Logo

மீனவனும் அவன் ஆன்மாவும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7364
Meenavanum Avan Aanmaavum

ளைஞனான மீனவன் எல்லா மாலை வேளைகளிலும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வான்.

கரையிலிருந்து காற்று வீசும்போது, குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவனுக்கு எதுவுமே கிடைக்காது. அதிகபட்சம், சிறிய அளவில் ஏதாவது மீன்கள் கிடைக்கும்; அவ்வளவுதான். காரணம்- கறுத்த சிறகுகளை வீசிக் கொண்டு அங்கு வரும் கடுமையான காற்றைப் பார்ப்பதற்காக கடலின் அலைகள் உயர்ந்து வந்து கொண்டிருக்கும். அதே நேரம்- கரையை நோக்கி காற்று வீசும் சமயத்தில், ஆழங்களுக்குள்ளிருந்து மேலே வரும் மீன்கள், வலையின் கண்ணிகளின் வழியாக அவனுடைய வலைக்குள் நீந்தி வந்து சேரும். அவன் அவற்றைப் பிடித்து, சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வான்.

எப்போதும் மதிய நேரம் கடந்த பிறகு கடலுக்குச் செல்வதைப்போல, அன்றும் அவன் புறப்பட்டான். அன்று மாலை, வலை மிகவும் கனமாக இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. இழுத்துப் படகில் போட முடியாத அளவிற்கு அது மிகவும் கனமாக இருந்தது. சிரித்துக்கொண்டே அவன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்: "இன்று நீந்துவதற்காக இறங்கிய மீன்கள் அனைத்துமே என்னுடைய வலைக்குள் சிக்கிக் கொண்டன என்று தோன்றுகிறது. அல்லது மனிதர்களை ஆச்சரியப்பட வைக்கும் பயங்கரமான உயிரினங்கள் ஏதாவது மாட்டிக்கொண்டிருக்குமோ? அதுவும் இல்லையென்றால் மகாராணிகள்கூட விரும்பக்கூடிய வினோதமான உயிரினங்கள் ஏதாவது இருக்குமோ?” அவன் தன்னுடைய பலம் முழுவதையும் முரட்டுத்தனமான கயிற்றில் பயன்படுத்தினான். கண்ணாடிப் பாத்திரத்தின்மீது பூசப்பட்ட நீலநிறப் பளிங்கைப்போல நரம்புகள் அவன் கையில் எழுந்து காணப்பட்டன. பருமன் குறைவாக இருந்த கயிறைப் பிடித்து இழுத்தவாறு அவன் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தான். இறுதியில், வலையின் மேற்பகுதி மெதுவாக நீருக்கு மேலே வர ஆரம்பித்தது.

ஆனால், அதற்குள் மீன்கள் எதுவும் இல்லை. பயங்கரமான உயிரினங்களும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் வினோதமான உயிரினங்கள்கூட எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, அதற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த ஒரு கடல் கன்னியைப் பார்த்தான்.

அவளுடைய கூந்தல் பொன் நிறத்தில் இருந்தது. அந்தக் கூந்தலின் இழைகளைப் பார்க்கும்போது, கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்த சுத்தமான தங்கத்தைப்போல இருந்தது. அவளுடைய சரீரம் யானையின் தந்தத்தைப்போல வெண்மை நிறத்தில் இருந்தது. வால் பகுதி வெள்ளியும் முத்துக்களும் நிறைந்ததாக இருந்தது. அதில் கடலில் இருக்கும் பச்சை நிறப் புற்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவளுக்கு சங்கைப் போன்ற கன்னங்களும் பவளத்தைப் போன்ற அதரங்களும் இருந்தன. அவளுடைய குளிர்ச்சியான மார்பகங்களின்மீது குளிர்ந்த கடலின் அலைகள் வந்து மோதிக் கொண்டிருந்தன. அலைகள் அவளுடைய கண்களின் இமைகளுக்குப் பிரகாசத்தை அளிந்தன.

இளைஞனான மீனவன் அவளைப் பார்த்ததும், ஆச்சரியமும் பரவசமும் அடைந்து அப்படியே நின்று விட்டான். அந்த அளவிற்கு அவள் பேரழகியாக இருந்தாள். அவன் தன்னுடைய கைகளை நீட்டி வலையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்து அருகில் வரும்படி செய்தான். ஒரு பக்கமாக சாய்ந்து நின்றுகொண்டு, அவன் அவளுடைய தோளில் தட்டினான். அவனுடைய ஸ்பரிசம் பட்ட கடல் கன்னி ஒரு கடல் காகத்தைப்போல அழுது கொண்டே கண் விழித்தாள். பயம் கலந்த நீலநிறக் கண்களால் அவள் அவனைப் பார்த்தாள். இப்படியும் அப்படியுமாக அசைந்து தப்பித்துச் செல்வதற்காக முயற்சித்தாள். ஆனால், அவன் அவளை பலமாகப் பிடித்து, தன்னோடு நெருக்கமாக இருக்கும் வண்ணம் செய்தான். அப்படிப் பிடித்திருந்ததால், அவளால் விடுபட்டுச் செல்லமுடியவில்லை.

தப்பித்துச் செல்வதற்கு ஒரு வழியும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட கடல் கன்னி அழ ஆரம்பித்தாள். “தயவுசெய்து என்னைப் போக அனுமதி. நான் ஒரு மகாராஜாவின் மகள். என்னை விடு... வயதான அவர் அங்கு தனியாக இருக்கிறார்.” அழுதுகொண்டே அவள் கெஞ்சினாள்.

ஆனால், இளைஞனான மீனவன் சொன்னான். “நான் உன்னை விடுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நான் அழைக்கும்போதெல்லாம் நீ வருவதாகவும், எனக்காக பாட்டு பாடுவதாகவும் வாக்குறுதி அளிக்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே உன்னை போவதற்கு அனுமதிப்பேன். அந்த சமயத்தில் உன்னுடைய பாடலைக் கேட்பதற்காக வந்துசேரும் மீன்களால் என்னுடைய வலை நிறையுமே!”

“நான் வாக்குறுதி அளித்தால், என்னைப் போவதற்கு அனுமதிப்பாய் என்பது உறுதியானதுதானே?”  கடல் கன்னி அழுதுகொண்டே கேட்டாள்.

“உண்மையாகவே... நீ போவதற்கு நான் அனுமதிக்கிறேன்” மீனவன் சொன்னான்.

கடல் உயிரினங்கள் கூறக்கூடிய உறுதிமொழி கொண்ட வார்த்தைகளைக் கூறி, அவன் அழைக்கும் போதெல்லாம் தான் வருவதாக அவள் சத்தியம் செய்து கொடுத்தாள். அவனுடைய பிடியிலிருந்து விடுதலை பெற்ற கடல் கன்னி இனம்புரியாத பயத்தால் நடுங்கிக்கொண்டே நீருக்கு அடியில் வேகமாகப் பாய்ந்து சென்றாள்.

2

தினமும் மதியத்திற்குப் பிறகு மீனவன் கடலுக்குச் செல்வான். அங்கு சென்று அவன் கடல் கன்னியை அழைப்பான். நீருக்கடியிலிருந்து மேலே வரும் அவள் அவனுக்காக பாட்டு பாடுவாள். அப்போது

அவளைச் சுற்றி டால்ஃபின்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும். தலைக்கு மேலே கடல் காகங்கள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கும்.

அவளுடைய பாடல் மிகவும் இனிமை நிறைந்ததாக இருந்தது. இடுப்பில் வைத்திருக்கும் குஞ்சுகளுடன் குகைகளிலிருந்து குகைகளை நோக்கிப் பயணிக்கும் கடல்வாழ் உயிரினங்களின் கூட்டத்தைப் பற்றியும்; மன்னர் கடந்து செல்லும்போது சங்கு ஊதி ஓசை உண்டாக்கும் பச்சை நிற தாடியும், உரோமங்கள் நிறைந்த நெஞ்சையும் கொண்ட ட்ரைட்டன்கள் என்று அழைக்கப்படும் கடல்வாழ் மனிதர்களைப் பற்றியும்; மஞ்சள் நிற மணலில் மலர்ந்து கொண்டிருக்கும் இளஞ்சிவப்பு நிற செடிகளும்; பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏறும் தாவரங்களும்; வெள்ளி நிறப் பறவையைப்போல வேகமாகப் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் மீன் குஞ்சுகளும்; நாள் முழுவதும் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கும் மென்மையான தொங்கும் பகுதிகளைக் கொண்ட பவளப் புற்றுகளும் நிறைந்த கடலின் தோட்டத்தைப் பற்றியும் அவள் பாடுவாள். செதில்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கூர்மையான பனிக்கட்டித் துண்டுகளுடன், வடக்கு திசைக் கடலிலிருந்து அங்கு வரும் மிகப்பெரிய திமிங்கிலங்களைப் பற்றியும் அவள் பாடினாள்.

கப்பலில் செல்லும் வணிகர்களை வசீகரிக்கக்கூடிய இனிய கதைகளைக் கூறி, கடலில் விழச் செய்யும் ஸைரன் என்ற கடல் கன்னியும், ஆழங்களுக்குள் மூழ்கும் கப்பல்களும், அவற்றின் மிகப்பெரிய பாய் மரங்களும், குளிர்ந்து மரத்துப்போய் பாய்மரத்தின் கயிறில் தொங்கிக் கொண்டிருக்கும் மாலுமிகளும், கப்பலின் திறந்து கிடக்கும் சாளரங்கள் வழியாக நுழைந்து செல்லும் மாக்கெரல் என்ற காற்றும் அவளுடைய இசைக்கான விஷயங்களாக ஆயின.


கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு உலகம் முழுவதும் பயணம் செய்யும், பயண விரும்பியான மிகச் சிறிய பார்னக்கியைப் (ஒரு வகையான கடல்வாழ் உயிரினம்) பற்றியும்; பாறைகளின் இடைவெளிகளில் வாழும்- கறுத்து நீண்ட கைகளை நீட்டி இரைகளைப் பிடிக்கும் கனவா மீன்களைப் பற்றியும் அவள் பாடினாள். பட்டால் உருவாக்கப்பட்ட பாயைக் கொண்டிருக்கும் கப்பலைச் சொந்தமாக வைத்திருக்கும் முத்துச் சிப்பியைப் பற்றியும்; சந்தோஷமாக இருக்கும்போது யாரையும் மயக்குகிற வகையில் ‘ஹார்ப்’ வாசிக்கும் கடல்வாழ் ஆண்களைப் பற்றியும்; சிறிய டால்ஃபின்களைப் பிடித்து, அவற்றின் வழுவழுப்பான சரீரத்தில் ஏறிப் பயணம் செய்யும் குழந்தைகளைப் பற்றியும்; வெண்மையான நுரைகளில் ஓய்வெடுத்துக் கொண்டு, தேவைப்படும் நேரத்தில் மாலுமிகளுக்கு உதவியாக இருக்கும் கடல் கன்னிகளைப் பற்றியும்; வளைந்த தும்பிக்கையைக் கொண்ட கடல் சிங்கத்தைப் பற்றியும்; சிறந்த ஆன்மாக்களுடன் சேர்ந்து திரியும் கடல் குதிரைகளைப் பற்றியும் அவள் பாடல்கள் பாடினாள்.

கடல் கன்னி அவ்வாறு பாடிக்கொண்டிருக்கும் போது, ஆழங்களுக்குள் இருந்து பாடலைக் கேட்பதற்காக மீன்கள் மேலே வரும். மீனவன் அவற்றை வலை வீசிப் பிடிப்பான். வேறு சில மீன்களை அவன் ஈட்டியை எறிந்தும் பிடிப்பான். மீனவனின் படகு மீன்களால் நிறைந்திருப்பதைப் பார்த்ததும், அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே மீண்டும் கடலுக்குள் சென்று விடுவாள்.

எனினும், ஒருமுறைகூட அவள், அவன் தொடக்கூடிய அளவில் அருகில் வந்ததே இல்லை. அவன் பல நேரங்களில் அவளிடம் கூறியும், அதற்காக கெஞ்சிக் கேட்டுக் கொண்டும், அவள் அதை அனுமதித்ததே இல்லை. எப்போதாவது அவளைப் பிடிப்பதற்கு முயற்சிக்கும்போது, அந்த நிமிடத்தில் ஒரு நீர் நாயின் உடல் மொழியுடன் அவள் கடலுக்குள் தாவிச் சென்று விடுவாள். நாட்கள் செல்லச் செல்ல அவளுடைய குரல் அவனுடைய காதுகளுக்கு மிகவும் இனிமை நிறைந்ததாக ஒலித்தது. அவன் தன்னுடைய வலையையும், உரையாடலையும், தொழிலையும் மறக்கக் கூடிய அளவிற்கு அந்தக் குரல் இனிமையானதாக இருந்தது. சிவப்பு நிறச் செதில்களையும் பொன் நிறக் கண்களையும் கொண்ட மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. ஆனால், அவன் அவற்றை கவனிக்கவே இல்லை. அவனுடைய ஈட்டி பயன்படுத்தப்படாமல் பக்கத்திலேயே கிடந்தது. வலையை வீசிப் பிடிக்கப்படும் மீன்களைப் பாதுகாத்து வைக்கக் கூடிய ஒரு பாத்திரம் வெறுமனே கிடந்தது. பாடலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, கண்களை மூடிக்கொண்டு, வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, அவன் படகிலேயே படுத்திருப்பான். சுற்றிலும் பனிப்படலம் வந்து மூடுவது வரை, சந்திரன் உதயமாகி நிலவு வெளிச்சம் பரவும் வரை அவன் அதே இடத்தில் படுத்திருப்பான்.

ஒருநாள் அவன் கடல் கன்னியை வரவழைத்துச் சொன்னான்: “கடல் கன்னியே, உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீ என்னை மணமகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

ஆனால், கடல் கன்னி மறுப்பை வெளிப்படுத்துவதைப்போல இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டினாள். “உனக்கு இருப்பது மனிதர்களுக்கு இருக்கக்கூடிய ஆன்மா.” அவள் சொன்னாள்: “நீ அதை விட்டுவிட்டு வந்தால் மட்டுமே, நான் உன்னைக் காதலிக்க முடியும்.”

"இந்த ஆன்மாவைக் கொண்டு எனக்கு என்ன பயன்? என்னால் அதைப் பார்க்க முடியவில்லை; தொடவும் முடியவில்லை. என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அப்படி இருக்கும் போது, நான் அதை விட்டு வந்தால் என்ன பிரச்சினை வரப் போகிறது? இன்னும் சொல்லப் போனால்- அப்படிச் செய்வதுதான் எனக்கு நல்லதும்கூட...” மீனவன் சிந்தித்தான். சந்தோஷத்தால் அவனுக்குள்ளிருந்து ஒரு சத்தம் வெளியே வந்தது. வண்ணம் பூசப்பட்ட படகிலிருந்து எழுந்து அவன் கடல் கன்னியை நோக்கித் தன்னுடைய கைகளை நீட்டினான்.

“ஆன்மாவை உதறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். நீ என்னுடைய மணமகளாக ஆவாய் அல்லவா? நான் மணமகனாகவும்... இந்தக் கடலின் ஆழங்களுக்குள் நாம் இருவரும் சந்தோஷமாக வாழ்வோம். நீ பாடல்களின் மூலம் கூறியவை அனைத்தையும் எனக்குக் காட்டவேண்டும். நீ விரும்பும் வண்ணம் நானும் நடந்து கொள்வேன். இனி நாம் வாழ்க்கையில் பிரியவே மாட்டோம்” என்றான் அவன்.

அவனுடைய சந்தோஷத்திற்காக அந்த கடல் கன்னி சிரித்தாலும், அவள் தன்னுடைய முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டிருந்தாள்.

"ஆனால், என்னுடைய ஆன்மாவை எப்படி உதறுவது?” இளைஞனான மீனவன் சிந்தித்தான். “சொல்... எப்படி அதைச் செய்ய முடியும்? வழி தெரிந்தால் போதும்... நான் அதை உதறி விடுவேன்...”

“ஹா! எனக்குத் தெரியாது.” கடல் கன்னி சொன்னாள்: “கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆன்மா கிடையாது.” பதைபதைப்புடன் அவனைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, அவள் கடலுக்குள் மறைந்தாள்.

3

டுத்த புலர்காலைப் பொழுதில், சூரியன் உதயமாகி ஒரு அடி உயரம் எழுவதற்கு முன்பே, இளைஞனான மீனவன் புறப்பட்டான். அவன் பாதிரியாரின் வீட்டுக்குச் சென்று, கதவை மூன்று முறை தட்டினான்.

சாளரத்தின் வழியாக எட்டிப் பார்த்த பாதிரியார், வந்திருப்பது யார் என்பதைத் தெரிந்துகொண்டு, கதவின் தாழ்ப்பாளை நீக்கிவிட்டு சொன்னார். “வா.... உள்ளே வா...

இளைஞனான மீனவன் உள்ளே சென்று, தரையில் விரிக்கப்பட்டிருந்த புல்லாலான பாயில் முழங்காலிட்டு அமர்ந்தான். “ஃபாதர்.... நான் ஒரு கடல் வாழ் உயிரினத்தைக் காதலிக்கிறேன். மனதில் இருக்கும் ஆசை நிறைவேறுவதற்குத் தடையாக என்னுடைய ஆன்மா இருக்கிறது. ஆன்மாவை நான் எப்படி அகற்றுவது? சொல்லுங்கள்... உண்மையாகச் சொல்வதாக இருந்தால் எனக்கு அதனால் எந்தவொரு பயனும் இல்லை. என்னால் ஆன்மாவைப் பார்க்க முடியவில்லை. அதைத் தொடவும் முடியவில்லை. அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது...” வேத நூலை வாசித்துக் கொண்டிருந்த பாதிரியாருக்கு முன்னால் மீனவன் தன்னுடைய பிரச்சினையைக் கூறினான்.

