Logo

ஒரு லட்சமும் காரும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5984
Oru Latchamum Kaarum

சுராவின் முன்னுரை

பி.கேசவதேவ் எழுதிய ‘பப்பு’, ‘திருப்பம்’, ‘மரணத்திலிருந்து’, ‘நான்தான் தவறு செய்தவன்’, ‘உலக்கை’, ‘தங்கம்மா’ ஆகிய புதினங்களை நான் ஏற்கனவே மொழி பெயர்த்திருக்கிறேன். அவர் 1969-ஆம் ஆண்டில் எழுதிய கதை ‘ஒரு லட்சமும் காரும்’. ‘நான் எழுதும் அனைத்தையும் சமுதாயத்தின் மீது கொண்ட பொறுப்புணர்வுடனே எழுதுகிறேன்’ என்று மார்தட்டிக் கூறும் கேசவதேவ் எந்த அளவிற்கு உலகத்தையும் மக்களையும் அவர்களின் போலித்தனங்களையும் கூர்மையாகப் பார்த்திருக்கிறார் என்பதை இந்தப் புதினத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் பார்க்கலாம்.

80 நூல்களை எழுதியிருக்கும் அவர் 1964-ஆம் வருடம் தேசிய சாகித்ய அகாடமி விருதையும், 1970-ல் சோவியத் நாடு நேரு விருதையும் பெற்றிருக்கிறார். இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கும் கேசவதேவ் மீது நமக்கு ஒரு வியப்பும் மரியாதையும் உண்டாகிறது. இத்தகைய அரிய படைப்புகளால்தான் அவர் சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பி.கேசவதேவ் எழுதிய இந்த சிறந்த புதினத்தை மொழிபெயர்த்த மகிழ்ச்சியுடன் இதை தமிழ் மக்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,

சுரா


வேலை முடிந்து கூலியை வாங்கிக் கொண்டு, தேநீர்க் கடைக்குள் நுழைந்து ஒரு தேநீரையும் குடித்துவிட்டு வெளியே வந்த போதுதான், மாதவன் சங்கரன் குட்டியைப் பார்த்தான். மாதவன் கேட்டான்:

‘‘சங்கரன்குட்டி, நீ ஏன்டா வேலைக்கு வரல?’’

‘‘நான் திருவனந்தபுரத்துக்குப் போயிருந்தேன். மாதவன் அண்ணே. அக்காவை அங்கே தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கு! நான் அங்கே போயிட்டு வந்தேன்.’’

‘‘உன் மச்சான் நல்லா இருக்காரா? வெற்றிலைப் பாக்குக் கடை நல்லா நடக்குதா?’’

‘‘ஒரு தேநீர்க் கடையையும் ஆரம்பிக்கணும்னு மச்சான் ஆசைப்படுறாரு. அதற்காகப் பணம் தயார் பண்ணுவதற்காக இப்போ அங்கேயும் இங்கேயுமா ஓடித் திரிகிறார். அக்காவின் கழுத்தில் கிடக்கும் செயினை அடமானம் வைப்பதற்காகக் கேட்டதற்கு, அவள் தூக்குல தொங்கி இறந்திடுவேன்னு சொல்கிறாள்.’’

‘‘அப்படின்னா லாட்டரிச் சீட்டு வாங்கச் சொல்லு. இப்போ அரசாங்கம்தானே லாட்டரிச் சீட்டை நடத்திக் கொண்டிருக்கு!’’

‘‘லாட்டரிச் சீட்டுல சேர்ந்தால், பணம் கிடைக்குமா மாதவன் அண்ணே?’’

‘‘கிடைக்குமான்னு கேட்டால்... கிடைக்காது என்று யாராவது சொன்னாங்களா? நம்மைப் போல ஒரு கூலி வேலை செய்யிறவனுக்கு முதல் பரிசு கிடைக்குதே! அப்படி இருக்குறப்போ, ஒரு வெற்றிலைப் பாக்குக் கடைக்காரனுக்குக் கிடைக்கக் கூடாதா?’’

‘‘அப்படின்னா... மாதவன் அண்ணே, நான் ஒரு விஷயம் சொல்றேன். மச்சானும் நானும் லாட்டரிச் சீட்டு வாங்கிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.’’

‘‘அப்படிச் சொல்லு!’’

‘‘மாதவன் அண்ணே, உங்களுக்கு டிக்கெட் வேண்டாமா?’’

‘‘ஓ! நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்டா சங்கரன்குட்டி. பிறகு... நான் எதற்கு லாட்டரிச் சீட்டு வாங்க வேண்டும்?’’

‘‘உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று யார் சொன்னது?’’

‘‘எனக்குத் தெரியும்டா சங்கரன்குட்டி... எனக்கு அதிர்ஷ்டம் இல்லை...’’

‘‘இருந்தாலும்... சோதிச்சுப் பார்க்கலாமே! மாதவன் அண்ணே, லாட்டரிச் சீட்டு வாங்கிப் பாருங்க!’’

‘‘வேண்டாம்டா சங்கரன்குட்டி எனக்கு வேண்டாம்...’’

‘‘அப்படின்னா எனக்காக... மாதவன் அண்ணே, ஒரு டிக்கெட் வாங்குங்க. ஏனென்றால் என் கையில் இரண்டு சீட்டுகள் இருக்கு.’’

‘‘ஏதாவதொரு சீட்டுக்குப் பரிசு கிடைக்கும்டா சங்கரன் குட்டி பத்திரமா வைத்திரு.’’

‘‘அதில் ஒரு விஷயம் இருக்கு மாதவன் அண்ணே.’’

‘‘அது என்னடா?’’

‘‘நான் ஒரு சீட்டு வாங்கி, ஒரு இரண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அப்போ அந்த ஆளு கேட்டாரு, இன்னொரு சீட்டையும் தரட்டுமா என்று. அப்போ மச்சினன் சொன்னாரு- இன்னொரு சீட்டையும் வாங்கிக்கோ மச்சினா என்று. நான் இன்னொரு சீட்டையும் வாங்கினேன். நான் இப்போ குழப்பத்துல இருக்கேன்.’’

‘‘என்ன குழப்பம்?’’

‘‘ரேஷன் வாங்க வச்சிருந்த பணத்தை வைத்து நான் லாட்டரிச் சீட்டு வாங்கிட்டேன்.’’

‘‘அப்படின்னா ஒரு காரியம் செய். ஒரு டிக்கெட்டை இங்கே கொடுத்திடு’’ - மாதவன் மடியில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

சங்கரன் குட்டி ஒரு லாட்டரிச்சீட்டைத் தந்தான். சீட்டை மடித்து, மடியில் வைத்துக்கொண்டு மாதவன் கேட்டான்.

‘‘நாளைக்கு வேலைக்கு வருவியா?’’

‘‘ம்... வருவேன்.’’

அவர்கள் பிரிந்து சென்றார்கள்.

திருவனந்தபுரம் நகரத்திற்கு வெளியேதான் மாதவனின் வீடு இருக்கிறது. வீடு என்றால் - ஒரு சிறு மண்ணாலான வீடு.

‘‘மாதவனின் தாய் - குஞ்ஞுலட்சுமி. மாதவனுக்கு இளையவர்கள் இருவரும் சகோதரிகள் - ராஜம்மாவும், ரத்னம்மாவும். மாதவனின் தந்தை அந்த ஊரிலேயே மிகவும் திறமைவாய்ந்த வேலை செய்யக்கூடியவனாக இருந்தான். எந்த வேலையாக இருந்தாலும் அவன் செய்வான். மரவள்ளிக் கிழங்குகளைக் கிளறுவான். வயலில் உழுவான். அறுவடை செய்வான். மிதிப்பான். வீட்டை வேய்வான். சுமையைச் சுமப்பான். தென்னை மரத்தில் ஏறுவான் - இப்படி எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய திறமை கொண்டிருந்த அவன், பாம்பு கடித்து இறந்துவிட்டான்.

தந்தை இறந்தபோது, மாதவனுக்கு பத்து வயது நடந்து கொண்டிருந்தது. ராஜம்மாவிற்கு ஏழு வயதும் ரத்னம்மாவிற்கு ஐந்து வயதும் நடந்து கொண்டிருந்தன. பிள்ளைகளை வளர்ப்பதற்கு குஞ்ஞுலட்சுமி மிகவும் சிரமப்பட்டாள். அவள் நாற்று நடுவதற்கும் அறுவடை செய்வதற்கும் போவாள். ஆனால் எல்லா நேரங்களிலும் நாற்று நடுவதும், அறுவடை செய்வதும் இருந்து கொண்டே இருக்காதே! சில நேரங்களில் நெல் குத்துவதற்காகச் செல்வாள். இரண்டு வீடுகளில் பசுக்களுக்குப் புல் அறுத்துக் கொடுத்தால் ஏதாவது கிடைக்கும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பிள்ளைகளுக்கு உணவு உண்டாக்கி அவள் தந்து கொண்டிருந்தாள்.

மாதவனுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, அவன் வேலைக்குப் போகத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே அவனும் ஒரு நல்ல வேலை செய்யக் கூடியவனாக இருந்தான். ஆனால், பையனாக இருந்ததால், பாதி சம்பளம்தான் கிடைத்தது. தாயுடன் பெண் பிள்ளைகளும் சேர்ந்து வேலைக்குப் போவார்கள். சாயங்காலம் ஆகிவிட்டால், அவர்களும் ஏதாவது கொண்டு வருவார்கள். கிடைப்பவை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்ந்து பரிமாறி, எல்லாரும் அள்ளிக் குடித்து தூங்கச் செல்வார்கள்.

மாதவனுக்கு இருபத்து ஐந்து வயது கடந்தது. வேலை தேவைப்பட்டவர்களுக்கெல்லாம் மாதவன் தேவைப்பட்டான். அவன் செய்யும் வேலைக்கு மேற்பார்வை தேவையில்லை. எந்த வகையான வேலையாக இருந்தாலும் அதில் முழுமையான மனதுடன் அவன் ஈடுபட்டான். தன்னுடைய சொந்த வேலையைப் போல எண்ணி அவன் அதைச் செய்வான். அதனால் எல்லாருக்கும் மாதவன் தேவைப்பட்டான்.

குஞ்ஞுலட்சுமிக்கு வயதானது உடல் நலமும் பாதிக்கப்பட்டது. ராஜம்மாவிற்கு இருபத்து இரண்டு வயது ஆனது. ரத்னம்மாவிற்கு இருபது வயது ஆனது. வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பினால் சரியாக இருக்குமா? ஏதாவது பிரச்சினை உண்டாகிவிட்டால்? வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது’ என்று மாதவன் உத்தரவு போட்டான். அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது இல்லை. மாதவன் வேலை செய்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றினான்.

தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மாதவனுக்கு இருந்தது. ஆனால், வயதிற்கு வந்த இரண்டு தங்கைகள் வீட்டில் இருக்கும்போது, அண்ணன் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்குமா? அவர்களுக்குத் திருமணம் செய்து அனுப்பிவைத்து விட்டுத் திருமணம் செய்து கொள்வதற்காக அவன் காத்திருந்தான்.

குஞ்ஞுலட்சுமிக்கு எப்போதும் ஒரே சிந்தனைதான். பெண்பிள்ளைகளைத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அது. பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் திருமணம் செய்து கொள்வதற்காகப் பலரும் வந்தார்கள். அந்த ஊரிலேயே இருக்கும் ஒரே தையல்காரனான வாசுக்குட்டி, ராஜம்மாவைத் திருமணம் செய்து விரும்பினான். ஆனால், ஒரு புதிய தையல் இயந்திரத்தை வாங்கக்கூடிய பணத்தை தந்தால் மட்டுமே, அவன் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தான்.


மரவள்ளிக்கிழங்கு வியாபாரியான வேலாயுதனின் மகன் சுசீலன் ரத்னம்மாவைத் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னான். ஆனால், அவனுக்கு ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை வைப்பதற்கான பணத்தைத் தரவேண்டும்.

இரவு உணவு சாப்பிட்டு முடித்த பிறகு, தாயும் மகனும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு திருமணத்தைப் பற்றிப் பேசுவார்கள். தாய் கூறுவாள்:

‘‘வீடு முழுவதும் நிறைந்து நின்றிருக்கும் பெண் பிள்ளைகள் ஆச்சே! எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. இதையே நினைத்துக் கொண்டு படுத்திருப்பேன். பொழுது விடியிறது வரை.’’

‘‘வர்றவன் எல்லாம் பணம் கேட்டால், பிறகு நாம என்ன செய்றது அம்மா?’’

‘‘அதையேதான் நானும் நினைக்கிறேன். ஒருத்தனுக்கு தையல் இயந்திரம் வேணும். பிறகு... இன்னொருத்தனக்கு வெற்றிலைப் பாக்குக் கடை வேணும். இப்படியெல்லாம் சொன்னால் பிறகு...’’

‘‘நீர் இல்லாத இடத்தில் மூழ்க முடியுமா?’’

சில நேரங்களில் குஞ்ஞுலட்சுமி கேட்பாள்:

‘‘டேய் மாதவா, நாம ஒரு சீட்டுல சேர்ந்தால் என்ன?’’

‘‘சீட்டு சேர்ந்தால் போதுமா? பணம் தர வேண்டாமா?’’

‘‘வாரத்திற்கோ மாதத்திற்கோ ஒரு ரூபாய் கொடுத்தால் போதாதா?’’

‘‘ஒரு ரூபாய் கொடுத்தால், நமக்கு என்ன கிடைக்கும்?’’

‘‘நூறும் நூற்றைம்பதும் கிடைக்காதா?’’

‘‘நூறும் நூற்றைம்பதும் கொடுத்தால் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்ய ஆட்கள் வருவார்களா?’’

‘‘எப்படியாவது பெண் பிள்ளைகளை இங்கேயிருந்து அனுப்பி வைக்க வேண்டாமா மகனே?’’

‘‘எப்படியாவது வெளியே அனுப்பி வைத்தால் போதுமா அம்மா?’’

குஞ்ஞுலட்சுமி நீண்ட பெருமூச்சை விடுவாள்.

தான் வாங்கிய லாட்டரிச் சீட்டை மாதவன் குஞ்ஞுலட்சுமியின் கையில் கொடுத்தான். குஞ்ஞுலட்சுமி கேட்டாள்:

‘‘இது என்ன மகனே?’’

‘‘டிக்கெட் அம்மா... லாட்டரிச் சீட்டு.’’

‘‘இதன் விலை என்ன?’’

‘‘ஒரு ரூபாய்.’’

‘‘நமக்கு கிடைக்குமா மகனே?’’

‘‘நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். நம்மைவிட அதிர்ஷ்டம் உள்ளவர்கள் வேறு இருந்தார்கள் என்றால் அவர்களுக்குக் கிடைக்கும்.’’

‘‘கிடைத்தால் நமக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?’’

‘‘அதுவா? எனக்குத் தெரியாது அம்மா.’’

‘‘கேட்கலையா?’’

‘‘சங்கரன் வாங்கிய இரண்டு டிக்கெட்கள்ல ஒண்ணை நான் வாங்கினேன். என்ன கிடைக்கும் என்று நான் அவனிடம் கேட்கல.’’

‘‘ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அப்படித்தானே?’’

‘‘பத்தாயிரம்னு தோணுது.’’

‘‘பத்தாயிரமா! ஓ... அந்த அளவிற்குக் கிடைக்காது. ஒரு ரூபாய் கொடுத்தால் சும்மா பத்தாயிரம் ரூபாயை யாராவது தருவாங்களாடா மாதவா?’’

‘‘சங்கரன் குட்டியிடம் நாளைக்கு நான் கேட்கிறேன்.’’

‘‘கேளு. ஆயிரம் ரூபாய் கிடைத்தால் பெண் பிள்ளைகளை யாருடனாவது சேர்த்து அனுப்பி வைத்து விடலாம். பிறகு உனக்கு ஒரு பெண்ணைக் கொண்டு வரணும். நான் சாகுறதுக்கு முன்னால்... நமக்கும் கிடைக்கும் மகனே... வெள்ளாயிணி பகவதி அங்கேதான் இருக்கிறாள் என்றால் நமக்கு இது கிடைக்கும்.’’

‘‘கிடைக்கும்!’’

அன்று இரவு ரத்னம்மா ராஜம்மாவிடம் சொன்னாள்:

‘‘அக்கா என் மனதிற்குள் யாரோ வந்து இருந்து கொண்டு சொல்றாங்க.’’

‘‘என்னன்னு...?’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசு நமக்குக் கிடைக்கும் என்று! எனக்குத் தோணுது... வெள்ளாயிணி பகவதி வந்து சொன்னதுதான் அதுன்னு.’’

‘‘நீ கொஞ்சம் சும்மா இருடி ரத்னம்மா. நாம அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இல்லைடீ...’’

‘‘வெள்ளாயிணி பகவதி மனசு வைத்த பிறகு, அதற்கு அப்பால் யாராலாவது முடியுமா அக்கா? அக்கா, பார்க்கத்தானே போறீங்க - லாட்டரிச் சீட்டுல பரிசு நமக்குத்தான் கிடைக்கப் போகுது.’’

‘‘கிடைத்தால் சரிதான்.’’

மறுநாள் சாயங்காலம் மாதவன் வேலை முடிந்து வந்தபோது குஞ்ஞுலட்சுமியிடம் சொன்னான்:

‘‘அம்மா, விஷயம் தெரியுமா?’’

‘‘என்ன?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய்.’’

‘‘ஓ! சும்மா இருடா மாதவா. ஒரு லட்சம் ரூபாயை சும்மா யாராவது வாரி எடுத்துக் கொடுத்திடுவாங்களா?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய் மட்டுமில்லை அம்மா. ஒரு காரும் கிடைக்கும்.’’

‘‘உனக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.’’

‘‘உண்மைதான் அம்மா. முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயும் காரும் என்று பத்திரிகையில் போட்டிருக்காங்க. சங்கரன் குட்டியும் சொன்னான்.’’

‘‘உண்மையாகவா?’’

‘‘உண்மையாக இல்லாமல் இருந்தால், பத்திரிகையில் போடுவாங்களா?’’

‘‘உண்மையாகத்தான் இருக்கும். நமக்குக் கிடைத்தால் சரி தான். ஆனால் நமக்கு அதற்கான அதிர்ஷ்டம் இருக்காடா மகனே?’’

‘‘நம்மைவிட அதிர்ஷ்டம் இருப்பவர்கள் வேறு இருந்தார்கள் என்றால் அவர்களுக்குத்தான் கிடைக்கும்.’’

‘‘என் வெள்ளாயிணி பகவதி!’’ - குஞ்ஞுலட்சுமி கைகளைக் கூப்பி மேல்நோக்கிப் பார்த்தவாறு வணங்கினாள்.

‘‘அன்று இரவு ரத்னம்மா ராஜம்மாவிடம் சொன்னாள்:’’

‘‘ஒரு காரும் கிடைக்குமாம்.’’

‘‘அது பிரச்சினைக்குரிய விஷயம்டி ரத்னம்மா.’’

‘‘என்ன பிரச்சினை?’’

‘‘கார் கிடைத்தால் யார் அதை ஓட்டுறது?’’

‘‘கார் ஓட்டத் தெரிஞ்சவங்க இருக்காங்க அக்கா. டிரைவர்கள் பஸ், கார் எல்லாவற்றையும் ஓட்டுறவங்க டிரைவர்கள்தானே?’’

‘‘டிரைவர் வந்து நம்முடைய காரை ஓட்டினால், அந்த ஆளுக்கு சம்பளம் தர வேண்டாமா?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய் கிடைக்குதுல்ல? பிறகு ஏன் சம்பளம் தர முடியாது.’’

‘‘பிறகும் ஒரு பிரச்சினை இருக்குதுடி ரத்னம்மா.’’

‘‘அக்கா, உங்களுக்கு எல்லாமே பிரச்சினைதான்.’’

‘‘அடியே! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு.’’

‘‘சரி... சொல்லு.’’

‘‘காரை நம்முடைய வீட்டுக்கு எப்படி கொண்டு வர முடியும்? ’’

‘‘டிரைவர் ஏறி உட்கார்ந்து ஓட்டி இங்கே கொண்டு வருவார்.’’

‘‘குண்டும் குழியுமா இருக்குற ஒற்றையடிப் பாதையின் வழியாக காரைக் கொண்டு வர முடியுமான்னு நான் கேக்குறேன்.’’

‘‘இங்கே வர்றதுக்கு ஒரு சாலை உண்டாக்கணும். ஒரு லட்சம் ரூபாய் கிடைக்குதே!’’

‘‘அது உண்மைதான்.’’

குமாரன் நாயரின் தேநீர்க் கடையில் பெரிய அளவில் மனிதர்களின் கூட்டம் இருந்தது. பத்திரிகை வந்திருக்கவில்லை. பத்திரிகை ஏஜெண்ட் பேருந்து நிறுத்தத்தில் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

தேநீர்க் கடையில் கூடி நின்றிருந்த அனைவரும் லாட்டரி டிக்கெட் வாங்கியிருப்பவர்கள். அவர்களுடைய அதிர்ஷ்டம் தலைமுடி இழையில் தொங்கிக் கொண்டிருந்தது.

நேற்று கோழிக்கோட்டில் குலுக்கல் நடைபெற்றது. அன்றைய நாளிதழில் பரிசு கிடைத்தவர்களின் எண்கள் பிரசுரமாகும்.

குமாரன் நாயரின் தேநீர்க் கடையில் தங்களுக்குப் பரிசு கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் மாதவனும் இருந்தான். அவன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பத்திரமாகத் தன்னுடைய மடிக்குள் வைத்திருந்தான்.

‘‘ஒரு தேநீர் கொடு’’ - இப்படிக் கூறியவாறு பத்திரிகை ஏஜெண்ட் பத்திரிகைக் கட்டுடன் தேநீர்க் கடைக்குள் வந்தான்.

‘‘பத்திரிகைக் கட்டை சீக்கிரமா அவிழ்டா சுகுமாரா’’ - சங்கரன் குட்டி சொன்னான்.

‘‘மெதுவாத்தான் அவிழ்க்க முடியும்’’ - சுகுமாரன் மெதுவாகக் கட்டை அவிழ்க்க ஆரம்பித்தான்.


எல்லாரும் பொறுமை இல்லாமல் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

கட்டை அவிழ்த்து சங்கரன்குட்டி ஒரு நாளிதழை வெளியே எடுத்தான்.

