
மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
பள்ளி, கல்லூரி நாட்களிலேயே ரஷ்ய இலக்கியத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன் நான். வாழ்க்கையை இலக்கியமாக வடித்த ரஷ்ய இலக்கியச் சிற்பிகளின் படைப்புகளைப் பல நாட்கள் ஊண், உறக்கம் மறந்து படித்திருக்கிறேன். மாக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆன்ட்ரி துர்கனேவ், தாஸ்தாயெவ்ஸ்கி, மிகயீல் ஷோலகோவ் ஆகியோரின் அழியாப் புகழ்பெற்ற இலக்கியங்களில் என்னை முழுமையாக இழந்திருக்கிறேன். இலக்கியத்தின்பால் எனக்கு அளவற்ற ஈடுபாடு உண்டானதற்கு முதற்காரணமாக இருந்தவை ரஷ்ய இலக்கியங்கள் என்பதே உண்மை.
எனக்கு மிகவும் விருப்பமான ஒரு மாபெரும் இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய். அவரின் படைப்பைத் தமிழில் மொழிபெயர்ப்பது என்பது உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்யக்கூடிய ஒன்று. அந்த ஆர்வத்துடன் நான் மொழிபெயர்த்திருப்பதுதான் அவரின் ‘ஏ பிளீஸனர் இன் தி காக்கஸஸ்’ என்ற கதை. இதைப் படிக்கும்போது வீரசாகஸங்கள் நிறைந்த ஒரு ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வு உண்டாகும். 1870-ஆம் ஆண்டில் லியோ டால்ஸ்டாய் எழுதிய இந்தக் கதையைத் தவிர 1885-ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘லிட்டில் கேர்ள்ஸ் வைஸர் தென்மென்’ என்ற சிறுகதையையும், 1886-ல் எழுதிய ‘ஏ க்ரெய்ன் அஸ் பிக் அஸ் எ ஹென்ஸ் எக்’ என்ற சிறுகதையையும்கூட இங்கு மொழி பெயர்த்திருக்கிறேன். இந்தச் சிறுகதைகளின் சில பக்கங்களுக்குள் எவ்வளவு பெரிய படிப்பினையை வாசகர்களுக்கு டால்ஸ்டாய் உணர்த்துகிறார் என்பதைப் பார்க்கும்போது அவரைக் கையெடுத்து வணங்க வேண்டும் போல் நமக்குத் தோன்றுவது இயல்பான ஒன்றுதானே ! அத்துடன் ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘ஒரு தேசத்துரோகியின் தாய்’ என்ற சிறுகதையையும் மொழிபெயர்த்திருக்கிறேன். இந்தப் படைப்புகள் உங்களைப் பரவசப்படுத்தும் என்று நிச்சயமாக நம்புகிறேன். அன்புடன் சுரா
காக்கஸஸ் பகுதியிலிருந்த ராணுவத்தில் ஜிலின் என்ற பெயரைக் கொண்ட ஒரு அதிகாரி பணியாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு அவனுடைய வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. எழுதியிருந்தது அவனுடைய தாய். அதில் அவள் எழுதியிருந்தாள்: ‘எனக்கு மிகவும் வயதாகி விட்டது. மரணத்தைத் தழுவுவதற்கு முன்பு மகனே, உன்னை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். உடனே புறப்பட்டு வந்து எனக்கு இறுதிவிடை கொடுத்து, என்னை மண்ணில் புதைத்து விட்டுப் போ. ஆனால், உனக்காக நான் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன். அறிவாளியான அந்தப் பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாள். அவளிடம் கொஞ்சம் சொத்துக்கள் கூட இருக்கின்றன. அவள்மீது நீ பிரியம் கொள்வாயானால், அவளைத் திருமணம் செய்து கொண்டு நீ நம் வீட்டிலேயே இருந்து வாழ்க்கையை நடத்தலாம்.’ ஜிலின் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். அந்தக் கடிதத்தில் அவன் தாய் எழுதியிருந்தது உண்மைதான். அவன் தாய் மரணத்தை நோக்கிய பயணத்தில்தான் இருக்கிறாள். இந்தமுறை அவளை அவன் சென்று பார்க்காவிட்டால், இன்னொரு முறை உயிருடன் அவன் பார்க்கமுடியுமா என்பதுகூட சந்தேகம்தான். அவன் இப்போது ஊருக்குக் கிளம்புவதே சரியான ஒரு செயலாக இருக்கும். அதேநேரத்தில் அவன் தாய் சொன்ன பெண் அந்த அளவிற்கு அழகானவளாக இருந்தால், அவளை ஏன் அவன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது ? அவன் தன்னுடைய மேலதிகாரியைப் போய்ப் பார்த்தான். ஊருக்குப் போகும் விஷயத்தைச் சொல்லி விடுமுறை கேட்டான். விடுமுறை கொடுக்கப்பட்டது. தன்னுடைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கெண்ட அவன் ராணுவ வீரர்களுக்கு நான்கு வோட்கா புட்டிகளை விடைபெறும் விருந்து நிமித்தமாக வாங்கிக் கொடுத்தான். எல்லாம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாரானான். காக்கஸில் போர் நடந்து கொண்டிருந்த காலமது. இரவாகட்டும் பகலாகட்டும் சாலையில் போவது அவ்வளவு பாதுகாப்பான விஷயமாக அப்போது இல்லை. தான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு ரஷ்யன் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றாலும் சரி அல்லது ஏதாவது வாகனத்தில் பயணம் செய்தாலும் சரி, நிச்சயம் அவனை டார்ட்டர்கள் பிடித்துக் கொன்று விடுவார்கள். இல்லா விட்டால் மலைப்பகுதிக்கு அவனைத் தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள். அதனால் ஒரு வித்தியாசமான ஒரு ஏற்பாடு அங்கு செய்யப்பட்டது. அதன்படி ஒரு முகாமில் இருக்கும் வீரர்களில் ஒரு பகுதியினர் வாரத்திற்கு இரண்டு முறை கூட்டமாக இன்னொரு முகாமிற்கு வரிசையாக குதிரைகளில் செல்ல வேண்டும். பயணம் போகவேண்டியவர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பி வைப்பதற்காகவே இப்படியொரு திட்டம் அங்கு பின்பற்றப்பட்டது. அது கடுமையான கோடைகாலம். பொழுது புலரும் நேரத்திலேயே சாமான்களை ஏற்றிச் செல்லும் வாகனம் தயாராக ராணுவ கட்டிடத்தின் அருகிலிருந்த நிழலில் நின்றிருந்தது. படை வீரர்கள் குதிரைகளில் ஏறி நகர ஆரம்பித்தார்கள். அவர்கள் சாலையில் கம்பீரமாகச் சென்றார்கள். ஜிலின் குதிரையின் மேல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய பொருட்களை ஏற்றியிருந்த வண்டி சாமான்கள் ஏற்றப்பட்ட வாகனத்துடன் சென்று கொண்டிருந்தது. அவர்கள் பதினாறு மைல்தூரம் பயணம் செய்யவேண்டும். சாமான்கள் ஏற்றப்பட்டிருந்த வாகனம் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. சில இடங்களில் வீரர்கள் நிற்பார்கள். சில வேளைகளில் வாகனத்திலிருந்த ஏதாவதொரு சக்கரம் சுழன்று வெளியே வருவது மாதிரி இருக்கும். இல்லாவிட்டால் ஒரு குதிரை நடக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும். அது சரியாகும் வரை எல்லோரும் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டியதுதான். மதியநேரம் கடந்து விட்டது. அவர்கள் பாதி தூரத்தைக்கூட கடந்திருக்கவில்லை. சாலை முழுக்க பயங்கர தூது இருந்தது. சூரியன் உக்கிரமாக தகித்துக் கொண்டிருந்தது. நிழல் இருப்பதற்கான அறிகுறி எங்குமே இல்லை. சுற்றிலும் ஒரே வெட்டவெளி பொட்டல். போகும் பாதையில் பெயருக்குக்கூட ஒரு மரமோ இல்லாவிட்டால் செடி, கொடிகளோ இல்லை என்பதுதான் கொடுமையான விஷயம். முன்னால் போய்க் கொண்டிருந்த ஜிலின் நின்றான். தன்னுடைய பொருட்கள் தன்னைக் கடந்து செல்லட்டும் என்பதற்காக அவன் காத்திருந்தான். தனக்குப் பின்னால் அடையாள குழலோசை ஒலிப்பதை அவன் கேட்டான். அவ்வளவுதான் - முழு படையும் அப்படியே சாலையில் நின்று விட்டது. அவன் தனக்குள் இப்படி சிந்திக்க ஆரம்பித்து விட்டான் : ‘நானே தனியா ஏன் போகக்கூடாது ? என்னுடைய குதிரை மிகவும் திறமையானது. ஒருவேளை டார்ட்டர்களே வந்து தாக்கினால்கூட, குதிரைமேல் அமர்ந்து நான் படுவேகமாகப் பாய்ந்தோடி விடமுடியும். இருந்தாலும் அவர்களுக்காகக் காத்திருப்பதுதான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.’ சிந்தனையில் ஆழ்ந்தவாறு அவன் உட்கார்ந்திருக்க, காஸ்ட்டிலின் என்ற அதிகாரி துப்பாக்கியுடன் குதிரை மேல் ஏறி வந்து கொண்டிருந்தான். அவன் ஜிலினைப் பார்த்து சொன்னான் : ‘‘வா ஜிலின்... நாம் தனியா போவோம். இந்தச் சாலையில போறதே கஷ்டமான ஒரு அனுபவமா இருக்கு. வெயிலோட கடுமையை நம்மால தாங்க முடியல. என் சட்டை வியர்வையால ‘கசகச’ன்னு இருக்கு.’’ காஸ்ட்டிலின், ஆஜானுபாகுவான உடற்கட்டைக் கொண்ட தடிமனான ஒரு மனிதன். அவன் சிவந்த முகத்திலிருந்து வியர்வை அருவியென வழிந்து கொண்டிருந்தது. ஜிலின் ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று யோசித்தான். அடுத்த நிமிடம் காஸ்ட்டிலினைப் பார்த்து அவன் கேட்டான் : ‘‘உன் துப்பாக்கியில குண்டுகள் நிரப்பப்பட்டிருக்கா ?’’ ‘‘ஆமா...’’ ‘‘அப்படின்னா பரவாயில்ல. சரி... நாம போவோம். ஆனா ஒரு விஷயம். நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் போகணும்.’’ சாலையில் அவர்கள் முன்னோக்கி குதிரையில் பயணம் செய்தார்கள். இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டேதான் சென்றார்கள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டேதான் போனார்கள். சுற்றிலும் பார்க்கக்கூடிய அளவிற்கு அந்தப்பகுதி முழுவதும் வெட்ட வெளியாகத்தான் இருந்தது. ஆனால், பரந்து கிடக்கும் வெளியைத் தாண்டியவுடன், சாலை இரண்டு மலைகளுக்குமிடையில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கியது. அப்போது ஜிலின் சொன்னான் : ‘‘நாம அந்த மலைமேல ஏறி சுற்றிலும் ஒரு தடவை பாக்குறது நல்லதா இருக்கும்னு நினைக்கிறேன். டார்ட்டர்கள் ஒரு வேளை நமக்குத் தெரியாமலே நம்மை கவனிச்சிட்டு இருந்தாலும் இருக்கலாம்.’’ அதற்கு காஸ்ட்டிலின் சொன்னான் : ‘‘அது தேவையில்லாத விஷயம்னு நினைக்கிறேன். நாம போய்க்கிட்டே இருப்போம் !’’ அதற்கு ஜிலின் ஒப்புக்கொள்ளவில்லை.
‘‘அப்படிச் சொல்லாதே’’ என்று சொன்ன ஜிலின் தொடர்ந்து சொன்னான் : ‘‘நீ பிரியப்பட்டா, இங்கேயே இரு. நான் வேணும்னா போய் பார்த்துட்டு வர்றேன்.’’ அடுத்த நிமிடம் அவன் தன்னுடைய குதிரையை இடது பக்கமாக திருப்பி மலைமேல் செலுத்தினான். ஜிலினின் குதிரை பொதுவாகவே வெறி பிடித்தது போல் படுவேகமாகப் போகக்கூடியது. தனக்கு ஏதோ சிறகுகள் இருப்பதைப் போல அது ஜிலினைச் சுமந்து கொண்டு மலையின் மேல் பகுதியை நோக்கி ஓசையை எழுப்பிக் கொண்டு ஓடியது. (அந்தக் குதிரையை அவன் 100 ரூபிள்கள் கொடுத்து விலைக்கு வாங்கி, அதைத் தன் சொந்த உபயோகத்திற்காக வைத்துக் கொண்டிருந்தான்.) அவன் மலை உச்சியை அடைந்ததும், சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு 100 அடி தூரத்தில் சுமார் முப்பது டார்ட்டர்கள் இருப்பதை அவன் கண்கள் பார்த்துவிட்டன. டார்ட்டர்களைப் பார்த்ததுதான் தாமதம், அவன் வேகமாகக் குதிரையைத் திருப்பினான். அதற்குள் அவர்களும் அவனைப் பார்த்துவிட்டார்கள். தங்களின் குதிரை மேல் ஏறி அவனை அவர்கள் படுவேகமாக ஓசையை எழுப்பிய வண்ணம் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் எல்லோரின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. கீழே வேகமாக குதிரையில் வந்து கொண்டிருக்கும் பொழுதே காஸ்ட்டிலினைப் பார்த்து ஜிலின் உரத்த குரலில் கத்தினான் : ‘‘துப்பாக்கியைத் தயாரா வச்சுக்கோ...’’ தன்னுடைய குதிரையிடம் கூறுவதாக நினைத்து தன் மனதிற்குள் அவன் கூறிக் கொண்டான். ‘நண்பனே, இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து என்னை எப்படியாவது காப்பாத்திடு. எங்கேயாவது தடுமாறி கீழே விழுந்திடாதே. அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா, அதோட எல்லா விஷயமும் முடிஞ்சது. துப்பாக்கி இருக்குற இடத்துக்கு நான் போய்ச் சேர்ந்துட்டேன்னா, என்னை அவங்க ஒண்ணும் பண்ண முடியாது.’’ ஆனால், காத்திருப்பதற்குப் பதிலாக டார்ட்டர்கள் வருவதைப் பார்த்ததும் காஸ்ட்டிலின் முழு வேகத்துடன் குதிரையைச் செலுத்த ஆரம்பித்தான். குதிரையை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அடித்து எவ்வளவு வேகமாகப் போகமுடியுமோ அவ்வளவு வேகமாகப் பாய்ந்து புயலென போனான் காஸ்ட்டிலின். குதிரையின் முறுக்கேறிப்போன வால் மட்டும் அதற்குப் பின்னாலிருந்த தூப் படலத்திற்கு மத்தியில் சற்று மங்கலாகத் தெரிந்தது. தான் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டதை ஜிலினால் தெளிவாக உணர முடிந்தது. துப்பாக்கி இப்போது போய் விட்டது. அவனிடம் இருப்பது வாள் மட்டுமே. குதிரையைச் சற்று வேறு பக்கம் அவன் திருப்பினான். எப்படியாவது அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட வேண்டும் என்பதொன்றே அவனின் அப்போதைய நோக்கமாக இருந்தது. ஆனால் பதினாறு டார்ட்டர்கள் அவனின் தலையை வெட்டுவதற்காக வேகமாக அவனை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். அவனுடைய குதிரை மிகவும் திறமையயனதுதான். எனினும், அவர்களின் குதிரை அதைவிட சிறப்பானவையாக இருந்தன. தவிர, அவர்கள் அவன் போகும் பாதைக்கு எதிராக வந்து கொண்டிருந்தார்கள். குதிரை மேல் அமர்ந்தவாறு அதை வேறுபக்கம் திருப்ப அவன் முயற்சித்தான். ஆனால், அது வேகமாகப் போய்க் கொண்டிருந்ததால், அதனால் நிற்க முடியவில்லை. விளைவு - டார்ட்டர்களுக்கு நேர்எதிரில் போய் நிற்கவேண்டிய நிலைமையாகி விட்டது ஜிலினுக்கு. சிவப்பு நிறத்தில் தாடி வைத்திருந்த ஒரு டார்ட்டர் ஒரு சாம்பல் நிற குதிரையின் மேல் உட்கார்ந்திருந்தான். அவன் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தவாறு அவனை நெருங்கி வந்து வாயைப் பெரிதாகத் திறந்து பற்கள் தெரியுமாறு சிரித்தான். ‘என்னைப் பார்த்து சிரிக்கிறியா ?’ மனதிற்குள் நினைத்தான் ஜிலின். ‘எனக்கு நல்லா தெரியும், நீங்க ரொம்பவும் பயங்கரமான ஆளுங்க. என்னை நீங்க உயிரோட கொண்டு போனா அவ்வளவு தான்... என்னை பாழுங்குழிக்குள்ள போட்டு ஒரு வழி பண்ணிடுவீங்க. அவ்வளவு சர்வ சாதாரணமா உயிரோட உங்க கையில நான் சிக்குவேனா என்ன...?’’ அவ்வளவு பருமனான ஆள் இல்லையென்றாலும் ஜிலின் மிகவும் தைரியசாலி என்பதென்னவோ உண்மை. அவன் தன்னுடைய வாளை உருவி சிவப்புநில தாடியைக் கொண்ட டார்ட்டரை நோக்கி நீட்டினான். அப்போது அவன் தன் மனதிற்குள் பேசிக் கொண்டான் : ‘ஒண்ணு நான் இந்த ஆளை ஒரேயடியா கீழே வீழ்த்தணும்; இல்லாட்டி என்னோட வாளால இவனை உடல் ஊனமுள்ளவனா ஆக்கணும்.’ அவனுக்கு ஒரு குதிரை அளவு தூரத்தில் நின்றிருந்தான் அந்த சிவப்பு தாடி மனிதன். ஜிலினை நோக்கி அந்த மனிதன் துப்பாக்கியால் சுட, அவனுடைய குதிரையின் மேல் அந்தக் குண்டு போய்பட்டது. குதிரை தன்னுடைய உறுதி மிக்க உடம்புடன் கீழே விழ, ஜிலினும் அதோடு சேர்ந்து கீழே விழுந்தான். அவன் பூமியை விட்டு வேகமாக எழு முயற்சித்தான். ஆனால், இரண்டு டார்ட்டர்கள் ஏற்கனவே அவனுக்கு மிகவும் அருகில் அமர்ந்து அவனுடைய கைகளை அவனின் முதுகுப் பக்கமாகக் கட்டி விட்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் தன்னுடைய பலத்தைக் கொண்டு தூக்கியெறியலாமா என்று பார்த்தான் ஜிலின். அதற்குள் வேறு மூன்று டார்ட்டர்கள் தங்கள் குதிரையில் இருந்து இறங்கி அவன் தலையை தங்கள் துப்பாக்கி முனையால் ஆவேசத்துடன் தாக்கினார்கள். அவ்வளவுதான் - அவனுடைய கண்கள் இருள ஆரம்பித்தன. அடுத்த நிமிடம் அவன் தளர்ந்து போய் கீழே சாய்ந்தான். டார்ட்டர்கள் அவனைப் பிடித்து தூக்கி, அவன் கைகளை பின்னால் வைத்து கயிறு கொண்டு இறுகக் கட்டினார்கள். அவனுடைய தலையிலிருந்த தொப்பியை நீக்கினார்கள். அவனுடைய காலணிகளைக் கழற்றினார்கள். அவனுடைய உடம்பை முழுவதும் ஆராய்ந்து பார்த்தார்கள். அவனுடைய ஆடைகளைக் கிழித்தெறிந்து, அவனிடமிருந்த பணம், கடிகாரம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார்கள். ஜிலின் தன் குதிரையைப் பார்த்தான். அந்த அப்பிராணிக் குதிரை தரையில் விழுந்த கோலத்திலேயே சாய்ந்து படுத்துக் கிடந்தது. அது போராடிக் கொண்டிருந்தது. அதனுடைய கால்கள் தரையில் படாமல் அந்தரத்தில் நின்றவாறு காற்றைத் துழாவிக் கொண்டிருந்தன. அதனுடைய தலையில் ஒரு ஓட்டை விழுந்திருந்தது. அதன் வழியாக கருப்பு இரத்தம் தொடர்ந்து வெளியே வந்தவண்ணம் இருந்தது. அந்த இரத்தம் அங்கிருந்த தூசியை இரண்டடி தூரத்திற்குச் சேறாக மாற்றியிருந்தது. டார்ட்டர்களில் ஒருவன் குதிரையின் மேல் ஏறினான். அதன் மேல் போடப்பட்டிருந்த சேணத்தை அவிழ்த்தான். அந்த நிலையில் கூட குதிரை அவளை உதைத்துக் கொண்டிருந்தது. அடுத்த நிமிடம் - ஆவேசமான அவன் கத்திய உருவி குதிரையின் மூச்சுக் குழாயை வேகமாக அறுத்தான். ஒருவித வினோதமான ஓசை குதிரையின் தொண்டைக்குழியிலிருந்து புறப்பட்டு வந்தது. அடுத்த சில நொடிகளில் குதிரை தன்னுடைய இறுதி மூச்சை இழுத்து வெளியே விட்டது. அதோடு அதன் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.
