Logo

வண்டியைத் தேடி...

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6597
vandiyai thedi

டல் மிகவும் அமைதியாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, அலைகளுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் கடல் காகங்களையும் அவற்றின் சிறகுகளில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியனின் கதிர்களையும் ஒரு கனவில் பார்ப்பதைப் போல நம்மால் காண முடியும்.

கடந்த சில நாட்களாகவே வானம் பயங்கரமாக மூடிக் கொண்டிருக்கிறது. காற்று பலமாக வீசுகிறது. இரவு முழுவதும் பெய்து கொண்டிருக்கும் பனி அந்தக் காற்றில் பட்டு ஒருவகை பயத்துடன் நாற்புறமும் பரவி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெயிலின் பலமிழந்த கீற்றுகள் அதில் சக்தியற்றுப் போய் விடுகின்றன. மதியம் வரை காற்றின் தாக்கம் பெரிதாகவே இருக்கிறது. மதிய நேரம் வருகிறபோது வெளிறிப் போன சூரியன் மேகங்களுக்குப் பின்னாலிருந்து போதை மாத்திரை சாப்பிட்ட ஒரு மனிதனைப் போல மெதுவாகத் தன்னுடைய முகத்தை வெளியே காட்டுகிறான். அதற்குப் பிறகு காற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக, மேற்கு திசையில் பலமிழந்த மஞ்சள் வெளிச்சம் எந்தவித இலக்கும் இல்லாமல் எல்லா இடங்களில் பரவி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அது சிறிது நேரத்திற்குத்தான். அதற்குள் மாலை நேரம் வந்து சேர்கிறது. இதுவரை கொஞ்ச நேரத்திற்கு விடை பெற்று மறைந்து போயிருந்த அந்தக் குளிர்க் காற்று, மீண்டும் பாய்ந்து வருகிறது. அது சூரியனை எங்கோ இழுத்துக்கொண்டு போகிறது. கடலுக்குக் கீழேயிருந்து பனியை அள்ளி எடுத்து எங்கள் மேல் வேகமாக அது எறிந்து விளையாடுகிறது. குளிர்ச்சியான முகத்தைக் கொண்ட சந்திரனை ஆகாயத்தின் ஒரு மூலையில் ஒரு காட்சி பொருளைப் போல வந்து நிறுத்துகிறது.

இப்படித்தான் கடந்த சில நாட்கள் இருந்தன. மக்கள் சூரியனைத் திட்டினார்கள். காற்றைக் கண்டபடி ஏசினார்கள். பகல் நேரத்தை வெறுத்தார்கள். மாலை நேரம் என்ற ஒன்றையே மறந்தார்கள். சந்திரனைப் பார்த்து கோபம் கொண்டார்கள். இரவுடன் சங்கமமாகி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படி உறங்கும்போது மக்கள் தங்களைத் தாங்களே திட்டிக் கொள்வதும், சாபமிடுவதும், வெறுப்பதும், மறப்பதும், கோபம் கொள்வதுமாய் இருந்தார்கள். கடைசியில் இரவுடன் ஐக்கியமாகி உறங்கியும் போனார்கள்.

இன்று அப்படியில்லை. இன்று அந்தப் பாழாய்ப்போன காற்று இல்லை. உடம்பில் ஊசிமுனைகளைப் போல வேகமாக வந்து குத்திக் கொண்டிருக்கும் பனியின் தாக்கமில்லை.

மனம் விட்டு கூறுவதாக இருந்தால் இப்படியொரு முகம் இந்த நாளுக்கு இருக்கும் என்பதை கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கவே இல்லை. எப்போதும் போல மதியம் வரை இருக்கும் தூக்கத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு போர்வையை இழுத்து மூடி படுத்துக் கிடந்தான் அவன். வெளியே போகலாமென்றால் கடுமையான காற்றை நினைத்துப் பார்க்கும்போது ஒரே பயமாக இருந்தது. அப்படியே வெளியே போனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அவனின் தந்தை அவனை அடித்து எழுப்பினான். “டேய் புருஷா, எந்திரி... எந்திரிடா...”

தன் தந்தையின் குரலில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தோஷத்தின் ரேகைகள் தெரிந்தன.

போர்வையில் இருந்த பல ஓட்டைகளில் ஒரு ஓட்டை வழியாக புருஷன், தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.

அந்த முகத்தில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு தெரிந்தது. வயதாகிப் போயிருந்த அந்த தேகத்தில் ஒருவகை வேகமும், ஆவேசமும் தெரிந்தன.

“இன்னைக்குக் காற்று, மழை எதுவும் இல்ல...”

அவன் தந்தை உரத்த குரலில் சொன்னான்.

“இன்னைக்கு வானம் ரொம்பவும் தெளிவா இருக்கு.”

“அதற்கென்ன?”

“நீ இப்படி இழுத்து மூடி தூங்கிக்கிட்டு இருக்கக்கூடாது.”

அதற்கு மேல் தன் தந்தையைப் பார்த்து அவன் ஒன்றும் கேட்கவில்லை. கடந்த சில நாட்களாக, ஏன் மாதக் கணக்கில் என்று கூடச் சொல்லலாம். அவர்கள் வீடு பட்டினியில்தான் கிடக்கிறது. அவன் வெளியே போய் வரவில்லையென்றால், இன்னும் இப்படியே பட்டினியில் கிடக்க வேண்டியதுதான்.

“நான் வெளியே போயிட்டு வர்றேன்...” - புருஷன் சொன்னான். “அப்பா... நீங்க படுத்து தூங்குங்க...”

“சரி... நீ எங்கே போற?”

“கடற்கரைக்கு.”

“பக்கத்து வீட்டுல இருக்குறவங்க காட்டுப்பக்கம் போறாங்க.”

“அவங்க காட்டுக்குப் போகட்டும். நான் கடலைத் தேடிப் போறேன்.”

வாசலில் வந்து நின்றபோது, மூன்று வீடுகளின் முற்றத்திலும் ஆட்கள் நின்றிருந்தார்கள். கடந்த சில நாட்களாகவே, இப்படியொரு காட்சியை அவனால் பார்க்கவே முடியவில்லை. இந்த நேரத்தில் மூன்று வீடுகளும் சொல்லி வைத்ததைப் போல பனிப்படலத்தால் மூடிக் கிடப்பதுதான் பொதுவாக நடந்து கொண்டிருக்க வேண்டிய ஒன்று. புகை இருக்காது. வெப்பம் இருக்காது. ஆட்களின் அடையாளமே இருக்காது.

அவன் வீட்டையொட்டி இருக்கும் ராமனின் வீட்டிலிருந்து ராமனும் அவன் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் சேர்ந்து காட்டை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவர்களுக்கு முன்னால் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் நாய்கள் சங்கு வெடிக்குமளவிற்கு குரைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. அவற்றின் பற்கள் வெயிலில் பிரகாசித்தன. பசியின் கொடுமையால் அவற்றின் வால்கள் கம்பிச் சுருளைப் போல் விறைத்துக் கொண்டு நின்றன.

கடந்த சில இரவுகளாகவே பசியால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாய்களின் தொடர்ந்து ஒலிக்கும் குரைத்தல் ஒலியாக ஒழுங்காக யாரும் தூங்கவே முடியவில்லை என்பதை புருஷன் நினைத்துப் பார்த்தான். மாலை நேரம் வந்து விட்டால் அவை ஊளையிடத் தொடங்கி விடுகின்றன. நள்ளிரவு நேரத்திலும்... ஏன் அதிகாலை நேரத்திற்கு முன்பும் கூட... மூடிக்கிடக்கும் பனிப் படலத்தைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் அவற்றின் குரைத்தல் சத்தத்தையும் ஊளைச் சத்தத்தையும் இப்போது கூட மனதில் நினைத்துப் பார்த்தான் புருஷன்.

இன்று அந்த நாய்களுக்கும் உற்சாகம் பீறிட்டு கிளம்பியிருக்கிறது. அவற்றின் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பற்களிலும், காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கும் குரைப்புச் சத்தத்திலும் அந்த உற்சாகத்தின் வெளிப்பாடு தெளிவாகத் தெரிந்தது.

“ராமன், நீங்க காட்டுக்கா போறீங்க?”

எல்லோரும் அருகுல் வந்தபோது, புருஷன் அழைத்துக் கேட்டான்.

“ஆமா... நீங்க எங்க போறீங்க?”

புருஷன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. ஒரு வேளை தான் கடல் பக்கம் போவதாகச் சொன்னால், தன்னுடைய பேரப் பிள்ளைகளில் மூன்று பேரையோ நான்கு பேரையோ கடல் பக்கமாகப் போகும்படி கிழவன் கூறலாம்.

“நீங்க எங்கேயும் போகலியா?”

ராமன் மீண்டும் கேட்டான். அவனின் குரல் ஒரு பெரிய பறை ஒலிப்பதைப் போல் இருந்தது.

“போகப் போறேன்...”

புருஷன் கவலையுடன் ஒரு பொய்யைச் சொன்னான்.

“ஆனால், எங்கே போறதுன்றதை இன்னும் நான் தீர்மானிக்கல...”

“காட்டுக்குப் போறது மாதிரி இருக்கா?”


“எனக்குத் தெரியாது...”

“அப்படின்னா நாங்கள் போகட்டுமா?”

“ம்...”

அவர்கள் அனைவரும் முன்னோக்கி நடக்க, பட்டினி கிடக்கும் நாய் முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று எதையோ நினைத்துக் கொண்ட புருஷன் கேட்டான்.

“சுப்ரனோட வீட்டுல உள்ளவங்க எங்கே போறாங்கன்னு தெரியுமா?”

“தெரியாது...”

ராமனின் பிள்ளைகளில் ஒருவன் திரும்பி நின்றான். அங்கே முற்றத்தில் எல்லோரும் கூட்டமாக நின்றிருந்தார்கள்.

“இப்படியே யோசிச்சு நின்னுக்கிட்டு இருந்தா, ராத்திரி வந்திடும். பனி பெய்ய ஆரம்பிச்சிடும்.”

அவன் உரத்த குரலில் சிரித்தான். அவன் பற்கள், முன்னால் குரைத்தவாறு ஓடிக்கொண்டிருந்த நாய்களிலொன்றின் பற்களைப் போல வெயிலில் பிரகாசித்தன.

திடீரென்று மனதில் தோன்றிய மாதிரி புருஷன் சொன்னான்.

“நான் கடல் பக்கம் போறேன்.”

“ஹ... ஹ... ஹ...”

ராமனின் பிள்ளைகளும் அவனின் பேரப் பிள்ளைகளும் உரத்த குரலில் சிரித்தார்கள்.

“எங்களுக்குத் தெரியும்; நீங்க இந்த மாதிரி முட்டாள்தனமா ஏதாவது செய்வீங்கன்னு...”

புருஷன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான்.

“எப்ப வேணும்னாலும் போங்க. அங்கே அந்தப் பைத்தியக்காரன் சேஷன் இருப்பான்.”

ராமனும் அவனின் கூட்டமும் அவனை விட்டு விலகிச் சென்றார்கள். அவர்கள் நடக்க நடக்க மணலில் இருந்து தூசு கிளம்பி மேலே பறந்தது. தூசுக்கு மத்தியில் சூரியன் தெரிந்தான்.

“நீ கடல் பக்கம்தான் போறதா இருக்கா?”

வீட்டிற்குள்ளிருந்து புருஷனின் தந்தை இறங்கி வந்தான். அவுசேப் என்ற பெயரைக் கொண்ட அந்த மனிதன் ஒரு கம்பளி ஆடையை அணிந்திருந்தான்.

“ஆமா...”

புருஷன் தாழ்ந்த குரலில் சொன்னான். அவன் தூண்டிலையும், இரையையும் தேடி எடுப்பதில் ஈடுபட்டிருந்தான்.

அவுசேப் சொன்னான்.

“இன்னைக்கு இருக்குற வெளிச்சத்தைப் பார்த்து முழுசா நம்பிடாதே. ஒரு வேளை நாளைக்கே திரும்பவும் காற்று வீச ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம். வெளிச்சம் இருக்குற இன்னொரு நாள் வர்றது வரை நமக்குத் தேவையானதை நீ சேகரிக்கணும். அதை ஞாபகத்துல வச்சுக்கோ.”

புருஷன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. தூண்டில்களையும், இரை அடங்கிய பெட்டியையும், கூடையையும் எடுத்தவாறு அவன் கடலை இலக்கு வைத்து நடந்தான்.

அமைதியான கடல் தூரத்தில் இருந்தவாறு அவனை மெதுவான குரலில் பெயர் சொல்லி அழைத்தது. கையால் சைகை காட்டி “வா வா” என்றது.

2

காட்டுக்கும் கடலுக்குமிடையில் இருக்கும் இந்த கிராமத்தில் மொத்தம் இருப்பதே மூன்று வீடுகள்தாம். சுப்ரனின் வீடு, அவுசேப்பின் வீடு, ராமனின் வீடு.

அந்த நிலம் அவர்கள் மூன்று பேருக்குமே சொந்தமானது. அவர்களுக்குத் தெரிந்து நாலாவதொரு வீடென்று அங்கு எதுவுமே இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை நாலாவதொரு வீட்டுக்காரன் எவனும் அவர்கள் கண்களில் படவில்லை.

புருஷன் பிறக்கும்போது சுப்ரனின் வீட்டை ‘சேஷனின் வீடு’ என்றுதான் சொல்வார்கள். அப்போதிருந்தே அந்த மூன்று வீட்டைச் சேர்ந்தவர்களில் மதிப்பும், அறிவும் கொண்டவர்கள் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது கூட அதே நிலைதான்.

பிறகொரு நாள் மூன்று வீட்டைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி உண்டாக்கிய ஒரு பிரச்சினையால் சேஷன் அவர்களை விட்டு வெளியே போக நேர்ந்தது. நான்காவதாக ஒரு வீடு இங்கு இல்லாததால், நான்காவது வீட்டைச் சேர்ந்தவன் என்று இங்கு யாரும் இல்லாமல் இருந்ததால், சேஷன் இங்கு யாருமே இல்லாத மனிதரானார். அவரை யாருமே அதற்குப் பிறகு கண்டு கொள்ளவில்லை. அவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள், அவர் வளர்த்து ஆளாக்கிய அவரின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அவரைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி நடித்தார்கள். அவர்கள் அவரை மறக்க ஆரம்பித்தார்கள். அவரின் முகத்தை மறந்தார்கள். அனாதையான, உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லாத அந்த மனிதர் எப்போது பார்த்தாலும் கடலோரத்தில் நடந்து திரிந்து கொண்டிருந்தார்.

இதற்காக யாரைக் குற்றம் சொல்வது? தப்பு என்று பார்த்தால் சேஷனைத்தான் சொல்ல வேண்டும். அந்தத் தப்பின் விளைவாக அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக கடலோரத்தில் பல நாட்கள் நடந்து திரிந்தார். அவரின் மனதிற்குள் ஒரு கொடுங்காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தக் காற்று நாள் முழுக்க வீசிக் கொண்டிருக்கும். வருடக்கணக்காக அவரின் அந்த மவுனம் நீடித்தது. குற்ற உணர்வு அவரை அந்த அளவிற்கு அமைதியான மனிதராக ஆக்கி குறுக்கி விட்டிருக்கிறது என்பதைப் பலரும் புரிந்து கொண்டார்கள். யாரும் அவரைப் பார்த்து எதுவும் கேட்கவில்லை. அதற்குப் பிறகு ஒரு நாள் யாருமே கேட்காமல் சேஷன் வேகமாகப் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் பயன்படுத்திய மொழி மற்றவர்களின் மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. நீண்ட நாட்கள் எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்த அவர், அந்தக் காலகட்டத்தில் தனக்கென ஒரு மொழியைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொண்டார்கள். அவர் பேசும் மொழி என்னவென்பதையும், அதைப் புரிந்து கொள்வதிலும் மற்றவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் ஏதாவது புலம்பினார் என்றால், அவர்கள் எல்லோருமே பயந்தார்கள். மூன்று வீட்டைச் சேர்ந்தவர்கள் அடங்கிய சமூகம் உண்டாக்கிய விலக்கைத் தாண்ட அவர்களில் யாருக்குமே தைரியம் கிடையாது. யாருமே எதுவுமே கேட்காமல், யாரிடமும் எதுவும் பேசாமல், தனக்கென்றிருந்த மொழியில் தனக்குத் தானே பேசிக் கொண்டு சேஷன் கடலோரத்திலும் காட்டு வழிகளிலும் சுதந்திரமான மனிதராகச் சுற்றித் திரிந்தார். அவரைப் பார்த்து இளம்பெண்கள் பயந்து போய் ஓடினார்கள். வயதான பெண்கள் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு நிலத்தைப் பார்த்து துப்பினார்கள்.