‘‘சத்தமா வாசிடா சங்கரன்குட்டி’’ - பின்னாலிருந்து யாரோ உரத்த குரலில் சொன்னார்கள்.

சங்கரன்குட்டி நாளிதழை விரித்து வைத்துக்கொண்டு சொன்னான்.

‘‘எல்லாரும் சீட்டை எடுத்துப் பாருங்க.’’

எல்லாரும் தங்களின் டிக்கெட்டுகளை எடுத்துப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். சங்கரன்குட்டி உரத்த குரலில் வாசித்தான்.

‘‘முதல் பரிசு கிடைத்திருக்கும் சீட்டின் எண்... நாற்பத்து ஆறு, முப்பத்து ஒன்பது, ஒரு பூஜ்யம், மூணு.’’

மாதவன் மெதுவாகத் துள்ளினான். அவள் வெளியே ஓடினான்.

‘‘நில்லுங்க மாதவன் அண்ணே, நில்லுங்க’’ - சங்கரன் குட்டி சத்தம் போட்டுச் சொன்னான்.

மாதவன் நிற்கவில்லை. அவன் மிகவும் வேகமாக ஓடி மறைந்து விட்டான்.

2

ரு லட்சமும் ஒரு காரும்... அந்தச் சிறிய குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தூரத்தில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். ஒரு லட்சம் ரூபாயையும் காரையும் அவன் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தான். அதிர்ஷ்டத்தின் அரசனான தன் மகனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்ஞுலட்சுமி. அவளால் எதையும் கூற முடியவில்லை. ஆனந்தம் அவளைத் திக்குமுக்காடச் செய்தது.

வீட்டிற்குப் பின்னால் பலாமரத்திற்குக் கீழே ராஜம்மாவும் ரத்னம்மாவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னென்னவோ கூறிக்கொண்டிருந்தார்கள்.

‘‘என்னை மறந்துவிட மாட்டீர்களே மாதவன் அண்ணே!‘‘- இப்படி கூறியவாறு சங்கரன்குட்டி அங்கு வந்தான்.

‘‘முதல் பரிசு எனக்குக் கிடைத்திருப்பது எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சா சங்கரன்குட்டி?’’ - மாதவன் மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான்.

‘‘பிறகு...?’’ முதல் பரிசு உங்களுக்குக் கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சவுடனே எல்லாருடைய முகமும் மழைமேகம் மாதிரி ஆயிடுச்சு.’’

‘‘பொறாமை... சங்கரன்குட்டி, பொறாமை... யாருக்காவது நல்லது நடந்தால் மத்தவங்க எல்லாருக்கும் கண்கள் உறுத்த ஆரம்பிச்சிடுது’’ - குஞ்ஞுலட்சுமி சொன்னாள்.

‘‘இவை அனைத்தும் கடவுள் முடிவு செய்யிற விஷயம் அம்மா’’ - சங்கரன் குட்டி திண்ணையில் ஏறி மாதவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தான்.

‘‘அப்படிச் சொல்லு சங்கரன்குட்டி. வெள்ளாயிணி பகவதி தூக்கத்தில் வந்த சொன்னது -  என் மகனுக்கு ஒரு லட்சம் ரூபாயும் ஒரு காரும் கிடைக்கும்னு.’’

சங்கரன் குட்டி பொறுமையை இழந்து சொன்னான்:

‘‘கேட்டீங்களா மாதவன் அண்ணே, என்னை மறந்துடாதீங்க உங்களுக்கு நான்தான் லாட்டரிச் சீட்டைத் தந்தேன்.’’

‘‘உன்னை நான் மறக்க மாட்டேன்டா சங்கரன்குட்டி. நீ கையில புண்ணியம் வைத்திருப்பவன்.’’

‘‘சரி... அது இருக்கட்டும். எப்போ பரிசுப் பணத்தைத் தருவாங்க சங்கரன்குட்டி?’’ - குஞ்ஞுலட்சுமி கேட்டாள்.

‘‘எப்போ தருவாங்கன்னு பத்திரிகையில் வரும். பெரிய மீட்டிங்கெல்லாம் நடக்கும். அமைச்சர்களும் கவர்னரும் அதிகாரிகளும் வருவார்கள். அந்த இடத்தில் வைத்துதான் பரிசைத் தருவாங்க.’’

‘‘மாதவா... மகனே...  நீ ஒரு நல்ல ஆடையைத் தைக்கணும். பெரிய பெரிய ஆட்கள் இருக்குற இடத்துல போய் பரிசுப் பணத்தை வாங்க வேண்டியதிருக்கே!’’

‘‘இப்போ ஒரு புதிய வகை துணி வந்திருக்கு மாதவன் அண்ணே. டெர்லின் என்பது அதன் பெயர். அதுல ஒரு ஆடை தைக்கணும். ஒரு இரட்டை மடிப்பு வேட்டியும்...’’

‘‘பெண் பிள்ளைகளுக்கு முண்டும் ரவிக்கையும் வேணும்’’- குஞ்ஞுலட்சுமி.

‘‘அவங்க இனி முண்டு அணிய வேண்டாம். அவங்க இனி புடவை அணிந்தால்தான் நல்லா இருக்கும்’’- மாதவன்.

‘‘அது உன் விருப்பப்படி நடக்கட்டும். ஆனால் என்னால புடவையெல்லாம் அணிய முடியாது. எனக்கு முண்டு போதும்.’’

‘‘அம்மா, உங்களுக்கு முண்டு வாங்கலாம்.’’

‘‘செருப்பு வேணும் மாதவன் அண்ணே. செருப்பு அணிந்து கொண்டுதான் அங்கே போகணும்’’ - சங்கரன் குட்டி.

‘‘அப்படின்னா... சங்கரன்குட்டி, நீ இன்னைக்கு வேலைக்குப் போகலையா?’’ - குஞ்ஞுலட்சுமி.

‘‘போகணும்... போகணும்... மாதவன் அண்ணே! நீங்க பெரிய சொத்துக்குச் சொந்தக்காரரா ஆயீட்டீங்களே! இனிமேல் கூலி வேலைக்குப் போனால் ஆட்கள் என்ன சொல்லுவாங்க?’’

‘‘அது உண்மைதான். நான் வரல. சங்கரன்குட்டி நீ கிளம்பு.’’

‘‘வேலை முடிச்சு சாயங்காலம் நான் இங்கே வர்றேன் மாதவன் அண்ணே’’- சங்கரன்குட்டி அங்கிருந்து கிளம்பினான்.

‘‘எச்சரிக்கையா இருக்கணும் மகனே. இவனெல்லாம் நட்புன்னு சொல்லிக்கிட்டு வர்றது ஏன் தெரியுமா?’’

‘‘எனக்குத் தெரியும். அதெல்லாம் என்கிட்ட நடக்காது அம்மா.’’

மதியம் கடந்த பிறகும் அதுவரை யாரும் எதுவும் சாப்பிடவில்லை. எதுவும் சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தோன்றவும் இல்லை. லட்சம் ரூபாய், கார் ஆகியவற்றின் போதையில் அவர்கள் எல்லோரும் மூழ்கிப் போய் உட்கார்ந்திருந்தார்கள்.

‘‘நீ ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டியேடி குஞ்ஞுலட்சுமி’’- இப்படிக் கூறியவாறு குஞ்ஞுலட்சுமியின் அக்கா குஞ்ஞுக்குட்டி அங்கு வந்தாள். மாதவன் பக்கம் திரும்பிக் கொண்டு அவள் சொன்னாள்:

‘‘நீ ரொம்பவும் மோசமா இருக்கியேடா மாதவா?’’

குஞ்ஞுலட்சமியும் மாதவனும் எதுவும் பேசவில்லை.

குஞ்ஞுக்குட்டி கேட்டாள்:

‘‘ராஜம்மாவும் ரத்னம்மாவும் எங்கே?’’

அதற்கும் பதில் கிடைக்கவில்லை. குஞ்ஞுக்குட்டி அதிகார தொனியில் கேட்டாள்.

‘குஞ்ஞுலட்சுமி, நீ ஏன்டி பேசாமல் இருக்கே?’’

‘‘அக்கா, நீங்க எதற்காக வந்தீங்க?’’ - குஞ்ஞுலட்சுமி தன் மவுனத்தைக் களைத்தாள்.

‘‘நான் வந்ததா? நீ என்னுடைய உடன்பிறப்புன்னு நினைச்சு வந்தேன். உனக்கு விருப்பம் இல்லைன்னா நான் இங்கேயிருந்து போயிடுறேன்.’’

‘‘இவ்வளவு நாட்களும் கூட பிறந்தவள்ன்ற எண்ணம் உங்களுக்கு இல்லாமல் போச்சே அக்கா. இப்போ இப்படி திடீர்னு எப்படி அந்த ஞாபகம் வந்தது?’’

‘‘உனக்கு தெரியாதுடி குஞ்ஞுலட்சுமி. அங்கேயிருந்து கொஞ்சம் வெளியேறி வர என்னால் முடியுதா? பிள்ளைகள்... பிள்ளைகளின் பிள்ளைகள் என்று எப்போ பார்த்தாலும் ஒரே தொந்தரவு...’’

‘‘பிறகு... இப்போ இங்கே வர எப்படி முடிஞ்சது பெரியம்மா’’- மாதவன் ஒரு அம்பை வீசினான்.

‘‘இப்போ எப்படி முடிஞ்சதுன்னு கேட்டால் அது ஒரு கதையடா மாதவா. சரோஜினி முந்தாநாள்ல இருந்து சொல்லிக்கிட்டே இருக்கா- அம்மா, நீங்க சித்தியைப் போய் பார்த்துட்டு வாங்க... பார்த்துட்டு வாங்கன்னு. பிறகு... கேளு...’’

குஞ்ஞுலட்சமி இடையில் புகுந்து சொன்னாள்:

‘‘மாதவனின் அப்பா இறந்தபிறகு, நாங்கள் இங்கே கிடந்து சிரமப்படுறது... அக்கா, உங்களுக்கு தெரியவில்லையா? நாழி அரிசியையோ, ஒரு கட்டு மரவள்ளிக் கிழங்கையோ எனக்குத் தந்திருக்கீங்களா? அவள் என்கூடப் பிறந்தவள்னு நினைச்சு, அக்கா- ஒரு நாளாவது நீங்க இங்கே வந்திருக்கீங்களா? ஆனால் இப்போ...’’

குஞ்ஞுக்குட்டி மிடுக்கான குரலில் சொன்னாள்:


‘‘பிறகு... நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். உங்களுடைய ஒரு லட்சம் ரூபாயையும் காரையும் பார்த்து ஒண்ணும் நான் இங்கே வரல. கூட பிறந்தவளாச்சேன்னு நினைச்சுத்தான் நான் வந்தேன். உனக்குப் பிடிக்கலைன்னா, நான் இங்கேயிருந்து போயிடுறேன். அரிசியோ மரவள்ளிக்கிழங்கோ தேவைப்பட்டால், நான் இங்கே கொடுத்து அனுப்புறேன்.’’

‘‘இவ்வளவு நாட்களா... அக்கா உங்களோட அரிசியையும் மரவள்ளிக்கிழங்கையும் நாங்க சாப்பிட்டு வாழ்க்கையை நடத்தலையே! இனிமேலும் அது இல்லாமல் வாழ முடியுமான்னு பார்க்குறேன்.’’

‘‘அப்படின்னா, நான் கிளம்பட்டுமா?’’

‘‘ம்...’’

‘‘குஞ்ஞுக்குட்டி தலையை வெட்டியவாறு திரும்பி நடந்தாள். ஒற்றையடிப் பாதையில் போய் நின்றுகொண்டு அவள் உரத்த குரலில் சொன்னாள்:’’

‘‘உன் ஒரு லட்சத்தில் பங்கு கேட்டு வந்தவள் இல்லைடி நான்.’’

‘‘இல்ல... இல்ல... கூடப்பிறந்தவள்மீது வச்சிருக்குற பாசத்தாலதான் இங்கே வந்தீங்க. சரியா?’’

மாலை நேரம் ஆனது. மாதவன் எழுந்தான். 


‘‘அம்மா, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்.’’

"நீ இப்போ எங்கே போறே?"

"இரவுக்கு ஏதாவது வேண்டாமா?"

"அதற்கு நீ இப்போ என்ன செய்யப் போறே?"

"நான் கொஞ்சம் வெளியே போய் பார்க்குறேன். எனக்கு ஒரு தேநீர் குடிக்கணும்போல இருக்கு."

"சீக்கிரமா வந்திடணும்."

"வந்திடுறேன்."

அவன் ஒற்றையடிப் பாதையில் இறங்கி நடந்தான். குமாரன் நாயரின் தேநீர்க் கடையை நோக்கி அவன் நடந்தான். குமாரன் நாயரிடம் அவன் கேட்டான்:

"ஒரு தேநீர் கடனாகத் தர முடியுமா?"

"அது என்ன மாதவா? என்கிட்ட விளையாடுறியா?"

"தேநீர் கடனுக்குத் தாங்கன்னு கேக்குறது விளையாடுறதா?"

"பிறகு என்ன? மாதவா, நீ ஒரு லட்சாதிபதி. நான் ஒரு ஏழை தேநீர்க் கடைக்காரன். நிலைமை அப்படி இருக்குறப்போ கடன் தர முடியுமான்னு கேக்குறது விளையாட்டுதானே?"

"மாதவன் பெஞ்சில் உட்கார்ந்தான். குமாரன் நாயர் தேநீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் கேட்டார்:

"நல்ல பப்பட வடை இருக்கு. தரட்டுமா? பிறகு... அதிரசம் இருக்கு. அதிரசம் தரட்டுமா?"

மாதவன் பப்பட வடையையும் அதிரசத்தையும் வாங்கி தேநீர் குடித்து முடித்து எழுந்தான். அவன் சொன்னான்: "கணக்கு எழுதி வச்சிக்கோங்க."

"கணக்கு எதுவும் எழுத வேண்டாம் மாதவா. தினந்தோறும் இங்கே தேநீர் குடிக்க நீ வந்தால் போதும்."

மாதவன் அங்கிருந்து வெளியேறினான். சங்கரன் குட்டி வேலை முடிந்து வந்து கொண்டிருந்தான். அவன் மகிழ்ச்சியுடன் சொன்னான்:

"இங்கே நிற்கிறது மாதவன் அண்ணன்தானே?"- அருகில் சென்று அவன் மாதவனின் காதில் மெதுவான குரலில் சொன்னான்:

"மாதவன் அண்ணே, இனிமேல் நீங்க இப்படி வெளியே நடக்கக்கூடாது. ஏதாவது தேவைப்பட்டால் என்கிட்ட சொன்னால் போதும். நான் வாங்கிக் கொண்டு வந்து தர்றேன்."

"நான் ஒரு தேநீர் குடிப்பதற்காக வெளியே வந்தேன்டா சங்கரன்குட்டி."

"மாதவன் அண்ணே, இனிமேல் நீங்க தேநீர் கடைக்கு வந்து உட்கார்ந்து தேநீர் அருந்துவது நல்ல விஷயமா? தேயிலை, சர்க்கரை எல்லாவற்றையும் நானே வாங்கிக் கொண்டு வருவேன்ல? கிழக்கு வீட்டில் இருந்து பால் வாங்கலாம். இல்லாவிட்டால் ஒரு பசுவை வாங்கணும். ஹைத்ரோஸின் பசு பிரசவமாகி ஆறு நாட்கள்தான் ஆகுது. இரண்டரை படி பாலு கறக்குற பசு அது. அதை நாளைக்கே நான் அங்கே கொண்டு வர்றேன்."

"அப்போ... ஒரு காரியம் சங்கரன்குட்டி!"

"என்ன?"

"உனக்கு இன்னைக்கு கூலி கிடைச்சதா?"

"கிடைச்சது?"

"அதுல பாதியை எனக்குத் தர முடியுமா?"

"எதுக்கு?"

"இரவு சாப்பாட்டுக்கு வீட்டுல ஒண்ணும் இல்லையடா."

"மாதவன் அண்ணே, உங்களுக்கு அரிசியும் சாமான்களும் தானே வேணும்?"

"ஆமாம்..."

"அப்படின்னா வாங்க..."

அவர்கள் மாத்தச்சனின் மளிகைக் கடையை நோக்கி நடந்தார்கள். மாதவனை வெளியே நிறுத்திவிட்டு, சங்கரன்குட்டி கடைக்குள் நுழைந்து என்னவோ சொன்னான். மாத்தான் அன்புடன் அழைத்தவாறு சொன்னார்:

"அங்கே ஏன் நிற்கிறீங்க? இங்கே வந்து உட்காரலாமே!"

மாதவன் கடைக்குள் சென்றான். மாத்தச்சன் ஒரு நாற்காலியில் மாதவனை உட்காரும்படிச் சொல்லிவிட்டு, கடையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சொன்னான்: "டேய்... ஓடிப்போய் ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு வா. வெற்றிலைப் பாக்குக் கடைக்குப் போய் ஒரு சிகரெட்டையும் வாங்கிட்டு வா."

சிறுவன் ஓடிச் சென்றான். மாத்தச்சன் சொன்னார்:

"இங்கே வந்தது நல்ல விஷயம்தான். ஆனால் பொருட்கள் வாங்குவதற்காக வந்திருக்கிறீர்கள் என்றால் அதற்காக வர வேண்டாம். ஒரு பையன்கிட்ட சொல்லிவிட்டால் போதும்... தேவைப்படுகிற பொருட்களை நான் அங்கே கொடுத்து அனுப்பிட மாட்டேனா?"

சங்கரன்குட்டி சொன்னான்: "விஷயம் என்னன்னா... மாதவன் அண்ணன் வேறொரு விஷயமோ இந்தப் பக்கமா வந்துகிட்டு இருந்தாரு. அப்போ... சாமான்களைக் கொடுத்து அனுப்பிடலாம்னு இங்கே வந்து நான் சொன்னேன்."

சிறுவன் தேநீரையும் சிகரெட்டையும் கொண்டு வந்தான். மாதவன் தேநீரைக் குடித்தான். சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு மாத்தச்சன் சொன்னார்:

"சாமான்கள் எல்லாவற்றையும் நான் அங்கே கொடுத்து அனுப்பிடுறேன். இனிமேல் என்ன வேணும்னாலும், இங்கே சொல்லிவிட்டால் போதும்."

மாதவன் கடையை விட்டு வெளியேறி நடந்தான். அவனுக்குப் பின்னால் சங்கரன்குட்டி நடந்தான். வெற்றிலைப் பாக்குக் கடைக்கு அருகில் சென்றபோது, சங்கரன்குட்டி கேட்டான்:

"சிகரெட்டும் தீப்பெட்டியும் வேண்டாமா மாதவன் அண்ணே!"

"ம்... வேணும்!"

"அப்படின்னா... மாதவன் அண்ணே... நீங்க இங்கேயே நில்லுங்க."

சங்கரன்குட்டி வெற்றிலைப் பாக்குக் கடைக்குள் நுழைந்து என்னவோ சொன்னான். வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் செல்லப்பன் ஒரு பாக்கெட் பர்க்கிலி சிகரெட்டையும் ஒரு தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து மாதவனின் கையில் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

"இதுதான் இருக்கு. நாளைக்கு ப்ளேயர்ஸ், கோல்ட்ஃப்ளேக் எல்லாவற்றையும் வாங்கி வைக்கிறேன். நல்ல மிட்டாய் இருக்கு. கொஞ்சம் எடுத்துக் கொண்டு வரட்டுமா?"

"ம்... கொண்டு வா."

செல்லப்பன் ஓடிச் சென்று கொஞ்சம் மிட்டாய்களை தாளில் சுற்றிக் கொண்டு வந்து மாதவனின் கையில் கொடுத்துவிட்டுச் சொன்னான்:

"என்ன தேவைப்பட்டாலும், இங்கே சொல்லி அனுப்பினால் போதும்."

"ம்..."

மாதவன் தலையை உயர்த்திக் கொண்டு நடந்தான். அவனைப் பின்தொடர்ந்து சங்கரன்குட்டி நடந்தான்.

"அதிர்ஷ்டசாலி! அதிர்ஷ்டசாலி! எதிரில் இங்கே வந்து கொண்டிருப்பது லட்சாதிபதிதானே?"- இப்படி ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியவாறு பரமேஸ்வரன் பிள்ளை எதிரில் வந்து கொண்டிருந்தார். அருகில் வந்து மாதவனின் தோளில் கையை வைத்துக் கொண்டு அவர் சொன்னார்:

"முதல் பரிசு... மாதவா... உனக்குக் கிடைச்சிருக்குன்னு தெரிஞ்சவுடனே நான் சொன்னேன், கடவுளோட அருள் உனக்கு இருக்குன்னு. தெரியுதா மாதவா... எப்பவும் கடவுளை மனசுல நினைக்கணும். சரி... மாதவா, நீ லாட்டரிச் சீட்டை லாட்டரியின் தலைமை அலுவலகத்தில் கொண்டு போய் கொடுத்தாச்சா?"


"இல்ல..."

"அப்படின்னா நாளைக்கே கொண்டு போய் கொடுக்கணும். அப்படின்னாத்தான் பரிசு கிடைக்கும்."

"அது எனக்குத் தெரியாதே!"- மாதவன் பதைபதைத்துப் போய்விட்டான்.

"இல்லாவிட்டால் அவங்களுக்குத் தெரியுமா முதல் பரிசு உனக்கு கிடைச்சிருக்குன்னு? தலைமை அலுவலகம் உனக்குத் தெரியுமா? தேவைப்பட்டால் நானும் வர்றேன். அங்கே இருக்குறவங்க எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும்."

சங்கரன்குட்டி சொன்னான்:

"என் மச்சினனுக்குத் தெரியும். பேட்டைக்குப் போய் என் மச்சினனை அழைச்சிட்டுப் போனால் போதும்."

"அப்படின்னா, அதைச் செய்யுங்க. நாளைக்கே கொண்டு போகணும்."

"நாளைக்கு காலையில போறோம்."

பரமேஸ்வரன் பிள்ளை நடந்தார். திடீரென்று அவர் திரும்பி நின்று கொண்டு சொன்னார்:

"மாதவா, நெல்லோ பணமோ வேணும்னா, எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினால் போதும். நான் கொடுத்து அனுப்புறேன்."