டார்ட்டர்கள் குதிரையின் சேணத்தையும் மற்ற அதன் அணிகலன்களையும் எடுத்துக் கொண்டார்கள். சிவப்பு தாடி வைத்திருந்த டார்ட்டர் தன்னுடைய குதிரையின்மேல் ஏறி அமர்ந்தான். மற்ற டார்ட்டர்கள் ஜிலினைத் தூக்கி சிவப்பு தாடிக்காரனுக்குப் பின்னால் உட்கார வைத்து விட்டார்கள் அவன் கீழே விழாமல் இருப்பதற்காக அவனை டார்ட்டாரின் இடுப்புடன் சேர்த்து இறுகக் கட்டினார்கள். எல்லாம் முடிந்ததும் எல்லோரும் குதிரைகள் மீது அமர்ந்து மலையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். ஜிலின் இப்படியும் அப்படியுமாய் அசைந்தவாறு குதிரை மேல் இருந்தான். அவனுடைய தலை டார்ட்டரின் நாற்றமெடுத்த முதுகுப் பகுதியில் மோதிக் கொண்டே இருந்தது. டார்ட்டரின் சதைப் பிடிப்பான முதுகு, குறுகலான கழுத்து, நன்கு சவரம் செய்யப்பட்ட நீலவர்ணத்தில் இருந்த பிடறி - இவற்றை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது. ஜிலினின் தலை பலமாக காயம் பட்டிருந்தது. அவனுடைய கண்களுக்கு மேலே இரத்தம் காய்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. அவனால் இருந்த இடத்தை விட்டு தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. தன் மீதிருந்த இரத்தத்தைத் துடைக்கவும் முடியவில்லை. அவனுடைய கைகள் பின்னால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததால் அவன் கழுத்து எலும்புகள் பயங்கரமாக வலித்தன. அவர்கள் மலையின் மேலும் கீழுமாய் நீண்ட தூரம் சென்று கொண்டே இருந்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் ஒரு ஆற்றை அடைந்தார்கள். அந்த ஆற்றைக் கடந்தபிறகு கடைசியில் ஒரு கரடு முரடான சாலையைக் கடந்து அவர்கள் ஒரு சமவெளியில் போய் சேர்ந்தார்கள். தான் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள ஜிலின் முயன்றான். ஆனால், அவனுடைய கண்ணிமைகளைச் சுற்றிலும் இரத்தம் காய்ந்துபோய் இருந்ததால், அவனால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. மாலை நேர வெயில் சுற்றிலும் விழுந்து கொண்டிருந்தது. அவர்கள் வேறொரு ஆற்றைக் கடந்து சென்று, கற்கள் நிறைந்த ஒரு மலைப்பகுதியை அடைந்தனர். புகையின் மணம் அங்கு இருந்தது. நாய்கள் குரைத்தன. அவர்கள் ஒரு ‘அவுல்’லை (ஒரு டார்ட்டர் கிராமம்) அடைந்திருந்தார்கள். டார்ட்டர்கள் தங்களின் குதிரைகளை விட்டுக் கீழே இறங்கினார்கள். டார்ட்டர் குழந்தைகள் ஓடிவந்து ஜிலினைச் சுற்றி நின்று கொண்டார்கள். அவனைப் பார்த்ததும் அவர்களுக்கு ஏதோ உற்சாகம் போலிருக்கிறது - கற்களை அவன் மீது எறிய ஆரம்பித்தார்கள். டார்ட்டர் அங்கு கூடியிருந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் தள்ளிப் போகும்படி மிரட்டினான். ஜிலினைக் குதிரையிலிருந்து இறக்கிய அவன் தன்னுடைய ஆள் ஒருவனை அருகில் வரும்படி அழைத்தான். ஒரு ‘நோகாய்’ (டார்ட்டர் பழங்குடி இனத்தின் பெயர்) இனத்தைச் சேர்ந்த மனிதன் அதைக் கேட்டு ஓடிவந்தான். அவனுடைய கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. அவன் மேற்சட்டை அணிந்திருந்தான். ஆனால், அது பெரும்பாலும் கிழிந்திருந்ததால், அவனின் நெஞ்சுப்பகுதி முழுவதும் வெளியே தெரிந்தது. டார்ட்டர் அவனிடம் என்னவோ உத்தரவு பிறப்பித்தான். அவன் வேகமாகச் சென்று விலங்குகளை எடுத்துக்கொண்டு வந்தான். இரண்டு ஓக் மரத்தால் ஆன கட்டைகளுடன் இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு வளையத்தில் பூட்டு ஒன்று பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் ஜிலினின் கைகளைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்தார்கள். விலங்குகளை அவனுடைய காலில் மாட்டினார்கள். மரத்தால் ஆன கொட்டடிக்கு அவனை இழுத்துச் சென்ற அவர்கள் அவனை உள்ளே தள்ளி கதவை இழுத்து மூடினார்கள். ஜிலின் அங்கு குவிக்கப்பட்டிருந்த சாணத்தின் மேல் விழுந்து கிடந்தான். அவன் எந்தவித அசைவும் இல்லாமல் சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்தான். பிறகு அநத் கொட்டடியின் ஒரு மூலையில் போய் அவன் அமர்ந்தான்.
அன்று இரவு ஜிலின் சரியாகத் தூங்கவேயில்லை. எப்படியோ இரவு ஒரு முடிவுக்கு வந்தது. சுவரில் இருந்த ஒரு பெரிய ஓட்டை மூலம் தெரிந்த வெளிச்சத்தை வைத்து பொழுது விடிந்து விட்டது என்பதை அவன் தெரிந்து கொண்டான். படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்த அவன், சுவரில் இருந்த அந்த பெரிய ஓட்டை மூலம் வெளியே பார்த்தான். அந்த ஓட்டை வழியாக அவன் மலையின் கீழ்ப்பகுதியை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஒரு சாலையைப் பார்த்தான். வலது பக்கத்தில் ஒரு டார்ட்டரின் குடில் இருந்தது. அதன் அருகில் இரண்டு மரங்கள் இருந்தன. குடிலின் முன்னால் ஒரு கறுப்பு நிற நாய் படுத்திருந்தது. ஒரு ஆடும் அதன் குட்டிகளும் தங்களின் வால்களை ஆட்டியவாறு குடிலுக்கு முன்னால் இப்படியும் அப்படியுமாய் நடந்து கொண்டிருந்தன. பிறகு அவன் கண்களில் ஒரு இளம் டார்ட்டர் பெண் தெரிந்தாள். அவள் நீளமான, பிரகாசமான வண்ணத்தில் இருந்த தொள தொளவென்றிருந்த ஒரு கவுனை அணிந்திருந்தாள். கவுனுக்குக்கீழே காற்சட்டையும் காலணிகளும் கூட அவள் அணிந்திருந்தாள். அவள் தன் தலைக்கு மேலே ஒரு துணியை வைத்து அதில் நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தைச் சுமந்து கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவள் கையைப் பிடித்துக் கொண்டு நல்ல முக அழகைக் கொண்ட ஒரு டார்ட்டர் கிழவன் போய்க் கொண்டிருந்தான். கிழவன் ஒரு சட்டை மட்டுமே அணிந்திருந்தான். அவள் மிகவும் கவனமாக தன்னை சமன் செய்து கொண்டு நடந்தாள். அவள் பின்பகுதி இப்படியும் அப்படியுமாய் அசைந்தது. அவள் தலையில் வைத்திருந்த தண்ணீருடன் குடிலுக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் நேற்று ஜிலின் பார்த்த அந்த சிவப்புநிற தாடியைக் கொண்ட டார்ட்டார் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தான். அவன் பளபளப்பான ஒரு சில்க் சட்டையை அணிந்திருந்தான். அவன் உடம்பின் ஒரு பகுதியில் வெள்ளியென மின்னிக் கொண்டிருந்த கத்தியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. வெறும் கால்களில் காலணிகளை அணிந்திருந்தான். ஆட்டுத் தோலால் ஆன ஒரு கறுப்பு நிற தொப்பியை தலையில் அணிந்திருந்தான். குடிலை விட்டு வெளியேவந்த அவன் தன் உடம்பை நிமிர்த்திக்கொண்டு தன்னுடைய தாடியை ஒரு முறை தடவி விட்டுக் கொண்டான். சிறிது நேரம் அங்கு நின்றிருந்த அவன் தன்னுடைய வேலைக்காரனை அழைத்து என்னவோ உத்தரவு பிறப்பித்து விட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். தொடர்ந்து இரண்டு ஆட்கள் தங்களின் குதிரைகளுக்குத் தண்ணீர் தந்துவிட்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். குதிரையின் மூக்கு நன்கு நனைந்திருந்தன. மேலும் சில பிரகாசமான தோற்றத்தைக் கொண்ட சிறுவர்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் உடம்பில் சட்டையைத் தவிர, காற்சட்டையோ வேறு எதுவுமோ இல்லை. அவர்கள் கூட்டமாக ஜிலின் அடைத்து வைக்கப்பட்டிருந்த கொட்டடியை நோக்கி வந்து ஒரு குச்சியை எடுத்து அங்கிருந்த ஓட்டைக்குள் விட்டு நீட்டினார்கள். ஜிலின் அவர்களைப் பார்த்து உரத்த குரலில் கத்தினான். அடுத்த நிமிடம் சிறுவர்கள் பயந்துபோய் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது அவர்களின் காலணி அணியாத கால்கள் இங்கிருந்து பார்க்கும்போது பளபளவென்று தெரிந்தன.
ஜிலினுக்கு மிகவும் தாகமாக இருந்தது. அவனுடைய தொண்டை மிகவும் வறண்டுபோய் காணப்பட்டது. அவன் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்; அவர்களாகவே வந்து என்னை பார்த்தால் தான்...’ தான் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டடியை யாரோ திறப்பது போல் ஜிலின் உணர்ந்தான். அடுத்தநிமிடம் அந்த சிவப்பு நிற தாடிக்கார டார்ட்டர் உள்ளே வந்தான். அவனுடன் இன்னொரு குள்ளமான கறுப்பு மனிதனும் இருந்தான். அந்தக் கருப்பு மனிதனின் கண்கள் கருகருவென மிகவும் பிரகாசமாக இருந்தன. சிவப்பான கன்னங்களையும், சிறு தாடியையும் அவன் கொண்டிருந்தான். அவன் முகத்தில் உற்சாகம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. எப்போது பார்த்தாலும் அவன் சிரித்துக் கொண்டே இருந்தான். சிவப்பு தாடிக்காரனை விட இந்தக் கருப்பு மனிதன் மிகவும் ஆடம்பரமாக ஆடைகள் அணிந்திருந்தான். அதன் ஓரத்தில் தங்க நிறத்தில் பார்டர் கட்டப்பட்டிருந்தது. அவனுடைய இடுப்பில் ஒரு பெரிய வெள்ளிக்கத்தி மின்னிக் கொண்டிருந்தது. அவனுடைய சிவப்பு வண்ண மொராக்கோ காலணிகள் வெள்ளி முலாம் பூசப் பட்டிருந்தன. ஆட்டுத் தோலால் ஆன வெள்ளை நிற தொப்பி ஒன்றை அவன் அணிந்திருந்தான். சிவப்பு நிற தாடியைக் கொண்ட டார்ட்டர் கொட்டிலுக்குள் நுழைந்து என்னவோ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். அவனுடைய அந்த முணுமுணுப்பில் ஒருவித அலுப்பு தெரிந்தது. கதவுக்கு அருகில் இருந்த தூணில் சாய்ந்தவாறு தன்னுடைய இடுப்பில் இருந்த கத்தியை மெதுவாக அவன் தடவிப் பார்த்துக் கொண்டான். ஜிலினையே அவன் வைத்த கண் எடுக்காமல் ஒரு ஓநாயைப் போல் உற்றுப் பார்த்தான். அதே நேரத்தில் அந்த கறுப்பு மனிதன் ஸ்ப்ரிங்கின் மீது நடப்பதைப் போல மிகவும் வேகமாகவும் ஒய்யாரமாகவும் நடந்து நேராக ஜிலினின் முன்னால் வந்து நின்றான். ஜிலினின் தோளை அவன் தன் கைகளால் தட்டினான். தன்னுடைய மொழியில் அவன் மிகவும் வேகமாக என்னவோ சொன்னான். பேசும்போது அவனுடைய பற்கள் அனைத்தும் நன்கு வெளியே தெரிந்தன. கண்களை ஒருமாதிரி சிமிட்டியவாறு நாக்கை பற்களால் கடித்தபடி அவன் திரும்பத் திரும்பச் சொன்னான் : ‘‘நல்ல ரஷ்யாக்காரன்... நல்ல ரஷ்யாக்காரன்...’’ அவன் என்ன சொன்னான் என்பதை ஜிலினால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால், அவனைப் பார்த்து ஜிலின் சொன்னான் : ‘‘எனக்கு ஏதாவது குடிக்க தாங்க.’’ அதைக் கேட்டு அந்த கறுப்பு மனிதன் சிரித்தான். ‘‘நல்ல ரஷ்யாக்காரன்...’’ அவன் சொன்னான். தொடர்ந்து அவன் தன் மொழியில் என்னவோ சொல்லிக் கொண்டேயிருந்தான். ஜிலின் தன் கைகளால் சைகை செய்து, உதடுகளை அசைத்து குடிப்பதற்கு ஏதாவது வேண்டும் என்பதை அவர்கள் உணருமாறு செய்தான். கருப்பு மனிதன் ஜிலின் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு சிரித்தான். தொடர்ந்து அவன் கதவு பக்கம் திரும்பி யாரிடமோ சொன்னான் : ‘‘தினா...’’ அடுத்த நிமிடம் ஒரு இளம்பெண் அங்கே ஓடி வந்தாள். அவளுக்கு பதின்மூன்று வயது இருக்கும். மிகவும் ஒல்லியாக இருந்தாள். கறுப்பு நிற டார்ட்டரின் ஜாடை அவள் முகத்தில் தெரிந்தது. அவள் அந்த மனிதனின் மகளாக இருக்க வேண்டும். அவளின் கண்களும் கருப்பாக, பிரகாசமாக இருந்தன. அவள் முகம் மிகவும் அழகாக இருந்தது. நீல நிறத்தில் நீளமான கவுன் அணிந்திருந்த அவளின் மேற்சட்டை வெள்ளை நிறத்தில் இருந்தது. கவுன், மேற்சட்டை இரண்டின் ஓரங்களும் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அவள் காற்சட்டையும், காலணியும் அணிந்திருந்தாள். அவளின் காலணிகளின் அடிப்பகுதி மிகவும் உயரமாக இருந்தது. அவளின் கழுத்தில் ரஷ்யாவின் வெள்ளிக் காசுகளால் ஆன ஒரு நெக்லஸ் இருந்தது. தலையில் துணி எதுவும் இல்லை. அவளின் கறுப்புநிறக் கூந்தல் ஒரு ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது. தலைமுடியை முலாம் பூசப்பட்ட குப்பியும், வெள்ளிக் காசுகளும் மேலும் அழகுபடுத்தின. அவளுடைய தந்தை என்னவோ உத்தரவு பிறப்பிக்க, அவள் வேகமாக ஓடிச்சென்று ஒரு பாத்திரத்துடன் திரும்பிவந்தாள். தான் கொண்டு வந்த நீரை அவள் ஜிலினிடம் தந்துவிட்டு சற்றுத் தள்ளி தன் தலையை முழங்காலில் படுமாறு வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். ஜிலின் தண்ணீர் குடிப்பதை ஏதோ பயங்கரமான ஒரு மிருகத்தைப் பார்ப்பதைப்போல அவள் வைத்த கண் எடுக்காமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பாத்திரத்திலிருந்த நீர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்துவிட்டு வெறும் பாத்திரத்தைத் தன்னிடம் திருப்பித்தந்த ஜிலினைப் பார்த்துவிட்டு, ஆச்சர்யத்தின் உச்சிக்குப் போன அந்த இளம்பெண் பின்னோக்கி ஒரு ஆட்டைப் போல துள்ளிக் குதித்தவாறு போனாள். அவளின் அந்த செயலைப் பார்த்து அவளுடைய தந்தை விழுந்து விழுந்து சிரித்தான். அவன் அவளிடம் என்னவோ சொல்ல, அவள் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்றாள். போகும்போது தண்ணீர் கொண்டு வந்த பாத்திரத்தை அவள் கையோடு எடுத்துச் சென்றாள். சிறிது நேரத்தில் அவள் ஒரு தட்டில் ஒரு முழு ரொட்டியுடன் திரும்பி வந்தாள். மீண்டும் முன்பு உட்கார்ந்திருந்த அதே இடத்தில் அவள் அமர்ந்தாள். தன்னுடைய ஒளிமயமான கண்களால் ஜிலினையே அவள் வெறித்துப் பார்த்தாள். டார்ட்டர்கள் வெளியே சென்று கதவை அடைத்தார்கள். சிறிது நேரம் சென்றதும் ஒரு நோகய் அங்கு வந்து சொன்னான் : ‘‘மாஸ்டர் வரச் சொல்றாரு...’’ அவனுக்கும் ரஷ்ய மொழி தெரியாது. தன்னை அவன் வெளியே வரச்சொல்கிறான் என்பதை மட்டும் ஜிலினால் புரிந்து கொள்ள முடிந்தது. நோகய்யைப் பின்பற்றி வெளியே வந்தான் ஜிலின். அவனுடைய கால்களில் விலங்குகள் கட்டப்பட்டிருந்ததால், அவனால் மெதுவாகத் தான் நடக்க முடிந்தது. கொட்டடியை விட்டு வெளியே வந்த அவன் பத்து வீடுகள் இருக்கக்கூடிய ஒரு டார்ட்டர் கிராமத்தைப் பார்த்தான். அங்கே ஒரு டார்ட்டர் மசூதியும் ஒரு சிறிய ஸ்தூபியும் இருந்தது. மூன்று குதிரைகள் ஒரு வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தன. சிறுவர்கள் அவற்றின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கருப்பு நிற டார்ட்டர் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து, ஜிலினிடம் சைகை காட்டி தன்னைப் பின்பற்றி வரும்படி சொன்னான். தொடர்ந்து அவன் சிரித்துக் கொண்டே தன்னுடைய மொழியில் என்னவோ சொன்னான். பின்னர், அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான். ஜிலினும் அந்த வீட்டிற்குள் சென்றான். அநத் அறை மிகவும் அழகாக இருந்தது. சுவர்கள் களிமண்ணால் பூசப்பட்டிருந்தன. முன்பக்க சுவருக்கு அருகில் பட்டு மெத்தைகள் போடப்பட்டிருந்தன. பக்கவாட்டு சுவர்களில் விலை உயர்ந்த விரிப்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. சுவரின் மீது துப்பாக்கிகள், பிஸ்டல்கள், வாட்கள் ஆகியவையும் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது.
