
சுராவின் முன்னுரை
சென்னையைக் களமாக வைத்து காக்கநாடன் (Kakkanadan) மலையாளத்தில் எழுதிய ‘கோழி’ (Kozhi) என்ற புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் மூன்று மருமகன்கள்தான் இந்த நாவல் எழுதுவதற்கான உந்துசக்தியாக இருந்தவர்கள்’ என்கிறார் காக்கநாடன். மேலும் அவர் கூறுகிறார்: “அவர்களுடைய பெயர்கள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.
மூன்று பேரும் ஒன்று சேர்ந்து டில்லிக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று பேருக்கும் வேலை எதுவும் இல்லை என்று ஆனபோது, அவர்கள் கோழிப்பண்ணை ஆரம்பித்தார்கள். சமூகத்தில் உண்டாகும் மாற்றங்களுக்கேற்றபடி ஆச்சார குலத்தவரான நம்பூதிரியாக இருந்தாலும், நாயராக இருந்தாலும், யாராக இருந்தாலும் மாறுதல் நிகழும்; மாறுதலுக்கு உட்பட்டே தீருவார்கள் என்ற விஷயத்தைச் சிறிது நகைச்சுவை கலந்து நான் கூற முற்பட்டதன் வெளிப்பாடே இந்த நாவல்.”
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
அதிகாலையில் கோழி கூவியது. முன்பு அய்க்கர மடத்தின் கிழக்குப் பக்க எல்லையாக இருந்த காடன்மலைக்கு அப்பாலிருந்து சூரியன் உதித்து மேலே வந்தது.
அய்க்கர மடத்தின் பெரியவரான திருமேனி தன் இறுதி மூச்சை விட்டார். அத்துடன் மடம் முழுமையான அழிவிற்கு வந்துவிட்டது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு பெரிய திருமேனிக்குச் சாபம் கிடைத்ததுதான் மடத்தின் அழிவிற்குக் காரணம் என்று மட விரோதியும் கெட்ட எண்ணம் கொண்டவனுமான கோவிந்த கணகன் கவடி போட்டுச் சொன்னான்.
ஜோதிடன் சொன்னது சரியா அல்லது தவறா என்பது தெரியாது. மடம் அழிந்துவிட்டது.
திருமேனிமார்கள் ஊரிலுள்ள ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி உறவுகளில் ஈடுபட்டார்கள். அழகிகளான அச்சிமார்கள் திருமேனிமார்களை சுகத்தில் திளைக்க வைத்தார்கள். கீதா கோவிந்தத்தை உச்சரித்தவாறு மந்தாக்ராந்தத்திலும் குஸும் மஞ்சரியிலும் ஆபாச சுலோகங்களை உருவாக்கிக் கொண்டு, அச்சிமார்களின் படுக்கையறைகளில் திருமேனிமார்கள் தளர்ந்து போய்க் கிடந்தார்கள். ரம்பையைப் போன்ற அச்சிமார்களின் உதடுகளில் முத்தமிட்டபோது அச்சிமார்கள் யக்ஷிகளைப் போல இரத்தத்தைக் குடித்தபோது, சிற்றின்ப போதையின் ஆழங்களில் எச்சில் இலையைப் போல வீழ்ந்து கிடந்த திருமேனிமார்கள் இரத்தத்தையும், நீரையும், தசையையும், எலும்பையும் அச்சிகளுக்கு அர்ப்பணம் செய்தார்கள். அவற்றுடன் நிலத்தையும் வீட்டையும்.
திருமேனிமார்களை நாயர்கள் ஏமாற்றினார்கள்.
நாயர்களை மாப்பிளமார்கள் ஏமாற்றினார்கள்.
வேலையில் இறங்கியபோது மாப்பிளமார்கள் மாடுகளாக மாறினார்கள். தொப்பி மடலின் கொம்பும், தேய்ந்துபோன குளம்புகளும், கோவணத்தின் வால்களும் வந்து சேர்ந்தபோது மாப்பிளமார்கள் தோற்றத்திலும் மாடுகளாக ஆகிவிட்டார்கள்.
அவர்கள் நாயர்களை ‘அய்யா...’ என்று மரியாதையுடன் அழைத்தார்கள். நாயர்மார்கள் அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். அப்போது மாப்பிளமார்கள் அவர்களைக் கெட்ட காரியங்களுக்குத் தூண்டினார்கள். அதற்கான சூழ்நிலைகளை அவர்கள் உண்டாக்கிக் கொடுத்தார்கள். விளக்கைப் பிடித்துக் கொண்டு விலகி நின்றார்கள்.
திருமேனிமார்கள் அழிந்ததைப் போல நாயர்களும் அழிந்தார்கள்.
மாப்பிளமார்கள் பனையைப் போல வளர்ந்தார்கள். அவர்களின் மடியில் கனம் கூடியது. எனினும், தொப்பி மடலை அவர்கள் எடுக்கவில்லை. நிலத்தை விட்டு வெளியே வரவில்லை. எதையும் வீணடிக்கவில்லை.
அவர்கள் திருமேனிமார்களையும் பிள்ளைமார்களையும் புகழோ புகழென்று புகழ்ந்தார்கள். பெண்களின் இன்ப போதையில் மயங்கிக் கிடந்த அவர்களிடம் கள்ளக் கணக்குக் கூறி அவர்கள் ஏமாற்றினார்கள். கள்ளக் கணக்கு சொன்னதன் பாவம் தீருவதற்காக தேவாலயங்களைக் கட்டினார்கள். தேவாலயத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தார்கள். கடவுளுக்கு லஞ்சம் தந்தார்கள். கடவுளுக்குத் தரகர்களாக இருந்த பாதிரியார்களுக்கு உணவு தந்தார்கள்.
கடைசியில் மடங்களுக்குச் சொந்தமான வயல்களையும் நிலங்களையும், முன்பு நாயர்மார்களுக்குச் சொந்தமாக இருந்த நிலங்களையும் வீடுகளையும் மாப்பிளமார்கள் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.
மடங்கள் அழிந்தன. நாயர் குடும்பங்கள் அழிந்தன. அங்கு அழிவை அடையாளம் காட்டும் எறும்புகள் புகுந்தன. தானியக் கிடங்கை கரையான்கள் தின்றன. பட்டினி கிடந்த பாம்புகள் வயல்களில் ஊர்ந்து போய்க் கொண்டிருந்தன.
அழிவைச் சந்தித்த மடங்களின் கூட்டத்தில் அய்க்கர மடமும் சேர்ந்தது.
இறந்த பெரியவர் கடன்களை உண்டாக்கிவிட்டுச் சென்றிருந்தார். பெரியவரின் காம சக்தியின் ஜுவாலையில் மீதமிருந்தவையும் எரிந்து விழுந்தன.
ஏழை பண்டாரத்தைப் போல பந்தல் படர்ந்திருந்த ஒரு பழமையான வீடும், பாம்புகள் ஓடிக் கொண்டிருக்கும் காடுகள் நிறைந்த ஒரு வயலும், சிறிது நிலமும் மட்டுமே எஞ்சி நின்றன.
பெரியவரின் இறுதிச் சடங்குகளுக்காகத் தூரத்திலிருக்கும் நகரத்தில் படித்துக் கொண்டிருந்த உண்ணித் திருமேனிமார்கள் வந்திருந்தார்கள்.
பெரியவரின் பிணத்திற்கு அருகில் புதிய தலைமுறை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தது.
தாய், சித்திமார்கள், சகோதரிகள் அடங்கிய அந்தர் ஜனங்கள் இறந்த உடலைச் சுற்றிலும் கூட்டமாக நின்று வாய்விட்டு அழுதார்கள்.
இறந்துபோன பெரியவரான திருமேனியின் உடலைத் தழுவிய அச்சிமார்கள் அவருடைய பெருமைகளைப் புகழ்ந்து பேசினார்கள். நெஞ்சில் அடித்துக் கொண்டார்கள். உரத்த குரலில் கதறி அழுதார்கள்.
“என்ன வசதி படைத்த திருமேனியாக இருந்தார்!”
“பூவன்பழத்தின் நிறத்தைக் கொண்டவராயிற்றே!”
“இந்த மடத்தின் விளக்கு அணைந்துவிட்டது!”
“இந்த ஊரின் விளக்கு அணைந்துவிட்டது!”
முதலைக் கண்ணீர் விட்டார்கள். முதலைகள் புகழ்ந்து பாடின.
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உண்ணித் திருமேனிமார்கள் மிகவும் கவலையில் மூழ்கினார்கள். அகன்ற கண்களையும் தைரியத்தையும் மூக்கு நுனியில் கோபத்தையும் ஊர் முழுக்கத் தொடர்புகளையும் கொண்டிருந்த பெரியவர் என்ற பயமுறுத்தக் கூடிய கனவு இல்லாமல் போய் விட்டது என்பதற்காக அவர்கள் கவலைப்படவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால் பெரியவரின் மரணம் அவர்களைச் சந்தோஷம் கொள்ளச் செய்தது.
ஆனால், பிரச்சினைகள்! குடும்பத்தின் சுமை முழுவதும் உண்ணித் திருமேனிமார்களின் பறக்கும் சக்தி இல்லாத சிறகுகளின் மீது வந்து விழுந்தது. வீட்டில் ஆயிரத்தொரு பேருக்குச் சாப்பாடு போட வேண்டும். அந்தர் ஜனங்கள் உடலை விற்று விபச்சாரம் செய்வதற்கு முன்பு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைக்க வேண்டும்.
அது தவிர, உடனடியாகச் செய்ய வேண்டிய செலவு, செய்ய வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இறந்துபோன பெரியவன் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும்.
உண்ணித் திருமேனிமார்கள் மாளிகைக்குள் ஆட்கள் யாரும் இல்லாத ஒரு அறையில் ஒன்று கூடினார்கள்.
எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த நாராயணன், பி.ஏ. படித்துக் கொண்டிருந்த தேவதத்தன், எஃப்.ஏ. படித்துக் கொண்டிருந்த உண்ணி சங்கரன்.
மூன்று பேரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பேந்தப் பேந்த அவர்கள் விழித்தார்கள்.
“இப்போ என்ன செய்றது?” – நாராயணன் சொன்னான்.
தேவதத்தன் திரும்ப அதையே சொன்னான்: “இப்போ என்ன செய்றது?”
உண்ண சங்கரனும் அதையே சொன்னான்: “இப்போ என்ன செய்றது?”
கரையான் அரித்த பழமையான மரக்கதவு பதில் சொல்லவில்லை. பழைய அந்தச் சுவர் அசையாமல் இருந்தது. வயலில் அலைந்து கொண்டிருந்த – பட்டினியால் பேய்க் கோலம் போட வேண்டி நேரிட்ட பரதேவதையும் வாய் திறக்கவில்லை.
திருமேனியின் பிள்ளைகள் யாரிடம் என்று இல்லாமல் தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.
“இப்போ என்ன செய்றது?”
ஏதாவது செய்தே ஆக வேண்டும். மடத்தின் பெருமைக்கு ஏற்றபடி இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும். அது மிகவும் செலவு பிடிக்கக் கூடிய ஒரு விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
“எனினும், அந்தஸ்து...” அழகனான நாராயணன் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தினான்.
மற்ற இரு இளம் வயது திருமேனிகளும் தங்களின் தலையைச் சொறிந்தார்கள்.
நாராயணனுக்கு முகத்தில் அரச களை இருந்தது. வட்டமான முகம். கறுமை நிறக் கண்கள். சுருள் விழுந்த முடி. நல்ல உடல் கட்டு.
பல தலைமுறைகளுக்கு முன்பு கொடிகட்டி வாழ்ந்த அக்னி சர்மனின் அச்சு அசல் என்று அவனைச் சொல்லலாம்.
அக்னி சர்மனின் வாழ்க்கை மடத்திற்கு அழிவு உண்டாக்கக் கூடியதாக முடிந்தாலும் ஊருக்கு அவர் வாழ்ந்த காலம் பொற்காலமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் மடத்தைச் சேர்ந்த நிலங்கள் ஏக்கர் கணக்கில், மலை கணக்கில் அந்த ஊரைச் சேர்ந்த நாயர் குடும்பங்களுக்கு கை மாற்றம் செய்யப்பட்டது.
அக்னிசர்மனுக்கு ‘சேவல்’ என்றொரு பெயரும் இருந்தது.
சேவல் தங்கப் பஸ்பம் சாப்பிட்டார். தங்கம் சேர்த்த லேகியம் உண்டார். நெற்றியில் சந்தனம் பூசினார். பொன் நிறத்தைக் கொண்ட மார்பு எப்போதும் திறந்த கோலத்தில் இருந்தது. அந்த வடிவத்தை ஒருமுறையாவது பார்க்க அச்சிமார்கள் துடித்தார்கள். அவர் தங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஏங்கினார்கள். திருமேனியைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டார்கள்.
சேவலின் கருட பார்வையிலிருந்து விலகியிருக்க யாராலும் முடியவில்லை. அவருடைய கறுத்த கண்கள் ஊரெங்கும் அலைந்து கொண்டிருந்தன. போர்க்கோழியின் வீரியத்துடன் அக்னி சர்மன் பறந்து கொத்தினார். நாலு கெட்டுகளையும் எட்டு கெட்டுகளையும் கொத்தி ஒரு வழி பண்ணினார். வாசற் கதவுகளைக் கொத்தி உடைத்தார். உள்ளே நுழைந்து கோழிகளுடன் போர் புரிந்தார்.
கோழிகள் துடித்தன. கத்தின. முட்டை இட்டன.
சேவல் உற்சாகத்துடன் பறந்து திரிந்தது.
அக்னி சர்மன் சமஸ்கிருத பண்டிதராக இருந்தார். அவர் குமார சம்பவத்திலிருந்த பார்வதி வர்ணனையை வாயால் சொன்னார். அதை விரித்து விளக்கினார். கீதா கோவிந்தம் முழுவதையும் மனப்பாடமாகக் கூறினார். வாத்ஸ்யாயனனுக்குப் புகழ் மாலை சூட்டினார். புகழ் மாலை சூட்டியது மட்டுமல்ல – ஊரெங்கும் நடந்து காமசூத்திரத்திற்கு விளக்க உரைகள் எழுதிச் சேர்த்தார்.
சிற்றின்ப விஷயத்தில் அரசராக இருந்த அக்னி சர்மனிடமிருந்து அச்சிமார்களுக்கு உடல் சுகம் மட்டுமல்ல - பொருள் இன்பமும் கிடைத்தது. அக்னி சர்மனை மிகவும் அதிகமாக இன்பக் கடலில் மூழ்க வைத்த அச்சிமார்களின் குடும்பங்களுக்கு மடத்தைச் சேர்ந்த சொத்துக்களின் ஒரு பெரிய பகுதியை அவர் எழுதிக் கொடுத்தார்.
அக்னி சர்மனின் வாழ்வு முறை மடத்தின் வீழ்ச்சிக்கு நாள் குறித்தது.
அதே நேரத்தில் அய்க்கர மடத்திலேயே மிகவும் புகழ்பெற்ற திருமேனி என்ற பெயரை அவர் பெற்றார் என்பதென்னவோ உண்மை.
அவருடைய முகத்திலிருந்த ராஜகளையுடன் நாராயணன் பிறந்தான்.
நாராயணனுக்குத் தங்கப் பஸ்பம் கிடைக்கவில்லை. தங்கம் சேர்ந்த லேகியமும் கிடைக்கவில்லை. வெறும் `ச்யவன ப்ராசம்’ கூட அவனுக்குக் கிடைக்கவில்லை.
கஞ்சி, பயறு, பூசணிக்காய், பால் என்று நாராயணன் வளர்ந்தான். சுருக்கமாகச் சொல்லப்போனால் அக்னி சர்மனின் பரிதாபமான ஒரு பதிப்பாக அவன் இருந்தான்.
எனினும், நாராயணனைப் பார்த்தபோது ஊர்க்காரர்கள் அக்னிசர்மன் என்ற கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட திருமேனியை நினைத்துக் கொண்டார்கள். அவருடைய வீரச் செயல்களை அவர்கள் அப்போது பேசிக் கொண்டார்கள். மடத்திற்குத் திரும்பவும் புகழ் கிடைக்கும் என்று தங்கள் மனதிற்குள் எண்ணினார்கள். மடத்தை அழித்தார் என்றாலும், சேவல் புகழ்பெற்ற ஒரு மனிதராக இருந்தாரே!
பட்டாடை அணிந்து நாராயணன் வயல்வெளியில் ஓடித் திரிந்தபோது, பால கண்ணனைச் சுற்றி இருந்த கோபிகைகளைப் போல பக்கத்து வீடுகளைச் சேர்ந்த அச்சிமார்கள் அவனைச் சுற்றி எப்போதும் இருந்தார்கள். அவனை மிகவும் கவனம் எடுத்துப் பார்த்துக் கொண்டார்கள். அவனைக் கைகளில் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். முத்தம் தந்தார்கள். பெரியவரின் மனதைத் தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அவர்கள் செய்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது. பெரியவர் கோபிகைகள்மீது தன் கண்களைப் பதித்தார். ஆடைகளை அவர்களிடமிருந்து பறித்தார். ஆடைகளை அவிழ்த்த பெண்களுக்குத் தங்கக் கட்டிகளை அள்ளித் தந்தார். நாராயணன் என்ற பாலகன் எதுவும் தெரியாமல் ஓடி விளையாடிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த நேரத்தில், மாளிகை அறைக்குள் படுத்துக் கொண்டு பெரியவர் அக்னிசர்மன் ஆரம்பித்து வைத்த மிகப் பெரிய அழிவிற்கு அடையாளச் சின்னமாக இருந்தார்.
தேவதத்தனுக்கும் உண்ணி சங்கரனுக்கும் அந்தக் கொஞ்சல்களெல்லாம் சிறிதும் கிடைக்கவில்லை. அவர்கள் பிறந்தபோது மடம் கிட்டத்தட்ட வறுமை நிலையை எட்டியிருந்தது. வீட்டுக்குள்ளிருந்த பெண்கள் வெளியே அதைச் சொல்லாமல் இருந்தாலும், பிள்ளைகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது- நிலைமை அந்த அளவிற்குச் சிறப்பாக இல்லையென்று.
இப்போது இதோ முழுமையான அழிவிற்குக் காரணமாக இருந்த திருமேனி புகைச் சுருள்களாக முன்னோர்களின் உலகத்தைத் தேடி பறந்து போய்விட்டார். மடம் மரண வயதில் இருக்கிறது. வயலில் எங்கோ விழுந்து கிடந்து பரதேவதை தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.
கடினமான, மிகப் பெரிய கேள்வி திருமேனியின் பிள்ளைகளின் மனங்களின் கோட்டைச் சுவர்களில் பீரங்கியாக வெடித்துக் கொண்டிருந்தது.
“இப்போ என்ன செய்றது?”
நாராயணன் பாதியாக விட்ட தன்னுடைய கேள்வியைத் திரும்பச் சொல்லி முழுமை செய்தான்.
“இருந்தாலும், அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டாமா?”
தேவதத்தன் என்ற உல்பதிஷ்ணு எழுந்து அறைக்குள் நடந்தான். கரையான் அரித்த மரக்கதவின்மீது சாய்ந்து நின்று கொண்டு அவன் வெளியே பார்த்தான். மடத்தைச் சேர்ந்த நிலத்தின் எல்லைகள் சுருங்கிக் கொண்டிருந்தன. வேலி மிகவும் அருகில் இருப்பதை அவன் பார்த்தான்.
கொந்தளித்து வந்த கோபத்துடன் அவன் சொன்னான்: “அந்தஸ்து! மண்ணாங்கட்டி!”
