
பலபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் வீட்டைவிட்டுப் புறப்படுவார். ஆறு மைல் தூரம் நகரத்திற்கு நடக்க வேண்டும். நகரத்திலிருக்கும் முன்சீஃப் நீதிமன்றத்தில் சேவகனாக இருக்கிறார் அவர்.
ஒரு வேட்டி அணிந்து, துண்டை இடுப்பில்கட்டி மெதுவாக அவர் நடந்து செல்வார். ஒரு பழைய குடையை கையிடுக்கில் இறுகப் பிடித்திருப்பார். மாநிறத்தில், மெலிந்துபோன உருவத்தைக் கொண்ட மனிதர் அவர். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசாமல் அவர் கடந்து செல்லமாட்டார்.
முன்சீஃப் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள யாரைப் பார்த்தாலும் சங்கரன் நாயர் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஏதாவது பேசுவார். எல்லா வழக்குகளிலும் வெற்றி கிடைக்குமாறு செய்வது தன் பொறுப்பு என்பார். அவர்களைத் தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் செலவில் அவர் தேநீர் குடிப்பார்.
வழியில் ஆட்கள் யாரையும் பார்க்கவில்லையென்றால், அவர் தேநீர்க் கடையில் நுழைந்து உட்காருவார். வேறு யாருடைய செலவிலாவது தேநீர் குடித்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்புவார். நகரத்தை அடைவதற்குள் மூன்று தேநீர்க் கடைகள் இருக்கின்றன. ஏதாவதொரு தேநீர்க் கடையிலிருந்து அவருக்கு தினமும் தேநீர் கிடைக்காமல் இருக்காது.
நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு, எப்போதும் அவருடைய பார்வை வராந்தாவை நோக்கியே இருக்கும். வழக்குக்காக வராந்தாவில் வந்து நின்று கொண்டிருக்கும் ஆட்கள் எல்லோரிடமும் போய் அவர் ஏதாவது பேசுவார். மதிய நேர உணவுக்காக ஒரு ஆளையாவது எப்படியும் தயார் பண்ணிவிடுவார், நீதிமன்றம் முடிந்துவிட்டால், ஒரு நிமிடம்கூட இருக்காமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பத்து விடுவார்.
சில நாட்கள் முன்சீஃப்பின் ஃபைல்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லவேண்டிய வேலை, சங்கரன் நாயர்மீது வந்து விழும். அந்த வேலை எப்போதும் தனக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கடவுளிடம் வேண்டிக்கொள்வார். ஆனால், எப்போதாவது ஒருமுறைதான் அவருக்கு அந்த வேலை கிடைக்கும்.
முன்சீஃப்பின் வீட்டிற்குச் செல்லும் நாட்களில் அவர் அங்கேயே தங்கிவிடுவார். வெளியே போ என்று கூறமுடியாத அளவிற்கு அவர் ஏதாவது வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். இரவு உணவும் மறுநாள் காலை நேர காபியும் முடிந்து முன்சீஃப்பின் ஃபைல்களை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அவர் செல்வார்.
நீதிமன்றத்தில் வேறு சேவகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சங்கரன் நாயரிடம் கூறுவார்கள்.
“காசு கொடுத்து எதையும் வாங்கித் தின்னுடா சங்கரன் நாயர். தினமும் கண்ணுல படுறவன்கிட்டயெல்லாம் வாங்கி சாப்பிட முடியுமா?”
“எனக்கு யாராவது எதையாவது வாங்கித் தர்றாங்க. அதைப்பற்றி உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை?” - சங்கரன் நாயர் திருப்பிக் கேட்பார்.
அவர் வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்வதைப் போலவேதான், திரும்பி வீட்டிற்குச் செல்வதும் வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசியவாறு மெதுவாக நடந்து செல்வார். இரவு ஒன்பது மணி ஆகாமல் அவர் வீட்டை அடையமாட்டார்.
அவருடைய வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பாள் கவுரியம்மா. இரவு உணவிற்கு சாதம், மரவள்ளிக் கிழங்கு, மீன் எல்லாம் தயாராக இருக்கும். நீரைச் சூடாக்கி வேறு வைத்திருப்பாள். சங்கரன் நாயருக்கான சாதம், மரவள்ளிக்கிழங்கு, மீன் ஆகியவற்றை மிகவும் உயரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் மண் பானைக்குள் அவள் வைத்திருப்பாள். இல்லாவிட்டால், பங்கன் அதிலிருப்பவற்றை எடுத்து சாப்பிட்டுவிடுவான்.
சங்கரன் நாயர் குளித்து முடித்து வரும்போது, கவுரியம்மா சாதம், மரவள்ளிக் கிழங்கு, மீன் ஆகியவற்றை எடுத்து முன்னால் வைப்பாள். தூங்குவதற்காக படுத்திருக்கும் பங்கன் எழுந்து முன்னால் வந்து உட்காருவான். கவுரியம்மாவிற்கு அதைப் பார்த்துக் கோபம் வரும்.
“எழுந்து போடா, உனக்குத் தந்தேன்ல?”
அவன் போகமாட்டான். கொடுக்காவிட்டால் அவனே கையை நீட்டி எடுத்துவிடுவான். சங்கரன் நாயர் கொடுப்பார். கவுரியம்மா முணுமுணுப்பாள்.
“இவனைக் கொண்டுபோக ஒரு எமனும் இல்லையா?”
“முணுமுணுக்காதடி கவுரி. நீ இப்படி முணுமுணுத்துத்தான் இரண்டு பேரு செத்துப் போனாங்க!”
“செத்தவங்க புண்ணியம் செய்தவங்க. பட்டினி கிடந்து கஷ்டப்படாமல், உயிரை விட்டுட்டு சீக்கிரம் போய்ச் சேர்ந்தாங்க. அதிர்ஷ்டம் செய்தவங்க....”
“நீ இன்னைக்கு ஒண்ணும் சாப்பிடலையா?”
“ஓ... சாப்பிட்டேன். ஒரு துண்டு மரவள்ளிக் கிழங்கு சாப்பிட எடுத்தேன். இந்த பங்கன் வந்து அதைத் தட்டிப் பறிச்சிட்டுப் போயிட்டான். திருடன்! திருடன்!”
சங்கரன் நாயர் பங்கனை அங்கிருந்து விரட்டி அனுப்பிவிட்டு சாதத்தையும் மீனையும் மரவள்ளிக் கிழங்கையும் கவுரியம்மாவிற்குக் கொடுப்பார். கவுரியம்மா அப்போது கூறுவாள்:
“எனக்கு வேண்டாம். எல்லாத்தையும் சாப்பிடுங்க. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.”
“நீ இதை எடுத்துச் சாப்பிடுடி கவுரி. நான் தேநீர் குடிச்சிட்டுத்தான் வந்தேன்.”
கணவனும் மனைவியும் அதைப் பங்கிட்டு சாப்பிடுவார்கள். கஞ்சி நீரையும் குடித்துவிட்டு, அவர்கள் இரண்டு பேரும் படுப்பார்கள். மீண்டும் பலபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் எழுந்து புறப்படுவார்.
சில நேரங்களில், சங்கரன் நாயர் நீதிமன்றத்திலிருந்து வரும்போது ஒரு பொட்டலத்தைக் கொண்டு வருவார். வடை, அதிரசம், வேர்க்கடலை ஆகியவை அந்தப் பொட்டலத்தில் இருக்கும். அதைக் கொண்டு வந்தால், பிள்ளைகள் யாருக்கும் தெரியாமல் அதை அவர் ஒளித்து வைப்பார். எல்லோரும் உறங்கிய பிறகு, அதை எடுத்துத் தன் மனைவிக்குத் தருவார். அப்போது கவுரியம்மாள் கூறுவாள்:
“எனக்கு எதுவும் கொண்டு வரலைன்னாக்கூட பரவாயில்ல... எதையாவது வாங்கி வயிறு நிறைய சாப்பிடுங்க. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.”
சங்கரன் நாயருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். கவுரியம்மா ஒன்பது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இறந்துவிட்டன.
மூத்த மகன் அச்சுதனுக்கு இருபத்து ஒன்பது வயது நடக்கிறது. அவனுக்கடுத்தவன் ராமு. அவனுக்கு இருபத்தேழு வயது நடக்கிறது. அவனுக்கு அடுத்து இளையவன் ஒரு ஆண். அவன் இறந்துவிட்டான். அதற்குப் பிறகு பிறந்தவள் லட்சுமிக்குட்டி. இவளுக்கு இளையவள் ஒரு பெண். அவளும் சுமதியும் பங்கனும் ராஜனும். எல்லோருக்கும் இளையவனான ராஜனுக்கு எட்டு வயது முடிந்துவிட்டது.
அச்சுதன் ஆறாம் வகுப்பு படித்துவிட்டு, படிப்பை நிறுத்திக்கொண்டான். நிறுத்தாமல் என்ன செய்வான்? கஞ்சி குடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றால், சாயங்காலம் வரை அவன் பட்டினியாக இருக்கவேண்டும். பாடப் புத்தகங்கள் இல்லை. நோட்டுப்புத்தகங்கள் இல்லை. பென்சில் இல்லை. வகுப்பிற்குள் நுழைந்தவுடன் ஆசிரியர், அவனை வெளியில் போய் நிற்குமாறு கூறுவார். பிறகு எதற்கு அவன் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும்?
தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் சண்டியர்களுடன்தான் அச்சுதனுக்கு நட்பு. திருவிழா நடக்கும் இடங்களுக்கும் நாடகக் கொட்டகைகளுக்கும் சென்று, அவன் வீண் சண்டையை உண்டாக்குவான். வழியில் நடந்து செல்லும் பெண் பிள்ளைகளைப் பார்த்து ஏதாவது வர்ணிப்பான். மாலை நேர சந்தைக்குச் சென்று, வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களின் தலைவனாக ஆவான். மதியமும் இரவிலும் வீட்டிற்குச் சென்று இருப்பதில் பங்கு பிரித்துக்கொள்வான்.
அச்சுதன் நாயருக்கு ஒரு சேவகன் வேலை வாங்கிக் கொடுக்க சங்கரன் நாயர் முயற்சித்தார். முன்சீஃப்பின் மனைவியிடம் சொல்லி முன்சீஃப்பிடம் கூறும்படி செய்தார். மேஜிஸ்ட்ரேட்டின் தந்தையின் மூலம், மேஜிஸ்ட்ரேட்டிடம் கூறும்படி செய்தார். போலீஸில் சேர்க்கவும் பல முயற்சிகள் செய்தார். எதுவும் நடக்கவில்லை.
இப்படி இருக்கும்போதுதான், ஒருநாள் மாலை நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு அச்சுதன் நாயர் வீட்டிற்குள் வந்தான். எல்லோரும் அதைப் பார்த்துத் திகைத்துப் போய்விட்டார்கள். கவுரியம்மா கேட்டாள்:
“இந்தப் பெண் யார்டா அச்சுதா? இவளை இங்கே எதற்காக அழைச்சிட்டு வந்தே? ”
“இவள் என் மனைவி.”
“உன் மனைவியா? எங்கள் யாருக்கும் தெரியாமல் உனக்கு எப்படிடா மனைவி வந்தா? நீ யாருடி பெண்ணே?”
அவள் பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள். அச்சுதன் நாயர் சொன்னான்:
“இவள் ஸ்ரீதரன் பிள்ளையோட தங்கை. இவளை இங்கேயே தங்குறதுக்காகத்தான் நான் அழைச்சிட்டு வந்தேன். இருக்குறதுல இவளுக்கும் பங்குபோட்டுக் கொடுத்தால் போதும்.”
“இங்கே இருக்குறதுல கொடுக்குறதுன்னா, மற்றவர்களோட சம்மதம் வேண்டாமா?”
“இல்லாட்டி.... என் பங்கை இவளுக்குக் கொடுத்தால்கூட போதும்.”
கவுரியம்மா அந்தப் பெண்ணிடம் கேட்டாள்:
“ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லாத இவன்கூட நீ எதுக்குப் புறப்பட்டு வந்தே?”
அந்தப் பெண் அழுதுகொண்டே சொன்னாள்:
“எனக்கு இது நாலாவது மாதம்...”
அதைக் கேட்டு கவுரியம்மாவிற்கு பயங்கரமான கோபம் உண்டானது.
“நாசாமாக்கிட்டியே..... இந்தச் சின்னப் பெண்ணை நாசமாக்கிட்டியே!”
அச்சுதன் நாயர் உரத்த குரலில் சொன்னான்:
“இவளை நான் நாசமாக்கல. நாசாமாக்கவும் மாட்டேன். இவளை இங்கே தங்கவைக்க விருப்பமில்லைன்னா, இப்பவே நான் அழைச்சிட்டுப் போறேன்.”
கவுரியம்மாவின் மனம் மாறியது. அவள் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்:
“வா மகளே..... நீ இங்கேயே இரு. ஒன்பது பிள்ளைகளைப் பெத்தவ நான். இருக்குறதுல உனக்கும் பங்கு தர்றேன்.”
சங்கரி என்பதுதான் அந்தப் பெண்ணின் பெயர். ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் அவள். அவளுடைய அண்ணன் ஒரு தெருச்சுற்றி. அவனும் அச்சுதன் நாயரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சங்கரியின் வீட்டிற்கு எப்போதும் போவார்கள். சில நேரங்களில் அச்சுதன் நாயர் மட்டும் தனியாக அங்கு செல்வதும் உண்டு. ஒருநாள் சங்கரி தன் தாயிடம் ரகசியமாகச் சொன்னாள் - தான் கர்ப்பம் தரித்திருப்பதாக. இந்த விஷயத்தை தாய் மகனிடம் சொன்னாள். மகன் அச்சுதன் நாயரிடம் உண்மையைச் சொல்லவில்லையென்றால் குத்தப் போவதாகச் சொன்னான். அச்சுதன் நாயர் தன் தவறை ஒப்புக்கொண்டான். சங்கரியைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவன் சொன்னான். இதுதான் சங்கரியின் கதை.
இரவு எட்டு மணி தாண்டியபோது, சங்கரன் நாயர் வந்தார். கவுரியம்மா எல்லா விவரங்களையும் அவரிடம் சொன்னாள். சங்கரன் நாயர் கேட்டார்.
“யாருடி இவளை சாப்பாடு போட்டுக் காப்பாத்துறது? அவன் கையில் பணம் இருக்குதா என்ன?”
“கையில் பணம் இல்லைன்னாலும், அவன் இந்தப் பெண்ணை ஏமாத்தலையே!”
“ஏமாத்தாதது நல்ல விஷயம் தாண்டி, உண்மையிலேயே அது நல்லதுதான். அதே நேரத்துல, இவளைச் சாப்பாடு போட்டு காப்பாத்துறது யாருடி? இவளுக்கு ஆகுற செலவைப் பாக்குறது யாருடி?”
“இருப்பதை அவளுக்கும் பங்கு போட்டுக் கொடுப்போம். பிறகு என்ன செய்றது?”
மறுநாள் காலையில் சங்கரன் நாயர் நீதி மன்றத்திற்குப் புறப்படும்போது, அச்சுதன் நாயர் சொன்னான்:
“நான் ஒரு தேநீர்க் கடை வைக்கப் போறேன்!”
“கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனால், தேநீர்க் கடை வைக்கப் பணம் வேணுமே!”
“இந்த மாமரத்தை வெட்டி விற்பனை செய்தால் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வச்சு தேநீர்க் கடை தொடங்க வேண்டியதுதான்.”
“எல்லோருக்கும் உரிமை இருக்குற மாமரமாச்சே அது! அதை வெட்டி விற்பனை செய்ய மத்தவங்க சம்மதிக்க வேண்டாமா?”
“அந்த மாமரத்தை எனக்கு தந்துட்டா அதற்குப் பிறகு எதுவும் தரவேண்டாம். பிறகு நான் இந்தப் பக்கம் வரவே மாட்டேன்.”
“அப்படியா? நான் கிளம்புறேன். நீங்க எல்லாரும் சேர்ந்து யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க”
வீட்டின் முன்னால் பல வருடங்களாக நின்று கொண்டிருக்கும் மாமரம் அது. ஒவ்வொரு வருடமும் நிறைய பூக்கும். நிறைய காய்களைத் தரவும் செய்யும். அந்த மாமரத்தில் மாங்காய்கள் காய்க்க ஆரம்பித்துவிட்டால், அது முடிகிற வரையில் அந்த வீட்டில் திருவிழாதான். அதை வெட்டி விற்பனை செய்யப்போகும் விஷயம் தெரிந்ததும், எல்லோருக்கும் தாங்கமுடியாத துக்கம் உண்டானது. ராஜன் குலுங்கிக் குலுங்கி அழுதான். ராமு அதை பலமாக எதிர்த்தான். அவன் சொன்னான்.
“அதை வெட்டுறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”
“சம்மதிக்க முடியாதுன்னு யார்டா சொல்றது? அச்சுதன் நாயர் கோபமாகக் கேட்டான்.”
“சம்மதிக்க முடியாதுன்னு நான்தான் சொன்னேன்.”
“மாமரம் உனக்குச் சொந்தமானதா?”
“அண்ணே உங்களுக்குச் சொந்தமானதா?”
“அப்பாவுக்குச் சொந்தமானது அது. அப்பா சம்மதிச்சுதான், நான் அதை விற்கப் போறேன்.”
“பாதிப் பணத்தை எனக்குத் தந்துடனும். அப்படிச் செய்துட்டா, நான் பிரச்சனைக்கே வரமாட்டேன்.”
“இதுல இருந்து உனக்கு ஒரு பைசாகூட தரமாட்டேன்.”
“அப்படின்னா இதை வெட்ட முடியாது.”
“வெட்டுறேனா இல்லையான்னு நீ பார்க்கத்தானே போறே!”
ஒரு விறகு வியாபாரி அந்த மாமரத்திற்கு அறுபது ருபாய் விலை சொன்னான். அச்சுதன் நாயர் அதற்குச் சம்மதித்தான். வியாபாரி மாமரத்தை வெட்டுவதற்காக கூலியாட்களுடன் வந்தபோது, ராமு அதைத் தடுத்தான். அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே சண்டை உண்டானது. அச்சுதன் நாயர் ராமுவிற்கு பலமான ஒரு அடி கொடுத்தான். ராமு தன் கையை ஓங்கினான். கவுரியம்மா ஓடி வந்து ராமுவைப் பிடித்துக்கொண்டாள்.
இறுதியில் வியாபாரி தலையிட்டதன் மூலம் ஒரு உடன்பாடு உண்டானது. ராமுவிற்கு இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உடன்பாட்டில் முடிவு செய்யப்பட்டது. அச்சுதன் நாயர் அதற்குச் சம்மதித்தான். ராமுவிற்கு இரண்டு ரூபாய் அவன் தந்தான். ராமு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தேநீர் குடிப்பதற்காகச் சென்றான். வியாபாரி மாமரத்தை வெட்ட ஆரம்பித்தான்.
ஐம்பத்தெட்டு ரூபாயிலிருந்து வீட்டுச் செலவிற்காக கவுரியம்மாவிடம் அச்சுதன் நாயர் மூன்று ரூபாய் கொடுத்தான். மீதியிருந்த ஐம்பத்தைந்து ரூபாய் வைத்து அவன் ஒரு குடிசையைக் கட்டி தேநீர் வியாபாரத்தை ஆரம்பித்தான்.
சங்கரன் நாயருடைய மூத்த மகள் லட்சுமிக் குட்டியைத் திருமணம் செய்து கொண்டது ஜோதிடரான நாராயணப்பிள்ளை.