ஒரு சுவரையொட்டி தரையின் மீது அடுப்பொன்று இருந்தது. தரை இப்போதுதான் கழுவிவிடப்பட்டதைப் போல் மிகவும் சுத்தமாக இருந்தது. மூலையில் இருந்த அகலமான ஒரு இடத்தில் துணிகள் விரிக்கப்பட்டு, அவற்றுக்கு மேல் ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்த ஐந்து ஆசனங்களிலும் ஐந்து டார்ட்டர்கள் அமர்ந்திருந்தனர். கறுப்பு நிற டார்ட்டர்களும் இருந்தார்கள். வீட்டிற்குள் அணியக்கூடிய காலணிகளை அவர்கள் அணிந்தார்கள். ஒவ்வொருவரின் முதுகுக்குப் பின்னாலும் மெத்தை இருந்தது. ‘புஸா’ என்றழைக்கப்படும் டார்ட்டர்கள் அருந்தும் பீர் அதற்குப் பக்கத்தில் இருந்தது. அவர்கள் கேக், வெண்ணெய் இரண்டையும் தங்கள் கைகளால் எடுத்துச் சாப்பிட்டார்கள். கருப்பு மனிதன் வேகமாக எழுந்து ஜிலினை ஒரு பக்கம் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பித்தான். விரிப்பில் அல்லாமல் வெறும் தரையில் அவளைக் கொண்டு வந்து உட்காரச் செய்யுமாறு சொன்ன அவன் தான் அமர்ந்திருந்த இடத்தில் மீண்டும் உட்கார்ந்தான். தன்னுடன் அமர்ந்திருந்த விருந்தாளிகளுக்கு கேக்குகளையும் ‘புஸா’வையும் மேலும் அவன் அளித்தான். வேலைக்காரன் ஜிலினைக் கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைத்தான். தொடர்ந்து அவன் தன் கால்களில் இருந்த காலணிகளைக் கழற்றி ஏற்கனவே கதவுக்கு அருகில் இருந்த மற்ற காலணிகளுடன் அவற்றை இருக்குமாறு செய்துவிட்டு தன்னுடைய எஜமானர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி கீழே அமர்ந்து அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டு உதடுகளை நாவால் அவன் நக்கிக் கொண்டு இருந்தான். டார்ட்டர்கள் தங்கள் விருப்பப்படி திருப்தி உண்டாகும் வரை சாப்பிட்டார்கள். அந்த இளம்பெண்ணைப் போலவே ஆடையணிந்திருந்த ஒரு பெண் நீளமான கவுனுடனும் காற்சட்டையுடனும் தலையில் கட்டிய கைக்குட்டையுடனும் அப்போது அங்கு வந்து மீதமிருந்ததை எடுத்துக் கொண்டு போனாள். அடுத்த நிமிடம் கைகழுவுவதற்காக ஒரு பாத்திரத்தையும், நீர் இருந்த வேறொரு பாத்திரத்தையும் கொண்டு வந்து வைத்தாள். அதில் டார்ட்டர்கள் தங்களின் கைகளைக் கழுவினார்கள். கைகளைக் குவித்தவாறு முழங்கால் போட்டு அமர்ந்து நான்கு திசைகளிலும் கேட்கும்படி உரத்த குரலில் தங்களின் பிரார்த்தனைகளைச் சொன்னார்கள். சிறிது நேரம் அவர்கள் பேசி முடித்தபிறகு, அங்கிருந்த விருந்தாளிகளில் ஒருவன் ஜிலின் பக்கம் திரும்பி, ரஷ்ய மொழியில் பேச ஆரம்பித்தான். ‘‘உன்னைப் பிடித்தவர் காஜி முகம்மது.’’ - அவன் சிவப்பு நிற தாடிக்காரனைச் சுட்டிக் காட்டினான். ‘‘காஜி முகம்மது உன்னைப் பிடிச்சு அப்துல் முராத்கிட்ட கொடுத்திட்டார்’’ என்று சொன்ன அவன் கருப்புநிற மனிதன் பக்கம் தன் விரலை நீட்டினான். தொடர்ந்து அவன் சொன்னான் : ‘‘அப்துல் முராத்துதான் இப்போ உன்னோட எஜமான்.’’ ஜிலின் அதைக்கேட்டு அமைதியாக இருந்தான். அப்துல் முராத் இப்போது பேசத் தொடங்கினான். சிரித்தான். ஜிலினைச் சுட்டிக் காட்டியவாறு திரும்பத் திரும்ப சொன்னான் : ‘‘ரஷ்யச் சிப்பாய் நல்ல ரஷ்யன்.’’ அருகில் உட்கார்ந்திருந்த மனிதன் இடையில் புகுந்து சொன்னான் : ‘‘உன்னை உடனடியா வீட்டுக்கு கடிதம் எழுதும்படி இவர் சொல்றாரு. வீட்டில இருந்து பணம் அனுப்பச் சொல்லு. பணம் அனுப்பச் சொல்லு. பணம் இங்கே வந்து சேர்ந்துருச்சுன்னா, உன்னை இவரு விடுதலை பண்ணிடுவாரு.’’ ஜிலின் ஒரு நிமிடம் என்னவோ யோசித்தான். பிறகு, அவன் கேட்டான் : ‘‘எவ்வளவு பணம் வேணும்னு கேக்கறாரு ?’’ டாட்டர்கள் அவர்களுக்குள் சில நிமிடங்கள் என்னென்னவோ பேசிக் கொண்டார்கள். பேசி முடிந்ததும் அந்த விருந்தினராக வந்த மனிதன் சொன்னான் : ‘‘மூவாயிரம் ரூபிள்கள் கேக்குறாரு.’’ ‘‘நிச்சயமா முடியாது... என்னால அவ்வளவு பணம் தரமுடியாது’’ ஜிலின் சொன்னான். ‘‘அடுத்த நிமிடம் அப்துல் குதித்துக் கொண்டு தன்னுடைய கைகளை இப்படியும் அப்படியுமாய் ஆட்டினான். ஜிலின் தன்னைப் புரிந்து கொள்வான் என்பதாக அவன் மனதில் நினைத்துக் கொண்டான். அந்த விருந்தினராக வந்த மனிதன் சொன்னான் : ‘‘சரி... நீ எவ்வளவு பணம் தருவே ?’’ ஜிலின் சிறிது நேர யோசனைக்குப் பிறகு சொன்னான் : ‘‘ஐநூறு ரூபிள்கள் ! அடுத்த நிமிடம் டார்ட்டர்கள் தங்களுக்குள் வேகமாக என்னவோ விவாதித்தார்கள். அப்துல் சிவப்பு நிற தாடியைக் கொண்ட மனிதனைப் பார்த்து உரத்த குரலில் என்னவோ கத்தினான். அவன் அப்படி வாயைத்திறந்து கத்தியபோது, அவனுடைய வாயிலிருந்து எச்சில் வெளியே தெறித்தது. சிவப்பு நிற தாடியைக் கொண்ட மனிதன் கண்களை ஒருமாதிரி உருட்டிய படி நாக்கை மடித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவர்கள் சிறிது நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அந்த விருந்தினராக வந்திருந்த மனிதன் சொன்னான் : ‘‘ஐநூறு ரூபிள்கள் ரொம்பவும் குறைவான ஒரு தொகைன்னு மாஸ்டர் நினைக்கிறாரு. இவர் தன் கையிலிருந்து உனக்காக இருநூறு ரூபிள்கள் தந்திருக்காரு. காஜி முகம்மது இவருக்கும் பணம் தர வேண்டியிருக்கு. அந்தப் பணத்துக்காகத்தான் அவர் உன்னையே பிடிச்சாரு. அவர் எவ்வளவு தரணும் தெரியுமா? மூவாயிரம் ரூபிள்கள்! அதுக்குக் குறைவா முடியவே முடியாதுன்றாங்க. நீ அந்தப் பணத்தைக் கேட்டு வீட்டுக்குக் கடிதம் எழுதலைன்னா, உன்னை இங்கே இருக்குற ஒரு பாழுங்குழிக்குள்ள தள்ளி சாட்டையை வச்சு தொடர்ந்து உன்னை அடிக்குறதுன்னு இவங்க முடிவு பண்ணியிருக்காங்க.’’ ‘‘அப்படியா?’’- மனதிற்குள் நினைத்தான் ஜிலின். ‘இவங்களைப் பார்த்து பயப்படறது மாதிரி மோசமான விஷயம் உலகத்திலேயே இருக்க முடியாது.’ அவன் எழுந்து நின்றவாறு சொன்னான்: ‘‘என்னை இது மாதிரி இந்த நாய் மிரட்டினா, நான் வீட்டுக்குக் கடிதமே எழுத மாட்டேன்னு இந்த ஆளுகிட்ட சொல்லு. நான் வீட்டுக்குக் கடிதம் எழுதலைன்னா, இவனுக்கு ஒண்ணுமே கிடைக்காது. நாய்களே, நான் உங்களுக்காக கொஞ்சம்கூட பயப்படுறதா இல்ல... இப்போ மட்டுமல்ல; எப்பவும் நான் பயப்பட மாட்டேன்.’’ அந்த மனிதன் ஜிலின் சொன்னதை அவர்களிடம் மொழி பெயர்த்து சொன்னான். தொடர்ந்து அவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக்கொண்டார்கள். அவர்கள் சிறிது நேரம் தீவிர சிந்தனையில் இருந்தார்கள். பிறகு அந்தக் கருப்பு நிற மனிதன் எழுந்து ஜிலினின் அருகில் வந்து சொன்னான்: ‘‘உண்மையிலேயே நீ பயங்கர தைரியசாலிதான்!’’ அவன் தொடர்ந்து சிரித்துக்கொண்டே மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்த மனிதனைப் பார்த்து கூறினான்: ‘‘ஆயிரம் ரூபிள்கள் தரணும்னு சொல்லு.’’ அதைக்கேட்டு ஜிலின் சொன்னான்: ‘‘ஐநூறு ரூபிள்களுக்கு மேலே நான் தரவே மாட்டேன். என்னை நீங்க கொல்றதா இருந்தா, உங்களுக்கு ஓண்ணுமே கிடைக்காது.’’
டார்ட்டர்கள் தங்களுக்குள் என்னவோ விவாதித்தார்கள். தொடர்ந்து பணியாளை அவர்கள் என்னவோ கொண்டு வரும்படி வெளியே அனுப்பினார்கள். ஜிலினையும் கதவையும் மாறி மாறி பார்த்தவாறு அவர்கள் அமர்ந்திருந்தார்கள். வெளியே சென்ற வேலைக்காரன் தடிமனான கால்களில், காலணிகள் எதுவும் இல்லாத, முகமெல்லாம் புள்ளிகள் விழுந்திருந்த ஒரு மனிதனுடன் திரும்பி வந்தான். அவனுடைய கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது. ஜிலின் அங்கு வந்து நின்ற அந்த மனினை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தான். அது வேறு யாருமல்ல காஸ்ட்டிலின்தான். அவனும் தன்னை மாதிரியே பிடிபட்டிருக்கிறான் என்பதை ஜிலின் புரிந்து கொண்டான். அவர்கள் அருகருகே அமர்ந்து, என்ன நடந்தது என்பதை தங்களுக்கிடையே பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டபோது டார்ட்டர்கள் அவர்களையே அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தார்கள். ஜிலின் தனக்கு என்ன நடந்தது என்பதை விளக்கி காஸ்ட்டிலினிடம் சொன்னான். தன்னுடைய குதிரை எப்படி பயந்துபோய் நின்றுவிட்டது என்பதையும், தன்னுடைய துப்பாக்கி எப்படி சுடுவதில் தோல்வியடைந்துவிட்டது என்பதையும் இங்கு அமர்ந்திருக்கும் அப்துல் எப்படி தன்னை விரட்டி வந்து கடைசியில் சிறைப்பிடித்தான் என்பதையும் ஜிலினிடம் காஸ்ட்டிலின் சொன்னான். அப்துல் எழுந்து நின்று காஸ்ட்லினைச் சுட்டிக் காட்டியவாறு என்னவோ சொன்னான். இதுவரை அங்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த விருந்தாளி அவர்கள் இருவருமே தற்போது ஒரே எஜமானுக்குச் சொந்தமானவர்கள்தாம் என்றும், யார் முதலில் பணத்தைக் கட்டுகிறார்களோ, அவர்கள் முதலில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறினான். ‘‘அதே நேரத்தில்... ஒரு விஷயத்தைப் பார்த்தியா?’’ அவன் ஜிலினைப் பார்த்து சொன்னான்: ‘‘நீ பயங்கரமா கோபப்படுறே. ஆனால் உன்னோட நண்பன் எவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கான் பாரு. அவன் ஏற்கனவே வீட்டுக்குக் கடிதம் எழுதிட்டான். அவன் ரொம்பவும் சீக்கிரமே அய்யாயிரம் ரூபிள்களை அனுப்பி வெச்சுடுவாங்க. அதனாலதான் அவனுக்கு நல்ல சாப்பாடு போட்டு, நல்ல முறையில் இங்க கவனிச்சிக்கிட்டு இருக்கோம். அதைக்கேட்டு ஜிலின் சொன்னான்: ‘‘என் நண்பன் தன் விருப்பப்படி எப்படி வேணும்னாலும் நடக்கலாம். அவன் நல்ல வசதியானவன். ஆனா, நான் அப்படி இல்ல. நான்தான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லிட்டேனே, நீங்க விருப்பப்பட்டா என்னைக் கொன்னுக்கோங்க. ஆனா, அதுனால உங்களுக்குக் கிடைக்கப் போறது ஒண்ணுமில்ல. நான் ஐந்நூறு ரூபிள்களுக்கு மேல் கேட்டு நிச்சயம் கடிதம் எழுதப்போறது இல்ல...’’ எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். திடீரென்று என்ன நினைத்தானோ, அப்துல் எழுந்து சிறு பெட்டியொன்றை எடுத்துக் கொண்டு வந்தான். அதிலிருந்து ஒரு பேனா, மை, ஒரு சிறு தாள் ஆகியவற்றை எடுத்து ஜிலினின் கையில் அவன் தந்தான். ஜிலினின் தோளைத் தன் கையால் தட்டிய அவன் கையால் சைகை செய்து அந்தத் தாளில் எழுதும்படி சொன்னான். ஐந்நூறு ரூபிள்கள் வாங்கிக் கொள்ள அவன் சம்மதித்து விட்டான். ‘‘கொஞ்சம் நில்லு...’’ - ஜிலின் அந்த மொழி பெயர்க்கும் மனிதனிடம் சொன்னான்: ‘‘ஒரு விஷயத்தை அந்த ஆளுகிட்ட தெளிவா சொல்லிடு. எங்களுக்கு ஒழுங்கா சாப்பாடு போடணும். எங்களுக்கு நல்ல உடைகளைத் தரணும். காலணிகள் தரணும். நாங்க ரெண்டு பேரும் எப்பவும் சேர்ந்து இருக்க அனுமதிக்கணும். அப்படி சேர்ந்து இருந்தா, அது நாங்க சந்தோஷப்படுற ஒரு விஷயமா இருக்கும். எங்க கால்கள்ல போடப்பட்டிருக்கிற விலங்குகளை முழுமையா நீக்கணும்’’- ஜிலின் தன்னுடைய எஜமானனைப் பார்த்து சிரித்தான். அந்த எஜமானனும் பதிலுக்கு சிரித்தான். அவன் சொன்னான்: ‘‘நான் இவங்களுக்கு நல்ல ஆடைகள் தர்றேன். நல்ல காலணிகள் தர்றேன். இளவரசர்களைப் பார்த்துக்குற மாதிரி அருமையான உணவு வகைகளை இவங்களுக்குத் தர ஏற்பாடு பண்றேன். இவங்க ரெண்டு பேரும் பிரியப்பட்டா, சேர்ந்தே இவங்க கொட்டடியில் இருக்கட்டும். ஆனா ஒரு விஷயம்... இவங்க கால்கள்ல போடப்பட்டிருக்கிற விலங்குகளைக் கழற்ற நான் நிச்சயம் சம்மதிக்க மாட்டேன். அதை நீக்கிட்டா, கட்டாயம் இவங்க ஓடிடுவாங்க. ஆனா, இரவு நேரத்துல மட்டும் நீக்குறதுக்கு நான் சம்மதிக்கிறேன்’’ இதைச் சொல்லிய அவன் அடுத்த நிமிடம் குதித்தவாறு ஜிலினின் தோளைத் தன் கையால் தட்டிக் கொண்டு வியப்பு மேலோங்கச் சொன்னான்: ‘‘நீ ரொம்பவும் நல்லவன்... நானும்தான்.’’ ஜிலின் கடிதத்தை எழுதினான். ஆனால், தவறான ஒரு முகவரியை வேண்டுமென்றே எழுதினான். அப்படியென்றால்தானே, அந்தக்கடிதம் எந்தவொரு இடத்திலும் போய் சேரவே சேராது! கடிதத்தை எழுதும்போது அவன் தனக்குள் மெதுவான குரலில் கூறிக்கொண்டான்: ‘‘நான் எப்படியும் இங்கேர்ந்து தப்பிச்சுடுவேன்.’’ ஜிலின், காஸ்ட்டிலின் இருவரும் மீண்டும் கொட்டடிக்குள் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களுக்கு சோளக் கஞ்சி சாப்பிட தரப்பட்டது. ஒரு பாத்திரத்தில் குடிப்பதற்கு நீர் தரப்பட்டது. கொஞ்சம் ரொட்டி, இரண்டு பழைய ஆடைகள், ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட சில பழைய காலணிகள் ஆகியவற்றையும் அவர்களிடம் கொண்டு வந்து தந்தார்கள். அவை எல்லாமே இறந்துபோன ரஷ்ய வீரர்களின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இரவு நேரங்களில் அவர்களின் கால்களில் கட்டப்பட்டிருந்த விலங்குகள் நீக்கப்பட்டு, அவர்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டார்கள்.