மற்ற இரண்டு உண்ணித் திருமேனிமார்களும் அதைக் கேட்டு நடுங்கினார்கள். தேவதத்தனின் குரல் உண்மையாகவே ஒலித்ததுதானா என்று நம்ப அவர்களுக்கே தயக்கமாக இருந்தது. உல்பதிஷ்ணு தன்னுடைய சகோதரர்களின் முகங்களைப் பார்க்காமல் தொடர்ந்து சொன்னான்:
“அந்தஸ்து ஒண்ணுதான் பாக்கியா? வீடு எங்கே? எல்லாம் போயிடுச்சுல்ல? எல்லாவற்றையும் அழிச்சு தேய்ச்சு கழுவியாச்சே! வேலி எவ்வளவு பக்கத்துல இருக்குன்றதைப் பாருங்க. அதைத் தாண்டி எவ்வளவு செழிப்பு தெரியுதுன்றதையும் பாருங்க. அந்த நிலங்கள் யாருக்குச் சொந்தமானவைன்னு தெரியுமா? வேலிக்குள்ளே வளர்றது பாம்புகளும் தெய்வங்களும் மட்டும்தான். அவை இரண்டையும் சுட்டுத் தின்ன முடியாது. விற்பனை செய்யவும் முடியாது. அந்தஸ்து வேணுமாம் அந்தஸ்து! இந்த மாதிரி ஏதாவது நீங்க பேசாம இருக்குறதே நல்லது!”
தேவதத்தன் தன்னுடைய பேச்சை நிறுத்தினான். மீண்டும் அறைக்குள் அவன் நடக்க ஆரம்பித்தான். நம்பிக்கை இல்லாமல் ஒருவித பதைபதைப்புடன் சகோதரர்கள் அவன் சொன்னதைக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தார்கள்.
தேவதத்தன் தன்னுடைய பேச்சை நிறத்தினான். மீண்டும் அறைக்குள் அவன் நடக்க ஆரம்பித்தான். நம்பிக்கை இல்லாமல் ஒருவித பதைபதைப்புடன் சகோதரர்கள் அவன் சொன்னதைக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தார்கள்.
தேவதத்தன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவர்களின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவன்தான் அதைச் சொன்னானா என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. அய்க்கர மடத்தில் பிறந்த ஒருவன் அப்படியெல்லாம் பேசலாமா?
ஆனால், அவன் சொன்ன ஒவ்வொன்றும் உண்மையானது என்ற விஷயம் அண்ணன் திருமேனிக்கும் தம்பி திருமேனிக்கும் நன்றாகவே தெரிந்தது. அவர்கள் ஒருவர் கண்ணை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நாராயணனின் மனம் ஊஞ்சலைப் போல ஆடிக் கொண்டிருந்தது. தேவதத்தன் சொன்னது உண்மைதான் என்றாலும், இந்த மடத்தில் அவன் பிறந்துவிட்டானே! மானத்தைக் காப்பாற்றாமல் இருக்க முடியுமா?
அக்னி சர்மனின் தலைமையில் முன்னோர்கள் சுவர்களைப் பிளந்து வெளியே வந்து முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைமைகள் ‘பளபள’வென்று மின்னிக் கொண்டிருந்தன. தேவதத்தனின் குருதியைக் குடிக்கக் கூடிய அளவிற்கு அவன் மீது அவர்களுக்குக் கோபம் இருந்தது. மூத்தவனான நாராயணனின் முடிவிற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.
உண்மை என்பது தேவதத்தன் கூறியதா, இல்லாவிட்டால் முன்னோர்களின் கண்களில் இருந்த நெருப்பு ஜூவாலையா?
“பரதேவதையே, காப்பாத்தணும்”- நாராயணன் பிரார்த்தனை செய்தான்.
எழுந்து நிற்க, கண்களைத் திறக்க, சக்தியற்ற, விழுந்து இறக்கும் நிலையில் கிடக்கும் பரதேவதையால் காப்பாற்ற முடியுமா?
நாராயணன் பற்களைக் கடித்தான், குமுறினான், உள்ளுக்குள் புகைந்தான்.
உண்ணி சங்கரன் ஒரு முட்டாளைப் போல உயிரற்ற கண்களால் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தான்.
“தம்பி...” நாராயணன் அவனை அழைத்தான்.
“அண்ணே...”- அவன் சொன்னான்.
“நான் அழைச்சது காதுல விழுந்ததா?”
“ம்...”
“என்ன சொல்ற?”
“ம்...”
“ம்...”- நாராயணன் திரும்பச் சொன்னான்.
தேவதத்தன் மாளிகையின் திண்ணைக்கு அருகில் நின்றிருந்தான்.
“தேவதத்தா...”- நாராயணன் அழைத்தான்.
“என்ன?”
“இங்கே கொஞ்சம் வா.”
தேவதத்தன் வந்தான். அவனுடைய மெல்லிய உதடுகள் ஏதோ தெளிவாகத் தீர்மானித்துவிட்டதைப் போல, ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருந்தன. உள்ளே போயிருந்த குழிக்குள் கண்கள் இருப்பது தெரிந்தது. அகலமான உயர்ந்த நெற்றிக்குப் பின்னால் ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி எழுந்து நின்று கொண்டிருந்தது. கூர்மையான தாடை எலும்பும் தெளிவான கன்ன எலும்புகளும் நுனி கூர்மையான நாசியும் எந்தவிதமான சலனங்களும் இல்லாமலிருந்தன.
அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நாராயணன் குழப்பத்தில் இருந்தான்.
“என்ன கூப்பிட்டீங்க?”- தேவதத்தன் கேட்டான்.
இரத்தத்தில் கலந்துவிட்ட தெளிவற்ற நிலை வெளியே தெரிகிற மாதிரி நாராயணன் கேட்டான்:
“இப்போ என்ன செய்றது?”
“ம்...” – தேவதத்தன் அலட்சியமாகப் பதில் சொன்னான். எல்லாவற்றையும் பற்றி தீர்மானித்து விட்டதைப் போல் இருந்தது அவனுடைய குரல்.
நாராயணன் உண்ணி சங்கரனிடம் கேட்டான்:
“நீ என்ன சொல்ற?”
“நான் என்ன சொல்றது?” – அவன் கைகளை விரித்தான்.
நாராயணன் பேந்தப் பேந்த விழித்தான். முன்னால் நின்று கொண்டிருந்த இறந்துபோன பெரியவர்கள் ஒருமித்த குரலில் அலறினார்கள்: “அந்தஸ்து!”
நாராயணன் திரும்பி தேவதத்தனின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அவனுடைய முகத்தில் எந்த ஒரு வேறுபாடும் தெரியவில்லை.
ஒரு முடிவும் எடுக்காமல் அவர்கள் பிரிந்தார்கள்.
மீண்டும் அவர்கள் சேர்ந்து பேசினார்கள். நிச்சயமற்ற தன்மை என்ற மூடுபுகைக்குப் பின்னால் பிரச்சினைகள், பிரச்சினைகளாகவே நின்றுகொண்டிருந்தன.
காரியதரிசி ராமன் நாயர்தான் விஷயங்களுக்கு ஒரு வழி உண்டாக்கினார்.
“பிள்ளைகளே, கலவரம் அடைய வேண்டாம்” – அவர் சொன்னார்: “எல்லாவற்றுக்கும் வழி இருக்கு.”
உள்ளே இருந்த பெண்கள் முணுமுணுத்தார்கள்: “எமன் வந்திருக்கான். இனி இருப்பதையும் அழிச்சிட்டுத்தான் வெளியே போவான்.”
“இருந்தாலும் அது பரவாயில்லையே!”- நாராயணன் சொன்னான்: “காரியங்கள் நடக்கணும்ல... அந்த மனிதர் எப்படியும் நடத்திடுவாரு.”
குளித்து முடித்து, திருநீறு பூசி, கழுத்தில் ருத்ராட்ச மாலையும் கண்களில் கபடத்தனத்தின் ஒளிவீசலுமாய் எமன் காலை நேரத்தில் வாசலில் வந்து நின்று இருமினார்.
சாளரத்தின் வழியே எட்டிப்பார்த்த பெண்கள் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். இளம் வெயிலில் துளசி இலைகளில் இருந்த பனித்துளிகள் அழிந்து கொண்டிருந்த காலை வேளையில் கிழக்குப் பக்க வாசலில் எமனின் நிழல் தெரிந்தது. எமனின் நிழல் வாசலில் தெரிந்தால், அது கஷ்ட காலத்தின் தொடக்கம் என்று அர்த்தம்.
எமனுக்கு எதிராக அங்குள்ள பெண்கள் கருத்து கொண்டிருப்பதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை.
இறந்த பெரியவருடன் எப்போதும் இருப்பவரும், அவருக்கு ஆலோசனைகள் கூறக் கூடியவராகவும், பல விஷயங்களைச் செயல்படுத்தக் கூடியவருமாக இருந்தார் ராமன் நாயர். அவருடைய மாமாவும், அந்த ஆளின் மாமாவும், அந்த ஆளின் மாமாவும்... இப்படி தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அய்க்கர மடத்தில் காரியதரிசிகளாகப் பணியாற்றியிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக அவர்கள் அய்க்கர மடத்தை வைத்துத்தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்பு இருந்த ஒரு திருமேனி ராமன் நாயரின் ஏதோ ஒரு பெரிய மாமாவை மடத்தின் வடக்குப் பக்கத்தில் குடியமர்த்தினார். மடத்தின் வடக்குப் பக்கம் காரியதரிசிகளைக் குடியமர்த்துவது அவ்வளவு நல்லதல்ல என்று சோதிடர்கள் கூறிய விஷயத்தை அப்போதிருந்த திருமேணி பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. சோதிடர்கள் சொன்ன வார்த்தைகள் திருமேனி அலட்சியமாக நினைத்தது மாதிரி இல்லை. அந்த மடத்தின் செல்வச் செழிப்பு பாதிப்பது மாதிரி மட்டுமல்ல, வடக்கில் காரிதரிசிகள் குடியிருந்தது அழிவிற்கான அறிகுறி என்பதும் நடைமுறையில் நடந்தது. ஆனால், அப்போது நடந்த தவறைத் திருத்திக் கொள்வதற்கான நேரம் தாண்டி விட்டிருந்தது. தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவிற்கு இரு குடும்பங்களுக்குள் நெருங்கிய உறவு உண்டாகிவிட்டிருந்தது.
ராமன் நாயரின் குடும்பத்திற்கு அய்க்கர வடக்கு வீடு என்ற பெயர் கிடைத்துவிட்டிருந்தது.
அய்க்கர வடக்கு வீட்டில் முளைத்த ஒவ்வொன்றும் அய்க்கர மடத்தின் வித்துதான் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். உருவ ஒற்றுமை அது உண்மைதான் என்பதை வெளிப்படுத்தியது. அவர்களுக்குள் இருந்த உறவு மனரீதியாக, பொருளாதார ரீதியாக, உடல் ரீதியாக என்று ஆகிவிட்டிருந்தது. ஒருவரையொருவர் பிரிக்க முடியாத அளவிற்கு இரத்தம் இரத்தத்துடன் கலந்தது.
அய்க்கர வடக்கு வீட்டிலிருந்த பெண்களின் ஊர்கள் குடும்பத்திற்குத் தூண்களாக இருந்தன. தூண்கள் மண்ணுக்குள், அய்க்கர மடத்தின் பழமையான உடம்பிற்குள் ஆழமாக இறங்கின. பெண்களின் இரத்தக் கொழுப்பு சிறிதும் குறையவில்லை. வீரியம் குறையவில்லை. அதனால் அய்க்கர வடக்கு வீட்டின் செல்வச் செழிப்பு நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. மடத்தின் செல்வ நிலை மங்கலாகிக் கொண்டிருந்ததையும், இரத்தம் சுண்டிக் கொண்டிருப்பதையும் மந்திரத்தின் மாய வலையில் சிக்கி பாட்டுப் பாடி மயங்கிக் கிடந்த மடாதிபதிகள் பார்க்கவில்லை. அவர்களின் கண்களுக்குப் பார்வை சக்தி இல்லாமல் போயிருந்தது. அவர்களின் செவிகள் அடைக்கப்பட்டுவிட்டன. படுக்கையறை சுகத்தில் அவர்கள் அந்த சந்தோஷம் கண்டு கொண்டிருந்தார்கள். கிடைத்த அந்த சந்தோஷத்தின் நிரந்தரமான இருட்டில் அவர்கள் பெரிய விஷயங்களை மறந்துவிட்டார்கள்.
அந்தச் சமயத்தில் அய்க்கர வடக்கு வீட்டின் தானியக் கிடங்கு வளர்ந்து கொண்டிருந்தது.
இறந்துபோன திருமேனியின் காரியதரிசி மட்டுமல்ல; அவருடைய நண்பராகவும் வழிகாட்டியுமாகக் கூட இருந்தார் ராமன் நாயர். திருமேனி மடத்தில் உறங்குவதையோ வேறொரு வீட்டில் உறங்குவதையோ அவர் விரும்புவதில்லை. ராமன் நாயரின் வீட்டிலுள்ள பெண்களும் அவரை நம்பியிருக்கும் பெண்களும் திருமேனியைக் கவனித்துக் கொண்டார்கள்.
ராமன் நாயர் திருமேனியுடன் உட்கார்ந்து வெற்றிலை போட்டு பல விஷயங்களைப் பற்றியும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து சதுரங்கம் விளையாடுவார்.
பலவிதப்பட்ட கேளிக்கைகளிலும் மிகுந்த விருப்பத்துடன் ஈடுபட்டிருந்தார் திருமேனி. அவர் அப்படி அவற்றில் இரண்டறக் கலந்திருந்தபோது ராமன் நாயர் ஒவ்வொன்றையும் திட்டம் போட்டு, காய்களை முறைப்படி நகர்த்திக் கொண்டிருந்தார். சதுரங்க விளையாட்டில் பல நேரங்களில் ராமன் நாயர் தோல்வியைச் சந்தித்தாலும், வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் திருமேனிதான் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்தத் தோல்விகளை வெற்றி என்று தவறுதலாக நினைத்துக் கொண்டிருந்தார் திருமேனி.
ராமன் நாயருடன் கலந்து ஆலோசிக்காமல் திருமேனி எதையும் சொல்வதில்லை. பிள்ளைகளின் கல்வியிலிருந்து, வீட்டிலிருக்கும் பெண்களின் ஆடை, அணிகலன்கள் வரை உள்ள எல்லா செலவினங்களும் ராமன் நாயர் மூலம்தான் நடந்தது. மாப்பிளமார்களுக்கு விற்பனை செய்த பொருட்கள் விஷயத்திலும் இடைத்தரகராக ராமன் நாயர் இருந்தார். இடையில் நின்று எமன் தன்னுடைய பையை வீங்குமாறு செய்து கொண்டார்.
ராமன் நாயருக்குச் சொந்தமாக வயல்களும் நிலங்களும் பெருகின. எனினும், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தார். திருமேனிக்கு விளக்கு பிடிப்பதிலும் அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பின்பற்றி நடப்பதிலும் சிறிதும் குறைவு உண்டாகாமல் அவர் பார்த்துக் கொண்டார்.
“அந்த ஆளு நம்மோட வலது கை...”- திருமேனி சொன்னார்: “அந்த ஆளு இல்லைன்னா அந்தக் காரியங்களை வேற யார் நடத்த முடியும்?”
இப்படிக் கூறிய திருமேனி ராமன் நாயருடைய வீட்டிற்குள் நுழைந்தார். கதவை மூடினார். விரித்துப் போடப்பட்டிருந்த படுக்கை மீது போய் உட்கார்ந்தார். செம்பு நிறத்தைக் கொண்ட ரோமங்கள் உள்ள வளையலணிந்த கை வெற்றிலையைச் சுருட்டி நீட்டியது. அந்தக் கையைப் பிடித்துக் கொண்டு திருமேனி கேட்டார்:
“யாரு? குஞ்ஞு லட்சுமியா?”
“ஆமாம்”- தேன் ஊறும் குரல்.
“உனக்கு நான்கு வளையல்கள்தான் இருக்குதா?”
“எனக்கு இது போதும்.”
“போதாது... போதாது...”
“எல்லாம் உங்க விருப்பம்...”
“ம்... அப்படிச் சொல்லு”- திருமேனி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
குஞ்ஞுலட்சுமி வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
அந்தச் சமயத்தில் ராமன் நாயர் வீட்டில் நெல் அளக்கவோ, தேங்காய்களை எடுக்கவோ செய்து கொண்டிருந்தார்.
குஞ்ஞுலட்சுமியின் கைகளில் வளையல்கள் குலுங்கிப் பெரிய ஒரு சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
வளையல்களை இழந்த திருமேனி வீட்டுப் பெண்கள்தான், அவருடைய வலது கைக்கு எமன் என்று பெயரிட்டார்கள்.
எமனின் சதிச் செயலால் மடத்தின் அழிவு, அதன் முழுமையை அடைந்தது.
எமனின், மடத்தின் நம்பிக்கைக்குரிய உறவு என்பது மாதிரி ராமன் நாயர் தன்னுடைய நடத்தைகளில் காட்டிக் கொண்டார்.
“எல்லாவற்றுக்கும் வழி இருக்கு” என்று அவர் சொன்னபோது நாராயணனுக்கு நிம்மதி வந்ததைப் போல் இருந்தது.
அதைக் கேட்டு தேவதத்தனுக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. ஆனால், அவன் அதை அடக்கிக் கொண்டான். மெதுவாக அவன் சிந்தித்துப் பார்த்தான். வேறு வழியெதுவும் தோன்றவில்லை. கொல்வதாக இருந்தால் கொல்லட்டும். கழுத்தை நீட்ட வேண்டியதுதான்.
நாராயணன்தான் ராமன் நாயரிடம் பேசினான். தேவதத்தனும் உண்ணி சங்கரனும் மாளிகையின் அறைக்குள் இருந்தார்கள்.
ராமன் நாயருடன் கலந்து பேசிய பிறகு நாராயணன் மேலே ஏறி வந்தான்.
“எல்லா காரியங்களையும் சரி பண்ணிர்றதா அவர் சொல்றாரு”- அவன் சொன்னான். தொடர்ந்து அவன் விஷயங்களை விளக்கிச் சொன்னான். மடத்தைச் சேர்ந்த நிலத்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கொஞ்சம் மரங்களை வெட்டிக் காட்டு ஒளஸேப் என்ற கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மனிதனுக்கு விற்றுவிடலாம். அப்போது அவசர செலவுக்குத் தேவைப்படும் பணம் கிடைக்கும்.
அவன் சொன்னதைத் தேவதத்தன் கேட்டவாறு நின்றிருந்தான். அதற்குத் தன்னுடைய கருத்து என்று அவன் எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவுமில்லை.
நாராயணனின் விளக்கம் முடிந்தவுடன், உண்ணி சங்கரன் கேட்டான்:
“அதற்கு நீங்க என்ன சொன்னீங்க?”
“சொல்றதுக்கு என்ன இருக்கு?”
“அதுவும் சரிதான்...”
தேவதத்தனிடம் நாராயணன் கேட்டான்:
“நீ என்ன சொல்ற?”
“நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல... அண்ணே, நீங்க முடிவு செய்யுங்க. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல.”
சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியேறினான்.
அண்ணன் முடிவு செய்தான். ஆற்றில் குளிக்கும் சடங்கு நடந்து முடிந்தது.
வெற்றிலை போட்டு உதட்டைச் சிவக்கச் செய்து, மூச்சை அடக்கி, இடுப்பில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தோய்த்து, நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்து... ஒரு மிகப் பெரிய காரியத்தைச் செய்து முடித்த திருப்தியுடன் ராமன் நாயர் சொன்னார்:
“ம்... ஒரு பொறுப்பு முடிஞ்சது.”
“பொறுப்பை நிறைவேற்றிய வகையில் எவ்வளவு பணம் அடிச்சிருப்போம்னு அந்த ஆளுக்கு மட்டும்தான் தெரியும்” அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.
அதைக் கேட்டு தேவதத்தன் தன் பற்களைக் கடித்தான்.
பிள்ளைகள் நகரத்திற்குத் திரும்பினார்கள்.
