போதாதென்று, மனதிற்குள் பிடிவாதம் வேறு தோன்றிவிட்டது. அந்தப் பெண்ணால் தொடர்ந்து நேர்மையாக இருக்கமுடியுமா? அவள் மனதைத் தவிர, அவளைக் காப்பாற்ற வேறு என்ன இருக்கிறது? அவளின் அந்த மனதே காலப்போக்கில் ஆட்டம் காணலாம். இல்லாவிட்டால் அப்படி ஆடிப்போகும் அளவிற்கு சூழ்நிலைகளை பேபிக்குட்டியே உண்டாக்கலாம்.

அவளிடம் முன்கூட்டியே சொல்லி எச்சரித்தால் என்ன என்று நான் நினைத்தேன். ஆனால், அவள் என்னை நம்புவாளா? முன்னால் ஒரு எண்ணத்துடன் அங்கு சென்றேன். இப்போது அதற்கு நேர்மாறாக சொல்வதற்காக செல்ல நினைக்கிறேன்.

சமீபத்தில் பெரிய முதலாளியுடன் நான் கிழக்கு மலைகளிலுள்ள அவரின் தோட்டத்திற்குப் போயிருந்தேன். வெறுமனே என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். அவ்வளவுதான். அங்கே அவருக்குப் பெரிய அளவில் ஐந்தாறு தோட்டங்கள் இருக்கின்றன. அங்கேயும் முதலாளிக்கு ஆட்கள் இருக்கிறார்கள். இரண்டு மூன்று வாரங்கள் அங்கு இருந்துவிட்டு நான் திரும்பி வந்தேன். வந்ததற்கு மறுநாள் பேபிக்குட்டியைப் பார்த்தேன். அன்று இரவு விருந்தினர் மாளிகைக்கு வரும்படி என்னிடம் பேபிக்குட்டி சொன்னார்.

இரவு நன்றாக இருட்டியவுடன் நான் விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். வெளியே ஒருவன் நின்றிருந்தான். எனக்கு அந்த ஆள் யார் என்பது தெரியவில்லை. வராந்தாவில் பேபிக்குட்டி நின்றிருந்தார்.

என்னைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு பேபிக்குட்டி அறைக்குள் போனார். நான் அவருக்குப் பின்னால் நடந்தேன்.

கட்டிலின் காலைப்பிடித்தவாறு ஒரு பெண் நின்றிருந்தாள். நல்ல வெள்ளை நிறத்தில் முண்டும், ப்ளவ்ஸும் அணிந்திருந்தாள். முகத்திற்கு பவுடர் இட்டிருந்தாள். நெற்றியில் பொட்டு இருந்தது. அவள் உண்மையிலேயே அழகிதான்.


அவளைப் பார்த்தவுடன் முதலில் எனக்கு அடையாளம் தெரியவில்லை. அடுத்த நிமிடம் அவள் யாரென்பது தெரிந்துவிட்டது. அவள்- அந்த இளம்பெண்தான்!

உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அவளின் 'மாமா' என்ற அழைப்பு என் காதுகளில் ரீங்காரமிட்டது.

அந்தப் பெண் வலையில் விழுந்துவிட்டாள்.

பேபிக்குட்டி கேட்டார்:

"என்ன சொல்ற நாய்க்குட்டி?"

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை- பேபிக்குட்டி வெற்றி பெற்றுவிட்டார் என்பதற்காக அல்ல. இந்தப் போட்டியில் மட்டுமல்ல, எந்தப் போட்டியாக இருந்தாலும் பேபிக்குட்டிதானே வெற்றி பெறமுடியும்?

எனக்குள் ஒருவகை வேதனை உண்டானது. தாங்க முடியாத வேதனை!

அவள் தன் முகத்தை மூடிக் கொண்டாள். அவள் அழுகிறாளா என்ன?

நான் வெளியே வந்தேன்.

"மாமா...!"

அவள் அழைப்பது போல் எனக்குத் தோன்றியது. நான் திரும்பிப் பார்த்தேன். நடந்து போகும் என்னையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்தக் கதவு அடைக்கப்பட்டது.

வெளியே நின்றிருந்தவனிடம் நான் கேட்டேன் "நீ யாரு?"

"பேபிக்குட்டி முதலாளியோட ஆள்."

"அது புரியுது. நீ இங்கே வந்த விஷயம்...?"

"நான் அந்தப் பெண்ணோட புருஷன்."

நான் நடந்தேன்.

அன்று அவள் சொன்னதெல்லாம் வெறுமனே சொல்லப்பட்டதா?

அப்படி இருக்க வாய்ப்பில்லை.

அவளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

13

பிறக்கும்போதே கெட்டவளாகப் பிறந்த பெண்கள் இருக்கிறார்களா என்ன? அப்படி இருக்காது என்பதுதான் என் கருத்து. கெட்டவர்களாக காலப்போக்கில்அவர்கள் ஆனதுதான் உண்மை. இந்தப் பெண்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டால், ஒவ்வொரு கதை சொல்வார்கள்.

என் கையில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பெண் குழந்தை... இவளையும் எதிர் காலத்தில் விருந்தினர் மாளிகைக்கு கொண்டு போக வேண்டியது வருமோ? இவளைத் திருமணம் செய்பவனே இவளை அழைத்துக் கொண்டு போவானோ? இவள் என்னை 'மாமா' என்று அழைக்கிறாள்.

நான் இடி விழுந்ததைப் போல நடுங்கினேன். த்ரேஸ்யாக்குட்டியைப் பார்த்தேன். ஒன்றுமே தெரியாத சிறு குழந்தை! "மாமா! மாமா!" என்று அழைத்து ஆயிரம் விஷயங்களைப் பற்றி என்னிடம் கேட்கிறாள்.

நானே இவளை விருந்தினர் மாளிகைக்குக் கொண்டு செல்வேனோ?

முன்னாலிருக்கும் நடைபாதையில் பேபிக்குட்டியின் நண்பரான வக்கீல் வந்து கொண்டிருக்கிறார். அவர் என்னைப் பார்த்து அழைக்கிறார்.

"நாய்க்குட்டி!"

நான் ஓடி அவரருகில் போய் நிற்கிறேன்.

"எங்கே போயிட்டு வர்றீங்க எஜமான்?"

அவர் யாரையோ பார்க்கப் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.

"நீ இங்கேதான் வசிக்கிறியா?"

"ஆமா..."

"அது யாரு?"

க்ளாரா வாசலில் நின்றிருக்கிறாள். அவளைப் பார்த்தவாறு அவர் கேட்கிறார்.

அவள் எனக்கு யார் என்று நான் சொல்லுவேன்? என்ன சொல்ல வேண்டும் என்று தெரியாமல் நான் குழம்பிப்போய் நின்றேன். என்னுடைய மனைவி என்று சொன்னால் - என் மனைவிக்கு தப்பித்தல் உண்டா?

வக்கீல் ஒரு சிரிப்புடன் சொன்னார்.

"கறுப்பா இருந்தாலும் பார்க்க லட்சணமா இருக்கா."

நான் எதுவும் பேசாமல் மவுனமாக நின்றிருந்தேன்.

"சரி... நான் வர்றேன்" வக்கீல் புறப்பட்டார்.

நான் நின்ற இடத்திலேயே நின்று விட்டேன். பின்னாலிருந்து அந்தப் பெண் குழந்தையின் அழைப்பு என்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தது.

எனக்கு என் மீதே நம்பிக்கையில்லை. க்ளாராவும் த்ரேஸ்யாக்குட்டியும் புலயன்வழியிலும் ஆலிசேரியிலும் உள்ள பத்தாயிரம் பெண்களுடன் ஒன்றாக ஆகிவிடுவார்கள்.

நான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றியே ஆக வேண்டும்!

மூன்று நான்கு நாட்கள் நான் ஆலப்புழை பக்கமே போக வில்லை. வாடைக்கல் வீட்டிலேயே இருந்துவிட்டேன். "அப்படியென்ன யோசனை?" என்று க்ளாரா பலமுறை என்னைப் பார்த்து கேட்டுவிட்டாள். என் மனதில் வெளியே சொல்ல முடியாத ஏதோ குழப்பம் என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் அவளிடம் கேட்டேன்.

"இங்கே எவ்வளவு ரூபாய் இருக்கு?"

"இருக்கு. வேணுமா?"

கையில் பணமில்லாததால் ஒரு வேளை நான் கவலையில் இருக்கிறேன் போலிருக்கிறது என்று அவள் நினைத்திருக்க வேண்டும்.

நான் சொன்னேன்.

"வேண்டாம். எவ்வளவு இருக்கு?"

"நானூற்றைம்பது ரூபாய் இருக்கு."

எனக்கு ஒரு விதத்தில் நிம்மதி தோன்றியது. எப்படியும் அவர்களை என்னிடமிருந்து தனியாகப் பிரிந்து இருக்குமாறு செய்ய வேண்டம். ஆனால், அவர்களை அப்படி பிரிந்து தனியாக இருக்கும்படி செய்துவிட்டால் மட்டும் அவர்கள் தப்பித்துவிட முடியுமா? வேறொரு வழியில் அவர்கள் பாழாகிப் போய்விட்டால்-...?

நான் அவர்களை என்னிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்க மனதிற்குள் தீர்மானித்தேன். என்னிடமிருந்த அவர்களைப் பறித்து எவ்வளவு தூரத்தில் முடியுமோ அவ்வளவு தூரத்தில் எறிய வேண்டும். ஆனால், அது அவ்வளவு சாதாரண ஒரு விஷயமல்ல. அவர்கள் என்னைச் சுற்றி பிணைந்திருக்கிறார்கள்.

இரவு சாப்பாடு முடிந்து ஒரு பீடியை உதட்டில் வைத்து புகைத்தவாறு நான் அமர்ந்திருந்தேன். க்ளாரா கயிறு பிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தை எந்தக் கவலையும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது.

நான் க்ளாராவின் குழந்தையையே உற்றுப் பார்த்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். என்னையும் மீறி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வெளியே வந்துவிட்டது.

"க்ளாரா, நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்."

அவள் என்னுடைய முகத்தையே பார்த்தாள். நான் சொன்னதில் கடினத்தன்மை சற்று அதிகமாகிவிட்டது போல் எனக்குத் தெரிந்தது. நான் மீண்டும் சொன்னேன்.

"பொண்ணைப் பார்த்துட்டேன். எல்லாம் பேசி முடிச்சாச்சு."