ஜிலினும் அவனுடைய நண்பனும் இந்த வகையில் ஒரு மாதம் பிழைப்பை ஓட்டினார்கள். அவர்களின் எஜமான் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டே சொல்லுவான்: ‘‘நீ... ஜவான்... ரொம்பவும் நல்லவன். நான்... அப்துல்... நான்கூட நல்லவன்தான்.’’ ஆனால் அவர்களுக்கு சரியான முறையில் உணவு தரவில்லை. சாதாரணமாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள், இல்லாவிட்டால் கேக்குகள் அவர்களுக்குத் தரப்பட்டன. சில நேரங்களில் அவை ஒழுங்காக வெந்திருக்கக்கூட செய்யாது. காஸ்ட்டிலின் தன்னுடைய வீட்டிற்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதினான். எப்போது பார்த்தாலும் ஏதாவது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப்போய், வீட்டிலிருந்து வரும் பணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அவன் இருப்பான். நாட்கணக்கில் கொட்டடியில் தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருப்பான். எப்போது வீட்டிலிருந்து தகவல் வரும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு நாட்களை ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொண்டே இருப்பான். தன்னுடைய கடிதம் எந்த இடத்திற்கும் போய் சேராது என்ற உண்மைதான் ஜிலினுக்கு நன்றாகத் தெரியுமே! அதனால் அவன் இரண்டாவது கடிதம் எதையும் எழுதவில்லை. அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்: எனக்கு பணம் அனுப்பி வைப்பதற்கு என் அம்மா எங்கே போவாங்க? நான் அனுப்பி வைக்கிற பணத்தை வச்சுத்தான் அவங்களே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க! ஐந்நூறு ரூபிள்கள் எனக்காக அனுப்பி வைக்க அவங்க கஷ்டப்பட்டாங்கன்னா, அதோட அவங்க அவ்வளவுதான்... கடவுள் அருளால, நான் இங்கேயிருந்து எப்படியும் தப்பிச்சே ஆகணும்.
தொடர்ந்து தான் எப்படி அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடுவது என்பதைப் பற்றிய சிந்தனையிலேயே அவன் சதா நேரமும் இருந்தான். அவன் அங்கு வாயால் விசிலடித்தவாறு இங்குமங்குமாய் நடந்து கொண்டிருப்பான். சில நேரங்களில் கீழே உட்கார்ந்து ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பான். களிமண்ணால் விதவிதமான பொம்மைகளைச் செய்வான். சில நேரங்களில் பிரம்பைவைத்து கூடைகள் பின்னுவான். ஜிலின் இந்த மாதிரியான விஷயங்களைக் கையால் செய்வதில் மிகவும் திறமையுள்ளவனாக இருந்தான். ஒருமுறை அவன் பொம்மையைப் படைத்து அதற்கு ஒரு டார்ட்டர் கவுனை அணிவித்தான். முழுமையாக பொம்மை முடிந்ததும், அதை கொட்டடியின் மேற்பகுதியில் வைத்தான். டார்ட்டர் பெண்கள் நீர் எடுப்பதற்காக வரும்போது, மாஸ்டரின் மகள் தினா அந்த பொம்மையைப் பார்த்து தன்னுடன் இருந்த மற்ற பெண்களை அழைத்தாள். அடுத்த நிமிடம் அவர்கள் தங்கள் கைகளில் இருந்த பாத்திரங்களைத் தரையில் வைத்துவிட்டு அந்த பொம்மையையே வைத்த கண் எடுக்காது பார்த்து சிரித்தார்கள். ஜிலின் அந்த பொம்மையை எடுத்து அந்தப் பெண்கள் கையில் தந்தான். அவர்கள் சிரித்தார்கள். ஆனால், அந்த பொம்மையை அவர்கள் அவனிடமிருந்து வாங்கவில்லை. அவன் பொம்மையைத் தரையில் வைத்துவிட்டு கொட்டடிக்குள் நுழைந்தான். அங்கிருந்தவாறு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தினா பொம்மையின் அருகில் ஓடிவந்தாள். அதையே உற்றுப் பார்த்தாள். பின் என்ன நினைத்தாளோ, சுற்றிலும் ஒருமுறை கண்களை ஓட்டிய அவள் அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு படுவேகமாக அங்கிருந்து ஓடினாள். மறுநாள் அதிகாலை நேரத்தில் ஜிலின் வெளியே பார்த்தான். தினா வீட்டை விட்டு வெளியே வந்து அங்கிருந்த திண்ணையில் கையில் அந்த பொம்மையுடன் அமர்ந்திருந்தாள். அதற்கு அவள் நன்கு ஆடைகள் அணிவித்திருந்தாள். சிவப்பு நிறத்தில் ஒரு துணியை அந்த பொம்மைக்கு சுற்றிவிட்டு, அந்தக் கையில் வைத்துக்கொண்டு சிறு குழந்தையைத் தாலாட்டுவது மாதிரி அவள் தாலாட்டினாள். டார்ட்டர்கள் பாடும் ஒரு தாலாட்டுப் பாடலையும் அவள் பாடினாள். ஒரு வயதான பெண் வெளியே வந்து அவளைத் திட்டினாள். அவள் கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கி அந்தப் பெண் துண்டு துண்டாக உடைத்தெறிந்தாள். தினாவைப் போய் ஒழுங்காக வேலையைச் செய்யும்படி அவள் சத்தமிட்டு அனுப்பினாள். ஆனால், ஜிலின் முதலில் செய்ததைவிட நல்ல ஒரு பொம்மையைத் திரும்பவும் செய்து, அதை தினாவின் கையில் கொடுத்தான். ஒருமுறை தினா சிறு பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து தரையில் வைத்தாள். கீழே அமர்ந்து ஜிலினையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு என்ன நினைத்தாளோ சிரித்தவாறு அந்தப் பாத்திரத்தையே அவள் அவனிடம் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள். ‘அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?’ என்று மனதிற்குள் நினைத்தான் ஜிலின். அந்தப் பாத்திரத்தில் தண்ணீர்தான் இருக்கிறது என்று நினைத்தவாறு அதைக் கையில் எடுத்தான் அவன். ஆனால் தண்ணீருக்குப் பதிலாக அதில் பால் இருந்தது. அவன் பாலைக் குடித்தவாறு சொன்னான்: ‘‘ரொம்ப நல்லா இருக்கு!’’ அதைக் கேட்டு தினா அடைந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! ‘‘நல்லது, ஜவான்... நல்லது...’ அவள் சொன்னாள். மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்த அவள் தன்னுடைய கைகளை உணர்ச்சிப் பெருக்கில் தட்டினாள். தொடர்ந்து பாத்திரத்தை ஜிலினிடமிருந்து பிடுங்கிய அவள் வேகமாக அங்கிருந்து ஓடினாள். அதற்குப் பிறகு அவள் ஒவ்வொரு நாளும் ஜிலினுக்கு பால் கொண்டு வந்து தருவதை வாடிக்கையான ஒன்றாக்கிக் கொண்டாள். டார்ட்டர்கள் ஆட்டின் பாலிலிருந்து ஒரு வகையான வெண்ணெயைத் தயார் செய்து அதைத் தங்களின் வீடுகளின் கூரைமேல் வைத்திருப்பார்கள். சில நாட்களில் தினா அந்த வெண்ணெயில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வந்து ஜிலினிடம் தருவாள். ஒருமுறை அப்துல் ஆடொன்றைக் கொன்றபோது, அதன் மாமிசத்துண்டு ஒன்றைத் தன்னுடைய ஆடையில் மறைத்து வைத்துக்கொண்டு வந்து ஜிலினிடம் அவள் தந்தாள். எதைக் கொண்டு வந்தாலும் அவனிடம் வீசி எறிந்துவிட்டு, அடுத்த கணமே அவள் சிட்டெனப் பறந்து விடுவாள். ஒருநாள் காற்று மிகவும் வீசிக் கொண்டிருந்தது. மழை தொடர்ந்து ஒரு மணிநேரமாக விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஆற்றில் ஏழடி உயரத்துக்கு நீர் போய்க்கொண்டிருந்தது. வெள்ளம் பயங்கரமாகப் பெருக்கெடுத்து, பெரிய பெரிய பாறைகளையெல்லாம் உருட்டியபடி சென்று கொண்டிருந்தது. மலைகளில் கேட்ட இரைச்சல் சிறிதும் குறைவதாயில்லை. சூறாவளிக் காற்று ஓய்ந்தவுடன், கிராமத்துத் தெருக்களில் நீர் ஆங்காங்கே ஓடை என ஓடிக் கொண்டிருந்தது. ஜிலின் தன்னுடைய மாஸ்டரிடம் ஒரு கத்தி வேண்டுமென்று கேட்டான். கிடைத்த கத்தியைக் கொண்டு ஒரு வட்ட தகரம் ஒன்றை உண்டாக்கினான். பிறகு தொடர்ந்து சில வேலைகள் செய்து அதைச் சக்கரமாக அவன் மாற்றினான். சக்கரத்தின் இரு பக்கங்களிலும் ஒவ்வொரு பொம்மையைச் செய்து பொருத்தினான். சிறுமிகள் அவனிடம் சில துண்டுத் துணிகளைக் கொண்டு வந்து தந்தார்கள். அவற்றை வைத்து அவன் பொம்மைகளை அழகுப்படுத்தினான். ஒரு பொம்மை விவசாயம் செய்யும் ஆணாகவும், இன்னொரு பொம்மை விவசாயம் செய்யும் பெண்ணாகவும் இருந்தது. அவன் அந்த சக்கரத்தை நீர் வந்து கொண்டிருந்த இடத்தில் வைத்தான். நீரின் போக்கின் அந்தச் சக்கரம் உருள ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து அந்த இரண்டு பொம்மைகளும் நடனமாடின. அதைப் பார்ப்பதற்கு முழு கிராமமும் அங்கு திரண்டு விட்டது. சிறுவர்கள் சிறுமிகள், டார்ட்டர் ஆண்கள், பெண்கள் என்று ஒருவர் விடாமல் எல்லோரும் அங்கு வந்து நின்று பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றார்கள். வியப்பு மேலோங்க அவர்கள் ஒவ்வொருவரும் சொன்னார்கள்: ‘‘ஆச்சரியமான ரஷ்யாக்காரன்! ஆச்சரியமான ஜவான்!’’ அப்துல்லிடம் ஒரு உடைந்துபோன ரஷ்ய நாட்டு கடிகாரம் இருந்தது. அவன் ஜிலினை அழைத்து அந்தக் கடிகாரத்தைக் காண்பித்தான். அதைப் பார்த்து ஜிலின் சொன்னான்: அந்தக் கடிகாரத்தை என்கிட்ட கொடு. நான் சரி பண்ணித் தர்றேன்.’’ அவன் அந்தக் கடிகாரத்தை ஒரு கத்தியால் தனித்தனி பாகமாகப் பிரித்தான். பின்னர், சில வேலைகள் செய்து அவற்றை மீண்டும் பொருத்தினான். இப்போது கடிகாரம் ஒழுங்காக ஓடியது. அவ்வளவுதான் - அப்துல் மிகவும் உற்சாகமாகி விட்டான். அவனுக்கு உண்டான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் அவன் தன்னிடமிருந்த ஒரு பழைய கம்பளியை ஜிலினுக்குப் பரிசாகத் தந்தான். அந்தக் கம்பளியில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. எனினும், ஜிலின் அதை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டான். இரவு நேரத்தின் குளிருக்கு எப்படிப் பார்த்தாலும் அது தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நன்கு தெரிந்திருந்தான் ஜிலின்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜிலினின் புகழ் எல்லா இடங்களுக்கும் பரவியது. பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த டார்ட்டர்கள் அவனைத் தேடி வர ஆரம்பித்தார்கள். சேதமடைந்து போயிருக்கும் துப்பாக்கியையோ, பிஸ்டலையோ அவனிடம் அவர்கள் கொண்டு வருவார்கள். அதைச் சரி பண்ணித் தரும்படி அவர்கள் கூறுவார்கள். அவனுடைய மாஸ்டர் அவனுக்குச் சில கருவிகளைத் தந்திருந்தார். ஒருநாள் ஒரு டார்ட்டர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டான். அவர்கள் ஜிலினைத் தேடி வந்து சொன்னார்கள். ‘‘இவனை நீதான் காப்பாற்றணும்.’’ ஜிலினுக்கு நோயைக் குணப்படுத்தும் விஷயமெல்லாம் சிறிதும் தெரியாது. இருந்தாலும் அந்த நோயாளியைப் பார்த்து ஏதாவது செய்வது சரியானது என்ற முடிவுக்கு அவன் வந்தான். அவன் தன் மனதிற்குள் கூறிக்கொண்டான்: ‘ஒருவேளை இவன் உடல்நிலை நல்லா ஆனாலும் ஆகலாம்...’ அவன் தன் கொட்டடிக்குள் வந்தான். சிறிது மணலை தண்ணீரில் போட்டு கலந்தான். டார்ட்டர்கள் பலரும் அங்கு குழுமியிருக்க, அவன் சில வார்த்தைகளை வாயால் முணுமுணுத்தான். பிறகு அந்த நீரை நோயால் பாதிக்கப்பட்ட மனிதனிடம் கொடுத்து குடிக்கச் சொன்னான். அவனுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்த நோயாளி பிழைத்துக் கொண்டான். காலப்போக்கில் டார்ட்டர்களின் மொழியைச் சற்று தெரிந்து கொண்டான் ஜிலின். சில டார்ட்டர்கள் அவனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். அவன் தேவைப்பபடும்போது அவர்கள் அழைப்பார்கள். ‘‘ஜவான்! ஜவான்!’’ அதே நேரத்தில் சிலர் அவனை தூரத்தில் நின்றவாறு ஒரு கொடிய மிருகத்தைப் பார்ப்பது மாதிரி பார்க்காமலும் இல்லை. சிவப்பு நிற தாடியைக் கொண்ட டார்ட்டருக்கு ஜிலினைக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவனை எப்போது பார்த்தாலும் ஒன்று அவன் தலையைக் குனிந்து கொள்வான். இல்லாவிட்டால் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வான். இல்லாவிட்டால் அவனை மனதிற்குள் கடுமையாக ஏதாவது நினைத்துக் கொண்டு பார்ப்பான். இன்னொரு வயதான மனிதனும் அங்கு இருந்தான். அவன் அந்த ‘அவுல்’ என்று சொல்லப்படும் கிராமத்தில் இல்லை. மாறாக, மலையின் அடிவாரத்தில் இருந்து அவன் அங்கு வருவான். மசூதியை நோக்கிப் போகும்போது மட்டுமே ஒருமுறை ஜிலின் அந்த வயதான மனிதனைப் பார்த்திருக்கிறான். அவன் ஒரு குள்ளமான மனிதன். அவனுடைய தொப்பியைச் சுற்றிலும் ஒரு வெள்ளைத் துணியை அவன் சுற்றி விட்டிருந்தான். அவனுடைய தாடி, மீசை எல்லாமே சீராக கத்தரித்து விடப்பட்டிருந்தன. அவை பனியைப்போல நன்கு வெளுத்துக் காணப்பட்டன. அவனுடைய முகத்தில் நிறைய சுருக்கங்கள் விழுந்திருந்தன. முகம் செங்கல்லைப் போல் சிவந்திருந்தன. ஆந்தையின் மூக்கைப்போல் அவனுடைய மூக்கு மிகவும் வளைந்து காணப்பட்டது. அவனுடைய சாம்பல் நிறக் கண்களில் ஒருவித குரூரம் தெரிந்தது. அவன் வாயில் பற்கள் இல்லை. அதற்குப் பதிலாக இரண்டு பக்கங்களிலும் வெளியே துருத்திக் கொண்டிருந்த இரண்டு தந்தங்கள் இருந்தன. அவன் தலையில் துணியைக் கட்டிக்கொண்டு குதிரை மேல் கம்பீரமாக அமர்ந்து கொண்டு ஜிலினை வெறித்துப் பார்த்தவாறு ஒரு ஓநாயைப் போல கடந்து போவான். அவன் ஜிலினை பார்க்கும் போது, அவன் முகத்தில் கோபம் அரும்ப, வேறு பக்கம் திருப்பிக் கொள்வான். ஒருநாள் ஜிலின் மலையை விட்டு கீழே இறங்கி அந்த வயதான கிழவன் எங்கே வாழ்கிறான் என்பதைத் தேடிப்பார்த்தான். அவன் ஒரு பாதையில் நடந்து சென்று கற்சுவரால் சூழப்பட்ட ஒரு தோட்டத்தை அடைந்தான். சுவருக்குப் பின்னால் செர்ரி மரங்கள் வளர்ந்து காணப்பட்ட தட்டையான மேற்கூரை போடப்பட்ட ஒரு குடில் இருப்பதை அவன் பார்த்தான். குடிலை நெருங்கி வந்தான். தேன்கூடுகள் அங்கு நிறைய இருப்பதையும், அவற்றிலிருந்து ரீங்காரமிட்டவாறு தேனீக்கள் பறந்து கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான். அந்த வயதான கிழவன் கீழே அமர்ந்து தேன் கூட்டை என்னவோ செய்து கொண்டிருந்தான். ஜிலின் அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்பதற்காக சற்று கழுத்தை நீட்டினான். அப்போது அவன் காலில் கட்டப்பட்ட விலங்கு ஓசை உண்டாக்கியது. அவ்வளவு தான்- அந்தக் கிழவன் அவனை நோக்கி திரும்பினான். வாயைப் பெரிதாகத் திறந்தவாறு இடுப்பிலிருந்து ஒரு பிஸ்டலை எடுத்து ஜிலினை நோக்கி அதை அவன் திருப்பினான். கற்சுவருக்குப் பின்னால் மறைந்து கொண்டு தன்னைப் பாதுகாக்க முயன்றான் ஜிலின். வயதான அந்தக் கிழவன் ஜிலினின் மாஸ்டரிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னான். அவன் ஜிலினை அழைத்து சிரித்தவாறு கேட்டான்: ‘‘நீ ஏன் அந்தக்கிழவனோட வீட்டைத் தேடிப் போனே?’’ ‘‘அந்த ஆளுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யலியே?’’- ஜிலின் சொன்னான்: ‘‘அவர் எப்படி வாழுகிறார்னு பார்க்கப் போனேன்- அவ்வளவுதான்.’’ மாஸ்டர் அவன் சொன்னதை மீண்டும் திருப்பிச் சொன்னான். ஆனால், அந்த வயதான கிழவன் பயங்கர கோபத்தில் இருந்தான். அவன் தனக்குள் என்னவோ கோபமான குரலில் பேசிக்கொண்டான். இப்படியும் அப்படியுமாய் ஒருமாதிரி ஆடினான். தன் வாயில் இருந்த தந்தத்தையொத்த இரண்டு நீளமான பற்களையும் வெளியே காட்டியவாறு அவன் தன் முஷ்டியை முறுக்கிக் காட்டிக்கொண்டு ஜிலினையே பார்த்தான். அவனுடைய செயலை உண்மையாகவே ஜிலினால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கிராமத்தில் ரஷ்யர்களை வைத்திருப்பது அவ்வளவு நல்லதல்ல என்று அந்தக் கிழவன் அப்துல்லாவிடம் சொல்கிறான் என்பதை மட்டும் சூசகமாக அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு மாறாக, அவர்களை கொன்றுவிட வேண்டும் என்று கிழவன் விருப்பப்படுகிறான் என்பதையும் ஜிலின் புரிந்து கொண்டான். சிறிது நேரத்தில் கிழவன் அங்கிருந்து சென்று விட்டான். ஜிலின் தன்னுடைய மாஸ்டரிடம் அந்தக் கிழவன் யார் என்பதை விசாரித்தான். ‘‘அவர் ஒரு பெரிய மனிதர்!’’- மாஸ்டர் சொன்னார்: ‘‘எங்க ஆட்கள்லயே ரொம்ப தைரியசாலி அவர்தான். எத்தனையோ ரஷ்யர்களைக் கொன்னுருக்காரு. ஒரு காலத்துல அவர் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவரு. அவருக்கு மூணு பொண்டாட்டிங்க இருந்தாங்க. மொத்தம் எட்டு மகனுங்க இருந்தாங்க. எல்லோரும் ஒரு கிராமத்துல வாழ்ந்தாங்க. ரஷ்யர்கள் அந்த ஊருக்குள்ள நுழைஞ்சு, ஊரையே அழிச்சிட்டாங்க. அவரோட மகன்கள்ல ஏழுபேரை ரஷ்யர்கள் கொன்னுட்டாங்க. ஒரே ஒரு மகன்தான் உயிரோட பிழைச்சான். ஆனா, அவனோ தானாகவே போய் ரஷ்யர்கள் கிட்ட சரண் அடைஞ்சிட்டான். கிழவரும் ரஷ்யர்களோட மூணு மாசகாலம் அவர் வாழ்ந்தாரு.
