Logo

அழுக்குப் புடவை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6674
azhukku pudavai

ந்தித் திரைப்பட இயக்குனர் ராஜேந்தர்சிங் பேடி உருது மொழியில் எழுதிய ‘ஏக் சாதர் மைலி ஸீ’ என்ற புதினத்தின் தமிழாக்கம் இது. பஞ்சாப்பின் கிராமத்து மக்களுடைய வாழ்க்கையை - குறிப்பாக சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களின் சமூக வாழ்க்கையை இந்த நூல் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. இந்த நூல் இந்தியாவின் பிற மொழிகளிலும், ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், சைனீஸ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவின் பாரீஸ் என்று அழைக்கப்பட்ட லாகூர் நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், பஞ்சாப்பின் கிராமப்புற மக்களின் வாழ்க்கைமீது மிகவும் ஈடுபாடும், நெருக்கமும் கொண்டவர் ராஜேந்தர்சிங் பேடி. இந்தியா இரண்டாகப் பிளவுபட்டபோது, ராஜேந்தர்சிங்கிற்கும் தன்னுடைய பிறந்த நாடு இல்லாமல் போனது. அதன் விளைவாகப் பிழைப்பு தேடி வந்த அவர், மும்பை திரைப்பட உலகில் நுழைந்து எழுத ஆரம்பித்தார். இன்றைய பஞ்சாப்பில் இந்த நூலில் காட்டப்பட்டிருக்கும் பல விஷயங்கள் மாறிவிட்டன. பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் முன்பு இருந்த அன்பும் உதவும் குணமும் இரக்கமும் இப்போது பார்க்க முடியாத விஷயங்களாகி விட்டன. அதற்குப் பதிலாக இருப்பவை பயமும் நம்பிக்கையற்ற நிலையும் பகைமையும்தான்...

ராணு என்னும் ஏழைப் பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் மூலம் பஞ்சாப்பின் கிராமத்து வாழ்க்கையை ஓரளவுக்கு நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய கிராமத்தின் ‘மாதிரிப் பெண்’ணான ராணுவின் வாழ்க்கையைக் கொண்ட இந்த நூலை மொழிபெயர்த்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அந்தப் பெருமிதத்துடன் இந்த நூலைத் தமிழ் வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அன்புடன்,

சுரா


ன்று மறையப் போகும் சூரியன் எப்போதும் இருப்பதை விட இரத்த நிறத்தில் இருந்தது. வானத்தின் மூலையில் ஏதோ ஒரு நிரபராதி கொலை செய்யப்பட்டிருக்கலாம். அவனுடைய சிவப்புக் குருதியில் குளித்த சூரியனின் கதிர்கள் வாசலில் நின்றிருந்த வேப்பமரத்தின் இலைகள் வழியாக தலோக்கா சிங்கின் வீட்டின் மீது விழுந்து கொண்டிருந்தன. சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் இருந்த மண்ணாலான சுவருக்கு அருகில், குப்பைகள் போடக்கூடிய இடத்தில் நின்றுகொண்டு ‘டப்பு’ தலையை உயர்த்தி ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அன்று மதியம் கிராமத்து அதிகாரிகள், அலைந்து திரிந்து கொண்டிருந்த நாய்களை விஷம் கொடுத்துக் கொல்வதற்காக வந்திருந்தாலும், டப்பு எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித்துவிட்டது. அது தலோக்காசிங்கின் வாசலிலிருந்த புல்தொட்டிமீது படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. கிராமத்தில் மனித நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்பது தெரிந்ததும் டப்பு வெளியே வந்தது. உடம்பை நெளிந்துக் கொட்டாவி விட்ட அது வெளியே ஓடியது.

இதற்கிடையில் டப்புவின் காதலியான ‘புடி’ இறந்து விறைத்துப் போயிருந்தது. அவள் அருகில் சென்று தன்னுடைய காதலியை முகர்ந்து பார்த்துவிட்டு எதுவும் நடக்கவில்லை என்பது மாதிரி அந்த இடத்தைவிட்டு ஓடினான்.

தலோக்காசிங்கின் மனைவி ராணுவும் பக்கத்து வீட்டுக்காரி சன்னுவும் ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சன்னு தன்னுடைய சப்பையான மூக்கிற்கு மேல் சுண்டு விரலை வைத்தாள். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள்: “அய்யய்யோ.... இந்த ஆண் இனம்.... எல்லாம் ஒரே மாதிரியா இருப்பாங்க?” ராணுவின் கண்கள் துடித்தன. அவள் தன் கண்களைத் துடைத்துவிட்டு, புன்னகைத்தவாறு சொன்னாள்: “இல்ல... உங்க டப்பு அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே!”

அதற்குப் பதில் சொன்ன சன்னுவின் வார்த்தைகளைக் கேட்டு இருவரும் வெட்கத்தில் மூழ்கினார்கள். ராணு தன்னடைய வீட்டிற்கு வந்து வேலைகளில் மூழ்கினாள். சாயங்காலம் ஆனதும் அவள் குப்பைகளைக் கொட்டுவதற்காக வெளியே வந்தபோது பகலில் நடைபெற்ற சம்பவங்களை அவள் முழுமையாக மறந்து விட்டிருந்தாள். குப்பைகளை வெளியே எறிந்த ராணு துடைப்பத்தை வைப்பதற்காகப் போனாள். டப்பு அப்போதும் அங்கே இருந்தவாறு ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அவள் நாயைத் திட்டியவாறு அதை அடித்துவிரட்ட முயற்சித்தாள்.

“போ... போ... தூரப்போ.... சவமே! இங்கே அழறதுக்கு என்ன இருக்கு? சௌதரிமார்களின் வீட்டுக்குப் போய் அழு. அங்கேதான் பணத்தைச் சேர்த்து வச்சிருக்குறதும், ஆண்களின் கூட்டம் உள்ளதும்...”

ராணுவிற்கு சௌதரி மெஹர்பான்தாஸ் மீது ஏகப்பட்ட வெறுப்பு இருந்தது. அதற்குக் காரணம் - அவன்தான் அவளுடைய கணவனான தலோக்காசிங்கை கெட்டவனாக ஆக்கியவன். அதற்குப் பிறகு கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்கள். அவர்களுக்குத் தங்களுடைய கணவர்களைப் பற்றி எந்தவொரு விவரமும் தெரியாது. அதே நேரத்தில் மற்றவர்களின் கணவன்மார்களைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும். நவாப், குருதாஸ் ஆகிய குதிரை வண்டிக்காரர்களின் மனைவிமார்களிடமிருந்து ராணு தன்னுடைய கணவனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டபோது, அவள் தாங்க முடியாத கோபத்தில் கொதித்தாள். அந்த நெருப்பிற்கு ராணுவை கரிக்கட்டையாக ஆக்க முடிந்ததே தவிர, சாம்பலாக ஆக்க முடியவில்லை. உள்ளுக்குள் மிகவும் பக்குவப்பட்ட ஒருத்தியாக இருந்தாள் அவள்!

தலோக்கா வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன் ராணு அவனுடன் சண்டை போடுவாள். இறுதியில் தன் கணவனிடமிருந்து அடியோ, உதையோ கிடைக்கும்போது, அவள் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பிப்பாள் : ‘ஒரு வகையில் பார்த்தால் என் கணவன் கோபம் முழுவதையும் வெளியே காட்டிட்டு வர்றது நல்லதுதான்... நான் நிம்மதியா இருக்கலாமே!’

அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ராணு தலோக்காசிங்கை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அதனால் அவள் பிடிவாதமாக தன்னுடைய கணவனை தன்னை நோக்கித் திருப்ப தீவிரமாக முயற்சி செய்வாள். அப்படி முயற்சி செய்வதற்குக் காரணம் என்ன? மேற்பகுதி ஒடிந்த ஆலமரத்திற்குக் கீழே ஒரு சன்னியாசி உட்கார்ந்திருப்பார். அவர் இரும்பாலான கோவணத்தை அணிந்திருப்பார். பெண் என்றால் அவள் எப்படிப்பட்டவள் என்பது அந்தச் சன்னியாசிக்கு இதுவரை தெரியாது. அந்தச் சன்னியாசியைப் பற்றி ஊருக்குள் இப்படிப்பட்ட கதைகள்தான் உலாவிக்கொண்டிருந்தன. அதனால் அவருக்கு முன்னால் எப்போது பார்த்தாலும் பெண்களின் கூட்டமாகவே இருக்கும். சிலர் குழந்தை பெறுவதற்கான வரம்கேட்டு வந்து நிற்பார்கள். வேறு சிலர் நோய் குணமாவதற்கான பரிகாரம் கேட்டு வந்து நிற்பார்கள். இது ஒரு புறமிருக்க, பெரும்பாலான பெண்கள் கணவன்மார்கள் தங்கள் மீது தீவிர ஈடுபாடு கொள்ளுமாறு ஈர்ப்பதற்கு ஏதாவது ஒரு மூலிகை தந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு அங்கு வருவார்கள். சில மாதங்களுக்கு முன்னால் அந்தச் சன்னியாசி பூரண்தேயிக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். அதை வைத்து அவள் கர்ப்பிணி ஆகிவிட்டாள் என்பது மட்டுமல்ல; அவளுடைய கணவன் க்யான்சந்த் நிழலைப் போல அவளுக்குப் பின்னால் சதாநேரமும் சுற்றிக்கொண்டிருந்தான்.

தன்னுடைய கணவனின் ஈவு இரக்கமற்ற தொந்தரவுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ராணுவும் பாபா ஹரிதாஸிடமிருந்து திருநீறு மந்திரித்து தன் கணவனுக்கு கொடுத்த பிறகு அவனை தன்னிடம் வர அவள் அனுமதிக்கக் கூடாது. ஆமாம்! இறுதியில் கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கேட்டால்... அதற்குப் பிறகு... அதற்குச் சம்மதிக்கலாம். ஆனால்,  தலோக்கா இரண்டு வாரங்கள் பசும்பால் வேண்டுமென்றோ அதைக் குடிக்கவோ செய்யவில்லை.

தலோக்கா இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்டால் ஒரு நாள் சௌதரி மெஹர்பான்தாஸிடமிருந்து ஒரு புட்டி சாராயம் கொண்டு வருவான். உலகத்திலுள்ள மற்ற எல்லாவித தவறுகளையும் ராணுவால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் மது அருந்தும் விஷயத்தை மட்டும் அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. மதுவைப் போல மோசமான பொருள் இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை. ஆண் தன்னுடைய எல்லாவற்றையும் பிற பெண்களிடம் இழந்துவிட்டான் என்றுகூட வைத்துக்கொள்வோம். அப்போதுகூட தன்னுடைய சொந்த மனைவிக்கு என்று கொஞ்சமாவது மீதம் வைத்திருப்பான். ஆனால், மது.... அய்யய்யோ! அதன் கெட்ட வாசனை காரணமாக முகத்தை அருகில் கொண்டு போகக்கூட முடியாது. அவளுக்கென்று எதுவும் மீதமிருக்காது. எல்லாமே இழக்கப்பட்டு விட்டதைப்போல் தோன்றும்.

தலோக்காசிங் பகல் முழுவதும் நவாப், இஸ்மாயில், குருதாஸ் ஆகியோருடன் டாங்கா (குதிரை வண்டி) ஓட்டிக்கொண்டிருப்பான். சாயங்காலம் ஆகிவிட்டால் நஸீபன்வாலா ஸ்டாண்டில் டாங்காவுடன் அவன் காத்திருப்பான். யாராவது வழி தவறிப்போன வேற்று ஊர் பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால், நல்ல உணவு, சூடும் சுகமும் உள்ள படுக்கை என்று வாக்குறுதிகளைக் கொடுத்து அவளை சௌதரி மெஹர்தாஸின் தர்மசாலைக்குக் கொண்டு வந்துவிடுவான்.


தலோக்கா இப்படிப்பட்ட காரியங்களைச் செய்தது சௌதரி மெஹர்பான்தாஸுக்கும் அவனுடைய சகோதரனான கணஷ்யாமிற்கம் மட்டும் தான் அதைச் செய்ததற்காக அவனுக்குக் கிடைத்த வெகுமதி என்ன? எப்போதாவது கிடைக்கும் ஒரு புட்டி சாராயம்!

‘கோட்லா’ ஒரு புண்ணியம் இடம். சௌதரியின் வீட்டிற்கு அருகில் ஒரு தேவியின் ஆலயம் இருக்கிறது. ஒரு காலத்தில் தேவி, பைரவனின் பிடியிலிருந்து விடுபட்டு அந்தக் கிராமத்தில் அபயம் தேடினாள். அதற்குப் பிறகு அவள் அங்கிருந்து ஓடி நேராக ஸ்யால்காட் வழியாக ஜம்முவைக் கடந்து இமயமலையில் மறைந்தாள். இப்போதுகூட தெளிவாக இருக்கும் காலைப் பொழுதில் கோட்லாவிலிருந்து வடமேற்குத் திசையைப் பார்த்தால் விஷ்ணுதேவியின் மலை தெரியும்.

தலோக்கா இன்று சௌதரி மெஹர்பான்தாஸின் தர்மசாலையில் கொண்டு போய்ச் சேர்த்த இளம்பெண்ணுக்கு அதிகபட்சம் பன்னிரெண்டோ.... பதின்மூன்றோ வயதுதான் இருக்கும். பைரவனின் தலையை வெட்டி, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வதற்கு விஷ்ணுதேவியிடம் திரிசூலம் இருந்தது. ஆனால், கள்ளங்கபடமில்லாத அந்தப் புனித பயணத்திற்கு வந்த இளம்பெண்ணிடம் பைரவனுக்கு முன்னால் கைகூப்பி நிற்பதற்கு அழகான இரண்டு கைகள் மட்டுமே இருந்தன. தவிர, அவனை எதிர்த்து நிற்பதற்கான சக்தியெல்லாம் அவளிடம் இல்லை. காய்ந்த மிளகாயின் கத்தியிடமிருந்து தப்ப முடியாது என்பதென்னவோ உண்மை. அதனால்தானோ என்னவோ அன்றைய சூரியன் கோபத்தால் தன் முகத்தைச் சிவப்பாக்கிக்கொண்டு வேகவேகமாக தன்னுடைய ரதத்தைச் செலுத்தியவாறு, அருகிலிருந்த பருத்தி வயலுக்குப் பின்னால் போய் மறைந்து, சந்திரனுக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்தான்.

தர்மசாலைக்கு அருகிலிருக்கும் ஒப்பந்தக்காரரின் வீடு சமீபத்தில்தான் கட்டப்பட்டது. செங்கல்களுக்கு நடுவில் பூசப்பட்டிருந்த சாந்து அந்த இருட்டு வேளையிலும் சிரித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. இருட்டு கோட்லாவிலிருந்த எல்லா மரங்களையும் மூடி விட்டிருந்ததது. நதிக்கு அருகில் பாபா ஹரிதாஸின் பர்ணசாலையின் மேற்கூரையாக இருந்த ஆலமரத்தில் இருந்த இலைகள் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தன.

தலோக்கா வேலை செய்த கிராமத்தில் ஒரு கடையும் தானியங்களைப் பொடியாக்கும் ஒரு அரவை மில்லும் மட்டுமே இருந்தன. அந்த மில்லுக்கு முன்னாலிருந்த ஒரே காய்கறி கடை தேலம் ராயணி என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. தலோக்கா அந்த வழியாகச் செல்லும்போது, கடைக்காரி மட்டுமே இருந்தாள். அவளைப் பார்த்து அவன் கேட்டான்:

“ஏய்... தேலம்... என்ன சொல்ற?” கிராமத்திலுள்ள எல்லோரும் ‘அக்கா’ என்று அழைக்கும் தேலம் தலோக்காவை திரும்பிக்கூட பார்க்காமலே சொன்னாள்: “எல்லாம் உங்க அம்மா செய்த குற்றம், தலோக்கா! நீங்க பிறக்குறதை அவங்க தடை செய்திருக்கணும்...”

அதைக் கேட்டு தலோக்கா சிரித்துக்கொண்டே கடந்து போனான். அவன் வீட்டை அடைந்தபோது, இரட்டைக் குழந்தைகள் இரண்டும் வேப்ப மரத்திற்குக் கீழே கரியால் கட்டம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் திருட்டு விளையாட்டு விளையாடினான். அத்துடன் இன்னொருவன் மகாபாரதத்தை ஆரம்பித்தான். அவர்கள் அர்த்தம் தெரியாமல் வயதானவர்கள் பயன்படுத்தும் கிராமத்து மொழியில் ஒருவரையொருவர் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தார்கள். தங்களின் தந்தையின் காலடிச் சத்தத்தைக் கேட்டதும் அவர்கள் இருவரும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு தீபத்தின் முன்னால் போய் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினார்கள்.

தலோக்கா சொன்னான்:

“படிங்க... படிங்க... திருட்டுப் பயல்களே! எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும்...” - அப்போது இளைய மகன் யாரிடம் என்றில்லாமல் உரத்த குரலில் சொன்னான்: “கொஞ்சம் பேசாம இருங்க...”

தன்னுடைய பிள்ளைகளின் படிப்பை சிகிச்சையற்ற ஒரு நோயாக மனதில் எண்ணிக்கொண்டு தலோக்கா அமைதியாக இருந்தான். தலோக்காவின் இரட்டைப் பிள்ளைகளின் பெயர்கள் ‘பந்தா’ என்றும் ‘ஸந்தா’ என்றும் இருந்தன. அவர்களைவிட மூத்த ஒரு பெண்ணும் இருந்தாள். அழைப்பதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்பதற்காக தலோக்காவும் ராணுவும் அவளுக்கு ‘படி’ என்று பெயரிட்டார்கள். வீட்டு வேலைகளில் தன்னுடைய தாய்க்கு உதவியாக இருப்பதுதான் படியின் வேலை. ஓய்வு நேரம் கிடைத்தால் ஒரு வயது கொண்ட தன்னுடைய தம்பியைக் கையில் தூக்கிக் கொண்டு அவள் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவாள். தன்னுடைய வீடும் பக்கத்து வீடுகளும் மட்டுமே கள்ளங்கபடமற்ற அந்தச் சிறுமியின் உலகமாக இருந்தது. எனினும், அந்த வீட்டில் வேறொரு மனிதன் படுவேகமாக வளர்ந்துகொண்டிருந்தான். மங்கல் - தலோக்காசிங்கின் தம்பி - ராணுவின் கணவனுடைய சகோதரன் - படியின் சித்தப்பா.

வேலை எதுவும் இல்லாத, கெட்ட பழக்கங்களை ஏராளமாகக் கொண்ட மங்கல் பகல் நேரம் முழுவதும் மற்றவர்களுடன் சண்டை போட்டுக்கொண்டும், வசைகள் பாடிக்கொண்டும் இருந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வந்தான். அவன் உணவு கேட்பதைப் பார்க்கும் போது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் அவனை நம்பித்தான் இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும தோன்றும். அண்ணனுடைய மனைவியான ராணுவின் மனதில் கோபம் உண்டானாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அன்பு இருப்பதைப் போல் காட்டிக் கொண்டு அவள் கூறுவாள்: “இந்தாங்க சாப்பாடு. உங்களுக்காகத்தானே இது எல்லாத்தையும் சமையல் பண்ணி வச்சிருக்குறதே!”

மங்கலுக்கு ஐந்தோ ஆறோ வயது இருக்கும்போதுதான் தலோக்கா ராணுவைத் திருமணம் செய்தான். அவளுடைய பெற்றோர்கள் மிகவும் வறுமையில் சிக்கியவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் தங்களின் கிழிந்த துணியால் மூடப்பட்டிருந்த மகளுக்கு ராணி என்று பெயரிட்டார்கள். ராணு திருமண வயதை அடைந்தபோது அவளுடைய தாயும் தந்தையும் சாப்பாடும் ஆடைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலோக்காசிங்கின் கைகளில் அவளை ஒப்படைத்தார்கள். ராணுவிற்குத் திருமணமான சில நாட்களிலேயே அவளுடைய தாயும் தந்தையும் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்கள்.

தன் பெற்றோர்கள் இந்த உலகைவிட்டுச் சென்றது ராணுவை மிகவும் வேதனைப்பட வைத்தது. காரணம் அவள் பிறந்து வளர்ந்த வீட்டின் நிலைமையும், திருமணமாகி நுழைந்த வீட்டின் நிலைமையும் மிகவும் மோசமாகியருந்ததே. பெண்கள், கீழே விழுந்த பிறகு பின்னால் திரும்பிப் பார்க்கிறார்கள். அப்படித் திரும்பிப் பார்க்காத அவளுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையே தெரிந்துகொள்ள முடியாது.

ராணு ஒரு மனைவியாக கோட்லாவிற்கு வந்து சேர்ந்ததிலிருந்து தன்னுடைய மாமியார் இடத்திற்கு ஐந்தானேயும், தாய்-தந்தையின் இடத்திற்கு ஹுஸூர் சிங்கும் கிடைத்தார்கள். கணவனின் சகோதரனான மங்கல் அந்தச் சமயத்தில் குழந்தையாக இருந்தான். ராணு தன்னுடைய மகளுக்கு பால் தரும்போது மங்கலும் பால் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பான்.

ஒருநாள் ராணு மங்கலை அழைத்து மடியில் உட்கார வைத்து தன்னுடைய மார்பின் காம்புப் பகுதியை எடுத்து அவனுடைய வாய்க்குள் வைக்க முயன்றாள்.


ராணுவின் நிர்வாணமான மார்புப் பகுதியைப் பார்த்து வெட்கப்பட்ட மங்கல் அப்போதே எழுந்து ஓடிவிட்டான். உலகத்தவரின் பார்வையில் அவன் ராணுவின் கணவனின் சகோதரனாக இருந்தாலும், ராணுவின் பார்வையில் அவன் அவளுடைய மூத்த மகனாகத்தான் இருந்தான். மங்கலை வளர்த்ததே ராணு தான். அவனும் ராணுவைத் தன்னுடைய சொந்த அன்னையாகத்தான் நினைத்தான். இல்லாவிட்டால் எதற்கு மங்கல் தன்னுடைய சொந்தத் தாயை ‘பெரியம்மா’ என்று அழைக்க வேண்டும்? சில நேரங்களில் ராணு மங்கலை திட்டுவதற்கும் அடிப்பதற்கும்கூட காரணம் அதுதான்.

எனினும், இப்போது சில வருடங்களாக எல்லாம் மாறிப்போய் விட்டது. ராணுவின் குழந்தைகள் வளர மட்டுமல்ல; மங்கல் அவர்களை எதிர்க்க ஆரம்பித்தான். கணவனான தலோக்காசிங் மது அருந்திவிட்டு வருவதும், ஐந்தான் மாமியார் குணத்தைக் காட்டுவதும் நடந்து கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து ராணு வாழ்க்கையில் அமைதியை இழக்கத் தொடங்கினாள். குடும்பத்தின் வருமானம் குறைந்ததுதான் இதற்கெல்லாம் காரணம்.

தலோக்கா வாரத்திற்கு மூன்று, நான்கு நாட்கள் வேலைக்கே போவதில்லை. ஹுஸூர் சிங்கின் கண்களுக்குப் பார்வை சக்தி குறைந்தது. கட்டிலிலேயே அவன் எப்போதும் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய காதுகளால் எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்தான். ஹுஸூர் சிங்கின் கண்கள் காலையில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் புறாக்களின் சிறகுகளைப்போல துடித்துக்கொண்டிருக்கும்.

ஒரு விடுமுறை நாளன்று சாயங்கால நேரத்தில் தலோக்கா ராணுவிற்கு அருகில் வந்து தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு தக்காளியை எடுத்தான். அதை அவளிடம் நீட்டியவாறு அவன் சொன்னான்: “இதோடு சேர்த்து கொஞ்சம் வெங்காயத்தை அறுத்துப் போட்டு ஒரு கிண்ணத்துல வச்சு கொண்டு வா!”

ராணு காய்கறியை அப்போதுதான் வேகவைத்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த கரண்டியை மண் சட்டியில் நுழைத்த அவள் எழுந்தாள்.

“இன்னைக்கும் அந்த நாசம் பிடிச்சதைக் கொண்டு வந்தாச்சா?” தலோக்கா வேண்டுமென்றே கனிவாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்: “தினமும் அதைக் கொண்டு வரவில்லையே, ராணு?”

“தினமும் கொண்டு வந்தாலும் சரி; இல்லாட்டியும் சரி... மது அருந்த நான் விடமாட்டேன். புட்டி எங்கே இருக்கு?” ராணு கோபக் குரலில் தொடர்ந்தான்: “அதுல என்கிட்ட இல்லாதது என்ன இருக்குன்னு நான் பார்க்குறேன்.”

ராணு எங்கே பெரிய ஆர்ப்பாட்டத்தை உண்டாக்கிவிடுவாளோ என்று தலோக்கா பயந்தான். ஆனால் அவள் அதைச் செய்தாள்.

தலோக்கா பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான்: “அடியே நாயே! நான் உன்கிட்ட நல்ல அன்புடன் பேசிக்கிட்டு இருக்கேன். ஆனா நீ கடிவாளம் இல்லாத குதிரைமேல உட்கார்ந்து சவாரி பண்ணிக்கிட்டு இருக்கே”

“ஆமா... உண்மைதான். நீங்க மட்டும்தான் குதிரைமேல உட்கார்ந்து சவாரி செய்ய முடியுமா? வேற யாருக்கும் முடியாதா என்ன? இந்த விஷயத்துல ஒரு முடிவு கண்டு பிடிச்சிட்டுத்தான் அடங்குவேன். ஒண்ணு இந்த வீட்டுல இந்தப் புட்டி இருக்கணும். இல்லாட்டி நான் இருக்கணும். ரெண்டும் ஒரே நேரத்துல இருக்க முடியாது.”

ராணு சாராய புட்டியை எடுப்பதற்காக அறைக்குள் வேகமாக ஓடினாள். தலோக்காவின் முகபாவம் மாறியது. அவன் ராணுவின் தலைமுடியை இறுகப் பற்றினான். ஒரே இழுப்பில் அவள் தரையில் போய் விழுந்தாள். விளக்கின் திரி அணையப் போவது மாதிரி இருந்தது. பின்னர் பிரகாசமாக எரிந்தது. வேப்பமரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் பறந்தோடின. டப்பு திடுக்கிட்டு எழுந்து எதுவும் தெரியாமல் குரைக்கத் தொடங்கியது. “அப்பா... அப்பா...” மூத்த மகள் ‘படி’ உரத்த குரலில் அழுதாள். பந்தாவும், ஸந்தாவும் பயந்து போய் மூலையில் ஒளிந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவன் தக்க சந்தர்ப்பம் பார்த்து வெளியே ஓடினான். இளைய குழந்தை “அம்மா... அம்மா...” என்று அழைத்து அழுவதற்குப் பதிலா பதைபதைத்துக் கொண்டிருந்தது. “ஓ... ஓ...” என்று அது அழ ஆரம்பித்தது. ஹுஸூர் சிங் கட்டிலைவிட்டு எழுந்து வாய்க்கு வந்தபடி திட்டியவாறு தட்டுத்தடுமாறி வெளியே வந்தான். கண்களுக்கு பார்வை சக்தி இல்லாததால் அவன் கால் தடுமாறி அடுப்பின்மீது விழுந்தான்.

முதல் பலப்போட்டியில் ராணு வெற்றி பெற்றாள். அவள் தலோக்காவின் கையில் தன் பற்களைப் பதித்தாள். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் கத்திய தலோக்கா ராணுவின் தலைமுடியைப் பிடித்து சுவரோடு சேர்த்து மோதினான். தொடர்ந்து அவன் தன்னுடைய குதிரையிடம்கூட பயன்படுத்தியிராத வார்த்தைகளைக் கொண்டு அவளை வாய்க்கு வந்தபடி திட்டினான்.

“அய்யோ! அய்யோ! என் அம்மாவைக் கொன்னாச்சா?” பயந்து போன படி உரத்த குரலில் அழுதாள். அவளுடைய பாட்டி வெளியே வந்தபோது, படியின் பைஜாமா நனைந்து போயிருந்தது. “இந்தத் தெருப்பொறுக்கியோட மகள் எப்படியோ என் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டா...”  -  பாட்டி சொன்னாள். உடனே மங்கல் தன் தாயைத் தடுத்தான். “நீங்க சும்மா இருங்க, பெரியம்மா. அது புருஷன்-பொண்டாட்டிக்கு இடையில் இருக்குற சண்டை. அந்தச் சண்டைக்குள்ளே நுழையிறது சரியில்ல...”

“எதுக்கு பேசாம இருக்கணும்?” - கிழவி புலம்பிக் கொண்டிருந்தாள். “என் மகன் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்ச பணத்துல அவன் குடிக்கிறான். இந்தத் தேவடியாளோட அப்பன் சம்பாதிச்ச பணத்துல இருந்து எடுத்து ஒண்ணும் அவன் குடிக்கல. மண்ணுக்குக் கீழே போயிட்டாலும் தாடகையைப் போல ஒரு மகளை இங்கு கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாள்.”

தாயின் ஆதரவு கிடைத்தவுடன் தலோக்கா முழுமையாக ஒரு அரக்கனாகவே மாறிவிட்டான். அவன் ராணுவின் ஆடையைக் கிழித்தான். அவளை நிர்வாணமாக்கிவிட்டு உரத்த குரலில் கத்தினான்: “வெளியே போடீ.... என் வீட்டை விட்டு வெளியே போடீ...”

மயக்க நிலையில் ராணுவும் புலம்பிக் கொண்டிருந்தாள்: “ நான் இனிமேல் ஒரு நிமிடம்கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன். இதோ போறேன்.”

வாசலில் மண்ணாலான சுவருக்குப் பக்கத்தில் சில நிழல்கள் தெரிந்தன. மேலே - மாடிகளில் சில பெண்களின் நிழல்கள் அசைந்தன.

“அய்யோ! கொல்றான்! கொல்றான் ஓடிவாங்க...” யாரோ உரத்த குரலில் கத்தினார்கள்.

அங்கு நடந்த அந்தக் காட்சியை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ராணுவைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. தேலம்ராயணியும், அவளுடைய மகள்களும் பூரண்தேயி, நவாபின் மனைவி ஆயிஷா, சன்னு, வித்யா, ஸ்வரூப் என்று எல்லோரும் அங்கு இருந்தார்கள். ஆனால், சன்னு மட்டும் அழுதுகொண்டிருந்தாள்: “அய்யோ! ராணுவைக் கொல்றான். அவளை காப்பாத்துங்க” என்று.


“யாரும் பக்கத்துல வராதீங்க.” - ராணு உரத்த குரலில் சொன்னாள்: “உங்களுக்கு இங்கே என்ன வேலை? அவங்கவங்க வேலையைப் பார்த்து போங்க. உங்க வீடுகள்லயும் புருஷன் பொண்டாட்டிக்கு இடையில சண்டை நடக்காதா என்ன? இன்னைக்கு நடக்க வேண்டியதெல்லாம் நடக்கட்டும். இன்னைக்கு தேவியோட கோட்லாவுல புண்ணியம் உண்டாகும். நான் இன்னைக்கு உங்க கையால சாகப் போறேன். சொர்க்கத்திற்குப் போவேன். என் பிள்ளைங்க என்னை நினைச்சு அழுவாங்க...”

அமைதியாக அங்கு நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து நின்றிருந்த மங்கல் ஓடிவந்து தன் அண்ணனின் கையைப் பிடித்தான்: “ச்சீ! ச்சீ! நீங்க என்ன செய்றீங்க? ஒரு பொம்பளைக் கிட்டயா உங்க வீரத்தைக் காட்டுறது? கொஞ்சம்கூட வெட்கம் இல்லாத ஆளு!”

கோபமடைந்த தலோக்கா தன்னுடைய தம்பியை வெறித்துப் பார்த்தாலும், அவனுடைய முகத்தில் தெரிந்த கடுமையைப் பார்த்து அவன் மவுனமாக இருந்தான். அதோடு நிற்காமல் மங்கல் மதுப் புட்டியை தரையில் எறிந்து உடைத்தான். மதுவின் கெட்ட வாசனை நான்கு பக்கங்களிலும் பரவியது. கூட்டமாக அங்கு நின்றிருந்த பெண்கள் தங்களின் மூக்கை மூடிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள். தலோக்கா தன்னுடைய தம்பியைத் திட்டிக்கொண்டே படுக்கையறையை நோக்கிச் சென்றான். ஏதோ ஒரு புத்தகத்தை வாசிப்பதைப்போல அவன் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தான்.

ராணு உள்ளே சென்று ட்ரங்க் பெட்டியில் துணிகளை வைத்துக் கொண்டிருந்தாள். அவள் கிளம்புகிறாள். எங்கே? அது ராணுவிற்கே தெரியாது. எதிரிக்குக்கூட ஒரு பெண் பிறக்கக்கூடாது. கடவுளே! வயதிற்கு வந்துவிட்டால் தாயும் தந்தையும் திருமணம் முடித்து கணவனின் வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைத்து விடுகிறார்கள். அங்கு அவர்கள் கோபித்தால், மீண்டும் பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்து விடுகிறார்கள். அய்யோ! துணியால் செய்யப்பட்ட அந்தப் பந்து அதற்குப் பிறகு தன்னுடைய கண்ணீரால் நனைகிறது! அத்துடன் அதை உருட்டக்கூட முடியாமற் போகிறது.

ராணுவிடம் எவ்வளவு ஆடைகள் இருக்கின்றன? ஒரே நிமிடத்தில் அவள் ட்ரங்க் பெட்டியில் துணிகளை வைத்து அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் தனக்குள் அழுதாள். மற்றவர்களையும் அழவைத்தவாறு அவள் சொன்னாள்: “இதோ பாருங்க... வீட்டைப் பத்திரமா பார்த்துக்கணும். இங்கே நான் மட்டும்தான் வெளியில இருந்து வந்த விருந்தாளி. நான் இதோ போறேன். உங்களோட ஏச்சுப் பேச்சுக்களையும், அடிகளையும் பட்டினியையும் பொறுத்துக்கொண்டு இருக்குறது மாதிரி யாரையாவது கொண்டு வந்து வச்சுக்கோங்க.”

குழந்தைகள் ராணுவின் பார்வையில் பட்டார்கள். கோபத்தாலும் கவலையாலும் ஆக்கிரமிக்கப்பட்ட ராணு தன்னுடைய குழந்தைகளை மறந்துவிட்டாள். குழந்தைகள்! அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். பிறக்கவே இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். இல்லாவிட்டால் இறந்துபோய்விட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

படி ஓடி வந்து தன் தாயின் துப்பட்டா நுனியைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்: “அம்மா...!” ராணு தன் மகளின் கையைப் தட்டிவிட்டவாறு கத்தினாள்: “தூரப்போ, பிணமே! ஒருநாள் என் கதியும் இதேதான்.”

ராணு பரந்துகிடந்த உலகத்தை இலக்கு வைத்து வெளியேறி நடந்தாள். இருட்டின் காரணமாக நட்சத்திரங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. பூமியைவிட பெரிதாக இருந்த ஒவ்வொரு நட்சத்திரமும் மின்னுவதும் மங்கலாவதுமாக இருந்தன. நடுவில் கரிய மேகங்கள் மூடியது காரணமாக சந்திரன் இரண்டு துண்டுகளாகத் தெரிந்தது.

மங்கல் ஓடிச் சென்று ராணுவைத் தடுத்தவாறு கேட்டான்: “அண்ணி! நீங்க எங்கே போறீங்க?” தொடர்ந்து அவன் தன்னுடைய தாயின் பக்கம் திரும்பினான்: “அவங்களைத் தடுத்து நிறுத்துங்க, பெரியம்மா” ஜந்தான் வெட்டவெளியை நோக்கி கையைக் காட்டியவாறு சொன்னாள்: “முன்னும் பின்னும் இல்லாதவ எங்கே போவா?”

ஹுஸூர் சிங், “மகளே... ராணு” என்று அழைத்தவாறு தட்டுத் தடுமாறி ராணுவை நோக்கி வந்தான். அடுப்புமீது விழுந்ததால் புண் உண்டான தன்னுடைய முதுகை ராணுவிடம் காட்டியவாறு அவன் சொன்னான்: “என் முதுகைக் கொஞ்சம் பாரு, மகளே...”