சேஷன் செய்த தப்பு அந்த அளவிற்குப் பெரியதாக இருந்தது. அவர் செய்த அந்தத் தப்புக்கு மற்றவர்களின் பார்வையில் பிராயச்சித்தம் என்பது கிடையவே கிடையாது.

தன்னுடைய சொந்த மொழியைவிட்டு, மற்றவர்கள் பேசும் மொழியில் அவர் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் சொன்னார். அதைக் கேட்டவர்கள் பயந்து நடுங்கினார்கள். அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு மனிதரின், தனித்து விடப்பட்டு அனாதையாக்கப்பட்ட ஒரு மனிதரின் பழி வாங்கும் உணர்வு. துக்கம் எல்லாமே அந்த வாக்கியத்தில் இருப்பதை மற்றவர்கள் உணர்ந்தார்கள்.

“அடுத்த வண்டி வரட்டும்” - நாட்கணக்கில், வாரக்கணக்கில் சேஷன் எல்லோருக்கும் புரியக்கூடிய மொழியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.

“அப்போ நான் உங்களோட ராஜாவாக ஆவேன். எல்லாரோடயும்...”

அதைக் கேட்டு எல்லோரும் காதுகளை மூடிக்கொண்டு தூரத்தில் ஓடினார்கள். அவர்கள் மனதிற்குள் மற்றவர்களைக் கொன்று தீர்ப்பதற்காக கோபம் கொண்டு கம்பீரமாக நின்றிருக்கும் சேஷனின் உருவம் தெரிந்தது.


அவரின் காலுக்கு அடியில் கிடந்து தங்களின் உடல்கள் நொறுங்குவதையும், அவரின் மிதிபட்டு நெளிவதையும் அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.

சேஷன் அப்படி நிச்சயம் நடக்கக்கூடியவர்தான்.

தூண்டில்களைக் கடலுக்குள் போட்டுவிட்டு, கடலையொட்டி இருந்த ஒரு பாறை மேல் அமர்ந்தவாறு புருஷன் நினைத்துப் பார்த்தான். ஒரு முறை அவர் அப்படி நடக்கவும் செய்தார்.

அதுதான் முதல் தடவை. அது நடந்தது அவன் பிறப்பிற்கு முன்னால் மற்றவர்கள் சொல்லித்தான் அவனுக்கே இந்த விஷயம் தெரியும். அப்போது காட்டிற்கும் கடலுக்கும் மத்தியில் இருக்கும் இந்த இடத்தில் முழுக்க முழுக்க ஆட்சி செய்து கொண்டிருந்தது சேஷனின் தனித்துவம்தான். மற்ற யாராலும் அவர் அளவிற்கு உயர்ந்து நிற்க முடியவில்லை. புருஷனின் தந்தை அவுசேப்பும் ராமனும் சேஷனின் முன்னால் நிற்கும்போது மனதிற்குள் நடுங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். புருஷனின் தந்தையே இந்த உண்மையை பலமுறை மனம் திறந்து ஒப்புக் கொண்டிருக்கிறான்.

வறுமை முழுமையாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்த நாட்கள் அவை. மூன்று வீடுகளிலும் பட்டினி நுழைந்து அவர்களைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. அவர்கள் தங்களின் இந்த கஷ்டமான சூழ்நிலையை யாரிடம் போய்க் கூறுவார்கள்? ஏதாவதொரு இடத்திலிருந்து எதையாவது அவர்களால் வாரிக்கொண்டு வந்து விட முடியுமா என்ன? யாரிடமும் எதுவும் இல்லாமல் இருந்ததால், ஒருவரையொருவர் கூட அவர்கள் எந்தவிதத்திலும் குறைபட்டுக் கொள்வதில்லை. அவர்களின் கவனம் முழுவதும் அந்த ஒரே வாக்கியத்தின் மேல்தான் இருந்தது. அவர்களின் பசி அந்த வாக்கியத்தின் மேல் அமர்ந்து இளைப்பாறியது. அந்த வாக்கியத்தைக் கேட்கும் நேரங்களில், அவர்களின் கவலை காணாமலே போனது.

“வண்டி வருது...” - சேஷன்தான் ஒரு நாள் அவர்களிடம் இப்படிச் சொன்னார். “வண்டி வருது...”

எங்கேயிருந்து அந்த வண்டி வருகிறது என்பதை அந்த மனிதராலும் கூற முடியவில்லை. மூன்று வீட்டுக்காரர்களும் அடங்கிய சமூகத்தின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய விதத்தில் வெகு சீக்கிரம் ஒரு வண்டி வரப்போகிறது. அந்த வண்டியில் இல்லாதது என்று எதுவுமே இருக்காது.

“வண்டி புறப்பட்டாச்சா?”

கடுமையான நோய், தாங்க முடியாத பசி- இவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அவுசேப்பும், ராமனும் சில நேரங்களில் அவரைப் பார்த்துக் கேட்பார்கள்.

“அது எனக்குத் தெரியாது.”

தோல்வி என்றால் என்னவென்று தெரியாத, பட்டினி கிடந்ததால் கருப்பு வண்ணம் படர்ந்த கண்களில் நம்பிக்கை ரேகைகள் பிரகாசிக்க, சேஷன் சொல்வார்.”

“வரும்... அது மட்டும்தான் எனக்குத் தெரியும்.”

அவர் அந்த வார்த்தைகளைக் கூறும்போது, மற்றவர்கள் அவரிடம் எந்தவித கேள்வியையும் கேட்காமல், அவர் கூறுவதை அப்படியே நம்பினார்கள். அவர்கள் மனதில் நம்பிக்கைகான மின்னல்கள் தோன்றிக் கொண்டிருந்தன.

அவர்களுக்கென்று இருந்தது காடும் கடலும் மட்டும்தான். காட்டுக்குள் ஒற்றையடிப் பாதை வழியே நடந்து போகும் சிறுவர்கள் அணிலையும், முயல்களையும் பொறி வைத்துப் பிடித்தார்கள். அவர்களின் கவணில் மாட்டி காட்டுக் கிளிகள் உயிரை விட்டன. ஆனால், அவை யாருடைய பசியையும் அடக்கவில்லை. சிறுவர்கள் பெரியவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றிவிட்டு பட்டாம்பூச்சிகளைக் குறி வைத்துப் பிடித்து, அவற்றின் சிறகுகளை நீக்கி இளம் சூட்டில் வேக வைத்து தின்றார்கள். பெரியவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டால், எங்கே அவர்களுக்கும் சேர்த்து பங்கு போட வேண்டிய நிலை வந்து, தங்களுக்குள் கிடைக்க வேண்டியது சரியாகக் கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலை அவர்களுக்கு.

பெரியவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உணவு தரவேண்டும் என்பதையும், அது தங்களின் தலையாய கடமை என்பதையும் சில நாட்கள் வரை நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு தங்களின் சொந்தப் பசியை அவர்கள் நினைக்க ஆரம்பித்தபோது, பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையை காலப் போக்கில் மறந்தே போனார்கள். கடலுக்கு நடுவில் கட்டுமரத்தின் மேல் அமர்ந்து கொண்டு அவ்வப்போது கிடைக்கும் மீன்களை வேக வைத்து தின்பது என்பது அவர்களுக்கு ஒரு வாடிக்கையான செயலாகிவிட்டது.

பெண்களின் நிலைமைதான் உண்மையிலேயே மிகவும் கஷ்டமானது. காட்டைத் தேடிப் போகும் பிள்ளைகளும், கடலைத் தேடிப் போகும் ஆண்களும் பெரும்பாலான நாட்கள் எதுவுமே இல்லாமல் வெறும் கையுடன்தான் திரும்பி வருவார்கள். “எங்கே? எங்கே?” என்று கேட்டால் “எதுவுமே கிடைக்கவில்லை” என்று அவர்கள் கையை விரிப்பார்கள். பசியை மறந்து, விதியை சபித்துக்கொண்டு, உறக்கத்தின் நிழலில் சங்கமமாகி மனதில் கடவுளை வேண்டிக் கொண்டு படுத்திருக்கும் பெண்களை அவர்கள் வெறுமனே விட்டால்தானே! பிள்ளைகள் அவர்களின் மார்பகத்தில் பால் குடித்தார்கள். அவர்களின் இரத்தம் பால் வழியாக வெளியே வந்தது. இரத்தமில்லாத அந்த உடல்களின் மேல் படுத்து ஆண்கள் இன்பம் கண்டார்கள். உயிரின் கடைசிச் சொட்டுகளும் அவர்களுக்கு இப்படி நஷ்டமாயின.

வாழ்க்கை நாளுக்கு நாள் மிகவும் கஷ்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவர்களின் விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் ஒரே ஒரு வார்த்தையை நம்பிக் கொண்டு இருந்தது.

“வண்டி... வருது..”

பிள்ளைகள் தங்களின் தாய்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

“எப்பம்மா வண்டி வரும்?”

தங்களுக்குத் தெரியாது என்று தாய்மார்கள் தலையை ஆட்டினார்கள். அவர்கள் தங்களின் கணவர்மார்களிடம் கொஞ்சியபடி கேட்டார்கள்.

“வண்டி எப்போ வரும்?”

ஆண்கள் தங்களுக்குத் தெரியாது என்றார்கள். அவர்கள் தங்களின் தலைவரிடம் இது பற்றி தாழ்மையான குரலில் கேட்டார்கள்.

“எப்போ வண்டி வரும்?”

“எப்போ வரும்னு எனக்கு சொல்லத் தெரியாது. ஆனா, ஒண்ணு மட்டும் என்னால உங்கக்கிட்ட உறுதியா சொல்ல முடியும்.”

பசியால் கறுத்துப் போயிருந்த உதடுகளில் எதிர்பார்ப்பு கலந்த பிரகாசத்தை உண்டாக்கிக் கொண்ட சேஷன் அவர்களைப் பார்த்துச் சொன்னார்.

“வண்டி வரும். அது மட்டும் உண்மை.”

இந்த விஷயங்கள் புருஷன் பிறப்பதற்கு முன்பு நடைபெற்றவை.

வண்டி வந்தது கூட புருஷன் பிறப்பதற்கு முன்புதான்.

அவன் கேள்விப்பட்ட விஷயம் இதுதான். ஒரு நாள் அதிகாலை நேரத்தில் திடீரென்று வானம் கரிய மேகங்களால் சூழப்பட்டு மூடிக்கொண்டது. காடுகளின் மேல் முழுமையாக மேகங்கள் ஆக்கிரமிப்பு செய்து அவற்றைப் பூரணமாக மூடி விட்டிருந்தது. கடலுக்கப்பால் இருந்து இடி முழக்கங்கள் கேட்டன. மலைகளுக்குப் பின்னாலிருந்து தொடர்ந்து மின்னல் வெட்டிக் கொண்டே இருந்தது.

காடுகளுக்கு அப்பால், மலைகளுக்கு அப்பாலிருந்து அந்த அதிகாலை வேளையில் ஒரு மணிச்சத்தம் கேட்டது. ஆரம்பத்தில் இலேசாக ஒலித்த அந்த மணிச்சத்தம் நேரம் செல்லச் செல்ல கனமாக ஒலிக்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் ஒருவித லயத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது.


தங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்த மணிச்சத்தத்தைக் கேட்டு, அதைக் கேட்டவர்கள் பயந்து நடுங்கினார்கள்.  மரணத்தின் சத்தம் தங்களின் காதுகளில் ஒலிப்பதாக அவர்கள் ஒவ்வொருவரும் நினைத்தார்கள். அவர்களைத் தேற்றியவர் சேஷன்தான்.

“யாரும் பயப்படாதீங்க.”

அவர் எல்லோரையும் பார்த்துச் சொன்னார்.

“கடைசியில இதோ வண்டி வரப் போகுது. எல்லாரும் அதை எதிர்பார்த்து நில்லுங்க.”

காட்டிலிருந்து நீண்டு கிடக்கும் ஒற்றையடிப்பாதையின் மேல் தங்களின் விழிகளைப் பதித்தவாறு அவர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் காத்து நின்றிருந்தார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.

நேரம் கடந்து கொண்டே இருந்தது. வானத்தில் அப்போதும் வெளிச்சம் உண்டாவதாகத் தெரியவில்லை. மேலும் அது இருட்டிக் கொண்டே வந்தது. இடி முழக்கம் மேலும் பெரிதாகியது. நள்ளிரவு நேரத்தில் தெரியும் மின்னல்கள் எந்த அளவு பிரகாசமாக இருக்குமோ அந்த அளவுக்கு பிரகாசமாக இருந்தன- அந்தப் பகல் நேரத்தில் தெரிந்த மின்னல்கள்.

மணிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர வர, காத்து நின்றிருந்தவர்களின் மனதிற்குள் எதிர்பார்ப்பும் ஆர்வமும் பயமும் அதிகமாகிக் கொண்டிருந்தன. மணிச்சத்தத்தின் அளவு அதிகமாக ஆக ஆக, இருளும் அதிகமாக உண்டாகத் தொடங்கியது. கடைசியில் அந்தக் காலை வேளைக்கு இரவின் சாயல் உண்டானபோது, இடி முழக்கங்கள் பெரிதாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் கீற்றுகள் எரிந்து விழும் நட்சத்திரங்களைப் போல வானத்தில் தொடர்ந்து தோன்றி இங்குமங்குமாய் பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் வண்டி வந்தது.

காட்டின் ஒற்றையடிப் பாதையின் மத்தியில் இரண்டு கருப்பு குதிரைகள் இழுத்துக் கொண்டு வந்த ஒரு கறுப்பு வண்ண வண்டி.

குதிரைகள் இரண்டும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் வாயோரத்திலிருந்து பஞ்ச வண்ணம் கலந்த கறுப்பு நிறுத்தில் நுரை வழிந்து கொண்டிருந்தது. எவ்வளவோ தூரத்திலிருந்து, கடல்களுக்கும் மலைகளுக்கும் அப்பாலிருந்து, வந்திருப்பவை அவை என்று எல்லோருக்குமே தெரிந்தது. ஆனால், வண்டியின் வேகத்தில் வித்தியாசம் எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. வண்டி புறப்பட ஆரம்பித்ததிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் ஒரே லயத்தில், ஒரே வேகத்தில் வந்திருக்கிறது என்பதை அங்கு காத்து நின்றிருந்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

குதிரைகளைக் கட்டுப்படுத்த வண்டிக்குள் யாருமே இல்லை.

“வண்டியைப் பிடிச்சு நிறுத்துங்க”

சேஷன் கட்டளையிட்டார். மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தவாறு, ஆவேசம் மேலோங்க குதிரைக்கு முன்னால் பாய்ந்து சென்றார்கள். அவர்களுக்கு குதிரைகளைப் பார்த்தோ, அவற்றின் மிதியைப் பற்றியோ... ஏன், மரணத்தைப் பற்றியோ கூட அந்த நிமிடத்தில் பயமில்லை. பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் உரத்த குரலில் கூவியவாறு, பட்டினி கிடந்து வாடிய நரிகளைப் போல வண்டிக்கு முன்னால் வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

குதிரைகள் பயந்து போயிருக்க வேண்டும். அவை நின்றவுடன், மணிச்சத்தமும் நின்றது.

அப்போதுதான் அவர்கள் வண்டிக்குள் பார்த்தார்கள். அதற்குள் அவர்கள் கண்ட காட்சி அவர்களை பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முன் வரிசையில் நின்றிருந்தவர்கள் பயந்து போய், மனதிற்குள் நடுங்கியவாறு, பயத்தால் ஆடிக்கொண்டிருக்கும் முழங்கால்களுடன், பின்னால் நகர்ந்து போனார்கள். சிலர் யாருக்குமே தெரியாமல் அந்த இடத்தைவிட்டு நீங்கினார்கள்.

வண்டிக்குள் மனிதப் பிணங்கள் குவிந்து கிடந்தன. வெளியே விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகளைப் போல, ஒரு கூடைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செத்துப் போன மீன்களைப் போல, ஒன்றுக்கு மேல் ஒன்றாக -ஒரு முறையே இல்லாமல், செத்துப் போன மனிதர்களின் நாற்றமெடுத்த உடல்கள் அங்கு குவிக்கப்பட்டு கிடந்தன. ஒரு பிணம் கூட முழுமையாக இல்லை. ஒவ்வொரு உடலிலும் ஏதாவதொரு உறுப்பு இல்லாமல் இருந்தது. சில பிணங்களின் கை கால்கள் முற்றிலுமாக இல்லாமல் இருந்தன.