அவள் எதுவும் பேசவில்லை. நான் கடந்த சில நாட்களாகவே மனதில் சிந்தித்துக் கொண்டிருப்பது இந்த விஷயத்தைப் பற்றித்தான் என்று அவள் நினைத்திருக்கலாம்.

மீண்டும் அவள் கயிறு பிரிப்பதைத் தொடர்ந்தாள். ஆனால், கண்கள் கலங்கியிருந்தன. நான் கேட்டேன்.

"என்ன, ஒண்ணுமே சொல்லல?"

அவளால் பேச முடியாது. இருந்தாலும், ஒரு மெல்லிய குரல் வெளியே வந்தது.

"சரிதான்..."

சிறிது நேரத்திற்கு யாரும் பேசவில்லை. நான் சொன்னேன்.

"அதற்கு நீ ஒரு காரியம் செய்யணும்."

என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதைப் போல அவள் என் முகத்தையே பார்த்தாள். நான் சொன்னேன்.

"நானூற்றைம்பது ரூபாய் கையில் இருக்குமில்ல?"

நான் சொல்வதற்கு முன்பு, அவள் சொன்னாள்.

"அதை நான் தந்திடறேன்."

நான் அந்தப் பணத்தைக் கேட்கப் போகிறேன் என்று அவள் நினைத்துக் கொண்டாள். நான் சொன்னேன்.

"நான் உன்கிட்ட இருக்குற பணத்தைக் கேட்கல. இன்னும் முந்நூறு ரூபாய் ஏற்பாடு பண்ணித் தர்றேன். நீயும் குழந்தையும் இந்த இடத்தை விட்டு வேற எங்கேயாவது போயிடணும்."

அவள் கையிலிருந்த கயிறு கீழே விழுந்தது. அவளால் நான் சொன்னதைத் தாங்க முடியவில்லை.


"நாங்க இங்கே இருந்தா என்ன? நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. யார் வேண்டான்னாங்க?"

நான் சொன்னேன். "அது நடக்காது."

"எங்களால ஒரு தொந்தரவும் உங்களுக்கு இருக்காது."

"அது சரியா வராது."

அப்படிக் கடுமையாகச் சொல்ல மட்டும் என்னால் முடிந்தது. அவள் அழுதவாறு கேட்டாள்.

"நாங்க என்ன செய்றது?" தொடர்ந்து தாங்க முடியாமல் அவள் சொன்னாள். "வேணும்னா என்னையும் குழந்தையையும் உங்க கையாலேயே கொன்னுடுங்க."

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவள் சொன்னாள்.

"த்ரேஸ்யாக்குட்டியோட அப்பா செத்துப்போன பிறகும் எங்களை எந்தவித கஷ்டமும் தெரியாமதான் காப்பாத்தினீங்க."

கடைசி முயற்சியாக அவள் சொன்னாள்.

"இந்தக் குழந்தை எப்படி வளரும்? அவளைப் பார்க்குறதுக்கு யார் இருக்காங்க?"

என் மனதில் இருந்த விஷயம் என்னையும் மீறி வெளியே வந்துவிட்டது.

"க்ளாரா, என்னால் கட்டுப்பாட்டோடவும், ஒழுக்கத்தோடும் இந்த குடும்பத்தைக் கடைசி வரை கொண்டு போக முடியாது. ஒரு குழந்தையை வளர்க்க என்னால் முடியாது!"

அவள் என்னிடம் வாதம் செய்யவில்லை. அவளால் என்னிடம் என்ன கேட்க முடியுமோ, அதைக் கேட்டு விட்டாள். அவ்வளவுதான்.

இந்த இடத்தைவிட்டுஅவர்கள் செல்ல வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட ஒரு விஷயம் என்பதை அவள் தெரிந்து கொண்டாள் என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

நான் கேட்டேன்.

"உனக்கு வேண்டியவங்க யாரும் இல்லியா?"

"சங்ஙனாசேரிக்கு கிழக்குல சித்தப்பா இருக்காரு.ஆனா, அவருக்கு இப்போ என்னைப் பார்த்தா அடையாளம் தெரியுமான்னு சந்தேகம்..."

"சரி... அப்படின்னா அங்கே போ. இல்லாட்டி அதையும் தாண்டி கிழக்குல போ. மலைப் பிரதேசத்துல இருக்குற தோட்டங்களுக்குப்போயிடாதே. இந்தப் பணத்தைப் பத்திரமா வச்சிருந்து, பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடு. எல்லாம் முடிஞ்சு, நீ படுகிழவியான பிறகு, இங்கே வந்திடு."

விளக்கில் மண்ணெண்ணெய் தீர்ந்து திரி கறுப்பாக எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும், நானும் அவளும் சிறிதுகூட தூங்கவில்லை. எங்களுக்குள் பேச எதுவும் இல்லாததுதான் நாங்கள் பேசாமல் இருந்ததற்கான காரணமா என்ன?

நீண்ட நேரம் கழித்து, வெளியில் இருந்த ஒரு சிறு புன்னைமரத்தில் இருந்த ராப்பாடி 'உவ் உவ்' என்று அழுது கொண்டிருந்தது. 

சாக்கோ அண்ணன் மரணமடைந்து பிறகு, நான் தூங்கிய அந்த இரவை நினைத்துப் பார்த்தேன். அன்றும் அந்த ராப்பாடி இப்படித்தான் பாடிக் கொண்டிருந்தது.

"என்னைப் படைத்த கடவுளே!"

அவள் அழுதாள்.

பொழுது புலர்வதற்கு முன்பு, எழுந்து வெளியே புறப்பட்டேன். நான் பல விஷயங்களைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களை அனுப்புவதற்கு பணம் தயார் பண்ண வேண்டும்.

அது எனக்கு ஒரு கஷ்டமான விஷயமில்லை. பத்து, பதினைந்து என்று முதலாளிமர்களிடம் வாங்கி முந்நூறு ரூபாய் தயார் பண்ணிவிட்டேன். அன்று சாயங்காலம் நான் திரும்பி வந்தேன். மறுநாள் அவர்களை அனுப்ப வேண்டும். அந்தப் பெண் குழந்தை என்னையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவள் முகம் மிகவும் வாடிப் போயிருந்தது. அவள் கேட்டாள்.

"மாமா, எங்களை வெளியே போகச் சொல்றீங்களா?"

நான் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டேன்.

"மாமா, பிறகு எப்படி நான் உங்களைப் பார்ப்பேன்? மாமா, உங்களைப் பார்க்காம..."

க்ளாரா அந்தப் பெண் குழந்தையிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தாள்.

"மாமா, நான் எப்படிச் சாப்பிடுவேன்?"

நான் எதுவும் பேசவில்லை. நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பேசவும் கூடாது.

நன்கு இருட்டும் வரை குழந்தை என்னுடைய மடியிலேயே படுத்திருந்தாள். அவளை உள்ளே போய் படுக்கும்படி சொன்னதற்கு தொண்டை அடைக்க அவள் சொன்னாள். "மாமா, நான் உங்க மடியிலேயே படுத்துத் தூங்கட்டுமா?"

ஒரு நிமிடம் கழித்து அவள் தொடர்ந்து சொன்னாள்.

"இனிமேல் நான் உங்க மடியில் படுக்கவே முடியாதே!"

என் மடியிலேயே படுத்து அவள் உறங்கினாள். அவளை நான் என் பாயில் படுக்க வைத்தேன்.

அந்த ராப்பாடி அன்றும் பாடிக் கொண்டிருந்தது. அதைத் தவிர வேறு எந்த சிறு சத்தமும் இல்லை.

"இந்தப் பாயில நான் கொஞ்சம் உட்காரட்டுமா?"

சிறிது நேரம் கழித்து தொண்டை இடற க்ளாரா சொன்னாள்.

"நான் உங்க பாயில ஒருநாள் கூட உட்கார்ந்தது இல்ல. இனி மேலும் உட்கார முடியாது. ஒரே ஒரு தடவை உட்கார்ந்துக்கிறேனே?"

நான் கையை நீட்டினேன். என் கை அவள் உடம்பில் பட்டது. முதல் தடவையாக நான் அவளைத் தொட்டேன்.

என் மார்பின் மீது தன் தலையை வைத்தவாறு அவள் படுத்தாள்.

திடீரென்று என் மார்பு முழுவதும் நனைந்தது. அவள் முதுகை நான் கையால் தடவினேன்.

தடுமாறிய குரலில் அவள் கேட்டாள்.

"எங்களை நினைப்பீங்களா?"

குரல் வெளியே வரவில்லை. அவள் என்ன சொல்கிறாள் என்பதையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மீண்டும் அவள் என்னவோ சொன்னாள். சிறிது நேரம் கழித்துத்தான் அவள் என்ன சொன்னாள் என்பதையே நான் தெரிந்து கொண்டேன்.

"இந்த இரத்தத்துல இருந்து எனக்கொரு குழந்தை உண்டாக நீங்க சம்மதிக்கல..."

அவள் சொன்னதைக் கேட்டு என் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. நானும் தொண்டை கம்ம சொன்னேன்.

"எனக்கு குழந்தை வேண்டாம். குழந்தை பிறக்கக்கூடாது.

என் மனசுல சந்தோஷம் இல்ல. குழந்தை பிறந்து என்ன பிரயோஜனம்?"

அவள் உரத்த குரலில் அழுதவாறு நான் அங்கிருந்து நகராமல் இருக்க வேண்டும் என்பதற்காக என் தோளை தன் கைகளால இறுகப் பற்றினாள்.

நான் சொன்னேன்.

"சங்ஙனாசேரிக்கு கிழக்குல ஏதாவதொரு இடத்துல உனக்குப் பொருத்தமா இருக்குற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கோ. அவன் நல்லவனான்றதை பார்த்துக்கோ. அவன் உன் மேல பிரியம் வச்சிருக்கணும். உன்னைக் கடைசி வரை காப்பாத்துறவனா இருக்கணும்."

"முடியாது... முடியாது... என்னால மறக்க முடியாது. நீங்க... நீங்க... எங்களோட தெய்வம். நான் சாகுறவரை உங்களை நினைச்சிக்கிட்டே இருப்பேன்."

மீண்டும் அவள் சொன்னாள்.

"உங்க மடியில தலையை வச்சுக்கிட்டே சாகணும்னு நினைச்சிருந்தேன். என் கடவுளே!"

அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை.

அந்த ராப்பாடியின் பாட்டு நின்றது.

என் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டதை வைத்தாவது அவள் என்னைப் புரிந்து கொண்டிருப்பாளா?

உறக்கத்தில் அந்தக் குழந்தை சொன்னாள். 

"மாமா, என் மாமா, எங்களை விட்டு நீங்க போக மாட்டீங்கள்ல..."


ஹோட்டலுக்குப் பின்னாலிருந்த எச்சில் தொட்டியில் வளர்ந்த நாய்குட்டியின் மார்பின் மீது தன்னுடைய தலையை வைத்து ஒருத்தி படுத்திருக்கிறாள். ஒரு பெண் குழந்தை தன்னை விட்டுப் போகக்கூடாது என்று அவனைப் பார்த்து கெஞ்சுகிறது. எனக்கென்று ஒரு வீடு உண்டானது. அன்பு செலுத்த ஒரு பெண்ணும் பிள்ளையும் கிடைத்தார்கள். ஆனால், இதென்ன கஷ்டம்? எனக்கு இது தேவையில்லையா என்ன?

பொழுது புலர்வதற்கு முன்பே நாங்கள் எல்லா பொருட்களையும் கட்டி எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். வெளியில் வந்ததும் க்ளாரா அந்த வீட்டை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். என் தோளில் இருந்த த்ரேஸ்யாக்குட்டியும் அந்த வீட்டைப் பார்த்தாள்.

படகுத்துறையை விட்டுப் படகு புறப்பட்டதும் க்ளாரா மேல் துண்டால் முகத்தை மூடிக் கொண்டாள். கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்த த்ரேஸ்யாக்குட்டி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் திரும்பி நடந்தேன்.

"மாமா!..."

நான் திரும்பிப் பார்த்தேன்.

படகு அவர்களை ஏற்றிக் கொண்டு வேகமாகபோய்க் கொண்டிருந்தது.

இன்னும் என் குழந்தை த்ரேஸ்யாக்குட்டி அழைப்பதை நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

14

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக நான் குன்னும் புறத்து முதலாளியுடனே இருந்துவிட்டேன். இருந்தாலும் இந்த இடத்தில்தான் சாப்பாடு என்றில்லை. இந்த இடத்தில்தான் தூக்கம் என்றில்லை. எப்படியோ வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் நோக்கம் என்ன? அப்படியெதும் இல்லை என்பதே உண்மை. போவதற்கு இடமில்லை. பார்ப்பதற்கு ஆட்கள் இல்லை. நாளை என்ன செய்யவேண்டுமென்றோ எங்கு போகவேண்டுமென்றோ மனதில் எந்தவித தீர்மானமும் இல்லை. மனிதனாகப் பிறந்தும், மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் மறுக்கப்பட்ட ஒரு பிறவி நான். இப்படியே என் வாழ்க்கை நீங்கிக் கொண்டிருக்கிறது. எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை இப்படியே போகுமோ, யாருக்குத் தெரியும்?

ஒரு நாள் பெரிய முதலாளி என்னை அழைத்துச் சொன்னார்.

"டேய், நாய்க்குட்டி, அந்தப் புலயன்வழியில ஒரு வீடு கட்டணும்.

அதற்கு அங்கே இப்போ குடியிருக்குற அந்த தொந்தரவு பிடிச்சவங்களையெல்லாம் அந்த இடத்தை விட்டு போக வச்சாத்தான் சரியா இருக்கும்..."

அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. முதலாளி தொடர்ந்து சொன்னார்.

"ரெண்டு மூணு குடிசைங்க ஆள் இல்லாம சும்மாத்தான் கிடக்கு. அங்கே இருந்தவங்க போயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதற்குப் பிறகு அங்கே யாரையும் நாம கொண்டு போய் வைக்கல... இன்னும் அஞ்சாறு பேர் அங்கே இருக்காங்க. எல்லாரும் உன்னோட சொந்தக்காரங்கதானே?"

முதலாளி இலேசாக புன்னகைத்தார். அப்படியென்றால் அந்த ஆதரவில்லாதவர்களை வெளியேற்றி விடும் வேலைகளையும் என்னிடம்தான் அவர் ஒப்படைக்க நினைக்கிறார்!

நான் என்ன செய்வது?

நான் மெதுவான குரலில் கேட்டேன்.

"அவங்க எங்கே போவாங்க முதலாளி?"

கட்டாயம் கேட்க வேண்டிய கேள்விதான் அது. முதலாளி கொண்டு வந்து தங்கவைத்த கொச்சு மரியம், ஜானகி, கவுரி இவர்கள்தான் அங்கே இருப்பவர்கள். அவர்களின் விஷயமாக இருப்பதால் முதலாளியிடம் கட்டாயம் கேட்க வேண்டியதுதான். முதலாளி சொன்னார்.

"எங்கே வேணும்னாலும் போகட்டும்."

அடுத்த நாள் முதலாளி கேட்டார்.

"நீ அங்கே போனியாடா?"

"இல்ல.."

"ஏன்?"

"இன்னைக்குப் போறேன்."

இந்த விஷயத்தை அவர்களிடம் எப்படி சொல்வது? என்னால் முடியாது. அவர்கள் வாயைத் திறந்து இங்கு சொல்வதாக இருந்தால் எவ்வளவு விஷயங்களைச் சொல்லலாம் தெரியுமா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வாழ்க்கைக் கதையே சொல்லலாம். எனக்கு அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் நன்றாகவே தெரியும். கொச்சு மரியம் தன் சிறுவயது மகனைப் பிடித்து முன்னால் நிறுத்திக் கொண்டு இவனும் வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றா சொல்கிறாய் என்று கேட்டால் நான் அவளிடம் என்ன பதில் சொல்லுவேன்? நீ யாரடா எங்களிடம் இந்த விஷயத்தை வந்து சொல்வதற்கு என்றுகூட அவர்கள் கேட்லாம்.

இருந்தாலும் நான் சாப்பிடும் சோறு முதலாளி போட்டதுதான். அவர் சொல்லும் வேலையை என்னால் செய்யாமல் இருக்க முடியாது.

நான் மதிய நேரத்திற்கு பிறகு அங்கே சென்றேன். அந்தப் பகுதியில் நுழைந்தவுடன் கொச்சு மரியம் முகமெங்கும் படர்ந்த ஒரு சிரிப்புடன் ஜானகியை அழைத்துச் சொன்னாள்.

"ஜானகி, யார் வந்திருக்கிறதுன்னு பாரேன்..."

ஜானகி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். அவளின் முகம் பிரகாசமாக இருந்தது.

"என்ன? ஆளையே இநதப் பக்கம் காணோம்? என்ன விஷயம்? எங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சு. நாங்க பழைய சரக்குகள் ஆயிட்டோம் இல்லியா? சின்னச் சின்ன பொண்ணுகளா கிடைப்பாங்க. பிறகென்ன?

கவுரி அருகில் வந்து மெதுவான குரலில் சொன்னாள்.

"எங்க மூணு பேருக்கும் ஆள் இருக்கறதா இருந்தா, பரவாயில்ல. ஒரு ஆளுக்கு மட்டும்தான்னா வேண்டாம்..."

கொச்சுமரியம் சொன்னாள்.

"கவுரி, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இந்த ஆளு நம்மளைத் தேடி வந்திருக்கிறதா நீ நினைச்சிக்கிட்டு இருக்கியா? இப்போ கொம்மாடியிலயும் பூங்காவிலயும்தான் இந்த ஆளு சுத்துறதே! கைவசம் பத்து, பதினெட்டு வயசுல பொண்ணுக இருக்காங்க."

அங்கு கிளைவிட்டுப் படர்ந்திருந்த ஒட்டு மாமரத்திற்குக் கீழே ஜானகி ஒரு பாயைக் கொண்டு வந்து விரித்தாள்.

"சும்மா நின்னுக்கிட்டு இருக்காம, பாயில உட்காருங்க நாய்க்குட்டி அண்ணே..."

நான் பாயில் அமர்ந்தேன். கொச்சு மரியம் எனக்கு ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு வருவதற்காக கடையை நோக்கி ஓடினாள். நான் கேட்டேன்.

"பிறகு... என்ன விசேஷம்?"

கவுரி சொன்னாள்.

"என்ன விசேஷமா! ஒண்ணுமேயில்ல. நாங்க பட்டினி கிடக்குறோம். வாரத்துல ரெண்டு நாளு கயிறு தொழிற்சாலையில வேலை கிடைக்குது. நீங்கதான் எங்களை மறந்துட்டீங்களே!"

ஜானகி கேட்டாள்.

"யாராவது ஆள் இரக்காங்களா நாய்க்குட்டி அண்ணே? நாங்க எவ்வளவு நாள்தான் பட்டினி கிடக்குறது! கொச்சு மரியம் கஞ்சி வச்சு இன்னைக்கோட ரெண்டு நாளாச்சு. எப்பவாவது எங்களுக்கு காசு வந்திருச்சுன்னா, நாங்க கொஞ்சம் அவளுக்குத் தருவோம்."

நான் கேட்டேன். "பிறகு எதற்கு அவள் தேநீருக்கு ஓடினா?"

"எங்களுக்கு நன்றி உணர்ச்சி இருக்கு நாய்க்குட்டி அண்ணே. நீங்க எங்களுக்கு எவ்வளவு காசு வாங்கித் தந்திருப்பீங்க! சொல்லப் போனா எங்க உடம்பு நீங்க வளர்த்தது. எங்களை நீங்க மறந்தாலும், நாங்க மறக்க மாட்டோம்."

ஜானகி மீண்டும் கேட்டாள்.

"யாராவது ஆள் இருக்கா, இருந்தா, இன்னைக்கு கொச்சு மரியத்தைக் கூட்டிட்டுப் போங்க. அவ ரொம்பவும் கஷ்டப்படுறா. அவளுக்கு ஒரு பையன்வேற இருக்கான்.


அவனைப் பட்டினி போடாம பார்க்குறதுன்னா சாதாரண விஷயமா என்ன? ஆனா, நாங்க மூணு பேரும் சேர்ந்துதான் அவனை வளர்க்கிறோம்."

கவுரி அவனை அழைத்தாள்.

"டேய் பேபிக்குட்டி! மகனே, பேபிக்குட்டி!"