கோடையின் ஆரம்பத்தில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து பிள்ளைகள் திரும்பவும் தங்களுடைய குடும்பத்தைத் தேடி வந்தார்கள். மாளிகையின் அறையில் அமர்ந்து கொண்டு, சில நேரங்களில் சதுரங்கம் விளையாடினார்கள். வேலைக்காக மனுக்கள் போட்டார்கள். இனிமேல் படிப்பு வேண்டாமென்று அவர்கள் தீர்மானித்தார்கள்.
மாலை நேரம் மயங்கியதும் நாராயணனும் உண்ணி சங்கரனும் தனித்தனியாக ஊருக்குள் நடந்து திரிந்தார்கள்.
தேவதத்தன் வீட்டிலேயே இருந்தான். சுருக்கமாகச் சொல்லப் போனால் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டதைத் தவிர, அவன் வேறு எந்த விஷயத்தையும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவில்லை. எந்த நேரம் பார்த்தாலும் எதையாவது வாசித்துக் கொண்டோ, படித்துக் கொண்டோ அவன் இருப்பான்.
அதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படவில்லை. மிகுந்த அறிவு படைத்தவன் தேவதத்தன் என்ற விஷயம் எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆர்யன் என்ற ஒரு திருமேனியின் அவதாரம் அவன் என்று மக்கள் நி்னைத்தார்கள்.
ஆர்யன் பல தலைமுறைகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு திருமேனி. அவர் நல்ல ஒரு அறிவாளியாக இருந்தார். வானவியல் பண்டிதரும் சோதிடருமாக அவர் இருந்தார். அவற்றுடன் மிகப் பெரிய மந்திரவாதியாகவும் அவர் இருந்தார்.
அவருடைய காலத்தில் அய்க்கர மடத்தின் பெருமை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் போய் அடைந்துவிட்டிருந்தது. வேற்று உலகங்களிலிருந்தும் புராணங்களின் தாள்களிலிருந்தும் தேவர்களும் புண்ணிய மனிதர்களும் இறங்கி வந்து ஆர்யன் திருமேனியைச் சந்தித்தார்கள். அவர் பெரும்பாலான நேரங்களில் பழைய காலத்தைச் சேர்ந்த வரலாற்று மனிதர்களுடன் உரையாடித்தான் தன்னுடைய நேரத்தையே செலவிட்டார்.
அவருடைய கணிப்புகள் ஒருமுறைகூட தவறாக இருந்ததில்லை. ஆசீர்வாதங்களும் சாபங்களும் அப்படியே பலித்தன. ஆர்யனுக்கு இளநீர் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், மாளிகை அறை சாளரத்தைத் திறந்து தன்னுடைய கையை நீட்டினால் போதும். தென்னை மரம் அன்புடன் சாளரத்தை நோக்கிச் சாய்ந்து இளநீர் காய்களை நீட்டும். ஆர்யன் இளநீரைப் பெற்று தன்னுடைய கைகளால் அதை உரித்து, உடைத்து குடிப்பார்.
ஆர்யனின் கணக்குக் கூட்டல்களுக்கேற்றபடி நட்சத்திரங்கள் பயணித்தன. லக்னங்களும் ராசிகளும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தன.
ஆர்யன் திருமேனியின் மந்திரச் சக்தியைப் பற்றியும் மிகுந்த அறிவுத் திறமையைப் பற்றியும் ஏராளமான கதைகள் இருந்தன.
வெற்றிலையின் நாறைக் கிள்ளி அவர் பாம்பை வரவைத்தார். வாழையிலையை வெட்டி ஆற்றில் மிதக்கவிட்டு, அதன்மீது ஏறி அவர் பயணம் செய்தார். முட்டையை உடைத்து அவர் கோழியைப் பறக்கச் செய்தார். தூரத்தில் இருந்தவாறு தன்னிடமிருந்த அபூர்வ சக்தி கொண்டு படகை மூழ்கச் செய்தார்.
மிகப்பெரிய மந்திரவாதியாக இருந்த காஞ்ஞங்காட்டு விஷ்ணு நம்பூதிரியைக் கதி கலங்க வைத்து மந்திர வித்தையில் உன்னத சிம்மாசனத்தில் போய் உட்கார்ந்தவர் ஆர்யன். காஞ்ஞங்காட்டு விஷ்ணு, ஆர்யனை அழைத்திருந்தார். வாழையிலைமீது உட்கார்ந்து பயணம் செய்து அங்கு போனார் ஆர்யன். விஷ்ணு நம்பூதிரிக்கு அவர் அப்படிச் சென்றது சிறிதும் பிடிக்கவில்லை. ஆர்யன் கரையில் இறங்கிய நிமிடம், விஷ்ணு நம்பூதிரி கேட்டார்:
“வாகனம் எங்கே?”
ஆர்யன் திரும்பிப் பார்த்தபோது வாழையிலை ஒரு வாழை மரத்தின்மீது போய் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஆர்யன் அதைப் பார்த்து சிரித்தார். அவர் சொன்னார்:
“பரவாயில்ல... அது அங்கேயே இருக்கட்டும். இங்கேதான் ஏராளமா வாழை மரங்கள் இருக்கே! பிறகு எதற்கு என்னோட அந்த அப்பிராணி இலை?”
அடுத்த நிமிடம் காஞ்ஞங்காட்டு நிலத்திலிருந்த வாழை மரங்கள் முழுவதும் வாடி கரிந்துக் கீழே விழுந்தன.
காஞ்ஞங்காட்டு விஷ்ணுநம்பூதிரி விடவில்லை. தன்னிடம் உண்டான மிகுதியான கோபத்துடன் அவர் உரத்த குரலில் கர்ஜனை செய்தார்.
“விஷயம் இந்த அளவுக்கு ஆயிடுச்சா? அப்படின்னா நான் யார்ன்றதை இப்போ காட்டுறேன்.”
அவர் இப்படிக் கூறி முடித்ததும் வாடிக் கீழே விழுந்த வாழை மரங்கள் பாம்புகளாக மாறி ஆர்யனுக்கு நேராகச் சீறிப் பாய்ந்து கொண்டு வந்தன. ஆனால், ஆர்யன் அழைத்து அங்கு வந்து சேர்ந்த கழுகுகள் பாம்புகளைக் கொத்திக் கொண்டு பறந்தன.
இந்த வகையில் மந்திரங்களும் அவற்றுக்கு எதிரான மந்திரங்களும் நடைபெற்றன.
இறுதியில் விஷ்ணுநம்பூதிரி தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆர்யனை குருவாக அவர் ஏற்றுக் கொண்டார்.
ஆர்யனின் மந்திரசக்தியைப் போலவே அவருடைய அறிவுத் திறமையைப் பற்றியும் ஊரெங்கும் கதைகள் பரவிவிட்டிருந்தன.
அந்த அறிவாளியின் இன்னொரு அவதாரம்தான் தேவதத்தன்.
பத்து வயது ஆவதற்கு முன்பே அவன் சமஸ்கிருதத்தில் பண்டிதனாகி விட்டான். இலக்கியத்தை மட்டுமல்ல; இலக்கணத்தையும், எல்லா முக்கிய நூல்களையும்கூட மிக இளம் வயதிலேயே அவன் மனப்பாடமாக்கியிருந்தான்.
தேவதத்தன் ஆர்யனையே தோல்வியடையச் செய்தான். அவனுடைய அறிவு தலைக்குள் முழுமையாக இருந்தது. இரவு நேரத்தில், உறங்கும்போது அவன் பாணினி சூத்திரங்களையும் அமரகோசத்தையும் உச்சரித்தான். காளிதாசனின் சாகுந்தலத்தையும் பாஸ நாடகங்களையும் வாய்விட்டுச் சொன்னான். வியாக்யானங்கள் நடத்தினான்.
கல்லூரிக்குச் சென்றபோது தேவதத்தனின் மனம் முழுவதும் கணித சாஸ்திரம் நிறைந்திருந்தது. தூக்கத்தில் அலறும்போது கூட அவன் திரிகோணமெட்ரியைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய அலறலைக் கேட்டு சகோதரர்கள் அதிர்ச்சியடைந்து எழுந்தார்கள். அந்தர்ஜனங்களான வீட்டிலிருந்த பெண்கள் அதிர்ந்து போய் எழுந்தார்கள். அவனைத் தட்டி எழுப்பியபோது, எழுந்து ஒரு முட்டாளைப்போல அவன் உட்கார்ந்திருந்து சிரித்துவிட்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.
தேவதத்தன் ஊர் முழுக்கப் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்தான்.
“உண்மையாகவே அவன் ஆர்யன் திருமேனிதான்”- ஊர்க்காரர்கள் கூறினார்கள்: “கவனமா இருக்கணும். இல்லாட்டி சாபம் போட்டே நாம ஒரு வழி ஆயிடுவோம்.”
“குணங்களைப் பார்க்குறப்போ அப்படியே ஆர்யன் திருமேனிதான்”- ஊரைச் சேர்ந்த பெண்கள் சொன்னார்கள்: “பெண் என்றொரு நினைப்பே இல்லையே...”
அழகான ஆடைகள் அணிந்து மடத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடந்து கொண்டிருந்த இளம் பெண்களை தேவதத்தன் ஒருநாள்கூட பார்த்ததில்லை. நாராயணனும் உண்ணிசங்கரனும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் இளம் பெண்களைப் பார்த்துக் கொண்டும், அவர்களுடன் பேசிக் கொண்டும் இருந்ததைப் பலரும் பார்த்தார்கள். தேவதத்தனைப் பற்றி யாருக்கும் அப்படியொரு குற்றச்சாட்டே இல்லை.
“இந்தத் திருமேனி என்ன இப்படியொரு நாகப் பாம்பா இருக்காரு!” என்று பெண்கள் குறைப்பட்டுக் கொண்டார்கள்.
ஆர்யன் கடுக்காய் போட்ட கஷாயம் குடிப்பார் என்றொரு கருத்து உண்டு. தேவதத்தனும் அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள்.
உண்மை என்னவென்று அவனுக்கு மட்டுமே தெரியும்.
எது எப்படி இருந்தாலும், தேவதத்தன் பெண்கள் விஷயத்தில் பாராமுகம் கொண்டவனாக இருந்தான் என்பது மட்டும் உண்மை.
நாராயணனுக்கும் உண்ணிசங்கரனுக்கும் கல்லூரியில் தோழிகள் இருந்தார்கள். அவர்களுடைய புத்தகங்களிலிருந்து இளம் பெண்களின் புகைப்படங்கள் தரையில் விழுந்தன. வீட்டிலிருந்த பெண்கள் அவற்றைப் பார்த்துவிட்டார்கள்.
அவர்களுக்கு ஊரிலும் சில தொடர்புகள் இருந்தன. கோடை விடுமுறைக்கு வந்திருந்தபோது தேவதத்தன் வீட்டின் அறைக்குள் உட்கார்ந்துகொண்டு புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது நாராயணனும் உண்ணி சங்கரனும் பக்கத்திலிருந்த நாயர் வீடுகளுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
“வாழ்க்கைன்னா சுவாரசியம் இருக்க வேண்டாமா, குழந்தை!” ராமன் நாயர் தேவதத்தனிடம் கேட்டார்.
தேவதத்தன் அமைதியான குரலில் அதற்குப் பதில் சொன்னான்:
“எனக்கு சுவாரசியமா இருக்குறதைத் தானே நான் செய்ய முடியும்? நீங்க எதற்குத் தேவையில்லாம என்னைக் கஷ்டப்படுத்துறீங்க?”
ராமன் நாயர் தன்னுடைய படத்தைத் தாழ்த்திக் கொண்டார்.
“இல்ல... சும்மா கேட்டேன்.”
“கேட்க வேண்டியதே இல்ல...”
தொடர்ந்து அவன் புத்தகத்தில் தன் பார்வையைச் செலுத்தினான்.
எமன் பின் வாங்கினார்.
தேர்வு முடிவுகள் வந்தன. உண்ணித் திருமேனிமார்கள் மூன்று பேரும் தேர்ச்சி பெற்றார்கள். தேவதத்தனுக்கு முதல் வகுப்பும் ரேங்க்கும் கிடைத்தன. அதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்படவில்லை.
தேர்வு முடிவு வந்து சிறிது நாட்களில் நாராயணனுக்கு வேலைக்கான உத்தரவு வந்தது. தூரத்திலிருந்த மதராஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேய நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. வெட்டிக்காட்டு ஒளஸேப்பின் மகன் தான் அவனுக்கு அந்த வேலையைத் தயார் பண்ணித் தந்தான்.
“கிறிஸ்தவன் நன்றி உள்ளவன்...” – ராமன் நாயர் சொன்னார்.
“நல்லது நடந்திருக்கு”- வீட்டிலிருந்த சில அந்தர்ஜனப் பெண்கள் சந்தோஷக் குரலில் சொன்னார்கள். நாராயணனின் பாட்டி அழுதாள்:
“என்ன இருந்தாலும் என் குழந்தை வேலைக்குப் போறது மாதிரி ஆயிடுச்சே! இந்தக் குடும்பத்தில இருந்து இதுவரை யாரும் வேலைக்குப் போனதே இல்லை...”
“இப்போ காலம் வேற ஆச்சே!”- ராமன் நாயர் சொன்னார்: “இதுல வருத்தப்படுறதுக்கு எதுவுமே இல்ல. இனி வர்ற காலத்துல வேலை செய்து வாழ்றதுதான் மதிப்பு உள்ள விஷயமா இருக்கும்.”
அதைக் கேட்டு தேவதத்தனுக்குச் சந்தோஷமாக இருந்தது. அவன் ராமன் நாயரிடம் சொன்னான்:
“இப்போத்தான் சரியான ஒரு உண்மையைச் சொன்னீங்க, ராமன் நாயர்.”
“சரிதான்...”- உண்ணி சங்கரனும் அதை ஒத்துக் கொண்டான்.
நாராயணனுக்கு மதராஸ் நகரத்திற்கு வண்டி ஏற்றி அனுப்பும்போது, அவன் சொன்னான்:
“எங்க விஷயத்தையும் நினைச்சுப் பார்க்கணும், அண்ணே!”
“கட்டாயமா...”
நாராயணன் நினைத்துப் பார்த்தான்.
அவன் வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களில் உண்ணி சங்கரனை அங்கு அழைத்துக் கொண்டான். உண்ணி சங்கரனும் மதராஸுக்கு வண்டி ஏறினான்.
“இது என்ன, தேவதத்தனை அழைக்காம உண்ணியை அவன் அழைச்சிருக்கான்!”- அந்தர்ஜனப் பெண்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.
“அது ஒரு பிரச்சினையே இல்ல...”- தேவதத்தன் சொன்னான்.
அவனுக்கு அதற்கான காரணம் என்னவென்று நன்றாகத் தெரியும். உண்ணிசங்கரனை அழைத்தது வேலைக்காக அல்ல. தட்டெழுத்து படிப்பதற்காக. நல்ல ஒரு வேலையைப் பார்த்து வைத்த பின்பே தான் தேவதத்தனை அழைக்கப் போவதாக நாராயணன் எழுதியிருந்தான்.
தேவதத்தன் வீட்டில் அமர்ந்து புத்தகங்களைப் படித்தான். பொருளாதாரத்தையும் தத்துவத்தையும் படித்தான். ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, மால்த்தூஸ் ஆகியோரைப் பற்றிப் படித்து முடித்துவிட்டு மார்க்ஸுக்கு வந்தான். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ப்ளேட்டோ, டெக்கார்ட்டெ, ஹெகல் ஆகியோரைப் பற்றிப் படித்து முடித்துவிட்டு திரும்பவும் மார்க்ஸுக்கே வந்து சேர்ந்தான்.
தன்னுடைய கூர்மையான முகத்தை மேலும் கூர்மையாக வைத்துக் கொண்டு, கண்களைச் சிறிதாக ஆக்கிக்கொண்டு, கைகளைச் சுருட்டியவாறு தேவதத்தன் சொன்னான்:
“மார்க்ஸிஸம் மட்டுமே சரியான ஒரு பாதை... அப்படின்னா...”
அவனுடைய மார்க்ஸிஸம் மடத்திலிருந்து வந்ததல்ல. புத்தகத்திலிருந்து மூளைக்குள் நுழைந்தது அது. மூளைக்குள் அது ஒரு புயலையே அடித்துக் கொண்டிருந்தது.
“எல்லாம் சரிதான்... மார்க்ஸ் சொன்னது எல்லாமே...” தேவதத்தன் அந்தர்ஜனப் பெண்களிடமும் ராமன் நாயரிடமும் சொன்னான்: “கம்யூனிஸம் விட்டால் வேற பாதையே இல்ல...”
ராமன் நாயர் அந்தர்ஜனப் பெண்களிடம் எச்சரித்தார்:
“ஆபத்துதான்...”
“அதெல்லாம் வேண்டாம், தேவதத்தா”- அந்தர்ஜனப் பெண்கள் சொன்னார்கள்.
அதைக் கேட்டு தேவதத்தன் சிரித்தான்.
ஆபத்து எதுவும் இல்லை என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். படித்து, அதுதான் சரியான பாதை என்பதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். இதில் ஆபத்துக்கு எங்கே இடம் இருக்கிறது?
ஊரைச் சேர்ந்த அரசியல்வாதிகள் யாருடனும் அவன் சேரவில்லை. அவர்களின் நடவடிக்கைகள் சரியல்ல என்று அவன் நினைத்தான். மார்க்ஸிஸம் கணக்கைப் போல. அதைப் படிக்க வேண்டும். அப்போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
அதற்கு அர்த்தம் உடனடியாகக் கொடியைக் கையில் பிடிக்கவேண்டும் என்றொன்றும் இல்லையே!
தேவதத்தனின் கம்யூனிஸம் முழுமையாக அவனை மட்டுமே மையமாகக் கொண்டதாக இருந்தது. அவன் படித்தான். சிந்தித்தான். சிந்தனைகள் தலைக்குள் நுழைந்தபோது தூக்கத்தில் கணித சூத்திரங்களுக்குப் பதிலாக அவன் மார்க்ஸிஸத்தைச் சொல்ல ஆரம்பித்தான். ஒருநாள் மாளிகையின் அறைக்குள் தான் மட்டும் தனியே படுத்து உறங்கிக் கொண்டிருந்த தேவதத்தன் உரத்த குரலில் அலறினான்:
“உடைத்தெறியணும்.”
பதைபதைத்துப் போய் எழுந்த அவனுடைய தாய் அவன் இருந்த இடத்திற்கு ஏறிச் சென்றாள்.
“என்ன?”
“ஒண்ணுமில்ல...”- அவன் மீண்டும் சுருண்டு படுத்தான்.
உலகத் தொழிலாளர்கள் வர்க்கம் ஒன்று சேர்ந்து நிற்பதையும் சுரண்டிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எதிராகப் புரட்சி செய்வதையும் அவன் கனவு கண்டான். தொழிலாளர்கள் வர்க்கத்தின் தலைவன் அவன்தான். கூட்டமாக நின்றிருந்த தொழிலாளர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஏழைகளும் இருந்தார்கள். எதிரிக் கூட்டத்தின் மத்தியில் வெட்டிக்காட்டு ஒளஸேப் மாப்பிள நின்றிருந்தான். ஏராளமான மாப்பிளமார்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் பதுங்கிக் கொண்டு நின்றிருந்தார் ராமன் நாயர்.
அந்தக் கனவிற்குப் பிறகு, தகர்ந்து போன புகழைத் திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி மார்க்ஸிஸம்தான் என்று தேவதத்தனுக்குத் தோன்றியது. கம்யூனிஸத்தின் காலத்தில் அதற்கு அய்க்கரமடத்தின் திருமேனி தலைமை தாங்க வேண்டும். அப்படியென்றால்தான் எப்போதும் மக்களை வழி நடத்திக் கொண்டிருந்த அந்தப் பழைய பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டிருக்க முடியும்.
தூங்கும்போது கோஷங்களை முழக்கமிடுவது அவனுடைய அன்றாடச் செயலானது.
கண்ட கண்ட சத்தங்களைக் கேட்டு அந்தர்ஜனப் பெண்கள் திடுக்கிட்டு எழுந்தார்கள். தேவதத்தனின் உறக்கப் புரட்சி மடத்தில் இருந்தவர்களுக்குத் தொந்தரவுகள் உண்டாக்கியதுடன் கவலைகளுக்கும் காரணமாக இருந்தது.