ராணு துப்பட்டாவால் தலையையும் முகத்தையும் மறைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். அதற்குள் தலோக்காவின் வெறித்தனம் முழுமையாக இறங்கிவிட்டிருந்தது. ஒரு அனாதைச் சிறுவனைப்போல அவன் வாசலைப் பார்த்தவாறு நின்றிருந்தான். ராணுவின் ஆவேசம் சற்று அடங்கிவிட்டது என்பதைத் தெரிந்துகொண்ட அவன் சொன்னான்: “நீ போ... எங்கே போறேன்னு நானும் பார்க்குறேன்.”

“நான் எங்கே வேண்டுமானாலும் போவேன். உங்களுக்கு என்ன? எங்கே போனாலும் வேலை செஞ்சி வாழ்வேன். ஒரு நேர உணவுக்கு இந்த உலகத்துல எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஊர்ல இடம் கிடைக்கலைன்னா, இருக்கவே இருக்கு தர்மசாலை...”

தர்மசாலையா? தலோக்கா அதிர்ச்சி அடைந்தான்.  அவன் ஓடிச் சென்று ராணுவின் கையைப் பிடித்தான்: “நட என் பின்னால்...”

“பின்னால இல்ல... முன்னால....”

ராணு இப்போது சுதந்திரமானவள். எனினும், தலோக்காவைப் போலவே அவளும் களைத்துப் போயிருந்தாள். ராணு வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு ஒரு காரணத்தைத் தேடிக்கொண்டிருந்தாள். புட்டிதான் உடைந்து போய்விட்டதே! இனிமேல் போவதால் என்ன பிரயோஜனம்?

2

ஹுஸூர் சிங்கின் உடலில் காயம் உண்டான இடத்தில் மருந்து தேய்த்துவிட்டு, ராணு படுக்கையறைக்குச் சென்றாள். தலோக்கா கையையும், கால்களையும் நீட்டிப் படுத்தவாறு என்னவோ சிந்தனையில் ஈடுபட்டிருந்தான். தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சம்மு அழ ஆரம்பித்தாலும், தாயின் மார்புக் காம்பு வாய்க்குள் சென்றவுடன் அவன் அமைதியாக இருக்க ஆரம்பித்தான்.

தலோக்கா அப்போது சாயங்காலம் உண்டான சண்டைக்குப் பதிலாக, தர்மசாலையில் தான் கொண்டு போய்விட்ட இளம்பெண்ணைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். அன்று இரவு தலோக்கா தன்னை மெஹர்பான்தாஸாக கற்பனை பண்ணிக்கொண்டு ராணுவை அந்த இளம்பெண்ணாக நினைத்தான். தலோக்கா தன் கையை நீட்டினான். ராணு அதைத் தட்டிவிட்டாள்.

“ஹா... ஹா... குழந்தை உண்மையாகவே நீ குழந்தைதான்.” தலோக்கா பரிதாப உணர்ச்சியுடன் சொன்னான்: “நீ என்ன சின்னக் குழந்தைமாதிரி நடக்குற! கோபம் இன்னும் போகல... அப்படித்தானே?”

தலோக்கா ராணுவை திருப்திப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருந்தான். சாயங்காலம் நேரம் வந்துவிட்டால் எல்லாவிதப்பட்ட வீரச்செயல்களையும் தாண்டி செயல்படக்கூடிய ஆண்களைச் சேர்ந்தவனாக இருந்தான். அவனும். அவன் எழுந்து பரமசிவன் இருக்கும் படத்தை எடுத்துக்கொண்டு வந்தான். பார்வதி அருகில் நின்றிருந்தாள். தலையின் உச்சியிலிருந்து கங்கை கீழே விழுந்துகொண்டிருந்தது. அவன் அந்தப் படத்தை ராணுவிடம் காட்டியவாறு பார்வதியின் ஆழமான காதலைப் பற்றி வர்ணித்தான். அதைக் கேட்ட பிறகும் ராணு தான் படுத்திருந்த இடத்தைவிட்டு சிறிதும் அசையவில்லை.


அடுத்த நிமிடம் தலோக்கா ராதாகிருஷ்ணனின் படத்தை ஃப்ரேமை விட்டு வெளியில் எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஃப்ரேமுடன் அவன் கொண்டு வந்திருக்கலாம். எனினும் தலோக்கா ஒவ்வொரு படத்தையும் ஃப்ரேமைவிட்டு வெளியே எடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் படங்கள் இல்லாத ஃப்ரேம்கள் நிறைந்துவிட்டன.

ராணு காலையில் கண் விழித்தபோது, உடம்பு முழுவதும் பயங்கர வலி எடுத்தது. எழுவதற்கே மனமில்லாமல் இருந்தது. என்ன செய்வது? எல்லா வேலைகளும் அப்படியே கிடந்தன. முந்தைய நாள் யாரும் இரவு உணவு சாப்பிடவில்லை. அதனால் காலை உணவு சீக்கிரம் செய்தாக வேண்டும். குதிரைக்குத் தேவைப்படும் தானியத்தைக் குத்தி தயார் பண்ண வேண்டும். சாட்டையை வெளியே எடுத்து வைக்க வேண்டும். தலோக்கா வழக்கம்போல பாதி சுய உணர்வுடன் படுத்துக் தூங்கிக்கொண்டிருந்தான் - பாதி திறந்த கண்களுடனும் முழுவதுமாக திறந்த வாயுடனும். ராணு கையில் விளக்குடன் மீண்டும் தலோக்காவின் அருகில் வந்தாள் - பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மனிதர்கள் மீண்டும் இறந்துபோன பாம்பிற்கு அருகில் வருவதைப்போல.

தலோக்கா கண் விழித்தபோது, ராணு வீட்டு வேலைகளில் பாதியை முடித்துவிட்டிருந்தாள். அவள் கையிலிருந்து குதிரைக்கான உணவை வாங்கியபோது தலோக்காவின் புருவம் சுருங்கியது. முந்தைய நாள் மாலையில் ஏதாவது நடந்ததைப்போல் ராணுவைப் பார்க்கும்போது தோன்றவில்லை. தலோக்கா முந்தைய நாள் இரவு எத்தனையோ தடவைகள் ராணுவிடம் மன்னிப்பு கேட்டு விட்டான். அவளுடைய கால்களைப் பிடித்து விட்டான். எனினும், சூரியன் உதயமானவுடன் அவனுடைய ஆண்மைத் தனம் தலையை உயர்த்தியது. தலோக்காவின் கையிலிருந்த சாட்டை அசைந்தபோது, அதில் தொங்க விடப்பட்டிருந்த சலங்கைகள் ஓசை எழுப்பின. அப்போது அவன் சொன்னான்: “நேற்று இரவு நான் பயந்துட்டேன்னு நினைச்சிடாதே.” ராணு சற்று தள்ளி நின்றுகொண்டு சொன்னாள்: “நான் எப்போ அப்படிச் சொன்னேன்?”

“அலிகள்தான் பொம்பளைகளைப் பார்த்து பயப்படுவாங்க. நான் இன்னைக்கும் சாராயம் கொண்டு வருவேன். நீ தடுக்குறதை நான் பார்க்குறேன்” - தலோக்கா சொன்னான்.

அதற்கு ராணு பதிலெதுவும் கூறவில்லையென்றாலும் தன் மனதிற்குள் அவள் நினைத்துக்கொண்டாள்: ‘இன்னைக்கும் சாராயம் கொண்டு வந்தால், நான் கழுத்துல கயிறைப் போட்டுத் தொங்கி செத்துடுவேன். மான் கொம்பை மார்புல குத்தி இறக்குவேன். அன்னைக்கு நாய்களைக் கொன்ன விஷத்தைத் தின்னு சாவேன். இந்த நாசமாப் போறவன் ‘டப்பு’வைப் போல ஒரு தடவையாவது என்னை பார்ப்பான்ல? எனக்காக இல்லைன்னாலும் குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சாவது வருத்தப்படுவான்ல! இல்ல... இல்ல... நான் செத்துப் போறதுனால மத்தவங்களுக்கு என்ன இழப்பு? என் அப்பனுக்கும் அம்மாவுக்கும்தான் இழப்பு. ஆனா, அவங்க எங்கே? முன்னாலும் இல்ல... பின்னாலும் இல்ல. இல்ல...நான் தற்கொலை செய்துக்க மாட்டேன். செலவே இல்லாம வலை காலியாயிடுச்சுன்னு சொல்லி இங்கே இருக்குறவங்க சந்தோஷப்படுற்துதான் நடக்கும்.’

அந்த நேரத்தில் சிறிதும் எதிர்பார்க்காமல் மங்கல் அந்தப் பக்கமாக கடந்து சென்றான். தன் அண்ணனுக்கு முன்னால் வந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். “ஹும்... நேற்று பெரிய இவன் மாதிரி ஓடி வந்தான்... பிறகு வாலை தாழ்த்திக்கிட்டு ஓடி ஒளிஞ்சிட்டான்...” தலோக்கா தன் தம்பியைக் கிண்டல் பண்ணினான். மங்கல் அதைப் பொருட்படுத்தவில்லை.

தந்தையும் தாயும் அடுத்தடுத்து நின்றிருப்பதைப் பார்த்த ‘படி’ சிறு பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டாள்.

பக்கத்து அறையில் இரவு முழுவதும் தூக்கத்தை இழந்து முக்கிக்கொண்டும் முணகிக்கொண்டும் இருந்த ஹுஸூர்சிங் பொழுது புலரும் நேரத்தில்தான் தூங்கவே ஆரம்பித்தான். ஜந்தான் மெதுவான குரலில் ‘சுப்ஜி’ மந்திரத்தைக் கூறிக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் சென்றதும் தலோக்காவின் ‘டாங்கா’ வாசலில் வந்து நின்றது. ராணு வழக்கம்போல நான்கு தடிமனான ரொட்டிகளை ஒரு பழைய துணியில் சுற்றி தலோக்காவிற்குக் கொடுப்பதற்கு மத்தியில் அவளுடைய பார்வை டாங்காமீது பதிந்தது. பன்னிரெண்டு, பதின்மூன்று வயது இருக்கக்கூடிய ஒரு சிறுமி சுய உணர்வு இல்லாத நிலையில் டாங்காவில் படுத்திருந்தாள். தலோக்கா அவளை சௌதரி மெஹர்பான்தாஸின் தர்மசாலையிலிருந்து நகரத்திற்கு கொண்டு போகிறான்.

ராணு ஆச்சர்யத்துடன் கேட்டாள்: “யார் அது? என்ன ஆச்சு?”

“வலிப்பு நோய்” - தலோக்கா சாட்டை வாரை முறுக்கியவாறு சொன்னான். ராணு தன் மூக்கின்மீது விரலை வைத்துக்கொண்டே மீண்டும் கேட்டாள்:

“வலிப்பு நோயா?”

“ஆமா... வலிப்பு நோய்தான். சாதாரணமா எல்லா பெண்களுக்கும் முதல்முதலா வர்ற நோய். நேற்று ராத்திரி நீயும் அந்த நோயால பாதிக்கப்பட்டேல்ல? அதற்கு மருந்து செருப்புதான். இல்லாட்டி அதோ வாசல்ல வச்சிருக்குற சம்மட்டி நேற்று நத்துகிட்ட சொல்லி இரும்பு ஆணிகள் தயார் பண்ணி வச்சிருக்கேன். அதுதான் இன்னைக்கு உன் முதுகுல பதியப் போகுது.”

அதைக்கேட்ட ராணுவின் பாதங்கள் நடுங்கின. தலோக்கா டாங்காவுடன் பார்வையிலிருந்து மறைந்தவுடன் அவள் அந்தச் சம்மட்டியை எடுத்து மறைத்து வைத்தாள்.

மதியத்திற்கு இன்னும் நேரமிருந்தது. அப்போது சில ஆட்கள் - நவாப், இஸ்மாயில், க்யான்சந்த், திவானா ஆகியோர் ஓடிவந்தார்கள். அவர்கள் தானியம் அரைக்கும் மில்லுக்கு முன்னால் வந்தபோது, நவாப் மில்லின் உரிமையாளரிடம் சொன்னான்: “பண்டிட்ஜி! கேட்டீங்களா?” அதற்குப் பிறகு அவன் அந்த மனிதரின் காதில் என்னவோ மெதுவான குரலில் சொன்னான். தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களிடம் முணுமுணுக்க ஆரம்பித்தான். அவர்கள் எல்லோரும் தலோக்காவின் வீட்டையே உற்று பார்த்தார்கள். தேலம் ராயணியின் தாயான முரார் பக்ஷ் ஒரு கையில் தராசையும் இன்னொரு கையில் எடைக்கற்களையும் வைத்துக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்து, ‘ஷாஹி ஜட்டை ‘ஜாராம்’ வகை கிணற்றை நோக்கிப் போகாமல் தடுத்து நிறுத்திய பிறகு, அவனுடைய காதில் என்னவோ சொன்னாள். அப்போது ஷாஹி ஜட்டும் மற்றவர்களுடன் சேர்ந்து தலோக்காவின் வீட்டைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

ராணு கதவின் மறைவில் நின்றுகொண்டு எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

முந்தைய நாள் இரவு நடந்த சம்பவங்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்த சன்னு ராணுவின் தோளைப் பிடித்து குலுக்கியவாறு சொன்னாள்: “நேற்று என்ன நடந்தது? சொல்லு கேக்குறேன்.”

வீட்டின் முன்னால் நடைபெற்றுக்கொண்டிருந்த ரகசிய மாநாட்டை நோக்கி சன்னுவின் கவனத்தைத் திருப்பிவிட்டவாறு ராணு சொன்னாள்: “இன்னைக்கு ஆம்பளைங்களுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் இங்கேயே உத்துப் பார்த்துகிட்டு நிக்கிறாங்க.”

சன்னு திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள்: “சரிதான்... அதன் காரணம் என்னன்னு தெரியுமா?”


“தெரியல... ஏன் அவங்க இங்கேயே உத்துப் பார்த்து நிற்கிறாங்க?”... ராணு ஆர்வத்துடன் கேட்டாள்.

“ராத்திரி முழுவதும் கிடைச்ச அடி, உதைகளையெல்லாம் பொறுமையா வாங்கிக்கிட்ட பிறகும் உங்க அழகு முன்னாடி இருந்ததைவிட கூடி இருக்கு. அதைத்தான் அவங்க இங்கே உத்துப் பார்க்குறாங்க.”

“ச்சீ! போடீ... குறும்புக்காரி” - ராணு சன்னுவின் தலை முடியை இழுத்துப் பிடித்தாள். தொடர்ந்து அவர்கள் ஒருவரையொருவர் ‘கிச்சு கிச்சு’ மூட்டி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

போலீஸ்காரர்கள் சௌதரி மெஹர்பான் தாஸையும் அவனுடைய தம்பி கணஷ்யாமையும் கைகளில் விலங்குகள் மாட்டி சாலை வழியாக அழைத்துச் சென்றதைப் பார்த்தபோது, ராணுவிற்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பதினெட்டு அல்லது பதினைந்து வயது இருக்கக்கூடிய ஒரு இளைஞனும் இருந்தான். அவன் அணிந்திருந்த ஆடை இரத்தம் கொண்டு நனைந்திருந்தது. தலையிலிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. சுய உணர்வை இழந்த அந்த இளைஞன் ஹவல்தார் ஜஹான்கான், கிராமத்தின் தலைவன் தாராசிங் ஆகியோரின் உதவியுடன் நடந்தான். மெஹர்பான்தாஸின் முகம் மிகவும் கறுத்துப் போயிருந்ததால், அவனுடைய கண்கள் முன்பிருந்ததைவிட அதிகமாக பிரகாசித்தது. கணஷ்யாமின் முகத்தில் நீல நிறத்தில் கோடுகள் தெரிந்தன. தலைப்பாகையை அணிய நேரம் இல்லாததைப் போல, அது தோளில் அவிழ்ந்து கிடந்தது.

“ஹா! கடவுளின் கருணையே கருணை! நான் இன்னைக்கு சர்க்கரை தரப் போறேன் சன்னு” - ராணு சந்தோஷத்துடன் சொன்னாள்: “இவங்க இதுவரை மற்றவர்களைத் துன்புறுத்தக் கூடிய மனிதர்களாக இருந்தாங்க. இப்போ இதோ அரசாங்கத்தின் பிடியில சிக்கின ஆளா ஆயிட்டாங்க” சன்னு பதில் கூறுவதற்கு முன்பே ராணு தன்னுடைய கைகளைத் தட்டி நடனமாட ஆரம்பித்தாள்: “சன்னு! நான் இன்னைக்கு இதயத்தைத் திறந்து நடனமாடுவேன்” என்று கூறிய அவள் தேவி ஆலயத்தை திறந்து நடனமாடுவேன்” என்று கூறிய அவள் தேவி ஆலயத்தை நோக்கித் தன் கைகளைக் கூப்பினாள்: “தேவி! அம்பிகையே! உன்னை வணங்குறேன் இன்னைக்கு நீ என் பிரார்த்தனையை ஏத்துக்கிட்டே என்னைப் பொறுத்தவரை நீ என் மனசுல எங்கோ உயரத்துக்குப் போயிட்டே அம்பிகையே!”

தலோக்காவின் டாங்கா வீட்டு வாசலில் வந்து நின்றது. ஆனால் அதை ஓட்டிக்கொண்டு வந்தது குருதாஸ். “அய்யோ! சன்னு! இது என்ன?” - ராணு டாங்காவைபே பார்த்தாள். அதில் யாரோ காலை நீட்டிப் படுத்திருந்தார்கள். ‘ஒரு வேளை அந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியாக இருக்குமோ’ என்று ராணு நினைத்தாள். எல்லோரும் சேர்ந்து அந்த நோயாளியை வண்டியிலிருந்து கீழே இறக்கி வாசலுக்குக் கொண்டு வந்தார்கள். படுத்திருந்த நோயாளியின் முகத்திலிருந்து துணியை நீக்கியபோது ராணு அதிர்ந்துபோய் விட்டாள். உரத்த குரலில் அழுது கொண்டே அவள் வீட்டிற்குள் ஓடினாள். சன்னு மார்பில் அடித்து அழுதவாறு தன்னுடைய வீட்டை நோக்கி ஓடினாள்.

தலோக்காசிங் கொலை செய்யப்பட்டிருந்தான். ‘ஜார’த்திற்கு அருகிலுள்ள கிணற்றுக்குப் பக்கத்தில் வெளியூரிலிருந்து வந்த சிறுமியின் சகோதரன் அவனைத் தாக்கியிருக்கிறான். தலோக்காவின் செவியில் அவன் தன் பற்களைப் பதித்தான். அவனுடைய உடம்பிலிருந்து இறுதி இரத்தத் துளி வெளியே வந்த பிறகுதான் அவன் கடிப்பதையே நிறுத்தினான்.

மக்கள் தலோக்காவைக் கொன்றவனைச் சுற்றி வளைத்தார்கள். அப்போது அவன் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப்போல குதித்து ஓடினான். கோவிலை நோக்கித் தன் கைகளை உயர்த்தியவாறு அவன் சொன்னான்: “தேவி! உன் முன்னாடி இது நடக்குது. உன் முன்னாடி...” மக்கள் அவனை அடித்து, உதைத்து, இழுத்துக்கொண்டு போன போதும் அவன் தேவியின் பெயரைக் கூறிக்கொண்டே இருந்தான்.

“மாதாராணி தெ தர்பார் ஜ்யோதியாம் ஜக்தியாம்

மய்யாராணி தேர்பார் ஜ்யோதியாம் ஜக்தியாம்”

(தேவி அன்னையின் சந்நிதியில் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன)

அந்தத் தீப வெளிச்சம் அவனுடைய கண்களில் தெரிந்தது. அவ்வப்போது அவனுடைய முகம் வியர்த்து சிவந்து கொண்டிருந்தது. மக்களுடன் சேர்ந்து அந்த இளைஞன் கோவிலை நெருங்கியபோது, குதித்து ஓடினான். நடனம் ஆடியவாறு பாடத் தொடங்கினான்.

“ஹெ! மய்யானெம் ஸதெ பஹினாம் கோரியாம்

ஸிர்லால் ஃபுலோம் தெஜ்ருடியாம்

மய்யாராணி தெ தர்பார் ஜ்யோதியாம் ஜக்தியாம்”

(தேவி! அன்னையே! நீங்கள் ஏழு சகோதரிகளும் வெண்மை நிறம் கொண்டவர்களாக இருந்தாலும், உங்களுடைய தலையில் சிவப்பு நிற மலர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. தேவியின் தர்பாரில் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.)

தொடர்ந்து அவன் தான் அணிந்திருந்த ஆடையைப் பிழிந்து வழிந்த இரத்தத்தைத் தன்னுடைய தலையில் தடவ ஆரம்பித்தான். தேவியின் ஆத்மா அந்த இளைஞனிடம் எழுந்த பழிவாங்கும் ஆவேசத்தைப் பார்த்து பைரவனையோ, தலோக்காவையோ தேடிக்கொண்டிருக்கும் என்பது மாதிரியான சூழல் அங்கு உண்டானது.

தலோக்காவைக் கொலை செய்த அந்த இளைஞன் கோவிலுக்கு நேராக தன் உடம்பை முழுமையாகக் கிடத்தி வணங்கியதைப் பார்த்து மக்கள் பயந்துபோய் விலகி வந்தார்கள்.

வேண்டுமென்றால் அவன் அப்போது அங்கிருந்து ஓடி தப்பிக்க முடியும். தேவியின் பெயரை உச்சரித்துக்கொண்டே அங்கிருந்து அவனால் போய்விட முடியும். ஆனால், அவன் அப்படி எதுவும் செய்யாமல் கிராமத்தின் தலைவனான தாராசிங்கிற்கு அவன் அடிபணிந்து நின்றிருந்தான். அது அவனுடைய ஆவேசத்தின் இன்னொரு வெளிப்பாடாக இருக்கலாம்.

அருகிலிருந்த கிராமங்களெல்லாம் அமைதி ஆயின. கோட்லா கிராமம் இருட்டில் மூழ்கிவிட்டதைப் போல் இருந்தது. கரியமேகம் சூரியனின் ஒளியைச் சற்று மறைத்து குறைத்தது. எப்போதையும்விட சற்று முன்பே இருள் வந்து பரவியது. விஷ்ணுதேவி ஆலயம் தலோக்காசிங்கின் வீட்டை எட்டிப் பார்க்கத் தொடங்கியது. வேப்ப மரம் தன் இலைகளைச் சுருட்டிக்கொண்டது. டப்பு குரைக்கவோ, ஊளையிடவோ செய்வதற்குப் பதிலாக வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தது.

மகனின் இறந்த உடலைப் பார்ப்பதற்காகக் கடவுள் ஹுஸூர்சிங்கின் கண்களுக்குத் தற்சமயத்திற்குப் பார்வை சக்தியைத் தந்தது. ஜந்தான் சில நிமிடங்களுக்கு சுய உணர்வு இல்லாமலிருந்தாள். குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து அழுது நேரத்தைச் செலவிட்டார்கள். ராணு முதலில் அறைக்கு உள்ளேயும், பிறகு வெளியிலும் ஓடினாள். தான் என்ன செய்ய வேண்டும் என்பதே அவளுக்குத் தெரியவில்லை. என்ன காரணத்தாலோ தன்னுடைய எல்லா ஆடைகளையும் நகைகளையும் எடுத்து அணிய வேண்டும்போல ராணுவிற்கு இருந்தது. அவள் அதற்கு தயாரானபோது, சன்னு அதைத் தடுத்தாள்.


அவள் ராணுவின் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்களை அடித்து உடைத்தாள். பூரண்தேயி ஓடிவந்து ஒரு குடம் நிறைய நீரை மொண்டு ராணுவின் தலையில் ஊற்றினாள். அதற்குப் பிறகும் ராணுவின் மூளை நேரான முறையில் இல்லை. அவள் சாமான்கள் போட்டு வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்து, அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்த சம்மட்டியை எடுத்துக் கொண்டு வந்து எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க தலோக்காவின் இறந்த உடலை நோக்கி அதை நீட்டியவாறு தன் மகள் படியைப் பார்த்துச் சொன்னாள்: “இடி, மின்னல் பட்டு பலரும் செத்திருக்காங்க. அம்மைநோய் வந்தும் இறக்குறாங்க. ஆனா, நீ மட்டும் ஏன் இறக்கல?”

வித்யா ஒடிவந்து படியைக் காப்பாற்றிவிட்டு, ராணுவிடம் சொன்னாள்: “இந்த அப்பிராணி செய்த பாவம்தான் என்ன?”

“இவள் எதற்கு கடமையைச் செய்யாத மனிதனின் மகளாகப் பிறந்தாள்?” - இதைச் சொன்ன ராணுவிற்கு அழவேண்டும் என்ற நினைப்பு வந்தது. ‘அழு! அழு! இல்லாவிட்டால் உலகம் உங்களைக் கேலி பண்ணும்.’ ஆனால், அழுகை வரவில்லை. ராணுவிற்கு தன்னுடைய சொந்த வீடும், குழந்தைகளும், கணவனும் வேறு யாருக்கோ சொந்தம் என்பதைப் போல் தெரிந்தார்கள். அழுகை வரவேண்டும் என்பதற்காக, கண்ணில் வெங்காய நீரை ஊற்றிக்கொள்ள அவள் சமையலறையைத் தேடி ஓடினாள். ஆனால், வெங்காயத்தின் தேவையே இல்லாமற்போனது. முந்தைய நாள் இரவு தலோக்கா சாராயத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்காக கொண்டு வந்திருந்த தக்காளி ராணுவின் பார்வையில் பட்டது.

ராணுவின் கண்ணீர் மதகை உடைத்துக்கொண்டு வெளியே வந்தது. அவள் தன் மார்பில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். கிராமத்திலிருந்த மற்ற பெண்கள் தேம்பித் தேம்பி அழுதவாறு ராணுவிற்கு ஆறுதல் கூற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ராணுவின் அழுகைச் சத்தம் ஏழு ஆகாயங்களையும் பாதித்தது. மங்கல் ‘அம்மா’ என்று அழைத்தவாறு சுவரில் தன் தலையை மோதிக் கொண்டு அழுதான். ராணு தன் அழுகையைத் தொடர்ந்தாள். “அடியே! ராணு! உனக்கு இனிமேல் முன்னாலும் இல்ல... பின்னாலும் இல்ல... அடியே... விதவையே! உன் உருவம் இனிமேல் பஸாஸாரில்கூட இருக்க முடியாதே!”

3

சௌதரி மெஹர்பான்தாஸ், அவனுடைய தம்பி கணஷ்யாம், பாபா ஹரிதாஸ் ஆகியோருக்கு ஏழு வருடங்கள் வீதம் கடும் தண்டனை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தையான சிறுமியின் சகோதரனுக்கும் அதே அளவு தண்டனை கிடைத்தது. கிராமத்தின் தலைவன் தாராசிங்கும் ஹவல்தார் ஜஹான்கனும் அங்கு வந்து சேர்வதற்கு முன்பே மக்கள் தலோக்காவின் இறந்த உடலை அங்கிருந்து அகற்றியிருந்தார்கள். அதன்மூலம் ப்ராஸிக்யூஷன் தரப்பில் குற்றத்தை நிரூபிக்க கஷ்டமாக இல்லை. ஆனால், பாபா ஹரிதாஸூக்கு இந்த அளவிற்கு கடும் தண்டனை ஏன் வழங்கப்பட்டது?

அவன் அணிந்திருந்த இரும்பு கோவணம் பழைய துணியால் ஆன கோவணமாக இருந்தது என்பதுதான் காரணம். பாபா ஹரிதாஸுக்கு ஏழு வருட கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம் தெரிந்ததும் கோட்லாவைச் சேர்ந்த பெண்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து என்னவோ விசாரித்துக் கொண்டார்கள். ஆனால், அதிகம் பேசக்கூடிய பூரண்தேவி தான் பெரிதும் பாதிப்படைந்தாள். அவளுடைய கண்களில் கண்ணீரும், முகத்தில் அமைதியும் இருப்பதை எல்லோரும் பார்த்தார்கள்.

தேவி ஆலயத்தின் நிழல் கிராமத்திற்குத் துணையாக இருக்க, நதிக்கு அருகில் வரும் புறாக்களுக்கு இரக்க குணம் கொண்டவர்களும், தர்மம் செய்யக்கூடியவர்களும் தானியங்களைச் சிதறிவிடும் காலம் இருக்கும் வரை, கோட்லாவிற்கு எந்தவொரு கெடுதலும் உண்டாகவில்லை. இனி அப்படியே உண்டானாலும், அதைச் செய்பவர்களுக்கு பைரவனுக்குக் கிடைத்ததைப் போல சரியான தண்டனை கிடைக்கும் என்பது வயதில் மூத்த பெரியவர்கள் கூறிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்.

சௌதரிமார்களின் வீடுகளும், சொத்துகளும் வழக்கிற்காக செலவழிக்கப்பட்டன. தர்மசாலை பஞ்சாயத்துக்குச் சொந்தமாக ஆனது. அன்றைய சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள். பிற பெண்களின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கக்கூட அவர்களுக்குத் தைரியமில்லாமல் போய் விட்டது. கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சந்தோஷத்துடன் நடந்து செல்லும்போது, அவர்களின் அசையும் பின்பகுதிக்கு ஏற்றபடி சிலர் தங்களின் பார்வையால் தாளம் போடுவார்கள். சிறிது நேரம் சென்றால் அதற்குக்கூட தைரியம் இருக்காது.

ஹுஸூர்சிங் மெலிந்து எலும்புக் கூட்டைப்போல ஆகிவிட்டான். கிழவியின் ஏச்சுப் பேச்சுக்களை அவன் பொறுத்துக்கொண்டான். கட்டிலிலேயே அவனுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ஜந்தான் ஒவ்வொரு நாளும் ஹுஸூர்சிங்கை அழவைப்பாள். அவன் ஒரு காலத்தில் ஜந்தானை மகாராணியைப் போல மகிழ்ச்சியுடன் வைத்திருந்தான். பெரிய பெரிய நகரங்களுக்கெல்லாம் அவளை, அவன் அழைத்துச் சென்று மிருகக் காட்சி சாலைகளையும், அரண்மனைகளையும் பார்க்கும்படி செய்தான். ஆனால், இப்போது அதே ஹுஸூர்சிங் பூமிக்குப் பாரமாகிவிட்டான். அனாதை ஆகிவிட்டான். வீட்டின் ஒரு மூலையில் படுத்து நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். மத நூலான ‘க்ரந்தஸாஹி’பின் ஒன்பதாவது அத்தியாயத்தை முணுமுணுத்துக்கொண்டு அவனுடைய நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஜந்தான் - இரவும் பகலும் கோபப்படுவதும், திட்டுவதும்தான் அவளுடைய தொழிலாக இருந்தது.

ராணுவைப் பார்த்தவுடன் மிளகாய்ப் பொடி பட்டதைப் போல கிழவியின் உடல் எரிய ஆரம்பித்துவிடும். தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் ஜந்தான் ராணுவைப் பார்த்துக் கூறுவாள்: “பேயே! பிசாசே! தேவிடியாளே! என் மகனை விழுங்கிட்டே. இனி எங்களையும் விழுங்கணும்னு வாயைப் பிளந்துகிட்டு நிக்கிறே. வெளியே போ. வேற யார் முகத்துலயாவது கரியைத் தேய்ச்சுக்கோ. இனி இந்த வீட்டுல உனக்கு ஒரு வேலையும் இல்ல.”

ராணு இனிமேல் ஒரு நிமிடம்கூட அந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று நினைத்தாள். ஆனால், பிள்ளைகள்மீது வைத்திருந்த பாசம் அவளின் கால்களைக் கட்டிப்போட்டு விட்டது. தாய்ப்பாசம் ராணுவை சலனப்படுத்தியது. ஜந்தான் அவளை வாய்க்கு வந்தபடி திட்டி வெளியே போகச் சொல்லும்போது, ராணு அவளுடன் நெருங்கி நிற்க முயற்சித்தாள்.

சிறிதும் எதிர்பாராமல் தன்னுடைய வாழ்க்கை இருட்டாகி விட்டதால் ராணுவின் உடல்நிலை பலமாக பாதிக்கப்பட்டது. ராணுவின் உடலில் தளர்ச்சி உண்டாக உண்டாக, படியின் உடலில் மெருகு ஏறிக்கொண்டிருந்தது. அவள் ஒரு காட்டு மரத்தைப் போல வளர்ந்துக் கொண்டிருந்தாள். ஒரு இதழ் உதிர்ந்து விழுந்தால், அதன் இடத்தில் இரண்டு இதழ்கள் உண்டாயின.

படி தன்னையே மறந்துவிட்ட மான்குட்டியைப் போல துள்ளித் திரிந்தாள். பக்கத்து வீடுகிளிலிருக்கும் சிறுமிகளுடன் சேர்ந்து குளிக்கச் செல்வாள். திரும்பி வர சற்று தாமதமானால் ராணு அவளைப் பலமாகத் திட்டுவாள். சில நேரங்களில் அடிக்கக்கூடச் செய்வாள்.


ஆனால், அதையெல்லாம் படி சிறிதும் பொருட்படுத்துவதேயில்லை. வறுமையை நினைத்தும், பல விஷயங்களைச் சிந்தித்தும் ராணு தன் மகளுக்கு அழுக்கான, கிழிந்துபோன தன் ஆடைகளையே அணிவதற்குத் தருவாள். தலை முடியை வாரி விடுவதற்குப் பதிலாக காற்றில் அது பறந்து இருக்கும்படி சுதந்திரமாக விடுவாள். யாருடைய கருங்கண்ணிலாவது அவள் பட்டு விட்டால்...? படி மிகவும் அழகான பெண்ணாக இருந்தாள். அவளை யாராவது உற்றுப் பார்த்தால் போதும். ராணு அவர்களுடன் அடுத்த நிமிடம் சண்டைக்குப் போய்விடுவாள். தொடர்ந்து அவள் நிம்மதிக்காக வாரிஸ்ஷாவின் ஈரடியை முணுமுணுப்பாள்:

‘கோரங்க நபேவெரப-

ஸாராபிண்த் எவெர்பெகயா’

(வெளுத்த நிறத்தை எந்தப் பெண்ணுக்கும் கொடுக்காதே கடவுளே! ஊர் முழுவதும் எதிரிகளாகி விடுகிறார்கள்.)

ராணு தன்னுடைய மகளை மறைத்து வைக்க முயற்சிப்பதற்கு மத்தியில் அவளுடைய அழகு, கிழிந்துபோன பழைய ஆடைகளைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருந்தது. வாத்தியங்களின் ஓசையைக் கேட்டுவிட்டால் போதும். வாசலுக்கு ஓடிவந்து நிற்கும் கள்ளங்கபடமில்லாத குழந்தைகளைப் போல இருந்தாள் படி. தன் மகளின் வெகுளித்தனத்தைப் பார்த்துக் கோபப்படும் ராணு கூறுவாள்: “அப்பனில்லாத இந்த மகளின் கடைசி காலம் மிகவும் மோசமாக இருக்கும். எதிரிகளின் கண்களில் பட்டுட்டா, பிறகு எதற்குமே லாயக்கு இல்லாதவளா ஆயிடுவா.” தொடர்ந்து அவள் தனக்குத்தானே பயந்து நடுங்குவாள்.