"சொல்லி அனுப்புறேன்."

பரமேஸ்வரன் பிள்ளை ஒரு நடுத்தர ஜமீன்தார். அவருடைய நிலத்தைப் பண்படுத்தவும், அறுவடை செய்வதற்கும் எப்போதும் மாதவன் போவதுண்டு. அவர்தான் மாதவனின் தோளில் கையை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

மாதவன் தலையை உயர்த்தி கையை வீசிக்கொண்டு நடந்தான்.

3

ரு பெரிய கூடையில் ஒரு சுமை சுமக்கும் தொழிலாளி பொருட்களைக் கொண்டு வந்து இறக்கியபோது குஞ்ஞுலட்சுமியும் ராஜம்மாவும் ரத்னம்மாவும் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டார்கள். குஞ்ஞுலட்சுமி கேட்டாள்:

‘‘இது எங்கே இருந்து வந்திருக்கு?’’

‘‘மாத்தச்சன் கடையில் இருந்து.’’

‘‘இங்கேதானா?’’ - ராஜம்மா கேட்டாள்.

‘‘மாதவன் வீட்டுல கொண்டு போய் கொடுன்னு என்கிட்ட சொல்லி அனுப்பினாரு. மாதவனின் வீடு இதுதானே?’’

‘‘இதேதான்.’’

‘‘அப்படின்னா... இவை எல்லாவற்றையும் அங்கே எடுத்து வச்சிட்டு கூடையை இங்கே தாங்க.’’

சாமான்கள் அனைத்தையும் எடுத்து உள்ளே வைத்துவிட்டு கூடையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். சுமை தூக்கும் தொழிலாளி கூடையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான். குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘சீக்கிரமா அடுப்புல நீரை வையிடி... அவன் இன்னைக்கு எதுவும் சாப்பிடல.’’

ராஜம்மாவும் ரத்னம்மாவும் சமையலறைக்குள் சென்றார்கள். குஞ்ஞுலட்சுமி ஒவ்வொரு பொட்டலத்தையும் பிரித்துப் பார்த்தாள். உப்பு, மிளகு, கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சிறு பயறு - எல்லாம் அங்கு இருந்தன. தேங்காய் இருந்தது. ஒரு பொட்டலத்தைப் பரித்துவிட்டு, குஞ்ஞுலட்சுமி உரத்த குரலில் சொன்னாள்:

‘‘சர்க்கரையும் இருக்குடி ராஜம்மா... தேங்காயும் இருக்கு. பச்சை அரிசியும் இருக்கு.’’

ராஜம்மாவும் ரத்னம்மாவும் ஓடி வந்தார்கள். இரண்டு பேரும் ஒரே நேரத்தில் கூறினார்கள்:

‘‘பாயசம்... பாயசம் செய்யணும்.’’

‘‘நாளைக்கு வைக்கலாம்டி... இன்னைக்கு நேரமில்லை.’’

‘‘சாமான்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்துட்டார்களா அம்மா?’’ -  இப்படிக் கேட்டவாறு மாதவன் திண்ணையில் போய் உட்கார்ந்தான். அவனுடன் சங்கரன் குட்டியும் இருந்தான்.

‘‘இவை எங்கேயிருந்து வந்ததுடா மகனே? கடனுக்கு வாங்கியதா?’’ குஞ்ஞுலட்சுமி உள்ளேயிருந்து திண்ணைக்கு வந்தாள்.

மாதவன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். சங்கரன்குட்டி ஒரு பீடியைப் பற்ற வைத்தான். மாதவன் சொன்னான்:

‘‘மாத்தச்சன் கடையில கடனுக்கு வாங்கியவைதான். இனிமேல் என்ன வேணும்னாலும் அங்கே சொல்லிவிட்டால் போதும். அவர் கொடுத்து அனுப்பிடுவாரு.’’

ஒற்றையடிப் பாதையைப் பார்த்துக் கொண்டே சங்கரன்குட்டி கேட்டான்.

‘‘இங்கே வர்றது யாரு?’’

‘‘செக்ரட்டரி புருஷோத்தமன்தானே அது?’’

எஸ்.என்.டி.பி. கிளை செக்ரட்டரி புருஷோத்தமன் திண்ணைக்கு வந்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் அவர் சொன்னார்:

‘‘காலையில்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. அப்போதே இங்கே வரணும்னு நினைச்சேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்துக்காக திருவனந்தபுரத்திற்குப் போக வேண்டியது இருந்தது. திரும்பி வர்ற வழியில இங்கே வந்தேன். மாதவா, தெரியுதா? உன்னுடைய அதிர்ஷ்டம் சமுதாயத்தின் அதிர்ஷ்டம்! நீ சமுதாயத்தின் மரியாதை!’’

குஞ்ஞுலட்சுமி ஒரு பழைய பாயைக் கொண்டு வந்து திண்ணையில் விரித்தாள். செக்ரட்டரி கேட்டார்:

‘‘இங்கே நாற்காலி எதுவும் இல்லையா? இனிமேல் பல முக்கிய மனிதர்களும் வரக்கூடிய வீடாயிற்றே இது! இங்கு ஒரு நாற்காலி கூட இல்லை என்ற குறை சமுதாயத்தைச் சேர்ந்ததாயிற்றே!’’

மாலை நேரம் கடந்தது. குஞ்ஞுலட்சுமி ஒரு மண்ணெண்ணெய் விளக்கை எரிய வைத்து, திண்ணையில் வைத்தாள். செக்ரட்டரி கடுமையான கோபத்துடன் சொன்னார்:

‘‘ச்சே... ச்சே... சாயங்கால நேரத்துல மண்ணெண்ணெய் விளக்கு எரிய வைக்கப்பட்டிருக்கு! சமுதாயத்திற்கு இது எவ்வளவு கேவலம் தரக்கூடிய விஷயம்! சங்கரன்குட்டி, நீ என்னுடைய வீட்டிற்குச் சென்று லாந்தர் விளக்கை வாங்கிக் கொண்டு வா. இரண்டு நாற்காலிகளையும் அங்கேயிருந்து எடுத்துக் கொண்டு வரணும். நான் சொல்லி அனுப்பினதா சொன்னால் போதும். நான் இங்கேதான் இருக்கேன்னு சொல்லிடு...’’

சங்கரன்குட்டி ஓடி மறைந்தான். குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘எங்களுக்கு இன்னைக்குத்தானே லாட்டரியில பரிசு கிடைச்சிருக்கு!’’

‘‘நான் குறை சொல்லல. மாதவன் பழைய மாதவன் இல்ல. லட்சாதிபதி. சமுதாயத்தின் மதிப்புமிக்க தூண் மாதவன்.’’

ஒரு மனிதன் ஒரு சாக்கு மூட்டையைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான். திண்ணையில் சுமையை இறக்கி வைத்துவிட்டு, தாள் பொட்டலத்தை மாதவனிடம் நீட்டியவாறு சொன்னான்:

‘‘பரமேஸ்வரன் பிள்ளை ஐயா கொடுத்து அனுப்பினாரு.

‘‘மாதவன் பொட்டலத்தை வாங்கித் திறந்து பார்த்தான். அடுத்த நிமிடம் அதை மடித்து இடுப்பில் சொருகிக் கொண்டான். செக்ரட்டரி கேட்டார்:

‘‘அந்தப் பொட்டலத்துல என்ன இருக்கு மாதவா?’’

‘‘பணம்.’’

‘‘அந்த மூட்டையில் என்ன இருக்கு?’’

‘‘நெல்.’’

‘‘மாதவா, நீ கேட்டா பரமேஸ்வரன் பிள்ளை நெல்லையும் பணத்தையும் அனுப்பியிருக்காரு?’’

‘‘கேட்கவில்லை. கொடுத்து விடுறதா சொன்னாரு. சொன்ன மாதிரியே கொடுத்து அனுப்பியிருக்காரு.’’

‘‘எச்சரிக்கையா இருக்கணும். அவர் ஒரு ஆபத்தான ஆளு. லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்தவுடன் நெருங்குகிறார். ஆபத்தான விஷயம்!’’

‘‘உண்மைதான். லாட்டரியில் பரிசு கிடைத்தவுடன் பார்க்கும்போது பேசாதவர்கள் எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. சிலர் வெளியில பார்த்து நட்பு கொள்ள தொடங்கிட்டாங்க. சிலர் இங்கேயே வர ஆரம்பிச்சிட்டாங்க’’ - மாதவன் செக்ரட்டரியை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே தொடர்ந்தான்.’’

‘‘கேட்காமலே ஒவ்வொன்றையும் கொண்டு வரவும் தொடங்கிட்டாங்க.’’

செக்ரட்டரியின் முகம் வெளிறியது. குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘நாம எச்சரிக்கையா இருக்கணும் மகனே. எல்லாரும் நெருங்கி வர்றது ஆபத்தான விஷயம்!’’

முகத்தைத் துடைத்துவிட்டு செக்ரட்டரி சொன்னார்:

‘‘மாதவா, ஒரு விஷயம் தெரியுமா? பணம் கையில் வர்றப்போ பலரும் நெருங்கி வருவாங்க. அதற்காக வர்றவங்க எல்லோரும் சுயநலம் கருதி வர்றவங்கன்னு நினைச்சிடக் கூடாது. நீ உயர்வது சமுதாயத்திற்கு மதிப்பு தரக்கூடிய ஒரு விஷயம். உயர்வை நோக்கிச் செல்லும் மாதவனுக்கு உதவ வேண்டியது சமுதாயத்தின் கடமை.’’


தலையில் இரண்டு நாற்காலிகளைச் சுமந்து கொண்டு, ஒரு லாந்தர் விளக்கைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு சங்கரன்குட்டி வந்தான். நாற்காலிகளையும் லாந்தர் விளக்கையும் திண்ணையில் வைத்தான்.

செக்ரட்டரி சொன்னார் : ‘‘உட்காரு மாதவா உட்காரு. சில விஷயங்களைக் கூற வேண்டியதிருக்கு.’’

‘‘ஒரு நாற்காலியில் அவர் உட்கார்ந்தார். மாதவனும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.’’

‘‘தெரியுதா மாதவா? இந்த வீட்டில் இருந்து மாறி வேறொரு வீட்டில் இருக்கணும். இன்னும் சில நாற்காலிகளையும் மேஜைகளையும் வாங்கணும். பெரிய ஆட்கள் பலரும் உன்னைப் பார்க்க வர்றப்போ, குடிசையில இப்படி... ’’

‘‘பணம் கிடைத்த பிறகு ஒரு வீடு உண்டாக்கணும் செக்ரட்டரி... ’’

‘‘வீடு உண்டாக்கணும் ஓர் அருமையான மாளிகை! அதுவரை இருப்பதற்கு நான் ஒரு வீடு தர்றேன். கிராம அலுவலகத்திற்கு எதிரில் இருக்குற வீடு இருக்கே! அது எங்களுக்குச் சொந்தமானது தான். அது இப்போது யாரும் இல்லாமல் சும்மாதான் கிடக்குது. நானும் என்னுடைய இரண்டு சகோதரிகளும்தான் அதற்கு உரிமையாளர்கள். மாதவா, உனக்கு வேணும்னா, அந்த இடத்தையும் விலைக்குத் தர தயாராக இருக்கோம்.’’

‘‘பணம் கிடைக்கட்டும் செக்ரட்டரி...’’

‘‘பணம் கிடைப்பது வரையில் அங்கே இருக்கலாம்னு நான் சொல்றேன். வாடகை எதுவும் தர வேண்டாம். உன்னுடைய அந்தஸ்த்தைக் காப்பாற்ற வேண்டியது சமுதாயத்தின் கடமை. சங்கரன் குட்டி, நீ என்ன சொல்றே?’’

‘‘இந்த இடத்தை விட்டு வேறு இடத்துல இருக்கணும் என்பதுதான் என்னுடைய கருத்து. மாதவன் அண்ணன் இனிமேல் மதிப்பா இருக்கணும்.’’

‘‘என்ன சொல்றே மாதவா?’’

‘‘அப்படியே நடக்கட்டும்.’’

‘‘அப்படின்னா... நான் இப்போ கிளம்புறேன். நாளைக்கு நானும் என் மனைவியும் இங்கே வர்றோம். அம்மா, நான் இப்போ புறப்படட்டுமா?’’

‘‘சரி...’’

செக்ரட்டரி புறப்பட்டார். குஞ்ஞுலட்சுமி சொன்னார்:

‘‘அந்த வீட்டையும் நிலத்தையும் விற்பதற்கு அந்த ஆள், ஆளைத் தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்காரு. அதனால் இப்போ சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக்கிட்டு வந்திருக்காரு. இந்தப் பிள்ளைகளை வளர்க்க நான் இங்கே கிடந்து கஷ்டப்பட்டப்போ, ஒரு சமுதாயக்காரனையும் காணவில்லை. எச்சரிக்கையா இருக்கணும் மகனே... நெருங்கி வர்றவனையெல்லாம் கவனமா பார்க்கணும்.’’

மறுநாளே மாதவனும் சங்கரன் குட்டியும் சேர்ந்து திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டார்கள். சவுக்காரம் போட்டு வெள்ளை ஆக்கியிருந்த வேட்டியையும் சட்டையையும் அணிந்து கொண்டு மாதவன் சென்றான். சங்கரன்குட்டி சொன்னான்:

‘‘இன்னைக்கு நல்ல சட்டையும் வேட்டியும் வாங்கணும் மாதவன் அண்ணே. பேருந்து ஏறுகிற இடத்தில் ஒரு துணிக்கடை இருக்குதே! அங்கே வாங்கலாம்.’’

‘‘பணத்தை ரொக்கமா கொடுத்திடுவோம்டா சங்கரன்குட்டி...’’

‘‘பரமேஸ்வரன் பிள்ளை ஐயா கொடுத்து விட்ட பணம்தானே? அது கையில் இருக்கட்டும் மாதவன் அண்ணே. தேவைப்படும் வேட்டி, சட்டையைக் கடனுக்கு வாங்கலாம்.’’

மாதவன் அதற்கு ஒப்புக் கொண்டான். இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்கள். பேருந்து வருவதற்கு சற்று நேரம் இருந்தது. அவர்கள் துணிக் கடைக்குள் நுழைந்தார்கள். சங்கரன்குட்டி துணிக்கடைக்காரரிடம் கேட்டான்:

‘‘இது யாருன்னு தெரியுமா?’’

‘‘யாரு?’’

‘‘இவர்தான் லாட்டரிச் சீட்டுல முதல் பரிசு கிடைத்திருக்கும் மாதவன்.’’

‘‘வாங்க.’’

துணிக்கடைக்காரன் மரியாதை கலந்த குரலில் சொன்னான்:

‘‘உட்காருங்க... உட்காருங்க. இப்போ எங்கே போறீங்க?’’

மாதவன் உட்கார்ந்தான். சங்கரன்குட்டி சொன்னான்:

‘‘நாங்க இப்போ லாட்டரிச் சீட்டு அலுவலகத்திற்குப் போறோம். சீட்டை அவர்களிடம் காட்டணும். அதற்காகப் போறோம்.’’

‘‘எங்கே சீட்டு?’’ - கடைக்காரன் கேட்டான்.

மாதவன் சீட்டை எடுத்துக் காட்டினான். சங்கரன்குட்டி சொன்னான்:

‘‘மாதவன் அண்ணனுக்கு வேட்டியும் சட்டையும் வாங்கணும். சாலையில வாங்கலாம்னு மாதவன் அண்ணன் சொன்னார். இங்கே வாங்கலாம்னு நான் சொன்னேன்.’’

‘‘இங்கே வாங்குறதுதானே நல்லது! விலை மதிப்பு உள்ள சில்க் வகைகளும் டெர்லின் துணிகளும் இங்கே இருக்கு தையல்காரரும் இருக்காரு.’’

அதைக் கேட்டுக் கொண்டிருந்த தையல்காரன் எழுந்தான். அவன் சொன்னான்:

‘‘சார், உங்களுக்கு டெர்லின் பொருத்தமா இருக்கும். ஜரிகை போட்ட இரட்டை மடிப்பு வேட்டி சரியா இருக்கும்.’’

கடைக்காரன் பலவகைப்பட்ட துணிகளை எடுத்து, விரித்துக் காட்டினான்.

‘‘சார், உங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கணும்.’’

‘‘எது டெர்லின்? ’’ - மாதவன் கேட்டான்.

கடைக்காரன் டெர்லினை எடுத்துக் கொடுத்தான்.

மாதவன் சொன்னான்:

‘‘இதுல ஒரு சட்டை...’’

‘‘ஒண்ணு போதுமா சார்? நான்கு சட்டைகள் தைத்தால், தினந்தோறும் தைப்பதற்காக நடந்து திரிய வேண்டாமே!’’ - தையல்காரன் சொன்னான்.

‘‘அப்படின்னா, நாலு எடுத்திட வேண்டியதுதான். சட்டையும் வேட்டியும்’’ - மாதவன் ஒப்புக்கொண்டான்.

சங்கரன்குட்டி தையல்காரனிடம் கேட்டான்: ‘‘நாங்கள் திரும்பி வருவதற்குள் தைத்துத் தரமுடியுமா?’’

‘‘எப்போ திரும்பி வருவீங்க?’’

‘‘சாயங்காலம் ஆகும்.’’

‘‘முடியாது. ஒரு சட்டையை தைத்து வைக்கிறேன். மீதி இருப்பவற்றை நாளை மறுநாள் தர்றேன்.’’

‘‘வேட்டிகளை இப்போ கொண்டு போறீங்களா சார்?’’  - கடைக்காரன் கேட்டான்.

‘‘திரும்பி வர்றப்போ வாங்கிக் கொள்கிறேன்.’’

பேருந்து வந்தது. சங்கரன்குட்டி துணிக்கடைக்காரனிடம் என்னவோ ரகசியம் சொன்னான். கடைக்காரன் சொன்னான் ‘‘இந்தத் துணி முழுவதும் வேணும்னாகூட சாருக்குக் கடனாகக் கொடுக்கலாமே!’’

மாதவனும் சங்கரன் குட்டியும் பேருந்தில் ஏறிப் புறப்பட்டார்கள்.

சங்கரன்குட்டியின் மைத்துனரையும் அழைத்துக் கொண்டு அவர்கள் லாட்டரிச் சீட்டு அலுவலகத்திற்குச் சென்றார்கள். முதல் பரிசு விழுந்திருந்த சீட்டைக் கொடுத்து பெயரையும் முகவரியையும் எழுதினார்கள். பெயர் என்ன என்று கேட்டதற்கு சங்கரன் குட்டிதான் பதில் சொன்னான்:

‘‘மாதவன் முதலாளி.’’

‘‘என்ன வியாபாரம்?’’

மாதவன் பதில் கூற முயற்சிக்க, சங்கரன் குட்டி கண்களைச் சுருக்கிக் காட்டியவாறு சொன்னான்: ‘‘பல வியாபாரங்கள் இருக்கு.’’

‘‘இரண்டு வியாபாரங்களின் பெயர்களைச் சொல்லுங்க.’’

‘‘வியாபாரம் இருக்கு... பிறகு... விவசாயமும் இருக்கு...’’

லாட்டரிச் சீட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது சங்கரன்குட்டியின் சகோதரியின் கணவன் சங்கரன்குட்டியைப் பாராட்டினான்.

‘‘அது நல்லதாப் போச்சு மச்சினா. அப்படித்தான் சொல்லணும்.’’

4

மாதவன் வெளியே எங்கும் செல்வதில்லை. வெளியேறி நடக்க சங்கரன்குட்டி ஒப்புக் கொள்வதில்லை. அவன் கூறுவான்:

‘‘மாதவன் அண்ணே, இப்போ நீங்க லட்சாதிபதி. சும்மா வெளியே போய் கண்டவன்கூடவெல்லாம் பேசிக்கொண்டிருப்பது, உங்களுக்கு மரியாதைக் குறைவான செயல். என்ன விஷயமாக இருந்தாலும் நான் போயி முடிச்சிட்டு வர்றேன்.’’

காலையிலும் மாலை நேரத்திலும் சங்கரன்குட்டி குமாரன்நாயரின் கடையில் இருந்து பலகாரங்களை வாங்கிக்கொண்டு வருவான். சங்கரன்குட்டியும் அங்கேயே தேநீர் அருந்துவான். செல்லப்பனின் கடையில் இருந்து மாதவனுக்கு ப்ளேயரஸ் சிகரெட் வாங்கிக் கொடுப்பான். தனக்கு பர்க்லி சிகரெட்டை வாங்கிக் கொள்வான்.


மாத்தச்சனின் மளிகைக் கடையில் இருந்து சாமான்களை வாங்கி மாதவனின் கையில் கொடுப்பான். அப்போது சந்தடி சாக்கில் தன்னுடைய வீட்டிற்கும் சங்கரன்குட்டி சாமான்கள் வாங்கிக் கொள்வான். மாத்தச்சன் சங்கரன்குட்டியிடம் சொன்னான்:

‘‘சங்கரன்குட்டி, எனக்கு நீ உதவி செய்யணும்.’’

‘‘உங்களுக்கு என்ன உதவி வேணும்? சொன்னால் நான் நடத்திக் காட்டுறேன்.’’

‘‘எனக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் வேணும். இரண்டு மாதங்களுக்குள் அதைத் தந்திடுறேன். வட்டியும் தர்றேன்.’’

‘‘நீங்க வட்டி எதுவும் தரவேண்டாம். ஐயாயிரம் ரூபாய் தர்றேன். உங்களின் கையில் இருக்குறப்போ திருப்பித் தந்தால் போதும்.’’

‘‘நான் இந்த வியாபாரத்தை விருத்தி பண்ண விரும்புகிறேன் சங்கரன்குட்டி. இந்தக் கடையை பெரிதாக ஆக்கணும். அதற்காகவும் தான் நான் ஐயாயிரம் ரூபாய் கேட்டேன்.’’

‘‘தர்றேன். மாத்தச்சா... தர்றேன்.’’

தேநீர்க் கடைக்காரன் குமாரன் நாயர் சங்கரன்குட்டியிடம் சொன்னார்:

‘‘சங்கரன்குட்டி என் விஷயத்தை மறந்துட மாட்டீல்ல?’’

