
கலெக்டரின் அலுவலகத்திலிருந்து சிறைச்சாலைக்கு...
பின்பு அங்கிருந்து தூக்கு மேடைக்கு...!
நீதிமன்றத்தில் மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அங்கே கூடியிருந்த மனிதர்களில் ஒருவரேனும் சற்று வாயைத் திறக்க வேண்டுமே! ஊஹூம்... அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இதோ இந்த அறிவிப்பு.
“ஸ்ரீ தேவராஜ மேனன் ஐ.ஏ.எஸ். தம் மனைவியைக் கொலை செய்ததாகச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிய வருவதால், அவருக்கு இந்த நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளிக்கும்படி தீர்ப்புக்கூறுகிறது” ... sentence to be hanged by the neck till he is dead… (கழுத்தில் சுருக்கிட்டு, இறக்கும்வரை தூக்கிலிடும்படி தண்டனை விதிக்கப்படுகிறது.)
அதில் அடங்கியிருந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வெடிகுண்டு போல் தோன்றியது. எங்கே அவை என் உள்ளத்தைத் தாக்கி நுழைந்துவிடுமோ என்று கூட அஞ்சினேன்.
ஐ.ஏ.எஸ்... இந்தப் பட்டத்தைக் கூறும்போது அந்த நீதிபதியின் குரலில்தான் எவ்வளவு அழுத்தம்!
நீதிமன்றத்தில் ஒரே மயான அமைதி நிலவிக் கொண்டிருந்த அந்த வேளையில், அந்த மவுனத்தின் கொடுமையைத் தாங்கிக் கொள்ளச் சக்தி இல்லாததாலோ என்னவோ தமக்கென்றே உரிய அறைக்குள் நுழைந்துகொண்டார் நீதிபதி. நீதிமன்றத்தில் கூடியிருந்தவர்களின் கண்களும் என்னைத்தான் வெறித்து வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. அந்தக் கண்களில் காணும் கொடூரத்துக்குத்தான் எவ்வளவு சக்தி!
போலீஸ்காரர்களின் காலணிச்சப்தம் கேட்டபோதுதான் நான் இருக்கும் சூழல் பற்றிய எண்ணமே எனக்கு வந்தது.
நீதிமன்றத்தில் ஒரே நிசப்தம்.
போலீஸ்காரர்கள் புடைசூழ்ந்து வர நான் போலீஸ் வண்டியில் ஏறியபோது என் முகத்தைப் படம் பிடித்த கேமராக்கள்தாம் எத்தனை! இத்தனை புகைப்பட நிபுணர்கள் எங்கிருந்துதான் வந்தார்களோ?
ஸார்... ப்ளீஸ்... தலையைக் கொஞ்சம் வலது பக்கம் சாயுங்கள்! ப்ளீஸ், ப்ளீஸ் ஸ்மைல் ஸார்... இன்று யாரும் என்னிடம் இப்படிக் கூறவில்லை... நன்றி!
முன்பு என் திருமணம் முடிந்தபோது தம்பதிகளான என்னையும் ஸ்வப்னாவையும் சுற்றி எத்தனை எத்தனை ஃபோட்டோக்காரர்கள்! அன்று, “கொஞ்சம் நெருங்கி, ப்ளீஸ் இன்னும் கொஞ்சம்...” என்று நரைத்த தலைமுடியும் நீண்ட தாடியும் வைத்திருந்த அந்த ஃபோட்டோக்காரர் ஸ்வப்னாவுடன் சற்று நெருங்கி நிற்கும்படி கூறியபோது எனக்கு சிறிது கூச்சந்தான்! அப்போது பந்தலில் கூடியிருந்தோரின் கேலிச் சிரிப்பைக் கேட்க வேண்டுமே! கடைசியில் நெருங்கி நின்றதென்னவோ ஸ்வப்னாதான்!
“குட்! தாங்க்யூ, ஸிஸ்டர்!”
அந்த ஆளைப் பொறுத்தவரை எல்லாப் பெண்களுமே சகோதரிகள்தாம்!
அது நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?
எட்டு வருஷகாலம் ஆகிவிட்டது!
இனி என்னைப் புகைப்படம் எடுக்க யாரால் முடியும்? அப்படி நினைத்தாலும் எடுக்கத்தான் முடியுமா? சிறைச்சாலைக்குள்ளேதான் புகைப்படம் எடுக்க முடியாதே!
சிறைச்சாலையின் வாசலில்தான் எவ்வளவு கூட்டம்! நான் இதுவரை அணிந்திருந்த ஆடைகளை அகற்றி, அதிகாரி கொடுத்த சிறை உடுப்புகளை அணிந்தேன். திருமண நாளன்று அணிந்த மோதிரமும் கடிகாரமுமே என் உடலில் இருந்த விலையுயர்ந்த பொருள்கள்! மோதிரத்தைக் கழற்றத்தான் பலமான போராட்டமே செய்ய நேர்ந்தது. அதை விரல்களில் அணிந்து கிட்டத்தட்ட பதினொரு வருஷங்கள் அல்லவா ஆகிவிட்டன! நிச்சயதார்த்தத்தன்று குத்துவிளக்கைச் சாட்சியாக வைத்து விரல்களில் அணிந்த மோதிரம் அது! மோதிர விரலில் எஞ்சி நின்ற தழும்பு என்னையே வெறித்து நோக்குவதுபோல் ஓர் உணர்வு; காக்கி ஆடையணிந்த அந்தச் சிறை அதிகாரி அந்த மோதிரத்தில் செதுக்கப்பட்டிருந்த 'S' என்ற ஆங்கில எழுத்தையும், என்னையும் மாறிமாறிப் பார்த்தார்.
மகாபாவி நான்! இந்த மோதிரத்தை என் விரல்களில் அணிவித்த அவளையே அல்லவா கொன்றுவிட்டேன். சிறை அதிகாரியின் பார்வையின் பொருள் கூட ஒரு வேளை இதுவாகத்தான் இருக்குமோ? என் உதடுகளில் வறண்ட சிரிப்பு ஒன்று மலர்ந்ததுபோல் ஓர் உள்ளுணர்வு!
காக்கி உடையணிந்த அந்த அதிகாரி என் கடிகாரத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு என்ன நினைத்தாரோ, அதைக் காதோரம் வைத்து மெதுவாகக் குலுக்கிப் பார்த்தார். ஒரு வேளை கடிகாரம் ஓடாமல் நின்று விட்டதோ? அந்தக் கடிகாரத்தை கையில் கட்டித்தான் எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன! இப்போதுதான் அதன் ஓட்டம் நின்றிருக்க வேண்டும். என் சின்னஞ்சிறு மகள் பிந்துமோள் மட்டும் அதைக் கண்டிருந்தால் என்ன சொல்லியிருப்பாள்?
“டாடீ, சிறிய முள் பதினொன்றிலும் பெரிய முள் ரெண்டிலும் நிக்குதே!” என்று கேட்டிருப்பாளோ, முன்பெல்லாம் கேட்பது போல்?
“டாடீ என்று என்னை அழைக்காதே மகளே, அப்பா என்று கூப்பிடு! அதுதான் நன்றாக இருக்கிறது.” - இது நான்.
“அப்படி வேண்டாம். என் ஸ்வீட்டி! ‘டாடீ’ என்றே கூப்பிடு.” - இது ஸ்வப்னா.
எப்படிக் கூப்பிட்டால் நல்லது என்று தெரியாமல் என்னையும் தாயையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருப்பாள் பிந்து.
“நான் ‘மம்மி’ இல்லையா! சொல்லு டார்லிங், டாடீ என்று அழைத்தால் போதுமென்று. ‘அப்பா’, ‘அம்மா’ என்று அழைப்பதா? சே! சே! ஷேம் தேவு (வேலையாள்) இருக்கிறானே, அவனுடைய மகன் தன் தாயை ‘அம்மா’ என்கிறான்; அவன் கூப்பிடுவதுபோல் நீ கூப்பிடுவதாவது!”
உண்மைதான்...
தேவுவின் மகன் - ஓர் ஏழையின் மகன் - தந்தையையும் தாயையும் அழைப்பதுபோல் ஸ்வப்னாவின்- ஒரு லட்சாதிகாரிணியின் - மகள் தன் தந்தையையும் தாயையும் அழைப்பதாவது!
‘ஷேம்’தான்!
மாதர் சங்கத்திலிருந்து தினமும் வெகு நேரம் கழிந்த பிறகே வீட்டுக்கு வருவாள் ஸ்வப்னா. நான் மேஜை மீது குவிந்த ஃபைல்களை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்து கொண்டிருப்பேன். வாசலையே நோக்கி அமர்ந்திருக்கும் பிந்து கண்களை மெல்லச் செருகிக்கொண்டு கொட்டாவி விடுவாள்.
“எனக்கு தூக்கம் வருது, டாடீ...”
“மணி என்ன ஆகிறது என்று பார், மகளே.”
என்னுடைய பழைய கடிகாரம் பெரும்பாலும் ஓடாது. ஸ்வப்னாவின் தந்தை துபாயிலிருந்து வாங்கி வந்திருந்த அந்தச் சுவர்கடிகாரம் பெரும்பாலும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும். வரவேற்பு அறையில் இருக்கும் அந்தக் கடிகாரத்தில்போய் மணி பார்த்துவிட்டு வருவாள் என் அன்பு மகள்.
“டாடீ! சிறிய முள் பதினொன்றிலும் பெரிய முள் ரெண்டிலும்.”
“வா மகளே! நான் கதை சொல்லுகிறேன்; கேட்டுக் கொண்டே தூங்கிவிட வேண்டும். என்ன?”
படியில் ஏறிப் படுக்கையறைக்குப் போக முற்படும்போது, தேவுவின் ஏக்கம் நிறைந்த விழிகள் எங்களையே நோக்கிக் கொண்டிருக்கும். பாவம், என்ன இருந்தாலும் அவனும் ஒரு குடும்பத் தலைவனில்லையா?
“போலீஸ்காரனும் திருடனும் கதை சொல்லுங்க, டாடீ!”
“சரி மகளே! சொல்கிறேன்.”
களங்கமற்ற அந்தச் சின்னஞ்சிறிய குழந்தையை- என் அன்பு மகளை மார்போடு அணைத்தபடி நான் கதை சொல்லுவேன்.
“பல வருஷத்துக்கு முன் ஒரு ஊரில் ஒரு பெரிய திருடன் இருந்தான்.”
இதற்கு முன் எத்தனையோ தடவை சொன்ன கதைதான் அது. என்றாலும் அதே கதையைத் திரும்பத் திரும்பக் கேட்பதில் அப்படி ஒரு விருப்பம் பிந்துவுக்கு. ஒவ்வொரு முறை கதை சொல்லும்போதும் போலீஸ்காரரின் புதுப் புது சாகசங்களை வர்ணிப்பேன். பிந்து உறங்கும்வரை என் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். வேதனை தரக்கூடிய எண்ணங்களால் பாதிக்கப்பட்டு, நானுங்கூடச் சில சமயங்களில் கதை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே உறங்கிவிடுவதும் உண்டு. காரின் ‘ஹார்ன்’ ஒலி வெளியே கேட்டவுடன், விழித்து விடுவேன். கலெக்டருடைய பங்களாவின் இரும்பு ‘கேட்’டைத் திறக்கும்போது, அதன் சப்தத்துடன் பல சமயங்களில் ஸ்வப்னாவின் குரலும் சேர்ந்து ஒலிக்கும்.
“இடியட்! இப்படியா கோழி மாதிரி உறங்குவது...’
அவள் சொன்ன இந்த ‘இடியட்’ என்ற வாசகம் உண்மையில் யாரைக் குறிக்கிறது? போலீஸ்காரனையா? இல்லை, கலெக்டரான அவளுடைய இந்தக் கணவனையா? பல சமயங்களில் இது குறித்து அவளிடம் கேட்க வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்திருந்தாலும், அதற்கான துணிவு கொஞ்சமும் எனக்கு வந்ததில்லை! அவள் யாரை அப்படிக் கூறியிருப்பாள் என்று என் மனசுக்குள்ளேயே போட்டு நான் குழப்பிக்கொள்வேன்... இதைப்போய் அவளிடம் கேட்காவிட்டால்தான் என்ன?
நெளிந்து சப்பையாகிவிட்ட ஓர் அலுமினியப் பாத்திரம் நிறைய கஞ்சியும், சேனையும் பயறும் சேர்த்து ஆக்கிய கூட்டும்... என் உணவு இது.
கொஞ்சங்கூட மீதி வைக்காமல் இன்றுதான் இதை உண்டு முடித்தேன். எத்தனையோ வருஷங்களுக்கு முன் என் தாய் எனக்குச் சம்பா அரிசிக் கஞ்சியையும், கறி, கூட்டையும் பரிமாறும் காட்சி என் கண்முன்னால் இப்போது தெரிகிறது. உணவறையில் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டிய ‘டேபிள்மானர்ஸுக்கு- அதுதான் மேஜையில் சாப்பிடும்போது நடந்துகொள்ளும் முறைக்கு- சிறையறைக்குள் வேலை இல்லை. முன்பு கத்தியையும், முள்கரண்டியையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை மிக மிகக் கவனத்துடன் படித்தேன். இன்று? சப்பையாகிவிட்ட இந்த அலுமினியப் பாத்திரத்தில் உள்ள கஞ்சியையும், கூட்டையும் எப்படிச் சாப்பிட வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் படிக்க வேண்டிய அவசியமே இல்லை பாருங்கள்! இவர்களில் பெரும்பான்மையோர் பிறக்கும்போதே வாயில் வெள்ளிக்கரண்டியைக் கவ்விக்கொண்டு பிறந்தவர்களில்லையா?
நீங்கள் ஒரு ‘பார்ட்டி’யில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும்போது, உங்களைக் கடந்து ஓர் இளம்பெண் போகிறாள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்குக் கீழே பணி செய்யும் ஒருவரின் மனைவியாக அவள் இருந்தாலும், அவளைக் கண்டவுடன் எழுந்து அவளுக்கு நீங்கள் மரியாதை தர வேண்டும். அவள் தன் இருக்கையில் அமர்ந்த பின்புதான், நீங்கள் அமரவேண்டும்.
பெண்களுடன் கையைக் குலுக்கும்பொழுது, அதை மிகமிக மென்மையாகச் செய்ய வேண்டும். வேண்டுமென்றே அவர்களின் விரல்களை இறுக்கிப் பிடிப்பதோ, அவர்களின் உள்ளங்கையைச் சுரண்டுவதோ கூடாது.
ஆனால், என் மனைவியே எவனோ ஒருத்தனைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு நடனம் ஆடினால்- அதுவும் கணவனான, என் கண் முன்பே இப்படி நடைபெறும்போது- கணவனுக்கு அது பிடிக்கவில்லையென்றால், தூக்கில் தொங்கிச் சாக வேண்டும். மேற்கத்திய இசைக்கருவிகள் பொரிந்து தள்ளும் கர்ணகடூரமான இசை. அந்த இசைக்கேற்ப ஆடும் இளம் பெண்களின் கால்கள், அடிக்கு ஒரு தரம் ஜோடிகளை மாற்றிக் கொண்டு நள்ளிரவு நேரம் வரையில் தொடரும் நடனம். முதல் முதலாக ஸ்வப்னா நடனம் ஆடியதைக் கண்ணுற்றபோது என்னுள் பொங்கி எழும்பிய உணர்ச்சிக் கொந்தளிப்பை நான் எவ்வளவு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன் தெரியுமா? அந்த ஹிப்பித் தலையனின் கைவிரல்கள் அவளுடைய முதுகில் படிந்தபோது இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டால் என்ன என்றுகூடத் தோன்றும்! ‘க்ளப்’பிலிருந்து திரும்பி வருகிற வழியில் இது குறித்து மென்மையாக அவளிடம் எடுத்துரைத்தபோது, அவள் என்னமாய்ச் சீறினாள் தெரியுமா?
“வெயிஸ்ட் லைனில் (இடுப்பில்) ஆண் ஒருத்தனின் விரல்கள் பட்டுவிட்டால் என் உடம்பு என்ன உருகியா போய்விடப் போகிறது? ஏன், விரல்கள் கொஞ்சம் தாழ்ந்து போனாலோ- இல்லை; மேலே நகர்ந்தாலோ என்ன பெரியதாய்ச் சம்பவித்துவிடப் போகிறது?”
அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை.
அவள் செல்லும் சில இடங்களுக்கு நானும் போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும் சமயங்களில் மட்டுமே, நான் போவது உண்டு. ‘ப்ளாக் டாக்’கும், வொய்ட் ஹார்ஸு’ம் (மேனாட்டு மதுவகைகள்) பரிமாறப்படும் இடங்களில் நாயைப் போல நான் அவள் பின்னே போய்க் கொண்டிருப்பேன்.
“வாட் ஈஸ் யுவர் சாய்ஸ்?” - அவர்கள் என்னை இப்படிக் கேட்கும்போது, என்ன சொல்வதென்று தெரியாமல் நான் பேந்தப் பேந்த விழிப்பேன். கடைசியில் ஸ்வப்னாதான் விடையும் கூறுவாள்.
“ஹாவ் எ பெக் அஃப் ப்ளாக் டாக்! கமான்... பீ ஏ குட் பாய்.” அவளுடைய செய்கைகளை வெறித்து நான் நோக்கிக் கொண்டிருக்கும்போது, சர்வர் மது க்ளாஸுடன் வந்துவிடுவான். அப்படிப்பட்ட சமயங்களில் “தாங்க்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு நான் பவ்யமாக ஒதுங்கிவிடுவேன்.
கொலை செய்தவன் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதாலோ என்னவோ, நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை உத்தரவை ஒரு வரிகூட விடாமல் முழுமையாகவே படித்தார்கள். அதை வாசிக்கும்போது நீதிமன்றத்தில் ஒரு ஈ எறும்பாவது வாயைத் திறக்க வேண்டுமே!
“...திருமதி ஸ்வப்னா மேனன் தம் கணவரின் போக்கை அனுசரித்து வாழ்க்கை நடத்தவில்லை என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வருகிறது. அந்நிய நாடு ஒன்றில் பிறந்து, அந்த நாட்டுச் சூழலிலேயே வளர்க்கப்பட்டுவிட்ட அவர், வாழ்க்கை முழுவதும் ஒரு ‘ஸொஸைட்டி லேடி’யாகத்தான் வாழ்ந்திருக்கிறார். நாளின் பெரும் பகுதி நேரத்தைக் ‘க்ளப்’களில் கழித்துக் கொண்டிருந்த அந்த நங்கையின் செயல்களைத் தடுத்து நிறுத்த அவருடைய கணவரான பிரதிவாதியினால் இயலவில்லை என்று தெரியவருகிறது. சாதாரண கிராமக் குடும்பம் ஒன்றில் பிறந்தவரும், அந்தக் கிராமச் சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டுவிட்டவருமான பிரதிவாதியினால், தம் மனைவியின் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவோ, மனைவியின் அந்த வாழ்வுடன் தம்மையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவோ இயலவில்லை. மனைவியின் ஒவ்வொரு செயலையும் வெறுப்புடன் கண்டு வந்த பிரதிவாதி தம் மனசுக்குள் காழ்ப்புணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறார். இப்படி வளர்ந்து வந்த அந்த உணர்ச்சி நாளாக ஆகப் புகையத் தொடங்கியிருக்கிறது. ஒரு நாள் இரவு அது கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டுவிட்டது.
கொலை நடந்ததை நேரில் கண்டவர் ஒருவர்கூட இல்லையென்றாலும் கண்டெடுத்த சான்றுகளும் சூழ்நிலையும், கொலை செய்தவர் அவருடைய கணவரான பிரதிவாதியே என்ற உண்மையை மிக மிகத் தெளிவாக எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி நிரூபிக்கின்றன. திருமதி மேனனின் உடலை மருத்துவப் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்த உண்மை புலனாகியது. இதன்மூலம் திருமதி மேனனை மட்டுமின்றி, அவரது வயிற்றில் வளர்ந்த நான்கு மாத வளர்ச்சி பெற்ற குழந்தையையும் கொன்ற குற்றத்துக்குப் பிரதிவாதி ஆளாகிறார். முழுக்க முழுக்க மிருகத்தனமாகச் செய்யப்பட்ட இந்தக் கொலை வழக்கில் இந்தியக் குற்றப்பிரிவுச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மிக மிகக் கடுமையான தண்டனை அளித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. குற்றவாளிகள் யாராயிருந்தாலும், சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவரே...”
பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் சர்க்கார் தரப்பு வழக்கை எவ்வளவு அழகாக நடத்தினான். சசாங்கனை பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக நியமிக்க முழுமுதற்காரணமாக இருந்தவனே நான்தான். பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக நியமிக்க வேண்டியவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் சசாங்கனின் பெயர் இல்லை. மாவட்டத்திலேயே சிறந்த வழக்கறிஞன் என்ற தகுதி சசாங்கனுக்கே உண்டு என்று செஷன்ஸ் நீதிபதியும் கூறினார். விளைவு, அரசாங்கத்திடம் சமர்ப்பித்த பட்டியலில் முதல் பெயரே சசாங்கனுடையதுதான். நியமனம் செய்யப்பட்டதும் அவனேதான். எனக்குக் கிடைத்த தண்டனையை நினைத்து, சட்ட மந்திரிக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.
கலெக்டருக்கு இந்த தண்டனை வேண்டியதுதான் என்பார் அவர்.
விதியின் செங்கனலில் வெந்து சிறகடிக்கும் விட்டில்கள் என்று மனிதர்களைக் குறித்து ஒரு புலவன் பாடியிருப்பது கூட நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நினைத்துத்தான் இருக்குமோ?
ஒருவேளை, இதுவே தெய்வ தண்டனையாக- தெய்வ புருஷரை பழித்ததற்கான தண்டனையாக இருக்குமோ?
அந்த ‘ஸ்வாமிஜி’ நகரத்துக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்கக் குழுமியிருந்த பக்தர்களின் கூட்டத்தில் ஸ்வப்னாவும் இருந்தாள். அவளுடைய முகத்தைக் கண்டதும், தம் சுட்டு விரலால் அவளைத் தமக்கு அருகில் வரும்படி சைகை காட்டினார் ‘ஸ்வாமிஜி’. அவர் நகரத்தை விட்டுச் செல்லும்வரை இரவு, பகல் எந்த நேரமும் அவள் ‘ஸ்வாமிஜி’யின் அருகிலேயே கிடந்தாள். முதல் நாளில் அவளைக் கண்டவுடன், அவளது ‘பாப்’ செய்யப்பட்ட முடியையும், பளபளப்பு மிக்க கழுத்தையும், முதுகையும் மெதுவாகத் தொட்டு, “பெண்ணே! உன் துயரத்தை என்னால் உணர முடிகிறது. என் வருகையால் உன் துன்பம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்” என்றார்.
‘ஸ்வாமிஜி’யுடன் பழகியபோது ஏற்பட்ட இன்பம் தரக்கூடிய நினைவலைகளை என்னிடம் அவள் விவரித்தபோது, எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. நான் சிரிப்பதைக் கண்டு, அவளுக்கு ஏற்பட்ட சினத்தைப் பார்க்க வேண்டுமே!
“சாட்சாத் பகவானின் அவதாரமான ‘ஸ்வாமிஜி’யைப் பரிகாசம் செய்கிறீர்கள். அதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கத்தான் போகிறது. வேண்டுமானால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
அப்போது பிந்து பிறந்து விட்டாளா? ஊஹூம்... அவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? ‘இந்திர ப்ரஸ்த’த்தில் குளிர்ப்பதனம் செய்த விசாலமான அறை ஒன்றில் அமர்ந்து, வெளிநாடுகளிலிருந்து வாங்கி வந்த பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பாளோ? நூலினால் இணைத்துக் கட்டி ஆட்டுவிக்கும் பொம்மலாட்டத்தை என் அன்பு மகள் பார்த்திருக்கிறாளா? நன்றாக ஞாபகமில்லை. சென்ற நான்கு ஆண்டுகாலமும், மகளே, நானும் நீயும் ஒன்றாகவே அல்லவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகளே, அப்பாவை உன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டே தூங்கு. அப்பா புதிய ஒரு கதை சொல்லப்போகிறேன். அதாவது ஒரு பொம்மையைப் பற்றிய கதை.
பல வருஷங்களுக்கு முன் ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண் இருந்தாள். ஒரு நாள் அவள் ஒரு பொம்மையை விலைக்கு வாங்கினாள். அந்தப் பொம்மையை அவள் தன் படுக்கையறையில் வைத்துப் பத்திரமாகக் காத்து வந்தாள். அந்தப் பொம்மையை ஒரு நூலுடன் இணைத்து அவள் நூலை ஆட்டும் சமயங்களில் எல்லாம் நூலின் சலனத்துக்கேற்ப அந்தப் பொம்மையும் ஆடும். அந்தப் பொம்மைக்கு உயிர்கூட இருந்தது தெரியுமா? மகளே, நீ அகலிகையின் கதையை இதற்கு முன் கேட்டிருக்கிறாயா? இல்லையா? உண்மைதான். உனக்குப் புராணக் கதைகளில் ஒன்றுகூடத் தெரியாதே! முகமூடிக் கதைகளும், ‘டார்ஜான்’ கதைகளுமல்லவா நீ கேட்டிருப்பாய்? நாளாக ஆக அந்தப் பொம்மை அவளுடைய சொல்லைக் கேட்க மறுத்துவிட்டது. உயிருள்ள பொம்மையில்லையா? அதற்கும் உணர்ச்சி என்ற ஒன்று இராதா? கடைசியில், பொம்மையை அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அந்தப் பொம்மையைக் கண்டாலே, அவளுக்கு அவ்வளவு வெறுப்பு! வேதனையுடன் மேலும் பல வருஷங்கள்வரை அந்தப் பொம்மை அவளுடனேதான் தன் வாழ்வைக் கழித்தது. ஒரு நாள் பார்த்தால், அந்தப் பெண் இறந்து கிடக்கிறாள். மகளே, அவளை யார் கொன்றிருப்பார்கள்?”
“அந்தப் பொம்மையாகத்தான் இருக்கும். இல்லையா, டாடீ...?”
கெட்டிக்காரி என் மகள்!
என் மகள் ஒரு பெரிய வக்கீல் ஆவாள்.
“மகளுக்கு அந்தப் பொம்மை வேண்டும். இல்லையா?”
“எனக்கு அது வேண்டாம் டாடீ! அதை ஒரு கயிற்றில் கட்டி ஒரு இடத்தில் தொங்கவிட்டு விடுவோம். அங்கேயே கிடந்து சாகட்டும். இல்லையா, டாடீ?”
இவ்வளவும் என் மன ஓட்டம்!
அங்கே நிற்பது யார்? ரோந்து சுற்றும் அதிகாரியாக இருக்குமா? நீங்கள் ஏன் என் அறையையே வெறித்து வெறித்துப் பார்க்கிறீர்கள்? ஒரு வேளை, நான் உறங்கிவிட்டேனா இல்லையா என்று பார்க்கிறீர்களா? அல்லது நான் தப்பி ஓடிவிட்டேனா இல்லையா என்று உறுதி செய்து கொள்கிறீர்களா? ஒரு வேளை, தற்கொலை செய்து கொள்ளத்தான் முயன்று கொண்டிருப்பேன் என்று நினைத்திருப்பீர்கள், இல்லையா?
நான் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? ஆறு மாதத்துக்கு முன்வரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஸ்ரீ தேவராஜ மேனன், ஐ.ஏ.எஸ். நான்தான்!
தற்கொலை செய்துகொள்ளவா? நானா? உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது? உயிரற்ற சவம் தற்கொலை செய்து கொள்வதா? இந்த உண்மைகூடவா உங்களுக்குத் தெரியவில்லை? உங்களுக்குப் போய் இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார்களே, அவர்களைச் சொல்ல வேண்டும்.
ஏய், சிறைக் காவலனே! அந்த ஆளை இழுத்துக் கொண்டு போகிறாயா இல்லையா? எட்டு வருஷங்களுக்கு முன் நான் இறந்தது உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? நீங்கள் அந்தச் செய்தியைப் பத்திரிகைகளில் பார்க்கவில்லையா? முதல் பக்கத்திலேயே என் புகைப்படத்தைப் போட்டிருந்தார்களே! என் கழுத்தைச் சுற்றியிருந்தது என்னவென நீங்கள் நினைத்தீர்கள்? கொலைக் கயிறு ஐயா, கொலைக் கயிறு!
நீங்கள் அதை முத்துமாலை என்று நினைத்தீர்கள்போல் இருக்கிறது, என் திருமண ஃபோட்டோவைத்தான் குறிப்பிடுகிறேன். தண்டனை பெற்ற கைதிகள் அண்டை அறைகளில் இருக்கிறார்களில்லையா? இல்லாவிட்டால், நீங்கள் இப்படி கிறுக்குத்தனமாய் ஏன் உளற வேண்டும்? உங்களில் ஒருவர் அன்று நான் அதிகாரியாக இருந்தபோது கொஞ்சநேரம் என்னுடன் பேசியதாக ஞாபகம். ஊருக்கு வெளியே இருந்த புறம்போக்கு நிலத்தை ஒதுக்கித் தரும்படி நீங்கள்தானே அன்று என்னிடம் கேட்டது? ஏனென்று கேட்டதற்கு தீப்பெட்டிக் கம்பெனி ஆரம்பிக்க என்றீர்கள். தீப்பெட்டிக் கம்பெனி என்ற பெயரில் பொட்டாஷியம் க்ளோரைட்டை வாங்கிக் கள்ள மார்க்கெட்டில் விற்கத்தான் இந்தத் திட்டம் என்ற உண்மை எனக்குத் தெரியாதா என்ன?
எனக்கு அடுத்தாற்போல் எனக்குப் பக்கத்தில் இருக்கிற அறையில் யார் இருக்கிறார்? எதற்காக அவர் இருக்கிறார்? மனைவியைக் கொன்றதற்காக இருக்குமோ? அப்படியானால், நிச்சயம் அந்த மனிதனைத் தூக்கிலிட்டுக் கொல்லத்தான் வேண்டும்! சாகும்வரை விடக்கூடாது! மனைவியின் கர்ப்பப்பையில் கிடக்கிற குழந்தை அந்த மனிதனுடையது இல்லை என்றாலுங்கூடத்தான்!
கடைசி முறையாக நான் சிறைக்கு வருகை தந்திருந்தபோது கொலைக் குற்றம் சம்பந்தமாகத் தண்டனை பெற்ற பெண்கள் ஒன்பது பேர் இங்கே இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய கணவன்மார்களைக் கொன்ற குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டார்கள். ஏன் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும்? அந்நியப் பெண்களுடன் சிநேகம் வைத்துக்கொண்டதற்காகத்தான். ஆனால், அவர்களில் ஒருவருக்குக்கூடத் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே! கணவனைக் கொலை செய்த மனைவிக்கு வெறும் சிறைத் தண்டனை; மனைவியைக் கொன்ற கணவனென்றால் மட்டும் தூக்குத் தண்டனையா! பெண் சமத்துவக் கொள்கை ஓங்குக! ‘அந்நிய ஆடவர்களுடன் உறவாடுவது எங்களுடைய உரிமை. கணவன்மார் இந்த விஷயத்தில் மட்டும் எங்களைக் கட்டுப்படுத்தக்கூடாது! அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை’ என்கிறீர்களா? சரி, சரி; ஒப்புக்கொள்கிறேன். அவர்களுடைய உரிமைக் குரலை. இப்போது திருப்திதானே?