ராணுவின் கணக்குப்படி படியின் ‘அந்த நல்ல நாள்’ வெகு சீக்கிரமே வந்தது. கடந்த மகா சங்கராந்தி முதல் ராணு தன்னுடைய மகள் ‘குளிக்கும்’ நாளை மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டி வந்தது. சில வேளைகளில் இரண்டோ மூன்றோ நாட்கள் தாமதமாகிவிட்டால் போதும், ராணு தன் மகளைக் கேள்விகள் கேட்டு மூச்சுவிட முடியாமல் செய்துவிடுவாள். சாயங்காலம் நீ எங்கே போனே? அங்கேயிருந்து பிறகு  எங்கே போனே? கோவில்ல யாரெல்லாம் இருந்தாங்க? நீ எதற்கு பூசாரியின் குருமந்திரம் கேட்பதற்காக காத்திருந்தே? அந்த மந்திரம் உன்னை எங்கே கொண்டுபோய்விடும்னு உனக்குத் தெரியாதா? பாபா ஹரிதாஸை மறந்துட்டியா?” -  கேள்விகள் அனைத்தும் முடிந்தவுடன் ராணு கஷாயத்திற்கான மருந்துகளைத் திரட்டுவாள். குழப்பங்கள் நிறைந்த அந்த எதிர்ப்பார்ப்புகளுக்குப் பிறகு அந்த இளம் பெண்ணின் உடல் நிலை சரியானால்தான் ராணுவிற்கு நிம்மதியே பிறக்கும்.

ராணு தன் மகளைத் திருமணம் செய்து தருவதற்கான வழிகளைப் பற்றி சிந்திப்பாள். ஆனால், அவள் கையில் இருபது பைசாகூட இல்லை. பிறகு எப்படி மகளுக்கு அவள் திருமணம் செய்து வைப்பாள்? “நான் சாப்பாட்டுக்காகவும், ஆடைகளுக்காகவும் மட்டும்தானே இந்த வீட்டுக்கு வந்தேன்! இந்த நிலையிலயும் என் மகளைத் திருமணம் செய்ய யாரும் முன் வரலையே! கிராமத்துல இருக்குற இளைஞர்களை எடுத்துக்கிட்டா தினமும் நகரத்துக்குப் போயி திரைப்படம் பார்த்து சும்மா சுத்தித் திரியிறாங்க! தாயைப்பற்றியும் சகோதரிகளைப் பற்றியும் கொஞ்சம்கூட சிந்தனையே இல்லாத போக்கிரிகள்! கோட்லாவுல இருக்குற இளம் பெண்கள் தங்களோட சகோதரிமார்கள்,பெண்கள் தங்களோட தாய்மார்கள் அப்படின்ற நினைப்பு அவர்களுக்கு இருக்க வேண்டாமா?- இப்படி பல விஷயங்களை மனதில் அலசிக்கொண்டிருந்தாள் ராணு. நிலைமை அப்படித்தான் என்றாலும், அவர்களால் யாராவது ஒருவனுக்குத் தன்னுடைய மகளை ராணு திருமணம் செய்து கொடுத்து இந்தக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் பழக்கத்திலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் அந்த ஊர் சுற்றிகள்! எல்லோரும் மெர்ஹர்கர்மதீனின் மாந்தோப்பிலிருக்கும் மாமரங்களில் மாங்காய்களைப் பறித்துக் கொஞ்சம் திண்பார்கள். மீதி மாங்காய்களை வீசி எறிவார்கள். மரங்களிலிருந்து மாங்காய்களைப் பறித்து நாசம் செய்துவிட்டு ஓடிப்போகும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தோட்டத்திற்கு காவல்காரன் இல்லை. படிக்கு எப்படிப்பட்டவன் கணவனாக வருவான்? கிழவனா? இல்லாவிட்டால் இளைஞனா? சமீபத்தில் எங்கேயாவது இருப்பானா, இல்லாவிட்டால் லாகூரிலா? பெஷாவரிலா? தன் மகள் திருமணமாகி தன்னை விட்டுப் போகப் போகும் நாளைப்பற்றி அவள் மனம் சிந்திக்கும். தொடர்ந்து அவள் தன்னையே அறியாமல் ஏதோ ஒரு உணர்ச்சியில் உந்தப்பட்டு சந்தோஷத்துடன் பாடுவாள்:

‘ஸபாம் ஸோஹரெ சல்நாஸத் முக்லவாம்ஹார்’

(ஒரு நாள் எல்லோரும் கணவன் வீட்டிற்குப் போய்த்தான் ஆக வேண்டும். அதற்குப் பிறகு அவளுடைய வீடு அதுதான்)

ஆனால் ராணுவின் புது வீடு? அவளுடைய சொந்த வீடு? அது இப்போது  ராணுவின் கணவனுடைய வீடாக ஆகிவிட்டது. மனதில் கோட்டை கட்டுவதற்கு மத்தியில், தான் பாடிய பாடல் வாழ்க்கையைப் பற்றியது அல்ல-மரணத்தைப் பற்றியது என்ற உண்மையை ராணு மறந்துபோய் விட்டாள். அவளுடைய நரம்புகள் துடித்தன. தாய்மை என்ற இனிமையான நினைப்பு ராணுவை உணர்ச்சிவசப்படச் செய்தது. தன்னுடைய வீட்டிற்குப் போக வேண்டும் என்று அவளுடைய இதயம் துடித்தது. ராணு கோட்லாவிற்கு வந்தபிறகு தலோக்காசிங் அவளுக்கு அவளுடைய  வீட்டைப்பற்றி நினைப்பதற்கான சந்தர்ப்பத்தையே தரவில்லை. ஏழு பட்டாடைகள் அணிந்து வரும் மணப்பெண்ணுக்குத் தான்  புகுந்த வீடு. அவளை வரவேற்பதற்காக மாமியார் கையில் தீபத்தை வைத்துக்கொண்டு காத்திருப்பாள். மாமியாரின் வாசம் - மாமனாரின் அன்பு -பாத்திரங்கள் மாற்றம் -முகம் காட்டுதல்-பிறகு இரவு-முல்லை மலர் பரப்பிய படுக்கை-விளக்கு வெளிச்சத்தில் முதலில் வெட்கப்பட்டு, பின்னர் மலர்வது அதற்கு பின் தாய்மை. ஆனால் தலோக்கா ராணுவை ஒவ்வொரு நாளும் காலால் மிதித்து கொடுமைப்படுத்திய வீடு எல்லா பெண்களும் கனவு காணும் புகுந்த வீடு அல்ல அது.

புகுந்த வீட்டுப் பயணத்திற்கும், புத்தாடைக்கும் ராணுவின் இதயம் ஏங்கியது. மிக விரைவிலேயே ராணுவின் மகளுடைய  திருமணம் நடக்க இருக்கிறது. ராணு நினைத்துப் பார்த்தாள். அது தன்னுடையதா அல்லது தன் மகளுடையதா என்று யாருக்குத் தெரியும்? தோழன் இருந்தால் தான் அருகில் தோழியும் இருப்பாள். மனம் நிம்மதியாக இருந்தால்தானே உடல் இயங்கிக் கொண்டிருக்கும்?

மங்கல்- அவன் இந்த இடைப்பட்ட காலத்தில் டாங்கா ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தான். எனினும் குடும்பத்தைப் பற்றிய பொறுப்புணர்வு அவனுக்கு சரிவர புரியவில்லை. அதனால் மிகவும் குறைவாகவே வருமானம் வந்தது வாழ்க்கையில் திடீரென்று கண்விழித்த மங்கல் இளைஞர்களுக்கே உரிய குறும்புத்தனங்களில் மறைமுகமாக ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தான் . வாழ்க்கையின் உண்மையான விஷயங்கள் அவனுக்கு இப்போதும் தெரியாதவையாகவே இருந்தன. ஏதாவதொரு இளம்பெண்ணைப் பார்த்துவிட்டால் போதும் அப்போதே மங்கல் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவான்.

“ஹாய் நஸ்ஸெதி போதல்

தனெ பீண் கெனஸீபாம் வாலா”

(அப்படியா? போதை நிறைந்த புட்டியான உன்னை எதாவதொரு அதிர்ஷ்டசாலி அருந்துவான்)


நபீஸன் வாலா ஸ்டாண்டில் டாங்கா ஓட்டும் மங்கல், தனது வீட்டிற்கோ அல்லது அங்கு இருப்பவர்களுக்கோ ஏதாவது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. வீட்டிலிருந்தவர்கள் தினமும் ஒரு நேரம் மட்டுமே சாப்பிடுகிறார்கள் என்ற உண்மையை அவன் தெரியாமல் இருந்தான்.

நிலைமை இப்படி இருக்கும்போது ஒருநாள் மங்கல், தெலம் ராயணியின் இளைய மகள் ஸலாமத்தியுடன் அறிமுகமானான். அவள் வெண்டைக்காய்,கத்திரிக்காய்,பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளில் மட்டும் தன் கையை வைக்கவில்லை. பார்க்கிற மரங்களைக் கட்டிப் பிடிக்கும் தைரியசாலியாகவும் அவள் இருந்தாள். வழியில் ஒரு நாள் ஸலாமத்தி மங்கலுக்கு வலை வீசினாள். “ஏய் மங்கல்சிங்!”

மங்கல் டாங்காவை விட்டு இறங்கினான். ஸலாமத்தி அவனுக்கு அருகில் சென்று  அவன் முகத்தையே உற்றுப் பார்த்தவாறு சொன்னாள்: “உங்க டாங்காவுல என்னையும் ஏற்றிக்கொள்ள முடியுமா?”

“ம்...”

“எப்போ?”

“உங்களுக்கு விருப்பம் இருக்குறப்போ!”

ஸலாமத்தி நான்கு திசைகளிலும் தன் கண்களை ஓட்டியவாறு சொன்னாள்: “அப்படின்னா... இன்னைக்கு ராத்திரியே...”

“என் டாங்கா ராத்திரி நேரங்கள்ல ஓடாதே, ஸலாமத்தி...”

மங்கல் டாங்காவுடன் நகரத்தை நோக்கி திரும்பினான். இரண்டு மைல்கள் கடந்த பிறகுதான் ஸலாமத்தியின் மனதில் இருக்கும் விஷயத்தை மங்கலால் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே மங்கல் டாங்காவை திருப்ப நினைத்தான். அதற்குள் நகரத்திற்குச் செல்லும்  ஒரு பயணி அவனுக்குக் கிடைத்துவிட்டான். இரவு வர இன்னும் பத்து மணி நேரங்கள் இருந்தன. அதனால் அந்தப் பயணியை ஏற்றிக்கொண்டு அவன் நகரத்தை நோக்கி டாங்காவைச் செலுத்தினான்.

மங்கல் சாயங்காலம் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்தபோது  அங்கு கண்ட காட்சி அவனை பதைபதைக்கச் செய்துவிட்டது. குடும்பத்திலுள்ள அனைவரும் பகல் முழுவதும் பட்டினி கிடந்திருக்கிறார்கள். படி எங்கிருந்தோ கொஞ்சம் அரிசி வாங்கிக் கொண்டு வந்து சமைத்திருக்கிறாள். ஆனால், அதுவரை பசியை அடக்க முடியவில்லை. ராணு அந்த அரிசி நன்கு வெந்து முடிவதற்கு முன்பே, கீழே இறக்கி யாருக்கும் தெரியாமலே அது முழுவதையும் சாப்பிட்டு விட்டாள். மாமனாரும் மாமியாரும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்! அவளுடைய சொந்த பிள்ளைகளுக்குக்கூட ஒரு பருக்கை மீதி வைக்காமல் முழுவதையும் அவளே சாப்பிட்டு முடித்தாள். அதைப் பார்த்து கோபத்திற்கு ஆளான ஜந்தான் ராணுவை வீட்டை விட்டு வெளியே துரத்தும் முயற்சியில் இறங்கினாள். ராணு ஒரு கருங்கல் சிலையைப் போல சிறிதும் அசையாமல் நின்றிருந்தாள். அவள்  நினைத்திருந்தால் ஒரே அடியில் கிழவியான ஜந்தானை எம உலகத்திற்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவள் தலைகுனிந்து நின்றுகொண்டு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள்.

அந்த காட்சியைப் பார்த்து மங்கல் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். அவன் ஒருவித குற்ற உணர்வுடன் வாசலில் இருந்த வேப்பமரத்திற்குக் கீழேயே நின்றுவிட்டான். மங்கல் அன்று பதினான்கு அணா மட்டுமே சம்பாதித்திருந்தான். அதை வைத்து வீட்டிற்குத் தேவையான உப்பையும் மிளகாயையும் வாங்க முடியுமா என்று அவன் சந்தேகப்பட்டான். திரும்பி வந்தபோதும் அவனுக்கு சவாரி கிடைக்கவே செய்தது. ஆனால் ஸலாமத்தி மீது கொண்டிருந்த ஈர்ப்பில் அவன் டாங்காவில் யாரையும் ஏற்றாமல் திரும்பி வந்துவிட்டான்.

மங்கல் முன்னால் வந்து தன் தாயைத் தடுத்துக்கொண்டு சொன்னான்: “பெரியம்மா! நீங்க எதற்கு இந்த அப்பிராணியை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? பாவம்... இவங்க எங்கே போவாங்க?”

தன்னுடைய கணவன் இறந்தபோதுகூட அழாத ராணு திடீரென்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். கண்ணீர் கடலில் நீந்தித் துடித்துக் கொண்டிருந்த அவள் சொன்னாள்: “நான் எதற்கு போகணும்? நான் இந்தக் குடும்பத்துக்கு என்ன செய்யல? மகன்களையும் மகளையும் பெறலையா?”

மங்கல் ராணுவைத் தேற்றிக் கொண்டு சொன்னான்: “தப்பு என்னோடதுதான். அண்ணியோடது இல்ல...” ஜந்தான் இடையில் புகுந்து சொன்னாள்: “நீ எதுக்கு குற்றத்தை ஏத்துக்கணும்? தன்னோட சொந்த பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு பெண் வேற யாரைக் காப்பாற்றப் போறா?”  தொடர்ந்து அவள் ராணுவைப் பார்த்து கைகளைக் கூப்பியவாறு சொன்னாள்: “குருவை ஞாபகத்துல வச்சுக்கிட்டு, கடவுளை மனசுல வச்சுக்கிட்டு நீ இங்கேயிருந்து போக முடியுமா? குருடனையோ செவிடனையோ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. என் வீட்டுல இருந்து கிளம்பினா போதும்...”

ராணு தன் மாமியாரை பரிதாபமாகப் பார்த்தாள். அவளுடைய கண்கள் ஜந்தானை இப்படி யாசித்தன: “அப்படியா சொல்றீங்க? நீங்க உலகத்துக்கே தாய். என்னை ஒதுக்காதீங்க! என்னை எப்படியாவது இங்கேயே இருக்க விடுங்க. இந்த உலகத்துல எனக்குன்னு வேற யார் இருக்காங்க?’ அந்தச் சிந்தனையில்தான் ராணு எல்லோருடைய பங்கையும் அவள் ஒருத்தி மட்டுமே சாப்பிட்டிருக்க வேண்டும். இனி இந்த வீட்டில் தான் எப்படி வாழ்வது என்பது அவளுக்கே தெரியவில்லை. பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். சட்டப்படி அவர்கள் தலோக்காவிற்குச் சொந்தமானவர்கள். மாமனாரும், மாமியாரும், பஞ்சாயத்தும் பிள்ளைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல அவளை அனுமதித்தாலும், அவர்களை எங்கே கொண்டு போவாள்? ராணு வேண்டுமென்றால் பிச்சை எடுக்கலாம். அதற்காக பிள்ளைகளை பிச்சை எடுக்கவிட முடியுமா? தவிர, சம்மு, பந்தா, ஸந்தா, படி ராணுவிற்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் சம அளவில் பாசம் இருக்கிறது. இப்போதும் பிள்ளைகளுக்கு ராணுவின் பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. பிள்ளைகளில் யாராவது இங்கு இருக்கும்படி விட்டுப்போவது என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்கும்போது ராணுவின் இடுப்பெலும்பு பயங்கரமாக வலித்தது. பிள்ளைகள் தன்னுடன் அவள் தூக்கிச் செல்லும் அளவிற்கு வயதில் சிறியவர்களும் இல்லை, அங்கேயே விட்டுப்போகும் அளவிற்கு வயதில் பெரியவர்களும் இல்லை.

மாமியாரின் கொடுமைகளையும், ஏச்சுப் பேச்சுகளையும் பொறுமையாகச் சகித்துக்கொண்டு திண்டாடிக் கொண்டிருந்த ராணு மனதிற்குள் சிந்தித்தாள். ஒரு விதவைக்கு தன் கணவனுடைய வீட்டில் வசிக்க என்ன உரிமை இருக்கிறது? அவளுக்கு இந்த உலகத்தில் வாழவே அதிகாரம் இல்லை.

ராணுவின் மோசமான நிலைமையைப் பார்த்து மனதில் வேதனைப்பட்ட பக்கத்து வீட்டுக்காரி சன்னு ஒருநாள் அவளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, வயிறு நிறைய சாப்பாடு போட்டாள். இனிமேல் எங்கே கிடைக்காமலே போய்விடுமோ என்று நினைத்து ராணு மிகவும் குறைவாகவே சாப்பிட்டாள். சன்னு மிகுந்த இரக்க உணர்வுடன் ராணுவிடம் சொன்னாள்: “இங்கே பாருங்க ராணு-நீங்க கேக்குறதா இருந்தால் நான் ஒரு விஷயம் சொல்றேன் ...”

ராணு ஆர்வத்துடன் சன்னுவைப் பார்த்தாள். சன்னு தொடர்ந்து சொன்னாள்: “உங்க மாமியார் ஒரு பேய். அவள் உங்களை அங்கே வசிக்க விடமாட்டா. பிறகு... அந்த வீட்டில் நீங்க வாழணும்னா, அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு...”


“அது என்ன?”- ராணு கேட்டாள்.

“அது...நீங்க...மங்கலைக் கல்யாணம் பண்ணிக்கணும்...”

“அது நடக்காது...” -ராணு வாய்க்குப் போன சாப்பாட்டை பாத்திரத்திலேயே போட்டுவிட்டு வேகமாக எழுந்தாள். “நீங்க என்ன சொல்றீங்க சன்னு?”

“நான் சொல்றதுதான் சரியானது...அண்ணன் இறந்தால்...”

“அது ஒருநாளும் நடக்காது”-துடிக்கும் உதடுகளுடன் ராணு சொன்னாள்: “மங்கல்... அவன் சின்ன பிள்ள... நான் அவனை என் சொந்த மகனைப் போல வளர்த்திருக்கேன்... வயசுல என்னைவிட எப்படிப் பார்த்தாலும் பத்து பதினோரு வயசு கம்மி... என்னால அதை நினைச்சுப் பார்க்கக்கூட முடியல” -  ராணு ஒரு பைத்தியம் பிடித்த பெண்ணைப்போல தன் வீட்டை நோக்கி ஓடினாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது மங்கல் குதிரைக்கு கடலை கொடுத்துக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழைந்த ராணு மங்கலை திரும்பிப் பார்த்தாள். அடுத்த நிமிடம் அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்: “இல்ல... அது நடக்காத விஷயம்...”

ராணு கட்டிலில் குப்புறப்படுத்து அழ ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்ற பிறகு மங்கல் சாட்டையை எடுப்பதற்காக அங்கு வந்தான். அன்று அவன் சீக்கிரமே போயாக வேண்டும். வீட்டில் சாப்பாட்டுக்கு எதுவும் இல்லை. கோதுமை மாவு வாங்கி ரொட்டி தயார் பண்ண வேண்டும். முன்பைப் போல தடிமனான ரொட்டி. இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டாலே வயிறு நிறைய வேண்டும். சோறு சாப்பிட்டால், சிறிது நேரத்திலேயே வயிறு காலியானது மாதிரி இருக்கும். அதற்குப்பிறகு பசியைப் பொறுக்கவே முடியாது. முடிந்தால் கூட்டு வைப்பதற்கும் எதையாவது வாங்க வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் வெங்காயமாவது வாங்க வேண்டும். ரொட்டியுடன் வெங்காயத்தைச் சேர்த்து சாப்பிட்டால்கூட போதும்தான். வித்யாவின் வீட்டிலிருந்து காசு எதுவும் கொடுக்காமலே மோர் கிடைக்கும். அதோடு கொஞ்சம் காய்ந்த மிளகாய்ப் பொடியும் உப்பும் இருந்தால் போதும். இவற்றை நினைத்தபோது மங்கலின் வாயில் நீர் ஊறியது. அவனுடைய நாக்கு தாளம்போட்ட சத்தம் வெளியே கேட்டது. மங்கல் சாட்டையைக் கையிலெடுத்தபிறகு ராணுவிடம் கேட்டாள்: “குதிரையோட தலைப்பூ எங்கே?”

ராணு வேகமாக எழுந்து மங்கலையே உற்றுப் பார்த்தாள். பிறகு ஒரு வித பதைபதைப்புடன் தன் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு சொன்னாள்: “பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்காங்க.”

மங்கல் திகைத்துப் போய் நின்றவாறு ராணுவைப் பார்த்து சொன்னான்: “இவங்களுக்கு என்ன ஆச்சு? நான் தலைப்பூவைப் பற்றி கேட்டா இவங்க பிள்ளைகளைப் பற்றி சொல்றாங்க.”

மங்கல் முன்னால் சென்று ராணுவின் தலையை தன்னுடைய விரலால் தொட்டான்.

மின்சாரம் பாய்ந்ததைப் போல ராணு அதிர்ந்து போய், சற்று பின்னோக்கி நகர்ந்துகொண்டு உரத்த குரலில் சொன்னாள்: “என்னைத் தொடக்கூடாது...”

மங்கல் பயந்து போய் அறையைவிட்டு வெளியேறினான்.

அவன் தனக்குள் கூறிக் கொண்டான்: ‘இப்பவும் ராத்திரி நடந்த சம்பவத்தையே இவங்க நினைச்சுகிட்டு இருக்காங்க.’ மங்கல் டாங்காவை ஓட்டியவாறு நகரத்திற்குச் சென்றான். ராணு வாசலுக்கு வந்து மங்கல் போய் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

4

ன்னு பூரண்தேயியிடம் விஷயத்தைச் சொன்னாள். பூரண்தேயி தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள். அவன் வயலில் ஆட்களை வைத்து வேலை செய்து கொண்டிருந்தான். பஞ்சாயத்து தலைவனான க்யான்சந்த் தன் மனைவியிடமிருந்து மங்கலின் குடும்ப நிலைமையைப் பற்றி தெரிந்துகொண்டு சென்னான்: “சரிதான்... பாவம் ராணு! அவ எங்கே போவா? என்ன செய்வா? ஆனா, மங்கல்! ராணுவைவிட ரொம்பவும் இளையவனாச்சே!”

அதற்கு பூரண்தேயி சொன்னாள்: “அதுனால  என்ன? அவனுக்கு வேற எந்த ராஜகுமாரி கிடைப்பாள்? வீட்டில் சாப்பிடுறதுக்கு ஒண்ணும் இல்ல. உடம்பை மறைக்க ஆடைகள் இல்ல. ராணுவை கல்யாணம் பண்ணினாத்தான் என்ன?  ரெண்டு பேரோட காரியமும் முடிஞ்ச மாதிரி இருக்கும். சந்தோஷமா வாழவும் செய்யலாம்.”

தன் கணவனை பயமுறுத்துவதற்காகப் பூரண்தேயி அருகில் சென்று தொடர்ந்து சொன்னாள்: “உங்களுக்குத் தெரியுமா? ஸலாமத்தியும் மங்கலும்...”

“அப்படியா? எனக்கு எதுவுமே தெரியாதே!”

“அந்த ராயணியையும் பிள்ளைகளையும் நம்ம கிராமத்தை விட்டே விரட்டணும்னு நான் சொல்றேன்.தேலமும் அவளோட மூணு மகள்களும்... கல்யாணம் ஆனவளும், கல்யாணம் ஆகாதவளும்... எல்லாம் நாய்களைப் போல அலைஞ்சு திரியுது...”

க்யான்சந்த் சிறிது கோபத்துடன் சொன்னான்: “நீ விஷயத்தைச் சொல்றதுக்காக வந்தியா? விஷயம் எதாவது நடந்ததா?”

“இல்ல... இதுவரை எதுவும் நடக்கல.ஆனா, நடக்கும்.”

க்யான்சந்த் ஆர்வத்துடன் கேட்பதற்காக வந்திருந்தாலும், பூரண்தேயி கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் இருக்கவே அவனுக்குக் கோபம் வந்தது. அதனால் தன் மனைவியை பயமுறுத்துவதற்காக க்யான்சந்த் சொன்னான்: “அப்படி ஏதாவது நடந்தால், அப்படி செய்றவனுக்கு சௌதரி மெஹர்பான்தாஸ்க்கு கிடைச்ச அனுபவம்தான் கிடைக்கும். இரும்பு கோவணம் அணிந்திருந்த பாபா ஹரிதாஸுக்கு என்ன கிடைச்சதுன்னு பார்த்தேல்ல?”

அதைக் கேட்டு பூரண்தேயி தன் முகத்தைக் குனிந்துகொண்டாள். க்யான்சந்த் அர்த்தத்துடன் தன் மனைவியைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு தொடர்ந்து சொன்னான்: “இனிமேல் ஆண்களுக்கு மட்டும்தான் தண்டனை கிடைக்கும்னு யாரும் நினைக்க வேண்டாம். பெண்கள் சமநிலை கேட்டு போராடுவது வரை எல்லா விஷயங்களும் சரியாகவே இருந்தது. இனிமேல் சம உரிமையை அவங்களும் வாங்கிக்கட்டும்.”

பூரண்தேயி கோபத்துடன் சொன்னாள்: :“நான் ஒண்ணு கேட்கட்டுமா? நீங்க தேலம் ராயணியை தர்மசாலைக்கு எதுக்காக அழைச்சீங்க?” - அவள் தன் கணவனைப் பழிக்குப் பழி வாங்கினாள்.

“தர்மசாலைக்கு அழைக்கலையே! அவள் கர்ம்முதீனின் மாந்தோப்பில்...”- க்யான்சந்த் பதைபதைப்புடன் விஷயத்தை மாற்றினான்: “முஸ்லிம் எப்படி தர்மசாலைக்குள் நுழைய முடியும்?”

“ஓ... தர்மசாலை இப்போ கர்ம்முதீனின் மாந்தோப்புக்கு வந்திடுச்சு. அப்படித்தானே?”

இல்ல...அவள் தோட்டத்துல காய்கனிகள் பறிச்சுக்கிட்டு இருந்தா...”

“உங்க தோட்டத்துல கை வைக்கல அப்படித்தானே?”

“அப்படி ஒரு எண்ணம் இருந்தது.” - க்யான்சந்த் புன்னகைத்துக் கொண்டே சொன்னான்.

“எண்ணம் இருந்ததா? இல்லாட்டி முதல்ல வந்தவங்களும் போனவங்களும் தோட்டத்தை நாசம் பண்ணிட்டாங்களா?”

அதைக் கேட்டு க்யான்சந்தின் முகம் ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் தன் மனைவியின் கேள்விகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சொன்னான்: “சரி -அது இருக்கட்டும்... நீ சொல்ல வந்தது மங்கலோட விஷயம் தானே?”

“இல்ல... ராணுவோட விஷயம்...” பூரண்தேயி திருத்தினாள்.


“சரி... ராணுவோட விஷயம்... அவள் மங்கலைக் கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுன்றது என் கருத்து. கிராமத்துக்கு வந்து சேர்ந்த ஒரு பெண் வெளியே போகவேண்டிய தேவையில்ல. அங்கேயும் இங்கேயும் எதுக்காக அலையணும்? இந்தக் கிராமத்துல இருக்கிற ஆம்பளைகளுக்குதான் கெட்ட பெயர்...”

க்யான்சந்த் பிறகு தன்னுடைய வேலைக்காரர்களிடம் சொன்னான்: “இளைஞர்களே, நல்லா வேலை செய்யிங்க. ஆழமா கிளறி சமப்படுத்தணும்.”

தொழிலாளிகள் சுறுசுறுப்புடன் பணி செய்தார்கள். வியர்வையில் நனைந்த அவர்களுடைய உடல் வெயில் பட்டு ஒளித்தது.

க்யான்சந்த் சிந்தித்தான்: ‘பெண்கள் மிகவும் குறைவாக இருக்கும் நம்முடைய பஞ்சாபில் அவர்கள் எதற்காக சமத்துவத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடுகிறார்கள்! எதற்காக ஒரு பெண் தானே அழியும்படி பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?’ தொடர்ந்து அவன் பஞ்சாயத்திலும் ஹூஸூர்சிங்கிடமும் பேசுவதற்காக அங்கிருந்து கிளம்பினான்.

மங்கல் வீட்டில் இல்லாமலிருந்த நேரத்தில் சிலர் படியைப் பார்ப்பதற்காக வந்தார்கள். கள்ளங்கபடமற்ற படிக்கு எதுவும் தெரியவில்லை. அவள் தன் பாட்டியின் ஆலோசனைப்படி வந்திருந்தவர்களை உபசரித்தாள். படி ஓடிச் சென்று வித்யாவின் வீட்டிலிருந்து பர்ஃபி (பலகாரம்) வாங்கிக் கொண்டு வந்தாள். அதில் பாலின் அம்சம் குறைவாகவும் சர்க்கரை அதிகமாகவும் இருந்தது.அதிக லாபத்திற்கு ஆசைப்படும் வியாபாரிகள் ஒரு மடங்கு பாலில் ஐந்து மடங்கு பர்ஃபி தயார் பண்ணிவிடுவார்கள். நகரத்திலிருந்த அந்த நோய் கிராமங்களுக்கும் பரவிவிட்டது.

வந்திருந்த விருந்தாளிகள் மூன்று பேர். ஒரு ஆள் நாற்பது வயதைத்  தாண்டிய கிழவன். மற்ற இருவரும் இளைஞர்கள். அவர்களின் ஒருவன் வயதான மனிதனின் மகனும் இன்னொருவன் அந்த இளைஞனின் நண்பனுமாக இருக்கவேண்டும். அவர்கள் படியின் நடத்தையையும் பழகும் விதங்களையும் சிறப்பு கவனம் செலுத்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்களால் அவர்கள் எடைபோட்டுக்கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் அந்த அளவிற்கு தீவிரமாக பார்க்கவில்லை. ஆனால், கிழவனின் பார்வை படியின் உடலுக்குள் ஆழமாக நுழைவது மாதிரி இருந்தது. படி, குடத்திலிருந்து நீரை எடுத்தப்போது, கிழவன் அர்த்தத்துடண் இருமியவாறு சொன்னான்: “அம்மா! எல்லாம் சரி! சம்மதம்!”

படியின் மனதிற்குள் ஏதோ ஒரு சிந்தனையின் நிழல் கடந்து சென்றது. அவள் ஒரு மான்குட்டியைப் போல அங்கிருந்து குதித்து ஓடினாள்.

ஆயிரம் ரூபாயிலிருந்து விலைபேச ஆரம்பித்து இறுதியில் ஐந்நூற்று ஐம்பது ரூபாய் என்று முடிவு செய்தார்கள்.ஜந்தானுக்கு சிந்திப்பதற்கு நேரம் தந்துவிட்டு, வந்திருந்தவர்கள் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினார்கள். ராணு மற்ற பெண்களுடன் வயலுக்கு வேலை செய்வதற்காகப் போயிருந்த நேரம் பார்த்து ஜந்தான் அந்த வியாபாரத்திற்கு நேரம் குறித்தாள். இனிமேல் அந்த தொகையை எப்படி வாங்குவது என்ற சிந்தனையில் இருந்தாள் ஜந்தான். பெண்ணை அவர்களுக்கு எப்படிக் கொடுப்பது? ராணுவிடம் கேட்க வேண்டியதிருக்கும். ஆனால், அவளை மனதிலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியே தள்ளியாகிவிட்டதே!

ராணு வேலை முடிந்து திரும்பி வந்தபோது ஐந்தான் மிகுந்த அன்பு இருப்பது மாதிரி காட்டிக்கொண்டு அவளை தனக்கருகில் அழைத்து உட்கார வைத்துக்கொண்டு தன்னுடைய சுருக்கங்கள் விழுந்த கையால் முதுகைத் தடவியவாறு சொன்னாள்: “மகளே, ராணு! நீ என் மருமகள். குடும்பத்தை நடத்துறதுக்காக நீ ரொம்பவும் கஷ்டப்படுற...”

ஜந்தானின் நாடகத்திற்கு மத்தியில் படி தன் தாயை சைகை காட்டி உள்ளே வரும்படி அழைத்து, அங்கு நடைபெற்ற பேச்சுக்கள் ஒவ்வொன்றையும் விளக்கிச் சொன்னாள். ஐநூற்று ஐம்பது ரூபாய்க்கு பேசி முடிக்கப்பட்ட விஷயத்தை அவள் சொன்னாள்.

படி தடுத்தும், ராணு தன்னுடைய சூழ்நிலையை முழுமையாக மறந்து, வெளியே ஓடினாள். தன்னுடைய பிள்ளைகளை பருந்தின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப் போராடும் தாய்க்கோழியைப் போல அவள் ஜந்தான் இருந்த பக்கம் திரும்பினாள்.

“இன்னைக்கு இங்கே யார் வந்தாங்க? என் மகளை விலைபேச யாருக்குத் தைரியம் வந்தது?”

ஜந்தான் மெதுவான குரலில் சொன்னாள்: “ஒண்ணுமில்ல, மகளே! ராணு! அவங்க சும்மா சொன்னாங்க. அவங்க வாயைக் கட்ட நம்மால் முடியுமா?”

“கட்ட முடியும். அந்தப் பாழாய் போனவங்களின் நாக்கை அறுத்து எறிந்திருக்கணும். நெருப்புக் கொள்ளியை எடுத்து வாய்க்குள்ளே சொருகியிருக்கக் கூடாதா? என் மகள்... அவளோட ஒவ்வொரு உறுப்புக்கும் லட்சம் ரூபாய் வீதம் விலை... என் மகளோட ஒவ்வொரு பார்வைக்கும் முத்துக்களை மழையா பொழிய வைக்கணும்.”

ஜந்தான் தொடர்ந்தாள்: “உன் மகள்னா அவ என் பேத்தி... எனக்கும் சில உரிமைகள் இல்லையா?”

ம்... உண்டு. மருமக மூலம்தான் பேத்தி வந்திருக்கா. மருமகளே இல்லாதவங்களுக்கு பேத்தி எங்கேயிருந்து வந்தா?”- ராணு தன் மாமியாரை எதிர்த்து பேசிவிட்டு அறைக்குள் நுழைந்து முன்பைப்போல அழுது மார்பில் அடித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.

“அய்யோ என் மகளை விற்கிறதை நான் கண்ணால பார்க்க வேண்டியதிருக்கே! நான் எதையும் வாங்காமலே எனக்கு இந்தக் கெட்ட பெயர்! பிறகு... மகள் விற்கப்படுறதா இருந்தா...! எடுத்தது, தொட்டதுக்கெல்லாம் அடியும் உதையும் கிடைக்கும்... நான் உன்னை பணம் கொடுத்து வாங்கியிருக்கேன்னு சொல்லுவாங்களே!” தலோக்கா உயிரோடு இருந்தபோது ராணு இப்படிச் சொல்லுவாள்: “நான் எதையும் கொண்டு வரல. அதே மாதிரி உங்ககிட்டயிருந்து நானும் எதையும் வாங்கல. கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்திருக்கீங்க. என்னை விலைக்கு ஒண்ணும் நீங்க வாங்கல.” தொடர்ந்து அவள் இப்போது தனக்குள் சொன்னாள்: “ஆனா, என் மகளை விற்கிறாங்க. வீட்டுல சாப்பிடுறதுக்கு எதுவும் இல்ல. பிறகு எப்படி கல்யாணம் பண்ண முடியும்?’  ராணு சிந்தித்தாள்: ‘இன்று மெஹர்பான்தாஸ் இருந்திருந்தால்! ஒரே ராத்திரியில மகளோட கல்யாணத்துக்கு தேவையானதை சம்பாதிச்சுடுவேன். பிறகு சொந்த பந்தங்கள் கூடியிருக்க வாத்திய மேளங்கள் முழங்க புதிதாக வரும் மணமகளுக்கு என் மகளை நான் கொடுப்பேன். மகள் பல்லக்குல உட்கார்ந்து கணவன் வீட்டுக்குப் போறப்போ நான் தூரத்துல நின்னுக்கிட்டு அழுவேன். ஆனா, ஒண்ணும் சொல்ல மாட்டேன்.’ – “மகளே உன்னை இன்னொருத்தன் மனைவியாக ஆக்குறதுக்கு நான் என்னோட உடலை விலைக்கு வித்திருக்கேன்... பிறகு ஐநூறோ ஐநூற்று ஐம்பதோ ரூபாய் கிடைத்தாலும் அந்தப் பிசாசு அதை என்கிட்ட தருமா? இனி மகளை விற்கணும்னா இந்த ஐநூற்று ஐம்பதை வச்சுத்தான் விற்கணும். எதாவது நகரத்துக்குக் கொண்டுபோனா, கொஞ்சம் கொஞ்சமாக விற்கலாமே! நகரங்கள்ல கொஞ்ச நேர இன்பத்துக்காக முப்பது, நாற்பதுன்னு செலவழிக்கிற எத்தனையோ ஆண்கள் இருக்காங்க. சாப்பிட நல்ல உணவும், உடுக்க பட்டாடைகளும் கிடைக்கும். கொஞ்ச நாட்கள் போனால் பெட்டி நிறைய பணத்தையும், நகைகளையும் சம்பாதிக்கலாம்.