எங்கிருந்தோ அவன் தன்னை அழைப்பதைக் கேட்டு ஓடி வந்தான். நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"அவனோட பேரு பேபிக்குட்டியா?"

ஜானகி கேட்டாள். "பிறகு என்ன பேரு வைக்கிறது, கண்ணைத் திறந்து அவனை நல்லா பாருங்க."

அவன் வந்து கவுரியுடன் ஒட்டிக் கொண்டு நின்றான். கவுரி அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டு அவனைச் செல்லமாக தடவினாள். அவன் கேட்டான்.

"என்னை எதுக்கு கூப்பிட்டீங்க, சித்தி?"

"சும்மாதான்டா மகனே."

கவுரி அவனுக்கு முத்தம் தந்தாள்.

நல்ல சதைப்பிடிப்பும், சுறுசுறுப்பும் உள்ள அழகான பையன்! அவனுக்கு நல்ல நிறம்! புத்திசாலியாகவும் தெரிந்தான். அந்தப் பெண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவனைப் பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். அவனுக்கு கவலை என்றால் என்னவென்று தெரியாது.

கொச்சு மரியம் தேநீருடன் வந்தாள். நான் கேட்டேன்.

"நீ ஏன் அப்பன் பேரை இவனுக்கு வச்சே?"

ஜானகி சொன்னாள்.

"நாய்க்குட்டி அண்ணே... உங்களுக்கு கண்ணு இல்லியா என்ன? நல்லா பாருங்க. இவன் காதுக்குப் பின்னால மூத்த முதலாளிக்கிட்ட இருக்குற மரு இருக்கு பாருங்க..."

நான் தோற்றுவிட்டேன்.

"எனக்கு இதெல்லாம் தெரியாது. முதலாளிக்கு உடம்புல எங்கெங்கே மரு இருக்குன்ற விஷயமெல்லாம் எனக்கு எப்படி தெரியும்?"

அந்தப் பெண்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

"அது எங்களுக்கு நல்லாவே தெரியும்."

அந்த கள்ளுக்கடைப் பெண்ணைப் பற்றி நான் கவுரியிடம் கேட்டேன். நான் கொடுத்த ஐம்பது ரூபாயுடன் அவள் ஊரை விட்டே போய் விட்டாளாம். இப்போது அவள் எங்கே இருக்கிறாள் என்பது யாருக்குமே தெரியாதாம். ஜானகி சிரித்துக் கொண்டே கேட்டாள்.

"அந்தப் பெண் மேல நாய்க்குட்டி அண்ணனுக்கு ஒரு தனி பிரியம். அதனாலதான் நம்ம எல்லாரோட வீடுகளையும் தாண்டிப்  போயி அவளுக்கு ஐம்பது ரூபாய் தந்திருக்காரு."

கொச்சு மரியமும் கவுரியும் தொடர்ந்து சொன்னார்கள்.

"அதுல விஷயம் இருக்கு. அந்தப் பெண்கூட பாயில நாய்க்குட்டி அண்ணன் படுத்திருக்காரு. நம்ம யாரையும் இவரு தொட்டதுகூட இல்லியே!"

நான் மனதில் நினைத்தது அதுவல்ல. பாவம் அந்தப் பெண்ணுக்கு நான் தந்த ஐம்பது ரூபாய் ஏதாவதொரு விதத்தில் பயன்பட்டிருக்குமா? வாழ்க்கையில் அவள் எங்காவது காலூன்றியிருப்பாளா?

ஜானகி கேட்டாள்.

"பிறகு ஒரு விஷயம்... அந்தப் பெண், அவளோட குழந்தை அவங்களைப் பற்றி ஏதாவது தெரியுமா?"

அவள் கேட்டது க்ளாராவைப் பற்றி.

நான் எதுவும் சொல்லவில்லை.

"அய்யோ! அவ ஒரு அப்பிராணி. நல்ல வேளை அவ கெட்டுப் போகல..."

கொச்சு மரியம் என்னைப் பார்த்தவாறு சொன்னாள்.

"பெரிய முதலாளி ரொம்பவும் மோசமான ஒரு ஆளு. கண்ணுல கொஞ்சம்கூட இரத்தம் இல்லாத மனுசன்!"

நான் வெறுமனே சிரிக்க மட்டும் செய்தேன்.

இவ்வளவு நேரமான பிறகும் நான் வந்த விஷயத்தைச் சொல்லவேயில்லை. எப்படிச் சொல்வது? அவர்களிடம் சொல்ல என்னால் முடியாது. எதுவுமே வாய் திறக்காமல் அங்கிருந்து நான் போவதுதான் சரியானது. ஜானகி ஒரு பெரிய புகாரை மனதில் வைத்திருக்கிறாள். இப்போதுதான் அது அவள் ஞாபகத்திற்கு வந்திருக்கிறது. அவள் சொன்னாள்.

"போன தடவை தேங்காய் பறிச்சப்போ, இந்தச் சின்ன பையன் பேபிக்குட்டி ஒரு தேங்காயைத் தூக்கிக்கிட்டு வந்தான். அதை ஒண்ணும் வீட்டுக்கு கொண்டு வரல. என்ன இருந்தாலும் சின்னப் புள்ளைதானே! அந்தத் தேங்காயை வச்சு விளையாட்டிக்கிட்டு இருந்தான். ஒரு குச்சியால அவனை அடிச்சு அந்த ஆளு தேங்காயைப் பிடுங்கிக்கிட்டாரு. குழந்தை அழுதுக்கிட்டே வந்தான்..."

நான் கேட்டேன்...

"யார் அடிச்சது? கணக்குப் பிள்ளையா?"

அவள் வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்.

"இல்ல. கணக்குப்பிள்ளை அப்படியெல்லாம் செய்யவேமாட்டாரு. அவருக்கு முகத்துல கண்ணு இல்லியா என்ன? எல்லாம் இவனோட அப்பாதான். சரி... சின்னப்புள்ளைதானே, தேங்காயை எடுத்துட்டுப் போகட்டுமேன்னு விடணும்ல... அதை விட்டுட்டு அடிக்குறதுன்னா..."

சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்து சொன்னாள்.

"இந்தச் சின்ன புள்ளை அப்படி அழுதான்... இந்த மாதிரி அவன் அதுக்கு முன்னாடி அழுததே இல்ல. மகாபாவி! எப்படி பையனை அடிச்சுத் தேங்காயைப் பிடுங்க அந்த ஆளுக்கு மனசு வந்துச்சுன்னு தான் நான் யோசிக்கிறேன். இந்தத் தேங்காய்களை அந்த ஆள் தன்னோட புள்ளைங்களுக்குத்தானே கொண்டு போறாரு! இவனும் அவரோட இரத்தத்துல பிறந்தவன்தானே! எப்படித்தான் இப்படியெல்லாம் செய்ய மனசு வருதோ, தெரியல..."

நான் சொன்னேன்.

"குச்சியை வச்சித்தானே அடிச்சாரு? என்ன இருந்தாலும் அடிச்சது அப்பாதானே! இதுக்குப் போயி கோபப்பட்டா எப்படி?"

அவ்வளவுதான் -ஜானகிக்கு கோபம் வந்துவிட்டது.

"இங்கே இந்த மாதிரி ஏதாவது பேசினா, பிறகு..."

அதற்கு நான் சொன்னேன்.

"சரி... சரி... இதுக்கெல்லாம் கோபப்படலாமா ஜானகி?"

கொச்சு மரியம் வேறொரு விஷயத்தைச் சொன்னாள். கடந்த இரண்டு முறை தேங்காய் பறிக்கும்போதும் இங்கு இருப்பவர்களுக்கு ஒரு தேங்காய் கூட கொடுக்கவில்லையாம். இது போதாதென்று, வீட்டை எல்லோரும் காலி பண்ண வேண்டும் என்றும் உத்தரவாம். இப்போதுவும் இந்த விஷயத்தைமிகவும் தீவிரமாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்களாம். கொச்சு மரியம் உறுதியான குரலில் சொன்னாள்.

"என்ன செய்தாலும் நான் போறதா இல்ல..."

ஜானகியும் சொன்னாள். "பிறகு... நாங்க போவோமா என்ன? எங்களுக்கு பசங்க இல்லை... அது வேற விஷயம்."

நான் கேட்டேன்.

"இப்படி நீங்க சொல்ற அளவுக்கு வேற முதலாளிமார்கள் யாரும் இல்லியா?" ஜானகி என்னை கோபத்துடன் பார்த்தாள். நான் அவளைப் பார்த்து விளையாட்டாக சிரித்தேன்.

"ஜானகிக்கு கோபம் வந்திடுச்சா? நாய்க்குட்டி அண்ணன் ஏதோ பொழுதுபோக்குக்காக சொன்னாரு. அதைப் போயி பெரிசா எடுத்துக்கிட்டு..."

நான் எந்த விஷயத்தைக் கூற வேண்டும் என்று சென்றேனோ, அதைச் சொல்லாமலே அங்கிருந்து கிளம்பினேன். அந்த அப்பிராணிப் பெண்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் மிகவும் வருத்தமாகிவிட்டது. எனக்கு கள்ளு குடிக்க எட்டணா தங்களால் கொடுக்க முடியவில்லையே என்பதுதான் அது. அதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று அவர்களை நான் தேற்றினேன். ஒரு விஷயத்தை அவர்கள் திரும்பத்திரும்ப சொன்னார்கள். நான் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயமது. யாராவது ஆள் வந்தால், அவர்களை நான் எந்த காரணத்தைக் கொண்டும் மறந்துவிடக்கூடாது.


குறிப்பாக- கொச்சு மரியத்தை. அந்தப் பையன் வளர வேண்டும் அல்லவா? அவன் அவர்கள் மூன்று பேரின் மகனாம்!

திரும்பி வரும் போது, யாராவது ஒரு ஆளை அன்றே பிடித்து அவளுக்குத் தர வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தேன். அந்த அப்பிராணிப் பெண்கள் பட்டினி கிடக்கிறார்கள். நீண்ட நாட்களாகவே குன்னும்புறத்து பேபிக்குட்டியை விட்டால், வேறு யாரையும் நான் தேடிப்போகாமல் இருந்தேன். இனிமேல் பழையபடி வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதானா? இல்லாவிட்டால் பாவம்... அந்தப் பெண்கள் எப்படி வாழ்வார்கள்?