பிண நாற்றம் அந்தப் பகுதி முழுவதும் காற்றில் பரவி வந்தது. சிலர் அந்த நாற்றத்தைத் தாங்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்தனர். சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் ஒரு வகையான பதற்றமும், கோபமும் உண்டாகத் தொடங்கியது. இத்தனை நாட்களாக இந்த வண்டிக்காகவா வழிமேல் விழி வைத்து நாம் காத்திருந்தோம் என்று அங்கிருந்த ஒரே ஒரு மனிதரைத் தவிர, மற்ற எல்லோருமே நினைத்தார்கள்.

தங்களின் வறுமை முழுமையாக முடியப் போகிறது என்று நினைத்திருந்தால், நடப்பது இப்படியா இருக்க வேண்டும்? தங்களின் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெற என்னதான் வழி? - இப்படிப் பல விஷயங்களையும் அவர்கள் மனம் அலசிக் கொண்டிருந்தது.

சேஷன் மட்டும் ஒரு சிலையைப் போல நின்றவாறு ஒருவித பரபரப்புடன் காணப்பட்டார். அவர் தன்னைச் சுற்றிலும் நின்றிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். தன்னுடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் ஒன்றாகக் கூடி தனக்கு எதிராக என்னவோ கன்னா பின்னாவென்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. நீண்ட நாட்களாகத் தங்களை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்த ஒரு போலி பிரச்சாரகனைத் தாங்கள் திடீரென்று இப்போது கண்டுபிடித்து விட்டதைப் போல் மக்களின் நடவடிக்கை இருந்தது. அவர்களின் கண்களில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

“என்ன இது?”

ராமனின் வீட்டைச் சேர்ந்தவர் முன்னால் வந்து கேட்டார்கள்.

“இந்தப் பிண வண்டி எங்கேயிருந்து வருது?”

“காட்டுல இருந்து...”

சேஷன் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சொன்னார்.

“அங்கே நெருப்பு பிடிச்சிருக்கணும். எத்தனையோ வருடங்களுக்கொருமுறை இப்படி பெரிய அளவுல காட்டுல நெருப்பு பிடிக்கும். அதுல இரையானவங்கதான் இவங்க!”

“இவங்கதான் நம்மளைக் காப்பாற்ற வந்தவங்களா?”

“ஆமா...”

“உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. சரியான முழு பைத்தியம்.”

கூடியிருந்த மக்கள் விரலை முன்னோக்கி நீட்டியவாறு சேஷனைப் பார்த்துக் கத்தினார்கள்.

“நீங்க எங்களை ஏமாத்திட்டீங்க. நீங்க ஒரு மோசமான ஆளு...”

அவர்கள் அப்படிச் சொன்னதைக் கேட்டு சேஷனின் கண்கள் சிவந்தன. அவருக்கு பயங்கரமான கோபம் வந்தது. நெருப்பென சிவந்த கண்களில் இருந்து கோபத்தால் வியர்வை அரும்பி கீழ் நோக்கி வழிந்தது. ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசாமல், அவர் பலமாக கால்களை நிலத்தில் ஊன்றியவாறு வண்டியை நோக்கி நடந்து போனார். ஒரு நிமிடம் அவர் எந்தவித அசைவும் இல்லாமல் தனக்கு யாரென்றே தெரியாத அந்தச் செத்துப்போன மனிதப் பிணங்களையே வெறித்துப் பார்த்தார். அவர் கண்களில் இரக்கம் தெரிந்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும்... வண்டிக்குள் அவர்கள் கூட்டமாகக் கிடந்து நாறினார்கள். ஒரு காலத்தில் மிகவும் அழகாக இருந்த பல முகங்களும் அவருக்கு முன்னால் பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு கொடூரமாக மாறிப் போய் கிடந்தன.


பயங்கரமான ஆவேசத்துடன், பைத்தியக்காரன் போல தன்னை ஆக்கிக் கொண்டு அவர் அங்கிருந்த பிணங்களில் ஒன்றை இழுத்து வெளியே போட்டார். செத்துப் போன ஒரு நாய்க் குட்டியையோ எலியையோ தூக்கி எறிகிற மாதிரி அவர் மிகவும் சர்வ சாதாரணமாக அந்தச் செயலைச் செய்தார். அவர் கீழே எறிந்த பிணம் துண்டு துண்டாகச் சிதறியது. ஆனால், மனித உடம்பின் சதையைத் தாண்டி துண்டு துண்டாகக் கிடக்கும் மனித உறுப்புகளைத் தாண்டி, அங்கு கூடியிருந்த மக்களின் கண்களில் பட்டது வேறொன்று. அது - பிணத்தின் கையில் இறுகப் பற்றியிருந்த பொட்டலத்தில் இருந்து சிதறிக் கீழே விழுந்த ரத்தினங்களும், தங்கக் கட்டிகளும்தான்.

மக்கள் கூட்டம் ஆச்சரியப்பட்டு நின்று விட்டது. அவர்கள் அந்தப் பிணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சேஷன் சொன்னார்.

“நமக்குத் தேவையானதெல்லாம் இந்த வண்டியில இருக்கு. இந்தப் பிணங்கள்கிட்ட நமக்கு என்னவெல்லாம் வேணுமோ, எல்லாமே இருக்கு. உரிய நேரத்துல பற்றி எரியிற காட்டுத் தீ அங்கே வாழுற சில மனிதர்களை எரிச்சு அவங்க வாழ்க்கையையே முடிச்சிடுது. மீதி இருக்குற நம்மளைப் போல மனிதர்களுக்கு அது சொந்தம்.”

“இந்தப் பிணங்கள் நமக்கா?” - அவுசேப் கேட்டான்.

“நம்ம மூணு வீட்டுக்காரங்களுக்கும் உள்ளதுதான் இந்தப் பிணங்கள். நான் இந்தப் பிணங்களைப் பங்கு வச்சு தர்றேன். அதற்கு முன்னாடி இந்த வண்டியை நாம காலி பண்ணனும். குதிரைகள் சீக்கிரம் போய்ச் சேரணும்.”

அப்போது மக்கள் கூட்டம் வெளிப்படுத்திய உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஆரவாரத்தையும் இப்போது கூட புருஷனால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறது. காரணம், இரண்டாவது வண்டி வந்தபோது அவர்கள் எப்படியெல்லாம் நடந்தார்கள்; என்பதை அவனே நேரடியாகப் பார்த்தான். அவன் சிறு பிள்ளையாக இருந்தபோது நடைபெற்ற சம்பவம். இருந்தாலும், அவனால் மறக்க முடியாத அளவிற்கு அந்த நிகழ்ச்சி அவன் மனதின் அடித்தளத்தில் பசுமையாக பதிந்துவிட்டிருந்தது.

இரண்டாவது வண்டி வந்தபோது, புருஷனுக்கு நான்கோ அல்லது ஐந்தோ வயது இருக்கும்.

முதல் வண்டி வந்து போய் சில வருடங்களுக்கு, மூன்று வீட்டுக்காரர்களும் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நல்ல வசதியுடன் வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களெல்லாம் அந்த வண்டியில் இருந்தன. விலை உயர்ந்த ஆடைகள், நல்ல உணவு வகைகள், அருமையான வாசனை திரவியங்கள், விலை உயர்ந்த நகைகள், ஏராளமான ஆடம்பர பொருட்கள்...

இருந்தாலும் வருடங்கள் ஓட, ஓட, அவர்களிடமிருந்த அந்தப் பொருட்களும் படிப்படியாக காணாமல் போய்க் கொண்டிருந்தன. ஆடைகள் கிழிய ஆரம்பித்தன. சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக தீர ஆரம்பித்தன. வாசனைத் திரவியங்கள் அடங்கிய குப்பிகள் காலியாயின. வாசனைப் பொருட்கள் இல்லாத குப்பி அவர்களைப் பார்த்து சிரித்தது. நகைகள் படிப்படியாக இல்லாமல் போயின. ஆடம்பரமாகக் காட்சியளித்த பொருட்களின் பகட்டு அழிந்து, அவை வெறுமனே பல்லைக் காட்டின.

மூன்று வீட்டுக்காரர்களைக் கொண்ட அந்தச் சமூகம் மீண்டும் கஷ்டத்தில் சிக்கிக் கொண்டது. வறுமை, பட்டினி ஆகியவற்றின் கறுப்பு நிழல்கள் அவர்கள்மேல் மீண்டும் விழ ஆரம்பித்தன. ஏற்கனவே ஒருமுறை அவற்றுடன் நன்கு பழகிப் போயிருந்த வயதானவர்கள் மனதைப் சமாதானப்படுத்திக் கொண்டு நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முன்பு ஒருமுறை கூட வறுமையையோ பட்டினியையோ அனுபவித்திராத இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாளும் நீங்க நீங்க என்ன செய்வதென்று தெரியாமல் பயங்கரமான கவலையில் மூழ்கிப் போய் நின்றிருந்தார்கள். பட்டினியால் ஆங்காங்கே ஆட்கள் மரணத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள். அவுசேப்பின் மனைவியும் ராமனின் மனைவியும் இந்த உலகை விட்டு நீங்கினார்கள்.

“அடுத்த வண்டி எப்போ வரும்?”

ஆட்கள் சேஷனைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்கள். அவருக்கு கிட்டத்தட்ட எல்லோரும் ஒன்று சேர்ந்து தலைவர் பட்டத்தை இதற்குள் வழங்கி விட்டிருந்தார்கள்.”

“வரும்...” - அவர் சொன்னார். “சீக்கிரமே...”

இப்போது அவர்கள் சேஷனின் வார்த்தைகளை முழுமையாக நம்பினார்கள். தன்னுடைய வார்த்தைகளைக் கேட்பதிலும், அவற்றை நம்புவதிலும் மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட சேஷனுக்கும் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தது.

அவர் ஆட்களை அழைத்துச் சொன்னார்.

‘தூரத்துல காட்டின் மத்தியில் நெருப்பு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அது இப்போ காற்றுக்குள்ளே தன்னை மறைச்சிக்கிட்டு இருக்கு. லேசா ஜொலிக்கிறது தெரியுது. ஒரு நாள் அது பெருசா எழுந்து நிற்கும். காடு முழுக்க பிடிச்சு எரியும். எப்ப வேணும்னாலும் அது நடக்கும்...’

“காட்டுல இருக்குறவங்களுக்கு அது தெரியாதா?”

“அதைப் பார்க்க முடியாது. நம்மளை மாதிரி அவங்களும் அந்தக் காட்டுத் தீ வேணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டுத்தான் இருக்காங்க.”

“அவங்க எதற்கு வேண்டணும்?”

“மீதி இருக்குறவங்க சந்தோஷமா இருக்கலாமே! என்ன இருந்தாலும் கொஞ்ச பேராவது உயிரோட இருக்கணுமில்லையா!”

அவர் சொன்னதுதான் மிச்சம், மக்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் காட்டுக்குள்ளிருந்து வரும் ஒற்றையடிப் பாதையையே பார்த்தவாறு சதாநேரமும் உட்கார்ந்திருக்க ஆரம்பித்தார்கள். காட்டுக்குள்ளிருந்து ஒரு கிளி கத்தும் ஓசை கேட்டால்கூட போதும், அவர்கள் அலறியடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தார்கள். கொடிகள் மேல் உரசியவாறு காற்று வீசிப் போகும்போது உண்டாகும் ஒருவகை சத்தத்தைக் கேட்டு அவர்கள் பரபரப்படைந்து நின்றார்கள். எந்த நிமிடத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இரவு நேரங்களில் அவர்கள் அவ்வப்போது தூக்கத்தை விட்டு வெளியே வந்து வண்டி வருகிறதா என்று பார்த்தார்கள். பகல் நேரங்களில் காட்டில் சிறிது தூரம் நடந்து சென்று வண்டி வருகிறதா என்று பார்த்துவிட்டு திரும்பி வந்தார்கள்.

கடைசியில் ஒரு நாள் ஒரு மாலை நேரத்தில் மணிச்சத்தம் கேட்டது. எல்லோரும் ஒற்றையடிப்பாதைக்கு முன்னால் போய் காத்து நின்றார்கள். வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருண்டு கொண்டிருந்தது.

இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் மீண்டுமொருமுறை பிணங்களும் பொருட்களும் வந்து சேர்ந்தன.

அதைப் பார்ப்பதற்காகத் தன்னுடைய தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு புருஷனும் போயிருந்தான்.

வண்டியில் இருந்த பொருட்களை அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார் சேஷன். இந்த முறை விலை கூடிய நவநாகரீக பொருட்கள் பலவும் வண்டிக்குள் இருந்தன. தங்கக் கட்டிகள் உள்ளே வைத்து கட்டப்பட்ட நான்கைந்து மூட்டைகள் வண்டிக்குள் இருந்தன. எல்லா வீட்டுக்காரர்களுக்கும் தேவையான ரேடியோவும் கொஞ்சம் டெலிவிஷன் செட்டுகளும் கூட அங்கு இருந்தன.


எல்லோருக்கும் அங்கிருந்த பொருட்களைப் பங்கு வைத்துக் கொடுத்து முடித்தவுடன், அங்கு நின்றிருந்த ஒரு மனிதன் சேஷனைப் பார்த்துக் கேட்டான்.

“உங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா?”

“எனக்குத் தேவையானது வண்டியில இருக்கு.”

“எல்லோரும் வண்டிக்குள் பார்த்தார்கள். அங்கே மிகவும் அழகான ஒரு இளம் பெண்ணின் பிணம் இருந்தது.

மற்ற பிணங்களை விட அந்தப் பெண்ணின் பிணம் சற்று வித்தியாசமானதாக இருந்தது.

அதற்கு எந்தவித கேடும் உண்டாகவில்லை. அவள் தூங்கிக்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது.

அங்கு கூடியிருந்த அனைவரும் அந்தப் பெண்ணின் முகத்தையே ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தனர். இந்த அளவுக்கு அழகான ஒரு முகத்தை இதற்கு முன்பு அவர்களில் ஒருவர் கூட பார்த்ததில்லை என்பதே உண்மை. தங்களுக்குக் கிடைத்த விலை உயர்ந்த பொருட்களை விட மதிப்பு கொண்டது உயிரற்ற அந்தப் பெண்ணின் உடல் என்று அவர்கள் எல்லோருக்குமே தோன்றியது.

அங்கு நின்றிருந்தவர்களின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை ஓரளவுக்குப் புரிந்து கொண்ட சேஷன் அடுத்த நிமிடம் என்ன நினைத்தாரோ அந்த இளம்பெண்ணின் பிணத்தை வேகமாக எடுத்து தன்னுடைய தோள் மேல் போட்டார். அங்கு கூடியிருந்த மனிதர்களைப் பற்றியோ அவர்கள் தன்னைப் பற்றி மிகவும் கேவலமாக நினைப்பார்களே என்பதைப் பற்றியோ எண்ணிப் பார்க்கும் அளவிற்கு தன்னுடைய சுயசிந்தனையை அவர் முழுமையாக இழந்துவிட்டிருந்தார்.

காலியான வண்டி வந்த வழியே மீண்டும் திரும்பிச் சென்றது. கொஞ்சம் கொஞ்சமாக மணிச்சத்தம் கேட்பதும் நின்றது.

சேஷன் எல்லோரையும் வெறித்துப் பார்த்தார். அவரின் கண்கள் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனின் கண்களைப் போலவே இருந்தன. அந்தக் கண்களில் இருந்து ஒரு கரும்புகை கிளம்பிப் பரவுவதைப் போல் அங்கு நின்று கொண்டிருந்தவர்களுக்குத் தோன்றியது. ஒரு முறை கூட சமநிலை தவறாமல் நடந்திருக்கும் தங்களுடைய தலைவரிடம் உண்டான இந்தத் திடீர் மாற்றத்தைப் பார்த்து அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்று நின்றார்கள்.

சேஷனுக்கு எதுவுமே புரியும் நிலையில் இல்லை. அவரின் தொண்டைக் குழியில் இருந்து ஒரு பயங்கர அலறல் சத்தம் கிளம்பி வெளியே வந்தது. அந்தச் சத்தம் பெரிதாக ஒலிக்க ஒலிக்க, அவர் உடல் ‘கிடுகிடு’வென நடுங்க ஆரம்பித்தது. உரத்த குரலில் கத்தியவாறு, நடுங்குகிற உடலுடன் சேஷன் காட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஒற்றையடிப் பாதையின் வளைவில் அவரின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, இறுதியில் முழுமையாகக் காணாமல் போனதை அங்கிருப்பவர்கள் பார்த்தவாறு நின்றிருந்தனர்.

“அந்த ஆளு பிணத்தை வச்சு என்ன செய்யப் போறாரு?”

அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள். யாருக்கும் அந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை.

காட்டுக்குள்ளிருந்து பல்வேறு வகைப்பட்ட மிருங்களின் சத்தமும், பல ஜாதிகளைச் சேர்ந்த கிளிகளின் கத்தலும் வெளியே கேட்டது.

அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பேசியதில் மூன்று பேர்களை மட்டும் காட்டுக்குள் அனுப்புவது என்றும், அவர்கள் போய் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வரட்டும் என்றும் தீர்மானமெடுத்தார்கள். சேஷனின் மூத்த மகன் சுப்ரனும், அவுசேப்பும், ராமனும் சேர்ந்து ஒற்றையடிப்பாதை வழியாக வேகவேகமாக நடந்தார்கள்.

மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வந்தார்கள். மூன்று பேரும் தங்களுக்கு உண்டான வெட்க உணர்வில் ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தார்கள். அவர்களால் எதுவும் பேச முடியவில்லை என்பதே உண்மை. சுப்ரன் வந்த வேகத்தில் ஒரு மரத்தின் மேல் தன்னுடைய தலையால் மோதி கதறிக்கதறி அழுதான். தன்னுடைய தந்தைக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அழுகைக்கு மத்தியில் மற்றவர்களிடம் சொன்னான்.

அவர்கள் அங்கு கண்ட காட்சி உண்மையிலேயே நடுங்கக்கூடிய விதத்தில்தான் இருந்தது. காட்டின் நடுவில், ஆற்றோரத்தில் ஒரு வெள்ளை நிற பாறையின் மேல் நிர்வாணமாக இருந்த அந்த இளம்பெண்ணின் பிணத்தின்மேல் சேஷன் படுத்துக் கிடந்தார்.

அவர் அவர்களைப் பார்க்கவேயில்லை. அவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே கூச்சப்பட்டார்கள்.

பிணத்தைப் புணர்ந்து கொண்டிருக்கும் மனிதன்! அப்படிப்பட்ட ஒரு மனிதனை தங்களின் தலைவராக இனிமேலும் ஏற்றுக்கொண்டிருக்கவோ, தங்களுக்கு மத்தியில் அவரை வைத்துக் கொண்டிருக்கவோ அவர்கள் நிச்சயம் தயாராக இல்லை.

மூன்றாம் நாள் சேஷன் திரும்பி வந்தார். அவர் முழுக்க முழுக்க மாறி விட்டிருந்தார். அவரின் உடம்பிலிருந்து அழுகி நாறிப்போன மனித உடம்பின் வீச்சம் வந்து கொண்டிருந்தது. தளர்ந்து போயிருந்த கண்களில் அப்போது கூட மிருகத்தனமான ஒரு தாகத்தின கடைசி ரேகைகள் தெரிந்தன.

திரும்பி வந்த சேஷனுக்கு அங்கிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையே எந்தவித உறவும் இல்லாமல் போனது. அவர், அவர்களிடமிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்தார்- என்றென்றைக்குமாக. அவர் தனக்குள் தானே சுருண்டு கொண்டார். தன்னுடைய மொழிக்குள் தன்னை அடக்கிக் கொண்டார். தன்னை வேண்டாம் என்று வெளியிலே தூக்கியெறிந்த சமூகத்திற்கெதிராக அவர் மனதிற்குள் பகைமை எண்ணம் குடியேறியது. தனக்கு மட்டுமே தெரிந்திருக்கும் மொழியில் அவர்களுக்கெதிராக வாய்க்கு வந்தபடியெல்லாம் கடுமையான வார்த்தைகளை உதிர்த்தவாறு அவர் அந்தப் பகுதி முழுவதும் அலைந்து திரிந்தார். யாருக்கும் அவர் யாருமில்லை என்றானார்.

3

மாலை நேரமானதும், புருஷன் தூண்டில்களைக் கரைக்கு எடுத்தான்.

சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் கிடைக்கவில்லை. சமீப காலமாக கடலில்கூட ஒன்றுமே இல்லை என்ற நிலைதான்.

ஒரு பெரிய மீன் கிடைத்தது. அதை வைத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒப்பேற்றலாம். அதோடு இருந்தவை எல்லாம் ரொம்பவும் சின்னச் சின்ன மீன்களாக இருந்தன, அவற்றை இன்றைக்கு வைத்துக் கொள்ளலாம்.

மாலை நேர வெயிலில் கடல், மஞ்சள் வண்ணத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது. கடலின் அக்கரையில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போய்க் கொண்டிருந்தது. அது மறையும் காட்சியை இங்கிருந்தவாறு புருஷன் பார்த்தான்.

இன்று சேஷனைக் காணவில்லை. உண்மையிலேயே இது ஆச்சரியமான விஷயம்தான். பொதுவாக கடல் பகுதியில் ஒரு நாள் முழுக்க அலைந்தால் அவரை ஏதாவதொரு இடத்தில் நாம் கட்டாயம் பார்க்கலாம். சில நேரங்களில் அவர் தன் கையில் வைத்திருக்கும் மீன்களைத் தான் பார்ப்பவர்களுக்குத் தருவார். மற்ற நேரங்களில் பயங்கரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எங்கு போகிறோம் என்று தெரியாமலே எங்கோ நடந்து போவார்.

புருஷன் வீட்டிற்குத் திரும்பினான். அவனுக்கே வெறுப்பாக இருந்தது. இனி... ஒரு பழைய வீட்டின் மேற்கூரைக்குக் கீழே, வழக்கமான ஒரு இரவு... அவளின் தந்தையின் இருமல் சத்தம்... தூக்கத்தின் மத்தியில் கேட்கும் சாப வார்த்தைகள்...


வயிற்றுக்குள்ளிருந்து பசியின் தீ நாக்குகள் கொழுந்து விட்டு எரிந்தன. வெளியே குளிர்க்காற்று வீசும்போது கால்களில் ரோமங்கள் சிலிர்த்து நின்றன.

அவன் கூடையில் ஒன்றிரண்டு சின்ன மீன்கள் இன்னும் சாகாமல் கிடந்து இப்படியும் அப்படியுமாய் நெளிந்தன. அந்த மீன்களைப் பார்த்தவாறு அவன் தலைக்குப் பின்னால் மேலே காகங்கள் கூட்டமாகப் பறந்து கொண்டு கத்தின.

கடற்கரையிலிருந்த கோவிலுக்கு முன்னால் அவன் கடந்து சென்றபோது, கோவில் திருப்பத்தில் நின்று அவனை யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். தென்னையோலைகளில் பட்டு வீசிக்கொண்டிக்கும் காற்றாக அது இருக்கும் என்றுதான் முதலில் அவன் நினைத்தான். ஆனால், தொடர்ந்து அந்த அழைப்பு கேட்டபோதுதான் அவனே அதை சிரத்தை எடுத்து கவனிக்கத் தொடங்கினான். இந்த நேரத்தில் கோவில் திருப்பத்தில் தன்னை எதிர்பார்த்து யார் நிற்க முடியும் என்று புருஷன் ஆச்சரியப்பட்டான். அவன் அடுத்த நிமிடம் அந்த இடத்தை நோக்கி நடந்தான்.

அங்கே ராமனின் மகன் ஜனகனும் வேறு சிலரும் அவன் வருவதை எதிர்பார்த்து காத்து நின்றிருந்தார்கள். புருஷனைப் பார்த்ததும், அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது.

புருஷனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் ஏற்கனவே அவனுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்தான் என்றாலும், அவனுக்காக அவர்கள் காத்திருக்கும் விஷயமும், அவனைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் தெரிந்த பிரகாசமும் அவனைப் பலவாறாக நினைக்க வைத்தது.

“இனியும் தாமதப்படுத்த வேண்டாம்” - கூடியிருந்தவர்களில் வயதில் மூத்தவராகத் தோன்றிய ஒரு பெரிய மனிதர் சொன்னார். “நாம செய்ய வேண்டியதை உடனடியா செய்வோம், என்ன?”

அவர்கள் எல்லோரும் புருஷனைப் பார்த்தார்கள். அப்போதுதான் மக்கள் கூட்டத்திற்குப் பின்னால் தலைகுனிந்தவாறு ஒரு மூலையில் நின்றிருந்த மாயாவை புருஷன் பார்த்தான். ஜனகனின் மகளான அவள் கையில் பூக்களால் ஆன ஒரு மாலை இருந்தது.

‘மாயா, முன்னாடி வாம்மா...’ - ஜனகன் சொன்னான். வெட்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மாயா தலையைக் குனிந்துகொண்டு சுயம்வரம் நடக்கக்கூடிய ஒரு சபையில் நடந்து வருவது மாதிரி சிறுசிறு அடிகளாக எடுத்து வைத்து நடந்து வந்தாள். புருஷனுக்கு முன்னால் வந்ததும் அவள் நின்றாள். அவளின் உஷ்ணமான மூச்சுக் காற்று தன்னுடைய நெஞ்சின் மேல் படுவதை புருஷனால் உணர முடிந்தது.

புருஷனுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. அவன் கனவுகளில் பல முறை இந்த மாயா வந்திருக்கிறாள். ஒருமுறை கூட அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டதில்லை. அவள் தன்னை ஒரு பொருட்டாக நினைத்திருக்கிறாளா என்பதைப் பற்றிக்கூட அவன் எண்ணிப் பார்த்ததில்லை.

“என்ன திகைச்சுப் போய் நிக்கிறே?” - வயதான பெரியவர் கேட்டார்.

“கையில் இருக்குற தூண்டில்களையும், கூடையையும் தரையில் வை. பிறகு... இந்த மாலையை நீ வாங்கி கையில வை.”

புருஷன் அவர் சொன்னபடி நடந்தான்.

“எனக்கொண்ணும் புரியலையே!”

அவன் ஒரு முட்டாளைப் போல முணுமுணுத்தான்.

அதைக் கேட்டு, ஜனகன் அவன் முகத்துக்கு மிகவும் அருகில் வந்து நின்று கேட்டான்.

“ஒன்றுமே புரியலையா? ஒண்ணுமே...”

ஜனகனின் கேள்வியில் மீன்வாடை அடித்தது. புருஷன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் கண்கள் மாயாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தன.

“நான் புரிய வைக்கிறேன்” - ஜனகன் தொண்டையை நனைத்துக் கொண்டு கேட்டான்.

“நீங்க ஒருவரையொருவர் காதலிக்கலையா?”

அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் புருஷன் வெறுமனே நின்றிருந்தான். அவன் மாயாவைக் காதலிக்கிறான் என்பதென்னவோ உண்மை. ஆனால், அதை இங்கு கூறமுடியுமா என்ன? தான் அதைக்கூறி, ஒரு வேளை மாயா அதை மறுத்துவிட்டால்...?

ஜனகன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். மனதிற்குள் நடுங்கியவாறு புருஷன் மாயாவின் முகத்தைப் பார்த்தான். அவனே ஆச்சரியப்படும் அளவிற்கு, அவளின் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

“ஆமான்னு சொல்லுங்க” என்று அவள் கூறுவது மாதிரி இருந்தது அவளின் பார்வை. மற்றவர்களால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.

“ஆமாம்... காதலிச்சோம்...” - புருஷன் சொன்னான்.

ஜனகனின் வறண்டு போயிருந்த உதடுகளில் அன்பான ஒரு புன்னகை அரும்பியது.

“அப்படின்னா, இந்த முகூர்த்தத்தை நாம தவறவிட்டுட வேண்டாம்” - அவன் ஒரு சுமையை தலையிலிருந்து இறக்கி வைக்கிற எண்ணத்துடன் சொன்னான். புருஷன் மாயாவின் முகத்தையே பார்த்தான். அந்த முகத்தில் ஒரு வெற்றிக் களிப்பு தாண்டவமாடிக் கொண்டிருந்ததை அவனால் காண முடிந்தது.

அவர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

அந்தக் கணம் பூமிக்கும் தனக்குமிடையே உள்ள தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு விட்டதைப் போல் உணர்ந்தான். தனக்கு சிறகு முளைத்து விட்டதைப் போலவும் வானத்தில் உயர்ந்து பறந்து திரிவதைப் போலவும் அவன் உணர்ந்தான். கடந்து போய்க் கொண்டிருக்கும் மேகங்கள்... தூரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் பூமியின் சத்தங்கள்...

அவனுக்கு மீண்டும் சுய உணர்வு வந்தபோது கோவில் கிட்டத்தட்ட காலியாகி விட்டிருந்தது. ஒவ்வொருவராகக் கடலின் மங்கலான வெளிச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். சிலர் புறப்படும்போது அவனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். சிலர் அவனை கவனிக்காதது மாதிரி போனார்கள்.

ஜனகனை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அவர்கள் எல்லோரும் இவ்வளவு வேகமாக எங்கே போகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டவாறு நின்றிருந்தான் புருஷன். தான் தேவையில்லாமல் ஒரு வலையில் வந்து மாட்டிக் கொண்டோமோ என்று அவன் நினைத்தான். ஆனால், மாயாவின் முகத்தைப் பார்த்தபோது, அவளின் துடித்துக் கொண்டிருக்கும் அதரங்களின் ஓரத்தில் அரும்பிக் கொண்டிருக்கும் புன்னகையின் ரேகையைப் பார்த்தபோது, அவனின் அந்தச் சந்தேகம் இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்தது. மாறாக, தான் ஒரு கொடுத்து வைத்த மனிதன் என்ற எண்ணமே அப்போது அவனுக்கு உண்டானது.

சிறிது நேரத்தில் கோவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஆளே இல்லாத இடமானது. கடலையொட்டி இருண்டு போய் கிடக்கும் மணல் மீது நடந்தவாறு, ஏதோ ஊர்வலம் போவதைப் போல நிழல் உருவங்களுடன், ஒரு நாட்டிய நாடகத்தின் தளர்ந்து போன நடைகளுடன் தன்னுடைய உறவினர்கள் தன்னை விட்டு தூரத்தில் நீங்கிப் போவதைப் பார்த்த மாயா மனதிற்குள் குமுறிக் குமுறி அழுதாள்.

“நாம இனி எங்கே போறது?” - புருஷன் கேட்டான். தன்னுடைய வீட்டிற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத இந்த இளம்பெண்ணின் கையைப் பிடித்துக் அழைத்துக் கொண்டு போக முடியாது. தன்னுடைய தந்தையிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் அல்லவா அவன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான்.


“எங்க வீட்டுக்குப் போக முடியாது” - மாயா சொன்னாள்.

“தாத்தாவுக்குத் தெரியாமத்தான் இந்தக் கல்யாணம் நடந்திருக்குது. அவருக்கு விஷயம் தெரிஞ்சா என்னையும் உங்களையும் கொன்னுட்டுத்தான் மறு வேலை பார்ப்பாரு.”

காலையில் கடலை நோக்கிப் போகிறபோது, ராமனும் மற்றவர்களும் காட்டைத் தேடி போன விஷயத்தை புருஷன் நினைத்துப் பார்த்தான்.

“ஆமா... ராமன்கிட்ட ஏன் இந்த விஷயத்தைச் சொல்லல?” - அவன் கேட்டான்.

“அதற்கு நேரம் கிடைக்கல. அவங்க எல்லோரும் காட்டுக்குப் போயிருக்காங்க. இன்னும் திரும்பி வீட்டுக்கு வரல.”

நீண்ட நேரம் புருஷன் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான். அவனையும் அறியாமல் அவனின் கால்கள் மெதுவாக நடக்க ஆரம்பித்தன. கோவிலைத் தாண்டி அவன் கடலை நோக்கி நடந்தான். அவனுடன் ஒரு நிழலைப் போல மாயாவும் பின் தொடர்ந்தாள். தன்னுடைய கணவனின் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும், அப்படிப்பட்ட நேரத்தில் தான் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது என்று அவள் நினைத்தாள்.

கடலையொட்டி இருந்த மணலில் நிலவு வெளிச்சம் பரவி விட்டிருந்தது. பனி இழையோடிய காற்று அவர்கள் மேல் மோதி வீசிக் கொண்டிருந்தது.

அப்படியே எவ்வளவு நேரம் நடந்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. கடைசியில் என்ன நினைத்தானோ, புருஷன் நின்றான். உரத்த குரலில் அவன் சொன்னான்.

“நாம காட்டை நோக்கிப் போவோம்.”

மாயா எதுவும் பேசவில்லை. அவன் என்ன சொன்னாலும் அவளைப் பொறுத்தவரை சம்மதம்தான்.

காட்டுக்குப் போகும் ஒற்றையடிப் பாதை வழியே நடக்கிறபோதுதான் புருஷன் தன்னுடைய தூண்டில்களைப் பற்றியும், தனக்குக் கிடைத்த மீன்களையும் நினைத்துப் பார்த்தான். மாயாவின் கழுத்தில் மாலை சூடும் நேரத்தில் அவன் அவற்றைத் தரையில் வைத்திருந்தான்.

“நான் ஒரு விஷயத்தை மறந்துட்டேன்” - வெட்கத்துடன் அவன் சொன்னான்.