அதைக் கேட்டு பாதிரியார் நெஞ்சில் அடித்துக் கொண்டார். “கஷ்டம் கஷ்டம்! உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. ஒருவேளை.... மூளையில் கோளாறு உண்டாக்கும் விஷச் செடிகள் எதையாவது சாப்பிட்டு விட்டாயா? மனித உடலில் மிகவும் புனிதமான பகுதியே ஆன்மாதான். கடவுள் நமக்கு நேரடியாகத் தந்திருக்கும் ஆன்மாவை மிகவும் புனிதத் தன்மையுடன் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். மனித ஆன்மாவை விட மதிப்புள்ள வேறு எதுவுமே இல்லை. குழந்தை, இன்னும் சொல்லப் போனால்- அதோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய அளவிற்கு வேறு எதுவுமே பூமியில் இல்லை. இந்த பூமியிலுள்ள தங்கம் முழுவதிற்கும் நிகரானது- மன்னர்களின் ரத்தினங்களைவிட விலை மதிப்பு கொண்டது... அதனால்... என் குழந்தையே! இதைப் பற்றி இதற்குமேல் சிந்திப்பதற்கே இல்லை.


அது மன்னிக்க முடியாத பாவம்! இன்னும் கூறுவதாக இருந்தால், கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அவை நாசமாகப் போகின்றவை. அவற்றுடன் சேர்ந்து போகும் யாராக இருந்தாலும், அவர்கள் நாசமாகிப் போவார்கள். அவை தவறானது எது- சரியானது எது என்பதைத் தெரிந்துகொள்ளும் சக்தி இல்லாத உயிரினங்கள்!

அவற்றுக்காக தெய்வம் உன்னுடைய நேரத்தை வீணாக்க மாட்டார்.”

பாதிரியாரிடமிருந்து வெளிப்பட்ட அந்த ஆவேசமான வார்த்தைகள் மீனவனின் கண்களை ஈரமாக்கி விட்டன. முழங்காலிட்டு அமர்ந்திருந்த அவன் எழுந்தான். “ஃபாதர்.... காட்டில் வாழும் ஃபான்களும் (ஆட்டின் சரீரத்தையும், மனிதனின் தலையையும், அதில் கொம்பையும் கொண்டிருக்கும் கிரேக்க கிராம தேவதை) பாறைகளின்மீது அமர்ந்து பொன்நிற வீணையை மீட்டிக் கொண்டிருக்கும் கடல்வாழ் மனிதர்களும் சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களில் ஒருவனாக நானும் ஆவதற்கு என்னை அனுமதியுங்கள். இனி.... என்னுடைய ஆன்மாவைப் பற்றிக் கூறுவதாக இருந்தால்... எனக்கும், நான் ஆசைப்படுவதற்கும் இடையில் நின்றுகொண்டிருக்கும் ஆன்மாவால் என்ன பிரயோஜனம்?” அவன் கேட்டான்.

“மேலோட்டமான இப்படிப்பட்ட காதல்கள் விலக்கப்பட வேண்டியவை.” நெற்றியைச் சுளித்துக் கொண்டே பாதிரியார் தன்னுடைய அறிவுரையைத் தொடர்ந்து கூறினார். “தெய்வம் தன்னுடைய உலகத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்னால் இப்படிப்பட்ட விலக்கப்பட வேண்டிய துன்பங்கள் நிறைந்த காரியங்களை அனுபவிக்கிறாய். காட்டில் இருக்கும் ஃபான்கள் சபிக்கப்பட்டவை. காடுகளில் பாடல் பாடிக்கொண்டிருப்பவை சபிக்கப்பட்டவை. நானும் இரவு நேரங்களில் அவற்றின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஜெபமாலையிலிருந்து என்னை வசீகரிப்பதற்கு அவை முயற்சித்திருக்கின்றன. அவை என்னுடைய சாளரங்களை வந்து தட்டி, விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றன. அர்த்தமற்ற விஷயங்கள் உண்டாக்கும் சந்தோஷத்தைப் பற்றி அவை என்னுடைய காதுக்குள் முணுமுணுத்திருக்கின்றன. என்னை கடலின் அலைகளை நோக்கி பிடித்து இழுத்திருக்கின்றன. அவை நாசமாகப் போகின்றவை. நான் உன்னிடம் கூறுகிறேன்- அவை அழிந்து போனவை. அவற்றுக்கு சொர்க்கமோ நரகமோ கிடையாது. எங்கே இருந்தாலும், அவை கடவுளின் பெயரைக் கூறக்கூடியவை அல்ல.

“ஃபாதர், என்ன பேசுகிறோம் என்று உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் என்னுடைய வலையில் ராஜகுமாரி ஒருத்தி சிக்கிக் கொண்டாள். புலர்காலைப் பொழுதின் நட்சத்திரத்தை விட பிரகாசமான நிறத்தைக் கொண்டவள். சந்திரனைவிட வெண்மையானவள். அவளுக்காக நான் என்னுடைய ஆன்மாவைத் துறக்கத் தயாராக இருக்கிறேன். அவளுடைய காதலுக்காக சொர்க்கத்தைக்கூட நான் கைவிடத் தயாராக இருக்கிறேன். நான் கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் என்பதைக் கூறுங்கள். அதற்குப் பிறகு அமைதியாகப் போவதற்கு என்னை அனுமதியுங்கள்.

“போ.... இங்கிருந்து போ...” ஃபாதர் உரத்த குரலில் கத்தினார்: “உன்னுடைய காதலி நாசமாகப் போனவள். அவளுடன் சேர்ந்து நீயும் அழிந்து போவாய். அவ்வளவுதான்...” அவர் அவனுக்கு ஆசீர்வாதம் எதுவும் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக அவனைப் பிடித்து அவர் வெளியேற்றினார்.

அங்கிருந்து வெளியே வந்த மீனவன் தலையைத் தொங்கப் போட்டவாறு, கவலையுடன் சந்தையை நோக்கி நடந்தான்.

தூரத்திலிருந்து அவன் வருவதைப் பார்த்த வர்த்தகர்கள் தங்களுக்குள் மெதுவான குரலில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஒருவன் அவனைப் பெயர் சொல்லி அழைத்து நிறுத்தினான். தொடர்ந்து கேட்டான். “டேய், உன்னிடம் விற்பதற்கு என்ன இருக்கிறது?

“நான் என்னுடைய ஆன்மாவை விற்க வேண்டும்.” அவன் சொன்னான்: “அதை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். அதனால் எனக்கு என்ன பயன்? அதைச் சிறிதுகூட பார்க்கவும் முடியவில்லை. தொடவும் இயலவில்லை. எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை.”

ஆனால், அதைக் கேட்டு வர்த்தகர்கள் அவனைக் கிண்டல் பண்ணினார்கள். “எங்களுக்கு எதற்கு மனிதனின் ஆன்மா? ஒரு வெள்ளித் துண்டின் விலைகூட அதற்கு இல்லை. உன்னுடைய சரீரத்தை எங்களுக்குத் தா- ஒரு அடிமையாக உனக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவித்து, விரலில் மோதிரம் அணிவித்து, நாங்கள் மகாராணியின் சேவகனாக உன்னை ஆக்குகிறோம். ஆன்மாவைப் பற்றி மட்டும் பேசாதே. எங்களுக்கு அது ஒரு விற்பனை செய்ய முடியாத சரக்கு.”

"இது என்ன ஒரு கஷ்டம்! இந்த உலகத்திலுள்ள தங்கம் முழுவதையும் விட விலைமதிப்பு கொண்டது மனித ஆன்மா என்று சற்று நேரத்திற்கு முன்பு பாதிரியார் கூறினார். இப்போது... இந்த வர்த்தகர்கள் கூறுகிறார்கள்- அதற்கு ஒரு வெள்ளித் துண்டின் விலைகூட இல்லை என்று!” இளைஞனான மீனவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான். அவன் சந்தையை விட்டு வெளியே வந்தான். கடலை நோக்கி நடந்தான். இனி என்ன செய்வது என்ற சிந்தனையில் மூளை குழம்ப ஆரம்பித்தது.

4

ஸாம் ஃபயர் (ஒரு கடலில் வளரும் செடி. அதன் இலையைப் பறித்து ஊறுகாய் போடுவார்கள்) இலைகளைப் பறிப்பதற்காக செல்லும் தன் நண்பன், ஒரு பெண் மந்திரவாதியைப் பற்றி முன்பு எப்போதோ கூறியதை மதிய நேரம் ஆனபோது மீனவன் நினைத்துப் பார்த்தான். மந்திரச் செயல்களில் மிகவும் கை தேர்ந்த இளம்பெண்ணான அந்த மந்திரவாதி தீவின் எல்லையிலேயோ குகைக்குள்ளேயோ இருக்கிறாள். தன்னுடைய ஆன்மாவைத் துறக்க வேண்டுமென்ற ஆர்வத்திலிருந்த அந்த இளைஞன் நேரத்தை வீண் செய்யாமல் அந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டான். அவன் கடற்கரையின் வழியாக மிகவும் வேகமாக ஓடினான். ஒரு மணல் மேடு இருந்தது. உள்ளங்கை அரித்தபோது, யாரோ வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பெண் மந்திரவாதி குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே எழுந்து, தன்னுடைய சிவப்பு நிறக் கூந்தலை அவிழ்த்து விட்டாள். அவிழ்ந்து கிடந்த செந்நிறத் தலைமுடியுடனும், மலர்ந்து விரிந்த பூக்கள் கொண்ட ஹெம்லாக் செடியைக் கையில் வைத்தபடியும் அவள் குகையின் வாயிற் பகுதியிலேயே நின்றிருந்தாள்.

“உனக்கு என்ன குறை? சொல்! உனக்கு என்ன வேண்டும்? அவள் கேட்டாள். குன்றின்மீது ஏறி அங்கு வந்து நின்ற மீனவன் அவளுக்கு முன்னால் தலைகுனிந்து வணங்கியபோது, அவள் உரத்த குரலில் கூறினாள்: “தவறுதலாகக் காற்று வீசும்போது, உன்னுடைய வலையில் மீன்கள் வந்து நுழைய வேண்டுமா? என்னுடைய கையில் ஒரு புல்லாங்குழல் இருக்கிறது. அதை எடுத்து ஊதினால், மத்தி மீன்கள் கூட்டம் கூட்டமாக தீவை நோக்கி நீந்தி வரும். ஆனால், அதற்கு ஒரு செலவு இருக்கிறது, குழந்தை! உனக்கு என்ன குறை? சொல்... என்ன வேண்டும்? கடுமையான காற்று வீசி கப்பல் மூழ்க வேண்டுமா? அல்லது புதையல் இருக்கும் அறைகளைக் கரையின் அருகில் வர வைக்க வேண்டுமா?


காற்றைவிட பலமான ஒருவரை வணங்கும் எனக்கு, காற்றின் கைகளில் இருப்பதைவிட பலமான- கடுமையான காற்று இருக்கிறது. நீரை பலமாக எழச் செய்து, பெரிய கப்பல்களைக்கூட கடலின் ஆழங்களுக்குள் போகச் செய்ய என்னால் முடியும். ஆனால், இதற்கெல்லாம் செலவு இருக்கிறது, குழந்தை! செலவுகள் இருக்கின்றன. உனக்கு என்ன வேண்டும்? சொல்... அடிவாரத்தில் மலரக்கூடிய ஒரு மலரை எனக்குத் தெரியும். வேறு யாருக்கும் தெரியாத மலர் அது. அதன் இலைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். மலரின் மத்தியில் ஒரு நட்சத்திரம் இருக்கும்.

அதன் ஓரப்பகுதி பாலைப்போல வெண்மையாக இருக்கும். நீ அதைக் கொண்டுபோய் மகாராணியின் சொரசொரப்பான உதடுகளில் சற்று தொடும்படி செய்து பார். இந்த உலகத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் அவள் உன்னுடன் சேர்ந்துவருவாள். மகாராஜாவின் பட்டு மெத்தையில் படுத்துக் கிடந்தாலும், அதிலிருந்து எழுந்து, இந்த பூமியின் எந்த இடத்திற்கும் உன்னைப் பின்தொடர்ந்து வருவாள். ஆனால், அழகான பையனே! இதற்கெல்லாம் விலை இருக்கிறது. நல்ல விலை...

உனக்கு என்ன குறை? சொல்... நான் ஒரு தவளையைப் பிடித்து சூப் வைத்துத் தருகிறேன். நீ அதைக் கொண்டு போய் தூங்கிக் கொண்டிருக்கும் எதிரியின்மீது தெளித்துப் பார். அவன் ஒரு கறுப்பு நிறப் பாம்பாக மாறிவிடுவான். அதற்குப் பிறகு அவனுடைய தாயே அவனை அடித்துக் கொன்றுவிடுவாள். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இறந்துபோனவனைக் காட்டுவதற்கும் என்னால் முடியும். சொல்... உனக்கு என்ன குறை? உனக்கு என்ன வேண்டுமென்று கூறு. அழகிய பையா! சொல்... உனக்கு அதை நிறைவேற்றித் தருகிறேன். நீ அதற்கு பணம் தந்தால் போதும்.”

“எனக்கு ஒரே ஒரு சிறிய விருப்பம் மட்டுமே இருக்கிறது.” இளைஞனான மீனவன் சொன்னான்: “ஆனால், பாதிரியார் கோபமடைந்து என்னை வெளியே போகும்படி கூறிவிட்டார். என்னுடைய விருப்பம் பெரிய ஒரு விஷயமில்லை என்றாலும், வர்த்தகர்கள் என்னை கிண்டல் செய்து, கிளம்பிச் செல்லும்படி கூறிவிட்டார்கள். இதுவரை அவர்கள் அந்த விருப்பத்தை நிறைவேற்றி வைக்கவும் இல்லை. மனிதர்கள் எல்லாரும் கெட்ட பெண் மந்திரவாதி என்று அழைத்தாலும், நான் உங்களைத் தேடி வந்ததற்குக் காரணம் அதுதான். சரி... உங்களுடைய கட்டணம் எவ்வளவு?”

“முதலில் உன்னுடைய விருப்பம் என்ன என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்.” அவன் அருகில் வந்த பெண் மந்திரவாதி கூறினாள்.

“என்னுடைய ஆன்மாவை என்னிடமிருந்து நீக்கவேண்டும்.” மீனவன் சொன்னான்.

அதிர்ச்சியடைந்து நடுங்கிய பெண் மந்திரவாதி வெளிறிப் போய்விட்டாள். அவள் நீல நிறத்திலிருந்த தன் மேலாடையைக் கொண்டு முகத்தை மறைத்தாள். “புத்திசாலி! புத்திசாலி... அது ஒரு பயங்கரமான விஷயம்தான்...” அவள் முணுமுணுத்தாள்.

அவன் தன்னுடைய சிவப்பு நிறத் தலைமுடி கலையும் அளவிற்கு விழுந்து விழுந்து சிரித்தான். “எனக்கு இந்த ஆன்மா ஒரு பொருட்டே அல்ல. என்னால் அதைப் பார்க்கவும் முடியவில்லை; தொடவும் முடியவில்லை. அதைப் பற்றி தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.” அவன் சொன்னான்.

“இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் ஒரு வழியைக் காட்டினால், நீ எனக்கு என்ன தருவாய்?” தன்னுடைய அழகான நீல நிறக் கண்களால் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டே அந்தப் பெண் மந்திரவாதி கேட்டாள்.

“ஐந்து தங்கத் துண்டுகள் தருகிறேன். என்னுடைய வலையைத் தருகிறேன். நான் வசிக்கும் வீட்டையும், வண்ணம் பூசப்பட்ட படகையும் தருகிறேன்... எனக்குச் சொந்தமாக என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் தருகிறேன்... ஆன்மாவை விலக்குவது எப்படி என்பதைப் பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள்.”

அதைக்கேட்ட பெண் மந்திரவாதி ‘ஹெம்லாக்’ கிளையை எடுத்து அவனைத் தடவிக் கொண்டே சொன்னாள்: “வசந்த காலத்தின் தளிர் இலைகளைத் தங்கமாக மாற்ற என்னால் முடியும். நான் சற்று மனம் வைத்தால், சந்திரனின் ஒளிக் கீற்றுகளை வெள்ளி நூல்களாக மாற்ற முடியும். இந்த பூமியிலிருக்கும் எல்லா மன்னர்களையும்விட, அவர்களுடைய சாம்ராஜ்ஜியங்களைவிட மிகப்பெரிய செல்வந்தனை நான் பூஜித்து வணங்கிக் கொண்டிருக்கிறேன். உனக்குத் தெரியுமா?”

“பொன்னும் வெள்ளியும் வேண்டாம் என்றால் அதற்குப் பிறகு நான் வேறு எதைத் தருவது?” மீனவன் பரிதாபமாகக் கேட்டான்.

வெளுத்து, மெலிந்து காணப்பட்ட கைகளால் அந்தப் பெண் மந்திரவாதி அந்த இளைஞனின் தலை முடியை வருடினாள். “அழகான பையனே! நீ என்னுடன் சேர்ந்து நடனமாட வேண்டும்.” ஒரு சிரிப்புடன் அவள் முணுமுணுத்தாள்.

“அவ்வளவுதானா?” ஆச்சரியத்துடன் துள்ளியெழுந்த அந்த இளைஞன் கேட்டான்.

“அவ்வளவுதான்...” மீண்டும் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள் சொன்னாள்.

“அப்படியென்றால், இன்று ஆதவன் மறையும் நேரத்தில் நாம் ஏதாவதொரு இடத்தில் நடனமாடுவோம். அதற்குப் பிறகு நீங்கள் எனக்கு அந்த வித்தையைக் கற்றுத் தரவேண்டும்.” என்றான் அவன். அவள் தலையை ஆட்டினாள். “முழு நிலவும் உதயமான பிறகு மட்டுமே... உதயம் முழுமையான பிறகு மட்டுமே...” அவள் சொன்னாள். சுற்றிலும் கடைக் கண்களால் பார்த்த அவள் அந்த இடம் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தாள்.

ஒரு நீலநிறக் கிளி ஓசை உண்டாக்கியவாறு கூட்டுக்குள்ளிருந்து பறந்து உயர்ந்து சென்றது. அது குகையின் மேற்பகுதியில் வட்டமிட்டுப் பறந்தது. புள்ளிகள் காணப்பட்ட மூன்று கிளிகள் காய்ந்த புல்லில் நடந்து கொண்டிருந்தன. கீழே, பாறைகளின்மீது வந்து மோதிக்கொண்டிருந்த கடல் அலைகளின் ஓசையை நீக்கிவிட்டுப் பார்த்தால், வேறு எந்தவொரு சத்தமும் அங்கு கேட்கவில்லை.