கொஞ்ச நாட்கள் கழிச்சு, அவர் தன் மகனை ஒரு இடத்துல பார்த்தாரு. தன் சொந்தக் கைகளால அவனைக் கொன்னுட்டு, அங்கேயிருந்து அவர் தப்பிச்சிட்டாரு. சண்டை போடுற வேலையெல்லாம் விட்டுட்டு அவரு மெக்காவுக்கு கடவுளைத் தொழப் போயிட்டாரு. அதுனாலதான் அவர் தன் தலையில எப்பவும் துணி கட்டிக்கிட்டு இருக்காரு. மெக்காவுக்குப் போயிட்டு வந்தவங்களை ‘ஹாஜி’ன்னு தான் எல்லோரும் கூப்பிடுவாங்க. அவங்க எப்பவும் தலையில துணி கட்டியிருப்பாங்க. ரஷ்யர்களை அவருக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது. உன்னை உடனடியா கொன்னுடணும்னு என்கிட்ட வர் சொன்னாரு. ஆனா, நான் உன்னைக் கொல்லப்போறதா இல்ல. நான் உன்மேல பணம் கொடுத்திருக்கேன். அது மட்டுமில்லை... ஜவான் உன்னை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. உன்னைக் கொல்றதுன்னு ஒரு பக்கம் இருக்கட்டும்... நான் மட்டும் வாக்கு கொடுக்காம இருந்திருந்தா, சொல்லப்போனா நான் உன்னை விடக்கூட மாட்டேன்.’’ இதைச் சொல்லி விட்டு அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் ரஷ்ய மொழியின் சொன்னான்: ‘‘ஜவான், நீ ரொம்பவும் நல்லவன். நான் அப்துல்... நான் கூட நல்லவன்தான்.’’
ஜிலினின் வாழ்க்கை இப்படியே ஒரு மாத காலம் ஓடியது. பகல் நேரங்களில் கிராமத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்பான். இல்லாவிட்டால், ஏதாவது கைவினைப் பொருட்களைச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பான். இரவு நேரம் வந்துவிட்டால், கிராமம் படு அமைதியில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவன் தான் இருக்கும் கொட்டடியின் தரையைத் தோண்ட ஆரம்பிப்பான். தரையைத் தோண்டுவது என்பது அப்படியொன்றும் எளிதான ஒரு விஷயமாக இருக்கவில்லை. காரணம் கீழே கற்கள் நிறைய இருந்தன. ஆனால், அவன் மிகவும் கஷ்டப்பட்டு தோண்டியதன் விளைவாக, சுவருக்குக் கீழே பெரிய ஓட்டையை அவனால் தோண்ட முடிந்தது. அதன் வழியாக ஒருவன் தாராளமாக நுழைய முடியும். ‘வெளியே போறதுன்னா, எப்படிப்போனா ஒழுங்கா போய்ச் சேர முடியும்னு தெரியணுமே!’ - அவன் மனதிற்குள் நினைத்தான். ‘வழியை எப்படித் தெரிஞ்சிக்கிறது? ஆனா, எந்த டார்ட்டரும் அதை எனக்குச் சொல்ல மாட்டாங்களே!’ தன்னுடைய மாஸ்டர் வீட்டில் இல்லாத ஒருநாள் பார்த்து இரவு சாப்பாடு முடிந்ததும் ஊரைத் தாண்டி இருக்கும் மலை மேல் ஏறிப்போவது என்று தீர்மானித்து புறப்படத் தொடங்கினான். ஜிலின் மலையின் உச்சியை அடைந்தால், சுற்றிலும் இருக்கும் நிலப்பரப்பைப் பார்க்கலாமே! ஆனால், எப்போது வீட்டை விட்டு வெளியேறினாலும் மாஸ்டர் தன்னுடைய மகனை அழைத்து ஜிலின் மேல் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டுமென்றும், எவ்வித காரணத்தைக் கொண்டு அவன் மேல் இருக்கும் கவனத்தை வேறு பக்கம் செலுத்திவிடக் கூடாது என்று கறாராகக் கூறிவிட்டுத்தான் செல்வார். அதனால், அந்தப்பையன் ஜிலினைத் தொடர்ந்துவந்து, ‘‘எங்கேயும் போகாதே. அப்பா கடுமையாகச் சொல்லியிருக்கார். நீ இப்போ உடனே வரலைன்னா நான் எல்லோரையும் இங்கே கூப்பிடுவேன்’’ என்றான். அவ்வளவுதான்- ஜிலின் அவனைச் சமாதானப்படுத்த ஆரம்பித்துவிட்டான். அவன் சொன்னான்: ‘‘நான் ரொம்ப தூரத்துக்கு ஒண்ணும் போகல. நான் அந்த மலை மேல ஏற நினைச்சேன். அவ்வளவுதான். நான் அங்கே போயி ஒரு மூலிகை செடியைத் தேடி கண்டுபிடிக்கணும். அந்தச் செடி கிடைச்சா, அதை வைச்சு பல நோயாளிங்களை என்னால காப்பாத்த முடியும். பிரியப்பட்டா என் கூட வா. கால்கள்ல இந்த விலங்கை போட்டுக்கிட்டு நான் எப்படி ஓட முடியும்? நீயே சொல்லு. நாளைக்கே உனக்கு நான் ஒரு வில்லையும் அம்பையும் செஞ்சி தர்றேன்...’’ அவன் பையனிடம் இப்படி ஆசை வார்த்தைகளை சொன்னதும், அவன் அமைதியாகி விட்டான். இருவரும் மலையை நோக்கி நடந்தார்கள். மலையை மேலோட்டமாக பார்க்கும்பொழுது, உச்சியை அடைவதென்பது மிகவும் தூரத்தில் இல்லை என்பது மாதிரி தெரிந்தது. இருப்பினும் ஜிலினுக்கு காலில் விலங்கைக் கட்டிக் கொண்டு நடப்பதென்னமோ மிகவும் கஷ்டமான ஒன்றாகவே இருந்தது. எப்படியோ மெதுவாக நடந்து நடந்து உச்சியை அடைந்து விட்டான் ஜிலின். உச்சிக்கு போனதும், அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து கீழே இருக்கும் நிலப்பரப்பைப் பார்த்தான். தெற்குப் பக்கத்தில் கொட்டடியைத் தாண்டி ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அங்கு கூட்டம் கூட்டமாக குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. பள்ளத்தாக்கிற்குக் கீழே இன்னொரு கிராமம் இருந்தது. அதைத் தாண்டி செங்குத்தான ஒரு மலை இருந்தது. அதைத் தாண்டி உயரமான இன்னொரு மலை இருந்தது. இரண்டு மலைகளுக்கும் நடுவில் தெரிந்த நீலவண்ண இடத்தில் காடுகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. அதைத் தாண்டி நிறைய மலைகள் தெரிந்தன. அந்த மலைகள் போகப்போக உயரம் கூடுதலாக இருந்தன. மலைகளிலேயே உயரமாகத் தெரிந்த மலைக்கு மேலே பனிபடலம் படர்ந்திருந்தது. எல்லா மலைகளையும் தாண்டி ஒரு உயரமான மலைச்சிகரம் பனியால் போர்த்தப்பட்டு காட்சியளித்தது. கிழக்கிலும், மேற்கிலும்கூட அதே வகையான மலைகள் தெரிந்தன. ஆங்காங்கே ‘அவுல்’களில் இருந்த குடிசைகளில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. ‘ம்’...-ஜிலின் தன் மனிதற்குள் நினைத்தான். ‘அவை எல்லாமே டார்ட்டாருக்குச் சொந்தமான கிராமங்கள்...’ இப்போது அவன் இந்தப் பக்கம் திரும்பினான். அவனுடைய பாதத்திற்குக் கீழே ஒரு ஆறு தெரிந்தது. அவன் வசிக்கக்கூடிய ‘அவுல்’ தெரிந்தது. அதைச் சுற்றி இருந்த சிறு சிறு தோட்டங்கள் தெரிந்தன. சிறு பொம்மைகளைப் போல பெண்கள் தெரிந்தார்கள். அவர்கள் ஆற்றின் கரைகளில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமத்தைத் தாண்டி தெற்கில் இருந்த மலையை விட சற்று உயரம் குறைவான ஒரு மலை தெரிந்தது. அதைத் தாண்டி மேலும் இரண்டு மலைகள் தெரிந்தன. அந்த மலையில் நிறைய மரங்கள் வளர்ந்து காணப்பட்டன. அவற்றுக்கு மத்தியில் நீலநிறத்தில் ஒரு சமவெளி தென்பட்டது. அதையும் தாண்டி தூரத்தில் மேகமோ, புகையோ இருந்தது. தான் ராணுவ முகாமில் இருக்கும்போது சூரியன் எந்தப்பக்கம் தோன்றும், எந்தப்பக்கம் மறையும் என்பதை ஒரு நிமிடம் அவன் ஞாபகப்படுத்திப் பார்த்தான். தான் நினைத்தது சரியானது என்ற முடிவுக்கு அவன் வந்தான். ரஷ்யர்களுக்குச் சொந்தமான ராணுவ முகாம் அந்தச் சமவெளியில்தான் இருக்க வேண்டும். இந்த இரண்டு மலைகளுக்கும் நடுவில்தான் அவன் தப்பித்துச் செல்ல வேண்டும்.
சூரியன் மறையத் தொடங்கியிருந்தது. பனி மூடியிருந்த மலைகள் சிவப்பு நிறத்தில் மாறின. கருப்பு நிற மலைகள் மேலும் கறுத்துத் தெரிந்தன. காடுகளிலிருந்தும் பள்ளத்தாக்குகளிலிருந்தும் பனிப்படலம் உயர்ந்து மேலே வந்து கொண்டிருந்தது. அவன் ரஷ்ய முகாம் என்று நினைத்திருந்த இடம் அந்த மாலைநேர சூரிய அஸ்தமனத்தில் நெருப்பென பளபளத்தது. ஜிலின் அதையே கூர்மையாகப் பார்த்தான். சமையலறைப் புகைக் குழாயிலிருந்து வரும் புகையைப் போல பள்ளத்தாக்கில் புகை வந்து கொண்டிருந்தது. அதை வைத்து ரஷ்யர்கள் தங்கியிருக்கும் முகாம் அங்குதான் இருக்கிறது என்ற நிச்சயமான முடிவுக்கு அவன் வந்தான். நேரம் அதிகமாகி விட்டிருந்தது. முல்லாவின் உரத்த குரல் கேட்டது. மேயப்போன மாடுகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. பையன் ஜிலினைப் பார்த்து சொன்னான்: ‘‘சரி திரும்புவோம்’’ ஆனால் ஜிலினுக்கு திரும்பிப் போக வேண்டும் என்ற எண்ணமே உண்டாகவில்லை. இருந்தாலும் இருவரும் திரும்ப நடந்தார்கள். ‘சரி... இருக்கட்டும்...’- ஜிலின் தனக்குள் நினைத்துக் கொண்டான். ‘நான் எப்படிப் போகணும்ன்றதை தெரிஞ்சிக்கிட்டேன். இதுதான் தப்பிச்சுப் போறதுக்கு சரியான நேரம். அன்றிரவு எப்படியும் தப்பித்தே ஆவது என்பதில் மிகவும் திடமாக இருந்தான் ஜிலின். இரவு மிகவும் அடர்த்தியாக இருந்தது. வானத்தில் சந்திரன் கூட இல்லை. ஆனால் அவன் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும் - டார்ட்டர்கள் அன்று மாலையே வீடு திரும்பி விட்டார்கள். உற்சாகமாக கால்நடைகளை தங்களுக்கு முன்னால் விரட்டியபடி அவர்கள் வருவார்கள். ஆனால், இந்தமுறை கால்நடைகள் எதுவும் இல்லை. அதற்கு மாறாக ஒரு இறந்துபோன டார்ட்டரின் உடலை அவர்கள் கொண்டு வந்தார்கள். கொல்லப்பட்ட அந்த மனிதன் வேறு யாருமல்ல - சிவப்பு தாடி மனிதனின் சகோதரன்தான். அவர்கள் மிகவும் கவலையாகக் காணப்பட்டார்கள். இறந்து போன மனிதனைப் புதைப்பதற்காக அவர்கள் அனைவரும் குழுமி நின்றார்கள். ஜிலின் அதைப் பார்ப்பதற்காக அங்கு வந்தான். அவர்கள் இறந்து போன மனிதனின் உடலை பெட்டி எதிலும் அடைக்காமல் துணியொன்றில் சுற்றி கிராமத்துக்கு வெளியே கொண்டு சென்றார்கள். அங்கிருந்த மரங்களுக்குக் கீழே இருந்த புல்லில் அதை வைத்தார்கள். முல்லாவும் அந்த வயதான மனிதனும் வந்தார்கள். அவர்கள் தங்களின் தொப்பியின் மேல் துணிகளை அகற்றினார்கள். கால்களில் இருந்த காலணிகளைக் கழற்றினார்கள். இறந்த உடலுக்கு அருகில் கீழே எல்லோரும் அமர்ந்தார்கள். முல்லா முன்னால் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் வரிசையாக மூன்று வயதான மனிதர்கள் தலையில் துணியைக் கட்டி அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மற்ற டார்ட்டர்கள் அமர்ந்திருந்தார்கள். எல்லோரும் தங்கள் கண்களால் கீழே பார்த்தபடி படு அமைதியாக உட்கார்ந்திருந்தனர். இந்த நிலைமை நீண்ட நேரம் நீடித்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகு முல்லா தன்னுடைய தலையை உயர்த்தி சொன்னார்: ‘‘அல்லா!’’ (கடவுள் என்று அதற்கு அர்த்தம்) அவர் அந்த ஒரே வார்த்தையைத்தான் சொன்னார். எல்லோரும் தங்களின் பார்வையை கீழ் நோக்கி செலுத்தியபடி மீண்டும் நீண்ட நேரத்திற்கு அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் சிறிதுகூட அசையவோ, சிறிதுகூட ஓசை எழுப்பவோ இல்லை. மீண்டும் முல்லா தன்னுடைய தலையை உயர்த்தியவாறு சொன்னார்: ‘‘அல்லா!’’ தொடர்ந்து அவர்கள் எல்லோரும் திரும்பச் சொன்னார்கள்: ‘‘அல்லா! அல்லா!’’ மீண்டும் ஒரே நிசப்தம் நிலவியது. இறந்துபோன மனிதனின் உடல் புல்லின் மீது அசைவற்றுக் கிடந்தது. அங்கிருந்த எல்லோரும் ஒரு சிறிது அசைவு கூட இல்லாமல் அவர்களே செத்துப்போனவர்கள் என்பதைப்போல உட்கார்ந்திருந்தார்கள். அங்கிருப்பவர்களில் யாராவது ஒருவராவது அசையவேண்டுமே! அருகில் மரத்திலிருந்த கிளைகள் காற்றில் ஆடி உண்டாக்கிய ஓசையைத் தவிர வேறு எந்த சத்தமும் அங்கு இல்லை. முல்லா தன் பிரார்த்தனையை மீண்டும் அங்கு தொடர்ந்தார். அவர்கள் எல்லோரும் எழுந்து நின்றார்கள். செத்துப்போன உடலை அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தூக்கி அருகில் தரையில் தோண்டப்பட்டிருந்த குழியை நோக்கிக் கொண்டு போனார்கள். அது ஒரு சாதாரண குழியல்ல. பூமியில் மிகவும் ஆழமாக இருக்கும்படி அந்தக் குழி மிகவும் கவனமாகத் தோண்டப்பட்டிருந்தது. உடலின் கைகளுக்கும் கால்களுக்கும் கீழே கையைக் கொடுத்து தூக்கிய அவர்கள், அதை லேசாக மடித்து இருக்கும்படி செய்தார்கள். மெதுவாக கீழ்நோக்கி உடலை இறக்கி, குழிக்குள் உட்கார்ந்திருக்கும் வண்ணம் செய்தார்கள். பிணத்தின் கைகள் முன்னால் மடக்கி இருக்கும்படி செய்தார்கள். ‘நோகய்’ சில பச்சை இலைகளைக் கொண்டு வந்தான். அவர்கள் அந்த இலைகளைக் குழிக்குள் போட்டு மண்ணால் குழியை மூடினார்கள். கல்லறையின் தலைப்பகுதியில் ஒரு செங்குத்தான கல்லைக் கொண்டு வந்து வைத்தார்கள். எல்லாரும் வரிசையாக தரையில் அமர்ந்திருந்தார்கள். இந்த அமைதி நீண்ட நேரம் நீடித்தது. கடைசியில் அவர்கள் எழுந்து சொன்னார்கள்: ‘‘அல்லா! அல்லா! அல்லா! சிவப்பு தாடியைக் கொண்ட மனிதன் வயதான மனிதனுக்கு பணம் தந்தான். தொடர்ந்து எழுந்த அவன் சாட்டையொன்றை எடுத்து, அதனால் தன்னுடைய நெற்றியில் மூன்று முறை அடித்துக்கொண்டு, அங்கிருந்து வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அடுத்தநாள் காலையில் இப்படி சிவப்பு நிற தாடியைக் கொண்ட டார்ட்டர் மூன்று மனிதர்கள் பின்தொடர கிராமத்தை விட்டுப்புறப்பட்டான். அவர்கள் தங்களுடன் ஒரு ஆட்டையும் அழைத்துச் சென்றார்கள். கிராமத்தைத் தாண்டியதும் அந்த சிவப்பு தாடி மனிதன் தன்னுடைய மேற்சாட்டையைக் கழற்றி தன்னுடைய பருமனான கைகளை வெளியே காட்டினான். தொடர்ந்து அவன் ஒரு கத்தியை எடுத்து அதை அங்கிருந்த ஒரு கல்லில் தீட்ட ஆரம்பித்தான். அருகிலிருந்த மன்ற டார்ட்டர்கள் ஆட்டின் தலையை உயர்த்திக் காட்ட, சிவப்பு தாடி டார்ட்டர்கள் ஆட்டின் கழுத்தை வெட்டினான். கழுத்து துண்டிக்கப்பட்ட ஆடு ஒரு மூலையில் போய் விழுந்தது. ஆட்டின் தோலை உரிக்க ஆரம்பித்தான். தன்னுடைய பலம் பொருந்திய கைகளால் அவன் அதைச் சர்வ சாதாரணமாகச் செய்தான். பெண்களும் சிறுமிகளும் அங்கு வந்து குழுமினார்கள். ஆடு துண்டு துண்டாக நறுக்கப்பட்டது. சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டின் மாமிசம் குடிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. சவ அடக்கத்திற்குப் பிறகு நடக்கும் விருந்திற்காக அந்த முழு கிராமமும் சிவப்பு தாடி டார்ட்டரின் குடிலின் முன் கூடிவிட்டது. அடுத்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் ஆட்டின் மாமிசத்தைத் தின்றவண்ணம் இருந்தார்கள். மாமிசம் சாப்பிடுவதும், ‘புஸா’ குடிப்பதும், இறந்துபோன மனிதனுக்காகப் பிரார்த்தனை செய்வதும்... இதுதான் அவர்களின் வேலையாக இருந்தது. எல்லா டார்ட்டர்களும் வீட்டில்தான் இருந்தார்கள்.
