
பரபரப்பாக வந்தான் சந்துரு. "மீனாட்சி அத்தை... நம்ம பவித்ரா, அந்த அரவிந்தனோட ஓடிப் போகப்போறாளாம். அவங்க ரெண்டு பேரும் மதுரைக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்..."
"என்னடா சந்துரு சொல்ற?" அதிர்ச்சியான விஷயத்தைக் கேட்ட மீனாட்சி, கால்கள் மடங்க, தரையில் சரிந்து உட்கார்ந்தாள்.
"பதறாதீங்க அத்தை. அவங்க போறதைத் தடுத்து நிறுத்த என்னால முடியும். நாளைக்கு ராத்திரிதான் போகப் போறாங்க..."
"அவங்க ரெண்டு பேரும் படிச்சவங்கதானே? ஏண்டா அவங்களுக்கு இப்பிடி புத்தி கெட்டுப் போகுது? இதுக்காகவா பவித்ராவை இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சேன்..."
"அந்த அரவிந்தனோட வீட்ல பவித்ராவை மருமகளா ஏத்துக்க சம்மதிக்கலை. அவங்க ஜாதி, மதம், அந்தஸ்து பேதம் அது.. இதுன்னு கெடுபிடியா இருக்காங்க. அவங்க அந்தஸ்து, மலை உச்சியில. நம்ப நிலைமை படு பள்ளத்துல. இதையெல்லாம் அவளுக்கு எடுத்துச் சொன்னீங்களா இல்லையா?"
"சாத்தானுக்கு வேதம் ஓதியிருக்கேன்னு இப்பதாண்டா புரியுது. கிளிப்பிள்ளைக்கு மாதிரி எடுத்துச் சொன்னேன். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவு கிடைச்சாப்ல, அவ படிச்சு முடிச்ச உடனேயே பெரிய கம்பெனியில நல்ல வேலையும் கிடைச்சாச்சு. அந்த நிம்மதி கூட நிலைக்காம இதென்னடா இப்பிடி ஒரு பிரச்னை? அது சரி, அவங்க மதுரைக்குப் போற திட்டம் உனக்கெப்படி தெரியும்?"
"அரவிந்தனோட வீட்ல, என் கூட வேலை பார்க்கறானே 'குரு’ன்னு ஒரு பையன்.. அவன்தான் சொன்னான். அரவிந்தனோட ரூமை சுத்தம் செய்றது குருவோட வேலை. அது மட்டுமில்ல. அரவிந்தன் அமெரிக்காவில இருந்து வந்ததில இருந்து அரவிந்தனோட வேலைகளையெல்லாம் செய்றது அந்த குருதான். அரவிந்தன், நம்ம பவித்ரா கூட போன்ல பேசிக்கிட்டிருந்ததை குரு கவனிச்சிருக்கான். அரவிந்தனோட பேச்சுல இருந்து அவனும், பவித்ராவும் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போற திட்டத்தைப் புரிஞ்சுக்கிட்டான். உடனே என் கிட்ட சொன்னான். நான் உடனே உங்ககிட்ட ஓடி வந்தேன்."
"எனக்கு மகன் இல்லாத குறைக்கு, மகனைப் போல நீ எல்லாம் செய்யற... எங்க அண்ணனும், அண்ணியும் உயிரோடு இருந்திருந்தா நீ நல்லா இருந்திருப்ப..."
"பத்து வயசுக் குழந்தையா என்னை விட்டுட்டு ஆக்ஸிடென்ட்ல உயிர் விட்ட எங்க அம்மா, அப்பா இல்லைங்கற குறையே தெரியாம பாசத்தோட வளர்த்து விட்டிருக்கீங்க அத்தை. இதுக்கு மேல இன்னும் என்ன வேணும்..."
"நீ இவ்வளவு அடக்கமா இருக்க. ஆனா என் பொண்ணு பவித்ரா, சொன்ன பேச்சே கேட்காம அவ இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணிக்கறா. அடங்க மாட்டேங்கறா..."
"பாவம் அத்தை பவித்ரா. அவளைத் திட்டாதீங்க. அவ நல்ல அறிவாளி. படிப்புல எப்பிடி கில்லாடியோ அது போல, அவ வேலை பார்க்கற ஃபைனான்ஸ் கம்பெனியில வேலைக்கு சேர்ந்த மூணு மாசத்துல நல்ல பேர் எடுத்திருக்கா."
"அதில மட்டும் அறிவாளியா இருந்தா போதுமா? அதைவிட முக்கியமானது எதிர்கால வாழ்க்கை. நமக்குக் கொஞ்சம் கூட எட்டாத பெரிய இடத்துப் பையன் அரவிந்தனைக் காதலிக்கறேன், கல்யாணம் பண்ணிக்கறேன்னு பிடிவாதம் பண்றா. அவங்க வீட்ல சம்மதிக்கலைன்னதும் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கா. சந்துரு கண்ணா, அவங்க ரெண்டு பேரையும் தடுத்து நிறுத்திடுப்பா. அரவிந்தன் வீட்டுல இருக்கறவங்களுக்கு ஆள் பலம், பணபலம் எல்லாமே ஜாஸ்தி. பெரிய பிரச்னையாயிட்டா நம்பளால தாக்கு பிடிக்க முடியாது..."
"அது முடியாதுதான். ஆனா அவங்க ஊரை விட்டுப் போயிடாம தடுக்க என்னால முடியும். நான் பார்த்துக்கறேன். நீங்க பயப்படாதீங்க. முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்ங்கற மாதிரிதான் இந்த விஷயத்துல இறங்கணும்."
"அந்த அரவிந்தன் வீட்ல கிட்டத்தட்ட இருபது வருஷம் சமையல் வேலை பார்த்திருக்கேன். அரவிந்தனோட அப்பா விஸ்வநாதன், அவனோட அம்மா ஜானகி, அவங்க கூட ஒட்டிக்கிட்டிருக்கற உறவுக்காரங்க ஒவ்வொருத்தரைப் பத்தியும் எனக்கு நல்லா தெரியும். அந்த அரவிந்தன் அமெரிக்காவுக்கு படிக்கப் போனான்ல, அவன் கிளம்பறதுக்கு ஒரு மாசம் முன்னாடியிலயிருந்தே அவனுக்கு எப்பிடியெல்லாம் போதனை பண்ணாங்க தெரியுமா? 'படிப்பை முடிச்சுட்டு அங்கேயே வேலை தேடிக்கிடாத; அங்கயே பொண்ணையும் தேடிக்காத; படிப்பை முடிச்ச கையோட இந்தியா வந்து சேர்ந்துடணும் ன்னு நூறு தடவை சொல்லியிருப்பாங்க. அவன் என்னமோ பவித்ராவை கல்யாணம் பண்ணி, அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போய் குடித்தனம் பண்ணலாம்னு தப்புக்கணக்கு போட்டிருக்கான். நீ சொன்னியே உன் அறிவான அத்தை மக.. அவளும் அந்தக் கணக்கை தப்புன்னு புரிஞ்சுக்கலை.."
"புரிய வைக்கலாம் அத்தை. நீங்க பொறுமையா இருங்க. உங்களுக்கு ரத்த அழுத்தம் ஜாஸ்தியா இருக்கு. டென்ஷன் ஆகாதீங்க. நெஞ்சு வலி வந்துடும்."
"நெஞ்சு இப்படியே நின்னுப் போயிட்டா கூட நிம்மதிடா சந்துரு.."
"அப்பிடியெல்லாம் சொல்லாதீங்க அத்தை. பவித்ரா பிடிவாதக்காரிதான். ஆனா உங்க மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா. உங்களை வசதியா வாழ வைக்கறதுக்கு எவ்வளவு ஆசைப்படறா தெரியுமா? மனசுக்குள்ள இருக்கற பாசத்தை, வாய் வார்த்தையா வெளிப்படுத்த மாட்டா. அது அவளோட சுபாவம்.."
"அதெல்லாம் சரிதான். அவகிட்ட இருக்கற அந்தப் பிடிவாதம்தான் பிரச்னையே. ஆஃபீஸ்ல இருந்து வரட்டும். ரெண்டுல ஒண்ணு கேட்டுடறேன்."
"ஒண்ணும் கேட்க வேணாம் அத்தை. அவளோட திட்டம் உங்களுக்குத் தெரிஞ்சதாவே காட்டிக்காதீங்க. அவ எங்கயும் போயிடாம நான் பார்த்துக்கறேன்."
"ஜாக்கிரதையா பார்த்துக்கோப்பா. அவ துணிச்சல்காரி. நம்பளை ஏமாத்திடுவா.."
"யாரை ஏமாத்தினாலும் இந்த சந்துருவை மட்டும் அவளால ஏமாத்த முடியாது...."
"அவளை உசத்தியான படிப்பு படிக்க வச்ச நான், உன்னை அப்பிடி படிக்க வைக்க முடியாமப் போச்சேங்கற வருத்தம், எனக்கு உறுத்தலா இருக்கு சந்துரு..."
"அவளை உசத்தியான படிப்பு படிக்க வைக்கறதுக்கு நீங்க எவ்வளவு கீழே இறங்கி இருக்கீங்க.."
"அரவிந்தன் வீட்ல சமையல் வேலை செஞ்சதை அப்பிடி சொல்றியா? சமையல் வேலை புனிதமானது. தெய்வீகமானது. அந்த வேலை, என் கையில இருந்ததுனாலதான் அங்க வேலைக்கு சேர முடிஞ்சது. என்னோட சமையல் அவங்களுக்குப் பிடிச்சதுனாலதான் சம்பளத்துக்கு மேல எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சாங்க. அதனாலதான் பவித்ராவை படிக்க வைக்க முடிஞ்சது. உன்னைத்தான் படிக்க வைக்க முடியாம, அவங்க வீட்ல வேலைக்கு சேர்த்து விட்டேன்."
"என்னையும் படிக்க வைக்கணும்னுதான் ஸ்கூல்ல சேர்த்தீங்க. என் மண்டையில படிப்பு ஏறல. எட்டாங்கிளாஸை எட்டிப் பிடிக்கவே திணறிப் போயிட்டேன்.
அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஆனா ஒண்ணு அத்தை. அரவிந்தன் வீட்ல எனக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா? காய்கறி வாங்கறதுல இருந்து, பாங்க்குக்குப் போய் பணம் எடுக்கற வரைக்கும் அங்க ஆல் இன் ஆல் நான்தான். அந்த அளவுக்கு என்னை நம்பறாங்க. அவங்க வீட்ல, எல்லா அறைக்குள்ளயும் போற அளவுக்கு உரிமை குடுத்திருக்காங்க. குடும்பத்துல ஒருத்தனா என் மேல அன்பு வச்சிருக்காங்க..."
"அன்பு செலுத்தறதுலயோ, சாப்பாடு துணி மணி விஷயத்துலயோ எனக்கும் அவங்க எந்தக் குறையும் வைக்கல. அதனாலதானே உன்னையும் அங்கே சேர்த்து விட்டேன். சும்மா சொல்லக் கூடாது. பவித்ராவோட படிப்பு செலவுக்கும் நிறைய பணம் குடுத்து உதவியிருக்காங்க..."
"அது அவங்களோட தரும சிந்தை. ஆனா, கல்யாணம்னு வரும்போது அவங்களுக்கு கௌரவம், பணம், அந்தஸ்துதான் முக்கியம்னு நினைப்பாங்க. அதைப் பத்தி அரவிந்தன் நல்லாப் புரிஞ்சுக்கிட்டான். அதனாலதான் அரவிந்தனும், பவித்ராவும் யாருக்கும் தெரியாம, ரகசியமா கல்யாணம் பண்ணிக்கத் திட்டம் போட்டிருக்காங்க. அரவிந்தன், அவங்க அப்பா, அம்மா மேல் வச்சிருக்கறது உண்மையான பாசம் இல்லை. பொய்யான வேஷம். அவங்க சேர்த்து வச்சிருக்கற ஏகப்பட்ட ஆஸ்திக்காகத்தான் 'அம்மா, அப்பா’ன்னு ஒட்டிக்கிட்டிருக்கான். அவனோட குணம் அப்படி. சின்ன வயசுல இருந்து அவன் கூட பழகி இருக்கேன். மனுஷங்களை மனுஷங்களா மதிக்க மாட்டான். அவங்களோட பணத்தையும், பதவியையும், அந்தஸ்தையும் பார்த்துத்தான் மதிப்பான். பழகுவான். அப்படிப்பட்டவன் பவித்ராவைக் கல்யாணம் பண்ணிக்க நினைச்சதுக்கு காரணம் அவளோட அழகுல ஏற்பட்ட மோகம். அடுத்த காரணம் அவளோட அறிவு. அமெரிக்காவுல அவளையும் வேலைக்கு அனுப்பி ஏகமா சம்பாதிக்கலாம்ங்கற பேராசை. அரவிந்தனோட அப்பா, பவித்ராவை மருமகளா ஏத்துக்கவும் மாட்டாரு. அமெரிக்காவுக்கும் அனுப்ப மாட்டாரு. அவங்களைப் பிரிக்கறதுக்கு என்னென்ன செய்யணுமோ அத்தனையும் செய்வாரு. இப்போதைக்கு ரகஸியமா கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு அவரை சமாதானப்படுத்திடலாம்னு வீண்கனவு காண்றான் அரவிந்தன். ஆயுசு காலத்துக்கும் அவங்கப்பா மன்னிக்கவே மாட்டார். அதனாலதான் நான் பயப்படறேன். அவங்களோடத் திட்டத்தை முறியடிக்கணும்ன்னு ஒரு யோசனை பண்ணி வச்சிருக்கேன். நீங்க கவலைப் படாம இருங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். பட்டினி கிடக்காம சாப்பிடுங்க. நான் போயிட்டு வரேன்.
சந்துரு, வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரில் ஏறிக் கிளம்பினான்.
அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியின் உள்ளத்தில் பழைய நினைவுகள் அலைமோதின.
மீனாட்சியின் கணவர் மூர்த்தி, அள்ளிச் செலவழிக்கும்படியாக சம்பாதிக்காவிட்டாலும் அளவாக சம்பாதித்துக் கொண்டிருந்தார். பெரிய எதிர்பார்ப்புகளோ பேராசையோ இல்லாமல் மீனாட்சி அவரது வருமானத்திற்கேற்ப சிக்கனமாக குடும்பம் நடத்தினாள். வருமானம்தான் குறைவாக இருந்ததே தவிர குடும்பத்தின் மீதான அபிமானம் மூர்த்திக்கு நிறையவே இருந்தது. மீனாட்சி மீதும், மகள் பவித்ரா மீதும் அதிகப் பாசம் கொண்டிருந்தார். தன் நிலைமையைப் புரிந்துக் கொண்டு பொருளாதாரக் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு தன்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மீனாட்சியை மனைவியாக அடைந்ததை பெரிய பாக்கியமாக கருதி வாழ்ந்து வந்தார் மூர்த்தி.
தெளிந்த நீரோடையில் கல்லெறிந்தது போல, திடீரென்று விஷக் காய்ச்சல் ஏற்பட்டு உடல் நலிவுற்றார் மூர்த்தி. மருத்துவமனைகளில் அனைத்து உடல்நலம் பரிசோதிக்கும் கருவிகளுக்கும் வேலை கொடுத்து, அதன் விளைவாய் வாயில் நுழையாத ஒரு வியாதியின் பெயரைக் கண்டிறிந்தார்கள். உயர்தரமான மருத்துவம் கூட பலனளிக்காமல் மூர்த்தியின் வியாதியுடன் கண்ணாமூச்சி விளையாடி இறுதியில் அவரது கண்களை நிரந்தரமாக மூடச் செய்து விட்டது.
தாலித்தங்கம் வரை விற்று வைத்திய செலவு செய்த மீனாட்சி, தன் தாலியை இழந்தாள். துடித்தாள். சின்னஞ்சிறுமியான பவித்ராவைக் கட்டிப்பிடித்து அவள் அழுத அழுகை காண்போரைக் கலங்க வைத்தது.
அன்றைய நிலையில் அவளுக்கு இருந்த ஒரே ஆதரவு அவளது உடன்பிறப்பான அண்ணன் ராகவன். தங்கையின் விதவைக் கோலம் கண்டு நெஞ்சம் பதைத்தான். அவனது மனைவி விமலாவும் மீனாட்சி மீது மிகுந்த அன்பு கொண்டவள். வாய் ஓயாமல் மீனாட்சிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.