“இது பெரிய பிரச்சினையா இருக்கே, ராமன் நாயர்!”- அங்கிருந்த பெண்கள் குறைப்பாட்டார்கள்.
“நான் அப்பவே சொன்னேன்ல?”
“இப்போ தலைக்குள்ளும் நுழைஞ்சிடுச்சே!”
“இது சமஸ்கிருதம் சொல்றது மாதிரியான விஷயம் இல்ல. இதைச் சொல்றது யாராவது கேட்டாங்கன்னா, வழக்குப் போட்டுடுவாங்க. பிறகு நாம நீதிமன்றம் ஏறி இறங்கணும்.”
“என் குருவாயூரப்பா! இப்போ என்ன செய்றது ராமன் நாயர்?”
“ஏதாவது வழி பண்ணுவோம்.”
“என்ன வழி?”
“மதராஸுக்கு ஒரு கடிதம் எழுதுங்க. ஒரு வேலையில் போய் உட்கார்ந்தா, எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்திடும். புத்தகங்கள் படிச்சதுதான் எல்லாத்துக்கும் காரணம். வேலை இருந்தால் புத்தகம் வாசிக்க நேரம் இருக்காது.”
“சரிதான்...”
“அப்போ... தாமதம் செய்ய வேண்டாம். உடனடியா கடிதம் எழுதுங்க.”
“சரி...”
கடிதம் எழுதப்பட்டது.
அது மதராஸை அடைந்தது.
நாராயணன் உண்ணி சங்கரனின் முகத்தைப் பார்த்தான். உண்ணி சங்கரன் நாராயணனின் முகத்தைப் பார்த்தான்.
“இப்போ என்ன செய்றது?”
“ம்...”
வண்ணாரப்பேட்டையின் ஒரு சிறிய அறையில் சிதிலமடைந்த சுவர்களில் ஒட்டிக் கொண்டிருந்த கொசுக்கள் பாடிக் கொண்டே பறந்தன.
பிரச்சினை மிகவும் பெரியது. முக்கியமானது. உண்ணி சங்கரனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. நாராயணனின் வருமானத்தை வைத்துத்தான் இரண்டு பேரின் செலவுகளும் நடந்து கொண்டிருந்தது. அவர்களே சொந்தமாகச் சமையல் செய்ததோடு, அரைப்பட்டினி கிடந்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த மோசமான நிலைமையில் இன்னொரு ஆளையும் அங்கு வரவழைத்தால் என்ன செய்வது?
அதற்கான வழி இல்லை. உண்ணி சங்கரனுக்கு வேலை கிடைப்பது வரை தேவதத்தன் காத்திருக்கவே வேண்டும். அவன் அதன்படி காத்திருந்தான். இறுதி்யில் நாராயணன் வேலை செய்த நிறுவனத்திலேயே உண்ணி சங்கரனுக்கு ஒரு டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.
வேப்பேரியில் குறைந்த வாடகைக்குச் சிறிய ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். வெங்கிட்டராமன் என்ற ஒரு ஸ்டெனோக்ராஃபரான அய்யர்தான் வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தான். அந்த வீடு அவனுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தது.
வீட்டை வாடகைக்கு எடுத்த நாளன்றே நாராயணன் ஊருக்குக் கடிதம் எழுதினான். தேவதத்தனுக்கு வழிச் செலவிற்கான பணத்தையும் அனுப்பி வைத்தான்.
தேவதத்தன் ஊரில் இருந்து கொண்டு சிந்தித்தான். மதராஸுக்குச் சென்ற பிறகும் கூட படிப்பதைத் தொடரலாம். மார்க்ஸிஸம் படிப்பதற்குத் தடை உண்டாகப் போவதில்லை. செயல்படுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.
முடிவெடுத்தான். புறப்பட்டான். அடைந்தான்.
“தந்தி அடிச்சதுக்கான காரணம்?”- வந்தவுடன் கேட்டான்: “வேலை ஏதாவது தயாராக இருக்குதா?”
“ஒண்ணும் இல்ல...”- நாராயணன் சொன்னான்: “இனிமேல்தான் பார்க்கணும். ஆள் இங்கே இருந்தாத்தான் வேலை தேட முடியும்.”
தேவதத்தன் வந்தபோது, நாராயணன் எழுதியபடி ஊரிலிருந்து கேசவன் குட்டி என்றொரு பையனையும் சமையல் வேலை செய்வதற்காகத் தன்னுடன் அழைத்து வந்திருந்தான்.
தேவதத்தன் மதராஸை அடைந்தவுடன், எல்லா விஷயங்களும் முறைப்படி நடக்க ஆரம்பித்தன. பையன் சமையல் செய்தான். தேவதத்தன் கணக்குகளைப் பார்த்தான். கடைவீதிக்குச் சென்றான். பூசணிக்காய்க்கு விலை பேசினான். குறைவாகச் செலவழித்தான்.
தேவதத்தனின் நிர்வாகத்தின் கீழ் சாப்பாட்டு விஷயம் இப்படி இருந்தது...
காலையில் – இட்லி, தேங்காய் சேர்க்காத மிளகாய் சட்னி. சிறப்பு நாட்களில் உளுந்துப் பொடியும், எண்ணெயும். காப்பி (பால் சேர்க்காமல்) இட்லிக்கு முன்னால் பெட் ஃகாபியாகவோ இட்லிக்குப் பிறகோ உபயோகிக்கலாம்.
மதியம் – அலுவலகத்திற்குச் செல்பவர்களுக்குச் சாதம் கொண்டு போகலாம். தயிரும் ஒரு கூட்டும், தேங்காய் சேர்த்து அரைத்த சட்னியும். வீட்டில் இருப்பவர்களுக்கும் கிட்டத்தட்ட அதுதான். அலுவலக நேரத்தில் இரண்டு முறை காபி குடிக்கலாம்.
மாலை நேரத்தில் – பால் இல்லாத காபி. விடுமுறை நாட்களில் பருப்பு வடை. சாயங்கால நேரங்களில் குறிப்பாக யாராவது வந்தாலும் காப்பிப் பொடியின் அளவைக் கூட்டக் கூடாது.
இரவில் – சாதம். பூசணிக்காய் சாம்பார் (சில நேரங்களில் புடலங்காயோ, வெள்ளரிக்காயோ இருக்கலாம்). ஆளுக்கு ஒரு அப்பளம். ஒரு கூட்டு. மோர். விருந்தாளிகள் இருந்தால் சாப்பிடும் தட்டுகளின் எண்ணிக்கை மட்டும் கூடும்.
மூளை வளர பூசணிக்காயைவிட நல்ல உரம் இல்லை என்று தேவதத்தன் வாதிட்டான்.
இந்தச் சாப்பாட்டு விஷயங்கள் முறைப்படி செயல்படுத்தப்பட்டபோது, சிறிது பணம் மிச்சமானது.
தேவதத்தன் புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தான். நகரெங்கும் அலைந்து வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடினான். வேலை கிடைக்கவில்லையென்றாலும், அவன் நகரத்தைச் சுற்றிப் பார்த்தான்.
துறைமுகத்தில் கப்பல்கள் வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். கப்பல்களிலிருந்து வெள்ளை நிற நாய்களும் கறுப்பு நிறப் பெண்களும் இறங்கி வந்தார்கள். பிராட்வேக்குப் பின்னாலும் ராயபுரத்திலும் இருந்த தெருக்களிலுள்ள விலைமாதர்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று கப்பல் பணியாளர்கள் சுகம் கண்டார்கள். கள்ளக் கடத்தல் செய்தார்கள். பிராட்வே தெருக்களில் வியாபார மையங்கள் இருந்தன. பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தன. தெருக்களின் ஓரத்தில் விளக்கு மரங்கள் இருந்தன.
பிராட்வேயிலிருந்து மதராஸ் ராயபுரம் வழியே தண்டையார்பேட்டைக்கும் திருவொற்றியூருக்கும் வளர்ந்தது.
பிராட்வேயிலிருந்து வேறொரு திசையில் பார்க் டவுனை நோக்கி வளர்ந்தது. பார்க் டவுனில் சென்ட்ரல் ஸ்டேஷனும் மருத்துவமனையும் மூர் மார்க்கெட்டும் ரிப்பன் கட்டிடமும் இருந்தன. அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் நகரம் வளர்ந்து செல்வதை தேவதத்தன் பார்த்தான்.
வேப்பேரி வழியே கெல்லீஸை நோக்கியும் பெரம்பூரை நோக்கியும் நகரம் வளர்ந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாகக் கீழ்ப்பாக்கத்திற்கும் அமைந்தகரைக்கும் நகரம் நீண்டது. சிந்தாதிரிப்பேட்டை, மவுண்ட் ரோடு வழியாக ஆயிரம் விளக்கிற்கும் தேனாம்பேட்டைக்கும் நகரம் வளர்ந்தது. ரவுண்டானா, லஸ் வழியாக மைலாப்பூருக்கும் அடையாறுக்கும் நகரம் நீண்டது. மின்சார ட்ரெயின் வழியாக எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி ஆகியவற்றைத் தாண்டி நகரம் தாம்பரத்தை நோக்கி வளர்ந்தது.
வளர்ந்த வழிகளின் ஓரத்தில் இருந்த பெரிய கட்டிடங்களில் நகரம் நின்று கொண்டிருப்பதை தேவதத்தன் பார்த்தான்.
அவன் நகரத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகினான். அதன் மீது அன்பு செலுத்தியதைவிட, அதை அதிகமாக வெறுத்தான். சுற்றிலும் பார்த்த பட்டினியும் விபச்சாரமும் பிக் பாக்கெட்டும் கள்ளக் கடத்தலும் அழிக்கும் செயலும் அவனுடைய மனச்சாட்சியைப் பலமாக உலுக்கியது.
நகரத்திற்கு எதிராக, நகரத்தின் நாகரிகத்திற்கு எதிராக, நகர வாழ்க்கைக்குப் பகட்டு உண்டாக்குகிற செல்வச் செழிப்புமிக்க அமைப்புகளுக்கு எதிராக அவனுக்குள் கோபம் உண்டானது. வேலையின்மையும் மார்க்ஸிஸமும் ஆணவம் என்ற மிருக குணமும் சேர்ந்து அவனுடைய கோபத்தை அதிகமாக்கின.
ஆர்யன், அக்னி சர்மன் ஆகியோரின் வாரிசு தனக்கு நகரத்தில் யாரும் இல்லை என்ற எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெயைப் போல விழ, தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சமஸ்கிருதப் பண்டிதனும், கணித விஞ்ஞானியும், தத்துவச் சிந்தனையாளனுமான அய்க்கர மடத்தைச் சேர்ந்த தேவதத்தன் திருமேனி எதுவும் இல்லாமல் யாரும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வேலை இல்லாதவனாக நகரத்தில் அலைந்து திரிந்தான். வேலை இல்லாத காரணத்தால் சிந்திப்பதற்குத் தாராளமாக நேரம் கிடைத்தது. சிந்தனை கொள்கைகளாக மாறின. கொள்கைகள் மனதில் கிலேசங்களாக உருமாறின.
சொந்த ஊர் நகரத்தைவிட அவனுக்குச் சிறந்ததாகத் தெரிந்தது. பட்டினி கிடந்தாலும், புகழை இழந்துவிட்டிருந்தாலும் அய்க்கர மடத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலே ஊரில் ஒரு தனி மதிப்பு இருந்தது. அய்க்கர மடத்தைச் சேர்ந்த திருமேனியின் மகன் கிராமத்து வழிகளில் இறங்கி நடந்தால், நான்கு ஆட்கள் இப்போதுகூட தங்களின் மேற்துண்டை இடுப்பில் கட்டி மரியாதையுடன் ஒதுங்கி நிற்பார்கள். அதுதான் அந்தஸ்து! இங்கு அது நடக்கவே நடக்காது. தெருவைப் பெருக்கிச் சுத்தம் செய்யும், காதுகளில் கண்ணாடி தொங்கட்டான்கள் அணிந்த, ரவிக்கை அணியாமல் சிவப்பு நிறப் புடவை மட்டும் அணிந்திருக்கும், வெற்றிலை எச்சிலில்கூட தமிழை வாந்தி எடுக்கும் துப்புரவு செய்யும் பெண்கூட அவனுக்கு மரியாதை தரமாட்டாள்.
அய்க்கர மடத்தைச் சேர்ந்த தேவதத்தன் திருமேனிக்கு நகரம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நகரத்தில் அவன் யார்? வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் எத்தனையோ மதராஸ் மலையாளிகளில் அவன் ஒருவன். அவ்வளவுதான். ஆர்யன் திருமேனியின் வாரிசுக்கு இந்த விஷயத்தில் எதிர்ப்பு உண்டாகலாமா?
தெரு விளக்குகள் எரிந்து கொண்டும், புகை வண்டிகள் அலறிப் பாய்ந்து கொண்டும் இருந்த இரவு நேரங்களில் வீட்டின் முன்னாலிருந்த ஒடுகலான தெருவில் நின்றுகொண்டு தேவதத்தன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்:
“என் முகம் எங்கே?”
பதில் கிடைக்கவில்லை. முகத்தைக் காணவில்லை. தரையில், தெருவில் விழுந்து கிடந்த, கறுத்த, சிறிய நிழலை மட்டும் அவன் பார்த்தான்.
தன்னுடைய இழக்கப்பட்ட முகத்தை நினைத்து தேவதத்தன் கவலைப்பட்டான்.
இரக்கத்தின் அறிகுறியே இல்லாமல் நகரம் பற்களைக் காட்டி இளித்தது. நகரத்துடனும் இரவு வேளையுடனும் கொண்ட கோபத்தைச் சகித்துக் கொள்ள முடியாமற் போனபோது தேவதத்தன் வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான். தன்னுடைய அறைக்குள் சென்று உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.
படித்தபோது புத்தகங்களின் தாள்களிலிருந்து மார்க்ஸும் லெனினும் இறங்கி வந்தார்கள். மாவோ இறங்கி வந்தார். சிவப்பு நிறக் கொடியைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் வர்க்கம் இறங்கி வந்தது. அவர்களின் தலைவன்தான் தான் என்பதை தேவதத்தன் உணர்ந்தான். ஆர்யன் திருமேனிக்கு மட்டுமல்ல; மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் வாரிசு கூடத்தான் தான் என்பதையும் அவன் உணர்ந்தான். அய்க்கர மடத்தின் இளம் வாரிசான அவன் அந்தக் கொடியைக் கையில் பிடித்தால் மட்டுமே ஆர்யனின் இல்லத்திற்கு நவீன உலகத்தில் இடம் கிடைக்கும்.
தொலைந்து போன தன்னுடைய முகத்தைத் திரும்பவும் பெற இந்த ஒரே வழிதான் இருக்கிறது என்பதையும் தேவதத்தன் புரிந்து கொண்டான்.
ஆனால், எப்படி, எங்கிருந்து அதைத் தொடங்குவது? தனியாக, ஒரு ஆள் மட்டும் கொடியைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கினால், உடன் வர ஆட்கள் கிடைப்பார்களா? புகழ்பெற்ற முன்னோர்களின் வழித் தோன்றல்கள்தான் கொடியைக் கையில் பிடித்துக் கொண்டு நடக்கிறார்கள் என்பது தெரிந்தால்தானே மக்கள் அவனைப் பின்பற்றி நடப்பார்கள்? அவனுக்குத் தெரிந்த மலையாளிகளுக்குக் கூட அவனுடைய குடும்ப வரலாறு முழுமையாகத் தெரியாது என்பதுதான் உண்மை.
வேலை தேடி மதராஸுக்கு வந்து, வெயிலையும் மழையையும் சகித்துக் கொண்டு, தெருவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரன் என்றுதான் ஆட்கள் அவனைப் பற்றி நினைப்பார்கள்.
நாராயணனுக்கும் உண்ணி சங்கரனுக்கும் அதைவிட அதிக மதிப்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் – அவர்களுக்கு வேலை இருக்கிறது என்பதுதான். விடுமுறை நாட்களில் அவர்களைத் தேடி நண்பர்கள் வந்தார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு போனார்கள். அவர்களுக்குப் பொழுதைப் போக்க எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. கேரள சமாஜத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் பேசினார்கள். வீட்டிற்கு வரும் ஆட்கள் பரிதாபத்தை வெளிப்படுத்துகிற மாதிரியோ சடங்குக்காக என்பது மாதிரியோதான் அவனுடன் பேசினார்கள்.
“வேலை ஒண்ணும் கிடைக்கலயா?”
“இப்படி உட்கார்ந்திருந்தால் போதாது. கஷ்டப்பட்டு நடக்கணும். அப்படின்னாத்தான் வேலை கிடைக்கும்.”
“டைப் ரைட்டிங் படிக்கணும்.”
“இப்படியே எவ்வளவு நாட்களா இருக்குறது?”
“ஊருக்குத் திரும்பிப் போறது நல்லது.”
தேவதத்தனுக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டு கோபம் வந்தது. அவன் அதைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
ஒரு வேலை கிடைக்கட்டும். அதற்குப் பிறகு அவர்களுக்குப் பதில் கூறலாம். ஆனால், வேலை கி்டைக்கவில்லை.
தேவதத்தன் வேலைக்காகக் காத்திருந்து ஒரு மாதிரி ஆகிவிட்டான். அவனுடைய மனதில் புரட்சி சிந்தனை வளர்ந்து கொண்டிருந்தது.
இறுதியில், நீண்ட ஆழமான தவத்தின் கடைசி கட்டத்தில் கூட்டை உடைத்துக் கொண்டு தேவதத்தன் வெளியே குதித்தான். சிறகுகளைக் குடைந்து விரித்தான். வீசிப் பறந்தான்.
மலையாளிகளின் காதுகளில் வண்ணத்துப் பூச்சி பறக்கும் சத்தம் கேட்டது.
“ஒரே வழி மார்க்ஸ்தான். நம்மைச் சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒண்ணு... வேலை கிடைக்காது. அப்படி வேலை கிடைச்சா, பட்டினி கிடைக்கறதுதான் பலன். இந்த நிலை மாறணும். மாற்றியே தீரணும்.”
முறையற்று மீசை வளர்த்திருந்த கூர்மையான முகத்தில் ஆவேசம் முழுவதையும் திரட்டி வைத்துக் கொண்டு மூக்கை விறைத்துக் கொண்டு தேவதத்தன் ஆட்களிடம் பேசினான். பலரும் அவன் பேசியதைக் கேட்டார்கள். சிலர் மிகவும் கவனமாகக் கேட்டார்கள். சிலர் தலையை ஆட்டினார்கள். சிலர் எதிர்த்தார்கள். பெரும்பாலானோர் அதை நிராகரித்தார்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தேவதத்தன் சொன்னான். உறக்கத்திலும் அவன் மார்க்ஸிஸத்தைக் கூறிக் கொண்டிருந்தான்.
“புரட்சி செய்யணும். மனிதர்களை ஒன்று சேர்க்கணும்.”
இரவு நேரங்களில் அவன் கோஷம் போடுவதைப் பற்றி ஆட்கள் புகார் சொல்ல ஆரம்பித்தார்கள். வீடு வாடகைக்கு எடுக்க உதவின வெங்கிட்டராமன் என்ற அய்யர்தான் முதலில் புகார் சொன்னவன்.
அய்யர் குளித்தான். திருநீறு அணிந்து வேட்டியைத் தாராகக் கட்டினான். கசங்கிய, கிழிந்த அரைக்கைச் சட்டையை எடுத்து அணிந்தான். காலை நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து நாராயணனிடம் புகார் சொன்னான். அவன் பேசியபோது வெற்றிலையின் சிவப்பு நிறச் சாறு தெறிந்து விழுந்தது.
நாராயணன் அழைத்தான்:
“தேவதத்தா...”
“என்ன?”
