Logo

ரஷ்யா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6969
russia

வருடைய பெயர் கோவிந்தன். ஐந்து எழுத்துகளைக் கொண்ட தன்னுடைய இந்தப் பெயர் ஒரு பெரிய பெயர்தான் என்று பலமுறை அவர் நினைத்திருக்கிறார். நம்முடைய நாடு ஒரு தரித்திரநாடு. ஒவ்வொரு ரூபாயையும், ஒவ்வொரு துளி பெட்ரோலையும் நாம் மிகவும் கவனத்துடன் செலவழிக்க வேண்டியிருக்கிறது. விலை மதிப்புள்ள எழுத்துக்களைக் கையாளும்போதும் நாம் அதே போல் மிகுந்த சிக்கனத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல- மொழியில் கம்பீரத்தைக் கையாளும் வார்த்தைகளை சிக்கனத்துடன் கையாளும் இலக்கியம்தான் உன்னதமான இலக்கியம் என்ற விமர்சனத்தையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் கோவிந்தனை கோன் என்றழைத்து நாம் மூன்று எழுத்துக்களை லாபமாக அடைவோம்.

இல்லாவிட்டால் கோன் என்பதற்கு பதிலாக கோ என்று கூட இருக்கலாம். அப்படிச் செய்யும் பட்சம் விலை மதிப்புள்ள ஒரு எழுத்து நமக்குக் கூடுதல் லாபமாகக் கிடைக்கிறது. நம்முடைய வாசகர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில மொழியில் நல்ல அறிவுள்ளவர்களாக இருப்பதால் ‘கோ’ என்ற அந்த ஒரு எழுத்துப் பெயரில் இருக்கும் உயிர்ப்பை அவர்கள் உணராமல் போக மாட்டார்கள்.

கோவிந்தன்: அம்பத்தெட்டு வயசு ஆகுற நான் இப்போ ஒரு வெறும் தாவரம். அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும். நான் வாழறதுக்குத் தேவையான போட்டோ சிந்தஸிஸுக்கு வேண்டிய சக்தியை நான் கேட்காமலேயே சூரியன் எனக்குத் தந்திடுறதுனால நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்றதுதான் உண்மை. சூரியனோட இந்தக் கருணைச் செயலைப் பார்த்து சந்தோஷப்படணுமா வருத்தப்படணுமான்னு எனக்கே தெரியாது. காரணம்- வாழ்க்கையும் மரணமும் இப்போ எனக்கு ஒரே மாதிரிதான்.

கோவிந்தன் தன்னுடைய மரணம் இதற்கு முன்பே நடந்து விட்டது என்று மனதில் நினைக்க ஆசைப்படுகிறார். கோவிந்தனின் இந்த நினைப்பை ஒரு கற்பனை மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இடது: ஜனனம்

வலது: மரணம்

கோவிந்தன் (தொடர்ச்சி): நாம இந்த கற்பனையை இடது பக்கம் நிற்கிற ஒரு ஆளின் கண்கள் மூலமா பாக்குறப்போ முதலில் பிறப்பும், தொடர்ந்து மரணமும் நடக்குது. ஆரம்பமும் முடிவும் காலத்திற்கும் இடத்திற்கும் இடது, வலது, முன்பு, பின்பு என்று எதுவும் இல்லையென்று நமக்கு நல்லா தெரியும். அதனால இதே விஷயத்தை இடது பக்கத்துல இருந்து பாக்குறதுக்கு பதிலா வலது பக்கத்துல நின்னு பாக்குறதுனால எந்த ஒரு ஆபத்தும் வந்திடப் போறது இல்லைன்னு நான் சொல்றேன். நாம அப்படிச் செய்வதால் மரணம் முதல்லயும் பிறப்பு பின்னாடியும் வரும்.

குழந்தைகளே, உங்களுக்குப் புரிகிறதா?

பிறப்பு, இறப்புகளின் செயல்பாட்டை மாற்றியமைத்த மனத் துணிச்சலுடன் கோவிந்தன் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு தெளிவான சிரிப்பு சிரித்தார். அவரைப் பார்த்து அவர்கள் தலையை ஆட்டினார்கள்.

இடம், காலங்களைப் பற்றிய கோவிந்தனின் இந்தக் கொள்கை நடைமுறை வாழ்க்கையில் அவருக்கு ஏகப்பட்ட தொந்தரவுகளை உண்டாக்கின என்பது உண்மை. உதாரணம்- காயத்ரியின் மெல்லிய தலைமுடியைத் தடவுவதற்காக அவர் தன் கையை நீட்டுகிறார். அதே நேரத்தில் அவர் தன்னையுமறியாமல் இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு இடம் மாறுகிறார். இப்போது அவர் பார்ப்பது என்ன? பதினாறு வயது கூட ஆகாத காயத்ரியின் இடத்தில் வயது முதிர்ந்த கிழவியான காயத்ரி அமர்ந்திருக்கிறாள். நரைத்த தலை முடியைப் பார்த்து அதிர்ச்சிக்கு ஆளாகும் அவர் தன் நீட்டிய கையைப் பின்னால் எடுக்கிறார். ஒரு பார்வையாலேயே தன் எதிர்ப்பை வெளிப்படுத்திய காயத்ரி கீழே கழற்றி வைத்திருந்த தன்னுடைய பள்ளிச் சீருடைகளை எடுத்து அணிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறாள்.

தன்னைச் சுற்றியுள்ளவர்களெல்லாம் மரணத்தைத் தழுவியவர்கள் என்ற அறிவு அவரின் உலகத்தை ஒரு சுடுகாடாக மாற்றுகிறது.

இப்போது தன்னுடைய வாழ்க்கை ஒரு தாவரத்தின் வாழ்க்கையைப் போல சாதாரணமானது என்று அவர் மனதில் எண்ணலாம். ஆனால் அவர் கடந்து வந்த ஆண்டுகள் பலவித சம்பவங்களையும் கொண்டவை. சலனம்தான் வாழ்க்கை என்பதை அவர் நம்ப முயற்சித்துக் கொண்டார்.

அதனால் கோவிந்தனை நாம் ‘கோ’ என்றே அழைக்கலாம். எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் கோவிந்தன் என்ற கோன் என்ற கோ, கோவிந்தன் லீவ்ஸ் ஃபார் டெல்ஹி, கேரியிங் ஹிஸ் ஏன்ஸியன்ட் ரெக்ஸின் பாக்ஸ்...

“சார், இந்த வெயில்ல எங்கே போறீங்க?”

“டெல்லிக்கு...”

“இந்தப் பெட்டியையும் தூக்கிக்கிட்டா நடக்கறீங்க? ஒரு ஆட்டோ பிடிச்சுக்கக்கூடாதா?”

வழிப்போக்கன் கோவிந்தனின் கையிலிருந்த பெரிய பெட்டியையே பார்த்தவாறு நின்றிருந்தான். திடகாத்திரமில்லாத, மிகவும் மெலிந்து போய்க் காணப்பட்ட கோவிந்தனால் இந்த அளவிற்குப் பெரிதாக இருக்கும் ஒரு பெட்டியை எப்படி சர்வ சாதாரணமாக தூக்கிச் செல்ல முடிகிறது என்று அவன் ஆச்சர்யப்படலாம். கோவிந்தன் அதற்குப் பதிலாக ஒன்றும் கூறாமல் இந்திரா காந்திக்கு இருப்பது மாதிரி ஒரு பக்கம் மட்டும் நரைத்திருக்கும் தன்னுடைய தலைமுடியைக் கையால் மெதுவாகத் தடவியபடி அவர் தன் நடையைத் தொடர்ந்தார். அவரின் தலை வெயில் காரணமாக மிகவும் சூடாக இருந்தது. வீட்டை விட்டு புறப்படும் போது இடுப்பில் கட்டிய வெளுத்த வேஷ்டியின் ஓரம் நிலத்தில் பட்டு சிவப்பாக இருந்தது.

அவருக்கு எதைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற விருப்பமே மனதில் இல்லை. ஆனால், நம்மைப் போன்ற மனிதர்களுக்கு எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டோ எதைப் பற்றியாவது நினைத்துக் கொண்டோ இல்லாமல் ஒரு நிமிடம் கூட வெறுமனே இருக்கமுடியாதே! இந்த நிமிடம் எதைப்பற்றி மனதில் நினைப்பது என்பதை யோசித்தவாறு அவர் தன்னுடைய பழைய ரெக்ஸின் பெட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு புகை வண்டி நிலையத்தை நோக்கி நடந்தார். “கோவிந்தா, நாற்பது வருடங்களுக்கு முன்னாடி முட்டையின் மணம் வீசுற பாய் விரிச்ச கட்டில்ல படுத்துக்கிட்டு நீங்க செய்த குறும்புத்தனங்களை மனசுல நினைச்சுப் பாருங்க.”