தொடர்ந்து அமைதி நிலவிக் கொண்டிருந்ததால், ராணு தன்னுடைய சிந்தனையிலிருந்து திடுக்கிட்டு  சுய உணர்விற்குத் திரும்பினாள். அவள் தன்னைத்தானே கன்னத்தில் அடித்துக் கொண்டாள். இனம்புரியாத ஏதோ பயத்தால் ராணுவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

ஜந்தான் ராணு சொன்ன கடைசி வாக்கியத்தை நினைத்துக் கொண்டிருந்தாள்: “மருமகளே இல்லாதவங்களுக்கு பேத்தி எங்கேயிருந்து வந்தா?”

அந்த நேரத்தில் க்யான்சந்த், கேஸர்சிங், ஜகு, துல்லா கர்முதீன் ஆகியோர் அங்கு வந்தார்கள். அவர்கள் ஹூஸூர்சிங்குடன் கட்டிலில் உட்கார்ந்த பிறகு, ஜந்தானையும் அழைத்தார்கள். ராணுவின் மறுமணத்தைப் பற்றி பேச்சு ஆரம்பமானது-அதுவும் பஞ்சாயத்து முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்பது மாதிரி.

இந்த வயதான காலத்தில்-மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்-பஞ்சாயத்தும்,சொந்த பந்தங்களும் தன்னை அவமானப்படுத்த வந்திருக்கிறார்கள் என்று ஹூஸூர்சிங் நினைத்தான். அதே நேரத்தில் ஜந்தான் - பெண்களுக்கே இருக்கும் நுண்ணறிவால் விஷயத்தின் அடித்தளம் வரை அவளுடைய மனம் சென்றது. இவ்வளவு இலகுவான,லாபம் தரும் வழி தனக்கு முதலிலேயே ஞாபகத்தில் வரவில்லை என்று அவள் நினைத்தாள். அதற்காக ஜந்தான் வருத்தப்பட்டாள். ஆமாம்! ஞாபகம் வந்தது. அப்போது படி மிகவும் வயதில் இளையவளாக  இருந்தாள், இப்போது அவள் திருமண வயதை எட்டிவிட்டாள். இப்போது ராணு மருமகளாக இருப்பதும், படி பேத்தியாக இருப்பதும் லாபமான ஒரு விஷயம்.

ஹூஸூர்சிங் பஞ்சாயத்து உறுப்பினர்களை நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்களை மூடி இருந்தபோது ஜந்தான் பற்களைக் காட்டிக் கொண்டு கிழவனை எதிர்த்தாள். “நீங்க இடையில ஒரு தடையா இருக்கக் கூடாது. கிழவா! சாகுறதும் இல்ல, வாழறதும் இல்ல. உலகத்துல என்னவெல்லாம் நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பிறவியில் குருடனா இருக்குறவன் அடுத்த பிறவியிலயும் குருடனாகத்தான் இருப்பான்.”

பஞ்சாயத்து கிழவனுக்கும் கிழவிக்குமிடையில் நடைபெற்ற சண்டையைச் சமாதானத்திற்குக் கொண்டுவந்தது. அவர்கள் இருவரின் அனுமதியையும் வாங்கிக் கொண்டு  அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். கிளம்புகிற சமயத்தில் குடும்பத்தில் மூத்தவள் என்ற முறையில் ஜந்தான் அவர்களை ஆசீர்வதித்தாள்.

பஞ்சாயத்து உறுப்பினர்கள் பார்வையிலிருந்து  மறைந்திருப்பார்கள். ராணு சண்டை போடத் தயாரானாள். “நீங்க படியோட திருமண விஷயத்தைப் பற்றி பேசுறதுக்குத்தானே போனீங்க? அதுக்கு மத்தியில என் பிணத்தை  எதுக்காக இழுக்கணும்? வெட்கம்னு ஒண்ணு இருந்தா போயி தூக்குல தொங்கி  சாகணும், கிழவி... ஆத்துல கலங்கலோட ஓடுற தண்ணியில முங்கி  சாகக் கூடாதா? நீங்க என் சம்முவைக் கல்யாணம் பண்ணிக்கலாமே? பந்தாகூட படுத்துக்கங்க. ஸந்தாவைக் கல்யாணம் பண்ணிக்கங்க. பிணமே! நான் யாருக்கு பால் கொடுத்து வளர்த்தேனோ, அவனைக் கல்யாணம் பண்ணிக்கணுமா?”

பின்னால் யாரோ ராணுவின் தலை முடியைத் தொட்டார்கள். அவள் அதிர்ந்துபோய் அந்த இடத்திலிருந்து கீழே விழுந்தாள். ராணு அடித்துப் பிடித்து எழுந்கபோது பற்களைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் சன்னுவை அவள் தனக்கு முன்னால் பார்த்தாள். அவள் ராணுவை வீட்டைவிட்டு சற்று தூரத்தில் காலியாகக் கிடந்த மைதானத்திற்கு அழைத்துக் கொண்டு போனாள். அங்குதான் கிராமத்தைச் சேர்ந்த காதலர்களும் காதலிகளும் இரவு நேரங்களில் சந்திப்பார்கள்.  

“அடியே தேவிடியா! புருஷன் எதுக்கு? நாங்க உங்க நன்மைக்காக சொல்றோம். அப்போ நீ நாயைப் போல திரும்பி கடிக்கப் பாக்குற...” -சன்னு சொன்னாள்.

“இல்ல, சன்னு...” -ராணு தேம்பி அழுதவாறு சன்னுவின் பாதத்தில் விழுந்தாள். “சன்னு... மங்கல் ஒரு சின்ன குழந்தை. நான் எந்தச் சமயத்திலும் அவனை அந்தப் பார்வையில பார்த்ததே இல்ல...”  - ராணு அவளிடம் கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.

“இங்க பாருங்க ராணு!” - சன்னு தொடர்ந்தாள்: “நீங்க இந்த உலகத்துல வாழணுமா? வயிறா இருக்குற இந்த நரகம் நிறையணுமா? வேண்டாமா? ஒரு பார்வையாலகூட பார்த்தது இல்லையாம்! புல்லெஷா என்ன சொல்லியிருக்கிறார்னு தெரியுமா?”

“இதரோ, பட்னா அதர்லானா (இதிலிருந்து எடுத்து அதில் இடும் வித்தியாசம் மட்டுமே)

இதுவரை அந்தப் பார்வையோட பார்க்கலைன்னா, இனிமேல் பார்த்துக்க வேண்டியதுதான். முட்டாள்!”

ராணு தன் மனதில் அப்போது மங்கலை நினைத்தாள். சன்னு தொடர்ந்தாள். “சிந்திச்சுப் பார்க்கணும். பிணமே! ரெண்டு கல்யாணத்துக்கான அதிர்ஷ்டம் இப்போ யாருக்கு கிடைக்கும்? ஒரு விஷயம் முடிஞ்சது. ஆமாம்! யாருக்கும் தெரியாம மூணு, நாலுன்னு நடக்குதுன்னு வச்சுக்க. அது ஒரு நல்ல விஷயமா? எப்பவும் பயந்துக்கிட்டே இருக்கணும். ஆனா ஆம்பிளைங்களோட விஷயம் வேற உலகம் அவங்களுக்கானது. அவங்கக்கிட்டே யாராவது கேட்பாங்களா? உங்க மங்கலை வெளியே இருக்குற யாராவது தட்டிக்கொண்டு போயிடுவாங்க. அதுக்குப் பதிலா நீங்களே மங்கலை வச்சிக்க வேண்டியதுதானே? ஸலாமத்தியோட விஷயம் தெரியும்ல? சரி அதெல்லாம் இருக்கட்டும்... உங்க மகளோட கல்யாணம் நடக்கணுமா, வேண்டாமா?”

ராணு அதைக் கேட்டு அதிர்ந்து போனாள். “திருமணம் எனக்கா என் மகளுக்கா? என் திருமணம்...” - ராணு ஒரு குழந்தையைப் போல பிடிவாதம் பிடித்தாள். “இல்ல நான் அப்படி எந்தச் சமயத்திலும் நடக்க மாட்டேன்!”

வீட்டிற்குத் திரும்பி வந்தபிறகு ராணு சிந்தனையில் மூழ்கினாள். வேறொரு நெருப்பு  அவளுடைய இதயத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி அல்ல... பிறகு? பிறக்காத ஒரு குழந்தை தன்னுடைய உடலுக்குள் அசைவதைப்போல் அவள் உணர்ந்தாள்.

சாயங்காலம் பூரண்தேயி வந்தபோது ராணு உடல்நலமில்லாமல் படுத்திருந்தாள். நெற்றியில் துணி நனைத்து கட்டப்பட்டிருந்தது. பூரண்தேயி மெதுவான குரலில் கேட்டாள்: “இது என்ன காய்ச்சல், ராணு?”

ராணு புன்னகைத்தவாறு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பூரண்தேயி சிரித்தாள். அதைப் பார்த்து விஷயம் என்னவென்றே தெரியாமல் படியும் குலுங்கிச் சிரித்தாள்.

மகான்மார்களின், சன்னியாசிகளின், ராதா-கிருஷ்ணனின், சிவன்-பார்வதியின் படங்கள் அதாகவே எப்போது, எப்படி சட்டத்திற்குள் போய் நுழைந்தன என்று யார் பார்த்தது? அந்த தேவிகளின், தேவர்களின் முகத்தில் ஆழமான அன்பு நிறைந்திருந்தது. படியின் வாய் திறந்த சிரிப்பைக் கேட்டு வேப்ப மரத்திலிருந்த பறவைகள் ஓசை உண்டாக்கியவாறு பறந்து சென்றன. கோவிலின் உச்சியின்மீது செங்கதிரோனின் அன்றைய அணைப்பு முடிந்தவுடன், மணி அடித்தது.

மங்கல் எங்கிருந்தோ வாசலில் வந்து நின்றான். அவன் அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அன்று ஏழு ரூபாய் சம்பாதித்திருந்தான். வழக்கம்போல அவன் அதை ராணுவின் கையில் கொடுத்தான். அப்போது பூரண்தேயி சொன்னாள்: “ஆமா... அவன் சம்பாதிப்பான்.


நீ சாப்பிடு...” பதைபதைத்துப் போன ராணுவின் கையிலிருந்து பணம் கீழே விழுந்தது. நோட்டுகள் காற்றில் பறந்தன. நாணயம் சிறிது நேரம் தரையில் சுற்றிய பிறகு ஒரு மூலையில் போய் நின்றது. மங்கல் ஆச்சரியத்துடன் பூரண்தேயியிடம் கேட்டான்: “நீங்க ஏன் சிரிக்கிறீங்க, சித்தி?”

“உன்னோட இவள்கிட்ட கேளு...” என்று கூறிய பூரண்தேயி அங்கிருந்து வெளியேறினாள். பதைபதைத்துப் போயிருந்த ராணுவிற்கு அருகில் மங்கலைத் தனியாக விட்டுவிட்டு அவள் படியை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

மங்கல் ஒரு முட்டாளைப் போல உரத்த குரலில் சிரித்தான். “கோட்லாவுல இருக்குற பொம்பளைங்க எல்லோரும் ஒரே மாதிரி.” அதைக் கேட்டு ராணுவிற்குக் கோபம் வந்தது. அவள் சொன்னாள்: “ஆம்பளைங்க மட்டும் என்னவாம்?”

மங்கலுக்கு எதுவுமே புரியவில்லை. இருவரும் அவரவர்களின் சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள். மங்கல் ட்ரங்க் பெட்டியைத் திறந்து சட்டையை எடுத்தான்.ஒரு காலத்தில் பெஷாவரில் வாங்கியது அது. சட்டையை கையில் மாட்டி  காற்றில் பறக்க விட்டவாறு அவன் சொன்னான்: “ஆம்பளைங்க விஷயம் புரியுது.”

“ஆம்பளைங்க விஷயம் ஆம்பளைங்களுக்கும் பொம்பளைங்க விஷயம் பொம்பளைங்களுக்கும் மட்டுமே புரியும்” என்று சொன்ன ராணு தன் கண்களால் பேச ஆரம்பத்தாள். நூற்றுக்கணக்கான வருடங்களாக பெண்கள்  பயன்படுத்தி வந்த ஒரு கலை!

மங்கல் சிந்தித்தான். சிரிதான்! அன்று இரவு சௌதரியின் சிதிலமடைந்த வீட்டின் மாடியில் ஸலாமத்தி மற்றொரு வீடுகட்ட திட்டமிட்டிருக்கும் செய்தி அவனுக்குக் கிடைத்தது! அவன் திரும்பி நின்று ராணுவிடம் கேட்டான்: “இன்னைக்கு நீங்க இந்த ஆம்பளை- பொம்பளை விஷயத்தைப் பற்றி பேசி சண்டை போடுறதுக்குக் காரணம் என்ன?”

“அங்கேதான் எல்லா சண்டையும் இருக்கு.”

“குருக்ஷேத்திரப் போரா?”

அதைவிட பழையது. அதுல வெற்றி பெற்றவங்க தோல்வியடைவாங்க. தோல்வி அடைஞ்சவங்க திரும்பவும் தோல்வியைச் சந்திப்பாங்க.”

மங்கல் ராணு சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அவர்கள் இருவருக்கும்- ஒரு ஆளுக்கு இன்னொரு ஆளைப்பற்றி எதுவும்  தெரியாது. சில நேரங்களில் என்ன சொன்னாலும்  அர்த்தம் புரிந்துவிடுகிறது. சில நேரங்களில் அர்த்தம் புரியாமலும்  இருக்கிறது. அந்தச் சமயத்தில் பேச்சுக்கு அர்த்தம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள அறிவோ, நேரமோ கட்டாயம் தேவை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அவை இரண்டும் மிகவும் குறைவாகவே இருந்தன. ராணு-முப்பத்து நான்கு, முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண். அவளுக்குள் மனிதத் தன்மை ஏற்கெனவே மலர்ந்துவிட்டிருந்தது. நவநாகரிக  மங்கையிடம்  இருக்கும் வசீகரமும் பூரிப்பும் அவளிடம் இருப்பதென்பது இயல்பானது அல்ல. எனினும், பல நூறு ஆண்டுகளாகச் சூழ்நிலைகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து அடங்கிக் கிடந்த பெண் உணர்வு அப்போதும் எச்சரிக்கையுடன் இருந்தது. அதற்கு நேர்மாறாக இருந்தான் மங்கல். இருபத்து நான்கு வயதுள்ள ஒரு இளைஞன். ஆரம்பத்திலும், இறுதியிலும் பாய்ந்தோடிக்கொண்டிருந்த ஒரு நதி - அது பாய்ந்தோட யாரும் வழி வெட்டித் தரவேண்டிய அவசியமில்லை.

மனதில் நினைக்காதது கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு ராணு வெளியே வந்து பாத்திரங்களை மோதவிட்டு ஒசைகள்  உண்டாக்கினாள். ஸலாமத்தியின் அருகில் செல்ல தற்போதைக்கு மங்கலால் முடியவில்லை. தாய் ஜந்தான் அவனை அழைத்து தன் அருகில் உட்கார வைத்தாள். விஷயத்தைப் புரிந்துகொண்ட ராணு அப்போதே படியையும் சிறு பிள்ளைகளையும் குளிப்பதற்காக அனுப்பினாள். ராணு பொதுவாக பெண்கள் தேர்ந்தெடுக்கும் இடமான கதவுக்குப் பின்னால் நின்றிருந்தாள்.

ஜந்தான் பேச்சை ஆரம்பித்தபோது மங்கலுக்கு விஷயம் புரிந்துவிட்டது. தலைப்பாகைக்கு நடுவில் அவனுடைய முடி வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அவன் அதை மீண்டும் தலைப்பாகைக்குள் இருக்கும்படி செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தான். மங்கலான வெளிச்சத்தில் மங்கலின் முகத்தில் இரத்த நிறம் பரவிக் கொண்டிருப்பதை ராணு பார்த்தாள்.

கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றுகொண்டிருந்த ராணு, தன் மார்பில் கை வைத்தாள். வீட்டின் மேல்மாடியில்  கொலை செய்து விட்டு,கொலையாளி ஓடித் தப்பிப்பதற்காக வேகமாகப் படிகளில் இறங்கும்போது ஏற்படும் சத்தத்தைப் போல அவளுடைய இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. வெயிலில் வாடி கீழே விழுந்த வெண்டைப் பூவைப்போல ராணுவின் முகம் வெளிறிப் போயிருந்தது. கண்களில் ஒளி குறைந்திருந்தது. உதடுகள் திவான் ஷாவின் கடையில் விற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் வாடிய காய்கறிகளைப் போல இருந்தன. ராணுவின் பாதங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.

மங்கல் எழுந்து உள்ளே பார்த்துவிட்டுச் சொன்னான்: “இல்ல-இது எப்பவும் நடக்காத ஒண்ணு. நான் உங்களைச் சொல்லல அம்மா. தீர்மானம் எடுத்த அந்தப் பஞ்சாயத்துக்காரர்களின் தாய்... இர்வின் பிரபு வந்தாலும் ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் வந்தாலும் இது நடக்கப் போறதே இல்ல. அவங்களுக்கு என் தாயின் வயசு இருக்கும். நான் அவங்க பாதங்கள்ல விழத் தயாராக இருக்கேன். அதுக்காக தலையில காலை வைக்க முடியாது.”

மங்கல் யாரிடம் என்றில்லாமல் புலம்பியவாறு வெளியேறினான். பக்கத்து வீட்டின் மாடியில் கண்ட நிழல் பின்னோக்கி நகர்ந்தது. “மகளே, ராணு! அடியே முட்டாள்! வேகமாகப் போயி அவனைத் தடுத்து நிறுத்து. அவன் தனக்குத்தானே எதாவது பண்ணிக்கப் போறான். இன்னொரு தலோக்காவின் இறந்த உடல் வீட்டுக்கு வரும்னு சொல்லிட்டுத்தான் அவன் வெளியே போயிருக்கான்.”

ராணு மங்கலைத் தடுத்து நிறுத்துவதற்காக இருட்டில் ஓடினாள். கால் தடுமாறிக் கீழே விழுந்த அவள், வேகமாக எழுந்து ஓடினாள். வாசற்படியை அவள் அடைந்தபோது சன்னு, பூரண்தேயி, வித்யா ஆகியோர் ராணுவைத் தடுத்தார்கள். ராணு அவர்களை விலக்கிவிட்டு, இருட்டுக்குள் கையை நீட்டினாள். 

“எதுவும் செய்ய முடியாது” - சன்னு ராணுவைத் தேற்றினாள். “அய்யோ எதாவது பண்ணிட்டா, குடும்பம் நாசமாப் போயிடும். தப்பு என் தலையில விழுந்திடும்” - ராணு அழுதுகொண்டே சொன்னாள். “அப்படின்னா அவன் போயி சாகட்டும். உங்கமேல யார் சொல்லுவாங்கன்னு  நாங்கதான் பார்க்குறோமே!”

“தேவீ! என் உடல் குளிர்ந்து மரத்துப் போனது மாதிரி இருக்கு!”-ராணு பூரண்தேயியின் கைகளில் சாய்ந்தாள். சன்னு ராணுவின் கையைப் பிடித்துத் தடவியவாறு சொன்னாள்: “உங்களுக்குச்  சூட் கிடைக்கணும்ன்றதுக்காகத்தான் நாங்க இந்த ஏற்பாடுகளையே செய்றோம். நீங்க ஒரு பனிக்கட்டியா ஆயிடக் கூடாதே!

“என்னைக் காப்பாத்தணும் சின்னம்மா!” -ராணு பூரண்தேயியின் பாதங்களில் தலையைக் குனிந்துகொண்டு சொன்னாள்.

பூரண்தேயி ராணுவின் தலையைத் தடவியவாறு அறிவுரை சொன்னாள்: “நீ இறக்கப் போறதுனால என்ன? எதுவுமே நடக்கப் போறது இல்ல.ஆண்மைத்தனம் இல்லாத இவன்கள்-தோள்ல கொஞ்சம் சுமை கூடுறது மாதிரி இருக்குன்னா, இப்படியெல்லாம் நடந்துக்குவாங்க நாம... பொம்பளைங்க இப்படியெல்லாம் நடக்கலைன்னா, காரியம் நடக்கவே நடக்காது.”


ராணுவிற்குச் சற்று மனதில் நிம்மதி உண்டானது மாதிரி இருந்தாலும், அவள் பதைப்புடன் சன்னுவிடம் சொன்னாள்: “அவன் என்ன செய்வான்?”

“நீங்க என்ன செய்வீங்களோ, அதை...”

“என்ன நினைப்பான்?”

“நீங்க நினைக்கிறதை...”

பக்கத்தில் நின்றவாறு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த படிக்கு விஷயம் புரிந்துவிட்டது. “அம்மா, அப்படி ஏதாவது பண்ணினா நான் ஏதாவது சாப்பிட்டு உயிரை விட்டுடுவேன்...” அவள் சொன்னாள். அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட பெண்கள் தங்கள் மூக்கின் மீது விரலை வைத்தார்கள். சன்னு ஓடிச்சென்று படியின் தலைமுடியைப்  பிடித்தாள். அதைப் பிடித்து இழுத்தாள். படி அங்கிருந்து வேகமாக ஓடி அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளுடைய முகம் கவலையாலும் வெட்கத்தாலும் ஒளிர்ந்தது.

5

ங்கல் வாக்களித்தபடி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தான். ஸலாமத்தி, மங்கலின் வீட்டில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் கவனித்திருந்தாலும், அவள் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டாள். மங்கலை எதிர்பார்த்துக் கொண்டு அவள் அங்கு அமர்ந்திருந்தாள். இதயத்தில் இருந்த ஒரே ஒரு உணர்வை அவள் மங்கலிடம் கூற ஆவலுடன் இருந்தாள்.

‘ஹஸ்தினை சந்த்மங்லியா

யார்ச்சீட் கயாகலிதா ஆனா’

(விளையாட்டில் முடியைப் பிடித்துக் கேட்டதால், காதலன் அருகில் நடந்து செல்வதையே தவிர்த்தான்).

மங்கல் ஸலாமத்தியின் பார்வையில் பட்டான். அவனுடைய உடல் அப்போதும் நடுங்கிக் கொண்டிருந்தது. மங்கல் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, ஸலாமத்தியின் அருகில் வந்தான். ஸலாமத்தி எழுந்து மங்கல் மவுனமாக இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை அறிய முற்பட்டாள். அவள் அன்று தன்னை நன்கு அழகுப்படுத்திக் கொண்டு வந்திருந்தாள். திருமணமான மூத்த சகோதரியின் துப்பட்டாவை தலையில் போர்த்தியிருந்தாள்.அதிலிருந்த ஜரிகையாலான பூக்கள் அந்த இருட்டு வேளையில் ‘பளபள’வென மின்னிக் கொண்டிருந்தன.

மங்கலின் கண்கள் நெருப்புத் துண்டைப்போல பிரகாசமாக இருந்தன. அவன் அருகில் கிடந்த மரக்கட்டைமீது  தன்னுடைய ஒரு காலை வைத்துக்கொண்டு அதிகாரத் தொனியில் அழைத்தான்:

“ஸலாமத்தி!”

“ம்...”

“இங்கே வா.”

ஸலாமத்தி எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் மங்கலின் அருகில் வந்து நின்றாள்.

“துப்பட்டாவை எடு.”

அவள் துப்பட்டாவை எடுத்து சற்று தூரத்தில் எறிந்தாள்.

“சட்டையைக் கழற்று.”

அவள் சட்டையைக் கழற்றினாள்.ஒரு இளம்பெண்ணைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமமான ஒரு விஷயம் அது. எனினும்,சூழ்நிலை என்ற தூக்குமரத்தில் ஏற்றப்பட்ட ஸலாமத்தி எல்லாவற்றையும் மறந்துவிட்டாள்.

ஒருவேளை ஸலாமத்தி ஏதாவது கூற நினைத்திருக்கலாம். ஆனால்...! தூரத்திலிருந்து வந்த வெளிச்சத்தில் மங்கல் ஸலாமத்தியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னான்: “சவாரி முடிஞ்சு போச்சு, இனிமேல் நீ போ.”

ஸலாமத்தி பதைபதைப்புடன் ஆடையை எடுத்து அணிந்து, துப்பட்டாவைக் கையில் இட்டுக்கொண்டு நான்கு திசைகளிலும்  கண்களை ஓட்டியவாறு அங்கிருந்து கிளம்பினாள்.

அந்த நேரத்தில் விளக்குடன் யாரோ, அந்த வழியாகக் கடந்து சென்றார்கள். அமைதியைக் கலைக்கும் எண்ணத்துடன் மங்கல் சொன்னான்: “யார்டா நீ?” சண்டை போடலாம் என்ற எண்ணத்துடன் அவன் மீண்டும் கேட்டான். ஆனால், அந்த மனிதன் விஷயம் தெரியாமல் சற்றுப் பரபரப்பு அடைந்தாலும், மங்கலைப் போல விவேகமற்றவனாக இல்லாமலிருந்ததால், தன்னுடைய பாதையில் அவன் சென்றான். மங்கல் சிறிதுநேரம் அங்கேயே நின்று காட்சிகளைப் பார்த்துவிட்டு, கைகளால் ஓசை உண்டாக்கியவாறு ஸலாமத்தியின் வீட்டிற்கு அருகில், அரிஜனங்கள் வசிக்கும் தெருவிற்குள் நுழைந்து மறைந்தான்.

6

ஞ்சாயத்து முடிவு செய்த நாள் வந்தது. பூரண்தேயி,வித்யா, சன்னு ஆகிய பெண்கள் சேர்ந்து ராணுவிற்கு மருதாணி பூசினார்கள். கூந்தலை வாரி தலையில் கண்ணாடி மாளிகை கட்டினார்கள். எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் ராணு அழுதுகொண்டேயிருந்தாள்.

ராணுவின் பிள்ளைகள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். அன்றும் தங்களின் தாய்க்கு என்னவோ நடக்கப் போகிறது என்று அவர்கள் நினைத்தார்கள். படி தன்னுடைய இளைய தம்பிகளை சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக அழ வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். இறுதியில் வயதில் மூத்த பெண்களின் முடிவுப்படி பிள்ளைகள் சன்னுவின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

வாசலில் அழுக்குப் புடவை கொண்டு ஒரு திருமண மண்டபம் கட்டப்பட்டது. அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு மண்பானை வைக்கப்பட்டன. கரிபிடித்த அந்தப் பானைகள்மீது செந்தூரம் பூசப்பட்டது. ராணுவை அழைத்துக்கொண்டு வந்து மண்டபத்தில் உட்காரவைத்த போது அவள் வாய்விட்டு அழுதாள்: “இறந்துபோன என் கணவனே! இங்க பாருங்க... உங்க ராணுவை என்னவெல்லாம் செய்யச் சொல்றாங்க, பாருங்க...”

புரோகிதன் கேட்டான்: “மணமகன் எங்கே?”

க்யான்சந்த், கேஸர்சிங் ஆகியோர் இங்குமங்குமாகத் தேடினார்கள். அவர்கள் மங்கலை இறுகப் பிடித்துக்கொண்டு வந்து உள்ளேயிருந்த கட்டிலுடன் சேர்த்துக் கட்டிப் போட்டிருந்தார்கள். சடங்குகளிலிருந்து விலகிச் சற்று தூரத்தில் நின்றிருந்த மெஹர் கர்ம்முதீன் மங்கலைத் தேடி உள்ளே சென்றுவிட்டு அதே வேகத்தில் திரும்பி வந்தான். “அய்யோ! மங்கல் உள்ளே இல்லையே!” - அவன் சொன்னான். அன்று வடக்கு திசையிலிருந்து வீசிய காற்று, திருமண மண்டபமாகக் கட்டப்பட்டிருந்த அழுக்குப் புடவையில் பட்டு இலவசமாக வாத்திய இசையை முழக்கியது. மண்டபத்திற்கு அலங்காரமாகத் தொங்க விடப்பட்டிருந்த சிறிய மரக்கிளைகள் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ஓசை உண்டாக்கின.

சற்று தூரத்தில் ஒரு குழியில் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருந்த டப்பு வாலை ஆட்டியவாறு அங்கு நடைபெறும் காட்சிகளைப் பார்ப்பதற்காக வந்து நின்றது. வயது அதிகமானதால் அதிக வெளிச்சத்தையும், கோலாகலத்தையும் டப்புவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அது அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்துக் குரைக்க ஆரம்பித்தது.

“ச்சீ... வாயை மூடு...” ஜந்தான் அதைத் திட்டியவாறு தொடர்ந்தாள்: “எப்போ பார்த்தாலும் எதையாவது பேசிக்கொண்டிருப்பதைத் தவிர இந்தக் கிழவனுக்கு வேற வேலை எதுவும் இல்ல...” தொடர்ந்து அவள் குழிக்குள் விழுந்து கிடந்த கண்களை விரித்து திருமண மண்டபத்தைப் பார்த்தாள். இனி என்ன ஆபத்து வந்து சேரப் போகிறது!

“கொஞ்சம் மன்னிக்கணும் பிராமணரே!” – கிராமத் தலைவனான தாராசிங் புரோகிதனிடம் சொன்னான்: “அந்த அம்மாவின் பையனை நான் பிடிச்சுக் கொண்டு வர்றேன்.”

“சரி...” கேஸர்சிங் அவனைப் பின்பற்றினான்.

“அவனோட அம்மாவின் கல்யாணத்துக்கு நாம செருப்பைச் சுமக்கணுமா? நாங்க எல்லோரும் வர்றோம். நீங்க எல்லோரும் தயாரா இருங்க. இவ்வளவு அடிகள் தந்தும் மங்கல் ஓடிவிட்டானா?”

மங்கலைச் சரிபண்ணுவதற்காகக் கிராமத்து மனிதர்கள் அவனை எதிர்த்தார்கள். அவனுடைய ஒரு காலை அடித்து ஒடிக்கவேண்டும் என்று அவர்கள் முதலில் முடிவு செய்தார்கள்.


இல்லாவிட்டால் மங்கல் திருமண மண்டபத்தில் அடங்கி இருக்கமாட்டான். ஆட்கள் லத்தி, ஈட்டி, புல் அறுக்கப் பயன்படும் கத்தி (கண்டாஸா) ஆகியவற்றுடன் மங்கலைத் தேடிப் புறப்பட்டார்கள். பஞ்சாயத்தின் சட்டங்களைப் பிறப்பிக்கும் க்யான்சந்த் வெளியே தெரியும்படி, “வேண்டாம் வேண்டாம்” என்று கட்டளை போட்டவாறு எல்லோருக்கும் உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு பின்னால் வந்தான். திருமண மண்டபத்தில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்களுள் மங்கலை இந்த உலகத்திற்கு அளித்த அன்னையும் இருந்தாள்.

ஆண்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து பயந்துபோன ராணு உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். “என்னை விட்டுடுங்க தோழிகளே! நான் வாழப் போறது இல்ல” என்று சொன்ன ராணு மயக்கமடைந்து  கீழே விழுந்தாள். பெண்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பானையை எடுத்து அதிலிருந்த நீரை அவளுடைய தலைமீது ஊற்றினார்கள். மரணத்தைப் பார்த்ததைப் போல இனிமேல் திருமணத்தையும் பார்த்துக்கொள் என்பதாக இருந்தது அவர்களின் நடவடிக்கை.

மக்கள், மங்கலை விவசாயப் பண்ணையைச் சேர்ந்த பருத்தித் தோட்டத்தில் பிடித்தார்கள். அவன் ஆரம்பத்திலேயே அடி, உதைகள் வாங்கி மிகவும் பலவீனமாக இருந்தான். இரண்டாவது தாக்குதலில் கிட்டத்தட்ட மரண நிலையில் இருந்தான். வேண்டுமென்றால் மங்கல் ஓடி அவர்களிடமிருந்து தப்பித்திருக்கலாம். அதற்கான அதிர்ஷ்டம் அவனுக்கில்லை என்றுதான் சொல்லவேண்டும். மிர்ஸாவின் குதிரையைக் கூட ஸாஹபான் கட்டிப் போடத்தானே செய்தான்? அதைப்போல மங்கலின் குதிரையும் முன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சற்று தூரத்தில் நின்று மேய்ந்துகொண்டிருந்தது. வயலை நாசம் செய்துவிடக் கூடாது என்பதற்காக மங்கல் குதிரையின் முன் கால்களை சங்கிலியால் கட்டி ‘அலிகார்’ பூட்டுப் போட்டு பூட்டுவது எப்போதும் வழக்கத்திலிருந்த ஒன்று.

தன்னுடைய நண்பர்களான நவாப், இஸ்மாயில், குருதாஸ் ஆகியோர் இந்த ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று மங்கல் எதிர்பார்த்தான். ஆனால் அந்த அயோக்கியர்களும் கோட்லாவின் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் மங்கலுக்கு அறிவுரை சொன்னார்கள்: “சரி... இருக்கட்டும் நண்பா! கல்யாணம் தானே! கொலை ஒண்ணும் நடந்துடலையே!”

மங்கல் ஒளிந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்தது அந்தக் கிணறு. சில வருடங்களுக்கு முன்பு அந்தக் கிணற்றுக்கு அருகில்தான் மங்கலின் அண்ணனான தலோக்கா கொலை செய்யப்பட்டான். எப்போதையும் விட திடீரென்று இருட்டு வந்து சேர்ந்ததும் சூரியன் தலோக்காவின் வீட்டு வாசலில் இரத்தத்தைச் சிதறவிட்டதும் அன்றுதான். அங்கிருந்த மண்ணில் அப்போதும் இரத்தத்தின் வாசனை வந்துகொண்டிருந்தது.

கிராமத்து மனிதர்கள் மங்கலைச் சுற்றி வளைத்தபோது, அவன் பருத்தி வயலின் மத்தியில் ஒரு குழியில் பதுங்கி உட்கார்ந்திருந்தான். சில நேரங்களில் குளிர்காலத்தில் கோட்லாவில் ஏதாவது நரியோ அல்லது காட்டுப் பன்றியோ வந்துவிட்டால் மக்கள் இந்த மாதிரி கையில் கிடைத்த ஆயுதங்களுடன் அவற்றை வேட்டையாடுவதுண்டு. குழிக்குள் மறைந்திருந்த மங்கல் ஒரு காட்டுப்பன்றியைப் போலத் தோன்றினான். கையில் ஆயுதங்களுடன் சுற்றிலும் கேட்கும் வண்ணம் சத்தம் போட்டவாறு அங்கு வந்த மக்கள் கூட்டம் மங்கலைப் பார்த்தவுடன் அமைதியாகிவிட்டார்கள். யார் முதலில் அவனைப் போய் பிடிப்பது என்பதை அறிவதற்காக அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மங்கலின் முகத்தில் தெரிந்த வெளிப்பாடுகளைப் பார்த்து கிராமத்து ஆட்கள் பயந்துவிட்டார்கள். அவர்கள் கையில் இருந்த கழிகளைத் தரையில் தட்டி மங்கலைப் பயமுறுத்த முயற்சித்தார்கள். கோழைத் தனத்தில் உண்டான ஆவேசத்துடன் தரையில் அடித்துக்கொண்டிருந்த கழிகள் பூமியில் அடையாளங்களை உண்டாக்கின. கிராமத்து ஆட்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, யாரும் மங்கலின் அருகில் செல்லவில்லை. அவனுடைய மிகவும் நெருங்கிய நண்பனான குருதாஸ் முன்னால் சென்றான். அதைப் பார்த்து கேஸர்சிங், நவாப், இஸ்மாயில், ஜகு ஆகியோரும் அவன் அருகில் சென்றார்கள். மங்கல் ஓடித் தப்பிப்பதற்காகக் குழிக்குள் இருந்து வெளியே குதித்தான். அத்துடன் ஆட்கள் நான்கு திசைகளில் இருந்தும் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.