இனிமேல் நாம் அதைச் செய்யக்கூடாது என்று ஒதுக்கி வைத்திருந்தேன். வேண்டாமென்று நான் நினைத்திருந்தேன். மீண்டும் ஆரம்பிக்க வண்டும். அதைச் செய்வதற்கு தயக்கமாகவும் இருக்கிறது.

15

டுத்த நாள் நான் முதலாளியைச் சந்திக்கவேயில்லை. அதற்கடுத்த நாள் நேருக்கு நேர் பார்க்க வேண்டியதாகிவிட்டது. நல்ல வேளை அப்போது கோபமாக இல்லாமலிருந்தார் அவர்.

"என்னடா? விஷயம் என்னாச்சு? அங்கே நீ போனியா?"

"போனேன்."

"அதுக்குப் பிறகு?"

நான் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தேன். முதலாளி கேட்டார்.

"அங்கே போயி அவங்க கூட விளையாடி, சிரிச்சு, ரசிச்சுக்கிட்டு இருந்தே... அப்படித்தானே?"

நான் எதுவும் பேசவில்லை.

"நீ ஒரு பெரிய திருட்டுப் பயடா. சரியான திருடன். சொல்லப் போனா நீ அவள்களோட ஆளு. உனக்கு சாப்பாடு கிடைக்குறது இங்கே. ஆனா, உன் கவனம் இருக்கிறது முழுசா அங்கேதான்."

"அய்யோ... என்ன முதலாளி சொல்றீங்க?"

"நான் சொல்றது சரிதாண்டா... நீ இந்த விஷயத்துக்கு சரியா வரமாட்ட செய்யவும் மாட்டே."

முன்னாலிருந்த விஸ்கியை எடுத்து சிறிது குடித்துவிட்டு முதலாளி சொன்னார்.

"எனக்கு அந்த விஷயம் தெரியும். அவள்களை விட்டு உன்னால இருக்க முடியாது. ஒரு வகையில பார்த்தால் அது சரிதான்."

அவர் அப்படிச் சொன்னது ஒரு விதத்தில எனக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. வீட்டை இடிப்பதற்கும், அவர்களை வெளியே போகச் சொல்வதற்கும் நான் உடன் செல்ல வேண்டுமென்று அவர் சொல்லியிருந்தால், நான் நிச்சயம் சென்றிருப்பேன். அந்தக் காரியங்களைச் செய்துமிருப்பேன். ஆனால், அது எவ்வளவு மோசமான ஒரு செயலாக இருந்திருக்கும். அதைவிட மகா பாவமான செயல் வேறொன்று உலகத்தில் இருக்கிறதா என்ன? நல்ல வேளை அந்த விரும்பத்தகாத ஒரு விஷயத்திலிருந்து நான் தப்பித்து விட்டேன்.

நான் தலையைச் சொறிந்து கொண்டே சொன்னேன்.

"நான் ஒரு விஷயம் சொல்லணும்."

"என்னடா?"

"நான் முந்தா நாளு அங்கே போயிருந்தேன்."

"பிறகு?"

நான் பேசாமல் இருந்தேன்.

"போன... அதனால என்ன?"

முதலாளி மீண்டும் கொஞ்சம் விஸ்கியைக் குடித்தார்.

"அவங்களோட நிலைமை ரொம்பவும் மோசமா இருக்கு."

"நீ அப்படித்தான் சொல்வே."

"அது மட்டுமல்ல. அந்தக் குழந்தை..."

நான் முதலாளியின் முகத்தைப் பார்த்தேன். நான் சொல்ல வருவதை அவர் எப்படி வாங்கிக் கொள்கிறார் என்பதை அறியும் நோக்கத்துடன்.

"எந்தக் குழந்தைடா?"

"அந்தக் கொச்சு மரியத்தோட சின்னப் பையன்..."

"கொச்சு மரியத்தோட பையனா?"

முதலாளிக்கு ஞாபகம் வந்திருக்குமா? அடுத்து என்ன சொல்வதென்று தெரியாமல் நான் தயங்கி நின்றேன். முதலாளியின் மகன்தான் அவன் என்று சொல்லி அவருக்கு நான் நினைவுபடுத்த வேண்டுமா என்ன?

திடீரென்று முதலாளி ஞாபகத்தில் வந்த மாதிரி சொன்னார்.

"ஒண்ணுமில்லடா அவள் அப்படிச் சொல்லியிருப்பா. வேற யாருக்காவது பிறந்திருக்கக் கூடாதா என்ன?"

முதலாளி சொல்லி முடிப்பதற்கு முன்பு நான் இடையில் புகுந்து சொன்னேன்:

"அந்தக் குழந்தையோட காதுக்குப் பின்னால ஒரு மரு இருக்குது. அதை நானே பார்த்தேன்."

முதலாளி என்னைப் பார்த்து கோபத்துடன் சொன்னார்.

"போடா போ..."

தொடர்ந்து இந்த விஷயத்தைப் பேசுவது அவ்வளவு நல்லதாக இருக்காது என்று என் மனதிற்குத் தோன்றியது. முதலாளியை எனக்கு நன்றாகவே தெரியும். இதற்கு மேல் பேசினால் அவருக்கு பயங்கரமாக கோபம் வரும்.

நான் சிறிது தள்ளி நின்றேன். சிறிது நேரம் கழித்து முதலாளி என்னை அழைத்தார். "டேய்... இப்போ இந்த விஷயத்தை என்கிட்ட நீ சொன்னதோட இருக்கட்டும். இதே விஷயத்தை வேற யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூடப் பேசிடாதே..."

அது ஒரு கறாரான கட்டளையாக இருந்தது.

"இல்ல... இல்ல..."

முதலாளி என்னவோ யோசனையில் இருந்தார். ஒருவேளை இதே விஷயத்தைப் பற்றிக் கூட இருக்கலாம். வேறொரு வயிற்றில் பிறந்தாலும், இரத்தம் முதலாளியுடையதுதானே. அதை நினைக்காமல் இருக்க முடியுமா? மனதிற்குள் ஒரு உறுத்தல் உண்டாகாமல் இருக்குமா?

ஏதாவதொன்று நிச்சயம் நடக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.

அதற்குப் பிறகு அந்த வீடுகளைக் காலி செய்யும் விஷயத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசவேயில்லை. ஆனால், முதலாளியின் முக்கிய காரியதரிசி பாச்சு பிள்ளைக்கு எல்லா விஷயங்களும் நன்றாகத் தெரியும். ஆனால், எந்த விஷயத்தையும் அவர் வெளியே விடவில்லை. நான்அதைப் பற்றி யாரிடமும் விசாரிக்கவும் இல்லை. எதற்காக விசாரிக்க வேண்டும்? இந்த விஷயத்தைப் பொறுத்தவரை முதலாளிக்கு என் மீது நல்ல நம்பிக்கை கிடையாது என்பதே உண்மை. நான் அதற்குப் பிறகு புலயன் வழி பகுதிக்கு போகவும் இல்லை. போனால், அவர்கள் எதாவது கேட்பார்கள். உதவி செய்ய வேண்டுமென்று சொல்லுவார்கள். சாப்பிடும் சோற்றுக்கு நன்றியில்லாமல் நடக்க என்னால் முடியாது. அந்த அப்பிராணி பெண்களுக்கு ஏதாவது செய்யாமலிருக்கவும் என் மனம் அனுமதிக்காது.

புலயன் வழியில் இருக்கும் ஒரு சணல் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு இளைஞனும் அவன் தாயும் அந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனுக்குக் கடுமையான காய்ச்சல். மருத்துவமனைக்கு அந்த இளைஞனைக் கொண்டு சென்றாள் அவன் தாய். அவர்கள் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தபோது, வீட்டைக் காணோம். வீட்டிலிருந்த பொருட்களுமில்லை. வீட்டிலிருந்த சாமான்களை பாச்சுப்பிள்ளை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

அதற்குப் பிறகு ஒரு வயதான கிழவன் மட்டும் அந்த இடத்தில் வசித்துக் கொண்டிருந்தான். அந்த பூமி முதலாளிக்குக் கிடைப்பதற்கு முன்பிருந்தே அந்தக் கிழவன் அங்கிருந்தான். ஒருநாள் பாதையோரத்தில் அந்த ஆள் இறந்து கிடந்தான். அங்கேயே விழுந்து செத்திருந்தான். அவனுக்கும் சில சில்லறை சாமான்கள் இருந்தன. பாத்திரங்கள் கிண்ணம், மண்ணெண்ணெய் விளக்கு இப்படி... அவை எல்லாவற்றையும் பாச்சு பிள்ளை எடுத்துக் கொண்டு போய் விட்டார். ஒரு நல்ல கைபெட்டி இருந்தது. அதை முதலாளி எடுத்துக் கொண்டார்.


அந்தக் கிழவன் சிறுவயது முதல் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவன். பணத்தை பூமிக்கடியில் புதைத்து வைத்திருப்பதாகப் பலரும் சொல்வார்கள். ஏதாவதொரு மண் குடத்திலோ அல்லது பெட்டியிலோ வைத்து புதைத்திருப்பார் என்றெண்ணி பாச்சுப் பிள்ளை அந்தக் கிழவன் இருந்த வீட்டைக் குழி தோண்டிப் பார்த்தார்.

இப்படி இரண்டு வீடுகள் காலி செய்யப்பட்டன. இனி மீதமிருப்பது மூன்று வீடுகள். அவர்களிடம் எப்படி இவர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை அறியும் எண்ணத்துடன் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண்கள் முரட்டுத்தனமானவர்கள். பலத்தை பயன்படுத்துவது என்ற எண்ணத்துடன் போனால், ஒருவேளை அவர்கள் பயங்கரமாக எதிர்க்கலாம். முதலாளியைப் பற்றி தாறுமாறாகப் பேசலாம். நேராகச் சென்று வீட்டைக் காலி பண்ணச் சொன்னால், நிச்சயம் போகவும் மாட்டார்கள்.

பாச்சுப் பிள்ளையின் மூளை எப்படி செயலாற்றப் போகிறதோ?

ஒருநாள் என் காதுக்கு ஒரு செய்தி வந்தது. ஜானகியும் கவுரியும் தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள் என்பதே அது. அதில் ஜானகி, கவுரி இருவரின் தலையும் உடைந்துவிட்டதாம். ஒரு பெரிய கழியைக் கொண்டு வந்து ஜானகி அடித்திருக்கிறாள். உலக்கையால் கவுரி ஜானகியை அடித்திருக்கிறாள். இரண்டு பேரும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாக செய்தி வந்தது. காயம் பெரிதுதான் போலிருக்கிறது-.