அவனுடைய முகத்தை தன்னை நோக்கிப் பிடித்திழுத்து நெருங்கியிருக்கும்படி செய்து, அவனுடைய செவியைத் தன்னுடைய உதடுகளுடன் சேர்த்து, அவள் முணுமுணுத்தாள்:

“இன்று இரவு நீ மலை உச்சிக்கு வரவேண்டும். இன்று ஒரு ‘சாபத்’ இரவு. அவர் அங்கு இருப்பார்.”

அவளிடமிருந்து வேகமாக விலகிய மீனவன் அவளையே பார்த்தான். மீண்டும் தன்னுடைய வெண்மையான பற்கள் வெளியே தெரியும்படி சிரித்துக்கொண்டே அவளிடம் அவன் கேட்டான்.

“அவர் அங்கு இருப்பார் என்று கூறுகிறீர்களா? யார்? நீங்கள் யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?”

“ஓ! அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.” அவள் கூறினாள்.

“இன்று இரவு அங்கே வா. ஓக் மரத்திற்கு அடியில் என்னை எதிர்பார்த்துக் காத்திரு. உன்னை நோக்கி ஒரு கருப்பு நிற நாய் வந்தால், ஒரு கம்பை எடுத்து வீசு. அது ஓடிப்போய் விடும். ஒரு ஆந்தை உன்னிடம் பேசுவதற்கு வந்தால், மறுத்து எதுவும் கூறாமல் இரு. சந்திரோதயம் முழுமையாக நடந்தபிறகு, நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வேன். அதற்குப் பிறகு நாம் இருவரும் சேர்ந்து அந்தப் புல்வெளியில் நடனமாடுவோம்.”


“ஆனால், என்னுடைய ஆன்மாவை என்னிடமிருந்து அகற்றுவது எப்படி என்பதை எனக்குக் கூறவேண்டும். அதைக் கூறுவதாக சத்தியம் செய்து தர முடியுமா?” அவன் கேட்டான். அவள் சூரிய வெளிச்சத்தை நோக்கி நகர்ந்து நின்றாள். அவளுடைய சிவப்பு நிறத் தலைமுடிகளைப் பறக்கச் செய்து கொண்டு காற்று கடந்து சென்றது.

“ஆட்டின் குளம்புகளின்மீது ஆணையிட்டு சத்தியம் செய்கிறேன். நான் அதை உனக்குக் கூறுவேன்.” அவள் வாக்குறுதி அளித்தாள்.

“பெண் மந்திரவாதிகளிலேயே மிகவும் நல்லவள் நீங்கள்தான்.” மீனவன் உரத்த குரலில் சத்தமாகக் கூறினான்: “இன்று இரவு மலையின் உச்சியில் நான் உங்களுடன் சேர்ந்து நடனமாடுவேன். நிச்சயமாக... இந்த அளவிற்கு சாதாரணமான ஒரு விஷயத்தைப் பிரதிபலனாகக் கேட்கும்போது, அதை நிச்சயமாக நான் நிறைவேற்றுவேன்.” அவளுக்கு முன்னால் தொப்பியைக் கழற்றி, குனிந்து வணங்கிவிட்டு, அவன் சந்தோஷத்துடன் கீழ்நோக்கி வேகமாக நடந்து சென்றான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த பெண் மந்திரவாதி, தன் பார்வையிலிருந்து அவன் மறைந்த பிறகு குகைக்குள் நுழைந்தாள். தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட பெட்டிக்குள்ளிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து, அதன் சட்டத்தைக் கையால் பற்றினாள். ப்ளாஸின் மரத்தின் கொம்பை எடுத்து, நெருப்பு பற்ற வைத்து, அதை எரிய வைத்தாள். தொடர்ந்து அவள் புகை மண்டலத்தின் வழியாகக் கூர்ந்து பார்த்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, கோபமடைந்து, தன்னுடைய கையின் முஷ்டியை இறுக்கிக் கொண்டு அவள் முணுமுணுத்தாள். "அவன் எனக்குச் சொந்தமானவாக வேண்டும். அவளைப் போல நானும் நல்லவள்தான்.”

5

ன்று இரவு, வானத்தில் நிலவு உதயமானபோது, அந்த இளைஞனான மீனவன் மலையின் உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் அங்கு சென்று மரத்திற்குகீழே அவளை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அதற்குக் கீழே, மினுமினுப்பான உலோகத்தாலான கவசத்தைப்போல நீல நிறக் கடல் தெரிந்தது. அங்கு... தூரத்தில்... கடலின் உட்பகுதிக்கு மீன்களைப் பிடிப்பதற்காகச் சென்ற படகுகள் நிழல்களைப்போலத் தெரிந்தன. பிரகாசித்துக் கொண்டிருந்த- மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட பெரிய ஆந்தை ஒன்று வந்து அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்தது. ஆனால் அவன் எதுவும் பேசாமல் இருந்தான். ஒரு கறுப்பு நிற நாய் முனகியவாறு அவனை நோக்கி வர, ஒரு மரத்தின் கொம்பை எடுத்து வீசியதும், அது கத்திக் கொண்டே திரும்பிச் சென்றது.

நள்ளிரவு நேரம் ஆனபோது, பெண் மந்திரவாதிகள் வவ்வால்களைப் போல பறந்துவர ஆரம்பித்தார்கள். “ஃப்யூ...” தரையில் இறங்கிய அவர்கள் ஓசை உண்டாக்கினார்கள். “நமக்கு அறிமுகமில்லாத யாரோ இங்கே இருக்கிறார்கள்.” வாசனை பிடித்த அவர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டு, ஒருவருக்கொருவர் சைகைகள் காட்டிக் கொண்டார்கள். இறுதியாக காற்றில் இப்படியும் அப்படியுமாக அசைந்து கொண்டிருந்த தலைமுடியைக் கொண்ட அந்த இளம் பெண் மந்திரவாதி வந்து சேர்ந்தாள். மயிலின் கண்களைக் கொண்டு சேர்த்து தைக்கப்பட்ட, பொன் வேலைப்பாடுகள் கொண்ட பட்டாடையும், தலையில் பச்சை நிற ‘வில்லீஸ்’ தொப்பியையும் அணிந்து அவள் வந்திருந்தாள்.

“அவன் எங்கே? அந்த ஆள் எங்கே?” அவளைப் பார்த்ததும், மற்ற பெண் மந்திரவாதிகள் ஆரவாரம் செய்தார்கள். ஆனால், அவள் வெறுமனே சிரிக்க மட்டும் செய்தாள்... ஓக் மரத்தின் அடிப்பகுதியை நோக்கி ஓடிய அவள் அவன் கையைப் பிடித்து, நிலவு வெளிச்சத்திற்கு அவனைக் கொண்டு வந்தாள். தொடர்ந்து அவர்கள் அங்கு நடனமாட ஆரம்பித்தார்கள்.

கைகளைக் கோத்துக் கொண்டு, வட்டமிட்டு சுற்றிக்கொண்டே அவர்கள் நடன எட்டுகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவர்களுக்கு மத்தியில் ஒரு குதிரையின் குளம்போசை கேட்டது. ஆனால், குதிரைகள் எதுவும் அங்கு தென்படவில்லை. மீனவனுக்குச் சிறிது அச்சம் உண்டாகாமல் இல்லை.

“வேகம்... வேகம்...” பெண் மந்திரவாதி உரத்த குரலில் கூறினாள். அவளுடைய கைகள் அந்த இளைஞனின் தோளிலும் கழுத்தைச் சுற்றியும் இருந்தன. அவளுடைய மூச்சின் வெப்பம் அவன் முகத்தின்மீது பட்டுக் கொண்டிருந்தது.

“வேகம்... இன்னும் வேகம்” அவள் கத்தினாள். தன்னுடைய கால்களுக்கு கீழே பூமி சுற்றுவதைப் போலவும், மூளை கலங்குவதைப்போலவும் அவனுக்குத் தோன்றியது. ஏதோ கெட்ட சக்திகளின் பாதிப்பு உண்டாகியிருப்பதைப்போல அவனுக்கு பயம் உண்டாக ஆரம்பித்தது. இறுதியில் அங்கிருந்த ஒரு பாறையின் நிழலில், முன்பு இல்லாமலிருந்த ஒரு உருவம் நின்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான்.

‘ஸ்பானிஷ்’ பாணியில் தைக்கப்பட்ட, வில்லீஸாலான கருப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு ஆண் அங்கு நின்றிருந்தான். அவனுடைய முகம் மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டாலும், உதடுகள் செம்பருத்தி மலரைப்போல சிவப்பாக இருந்தன. சோர்வுடன் காணப்பட்ட அவன் சாய்ந்து நின்று கொண்டு, தன்னுடைய கத்தியின் கைப்பிடியைப் பிடித்தவாறு, அலட்சியமாக அதை ஆட்டிக் கொண்டிருந்தான். அருகிலேயே இறகு செருகப்பட்ட தொப்பியும், கையுறையும் இருந்தன. அவன் தன்னுடைய தோளில் ஒரு சிறிய மேலாடையையும், வெளுத்து மெலிந்த தன் கைகளில் வளையத்தையும் அணிந்திருந்தான். கண் இமைகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. வலையில் சிக்கிய மிருகத்தைப்போல, மீனவன் அவனையே பார்த்தான். இறுதியில் அவர்களுடைய கண்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. தான் நடனமாடும் இடங்களிலெல்லாம் அவனுடைய கண்கள் பின்தொடர்ந்து வருவதைப்போல அவன் உணர்ந்தான். பெண் மந்திரவாதி சத்தம் உண்டாக்குவதை அவன் கேட்டான். அவன் அவளுடைய இடையைப் பிடித்து, அவளைச் சுழற்றினான். திடீரென்று, மரங்களுக்கு மத்தியிலிருந்து நாயொன்று வந்ததைத் தொடர்ந்து, எல்லாரும் நடனத்தை நிறுத்தினார்கள். பிறகு இரண்டிரண்டு பேர்களாக நடந்து சென்று, முழங்காலிட்டு அமர்ந்து, அந்த மனிதனின் கைகளில் முத்தமிட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு ஜோடியும் அப்படிச் செய்தபோது, அவனுடைய உதடுகளில் ஒரு பெருமை கலந்த புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், அங்கு ஒரு முக்கிய செயலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவன் மீனவனையே கவனித்துக் கொண்டிருந்தான்.

“வா.... நாமும் வணங்குவோம்.” பெண் மந்திரவாதி குரலைத் தாழ்த்திக் கொண்டு கூறினாள். அவள் அவனை அந்த இடத்தை நோக்கி நகர்த்தினாள். அவளுடைய வற்புறுத்தல் அதிகமானபோது, மீனவனின் மனதிலும் அப்படிச் செய்ய வேண்டுமென்ற விருப்பம் உண்டானது. அவன் மிகவும் அமைதியாக அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். ஆனால், அந்த மனிதனுக்கு அருகில் வந்ததும், என்ன காரணமென்று தெரியவில்லை- அவன் தன்னுடைய நெஞ்சில் சிலுவையை வரைந்து, கடவுளின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.


மீனவன் அந்தச் செயலைச் செய்ததும், மற்ற பெண் மந்திரவாதிகள் பயந்து போய், கழுகுகளைப் போல உரத்த குரலில் கத்திக்கொண்டு பறந்து செல்ல ஆரம்பித்தார்கள். அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த வெளிறிய முகம் கொண்ட மனிதன் வேதனையால் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் ஒரு சிறிய மரக் கட்டையின்மீது ஏறி நின்று சீட்டி அடித்தவுடன், வெள்ளியைப்போல மின்னிக்கொண்டிருந்த ஒரு பருந்து அங்கு வந்தது. அவன் அதன் மீதேறி மிகுந்த கவலையுடன் மீனவனையே சிறிது நேரம் பார்த்தான்.

சிவந்த நிறத்தில் தலைமுடியைக் கொண்டிருந்த பெண் மந்திரவாதியும் பறந்து செல்லத் தயாரானபோது, மீனவன் அவள் கையை இறுகப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.

“என்னை விடு... நான் போக வேண்டும்.” அவள் கெஞ்சினாள். “நீ செய்யக் கூடாததைச் செய்தாய். கூறக் கூடாததைக் கூறினாய்.”

“இல்லை...” அவன் சொன்னான்: “எனக்கு நீ அந்த ரகசியத்தைக் கூறவில்லையென்றால், நான் உன்னைப் போகவிடமாட்டேன்.”

“என்ன ரகசியம்?” நுரையும் எச்சிலும் ஒழுகிக் கொண்டிருந்த தன்னுடைய உதடுகளைக் கடித்துக் கொண்டும், ஒரு காட்டுப் பூனையைப்போல அவனுடைய கையிலிருந்து போராடிக் கொண்டும் அவள் கேட்டாள்.

“அது உனக்குத் தெரியும்...”

அவளுடைய அடர்த்தியான பச்சை நிறத்திலிருந்த கண்கள், நீரால் நிறைந்து விட்டன. அவள் சொன்னாள்: “என்னிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்... அந்த ஒன்றே ஒன்றை மட்டும் தவிர...”

மீனவன் குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே, மேலும் சற்று பலமாக அவளைப் பிடித்து நிறுத்தினான்.

தப்பித்துச் செல்வதற்கு வேறு எந்தவொரு வழியும் இல்லையென்ற நிலைமை உண்டானதும், அவனுக்கு முன்னால் அவள் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். “நான் ஒரு அழகான பெண் அல்லவா? கடலின் பிள்ளைகளைப்போல நல்லவள் அல்லவா? நீலநிறக் கடலில் வாழும் எந்தவொரு உயிரினத்தைப்போலவும், பிரகாசமான தோற்றத்துடன் இருப்பவள் அல்லவா?” தொடர்ந்து அவனைப் புகழ்ந்து கூறி, அவனை வீழ்த்துவதற்கான முயற்சிகளைச் செய்தாள். அவள் தன்னுடைய முகத்தை அவனுக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்தாள்.

ஆனால், தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி அவளைப் பின்னோக்கித் தள்ளியபடியே அவன் உரத்த குரலில் சத்தமிட்டான்:

“எனக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லையென்றால், கபடத்தனங்கள் நிறைந்த பெண் மந்திரவாதியான உங்களை நான் வெட்டி துண்டு துண்டாக்கி விடுவேன்.”

யூதச் செடியின் மொட்டைப்போல வெளிறிப் போய் காணப்பட்ட அவள் அதிர்ச்சியடைந்து நடுங்கிக்கொண்டே முணுமுணுத்தாள்: “அப்படியென்றால்... இது உன்னுடைய ஆன்மா... என்னுடையதல்ல... அதைக் கொண்டுபோய் உனக்கு விருப்பமுள்ளபடி செய்துகொள்...” அந்தப் பெண் மந்திரவாதி தன்னுடைய பைக்குள்ளிருந்து, கைப்பிடியில் பாம்பின் தோல் சுற்றப்பட்டிருந்த கத்தியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“இதன் பிரயோஜனம் என்ன?” அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

அவள் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அப்போது அவளுடைய முகத்தில் அச்சத்தின் நிழல் பரவிக் காணப்பட்டது. நெற்றியில் விழுந்து கிடந்த தலைமுடியை பின்னோக்கி இழுத்து விட்டுக்கொண்டே அவள் சொன்னாள்: “உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- மனிதர்கள் நிழல் என்று குறிப்பிடுவது உடலின் நிழலை அல்ல; அது ஆன்மாவின் சரீரம். நீ கடற்கரைக்குச் சென்று, நிலவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நில்... பிறகு உன்னுடைய பாதத்திலிருந்து அந்த நிழலை- உன்னுடைய ஆன்மாவை வெட்டி நீக்கு... அந்த வகையில் நீ ஆன்மாவை விலக்கிவிட முடியும்...”

இளைஞனான மீனவன் பரபரப்படைந்து விட்டான். “இது உண்மையா?”

அவன் பெண் மந்திரவாதியின்மீது இருந்த தன் பிடியை விட்டுவிட்டு மலையின் எல்லைக்குச் சென்று, கத்தியைத் தன்னுடைய இடுப்பில் செருகிக் கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தான்.

அப்போது அவனுக்குள் இருந்த ஆன்மா வெளியே வந்து கேட்டது. “நில்... நான் இவ்வளவு காலம் உன்னுடன் சேர்ந்து, உன்னுடைய பணியாளாக இருந்திருக்கிறேன். என்னை வெளியே விட்டெறியும் அளவிற்கு நான் என்ன துரோகச் செயலைச் செய்து விட்டேன்?”

மீனவன் சிரித்தான்: “நீ எனக்கு எந்தவொரு துரோகத்தையும் செய்யவில்லை. ஆனால், எனக்கு நீ வேண்டாம்... அந்த உலகம் மிகவும் பெரியது... விசாலமானது. அங்கு சொர்க்கம், நரகம் இருக்கிறது. இவை இரண்டுக்குமிடையே உள்ள தீவும் இருக்கிறது. உனக்கு விருப்பப்படும் ஏதாவதொரு இடத்திற்கு நீ செல்லலாம். ஆனால், என்னைத் தொல்லைப்படுத்த வரவேண்டாம். என்னை என்னுடைய காதலி அழைக்கிறாள். நான் செல்கிறேன்...”

மீனவனுக்கும் ஆன்மாவிற்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் கடுமையாக இருந்தாலும், அவன் தன்னுடைய வாதத்தில் பாறையைப்போல உறுதியாக நின்றான். இறுதியில் அவர்கள் கீழே, கடற்கரையை அடைந்தார்கள்.

அங்கு, வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட கிரேக்க சிலையைப்போல நிலவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அவன் நின்றான். முன்னால் நிழலும் ஆன்மாவின் சரீரமும், பின்னால் தேன் நிறத்தைக் கொண்ட சூழ்நிலையில் நிலவும்...