ஒரு நிமிஷம் மனசின் சமநிலை பாதிக்கப்பட்டால் அது கொலை நடப்பதற்கு வழி வகுத்துக் கொடுத்து விடுகிறது. அப்படியானால் கொலை பற்றிப் படிக்கும் போது கொலை செய்தவனின் மனநிலையை முதலில் ஆராய வேண்டும்? அதை விட்டுவிட்டு, கொலைக்குற்றம் சந்தேகத்துக்கிடமின்றித் தெளிவாக்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்துக்காக ஒருவனைத் தண்டிப்பது என்ன நியாயம்? இனிமேலாவது அவன் கொலை செய்யாமல் இருப்பானே என்ற நிம்மதியில் ஒரு வேளை அவனைக் கழு மரத்தில் ஏற்றுவார்களா? இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக இருக்குமோ?
இந்தச் சிறையில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். என்ன என்ன காரணத்தால் அவர்கள் இங்கே வந்திருக்க வேண்டும்? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைப்பு, சதி...
அரசியல் கைதிகள் எவரேனும் இங்கே இருந்தாலும் இருக்கலாம். அவர் ஒரு வேளை நாளையே கூட வெளியே போகலாம். தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே அவரை வரவேற்க ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பூமாலை, பூச்செண்டுகள் சகிதம் சிறை வாசலில் அப்போது காத்து நின்றிருப்பார்கள். வெளியே போன ஒரு மாச காலத்துக்குள் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்த விவரம் செய்தித்தாளில் வரும். “கேட்டால் இதுதான் ஜனநாயகம்” என்பார்கள்.
நேற்றுச் செய்தவொரு குற்றம்
இன்றைய மூடர்க்கு ஆசாரமாம்;
நாளைக்கோ இதுவே தத்துவமாம்.
நம்மைத் தூக்கில் தொங்கி இறக்கும்படி செய்வது. நாமே தூக்கில் தொங்கி இறப்பது. இவற்றில் எது உயர்ந்தது? இதற்கு எப்படி விடை காண முடியும்? இரண்டையுமே அனுபவித்துப் பார்த்தவர்தாம் இந்த உலகில் ஒருவர் கூட இல்லையே!
நீங்களும் தூக்குத் தண்டனை பெற்றவர்களா? நீங்கள் எல்லாம் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்? பேசாமல் தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துப் போகலாமே? ஆனால், அதிலும் பிரச்சினை இல்லாமல் இல்லை. தற்கொலை முயற்சி முழுமையாக வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்தியக் குற்றிப் பிரிவுச் சட்டம் 309-ம் விதியின்படி தற்கொலை செய்து கொள்ள முயன்றமைக்காகத் தண்டனை பெற நேரிடும்! இந்தச் சட்டத்தையெல்லாம் உருவாக்கிய மனிதர் யாராக இருக்க முடியும்? மெக்காலே துரையோ?
ஆமாம். நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? நீங்களும் ஏன் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்றா?
ஸ்ரீ தேவராஜ மேனன். ஐ.ஏ.எஸ். தற்கொலை செய்து கொள்வதா?
எத்தனை பெரிய விவகாரங்களையெல்லாம் தீர யோசித்து நல்ல ஒரு முடிவு எடுத்துக் காப்பாற்றியிருப்பவன் இந்த மேனன் என்று உங்களுக்குத் தெரியுமா?
சமுதாயப் பிரச்சினையை முன் வைத்து ஒரு முறை பெரிய கலகம் ஒன்று... இரண்டு பிரிவு மக்கள். ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு கடைவீதியின் இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கையிலும் ஆயுதம் பளபளக்கிறது. ஒரு வேன் நிறைய ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்களும், போலீஸ் சூப்பிரண்டும், நான்கு போலீஸ் அதிகாரிகளும், டெபுட்டி கலெக்டரும் புடைசூழ, சம்பவம் நடைபெற்ற இடத்துக்குப் போனேன்.
அன்று செவ்வாய்க் கிழமை என்று நினைக்கிறேன். இரவு சுமார் ஒரு மணி அப்போது.
அலைகளை வீசி எறிகிற கடல், ‘உய் உய்’ என்று பேரிரைச்சல் எழுப்பும் காற்று! மிருகம் போல் கத்தும் மதவெறியர்கள்!
யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியும் முயற்சி... ஆனால் பலன்?
ஆயுதங்களை ஒருவர் மேல் ஒருவர் வீசி எறிந்துகொண்டு அங்கே அவர்கள் ஒரு பெரிய போரே பண்ணிக் கொண்டிருந்தார்கள். நிலைமை கட்டுக்கு அடங்காது என்று தோன்றியது.
மனசுக்குள் அச்சத்தின் அலைபரவல். நாம் நிச்சயம் வெறுமனே நிற்கக்கூடாது! வெறுமனே நின்றால் விளைவே வேறு. இன்னும் கொஞ்ச நேரம் போனால் எத்தனை பேர்களின் கழுத்து துண்டிக்கப்படுமோ? எத்தனை பேர்களின் குருதியாறு பெருக்கெடுத்துக் கடலில் போய்ச் சங்கமம் ஆகுமோ? முடிவு? இரண்டு பக்கங்களில் இருந்தவர்களையும் சமாதானம் செய்து, அப்போதைய பிரச்சினைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைத்தேன். ஒரு பெரிய இனக் கலவரத்தை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கிள்ளி எறிந்ததற்காக அரசாங்கத்திடமிருந்து ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் என்னைத் தேடி வந்தன. முதல் அமைச்சர் எனக்கு எழுதியிருந்த பாராட்டுக் கடிதங்கூடக் கலெக்டர் பங்களாவின் காம்ப் ஆபீஸில் உள்ள ஒரு ஃபைலில் தான் இருந்தது.
நான் என்ன அவ்வளவு துணிவு இல்லாதவனா? அல்லது துணிவு இல்லாதவன் மட்டுந்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமா என்ன? ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரான மிஷிமா தற்கொலை செய்துகொள்ளவில்லையா?
தம் நாடு ஒரு சமயம் உன்னத நிலையில் இருந்து சமீபத்தில் போரில் தோற்று இழந்த பழம்பெருமையை நிலைநிறுத்த அவர் செய்த தியாகமில்லையா அது? அவருடைய நினைவு கொஞ்ச நாள் மக்களின் உள்ளத்தில் இருந்தது. அதன் பின்? நினைவை மண்ணின் மேல் போட்டுக் காலால் மிதித்து நடக்கத் தொடங்கினார்கள் எல்லோரும். நான் தற்கொலை செய்து கொண்டிருந்தால், மக்கள் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்.
மக்கள்... சட்… அவர்கள் கிடக்கிறார்கள்.
எனக்குக் ‘கொலைகாரன்’ என்ற பட்டம் எப்படியோ கிடைத்துவிட்டது. செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்திருக்கின்றன. கருணை மனுவை கவர்னரும், ஜனாதிபதியும்கூட நிராகரித்து விட்டார்கள்.
சொந்த மனைவியை, வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த குழந்தையுடன் கொலை செய்த குற்றத்துக்காக, நிறைய படித்தவரும், முக்கியமான பொறுப்பு ஒன்றில் இருந்தவருமான தேவராஜ மேனன் அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்கில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்!
எனக்கென்று ஒரு துளி கண்ணீர் வடிக்க இந்த உலகில் ஒருவரும் இல்லை. என் தாய் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் எனக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமையை நினைத்து எவ்வளவுக்கு மனம் பதைபதைத்திருப்பாள். என் தந்தை பாம்பு கடித்து இறக்கும்போது எனக்கு வயசு மூன்று! எங்கள் வீட்டுக்கு மிக அருகில் தென்கிழக்குத் திசையில் ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. அங்கேதான் எத்தனை எத்தனை வகைப்பட்ட பாம்புகள்! விஷம் நிறைந்த கொடிய நாகங்களுடன் மனிதர்கள் செய்துவைத்த கற்களினால் ஆன பாம்புகளும் அங்கே காட்சி தந்தன. அந்தப் பாம்புப் புற்றுக்குச் சென்று தவறாமல் விளக்கேற்றி வைக்கும் வழக்கத்தை, எதை மறந்தாலும் மறந்துவிடாமல் மேற்கொண்டிருந்தார்கள், அண்டை அயலில் இருந்த மக்கள். நாகதேவதைகளின் சினத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் அப்படிச் செய்து வந்தார்கள். ஏன், வீட்டில் இருந்த சிம்னி விளக்கை ஏற்றி வைக்கவே மண்ணெண்ணெய் இல்லாமல் இருந்த சமயத்தில்கூட, நாகதேவதைகளுக்கு விளக்கு ஏற்றி வைக்கும் வழக்கம் மட்டும் நிற்கவில்லை. மண்ணெண்ணெய் இல்லாவிட்டால் போகிறது; தேங்காய் எண்ணெய் இருக்கவே இருக்கிறதே! எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அந்த அடர்ந்த காட்டில் வளர்ந்துகிடந்த தெச்சிச் செடிகளின் மலர்களிலிருந்து நான் எத்தனை முறை தேனை எடுத்து உறிஞ்சி மகிழ்ந்திருக்கிறேன்! சிவந்த தெச்சிப் பழங்களில்தான் என்ன சுவை! அந்தப் பழங்களை உண்டுவிட்டு மரத்துக்கு மரம் கிளைக்குக் கிளை உற்சாகத்துடன் தாவித் திரிந்த அணில்களைப் பார்த்தபடி நான் எத்தனை முறை நின்றிருக்கிறேன். அவற்றின் முதுகுப் பகுதியில் காணப்படும் அந்த மூன்று வரிகளைக் காணும் போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா? பாட்டிதான் கடைசியில் அணில்களின் முதுகில் எப்படி அந்த வரிகள் வந்தன என்று சொன்னாள். கருணை கொண்டு ஸ்ரீராம பகவான் அவற்றின் முதுகில் தடவியதால்தான் அந்த கோடுகள் உண்டாயினவாம். கர்ப்பம் தரித்த தம்முடைய பத்தினியான சீதாபிராட்டியை ராமர் ஏன் வெறுத்து ஒதுக்கினார். அதற்கான அவசியம் என்ன என்றெல்லாம் பல சமயங்களில் என் மனசைப் போட்டு நான் குழப்பிக் கொண்டதுண்டு. என் மனம் முழுமையாகத்ச திருப்தியடையும் வகையில் ஒருவரும் பதில் கூறவேயில்லை! மீண்டும் மீண்டும் பாட்டியிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. வெற்றிலைத் தாம்பூலத்தைத் துப்பிவிட்டு ஓர் அதட்டு அதட்டினாள்.
“ம்... காலம் கெட்டுத்தான் போய்விட்டது! இல்லாவிட்டால் இப்படியெல்லாம் கேட்பாயா? கடவுளே தப்புச் செய்கிறாரே என்று கேட்டு என்னைக் கிண்டப் பார்ப்பாயா?”
பாட்டி மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், நிச்சயம் அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்க மாட்டேன். காரணம், ராமபிரான் கர்ப்பிணியான தம் மனைவியை ஒதுக்க மட்டும்தானே செய்தார்? ஆனால், நான்...
சிறுவயதில் பாம்புப் புற்றருகிலுள்ள மரங்கொத்தியைக் கவனித்துக் கொண்டிருப்பேன். அப்போது அது சக்கை உண்டோ என்பது போல் கூவும். நானும் அது போலவே கூவுவேன்.
வழக்கம்போல மாலை நேரத்தில் நாக தேவதைக்கு விளக்கேற்றி வைக்க வந்த என் தாய் புற்றருகில் நான் நின்றிருப்பதைக் கவனித்தாள். மெதுவாக என் அருகில் வந்து என் தொடையை பிடித்து அழுத்தி நிமிண்டி விட்டாள். நான் ‘வீல்’ என்று கூவினேன்.
“சாயங்கால நேரத்தில் பாம்புக்காவில் நின்றுகொண்டு அதைப்போல் சக்கையுண்டோ என்று கூவுகிறாயே; பாம்பு கொத்திவிட்டால், அப்புறம் சக்கையும் இருக்காது, தண்ணியும் இராது. ஏன், உன் உயிரும் இருக்காது” என்று கடிந்து கொண்டாள்.
இரவில் அப்பா சந்தையிலிருந்து திரும்பி வருகிற மட்டும் இமையை மூடாமல் அவருக்காக நான் காத்துக் கிடந்தேன். அவர் வந்ததும், தொடையில் பதிந்திருந்த நான்கு விரல்களின் அடையாளத்தைக் காட்டினேன். சமையலறைக்குள் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்த அம்மாவைக் கூப்பிட்டார் அப்பா.
“என்ன, ஜானு! மகனுடைய தொடையைப் பார்த்தாயா?”
“ஏன்? உங்க ஆசை மகன் இதற்கு முன்னாலேயே எல்லாவற்றையும் ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லியிருப்பானே! சாயங்காலம் நாகதேவதைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு வரலாம் என்று போனால், அங்கே உங்கள் ஆசை மகன் நின்று கொண்டிருக்கிறான்- மர உச்சியில் இருந்து மரங்கொத்தியுடன் பேசிக்கொண்டு. இந்த வெட்கக்கேட்டை நான் எங்கே போய்ச் சொல்வேன்? ஏதாவது பூச்சி புழு கடித்துவிட்டால் என்ன செய்வது?”
இதைக் கேட்டதும் என் தந்தை சிரித்து விட்டார்.
“நாம் தினமும் பாலூட்டி வளர்க்கிற நாகதேவதை நம் ஆசை மகனைக் கொத்திவிடும் என்றா எண்ணிப் பயப்படுகிறாய் ஜானு?”
ஆமாம்; என் தந்தைதான் இப்படிச் சொன்னார். ஆனால், அவர் இறந்ததோ பாம்பு தீண்டி! ஆட்டுக்குட்டிக்குத் தழை அறுத்துக்கொண்டு வரும் வழியில் எப்படியோ ஸர்ப்பம் தீண்டியிருக்கிறது. அதை அவர் கவனிக்கவேயில்லை. வீட்டுக்கு வந்த பிறகு பார்த்தால் வலது கால் பெருவிரல் நுனியில் ரத்தம் கட்டிப் போயிருக்கிறது. வேதனையும் உண்டாயிருந்ததாம்.
“என் காலில் ஏதோ வேதனையாக இருக்கிறது! ஜானு, வந்து கொஞ்சம் என்னவென்று பார்!”
இதைக் கேட்டதும் என் தாய் பதறிப் போனாள். “தொட்டால் சிணுங்கி முள்ளோ அல்லது கள்ளிச்செடி முள்ளோ குத்தியிருக்குமோ...!” என்றாள். உடனே “அந்தக் கோபால் வைத்தியனை நான் போய் அழைத்து வரட்டுமா?” என்றும் கேட்டாள்.
அவளை உற்றுப் பார்த்துவிட்டு உரக்கச் சிரித்து விட்டார் என் தந்தை.
அம்மா அப்படியொன்றும் பெரியதாக ‘ஜோக்’ அடித்து விடவில்லையே!
“என்னைப் பாம்பு தீண்டிவிட்டது. சும்மா விளையாட்டுக்குச் சொல்லவில்லை, ஜானு. உண்மையைத்தான் சொல்லுகிறேன். ஆனால் ஒரு விநோதம் பார்; என்னைக் கடித்த அந்தப் பாம்பு மறுநிமிஷமே செத்து விழுந்து விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது? பாம்பைவிட என்னிடம்தான் விஷம் என்பதுதானே!”
ஆனால், என் தாய் சிரிக்கவில்லை. பொழுது புலர்வதற்கு முன்பே என் தந்தையின் உயிர் உலகை விட்டுப் பிரிந்துவிட்டது. வெளுத்துக் காணும் அவருடைய உடல் இளநீல வண்ணத்தில் காட்சியளித்தது. தூய வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது தந்தையின் உடல். குத்துவிளக்கில் தள்ளாடிக் கொண்டிருந்தன தீ நாளங்கள்.
முன்பெல்லாம் என் தாயின் முகத்தில் காணும் ஒளி எங்கேதான் பறந்து போய்விட்டதோ, தெரியவில்லை. அவள் தினமும் எதையோ நினைத்துக் கொண்டு ஒரு மெழுகுவர்த்தியைப் போல் உருகியவண்ணம் இருந்தாள்.
‘வாழவேண்டும், வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு. தேவனைக் கரையேற்றி விட வேண்டியாவது நான் இந்த உலகத்தில் வாழ்ந்துதானே ஆக வேண்டும்?’ என் தாயின் உள்ளத்தின் அடித்தளத்தில் ஏங்கிக்கிடந்த ஒரே ஒரு வாழ்க்கையின் நோக்கமும் அது ஒன்றாகத்தான் இருந்தது.
அழகிலோ உடல் நலத்திலோ என் தாய்க்கு ஒரு குறைவும் உண்டாகவில்லை; என் தந்தை இறக்கும்போது அவளுக்கு வயது என்ன இருக்கும்? இருபத்து நான்கு இருபத்தைந்து இருக்குமா?
அவளை மறுமணம் செய்து கொள்ளும்படி எத்தனை பேர் தூண்டியிருக்கிறார்கள்! அவர்கள் கூறியபடியெல்லாம் இருந்திருந்தால், அவள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பாள்!
எல்லாம் எதற்காக? என் ஒருவனுக்காகத்தானே?
தாயின் நெஞ்சத்து உஷ்ணத்தைச் சிறிதேனும் சுவைத்து உறங்கும் பெரும் வாய்ப்பு என் அன்பு மகள் பிந்துவுக்குக் கிடைக்கவில்லையே! தாய்ப்பாலைச் சுவைக்கும் பாக்கியங்கூட அவளுக்கு குறைந்த நாட்களுக்கே கிடைத்திருக்கிறது. பிந்து பிறந்து சரியாக நாற்பது நாட்கள்கூட ஆகவில்லை. ‘இந்திர ப்ரஸ்த’த்தினுள் நுழைந்து சென்றபோது மடியில் பிந்துவைக் கிடத்தி எதையோ கரண்டியில் ஊட்டிக் கொண்டிருந்த ஆயாதான் என் கண்ணில் பட்டாள்.
“குழந்தைக்கு இந்தப் பருவத்தில் தாய்ப்பாலல்லவா கொடுக்க வேண்டும்!” என்னையும் மீறி ஆயாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன். ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல் ஆயா தன் முன் இருந்த வெள்ளிக் கிண்ணத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இதே கேள்வியை நான் ஸ்வப்னாவிடம் கேட்டபோது, அவளுடைய வாயிலிருந்து அடுத்த நிமிஷமே அதற்கான பதில் வந்துவிட்டது.
“அது வேண்டுமானால் உங்களுடைய பட்டிக்காட்டுப் பழக்கமாக இருக்கலாம். குழந்தைகள் சப்பினால் என் மார்பின் நிலை என்ன ஆவது? உடம்பின் அழகே கெட்டுப்போய்விடுமே! தாய்ப்பால் கொடுத்தே குழந்தைகளைப் பழக்கப்படுத்திவிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆள் இல்லாவிட்டால் பால் கேட்டு அழுது தொலைக்கும்! ‘லேடீஸ் க்ளப்’போய்விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் பேசுகிறபோது அந்த மாதிரி சமயங்களில் குழந்தையையும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு திரிய முடியுமா என்ன? அதனால்தான் இந்தத் தலைவலியெல்லாம் வேண்டாமென்று முடிவு கட்டிவிட்டேன். இந்த மாதிரியான கெட்ட பழக்கங்கள் குழந்தைக்கு ஏற்படக் கூடாது என்றுதான் இப்படிச் செய்தேன்.”
நான்கு ஆண்டுகாலம் தாய்ப்பாலைச் சுவைத்து வளர்ந்த பட்டிக்காட்டுக்காரனான என் ஆசை எவ்வளவு சீக்கிரம் நிராசையாகப் போய்விட்டது.
“அன்னையின் அன்புப் பாலைச் சுவைத்தால்தான் குழந்தைகள் பூர்ண வளர்ச்சியை அடையும்” என்று பாடிய வள்ளத்தோள் எங்கே? என் மனைவி ஸ்வப்னா எங்கே?
அடுத்த நாள் உச்சிப்பொழுது- சாப்பிட வீட்டினுள் காலடி எடுத்து வைத்தபோது, அங்கே கட்டிலில் படுத்துக் கொண்டு புரண்டுகொண்டிருந்தாள் ஸ்வப்னா.
பால் கட்டிக்கொண்டு அதனால் மார்பு வீங்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். மனசினுள் என்னவோ தோன்றவே நான் சிரித்துவிட்டேன்.
உடனே அவளுக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே!
“ம். சிரிக்கவா சிரிக்கீறர்கள்? அப்பப்பா, என்ன வேதனை! உயிரே போய்விடும்போல் இருக்கிறதே! கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்... சேசே!” என்றாள்.
குளியலறையில் நுழைந்த நான் கையையும் முகத்தையும் குளிர்ந்த நீரினால் கழுவிக்கொண்டேன்.
வாழ்வில் பலவற்றை இழந்து, பலவற்றைத் தியாகம் செய்து, வாழ்ந்த என் தாயின் நினைவு வந்தது.
பி.ஏ. இறுதித்தேர்வு எழுதி முடித்து நான் ஊருக்குச் சென்றிருந்தபோது அம்மாவின் உடம்பைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். முன்பு அவளுடைய கண்களில் இருந்த ஒளி எங்கே போய் மறைந்தது? கன்னத்தில் முன்பு காணப்பட்ட சதைப் பிடிப்பு எங்கே? ஐயோ, முகம் முழுவதுந்தான் எத்தனை கோடுகள், எத்தனை சுருக்கங்கள்! பரிவு நிரம்பிய அந்தப் புன்சிரிப்பு மட்டும் அந்த உதடுகளிலிருந்து மலராமல் இருந்திருந்தால் நிச்சயம் வாசற்படியில் நின்று கொண்டிருப்பது என் தாய் என்று யார் கூறினாலும் ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டேன். தலை முடியில் என்ன மாற்றம்! ஒரேயடியாக நரைத்துப் போய்விட்டது! என்னைத் தன் தோளோடு சேர்த்துப் பிடித்துத் தேம்பித் தேம்பி அழலானாள். இந்த மாதிரி முன் ஒரு போதும் அவள் நடந்து கொண்டதை நான் பார்த்ததில்லை.
“அம்மா, உனக்கு என்ன நேர்ந்துவிட்டது?”
“ஒன்றுமில்லையடா, மகனே ஒன்றுமில்லை!”
அவளுடைய உடலில் ஏதோ வேதனை அவளை இப்படி உருக்குலைத்துவிட்டது என்பது மட்டும் உண்மை.
துக்கம் என் தொண்டையை அடைத்துவிட்டதால், என்னால் பதிலே பேச முடியவில்லை.
“மகனே, நீ சீக்கிரம் போய்க் குளித்துவிட்டு வா.”
மிளகையும், துளசி இலைகளையும் போட்டுக் காய்ச்சிய தேங்காய் எண்ணெயை அம்மா என் தலையில் தேய்த்துக் கொண்டிருந்தபோது, என் மனம் மீண்டும் மீண்டும் அவளது ஆரோக்கியத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு உடலில் என்ன குறை இருக்கும்? எங்களோடு கூடவே இருக்கும் பாரு அம்மாவிடம் கேட்டால் ஒரு வேளை எல்லாம் தெரியுமோ?
அடுத்த நாள் மத்தியான வேளை. அம்மா குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட எனக்கு அதிக வியப்பே உண்டாயிற்று. இதற்கு முன் அம்மா இப்படி உறங்கி நான் கண்டதேயில்லை.
“பகலில் உறக்கம் கொள்வதைப் போன்ற கெட்ட பழக்கம் வேறில்லை.” இதுதான் என் தாயின் நிரந்தரக் கொள்கை. பகவதி கோவிலில் திருவிழாக் காலங்களில் இரவு முழுவதும் கதகளி நடைபெறும். எப்படியும் அது முடியும் போது சூரியன் உதித்துவிடும். இரவு முழுவதும் சிறிதும் கண்மூட மாட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்தாலும் என் தாய் கொஞ்சமாவது கண் மூடவேண்டுமே! ஊஹூம், அதுதான் இல்லை.
“தாடகை... பயங்கரி... அவளைக் கண்டுதான் எவ்வளவு நடுக்கமெடுக்கிறது!”
குளியல் அறையினுள்ளிருந்து வெளிவரும்போது இப்படிப் பாடிய என் நாக்கு என்னையோ, என் செயலையோ வெறிக்க நோக்கிக் கொண்டிருந்த ஸ்வப்னாவைக் கண்டதுதான் தாமதம், அப்படியே செயலற்று நின்றுவிட்டது!
பால் கட்டிக்கொண்டதால் ஸ்வப்னா இன்னும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். அவளைப் பார்த்ததும் எனக்கு ஏனோ கண்ணபிரானைக் கொல்ல வந்து தானே மடிந்து அலங்கோலமாகக் கிடந்த பூதகியின் நினைவுதான் வந்தது!
என் பி.ஏ. தேர்வுகள் முடியும் வரை என் தாய் அவள் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்துத் தெரிவிக்கவேயில்லை. ஒவ்வொரு மாதமும் எப்பொழுதும் அனுப்பக் கூடிய பணத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே அவளிடமிருந்து எனக்கு வந்து கொண்டிருந்தது. திருவோணத் திருவிழாவுக்கு நான் கட்டாயம் ஊருக்கு வந்து தன்னுடன் ஒன்றாக அமர்ந்து, தன் கையாலேயே ஆக்கிய சோற்றைச் சுவைக்க வேண்டும் என்று கூட அவள் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை.
“மகனே உன் தேர்வுகளெல்லாம் முடிந்து, உனக்கு உசிதம் என்று தோன்றுகிற சமயத்தில் நீ என்னைத் தேடிவநந்தால் போதும்!”
அப்பா உயிரோடிருந்தபோது காலை வேளையில், சமையலறைக்குள் நுழைந்தவள் பிறகு இரவு பத்து மணி வரை பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருப்பாள்.
“ஜானு, நீ ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறாய்? இரவு முழுவதும் வேறு கண்விழித்தாய்? பகலில் கொஞ்ச நேரமாவது தலையைச் சாய்த்துத் தூங்கினால் என்ன?” - அப்பா கூறுவார்.
“பகலில் உறங்குவதற்கு நான் என்ன கோழியா? சே! சே! அவமானம்!” - இதுதான் என் தாயின் பதிலாக இருக்கும்.
ஓசை எழுப்பாமல் சமையலறைக்குள் நுழைந்தேன். அங்கே சீடை செய்வதற்காக மாவைக் கையால் பிசைந்து கொண்டிருந்தால் பாருவம்மா. சீடை என்றால் எனக்கு எப்போதும் அலாதி விருப்பம்! நான் விரும்புவது எது, வெறுக்கக்கூடிய பொருள் எது என்பது என் தாய்க்கு அத்துப்படி.
என்னைக் கண்டதும், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நிற்க முயற்சி செய்தாள் பாருவம்மா.
“இருக்கட்டும், பாருவம்மா உட்கார்.”
என்னை தன் இடுப்பில் ஏந்தி இந்தப் பாருவம்மாதான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்!
“உன்னை என் இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.” பாருவம்மாவின் பேச்சில் அன்பும் பாசமும் இழைந்து ஓடும்.
தரையில் உட்காரப்போன என்னைத் தடுத்து, நான் உட்காருவதற்காக ஒரு சிறிய மணையைக் கொண்டு வந்தாள் பாருவம்மா.
“அம்மாவுக்கு உடம்புக்கு எதுவும் இல்லையே, பாருவம்மா?”
சிறிது நேரம் அவள் ஒன்றுமே பேசவில்லை. அவள் பொய் பேச மாட்டாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
“கொஞ்ச நாளாகவே அவளுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது தம்பி! அது வந்துவிட்டால் போதும்; துடிதுடித்துப் போய்விடுவாள். உன் தாய், அப்போதெல்லாம் அவளுக்கு ஒரே துணை நம்மைக் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஆண்டவன்தான்! இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு ‘கடவுளே, என்னைக் காப்பாற்று’ என்று கதறுவாள்.”
பாருவம்மா மீண்டும் தொடர்ந்தாள்.
“ஒரு முறை இப்படித்தான் வழக்கம்போல் அன்றும் தலைவலி வந்துவிட்டது. தலைவலியின் கொடுமையை அம்மாவினால் கொஞ்சமும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு வேதனை! அப்போது அம்மா என்னிடம் என்ன சொல்வாள் தெரியுமா? ‘பாரு, இங்கே பார் என் தலையை யாரோ கோடாரியால் அடித்து இரண்டாகப் பிளப்பதுபோல் இருக்கிறது! ஐயோ, பாரு! என்னால் தாங்க முடியவில்லையே! உண்மையிலேயே கடவுள் என்ற ஒருவர் உலகத்தில் இருப்பாரானால் என்னை ஏன் இப்படி உபத்திரவப்படுத்த வேண்டும். பேசாமல் தூக்குப் போட்டுச் செத்துப் போவதே மேல்’ என்றாள் அழுதுகொண்டே.”
பல இரவுகளில் அம்மா சிறிது கூடக் கண்மூடவே இல்லை. பாருவம்மா மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே ஒரு நாள் பாருவம்மாவுடன் டாக்டர் சுகந்தனைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தாள். தலைவலி வரும் சமயங்களிலெல்லாம் சாப்பிடும்படி சில மாத்திரைகளைக் கொடுத்திருந்தார் டாக்டர்.
“அந்த மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டால் போதும், வெட்டிப்போட்ட சவம் போல உணர்ச்சியற்ற உறக்கம் வரும் அம்மாவுக்கு. டாக்டர் கூடச் சொன்னார், ‘நோய் மிகவும் முற்றிவிட்டது! இனி மேலும் வெறுமனே இருந்து கொண்டிராமல் திருவனந்தபுரம் போய் நல்ல டாக்டரிடம் அம்மாவைப் பரிசோதி’ என்று. நான் கூட உனக்கு எழுதத்தான் சொன்னேன். ஆனால், அம்மா கேட்டால்தானே! எதையெடுத்தாலும் வேண்டாமென்று சொல்லிவிடுவாள். இப்போதுகூடப் பார், குழந்தை; நீ குளிக்கப் போயிருந்தாய் இல்லையா? அப்போது என் காதில் வந்து அம்மா என்ன சொன்னாள் தெரியுமா? ‘எனக்கு ஏற்பட்ட இந்த நோயைப் பற்றித் தேவனிடம் தப்பித் தவறி கூட வாய்திறந்து சொல்லி விடாதே’ என்றுதான்!”
பாருவம்மாவின் பேச்சு என் உள்ளத்தின் அடித்தளத்தை அடைந்து என்னை என்னவோ செய்துகொண்டிருந்தது. என் அறைக்குள் சென்று நான், கட்டிலில் படுத்தபடி கையில் இருந்த ஒரு நாவலின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வரியாக வாசிக்க முற்பட்டேன். ஆனாலும் மனசில் ஒரு வார்த்தையாவது பதியவேண்டுமே! சாயங்காலம் சுமார் ஐந்து மணி இருக்கும். டீயையும், தட்டில் கொஞ்சம் சீடையையும் எடுத்துக் கொண்டு என் அறையில் நுழைந்தாள் அம்மா. தன் உடலுக்கு ஒரு குறைவும் இல்லை என்று நான் உணரவேண்டுமாம்! தன் வேதனையை எல்லாம் மறந்து, அதரங்களில் புன்னகையைத் தவழ விட்டிருந்தாள். அவளுடைய கைகளில் இருந்த ‘டீ’யையும் தட்டையும் நான் கையில் வாங்கிக் கொண்டேன். “உட்காரு... அம்மா” என்றேன்.
“...”
“நாம் நாளைக்குத் திருவனந்தபுரம் வரை போய்விட்டு வருவோம்.”
“...”
“அங்கே பெரிய டாக்டர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். போய் உன்னை அவர்களிடம் காட்டலாம் என்று பார்க்கிறேன்.”