அங்கு உண்டான கோலாகலங்களைப் பார்த்து வழியில் போய்க் கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கிராமத்து ஆட்கள் மங்கலின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவனாக இருந்ததால் தலை முடியை அவமதிக்காமல் கேஸர்சிங்கும் தாராசிங்கும்தான் கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த மோசமான காரியத்தைச் செய்ததே அவர்கள்தான். பிடித்து இழுத்துச் செல்வதிலிருந்து தப்பிப்பதற்காக மங்கல் சிறிது நேரம் நடப்பான். பிறகு அவன் கட்டிப் போடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் திருட்டுக் காளையைப் போல பின்னோக்கி நடப்பான். வயல் வழியே இழுத்துக் கொண்டு சென்றதால் மங்கலின் நீளமான தலைமுடியிலும் தாடிக்கு மத்தியிலும் ஏராளமான சருகுளும் குப்பைகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. உடல் பூமியில் இழுபட்டதால் கிழிந்துபோன ஆடைகள் இரத்தத்தில் நனைந்திருந்தன.

ஆற்றிலிருந்து தர்மசாலையை அடைந்தபோது ஊர்வலமாகச் சென்ற மனிதர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமானது. பாதையில் பயணம் சென்றவர்கள் பாதையின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றார்கள். அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தார்கள். கிக்கர் மரங்களுக்கு மத்தியில் சற்று விலகி நின்ற ஒரு பெண் பயணி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணிடம் கேட்டாள்:

“அக்கா, இது என்ன?”

அவள் ஆச்சரியத்துடன் அந்த வெளியூர் பெண்ணை உற்று பார்த்தவாறு சொன்னாள்: “அய்யோ! உங்களுக்கு இவ்வளவு வயசாகியும், இது கல்யாணம்ன்றது தெரியலையா?”

கோட்லாவிலிருந்து சற்று தூரத்திலிருந்த விஷ்ணுதேவி மலை அப்போதும் வெள்ளைப் புடவை அணிந்து ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் அங்கு ஏராளமான புனிதப் பயணிகள் வழிபாடுகள் நடத்தி திரும்பிப் போய்க்கொண்டிருப்பார்கள். பவுர்ணமி சமயத்தில்தான் விஷ்ணுதேவி மலைக்கு நிறைய புனிதப் பயணிகள் வருவார்கள் அவர்கள் இப்போது மேள, தாளங்களுடன் தேவி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள். ‘காப்பாற்றுவதாக இருந்தால் இப்போது காப்பாற்று! தேவி! அம்பிகையே! பாவம் செய்தவர்களைக் காப்பாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இதுதான்’ புனிதப் பயணிகள் மந்திரங்களை உச்சரித்தவாறு தெற்குப் பக்கமும் தங்கள் கண்களை ஓட்டாமல் இருக்க மாட்டார்கள். அப்போது கோட்லாவின் இந்த வெளிச்ச இருட்டும் அவர்களின் பார்வையில் படவே செய்யும்.

பஞ்சாயத்து தலைவன் க்யான்சந்த் தொழிலாளர்களை வைத்து சரி பண்ணி தன்னுடைய வயலுடன் சேர்க்காமல் விட்டு வைத்திருந்த ஒரு இடம் கிராமத்திற்கு வெளியில் அது மட்டுமே. அங்குதான் மங்கல் காயம் பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தது. பிக்காக்ஸ், மண்வெட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி பல நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததன் பலனாக ஆற்றிலிருந்து அங்கு நீரைத் திருப்பிக்கொண்டு வர முடிந்தது.


தேலம் ராயணியின் வயல் எப்போதும் ஈரத்துடன் இருப்பதற்கும் அவளுடைய வயல் எந்நேரமும் வசந்தம் பொங்க இருப்பதற்கும் அது உதவியாக இருந்தது. அங்கு இதுவரை எவ்வளவோ பயணிகள் ஓய்வெடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு நீரைத் தடுத்து நிறுத்துவதற்காகக் கட்டிய மேட்டின்மீது மங்கல் விழுந்துவிட்டான். அதன் மூலம் அந்த மேடு தகர்ந்து நீர் பாய்ந்தோட வழி உண்டாகிவிட்டது. மங்கல் அணிந்திருந்த ஆடைகள் நனைந்து, முகத்தில் சேறு படிந்தது. மக்கள் மங்கலைப் பிடித்துத் தூக்கியிருப்பார்கள். ஆனால் அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சித்துக் கொண்டிருந்ததால் யாரும் அதற்குத் துணியவில்லை.

அழகான மணமகன்! தலைமுடி கலந்துபோய்க் கிடந்தது. தலைப்பாகை தலையில் இல்லை. கையில் சந்தனத்திற்குப் பதிலாக இரத்தம், வாசனைப் பொருளுக்குப் பதிலாக சேறு, கண்ணில் காதலுக்குப் பதிலாக வெறுப்பும், கோபமும். பரமசிவன் பார்வதியைத் திருமணம் செய்யப் போவது போன்ற ஆச்சரியமான திருமண ஊர்வலம். மணமகனின் கழுத்தில் ருத்ராட்ச மாலையும், பாம்பும், இடுப்பில் துணியும்,கையில் திரிசூலமும், உடுக்கையும்... பின் தொடர்ந்து வந்தவர்களோ? குரங்குகள், நரி, கரடி, யாணை போன்ற மிருகங்கள்...

திருமண மண்டபத்தில் மங்கலை உட்கார வைத்தபோது அவனுடைய உடல் இரத்தமயமாக இருப்பதைப் பார்த்து, ராணு சுய உணர்வையே இழந்துவிட்டாள். கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் என்று பெண்கள் தேற்றினார்கள். திருமணம் செய்வது ஒரு சாதாரண சடங்கு. அதற்கு நீண்ட நேரம் ஆகாது. எனினும், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சாதாரண திருமணத்திற்கு வேண்டிய அனைத்தையும் தயார்ப் பண்ணிவிடுவார்கள்.

மணமகன் பொதுவாக மணமகளுடைய வீட்டிற்குச் சென்றுதான் அவளைத் திருமணம் செய்வது வழக்கம். ஆனால், இந்த விஷயத்திலோ மணமகனுடைய வீடும், மணமகளுடைய வீடும் ஒன்றே என்றாகி விட்டது. முன்னாலும், பின்னாலும் ஒன்றுதான்.

பூரண்தேயி, வித்யா போன்ற சில பெண்கள் மணமகளின் சொந்த பந்தங்களாக ஆனார்கள். ஜந்தான், சன்னு, ஸ்வரூப் ஆகியோர் மணமகனைச் சேர்ந்தவர்களாக ஆனார்கள். போருக்குத் தயார் நிலையில் இருப்பதைப்போல இரு பக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அணிவகுத்து நின்றிருந்தார்கள். தாய் என்ற நிலையில் ஜந்தான் தன்னுடைய பற்கள் இல்லாத வாயைத் திறந்து பாட ஆரம்பித்தாள். மற்ற பெண்கள் அவளைப் பின் தொடர்ந்து பாடினார்கள்.

அந்தச் சமயத்தில் படி தன்னுடைய தம்பிகளுடன் மாடியின் மீது ஏறி நின்றிருந்தாள். இளைய தம்பி சம்மு பெண்களின் பாட்டைக் கேட்டு சந்தோஷப்பட்டு கைகளால் தட்டி தாளம் போட்டுக் கோண்டிருந்தான். படி அவனை வேதனைப்படுத்துவதும், திட்டுவதுமாக இருந்தாள். எனினும், கள்ளங்கபடமற்ற அந்தக் குழந்தை அதைச் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. ராணுவின் பிள்ளைகள் அந்த வகையில் மாடியில் நின்று தங்களுடைய தாயின் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். படி முதலில் அழுதாலும், பிறகு ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் மறந்துவிட்டு திருமணம் நடைபெறும் இடத்திற்கு இறங்கிவந்தாள்.

“நீங்க ஏன் பாடவில்லை?” - வித்யா சொன்னாள். அவ்வளவுதான் அடுத்த நிமிடம் பெண்கள் அனைவரும் பாட ஆரம்பித்தார்கள். பெண்களை மறைந்து பார்த்தவாறு அங்கு நின்றிருந்த தாராசிங், க்யான்சந்த், திவானா, கேஸர்சிங், ஜகு, துல்லா, ஜமாலா, கர்ம்முதீன் ஆகியோர் உற்சாகம் தந்தார்கள். “ஆமாம்! பாடுங்கள்! பாடுங்கள்!”

ராணுவிற்கு சுய உணர்வு வந்தது. ஒரு புது மணப்பெண்ணும் இதுவரை செய்யாத வகையில் அங்கு கூடியிருந்தவர்களை அவள் வெறித்துப் பார்த்தாள்.

பெண்களின் பாடல்களுக்கு மத்தியில் யாரோ கையைச் சுருட்டி வைத்துக்கொண்டு விசில் அடித்தார்கள். அடுத்த நிமிடம் மணமகன் வந்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்,பெண்கள் நடனமாட ஆரம்பித்தார்கள். பூரண்தேயியின் நடனத்தை ஊர்க்காரர்கள் இன்னும் மறக்காமல் இருந்தார்கள். கைகளின் அசைவுக்கேற்ப அவளுடைய இரவிக்ககைக்கு அடியில் பிலாத்தி ஜம்பர் கண்ணடித்துக் கொண்டிருந்தது. நவாபின் மனைவி ஆயிஷா, தேலம் ராயணியின் மூன்று மகள்கள் - ஆயிஷா, இனாயத்தி, ஸலாமத்தி - இவர்கள் எல்லோரும் நடனத்தில் பங்கு பெற்றார்கள்.

அதற்குமேல் அதிக நேரம் ஆகவில்லை. அங்கு வந்திருந்த  ஆண்களும் நடனம் ஆட ஆரம்பித்தார்கள். யார் யாருடைய கையைப் பிடித்துக்கொண்டு நடனமாடினார்கள் என்று யாருக்கும்  தெரியவில்லை. பூரண்தேயி ஜமாலாவின் கையில் கிடந்து குதித்துக் கொண்டிருந்தாள். வித்யா, ஜகுவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். படி கீழே இறங்கி வந்தபோது பின்னாலிருந்து யாரோ அவளைத் தள்ளினார்கள். தொடர்ந்து அவள் க்யான்சந்தின் கையைப் பிடித்து குதிக்க ஆரம்பித்தாள்.

அந்த நேரத்தில் திரைசீலை விலகி, ராணுவின் திருமணம் நடந்தது. திடீரென்று எல்லோரும் அமைதி ஆனார்கள். மணமகளையும் மணமகனையும் பல்லக்கில் பயணம் அனுப்பி வைப்பதற்கான நேரம் வந்தது. மணமகளைச் சேர்ந்தவர்கள் பாட ஆரம்பித்தார்கள்.

முதலில் ராணுவையும், பிறகு மங்கலையும் மணவறைக்குள் தள்ளிவிட்டு கதவை மூடுவதை படியும், அவளுடைய தம்பிமார்களும் பார்த்து நின்றுகொண்டு கண்ணீர் விட்டார்கள். 

7

ந்த இரவு ராணு ஒரு தாய், சகோதரி, மனைவி என்ற நிலைகளில் மங்கலுக்குச் சேவை செய்தாள். வெளியே போக முடியாத நிலை. அதனால் அவள் தன் துப்பட்டாவைச் சுருட்டி ஊதி சூடாக்கி மங்கலின் காயங்களில் ஒத்தடம் கொடுத்தாள். அதன் மூலம் அவனுக்கு சற்று சுகம் தோன்றினாலும், உடல் நிலை மிகவும் மோசமாகவே இருந்தது. மங்கல் சில நேரங்களில் வேதனை எடுக்கும் இடங்களை வாய் திறந்து கூறாமலும், ஒத்தடம் கொடுக்க வேண்டியது எங்கு என்பதைக் கூறாமலும் ஆழமான சிந்தனையில் மூழ்கிவிட்டிருந்தான். சில நேரங்களில் ராணுவின் கைகள் தொட்டது மங்கலுக்கு வார்த்தையால்  விவரிக்க முடியாத ஒரு சுகத்தை உண்டாக்கியது. அவளுடைய கைகளில் பூசியிருந்த மருதாணிக்கு இரவை விட இருட்டு அதிகம் இருப்பதாக மங்கல் சந்தேகப்பட்டான்.

தன்னுடைய பிள்ளைகள் எதாவது சாப்பிட்டிருப்பார்களா? அவர்கள் எங்கே? எப்படி உறங்குகிறார்கள்? - இப்படி பல விஷயங்களையும் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள் ராணு. இளைய குழந்தை சம்முவைப் பற்றி நினைத்தபோது அதிர்ந்து போய்விட்டாள் ராணு. அங்கு நடந்துகொண்டிருப்பது சம்முவின் நிலைமையை விட மிகவும் பரிதாபமானது என்று அவள் நினைத்தாள்.சம்முவும் அவனைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகளும் நடந்த இந்தச் சம்பவங்களின் ஒரு பகுதி மட்டுமே.

மங்கல் முனகியவாறு ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்திருக்க, ராணு அருகில் அமர்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்கு அதிகமான தாகம் உண்டானது. என்ன செய்வது? ஜன்னலைத்  திறந்து யாரிடமாவது சிறிது நீர் கேட்கக்கூட அவளுக்குத் தைரியம் வரவில்லை.


மங்கல் எழுந்து இருட்டில் அங்குமிங்கும் பார்த்தான். பிறகு மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போல தன்னுடைய உடலிலிருந்த சட்டையை இழுத்துக் கிழித்தான்,

“அய்யோ! என்ன இது?” - ராணு அழுதுகொண்டே மங்கலின் அருகில் வந்தாள்.

“ச்சீ... விலகி நில்லுங்க” - மங்கல் கத்தினான்.

ராணு மங்கலின் பக்கத்தில் விழுந்துகொண்டு சொன்னாள்: “இந்த விஷயத்துல என் தப்பு எதுவும் இல்லைன்னு தெரியாதா, மங்கல்?”

“தெரியும்” - மங்கல் அலட்சியமாகச் சொல்லிவிட்டு, வேறு ஏதோ ஒரு உணர்வால் உந்தப்பட்டு ராணுவின் வலதுகையைப் பிடித்தான். தொடர்ந்து இருட்டிலேயே இருந்ததால் அவனுக்கு எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடிந்தது.

ராணு தன் கைகளைப் பின்னால் இழுக்கவில்லை. துடித்துக் கொண்டிருக்கும் இதயத்துடன் அவள் அமைதியாகத் தன் வாழ்க்கையின் கூட்டாளி, மருதாணி அணிந்த தன் கையை சாட்டை பிடிக்கும் கையிலேயே வைத்திருப்பானா, இல்லாவிட்டால் வீசி எறிந்துவிடுவானா என்று பார்ப்பதற்காகக் காத்திருந்தாள். ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. மங்கல் கை தானாகவே கீழே விழுந்தது. அதோடு சேர்ந்து ராணுவின் கையும்.

திருமணம் என்பது சந்தோஷமும் உற்சாகமும் தரக்கூடிய ஒன்று என்றுதான் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. வேறு சிலருக்கு அதைப்பற்றி தெரியும்; என்றாலும், திருமணத்தால் கிடைத்த சந்தோஷமும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் அவர்களைப் பொறுத்தவரையில் கடந்துபோன விஷயங்களாகிவிட்டன. திருமணத்தின் மூலம் கிடைக்கும் ஆனந்தம், பிச்சைக்காரன் பிச்சை பெறுவதற்காக ஹாத்திமின் தர்பாரிற்குச் சென்று மனிதத் தன்மையையும், சுய மரியாதையையும் அடமானம் வைத்து, அதன்மூலம் கிடைக்ககூடிய ஒன்றோ, இரண்டோ சில்லறைக் காசுகளுக்கு நன்றி கூறுவதற்கு நிகரானது என்று கூறுவதே பொருத்தமானது.

காலையில் மங்கலும் ராணுவும் படுக்கையை விட்டு எழுந்தபோது வெளியிலிருந்து யாரோ பூட்டைத் திறந்தார்கள். மங்கல் வெளியே செல்வதற்காக இரண்டு, மூன்று அடிகள் எடுத்து வைத்துவிட்டு, திடீரென்று ஏதோ மெதுவான குரலில் முனகியவாறு தரையில் உட்கார்ந்துவிட்டான். ராணு வேகமாகத் தன் மாமியாரிடம் ஓடினாள்: “அம்மா! சமையலறையின் சாவி எங்கே?”

“எதுக்கு மகளே?” - ஜந்தான் கேட்டாள்.

“மஞ்சள் எடுக்கணும். மங்கலுக்குப் பெரிய காயம் உண்டாகியிருக்கு.”

ஜந்தான் துப்பட்டாவின் முனையிலிருந்து சாவியை எடுத்துக் கொடுத்தாள். ராணு சாவியுடன் சமையலறைக்குள் போவதற்குப் பதிலாக, வாசலுக்கு ஓடினாள். அங்கு அவளுடைய பிள்ளைகள், போர்வையை மூடியும் மூடாமலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். ராணு தன் பிள்ளைகளை நல்ல வண்ணம் போர்வையால் மூடிவிட்டு, மூத்த மகளின் அருகில் சென்றாள். படி கண் விழித்தவாறு படுத்திருந்தாள். ராணு தாய்ப் பாசத்துடன் தன் மகளின் தலையை வருடினாள். கோபமுற்ற படி, நீளமான நகங்களால் தன் தாயின் முகத்தைக் கீறியவாறு சொன்னாள்: “என்னைத் தொடாதீங்க. முகத்துல கரி தேய்க்க அந்த ஆளுக்கிட்டேயே போய்க்கோங்க.”

ராணுவின்மீது இதுவரை கொஞ்ச நஞ்சமா தாக்குதல்கள் நடந்திருக்கின்றன? அவை போதாதென்று, இதோ அவளுடைய மகளும் காயத்தை உண்டாக்குகிறாள். ‘மகளே! நான் உனக்காகத்தான் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா நீயோ..’ என்று வேண்டுமானால் ராணு கூறியிருக்கலாம். ஆனால், அதைச் சொல்வதற்கு அவளுக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது? ராணு இதெல்லாம் நடக்கும் என்று கொஞ்சமும் சிந்திக்கவில்லை. தன் சொந்த மகள்! ஒன்பது மாதங்கள் வயிற்றுக்குள் சுமந்து, பல கஷ்டங்களையும் வேதனைகளையும் தாங்கி ஒருநாள் அவளை பூமிக்குக் கொண்டு வந்தாள். பிறகு பட்டினியும் சிரமங்களும் கடந்து வளர்த்து அவளைப் பெரியவளாக்கினாள். அந்த மகள் இதோ தன் தாயின் முகத்தில் காயத்தை ஏற்படுத்துகிறாள். ‘என் மகள் நகத்தால கீறல. முகத்துல பூ வரையிறா அவ’ - ராணு தனக்குள் கூறிக்கொண்டாள்.

உணர்ச்சியற்ற நிலையில் ராணு சமையலறையிலிருந்து மஞ்சள் எடுத்து அதை எண்ணெயில் போட்டுச் சூடாக்கி, படுக்கையறைக்குத் திரும்பி வந்தபோது அங்கு மங்கலைக் காணவில்லை. அவள் நான்கு பக்கங்களிலும் தேடிவிட்டு வாசல் பக்கமாக ஓடினாள். ஆனால் மங்கல் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டிருந்தான்.

பதைபதைத்துப் போன ராணு மங்கலைத் தேடி நடந்தபோது, டப்பு தன் வாலை ஆட்டியவாறு அவள் அருகில் வந்து நின்று முன்கால்கள் இரண்டையும் ராணுவின் உடல் மீது வைத்தது. ‘ராணு! உங்கக்கிட்ட இவங்க எப்படியெல்லாம் நடக்குறாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, எல்லாம் சரியாகும்’ என்று ராணுவிற்கு அந்த நாய் ஆறுதல் கூறினாலும் கூறலாம்.

சன்னு தினமும் காலையில் கோவிலுக்குச் செல்வதுண்டு. அவளுடைய ராம நாம உச்சரிப்பைக் கேட்டுத்தான் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் தூக்கம் களைந்து எழுவது வழக்கம். அன்று கோவிலுக்குச் செல்வதற்குப் பதிலாக சன்னு, ராணுவின் வீட்டுப் பக்கம் வந்தாள். வாசலில் அவள் ராணுவைப் பார்த்தாள்.

“என்ன ராணு சுகம்தானா?”

ராணு அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை.

“சீக்கிரம் சொல்லுங்க. இப்போ எப்படி இருக்கீங்க?”

அப்போதும் எந்த பதிலும் கூறாமல் நின்றிருந்த ராணுவின் தோளைப் பிடித்துக் குலுக்கியவாறு சன்னு கேட்டாள்: “என்ன! ராத்திரி ஏதாவது நடந்ததா? சொல்ல முடியாத அளவுக்கு உங்க வாயில என்ன வச்சிருக்கீங்க?”

ராணு தன் வாயில் வைத்திருப்பது என்ன என்பதை அவள் மற்றவர்களுக்கு எப்படிக் கூறி புரிய வைப்பது? வாய்க்குள் இட்டிருக்கும் பலகாரம் வேக வைத்ததன் ஆவியின் உஷ்ணம் பட்டு ராணுவின் உணர்ச்சிகளும், விருப்பங்களும், உற்சாகமும் முழுமையாக அடங்கி விட்டிருந்தன.

ராணு தரையில் தன் பார்வையைப் பதித்தவாறு சொன்னாள்: “ராத்திரி ஒண்ணும் நடக்கல?”

சன்னு ராணுவின் முகத்தையே வெறித்துப் பார்த்துவிட்டு சொன்னாள்: “சுத்த பொய்! உங்க முகத்துல காயங்கள் எப்படி வந்தது?”

ராணுவின் முகத்தில் வியர்வைத் துளிகள் அரும்பின. அவள் சிறிது நேரம் வெட்கத்துடன் தலைகுனிந்து விட்டு துடித்துக்கொண்டிருக்கும் உதடுகளுடன் சொன்னாள்: “நீங்க நினைக்கிறதை நான் தேடல சன்னு! வெட்கத்தை மறைக்க ரெண்டு ஆடைகளும், பசியை அடக்க ஒரு நேர உணவும் மட்டும்தான் எனக்குத் தேவை. இந்த விஷயத்துல கடவுள் என்ன நினைக்கிறார்னு யாருக்குத் தெரியும்? அம்பாதேவி என்ன நினைக்கிறாங்களோ? மங்கல் திரும்பவும் எங்கேயோ போயாச்சு...”

“ராமா! ராமா! அந்த நாசமாப் போறவன் எங்கே போனான்?” உதய சூரியனைப் பார்த்தவாறு சன்னு சொன்னாள்: “அய்யோ... உங்க முன்னாடி அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாது...” அதைக் கேட்டு ராணு அழுவதைப் போல புன்னகைத்தாள். சன்னு அவளுக்கு ஆறுதல் கூறினாள். “எதையும் நினைச்சு பயப்பட வேண்டாம் ராணு! அவன் போனது மாதிரியே திரும்பி வருவான்.”


சன்னு கூறியதைப் போலவே மதிய நேரம் ஆனபோது மங்கல் திரும்பி வந்தான். நவாபின் சட்டையையும், இஸ்மாயிலின் தலைப்பாகையையும், குருதாஸின் செருப்புகளையும் அப்போது அவன் அணிந்திருந்தான். உடலில் பல இடங்களிலும் பேன்டேஜ் போடப்பட்டிருந்தது. மஞ்சள் பூசுவதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட மங்கல் அதிகாலையிலேயே இஸ்மாயிலின் டாங்கா மூலம் நகரத்திலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி, காயம் பட்ட இடங்களில் பேன்டேஜ் போட்டுக் கொண்டான்.

மங்கல் காலையில் உணவு எதுவும் சாப்பிடவில்லை. முந்தைய நாள் முதல் பல கொடுமைகளையும் அவன் தாங்கிக் கொண்டிருந்தான். திருமணம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். மங்கல் பகல் முழுவதும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தரையில் கிடந்த சருகுகளை எண்ண ஆரம்பித்தான். சருகுகளைவிட எடை குறைந்தவனா தான் என்று மங்கல் சந்தேகப்பட்டான். சில நேரங்களில் இந்த பூமியைவிட எடை கூடியவன்தான் என்றும் அவனுக்கு தோன்றியது. கட்டிலிலேயே  உட்கார்ந்துகொண்டு மங்கல் தரையில் தன்னுடைய விரல்களால் வரைந்தான். எப்போதும் இரட்டைக் கோடுகள் இல்லாமல் ஒற்றைக் கோடு மட்டும் இல்லை. தன்னுடைய அதிர்ஷ்டம் சரியாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட மங்கல் உடனடியாக எல்லா கோடுகளையும் கையால் அழித்துவிட்டான். தொடர்ந்து அவன் முகத்தைச் சுத்தம் செய்வதற்காகத் துடைத்தபோது,கையில் ஒட்டியிருந்த மண் முழுவதும் முகத்தில் ஒட்டிக் கொண்டது. சுத்தம் பண்ண முயற்சித்தபோது, அசுத்தம் உள்ளவனாகத் தான் ஆனதைப் புரிந்துகொண்ட மங்கல் ஒருவித நிம்மதியற்ற மனதுடன் எழுந்தான். அவன் வாசலில் இருந்த வேப்பமரத்தில் உட்கார்ந்து ஓசைகள் உண்டாக்கிக் கொண்டிருந்த பறவைகளை அங்கிருந்து விரட்டினான். அத்துடன் விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டிய சில நாய்களின் ஆக்கிரமிப்பிலிருந்து முடிகளை இழந்த, வயதான ஒரு நாயை அவன் காப்பாற்றவேறு செய்தான்.

சிறிது நேரம் சென்றதும் அரை டஜனுக்கும் அதிகமான நாய்கள் ஒன்றையொன்று கடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தவாறு அந்த வழியே வந்தன. மங்கல் அவற்றை விரட்டிவிட்ட பிறகு, தனக்குள் கூறிக்கொண்டான்: ‘கோட்லாவில் இறந்து போறவங்க எல்லாருமே நாய்களாகப் பிறப்பாங்க போலிருக்கு.’

தூரத்தில் நீளமாகக் கிடந்தது இமயமலை. ஒன்று மற்றொன்றில் கலந்து நின்றிருக்கும் மலைச்சிகரங்கள்... பனி படர்ந்த அந்த மலைகளுக்குத் தெற்குத் திசையில்தான் ‘ஸூஸ்’ பிறந்தது. அங்குள்ள காதலர்களுக்கும் காதலிகளுக்கும் சிறிதுகூட உடலின்பம் காண்பதற்கான வாய்ப்பு கிடைத்ததில்லை. காதலன் ஒரு மலைச்சிகரத்தில் இருந்தால் காதலி வேறொரு மலைச் சிகரத்தில் இருப்பாள். அவர்களுக்கு நடுவில் ஆறு!

அவர்களின் விரகவேதனை, ராவி, செனாப், தேலம் ஆகிய நதிக்கரைகள் வழியாக வாரிஸ்ஷா, காதிரியார், கஞ்ஞிபார் போன்ற காதல் பாடகர்களின் இதயங்களை அடைந்தது. அவர்கள் அதற்கு வடிவம் தந்தார்கள். கடந்துபோன ஒவ்வொரு சம்பவமும் மங்கலுக்கு நினைவில் வந்தது. அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு, மிர்ஸா ஸாஹபான் என்ற காதல் கதையில் வரும் நாயகனின் மொழியில் சொன்னான்: “நீங்க என் குதிரையின் முன்கால்களைக் கட்டியதும், வில்லின் நாணை அறுத்ததும் மிகப் பெரிய தவறு ஸாஹபான்.இல்லாவிட்டால் ஒரே அம்பை வச்சு நான் உங்கள் அண்ணனையும் வரப்போகிற மணமகனையும் எமலோகத்துக்கு அனுப்பியிருப்பேன்.”

‘மிர்ஸா... ஸாஹபான்’ கதையாலும் மங்கலின் வேதனைகள் நிறைந்த இதயத்திற்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதனால் அவன் வாரிஸ்ஷாவின் இரண்டு வரிகளைப் பாடி தன் மனதிற்கு ஆறுதல் தேடிக்கொண்டான்.

மங்கல் உள்ளே போய் படுத்தான். காலையும் மதியமும் மாலையும் கடந்தன. அது அழுக்குப் படிந்த ஒரு சுவராக இருந்தது. ஆகாய ஆற்றிலிருந்து வந்த நீரைக்கொண்டு சூரியன் தன்னுடைய கிரணங்கள் என்ற துடைப்பத்தால் அந்தச் சுவரைக் கழுவிச் சுத்தம் செய்ததைப் போல சுற்றிலும் நிர்மலமாக இருந்தது.

ராணு உணவு தயாரித்து முடித்து, சன்னுவின் வீட்டிற்குச் சென்று நெய் வாங்கிக் கொண்டு வந்தாள். மங்கல் சாப்பிடப் போகும் ரொட்டிகளில் அதைத் தடவினாள். ஒரு நல்ல மனைவியைப் போல உணவை எடுத்துக்கொண்டு ராணு தன் கணவனுக்கு முன்னால் சென்றாள். அதே நேரத்தில் ஏதோவொரு சிந்தனையால் உந்தப்பட்ட அவள் திடீரென்று அதிர்ந்து நின்றாள். சிறிது நேரம் சிந்தித்து நின்ற அவள் தன் மகளிடம் சொன்னாள்: “மகளே! இந்த ரொட்டிகளை அறைக்குள்ளே போய் கொடு.” அடுத்த நிமிடம், “நான் தரமாட்டேன். நாய்கிட்ட கொண்டு போய்க் கொடுங்க” என்று கூறியவாறு படி அங்கிருந்து கிளம்பினாள். கவலைக்குள்ளான ராணு உணவைக் கையில் வைத்துக்கொண்டு சிந்தித்து நிற்பதைப் பார்த்து அவளுடைய இளைய மகன் சம்மு சொன்னான்: “நான் கொடுத்துட்டு வர்றேன் அம்மா! தாங்க...”

ராணு தன்னுடைய மகனைப் பார்த்தாள். கள்ளங்கபடமில்லாத அந்தச் சிறுவனால் மட்டுமே தன் தாயின் வேதனைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ராணு உணவை அவன் கையில் கொடுத்துவிட்டு, துப்பட்டாவின் நுனியால் தன் கண்களை துடைத்தாள்.

மாதங்கள் பல கடந்தன. மங்கலுக்குப் பொறுப்புணர்வு கூடியது. அவன் தினமும் ஐந்து, ஆறு என்று ரூபாய்களைச் சம்பாதிக்க ஆரம்பித்தான். ராணுவுடன் அவனுக்கு கணவன்-மனைவி உறவு உண்டாகவில்லை. எனினும் அவன் தான் சம்பாதித்துக கொண்டுவரும் பணத்தைத் தன் தாயிடம் கொடுப்பதற்குப் பதிலாக ராணுவிடம்தான் கொடுத்தான். ராணு அந்த விஷயத்திற்காக மகிழ்ச்சியடைந்தாலும், சில நேரங்களில் கவலைப்படவும் செய்தாள். வார்த்தையால் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளுடைய இதயத்தில் அரும்பியது. பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் - சன்னு, பூரண்தேயி, வித்யா ஸ்வரூப் ஆகியோர் - “ஏதாவது நடந்ததா? எதுவரை ஆயிருக்கு?” என்று கேள்வி கேட்டு அப்பிராணி ராணுவைத் திக்குமுக்காடச் செய்யும்போது, அவள் பதில் கூறுவாள்: “கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். எனக்கு உணவு கிடைச்சது. என் குடும்பம் வாழ்ந்துக்கிட்டு இருக்கு. இனிமேல் இங்கேயிருந்து வெளியே போகச் சொல்லமாட்டாங்க. என் பிள்ளைகளை விற்கவும் மாட்டாங்க.”

ஆனால் அந்தத் தேனீக்கள் ராணுவை விட்டால்தானே! அவர்கள் அவளைச் சுற்றி வளைந்தார்கள்.

“என்ன? ராத்திரி முழுவதும் நீங்க சும்மா படுத்திருக்கீங்களா?”

“ஆமா...

“நீங்க இங்கேயும், அவன் அங்கேயும்.”

“ஆமா...”

“நீங்கள் அவனை எழுப்ப முயற்சிக்கலையா?”

“இல்ல...”

“எதுனால? நாசமாப் போனவளே! நீங்க அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கள்ல?”

ராணு வேதனை கலந்த குரலில் கூறுவாள்: “அதுனால என்ன? எனக்கு இப்பவும் அந்த ஆள் பழைய மங்கல்தான்.”

அதைக் கேட்டவுடன் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ராணுவைத் திட்ட ஆரம்பித்தார்கள்..

“நீங்க எப்படி தூங்குறீங்க?”


“முன்னாடி தூங்கின மாதிரிதான்.”

“மங்கலும் அப்படித்தான் தூங்குறானா?”

“ஆமா...”

“ராத்திரி எழுந்திருப்பதோ திரும்பிப் படுக்குறதோ இல்லையா?”

அதைக் கேட்டு அவர்கள் எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு ஒருவரையொருவர் கட்டிபடித்துக்கொண்டார்கள். பிறகு அந்தப் பெண்கள் ராணுவிற்கு அறிவுரை சொன்னார்கள்:

“ராணு! விஷயம் ஒழுங்கா நடக்கணும்னா நீங்க ஏதாவது செய்தே ஆகணும். இல்லாட்டி கையில கிடைச்ச சொத்து கையை விட்டுப் போயிடும்.”

“வேணும்னா நான் ஒரு தாயத்து வாங்கித் தர்றேன்.” பூரண்தேயி சொன்னாள்.

“சரிதான்” - வித்யா கூறினாள்.

“வேண்டாம்... எனக்கு தாயத்து, மந்திரம் எதுவும் தேவையில்ல...” - ராணு சொன்னாள்.

“இப்படியே  இருந்தா கடைசியில கண்ணீர் விட்டு அழ வேண்டிய நிலை வரும்.” - பூரண்தேயி கோபத்துடன் சொன்னாள்.

“நீங்க அழமாட்டீங்கள்ல?” - வித்யா பூரண்தேயியிடம் கேட்டாள்.

பூரண்தேயி வெட்கத்தையும், சுயமரியாதையையும் மறந்து தன்னுடைய செருப்பை நோக்கி விரலைக் காட்டியவாறு சொன்னாள்: “என் - அதுதான் - அழும் - நான் தாயத்து கொண்டு வந்து... என் சம்பு பிறக்காம இருந்திருந்தா உங்க சித்தப்பா என்னை தன்கூட வச்சிருப்பாரா?”

அதைக் கேட்டதும் எல்லோருடைய முகமும் மலர்ந்து பருத்திப் பூ போல வெண்மையானது.

“நீங்க அதுக்காக பாபா ஹரிதாஸோட ஆஸ்ரமத்துல எத்தனை நாட்கள் தங்கினீங்க?” சன்னு கேட்டாள்.

பூரண்தேயி சன்னுவின் தலைமுடியைப் பிடித்தாள். சன்னுவின் “அய்யோ! அய்யோ நான் செத்துடுவேன்” என்ற ஆர்ப்பாட்டத்துடன் அந்த விளையாட்டு முடிந்தது.