“நீ என்னை வெளியேற்றியே ஆவது என்றால், இதயத்தையும் சேர்த்துக் கொடுத்துவிட்டுச் செல். குரூரம் நிறைந்த இந்த உலகத்தில் இதயமே இல்லாமல் என்னை விட்டெறிந்து விடாதே.” ஆன்மா மீனவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

“இதயத்தைக் கொடுத்து விட்டால், நான் எப்படிக் காதலிப்பேன்? இல்லை... அது முடியாது...” தலையை ஆட்டிக் கொண்டே மீனவன் சொன்னான்:

“என்னுடைய இதயம் என் காதலிக்குச் சொந்தமானது. அதைத் தர முடியாது...”

“அப்படியென்றால், நான் யாரையும் காதலிக்க வேண்டாமா?” ஆன்மா கேட்டது.

“இங்கேயிருந்து நகர்ந்து செல். நான் உன்னைப் பார்க்கவே தேவையில்லை. சீக்கிரமாகப் போ...” மீனவன் உரத்த குரலில் கத்தியவாறு பாம்பின் தோல் சுற்றப்பட்டிருந்த கத்தியை வெளியே எடுத்து கால்பகுதியிலிருந்த நிழலை வெட்டி நீக்கினான். அவனைப்போலவே இருந்த நிழல் எழுந்து நின்று, மீனவனையே பார்த்தது.

அவனோ சிறிது நிம்மதியுடன் பின்னால் நகர்ந்து நின்றுகொண்டு, கத்தியைத் திரும்பவும் உறைக்குள் போட்டான். “இங்கேயிருந்து சீக்கிரமாகப் போ. இனி உன் முகத்தைப் பார்க்கவேண்டிய நிலைமை வராமல் இருக்கட்டும்...” அவன் ஆன்மாவிடம் சொன்னான்.

“இல்லை... நாம் இனிமேலும் பார்த்தேதான் ஆகவேண்டும்...” ஆன்மா கூறியது. மிகவும் இனிமையான குரலில், உதடுகளை அசைக்காமலேயே இந்த வார்த்தைகளை அது உச்சரித்தது.

“எப்படி பார்ப்போம் என்கிறாய்? நீ எனக்குப் பின்னால் கடலின் ஆழத்திற்குள் வருவாயா?”  மீனவன் கேட்டான்.

“வருடத்திற்கு ஒருமுறை நான் இங்கு வந்து உன்னை அழைப்பேன்.” ஆன்மா கூறியது: “உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- நான்தான் உனக்குத் தேவைப்படுவேன். எனக்கு நீ தேவைப்பட மாட்டாய்.”


“எனக்கு என்ன தேவை? எது எப்படியோ, உன்னுடைய விருப்பப்படி நடக்கட்டும்...” இந்த வார்த்தைகளைக் கூறிய மீனவன் கடலுக்குள் குதித்தான். அப்போது ‘ட்ரைட்டன்கள்’ சங்கு ஊதின. கடல் கன்னி மேலே வந்து அவனுடைய கழுத்தில் கையைப் போட்டு, அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

அவர்களையே பார்த்தவாறு, கடற்கரையில் தனியாக. அந்த ஆன்மா நின்றுகொண்டிருந்தது. அவர்கள் கடலின் அடிப்பகுதிகளுக்குள் மறைந்தவுடன், ஆன்மா புலம்பிக்கொண்டே புதர்களுக்குள் நடந்து மறைந்தது.

6

ரு வருடம் கடந்தபிறகு, ஆன்மா மீண்டும் கடற்கரைக்கு வந்து மீனவனை அழைத்தது. ஆழங்களுக்குள்ளிருந்து வெளிவந்த மீனவன், “நீ ஏன் என்னை அழைத்தாய்?” என்று கேட்டான்.

“வா... என் அருகில் வா... நான் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. இப்போது நான் எவ்வளவு காட்சிகளைப் பார்த்திருக்கிறேன், தெரியுமா?”

மீனவன் நீர்ப்பரப்பில் நெருங்கி வந்து நின்றான்.

ஆன்மா கூற ஆரம்பித்தது. “நாம் இங்கிருந்து புறப்பட்ட பிறகு, நேராக கிழக்கு திசை நோக்கிப் பயணம் செய்தேன். அதற்குக் காரணம் ஞானங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவதே பழமையான அந்த நாட்டில் தானே! ஆறு நாட்கள் பயணம் செய்தபின், ஏழாவது நாள் காலையில் டார்ட்டார்களின் நாட்டை அடைந்தேன். மிகவும் வெப்பம் நிறைந்ததாகவும், வறண்டு போயும் காணப்பட்ட அந்த நாட்டிலிருந்த ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தேன்.

மாலை நேரம் ஆனபோது, வானத்தின் விளம்பில் சிவப்பு நிறத்தில் தூசி எழுவதைப் பார்த்த டார்ட்டார்கள், வண்ணம் பூசப்பட்ட அம்புகளையும், வில்களையும் எடுத்துக்கொண்டு புறப்படுவதைப் பார்த்தேன். பெண்கள் அழுதுகொண்டே ஓடி, சரக்கு வண்டிகளில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.

மாலைப் பொழுது மறைய ஆரம்பித்தவுடன், டார்ட்டார்கள் திரும்பி வந்தார்கள். ஆனால், எண்ணிக்கையில் அவர்களில் ஐந்து பேர் குறைந்து விட்டிருந்தார்கள். திரும்பி வந்தவர்களில் பலருக்கும் காயம் உண்டாகியிருந்தது. அவர்கள் குதிரைகளை சரக்கு வண்டிகளில் கட்டி, ஓட்டிச் சென்றார்கள். மூன்று ஓநாய்கள் ஒரு குகைக்குள்ளிருந்து வெளியே வந்து வாசனை பிடித்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து அவை எதிர்திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தன.

நிலவு உதயமான பிறகு, தூரத்தில்... சமவெளியில் ஒரு நெருப்புக் குண்டம் தெரிவதைப் பார்த்து அந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டேன். வர்த்தகர்கள் அங்கே கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒட்டகங்கள் கட்டப்பட்டிருப்பதையும், பணியாட்களான நீக்ரோக்கள் கூடாரம் அமைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

நான் அவர்களுக்கு அருகில் சென்றவுடன், வர்த்தகர்களின் தலைவன் வேகமாக எழுந்து வாளை உருவி, அங்கு வந்திருப்பதற்கான நோக்கத்தை விசாரித்தான்.

நான் ஒரு நாட்டின் இளவரசன் என்றும், என்னைப் பிடித்து அடிமையாக ஆக்க முயற்சி செய்த டார்ட்டார்களிடமிருந்து தப்பித்து ஓடி வருவதாகவும் அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் ஐந்து டார்ட்டார்களின் தலைகள் மரக் கிளைகளில் குத்தி வைக்கப்பட்டிருப்பதை புன்னகைத்துக் கொண்டே காட்டினார்கள்.

தொடர்ந்து அவர்கள் "கடவுளின் தூதர் யார்?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் ‘முஹம்மது’ என்று கூறினேன்.

அந்தப் பெயரைக் கேட்டவுடன், அவர்கள் எனக்கு முன்னால் வந்து நின்று வணங்கி, என் கையைப் பிடித்துக்கொண்டு போய் தங்களின் தலைவனுக்கு அருகில் அமரச் செய்தார்கள். ஒரு நீக்ரோ வேலைக்காரன் மரத்தாலான கலத்தில் குதிரையின் பாலையும், பொரித்த ஆட்டு மாமிசத்தையும் கொண்டு வந்து தந்தான்.

பொழுது புலரும் வேளையில் நாங்கள் பயணத்தைத் தொடங்கினோம். தலைவனுடன் சேர்ந்து, சிவப்பு நிற உரோமங்களைக் கொண்ட ஒட்டகத்தின் மீது அமர்ந்து நான் பயணித்தேன். எங்களுக்கு முன்னால் நீளமான ஈட்டியுடன் ஒரு வீரன் போய்க் கொண்டிருந்தான்... இரண்டு பக்கங்களிலும் தென்னிந்தியப் போர்வீரர்களும், பின்னால் கழுதைகளும், அதற்குப் பின்னால் மற்ற வர்த்தகர்களும், நாற்பது ஒட்டகங்களும், அதன் இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான கழுதைகளும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள்.

டார்ட்டார்களின் நாட்டிலிருந்து நிலவைச் சபிக்க கூடியவர்களின் நாட்டிற்கு நாங்கள் சென்றோம்.

உயரமான மலைகளில் தங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு காவலாக நின்றிருக்கும் க்ரைஃபுன்களையும், குகைகளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ட்ராகன்களையும் நாங்கள் பார்த்தோம். பனி நிறைந்த மலை எங்கே இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் உண்டாகி, மூச்சைப் பிடித்துக்கொண்டு எங்களின் பயணம் நடந்து கொண்டிருந்தது. அடிவாரத்தின் வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது, மரங்களின் பொந்துகளில் இருந்துகொண்டு பிக்மிகள் எங்களை நோக்கி அம்புகளை எய்தார்கள். இரவு வேளைகளில் காட்டு மனிதர்களின் பெரிய பறை ஓசைகள் கேட்டுக் கொண்டிருந்தன. மனிதக் குரங்குகள் இருந்த இடத்தில் பழங்களைப் படையலாக வைத்து, அவர்களுடைய தொந்தரவுகளிலிருந்து தப்பித்து, பாம்புகள் இருந்த இடத்தை அடைந்தபோது, மண்பாத்திரத்தில் சூடான பாலை வைத்தோம். அவையும் எங்களைப் போக அனுமதித்தன. நாங்கள் ஆக்ஸஸ் நதியின் கரையை அடைந்தோம். பக்குவம் செய்யப்பட்ட மிருகத்தின் தோலையும், மரங்களாலான மிதவைகளையும் பயன்படுத்தி ஆற்றைக் கடந்தோம். எங்களுக்கு எதிராக நீர்க் குதிரைகள் ஓசை எழுப்பியவாறு நெருங்கி வந்தன. அவற்றைப் பார்த்ததும், ஒட்டகங்கள் பயந்து நடுங்கின.

ஒவ்வொரு நகரத்திலும் மன்னர்கள் எங்களிடமிருந்து மிகப்பெரிய தொகையை வாங்கினார்கள்... ஆனால், நகரத்தின் எல்லையைத் தாண்டி யாரும் எங்களை நுழையவிடவில்லை பேரீச்சம் பழம் கலந்த அரிசி மாவால் செய்யப்பட்ட அப்பத்தையும், தேனில் வேக வைத்த சோள அப்பத்தையும், வேறு சில பலகாரங்களையும் அவர்கள் மதிலின் மேற்பகுதி வழியாக எங்களுக்குத் தந்தார்கள்; அவ்வளவுதான். அவர்கள் தந்த ஒவ்வொரு சிறிய கூடைக்கும் நாங்கள் ஒரு முத்து மணியை விலையாகக் கொடுத்தோம்.

கிராமத்து மனிதர்களோ... நாங்கள் வருவதைப் பார்த்ததும், கிணறுகளில் விஷத்தைக் கலந்துவிட்டு மலையின் உச்சியை நோக்கிச் சென்றுவிட்டார்கள். நாங்கள் ‘மகெய்ஸு’களுடன் போராடினோம். வயதானவர்களாகப் பிறந்து, ஒவ்வொரு வருடமும் வயது குறைந்து, இறுதியில் குழந்தைகளாக இறக்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். தங்களை கடவுளின் மைந்தர்கள் என்று கூறிக்கொண்டு, சரீரத்தில் மஞ்கள், கறுப்பு வண்ணங்களைப் பூசிக் கொண்டு திரியும் லக்ட்ராயிகள்; எங்களுடைய கடவுளான சூரியனுக்கு முன்னால் வராமல், இருண்ட குகைகளுக்குள் வாழ்ந்து, இறந்தவர்களை மரத்தில் அடக்கம் செய்யும் ஆரண்டீஸ்கள்; வெண்ணெயையும் கோழி முட்டையையும் படையலாக அளித்து, பச்சை நிற ஸ்படிக கம்மலை அணிவித்து, முதலைக் கடவுளை வழிபடும் க்ரிமனியன்கள்; நாயின் முகத்தைக் கொண்ட சுகஸான்பிகள் என்று எல்லோருடனும் நாங்கள் போர் புரிந்தோம். எங்களுடைய படையில் மூன்றில் ஒரு பகுதி மனிதர்களை இந்தப் போர்களில் இழந்தோம். இன்னொரு மூன்றில் ஒரு பகுதி மனிதர்களை உணவுப் பற்றாக்குறையின் காரணமாக இழந்தோம். எஞ்சியுள்ளவர்கள் என்னை சுட்டிக் காட்டி, திருப்தி இல்லாதவர்களாக இருந்தார்கள். தங்களை மோசமான நிலையில் கொண்டுபோய் சேர்த்தவன் நான்தான் என்று அவர்கள் கூறினார்கள்.


நான் ஒரு பாறைக்குக் கீழேயிருந்து கொம்புகள் கொண்ட விஷம் நிறைந்த பாம்பைப் பிடித்து என்னுடைய உடலைக் கொத்தும்படிச் செய்தேன். ஆனால், எனக்கு எந்தவொரு பாதிப்பும் உண்டாகவில்லை. அதைப் பார்த்ததும், அவர்களுடைய பயம் இரண்டு மடங்கானது.

நான்காவது மாதம் நாங்கள் ‘இலல்’ நகரத்தை அடைந்தோம். அங்கு சென்றபோது இரவு நேரமாக இருந்ததால், கோட்டைக்கு வெளியே இருந்த தோட்டத்தில் நாங்கள் தங்க வேண்டியதிருந்தது. நிலவு, விருச்சிக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய அந்த நேரம், மிகவும் வெப்பம் நிறைந்ததாக இருந்தது. பழுத்த மாதுளம் பழங்களை மரத்திலிருந்து பறித்து, உடைத்து, அதிலிருந்த இனிப்பு நிறைந்த நீரைப் பருகினோம். தொடர்ந்து தரையில் ஜமக்காளங்களை விரித்துப்போட்டு, பொழுது புலர்வதை எதிர்பார்த்து படுத்திருந்தோம்.

பொழுது புலரும் நேரத்தில் நாங்கள் கண்விழித்து கோட்டைக் கதவைத் தட்டினோம். செம்பொன்னால் செய்யப்பட்டிருந்த அந்தக் கதவில் கடல் மீன்களையும் பறக்கும் மீன்களையும் செதுக்கி வைத்திருந்தார்கள். கோட்டையின் மேற்பகுதியிலிருந்த படை வீரர்கள் நாங்கள் வந்திருக்கும் நோக்கத்தைப் பற்றி விசாரித்ததற்கு, சிரியன் தீவிலிருந்து வரும் வர்த்தகர்கள் நாங்கள் என்று மொழிபெயர்ப்பாளர் பதில் கூறினார். எங்களிடமிருந்து பெற வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு, மதிய நேரம் ஆகும் போது, கதவைத் திறக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். அதுவரை எங்களை உபசரித்து, அங்கு இருக்கச் செய்தார்கள்.

மதிய நேரம் ஆனபோது, கோட்டையின் கதவு திறக்க, நாங்கள் உள்ளே நுழைந்தோம். மக்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே வந்து கூட்டமாக நின்று எங்களையே பார்த்தார்கள். நாங்கள் சந்தையை அடைந்தோம். பணியாட்களான நீக்ரோக்கள் மூட்டைகள் ஒவ்வொன்றையும் அவிழ்த்து, பொருட்களை வெளியே வைக்க ஆரம்பித்தார்கள். எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட நீர் ஒட்டாத துணியையும், எத்தியோப்பியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பல நிறங்களைக் கொண்ட துணி வகைகளையும், டைரியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு நிற கடல் பாசியையும், சிடோனிலிருந்து கொண்டு வரப்பட்ட நீல நிற தொங்கட்டான்களையும், கண்ணாடிப் பாத்திரங்களையும், களிமண் பாத்திரங்களையும் வெளியே பரப்பி வைத்தார்கள்.

முதல் நாள் மதகுருமார்கள் வந்து விலை பேசினார்கள். அடுத்த நாள் மற்ற வசதி படைத்த மனிதர்கள் வந்தார்கள். மூன்றாவது நாள் தொழிலாளர்களும், பணியாட்களும், அடிமைகளும் வந்தார்கள். நகரத்தில் வர்த்தகர்கள் வந்து சேரும்போதெல்லாம் அங்கு பின்பற்றப்படும் வழக்கம் இதுதானாம்.

நாங்கள் நிலவு வெளிச்சத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கிருஷ்ணபட்சம் தொடங்கியவுடன், நான் நகரத்தின் பாதைகளின் வழியாக சுதந்திரமாக நடந்து திரிந்தேன். அதைத் தொடர்ந்து அவர்களுடைய தெய்வம் இருக்கும் இடத்திற்கு வந்தேன். பசுமையான மரங்களுக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கும் நீளமான மஞ்சள் நிற ஆடை அணிந்த மதகுரு... நீலநிறக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் பாதையைத் தாண்டி... தெய்வம் குடிகொண்டிருக்கும் இளஞ்சிவப்பு நிறக்கட்டடம்.

ஆலயத்திற்கு முன்னால், வெள்ளை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட தெளிந்த நீரைக் கொண்ட ஒரு குளம் இருந்தது. வெளிறி வெளுத்துப் போன கைகளால் விசாலமான இலைகளைத் தடவியவாறு நான் அதன் கரையில் உட்கார்ந்திருக்கேன். கால்களில் மிதியடிகள் பயன்படுத்தும் அவர், வெள்ளியைப் போல மின்னிக் கொண்டிருக்கும் நிலவின் கீற்றுகள் பின்னப்பட்டிருந்த கறுமையான உரோமத் தொப்பியை அணிந்திருந்தார். தனித்தனி துணிகளை இணைத்து தைக்கப்பட்ட நீளமான அங்கியையும், சுருண்ட தலைமுடிக்கு பிரகாசம் உண்டாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஓலையையும் மதகுரு அணிந்திருந்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் என்னுடன் உரையாடி, என்னுடைய விருப்பங்களைப் பற்றி விசாரித்தார்.

“கடவுளைக் காண்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று நான் மதகுருவிடம் கூறினேன்.