“என்னால இப்போ அது முடியாது. நான் இப்போ சின்ன வயசு இல்ல.”

“ஆனால், ஒரு காலத்துல நீங்க நல்ல திடகாத்திரமான ஒரு இளைஞனா இருந்தீங்க.”

ஐம்பத்தெட்டிலிருந்து நாற்பதைக் கழித்தால் பதினெட்டு. அப்போது கோவிந்தனின் வயது அதுதான். அந்த வயதில் ஒரு இளைஞன் எதைப்பற்றி நினைப்பான்? எதைக் கனவு காணுவான்?

அவர் யோசித்துப் பார்த்தார். முட்டையின் மணம் வந்து கொண்டிருக்கும் கட்டிலில் படுத்தவாறு, தாழ்ந்த மேற்கூரையையும் ஜன்னலையும் கொண்ட சிறு அறையின் மங்கலான இருட்டில் ஏற்கனவே நன்கு அறிமுகமான - பார்க்க அழகாக இருக்கும் பெண்களை ஆடை எதுவும் இல்லாமல் கற்பனை பண்ணிப் பார்ப்பது அவரின் வழக்கமான குறும்புத்தனங்களில் ஒன்றாக இருந்தது.


அச்சு மாஸ்டர் வகுப்பறையில் ஒவ்வொரு பெயரையும் சொல்லி அழைப்பதைப் போல அவர் அந்தப் பெண்களின் பெயரைச் சொல்லி அழைத்தார். ‘கெ.பி.சுதாராணி, டென்த் பி, சுமித்ரா நம்பியார், இங்கிலீஸ் டீச்சர், மஹாத்மா காந்தி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எ.கெ.சரோஜினி D/o. எ.கெ.நாராயணன், டெவலப்மெண்ட் அதிகாரி, எல்.ஐ.சி.ராஜலட்சுமி வாரியர், W/o. கருணாகரவாரியர், போஸ்ட் மாஸ்டர், பி.ஸி.வனஜா...’ அவர் பெயர் சொல்லி அழைத்ததும் அவர்கள் ஒவ்வொருவரும் மிகவும் பவ்யமாக நடந்து வந்து நிர்வாணமாக அறையின் ஒரு பக்கம் ஒதுங்கி நிற்பார்கள். வெளுத்தும், தவிட்டு நிறத்திலும், கறுப்பாகவும் இருக்கும் அந்த உடல்களையே அவர் கண்குளிரப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பார். திடீரென்று அந்த சதைப் பிடிப்பான உடல்களுக்கு மத்தியில் முடிவளர்ந்த ஒரு பெரிய சிவந்த நிர்வாண உடலை அவர் பார்த்தார். அந்தச் சிவந்த முகத்தில் அடர்த்தியான ஒரு மீசை இருந்தது. கடவுளே, அது ஜோசப் ஸ்டாலினாயிற்றே! கோவிந்தன் அடுத்த நிமிடம் வேகமாகப் படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். ‘என்னோட சுகமான கனவுகளில் இன்பமான காட்சிகளைத் தடை செய்ய நீங்க ஏன் இப்போ வந்தீங்க? என்னோட வருகைப் பதிவு புத்தகத்துல உங்களோட பேரு இல்லியே! நான் உங்களைக் கூப்பிடலியே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் கோவிந்தன்.

தொடர்ந்து கோவிந்தன் சொன்னார்: ஆனா, என்னோட மரியாதைக்குரிய புத்தகத்தில் ஜோசப் ஸ்டாலினோட பேரு இருக்கவே செய்யுது. என் தலைமுறையில் ஸ்டாலினை விரும்பாத இளைஞனும் உண்டோ?

இருபதாவது வயதில் கோவிந்தன் தந்தையாக ஆனார். அவருடைய வாலிபப் பருவம் எந்த அளவிற்கு ஆவேசம் நிறைந்ததாக இருந்தது என்பதையும் அவரின் கடந்தகாலம் எந்த அளவிற்கு உயிரோட்டம் நிறைந்ததாக இருந்தது என்பதையும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். இளமையின் நீராவி ஒரு பிரஷர் குக்கரில் இருப்பதைப்போல அவருக்குள் பொங்கி வரும்போது அதை வெளியே அனுப்ப அவர் முன்னால் இரண்டே இரண்டு வழிகள் இருந்தன. பெண்ணும், புரட்சியும். அவரைப் பொறுத்தவரை அவை அவருக்கு பாதுகாப்பான வால்வுகளாக இருந்தன. அந்த இரண்டு வால்வுகளும் இல்லாமற்போயிருந்தால் அளவுக்கதிகமாக நெருப்பின் சூடுபட்ட ப்ரஷர் குக்கரைப்போல தான் வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகிப் போயிருப்பது உறுதி என அவர் மனம் பயத்துடன் நினைத்தது.

திருமணமாகாத நிலையில் இருந்தபோது வீட்டைச் சுத்தம் செய்ய வந்த பெண்ணுக்குத்தான் கோவிந்தன் தன்னுடைய முதல் குழந்தைக்கான உயிரணுக்களைத் தாரை வார்த்துத் தந்தார். வீட்டைச் சுத்தம் செய்யும் எல்லாப் பெண்களும் ஜானு என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். எல்லாத் தொழிலிலும் பொருத்தமான ஒரு பெயர் பொதுவாகவே இருக்கும். எல்லா ஆசாரிகளுக்கும் மாக்கம் என்ற பெயர் பொதுவாகவே வழங்கப்படும். வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்ணை மாக்கம் என்றோ ஆசாரிச்சி ஜானு என்றோ சொல்லப்படும்போது, அது எவ்வளவு பொருத்தமில்லாமல் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். தோழர் ஜெ.கருணாகரன் என்றோ தோழர் நரசிம்மராவ் என்றோ சொல்லப்படும்போது இருக்கும் பொருத்தமற்ற தன்மையைப் போலத்தான் அதுவும். அதனால் கோவிந்தன் அவளை ஜானு என்றே அழைத்தார். அவளின் உண்மையான பெயர் வேறு ஏதோவொன்று.

காலையில் பனி தன்னை எங்கே தாக்கிவிடப்போகிறதோ என்று எச்சரிக்கை உணர்வுடன் வண்ணம் செறிந்த ஒரு துணியைத் தன்னுடைய தலையில் சுற்றிக்கொண்டு அவள் வாசலைப் பெருக்கிக் கொண்டிருக்கும்போது திண்ணையில் தன்னுடைய தந்தையின் நாற்காலியில் புத்தகத்துடன் அமர்ந்திருப்பார் கோவிந்தன். அந்த நாற்காலியில் அமர்ந்து அவர் ஜானுவை சைட் அடிப்பார். (சைட் அடிப்பது என்ற வார்த்தையை நாம் எப்படி மலையாளத்தில் மொழி பெயர்ப்பது? தம் மொழியின் இயலாமையை நினைத்து கோவிந்தன் மிகவும் வெட்கப்படுவார்). அவளுடைய கறுப்பான உடம்பிற்கு இரும்பின் தன்மை இருந்தது. அவளுடைய மேல் தோல் பாலித்தீனாலும், நாடி நரம்புகள் அலுமினியத்தாலும் ஆனவை என்று அவர் நினைத்தார். தன்னுடைய நண்பரும் சிற்பியுமான ராமன் நம்பூதிரி உலோகத்தால் ஆன சிலைகளை உருவாக்குவதைப் போல தெய்வம் அவளுடைய மார்பாகங்களைப் படைத்திருக்கிறது என்று அவர் நினைத்தார். முதலில் மார்பகங்களின் அச்சுகளை உண்டாக்கி அதற்குப் பிறகு உலோகத்தை உருக்கி அதற்குள் ஊற்றி அந்த மார்பகங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். உலோகத்தால் ஆன சிற்பங்களின் சிறப்பு என்னவென்றால் அவற்றின் படைப்பு நெருப்புடனும் நீருடனும் தொடர்புடையது என்பதுதான். சிற்பி உலோகத்தால் ஆன சிலையை உருவாக்குவது நெருப்பும், நீரும் கொண்டுதானே! ஜானுவின் பருமனான மார்பகங்கள் கோவிந்தனின் மனதில் நெருப்பு, நீர் ஆகியவற்றைப் பற்றி நினைக்க வைத்தன. மார்பகங்கள் அச்சுக்குள் உருவானவுடன், அவை ‘வெல்ட்’ செய்யப்பட்டு அவளின் நெஞ்சில் வைத்து இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரவு நேரங்களில் மாடுகளின் அருவருப்பான வாசனை வந்து கொண்டிருக்கும் தொழுவத்தில்தான் அவர் அவளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். காதலிக்கத் தொடங்கும்போது அவளுடைய கை, கால்களின் மூட்டுகள் ஒருவித ‘கிறுகிறு’ ஓசையை உண்டாக்கும். “உன்னோட மூட்டுகள்ல எண்ணெய் தேய்க்கணும்” - அவர் கூறுவார். அவளின் முதுகெலும்பில் ஸ்ப்ரிங்குகளும் கழுத்தில் பால் பேரிங்குகளும் இடுப்பில் ஷாக் அப்ஸார்பர்களும் இருந்ததென்னவோ உண்மை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கர்ப்பமாக இருந்த பசுவிற்கருகில் அமர்ந்து அவள் கண்ணீர் விட்டுச் சிணுங்கிக் கொண்டே அழுதபோது, அவள் கண்ணீரில் இரும்பின் சுவை இருந்ததாக அவர் உணர்ந்தார். அந்தச் சுவை இப்போது கூட கோவிந்தனின் நாக்கில் இருக்கவே செய்கிறது. கோவிந்தன் வீட்டை விட்டு வெளியேபோய் சில நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்.