அம்மா சிரித்தாள். அவளுடைய சிரிப்பில் மலர்ச்சி இல்லை.
“எனக்கென்ன குறை வந்தது, மகனே, இப்போது?”
“அம்மா! போதும். இனிமேலும் என்னிடம் எதையும் மறைக்க வேண்டாம்! எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது. நீ ஏன் இப்படி எல்லாம் சிரமப்பட வேண்டும்?”
“பரவாயில்லையடா, மகனே... எனக்கு இப்போது ஒரு குறைவும் இல்லை. வேண்டுமானால், இன்னும் கொஞ்சநாள் போகட்டும்.”
கோடை விடுமுறையில் நான் வீட்டுக்கு வந்திருந்தபோதும் என் தாய் படும் கஷ்டங்களை என்னால் நன்கு உணர முடிந்தது. இறுதியில் எப்படியோ டாக்டரிடம் செல்லச் சம்மதித்துவிட்டாள்.
அம்மாவை நன்கு பரிசீலித்து முடித்த டாக்டர், “ப்ரெயின் ட்யூமர் (மூளைச்சதை வளர்ச்சி)” என்றார்.
என் தலையை யாரோ பிளப்பது போல் ஓர் அதிர்ச்சி! இனி நான் என்ன செய்ய வேண்டும்?
டாக்டருடன் வெகு நேரம் வரை நோயைக் குறித்து விரிவாகப்பேசிக் கொண்டிருந்தேன்.
“எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் வேலூருக்குப் போய் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.”
வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் ஆன பின்புதான், மெல்ல மெல்ல அவளிடம் விஷயத்தைச் சொன்னேன். கல்லூரி திறப்பதற்குக் கூட இன்னும் சிறிது நாட்களே பாக்கி இருந்தன. வேலூருக்குப் போய் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு வரலாம் என்று நான் சொன்னபோது, அம்மா சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. குறைந்தது மருத்துவச் செலவுக்காக ஓர் ஐயாயிரம் ரூபாயாவது வேண்டிவரும். ஒரு வாரத்தில் தேர்வு முடிவுகளும் வந்துவிடும். இங்கிலீஷிலும், மலையாளத்திலும் நிச்சயம் முதலாக வருவேன். எம்.ஏ., படிக்க வேண்டுமானால், நூற்றைம்பது மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கல்லூரியில் போய்ச் சேர வேண்டும். சேரும் சமயத்தில் எப்படியும் குறைந்தது ஓர் ஐந்நூறு ரூபாயாவது செலவாகும்.
இதுவரை எனக்கு எப்படி ஒவ்வொரு மாசமும் தவறாமல் பணம் வந்து கொண்டிருந்தது? பணத்தைப் பற்றி நான் கேள்வி கேட்கும் சமயங்களிலெல்லாம் அவள் ஏன்தான் கேட்பதைக் கண்டுகொள்ளாதபடி ஒதுங்க வேண்டும்?
“அப்பம் சாப்பிட்டுவிட்டால் மட்டும் போதுமா? உலகத்தில் இன்னும் கண்டுகளிக்க எத்தனையோ ஆயிரம் காட்சிகள் இல்லையா? அதற்கெல்லாம் பணம் வேண்டாமா? இன்னும் பணம் வேண்டுமானால் கேள். கட்டாயம் அனுப்பி வைக்கிறேன், மகனே” என்றாள்.
தேங்காய் வியாபாரம் செய்யும் நாணு முதலாளியிடமிருந்து, தோட்டத்தையும், வீட்டையும் விற்றால் என்ன பணம் கிடைக்குமோ அதற்குச் சமமான தொகையை அம்மா ஏற்கனவே வாங்கியாகிவிட்டது என்ற செய்தியை அறிய நேரிட்டபோது நான் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை.
அம்மாவின் மனவுறுதி நாளாக நாளாக அழியத் தொடங்கியது.
“இரண்டு வருஷ காலம் நாம் எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு வாழ வேண்டும். அதற்குப் பிறகு நீதான் இருக்கிறாயே! எம்.ஏ. தேறி நீ வரும்போது அநேகமாக வீடு, தோட்டம் எதுவுமே நம் கைகளில் இருக்காது. ஒரு வேளை நானும் அப்போது இந்த உலகத்தில் இல்லாமல் போயிருந்தால்...”
இதைக் கூறும்போது என் தாயின் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் ‘பொல பொல’வென்று வழியும். மரணம் என்பது அப்படி என்ன, நினைத்த மாத்திரத்திலேயே வந்து விடக்கூடியதா? அம்மாவின் கண்ணில் நீரைக் கண்டவுடன் ஏதோ பேச நினைத்தேன். ஆனால், வார்த்தை வெளியே வந்தால்தானே?
‘என்ன செலவானாலும் பரவாயில்லை. அம்மாவின் உயிரைக் காப்பாற்றியே தீரவேண்டும்!’ என்று தீர்மானித்தேன். அன்று மாலையே நாணு முதலாளியைப் போய்ப் பார்த்தேன். அவர், “தம்பி, என் இப்போதைய நிலை கொஞ்சம் மோசந்தான்... தேங்காயின் விலை எப்போதும் இருப்பதை விட திடீரென்று இப்படிச் சரிந்து போன பிறகு, என்னைப் போன்ற ஒரு (தேங்காய்) மொத்த வியாபாரியின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார். சுருக்கமாகச் சொல்லப்போனால், தேங்காயின் இந்த விலைச் சரிவு என் முதுகெலும்பையே உடைத்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். எப்படி மீண்டும் பழைய நிலைக்கு வரப்போகிறேன் என்பதுதான் தெரியவில்லை. தம்பி, உன் படிப்பு முடிகிறவரை எந்த விஷயமுமே உனக்கு தெரியக்கூடாதாம்; அம்மா சொல்கிறாள். நான் என்ன செய்யட்டும்? அத்தகைய குணம் வாய்ந்த தாயாரை நாம் வேறு எங்கே காண முடியும்?” என்றார்.
மனம் சோர்ந்து வீடு திரும்பினேன். நாணு முதலாளியை நான் கண்டு பேசிவிட்டு வந்த விவரம் அம்மாவுக்குத் தெரியாது. நான் வீட்டை அடையும்போது, இருட்டத் தொடங்கிவிட்டது. ‘மினுக் மினுக்’என்று மங்கலாக எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் அருகே சப்பணமிட்டு அமர்ந்திருந்தாள் அம்மா. அந்த விளக்கைப் பார்க்கும்போது, பாம்பு புற்றுக்குப் போய் அவள் தினமும் ஏற்றி வைத்துவிட்டு வரும் விளக்குதான் என் ஞாபகத்தில் வந்தது. இன்னும் நாகதேவதைகளுக்கு விளக்கேற்றி வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது... கண்ணைத் திறக்காத தெய்வங்களே...!
“மகனே, இதுவரை நீ எங்கே போயிருந்தாய்?”
“சும்மா அப்படியே காலாற நடந்து வரலாம் என்று போயிருந்தேன் அம்மா.”
“ஸ்ரீதர மேனனிடமிருந்து இப்போதுதான் ஓர் ஆள் வந்து விட்டுப் போனான். ஏதோ முக்கியமான விஷயம் குறித்து உன்னிடம் பேசவேண்டி இருக்கிறதாம். உனக்கு சௌகரியப்பட்டால், நாளைக்கு ஒரு நடை அங்கே போய் விட்டு வாயேன். என்ன விசேஷமோ தெரியவில்லை அவரை.”
“ஸ்ரீதர மேனனா? யாரம்மா அவர்?”
அவரைப் பற்றித் தான் அறிந்த எல்லா விவரத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் அம்மா!
ஸ்ரீதரன் பிறந்தது ஒரு நடுத்தரக் குடும்பத்தில்தான். இன்டர்மீடியட் தேர்வைப் பல முறை எழுதியும், அதில் தேறவில்லையாம். தந்தை கோபித்துக் கொள்ளவே ஊரைவிட்டே ஓடிவிட்ட ஸ்ரீதரன், கடைசியில் ஒரு நாள் துபாய்க்குப் போகும் கப்பல் ஒன்றில் ஏறிவிட்டார். துபாயில் அவருக்கு எண்ணெய்க் கம்பெனி ஒன்றில் பொறுப்புள்ள நல்லதொரு வேலை கிடைத்திருக்கிறது. அவருக்கும், அங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு மலையாளிப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. தம் தந்தை இறந்த செய்தியைக் கேட்ட பின்புங்கூட, ஸ்ரீதரன் ஊர் திரும்பவில்லை. அவருடைய தாய் அதற்கு முன்பே இறந்து விட்டாளாம். சமீபத்தில்தான் துபாயிலிருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுச் சேர்த்துக்கொண்டு தாய்நாடு திரும்பியிருக்கிறார். அவருடைய மனைவி திடீரென்று இறக்கவே, சொந்த நாடு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. போதாததற்கு திருமண வயசுள்ள ஒரு மகள் வேறு அவருடன் இருந்திருக்கிறாள். இப்போது அரண்மனை போன்ற ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெயரைச் சுருக்கி பி.ஸ்ரீதர் என்று வைத்திருக்கிறாராம். இப்போது அதையும் மாற்றிப் பி.எஸ்.தர் என்று வைத்திருக்கிறாராம்.
“அவரை நான் ஏன் போய்ப் பார்க்க வேண்டும்?”
“மகனே, உனக்குப் போக வேண்டும் என்று விருப்பம் இருந்தால் போய்ப் பார்!” என்பதற்கு மேல் அம்மா வேறு ஏதும் சொல்லவில்லை.
‘சரி; நாளைக்கு போய்த்தான் பார்ப்போமே!’ என்று எண்ணினேன்.
அம்மா சமையல் அறைக்குள் இருந்தாள். அப்போது ஓர் ஆள் வந்தான் நாணு முதலாளியின் கடிதத்துடன். அப்போது தான் தெரிந்தது, தர் என்னை வரச் சொன்னதற்கு மூலகாரணம் நாணு முதலாளிதான் என்பது. ‘ஏன் சாயங்காலம் அவரைப் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வருவோமே?’ என்றும் தோன்றியது.
குளித்து முடித்து, நன்றாக வெளுத்த ஆடைகளை அணிந்து கொண்டு முற்றத்தைவிட்டு நான் இறங்கியபோது, சமையலறைக்குள் இருந்தபடி அம்மா அழைக்கும் குரல் காதில் விழுந்தது.
“இந்த நேரத்தில் எங்கே போகிறாய், மகனே?”
“நான் ஸ்ரீதர மேனனைப் பார்த்துவிட்டு வருகிறேன் அம்மா.”
“ம்...”
அம்மாவின் மெதுவான முனகல் காதில் விழுந்தது.
என் ஊரில் இத்தனை பெரிய உயரமான அரண்மனை போன்ற வீடா! என்னால் கொஞ்சம்கூட நம்பவே முடியவில்லை! வீட்டின் உச்சியிலிருந்து வெளியே பரவும் விளக்கொளி சுற்றி இருந்த குன்றுகளில் பிரகாசித்தது. ‘கேட்’டை நான் நெருங்கியபோது என்னை அறியாமலேயே என் கால்கள் நடக்க மறுத்தன. நெற்றியில் வழிந்து கொண்டிருந்த வியர்வையைக் கை விரலால் வழித்தெறிந்தேன். சிறிது நேரம் கொஞ்சமும் அசையாமல் அப்படியே நின்றேன். வீட்டின் முன்னால் ஒரு பலகை. அதில் ‘நாய் இருக்கிறது; ஜாக்கிரதை’ என்று எழுதியிருந்தது. ‘கேட்’டின் அருகே இரண்டு பக்கங்களிலும் அமைந்திருந்த கல் தூண்களில், சுற்றுப்புறங்களில் எல்லாம் தம் ஒளியை வியாபித்துக் கொண்டு நின்றிருந்தன இரண்டு ‘க்ளோப்’விளக்குகள். கதவை இரண்டு மூன்று முறை தட்டிய பிறகு காக்கி உடை அணிந்த ஒரு ஆள் கூர்க்கா போல் இருக்கிறது- உள்ளேயிருந்து நடந்து வந்து கதவைத் திறந்தான். விநோதமான ஒரு சப்தத்தை உண்டாக்கியபடி ‘கேட்’ கதவுகள் இரண்டும் திறந்து எனக்கு வழிவிட்டன. அரைச் சந்திர வடிவத்தில் வளைந்து காணப்பட்ட தன் கரிய மீசையைத் தடவியபடி நின்றிருந்த கூர்க்கா என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“மிஸ்டர் மேனன் உள்ளே இருக்கிறாரா?”
நான் இப்படிக் கேட்டதும் தன் புருவத்தைச் சுளித்துக் கொண்டு என்னைப் பார்த்தான் கூர்க்கா.
“மேனனா?”
“ஸாரி, மிஸ்டர் தர்!”
மிஸ்டர் தர்ரைத் தேடி வந்திருப்பவர் யாரென்று அவனுக்குத் தெரிய வேண்டும். ‘விஸிட்டிங் கார்டு’கையில் இருந்தால் இன்னும் கொஞ்சம் விசேஷமில்லையா?
“என்னிடம் விஸிட்டிங் கார்டு இல்லை. தேவன் வந்திருப்பதாகச் சொல். அவருக்குத் தெரியும். அவர் என்னை வரச் சொல்லித்தான் வந்திருக்கிறேன்.”
ஒன்றுமே பேசிக் கொள்ளாமல் கூர்க்கா கதவை இழுத்துச் சாத்தினான். என்ன செய்வதென்றே தெரியாமல் செயலற்றுச் சிறிது நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். உள்ளே போய்விட்டு வந்த கூர்க்கா மீண்டும் ‘கேட்’டைத் திறந்தபடி, “உள்ளே வரலாம்” என்று பணிவுடன் கூறினான்.
எத்தனை படிகளில் கால் வைத்து ஏறிச் செல்வது? பாதையின் இரு மருங்கிலும் ஏராளமான பூஞ்செடிகள் வைத்த சட்டிகள். பலப் பல வண்ணங்களில் செடிகளின் உச்சியில் காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த நறுமண மலர்கள், மாலை நேரத் தென்றலில் இனிமையாக ஆடிக் கொண்டிருந்தன. பூச்செடிகளில் நிறைத்து வைத்திருந்த நீர், வேட்டி மேல் படிந்து கரையாகி விடக்கூடாது என்று கவனத்துடன் வேட்டியின் கீழ்ப்பகுதியைச் சற்று மேலே தூக்கியே நடந்தேன். ஒரு காட்டருவி ஒழுகி வருவது போன்ற ஓசை. தலையை வலப்பக்கம் திருப்பி நோக்கினேன். அழகாக ஒரே மாதிரியான அளவில் சீராக வெட்டி விடப்பட்டு பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் புல்வெளியின் தெற்கு மூலையில் செயற்கையாக அமைத்த அந்தக் குகையும், அதன் அருகே மேலிருந்து கீழாகச் ‘சர்’ரென்று ஓசையெழுப்பியபடி வழிந்தோடிக் கொண்டிருக்கும் அந்தக் காட்டருவியும் கண்ணில் பட்டன. குகையின் மேல் பகுதியில் சிங்கம் ஒன்று யார் மேலோ பாயப்போகிற பாவனையில் நின்று கொண்டிருக்கிறது. சிங்கத்தின் வாயில் ஓர் ஆட்டுக்குட்டி. சிங்கத்தின் வாயின் இரு பக்கங்களிலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. போர்ட்டிக்கோவை அடைந்ததும் என் கண் அங்கே ஒரு மூலையில் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடக்கிற அந்த உயரமான நாயைக் காண நேர்ந்தது. அதைக் கண்டதும் என்னையும் மீறி நான் பயந்து போனேன். என்னைக் கண்ட அந்த நாய் இப்படியும் அப்படியும் உடலை ஆட்டிக் கொண்டு முரண்டு பிடித்தபடி திமிறிக் கொண்டிருந்தது. வரவேற்பு அறையின் இரு மருங்கிலும் காட்சியளிக்கும் கண்ணாடித் தொட்டிகளுக்குள் பல வகைப்பட்ட மீன்கள் நீந்திக் களித்துக் கொண்டிருந்தன. தண்ணீரினுள் எப்படியோ சிக்கிக் கொண்ட ஒரு பூச்சியைக் கவ்விப் பிடிக்கும் ஆவலுடன் வாயைப் பெரிதாகத் திறந்து வைத்துக் கொண்டு பூச்சியை நோக்கிச் சென்றது ஒரு பெரிய மீன்.
“யார், தேவனா? உள்ளே வாருங்கள்.”
கம்பீரமாக ஒலித்த அந்தக் குரலில் இதற்குமுன் பழக்கமில்லாத பாவனையின் அறிகுறிகள் கொஞ்சங்கூட இல்லை. கால்களில் அணிந்திருந்த செருப்புக்களைக் கழற்றி வாசலின் ஒரு பக்கம் வைத்துவிட்டு அறையினுள் நான் நுழைந்தேன். சுமார் நாற்பத்தைந்து, ஐம்பது வயசு மதிக்கக்கூடிய, கொஞ்சம் தடிமனான ஒருவர் அறையினுள் அமர்ந்திருந்தார். கம்பீரமாக உட்கார்ந்திருந்த அந்த மனிதரின் வெளுப்பான முகத்தில் ஒரு வகையான கர்வம் தவழ்ந்து கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவருடைய மேனியை வெளிநாட்டுத் துணியில் தைத்து அருமையான ‘டிசைன்’கள் போட்ட ஒரு கைலியும், ஜிப்பாவும் அழகு செய்து கொண்டிருந்தன. ஜிப்பாவுக்கு மேல் கைகளின் மேற்பகுதியில் சற்று உயர்ந்து, மலைபோன்ற தோற்றத்துடன் ‘மதமத’வென்று காட்சியளிக்கும் அந்தத் தசைக்குவியலைக் கண்டபோது, யாரோ குஸ்திக்காரனைக் காணும் உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது. நெற்றியின் இரு பக்கங்களிலும் வளர்ந்திருக்கும் கேசத்தில் லேசாக அங்குமிங்கும் நரை இழையோடியது. காதுகளின் மேற்பகுதிகளில் சிறுசிறு ரோமங்கள். கழுத்தில் சற்றுத் தடிமனான ஒரு தங்கச்சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. தங்கச் சங்கிலியின் நுனியில் ‘வெள்ளை வெளேர்’ என்று காட்சியளிக்கும் புலிநகம் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு கையில் தங்கத்தால் ஆன கடிகாரம். அதைப் பிணைத்திருக்கிற பொன் சங்கிலி. இடது கைச் சுண்டு விரலில் வைரம் பதித்த ஒரு மோதிரம். செருப்பு.. அது என்ன, புலித் தோலால் செய்ததாய் இருக்குமோ? செருப்புகளின் நுனிப்பாகம் மேல்நோக்கி வளைந்திருக்கிறது. வாயில் வைத்திருக்கும் ‘பைப்’பைக் கையில் எடுக்காமலே பேசினார்.
“உட்காருங்கள்.”
அந்தக் குரல் வேறு எங்கோ தொலைதூரத்திலிருந்து யாரோ பேசுவதுபோல் என் காதுகளில் விழுந்தது.
“பி.ஏ. முடிந்துவிட்டது இல்லையா?”
“இப்போதுதான் தேர்வு எழுதியிருக்கிறேன்.”
“க்ளாஸ் கிடைக்குமில்லையா?”
“நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.”
“அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?”
“எம்.ஏ. இங்கிலீஷ் படிக்கலாம் என்றிருக்கிறேன்.”
“வெரிகுட்!”
சிறிது நேரத்துக்கு ஒரே நிசப்தம்.
“புதிய தலைமுறையைச் சார்ந்தவர்களில் ஒருவர் கூட எனக்கு நேரடியாகப் பழக்கமில்லை. நாட்டை விட்டு துபாய்க்குப் போய்க் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆகிவிட்டது, பாருங்க.”
அணைந்து போன ‘பைப்’பை லைட்டர் மூலம் அவர் மீண்டும் பற்ற வைத்துக் கொண்டார். அதிலிருந்து கிளம்பிய புகைச்சுருள்களின் படலத்தினால் கொஞ்ச நேரத்துக்கு அவருடைய முகமே மறைந்து விட்டது. பனிப்போர்வையில் மறைந்துகொண்டு இரையை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் கரடியின் முகம்தான் ஏனோ அப்போது என் மனக்கண்முன் வந்தது!
“நான் உங்களுக்கு உதவி செய்யலாம் என்றிருக்கிறேன். எல்லா விஷயத்தையும் நாணு எனக்கு விவரமாகச் சொன்னார். அதையெல்லாம் கேட்டபோது எனக்கு உங்கள் மீது உண்மையாக ஸிம்பதி ஏற்பட்டது.”
“வாய் திறவாமல் வியப்பு மேலோங்க அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வேறு நான் என்ன செய்ய முடியும்? பேச நினைத்தாலும், எதைப்பற்றிப் பேசுவது? ‘எல்லாம் என் அதிர்ஷ்டம்’ என்று கூறலாமே?
புகைச்சுருள் உயர்ந்து உயர்ந்து பரவியது.
“உங்களுடைய இரண்டு வருஷப் படிப்புக்கும், அம்மாவின் மருத்துவச் செலவுக்கும் நான் பணம் தருகிறேன்.”
“அதற்கு ஈடாகத் தர என்னிடம் ஒன்றுமே இல்லையே! வீட்டையும் தோட்டத்தையும் விற்றால்கூட...”
அவர் சிரித்துவிட்டார்; முழுமையாகக் கூறி முடிக்க அவர் அனுமதிக்கவில்லை.
“எனக்கு எல்லாம் தெரியும். தம்பி!” அவர் சாவதானமாகத் தம் சுயசரிதையைக் கூறத் தொடங்கினார்.
“இருபத்தைந்து வருஷ காலம் கல்ஃப் நாடுகளில் இருந்தவன் நான். எனக்குப் பின்னால் வரக்கூடிய சில தலைமுறையினருக்குத் தேவைப்படும் அளவுக்கு நான் சம்பாதித்துவிட்டேன். பிறகு என்ன? அங்குள்ள வாழ்க்கையே எனக்கு ‘போர்’ அடிக்கத் தொடங்கிவிட்டது. அந்தச் சமயத்திலேயே என் மனைவியும் இறந்துவிட்டதால் பிறந்த இந்த மண்ணுக்கே வந்துவிட வேண்டும் என்று பட்டது. ஒரே மகள் அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்தாள். அவளும் உலகம் முழுவதையும் காணட்டுமே என்றுதான் அவளை அங்கே அனுப்பி வைத்தேன். இப்போது அவளும் என்னுடன்தான் இருக்கிறாள்.”
“டாடீ!”
அந்தக் குரலின் அலை அடங்குவதற்கு முன்பே குரலின் சொந்தக்காரி அறையினுள் நுழைந்தாள்.
கடைந்தெடுத்தது போன்ற பளபளப்பான கால்கள். அதன் அழகில் நான் என்னையே மறந்து போனேன்! துடையோடு இறுகிப் போய் அதனுடன் ஒன்றோடு ஒன்றாய்ப் பிணைந்து பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கிற ஷார்ட்ஸ்; கருஞ் சிவப்பு வண்ணத்தால் ஆன கம்பளி நூல் கொண்டு பின்னிய பனியன். தளதளவென்று இளமையின் பூரிப்புடன் விளங்கினாள். சிவப்பு வண்ணத்தில் ‘லிப்ஸ்டிக்’போட்ட அதரங்கள். இளம் நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் நயனங்கள். ‘பாப்’செய்ததுபோல் படியாத தலை முடி, ஒரே பார்வையில் அவளுடைய தோற்றம் என்னை எப்படிக் கவர்ந்துவிட்டது!
கையிலிருந்த டென்னிஸ் ராக்கெட்டை வலது கணுக்காலில் தட்டிக்கொண்டே அவள், “நான் இரண்டு செட் ஆடி விட்டுத்தான் வீடு வருவேன். ரம்மி ஆட்டத்திலும் கலந்துகொள்வேன். நான் திரும்பி வர நேரமாகிவிடும் டாடீ! டின்னருக்கு என்னை எதிர்பார்த்து நீங்கள் காத்துக் கிடக்க வேண்டாம்” என்றாள்.
தந்தையின் கழுத்தைச் சுற்றிலும் தன் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு அவருடைய கன்னத்தில் முத்தம் சொரிந்த அவள். சிறிது நேரத்தில் என் பார்வையிலிருந்து மறைந்து போனாள்.
என்னை அவள் கவனித்திருப்பாளா?
“ஓ...கே!”
தன் தந்தையின் பதில் அவள் காதில் விழுந்திருக்குமோ என்னவோ தெரியாது.
ஸ்ரீதர மேனன் மீண்டும் தம் பேச்சைத் தொடர்ந்தார். ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் திராணிதான் எனக்குக் கொஞ்சமும் இல்லை. ஏன்? ஏதோ ஒரு வகையான அசதி...
க்ளாஸில் இருந்த சர்பத்தை ஒரே மடக்கில் குடித்து க்ளாஸைக் காலி செய்தேன். மேனனின் பெருந்தன்மைக்கு நன்றி செலுத்தி விட்டு வெளியேறினேன்.
பாவம், கண்ணாடித் தொட்டியினுள் சிக்கிக் கொண்ட பூச்சி இந்நேரம் இறந்து போயிருக்குமோ? மீனின் திறந்த வாய்க்குள் அகப்பட்டிருக்குமோ?
ஆவி பரக்கும் சோற்றையும் கூட்டையும் தட்டில் வைத்தபடி அம்மா கேட்டாள்.
“ஸ்ரீதர மேனனுக்கு உன்னைக் காண வேண்டும் என்று ஏன் இந்த ஆசை!”
“ஒன்றுமில்லை, அம்மா. பணத்துக்குக் கஷ்டமாக இருந்தால் தாமே உதவுவதாகச் சொன்னார். வேறு ஒன்றுமில்லை.”
“ம்... நான் நினைத்தது சரியாகத்தான் போய்விட்டது. மகனே இந்த ஆள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்; அவ்வளவுதான் நான் சொல்வேன்.”
அம்மாவின் கைப்பாகமான முருங்கைக் கீரைக்குக்கூடச் சுவை இருப்பதாக அன்று எனக்கு ஏனோ படவில்லை! ஒரு வேளை உப்பு கூடிப்போயிருக்குமோ? உப்பு சாப்பிட்டால் பின்பு தண்ணீர் பருக வேண்டி வருமே... அல்லது வேறு ஒன்று காரணமோ?
நான் குற்றவாளியா?
“ஆம் “ என்கிறது நீதிமன்றத் தீர்ப்பு.
“பெருமதிப்பிற்குரிய நீதிமன்றங்கூடத் தவறு செய்துவிட்டது.”
இப்படி எவ்வளவு உரக்கக் கூற முடியுமோ அவ்வளவு உரக்கக் கூற வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், நான் கத்தினால், அதை யார் கேட்கப் போகிறார்கள்.
கற்சுவர்களாவது என் வார்த்தைகளைக் கேட்கலாமில்லையா? அதுபோதும்!
அம்மா மட்டும் இன்று உயிருடன் இருந்தால், “பெருமதிப்பிற்குரிய நீதிமன்றம் தவறு செய்துவிட்டது” என்பாள். அது நிச்சயம்!
ஆனால்... ஆனால்... அம்மா இன்று உயிருடன் இருந்தாலன்றோ அப்படிச் சொல்வதற்கு?
உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று அவளை டாக்டர்கள் நிர்ப்பந்தித்தபோது, “உன் படிப்பு முதலில் முடியட்டும் மகனே! அதற்குப் பிறகு நடக்கட்டும் என் உடலைக் கீறும் விஷயம். இப்போது என்ன வந்தாலும் சரி, நான் சம்மதிக்கப் போவதில்லை” என்று கூறிவிட்டாள்.
அம்மாவின் மருத்துவச் செலவுக்காக அல்லவா முக்கியமாக ஸ்ரீதர மேனனைச் சந்திக்கச் சென்றது?...
எம்.ஏ. தேர்வில் முதல் வகுப்பில் முதல் மாணவனாக நான் தேர்வு பெற்றிருக்கிற செய்தியை அறிந்தபோது அம்மாவின் முகத்திலேதான் எத்தனை மகிழ்ச்சி! பல வருஷங்களுக்குப் பின் தன்னை மறந்து அகம் மலர மகிழ்ச்சியில் அம்மா களித்தது அன்றுதான். கரையான் அரித்துப் பாதியாகிப் போய் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த என் தந்தையின் படத்தின் முன் அமர்ந்தாள் அவள்.
“இனியாவது நாம் வேலூருக்குப் போகலாம். வா, அம்மா!”
முதலில் விளையாட்டாகத்தான் சொன்னேன். பிறகு கெஞ்சிக் கூத்தாடினேன். ஆனால், அவளோ, “வேண்டவே வேண்டாம்” என்று ஒரே பிடிவாதமாக மறுத்து விட்டாள். எவ்வளவு முயன்றும் அவள் பிடி கொடுக்கவில்லை. என் நிர்ப்பந்தம் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் போன பிறகு தன் மனசினுள் உள்ளதை வெட்ட வெளிச்சமாகவே அம்மா கூறிவிட்டாள்.
“மகனே, என்னடா அம்மாவை இத்தனை முறை வலியுறுத்தி அழைத்தும் நாம் கூறுவதை செவிமடுக்க மறுக்கிறாளே என்று நீ நினைக்கலாம். ஆனால், நான் என்ன விஷயமாக இப்படி மறுக்கிறேன் என்பதற்கான காரணம் உனக்குத் தெரியுமா? ஸ்ரீதர மேனனின் பணத்தைக் கொண்டு எனக்கு மருத்துவம் செய்ய வேண்டாம். உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கட்டும். அதன்பின் எனக்கு மருத்துவம் பார்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமில்லையா? அப்போது நிச்சயம் நான் வேலூர் வருவேன். எனக்கு முன்னைப்போல அப்படியொன்றும் கடுமையான நோய் இல்லை. இப்போது எவ்வளவோ தேவலை.”
தேர்வு முடிவு வந்து மூன்று மாதங்கூட ஆகியிருக்காது. அரசுக்கல்லூரி ஒன்றில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. எனக்கு வேலை கிடைத்த அந்த இனிப்பான செய்தி ஸ்ரீதர மேனனை மட்டும் கொஞ்சமும் களிப்படையச் செய்யவில்லை.
“ஆசிரியர் வேலைக்குப் போக வேண்டாம். வீட்டில் இருந்தபடி படித்து, ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதுங்கள்.”
“கிடைத்தது அரசாங்க வேலை. அதை ஏற்றுக் கொள்வதே உசிதம் என்று எனக்குப் படுகிறது. வேலையையும் பார்த்துக் கொண்டே ஐ.ஏ.எஸ்.ஸும் படிக்கலாமில்லையா?”
“ஒரு கல்லூரி ஆசிரியருக்கு என்ன சம்பளம் இன்று கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியாதா எனக்கு? தேவனின் விருப்பம் அதுதானென்றால் அந்த வழியில் குறுக்கே நான் ஏன் நிற்கப் போகிறேன்?”
தோல்வி அடைந்ததற்கான கசப்பான உண்மைகளை மனசில் ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டுச் சும்மா தலையை ஆட்டி வைத்தார் ஸ்ரீதர மேனன்.
ஒருநாள் தம் வீட்டுக்கு என்னை அழைத்து மெல்ல மெல்லத் தம் கருத்துகளை என் மீது அவர் திணிக்க முற்பட்டார்.