“தெய்வம் வேட்டைக்குச் சென்றிருக்கிறது.” வினோதமான ஒரு பார்வையுடன் மதகுரு கூறினார்.

“எந்தக் காட்டில் என்று கூறுங்கள். நான் அங்கு போய்விடுகிறேன்.” என்றேன் நான்.

“தெய்வம் இப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.” தன்னுடைய நீளமான நகங்களால் ஆடையின் ஓரங்களைத் தடவிக் கொண்டே அவர் பதில் சொன்னார்.

"எந்த ஆலயத்தின் மெத்தையில் படுத்திருக்கிறது என்று கூறுங்கள். நான் அங்கு சென்று காத்திருக்கிறேன்” என்றேன் நான். ஆச்சரியத்தால் தன் தலையைக் குனிந்துகொண்ட மதகுரு என்னுடைய கையைப் பிடித்து என்னை எழுப்பினார். தொடர்ந்து ஆலயத்திற்குள் என்னை அனுப்பினார்.

அங்கு.... முதலில் இருந்த அறையிலேயே பவழ இலை வடிவத்தில், சூரியகாந்தக் கற்களாலான சிம்மாசனத்தில் ஒரு விக்கிரகம் இருப்பதைப் பார்த்தேன். கருந்தேக்கு மரத்தில் செதுக்கி உருவாக்கப்பட்டிருந்த ஒரு ஆணின் உருவம் அது. அதன் நெற்றியில் ஒரு மாணிக்கக்கல் பதிக்கப்பட்டிருந்தது. தலைமுடியிலிருந்து வழவழப்பான எண்ணெய் தொடைகளின் மீது சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. அப்போதுதான் பலி கொடுக்கப்பட்ட குழந்தையின் சிவப்பு ரத்தத்தால் அதன் பாதம் சிவந்து காணப்பட்டது. விக்கிரகத்தின் இடுப்பில் ஏழு நீல நிறக் கற்கள் பதிக்கப்பட்ட செம்பாலான அரைஞாண் இருந்தது.

"இதுதான் தெய்வமா?” நான் மதகுருவிடம் கேட்டேன்.

"ஆமாம்... இதுதான் தெய்வம்” என்றார் அவர்.

"எனக்கு தெய்வத்தைக் காட்டுங்கள். இல்லாவிட்டால் நான் உங்களை இங்கேயே பலிகொடுத்து விடுவேன்!” கோபத்துடன் உரத்த குரலில் கத்தியவாறு நான் அவருடைய கையை இறுகப் பற்றினேன். ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். திடீரென்று அந்தக் கைகள் அப்படியே சக்தி இல்லாததாக ஆகிவிட்டன.

உடனே மதகுரு என்னுடைய கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார். "என்னை மன்னித்து விடுங்கள் அய்யா... என்னுடைய கைகளைச் சீராக்கி விடவேண்டும். நான் உண்மையாகவே தெய்வத்தைக் காட்டுகிறேன்” என்றார் அவர்.

நான் மீண்டும் சாந்த சூழ்நிலையைக் கொண்டுவந்து, அவருடைய கைகளைத் தாங்கி, அதை ஊதி சரிப்படுத்தினேன். நடுங்கியவாறு எழுந்த அவர் என்னை இரண்டாவதாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு... மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட மணிக்கல்லால் செய்யப்பட்ட தாமரையில் நின்று கொண்டிருக்கும் ஒரு விக்கிரகத்தைப் பார்த்தேன். யானையின் தந்தத்தில் செய்யப்பட்ட, சாதாரண மனிதனைப்போல இரண்டு மடங்கு அளவிலுள்ள ஒரு ஆணின் உருவம் அது. அந்த விக்கிரகத்தின் நெற்றியில் கோமேதகக் கல்லும், நெஞ்சில் லவங்கத்தின் வாசனையும் இருந்தன. அது தன்னுடைய ஒரு கையில் மணிக்கல்லாலான செங்கோலையும், இன்னொரு கையில் உருண்டையாக இருந்தவொரு ஸ்படிகத் துண்டையும் ஏந்திக் கொண்டிருந்தது.

முழங்கால் வரை உள்ள வெண்ணிறக் காலணியையும், தடிமானாகவும் குறுகலாகவும் இருந்த கழுத்தில் இந்திரநீலக் கல்லாலான சங்கிலியையும் அணிந்திருந்தது.

"இதுதான் தெய்வமா?” நான் மதகுருவிடம் கேட்டேன்.

"ஆமாம்... இதேதான்...” என்றார் அவர்.


"எனக்கு தெய்வத்தைக் காட்டுகிறீர்களா? அல்லது நான் இதே இடத்தில் உங்களை பலி கொடுக்கவா?” மீண்டும் கோபமடைந்த நான் அவருடைய கண்களையே பார்த்தேன். அதைத் தொடர்ந்து அவற்றுக்கு பார்க்கும் சக்தி இல்லாமல் போனது.

மீண்டும் என்னுடைய கால்களில் விழுந்து மன்னிப்பு அளிக்கும்படி அந்த மதகுரு கேட்டார். "என்னை மன்னித்து விடுங்கள் அய்யா... என்னுடைய கண்களுக்கு பார்க்கும் சக்தியை மீண்டும் அளியுங்கள். நான் உங்களை தெய்வத்திற்கு அருகில் கொண்டு செல்கிறேன்” என்றார் அவர்.

நான் அவருடைய கண்களில் ஊதி, அவற்றுக்கு மீண்டும் பார்க்கும் சக்தியை அளித்தேன். மீண்டும் நடுக்கத்துடன் அவர் என்னை மூன்றாவதாக இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். ஹா! அங்கு விக்கிரகங்களோ உருவங்களோ எதுவுமே இல்லை. அதற்கு பதிலாக கல்லாலான பீடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வட்ட வடிவக் கண்ணாடி மட்டும் இருந்தது.

"எங்கே தெய்வம்?”  நான் மதகுருவிடம் கேட்டேன்.

"இங்கு தெய்வம் எதுவுமில்லை. ஆனால், நீங்கள் இங்கு பார்க்கும் கண்ணாடி இருக்கிறதல்லவா? அதுதான் "அறிவின் கண்ணாடி.” பூமியிலும் சொர்க்கத்திலும் இருக்கக்கூடிய எல்லா பொருட்களையும் இதில் பார்க்கலாம்- ஒன்றே ஒன்றைத் தவிர... இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆளை மட்டும் பார்க்க முடியாது. ஒரு ஆள் இந்தக் கண்ணாடியைப் பார்க்கும்போது, அங்கு தன்னைப் பார்க்கிறானென்றால்...

அதற்கு அர்த்தம் அவன் ஞானி என்பதுதான். இந்தக் கண்ணாடியைக் கையில் வைத்திருப்பவருக்கு, அறிந்து கொள்வதற்கு இதற்குமேல் வேறு எதுவுமே இல்லை. அதாவது அவர்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. இது கைவசம் இல்லாதவர்களுக்கு அறிவு இருக்காது. அதனால், நாங்கள் இந்த கண்ணாடியை தெய்வமாகப் பார்க்கிறோம். வழிபடுகிறோம்.”

மதகுருவின் விளக்கத்தைக் கேட்டு கண்ணாடியைப் பார்த்த எனக்கும், அனைத்தும் உண்மைதான் என்ற புரிதல் உண்டானது.

நான் ஒரு காரியத்தைச் செய்தேன். அந்தக் கண்ணாடியை ஒரு இடத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறேன். இங்கிருந்து ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும்- "அறிவின் கண்ணாடி”யை அடைவதற்கு. உனக்குள் என்னை நுழையச் செய். உன்னுடைய பணியாளாக இருப்பதற்கு என்னை அனுமதி. அதைத் தொடர்ந்து நீ எல்லா பண்டிதர்களையும் விட மேலான பண்டிதனாக ஆவாய். எல்லா ஞானங்களும் உனக்குச் சொந்தமானவையாக ஆகும். என்னை உன்னுடைய சரீரத்திற்குள் நுழைய அனுமதி.”

ஆனால், இளைஞனான மீனவன் விழுந்து விழுந்து சிரித்தான். “பண்டிதத்தன்மையைவிட காதல்தான் பெரியது. அது மட்டுமல்ல; இப்போதுகூட கடல் கன்னி என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்.” அவன் சொன்னான்.

“இல்லை... பண்டிதத்தன்மையைவிட பெரியது என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை.” ஆன்மா கூறியது.

“காதல்தான் பெரியது...” என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே மீனவன் கடலின் ஆழத்திற்குள் போய் மறைந்தான். ஆன்மா மீண்டும் புலம்பிக் கொண்டே புதர்களுக்குள் திரும்பிச் சென்றது.

7

ரண்டாவது வருடமும் அதே நேரத்தில் ஆன்மா கடற்கரைக்கு வந்து மீனவனை அழைத்தது. நீரின் மேற்பரப்பிற்கு வந்த மீனவன் கேட்டான். “நீ என்னை எதற்காக அழைத்தாய்?”

“வா... அருகில் வா.... நாம் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. நான் எவ்வளவோ காட்சிகளைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்...”

மீனவன் அருகில் வந்து தாடையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

“கடந்த முறை நான் உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற பிறகு, நேராக தெற்கு திசை நோக்கிச் சென்றேன். தெற்கிலிருந்து வரக்கூடியவை அனைத்தும் மதிப்பு மிக்கவை ஆயிற்றே! ஆஷ்டர் நகரத்திற்குச் செல்லும் முக்கிய வீதியின் வழியாக நான் ஆறு நாட்கள் நடந்தேன். தூசி நிறைந்து சிவப்பு நிறத்திலிருந்த, பக்தர்கள்கூட பயணம் செய்திராத வழியில்தான் நான் ஆறு நாட்களாக நடந்தேன். இறுதியாக, ஏழாவது நாள் காலையில் நான் கண்களைத் திறந்த போது, என்னுடைய கால்களுக்கு அருகில் அடிவாரத்தில் நகரம் தெரிந்தது.

அந்த நகரத்தில் ஒன்பது கதவுகள் இருந்தன. ஒவ்வொரு வாசலிலும் மண்ணாலான ஒரு குதிரை இருந்தது. மலையின் மேலே இருந்து வீரர்கள் இறங்கி வருவதைப் பார்த்ததும் அவை கனைக்க ஆரம்பிக்கும். கோட்டையின் வாசல்கள் அனைத்தும் செம்பு பதிக்கப்பட்டவையாக இருந்தன. ஆங்காங்கே கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இடங்களின் மேற்கூரைகள் பித்தளையால் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு கோபுரத்திலும், கையில் வில் வைத்திருக்கும் போராளிகள் நின்றிருந்தார்கள். புலர்காலைப் பொழுதில் அவர்கள் பெரும்பறையை முழங்கச் செய்வார்கள். சூரியன் மறையும் நேரத்தில் சங்கு ஊதுவார்கள்.

நான் அந்த நகரத்திற்குள் நுழைய முயன்றபோது படை வீரர்கள் என்னைத் தடுத்தார்கள். நான் யார் என்று அவர்கள் விசாரித்தார்கள். நான் டெர்வில் இருந்து வருவதாகவும், மெக்காவிற்குப் பயணம் செல்வதாகவும் கூறியவுடன், அவர்கள் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே நுழைய அனுமதித்தார்கள்.

அந்த நகரத்திற்குள் வர்த்தகம் நடக்கும் இடத்தைப் போல ஒரு இடம் இருந்தது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் நீயும் என்னுடன் சேர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தேன். அகலம் குறைவான தெருக்களுக்குக் குறுக்காக பெரிய பெரிய பட்டாம்பூச்சிகளைப்போல காகிதப் பறவைகள் வேகமாகப் பறந்து கொண்டிருந்தன. காற்று வீசும்போது, பல நிறங்களைக் கொண்ட குமிழ்களைப்போல அவை பறந்து விழுந்து கொண்டிருந்தன. தங்களது கடைகளுக்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த பட்டாலான விரிப்புகளில் வர்த்தகர்கள் அமர்ந்திருந்தார்கள். தலையில் கட்டியிருந்த துணிகளின் ஓரங்களில் தங்கநிற ஜரிகை காணப்பட்டது. நீளமான தாடியை வளர்த்திருந்தார்கள். சிலர் வாசனை திரவியங்களையும், கூந்தலில் அணியக்கூடிய பொருட்களையும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். வேறு சிலர் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலிருந்து கொண்டு வந்திருந்த நறுமணப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் யாராவது உரையாட ஆரம்பித்துவிட்டால், உடனடியாக அவர்கள் வாசனைப் பொருட்களைப் பற்ற வைத்து, புகை உண்டாக்கி, அருமையான நறுமணத்தைப் பரவச் செய்து கொண்டிருந்தார்கள். வெள்ளி ஆபரணங்களும், பொன்னில் செய்யப்பட்ட புலியின் நகங்களும், மரகதம் பதிக்கப்பட்ட கையில் அணியக்கூடிய நகைகளும், மோதிரங்களும் இன்னொரு பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தேநீர் கடைகளிலிருந்து கிட்டாரின் இசை காற்றில் மிதந்து ஒலித்துக்கொண்டிருந்தது. கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்களுடைய வெளுத்துக் காணப்பட்ட முகங்களில் சிரிப்பை வரவழைத்து, அந்த வழியாகக் கடந்து சென்றவர்களையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- நீயும் என்னுடன் இருந்திருக்க வேண்டும். வெளியே கருப்பு நிற உரோமத்தாலான பைகளுடன், மது விற்பனை செய்பவர்கள் மக்களுக்கு மத்தியில் நுழைந்து நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் அதிகமானவர்கள் விற்பனை செய்வது தேன்போல இனிப்பாக இருந்த ஷிராஸ் மதுவைத்தான். உலோகத்தாலான குப்பிகளில் எடுத்து, அதன்மீது ரோஜா இதழ்களைத் தூவி விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்.


சந்தையிலிருந்த பழக் கடைகளில் எல்லா வகையான பழங்களும் கிடைத்தன. நன்கு சிவப்பாக பழுத்த அத்திப் பழமும், நல்ல மணத்தைக் கொண்ட, மஞ்சள் நிறத்திலிருந்த சாத்துக்குடிப் பழமும், தண்ணீர்ப் பூசணியும், பொன்னைப்போல சிவந்து காணப்பட்ட ஆப்பிளும், பச்சை நிறத்திலிருந்து கொடி எலுமிச்சம்பழமும், ஆரஞ்சும்... ஒருநாள் நான் அங்கு நின்று கொண்டிருந்த போது, ஒரு யானை அதன் வழியே வந்தது. அதன் தும்பிக்கையில் மஞ்சளைப் பூசி நிறம் பிடிக்கச் செய்திருந்தார்கள். வந்தவுடன் அது ஒரு கடையின் முன்னால் போய் நின்று, ஆரஞ்சுப் பழங்களை எடுத்து சாப்பிட ஆரம்பித்தது. அதைப் பார்த்த கடையின் உரிமையாளர் சிரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க மட்டுமே உன்னால் முடியும்!

ஒருநாள் மாலை நான் சந்தையில் இருந்தபோது, சில நீக்ரோக்கள் ஒரு பல்லக்கைச் சுமந்து செல்வதைப் பார்த்தேன். பிரகாசமான வண்ணம் பூசப்பட்ட மரக் கொம்புகளைக் கொண்டு அதை உருவாக்கியிருந்தார்கள். அதன் கைப்பிடிகளில் பித்தளையாலான மயிலின் வடிவம் பொருத்தப்பட்டிருந்தது. அதன் சாளரங்கள் மெல்லிய மஸ்லின் துணியாலான திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது. எனக்கு மிகவும் அருகில் அது கடந்து சென்றபோது, வெண்மையாகக் காணப்பட்ட ஒரு முகம் அதற்குள்ளே இருந்து சிரிப்பதைப் பார்த்தேன். நான் பல்லக்கின் பின்னால் சென்றபோது, அதைச் சுமந்துசென்ற நீக்ரோக்கள் முகத்தைச் சுளித்தபடி தங்களுடைய வேகத்தை அதிகரித்தார்கள். நான் அதை கவனிக்காததுபோல் காட்டிக் கொண்டே, பல்லக்கைப் பின்பற்றி நடந்தேன். ஒரு ஆழ்ந்த சிந்தனை என்னை ஆட்கொண்டு விட்டிருந்தது.

இறுதியில் அவர்கள் வெண்மை நிறத்தில், சதுரமாக இருந்த ஒரு வீட்டுக்கு முன்னால் போய் நின்றார்கள். அதற்கு சாளரங்கள் எதுவும் இல்லாமலிருந்தது. அதற்கு பதிலாக கல்லறையின் வாசலைப்போல ஒரு கதவு மட்டும் இருந்தது. அவர்கள் பல்லக்கை கீழே இறக்கி வைத்துவிட்டு, செம்பாலான சுத்தியலால் கதவை மூன்று முறை தட்டினார்கள். பச்சை நிறத்திலிருந்த, உரோமத்தாலான துர்க்கி ஆடையை அணிந்த ஒரு ஆர்மேனியாக்காரன் அந்தக் கதவின் வழியாகப் பார்த்தான். இவர்களைப் பார்த்த அந்த மனிதன் கதவைத் திறந்து, வெளியே வந்து ஒரு தரை விரிப்பை விரித்தான். அப்போது பல்லக்கிலிருந்து ஒரு பெண் கீழே இறங்கினாள். அவள் உள்ளே செல்வதற்கு மத்தியில் சற்று திரும்பி என்னைப் பார்த்து சிரித்தாள். அந்த அளவிற்கு வெண்மையான ஒரு மனிதப் பிறவியை நான் இதுவரை பார்த்ததே இல்லை.

சாயங்காலம், நிலவு உதித்தபிறகு நான் மீண்டும் அங்கு சென்றேன். அந்த வீட்டைத் தேடினேன். ஆனால், அது அங்கே இல்லை. அப்போது நான் நினைத்தேன். அந்தப் பெண்ணை எனக்குத் தெரியும். அதனால்தான் அவள் என்னைப் பார்த்து சிரித்திருக்கிறாள் என்று.