“நான் அதை மறக்கல...”- அவன் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டவள் மாதிரி மாயா சொன்னாள். அவள் தனக்குப் பின்னால் ஒளித்து வைத்திருந்த கைகளை உயர்த்திக் காட்டினாள். அவளின் கையில் மீன்கள் அடங்கிய கூடை இருந்தது.

அதைப் பார்த்ததும் புருஷனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. தன்னுடைய மனைவியின் திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மனதிற்குள் பெருமையாக நினைத்தான் அவன். அவளை அவன் தன்னோடு இறுகச் சேர்த்து அவள் கண்களின் மேல் ஆசையுடன் முத்தமிட்டான்.

நிலவொளியில் அவள் கண்கள் பிரகாசித்தன.

“வா... நாம நடக்கலாம்”- அவன் அவள் கையைப் பிடித்தவாறு காட்டை நோக்கி நடந்தான்.

அவர்களின் நிழல்கள் மணல் மேல் ஓவியம் போல் விழுந்தன. சில நேரங்களில் அந்த ஓவியங்கள் சேர்ந்தன. சில வேளைகளில் பிரிந்தன.

நள்ளிரவு நேரம் தாண்டிய வேளையில் அவர்கள் காட்டின் முகப்பை அடைந்தார்கள்.

ஒற்றையடிப்பாதையில் ஆங்காங்கே நிலவொளி தெரிந்தது. அவர்கள் வந்திருப்பது தெரிந்தோ என்னவோ காட்டுக்குள் இருந்த மூன்று நான்கு கிளிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடின.

அவர்களுக்கு எந்தவித பயமும் தோன்றவில்லை. மரங்களுக்குப் பின்னாலிருந்து ஆந்தைகள் அலறின.

ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்தவாறு, மனதிற்குள் அலையடிக்கும் இசையுடன் அவர்கள் ஒற்றையடிப்பாதை வழியே நடந்து போனார்கள்.

காட்டின் இருட்டு அவர்களை மூடிக் கொண்டது. காட்டின் நிலவு அவர்களை முழுமையாக மறைத்துவிட்டது.

4

ரவு வெகு நேரம் ஆனபிறகு, நிலவு முழுமையாக நீங்கிவிட்ட பிறகு, காட்டின் மத்தியில் இருந்த ஒற்றையடிப்பாதை ஒரு ஆற்றில் போய் முடிந்தபோது, புருஷனும் மாயாவும் தங்களின் பயணத்தை முடித்துக் கொண்டார்கள்.

வரும் வழியில் அவர்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கைகளைப் பிணைத்துக் கொண்டு ஒரே மாதிரி கால்களை எடுத்து வைத்து, ஒரே மாதிரியான இதயத்துடிப்புடன் நடந்தபோது அவர்களுக்கு தூரம் என்பது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.

இரண்டு பேருமே மிகவும் அமைதியாக இருந்தார்கள். தாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்திருப்பதை நினைத்து அவர்கள் தங்களையே முழுமையாக மறந்துவிட்டிருந்தார்கள். இந்த உறவின் மூலம் தாங்கள் ஒருவரோடொருவர் கட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். கைகளைப் பிரித்துக் கொண்டு பாதையோரத்தில் இருக்கும் காட்டுக்குள் நுழைந்து ஓடி தப்பித்தாலென்ன என்று இரண்டு பேருக்குமே தோன்றாமல் இல்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி தங்களை இறுகப் பிணைத்திருப்பதாக அவர்கள் மனதிற்குள் உண்டான நினைப்பு மற்ற தேவையில்லாத எண்ணங்களை இருந்த இடம் தெரியாமல் விரட்டின.

ஆற்று நீரின் மேல் நிலவொளி தெரிந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, நிலவு காட்டுக்கு மேலே போய் முழுமையாக மறைந்தது.

“பசிக்குதா?” - புருஷன் கேட்டான்.

“எனக்குத் தெரியல”- மாயா சொன்னாள். அவள் தன்னையே மறந்திருந்தாள்.

“அப்படின்னா, நாம உறங்குவோம்” -அவன் சொன்னான்.

அவள் அவன் சொன்னதை மறுத்து எதுவும் சொல்லவில்லை.

ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் இசையென அவர்களின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டவாறு அவர்கள் படுத்துக் கிடந்தார்கள்.  தங்களுக்குள் அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காற்றுக்கேற்றபடி ஆற்றில் ஓடிக் கொண்டிருக்கும் நீரின் ஓசையும் மாறி மாறி கேட்டது. புருஷன் ஒரு கையை எடுத்து மாயாவின் இடுப்பைச் சுற்றினான். அவள் எப்போது செய்தாள் என்று தெரியவில்லை. தன்னை முழு நிர்வாணமாக ஆக்கிக் கொண்டிருந்தாள். அவனின் முரட்டுத்தனமான கை விரல்களுக்கு அடியில் அவளின் நிர்வாண உடம்பு ஆயிரம் இதழ்களைக் கொண்ட மலரைப் போல மலர்ந்தது.

காற்றில் குளிர் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆறு லேசாக ஓசையெழுப்பியவாறு அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நிலா வெளிச்சம் ஆற்று நீரின் மேற்பகுதியில் பட்டு ஜொலித்தது.

புருஷன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான். அவனின் மீன் வாடை அடிக்கும் உதடுகளுக்கு  மிகவும் நெருக்கமாக அவளின் அதரங்கள் இருந்தன. அவன் இடுப்பை நோக்கி தன்னைத் தானே நகர்த்திக் கொண்டு போய் நெருக்கமாக்கிக் கொண்டாள் அவள்.

அவர்கள் மீண்டும் சுயநினைவுக்கு வந்தபோது, ஆகாயத்தில் நிறைய மேகங்கள் காணப்பட்டன. அவர்களைச் சுற்றிலும் வசந்தத்தின் மணம் பரவிக் கொண்டிருப்பது தெரிந்தது. காட்டிற்கு மேலே ஒரு மதிய நேரம் விரிந்து  நிற்பதை உணர முடிந்தது. ஆற்றில் ஓடிக் கொண்டிருந்த நீரில் தெரிந்த வளையங்களில் சூரியனின் கதிர்கள் தெரிந்தன.

இலைகளனைத்தும் உதிர்ந்து போய் பூக்கள் மட்டுமே மீதமாக இருந்த ஒரு மரம் ஆற்றின் மேற்பரப்பில் சாய்ந்து கிடந்தது. காற்று வீசுகிறபோது இரத்தச் சிவப்பு வண்ணத்தில் இருந்த மலர்கள் அந்த மரத்திலிருந்து உதிர்ந்து ஆற்று நீரில் விழுந்தன.


நீரின்மேல் விழுந்த மலர்கள் படகுகளைப் போல நீரோடு சேர்ந்து தூரத்தை நோக்கி பயணம் சென்றன.

புருஷன் அவற்றைப் பார்த்தவாறு அசையாது படுத்துக் கிடந்தான். இதுவரை நடந்ததெல்லாம் ஒரு கனவு போல் அவனுக்குத் தோன்றியது. எங்கோயிருந்தோ பறந்து வந்த ஒரு கிளி மலர்கள் நிறைந்த ஒரு மரக்கிளையில் போய் அமர்ந்தது. ஒரு கிளையை விட்டு இன்னொரு கிளைக்குத் தாவுகிறபோது அது மகிழ்ச்சியான குரலில் என்னவோ ஒரு செய்தியை வெளிப்படுத்துவதுபோல் தோன்றியது.

புருஷனுக்கு அதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருந்தது. பரந்து கிடக்கும் இந்தக் காட்டிற்குள் யாருக்காக இந்தக் கிளி தன்னுடைய இனிமையான குரல் மூலம் செய்தி சொல்ல விரும்புகிறது என்று அவன் மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். ஒரு வேளை தன்னுடைய முன்னோர்களில் யாராவது ஒருவரின் ஆத்மா அந்தக் கிளிக்குள் இருந்து தன்னுடன் பேச விரும்பியிருக்கலாம் என்று அவன் எண்ணினான்.

திடீரென்று தோன்றிய உற்சாகத்துடன், புருஷன் படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்தான். அவன் அசைவுசத்தம் கேட்டு, கிளி உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஓடியது. பறந்து போகும்போது, உரத்த குரலில் அது என்னவோ கூறியவாறு ஓடியது.

ஆற்றின் அக்கரையில் வெயிலுக்குள் அந்தக் கிளி முழுமையாக மறைந்து போகும் வரை அதையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தான் புருஷன். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நிமிஷத்தில் இதற்கு முன்பு தோன்றியிராத ஒரு தன்னம்பிக்கை அவன் மனதின் அடித்தளத்தில் அரும்பி பல்வேறு பக்கங்களிலும் கிளை பரப்பியது. இந்தக் காட்டுக்குள்ளிருக்கும் ஓசைகளும், மணமும், காற்றும் தன்னுடன் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு விதத்தில் நெருங்கிய பந்தம் கொண்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். தன்னுடைய முன்னோர்களும், தன்னுடைய காவல் தேவதைகளும் அவர்களுக்கென்று இருக்கிற மொழியில் தன்னுடன் பேச தொடர்ந்து முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக அவன் மனதிற்குத் தோன்றியது. அவர்களின் அந்த மொழியைப் புரிந்து கொள்ள மனப்பூர்வமாக புருஷன் ஆசைப்பட்டான். ஒரு வேளை அந்த மொழியைக் கற்றுக் கொள்ள அவனுக்குச் சில நாட்கள் வேண்டி வரலாம். இருந்தாலும், நாட்கள் சிறிது ஆனாலும் கூட, தான் நிச்சயம் அந்த மொழியைக் கற்றே ஆவது என்பதில் அவன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். இதன் மூலம் காட்டுக்குள் தனக்கென்று- முழுக்க முழுக்க தனக்கென்றே இருக்கும் ஒரு சுதந்திர வாழ்க்கையை அவன் அடைந்து வாழ முடியும்.

இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் இத்தகைய ஒரு பாதுகாப்பு உணர்வு தன் மனதில் என்றுமே தோன்றியதில்லை என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அங்கே இதுவரை யாரும் அவனிடம், அவனுக்கே தெரியாத மொழியில் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் பேசியதில்லை. ஆனாலும், இனி அப்படியல்ல. எந்த நேரத்திலும் அவனைச் சுற்றிலும் அந்தச் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும்.

மனதில் உண்டான ஒரு உற்சாக உணர்வுடன் அவன் மாயாவைத் தட்டியெழுப்பினான். அவள் திடுக்கிட்டு எழுந்து, கண்களைக் கசக்கியவாறு, சுற்றிலும் பதைபதைப்புடன் பார்த்தாள்.

நாம் எப்படி இங்கே வந்தோம்? - மாயா கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. நடந்த விஷயங்கள் அனைத்தும் ஒரு கனவைப்போல அவளுக்குத் தோன்றியிருக்கலாம். கனவின் வழியாகப் பயணம் செய்து திடீரென்று உண்மைக்கு நடுவில் மனிதன் நிற்க வேண்டிய சூழ்நிலையை நினைத்துப் பார்த்து உரத்த குரலில் புருஷன் சிரித்தான்.

அவன் சிரிப்பதைப் பார்த்து, அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அவள் கேட்டாள்.

“ஆமா... நீங்க ஏன் சிரிக்கிறீங்க?”

அவன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், தான் சிரிப்பதை நிறுத்தினான்.

“நாம இங்கேயிருந்து போக வேண்டாமா?” - மாயா கேட்டாள்.

“எங்கே போகணும்ன்ற?”

“எங்கேயா? எங்கேயாவது...”

“எங்கே போகணும்னு நீயே சொல்லு...” - புருஷன் சொன்னான்.

அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள் மாயா. அவள் ஒரு நீண்ட நேர யோசனையில் மூழ்கி விட்டாள். அவளின் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் விழுவதையும், கண்களில் சிந்தனைக்குரிய கருத்த நிழல்கள் தெரிவதையும், புருஷன் ஆர்வத்துடன் பார்த்தான். கடைசியில் தளர்ந்து போன குரலில் அவள் சொன்னாள்.

“எனக்குத் தெரியல. எங்கே போகணும்னு எனக்குத் தெரியல!”

புருஷன் அவளின் கையைப் பிடித்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளை மெதுவாக தடவியபடி சொன்னான்.

“நாம எங்கேயும் போக வேண்டியது இல்ல. இந்தக் காட்டுலயே இருந்துட வேண்டியதுதான்.”

அவள் அமைதியாக அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டு அவள் மனதில் கவலை உண்டானது.

“எனக்குப் பசிக்குது”- புருஷன் சொன்னான்.

“நேத்து பிடிச்ச மீன் இருக்கு”- அவள் திடீரென்று பொறுப்பான இல்லத்தரசியாக மாறினாள்.

“நான் அதைச் சரி பண்ணித் தர்றேன்.”

அப்போதுதான் அவனுக்கே தான் பிடித்து வந்த மீன்களைப் பற்றி ஞாபகம் வந்தது. மாயா மீன்களைப் பற்றி சொன்னதும், அவளின் ஞாபக சக்தியைப் பார்த்து அவனுக்கே பொறாமையாக இருந்தது. எழ முயன்ற அவள் கைகளைப் பிடித்து அவன் சொன்னான்.

“நாம இங்கேயே ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பிப்போம். நான் இந்தக் காட்டு மொழியைக் கற்க ஆரம்பிச்சிருக்கேன். நிச்சயமா கொஞ்ச நாட்கள்ல நான் இந்த மொழியை முழுமையா படிச்சிடுவேன். இங்கே கேக்குற வண்டுகளின் ரீங்காரத்திலும் கிளிகளின் சத்தத்திலும் அசைகிற இலைகள் உண்டாக்குகிற ஓசையிலும் நானும் நீயும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமா இருக்கு. நம்மோட முன்னோர்கள் நம்ம கூட பேச விரும்புற வார்த்தைகளைத் தான் நம்மைச் சுற்றிலும் நாம கேட்டுக்கிட்டு இருக்குறோம். இந்த மொழியை மட்டும் கத்துக்கிட்டோம்னா, பிறகு நாம பயப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. இந்த மொழியைக் கத்துக்குறது வரை இருக்கக்கூடிய கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் நீ பொறுமையா சகிச்சிக்கிட்டுத்தான் இருக்கணும்...”

அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினான். அவனைப் புரிந்து கொண்டு அவனைச் சமாதானப்படுத்துகிற குரலில் அவள் சொன்னாள்.

“நிச்சயமா நான் சகிச்சிக்குவேன்.”

பக்கத்தில் இருந்த மரத்தின் கையெட்டும் தூரத்தில் இருந்த ஒரு கிளையில் இருந்த கடைசி பூ கீழே விழுந்தது.

நிர்வாணமாகக் காட்சியளித்த மரக் கிளைகளில் இருந்தும், செடிகளில் இருந்தும் குளிர் கிளம்பி பரவியது. மரக் கிளைகளில் இப்போதுதான் தளிர்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன.


புருஷன் கிட்டத்தட்ட காட்டுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டிருந்தான். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும், வீடில்லாமல் வாழும் வாழ்க்கையை காலப்போக்கில் மாயாவும் விரும்பத் தொடங்கிவிட்டாள்.

காட்டில் பழகுவதற்கு அவர்களுக்கு மனிதர்கள் என்று வேறு யாரும் இருந்தால்தானே! பசியையும் தாகத்தையும் அடக்குவதற்கு காட்டில் பழங்களும் சிறிய மிருகங்களும் தண்ணீரும் அவர்களுக்குத் தேவையான அளவிற்குக் கிடைத்தன. தூக்கம் என்பது மட்டும்தான் அவர்களுக்கு முதலில் ஒரு பிரச்சினையாக இருந்தது.

ஆரம்பித்தில் சிறு மிருகங்களின் சத்தம் கூட அவர்களின் தூக்கத்தை பயங்கரமாகக் கெடுத்துக் கொண்டிருந்தது. நாளடைவில் அதனுடனும் அவர்கள் ஒத்துப் போய் வாழப் பழகிக் கொண்டார்கள். குள்ள நரியின் ஊளை, ஆந்தையின் அலறல், பறவைகளில் சிறகடிப்பு எல்லாமே அவர்களுக்கு நாட்கள் செல்லச் செல்ல தாலாட்டு போல மாறிவிட்டன. மின்மினிப் பூச்சிகளின் ரீங்காரம் அவர்களின் தூக்கத்திற்கு ஒரு பின்னணி இசை போல காலப்போக்கில் அவர்களுக்கு ஆகிவிட்டது.

அவர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. புருஷனைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது மிகவும் எளிமையானதாக, இனிமையான சம்பவங்கள் நிறைந்த, பிரச்சினைகள் எதுவும் இல்லாத ஒரு அனுபவமாக மாறிவிட்டிருந்தது. தேவைப்படுகிறபோது உணவு, குளிரில் கட்டிப்பிடித்துக் கொள்வதற்கு ஒரு பெண், பரந்து கிடக்கும் பூமியில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போய் வரலாம் என்ற சுதந்திரம்- இவை எல்லாமே அவனுக்கு இருந்தன.