சமுதாய முறைப்படி அந்தத் திருமணம் நடைபெற்றது. அதாவது - திருமண விஷயமாகப் பேசி, பெண் பார்த்தல் நடந்து, ஜாதகப் பொருத்தங்கள் பார்த்து நடைபெற்ற திருமணம் அது.
ஜோதிடர் நாராயணப்பிள்ளை தன் தொழிலில் நல்ல பண்டிதத் தன்மை உள்ளவன். அதே நேரத்தில் நிரந்தரமான வறுமையில் இருப்பவன். அவனுக்குப் பெண்ணைத் தரும் விஷயத்தில் கவுரியம்மாவிற்குச் சிறிதும் விருப்பமில்லை. அதற்கு சங்கரன் நாயர் சொன்னார்.
“அவன் ஒரு பெரிய வித்துவான்டி கவுரி!”
“சுலோகங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் வயிறு நிறையுமா?”
“திருமணம் ஆயிடுச்சுன்னா, பிறகு செலவுக்குப் பணம் தர வேண்டியது அவன்தானே? அதை அவன் பார்த்துக்குவான்.”
“நான் பெத்த பொண்ணு அவள்.... அவ பட்டினி கிடக்குறதை என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.”
“அப்படின்னா நீ போயி ஒரு பணக்காரனைக் கொண்டு வாடி...”
“பணக்காரனா இல்லைன்னாலும், செலவுக்குப் பணம் கொடுக்குற அளவுக்காவது வருமானம் இருக்குற ஒருத்தனா இருக்க வேண்டாமா?”
“அடியே, பொண்ணுங்க வயசுக்கு வந்துட்டா, அதற்குப் பிறகு அவங்களை வீட்டுல வச்சிக்கிட்டு இருக்குறது நல்லதா?”
அந்த கேள்விக்கு கவுரியம்மாவால் பதில் கூற முடியவில்லை. சங்கரன் நாயர் சொன்னார்.
“ஒரு பொண்ணை ஒருத்தன்கூட அனுப்பி விட்டுட்டோம்னா, நம்ம தொல்லை அந்த அளவுக்குக் குறையுதுல்ல?”
கவுரியம்மா அவர் கூறியதைச் சரியென்று ஒப்புக்கொண்டாள். திருமணம் நடந்து முடிந்தது. வீட்டிற்குப் பின்னால் நின்றிருந்த பெரிய பலா மரத்தை வெட்டி விற்றுத்தான், திருமணத்திற்கான செலவுகளை சங்கரன் நாயர் பார்த்துக்கொண்டார்.
அந்தப் பலா மரத்தை விற்பதற்கும் ராமு தடையாக நின்றான். அவனை அதிலிருந்து விலகி நிற்கச் செய்ய இரண்டு ரூபாய் கொடுக்க வேண்டி வந்தது.
ஜோதிடர் நாராணயப்பிள்ளை, புகழ்பெற்ற சமஸ்கிருத பண்டிதரான கிருஷ்ணன் ஆசானின் சீடன். அவரிடம் ஜோதிடம், தர்க்க சாஸ்திரம், வேதாந்தம் ஆகியவற்றை நாராயணப்பிள்ளை படித்திருந்தான். அவன் நல்ல வாதத்திறமை உள்ளவனும்கூட. சமஸ்கிருத சுலோகங்களைக் கூறி மிகவும் அழகாக அவற்றுக்கு விளக்கங்கள் கூறுவான். அன்றாட வாழ்க்கையிலிருந்து ஏராளமான உதாரணங்களை எடுத்துக் கூறுவான். அதே நேரத்தில், அவன் பிரசன்னம் வைத்துப் பலன் கூறினால், எல்லாமே தவறுதலாக இருக்கும். ஊர்க்காரர்கள் பொதுவாக இப்படிக் கூறுவதுண்டு.
“நல்ல சொற்பொழிவு கேட்கணும் என்றால், ஜோதிடர் நாராயணப் பிள்ளையைத் தேடிப்போகலாம். பிரசன்னம் பார்க்கணும்னா, வேற யாரையாவதுதான் தேடிப் போகணும்.”
பிரசன்னம் பார்ப்பதற்குத்தான் பொதுவாக யாரும் ஜோதிடரைத் தேடுவார்கள். அதனால் அந்த விஷயத்துக்காக யாரும் அதிகமாக ஜோதிடர் நாராயணப் பிள்ளையைத் தேடிச் செல்வதில்லை. அவனுடைய வாய்ச் சவடாலில் மயங்குபவர்கள். பிரசன்னம் பார்ப்பதற்கும் அங்கு செல்வார்கள் என்பதே உண்மை. நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் ஆட்கள் அவனைத் தேடிச் செல்வதுண்டு.
நாராயணப் பிள்ளை அதிகாலையிலேயே எழுந்து குளித்து, நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றைப் பூசி, தேவிக்குப் பூஜை செய்து முடித்து, சுவடி இருக்கும் பையையும் பலகைகையும் எடுத்து வாசலில் வைத்துவிட்டு, ஒரு சிறு புல்லாலான பாயைப் போட்டு உட்காருவான். யாராவது பிரசன்னம் பார்ப்பதற்காக வரலாம். ஏதாவது கிடைக்கலாம். சில நாட்களில் யாருமே வரமாட்டார்கள். எதுவும் கிடைக்காது. அப்படிப்பட்ட நாட்களில் வீடு பட்டினிதான்.
லட்சுமிக்குட்டி நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். எல்லோருக்கும் இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களே ஆகிறது. மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் சரியான உணவு இல்லாததால், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இங்குமங்குமாக நடந்து திரிவார்கள். ‘கேடுகெட்ட சவங்கள்!’ என்றுதான் பொதுவாக நாராயணப் பிள்ளை தன் பிள்ளைகளைப் பற்றிக் கூறுவான். அவர்கள் யாரும் வாசல் பக்கம் வரக்கூடாது என்று கறாரான குரலில் கூறியிருக்கிறான் நாராயணப் பிள்ளை.
பிரசன்னம் பார்ப்பதற்காக யாராவது வந்தால், லட்சுமிக்குட்டி உள்ளேயிருந்தவாறு எட்டிப் பார்ப்பாள். வந்திருப்பவர்கள் நாராயணப்பிள்ளையின் கையில் காசு தருகிறார்களா என்பதைப் பார்ப்பதற்காகத்தான். பிள்ளைகளும் இங்குமங்குமாக மறைந்து நின்றுகொண்டு காசு கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள்.
பிள்ளைகள் மறைந்து நின்று கொண்டு பார்ப்பதை பிரசன்னம் பார்க்க வந்தவர்கள் சில நேரங்களில் பார்த்துவிடுவார்கள். அந்த பிள்ளைகள் யார் என்று நாராயணப் பிள்ளையிடம் அவர்கள் கேட்கவும் செய்வார்கள். அப்போது நாராயணப் பிள்ளை “பிச்சைக்காரப் பசங்க” என்று கூறுவான். அவன் அப்போது கூறுவான்:
“போங்க பிள்ளைகளே இங்கேயிருந்து.... பீடைகள் பீடைகள்.”
அவர்கள் அங்கிருந்து ஓடிவிடுவார்கள். அவர்கள் அடுத்த நிமிடம் வீட்டிற்குள் நுழைந்து மறைந்துகொண்டு பார்ப்பார்கள். நாராயணப் பிள்ளையின் குரல் உச்சத்தில் ஒலித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் மெதுவாக அவனை நெருங்கிச் செல்வார்கள். மூத்த பையன் கூறுவான்:
“அப்பா, அரிசி வாங்க காசு வேணும்னு அம்மா சொன்னாங்க...”
நாராயணப் பிள்ளை மரணமடைந்த மனிதனைப்போல ஆகிவிடுவான். அவன் தன் மனைவியை அழைப்பான்.
“லட்சுமிக்குட்டி...”
“என்ன?”
“உன்கிட்ட சொன்னேன்ல...... பிள்ளைகளை இங்கே விடக் கூடாதுன்னு.....!”
“இப்போ என்னை என்ன செய்யச் சொல்றீங்க? பிள்ளைகளைப் பிடிச்சுக் கட்டிப்போடவா?”
“கட்டிப்போடணும்டி.... கட்டிப்போடணும்..... பீடைகள்! பீடைகள்.”
“பிள்ளைகளுக்கு வயிற்றுப்பசி.... கட்டிப்போட்டா அங்கேயிருந்துக்கிட்டு அவங்க அழுவாங்க.”
எப்போதாவது சங்கரன் நாயர் அங்கு செல்வார். அவர் போனவுடன் அவரைச் சுற்றி வந்து நிற்பார்கள். தின்பதற்கு ஏதாவது வாங்கி வந்திருக்கிறாரா என்று அவரைப் பார்த்துக் கேட்பார்கள். லட்சுமிக்குட்டி தன்னுடைய கஷ்டங்களையும், கவலைகளையும் கூறுவாள். சங்கரன் நாயர் அப்போது அவளிடம் கேட்பார்.
“பிரசன்னம் பார்க்க இங்கே யாரும் வராததற்குக் காரணம் என்ன மகளே?”
“இவர் சொல்றது எதுவும் நடக்க மாட்டேங்குதுன்னு எல்லாரும் சொல்றங்க.”
“அது உண்மையிலேயே ஒரு கஷ்டகாலம்தான்.”
“பிள்ளைகளை நீங்க அழைச்சிட்டுப் போறீங்களா அப்பா?”
“அடியே மகளே, இவங்களை நான் அங்கே அழைச்சிட்டுப் போனால் இவங்களுக்கு நான் எதைத் தருவேன்? அங்கேயும் ஆறு ஏழு பேர் இருக்காங்களே! போதாக்குறைக்கு உன் அம்மாவுக்கு இப்போ கடுமையான காய்ச்சல் வேற... வைத்தியர் சொன்ன எல்லா மருந்துகளையும் நான் வாங்கிக் கொடுத்துட்டேன். அப்படியும் காய்ச்சல் குறையிறமாதிரி தெரியல. என் விஷயத்தை எடுத்துக்கிட்டா, பென்ஷன் வாங்க இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு.... பிள்ளைங்க அச்சுதனோட தேநீர்க் கடைப்பக்கம் போறது இல்லையா?”
“ம் அந்தப் பக்கம் போனாலும்....”
லட்சுமிக் குட்டியின் மூத்த மகன் சொன்னான்:
“நான் நேற்று அச்சு மாமாவோட தேநீர்க் கடைக்குப் போயிருந்தேன் தாத்தா.”
“அப்படியா? உனக்கு ஏதாவது தந்தானா?”
“நான் போனப்போ, அத்தை தோசை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் பக்கத்துல போனப்போ, அத்தை “நீ ஏன்டா இங்கே வந்தே? இங்கேயிருந்து போடா”ன்னு சத்தம் போட்டாங்க. நான் அந்த நிமிடமே அங்கேயிருந்து கிளம்பிட்டேன்.”
“அப்போ அச்சுதன் அங்கே இருந்தானா?”
“இருந்தாரு தாத்தா. என்னை வெளியே போடான்னு சொன்னதை மாமா கேட்டுக்கிட்டுதான் நின்னாரு.”
லட்சுமிக்குட்டி வருத்தத்துடன் சொன்னாள்.
“அவளும் நான்கு பிள்ளைகளைப் பெத்தவதானே அப்பா? இப்போகூட வயித்துல ஒரு குழந்தை இருக்குல்ல? இருந்தும் என் பிள்ளையைப் பார்த்து வெளியே போடான்னு சொல்லியிருக்காளே! சுட்டு வச்சிருக்குற தோசையில் கொஞ்சம் பிச்சிகொடுக்கணும்னு அவளுக்குத் தோணலையே!”
“அவளைக் குற்றம் சொல்லக்கூடாது மகளே. அங்கேயும் நாலு பிள்ளைகள் பசியுடன் இருக்காங்களே! சரி.... நான் நாளைக்கு தோசை வாங்கிட்டு வர்றேன்.”
“நாளைக்கு எப்போ தோசை வாங்கிக்கிட்டு வருவீங்க தாத்தா? எத்தனை தோசைகள் வாங்கிக்கிட்டு வருவீங்க தாத்தா?”
லட்சுமிக் குட்டி சொன்னாள்:
“அப்பா, இப்போ நீங்க சொல்லிட்டீங்கள்ல! பிள்ளைகள் எப்போ தோசை வாங்கிட்டு வருவீங்கன்னு எதிர்ப்பார்த்துக்கிட்டு இருப்பாங்க.”
“வாங்கிட்டு வரறேன் மகளே. நாளைக்கு ராத்திரி நான் நீதிமன்றத்துல இருந்து வர்றப்போ இந்த வழியா வர்றேன்.”
“வாங்கிட்டு வரணும் தாத்தா” பிள்ளைகள் ஒரே குரலில் சொன்னார்கள்.
சங்கரன் நாயர் சிந்தனையில் மூழ்கினார். அவர் மெதுவான குரலில் கூறினார்:
“தவறு செய்தவன் நான்.... நான்தான் மகளே.... தவறு செய்தது...”
“அப்பா, நீங்க என்ன தவறு செஞ்சிங்க?”
கவலையுடன் அவர் சொன்னார்:
“என் அனுபவம் என் பிள்ளைகளுக்கும்.”
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு, எதையும் கேட்காத மாதிரி காட்டியவாறு ஜோதிடர் நாராயணப் பிள்ளை சொன்னான்:
“எல்லா மனிதர்களும் தங்களின் தலைகளில் எழுத்துக்களுடன் பிறக்கிறார்கள். அந்தத் தலையில் இருக்கும் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது.”
அதைக் கேட்டு சங்கரன் நாயருக்கு கோபம் உண்டானது. அவர் கேட்டார்:
“எல்லோருடைய தலைகளிலும் இப்படி எழுதுறது யார்? அவனை நான் கொஞ்சம் பார்க்கணுமே!”
“எல்லாராலும் எப்போதும் பார்க்க முடிகிறவனும், யாராலும் எந்தச் சமயத்திலும் பார்க்க முடியாதவனுமான ஒருத்தன் இருக்கான். அவன்தான் எல்லாரின் தலைகளிலும் எழுதுறவன்.”
சங்கரன் நாயர் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. திரும்பி நடந்துகொண்டே, அவர் மெதுவான குரலில் முணுமுணுத்தார்:
“இனிமேல் நான் தவறு செய்ய மாட்டேன்.”
“அப்பா, நீங்க என்ன சொல்றீங்க? நீங்க அப்படி என்ன தவறைச் செய்தீங்க?”
சங்கரன் நாயர் திரும்பி நின்று சொன்னார்.
“நான் செய்த தவறா? உனக்குக் கல்யாணம் செய்து வைத்தேன்ல! அதுதான் நான் செய்த தவறு. இனிமேல் நான் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன் மகளே. ராதாம்மாவிற்கும் சுமதிக்கும் திருமணமே வேண்டாம். நாய், குட்டிகள் போடுறது மாதிரி அவங்களும் பிள்ளைகளைப் பெற்றால்...”
லட்சுமிக் குட்டி இடையில் புகுந்து சொன்னாள்:
“வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வீட்டுல நிறுத்துறதுன்றது ஆபத்தான ஒரு விஷயம் அப்பா.”
“வேண்டாம்டி.... வேண்டாம். அந்தக் கல்யாணமே பண்ணிக்க வேண்டாம். அவங்க பிள்ளை பெறவேண்டாம். அவங்க பிள்ளைங்க இப்படி ஏங்கி ஏங்கி நடக்குறதைப் பார்க்குறதுக்கான சக்தி எனக்கு இல்ல.”
நாராயணப்பிள்ளை லட்சுமிக் குட்டியிடம் கேட்டான்:
“ராதாம்மாவிற்கும் சுமதிக்கும் திருமணம் செய்து வைக்கிறதா இல்லையான்றதுதான் உங்க கருத்தா?”
“நான் சொன்னதைக் கேட்டேல்ல? பிறகு எதுக்கு என்கிட்ட கேக்குற?”
“திருமணம் ஆகலைன்னாலும், பெண்கள் பிள்ளை பெறுவார்கள். ஒவ்வொரு பெண்ணும் எத்தனை பிள்ளைகளைப் பெற்றெடுக்கணும்னு அவங்க தலையிலேயே எழுதி வச்சிருக்கு. அவ்வளவு பிள்ளைகளையும் பெற்றெடுக்கத்தான் வேணும்.”
“திருமணம் ஆகாமல் பிள்ளை பெறுபவள் இல்ல என் தங்கைகள்...”
“கடவுளோட தீர்மானத்தை யாராலும் மீற முடியாது.”
அதைக்கேட்டு லட்சுமிக் குட்டிக்குக் கோபம் வந்துவிட்டது.
“இங்க பாருங்க. தேவையில்லாமல் என்னைப் பேச வச்சிடாதீங்க. பிள்ளைகள் பட்டினி கிடந்து ஏங்கிக்கிட்டு திரியணும்ன்றதுதான் கடவுளோட தீர்மானமா? எனக்கு நாலு பிள்ளைகள். என் அண்ணனுக்கும் நாலு பிள்ளைகள். மூணு நாலு மாசங்கள் ஆனா, அதுவே அஞ்சு ஆயிடும்.”
“குழந்தைகள் பாக்யம் இருக்கே... அதுதான் எல்லா பாக்யங்களையும் விட பெரிய பாக்யம். பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டே சாகறது.... அதுதான் உண்மையிலேயே சொர்க்கம்!”
“அந்த சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம். நான் இன்னொரு விஷயம் சொல்றேன். இனிமேல் என்கிட்ட நீங்க வரவே கூடாது.”
“என்ன... என்ன சொன்னே? கணவன் மனைவிக்கிட்ட வரக்கூடாதா? பாவம்... பாவம்...”
“புண்ணியம்... புண்ணியம்.... இனிமேல் என்கிட்ட வாங்க அப்போ பார்ப்போம்...”
மறுநாள் காலையில் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, சங்கரன் நாயர் தன் மகனுடைய தேநீர்க் கடைக்குள் நுழைந்தார். அச்சுதன் நாயர் தன் தந்தையை வரவேற்று உட்காரச் சொன்னான். தோசை சுட்டுக் கொண்டிருந்த சங்கரி எழுந்தாள். அச்சுதன் நாயர் அவளிடம் சொன்னான்.
“அப்பாவுக்கு இரண்டு தோசைகள் எடுத்துக் கொண்டு வாடி...”
சங்கரி இரண்டு தோசைகளையும் சட்னியையும் எடுத்தாள். அவற்றை சங்கரன் நாயருக்கு முன்னால் கொண்டுபோய் வைத்தாள். உள்ளே நின்றிருந்த பிள்ளைகள் “தாத்தா... தாத்தா...” என்று அழைத்தவாறு அவரை நெருங்கி வந்தார்கள். அவர்கள் சங்கரன் நாயரின் கையைப் படித்தார்கள். அச்சுதன் நாயர் அவர்களை அங்கிருந்து போகச் சொன்னான்.
“இங்கேயிருந்து போங்க பிள்ளைகளா....!”
“பிள்ளைகளா, தாத்தாவைச் சாப்பிட விடமாட்டீங்களா?” சங்கரி அவர்களைத் திட்டினாள்.