உண்மையிலேயே நீ என்னுடன் இருந்திருக்க வேண்டும். அமாவாசை இரவு விருந்தையொட்டி, இளைஞரான மன்னர் அரண்மனையிலிருந்து வரும் நாளாக அது இருந்தது. அவர் மசூதிக்கு தொழுவதற்காகச் சென்றிருந்தார். அவருடைய தாடியும், தலைமுடியும் ரோஜா இதழ்களைக் கொண்டு நிறமாக்கப்பட்டிருந்தன. கன்னங்களில் பொன் இழைகளைத் தேய்த்திருந்தார்கள். உள்ளங்கைகளும், கால் பாதங்களும் காவி நிறம் பூசப்பட்டு, மஞ்சள் நிறத்தில் இருந்தன.

சூரியன் உதயமாகும்போது, வெள்ளி நிற ஆடை அணிந்து அரண்மனையிலிருந்து வரும் அவர், சூரியன் மறையும் நேரத்தில் பொன் நிற ஆடை அணிந்து திரும்பிச் செல்கிறார். மக்கள் அனைவரும் தங்களின் முகங்களை மறைத்துக் கொண்டு அவரைச் சூழ்ந்து கொண்டு நிற்பார்கள். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. ஒரு பேரீச்சம்பழம் விற்பனை செய்யும் கடைக்கு முன்னால் நான் நின்றிருந்தேன். எந்தவொரு மரியாதைச் செயல்களையும் நான் செய்யவில்லை. என்னைப் பார்த்த மன்னர் சற்று நின்று, நெற்றியைச் சுளித்துக்கொண்டு பார்த்தார். நான் எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தேன். ஆட்கள் என்னுடைய தைரியத்தைப் புகழ்ந்தாலும், சீக்கிரமே நகரத்தைவிட்டுப் போய்விட வேண்டும் என்பதுதான் எல்லாருடைய அறிவுரையாக இருந்தது. நான் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல், அரிதான கடவுள் சிலைகளைச் செய்பவர்களின் அருகில் சென்றேன். தங்களுடைய தொழில் காரணமாக வெறுக்கப்பட்டிருந்த அவர்களிடம் நான் நடைபெற்ற இந்த சம்பவங்களைப் பற்றியெல்லாம் கூறினேன். அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிலையை எடுத்துக் கொடுத்து விட்டு, உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் செல்லும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். அன்று இரவு, மாதுளம் பழத் தெருவின் தேநீர் கடையில் இருந்த என்னை, மன்னரின் படையாட்கள் வந்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். நான் உள்ளே நுழைந்தவுடன், எனக்குப் பின்னாலிருந்த கதவை அடைத்து, சங்கிலி போட்டு பூட்டினார்கள். ஆச்சரியப்படக் கூடிய கலைவேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களுடன் உயர்ந்த தன்மை கொண்டவையாக அங்கிருந்த தூண்களும் சுவர்களும் இருந்தன. அப்படிப்பட்ட ஒன்றை அதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் நான் பார்த்ததே இல்லை.

நான் அங்கு நடந்து சென்றபோது, முகத்தை மறைத்துக்கொண்டு இரண்டு பணிப்பெண்கள் மாடியில் இருந்தவாறு பார்ப்பதை கவனித்தேன். அவர்கள் என்னை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். படை வீரர்கள் தங்களின் நடையின் வேகத்தை அதிகரித்தார்கள். அவர்களுடைய ஈட்டிகளின் அடிப்பகுதி பளபளப்பாக்கப்பட்ட தரையில் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தன. யானைத் தந்தத்தாலான கதவைத் திறந்து, அவர்கள் என்னை முன்னால் போகச் செய்தனர். ஏழு நிலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பூந்தோட்டத்திற்கு நாங்கள் சென்றோம். ட்யூலிப் செடிகளும், பாரிஜாதமும், கல் வாழையும் நிறைந்த தோட்டமாக அது இருந்தது. சிறிய ஒரு குழலைப்போல காற்றில் நீர் வரக்கூடிய ஒரு இயந்திரம் அங்கு இருந்தது. எரிந்து முடிந்த பந்தத்தைப்போல நின்றுகொண்டிருந்த மரங்களும், அதிலொன்றின் கிளையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்த இரவில் பாடும் பறவைகளும் காணப்பட்டன.

அந்தப் பூந்தோட்டத்தின் இறுதியில் ஒரு கூடாரம் இருந்தது. நாங்கள் அங்கு சென்றபோது, இரண்டு அரவானிகள் அதன் வழியாக வந்தார்கள். நடந்த போது, அவர்களுடைய தடிமனான சரீரங்கள் இரு பக்கங்களிலும் இப்படியும் அப்படியுமாக அசைந்து கொண்டிருந்தன. மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட கண் இமைகளின் வழியாக அவர்கள் என்னை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் படைவீரர்களில் ஒருவனைச் சற்று விலக்கி நிறுத்தி, தாழ்ந்த குரலில் என்னவோ முணுமுணுத்தான். இன்னொருவன் வாசனைப் பொருட்களை மென்று கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் அந்தப் படைவீரன் திரும்பி வந்து, மற்ற படை வீரர்களை அரண்மனைக்குத் திரும்பிப் போகும்படிச் சொன்னான். எங்களுக்குப் பின்னால் அரவானிகள் வந்தார்கள். வரும் வழியில் அவர்கள் இனிப்பான மல்பரி கனிகளைப் பறித்து சாப்பிட்டுக் கொண்டே வந்தார்கள். இடையில், அவர்களில் மூத்த மனிதன் என்னைப் பார்த்து குறும்புத்தனமாக சிரித்தான்.


தொடர்ந்து படைவீரன் என்னை கூடாரத்தின் வாசற்கதவின் வழியாக செல்லும்படி சைகை செய்தான். நான் நடுங்காமல் தைரியமாக, வாசற் கதவுக்கு அருகில் தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலையை நீக்கி உள்ளே சென்றேன்.

கையில் பருந்துடன், புலித்தோலில் அமர்ந்திருந்த இளைஞரான மன்னரை அங்கு நான் பார்த்தேன். அவருக்குப் பின்னால் பித்தளையாலான தொப்பியும், காதில் கடுக்கனும் அணிந்த, அரை நிர்வாணக் கோலத்தில், நுபியன் இனத்தைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். புலித்தோலுக்கு அருகிலேயே இருந்த ஒரு தட்டில் வெள்ளிக் கைப்பிடி கொண்ட வாள் இருந்தது.

என்னைப் பார்த்தவுடன் மன்னர் புருவத்தை வளைத்துக்கொண்டு கேட்டார். "பெயர் என்ன? இந்த நாட்டின் மன்னர் யார் என்று உனக்கு தெரியாதா?”

அதற்கு நான் பதிலெதுவும் கூறவில்லை.

அவர் வாளுக்கு நேராக கையை நீட்டியதும், அந்த நுபியா மனிதன் அதை எடுத்துக்கொண்டு முன்னால் வந்து என்னை நோக்கி வீசினான். என்மீது ஒரு ஓசையை உண்டாக்கியவாறு அது பாய்ந்து சென்றாலும், எனக்கு காயமெதுவும் உண்டாகவில்லை. தரையில் விழுந்த அவன் பயந்து நடுங்கியவாறு எழுந்து விலகி நின்றான்.

அதைப் பார்த்து வேகமாக எழுந்த மன்னர் ஆயுதங்களின் குவியலிலிருந்து ஒரு ஈட்டியை எடுத்து என்னை நோக்கி எறிந்தார். பாய்ந்து வரும்போதே அதைக் கையில் பிடித்து, இரண்டாக ஒடித்து தூரத்தில் எறிந்தேன் அதைப் பார்த்த அவர் என்னை நோக்கி அம்பை எய்தார். ஆனால், காற்றிலேயே அதை நான் கையை நீட்டிப் பிடித்தேன். கோபம் கொண்ட மன்னர் தன்னுடைய வெள்ளை நிற உரோமத்தாலான உறைக்குள் இருந்து ஒரு கத்தியை உருவி, அந்த நுபியாக்காரனைக் குத்தி வீழ்த்தினார். சிவப்பு நிற ரத்தத்தைச் சிந்தியவாறு தரையில் விழுந்த அடிமை, அடிபட்ட பாம்பைப் போல துடித்துக் கொண்டிருந்தான்.

அவன் மரணமடைந்தவுடன், என் பக்கம் திரும்பிய மன்னர் பட்டாடையால் வியர்வையை ஒற்றிக் கொண்டே கேட்டார். “என்னுடைய ஆயுதங்களால் காயப்படுத்த முடியாத நீங்கள் ஒரு தீர்க்கதரிசியா? இல்லாவிட்டால்... தெய்வத்தின் மகனா? இந்த இரவிலேயே நீங்கள் நகரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்று நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். காரணம் நீங்கள் இங்கு இருந்தால், நான் இந்த நாட்டின் மன்னன் அல்ல என்பதுதான் உண்மை.”

"எனக்கு உங்களுடைய செல்வத்தில் பாதியைத் தாருங்கள். நான் போகிறேன்” என்றேன் நான்.

அவர் என்னுடைய கையைப் பிடித்து பூந்தோட்டத்தை நோக்கி நடந்தார். என்னைப் பார்த்த படை வீரன் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். அரவான்கள் என்னைப் பார்த்தவுடன், பயந்துபோய் முழங்கால்கள் மோத, தரையில் விழுந்தார்கள்.

அரண்மனைக்குள் ஒரு அறை இருக்கிறது. மிகவும் பழமையான பளபளப்பான செங்கற்களால் கட்டப்பட்ட எட்டு சுவர்களுக்குள் அது இருக்கிறது. அதன் பித்தளையாலான மேற்கூரையில் விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. மன்னர் சுவரில் எங்கோ தொட்டதும், ஒரு கதவு திறந்தது. ஏராளமான பந்தங்கள் வெளிச்சத்தைத் தந்து கொண்டிருந்த நீண்ட இடைவெளியின் வழியாக நாங்கள் நடந்தோம். இரண்டு பக்கங்களிலுமிருந்த சுவர்களில் கழுத்து வரை வெள்ளி நாணயங்கள் நிரப்பப்பட்ட மதுக்குப்பிகள் வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் அந்த இடைவெளியின் வழியாக நடுப்பகுதியை அடைந்ததும், மன்னர் கூறக்கூடாத ஒரு வார்த்தையைக் கூறினார். அப்போது ஒரு கருங்கல் கதவு திறந்தது. கண்கள் கூசாமல் இருப்பதற்காக நெற்றிக்கு முன்னால் கையை வைத்துக்கொண்டே, மன்னர் அந்தப் பக்கமாக நகர்ந்தார்.

அது எந்த அளவிற்கு அழகான இடமாக இருந்தது என்பதைக் கூறினால், நீ நம்ப மாட்டாய்... மிகப் பெரிய ஆமையின் மேலோடுகள் முழுக்க முத்துக்கள், சந்திரகாந்தக் கற்களும் சிவப்பு நிற பவளமும்

நிறைந்த குவியல்கள்... ஒரு யானையை நிறுத்தி வைக்கக்கூடிய அளவிற்கு மிகப் பெரியதாக இருந்த பெட்டிகளில் பொன் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. பொன்னாலான இழைகள் உரோமத்தாலான பைகளில் வைக்கப்பட்டிருந்தன. ஸ்படிகப் பாத்திரங்கள் நிறைய பவளக் கற்களும், கல்லாலான கலங்களில் புஷ்பராகக் கற்களும் இருந்தன. இவை போதாதென்று, உருண்டையான மரகதக் கற்கள் யானைத் தந்தத்தாலான கலன்களில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் இந்திர நீலக் கற்களாலும் வைடூரியங்களாலும் நிறைக்கப்பட்ட பட்டுத் துணிகள் வைக்கப்பட்டிருந்தன. நீல நிறத்தைக் கொண்ட வைடூரியங்கள் பதிக்கப்பட்ட யானைத் தந்தங்களும், விலை மதிக்க இயலாத வேறு பல ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கொம்புகளும் அந்த அறையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட தூண்களில், காட்டுப் பூனையின் கண்களைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்த மஞ்சள் நிறக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான் இப்போது கூறியவை அனைத்தும் அங்கு பார்த்தவற்றில் ஒரு பகுதி மட்டுமே.

முகத்திலிருந்து கையை விலக்கிக் கொண்ட மன்னர் என்னிடம் கூறினார். "இதுதான் என்னுடைய சேமிப்பு. நான் வாக்குறுதி அளித்ததைப்போல, இதன் பாதி உங்களுக்குச் சொந்தமானது. இதிலிருந்து உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒட்டகங்களையும் பணியாட்களையும் தருகிறேன். அவர்களை அழைத்துக்கொண்டு, இந்த உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமென்றாலும், போய்க் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும், காரியங்கள் அனைத்தும் இரவிலேயே நடக்க வேண்டும். காரணம்- காலையில் இங்கு நான் இருக்கமாட்டேன். என்னுடைய தந்தைதான் இருப்பார். என்னால் கொல்லமுடியாத ஒரு மனிதன் நகரத்தில் இருக்கிறார் என்ற விஷயம் அவருக்குத் தெரியக்கூடாது!”

நான் சொன்னேன்: "இங்கு உள்ள பொன் உங்களுக்கே சொந்தமானவையாக இருக்கட்டும். அதேபோல வெள்ளியும் ரத்தினக்கற்களும் உங்களுக்குச் சொந்தமானவையாகவே இருக்கட்டும். எனக்கு அது தேவையே இல்லை. அதற்கு பதிலாக எனக்கு உங்களுடைய விரலிலுள்ள அந்த மோதிரம் மட்டும் போதும்!”

கோபத்தால் சிவந்துபோன மன்னர் சத்தம் போட்டு கத்தினார்: "இது ஒரு சாதாரண மோதிரம் தானே! ஈயத்தால் செய்யப்பட்டது.... இதற்கு விலையே இல்லை. நீங்கள் பாதி சொத்தை எடுத்துக் கொண்டு நகரத்தை விட்டுக் கிளம்புங்கள்.”

"இல்லை....” நான் சொன்னேன்: "அந்த ஈயத்தாலான மோதிரத்தைத் தவிர, வேறு எதுவும் எனக்கு வேண்டாம். அது எதற்காக உள்ளது என்பதும், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும்.”

மன்னர் நடுங்கிக்கொண்டே என்னுடைய கால்களைப் பிடித்துக் கொண்டார்! "இந்தச் சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய பாதியையும்கூட நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அதையும் எடுத்துக்கொண்டு இந்த இடத்தை விட்டுக் கிளம்புங்கள்.”

நான் என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல; ஆனால், வினோதமான ஒரு காரியத்தைச் செய்தேன். இங்கேயிருந்து ஒருநாள் பயணம் செய்து செல்லக்கூடிய ஒரு இடத்தில் "பணக்காரர்களுக்கான மோதிரத்தை” நான் கொண்டு போய் வைத்திருக்கிறேன். நீ வருவதற்காக அது காத்திருக்கிறது.


அந்த மோதிரம் யாருடைய கையில் இருக்கிறதோ அவர்கள் வேறு யாரையும் விட வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். வா..... வந்து அந்த மோதிரத்தை எடு.... இந்த பூமியிலேயே மிகப் பெரிய பணக்காரனாக ஆகு......”

ஆனால், இளைஞனான மீனவன் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே சொன்னான்: “பணத்தைவிட காதல்தான் பெரியது. அது மட்டுமல்ல; கடல் கன்னி என்னை இப்போதும் காதலித்துக் கொண்டிருக்கிறாள்.”

“இல்லை... பணத்தைவிட பெரியது எதுவுமில்லை.” ஆன்மா வாதம் செய்தது.

“காதல்தான் நல்லது...” என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே மீனவன் நீரின் ஆழத்திற்குள் சென்றான். ஆன்மா புலம்பிக்கொண்டே மீண்டும் புதர்களுக்குள் திரும்பியது.

8

தேபோல மூன்றாவது வருடம் முடிவடைந்த போதும், ஆன்மா கடற்கரைக்கு வந்து மீனவனை அழைத்தது. நீர்ப்பரப்பிற்கு மேலே வந்த மீனவன் கேட்டான். “நீ என்னை எதற்காக அழைத்தாய்?”

“வா... அருகில் வா... நாம் பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.”

அதைத் தொடர்ந்து மீனவன் மீண்டும் நீர்ப்பரப்பிற்கு மேலே வந்து உட்கார்ந்தான்.

“நதியின் கரையில் சத்திரம் இருக்கக்கூடிய ஒரு நகரத்தில் நான் இருந்தேன். என்னுடன் இரண்டு நிறங்களைக் கொண்ட மதுவைப் பருகிக் கொண்டிருந்த மாலுமிகள் இருந்தார்கள். அவர்கள் பார்லியால் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் எலுமிச்சம்பழம் சேர்க்கப்பட்டு, உப்பு போட்ட மீனையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கு உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு கிழவன் அங்கு வந்தான். கையில் ஒரு தோலாலான விரிப்பையும், இரண்டு கொம்புகளைக் கொண்ட ல்யூட் என்ற வீணையையும் அவன் வைத்திருந்தான். அந்தத் தோலை விரித்து தரையில் அமர்ந்து அவன் வீணையை மீட்ட ஆரம்பித்தவுடன், முகத்தை மறைத்துக் கொண்டு ஒரு இளம்பெண் உள்ளே வந்து நடனமாட ஆரம்பித்தாள். கம்பி வலையால் முகத்தை மறைத்திருந்த அவளுடைய பாதங்கள் நிர்வாணமாக இருந்தன. அவளுடைய நிர்வாணப் பாதங்கள், அந்த விரிப்பிற்கு மேலே வெள்ளை நிறப் புறாக்குஞ்சுகளைப்போல ஆடிக் கொண்டிருந்தன. அந்த அளவிற்கு அழகான ஒரு நடனத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அந்த நகரத்திற்கு இங்கிருந்து அப்படியொன்றும் அதிக தூரமில்லை. குறைந்த பட்சம் ஒருநாள் பயணம் மட்டுமே...” ஆன்மா விளக்கிக் கூறியது.