இந்த வசதிகள் தன்னை ஒரு சோம்பேறியாக மாற்றி விட்டிருக்கின்றன என்பதையும் அவன் அறியாமல் இல்லை. ஆரம்பத்தில் காட்டுக்குள் வந்த நாட்களில் தன் மனதிற்குள் இருந்த ஒரு ஆவேசம், காட்டின் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருந்த ஆவேசம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய் விட்டதை அவன் நினைத்துப் பார்த்தான். இருந்தாலும் அப்படி அவன் நினைத்தது கூட அவனின் அன்றாட வாழ்க்கைப் போக்கிற்கு எந்தவித தடையாகவும் இருக்கவில்லை. வசதி கிடைக்கிறபோது அந்த மொழியை நாம் கற்றுக்கொள்வோம். அதற்கான வசதிகள் சரியாக அமையாவிட்டால் அதைக் கற்றுக் கொள்ளாமலே விட்டு விடுவோம் என்று நாளடைவில் அவன் மனதிற்குள் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டான்.

இருந்தாலும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அவன் நிலை குலைந்து போய் விடுகிறான் என்பதும் உண்மை. காடு முழுக்க முழுக்க அமைதியில் மூழ்கிப் போய் கிடக்கிறபோது, உடலுறவுக்குப் பிறகு பயங்கர களைப்புடன் மாயா தளர்ந்துபோய் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஆற்றுக்கு மேலே தனிமையாக இருக்கும் ஒரு கிளியின் சத்தம் காற்றைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும்போது, புருஷன் தன்னுடைய இதயத்தை கிழித்து தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.

‘இப்படியே இந்தக் காட்டுல வாழ்றதுல அர்த்தம் என்ன இருக்கு? நான் இதுவரை காட்டோட மொழியைக் கத்துக்கவே இல்லை. செத்துப் போன எங்கம்மா காட்டு மொழியில் என்கிட்ட என்னவெல்லாம் பேச முயற்சித்திருப்பாங்க! அதைக் கொஞ்சம் கூட என்னால புரிஞ்சிக்க முடியலையே! செத்துப் போன என்னோட மூதாதையர்களோட குரல் ஆயிரம் கிளிகளோட சத்தம் மூலம் என் காதுல வந்து விழுது. ஆனா, என்னால ஒரு சின்ன சத்தத்துக்கு கூட அர்த்தம் கண்டுபிடிக்க முடியல. இனி எத்தனை வருடங்கள் இந்தக் காட்டுல வாழ்ந்தாலும், நிச்சயமா நான் அந்த சத்தத்தோட அர்த்தத்தை கொஞ்சமாவது புரிஞ்சிக்கப் போறது இல்ல. உண்மை இப்படி இருக்குறப்போ, நான் எதுக்காக இந்தக் காட்டுல இருக்கணும்?’

தன் மனதில் இருக்கும் சந்தேகங்களை, அங்கு வீசிக் கொண்டிருக்கும் கொடுங்காற்றை அவன் ஒருநாள் கூட மாயாவிடம் காட்டிக் கொண்டதில்லை. அவளுக்கு அதெல்லாம் சரிவர புரியாது என்பதை அவன் நன்கு அறிவான். ஒரு வேளை வெறும் காட்டை மட்டுமே சதா நேரமும் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காட்டு வாழ்க்கை அவளுக்குக்கூட அலுப்பைத் தந்திருக்கலாம். ஆனால், இங்கேயிருந்து கிராமத்துக்குப் போய் வாழ்வதைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்பதைப் பற்றி அவனுக்கும் ஒரு தீர்மானமும் இல்லாமல் இருந்தது.

ஒருநாள் என்ன சொல்கிறாள் பார்ப்போம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே புருஷன் கேட்டான்.

“இந்தக் காட்டுக்குள்ளேயே இப்படியே எத்தனை வருடம் வாழலாம்னு நீ நினைச்சிக்கிட்டு இருக்கே?”

அவனின் அந்தக் கேள்வியைக் கேட்டு உண்மையிலேயே மாயா பதைபதைத்துப் போனாள். அவள் கண்கள் அப்போது அகல விரிந்தன. இங்கேயிருந்து போய் இன்னொரு வாழ்க்கை என்பது அவள் மனதில் நினைத்துப் பார்க்காத ஒன்று என்பதை அவளின் அந்த பதைபதைப்பும் வியப்பும் தெளிவாகக் காட்டின. அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, புருஷன் மீண்டும் கேட்டான்.

“இங்கேயிருந்து எப்படியாவது போயிடணும்னு, மாயா உனக்கு எப்போவாவது தோணியிருக்கா?”

“எப்படியாவது போயிடுறதா?” - மாயா பயத்துடன் கேட்டாள்.

“எதுக்கு? எங்கே?”

அதற்கு என்ன பதில் கூறுவது என்றே புருஷனுக்குத் தெரியவில்லை. அந்த நிமிடத்தில் “எப்படியாவது போயிடுறது” என்பதற்கு என்ன அர்த்தம் கூறுவது என்று தெரியாமல் அவன் வெறுமனே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன்தானே இந்த இளம்பெண்ணை இந்த அடர்ந்த காட்டுக்குள் அழைத்துக்கொண்டு வந்தது! இங்கிருந்து வேறு எங்குமே போவதற்கில்லை என்று சொன்னதும் அவனேதான். அவன் சொன்னதற்கு எதிராக அவள் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இப்போது இந்த இடத்தைவிட்டு போய்விட்டால் நல்லது என்று அவனுக்குத் தோன்றுகிறபோது, அதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவள் இருக்கிறாள். இதற்காக அவளை எப்படி குறை சொல்ல முடியும்?

ஆற்றின் அக்கரையில் இருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்து கத்திக் கொண்டிருந்த அணிலையே பார்த்தவாறு அவன் நின்றிருந்தான்.

அடுத்து வந்த நாட்களில் அவன் மனம் அமைதியே இல்லாமல் தவித்தது. தானும் மாயாவும் இரண்டு தனித்தனி மானிடப் பிறவிகள் என்பதையும், ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையோ மிகவும் நெருக்கமாக இருந்ததோ தங்களை ஒன்றாக ஆக்கப் போவதில்லை என்பதையும் அவன் மன வேதனையுடன் புரிந்து கொண்டான். உண்மையாகச் சொல்லப் போனால் அவனுக்குத் தனியே வாழ்வதில் விருப்பமே இல்லை. ஆனால் தன்னுடைய தலைவிதி அதுதான் என்பதையும், அதற்கு மாறுபட்ட வாழ்க்கை என்பது தன்னுடைய கனவுகளில் மட்டுமே வர முடியும் என்பதையும் அவன் புரிந்து கொண்டான். அது தெரிந்ததும் அவன் உண்மையிலேயே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.

காட்டுக்குள் இலையுதிர்காலம் வந்தது. மரங்களில் இருந்து இரவிலும் பகலிலும் கொஞ்சம்கூட நிற்காமல் இலைகள் கீழே விழுந்த வண்ணம் இருந்தன. காட்டின் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையை காய்ந்த இலைகள் முழுமையாக மூடின.


இலைகளுக்கு மத்தியில் இவ்வளவு காலமும் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக மறைந்திருந்த பறவைக் கூடுகள் எப்போதாவது ஒரு முறை வரும் சூரியனின் வெளிச்சத்தில் தாங்கள் இருப்பதைக் காட்டின. அந்தக் கூடுகளுக்குள்ளிருந்து படு உற்சாகத்துடன் கிளிக்குஞ்சுகள் பாடிக் கொண்டிருந்தன.

காட்டில் குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்வது என்பதே மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக இருந்தது. எல்லா இரவுகளிலும் புருஷன் நெருப்பு போட்டான். காய்ந்த விறகுகள் பொழுது புலரும் வரை விடாமல் எரிந்து கொண்டிருந்தன. காய்ந்த சருகுகளும் மரச் சுள்ளிகளும் நெருப்பில் எரிந்தன. காட்டில் பரவிய சிவந்த வெளிச்சத்தின் நிழலில் புருஷனும் மாயாவும் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்தவாறு படுத்துக் கிடந்தனர். பொழுது புலர்ந்த பிறகு கூட பனி விலகுவதாக இல்லை. பனி நீங்கும் வரை அவர்கள் இருவரும் அப்படியே அசையாது படுத்துக் கிடந்தார்கள்.

பனிக்காலமும் நீங்கியது. சூரியன் வெகு சீக்கிரமே வந்து காட்டுக்கு மேலே ஒளி வீசத் தொடங்கியது. புதிதாக முளைத்து வந்த தளிர்கள்மேல் சூரியன் பட்டு ஒளிர்ந்தது. காட்டிற்கே ஒரு புத்துயிர் பிறந்தது போல் இருந்தது. தளிர்களின் இனிமையான வாசனை காற்றில் எல்லாத் திசைகளிலும் பரவியிருந்தது. மாலை நேரம் வந்த பிறகு கூட சூரியன் மறைவதாகத் தெரியவில்லை. வெளிறிப் போன ஒரு சந்திரன் சூரியன் எப்போது மறையும் என்பதை எதிர்பார்த்து, ஆகாயத்தின் ஒரு மூலையில் நீண்ட நேரம் காத்து நின்று வெறுப்படைந்ததைப் போல, சூரியன் கீழ் வானத்தில் முழுமையாக மறைந்த பிறகுதான் இரவு நேரமே பிறக்கும்.

“அப்படின்னா...” - கடைசியில் அவள் கேட்டாள்.

“நீங்க என்ன செய்யப் போறீங்க?”

“நாம இங்கே இருந்து புறப்படணும்.”

“எங்கேன்னு சொல்லுங்க.”

அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். தன் கணவன் இந்த மாதிரி அலை பாய்ந்து நிற்கும் நிமிடங்கள் சமீப காலமாக அவளுக்குத் தமாஷான ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. அவளுடைய அந்த சிரிப்பில் தனக்கு ஒரு வேளை புத்தி தடுமாறி விட்டதோ என்ற சந்தேகம் மறைந்திருப்பதைப் போல் அவன் உணர்ந்தான்.

மனதிற்குள் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு புருஷன் அமைதியாக இருந்தான். இங்கிருந்து புறப்படலாம் என்று அவன் கூறுகிற ஒவ்வொரு நிமிடமும் மாயா இப்படித்தான் சமீப காலமாக நடந்து கொள்கிறாள். அவன் அதை கோபத்துடன் நினைத்துப் பார்த்தான். அவளின் விருப்பத்திற்கு எதிராக தான் தீர்மானம் எடுப்பதாக அவள் நினைப்பதாக அவன் நினைத்தான். காட்டை விட்டு புறப்படுவதற்கு அவளின் ஒத்துழைப்பு எங்கே தனக்குக் கிடைக்காமலே போய் விடுமோ என்று அவன் பயந்தான். அது தன்னை மட்டுமே பாதிக்கக்கூடிய ஒரு விஷயம் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவளுக்கு இங்கிருந்து விடுதலை தேவையில்லை, மழைக்கு மத்தியிலும், பனிக்கு நடுவிலும் அவள் இந்தக் காட்டிற்குள்ளேயே வாழ்ந்து விடுவாள். யாருக்குமே தெரியாமல் இந்தக் காட்டுக்குள்ளேயே ஒரு நாள் தன் வாழ்நாளை முடித்துக் கொள்ளும் அளவிற்கு அவள் காட்டுடன் முழுமையாக ஒன்றிப் போய் விட்டாள் என்பதையும் அவன் புரிந்து கொண்டான். அத்தகைய ஒரு முடிவுதான் தனக்கும் உண்டாகப் போகிறது என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு நடுக்கம்தான் உண்டானது. மழையிலும் காற்றிலும் சிக்கி ஒரு நாள் இந்தக் காட்டில் எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு மூலையில் தன்னுடைய இறுதி மூச்சை தான் விடுவதை நினைத்துப் பார்த்து அவன் அதிர்ச்சியடைந்து போய் நின்றுவிட்டான்.

எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்ற வழி அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. காட்டிலிருந்து தப்பிச் செல்வதைப் பற்றிய எண்ணங்கள் காலப் போக்கில் அவன் மனதில் இல்லாமலே போய்விட்டது. இருந்தாலும் மழைக்காலம் வந்து நின்ற ஒரு மதிய நேரத்தில், அவனுக்குக் காட்டை விட்டு எப்படி தப்பிப்பது என்ற வழி தெரிந்தது.

அதுவும் அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காமலே நடந்தது.

5

காட்டிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை சேஷன்தான் சொல்லித்தந்தார்.

சேஷனை முதலில் பார்த்ததும், புருஷனுக்கு அடையாளமே தெரியவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய அளவில் மாற்றம் உண்டாகி இருக்கிறதா என்றால், அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை. புருஷனின் மனதைவிட்டு அவர் முற்றிலுமாக நீங்கி விட்டிருந்தார் என்பதுதான் நிஜம்.

காட்டு வாழ்க்கை புருஷனின் மனதில் பழைய முகங்கள் எல்லாவற்றையும் முற்றிலுமாக இல்லாமல் செய்திருந்தன. சேஷன், சுப்ரன், ராமன், ஜனகன், அவுசேப் என்ற அவன் தந்தை - எல்லோருமே முன் பிறவியில் பார்த்து மறந்து போன மனிதர்களாக அவன் மனதிற்குத் தோன்றினார்கள். காட்டுக்கும், கடலுக்கும் நடுவில் பட்டினி, கஷ்டங்கள் ஆகியவற்றில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய பிறந்த பூமியைக் கிட்டத்தட்ட அவன் மறந்தே போயிருந்தான்.

காட்டிலிருந்து தப்பிக்கும் வழியைத் தெரிந்து கொண்ட நாளன்று புருஷனும் மாயாவும் தூங்குவதற்கு நல்ல ஒரு இடத்தைத் தேடி நடந்து கொண்டிருந்தார்கள். உச்சி வெயில் தலைக்கு மேலே பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. குளிர்ச்சியான ஒரு இடம்- அதுதான் அவர்களின் அப்போதைய தேவையாக இருந்தது.

அப்படி அலைந்து சென்றதில் அவர்கள் ஆற்றின் கரையை அடைந்தார்கள். ஆற்றிலிருந்து வீசும் காற்றில் நிச்சயம் குளிர்ச்சி தெரிந்தது. ஆற்று நீர் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய ஓசை வேறு. உச்சி வெயிலின் கொடுமையை அவை குறைத்ததென்னவோ உண்மை.

காட்டின் நடுவில் ஆறு ஒரு பெரிய பாம்பைப் போல நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு முறைகூட அந்த ஆற்றின் தலை எது வால் எது என்பதை புருஷனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு நெடுங்கதையைப் போல ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதற்கு முன்பு பார்த்த மாதிரி இல்லாமல் வேறுமாதிரி வளைந்து அது ஓடிக் கொண்டிருக்கும். எத்தனை முறை அது திரும்பத் திரும்பப் போய் பார்த்தாலும், அதன் தோற்றம் வேறு வேறு மாதிரிதான் இருக்கும்.

இப்போது அதுதான் நடந்தது. ஆற்றுக்கு இப்படியொரு அழகான முகம் இருக்கும் என்று இதுவரை புருஷன் நினைத்துப் பார்த்ததே இல்லை. மாயாவும் ஆற்று நீரின் அந்த அழகான ஓட்டத்தைப் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள்.

ஆற்றுக்கு மேலே மரங்கள் சாய்ந்து கிடந்தன. மண்ணட்டைகளின் சத்தம் அந்த உச்சிப் பொழுதின் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தது. மரங்களின் நிழலில் முயல்கள் அமர்ந்து புற்களைத் தின்று கொண்டிருந்தன. மனித நடமாட்டம் தெரிந்தவுடன் புற்களின் மேல் அமர்ந்திருந்த விட்டில் பூச்சிகள் குதித்தோடின.


மதிய நேரத்தின் கடுமை புருஷனின் மனதை விட்டு முழுக்க முழுக்க போய்விட்டது என்று கூடச் சொல்லலாம். அவன் கண்கள் முன்பிருந்ததை விட மிகவும் பிரகாசமாக இப்போது காணப்பட்டது. ஒரு புதுவித சுகமான அனுபவத்தை அவன் உணர்ந்தான்.

“நாம இங்கே படுப்போம்” - அவன் சொன்னான்.

அவன் சொல்வதற்கு முன்பே மாயா அங்கு படுத்து விட்டிருந்தாள்.