நஸீபன் வாலா ஸ்டாண்டில் நவாப், குருதாஸ், இஸ்மாயில் ஆகிய குதிரை வண்டிக்காரர்கள் சேர்ந்து மங்கலை கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள். “இப்போ எப்படி இருக்கு?” - அவர்களின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் மங்கலின் முகம் ஒரு மாதிரி ஆகிவிடும். உடனே மங்கல் தன் குதிரையைத் தடவிக் கொடுக்கவோ, இல்லாவிட்டால் அதைச் சுத்தப்படுத்தவோ இறங்கிவிடுவான். அப்போது குருதாஸ் கூறுவான்: “உண்மையாகச் சொல்லப் போனால் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிற பொம்பளைங்கக் கிட்டத்தான் அதிக சந்தோஷம் கிடைக்கும்.” “அது எப்படி?” - நவாபோ இஸ்மாயிலோ இப்படி கேள்வி கேட்டு இடத்தை வெப்பமாக்குவார்கள். “எல்லா அனுபவங்களும் உள்ளவளா இருக்கும். விஷயங்களை நல்லா புரிஞ்சுக்குவா” - குருதாஸ் கூறுவான்.

அதைக் கேட்டு எல்லோரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்போது மங்கல் கோபத்துடன் அவர்களைப் பார்த்துக்கொண்டே கூறுவான்: “உங்க எல்லோரையும் நான் ஒரு வழி பண்றேன்.... முட்டாள்களே!” அந்த நேரத்திற்கு எல்லோரும் அமைதியாக இருப்பது மாதிரி காட்டிக் கொண்டாலும்,தைரியசாலியும் பலசாலியுமான குருதாஸ் கேட்பான்:

“அப்போ தாயின் இடத்தில் வச்சு வணங்குறதுக்கா கல்யாணம் பண்ணினே?”

மங்கல் கோபத்துடன் குருதாஸைப் பார்த்தாலும், அவன் எந்தப் பதிலும் கூற மாட்டான்.

இஸ்மாயில் கதை சொல்ல ஆரம்பித்தான்: “ஒருநாள் ஒரு சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவனோட ஒரு அணா சேற்றுல விழுந்திடுச்சு...”

“அதுக்குப் பிறகு என்ன ஆச்சு?” - நவாப் மங்கலைக் கண்களால்  பார்த்தவாறு சொன்னான்.

“அதுவா? பிறகு அவன் ஒரு துணியை எடுத்துக்கிட்டு சேத்துல இறங்கினான். அணாவைத் தேடோ தேடுன்னு தேடினான். ரொம்ப நேரம் தேடியும் அணா கிடைக்கலைன்னு உடனே அந்தச் சீக்கியன் ‘அல்லா! என் ஒரு அணா... என் அல்லா... என் ஒரு அணா எனக்கு கிடைக்குறது மாதிரி செய்...’னு சத்தம் போட்டு சொல்லிக்கிட்டே சேறு முழுவதிலும் தேடினான். அந்தச்  சமயம் ஒரு முஸ்லிம் அந்த வழியா நடந்து போனான். அல்லாவின் பெயரைக் கேட்ட அந்த ஆள் திரும்பி நின்னான். ‘என்ன ஸர்தார் சாஹிப்! நீங்க வா குருன்னு கூப்பிடறதுக்குப் பதிலா எங்களோட அல்லாவைக் கூப்படுறீங்க’ன்னு அந்த ஆள் கேட்டான்.

அதுக்கு அந்த சீக்கியன் சொன்னான்: “ம்... ஒரு அணாவுக்காக எங்களோட குருவை சேத்துல குதிக்க வைக்கிறதா?’ன்னு.” இந்தக் கதையைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தாலும், மங்கல் மிடுக்கான குரலில் சொன்னான்: “அந்த முட்டாள் இஸ்லாம்ல இருந்து சீக்கிய மதத்துக்கு மதம் மாறிய ஆளா இருக்கும்.”

இதற்கிடையில் ஏதாவது பயணிகள் கண்ணில் பட்டால், வண்டிக்காரர்கள் எல்லோரும் அவர்களை நோக்கி ஓடுவார்கள். பயணி பெண்ணாக இருக்கும் பட்சம், அவள் கையில் இருக்கும் பொருள் நவாபின் டாங்காவிலும்,செருப்பு மங்கலின் டாங்காவிலும் இருக்கும். அவள் குருதாஸின் டாங்காவில் இருப்பாள். மனைவி ஒரு டாங்காவில் இருந்தால், கணவன் வேறோரு டாங்காவில் இருப்பான். அவர்களின் குழந்தை ஏதாவதொரு மூன்றாவது டாங்காவில் இருக்கும். இறுதியில் வண்டிக்காரர்கள் சண்டை போட்டவாறு அவரவர் இடத்திற்குத் திரும்பி வருவார்கள்.

மங்கலுக்கு இப்போது பெண்கள்மீது சொல்லிக் கொள்கிற மாதிரி ஈர்ப்பு ஒன்றும் இல்லை. இளம் பெண்களை ஆர்வத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கமும் அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. எனினும், மங்கல் ஸலாமத்தியை மறக்கவில்லை. இன்று வரை மனைவியுடன் மங்கல் நெருங்கவே இல்லை என்ற செய்தியை கிராமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களிடமிருந்து ஸலாமத்தி தெரிந்துகொண்டாள். அவள் தன்னை அழகுப்படுத்திக்கொண்டு மங்கலை நெருங்குவதும், டாங்காவில் சவாரி போவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துவதுமாக இருந்தாள். எனினும், அவளுக்கு அவன் மீது தாங்க முடியாத வெறுப்பு இருந்தது. ஸலாமத்தி அவனைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கு ஒரு நாள் இரவு மங்கலை அழைக்க வேண்டும். அவன் உடலைத் தொடத் தயாராகும்போது, சத்தம் போட்டு ஆட்களைக் கூட்ட வேண்டும். அந்த வகையில் நிரந்தரமாக ஞாபகத்தில் இருக்கும் வண்ணம் மங்கலை அவமானப்படுத்த வேண்டும். இப்படி ஒரு திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு ஸலாமத்தி மங்கலை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

அன்று சாயங்காலம் மங்கல் நஸீபர்வாலா ஸ்டாண்டில் இருக்கும் போது பயந்துகொண்டே மது அருந்தினான். தன் அண்ணன் உயிரோடு இருந்த காலத்தில் அவன் புட்டிக் கணக்கில் மது அருந்திக் கொண்டிருந்தவன்தான். ஆனால் இப்போது மங்கல் மது அருந்த பயந்தான்.

ராணுவும், மற்ற பெண்களைப் போலவே திருமணம் நடந்த நாளிலிருந்து தன் கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவளாக ஆகிவிட்டாள். கணவனின் ஒவ்வொரு அசைவையும் அந்தக் கணத்திலேயே அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ராணு அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்பதென்னவோ உண்மை. எனினும், தன் கணவன் என்ன தவறு செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதில் ராணுவிற்கு எந்தவிதச் சிரமமும் இருக்கவில்லை.


அதற்கு முன்பும் மங்கல் மூன்று நான்கு தடவைகள் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறான். ராணு அதைப் புரிந்துகொள்ளவும் செய்தாள். எனினும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

நாட்கள் கடந்து செல்ல, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்கள் ராணுவை மேலும் அதிகமாகத் தொந்தரவு செய்யவும் திட்டவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் கூறுவதும் ஒரு வகையில் சரியாகக்கூட இருக்கலாம். ராணு அதைப்பற்றி சிந்தித்தாள். ‘என்னைப் பற்றியும் என் பிள்ளைகளைப் பற்றியும் மங்கலுக்கு எந்தவொரு சிந்தனையும் இல்லை’ என்று அவள் நினைத்தாள். இதென்ன தமாஷா இருக்கு! அந்த விஷயத்தை என் முன்னால கொண்டு வரக்கூடாது’ என்று மங்கல் எதிர்த்ததையும் ராணு காதால் கேட்டிருக்கிறாள். அவளுக்கு மங்கலிடம் எதையும் கூறவும் முடியவில்லை. ராணுவிற்கு அவனிடம் என்ன அதிகாரம் இருக்கிறது.

‘அதிகாரம் இருக்கு. பஞ்சாயத்து முன்னால், கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் முன்னால் மங்கல் எனக்குப் புடவை தந்து கல்யாணம் பண்ணின ஆள்தானே? சிந்திச்சுப் பார்த்தால் எனக்கு அதிகாரம் இருக்கத்தான் செய்யுது. இல்லைன்னும் இருக்கலாம். புடவைன்னா என்ன? அஞ்சு முழம் துணி. அதுக்குப் பிறகு நடந்த திருமணச் சடங்குகளுக்கு என்ன அர்த்தம்? சரின்னா எல்லாம் சரிதான். இல்லாட்டி எல்லாமே தப்புதான்...’ - இப்படி தனக்குள் பேசிக் கொண்டாள் ராணு.

தலோக்காவிற்கு ராணு இந்த அளவு பயப்படவில்லை. கடைசியில் அடி, உதை வாங்கினாலும் வாயிலிருந்து வரும் வார்த்தைகளையெல்லாம் அவள் கூறிவிடுவாள். ஆனால் மங்கலிடம் எதையும் கூற முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? ‘அவன் விரலைக் காட்டிட்டுப் போகட்டும். எனக்கு நேரா நிற்கக்கூட மாட்டான். இருந்தாலும்... அதன் நோக்கம் என்ன? சரி.. இருக்கட்டும். எல்லாம் நல்லதுக்குத்தான். அடி, உதை வாங்கவேண்டியது இல்லையே!’

இப்படி சில நாட்களாக சிந்தித்ததன் விளைவாக மங்கலுடன் தன்னால் என்ன காரணத்துக்காகப் பேச முடியவில்லை என்பதை ராணு புரிந்துகொண்டாள். மற்ற பெண்கள் சூழ்நிலைகேற்ப தங்களின் கணவன்மார்களிடம் ஏதாவது வாங்கித் தரும்படி கேட்பார்கள். பகலில்- மோதிரம், இரவில் - ஆபரணம். கணவன்மார்களும் அவற்றைக் கட்டாயம் வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.

அன்று மங்கல் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது சிறிது பகல் இருந்தது. அஷ்டமியில் ஒளி குறைவாக இருந்த நிலவு கிக்கர் மரத்தில் சிக்கிக் கிடப்பதைப் போல் காட்சியளித்தது. மங்கல் வண்டியிலிருந்து  குதிரையை அவிழ்த்து, அதற்குத் தீவனம் கொடுத்தான். டாங்காவை நிறுத்தும் இடத்திற்கு வலது பக்கத்தில் விவசாயப் பண்ணையைச் சேர்ந்த கரும்புத் தோட்டம் இருந்தது. பதினைந்து, பதினாறு அடிகள் உயரம் கொண்ட கரும்பு செடிகள் அடர்த்தியாக நின்று கொண்டிருந்தன. சிலந்திகள் வலையை நெய்துகொண்டு ஒரு செடியிலிருந்து இன்னொரு செடிக்கு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. தோட்டத்தின் இடது பக்கம் பாதையின் ஓரத்தில் நிறைய சிறு சிறு வீடுகள் இருந்தன. அதன் முடிவில் மதர்ஸா இருந்தது. மதர்ஸாவிற்குப் பின்னால் தான் தேலம் ராயணியின் வீடு இருக்கிறது. அங்குதான் நிலவு இப்போது மறையப் போகிறது.

காற்றில் ஏதோவொன்றின் வாசனை கலந்திருந்தது. அது என்ன என்று மங்கலுக்குத் தெரியும். விவசாயிகள் அந்தக் காலகட்டத்தில்தான் கரும்பை ஆட்டிச் சாறு எடுத்து சர்க்கரை தயாரிப்பார்கள். அவர்கள் பானைகளில் கிக்கர் மரத்தின் சிதைந்த தோலையும் சர்க்கரையையும் சேர்த்து வாயை மூடிக் கட்டி கரும்புத் தோட்டத்தின் மத்தியில் குழி தோண்டி வைத்துவிடுவார்கள். சில நாட்கள் கடந்த பிறகு, அந்தப் பானைகள் தாமே பேச ஆரம்பிக்கும். பிறகு அவை போதை நிறைந்த மதுபானைகளாக மாறி காற்றை அசுத்தப்படுத்துகின்றன. 

பத்ர மாதம் அஸ்வினத்திற்கு கடந்து செல்கிறது. வெப்பமும், உஷ்ணக் காற்றும் பட்டு ‘தகதக’வென கொதித்துக் கொண்டிருந்த உடலுக்கு அப்போது வீசிய குளிர்காற்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. என்னவென்று வார்த்தையால் கூற முடியாத ஒருவித உணர்வும், சக்தியும் மனித இதயத்தை அலைக்கழிக்கும் காலகட்டமிது. ஆண்களைப் பொறுத்தவரையில் அதை மறைத்து வைக்கவும் முடியாது. போர்வையை விட்டெறியவும் முடியாத காலகட்டம். பெண்கள் பழைய போர்வைகளையும், ஸ்வெட்டர்களையும் சலவை செய்து சுத்தமாக்கி குளிருடன் போட்டிபோடத் தங்களைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரையில் மலைகூட சாதாரணம்தான். அதே நேரத்தில் குளிர்ந்த காற்றின் அணைப்பால் ஆண்களின் நரம்புகள் சிலிர்த்து நிற்கின்றன. அவர்களின் எழுச்சிபெற்ற நரம்புகளைக் குளிரச் செய்ய பெண்களுக்கு மட்டுமே முடியும்.

மங்கல் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது மதர்ஸாவிற்குப் பின்னாலிருந்த வீட்டில் மாடியிலிருந்து யாரோ அவனை அழைத்தார்கள். “ஏய்... மங்கல்!” என்ற அந்த அழைப்பைக் கேட்டு அவன் மாடியைப் பார்த்தான். ஸலாமத்தி! நல்ல மனிதனைக்கூட பைத்தியம் பிடிக்க வைக்கும் ஸலாமத்தியின் அழகான தோற்றம் மங்கலைப் பாடாய்ப்படுத்தியது. அவள் சொன்னாள்: “அங்கேயே நில்லுங்க! நான் கொஞ்சம் பேசணும்.”

மங்கல் ஒரு சிலையைப் போல அதே இடத்தில் நின்றான். ஸலாமத்தி வீட்டிற்குள்ளிருந்த படிகள் வழியே இறங்கி வருவதற்குப் பதிலாக வெளியே செல்லுவதற்கான படிகளில் இறங்கி வந்தாள்.

 “என்ன ஸலாமத்தி?”  மங்கல் கேட்டான்.

“ஒண்ணுமில்ல...”  அவளுடைய குரலில் கவலையும் குறையும் கலந்திருந்தன.

“நான் உங்க முன்னாடி அழுதாலும் எதுவும் சொல்ல மாட்டேன் என்பது மாதிரி இருந்தது” ஸலாமத்தியின் நடவடிக்கை.

“என்ன?  சொல்லுங்க.” - மங்கல் சற்று முன்னால் நகர்ந்து நின்று சொன்னான்.

“கொஞ்சம் தள்ளி... கொஞ்சம் தள்ளி...” - ஸலாமத்தி பயந்து பின்னோக்கி நகர்ந்து நின்றாள்.

ஸலாமத்தியின் உடம்பிலிருந்து அப்போது வந்த நறுமணம் மங்கலுக்கு இதற்கு முன்பு அறிமுகமில்லாத ஒன்று. அது நகரத்திலிருந்து வந்திருக்கும் வாசனை. காதலை ஒரு வழிபண்ணும் வாசனை. குளிர் காற்று பட்டு துடித்துக் கொண்டிருந்த மங்கலின் நரம்புகள் திடீரென்று பாம்பைப்போல சிலிர்த்து நின்றன. அவன் ஸலாமத்தியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆவேசம் பொங்க அவளை நெருங்கினான்.

“உங்களுக்கு என்னைப் பார்த்து பயமா ஸலாமத்தி?”

“ஆமாம்... அன்னைக்கு ஒருநாள்...”

ஞாபகத்துல இருக்கு. “ஆனா, எப்பவும் ஒரே மாதிரியா இருக்குமா ஸலாமத்தி?”

மங்கல் முன்னால் நெருங்கியபோது ஸலாமத்தி, “வேண்டாம்,, வேண்டாம்.. ” என்று கூறியவாறு நகர்ந்து சுவரோடு சேர்ந்து நின்றாள். அதற்குமேல் மங்கல் நெருங்கினால் சத்தம் போட்டு ஆட்களை அழைப்பது அவளுடைய திட்டம்.

ஆனால் மங்கல்தான் நரிக்குட்டி ஆயிற்றே! ஸலாமத்தி சிந்தித்தாள். ‘மங்கல் என் வாயை மூடினாலோ, என் முகத்தைத் தன்னோட முடிகள் வளர்ந்திருக்கும் மார்போடு சேர்த்து அனைத்துக் கொண்டாலோ என் திட்டமெல்லாம் புஸ்வானமாயிடும்...’


ஆனால், அந்த நரிக்குட்டி ஸலாமத்தியை கைகளால் வளைத்தது. அவளுடைய குரல் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது. ஸலாமத்தி பயந்து நடுங்க ஆரம்பித்தாள். அதற்குமேல் ஒரு அடி தூரம்தான் இருந்தது. ஸலாமத்தியைப் பொறுத்தவரையில் எல்லாமே நடக்காத ஒன்றாகிவிட்டது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலையில் நின்றுகொண்டு ஒருவர் கண்களில் ஒருவர் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பெண்களின் அறிவுதான் வேலை செய்யும். மங்கலிடம் கொண்டிருந்த விரோதத்தை ஸலாமத்தி முழுமையாக அப்போது மறந்துவிட்டாள். அவள் மங்கலின் மார்பில் தன் தலையை வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் சம்மதம் என்பது மாதிரி நின்று கொண்டிருந்தாள்.

மங்கல் காதல்  வயப்பட்ட குரலில் சொன்னான்:

“என்ன ஸலாமத்தி?”

“ஒண்ணுமில்ல... உங்களோட கலப்பை எங்கே இருக்கோ அங்கே என் சர்க்கையையும் கொண்டு போறதுன்னு சொல்ல வந்தேன்...”

அதைக் கேட்டு ஆவேசம் பொங்க அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

“அய்யோ! பைத்தியம் பிடிச்சிருச்சா? இது அதுக்கேற்ற நேரமா?” ஸலாமத்தி அவனிடமிருந்து விலகி நிற்க முயற்சித்தாள்.

“பிறகு எப்போது? எங்கே?”

தோட்டத்தை நோக்கித் தன் விரலைக் காட்டிய ஸலாமத்தி சொன்னாள்: “கோவில்ல மணி அடிக்கிறப்பவும் ‘முல்லா’ வாங்கு கொடுக்குறப்பவும்...”

மங்கல் முதலில் கருமேகங்கள் இருந்த ஆகாயத்தையும், பின்னர் கரும்புத்தோட்டத்தையும் பார்த்துவிட்டு சொன்னான்: “சரிதான்... நேற்று ஹஸாரி அங்கேயிருந்த சாராயப் பானைகளை எடுத்தாச்சு. ஒண்ணோ ரெண்டோ பானைகளின் இடம் நமக்குத் தாராளமாகப் போதும்.”

மங்கல் கையை எடுத்தான் சதைகள் திரண்டு துடித்துக் கொண்டிருந்த அவனுடைய கைகளால் நம்பவே முடியவில்லை - எப்படி இந்த வலைக்குள் சிக்கினோம், பின்னர் அதிலிருந்து விடுப்பட்டோம் என்ற விஷயத்தை தன்னுடைய மனபலம் குறைந்து கொண்டிருப்பதாக மங்கல் நினைத்தான். ஹா! இரண்டு துளி சாராயம் உள்ளே போனால்! அன்றைய அதிர்ஷ்டமில்லாத நிலையை நினைத்து மனதில் வருத்தப்பட்டவாறு மங்கல் சொன்னான்: “பரவாயில்ல... ஸலாமத்தி! மறந்துடாதே...”

ஸலாமத்தி மங்கலை சந்தேகத்தை நீக்குவதற்காகச் சொன்னாள்: “எப்பவும் மறக்குறவ நானில்ல...”

“இல்ல... நான் மறக்கமாட்டேன்.” மங்கல் உறுதியான குரலில் சொன்னான்.

பிறகு அரை நிலவின் ஒளியில், மங்கல் ஸலாமத்தியின் பார்வையிலிருந்து மறைந்து போனான். திடீரென்று உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பால் மங்கலின் பாதங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய நடையைப் பார்த்தால், ஒரு மனிதன் நடந்து போவது மாதிரியே தோன்றாது.

மங்கல் நடந்து செல்வதைப் பார்த்தவாறு ஸலாமத்தி அங்கேயே நின்றிருந்தாள். பத்ரமாதத்தின் குளிர்ந்த காற்று அவளுடைய உடலையும் தழுவிக் கொண்டிருந்தது. ஸலாமத்தியின் உணர்ச்சிப் பெருக்கு, காற்று பட்டு மின்னுவதும் மறைவதுமாக இருக்கும் நெருப்புத் துண்டைப் போல இருந்தது. இரவில் மங்கல் வரும்போது சத்தம் போட்டு ஆட்களை வரவழைத்து அவனை அவமானப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அவள் கைவிட்டாள்.

ஸலாமத்தி வீட்டிற்குச் செல்லும்போது வழியில் தன் அக்கா இனாயத்தியைப் பார்த்தாள். நீங்க “எங்கேயிருந்து வர்றீங்க அக்கா?” ஸலாமத்தி கேட்டாள்.

“நான் ஸூர்மாதாயிக்கிட்ட இருந்து கஷாயத்துக்கு மருந்து வாங்கிட்டு வர்றேன்.”

“கஷாயமா? எதுக்கு?”

“சாகுறதுக்கு...” இனாயத்தி வெறுப்புடன் சொன்னாள்.

தன் அக்கா சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள  முடியாமல் ஸலாமத்தி ஆச்சரியத்துடன் நின்றாள்.

“பெண்ணா பிறந்தாச்சே! என்ன செய்றது?” - இனாயத்தி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டு நின்றவாறு சொன்னாள்.

“ஓ... அதுவா?” - ஸலாமத்திக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவள் கேட்டாள்: “ஒரு வருஷம் ஆகலையே!”

“அதுனால் தான் சாகப் போறேன்றேன்!” இனாயத்தி மருந்து பொட்டலத்தை நெற்றியில் அடித்துக் கொண்டே சொன்னாள்.

“அது இருக்கட்டும்... அக்கா! நீங்க அப்படிச் செய்யிறதுக்கு முன்னாடி முராதுக்கிட்ட கேட்டீங்களா?”

இனாயத்தி கையைத் தடவியவாறு சொன்னாள்: “ம்... அந்த நாசமாப் போனவன்கிட்ட கேட்காம இருந்திருந்தா, இப்போ ஏன்  பதினொண்ணு எண்ணனும்? இது என்னோட வயிறா இல்லாட்டி மிஸ்கா சிங்கின் வயலா?”

அதைக் கேட்டு ஸலாமத்தியின் உடல் சிலிர்த்தது. வாழ்க்கையைப் பற்றி அவளுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது என்றாலும், இயற்கையாகவே உள்ள ஒரு தாயின் இதயம் எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறது அல்லவா? கர்ப்பம் தரித்தல், பிரசவம் போன்ற விஷயங்களை நினைத்தபோது, தன்னையும் மீறி பூரித்துப் போவது இதயம் உள்ள பெண்களைப் பொறுத்தவரையில் இயல்பான ஒன்றுதானே! ஸலாமத்தி சிந்தித்தாள்: “இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சும் மனிதன்...?”

இனாயத்தி வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போது தன் கணவன் முராத், அவளுடைய தங்கை ஆயிஷாவுடன் நெருக்கமாக இருப்பதை அவள் பார்த்தாள். இனாயத்தி அதே வேகத்தில் திரும்பிச் சென்று ஸலாமத்தியிடம் போய் பேசிக் கொண்டிருந்தாள்.

“நீ அதற்குப் பிறகு அவனைப் பார்த்தியா?”

“யாரை?” - ஸலாமத்தி எதுவும் தெரியாத மாதிரி கேட்டாள்.

“அந்தக் குதிரை வண்டிக்காரன்... மங்கலை?”

“இல்ல...”

தொடர்ந்து இனாயத்தி உள்ளே சென்று முராது, ஆயிஷா ஆகியோருடன் ஊர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதில் ஈடுபட்டாள். தேலம் ராயணி காய்கறிக்குப் பதிலாகக் காலையில்  மாமிசத்தில் சேர்த்து வேக வைக்க கடலைப் பருப்பு வாங்குவதற்காகப் போயிருந்தாள்.

ஸலாமத்தி தனிமையாக இருந்தபோது மங்கலைத் தான் முதல் தடவையாகச் சந்தித்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். அவளுடைய முகம் வெட்கத்தால் வியர்த்தது. ‘ம்.. எனக்கு அன்னைக்கு என்ன நடந்தது? அப்படி யாராவது சம்மதிப்பாங்களா? அவன் துணியை அவிழ்க்கச் சொன்னான். பைத்தியம்! அதற்குப் பிறகு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஆடைகளை அணிஞ்சேன்! கடவுளே! யாராவது பார்த்திருந்தா...!”

சிறிது நேரத்திற்குப் பிறகு ஸலாமத்தி கோபத்தால் ஜொலிக்க ஆரம்பித்தாள்:

‘அவன் சவாரி முடிஞ்சு நீ போன்னு சொன்னான். நான் அது மாதிரியே போனேன். ஓ! இதுவரை இப்படி வேற எந்தப் பெண்ணுக்கும் அவமானம் உண்டாகியிருக்கக் கூடாது. என் அக்கா அவமானம்னு சொல்றது எனக்கு அவமானமாகவே தெரியல.

ஸலாமத்தி உணவு எடுப்பதற்காகச் சமையலறைக்குள் சென்றாள். உணவு சாப்பிட்டு முடிக்கும் வேளையில் கிடைத்த நேரத்தில் தன் அக்கா இனாயத்தியிடம் விஷயத்தை மனம் திறந்து சொன்னாள். மங்கல் அன்றைய தினம் கரும்புத் தோட்டத்திற்கு வருவதாக வாக்குறுதி தந்திருக்கிறான் என்பதை அவள் சொன்னாள்.


முராத் சில நிமிடங்களில் கிராமத்தைச் சேர்ந்த சில ஊர் சுற்றிகளை வரவழைத்தான். “வறுமையும் கஷ்டங்களும் இருந்தா என்ன? ஒரு காஃபர் முஸ்லிம் பெண்ணின் மதிப்பில் கையை வைக்கிறதை எந்தச் சமயத்திலும் பொறுத்துக்க முடியாது” என்றான் அவன். எல்லோரும் லத்தி, ஈட்டி, கத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கரும்புத் தோட்டத்தை நோக்கி கிளம்பினார்கள். அங்கு அவர்கள் வெளியூரிலிருந்து புனிதப் பயணியாக வந்த இளம் பெண்ணின் மரணத்தைப் பற்றியும் தலோக்காவைப் பற்றியும் பேசியவாறு மங்கலின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

8

ங்கல் குளித்து முடித்து தலைவாரி தன்னை அழகுபடுத்திக் கொண்டான். ஸ்டான்டிலிருந்து திரும்பி வந்த மங்கல் இன்று மிகவும் உற்சாகமாக இருந்தான். அவன் இன்று ராணுவின் இளைய மகனான சம்முவை எடுத்துக் கொஞ்சினான். படியின் முடியைப் பிடித்து இழுத்தான். அவளுக்கு மணமகன் தேடுவது குறித்து தாயுடன் பேசினான். அந்த வகையில் குடும்பத்தின் சூழ்நிலை மிகவும் சந்தோஷமானதாக  இருந்தது.

மங்கலுக்கு இன்று ராணுவிடமும் அன்பு தோன்றியது. திருமணம் முடிந்து மூன்று, நான்கு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைப் போன்றுதான் அவனுடைய நடவடிக்கைகள் இருந்தன. பிள்ளைகள் தன்னுடைய முதல் மனைவியுடையவை, இல்லாவிட்டால் தான் மூத்த சகோதரன். தம்பி இறந்துவிட்டால் அண்ணன் தம்பியின் மனைவியைத் திருமணம் செய்துகொண்டான். இல்லாவிட்டால் புடவை தந்தான். இல்லை...இல்லை! அது நடக்காத ஒன்று அண்ணனைப் பொறுத்தவரையில் தம்பியின் மனைவி தன்னுடைய சொந்த சகோதரிக்குச் சமம். தம்பியோ அண்ணனின்  மனைவியைத் திருமணம் செய்து கொள்ளலாம்.

வழக்கத்திற்கு மாறாக மங்கல் இன்று குளித்து முடித்துவிட்டு தன்னை அழகுபடுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த ராணு அவனைத்  தவறாக எடைபோட்டாள். இந்த அழகுபடுத்தல் எல்லாம் அவன் தனக்காகத்தான் செய்கிறான் என்று அவள் நினைத்தாள். ‘இன்றைய பகல் எனக்கானது. ராத்திரியும் அப்படிதான்’ - இதெல்லாம் ராணுவின் பார்வையின் குற்றம் என்று மங்கலும் நினைத்தான். எனினும் தவறு ராணுவின் கன்னம், உதடு, கண்கள் ஆகிய உறுப்புகளுடையது என்பதுதான் உண்மை. அவள் இன்று ஆற்றுக்குப் போய் குளித்து விட்டு அக்ரோட் மரத்தின் இலையை அரைத்து தன்னுடைய கன்னங்களிலும் உதடுகளிலும் பூசி, கைகளில் மருதாணி அணிந்து நல்ல ஆடைகளணிந்து ஒரு மேனகையைப்போல நடந்து கொண்டிருந்தாள். காய்ந்த காரைக்காயைப் போல கறுத்து ஒட்டிப் போயிருக்கும் உதடு இன்று ரசம் ததும்பயிருக்கும் அக்ரோட் பழத்தைப் போல இருந்தது. மங்கல் ராணுவை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டான்: “நீங்க இன்னைக்கு கடைவீதிக்குப் போயிருந்தீங்களா?”

மங்கல் தன்னை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்த ராணு ஒரு புது மணப்பெண்ணைப் போல வெட்கப்பட்டவாறு சொன்னாள்: “ம்...” தொடர்ந்து அவள் வேலை செய்வதாகக் காட்டிக்கொண்டு மங்கலின் பார்வையிலிருந்து மறைந்து இருக்க முயற்சித்தாள்.

ராணு எதற்காக இப்படி ஒளியவேண்டும்! அவள் ஒரு புது மணப் பெண்ணைப் போல திடீரென்று தன்னுடைய சகலத்தையும் அர்ப்பணிக்க விரும்பவில்லை. காதல் உணர்வு ததும்பிக் கொண்டிருந்த கண்கள் - ரசம் ததும்பும் உதடு, கன்னங்கள் - அவை எல்லாவற்றுக்கும் மேலாக வேறொன்றும் இருந்தது. அதற்குப் பெண்ணின் உருவம், உடலமைப்பு, அழகு ஆகிய எதனுடனும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. பெண் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வருகிறாள். அஷ்டமி நிலவு தன் பாதியை மறைத்து வைக்கிறது. பிறகு தினமும் ஒவ்வொரு பர்தா, துப்பட்டா, சட்டை, ஜம்பர் ஆகியவற்றை தூரத்தில் மாற்றுகிறது. கடைசியில் ஒருநாள் - ஒரு இரவு நேரத்தில் பவுர்ணமியின் வடிவத்தில் சுய உணர்வு அற்ற நிலையில் எதற்கோ அடிபணிந்து தன்னுடைய சகலமானவற்றையும் அர்ப்பணித்து விடுகிறது.

என்ன? இது ஜோதிட சாஸ்திரத்தைவிட, கணித சாஸ்திரத்தைவிட ஆழமான விஷயமா? சாஸ்திரங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுபட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக ஆகாயத்தை ஆராய்ச்சி செய்து நட்சத்திரங்களின் பிரகாசத்தின்போது வாழ்வதும், அது மங்கலாகும்போது இறப்பதும், அமாவாசை சமயத்தில் வாடி விழுவதும், குளிர்காலத்தில் மலர்வதுமாய் இருக்கும் மனிதன் பெண்ணின் கண்களில் - விழிகளுக்கு இடையில் - பூமி, ஆகாயம் ஆகியவற்றைவிட பெரிய - மின் சக்தி கொண்டதும் அசைந்து கொண்டிருப்பதுமான இரண்டு சிறிய உருண்டைகளைப் பற்றிய ரகசியத்தைப் புரிந்து கொள்கிறான். அவனுக்கு அஷ்டமி நிலவின் ரகசியமும் புரியும்.

மங்கல் - குதிரை வண்டிக்காரன் - பிறகு ஸலாமத்தியின் மனதில் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பவன். அவன் எப்படி தன் வீட்டில் உதித்து உயர்ந்த அஷ்டமி நிலவின் ரகசியத்தைப் புரிந்து  கொள்ள முடியும்? மங்கல் ஒரு நாள்கூட ஆகாயத்தைப் பார்த்ததில்லை. தான் ஒரு நட்சத்திரம் என்றுகூட அவனுக்குத் தெரியாது.சூரியன் யாரையும் தன்னைப் பார்க்க அனுமதிப்பதில்லை. அப்படிப் பார்ப்பவனின் கண்கள் தானாகவே மங்கிவிடும். சூரியன் தினமும் உதிப்பதும், மறைவதுமாக இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் இருந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் அதைப் பார்க்கின்றன. மறையப் போகும் நிலவு படிப்படியாக வானத்தின் விளிம்பில் மறைகிறது. ஆனால், சூரியனுக்கு அது எதுவுமே தெரியாது. எனினும், இன்று எதையும் அறியாமலிருக்கும் மங்கலுக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தர ராணு விரும்புகிறாள். அவள் தனக்கும் மங்கலுக்கும் இடையில் தடையாக இருக்கும் பர்தாவை நீக்க விரும்பினாள். ‘பர்தா, பார்ப்பவர்களைக் குருடர்களாக ஆக்குகின்றது. அப்படித்தானே மணப்பேண்ணே! நீ அதை முகத்திலிருந்து நீக்கு. முத்துக்களை மறைந்து வைக்கவோ, பூக்களை நெருப்பில் எரியச் செய்யவோ கூடாது...’ வாரிஸ்ஷா கூறிய வார்த்தைகள் இவை. இன்று ராணு அந்தப் பர்தாவை நீக்கத் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். அதை நீக்காவிட்டால் கடவுளைக்கூட பார்க்க முடியாது.

மங்கல் ராணுவிற்கு இன்று ஏதாவது கைக்கூலி கொடுக்க விரும்பினான். அவன் தன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து ஹேர் பின்களை எடுத்து அவளிடம் தந்தான். கடைவீதியிலிருந்து திரும்பி வந்தபோது, அவன் வாங்கிக் கொண்டு வந்தவை அவை. ராணு அதைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டாள். தன்னையே அறியாமல் அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள். பெண்ணிடம் இயற்கையாகவே உண்டாகக் கூடிய உணர்ச்சியின் ததும்பல்...  ஆனால், மங்கல் தூரத்தில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து ராணுவின் கையில் தந்தான். அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. எனினும், ராணு ஆச்சரியத்துடன் கேட்டாள்:

“எட்டு ரூபாய்... எப்படி கிடைச்சது?”

“இன்னைக்கு பெஷாவருக்கு சவாரி கிடைத்தது!”

“அப்போ...”


“என்ன அப்போ? சாப்பாட்டுக்குத் தேவையானதையெல்லாம் வாங்க வேண்டியதுதான்.”- தொடர்ந்து மங்கல் திருமண வாழ்க்கையில் முதல் தடவையாகத் தன் மனைவியை அர்த்தம் நிறைந்த ஒரு பார்வை பார்த்தவாறு சொன்னான்: “நம்மோட செலவும் அதிகமாயிடுச்சுல்ல?”