“இந்த ராத்திரி நேரத்துல நீ ஏன் ஆர்ப்பாட்டம் பண்ணுற? பக்கத்து வீட்டுக்காரங்க உன்மேல புகார் சொல்றாங்களே!”
“தூக்கத்துலதானே? நான் என்ன செய்றது?”
“நீ அதைக் கட்டுப்படுத்த வேண்டாமா?”
“கட்டுப்படுத்தணும்தான். ஆனா, முடிஞ்சாதானே? மனசு முழுவதும் நெறஞ்சிருக்கு. அது வெளியே வருது. அவ்வளவுதான். எல்லாத்துக்கும் பதில் மார்க்ஸிஸத்துல மட்டும்தான் இருக்கு.”
நாராயணனின் முகம் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உண்ணி சங்கரனின் முகத்தில் ஒருவித வெறுப்பு தோன்றியது.
அதை தேவதத்தனால் புரிந்துகொள்ள முடிந்தது. அய்யரை திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறான் உண்ணி சங்கரன். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அய்யருக்கொரு மகள் இருக்கிறாள். ஒரு அழகான பெண். டைப்பிஸ்ட். அவளுக்கும் உண்ணி சங்கரனுக்குமிடையே காதல்... பின்னாலிருக்கும் முற்றத்தில் இறங்கி, சுவர் மீது கஷ்டப்பட்டு ஏறி அவன் அவளை எட்டிப் பார்ப்பதையும், அவளுடன் பேசுவதையும் அவன் கவனித்திருக்கிறான்.
அய்யரின் கருணை அவனுக்குக் கட்டாயம் தேவைதான்.
அய்யரின் புகார் தேவதத்தனின் புரட்சி மனத்தைச் சிறிதும் குறைக்கவில்லை. சொல்லப் போனால் முன்பு இருந்ததைவிட மிகவும் அதிகமாக அது வளர்ந்தது. மலையாளிகள் அனைவரையும் பிடித்து நிறுத்தி, தேவதத்தன் கம்யூனிஸம் கற்றுத் தந்தான்.
பலரும் நாராயணனிடமும் உண்ணிசங்கரனிடமும் சொன்னார்கள்:
“இந்தப் போக்கு நல்லது இல்ல. வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்பு கூட இல்லாமல் போயிடும்.”
“வேலை வெட்டி இல்லாம உட்கார்ந்துக்கிட்டு அரசியல் தொடங்கியிருக்காப்ல...”
“வேலை இல்லாதவர்கள் சொல்லித் திரியிற ஒண்ணுதான் இந்த கம்யூனிஸம்...”- சாலக்குடியைச் சேர்ந்த பொரிஞ்ஞு சொன்னான்.
தேவதத்தனுக்கு நண்பர்கள் குறைந்தார்கள். ஆட்கள் அவனைப் பார்த்ததும் தங்களின் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தார்கள். தங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறிக் கொண்டு அவனிடம் விடை பெற்றார்கள். சிலர் வால்களைத் தூக்கிக் கொண்டு திரும்பி ஓடினார்கள். அவனுடைய சகோதரர்கள்கூட அவனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.
தூக்கம் வராமல் இரவு நேரங்களில் அவன் படுத்து இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தான். ஏதாவது வழி கண்டுபிடிக்க வேண்டும். வருமானம் உண்டாக்க வேண்டும். கம்யூனிஸமாகவே இருந்தாலும், பணம் இல்லாமல் முடியாது. வருமானமில்லாதவன் கூறுவதைக் கேட்க ஆட்கள் இல்லை.
இரவுகள் வங்காள விரிகுடா கடலின் அலைகளில் இறங்கியது.
தேவதத்தன் பல வழிகளையும் பற்றி ஆலோசனை செய்தான்.
இறுதியில் கண்டுபிடித்தான். கோழி வளர்த்தல்!
மெரீனா கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோதுதான் ‘கோழி வளர்த்தல்’ என்ற எண்ணம் மனதில் உதித்தது.
கிழக்குப் பக்கம் கடல் இரைச்சலிட்டது.
மணல்மீது மங்கலான இருட்டில் படுத்திருந்த தேவதத்தன் உற்சாகத்துடன் எழுந்து உட்கார்ந்தான்.
தன்னிடம் உதித்த அந்தப் பெரிய திட்டத்தை அவன் யாரிடம் கூறுவது?
வேண்டாம். யாரிடமும் கூறாமல் இருப்பதே நல்லது. சொன்னால் ஏற்றுக் கொள்ளாத காலம். திட்டத்திற்கு விலை இல்லை. விலை உண்டாக வேண்டுமென்றால் அதைச் சொல்பவனைப் பற்றி நல்ல மதிப்பு இருக்க வேண்டும். மதிப்பு உண்டாக வேண்டுமென்றால் அவனிடம் வெளிப்படுத்தப்பட்ட திறமைகள் இருக்க வேண்டும்.
மனதில் தோன்றிய எண்ணத்தை மிகவும் ரகசியமாகக் காப்பாற்ற வேண்டும். முடிந்தவரையில் அதை வளர்க்க வேண்டும். மிகப் பெரிதாக விரிக்க வேண்டும். அதன் சிறப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு ரகசியமாக சகோதரர்களிடம் மட்டும் கூற வேண்டும். கொஞ்சம் பணத்தைத் தயார் பண்ண அவர்கள் ஆயத்தமாக இருக்கும் பட்சம், வியாபாரத்தை ஆரம்பித்துவிட வேண்டும். அதற்குப் பிறகு பொரிஞ்ஞுசுவைப் போன்ற முட்டாள்களுக்குத் தன்னிடம் எந்த அளவிற்குத் திறமை இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும்.
தேவதத்தனுக்குத் தன்னுடைய சொந்த அறிவு குறித்து மிகுந்த மிதிப்பு இருந்தது. அது பரம்பரை மூலம் அவனுக்குக் கிடைத்தது. ஆர்யன் என்ற முன்தோன்றிய மனிதரிடமிருந்து அவனுக்குக் கிடைத்தது அது.
கோழிகள் மனம் முழுக்க வலம் வந்து கொண்டிருந்தன. பத்து, நூறு, ஆயிரம்... கோழிகள் பெருகுகின்றன. கூட்டம் கூட்டமாக நடக்கின்றன. தீவனத்தைக் கொத்தித் தின்கின்றன. சத்தமிடுகின்றன. முட்டை போடுகின்றன. மீண்டும் தீவனத்தைத் தின்கின்றன. சத்தமிடுகின்றன. முட்டை போடுகின்றன...
அய்க்கர பிரதர்ஸ் நகரத்திலேயே மிகப்பெரிய முட்டை வியாபாரிகளாக மாறினர். இல்லாவிட்டால் எதற்கு நகரத்தில் மட்டும்? மதராஸ் மாநிலத்தில், இந்திய பெருநாட்டில், ஆசியா கண்டத்தில் எதற்கு, உலகத்திலேயே மிகப்பெரிய முட்டை வியாபாரிகளாக ஆகக் கூடாது என்று இருக்கிறதா என்ன?
அய்க்கர மடத்திற்கு இழக்கப்பட்ட செல்வமும் புகழும் திரும்பவும் வருகிறது. அதைத் தொடர்ந்து மக்களை ஆட்சி செய்ய வேண்டும்.
மனதில் உண்டான ஆவேசத்தை அடக்கி வைக்க முடியாதபோது தேவதத்தன் உரத்த குரலில் சொன்னான்:
“கோழி, கோழி, கோழி!”
“என்னங்க சார்?”- அருகில் கடந்து சென்ற, வேர்க்கடலை விற்கும் பையன் திடுக்கிட்டுத் திரும்பினான்.
“ஒண்ணுமில்லடா... போடா...”
அவன் சிரித்தான்: “கனவா? இல்லாட்டி... பைத்தியமா?”
சொல்லிவிட்டு அவன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நடந்து சென்றான். அந்த நிமிடத்திலிருந்து தேவதத்தன் கோழியைப் பற்றி மட்டுமே சிந்தித்தான்.
பலவித வண்ணங்களைக் கொண்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த கோழிகள் மனதில் வலம் வந்தன. சத்தமிட்டன. முட்டை போட்டன. சிறகடித்து நடந்தன.
தேவதத்தன் கோழிகளைப் பற்றி கனவுகள் கண்டான். அவற்றின் மென்மையான இறகுகளின் மீது தடவினான். அவற்றுக்குத் தீவனத்தைச் சிதறிப் போட்டான். கூட்டம் கூடி ஒன்றோடொன்று போட்டியிட்ட கோழிகள் தீவனத்தைக் கொத்தித் தின்றபோது அவன் மகிழ்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கோழிக் குஞ்சுகளை அவன் தன் கையில் எடுத்தான். அன்புடன் அதைத் தடவினான். மார்போடு சேர்த்து அதை அணைத்துக் கொண்டான்.
கோழியையும் கோழி வளர்ப்பதையும் பற்றி உள்ள புத்தகங்களைத் தேடி நடந்தான். கண்டுபிடித்தான்.
மார்க்ஸிஸம் சம்பந்தமான புத்தகங்களைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்தான். அதற்குப் பதிலாக கோழி வளர்ப்பு பற்றி நூல்களைப் படித்தான். பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் கன்னிமாராவிற்கும் சென்று அழகாக பைண்ட் செய்யப்பட்ட, யாரும் அதிகம் பயன்படுத்தியிராத, கோழி வளர்ப்பு பற்றிய அடிப்படை நூல்களை ஆழ்ந்து படித்தான்.
பலதரப்பட்ட கோழிகளைப் பற்றிய விவரங்களை அவன் சேகரித்தான். ஒவ்வொரு இனத்தின் எடை, வயது, முட்டையிடும் வயது, நோய் விவரங்கள், சிகிச்சை முறைகள் – எல்லாவற்றையும் படித்தான்.
அவனுடைய உலகம் கோழிகளின் உலகமாக மாறியது.
பலவிதப்பட்ட இனங்களைச் சேர்ந்த தீவனங்களைப் பற்றி அவன் படித்தான். எந்தத் தீவனத்தைத் தந்தால் எந்த இனக்கோழி கூடுதலாக வாழும், கூடுதலாக முட்டை இடும் போன்ற விஷயங்களைப் படித்தான். கோழிகளின் நோய்களையும் மனிதர்களின் நோய்களையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.
வாரங்கள் கடந்தபோது அவன் ஒரு கோழி நிபுணராக மாறினான்.
பாதையில் இறங்கி நடந்தபோது கோழிகளைக் கண்டால் அவன் வெறித்து அவற்றைப் பார்த்தவாறு நின்றான். அருகிலிருந்த கோழிகளை அழைத்து அவற்றுக்குத் தீவனம் கொடுத்தான்.
கேசவன் குட்டி என்ற பையன் அதைப் பார்த்தான். பையன் திகைத்துப் போய்விட்டான். அவன் மற்ற திருமேனிமார்களிடம் சொன்னான்.
நாராயணன் விசாரித்தான்:
“வீட்டுல இருக்குற அரிசியை எடுத்து நீ ஏன்டா கண்டவங்களோட கோழிக்குப் போட்டே?”
“பேசாத பிராணி ஆச்சே, அண்ணே!”- ரகசியத்தை மறைத்துக் கொண்டு தேவதத்தன் சொன்னான்.
“அப்படியா? கேட்க நல்லாத்தான் இருக்கு. இங்கே மனிதர்கள் சாப்பிடுறதுக்கே அரிசி பத்தல. இந்த நிலைமையில கோழிகள் மீது கருணை...”
“அண்ணே, நீங்கதானே குடும்பத்தோட அந்தஸ்தைப் பற்றி அடிக்கடி பேசுவீங்க?”
அதைக் கேட்டு நாராயணனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
வெங்கிட்டராமன் என்ற அய்யரின் வீட்டில் பேசப்படும் விஷயம் கோழி அல்ல என்பதைத் தெரிந்தபோது உண்ணி சங்கரனுக்கு மன நிம்மதியாக இருந்தது. கோழியின் மூலமாகத் தன்னுடைய காதலியைக் கொத்துவதற்குத் தன் சகோதரன் முயற்சிப்பதாக அவன் சந்தேகப்பட்டான். சந்தேகம் தீர்ந்தபோது அவன் தேவதத்தன் பக்கம் சாய்ந்தான்.
“பரவாயில்லை, அண்ணே...”- அவன் தேவதத்தனுக்காக நாராயணனிடம் சிபாரிசு செய்தான்: “கோழிக்குத்தானே...! போகட்டும்.”
“கல் அரிசியும் பொடி அரிசியும் மட்டும்தான் கொடுக்கணும்”- தேவதத்தன் ஒரு விளக்கம் சொன்னான்.
வழியில் இறங்கி கோழிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் எப்போதும் பாதுகாப்பாக நடந்தது என்று கூறுவதற்கில்லை.
ஒருமுறை கீழ்ப்பாக்கத்திலிருந்த ஒரு சிறிய சந்தில் மிகவும் அழகாக இருந்த ஒரு வெள்ளை நிறக் கோழியைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான் தேவதத்தன்.
அவன் ஆஜானுபாகுவாக இருந்தான். இல்லை... அவள் ஆஜானுபாகுவாக இருந்தாள். ஆஸ்ட்ரேலியன் ஒயிட் லெகானின் முகச் சாயல் தெரிந்தது. அவள் எப்படி அங்கு தனியாக வந்தாள்? தனியாக வளரவோ தனியாக நடக்கவோ செய்கிற இனமல்ல அது. அவள் அங்கு வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்து ஒரு காரணமும் தெரியாமல் வாய் பிளந்து நின்று கொண்டிருந்தபோது, திடீரென்று கோழியின் முகத்தில் ஒரு வாட்டம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டான் தேவதத்தன்.
ஜலதோஷம் இருக்குமோ என்று அவன் சந்தேகப்பட்டான். அந்தக் கோழி தூங்கித் தூங்கி நின்று கொண்டிருந்தது. ஜலதோஷம் மேலும் அதிகமானால் மிகவும் ஆபத்து. உடனே ஏதாவது செய்தால்தான் அது தப்பிக்கும்.
அதற்குப் பிறகு அவன் எதையும் யோசிக்கவில்லை. அவன் மெதுவாகப் பதுங்கிச் சென்று கோழிக்குப் பின்னால் போய் நின்றான். மிகவும் கவனமாகக் கோழியின் வால் பகுதியைத் தொட்டதும், உடனே கோழி உரத்த குரலில் சத்தமிட்டதும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தன.
கோழியின் சத்தத்தைக் கேட்டு அந்தச் சந்தின் ஓரத்தின் வரிசையாக வீடுகள் இருந்த கட்டிடத்தின் வாசல் ஒன்றின் வழியாகக் கறுத்து தடித்த ஒரு செட்டிப் பெண் ஒரு புயலைப் போல வெளியே பாய்ந்து வந்தாள். திகைத்துப் போய் நின்றிருந்த தேவதத்தனைப் பார்த்து அவள் சத்தமிட்டாள்:
“ஓடி வாங்க... ஓடி வாங்க... திருடன்! திருடன்! கோழித் திருடன்!”
அந்தக் கட்டிடத்தின் மற்ற வீடுகளின் கதவுகள் வழியாக மக்கள் என்ற பூச்சிகள் வேகமாக ஓடி வந்தனர்.
“திருடன்! திருடன்!”
ஆட்கள் திருமேனியைச் சுற்றிலும் நின்றுகொண்டு உரத்த குரலில் கத்தினார்கள். கைகளை ஆட்டினார்கள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனக்குத் தெரிந்த தமிழ் முழுவதையும் பயன்படுத்தி தேவதத்தன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றான்.
“நான் திருடன் இல்லீங்க...”
“பொய்! பொய்! கோழியைத் திருட வந்தான்! திருடன்!”- செட்டிப் பெண் உரத்த குரலில் கத்தினாள். கூடியிருந்த மக்கள் கூட்டம் அதைப் பின்பற்றியது.
தேவதத்தன் தன் கைகளைக் கூப்பினான்.
“இல்லீங்க... அந்தக் கோழிக்கு உடம்பு சரியில்ல... அதைப் பார்த்தேன் அவ்வளவுதான்.”
அவனுடைய குரல் கூடியிருந்தோர் உண்டாக்கிய சத்தத்தில் கேட்கவில்லை.
“பொய்! பொய்!”
திராவிடர்கள் கத்தினார்கள்.
“திருடன்! உதைப்போம். உயிரை வாங்குவோம். திருடன்... திருடன்...”
மக்கள் கைகளைச் சுருட்டினார்கள். குதித்தார்கள்.
இறுதியில் கூட்டத்தில் இருந்த ஒரு ஆள்- முறுக்கு மீசை, சிவப்பு நிறக் கை இல்லாத பனியன், செவிக்குப் பின்னால் பீடி, கழுத்தில் துண்டு – இப்படிப்பட்ட கோலத்துடன் நின்று கொண்டிருந்த ஒரு மனிதன் முன்னால் வந்தான். அவன் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து சொன்னான்:
“கொஞ்சம் பொறுங்க... கேட்டுப் பார்ப்போம்.”
“சரி வாத்யாரே...”- திராவிடர்கள் சம்மதித்தார்கள்.
அவன் கேள்வி கேட்டான். தேவதத்தன் அவனுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னான். விஷயம் முழுவதையும் விளக்கினான்.
செட்டிப் பெண் அதற்குப் பிறகும் கத்தினாள். வாத்தியார் அவளிடம் அமைதியாக இருக்கும்படி சொன்னான். இறுதியில் அவன் தீர்ப்பு சொன்னான்.
“பாவம்! பைத்தியக்காரன்! போகட்டும்... கோழிக்கு உடம்பு சரியில்லைன்னு நினைச்சானாம். பைத்தியக்காரப் பையன்!”
“சரி வாத்யாரே”- மக்கள் அவன் சொன்னத் தீர்ப்பை ஒத்துக் கொண்டார்கள்.
“போயா... போ!”- தேவதத்தனுக்கு உத்தரவு கிடைத்தது.
அவன் நடந்தான். அவனுக்குப் பின்னால் மக்கள் என்ற பூச்சிகள் உரத்த குரலில் கத்தின:
“பைத்தியம்! பைத்தியம்!”
இப்படிப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் சில நேரங்களில் நடந்திருக்கின்றன. ஆனால், அந்தச் சம்பவங்கள் எவற்றாலும் தேவதத்தனைத் தன்னுடைய முடிவிலிருந்து சிறிது கூட அகன்று நிற்கச் செய்ய முடியவில்லை.
அவன் கோழி வளர்க்கும் இடங்களைத் தேடி நடந்தான். அந்த விஷயத்தில் அவனால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இனிமேல் அவனுக்குத் தேவை நடைமுறை அறிவுதான்.
தேவதத்தன் கோழி வளர்ப்பு மையங்களைப் போய்ப் பார்த்தான். ஒரு மையத்திலிருந்து அதைவிட சிறப்பான வேறொரு மையத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அப்படி... அப்படி... இறுதியில் பல்லாவரத்தில் ஒரு செட்டியார் நடத்திக் கொண்டிருந்த, நகரத்திலேயே மிகவும் பெரிய கோழி வளர்ப்பு மையத்தைப் போய் பார்த்தான். சம்பளம் இல்லாத அப்ரன்டீஸாக அங்கு சேர்ந்தான்.
கோழிகளுடன் நேரடியாக அறிமுகமானான். ஆரம்பத்திலேயே அவற்றைப் பார்த்துச் சொன்னான்: “அய்க்கர மடத்தைச் சேர்ந்த தேவதத்தன். பகைவன் அல்ல நண்பன்...”
கோழிகள் அவன் சொன்னதைக் கேட்டு சிரித்தன. அவனை அவை மகிழ்ச்சியுடன் வரவேற்றன. எந்தவிதமான உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறின.
தேவதத்தன் பலதரப்பட்ட கோழிகளுடனும் நெருங்கிப் பழகினான்.