பரந்து காணப்பட்ட ஒரு பெரிய மரத்தின் நிழலில், பசுமையான புற்களுக்கு மேல், மாயாவின் உடலோடு ஒட்டி புருஷன் படுத்தான். அடுத்த சில நிமிடங்களில் மாயா உறங்கிக் கொண்டிருக்கும் சத்தம் அவளின் சீரான சுவாசத்தின் மூலம் அவனை வந்தடைந்தது.

புருஷனுக்கு அவ்வளவு எளிதில் உறக்கம் வரவில்லை. மழைக்காலத்தைப் பற்றிய பயம் நிறைந்த சிந்தனை அவன் மனதில் மேகங்களைப் போல் சூழ்ந்து அவனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. சொல்லப்போனால் சமீப காலமாக எல்லா நேரங்களிலும் அவனை மிகவும் அதிகமாக வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது இந்த ஒரே சிந்தனைதான்.

திடீரென்று மரங்களுக்கப்பால், ஆற்றுப் பக்கத்தில் இருந்து புருஷன் வேறொரு மனிதக் குரலைக் கேட்டான். இந்த அடர்ந்த காட்டிற்குள் இன்னொரு மனிதனின் குரலைக் கேட்பதென்பது அவனைப் பொறுத்தவரை மனதில் கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

அந்த மனிதக் குரல் மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே வந்தது. அது மனிதனின் சத்தம்தான் என்றாலும், மனிதர்கள் பேசும் மொழியைத் தான் இப்போது கேட்கவில்லை என்பதையும் புருஷன் உணர்ந்தான். அடுத்த நிமிடம் அதிர்ச்சியடைந்து அவன் எழுந்து நின்றான். தனக்கு கொஞ்சமும் பழக்கமில்லாத இந்த மொழியை இதற்கு முன்பு வேறு எங்கோ கேட்டு, காலப்போக்கில் அதைத் தான் மறந்து போய் விட்டதையும் அவன் நினைத்துப் பார்த்தான். எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் அந்த மொழியை தான் வேறு எங்கு கேட்டோம் என்பதை அவனால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை.

புருஷன் எழுந்து நின்று சத்தத்தைக் கேட்டு மாயா கண்களைத் திறந்து பார்த்தாள். அவன் மெதுவாக அடியெடுத்து வைத்து முன்னால் நடந்து செல்ல, ஒரு பூனையைப் போல பதுங்கிப் பதுங்கி அவனுக்குப் பின்னால் நடந்தாள்.

புருஷன் அந்த நேரத்தில் மாயாவைக் கவனிக்கவே இல்லை. அவன் மனம் முழுக்க அந்த சத்தத்தைச் சுற்றியே மையமிட்டிருந்தது.

கடைசியில் அந்தச் சத்தம் மிகவும் அருகில் கேட்டதும் அவன் நின்றான்.

ஒரு படர்ந்து கிடந்த கொடிக்குப் பின்னாலிருந்துதான் அந்தச் சத்தம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அவன் காது கொடுத்துக் கேட்டான்.

தேம்பித் தேம்பி அழும் ஒலி கேட்டது. சிறிது நேரத்தில் அது முணுமுணுப்பாக மாறியது. புருஷனின் இதயம் பயத்தால் நடுங்கியது. அது மிகவும் பலமாக அடித்துக் கொண்டது. அவனின் உள்ளங்கையில் இருந்து வியர்வை அரும்பி வழிந்தது. அவனே அதிர்ச்சியடையும் வகையில் அந்த முனகல் சத்தம் ஒரு பெரிய சிரிப்பாக மாறியது. அந்தப் பெரிய சிரிப்பு மீண்டும் அழுகையில் போய் முடிந்தது.

மாயாவின் முகத்தில் இரத்தமே ஓடவில்லை. அவள் பின்னால் நின்றவாறு, தன் கணவனை மெதுவாக பின்னோக்கி இழுத்தாள். அந்த இடத்தை விட்டு உடனே ஓடினால் நல்லது என்று அவள் நினைத்தாள்.

புருஷன் அவளின் காரியத்தை பொருட்படுத்தவே இல்லை. அவன் பரந்து கிடந்த கொடிகளை நீக்கி, அந்தப் பக்கம் பார்த்தான். கொடிகளைத் தாண்டி, காட்டிற்கு நடுவில், ஆற்றையொட்டி, ஒரு வெள்ளை நிறப் பாறையின் மேல் நிர்வாண கோலத்தில் இருந்த ஒரு மனிதன் ஒரு எலும்புக் கூட்டைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தான்.

அந்த நிமிடத்திலேயே ஒரு மின்னலைப் போல எல்லா விஷயங்களும் புருஷனுக்கு ஞாபகத்தில் வந்தன.

அந்த மனிதன் வேறு யாருமல்ல- சேஷன்தான். தான் கேட்பது சேஷனின் மொழியைத் தான் என்பதை அவன் புரிந்து கொண்டான். பல வருடங்களுக்கு முன்பு இரண்டாவது பிண வண்டியில் வந்த இளம்பெண்ணின் - சேஷனை மூன்று வீட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்தும் முழுக்க முழுக்க பிரித்து விட்ட செயலுக்கு மூலக் காரணமாக இருந்த இளம்பெண்ணின் எலும்புக் கூட்டைத் தான் இப்போது சேஷன் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார் என்பது ஒரு நிமிடத்திலேயே புருஷனுக்குப் புரிந்து விட்டது.

புருஷன் உண்மையிலேயே அதிர்ந்து போனான். அவன் உடம்பிலிருந்து மயிர்கள் அத்தனையும் சிலிர்த்துப் போய் நின்றன. வியர்வை அரும்பி உடம்பில் அருவியென வழிந்து கொண்டிருந்தது.

அவன் பதைபதைப்பு மேலோங்க மாயாவின் முகத்தையே பார்த்தான். அவள் ஒரு உயிரற்ற சடலத்தைப் போல சலனமில்லாமல் நின்றிருந்தாள்.

“சேஷன்...” - மாயா பயத்துடன் முணுமுணுத்தாள்.

புருஷன் “ஆமாம்” என்று தலையை ஆட்டினான்.

“அவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு?” - அவள் கேட்டாள்.

“அவருக்கு அந்த எலும்புக்கூடு மேல இருக்குற ஈடுபாடு இன்னும் குறைஞ்சதா தெரியல.”

புருஷன் மனதில் கூச்சம் உண்டாகக் கூறினான். இந்த வார்த்தைகளை அவன் கூறியபோது தன்னுடைய எலும்புகளுக்குள் குளிர்ச்சி பரவுவதையும் அவன் உணராமல் இல்லை.

“என்னால நம்பவே முடியல” - மாயா மெதுவான குரலில் சொன்னாள்.

“என்னாலயும்தான்” -புருஷன் சொன்னான். “ஆனால், உண்மையே அதுதான். அந்தப் பிணம் இந்த நிமிஷம்வரை மண்ணோடு போய்ச் சேரல. ஏதோ உயிரோட இன்னும் அவ இருக்கான்னு சேஷன் நினைச்சிக்கிட்டு இருக்காரு போல இருக்கு...”

“சரி... நாம இங்கே இருந்து போகலாம்”- அவள் அவனின் கையைப் பிடித்து வலிய இழுத்தாள். அவளுக்கு மனதில் பயம் உண்டாகிவிட்டிருந்தது.

“நான் வரல...” - புருஷன் அவளின் கையிலிருந்து தன்னுடைய கையைப் பிரித்து விட்டு, அங்கேயே நின்றிருந்தான். “சேஷன் நம்மோட வழிகாட்டி. காட்டுல இருந்து நாம வெளியே போகணும்னா, அதற்கான பாதையைத் தெரிஞ்ச ஒரே ஆளு சேஷன்தான். அவர் பின்னாடி போனாத்தான் நாம ஊர் போய் சேர முடியும்.

கொஞ்சமும் விருப்பமே இல்லாத சில வார்த்தைகளைக் கேட்டது மாதிரி மாயா அதிர்ச்சியடைந்து நின்றாள்.

“நான் ஊருக்கு வரல” -அவள் சொன்னாள்.

“நீயும் என் கூட வரணும். வந்தே தீரணும்...”

“மாட்டேன்... மாட்டேன்... இங்கேயிருந்து நான் வேற எங்கேயும் வர்றதா இல்ல.”

அவளின் உதடுகள் பயத்தால் லேசாக துடித்தது.

“நீ ஒண்ணும் காட்டுல பிறந்த பெண் இல்ல. இங்க சொந்தம்னு சொல்லிக்க உனக்கு யாருக்கு இருக்காங்க? இந்தக் காட்டை விட்டு நீ வேற எங்கே வேணும்னாலும் போகலாம். அதற்கான முழு சுதந்திரமும் உனக்கு இருக்கு. பிறகு... நீ யாருக்காகப் பயப்படுற?”


அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. ஒரு உயிரற்ற சடலத்தைப் பார்த்ததைப் போல அவள் சிறிது நேரம் அப்படியே செயலற்று நின்று விட்டாள். அவளின் பார்வையில் கொஞ்சம் கூட துடிப்பே இல்லாமல் இருந்தது. எல்லா ஆசைகளையும் முழுமையாக உதறியெறிந்த ஒரு பெண்ணாக அவள் மாறிப் போய் நின்றிருந்தாள். அதே பார்வையுடன், பின்னோக்கி... பின்னோக்கி... மெதுவாக அவள் நடந்து அவனை விட்டு நீங்கினாள்.

“மாயா!” - புருஷன் அழைத்தான்.

“நீ போகாத... போகாத... நாம ரெண்டு பேரும் சேர்ந்து இங்கேயிருந்து தப்பிச்சிடலாம்...”

“வேண்டாம்... வேண்டாம்...” - மாயா உரத்த குரலில் கத்தியவாறு ஓடத் தொடங்கினாள்.

“நான் தப்பிக்க விரும்பல. தப்பிக்கிறதுக்கு என்ன இருக்கு?”

ஒரு நிமிடம் புருஷன் அவளுக்குப் பின்னால் போவதா வேண்டாமா என்று சிந்தித்தவாறு நின்றிருந்தான். சிறிது முயற்சி செய்தால் ஒரு வேளை அவளை அவளின் தீர்மானத்திலிருந்து அவனால் மாற்றி விட முடியும். மாறாக, சேஷனை அவன் இழக்க நேரிட்டால்...? அவரை அவன் இழந்துவிட்டால், ஊருக்குப் போகும் பாதையை அவன் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதற்குப் பிறகு எந்தக் காலத்திலம் அந்தப் பாதையைத் தெரிந்து கொள்ளவே முடியாமற்போய்விடும் என்பதே உண்மை.

மாயாவை இழப்பது என்பது அந்த நிமிடத்தில் அவனுக்கு ஒரு மிகப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அவன் மனதில் உண்டான துக்கத்தை அடக்கிக் கொண்டு அவள் ஓடிச் சென்ற திசையையே பார்த்தான்.

 அவள் மரங்களுக்கப்பால் மறைந்து விட்டிருந்தாள். அந்தப் பக்கத்திலிருந்து புலி உறுமும் சத்தம் கேட்டது. மனித எலும்புகள் நொறுங்கும் சத்தமும் கேட்டது.

மாலை நேரம் வரும் வரை புருஷன் அங்கேயே நின்றிருந்தான். மாலை நேரம் வந்ததும் சேஷன் இருந்த இடத்தை விட்டு எழுந்தார்.

சிறிது தூரத்தில் படர்ந்து கிடக்கும் கொடிகளுக்கு அப்பால் இரண்டு உயிர்கள் நிரந்தரமாகப் பிரிந்து போன கதையை அவர் தெரிந்திருக்கவில்லை. அங்கிருந்து கேட்ட சத்தங்களோ, அசைவுகளோ எதுவும் அவரைப் போய் அடையவில்லை. தன்னுடைய செயலில் அந்த அளவுக்கு அவர் முழுமையாக மூழ்கிப்போயிருந்தார்.

சேஷன் நடக்க ஆரம்பித்தபோது, புருஷன் அவரைப் பின் தொடர்ந்தான்.

அந்த நேரத்தில் சேஷனுக்க முன்னால் போய் நிற்க அவனுக்கு பயமாக இருந்தது. அந்தப் பயம் எதற்காக வந்தது என்பதற்கான காரணம்தான் அவனுக்குத் தெரியவில்லை.

சேஷனுக்கு எதுவுமே தெரியவில்லை. பெரிது பெரிதாக காலடியை எடுத்து வைத்து, இடப்பக்கமோ வலப்பக்கமோ பார்க்காமல் அவர் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கிறபோதும், காடே அதிர்வதைப் போல் புருஷனுக்குத் தோன்றியது.

இப்போது நன்கு இருட்டிவிட்டிருந்தது. புருஷன் மிகவும் களைப்படைந்து போயிருந்தான். புருஷன் எந்த இடத்திலும் அமர்ந்து இளைப்பாறப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். அந்த நினைப்பே அவனை மேலும் தளர்வடையச் செய்தது.

சேஷன் தலைக்கு மேலே பெரிய பெரிய வௌவால்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அவற்றின் தொந்தரவு அதிகம் ஆனபோது, அவர் ஒரு காட்டு மிருகத்தைப் போல அலறினார். அப்போது முழு காடும் குலுங்குவதைப் போல புருஷன் உணர்ந்தான். சேஷனின் அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு, குள்ள நரிகள் ஊளையிட்டன. நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு சேஷன் விழுந்து விழுந்து சிரித்தார்.

அந்தப் பயணம் பொழுது புலரும் வரை நீண்டது.

பொழுது புலர்வதற்கு சற்று முன்னால் அவர்கள் காட்டின் எல்லையை அடைந்தார்கள்.

கிழக்குப் பக்கம் பிரகாசம் தெரிந்தது. வெளிச்சம் பரவிவிட்டிருந்த ஆற்றில் இறங்கி சேஷன் நீர் குடித்தார். ஒரு காட்டு மிருகம் நீர் குடிக்கும் ஓசையை அப்போது சேஷனின் செயலில் புருஷன் உணர்ந்தான். அப்போது கூட சேஷனுக்கு முன்னால் போய் நிற்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை.

ஆற்றுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மரத்தின் கீழேயிருந்த ஆடைகளை எடுத்து சேஷன் அணிந்தார். நிர்வாண கோலத்தை அவர் முழுமையாக ஆடை கொண்டு மறைத்த பிறகுதான் புருஷனுக்கு அவரை நேருக்கு நேராகப் பார்க்க தைரியமே வந்தது. நிர்வாண கோலத்திலிருந்து விடுபட்ட நிமிடத்திலேயே சேஷனிடம் இருந்த ஒரு பயங்கரத்தனம் சற்று குறைந்து விட்டதைப் போல் உணர்ந்தான் புருஷன்.

இப்போது சேஷனுக்கு முன்னால் போய் நிற்க அவன் தீர்மானித்தான். காட்டைத் தாண்டி தூரத்தில் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களின் சத்தம் அப்போது அவன் காதுகளில் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்தச் சத்தம் இவ்வளவு நேரமும் இல்லாதிருந்த ஒரு சுய உணர்வு நிலைக்கு அவனைக் கொண்டு வந்தது.

பலவித சிந்தனைகளுடன் அவன் சேஷன் முன்னால் போய் நின்றான். அவன் கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. ஒரு காட்டு மிருகத்திடம் இல்லாவிட்டால் பிசாசின் முன்னால் போய் நிற்கும் நிலையைப் போல் தன்னுடைய தற்போதைய நிலையை அவன் எண்ணிப் பார்த்தான்.

சேஷன் தன் முன்னால் வந்து நின்றிருக்கும் அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தார். அவரின் கண்களில் அதுவரை பற்றி எரிந்து கொண்டிருந்த பெரும் நெருப்பு திடீரென்று அணைந்தது. அந்தக் கண்களில் கருணையும், நம்பிக்கையும் தெரிவதைப் போல் புருஷன் உணர்ந்தான்.

“நான்... புருஷன்...” - அவன் சொன்னான். “அவுசேப்போட மகன்”

சேஷன் அவனைத் தெரிந்து கொண்டது போல் தலையை ஆட்டினார்.

“நான் நேற்று பகல்ல இருந்து உங்க பின்னாடிதான் இருக்கேன்.”

அதைச் சொன்னபோது புருஷனின் குரலில் ஒருவித பயம் கலந்திருந்தது.

அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டு, சேஷனின் கண்கள் விரிந்தன.

“நீங்க அந்த எலும்புக் கூட்டுடன் உடலுறவு கொண்டதை நான் பார்த்தேன்.”

புருஷன் சொன்னான்.

சேஷன் ஒரு சிலையைப் போல அசையாமல் நின்றிருந்தார்.

“நீங்கதான் நான் காட்டை விட்டு வெளியே வர உதவினீங்க. நீங்க வழி காட்டியதை வச்சுத்தான் என்னால காட்டை விட்டு வெளியே வர முடிஞ்சது.”