கோவிந்தன் சொன்னார்: அதற்குள் என்னோட அம்மா அவளை வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க...

சிறிது காலத்திற்குப் பிறகு கோவிந்தன் அவளைக் கண்டுபிடித்து, தன்னுடைய மகனைப் பார்க்கவும் செய்தார். ஜன்னி வந்து குளிர்ந்துபோன கை கால்களுடனும் வீங்கி முன் பக்கம் தள்ளிக் கொண்டிருந்த வயிற்றுடனும் ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணக் கோலத்திலிருந்த அந்தக் குழந்தை மண்ணைக் கையால் எடுத்து தின்னுவதற்கு மத்தியில் தன்னுடைய தந்தையைப் பார்த்தது. சிறிது நேரத்தில் அது இறந்து விட்டது என்பதை அவர் புரிந்து கொண்டார். மண்ணைத் தின்று கொண்டே மண்ணுக்குப் போய்ச் சேர்ந்த தன்னுடைய குழந்தையைப் பற்றிய நினைவு ஒரு ஸ்டீல் வயரைப்போல அவருடைய நெஞ்சில் வந்து ஆழமாகப் பதிந்து கொண்டது. உயிரோடிருந்தால் இப்போது அவனுக்கு முப்பத்தெட்டு வயது ஆகியிருக்கும். தன்னால் எப்படி எந்தவித தவறும் செய்யாமல் வாழமுடியவில்லை என்பதை எண்ணிப் பார்த்த அவர் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளானார்.


குறிப்பாகச் சொல்லப் போனால் மற்றவர்களின் தவறுகளைத் திருத்துவதற்கு தத்துவ சாஸ்திரங்களின் வெளிச்சத்தைக் கையில் வைத்துக்கொண்டு நடந்து திரியும் மனிதராயிற்றே அவர்!

பணக்காரர்களின் பிள்ளைகள் வீட்டு வேலை செய்யும் பெண்களுடன் திருமணமாகாமலே உறவு வைத்திருப்பதும் அந்தப் பெண்களின் வயிற்றுக்குள் குழந்தை தங்கி விடுகிறபோது அவர்களை சிறிதுகூட இரக்கமே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றுவதும் ஃப்யூல் அமைப்பின் பழக்கங்களில் ஒன்று. பணக்காரர்களின் காம இச்சை ஏழைப் பெண்களுக்குப் பல நேரங்களில் பலவித கஷ்டங்களையும் தந்துள்ளது. வசதி படைத்தவர்களின் பணத்திமிரைப்போல அவர்களின் காமக் களியாட்டங்களும் பல நேரங்களில் உன்னதமான கலைப்படைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்திருக்கின்றன. பி.பாஸ்கரனின் மகத்தான படைப்பான ‘நீலக்குயில்’ என்ற திரைப்படம் இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான். எந்தவொரு அமைப்பிற்கு எதிராக தான் சிறிது கூட சமரசமில்லாமல் போராடியதாக நினைத்தாரோ அந்த அமைப்பின் பழக்க வழக்கங்களையே தான் இப்போது பின்பற்றிக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தபோது கோவிந்தன் மனதில் ஒருவித தளர்ச்சி உண்டானது. தன்னுடைய கொள்கையில் உண்டாகியிருக்கிற தவறுகள் அவரைப் பாடாய்ப் படுத்தின.

“நீ ஏன் ஸ்டடி க்ளாஸுக்கு வரல?”

போராட்ட சமயங்களில் அவருடன் தோளோடு தோள் நிற்கும் அவருடைய நண்பர் கேட்டார். தான் தன்னுடைய வரையறையின் அளவை சரிப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கும் விஷயத்தை அவர் அவரிடம் கூறவில்லை.

“நீ கட்டாயம் வரணும்.”

அவர் கோவிந்தனை கட்டாயம் வரும்படி வற்புறுத்தினார். கோவிந்தனிடம் உண்டாகிவிட்டிருக்கும் கொள்கை பற்றிய குளறுபடிகள் பற்றியோ, அவருக்குள் நடந்து கொண்டிருக்கும் மனப் போராட்டங்களைப் பற்றியோ அவர்களுக்குச் சிறிதும் தெரியாது. கோவிந்தனிடம் உண்டாகியிருக்கும் இந்தத் தளர்வான போக்கு, சிறிது சிறிதாக விலகிச் செல்லும் இந்த நடத்தை, அந்தச் சிறு கிராமத்தில் அவர்கள் வளர்த்துக்கொண்டு வர நினைத்த அமைப்பிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்.

சமூகத்தை எல்லை கட்டி தனித்தனி வர்க்கங்களாகப் பிரிப்பதைப் போல மனிதனின் அடிப்படை குணங்களை எல்லை கட்டி நிறுத்த முடியவில்லை என்பதை நினைத்துப் பார்த்தபோது, கோவிந்தனுக்கு ஒருவித சோர்வே உண்டானது. இளைஞனாக இருந்த கோவிந்தன் எப்போது பார்த்தாலும் புத்தகங்கள் படிப்பதும் நிறைய சிந்திப்பதுமாக இருந்தார். அப்படி இருக்கும்போது அவருக்குச் சிறிது வெளிச்சம் கிடைத்தது. வர்க்கங்களுக்கு இடையில் மோதல் உண்டாவதற்குக் காரணம் அவர்களுக்கிடையே இருக்கும் வேறுபாட்டால் அல்ல என்று அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்.

இந்த விஷயத்தைப் பற்றி கோவிந்தன் தன்னுடைய நண்பருடன் பேசினார்.

“பாஸிட்டிவ்வும் நெகட்டிவ்வும் ஒன்றையொன்று சந்திக்கிறப்போ, அவற்றுக்கிடையே சண்டை உண்டாகுறது இல்ல. அதுக்கு மாறாக அவை இரண்டு சேர்றப்போ புதிய ஒரு சக்தி பிறக்குது. பாஸிட்டிவ்வும், பாஸிட்டிவ்வும் இல்லாவிட்டால் நெகட்டிவ்வும் நெகட்டிவ்வும் சேர்றப்போதான் தகராறே உண்டாகுதுன்ற விஷயத்தை முதல்ல நாம புரிஞ்சிக்கணும்.”

இரண்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே விஷயத்தைப் பின்பற்றும்போதுதான் சண்டை என்ற ஒன்றே உண்டாகிறது என்ற கோவிந்தனின் புரிந்து கொள்ளலை அவருடைய நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அவரைக் கிண்டல் செய்து ஏளனமாகப் பேசினார்கள். ஆனால், அந்தப் புரிந்து கொள்ளல் கோவிந்தனுக்குள் வேரூன்றி வளர ஆரம்பித்தது. வயதான கிழவனான கோவிந்தன் எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. எந்தவொரு தத்துவத்தையும் அவர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. இப்போது அவர் மனதில் சதா நேரமும் வலம் வந்து கொண்டிருப்பது ஜன்னி வந்து வீங்கிப் போன வயிறுடன் மண்ணைத் தின்று கொண்டு நின்றிருக்கும் அவருடைய சிறு மகனின் இரக்கத்தை வரவழைக்கும் பரிதாபகரமான பார்வை மட்டுமே.