நான்காம் நாள் இரவு சாப்பாடு முடிந்ததும், அவர்கள் எல்லோரும் புறப்படத் தயாராகி விட்டதை ஜிலின் பார்த்தான். குதிரைகள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் புறப்படத் தயாரானார்கள். பத்து டார்ட்டர்கள் (அவர்களில் அந்த சிவப்பு தாடி டார்ட்டரும் இருந்தான்.) குதிரைகள் மேல் ஏறிக் கிளம்பினார்கள். அப்துல் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கி விட்டான். அன்று அமாவாசை நாள். அதனால் இரவு மிகவும் இருட்டாக இருந்தது. ‘சரியான இருட்டு!’ - ஜிலின் மனதிற்குள் நினைத்தான். ‘இன்னைக்கு ராத்திரி தப்பிச்சுப் போறதுக்குச் சரியா இருக்கும்!’ அவன் இந்த விஷயத்தை காஸ்ட்டிலினிடம் சொன்னான். ஆனால் காஸ்ட்டிலினோ மிகவும் மனம் தளர்ந்து போய் இருந்தான். அவன் சொன்னான்: ‘‘நாம எப்படி தப்பிக்கிறது? நாம எப்படிப் போறதுன்னே நமக்குத் தெரியாதே!’’ ‘‘எந்த வழியில போகணும்னு எனக்குத் தெரியும்.’’ - ஜிலின் சொன்னான். ‘‘அப்படியே நாம போனாலும்...’’ - காஸ்ட்டிலின் சொன்னான்: ‘‘ஒரு ராத்திரியில நாம முகாமை அடைஞ்சிடமுடியாது.’’ அப்படி அடைய முடியலைன்னா என்ன?’’ - ஜிலின் கூறினான். ‘‘நாம காட்டுக்குள்ள படுத்து தூங்குவோம். இங்கே பாரு... என்கிட்ட மூணு வெண்ணைக் கட்டிகள் இருக்கு. இங்கே வெருமனே உட்கார்ந்துக்கிட்டு இருக்குறதுல என்ன பிரயோஜனம் இருக்கு? வீட்டில இருந்து நீ கேட்ட பணத்தை அனுப்பி வைச்சிட்டாங்கன்னா பரவாயில்லை. ஒருவேளை அந்தப் பணத்தை அவங்களால தயார் பண்ண முடியலைன்னு வச்சிக்கோ... அப்போ நிலைமை என்னவாகும்? டார்ட்டர்கள் ஏற்கனவே ரொம்பவும் கோபத்துல இருக்காங்க. ஏன்னா, அவங்க ஆட்கள்ல ஒருத்தனை ரஷ்யர்கள் கொன்னுருக்காங்க. நம்மளைக் கொல்றதைப்பத்தி அவங்க இப்போ பேசிக்கிட்டு இருக்காங்க.’’ காஸ்ட்டிலின் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். ‘‘சரி... நாம போவோம்’’ என்றான் அவன்.
ஜிலின் தான் தோண்டிய ஓட்டையைச் சற்று பெரிதாக ஆக்கினான். அப்படியென்றால்தானே காஸ்ட்டிலினும் அதற்குள் நுழைய முடியும்! கிராமம் அமைதியாக ஆகும் தருணத்தை எதிர்பார்த்து இருவரும் அங்கு அமர்ந்திருந்தார்கள். கிராமம் அமைதியானவுடன், ஜிலின் சுவருக்குக் கீழே இருந்த ஓட்டைக்குள் நுழைந்தான். காஸ்ட்டிலினைப் பார்த்து மெதுவான குரலில் சொன்னான்: ‘‘வா...’’ காஸ்ட்டிலின் இப்போது ஓட்டைக்குள் நுழைந்தான். அப்போது அவனுடைய கால் ஒரு கல்லில் பட்டு ஒரு சத்தம் உண்டானது. மாஸ்டரிடம் ஒரு திறமையான நாய் இருந்தது. உலியாஷின் என்ற பெயரைக் கொண்ட அதன் உடம்பு முழுக்க புள்ளிகள் இருக்கும். ஜிலின் அந்த நாய்க்கு அவ்வப்போது உணவு தருவான். உலியாஷின் சத்தத்தைக் கேட்டு குரைக்க ஆரம்பித்தது. குறைத்துக் கொண்டு குதிக்கும் அதைப் பார்த்து, மற்ற நாய்களும் குரைக்க ஆரம்பித்தன. அடுத்த நிமிடம் ஜிலின் மெதுவாக விசிலடித்தான். தொடர்ந்து கொஞ்சம் வெண்ணெயை விட்டெறிந்தான். உலியாஷினுக்கு ஜிலினை ஏற்கனவே நன்கு தெரியும். அது தன்னுடைய வாலை ஆட்டிக்கொண்டு குரைப்பதை நிறுத்தியது. ஆனால் மாஸ்டர் நாய் குரைப்பதைக் கேட்டு விட்டான். தன்னுடைய குடிலில் இருந்தவாறு அவன் உரத்த குரலில் சத்தம் போட்டான்: ‘‘என்ன உலியாஷின்?’’ இதற்குள் ஜிலின் உலியாஷின் காதை இலேசாகப் பிடித்து இழுத்தான். அவ்வளவுதான் - நாய் அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டது. அது தன்னுடைய உடம்பை ஜிலினின் காலில் கொண்டு போய் தேய்த்துக் கொண்டு, வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் ஒரு மூலையில் மறைந்து கொண்டு சிறிதுநேரம் உட்கார்ந்திருந்தார்கள். மீண்டும் சுற்றிலும் அமைதி நிலவ ஆரம்பித்தது. தொழுவத்திற்குள் ஆடொன்று கனைக்கும் குரல் மட்டும் கேட்டது. அருகிலிருந்த ஒரு பள்ளத்தில் இருந்த கல்மேல் நீர் விழுந்து கொண்டிருக்கும் ஓசை கேட்டது. சுற்றிலும் கடுமையான இருட்டு இருந்தது. வானத்தில் மிக உயரத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. நிலவு மலைக்குப் பின்னால் தன்னுடைய சிவந்த முகத்தை மெல்ல காட்டியவாறு வந்து கொண்டிருந்தது. பள்ளத்தாக்கில் பனிப்படலம் பால் நிறத்தில் எங்கும் பரவி விட்டிருந்தது. ஜிலின் இருந்த இடத்தை விட்டு எழுந்து தன்னுடைய நண்பனைப் பார்த்து சொன்னான்: ‘‘நண்பனே, என்கூட வா...’’ அவர்கள் புறப்பட்டார்கள். சில அடிகள்தான் அவர்கள் வைத்திருப்பார்கள். அதற்குள் முல்லா மேலே இருந்து உரத்த குரலில் சத்தம் போடுவது தெளிவாக அவர்களின் காதில் விழுந்தது. ‘‘அல்லா... பிஸ்மில்லா.... இல்ரஹ்மான்...’’ என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். மக்கள் மசூதியை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள் என்பதை அவர்களால் உணர முடிந்தது. அதனால் அவர்கள் மீண்டும் உட்கார்ந்து கொண்டார்கள். ஒரு சுவருக்குப் பின்னால் உட்கார்ந்தவாறு அவர்கள் நீண்ட நேரம் மக்கள் முழுமையாகப் போவது வரை காத்திருந்தார்கள். கடைசியாக மீண்டும் அமைதியான சூழ்நிலை உண்டானது. ‘‘சரி... கிளம்புவோம். கடவுள் நமக்கு துணையாக இருப்பார்...’’ - ஜிலின் சொன்னான். அவர்கள் மீண்டும் கிளம்ப ஆரம்பித்தார்கள். ஒரு வெட்ட வெளியைக் கடந்து மலையின் பக்கவாட்டில் இறங்கி ஆற்றை அடைந்தார்கள். ஆற்றைக் கடந்து பள்ளத்தாக்கு வழியாக நடந்தார்கள். தரையையொட்டி பனிப்படலம் படர்ந்திருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகக் காட்சி தந்தன. நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் ஜிலின் தன் நண்பனுக்கு பாதையைக் காட்டி நடந்தான். பனிப்படலம் சுற்றிலும் இருந்ததால், மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தது. அதனால் அவர்களுக்கு நடந்து செல்வது மிகவும் எளிதாகவே இருந்தது. காலணிகள் இருப்பதுதான் சற்று இடைஞ்சலாக இருந்தது. அவை ஆங்காங்கே பிய்ந்து போய் தொங்கிக் கொண்டிருந்தது. ஜிலின் தன்னுடைய காலணிகளைக் கழற்றி தூரத்தில் வீசியெறிந்தான். காலணிகள் இல்லாத வெறும் கால்களால் ஒவ்வொரு கல்லாகத் தாண்டி குதித்து நட்சத்திரங்கள் வழிகாட்ட அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். காஸ்ட்டிலின் ஜிலினுக்கு மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தான். ‘‘மெதுவாகப்போ...’’ -அவன் சொன்னான்: ‘‘இந்தக் காலணிகள் என் பாதத்தையே ஒரு வழி பண்ணிடும் போல இருக்கு!’’ ‘‘அவற்றைக் கழற்றிடு!’’- ஜிலின் சொன்னான்: ‘‘அது இல்லைன்னா உன்னால எளிதா நடக்க முடியும்.’’ காஸ்ட்டிலின் தன்னுடைய காலணிகளைக் கழற்றி தூரத்தில் எறிந்தான். ஆனால், அவனின் நடை இப்போது முன்பிருந்ததை விட மிகவும் மோசமானதாகி விட்டது. கற்கள் அவனுடைய பாதத்தைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தான். ஜிலின் சொன்னான்: ‘‘உன் பாதங்கள் பாதிக்கப்பட்டா, அதை நம்மால சீக்கிரம் சரி பண்ணிட முடியும். ஆனா, டார்ட்டர்கள் நம்மளைப் பிடிச்சிட்டாங்கன்னா, நம்மளைக் கொன்னுட்டுத் தான் மறுவேலை பார்ப்பாங்க. அப்படியொரு நிலைமையை நம்மால நினைச்சுப் பார்க்கவே முடியாது.’’
அதற்கு காஸ்ட்டிலின் எந்த பதிலும் கூறவில்லை. அதற்குப் பதிலாக தனக்குள் மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தவாறு வந்து கொண்டிருந்தான். அந்தப் பரந்து கிடக்கும் பள்ளத்தாக்கு வழியே அவர்கள் நீண்ட நேரம் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். வலது பக்கத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது. ஜிலின் நின்று சுற்றிலும் பார்த்தான். கைகளால் தடவியவாறு மலைமேல் ஏற ஆரம்பித்தான். ‘‘ச்சே!’’ - அவன் சொன்னான்: ‘‘நாம தப்பான வழியில வந்துட்டோம். வலது பக்கம் நாம ரொம்ப தூரம் வந்துட்டோம். இங்கோ இன்னொரு ‘அவுல்’ இருக்கு. இந்த கிராமத்தை மலைமேல இருந்து ஒரு தடவை நான் பார்த்திருக்கேன். நாம திரும்பவும் இடது பக்கம் இருக்குற மலை மேல ஏறணும். அங்கே ஒரு காடு இருக்கும்.’’ அதற்கு காஸ்ட்டிலின் சொன்னான்: ‘‘கொஞ்ச நில்லு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிறேன். என் பாதங்கள்ல ஒரே காயம். இரத்தம் வழிஞ்சிக்கிட்டு இருக்கு.’’ ‘‘அதற்காக கவலைப்படாதே, நண்பனே... அது சீக்கிரம் குணமாயிடும். நீ கொஞ்சம் வேகமாக நடக்கணும் என்னை மாதிரி.’’ ஜிலின் திரும்பி வேகமாக ஓடினான். இடது பக்கம் திரும்பி மலைமேல் ஏறி காட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். காஸ்ட்டிலின் அவனுக்கு மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தான். அவன் தனக்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஜிலின் அவனைப் பார்த்து ‘‘சீக்கிரம்!’’ என்று சொல்லியவாறு படுவேகமாக மேலே போய்க்கொண்டே இருந்தான். அவர்கள் மலையின் மேற்பகுதியை அடைந்தார்கள். அங்கு ஜிலின் சொன்னதைப்போலவே ஒரு காடு இருந்தது. அவர்கள் காட்டிற்குள் நுழைந்தார்கள். முற்களுக்கு மத்தியில் அவர்கள் நடந்து சென்றார்கள். முற்கள் அவர்களின் ஆடைகளைக் கிழித்தன. கடைசியில் அவர்கள் ஒரு பாதைக்கு வந்து, அதில் நடக்க ஆரம்பித்தார்கள். ‘‘நில்லு...’’ அவர்கள் குளம்புச் சத்தம் அந்தப் பாதையில் ஒலிப்பதைக் கேட்டார்கள். சிறிது நேரம் நகராமல் சென்று எங்கிருந்து அந்தச் சத்தம் வருகிறது என்று கவனித்தார்கள். குதிரைகளின் காலடிச் சத்தத்தைப் போல இருந்த அது சிறிது நேரத்தில் நின்றது. அவர்கள் நடக்க ஆரம்பிக்க, மீண்டும் அந்தக் குளம்புச் சத்தம் கேட்டது. அவர்கள் நின்றதும், அந்தச் சத்தமும் நின்றது. ஜிலின் மெதுவாக ஊர்ந்து சென்று பார்த்தபோது, பாதையில் என்னவோ கருப்பாக ஒன்று நின்றிருந்தது. இங்கிருந்து பார்த்தபோது அது குதிரையைப்போல் இருந்தது. ஆனால், குதிரைதானா என்பதை இங்கிருந்து முடிவு பண்ண முடியவில்லை. அதன்மேல் மனிதனொருவன் அமர்ந்திருப்பதைப் போலவும் இருந்தது. ஒரு கனைக்கும் ஓசையும் ஜிலினின் காதில் விழுந்தது. ‘‘அது என்னவாக இருக்கும்?’’ என்று மெதுவான குரலில் தனக்குள் முணுமுணுத்தபடி அவன் மெதுவாக விசிலடித்தபடி சடக்கென்று பாதையிலிருந்து விலகி அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தான். காடு முழுக்க எதுவோ ஒடியும் சத்தம் கேட்டது. கொடுவும் சூறாவளியொன்று புறப்பட்டு வந்து காட்டிலுள்ள மரங்களின் கிளைகளையெல்லாம் முறிப்பதைப் போல் அந்த ஓசை இருந்தது. காஸ்ட்டிலின் மிகவும் பயந்து விட்டான். அவன் தரையோடு தரையாகப் படுத்து விட்டான். ஆனால், ஜிலின் சிரித்தவாறு சொன்னான்: ‘‘அது வேறு யாருமல்ல; ஒரு மான். அது தன்னோட கொம்பால மரக்கிளைகளை ஒடிப்பதை நீ கேட்கவில்லையா? நாம அதைப் பார்த்து பயந்தோம். அது நம்மைப் பார்த்து பயந்திருக்கு.’’ அவர்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள். நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட மறைந்து விட்டிருந்தன. காலை நெருங்க ஆரம்பித்தது. தாங்கள் செல்வது சரியான பாதையில்தானா, இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்கே சரியாகத் தெரியவில்லை. அந்த வழியாகத்தான் தன்னை டார்ட்டர்கள் கொண்டு வந்தார்கள் என்று நினைத்தான் ஜிலின். ரஷ்ய முகாமிற்குச் செல்ல வேண்டுமென்றால் இடையில் இன்னும் ஏழு மைல்கள் இருக்கின்றன என்பதையும் அவன் மனதில் எண்ணிப் பார்த்தான். ஆனால், எல்லாம் சரியாக நடக்குமா என்பதைப் பற்றி அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இரவு நேரத்தில் ஒரு மனிதன் சர்வ சாதாரணமாக பாதையைத் தவறவிட்டுவிட முடியும். சிறிது நேரம் கழித்து அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். காஸ்ட்டிலின் தரையில் அமர்ந்தவாறு சொன்னான்: ‘‘நீ எப்படி நடக்கணும்னு நினைக்கிறியோ, அப்படி நட நான் இனிமேல் வர்றதா இல்ல. என்னால இதுக்கு மேல நடக்க முடியாது.’’ ஜிலின் அவனைத் தேற்ற ஆரம்பித்தான். ‘‘இல்ல... என்னால நிச்சயம் வரமுடியாது. என்னைப் புரிஞ்சிக்கோ...’’ அதைக் கேட்டு ஜிலினுக்கு பயங்கர கோபம் வந்தது. அவன் கடுமையான குரலில் அவனைப் பார்த்து சொன்னான்: ‘‘சரி... அப்படின்னா நான் மட்டும் தனியாப்போறேன்; சரிதானா?’’ அவ்வளவுதான்- காஸ்ட்டிலின் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். அவர்கள் மூன்று மைல்கள் நடந்திருப்பார்கள். காட்டிற்குள் பனிப்படலம் மிகவும் அடர்த்தியாகப் படர்ந்திருந்தது. அவர்களுக்கு முன்னால் ஒரு அடி தூரத்தைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை. நட்சத்திரங்கள் இல்லாததால், வானம் ஒளியே இல்லாமல் இருந்தது. அப்போது அவர்கள் தங்கள் முன் குதிரையின் குளம்படியோசை ஒலிப்பதைக் கேட்டார்கள். குளம்புச் சத்தம் கற்களில் பட்டு ஒலிப்பதை அவர்களால் உணர முடிந்தது. ஜிலின் தரையில் படுத்து தன்னுடைய காதால் அந்த ஒலியைக் கேட்டான். ‘‘நான் நினைச்சது சரிதான்... குதிரை மேல உட்கார்ந்து ஒரு மனிதன் நம்மை நோக்கி வந்துக்கிட்டு இருக்கான்!’’ அவர்கள் பாதையை விட்டு விலகி ஓட ஆரம்பித்தார்கள். புதருக்குள் மெதுவாக ஊர்ந்து சென்று ஒரு இடத்தில் மறைந்து நின்று என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஜிலின் புதரை நீக்கிக் கொண்டு பார்த்தான். டார்ட்டர் ஒருவன் ஒரு குதிரையின்மேல் அமர்ந்து கொண்டு மாடொன்றைத் துரத்தியவாறு தனக்குத்தானே ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். அவன் மிகவும் வேகமாக குதிரையில் பயணித்துக் கொண்டிருந்தான். ஜிலின் காஸ்ட்டிலினின் பக்கம் திரும்பினான். ‘‘கடவுள் அவனை நம்மைக் கடந்து போகும்படி செஞ்சிட்டார். சரி எழுந்திரு. நாம போவோம்.’’ காஸ்ட்டிலின் இருந்த இடத்தை விட்டு எழ முயற்சித்தான். ஆனால், அவனால் நிற்க முடியவில்லை. மீண்டும் கீழே விழுந்தான். ‘‘என்னால முடியல. நான் சொல்றேன்- என்னால நடக்க முடியாது. என் உடம்புல அதற்கான சக்தி கொஞ்சமும் இல்ல.’’ அவன் மிகவும் பருமனாகவும், உடல் எடை அதிகமாகக் கொண்ட மனிதனாகவும் இருந்ததால், அவன் பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தான். பனிப்படலத்தால் உண்டான குளிர்ச்சியாலும் பாதங்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்ததாலும், அவன் கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலையில்தான் இருந்தான்.