"அழாதே மீனாட்சி... உன் மேல் உயிரையே வைத்திருந்த உன் அன்புக் கணவர் உயிரை விட்டது உனக்குத் தாங்க முடியாத துயரம்தான். ஆனா என்ன செய்றது? விதி இப்படி சதி பண்ணிடுச்சு. உன் மகள் பவித்ராவை பார்த்துதான் நீ ஆறுதல் அடையணும். அழாதேன்னு சொல்றது சுலபம்தான். உன்னோட இழப்பு சாதாரணமானது இல்ல. இருந்தாலும் நீ அழுதுக்கிட்டே இருந்தா பவித்ரவிற்குக் கஷ்டமா இருக்கும். நம்மளோட துயரத்தை குழந்தைங்க மீது திணிக்கக் கூடாது. உன் மனசைத் திடப்படுத்திக்கோ. பவித்ராவை வளர்த்து ஆளாக்குறது ஒன்ணுதான் இனி உன் எண்ணமா இருக்கணும். நடந்தத மறந்துட்டு இனி வர்றதை பாரு. எங்க வீட்டுக்கு நீயும், பவித்ராவும் வந்துடுங்க. உங்களுக்கு நாங்க இருக்கோம்." விமலா சொன்னதையே ராகவனும் ஆமோதித்தார்.
"ஆமா மீனாட்சி, இந்த வீட்டை காலி பண்ணிட்டு, நீ எங்க கூட வந்துடு. என் மகன் சந்துருவுடன், பவித்ராவும் வளரட்டும்."
கையில் பணம் ஏதும் இல்லாத நிலை மட்டுமல்ல. அண்ணன், அண்ணியின் அன்புப் பேச்சிற்கும் கட்டுப்பட்டு அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தயாரானாள் மீனாட்சி.
"பொதுவா, அண்ணன் ஆதரிச்சாலும் அண்ணி தன் குடும்பத்துக்குள்ள நாத்தனார் வந்து நுழையறதை விரும்ப மாட்டாங்கன்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். பார்த்திருக்கேன். ஆனா, நீங்களும் அண்ணனைப் போலவே என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க. இந்த நன்றிக் கடனை நான் எந்த ஜென்மத்தில் தீர்க்கப்போறேன்..." விமலாவைப் பார்த்து அழுகைக் கலந்த குரலுடன் பேசினாள் மீனாட்சி.
இந்த ஜென்மத்திலேயே அந்த நன்றிக் கடனைத் தீர்க்கும் சூழ்நிலை உருவாகும் என்பதை அன்று அவள் அறியவில்லை.
இரண்டு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சாப்பிடும்பொழுது சந்துருவை கிண்டல் செய்வதே பவித்ராவின் வேடிக்கையான வாடிக்கையாகிப் போனது. சந்துருவிற்கு அத்தை மீனாட்சி மீது மிகுந்த பிரியம். சந்துருவை, பவித்ரா கேலி செய்யும்பொழுது மீனாட்சி அவளைக் கண்டித்தால், "அவளைக் கோவிச்சுக்காதீங்க அத்தை. ஏதோ ஜாலியா பேசிட்டுப் போறா" என்று கூறி சிரித்துக் கொள்வான். வயதில் மூத்தவன் என்றாலும் அவனை 'வா, போ’ என்று அழைப்பதுதான் பவித்ராவின் வழக்கம். அவள் மீதிருந்த பிரியத்தால் அனைவருக்கும் அவள் செல்லமாகவே இருந்தாள். படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த பவித்ரா மீது ராகவனுக்கு கொள்ளைப் பிரியம்.
"நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி பவித்ரா. மாமா உனக்கு செலவு செய்யத் தயாரா இருக்கேன். நீ நிறைய படிச்சு, உன் சொந்தக் கால்ல நிக்கணும். உங்க அம்மாவுக்கு படிப்பு இல்லாததுனாலதான் அவளால எங்கயும் வேலைக்கு போக முடியல. "
பவித்ராவின் அறிவையும், திறமையையும் பார்த்து அவளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக அப்படிக் கூறினாரே தவிர, அவரும், விமலாவும் சேர்ந்து சம்பாதிப்பதால்தான் குடும்ப வண்டியை ஓரளவு கஷ்டம் இல்லாமல் சாமாளிக்கும் நிலைமை இருந்தது. அந்தக் கஷ்டத்தை புரிந்துக் கொள்ள முடியாத வயதில் பவித்ரா இருந்தபடியால் மாமாவின் வார்த்தைகள் அவள் உள்ளத்தில் சந்தோஷத் தேன் வார்த்தது. அடிக்கடி கல்வியின் அவசியத்தை அவளுக்கு ராகவன் வலியுறுத்தி வந்தபடியால் பவித்ராவிற்கு அந்தப் பிஞ்சு வயதிலேயே படிப்பின் மீது அளவற்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக, சந்துரு இருந்தான். படிப்பின் மீது ஆர்வமின்றி வளர்ந்தான். விமலாவும் வேலைக்குப் போவதால் வீட்டையும், பிள்ளைகளையும் மீனாட்சி பொறுப்பாக கவனித்துக் கொண்டாள். எனவே விமலாவிற்கும் உதவியாக இருந்தது. அவசர அவசரமாக சமைத்ததை, அதைவிட அவசரமாக உப்புச் சப்பின்றி சாப்பிட்டுக் கொண்டிருந்த ராகவனும், விமலாவும் மீனாட்சியின் நளபாக சமையலை ருசித்துச் சாப்பிட்டனர்.
"ஏம்மா... மீனாட்சி ஒரே குடும்பமா இன்னிக்கு சந்தோஷமா வாழற நாம என்னிக்கும் ஒண்ணாவே வாழறதுக்கு எதிர்காலத்துல ஒரு வழி இருக்கு...."
"இதுக்கென்னண்ணா பெரிய வழி வேண்டியதிருக்கு. மனசுல அன்பும் பாசமும் இருந்தா என்னிக்கும் நாம சேர்ந்தே இருக்கலாம். விட்டுக் கொடுக்கற மனப்பான்மை இருந்தா இந்த சந்தோஷம் நம்பள விட்டு எங்கே போயிடும்?"
"நீ சொல்றது சரிதாம்மா. ஆனா ஒரு பிணைப்பும், இணைப்பும் உறுதியா ஏற்பட்டுட்டா இந்த சொந்தம் என்னிக்கும் விட்டுப் போகாது."
"புரியலேண்ணா"
"புரியும்படியாவே சொல்றேம்மா. எதிர்காலத்துல சந்துருவிற்கு பவித்ராவை கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்ல வரேன். நம்ம சொந்தமும் விட்டுப் போகாது. அழகான உன் பொண்ணு என்னோட மருமகளானா எனக்குப் பெருமைதானே...."
ராகவனின் எண்ணம் புரிந்ததும் சந்தோஷத்தில் ஒரு விநாடி மௌனமானாள் மீனாட்சி.
"என்னம்மா ஒண்ணும் பேச மாட்டேங்கறே. உன் பொண்ணு புத்திசாலியா இருக்காளே. என் பையன் மந்தமா இருக்கானேன்னு யோசிக்கிறயா? நாளடைவில சந்துருவுக்கு படிப்பு மேல ஆர்வம் வந்துடும்னு நான் நம்பறேன். பவித்ராவைப் பார்த்து அவனுக்கும், தான் நல்லா படிக்கணும்னு ஒரு வேகம் வரும்னு எதிர்பார்க்கறேன். பூவோடு சேர்ந்த நாரும் மணக்குமில்லயா?"
"அதில்ல அண்ணா, நான் சந்தோஷத்தில் என்ன பேசறதுன்னு தெரியாம வாயடைச்சு நிக்கறேன். சந்துரு எனக்கு மருமகனா வர்றதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும்."
"நீ இப்படி சொல்ற. ஆனா பவித்ரா சந்துருவை குண்டு, குண்டுன்னு கேலி பண்ணிக்கிட்டிருக்கா." சிரித்தபடியே விமலா கூறினாள்.
"நடிகர் பிரபு கூட குண்டுதான். ஆனா எவ்வளவு அழகா இருக்கார். சந்துரு இன்னும் வளர்ந்து பெரியவனானப்புறம் வாட்ட சாட்டமா கச்சிதமா ஆயிடுவான்.
“சின்ன வயசுல நான் கூட குண்டாதானே இருந்தேன் மீனாட்சி. அப்புறம் சரியாயிடலயா?" வேகமாக பதில் கூறினார் ராகவன்.
"சந்துரு, குண்டாயிருக்கறதப் பத்தி நான் கவலைப்படல. பார்க்கறதுக்கு முக லட்சணமா இருக்கான். என் மேல பாசமா இருக்கான். அது போதும்." சந்தோஷம் மாறாத குரலுடன் பேசினாள் மீனாட்சி.
"நீ ருசியா சமைச்சுப் போடறதை அவன் வளைச்சு மாட்டறான். அதான் இப்படி குண்டாயிட்டான்."
தன் சமையலை விமலா பாராட்டியதைக் கேட்டு உள்ளம் குளிர்ந்தாள் மீனாட்சி. அனைவரும் மனம் விட்டுப் பேசியதால் அந்த சூழ்நிலை அன்பு மயமாக இருந்தது. அந்த சந்தோஷம் தற்காலிகமானது என்று அவர்களில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அமைதியான நதியில் செல்லும் ஓடம் போல போய்க் கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் விதி தன் விளையாட்டைக் காண்பித்தது. விமலாவின் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு பஸ்ஸில் வெளியூருக்குப் பயணித்துக் கொண்டிருந்த விமலாவும், ராகவனும் பஸ்ஸிற்கு ஏற்பட்ட விபத்தினால் ஒரேயடியாக தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்ள நேரிட்டது. சந்துருவிற்கு பள்ளிக் கூடத்தில் லீவு போட முடியாத காரணத்தால், அவனை மீனாட்சியிடம் விட்டுச் சென்றிருந்தார்கள். 'பட்டக் காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பது போல, அண்ணணும், அண்ணியும் விபத்தில் மாண்டு போன செய்திக் கேட்டு பட்டுப் போன மரம் போல அடிப்பட்டு போனாள்.
கடந்த காலம்தான் கண்ணீரிலும் கவலையிலும் போயிற்று. நிகழ்காலத்தில் பவித்ராவையும், சந்துருவையும் வளர்த்து ஆளாக்கிய பின்னும் பிரச்னைகள் தன்னைப் பின்னி வருவதை உணர்ந்து சோகத்தில் ஆழ்ந்தாள் மீனாட்சி. திக்குத் தெரியாத காட்டில் விட்டதுபோல அண்ணனும், அண்ணியும் விட்டுப்போன பின் அவளுக்கு தெரிந்த சமையல் வேலைதான் கைக்கொடுத்தது. வசதி இல்லாத ஒண்டுக்குடித்தனத்தில் வீட்டு சொந்தக்காரியின் கெடுபிடிகளுக்கு நடுவே வாழ்க்கையை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டாள். கெட்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் போல அவள் சமையல் வேலைக்கு சேர்ந்த விஸ்வநாதனின் வீட்டில் அவளது நிலைமை கண்டு ஓரளவு உதவி செய்தார்கள். ராகவன் சொன்னதற்கு நேர்மாறாக, பவித்ரா படிப்பதைப் பார்த்தப்பின்னரும் கூட சந்துருவிற்கு கல்வியில் ஆர்வம் இல்லாமல் போனது. பள்ளிக்கூடம் செல்வதற்கு முரண்டு பிடித்தான். கல்வியின் அவசியத்தை மீனாட்சி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சந்துரு கேட்கவில்லை. அரவிந்தனின் வீட்டிற்கு மீனாட்சியுடன் அவனும் போக ஆரம்பித்தான். அங்கே சும்மா இருந்தவனை சின்ன சின்ன வேலைகள் வாங்கிய அந்தக் குடும்பத்தினர் நாளடைவில் அவனை நிரந்தரமாகத் தங்கள் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி நல்ல சம்பளமும் கொடுத்தனர். பவித்ரா மட்டும் மிக நன்றாகப்படித்து முதன்மையான மதிப்பெண்கள் பெற்று அறிவாளியாகத் திகழ்ந்தாள். பவித்ராவின் படிப்பு செலவிற்கும் விஸ்வநாதன் குடும்பத்தினர் உதவி செய்தனர். மீனாட்சியின் கைப்பாங்கான சமையலும், அவளது சேவை மனப்பான்மையும் அவர்களுக்கு அதிகமாய் பிடித்து விட்டது.
உடல் உழைப்பு ஒரு புறமிருக்க அதைவிட மன உளைச்சலில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த மீனாட்சி, பவித்ரா படிப்பு முடித்து வேலைக்கு சேர்ந்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள். உழைத்துத் தேய்ந்த அவளது உடம்பிற்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதற்கேற்ற சூழ்நிலையும் உருவாகி விட்டதால் அரவிந்தன் வீட்டு வேலையிலிருந்து நின்று கொண்டாள்.
சந்துரு மட்டும் அங்கே தன் பணியைத் தொடர்ந்தான். 'உன் உடலுக்குத்தான் ஓய்வு. உன் உள்ளத்திற்கு அது என்றும் கிடைக்காது’ என்பது போல் மீண்டும் விதி அவளைப் பார்த்து சிரித்தது.
பவித்ரா அரவிந்தன் மீது காதல் எனும் வலையில் சிக்கிக் கொண்டாள். அந்தக் காதல் ஏற்படுத்தியுள்ள சூறாவளி அவளுக்கு பேரிடியாக இருந்தது. தெய்வமாகிப் போன கணவன், அண்ணன், அண்ணி ஆகியோரை நினைத்து கண்ணீர் வடித்தாள். இனி என்ன ஆகுமோ என்ற திகில் அவளை ஆக்ரமித்துக் கொண்டது.
எஸ். எஸ். ஃபைனான்ஸ் கம்பெனியின் அலுவலகத்தில், பவித்ராவின் அறை, ஏ.ஸி. யின் மெல்லிய ரீங்காரம் தவிர வேறு எந்த ஓசையும் இன்றி அமைதியாக இருந்தது. முக்கியமான ஃபைல் ஒன்றில் மூழ்கிப் போயிருந்தாள் பவித்ரா. 'பளிச்’ என்ற நிறம். எடுப்பான மூக்கு. அழகிய கண்கள். சிவந்த உதடுகள். நெற்றியில் புரளும் கற்றைச் சுருள் முடி, அவளது அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது. சாதாரண அழகி அல்ல. காண்போரை அசர வைக்கும் கந்தர்வக் கன்னிக்கு நிகரான பேரழகி.
அழகாய் இருப்பதில் அலாதிப் பெருமை மட்டுமல்ல அகம்பாவமும் கொண்டவள். உயர் கல்வியும், அக்கல்வியினால் கிடைத்த உயர் உத்யோகமும் ஒரு கம்பீரத்தையும் அளித்திருந்தது.
வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே அவளது எம்.டி.யின் மதிப்பில் உயர்ந்து நிற்குமளவு திறமைசாலியாக இருந்தாள். எனவே சம்பளமும் உயர்ந்துக் கொண்டே போனது. தன் அறிவுக்கு ஏற்றபடி, நகரத்தின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தில் உயர் பதவி கிடைத்தது போல தன் அழகிற்கேற்ற அழகனாக, ஆடம்பரமான செல்வந்தனாக கணவன் அமைய வேண்டும் என்ற ஆசைக் கனவில் மிதந்தாள்.
அந்த ஆசைக்குப் பொருத்தமான அரவிந்தனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்ததை நினைத்துப் பார்க்கவே இனிமையாக இருந்தது பவித்ராவிற்கு. அந்த இனிமையான நினைவுகளில் தன்னை மறந்து மூழ்கினாள்.
மீனாட்சி சமையல் வேலை செய்து வந்த செல்வந்தர் விஸ்வநாதனின் மகன் அரவிந்தன், அமெரிக்கா சென்று வந்தபின் அவர்களது வீட்டில் நடைபெற்ற விருந்திற்கு, முன்னாள் சமையல்காரி என்ற தொடர்பை மதித்து அழைத்திருந்தனர்.