நெபுகத்நெஸர், தாரியூஸ் ஆகியோரின் பரம்பரையைப் பறைசாற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த கோழிகள், ஆங்கிலம் பேசும் ஆஸ்திரேலிய கோழிகள், ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் கறுப்பு நிறக் கோழிகள், மஞ்சள் நிறத்தைக் கொண்ட, மூக்கு மூலம் பேசும் சைனா கோழிகள்...
எல்லோரும் ஒரே வயிற்றில் பிறந்த சகோதரர்களைப் போல அங்கு இருந்தார்கள். அவர்கள் மத்தியில் நிலவிய சகோதரத்துவத்தையும் ஒருவரோடொருவர் காட்டிக் கொண்ட அன்பையும் பார்த்தபோது தேவதத்தனுக்கு மனிதர்களிடம் வெறுப்பு தோன்றியது.
அவன் கோழிகள் மீது அன்பு செலுத்தினான். அவற்றை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான். மிகவும் அக்கறை செலுத்தி அவற்றைக் கவனித்தான். சிகிச்சை செய்தான்.
அவனுடைய நிமிடங்கள் அவற்றைப் பற்றிய சிந்தனைகளால் நிறைந்தது.
தூங்கும்போது தன் சகோதரர்களுக்கு முன்னால் ஒரு பெரிய சத்தத்தைப் போட்டான் தேவதத்தன்.
அய்யர் பெண்ணின் மை எழுதிய கண்களை மனதில் நினைத்துக் கொண்டு தூங்காமல் படுத்திருந்த உண்ணி சங்கரன் திடுக்கிட்டு எழுந்தான். அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருந்த நாராயணனும் எழுந்துவிட்டான்.
“என்ன இது?”- நாராயணன் கேட்டான்: “திரும்பவும் கம்யூனிஸமா?”
“கோழியைப் பற்றி...”
“கோழியைப் பற்றியா? கேட்கவே சுவாரசியமா இருக்கே”- நாராயணன் தேவதத்தனைத் தட்டி எழுப்பினான்.
“டேய்... இந்தக் கோழிகள்கூட உனக்கு என்ன உறவு?” முதலில் அதைச் சொல்லாமல் மறைக்க முயன்றாலும் இறுதியில் தேவதத்தன் தன் சகோதரர்களிடம் எல்லா விஷயங்களையும் மனம் திறந்து சொன்னான். தன் மனதில் இருக்கும் திட்டம் பற்றியும் அதை நடைமுறையில் கொண்டு வருவதற்கான சாத்தியங்களைப் பற்றியும் வழிகளைப் பற்றியும் அந்த வியாபாரத்தில் கிடைக்கக் கூடிய லாபத்தைப் பற்றியும் அவன் விளக்கிச் சொன்னான். நம்பிக்கையான குரலில் அவன் அதை விவரித்தான்.
அவர்கள் ஆலோசிப்பதாகச் சொன்னார்கள். ஆலோசித்தார்கள். பல நண்பர்களும் சந்தேகத்தை வெளிப்படுத்தினாலும், அவர்கள் கடைசியில் சம்மதித்தார்கள்.
தேவதத்தன் உற்சாகத்தால் துள்ளிக் குதித்தான்.
கோழி வளர்ப்பதற்குத் தேவையான மூலதனத்தைத் தயார் பண்ணுவதுதான் அடுத்த வேலை. நாராயணனும் உண்ணி சங்கரனும் தாங்கள் வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து கிடைக்கக் கூடிய முன் பணத்தை வாங்கினார்கள். அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்தார்கள். அதுவும் போதாதென்று, கடன் வாங்கினார்கள்.
தேவதத்தன் கோழி வளர்ப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடி அலைந்தான். இறுதியில் கண்டு பிடித்தான். பெரம்பூரில் சிறிய ஒரு வீடும் பெரிய ஒரு வெற்றிடமும். இடம் எடுத்தான். கம்பி வலைகள் வாங்கினான். எல்லாப் பொருட்களையும் பல்லாவரத்திலிருந்த செட்டியாரிடம் கலந்தாலோசித்த பிறகே வாங்கினான். கோழி வளர்ப்பு மையத்திற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் செட்டியாரின் ஆலோசனைப்படியே நடைபெற்றது. செட்டியாரிடமிருந்தே கோழிக்குஞ்சுகளை அவன் வாங்கினான்.
தேவதத்தனின் கனவு செயல்வடிவத்திற்கு வந்தது.
உண்ணிசங்கரனுக்கும் அய்யரின் மகளுக்குமிடையே இருந்த காதல் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த காலமது.
அவன் மாலை நேரத்தில் பின்னாலிருந்த முற்றத்தில் இறங்கி நின்று கொண்டு தமிழ்த் திரைப்படங்களில் வரும் பாட்டுகளைப் பாடிக் கொண்டிருப்பான். சுவருக்கு அப்பால் நின்று கொண்டு அந்தக் கன்னிப் பெண் அந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பாள். அய்யர் இல்லாத நேரம் பார்த்து அவளும் அந்தப் பாட்டைத் திரும்பப் பாடுவாள். உண்ணி ஆங்கிலத்தில் கடிதம் எழுதி, சுவருக்கு மேலே எறிந்தான். காதல் கடிதத்தைப் படித்த அந்தக் கயல்விழியாள் உற்சாகத்தில் திளைத்தாள். தன்னையே மறந்தாள். அவளும் பதிலுக்குக் காதல் கடிதங்களை எழுதினாள். உண்ணி அவற்றைப் படித்து புளகாங்கிதம் அடைந்தான். தமிழர்களிடம் தொன்றுதொட்டுவரும் பழக்கங்களின் படி அவளுக்காக வீரச் செயல் புரியும் நிமிடத்தைக் காட்டும் சந்தர்ப்பத்திற்காக கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உண்ணி சங்கரன் இரவுகளையும் பகல்களையும் கழித்துக் கொண்டிருந்தான்.
காதல் அதிகமானபோது உண்ணி அலுவலகத்திலிருந்து தன் அண்ணனுடன் வரும் வழக்கத்தை நிறுத்தினான். அவன் ஐந்தோ பத்தோ நிமிடங்களுக்கு முன்பே அலுவலகத்திலிருந்து புறப்பட்டான். தன் காதலியின் அலுவலகத்திற்கு முன்னால் அவன் அவளுக்காகக் காத்திருந்தான். அவள் இறங்கி வந்தாள். அழகாகச் சிரித்தாள். அவளுடைய தந்தையும் அவனுடைய அண்ணனும் வரக்கூடிய பாதைகளைத் தவிர்த்து அவர்கள் சேர்ந்து நடந்தார்கள்.
அவன் அவளுடைய அழகைப் புகழ்ந்தான். தன் பற்களைக் காட்டி அந்தக் கன்னி சிரித்தாள்.
“போங்க அத்தான்” என்று கூறி தன் வெட்கத்தை அவள் வெளிப்படுத்தினாள்.
அவள் ‘அத்தான்’ என்று அழைத்தபோது அய்க்கர மடத்தின் திருமேனியின் காதும் இதயமும் குளிர்ந்தன.
அவள்மீது ஒரு சைக்கிள் வந்து மோதும்போது, தான் அவளைத் திடீரென்று காப்பாற்றும் சம்பவத்தை எதிர்பார்த்துக் கொண்டே அந்தக் காதல் வீரன் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
வீடு நெருங்கியபோது, அவர்கள் விலகி நடந்தார்கள்.
“நாம இப்படி ஒண்ணா சேர்ந்து நடந்து வர்றதையும் பேசுறதையும் யாராவது பார்த்தால்?”
“அதுனால என்ன?”- உண்ணி சொன்னான்: “என் அண்ணன்மார்கள் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.”
“ஆனா, என் அப்பா பார்த்தால் பிரச்சினை ஆயிடும்.”
“பரவாயில்லை... காதல்னா கட்டாயம் தடைகள் இருக்கத்தான் செய்யும்.”
“அப்பா பார்த்தால் நாம என்ன செய்றது?”
சிறிதும் தயக்கமே இல்லாமல் உண்ணி பதில் சொன்னான்:
“லைலா – மஜ்னுவின் கதையைச் சொல்ல வேண்டியதுதான்.”
“அப்பா என்னைக் கொன்னுடுவாரு.”
“நான் உன்னைக் காப்பாத்துவேன்.”
“அது போதும்...”
“பயப்படாதே...”
ஆனால், அன்றிலிருந்து காதலன் பயப்படத் தொடங்கினான். அவன் அய்யரின் உருண்டைக் கண்களை மனதில் நினைத்து நடுங்கினான்.
எனினும் காதல் தலையைப் பாடாய்ப் படுத்தியபோது அவன் முற்றத்தில் இறங்கிப் பாடினான்:
‘ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக்கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா....’
ஆசைக்கிளி சுவருக்கு அப்பால் வந்து நின்று அந்தப் பாட்டைக் கேட்டது.
இந்தக் காதல் நாடகத்தை மிகவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சமையல்காரன் கேசவன்குட்டி. அவன் அதைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க, உண்ணி சங்கரன் அவனுக்கு லஞ்சம் தந்தான்.
கோழி வளர்த்தல் தொடங்கியது ஒருவிதத்தில் நல்லதாகப் போய்விட்டது. அதனால் அண்ணன் என்ற சாட்சி அங்கு இல்லை. தேவதத்தன் பெரம்பூரிலேயே தங்கிவிட்டான். கோழிகளுடன் ஆள் இல்லாமல் இருக்க முடியாது. வேறு ஆட்கள் கோழி வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாதவர்கள். நாராயணனும் அங்கு போய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் விருப்பப்பட்டான் உண்ணிசங்கரன்.
அந்தத் தன்னுடைய ஆசை நடக்கவில்லையே என்று அவன் கவலைப்பட்டான்.
செலவு அதிகம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வேப்பேரியிலிருந்து பெரம்பூருக்குச் சாப்பாடு கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. காலையில் வேலைகளை முடித்துவிட்டு நாராயணனும் உண்ணியும் அலுவலகத்திற்குப் புறப்படும்போது தேவதத்தனுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு கேசவன் குட்டி பெரம்பூருக்குச் செல்வான். சாயங்காலம் சாப்பாடு எடுத்துக் கொண்டு போவது பெரும்பாலும் நாராயணனாக இருக்கும். அது உண்ணிக்கு மிகவும் வசதியாகிப் போனது.
காதலுக்கான பாதை எளிதாகிவிட்டது.
ஒரு கனவு செயல்வடிவத்திற்கு வந்தது குறித்து மிகுந்த சந்தோஷப் பெருவெள்ளத்தில் நீந்தித் துடித்துக் கொண்டிருந்தான் தேவதத்தன்.
அவன் தன்னுடைய வாழ்க்கையை கோழிகளுக்கு அர்ப்பணித்தான். காலையில் எழுந்து பால் கலக்காத காபி குடிப்பதற்கு முன்பே அவன் கோழிகளுக்குத் தீவனம் கொடுத்தான். தினமும் அவன் கோழிகளைச் சோதித்துப் பார்ப்பான். ஏதாவது ஒரு கோழிக்குச் சிறிய ஒரு வாட்டம் இருப்பது தெரிந்துவிட்டாலும், அவன் ஒரு மாதிரி ஆகிவிடுவான். என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு உடனடியாக மருந்தைக் கலந்து தீவனம் கொடுக்க ஆரம்பித்துவிடுவான்.
பகல் நேரம் முழுவதும் அவன் கோழிகளை கவனம் செலுத்தி பார்ப்பான். அவற்றைக் கொஞ்சிக் கொண்டிருப்பான். அவற்றுடன் விளையாடுவான். அவற்றுடன் பேசுவான்.
ஒரு விஷயத்தை அவன் உறுதியான குரலில் சகோதரர்களிடம் சொன்னான்:
“கோழி வளர்த்தல் மூலம் கிடைக்குற பணத்தை நம்ம செலவுக்கு எடுக்கவே கூடாது. அதை அந்தத் தொழில்லயேதான் போடணும். அப்போத்தான் கோழிப் பண்ணை வளரும்.”
“சரிதான்...”- மற்ற இரண்டு திருமேனிமார்களும் தலையை ஆட்டினார்கள்.
“கோழி மனிதர்கள் மாதிரியேதான்...”- தேவதத்தன் சொன்னான்: “அழும்... சிரிக்கும்... அதற்கும் நோய், மரணம் எல்லாம் இருக்கத்தான் செய்யுது.”
அந்தத் தொழிலில் நிபுணனான தேவதத்தன் கூறும்போது அதைத் தெரியாத மற்ற இருவரும் அவன் கூறுவதை வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தார்கள். தலையை ஆட்டினார்கள்.
திருமேனிமார்களுக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது என்று பொரிஞ்ஞுவைப் போன்றவர்கள் கூறிக் கொண்டு நடந்தார்கள்.
“ஒண்ணு முழு பைத்தியம்... அதனாலதான் இப்படியொரு காரியத்துல இறங்கியிருக்காங்க. அதை என்னால புரிஞ்சிக்க முடியுது. வேலை கிடைக்கல. அதுதான் விஷயமே. மற்ற ரெண்டு பேருக்கும் வேலை இருக்குதே! பிறகு எதற்கு இந்த நோய் வந்து பிடிச்சது? அதுதான் புரிஞ்சிக்க முடியாத விஷயமா இருக்கு”- பொரிஞ்ஞு சொன்னான்.
தேவதத்தனுக்குப் பைத்தியக்கார திருமேனி என்றும், கோழித் திருமேனி என்றும் அவர்கள் பெயர் வைத்தார்கள்.
நாராயணனையும் உண்ணி சங்கரனையும் அவர்கள் கிண்டல் பண்ணினார்கள். தேவதத்தன் அந்தச் சாதாரண மனிதர்களின் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்ளவே இல்லை.
நாராயணன் எதையும் கண்டு கொள்ளாதது மாதிரி இருந்தான்.
உண்ணி சில நேரங்களில் கோபத்துடன் சொன்னான்: “அது எங்களோட விஷயம். உங்களுக்கு அதுல என்ன வேணும்?”
“எங்களுக்குத் தேவை முட்டை”- அவர்கள் சொன்னார்கள்.
உண்ணி கடுமையான குரலில் சொன்னான்:
“சும்மா இருடா. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கிட்டு இருக்காதே.”
எனினும் உண்ணி நாராயணனிடம் புகார் கொன்னான்:
“இது ஒரு பெரிய தலைவலியா இருக்கே! எல்லாரும் என்கிட்ட சொல்றாங்க...”
தேவதத்தன் தன் சகோதரர்களுக்கு தைரியம் தந்தான்:
“நீங்க அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாட்கள் போகட்டும். அப்போ நாம யாருன்னு காட்டுவோம். இப்போ எதையும் காதுல வாங்காம இருக்குறது மாதிரி காட்டிக்கிறதுதான் நல்லது!”
“அதுவும் சரிதான்”- சகோதரர்கள் சொன்னார்கள்.
அவர்கள் அப்படிச் சொன்னாலும், உள்ளுக்குள் சந்தேகம் இருக்கத் தான் செய்தது. எஞ்சியிருந்த சந்தேகம் முழுமையாக இல்லாமற்போனது முதல் முட்டை வியாபாரத்தின்போதுதான்.
முட்டை விற்று கிடைத்த கரன்ஸி நோட்டுகளுடன் ஒரு மாலை நேரத்தில் வேப்பேரியிலிருந்த வீட்டிற்குள் நுழைந்து, கையிலிருந்த நோட்டுகளை மேஜைமீது எறிந்து, ஆணவக் குரலில் தேவதத்தன் சொன்னான்:
“பாருங்க... வருமானம் உள்ள வியாபாரம் இதுன்றதை... குற்றம் சொல்றவங்க வரட்டும் நான் யார்ன்றதைக் காட்டுறேன்.”
நாராயணனும் உண்ணி சங்கரனும் விமர்சனம் செய்து கொண்டிருந்த மனிதர்களை தைரியமாக நேருக்கு நேர் சந்தித்தார்கள். அந்தச் சமயத்தில்தான் ஊரிலிருந்து கடிதம் வந்தது. நாராயணனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. உடனே புறப்பட்டு வரவேண்டும்.
யாரெல்லாம் போவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
“என்னால வர முடியாது”- தேவதத்தன் உறுதியான குரலில் சொன்னான்: “கோழியை விட்டுப் போனால் வேலை நடக்காது.”
“எனக்கு விடுமுறை இல்லை”- உண்ணியும் பின் வாங்கினான். அவனுடைய பிரச்சினை உண்மையாகப் பார்க்கப் போனால் விடுமுறை இல்லை. நாராயணன் ஊருக்குப் போய்விட்டால், சில நாட்களுக்கு அவன் சுதந்திரமாக இருக்கலாம். தன் விருப்பப்படி காதலிக்கலாம்.
நாராயணன் தான் மட்டும் தனியே போவது என்று முடிவெடுத்தான்.
தம்பிமார்கள் அண்ணனை வழியனுப்பி வைத்தார்கள்.
புகை வண்டி புறப்பட்டுச் சென்றதும் தேவதத்தன் சொன்னான்:
“எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நீ பெரம்பூருக்கு வர்றியா?”
“இல்ல... எனக்கும் நிறைய வேலைகள் இருக்கு!”
உண்ணி வேகமாக வீட்டை நோக்கிப் பறந்தான். அங்கு போய்ச் சேர்ந்தவுடன் ஒரு குறிப்பை எழுதி சுவரின் மேற்பகுதி வழியாக அந்தப் பக்கமாக எறிந்தான்.
‘அண்ணன் ஊருக்குப் போயிருக்கிறார். இரண்டு வாரங்கள் கழித்துதான் வருவார்.’
சிறிது நேரம் சென்றதும், பதில் குறிப்பு கிடைத்தது.
‘நான் வருவேன். பின்னாலிருக்கும் கதவைத் திறந்து வைக்கவும்.’
உண்ணி சங்கரன் உண்மையிலேயே அதிர்ந்து போய் விட்டான். அவள் வருவாள்... கதவைத் திறந்து வைக்க வேண்டும். இதெல்லாம் உண்மையா? நடுங்கிக் கொண்டிருந்த விரல்களுக்கு மத்தியில் இருந்த பேப்பர் துண்டை அவன் திரும்பவும் வாசித்துப் பார்த்தான். அப்படித்தான் எழுதப்பட்டிருந்தது. இப்படியும் ஒரு காதலா? அவளுக்கு அந்த அளவிற்கு தைரியம் இருக்கிறதா? அந்த அய்யர் பெண்ணுக்கு? அவன் ஒரேயடியாகப் பதைபதைத்தான். அவனுடைய உடல் முழுக்க நடுக்கம்...
சாப்பாட்டைச் சிறிது முன் கூட்டியே சாப்பிட்டு முடித்தான். பையனிடம் தூங்கும்படி சொன்னான். இதயம் வேகமாக அடிக்க, அவன் அவளுக்காகக் காத்திருந்தான்.
வெளியே இரவு பிரகாசமாக இருந்தது. ஒடுகலான தெருவில் விளக்கு வெளிச்சம் பரவித் தெரிந்தது. புகைவண்டி நிலையத்திலிருந்து ஒலித்த சத்தங்கள் இரவை நடுங்கச் செய்து கொண்டிருந்தன.
பின்பக்கம் வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வரும் ஆள் வருவதற்காக இருக்கும் கதவைத் திறந்து வைத்தான். பயத்துடன், எதிர்பார்ப்புடன் உண்ணி சங்கரன் காத்திருந்தான்.
சீக்கிரமே விளக்கு அணைந்தது. மற்ற வீடுகளிலும் விளக்குகள் அணைந்தன. இரவு நேரத்தின் இயற்கை வெளிச்சத்தின் தெளிவற்ற கூடாரத்திற்குள் அந்தக் காதலன் அமர்ந்திருந்தான். இப்போது என்ன செய்வது?
கடைசியில் காதலி வந்து சேர்ந்தாள்.
உண்ணி நடுங்கிக் கொண்டே எழுந்து நின்றான். என்ன செய்ய வேண்டுமென்றோ என்ன பேசுவது என்றோ எதுவும் தெரியவில்லை. அவன் தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.