‘‘இது என்ன எப்போ பார்த்தாலும் மறந்துட மாட்டீல்ல மறந்துட மாட்டீல்லன்னு சொல்லிக்கிட்டே இருக்குறது! நான் எதை ஞாபகத்துல வச்சிருக்கணும்னு சொல்லுங்க குமாரன் நாயர்...’’

‘‘எனக்கு ஓர் ஆயிரம் ரூபாய் தரணும்.’’

‘‘அவ்வளவுதானா! அதைத்தான் மறந்துடக்கூடாதுன்னு மறந்துடக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களா?’’

‘‘நான் இந்த தேநீர்க் கடையை விரிவுபடுத்தணும்னு நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பணத்தைத் திருப்பித் தந்திடுறேன்.’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசு வாங்கிட்டு வந்து உடனே உங்களுக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன். உங்கள் கையில் பணம் வர்றப்போ தந்தால் போதும்.’’

வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் செல்லப்பன் சங்கரன்குட்டியிடம் சொன்னான்.

‘‘வெற்றிலைப் பாக்கையும் பீடியையும் விற்றுக் கொண்டிருந்தால் வீட்டுச் செலவுக்கு சரியாக இருக்காது சங்கரன்குட்டி. வேறு ஏதாவது பிஸினஸ் பண்ணினால்தான் சரியாக இருக்கும்.’’

‘‘வேறு என்ன பிஸினஸ் இருக்கு?’’

‘‘எவ்வளவோ பிஸினஸ் இருக்கு. எனக்கு எல்லா பிஸினஸும் தெரியும்.’’

‘‘பிறகு ஏன் செய்யல?’’

‘‘பணம் வேண்டாமா சங்கரன்குட்டி?’’

‘‘எவ்வளவு பணம் வேணும்?’’

‘‘ஒரு மூவாயிரம் ரூபாயாவது இருந்தால்தான் ஒரு பிஸினஸைத் தொடங்க முடியும். நீ மாதவன் முதலாளிக்கிட்ட சொன்னால் எனக்கு பணம் தருவாரு.’’

‘‘அதை முதலாளிக்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லை செல்லப்பா. எல்லா விஷயங்களையும் என்கிட்டத்தான் அவர் விட்டிருக்காரு. உனக்கு நான் பணம் தந்தால் போதாதா?’’

‘‘போதும்... போதும்... சங்கரன்குட்டி, நீ மனசு வச்சா எல்லாம் நடக்கும்.’’

‘லாட்டரிச் சீட்டில் பரிசு விழுந்து எல்லாருக்கும் எர்ணாகுளத்தில் 20-ஆம் தேதி பரிசு தரப் போகிறார்கள் என்பது பத்திரிகையில் வந்த செய்தி. சங்கரன்குட்டி தேநீர்க் கடையில் இருந்து பத்திரிகையை எடுத்துக் கொண்டு ஓடினான்.

‘‘மாதவன் அண்ணே... 20-ஆம் தேதி எர்ணாகுளத்துல....’’ - இப்படிக் கூறியவாறு சங்கரன்குட்டி மாதவனின் வீட்டிற்குள் நுழைந்தான்.

‘‘எங்கே தர்றாங்க?’’ - இப்படிக் கேட்டவாறு குஞ்ஞுலட்சுமி உள்ளேயிருந்து திண்ணைக்கு வந்தாள்.

ராஜம்மாவும் ரத்னம்மாவும் கதவிற்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு எட்டிப் பார்த்தார்கள்.

‘‘எர்ணாகுளத்துல... எர்ணாகுளத்துல...’’ - சங்கரன்குட்டி பத்திரிகையை மாதவனின் கையில் கொடுத்தான்.

‘‘என்னைக்கு? என்னைக்கு?” - குஞ்ஞுலட்சுமி ஆர்வத்துடன் கேட்டாள்.

‘‘20-ஆம் தேதி சாயங்காலம்.’’

‘‘எர்ணாகுளம் என்று சொல்லப்படும் ஊர் தூரத்திலயா இருக்கு? சாதத்தை தயார் பண்ணி பொட்டலம் கட்டி எடுத்துட்டுப் போக வேண்டாமா?’’

‘‘அதெல்லாம் வேண்டாம் அம்மா. பேருந்தில் போனால் போதும்.’’ - மாதவன் சொன்னான்.

‘‘அப்போ... ஒரு விஷயம் இருக்கு மாதவன் அண்ணே. எர்ணாகுளத்துல இருந்து இங்கே காரைக் கொண்டுவர வேண்டாமா? அதற்கு ஓட்டுநர் வேண்டாமா?’’

‘‘திருவனந்தபுரத்தில் ஓட்டுநர்கள் இல்லையாடா சங்கரன்குட்டி? ஒரு ஆளை அழைச்சிட்டு வா.’’

‘‘என் மச்சானின் வீட்டுக்குத் தெற்குப் பக்கத்துல இருக்குற வீட்டில் ஒரு ஆள் இருக்காரு மாதவன் அண்ணே. நான் போய் கூப்பிடுகிறேன். அவர் பேரு சிவராமன் பிள்ளை. பெரிய பெரிய பதவிகள்ல இருந்தவர்களிடம் ஓட்டுனரா இருந்தவர். நான் அழைச்சால் இங்கே வருவார்.’’

உள்ளே ராஜம்மா குஞ்ஞுலட்சுமியிடம் என்னவோ சொன்னாள். குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘அது உண்மைதான். கார் இங்கே வர முடியாது.’’

‘‘ஏன் வர முடியாது?’’ - மாதவன் கேட்டான்.

‘‘ஒற்றையடிப்பாதை குண்டும் குழியுமா இருக்குல்ல? அந்த வழியா கார் வர முடியுமா?’’

‘‘நான் அதை மறந்துட்டேன் மாதவன் அண்ணே. அந்தப் பாதையை மண் போட்டு சரி பண்ணணும். இரண்டு மூணு ஆட்களை வைத்து வேலை செய்தால் இரண்டு மணி நேரத்துல சரி பண்ணிடுவாங்க.’’

‘‘அதெல்லாம் வேண்டாம்டா சங்கரன்குட்டி. நாம இரண்டுபேரும் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு நின்றால் ஒரு மணி நேரத்துல சரி பண்ணிடலாம்! ’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க மண்வெட்டியை எடுப்பதற்கும் வெட்டுவதற்கும் மண்ணை அள்ளுவதற்கும் நான் சம்மதிக்க மாட்டேன்.’’

‘‘அப்படின்னா நீயே அதைச் செய்திடு’’

‘‘பிறகு... ஒரு விஷயம்...’’

‘‘என்ன?’’

‘‘காரைக் கொண்டு வந்தால் எங்கே நிறுத்துறது?’’

‘‘அதற்கு நாம ஒரு காரியம் செய்வோம்டா சங்கரன்குட்டி நாம ஒரு ஷெட் கட்டிடுவோம்.’’

‘‘ஷெட் உண்டாக்க ஓலையும் கொம்புகளும் வேண்டாமா?’’

‘‘வடக்கு வீட்டுல இருக்குற கல்யாணி ஓலை பண்ணி வச்சிருக்கா. அவள் விற்பனைக்குத்தான் வச்சிருக்கா’’ - குஞ்ஞுலட்சுமி சொன்னாள்:

‘‘பரமேஸ்வரன் பிள்ளையின் வீட்டில் கொம்புகளும் பாக்கு மரமும் இருக்கு. நான் போய் வாங்கிட்டு வர்றேன்.’’

‘‘அன்றே ஒற்றையடிப் பாதை சரி செய்யப்பட்டது. மறுநாள் பரமேஸ்வரன் பிள்ளையின் வீட்டிலிருந்து பாக்கு மரத்தையும் கொம்புகளையும் சங்கரன்குட்டி கொண்டு வந்தான். வடக்கு வீட்டில் இருக்கும் கல்யாணியிடமிருந்து ஓலையை அவன் கடனுக்கு வாங்கிக் கொண்டு வந்து வாசலில் கார் நிறுத்துவதற்காக ஷெட்டை உண்டாக்கினான்.’’

மறுநாள் சங்கரன்குட்டி திருவனந்தபுரத்திற்குச் சென்றான். ஓட்டுனர் சிவராமன் பிள்ளையை அழைத்துக் கொண்டு வந்தான். மாதவனுக்கு அருகில் வந்து அவனை வணங்கிவிட்டு, அவர் சொன்னார்:

‘‘சார், இதற்கு முன்னால் உங்களை நான் பார்த்திருக்கிறேனே! நீதிபதி அய்யா வீட்டில் வைத்து பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். சார் ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கோங்க. நீதிபதி அய்யாவைப் பற்றி சொல்வதாக இருந்தால் அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்ததே இல்லை. அவருடைய வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. சரி... சார் நீங்க ஏன் இந்த குடிசையில் வந்து இருக்கீங்க?’’

‘‘இதுதான் என்னோட வீடு’’ - மாதவன் சாதாரணமாக சொன்னான்.


‘‘அப்படித்தான் இருக்கணும். பெரிய பெரிய பணக்காரர்கள் குடிசையில் வசிப்பதை மற்றவர்கள் தெரிஞ்சிக்கணும். உள்ளவனும் இல்லாதவனும் கடன் வாங்கித்தானே வீடு உண்டாக்குகிறார்கள்? கடன் வாங்கி வீடு உண்டாக்கினால் அங்கே மன அமைதியுடன் படுத்துத் தூங்க முடியுமா? அப்போ... என்ன விஷயம்னா... உங்களைப் போல அவன் குடிசையில இருக்கல. அவன்கள் எல்லோரும் வரணும்... சரி... எர்ணாகுளத்துல இருந்துதானே காரை ஓட்டிக் கொண்டு வர வேண்டும்? அப்படின்னா... எர்ணாகுளத்திற்கு எப்படிப் போறது?’’

‘‘பேருந்தில் போகலாம்.’’

‘‘அது மரியாதைக் குறைவான விஷயம் சார், உங்களைப் போல உள்ள ஒருத்தர் பேருந்தில் பயணம் செய்வது என்பது... அது வேண்டாம் சார். அது மரியாதைக் குறைவான விஷயமாக இருக்கும்.’’

‘‘அங்கு பேருந்தில் போய் இங்கே காரில் வருவோம் சிவராமன் பிள்ளை...’’

‘‘அப்படின்னா அதுதான் நல்லது அது மட்டுமில்ல. சார் உங்களைப் போல உள்ளவர்கள் பேருந்தில் ஏறிப் பயணம் செய்வதை மற்றவர்கள் பார்க்க வேண்டும். இப்போ எல்லா அவன்களும் காரில்தானே போறதும் வர்றதும்! நம்முடைய டைரக்டர் அய்யா பேருந்தில்தான் பயணம். அவர் காரை ஷெட்ல நிறுத்திட்டு பேருந்தில் ஏறிப் போவார். நான் சும்மா இருந்தாலும் சம்பளத்தையும் செலவுக்கு பணத்தையும் தந்திடுவாரு. சம்பளம் என்ன தெரியுமா? இருநூற்றைம்பது ரூபாயும் செலவுத் தொகையும் சார், நீங்க அவ்வளவு தர வேண்டாம். இருநூறும் செலவுத் தொகையும் கொடுத்தால் கூட நான் இங்கே நின்னுடுவேன். ஏன் தெரியுமா? உண்மையைச் சொல்லிடுறேனே! சார், உங்களைப் பார்த்தவுடனே எனக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. அப்போ... எர்ணாகுளத்திற்கு நாம பேருந்துல போறோம்... அப்படித்தானே?’’

‘‘ஆமாம்...’’

‘‘எப்போ போறோம்?’’

‘‘நாளை மறுநாள் சாயங்காலம்.’’

‘‘இருபதாம் தேதிதானே பரிசுப் பணத்தைத் தர்றாங்க? அப்படின்னா பத்தொன்பதாம் தேதி சாயங்காலம் அங்கே போய்ச் சேர வேண்டாமா? அப்படின்னா... இங்கேயிருந்து மத்தியானம் கிளம்ப வேண்டாமா?’’

‘‘தேவையில்ல சிவராமன் பிள்ளை. நான் அங்கே... பேருந்து நிலையத்துக்கு வந்திடுறேன்.’’

அவர் திரும்பி நடக்க தொடங்கி, சற்று திரும்பி நின்று சொன்னார்:

‘‘விஷயம் என்னன்னா... எர்ணாகுளத்துக்குப் போறதா இருந்தால் வீட்டில் செலவுக்கு ஏதாவது கொடுத்திட்டுப் போகணும். பத்து ரூபாயாவது கொடுத்திட்டுப் போகணும்.’’

‘‘ஒரு லட்சம் கிடைக்கிறப்போ எல்லாவற்றையும் ஒரே நேரத்துல தந்துடலாம் சிவராமன் பிள்ளை. அது போதாதா?’’

‘‘அது போதும். அது போதும். நான் வெறுமனே சொன்னேன். சரி... நான் கிளம்பட்டுமா?’’ - அவர் புறப்பட்டார்.

அன்று சாயங்காலம் செக்ரட்டரி புருஷோத்தமனும் அவருடைய மனைவியும் வந்தார்கள். செக்ரட்டரி கேட்டார்:

‘‘இது என்ன மாதவா? வாசல்ல ஒரு ஷெட் உண்டாக்கப்பட்டிருக்கு?’’

‘‘காரை நிறுத்துறதுக்கு செக்ரட்டரி.’’

அதிகமான வருத்தத்துடன் செக்ரட்டரி சொன்னார்:

‘‘இது சமுதாயத்திற்கு குறைச்சல் உண்டாக்கக்கூடிய ஒரு விஷயம் மாதவா. லட்சாதிபதியான மாதவன் இப்படி இந்தக் குடிசையில் வசிக்கிறப்போ எங்களால் வெளியில் இறங்கி நடக்க முடியுமா? உன்கிட்ட நான் சொன்னேனே, இங்கேயிருந்து வேறு இடத்திற்குப் போய் வசிக்கணும்னு...’’

மாதவன் சிரித்துக்கொண்டே சொன்னான்:

‘‘வசிப்பிடத்தை மாற்றலாம் செக்ரட்டரி. பணம் கிடைத்த பிறகு இடத்தை வாங்கி வீட்டைக் கட்டி இருப்பிடத்தை மாற்றணும்.’’

‘‘அதுவரையில் வெறுமனே கிடக்கும் எங்களுடைய வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று நான் சொன்னேன்ல!’’

‘‘நான் என்னுடைய வீட்டில் தங்கணும்னு நினைக்கிறேன் செக்ரட்டரி.’’

‘‘அப்படின்னா என்ன செய்றது? மாதவா உன் விருப்பப்படி நடக்கட்டும்.’’

‘‘அந்த வீட்டிற்கும் நிலத்திற்கும் என்ன விலை தரணும் செக்ரட்டரி?’’

‘‘அப்படிக் கேளு... நிலம் ஒரு ஏக்கர் இருக்கு. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் அந்த வீடு கட்டப்பட்டது. அப்போ பதின்மூன்றாயிரம் ரூபாய் செலவானது இப்போ கட்டுறதா இருந்தால் முப்பதாயிரம் ரூபாயாவது செலவழிக்காமல் அப்படியொரு வீட்டைக் கட்ட முடியாது மாதவா உன்கிட்ட எல்லா விஷயங்களையும் மறைக்காமல் சொல்றேன். என் சகோதரிக்காக என் தந்தை கட்டிய வீடு அது. அவளுடைய கணவருக்கு திருவனந்தபுரத்தில்தானே வேலை! அவர்கள் அங்கு ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டிக்கொண்டார்கள். அப்படின்னா, இங்கே இருக்குற வீட்டை விற்று விடலாம் என்று அவங்க நினைக்கிறாங்க.’’

‘‘என்ன விலை தரணும்னு சொல்லுங்க செக்ரட்டரி.’’

‘‘மாதவா உனக்கு விருப்பமான விலையைத் தந்தால் போதும். உன்கிட்ட விலைபேச நான் விரும்பல. சமுதாயத்திற்கு கவுரவம் நீ...’’- எதையோ திடீரென்று நினைத்துக் கொண்டவரைப் போல அவர் தொடர்ந்து சொன்னார்:

‘‘வேறு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காகத்தான் நான் இப்போ வந்திருக்கேன்.’’

‘‘என்ன அது?’’

‘‘மாதவா, நீ ஒரு லட்சமும் காரும் வாங்கிக் கொண்டு வர்றப்போ மிகப்பெரிய ஒரு வரவேற்பை அளிக்க நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். வரவேற்பு விழாவில் தலைமை தாங்குவதற்காக அமைச்சர் ஒருவரை அழைக்க வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.’’

‘‘அமைச்சரா?’’- மாதவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘‘ஆமாம்... அமைச்சர்தான். முடியுமானால், கவர்னரை வரவேற்பு விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றுகூட முடிவு செய்திருக்கிறோம்.’’

‘‘அப்போ...’’- மாதவன் வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான்.

அந்த உரையாடல் இப்படி நடந்து கொண்டிருந்தபோது அங்கு இன்னொரு உரையாடலும் நடந்து கொண்டிருந்தது. செக்ரட்டரியின் மனைவி வனஜா, குஞ்ஞுலட்சுமியிடம் கேட்டாள்.

‘‘மாதவன் அண்ணனுக்கு இப்போ வயது இருபத்தெட்டு ஆயிடுச்சுல்ல?’’

‘‘ஓ... அந்த அளவிற்கு ஆகல. அவனுக்கு இப்போ இருபத்து நான்கு முடிந்து இருபத்தைந்து ஆகப்போகுது.’’

‘‘பொண்ணு கொடுக்குறதா யாரும் வரலையா குஞ்ஞுலட்சுமி அக்கா?’’

‘‘இங்கே வயசுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்களே! இவங்களை யாருடனாவது திருமணம் பண்ணி அனுப்பி வைக்காமல், அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டான்.’’

‘‘இவங்களோட கல்யாணத்தை நீங்க ஏன் நடத்தாமல் இருக்கீங்க?’’

‘‘ஏன்னு கேட்டால் இப்போ என்ன பதில் சொல்றது? பெண் கேட்டு வர்றவங்க எல்லோரும் பணம் கேக்குறாங்க.’’

‘‘பணம் கொடுக்கத்தான் வேணும். பணம் கொடுக்காமல் யாராவது வந்து வெறுமனே திருமணம் செய்து கொண்டு போவார்களா? மாதவன் அண்ணனின் இப்போதைய நிலைமையில் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்தால்தான் நல்ல ஒரு பையன் கிடைப்பான். என் பெரியப்பாவை உங்களுக்குத் தெரியுமா குஞ்ஞுலட்சுமி அக்கா?’’

‘‘ம்... பார்த்திருக்கேன்.’’

‘‘பெரியப்பாவின் மகன். எம்ஏ. படிச்சிருக்கான். போன வருடம்தான் தேர்வில் வெற்றி பெற்றான். வேணும்னா நான் கொஞ்சம் சொல்லிப் பார்க்கிறேன்.’’

‘‘அப்படின்னா... கொஞ்சம் முயற்சிப் பண்ணிப்பார் வனஜா.’’

‘‘பெரியப்பாவிற்கு இப்போ கொஞ்சம் கடன் இருக்கு. கடன் வாங்கித்தான் அவனைப் படிக்க வைத்தார். அந்த கடனை அடைக்க வேண்டியதிருக்கு.’’


‘‘எவ்வளவு கடன்?’’

‘‘ஏழாயிரமோ எட்டாயிரமோ இருக்கும் என்று நினைக்கிறேன். கல்லூரியில் அவனை விரிவுரையாளராக ஆக்குறது என்று சொல்லியிருக்காங்க. ஆனால் அதற்கு ஐயாயிரமோ ஆறாயிரமோ அங்கே கொடுக்கணும்.’’

‘‘அப்படின்னா... எல்லாவற்றையும் சேர்த்தால்...’’ - குஞ்ஞுலட்சுமி திகைத்துப் போய் விட்டாள்.

‘‘இருபதாயிரம் ரூபாய் கொடுக்குறதுக்கு ஆள் இருக்கு குஞ்ஞுலட்சுமி அக்கா. எம்.ஏ. படித்தவன் ஆச்சே!’’

‘‘நான் மாதவனிடம் சொல்லிப் பார்க்குறேன்.’’

‘‘பெரியப்பாவிடம் நானும் சொல்லிப் பார்க்குறேன்.’’

5

‘‘டேய் சங்கரன்குட்டி! எர்ணாகுளத்திற்குப் போய் திரும்பி வர்றதுக்கு எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?’’ - மாதவன் கேட்டான்.

‘‘மூணு பேர் போவதற்கும் வருவதற்கும் ஆகுற செலவுதானே?’’

‘‘யார் மூணு பேர்?’’

‘‘நீங்க... ஓட்டுனர், நான்...’’

‘‘நீயும் வர்றியா?’’

‘‘நான் வரவேண்டாமா?’’ மாதவன் அண்ணே, உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நான் வரல.’’

‘‘நீ வர்றது எனக்கு பிடிக்கலைன்னு நான் உன்கிட்ட சொன்னேனா?’’

‘‘நீ வர்றியான்னு கேட்டப்போ நான் நினைச்சேன் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னு.’’

‘‘அப்படின்னா நீ வரணும். உன்னை அழைச்சிட்டுத்தான் நான் போவேன்.’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க வரவேண்டாம்னு சொன்னால் நான் வரல. வரணும்னு சொன்னால் நான் வருவேன்.’’

‘‘அப்படின்னா சொல்லு... எவ்வளவு பணம் வேணும்?’’

‘‘மூணு பேருக்கு பேருந்து கட்டணம் வேணும். பிறகு... சாப்பிடுவதற்கும், தேநீருக்கும் வேணும். எர்ணாகுளத்திற்குப் போறதா இருந்தால் சாப்பிடவும் தேநீர் அருந்தவும் செய்யணும். பிறகு... நாம இங்கே காரில்தானே வருகிறோம்? காருக்கு பெட்ரோல் வாங்கி ஊற்றணும். பிறகு... சில்லரை சிலவு ஏதாவது வரும்ல?’’

‘‘எல்லாவற்றுக்கும் சேர்த்து எவ்வளவு பணம் வேணும்னு கணக்கு பார்த்து சொல்லு.’’

சங்கரன்குட்டி சிந்திப்பதைப்போல நடித்து விட்டு பதில் சொன்னான்:

‘‘ஐந்நூறு ரூபாயாவது வேணும் மாதவன் அண்ணே.’’