பச்சைப் பசேல் என்று பரந்து கிடந்த புல்வெளியின் மத்தியில் நாற்காலியில் ஒருவரையொருவர் பார்த்தபடி நானும் மேனனும் அமர்ந்திருந்தோம். ஒருவருடைய முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் நாங்கள் செய்யவில்லை. செயற்கை அருவியின் ஒலி என் செவிகளில் தெளிவாக ஒலித்துக் கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சம் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிலும் வியாபித்துக் கொண்டிருந்தது. பூஞ்செடிகளின் உச்சிகளில் விளங்கிய நறுமண மலர்களை இனிமையாகத் தொட்டுத் தழுவி ராகம் பாடியபடி தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது தென்றல். ஸ்ரீதர மேனன் நெய்யில் வறுத்த முந்திரப்பருப்பை மிக மிகக் கவனமாக எடுத்துத் தின்று கொண்டிருந்தார். அது முடிந்தபின், ‘ஸ்காட்ச் விஸ்கி’யைக் கைகளில் எடுத்து, அதையும் ஒரு பிடி பிடித்தார். அவருடைய கால்களைத் தன் சடை முடியால் தாலாட்டிக் கொண்டிருந்த அந்த பாமரேனியன் நாய்க்குச் சில பிஸ்கட் துண்டுகளைக் கொடுத்த மேனன், தம் உள்ளங்கையால் அதைச் செல்லமாகத் தடவி விட்டுக் கொண்டிருந்தார்.
“என் மகளுக்கு ஐ.ஏ.எஸ். படித்தவனோ பிரபு வம்சத்தவனோ கிடைக்காமல் ஒன்றுமில்லை. எனக்குத் தேவனை மிகவும் பிடித்திருக்கிறது. அதுபோன்றே என் மகளுக்கும்...”
என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வேன். ஆம், அதுதானே என்னை இந்தச் சிறைச்சாலைக் கம்பிகளுக்குள் கொண்டு வந்தது!
“நான் சம்பாதித்த சொத்து முழுவதுமே என்னுடைய ஒரே மகளுக்காகத்தான்... கல்யாணம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடப்பது உசிதம் என்று நினைக்கிறேன். இன்று என் உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நானும் ஒரு மனிதப் பிறவிதானே! எனக்கும் ஒரு நாள் திடீரென்று ஏதாவது சம்பவித்துவிட்டால்...”
ஒரே அமைதி; இனம் புரியாத அமைதி. என் மனசில் உள்ள அனைத்தும் அந்த ஆளுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
“கல்யாணம் முடிந்துவிட்டால், பிறகு ஐ.ஏ.எஸ். படிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும் என்பது தேவனின் அச்சமாக இருக்கும் அப்படித்தானே?”
பதிலுக்கு நான் ஏதும் கூறாமல், லேசாகப் புன்முறுவல் மட்டும் செய்தேன்.
“சரி, அப்படியென்றால் ஒன்று செய்வோம். கல்யாணத்துக்கான நிச்சயதார்த்தத்தை உடனே நடத்தி விடுவோம். அதுபோதும். தற்போதைக்கு மோதிரம் மாற்றிக் கொள்வது குறித்துத் தேவனுக்கு ஆட்சேபம் ஒன்றும் இருக்காது என்று நம்புகிறேன்...”
“அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் சொல்கிறேனே!”
“அஃப் கோர்ஸ்... வேண்டுமானால் நானே கூட அம்மாவைப் பார்த்து விஷயத்தைச் சொல்கிறேனே!”
“சே... சே... அதெல்லாம் ஒன்றும் கட்டாயமில்லை. எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் வந்து என் முடிவைச் சொல்கிறேன்.”
“ஓ எஸ்! உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்!”
அம்மாவின் ஆசை என்னவாக இருக்கும்?
“மகனே அந்தச் சோற்றைக் கொஞ்சம் நடுவில் இழுத்துப் போட்டுக் கொண்டு, கொஞ்சம் புளிக்குழம்பையும் சேர்த்துப் பிசைந்து சாப்பிடேன்.”
அம்மாவைப் பார்த்து மனசுக்குள் சிரித்தபடி முகவுரை எதுவும் போடாமல் நேராகவே விஷயத்துக்கு வந்தேன்.
“ஸ்ரீதர மேனன் இன்று என்னைத் தம் வீட்டுக்கு அழைத்திருந்தார். மோதிரம் மாற்றிக் கொண்டால் தற்போதைக்கு போதும் என்கிறார்.”
அம்மாவின் முகக்குறி திடீரென்று ஏன் அப்படி மாற வேண்டும்?
“எனக்கு முன்பே எல்லா விஷயமும் தெரியுமடா, மகனே!”
வயிறு நிறைந்துவிட்டதென்றாலும், மேலும் ஒரு பிடி சோற்றை உள்ளே செலுத்தினேன்.
“இதுவரை பல வகையில் செலவுக்காக நாலு ஐந்தாயிரம் ரூபாய் வாங்கியிருப்போம் இல்லையா? அவர் என்ன வட்டிக்கா நமக்கு பணம் கொடுத்தார்? இல்லையே! ஒரு வேளை அவர் உத்தேசித்திருக்கும் வட்டி...”
அம்மா ஏதோ நினைத்து குழம்பிக் கொண்டிருப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது.
“மகனே, உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அப்படியே செய். நாம் மீதியை நாளைக்குப் பேசிக் கொள்வோம்.”
அன்று இரவு முழுவதும் அம்மா ஒரு விநாடிகூடக் கண்ணயர்ந்திருக்க மாட்டாள்; அது மட்டும் உண்மை.
நெடுநேர வாக்குவாதத்துக்குப் பின்பு தாயும் மகனும் ஓர் இறுதித் தீர்மானத்துக்கு வந்தோம்.
ஸ்வப்னாவைக் கல்யாணம் செய்து கொள்ள மறுப்பது, இதுவரை பிரதிபலனை எதிர்பாராமல் உதவி செய்த நல்லதொரு மனிதரின் மனசை வீணே நோகச் செய்வதற்கு ஒப்பானது. அவளைக் கல்யாணம் செய்துகொள்வதாக எந்த ஒரு வாக்குறுதியும் இதற்கு முன் கொடுத்திராவிடினும்
பாருவம்மாவைக் கண்டபோது, அம்மா ஏன் அப்படிக் கதறி அழ வேண்டும்?
“என் ஒரே மகனை நான் இழந்துவிட்டேனே, பாரு!”
ஆர்ப்பாட்டமும், அல்லோல கல்லோலமுமாய் நடைபெறும் ஒரு திருமணத்துக்கு வந்தவர்களைக் காட்டிலும் சாதாரண அந்தக் ‘கல்யாண நிச்சயதார்த்த’த்துக்கு வந்தோரின் எண்ணிக்கை எவ்வளவோ அதிகந்தான். பல மந்திரிமார்களும், உன்னத பதவியில் இருக்கிறவர்களும்கூட வந்திருந்தார்கள் என்றால் பாருங்கள். ஸ்ரீதர மேனன் எவ்வளவு செல்வாக்கு உடையவராக இருந்திருக்க வேண்டும் என்று! ஒவ்வொருவரும் மூக்கின் மேல் விரலை வைத்து அதிசயப்படத் தொடங்கிவிட்டனர். சாலையின் புழுதிப் படலத்தைக் கிளப்பியபடி ஒன்றன்பின் ஒன்றாகக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு வரும் அந்தக் கார் ஊர்வலம், கிராமத்துக் கோவணாண்டிச் சிறுவர்களின் மனசை எவ்வளவு பெரிய அளவில் கவர்ந்திருக்கும்! சுருக்கமாகக் கூறினால், ஸ்ரீதர மேனனின் மகளுடைய அந்தக் கல்யாண நிச்சயச் சடங்கு அந்தப் பட்டிக்காட்டையே ஓர் குலுக்குக் குலுக்கிவிட்டது.
நள்ளிரவு கழிந்திருக்கும். ‘காக்டெயில் டின்னரு’க்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் திரை விழுந்துவிடும். எத்தனை எத்தனை வெளிநாட்டு மதுக் குப்பிகள் அந்த இரவில் உடைபட்டுக் காலியாகியிருக்கும்!
சோடா பாட்டில்கள் திறக்கப்படும் சப்தம். கேலிச் சிரிப்புக்கள்! மதுவின் போதையில் சிக்குண்டு சொல்லை உச்சரிக்க முடியாமல் நாக்குப் படும்பாடு! பார்ட்டி, டான்ஸ், மதுவின் போதையுடன் தள்ளாடிக்கொண்டே விருந்தினர் விடைபெற்றுச் செல்லும் தருவாயில் ஸ்ரீதர மேனன், “அடுத்த வருஷம் இதே சமயம் என் மகள் ஸ்வப்னாவுக்கும் மிஸ்டர் தேவராஜ மேனன், ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் திருமணம் நடைபெறும். அந்த நாளில், இந்தச் சமயத்தில் புறப்பட்டுப் போக நான் நிச்சயம் யாருக்கும் அனுமதி தரப் போவதில்லை. மீண்டும் சந்திப்போம்!” என்றார்.
அவருடைய நாவும் குழறத் தொடங்கிவிட்டதோ?
நிறைந்த ஒரு க்ளாஸுடன் என் அருகில் வந்தார் மேனன்.
“வாருங்கள். ஒரு ‘பெக்’குடியுங்கள்... ம்... கம்பெனிக்காக”
நான் திட்டவட்டமாக மறுக்க வேண்டியதாயிற்று. “மன்னிக்க வேண்டும். எனக்கு இது பழக்கமில்லை. தயவு செய்து இந்த ஒரு விஷயத்தில் மட்டும் என்னை வற்புறுத்த வேண்டாம்.”
இந்தப் பதிலைக் கேட்டதும் அவர் சற்று அதிர்ச்சியுற்றிருக்க வேண்டும். ‘சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்ளத் தெரியவில்லை’ என்று நினைத்திருப்பார் போலும்.
“தாய்ப்பால் தவிர வேறு எதையும் பருக மாட்டேன் என்று நீங்கள் கூறினால் நானென்ன செய்ய முடியும்? நான் நிர்ப்பந்தித்துத்தான் என்ன பயன்?” என்றார்.
ஏதோ சொல்ல வாயெடுத்த நான், பின்பு என்ன நினைத்தேனோ மவுனமாகிவிட்டேன்.
“உடனே வீடு திரும்பவேண்டும்” என்று தீர்மானமாகக் கூறினாள் என் தாய். ஒரு வேளை தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி ஏற்பட்டிருக்குமோ? வீடு செல்ல அனுமதி கேட்க மேனனை நெருங்கியபோது அவர் சொன்னார்.
“வாட் நான்ஸென்ஸ். தட் ஈஸ் பேட் மேனர்ஸ்... அது சரியில்லை. கெஸ்ட்ஸ் இன்னும் போகாமல் இருக்கும்போது தேவன் மட்டும் போவது சரியில்லை.”
அம்மாவின் செவிகளிலும் மேனன் கூறிய அந்த வார்த்தை விழாமல் இல்லை. அவளுடைய மனசையும் அந்தச் சொற்கள் தொட்டிருக்க வேண்டும்.
“அப்படியானால், மகனே நீ இரு. நான் வருகிறேன்...” தயங்கித் தயங்கி ஏதோ பாவம் செய்துவிட்ட உணர்வுடன் அம்மா அங்கேயிருந்த ‘இம்பாலா’ காரில் ஏற முற்பட்டபோது, எங்கோ போயிருந்த ஸ்வப்னா ஓடி வந்தாள்.
“டாட்டா, மம்மீ!”
அம்மா ஒன்றுமே பேசிக் கொள்ளாமல் வண்டியினுள் கற்சிலை போல் அமர்ந்திருந்தாள்.
‘இந்தக் கிழவிக்குக் கொஞ்சம் கூட மேனர்ஸ் என்றால் என்ன என்று தெரியவில்லை’என்று என் தாயின் மீது பழி சுமத்தாத பெருந்தன்மையான காரியத்தைச் செய்ததற்காக மிஸ்டர் மேனன் அவர்களுக்கு என் நன்றி!
ஒவ்வொரு விருந்தினரும் விடை பெற்றுச் செல்லும்போது ஸ்வப்னாவின் கரங்களைப் பிடித்துக் குலுக்க மறக்கவில்லை. இளைஞர்கள் சிலர் உற்சாக மிகுதியால் அவளுடைய கன்னங்களைத் தடவிச் செல்லும் காட்சியும் என் கண்களில் படத்தான் செய்தது. டென்னிஸ் கோர்ட்டில் அரும்பிய நட்பாயிருக்கும்! அகலம் இல்லாத கருநீல வண்ணச் சேலையும் அதற்கேற்ற கையில்லாத ப்ளவ்ஸும் அணிந்து கம்பீரமாக நடந்து வருகிற அந்தப் பெண் யாராக இருக்க முடியும்!
“ஆள் கொஞ்சம் ‘ஷை’டைப் போல் இருக்கிறது. போகப் போகச் சரிப்படுத்துவிடுவாய் இல்லையா?”
இந்த உபதேசத்தைக் கூறிவிட்டுக் கால் உயர்ந்த அந்தக் காலணிகளைத் தரையில் பட்டதும் படாததுமாய் ஊன்றிக் கொண்டு நடந்தபடி வெளியே கிளம்பினாள் அந்தச் சீமாட்டி.
“அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் ஸிஸ்டர்! இன்றைக்கே ஆரம்பித்துவிட்டால் போகிறது!”
“என்ன இருந்தாலும் முதல் அனுபவமில்லையா? கொஞ்சம் மெதுவாகவே இருக்கட்டும்; இல்லாவிட்டால் களைத்துப்போய் விடப் போகிறார் ஆசாமி... உம்... வரட்டுமா?”
என்னதான் அவர்கள் பேசிக் கொள்ளும் சம்பாஷணை முழுமையாகச் செவிகளில் விழுந்தாலும், அதன் உள்ளர்த்தம் மட்டும் எனக்குக் கொஞ்சமும் விளங்கவேயில்லை; இந்தப் பட்டிக்காட்டுக்காரனுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது? நான் என்று டென்னிஸ் கோர்ட்டில் விளையாடிக் களைத்துப் போயிருக்கிறேன்?
ஸ்வப்னா தலையைத் திருப்பி என்னைப் பார்த்தாள். கண் மை தீட்டிய தன் அழகிய கண்களை, அவள் ஒரு முறை இமைத்துத் திறந்தாள். அவளுடைய ‘லிப்ஸ்டிக்’பூசிய அதரங்களில் புன்னகை லேசாக அரும்பியது.
நிகழ்ச்சி முடிந்துவிட்டது.
“யூ கோ அண்ட் ஸ்லீப் அப் ஸ்டேர்ஸ்” என்றார் மேனோன்.
“குட்நைட், டாடீ!” என்று தந்தைக்கு விடை கொடுத்தாள் ஸ்வப்னா.
“...வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்றேன்.
“டோண்ட் பீ ஸில்லி!” பட்டென்று அவள் கூறிவிட்டாள். மேனன் குடிபோதையில் ஆடி அசைந்தபடி தம் படுக்கையறைக்குப் போய்விட்டார்.
ஸ்வப்னா எனது வலது கரத்தை கெட்டியாகப் பிடித்தபடி மாடிப்படியில் ஏறலானாள்.
அப்பப்பா... அவளுடைய கைக்கு இவ்வளவு சக்தியா? தினந்தோறும் ‘டென்னிஸ்’விளையாடும் பழக்கம் இருக்கிறபடியால் ஒரு வேளை அந்தக் கைகளுக்குச் சக்தி ஏறியிருக்குமோ? வெண்ணெய் திருடிய குற்றத்துக்காக உன்னி கிருஷ்ணனுக்குத் தண்டனை கொடுக்க அவனுடைய கையைப் பிடித்துப் பலமாக இழுத்துச் சென்ற யசோதையின் முகந்தான் அப்போது என் கண்முன் தெரிந்தது. வர மறுக்கும் ஆட்டுக்குட்டியைக் கயிற்றால் கட்டி இழுத்துச் செல்கிறானே மரணத்தின் மேடைக்கு கசாப்புக் கடைக்காரன். அந்தக் காட்சியும் அப்போது முன்பின் சம்பந்தமில்லாமல் மனக் கண்முன் தோன்றியது.
அன்றிரவு முழுவதும் நான் தூங்கவேயில்லை. ஆனால் ஸ்வப்னாதான் எவ்வளவு கவலையற்று உறங்கினாள்! காலையில் எழுந்து நான் புறப்படத் தயாரானேன்.
“ஓ! இவ்வளவு சீக்கிரத்திலா? பேசாமல் படுத்து உறங்குங்கள்; ‘ப்ரேக் ஃபாஸ்ட்’முடித்துவிட்டுப் போகலாம். அப்படி என்ன தலைபோய்விட்ட அவசரம்? எனக்கு ஒரே அசதி!” என்றாள் ஸ்வப்னா.
“இல்லை, இப்போதே நான் போக வேண்டும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
அநேகமாக நான் வந்துவிட்ட பிறகும் புரண்டு படுத்துத் தலையணையைக் கட்டிப் பிடித்தபடி அவள் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும்.
மனம் முழுவதும் ஒரு வகையான அசதியும் வெறுப்பும் நிறைந்து காணப்பட்டது.
“அந்தப் பெண் நம் குடும்பச் சூழ்நிலைக்கு ஒத்து வருவாள் என்று நீ எதிர்பார்க்கிறாயா? ஆனால், எல்லாவற்றையும் இனிமேல் எண்ணி என்ன பயன்? எல்லாம் நடந்து முடிந்துவிட்டது! ‘நன்றி கெட்டவன்’என்று நான்கு பேர் நாக்கின்மேல் பல்லைப் போட்டுப் பேசி விடக்கூடாது பார்!”
இது என் தாயின் இதயப் புலம்பல்!
இருநூறு மைல்களுக்கப்பால் நான் பணிபுரிந்த கல்லூரி இருந்தது என்றாலும், அந்தக் கல்லூரி இருந்த சூழல் என் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது. அம்மாவிடம் நான் எத்தனை முறை நிர்ப்பந்தித்தேன்!
“அம்மா, பேசாமல் என்னுடன் வந்துவிடு. ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்வோம். வேண்டுமானால் பாருவம்மாவுக்குங்கூட நம்முடனேயே வந்து விடட்டும்” என்றேன்.
“வாடகை வீட்டிலேயே ஒரு வேளை என் உயிர் பிரிந்துவிட்டால்? வேண்டாமடா, மகனே, வேண்டாம்! இந்த வீட்டையும், தோட்டத்தையும் விட்டு நான் ஒருபோதும் வரமாட்டேன். இங்கே உன் அப்பாவின் சுடலைக்கு அடுத்தே என்னையும் சுடவேண்டும்” என்றாள் அம்மா.
இதயத்தையே சுக்கு நூறாகக் கிழித்தெறியக்கூடிய சக்தி படைத்த வார்த்தைகள்! கண்கள் கலங்கிய கோலத்துடன், அம்மா முன் இருந்த இடத்தை விட்டு எழுந்து நின்றாள்.
“வருத்தப்படாதே, மகனே! அம்மா என்ற முறையில் எதை எதையோ நினைத்துப் பேசிவிட்டேன்.”
என் முகத்தை நேராகப் பார்க்காமலே இந்த வார்த்தைகளைக் கூறியபடி உள்ளே சென்றுவிட்டாள் அம்மா.
சிறிதுநேரம் சென்றது. சமையலறைக்குள் நான் சென்றபோது அங்கே கலங்கிய கண்களை ஆடையின் நுனியால் துடைத்தவாறு நின்றுகொண்டிருந்தாள் அம்மா.
“சே! சே! என்ன புகை பார்த்தாயா, அப்பப்பா, கண்ணெல்லாம் எரிகிறது! ஒரே சூடாக இருக்கும்போல் இருக்கிறது.”
அம்மா ஏதோ பழைய கால நினைவுகளை எண்ணிக் கொண்டு கண்கலங்கியிருக்க வேண்டும் என்ற உண்மை பிடிபட எனக்கு அதிக நேரமாகவில்லை... அந்தப் புகை, என்பது எதைக் குறிப்பதாக இருக்கும்? அன்பு மகனின் எதிர்காலம் இருண்டுவிடுமோ என்ற கவலையாக இருக்குமோ?
வேதனை தரக்கூடிய நினைவுகள்! மனதின் ஒரு மூலையில் இவை கிடந்து எரிந்து சாம்பலாகக் கூடாதா? இந்த நினைவலைகளை யாருடன் பங்கிட்டுக் கொள்ள முடியும்? யாராவது ஒருவருடன் இதயத்தை முழுமையாகத் திறந்து, அங்கே அடைந்து கிடக்கிற எத்தனையோ ஆயிரம் தாபங்களைக் கொஞ்சமும் மறைக்காமல் வார்த்தை ரூபத்தில் வெளிக்கொணர்ந்தால்...? வருஷக்கணக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளில் சிலர் தங்களைச் சுற்றி வளைத்திருக்கிற கற்சுவர்களுடன் பேசித் தங்கள் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
“ஆதி நதியது. அலையெழுப்பியோடும்
அந்தக் கரைகளின் உறுதி போகாது!”
ஆசிரியராக நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியும் அன்னையின் உடல்நலம் குறித்த சிந்தனைதான்.
எத்தனை நல்ல மாணாக்கர்கள்! அன்பே வடிவான எத்தனை ஆசிரிய நண்பர்கள்!
நல்ல ஒரு நடிகனாகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, என்னிடமே எனக்கு வியப்பு மூண்டது.
நான் அதுவரை நடித்ததில்லை. ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தயாரித்த அந்தச் சிறிய நாடகத்தின் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும்படி கல்லூரித் தலைவர் என்னைக் கேட்டுக் கொண்டபோது நான் உண்மையிலேயே மறுக்கத்தான் செய்தேன். ஆனால், அவர் விட வேண்டுமே!
நடிப்பு என்னைப் பொறுத்தவரை இதுவரை பழகிக் கொள்ளாத ஒன்று என்பது உண்மை. ஒரு வேளை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்டிருக்கிற தோல்விக்கான காரணங்கூட அதுவாகத்தான் இருக்குமோ?
எனக்கு மட்டும் நடிக்கத் தெரிந்திருந்தால் நான் ஏன் இந்தச் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குள் அடைந்து கிடக்கப்போகிறேன்?
நாடகத்தில் என் மனைவியாக நடித்தவர் சரிதா. அவளை என்னிடம் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர் மலையாளப் பேராசிரியர். அவருடைய அறைக்குள் நான் நுழைந்தபோது, பேராசிரியரிடம் அவள் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவளுடைய பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. அதில் என்ன நகைச்சுவை இருந்ததோ தெரியவில்லை. விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். பேராசிரியர். பேச்சு என்னைப் பற்றியதாக இருக்குமோ?
என் மன ஓட்டத்தை அறிந்தவர்போல் பேராசிரியர், “உட்காருங்கள், தேவன். இவர்தான் மலையாள லெக்சரர் குமாரி சரிதா. ஆள் கொஞ்சம் துடுக்கு புரிகிறதா? அதாவது, தப்பாக நினைத்துவிடாதீர்கள்; கவிதை எழுதும் ஆற்றல் உண்டு. பயப்படாதீர்கள் புதுமாதிரி கவிதை ஒன்றுமில்லை. பழைய ரீதிதான்! புனைப்பெயரில் எழுதுவது வழக்கம்” என்றார்.
அவளுடைய புனைப்பெயர் என்னவென்று அறியும் ஆவலுடன் தலையைத் தூக்கிய நான் அவளது முகத்தையே பார்த்தேன். பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த அந்தக் கண்களில் குழந்தையொன்றின் குறுகுறுப்பு!
“ஸ்வப்னா!”
பேராசிரியர்தான் அப்படிச் சொன்னார்.
எனக்கு ஒரே வியப்பு!
என் மனைவியின் பெயரும் அதுதானே? ‘ஸ்வப்னா’வின் கவிதைகள் என்றால் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. சரிதாவுடன் தனியாக அவளுடைய கவித்துவம் குறித்து ஏதாவது பேச வேண்டும் என்று என்னுள் ஒரு வகையான கிளர்ச்சி! ஆனால், நான் ஒன்று பேசப் போய் அவள் அதைக் கேலிப் பொருளாக எண்ணிவிட்டால்?
இனிமையான உரையாடல் முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருந்தது.
அப்போது மணி அடித்தது. மணியின் ஓசை கேட்டதும், தம் இருக்கையிலிருந்து எழுந்தார் பேராசிரியர்.
“தேவனுக்கு க்ளாஸ் இருக்கிறதா இப்பொழுது?”
“இல்லை.”
“சரிதாவுக்கு?”
“இல்லை.”
“அப்படியானால் நீங்கள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருங்கள். எனக்கு இப்போது மூன்றாம் ஆண்டு மெயின் க்ளாஸ் இருக்கிறது.”
உரூபின் ‘சுந்தரிகளும் சுந்தரன்மாரும்’ நாவலைக் கையில் இடுக்கியவாறே போனார் பேராசிரியர்.
தன்னைவிடப் பலசாலியான ஒரு மல்யுத்த வீரனைச் சண்டை நடக்கும் மேடையில் பய உணர்ச்சியுடன் சந்திக்கும் ஒரு சாதாரண மல்யுத்த வீரனின் மனநிலையில் நான் என்ன பேசுவதென்று தெரியாமல் எனக்குள்ளேயே ஒரு போராட்டத்தை மூட்டிவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். நேரம் ஆக ஆகத்தான் பேசுவதற்கான துணிவு எனக்குப் பிறந்தது. அலையைப் போல் சாந்தமும் சலனமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன, உள்ளத்தின் அடித்தளத்தில்.
சரிதாவின் மையிட்ட வளைந்த கரிய புருவங்களையும், கனவுகள் தண்டவமாடிக் கொண்டிருக்கும் நீல நயனங்களையும் கண் இமைக்காமல் நோக்கினேன். அதரங்களில் புன்னகை மிளிர அவள் கேட்டாள்.
“ம். ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீர்கள்?”
“ஒரு கவியினுடைய இதயத்தின் ஆழத்தை அளந்து கொண்டிருக்கிறேன்.”
“அளந்துவிட்டீர்களா?”
பதில் கூறவில்லை.
ஏதோ ஒரு வகையான உணர்வினால் உந்தப்பட்ட என் நெஞ்சம் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தது.
“கவியும் கலைஞனும் ஒரே வகைப்பட்டவர்கள்தான்; ஒரே உணர்ச்சிக்கு அடிமையானவர்கள்தான் பி.ஏ. மாணவர்களுக்கு மகாகவி ஷேக்ஸ்பியரின் ‘டெம்பெஸ்ட்’ நாடகத்தை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதை இன்று காலையில் வராந்தாவில் சிறிது நேரம் நின்றபடி கவனித்துக் கொண்டிருந்தேன். இது தவறாக இருந்தால், தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் அனுபவம் இதற்கு முன்பே உங்களுக்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”
அவளுடைய பேச்சில் காணப்பட்ட பணிவும், அடக்கமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
அடுத்த மணி அடிக்கும் வரை நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் போனதைக்கூட இருவரும் அறியவில்லை.
இனிமை இழைகின்ற கனவுகள் தோன்றிட
மந்தார மலரே, நீ மயங்கு என் மடிதனிலே.’
சரிதாவின் கவிதை அடிகளை உதடுகள் உச்சரித்தன. அதன் கடைசி சீர் மட்டும் வாயை விட்டு வெளிவராமல் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது.
பல வகைப்பட்ட உணர்ச்சிகள் முகத்தில் ஒளிரும்படி அவளை யார் இவ்வளவு அழகாகப் படைத்திருப்பார்கள்? மேஜையின் மேல் கையுன்றிச் சிறிது நேரம் சிலை போல் நின்றாள் சரிதா.
மெலிந்த உருவம், கன்னத்திலும் மூக்கின் கீழ்ப்பகுதியிலும் சின்னஞ்சிறிய ரோமங்கள். உயர்ந்து நிற்கும் மார்பு.
உள்ளத்தின் அடித்தளத்தில் ஏதோ ஒரு வகையான உணர்வு தோன்றிப்பின் சிறிது நேரத்தில் மறைந்து போயிற்று. அந்த உணர்வு எப்படிப்பட்டதாக இருக்க முடியும்? ஒரு வேளை இன்னதெனக் குறிப்பிட முடியாத உயர்ந்ததோர் உணர்வாக இருக்குமோ?
ஓணம் விடுமுறையில் அவள் எழுதியிருந்தாள். குண்டு குண்டான எழுத்துக்களில், அவளுக்கே உரிய அழகான நடையில். ஒரு கவி உள்ளம் அந்த எழுத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படுவதை என்னால் உணர முடிந்தது.
“நாம் இருவரும் சந்தித்த அந்த முதல் சந்திப்பு என் உள்ளத்தில் ஒரு புயலையே உருவாக்கிவிட்டது. என்னுடைய உள்ளச் சுவர்களுக்கு எப்படிப்பட்ட கொடுங்காற்றையும் வென்று நின்றிடக் கூடிய வல்லமை இருக்கிறதென்று நான் இதுவரை நம்பியிருந்தேன். ஆனால் அப்படியில்லை என்பதை இப்போது நான் உணர்கிறேன்.”
ஒரு வகையான குற்ற உணர்வுடன் நான் கடிதத்தை வாசித்தேன். மனம் ஒரே நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவளுடைய உள்ளத்துள் அந்தக் கொடுங்காற்றை- புயலை- உருவாக்கியதற்கான காரணகர்த்தா முழுமையாக நான்தானே? சிறிதுகூட மீற முடியாத வகையில் என்னைக் கை விலங்குகளும், கால் தளைகளும் பிணைத்திருப்பதை அப்போதுதான் முதன் முறையாக தெளிவாக உணர்ந்தேன். அந்த உண்மையை நான் ஏன் சரிதாவிடம் கூறாமல் மறைத்திருக்க வேண்டும்? அதை மறைத்ததனால் அதன் விளைவு எந்தத் திசையில் திரும்பிவிட்டது? ஐயோ! நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு!
அன்று சுமார் ஐந்து மணி இருக்கும். நூல் நிலையத்திலிருந்து படியிறங்கி வந்து கொண்டிருந்தேன். நான் வேகமாக நடந்து செல்ல முற்படும்போது, எனக்கு நேர் எதிரே சரிதா மட்டும் தனியாக வருவது தெரிந்தது. அவளை நேருக்கு நேர் கண்டதும் எனது இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. இதயத்தை முழுமையாகத் திறந்து அவளுடன் பேசிவிட வேண்டும் என்று நானும் எத்தனை நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்! தெரிந்தோ, தெரியாமலோ நாமாக ஏன் ஒருவருடைய மனதில் வீணான ஆசைகள் அரும்ப வழி செய்து கொடுக்க வேண்டும்?
இரண்டு பேரும் புன்முறுவல் செய்தோம். எந்தவிதக் கபடமும் இல்லாத உண்மையான சிரிப்பு அவளுடையது.
குற்ற மனப்பான்மை கலந்து வரத் தாழ்வான குரலில் நான், “கடிதம் கிடைத்தது. பதில் எழுத முடியவில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன்.
“பரவாயில்லை... மன்னிப்பா? எதற்கு மன்னிப்பு? நான் உங்களை பதில் போடும்படி சொல்லவில்லையே! கடிதத்தில் கூட நான் என் வீட்டு முகவரியை எழுதியிருக்கிறேனா என்று பாருங்கள்!”