அறைக்குள் சென்றவுடன் கதவை மூடி உண்ணி சங்கரன் விளக்கைப் போட்டான். இரத்த ஓட்டமும் ஆர்வமும் கொண்ட அந்த அய்யர் பெண் வெளிச்சம் அறையில் பரவியவுடன் சரவெடியைப் போல அப்படி அதிர்ந்து போய் அவன் மீது சாய்ந்தாள்.
உண்ணி சங்கரன் அட்டையைப் போல சுருண்டு போய் நின்றிருந்தான். பூரித்து சாய்ந்த காதலிக்கு முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல், சுய உணர்வை இழந்து, குழப்பமான மன நிலையுடன் காதலன் நடுங்கிக் கொண்டு நின்றிருந்தான்.
என்ன செய்வது?
எதுவும் செய்ய தோன்றவில்லை. எதுவும் செய்யவில்லை.
நாற்காலியைச் சுட்டிக்காட்டியவாறு அவன் சொன்னான்:
“உட்காரு.”
அவள் கட்டிலில் உட்கார்ந்தாள். உண்ணி நடுங்கிக் கொண்டிருந்தான். நாற்காலியில் அவன் உட்கார்ந்தான். காதலியின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ஏமாற்றத்துடன் தவிப்பும் தெரிந்தது. தன்னுடைய கருமை நிறக் கண்களால் அவள் அவனைத் தின்று கொண்டிருந்தாள்.
உண்ணி அவளைப் பார்த்துப் பயந்து நடுங்கினான். அவளுடைய கண்களை நேருக்கு நேராகப் பார்க்க தனக்கு தைரியம் இல்லை என்று அவன் நினைத்தான்.
யாரும் எதுவும் பேசவில்லை. நேரம் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கவும் இல்லை.
கடைசியில் அவள் ஏமாற்றத்துடன் எழுந்தாள்: “நான் போகட்டுமா?”
“நாளைக்கு வருவியா?”
அவள் பதிலெதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.
வீடு பெருக்குபவர்கள் பயன்படுத்தும் கதவை அடைத்துவிட்டு திரும்பி வந்தபோது, அவனுக்குத் தன் மீதே வெறுப்பு தோன்றியது.
மறுநாள் அவள் காதல் கடிதம் எழுதவில்லை. அவனை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. எனினும், உண்ணி வீடு பெருக்குபவர்களுக்காக அந்தப் பின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான்.
ஆச்சரியம்! அவள் வந்தாள்.
அன்றும் சிறிது நேரம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரம் பேசினார்கள். அவன் கொட்டாவி விட்டதும், அவள் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
ஒவ்வொரு நாளும் ஆக ஆக அவளுடைய உற்சாகமும் அவனுடைய பயமும் குறைந்து கொண்டே வந்தன.
புகை வண்டியின் சத்தத்தைத் தவிர்த்து பார்த்தால், நகரம் மிகவும் அமைதியாக இருந்தது.
உமாதேவி அந்தர்ஜனத்துடன் நாராயணன் திரும்பி வந்தபோது, அவர்களை வரவேற்பதற்காக தம்பிமார்கள் இருவரும் புகை வண்டி நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.
அண்ணி அவர்களுக்குத் தெரியாதவள் அல்ல.
வந்த நாளன்றே கோழிப் பண்ணைக்குப் போக வேண்டுமென்று பிடிவாதம் பண்ணினாள் உமாதேவி.
அதைக்கேட்டு தேவதத்தன் உற்சாகமாகிவிட்டான்.
அவன் அவளை அழைத்துக் கொண்டு போனான்.
அவனுடைய அற்புதச் செயல்களைப் பார்த்து அண்ணி திகைத்துப் போய்விட்டாள். எல்லா விஷயங்களையும் எந்த அளவிற்கு முறையாகவும், அழகாகவும் அவன் செய்திருக்கிறான்! அண்ணிக்கு அவன்மீது நல்ல மதிப்பு தோன்றியது.
தேவதத்தன் அண்ணிக்கு கோழிகளை அறிமுகம் செய்தான். தீவனத்தைப் பற்றியும் நோய், சிகிச்சை ஆகியவற்றைப் பற்றியும் சொன்னான்.
அந்தர்ஜனம் ஆச்சரியத்துடன் அவன் சொன்ன எல்லாவற்றையும் கேட்டாள்.
தேவதத்தன் கோழிகளுடன் பேசினான். அவன் அருகில் சென்றவுடன் அவை கூவின. அவனைச் சுற்றி நின்றன.
தன்னைச் சுற்றி நின்றிருந்த நூற்றுக்கணக்கான கோழிகளில் ஒன்றைத் திடீரென்று தேவதத்தன் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, அதைச் சற்று தள்ளி நிற்க வைத்தான்.
எதுவும் புரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்த உமாதேவி கேட்டாள்:
“என்ன விஷயம்?”
“இதுக்கு ஜலதோஷம் இருக்கு.”
“அது எப்படி தெரியும்?”- ஆச்சரியத்துடன் உமாதேவி கேட்டாள்.
“அது பார்த்தவுடனே தெரியும். அதுதான் பழக்கத்தின் குணம். அதோட கண்கள் கலங்கி இருக்குறதைப் பார்த்தீங்கள்ல? ஒரு வாட்டம் இருக்குறது தெரியுதுல்ல?”
தேவதத்தனின் கூர்மையான அறிவு குறித்து ஊரெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் கதைகளைப் பற்றி ஆச்சரியப்பட்டதில் வியப்பேதும் இல்லை என்று நினைத்தாள் உமாதேவி. எவ்வளவு கோழிகளுக்கு நடுவிலிருந்து அவன் அந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட கோழியை ஒரே பார்வையில் கண்டுபிடித்தான்!
“இப்போ இதைக் கண்டு பிடிக்கலைன்னா, விஷயம் பிரச்சினைக் குரியதா ஆயிடும்”- தேவதத்தன் சொன்னான்:“மனிதர்கள் மாதிரிதான் கோழிகளும் திடீர்னு நோய் வந்திடும். அந்த நோய் மற்ற கோழிகளுக்கும் பரவ ஆரம்பிச்சிடும். அதற்குப் பிறகு... அவ்வளவுதான். இப்போ பார்த்தது நல்லதா போச்சு.”
“உண்மையிலேயே இது ஆச்சரியமாகத்தான் இருக்கு!”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... எல்லாத்துக்கும் பழக்கம்தான் காரணம்.”
கழுத்தைப் பிடித்து தூக்கிய கோழியை தேவதத்தன் அறைக்குக் கொண்டு வந்தான். மருந்து கொடுத்தான். அதைத் தனியாக ஒரு இடத்தில் அடைத்துப் பூட்டினான். அதற்கு முன்பு அந்தக் கோழிக்கு முத்தம் தந்தான்.
“பரவாயில்லை”- அவன் அந்தக் கோழியிடம் சொன்னான்: “நல்லா உறங்கு. நாளைக்கு எல்லாம் சரியாயிடும். அப்போ நண்பர்கள்கூட போய் இருக்கலாம். தெரியுதா?”
கோழி அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதைப் போல கத்தியது... உறங்கியது...
“தேவதத்தனுக்குக் கோழியோட மொழி நல்லா தெரியுது”- இரவில் உமாதேவி அந்தர்ஜனம் தன் கணவனிடம் சொன்னான்.
“எப்படி சொல்ற?”
அந்தர்ஜனம் அன்றைய சம்பவத்தைச் சற்று மெருகேற்றிச் சொன்னாள்:
“லட்சம் கோழிகளோட கூட்டம் இருந்தாலும், அதுல எந்தக் கோழிக்கு நோய் இருக்குன்னு தெளிவா சொல்லக் கூடிய ஆளு.”
“யாரு?”- நாராயணன் அலட்சியமான குரலில் முனகினான்.
அவனுடைய மொத்த ஆர்வமும் தன்னுடைய மனைவிமீது இருந்தது. தேனிலவுக் காலமாயிற்றே!
காமசாஸ்திர விதிகளின்படி நாராயணன் அவளுடன் இன்பம் காண தயாராகிக் கொண்டிருந்தபோது உமாதேவி கேட்டாள்:
“உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா?”
ஆனந்தக் கயிறு அறுந்த கோபத்தில் கணவன் கேட்டான்:
“எதுல?”
“கோழி வளர்க்குறதுல...”
“மண்ணாங்கட்டி! இங்கும் அதே பேச்சுதானா? உமா, உனக்கு கோழி மேல அப்படி என்ன ஈடுபாடு?”- அவன் கேட்டான்.
“பிறகென்ன? சுவாரசியமான ஒரு விஷயமாச்சே அது! பணமும் கிடைச்ச மாதிரி இருக்கும்.”
“சரிதான்...”- நாராயணனும் ஒத்துக் கொண்டான். செயல் தொடர்ந்தது.
“உங்களுக்கு விருப்பம் இருக்குறது மாதிரி தெரியல...” அந்தர்ஜனம் குறைப்பட்டாள்.
‘பெரிய தொந்தரவா இருக்கே பகவானே!’- நாராயணன் மனதிற்குள் கூறினான். அவளை கோழிப் பண்ணைக்கு அனுப்பி வைத்ததே தப்பான ஒரு விஷயமாகி விட்டது! திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கின்றன. அதற்குள் அவளுடைய ஆர்வம் முழுவதும் வேறொரு விஷயத்தில் இருக்கிறது.
அவனுக்கு அதைப் பார்த்து வெறுப்பாக இருந்தது. கோழிகள் மீதும் வெறுப்பு தோன்றியது.
எனினும், தலையணை மந்திரம் பலித்தது. உமாதேவி கோழி மீது கொண்ட காதல் படிப்படியாக நாராயணனுக்கும் படர்ந்தது.
உமாதேவி ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் கோழிகளுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டாள். ஒவ்வொரு இரவிலும் தன் கணவனிடம் கோழிகளைப் பற்றி மேலும் மேலும் அதிகமாகக் கூறிக் கொண்டே இருந்தாள்.
நாராயணனும் காலப்போக்கில் ஒரு கோழிப் பிரியனாகிவிட்டான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனும் கோழி வளர்க்கும் இடத்திற்குப் போக ஆரம்பித்தான். தன் தம்பியைப் போல கோழிகள் மீது அன்பு செலுத்த முயற்சித்தான். அவற்றுக்குத் தீவனத்தைப் பிரித்துப் போட்டான். முட்டை வியாபாரத்தில் கவனம் செலுத்தினான்.
முட்டை வியாபாரம் வளர்ந்திருந்த காலமது. வியாபாரத்திற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகப் பண்ணை வகையில் ஒரு சைக்கிளையும் வாங்கியிருந்தான்.
சைக்கிளுக்குப் பின்னால் முட்டைக் கூடையை வைத்துக் கொண்டு தேவதத்தன் நகரத்தில் பயணித்தான்.
பொரிஞ்ஞும் அவனுடைய ஆட்களும் கிண்டல் பண்ணினார்கள்: ’முட்டை! முட்டை!’
தேவதத்தன் அதைப் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு அது அவமானமாகத் தோன்றவில்லை. வேலை இல்லாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதைவிட இது எவ்வளவோ மேல்! வேலை செய்பவர்களைவிட அதிக வருமானம் சம்பாதிக்கலாம். இதில் என்ன கேவலம் இருக்கிறது! இன்னொருவனிடம் கை நீட்டி சம்பளம் வாங்குவதைவிட மரியாதையானது இதுதான்.
கிண்டல் பண்ணிய ஆட்கள் முட்டையைக் கடனாகக் கேட்டார்கள். விலையைக் குறைத்துத் தரும்படி கேட்டார்கள்.
அதற்குச் சம்மதித்த தேவதத்தன் கேட்டான்:
“இப்போ கேலி பண்ண வேண்டியதுதானே?”
அதற்கு அவர்கள் சிரித்தார்கள். எனினும், தேவதத்தன் இல்லாத நேரத்தில் அவனையும் அவனுடைய சகோதரர்களையும் கேலி பண்ணவே செய்தார்கள்.
“மூணு பேருக்கும் பைத்தியம். மூத்த திருமேனி கொண்டு வந்திருக்கிற அந்தர்ஜனத்திற்கும் கோழி பைத்தியம்...”
“தேவதத்தனுக்குக் கோழியோட முகச்சாயல் அப்படியே இருக்கு.”
அந்தக் கருத்து சிரிப்பலைகளை உண்டாக்கியது.
மக்களின் எண்ணத்தைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் தேவதத்தனும் உமாதேவி அந்தர்ஜனமும் சில நேரங்களில் நாராயணனும் கடுமையாக உழைத்தார்கள். கோழிப்பண்ணை வளர்ந்தது. கோழிகளின் எண்ணிக்கை கூடியது. வியாபாரம் வளர்ந்தது. வருமானம் அதிகமானது. வங்கிச் சேமிப்பு வளர்ந்தது.
திருமேனிமார்கள் சந்தோஷப்பட்டார்கள். ஒரு திருமேனி மட்டும் கவலையில் இருந்தான். உண்ணி சங்கரன்!
காதலில் உண்டான ஏமாற்றம்தான் அவனுடைய கவலைக்குக் காரணம்.
அய்யருடைய மகள் காதல் கடிதம் எழுதுவதில்லை. அவனுக்காகக் காத்து நிற்பதில்லை. சிறிதும் எதிர்பாராமல் வழியில் பார்த்தால் ஒதுங்கி நடந்து போகிறாள்.
அவள் தன்னைவிட்டு விலகி விலகிச் செல்வதைப் பார்த்து உண்ணி மனதில் கவலைப்பட்டான். அதற்கான காரணத்தைதான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் ஒருமுறைகூட அவளிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதேயில்லை. இரவு நேரங்களில் அவள் பலமுறை வந்திருக்கிறாள். ஒருமுறைகூட அவன் தன்னுடைய மரியாதையை விட்டுக் கொடுத்ததில்லை. ஆரம்ப நாட்களில் அவன் பயந்து அவளிடமிருந்து விலகியே நின்றான். பயம் இல்லாமற் போன பிறகு கூட மரியாதையை விடாமல் காப்பாற்றிக் கொண்டுதான் இருந்தான். மொத்தத்திலேயே ஒன்றிரண்டு தடவைதான் அவளை அவன் தொடவே செய்திருக்கிறான். அதுகூட அவளுடைய உற்சாகத்தால்தான் நடைபெற்றது.
ஒருமுறைதான் அவன் எல்லையையே மீறினான். மெதுவாக முத்தம் கொடுத்துவிட்டான்.
அந்த விஷயத்தில்கூட அவள்தான் முதற்காரணமாக இருந்தாள். அவள் அவனுடன் படுத்தாள். கிச்சு கிச்சு மூட்டினாள். முடியை வருடினாள். கட்டிப் பிடித்தாள். அவனுக்கு முத்தம் தந்தாள். அதற்குப் பிறகுதான் அவன் அவளுக்கு முத்தம் தந்தான்.
அதற்குப் பிறகு எதுவுமே செய்யவில்லையே! பிறகு எதற்குக் கோபம்?
ஒருவேளை அவர்களுடைய இரவு நேர சந்திப்பு விஷயம் அவளுடைய வீட்டிற்குத் தெரிந்திருக்குமோ?
அவளிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.
அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு அவன் நடந்தான். இறுதியில் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது.
அவன் மட்டும் தனியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவன் வேகமாக நடந்து அவளுக்கு அருகில் போய் நின்றான்.
“ஜெயா...”
அவள், அவன் அழைத்ததைக் காதுகளிலேயே வாங்கவில்லை. திரும்பிப் பார்க்கவுமில்லை.
“ஜெயா, என்மீது கோபமா?”
அவள் பேசாமல் நடந்தாள்.
“ஜெயா, என்னை மறந்துட்டியா? இல்லாட்டி உன் அப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சா? என்னைப் பார்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரா? சண்டை போட்டாரா?”
அய்யரின் மகள் முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு நடந்தாள். இறுதியில் அவன் திரும்பத் திரும்ப அழைக்கவே, அவள் திரும்பிப் பார்த்தாள். அவளுடைய கண்களில் வெறுப்பும் கோபமும் இருந்தன. வெறுப்பான குரலில் அவள் சொன்னாள்:
“என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க, மிஸ்டர்”
கவலையில் மூழ்கிய காதலன் கண்ணீரில் குளித்த இரவுகளை எண்ணினான்.
நிலைமை இப்படி இருக்கும்போது ஒருநாள் காலையில் வெங்கிட்டராமன் வீட்டிற்குள் வந்தான். ஏதோ பயங்கரமாக வெடிக்கப் போகிறது என்றெண்ணி பயந்து உண்ணி வீட்டுக்குள்ளேயே இருந்தான். எனினும், ஆர்வத்தை அடக்க முடியாமல் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.
அய்யர் நாராயணனிடம் சொன்னான்: “அடுத்த திங்கள் கிழமை என் பொண்ணுக்குக் கல்யாணம். நீங்க கண்டிப்பா வரணும்.”
அறையே முழுமையாகக் குலுங்கிக் கீழே விழுவதைப் போல் இருந்தது உண்ணி சங்கரனுக்கு.
அவன் பின்னாலிருந்த முற்றத்தில் இறங்கி நின்று சோகப் பாடல்களைப் பாடினான். சுவருக்கு அப்பாலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவன் பேப்பர் துண்டுகளில் எழுதி எறிந்தான். பதில் வரவில்லை.
இறுதியில் கல்யாணத்திற்கு முந்தின நாள் ஒரு குறிப்பு கிடைத்தது:
‘நீ ஒரு ஆண்மகன் இல்லை’- ஒரே ஒரு வாக்கியம் மட்டும்.
விஷயம் அப்படிப் போய்விட்டதா? அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாழாக்கியதுதான் அவன் செய்த தவறு. அப்படித்தானே! ‘மரியாதையாக நடந்து கொண்டதுதான் தவறு.’ உண்ணி சங்கரன் தனக்குள் கூறிக் கொண்டான். நல்லவனாக இருக்கக் கூடாது. நல்லவனாக இருந்தால் கவலைப்பட வேண்டியது வரும்.
அவன் கவலை கொண்டு சிரித்தான்.
அய்யர் மகளின் திருமண நாளன்று இரவில் உமாதேவி அந்தர் ஜனத்திற்குக் காய்ச்சல் வந்துவிட்டது. நாராயணன் அதற்காகக் கவலையில் மூழ்கினான். விடுமுறை இல்லாத காலம். மனைவிக்கு உடல் நலக்கேடு.
“இது என்ன கஷ்ட காலம்...!”- அவன் சொன்னான
“நமக்குக் கஷ்ட காலம்தான்...”- உண்ணி அதை ஒப்புக் கொண்டான்.
மறுநாள் விஷயம் தெரிந்தது, முத்துவேலன் என்ற தமிழனிடம் கோழிப் பண்ணையை ஒப்படைத்துவிட்டு தேவதத்தன் வேப்பேரிக்கு வந்தான். அண்ணியை அவன் சோதித்துப் பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தன. மூக்கிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. இலேசான காய்ச்சல் இருந்தது. மொத்தத்தில் அவன் மிகவும் தளர்ந்து போய் காணப்பட்டாள்.
சோதனை செய்து பாத்துவிட்டு தேவதத்தன் தன் முடிவைச் சொன்னான்.
“அண்ணி, உங்களுக்குக் கோழி காய்ச்சல் வந்திருக்கு.”
பெரம்பூரிலிருந்து மருந்து வந்தது. உமாதேவி மருந்தைக் கொத்தித் தின்றாள்.
சாயங்காலம் நாராயணன் வந்தபோது, தம்பி சொன்னான்:
“பரவாயில்ல... கோழிக் காய்ச்சல்...”
“என்ன?”- நாராயணன் அதிர்ந்தான்.
“அதேதான்...”- தேவதத்தன் சொன்னான்: “கொஞ்ச நாட்களாகவே அண்ணி கோழிகள்கூட நெருங்கிப் பழகிக்கிட்டு இருக்காங்கள்ல...! அதுனால வந்திருக்கும். பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல... மருந்து கொடுத்திருக்கேன். ரெண்டு நாட்கள் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாயிடும்.”