"தன்னுடைய இளம் கடல் கன்னிக்கு பாதங்கள் இல்லையே... அவளால் நடனமாட முடியாதே” என்று அப்போதுதான் மீனவன் நினைத்துப் பார்த்தான். அதைத் தொடர்ந்து அவனுடைய மனதில் பெரிய ஒரு விருப்பம் தோன்ற ஆரம்பித்தது. “இல்லை... அது ஒருநாள் பயணம் தானே? அப்படியென்றால் நான் சீக்கிரம் என் காதலி இருக்கும் இடத்திற்கு திரும்பி வந்துவிட முடியும். சற்று போய் பார்ப்போமா?” ஒரு சிரிப்புடன் அவன் நீர்ப்பரப்பிலிருந்து எழுந்து கரையை நோக்கி வந்தான்.

கரைக்கு வந்தவுடன், மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே அவன் ஆன்மாவை நோக்கி கையை நீட்டினான். சந்தோஷத்தால் உரத்த குரலில் சத்தம் எழுப்பிய ஆன்மா, ஓடிச் சென்று மீனவனின் சரீரத்திற்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து தன்னுடைய சரீரத்தின் நிழல் அதாவது ஆன்மாவின் சரீரம் மீனவனுக்கு மீண்டும் இல்லாமல் போனது.

“இனி தாமதம் செய்யவேண்டாம். நாம் இப்போதே புறப்படுவோம். இல்லாவிட்டால் பொறாமை பிடித்த கடல் தெய்வங்களோ, தடை போடக் கூடிய பயங்கர பேய்களோ வந்துவிடும்.”

அவர்கள் அந்த வகையில் மிகவும் வேகமாக, இரவு முழுவதும் நிலவு வெளிச்சத்தில் பயணம் செய்தார்கள். மறுநாள் பகல் முழுவதும் பயணம் தொடர்ந்தது. இறுதியில் அன்று சாயங்காலம் மறையும் நேரத்தில் அவர்கள் ஒரு நகரத்தை அடைந்தார்கள்.

“நீ கூறிய நடனம் நடப்பது இந்த நகரத்தில் தானா?” மீனவன் ஆன்மாவிடம் கேட்டான்.

“இது அந்த நகரமல்ல. இது வேறொரு நகரம். எது எப்படியிருந்தாலும், நாம் இங்கு நுழைவோம்.” ஆன்மா சொன்னது.

அவர்கள் அந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது, ஆபரணங்கள் விற்கக்கூடிய தெருவிற்கு வந்தார்கள். அங்கிருந்த ஒரு கடையில் அழகான வெள்ளிப்பாத்திரங்கள் வரிசையாக வைத்திருப்பதைப் பார்த்த ஆன்மா கூறியது: “அதில் ஒரு வெள்ளிக் கோப்பையை எடுத்து மறைத்து வை.” அதைக் கேட்டு மீனவன் ஒரு வெள்ளிக் கோப்பையை எடுத்து தன்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்தான்.

தொடர்ந்து அவர்கள் வேகமாக நகரத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

நகரத்தை விட்டு சற்று தூரம் வந்ததும், மீனவன் நின்றான். அந்த வெள்ளிப் பாத்திரத்தை எடுத்து, ஆன்மாவைப் பார்த்து கோபத்துடன் கேட்டான்: “என்னை ஏன் இதை எடுக்கச் சொன்னாய்? இது என்ன ஒரு வெட்கம் கெட்ட செயல்!”

“அமைதியாக இரு... அமைதியாக இரு... நான் கூறுகிறேன்... இப்போது அல்ல... பிறகு...” ஆன்மா கூறியது.

இரண்டாவது நாள் இரவு வேளையில் அவர்கள் இன்னொரு நகரத்தின் வாசலை அடைந்தார்கள். “இதுதான் நீ கூறிய நடனம் நடக்கக்கூடிய நகரமா?”  மீனவன் கேட்டான்.

“இது அந்த நகரமல்ல. இது வேறொரு நகரம். பரவாயில்லை... நாம் இந்த நகரத்திற்குள் நுழைவோம்.” அவனுடைய ஆன்மா கூறியது.

அவர்கள் அந்த நகரத்திற்குள் நுழைந்து சுற்றித் திரிந்தார்கள். இதற்கிடையில் அவர்கள் சந்தனம் விற்பனை செய்யப்படும் தெருவிற்கு வந்தார்கள். அங்கிருந்த ஒரு கடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை அவர்கள் பார்த்தார்கள். “அந்தச் சிறுவனை அடி....” ஆன்மா மீனவனிடம் கூறியது. அந்தச் சிறுவன் கீழே விழுந்து அழும் வரையில் அவனை அடித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.

நகரத்தை விட்டு நீண்ட தூரம் கடந்து வந்தபிறகு, மீனவன் ஆன்மாவிடம் கேட்டான்: “என்ன காரணத்திற்காக என்னை அந்தச் சிறுவனை அடிக்க வைத்தாய்? எந்த அளவிற்கு மோசமான செயல் அது!”

“அமைதியாக இரு... நான் பிறகு கூறுகிறேன்...” ஆன்மா தேற்றியது.

மூன்றாவது நாள் சாயங்காலம் அவர்கள் இன்னொரு நகரத்தை அடைந்தார்கள். “நீ கூறிய நடனப் பெண்ணின் நகரம் இதுதானா?”

“இதுதான் என்று தோன்றுகிறது. நாம் பார்ப்போம்.” ஆன்மா கூறியது.

அவர்கள் அந்த நகரம் முழுவதும் சுற்றி நடந்தும், எந்தவொரு இடத்திலும் நதிக்கரையிலிருந்த அந்த சத்திரத்தைப் பார்க்க முடியவில்லை. நகரத்திலிருந்த மனிதர்கள் எல்லாரும் ஆர்வத்துடன் மீனவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள் சிறிது பயம் தோன்றவே, அவன் ஆன்மாவிடம் சொன்னான்: “வா... நாம் கிளம்பலாம். வெளுத்த பாதங்களைக் கொண்ட நடனப் பெண் இங்கே இல்லை.”

“வேண்டாம்... அவசரப்படாதே. இப்போது இரவு நேரம்... நல்ல இருட்டு... வழியில் திருடர்களின் தொல்லைகள் இருக்கும்.” ஆன்மா கூறியது.


அதனால் அவர்கள் அந்த இரவு வேளையில் சந்தையிலேயே ஒரு இடத்தில் தங்குவது என்று தீர்மானித்தார்கள். அப்போது அந்த வழியே தலையில் துணி அணிந்து, டார்டார் பாணியில் ஆடை அணிந்த ஒரு வியாபாரி கையில் ஒரு லாந்தர் விளக்குடன் வந்தான். “கடைகள் அனைத்தையும் அடைத்து விட்டு, மூட்டைகளைக் கட்டிவிட்டு கடைக்காரர்கள் போய்விட்டார்கள். அதற்குப் பிறகும் நீங்கள் ஏன் சந்தையில் இருக்கிறீர்கள்?” அவன் கேட்டான்.

“இந்த நகரத்தில் நான் எந்தவொரு சத்திரத்தையும் பார்க்கவில்லை. எனக்கு தலையைச் சாய்ப்பதற்கு ஒரு இடம் தர இங்கு உறவினர்கள் யாரும் இல்லை.” மீனவன் கூறினான். “ஓ! அதனாலென்ன? நாம் எல்லாரும் உறவினர்கள்தானே? நாம் ஒரே தெய்வத்தின் மக்கள் அல்லவா? என்னுடன் வாருங்கள். என்னுடைய வீட்டில் விருந்தினர்களுக்கான ஒரு அறை இருக்கிறது. அங்கு இருக்கலாம்.” அந்த வியாபாரி மீனவனை அழைத்தான்.

இளைஞனான மீனவன் எழுந்து அந்த வியாபாரியுடன் சேர்ந்து அவனுடைய வீட்டுக்கு நடந்தான். அவர்கள் மாதுளை மரங்கள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்தைக் கடந்து ஒரு வீட்டை அடைந்தார்கள். அங்கு சென்றவுடன், கையைக் கழுவுவதற்காக ஒரு செம்புப் பாத்திரத்தில் பன்னீரைக் கொண்டு வந்து வைத்தான். தொடர்ந்து தாகத்தைத் தணிப்பதற்காக தண்ணீர்ப் பூசணியையும், அதைத் தொடர்ந்து ஒரு சிறிய பாத்திரத்தில் சாதத்தையும், ஒரு துண்டு வறுத்த ஆட்டு மாமிசத்தையும் கொண்டுவந்து தந்தான்.

சாப்பாட்டுக்குப் பிறகு, வியாபாரி மீனவனை விருந்தினர் தங்குவதற்காக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான். நன்கு உறங்கும்படி கூறிவிட்டு அவன் அறையைவிட்டு அகன்றான். தன்னுடைய விரலில் கிடந்த மோதிரத்தை முத்தமிட்டு விட்டு, மீனவன் கம்பளிப் போர்வைக்குள் சுருண்டு படுத்தான். கம்பளியால் மூடியவுடன், அவன் தூக்கத்திற்குள் மூழ்கிவிட்டான்.

சூரியன் உதயமாவதற்கு மூன்று மணி நேரம் இருக்க, அப்போதும் இருள் படர்ந்திருக்க, ஆன்மா அவனைத் தட்டி எழுப்பிக் கூறியது: “எழுந்திரு... வியாபாரி தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் செல். பிறகு... அவனைக் கொன்றுவிட்டு, பொன் முழுவதையும் எடுப்பதற்கு வழியைப் பார். அது நமக்குத் தேவைப்படும்.”

இளைஞனான மீனவன் கண் விழித்து எழுந்து வியாபாரியின் அறையை நோக்கி நடந்தான். அவனுடைய கால் பகுதியில் வாளொன்றை வைத்திருப்பதை அவன் பார்த்தான். தலையின் அருகில் ஒன்பது பைகளில் பொன் இருந்தது. அவன் அந்த வாளைத் தொட்டபோது, வியாபாரி கண்விழித்துவிட்டான். வேகமாக எழுந்து அவன் வாளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு மீனவனிடம் கேட்டான்: “நன்மைக்கு பதிலாக நீ தீமையையா தருகிறாய்? நான் உன்னிடம் காட்டிய இரக்கத்திற்கு என்னுடைய ரத்தத்தைச் சிந்தச் செய்து பிரதிபலனைக் காட்டுகிறாயா?”

மீனவனின் ஆன்மா, அவனை கோபம் கொள்ளச் செய்தது. “அவனை அடி..” ஆன்மா கூறியது. மீனவன் அந்த வியாபாரியை அடித்து, மயக்கமடையச் செய்தான். பிறகு ஒன்பது பைகளிலும் இருந்த பொன்னை எடுத்து கொண்டு, மாதுளை மரங்கள் இருந்த தோட்டத்தின் வழியாக ஓடினான். ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவுக்கு எதிராக அவன் ஓடினான்.

அந்த நகரத்தை விட்டு நீண்ட தூரம் வந்தவுடன், மீனவன் தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு ஆன்மாவிடம் கேட்டான். “அந்த வியாபாரியை என்னை வைத்து அடிக்கச் செய்ததும், அவனுடைய பொன்னை எடுக்கச் செய்ததும் ஏன்? நீ ஒரு சாத்தான்...”

“மன்னித்து விடு... கொஞ்சம் அமைதியாக இரு.” ஆன்மா கூறியது.

“இல்லை...” மீனவன் சொன்னான்: “என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் எதையெல்லாம் வெறுக்கிறேனோ, அதையெல்லாம் நீ என்னைச் செய்ய வைக்கிறாய். உன்னையும் நான் வெறுக்கிறேன்.”

“நீ என்னை இந்த உலகத்திற்குள் திறந்துவிட்ட போது, எனக்கு ஒரு இதயத்தைத் தரவில்லை. அதைத் தொடர்ந்துதான் நான் இவற்றையெல்லாம் கற்றதும், விரும்பியதும்...” ஆன்மா கூறியது.

“நீ என்ன சொல்கிறாய்?” மீனவன் முணுமுணுத்தான்.

“உனக்குத் தெரியும்... உனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு ஒரு இதயத்தை நீ தரவில்லை என்ற விஷயத்தை மறந்துவிட்டாயா?” ஆன்மாவின் புலம்பல் தொடர்ந்தது: “அதனால் நீயும் சிரமப்படாமல், என்னையும் சிரமப்படுத்தாமல் அமைதியாக இரு... விட்டெறியப்படக் கூடிய அளவிற்கு வேதனைகளோ, கிடைப்பதற்கு சந்தோஷமானதோ, எதுவுமே உனக்கு இல்லை.”

அதைக் கேட்டு பயந்துபோன மீனவன், ஆன்மாவிடம் சண்டை போட்டான் : “இல்லை... நீ ஒரு மோசமானவன். கெட்ட விஷயங்களை நோக்கி இழுத்துச் சென்று, என்னை வழிதவற வைக்க நீ முயற்சிக்கிறாய். பாவத்தின் பாதையில் என்னை நடத்திக்கொண்டு செல்கிறாய்.”

“ஒரு இதயமே இல்லாமல் இந்த உலகத்தில் என்னை விட்டது நீதான் என்பதை மறந்துவிடாதே. வா... நாம் இன்னொரு நகரத்திற்குச் சென்று, சந்தோஷமாக இருக்கலாம். நம் கையில் இப்போது ஒன்பது பைகளில் பொன் இருக்கிறதல்லவா?”

ஆனால், மீனவன் அந்தப் பொன் இருந்த பைகளை எடுத்து வீசியெறிந்தவாறு சொன்னான்: “இனிமேல் நான் உன்னுடன் சேர்ந்து பயணம் செய்வதாக இல்லை. உன்னை நான் விலக்கப் போகிறேன்.” அவன் பாம்பின் தோலாலான கைப்பிடியைக் கொண்ட கத்தியை எடுத்து, நிலவுக்கு எதிரில் நின்றுகொண்டு, தன்னுடைய பாதத்திலிருந்து நிழலை வெட்டி நீக்கினான்.

ஆனால், அதற்குப் பிறகும் அவனிடமிருந்து ஆன்மா விலகிச் செல்லவில்லை. அவன் கூறியது எதையும் அது கேட்கவுமில்லை. அதற்கு பதிலாக அவனிடம் அது சொன்னது: “அந்தப் பெண் மந்திரவாதி கூறிய காலம் முடிந்துவிட்டது. இனி நான் உன்னை விட்டுப் போகமாட்டேன். உன்னால் என்னை விரட்டி விடவும் முடியாது. ஒருமுறை ஆன்மாவை விலக்கிய நபருக்கு, அது திரும்பவும் கிடைத்தால், அதை எப்போதும் அவன் தன்னுடன் பாதுகாப்பாக வைத்துக்கொண்டே தீரவேண்டும். அது ஒரு தண்டனை... ஆசீர்வாதமும்கூட...”

இளைஞனான மீனவன் தன் கைகளைக் கசக்கிக் கொண்டே புலம்பினான்: “அவள் ஒரு கபடத்தனம் நிறைந்த பெண் மந்திரவாதி... இந்த விஷயத்தை அவளே என்னிடம் ஒப்புக் கொண்டிருக்கிறாள்.”

“எந்தச் சமயத்திலும் இல்லை...” ஆன்மா திருத்திக் கூறியது: “அவள் யாரை வழிபட்டாளோ, அந்த ஆளுக்கு அவள் உண்மையானவளாக இருந்திருக்கிறாள். எல்லா காலங்களிலும் அவள், அந்த ஆளுக்குக் கீழ்ப்படியக்கூடியவளாக இருந்தாள்.”

இனிமேல் தன்னுடைய ஆன்மாவை விலக்குவதற்கு வழியே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, இந்த கெட்ட ஆன்மாவை எல்லா காலங்களிலும் பின்பற்றிச் சென்றே ஆகவேண்டும் என்பதையும் புரிந்துகொண்ட மீனவன் தரையில் விழுந்து தன்னுடைய தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.


9

பொழுது புலர்ந்ததும், மீனவன் எழுந்து ஆன்மாவிடம் சொன்னான்: “நீ கூறுவது எதையும் செய்யாமல் இருப்பதற்காக, நான் என்னுடைய கைகளைக் கயிறு கொண்டு கட்டிக்கொள்ளப் போகிறேன். இதேபோல உதடுகளை மூடிக்கொள்ளப் போகிறேன்... பிறகு... நீ கூறுவது எதற்கும் பதில் வராது. பிறகு... நான் என்னுடைய காதலி இருக்குமிடத்திற்குத் திரும்பிச் செல்லப் போகிறேன். அந்தக் கடலின் கரைக்குச் சென்று, அவளை வரவழைத்து, நீ என்னைச் செய்ய வைத்த மோசமான செயல்கள் அனைத்தையும் அவளிடம் கூறப்போகிறேன்.”

ஆனால், ஆன்மா அவனை விடுவதாக இல்லை. “திரும்பிச் செல்லும் அளவிற்கு உன்னுடைய காதலி யார்? இந்த உலகத்தில் அவளைவிட பேரழகு படைத்த பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். காட்டிலிருக்கும் பறவையைப்போல நடனமாடும் பெண்கள் இருக்கிறார்கள். காலில் மருதாணி பூசியிருப்பவர்கள்... கையில் செம்பு வளையல்கள் அணிந்திருப்பவர்கள்... நடனமாடிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் நீரைப் போல தெளிவாகச் சிரிப்பவர்கள்... வா.... என்னுடன் அவர்கள் இருக்குமிடத்திற்கு வா... பாவத்தைப் பற்றி சிந்திக்குமளவிற்கு உனக்கு என்ன பிரச்சினை? தின்பதற்குத் தகுதி கொண்டவை, தின்பதற்காக இருப்பவைதானே? குடிக்கும்போது இனிப்பாக இருக்கிறது என்றால், அதில் விஷம் இருக்கிறது என்று அர்த்தமா? உன்னை நீயே பிரச்சினைகளுக்குள் சிக்க வைத்துக் கொள்ளதே. வா... என்னுடன் சேர்ந்து வா... நாம் இன்னொரு நகரத்திற்குச் செல்வோம். ட்யூலிப் மலர்கள் நிறைந்த ஒரு சிறிய நகரம் இருக்கிறது. நீலநிற மார்புப் பகுதியிலிருக்கும் பீலியை விரிக்கும்போது, ஒளிவீசக் கூடிய மயில்கள் அங்கே இருக்கின்றன. அவற்றை கவனித்துக் கொள்பவள் சில நேரங்களில் கைகளைக் கொண்டும், சில நேரங்களில் கால்களைக் கொண்டும் நின்றுகொண்டே மிகவும் அழகாக நடனமாடுவாள். மிகவும் அழகாக ஆடைகளணிந்து, சிரித்து, ரசித்துக் கொண்டே இருக்கும் அவளுடைய நடனம். உன்னுடைய சொந்தப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல், வா... நாம் அங்கே செல்லலாம்.