‘‘ஐந்நூறு ரூபாயா? எர்ணாகுளத்திற்குப் போயிட்டு வர்றதுக்கு ஐந்நூறு ரூபாய் வேணுமாடா சங்கரன்குட்டி?’’

‘‘அவ்வளவு பணமும் கையில் இருக்கணும் மாதவன் அண்ணே. ஏனென்றால் நினைத்துப் பார்க்காத ஏதாவது ஒரு தேவை வந்திடுச்சுன்னு வச்சுக்கோங்க. உடனே செலவழிப்பதற்குக் கையில் பணம் இருக்க வேண்டாமா?’’

‘‘பணம் இருக்கணும்.’’

‘‘அதனால்தான் நான் சொன்னேன்- ஐந்நூறு ரூபாயாவது கையில் இருக்கணும்னு.’’

‘‘அப்போ ஒரு விஷயம்.’’

‘‘என்ன?’’

‘‘ஐந்நூறு ரூபாயை எங்கேயிருந்து தயார் பண்ணுவது?’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க சும்மா இங்கே உட்கார்ந்திருந்தால் போதும். பணத்தை நான் கொண்டு வர்றேன்.’’

சங்கரன்குட்டி திரும்பி நடந்தான்.

மூன்று மனிதர்கள் ஒற்றையடிப் பாதையிலிருந்து மாதவனின் வீட்டை நோக்கி வந்தார்கள். ஒரு மனிதர் நடுத்தர வயதைக் கொண்டிருந்தார். அவர் பெயர் ராகவன் பிள்ளை. ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்ற இருவரும் இளைஞர்கள். விஸ்வநாதனும், ஹுசைனும். விஸ்வநாதன் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஹுசைன் கல்லூரி மாணவன்.

மூவரும் மாதவனை வணங்கினார்கள். ராகவன் பிள்ளை கேட்டார்:

‘‘எங்களைத் தெரியுதா?’’

‘‘இல்லையே!’’

‘‘மாதவன் முதலாளி, எங்களை உங்களுக்குத் தெரியலைன்னாலும் எங்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும்.’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசு கிடைத்து விட்டால், பிறகு எல்லாருக்கும் தெரியத்தானே செய்யும்?’’

‘‘அதற்கு முன்பே எனக்குத் தெரியும்’’- விஸ்வநாதன் சொன்னான்.

‘‘அது எப்படி?’’

‘‘என் வீட்டில் வேலைக்கு வந்திருக்கீங்க.’’

‘‘எந்த வீடு?’’

‘‘குட்டப் பணிக்கரின் மகன் நான்.’’

‘‘அப்படிச் சொல்லு. குட்டப் பணிக்கரின் மூத்த மகன்... அப்படித்தானே? சரிதான். நான் அங்கே வேலைக்கு வந்திருக்கேன். ஆனால், இப்போ பார்த்தால் தெரியாது. அந்த அளவுக்கு அவர் ஆளே மாறிவிட்டார்.’’

‘‘ராகவன் பிள்ளை ஒரு பள்ளி ஆசிரியர். இவர் ஒரு கல்லூரி மாணவர். பெயர் ஹுசைன்.’’

‘‘இங்கே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கு. இதுல எப்படி மூன்று பேர் இருக்க முடியும்?’’

‘‘வேண்டாம்... நாங்கள் நிற்கிறோம்.’’

‘‘சரி... என்ன விஷயமாக வந்தீங்க?’’

‘‘நாங்கள் இங்குள்ள நூல் நிலையத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறோம்’’- ராகவன் பிள்ளை சொன்னார்.

‘‘அதற்கு என்னைத் தேடி ஏன் வந்தீங்க.’’

‘‘மாதவன் முதலாளி, இந்த ஊருக்குப் பெருமை சேர்த்த உங்களுக்கு மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய நூல் நிலையக் குழு தீர்மானித்திருக்கு.’’

"அப்படியொரு ஏற்பாடு பண்ணியிருக்கீங்க... இல்லையா? சரிதான். கிளை செக்ரட்டரி சொன்னார் - அவர்களும் எனக்கு ஒரு வர்வேற்பு தரப்போகிறார்களாம்."

‘‘எங்களுடைய வரவேற்பு எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கெடுக்கும் ஒரு வரவேற்பாக இருக்கும்.’’

‘‘சரிதான்...’’

‘‘கிராம அலுவலகத்திற்கு அருகில்தான். அங்கே பெயர்ப்பலகை கூட வைக்கப்பட்டிருக்கு- அறிவியல் நூலகம் என்று!’’

‘‘ஏதோ ஒரு பெயர்ப்பலகை அங்கு தொங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கேன். அது நூலகம் என்பது இப்போத்தான் தெரியுது.’’

‘‘நாங்கள் ஒரு நூலகக் கட்டிடம் உண்டாக்கத் தீர்மானிச்சிருக்கோம். அடித்தளம் அமைக்கப்பட்டாகிவிட்டது.’’

‘‘நல்ல விஷயம். இனி கட்டிடம் கட்டினால் போதுமே!’’

‘‘கட்டிடம் கட்ட வேண்டுமென்றால்... மாதவன் முதலாளி உங்களைப் போன்றவர்களின் உதவி வேணும்.’’

‘‘என்னைப் போன்றவர்கள் இன்னும் இந்த ஊரில் இருக்கிறார்களா?’’

‘‘அப்படியென்றால்- பணக்காரர்கள்’’- ராகவன் பிள்ளை சொன்னார்.

‘‘பணம் உள்ளவர்கள் நூலகம் உண்டாக்க உதவுவார்கள்... இல்லையா?’’

‘‘முதலாளி, நீங்களும் உதவணும்.’’

‘‘எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நிலைமை அப்படி இருக்குறப்போ எனக்கு எதற்கு நூலகம்? சரி... வரவேற்பு எப்போது?’’

‘‘தேதி முடிவு செய்யல. முதலாளி, உங்க வசதியைத் தெரிஞ்சிக்கிட்டு தேடி முடிவு பண்ணலாம்னு நினைச்சோம்.’’

‘‘உங்க வசதிதான் என்னோட வசதி. தேடி முடிவு பண்ணிட்டு யாரிடமாவது கூறிவிட்டால் போதும்- நான் அங்கே வந்திடுவேன்.’’

‘‘பெரிய இலக்கியவாதிகளெல்லாம் பங்குபெற வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்’’- விஸ்வநாதன் சொன்னான்.

‘‘அப்படின்னா....’’

‘‘பெரிய கவிஞர்கள், புதினம் எழுதுபவர்கள், நாடகங்கள் எழுதுபவர்கள் போன்றோரை அழைத்து சொற்பொழிவு ஆற்றும்படி செய்ய வேண்டும் என்பது நோக்கம்.’’

‘‘சரிதான்...’’

ராகவன் பிள்ளை விஸ்வநாதனின் காதில் முணுமுணுத்தார்:

‘‘செலவு விஷயத்தைப் பற்றி இப்போ ஏதாவது சொல்லணுமா?’’

விஸ்வநாதன் ராகவன்பிள்ளையின் காதில் முணுமுணுத்தான்:

‘‘இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். பிறகு... எல்லாத்தையும் சேர்த்து ஒரு தொகையை வாங்கிடலாம்.’’

‘‘அப்படின்னா நாங்கள் கிளம்புறோம். தேதி முடிவு பண்ணிட்டு சொல்லுறோம்.’’

‘‘அது போதும்.’’

அவர்கள் புறப்பட்டார்கள்.

‘‘வரவேற்பு என்றால் என்ன மகனே?’’ - குஞ்ஞுலட்சுமி கேட்டாள்.

‘‘ஆட்கள் எல்லோரும் வந்து கூடுவாங்க. பிறகு... என் கழுத்தில் பூ மாலைகள் அணிவித்து என்னை நாற்காலியில் உட்கார வைப்பாங்க.


பிறகு... சிலர் மேடையில் ஏறிப் பேசுவாங்க. நான் பெரிய தொழிலாளி, சமுதாயத்திற்கு மரியாதை, நான் அலங்காரம்- இப்படியெல்லாம் பேசுவாங்க.’’

‘‘அது நல்லதுதானே மகனே. பெரிய பெரிய ஆளுங்கெல்லாம் மேடையில் ஏறிப் பேசுறதுன்றது... என் மகன் பெரிய ஆளு...’’

‘‘ஆனால் அதில் ஒரு விஷயம் இருக்கு அம்மா.’’

‘‘என்ன?’’

‘‘என்கூட ஒட்டிகிறதுக்காக. எனக்கு இப்போ ஒரு பரிசு கிடைச்சிருக்குல்ல! அதற்காக அவன்க ஒட்டிக்கிறதுக்காக வர்றாங்க.’’

‘‘உண்மைதான் மகனே. எச்சரிக்கையா இருக்கணும். சமுதாயம் ஊர்க்காரர்கள் எல்லோரும் இப்பத்தானே உண்டாகியிருக்காங்க! அவன்க இதுவரை எங்கே போயிருந்தாங்க? செக்ரட்டரியும் அவருடைய பொண்டாட்டியும்கூட எதற்காக வந்தாங்கன்ற விஷயம் உனக்குத் தெரியுமா?’’

‘‘ஒட்டிக்கிறதுக்கு... அந்த ஆளுடைய புல் முளைக்காத நிலத்தை எனக்கு விலைக்கு விற்பதற்காக அவர் சமுதாயத்தின் பெயரைச் சொல்லிக்கிட்டு வர்றாரு.’’

‘‘பிறகு... இன்னொரு விஷயம்...’’

‘‘அது என்ன?’’

‘‘வனஜாவின் பெரியப்பாவிற்கு கடன் இருக்கிறதாம். பெரியப்பாவின் மகன் எம்.ஏ. படிச்சிருக்கானாம். அவனுக்கு கல்லூரியில் வேலை கிடைப்பதற்கு நாம பணம் தரணுமாம். கடனை அடைத்து வேலை வாங்கிக் கொடுத்தால் அவன் நம்ம வீட்டுல கல்யாணம் பண்ணிக்குவானாம்.’’

‘‘அம்மா, நீங்க அதற்கு என்ன சொன்னீங்க?’’

‘‘மாதவன்கிட்ட சொல்றேன்னு நான் சொன்னேன். எச்சரிக்கையா இருக்கணும் மகனே. எச்சரிக்கையா இருக்கணும்!’’

‘‘யாரோ இங்கே வர்றாங்க அம்மா.’’

குஞ்ஞுலட்சுமி எழுந்து சென்றாள்.

‘‘என்ன... அம்மாவும் மகனும் சேர்ந்து தீவிரமா விவாதத்துல ஈடுபட்டிருக்கீங்க.’’ - இப்படிக் கேட்டவாறு கோயிவிள திண்ணையை நோக்கி வந்தார்.

‘‘நாங்க சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் கோயிவிள.’’

கோயிவிள நாற்காலியில் உட்கார்ந்தார். கோயிவிள கறுத்து மெலிந்த ஒரு மனிதர். அவருடைய பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. கோயிவிள என்ற ஊரிலிருந்து அந்த ஊருக்கு வந்து வசித்ததால், எல்லாரும் அவரை கோயிவிள என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். பொருளாதாரம், திருமணம், அரசியல் ஆகிய விஷயங்களில் தரகர் வேலை பார்ப்பது அவருடைய தொழிலாக இருந்தது.

‘‘எர்ணாகுளத்துக்குப் போறது எப்போ?’’ - இப்படி அவர் பேச்சை ஆரம்பித்தார்.

‘‘இன்னைக்கு சாயங்காலம்.’’

‘‘இங்கேயிருந்து ஒரு காரை ஏற்பாடு பண்ணி அங்கே போறதுதான் நல்லது. இல்லையா? அங்கே போனபிறகு புதிய கார்... அப்படித்தானே?’’

‘‘நாங்க பேருந்தில் போறோம்.’’

‘‘அதுதான் நல்லது. அங்கேயிருந்து இங்கே கார்ல வந்திடலாம். கூட யாராவது வேண்டாமா?’’

‘‘சங்கரன்குட்டி இருக்கான்.’’

‘‘சங்கரன்குட்டியை கூட அழைச்சிட்டுப் போறது நல்லதுதான். ஆனால் ஆட்களுடன் பழக்கங்களும் விவரங்கள் தெரிந்தும் வைத்திருக்கிற ஒரு ஆளாவது கூட இருக்கணும். ஏன் இதைச் சொல்றேன்னா, பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களிடமும் அமைச்சர்களிடமும் பேச வேண்டியதிருக்கும். என் விஷயத்தை எடுத்துக் கொண்டால் எனக்கு இங்கே நூற்றுக்கணக்கான வேலைகள் இருக்கு. பிறகு... ஏன் இதைச் சொல்றேன்னா... மாதவன் முதலாளி, உங்களின் விஷயமாக இருப்பதால், வேணும்னா நானும் வர்றேன். காயம்குளம், கொச்சி, திருச்சூர் என்றெல்லாம் சொன்னால், அவை எனக்கு என்னுடைய சொந்த ஊர் மாதிரி அமைச்சரை எடுத்துக் கொண்டால், அவர் என்னுடைய பழைய நண்பர். முந்தாநாள் நான் திருவனந்தபுரத்திற்கு ஒரு விஷயத்திற்காகப் போயிருந்தேன். நான் சாலையில் போனப்போ, ஒரு கொடி கட்டப்பட்ட கார் வந்து கொண்டிருக்கு. உடனே கார் அந்த இடத்திலேயே நின்னுடுச்சு. அமைச்சர் கார்ல இருந்து இறங்கி என்னை இறுகக் கட்டிப் பிடிச்சிக்கிட்டாரு. ‘கோயிவிள, நாம பார்த்து எவ்வளவு நாளாயிடுச்சு!’ என்று சொன்னார். நூறு ரூபாய் நோட்டை எடுத்து என் கையில் தந்துவிட்டு, கார்ல ஏறி அங்கிருந்து கிளம்பினார். ஏன் தெரியுமா? நான் அவருக்கு பல நேரங்களில் பல உதவிகளையும் செய்திருக்கேன். அப்போ... நாளை மறுநாள் சாயங்காலம் வருவீங்க... அப்படித்தானே?’’

‘‘ஆமாம்.’’

‘‘அப்படின்னா நான் அங்கே... பேருந்து நிலையத்திற்கு வந்திடுறேன்.’’

‘‘வேண்டாம் கோயிவிள... கோயிவிள, நீங்க வரவேண்டாம்.’’

‘‘அதுதான் நல்லது. என் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு இங்கு ஏராளமான வேலைகள் இருக்கு. நான் வர்றேன்னு ஏன் சொன்னேன் தெரியுமா? பரிசுப் பணத்தை வாங்குவதற்காக எர்ணாகுளத்துக்குப் போகும் விஷயம் தெரிஞ்சும் கோயிவிள இந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கலையேன்னு குற்றம் சொல்லக் கூடிய சூழ்நிலை வரக்கூடாது. அதனால்தான் நான் இப்போ இங்கே வந்தேன்... சரி... தேநீர் எதுவும் இல்லை முதலாளி?’’

‘‘நாங்க இங்கே தேநீர் போடுவதில்லை கோயிவிள.’’

‘‘முதலாளி, நீங்க தேநீர் குடிப்பதை நிறுத்திட்டீங்களா?’’

‘‘நான் தேநீர் கடையில்தான் தேநீர் குடிக்கிறேன்.’’

‘‘இனிமேல் தேநீர்க் கடையில் போய் உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்பது... முதலாளி, உங்களுடைய தகுதிக்கு சரியா இருக்காது.’’

‘‘சங்கரன்குட்டி வாங்கிட்டு வருவான்.’’

‘‘அப்படின்னா சரிதான். சரி... இனிமேல் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டாமா?’’

‘‘ம்... பண்ணிக்கணும்.’’

‘‘முதலாளி உங்களுக்கு எங்கேதான் பெண் கிடைக்காது? வேணும்னா சொர்க்கத்துல இருந்தே பெண்கள் இறங்கி வந்தாலும் வருவாங்க? அந்தக் குட்டப் பணிக்கரின் மகளை... முதலாளி, நீங்க பார்த்திருக்கீங்களா?’’

‘‘ம்...’’

‘‘சொர்க்கத்துல இருந்து ஊர்வசியும் மேனகையும் ரம்பையும் திலோத்தமையும் வந்தாலும்கூட அந்த பெண்ணுக்குப் பின்னால்தான் அவங்க நிற்க முடியும். கல்லூரியில் படிச்சிக்கிட்டு இருந்த பெண். படிப்பை நிறுத்தியாச்சு. ஏன் தெரியுமா? அந்தப் பெண் சாலையில் நடந்து சென்றால் ஆண் பிள்ளைகளுக்கு ஒரு கிளுகிளுப்பு... அதே நேரத்தில் ஆண் பிள்ளைகளைக் குற்றம் சொல்லவும் கூடாது. அந்தப் பெண்ணை யார் பார்த்தாலும் ஒரு மாதிரி ஆகத்தான் செய்வாங்க!’’- மாதவனுக்கு மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு அவர் மெதுவான குரலில் சொன்னார்.

"முதலாளி, உங்களுக்கு கல்யாணம் பண்ணணும் என்ற ஆசை இருந்தால் நான் குட்டப் பணிக்கரிடம் சொல்லிப் பார்க்குறேன்."

‘‘இப்போ வேண்டாம் கோயிவிள. பிறகு பார்க்கலாம்.’’

‘‘பிறகு கல்யாணத்தை நடத்திக்கலாம். ஆனால், இப்பவே சொல்லி வச்சிடுறது நல்லது. ஏன் தெரியுமா? பல இடங்களில் இருந்தும் பெரிய பெரிய ஆட்களெல்லாம் பெண் கேட்டு வந்துட்டு இருக்காங்க. பிறகு ஒரு ரகசியத்தையும் சொல்லிடுறேன். இப்போ குட்டப்பணிக்கர் கொஞ்சம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரு. நிலம், வீடு எல்லாம் அடமானத்துல இருக்குல்ல! அவை எல்லாவற்றையும் திரும்பவும் வாங்கணும்னா, பதினைந்தாயிரம் ரூபாயாவது வேணும். மகனைத் தெரியும்ல? விஸ்வநாதன்! எம்.ஏ. படித்தவன். செக்ரட்டேரியட்டிலோ கல்லூரியிலோ வேலையில் சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான். அதற்கு யார் யாருக்கோ லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கு! நான் நினைக்கிறது என்ன தெரியுமா! முதலாளி, உங்களின் ஒரு தங்கையை விஸ்வநாதனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்துடணும். விஸ்வநாதனின் தங்கையை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும் முதலாளி.’’


‘‘அது சரிதான் கோயிவிள. ஏன்னா, அவங்க எனக்கும் பணம் தரவேண்டாம். நான் அவங்களுக்கும் பணம் தரவேண்டாம்.’’

‘‘நான் சொன்னதன் அர்த்தம் அது இல்ல முதலாளி.’’

‘‘பிறகு என்ன?’’

‘‘விஸ்வநாதனுக்கு வேலை கிடைத்தால் பயன் யாருக்கு? முதலாளி, உங்களுடைய தங்கைக்குத்தானே? பணயத்தில் இருக்குற நிலத்தையும் வீட்டையும் மீட்டால் அவற்றுக்குச் சொந்தக்காரர்கள் யார்? முதலாளி உங்களின் மனைவியும், தங்கையின் கணவரும்தானே? அதனால்தான் நான் சொல்றேன்- முதலாளி, நீங்க குட்டப் பணிக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று. பிறகு... இரண்டு திருமணங்களையும் ஒரே பந்தலில் நடத்தணும்.’’

‘‘அது நல்ல விஷயம்தான் கோயிவிள. அதைப்பத்தி யோசிப்போம்.’’

மாதவன் எழுந்து கொண்டே சொன்னான்:

‘‘கோயிவிள, இப்போ நீங்க போங்க. நாம பிறகு பார்ப்போம்.’’

6

ங்கரன்குட்டி, வெற்றிலைப் பாக்குக் கடைக்காரன் செல்லப்பனிடம் சொன்னான்:

‘‘எர்ணாகுளத்திற்குப் பேருந்தில் நாங்க போறோம். மாதவன் அண்ணனும் நானும் ஓட்டுநர் சிவராமன் பிள்ளையும். வர்றப்போ காரில் வருவோம்.’’

‘‘நான் சொன்ன விஷயத்தை மறந்துட மாட்டியே சங்கரன்குட்டி?’’

‘‘செல்லப்பா, உனக்குத் தேவையான பணத்தை நான் வாங்கித் தர்றேன்னு சொல்லிட்டேன்ல? நீ கொஞ்சம் அமைதியாக இரு செல்லப்பா... பிறகு... ஒரு விஷயம்...’’

‘‘என்ன சங்கரன்குட்டி?’’

‘‘மாதவன் அண்ணனுக்கு ஐந்நூறு ரூபாய் வேணும். போறதுக்கும் வர்றதுக்கும் ஆகுற செலவு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு இங்கே வர்றேன். நீ ஐம்பது ரூபாய் தயார் பண்ணி வைக்கணும்.’’

‘‘சங்கரன்குட்டி வேகமாகத் திரும்பி நடந்தான்.’’

செல்லப்பன் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் ஐம்பது ரூபாயை எப்படித் தயார் பண்ணுவான்? வியாபாரம் மிகவும் மோசமான நிலையில் நடந்து கொண்டிருந்தது. வெற்றிலையும், புகையிலையும், பீடியிலையும் சுருட்டும் வாங்க காசு இல்லாமல் மிகவும் அவன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவை எதுவும் வாங்காமல் வியாபாரம் நடக்குமா? மாதவனுக்கு ப்ளேயர்ஸ் சிகரெட்டையும் சங்கரன்குட்டிக்கு பர்க்கிலி சிகரெட்டையும் அவன் கடனாகத் தருகிறான். முதலீட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தால் பிறகு வியாபாரம் நாசமாகத்தானே செய்யும்?