சங்கரன் நதயர் எதுவும் பேசவில்லை. அவர் தோசை முழுவதையும் பிய்த்துப் பிய்த்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்தார். அச்சுதன் நாயர் தேநீர் கொண்டு வந்து தன் தந்தைக்கு முன்னால் வைத்தான். சங்கரன் நாயர் கொஞ்சம் தேநீரைக் குடித்துவிட்டு, மீதியைப் பிள்ளைகளுக்குக் கொடுத்தார். அவர் கேட்டார்:
“இங்கே தேநீர் குடிக்க வருபவர்களுக்கு முன்னால், இந்தப் பள்ளைகள் இப்படித்தான் பார்த்துக்கிட்டு இருப்பாங்களாடா?”
“அப்படிப் பார்த்துக்கிட்டு நிற்கக் கூடாதுன்னு நான் சொல்லிட்டேன் அப்பா. அதற்குப் பறகும் வந்து பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க.”
“பிள்ளைகள் இப்படிப் பார்த்துக்கிட்டு நின்னா அவங்களால எப்படிடா தேநீர் குடிக்க முடியும்?”
“பிள்ளைகளுக்குப் பசி எடுக்கறதுனாலதான் இப்படிப் பார்த்துக்கிட்டு நிற்கிறாங்க” சங்கரி சொன்னாள்.
“பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுக்கணும்டி....”
“இல்லாததை எப்படிக் கொடுக்க முடியும்? தோசையையும் தேநீரையும் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், பிறகு தேநீர் குடிக்க வர்றவங்க கையில இருந்து காசு வாங்கித்தானே, அரிசி வாங்கி கஞ்சி உண்டாக்கி பிள்ளைகளுக்குத் தரமுடியும்? முன்னாடி தேநீர் குடிக்க அங்கே வந்தவங்க யாரும் இப்போ வர்றதே இல்ல”.
“எப்படி வருவாங்கடி? பிள்ளைகள் வாயைப் பார்த்துக்கிட்டு நின்னா, யாராவது வருவாங்களா?” - அச்சுதன் நாயர் சொன்னான்.
“நாய், குட்டிகளைப் போடுறது மாதிரி பிள்ளைகளைப் பெத்துப் போட்டிருக்கேல்லடி? அதுனாலதான் இந்த நிலைமை...” சங்கரன் நாயர் சொன்னார்.
“பிள்ளைகளை அதிகமா பெத்ததுக்குக் காரணம் நானா?”
“பிறகு யாருடி?”
“கேளுங்க. உங்க மகன்கிட்ட கேளுங்க”.
அச்சுதன் நாயர் சொன்னான்:
“அப்பா நான் உங்க மகன்தானே?”
“உண்மைதான்டா. நான்தான் தவறு செய்தவன்.”
ராமு திருடனாகவும், பணத்தைக் கொள்ளையடிப்பவனாகவும் இருந்தான். விற்பதற்கு ஏற்றபடி ஏதாவது வீட்டில் இருந்தால் அவன் அதை எடுத்துக்கொண்டு போய் விற்றுவிடுவான். ஒரு குடத்தைக் கொண்டுபோய் விற்றான். ஒரு அண்டாவைக் கொண்டு போனான். இரண்டு தலையணைகளைக் கொண்டு போனான். அவற்றிலிருநத பஞ்சை எடுத்து விற்றான். பிறகு கொண்டு போவதற்கு வீட்டில் எதுவும் இல்லாமலிருந்தது.
ராதாம்மா, சுமதி இருவரின் காதுகளிலும் இரண்டு சிறிய கம்மல்கள் இருந்தன. ஒருநாள் ராமு, ராதாம்மாவிடம் சொன்னான்:
“இங்கே பக்கத்துல வாடி...”
அவள் அருகில் வந்தாள்.
“உன் காதுல கிடக்கிற கம்மலைக் கழற்றிக் கொடு.”
“எதுக்கு?”
“கழற்றித் தான்னு சொன்னேன்.”- ராமு உரத்த குரலில் கத்தினான்.
ராதாம்மா கம்மலைக் கழற்றிக் கொடுத்தாள். ராமு அதை எடுத்துக்கொண்டு நடந்தான். சுமதி தன்னுடைய காதுகளில் கிடந்த கம்மலைக் கழற்றி ஒளித்து வைத்தாள். இன்னொரு நாள் ராமு சுமதியிடம் கேட்டான்.
“உன் காதுல கிடந்த கம்மல் எங்கேடி?”
“அது காணாமல் போச்சு.”
“கம்மலை எடுத்துட்டு வாடி...” - ராமு உரத்த குரலில் கத்தினான்.
கம்மல் காணாமல் போச்சுன்னு சொன்னேன்ல!”
ராமு, சுமதியின் கன்னத்தில் ஒரு அடியைக் கொடுத்துவிட்டு சொன்னான்:
“எடுத்துட்டு வாடி...”
சுமதி தான் ஒளித்து வைத்திருந்த கம்மலை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். ராமு அதைக் கையில் வைத்துக்கொண்டு நடந்தான்.
கவுரியம்மாவிற்கும் சங்கரன் நாயருக்கும் ராமுவைக் கண்டால் பயம். கவுரியம்மா ஏதாவது எதிர்த்துச் சொன்னால், ராமு கேட்பான்:
“என்னை ஏன் பெத்தீங்க? என்னை பெறச் சொல்லி நான் சொன்னேனா?”
சங்கரன் நாயர் ஏதாவது எதிர்த்துச் சொன்னால், அவன் கூறுவான்:
“பிள்ளைகள்னு இருந்தால் செலவுக்குக் கொடுத்துத்தான் ஆகணும்....”
வீட்டிலிருந்து எடுப்பதற்கு எதுவுமில்லை என்று ஆனபோது, அவன் பக்கத்து வீடுகளிலிருந்து திருட ஆரம்பித்தான். சில வீட்டைச் சேர்ந்தவர்கள் அவனைப் பிடித்து அடித்தார்கள். அதைத் தொடர்ந்து பக்கத்து வீடுகளிலிருந்து திருடும் வழக்கம் நின்றது.
ஒருநாள் ஒரு இளம்பெண் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தாள். ராமு அவளுக்குப் பின்னால் நடந்து சென்று, அவளுடைய கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான். அந்த இளம்பெண் உரத்த குரலில் சத்தம் போட்டு ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிட்டாள். ராமு ஒரு ஒற்றையடிப் பாதையில் ஓடித் தப்பிவிட்டான்.
ஒரு வாரம் ஆன பிறகு, ராமுவை போலீஸ்காரர்கள் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். சங்கரன் நாயர் முன்சீஃப் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ராமுவைப் போலீஸ்காரர்கள் பிடித்து லாக் அப்பில் அடைத்திருக்கும் செய்தியை அவர் அறிந்தார். திருடிய விஷயத்தை ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக போலீஸ்காரர்கள் அவனை நன்றாக அடித்து உதைத்தார்கள் என்ற விஷயத்தையும் அவர் அறிந்தார். எனினும், அவர் எதையும் தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.
அவர் அன்று இரவு வீட்டிற்குச் சென்றபோது, தான் கேள்விப்பட்ட தகவல்களைத் தன் மனைவியிடம் சொன்னார். கவுரியம்மா கேட்டாள்:
“போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி அவனைப் பார்த்தீங்களா?”
“நான் அங்கே போனால், அவங்க என்னை உதைப்பாங்கடி. வழிப்பறி கேஸ்...... வழிப்பறி....”
கவுரியம்மா பதைபதைப்புடன் சொன்னாள்:
“அவனைப் பெத்தவ நான்...”
“திருடனையும் வழிப்பறி செய்றவனையும் பெத்தவங்க பாவிங்கடி... நீ சரியான பாவி...”
“அப்படின்னா நீங்களும் பாவிதானே...”
“பாவிதான்டி... நானும் பாவிதான்...” சங்கரன் நாயர் தொண்டை இடறியது.
ராதாம்மாவிற்கு இருபது வயது. சுமதிக்கு பதினெட்டு வயது. சரியான உணவு இல்லையென்றாலும்கூட அவர்கள் இருவரும் நல்ல அழகான தோற்றத்தைக் கொண்டவர்களே.
சங்கரன் நாயருக்கு ஒரு மருமகன் இருந்தான். அவனுடைய பெயர் கிருஷ்ணன் நாயர். நகரத்திலிருந்த ஒரு திரையரங்கில் காவலாளியாக அவன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். எந்த நேரம் பார்த்தாலும் அவன் திரைப்படங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். திரைப்படங்களில் வரக்கூடிய பாடல்களையும் பாடிக்கொண்டே இருப்பான்.
அவன் பல நேரங்களில் சங்கரன் நாயரின் வீட்டிற்கு வருவான். மாமாவைப் பார்ப்பதற்காக வந்திருப்பதாகக் கூறுவான். ஆனால், சங்கரன் நாயர் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டுமே அவன் பொதுவாக வருவான். வந்த பிறகு, ராதாம்மாவுடன் பேசிக் கொண்டிருப்பான். அவன் வரும் நேரங்களில் ராதாம்மாவின் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாகும்.
கவுரியம்மாவிற்கு அது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. கிருஷ்ணன் நாயர் ராதாம்மாவைத் திருமணம் செய்துகொள்வது கவுரியம்மாவிற்குப் பிடித்த ஒரு விஷயமாகத்தான் இருந்தது.
ஆனால், திருமணம் செய்யாமல், அவர்கள் இருவரும் இப்படி பல விஷயங்களையும் பேசி இன்பம் கண்டுகொண்டிருப்பது தேவையில்லாத பல பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக இருந்துவிடாதா? இனிமேல் வரக்கூடாது என்று அவளிடம் சொல்லவும் முடியாது. என்ன இருந்தாலும் அவன் சங்கரன் நாயரின் மருமகனாயிற்றே!
ஒருநாள் கவுரியம்மா சங்கரன் நாயரிடம் சொன்னாள்:
“சில நேரங்கள்ல கிருஷ்ணன் இங்கே வர்றான்.”
“அவன் ஏன் இங்கே வர்றான்?”
“மாமாவைப் பார்க்க வந்தேன்னு சொல்றான்.”
“நான் இல்லாத நேரத்துலயாடி என்னைப் பார்க்க வர்றது?”
“அதை நீங்க அவன்கிட்ட கேளுங்க...”
“அவன் வந்தால், பொம்பளைப் பசங்கக்கிட்ட பேசுறது உண்டா?”
“ராதாம்மாகூடத்தான் பேசுவான்.”
“அவனை ஏன் நீ விளக்குமாத்தை எடுத்து அடிக்கல?”
“உங்க மருமகன் அவன். அவனை நான் விளக்குமாத்தை எடுத்து அடிச்சா, தேவையில்லாத பிரச்சினைகள் வராதா?”
“இல்லடி... இல்ல... பொம்பளைப் பசங்களைக் கெடுக்கணும்னு வர்றவனை விளக்குமாத்தாலேயே அடிக்கணும்.”
“அப்படின்னா.... நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?”
“ஒரு விஷயமும் சொல்ல வேண்டாம். அவன் இங்கே வர்றப்போ, இனிமேல் இங்கே வரக்கூடாதுன்னு நான் சொன்னதா அவன்கிட்ட சொன்னால் போதும்.”
“அவன் வந்தவுடனே, ராதாம்மா அவன்கூட போயிடுறா....”
“அதுதான்டி நான் சொன்னேன்.... அவன் இனிமேல் இங்கே வரக்கூடாதுன்னு...”
“அவனுக்கு அவள்மீதும் பிரியம் இருந்ததுன்னா....”
“அடியே... அதனாலதான் நான் சொன்னேன்.... அவன் இங்கே வரக்கூடாதுன்னு...”
“வரவேண்டாம்னு சொல்றதைவிட அவங்களுக்கு நாம கல்யாணம் பண்ணி வச்சிடலாமே!”
“இனிமேல் இங்கே யாரோட கல்யாணமும் நடக்க நான் சம்மதிக்க மாட்டேன்டி.... சம்மதிக்க மாட்டேன்.”
“பொம்பளைப் பசங்க வயசுக்கு வந்துட்டாங்கன்னா, கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க முடியுமா?”
“கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா, பிள்ளை பெற ஆரம்பிச்சுடுவாங்களேடி...”
“பொம்பளைப் பசங்கன்னா பிள்ளை பெறாம இருக்க முடியுமா?”
“முடியும்டி.... திருமணம் செய்யாமலும் இருக்க முடியும் பிள்ளை பெறாமலும் இருக்க முடியும்.”
“நீங்க என்ன சொல்றீங்க? கல்யாணம் ஆகலைன்னாக்கூட, பொம்பளைப் பசங்க சில நேரங்கள்ல பிள்ளைகளைப் பெத்துடுவாங்க.”
“என் மகள்கள் அப்படிப் பெத்தா அவங்களைக் கொன்னுட்டுத்தான் நான் மறுவேலை பார்ப்பேன்.”
ராதாம்மாவும் சுமதியும் அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்கள். சுமதி, ராதாம்மாவிடம் சொன்னாள்:
“கிருஷ்ணன் அத்தானை இனிமேல் இங்கே வரக்கூடாதுன்னு சொல்லுங்க அக்கா.”
“வந்தால் என்ன?”
“அப்பா சொன்னது காதுல விழலையா?”
“கிருஷ்ணன் அத்தான் இங்கே வந்துட்டா, நான் பிள்ளை பெத்துடுவேனா?”
“அப்படித்தானே அப்பா சொல்றாரு?”
“நீ கொஞ்சம் சும்மா இருடி சுமதி. அப்பாவுக்கு பயம். நாம எங்கே பிள்ளை பெத்துடுவோமோன்னு அவர் மனசுல நினைப்பு...”
ஒருநாள் பலபலவென்று வெளுத்தபோது ஜோதிடர் நாராயணப் பிள்ளை, சங்கரன் நாயரைப் பார்ப்பதற்காக வந்தான். அவன் சொன்னான்:
“முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காகத்தான் நான வந்தேன்.”
“அந்த அளவுக்கு என்ன முக்கியமான விஷயம்?”
“ஒரு திருமண ஆலோசனை வந்திருக்கு.”
“அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“ராதாம்மாவைப் பொண்ணு கேட்டு என்னைத் தேடி வந்திருந்தாங்க.”
“எவன் பொண்ணு கேட்டு வந்திருக்கான்?”
“ஒரு ஆரம்பப் பள்ளிக் கூடத்துல ஆசிரியரா வேலை பார்க்கும் ஆள். நல்லா படிச்சவர். நல்ல குணங்கள் இருக்குற ஆளு...”
“அப்படின்னா ராதாம்மா அவனைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இல்லைன்னு சொல்லிவிடு!”
“ராதாம்மா கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லைன்னு சொல்ல வேண்டியது...”
“நான்தான்.... நான்தான் சொல்லணும். ராதாம்மா கல்யாணம் பண்ணிக்க மாட்டாள்னு நான் சொல்றேன்.”
“ராதாம்மா கல்யாணம் பண்ணிக்கலைன்னா, சுமதியைக் கல்யாணம் பண்ணிக்கட்டும்.”
“சுமதியும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாள்.”
“பிறகு அவங்களை என்ன செய்யப் போறீங்க?”
“அதை நீ தெரிஞ்சு என்னடா செய்யப் போற? உனக்கு ஒரு மகளைக் கல்யாணம் பண்ணித் தந்தேன்ல? அவள் இப்போ நரகத்துல கிடந்து கஷ்டப்படுறதை நான்தான் பார்க்குறேனே?”
கவுரியம்மா இடையில் புகுந்து சொன்னாள்:
“கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சு பொம்பளைப் பசங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்காம இருந்தா நல்லாவா இருக்கும்னு நான் கேக்குறேன்.”
“மாட்டேன்டி.... நான் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டேன்.... ரெண்டு பிள்ளைகளை நரகத்துக்கு அனுப்பியாச்சு. இனி இருக்குறவங்களையும் நரகத்துக்கு அனுப்ப மாட்டேன்டி...”
“கஷ்டப்படுறதும் கஷ்டப்படாமல் இருக்குறதும் தலையெழுத்துப்படிதான் நடக்கும்...‘ - நீ உன் வழியைப் பார்த்துப்போ...‘
அதைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்த ராதாம்மா, சுமதியிடம் சொன்னாள்:
“அப்பாவுக்கு விருப்பமில்லைன்னா, நான் இனிமேல் கிருஷ்ணன் அத்தான்கிட்ட பேசமாட்டேன்.”
பங்கன் ஒரு முட்டாள். பிறப்பிலேயே அவன் முட்டாளாகப் பிறந்தவன். எதைக் கண்களில் பார்த்தாலும் அவன் அதை எடுத்துத் தின்ன ஆரம்பித்துவிடுவான். அது யாருக்குச் சொந்தமாக இருந்தாலும் அதை எடுத்துச் சாப்பிடுவான். எது சரி, எது தவறு என்பதையெல்லாம் உணரக்கூடிய சக்தி அவனுக்குக் கொஞ்சமும் கிடையாது. பசிக்கும்போது சாப்பிடவேண்டும். அது ஒன்று தான் அவனுடைய ஒரே கொள்கை. அவனுடைய பசி எந்தச் சமயத்திலும் அடங்கவே அடங்காது.
வீட்டில் கொடுப்பதையும், திருடி எடுப்பதையும் தின்று கொண்டு அவன், தன் பசியைத் தீர்த்துக்கொண்டிருந்தான். தேநீர்க்கடைகளுக்கு முன்னால் போய் அவன் நிற்பான். யாரும் எதுவும் கொடுக்கவில்லையென்றால், அவனே உள்ளே நுழைந்து திருட ஆரம்பித்து விடுவான். அடித்தால் உரத்த குரலில் சத்தம் போடுவான். அதற்குப் பிறகும் திருடுவான்.
சாயங்கால வேளைகளில் மாலைச் சந்தைக்குச் செல்வான். மரவள்ளிக் கிழங்கு வியாபாரிக்கு அருகில் போய் நிற்பான். திடீரென்று ஒரு மரவள்ளிக் கிழங்கை எடுத்துக்கொண்டு ஓடுவான். ஓடுவதற்கிடையில் மரவள்ளிக் கிழங்கைக் கடித்துத் தின்பான் வியாபாரி அவனை விரட்டிக் கொண்டு வந்து பிடித்து அடிப்பான். அவன் உரத்த குரலில் ஓலமிடுவான்.
நான்கு பேரிடமாவது அடி வாங்காமல் ஒருநாள்கூட அவன் தூங்கியதில்லை. எவ்வளவு அடிகள் கிடைத்தாலும், தின்பதற்கு உணவு கிடைத்ததற்காக அவன் மகிழ்ச்சியுடன் சிரிப்பான்.
பங்கன் சில நேரங்களில் அச்சுதன் நாயர் தேநீர்க் கடைக்குச் செல்வான். அங்கு போனால், அவனை உள்ளே விடமாட்டார்கள்.
உள்ளே நுழைய முயன்றால், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்கள். அதற்குப் பிறகும் அவன் அங்கு செல்லத்தான் செய்வான். ஒருநாள் அச்சுதன் நாயர், கொதித்துக் கொண்டிருந்த நீரை எடுத்து அவனுடைய தலை வழியாக ஊற்றினான். பங்கனுடைய முழு உடம்பிலும் வெந்நீர்பட்டு, அவன் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தான். அதற்குப் பிறகு, அவன் அங்கு போவதே இல்லை.
சில நேரங்களில் லட்சுமிக் குட்டியின் வீட்டைத் தேடிச் செல்வான். அங்கு தின்பதற்கு எதுவும் இருக்காது. லட்சுமிக் குட்டியின் மூத்த மகன் மரக்கொம்பை எடுத்து பங்கனைக் குத்துவான். தின்பதற்கு ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் குத்து வாங்குவது என்பது அவனுக்கு ஒரு பிரச்சினைக்குரிய விஷயமே இல்லை. தின்பதற்கு எதுவும் இல்லாததால், அவன் அங்கு போவதை நிறுத்திவிட்டான்.