கோவிந்தன் நடந்து நடந்து புகை வண்டி நிலையத்தை அடைந்திருந்தார்.

“சார்... இப்போ நீங்க எதற்கு டெல்லிக்குப் போறீங்க?”

அவர் பதிலென்று எதுவும் கூறாமல் வெறுமனே சிரிக்க மட்டும் செய்தார்.

“அங்கே கண்ணீர்ப் புகை, குண்டு வெடிப்புன்னு பல விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கே!”

அப்போதும் அவர் சிரித்தார்.

“சும்மா போறீங்க... அப்படித்தானே?”

“ஆமா...”

அவர் வேட்டியை இடுப்பில் கட்டியிருந்த இடத்திலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்து தன்னுடைய முகத்தைத் துடைத்தார். கைக்குட்டை மிகவும் மோசமாக அழுக்காயிருந்தது. அதில் தூசும் சேறும் அப்பியிருந்தன.

முன்பு அவர் எப்போது வருங்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். வருங்காலத்தைப் பற்றிய நினைவுகளுடனும் கனவுகளுடனுமே எந்த நேரமும் அவர் மனம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது அவர் வாழ்ந்து கொண்டிருப்பது முழுக்க முழுக்க கடந்து போன காலங்களில் என்பதுதான் உண்மை. அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மோசமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அவருடைய உடல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்பொழுது, அவரின் மனம் பின்னோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

நகரம் அவரின் கடந்த காலத்தின் அரங்கமாக இருக்கிறது.

“சார், ஏதாவது வேணுமா? ஒரு தேநீர்...?”

“வேண்டாம் குழந்தைகளே...”

அன்றும் இன்றும் அவர் இழக்காமல் இருப்பது இளைஞர்களின் இந்த அன்பு ஒன்றுதான். அவர் அந்த இளைஞர்களின் முகத்தையே நன்றிப் பெருக்குடன் பார்த்தார். மீசை வளர ஆரம்பித்திருக்கும் இளம் பிராயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். பெரும்பாலும் அவர்கள் ப்ரீடிகிரி மாணவர்களாக இருக்க வேண்டும்.

“வண்டி இப்போ வந்திடும், சார்...”

ப்ளாட்பார்மில் ஆட்கள் நகர்ந்து கொண்டிருப்பதை அவர் கவனித்தார். இளைஞர்களில் ஒருவன் அவருடைய பழமையான அந்த ரெக்ஸின் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு இரண்டாம் வகுப்புப் பெட்டியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். விலை குறைவான அந்த ரெக்ஸின் பெட்டியின் எடை இல்லாத தன்மை அந்த இளைஞனை ஆச்சர்யம் கொள்ளச் செய்தது. அந்தப் பெரிய பெட்டியில் இரண்டு ஜோடி ஆடைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை.

‘எல்லாம் முடிவு நிலைக்கு வந்து விட்டன. என்னுடைய வாழ்க்கையும்...’- அவர் மனதிற்குள் நினைத்தார்.

2

ருஸ்ஸி என்ற பெயரில்தான் அவள் எல்லாராலும் அழைக்கப்பட்டாள். ருஸ்ஸி என்றால் ரஷ்யா என்று இந்தி மொழியில் அர்த்தம் என்பது நமக்குத் தெரியும். முதல் தடவையாக அவள் பெயரைக் கேட்டபோது இளைஞனான கோவிந்தனுக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்குவதற்கு பட்டபாடு அவருக்குத்தான் தெரியும். அந்தப் பெயரைவிட அவருக்கு வினோதமாகப் பட்டது தங்களின் ஒரே மகளுக்கு இப்படி ஒரு நாட்டின் பெயரை வைக்கும் அளவிற்கு தாய்-தந்தையைத் தூண்டிய அந்த உணர்ச்சி வேகம்தான்.


அந்தப் பெயரை ஏற்றுக் கொள்வது என்பது அவரைப் பொறுத்தவரை மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. பாகிஸ்தான் என்றோ பங்களாதேஷ் என்றோ பெயரைக் கொண்ட ஒரு பெண்ணை நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறதா? நாகரீகம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு அர்த்தமில்லாமல பெயர் வைப்பதில் நம்முடைய மலையாளிகளைத் தோற்கடிக்க யாராலும் முடியாது என்ற விஷயம் நமக்கு நன்றாகவே தெரியும். எனினும், சொந்த குழந்தைக்கு அமெரிக்கா என்றோ இங்க்லாண்ட் என்றோ பெயர் வைக்கும் அளவிற்கு அறிவு குறைவான மனிதர்களாக நாம் இல்லை என்பதை மட்டும் சத்தியம் பண்ணி நம்மால் சொல்ல முடியும். அளவுக்கு அதிகமான நவநாகரீக எண்ணங்களும் கொள்கைப்பிடிப்பும்தான் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது நம்மிடம் ஆட்சி செய்யப் பார்க்கும். லெனின், ஸ்டாலின் ஆகிய பெயர்களைக் கொண்ட ஆட்கள் நம் நாட்டில் நிறைய இருக்கிறார்கள் என்ற உண்மை நம்முடைய கொள்கைப் பிடிப்பின் ஆழத்தைக் காட்டுகின்றன. என்னதான் கொள்கைகள் நமக்குள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தாலும், நம் குழந்தைகளுக்கு ஒரு வேற்று நாட்டின் பெயரை வைக்க நாம் எந்தக் காலத்திலும் துணிய மாட்டோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் வினோதமான பெயர்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் வாழும் பார்ஸி இனத்தவரை நாம் இங்கு ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த இனத்தவர்களிடம் கார்பெண்டர் என்றும் மெர்ச்சண்ட் என்றும் எஞ்ஜினியர் என்றும் டாக்டர் என்றும் பெயர்கள் இருப்பது சர்வ சாதாரணம். இந்து சமுதாயத்தில் ஜாதிகள், உப ஜாதிகள் ஆகியவற்றின் அடிப்படை அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் செய்யும் தொழில்தான் என்ற உண்மை நமக்கு நன்றாகவே தெரியும். அதாவது ஒரு தனிப்பட்ட தொழிலைச் செய்யும் ஒருவர் ஒரு தனிப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவராக மாறுகிறார் என்று இதற்கு அர்த்தம். ஆனால், நம் நாட்டில் கல்வி காரணமாகவும், அறிவு காரணமாகவும் சிறிது சிறிதாக ஜாதிகளுக்கும் தொழில்களுக்குமிடையே இருக்கும் தொடர்பு அழிந்து கொண்டே வருகிறது. தென்னை மரம் ஏறக்கூடியவர்களாகக் கருதப்பட்டு கொண்டிருந்த ஈழவர்கள் மத்தியில் இன்று ஏராளமான டாக்டர்களும் என்ஜினியர்களும் ஐ.ஏ.எஸ். படித்தவர்களும். இவ்வளவு ஏன், உயர்ந்த நிலையில் இருக்கும் இலக்கியவாதிகளும் கூட இருக்கிறார்கள் என்ற உண்மை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. பார்ஸி சமுதாயத்தில் தொழிலைக் குறிப்பிட்டுக் காட்டும் கார்பெண்டர், டாக்டர், என்ஜினியர் ஆகிய பெயர்கள் ஜாதியைக் குறிப்பிடுவனவாக இன்று இல்லை. என்ஜினியர் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு பார்ஸி, உண்மை வாழ்க்கையில் சில வேளைகளில் மெர்ச்சண்டாகவும், கார்ப்பெண்டர் என்ற பெயரைக் கொண்ட மனிதர் டாக்டராகவும் இருக்கலாம். டாக்டர் என்ற பெயரைக் கொண்ட என்ஜினியரைப் பற்றி நாம் என்ன நினைப்பது? என்ஜினியர் என்ற பெயரைக் கொண்ட டாக்டரையும்தான்.

இளைஞனான கோவிந்தன்: ரஷ்யா என்ற அர்த்தத்தைக் கொண்ட ருஸ்ஸின்ற ஒரு இளம் பெண்ணை எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் என்னால கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியல.

அவள் உடலில் அவருக்கு மிகவும் பிடித்தது பளபளப்பாக இருக்கும் மேல்தோல்தான். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலிவ் எண்ணெயின் நிறத்தைக் கொண்ட அவளின் தோலையே அவர் கையால் தடவிக் கொண்டிருப்பார். நடுத்தர வயது நடக்கும் போது தான் அவர் நகரத்தை விட்டு கிராமத்திற்கே திரும்பிப் போனார். இந்தக் கால இடைவெளியில் பல வகைப்பட்ட பெண்களுடனும் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால், ருஸ்ஸியிடம் இருந்ததைப் போல இவ்வளவு மென்மையான தோலை வேறு எந்தப் பெண்ணிடமும் அவர் பார்த்ததில்லை. அவருக்கு அவள் மீது காதல் தோன்றியதற்குக் காரணமே அவளின் இந்த மென்மையான, பளபளப்பான தோல்தான்.