நிமிஷங்கள் ஸ்தம்பித்துப் போய்விட்டனவோ என்பது போன்ற ஓர் உள்ளுணர்வு! சரிதாவிடம் என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் இப்போதே முழுமையாகக் கூறிவிட்டால் என்ன? இனியும் அவற்றைக் கூறாமல் மறைத்துக் கொண்டு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது என்னைப் பொறுத்தவரை நல்லதாகப்படவில்லையே! ஆனால், இதுமாதிரியான திறந்த இடத்தில் நின்று கொண்டு அதிக நேரம் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை யாரேனும் காண நேர்ந்தால்?... நாளைக்கே கல்லூரி முழுவதும் இதுபற்றிய பேச்சாகத்தானே இருக்கும்? மதில்களிலே மாணவர்கள் சாக் பீஸாலும், கரியாலும் கண்டதையெல்லாம் எழுதிவிடுவார்களே!
“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? வீட்டுக்குச் செல்ல நேரமாகிவிட்டது இல்லையா?”
“நோ... நோ! அதெல்லாம் ஒன்றுமில்லை!”
“என் செல்லக் குழந்தைகளை வரும்போதே அறைக்குள் நன்றாகப் பூட்டி வைத்துவிட்டுத்தான் வருவது வழக்கம” என்றாள் அவள்.
என் நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களை சரிதா கவனித்திருக்க வேண்டும்.
“நூற்றுக்கணக்கான பொம்மைகள் என்னிடம் இருக்கின்றன என் அறையில். அவைதாம் என் குழந்தைகள்...”
“குழந்தைகள் இரண்டு அல்லது மூன்றுக்குள் இருந்தால்தானே நல்லது? நீங்கள் பாட்டுக்கு நூற்றுக்கணக்கில்...”
இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம். சம்பளத்தின் ஒரு பகுதியைப் புத்தகம் வாங்குவதற்காகவும், பொம்மை வாங்குவதற்காகவும் என்றே ஒதுக்கி வைத்து விடுகிறாளாம் சரிதா.
“சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம் என்று வந்தேன். உடன் வருவதற்கு ஓர் ஆள்கூடக் கிடைக்கவில்லை. என்னுடன் தங்கியிருக்கும் நண்பர்கள் எல்லோரும் சினிமாவுக்குப் போய்விட்டார்கள். என்னுடன் வருகிறீர்களா, கொஞ்ச தூரம்? அப்படியே காலாற நடந்துவிட்டு வருவோமே!”
“ஓகே!... போவோமே!” என்று ஒப்புக் கொண்டாள் சரிதா. ‘ஐயோ! நான் வரவில்லை. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்’ என்று அவள் என்னுடன் வர மறுப்பாள் என்று எதிர்பார்ப்பேன். ஆனால் நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை!
கடற்கரையை ஒட்டி இருவரும் நடந்தோம். மணலின்மேல் வெள்ளை வெளேரென்று கிடந்த முத்துச் சிப்பிகளை அவள் பொறுக்கிக் கொண்டே வந்தாள். அவளுக்கு விருப்பமில்லாத சில சிப்பிகளை, என்ன நினைத்தாளோ தெரியவில்லை, மீண்டும் கடல்நீருக்குள்ளேயே எறிந்துவிட்டாள். அவளுடைய உடலை ஓர் அங்குலம் விடாமல் வெள்ளைநிறச் சேலை மூடிக்கொண்டிருந்தது. அழகான தும்பை மலர் போன்றிருந்தாள். அவள் எப்போதும் அப்படிப்பட்ட பருத்தி நூலாடைகளைத்தான் உடுத்துவாளாம். அதன் கீழ்ப்பகுதியில் மணல் ஒட்டிக் கொண்டிருந்தது. கடலை நோக்கித் தலையை நீட்டியபடி கிடந்த பாறையின் மறைவில் இரண்டு பேரும் அமர்ந்தோம். என்ன பேச வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. அதற்கான துணிவு, கடல் காற்றோடு சேர்ந்து பறந்து போய்விட்டதோ? சின்னஞ் சிறிய தீவுக்கு அப்பால் மலைச்சரிவில் ஒரே அந்திச் சிவப்பு. பகல் இன்னும் சிறிது நேரத்தில் விடைபெறப் போகிறது. பகல் சென்றதும் இரவு வந்துவிடும். அதாவது, பகலின் மரணத்தில், இரவின் ஜனனம்!
என் மோதிரத்தில் பொறித்திருந்த ஆங்கில எழுத்தைத் தன் விரலால் சுட்டிக்காட்டிக் கேள்வி கேட்பது போல் என்னைப் பார்த்தாள் சரிதா.
“என் மனைவியின் பெயரின் முதல் எழுத்து” என்றேன்.
“இந்த பந்தம் என் மோதிர விரலை மட்டுமில்லை. கையையும் காலையும், உள்ளத்தையுங்கூடக் கட்டிப் போட்டுவிட்டது!” என்றேன்.
ஒரு சிப்பியைக் கடல் நீரில் எறிந்த அவள், புன்னகை அதரங்களில் தவழக் கேட்டாள்.
“எனக்கு அது தெரியாதென்று நினைத்தீர்களா? அந்த பந்தத்தை அறுத்துவிடும்படி சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? நிச்சயம் நான் அதைச் செய்ய மாட்டேன்!” என்றாள் அவள்.
மற்றொரு சிப்பியை எடுத்து அவள் கடலினுள் வீசினாள்.
“உங்கள் மனைவியின் பெயர் எனக்கு நன்றாகத் தெரியும். நம் முதல் சந்திப்பின் கடைசியில் நீங்கள் என் கவிதையின் இரண்டு அடிகளை உச்சரித்தீர்கள். ஞாகபம் இருக்கிறதா? நான் தாயும் இல்லை. ஒரு குழந்தையைப் பெற்ற அனுபவமும் எனக்கு நிச்சயமாக இல்லைதான். ஆனால் என் கவிதையில் தன் குழந்தையை இழந்துவிட்டு ஒரு தாய் படும் அவஸ்தையை முழுமையாகக் காட்டியிருக்கிறேன் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு உண்டு. ஒரு தாய் அந்த மாதிரியான சமயத்தில் எந்த அளவில் துன்பம் அனுபவித்திருப்பாளோ, அதே அளவிலான துயரத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். நான் ஒரு கவி; உலகம் அதை ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்க மறுத்தாலும் சரி, நான் கவித்துவ இதயம் உடையவள்தான். சொந்தமில்லாத ஒன்றிடங்கூட அன்பு செலுத்துவது எப்படி என்று எனக்குத் தெரியும். பிரதிபலனாக எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றைத்தான். என்னடா, பைத்தியம் மாதிரி பேசுகிறாள் என்று பார்க்கிறீர்கள் இல்லையா? இல்லாவிட்டால் காதலில் பைத்தியக்காரனும், கவிஞனும் ஒரே வகைப்பட்டவர்கள் என்று கூறியிருப்பார்களா கவிகள்?”
அவள் எவ்வளவு தூரம் உயரச் சென்றுவிட்டாள்!
கதிரவன் மறைந்துவிட்டான். மீண்டும் அவனை நாளைக் காலையில் தான் தரிசிக்க முடியும்!
தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு அவள் எழுந்தாள். சேலையின் பின் ஒட்டியிருந்த மணலைக் கைகளால் தட்டிவிட்டபடியே “வாருங்கள். போகலாம். நேரமாகிவிட்டதே!” என்றாள்.
“இடிபோன்று முழங்கும் கடலில் ஒரு குடம்போல்
பூச்சக்கரம் மூழ்கிப்போனது முழுமையாக.”
சரிதாவும் நானும் ஒன்றாக மேலும் கொஞ்ச மாதங்களுக்குத்தான் பணிபுரிந்தோம். அதற்குள் ஐ.ஏ.எஸ். தேர்வில் நான் தேர்ச்சி பெற்ற செய்தி வந்துவிட்டது. ஆசிரியர் பணிக்கு விடை கொடுக்கும்வரை நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட நண்பர்களாகவே இருந்தோம். என் உள்ளத்தில் உள்ளவற்றைக் கொஞ்சங்கூட மறைக்காமல் அப்படியே முழுமையாக வெளியிட்டேன் நான். அவளும் அப்படியே. இருவரும் ஒன்றாகவே பேசினோம். ஒன்றாகவே சிரித்தோம்; ஒன்றாகவே அமர்ந்து கவிதைகளைப் பற்றி சர்ச்சை செய்தோம்.
எனக்காக நடைபெற்ற பிரிவுபசார விழாவில் மிகமிகக் குறைவாகவே பேசினாள் அவள். அவளது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் என் மேல் அவள் கொண்டிருந்த அன்பு இழையோடிக் கொண்டிருந்தது.
“தேவன் இந்த வேலையை விட்டுப்போவது குறித்து எனக்குச் சிறிதுகூட மகிழ்ச்சி உண்டாகவில்லை. இதன்மூலம் உடன் பணியாற்றும் ஆசிரியத் தோழர்கள் நல்லதொரு நண்பரை விட்டுப் பிரிகிறார்கள் என்றுதான் படுகிறது. மாணவர்களுக்கோ நல்ல ஆசிரியரின் பாடபோதனை நமக்கு இனிக் கிடைக்காதே என்று வருத்தம் ஏற்படும். அவருடைய திறமை பயனற்று வீணாகிவிடாமல் ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படட்டும். மாணவர்களுடைய உள்ளங்களிலும், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் உள்ளங்களிலும் தேவன் என்ற இந்த உற்ற தோழருக்கு இடம் என்றும் உண்டு என்பது மட்டும் உறுதி.”
என் வாழ்க்கைப் பாதையில் நான் இதுவரை எத்தனை பேரைச் சந்தித்திருக்கிறேன்! அவர்களெல்லாரும் ஏதோ ஒரு வகையில் என் வாழ்க்கைப் பாதையில் தலைகாட்டிவிட்டு நிழல்களாகவே மறைந்து போய்விட்டார்கள். ஆனால், அவளது உருவம் மட்டும் ஏன் என்னுடைய அடிபட்ட உள்ளத்தின் அடித்தளத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது!
“மீண்டும் சந்திப்போம்!”
ஒரே வார்த்தையில் விடை பெற்றேன்.
‘சந்திப்போம்’ என்றால் எப்பொழுது? எங்கே? எப்படி?
மாதங்கள் பல கடந்தபின், பனி மூடிக்கிடந்த ஒரு நாள் செய்தித்தாள் ஒன்றைக் கைகளில் புரட்டிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியடைந்தேன்.
உடலினுள் ஒரே உணர்ச்சிப் போராட்டம். உலகமே வெடித்துப் போய்விடாதா என்று தோன்றியது.
சரிதா தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டாள்!
மலையாளக் கவிதை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!
“அநேகம் அநேகம் வருஷங்களுக்கு அப்பால்
நின்று என்னை ‘வா’வென அழைக்கும் அன்பர்களே!
நான் அங்கு வரப்போவதில்லை. இந்த மணற்பரப்பில் மிதித்து நடக்கவே எனக்கு இஷ்டம்.
உங்கள் அத்துணைப் பெரிய
உலகத்தை அடைய எனக்குத் தங்கச் சிறகுகள் தருவீரோ?
நன்றி!
எனக்குச் சிறகுகள் வேண்டாம்.
வைரங்கள் பதித்த பொன் கிரீடத்தை என்
தலையில் நீங்கள் அணிவீரோ?
வேண்டாம்-
எனக்குப் போதும் இந்த முள் கிரீடம்!”
சரிதாவின் கவிதையின் ஒவ்வோர் அடியிலும் அவளுடைய விருப்பங்கள், தேன் துளிகளைப்போல் நிரம்பி வழிகின்றன.
சரிதா! உன்னைத் தற்கொலை செய்துகொள்ளும்படி தூண்டிய காரணம் என்ன? ஒரு வேளை, உன்னை அந்தச் செயலைச் செய்யத் தூண்டியது இன்னதென்ற உண்மை இந்த உலகில் ஒருவருக்குமே தெரியாதோ? உனக்காவது அதன் காரணம் தெரியுமா? என்ன விபரீதமான முடிவை நீ மேற்கொண்டு விட்டாய், சரிதா. கடலை நோக்கித் தலையை நீட்டியிருக்கும் அந்தப் பெரிய பாறை; அதன் மறைவில் அமர்ந்து கொண்டு வாழ்க்கைக்கும் அன்புக்கும் என்னவெல்லாம் விளக்கங்கள் கூறிக்கொண்டிருந்தாய்! நீ மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், என்னை நிச்சயம் நீ காண வந்திருப்பாய். தூக்குக் கயிற்றில் நான் இறுதியாகத் தொங்குவதற்கு முன், இதயம் இரண்டாகப் பிளக்கும்படி ஒரு வேளை நீ உரக்கப்பாடினாலும் பாடுவாய். ஒரு நிரபராதி வீணாகத் தண்டிக்கப்படுகிறானே என்று. பொம்மைக் கூட்டங்களின் மத்தியில் அபயம் தேடிய நீ, ஏன் என் பிந்துமோளை எடுத்து வளர்த்திருக்கக் கூடாது? இல்லை, ஸ்ரீதரமேனன் நிச்சயம் அதற்குச் சம்மதிக்கப்போவதில்லை. அந்த மனிதரின் எண்ணற்ற சொத்துக்கு ஒரே வாரிசு இப்போது பிந்துமோள்தானே? அந்தச் சொத்தில் எனக்கும் ஒரு வேளை ஒரு கண் இருந்திருக்குமோ? இல்லையென்று என் உள்ளத்தின்மேல் கை வைத்து என்னால் உறுதியாகக் கூற முடியுமா? எனக்குத் தெரியவில்லை.
உன்னிடந்தான் எவ்வளவு மனதிடம் இருந்தது சரிதா! பெண்மையைக் காட்டிலும் ஆண்மையின் உறுதிதான் உன்னிடம் தென்பட்டது. தாய்மை தவழும் உடலமைப்போ இளைஞர்களைக் கிறுகிறுக்க வைக்கக்கூடிய சலனமோ உன்னிடம் நான் கண்டதில்லையே! ஆனால், உன் கண்களில்தான் உலகத்து அன்பு முழுவதும் ஒன்றாகத் திரண்டு கிடந்ததே! கருணையின் வற்றாத ஜீவநதி உன்னுடைய உள்ளத்துள் ஓடிக் கொண்டிருந்ததே!
மறுபிறப்பில் உனக்கு நம்பிக்கை கிடையாது. நாம் மீண்டும் எங்கே சந்திக்கப் போகிறோம்?
பயிற்சியின் பொருட்டு என்னை மஸ்ஸூரிக்கு அழைத்தபோது நான் அம்மாவிடம் சொன்னேன்.
“உனக்கு ஆபரேஷன் முடிந்த பிறகு தான் நான் அங்கே போகப் போகிறேன்.”
அம்மா கொஞ்சமாவது அசைந்து கொடுக்க வேண்டுமே! தன் பிடிவாதத்துக்குப் பொருத்தமாக இருக்கும்படி ஒரு புதுமையான காரணத்தையும் சொல்ல அவள் தயங்கவில்லை!
“வெறும் ஒன்றரை ஆண்டுகள் தானே மகனே! நீ மஸ்ஸூரியில் ட்ரெயினிங் படிக்கப் போகிறதோ ஒன்றரையாண்டு. ஒரே நொடி போல் அது உருண்டோடிவிடாதா? ட்ரெயினிங் முடித்துவிட்டு வா. அப்புறம் ஆபரேஷனை நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்.”
கல்யாண நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு எப்போதாவது ஒரு முறையே, இந்திரப்ரஸ்தத்துக்குச் செல்லும் வழக்கத்தை தானாகவே மேற்கொண்டிருந்தேன். அதுகூட அங்கே ஸ்வப்னா இல்லாத நேரம் பார்த்துத்தான். ‘ஊர் மக்கள் ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்ற என் நொண்டிச் சாக்கை எடுத்த எடுப்பிலேயே எடுத்தெறிந்து பேசினாள் ஸ்வப்னா.
கல்யாணத்தை முதலில் முடித்துவிட்டுப் பிறகு ட்ரெயினிங்குக்கு மஸ்ஸூரி போனால் என்ன?” என்றார் ஸ்ரீதர மேனன்.
ஸ்வப்னாவையும் உடன் அழைத்துச் செல்ல இயலாத நிலையில் அப்போது நான் இருந்தேன். பயிற்சிக் காலம் முடிந்து, அம்மாவுக்கு ஆபரேஷனும் நடந்து முடிந்ததும் கல்யாணம் நடைபெற்றால் போதாதா!
என் பதில் மிக உறுதியாக வந்தது. “ட்ரெயினிங் முடியட்டும். பிறகுதான் கல்யாணம்” என்றேன்.
என்னுடைய கருத்துடன் ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்துகொண்டு, “சரி” என்று சொல்லி விட்டார் ஸ்ரீதர மேனன். பின்பு அவர் “அம்மாவின் ஆரோக்கியம் குறித்து வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம்! அம்மாவைக் கவனித்துக் கொள்ளத்தான் நாங்கள் இருக்கிறோமே! ஸ்வப்னா ஒருத்தி போதாதா, அம்மாவின் உடம்பை அக்கறையாகக் கவனித்துக் கொள்ள? வேண்டுமானால் தினந்தோறும் அவளை அனுப்பி அம்மா உடம்பைப் பார்த்துக் கொள்ளச் சொன்னால் போகிறது” என்றார்.
ஸ்வப்னாவுக்கு ஏன் அந்தக் கஷ்டமெல்லாம்? அவளுடைய ‘திருமுக’த்தைக் கண்டுவிட்டாலே போதும், உடனே அம்மாவுக்குத் தலைவலி வந்துவிடுமே! அம்மாவைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி பாருவம்மாவிடம் தெளிவாகக் கூறிவிட்டுத்தான் நான் பயிற்சிக்கே புறப்பட்டுப் போனேன்.
ஒவ்வொரு வாரமும் தவறாமல் அம்மாவுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். அம்மாவிடமிருந்தும் பதில் கடிதங்கள் வந்து கொண்டுதான் இருந்தன. அவை ஒன்றும் பட்டியல் போன்ற நீண்ட கடிதங்கள் இல்லை. உண்மையான, முக்கியமான சில விஷயங்களை மட்டும் உள்ளடக்கியிருக்கும் கடிதங்களாகவே ஒவ்வொன்றும் இருக்கும். ஸ்வப்னாவின் கடிதங்களும் வரும்; ஒவ்வொரு கடிதமும் அவளுடைய காம வேட்கையின் எதிரொலியால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கின் வடிவங்களான நீண்ட சரித்திரமாகத்தான் இருக்கும். அவளுடைய இங்கிலீஷ் நடை உண்மையாகவே மிகமிகக் கவர்ச்சியாக இருந்தது. மலையாளம் எழுத அவள் கற்றிருந்தால்தானே! தனக்குப் பதில் கடிதம் எழுதவில்லை என்று என்மேல் அவளுக்குக் கோபம்.
“நான் என்ன அந்நிய ஸ்திரீயா?”
அவள் கேள்வி உண்மையிலேயே நல்லதொரு கேள்விதான்.
“நான் மஸ்ஸூரிவரை ஒரு முறை வரட்டுமா? இரண்டே இரண்டு வாரங்கள் நான் அங்கு உங்களுடன் தங்க எண்ணியிருக்கிறேன்.
“அங்கே யாரும் நம்மைப் பற்றித் தவறுதலாக நினைக்க மாட்டார்கள். இங்கே பயங்கரமான உஷ்ணம். ஏர்கண்டிஷன் செய்த அறையை விட்டு வெளியே புறப்பட்டுவிட்டால், அப்பப்பா, உடனே வெந்துவிடும்! அப்படிப்பட்ட உஷ்ணம்!”
அவள் எழுதியது உண்மைதான்.
அவளுக்கு ஒரு சிறிய கடிதம் எழுதினேன், “மஸ்ஸூரிக்கு இப்போது வர வேண்டாம்” என்று. அப்படி மட்டும் நான் எழுதாமல் இருந்தால் அடுத்த நிமிஷமே புறப்பட்டிருப்பாள் மஸ்ஸூரிக்கு.
ஒரு மாதமாக அம்மாவிடமிருந்து கடிதம் ஏதும் வராமற்போகவே, உண்மையிலேயே அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல், நான் பதறிப்போனேன். அம்மாவின் உடல்நிலை சரியாக இல்லையா? அப்படியிருந்தால் நிச்சயம் ஸ்வப்னா ஒரு கடிதம் எழுதாமலா இருந்திருப்பாள்? ஒரு வேளை, தன் உடல்நிலை மோசமானதைக் குறித்து ஸ்வப்னாவுக்கு அறிவிக்காமல் மறைத்திருந்தால்? பாருவம்மா மூலமாகவாவது அம்மா ஏன் ஒரு கடிதம் எழுதக்கூடாது?
உணவை முடித்துவிட்டுச் சாப்பாட்டறையிலிருந்து என் அறைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயந்தான் எனக்கு ஒரு தந்தி வந்திருக்கிற செய்தி தெரிந்தது. தந்தி என்றதும் என் உடலே ஒரு நிமிஷம் அசைவற்று நின்றுவிட்டது. குளிர்ந்து போன விரல்களால் தந்தியைக் கரங்களில் வாங்கியபோது என்னவென்றே தெரியவில்லை. நெற்றி முழுவதும் ‘குப்’பென்று வியர்த்துவிட்டது. ஸ்ரீதர மேனன் வேலூரிலிருந்து அனுப்பியிருந்த தந்தி அது.
“அம்மாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறோம். உடனே விமானம் மூலம் புறப்பட்டு வரவேண்டும்.”
காலையிலேயே மஸ்ஸூரியை விட்டுப் புறப்பட்டு விட்டேன்.
நினைவு தவறி மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் அம்மா. உடல் முழுவதும் வெள்ளை வெளேர் என்றிருந்தது. அம்மா எவ்வளவு மெலிந்துவிட்டாள்! கன்னங்கூடச் சுருங்கி ஒட்டிப் போய்விட்டதே! நான் வந்ததைக் கூட அம்மா கவனிக்கவில்லை.
கலங்கிய கண்களுடன் அம்மாவின் அருகே நின்றிருந்தாள் பாருவம்மா; என்றுமே தாயை விட்டுப் பிரியாத நிழல் அவள். அவள் உறங்கி எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ?
“நீ வந்ததும் தன்னை அழைக்கும்படி சொன்னாள். ஸ்வப்னாகூட இங்கே வந்திருக்கிறாள்.”
ஸ்ரீதரமேனனின் ஒரு விஸிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தாள் பாருவம்மா. அதில் பேனா மை கொண்டு ஒரு தொலைபேசி எண் குறிக்கப்பட்டிருந்தது.
தொலைபேசியில் பேசிச் சுமார் அரைமணி நேரம் ஆகியிருக்கும். ஸ்ரீதரமேனன் வந்தார். சரியான குடி போதையில் இருந்தார்.
“ஸ்வப்னா எங்கே?”
“ஸ்வப்னாவும் வந்திருக்கிறாள். அவள் ‘ஷாப்பிங்’குக்காக வெளியே போயிருக்கிறாள் தன்னுடைய ஃப்ரெண்டோடு. ஹோட்டலில் அதிக நேரம் இருந்தால் ‘போர்’ அடிக்குமில்லையா?
‘பாய் ஃப்ரெண்டாயிருக்கும்!’
மனதுக்குள்ளேயே நான் நினைத்ததை முனகிக் கொண்டேன்.
“உடனே ஆபரேஷன் நடக்க வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள். என்றாலும், பிழைப்பது ரொம்ப ரொம்பச் சிரமம் என்கிறார்கள். நாம் முன்பே கவனப் பிசகாக இருந்துவிட்டபடியால், ட்யூமர் முற்றி விட்டிருக்கிறது. தேவன் வரட்டும். ஆபரேஷனை நடத்திவிடலாம் என்று கருதித்தான் இதுவரை காத்திருந்தோம்.”
‘பைப்’பில் அடைந்து கிடந்த புகையிலையைக் கீழே மெல்லத் தட்டியபடி கூறினார் மேனன். செய்திப் பத்திரிகையில் ‘மரணச் செய்திகள்’ வாசிப்பதைப் போல் இருந்தது அவரது செயல்.
மூன்றாம் நாள் ஆபரேஷன் நடந்தது. அறுவை செய்யும் பொருட்டு ‘ட்ராலி’யில் வைத்து ஆபரேஷன் தியேட்டருக்குள் அம்மாவைக் கொண்டு சென்றபோது என்னையும் மீறி ‘ஓ’வென்று நான் கதறிவிட்டேன்.
ஆபரேஷன் நாலரை மணி நேரத்துக்கு மேல் நடந்தது. ஒவ்வொரு நிமிஷமும் ஒரு பெரிய யுகமாகத் தோன்றியது எனக்கு.
ஆபரேஷன் முடிந்த இரண்டாம் நாள் இரவு அந்த உடலில் இருந்த உயிர் இறுதி விடை பெற்றது. உலகமே இருண்டு போய்விட்டது போல் ஓர் உணர்வு எனக்கு. உதட்டைக் கடித்துக்கொண்டு, தலையைத் தாழ்த்தியபடி நின்று கொண்டிருந்தேன்.
எல்லாம் முடிந்துவிட்டது. மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டி பணத்தைக் கொடுத்துவிட்டு ஆம்புலன்ஸ் ஒன்றுடன் வந்தார் ஸ்ரீதர மேனன். சடலம் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. சடலத்தின் தலைப் பகுதியில் அமர்ந்திருந்தாள் பாருவம்மா. தனக்கு இதுவரை இந்த உலகத்தில் மிக நெருக்கமாக இருந்த ஒன்று திடீரென்று போய்விட்டதை நினைத்துக் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தாள் அவள்.
“ஸ்வப்னாவும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொள்ளட்டும். நான் பின்னால் காரில் வருகிறேன்.” ஸ்ரீதர மேனன் கூறினார்.
“சே! என்னால் முடியாது டாடீ... நான் உங்களுடன் காரில் வருகிறேன்.”
காரின் கதவைத் திறந்து உள்ளேயிருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள் ஸ்வப்னா.
கையைப் பிடித்து வண்டியிலிருந்து வெளியே இழுத்து, பளார் பளாரென்று முதுகில் இரண்டு அறை அறைய வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஆம்புலன்ஸின் பின்பக்கக் கதவைப் ‘படார்’என்று அடைத்துவிட்டு டிரைவரிடம் கூறினேன்; “ம், புறப்படுங்கள்.”
அடிக்கொரு தரம் பின்னால் திரும்பிப் பார்த்தேன். ஆம்புலன்ஸை ஒட்டி ‘இம்பாலா’வந்து கொண்டிருந்தது. காரில் இருந்த ‘டேப்ரிக்கார்ட’ரில் மேல்நாட்டு இசை முழங்கியது. தந்தையும் மகளும் ஏதோ தமாஷாகப் பேசிச் சிரித்துக் கொள்கிறார்கள்! அடிக்கொரு தரம் அருகே அமர்ந்திருக்கிற ‘பாமரேனியன்’ நாயை முத்தமிட்டுக் கொள்கிறாள் ஸ்வப்னா. சே! சே! என்ன அருவருப்பு!
எலும்பும் தோலுமாய் ஆகிப்போயிருந்த என் அன்பு அன்னையின் உடல் எரிந்து அடங்க ஒன்றும் அதிக நேரம் பிடிக்கவில்லை.
இறுதியில், ஒரு பிடி சாம்பல் மட்டுந்தான்.
ஸ்வப்னாவுடன் பந்தப்பட்டுள்ள வாழ்க்கையில் கொஞ்சங்கூட மகிழ்ச்சியே இல்லை. விரலில் அணிந்திருந்த மோதிரத்தின் மையப் பகுதியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தையே நோக்கியபடி மஸ்ஸூரியில் வேவல் ஹவுஸில் நின்றபடி எத்தனை மணி நேரம் செலவழித்திருப்பேன்! அப்போதெல்லாம் அம்மாவின் வார்த்தைகள்தாம் ஞாபகத்தில் வரும்.
“நன்றி கெட்டவன் என்று ஊரிலுள்ள நாலு பேர் நாக்கின் மேல் பல்லைப் போட்டுப் பேசிவிடக் கூடாதடா, மகனே!”
“அவனுக்குக் கல்வி கற்கப் பணமும், அவனுடைய தாய்க்கு மருத்துவம் பார்ப்பதற்கான செலவும் யார் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? எல்லாம் அந்தத் ‘தர் முதலாளி’ கொடுத்ததுதான்; ஸ்வப்னாவைத் திருமணம் செய்து கொள்வதாகத் தேவராஜன் உறுதி கொடுப்பதற்காகத்தான் அவர் கண்டபடியெல்லாம் பணத்தை வாரி இறைத்துச் செலவு செய்தார். ஆனால், அவன் ஒரு பெரிய ஐ.ஏ.எஸ். ஆபீஸராக ஆனபோது...”
இப்படித்தான் நாட்டிலுள்ள நான்கு மனிதர்கள் ஏதோ தங்களுக்கு எல்லாமே அத்துப்படியானது மாதிரி பேசிக் கொள்வார்கள்!
அப்படி யாரும் துணிந்து என்மீது அபாண்டமாகப் பழி சுமத்த நானே வழியமைத்துவிடக் கூடாது பாருங்கள்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நடைபெறக்கூடிய ஒன்று என்பார்கள்; ஆனால் என் திருமணம் சொர்க்கத்திலல்ல. நரகத்தில்தான் நடந்தது. அதாவது, சைத்தானின் மூளையில்!
எத்தனை எத்தனை அழகிகளும் பட்டாம்பூச்சி போன்று நகரத்து வீதிகளில் சுதந்தரப் பறவைகளாய்ச் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பணக்கார வீட்டுப் பெண்களும் என் முக தரிசனத்துக்காகக் காத்துக் கிடந்த சமயங்களில் எல்லாம் நான்தான் என் இதயக் கதவை இறுக்கமாக அடைத்து வைத்திருந்தேன்.
இல்லாவிட்டால் எனக்கு இந்தக் கதி ஒரு போதும் நேர்ந்திராது. இந்தச் சிறைச் சாலைக்குள் அடைபடவேண்டிய என்னைவிட யோக்கியர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் வெளி உலகில் உண்டு. ஒன்றுமே செய்யாத மாதிரியும், குற்றமென்றால் என்னவென்றே அறியாதவர்களைப் போலவும் வீதிகளில் அவர்கள் பாட்டுக்குச் சிங்கநடை நடந்து திரிவார்கள். இந்தப் பாழாய்ப் போன சமுதாயம் கொஞ்சங்கூடச் சூடு சொரணை இல்லாமல் அந்த ஈனப் பிறவிகளைப் போய்ப் பெரிய தெய்வங்கள் என்று கருதி மலர் வைத்துப் பூஜை செய்து கொண்டிருக்கும். துபாயிலிருந்து வந்த கே.எம்.கான் கூறியது மட்டும் உண்மையான இருக்குமேயானால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு தூக்கில் தொங்கியிருக்க வேண்டும். இந்த ஸ்ரீதர மேனன்!
“குழந்தை, முன்பே எனக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், என்னைத் தள்ளிக் கொன்றாலும் சரி, இந்தக் கல்யாண ஆபத்திலிருந்து உன்னைத் தப்ப வைத்திருப்பேன்.”
எப்பொழுதும் உண்மையைத் தவிர வேறு ஒன்றையுமே அறிந்திராத கான் ஆரம்ப காலம் முதல் கல்வி பயிற்சியின் போது ஒன்றாகப் படித்தவன். முதல் வகுப்பில் சேரும்போது அவனுக்கு என்ன வயசு தெரியுமா? பத்து வயசு! நல்ல பருமனான உடல்; உடலுக்கேற்ற வளர்ச்சி; மொட்டைத் தலை! கழுத்தில் கருநிறத் துண்டு- இதுதான் கானின் தோற்றம். கான், ‘குழந்தை!’ என்றுதான் என்னை அழைப்பது வழக்கம்.