ஜிலின் அவனைத் தரையிலிருந்து எழவைக்க முயற்சித்தான். அப்போது காஸ்ட்டிலின் தன்னை மறந்து உரத்த குரலில் கத்தினான்: ‘‘அய்யோ... வலிக்குது!’’ அதைக் கண்டு ஜிலின் பயங்கரமான கோபத்திற்கு ஆளானான். அவன் சொன்னான்: ‘‘ஏன் நீ இப்படி கத்துற? டார்ட்டர் இன்னும் நமக்கு ரொம்பவும் பக்கத்துல இருக்கான். அவன் நீ கத்துறதைக் கேட்டான்னா நம்ம நிலைமை என்ன ஆகும்?’’ ஜிலின் மனதிற்குள் நினைத்தான். ‘‘இவன் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்கான். நான் இவனை இப்போ என்ன பண்றது? ஒரு நண்பனைத் தனியா விட்டுட்டுப் போறதும் நல்லது இல்லியே!’’ ‘‘சரி... ஒண்ணு செய்யி. நீ எழுந்து என் முதுகு மேல ஏறிக்கோ. உன்னால உண்மையாகவே நடக்க முடியலைன்னா, நான் உன்னைத் தூக்கிச் சுமக்கிறேன்.’’ காஸ்ட்டிலின் தரையிலிருந்து எழ அவன் உதவினான். தன்னுடைய கைகளை அவனின் தொடைகளுக்குக கீழே வைத்து தூக்கினான். அவனைச் சுமந்து கொண்டு பாதையில் அவன் நடக்க ஆரம்பித்தான். ‘‘சொர்க்கத்து மேல இருக்குற விருப்பத்தால சொல்றேன்... உன் கையால என் கழுத்தை நெரிச்சிடாதே. என் தோள்களை பலமாப் பிடிச்சுக்கோ.’’ ஜிலின், காஸ்ட்டிலினின் உடல் பயங்கரமாக கனப்பதை உணர்ந்தான். அவனுடைய கால்களிலும் இப்போது இரத்தம் வர ஆரம்பித்தது. அவன் மிகவும் களைத்துப் போய்விட்டான். அவ்வப்போது இலேசாக குனிந்து காஸ்ட்டிலினைச் சமன் செய்ய முற்பட்டான். அவன் வசதியாக முதுகில் இருக்கும்படி செய்த அவன் மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தான். காஸ்ட்டிலின் உரத்த குரலில் கத்தியதை அந்த டார்ட்டர் கட்டாயம் கேட்டிருக்க வேண்டும். தனக்குப் பின்னால் குதிரையின் குளம்புகள் ஒலிக்க யாரோ வருவதையும், டார்ட்டர்களின் மொழியில் என்னவோ சொல்வதையும் ஜிலின் கேட்டான். அடுத்த நிமிடம் அவன் புதருக்குள் போய் தன்னை மறைத்துக் கொண்டான். அந்த டார்ட்டர் துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டான். ஆனால், குண்டு அவர்கள் மீது விழவில்லை. தன்னுடைய மொழியில் அவன் உரத்த குரலில் கத்தியவாறு, படு வேகமாக குதிரை மீது அமர்ந்து சாலையில் அவன் போனான். ‘‘நண்பனே... நாம தொலைஞ்சோம்!’’ - ஜிலின் சொன்னான்: ‘‘இந்த நாய் போய் மற்ற டார்ட்டர்களை இப்போ அழைச்சிட்டு வரப்போறான். எல்லோரும் சேர்ந்து வந்து நம்ம ரெண்டு பேரையும் இப்போ பிடிக்கப் போறாங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நாம ரெண்டு மைல்களாவது கடந்து போனாத்தான் அவங்ககிட்ட இருந்து தப்ப முடியும். இல்லாட்டி அதோ கதிதான்!’’ அவன் மனதிற்குள் நினைத்தான்: ‘எதற்காக இவனை என் முதுகுல சுமந்துக்கிட்டு நான் வந்திருக்கணும்? நான் மட்டும் தனியா நடந்திருந்தா, இவ்வளவு நேரத்துல எவ்வளவோ தூரத்தை நான் கடந்திருப்பேன்!’ ‘‘நீ மட்டும் தனியா போ’’- காஸ்ட்டிலின் சொன்னான்: ‘‘ என்னால நீ ஏன் வீணா சாகணும்?’’ ‘‘இல்ல... நான் போகமாட்டேன். ஒரு நண்பனை மட்டும் தனியா விட்டுட்டு போறதுன்றது அவ்வளவு ஒரு நல்லசெயல் இல்ல...’’ மீண்டும் அவன் காஸ்ட்டிலினைத் தன் தோள்மீது வைத்து தூக்கிக்கொண்டு நடந்தான். அதே பாதையில் அவர்கள் அரைமைல் தூரம் நடந்தார்கள். அவர்கள் இன்னும் காட்டுக்குள்தான் இருந்தார்கள். காடு எந்த இடத்தில் முடிகிறது என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கொஞ்சமும் இல்லை. பனிப்படலம் மெதுவாக கலைய ஆரம்பித்தது. அதற்குப் பதிலாக மேகங்கள் ஆங்காங்க திரண்டு நின்றிருந்தன. நட்சத்திரங்கள் இப்போது மருந்துக்குக்கூட வானத்தில் இல்லை. ஜிலின் மிகவும் களைத்து போயிருந்தான். பாதையின் ஒரத்தில் கல்லால் சுவர் அமைக்கப்பட்டு ஒரு சிறு ஓடையை அவர்கள் அடைந்தார்கள். ஜிலின் அதைப் பார்த்து நின்று, காஸ்ட்டிலினைக் கீழே இறக்கி விட்டான். ‘கொஞ்சம் நான் ஓய்வு எடுத்துக்கிறேன். கொஞ்சம் தண்ணீர் குடிச்சாத்தான் சரியா இருக்கும்’’ - அவன் சொன்னான். ‘‘நாம கொஞ்சம் வெண்ணெய் தின்போம். அனேகமாக நாம ரொம்ப தூரம் போக வேண்டியிருக்காதுன்னு நினைக்கிறேன்.’’ கீழே உட்கார்ந்து நீரைக் குடிப்பதற்காக ஜிலின் குனிந்திருப்பான் அதற்குள் அவனுக்குப் பின்னால் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்க ஆரம்பித்தது. வலது பக்கத்திலிருந்து புதருக்குள் தங்களை மறைத்துக்கொண்ட அவர்கள் உயரமாக இருந்த ஒரு மண்சுவர் மீது அவர்கள் சாய்ந்து கொண்டார்கள். டார்ட்டர்கள் பேசுவது அவர்கள் காதில் நன்றாக விழுந்தது. பாதையை விட்டு அவர்கள் விலகிய இடம் வந்ததும், டார்ட்டர்கள் நின்றார்கள். டார்ட்டர்கள் என்னவோ தங்களுக்குள் பேசினார்கள். தொடர்ந்து ஒரு நாயை அவர்கள் புதருக்குள் மோப்பம் பிடிப்பதற்காக அனுப்பினார்கள். செடிகளும் மரக்கிளைகளும் ஒடியும் சத்தம் கேட்டது. புதருக்குள் ஒரு பெரிய நாய் நின்றிருப்பது தெரிந்தது. அந்த நாய் நின்று, குரைக்க ஆரம்பித்தது. அங்கே வந்த டார்ட்டர்கள் ஜிலினையும் காஸ்ட்டிலினையும் கயிறால் கட்டி குதிரை மேல் ஏற்றி தங்களுடன் கொண்டு சென்றார்கள். இரண்டு மைல் தூரம் சென்றவுடன், தங்களின் மாஸ்டரான அப்துல்லை அவர்கள் பார்த்தார்கள். அப்துல்லாவுக்குப் பின்னால் வேறு இரண்டு டார்ட்டர்கள் இருந்தார்கள். ஜிலினையும் காஸ்ட்டிலினையும் பிடித்துக்கொண்டு வந்த வேறு கிராமத்து டார்ட்டர்களிடம் சில நிமிடங்கள் பேசிய அப்துல் அவர்கள் இருவரையும் தனக்குச் சொந்தமான இரு குதிரைகளின் மீது ஏற்றி மீண்டும் அவர்களை ‘அவுல்’லுக்குக் கொண்டு போனான். அப்துல் இப்போது சிறிதுகூட சிரிக்கவில்லை. அவர்களைப் பார்த்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. பொழுது விடியும் நேரத்தில் அவர்கள் ‘அவுல்’லை அடைந்தார்கள். அவர்களைத் தெருவில் நிற்கவைத்தான் அப்துல். சிறுவர்கள் ஓடிவந்து அங்கு குழுமினார்கள். கற்களை அவர்கள் மீது வீசி எறிந்தார்கள். அவர்களைப் பார்த்து சிறுவர்கள் ஊளையிட்டார்கள். கையிலிருந்த சாட்டையால் அவர்கள் இருவரையும் அடித்தார்கள். டார்ட்டர்கள் அனைவரும் வட்டமாக வந்து நின்றார்கள். மலையின் அடிவாரத்தில் இருக்கும் அந்த வயதான மனிதனும் அங்கு இருந்தான். அவர்கள் தங்களுக்குள் என்னவோ விவாதித்தார்கள். தன்னையும் காஸ்ட்டிலினையும் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர்கள் இப்போது விவாதிக்கிறார்கள் என்ற உண்மையை ஜிலினால் புரிந்து கொள்ள முடிந்தது. மலைப்பகுதியில் இன்னும் அதிக தூரத்தில் அவர்கள் இருவரையும் கொண்டு போய் விடவேண்டுமென்று சிலர் சொன்னார்கள். ஆனால் அந்த வயதான மனிதன் சொன்னான்: ‘‘இவங்க ரெண்டு பேரும் கட்டாயம் கொல்லப்படணும்!’’
அப்துல் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் சொன்னான்: ‘‘நான் இவங்களுக்காகப் பணம் தந்திருக்கேன். அந்தப் பணத்தை நான் திரும்பப் பெற்றாகணும்’’ அதற்கு அந்த வயதான கிழவன் சொன்னான்: ‘‘இவங்க உனக்கு காசே தரப்போறது இல்ல. தேவையில்லாத தொந்தரவுகளைத்தான் இவங்க ரெண்டு பேரும் உனக்கு கொண்டு வந்து தரப்போறாங்க. ரஷ்யர்களை உட்கார வச்சு சாப்பாடு போடுறதுன்றது உண்மையிலேயே ஒரு பாவச்செயல். இவங்களை உடனடியா கொல்றதுக்கு வழியைப் பாரு.’’ அனைவரும் கலைந்தார்கள். அவர்கள் எல்லோரும் சென்றதும் மாஸ்டர் ஜிலினின் அருகில் வந்து சொன்னான். ‘‘ரெண்டு வாரத்திற்குள் உங்களோட பணம் எனக்கு வந்து சேரலைன்னா, நான் உங்க ரெண்டு பேரையும் கொன்னுடுவேன். திரும்பவும் தப்பி ஓடணும்னு நினைச்சா, நாயைச் சுடுற மாதிரி சுட்டுத் தள்ளிடுவேன். ஒழுங்கா கடிதம் எழுது. எதை எழுதணுமோ, அதை எழுது...’’ அவர்களுக்கு தாள்கள் கொண்டு வந்து தரப்பட்டன. அவர்கள் கடிதத்தை எழுதினார்கள். அவர்களின் கால்களில் விலங்குகள் மாட்டப்பட்டன. மசூதிக்குப் பின்னாலிருந்த பன்னிரண்டு அளவில் சதுரமாக அமைந்திருந்த குழிக்குள் அவர்கள் இருவரும் இறக்கப்பட்டார்கள்.