பவித்ரா, அவளது சின்ன வயதில் அரவிந்தனின் வீட்டிற்கு அவ்வப்போது, மீனாட்சியுடன் போவது வழக்கம். நாளடைவில் படிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்தபின் அங்கே போவது குறைந்து, பின் அறவே நின்று போனது.
பல வருடங்களுக்குப் பிறகு அந்த விருந்தில் கலந்துக் கொள்ள மீனாட்சியுடன் சென்றிருந்த பவித்ரா, அமெரிக்காவிலிருந்து வந்திருந்த அரவிந்தனைப் பார்த்ததும் பிரமித்துப் போனாள்.
இங்கே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது ஒல்லியான உடல்வாகுடன், ஓடுங்கிய கன்னங்களுடன் மண்புழு போல மிக மெல்லிய மீசையுடன் சுமாராய் இருந்த அரவிந்தன் அமெரிக்கா சென்று வந்தபின் நல்ல பளபளப்புடன், கன்னங்கள் செழிப்பாகி, மீசை மழித்த முகத்துடன், கூடுதலான வசீகரத்துடன் ஹிந்தி திரைப்பட நடிகர் போலக் காணப்பட்டான்.
பவித்ராவைப் பார்த்த அரவிந்தனும் திகைத்துப் போனான். அழகாய் இருந்த பவித்ரா, இன்று பேரழகியாய் இருப்பதைப் பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். ரஸித்தான். ரஸித்துக் கொண்டே இருந்தான். அவளது மையலில் மயக்கம் கொண்டான். அவளுடன் பேசுவதற்குத் தயக்கம் தடை செய்தது.
அரவிந்தனின் சித்தி மகள் மாலினி தடதட வென்று ஓடி வந்தாள்.
"என்னடா அரவிந்தா? பவித்ராவைப் பார்த்து அப்படியே மலைச்சுப் போயிட்ட? நம்ம மீனாட்சியம்மாவோட பொண்ணு பவித்ராவை அடையாளம் தெரியலியா? பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு 'தஸ்புஸ்’ன்னு, இங்கிலீஷ்ல பேசி பிச்சு வாங்கறா. என்னடி பவித்ரா, பெரிய கம்பெனியில நல்ல வேலை கிடைச்சுடுச்சாமே? படிச்சு முடிச்ச உடனே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்ட. அடுப்படியில வெந்துக்கிட்டிருந்த உங்கம்மாவையும் வீட்ல உட்கார்த்தி வச்சுட்ட. உங்கம்மாவோட கைமணம் யாருக்கும் வராதுடி. சரி.. சரி. பந்தி ஆரம்பிச்சாச்சு. போய் சாப்பிடு." வாயாடியான மாலினி, பொரிந்து தள்ளிவிட்டு நகர்ந்தாள்.
பவித்ராவைப் பார்த்து புன்னகைத்தான் அரவிந்தன். அந்தப் புன்னகை வெளிப்படுத்திய ஆயிரமாயிரம் அர்த்தங்களை அறிந்துக் கொண்டாள். புரிந்துக் கொண்டாள் பவித்ரா. அதன் பிரதிபலிப்பாக தன் பார்வையைப் பரிமாறினாள்.
விருந்து தடபுடலாகவும், விழா கோலாகலமாகவும் நடைபெற்றது. வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அரவிந்தன், தன்னைத் தேடி வந்து பார்ப்பதும், சிரிப்பதும் தன் அழகை ரஸிப்பதையும் உணர்ந்தாள். உள்ளம் பூரித்தாள்.
சாதாரணமான பார்வையிலிருந்து மெல்ல, பேச்சு ஆரம்பித்தது. ஆரம்பித்த பேச்சு, சந்தோஷமாகத் தொடர்ந்தது.
அன்றைய விழா, இருவரது இதயங்களும் இணைவதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அன்றைய ஆரம்பம்... அதன் தொடர்ச்சி... எல்லாமே இனிமைதான். ஆனால் முடிவு? பேரழகி என்பதைத்தவிர, அந்தஸ்து ரீதியாகப் பார்த்தால் அவள் ஜீரோ. அவன் ஹீரோ.
அழகால் அரவிந்தனை அடையலாம். ஆனால் அவனது குடும்பத்தினரை? சரிநிகர் சமமான பணம், நகைகள், வாகனங்கள், சொத்துக்கள், பெண் வீட்டாரின் செலவில் விமரிசையான கல்யாணம் இவைதான் அவர்களைத் திருப்திப் படுத்தும்.
இது தெரிந்தும் அரவிந்தன் மீதான காதல் வலையில் சிக்கிக் கொண்டாள். அறிந்தும் அறியாமலும் அகப்பட்டுக் கொண்ட அவள், அதிலிருந்து மீள்வாளா? நினைவுகளின் நீச்சலிலிருந்து கரை வந்து சேர்ந்த பவித்ராவின் கவனத்தைக் கலைத்தது ப்யூன் ஆறுமுகம் கொண்டு வந்த சூடான காபியின் நறுமணம். நான்கு மணிக்கு சுடச்சுட காபி வேண்டும் அவளுக்கு. காபியை ரஸித்துக் குடித்தாள். காத்திருந்து காபி கப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஆறுமுகம்.
"மே ஐ கம் இன்?"
"யெஸ்... ப்ளீஸ்.."
பவித்ராவின் எம்.டி. ஷ்யாம் சுந்தர். நல்ல உயரம். சுமாரான நிறம் எனினும் களையான முகம். தங்க நிற ஃப்ரேமில் கண் கண்ணாடி அணிந்திருந்தான். அது அவனுக்கு கூடுதலான கம்பீரத்தை அளித்திருந்தது. அந்த இளம் வயதிலேயே பெரிய நிதி நிறுவனத்தின் எம்.டி.யாக உயர்ந்து, நிறுவனத்தை திறமையாக நிர்வகித்து, சாதனையாளனாக பிரபலமடைந்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றாள் பவித்ரா.
"இன்டர்காம்ல கூப்பிட்டிருக்கலாமே ஸார்.."
"அதனாலென்ன பவித்ரா... சேர்ல ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கறது கஷ்டமா இருந்துச்சு. அதான் வந்தேன். நீங்க உட்காருங்க."
பவித்ரா உட்கார்ந்தாள். அவள் முன் ஒரு ஃபைலை வைத்தான் ஷ்யாம் சுந்தர்.
"சில்வர் ஸ்டார் கம்பெனிக்கு நாம ஃபைனான்ஸ் பண்ணினது மூணு கோடி. அவங்க அதைத் திருப்பித் தர வேண்டியது செப்டம்பர் மாசம். இன்னும் அந்தப்பணம் வரலை. முதல் மூணு மாசம் வட்டியைக் கட்டியிருக்காங்க. அதுக்கப்புறம் வட்டியும் வரலை. குடுத்த தொகையும் வரலை..."
"ஸார். ஏற்கெனவே அந்தக் கம்பெனிக்கு வார்னிங் நோட்டீஸ் குடுத்தாச்சு. குடுத்த மறுநாளே அந்தக் கம்பெனியோட ஜி.எம். வந்து பேசினார். இன்னும் ரெண்டு மாசத்துல வட்டியோட, அசலையும் கொண்டு வந்து குடுத்துடறதா சொன்னார்.
அவங்க எம்.டி. வெளிநாட்டுக்குப் போயிட்டதால லேட்டாயிடுச்சுன்னு சொன்னார். நீங்க ரெண்டு நாளா ஊர்ல இல்லாததுனால டெய்லி ரிப்போர்ட்ல இந்த தகவல்களெல்லாம் டைப் பண்ணி உங்க டேபிள் மேல வச்சிருக்கேனே ஸார்..."
"அப்படியா? நான் பார்க்கலை. எல்லா வேலையையும் டைமுக்கு கரெக்ட்டா செஞ்சுடறீங்க. இதுக்கு முன்னால உங்க இடத்துல இருந்தவருக்கு எல்லாமே நான் ஞாபகப்படுத்தணும். நீங்க வந்தப்புறம் நான் ரொம்ப ரிலாக்ஸ்டாயிட்டேன்."
"தினமும் கூடிய வரைக்கும் எல்லா ஃபைலையும் பார்த்துடறேன் ஸார். வெற்றி ப்ரொடக்ஷன்ஸ்ன்னு ஒரு சினிமா கம்பெனிக்காரங்க கூட வட்டி கட்டாம இருக்காங்க. அவங்களுக்கும் வார்னிங் லெட்டர் எழுதி அனுப்பணும்."
"வெற்றி ப்ரொடக்ஷன்ஸா? பேருக்கேத்தாப்ல அவங்க பண்ற படங்கள் எல்லாமே வெற்றிப்படங்கள்தான். கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பணம் வந்துடும்."
"எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுதானே ஸார்.."
"நீங்க சொல்றதும் சரிதான். உங்களைப் போல திறமையான எக்ஸிக்யூடிவ் இருக்கும்போது எனக்கு எந்த டென்ஷனும் இல்ல."
"தாங்க் யூ ஸார்"
கொண்டு வந்த ஃபைலை கையில் எடுத்துக் கொண்டு எழுந்தான் ஷ்யாம் சுந்தர். அவன் போனதும், அறையின் கதவு தானாக மூடிக் கொள்ளும் சாதனம் பொருத்தியிருந்தபடியால் மிக மெதுவாக மூடிக் கொண்டது. ஆனால் பவித்ராவின் மனம் திறந்து கொண்டது. சிந்தனை, பரந்து விரிந்தது.
'எம்.டி. ஷ்யாம் சுந்தர் அவரோட ரூம்ல இருந்தே இன்ட்டர்காம்ல பேசி இருக்கலாம். நான் வச்சிருந்த டெய்லி ரிப்போர்ட்டையும் பார்த்தாரா பார்க்காத மாதிரி பேசறாரா?... அவரோட கண்ல தெரியற மாதிரிதான் வச்சிருந்தேன். எதற்காக என் ரூமைத் தேடி வரணும்? யோசிச்சு யோசிச்சுப் பேசறார். இதுக்கெல்லாம் என்ன காரணமாயிருக்கும்? வேறென்ன? என் அழகு. என் அழகினால் ஈர்க்கப்பட்டுத்தான் ஏதாவது சாக்கு வைத்துக் கொண்டு அடிக்கடி என் ரூமுக்கு வருகிறார்’ நினைத்துப் பார்த்து பெருமிதப்பட்டுக் கொண்டாள்.
அவளது அறையில் அவளுக்கென்றிருந்த பிரத்தியேகமான டாய்லெட்டிற்குள் சென்றாள். முழுக்க க்ரானைட் தரை பதித்திருந்தது. அங்கே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகைத் தானே ரஸித்தாள். என் அழகிற்கேற்ற அழகன் அரவிந்தன். என் அழகை ஆராதிக்கும் அரவிந்தன். அரவிந்தனுடன் அமெரிக்க வாழ்க்கை.. என் கனவு நிறைவேறும்."
"அழகே... அழகே... தேவதை..." திரைப்படப்பாடலை முணுமுணுத்தபடி தன் இருக்கைக்கு வந்து உட்கார்ந்தாள் பவித்ரா.
பவித்ராவின் மொபைல், இனிமையாகப் பாடியது. நம்பரைப் பார்த்தாள். பரபரப்பானாள். அரவிந்தனின் குரல் கேட்டது.
"என்ன பவித்ரா, வேலையா இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டனா?"
"இல்லை அரவிந்த். சொல்லுங்க."
"நம்ப திட்டப்படி, எல்லாம் சரியா நடக்கும்ல? திடீர்னு நீ, பின் வாங்கிட மாட்டியே?.."
"இந்தக் கேள்வி நான் உங்களைக் கேட்க வேண்டியது. நீங்கதான் எல்.கே.ஜி. ஸ்டூடண்ட் மாதிரி பயந்து ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கற திட்டம் போட்டிருக்கீங்க. தைர்யமா எல்லாருக்கும் சொல்லிட்டு, அவங்க சம்மதிக்காத பட்சத்துல நாம ரிஜிஸ்ட்ரர் ஆபீஸ்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னா வெளியூருக்குத்தான் போகணும்ங்கறீங்க.. ஏன்தான் இப்படி பயந்து நடுங்கறீங்களோ?.."
"சரிம்மா தாயே.. நீ வீரமான ஜான்ஸிராணிதான்.."
"நீங்க ப்ருத்விராஜனா இல்லையே?"
"உன் கிண்டலும் கேலியும் போதும்மா. போதும்."
"சரி. சரி. நீங்க பேசினதும் போதும். எனக்கு வேலை இருக்கு. ஸாரி. கொஞ்சம் ஃரீயானப்புறம் நானே கூப்பிடறேன். ப்ளீஸ்..."
"ஓ.கே."
மொபைல் போனை அடக்கி விட்டு, முக்கியமான ஃபைல்களில் மூழ்கினாள் பவித்ரா.
வலது கையினால் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த சந்துருவைப் பார்த்தான் குரு.
"என்ன சந்துருண்ணே, தலையில கையை வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க. ஏன் மூட் அவுட் ஆகி இருக்கீங்க?"
"இங்க பாருடா குரு, நீ சொன்னத வச்சுத்தான் பவித்ரா, அரவிந்தனும் போட்டிருக்கற திட்டத்தைப் பத்தி அத்தைக்கிட்ட சொன்னேன். நீ எதுவும் ஏடாகூடமா உளறலையே?"
"பவித்ரா அக்கா கூட அரவிந்தன் ஸார் செல்பொன்ல பேசிக்கிட்டிருந்தது எல்லாத்தையும் நான் நல்லா கவனிச்சிட்டுதான் உங்கக் கிட்ட வந்து சொன்னேன். நான் அரவிந்தன் ஸாரோட ரூம்ல டேபிள் துடைச்சிக்கிட்டிருக்கும்போது பவித்ரா அக்கா கிட்ட இருந்து போன் வந்துச்சு. அரவிந்தன் ஸார், கட்டில்ல அந்தப் பக்கமா திரும்பிப் படுத்துட்டிருந்ததால நான் ரூமுக்குள்ள இருந்ததை அவர் பார்க்கலை. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதைப் பத்தி பேசினதெல்லாம் நான் கேட்டேன். நியாயமா சொல்லப் போனா கள்ளத்தனமா நான் ஒட்டுதான் கேட்டேன். நான் அப்படி செஞ்சது தப்புதான். ஆனா, அவங்க தப்பு செய்யப் போறதைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டா அத தடுக்கறதுக்கோ, அல்லது அவங்களுக்கு உதவி செய்றதுக்கோ உங்ககிட்ட சொல்லலாம்னுதான் நான் அந்தத் தப்பை செஞ்சேன். அதனாலதான் இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லாம உங்க கிட்ட மட்டும் சொன்னேன்."
"அரவிந்தன் நல்லவனா இருந்தா நீ நினைச்ச மாதிரி நானே அவங்களுக்குத் தேவையான உதவி செஞ்சிருப்பேன். இப்ப அவங்க திட்டத்தை முறியடிக்கிறது ஒண்ணுதான் பவித்ராவுக்கு நல்லது. அதனாலதான் உன்கிட்ட திரும்ப திரும்ப கேக்கறேன். நீ சொன்ன தகவல் சரிதானான்னு."
"நூத்துக்கு நூறு சரியான தகவல்தான் அண்ணா. இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட சொன்னதிலிருந்து உங்களைப் பார்த்தாத்தான் எனக்கு கவலையா இருக்கு. எப்பவும் கலகலன்னு பேசிக்கிட்டு சுறுசுறுப்பா எதையாவது செஞ்சிக்கிட்டிருக்கற நீங்க, ரொம்ப டல்லடிச்சுப் போய் இருக்கீங்க. நான் ஒண்ணு கேக்கறேன். பவித்ராக்காவுக்காக இவ்வளவு கவலைப்படறீங்களே... நீங்க பவித்ரா அக்காவை காதலிக்கிறீங்களா?... அவங்க உங்களோட அத்தைப் பொண்ணாச்சே.. "
"தெரியலடா, சின்ன வயசிலேர்ந்தே எங்க ரெண்டுபேர் குடும்பமும் சேர்ந்து ஒரே வீட்லதான் வாழ்ந்தோம். பவித்ராவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ என்கிட்ட அன்பா பழகலன்னா கூட நான் அவமேல பாசம் வச்சிருக்கேன். அவ என்னை அதட்டிக்கிட்டும், மிரட்டிக்கிட்டும்தான் இருப்பா. அவ அப்படி பண்றதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. இன்னொரு விஷயம்... அவ அப்படியெல்லாம் பண்ணாம மௌனமா இருந்தாள்னா என் மேல கோபமா இருக்கான்னு அர்த்தம். சின்ன வயசுல இருந்து இன்னிக்கு வரைக்கும் இப்படித்தான் நான் அவளை புரிஞ்சு வச்சிருக்கேன். இது சரியா தப்பான்னு நான் யோசிச்சு பார்க்கறது கிடையாது. கூட பிறந்தவங்களா இருந்தா அண்ணன், தங்கச்சின்னு சொல்வாங்க. ஒருத்தன் ஒருத்தியைக் காதலிச்சா காதலன், காதலின்னு சொல்வாங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டா கணவன், மனைவின்னு சொல்வாங்க.