‘புலிக்குட்டி கோபி’ என்றால் வகுப்பிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே பயம். அதே இடத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ‘புலி ராக’வனின் சீமந்த புத்திரன்தான் புலிக்குட்டி. புதிதாக வாங்கிய என் ஸ்லேட்டிடம் ஒரு வகையான காதல் புலிக்குட்டிக்கு. அவனை எப்படியும் செம்மையாக ஒருநாள் உதைக்க வேண்டும் என்பது எங்கள் ஒவ்வொருவருடைய விருப்பமும். என் சிலேட்டைத் தன்னிடம் தந்து விடும்படி மிரட்டினான் புலிக்குட்டி. ஆனால், நானோ மறுத்தேன். இருந்தாலும், மனதில் எனக்கு ஒரு பய உணர்வு. நான் சிலேட்டை அவனிடம் கொடுக்க, அந்தச் செய்தியை அம்மா அறிந்துவிட்டால்...? ஒரு நாள் இப்படித்தான் பலவந்தமாக என்னிடம் இருந்த சிலேட்டைப் பிடுங்கித் தன் கையிடுக்கில் வைத்துக்கொண்டதோடு நிற்காமல், என்னை ஓர் அடியும் அடித்துவிட்டான் அவன். அடுத்த நிமிஷமே அங்கே பிரத்யட்சமானான் கான். ஒரே உதைதான். ‘குபீர்’ என்று தூரத்தில் போய் விழுந்தான் புலிக்குட்டி.
“அடே பன்றி! நீயும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகலாம் என்று பார்க்கிறாயா? உன்னை நான்...”
கானின் கரம் மேலே உயர்ந்து கீழ்நோக்கி வருவதற்கு முன்பே சண்டை நடந்த இடத்துக்கு ஓடி வந்தார் ஆசிரியர். மீண்டும் அமைதி நிலவியது. கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அரும்பிவிட்ட நட்பு இது. மாலை ஆறு மணியாகிவிட்டது. என்றாலும், விருந்தினர்களின் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. கான் அதிக நேரம் என்னைப் பார்ப்பதற்காகக் காத்து நின்றிருக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். அவன் என் அறையினுள் நுழைந்தபோது, ஆளே அடையாளம் தெரிய முடியாத அளவுக்கு மாறிப் போயிருந்தான்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
திடீரென்று தலையை உயர்த்தி நோக்கினேன். என்னை யார் இவ்வளவு மரியாதையுடன் அழைப்பது? வெகு நாட்களாகப் பழக்கமுள்ள குரல் போல் தோன்றியது. ஆனால், குரலின் சொந்தக்காரர்தான் யாரென்று தெரியவில்லை.
சுருண்ட முடி- பெரிய மீசை- நீண்டு வளர்ந்த கிருதா- சிவந்து தடித்த முகம்- அத்தரின் மணம்... கான்!
“வ அலைக்கு மஸ்ஸலாம்!”
தலையைச் சற்றுத் தாழ்த்தி எனக்கு மரியாதை தெரிவித்தான் கான். பெரும்பான்மையான நாட்களில் வகுப்பறைக்குள் கான் நுழையும்போது நிறைய நேரமாகி விடும். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. காலை வேளைகளில் தன் வாப்பாவுடன், “பழைய இரும்பு பித்தளை வாங்கறது!” என்று உரத்த குரலில் கூவியபடி வீடு வீடாகத் தினமும் போய்த் தன் தந்தைக்கு வியாபாரத்தில் உதவுவான். ஒரு நாள் வழக்கம்போல் காலம் தாழ்ந்தே வகுப்புக்கு வந்தான் கான். அப்படி வந்த கானைப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ‘முன்ஷி ஸார்’ எப்படிக் கூறி வரவேற்றார் தெரியுமா?
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
எந்தவொரு தயக்கமுமின்றி, கானும் பதிலுக்குக் கூறினான்.
“வ அலைக்கு மஸ்ஸலாம்!”
அன்று முதல் வகுப்பறைக்குக் காலம் தாழ்த்திக் கான் வருகை தரும் சமயங்களில் எல்லாம் அவனை மாணவர்கள் இப்படித்தான் கூறி வரவேற்றார்கள். ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று எல்லோரும் ஒரே சமயத்தில், ஒரே குரலில் ஒலிக்கும் வண்ணம் கூறுவதைக் கேட்க வேண்டுமே!
போக்கிரி! இன்னுங்கூட அதை மறக்காமல் இருக்கிறானே!
என் இடத்திலிருந்து எழுந்து மார்போடு சேர்த்து கட்டிப் பிடித்தேன் கானை. சிறிது தூரத்தில் டபேதார் வேலுப்பிள்ளை நின்று எங்களையே நோக்கிக் கொண்டிருந்தார். அன்று இரவு முழுவதும் நானும், கானும் நகரத்து வீதிகளில் உலா வந்துகொண்டிருந்தோம். கானின் ஒவ்வொரு பேச்சும் துபாயில் வாழ்ந்த ஸ்ரீதர மேனனையும் அவருடைய குடும்பத்தையும் பற்றியதாகவே இருந்தது. புதிய செய்திகள்! அதிர்ச்சியூட்டக் கூடிய உண்மைகள்!
எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் கடற்கரையில் அமர்ந்து கான் கூறி முடித்தபோது, வானத்தில் நட்சத்திரங்கள் ‘மினுக்மினுக்’ என்று கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவற்றை நோக்கியபடி மணற்பரப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டே கூறினேன். என்னுடைய குரலில் உற்சாகமேயில்லை.
“ரொம்பவே லேட்’டாகி விட்டது. கான்... வெரி வெரி லேட்...”
என் மனைவியின் தந்தை ஸ்ரீதர மேனன் இரட்டைக் கொலை செய்த கயவன்!
எண்ணெய்க் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்த ஓர் அதிகாரிக்குத் தன் அழகிய மனைவியையே அர்ப்பணம் செய்த பாவி இந்த மேனன்.
முடிவில் எண்ணெய்ச் சுத்திகரிப்பாலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரி கால் வழுக்கி, கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயில் விழுந்து வெந்து போனதை நேரில் கண்ட சாட்சி ஒருவர்கூட இல்லாமற் போனது மேனனின் அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்!
“எண்ணெய்க்குள்ளிருந்து அதிகாரியின் உடலைத் தூக்கியபோது உயிருடன் தீயில் வாட்டிய பன்றி போல் வெந்து போயிருந்தான் மடையன்!” கான் இந்த வார்த்தைகளை உச்சரித்தபோது என் கண்களில் நிலவு வெளிச்சத்தில் தோன்றிய கானின் முகபாவம் இன்னும் அப்படியே இதயத்தின் அடித்தளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்து கிடக்கிறது.
“குழந்தையின் மனைவி மேனனின் மகளா?... ஊஹும். அந்த தாயைப் போயா தம்பி கட்ட வேண்டும்? ம்... என்ன இருந்தாலும் அந்த வெள்ளைப் பன்றியின் மகள்தானே இவள்!... கர்மம்! அந்தக் கண்களையும், தோலையும் பார்க்கும்போது கூடவா தம்பிக்கு உண்மை பீடிபடாமல் இருந்தது? மகளை வெளிநாட்டில் படிக்க வைத்ததற்கான காரணம் இப்போது புரிகிறதா?”
இதைக் கேட்டதும் எனக்கு உண்மையிலேயே ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. அதை அநேகமாகக் கான் அறிந்திருக்க வேண்டும். “குழந்தை! நான் சொல்வது அத்தனையும் பச்சையான உண்மை. இது பொய் என்று நீ மறுக்கும் பட்சத்தில் இந்த இடத்திலேயே நான் சாகத் தயார். என்னைப் படைத்த ஆண்டவனே வந்தாலும் இந்த உண்மையை என்னால் மறக்கவே முடியாது.”
கானின் இயல்பு அதுதான்; பொய் என்றால் என்னவென்று அறியாத நாக்கு; வளைந்து கொடுக்காத முதுகெலும்பு; தோல்வி என்றால் என்னவென்றே அறியாத இதயம்!
சொத்துக்களனைத்தையும் தன் கவர்ச்சியால் சம்பாதித்தாள் மேனனின் மனைவி. ஒரு நாள் வெளிப்படையாகவே கூறிவிட்டாள்.
“என் திறமையைக் கொண்டு சேர்த்த இதை எப்படிச் செலவிட வேண்டும் என்று எனக்குத் தெரியும்... இதில் ஒரு பைசா கூட உங்களுக்கு நான் தரப் போவதில்லை...”
மேனன் தன் குடும்பத்துடன் வாழ்ந்தது ஐந்தாவது மாடி ஃப்ளாட்டில். ஒரு நாள் காலை... மேனனின் மனைவியின் உடல் உருச்சிதைந்து கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் சிதறிக் கிடந்தது. யாருமே எதிர்பார்க்காத அளவில் இரவு முழுவதும் நல்ல மழை வேறு. தாழ்வாரத்தில் காயப்போட்டிருந்த துணியை எடுக்கப் போனவள்தான் கால் நழுவி கீழே விழுந்திருக்கிறாளாம்!
எத்தனை அதிர்ச்சி தரக்கூடிய கதை! சரியான ஜோடிப்புதான்!
அடுத்து பத்து நாட்களுக்குள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு துபாயைவிட்டு புறப்பட்டுவிட்டாராம் மேனன். லண்டனில் படித்துக்கொண்டிருந்த ஸ்வப்னாவையும் உடன் அழைத்துக்கொண்டு.
“தம்பி! என்னை நம்பவில்லையென்றால் என்னுடன் வா. அங்கே போய் விசாரிப்போம். அப்போது தெரியும். நான் சொன்னது எல்லாமே உண்மையென்று. வேண்டுமானால் விமானத்துக்குரிய செலவைக்கூட நானே ஏற்றுக் கொள்கிறேன்.”
இனிமேலும் இதில் அறிந்து கொள்ள என்ன இருக்கிறது? அப்படியே அறிந்துதான் என்ன பயன்? நடந்ததெல்லாம் மங்கி மடியட்டும்!
“இந்தச் சிறை அமைந்திருக்கும் இடந்தான் எவ்வளவு அமைதியாக இருக்கிறது! அறுவைச் சிகிச்சை பண்ணப் போகும் ஒரு மனிதனை அறையின் மேஜைமேல் மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்திருப்பது போல்...”
இந்த வரிகள் யார் எழுதியவை? டி.எஸ். எலியட்டாக இருக்குமோ? இவை எந்தக் கவிதையில் வருகின்றன?
ஐ.ஏ.எஸ். பேட்டிக்கு நான் போயிருந்தபோது, என்னிடம் போர்டு சேர்மன் கேட்டார்.
“நீங்கள் எம்.ஏ.வில் இங்கிலீஷ் மொழியையும், இலக்கியத்தையும் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்திருக்கிறீர்கள், இல்லையா? அப்படியானால் 'Waste Land’ (தரிசு நிலம்) என்ற கவிதையின் கருத்து என்னவென்று சொல்லுங்கள், பார்ப்போம்.”
விடை தர நான் தயாரானபோது, எதையோ கூற மறந்துவிட்டு, பின்பு, ஞாபகத்தில் வந்தவுடன் கூறுவது மாதிரி, “ஆமாம்... ஆமாம்... சொல்லுங்கள்... தரிசு நிலம் என்று நீங்கள் உங்களை பொறுத்தவரை எதை நினைக்கிறீர்கள்?” என்றார்.
இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. அடக்க முடியாமல் சிரித்தும் விட்டேன்.
சேர்மன் மீண்டும் பேசினார்.
“டி.எஸ். எலியட்டின் கவிதையைப் பற்றியாக்கும் நான் கேள்வி கேட்டது.”
“ஈஸ் இட்? ஐ ஆம் ஸாரி.”
என் பதில் என்னவாக இருக்கும்?
என் வாழ்க்கையே ஒரு ‘தரிசு நிலம்’தானே! அல்லது ஒருவேளை வெறும் பாலைவனமாகவே போய்விட்டதோ? எனது இந்தத் ‘தரிசு நிலத்தில்’ இதுவரை எனக்குத் தெரிந்து ஏதாவது பசுமையாக என் விழிகளில் தென்பட்டிருக்கிறதா?
என் வாழ்க்கையே ஒரு போராட்டந்தானோ?
நான் இந்தச் சிறைச்சாலையின் கம்பிக் கதவுகளுக்குள் அடைபட வேண்டிய சூழ்நிலைகளை அறிய நேரிட்டால் இந்த உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கும்? ‘இடியட்’ என்றா?
உண்மைதான். நான் முட்டாள்தான். முட்டாளிலும் சாதாரண முட்டாள் இல்லை. வடிகட்டிய முட்டாள்! இல்லாவிட்டால் ஸ்வப்னாவின் சாவுக்குப் போய் நான் தண்டனை பெறும் துர்பாக்கியம் நிகழ்ந்திருக்குமா?
கடவுளின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்... நான் சொல்லப்போவது முழுவதும் உண்மை.
அழுக்குப் பிடித்துப் போன தாள்களில், செல்லரித்து விட்ட எந்தப் புத்தகத்தைத் தொட்டு நான் சத்தியப் பிரமாணம் எடுத்தேன்?
குரான், பைபிள், ராமாயணம்- இவற்றில் எதுவாக இருக்க முடியும்?
நீதிமன்றத்துக்கு உண்மை தெரிந்திருந்தால் என்னை ஏன் இப்படி சிறைக் கதவுக்குள் அடைத்து வைத்திருக்கப் போகிறது?
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் இதோ, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டிருக்கிறான்!
நான்... நான்... நிரபராதியா?
ஸ்வப்னாவின் சடலம் ‘கலெக்டர் பங்களா’விலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு ரிசர்வ் காட்டுப் பகுதியினூடே வளைந்து வளைந்து போகும் சாலையினருகே ஒரு சிறு நதியின் கரையில் அல்லவா காணக் கிடந்தது? முழுமையாக ஆடை எதுவுமற்ற நிர்வாணமான சடலம்! மார்பிலும் தொடைப் பகுதியிலும் ஒரே கீறல்கள்! போடப்பட்டிருந்த ஆபரணங்கள் அனைத்தும் அப்படியே அவளுடைய உடலில் பழைய மாதிரி கிடந்தன. மூலைக்கொரு பக்கமாய் அலங்கோலமாய் விரிந்து கிடந்த தலைமயிர்களில் காட்டுச் செடிகளின் காய்ந்து போன சருகுகள் ஒட்டிக்கொண்டிருந்தன. கண்கள் பாதி மூடியிருந்தன. அதரங்கள் லேசாகச் சிரிக்கும் கோலம். கீழ் உதட்டிலும், வாயின் பக்கங்களிலும் சிவப்பு வண்ணத்தில் ஏதோ சாயம். உடல் முழுவதும் ஏதோ தாக்கப்பட்டது போல் தோன்றியது. யாரோ உணர்ச்சி மேலிட அவளுடைய உடலை இன்பம் வேண்டிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கண்களிலும் வாயிலும் எறும்புகள் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தன.
பிரேதத்தை முதன் முதலாக என் கண்களால் கண்டபோது... அப்பப்பா எத்தனை விகாரமான காட்சி அது! என்ன செய்வதென்று அறியாமல் பேந்தப்பேந்த விழித்துக் கொண்டிருந்தேன்.
தினமும் ‘க்ளப்’பிலிருந்து வீட்டுக்கு ஸ்வப்னா வரும்போது நன்றாக இருட்டிவிட்டிருக்கும். பொதுவாகவே மிகவும் தாமதமாகத்தான் அவள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட இடங்களுக்கு என்னையும் அழைத்துப் போக விரும்புவாள்!
“நீங்கள் ஒருபோதும் திருந்தவே போவதில்லை” என்று ஒரு நாள் அவள் சாபமிட்டாள். அவளைத் திருத்தி, குடும்பமென்ற நான்கு சுவருக்குள் நிறுத்தலாம் என்று நான் கனவு கண்டுகொண்டிருந்தேன். ஆனால், அவளோ எல்லாவற்றையும் ஒரே நொடியில் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டாள்.
ஆடர்லியுடனும், தோட்டக்காரனுடனும் பகல் முழுவதும் விளையாடி மகிழ்வாள் என் மகள் பிந்து. அவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும், பேச்சிலுங்கூட அதிகார மிடுக்கு காணப்படுவதை உண்மையாகவே நான் உணர நேரிட்டபோது, எனது இதயம் பட்ட அவலத்துக்கு அளவேயில்லை. நேரம் கிடைக்கும் தருணமெல்லாம் அவளை அருகில் அழைத்துக் கதைகள் சொல்வேன். கடற்கரைக்கும் பூங்காவுக்கும் அழைத்துப் போவேன். புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்தான் என் மகளுக்கு எவ்வளவு ஆர்வம்! ஒவ்வொன்றைப் பற்றியும் அவள் எப்படியெல்லாம் என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பாள்!
‘சூரியன் கடலுக்குள் மூழ்கிவிட்டதே! நாளைக் காலையில் அது எப்படி, டாடீ அனுமான் குன்றுக்கு மேலே எழும்பி வருகிறது? போலீஸ்காரன் அதை எடுத்து அங்கே போய் வைப்பானாமே ஆடர்லி சொல்கிறான். உண்மையா, டாடீ?”
ஆகாயத்தில் மின்னிக் கொண்டிருக்கிற ஆயிரமாயிரம் நட்சத்திரங்களையும் தன் விரலால் சுட்டியபடி கேள்வி கேட்பாள் பிந்துமோள்.
“டாடீ, டெல்லிக்குப் போகிற ப்ளேனில் போனால் நாம் அந்த நட்சத்திரங்களைப் பிடித்துவிடலாம் இல்லையா? தோட்டக்காரன் சொன்னான். டாடியிடம் சொன்னால் டெல்லியிலிருந்து திரும்பி வரும்போது ஆகாயத்திலுள்ள ஒரு நட்சத்திரத்தைப் பறித்து எடுத்துக் கொண்டு வரலாமே என்று. இது உண்மையா டாடீ?”
இயற்கையின் பலப் பல விநோதங்களையும் அவளுடைய மனதில் நன்றாகப் பதியும்படி எளிமையான உதாரணங்களுடன் விளக்கினேன். ஆனால், மனிதர்களின் ரகசியங்களைத் தான் அறிந்துகொள்ளும் சக்தியே எனக்கு இல்லாமல் போய்விட்டது!
பிற்பகல் உறக்கம் கலைய ஸ்வப்னாவுக்கு எப்படியும் மாலை ஐந்து மணி ஆகிவிடும். அதன் பின் சில நேரங்களில் ‘பில்லி’யையும் உடன் அழைத்துக் கொண்டு காற்று வாங்கும் பொருட்டு கடற்கரைக்குப் போய்விடுவாள். எனக்கு ‘பில்லி’யைக் கண்டால் எப்போதுமே ஒரு வகையான வெறுப்பு. இது ஏன் என்று எனக்கு கொஞ்சமும் புரியமாட்டேனென்கிறது. நாய்களிடம் எனக்கு எப்போதுமே தனிப்பட்ட முறையில் அன்பு தோன்றியதில்லை என்பது சரிதான். ஆனால், அதற்காக நான் ஏன் அவற்றின் மீது வெறுப்புக் கொள்ள வேண்டும்? நானும் நாள் செல்லச் செல்ல நாயைப் போல் ஒரு மிருகமாக மாறிக் கொண்டிருப்பதால் இருக்குமோ என்று என் உள்ளத்தின் ஒரு மூலையில் ஒரு மின்னல். ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்றையொன்று வெறுப்புடன் நோக்கிக் கொள்வதில் தவறென்ன இருக்க முடியும்?
மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் விழா. அதற்கு நானும் போயிருந்தேன். விழாவையொட்டி நாடகம் ஒன்றுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அந்தச் சம்பவங்கள் எத்தனை பசுமையாய் என் மனதில் பதிந்து கிடக்கின்றன. மத்தியச் சிறையின் இந்த அறைக்குள் அடைந்து கொண்டு என்னால் எப்படி இதையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள முடிகிறது? இயற்கையுடன் என்னையும் பிணைத்துக் கொள்ளும் இந்தப் பழக்கம் சிறைக்கு வந்த இந்தக் கொஞ்ச நாட்களில் உருவாகியதுதானே! அதாவது ஸப்-ஜெயில்... பின் ஸப்ஜெயிலிலிருந்து மத்திய சிறைக்கு... பின்பு, மத்திய சிறையிலிருந்து தூக்கு மரத்துக்கு! படிப்படியான முன்னேற்றம்; ஸப்-கலெக்டர்... சீஃப் செக்ரடரி.
சாட்சிகள் கூறிய மொழிகள் இன்னும் என் காதுகளில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. கிராம அதிகாரிகள் கூறினால் அது உண்மையாகிவிடும்போலும்!
“மாலை ஆறு மணிக்கே அவர் அறையைவிட்டு வெளியேறிவிட்டார். தாசில்தாரும் நானும் அப்போது அங்கே நின்றுகொண்டிருந்தோம். எங்களை பொய் சொல்லும்படி வற்புறுத்தினார். நானும் தாசில்தாரும், சுற்றுலா மாளிகையிலேயே தங்கிவிட்டோம். டிரைவரைக் கூட அழைக்காமல், அவராகவே வண்டியை எடுத்து ஓட்டிக் கொண்டு போய்விட்டார். உடனே திரும்பி வந்துவிடுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் திரும்பி வரும்போது மணி அதிகாலை இரண்டரை மணி. நான் அப்போது உறங்கவில்லை. காத்துக் கிடந்ததற்காக கண்டபடி எங்களைத் திட்டினார். அவருடைய உடல் முழுவதும் ஒரே வியர்வைப் படலம்...”
சாட்சியை, என் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.
“கலெக்டரின் காஃம்புக்கு வரக்கூடிய இடங்களில் உடனிருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு கூடிய மட்டும் துன்பம் வராமல் இருக்கக்கூடிய மனோபாவம் உடையவர் தானே இவர்?”
“ஆமாம்...”
“இவருடைய உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது என்று நீங்கள் அழுத்தம் கொடுத்துச் சொல்வதற்கான காரணம்? எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?”
“இவர் அணிந்திருந்த சட்டை எல்லாம் நனைந்து போயிருந்தது.”
“ஏன் மழை பெய்து நனைந்திருக்கக் கூடாது?”
“அன்று மழை பெய்ததாக எனக்கு நினைவில்லை.”
“அவர் ஓட்டி வந்த கார் மழையில் ஓட்டி வந்த காரைப் போல் தோன்றியதா?”
“சரியாகக் கவனிக்கவில்லை.”
“தட்ஸ் ஆல்! யுவர் ஆனர்”
“நோ ரீ.”
பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் நீதிபதியைப் பார்த்துக் கூறினார்.
விருந்தினர் மாளிகையின் அதிகாரிகளின் சாட்சியங்களும் ஏறக்குறைய இதே மாதிரிதான் இருந்தன.
“வழக்கம்போல் அன்றும் இரண்டு சப்பாத்தியும், வாழைப்பழமும், ஒரு டம்ளர் பாலும் அறையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இரவில் அவர் பாலை மட்டுமே குடித்திருக்கிறார்.” சாட்சிகள் என்னவெல்லாமோ கூறினார்கள்.
“நோ க்ராஸ்.”
மீண்டும் பழைய நினைவுகள். நான் அன்று விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி வரும்போது இரவு சரியாக இரண்டே முக்கால். உறங்கப் போகும்போது மூன்று மணி ஆகிவிட்டது.
விடியற்காலையில் புறப்பட்டுச் செல்ல முற்படும்போது ‘பில்’கொண்டு வரும்படி நான் கேட்க, தலையைப் பின்பக்கம் சொறிந்தபடி மானேஜர் கூறினார்.
“தாசில்தாரிடம் கொடுத்தாகிவிட்டது.” வழக்கமான பதில்... இதைக் கேட்டதும் எனக்கு உண்மையிலேயே சினம் வந்துவிட்டது.
“நான் இதற்கு முன் எத்தனை முறை கூறியிருக்கிறேன். என்னுடைய ‘பில்’லை வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாதென்று! நான் தங்குவது என் சொந்தச் செலவில் ஐயா. ஊரான் பணத்தில் இல்லை! ‘பில்’லைக் கொண்டுவரப் போகிறீர்களா இல்லையா?” என்றேன்.
பாக்கியாகக் கொண்டு வந்த மூன்று ரூபாயைக் கூட அந்த ஆளிடமே திருப்பிக் கொடுத்து விட்டேன்.
சுகமான, குளிர்ந்த காற்று... அப்பப்பா... என்ன களைப்பு. ஒரே மயக்கமாக இருக்கிறதே!
“மெதுவாக ஓட்டினால் போதும்” டிரைவரிடம் கூறினேன்.
“பங்களாவுக்கா, ஆபீஸுக்கா ஸார்!”
“ஆபீஸுக்குப் போ...”
அப்போது பிந்துமோளின் உருவம் மனக் கண்முன் காட்சி அளித்தது.
‘அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் தோட்டக்காரனுக்கு உதவி செய்துகொண்டிருப்பாளோ? செடிகள், பூக்கள் என்றாலே அவளுக்கு உயிர்மாதிரி, அவளுடைய ஆடை முழுவதும் நனைந்து, ஜலதோஷமோ காய்ச்சலோ வந்துவிட்டால்...?
ஸ்வப்னா ‘பெட் காபி’குடித்து விட்டு உறக்கத்தின் இரண்டாம் கட்டத்தை அநேகமாக இந்நேரம் ஆரம்பித்திருப்பாளோ?
“வேண்டாம்; பங்களாவுக்கு போய்விட்டு, ஆபீஸுக்குப் போனால் போதும்” என்றேன் டிரைவரிடம்.
வீட்டில் வந்து படுத்ததுதான் தெரியும்.
நான் கண் விழிக்கும்போது கார் போர்ட்டிக்கோவில் நின்றிருந்தது. ஆடர்லியும், தோட்டக்காரனும் எங்கே போயிருப்பார்கள்? காம்ப் க்ளார்க் எங்கே போய்விட்டான்? அவனைக்கூட என்னுடன் போகும்போது அழைத்துச் செல்லவில்லையே! அப்படியானால் அவன் எங்கே போயிருப்பான்?
பிந்துமோள் அழும் சப்தம் உள்ளிருந்து கேட்டது. தேவ் எங்கே போய்விட்டான்?
காம்ப் க்ளார்க் மெதுவாக வீட்டின் பின்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தான்.
“குட் மார்னிங், ஸார்” என்ற அவனுடைய வழக்கமான வரவேற்புக் குரலை அன்று கேட்க முடியவில்லை.
என்ன நடந்துவிட்டது?
“ஸார்... ஸார்...?”
ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும்.
“என்ன, என்ன சங்கதி?”
“ஸார்... அம்மா...”
“அம்மா...?”
“இறந்து ரோட்டின் அருகே கிடக்கிறார்கள்.”
“என்ன?”
அம்பாஸிடர் காரின் பானெட்டில் கைகளை ஊன்றியபடி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டேன்.
“மாவட்டப் போலீஸ் சூப்ரென்ட் விபரீதம் நடைபெற்ற இடத்துக்குப் போயிருக்கிறார்...
“போலீஸ் நாய் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்.”
காம்ப் க்ளார்க் இப்படி என்ன என்னவோ மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருந்தான்.
“டிரைவர்!”
“ஐயா!”
கார் மீண்டும் புறப்பட்டது. காம்ப் க்ளார்க் ரவி, டிரைவரின் அருகே அமர்ந்திருந்தான். டிரைவரின் கைகள், கால்கள் எல்லாமே நடுங்கிக் கொண்டிருப்பதை என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஆக்ஸிலேட்டரில் உத்வேகமான ஓர் அழுத்தம்.
வண்டியின் வேகம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தது. எங்கேயாவது வண்டி மோதி, சுக்கு நூறாக நொறுங்கிப் போனால் தேவலை என்று எனக்குத் தோன்றியது.
நான் ஏன் இனியும் இந்த உலகத்தில் உயிருடன் இருக்க வேண்டும்? இனி இங்கே உயிரை பாரமாய் வைத்துக் கொண்டிருப்பதில்தான் என்ன பயன்?
தூரத்தில் ஒரு கூட்டம் குழுமியிருந்தது. வண்டியின் ‘ஹார்ன்’ தொடர்ந்து ஒலித்ததும், முணுமுணுவென்று என்னவெல்லாமோ பேசித் தர்க்கம் செய்துகொண்டிருந்த கும்பல் ஒன்று, வழிவிட மனமின்றி எங்களுக்கு வழிவிட்டது. ஜனங்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டிருக்கும் போலீஸ்காரர்கள்தாம் எவ்வளவு சத்தத்துடன் இப்படிச் செய்து கொண்டிருக்கிறார்கள்!... என் காரின் முகப்பைக் கண்டதும் என்னை நோக்கி ஓடி வந்தார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். என் முகத்தைக் கண்டதும் தொப்பியைக் கைகளில் கழற்றி வைத்து மரியாதை செய்தார். அவரையொட்டி வந்த போலீஸ் சூப்ரென்ட் என்னருகே வந்து எனக்கு ஆறுதல் கூறுகிற வகையில் என் தோள்களில் கையை வைத்து மெதுவாகத் தட்டினார். எல்லாம் முடிந்துவிட்டதாம். நிர்வாணமாகக் கிடந்த அந்த உடம்பை வெள்ளை நிறத்துணியொன்றினால் முழுமையாகப் போர்த்தியிருந்தார்கள். கீழே பாயை விரித்து அதன்மேல்தான் சவத்தை வைத்திருந்தார்கள். என் பார்வைக்காகப் பிணத்தை மூடியிருந்த போர்வையை முகப்பகுதியில் மட்டும் லேசாகத் தூக்கிக் காட்டினார் போலீஸ் சூப்ரென்ட். ஒரே ஒரு முறைதான் அந்த முகத்தை நான் பார்த்தேன். உடம்பு முழுவதும் பிணம் திண்ணி எறும்புகளின் நீண்ட வரிசை...
பேசாமல் வந்த வழியே நடந்தேன். அங்கே போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். அப்பப்பா, என்ன கோரம்! என் கரங்களால் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டேன். பேசுவதற்கு நாக்கு முழுமையாக மறந்துவிட்டது.
“தள்ளி நில்லுங்கப்பா, கொஞ்சம்.... சொன்னால் கேட்க மாட்டீர்களா? ஏன்... ஏண்டா இடிக்கிறீர்கள்?”
கூட்டத்தைத் தள்ளி இடித்துக்கொண்டு பிணத்தைப் பார்ப்பதற்காக முன்னோக்கி வந்த சிலரைத் தடுக்கும் பொருட்டு தடியடிப் பிரயோகங்கூட நடத்தினார்கள் போலீஸ்காரர்கள்.
சம்பவம் குறித்து எழுதப்பட்ட அறிக்கையை என் பார்வைக்காக என் கண்முன் நீட்டினார் போலீஸ் சூப்ரென்ட்.
“திருமதி ஸ்வப்னா மேனன்... வயது... யாரோ கொலை செய்து நதியின் கரையில் போட்டிருக்கிறார்கள்” என்று ஒரு மனமாகப் பஞ்சாயத்து அபிப்பிராயம் கூறியிருக்கிறது.
கும்பலை விரட்டிவிட்டு வந்து நின்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிவுடன் கூறினார்.
“ஆம்புலன்ஸ் ரெடி, ஸார்...”
போலீஸ் சூப்ரென்டும் என்னுடன் காரிலேயே ஏறிக் கொண்டார்.
“ஆஸ்பத்திரிக்கு வருகிறீர்களில்லையா?”
“இல்லை, என்னை பங்களாவிலேயே ‘ட்ராப்’பண்ணி விடுங்கள்.”
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்த சூப்ரென்ட் நீண்ட நேர அமைதிக்குப் பின் கூறினார்.