அதைக் கேட்டு நாராயணன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான்.
“ரெண்டு நாட்கள் நீ இங்கேயே இரு”- இறுதியில் அவன் சொன்னான்.
“எதுக்கு?”
“இவளைப் பார்க்க...”
கோழிப் பண்ணையை முத்துவேலனிடம் ஒப்படைத்துவிட்டு தேவதத்தன் வேப்பேரியிலேயே தங்கிவிட்டான். தன் அண்ணியை அவன் கவனமாகப் பார்த்துக் கொண்டான்.
அண்ணி உடல் நலம் பெற்றாள். அவள் தேவதத்தனுக்கு நன்றி சொன்னாள். அவனுடைய சேவை மனப்பான்மையையும் புத்தி சாமர்த்தியத்தையும் அவள் புகழ்ந்தாள்.
தேவதத்தன் பெரம்பூருக்குத் திரும்பினான்.
கோழிப்பண்ணையின் வாசலை அடைந்தபோது வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்த முத்துவேலனைப் பார்த்தான். அவனுடைய முகம் என்னவோ போலிருந்தது.
“என்ன? எங்கே போற?”- தேவதத்தன் விசாரித்தான்.
“உங்களைப் பார்க்கத்தான் சார்.”
“என்ன விசேஷம்?”
“சார்... நம்ம கோழி...”- முத்துவேலன் தயங்கினான்.
“என்ன? கோழிக்கு என்ன?”- தேவதத்தன் ஆவேசமானான்.
“என்னவோ தெரியல... ஒரே கவலையா இருக்கு... நிறைய கோழிங்க செத்துப் போச்சு.”
“செத்துப் போச்சா? கோழிங்களா? என் பகவதியே!”- பதைபதைப்புடன், நடுக்கத்துடன், ஆவேசத்துடன் அவன் உள்ளே வேகமாகச் சென்றான்: “வா... வா...”
முத்துவேலன் அவனைப் பின் தொடர்ந்தான்.
முதலில் சென்ற அறையில் எந்த மாறுபாடும் இல்லை. மேஜை, நாற்காலி, முட்டைக் கூடைகள் எல்லாம் ஒழுங்காக அவற்றின் இடங்களில் இருந்தன. உள்ளேயிருந்த அறைக்குள் நுழைந்த தேவதத்தன் தன் கைகள் இரண்டையும் தலையில் வைத்து திகைத்துப் போய் நின்றுவிட்டான். தன் கால்களுக்குக் கீழே பூமி நகர்ந்து போவதைப் போல் அவன் உணர்ந்தான். அந்த அறை நிறைய இறந்துபோன கோழிகள்! தன்னுடைய கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அழகான கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை முழுமையான உடல் நலத்துடன் இருந்து கோழிகள் செத்துக் கீழே கிடக்கின்றன.
“என் பகவதியே! என்னை மோசம் பண்ணிட்டியா?” தேவதத்தன் முழுமையாகத் தகர்ந்து போய்விட்டான். இறந்துகிடந்த கோழிகளுக்கு நடுவில் அவன் உட்கார்ந்தான். இறந்த கோழிகளை எண்ணினான்.
இருபத்தேழு!
தொற்றுநோய்தான். பகவதி! மற்ற கோழிகளுக்கும் அது பரவியிருக்குமா? இறந்து கிடந்த கோழிகளைத் தாண்டி அவன் கம்பியால் ஆன வேலிக்கு அருகில் சென்றான்.
கம்பிவேலியின் கதவைத் திறந்து அவன் உள்ளே சென்றான்.
ஒரே பார்வையில் அங்கிருந்த சூழ்நிலையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன் கண்கள் மீதே அவனுக்குப் பகையும் வெறுப்பும் தோன்றின.
முக்கால்வாசி கோழிகள் தூங்குவது மாதிரி நின்று கொண்டிருக்கின்றன.
முத்துவேலன் மூன்று இறந்த கோழிகளைக் கையில் எடுத்துக் கொண்டு வந்தான். சாகாத கோழிகள் நோயால் பாதிக்கப்பட்டு தேவதத்தனின் அண்ணியைப்போல வாடி, சுருங்கி நின்றுகொண்டிருந்தன. அவற்றின் கண்கள் கலங்கியிருந்தன. மூக்கிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. காய்ச்சல் இருப்பதன் அறிகுறி தெரிந்தது. அதனால் நடுங்கிக் கொண்டிருந்தன. தீவனம் சாப்பிடவில்லை.
“இது எப்போ கொடுத்தது?”- தேவதத்தன் கேட்டான்.
“நேத்து ராத்திரி, சார்.”
கடந்த இரவு முதல் பட்டினி.
இப்போது என்ன செய்வது? யோசித்து ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. இனி மருந்து கொடுத்து பிரயோஜனமில்லை. எல்லா கோழிகளுக்கும் ஊசி போட்டாலும் பிழைக்கும் என்று கூறுவதற்கில்லை.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக நான்கு கோழிகள் செத்து விழுந்தன.
“பகவதி! இது என்ன சாபம்?”- அவன் தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டான்: “இப்போ என்ன செய்றது?”
அவன் விடாமல் தன் தலையில் அடித்தான். இறுதியில் கம்பி வேலிக்குள், கோழிகள் இருந்த இடத்தில், தேவதத்தன் நிலைகுலைந்து விழுந்தான்.
முத்துவேலன் அலறி ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்தான். தேவதத்தனைத் தூக்கிக் கொண்டு போய் அறையில் படுக்க வைத்தார்கள். அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி இரண்டு சிறுவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, அவன் வேப்பேரிக்குக் கிளம்பினான்.
நாராயணன் அலுவலகத்திற்குப் போய்விட்டிருந்தான். காதல் தோல்வியைத் தொடர்ந்து உண்டான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கைந்து நாட்களுக்கு விடுமுறை எடுத்திருந்த உண்ணி சங்கரனும், உமாதேவி அந்தர் ஜனமும் கோழிப்பண்ணைக்குப் புறப்பட்டார்கள்.
அவன் அங்கு வந்தபோது, தேவதத்தன் சுய உணர்விற்கு வந்திருந்தான். ஆனால், அவன் அழுது கொண்டிருந்தான்.
“பரவாயில்ல...”- அவனுடைய அண்ணி தேவதத்தனுக்கு ஆறுதல் சொன்னாள். அவள் அவனைச் சோதித்தப் பார்த்தாள்.
கடுமையான காய்ச்சல் இருந்தது: “நாம வீட்டுக்குப் போவோம்.”
ரிக்ஷா வந்தது. நோயால் பாதிக்கப்பட்ட தேவதத்தன் ரிக்ஷாவிலும் மற்றவர்கள் பேருந்திலுமாக வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.
உமாதேவி தேவதத்தனுக்கு மாத்திரைகள் தந்தாள். பால் கலக்காத காபி கொடுத்தாள்: “படுத்துக்கோ, எதையும் நினைக்காம படு...”
“எப்படி அண்ணி நினைக்காம இருக்க முடியும்?”
“நினைச்சா தலைவலி அதிகமாகும். நடந்தது நடந்துருச்சு. நம்மோட கெட்ட காலம். கிரக நிலை நல்லாகுறப்போ எல்லாம் சரியா நடக்கும்”- உமாதேவி அவனைத் தேற்றினாள்.
“நான் எப்படி அண்ணி இதைத் தாங்குவேன்?”- தேவதத்தன் ஒரு குழந்தையைப் போல அழுதான்.
உண்ணி சங்கரன் ஒரு சந்தேகம் கேட்டான்:
“இதுவும் கோழிக்காய்ச்சலா அண்ணி?”
“அதுல என்ன சந்தேகம்? அதேதான்...”- அண்ணி உறுதியான குரலில் அந்தச் சந்தேகத்தை நீக்கினாள்.
சவ்வரிசி கஞ்சியும் பால் கலக்காத காபியும் மாத்திரைகளுமாக ஆர்யன் திருமேனியின் வாரிசு காய்ச்சலில் படுத்துக்கிடந்தான். இடையில் அவ்வப்போது தூங்கவும் செய்தான். தூக்கத்தில் கண்டதையெல்லாம் உளறினான். தூக்கம் கலைந்து எழுந்தபோது வாய்விட்டு அழுதான்.
இரண்டு நாட்களில் காய்ச்சல் நீங்கியது. ஆனால், அழுகை நிற்கவில்லை. உடல் மிகவும் சோர்வடைந்து போயிருந்தது.
உமாதேவி அந்தர்ஜனம் தன் கணவனிடம் சொன்னாள்:
“இனி சரியாயிடும்.”
எனினும், அவள் கவலைப்பட்டாள். கோழிகளுக்காக – கோழிகளின் தெய்வமும் குருவும் நண்பனுமான மிகுந்த அறிவாளியான அய்க்கர மடத்தின் தேவதத்தனுக்காக.
இரவில் சாப்பிட்டு முடித்து, உமாதேவி அந்தர்ஜனம் வெளியில் இருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். நகரம் உறங்கிக் கொண்டிருந்தது. வீடுகளில் வெளிச்சமில்லை. தெருக்களில் இங்குமங்குமாகப் பாதையோர விளக்குகள் வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. வானம் ஆழ்ந்த கவலையில் இருப்பதைப் போல கறுத்துக் காணப்பட்டது. இரவு ஒரு பேய் பிடித்த நாயைப் போல வாலைத் தொங்கவிட்டுக்கொண்டு, வாயிலிருந்து விஷநீரை வழிய விட்டுக் கொண்டு, மூச்சிரைக்க நடந்து கொண்டிருந்தது.
பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த தேவதத்தனின் தேம்பல்களைக் கவனித்துக் கொண்டு உமாதேவி உட்கார்ந்திருந்தாள்.
நாராயணன் படித்துக் கொண்டிருந்தான். அவன் தான் படிப்பதை நிறுத்தினான்.
“நீ படுக்கலையா?”
“எனக்குத் தூக்கம் வரல.”
“நேரம் அதிகம் ஆயிடுச்சே!”
“பரவாயில்லை... படுங்க. நான் வர்றேன்.”
நாராயணன் படுத்தான்.
உமாதேவி எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்து அறையில் தேம்பல் சத்தம் நின்றது. தேவதத்தன் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் என்பது தெரிந்து உமாதேவி எழுந்தாள். படுக்கையறையை நோக்கி நடந்தாள்.
அவளுடைய கணவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவள் அவனை எழுப்பவில்லை. விளக்கை அணைத்துவிட்டு படுத்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை.
என்ன ஒரு கெட்ட காலம்! அவள் நினைத்துப் பார்த்தாள். இப்படியொரு சாபமா? இது யாருடைய குற்றம்? தான் இங்கு வந்து சேர்ந்ததுதான் காரணமா? அவள் தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொண்டாள். தான் ஒரு பாவி. தன்னுடைய பாவங்களுக்கான தண்டனைதான் இது.
எத்தனை கோழிகள் இறந்துபோய்விட்டன? தேவதத்தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறான். நோய் நீங்கி படுக்கையை விட்டு எழுந்த பிறகுகூட அவன், அவனாக இருக்கப்போவதில்லை. அந்த அளவிற்குப் பாவம் அவன் ஒடிந்து போய் இருக்கிறான்.
அவள் கண்களை மூடி தூங்க முயற்சித்தாள். ஆனால், முடியவில்லை. மூடப்பட்ட கண்களுக்கு முன்னால் கோழிகளின் ஊர்வலம். கோழிகளுக்கு மத்தியில் தேவதத்தனும் இருக்கிறான். கோழிகள் ஒவ்வொன்றாகச் செத்து விழுகின்றன.
அந்தக் காட்சியைப் பார்க்காமல் இருப்பதற்காக உமாதேவி தன் கண்களைத் திறந்தாள். அறை முழுவதும் நல்ல இருட்டு. இருட்டில் நட்சத்திரங்களைப் போல கோழிகளின் கலங்கிய கண்கள். அவள் பயந்து நடுங்கிவிட்டாள். தன் கணவனுடன் சேர்ந்து படுத்துக் கொண்டாள். அவனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
நாராயணன் மெதுவாக முனகினான். திரும்பிப் படுத்தான். எழவில்லை. உமாதேவி தன் கணவனின் மார்பின்மீது தன் முகத்தை வைத்துக் கொண்டாள். திடீரென்று அவள் நடுங்கி எழுந்தாள்.
‘கொக்கரக்கோ... கோ... கோ...’
அருகில் எங்கோ கோழி கூவும் சத்தம். அது எங்கிருந்து வருகிறது? வெளியே தெருவிலிருந்தா? வராந்தாவிலிருந்தா? இல்லாவிட்டால் அறைக்குள்ளிருந்தா? எதுவுமே தெரியவில்லை. கோழிகள் தன்னிடம் பழிக்குப் பழி வாங்க வந்திருக்கின்றவோ?
நிமிடக்கணக்கில் அவள் கவனமாகக் கேட்டவாறு உட்கார்ந்திருந்தாள். ஒரு அசைவும் இல்லை. ஒரு சத்தமும் இல்லை. கோழியின் கொக்கரிப்பும் இல்லை. சிறகடிப்பும் இல்லை.
தெய்வங்களை மனதில் நினைத்துக் கொண்டே உமாதேவி அந்தர்ஜனம் படுத்தாள். அப்போது மீண்டும் கேட்டது: ‘கொக்கரக்கோ... கோ... கோ...’
பகவானே! இது என்ன? சத்தம் மேலும் சற்று உரத்துக் கேட்டது. அப்போது இந்த வீட்டிலிருந்துதான் அந்தச் சத்தம்... இந்த அறையின் இருட்டில் மிகப் பெரிய அளவில் இருக்கும் ஒரு கோழி ஒளிந்திருக்கிறதோ?
கனவாக இருக்குமோ? கண் விழித்து இருக்கும்போது கனவு காண முடியுமா? கனவு கேட்குமா? இப்போது என்ன செய்வது?
எழுந்து வெளியே போய் பார்த்தால் என்ன? திடீரென்று அவளுக்குப் பயம் தோன்றியது. ஒரு காட்டு மிருகத்தைப் பார்த்து பயப்படுவதைப் போல அவள் கோழிக்குப் பயந்தாள். விளக்கைப் போடலாமா? ஆனால், விளக்கைப் போட எழுந்திருக்க வேண்டும்! எமன் கட்டிலுக்குக் கீழேயே உட்கார்ந்திருந்தால்...?
இப்படி பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டு அவள் படுத்திருந்தபோது, மேலும் சற்று உரத்த குரலில் மீண்டும் கேட்டது:
‘கொக்கரக்கோ... கோ... கோ...’
உமாதேவி அதற்குப் பிறகு எதையும் யோசிக்கவில்லை. அவள் தன் கணவனைக் குலுக்கி எழுப்பினாள்.
“ஏங்க... கொஞ்சம் எழுந்திரிங்க...”
“என்ன? என்ன?”- திடுக்கிட்டு எழுந்த பதைபதைப்புடன் நாராயணன் கேட்டான். தன் மனைவி நடுங்கிக் கொண்டிருப்பதை அவன் அவளைத் தொட்டு தெரிந்து கொண்டான். அவன் எழுந்து விளக்கைப் போட்டான்.
தன் மனைவியைப் பார்த்து அவன் நடுங்கிவிட்டான். அவளுடைய கண்கள் சிவந்து வெறித்துக் கொண்டிருந்தன. கூர்மையான மூக்கு மேலும் சற்று கூர்மையாக இருந்தது. உடம்பு முழுக்க வியர்வை வழிந்து கொண்டிருந்தது. திருவிழாக்களில் வெளிச்சப்பாடு துள்ளுவதைப்போல அவள் உட்கார்ந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“உமா...”- அவன் அழைத்தான்.
“ம்...”
“என்ன இது?”
“என்ன?”
“நீங்க கேட்கலையா?”
“கோழி கூவுது.”
“இதுல பயப்படுறதுக்கு என்ன இருக்கு,”
“இங்கே... உள்ளே... எங்கேயோ கோழி இருக்கு...”
“வெளியே இருக்கும்.”
“இல்ல... இதுக்குள்ளதான் இருக்கு.”
திடீரென்று அவள் வெளிச்சம் நிறைந்த அறை முழுவதையும் பார்த்தாள். கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தாள்.
“நீ வெறுமனே எதை எதையோ நினைக்கிறே...”- நாராயணன் சொன்னான்.
அதைச் சொல்லி முடிப்பதற்கு முன்பு அவன் நடுங்கிப் போய் விட்டான். அந்தச் சத்தம் முன்பு இருந்ததைவிட உரத்து மீண்டும் கேட்டது.
‘கொக்கரக்கோ... கோ... கோ...’
“இப்போ என்ன தோணுது?”- உமாதேவி கேட்டாள்.
நாராயணனின் முகத்தில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டது. அவனுடைய கண்களுக்கு வெள்ளை நிறம் வந்து சேர்ந்தது. அவன் மீண்டும் சமநிலைக்கு வர பல நிமிடங்கள் ஆயின. இறுதியில் அவன் சொன்னான்:
“இந்த வீட்டுக்குள்ளே இருந்துதான்றது மாதிரி இருக்கே!”
“அதைத்தான் நானும் சொன்னேன்.”
“வா... பார்க்கலாம்...”- அசட்டு தைரியத்துடன் நாராயணன் சொன்னான். அவன் தயங்கித் தயங்கிக் கதவை நோக்கி நடந்தான். உமாதேவி தன் கணவனைப் பின்பற்றி நடந்தாள். வெளித் திண்ணைக்குச் செல்லும் கதவை நாராயணன் திறந்தபோது, உமாதேவி சொன்னாள்:
“பத்திரமா...”
கை நீட்டி விளக்கைப் போட்டுவிட்டுத்தான் அவன் திண்ணைப் பக்கமே சென்றான். அங்கு இறங்கிப் பார்த்தான்.
திண்ணையிலும் முற்றத்திலும் யாரும் இல்லை.
தேவதத்தனின் அறையில் வெளிச்சமில்லை. அவனுடைய அறைக்கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைய நாராயணன் முயன்றபோது, பின்னால் அவனை நெருங்கி நின்று கொண்டிருந்த உமாதேவி மீண்டும் எச்சரிக்கை விடுத்தாள்:
“பத்திரமா...”
கதவுக்கு அருகிலேயே ஸ்விட்ச் இருந்தது. நாராயணன் ஸ்விட்சை அழுத்தியதும் அடுத்த கூவல் சத்தம் ஆரம்பித்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. முன்பு இருந்ததைவிட உரத்த குரலில்- ‘கொக்கரக்கோ... கோ... கோ..’
அந்தச் சத்தம் காதுகளுக்குள் துளைத்துக் கொண்டு நுழைந்தது. அறையில் வெளிச்சம் நிறைந்திருந்தது. நாராயணன் அதிர்ந்து போய் பின்னால் குதித்தான். உமாதேவி பின்னாலிருந்த திண்ணையில் மல்லாக்கப் போய் விழுந்தாள். நாராயணனும் விழுந்தான்.
உமாதேவி எழுந்து கதவை நோக்கி நடந்தபோது, விழுந்துக் கிடந்த இடத்தைவிட்டு எழுந்திருக்க முயற்சி செய்து கொண்டே நாராயணன் சொன்னான்:
“நீ அங்கே பார்க்க வேண்டாம் உமா.”
எனினும், உமா பார்த்தாள். கட்டிலில் உட்கார்ந்து கொண்டு, மேலே பார்த்தவாறு, தேவதத்தன் கூவிக்கொண்டிருந்தான்: ‘கொக்கரக்கோ... கோ... கோ...’
அவனுக்குக் கோழியின் முகச்சாயல் இருப்பதைப் போல் தோன்றியது.
“என் கடவுளே!”
உமாதேவி சுய உணர்வு இழந்து பின்னால் சாய்ந்தாள்.
நாராயணன் தன் உடம்பைத் தடவிப் பார்த்தான்.
தூவல் இருக்கிறதா? சிறகு இருக்கிறதா?