ஆனா பவித்ரா மேல நான் வச்சிருக்கற அன்புக்கு, என்ன பேர் சொல்றதுன்னு எனக்கே புரியலடா. பவித்ரா சந்தோஷமா இருக்கணும். அவ வாழ்க்கை நல்லபடியா இருக்கணும். இதுதான் என்னோட ஒரே எண்ணம்... சரிடா குரு, நீ உன் வேலையைப் பாரு. மத்ததை நான் பார்த்துக்கறேன்." சொல்லிவிட்டு சந்துரு கிளம்பினான்.
இரத்த அழுத்தத்திற்காக உட்கொள்ளும் மாத்திரை போக, மீனாட்சிக்கு இரவில் அமைதியாக தூங்கக்கூடிய மாத்திரையும் சாப்பிடச் சொல்லி டாக்டர் பரிந்துரைத்திருந்தார். வழக்கம் போல, தூக்க மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொண்ட மீனாட்சி ஆழ்ந்து தூங்கி விட்டாள்.
தூங்கிக் கொண்டிருந்த மீனாட்சியின் அருகே அமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
'அம்மாவின் அறிவுரையை மீறி, அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். விஷயம் தெரிஞ்சதும் அம்மா துடித்துப் போவாள். அழுது தீர்ப்பாள். என்ன செய்றது? என் நிலைமை அப்படி. கல்யாணம் பண்ணிக்கிட்டப்புறம், அரவிந்தனோடு சேர்ந்து வந்து சமாதானப்படுத்திடலாம் தனக்குத் தானே தைர்யமூட்டிக் கொண்ட பவித்ராவின் நெஞ்சம் சற்று கலங்கினாலும் கூட அவளது கண்களிலிருந்து சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை.
மீனாட்சியின் பஞ்சு போன்ற மனதிற்கு நேரெதிராக மிகமிக திடமான நெஞ்சுறுதி கொண்டவள் பவித்ரா. சின்ன வயதில் அப்பாவை இழந்து, அம்மா பட்ட கஷ்டங்களைப் பார்த்து, தானும் சிரமப்பட்டு.. அந்த அனுபவங்கள் அவளுக்கு அளவற்ற மனதிடத்தையும் தைர்யத்தையும் அளித்திருந்தது. எந்தக் காரணத்திற்காகவும் கண் கலங்கவே கூடாது என்கிற வைராக்கியம், வைரம் போல் அவள் இதயத்தில் பதிந்திருந்தது.
விமான நிலையத்தில் வந்து இறங்கிய பவித்ராவையும், அரவிந்தனையும் சுற்றி, அரவிந்தனின் பெற்றோர், சில உறவினர்கள், சந்துரு அனைவரும் ஒரு வியூகம் போல் சூழ்ந்துக் கொண்டனர்.
அரவிந்தனின் அப்பா விஸ்வநாதனின் முகம் இறுகியிருந்தது. குரல் ஓங்கியது.
"டேய் அரவிந்தா, வந்து நம்ம கார்ல ஏறு. நம்ம வீட்டுக்குப் போகணும்" புலி போல் உறுமினார் விஸ்வநாதன்.
"அப்பா... " பூனை போல வாய்க்குள்ளயே முனகினான் அரவிந்தன்.
"எதுவும் பேசாம, கார்ல ஏறு.."
"அப்பா... பவித்ரா...."
"நம்ம வீட்ல சமையல் வேலை செஞ்சவளோட மகள் நம்ம வீட்டு மருமகளாயிடுவாளா? வெட்கமா இல்ல... நாலெழுத்து படிச்சுட்டாள்னா...? இவ அந்தஸ்து உசந்துடுமா? இவ படிச்சதே நாம பண்ண உபகாரம்தான். அதுக்கு நன்றிக் கடனாத்தான் இப்படி உபத்திரவம் கொடுக்கறா போலிருக்கு. இவளைப் பத்தி எனக்கென்ன பேச்சு? வாடா, வந்து கார்ல ஏறு."
"என்னைக் கொஞ்சம் பேச விடுங்கப்பா ப்ளீஸ்..."
"நான் பேசறதை நீ கேட்டுக்கோ. இவளை விட்டுட்டு இவளை மறந்துட்டு எங்க கூட வந்தாத்தான் நான் சுயமா சம்பாதிச்சிருக்கற சொத்துக்கள் அத்தனையும் உனக்குக் கிடைக்கும். இவதான் வேணும்னு முடிவு பண்ணிட்டா, இப்பிடியே இப்பவே இவ கூடவே போயிடு."
அழுத்தம் திருத்தமாக விஸ்வநாதன் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தான் அரவிந்தன். விஸ்வநாதன் வீசிய ஏவுகணை அவன் எதிர்பாராதது. எதிர்த்துப் பேசத் துணிவின்றித் திகைத்தான். அவனது முகத்தையே கூர்ந்துக் கவனித்துக் கொண்டிருந்த பவித்ராவை தயக்கமாய் பார்த்தான். பயந்தான். அவளது பார்வையைத் தவிர்த்துவிட்டு,... மெதுவாகக் காரை நோக்கி நடந்தான்.
அவனைப் பின் தொடர்ந்து சென்றனர் விஸ்வநாதனும் அவருடன் வந்தவர்களும். சந்துரு மட்டும், தனித்து விடப்பட்ட பவித்ராவின் அருகே அவளுக்குத் துணையாக நின்றான்.
அரவிந்தனின் அந்தக் கோழைச் செயல் பவித்ராவை நிலைகுலையச் செய்தது. அவமானப்படுத்தியது. காது மடல்கள் சிவக்க, கோபம் குறையாத முகத்துடன் அரவிந்தனின் முதுகை முறைத்தாள் வேறேதும் செய்ய இயலாதவளாய். அவன், இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் காரில் ஏறிக் கொண்டான். கார் கிளம்பியது.
பவித்ராவின் உள்ளத்தில் புயல் எழும்பியது. தன் அருகே நின்றுக் கொண்டிருந்த சந்துருவைப் பார்த்துப் பல்லைக் கடித்தாள்.
"உன்னோட கைங்கர்யம்தானே இதெல்லாம்? இப்ப திருப்திதானே? சந்தோஷம்தானே?..."
"நிச்சயமா சந்தோஷம்தான் பவித்ரா. அரவிந்தன் செஞ்ச காரியத்தைப் பார்த்தியா? 'சொத்து கிடைக்காது’ன்னு மிரட்டியதும் நீயே வேணாம்ன்னுட்டு நாய்க்குட்டி மாதிரி அவங்கப்பா பின்னாடியே போயிட்டான். அவனுக்கென்ன படிப்பு இல்லையா? உழைக்கறதுக்கு உடம்புல தெம்பு இல்லையா? பணம் சம்பாதிக்கறதுக்கு வேண்டிய அறிவும், திறமையும் இல்லையா? அப்பாவோட ஆஸ்திக்கு ஆசைப்பட்டு அம்போன்னு உன்னை நடுத்தெருவுல விட்டுட்டுப் போற அவனோட உனக்குக் கல்யாணம் நடக்கறதுல இருந்து நீ தப்பிச்சுட்டியேன்னு உண்மையிலயே நான் சந்தோஷப்படறேன் பவித்ரா."
சந்துரு பேசியதில் இருந்த உண்மைகள் அவளை சுட்டன. அவளது வாய்க்கு பூட்டு போட்டன.
சந்துரு தொடர்ந்தான். "உங்க ரெண்டு பேரையும் தடுக்கறதுக்கு இதைத் தவிர வேற வழியே எனக்குத் தெரியலை. அரவிந்தனின் நிறம் மாறும் நிஜத்தை நேர்லயே பார்த்துட்டே. இதுதான் அரவிந்தனின் சுய ரூபம். உன் அழகுக்காகவும், அறிவுக்காகவும் உன்னைக் காதலிச்ச அவன், உன்னோட கஷ்டங்கள்ல்ல பங்கெடுத்துக்க விரும்பலை பார்த்தியா? அவன், உன்னைப் போலவோ என்னைப் போலவோ கஷ்டங்களில் எதிர்நீச்சல் போட்டு வளர்ந்தவன் இல்லை. சொகுசான வசதிகளில் மிதந்து சுகமாக வளர்ந்தவன். அந்த சுகத்திலேயே வாழ நினைக்கறவன். அவங்கப்பாவோட சொத்து இல்லாம அவனால வாழ முடியாது. உன்னை விட பொன், பொருள், வசதியான வாழ்க்கை... இதெல்லாம்தான் அவனுக்குப் பெரிசு. நீயெல்லாம் வெறும் தூசு. உனக்காக, உன்னை மட்டுமே நேசிக்கக் கூடியவன்தான் உனக்குக் கணவனா வரணும். அவன் நல்லவனா... வல்லவனா இருக்கணும்."
பவித்ராவிடம் பொறுமையாக பேசினான் சந்துரு. அவன் மீதான கோபம் மாறாத சிவந்த முகத்துடன் காணப்பட்டாள் பவித்ரா. அவளது கோபத்தைப் பொருட்படுத்தாத சந்துரு, நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
"ஏர்போர்டிலிருந்து அரவிந்தனை கூட்டிட்டு வந்ததுலேர்ந்து அவனுடைய முகமே சரியில்லங்க. என்ன இருந்தாலும்- சொத்துக் கிடையாது, அப்படி இப்படின்னு நீங்க அவனை மிரட்டியிருக்கக் கூடாதுங்க" விஸ்வநாதனைப் பார்த்து பேசிய ஜானகியின் முகம் அசையும்போது அவளது காதுகளில் அணிந்திருந்த பெரிய வைரக் கம்மல் பளீர் பளீர் என மின்னி ஜொலித்தது. கட்டியிருந்த விலையுயர்ந்த காஞ்சிபுரப்பட்டின் ஜரிகைபார்டரை கைகளால் தடவியபடியே விஸ்வநாதனின் முகத்தை ஆராய்ந்தாள். கோபம் தென்பட வில்லை என்பது தெரிந்ததும் பேச்சைத் தொடர்ந்தாள்.
"ஏங்க, நான் ஒண்ணு சொல்றேன்... கோபப்படாதீங்க. அந்த பவித்ரா பொண்ணு நல்லா அழகாத்தானே இருக்கா. நம்ம அரவிந்தன் அவ மேல ஆசைப்பட்டதுல என்ன தப்பு?..."
"தப்பு அதுல இல்ல ஜானகி. ஏழைக் குடும்பத்துல பிறந்து வளர்ந்துருக்கா பாரு. அதுதான் தப்பு."
"நம்ம கிட்ட இல்லாத பணமாங்க, நீங்க சம்பாதிச்சு அரவிந்தனுக்கு ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்கீங்க... இன்னும் எதுக்கு பணம் பணம்னு பாகுபாடு பார்க்கறீங்க."
"இது பணப்பிரச்னை மட்டும் இல்ல ஜானகி, நம்மளோட கௌரவப் பிரச்னை. உன் பையனுக்கு எங்கே பொண்ணு எடுத்திருக்கீங்க அப்படின்னு நம்ம சொந்தக்காரங்க கேட்கும்போது நீ என்ன பதில் சொல்லுவ? எங்க வீட்டு சமையல்காரியோட பொண்ணுன்னு சொல்லுவியா? அது நமக்கு கௌரவமா? கௌரவமும், அந்தஸ்தும் கிடைக்கறதுக்கு முதல் காரணமே இந்தப் பணம்தான். அழகு அது இதெல்லாம் அவ்வளவு முக்கியமில்ல. நம்பளப் பத்தி ஃபேமஸ் பேமிலி அப்படிங்கற ஒரு இமேஜ் இருக்கு. சொஸைட்டியில பெரிய மரியாதை இருக்கு. இதையெல்லாம் இழக்க நான் தயாரா இல்ல... 'பணம் பணத்தோட, இனம் இனத்தோட’ அதுதான் சரி."
"உங்களுக்கு சரின்னு படறது அவனுக்கும் சரிப்பட்டு வரணுமேங்க. மனசுல ஒருத்தியை நினைச்சுக்கிட்டு கல்யாணம் வரைக்கும் போயிட்டானே, அவனுக்கு கஷ்டமாதானே இருக்கும்."
"ஒரு கஷ்டமும் இல்ல ஜானகி. சொத்து கிடையாதுன்னு நான் சொன்னவுடனே நம்ம பின்னாடியே வந்துட்டான். அது மாதிரி கொஞ்ச நாளைக்கு அந்தப் பொண்ணோட அழகையும், அவமேல ஆசைப்பட்டதைப் பத்தியும் நினைச்சுக்கிட்டிருப்பான். அப்புறம் எல்லாம் சரியாயிடும்."
"சரியானா எனக்கும் சந்தோஷம்தாங்க. நமக்கு இருக்கறது ஒரே மகன். அவன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்குத் தேவை..."
"ஜட்ஜ் நாராயணனோட மகள் வயிற்றுப் பேத்தி ஜாதகம் வந்திருக்கு. பொருத்தமெல்லாம் பார்த்தாச்சு. பொண்ணு சுமாராத்தான் இருப்பான்னு தரகர் சொன்னார். அதப்பத்தி நமக்கென்ன, பொண்ணு பேர்ல ஏகப்பட்ட சொத்து இருக்காம். நாநூறு பவுன் நகை போடறாங்களாம். பொண்ணோட அப்பா நடத்தற எக்ஸ்போர்ட் கம்பெனியில அந்த பொண்ணுக்கும் பங்கு இருக்காம். பொண்ணுக்கு கொடுக்கற சீர் வரிசைகள் போக கல்யாண செலவையும் அவங்களே பார்த்துக்கறாங்களாம். நம்பளுக்கு எப்படி அரவிந்தன் ஒரே பையனோ அதே மாதிரி அந்தக் குடும்பத்துக்கும் அந்தப் பொண்ணு மட்டும்தான் வாரிசாம். எல்லாம் விசாரிச்சுட்டேன். ஒரு மாசம் டைம் கேட்டிருக்கேன். அரவிந்தன்ட்ட கொஞ்சம் கொஞ்சமா பேசி அவனோட மனசை மாத்தி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு..."
"என்னமோங்க... அவன் மனசு மாறிட்டான்னா நல்லதுதான்"
"நல்லதே நடக்கும். நீ குழம்பாம நிம்மதியா இரு. இந்த விஸ்வநாதன் சொன்னா சொன்னதுதான்."
அவரது வார்த்தைகளில் ஓரளவு சமாதானமாகி விட்டாள் ஜானகி.
மறுநாள் காலை. மாத்திரையின் விளைவால் அயர்ந்து தூங்கிய கலக்கம் மாறாத முகத்துடன், கவலை சூழ்ந்து கொண்ட மனதுடன் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் மீனாட்சி. அவளுக்கெதிரே முழங்கால்களால் முகத்தைத் தாங்கியபடி ஒரே இடத்தை வெறித்துப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் பவித்ரா.
"உன்னோட அழகுல மயங்கி, ஆசை வார்த்தை பேசியிருக்கான் அந்த அரவிந்தன். அதை உண்மையான காதல்னு நம்பி கனவுல மிதந்துக்கிட்டிருந்த. எத்தனையோ எடுத்துச் சொல்லியும் நீ பிடிவாதமா இருந்த. என்னதான் நீ நிறைய படிச்சுட்டு உத்யோகத்துல இருந்தாலும் அவங்களைப் பொறுத்தவரைக்கும் நீ சாதாரண சமையல்காரியோட பொண்ணுதான்..."