இப்படியொரு சம்பவம் எப்படி நடந்தது? அவர்கள் இருவரும் இப்படி சண்டை போடுவார்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த மூன்று பெண்களும் அந்த அளவிற்கு ஒற்றுமையாக இருந்தார்கள். பாச்சுப் பிள்ளையின் வேலையாகத் தான் அது இருக்க வேண்டும். அவர்களை அவர் பிரிக்கப் பார்த்திருக்கிறார். விளைவு- அவர்கள் ஒருவருக்கொருவர் விரோதிகள் ஆகிவிட்டார்கள். கடந்த சில நாட்களாகவே அவர்களுக்குள் ஒரே சண்டைதான் என்று எல்லோரும் கூறுகிறார்கள்.

எப்படியோ இரண்டு பேர்களைச் சண்டை போட வைத்து அவர்களை வீடு காலி பண்ண வைத்துவிட்டார்கள். இனி மீதி இருப்பது கொச்சுமரியம் மட்டும்தான். அவளின் கதை என்னவாகப் போகிறதோ?

அந்த இடம் எப்போதும் தகராறு நடக்கக்கூடிய இடம் என்று போலீஸ்காரர்கள் முடிவு செய்து விட்டார்கள். இரவும் பகலும் போலீஸ்காரர்கள் அங்கு ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். கொச்சுமரியம் நிச்சயம் இதனால் கலங்கிப் போயிருப்பாள். யாராவது அந்த இடத்திற்கு தைரியமாகப் போவார்களா? அவள் வெளியே செல்ல முடியுமா? நேரம் பார்த்து பதுங்கி ஒளிந்து போகலாம் என்றாலும், அப்படிப்பட்ட நேரத்தில் அந்தச் சிறுவனை யார் பார்த்துக் கொள்வது?

கடைசியில் முதலாளியோ அவரின் காரியதரிசியோ ஒரு வார்த்தைகூட சொல்லாமல் கொச்சு மரியமே அந்த வீட்டைக் காலி செய்துவிட்டுக் கிளம்பி விட்டாள்.

அவள் வீட்டை விட்டு வெளியே போன கதையை பாச்சுப் பிள்ளை முதலாளியிடம் கூறிக் கொண்டிருந்த போது நான் அங்கு இருந்தேன். அதை விவரிக்கும்போது பாச்சுப் பிள்ளையின் குரலில் இருந்த சந்தோஷத்தைப் பார்க்கவேண்டுமே. அன்று கொச்சு மரியத்தின் குழந்தைக்கு உடல் நலமில்லாமல் இருந்திருக்கிறது. இருப்பினும், பையனைத் தோளில் போட்டுக் கொண்டுட அவள் வெளியேறிப் போயிருக்கிறாள். அவள் எங்கு போயிருப்பாளோ, அப்போது அவள் ஏதாவது சொன்னாளா என்று எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் கேட்கவில்லை. இல்லை... அவள் ஒன்றும் சொல்லியிருக்கமாட்டாள். பட்டினியாலும், கஷ்டங்களாலும் அவள் உயிரே போயிருக்கும். அவளிடமிருந்த பலமெல்லாம் இல்லாமல் போயிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒருத்தி என்ன சொல்லியிருக்கப் போகிறாள்?

அவளை மட்டும் பார்க்கவேண்டும் போல் எனக்கு இருந்தது. அவளைத்தான் நான் முதன்முதலாக வண்டியில் உட்கார வைத்துக் கொண்டுபோனேன். அதற்குப் பிறகு அவளை எங்கெல்லாம் நான் கொண்டு சென்றிருக்கிறேன்! என்னென்ன கதைகளெல்லாம் எனக்குத் தெரியும்... வேண்டாம்... அவளை நான் பார்க்கவே வேண்டாம். எனக்கு அதற்கான மன தைரியம் இல்லை.

மூன்று, நான்கு நாட்கள் கடந்தன. பேபிக்குட்டியின் மனைவிக்கு பிரசவ வேதனை உண்டானது. ஆலப்புழையில் ஏராளமான டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆலப்புழையில் இருப்பதைவிட பெரிய டாக்டர்மார்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக எர்ணாகுளத்திற்கோ கொல்லத்திற்கோ திருவனந்தபுரத்திற்கோ கூட ஆட்கள் போயிருக்கிறார்கள்.

பெரிய முதலாளி விரல்களைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு இங்குமங்குமாய் நடந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரே மனக்கவலை.

பேபிக்குட்டி தொடர்ந்து சிகரெட்டை உதட்டில் வைத்து புகைத்தவாறு பேசாமல் அமர்ந்திருக்கிறார். அவ்வப்போது எழுந்து உள்ளேயும் போகிறார்...

வெளியே நின்றிருக்கும் எங்களுக்கு ரகசியங்களெதுவும் தெரியக்கூடாது. ஒன்று மட்டும் புரிந்தது. பெரிய பிரச்சினை எதுவோ இருக்கிறது என்பதுதான் அது.

பைங்கிளியைப் போல் அழகான ஒரு இளம்பெண்! அவளின் குரலைக்கூட வெளியில் யாரும் கேட்தில்லை. அவள் இரக்க குணம் கொண்ட நல்லபெண் என்று பொதுவாக வேலைக்காரிகள் கூறுவதை நானே கேட்டிருக்கிறேன். யாரையும் 'சீ... போ' என்று அவள் சொல்லியதில்லை. 'ச்சீ' என்ற சத்தம் அவளுக்குள் இருந்து வரவும் செய்யாது அதற்கான மன தைரியமும் அவளுக்கு இல்லை. சில நேரங்களில் உதித்து வரும் சூரியனைப் போல அவள் முகத்தை நான் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறேன். அந்த மாதிரியான சமயங்களில் அந்தத் திருமண நாளில் தோன்றியது மாதிரி இந்த மோசமான ஆளின் கையில் இந்தக் கிளியைப் பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற எண்ணம்தான் மனதில் தோன்றும். அந்த ஆள் அந்த மென்மையான மலரைப்பிய்த்து எறிவார்... அந்த ஆளை இந்தப் பெண் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறாளோ என்று பலமுறை நான் மனதில் நினைத்திருக்கிறேன். மனதிற்கு வேதனையான விஷயம்தான்! அன்பு செலுத்தக்கூடிய ஒருவரிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்திருக்கககூடாதா? அதன் தலையெழுத்து இப்படியா ஆக வேண்டும்?

அந்தப் பெண் எவ்வளவு வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும்? நிச்சயம் அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அந்த முரட்டுத்தனமான மனிதரின் குழந்தை தானே அவளுக்குள் இருக்கிறது! தாயின் கர்ப்பப்பையை உதைத்து ஒருவழி பண்ணி விட்டுத்தான் அது வெளியே வரும்.

விபரத்தை அறியலாம் என்றால் ஒரு வேலைக்காரியைக் கூட காணவில்லை.

அப்போது ஒரு பெண் டாக்டர் வெளியே வந்தாள். பேபிக்குட்டியுடன் அவள் என்னவோ பேசினாள். அவள் ஆங்கிலத்தில் பேசியதால், எங்களுக்கொன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஒரு சிறிய தும்பு கிடைத்தது. சென்னையிலிருந்து பெரிய டாக்டர் வரும்வரை கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்று அந்தப் பெண் டாக்டர் கூறியிருக்கிறார்.

பேபிக்குட்டி தொலைபேசியை எடுப்பார். என்னவோ பேசுவார். பிறகு சிகரெட் பிடிப்பார். பெரிய முதலாளியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மலயாற்றூர் தேவாலயத்திற்கும், டெத்வா தேவாலயத்திற்கும், அர்த்துங்கல் தேவாலயத்திற்கும் நேர்த்திக்கடன் செய்வதாகச் சொன்னார்.


சிறிது நேரம் சென்ற பிறகு பிஷப் அங்கு வந்தார். அவர் கர்ப்பமாகியிருக்கும் பெண்ணை சிலுவை வரைந்து ஆசீர்வதித்தார். அங்கிருந்தவாறு மந்திரங்களை உச்சரித்தார். நீரைத்தெளித்தார். பெரிய முதலாளி முழங்கால் போட்டு அமர்ந்து பிஷப்பின் கையைப் பிடித்துக் கொண்டு விடாமல் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவரை முதலாளி விடவேயில்லை. பிஷப் சொன்னார்: "ஔஸேப்பச்சன், அழாம இருங்க. கர்த்தாவின் கிருபையால் கன்னிமாதாவின் ஆசீர்வாதத்துடன் குழந்தையை இப்பவே பெற்றெடுப்பாங்க."

பிஷப் பக்தி நிறைந்த மனதுடன் சிலுவை வரைந்தார்.

பிஷப் சொல்லிவிட்டார்- உடனடியாக பிரசவம் நடந்துவிடும் என்று எல்லோரும் முழுமையாக நம்பினார்கள். தங்கள் மனதைத் தாங்களே தேற்றிக் கொண்டார்கள். இருப்பினும், பிரசவம் நடக்கவில்லை.

பெரிய முதலாளியின் துக்கத்தையும், கஷ்டத்தையும் பார்த்து நாங்கள் மிகவும் மனவருத்தம் அடைந்தோம். முதலாளி, பெண்ணைப் போல வாய்விட்டு அழுதார். என்னை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டு என் தோளில் தன் தலையை வைத்துக் கொண்டு அவர் அழுதவாறு சொன்னார்:

"நாய்க்குட்டி பிரார்த்தனை செய்யடா. பிரார்த்தனை செய். என் குழந்தைக்காக பிரார்த்தனை செய்-"

யாரும் சொல்லாமலே அந்த நல்ல பெண்ணுக்காக கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டுதான் இருந்தோம்.

பொழுது விடியும் நேரத்தில் ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றது. டாக்டர் இறங்கி வந்தார். முதலாளி கண்ணீருடன் தாழ்மையாக வணங்கினார். டாக்டர் உள்ளே சென்றார். எல்லோருக்கும் ஒரு நிம்மதி பிறந்ததைப் போல இருந்தது.