கோவிந்தன்: இந்தத் தோல்தான் உன்னோட பெரிய சொத்து. அதன் மென்மைத் தன்மையையும் அழகையும் எவ்வளவு விலை கொடுத்தாவது நீ பத்திரமா பாதுகாக்கணும்னு உன்னை நான் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்...

அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த ருஸ்ஸி அவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள். “என் தோல் மட்டும்தான் உங்களுக்குப் பிடிக்குதா? வேறு எதுவும் பிடிக்கலையா?”

“உன் கண்கள்ல இருக்கிற மார்க்ஸிஸத்தை எனக்கு ரொம்பவும் பிடிக்குது.”

அவளின் பார்வையிலும் சிரிப்பிலும் பெருமூச்சுகளிலும் கலந்திருந்த அவருக்குப் பிடிக்காத மேலோட்டமான தன்மை பிற்காலத்தில் அவருக்கு சிறிதும் பிடிக்காமல் போனது.

“நீங்க எதைப்பற்றி இப்போ சிந்திச்சிக்கிட்டு இருக்கீங்க?”

“இலக்கிய மேடைகளில் பாலுணர்வுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் பற்றி. உன்னால வாசிக்க முடியாத எங்கள் மொழியின் நவீன இலக்கியத்தில் பாலுணர்வுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுறாங்க. அதைப்பற்றி சிந்திக்கிறப்போ கோடார்ட், ராப் க்ரியே ஆகியோரோட படைப்புகள் என் மனதில் வலம் வருது. அவர்களின் திரைப்படங்களில் வரும் பாலுணர்வுக் காட்சிகளைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தது உனக்கு ஞாபகத்துல இருக்கா? அவர்களின் கலைத்தன்மையிலிருந்து கொஞ்சம் கூட பிரிச்சுப் பார்க்க முடியாத ஒரு அம்சமாக பாலுணர்வும் இருக்குன்றது நமக்கு நல்லாவே தெரியும். உண்மையில் பார்க்கப்போனா, அவர்களோட திரைப்படங்களில் வரும் காட்சிகளில் மட்டுமல்ல, அதன் வடிவத்திலிருந்து கூட பாலுணர்வு என்ற ஒன்றைப் பிரித்துப் பார்க்க முடியாத நிலையிலதான் இருக்கு. கோடார்டின் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் மாவோவைப் பற்றியும் புரட்சியைப் பற்றியும் விவாதம் செய்றப்போ, நாயகி நிர்வாணமா உட்கார்ந்திருப்பான்றதை இப்போ நான் நினைச்சுப் பார்க்கிறேன். அந்த நிர்வாணக் கோலத்தை அந்தக் காட்சியைவிட இல்லாமற் செய்ய முடியாத நிலை. அவள் உடை அணிந்திருந்தால், அந்தக் காட்சியின் அழகு காணாமல் போயிருக்கும். ராப் கிரியேயின் ஒரு படத்தில் சிவப்பு வண்ணத்தில் அறையின் சிறு படிகளில் இறங்கி வரும் ஒரு முழு நிர்வாணமான பெண்ணை நாம் பார்க்கலாம். அந்த அறையின் அமைப்பையும், அதன் வண்ணத்தையும் மனசுல நினைக்கிறப்போ, அவளால நிர்வாணமா இல்லாம இருக்க முடியாது. ஆடை அணிந்து அவள் படிகள்ல இறங்கி வந்தால், அந்தக் காட்சிக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லாமல் போயிருக்கும். எங்களின் நவீன இலக்கியத்தில் இதைப்போல பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கொஞ்சம் இடம் இருக்கிறது என்பதை எங்களின் விமர்சகர்கள் பார்க்க மறுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பாலுணர்வு என்பது எதிர்ப்பு, அதிகாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தக் கூடியன; அவ்வளவுதான். கதைகளிலும், நாவல்களிலும் பாலுணர்வை அவற்றின் தன்மையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போக்குகள் நம்முடைய இலக்கியத்தில் இனி உண்டாக வேண்டும்!”


ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இளைஞனான கோவிந்தன் பல்வேறு இடங்களையும் பார்க்கப் புறப்பட்டு விடுவார். அழகான சிறுநகரங்களும் கிராமங்களும் இப்படித்தான் அவளுக்கு அறிமுகமாயின. தன்னுடைய பயணங்களுக்கு இடையில் நகரத்தின் தெற்குப் பகுதியில் பாவைக்கூத்து நடத்துபவர்கள் மட்டும் வசிக்கக் கூடிய ஒரு கிராமத்தை அவர் தன்னுடைய பயணங்களைச் செய்தார். பிறகு ருஸ்ஸி அவருக்கு அறிமுகமான பிறகு, அவர்கள் ஒன்றாகவே சேர்ந்து சுற்றினார்கள்.

இப்படித்தான் ஒருமுறை அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தூரத்தில் இருக்கும் ஒரு பாலைவனத்தைப் பார்க்கப் போனார்கள். எந்தப் பாலைவனம் என்று நாம் கேள்வி கேட்காமலிருப்பதே நல்லது. குஜராத்திலோ அல்லது ராஜஸ்தானிலோ இருக்கும் ஏதாவதொரு மணல் பரப்பாக இருக்கலாம். இல்லாவிட்டால் சஹாரா பாலைவனமாகக் கூட இருக்கலாம். ஒரு பாலைவனத்தை மனதில் கற்பனை பண்ணிப் பார்க்கும்போது அதற்கு அவசியமான மணல் பரப்பும் ஒட்டகங்களும் அங்கு இருக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு முக்கியம்.

கோவிந்தன்: ஒரு பாலைவனத்தின் நிறமில்லாத தன்மையையும், இந்த மணல் பரப்பின் தோற்றத்தையும், இந்த ஆகாயத்தின் சாந்தமான நிலையையும் மனதில் நினைத்து அதற்குப் பொருத்தமான ஒரு ஆடையை நான் உனக்காக கற்பனை பண்ணிப் பார்த்தேன். ஆனால், அந்த முயற்சியை இப்போது நான் கைவிட்டுவிட்டேன். காரணம்- உனக்குத் தேவை ஆடை அல்ல; ஆடை எதுவும் இல்லாமல் இருப்பதுதான் இந்த பாலைவனத்தின் வழியாக நடந்து போகும் உனக்குப் பொருத்தமானது என்பதையே நான் கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்திருக்கேன்.

ஒட்டகத்தின் மேல் நிர்வாணமாக அமர்ந்து அவள் மணல் பரப்பின் வழியாகப் பயணம் செய்வதை கற்பனை பண்ணிப் பார்க்க அவர் விரும்பினார். முன்பு நான்கோ, ஐந்தோ வயதுள்ள ஒரு பெண் குழந்தை உடம்பில் ஆடை எதுவும் இல்லாமல் நடப்பது மாதிரி ஒரு கற்பனை அவருக்கு இருந்தால் ஆச்சர்யம்தானே! அந்த ஒரு கற்பனை வழியாகத் தன்னுடைய தூரமான கடந்த காலத்தில் பார்த்த ஒரு சிறிய காட்சியுடன் அவர் ஒரு தொடர்பை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். தன்னுடைய கடந்தகாலம் மிகவும் வேகமாகத் தன்னை விட்டுப் பறந்து போய்க் கொண்டிருக்கிறது என்றொரு தோணல் அவருக்குப் பலமாக வேரூன்றி விட்டிருந்தது. கடற்கரையில் ஆடை எதுவும் அணியாமல் அமர்ந்து வீடுகள் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தை உண்மை. அதே நேரத்தில் மணல் பரப்பு வழியாக நிர்வாணமாக நடந்து செல்லும் தன்னுடைய தோழி ஒரு கற்பனை என்பதை அவர் உணராமல் இல்லை. அதனால் அவர் மனதில் உருவாக்கிய தொடர்பிற்கு ஒரு உயிர்ப்பு இருக்கவே செய்தது. உண்மையையும் கனவையும் கலந்து உண்டாக்கிய ஒன்றாக இருந்தது அது. கடற்கரை மணலின் ஈரமும் பாலைவன மணல் பரப்பின் வறட்சியும் அந்தக் கற்பனையில் இரண்டறக் கலந்திருந்தன.