கவுரியம்மா இறந்துவிட்டாள். அவள் இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, சங்கரன் நாயர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். கண்களில் நீர் ஒழுக சங்கரன் நாயர் சொன்னார்:
“அவள் எங்கோ போய்ச் சேர்ந்துட்டா.... எல்லாத்தையும் என் தலையில வச்சுட்டு....”
சங்கரன் நாயருக்கு பாதி சம்பளமே கிடைக்கும். அதற்கு உத்தரவு வர இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும். கவுரியம்மா இறந்து பதினான்கு நாட்கள் ஆனபோது, அந்த வீட்டில் அடுப்பு புகையவே இல்லை.
ராமு அன்றுதான் சிறையிலிருந்து திரும்பி வந்திருந்தான். கொடூரமான ஒரு சிரிப்பைச் சிரித்தவாறு அவன் வீட்டிற்குள் நுழைந்தான். தாங்க முடியாத கவலையுடன் ராதாம்மா கேட்டாள்:
“ராமு அண்ணே, அம்மா இறந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா?”
“அம்மா இறந்துட்டாங்களா? - ராமு பயங்கரமான குரலில் சிரித்தான்.”
“இனிமேல் நீங்கள் எல்லாம் சாகுறது எப்போடி?”
அதைக்கேட்டு ராதாம்மா தேம்பித் தேம்பி அழுதாள். அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த பங்கன் கையை நீட்டியவாறு ராமுவிடம் கேட்டான்:
“ராமு அண்ணே, ஒரு காசு”
“போய் சாகுடா...‘ - ராமு ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.”
உள்ளேயிருந்து சங்கரன் நாயர் உரத்த குரலில் கத்தியவாறு வெளியே வந்தார்.
“வெளியே போடா... என் வீட்டை விட்டு வெளியே போடா... திருடிச் சுத்திக்கிட்டு திரியிறவன் யாரும் என் வீட்டுக்குள்ளே நுழையக் கூடாது...”
“அம்மா போன பின்னாடி நீங்களும் போக வேண்டியதுதானே? ஏன் இன்னும் உயிரோட இருக்கீங்க?
போவேன்டா... நானும் அங்கே போகத்தான் போறேன். ஆனால், உன்னை நான் இந்த வீட்டுக்குள்ளே நுழையவிடமாட்டேன்.”
“நானும் இந்த வீட்டுக்குள்ளே நுழையிறதா இல்ல.”
“அப்படின்னா வெளியே போடா.”
“இவங்க எல்லோரையும் கொல்லுறதுக்குத்தான் நான் வந்திருக்கேன். இவங்க யாரும் இனிமேல் கஷ்டப்படக்கூடாது.”
“நீ பிறந்த பிறகுதான்டா இந்த கஷ்டங்களெல்லாம் வந்ததே”
“என்னைப் பெறுங்கன்னு நான் சொன்னேனா?”
“துரோகி! வெளியே போடா...” - சங்கரன் நாயர் கோபத்தில் கத்தினார்.
“நான் இப்போ வெளியே போறேன். நான் எல்லோரையும் கொல்றதுக்காக திரும்பவும் வருவேன். அப்பா, அம்மா செய்த பாவத்தைத் தீர்க்க நான் திரும்பவும் வருவேன். நாங்க எல்லோரும் பாவம்... அம்மா, அப்பா செய்த பாவம்!” ராமு திரும்பி நடந்தான்.
சங்கரன் நாயர் குலுங்கிக் குலுங்கி அழுதார்.
“அவன் சொன்னதுதான் உண்மை. நானும் அவளும் பாவிகள்தான்...”
ஐந்தாறு நாட்கள் ஓடி முடிந்தன. இதற்கிடையில் ஊரில் பல இடங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் நடந்தன. திருடன் ராமுவைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ராமுவைப் பகல் நேரங்களில் யாரும் பார்க்கவில்லை. இரவு நேரத்தில் கோவில் பக்கமாக ராமு போய்க் கொண்டிருப்பதை யாரோ பார்த்திருக்கிறார்கள். தண்ணீர்ப் பந்தலுக்குக் கீழே ராமுவைப் போல ஒரு ஆள் உட்கார்ந்திருப்பதை வேறொரு ஆள் பார்த்திருக்கிறான். ஒரு இரவு வேளையில் ராமு மண்டபத்தின்மீது சாய்ந்தவாறு நின்றுகொண்டிருப்பதை வேறொரு மனிதன் பார்த்ததாகச் சொன்னான்.
பல வீடுகளிலிருந்து பணமும் நகைகளும் ஆடைகளும் திருட்டுப் போயின. சில வீடுகளில் அரிசியும் வேறு சில பொருட்களும் காணாமல் போயின. எல்லோரும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் சொன்னார்கள். போலீஸ்காரர்கள் ராமுவைப் பிடிப்பதற்காக தீவிரமாகத் தேட ஆரம்பித்தார்கள்.
இரண்டு முறை போலீஸ்காரர்கள், சங்கரன் நாயரின் வீட்டிற்குச் சென்றார்கள். வீடு முழுவதையும் சோதனை செய்தார்கள். ராமு எங்கு இருக்கிறான் என்பதைச் சொல்லாவிட்டால், அவர்கள் எல்லோரையும் கொண்டுபோய் லாக் அப்பில் போடப்போவதாக போலீஸ்காரர்கள் பயமுறுத்தினார்கள். சில இரவு வேளைகளில் போலீஸ்காரர்கள் சங்கரன் நாயரின் வீட்டிற்குச் சென்று அவரைத் தட்டி எழுப்புவார்கள். வீட்டிற்குள் நுழைந்து சோதனை இடுவார்கள். தொடர்ந்து எச்சரித்துவிட்டுச் செல்வார்கள்.
சங்கரன் நாயரும் பிள்ளைகளும் பயந்து நடுங்கி வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் வீட்டைவிட்டு வெளியிலேயே வரவில்லை. முட்டாளான பங்கன் மட்டும் மாலைச் சந்தையிலும் தேநீர்க் கடைகளிலும் திருடிச் சாப்படுவதற்காகப் போவான்.
ஒருநாள் இரவு நேரத்தில் சங்கரன் நாயரும் பள்ளைகளும் பச்சைத் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுப் படுத்திருந்தார்கள். நள்ளிரவு தாண்டியபோது, வெளியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது.
“கதவைத் திறங்க.”
“ராமு இங்கே வரல”- என்று சங்கரன் நாயர் உள்ளே இருந்தவாறு சொன்னார்.
“வரலைன்னா விடுங்க கதவைத் திறங்க.”
சங்கரன் நாயர் மண்ணெண்ணெய் விளக்கைப் பற்ற வைத்துக் கொண்டு கதவைத் திறந்தார். ஒரு சாக்கு மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு வாசலில் ஒரு மனிதன் நின்றிருந்தான். அந்த மூட்டையைத் திண்ணையில் வைத்துவிட்டுச் சொன்னான்.
“ராமு கொடுத்து அனுப்பினாரு”- அவன் அதைக் கூறிவிட்டு வேகமாக ஓடிவிட்டான்.
ராதாம்மாவும் சுமதியும் சாக்கு மூட்டையின் அருகில் சென்றார்கள். சங்கரன் நாயர் அவர்களைத் தடுத்தார்.
“தொடாதே மகளே... தொடாதே, திருட்டுப் பொருள் அது. நம்மளை ஒரு வழி பண்ணணும்ங்கறதுக்காக அந்தத் துரோகி அதை இங்கே கொடுத்து விட்டிருக்கான்...”
சுமதி சொன்னாள்:
“அரிசின்னு நினைக்கிறேன்.”
“அரிசியா இருந்தாலும், தங்கமா இருந்தாலும் அது நமக்கு வேண்டாம்.”
“பிறகு இதை என்ன செய்றது அப்பா? போலீஸ்காரங்க வந்து பார்த்தால்...” - ராதாம்மா தான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூறவில்லை.
“நீ சொல்றதும் சரிதான். நம்மளை நல்லா மாட்டிவிடுறதுக்குத்தான் அந்தத் துரோகி இதைச் செய்திருக்கான். அப்படின்னா, இதை என்ன செய்றது மகளே?”
“தெற்குப் பக்கம் காய்ந்துபோன இலைகளைப் பெருக்கி போட்டிருக்கோம்ல.... அதுக்குள்ளே இதைக் கொண்டுபோய் வைப்போம்”
“அதுதான் சரி.”
“இருந்தாலும் இதைக் கொஞ்சம் அவிழ்த்துப் பார்த்துட்டு வைக்கலாமா?” - சுமதி கேட்டாள்.
“அப்படின்னா சீக்கிரமா அவிழ்த்துப் பாருங்க.”
சுமதி சாக்கு மூட்டையை அவிழ்த்தாள். அந்த மூட்டையில் அரிசியும் மளிகைச் சாமான்களும் இருந்தன. சுமதி சொன்னாள்:
“இதுல இருந்து கொஞ்சம் எடுத்துட்டு, மூட்டையைக் கட்டி வச்சிடுவோம்.”
“அப்படின்னா சீக்கிரம் நடக்கட்டும்... யாராவது பார்த்துட்டாங்கன்னா...”
சுமதியும் ராதாம்மாவும் சேர்ந்து கொஞ்சம் அரிசியையும் மற்ற பொருட்களையும் ஒரு முறத்தில் எடுத்தார்கள். அவர்கள் திரும்பவும் மூட்டையைக் கட்டினார்கள். சங்கரன் நாயர் சாக்கு மூட்டையை எடுத்துக்கொண்டு தெற்குப் பக்கமாகச் சென்றார்.
பொழுது புலரும் நேரத்தில், ராதாம்மா பங்கனையும் ராஜனையும் எழுப்பினாள். அவர்கள் எல்லோரும் கஞ்சி குடித்தார்கள்.
மறுநாள் சாயங்காலம் ஆனபோது, ராமுவைப் போலீஸ்காரர்கள் பிடித்துவிட்டார்கள் என்ற செய்தியை அவர்கள் கேட்டார்கள்.
நாட்கள் அதற்குப் பிறகும் பல கடந்தன. காய்ந்த இலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டையில் இருந்த அரிசியும் பொருட்களும் பன்னிரெண்டு நாட்களுக்குச் சரியாக இருந்தன.
ஒரு நாள் சாயங்காலம் ராதாம்மா வாசலில் நின்றிருந்தாள். கிருஷ்ணன் நாயர் ஒற்றையடிப் பாதையில் நின்றுகொண்டு மெதுவான குரலில் கேட்டான்:
“நான் அங்கே வரட்டுமா?”
ராதாம்மா பதில் எதுவும் கூறவில்லை. அவள் தலையைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள்.
“அங்கே மாமா இருக்காரா?”
“இல்ல...”
“எங்கே போயிருக்காரு?”
“தெரியல...”
“எப்ப வருவாரு?”
“தெரியாது...”
அவன் வாசலுக்கு வந்தான். அவன் மெதுவான குரலில் கேட்டான்:
“ராதாம்மா... உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”
“ம்...”
“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதைப் பற்றி உனக்கு சம்மதம்தானா?”
“எனக்கு சம்மதம்தான். ஆனா, அப்பா சம்மதிக்க மாட்டாரு.”
“மாமாவோட சம்மதம் இல்லாமலே நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நான் கேக்குறேன். உன்னை நான் காப்பாத்துறேன்.”
“அது... அது நடக்காது. அப்பா சம்மதிக்காம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”
“மாமா சம்மதிக்காததற்குக் காரணம் என்ன?”
“காரணமா? காரணம் தெரியாதா?”
“எனக்குத் தெரியாது.”
“எங்கம்மா ஒன்பது பிள்ளைகளைப் பெத்தாங்க. அதுல இரண்டு பேர் செத்துப் போயிட்டாங்க. மீதி நாங்க ஏழு பேர். மூத்த அண்ணனுக்கு அஞ்சு பிள்ளைங்க. அக்காவுக்கு நாலு பிள்ளைங்க. அஞ்சாவது பிள்ளை வயித்துல இருக்கு. இனிமேல் நானும் சுமதியும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு அப்பா சொல்றாரு.”
“பிள்ளைகள் உண்டாயிடுவாங்கன்றதுக்காக பயந்து போயா கல்யாணம் பண்ண வேண்டாம்னு அவர் சொல்றாரு?”
“ஆமா...”
“பிள்ளை பெறாத பெண்களும் இருக்காங்களே!”
“நான் பிள்ளை பெறாத பெண்ணா?”
“எனக்குப் பிள்ளைகள் பிறந்தால், அவர்களுக்கான செலவுக்குக் கொடுக்க என்னால முடியும்.”
“அதை ஏன் என்கிட்ட சொல்லணும்?”
“பிறகு யார்கிட்ட சொல்லணும்?”
“அப்பாக்கிட்ட சொல்லணும்.”
“புலியைப் போல கடிச்சு கிழிக்கிறதுக்குத் தயாரா நிக்கிற ஆள்கிட்ட நான் எப்படிச் சொல்வேன்?”
“எப்பவும் பட்டினியையும் கஷ்டங்களையும் மட்டுமே அனுபவித்துக்கொண்டிருந்தால், மனிதர்கள் புலியா மாறிடுவாங்களோ?”
“அப்படின்னா...”
“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.”
“அது எனக்குத் தெரியும். இந்த வாசல்படியை மிதிக்கக் கூடாதுன்னு மாமா சொன்ன பிறகும், நான் வர்றதுக்குக் காரணமே அதுதான்...”
“யாருடா? என் மகள்கிட்ட கொஞ்சிப் பேசுறதுக்கு வந்திருக்கவன் யாருடா?” என்று உரத்த குரலில் கத்தியவாறு அப்போது வேகமாக வந்தார் சங்கரன் நாயர்.
கிருஷ்ணன் நாயர் பாதையில் இறங்கி ஓடினான்.
“அவன் ஏன்டி இங்கே வந்தான்?”
“ராதாம்மா பதில் எதுவும் கூறவில்லை.” சங்கரன் நாயர் கவலை கலந்த குரலில் சொன்னார்:
“மகளே, கஷ்டங்களையும், துன்பங்களையும் நாமே கூப்பிட்டு வரவழைச்சிக்கக் கூடாது. அண்ணனும் அக்காவும் கஷ்டப்படுறதை மகளே... நீ பார்க்கறேல்ல? அவங்களை மாதிரி நீயும் ஆகணுமா?”
“நான் அவங்களை மாதிரி ஆகமாட்டேன் அப்பா.”
“அப்படின்னா... அவன் இந்தப் படியில் கால் வைக்கிறப்போ, இங்கேயிருந்து அவனை ஏன் நீ போகச் சொல்லல?”
ராதாம்மா தொண்டை கம்ம, சொன்னாள்:
“அதை நான் சொல்லமாட்டேன் அப்பா. சின்னப் பிள்ளையா இருக்குறப்பல இருந்து பாசமா அவர்கூட பழகியிருக்கேன். இங்கேயிருந்து போங்கன்னு நான் சொல்லமாட்டேன்.”
“மகளே, நீ கஷ்டப்படுறதைப் பார்க்க முடியாதுன்றதுக்காகத்தான் நான் சொல்றேன்.”
“இப்பவும் கஷ்டம் இருக்கத்தானே செய்யுது, அப்பா?”
“இப்பவும் கஷ்டம்தான்... மேலும் மேலும் கஷ்டங்களைக் கூப்பிட்டு வரவழைச்சிக்கணுமான்னுதான் நான் கேக்குறேன்.”
“நான் கூப்பிட்டு வரவழைச்சிக்க மாட்டேன் அப்பா. அதே நேரத்துல, இங்கே வந்தால் வெளியே போங்கன்னு நான் சொல்லமாட்டேன். என்கிட்ட வந்து பேசினா, நானும் பேசுவேன்.”
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு சங்கரன் நாயர் சொன்னார்.
“ம்... ஆணாக இருந்தால் ஒரு பெண் வேணும்... பெண்ணாக இருந்தால் ஒரு ஆண் வேணும். தடுத்தால் கேட்க மாட்டாங்க!”
அதற்குப் பிறகும் பல மாதங்கள் கடந்தோடின. ஒரு நாள் பொழுது விடியும் நேரத்தில், சங்கரன் நாயரின் வீட்டில் ஒரு பூகம்பம் உண்டானது. அவர் சட்டி, பானைகளை எடுத்து வீசி எறிந்தார். அவர் உரத்த குரலில் கத்தினார்:
“கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அவளை இன்னைக்கே நான் கொல்லுவேன்.”
அவர் வேளியே ஓடினார்.
வழியில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்துக்கொண்டு ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது இருக்கும். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள். வெள்ளை நிறத்தில் புடவையும் ப்ளவுஸும் அணிந்திருந்தாள். இடது கையில் கடிகாரம் கட்டியிருந்தாள். கையில் ஒரு வேனிட்டி பேக் இருந்தது. வலது கையில் பெண்களுக்கான குடை இருந்தது. அவள் மெதுவாக வீட்டை நோக்கி நடந்து வந்தாள்.
திண்ணையில் தாடையில் கையை வைத்துக்கொண்டு சோகத்துடன் உட்கார்ந்திருந்த ராதாம்மா எழுந்து நின்றாள். அவள் அங்கு வந்து நின்ற பெண்ணையே பார்த்தவாறு நின்றாள். அந்தப் பெண் கேட்டாள்:
“இங்கே என்ன சண்டை?”
“சண்டை எதுவும் இல்ல. என் தங்கையைக் காணோம்.”
“எப்போ காணாமப் போனாள்?”
“இன்னைக்கு பொழுது விடியிற நேரத்துல... அவள் படுத்திருந்த பாயில அவளைக் காணோம். இங்கே எல்லா இடங்களையும் தேடியாச்சு. கிடைக்கல...”
“அவளுக்கு என்ன வயது?”
“என்னைவிட ஒண்ணரை வயது குறைவு.”
“அப்படின்னா ஒரு பதினெட்டு வயது இருக்கும். சரியா?”
“ஆமா...”
“காதலன் இருக்கானா?”
“ம்...”
“அவனுக்கு என்ன வேலை?”
“இங்கே இருக்குற பள்ளிக்கூடத்துல ஒரு ஆசிரியர்...”
“அவனோட வீடும் இங்கேதான் இருக்கா?”
“இல்ல...”
“உன் தங்கைக்கு காதலன் இருக்கான்ற விஷயம் உன் அப்பாவுக்குத் தெரியுமா?”
“தெரியாது.”
“வேற யாருக்காவது தெரியுமா?”
“எனக்கு மட்டும்தான் தெரியும்.”
“ஏன் இந்த விஷயத்தை நீ உன் அப்பாக்கிட்ட சொல்லல?”
“அப்பாக்கிட்ட சொன்னா, பெரிய சண்டையே உண்டாயிடும். அவளும் கல்யாணம் பண்ணிக்கிறதை எங்கப்பா விரும்பல.”
“என்ன காரணம்?”
“கல்யாணம் ஆயிட்டா, பிள்ளைகள் பிறப்பாங்கள்ல?”
“கல்யாணம் ஆயிட்டா, பிள்ளைகள் பிறக்கும்னு யார் சொன்னாங்க?”