"போதும்மா. இதுக்கு மேல வேற எதுவும் பேச வேணாம்..."
"என் வாயை அடைச்சுட்டா போதுமா? உன் வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னுதான் பேசறேன். இருண்டு போன என்னோட வாழ்க்கைக்கு வெளிச்சமா நீ இருந்த. உன்னோட மாமாவும், அத்தையும் சந்துருவை விட்டுட்டு போனப்ப அவனையும் ஆதரிக்க வேண்டிய நிலைமை. உங்களை வளர்க்கறதுலதான் என் கவலைகளை ஓரளவு மறந்தேன். சந்துருவுக்கு படிப்பு ஏறலை. நீ கெட்டிக்காரியா நல்லா படிச்சு மேல மேல வந்தப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். உன்னோட நல்ல எதிர்காலம்தான் எனக்கு நிம்மதி. நீ அழகுதான். உன்னைப் பெத்தவள்ங்கற முறையில எனக்கும் அதில பெருமைதான். உன்னோட அழகு, உனக்கு ஆணவத்தையும், அகங்காரத்தைம் வளர்த்துடுச்சு. ஒரு பொண்ணோட அழகு அவளுக்கு அலங்காரமா இருக்கலாம். அதுவே அவ வாழ்க்கையை அலங்கோலமாக்கிடக் கூடாது. அழகானவன், பணக்காரன் புருஷனா கிடைச்சாத்தான் உன் அழகுக்கேத்த வாழ்க்கைன்னு நீ நினைக்கற. அது தப்பு. அழகும், வசதியும் நிறைஞ்சவன், குணம் கெட்டவனா இருந்தா என்ன பண்ண முடியும்? வசதி குறைஞ்சவனா இருந்தாலும் உன்னைப் புரிஞ்சுக்கிட்டவனா இருக்கணும். காலம் முழுசும் கண் கலங்காம பார்த்துக்கறவனா இருக்கணும். எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் நீ கண்ணீர் விட மாட்ட. அது உன் பலம். அந்த பலம் உன்னோட நல்லதுக்குப் பயன்படணும். நீ அற்புதமான அழகிங்கற கர்வம் உன்னோட பலவீனம். அந்த பலவீனம் உன் எதிர்காலத்தை ஊனமாக்கிடக் கூடாது. புரிஞ்சுக்க."
"அம்மா, உன்னோட புராணத்தைக் கொஞ்சம் நிறுத்திக்கோ..."
"நிறுத்த மாட்டேன்டி. உனக்கு ஒரு நல்ல பையன் கிடைச்சு. உனக்குக் கல்யாணம் நடக்கற வரைக்கும் நிறுத்த மாட்டேன். அந்த அரவிந்தன் கூட நீ ஓடிப்போக இருந்த விஷயம், காட்டுத்தீ மாதிரி பரவும். அதுக்கப்புறம் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா?...."
"யாரும் பண்ணிக்க வேணாம். நான் இப்படியே இருந்துடறேன். இப்ப எனக்கு பதினஞ்சாயிரம் சம்பளம். நான் வேலை செய்ற எஸ்.எஸ். பைனான்ஸ் கம்பெனியை சாதாரணமா நினைச்சுடாத. பெரிய கம்பெனி. நாளாக ஆக என்னோட வேலைத் திறமையைப் பார்த்து இன்னும் சம்பளம் ஏத்துவாங்க. கார் குடுப்பாங்க. வீடு கூட குடுப்பாங்க. நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும். இனி உன்னை சுகவாசியா வச்சுப்பேன். எந்தக் கஷ்டமும் இருக்காது."
"கஷ்டம்ங்கறது பொருளாதாரத்துல மட்டும்தான்னு நீ நினைச்சுக்கிட்டிருக்க பவித்ரா. ஏன்னா... நீ வளர்ந்த சூழ்நிலை அப்படி. வறுமையில சிக்கித் திணறி வளர வேண்டிய நிலைமை. 'கொடியது இளமையில் வறுமை’-ன்னு சும்மாவா சொன்னாங்க. அனுபவிச்ச உண்மை. ஆனா காசுப் பற்றாக்குறையை எப்படியாவது கஷ்டப்பட்டு சமாளிச்சுடலாம்... மனசு? அது வேதனைப் படும்போது தாங்கிக்க முடியாது. நீ தைர்யசாலிதான். திடமானவதான். இப்ப உனக்குள்ளயும் வேதனை இருக்கு. அரவிந்தன் அவனோட அப்பா கூட போயிட்டானேன்னுதானே இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்திருக்க?"
"நான் இடிஞ்சு போயும் உட்காரலை. என் மனசும் உடைஞ்சு போகலை. எந்த நிமிஷம் என்னைத் திரும்பிக்கூட பார்க்காம அரவிந்தன் அவங்கப்பா பின்னாடி போனாரோ அப்பவே எனக்கு விட்டுப் போச்சு..."
"பிறகென்ன.. அவனை மறந்துட வேண்டியதுதானே?..."
என் மதிப்பில் துரும்பாகிப் போன அரவிந்தனைத் தூக்கி எறிய, என்னோட இதயத்தை இரும்பாக்கிட்டேன். ஏராளமான பணம், தாராளமான வசதி இதெல்லாம் நிறைஞ்ச வாழ்க்கையை ஒரு ஆம்பளையாலதான் குடுக்க முடியுமா? இதையெல்லாம் நானே என் உழைப்பாலயும், திறமையாலயும் அடைவேன். 'சமையல் காரி மகள்’னு கேவலமா பேசினவங்க கண் முன்னாடி கௌரவமா வாழ்ந்துக் காட்டுவேன். பல பேர் பார்க்க, என்னைத் தலை குனிய வச்ச அந்தக் கும்பல் என்னைத் தலை நிமிர்ந்து பார்க்கற அளவுக்கு உயருவேன்." பவித்ராவின் குரலில் கடுமையும், உறுதியும் வெளிப்பட்டன.
'எப்படியோ அரவிந்தனை மறக்கணும்’னு முடிவு எடுத்துட்டாளே, அது போதும் என நினைத்து சற்று நிம்மதி அடைந்தாள் மீனாட்சி.
பவித்ரா வேலை செய்து வந்த எஸ்.எஸ். நிறுவனம் மேன்மேலும் வளர்ந்தது. செழித்தது. அதன் முறையான நடவடிக்கைகள், நேர்மையான வழிமுறைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. அத்தனையிலும் பவித்ராவின் உழைப்பு, அறிவுத்திறன் இவைதான் பெரும்பங்கு வகித்தது. நிறுவனம் வளர வளர அவளது சம்பளமும் உயர்ந்தது. ஷ்யாம் சுந்தர், அவளது திறமைக்கேற்றபடி அவளுக்கு கம்பெனி சார்பாக கார் கொடுத்தான். நகரத்தின் அமைதியான பகுதியில் வசதிகள் நிறைந்த, மூன்று அறைகள் கொண்ட விசாலமான ஃப்ளாட் ஒன்றை சொந்தமாக வாங்கிக் கொள்வதற்குரிய கடன் வசதியையும் வழங்கினான்.
மீனாட்சிக்கு தன் வாழ்வின் மறுமலர்ச்சியாக பவித்ராவின் வளர்ச்சியும், அதன் அடையாளமாய் கிடைத்த வசதியான வாழ்க்கையும் மகிழ்ச்சியை அளித்தது. உழைத்து உழைத்து ஓடாகிப்போன அவள், உட்கார்ந்து சாப்பிட்டாள். மனதிற்கு சந்தோஷமும், உடலுக்கு ஓய்வும் கிடைத்தது. வாழ்வின் விளிம்பில் நிற்கும் பொழுதுதான் அவளுக்குப் பொழுது விடியும் என்பது அவளது விதியாக இருந்தது. தாமதமாக கிடைத்த வாழ்க்கை என்றபோதும் தயங்காமல் அனுபவித்தாள். என்றாலும், பவித்ரா கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருப்பது குறித்த கவலை அவ்வப்போது அவளை வாட்டியது.
வழக்கம் போல சந்துரு வந்து போய்க் கொண்டிருந்தான். மீனாட்சி அவனுக்கு வித விதமாய் சமைத்துப் போட்டாள். அரவிந்தனின் வீட்டில் செய்து வந்த வேலையை விட்டுவிடும்படியும், தங்களுடன் வந்துத் தங்கிக் கொள்ளும்படியும் மீனாட்சி கூறியபோது மறுத்தான்.
"சின்ன வயசுல இருந்து எனக்கு சோறு போட்டு, துணிமணி குடுத்து அங்கயே தங்கவும் இடம் கொடுத்து, எனக்காக ஸ்கூட்டரெல்லாம் வாங்கிக் கொடுத்து என்னை நல்லா பார்த்துக்கற அவங்ககிட்ட இருந்து வெளிய வர்றது, நன்றி கொல்வதற்கு சமம் அத்தை. என் வாழ்க்கை இப்படியே போகட்டும். நீங்களும், பவித்ராவும் நல்லா இருக்கறதைப் பார்க்கறதே போதும் அத்தை. அங்கே வேலையை விடற பேச்சே இனி வேணாம் அத்தை" என்று முற்றுப்புள்ளி வைத்தான் சந்துரு.
பவித்ராவிற்கு அவன் மீதிருந்த கசப்பு முழுமையாக மாறாததால் அவள் இல்லாத சமயங்களில் மட்டுமே அங்கு வருவான். கூடியவரை அவள் இருக்கும் நேரங்களில் வருவதைத் தவிர்த்து விடுவான்.
ப்யூன் கொண்டு வந்த விலாச அட்டையைப் பார்த்தாள் பவித்ரா. வெற்றி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ஜி.எம். ரவீந்தரின் பெயரைப் பார்த்ததும் உடனே உள்ளே வரச் சொல்லி அனுப்பினாள்.
பவித்ராவின் அறைக்குள் ரவீந்தர் நுழைய, அவரைப் பின் தொடர்ந்து வந்தவன் நடிகர் தருண்குமார். நடிகர் தருண்குமார் முன்னணிக்கு வந்துக் கொண்டிருக்கும் பிரபல திரைப்பட நடிகன். இளைஞன். அழகன். அவனைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டாள் பவித்ரா.
"பவித்ரா மேடம். தருண்குமாரை நான் அறிமுகப்படுத்தித்தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை. உங்களை அவருக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். தருண்குமார், இவங்க மிஸ். பவித்ரா. இந்தக் கம்பெனியின் டெவலப்மெண்ட் எக்ஸிக்யூட்டிவ். இவங்கதான் இப்ப இந்த ஃபைனான்ஸ் கம்பெனிக்கு முதுகெலும்பு..."
"ரவீந்தர் ஸார், போதும் ஸார். ரொம்ப ஓவரா புகழறீங்க. என்ன சாப்பிடறீங்க? காபியா, டீயா?"
"இப்ப எங்களுக்குத் தேவை உங்க ஃபைனான்ஸ். இவரை வச்சு ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கோம். படம் முடியற நேரத்தில கொஞ்சம் பணப் பிரச்னை. ஏற்கெனவே உங்ககிட்ட கடன் வாங்கினதுல மூணு மாசமா வட்டி கட்டாம இருக்கோம். அதனால தருண்குமார் அவரோட பணத்தைப் போட்டு படத்தை முடிச்சுடலாம்னு சொன்னார். ஐம்பது லட்சம் அவர் போட்டுத்தான் படம் இந்த அளவுக்கு முடிஞ்சுருக்கு. இப்ப அவருக்கு நீங்க ஃபைனான்ஸ் பண்ணினீங்கன்னா முழுப்படமும் முடிஞ்சுடும். படம் நல்லா வந்துக்கிட்டிருக்கு. அதனால நல்ல லாபம் கிடைக்கும். உங்க பணத்தை வட்டியோட தருண்குமார் குடுத்துடுவாரு." படபடவென பேசி முடித்தார் ரவீந்தர்.
ஏதோ ஒரு உள்ளுணர்வு உணர்த்த, தருண்குமாரைப் பார்த்தாள் பவித்ரா. அவனது குறுகுறுத்த பார்வை, தன்னுடைய அழகை ரஸித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தாள். தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். தருண்குமார் பவித்ராவின் பேரழகையும், யௌவனத்தையும் பிரமிப்புடன் ரஸித்துக் கொண்டிருந்தான். ரவீந்தர் தன்னைப் பற்றி பேசுவதையோ, அதற்குப் பிரதிபலிப்பாக அவன் பதிலளிக்க வேண்டியது பற்றியோ எந்த நினைவும் இல்லாமல் பவித்ரா மீது கண்ணை எடுக்காமல் இருந்த தருண்குமாரின் கையைப் பிடித்து லேசாக அழுத்தினார் ரவீந்தர்.
சுதாரித்துக் கொண்ட தருண்குமார் பேச ஆரம்பித்தான்.
"பணம்... படம்.... அது... முடிஞ்சு.... " இப்படி உளற ஆரம்பித்தவன், பின்னர் சமாளித்தபடி தொடர்ந்தான்.
"அது வந்து மேடம்... ரொம்பக் கூட தேவை இல்லை. ஒரு ஐம்பது லட்சம் ரூபா கொடுத்தா போதும். பாக்கி படத்தை முடிச்சுடுவோம். உங்க பணத்தை வட்டியோட திருப்பிடுவோம்..."
"மேடம்ன்னெல்லாம் கூப்பிடாதீங்க ஸார். பவித்ரான்னு பேர் சொல்லியே கூப்பிடுங்க. வெற்றி ப்ரொக்ஷன்ஸ் கம்பெனி பேர்ல ஃபைனான்ஸ் வேணும்னா, சின்னதா ஒரு பிரச்னை இருக்கு. ஏற்கெனவே மூணு மாசமா வட்டி கட்டாம இருக்காங்க. ஸாரி ரவீந்தர் ஸார். நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. கம்பெனி சட்ட திட்டம் அப்படி இருக்கு". ரவீந்தரிடம் பேசிவிட்டு மறுபடி தருண்குமாரிடம் பேசினாள்.
"உங்களோட பேர்லயோ அல்லது உங்களுக்குன்னு ப்ரொடக்ஷன் கம்பெனி இருந்தா அந்த பேர்ல ஃபைனான்ஸ் பண்ணலாம்".
"கம்பெனி இனிமேலதான் ஆரம்பிக்கணும். தொடர்ந்து படம் எடுக்கலாம்னு ஐடியா இருக்கு."
"அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க ஸார். கம்பெனி ஆரம்பிச்சுட்டு பேர் சொல்லுங்க. அந்தப் பேர்ல ஃபைனான்ஸ் பண்றோம். அக்ரிமெண்ட்ல கையெழுத்து நீங்கதான் போடணும். என்னோட எம்.டி. மிஸ்டர் ஷ்யாம்சுந்தரையும் கலந்து பேசிட்டு நானே உங்களுக்கு ஃபோன் போடறேன். உங்க மொபைல் நம்பர் குடுங்க."
தருண்குமார் தன் மொபைல் நம்பரைக் கொடுக்க, அந்த நம்பரை தன் மொபைலில் போட்டுக் கொண்டாள் பவித்ரா.
"ரவீந்தர் ஸார், மூணு மாச வட்டியை எப்ப ஸார் கட்டப் போறீங்க? படம் முடியணும்னெல்லாம் சொல்லாதீங்க ஸார். அவ்வளவு லேட் ஆனா சரிப்பட்டு வராது..."
"வரும்மா. இன்னும் ஒரு பத்து நாள்ல்ல கோயம்புத்தூர்ல இருந்து எங்க முதலாளி பணம் புரட்டி கொண்டு வந்துடுவாரு. வந்த மறு நிமிஷம் வட்டியைக் கொண்டுவந்து கட்டிடறேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கம்மா."
"சரி சார். பத்து நாளைக்கு மேல லேட் பண்ணிடாதீங்க. தருண்குமார் ஸார், உங்களுக்கு சொத்து ஏதாவது இருந்தா அதோட டாக்குமெண்ட் காப்பி கொண்டு வந்து குடுங்க."