ராணு தன்னுடைய புதிய இல்லற வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு மனைவியைப் போல வெட்கப்பட்டாள். மருதாணியையும் கண் மையையும், ரசம் நிறைந்த உதடுகளையும் வெட்கப்படச் செய்த பர்தாவுக்குள் அவள் மறைந்தாள். ராணு மங்கலிடம் நெருங்குவதற்குப் பதிலாக விலகியும், விலகுவதற்குப் பதிலாக நெருங்கிக் கொண்டும் இருந்தாள் அவள் சிந்தித்தாள். ‘இப்போது தெரிந்த கோவில் மணி அடிக்கவும் இல்லை., பள்ளி வாசலில் முல்லா ‘வாங்கு’ கொடுக்கவும் இல்லை...’

“சாப்பாடு போடுங்க” - மங்கல் சொன்னான்.

“இவ்வளவு சீக்கிரமாகவா?” - ராணு கேட்டாள்.

“இப்போ என்ன?”

ராணு கொஞ்சம் பதைபதைத்தாள். அந்தக் கேள்விக்கு பதில் கூற அவளால் முடியவில்லை. ஆனால் மங்கல் ராணுவைத் தேவையில்லாத குழப்பத்திலிருந்து காப்பாற்றினான்.

“ஏதாவது பலகாரம் இருக்கா?”

“ம்... கடலைப் பருப்பு, புதினா சட்னி, காரமா மசாலா போட்டது...”

“ஓ! பெரிய தவறு நடந்துவிட்டது! மங்கலுக்கு ஏதோ ஞாபகத்தில் வந்தது. அவன் எழுந்தான். மங்கலின் நாசி துடித்தது. முடி தலைப் பாகையை விட்டு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. முடியில் இல்லை என்றாலும் அவனுடைய இதயத்தில் - அன்றைய இதயத்தில் இன்பம் உண்டாக்கிய சம்பவம் ஞாபகத்தில் வந்தது. மங்கல் கோபத்துடன் சொன்னான்: “எதையாவது சீக்கிரம் கொண்டு வாங்க. இல்லாட்டி நான் உடனடியாகப் புறப்படுறேன்.”

ராணு கட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி விஷயம் கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்தது. அவள் சிந்தித்ததும் தயார் பண்ணியதும் வேறு ஏதோ ஒன்றாக இருந்தது. அந்த அளவிற்கு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் இல்லையே! திரும்பி வரும்போது, பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். மாமனார் இருமி இருமி அடங்கிப்போய் ஆழமான உறக்கத்தில் இருப்பார். மாமியார் குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் மூச்சைக் கூட கட்டுப்பாட்டுடன்தான் விடவேண்டியதிருக்கும்...

“என் சட்டை எங்கே?”

மங்கல் திடீரென்று கேட்டான். ராணுவிற்கு விஷயம் புரிந்து விட்டது. “எங்கே போகணும்? மேகம் கர்ஜிக்கிறது கேட்கலையா?”

“இருந்துட்டுப் போகட்டும். நீங்க யார் என்னைத் தடுக்குறதுக்கு?”

ராணு வேதனை நிறைந்த குரலில் சொன்னாள்: “யாருமில்ல... தெரியாம கேட்டுட்டேன்.”

ராணு தலோக்காவை எதிர்த்ததைப் போல மங்கலையும் எதிர்த்திருந்தால், விஷயம் குழப்பத்திற்குள்ளாகியிருக்கும். ராணுவிற்குத் தன்னுடைய பழைய அழுக்குப் புடவையின் உறவு ஞாபகத்தில் இருந்தது. ராணுவின் சோகம் கலந்த பதிலைக்கேட்டு மங்கலின் கோபம் அடங்கியது. அவன் விஷயத்தை மாற்றுவதற்காகத் தொடர்ந்து சொன்னான்: “நான் விபச்சாரம் நடக்குற இடத்துக்குப் போறேன்.”

பொதுவாக எல்லா கணவன்மார்களும் நடைமுறையில் விபச்சாரம் நடக்கும் இடங்களுக்குப் போகும்போது தங்களின் மனைவிமார்களிடம் கூறக்கூடிய வார்த்தைகள் தான் இவை. தன் கணவன் சிறிதுகூட அந்த மாதிரியான கேவலமான செயல் செய்ய மாட்டான் என்று மனைவி மனதில் எண்ணுவாள். இல்லாவிட்டால் அவன் இந்த அளவிற்கு மனம் திறந்து கூறுவானா?

ஆனால் தன்னுடைய சொந்த வாழ்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ராணுவை மற்ற பெண்களிடமிருந்து வேறுபட்ட அறிவைக் கொண்ட ஒரு பெண்ணாக மாற்றியிருந்தன. திடீரென்று அவள் ஒரு தேவியிடமிருந்து இரத்தமும் சதையும் கொண்ட பெண்ணாக மாறினாள். அதை விட்டால் அவள் வேறு என்ன செய்வாள்? சூழ்நிலையின் ஆக்கிரமிப்பு மனிதனை அதற்கு ஏற்றபடி நடந்துகொள்ளும்படி கற்றுத் தருகிறது.இல்லாவிட்டால் மனிதனுக்குத் தெய்வம் இந்த அளவிற்கு அதிகமான நரம்புகளை எதற்காகத் தந்திருக்கிறது.?

அவன் சட்டை வேண்டும் என்று கேட்டது ராணுவின் சந்தேகத்தை உண்மையாகவே மாற்றியது. அவளும் அவனுடன்  மோதுவதற்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு நின்றாள். முகத்திலிருந்த தைரியத்தைத் துப்பட்டா மறைந்திருந்ததால் மங்கலால் பார்க்க முடியவில்லை. ஒரு மனைவி, தன்னுடைய உரிமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு விலைமகளின் நிலைக்கு இறங்கினாள். ராணுவின் கண் முன்னால் ஸலாமத்தியின் இளமை ததும்பும் சதைகள் அசைவது தெரிந்தது. அந்த உடம்பிற்கு மருதாணியின் அல்லது வேறு அழகுப்பொருட்களின் தேவையே இல்ல. அவையெல்லாம் மங்கலைப் போன்ற சபல மனம் கொண்டவனுக்கு அர்த்தமில்லாத விஷயங்களே. அவன் ஒரு பாறையைப் போல இருந்தான். இரும்புடன் மோதத் தயாராக இருந்தது ஒரு இரும்புச் சட்டி ராணுவிற்கு அவை எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால் அவன் அதற்குத் தயாராக இருந்தாள்.

ராணு உள்ளேயிருந்த ட்ரங்க் பெட்டியைச் சுட்டிக் காட்டியவாறு கோபத்துடன் சொன்னாள்: “அதுலுதான் இருக்கும் சட்டை!”

அப்போது வெளியிலிருந்து வித்யாவின் குரல் கேட்டது: “ராணு!”

அதைக் கேட்டு ராணு வாசலுக்கு ஓடினாள். வித்யா என்னவோ கூற ஆரம்பித்தாள். அதற்கு முன்னால் ராணு அவளைத் தடுத்துக் கொண்டு சொன்னாள்: “வித்யா! நீங்க தயவு செய்து இங்கேயிருந்து போங்க.”

வித்யா பிடிவாதத்துடன் கேட்டாள்: “எதுக்கு?”

ராணு கூப்பிய கைகளுடன் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்: “இப்போ நீங்க போங்க...”

ஆச்சரியத்துடன் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவாறு வித்யா அங்கிருந்து கிளம்பினாள்.

ராணு அறைக்குள் திரும்பி வந்தபோது மங்கல் ட்ரங்க் பெட்டியைத் திறந்து முடித்திருந்தான். அவன் அதிலிருந்த துணிகளை வெளியே எடுத்து சிதறப் போட்டிருந்தான். மங்கலின் கையில் ஒரு சாராய புட்டியும் இருந்தது.

“இது எங்கேயிருந்து வந்தது?” - மங்கல் ராணுவிடம் கேட்டான்.

“எது?”

மங்கல் புட்டியை ஆட்டியவாறு கேட்டான்: “சாராயம்.”

ராணு பதைபதைப்புடன் சுற்றிலும் பார்த்துவிட்டு சொன்னாள்:

“எனக்கு எப்படித் தெரியும்?”

பிறகு ராணுவிற்கு அதற்கு மேலாகத் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டாகவில்லை. டப்பு குரைக்க ஆரம்பித்தது. ராணு உடனடியாக அறையிலிருந்து எட்டிப் பார்த்தவாறு நாயைத் திட்டினாள்: “ச்சீ! போ! பிணமே! இங்கு என்ன இருக்குன்னு அழுறே? மாமிசம் தர்ற வீட்டுல போயி அழு!”

தொடர்ந்து அவள் மங்கலிடம் சொன்னாள்: “உங்களோட அண்ணன் குடிப்பார்ல?”

“ம்... ஆனா, இவ்வளவு காலம் கடந்தும்...?”

“பெட்டியில் இருந்திருக்கலாம். நான் இதுவரை அதைத் திறந்து பார்க்கல.”

மங்கல் நம்ப முடியாமல் புட்டியை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அதே மது - இப்போது அவனுக்கு மிகவும் அவசியத் தேவையாக இருந்த பொருள் அதுதான்.


பத்து குதிரைகளின்  பலமும் புலியின் வேகமும் வேண்டுமென்றால் அது கட்டாயம் அவசியம்தான். அழகு தேவதையான ஸலாமத்தியின் உருவம் மங்கலின் மனதில் அப்போது தோன்றியது. மங்கல் வெளியே வந்து வானத்தைப் பார்த்தான். கருமேகங்கள் நிறைந்திருந்த ஆகாயம் நிலவைத் தன்னுடைய போர்வைக்குள் மறைத்துக் கொண்டது. உண்மையாகவே எங்கேயாவது வெப்பம் அதிகரித்திருக்கலாம். பத்ர மாத இறுதியில் கோட்லா கிராமத்தில் உண்டான தூசிப் படலம் ஆகாயத்தை நோக்கி உயரும். இரவும் பகலும் ஒரே மாதிரி ஆகலாம். கார் மேகங்களின் மறைவிலிருந்து எட்டிப் பார்க்கும் நட்சத்திரங்களைப் பார்த்து மங்கல் நேரத்தைக் கணக்கிட்டான். “இப்போது இரவின் முதல் சாமம் ஆரம்பச்சிருக்கு...” – மங்கல் திரும்பி வந்தான். அத்துடன் அவன் ஆரம்ப மங்கலாக மாறினான். அவனுடைய கண்களில் கடுமை உண்டானது.

“நான் சில நேரங்கள்ல... அங்கே... நஸீபன்வாலா ஸ்டாண்டில் இருக்குறப்போ குடிக்கிறது உண்டு.” கைகளை ஆட்டியவாறு மங்கல் சொன்னான். எனக்குத் தெரியும்” - ராணு சொன்னாள். மங்கல் எந்தவித முகமாற்றத்தையும் காட்டிக்கொள்ளாமல் புட்டியையே பார்த்தான். அதனால் அவனால் ராணுவின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிக் கொந்தளிப்பை கவனிக்க முடியாமல் போய்விட்டது.

“நான் உங்க முன்னாடி குடிக்க மாட்டேன்.”

ராணு எச்சரிக்கையானாள்.

“எதுனால?”

“உங்களுக்கு அது மேல வெறுப்பு இருக்கே?”

“இல்ல...நான் எதுக்கு அதை வெறுக்கணும்? எனக்கு அதுக்கு என்ன அதிகாரம் இருக்கு?” என்று அப்போது அவள் கேட்க நினைத்தாள். ஆனால் இனம் புரியாத ஏதோவொரு உள்ளுணர்வு ராணுவைத் தடை செய்தது. காதலியைப் போல சொன்னாள்:“ஆமாம்...உங்களுக்குத் தெரியும்ல?நான் அதை விஷத்துக்குச் சமமா நினைக்கிறேன்.”

தொடர்ந்து ராணு நினைத்தது மாதிரியும், விரும்பியது மாதிரியும் மங்கல் கட்டுப்பாட்டை மீறி புட்டியின் மூடியைத் திறந்துவிட்டு சொன்னான்: “மனைவிமார்கள் நீங்கள், கணவன்மார்களை தின்னவும் குடிக்கவும் அனுமதிக்கிறதே இல்ல...”

அதைக் கேட்டு ராணுவிற்குச் சந்தோஷமாக இருந்தது. நாக்கு அளவிலாவது கணவன்-மனைவி உறவை உச்சரித்துவிட்டான் அல்லவா? தொடர்ந்து அவள் கோபம் இருப்பது மாதிரி காட்டிக் கொண்டு சொன்னாள்:

“குடிக்க நான் அனுமதிக்க மாட்டேன்.”

மங்கல் புட்டியின் மூடியை எடுத்ததும் அறையில் மதுவின் கெட்ட வாசனை பரவியது.ராணு துப்பட்டாவின் நுனியால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டு ஒரு கையால் மங்கலின் கையிலிருந்த புட்டியைப் பிடித்து வாங்க முயற்சித்தாள். மங்கல் ராணுவின் கையைத் தட்டி விலக்கியவாறு சொன்னான்: “நான் குடிப்பேன்... கட்டாயம் குடிப்பேன்...”

“சொந்த அண்ணனை மது அருந்தாம தடுத்து, புட்டியை வீசி எறிந்து உடைச்ச ஆள்தானே.”

தொடர்ந்து ராணு எதிர்பார்த்ததைப் போலவே மங்கல் அவளுடைய பிடியிலிருந்து விடுபடுவதற்காக அவளின் கையை பிடித்து இழுத்தான். அந்தச் சமயம் ‘படி’ அங்கு வந்தாள். சித்தப்பாவையும், தாயையும் ஒன்று சேர்ந்து பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். மேகத்தின் கர்ஜனை கேட்டு ராணு வெளியே பார்த்தபோது ‘படி’யைப் பார்த்தாள். “நீ போயி குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து, அவங்களைத் தூங்கவை. இப்போ மழை பெய்யும்!” என்றாள் ராணு. படி அந்த இடத்தைவிட்டுச் சென்றதும், ராணு உள்ளேயிருந்தவாறு கதவை அடைத்தாள். காலையிலிருந்து தன் தாயின் நடவடிக்கைகளைப் பார்த்த படிக்கு விஷயம் புரிந்துவிட்டது.

ராணு புட்டியைப் பிடித்து வாங்குவதற்காக மங்கலிடம் போராடினாள். அவனுடைய உறுதியான கை ராணுவின் உடம்பின் பல இடங்களையும் தொட்டது. ராணு அவனிடமிருந்து விலகியிருக்க முயற்சித்தாள். ஆனால், புடவையின் மூலம் கொண்ட உறவு நடைமுறையில் இருக்கிறதே! ராணுவின் உடம்பு பயங்கரமாக வலித்தது. சண்டை போட்டுக் கொண்டிருந்ததற்கு மத்தியில் சாராயத்தை வாய்க்குள் ஊற்றியவாறு மங்கல் சொன்னான்: “பொண்டாட்டி முன்னாடி அடிபணிஞ்சு நிற்கிறதுக்கு அண்ணனைப் போல நான் கோழை இல்ல...”

மங்கல் புட்டியின் முக்கால் பகுதி சாராயத்தையும் குடித்து முடித்தான். மீண்டும் அவள் புட்டியைப் பிடித்து இழுத்தபோது, அவன் ராணுவைத் தரையில் பிடித்துத் தள்ளிவிட்டான். ராணு எழுந்திருக்க முயற்சித்தபோது, மங்கல் அவளைத் தரையோடு சேர்த்து அமுக்கினான். மூச்சுவிட சிரமப்பட்டவுடன் ராணுவின் உறுப்புகளுக்குப் புதிய சக்தி கிடைத்தது மாதிரி இருந்தது. அடித்துப் பிடித்து எழுந்தபோது மங்கல் அவளைச் சுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டு மோத வைத்தான்.

ராணுவின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. கால்களுக்கு அவளுடைய உடம்பின் எடையைத் தாங்க முடியவில்லை. அவள் தரையில் விழுந்தாள். வாயைத் திறந்து கண்களை மூடினாள்.

ராணுவின் அமைதியான போராட்டத்தின் சத்தம் அவளுடைய மாமியாரின் காதுகளில் விழுந்தது. ஜந்தான் கேட்டாள்: “என்ன மகளே?”

“ஒண்ணுமில்லம்மா... பூனை...” பாதி சுய உணர்வுடன் படுத்திருந்த ராணு பதில் சொன்னாள். அவளுடைய உடலின் உறுப்புகள் தளர்ந்துப் போய்விட்டன. படுத்திருந்த இடத்திலிருந்து அவளால் அசையக்கூட முடியவில்லை. இதுவரை நடைபெற்ற சம்பவங்களிலிருந்து அவர்களில் மது அருந்தியது யார் -யார் போதையால் பாதிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருந்தது.

மங்கல் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். வினோதமான பெண்! இந்த அளவிற்குக் கொடுமைகள் அனுபவித்தும் அவள் கூறுகிறாள்: ‘ஒண்ணுமில்லை... பூனை’ என்று. மங்கலின் இதயம் கனிந்தது. உடனே அவன் தன்னுடைய தலைப் பாகையைக் கிழித்து ராணுவின் உடம்பிலிருந்த காயங்களைத் துடைத்தான். பிறகு துணியைச் சுருட்டி ஊதி  சூடாக்கி ஒத்தடம் கொடுத்தான். அன்றொரு நாள் இரவு ராணு நடந்து கொண்டதைப் போலவே அவன் நடந்தான். ராணுவிற்குச் சந்தோஷமும் நிம்மதியும் தோன்றின. மங்கலுக்கு அழுகை வரப் போவதைப் போல் இருந்தது. அவன் ராணுவின் கால்களில் விழுந்து கெஞ்சினான். ராணு அவனை தன் அருகில் உட்கார வைத்து அவனுடைய முதுகைத் தடவ ஆரம்பித்தாள் - அடிகள் தனக்கு விழவில்லை; மங்கலின் மீதுதான் விழுந்தது என்பது மாதிரி. “என்னை மன்னிக்கணும்” - மங்கல் மீண்டும் மன்னிப்பு கேட்டான்.

“இனிமேல் எந்தச் சமயத்திலும் மது அருந்தமாட்டேன்னு சத்தியம் பண்ண முடியுமா?” -  ராணு மங்கலைத் தன் உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு சொன்னாள். தொடர்ந்து அவள் விபத்திலிருந்து விலகுவதைப் போல சற்று தள்ளி நின்றுகொண்டு சொன்னாள்: “அப்படி செய்தால் இன்னைக்கு நான் கையால சாராயம் ஊற்றித் தருவேன்.” 

மங்கல் சத்தியம் செய்தான். பிறகு அவன் தான் எந்த விஷயத்திற்காக சத்தியம் செய்தோம் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

ராணு எழுந்து வெளியே சென்றாள். மங்கல், அங்கு பாத்திரங்களில் மழைத்துளிகள் விழும்போது உண்டாகக்கூடிய ஜலதரங்கத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.


படி குழந்தைகளை வாசலில் உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் நடக்கும் இந்த ஆழமான தந்திரச் செயலில் அவர்களும் பங்கெடுப்பதைப் போல அடுப்பில் நீர் விழாமலிருக்க ராணு அதை முறம் கொண்டு மூடினாள்.

கிண்ணத்தின் ஒரு பகுதியில் ரொட்டி, அறுக்கப்பட்ட வெங்காயம், இன்னொரு பகுதியில் வறுத்த மாமிசம் ஆகியவற்றுடன் ராணு திரும்பி வந்தாள். மங்கல் ஆச்சரியத்துடன் முதலில் ராணுவையும் பிறகு கிண்ணத்திலிருந்த உணவுப் பொருட்களையும் கூர்ந்து பார்த்தான். அவனுடைய வாயில் நீர் ஊறியது. ராணு கண்ணாடி டம்ளரில் சாராயத்தை ஊற்றி மங்கலிடம் நீட்டினாள். அவனால் அதை நம்பவே முடியவில்லை. மங்கல் ராணுவின் கண்களையே வெறித்துப் பார்த்தவாறு சாராயம் நிறைக்கப்பட்ட டம்ளரை வாங்கினான். “இன்மேல் நான் குடிக்கமாட்டேன். அதைமீறி நான் குடித்தால், மாட்டுக் கறியை நான் சாப்பிடுறதா நினைச்சுக்கணும்.”

மங்கல் தன்னுடைய உதடுகளோடு சேர்த்து கண்ணாடி டம்ளரை வைத்தபோது, அதைத் தடுத்த ராணு எதையோ எடுப்பதற்காக மீண்டும் வெளியே சென்றாள். பிறகு அவள் ஒரு கிண்ணத்தில் வெங்காயம், அறுக்கப்பட்ட தக்காளி ஆகியவற்றுடன் வந்தாள். மங்கல் தின்னவும், குடிக்கவும் ஆரம்பித்தான். ராணு அருகில் உட்கார்ந்து அழுது கொண்டே டம்ளரில் சாராயத்தை ஊற்றிக் கொடுத்தாள். இந்த அளவிற்கு சந்தோஷம் நஸீபன்வாலா ஸ்டாண்டில் எப்படி கிடைக்கும்?

சிறிது நேரம் கடந்ததும் சாராயத்தின் போதை ராணுவையும் பாதித்தது. அவர்களில் மது அருந்தியது யார் என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. ராணுவின் துப்பட்டா கீழே விழுந்தது. தொடர்ந்து சட்டையின் பொத்தான் அவிழ்ந்தது. கோவிலின் மணிகள் முழங்கின. பள்ளி வாசலில் முல்லா ‘வாங்கு’ கொடுத்தார். மணிகள் முழங்குவதையும், வாங்கு சத்தத்தையும் கேட்டு மங்கல் வெறுப்புடன் சொன்னான்: “..ச்சே..”

“என்ன?” - ராணு கேட்டாள்.

“இந்த முல்லாவும் பூசாரியும்...” - மங்கல் தேலம் ராயணியின் வீடு  இருந்த பக்கம் கையை நீட்டியவாறு சொன்னான்.

மங்கல் எழுந்து வாசல் வரை போனான். வெளியே கடும் இருட்டு இருப்பதைப் பார்த்தவுடன் நடுங்குகிற பாதங்களுடன்  திரும்பி வந்தான். பிறகு அவன் தன் கண்களுக்கு முழுபலத்தையும் தந்து உற்று பார்த்தான். ராணு அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள். முழு நிலவு - அஷ்டமியில் பாதி நிலவிலிருந்து முழுமையான வடிவம் எடுத்து கார்மேகங்களைக் கிழித்துக் கொண்டு கீழே பூமிக்கு இறங்கி வந்திருக்கிறது. மங்கல் மூச்சை அடக்கிக் கொண்டு சொன்னான்: “நீங்க... நீங்க எதுக்கு ஆடை அணிஞ்சிருக்கீங்க?”

ராணு தன்னுடைய பழைய அழுக்கு துப்பட்டா, புடவை ஆகியவற்றை எடுத்து தனக்கும் மங்கலுக்கும் நடுவில் திரையாகப் பிரித்தாள். “இந்தத் திரைச்சீலை எதுக்கு” - மேல் நோக்கி உயர்ந்த இரண்டு கைகள் அந்தப் புடவையின் நுனியைத் தொட்டது. மங்கலுக்கு முன்னால் பெண்ணின் அழகு - ஆண்மைத்தனம் கொண்ட ஒரு ஆணால் பார்க்காமல் இருக்க முடியாத அழகு... நடுவில் உணர்ச்சியைக் கிளறும் பர்தா. அதற்குப் பின்னால் அந்த அழகு நெளிந்து கொண்டிருந்தது.

மங்கலின் முகத்தில் சிவப்பு நிறம் பரவியது. அவனுடைய கண்கள் மூடின. உடலில் இருந்த உரோம குழிகள் தங்கள் இடத்தைவிட்டு இறங்கி வந்தன. அவை சில நேரங்களில் மழைதுளிகளுக்குப் பயந்து ஒளிந்து கொள்கின்றன. சில நேரங்களில் அதற்காக வெளியே வருகின்றன. ஸ்ராவணம், பத்ரம் ஆகிய மாதங்களில் மழை பெய்யும்... எங்காவது பெய்யும்... பத்ரத்திற்கும் அஸுஜினுக்கும் நடுவில் இரவும் பகலும் ஒன்று சேர்ந்து சமமாகின்றன. அப்போது தேவியின் கோட்லாவில் மழை பெய்யாமல் இருக்காது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

மங்கல் ஒரு பார்வை தெரியாதவனைப் போல தட்டுத் தடுமாறி ராணுவின் கையைப் பிடித்தான். சிறிது நேரம் கடந்த பிறகு அவன் சொன்னான்: “நீங்க இன்னைக்கு ரொம்பவும் அழகா இருக்கீங்க, அண்ணி!”

9

வாசலில் நின்றிருந்த ஸலாமத்தி தொடர்ந்து தரையில் விழுந்து கொண்டிருந்த மழைத் துளிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய கைகளைத் தடவியவாறு காரமான மிளகாயைக் கடித்ததைப் போல ஸ்...ஸ்... என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தாள். கோவிலின் மணிச் சத்தமும் பள்ளிவாசலின் ‘வாங்கு’ ஒலி - இரண்டும் ஒலித்து முடிந்தன. மனித உடல் படைக்க முடியவில்லை என்றாலும் அதிலிருந்து மனிதனைத் தடுக்கவும், புலம்பவும் வைக்கும் முல்லாவையும் பூசாரியையும்  மனதில் ஸலாமத்தி சபித்தாள்.

இரவின் இரண்டாவது யாமமும் முடிந்தது. கரும்புத் தோட்டத்திற்கு அருகில் இருந்த மதர்ஸாவின் வாசலில் நின்றிருந்த முராத் ஆகாயத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்களிடம் சொன்னான்: “சுத்தப் பொய், நண்பர்களே! இந்தப் பெண்கள் சொல்றது எதையும் நம்பவே கூடாது.” கலீஃபா ‘ம்’ கொட்டினான். அல்லாதாதும் ஹிக்மத்தும் அவன் சொன்னதற்குத் தலையாட்டினார்கள். பிறகு அவர்கள் தங்களின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு நடுங்கச் செய்துகொண்டிருந்த மழையில் நனைந்தவாறு கிளம்பனார்கள்: “ம்... சீக்கியனின் இந்தத் தடவை தப்பிச்சுட்டான்...”

முராத் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதைப் பார்த்த ஸலாமத்தி தன் கையை வீசி தீபத்தை அணைத்துவிட்டு கட்டிலில் காலை நீட்டிப் படுத்தவாறு சொன்னாள்: “அல்லா! உன் கருணை...”

10

ன்று சூரியன் கார்மேகம் என்ற பர்தாவிற்குப் பின்னால் மறைந்திருந்தான். ஆகாயத்தில் அவன் கடுமையான உழைப்பால் உண்டான கவலையாலும் வெட்கத்தாலும் தன்னுடைய கிழிந்து போன போர்வையை மூடி உறங்கிக் கொண்டிருக்கலாம்.

இமயமலையின் காற்று வீசத் தொடங்கியது. அதன் காரணமாக லோப்னார், கோக்னார், பாமிர், சுலைமான் ஆகிய மலைகளிலிருந்து வெள்ளை நிற சிறிய பறவைகள் பறந்து செல்ல ஆரம்பித்தன. ஆயிரம் மைல்களுக்கப்பால் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் காகிதப் படகுகள் காலம் என்ற நீரோட்டத்தில் காணாமல் போயிருக்கலாம். நூற்றுக்கணக்கான வருடங்களாகப் புனிதப் பயணிகள் பக்தியுடன் அர்ப்பணம் செய்த நைவேத்யங்களை விஷ்ணுதேவி சிறிய சிறிய தட்டுகளில் வைத்து பக்தர்களுக்குத் திரும்பித் தந்திருக்கலாம்.

கால நிலையின் மாறுதல், இரவு, பகலுக்கு ஒரு சுமையாகிவிட்டது. தோல்வியடைந்த சூரியன் மேகங்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு பூமியை எட்டிப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தான். சூரியன் புன்னகைத்ததுதான் தாமதம்... தித்தர், மைனா ஆகிய பறவைகளின் சிறகுகள் வண்ணங்களால் ஒளிர ஆரம்பித்தன. குயில்கள் மரக்கிளைகளில் ஊஞ்சலாடி, தங்களின் உறக்கத்தை மறந்து இனிய பாடல்களைப் பாடத் தொடங்கின. சூரியன் நாவல், நாஸ்பதி, வேம்பு ஆகிய மரங்களை மட்டுமல்ல - கிக்கர்,கைனி ஆகிய முட்களைக் கொண்ட மரங்களையும் தழுவிக்கொண்டு பூமியின் சோகங்களை நீக்கிக்கொண்டிருந்தது.


கவலைகளுக்குப் பின்னாலிருந்த புன்னகையின் அழகைக்காண முடிந்த விவசாயிகள் கலப்பைகளை எடுத்துக்கொண்டு வயல்களில் இறங்கினார்கள். விவசாயிகளின் பிள்ளைகள் நாஸ்பதி மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு வில் செய்து இலக்கே இல்லாமல் எய்து கொண்டிருந்தார்கள். முல்லாவும் பூசாரியும் அஸ்வமேதத்திற்குத் தங்களைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படி ஊரே சிறிதும் முடிவே இல்லாத கடின உழைப்பில் ஈடுபட்டிருந்தது.

மங்கல் குதிரை வண்டியைத் துடைத்து சுத்தம் செய்தான். ராணு அடுப்பு வேலையில் ஈடுபட்டிருந்தாள். அவள் முந்தைய நாள் சம்பாத்தியத்திலிருந்து ஒரு ரூபாயை எடுத்து படியின் கையில் தந்தாள். “ஜட்டு வீட்டுல சுத்தமான நெய் அளந்து வாங்கிட்டு வா” என்றாள். மூத்த ஆண் பிள்ளைகளுக்குக் காலாண்டு தேர்வு நடந்து கொண்டிருந்ததால் தேலம் ராயணியிடமிருந்து முள்ளங்கியும் உருளைக் கிழங்கும் வாங்கிக்கொண்டு வருவதற்காக சம்முவை அனுப்பினாள்.

ஸலாமத்தி துப்பட்டாவைத் தலையில் சுற்றி நெற்றியில் கடுகை அரைத்து தேய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சம்மு முள்ளங்கியும், உருளைக் கிழங்கும் வாங்குவதைப் பார்த்து அவள் கேட்டாள்: “என்ன சம்மு! இன்னைக்கு உன் வீட்டுல முள்ளங்கியும் உருளைக் கிழங்கும் சேர்த்த ரொட்டியா?”

“ரொட்டி இல்ல...பொரோட்டா... அம்மா, அடுப்பு எரிய வச்சுக்கிட்டு இருக்காங்க...” சம்மு சொன்னான்.

“அய்யய்யோ... உன் அம்மா அடுப்பு எரிய வச்சுட்டாளா?” - தேலம் ராயணி கிண்டலுடன் சொன்னாள். “ஆமா...” சம்மு தலையை ஆட்டியவாறு சொன்னான். “உங்களுக்கும் பொரோட்டா சுடணும்னா வாங்க. இல்லாட்டி ஸலாமத்தியை அனுப்புங்க.” சம்மு காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பிச் சென்றான். தேலம் ராயணியும், இனாயத்தியும், ஆயிஷாவும் சம்முவைப் பார்த்துச் சிரித்தார்கள். தலைவலி காரணமாக ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த ஸலாமத்தி சம்பவங்களை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுட்ட பொரோட்டாவிலிருந்து நெய்யின் மணம் வந்து கொண்டிருந்தது. ஹூஸூர்சிங், ஜந்தான் ஆகியோரின் வாய்களில் நீர் ஊறியது. “மகளே! கொஞ்சம் மெல்லிசா இருக்கணும் எனக்கு” - ஹூஸூர்சிங் சொன்னான். ஜந்தானால் அமைதியாக இருக்க முடியவில்லை அவள் சொன்னாள்: “ம்...இந்தக் கிழவனுக்கு எப்பவும் தின்றதைப் பற்றிதான் நினைப்பு.”

ராணு நெய் வழிந்து கொண்டிருந்த பொரோட்டாவைச் சுத்தமான ஒரு துணியில் சுற்றி மங்கலிடம் கொடுத்தாள். மங்கல் அதை வாங்கிக் கொண்டு ஒரு காதலனின் பார்வையுடன் ராணுவின் முகத்தைப் பார்த்தான். தொடர்ந்து அவன் குப்பைக் கூளங்கள் நிறைந்த முற்றத்தையும், குண்டும் குழியும் நிறைந்த வராந்தாவையும் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்: “இதையெல்லாம் சுத்தம் செய்யணும்னா, ரொம்ப கஷ்டப்படணும்.”

“நாங்கள்... பொம்பளைங்க எதுக்காக இருக்கோம்?” - ராணு காதல் நிறைந்த குரலில் சொன்னாள்.

மங்கல் நஸீபன்வாலா ஸ்டாண்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அதற்குள் ராணுவிற்கு ஏதோ ஞாபகம் வந்தது. அவள் சொன்னாள்: “நில்லுங்க!” மங்கல் டாங்காவை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான். ராணு நொடிக்குள் அவன் முன்னால் வந்தாள். “எனக்கு இரண்டு சல்வாருக்கு (பெண்கள் அணியும் பைஜாமா) துணி வேணும். நல்ல நாள் அடுத்து வரப் போகுது.” அவள் சொன்னாள். மங்கல் அதற்குப் பதில் கூறுவதற்கு முன்பே அவள் தன் ஆடையின் முன் பகுதியைக் கையால் காட்டியவாறு சொன்னாள்: “எல்லாருக்கும் இது இருக்கு. எனக்கு மட்டும் இல்ல..” சொல்லிவிட்டு ராணு மங்கலின் முகத்தைப் பார்த்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

மங்கல் தலையை ஆட்டியவாறு சொன்னான்: “சரி பார்க்கலாம்.”

“பார்த்தால் போதாது! நான் என்ன எல்லார் முன்னாலயும் சல்வார் இல்லாம நடக்கணுமா? அதுனால எனக்கு ஒண்ணும் வரப் போறது இல்ல...”

தன் சொந்த கடமையை நிறைவேற்றுவதில் வேறு யாருடைய உபதேசமும் தேவையில்லை என்பது மாதிரி மங்கல் மீண்டும் தலையை ஆட்டினான். ராணு தொடர்ந்து சொன்னாள்: “சன்னுவிற்கு அவளோட கணவன் ஒரு கம்பளி கோட் தைச்சு கொடுத்திருக்கான். நல்ல அழகான கம்பளி கோட் அவளோட வெள்ளை உடம்புக்கு அந்தக் கறுத்த கோட் பொருத்தமா இருக்கு.”

ராணு முன்னால் சென்று மங்கலின் கையைப் பற்றியவாறு சொன்னாள்: “நீங்க இன்னைக்கு நீண்ட தூரம் போற சவாரியா தேடணும். பிள்ளைகளும் புது ஆடைகள் வேணும்ன்றாங்க.”

மங்கல் தேவைகளின் சுமையால் ஒரு மாதிரி ஆகிவிட்டான். குதிரை அணிந்திருந்த தலைப்பூ கீழே விழுந்தது. அதை எடுத்து மீண்டும் அணிவித்த அவன் ராணுவின் முகத்தைப் பார்த்தான். அவள் அப்போதும் மங்கலின் கையைத் தடவியவாறு நின்று கொண்டிருந்தாள். மங்கல் ராணுவின் கடன்காரன், அவன் அந்த கடனை அடைக்க வேண்டும்.

“சரிதான்...” - மங்கல் கையை விடுவித்துக்கொண்டு டாங்காவில் ஏறினான். ராணு அங்கேயே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கணவன் சொன்னபடி கேட்ட, ஒத்துழைத்த ஒரே இரவு வாழ்கையின் நாட்களையும் மாதங்களையும்,வருடங்களையும் ராணு வரிசைப்படுத்திப் பார்த்தாள். அப்படிச் சிந்தித்த ராணு திடீரென்று அதிர்ந்து போய்விட்டாள். தலோக்கா! இல்லை... மங்கல்... மங்கல்! ராணு ஒரு காலத்தில் பார்த்த மங்கல் அல்ல இது. தாய் திருமணத்தைப் பற்றி பேசியபோதுகூட அலட்சியமாக வாரீஸ் ஷாவின் ஈரடிகளைப் பாடியவாறு ஒற்றையடிப் பாதையில் நடந்து மறைந்த மங்கலும் அல்ல. இப்போது மங்கல் மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய ஒரு மனிதன். இப்போது அவனுடைய தோள்கள் காதல் சுமையால் அழுத்தப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் மங்கல் தன்னையே தன் அண்ணனாக நினைத்துக்கொள்கிறான்.