“யாராவது சொல்லணுமா என்ன? கல்யாணமான பெண்கள் எல்லாருமே பிள்ளைகள் பெறுவதைத்தான் நாம பார்க்கிறோமே! என் மூத்த அண்ணன் கல்யாணம் பண்ணினார். அஞ்சு பிள்ளைகள் பிறந்தாங்க. அக்காவுக்குக் கல்யாணம் ஆனது நாலு பிள்ளைகள் பறந்தாங்க. ஐந்தாவது குழந்தை வயித்துல இருக்கு.”
“நீங்க எத்தனை சகோதர, சகோதரிகள்?”
“ஏழு பேர்.”
“உங்க அம்மா எங்கே?”
“இறந்துட்டாங்க.”
“நீங்க எப்படி வாழ்றீங்க?”
“எனக்குத் தெரியாது. பட்டினிதான்...”
“உன் தங்கைக்கு மட்டும்தான் காதலன் இருக்கானா?”
ராதாம்மா கூச்சத்துடன் சொன்னாள்.
“எனக்கு... என் அப்பாவோட மருமகன். இப்போ இங்கே வர்றது இல்ல...”
“என்ன காரணம்?”
“வந்தால், என் அப்பா அடிச்சு விரட்டிடுவாரு.”
“கல்யாணம் ஆயிட்டா பிள்ளை பிறக்கும்னு அப்பா பயப்படுறாரு... அப்படித்தானே?”
“ஆமா...”
“அப்படின்னா நான் ஒரு விஷயம் சொல்றேன். கல்யாணம் ஆனால் கூட பிள்ளைகள் பிறக்க மாட்டாங்க.”
“பிள்ளைகள் பிற்ககாம இருக்கணும்னா, கல்யாணம் செய்துக்காம இருக்கணும்.”
வெளியே ஓடிச் சென்ற சங்கரன் நாயர் திரும்பி வந்தார்.
“போயிட்டா மகளே. அவள் இனிமேல் வரமாட்டாள். அந்த வாத்தியார்தான் அவளை இழுத்துட்டுப் போயிருக்கான்.”
அவர் அடுத்த நிமிடம் அங்கு நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு கேட்டார்:
“நீங்க யாரு? எதுக்காக வந்திருக்கீங்க? எங்கேயிருந்து வர்றீங்க?”
“நான் கொஞ்சம் தூரத்துல இருக்குற இடத்துல இருந்து வந்திருக்கேன். இந்த வழியே போனப்போ, இங்கே இருந்து வந்த சத்தத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் பார்த்து வந்தேன்.”
“அடியே ராதாம்மா... அந்தப் பாயையோ, தடுக்கையோ இங்கே எடுத்துட்டு வாடி. பார்க்குறப்பவே தெரியலையா பெரிய குடும்பத்துல பிறந்தவங்க வந்திருக்காங்கன்னு...”
“எனக்கு இப்போ உட்கார்றதுக்கு நேரமில்ல. நான் கிளம்புறேன். என்ன பேரு?”
“என் பேரு சங்கரன் நாயர். முன் சீஃப் நீதிமன்றத்துல வேலை பார்த்தேன். இப்போ பென்ஷன் வாங்கிக்கிட்டு இருக்கேன்... இப்போ எங்கே போறீங்க?”
“இங்கே பக்கத்துல ஒரு விஷயத்துக்காக நான் போயிக்கிட்டு இருக்கேன்.”
“என் மகளைப் பற்றி ஏதாவது தகவல் கிடைச்சா, எனக்குச் சொல்லுங்க.”
“பொம்பளைப் பசங்க வயசுக்கு வந்துட்டா, அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் நல்லது.”
“அய்யோ... அப்படிச் சொல்லாதீங்க. நான் ஒரு பாவி. என் ரெண்டு பிள்ளைகளும் கூட பாவம் செய்தவர்கள்தான். இனி இருப்பவர்களாவது நரகத்துல கிடந்து புரளக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.”
“கல்யாணம் பண்ணுறது நரகமா சங்கரன் நாயர்?”
“கல்யாணம் பண்ணினா, பிள்ளைகள் பிறக்கும். பிள்ளைகள் பிறக்குறதுதான் நரகம்னு நான் சொல்லுறேன்.”
“கல்யாணம் ஆனா பள்ளைகள் பொறக்கணும்னு இல்லையே!”
“என்கிட்டயே சொல்றீங்களா? என் கவுரிக்குட்டி ஒன்பது பிள்ளைகளைப் பெத்தவ.”
“சரி... இருக்கட்டும். நான் இன்னொரு நாள் இங்கே வர்றேன். இப்போ கிளம்பட்டுமா?” - அவள் வெளியேறி நடந்தாள்.
சங்கரன் நாயர் உரத்த குரலில் அவளிடம் சொன்னார்:
“என் மகளை எங்கேயாவது பார்த்தா எனக்குத் தகவல் கொடுங்க.
அச்சுதன் நாயரின் தேநீர்க் கடையில் சங்கரி தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையை ஒரு தடுக்கில் படுக்கப் போட்டிருந்தாள். மீதி நான்கு பிள்ளைகளும் அடுப்பைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.
தேநீர் குடிப்பதற்காக வந்திருந்த இரண்டு பேர் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். தேநீர்ப் பாத்திரங்களைக் கழுவி வைத்துக்கொண்டிருந்தான் அச்சுதன் நாயர். அவன் சொன்னான்:
“சீக்கிரமா தோசை சுடுடி சங்கரி. தேநீர் குடிப்பதற்காக ஆட்கள் வந்திருக்குறதை நீ பார்க்கலையா?”
“வாசல்ல கிடக்குற தேங்காய் ஓட்டை எடுத்து அடுப்புல வைடி...”
“காயாத தேங்காய் ஓட்டை எடுத்து அடுப்புல வச்சா எரியுமா? ஊதி ஊதி என் கண்ணும் முகமும் வீங்கிப் போச்சு.”
சங்கரி தீயை ஊதி ஊதி இரண்டு தோசைகளைச் சுட்டாள். மூத்த பையன் ஒரு தோசையை எடுத்துக்கொண்டு ஓடினான். சங்கரி உரத்த குரலில் சத்தம் போட்டாள்:
“சுட்டு வச்ச தோசையை எடுத்துட்டு ஓடுறான்.”
பையன் தோசையை எடுத்துக்கொண்டு பாதை வழியே ஓடினான். ஓடுவதற்கு நடுவில் அவன் தோசையைத் தின்னவும் செய்தான். அச்சுதன் நாயர் அவனை விரட்டிக்கொண்டு ஓடினான். அவன் ஓடிச்சென்று தன் மகனைப் பிடித்தான். இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு, அவன் தின்றது போக மீதியிருந்த தோசையை அவனிடமிருந்து பிடுங்கினான். அவனை வேகமாகத் தள்ளினான். அடுத்த நிமிடம் சிறுவன் மல்லாக்கப் போய் விழுந்தான். அச்சுதன் நாயர் தேநீர்க் கடையை நோக்கி நடந்தான்.
அந்த வெள்ளை நிறப் புடவை அணிந்த பெண், அந்தச் சம்பவங்களைப் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தாள். அவள் ஓடி வந்து சிறுவனைப் பிடித்துத் தூக்கினாள்.
“எதுக்கு உன்னை அவர் அடிச்சாரு?”
“நான் ஒரு தோசையை எடுத்துட்டேன்” - அவன் அழுதுகொண்டே சொன்னான்:
“அவர் உன் அப்பாதானே?”
“ஆமா...”
அவள், அவனைக் கையில் பிடித்துக்கொண்டே தேநீர்க் கடைக்குள் நுழைந்தாள். அவள் அச்சுதன் நாயரிடம் கேட்டாள்:
அவனை ஓட ஓட விரட்டி அடி கொடுத்துக் கீழே தள்ளி விடுற அளவுக்கு அவன் என்ன தப்பு பண்ணிட்டான்?’’
“அவனை அடிச்சது போதாது. கீழே தள்ளிவிட்டதுகூட போதாது. அவனைக் கொல்லணும்...”
“அந்த அளவுக்கு அவன் என்ன பெரிய தப்பைச் செய்துட்டான்னுதான் நான் கேக்குறேன்.”
“இங்க பாருங்க. இவங்க தேநீர் குடிக்கிறதுக்காக வந்திருக்காங்க. சுட்டு வச்சிருக்குற தோசையை அவன் எடுத்துச் சாப்பிட்டா, இவங்களுக்கு நான் எதைத் தருவேன்?”
“அவன் தோசையை எடுத்து சாப்பிட்டதுக்குக் காரணம் அவனோட பசிதானே?”
“அவனை மாதிரி பசியில இருக்குறவங்கதான் மற்ற பிள்ளைகளும். தோசையையும் தேநீரையும் விற்றுக் கிடைக்கிற லாபத்துலதான் அரிசி கஞ்சி வச்சு பிள்ளைகளுக்குத் தர்றதே...”
“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”
“அஞ்சு பேர். இந்த வியாபாரத்துல லாபம் சம்பாதிச்சு எழு வயிறுகள் நிறையணும். உள்ளே கொஞ்சம் பாருங்க... வரிசையா எல்லாரும் உட்கார்ந்திருக்குறதை...”
அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டுக் கேட்டாள்:
“இவங்க எல்லாரும் உங்க பிள்ளைகள்தானா?”
“ஆமா... என் பிள்ளைகள்தான்.”
“இவங்க எல்லாரையும் பெற்றெடுத்தது உங்க மனைவிதானே?”
“ஆமா... அவதான் பெத்தா...”
“நீங்க சங்கரன் நாயரோட மகன்தானே?”
“ஆமா... நான் சங்கரன் நாயரோட மகன்தான். என் அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?
“தெரியும்.”
“நீங்க எங்கேயிருந்து வர்றீங்க?”
“நான் கொஞ்சம் தூரத்துல இருந்து வர்றேன்.”
“நீங்க எதுக்காக இங்கே வந்தீங்க?”
“இங்கே ஒரு ஆளைப் பார்க்குறதுக்காக வந்தேன்.”
“தேநீர் எதாவது குடிக்கிறதா இருந்தா...”
“ம்... தேநீர் வேணும். தோசையும் வேணும்.”
அவன் உள்ளே பார்த்துச் சொன்னான்.
“அடியே சங்கரி... சீக்கிரமா தோசை சுடு...” - அவன் அங்கு வந்திருந்த பெண்ணிடம் சொன்னான்:
“உள்ளே வந்து உட்காரலாமே!”
அந்தப் பெண் கடைக்குள் வந்தாள். அவள் சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய முகத்தில் கவலை தோன்றியது.
அழுக்குப் பிடித்த ஒரு கிழிந்துபோன தடுக்கு அங்கு கிடந்தது. அந்தப் பெண் அதில் உட்காரவில்லை. அவள் சொன்னான்:
“நான் இங்கேயே நிக்கிறேன். நீங்க சீக்கிரமா தோசை சுடுங்க.”
“சங்கரி அடுப்பை ஊதி ஊதி இரண்டு தோசைகளைச் சுட்டெடுத்தாள். அதில் சட்டினியை ஊற்றி, அங்கு வந்திருந்த பெண்ணுக்கு முன்னால் வைத்தாள். சங்கரியின் பிள்ளைகள் அதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். அந்தப் பெண் சொன்னாள்:
“நீங்க எல்லாரும் இங்கே வாங்க.”
எல்லோரும் அருகில் வந்தார்கள். அந்தப் பெண் சொன்னாள்:
“இதை எடுத்துச் சாப்பிடுங்க.”
பிள்ளைகளால் அதை நம்பமுடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு அனுபவம் அவர்களுக்கு இதற்கு முன்பு உண்டானதில்லை. அவர்கள் தயங்கியவாறு நின்றிருந்தார்கள். அந்தப் பெண் சொன்னாள்:
“சாப்பிடுங்க... உங்களுக்காக வாங்கியதுதான் இது”
பிள்ளைகள் தோசையை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள். சங்கரி மேலும் இரண்டு தோசைகளைச் சுட்டெடுத்தாள். அந்தப் பெண் சொன்னாள்:
“அந்தத் தோசைகளையும் பிள்ளைகளுக்குக் கொடுங்க.”
சங்கரி மகிழ்ச்சியுடன் தன் பிள்ளைகளுக்கு தோசைகளைக் கொடுத்தாள். அவள் அந்தப் பெண்ணிடம் கேட்டாள்:
“அப்படின்னா... நீங்க ஒரு தோசையாவது சாப்பிட வேண்டாமா?”
“எனக்கு வேண்டாம். நான் காபி குடிச்சிட்டுத்தான் வந்தேன்.”
சங்கரி அதற்குப் பிறகும் தோசை சுட்டாள். அந்தப் பெண் கேட்டாள்:
“பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறீங்களா?
“போகச் சொல்லுவோம். இவங்க போகமாட்டாங்க?”
“இந்தச் சின்னப் பிள்ளைக்கு என்ன வயது நடக்குது?”
“இதுக்கு நாலு மாசம் முடிஞ்சிடுச்சு”
“திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆச்சு?”
“ஏழு...”
“இதற்கிடையில் ஐந்து குழந்தைகள் பிறந்திருக்கு அப்படித்தானே?”
சங்கரி கூச்சத்துடன் சொன்னாள்:
“எனக்கு விருப்பமெதுவும் இல்ல. வந்து படுத்தால் நான் என்ன செய்றது? குழந்தைகள் பிறந்தால், செலவுக்குக் கொடுக்கணும்லன்னு நான் கேட்பேன். அப்போ கடவுள் இருக்காருடின்னு இவர் சொல்வாரு.”
“பிறகு... தெய்வம் உதவி செய்யுதா?”
““நான் சொல்றது என்னன்னா... எல்லாமே தெய்வத்தின் கருணையால் தானே நடக்குது!”
அச்சுதன் நாயர் ஒரு தேநீர் கொண்டு வந்தான். அந்தப் பெண் சொன்னாள்:
“மேலும் மூணு தேநீர் வேணும்.”
அவன் தேநீரைத் தரையில் வைத்துவிட்டு மீண்டும் சென்றான். அந்தப் பெண் சங்கரியிடம் சொன்னாள்:
“நீங்க இனிமேல் பிள்ளை பெறக்கூடாது”
“பிள்ளை பெறக்கூடாதுன்னு என்கிட்ட சொன்னா போதுமா? சொல்ல வேண்டியவங்கக்கிட்ட இல்ல சொல்லணும்!”
“அந்த ஆள்கிட்டயும் சொல்றேன். நான் இன்னொரு நாள் இங்கே வர்றேன்.”
நான்கு தோசைகளுக்கும், நான்கு தேநீருக்கும் உள்ள காசை அச்சுதன் நாயரிடம் கொடுத்துவிட்டு, அவள் பாதையில் இறங்கி நடந்தாள்.
தேநீர் குடித்துக்கொண்டிருந்த ஒருவன் அச்சுதன் நாயரிடம் கேட்டான்:
“இவங்க யாரு?”
“இவங்களா? எனக்குத் தெரியாது. நான் இப்போத்தான் இவங்களையே பார்க்குறேன். பள்ளிக்கூடத்துல ஆசிரியையா “வேலை பார்ப்பாங்களோ என்னவோ... என் அப்பாவை நல்லா தெரியும்னு சொன்னாங்க.”
“எந்த கூச்சமும் இல்லாம நடந்து போறாங்களே!”
“ஆனா, ஏழைங்க மேல கருணை இருக்கு”
தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேறொரு ஆள் சொன்னான்:
“நான் இவங்கள இதற்கு முன்பு பார்த்திருப்பதைப்போல ஒரு ஞாபகம்”- அவன் எதையோ நினைத்துக்கொண்டு சொன்னான்.
“நீதிமன்றத்துக்குப் போகிற வழியில் இப்போ புதிதாக ஒரு அலுவலகம் திறந்திருக்காங்கல்ல? அது என்ன அலுவலகம்?”
“அது ஏதோ மருத்துவமனையோ என்னவோன்னு சொன்னாங்க...” - இது அச்சுதன் நாயர்.
“இப்போ இங்கே வந்தவங்கள ஒரு நாள் அங்கே நான் பார்த்திருக்கேன்.”
உள்ளேயிருந்து சங்கரி சொன்னாள்:
“இங்கே கொஞ்சம் வாங்க.”
அச்சுதன் நாயர் உள்ளே சென்றான். சங்கரி சொன்னாள்:
“இனிமல் பிள்ளை பெறக்கூடாதுன்னு அவங்க என்கிட்ட சொன்னாங்க.”
“நீ என்ன சொன்னே?”
“நான் விருப்பப்பட்டு பிள்ளை பெறலைன்னு சொன்னேன்?”
“அப்படி சொல்லி, என்னை ரொம்பவும் மோசமானவனா காட்டிட்டியேடி... உனக்கு விருப்பம் இல்லைன்னா பிறகு யாரோட விருப்பத்துக்காக நீ பிள்ளைகளைப் பெத்தெடுக்குறே?”
“யாரோடவா? யாரோட விருப்பத்துக்காகன்னா கேக்குறீங்க? என்கிட்ட வர்றப்போல்லாம் நான் சொல்வேன்ல?”
“அப்படின்னா, இனிமேல் நான் உன்கிட்ட வரமாட்டேன். உன்கூட பேசவும் மாட்டேன்.”
“இதேமாதிரி முன்னாடியும் நீங்க சொல்லியிருக்கீங்கள்ல?”
“அப்போ சொன்னது மாதிரி இல்லைடி இப்போ சொல்றது.”
“அவங்க இனிமேலும் வருவாங்க. கருணை மனம் கொண்டவங்க அவங்க.”
“இனிமேல் வர்றப்போ, பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்தாலும் வருவாங்க.”
“அவங்க நல்லவங்க. பிள்ளைங்க மீது அவங்களுக்கு ரொம்ப பிரியம்.”
“நீ ஒரு காரியம் செய்யணும். அவங்ககிட்ட நூறு ரூபாய் கடன் கேளு. நூறு ரூபாய் இருந்தால், நம்ம வியாபாரத்தைப் பெருசா ஆக்கலாம். புட்டு, பழம், வடை, வாழைக்காய் வறுவல் எல்லாம் இருந்தால்தான் ஆளுங்க வருவாங்க.”
“நான் கேக்குறேன். தருவாங்களோ என்னவோ!”
“தருவாங்கடி. நீ கேளு.”
“அவங்க பெரிய பண வசதி படைச்சவங்களா இருக்கணும், ரூபாய் நோட்டுகளை அப்படியே தோல்பையில அடுக்கி வச்சிருந்தாங்க.”
“நீ கேளு நூறு ரூபாய் கேட்டால் ஐம்பது ரூபாயாவது தருவாங்க.”
“நான் கேக்குறேன்.”
ஒரு வாரம் கடந்தது. ஒருநாள் காலையில் தேநீர்க் கடையில் அச்சுதன் நாயர் தேநீர் குடித்துக்கொண்டு நின்றிருந்தான். பாதையில் வெள்ளை நிறப் புடவையணிந்த பெண் தேநீர்க் கடையை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஆர்வத்துடன் அவன் கேட்டான்:
“இங்கே வரலையா?”
“வர்றேன். திரும்பி வர்றப்போ வர்றேன்” என்று கூறியவாறு அவள் நடந்து சென்றாள்.
ஒரு மணி நேரம் ஆனவுடன், அவள் திரும்பி` வந்து தேநீர்க் கடைக்குள் நுழைந்தாள். பிள்ளைகள் ஓடி வந்து அவளைச் சுற்றி நின்றார்கள். அச்சுதன் நாயர் சொன்னான்:
“உள்ளே வந்து உட்காருங்க.”