"ஒரு ஃப்ளாட் வாங்கலாம்னு வச்சிருந்த பணம் அம்பது லட்சத்தைத்தான் ப்ரொடக்ஷன்ல போட்டுட்டேன். இப்பதான் படங்கள் வந்துக்கிட்டிருக்கு. அதெல்லாம் நடிச்சு முடிச்சு, ஜெயிச்சு அதுக்கப்புறம்தான் பெரிய அளவுல சொத்துக்கள்ல்ல இன்வெஸ்ட் பண்ண முடியும். இப்போதைக்கு வெற்றிப் ப்ரொடக்ஷன்ஸ் சிபாரிசு மட்டும்தான் எனக்கு பலம்."
யோசித்தாள் பவித்ரா. "அப்படின்னா, நானும், எங்க எம்.டி.யும் பேசித்தான் எதுவும் செய்ய முடியும். நானே உங்களுக்கு ஃபோன் பண்றேன்."
"படத் தயாரிப்புக்குன்னு ஃபைனான்ஸ் பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா உங்க கம்பெனியிலதான் வட்டி ஓரளவு குறைவா இருக்கு. அதனால நீங்க உங்க எம்.டி. கிட்ட சிபாரிசு பண்ணி பணம் குடுக்க ஏற்பாடு பண்ணனும்."
"ட்ரை பண்றேன் ஸார்."
அதுவரை கவலை கலந்து பேசிக் கொண்டிருந்த தருண்குமார், மீண்டும் பவித்ராவின் அழகை கண்களால் பருகினான். அவனால் அவனது அந்த செயலைக் கட்டுப் படுத்த முடிய வில்லை. இதையும் கவனித்தாள் பவித்ரா. 'என் அழகு... பேரழகு... நான் அழகி... பேரழகி... என் அழகில் ஒரு நடிகனே மயங்குகிறான்...’ பவித்ராவின் ரத்த நாளங்களில் கர்வம் கலந்து மிதந்தது. அதன் பிரதிபலிப்பாய் அவளது கன்னங்கள் சிவந்தன.
தருண்குமார் ரஸித்ததைக் கண்டு கொள்ளாதவள் போல திமிராக இருந்து கொண்டாள். பேச வேண்டிய விபரங்கள் யாவும் பேசி முடித்த பிறகும் எழுந்து செல்ல மனம் இல்லாவனாய் தயங்கினான் தருண்குமார்.
அவனது தயக்கம் பவித்ராவிற்கு தன் அழகின் மீதிருந்த மயக்கத்தை மேலும் பல மடங்காக்கியது.
"வாங்க தருண். போகலாம்." ரவீந்தரின் குரலைக் கேட்ட தருண்குமார் புன்னகையுடன் பவித்ராவிடம் விடை பெற்றான். கிளம்பியவன் அவளைத் திரும்பிப் பார்த்தபடியே நடந்தான். அவனது அந்த செயல் தனது அழகினால்தானே என்ற எண்ணம் பவித்ராவின் உள்ளத்தில் தோன்றியது. இதன் காரணமாய் அவள் மனதிற்குள் இருந்த கர்வமும், ஆணவமும் கொண்ட விலங்கு, வீறு கொண்டு எழுந்தது.
"என்ன அத்தை, ஏதோ நாக்குக்கு ருசியா சமைச்சுப் போடறீங்களே... உங்க கைமணமான சமையலை சாப்பிட்ட மாதிரியுமாச்சு. உங்களையும் அடிக்கடி பார்த்துக்கற மாதிரியுமாச்சுன்னு நான் பாட்டுக்கு இங்க வந்து போயிட்டிருக்கேன். உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணான்னு ஆக்கிடுவீங்க போலிருக்கே? நானே பயந்து பயந்து பவித்ரா இல்லாத நேரமா பார்த்து வந்துக்கிட்டிருக்கேன். தப்பித்தவறி அவ கண்ணுல பட்டுட்டா... அப்பப்பா... தீக்கனல் பறக்காத குறைதான் போங்க. இந்த லட்சணத்துல இருக்கு எங்களோட நிலைமை. நீங்க என்னடான்னா பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கோங்கறீங்க. உங்களுக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா அத்தை?..." சந்துரு படபடப்பாக பேசினான்.
"கிண்டலுமில்ல.. சுண்டலுமில்ல.. பவித்ராவை முழுசா புரிஞ்சுக்கிட்டவன் நீ. அவளோட முரண்டு பிடிக்கற குணத்துக்கு நீதான் அட்ஜஸ் பண்ணிப்ப. நான் உயிரோடு இருக்கும்போதே பவித்ராவுக்கு கல்யாணம் நடந்தாத்தான் உண்டு. அதனாலதான் சந்துருக் கண்ணா உன்னைக் கெஞ்சறேன்..."
"கெஞ்சறதுன்னாத்தானே சந்துருக்கண்ணா அது இதுன்னு செல்லமான வார்த்தையெல்லாம் வரும். நீங்க கெஞ்ச கெஞ்ச நான் மிஞ்சறதா நினைக்காதீங்க அத்தை. எனக்கும், பவித்ராவுக்கும் என்ன பொருத்தம் இருக்கு? படிப்புல அவதான் ஃபர்ஸ்ட். அழகுல அவதான் ஃபர்ஸ்ட். அறிவுலயும் அவதான் ஃபர்ஸ்ட். இப்ப அந்தஸ்துலயும் அவதான் ஃபர்ஸ்ட்டாயிட்டா. நான் எல்லாத்துலயும் லாஸ்ட். ஏணி வச்சா கூட எட்டாது."
"ஏணியும் வைக்க வேணாம். கோணியும் பிடிக்க வேணாம். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருப்பீங்கன்னு என் மனசுல படுது. நீ சரின்னு ஒரு வார்த்தை சொல்லு. பவித்ராகிட்ட நான் பேசிக்கறேன். அவளை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு."
"பொறுப்புள்ளவங்க பேசற பேச்சா இல்லை அத்தை நீங்க பேசற பேச்சு. இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருங்க. பவித்ரா மனசு மாறுவா. அவளுக்கேத்த ஒரு நல்ல ஆளா பார்த்தோம்னா நிச்சயமா கல்யாணம் பண்ணிக்குவா. என்னை விட்டுடுங்க."
"அப்போ ... நான் என் உயிரை விட்டுடணும்ங்கற... "
"ஐயோ அத்தை... ஏன் இப்படி பேசறீங்க? பவித்ரா நீங்க பெத்த பொண்ணு. அவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?..."
"தெரியும். அவளைப் பத்தி எனக்கு எல்லாம் நல்லா தெரியும். நீ சம்மதிக்கற பட்சத்துல அவகிட்ட நான் பேசிக்கிறேன். அதைப்பத்தி நீ கவலைப்படாத."
"கவலைகளே வாழ்க்கையா வாழ்ந்துட்டீங்க. இப்ப இப்படி ஒரு முடிவு எடுத்துட்டு முதுமை காலத்திலயும் மனசுக்கஷ்டத்தோட வாழப் போறீங்களா..."
"நான் வாழணும்னா நீ இதுக்கு சம்மதிக்கணும். இப்பவே உன் முடிவைச் சொல்லு..."
"முடிவை நீங்க எடுத்துட்டு என்னை சம்மதிக்க சொல்றது என்ன நியாயமோ தெரியலை. இவ்வளவு தூரம் கேட்டப்புறமும் நான் மறுக்கறதும் நியாயமா இல்லை. அதனால பவித்ராகிட்ட நீங்க பேசுங்க. நாங்க நல்லா இருப்போம்னு நீங்க நம்பறீங்க. இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அத்தை..."
"நீ எதுவும் சொல்ல வேணாம். உனக்குப் பிடிச்ச பட்டாணி ரவா பாத் செஞ்சு வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு கிளம்பு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்." சந்துருவிற்கு சாப்பிட தட்டு எடுத்து வைப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள் மீனாட்சி.
அரவிந்தனின் திருமணம் பணமழையில் நனைந்தபடி நிகழ்ந்தது. பணத்திற்கும், பணத்திற்கும் கல்யாணம் என்பது போல நடந்தேறியது அந்த திருமணம். அரவிந்தனுக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் சுமாரான நிறத்தில், ஏறிய நெற்றியுடன், சிறிய கண்களுடன் காணப்பட்டாள் மணப்பெண். அரவிந்தனின் குடும்பத்தினர் பெண் வீட்டாரின் ஏகமான பணக்காரத் தன்மையில் திளைத்துக் கொண்டிருந்தனர். அரவிந்தனும் பெண் அழகாக இல்லை என்பதைப் பற்றி துளி கூட பொருட்படுத்தாமல் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தான். கல்யாண காரியங்களிலும் சந்துருதான் மாங்கு மாங்கென்று உழைத்தான்.
'இவர்களிடம் இல்லாத பணமா? ஏன் இப்படி பெண் வீட்டாரின் பணத்தில் மோகம் கொண்டு அலைகிறார்கள்.
அழகான, அறிவாளியான பவித்ரா இந்த அரவிந்தனுக்கு கிடைக்காதது அவன் செய்த பாவம். இப்படி அந்தஸ்து வெறி கொண்ட குடும்பத்தில் பிறந்த அரவிந்தன் நம்ம பவித்ராவுக்கு கணவனாக அமையாதது அவள் செய்த புண்ணியம்’ அவனது மனதில் எண்ணங்கள் அலை பாய்ந்தது.
அரவிந்தனின் திருமண விஷயம் அறிந்த பவித்ரா, அழுத்தமாய் மௌனம் காத்தாள். மீனாட்சி, 'தன் மகள் இந்தப் பண முதலைகளின் வாயில் சிக்கிக் கொள்ளவில்லை’ என்று ஆறுதல் அடைந்தாள்.
சந்துருவிடம் பயன்படுத்திய வாழ்வா சாவா என்கிற அதே அஸ்திரத்தை பவித்ராவிடம் பிரயோகித்தாள் மீனாட்சி. ஆனால் அதை விட உறுதியான அஸ்திரத்தை வீசினாள். சந்துருவை கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதிக்காத பட்சத்தில் இரவோடு இரவாகத் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டினாள். கண்ணீர் வடித்தாள். கடைசியாக பவித்ராவின் கால்களில் விழவும் தயாரானாள்.
அதைக்கண்ட பவித்ராவின் கல் மனதும் லேஸாக கரைந்தது. 'வாழ்க்கையில் தான் எந்த சுகமும் அடையாமல் என் நலனுக்காக அடுப்படியில் வெந்து, இரத்த அழுத்தம் வருமளவு மனநிலை பாதித்து, எனக்காகவே இது நாள் வரை வாழ்ந்த என் அம்மாவை வசதியான நிலைமை மட்டும் திருப்தி படுத்தாது. என் திருமணம் மட்டுமே சந்தோஷப்படுத்தும்.’ புரிந்து கொண்டாள். 'அம்மாவுக்காக ஒரு கல்யாணம். அது சந்துருவோடு நடந்தாலென்ன, வேறு எவனோடு நடந்தாலென்ன’ என்கிற ரீதியில் சம்மதித்தாள்.
பவித்ராவின் நிபந்தனையை மீறாமல் சந்துருவும் மாமியார் வீட்டு மருமகனாக வந்து சேர்ந்தான். அரவிந்தன் வீட்டு வேலையை விடாமல் தொடர்ந்தான். அண்ணன் மகன் தன் மருமகன் என்றானதும் இன்னமும் இழைந்து உபசரித்தாள் மீனாட்சி. பவித்ரா வழக்கம் போல் ஆறு மணிக்கு எழுந்து 'ஜிம்’மிற்கு போவதும் எட்டு மணிக்கு வந்து குளித்து விட்டு அலங்கரித்து ஆபீஸ் போவதுமாக எந்த மாற்றமுமின்றி இருந்தாள்.
'என் மிரட்டலுக்கு பயந்து சந்துரு இவளைத் திருமணம் செய்து கொண்டான். ஆனா அவன் சந்தோஷமா இல்லை. பவித்ரா இன்று மாறுவாள், நாளை மாறுவாள் என்று எதிர்பார்த்ததெல்லாம் வீண். ஒரு நாளில் கூட சந்துருவிற்கு அவள் ஒரு காபி கூட கொடுக்கவில்லை. எல்லாமே தலைகீழாக நடக்கிறது.’ மீனாட்சிக்கு உறுத்தியது.
பவித்ரா ஜிம்மில் இருந்து வருவதற்குள் ஹீட்டர் போட்டு வைப்பது, கலைந்து கிடக்கும் அவளது அறையை சுத்தம் செய்வது, அவளது உடையை அயர்ன் செய்வது என்று பவித்ராவிற்கு வேலை செய்தான். அவள் குளித்து முடித்து, தயாராவதற்குள் அவளது காரைக் கழுவி வைப்பான். மதிய உணவுக் கூடையை காரில் ஏற்றுவான். கணவன், மனைவியாக இருவரும் ஒன்றுசேரவில்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது மீனாட்சிக்கு. இருவரும் இணைந்து இல்லறம் நடத்துவதும் இனி நிறைவேறாத கனவுதான் என்பதையும் புரிந்துக் கொண்டாள்.
பவித்ராவிடம் இது பற்றி பேசினால் எடுத்த எடுப்பிலேயே கத்த ஆரம்பிப்பாள். "கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னம்மா. பண்ணிக்கிட்டேன். வேற எதுவும் என் கிட்ட பேசாதே" என்று கூறி மீனாட்சியின் வாயை அடைப்பதே பவித்ராவின் வழக்கமாகிப் போனது. ஆறு மாத காலம் பொறுமையாகக் காத்திருந்தாள் மீனாட்சி. கல்யாணமாகியும் எந்த சுகமும் அனுபவிக்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்த சந்துருவைப் பார்த்து உள்ளம் பதறினாள். துடித்தாள்.
'பெண் புத்தி பின் புத்தி’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள். நம்பிக்கை நாசமாகிப் போனபின் அவளது உடல்நலம் மோசமானது. இரத்த அழுத்தம் அதிகமாகியது திடீரென நெஞ்சுவலி என்று துடித்தவள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வரை கூடத் தாங்காமல் வீட்டிலேயே உயிரை விட்டாள். எல்லாம் முடிந்தது. அம்மாவிற்காக கண்ணீர் கூட சிந்தாமல் மௌனமாக, தன் துக்கத்தைத் தாங்கிக் கொண்டாள். அலுவலக வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். சந்துருவிற்கு வழக்கமான வேலைகள் நீங்கலாக சமையல் வேலையும் சேர்ந்து கொண்டது. காலையில் பவித்ராவிற்கு தேவையானதை மேஜை மீது எடுத்து வைப்பான். அவள் சாப்பிட்டு விட்டு, "வரேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விடுவாள். சந்துரு, இங்கே வேலைகளை முடித்து விட்டு அரவிந்தன் வீட்டிற்கு கிளம்பி விடுவான். இருவரிடமும் ஃப்ளாட் சாவி இருந்தது.
இரவும் பகலும் மாறி மாறி தன் கடமையை செய்தன. ஆடிட்டிங் வேலை பவித்ராவின் முதுகை நிமிர்த்தியது. சுறுசுறுப்பாக வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டாள் பவித்ரா என்கிற மகிழ்ச்சியில், எம்.டி.ஷ்யாம் சுந்தர் ஒரு விருந்திற்கு எற்பாடு செய்தான். விஷால் திறமையான இளம் ஆடிட்டர். பத்து நாட்களாக பவித்ராவுடன் கணக்கு வேலைகளில் சாமர்த்தியமாக ஈடுபட்டதைப் பார்த்து பிரமித்தான். அழகு இருக்குமிடத்தில் அறிவு இருக்காது என்பதை உடைத்தெறிந்த பவித்ரா அவனது இதயத்தை அசைத்தாள். விஷாலின் மனதில் அவள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது.
அந்த ஆர்வம், காதல் என்பது புரிந்ததும் அதை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு கடிதம் எழுதினான். கவரில் போட்டு பத்திரப்படுத்தினான். ஷ்யாம் சுந்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்திற்கு விஷாலுக்கும் அழைப்பு இருந்தது. அந்த விருந்து முடிந்ததும் பவித்ராவிடம் தன் உள்ளத்தில் உள்ளதை எழுத்தில் கொட்டிய கடிதத்தைக் கொடுக்கலாம் என்று தீர்மானித்திருந்தான்.