மங்கல் நீண்ட தூரம் போய்விட்டான். கிராமத்திற்கு வெளியே நீண்டு கிடக்கும் பாதைகள் ஒன்றையொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. அவை எப்படி வேண்டுமென்றாலும் வளைந்தும் நீண்டும் இருக்கட்டும். ஒருவிஷயம் மட்டும் உண்மை. பாதையிலிருந்து கிளம்பும் தூசிப்படலம், சேறு, மணல் ஆகியவற்றுடன் கிராமத்தைச் சேர்ந்த  ஒவ்வொரு மங்கலின் இரத்தத்திற்கும் வியர்வைக்கும் தொடர்பு இருக்கிறது. பாதைகள் எத்தனை இருந்தாலும், அவற்றில் ஒரு பாதை எல்லா மனிதர்களையும் மிருகங்களையும் சாயங்கால வேளையில் அவரவர்களின் ஆலயங்களுக்குத் திரும்பிக் கொண்டு வந்துவிடுகிறது.

மங்கல் தன்னுடைய பார்வையிலிருந்து போன பிறகு,ராணு திரும்பிச் சென்றாள். இன்று அவளுடைய பாதங்கள் நம்பிக்கையுடன் பூமியில் பதிகின்றன. இன்று எல்லா வேலைகளும் அவளுக்கு எளிதாகவே இருக்கும். வராந்தாவையும், முற்றத்தையும் பெருக்கிச் சுத்தம் செய்வது இப்போது ராணுவைப் பொறுத்தவரையில் ஒரு சுமையே அல்ல.


11

ந்த முறை கோட்லாவிற்கு இந்த அளவிற்கு அதிகமாகப் புனிதப் பயணிகள் வருவார்கள் என்றும், எப்போதையும்விட சற்று முன்பே பனிக்காலம் வரும் என்றும், அம்பாதேவி தன்னுடைய பக்தர்களைக் கூட்டமாக இந்தப் பக்கமாக வரும்படி செய்வாள் என்றும் யாரும் நினைத்திருக்கவில்லை. பெஷாவார், குஜரான்வாலா, சம்மடியார், ஸ்யால்கோட் ஆகிய பகுதிகளிலிருந்து லாரிகளிலும், பேருந்துகளிலும் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்து இவ்வளவு அதிகமான பயணிகள் வந்து சேர்வார்கள் என்று யாரும் மனதில் நினைத்திருக்கவில்லை. கோட்லாவில் இருப்பவர்களின் இல்லங்கள் பணத்தால் நிறையும் என்றும்  யாரும் எண்ணியிருக்கவில்லை. திவான்ஷாவின் பலசரக்குப் பொருட்களும் ‘ஜட்’டுகளின் நெய்யும் ‘கைரெ’யின் எண்ணெயும்,தேலம் ராயணியின் காய்கறிகளும் இந்த அளவிற்கு உயர்ந்த விலைக்கு விற்கப்படும் என்று யார் நினைத்தார்கள்? கோவிலிலிருந்த புறாக்கள் தெருக்களில் இறங்கி தானியங்களைக் கொத்திக்கொண்டு பறந்து செல்லும். அவற்றின் அன்பான கு...கு... சத்தம் இருபத்து நான்கு மணி நேரங்களும் வேலை செய்து கொண்டிருக்கும் மாவு ஆலையின் சங்கொலியில் சங்கமமாகிவிடும். தெருக்கோவில், தர்மசாலை, கச்சேரி ஆகியவற்றில் ஊசி குத்தக்கூட இடம் இல்லை. ஒரு ஆள் படுக்கக் கூடிய இடத்திற்குப் பயணிகள் இருபது இருபத்தைந்து என்று வாடகை கொடுப்பார்கள் என்பதை யாரும் கற்பனை கூட செய்ததில்லை. தட்டானின் நகைகளும், ஆசாரியின் தாம்பளங்களும் விளக்குகளும், குயவனின் மண் பானைகளும் நினைத்துப்பார்க்க முடியாத விலைக்கு சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூட இல்லை. புனிதப் பயணிகளின் வருகை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆடியும், பாடியும், தாளங்கள் போட்டுக் கொண்டும் அவர்கள் கோட்லாவிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் கோட்லாவைச் சேர்ந்த பெண்கள் மேலேயிருந்து மெலிந்தும், கீழேயிருந்து தடித்தும் இருந்ததற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. கடந்த காலத்தின் உஷ்ணம்தான்  காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். வரப் போகிற குளிர்காலம்தான் காரணம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கையில் தட்டுடனும், தட்டில் செந்தூரச் செப்புடனும் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் நடையில் தங்களைத் தாங்களே மறந்து பின்னர் எங்காவது சப்பணம் போட்டு உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் க்யான்சந்த், கேஸர்சிங், தீவானா, ருல்து போன்றோரின் நரம்புகள் தளர்ந்து போய்விடும். அவர்கள் ‘ஹாய்! ஹாய்!’ என்று ஒரே குரலில் அழைப்பார்கள்.

அன்று பெரிய பூஜை நடக்கும் நாள். ஹூஸூர்சிங், ஜந்தான் ஆகியோர் கூட வெளியே சென்றிருந்தார்கள். ஆனால், ராணு மட்டும் எங்கும் போகவில்லை. அதனால் ‘படி’யும் வீட்டிலேயே இருந்தாள். வயதுக்கு வந்த பெண் அவள். கோவிலுக்கு வந்திருப்பவர்களில் பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். யாராவது படியை நோக்கி விரலை நீட்டி விட்டால்...?

ராணு சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்றை அரைத்து, அம்மியிலிருந்து எடுத்து கிண்ணத்தில் போட்டாள். கடலைமாவை நீரில் கரைத்து அதில் பச்சை மிளகாய், அறுத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தாள். அடுப்பிலிருந்த வாணலியில் கடுகெண்ணெய் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது சன்னு அங்கு வந்தாள். கறுப்பு நிறக் கம்பளி கோட்டையும், குலாபி துப்பட்டாவையும் அவள் அணிந்திருந்தாள். கருப்புக் கோட்டுக்குள் துறுத்திக்கொண்டிருந்த அவளுடைய வெளுத்த மார்பகங்கள் காதலின் மகத்துவத்தின் கருப்பு,வெள்ளை நிறங்களை வெளிப்படுத்தின. ராணுவைப் பார்த்த உடனே அவள் கேட்டாள்:

“அய்யய்யோ! இன்னைக்கும் நீங்க இங்கேயே இருந்து சாகுறீங்களா?”

ராணு அதற்கு தலையை ஆட்டி “ஆமாம்” என்றாள். சன்னு அருகில் வந்து சொன்னாள்: “வெளியே நாங்க எல்லாரும் உங்களுக்காகக் காத்திருந்தோம்.”

ராணு அணிந்திருந்த புதிய சல்வாரும், சட்டையும் சன்னுவின் பார்வையில் பட்டன. சன்னு அப்போதே, “இதுதான் விஷயம்” என்று கூறி ராணுவின் சல்வாரைத் தொட்டுப் பார்த்தாள். சன்னுவிடமிருந்து  தப்பிப்பதற்காக ராணு தன் கையிலிருந்த மாவை வாணலிக்குள் போட்டாள். அவள் கையைத் தூக்கியவுடன் சன்னு சட்டைக்குள் வேறு எதையோ பார்த்தாள். திடீரென்று அவள் ராணுவின் சட்டைக்குள் தன் கையை நுழைத்து வயிற்றைத் தடவிப் பார்த்துவிட்டு, வாசலுக்குச் சென்று நடனமாடி, பாட்டுப் பாடி, சந்தோஷப்பட்டாள்.

“மங்கல் உங்க சொல்படி நடந்துட்டான். அப்படித்தானே? ”

ராணு பதிலெதுவும் கூறாமல் அம்மியிலிருந்து கிண்ணத்தில் எடுத்து வைத்திருந்த பொருளை விரலில் எடுத்து வாய்க்குள் போட்டு நாக்கால் ஓசை உண்டாக்கினாள்.

“அது என்ன?” - சன்னு அந்தப் பாத்திரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.

“அது சட்னி...” ராணு சொன்னாள்.

சன்னுவின் கண்கள் விரிந்தன. அவள் உடனே சட்னியை எடுத்து வாயில் வைத்து “ஸி...ஸி....” என்று ஓசை உண்டாக்கினாள்.

“உண்மையைச் சொல்லுங்க. இல்லாட்டி நான் உங்க முகத்துல விழிக்க மாட்டேன்.”

ராணு நான்கு திசைகளிலும் பார்த்துவிட்டு அருகில் நின்றிருந்த ‘படி’யிடம் சைகை காண்பித்தாள். தொடர்ந்து அவள் சன்னுவின் காதில் சொன்னாள்: “ஆமா... உண்மைதான்...”

அதைக் கேட்டு சன்னு ஒரு பைத்தியம் பிடித்தவளைப் போல ஆர்ப்பாட்டம் பண்ணியவாறு வெளியே ஓடினாள். அதே வேகத்தில் மங்கலும் உள்ளே வந்து கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் மோதிக் கொண்டார்கள். சன்னு வீசி எறியப்பட்டு சுவருக்கு அருகில் போய் விழுந்தாள். மங்கலின் தலைப்பாகையும் அணிந்திருந்த ஆடையும் அவிழ்ந்தன. மங்கலை அப்படிப்பட்ட கோலத்தில் பார்த்த சன்னு வெட்கமும் கோபமும் கலந்த குரலில் சொன்னாள்: “குருடன்! ஆள் வருவதைப் பார்க்க வேண்டாமா?”

 “ஆனா, சன்னு!” - மங்கல் என்னவோ கூற ஆரம்பித்தான். அதற்குள் சன்னு அங்கிருந்து போய்விட்டாள். மங்கல் தன்னுடைய தலைப்பாகையை எடுத்தவாறு ராணுவை அழைத்தான்: “ராணு!”

ராணு சமீபத்தில் தான் இருந்தாலும், அவள் அதிர்ச்சியடைந்து போனதென்னவோ உண்மை. மங்கல் இன்றுதான் முதல் தடவையாக அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறான். ஏதாவது முக்கிய விஷயம் இருக்கும் என்று அவள் நினைத்தாள். ஏதோ ரகசியத்தைக் கூறப்  போவதைப் போல மங்கல் ராணுவிற்கு நெருக்கமாகச் சேர்ந்து நின்றான். “கேள் ராணு! மிகப் பெரிய ஆச்சரியம்!” - அவன் சொன்னான். ராணு புன்னகைத்துக்கொண்டே சொன்னாள்: “என்ன? சீக்கிரமா சொல்லுங்க. உங்கக்கிட்ட சொல்றதுக்கு என்கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு.”

“நீ என்ன சொல்ல விரும்புற?” - மங்கல் ஆர்வத்துடன் கேட்டான்.

“முதலில் நீங்க சொல்லுங்க.”

மங்கல் ரகசியத்தைக் கூறத் தயாரானான். இதற்கிடையில் சமீபத்தில் நின்றிருந்த ‘படி’யை அவன் பார்த்தான்.


அவள் தாயும் தந்தையும் என்ன கூறப் போகிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். மங்கல் பாசத்துடன் ‘படி’யிடம் சொன்னான்: “நீ உள்ளே போ மகளே!”

படி அங்கிருந்து கிளம்பினாள். உடனே மங்கல் சொன்னான்: “இந்த வருடம் வெளியூர்கள்ல இருந்து வந்த பயணிகள்ல ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு இருபத்தைந்து வயசு இருக்கும். பார்க்க ரொம்பவும் நல்ல பையனா இருந்தான். டஸ்காவுல இருக்குற முன்ஷி(க்ளார்க்)யோட மகன். பூமி, வீடு, நிலங்கள்... நிறைய சொத்துகள்  இருக்குற ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசு...”

அதைக் கேட்டு ராணுவின் முகம் மங்கலானது. “அப்போ... அந்த ஆள்..?”

“ம்... நீ விஷயம் முழுவதையும் கேளு” - மங்கல் தொடர்ந்து சொன்னான்: “அந்தப் பையன் சொல்றான் ‘நான் கல்யாணம் பண்றதா இருந்தா படியை மட்டும் தான் பண்ணுவேன்’னு.”

“அப்படியா?” - ராணு எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். அவளால் அதை நம்ப முடியவில்லை.

“உன் மேல சத்தியமா...” - அவன் ராணுவைத் தொட்டு சத்தியம் பண்ணினான். ராணு வேகவேகமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள். சல்வாருக்குள் அவளுடைய கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. ராணு தன்னுடைய பதைபதைப்பை அடக்கியவாறு கேட்டாள்:

“அந்த ஆள் நம்ம மகளைப் பார்த்திருக்கிறாரா?”

“பார்த்திருக்கலாம். ஒரு வேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம்.”

“பார்க்கலைன்னா, பிறகு இது எப்படி நடக்கும்?”

“என்னவோ? கிராமத்துல பஞ்சாயத்தும் அதைத்தான் விரும்புறாங்க. பிறகு... பஞ்சாயத்துலதான் பரமேஸ்வரன் இருக்காருன்னு உனக்குத்தான் தெரியுமே!”

“தெரியும் பஞ்சாயத்துல பரமேஸ்வரன் இல்லாமப் போயிருந்தா இன்னைக்கு என் நிலைமை என்ன ஆகியிருக்கும்?”

“உன் மகள் மகாராணி மாதிரி ஆட்சி நடத்துவான்னு அவங்க எல்லாரும் சொல்றாங்க.”

ராணுவிற்கு அது விருப்பமில்லையென்றாலும் மங்கல் தொடர்ந்து சொன்னான்: “அவனுக்கு வேற எதுவும் தோவயில்லையாம்... அதை அப்படியே  ஏத்துக்கிட்டேன். அதுக்காக நான் ஒண்ணும் கொடுக்க மாட்டேன்னு அர்த்தம் இல்ல. என்னால் முடியக் கூடியதை நான் என் மகளுக்குத் தருவேன். எதையும் பாக்கி வைக்க மாட்டேன்.”

“என் மகள்!” - என்று அவன் சொன்னதைக் கேட்ட ராணுவிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“டாங்காவும் குதிரையும் மட்டுமில்ல... என்னையே விற்கவேண்டியது வந்தாலும் சரி நம்மோட மகளுக்குக் கொடுக்க வேண்டியதையெல்லாம் கொடுக்கணும் ராணு. சரி... நீ என்ன சொல்ல விரும்புற?” - மங்கல் ராணுவிற்கு ஞாபகமூட்டினான்.

“ஒண்ணுமில்ல... சுர்மாபாயியைக் கொஞ்சம் கூப்பிடணும்.”

“சுர்மாபாயி...” - மங்கல் அதைத் திரும்பத் திரும்ப உச்சரித்தவாறு ராணுவையே உற்றுப் பார்த்தான்.

“உண்மையாகவா?”

ராணு வெட்கத்துடன் தலை குனிந்தாள். அப்போது சன்னு, பூரண்தேயி, வித்யா, ஸ்வரூப், ஜானகி ஆகிய பக்கத்து வீட்டுப்பெண்கள் தாளமேளத்துடன் நடனமாடியவாறு அங்கு வந்தார்கள்.

மங்கல் கையால் சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னாலும், பூரண்தேயி ஓடி வந்து அவனைப் பிடித்துத் தள்ளி வெளியே போகச் சொன்னாள். “போ... வெளியே போ! பொம்பளைங்க மத்தியில ஆம்பளைக்கு என்ன வேலை? செய்ய வேண்டியதையெல்லாம் நீங்க செஞ்சாச்சு. இனி போயி டாங்கவை ஓட்ட வேண்டியதுதானே?”

மங்கல் மரியாதையைக் காப்பாற்றும் வண்ணம் அங்கிருந்து நகர்ந்தான். பெண்கள் தாளம் மேளத்துக்கு மத்தியில் ராணுவிடம் சொன்னார்கள்: “ஆண் பிள்ளையைப் பிரசவிக்கணும். தேவையில்லாம இன்னொரு ஆபத்தைக் கொண்டு வந்துடாதே!”

சந்தோஷத்திலிருந்த பெண்களின் கொண்டாட்டத்தில் தாங்கள் என்ன சொல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை. அந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் ராணு பூரண்தேயியைச் சற்று தள்ளி அழைத்துக் கொண்டுபோய், செவியில் சொன்னாள்: “வாழ்த்துக்கள் சித்தி!”

பூரண்தேயி சல்வாரை இறுக்கமாக அணிந்துகொண்டு சொன்னாள்: “எதுக்கு வாழ்த்துக்கள்?”

“படிக்கு மணமகன் கிடைச்சாச்சு.”

வாசலில் பார்த்தவாறு நின்று கொண்டிருந்த படி மிளகு வற்றலைப் போல தன் முகத்தைச் சிவப்பாக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள். பெண்களின் பார்வையின் ஓரத்தில் எப்போதும் கணவன்மார்கள்தான் இருப்பார்கள். திருமணமாகாத பெண்களின் செவிகள் வாத்தியங்களைக் கேட்பதற்கும், கண்கள் திருமண ஊர்வலத்தைப் பார்ப்பதற்கும் ஏங்கிக் கொண்டிருக்கும். அதனால் அங்கு கூடியிருந்த பெண்கள் இப்போதே படியின் திருமண ஊர்வலத்தைப் பார்க்கவும், வாத்திய இசையைக் கேட்கவும் ஆரம்பித்தார்கள். அவர்கள் மணமகன் யார் என்றுகூட கேட்கவில்லை. தலைப்பூ அணிந்த குதிரை மீது அமர்ந்து கையில் வாளை ஏந்தி சவாரி செய்துவரும் வரனை மனக்கண்ணால் பார்த்த அந்தப் பெண்கள் நடனமாடி சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தார்கள்.

தேவி கோவிலில் தரிசனம் பண்ணுவதற்காக வந்திருந்த பக்தர்கள் பெண்களின் கோலாகல சத்தங்களைக் கேட்டு மங்கலின் வீட்டை நோக்கி நடந்தார்கள். விஷ்ணுதேவி கோவிலில் அல்ல மங்கலின் வீட்டில். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் அந்த வீடுதான் கோயில் என்பது மாதிரி இருந்தது அந்தப் பயணிகளின் செயல்.

பஞ்சாயத்து தலைவன் க்யான்சந்த், கிராமத்து தலைவன் தாரசிங், கேஸர்சிங், ஜகு, ருல்து, தீவானா, கர்ம்முதீன், துல்லா, ஜமாலா ஆகியோர் வந்து நின்றார்கள். மாடிக்கு மேலே பெண்களும் கீழே ஆண்களும் திரண்டு நின்றார்கள். தேலம் ராயணியும் அவளுடைய மகள்கள் இனாயத்தி, ஆயிஷா, ஸலாமத்தி மூவரும் அங்கு ஓடி வந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தேலமின் அண்ணன் மகன் ‘முலு’வும் இருந்தான். அவனுடைய கை சைகைகளையும் நடவடிக்கைகளையும் பார்த்து ஸலாமத்தி வெட்கப்பட்டு தலையைக் குனிந்துகொண்டாள். நவாபின் மனைவி ஆயிஷா, குருதாஸின் மனைவி ஆகியோர் நடன நிகழ்ச்சியில் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.

பூரண்தேயியும் வித்யாவும் சேர்ந்து ராணுவையும் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு நடுவில் டப்பு தன் வாலை ஆட்டிக் கொண்டு அவரையும் இவரையும் மோப்பம் பிடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தது. ராணு கட்டுப்பாட்டுடனும், சில நேரங்களில் அதை மறந்தும் நடனமாடினாள். அவள் அணிந்திருந்த சல்வார் காற்று பட்டு, பாம்பைப்போல காலில் நெளிந்து ஏறுவதைப் போல இருந்தது. கஷ்டங்களில் அழுத்தப்பட்டுக் கிடந்த ராணுவின் அழகை அதுவரை யாரும் சரியாக கவனிக்கவில்லை. அழகாக இருந்த சட்டைக்குள்ளிருந்து ஏதோ கண்ணடித்து அழைப்பதைப் போல இருந்தது. குறும்புத்தனம் கொண்ட சிறுவன் கண்ணாடியில் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கச் செய்து மற்றவர்களின் கண்களைச் கூசச் செய்வதைப் போல அது இருந்தது.

நடனமாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு உலகம் மிகவும் பெரியதாகத் தோன்றியது. அங்கு கூடியிருந்த ஆண்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள்.


அந்த இடம் ஒரே ஒரு நிறத்தில் இருந்தது. சூரிய கிரணத்தின் நிறம். அதில் மற்ற எல்லா நிறங்களும் மறைந்துபோயின. ஒவ்வொருவரின் நிறத்தையும் அடையாளம் கண்டுபிடிக்க மனிதனின் அறிவைப் பயன்படுத்த வேண்டிய நிலை வந்தது.

வெளியே வேறொரு கூட்டம் பாட்டுப் பாடிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும், ஒரு ஆள் வேறொரு ஆள்மீது விழுந்து கொண்டும், சிறிய சிறிய கூட்டங்களாக நெருங்கி வந்து கொண்டிருந்தனர். தேவியைப் பற்றி பஜனைப் பாடல்களைப் பாடுவதில் கைதேர்ந்த பக்தர்கள் கூட்டமே அது. பாவ நிவர்த்திக்காக தேவி தரிசனத்திற்கு வந்தவர்கள் அவர்கள். செய்ததும், செய்து கொண்டிருப்பதும், செய்யப் போவதுமான பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதுதான் அவர்களின் நோக்கம்.

பக்தர்களின் கூட்டம் நெருங்கி வந்தது. ஏழு வருட கடுங்காவல் தண்டனையை அனுபவித்துவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்று வரும் சௌத்ரி மெஹர்பான்தாஸும், கணஷ்யாமும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். பக்தர்களின் கொண்டாட்டத்தில் தங்களையே மறந்து நடந்து கொண்டிருந்தாலும், தலை குனிந்து தங்களின் பார்வையை பூமியின்மீது அவர்கள் பதித்துக் கொண்டிருந்தார்கள். எத்தனையோ வருடங்கள் வஞ்சனை, சதி என்று இருந்த மெஹர்பான்தாஸும், கணஷ்யாமும் இப்போது மிகவும் அமைதியாக இருந்தனர். எனினும் அந்த மவுனம் அவர்களுடைய கடந்த கால வரலாற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது.

அவர்களுடன் இருபத்து ஐந்து, இருபத்து ஆறு வயதுள்ள அழகான ஒரு இளைஞனும் இருந்தான். தேவியைப் பற்றிய பஜனைப் பாடலில் தன்னையே மறந்துவிட்ட அந்த இளைஞனைப் பார்த்து கிராமத்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். எல்லோரின் உதடுகளிலிருந்தும் ஒரே ஒரு கேள்வி எழுந்தது. ‘இந்த இளம் வயதில் அவன் என்ன பாவம் செய்தான்?’ என்பதே அந்தக் கேள்வி. ஒருவேளை அவன் பாவம் செய்திருக்க மாட்டான். பாவம் அவனை பாடாய் படுத்தியிருக்கும்.

கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு களைத்துப்போன மங்கல் ராணுவிடம் வந்தான். அவளைத் தோளில் தொட்டுக் குலுக்கியவாறு அவன் சொன்னான்: “ராணு! அதுதான் நம்ம மகளோட மணமகன்” - மங்கல் பஜனைப் பாடலைப் பாடியவாறு வந்து கொண்டிருந்த இளைஞனுக்கு நேராக விரலைச் சுட்டிக் காட்டினான்.

ராணு, அழகான தோற்றத்தைக் கொண்ட அந்த இளைஞனைப் பார்த்தாள். அவளுடைய இதயத்தில் திருமணம் முடிந்தது. ராணு தன் மனதில் படியின் கையிலிருந்த பூ மாலையை அவனுடைய கழுத்தில் அணிவித்தாள். இந்த அளவிற்கு அழகான தோற்றமும், நல்ல நடத்தையும், நல்ல உடல் நலமும் உள்ள ஒரு மணமகன் கிராமத்திலுள்ள ஒரு மகளுக்கும் இதுவரை கிடைத்திருக்க  வாய்ப்பில்லை. ஆனந்தத்தால் திக்குமுக்காடிப் போன ராணு அருகில் நின்றிருந்த சன்னுவைப் பிடித்து இழுத்து நடனம் ஆடிக்கொண்டே சொன்னாள்: “ஹாய் சன்னு... நான் கரையைக் கடந்துட்டேன்..”

பெண்களுக்கு மத்தியில் நின்றிருந்த ‘படி’ தலையை உயர்த்தி தன்னுடைய வரப்போகும் கணவனைப் பார்த்தாள். நடனப் பாடல் படியின் வெட்கத்தை மறைத்துப் பிடித்தது. தன் உடலில் இருந்த இரத்தம் முழுவதும் முகத்திறகு வந்துவிட்டதைப் போல் அவள் உணர்ந்தாள். அதே இரத்தம், ஸலாமத்தியின் முகத்திலிருந்து காணாமல் போனது. அவள் தன் அக்காவிடம் சொன்னாள்: “வீட்டுக்கு போகலாம் அக்கா. சோர்வா இருக்கு.”

ராணு குழந்தையைப் போல அவளுக்கும் இவளுக்கும் தன்னுடைய சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள். “பாருங்க! சித்தி! அதோ பாருங்க... வித்யா! ஸ்வரூப்! நீங்களும் பாருங்க!”- அவள் சொன்னாள். பூரண்தேயி பார்த்தாள். வித்யா உறுதி செய்தாள். ஸ்வரூப் எடை போட்டாள். ராணு தலையை ஆட்டியவாறு அவர்களிடம் கேட்டாள்: “என்ன, நல்ல ஆள்தானே?”

சன்னுவின் முகம் ஒளி குறைந்து ஒரு மாதிரி ஆவதைப் பார்த்து ராணுவின் பார்வையில் ஒரு நடுக்கம் உண்டானது. அவளுடைய முகம் வெயிலில் வாடி விழுந்த வெண்டைப்பூ போல ஆனது. ராணு சன்னுவின் முகத்தையே உற்றுப் பார்த்தவாறு சொன்னாள்: “அய்யோ... சன்னு! இது என்ன?” தொடர்ந்து அவள் அதே பார்வையுடன் அந்த இளைஞனைப் பார்த்தாள். அப்போது அவன் பிச்சைப் பாத்திரத்தை நீட்டி ராணுவிடம் என்னவோ யாசித்தான்.

“அய்யோ...நான் செத்துட்டேன்!” ராணு மூச்சை உள்ளே இழுத்தாள். அதே சுவாசம் வெளியே வருவதற்கு முன்பு தன் முகத்திலிருந்த சிவப்பு நிறம் சிறகு முளைத்து பறப்பதைப்போல் அவளுக்கு தோன்றியது. முதலில் ராணுவின் கைகள் நடுங்கின. பிறகு உடல் முழுவதும் அதேபோல நடுங்கியது. ராணு அந்த இளைஞனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “இவன் ... இவன்தான்... என்னோட...”

ராணு தாங்க முடியாத துக்கத்தால் சுய உணர்வை இழந்து தரையில் விழ இருந்தாள். அதற்குள் கிழவனான மாமனார் தட்டுத் தடுமாறி அங்கு வந்தான். அருகில் நின்றிருந்த ஜந்தானைக்கூட பொருட்படுத்தாமல் அவன், விழப் போன ராணுவைத் தாங்கிப் பிடித்தான். இன்று ஹூஸூர்சிங்கின் கண் புறாவின் சிறகைப் போல துடிப்பதற்குப் பதிலாக சிறகை விரித்து ஆகாயத்தை நோக்கி உயர ஆரம்பித்தது.

“வா... மகளே!” -  ஹூஸூர்சிங் துடிக்கும் உதடுகளுடன் அழைத்தான்: “மகளே! நீ எதுக்கு அழறே? இதோ என்னைப் பாரு. மகனைத் தருபவன் எப்பவும் மகனைத்தான் தருவான். அப்படித்தான் இந்த மகனும் கிடைச்சிருக்கான்.”

ஹூஸூர்சிங் பிறகு மருமகளின் மனதிற்கு அமைதி கிடைக்கக்கூடிய முயற்சிகளில் இறங்கிவிட்டான். அவனுடைய கண்கள் கங்கையும், யமுனையுமாக மாறி தாடி என்ற வனத்தில் அது தேங்கியது. தலோக்காவின் மரணத்திற்குப் பிறகு ஹூஸூர்சிங்கின் கைகள் இன்றுவரை சிறிதும் கிடைக்காத பொருளைத் தேடும் முயற்சியில் இறங்கியதேயில்லை. அவனுடைய குரல் தொண்டைக்குள்ளேயே  நின்றுவிட்டது. யோகி வெறுமனே வெந்நீரில் தேடி என்ன பயன்? ஒருமுறை இழக்கப்பட்ட இரத்தினம் நிரந்தரமாக இழக்கப்பட்டதுதான். இனி அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. ஆமாம்... அந்த இரத்தினத்திற்குப் பதிலாக மாணிக்கமோ, மரகதமோ, வைடூரியமோ உங்களுக்குக் கிடைக்கலாம். ஆனால், இழக்கப்பட்ட அதே இரத்தினம் கிடைப்பது என்பது கஷ்டமான ஒரு விஷயம்தான்.

அதனால்தானே ஹூஸூர்சிங்கின் கண்கள் இந்த உலகத்துடன் உள்ள தொடர்பை நீக்கி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தன? பிறகு பார்வை அவனுடைய நிலைக்கொள்ளா நிலையில் கண்ணீர் சிந்தியது. இப்போது ஹூஸூர்சிங் அவனே பார்க்கும் பொருளாகவும் பார்க்கக் கூடியவனாகவும் ஆகிவிட்டான். விளையாட்டும், அதைப் பார்ப்பவனும் அவனேதான்.  ஹூஸூர்சிங் அணிந்திருந்த மஞ்சள் நிறத் தலைபாகை அவிழ்ந்து விழுந்தது. அதன் நுணியால் தன் கண்களையும் மூக்கையும்  துடைத்த ஹூஸூர்சிங் ஒரு யோகியைப் போல இருந்தான். அவன் இந்த உலகத்தை விட விரும்பினான்.


ஆனால், உலகம் ஹூஸூர்சிங்கை விட விரும்பவில்லை. மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கும் ஹூஸூர்சிங்கிற்கு ஆத்ம பார்வை கிடைத்தது. அதன் பேரொளியில் அவன் பார்க்கத் தொடங்கினான். பிறப்பு, மரணம் ... அதற்கு நடுவில், ராணு மருமகள் - திருமண நாளன்று, மருதாணி அணிந்த வெண்மையான கைகளைக் கூப்பி, பர்தாவிற்குப் பின்னால் குனிந்த தலையுடன் மாமனாரிடம் வேண்டுகிறாள்: “தந்தையே! நீங்க உங்களின் மகனை எனக்குத் தாங்க. அதற்குப் பதிலா நான் உங்களுக்குப் பத்து மகன்களைத் தருவேன். அதே உடல் பலமும், வடிவமும் கொண்ட மகன்கள்...”

அப்போது தந்தை கூறுகிறார்: “சரி... மகளே! என்னோட இந்த மகன்...”

பிறகு ஹூஸூர்சிங் கண்களைத் துடைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஹூஸூர்சிங் பாசத்துடன் ராணுவின் தலையை வருடிக் கொண்டிருந்தான். இன்று அவளுக்கு இல்லாமல் போன சொந்த தந்தையின் இடத்தில் கடவுளின் அருளால் ஒரு தந்தை கிடைத்திருக்கிறான். அதனால் அவள் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் தந்தையின் மார்பில் தலையை மோதி அழுதுகொண்டு சொன்னாள்:

“இல்ல... இல்ல... அது முடியாத விஷயம். அய்யோ! என் மகளே! நான் செத்துப்போயிடுவேன். அப்பா...!”

அந்தச் சமயத்தில் ‘பரிகார’த்திற்காக வந்திருந்த புனிதப் பயணிகளின் கூட்டம் முடிந்து போயிருந்தது. மக்கள் மூச்சை அடக்கிக்கொண்டு ஒரே ஒரு முடிவைத் தெரிந்துகொள்ள காத்திருந்தார்கள். ராணு சம்மதம் தந்தால் உலகம் இருக்கும் - இல்லாவிட்டால் பூகம்பத்தில் அழியும் என்று தோன்றும் வண்ணம் - மிகப் பெரிய பூகம்பம் - அதில் மனிதர்களும், பறவைகளும், மிருகங்களும், பூமியும், ஆகாயமும் அழிந்து போகும்! அந்த நேரத்தில் ஒரு ‘நுஹ்’ஹூம், பூகம்பத்துடன் தொடர்புள்ள முஸ்லீம் தீர்க்கதரிசியும் இருக்கப்போவதில்லை. கடவுளின் பக்கம் ஒரு ஆத்மாவும் - சத்தத்திற்கு ஓங்காரமும், சூரியனுக்கு பிரகாசமும் இருக்காது. அதனால் பஞ்சாயத்தின் ஐந்து பரமேஸ்வரன் மார்கள் வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பிரார்த்தனையில் கள்ளங்கபடமற்ற மங்கலும் சேர்ந்துகொண்டான்.

ராணுவிற்கு ஆறுதல் கூறும் வகையில் ஹூஸூர்சிங் சொன்னாள்: “மகளே! இது எல்லாம் எதற்கு? எதற்காக இவையெல்லாம் நடக்குதுன்னு எனக்கும், உனக்கும், இந்த மக்களுக்கும் தெரியாது. அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும் கூடாது.” சுற்றிலும் அமைதி... அங்கு மூச்சுவிடக் கூட இடமில்லை...

ராணு திரும்பிப் பார்த்தாள்: ‘படி’யின் சோகம் படிந்த முகம் அவளுடைய பார்வையில் பட்டது. படி வேதனை நிறைந்த குரலில் சொன்னாள்: “அம்மா! நீங்க என்ன செய்றீங்க? நீங்க சம்மதம் தரலைன்னா, நான் வாழ்க்கை முழுவதும் திருமணமே செய்யாம இருக்க வேண்டியதுதான்... பாலைவனத்தைப்போல!”

ராணு மாமனாரின் தோளிலிருந்து தன் தலையை உயர்த்தினாள்: “சரி, அப்பா! உங்க விருப்பம்போல நடக்கட்டும்!”

திடீரென்று திருமணப் பாடல் ஆரம்பமானது. மக்கள் ஆவேசத்துடன் பாடவும் நடனமாடவும் ஆரம்பித்தார்கள். ராணு கோவிலையே பார்த்தாள். தேவி புன்னகைத்தாள். கோவிலின் தங்கத் தாழிகைக் குடத்தின் பிரகாசம் ராணுவின் முகத்தில் பிரதிபலித்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு இருட்டு பரவியது. இப்போதும் புரிந்து கொள்ள முடியாத ஏதோ பிரகாசம் ராணுவின் முகத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் கோவிலில் மணிகள் முழங்கின. பள்ளிவாசலில் ‘வாங்கு’ ஒலித்தது. இருட்டில் நாழிகைக் குடத்தின் இடத்தில் யாருடைய கையோ தெரிந்தது. பயந்துபோன ராணு கோவிலின் நாழிகைக் குடத்திற்கு நேராகத் தன் கைகளை உயர்த்திக் கொண்டு சொன்னாள்: “ஹே! தேவி! அம்பிகை!”

அப்போது வித்யா பூரண்தேயியைக் கிண்டல் பண்ணினாள்: “ஏய், பூரூ! எல்லாரும் வந்துட்டாங்க. ஆனா, உங்க தர்மதாசன் வரலையே!”

பூரண்தேயி அழுதுகொண்டே மகனுடைய சட்டவிரோதமான தந்தைக்காகவும் தன்னுடைய நரை விழுந்த கணவனுக்காகவும் கண்ணீர் விட்டாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.