அவர்கள் வாழ்க்கையே இப்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களின் கால்களிலிருந்த விலங்குகள் சிறிதுநேரம்கூட நீக்கப்படவில்லை. நல்ல காற்றை சுவாசிப்பதற்குக்கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாய்க்கு விட்டெறிவதைப்போல சரியாக வேகாத பண்டங்களை அவர்களுக்குத் தூக்கிப் போட்டார்கள். ஒரு பீப்பாயில் அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் வைக்கப்பட்டிருந்த குழி மிகவும் ஈரத்தன்மையுடன் இருந்தது. தாங்க முடியாத அளவிற்கு ஒரு கெட்ட நாற்றம் அதில் வந்து கொண்டிருந்தது. காஸ்ட்டிலின் உடல் நலம் பாதிக்கப்பட்டான். அவனுடைய உடம்பு வீங்க ஆரம்பித்தது. வலியைத் தாங்க முடியாமல் எப்போது பார்த்தாலும் அவன் அனத்திக் கொண்டே இருந்தான். இல்லாவிட்டால் எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டே இருந்தான். ஜிலின்கூட மிகவும் சோர்வடைந்து போய்விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுடைய தற்போதைய நிலைமை மிகவும் மோசமானது என்பதையும் தப்பிப்பதற்கான வழி இல்லவே இல்லை என்பதையும் அவன் புரிந்து கொள்ளாமல் இல்லை. அவன் ஒருவழி உண்டாக்க முயற்சித்தான். ஆனால் தோண்டப்படும் மண்ணை எங்கே போடுவது? அவனுடைய செயலைப் பார்த்த அப்துல் இனியொரு முறை அப்படி நடக்கும்பட்சம், அவனைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியேயில்லை என்றான். ஒருநாள் ஜிலின் அந்தக் குழியின் தரையில் உட்கார்ந்திருந்தான். சுதந்திர வேட்கை அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. தன்னுடைய தற்போதைய நிலைமையை நினைத்து அவன் மிகவும் கவலை கொண்டான். அப்போது அவனுடைய மடியில் ஒரு கேக் வந்து விழுந்தது. தொடர்ந்து இன்னொரு கேக் வந்து விழுந்தது. பிறகு நிறைய செர்ரி பழங்கள் வந்து விழுந்தன. அவன் மேலே பார்த்தான். அங்கு தினா நின்றிருந்தாள். அவள் அவனைப் பார்த்து சிரித்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, அங்கிருந்து ஓடினாள். ஜிலின் மனதிற்குள் நினைத்தான் ‘தினா எனக்கு ஏன் உதவக்கூடாது?’’ அவன் குழிக்குள் ஒரு சிறு பகுதியை சுத்தம் செய்தான். கொஞ்சம் மண்ணைச் சுரண்டி எடுத்தான். அதை வைத்து பொம்மைகள் செய்தான். அவன் மனிதர்கள், குதிரைகள், நாய்கள் என்று பலவகைப்பட்ட பொம்மைகளைச் செய்தான். அப்போது அவன் மனதிற்குள் நினைத்தான். ’தினா வர்றப்போ நான் இந்த பொம்மைகளை அவள் மேல எறியணும்.’ ஆனால், அடுத்த நாள் தினா வரவில்லை. குதிரைகளின் குளம்படி ஓசையை ஜிலின் கேட்டான். சில மனிதர்கள் வேகமாக குதிரைகளில் சென்றார்கள். டார்ட்டர்கள் கூட்டமாக மசூதிக்கருகில் நின்றிருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் சத்தமிட்டவாறு என்னவோ தங்களுக்குள் விவாதித்தார்கள். ‘ரஷ்யன்கள்’ என்ற வார்த்தை அவர்கள் வாயில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அவன் அந்த வயதான கிழவனின் குரலைக் கேட்டான். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அப்படியே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை யென்றாலும், ரஷ்யப்படைகள் எங்கோ சமீபத்தில் இருக்கின்றன என்பதை மட்டும் ஓரளவுக்கு அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் இந்த ‘அவுல்’லுக்குள் வந்துவிடுவார்களோ என்று அங்கிருந்த டார்ட்டர்கள் பயந்தார்கள். கைதிகளை என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்தார்கள். சிறிது நேரம் தங்களுக்குள் என்னவோ விவாதித்து விட்டு, அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அப்போது மேலே ஒரு ஓசை கேட்டது. என்னவென்று பார்த்தால் தினா குழியின் மேற்பகுதியில் படுத்தவாறு தன்னுடைய உடலில் இருந்த காசுகள் ஒசை உண்டாக்கும் வண்ணம் குனிந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் நட்சத்திரங்களைப்போல் மின்னின. அவள் தன்னுடைய சட்டைக்குள்ளிருந்து இரண்டு வெண்ணெய் கட்டிகளை எடுத்து அவற்றை ஜிலின்மீது எறிந்தாள். ஜிலின் அவற்றை எடுத்துக் கொண்டு சொன்னான்: ‘‘நீ ஏன் இதுக்கு முன்னாடி வரல? நான் உனக்காக சில பொம்மைகளை செய்து வைச்சிருக்கேன். இந்தா... பிடிச்சுக்கோ’’ அவன் பொம்மைகளை அவளை நோக்கி மேலே தூக்கி எறிய ஆரம்பித்தான். ஆனால், அவள் தன்னுடைய தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள். அவள் அந்த பொம்மைகளைப் பார்க்கவேயில்லை. ‘‘எனக்கு இது எதுவும் வேணாம்’’ - அவள் சொன்னாள். அவள் அங்கேயே சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டாள். ‘‘ஜவான், அவங்க உன்னை கொல்லப் போறாங்க’’ என்று சொன்ன அவள் தன்னுடைய தொண்டையில் கையை வைத்துக் காட்டினாள். ‘‘யார் என்னைக் கொலை செய்ய விரும்புறது?’’ ‘‘அப்பா... அவர் உன்னைக் கட்டாயம் கொலை செய்தே ஆகணும்னு வயதான பெரியவர் பிடிவாதமா சொல்றாரு. நான் உனக்காக வருத்தப்படுறேன்.’’ ஜிலின் சொன்னான்: ‘‘சரி... எனக்காக உண்மையிலேயே வருத்தப்படுறதா இருந்தா, ஒரு நீளமான கம்பைக் கொண்டு வா. அவள் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டியவாறு சொன்னாள்: ‘‘என்னால அது முடியாது.’’ அவன் தன்னுடைய கைகளைத் குவித்தவாறு கெஞ்சினான். ‘‘தினா, எனக்காக நீ இதைச் செய்யணும். என் அன்பு தினா உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன்...’’ ‘‘என்னால முடியாது’’- அவள் சொன்னாள்: ‘‘நான் அதை எடுத்துட்டு வர்றப்போ, நிச்சயம் அவங்க என்னை பார்த்துடுவாங்க. அவங்க எல்லோரும் வீட்டுலதான் இருக்காங்க’’ என்று சொல்ல அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
சாயங்காலம் வந்ததும் ஜிலின் மேலே அவ்வப்போது பார்த்து கொண்டு என்ன நடக்கப்போகிறதோ என்பதை எதிர்பார்த்து குழிக்குள் அமர்ந்திருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஆனால், நிலவு இன்னும் வரவில்லை. முல்லாவின் குரல் கேட்டது. மற்றபடி எங்கும் அமைதி நிலவியது. ஜிலின் மிகவும் சோர்வடைந்த நிலையில் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: ‘அந்தப் பொண்ணு கம்பைக் கொண்டு வந்து தர்றதுக்குப் பயப்படுது.’ திடீரென்று தன் தலை மேல் மண் வந்து விழுவதைப்போல் உணர்ந்தான் ஜிலின். அவன் மேலே பார்த்தான். ஒரு நீளமான கம்பு குழியின் எதிர்சுவரின் வழியாகக் கீழே வந்து கொண்டிருந்தது. மெதுவாகக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த அந்தக்கம்பு சிறிது நேரம் சென்றதும் நின்றது. உண்மையிலேயே மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டான் ஜிலின். அவன் அந்தக்கம்பைக் கீழ்நோக்கி இழுத்தான். அது ஒரு உறுதியான கம்புதான். தன்னுடைய மாஸ்டரின் குடிலின் மேற்பகுதியில் அவன் இதற்கு முன்பு அந்தக் கம்பைப் பார்த்திருக்கிறான். அவன் மேலே பார்த்தான். வானத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. குழிக்கு மேலே தினாவின் கண்கள் இருட்டில் பூனையின் கண்களைப்போல பிரகாசமாகத் தெரிந்தன. அவள் குழியின் மேல்விளிம்போடு சேர்ந்து தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டு மெதுவான குரலில் சொன்னாள் : ‘‘ஜவான் ! ஜவான் !’’ தன்னுடைய கையை முகத்திற்கு நேராக வைத்துக் கொண்டு அவனை மெதுவாகப் பேசும்படி அவள் கேட்டுக் கொண்டாள். ‘‘என்ன ?’’ - ஜிலின் கேட்டான். ‘‘ரெண்டு பேரைத் தவிர மற்ற எல்லோரும் போயிட்டாங்க.’’ அப்போது ஜிலின் சொன்னான் : காஸ்ட்டிலின்... வா, கடைசி முறையா நாம முயற்சி செய்து பார்ப்போம். நான் உன்னை எழ வைக்க உதவுறேன்.’’ ஆனால், காஸ்ட்டிலின் அதைப் பொருட்படுத்தவேயில்லை. ‘‘இல்ல...’’ - அவன் சொன்னான் : ‘‘ஒரு விஷயம் எனக்கு நல்லா தெரியும். இங்கே இருந்து நான் போகவே முடியாது. என் உடம்புல எந்த சக்தியும் இல்லாம இருக்குறப்போ நான் எப்படி தப்பிச்சுப் போக முடியும் ?’’ ‘‘சரி... அப்படின்னா நான் கிளம்புறேன். என்னைப் பற்றி தப்பா நினைக்காதே.’’ அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள். ஜிலின் கம்பை எடுத்தான். மேலே இருக்கும் தினாவிடம் அதை இறுகப் பிடித்துக் கொள்ளும்படி சொன்னான். இப்போது அவன் கம்புவழியாக மேலே ஏற ஆரம்பித்தான். ஒன்றிரண்டு முறை அவன் தடுமாறிக் கீழே விழுந்தான். காலில் கட்டப்பட்டிருந்த விலங்குகள் அவனுக்கு மிகவும் தொந்தரவாக இருந்தன. காஸ்ட்டிலின் அவனுக்கு உதவ, அவன் மேலே வந்து சேர்ந்தான். தினா தன்னுடைய சிறு கைகளால் தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அவனுடைய சட்டையைப் பிடித்துத் தூக்கினாள். அப்போது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஜிலின் கம்பை வெளியே எடுத்துவிட்டு சொன்னான் : ‘‘இந்தக் கம்பை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வச்சிடு, தினா. கண்டு பிடிச்சிட்டாங்கன்னா, உன்னை அடிச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க.’’ அவள் அந்தக் கம்பை எடுத்துக் கொண்டு போனாள். ஜிலின் மலையை விட்டு கீழே இறங்கினான். அவன் சற்று கீழே இறங்கியவுடன் கூர்மையான ஒரு கல்லை எடுத்து தன்னுடைய விலங்கை உடைக்க முயற்சித்தான். ஆனால், அது மிகவும் பலமாகப் பூட்டப்பட்டிருந்தால் அவனால் அதை உடைக்க முடியவில்லை. அப்படி உடைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. மலையின் கீழ்நோக்கி யாரோ மெதுவாக ஓடிவருவது தெரிந்தது. அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான் : ‘நிச்சயமா, தினாவாகத்தான் இருக்கும்...’ தினா வந்தாள். ஒரு கல்லை கையில் எடுத்துக் கொண்டு சொன்னாள் : ‘‘நான் முயற்சி பண்றேன்.’’ அவள் கீழே அமர்ந்து விலங்கின் பூட்டை உடைக்க முயற்சி செய்தாள். ஆனால், அவளின் சிறு கைகள் சிறு செடிகளின் கைகளைப் போல மிகவும் மென்மையாக இருந்ததால், அதற்கான சக்தி அவளுக்கு இல்லை. அவள் கையிலிருந்த கல்லைத் தூக்கியெறிந்து விட்டு அழ ஆரம்பித்தாள். ஜிலின் மீண்டும் பூட்டை உடைப்பதற்கான வேலையில் இறங்கினான். தினா அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து தன்னுடைய கைகளை அவனுடைய தோளில் போட்டாள். ஜிலின் சுற்றிலும் பார்த்தான். மலைக்குப் பின்னால் இடது பக்கத்தில் ஒரு சிவப்பு விளக்கு தெரிந்தது. நிலவு மெதுவாக உதித்துக் கொண்டிருந்தது. அவன் மனதிற்குள் நினைத்தான் : ‘‘நிலவு வர்றதுக்கு முன்னாடி நான் பள்ளத்தாக்கைத் தாண்டி காட்டுக்குள்ளே போயிடணும்.’’ அவன் கையிலிருந்த கல்லை வீசியெறிந்தான். விலங்குகள் இருக்கின்றனவோ இல்லையோ, அவன் இங்கிருந்து கட்டாயம் சென்றாக வேண்டும். ‘‘என் அன்பு தினா, நான் வர்றேன். உன்னை எந்தக் காலத்திலும் நான் மறக்கவே மாட்டேன்.’’ தினா அவனுடைய கையைப் பற்றி தன்னுடைய கைகளுடன் இறுகச் சேர்த்து வைத்துக் கொண்டாள். தான் கொண்டு வந்திருந்த வெண்ணெய் கட்டிகள் சிலவற்றை அவனிடம் தந்தாள். அவன் அவளிடமிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டான். ‘‘நன்றி, சின்னப்பெண்ணே ! நான் போயிட்டா உனக்காக யார் பொம்மை செய்து தருவாங்க ?’’ என்று சொல்லியவாறு அவன் தினாவின் தலையைக் கோதினான். தினா கண்ணீர் விட்டு அழுதாள். தன்னுடைய முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டாள். தொடர்ந்து எழுந்து ஒரு இளம் ஆட்டுக் குட்டியைப் போல் மலையின் மேற்பகுதி நோக்கி ஓடினாள். அவளின் இடுப்பிலிருந்த காசுகள் அப்போது குலுங்கின. ஜிலின் நடக்க ஆரம்பித்தான். விலங்குகளின் பூட்டைத் தன்னுடைய கைகளில் எடுத்து வைத்துக் கொண்டான். தேவையில்லாமல் அது ; ஏன் ஓசையை உண்டாக்க வேண்டும் என்று அவன் நினைத்ததே காரணம். அவன் விலங்குகள் மாட்டப்பட்ட தன்னுடைய கால்களை இழுத்தபடி நிலவு உதிக்கும் திசையைப் பார்த்தவாறு சாலையில் நடந்து சென்றான். அவனுக்கு இப்போது பாதை நன்றாகத் தெரிந்தது. அவன் நேராக நடந்து சென்றால் கிட்டத்தட்ட ஆறு மைல்கள் அவன் நடக்க வேண்டும். நிலவு சரியாக உதிப்பதற்கு முன்பே அவன் காட்டை அடைய வேண்டும். அவன் ஆற்றைக் கடந்தான். மலைக்குப் பின்னால் வெளிச்சம் மேலும் சற்றுப் பிரகாசமாகத் தெரிந்தது. அவன் அதைப் பார்த்துக் கொண்டே பள்ளத்தாக்கின் வழியே நடந்தான். நிலவு சரியாக முகத்தைக் காட்டவில்லை. ஒளி மேலும் பிரகாசமாகத் தெரிந்தது. பள்ளத்தாக்கின் ஒரு பக்கம் மேலும் மேலும் பிரகாசமாகிக் கொண்டே வந்தது. மலையின் அடிவாரத்தில் நிழல்கள் தெரிய ஆரம்பித்தன. அந்த நிழல்கள் அவனை நோக்கி மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டேயிருந்தது.
ஜிலின் அந்த நிழலில் நடந்து கொண்டேயிருந்தான். அவன் மிகவும் வேகமாக நடந்தான். நிலவு மேலும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் இருந்த மலையின் மேற்பகுதிகள் நிலவு வெளிச்சத்தில் படுபிரகாசமாக இருந்தன. அவன் காட்டை அடைந்தபோது, வெள்ளை நிறத்தில் நிலவு மலைக்குப் பின்னாலிருந்து தன்னுடைய முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. பகலைப் போல அது ஒளிர்ந்து கொண்டிருந்தது. மலைகளில் இருந்த எல்லா இடங்களையும் ஒருவர் அந்த நேரத்தில் பார்க்கலாம். அந்த அளவிற்குப் படுபிரகாசமாக இருந்தது. நிலவு மலையில் நல்ல வெளிச்சம் இருந்தது. ஆனால், எதுவுமே உயிர்ப்புடன் இல்லாததைப் போல், சாந்தமான ஒரு சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. கீழே ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் ஓசையைத் தவிர, வேறு எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. ஜிலின் வழியில் யாரையும் சந்திக்காமல் காட்டை அடைந்தான். இருண்ட ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சற்று ஓய்வு எடுப்பதற்காகப் போய் அமர்ந்தான். அவன் அங்கு அமர்ந்து, கையிலிருந்த வெண்ணெய் கட்டிகளில் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். அங்கிருந்த கல்லை எடுத்து தன்னுடைய காலில் இருந்த விலங்குகளை உடைக்க முயற்சித்தான். அவனால் இந்தப் பூட்டை உடைக்க முடியவில்லை. மீண்டும் எழுந்து அதே சாலையில் நடக்க ஆரம்பித்தான். பெரும்பாலான தூரத்தை அவன் கடந்ததும், அவன் மிகவும் களைப்படைந்து விட்டான். அவனுடைய பாதங்கள் பயங்கரமாக வலித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பத்து அடிகளுக்கும் அவன் நின்று இளைப்பாற வேண்டி வந்தது. ‘இப்போ நான் என்ன செய்றது ?’ - அவன் தன்னுடைய மனதிற்குள் நினைத்தான் : ‘‘என் உடம்புலசக்தி இருக்குற வரைக்கும், கஷ்டப்பட்டு நடக்க வேண்டியதுதான். நான் உட்கார்ந்துட்டா, அதுக்குப் பின்னாடி என்னால எழுந்து நடக்க முடியாமல் போயிடும். என்னால ரஷ்யர்களின் முகாமை அடைய முடியாமலே போயிடும். பொழுது விடிஞ்சதும், காட்டுலேயே இருந்துட வேண்டியதுதான். பகல் முழுக்க காட்டுல இருந்திட்டு, இரவு வந்ததும் மீண்டும் நடக்க வேண்டியதுதான்.’’ அவன் இரவு முழுக்க நடந்தான். குதிரை மீது அமர்ந்திருந்த இரண்டு டார்ட்டர்கள் அவனைக் கடந்து சென்றார்கள். தூரத்தில் வரும்போதே அவர்களை அவன் பார்த்துவிட்டதால், அவன் ஒரு மரத்திற்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டான். நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகிக் கொண்டிருந்தது. பனி விழத் தொடங்கியது. பொழுது புலரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஜிலின் இன்னும் காட்டின்இறுதிப் பகுதியை அடையாமல் இருந்தான். ‘சரிதான்...’ அவன் தன்னுடைய மனதிற்குள் நினைத்தான் : ‘இன்னும் முப்பதடி தூரம் நடந்து, மரங்களுக்கு மத்தியில போயி உட்கார வேண்டியதுதான்.’ அவன் மேலும் முப்பதடிகள் நடக்க, காட்டின் இறுதிப் பகுதியில் அவன் நின்றிருந்தான். அவன் எல்லையை அடைந்தான். அங்கு நல்ல வெளிச்சம் இருந்ததுது அவனுக்கு முன்னால் பரந்து கிடக்கும் சமவெளியும் பரந்து கிடக்கும் கோட்டையும் தெரிந்தது. இடது பக்கத்தில் மலைக்குக் கீழே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை அந்தப்பகுதி முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. அந்த நெருப்பைச் சுற்றி மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். அவன் பார்த்ததான். அவன் உற்றுப் பார்த்தான். துப்பாக்கிகள் பளபளத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்தவர்கள் சிப்பாய்கள் - காஸாக்குகள் ! ஜிலினுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் தன்னுடைய உடம்பில் மீதமிருந்த சக்தியை வரவழைத்துக் கொண்டு மலையை விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான். அப்போது அவன் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்; ‘திறந்து கிடக்கும் இந்த வெளியில நான் நடக்குறப்போ, குதிரை மேல வந்து எந்த டார்டராவது என்னைப் பார்த்துடாம, கடவுள்தான் பார்த்துக்கணும். அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா, என்னால அங்க போயி சேர முடியாம போயிடும்...’ அவன் மனதிற்குள் இப்படியொரு எண்ணம் ஓடியதுதான் தாமதம்... நூறடி தூரத்தில் மூன்று டார்ட்டர்கள் அவன் கண்களில் பட்டார்கள். அவர்கள் அவனைப் பார்த்தும் விட்டார்கள். அவ்வளவுதான் - படு வேகமாக அவனை நோக்கி வந்தார்கள். அவன் உடல் தளர ஆரம்பித்தது. அவன் தன்னுடைய கைகளை ஆட்டியவாறு தன்னால் முடிந்தவரை உரத்த குரலில் கத்தினான் : ‘‘சகோதரர்களே, சகோதரர்களே... என்னைக் காப்பாத்துங்க...’’ காஸாக்குகள் அவன் கத்துவதைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் குதிரை மீது அமர்ந்து டார்ட்டர்களின் பாதைக்குக் குறுக்காக வருவதற்காக விரைந்தார்கள். காஸாக்குகள் மிகவும் தூரத்தில் இருந்தார்கள். டார்ட்டர்களோ அவனுக்கு மிகவும் அருகில் இருந்தார்கள். இருப்பினும், ஜெலின் தன்னுடைய கடைசி முயற்சியைச் செய்யாமல் இல்லை. காலில் இருந்த விலங்கைக் கையால் தூக்கிக் கொண்டு அவன் தான் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிய எண்ண்மே இல்லாமல் காஸாக்குகளை நோக்கி வேகமாக ஓடினான். போகும்போதே ‘‘சகோதரர்களே... சகோதரர்களே... சகோதரர்களே...’’ என்று கத்திக் கொண்டே சென்றான். அங்கு கிட்டத்தட்ட பதினைந்து காஸாக்குகள் இருந்தார்கள். டார்ட்டர்கள் இப்போது பயந்து விட்டார்கள். அவனை நெருங்காமல், அவர்கள் நின்றுவிட்டார்கள். ஜிலின் காஸாக்குகளின் அருகில் போய் நின்றான். அவர்கள் அவனைச் சுற்றிலும் இருந்து அவனைப் பார்த்துக் கேட்டார்கள் : ‘‘நீ யார் ? நீ என்னவா இருக்கே ? எங்கேயிருந்து வர்றே ?’’ ஆனால், ஜிலினால் உடனடியாக எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அவன் அழுதுகொண்டே திரும்பத் திரும்ப சொன்னான் : ‘சகோதரர்களே... சகோதரர்களே...’’ சிப்பாய்கள் ஓடிவந்து ஜிலினைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒருவன் ரொட்டியை எடுத்து ஜிலினிடம் தந்தான். இன்னொருவன் கோதுமையால் ஆன ஒரு உணவுப்பொருளைத் தந்தான். வேறொருவன் வோட்காவைக் கொடுத்தான். ஒருவன் அவனை ஒரு போர்வையால் போர்த்தினான். இன்னொருவன் அவன் விலங்கை உடைத்தான். அதிகாரிகள் அவனை அடையாளம் தெரிந்து கொண்டார்கள். அவனைக் குதிரையில் தங்களுடன் முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த போர்வீரர்கள் அவனை மீண்டும் காண நேர்ந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அவனுடைய நண்பர்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஜிலின் அவர்களிடம் தனக்கு நேர்ந்த கதையை ஒன்று விடாமல் சொன்னான். ‘‘இப்படித்தான் நான் வீட்டுக்குப் போய் கல்யாணம் பண்ணினேன்.’’ - அவன் சொன்னான் : ‘‘இல்ல... விதி அந்த விஷயத்திற்கு எதிராக இருக்குன்றதை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது.’’ அவன் சேவை காக்கஸில் தொடர்ந்தது. ஒரு மாதம் கழித்து அய்யாயிரம் ரூபிள்கள் பிணைத்தொகையாகக் கட்டப்பட்ட பிறகு, காஸ்ட்டிலின் விடுதலை செய்யப்பட்டான். அவனை அவர்கள் மீண்டும் கொண்டு வந்தபோது, கிட்டத்தட்ட அவன் இறந்து போயிருந்தான்.