'டிராயல் மெரிடியன்’ ஹோட்டலில் மூன்று மேஜைகள் ரிசர்வ் செய்திருந்தான் ஷ்யாம் சுந்தர். அவளது ஃபைனான்ஸ் கம்பெனியின் கிளை நிறுவனத்தின் ஜி.எம்., அவனது மனைவி, ஆடிட்டர் விஷால், வெற்றி ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர், நடிகர் தருண்குமார் உட்பட இன்னும் சில மேலதிகாரிகளை அழைத்திருந்தான்.
ஸெவன் ஸ்டார் ஹோட்டலான அங்கு இருந்த ரம்மியமான சூழ்நிலை பவித்ராவின் மனதிற்கு இதம் அளித்தது. விருந்தினர்களுடன் சந்தோஷமாகக் கலந்து உரையாடினாள். பஃபே ஸிஸ்டம் என்கிறபடியால் அவ்வப்போது உணவு வகைகளை எடுத்து வருவதற்காக, எழுந்து செல்வதும் உட்காருவதுமாக இருந்தனர். விஷாலும், பவித்ராவும் தனித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்றெண்ணிய விஷால், பவித்ராவிற்கு எழுதிய கடிதத்தை அவளிடம் கொடுத்தான். 'ஆபீஸ் சம்பந்தப்பட்ட கவராக இருக்குமோ’ நினைத்தபடியே அதைக் கையில் வாங்கினாள். பிரித்தாள்.
"ப்ளீஸ் பவித்ரா. இந்த லெட்டர் பெர்ஸனல். உங்க வீட்டுக்குப் போய் பிரிச்சுப் பாருங்க." அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பெங்களூர் கிளையின் ஜி.எம். பத்மநாபன் உணவுத் தட்டோடு அங்கு வர, பவித்ரா கவரைத் தன் கைப்பையில் போட்டுக் கொண்டாள்.
"ஹாய் விஷால்..." திடீரென உற்சாகமான ஒரு குரல் கேட்டது. ஆறு அடிக்கு மேல் உயரமான ஒரு இளைஞன் விஷாலின் முதுகில் தட்டினான். விஷால் திரும்பிப் பார்த்தான். அவனது நண்பன் மோகன் நின்றுக் கொண்டிருந்தான். அவனை அங்கே எதிர்பார்க்காத விஷால், அங்கிருந்து அவனைக் கிளப்ப முயற்சித்தான். அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சற்று தள்ளி இருந்த டாய்லெட் அருகே நிறுத்தினான். அதே சமயம் பவித்ராவும் டாய்லெட்டிற்குச் சென்றாள். அவள் போனதை விஷால் கவனிக்கவில்லை.
"எதுக்குடா என்னை இவ்வளவு அவசரமா இழுத்துக்கிட்டு வந்த?"
"நான் காதலிக்கற பொண்ணு அங்கதான் உட்கார்ந்திருக்கா. நீ பாட்டுக்கு நாம ஊர் சுத்தறதைப் பத்தி உளறிக் கொட்டினா என்னோட இமேஜ் என்ன ஆகறது? எப்பவும் நீ இடம், சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாம ஓப்பனா பேசறவனாச்சே... அதான்..."
"நிஜமாவே நான், நாம தாய்லாந்து போனதைப் பத்தித்தான் பேச வாயெடுத்தேன். இப்ப தாய்லாந்து சீஸன் வந்தாச்சு. கிளம்பிறதுக்கு ப்ளான் போடலாமா? போன ட்ரிப் சூப்பர்டா. அந்த சைனாக்காரக் குட்டிகளோட நாம அடிச்ச லூட்டி செம ஜாலிடா..."
டாய்லெட்டிலிருந்து வெளியே வந்த பவித்ரா, மோகன் பேசியதைக் கேட்டு, ஒரு நொடியில் விஷாலைப் பற்றி புரிந்துக் கொண்டாள். மறுபடியும் டாய்லெட்டிற்குள் நுழைந்து, கைப்பையிலிருந்து விஷால் கொடுத்த கவரை எடுத்தாள். பிரித்தாள். படித்தாள். கிழித்தாள். டாய்லெட்டில் போட்டு தண்ணீரை ஃப்ளெஷ் செய்தாள். வெளியே வந்து எந்த உணர்வையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் விருந்தில் கலந்துக் கொண்டாள்.
தருண் குமார் படப்பிடிப்பு முடிய லேட்டாகி விட்டது என்று சற்று நேரம் கழித்து வந்தான். பவித்ராவைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தான்.
"ஹாய் பவித்ரா... எப்படி இருக்கீங்க? ஃபைனான்ஸ் விஷயமா என்னோட மொபைலுக்கு கூப்பிடறேன்னீங்க? கூப்பிடவே இல்லையே?..."
"ஸாரி ஸார். ஆடிட்டிங் வேலையில ரொம்ப பிஸியாயிட்டேன். ஆனா உங்க விஷயமா எம்.டி. கிட்ட பேசிட்டேன். அவர் ஓ.கே. சொல்லிட்டார். இதோ ஸாரே வந்துட்டாரே..."
"ஹலோ ஷ்யாம் சுந்தர் ஸார். எனக்கு ஃபைனான்ஸ் பண்றதுக்கு ஒத்துக்கிட்டிங்களாமே. பவித்ரா சொன்னாங்க. ரொம்ப தாங்க்ஸ் ஸார்."
"பவித்ரா சொன்னதுனாலதான் நான் சம்மதிச்சேன். புதுமுறையில சில அக்ரிமெண்ட்ஸ் போட்டு வச்சிருக்காங்க. அதில நீங்க கையெழுத்து போட்டா மட்டும் நீங்க கேக்கற ஃபைனான்ஸ் தொகையைக் குடுக்கலாம்னு பவித்ரா சொன்னாங்க. அந்த அக்ரிமென்ட் எனக்கு எந்த ரிஸ்க்கும் இல்லாம என் பணத்துக்கு பாதுகாப்பா இருக்கு. ஷி இஸ் வெரி ஸ்மார்ட்"
"ஆமா ஸார். நீங்க சொல்றது சரி. பவித்ரா ரொம்ப புத்திசாலி. அவங்க குடுக்கற எல்லா அக்ரிமெண்ட்லயும் நான் கையெழுத்துப் போடத் தயாரா இருக்கேன். ஏன்னா இந்தப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். வியாபார ரீதியாவும் பணம் கொட்டும்."
"ஓ.கே. சந்தோஷமா சாப்பிடுங்க."
தருண்குமார், உடன் வந்திருந்த ரவீந்தரையும் அழைத்துக் கொண்டு உணவு வகைகள் எடுப்பதற்காக நகர்ந்தான். அப்பொழுது பவித்ராவுடன் ஏற்பட்ட தனிமை வாய்ப்பு, ஷ்யாம் சுந்தருக்கு வசதியாக இருந்தது.
தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான்.
"பவித்ரா.... உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். சுத்தி வளைச்சுப் பேசறதுக்கு எனக்கு உடன்பாடில்லை. நேரடியாவே விஷயத்துக்கு வரேன். உங்க அப்ளிகேஷன்ல மிஸ். பவித்ரான்னு இருக்கு. நீங்க இங்க வேலைக்கு சேர்ந்தப்புறம், உங்களுக்கு கல்யாணமாகிட்டதாகவும், உங்களுக்கும் உங்க கணவருக்கும் டெர்ம்ஸ் சரியில்லைன்னும் கேள்விப்பட்டேன். அது உண்மையா இருந்து நீங்க உங்க கணவர் கூட வாழ விரும்பாத பட்சத்துல, நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கேன்... அவசரம் இல்ல. யோசிச்சு சொல்லுங்க. எதுவா இருந்தாலும் என் கிட்ட மனம் விட்டு பேசுங்க. என்னோட வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நான் ஒரு விடோயர். என் மனைவி ஊர்மிளா, எங்களுக்குக் கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷம் இறந்து போயிட்டா. துடுக்குத் தனமான அவ, கார் ஓட்டக் கத்துக்கிட்டா. தனியா ஓட்டற அளவுக்கு ட்ரெயினிங் எடுக்கறதுக்குள்ள அவசரப்பட்டு தனியா டிரைவிங் போனா. எதிர்த்து வந்த லாரியைப் பார்த்து பயந்து ஃபன்க் ஆகி ஸ்டீரியங்கை விட்டுட்டா போலிருக்கு. கார், லாரி மேல மோதி அந்த ஸ்பாட்லயே அவ உயிர் போயிடுச்சு. எங்க உறவுலயே எத்தனையோ பேர் எனக்கு பொண்ணு குடுக்க முன் வந்தாங்க. ஏனோ தெரியல மறுமணமே வேணாம்னு மறுத்துட்டேன். இப்ப என்னோட ஐடியா மாறி இருக்கு. இனி நீங்கதான் சொல்லணும். ஒரு வாரம் கழிச்சு சொன்னா போதும்..." ஷ்யாம் சுந்தர் பேசி முடித்த மறுவிநாடி உணவுத்தட்டுடன் தருண்குமாரும், ரவீந்தரும் வந்தனர். விருந்து தொடர்ந்தது.
பவித்ராவின் மனம் நிலை கொள்ளாமல் அலை பாய்ந்தது. 'ஒருவன் என் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரியாமலே என்னை விரும்புவதாகவும், கல்யாணம் செய்துக் கொள்வதாகவும் சொல்கிறான். இன்னொருவன் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தும் கல்யாணம் செய்துக் கொள்வதாக கூறுகிறான். விஷால் ஒழுக்க நெறி இல்லாத மனிதன். எம்.டி.ஷ்யாம் சுந்தரோ மனைவியை இழந்தவர். எனக்கு நடந்தது, பொம்மைக் கல்யாணம். உண்மைக் கல்யாணம் இல்லை. இருந்தாலும் நான் புனிதமாவள்ன்னு யார் நம்புவா? என் மனதிற்கு நான் புனிதமானவள். ஷ்யாம் சுந்தர் ஏற்கெனவே ஒருத்தியுடன் கணவனாக வாழ்ந்தவர். அவரை மறுப்பதற்கு பொருத்தமான காரணத்தை யோசிக்கணும்...’
"பவித்ரா.... என்ன ட்ரீம்லேண்டுக்கு போயிட்டீங்க?" தருண்குமாரின் குரல் அவளது சிந்தனைக் குதிரையை அடக்கியது. சமாளித்தாள். சம்பிரதாயமான வார்த்தைகளை வலிந்துப் பேசினாள்.
தன் படங்கள் பற்றி, படப்படிப்பு பற்றி, சக நடிக, நடிகைகள் பற்றி உற்சாகமாய் அளந்துக் கொண்டிருந்தான் தருண். ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சினிமா ரசிகர்கள், தருண்குமாரை சுற்றி வளைத்து நின்று கொண்டனர். ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டனர். போட்டோவும் எடுத்துக் கொண்டனர். அழகிய இளம் பெண்கள், அவன் மீது விழாத குறையாக அசடு வழிந்தனர். அனைவரிடமும் சளைக்காமல் அரட்டை அடித்தான் தருண்குமார்.
'ஒரு நடிகன் தன் மனைவிக்கு உண்மையானவனாக இருக்க முடியாது போலிருக்கே... தருண்குமார் முன்னணிக்கு வந்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இப்படி பெண்கள் அலைகிறார்கள். நம்பர் ஒன்னாக வந்துவிடக் கூடிய பட்சத்தில் இன்னும் எப்படியோ....’ அடங்கிக் கிடந்த சிந்தனைக் குதிரை மீண்டும் தட்டி விட்டது போல ஓடியது.
"எப்ப ஸார் உங்க கல்யாணம்? நடிகையை கல்யாணம் பண்ணிப்பீங்களா?" ஒரு பெண் தருண்குமாரிடம் கேட்டாள்.
"நான் இன்னும் நிறைய படம் நடிச்சு, நல்ல நடிகர்னு பேர் வாங்கணும். அதுக்கப்புறம்தான் கல்யாணம்" கூறியவன், பவித்ராவின் முகத்தைப் பார்த்தான். மீண்டும் தொடர்ந்தான். "நடிப்புத் துறையில இருக்கற பெண் யாரையும் நான் கட்டிக்க மாட்டேன். நல்ல அழகும், அறிவும் உள்ள பொண்ணா நானே பார்த்து ஸெலக்ட் பண்ணுவேன்" கூறியபடியே மீண்டும் பவித்ராவின் முகத்தைப் பார்த்தான். எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக இருந்தாள் பவித்ரா. விருந்து முடிந்தது. அனைவரும் கிளம்பினர்.
பவித்ரா தன் காரில் அமர்ந்தாள். ஒரு நிமிடம் யோசித்தவள், ஷ்யாம் சுந்தரின் மொபைல் நம்பரை அழுத்தினாள். அவனது குரல் கேட்டதும், பேச ஆரம்பித்தாள். "ஸாரி ஸார். உங்க ப்ரபோஸலை ஏத்துக்க முடியாத நிலையில இருக்கேன். நீங்க என்னோட முதலாளி. நான் உங்க ஸ்டாஃப். இந்த ரிலேஷன்ஷிப் மட்டும் போதும் ஸார்." நாசூக்காக ஷ்யாம் சுந்தரை மறுத்துவிட்டு மொபைல் தொடர்பை துண்டித்தாள்.
காரை ஸ்டார்ட் செய்தாள். அவளது மொபைல் ஒலித்து அழைத்தது. ஸ்டார்ட் செய்த காரை நிறுத்தினாள். மொபைலை எடுத்துப் பேசினாள்.
"பவித்ரா, நான் தருண்குமார் பேசறேன். ஹோட்டல்ல மறைமுகமா பேசினது உங்களுக்கு புரிஞ்சுச்சோ என்னமோ... நான்... நான்... உங்களை விரும்பறேன். உங்களைப் பார்த்த அன்னிக்கே என் இதயத்துல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டீங்க. கல்யாணம் பண்ணிக்கறதைப் பத்தியே இப்போதைக்கு நினைச்சுக் கூடப் பார்க்காத நான் உங்களைப் பார்த்த அந்த நிமிஷமே உங்களை என்னோட சொந்தமாக்கிக்கணும்னு நினைச்சேன்..."
"ப்ளீஸ் தருண்குமார், ஸ்டாப் இட். "நான், இன்னொருத்தருக்கு சொந்தமானவ. ஐ மீன் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஒரு பெண்ணைப் பத்தி தெரிஞ்சுக்காமயே கல்யாணம் வரைக்கும் போயிட்டீங்க?"
சில நிமிடங்கள் மௌனம் காத்த தருண், தட்டுத்தடுமாறி பேச ஆரம்பித்தான். "ஸ... ஸா....ஸாரி பவித்ரா. வெரி ஸாரி. ஏதோ தெரியாம பேசிட்டேன். மன்னிச்சுடுங்க." தன் மொபைல் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.
"நான் ஏன் இப்படிப் பேசினேன்? இன்னொருத்தருக்கு சொந்தமானவள்-ன்னு ஏன் சொன்னேன்? நான் யாருக்கு சொந்தமானவள்? சந்துருவிற்கா? சந்துரு என் கணவனா? அம்மாவிற்காக நான் செய்து கொண்ட கல்யாணத்தில் சந்துருவிற்காக நான் எந்த இடத்தைக் கொடுத்திருக்கேன்? ஒரு சேவகனாய் எனக்கு வேலை செய்யும் சந்துருவை, புருஷனாகக் கூட இல்ல... ஒரு மனுஷனாய் கூட மதிக்கலயே... இதற்கு என்ன காரணம்? என் பேரழகா? நான் பேரழகி என்கிற ஆணவத்தாலா? அதிபுத்திசாலி என்கிற அகங்காரத்தாலா? அம்மா உயிரோடு இருந்தவரை சந்துருவும், நானும் ஒரே அறையில் படுக்க நேரிட்டபோதும் தரையில் பாய் விரித்துத் தனியாகப் படுத்துத் தூங்கினான் சந்துரு. அவன் நினைத்திருந்தால் தாலி கட்டிவிட்ட உரிமையை வைத்து என் உடல் மீது கை வைத்திருக்கலாம். தகராறு பண்ணி இருக்கலாம். ஆனா மனதளவில் நெருங்காத பெண்ணைத் தொடுவது கூட 'பாவம்’ என்று ஒதுங்கி இருந்தான்.