ஆனால், ஆன்மாவிடம் பதிலெதுவும் கூறாமல், தன்னுடைய உதடுகளை மவுனத்தால் அடைத்து வைத்தான் மீனவன். தன்னுடைய கைகளை ஒரு கயிறைக் கொண்டு இறுக்கிக் கட்டினான். பிறகு, தான் வந்த வழியிலேயே அவன் திரும்பி நடந்தான். வழியில் பல இடங்களிலும் ஆன்மா பல ஆசைகளில் அவனை இறக்கினாலும், மீனவன் அவற்றில் விழவில்லை. அந்த அளவிற்கு அவனுக்குள் இருந்த காதல் பலம் கொண்டதாக இருந்தது.

பழைய கடற்கரையை அடைந்ததும். அவன் தன்னுடைய கையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டு, உதட்டிலிருந்த பூட்டை உடைத்தெறிந்து விட்டு, அவன் கடல் கன்னியை அழைத்தான். ஆனால், அவனுடைய அழைப்பைக் கேட்டு அவள் வரவில்லை. பகல் முழுவதும் அவன் அவளை அழைத்துக் கொண்டிருந்தும், அதற்கு அவளிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அதைப் பார்த்த மீனவனின் ஆன்மா அவனை கிண்டல் பண்ண ஆரம்பித்தது. “உன்னுடைய காதலில் என்ன கிடைத்தது? நீ உடைந்த பாத்திரத்தில் நீர் பிடிப்பவனைப் போன்றவன். கையில் இருந்ததைக் கொடுத்து விட்டாய். திரும்ப எதுவும் கிடைக்கவில்லை. என்னுடன் சேர்ந்து நீ வந்திருந்தால், இதைவிட எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும்! சந்தோஷத்தின் அடிவாரம் எங்கே இருக்கிறது என்ற விஷயம் எனக்குத் தெரியும். அத்துடன் அங்கு என்ன செய்யவேண்டும் என்பதும்...!”

ஆனால், மீனவன் ஆன்மாவிற்கு பதிலெதுவும் கூறவில்லை. அவன் அங்கிருந்த பாறைகளுக்கு மத்தியிலிருந்த இடைவெளியில் ஒரு குழியை உண்டாக்கி, ஒரு வருடத்திற்கு அங்கேயே தங்கியிருந்தான். எல்லா நாட்களிலும் பொழுது புலரும் நேரத்திலேயே கடற்கரைக்குச் சென்று, கடல் கன்னியை அழைப்பான். மதிய நேரத்திலும் சென்று கூப்பிடுவான். இரவு வேளையிலும் கடற்கரைக்குச் சென்று அவளைப் பெயர் சொல்லி அழைப்பான். ஆனால், ஒருமுறைகூட அவள் நீர்ப்பரப்பில் தன்னுடைய முகத்தைக் காட்டவில்லை. அவன் பல இடங்களிலும் தேடிப் பார்த்தும், வேறு எந்த இடத்திலும் அவளைப் பார்க்க முடியவில்லை.

ஆன்மாவோ, எல்லா நேரங்களிலும் அவனுக்கு முன்னால் இனிய வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. ஆனால், ஒருமுறைகூட அவன் அந்த ஆசை வார்த்தைகளில் விழவில்லை. அந்த அளவிற்கு அவனுடைய காதல் பலம் கொண்டதாகவும், ஆழமானதாகவும் இருந்தது.

இப்படியே ஒரு வருடம் கடந்தோடி விட்டது. அப்போது ஆன்மா தனக்குத்தானே சிந்தித்தது. "நான் என்னுடைய எஜமானரை இவ்வளவு நாட்களும் மோசமான காரியங்களை நோக்கிப் பிடித்திழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனால், பலமான அந்தக் காதலுக்கு சிறிதும் கேடு உண்டாகவில்லை. இனி... இப்போது... நல்ல விஷயங்களைக் கொண்டு கவர்ந்திழுக்க முயற்சிப்போம். ஒருவேளை என்னுடன் ஆள் வந்து சேர்ந்தால்...?”

ஆன்மா மீனவனிடம் கூற ஆரம்பித்தது: “நான் இவ்வளவு காலமும் இந்த உலகத்திலுள்ள சந்தோஷங்களைப் பற்றி மட்டுமே கூறிக்கொண்டிருந்தேன். நீ அவற்றை காது கொடுத்து கேட்கவில்லை. இனி... இந்த உலகத்திலுள்ள வேதனைகளையும் துயரங்களையும் பற்றிக் கூறுகிறேன். அது... ஒருவேளை உன்னை மாறும்படிச் செய்யலாம். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- வேதனைதான் இந்த உலகத்திலேயே மன்னனாக இருக்கிறது. அதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. அணிவதற்கு ஆடைகள் இல்லாதவர்களும், சாப்பிடுவதற்கு உணவு இல்லாதவர்களும் அங்கே இருக்கிறார்கள். பழைய துணிகளை அணிந்துகொண்டு வாழும் விதவைகள் இருக்கிறார்கள். ஓட்டை விழுந்த பையுடன் நடந்து திரியும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். வா... நாம் அங்கு செல்லலாம். இல்லாவிட்டால்... நீ இங்கேயே கடல் கன்னியை அழைத்துக் கொண்டு இருக்கப் போகிறாயா? இவ்வளவு நாட்களாக அழைத்து அவள் வரவில்லை. இனி வருவாளா? நீ இந்த அளவிற்கு விலை மதிப்பு கொண்டதாக நினைக்கும் காதல் இதுதானா?”

அதற்குப் பிறகும், தன் காதலின் பலத்தின்மீது நம்பிக்கை கொண்டிருந்த மீனவன் தொடர்ந்து கடற்கரைக்குச் சென்று, மூன்று நேரங்களிலும் கடல் கன்னியை அழைத்துக் கொண்டிருந்தான். இரவு நேரத்தில்கூட அவளுடைய பெயரை அவன் உச்சரித்துக் கொண்டிருந்தான். ஆனால், ஒருமுறைகூட அவள் கடல் பரப்பிற்கு வரவேயில்லை. அவன் அவளைத் தேடி கடலுக்குள் நதிகள் நுழையும் பகுதிகளுக்குச் சென்றான். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அடிவாரங்களுக்குச் சென்றான். நிலவின் நீல வெளிச்சத்தில் குளித்த வண்ணம் நின்றிருக்கும் கடலிலும், புலர்காலைப் பொழுதின் மெல்லிய வெளிச்சத்தில் கிடக்கும் கடலிலும் தேடிப் பார்த்தான்.

இப்படியே இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன. மீனவன், தன்னுடைய குடிலில் தனியாக இருக்கும் போது, ஆன்மா சொன்னது: “ஹா! நான் உன்னை தீமையான விஷயங்களைக் கூறி, பிடித்திழுக்க முயற்சித்தேன். பிறகு... நல்ல விஷயங்களைக் கூறி, கவர்ந்திழுப்பதற்கு முயற்சித்தேன். ஆனால், உன்னுடைய பலமான காதலுக்கு முன்னால், அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.


இனிமேல்... நான் உன்னை எந்தச் சமயத்திலும் வசீகரிக்க முயற்சிக்க மாட்டேன். அதனால், முன்பு மாதிரியே என்னை உன்னுடைய இதயத்திற்குள் நுழைய அனுமதி... முன்பு மாதிரியே நான் இருந்து கொள்கிறேன்.”

“உண்மையாகவே நீ உள்ளே நுழைய வேண்டும்.” மீனவன் சொன்னான். “கொஞ்சகாலம் இதயமே இல்லாமல் உலகம் முழுவதும் அலைந்து திரிந்தாய் அல்லவா நீ?”

“கஷ்டம்! உன்னுடைய இதயத்திற்குள் நுழைவதற்கு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை. அந்த அளவிற்கு இந்த இதயம் அன்பால் நிறைந்திருக்கிறது...” ஆன்மா புலம்பியது.

“பரவாயில்லை... ஏதாவது வழி இருக்கிறதா என்று நான் பார்க்கிறேன்.” மீனவன் தேற்றினான்.

அவர்கள் அவ்வாறு உரையாடிக் கொண்டிருந்த போது, கடலில் ஒரு ஓலம் கேட்டது. கடல் வாழ் உயிரினங்கள் மரண நேரத்தில் உண்டாக்கும் அலறல் சத்தத்தைப்போல அது இருந்தது. வேகமாக எழுந்த மீனவன் தன்னுடைய குடிலை விட்டு, கடற்கரையை நோக்கி ஓடினான். வெள்ளியை விட வெண்மையான ஒரு கட்டுடன், கறுப்பு நிற அலைகள் கரையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தன. அலையிலிருந்து அதை நுரை ஏற்றெடுத்தது... கடைசியில் கரை... இறுதியில் மீனவன் அதைப் பார்த்தான். தன்னுடைய கால்களுக்கு அருகில் இறந்து விறைத்துப்போய் கிடக்கும் கடல் கன்னியின் பிணத்தை...

குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே அவன் கடல் கன்னியின் முகத்தில் முத்தமிட்டான். அவளை இறுக அணைத்துக்கொண்டு மணலில் கிடந்த அவன், அவளுடைய ஈரமான தலைமுடியைத் தடவினான்.

அவளுடைய மூடப்பட்டிருந்த கண்களில் முத்தமிட்ட அவன் தேம்பித் தேம்பி அழுதான். அந்த இறந்த உடலுக்கு முன்னால் அவன் தன்னுடைய குற்றங்களைக் கூறினான்.

திடீரென்று கறுத்த கடல் அருகில் வந்தது. வெண்மையான நுரைகள் ஒரு புலியைப்போல சீறின. நுரையின் வெண்மையான நகங்கள் கடற்கரையில் மோதிக்கொண்டிருந்தன... கடல் அரசனின் அரண் மனையிலிருந்து எழுந்த ஓலத்தை மீண்டும் கேட்பதற்காக கடலில் தூரத்தில் எங்கோ ட்ரைட்டன்கள் சங்கு ஊதி அழைத்தன.

“ஓடித் தப்பிக்க வழி பார்...” ஆன்மா உரத்த குரலில் கூறியது: “அதோ... கடல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. அது உன்னையும் கொன்றுவிடும். ஓடி... விலகிச் செல். காதலின் பலம் காரணமாக உன்னுடைய இதயம் எனக்கு முன்னால் மூடப்பட்டு இருக்கிறது என்று தோன்றுகிறது. பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வேகமாக போய்ச் சேர். என்னை இந்த உலகத்தில் மீண்டும் இதயமே இல்லாமல் அலைந்து திரிய விட்டு விடாதே.”

ஆனால், மீனவனோ அதைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல் கடல் கன்னியை அழைத்துக் கொண்டே இருந்தான். “அறிவைவிட உயர்ந்தது காதல்தான். பணத்தைவிட விலை மதிப்பு உள்ளதும், மனித மகள்களின் பாதங்களைவிட அழகானதும் அதுதான்... அது நெருப்பில் வாடுவதோ, நீரில் நனைவதோ இல்லை. நான் புலர்காலைப் பொழுதில் உன்னை அழைத்தேன். நீ வரவில்லை. உன்னுடைய பெயரை இப்போது நிலவுகூட தெரிந்துகொண்டிருக்கும். அதற்குப் பிறகும் நீ வரவில்லை. கஷ்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும்- நான் உன்னை விட்டுப் போயிருந்தாலும், உன்னுடைய காதல் என்னுடனே இருக்கிறது. நீ இறந்ததைத் தொடர்ந்து, நானும் இனி உயிரைவிடப் போகிறேன்.” அவனுடைய புலம்பல் தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆன்மா அவனைவிட்டு தூரத்தில் விலகி நின்றது. ஆனால், காதலின் பலத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்ட மீனவனால் அது முடியவில்லை. நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருந்த கடலோ, அலைகளில் அவனை மூட ஆரம்பித்தது. தன்னுடைய இறுதி நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட மீனவன், பைத்தியம் பிடித்த நிலையில் இருந்த உதடுகளால் கடல் கன்னியின் மென்மையான அதரங்களில் முத்தமிட்டான். அத்துடன் அவனுக்குள்ளிருந்த இதயம் தகர்ந்தது. காதலின் முழுமையில் தகர்ந்த அந்த இதயத்திற்குள் வழி கண்ட ஆன்மா, அதற்குள் நுழைந்தது. முன்பைப்போல அவர்கள் ஒன்றாக ஆனார்கள். அதற்குள் மீனவனை... அலைகளைக் கொண்டு கடல் விழுங்கி விட்டிருந்தது.

10

கோபமாக இருந்த கடலை ஆசீர்வதிப்பதற்காக அதிகாலை வேளையில் பாதிரியார் வந்தார். துறவிகளும் இசை நிபுணர்களும் ஊதுபத்தி பற்ற வைப்பவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றுபவர்களும் அவரைப் பின்பற்றி வந்தார்கள். கடற்கரைக்கு வந்த பாதிரியார், கடல் கன்னியின் இறந்த உடலையும், அதை இறுக அணைத்துக்கொண்டு நுரையில் குளித்தவாறு கிடந்த மீனவனையும் பார்த்தார். “நான் இந்தக் கடலை ஆசீர்வதிக்க மாட்டேன். இதற்குள் இருப்பவற்றையும்! இந்தக் கடல் கன்னிகள் சபிக்கப்பட்டவர்கள். அதை விட சபிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் செல்பவர்கள். காதல் என்ற பெயரில் தெய்வத்தை மறந்துவிட்டவன், இதோ அவனுடைய காதலியுடன் சேர்ந்து, தெய்வத்தால் விதிக்கப்பட்டுக் கிடக்கிறான்! அவனுடைய உடலையும் அவனுடைய காதலியின் உடலையும் எடுத்து சலவை செய்பவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் குழியைத் தோண்டி புதையுங்கள். அங்கு எந்தவொரு அடையாளமும் இட வேண்டாம். யாருக்கும் அந்த இடம் தெரியக்கூடாது. வாழ்க்கையில் அந்த அளவிற்கு சபிக்கப்பட்டவர்கள் அவர்கள். மரணத்திலும் அப்படித்தான்...”

பாதிரியார் கூறியதைப்போலவே, அவர்கள் பின்பற்றி நடந்தார்கள். சலவை செய்பவர்களின் பகுதிக்கு அருகில் ஒரு இடத்தில் அவர்களைக் குழிதோண்டிப் புதைத்தார்கள்.

அதற்குப் பிறகு... மூன்று வருடங்கள் கழித்து, ஒரு புனித நாளன்று நம்பிக்கையாளர்களுடன் உரையாடுவதற்காக பாதிரியார் தேவாலயத்திற்கு வந்தார். தன்னுடைய ஆடையை அணிந்து நுழைந்த அவர், பீடத்திற்கு முன்னால் வணங்கி தன் தலையை உயர்த்தியபோதுதான் கவனித்தார்- பீடம் முழுவதும் இதுவரை பார்த்திராத அழகான மலர்களால் மூடப்பட்டிருந்தது. அதன் அழகு அவரைச் சுண்டி இழுத்தது. அதன் நறுமணம் நாசிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை- அவருக்கு சந்தோஷம் உண்டானது.

தெய்வ கோபத்தைப் பற்றி உரையாற்றுவதற்குத் தயாராகி வந்திருந்த பாதிரியார், அந்த மலர்களின் அழகில் மனதைப் பறி கொடுத்திருந்ததாலும், நாசிக்குள் நுழைந்த அந்த நறுமணத்தாலும் அவர் வேறொரு விஷயத்தைப் பற்றி உரையாற்றச் செய்துவிட்டது: அவர் தெய்வ கோபத்தைப் பற்றி உரையாற்றவில்லை. காதல் என்ற ஒரு தெய்வத்தைப் பற்றி அவர் பேசினார். எப்படி அது நடந்தது என்று அவருக்குக்கூட தெரியவில்லை.

சடங்குகளுக்குப் பிறகு, பாதிரியார் அங்கியைக் கழற்றிவிட்டு விசாரித்தார். “இவை என்ன மலர்கள்? இங்கு இவை எப்படி வந்தன?”

“இவை என்ன மலர்கள் என்று தெரியவில்லை. ஆனால், சலவை செய்பவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலிருந்து இவை கிடைத்தன.” அவர்கள் கூறினார்கள்.

அதைக் கேட்டு நடுங்கிப்போன பாதிரியார் தன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று பிரார்த்தனையில் மூழ்கினார்.

புலர்காலைப் பொழுதில், வெளிச்சம் வருவதற்கு முன்பே, அவர் துறவிகளையும் இசை நிபுணர்களையும் மெழுகுவர்த்தி ஏற்றுபவர்களையும் ஊதுபத்தி பற்ற வைப்பவர்களையும் ஒன்று சேர்த்து, கடற்கரைக்குச் சென்று கடலை ஆசீர்வதித்தார். அத்துடன் அதிலிருக்கும் எல்லா உயிரினங்களையும் செடிகளையும்கூட... தெய்வத்தின் ராஜ்ஜியத்தில் உள்ள எல்லாவற்றையும் அவர் ஆசீர்வதித்தார். எல்லாருக்கும் சந்தோஷம் உண்டானது. ஆனால், அதற்குப் பிறகு எந்தச் சமயத்திலும் சலவை செய்பவர்களின் பகுதியிலிருந்த அந்த மூலையில் ஒரு மலர்கூட மலரவில்லை. அந்த இடம் எப்போதும்போல வெறுமனே கிடந்தது. அதேபோல கடலின் இன்னொரு பகுதிக்கு விலகிச் சென்ற கடல் கன்னிகளில் யாரும் அந்தக் கரைக்கு வரவும் இல்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.