அவர் விருப்பப்பட்டிருந்தால் எங்கோ ஒரு தூரத்தில் மனிதப்பிறவி கூட இல்லாத ஒரு பாலைவனத்தில் அவள் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஆகியிருக்கலாம். பிறந்த கோலத்தில் ஒட்டகத்தின் மீது அமர்ந்து மணல் பரப்பு வழியாகப் பயணம் செய்திருக்கலாம்.

கோவிந்தன்: ஆனால், நான் அதை அவள்கிட்ட கேட்கல. வெப்பக் காற்று பட்டு அவளின் மென்மையான தோல் எங்கே பாழாகிப் போய் விடப்போகிறதோ என்ற பயம்தான் காரணம். என்னைப் பொறுத்தவரை என்னுடைய சொந்த அழகுணர்வை விட முக்கியம் அவளோட தோலின் பாதுகாப்பு.

பாலைவனத்தைக் கண்களால் நிறையக் கண்டு ஒரு பெரிய பாலித்தின் பை முழுவதும் அங்கேயிருந்த வறண்டு போன மணலைச் சேகரித்துக் கொண்டு அவர்கள் நகரத்திற்குத் திரும்பினார்கள். அந்த மணலை அவர் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு தன்னுடைய அறையில் பாதுகாத்து வைத்தார். இப்படித்தான் பாலைவனத்தின் ஒரு அம்சம் அவரின் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக இருந்தது. ஆனால், அவரின் நோக்கம் அதுவல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நாட்கள் கழிந்த பிறகு மட்டும்தான் எதற்காக அவர் பாலைவனத்திலிருந்து மணலை வாரி பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் அழகான ஒரு பெண் பொம்மையை வாங்கிக் கொண்டு வந்து அது அணிந்திருந்த பளபளப்பான ஆடைகளை அவிழ்த்துவிட்டு, அதை முழு நிர்வாணமாக ஆக்கி கண்ணாடிப் பாத்திரத்திற்குள் இருந்த மணலில் நிறுத்தினார்.

கோவிந்தன்: இப்படித்தான் பாலைவனத்தில் என்னால் செயல்வடிவில் செய்ய முடியாமற்போன ஒரு கற்பனையை, அதன் ஒரு நகலின் மூலமாக நடத்திக்காட்டி எனக்கு நானே திருப்தியடைந்தேன்.

இனி கோவிந்தனின் ஆரம்ப கால நண்பரான பாலகிருஷ்ணனின் மத்திய வர்க்க குணங்களைப் பற்றியும் மன எண்ணங்களைப் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கோவிந்தனும் ருஸ்ஸியும் மிகவும் நெருக்கமாகப் பழகுவது பாலகிருஷ்ணனை ஒரு மாதிரி ஆக்கியது.

“நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்குவியா?”

“எதுக்கு?”

பாலகிருஷ்ணனின் கேள்வியில் இருந்த முக்கியத்துவத்தை கோவிந்தனால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோவிந்தனின் எதிர்கேள்வியைக் கேட்டு அதிர்ச்சிக்கு உள்ளானார் பாலகிருஷ்ணன்.

“நீங்க எவ்வளவு காலம் இப்படியே இருப்பீங்க?”

“எப்படி?”

“கல்யாணமே பண்ணிக்காம...”

“ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமாயிட்டா அவங்க உடனே திருமணம் செய்து கொள்ளணுமா என்ன? ஒண்ணா காப்பிக் கடைகளுக்குப் போயி உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கிட்டு பாலைவனங்களைப் போய் பார்த்துக்கிட்டு... இப்படி நாங்க இருந்தா போதாதா?”

“நம்மோட நாட்டு நடப்புக்கு ஏற்றதா அது இருக்காதுன்றதை முதல்ல உனக்கு நான் ஞாபகப்படுத்த விரும்பறேன்.”

“அன்புள்ள நண்பனே, என்னோட நோக்கமும் அதுதான்...”

“அந்தப் பெண்ணோட வீட்டிலுள்ளவர்கள் சம்மதிப்பாங்கன்னு நீ நினைக்கிறியா? அவங்க பஞ்சாபிகளாச்சே!”

“அவங்களைப் பற்றி நான் எதுக்கு நினைச்சுப் பார்க்கணும்?”

“கிராமத்துக்குப் போயி ஒரு மலையாளிப் பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டு வந்து வாழுற வாழ்க்கை... என் கோவிந்தா, உனக்கு அதோட அருமையைப் புரிஞ்சிக்கவே முடியல...”

விமர்சகன்: கோவிந்தா, வெளிநாட்டுக்காரர்களின் வாழ்க்கை முறையைத்தான் நீ வாழ்க்கையில் பின்பற்றிக்கிட்டு இருக்கே! சார்த்ரும் ஸிமோன்த் புவாரும் வாழ்ந்தது போலுள்ள ஒரு வாழ்க்கையை உன்னோட தோழியுடன் வாழணும்னு நீ முயற்சி பண்ணுறே. உன்னோட பார்வை பின்பற்றுகிற வழிகளும் முழுக்க முழுக்க மேல் நாட்டு முறையில் அமைந்தவை. அந்தப் பெண்ணை ஒட்டகத்து மேல நிர்வாணமா உட்காரவச்சு பாலைவனத்தின் வழியா பயணம் செய்யணும்ன்ற உன்னோட அந்த கற்பனைகூட மேல்நாட்டு சிந்தனைதான்.


குளக்கரையில் தலைமுடியை அவிழ்த்து விட்டுட்டு ஈர உடையுடன் நின்று கொண்டிருக்கிற இளம் பெண்களும், முழுக்க முழுக்க கேரளத்தின் மணம் கமழ்கிற உருவங்களும் ஓவியங்களும் என்ன காரணத்தால் உன் மனதில் வலம் வரவில்லை கோவிந்தா?”

கோவிந்தன்: எதற்கு அப்படி என் மனதில் தோன்றணும்ன்ற இன்னொரு கேள்வியைத்தான் நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன்.

இளைஞனான கோவிந்தனின் வாழ்க்கை முறைகளுடன் ஒத்துப்போவதென்பது பாலகிருஷ்ணன் உட்பட்ட அவரின் சில நண்பர்களுக்கு இயலாத ஒரு காரியமாக இருந்தது. அவரின் சமவயது கொண்ட அந்த இளைஞர்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களிலும் அதைப்போலுள்ள பிற நிறுவனங்களிலும் டைப்பிஸ்டுகளாகவோ க்ளார்க்குகளாகவோ வேலை செய்து தங்களின் உழைப்பையும் அறிவையும் பயன்படுத்தி தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் திருப்தியடையும்படி செய்து தங்கள் பணிகளில் பதவி உயர்வு பெற்றார்கள். உணவு விடுதிகளில் உணவு சாப்பிட்டால் செலவு அதிகமாகுமென்பதால் அலுவலகங்களிலிருந்து திரும்பி வந்தவுடன் சமையலறைக்குள் நுழைந்து அவர்களே சமையல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தினந்தோறும் அதிகாலையில் எழுந்து காலை உணவையும் சமையல் பண்ண ஆரம்பிப்பார்கள். அதற்குப் பிறகு அழகாகத் தேய்த்த டெர்லின் சட்டையும் மிகவும் இறுக்கமாக இருக்கும் பேன்ட்டையும் பாலிஷ் போட்டு பளபளப்பாக்கிய முனை கூர்மையாக இருக்கும் காலணிகளையும் அணிந்து அலுவலகத்திற்குப் போவார்கள். இப்படியே சில வருடங்கள் வாழ்ந்த பிறகு அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் போய் தலை முழுவதும் தேங்காய் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு நடக்கும் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு திரும்பி வருவார்கள். முதல் குழந்தை பிறக்கும்போது ஓவர் டைம் வேலை செய்து பணம் சம்பாதித்து அவர்கள் டில்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டியின் ஒரு ஃப்ளாட்டை புக் செய்வார்கள். முதல் குழந்தைக்கு பத்து வயது ஆகும்போது அவர்கள் நகரத்தின் எல்லையில் கொசுக்களும் ஈக்களும் நிறைந்திருக்கும் இடத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கான்க்ரீட்டால் ஆன வீடுகளில் ஒரு ஃப்ளாட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆவார்கள். டில்லியில் வசிக்கும் மத்தியதர வாழ்க்கை நடத்தும் மக்களின் லட்சியமே ஒரு டி.டி.ஏ. ஃப்ளாட்தான். அதோடு அவர்களின் மீசையும் காதுகளுக்கு மேலே தலைமுடியும் நரைக்கத் தொடங்கி விடும். அவர்கள் குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்பே கிழவர்களாக மாறி விட்டிருப்பார்கள்.