ஒருவகையில் பார்க்கப்போனால் இந்த டாக்டர்மார்கள் கடவுளைப் போல என்று கூட சொல்லலாம். எல்லா டாக்டர்களுமல்ல. திறமைவாய்ந்த டாக்டர்களை மட்டும் சொல்கிறேன். இங்குள்ள டாக்டர்கள் இரண்டு நாட்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பெரிய டாக்டர் உள்ளே போய் ஒருமணி நேரம் ஆகியிருக்கும். நாங்கள் எல்லோரும் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அப்போது பெரிய முதலாளியின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! சந்தோஷ மிகுதியால் எங்கே கிழவருக்கு பைத்தியம் பிடித்துவிடப் போகிறதோ என்று கூட நான் பயந்தேன்.

குழந்தை- ஆண்குழந்தை!

நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. பெரிய முதலாளி கூட குழந்தையைப் பார்க்கவில்லை. அவர்கள் எப்போது அதைக் காட்டுவார்கள்?

நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்துக் கொண்டிருந்தது. பெரிய டாக்டர் முன்னால் வர, ஆயா ஒருத்தி குழந்தையைத் தூக்கிய வண்ணம் பின்னால் வந்தாள். பெரிய முதலாளியின் முன்னால் வந்து அவர்கள் நின்றார்கள். பெரிய முதலாளி ஆவலுடன் அந்த குழந்தையை வாங்கி, தன் முகத்தோடு அதைச் சேர்த்து வைத்துக் கொண்டார். கண்ணீரால் குழந்தையைக் குளிப்பாட்டினார்.

கையளவே உள்ள குழந்தை! அதன் கால்கள் இரண்டும் இப்படியும் அப்படியுமாய் வளைந்து முடமாகக் காணப்பட்டன. அதை முதலாளி முதலில் கவனிக்கவில்லை. அதைப் பார்த்ததும் அவர் சொன்னார்: "கால் முடமா இருந்தா என்ன? அதைக் குணப்படுத்தப் பார்ப்போம்..."

இந்தப் பிரசவத்திற்கு எப்படியும் ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருக்கும். அது மட்டும் நிச்சயம்.

டாக்டர் எங்கும் போகவில்லை. நேரம் நன்றாக வெளுத்தது. அங்குள்ள ஒரு வேலைக்காரன் வெளியே செல்வதற்காக படியில் நின்றிருந்தான். அடுத்த  நிமிடம் அவன் உரத்த குரலில் கத்தியவாறு பின்னால் ஓடினான்.

நாங்கள் சென்று பார்த்தோம். முதலாளியும் எங்களுடன் இருந்தார். ஒரு சிறுவனின் இறந்த உடல் படியில் வைக்கப்பட்டிருந்தது. குப்புறப்படுத்திருந்தான் பையன்.

அவன் கொச்சுமரியத்தின் மகன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் காதுக்குப் பின்னால் ஒரு மரு இருந்தது.

நான் முதலாளியைப் பார்த்தேன். முதலாளிக்கு இன்னும் புரியவில்லை என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

16

மாலை மயங்கிய நேரம் நானும் முதலாளியும் வாசலில் பேசிக் கொண்டு நின்றிருந்தோம். எங்களுக்குப் பின்னால் ஒரு அலறல் சத்தம் கேட்டது போல் தோன்றியது. முதலாளி முன்னால் ஓட, நான் பின்னால் ஓடினேன். குளியலறைக்கு வெளியே சமையல்காரன் மத்தாயி நிலத்தில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தான். நாங்கள் போன போது இரண்டு பேர் இரண்டு வழிகளில் ஓடியதை நாங்கள் பார்த்தோம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும். பேபிக்குட்டியும் முதலாளியின் மகள் லில்லிகுஞ்ஞீம்தான் அவர்கள் என்பதே இப்போதும் என் மனதில் இருக்கும் ஆழமான சந்தேகம்.

நானும் முதலாளியும் போய்ச் சேர்ந்த சிறிது நேரத்தில் வேலைக்காரர்களும், வீட்டிலுள்ளவர்களும் அங்கு வந்தார்கள். லில்லிகுஞ்ஞீம் இல்லை. பேபிக்குட்டி சிறிது நேரம் கழித்து வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் சுவர்கள் மேல் ஏறி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதை யாரிடமிருந்தும் மறைக்க முடியாது. ஆட்கள் கூட்டமாக நின்றிருக்க, முதலாளி என்னைப் பார்த்து உரத்த குரலில் சத்தமிட்டார்:

"துரோகி, நீ இவனைக் கொன்னுட்டியாடா?"

ஓடி வந்து கொண்டிருந்த வேலைக்காரனிடம் முதலாளி சொன்னார்:

"அவனைப்பிடிடா..."

அவன் என்னை இறுகப்பிடித்துக் கொண்டான். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. யாரால் சொல்ல முடியும்?

மத்தாயியின் அசைவு நின்றது.

யாரோ அவனுக்கு உயிர் இருக்கிறதா என்று பார்த்தார்கள். பிறகு அவனை வெளியே தூக்கிக் கொண்டு போனார்கள்.

முதலாளி என்னுடன் வாசலுக்கு வந்தார். அப்போது அங்கு யாருமில்லை. அவர் என்னுடைய காதுகளில் மெதுவான குரலில் சொன்னார்:

"என்னை நீதான் காப்பாத்தணும். நாய்க்குட்டி, நீதாண்டா காப்பாத்தணும். இந்தக் குடும்பம் என்னைக்கும் உன்னை மறக்காது."

எனக்கு எதுவுமே புரியவில்லை. நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு முதலாளி சொன்னார்:

"நான் உன்னைக் காப்பாத்துறேன். என் எல்லா சொத்துக்களையும் விற்று உன்னை நான் காப்பாத்துவேன். உனக்கு தண்டனை கிடைக்க விடமாட்டேன்."

எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ஆனால், தெளிவாக புரிந்ததா என்பது சந்தேகம்தான். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாவதன் அர்த்தம் எனக்குப் புரிந்ததா என்பது சந்தேகம்தான்.

அவர்கள் சொன்னதை நான் 'சரி' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். அது என்னுடைய சுபாவம்தானே! அதன் அர்த்தத்தை நான் ஏன் அறிய வேண்டும்? எவ்வளவு காலமாக இந்த விஷயம் நடந்து வருகிறது. அவர்களின் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு உடம்பு இது. அது மட்டுமல்ல- இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது- அதற்கு இன்னும் நிறைய நேரமிருக்கிறது என்றாலும் கூட எனக்கு குழந்தை இல்லை. மனைவி இல்லை, வீடு இல்லை, மொத்தத்தில் ஒன்றுமில்லை, யாருமில்லை. வெளியில் சென்றால் இப்படியும் அப்படியுமாய் நடக்கலாம். சிறைக்குள் என்றால் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். 'முடியாது' என்று நான் கூறுவதாக இருந்தால், அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டாமா? ஒரு காரணமும் இல்லை என்பதே உண்மை.


இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக என் தலைக்குள் ஒரு வெளிச்சம் நுழைந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் கொலையை நான் செய்ததாக சம்மதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்தக் கொலையை நான் செய்யவில்லை. நான் உண்மையைச் சொன்னலென்ன? யாரும் நம்ப மாட்டார்கள். நம்ப வைக்க என்னால் முடியாது. அப்போது முதலாளிக்கு கோபம் வரும். கோபம் வந்தால் என்மீது உள்ள தயவு இல்லாமற் போகும். பிடிவாதமாக வழக்கை நடத்துவார். தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அப்படியில்லாமல் நான்தான் கொலை செய்தேன் என்று சம்மதித்தால்...? என் மீது முதலாளியின் தயவு முழுமையாக இருக்கும். வழக்கை நடத்துவார். என்னை எப்படியும் காப்பாற்றுவார். அப்படியென்றால் எது நல்லது?

போலீஸ்காரர்கள் வந்தார்கள். முதலாளி ஒரு கதை சொன்னார். அதே கதையை வேறு மூன்று, நான்கு பேர் கூட சொன்னார்கள். பிரேத விசாரணை நடைபெற்றது. சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அறிக்கை தயார் பண்ணினார்கள். குற்றவாளியைக் கைது செய்தார்கள்.

அதையெல்லாம் பார்த்து நான் சிறிதும் கலங்கவில்லை. ஒரே ஒரு விஷயம்தான் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. மத்தாயியின் தாய் நெஞ்சிலடித்துக் கொண்டு வந்து என்னைப் பார்த்துக் கேட்டாள்:

"டேய் பாவிப்பயலே, நீ ஏண்டா அவனைக் கொலை செய்தே? எனக்குன்னு உலகத்துல இருந்தது அவன் ஒருவன்தான்."

அவனை அந்த ஏழைத்தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தாள். அவன் வாலிப வயதை அடைந்த பிறகு, பலவித வேலைகளையும் செய்து தன் தாயைக் காப்பாற்றி வந்தான். நான் அந்தத் தாயிடம் உண்மையைச் சொன்னேன். அவளிடம் மட்டும்!

என் வாயிலிருந்து என்னையும் மீறி ஒரு வார்த்தை வெளியில் வந்துவிட்டது!

"அம்மா...!"

அதற்குப்பிறகு நான் வாயே திறக்கவில்லை. நான் எதுவும் பேசுவதற்கும் தயாராக இல்லை.

எனக்காக லாக்-அப்பைத் திறந்தார்கள். நான் உள்ளே நுழைந்தேன். என்னை இரண்டு கைகளையும் நீட்டி ஒரு ஆள் வரவேற்றான். அது யார் என்று நினைக்கிறீர்களா? என்னுடைய அவ்வக்கர்! அவன் இருபத்து நாலாவது தடவையாக திருட்டுக் குற்றத்திற்காக சிறைக்குள் வந்திருக்கிறான்!

அவ்வக்கருக்கு மனைவி, மக்கள் எல்லோரும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மூத்த மகளுக்கு அவன் திருமணம் செய்து அனுப்பி வைத்துவிட்டான். இந்த முறை அவன் எதையும் திருடவில்லை. குற்றவாளியைப் பிடிக்க முடியாத ஒரு திருட்டு வழக்கில் வேறு வழியில்லாமல் அவனைப் பிடித்து உள்ளே போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.

நான் என்னுடைய முழு கதையையும் சொன்னேன். அதைக் கேட்டு அவ்வக்கர் விழுந்து விழுந்து சிரித்தான்.

"நீ, முதலாளிமார்களோட ஆளாயிட்டே இல்லே?"