ஆனால் சங்கரன்குட்டிக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும். மாதவன் எர்ணாகுளத்திற்குப் போவதற்காகக் கேட்கிறான். ஒரு லட்சம் ரூபாயுடனும் ஒரு காருடனும் எர்ணாகுளத்திலிருந்து திரும்பி வருகிறார்கள். செல்லப்பன் சென்று ஆயிரமோ இரண்டாயிரமோ கேட்டால் மாதவன் புல்லைப் போல எடுத்துக் கொடுக்கவும் செய்வான். நிலைமை அப்படி இருக்கும்போது, எப்படியாவது ஐம்பது ரூபாயைத் தயார் பண்ணிக் கொடுக்கத்தானே வேண்டும்? ஒரு பையனை அழைத்துக் கடையில் உட்கார வைத்துவிட்டு, செல்லப்பன் அங்கிருந்து கிளம்பினான்.

எதிரில் தேநீர்க் கடைக்காரர் குமாரன் நாயர் வந்து கொண்டிருந்தார். அவர் கேட்டார்:

‘‘எங்கே போற செல்லப்பா?’’

‘‘நான் ஒரு முக்கியமான வேலையா போறேன். விஷயம் என்னன்னா.... எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் வேணும். குமாரன் நாயர், உங்க கையில பணம் இருக்கா? எனக்குக் கொஞ்சம் உதவ முடியுமா?’’

குமாரன் நாயர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

‘‘உரல் போய் மத்தளத்திடம் சொன்னதைப்போல ஆயிடுச்சே செல்லப்பா! எனக்கு இப்போ ஒரு நூறு ரூபாய் வேணும். அதற்காகத்தான் நான் அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். செல்லப்பா, உனக்கு இப்போ எதற்கு ரூபாய்?’’

‘‘மாதவன் முதலாளிக்கு எர்ணாகுளத்திற்குப் போறதுக்கு ஐந்நூறு ரூபாய் தேவைப்படுது. நான் ஐம்பது ரூபாய் தரணம்னு சங்கரன்குட்டி வந்து சொல்லிட்டுப் போயிட்டான். கொடுக்காமல் இருக்க முடியுமா குமாரன் நாயர்?’’

குமாரன் நாயர் அதைக் கேட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

‘‘அதற்காகத்தாண்டா நான் அலைஞ்சிக்கிட்டு இருக்கேன் செல்லப்பா. நான் நூறு ரூபாய் தரணும்னு சங்கரன்குட்டி வந்து சொல்லிட்டான். நான் இப்போ எங்கேயிருந்து நூறு ரூபாய் தயார் பண்ணுவது?’’

‘‘அதையேதான் நானும் கேட்கிறேன். நான் எங்கே போய் ஐம்பது ரூபாய் தயார் பண்ண முடியும்?’’

‘‘ஆனால் ஒரு விஷயம் இருக்கு செல்லப்பா. ஒரு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு வந்துவிட்டால், நம்மோட கஷ்டங்களெல்லாம் தீர்ந்திடும். பத்தோ, ஆயிரமோ, இரண்டாயிரமோ கேட்டால் எடுத்துத் தருவாரு.’’

‘‘மாதவன் முதலாளி கூலி வேலைக்குப் போன ஆள்தானே? இல்லாதவர்களுடைய கஷ்டம் அவருக்கு நல்லாத் தெரியுமே! நான் என் வீடு வரை கொஞ்சம் போயிட்டு வரட்டுமா குமாரன் நாயர்?’’ செல்லப்பன் நடக்க ஆரம்பித்தான்.

‘‘வீட்டில் ரூபாய் இருக்குதா செல்லப்பா? இருந்தால் எனக்கு நூறு ரூபாய் தா.’’

என் தங்கையின் கழுத்தில் ஒரு மாலை இருக்கு. அதை அடகு வைக்கலாம்னு நினைச்சு நான் போறேன்.’’

‘‘என் சகோதரி கழுத்திலும் ஒரு மாலை இருக்கு.’’

இரண்டு பேரும் சிரித்துக்கொண்டே பிரிந்து சென்றார்கள்.

சங்கரன்குட்டிக்கு மொத்தம் எழுநூறு ரூபாய் கிடைத்தது. செல்லப்பன் தன் தங்கையின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை அடகு வைத்து ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து சங்கரன்குட்டியின் கையில் கொடுத்தான். குமாரன் நாயரும் அடகு வைத்து வாங்கிய நூறு ரூபாயைக் கொண்டு வந்து தந்தார்.

மளிகைக் கடைக்காரர் மாத்தச்சன் திருவனந்தபுரத்தில் இருக்கும் சாலைக்குச் சென்று சாமான்கள் வாங்குவதற்காக முந்நூறு ரூபாய் வைத்திருந்தார். அதிலிருந்து இருநூறு ரூபாயை சங்கரன்குட்டிக்கு அவர் கொடுத்தார்.

மரவள்ளிக்கிழங்கு வியாபாரி அஹம்மதிற்குக் கொஞ்சம் பணம் தந்து உதவுவதாக சங்கரன்குட்டி கூறியிருந்தான். அது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவன் எர்ணாகுளம் பயணத்திற்கு ஐம்பது ரூபாய் கொடுத்தான்.

பரமேஸ்வரன் பிள்ளையிடம் சங்கரன்குட்டி முந்நூறு ரூபாய் வாங்கினான். அவரும் மிகவும் சிரமப்பட்டுத்தான் முந்நூறு ரூபாயைத் தயார் பண்ணிக் கொடுத்தார். பணத்தைத் தந்துவிட்டு அவர் சங்கரன்குட்டியிடம் கூறினார்:

‘‘சங்கரன்குட்டி, கேட்டுக்கோ, மாதவனிடம் எனக்கு உதவச் சொல்லு. இரண்டு பிள்ளைகள் கல்லூரியில் படிக்கிறார்கள். மூன்று பேர் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார்கள். அதனால்தான் சாலைக்கு அருகில் இருக்கும் மனை இடத்தை விற்றுவிடலாம் என்று நினைக்கிறேன். மாதவனுக்கு வீடு கட்டுவதற்கு சரியான இடம் அது. மூன்றரை ஏக்கர் இருக்கு. தென்னை இருக்கு... மாமரம் இருக்கு... பலா இருக்கு.... பாக்கு மரம் இருக்கு...’’

‘‘அதை மாதவன் அண்ணனை வாங்க வைக்கிற பொறுப்பு என்னைச் சேர்ந்தது’’- சங்கரன்குட்டி உறுதியான குரலில் சொன்னான்.

அந்த வகையில் எழுநூறு ரூபாய் கிடைக்கும்படி சங்கரன்குட்டி செய்தான். இருநூறு ரூபாயை வீட்டிற்கு எடுத்துச் சென்று தன் தாயின் கையில் கொடுத்தான். ஐந்நூறு ரூபாயுடன் மதியத்திற்குப் பிறகு மாதவனின் வீட்டிற்கு வந்தான். மாதவன் கேட்டான்:

‘‘பணம் கிடைச்சதா சங்கரன்குட்டி?’’


‘‘யானைக்கு யானையின் பலம் தெரியாதுன்னு சொல்றதைப் போலத்தான் மாதவன் அண்ணே உங்க விஷயமும் இருக்கு. நீங்க பணம் வேணும்னு நினைச்சா, இல்லாத பணமும் உண்டாயிடாதா மாதவன் அண்ணே?’’- அவன் ஐந்நூறு ரூபாய்களை மாதவனின் கையில் கொடுத்தான்.’’

‘‘இதை யாரிடம் வாங்கினே?

‘‘அவற்றையெல்லாம் பிறகு நான் சொல்றேன் மாதவன் அண்ணே. இப்போ நடக்க வேண்டியது நடக்கட்டும்.’’

மாதவன் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஜரிகை போட்ட இரட்டை மடிப்பு வேட்டியை அணிந்தான். டெர்லின் சட்டையை எடுத்து அணிந்தான். பிறகு, சங்கரன்குட்டியிடம் கேட்டான்:

‘‘நீ இந்த ஆடைகளுடனாடா என்கூட வர்றே சங்கரன்குட்டி?’’

‘‘நான் இந்த ஆடைகளுடன் வந்தால் போதும்னா, இப்படியே வர்றேன். இல்லாவிட்டால்....’’ - அவன் அர்த்தம் நிறைந்த ஒரு சிரிப்பு சிரித்தான்.

மாதவன் ஒரு ஜரிகை போட்ட வேட்டியையும் டெர்லின் சட்டையையும் எடுத்து சங்கரன்குட்டியிடம் கொடுத்தான். சங்கரன்குட்டி அலட்சியமான குரலில் சொன்னான்:

‘‘எனக்கு இவற்றை அணியக்கூடிய தகுதி இல்லை மாதவன் அண்ணே. பிறகு... இன்னொரு விஷயம் என்னன்னா, உங்ககூட சேர்ந்து வர்றப்போ, உங்களுடைய நிலையையும் விலையையும் நான் காப்பாற்ற வேண்டாமா?’’

குஞ்ஞுலட்சுமி கேட்டாள்:

‘‘ஒரு பெட்டி எடுத்துட்டுப் போக வேண்டாமா மகனே?’’

‘‘எதற்கு அம்மா?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய்களையும் நோட்டுகளாகத்தானே தருவாங்க? அவை எல்லாம் சேர்ந்தால் ஒரு குவியல் மாதிரி இருக்குமே! அதை பெட்டிக்குள் வைத்துப் பூட்ட வேண்டாம்னு நான் கேட்கிறேன்.’’

‘‘போற வழியில திருவனந்தபுரத்துல ஒரு பெட்டி வாங்குவோம். சரிதானா சங்கரன்குட்டி?’’

‘‘சரி மாதவன் அண்ணே.’’

ஒரு பெரிய தகரப் பெட்டியை வாங்கிக்கொண்டுதான் அவர்கள் பேருந்து நிலையத்திற்கே வந்தார்கள். ஓட்டுநர் சிவராமன் பிள்ளை அங்கு அவர்களை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். சங்கரன் குட்டி தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த பெரிய தகரப் பெட்டியைப் பார்த்து, சிவராமன் பிள்ளை கேட்டார்:

‘‘எர்ணாகுளம் வரை போறதுக்கு இவ்வளவு பெரிய பெட்டி எதற்கு சார்?’’

‘‘ஒரு லட்சம் ரூபாய்களைக் கொண்டுவர வேண்டாமா சிவராமன் பிள்ளை?’’ - மாதவன் கேட்டான்.

ஓட்டுநர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே சொன்னார்:

‘‘சார், ஒரு லட்சம் ரூபாயை உங்க பாக்கெட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டு வரலாம். உங்கக்கிட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைத் தருவாங்க. அதை இங்கே கொண்டு வந்து வங்கியில் கொடுத்தால் பணம் தருவாங்க.’’

‘‘அப்படியா?’’

‘‘இப்போ பணத்தை நேரடியா தர்றது இல்லை சார். எல்லாமே காசோலைதான். எது எப்படியோ... வாங்கின பெட்டி இருக்கட்டும்.’’

ஐந்து மணிக்குப் புறப்படும் பேருந்தில் அவர்கள் எர்ணாகுளத்திற்குப் பயணத்தை ஆரம்பித்தார்கள். இரவு பத்து மணி தாண்டி, அவர்கள் எர்ணாகுளத்தை அடைந்தபோது மாதவன் கேட்டான்:

‘‘இனி பொழுது விடியிறது வரை என்ன பண்றது சங்கரன்குட்டி?’’

ஓட்டுனர்தான் அதற்குப் பதில் சொன்னார்:

‘‘ஹோட்டலுக்குப் போய் அறை எடுத்துத் தங்கலாம் சார். உங்களைப் போன்ற முதலாளிமார்கள் வந்தால் அப்படித்தான்! ஹோட்டல்ல அறை எடுப்பாங்க!’’

அவர்கள் ஒரு ஹோட்டலுக்குச் சென்று அறை எடுத்துத் தங்கினார்கள். ஓட்டுனர் கேட்டார்:

‘‘ஏதாவது சாப்பிட வேண்டாமா சார்?’’

‘‘என்ன சாப்பிடுறது?’’ - மாதவன் கேட்டான்.

‘‘மாமிசம், மீன் எல்லாம் இருக்கு. பிறகு... ஏதாவது வேணும்னா, அதுவும் இருக்கு.’’

‘‘பிறகு ஏதாவது என்றால் என்ன?’’

‘‘புட்டி ஏதாவது வேணும்னாகூட கிடைக்கும்.’’

‘‘எப்போதாவது கொஞ்சம் சந்தோஷமா இருக்கணும் மாதவன் அண்ணே’’ - சங்கரன்குட்டி சொன்னான்.

மாமிசம், மீன் ஆகியவற்றை வரவழைத்தார்கள். ஒரு புட்டி பிராந்தியும் வந்தது. மூன்று பேரும் சந்தோஷமாகத் தூங்கினார்கள்.

மறுநாள் சாயங்காலம் ஒரு பெரிய அரங்கத்தில் லாட்டரிச் சீட்டுக்கான பரிசைத் தருவதாக இருந்தது. மதியம் உணவு சாப்பிட்டவுடன் ஓட்டுனர் சொன்னார்:

‘‘கணக்குப் பார்த்து பணத்தைக் கொடுத்துவிட்டு, அறையை காலி பண்ணிவிட்டு நாம போவோம். பரிசு கிடைத்தவுடன் நாம காரில் அல்லவா போறோம்?’’

‘‘இப்பவே பணத்தை தரணுமா?’’ - மாதவன் கேட்டான்.

‘‘முதல் பரிசு கிடைத்திருக்கும் மாதவன் அண்ணன்னு சொன்னால், அவங்க பணம் கேட்க மாட்டாங்க.’’ - சங்கரன்குட்டி சொன்னான்.

‘‘பிறகு...? நான் ஒரு விஷயம் சொல்றேன். இங்கே இருக்குறவங்க ஒரு லட்சம் என்றும்; கார் என்றும் சொன்ன உடனே நடுங்குறவங்க இல்ல. எப்போதும் லட்சங்களையும் கார்களையும் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள் பணம் கொடுக்கலைன்னா, அவங்க விடமாட்டாங்க.’’

‘‘அது உண்மைதான்’’ - சங்கரன்குட்டியும் ஒப்புக் கொண்டான்.

பில் கொண்டு வரப்பட்டது. பணமும் கொடுக்கப்பட்டது. ஓட்டுனர் சொன்னார்:

‘‘இனி ஒரு நாற்பது ரூபாயை என் கையில் தாங்க சார்.’’

‘‘அது எதுக்கு?’’

‘‘பெட்ரோல் ஊற்றாமல் கார் ஓடுமா சார்?’’

‘‘முதல் பரிசு கிடைத்த மாதவன் முதலாளிக்கு என்று சொன்னால் கடனாகத் தர மாட்டார்களா?’’

‘‘நீங்களே போய் வாங்கிட்டு வந்தால் சரிதான்.’’

‘‘பணம் தராமல் பெட்ரோல் தரமாட்டாங்க மாதவன் அண்ணே’’ - சங்கரன்குட்டி சொன்னான்.

‘‘இரண்டோ மூணோ ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கினா போதாதா?’’

‘‘அப்படின்னா ஒரு காரியம் செய்யுங்க. மூணு ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி ஊற்றி... சார், நீங்களே காரை ஓட்டிட்டும் போங்க நான் புறப்படுறேன்’’- ஓட்டுனர் கிளம்ப ஆரம்பித்தார்.

‘‘நில்லுங்க சிவராமன் பிள்ளை நில்லுங்க! மாதவன் அண்ணனுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது’’ - சங்கரன்குட்டி ஓட்டுனரை சமாதானப்படுத்தியவாறு மாதவனிடம் சொன்னான்.

‘‘நாற்பது ரூபாய் கொடுங்க மாதவன் அண்ணே.’’

மாதவன் தயங்கித் தயங்கி நாற்பது ரூபாயைக் கொடுத்தான். ஓட்டுனர் சொன்னான்:

‘‘சரி... சார், நீங்க சொல்றதையும் நடந்துக்குறதையும் பார்க்குறப்போ எனக்கு ஒரு சந்தேகம். கேட்குறீங்களா சங்கரன்குட்டி சார்? என் சம்பளம், பேட்டா எல்லாவற்றையும் இப்பவே முடிவு பண்ணணும்.’’

‘‘சம்பளமா? அது எதற்கு. என்ன சிவராமன் பிள்ளை?’’ - மாதவன் கிண்டலாக கேட்டான்.

‘‘சம்பளம் எதற்கா? கார் ஓட்டுறதுக்கு...’’

‘‘சிவராமன் பிள்ளை, மாச சம்பளத்தையா நீங்க கேக்குறீங்க?’’

‘‘பிறகு என்ன? மாதம் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய் சம்பளம் தருவீங்க, வெளியூர் பயணம் போறப்போ, பேட்டாவாக எவ்வளவு தருவீங்க என்பதெல்லாம் இப்பவே எனக்குத் தெரியனும்.’’

‘‘இப்போ அதெல்லாம் தெரிய வேண்டாம் சிவராமன் பிள்ளை. எர்ணாகுளத்துல இருந்து காரை என் வீட்டுக்குக் கொண்டு போறதுக்கு நான் என்ன தரணும்? அதைச் சொல்லுங்க.’’


‘‘சார், காரை உங்க வீட்டுக்குக் கொண்டு போனால் போதுமா? அதற்குப் பின்னால் நீங்க என்ன செய்வீங்க சார்?’’

‘‘பின்னால் உள்ள விஷயங்களைப் பின்னால் பார்ப்போம். இப்போதைய விஷயத்தைச் சொல்லுங்க.’’

‘‘இங்கேயிருந்து காரை உங்களின் வீட்டிற்குக் கொண்டு போறதுக்கு நூறு ரூபாய் தந்தால் போதும் சார்.’’

‘‘நூறு ரூபாயா? ஒருநாள் கார் ஓட்டுவதற்கு கூலி நூறு ரூபாயா? மண்வெட்டி எடுத்து வெட்டுவதற்கு, நாளொன்றுக்கு நாலு ரூபாய் கூலியாகக் கிடைக்குது.’’

‘‘கார் ஓட்டுவது என்பது மண்வெட்டி எடுத்து வெட்டுவதற்கு இணையா சார்?’’

‘‘பிறகு என்ன?’’

‘‘அப்படின்னா நீங்களே ஓட்டுங்க. நான் புறப்படுறேன்’’ - அவர் போக முயற்சித்தார்.

‘‘கொஞ்சம் நில்லுங்க சிவராமன் பிள்ளை’’ - சங்கரன் குட்டி தடுத்தான்.

‘‘சிவராமன் பிள்ளை, உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதை நான் வாங்கித் தருவேன்.’’

‘‘சங்கரன்குட்டி, நீங்கதான் அதற்குப் பொறுப்பு ஏத்துக்கணும்.’’

‘‘ஏத்துக்கிட்டேன்.’’

7

‘‘கார் வந்திடுச்சு! கார்... மாதவன் முதலாளியின் கார்!’’ - ஒரு சிறுவன் உரத்த குரலில் கூறியவாறு ஓடிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டவர்கள் எல்லாரும் அந்தச் சிறுவனுக்குப் பின்னால் ஓடினார்கள். சிறுவர் - சிறுமிகளும் பெண்களும். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் கேட்டாள்:

‘‘நீங்கள் எல்லாரும் எங்கே போறீங்க?’’

‘‘மாதவன் முதலாளி ஒரு கார் நிறைய ரூபாய் நோட்டுகளுடன் வந்திருக்காரு. ஒரு லட்ச ரூபாயும் ஒரு காரும்.’’

மாதவனின் வீட்டு வாசலில் ஆட்கள் கூடினார்கள். ஒரு சிறுவன் அருகில் நின்றிருந்தவர்களிடம் கேட்டான்:

‘‘காரும் பரிசாகக் கிடைத்தது. அப்படித்தானே?’’

‘‘ம்... காரும் ஒரு லட்ச ரூபாயும்.’’

‘‘ஒரு லட்ச ரூபாய்களையும் கார்ல ஏற்றிக் கொண்டு வந்திருக்காங்க. அப்படித்தானே?’’

“ஆமா...”

‘‘அப்படின்னா, பணம் எங்கே?’’

‘‘அதை அங்கே... உள்ளே எடுத்துக் கொண்டு போய் வச்சிருக்காங்க - யாருக்கும் தெரியாமல்.’’

ஒரு சிறுவன் காரை மெதுவாகத் தொட்டான். மற்ற சிறுவர்களும் காரைத் தொட்டார்கள். ஒருவன் உள்ளே கையை விட்டு ஸ்டியரிங்கைப் பிடித்தான்.

‘‘இங்கேயிருந்து போங்கடா!’’ சங்கரன்குட்டி கத்தினான்.

எல்லாரும் விலகி நின்றார்கள்.

ஓலை வியாபாரம் செய்யும் கிழவி மெதுவாக அங்கு வந்தாள். அவள் கேட்டாள்:

‘‘மாதவன் எங்கே சங்கரன்குட்டி?’’

‘‘உள்ளே இருக்காரு. உறங்குறாரு.’’

‘‘ஒரு லட்சத்தைக் கொண்டு வந்தாச்சா?’’

‘‘ம்...’’

‘‘அப்படின்னா... என்கிட்ட வாங்கின ஓலைக்கான பணத்தை தந்துடக் கூடாதா சங்கரன்குட்டி?’’

‘‘பிறகு தர்றோம் கிழவி. சில்லரை இல்லாமல் தர முடியுமா? ஒரு லட்சத்தை மாற்றி சில்லரையா ஆக்கிக் கொண்டு வந்த பிறகு தர்றோம்.’’

‘‘அதெல்லாம் எனக்குத் தெரிய வேண்டாம்டா சங்கரன்குட்டி. இப்போ எனக்கு ஓலையோட விலை வந்தாகணும். அது கிடைத்தால்தான் நாங்க அரிசி வாங்க முடியும்.’’

வெற்றிலைப் பாக்குக் கடை செல்லப்பன் சந்தோஷத்துடன் அங்கு வந்தான். அவன் கேட்டான்:

‘‘இங்கே நிற்கிறது பரிசாகக் கிடைச்ச காரா?’’ - காருக்கு அருகில் சென்று பார்த்துக் கொண்டு அவன் கேட்டான்:

‘‘இதன் விலை என்ன?’’

‘‘இருபத்தைய்யாயிரம் என்று சொல்றாங்க. ஆனால் முப்பதாயிரம் தர்றதுக்கு ஆள் இருக்கு.’’

‘‘அப்படின்னா, கொடுத்துடுறதுதானே?’’