கோவிந்தனின் நண்பனான பாலகிருஷ்ணனுக்கும் அதுதான் நடந்தது.

கோவிந்தன் அவருடைய பஞ்சாபி தோழியைத் திருமணம் செய்யவில்லையென்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லையே! அவருக்கு டில்லியில் சொந்தமாக ஃப்ளாட் எதுவும் இல்லை. சொந்த ஊருக்குத் திரும்பிப் போகலாமென்று தீர்மானித்தபோது அவர் நகரத்தில் முழுக்க முழுக்க ஒரு தனிமையான மனிதனாகவும் ஆதரவு என்று யாருமில்லாத மனிதனாகவும் மாறிவிட்டிருந்தார். அதே நாட்களில் மீசைக்கு சாயம் பூசி அதைக் கறுப்பாகத் தோன்ற வைத்த பாலகிருஷ்ணன் தன்னுடைய மனைவியையும் பெரிதாக வளர்த்த குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தமாஷாகப் பேசிக் கொண்டும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டும் நகரத்தின் தெரு வழியாக ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருப்பதை கோவிந்தன் பார்த்தார். மத்திய தர வர்க்கங்களின் வாழ்க்கை முறைகளிலிருந்தும் விருப்பங்களிலிருந்தும் இலட்சியங்களிலிருந்தும் விலகி நடந்ததற்காக தனக்குக் கிடைத்த தண்டனைதான் இந்தத் தனிமையான வாழ்க்கையோ என்று அந்த நாட்களில் மத்திய வயதில் இருக்கும் கோவிந்தன் தன்னைத்தானே கேட்டுக் கொள்வார்.

நாம் இனி தன்னுடைய பெரிய ரெக்ஸின் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு புகைவண்டி நிலையத்தில் தன்னந்தனி மனிதனாக நின்று கொண்டிருக்கும் வயதான கோவிந்தனின் அருகில் செல்வோம்.

3

ளைஞனான கோவிந்தனுக்கும் ருஸ்ஸி என்ற வினோதமான பெயரைக் கொண்ட இளம்பெண்ணுக்குமிடையே இருந்த உறவு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டேயிருந்தது. விடுமுறை நாட்களில் பதினெட்டு மணி நேரம் அவர்கள் ஒன்றாக இருந்து பொழுதைக் கழிப்பார்கள். உறங்கப்போகும் நேரத்தில் மட்டுமே அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்திருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் பயணம் செய்த நாட்களில் தூக்கத்தில்கூட அவர்கள் பிரிந்ததில்லை. இருந்தாலும் அவர்களைக் காதலன்- காதலி என்றழைக்க நம்மால் முடியாது. அப்படி அழைத்தால் நாம் அவர்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காதல் என்ற வார்த்தை கொண்டு நாம் அவர்கள் இருவருக்குமிடையே இருக்கும் உறவைக் கணக்கிட்டால், அவர்களின் ஆழமானதும், முழுமையானதுமான மன ரீதியான உறவை மிகவும் சாதாரணமாக எடைபோட்டு விட்டோம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் இருவரும் நிலவையும் மலர்களையும் விரும்பவில்லை. இரவு நேரங்களில் தன்னுடைய ஜோடியைத் தேடிப்போகும் காதலர்களுக்கு வெளிச்சம் தருகிற ஒரு விளக்காகத்தான் அவர் நிலவைப் பார்த்தார். நிலவின் முகத்தில் தழும்புகளும் புள்ளிகளும் இருப்பதைப் பார்த்து அவள் மனதில் மிகவும் கவலை கொண்டாள். எந்தக் காரணத்தால் நிலவு தன்னுடைய முகத்தை இன்னும் ‘ப்ளிச்’ செய்யாமல் இருக்கிறது என்று அவள் தன்னைப் பார்த்துக் கேட்டுக் கொள்வாள். ஆகாயத்தில் ப்யூட்டி பார்லர்கள் இல்லாமலிருப்பதன் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுவார். எது எப்படியோ, நிலவிற்கு ஒரு விலை மாதுவின் முகம் இருப்பதென்னவோ உண்மை.

ஆக்ரா மிகவும் அருகில்தான் இருக்கிறது என்றாலும் அவர்கள் இதுவரை தாஜ்மஹாலைப் பார்த்ததில்லை. ஏராளமான பூந்தோட்டங்கள் இருந்தாலும் அவர்கள் அங்கு போய் உட்காரவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் காதலர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டையோ குறும்புத்தனங்களையோ அவர்கள் எந்தச் சமயத்திலும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

அவர்: விபச்சாரம் நடக்கும் தெருவில்தான் நாம சந்திச்சோம் சிதிலமடைந்து போன வீடுகளின் மேற்பகுதியில் விபச்சாரிகள் அழகா ஆடைகள் அணிந்து நின்னுக்கிட்டு இருக்கிறதை நான் கீழே நடைபாதையில் ஒரு சிகரெட்டைப் பிடிச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருந்தேன். கிராமத்திலிருந்து வந்த ஒரு பணக்கார விவசாயி சைக்கிள் ரிக்ஷாவுல வந்து இறங்கினப்போ விபச்சாரிகள் கிளிகளைப் போல சலசலத்தார்கள். விபச்சாரிகள் தங்களின் நடவடிக்கைகள் மூலமும், எந்தச் சமயமும் நிறைவேறவே முடியாத தங்களின் கனவுகள் மூலமும், பரிதாபமான மரணங்கள் மூலமும் நம்ம வாழ்க்கையில் அர்த்தமுள்ள ஒரு சலனத்தை உண்டாக்குறாங்கன்றது என்னவோ உண்மை.

அவள்: நான் எதற்காக விலை மாதர்கள் இருக்கும் அந்தத் தெருவிற்குப் போனேன்றதைப் பற்றி நீங்க ஒருநாள் கூட என்னைப் பார்த்துக் கேட்டது இல்ல. நல்ல பெண்கள் அந்தத் தெரு இருக்கிற பக்கமே போக மாட்டாங்க. இருந்தாலும் ஒரு பிராமண குடும்பத்துல பிறந்த நான் எதற்காக ஜி.பி.ரோட்டுக்குப் போனேன் என்பதைத் தெரிஞ்சுக்கணும்ன்ற ஆர்வம்கூட உங்களுக்கு எப்பவும் இருந்தது இல்ல.


அவர்: நாம ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமாகி நீ பேசத் தொடங்கிய பிறகு நான் அந்த வீடுகளின் வாசல்களில் இருக்கும் மரத்தூண்களின் சிதிலமான நிலையைப் பற்றித்தான் மனசுக்குள்ள சிந்திச்சேன். காலம் ஆச்சர்யப்படும் விதத்தில் அந்தத் தூண்களைக கொஞ்சம் கொஞ்சமா தின்னுக்கிட்டு இருந்துச்சு. அழிவின் அழகை நான் அப்போதான் பார்த்தேன்.

அவர்கள் இருவரும் பத்து அல்லது பன்னிரெண்டு மணி நேரங்கள் தொடர்ந்து உட்கார்ந்து குழந்தைகளைப் பற்றியோ இன்ஷுரன்ஸ் பாலிஸியைப் பற்றியோ டி.டி.ஏ ஃப்ளாட்டுகளைப் பற்றியோ அல்ல பேசிக் கொண்டிருந்தது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து எந்தெந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் பொதுவாக பேசினார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

புதன்கிழமை (காப்பிக்கடை): இயற்கையும் மனிதனும்; மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இயற்கையும் மனிதனும் என்று கூறப்படும் பொருத்தமின்மை.

வியாழக்கிழமை (பார்ஸி சுடுகாடு): இந்தியாவில் இடதுசாரி அமைப்புக்களின் எதிர்காலம்; கம்யூனிசமும் பாலுணர்வும் இலக்கியத்தில்; எதற்காக ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றி பெற்றார் என்பதையும் சேகுவாரே தோல்வியடைந்தார் என்பதையும்.

வெள்ளிக்கிழமை (பல இடங்களிலும் நடந்துகொண்டு): மனசாஸ்திரம்; ஃப்ராய்டில் இருந்து லக்கானுக்குள்ள தூரம்; சமூக அக்கறை கொண்டு சில செயல்கள் மூலம் அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முடியும் என்பதைப் பற்றி.