சங்கரி வெளியே வந்து அந்தப் பெண்ணை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றாள். தடுக்கில் அந்தப் பெண்ணை உட்கார வைத்தாள். அந்தப் பெண் சொன்னாள்:
“இந்தப் பிள்ளைகளுக்கு தோசையும் தேநீரும் கொடுங்க.”
“பிள்ளைகளுக்கு வாங்கித் தர்றீங்க. உங்களுக்குன்னு ஒரு தேநீர்கூட குடிக்காம இருக்குறதுக்குக் காரணம்?”
அச்சுதன் நாயர் உள்ளே வந்துகொண்டே சொன்னான்:
“தைத்தான் நானும் கேக்குறேன். உங்களுக்குன்னு நல்லா இருக்குறது மாதிரி ஒரு தேநீர் போடட்டுமா?”
“ம்.... போடுங்க”
அச்சுதன் நாயர் தேநீர் தயாரிக்கச் சென்றான். சங்கரி தோசை, சட்னி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். அவள் சொன்னாள்:
“எங்க வியாபாரம் ரொம்பவும் மோசமா இருக்கு. புட்டோ, அப்பளமோ, வடையோ உண்டாக்கி வச்சாத்தான் ஆட்கள் வருவாங்க. வியாபாரத்தை நல்லா வர்ற மாதிரி செய்யணும். நல்லா கொண்டு வரணும்னு மனசுல நினைக்கிறேன். இதுல லாபம் கிடைச்சாத்தானே பிள்ளைகளுக்குக் கஞ்சி வச்சித் தரமுடியும்?”
“பிறகு ஏன் வியாபாரத்தை நல்லா நடத்தல?”
“நல்லா நடத்தனும்னா அதுக்கு பணம் வேண்டாமா? நூறு ரூபாயாவது இருந்தால்தான் சரியா வரும். எங்களுக்கு ஒரு நூறு ரூபாய் கடனாகத் தர முடியுமா? மூணு, நாலு மாதங்கள் கழிச்சு நாங்க அதைத் திருப்பித் தந்திடுறோம்.”
“கடன் தர்றதுக்கு என் கையில் பணம் இல்லையே!”
“ஐம்பது ரூபாய் கொடுத்தால் போதும்.”
“கடன் தர என் கையில் பணமே இல்ல...”
அச்சுதன் நாயர் தேநீர் கொண்டு வந்தான். ஒரு கண்ணாடி டம்ளரை அந்தப் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அவன் சொன்னான்:
“இது உங்களுக்குன்னே தயாரிச்ச தேநீர்.”
அந்தப் பெண் தேநீரை வாங்கிச் சிறிது சிறிதாகக் குடித்தாள். அச்சுதன் நாயர் சொன்னான்:
“வியாபாரத்தைக் கொஞ்சம் பெருசா செய்யணும்னு நினைக்கிறோம் ஒரு நூறு ரூபாய் இருந்தா....”
“உங்க மனைவி என்கிட்ட சொன்னாங்க. கடன் தர்றதுக்கு என் கையில பணம் எதுவும் இல்ல. ஆனா, வேற வகையில் உங்களுக்கு நான் உதவமுடியும்.”
“பிள்ளைகளுக்காகவாவது எந்த வழியிலாவது எங்களுக்கு நீங்க உதவி செய்யணும்.”
“நீங்க நான் இருக்குற இடத்துக்கு வரமுடியுமா?”
“நீங்க எங்கே இருக்கீங்க?”
“மலைக்குப் போற வழியில.... நகரத்தை நெருங்குறப்போ புதிதாக இரண்டு கட்டிடங்கள் கட்டியிருக்குறதைப் பார்த்திருக்கீங்களா?”
“அப்படி ஒரு இடம் இருக்குன்னு மத்தவங்க மூலம் தெரிஞ்சது. அது ஒரு அலுவலகம்தானே?”
“ஆமா... ஆது ஒரு அலுவலகம்தான். அங்கே வந்தால் என்னை நீங்க பார்க்கலாம்”
“உங்க பேரு?”
“பேரு இப்ப தெரிய வேண்டாம். நீங்க நாளைக்குக் காலையில, எட்டு மணி கடந்த பிறகு அங்கே வந்தால் போதும்.”
அவள் எழுந்தாள். தேநீர், தோசை ஆகியவற்றிற்கான காசைக் கொடுத்துவிட்டு, அவள் அங்கிருந்து சென்றாள். அச்சுதன் நாயர் கேட்டான்:
“அடியே சங்கரி... பணம் தராமல் அவங்க நமக்கு எப்படி உதவ முடியும்?”
“கடையில இருந்து அரிசியும் மற்ற பொருட்களும் வாங்கித் தந்தாலும் தருவாங்க....”
“அப்படி வாங்கிக் கொடுத்தால்கூட சரிதான். ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்....”
“என்ன சந்தேகம்?”
“எனக்கு அங்கே ஏதாவது வேலை போட்டுத் தந்தாலும் தருவாங்களோ?”
“அப்படின்னா... நாம தப்பிச்சிடலாம்டி சங்கரி...”
சுமதிக்கு ஒரு காதலன் இருந்தான். அவனுடைய பெயர் ஸ்ரீதரன் பிள்ளை. அங்கிருந்த ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் அவன் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். சங்கரன் நாயரின் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டில் அவன் இருந்தான்.
காலப்போக்கில் சுமதிக்கும், அவனுக்குமிடையில் காதல் உண்டானது. சில நேரங்களில் அவன் சங்கரன் நாயரின் வீட்டிற்குப் போவதுண்டு. சங்கரன் நாயருடன், அவன் நீண்ட நேரம் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருப்பான். இரண்டு முறை சங்கரன் நாயர் அவனிடம் கடன் வாங்கக்கூட செய்திருக்கிறார். அதைத் திருப்பி அவர் தரவும் செய்திருக்கிறார். ஆனால், நாட்கள் கொஞ்சம் கடந்த பிறகு, சங்கரன் நாயருக்கு ஒரு சந்தேகம் உண்டானது. ஒருநாள் அவர் ஸ்ரீதரன் பிள்ளையிடம் சொன்னார்:
“ஸ்ரீதரன் பிள்ளை சார்... ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சிக்கணும். இங்கே இரண்டு பொம்பளை பசங்க வயசுக்கு வந்து நிக்கிறாங்க. நீங்க இங்கே வர்றதை யாராவது பார்த்தாங்கன்னா, எதையாவது வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டு இருப்பாங்க. அதுனால சார், நீங்க இனிமேல் இங்கே வர வேண்டாம்...”
அதற்குப் பிறகு ஸ்ரீதரன் பிள்ளை அங்கு போவதே இல்லை. எனினும், அவனுக்கும் சுமதிக்குமிடையே இருந்த காதலுக்கு எந்தக் குறையும் உண்டாகவில்லை. அது நாட்கள் ஆக ஆக அதிகரிக்கவே செய்தது. காதலுக்கு உரமே அதற்கு இருக்கும் எதிர்ப்புதானே!
சங்கரன் நாயர் தன் மகள்களுக்குத் திருமணம் செய்யப் போவதில்லை என்று எடுத்திருக்கும் முடிவை ஸ்ரீதரன் பிள்ளை அறிந்தான். அதற்குப் பிறகு ஸ்ரீதரன் பிள்ளை கடுமையான ஏமாற்றத்துடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். சுமதியும் கடுமையான கவலையில் மூழ்கிவிட்டிருந்தாள்.
இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீதரன் பிள்ளைக்கு அவனுடைய ஊருக்கே இடம் மாற்றம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து தன்னுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டதைப் போல அவன் உணர்ந்தான்.
இடமாற்றத்தைப் பற்றி அறிய நேர்ந்தபோது, சுமதி உடைந்தே போய்விட்டாள். ஒருநாள் முழுவதும் அவள் பாயை விட்டு எழுந்திருக்கவே இல்லை. சங்கரன் நாயர் கேட்டதற்கு தனக்கு தலைவலி இருப்பதாக அவள் கூறிவிட்டாள். சுமதிக்கு இருக்கும் நோய் தலைவலி அல்ல என்ற உண்மை ராதாம்மாவிற்குத் தெரியும் என்றாலும், தலைவலிதான் என்று அவளும் தன் தந்தையிடம் கூறினாள்.
ஸ்ரீதரன் பிள்ளை தன் ஊருக்குக் கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு, இறுதியாக விடைபெற்றுக் கொள்வதற்காக அவன் சுமதியின் வீட்டிற்குச் சென்றான். எல்லோரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். கதவைத் தட்டுவதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. சங்கரன் நாயர் எழுந்து வந்து கதவைத் திறக்கும்பட்சம், அது ஒரு ஆபத்தான விஷயமாக ஆகிவிடாதா? சுமதியிடம் சொல்லாமல் இங்கிருந்து போகவும் முடியாது.
திறந்து கிடந்த சாளரத்திற்கு அருகில் போய் அவன் நீண்ட நேரம் நின்றிருந்தான். அப்படி நின்றிருந்தபோது அவனுக்கு இருமல் வந்துவிட்டது. அடக்க முயன்றும், அடங்காமல் இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சுமதி எழுந்து சாளரத்திற்கு அருகில் வந்தாள். அவள் மெதுவான குரலில் கேட்டாள்:
“யாரு?”
“நான்தான்.”
“நான் அந்த வழியா வர்றேன்.”
வீட்டிற்குப் பின்னால் இருந்த கதவைத் திறந்து, சுமதி வாசலுக்கு வந்தாள். அவள் ஸ்ரீதரன் பிள்ளைக்கு அருகில் வந்தாள். இரண்டு பேரும் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள். கடைசியில் ஸ்ரீதரன் பிள்ளை இடறிய குரலில் சொன்னான்:
“நாளைக்குக் காலையில் நான் புறப்படுறேன்.”
“அதற்கு முன்னால் நான் போயிடுவேன்.”
“எங்கே?”
“என் அம்மா போன இடத்துக்கு நானும் போறேன்.”
“அப்படின்னா... நாம சேர்ந்தே போவோம்.”
“அது தேவையில்ல... என்னைவிட ஒரு நல்ல பெண் உங்களுக்குக் கிடைக்க மாட்டாளா?”
“உனக்கு என்னைவிட ஒரு நல்ல ஆண் கிடைக்கமாட்டானா?”
“இதைவிட நல்ல ஆண் எனக்குக் கிடைக்க மாட்டான்.”
“இதைவிட நல்ல பெண் எனக்குக் கிடைக்க மாட்டாள்.”
“அப்படின்னா...”
“நாம சேர்ந்தே போவோம்...”
“இப்பவேவா?”
“ஆமா.... இப்பவேதான். சலவை செய்த முண்டும் ப்ளவ்ஸும் இருக்கா?”
“சலவை செய்து வச்சிருக்கு.”
“அப்படின்னா.... அதை எடுத்து உடுத்திக்கிட்டு வா.”
அவள் மெதுவாக உள்ளே சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவன் நடந்தான். பாதையில் கால் வைத்தபோது அவள் கேட்டாள்:
“நாம எங்கே போறோம்?”
“என் வீட்டுக்கு”
அவர்கள் நடந்தார்கள். இப்படித்தான் சுமதி ஸ்ரீதரன் பிள்ளையுடன் சென்றாள்.
சங்கரன் நாயர் பல இடங்களிலும் தேடினார். கண்ணில் பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டார். அந்த வகையில் ஊரில் இருந்த எல்லோருக்கும் சுமதி யாருடனோ வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்ற விஷயம் தெரிந்துவிட்டது. ஸ்ரீதரன் பிள்ளையுடன்தான் அவள் ஓடியிருக்கிறாள் என்பது பின்னால் தான் அவர்களுக்குத் தெரிந்தது. சாயங்காலம் ஆனதும் சங்கரன் நாயர் திரும்ப வந்து திண்ணையில் போய்ப் படுத்துவிட்டார். இடையில் அவ்வப்போது ஒரு நீண்ட பெருமூச்சை அவர் விடுவார். கம்மிய குரலில் அவர் சொன்னார்:
“அவள் அதிர்ஷ்டம் செய்தவள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பார்க்காமலே, கேட்காமலே அவள் இங்கேயிருந்து போயிட்டா... கவுரி, உன் பின்னாடி நானும் வர்றேன்.”
உள்ளே படுத்திருந்த ராதாம்மா எழுந்து திண்ணைக்கு வந்தாள். அவள் கேட்டாள்:
“சுமதி எங்கேயிருக்கான்னு தெரிஞ்சதா அப்பா?”
“அவள் அந்த வாத்தியார்கூட ஓடிப்போயிட்டா. அந்த ஆளு அவளைக் கடத்திட்டுப் போயிட்டான்”
“அவளை அழைச்சிட்டு வரவேண்டாமா?”
“பத்து, பன்னிரெண்டு மைல்கள் நடக்கணுமே! என்னால முடியாது. அவள் போனால் போகட்டும். அவளும் நாய் குட்டிகள் போடுற மாதிரி பிள்ளைகளைப் பெத்தெடுக்கட்டும்.”
“ராஜனுக்குக் காய்ச்சல் அடிக்குது அப்பா. தீயா கொதிக்குது.”
“கொதிக்கட்டும். அவன் அப்படியே காய்ச்சல்ல படுத்துக் கிடக்கட்டும். நான் என்ன செய்யமுடியும்?”
“கொஞ்சம் நீர் கொதிக்க வச்சுக் கொடுத்தோம்னா...”
“தேவையில்லைடி. நீர் கொதிக்க வச்சுத்தர வேண்டாம். முடியாது.... இதையெல்லாம் கேட்கவும் என்னால முடியாது.”
“அக்கா வர்றாங்க அப்பா.”
“ஓ! இங்கே அவள் வர்றது ஒண்ணுதான் குறைச்சல்! பிள்ளைகளையும் அழைச்சிட்டா வர்றா?”
“அக்கா மட்டும்தான் வர்றாங்க.”
லட்சுமிக்குட்டி வாசலில் வந்து நின்றாள். அவள் பதைபதைப்புடன் கேட்டாள்.
“ராதாம்மா, சுமதி எங்கேயிருக்கான்னு தெரிஞ்சதா?”
“பொம்பளைப் பசங்க வயசுக்கு வந்து கல்யாணம் பண்ணிக் கொடுக்காம இருந்தா, இதுதான் நடக்கும்.”
“சங்கரன் நாயர் கட்டிலிலிருந்து வேகமாக எழுந்தார்.”
“உன்னைக் கல்யாணம் பண்ணி நான் அனுப்பி வச்சேன். இப்போ நீ எப்படிடீ இருக்கே? தவளைக் குஞ்சுகளை மாதிரி நாலு பிள்ளைகளை நீ பெத்திருக்கேல்ல? ஒரு குழந்தையை வயித்துல சுமந்துக் கிட்டுத்தானே வந்திருக்கே?” - அவர் கேட்டார்.
“அப்பாவையும் அம்மாவையும் போலத்தான் பிள்ளைகளும் இருப்பாங்க.”
“ஆமாம்டி... நாங்கதான் தவறு செய்தவங்க... உன் அம்மா ஒன்பது பிள்ளைகளைப் பெத்தவ. பிறகு எல்லோரையும் என் தலைமேல வச்சிட்டு அவ போய்ச் சேர்ந்துட்டா.”
“சுமதி இங்கே வருவாள்னு பிள்ளைகளோட அப்பா சொன்னாரு.”
“ஓ... அவன் அப்படிச் சொல்லி அனுப்புனானா?”
ராதாம்மா சொன்னாள்:
“அக்கா, ராஜனுக்குக் காய்ச்சல்.”
“சீரகம் போட்டு நீரைக் கொதிக்க வச்சுக் கொடு. எனக்கும் சீரகம் தா. அங்கேயிருக்குற பையனுக்கும் காய்ச்சல் இருக்கு.”
“இங்கே சீரகம் இல்ல அக்கா.”
சங்கரன் நாயர் சொன்னார்:
“இல்லைன்னா வெறும் பச்சத் தண்ணியை சுட வச்சுக் கொடுடி. இல்லாட்டி போய்த் தொலையட்டும். பிள்ளைகளை அடுத்தடுத்து பெத்துவிட்டுட்டு இவள் போய்ச் சேரலையா?”
“அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்ததுனாலதான் அம்மா செத்தாங்க.” லட்சுமிக்குட்டி சொன்னாள்.
“நீங்க எல்லாரும் பிள்ளைகள் பெத்துப் பெத்து சாகுங்கடி... இதையெல்லாம் பார்க்குறதுக்கும் கேக்குறதுக்கும் என்னால முடியவே முடியாது.”
லட்சுமிக்குட்டி மெதுவான குரலில் முணுமுணுத்தாள்:
“போன பிறவியில செய்த பாவம்...”
“பாவம் செய்தவங்க எல்லாரும் இந்த வீட்டுல எப்படிடீ வந்து பிறந்தாங்க?”
“எப்படியோ?”
ராதாம்மா லட்சுமிக்குட்டியைக் கோபித்தாள்.
“அக்கா நீங்க போங்க. இந்த கவலையான சூழ்நிலையில் இன்னொரு சண்டையை உண்டாக்காம நீங்க போங்க.”
“நான் போறேன். இனிமேல் நான் இந்த வீட்டு வாசல்ல கால் வைக்க மாட்டேன்.”
“போடி .... போய்த் தொலை....”
“நான் எங்கே போவேன். எனக்குப் போறதுக்கு ஒரு இடமும் இல்லையே!” - ராதாம்மா குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
ராஜனுக்குக் காய்ச்சல் அதிகரித்தது. அவன் சுய உணர்வு இல்லாமல் வாய்க்கு வந்ததைப் பேசிகொண்டிருந்தான். ராதாம்மாவிற்குக் கவலையாக இருந்தது. அவள் சங்கரன் நாயரிடம் சொன்னாள்:
“வைத்தியரை அழைச்சிட்டு வாங்க அப்பா.”
“நான் கூப்பிட்டால் அந்த ஆளு வரமாட்டார் மகளே. இங்கே வந்தால் எதுவுமே கிடைக்காதுன்னு அந்த ஆளுக்கு நல்லா தெரியும். வைத்தியர்மார்களுக்கு ஏதாவது தராமல், அவங்க நோயைக் கவனிக்க மாட்டாங்க. இருந்தாலும் நான் அந்த ஆளைக் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன்.”
அவர் மெதுவாக நடந்தார். அவருக்கு நடப்பதற்கு சக்தியே இல்லை. அவர் கஞ்சி குடித்து இரண்டு நாட்களாகிவிட்டன. விளைந்திருந்த சேம்பை வேக வைத்துத் தின்று, பச்சைத் தண்ணீரைக் குடித்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
பங்கன் பலபலவென்று விடிகிற நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிச் செல்வான். தேநீர்க் கடையிலும், மாலை நேரச் சந்தையிலும் போய் நிற்பான். தின்பதற்கு ஏற்றபடி எது இருந்தாலும், அவன் போய் அதை எடுப்பான். அடியும் இடியும் வாங்குவான். அடி வாங்கிக்கொண்டே அவன் அதைத் தின்பான்.
மாலைநேரம் ஆனபோது, வழக்கம்போல பங்கன் வீட்டிற்கு வந்தான். இருட்டென்றால் அவனுக்கு பயம். அதனால் சாயங்காலம் ஆகிவிட்டால் அவன் வீட்டிற்கு வந்துவிடுவான். சமையலறைக்குச் சென்று பார்ப்பான். அங்கு ஏதாவது இருப்பதைப் பார்த்தால், அதை எடுத்துச் சாப்பிடுவான். எதுவும் இல்லாவிட்டால், போய் படுத்துத் தூங்கிவிடுவான்.