“திஸ் ஈஸ் எ க்ளியர் கேஸ் அஃப் மர்டர்.”
நான் பதில் கூறவில்லை. இதைக் கண்டுபிடிக்கப் பெரிய குற்ற நிபுணர் ஒன்றும் தேவையில்லையே!
பங்களாவின் முற்றத்தில் யார் யாரோ நின்றுகொண்டிருந்தார்கள். அந்தரங்கக் காரியதரிசி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் உதவிக் கலெக்டர் குமாரி மாவட்ட விநியோக அதிகாரி...
ஒருவருடைய முகத்தைக் கூட நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
“ஃபாதர் - இன்லா ஒன்பது மணிக்கு இங்கே வரப் புறப்பட்டதாக ஃபோன் வந்திருக்கிறது.”
அதை யார் கூறியது? அந்தரங்கச் செயலாளராக இருக்குமோ?
கட்டிலில் போய் விழுந்ததுதான் தாமதம்; அதன் பிறகு என்னவெல்லாம் நடந்ததோ தெரியவில்லை.
“கொலை செய்த கலெக்டரைத் தண்டிக்க வேண்டும்! தூக்கிலிட வேண்டும்!”
ஆயிரமாயிரம் குரல்கள் வானத்தைக் கிழித்துக் கொண்டு ஒலித்தன. ரோட்டரி அச்சகத்தின் எரிச்சலூட்டக்கூடிய ‘கரகர’ சப்தம்; அலை அலையாய் பத்திரிகைகள் அச்சாகிக் குவிந்து கொண்டிருந்தன. முதல் பக்கத்தில் ஸ்வப்னாவின் சவத்தின் புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. அதைத் தவிர ஸ்வப்னா, பிந்துமோள் இவர்களின் சிறிய படங்களுடன் என்னுடைய படமும்.
‘கலெக்டரின் மனைவி கொலை’
சிவப்பு வண்ணத்தில் பெரிய எழுத்துக்களில் அச்சாகியிருந்த தலைப்பு!
எல்லாம் ஒரு கனவு போல் நடந்து முடிந்துவிட்டதே! உள் மனத்தில் காலங்காலமாய் ஏற்பட்டுக் குவிந்து கிடந்த குற்ற உணர்வின் வெளிப்பாடாக இது இருக்குமோ?
நிச்சயம் இது கனவாக இருப்பதற்கில்லை. நான் கண் விழித்தபோது எனக்கெதிரே டாக்டர் சரத் மோகன், டி.ஐ.ஜி. சத்தியநாத், ஸ்ரீதர மேனன் மூவரும் அமர்ந்திருப்பது என் கண்களில் மங்கலாகத் தெரிந்தது. மேனன் என்னவோ பேச நினைப்பது போல் தோன்றியது. ஆனால், பேச நா வரவில்லைபோல் இருக்கிறது?
இறுதியில் டாக்டர்தான் அங்கே நிலவிக்கொண்டிருந்த அமைதியைக் கிழிக்கும் வகையில் பேசினார்.
“அப்படியானால், நான் வரட்டுமா? அவரை யாரும் தயவு செய்து துன்பப்படுத்தாதீர்கள்! லெட் ஹிம் ப்ரீத் ஸம் ஃப்ரெஷ் ஏர்!”
டி.ஐ.ஜி.-யைத் தவிர மற்ற எல்லோருமே அறையை விட்டு வெளியே போய்விட்டார்கள்; ஸ்ரீதர மேனனுந்தான். மேலே சுழன்று கொண்டிருந்த மின் விசிறியை வெறிக்க நோக்கியபடி படுத்துக்கிடந்தேன். திருவிழாக்காலம் முடிந்ததும் கோவில் வெறிச்சோடிப் போய் களையிழந்தது போல் காணப்படுமே அந்த நிலையில்தான் என் மனமும் இருந்தது. ஒரே சூனியம்.
டி.ஐ.ஜி. என்னவோ கூறிக் கொண்டிருந்தார்!
“இது ஒரு கொலைதான் என்ற உண்மை சந்தேகத்துக்கே இடமின்றித் தெரியவந்திருக்கிறது. வயிற்றிலோ நுழையீரலிலோ ஆற்றில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீர் எதுவும் இல்லை என்று சோதனை வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ‘போஸ்ட் மார்ட்டம்’நடத்திய போலீஸ் ஸர்ஜன் பேராசிரியர் குருதேவின் கருத்தை வைத்துப் பார்க்கும்போது கொலை இரவு பதினொரு மணிக்கும் அதிகாலை இரண்டு மணிக்கும் இடையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. ‘க்ளப்’பில் உங்கள் மனைவி உண்ட டின்னர்கூட அப்படியே ஜீரணம் ஆகாமல் வயிற்றினுள் கிடந்தது. மிஸஸ் மேனன் நிறைய மது அருந்தியிருக்கிறார் என்பதும் சோதனை வாயிலாகத் தெரிய வந்திருக்கிறது. உண்மை பிடிபட ஒன்றும் அதிக நாள் ஆகிவிடாது. இந்தக் கொலையைச் செய்தது யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்கக் குற்றவியல் நிபுணர்கள் பலர் விரைவில் வரவிருக்கிறார்களாம்; உள்ளாட்சித்துறை மந்திரியிடமிருந்து சிறிது நேரத்துக்கு முன்புதான் தகவல் வந்தது. இங்கேயுள்ள போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு, சம்பந்தப்பட்ட கொலை வழக்கை விசாரிப்பது அவ்வளவு உசிதமாக இல்லை என்பதே எல்லோருடைய கருத்தும்.”
காட்டுத் தீ போல ஊரின் மூலை முடுக்கில் எல்லாம் செய்தி பரவிவிட்டது.
அடுத்த நாள் சட்டமன்றத்தில் ‘ஸ்வப்னாவின் கொலை’ வழக்கில் மறைந்து கிடக்கும் மர்மங்களைப் பற்றித் துப்புத் துலக்க ஓர் உடனடித் தீர்மானம் போடும்படி எதிர்க்கட்சிகள் கோரின.
“குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாகக் கண்டுபிடித்தாக வேண்டும்!”
உள்ளாட்சித்துறை அமைச்சரின் தீர்மானத்தின்பேரில், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தைத் தள்ளுபடி செய்தார் சபாநாயகர். “நல்ல குணங்களின் உறைவிடமாக இருந்தவர் ஸ்வப்னா” என்று பாராட்டிப் புகழ்ந்தார். “சொந்த மனைவியின் உயிரைப் பறிக்கக் கொஞ்சங்கூட அஞ்சாமல் காட்டுத்தனமாய் நடந்து கொண்ட அந்த மனிதனைக் கலெக்டராகப் போட்ட அரசு வெட்கமான ஒரு செயலைச் செய்துவிட்டது” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறிமுடித்ததும் எல்லா எதிர்க்கட்சியினரும் சேர்ந்து, ‘வெட்கம்! வெட்கம்’என்று கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
காற்று எந்தப் பக்கமாக வீசத் தொடங்கியிருக்கிறது என்று எனக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்துவிட்டது. ஆனால்... மெதுவாகக் கிளம்பிய அந்தத் தென்றல் இப்படிப் புயல்காற்றாக மாறி அதன் சக்தியால் என்னை இந்த நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கும் என்பதை நான் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை!
பல மாதங்களாகவே கலெக்டருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே இருந்த தொடர்பு அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருந்தன பத்திரிகைகள். ஸ்வப்னாவின் தந்தை ஸ்ரீதர மேனன் உள்ளாட்சித் துறை அமைச்சரைப் போயப் பார்த்தாராம்; குடும்பத்தில் நிலவிக் கொண்டிருந்த ரகசியங்கள் ஒவ்வொன்றையும் ஒரு வேளை ஒன்று விடாமல் கூறியிருப்பாரோ, அமைச்சரிடத்தில்! தாம் அமைச்சரைச் சந்திக்கப் போவது குறித்து, இதற்கு முன்பே ஏன் என்னிடம் அவர் கூறவில்லை? இதற்கு முன் ஒரு போதும் அவர் இப்படி நடந்து கொண்டதில்லையே! அதுவும் அமைச்சரைச் சந்திக்க டெல்லிக்கே போவது என்றால்...?
கொலை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு என்னைத் தேடி வந்திருக்கிறார் ஸ்ரீதர மேனன். என்னைச் சந்தித்துவிட்டுப் போகும் போது என் மீது அவருக்கு ஒரே கோபம். கள்ளக்கடத்தல் மன்னனான ஜமாலைக் கைது செய்ய மத்திய அரசு உத்தரவு போட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவர் வந்திருந்தார்.
ஆனால், அதற்குப் பதில் கூறாமல் வேறு எதை எதைப் பற்றியோ வேண்டுமென்றே பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் மனிதர் விட வேண்டுமே! “எனக்கும் ஜமாலுக்கும் இடையே ரொம்ப நாட்களாகவே நல்ல நட்பு. எப்படியும் அந்த மனிதரைக் காப்பாற்றுவேன்” என்றார்.
எனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, “இந்த மாதிரியான அந்தரங்க விஷயங்களைப் பற்றிப் பேசுவது எனக்கு ஒரு போதும் பிடிக்காது; மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.
எழுந்து படியிலேறிப் படுக்கையறைக்கு நான் போய்க் கொண்டிருந்தபோது என்னவோ ‘கன்னாபின்னா’என்று அந்த மனிதர் முணுமுணுப்பது மட்டும் என் செவிகளில் கேட்டது.
கட்டிலில் ஸ்வப்னா படுத்திருப்பதைக் கண்டபோது, உண்மையிலேயே நான் வியந்து போனேன். அவள் இன்று ‘க்ளப்’புக்குப் போகவில்லை போலிருக்கிறதே! அல்லது போய்விட்டுச் சீக்கிரமே வந்து விட்டாளோ! தலையணையில் தன்னுடைய முகத்தைப் புதைத்து வைத்துக்கொண்டு அவள் அழுது கொண்டிருப்பதை அப்போதுதான் நான் கண்டேன்.
அவள் ஏன் அழ வேண்டும்? ஓ... அவளுக்கு அழக்கூட தெரியும் போல் இருக்கிறதே! ஹெரால்ட் ராபின்ஸின் 'Lonely Lady’ (தன்னந்தனி சீமாட்டி) என்ற புத்தகம் டீபாயின் மேல் இருக்கிறது. அதை எடுத்துச் சாவதானமாகப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
எப்போதுமே அடுத்த அறையில் படுத்துறங்கும் - ஸ்வப்னாவுக்கு இன்று என்ன வந்தது?
கைகளை மெத்தையில் ஊன்றியபடி லேசாக ஒரு பக்கம் தலையை ஸ்டைலாகச் சாய்த்தபடி கேட்டாள் ஸ்வப்னா.
“டார்லிங்! என் அப்பாவிடம் இப்படித்தான் பேசுவதா?”
“எப்படி?”
அப்போதும் புத்தகத்தின் பக்கங்களை என் கை விரல்கள் புரட்டிக் கொண்டுதான் இருந்தன.
“ஜமால் நமக்கு எவ்வளவு வேண்டியவர் தெரியுமா?”
“நமக்கா?” என்னையும் மீறி நான் கேட்டேன்.
அவள் ஒன்றும் பதில் கூறவில்லை.
“கள்ளக் கடத்தல் செய்வதற்கு அந்த மனிதனின் தயவு, உன் தந்தைக்கு வேண்டுமானால் தேவையாக இருக்கலாம். ஆனால் எனக்கு...” வாக்கியத்தை நான் சரியாகக் கூட முடிக்கவில்லை. அதற்கு எரிமலை ஆகிவிட்டாள் ஸ்வப்னா.
“கொஞ்சங்கூட நன்றியில்லாத மனிதன்!”
“நான் நன்றி இல்லாதவனா? என் நன்றியை நான் யாரிடம் காட்டுவது? எப்படிக் காட்டுவது? ஜமாலிடம்- ரம்மி மேஜையிலும், டான்ஸ் ஃப்ளோரிலும் இன்னும் எங்கெல்லாமோ நீ பழகும் ஜமாலிடம் - நான் நன்றி காட்ட வேண்டும், இல்லையா?”
“சோறு தந்த கையையே கடிக்கத் தயங்காத...”
நான் பூகம்பமாய் மாறிவிட்டேன். ஒரே அறையில் அவள் இந்த உலகத்தை விட்டே போக வேண்டும் என்று கோபம் பொங்கியெழுந்தது.
“டாடீ...!” பிந்து அறையினுள் ஓடி வந்தாள். தாயின் மார்பில் புரண்டு அழுதாள். பல்லை ‘நற நற’வென்று கடித்தபடி அறையை விட்டு நான் வெளியேறிய போது மாடிப்படியில் தயங்கியவாறு நின்றிருந்தார்கள் ஆடர்லியும் வேலையாள் தேவும்...
அன்று இரவே நகரத்தின் விலை உயர்ந்த ஆடம்பரமான ஒரு விடுதியில் ஜமால் கைது செய்யப்பட்டு விட்டான். அந்தச் சமயத்தில் ஜமாலுடன் மேனனும் இருந்திருக்கிறார். போதாதென்று காபரே நடனக்காரி ஒருத்தியும்... இதை ஏன் ஜமாலைக் கைது செய்த அதிகாரிகள் முன்கூட்டியே என்னிடம் கூறவில்லை?
மூன்று நாட்கள் கழித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் சட்டசபையில் கூறினார்.
“திருமதி ஸ்வப்னா மேனனைக் கொலை செய்த பேர்வழி அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் பிடிபட்டு விடுவான். இதில் மிகவும் பொறுப்புணர்வு காட்டுகிற நம் எதிர்க்கட்சித் தோழர்களை அமைதியாக இருந்து பார்க்கும்படி வேண்டுகிறேன். இந்த வழக்கைக் குறித்த ரகசியங்களை இப்போதே கூறிவிடுவது அவ்வளவு பொருத்தமாக இராது. ஒருவேளை அது துப்பு துலக்குவதைப் பாதித்தாலும் பாதிக்கலாம்.”
அமைச்சரின் பேச்சைத் தொடர்ந்து சபையே அதிரும் வண்ணம் கை தட்டல். அடுத்த நாள் பொழுது புலர்வதற்குள் அவர் கூறியது நடந்துவிட்டது. திருமதி ஸ்வப்னா மேனனைக் கொலை செய்தவன் கைது செய்யப்பட்டான். ஸ்ரீதேவராஜ மேனன், ஐ.ஏ.எஸ்., கலெக்டரின் பங்களாவிலிருந்து காவல் நிலையத்துக்குச் இட்டுச் செல்லப்பட்டதை யார்தான் அறியமாட்டார்.
விசாரணை அதிகநேரம் நீடித்துக் கொண்டிருந்தது. என் பதில்களில் ஒன்றுகூட யாருடைய உள்ளத்தையும் திருப்திபடுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. எனக்குக் கீழே பணியாற்றுகிற பல ஊழியர்களும், உன்னத பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களில் சிலரும் என்மீது ஏராளமான குற்றச்சாட்டுகளைத் தயக்கமின்றி ‘அம்பு’ மாதிரி ஒருவரை அடுத்து ஒருவராக எறிந்துகொண்டே இருந்தார்கள். பத்திரிகைகளும், அரசியல்வாதிகளும் என்னைச் சந்தேகம் குடிகொண்ட பார்வையாலேயே நோக்கினார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உண்மையை விளக்கி அவர்களிடம் கூறும் தைரியம் எனக்கு வரவில்லை.
பிரபலமான வக்கீல்கள் பலர் என்னை இந்த வழக்கு சம்பந்தமாக அணுகினார்கள்.
“ஜாமீனுக்கு மனுச் செய்ய வேண்டாமா?”
“வேண்டாம்.”
“நீங்களே ஏன் உங்கள் தலையை இப்படிப் பணயம் வைக்க வேண்டும்?” - ஒரு வக்கீல் கேட்டார்.
“தயவு செய்து என்னிடம் உண்மை முழுவதையும் மறைக்காமல் திறந்து கூறுங்கள். உங்களுடைய வழக்கை நான் வாதிக்கிறேன். வக்கீல்களிடம் மட்டும் எதையும் மறைத்து வைக்காதீர்கள்.” இது மற்றொரு வக்கீல்.
நான் நிரபராதிதான் என்று கூறிவிடக் கூடாது என்பது தானே என் விருப்பம்? என்னை மட்டும் நிரபராதி என்று ஒருவேளை நீதிமன்றம் கூறிவிடுமேயானால்... நிச்சயம் நான் தளர்ந்து போவேன். மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் இழந்தப் பதவி என் கைகளுக்கு வரும். நாட்களின் ஓட்டத்தில் ‘கொலைகாரன்’என்ற முத்திரை கூட மறைந்து போகும். ஆனால், யார் என்னை எப்படி நினைத்தாலும், பிந்து - என் அன்புமகள்- அவள் என்னை மன்னிப்பாளா?
தீர்ப்புக் கூறுகிற அன்று நீதிமன்றத்துக்கு அவளை யார் அழைத்து வந்தார்களென்று தெரியவில்லை. போலீஸ்காரர்கள் என்னைச் சூழ்ந்து வர ‘வேன்’உள்ளே நான் ஏறியபோது அவள் ஏன் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வேண்டும். ஒரு பச்சைக் குழந்தையின் கபடமற்ற கண்களுக்குப் பரமசிவனின் நெற்றிக் கண்ணைக் காட்டிலும் சக்தி உண்டோ! அப்பப்பா... எப்படிப்பட்ட பார்வை அது. தணலாகக் கொதித்த அந்தப் பார்வையிலே கருகிப் போகாமல் இன்னுமா நான் உடலில் உயிரை வைத்துக் கொண்டு திரிகிறேன்? அந்தப் பார்வையை இனி ஒருமுறை என் கண்கள் எங்கே சந்திக்கப் போகின்றன? சொந்த மகளுடைய கண்களுக்கு முன்னேயே அவளுடைய பகைவனைப் போல் ஒரு தந்தையால் வாழத்தான் முடியுமா? சூனியம் நிறைந்த இப்படிப்பட்ட வாழ்வு நிச்சயம் எனக்குத் தேவைதானா?
என் சிந்தனை இப்படிப் போய்க் கொண்டிருந்தது. என்றாலும், ஊரிலேயே நல்ல கிரிமினல் வக்கீல் பிரதிவாதியான என் சார்பில் வாதாட வந்துவிட்டார்.
நீதிமன்ற அறைக்குள் நல்ல கூட்டம்.
குற்றவாளிக் கூண்டுக்குள் கைகளைக் கட்டியபடி நான் நின்று கொண்டிருந்தேன். வழக்கில் அடங்கியுள்ள குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது நீதிமன்றம். தொடர்ந்து வழக்கமான விசாரணைகள்.
“நீங்கள் இந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?”
சப்தம் போட்டுக் கூற வேண்டும் என்று உள்ளத்துள் ஓர் உணர்வு.
ஆமாம்... ஆமாம்... தயை செய்து என்னைத் தூக்கிலிட்டு விடுங்கள். என் பதில் இன்னும் வாயிலிருந்து வெளிவராமல் போகவே, மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது.
பதில்: “இல்லை”
சப்தம் போட்டே கூறினேன்.
சாட்சிகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.
எத்தனை சாட்சிகள்.
எத்தனை பெரிய விசாரணைகள்.
தேவும், ஆடர்லியுங்கூடச் சாட்சியம் சொன்னார்கள். எனக்கும் ஸ்வப்னாவுக்குமிடையே சமீப காலமாக நிலவிய மனக்கசப்பைத் தெளிவாகக் கூறினார்கள். “சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்துக்கு முன் ஒருநாள், தர் ஸாருடனும் ஸ்வப்னா அம்மாவுடனும் மிகவும் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார் கலெக்டர். அதை நாங்களும் கேட்டோம். அன்று மட்டும் கலெக்டரின் அறைக்குள் பிந்துமோள் போகாமல் இருந்திருந்தால், அன்றே கூட இந்தக் கொலை நேர்ந்திருக்கும்.”
சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சரியாகப் பதினொரு மணிக்கு ‘க்ளப்’பிலிருந்து ஸ்வப்னா புறப்பட்டுப் போனதாக லேடீஸ் கிளப் காரியதரிசி திருமதி நம்பி கூறினார். ஸ்வப்னா போகும்போது கறுப்பு நிற அம்பாசிடர் காரில் போனாளாம். காரின் நம்பர் தமக்கு மனதில் ஞாபகமில்லை என்றும், அது போர்ட்டிகோவில் நிற்காமல் அதற்குச் சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்ததாகவும் கூறினார் அவர்.
“தேவன் வந்தாகிவிட்டது. இனி நான் போகிறேன்” என்று கூறிவிட்டுப் போனாளாம் ஸ்வப்னா.
குறுக்கு விசாரணையில், அன்று அளவுக்கும் அதிகமாக ஸ்வப்னா குடித்திருந்ததாகக் கூறினார் திருமதி நம்பி. அன்று என்றுமில்லாத வகையில் மிகவும் சந்தோஷமாக ஸ்வப்னா காணப்பட்டாளாம்.
“இன்றைக்கு சீக்கிரமே போக வேண்டும்” என்று அடிக்கொருதரம் கூறிக் கொண்டிருந்தாளாம் ஸ்வப்னா. “சாதாரணமாக, தேவராஜ மேனன் ‘க்ளப்’புக்கு வருவதோ, அவளை அழைத்துக் கொண்டு போவதோ இதுவரையில் ஒரு முறைகூட இல்லை என்பதை நான் மறுக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார் திருமதி நம்பி.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரவோடு இரவாக அந்தக் கறுப்பு வண்ண அம்பாசிடர் காரைத் தாங்கள் பார்த்ததாகவும், டிரைவரின் அருகே வெளுத்துத் தடிமனான ஒரு பெண் அமர்ந்திருந்ததாகவும் லாரி டிரைவர் ரஷீதும் க்ளீனர் பஷீரும் சாட்சியம் கூறினார்கள். காரின் எண்ணை அவர்கள் பார்க்கவில்லையாம். காரில் இருந்த ஆட்களின் முகங்கள் சரியாக நினைவுக்கு வரவில்லையாம்.
“ஜமாலுக்கும் ஸ்ரீதர மேனனுக்கும், மரக் கள்ளக்கடத்தல் செய்வதுதானே உங்கள் வேலை?”
எனக்காக வாதாடிய வக்கீலின் கேள்விக்கு, “இல்லை” என்ற பதில் அவர்களிடமிருந்து வந்தது. என்றாலும், அந்தக் கேள்வியைக் கேட்டதும், அவர்களின் முகத்தில் காணப்பட்ட கலவரத்தை, மேன்மை தங்கிய நீதிபதியே நீங்கள் கவனிக்கவேயில்லையா?
சாட்சிக் கூண்டில் நின்ற ஸ்ரீதர மேனன் குற்றவாளிக் கூண்டில் நின்ற என்னைக் கொஞ்சமேனும் தலையைத் தூக்கிப் பார்க்க வேண்டுமே. ஸ்வப்னா அவருக்கு எழுதியிருந்த சில கடிதங்கள் என்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றத்தை மேலும் ஊர்ஜிதம் செய்வதுபோல் அமைந்திருந்தன. அப்படி அந்தக் கடிதங்களில் அவள் என்னைப் பற்றி என்னதான் எழுதியிருப்பாள்? கடைசிக் கடிதத்தின் ஒரு பகுதியாக ஜமாலின் விஷயமாக என்னை அவர் பார்க்க வந்திருந்த நாளன்று பிந்துமோள் மட்டும் அறையில் நுழையாமல் இருந்திருந்தால் தன்னை நான் கொலை செய்திருப்பது உறுதி என்று எழுதியிருந்தாள்.
“ஜமாலின் விஷயமாகக் கலெக்டரின் பங்களாவுக்கு நீங்கள் போயிருந்ததாக இந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், யார் இந்த ஜமால்?” - குறுக்கு விசாரணையின் போது ஸ்ரீதர மேனனை என் வக்கீல் இப்படிக் கேட்டார்.
“என் நண்பன்.”
பதில் கிடைத்தவுடன், அடுத்த கேள்வி தொடர்ந்தது.
“அவர் உங்களுடன் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடியவராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
“நான் இதை முழுமையாக மறுக்கிறேன்.”
என் வக்கீலின் குரல் இப்போது தாழ்ந்து ஒலித்தது. மேனனுக்கு இரண்டடி தூரம் வரை போய் விட்டு ரகசியம் பேசுகிற தொனியில் கூறினார்.
“அப்படியானால் ஜமாலைப் பற்றி என்ன சம்பந்தமாகப் பேச அங்கே போயிருந்தீர்கள்?”
மேனன் பதில் கூற முடியாமல் விழித்தார்.
“யுவர் ஆனர். இந்தக் கேள்விக்கு அடிப்படை ஒன்றுமில்லை. ஆகவே, இதை அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகிறேன்.”
“பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் இடைமறித்தும் என் வக்கீல் கூறினார்.
“நோ... நோ... யுவர் ஆனர். மிகவும் சக்தி வாய்ந்த கேள்வி இது. வேண்டுமானால் நான் இதை நிரூபிக்கிறேன்.”
மேன்மை தங்கிய நீதிமன்றம் அந்தக் கேள்வியை அனுமதித்துவிட்டது. இந்தக் கால இடைவெளி பொய்யான கதையொன்று ஜோடிக்க ஸ்ரீதர மேனனுக்கு உதவியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
“தேவன் இரண்டு லட்ச ரூபாய் வேண்டுமென்று என்னிடம் கேட்டிருந்தார்... அவ்வளவு பணம் அப்போது என் கைகளில் இல்லை. வேண்டுமானால் ஜமாலிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்று கூறியிருந்தேன். ஜமால் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதால், அவரிடம் அந்த அளவு பணம் இல்லை என்ற விவரம் அப்போது தெரிய வந்தது. அதற்காகத்தான் அப்போது நான் அங்கே போனேன்.”
இதைக் கேட்டதும் நான் அதிர்ந்து போனேன். அப்போது என் மனதில் கானின் உருவம் வந்து மறைந்தது.
“உங்களுக்கு எத்தனை பாங்குகளில் கணக்கு இருக்கிறதென்றும், கையிலுள்ள கறுப்புப் பணத்தைத் தவிர அவற்றில் எவ்வளவு பணம் உங்களுடைய கணக்கில் இருக்கிறதென்றும் கூற முடியுமா?”
‘கறுப்புப் பணம்’ என்று வக்கீல் பிரஸ்தாபித்தது தவறானதென்றும் அதை நீதிமன்றக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும் என்றும் ஆட்சேபித்தார் சர்க்கார் வக்கீல். அதன்படி அவ்விவரம் நீக்கப்பட்டும் விட்டது.
“வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பாங்க்கையும் சேர்த்து எனக்கு ஐந்து பாங்குகளில் கணக்குகள் இருக்கின்றன. அவற்றில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று அக்கவுண்ட் புத்தகத்தைப் பார்க்காமல் என்னால் எப்படிச் சொல்ல முடியும்?” என்றதும் மேனனின் உடல் முழுவதும் ‘குப்’பென்று வியர்வை அரும்பி வழிந்தது.
குரலைத் தாழ்த்தி, என் வக்கீல் மீண்டும் கேட்டார்.
“அன்று இரவுதானே ஜமால் கைது செய்யப்பட்டது?”
“ம்... ஆ... மா... ம்...”
“அப்போது நீங்களும் ஜமாலுடன் இருந்தீர்களில்லையா?”
“ஆமாம்.”
ரகசியம் பேசுவதுபோல் வக்கீல் கேட்டார்.
“அப்போது உங்களுடன் இருந்தாளே ஒரு பெண், அவள் யார்? காபரே டான்ஸர் இல்லையா? அப்படியானால், அவளுடைய பெயர் என்ன?”
சொல்ல வந்தது எதையோ மறந்துவிட்டது போன்ற உணர்வுடன் மறந்து போனதை ஞாபகப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தம் கையிலிருந்த பென்ஸிலால் இரண்டு மூன்று முறை மெதுவாகத் தட்டிக் கொண்டார் வக்கீல்.
அந்தக் கேள்வியை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது நீதிமன்றம்.
“நேர்மையாளரான, உன்னத மனிதரான- உங்கள் மகளின் கணவரான- கலெக்டர் தேவராஜ மேனோன் உங்களுக்கு கள்ளக் கடத்தலில் பெரிய பங்கு இருக்கிறது என்ற உண்மையை அறிய நேரிட்டு விட்டதாலும், எந்த நேரத்திலும் உங்களைச் சட்டத்தின் கை விலங்கில் மாட்டிவிட்டுத் தான் அவர் வேறு வேலை பார்ப்பார் என்று நீங்கள் முழுமையாகக் கருதியதாலும், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சந்தர்ப்பத்தை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டீர். மருமகனைப் பழி வாங்கும் நோக்கத்துடன் பொய்யான கதை ஒன்றை ஜோடித்துக் கொண்டு நீங்கள் நாடகமாடிக் கொண்டிருக்கிறீர்கள்... நான் கூறுவதை நீங்கள் மறுக்க முடியுமா?”
ஒரே மூச்சில் இவ்வளவு பெரிய கேள்வியைக் கேட்டதாலோ என்னவோ, அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.
“நான் அதை முழுமையாக மறுக்கிறேன்.”
“தட்ஸ் ஆல், யுவர் ஆனர்!”
போலீஸ் ஸர்ஜன் குருதேவின் பேச்சு, குற்றவாளிக் கூண்டிலிருந்த என் செவிகளில் மிக மிகத் தெளிவாகக் கேட்டது.
தண்ணீர் வயிற்றினுள் போய் ஸ்வப்னா இறக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறினார் அவர். யாரோ, குரல்வளையை இறுக நெரித்தே கொன்றிருக்கிறார்களென்றும், ஸ்வப்னா கர்ப்பிணி என்றும், அளவுக்கும் அதிகமாகக் குடித்திருந்ததால், நல்ல திடகாத்திரமுள்ள ஒருவர் மட்டுமே தனியே நின்று இந்தக் காரியத்தைச் செய்திருக்கக் கூடுமென்றும் தெரிவித்தார் குருதேவ்.
எல்லாரையும் விசாரித்த பிறகு இறுதியில் விசாரிக்கப்பட்டார் விசாரணை அதிகாரி. அவர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்த அறிக்கையின் மீது மாசு கற்பிக்க முற்பட்ட என் வக்கீலின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, சிறிது கூடத் தயக்கமின்றிப் ‘பட பட’வெனப் பதில் கூறினார்.
“நடந்த சம்பவங்களை, சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு பொய்க் கேஸை ஜோடித்திருக்கிறீர்கள் என்கிறேன்” இது என் வக்கீலின் வாதம்.
“ஒரு போதும் அப்படி இல்லை.”
அதோடு சாட்சிகளின் விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நான் ‘கதிரவன் குன்று’க்குப் புறப்பட்டுப்போனது அல்லவா எனக்கு எதிராக நிற்கிற மலை போன்ற சாட்சியாக ஆகிவிட்டது. பங்குனி மாதக் கடைசி. நல்ல வெப்பம்.
பணி முடிந்து விருந்தினர் மாளிகைக்குத் திரும்பும் போது சரியாக ஐந்துமணி. நன்றாகக் கை கால்களைக் குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு வெளுத்த ஆடைகளை மாற்றிக் கொண்டு ஏதாவது வாசிக்கலாம் என்ற ஆவலுடன் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். அறையில் போதுமான வெளிச்சம் இல்லை. போதாததற்கு மின்சார வெட்டு வேறு. கதிரவன் குன்றின் உச்சிக்குப் போய்ச் சிறிதுநேரம் அப்படியே அமர்ந்தபடி காற்று வாங்கிவிட்டு வந்தால் என்ன? சென்ற முறை வந்திருந்தபோது கூட அங்கே போய்விட்டுச் சிறிது நேரம் இருந்துவிட்டு வந்தேனே’என்று எண்ணி, வெளியே இறங்கிச் சென்றபோது தாசில்தாரும் கிராம அதிகாரிகளும் நின்று கொண்டிருக்கிறார்கள்.