‘‘இருக்கட்டும் செல்லப்பா, மாதவன் அண்ணன் ஒரு கார் இல்லாமல் இருக்க முடியுமா?’’

‘‘மாதவன் முதலாளி எங்கே?’’

‘‘தூங்கிக்கிட்டு இருக்காரு. எர்ணாகுளத்துல இருந்து இங்கே வரை கார்ல வந்தோம்ல! ஒரே களைப்பு!’’

‘‘மாதவன் முதலாளி எங்கே சங்கரன்குட்டி?’’ - இப்படிக் கேட்டவாறு செக்ரட்டரி புருஷோத்தமன் அங்கு வந்தார்.

‘‘தூங்கிக்கொண்டு இருக்காரு.’’

‘‘நான் வந்திருக்குறதா சொல்லு.’’

‘‘களைச்சுப் போய் உறங்கிக்கிட்டு இருக்காரு. இப்போ எழுப்பினால்...’’

‘‘முக்கியமான காரியங்கள் இருக்குறப்போ தூங்கினால் எப்படி?’’

‘‘என்ன செக்ரட்டரி?’’ - இப்படிக் கேட்டவாறு குஞ்ஞுலட்சுமி உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.

‘‘நான் வந்திருக்கேன்னு மாதவன் முதலாளிக்கிட்ட சொல்லுங்க.’’

‘‘அவன் உடம்பு வேதனையோடு படுத்திருக்கான்.’’

‘‘இன்னைக்கு சாயங்காலம் நாங்க மாதவன் முதலாளிக்கு வரவேற்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம். அதைப்பற்றி மேலும் விவரங்களைப் பேச வேண்டியதிருக்கு!’’

‘‘அப்படின்னா... செக்ரட்டரி, ஒரு காரியம் செய்யுங்க. மத்தியானம் இங்கே வாங்க.’’

‘‘அப்படின்னா... நான் பிறகு வர்றேன்’’ - செக்ரட்டரி வெளியேறி நடந்தார்.

செல்லப்பன் ரகசியமாகக் கேட்டான்:

‘‘ஒரு லட்ச ரூபாயைக் கொண்டு வந்து என்ன பண்ணினீங்க சங்கரன்குட்டி!’’

‘‘வங்கியில போட்டிருக்கோம். வர்ற வழியில திருவனந்தபுரத்துல இறங்கி வங்கியில போட்டுட்டுத்தான் இங்கே வந்தோம்.’’

‘‘அப்படின்னா... அதுல இருந்து விருப்பப்படி எடுத்துக்கலாம், அப்படித்தானே?’’

‘‘அது முடியாது. மூணு வருடங்கள் கடந்தால்தான் எடுக்க முடியும். வங்கியில் அப்படி ஒரு திட்டம் இருக்கு. அதன் பெயர் என்ன?’’ - அவன் சிறிது சிந்தித்துவிட்டுச் சொன்னான்.

‘‘ஃபிக்சட் டெப்பாஸிட் என்பது அதன் பெயர். ஆனால் வட்டி கிடைக்கும்.’’

செல்லப்பனின் முகம் வாடியது. அவன் தலையைக் குனிந்து கொண்டு நின்றான்.

‘‘என் ஓலைக்கான பணத்தை இங்கே தா குஞ்ஞுலட்சுமி’’- கிழவியின் பொறுமை எல்லை கடந்தது.

‘‘அவன் தூங்குறான்னு சொன்னேன்ல!’’ - குஞ்ஞுலட்சுமி மிடுக்கான குரலில் சொன்னாள்.

‘‘கிழவிக்கு அதைக்கேட்டு கோபம் வந்துவிட்டது.’’

‘‘அவன் தூங்குறான்னு சொன்னால் என் பிள்ளைகளின் பசி இல்லாமல் போயிடுமா? இந்தக் காசை கொண்டுபோய் அரிசி வாங்கிக் கொண்டு போய்தான் பிள்ளைகளுக்குக் கஞ்சி வச்சிக் கொடுக்கணும். என் காசை இப்போ இங்கே தரலைன்னா...’’

சங்கரன்குட்டி கிழவியின் அருகில் சென்று அமைதியான குரலில் சொன்னான்: ‘‘கிழவி, நீ இங்கேயிருந்து போ. ஒரு லட்ச ரூபாயைக் கொண்டு வந்து வங்கியில போட்டிருக்கோம். எடுத்துக் கொண்டு வந்த பிறகு உன் காசைத் தர்றோம் கிழவி.

‘‘எப்போ எடுத்துட்டு வருவீங்க?’’

‘‘கிழவி, இப்போ இங்கேயிருந்து கிளம்பு. அங்கே நான் காசைக் கொண்டு வந்து தர்றேன்.’’

‘‘சரி... நான் இப்போ புறப்படுறேன். பிறகு... ஒரு விஷயம்! இந்த கிழவிக்கிட்ட விளையாடுற விளையாட்டு ரொம்ப மோசம்... சொல்லிடுறேன்! இன்னைக்கு மதியத்துக்கு முன்னால என் காசைத் தரலைன்னா...’’

‘‘தரலைன்னா என்ன செய்வே?’’ - குஞ்ஞுலட்சுமி மிடுக்கான குரலில் கேட்டாள்.

செல்லப்பன் மெதுவான குரலில் சொன்னான்:

‘‘சங்கரன்குட்டி, என் விஷயத்தை மறந்துடக்கூடாது!’’

‘‘மறக்க மாட்டேன் செல்லப்பா. உன் விஷயத்தை நான் மறக்க மாட்டேன்.’’

‘‘தங்கையின் கழுத்தில் கிடந்த மாலையை அடகு வச்சுத்தான் ஐம்பது ரூபாய் வாங்கித் தந்தேன்.’’

‘‘அடகு வச்சதை மீட்டிடலாம் செல்லப்பா. வட்டியையும் கொடுத்துடலாம்.’’

‘‘நான் இன்னைக்கு கடையைத் திறக்கல சங்கரன்குட்டி.’’

‘‘என்ன காரணம்?’’


‘‘விற்பதற்கு எதுவும் இல்லாமல் சும்மா ஏன் கடையைத் திறந்து வைக்கணும்?’’

‘‘கடையை இனிமேல் திறக்க வேண்டாம் செல்லப்பா. வேறு ஒரு நல்ல பிசினஸ ஆரம்பி. அதற்கான பணத்தை நான் தர்றேன்னு சொன்னேன்ல? செல்லப்பா, நீ இப்போ இங்கேயிருந்து கிளம்பு.’’

‘‘அப்படின்னா நாளைக்கு நான் இங்கே வர்றேன்.’’

‘‘நாளையோ நாளை மறுநாளோ... இல்லாவிட்டால் பத்து பனிரெண்டு நாட்கள் கடந்து வந்தாலும் சரிதான்.’’

அதற்குப் பிறகும் செல்லப்பனின் முகம் வாடியது. அவன் சிறிது நேரம் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான்.

‘‘நான் பிறகு வர்றேன் சங்கரன்குட்டி’’ - அவன் திரும்பி வேகமாக நடந்தான்.

‘‘எங்களைக்கூட கார்ல ஏற்றுவீங்களா சங்கரன்குட்டி அண்ணா?’’ - இன்னொரு சிறுவன் கேட்டான்.

‘‘போடா இங்கேயிருந்து!’’ - குஞ்ஞுலட்சுமி கத்தினாள்.

‘‘அடிச்சிடுவாங்கடா. இங்கேயிருந்து போயிடு’’ - பின்னாலிருந்து ஒரு சிறுவன் சொன்னான்.

ஒரு சிறுவன் கூவினான். எல்லா பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து கூவினார்கள். அவர்கள் கூவியவாறு அங்கிருந்து ஓடினார்கள். ஒரு சிறுவன் உரத்த குரலில் கத்திச் சொன்னான்:

‘‘உங்களுடைய ஒரு லட்சம் எங்களுக்குப் புல்!’’

வீட்டிற்குப் பின்னால் இருந்த பலாமரத்திற்குக் கீழே ராஜம்மாவும் ரத்னம்மாவும் அமர்ந்திருந்தார்கள். ரத்னம்மா சொன்னாள்:

‘‘பணத்தை வங்கியில் போட்டுவிட்டால் பிறகு மூன்று வருடங்கள் கழிச்சுத்தான் எடுக்க முடியும். அப்படித்தானே அக்கா?’’

‘‘இருக்கலாம்.’’

‘‘அப்படின்னா அதை எதற்கு அண்ணன் வங்கியில போடணும்?’’

‘‘ம்... நீ போய் கேளு...’’

‘‘அக்கா, உங்களுக்கு என்ன பெரிய அளவுல கோபம்?’’

‘‘கோபமா? அண்ணனுக்கு லாட்டரிச் சீட்டுல பரிசு கிடைத்தது நம்முடைய அதிர்ஷ்டத்தாலும்தானே?’’

‘‘வெள்ளாயினி பகவதியின் அருள் இருக்கு. நம் எல்லாருடைய அதிர்ஷ்டமும் இருக்கு.’’

‘‘சரி... அண்ணன் பணத்தை வங்கியில் கொண்டு போய் போட்டால் நம்முடைய காரியங்கள் எப்படி நடக்கும்?’’

‘‘அதைத்தான் நானும் கேக்குறேன். நிலம் வாங்க வேண்டாமா? வீடு கட்ட வேண்டாமா? அக்கா, உங்களுடைய கல்யாணத்தை நடத்த வேண்டாமா?’’

‘‘உன் கல்யாணத்தை நடத்த வேண்டாமா?’’

‘‘அதுதான் நான் சொல்றேன். பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, அண்ணன் உறங்கிக் கொண்டிருந்தால் காரியங்கள் எப்படி நடக்கும்?’’

‘‘அந்தக் கிழவி வந்து நின்றுகொண்டு சொன்னதைக் கேட்டப்போ, என் தோல் உரிஞ்சு போனதைப்போல எனக்கு இருந்தது ரத்னம்மா.’’

‘‘அவங்கதான் சொன்னங்கள்ல... ஓலைக்கான காசு கிடைத்த பிறகுதான் அவங்களோட சின்ன பிள்ளைகளுக்கு கஞ்சி காய்ச்சித் தர முடியும்னு!’’

இரண்டு பேரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். ரத்னம்மா கேட்டாள்:

‘‘நாளைக்குத்தானே அண்ணனுக்கு வரவேற்பு விழா நடத்தப் போறாங்க?’’

‘‘நூல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தரப்போவது என்னைக்கு?’’

‘‘அதுவும் நாளைக்குத்தான் இருக்கும்.’’

‘‘நம்மை அழைச்சிட்டுப் போவாங்களாடீ ரத்னம்மா?’’

‘‘எனக்கு அந்தக் காரில் ஏறணும்னு ஒரு ஆசை! அண்ணன் வரவேற்பு விழாவிற்கு காரில்தானே போகிறார்?’’

‘‘கார்ல போறதுன்னா, ஓட்டுனர் வேண்டாமா?’’

‘‘அது உண்மைதான். ஓட்டுனர் கோவிச்சிட்டுப் போயிட்டாரு. அந்த ஆளு இனிமேல் வரமாட்டாரு.’’

‘‘அதிர்ஷ்டம் வந்தால் போதாதுடீ ரத்னம்மா. அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதற்கும் கொடுத்து வச்சிருக்கணும்.’’

இரண்டு பேரும் நீண்ட பெருமூச்சை விட்டார்கள்.

ஒற்றையடிப் பாதையின் வழியாக மாதவனின் வீட்டை நோக்கி விஸ்வநாதனும் ராகவன் பிள்ளையும் ஹுசைனும் வந்து கொண்டிருந்தார்கள். விஸ்வநாதன் சொன்னான்:

‘‘நாம இங்கே நின்னு கொஞ்சம் பேசிட்டுப் போனால் நல்லது.’’

‘‘மூன்று பேரும் நின்றார்கள். ஹுசைன் கேட்டான்.’’

‘‘என்ன பேசுவது?’’

‘‘வரவேற்பு விழாவிற்குச் செலவாகக்கூடிய தொகையை மாதவனிடம் வாங்க வேண்டாமா?’’

‘‘அதுதான் என்னுடைய கருத்தும். அந்த ஆளிடமிருந்து பெரிய ஒரு தொகையை வாங்கணும்’’ - ராகவன் பிள்ளை.

‘‘பெரிய தொகை என்றால், எவ்வளவுன்னு நினைக்கிறீங்க?’’ - ஹுசைன்

‘‘நூலகக் கட்டிடம் கட்டுவதற்கான முழுத் தொகையையும் அந்த ஆளிடமிருந்து வாங்கணும்’’ - ராகவன் பிள்ளை.

‘‘பன்னிரண்டாயிரம் ரூபாய் அல்லவா செலவுத் தொகை?’’

‘‘அந்தத் தொகை முழுவதையும் அந்த ஆளிடமிருந்து வாங்கணும். இல்லாவிட்டால் அந்த ஆள் கட்டிடத்தைக் கட்டித் தந்தால்கூட சரிதான்னு சொல்லணும்’’ - விஸ்வநாதன்.

‘‘தருவாரா?-’’ -ஹுசைன்.

‘‘வாங்கணும்’’ - விஸ்வநாதன்.

‘‘மாதவன் மடையன் இல்லை’’ - ஹுசைன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

‘‘மடையனாக இல்லாமல் இருப்பதால்தான் அந்த ஆளிடமிருந்து வாங்கலாம் என்று நான் சொல்கிறேன். ஊருக்கு ஒரு அலங்காரம், மதிப்பு, கவுரவம் என்றெல்லாம் சொன்னால் எந்த புத்திசாலியும் விழுந்துவிடுவான் ஹுசைன்!’’

‘‘அதில் சில உண்மைகள் இருக்கின்றன.’’

திடீரென்று அருள் கிடைத்தவனைப் போல விஸ்வநாதன் சொன்னான்:

‘‘நான் ஒரு தந்திரம் சொல்றேன். நம்முடைய நூல் நிலையத்தின் பெயரை மாற்றணும். ‘மாதவன் நினைவு நூல் நிலையம் மற்றும் படிப்பகம்’ என்று பெயரை ஆக்கணும். நாம் அங்கு போனவுடன் மாதவனிடம் இதைச் சொல்லணும்.’’

‘‘அது சரிதான்’’ - ஹுசைனும் ராகவன் பிள்ளையும் சேர்ந்து சம்மதித்தார்கள். ராகவன் பிள்ளை சொன்னார்:

‘‘இந்தப் பெயர் மாற்றத்தை வரவேற்பு விழாவில் கூறப் போகிறோம் என்பதையும் சொல்லிடணும்.’’

‘‘அதுவும் சரிதான். ஆனால், நாம சொல்லி முடித்த பிறகும், அந்த ஆள் பணம் தரலைன்னா?’’ - ஹுசைன்.

‘‘நூலகம் கட்டுவதற்குத் தேவைப்படும் பன்னிரண்டாயிரம் பாயை நான் நன்கொடையாகத் தருகிறேன் என்று மாதவனைச் சொல்ல வைக்கணும்’’ - விஸ்வநாதன்.

‘‘அந்த ஆள் அப்படிச் சொல்லலைன்னா?’’ - ஹுசைன்.

‘‘நாமளும் சொல்ல வேண்டாம்’’ - ராகவன் பிள்ளை.

‘‘அப்படின்னா... நாம போவோம்.’’

அவர்கள் மாதவனின் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.

‘‘மாதவன் முதலாளி எங்கே?’’ - விஸ்வநாதன் சங்கரன் குட்டியிடம் கேட்டான்.

‘‘தூங்கிக்கிட்டு இருக்காரு.’’

‘‘எப்போ எழுந்திருப்பாரு?’’

‘‘நாங்க எர்ணாகுளத்துல இருந்து வந்தப்போ பொழுது விடிஞ்சிடுச்சு. அப்பவே மாதவன் அண்ணன் படுத்திட்டாரு. இனி மதியத்திற்குப் பின்னால்தான் எழுந்திருப்பாரு.’’

‘‘அப்படின்னா நாங்க பிறகு வர்றோம்.’’

‘‘அதுதான் நல்லது.’’

‘‘நாளைக்கு நூலகத்தில் மாதவன் முதலாளிக்கு வரவேற்பு தரப்போறோம்ன்றதை முதலாளிக்கிட்ட சொல்லிடுங்க.’’

‘‘சொல்லிடுறேன்.’’

அவர்கள் திரும்பி நடந்தார்கள்.


8

சாயங்காலம் ஆனது. மேற்குப்பக்க வீட்டில் ஒரு பெண்கள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளில் பெண்கள் எல்லாரும் அங்கு கூடியிருந்தார்கள். ஓலை வியாபாரம் செய்யும் கிழவியும் இருந்தாள். தாய்மார்களின் பேச்சைக் கேட்பதற்காக சில பிள்ளைகளும் அங்கு வந்திருந்தனர்.

நாராயணி சொன்னாள்:

‘‘ஒரு லட்ச ரூபாய் கிடைத்தாலும், கார் கிடைத்தாலும், அரண்மனையில் வாழ்ந்தாலும் மனிதன் மனிதனாக இல்லாமல் போய் விடுவானான்னு நான் கேட்கிறேன்.’’

‘‘லாட்டரிச் சீட்டுல பரிசுப்பணம் கிடைத்த பிறகு குஞ்ஞுலட்சுமி அக்கா இந்த வீட்டுப் பக்கமே காலடி எடுத்து வைக்கல. அந்தப் பெண் பிள்ளைகள் பார்த்தால் பேசுறது இல்ல. இன்னைக்குக் காலையில நான் கையால மேல் நோக்கிப் பார்த்தப்போ, பெண்பிள்ளைகள் இரண்டு பேரும் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. ‘ஒரு லட்சமும் காரும் கொண்டு வந்தாச்சடீ ராஜம்மா?’ என்று நான் கேட்டேன். அதற்கு முனகிட்டு தலையை வெட்டித் திரும்பிக்கிட்டு சமையலறைக்குள்ளே அவள் போயிட்டா.’’

‘‘அதுல ஒரு விஷயம் இருக்குடீ கார்த்தியாயினி. ஒரு லட்சத்துல இருந்து நாம யாராவது எதையாவது கேட்டுடப் போறோமோன்னு பயந்துதான் அவங்க பேசாமலும் பார்க்காமலும் இருக்காங்க.’’

‘‘உனக்கு ஒரு விஷயம் தெரியணுமா? இங்கே... யசோதரனின் அப்பா மரவள்ளிக்கிழங்கைப் பிடுங்கிக் கொண்டு நிற்கிறாரு. அதைப் பார்த்துட்டு குஞ்ஞுலட்சுமி அக்கா இங்கே வந்தாங்க. நான் குஞ்ஞுலட்சுமி அக்காவுக்கு ஒரு செடியின் கிழங்கைக் கொடுங்கன்னு யசோதரனின் அப்பாக்கிட்ட சொன்னேன். ஒரு செடியில் இருந்த மரவள்ளிக் கிழங்குகள் எல்லாவற்றையும் அவர் கொடுத்துட்டாரு. எட்டு அல்லது ஒன்பது ராத்தல் எடை வரும். குஞ்ஞுலட்சுமி அக்கா தாங்கிப் பிடித்துக் கொண்டு போனாங்க. ஆனா கேளு. நேற்று நான் சந்தைக்குப் போய் மீன் வாங்கிட்டு வர்றேன். குஞ்ஞுலட்சுமி அக்கா ஒற்றையடிப் பாதையில நின்னுக்கிட்டு இருக்காங்க. நான் கேட்டேன், ‘ஒரு லட்சம் ரூபாயை வச்சு என்ன செய்ய போறீங்க’ன்னு. ‘அதெல்லாம் மாதவனுக்குத் தெரியும்’னு சொல்லிட்டுத் திரும்பி நடகக ஆரம்பிச்சிட்டாங்க.’’

‘‘நீ ஏதாவது கேட்டுடப் போறியோன்னு பயந்துதான்...’’

‘‘என் நாய்க்குக்கூட வேண்டாம்’’ - கார்த்தியாயினி காரித் துப்பிவிட்டுத் தொடர்ந்தாள்:

‘‘ஒரு லட்சம் ரூபாயை வாங்கிட்டு வந்துட்டு ஓலை வாங்கியதற்குக் காசு தராதவங்கதானே அவங்க! நாய் கடலுக்குப் போனாலும் நக்கித்தான் குடிக்கும். தெரியுமா?’’

ஓலை வியாபாரம் செய்யும் கிழவி எழுந்து வெறிபிடித்தவளைப் போல சொன்னாள்:

‘‘நான் வாங்குவேன்டீ கார்த்தியாயினி. என் ஓலைக்கான காசை நான் வாங்குவேன். இல்லாவிட்டடால் நான் அவனோட குடிசைக்கு நெருப்பு வைப்பேன். தெரியுமா?’’

‘‘வீட்டை இடிக்கப் போறதா சொல்லிக்கிட்டு செல்லப்பன் நடந்து திரியிறாரு’’ - லட்சுமி சொன்னாள்.

‘‘எந்த செல்லப்பன்?’’ - நாராயணி கேட்டாள்.

‘‘வெற்றிலைப் பாக்குக்கடை செல்லப்பன். அந்த ஆளோட வெற்றிலைப் பாக்குக் கடையை மூடியாச்சு...’’

‘‘எப்படி?’’

‘‘விற்பதற்கு எதுவும் இல்லைன்னு ஆன பிறகு, சும்மா எதற்கு கடையைத் திறந்து வைக்கணும்?’’

‘‘விற்பதற்கு எதுவும் இல்லைன்ற நிலை எப்படி வந்தது?’’

‘‘சங்கரன்குட்டி எல்லாவற்றையும் கடனுக்கு வாங்கிக் கொண்டு போய்விட்டான் - மாதவனின் பெயரைச் சொல்லிச் சொல்லியே கடைசியில எர்ணாகுளத்திற்குப் பரிசுப் பணத்தை வாங்கப் போறதா சொல்லி ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டான். தன் தங்கையின் கழுத்தில் கிடந்த மாலையை அடகு வச்ச செல்லப்பன் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொடுத்திருக்காரு. நான் இங்கே வர்றப்போ அந்தப் பெண் அங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருக்கா.’’

‘‘சங்கரன்குட்டி போய் கேட்டப்போ செல்லப்பன் பணம் தந்தது எதற்கு?’’