அன்றும் அவன் சமையலறைக்குள் சென்று பார்த்தான். அடுப்பில் நெருப்பு எரிந்த அடையாளத்தைப் பார்த்தான். ஆனால், தின்பதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு பாத்திரத்தில் சிறிது வெந்நீர் மட்டும் இருந்தது.
ராஜன் படுத்திருந்த கட்டிலின் தலைப்பகுதியில் இரண்டு தாள் பொட்டலங்கள் இருந்தன. பங்கன் இரண்டு பொட்டலங்களையும் எடுத்துப் பரித்துப் பார்த்தான். ஒரு பொட்டலத்தில் மூன்று மாத்திரைகள் இருந்தன. பங்கன் அதைத் தன்னுடைய வாய்க்குள் போட்டு மென்றான். இன்னொரு பொட்டலத்தில் ஒரு பொடி இருந்தது. அவன் அதையும் வாய்க்குள் போட்டான். கட்டிலுக்குக் கீழே ஒரு புட்டி இருப்பதைப் பார்த்தான். அதை எடுத்துத் திறந்து பார்த்தான். மெதுவாக அதை குலுக்கினான். அதிலிருந்ததைக் கொஞ்சம் வாயில் ஊற்றிப் பார்த்தான். இனிப்பாக இருந்தது. அவன் அது முழுவதையும் குடித்தான்.
பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சம் அரிசி வாங்கிக் கொண்டு வருவதற்காகப் போயிருந்த ராதாம்மா திரும்பி வந்தாள். அவள் மண்ணெண்ணெய் விளக்கைப் பற்ற வைத்தாள். கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த புட்டி காலியாக இருந்தது. அவள் பதைபதைத்துப் போய்க் கேட்டாள்:
“இதுல இருந்த அதிர்ஷ்டத்தை யார் எடுத்துக் கீழே ஊற்றியது?”
“கீழே எதையும் ஊத்தல. நான் அதை எடுத்துக் குடிச்சிட்டேன்” - பங்கன் சொன்னான்.
“அய்யோ! ராஜனுக்கு கொடுக்குறதுக்காக வைத்தியர் கொடுத்தனுப்பின மருந்தாச்சே அது! அதை எடுத்துக் குடிச்சால்...”
முட்டாள்தனமாக சிரித்துக்கொண்டே பங்கன் சொன்னான்:
“பொட்டலத்துல இருந்ததையும் நான் எடுத்து தின்னுட்டேன்.”
“மோசம் பண்ணிட்டியே!”
“என்னடி என்ன?” - என்று கேட்டவாறு சங்கரன் நாயர் ஓடி வந்தார்.
“ராஜனுக்குத் தர்றதுக்காக வாங்கி வச்சிருந்த மருந்து முழுவதையும் பங்கன் எடுத்துத் தின்னுட்டான்....”
“தின்னுட்டானாடி? தின்னுட்டானா?... சாகட்டும். இரண்டு பேரும் சாகட்டும். ஒருத்தன் மருந்தைத் தின்னு சாகட்டும்! இன்னொருத்தன் மருந்தைச் சாப்பிடாம சாகட்டும்!”
நள்ளிரவு நேரமானது. ராஜனுக்குக் காய்ச்சல் மேலும் அதிகமாகியது. அவன் தொடர்நது சுய உணர்வை இழந்து கொண்டேயிருந்தான். எதையோ கூற முயற்சிப்பதைப்போல உதடுகளை அவன் அசைத்துக்கொண்டேயிருந்தான். மண்ணெண்ணெய் விளக்கை எரிய வைத்துக்கொண்டு ராதாம்மா கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். பக்கத்து அறையில் படுத்திருந்த பங்கன், முனகுவதும் பற்களைக் கடிப்பதுமாக இருந்தான். தாங்க முடியாத வேதனை காரணமாக அவன் இப்படியும் அப்படியுமாக உருண்டு கொண்டிருந்தான்.
திண்ணையில் போடப்பட்டிருந்த கட்டிலில் சுருண்டு படுத்திருந்த சங்கரன் நாயர் கேட்டார்:
“யாருடி முனகுறதும் பற்களைக் கடிக்கிறதுமா இருக்கிறது?”
“பங்கன்...”
“அரிஷ்டம், பொடி, மாத்திரைகள் எல்லாத்தையும் எடுத்து சாப்பிட்டிருக்கான்ல! இப்போ என்ன செய்யறது? யார்கிட்ட சொல்றது?”
பங்கன் உரத்த குரலில் கூப்பாடு போட்டான்:
“அய்யோ! என் அம்மா! நான் இப்போ சாகப் போறேன்.”
“கொஞ்சம் தண்ணியை எடுத்துக் கொடுடி... நான் எங்கே போவேன்? யார்கிட்ட சொல்லுவேன்?”
பச்சைத் தண்ணீரைத் தவிர, வீட்டில் வேறு எதுவும் இல்லை. ராதாம்மா ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து பங்கனிடம் கொடுத்தாள். அவன் அது முழுவதையும் குடித்து தீர்த்தான். அதற்குப் பிறகும் அவன் இப்படியும் அப்படியுமாக உருண்டு கொண்டேயிருந்தான். உரத்த குரலில் கூப்பாடு போட ஆரம்பத்தான்.
திடீரென்று ஒரு வாந்தி! தொடர்ந்து மலம் வெளியேறியது. ராதாம்மா ஓடிச்சென்று அவனைப் பிடித்தாள். அவன் திரும்பித் திரும்பி முனகியவாறு உருண்டு கொண்டிருந்தான். ராதாம்மாவின் உடல் நடுங்க ஆரம்பித்தது. பங்கனின் வாயிலிருந்தும், ஆசனப் பகுதியிலிருந்தும் விடாமல் ஓழுகிக் கொண்டேயிருந்தது. அதில் கிடந்து அவன் உருண்டு கொண்டேயிருந்தான். ராதாம்மாவிற்கு முச்சு அடைத்தது. அவள் வெளியே ஓடினாள்.
“அப்பா... பங்கன்...”
“தொலைஞ்சிட்டானாடி...? தொலைஞ்சிட்டானா?” சங்கரன் நாயர் குலுங்கி குலுங்கி அழுதார்.
அச்சுதன் நாயரின் தேநீர்க் கடையில் சில முன்னேற்றங்கள் உண்டாயின. காலையில் புட்டும், கடலையும், அப்பளமும், தேநீரும். மதிய நேரம் முடிந்த பிறகு ஊற வைத்த அவலும், பருப்பு வடையும், அதிரசமும், தேநீரும். புதிய ஓலை வாங்கி தேநீர்க் கடையை அவன் வேய்ந்தான். ஆட்கள் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, பிள்ளைகள் இப்போதெல்லாம் வந்து நின்றுகொண்டு பார்ப்பதில்லை. பிள்ளைகளும் தாயும் புதிய ஆடைகளை அணிந்திருந்தார்கள்.
ஊர்க்காரர்களுக்கு மத்தியில் அது ஒரு பேசப்படும் விஷயமாக ஆனது. பலரும் பலவற்றையும் சொன்னார்கள். சிலர் அச்சுதன் நாயர் எங்கிருந்தோ திருடியிருக்கிறான் என்று சொன்னார்கள். வேறு சிலர் யாரிடமோ கடன் வாங்கியிருக்கிறான் என்றார்கள். அதைப் பெரும்பாலானவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த ஊரில் அச்சுதன் நாயருக்குக் கடனாக பணம் தருவதற்கு யார் இருக்கிறார்கள்? வேறு சிலரோ அச்சுதன் நாயருக்கும், வெள்ளை நிறப் புடவை அணிந்த பெண்ணுக்குமிடையே என்னவோ இருக்கிறது என்றார்கள். அதனால்தான் இரண்டு மூன்று தடவை அந்தப் பெண் தேநீர்க் கடையைத் தேடி வந்தாள் என்றார்கள் அவர்கள். அந்தப் பெண்தான் அச்சுதன் நாயருக்குப் பணம் தந்திருக்கிறாள் என்றார்கள் அவர்கள். அதைப் பற்றி பலருக்கும் பலமான கருத்து வேறுபாடு இருக்கவே செய்தது. அழகான தோற்றத்தைக் கொண்டவளும், பணவசதி படைத்தவளும், நிறைய படித்தவளுமான ஒரு பெண்ணுக்கு அச்சுதன் நாயருடன் என்னவோ இருக்கிறது என்று சொன்னால், அதை நம்புவது என்பது எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம்? ஆனால், அவள் அச்சுதன் நாயரின் தேநீர்க் கடைக்கு இரண்டு மூன்று முறை வந்ததற்கும், பிள்ளைகளுக்குத் தேநீரும் தோசையும் வாங்கிக் கொடுத்ததற்கும் காரணம் என்னவாக இருக்கும்? அச்சுதன் நாயரிடம் சிலர் ரகசியமாக இதைப் பற்றிக் கேட்டதற்கு அவன் “கடவுள் கொடுத்தார்” என்று சொன்னான்.
அச்சுதன் நாயரின் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகி இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு லட்சுமிக்குட்டி, தன் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு விருந்திற்கு வந்திருந்தாள். லட்சுமிக்குட்டிக்கும் பிள்ளைகளுக்கும் தேநீரும் பலகாரங்களும் தந்துவிட்டு சங்கரி கேட்டாள்:
“இது எத்தனையாவது மாதம்?”
“எனக்கு இப்போ எட்டு... உங்களுக்கு ஏதாவது உண்டாகியிருக்கா?”
“நான் இதை நிறுத்திட்டேன்.”
“நிறுத்த முடியுமா என்ன? ஆண்கள் பலசாலிகளா இருந்துக்கிட்டு...”
“உண்மைதான். பலசாலிகளா இருக்குற ஆண்கள் வந்து கையைப் பிடிக்கிறப்போ நாம என்ன செய்ய முடியும்?”
“அதைத்தான் நானும் சொல்றேன். என்னை நெருங்கி வரவே கூடாதுன்னு நான் தினமும் சொல்வேன். ஆனா, பக்கத்துல வந்து நிக்கிறப்போ, மனசு இளகிடுது.”
“ஆனா... ஒண்ணு தெரியுமா? நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். கேக்குறியா?”
“என்ன விஷயம்? சொல்லுங்க. கேக்குறேன்.”
“புடவை அணிந்து இங்கே நடந்து வர்ற ஒரு பெண்ணை நீ பார்த்திருக்கியா? அவங்களைப் பார்க்குறப்பவே தெரியும். பெரிய குடும்பத்துல பிறந்தவங்கன்னு...”
“வெள்ளை நிறத்துல புடவை உடுத்தி கடிகாரம் கட்டி வர்றவங்களைத்தானே சொல்றீங்க?”
“அவங்களைத்தான். அவங்க சில நேரங்கள்ல இங்கே வருவாங்க. வர்றப்பல்லாம் பிள்ளைகளுக்கு தோசை, தேநீர்னு வாங்கிக் கொடுப்பாங்க. பிள்ளைகளோட அப்பாக்கிட்டயும் என்கூடவும் பேசுவாங்க. அவங்க யார்னு தெரியுமா?”
“யாரு?”
“டாக்டராம்... டாக்டர்...”
“எனக்கும் மனசுல ஒரு சந்தேகம் இருந்தது. ஏன்னா, ஒவ்வொண்ணா கிளறிக் கிளறிக் கேட்பாங்க. அது சரி... டாக்டர்னா, அவங்க ஏன் இங்கே நடந்து திரியணும்? அவங்க மருத்துவமனையில இருந்தா போதாதா? நோய் இருக்குறவங்க எல்லோரும் அங்கே போவாங்களே!”
“அதுல ஒரு விஷயம் இருக்கு. அது ரகசியம்...”
“அப்படின்னா?”
“அப்படின்னா... யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணினா, நான் சொல்றேன்.”
சங்கரி, லட்சுமிக்குட்டியின் காதில் என்னவோ முணுமுணுத்தாள். லட்சுமிக்குட்டி கேட்டாள்:
“நீங்க சொல்றது உண்மையா?”
“நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும்? அவங்க சொன்னதைக் கேட்டு நடந்தா, பிறகு பிள்ளைகளே பிறக்காது.”
“அப்படின்னா நான் ஒரு விஷயம் சொல்றேன். அவங்க ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்தாங்க. பிள்ளைகளுக்கு மிட்டாயோ என்னவோ கொடுத்தாங்க. அதற்குப் பிறகு என்னைப் பார்த்து, இனிமேல் பிள்ளை பெறக்கூடாதுன்னு சொன்னாங்க. நான் மட்டும் நினைச்சால் பிள்ளை பெறாம இருக்க முடியுமான்னு நான் கேட்டேன். பிறகு, இன்னொரு நாள் வர்றேன்னு சொல்லிட்டு அவங்க போயிட்டாங்க. அவங்க வெறுமனே பேச்சுக்காக சொல்லியிருக்காங்கன்னு நான் நினைச்சேன். அப்படின்னா, அவங்க சொன்னது உண்மைதான். அப்படித்தானே?”
“அது எப்படித் தெரியுமா? சின்ன கத்தி மாதிரி இருக்குற ஒரு கருவியால ஒரு கீறு கீறுவாங்க...”
“எங்கே கீறுவாங்க?”
“சொல்லக் கூடாத இடத்துலதான் கீறுவாங்க. அப்பவே மருந்து வச்சு அங்கே கட்டிடுவாங்க.”
“உள்ளே சாப்பிடுற மாதிரி ஏதாவது மருந்து கொடுப்பாங்கன்னு நான் நினைச்சேன்.”
“எல்லாத்துக்கும் மருந்து இருக்குன்னு அவங்க சொன்னாங்க. அவற்றோட பெயர்கள் எனக்கு ஞாபகத்துல இல்ல.”
“அப்படின்னா... பிள்ளைகள் பிறக்காமல் இருக்க, ஆம்பளைகளைத்தான் கீறுறது, அறுக்குறது எல்லாம்... அப்படித்தானே?”
“பெண்ணுக்கும் அது இருக்கு... அது எல்லாத்தையும் டாக்டர் சொல்லித் தருவாங்க.... அதற்குப் பிறகு இன்னொரு விஷயம் இருக்கு...”
“என்ன விஷயம்?”
“பணமும் தருவாங்க.”
“பணமே தரலைன்னாலும் பரவாயில்ல... என்னால இனிமேல் பிள்ளைகள் பெறமுடியாது.”
“அந்த உரையாடல் இப்படியே நீண்டுகொண்டு போனது. இறுதியில் லட்சுமிக்குட்டி சொன்னாள்.
“அப்படின்னா...”
“நீ என்ன சொல்லப் போறேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, ராதாம்மா, சுமதி ஆகியோரின் திருமண விஷயத்தைப் பற்றித்தானே நீ சொல்ல வர்ற?”
“அதேதான்... கல்யாணம் ஆயிட்டா, நாய் குட்டி போடுறதைப்போல பிள்ளைகள் தொடர்ந்து பிறக்கும்னுதானே பொதுவா அப்பா சொல்லுவாரு?”
“அவரு விஷயத்தைக் கேட்கணுமா? அவர் ஒருநாள் இங்கே வந்து வாய்க்கு வந்தபடி அசிங்கமா பேசின பேச்சுக்குக் கையோ கணக்கோ எதுவுமே இல்லை. நீ கல்யாணம் பண்ணியதுனாலதானடா இந்தப் பிள்ளைகள்லாம் பிறந்தாங்க - இந்தப் பிள்ளைகளைப் பார்த்த பிறகு இங்கு தேநீர் குடிக்க ஆம்பளைங்க யாரும் வருவாங்களாடா. அது இதுன்னு சொல்லி குதிக்க ஆரம்பிச்சிட்டாரு.”
“இங்கே வந்து குதிக்க மட்டும் செஞ்சிருக்காரு. என்னைப் பார்த்து வெளியே போடின்னு சொல்லிட்டாரு. சுமதி யார்கூடவோ ஓடிப்போயிட்டாள்னு தெரிஞ்சதும், விஷயம் என்னன்னு தெரிஞ்சிக்கிடறதுக்காக நான் அங்கே போனேன். தவளைக் குஞ்சுகளைப்போல பிள்ளைகளை அடுத்தடுத்து பெத்தவளடி நீ, உன்னை யார் வரச் சொன்னதுடி, “இங்கேயிருந்து கிளம்புடின்னு சத்தம் போட்டு அவர் கத்தினாரு பாருங்க... நான் அந்த நிமிடமே வீட்டை விட்டு வெளியேறிட்டேன்.”
“அவர் சொன்னது உண்மைதான்றதை நீ கொஞ்சம் சிந்திச்சுப் பாரு. மூத்த மகனுக்கு ஐந்து பிள்ளைகள். இரண்டாவது மகளுக்கு நாலு பிள்ளைகள். பிறகு ஒண்ணு வயித்துல.. மூணாவது மகன் திருடின குற்றத்துக்காக சிறையில இருக்கான், நாலாவது ராதாம்மா... அவள் அப்படியே வயசு ஏறி வீட்டுல உட்கார்ந்துக்கிட்டு இருக்கா. ஐந்தாவது பெண் ஒருத்தனைக் காதலிச்சு, அவன்கூட சேர்ந்து ஓடிட்டா. இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்க எப்படி முடியும்? அவருக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குறதே ஆச்சரியமான ஒரு விஷயம்!”
லட்சுமிக்குட்டி இடறிய குரலில் கொன்னாள்:
“நீங்க சொல்றது சரிதான். இந்த பூமியில பெண்கள்தான் நரகத்தையே உண்டாக்குறாங்க.”
“அப்படிச் சொல்ல முடியாது. பெண்களும் ஆண்களும் சேர்ந்துதான் நரகத்தை உண்டாக்குறாங்க”
“கடவுள் இதையெல்லாம் பார்க்கலையா? கடவுளுக்குக் கண்ணே இல்லையா?”
அப்போது அச்சுதன் நாயர் பரபரப்புடன் அங்கு வந்தான். அவன் கேட்டான்:
“லட்சுமிக்குட்டி, உனக்கு விஷயம் தெரியுமாடி? ராஜனுக்கு உடம்புக்கு சரியில்ல..”
“உடம்புக்கு என்ன?”
“என்ன உடம்புக்குன்னு கேட்டால் எனக்குத் தெரியுமா? உடம்புல ஏதோ பெரிய நோய் இருக்குன்னு மட்டும் தெரியுது. அவனுக்கு கொடுக்குறதுக்காக வாங்கி வச்சிருந்த மருந்தை எடுத்து இன்னொருத்தன் தின்னுட்டான்.”
“யாரு? பங்கனா?”
“பிறகு யாரு? சரியான மடையனாச்சே அவன்! வாயிலயும், ஆசனப் பகுதியிலயும் ஓழுகிக்கிட்டே இருக்கு. எல்லாம் முடிஞ்சு, கீழே படுத்து உருண்டுக்கிட்டு இருக்கான்.”
“அங்கே ராதாம்மா இல்லையா?”
“அவள் இருக்கா. அவளுக்கு பைத்தியமே பிடிச்சிடும்னு நினைக்கிறேன்.”
“அவள் என்ன செய்றா?”
“என்னையும் அழைச்சிட்டுப் போக கூடாதான்னு கூப்பாடு போட்டு அழுதுக்கிட்டு இருக்கா.”
லட்சுமிக்குட்டி இடறிய குரலில் சொன்னாள்:
“அம்மா உயிரோட இருந்தப்போ, அப்பாவுக்கு ஒரு கவலையும் இல்லாம இருந்தது.”