நான் ஏற்கெனவே திருமணமானவள் என்று தெரிந்தும் என்னை மறுமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டார் ஷ்யாம் சுந்தர். காரணம் என் அழகு. ஆடிட்டர் விஷால் பெண் பித்து பிடித்தவன். நடிகர் தருண்குமார் இன்று என் வெள்ளைத் தோல் உள்ள முகத்திற்கு ஏங்கி காதல், கல்யாணம் என்று பிதற்றுகிறான். நாளை என்னைவிட வெள்ளையாக, இன்னும் அழகியாக அவனுடன் நடிப்பதற்கு இன்னொருத்தி வந்தால் அவள் மீதும் மோகம் கொள்வான். இவர்கள் மூவரும் என்னை அடைய விரும்பியவர்கள். அதற்குத் தகுதி இல்லாதவர்கள். நான் விரும்பிய அரவிந்தன், பணம், சொத்துக்களை விரும்புபவனாய் என்னை அவமானப்படுத்தி விட்டான். ஆனால் சந்துரு...? என் அம்மா பார்த்து, 'உன் குணத்தைப் புரிந்துக் கொண்டு உனக்கு ஏற்றபடி அட்ஜஸ் செய்து வாழ்வது என்பது சந்துருவால் மட்டுமே முடியும்’ என்று தீர்க்கதரிசியாய் சொன்னாளே.
சந்துரு சந்துரு நீ... நீ... நீங்கள் நல்லவர். என்னைப் புரிந்துக் கொண்டவர். பேரழகி என்ற ஆணவத்தால் உங்க அன்பை நிராகரிச்சேன். மூணு வருஷ காலமா உங்க வாழ்க்கையை பாழாக்கிட்டேன். அத்தை மகள் என்கிற ரத்த பாசத்திற்காக என் அலட்சியப் போக்கையெல்லாம் பொறுத்துக் கொண்டீர்களே. நீங்க மனிதர். மாமனிதர். நீங்க என் கணவர். உங்களுக்கு மட்டுமே என் அழகை ஆள்வதற்குத் தகுதி இருக்கு. சந்துரு... சந்துரு.... காரை ஸ்டார்ட் செய்தாள். தன் வாழ்வைப் பற்றி யோசித்தாள். சந்துருவின் அன்பைப் பற்றி சிந்தித்தாள். வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். காரை நிறுத்தினாள். தன்னிடம் இருந்த சாவியால் வீட்டைத் திறந்தாள். தூரத்து உறவில் ஒரு துக்கத்திற்காக கிராமத்துக்கு போவதாகவும், இரவு வீட்டிற்கு வரமாட்டேன் என்றும் மறுநாள் இரவு பத்து மணிக்குத்தான் வருவதாகவும் சொல்லி விட்டுப் போயிருந்தான் சந்துரு.
தன் அறைக்கு சென்றாள் பவித்ரா. அவளது படுக்கை அருகே இருந்த மேஜை மீதிருந்த மீனாட்சியின் படத்தைப் பார்த்தாள். "அம்மா" கதறினாள். அழுதாள். துடித்தாள். தன் மனதில் நினைத்ததையெல்லாம் வாய்விட்டு சொல்லி புலம்பினாள். தன் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடக்கூடாது என்று வைராக்கியமாக இருந்த பவித்ரா, உடைந்து உணர்ந்து அழுதாள். மீனாட்சி இறந்துபோன அன்று கூட வாய்விட்டுக் கதறி அழாத பவித்ரா, அன்று 'அம்மா 'அம்மா என்று அழுதாள். அழுது முடித்தாள். அதன்பின் தெளிவு பெற்றாள். மறுபடியும் உறுதியான முடிவு எடுத்தாள். 'இதுவே என் கண்களின் கடைசிக் கண்ணீர்த்துளி கண்களில் வழிந்த கண்ணீரைச் சுண்டினாள். சந்துரு.... இனி உங்களுக்கு நான் சேவை செய்வேன். நானே சமைச்சு உங்களை உட்கார வச்சு சாப்பாடு பரிமாறுவேன். நான் படிப்புல உயர்ந்தவளா இருந்தாலும் நீங்க குணத்துல உயர்ந்தவர். இவர்தான் என் கணவர்ன்னு இனி பெருமையாக உங்களை அறிமுகப்படுத்துவேன். கார்ல என் பக்கத்துல உட்கார வச்சு ஓட்டிட்டு போவேன். உங்க ஸ்கூட்டர்ல உங்க பின்னாடி உட்கார்ந்து உங்க தோளைப் பிடிச்சுக்கிட்டு வருவேன். ஸ்பீடா ஓட்டச் சொல்லுவேன். என் அன்பான நீங்க என் பக்கத்துல இருக்கறதுதான் எனக்கு இனி சொர்க்கம். என் அழகுக்கு ஏத்த அர்த்தம் நிறைஞ்ச வாழ்க்கை இனி உங்களாலதான். ஐ லவ் யூ சந்துரு... ஐ லவ் யூ.. மானசீகமாக, சந்துருவுடன் பேசிக் கொண்டிருந்த பவித்ராவின் உறங்கி கிடந்த பெண்மை விழித்துக் கொண்டது.’ தூங்காமலே கனவுகளில் மிதந்தாள்.
விடிந்தது. பவித்ரா எழுந்தாள். குளித்தாள். ஃப்ரிட்ஜில் இருந்து முன்தினம் சமைத்திருந்த உப்புமாவை எடுத்து மைக்ரோ அவனில் சூடு பண்ணினாள். பெயருக்கு ஏதோ சாப்பிட்டாள். ஷ்யாம் சுந்தரை மொபைல் போனில் அழைத்தாள். "ஸார்... நாலு நாள் லீவு ஸார். என் ஹஸ்பண்ட் கூட வெளியூருக்குப் போகப்போறேன் ஸார்."
மறுமுனையில் சில விநாடிகள் மௌனம். பிறகு, "ஓ.கே. பவித்ரா. ஹாவ் அ நைஸ் ட்ரிப்" ஷ்யாம் சுந்தர் சமாளித்துப் பேசியது புரிந்தது.
ஃப்ளாட்டின் காம்பவுண்டு சுவரோரம், மீனாட்சி ஆசையாக வளர்த்த ரோஜா செடியில் அழகான ஊட்டி ரோஜா செழிப்பாய் மலர்ந்திருந்தது. தன் மனம் மாறியது குறித்து, 'அம்மாவின் ஆசீர்வாதமாய், பிரசாதமாய், மகிழ்ச்சியாய் அந்த ரோஜா பூத்திருக்கிறதோ’ மலர்ந்த அந்த ரோஜாவை விட பவித்ராவின் முகம் அழகாய் மலர்ந்தது. அதைப் பறித்து தன் காதோரம் வைத்து க்ளிப் குத்தினாள்.
காரில் ஏறி அமர்ந்தாள். பனகல் பார்க் குமரன் சில்க்ஸ்-ற்கு காரை செலுத்தினாள். பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்து விட்டு கடைக்குள் நுழைந்தாள்.
"என்னம்மா பார்க்கப் போறீங்க? பட்டா, சிந்தெடிக்கா?" கேட்ட பெரியவருக்கு புன்னகையுடன் பதிலளித்தாள்.
"பட்டு"
"பவித்ரா மேடம். வாங்க மேடம். எப்படி இருக்கீங்க?" குமரன் சில்க்ஸ் அதிபர்களுள் ஒருவர் அவளைக் கண்டதும், வணங்கி மரியாதையாய் நலம் விசாரித்தார்.
"பட்டுப் புடவையா பார்க்கப் போறீங்க? வாங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு" அவரைப் பின் தொடர்ந்தாள் பவித்ரா.
அங்கே பணி புரியும் விற்பனையாளரிடம், "அம்மாவுக்கு நல்லா எல்லா டிசைனையும் காட்டுங்க." என்று சொல்லிவிட்டு, தன் அலுவல்களை கவனிக்கச் சென்றார்.
பட்டுப் புடவைகளில் பல ரகங்கள் கண்ணைப் பறித்தன. இது நாள் வரை மொட மொட வென்று கஞ்சி போட்ட காட்டன் புடவைகளை மட்டுமே அணிந்து வந்த பவித்ரா, இப்போது பட்டுப்புடவை மீது ஆசைப்பட்டாள். ஆறு புடவைகளைத் தேர்ந்தெடுத்தாள். அதில் மாந்தளிர் வண்ணத்தில் ஜரிகை பார்டரில் கற்கள் பதித்த புடவை அவளது மலரும் நினைவுகளைக் கிளறியது.
திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் இதே மாந்தளிர் கலரில் எம்ப்ராய்டரி செய்த காட்டன் புடவையில் அவளைப் பார்த்த சந்துரு "பவித்ரா, உனக்கு இந்தக் கலர் புடவை ரொம்ப பாந்தமா இருக்கு" என்று பாராட்டினான்.
அதற்குப் பதிலாகத் தன் புருவங்களை ஒரு முறை நெறித்து விட்டு முகத்தைத் திருப்பியபடி அகன்று விட்டாள். அகம்பாவத்துடன் அவள் அவ்விதம் செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி, சந்துருவின் முகம் வாடிப் போனதையும் கவனித்தாள்.
"ஏண்டி, பவித்ரா அவன் இப்ப என்ன சொல்லிட்டான்னு திருப்பிக்கிட்டு போற? நீ அழகிதான். அதுக்காக இப்படி ஒரு அகம்பாவம் கூடாதும்மா?" அம்மாவின் பேச்சைக் காதிலேயே வாங்கி கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியினால் சந்துருவிற்கு பிடித்த கலர் மாந்தளிர் கலர் என்ற ஒரே விஷயம் தெரிந்து கொள்ள நேரிட்டது.
ரெடிமேடாக, மேட்சிங் ப்ளவுஸ் வாங்கிக் கொண்டாள். வீடு வந்து சேர்ந்தாள். சந்துரு ஊரில் இல்லாதபடியால் தூசு படிந்து கிடந்த வீட்டைத் தானே சுத்தம் செய்தாள். மறுபடியும் கடைக்குச் சென்று ரெடிமேட் திரைச்சீலைகளை வாங்கி வந்து மாட்டினாள். அவள் கை பட்டதில் வீடு மேலும் அழகாகியது. அம்மாவின் பூஜை அறையில் ஸ்வாமி படங்களை நேர்த்தியாக அடுக்கினாள். தன் பீரோவிலிருந்து அழகிய வெள்ளி அன்ன விளக்கை எடுத்து வைத்தாள். விளக்கேற்றினாள்.
இரவு உணவுக்கென்று சந்துருவிற்காக மிகச் சிறப்பாக சமைத்து வைத்தாள். மறுபடியும் குளித்தாள். மாந்தளிர் பட்டுப் புடவையை உடுத்தினாள். அவளது திருமணத்திற்கு அம்மா பார்த்து பார்த்துத் தேர்ந்தெடுத்த அழகிய அட்டிகையையும், அதற்கு பொருத்தமான கம்மல், வளையல்களையும் அணிந்தாள். தளர தளர பின்னிக் கொண்டாள். பட்டுப்புடவையிலும், நகையிலும் நான் இத்தனை அழகா? பிரமித்தாள். தன்னைத்தானே ரஸித்தாள்.
'நானே நானா யாரோதானா .... மெல்ல மெல்ல மாறினேனா’ அவளையறியாமலேயே பாடலை இசைத்தாள். காலிங் பெல் ஒலித்தது. ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். சந்துருவிடம் உள்ள சாவியை வைத்து அவனே கதவை திறந்து விடக்கூடாது, தான் சென்று திறக்க வேண்டும் என்பதற்காக உள்பக்கம் பூட்டி வைத்திருந்தாள்.
கதவைத் திறந்த பவித்ரா கண்ட காட்சி... சந்துருவும், ஒரு பெண்ணும் மாலையும், கழுத்துமாய் நின்றிருந்தார்கள். இருவரும் உள்ளே வந்து பவித்ராவின் காலில் விழ முயற்சித்தனர்.
"நோ..." கத்தினாள் பவித்ரா. ஒரு நொடிக்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு, மௌனமாய் நின்றாள் சந்துருவே பேசட்டும் என்று.
"பவித்ரா, இவ உமா. உன் அம்மாவுக்கு தூரத்து உறவு. கிராமத்துல ஒரு துக்க வீடுன்னு போனேன்ல. இறந்து போனது இவளோட அம்மாதான். அப்பா செத்துப் போய் பல வருஷமாச்சாம். யாரோ உறவுக்காரங்க கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய் அடிமை மாதிரி நடத்தியிருக்காங்க. பட்டினி போட்டிருக்காங்க. கொடுமை தாங்க முடியாம எப்படியோ தப்பிச்சு கிராமத்துக்கு போய் சேர்ந்திருக்கா. இவ கிராமத்துக்கு போன கொஞ்ச நாள்ல்ல இவளோட அம்மாவும் இறந்துப் போயிட்டாங்க. உமாவுக்கு யாரும் இல்ல. எனக்கும் யாரும் இல்ல. நீ... நீ... உனக்கும் .... என்னைப் பிடிக்கலை.. அத்தைதான் எவ்வளவோ தடுத்தும் கேக்காம நமக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டாங்க. மூணு வருஷம் காத்திருந்தேன். உன் மனசு மாறலை. நானும் சாதாரண மனுஷன்தானே பவித்ரா? எனக்கும் முப்பத்தி மூணு வயசாச்சு. எனக்குன்னு ஒரு துணை வேணும்னு கொஞ்ச நாளாவே நினைக்க ஆரம்பிச்சுட்டேன். இவளைப் பார்த்தப்ப, அநாதையான இவளுக்கும் ஒரு துணை தேவைன்னு தோணுச்சு. இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா இவளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். உனக்கும் என்கிட்ட இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைச்சுதான் நான் இந்த முடிவு எடுத்தேன். இதெல்லாம் திட்டம் போட்டு செஞ்சது இல்ல பவித்ரா. துக்கம் விசாரிக்கப் போன இடத்துல எதிர்பாராம நடந்ததுதான். எனக்கு வேற வழி தெரியலை..." சந்துருவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
கடைசி சொட்டுக் கண்ணீர் என்று முன்தின இரவு சபதம் எடுத்தது பவித்ராவிற்கு நினைவு வந்தது. சிரித்தாள். மௌனமாய் விரக்தி வெளிப்பட தொடர்ந்து சிரித்தாள். சில விநாடிகளில் அடங்கினாள். 'இயற்கையின் உந்துதல் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானது. அந்த உந்துதல் உருவாகும் வாய்ப்பு, சூழ்நிலை இவைகள்தான் வேறுபடும் போலிருக்கு.
அழகே உருவான மனைவியுடன், தன் உடலைக் காயப்போட்டு எந்த ஆண் மகனால் இத்தனை வருடங்கள் விரதம் காக்க முடியும்? அம்மா சொன்னது போல பேரழகி என்கிற கர்வம் என் வாழ்வை அழித்து விட்டது. பெரிய அறிவாளி என்கிற மமதை, என் பெண்மையை தோற்கடித்து விட்டது. சந்துரு மீது எந்த தப்பும் இல்லை. எல்லா தவறும் என் மீதுதான். தன்னை உணர்ந்தாள் பவித்ரா. ஆனால் அது காலம் கடந்த உணர்வு. 'தனிமையே துணை என்று இனி வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான். முடிவு செய்தாள். தன் கழுத்திலிருந்த அட்டிகை, மற்ற நகைகளைக் கழற்றி உமாவிற்குப் போட்டாள். அன்று காலை வாங்கிய அத்தனை பட்டுப்புடவைகளையும் உமாவிடம் கொடுத்தாள். சந்துருவின் உடைமைகள் இருந்த பெட்டியையும், கற்றையாக பணத்தையும் அள்ளிக் கொடுத்தாள். தன் கழுத்தில் சந்துரு கட்டிய தாலியைக் கழற்றி, ஹாலில் பெரிதாக மாட்டியிருந்த மீனாட்சியின் படத்தில் மாலை போல் போட்டாள். சந்துரு அவனது பெட்டியை ஒரு கையிலும், உமாவின் கையை ஒரு கையிலும் பிடித்தபடி வெளியேறினான்.
பவித்ரா, பவித்ரமானவள். ஆனால் பரிதாபத்திற்குரியவள். அது அவளே தேடிக் கொண்ட முடிவு.