‘‘அதில் ஒரு விஷயம் இருக்கு. ஒரு லட்ச ரூபாய் வந்தவுடன் செல்லப்பனுக்கு மூவாயிரம் ரூபாய் தர்றதா சொல்லியிருக்கான் - வியாபாரத்துக்கு. நிலைமை அப்படி இருக்குறப்போ ஐம்பதல்ல நூறு ரூபாய் கேட்டாலும் கொடுக்கத்தானே செய்வார்!’’

‘‘கொடுப்பாங்கடீ லட்சுமி... கொடுப்பாங்க. நானாக இருந்தாலும் கொடுப்பாங்க.’’

‘‘இன்னும் கேளு. இன்னைக்குக் காலையில் செல்லப்பன் போய் பணத்தை கேட்டிருக்காரு. அப்போ சொல்லி இருக்கான். ஒரு லட்ச ரூபாயைக் கொண்டுபோய் வங்கியில போட்டிருக்கிறதா. மூணு வருடங்கள் தாண்டின பிறகுதான் எடுக்க முடியுமாம்.’’

‘‘பொய்டீ லட்சுமி... அது பொய். பணம் மாதவனின் கையில இருக்கு. அதனால்தான் அவன் வீட்டுக்குள்ளே ஒளிஞ்சிருக்கான்.’’

‘‘எனக்கு ஒரு சந்தேகம்’’ - கார்த்தியாயினி கேட்டாள்.

‘‘மாதவனுக்கு முதல் பரிசு கிடைச்சிருக்குன்றது உண்மையா?’’

‘‘அது பொய் இல்லை கார்த்தியாயினி அக்கா. பத்திரிகையில் வந்திருந்ததே!’’

‘‘பத்திரிகையில் வர்றதெல்லாம் பொய்டீ லட்சுமி!’’

‘‘பிறகு எப்படி கார் கிடைச்சது?’’

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவன் உரத்த குரலில் கத்தினான்:

‘‘அந்தக் கார் செத்த கார். அது ஓடாது.’’

‘‘உண்மைதான்டி லட்சுமி. எங்கேயிருந்தோ ஒரு செத்துப்போன காரைத் தள்ளிக்கொண்டு வந்துட்டு, பரிசு கிடைச்சிருக்குன்னு பொய் சொல்லிக்கிட்டு இருக்குறாங்க.’’

‘‘கடன் வாங்கினால் கொடுக்க வேண்டாமா மகனே?’’ - குஞ்ஞுலட்சுமி மாதவனிடம் கேட்டாள்.

‘‘கடன், வாங்கினால் கொடுக்கணும். கொடுக்க மாட்டேன் என்று நான் சொன்னேனா?’’

‘‘முன்னாடியே நீ கொடுத்திருந்தால் அவங்க இங்கே வந்து அவமானப்படுற மாதிரி பேசியிருப்பாங்களா?’’

‘‘அவங்க கடன் தந்தது எதற்குன்னு உங்களுக்குத் தெரியுமா அம்மா?’’

‘‘எதுக்கு?’’

‘‘என்னை காக்காய் பிடிக்கிறதுக்கு. அதாவது - அவங்க எல்லோரும் எனக்குக் கடன் தந்தது - என்கிட்ட கடன் வாங்குறதுக்குத்தான்.’’

‘‘அதனால்தான் நான் சொன்னேன்... எச்சரிக்கையா இருக்கணும்னு.’’

‘‘நான் எச்சரிக்கையா இருப்பேன் அம்மா... எச்சரிக்கையாகத்தான் நான் இருக்கேன்.’’

‘‘ஆனால் நாம வாங்கின பணத்தைக் கொடுக்க வேண்டாமா மகனே? பணத்தை வங்கியில போட்டுட்டு கடன் வாங்கினவங்கக்கிட்ட தவணை சொல்லிக்கிட்டு இருக்கலாமா?’’

‘‘பணத்தை வங்கியில் போட்டிருக்கிறதா சும்மா சொன்னோம் அம்மா’’ - தலையணைக்கு அடியில் இருந்து ஒரு தாள் பொட்டலத்தை எடுத்து, அதிலிருந்து ஒரு லட்சத்துக்கான காசோலையை எடுத்துத் தன் தாயிடம் காண்பித்துவிட்டு அவன் சொன்னான்:

‘‘இதோ எனககுக் கிடைத்த ஒரு லட்சம்... இதை வங்கியில் கொடுத்தால்தான் பணம் கிடைக்கும்.’’

‘‘இதை அங்கே கொடுத்த உடனே, ஒரு லட்சத்தை எண்ணிக் கொடுத்திடுவாங்களா?’’

‘‘நமக்குத் தேவைப்படும் பணத்தை மட்டுமே வாங்கணும். மீதி இருப்பதை வங்கியிலேயே போட்டு வச்சிருக்கணும்.’’

‘‘பிறகு... எப்போ போய் கேட்டாலும் தருவாங்களா?’’

‘‘தருவாங்க.’’

‘‘அப்படின்னா... அது போதும்.’’

வெளியே ஒரு கூச்சல்...

‘‘ஓலைக்கான காசை இங்கே தர்றியா? குடிசைக்கு நெருப்பு வைக்கவா?’’

குஞ்ஞுலட்சுமி வெளியே வந்தாள். ஓலை விற்கும் கிழவி, ஒரு பந்தத்தை எரிய வைத்துப் பிடித்துக்கொண்டு வாசலில் நின்று கொண்டு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள்.’’

‘‘என் ஓலைக்கான காசை எனக்குத் தர்றியாடீ குஞ்ஞுலட்சுமி? இல்லாவிட்டால்... நான்...’’ - கிழவி பந்தத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு குடிசையை நெருங்கினாள்.

‘‘குஞ்ஞுலட்சுமி வாசலுக்கு வேகமாக வந்தாள். கிழவியின் கையில் இருந்த பந்தத்தைத் தட்டிப் பறித்தாள்.


அவள் அமைதியான குரலில் சொன்னாள்:

‘‘கிழவி, இங்கேயிருந்து போ. நாளைக்குக் காசைத் தர்றேன்.’’

‘‘எனக்கு என்னோட காசு இப்பவே கிடைக்கணும். என் காசை இப்போ தரலைன்னா உன் குடிசைக்கு நான் நெருப்பு வைப்பேன்.’’

‘‘அம்மா, கிழவியின் காசை இப்போ நாம கொடுத்திடுவோம்’’- மாதவன் உள்ளேயிருந்து சத்தம் போட்டுச் சொன்னான்.

‘‘குஞ்ஞுலட்சுமி உள்ளே போய், நான்கு ரூபாய்களுடன் வெளியே வந்தாள்.’’

‘‘இந்தா... ஓலைக்கான காசு.’’

‘‘கிழவி ரூபாய்களை வாங்கி எண்ணிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்:’’

‘‘இன்னும் அரை ரூபாய் தரவேண்டியது இருக்கு. அதை நான் விட்டுத் தர்றேன். ஏன் தெரியுமா? நீங்க லட்சாதிபதிகள் ஆச்சே! அந்தப் பணத்துடன் என்னோட அரை ரூபாயும் இருக்கட்டும்!” கிழவி திரும்பி நடந்தாள்.

ஒற்றையடிப் பாதையில் நின்றிருந்த சிறுவர்கள் கூவ ஒரு சிறுவன் உரத்த குரலில் சொன்னான்:

‘‘பரிசு கிடைத்த கார் செத்துப் போன கார்டா.’’

அவர்கள் அதற்குப் பிறகும் கூவிக் கொண்டிருந்தார்கள்.

‘‘தெரியுமா மாதவன் அண்ணே, தெரியுமா?’’- வெளியே போயிருந்த சங்கரன்குட்டி மாலை கடந்த பிறகு ஓடி வந்து மாதவனிடம் கூறினான்.

‘‘என்ன சங்கரன்குட்டி!’’

‘‘நடுப்பகல் பொழுதில் சூரியன் மறைஞ்சிடுச்சுன்னு வச்சுக்கோங்க. அதைப்போலத்தான் இப்போ உங்களுடைய நிலைமையும் இருக்கு மாதவன் அண்ணே.’’

‘‘அதாவது - நீங்க சமுதாயத்திற்குப் பெருமை என்று செக்ரட்டரி சொன்னாரா?’’

‘‘ஆமா...’’

‘‘ஊருக்கு அலங்காரம் என்று நூலகத்தைச் சேர்ந்தவர்கள் சொன்னாங்களா?’’

‘‘ஆமா...’’

‘‘ஆனால் இப்போ நீங்க சமுதாயத்துக்கும் ஊருக்கும் அவமானச் சின்னமாம்.’’

‘‘அப்படி யாரு சொன்னாங்கடா சங்கரன்குட்டி?’’

‘‘பெருமைன்னும் அலங்காரம்னும் சொன்னது யாரு? அவங்களேதான் இப்போ அவமானச் சின்னம் என்று சொல்லிக் கிட்டு இருக்காங்க.’’

‘‘நடுப்பகல் நேரத்தில் சூரியன் மறைஞ்சிடுச்சுன்னு நீ சொன்னதற்கான அர்த்தம் இப்போத்தான் எனக்குப் புரியுது.’’

‘‘முழுசா புரியல மாதவன் அண்ணே.’’

‘‘அப்படின்னா புரியாததையும் நீ சொல்லிடு.’’

‘‘பெருமையாகவும் அலங்காரமாகவும் இருந்த மாதவன் அண்ணன் என்ன காரணத்தால் அவமானச் சின்னமா ஆகிவிட்டார்?’’

‘‘என்ன காரணத்தால்?’’

‘‘மாதவன் அண்ணே, உங்களுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாயை மூணு வருடங்களுக்கு வங்கியில் போட்டிருக்கீங்கள்ல?’’

‘‘அப்படி வங்கியில போடலைன்ற விஷயம் உனக்குத் தெரியாதா?’’

‘‘மூணு வருடங்களுக்கு வங்கியில் போட்டிருக்கிறதா எல்லாரிடமும் சொன்னோம்ல!’’

‘‘சொன்னோம்.’’

‘‘அப்போத்தான் சூரியன் மறைஞ்சிடுச்சு. இப்போ புரியுதா?’’

‘‘புரியுது... புரியுது..’’

‘‘இன்னொரு விஷயம்...’’

‘‘என்ன?’’

‘‘சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் ஊர்க்காரங்களும் உங்களுக்கு வரவேற்பு அளிக்கப் போறதா சொன்னாங்கள்ல?’’

‘‘சொன்னாங்க.’’

‘‘ஆனா, அவங்க உங்களுக்கு வரவேற்பு தர்றதா இல்ல.’’

‘‘தரவேண்டாம்.’’

‘‘பிறகு... இன்னொரு விஷயம்.’’

‘‘சொல்லு.’’

‘‘மாதவன் அண்ணே, நீங்க குட்டப் பணிக்கரின் கடன்கள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு அவருடைய மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?’’

‘‘இல்ல...’’

‘‘செக்ரட்டரியின் வீட்டையும் நிலத்தையும் அவர் சொல்ற விலையைக் கொடுத்து வாங்கப் போறீங்களா?’’

‘‘இல்ல...’’

‘‘அவருடைய பொண்டாட்டியோட பெரியப்பாவின் மகனுக்கு உங்களுடைய தங்கையைக் கல்யாணம் பண்ணித் தரப்போறீங்களா?’’

‘‘இல்ல...’’

‘‘நூலகத்திற்குக் கட்டிடம் கட்டுவதற்காகப் பன்னிரண்டாயிரம் ரூபாய்களைக் கொடுக்கப் போறீங்களா?’’

‘‘இல்ல...’’

‘‘அப்படின்னா, அவங்க எல்லோரும் சேர்ந்து உங்களை இந்த ஊர்ல இருந்து விரட்டியடிப்பாங்க.’’

‘‘அவங்க விரட்டியடிப்பதற்கு முன்பே நான் ஓடிட்டா?’’

‘‘ஓடி எங்கே போவீங்க?’’

‘‘வேறு எங்காவது போய் வசிப்பேன்.’’

‘‘அங்கும் செக்ரட்டரியும் குட்டப் பணிக்கரும் இருப்பார்களே?’’

‘‘யார் இருந்தாலும் என்னுடைய பணம் என் கையில் இருக்கும்டா சங்கரன்குட்டி!’’

‘‘அப்படின்னா... இந்த ஊர்லயே இருந்தாலும் உங்க பணம் உங்க கையில் இருக்கும்ல?’’

‘‘அது உண்மை.’’

‘‘விட மாட்டேன்டா. என் பணத்தைத் தராமல் உன்னை நான் விடமாட்டேன்’’- செல்லப்பன் சங்கரன்குட்டியின் மடியைப் பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டிருந்தான்.

சங்கரன்குட்டி திகைத்துப் போய்விட்டான். அந்த அளவிற்கு அவன் எதிர்பார்க்கவில்லை. கவலையை வெளிப்படுத்தி இருக்கலாம்; குறை சொல்லி இருக்கலாம்; ஒருவேளை மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும் செய்திருக்கலாம். நடுச்சாலையில் வைத்து மடியில் கை வைத்து நிறுத்துவான் என்பதை சங்கரன்குட்டி எதிர்பார்க்கவே இல்லை. அந்த அளவிற்கு செல்லப்பனுக்குத் தைரியம் இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை.

ஆனால் செல்லப்பனுக்குப் பின்பலம் இருந்தது. தேநீர்க் கடைக்காரர் குமாரன் நாயர் வேகமாக அங்கு வந்தார்.

‘‘விடக்கூடாது செல்லப்பா. அவனை விடக்கூடாது’’- சங்கரன்குட்டியின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவர் கேட்டார்.

‘‘ஒரு லட்சத்தைக் காட்டி ஊர்க்காரர்கள் எல்லாரையும் ஏமாற்றலாம் என்பது உன்னுடைய எண்ணமும் உன் மாதவன் அண்ணனின் எண்ணமுமாடா?’’

சங்கரன்குட்டி கையை இழுத்தான். குமாரன் நாயர் பிடியை இறுக்கினார்.

‘‘விட மாட்டேன்டா சங்கரன்குட்டி போக விடமாட்டேன்.’’

செல்லப்பன் உரத்த குரலில் கத்தினான்:

‘‘என் வியாபாரம் நாசமாயிடுச்சு. என் வீட்டிற்குள் நுழையவே முடியவில்லை. தங்கையின் கழுத்தில் கிடந்த மாலையை வாங்கி அடகு வச்சு, ஐம்பது ரூபாய் தந்தேன்.’’

மளிகைக் கடைக்காரர் மாத்தச்சன் ஓடிவந்து கொண்டிருந்தார். அவர் சத்தம் போட்டுச் சொன்னார்:

‘‘அவனை விடக்கூடாது செல்லப்பா. அவனும் அவனுடைய மாதவன் அண்ணனும் ஏமாற்றுப் பேர்வழிகள்! திருடர்கள்!’’

பக்கத்தில் இருந்த கடைகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் ஆட்கள் வந்து கூடினார்கள். செல்லப்பன் ஊர்க்காரர்களிடம் சொற்பொழிவு ஆற்றினான்.

‘‘நீங்கள்தான் நான் சொல்றதைக் கேட்கணும். விஷயம் என்னவென்றால்- துண்டு பீடி புகைத்துக்கொண்டு திரிந்த மாதவன் இப்போ ப்ளேயர்ஸ் பிடிச்சிக்கிட்டு இருக்கான். இல்லாத காசை தயார் பண்ணி, நான் ப்ளேயர்ஸ் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் இப்போ என்ன ஆச்சு? எனக்கு வியாபாரம் இல்ல. ஒரு லட்சம் ரூபாயை வாங்கிக்கிட்டு வந்த உடனே, என் பணத்தைத் தந்திடுவாங்கன்னு நினைச்சுத்தான் நான் கடன் வாங்கிக் கடன் கொடுத்தேன்.

ஒரு லட்சம் பணத்தையும் வாங்கிட்டு வந்த பிறகு சொல்றாங்க. வங்கியில போட்டுருக்கோம் என்று. மூணு வருடங்கள் கடந்த பிறகுதான் எடுக்க முடியுமாம்.’’

ஆட்களின் கூட்டத்திற்குப் பின்னால் நின்றுகொண்டு செக்ரட்டரி புருஷோத்தமன் உரத்த குரலில் சொன்னார்:

‘‘இவனும் இவனுடைய மாதவன் அண்ணனும் சமுதாயத்திற்கு அவமானச் சின்னங்கள் செல்லப்பா. இவங்களுக்கு ஒரு பாடம் கற்றுத் தரணும்.’’

‘‘இவங்க இரண்டு பேரையும் சும்மா விடக்கூடாது. இவங்க ஏமாற்றுப் பேர்வழிகள்!’’

ஜமீன்தார் பரமேஸ்வரன் பிள்ளைதான் இப்படிச் சொன்னார்.

ஓர் உரத்த சிரிப்புச் சத்தம்!’’

எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். ஒருவன் சத்தம் போட்டுச் சொன்னான்:

‘‘அதோ ஏமாற்றுப் பேர்வழி மாதவன்!’’

எல்லாரும் கூவினார்கள்.

‘‘கூவுங்கடா... கூவுங்க’’- மாதவன் மக்கள் கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்தான்.


‘‘விடுடா செல்லப்பா’’- செல்லப்பனின் கையில் மாதவன் ஒரு தட்டு தட்டினான்.

பிடி விட்டுப் போனது. குமாரன் நாயரும் சங்கரன் குட்டியின் கையிலிருந்த தன் பிடியை விட்டார். மாதவன் உரத்த குரலில் சொன்னான்:

‘‘டேய் செல்லப்பா... உன்கிட்ட நான் கடன் வாங்கியிருக்கேன். அது உண்மை. சாயங்காலத்திற்குள் நான் அதைத் திருப்பித் தந்திடுவேன். ஆனால் நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கணும். முன்பு ஒருநாள் நான் உன்னோட கடைக்கு வந்து ஐந்து பைசாவுக்கு பீடி கடனாகக் கேட்டேன்ல? அப்போ நீ தந்தியா? எனக்கு லாட்டரிச் சீட்டுல பரிசு கிடைச்சிடுச்சுன்னு தெரிஞ்சவுடனே, நீதானே பர்க்கிலி சிகரெட்டை எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வந்தே? பிறகு தினமும் ப்ளேயர்ஸைத் தந்ததும் நீதானே? தங்கச்சியின் கழுத்தில் கிடந்த மாலையை அடகு வைத்து, ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்ததும் நீதானே? அவற்றையெல்லாம் நீ எனக்கு கடனாகத் தந்ததற்குக் காரணம் என்ன? என்னை காக்கா பிடிக்கிறதுக்குத்தானேடா செல்லப்பா? நான் ஒரு லட்சத்தைக் கொண்டு வர்றப்போ, அதுல இருந்து கடன் வாங்கலாம் என்பதற்காகத்தானே நீ எனக்குக் கடன் தந்தே?’’

எல்லோரும் அமைதியாக நின்றிருந்தார்கள். மாதவன் குமாரன் நாயருக்கு நேராகத் திரும்பினான்:

‘‘உங்கக்கிட்ட வாங்கிய பணத்தையும் இன்னைக்கே தந்திடுறேன். நான் இப்போ வங்கிக்குப் போறேன். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாற்றிக் கொண்டு வந்த உடனே உங்களுடைய பணத்தைத் தந்திடுறேன். ஆனால் ஒரு விஷயம் ஒரு காசுகூட அதிகமாகத் தரமாட்டேன். ஏனென்றால் என்னை ஏமாற்றலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒருநாள் தேநீர் குடித்துவிட்டு, பிறகு காசு தர்றேன்னு சொன்னதற்கு நீங்க என்னைப் பிடிச்சு நிறுத்தியது ஞாபகத்தில் இருக்குதா?’’

‘‘சொல்லிக் காட்டுங்க மாதவன் அண்ணே... சொல்லிக் காட்டுங்க’’- சங்கரன்குட்டி உற்சாகப்படுத்தினான்.

‘‘அங்கே செக்ரட்டரி இருக்காரா?’’- மாதவன் தலையை உயர்த்திப் பின்னால் பார்த்துக்கொண்டே தொடர்ந்தான்:

‘‘என் வீட்டுக்கு வந்து நான் சமுதாயத்திற்குப் பெருமை என்று நீங்கதானே சொன்னீங்க? உங்க மனைவி வந்து என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதைப் பற்றி பேசினாங்கள்ல? பிறகு... இப்போ எப்படி நான் சமுதாயத்தின் அவமானச் சின்னமா ஆனேன்? உங்களுடைய புல் முளைக்காத நிலத்தையும் மனிதன் வாழாத வீட்டையும் என்னை வாங்கச் செய்வதற்காகத்தானே நீங்க எனக்கு வரவேற்பு தரப்போறதா சொன்னீங்க? முடியாதுடா செக்ரட்டரி... மாதவனை ஏமாற்ற முடியாது...’’

‘‘சொல்லிக் காட்டு மாதவன் அண்ணே... கணக்குக்கு கணக்கா சொல்லிக்காட்டுங்க’’- சங்கரன்குட்டி உற்சாகமூட்டினான்.

 ‘‘வேலை செய்தவனுக்கு கூலி தராத மனிதர்தானே பரமேஸ்வரன் பிள்ளை! இருந்தாலும் நான் கேட்காமலே பணத்தையும் நெல்லையும் நீங்க ஏன் கொடுத்து அனுப்ப வேண்டும்? என்னை ஏமாற்றுவதற்காகத்தானே? நடக்காது பரமேஸ்வரன் பிள்ளை.... மாதவனை ஏமாற்றுவது என்பது நடக்காது. பிறகு... ஒரு விஷயம். வாங்கிய பணத்தை இன்னைக்கே தந்திடுறேன். மாத்தச்சா, நான் உங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கடன் தரப்போறது இல்ல. வாங்கிய பணத்தை இன்னைக்கு திருப்பித் தந்திடுறேன். இன்னும் எல்லோரிடமும் ஒரு விஷயம் சொல்ல வேண்டியது இருக்கு. என்னை ஏமாற்ற முடியாது. திருமண விஷயமா யாரும் என்னைத் தேடி வரவேண்டாம். வாடா சங்கரன்குட்டி... வா...’’

சங்கரன்குட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு மாதவன் நடந்தான்.

எல்லாரும் மாதவனுக்கு வழியை விட்டுக் கொடுத்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.