புருஷன் ஒரு கல்லைப் பார்த்துச் சொல்வது போல் மனதில் பக்தி மேலோங்கிய குரலில் சொன்னான்.

“உங்களுக்கு நன்றி.”

அதைக் கேட்டு சேஷன் விழுந்து விழுந்து சிரித்தார். அவரின் சிரிப்பு காடு முழுக்க எதிரொலித்தது. சிரிப்பின் முடிவில் அவர் இரு கைகளையும் சேர்த்துத் தட்டினார். தன்னுடைய தொடைகளைத் தட்டியவாறு உரத்த குரலில் கத்தினார்.

“பயங்தாங்கொள்ளி...” - சிரிப்பின் முடிவில் அவர் சொன்னார்.

“மூணாவது வண்டி வரப் போகுது...”


“எப்போ?”

புருஷன் தன்னையும் மீறிய ஒரு உணர்வில் கேட்டான்.

“சீக்கிரமே ஒரு வேளை... இன்னைக்கே வரலாம். இல்லாட்டி ஒரு யுகம் கழிச்சு... எது எப்படியோ நான் உங்களோட ராஜாவா ஆவேன். எல்லாரோடயும்...”

“எங்களுக்கு ராஜான்னு யாரும் கிடையாது” - பயந்து நடுங்கியவாறு புருஷன் சொன்னான். “எங்களுக்கு ராஜா ஒரு பிரச்சினையே இல்லை...”

“நிச்சயம் பிரச்சினைதான்...” - சேஷன் சொன்னார். “இல்லாட்டி நான் பிரச்சினையை உண்டாக்குவேன்.”

ஒருவித பரபரப்புடன் சேஷன் தனக்கே உரிய மொழியில் பேசுகிறார் என்பதை புருஷன் புரிந்து கொண்டான். இந்த பரந்து கிடக்கும் உலகத்தில் யாருக்குமே தெரியாத சில ரகசியங்கள் தனக்குத் தெரியப் போகின்றன என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான்.

“எப்படி?” - அவன் கேட்டான்.

“மூணாவது வண்டியில் என்ன வருதுன்னு உனக்குத் தெரியுமா?”

சேஷன் கேட்டார்.

“தெரியாது.”

சேஷன் அதைக் கேட்டு உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தார். அவரின் பற்கள் அந்தக் காலை நேர வெயிலில் பிரகாசித்தன.

“அவளோட எலும்புக்கூடு”- அவர் உரத்த குரலில் சொன்னார்.

“அவளோட எலும்புக் கூடு என்னைத் தேடிப் பயணம் செஞ்சு வருது. பொறுத்திருந்து பார்...”

அதைச் சொல்லிவிட்டு, அவர் ஓடினார். காட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் ஒற்றையடிப்பாதை வழியே அவர் ஓடி மறைந்தார்.

அவர் போய் மறைந்தவுடன், ஒரு பெரிய புயல் அடித்து ஓய்ந்ததைப் போல் உணர்ந்தான் புருஷன்.

அவன் மெதுவாக நடந்தான். அந்தக் காலை வேளையிலேயே அவன் நன்றாக வியர்த்து விட்டிருந்தான்.

நடக்க நடக்க பாதை நீள்வதைப் போல் அவனுக்குத் தோன்றியது. எப்போது பார்த்தாலும் சிறிது தூரத்தில் கிராமத்து மனிதர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால், அவன் நடந்து செல்லும் பாதை மட்டும் இன்னும் முடியாமலே இருந்தது.

மதிய நேரம் ஆனபோது அவன் கிராமத்தின் எல்லையை அடைந்தான். காட்டின் சத்தங்கள் அவனிடமிருந்து இறுதி விடை பெற்றன. அவன் மனதில் அப்போது ஒருவித துக்கம் சூழ்ந்தது. வாழ்க்கையில் இனியொரு முறை தான் காட்டின் இனிமையான இசையைக் கேட்க முடியாது என்பதை நினைத்துப் பார்த்த போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அந்த நினைப்பு சில நிமிடங்களுக்கு அவனை மவுனியாக ஆக்கியது.

கிராமத்துக்குப் போகும் வழியின் ஆரம்பத்தில் சில மனிதர்கள் காத்து நின்றிருந்தார்கள். காட்டிலிருந்து வரும் அவனை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர். அவர்களை அவன் அடுத்த நிமிடம் யார் யாரென்று அடையாளம் கண்டு கொண்டான். ஆனால், ஆச்சரியப்பட்டு நிற்கவோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலையிலோ அவர்கள் இல்லை. யாரும் குசலம் விசாரிக்கவில்லை. எல்லோரின் முகங்களிலும் பட்டினியின், வறுமையின் பிரதிபலிப்பு தெரிந்தது. எல்லோருக்கும் தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான். அவர்கள் அதை திரும்பத் திரும்ப கேட்டனர்.

“காட்டுல தீ பிடிச்சிருக்கா?”

“சீக்கிரம் வண்டி வருமா?”

“மூணாவது வண்டியோட சத்தத்தை நீங்க அங்கே கேட்டீங்களா?”

புருஷன் அவர்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பதில் அவன் மனதில் இருக்கவே செய்தது. தன்னுடைய பதில்கள் அவர்களிடம் உண்டாக்கப் போகும் பாதிப்பையும் அவன் உணர்ந்தே இருந்தான்.

இருந்தாலும் அவன் எந்தவித பதிலும் கூறாமல் வெறுமனே அமைதியாக இருந்தான். எல்லாமே தெரிந்திருந்தும் ஒன்றுமே தெரியாதது போல் இருக்கும் ஒரு துறவியைப் போல் அவன் நடந்து கொண்டான். மிகவும் அமைதியாக, மக்கள் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு பாதையை உண்டாக்கிக் கொண்டு அவன் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான்.

அவன் எந்த பதிலும் சொல்லாததால், அவனை அவர்கள் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. காட்டிலிருந்து வரும் ஒற்றையடிப் பாதையை நோக்கி மீண்டும் அவர்களின் பார்வை பதிந்தது.

6

புருஷன் மீண்டும் திரும்பி வந்தது அவன் தந்தையிடம் குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு எந்தவித ஆச்சரியத்தையும் உண்டாக்கவில்லை.

வாசலின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் சுருண்டு படுத்துக் கிடந்தான் கிழவன். யாரோ வரும் ஓசையைக் கேட்டதும், அவன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

புருஷன் மன்னிப்புக் கேட்கிற பாவனையில் தன் தந்தையின் முகத்தையே பார்த்தான். கிழவன் மிகவும் மெலிந்து தளர்ந்து போய் காணப்பட்டான். பட்டினியும், வறுமையும் அவன் உடம்பில் பலவித பாதிப்புகளையும் உண்டாக்கிவிட்டிருந்தன.

“நீ எங்கேயிருந்து வர்ற?” - அவுசேப் கேட்டான்.

“காட்டுல இருந்து...” - அவன் சொன்னான்.

“காட்டுல இருந்தா?” - கிழவன் வேகமாக எழ முயற்சித்தான். அவன் கண்களில் புது உற்சாகம் பிறந்தது மாதிரி இருந்தது. “அங்கே என்ன விசேஷம்?”

“ஒரு விசேஷமும் இல்ல...” - புருஷன் சொன்னான்.

“வண்டி புறப்பட்டிருச்சா?”

புருஷன் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

“நீ வண்டியைப் பார்த்தியா?”

“இல்ல...”

“எப்போ வரும்னு தெரியுமா?”

அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். சேஷன் சொன்ன விஷயத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.

“சீக்கிரம் வரும். ஒரு வேளை இன்னைக்கே வந்தாலும் வரலாம். இல்லாட்டி ஒரு யுகம் கழிச்சு...”

அவனின் தந்தையின் கேள்விக்கு அவன் சொல்ல வேண்டிய பதில் அதுதான். ஆனால், அதை அவன் எப்படிச் சொல்வான்? அதைச் சொன்னால் தனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று அந்தக் கிழவன் தீர்மானித்துவிட்டால்...?

தற்போதுள்ள சூழ்நிலையில் பதில் எதுவும் கூறாமல் வெறுமனே அமைதியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

“உனக்குத் தெரியாதா?” - அவன் தந்தை கேட்டார்.

“தெரியாது...” - புருஷன் சொன்னான்.

“காட்டுல உன் கூட யாரெல்லாம் இருந்தாங்க?”

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு புருஷன் சொன்னான். ஒரு பெண் இருந்தா...”

“நான் நினைச்சேன்” - தனக்குத் தானே ஏதோ முணுமுணுத்த கிழவன் அடுத்த நிமிடம் கட்டிலில் சாய்ந்தான்.

பகல் முழுவதும் புருஷன் வராந்தாவிலேயே உட்கார்ந்திருந்தான். யாரும் அவனைத் தேடி வரவில்லை. தான் திரும்பி வந்த விஷயம் அங்கிருந்த மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு விஷயமாகவே தோன்றவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். ஒரு வேளை சேஷனை வெளியேற்றியது மாதிரி தன்னையும் அவர்கள் சமூகத்தை விட்டு தள்ளி வைத்து விட்டார்களோ என்று கூட அவன் பயந்தான்.

பாதையில் நடந்து சென்றவர்களில் சிலர் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் புதிதாக எதுவும் நடக்கவில்லை என்பது மாதிரி அவனை உற்றுப் பார்த்துவிட்டு நடந்து போனார்கள். அவனுக்கு நன்கு பழக்கமானவர்களாக இருந்த சிலர் மட்டும் அவனைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள்.


யாரிடமும் எதுவும் பேசவேண்டும் என்ற எண்ணம் புருஷனுக்கு உண்டாகவில்லை. தான் உண்டாக்கிக் கொண்ட செயற்கையான ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் எழவில்லை.

பசியும், தாகமும் அவனுக்குத் தோன்றின. இடையில் அவன் எழுந்து சமையலறைப் பக்கம் போய்ப் பார்த்தான். அங்கே ஒரு பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் பழைய தண்ணீர் இருந்தது. அந்தப் பாத்திரத்தை உயர்த்திப் பிடித்து, அந்த நீர் முழுவதையும் அவன் குடித்தான்.

உள்ளேயிருந்த அறையில் அவன் எப்போதும் படுக்கும் கட்டிலில் அப்போதும் விரிக்கப்பட்டிருந்த துணிகள் கசங்கிக் காணப்பட்டன. தான் வீட்டை விட்டு போன பிறகு அந்தத் துணிகளை யாரும் கையால் கூடத் தொடவில்லை என்பதை புருஷன் புரிந்து கொண்டான். அந்தத் துணிகளில் இருந்து ஒரு பழமையான வாசனை வீசியது.

அவன் அந்தக் கட்டிலில் போய் விழுந்தான். தளர்ந்து போன ஒரு மனிதனைப் போல சுருண்டு படுத்தான். அவன் கண்களை உறக்கம் வந்து சூழ்ந்தது.

7

புருஷன் ஒரு பெரிய கூக்குரலைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். உலகமே பயங்கர ஆரவாரமாக இருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. எங்கோ யாரோ உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டின் முற்றத்தில் ஏராளமான ஆட்கள் ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் ஓடும் காலடி சத்தமும் அவர்கள் உண்டாக்கிய ஆரவாரமும் காற்றைக் கிழித்துக் கொண்டு எதிரொலித்தது.

புருஷனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நடுராத்திரி நேரம் ஆகியிருந்தது என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்தது. அவனைச் சுற்றிலும் பயங்கர இருட்டாக இருந்தது.

தட்டுத் தடுமாறி அவன் எழ முயற்சித்தான். அப்போது வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

“புருஷா எழுந்திரு. எழுந்திரிடா...” - அழைத்தது அவன் தந்தைதான். அவன் குரல் நடுங்கியது. பரபரப்பும், ஆர்வமும் நிறைந்த குரலில் அவன் கத்தினான். “வண்டி வருது.”

அடுத்த நிமிடம் புருஷன் வேகமாக எழுந்தான். இருட்டில் எங்கோ தூரத்திலிருந்து மணியோசை ஒலிப்பது அவன் காதுகளில் விழுந்தது.

அவுசேப்பின் கையில் ஒரு லாந்தர் விளக்கு இருந்தது. கிழவனின் நடுங்கிக் கொண்டிருந்த விரல்களில் லாந்தர் விளக்கு இப்படியும் அப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தது.

புருஷன் தன் தந்தையின் பக்கத்தில் போய் நின்றார். லாந்தர் விளக்கை தன் கையில் தரும்படி அவன் கைகளை நீட்டினான். ஆனால், கிழவன் அவன் கையில் விளக்கைத் தரவில்லை.

“நீ ஓடு. என்ன இருந்தாலும் உனக்கு வயசு குறைவுதானே! என்னால் விளக்கு இல்லாம பாதையைக் கண்டுபிடிக்க முடியாது.”

“அப்பா, நீங்களும் வர்றீங்களா என்ன?” - புருஷன் ஆச்சரியத்துடன் கேட்டான்.

“பிறகு, வராம...” - பல வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக கிழவன் லேசாகப் புன்னகை செய்ததை புருஷன் உணர்ந்தான்.

புருஷனுக்கு முன்பே கிழவன் முற்றத்திற்கு வந்திருந்தான். அவனின் ஒரு கையில் லாந்தர் விளக்கும் இன்னொரு கையில் ஊன்றுகோலும் இருந்தன. படுவேகமாக கிழவன் ஓட ஆரம்பித்தான். கிழவனின் ஓட்டத்தைப் பார்த்து புருஷனே ஆச்சரியப்பட்டான். அவன் ஓட்டத்திற்கு புருஷனால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

நான்கு பக்கமும் பயங்கர இருள் சூழ்ந்திருந்தது. இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு பெண் உரத்த குரலில் அழுவது கேட்டது. நீண்ட நேரம் அந்த அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

புருஷன் ஒரு நிமிடம் அப்படியே செயலற்று சிலையென நின்றுவிட்டான். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.

திடீரென்று இருட்டுக்கு மத்தியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் வந்தது ராமனின் வீட்டிலிருந்து என்பதை புருஷன் புரிந்து கொண்டான். வெளிச்சத்திற்கு மத்தியில் மீண்டும் அந்தப் பெண் குரல் கேட்டது. தொடர்ந்து அந்த வெளிச்சம் அணைந்தது. ராமனின் வீடும் மூடியது.

இருட்டைக் கிழித்துக் கொண்டு மீண்டும் அந்தப் பெண்ணின் அழுகைச் சத்தம் கேட்டது. இந்த முறை அந்தச் சத்தம் மிகவும் சமீபத்தில் கேட்டது.

கிழவன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். அவன் அப்போது முன்னோக்கி ஓடிக் கொண்டுதான் இருந்தான்.

இருட்டுக்கு மத்தியில் வேறொரு மூலையில் திடீரென்று  ஒரு பிரகாசம் தெரிந்தது. அது சுப்ரனின் வீட்டிலிருந்து வரும் வெளிச்சம் என்பதை புருஷன் புரிந்து கொண்டான். அந்த வெளிச்சத்திற்கு நடுவில் அந்தப் பெண்ணின் குரலும் காற்றைக் கிழித்துக்கொண்டு கேட்டது.

பிறகு அந்தப் பெண் குரலும் நின்றது. வெளிச்சமும் இல்லாமல் போனது. சுற்றிலும் இருட்டு மட்டுமே இருந்தது.

இருட்டில் எங்கே தூரத்திலிருந்து குதிரைகளின் குளம்பொலிகளும் மணிகளின் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருப்பதை புருஷனால் புரிந்து கொள்ள முடிந்தது.

புருஷன் அங்கேயே நின்றிருந்தான். இருட்டுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருந்த அவுசேப் திடீரென்று உரத்த குரலில் கத்தினான்.

என்னவென்று திடுக்கிட்டு பார்த்தபோது கிழவன் கீழே விழுந்து கிடந்தான். அவன் கையிலிருந்த லாந்தர் விளக்கின் திரி மண்ணில் பட்டு, கடைசி முறையாகப் பெரிதாக சுடர்விட்டு எரிந்தது. பிறகு அது நிரந்தரமாக அணைந்தது.

இருட்டில் கிழவனின் சத்தமும் நின்றது.

மணிச்சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது சுற்றிலும் சூழ்ந்திருந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒரு சிரிப்புச் சத்தம் கேட்பதை புருஷன் உணர்ந்தான். அந்தச் சிரிப்புச் சத்தம் எல்லாத் திசைகளிலும் மோதி எதிரொலித்தது.

அது சேஷனின் சிரிப்பு என்பதைக் கண்டுபிடிக்க புருஷனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.

புருஷன் இருட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான். அவனிடம் நம்பிக்கை என்ற ஒன்று முற்றிலுமாக வற்றி விட்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.