“நீங்கள் இப்போது போகலாம். நாளை காலையில் ‘ஹெட் க்வார்ட்டர்ஸுக்கு வருவேன்; யாரும் என்னுடன் வரவேண்டாம். குட்நைட்” என்றேன்.
டிரைவரை ஏன் அழைக்க வேண்டும்? கதிரவன் குன்றுக்குப் போகிற பாதைதான் எனக்கு நன்றாகத் தெரியுமே. தனியே அமர்ந்து வேதனைகளை மறக்க இதுதான் நல்ல சமயம்... அப்பப்பா... அப்படிப்பட்ட சூழலில் அமர்ந்து வாழ்க்கையின் துன்பங்களை மறப்பதில்தான் எத்தனை இன்பம். ‘ஷெட்’டில் இருந்த காரை டிரைவர் எடுத்துக் கொண்டு வந்தான்.
“நான் ஓட்டிச் செல்கிறேன். நீ போய்ப் படுத்துக்கொள். காலையில் வந்தால் போதும்.”
“சரி, ஸார்...”
மலையின் உச்சியை நோக்கி வண்டி சென்று கொண்டிருந்தது. தென்றல் காற்று நறுமணம் கொண்டு என்மீது வீசியது. என்னையே மறந்து போனேன். கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனேன். மழைத்துளிகள் முகத்தில் ‘சடசட’வென்று அறைந்தபோதுதான் திடீர் அதிர்ச்சியுடன் கண் விழித்தேன். கடிகாரத்தைப் பார்த்தால், நேரம் இரண்டு மணியைக் கடந்து விட்டிருக்கிறது.
மிக மிகக் கவனமாகப் பாறையை விட்டுக் கீழே இறங்கினேன். காரில் ஏறுவதற்குள், மழையில் நான் நன்றாகவே நனைந்து போனேன். திரும்பியதும் நனைந்த ஆடைகளைக் கழற்றி வேறு துணி உடுத்தினேன்.
அறையில் இருந்த மேஜைமேல், குளிர்ந்து போன சப்பாத்திகள், பால் டம்ளரை எடுத்து, அதிலிருந்த பாலை மட்டும் ‘மடக் மடக்’கென்று ஒரே நொடியில் குடித்துத் தீர்த்தேன். நல்ல தாகம்... உறக்கம் கண்ணைச் சுழற்றியடித்தது. அப்படியே போய்க் கட்டிலில் விழுந்தேன். ‘விருந்தினர் மாளிகை’யின் சுவர்க்கடிகாரம் அப்போது மூன்று முறை அடித்து ஓய்ந்தது.
ஜாமீன் எடுப்பது பற்றிய என்னுடைய விண்ணப்பத்தைப் பற்றித் தீர்மானம் எடுக்கும் பொருட்டு நடந்த விவாதத்தின் போது ப்ராஸிக்யூட்டர் கூறினார்.
“கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் மிக உன்னதமான ஒரு பதவியில் - அதாவது, கலெக்டர் பதவியில் இருந்தவர். அவரை ஜாமீனில் வெளியே விடுவதென்றால் சாட்சிகளைத் தமக்குச் சாதகமாகத் தம் தனிப்பட்ட செல்வாக்கை உபயோகித்துத் திருப்பி விடக் கூடும். இதன் மூலம் இதுவரை தெரிய வந்திருக்கிற பயன்மிக்க பல சான்றுகளுக்கு மதிப்பில்லாமல் போக வழி உண்டு. இதனால் நீதிமன்றம் இனியும் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்யப் பல இடர்ப்பாடுகள் உண்டாக நேரும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பிரதிவாதிக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஜாமீன் அளிக்கக் கூடாது என்று வேண்டுகிறேன்.”
ஜாமீனில் வெளியே போய்த்தான் எனக்கென்ன நன்மை? சமுதாயம் என்னை ஒரு ‘கொலைகாரன்’என்ற நோக்கில் அல்லவா பார்க்கும்? ‘கர்ப்பிணியான மனைவியைக் கொன்ற கயவன்’ என்று கல்லை எடுத்து என்மேல் கொஞ்சமும் தயக்கமின்றி எறியுமே. எனக்குப் பாதுகாப்பளிக்க இந்த அகன்ற உலகில் யார் இருக்கிறார்கள்? ஜமாலோ, ஸ்ரீதர மேனனோ என்னைத் தங்களுடைய துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்காமல் தான் விட்டு வைக்கப் போகிறார்களா? போலீஸ்காரர்கள் தாம் என்னைக் காப்பாற்றி விடுவார்களா?...
எனக்கென்று பாங்க்கில் இருக்கிற தொகை கூட இருபத்தைந்து ரூபாய்க்கும் குறைவாயிற்றே. வீட்டையும் தோட்டத்தையும் விற்றுத்தான் நாணு முதலாளியின் கடனை அடைத்தாகிவிட்டதே. ஒருவேளை அன்று மட்டும் அப்படிச் செய்யாமல் இருந்தால்...? முதலாளி தம் பொருளாதார நெருக்கடியால் இந்த உலகைவிட்டே போயிருப்பாரே. வேண்டாம்... ஜாமீனேவேண்டாம்... அரசாங்கத்தின் செலவில் இந்த இடத்திலேயே தங்கி விடுவது தான் எல்லாவற்றுக்கும் நல்லது...
தனக்கென்று ஒரு வக்கீலை ஏற்பாடு செய்யாத ஒருவன் குற்றவாளியாக மட்டும் இருந்திருந்தால், அந்த ஆளுக்கு அரசாங்கச் செலவிலேயே வக்கீலை ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடடா! எவ்வளவு அழகான திட்டம்!
ஒன்றுக்கும் உதவாத வக்கீல்தான் வாய்ப்பான் இந்த மாதிரியான விஷயங்களுக்கு. பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் போடுகிறபோடில் திணறிப் போவான் அவன். அவனுடன் அவனுடைய வாதங்களும் காற்றில் பறந்துவிடும். பிறகென்ன? பிரதிவாதி தண்டனை பெற வேண்டியதுதான்! அப்படிப்பட்ட சமயங்களில் நிரபராதியும் தண்டனை பெற வேண்டியதுதான்! ஒரு கொலை வழக்கின் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்வதில் வக்கீல்களுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறதே! சட்டத்தின் தராசுத்தட்டு உயர்வதும், தாழ்வதுங்கூட இந்தக் காலத்தில் நபரின் பணபலத்தைப் பொறுத்துத்தானே இருக்கிறது?
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது நம் இந்தியாவின் சட்டத்தின் அடிப்படையையே மாற்றி அமைக்க வேண்டும் என்று எத்தனை முறை மற்ற மாணவர்களுடன் காரசாரமாக விவாதித்திருக்கிறேன்!
“ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டாலும், ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக்கூடாது என்று இதுவரை இருந்து வரும் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய கால கட்டம் இப்போது வந்துவிட்டது. ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால்கூட, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கும் வழி வகை இருக்கவே கூடாது. சமுதாயம் நன்முறையில் இருக்க வேண்டுமானால், அதனுடைய நன்மைக்கு ஒரு நிரபராதி தண்டனை பெற்றுத்தான் ஆக வேண்டுமென்றால், அதற்காக ஒருவன் தண்டனை பெறுவது வரவேற்புக்கு உரிய ஒன்றே...!”
நண்பர்கள் என் இந்தப் பேச்சைக் கேட்டதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் கையைத் தட்டி ஆரவாரித்ததைப் பார்க்க வேண்டுமே! அவர்கள் அன்று எழுப்பிய கரவொலி இப்போதும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.
“பிரதிவாதி வேறு யாரையாவது விசாரணை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரா?” - நீதிபதி கேட்டார்.
வக்கீல் பதில் கூறுவதற்கு முன்பே குற்றவாளிக் கூண்டில் நின்ற நான் உரக்கக் கூறினேன்.
“உண்டு... உண்டு... என்னுடைய மனச்சாட்சி!” என்ன காரணமோ தெரியவில்லை; தலையை நான் தாழ்த்திக் கொண்டேன். கண்களிலிருந்து கண்ணீர் ‘பொலபொல’வென்று வழிந்து கொண்டிருந்தது.
மனச்சாட்சியைச் சாட்சியாக விசாரிக்கும்படி நீதிமன்றத்தில் கூறும் தைரியம் அச்சமயத்தில் எனக்கு எங்கிருந்துதான் வந்ததோ தெரியவில்லை. நான் குற்றவாளி ஆயிற்றே! உள்ளக் குமுறலில் ஒரு வேளை அப்படிக் கூறிவிட்டேனோ?
பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் தம் வாதத்தை ஆரம்பித்தார்.
ஸ்வப்னாவிடம் எனக்கு எந்த அளவுக்கு வெறுப்பு இருந்து வந்திருக்கிறது என்பதைச் சாட்சியங்களின் துணைகொண்டு மிகவும் விளக்கமாகக் கூறினார். “ஸ்வப்னாவின் உடலில் அணிந்திருந்த ஆபரணங்கள் கழற்றி எடுக்கப்படாமல் இருந்தபடியே இருந்ததால் ஆபரணங்களுக்கு ஆசைப்பட்டு இந்தக் கொலை நடைபெறவில்லை என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிய வருகிறது” என்று வாதித்த ப்ராஸிக்யூட்டர் குற்றவாளிக் கூண்டில் நின்ற என்னை நோக்கித் தம் சுட்டு விரலை நீட்டிக் கொண்டே கூறினார்.
“இங்கே நிற்கிற பிரதிவாதியைத் தவிர வேறு ஓர் ஆசாமி நிச்சயம் ஸ்வப்னாவைக் கொலை செய்திருக்க முடியாது. யுவர் ஆனர்! பாவம், அந்தப் பெண்ணைக் காரணமின்றி வேறு யாரும் கொலை செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.”
இறந்தது கீசகனென்றால், அவனைக் கொன்றது நிச்சயம் பீமன்தான்... இல்லையா?
“தேவன் வந்துவிட்டார், நான் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு அல்லவா ‘க்ளப்’பிலிருந்து பாவம் அந்தப் பெண் புறப்பட்டிருக்கிறாள்?
தம் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டுப் பிரதிவாதி ‘க்ளப்’புக்குள் காரில் போயிருக்கிறார். இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே பல மாதங்களாகவே உறவு நிலை திருப்திகரமாக இல்லை என்று சாட்சியம் கூறியிருக்கிறார்கள் இவருடைய வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், இவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள், நண்பர்கள் எல்லாருமே. அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிரதிவாதியோடு எந்தவிதமான பகையோ, வெறுப்போ கிடையாது. சுருக்கமாகச் சொல்லப்போனால், அவர்கள் எல்லாருமே அவரிடம் அன்பு பாராட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஸ்வப்னா மேனனைப் போன்ற உயர் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் இரவு நேரம் தன்னந்தனியாகக் காரில் சென்று கொலை செய்யப்பட்டாள் என்பது அவ்வளவு நம்பும்படியாக இல்லையே! ‘கதிரவன் குன்று’க்குப் பிரதிவாதி சென்றதாகக் கூறியது வெறும் கற்பனைக் கதை... சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பிரதிவாதி தம் காரை எடுத்துக்கொண்டு வெளியே தனியே போனது இயற்கையின் வனப்பை ரசிப்பதற்காக அல்ல; தம் நீண்ட கால மனக்குமைச்சலைத் தீர்த்துக் கொள்ள வேண்டி ஓர் உபாயம் தேடியிருக்கிறார். திட்டமிட்டபடி தம் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அது.”
பப்ளிக் ப்ராஸிக்யூட்டரின் கூற்றை மறுத்துத் தம்மால் ஆனமட்டும் முயன்று பார்த்தார் என் தரப்பில் வாதாடிய வக்கீல்.
“வெறும் சந்தேகமென்ற ஒன்றை மாத்திரம் வைத்து ஸ்ரீ தேவராஜ மேனன் என்ற ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொலைக் குற்றவாளி என்று எப்படி கூறிவிட முடியும்? நானும் முதலிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். வேண்டுமென்றே எல்லா அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு ஸ்ரீ தேவராஜன் மீது கொலைக் குற்றம் சாட்டி அவர் மேல் களங்கம் கற்பிக்க முயன்றிருப்பது போலத்தான் தெரிகிறது. இதன் மூலமாக ஒரு நிரபராதி எத்தனை கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டுவிட்டது! இதன்மூலம் உண்மையான குற்றவாளிதான் தப்ப நேரிடும்.”
“ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற முறையில் பார்க்கும்போது நல்ல சுத்தமான மனமுடைய, களங்கம் அற்ற, ஊழல் அற்ற, நிர்வாகத்தில் திறனுடைய, கடமையைப் பெரிதாக நினைக்கிற ஒரு மனிதர் ஸ்ரீ தேவராஜ மேனன் என்று நீதிமன்றத்தின் முன் வந்த விசாரணைகளின் மூலம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது... அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் திட்டமிட்டு ஒரு கொலையைச் செய்தார் என்பது, யுவர் ஆனர், உண்மை என்று நான் நினைக்கவில்லை. மேனனும் ஸ்வப்னாவும் வாழ்ந்த தாம்பத்திய வாழ்க்கையில் இருவருக்குமிடையே கருத்து வேற்றுமைகள் பல இருந்து வந்திருக்கின்றன என்பது உண்மை. நான் அதை மறுக்கவில்லை. ஆனால், ஸ்ரீமேனனைப் போன்ற ஒரு மனிதர் அப்படிப்பட்ட மனைவியின் காரியங்களைக் கூடக் கண்டும் காணாமலும் இருந்துகொண்டேதான் இருந்திருக்க முடியும். அதற்கு என் கட்சிக்காரரை நான் கோழை என்று வேண்டுமானால் கூறுவேனேயொழிய வேறு வகையில் அவரைக் குறை கூற மாட்டேன்!
ஸ்ரீதேவராஜ மேனன், ஸ்வப்னா இருவருக்குமிடையே ஏற்பட்ட சச்சரவின் எதிரொலியாகவே இந்தக் கொலை நடைபெற்றிருக்க வேண்டும் என்பதுதான் ப்ராஸிக்யூஷன் தரப்பு வாதம்? ‘காம்பு’க்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் போன மேனோன் தம் மனைவியைக் கொலை செய்யத் தான் போயிருக்கிறார் என்று ப்ராஸிக்யூஷன் தரப்பில் வாதாடப்பட்டது. நான் இதை வன்மையாக மறுக்கிறேன். காரணம் என்னவென்றால், தான் ‘காம்பு’க்குப் போகப் போகிற விஷயத்தை ஸ்ரீமேனன் ஒரு வாரத்துக்கு முன்பே எல்லோரிடமும் கூறியிருக்கிறார்.
‘க்ளப்’பில் இருந்த ஸ்வப்னாவைக் கறுப்பு வண்ண அம்பாசிடர் காரில் ஏற்றிக் கொண்டு போனது யாராக இருக்க முடியும்? ஸ்ரீ தேவராஜ மேனனாக அது நிச்சயம் இருக்க முடியாது! மனைவியை அழைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் ஸ்ரீ தேவராஜ மேனனுக்கு என்றுமே இருந்ததில்லை என்று ப்ராஸிக்யூஷன் ஆறாவது சாட்சியான ‘லேடீஸ் க்ளப்’காரியதரிசி ஸ்ரீமதி நம்பி கூறிய செய்தியை மேன்மை தங்கிய நீதிமன்றத்தாரின் கவனத்தில் கொண்டு வருகிறேன். காரில் வந்தது பிரதிவாதிதான் என்றால், அவர் ஏன் காரைப் போர்ட்டிகோவில் நிறுத்தாமல் அதற்கப்பால் சற்றுத் தூரத்தில் நிறுத்த வேண்டும்? தம்மை அழைத்துப் போக வந்திருப்பவர் தம் கணவர்தான் என்று மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, யுவர் ஆனர், ‘தேவன் வந்துவிட்டார். நான் போகிறேன்’ என்று கூறிவிட்டு ஸ்ரீமதி ஸ்வப்னா மேனன் ‘க்ளப்’பை விட்டுப் புறப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு யாருடனோ ஸ்வப்னா உடலுறவு கொண்டிருப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றனவென்று ப்ராஸிக்யூஷன் பதின்மூன்றாம் சாட்சியான போலீஸ் ஸர்ஜன் கூறினார். ரிஸர்வ் காட்டில் வைத்தா ஒரு கணவன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்வான்?”
வக்கீல் இப்படிக் கேட்டதும், நீதிமன்றத்தில் ஒரு பெரிய சிரிப்பலையே எழுந்தது.
“ஆர்டர், ஆர்டர்!”
நீதிபதியின் குரல் உயர்ந்து ஒலித்தது.
உடனே அமைதி நிலவியது.
சம்பவம் நடைபெற்ற அன்று இரவு இரண்டு மணி வரை பிரதிவாதி எங்கிருந்தார் என்பதை மிகவும் விளக்கமாகக் கூறினார் என் சார்பில் வாதாடிய வக்கீல்.
“ஸ்ரீ தேவராஜ மேனன் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்பதற்கான சான்றுகளை நீதிமன்றத்தின் முன் வைப்பதுதான் என் வேலையே தவிர இந்தக் கொலையை வேறு யார் செய்திருக்க முடியும் என்பது அல்ல. உண்மையான குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தைச் சார்ந்துதான் என்றாலும்...”
கைக் குட்டையை எடுத்து தம் முகத்தைத் துடைத்துக் கொண்டார் வக்கீல்.
“ஜமாலும் அவனைச் சார்ந்த ஆட்களுந்தான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்ற என் சந்தேகத்தை நீதிமன்றத்தின் முன் தெரிவிக்க விரும்புகிறேன். தங்களுக்கு ஒரு சிறு இடையூறு நேர்ந்தாலும் அதற்குக் காரணமானவரை ஒழித்துக் கட்டுவதில் பின் வாங்காதவர்கள்தாம் ஜமாலும் அவனுடைய அடியாட்களும். ஜமால் சிறைக் கம்பிகளுக்குள் இருந்தாலும் அவனுடைய ஆட்கள் சும்மா இருக்க வேண்டுமே! இல்லாத தொல்லையையெல்லாம் ஸ்ரீ தேவராஜ மேனனுக்கு கொடுத்திருக்கிறார்கள். சமூகத்தில் அவருக்கு இருந்த நல்ல பெயரைப் பாழ்ப்படுத்த வேண்டும் என்று கருதிய அவர்கள், இந்தக் கொலையைச் செய்துவிட்டு, ஒன்றுமே அறியாத ஸ்ரீ தேவராஜ மேனனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய ஆசை நிறைவேறிவிட்டதில்லையா?
ஸ்வப்னா ஏறிப்போன கார் பிரதிவாதியினுடையதுதான் என்று இதுவரை விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் ஒருவர்கூடக் கூறவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஸ்வப்னாவுடன் கள்ளத்தனமாக உடலுறவு கொண்ட யாரோ ஓர் ஆசாமி அந்தக் காரில் இருந்திருக்கிறான் என்பதுதானே? ஜமாலின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவனாக அவன் ஏன் இருக்கக் கூடாது? நன்றாகக் குடித்துவிட்டு, உணர்வு இழந்திருந்த ஸ்வப்னாவுடன் உடலுறவு கொண்டுவிட்டு, அதன்பின் அவரை அவன் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்க வேண்டும். பிரதிவாதியை வேண்டுமென்றே கொலைக் குற்றத்தில் மாட்டி வைக்கும் உள் நோக்கத்துடனேயே, இறந்த பின், அலங்கோல நிலையில் அவரது உடலைவிட்டுச் சென்றிருக்க வேண்டும்... வெறும் சூழ்நிலையை மட்டும் வைத்து நிரபராதி ஒருவர் மீது கொலைகாரன் என்று அபாண்டமாக அவசரப்பட்டுப் பழி கூறிவிடக் கூடாது! ஜமாலுடன் பழகிய சில போலீஸ் அதிகாரிகளும், அவனுக்கு அஞ்சிச் சேவகம் புரிகிற சில மனிதர்களும், சரடு திரிக்கும் சில மஞ்சள் பத்திரிகைக்காரர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய முயற்சியே இது. யுவர் ஆனர், இதுதான் உண்மையாக இருக்க முடியும். எனவே நீதிமன்றம் என்னுடைய இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.”
என் வக்கீல் எவ்வளவு அருமையாக வாதித்தார்! ஆனால்... இறுதியில் நான் வந்து சேர்ந்தது இந்தச் சிறைச்சாலையின் நான்கு சுவர்களுக்குள்ளேதான்!
அந்த விளக்கைக் கொஞ்சம் தள்ளி வைக்கக்கூடாதா வார்டன்? சிறிது நேரமாவது கண் மூடுகிறேனே! விளக்கின் ஒளி கண்ணில் பட்டுக் கொண்டிருந்தால் என்னால் எப்படித் தூங்க முடியும்? சே... இப்போது புரிகிறது, விளக்கை ஏன் அங்கு வைத்திருக்கிறீர்கள் என்று கேரளச் சிறை விதியின்படி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதியைத் தெளிவாக வார்டன் காணக்கூடிய ஓர் இடத்தில்தான் விளக்கை வைக்க வேண்டும்; அதுதானே விஷயம்?... சரி; இருக்கட்டும். விளக்கு அந்த இடத்திலேயே இருந்துவிட்டுப் போகட்டும்!
‘கொலைக்கூடம்’இதற்கு அடுத்ததுதானே! தூக்குத் தண்டனையைப் பார்ப்பதற்காக இரண்டு வருஷங்களுக்கு முன்னால் நான் இங்கே வந்திருந்தேனே! அன்று எனக்கு அது ஒரு காட்சியாயிருந்தது. ஆனால் இப்போதோ நானே ‘நாயகன்!’ தூக்குத் தண்டனையைக் காண தூக்கிலிடப்படுபவனின் சுற்றத்தார் அனுமதிக்கப்படுவார்கள். ஏன்? பார்க்க விரும்பும் பிறர் கூட வரலாம். ஸ்ரீதர மேனன் நான் தூக்கில் தொங்கப் போவதைப் பார்க்க வருவார் என்பது நிச்சயம்! அப்படியானால் அவர் என்ன முறையில் வருவார்? சுற்றம் என்ற பெயரிலா? வெறும் பார்வையாளராக மட்டுமா? ஜமாலின் ஆட்களில் சிலர்கூட நிச்சயம் என்னைப் பார்க்க வருவார்கள்! ஆனால், அவர்களுடைய முகத்தைத்தான் என்னால் பார்க்கவே முடியாதே! கறுப்பு நிறத்துணியால் என் முகம் முழுவதையும் மூடியிருப்பார்கள். அதுவரையில் பரவாயில்லை. ‘கடைசி விருப்பம்’ என்னவென்று கேட்கும் சம்பிரதாயம் கூட இருக்குமே! அது ஏன்? அந்த விருப்பம் என்னவென்று கூறிவிடுகிறேன். இறந்தவனான என் சடலத்தைக் கூட என் அன்பு மகள் பிந்துமோளின் கண்களில் காட்டிவிடக் கூடாது என்பதுதான் என் அந்த இறுதி விருப்பம்!”
ஓர் அங்குலம் பருமனுள்ள, பருத்தியால் ஆன கயிறுதான் தூக்குத் தண்டனைக்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்; தூக்கில் கொல்லப்படுபவனின் கழுத்து வலிக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் போலும்!
அடடா, என்ன கருணை! என்ன கருணை!
குறைந்தபட்சம் மூன்று கயிறுகளேனும் எப்போதும் தயாராக இருக்கும்... சூப்ரென்ட்! என் எடை அறுபது கிலோகிராம். ஆகையால், நீங்கள் கட்டித் தொங்கவிடும் பொருளின் எடை குறைந்தபட்சம் தொண்ணூறு கிலோ கிராமாவது இருக்க வேண்டும். கயிற்றின் பலத்தைப் பரிசோதனை செய்யத்தான்! ஆறு அடி உயரத்திலிருந்து எடையைக் கட்டித் தூக்கிப் பரிசோதனை செய்யுங்கள். சூரியன் மீண்டும் உதிப்பதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்து விட வேண்டும்.
சூப்ரென்ட், மெடிக்கல் ஆபீசர், மாஜிஸ்டிரேட் எல்லாரும் தயாராகிவிட்டீர்களா? அப்படியென்றால் நானும் தயார்தான்! உம்; நடக்கட்டும். ஏன் நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லையா? அதுதான் தூக்கிலிடுவதற்கான கூலியாக நூறு ரூபாய் கொடுத்திருப்பார்களே! அதுவும் தூக்கிலிடப்படுவது கலெக்டராயிற்றே! அதற்குத் தகுந்த வெகுமானம் உங்களுக்கும் கிடைக்க வேண்டாமா என்ன? இருக்கட்டும்.. இருபது ரூபாய் அதிகம் வைத்துக் கொள்ளுங்கள்... காம்ப் க்ளார்க், ‘செக்புக்’கை எடுத்து என்னிடம் கொஞ்சம் தருகிறாயா?...
நீங்கள் ஏன் என் கைகளைப் பின்பக்கமாக இழுத்துப் பிடித்துக் கட்டுகிறீர்கள்? முகத்தில் மூடியிருக்கிற துணியைக் கிழித்து விடக்கூடாது என்பதற்காகவா? நான் இதற்கு முன்பு ஒருமுறை கூட முகமூடி அணிந்து பழக்கமில்லையே! நான் மட்டும் அதை அணிந்திருந்தால், இந்த முகமூடியை அணியும் சூழ்நிலை ஏன் உருவாகியிருக்கப் போகிறது?
என்னைத் தூக்கிலிட ஓர அதிகாரியும், நான்கு வார்டன்களும் வேண்டுமா? பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு அதன் ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினனாக நான் போயிருந்தபோது என்னை வரவேற்கத்தான் எத்தனை எத்தனை பெண்கள்! மேள தாளம், நாதசுரம் முழங்க அல்லவா வரவேற்றார்கள்! கைகளின் தாளங்களிலும் மையிட்ட கண்களிலுந்தான் மகிழ்ச்சியின் தாண்டவம் எவ்வளவு!... ஆனால், நீங்கள் இப்போது அணிந்திருப்பது வேட்டியும் சட்டையுமில்லை... மாறாக, காக்கி ட்ரவுஸர்... சரி அப்படியானால் எங்கே ஒழுங்காக ‘லெஃப்ட் ரைட்’ போட்டு நடவுங்கள் பார்க்கலாம்... லெஃப்ட்... ரைட்... லெஃப்ட்... ரைட்... சுதந்தர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் ‘பரேட்’பரிசோதித்த மாவட்ட ஆட்சித் தலைவர் - அதாவது - கலெக்டர் நான்!
அறைக்குள்ளிருந்து வெளி வருவதற்கு முன், சூப்ரென்டே, நீங்கள் என் ‘வாரன்ட்’ வாசீத்தீர்கள்?
சவத்தில் குத்தி வைப்பதற்காக இருக்குமோ?
சட்டம் அப்படிக் கூறுகிறதில்லையா? செய்த குற்றத்தைப் பற்றியுள்ள ஞாபகத்துடனேயே தூக்கிலே தொங்கிச் சாக வேண்டும் என்பதற்காக இருக்குமோ?
சூப்ரென்ட்! நீங்கள் ஏன் சிறைச்சாலையின் ரெஜிஸ்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? தூக்கில் கொல்லப்படப்போகிற ஆள் நான்தான் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறீர்களோ? அதில் குறிப்பிடப்பட்டிருக்கிற அடையாளங்கள் எல்லாம் உண்மையானவைதாம் மிஸ்டர்! வலது புருவத்துக்குக் கீழ் ஒரு தழும்பு; அது சிறு வயதில் பேரி மரத்தில் ஏறப்போய் மரத்தின் மொட்டைக் கிளையொன்று குத்தி உண்டானது. அப்பப்பா! அன்று அதிலிருந்து எவ்வளவு ரத்தம் கொட்டியது! கண்டதும், அம்மா எப்படிக் கதறி அழுதாள்! இன்று ரத்தம் வெளியே ஒழுகாது அல்லவா? அம்மா... என் அன்புத் தாய்...! ஆ... மரணத்தைக் காணக்கூட அம்மா இல்லையே, ஆனால் அம்மாவின் ஆத்மா...?
ஆத்மா!... மண்ணாங்கட்டி!
இடது கண்ணுக்குக் கீழே பைசா அளவுக்கு ஒரு வட்டம் சிறு வயதில் ஏற்பட்ட அம்மைத் தழும்பு...
மரண தண்டனை பெறப்போகிற தேவராஜ மேனன், ஐ.ஏ.எஸ். நான்தான். சந்தேகம் வேண்டாம்!
சூப்ரென்ட், சாதாரணமாக உங்கள் வீட்டிலிருந்துதான் ‘கொலை சோறு கொண்டு வருவது வழக்கம் என்று முன் ஒரு நாள் என்னிடம் நீங்கள் கூறினீர்களே! எனக்குப் பாயசம் மட்டும் போதாது; அடையும் கடலையுங் கூட வேண்டும். நான் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாயிற்றே! பிந்துமோளுக்குங்கூடக் கொஞ்சம் அவற்றைக் கொடுக்க வேண்டும்... அப்பப்பா! பாயசம் என்றால் என் அன்பு மகளுக்கு எவ்வளவு விருப்பம்! தந்தையின் மரணத்தை மகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடட்டும்!
லீவரை ஒரு முறை தட்டினால் போதும்; ஏறி நிற்கிற மரத்தால் ஆன மேடை கீழ்நோக்கி விழும்.
இரண்டு மூன்று நிமிஷங்கள் உயிர் துடிக்கும்; அவ்வளவுதான்! அதன் பின்?
சூனியம், எல்லாம் சூனியம்!
என்றாலும், சவம் ஒரு மணி நேரமாவது கயிற்றிலேயே தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்; மெடிக்கல் ஆபீஸர் வந்து, ‘உயிர்போய்விட்டது’ என்று உறுதிப்படுத்த வேண்டும். கயிற்றில் கழுத்து இறுகிப்போய் ஒரு மனிதன் ஒரு மணி நேரம் அப்படியே தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்றால்... அது முடியுமா, டாக்டர்? யோகம் பயின்று விட்டா வந்திருக்கிறார்கள், தூக்குத் தண்டனைக் கைதிகள்?
சுற்றத்தாரோ, நண்பர்களோ வேண்டுமானால் சடலத்தை எடுத்துப் போகலாம். ஆனால், யாருக்கு வேண்டும் சடலம்? யாரும் அதை வாங்க வரவில்லையென்றால், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அறுவைச் சிகிச்சை பயிலக் கொடுத்துவிடுவதுதான் நடைமுறை வழக்கம்... பரவாயில்லை. ஆனால், ஒரு நிபந்தனை. தேவராஜ மேனன், ஐ.ஏ.எஸ்.ஸின் இதயத்தை பிளந்து அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும்! என் மனசாட்சியை அறுத்து நீங்கள் கண்ட உண்மையை உலகத்துக்கு அறிவிக்க வேண்டும்- அதாவது, உண்மையிலேயே நான் கொலைகாரன்தானா என்பதைத்தான்!
பிந்துமோள் நிச்சயம் கேட்கத்தான் கேட்பாள்.
“மம்மியைக் கொலை செய்தது யார்?”
“உன் அப்பா!” அவளுக்கு உடனே பதில் கிடைக்கும்.
“யார் டாடியைக் கொன்றது!”
இதற்கு யார் பதில் கூறுவார்கள்? என்ன பதில் கூறுவார்கள்?