தொடர்ந்து அவன் சொன்னான்: "நீ செய்யிற தொழிலும் முதலாளிமார்களுக்கு உள்ளதுதான்."

லாக்-அப்பிற்குள் இருந்து யோசித்துப் பார்த்தபோது அவன் சொன்னது முழுவதும் உண்மைதான் என்பது புரிந்தது.

நான்கைந்து நாட்கள் கழித்து ஸ்டேஷனில் முதலாளியும் ஒரு போலீஸ்காரரும் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தப் போலீஸ்காரர் யார் என்கிறீர்கள்? முன்பு முதலாளி சொல்லி நான் கொச்சுமரியத்தை ரிக்ஷாவில் ஏற்றி அழைத்துச் சென்றேனே, அதே போலீஸ்காரர்தான். அவர் என்னைப் பார்த்துக் கேட்டார்:

"நாய்க்குட்டி உன்னை யாரும் அடிக்கலியே?"

அப்படி எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து போலீஸ்காரர் சொன்னார்.

"இப்போ உன்னை ஜாமீனில் எடுக்க முடியாது. அதற்குக் காரணங்கள் இருக்கு. புரியுதா?"

நான் சிரித்தவாறு சொன்னேன்:

"புரியுது."

போலீஸ்காரர் தொடர்ந்தார்:

"இப்போ ஜாமீனில் வெளிவந்து என்ன பிரயோஜனம்? அலைச்சல் இல்லாம இங்கேயே இருக்கலாமே? நான் தேவையான ஏற்பாடுகளையெல்லாம் செய்யிறேன்."

அவர் சொன்னதற்கு மாற்று கருத்து எதையும் நான் சொல்லவில்லை. ஜாமீனில் வெளிவரவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் எனக்கு இல்ல. உள்ளே எனக்குப் பேச்சுத் துணைக்குத் தான் என் அவ்வக்கர் இருக்கிறானே!

முதலாளிக்கு இன்னும் சில விஷயங்களை என்னிடம் கூற வேண்டியிருந்தது. நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் முதலாளி சொன்னார்:

"டேய், இப்பவே உன்மேல குற்றச்சாட்டு இருக்கு. ஜாமீனில் வெளியே வந்தா, அவ்வளவுதான்... அதான் சொல்றேன்... நீ பேசாம உள்ளேயே இருந்திடு. உனக்குத் தேவையானதெல்லாம் இங்கே உனக்குக் கிடைக்கிறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்."

நான் ஒரு விஷயத்தை முதலாளியிடம் சொல்ல விரும்பினேன். மத்தாயியின் தாய்க்கு அவள் வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளை அவர் கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அது. போலீஸ்காரர் தலையைக் குலுக்கி அதற்குச் சம்மதித்தார்.

"சரிதான்... நாய்க்குட்டி சொன்னது சரிதான்... நாய்க்குட்டி உண்மையிலேயே நல்லவன். அந்தக் கிழவியை வரச்சொல்லி பத்தோ, ஐம்பதோ நாம கட்டாயம் தரணும். தெரியுதா அவுஸேப்பச்சன்?"

தொடர்ந்து என்னைப் பார்த்து போலீஸ்காரர் சொன்னார்:

"நாய்க்குட்டி, நீ உண்மையிலேயே நல்லவன்!"

நான் சொன்னேன்:

"பத்தோ, ஐம்பதோ போதாது. அந்தத் தாய்க்கு சாகுறது வரை பிரச்சினை இல்லாம வாழறதுக்குக் கொடுக்கணும்."

முதலாளி ஒரு புன்சிரிப்புடன் கேட்டார்:

"அதெப்படிடா முடியும்? பத்தாயிரம் ரூபா அதுக்காக நாம கொடுக்க முடியுமா? ஏதோ நீ சொல்றேன்றதுக்காக வேணும்னா நூறோ நூற்றைம்பதோ கொடுக்கலாம்."

அதைக்கூட கொடுத்தாரா என்பது யாருக்குத் தெரியும்?

வழக்கு விசாரணை தொடங்கிற்று. மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் எனக்கு வக்கீல் யாருமில்லை. செஸன்ஸ் நீதிமன்றத்தில் வக்கீல் வைத்துக் கொள்ளலாம் என்று முதலாளி சொன்னார். மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒவ்வொரு சாட்சியும் வந்து சத்தியம் செய்து வாக்குமூலம் கொடுக்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது. அவர்கள் என்ன மாதிரியெல்லாம் கதைகள் சொல்கிறார்கள்! எனக்கும் மத்தாயிக்கும் இடையில் பயங்கர விரோதமாம். நான் அவனைக் கொலை செய்வதாகச் சொன்னதை இவர்கள் அவனைவரும் கேட்டார்களாம். நான் கத்தியால் குத்திக் கொன்றதைப் பார்த்ததாக அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.

முதலாளி பெரிய அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு கூண்டுக்குள் வந்து என்னென்னவோ சொன்னார். அதைக் கேட்பதற்கு எனக்கே புதுமையாக இருந்தது. முதலாளிக் நீதிமன்றத்தில் உட்காருவதற்கு இருப்பிடம் தந்தார்கள். அப்போது அந்த டி.எஸ்.பி.எஜமானும் வந்திருந்தார்.

வழக்கு பதிவானது. செஸன்ஸ் நீதிமன்றத்தில் அது விசாரணைக்கு வந்தது. அப்போதும் முதலாளி வந்து என்னைப் பார்த்தார். இந்த வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்காமலிருந்தால் அது போலீஸ்காரர்களுக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றும் அதனால் சிறிய அளவில் எனக்கு தண்டனை கிடைக்கும் படி செய்த வழக்கை முடித்துக் கொள்ள வேண்டியதுதான் என்றார் அவர்.


நீதிமன்றத்தில் எனக்காக வாதாட ஒரு வக்கீலை நியமித்தார்கள். முதலாளியின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன்தான் அவர். வக்கீல் தொழிலுக்கு அவர் வந்தே ஐந்தாறு மாதங்களே ஆகின்றன.

அப்போதும் சாட்சிகள் வந்து வாக்குமூலம் தந்தார்கள்.

இறுதியில் நீதிபதி நான் சொல்லவேண்டியதைச் சொல்லலாம் என்றார்.

நான் சொன்னேன். எல்லாவற்றையும் சொன்னேன்- எதையும் மறைக்காமல் சொன்னேன்.

எப்படி என்னால அவை எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்ல முடிந்தது என்பது எனக்கே தெரியவில்லை.

அன்று போலீஸ் ஸ்டேஷனில் என்னை அடித்தார்கள். முதலாளி சொல்லி அது நடந்திருக்க வேண்டும். அவரின் குடும்பத்திற்கு அவமானம் தேடித்தரும் ஒரு விஷயமாயிற்றே அது!

போலீஸ்காரர்களும் இந்த விஷயத்தில் திருட்டுத்தனம் செய்திருக்கிறார்கள் என்றல்லவா நான் சொன்னேன்?

நான் சொன்னது எதற்கும் ஆதாரங்களில்லை. அதனால் எனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நான் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். எனக்கு முன்பே அவ்வக்கர் அங்கு இருந்தான்.

ஆலப்புழையில் என்னைக் கொண்டுவந்து விட்டார்கள்.

நகரத்திற்கு பெரிய அளவில் மாற்றமொன்றும் உண்டாகியிருக்கவில்லை. எதற்காக என்னை ஆலப்புழையில் கொண்டு வந்துவிட்டார்கள்? அதுதான் சட்டம் போலிருக்கிறது. என்னை வேறெங்காவது விட்டிருந்தால் கூட போதும்தான்.

எங்கே போக வேண்டும் என்று தெரியாமல் நான் நின்றிருந்தேன். எனக்குத் தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை. நான் நடந்தேன். இரும்பு பாலத்திற்கு அருகில் சென்றபோது, கண்ணுக்கு எட்டாத தூரம்வரை நீண்டு செல்லும் ஒரு ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். முன்னால் ஒரு பெரிய சிவப்பு வண்ணக்கொடி பறந்து கொண்டிருந்தது.

நான் ஜானகியைப் பார்த்தேன். அந்தக் கூட்டத்தில் கவுரியும் இருந்தாள். அவர்கள் கிழவிகளாகி விட்டிருந்தார்கள். ஒருத்தி கையை நீட்டி ஆவேசமாக என்னவோ முழங்குகிறாள். அவள் பூங்காவு பகுதியைச் சேர்ந்தவள். இப்படிப் பல பெண்களையும் நான் பார்த்தேன். அவர்கள் யாரும் என்னைப் பா£க்கவில்லை.

அது ஒரு வேலைநிறுத்தப் போராட்ட ஊர்வலம் என்பதைத் தெரிந்து கொண்டேன். அப்படியென்றால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முதலாளிமார்களை எதிர்க்கிறார்கள்.

அந்த ஊர்வலம் முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. அதில் இளம் பெண்களும் இருந்தார்கள். இளைஞர்களும் இருந்தார்கள். ஒவ்வொருவரையும் நான் பார்த்தேன். அவர்களின் கண்கள் ஆவேசத்தால் பிரகாசமாக தெரிந்தன. வீரத்துடன் கையை மடக்கி அவர்கள் தூக்கும் போது, நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. அவர்கள் தங்களுக்குள் தெளிவாக ஏதோ தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் முன்னோக்கி நடந்து போகிறார்கள். இனிமேல் முதலாளிமார்களின் ஏமாற்று வேலைகள் செல்லுபடியாகாது என்ற நிலை உண்டாகிவிட்டதா என்ன?

"முதலாளித்துவம் ஒழிக!"

நான் நினைத்ததைத்தான் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த இளம்பெண்களிடம் தைரியமிருந்தாலும், பலமிருந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். பட்டினிகிடப்பவர்கள். அவர்கள் விருந்தினர் மாளிகைக்குப் போவதுண்டா? அவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போகும் நாய்க்குட்டிமார்களும் வாவாமார்களும் இப்போதும் இருக்கிறார்களா?

அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்போல் எனக்கு இருந்தது. இப்படி கையை மடக்கி உயர்த்த குரலெழுப்பி போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் முதலாளிமார்களுக்கு பயம் உண்டாகும் அல்லவா?

அந்த ஊர்வலத்தின் இறுதியாக வந்த ஆளுக்குப் பின்னால் நானும் சேர்ந்து கொண்டேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.