“நீ அங்கே போ. நான் டாக்டரை அழைச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.”
“நாத்தனாரே, நீங்க வரலையா?”
“இவ இப்போ அங்கே வந்தால், இங்கே தேநீர் குடிப்பதற்காக வர்றவங்க என்ன செய்வாங்க? நீ அங்கே போ, நான் பின்னாடி வர்றேன்.”
“நான் இந்தப் பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு அங்கே போனால்...”
“அது பிரச்சினை ஆயிடும். பிள்ளைகளை அழைச்சிட்டு போகவேண்டாம். இவங்க இங்கேயே இருக்கட்டும். சங்கரி கொஞ்சம் அரிசி கொடுத்து அனுப்பு. அப்பாவும் ராதாம்மாவும் பட்டினியா இருக்காங்க.”
அரிசியை வாங்கிக்கொண்டு லட்சுமிக்குட்டி வீட்டை நோக்கி நடந்தாள். அச்சுதன் நாயர் டாக்டரை அழைத்து வருவதற்காகச் சென்றான்.
வாந்தியும் மலமும்...! பங்கன் அதில் கிடந்து உருண்டு, உருண்டு தாங்க முடியாத நாற்றம் அங்கு இருந்தது. பெண் டாக்டர் உள்ளே நுழைந்த வேகத்திலேயே, வெளியே வந்தாள். “முடியல... இந்த கெட்ட நாற்றத்தை என்னால சகிச்சிக்க முடியல...” என்றாள் அவள்.
ராஜன் உள்ளே கட்டிலில் படுத்திருந்தான். கட்டிலோடு சேர்ந்து ராஜனை வெளியே கொண்டு வரமுடியுமா என்று அந்தப் பெண் டாக்டர் கேட்டாள். சங்கரன் நாயர் திண்ணையில் போடப்பட்டிருந்த கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார். அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை. ராதாம்மா, தன் தாடையில் கை வைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய முகத்தில் கவலை முழுமையாக ஆக்ரமித்திருந்தது.
டாக்டர் மீண்டும் கேட்டாள்:
“கட்டிலை வெளியே கொண்டுவர முடியுமா?”
அச்சுதன் நாயர் சொன்னான்:
“ராதாம்மா நீயும் வா.”
“எதுக்கு?”
“கட்டிலை வெளியே எடுக்க.”
“எதுக்கு கட்டிலை வெளியே கொண்டு வரணும்?”
“டாக்டர் அவனைக் கொஞ்கம் பார்க்கணும்.”
“அவன் இறந்துட்டான். இனிமேல் அவனை யாரும் பார்க்க வேண்டாம்.”
“இன்னொருத்தன்...?”
“அவனும் இறந்துட்டான்.”
சங்கரன் நாயர் கண்களைத் திறந்தார். சுற்றிலும் கண்களை விரித்துக்கொண்டு பார்த்தவாறு கேட்டார்:
“யாரு? இங்கே யார் வந்திருக்கிறது?”
“நான்தான்...” பெண் டாக்டர் கட்டிலுக்கு அருகில் சென்றாள்.
“அவங்க ரெண்டு பேரும் அவங்க அம்மா பின்னாடி போயிட்டாங்க. ராதாம்மா, லட்சுமிக்குட்டி வந்துட்டுப்போயிட்டாளா?”
“இல்ல... கஞ்சி வைக்கிறாங்க.”
“யாருக்கு?”
“உங்களுக்குத்தான்....”
“எனக்கா? எனக்கு கஞ்சி வேண்டாம். நான் அவள் இருக்குற இடத்துக்குப் போறேன். மகளே, நீ கஞ்சி குடி.”
பெண் டாக்டர் அமைதியாக நின்றிருந்தாள். அச்சுதன் நாயர் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தான். திடீரென்று அவன் கேட்டான்:
“கட்டிலை வெளியே எடுக்கணுமா டாக்டர்?”
“வேண்டாம்.”
புடவைத் தலைப்பால் மூக்கைப் பொத்திக்கொண்டு டாக்டர் உள்ளே வேகமாக ஓடினாள். சிறிது நேரம் கழித்து அவள் வெளியே வந்து சொன்னாள்:
“இறந்துட்டாங்க. ரெண்டு பேரும் இறந்துட்டாங்க.”
சங்கரன் நாயர் மெதுவான குரலில் முணுமுணுத்தார்:
“அவங்க கொடுத்து வச்சவங்க. இறப்பவர்கள் எல்லாருமே கொடுத்து வச்சவங்கதான்... நான் சொல்றது சரிதானா?”
பெண் டாக்டர் அதற்கு பதில் சொன்னாற்:
“பிறப்பவர்களும் கொடுத்து வச்சவங்கதான்.”
“ம்... பிறக்க வேண்டிய இடத்தில் பிறக்க வேண்டிய முறையில் பிறந்தால் கொடுத்து வச்சவர்கள்தான். பிறக்கக் கூடாத இடத்தில் பிறக்கக் கூடாத முறையில் பிறந்தால், பிறப்பது அதிர்ஷ்டக் கேடான ஒன்றுதானே?”
“ஆமா... அப்படி அதிர்ஷ்டம் கெட்டவர்கள் பிறக்காம இருக்குறது மாதிரி பார்த்துக்கணும். சரி... அது இருக்கட்டும். பிணத்தை அடக்கம் செய்ய வேண்டாமா?”
சங்கரன் நாயர் கட்டிலை விட்டு எழ முயற்சித்தார். அச்சுதன் நாயர் தன் தந்தையைத் தடுத்துவிட்டுச் சொன்னான்:
“அப்பா, நீங்க இங்கேயே படுத்திருங்க. பிணத்தை நான் அடக்கம் செய்றேன்.”
“அவங்க அதிர்ஷ்டசாலிங்கடா, அச்சுதா!”
நள்ளிரவு நேரம். எல்லோரும் உறக்கத்தில் இருந்தார்கள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, சங்கரன் நாயர் எழுந்தார். அவர் கேட்டார்:
“யார் அது?”
“நான்தான் ராமு... கதவைத் திறங்க.”
ராதாம்மா விளக்கைப் பற்ற வைத்தாள். சங்கரன் நாயர் கதவைத் திறந்தார். அவர் கேட்டார்:
“உன்னை சிறையில இருந்து விட்டுட்டாங்களாடா?”
“விடல... தப்பி ஓடி வந்துட்டேன்.... எல்லாரையும் கொல்லுறதுக்கு.. கொன்னுட்டு நான் சீக்கிரமா அங்கே போகணும்....” - ராமு, பிசாசைப் போல உரத்த குரலில் கத்தினான்.
சங்கரன் நாயர் இடறிய குரலில் சொன்னார்:
“அப்படின்னா... எங்க எல்லோரையும் கொன்னுட்டு சீக்கிரமா அங்கே போ மகனே. ஆனா, எங்களை எதுக்காக கொல்றேன்றதை முன்கூட்டியே சொல்லிட்டா நல்லா இருக்கும்.”
“எதுக்கா? நீங்க என் அப்பாவா இருக்குறதுனால... புரியுதா?”
“புரியுது மகனே. நீ என்னைக் கொல்லணும். உன் கையால நான் சாகணும். ஆனா, இவளை எதுக்காக கொல்ற?”
“இவ எதுக்காக வாழணும்? இவ இனிமேலும் கஷ்டப்பட வேண்டாம். இவளையும் கொல்லணும்.”
“அப்படின்னா கொல்லு... கொன்னுட்டு சீக்கிரமா அங்கே போ.”
“நான் சொல்ல வேண்டியதை முழுசா சொல்லல. சொல்லி முடிச்சிட்டுக் கொல்றேன். என் சம்மதமே இல்லாமத்தானே என்னைப் பெத்தீங்க? நான் பட்டினி கிடந்துதானே வளர்ந்தேன்? திருடியும் வழிப்பறி செய்தும்...” - ராமுவின் குரல் இடறியது. இடறிய குரலில் அவன் தொடர்ந்து சொன்னான்:
“அடி, உதைகள் வாங்கி வாங்கி என் எலும்புகளெல்லாம் நொறுங்கிப் போச்சு. சிறையில கிடந்தே நான் செத்துப் போவேன். சாகுறதுக்கு முன்னாடி...” - அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
“கொல்லு மகனே, என்னைக் கொல்லு... நான்தான் தவறு செய்தவன்.”- அவர் தன் மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார்.
“முடியாது.... என்னால் முடியாது...” அவன் தன் முகத்தை மூடிக் கொண்டு அடக்க முடியாமல் அழுதான்.
“அவள் ஒன்பது பிள்ளைகளைப் பெத்தாடா. தவறு செய்தவன் நான்தானே? என்னைக் கொல்லு மகனே... கொல்லு...”
“நான் அங்கே போறேன். நான் இனிமேல் வர மாட்டேன். வர முடியாது. என்னால வரமுடியாது...’ - அவன் உரத்த குரலில் அழுதவாறு ஓடினான்.
ராதாம்மா திகைத்துப் போய் நின்றிருந்தாள்.
பொழுது புலர்ந்தது. சங்கரன் நாயர் வாசலில் நின்று கொண்டு சூரியனைப் பார்த்து சொன்னார்.
“இறந்தவங்க எல்லாரும் புண்ணியம் செய்தவங்க இறக்காதவங்க எல்லாரும் பாவம் செய்தவங்க.”
அதைத் காதில் வாங்கியவாறு வந்த ஜோதிடர் நாராயணப்பிள்ளை சொன்னான்:
“பிறப்பதற்கும் இறப்பதற்கும் கடவுள் நேரத்தை முடிவு செய்து வைத்திருக்காரு. அந்த நேரத்துல பிறப்பாங்க. அந்த நேரத்துல இறப்பாங்க.”
சங்கரன் நாயர் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. நாராயணப் பிள்ளை தொடர்ந்து சொன்னான்.
“பிறக்குறப்போ சந்தோஷப்பட வேண்டாம். இறக்குறப்போ கவலைப்பட வேண்டாம்.”
சங்கரன் நாயர் அதையும் காதில் வாங்கிக் கொண்ட மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. நாராயணப் பிள்ளை வாசலில் நின்று கொண்டு தொடர்ந்தான்.
“பிறப்பையும் இறப்பையும் மருந்து மூலம் தடுக்கலாம்னு சிலர் சொல்றாங்க. அவங்க கடவுளுக்கு எதிரானவங்க. அப்படிச் சொல்றவங்க, இந்த வீட்டுக்குள்ளேயும் நுழைஞ்சிருக்காங்க. மிகவும் கவனமா இருக்கணும். வீட்டுக்குள்ளே திருடன் நுழைஞ்சிருக்கான்...”
சங்கரன் நாயர் கோபத்துடன் சொன்னார்:
“காலை நேரத்துல வந்து நீ என்ன சொல்றே? வீட்டுக்குள்ளே திருடன் நுழைஞ்சிருக்கான்னா, நீ அவனைப் பிடிச்சு போலீஸ்கிட்ட ஒப்படை...”
“நான் சொன்னதோட அர்த்தம் உங்களுக்குப் புரியல... அப்படித்தானே? உங்க மூத்த மகன் அச்சுதன் நாயர் ஒரு திருடன். அவனோட பொண்டாட்டி சங்கரியும் ஒரு திருடி... என் பொண்டாட்டி லட்சுமிக்குட்டியும் திருடியா ஆயிட்டா.”
“நீ இங்கேயிருந்து போறியா இல்லியா?”
“இந்தக் குடும்பத்துக்கு அழிவு வரப்போகுது.”
“நாங்க நாசமாப் போறோம். நீ ஒண்ணும் எங்களைக் காப்பாற்ற வேண்டாம்.”
அச்சுதன் நாயரும், கிருஷ்ணன் நாயரும், ஸ்ரீதரன் பிள்ளையும் சேர்ந்து வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். சங்கரன் நாயர் உரத்த குரலில் கத்தினார்.
“வந்துட்டாயாடா? நீ திரும்பவும் வர்றியா?”
கிருஷ்ணன் நாயர் அமைதியான குரலில் சொன்னான்:
“மாமா, நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் இப்படி கோபம் வந்து குதிக்கிறீங்க? பங்கனும் ராஜனும் இறந்துட்டாங்கன்னு கேள்விப் பட்டேன். வந்தேன்.”
“ஆமாடா... ஆமா... அந்தக் காரணத்தை சொல்லிக்கிட்டு நீ ஏன் வந்திருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும்டா...” அவர் ஸ்ரீதரன் பிள்ளையின் முகத்தைப் பார்த்துக் கோபத்துடன் கத்தினார்.
“நீயும் இங்கே வந்திருக்கியாடா! என் மகளைக் கடத்திட்டுப் போனவன்தானே நீ?”
தன் தந்தைக்கு முன்னால் வரத் தயங்கி, மரத்திற்குப் பின்னால் நின்றிருந்த சுமதி வாசலை நோக்கி வேகமாக வந்தாள். அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொன்னாள்.
“அப்பா, என்னால இதைப் பொறுத்துக்கிட்டு இருக்கமுடியாது. என் கணவரை அவமானப்படுத்தினால்...”
“ப்பூ! யார்டி உன் கணவன்? கண்டவன்கூட - ஓடினவள் தானேடி நீ?”
“நான் என் கணவர்கூடத்தான் போனேன்.”
“நீ ஏதுவும் போசாம இருடி சுமதி. எல்லா விஷயத்தையும் நான் சரி பண்ணுறேன்” - அச்சுதன் நாயர் சூழ்நிலையைச் சரி செய்ய முயன்றான்.
“அச்சுதா, நீ ஏன்டா சரி பண்ணப் போறே. தங்கை கண்டவன்கூட ஓடினதை எதுக்கடா சரி செய்யணும்?”
அச்சுதன் நாயர் உறுதியான குரலில் சொன்னான்:
“ராதாம்மா, சுமதி இரண்டு பேர்களோட கல்யாணமும் இப்போ இங்கே நடக்கப் போகுது.”
“யார்டா கல்யாணத்தைப் பண்ணி வைக்கப் போறது?”
“நான்தான் பண்ணி வைக்கப் போறேன். உங்களோட மூத்த மகனான நான் என் தங்கைகளின் கல்யாணத்தை நடத்தப் போறேன்.”
“இப்பவா? என் வீட்டில் வைத்தா? நடக்காதுடா அச்சுதா, நடக்காது. அப்படி ஒண்ணு நடக்குறதுக்கு முன்னாடி, உன்னைக் கொன்னுட்டு நானும் செத்துப் போவேன்.”
வெளியிலிருந்து பெண் டாக்டர் சிரித்துக்கொண்டே வந்தாள். அவள் கேட்டாள்:
“என்ன சங்கரன் நாயர், இங்கே சண்டை?”
“என் வீட்டில் எனக்கு அதிகாரமா, இல்லாட்டி என் மகனுக்கா?”
“அதிகாரம் யாருக்குன்னு சண்டையா?”
“அதாவது... என் மூத்த மகன், என் இளைய மகள்கள் இரண்டு பேரை நாசம் செய்யப் போறான். அதை நான் ஒத்துக்க மாட்டேன்.”
“எப்படி நாசம் செய்யப் போறார்?”
“நான் சொல்றேன்...” - நாராயணப் பிள்ளை சண்டைக்குள் புகுந்தான்.
“ராதாம்மாவிற்கும் சுமதிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க அச்சுதன் நாயர் முடிவெடுத்திருக்கிறாரு.”
சங்கரன் நாயர் நாராயண பிள்ளையை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னார்:
“என் மூத்த மகளைத் திருமணம் செய்தவன் இந்த ஆளு. அவளுக்கு நாலு பிள்ளைகள். வயித்துல ஒண்ணு இருக்கு. அதோ நிற்கிறவன் என் மூத்த மகன். அவனுக்கு ஐந்து பிள்ளைகள். இப்படிப் பெத்துப் பெத்தே எல்லாரும் அழிஞ்சிட்டாங்க! இனி என் இளைய மகள்கள் நாசமாப் போக நான் சம்மதிக்கவே மாட்டேன்” - கோபத்துடன் குதித்த அவர் அச்சுதன் நாயரை நெருங்கினார்.
“சம்மதிக்க மாட்டேன்டா... என் மகள்கள் நாசமாக நான் சம்மதிக்கவே மாட்டேன்.”
பெண் டாக்டர் அமைதியான குரலில் சொன்னாள்:
“சங்கரன் நாயர், திருமணம் செய்றது நாசமாப் போறதுக்கு இல்ல.”
“பிறகு எதுக்கு? திருமணம் நடந்தால், பிள்ளைகள் பிறக்கும்ல?
“பிள்ளைகள் பெறணும்னு கட்டாயம் இல்ல. வேணும்னா, பிள்ளை பெத்துக்கலாம். வேண்டாம்னா பெத்துக்காம இருக்கலாம்.”
“அது முடியுமா? பிள்ளை பெறுவதும் பெறாம இருக்குறதும் கடவுள் தீர்மானிக்கிற விஷயமில்லையா?”
“இல்ல... கொஞ்சம் மனிதர்கள் தீர்மானிக்கிற மாதிரியும் நடக்கும்.”
நாராயணப் பிள்ளை வெற்றி பெற்று விட்ட எண்ணத்துடன் சொன்னான்:
“வீட்டுக்குள்ளே திருடன் நுழைஞ்சாச்சுன்னு நான் சொன்னேன்ல! இதோ திருட்டுத்தனங்கள் வெளியே வருது!”
“நீ கொஞ்சம் பேசாம இருடா!” - அச்சுதன் நாயருக்குக் கோபம் வந்தது.
சங்கரன் நாயர் பெண் டாக்டருக்கு அருகில் சென்று மெதுவான குரலில் கேட்டார்:
“அப்படின்னா... பிள்ளைகள் பெறாம இருக்கமுடியுமா?”
“பிள்ளை பெறாம இருக்கமுடியுமா?” அதற்கு சில மருந்துகளும் சிகிச்சைகளும் இருக்கு.”
“இதெல்லாம் டாக்டர்கள் கையிலேயே இருக்கா?”
“இருக்கு. பலரையும் நான் பிள்ளை பெறாம செய்திருக்கேன். உங்க மூத்த மகனோட மனைவி இனிமேல் பிள்ளை பெறமாட்டாங்க. உங்களோட மூத்த மகளும் இனிமேல் பிள்ளை பெறமாட்டாங்க.”
“வீட்டிற்குள் திருடன்! கவனமா இருக்கணும். எல்லாரும் கவனமா இருக்கணும்!”- நாராயணப் பிள்ளை உரத்த குரலில் சொன்னான்.
“நீ கொஞ்சம் பேசாம இருடா!” - சங்கரன் நாயர் கோபத்துடன் சொன்னார். அவர் மீண்டும் பெண் டாக்டரிடம் கேட்டார்:
“அப்படின்னா பிள்ளை பெறாம இருக்க மருந்து, மந்திரம் எல்லாம் இருக்கா?”
“மந்திரம் இல்ல... மருந்து இருக்கு... பிறகு... ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்துக்கணும்.”
“அப்படியா சொல்றீங்க?”
“ஆமா... அப்படித்தான்.”
“அப்படின்னா... ராதாம்மாவுக்கும், சுமதிக்கும் திருமணம் செய்து வைக்க நான் முழுமையா சம்மதிக்கிறேன்.”
“அப்படின்னா இப்பவே... இங்கேயே திருமணத்தை நடத்தட்டுமா, அப்பா?”
“நடத்திக்கோ...”