சனிக்கிழமை (ஒரு புதருக்குள் ஒளிந்து உட்கார்ந்துகொண்டு): நகரங்களில் எப்படி சேரிகள் உண்டாகின்றன என்பதைப் பற்றி; சேரிகளை ஒழிப்பதற்கான வழிகள்; சேரிகளும் விலை மாதர்கள் இருக்கும் தெருக்களும் சமூகத்தின் மனதில் மண்டிக்கிடக்கும் அழுக்குகளைப் போக்கும் அவுட்லெட்டுகளாக இருக்கின்றன என்ற கண்டுபிடிப்பு.

ஞாயிற்றுக்கிழமை (தோபிகாட்டில் தோபிகள் துணிகள் துவைப்பதைப் பார்த்தவாறு): அரசியல் கட்சிகள் பிழைப்பதற்கு மக்களின் வறுமை அவசியம் என்பது; மறைவிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சியாளர்கள் தங்களின் பாலுணர்வை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது; தோப்பில் பாஸியின் ‘மறைவு வாழ்க்கையின் நினைவுகள்’ என்ற நூலைப் பற்றி.

காப்பி கடையிலும் பார்ஸி சுடுகாட்டிலும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசியது எதற்காக என்பதையும் ஆராய்ந்து பார்த்து நாம் இந்த விஷயத்தை முடித்துக் கொள்வோம்.

கோவிந்தன்: அன்று நாங்க பேசினது காசியில் குளிக்கிற இடத்தில் இருக்கும் அசுத்தத்தைப் பற்றி; இந்து மதமும் அசுத்தமும்; அசுத்தம் கலந்த கங்கை நீரைக் கொண்டு ஆன்மாவில் இருக்கிற அழுக்குகளை நீக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் புத்திசாலித்தனத்தைப் பற்றி.

சில நேரங்களில் கோவிந்தன் மிகவும் அமைதியான மனிதனாகி விடுவார். அப்போது தன்னுடைய தோழியுடன்கூட அவர் ஒரு வார்த்தை பேசமாட்டார். மவுன விரதம் இருக்கும் அவரிடம் ஏதாவது கேட்பதாலோ அல்லது அவரிடம் ஏதாவது சொல்வதாலோ எந்தவிதப் பயனும் இருக்காது என்பதை நன்கு அறிந்திருந்த அவள் அவரைப்போலவே தானும் மவுனமாக இருந்து கொண்டு அவரோடு சேர்ந்து நகரத்தின் தெருக்கள் வழியே நடப்பாள். களைப்பு தோன்றும்போது அவர்கள் பாதையோரங்களில் நின்று பால் கலக்காத தேநீர் வாங்கிப் பருகி ஓய்வெடுப்பார்கள்.

அவள்: அது நகரத்தில் ஹிப்பிகள் வந்து இறங்கிய காலம். பட்டாம்பூச்சி கூட்டத்தைப் போல அவங்க நகரத்தில் வந்து குழுமிக் கொண்டிருந்தாங்க. பணத்தை இழந்த சில ஹிப்பிகளுக்கு நீங்க உதவி செஞ்சீங்க. நிகம்பாய் சுடுகாட்டிற்குப் பக்கத்துல சில பொறுக்கிப் பசங்க ஒரு பெண் ஹிப்பியை மானபங்கப்படுத்த முயற்சி செய்தப்போ திரைப்படங்கள்ல வர்ற கதாநாயகனைப்போல நீங்க அங்கே போயி அவளோட மானத்தைக் காப்பாத்தினீங்க....

அவர் அவளிடம்: அடுத்த வருடம் தீரச் செயலுக்கான தேசிய விருது எனக்குக் கிடைக்கும், நெஞ்சுல மெடலைத் தொங்கப் போட்டுக்கிட்டு நான் குடியரசு நாள் அணிவகுப்புல பந்தாவா நடந்து போவேன்னு நீ என்னைப் பார்த்து கிண்டல் பண்ணினே.

வயதாகி விட்ட கோவிந்தனுக்கு இருக்கும் ஒரு வருத்தம் தன்னுடைய இளமைக் காலத்தில் தான் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்காரனைப் போல வாழவில்லை என்பதுதான். ஐம்பத்தெட்டாம் வயதில் மீண்டும் டில்லியில் வந்திறங்கி அதன் சிறிதும் மாற்றமில்லாத வறுமையையும் பசியையும் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மனதில் அசைபோட்டவாறு ரெக்ஸின் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு தெருவில் நடக்கும்போது ஒரு கம்யூனிஸ்ட்காரனாக வாழவேண்டியதன் தேவையைப் பற்றி மீண்டும் அவர் சிந்திக்கலானார். பெண்களுடன் சேர்ந்து இங்குமங்குமாய் நடந்து கொண்டு தத்துவ சாஸ்திரங்களைப் பற்றி பேசிக் கொண்டும் தன்னுடைய அருமையான நாட்கள் முழுவதையும் வீணாக்கி விட்டோமே என்ற சிந்தனை இந்த வயதான காலத்தில் அவரிடம் ஒரு பரிதாபமான நிலையை உண்டாக்கியது. அவரின் சில நண்பர்கள் தங்களின் சொந்த கொள்கைகளின் வெற்றிக்காக வாழ்க்கையையே இழந்தார்கள். ஆரம்ப காலத்தில் அவர்கள் போலீஸ்காரர்களின் அடி, உதைகளையும் பிற்காலத்தில் மத வெறியர்களின் கத்தி குத்துக்களையும் வாங்கினர். அவருடைய உற்ற நண்பனான உபேந்திரனின் மனைவி லதாவிற்கு வாழ்க்கையில் ஒருமுறை கூட உடலுறவு என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. காரணம்- இரவு படுக்கையில் படுத்தவாறு உபேந்திரன் சிந்தித்ததும், சொல்லிக்கொண்டிருந்ததும் பட்டினியை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பதைப் பற்றித்தான். இருந்தாலும் லதா பிரகாசமான முகத்தைக் கொண்டவளாகவும் எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவளுமாக இருந்தாள்.

கோவிந்தன் உபேந்திரனிடம்: நீ அவளுக்குச் சிரிப்பைத் தராவிட்டாலும் அவள் எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்காளே, அது எப்படி?

உபேந்திரன் கோவிந்தனிடம்: சிரிப்புக்கும் அழுகைகளுக்கும் அப்பால் இருப்பதுதான் ஒரு உண்மையான லட்சியவாதியின் வாழ்க்கை. இலட்சியத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் என்னுடைய இந்த சோகங்கள் நிறைந்த வாழ்க்கையில் கோவிந்தா, உன்னுடைய அல்லது லதாவின் தனிப்பட்ட சிரிப்பையும் அழுகையையும் நான் ஒரு பொருட்டாகவே நினைக்கல.

இந்த ஒரு துளியில்தான் கம்யூனிஸமும் ஆன்மிகமும் சந்திக்கின்றன என்று கோவிந்தன் ருஸ்ஸியிடம் சொன்னார்:

FREDERIC ARTENSEN: WHAT DOES LIFE STAND FOR?

WILLIAM HEYSENTBERG: THE WHOLE MEANING OF LIFE IS SUMMED UP IN A SINGLE WORD-SHIT

GORDENSTEIN: AGREED, BUT ADD A PINCH OF SALT AND PEPPER.

இன்று போலீஸ்காரர்கள் உபேந்திரனின் பாதுகாப்பாளர்கள். காரணம்- மத வெறியர்களின் கத்திகள் அவன் நெஞ்சுக்கு நேராக பிரகாசமாக நீட்டிக் கொண்டிருக்கின்றன.

செயல்களால் அல்ல, சிந்தனைகளின் மூலம்தான் நாம் வாழ்க்கைக்கு ஒரு விளக்கம் தர முடியும் என்று இளைஞனான கோவிந்தன் முழுமையாக நம்பினார். அந்தப் புரிந்து கொள்ளல் மூலம்தான் அவர் தனக்குள்ளேயே ஒரு சிந்தனையைத் தோற்றுவித்து வளர்த்துக் கொண்டிருந்தார்.


காலப்போக்கில் மதுபானத்தைப் போல சிந்தனை அவரைத் தளர்வடையச் செய்தது. சிந்தித்துச் சிந்தித்து களைப்படைந்து போன அவர் கால் தடுமாறிக் கீழே விழ இருந்தார்.

அவள் (தனக்குள்): கல், மண் ஆகியவற்றின் மேல் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நான் நன்றாகவே அறிவேன்.

கோவிந்தனை நன்கு புரிந்து கொள்வதற்கு முன்பு, அதாவது- ஆரம்ப நாட்களில் அவரை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டுமென்பதற்காக வாசனை சோப் தேய்த்து குளித்து அவள் அவரின் அருகில் போய்ப் படுப்பாள். ஆனால் அவளுடைய ஈரமாகியிருக்கும் கூந்தலிலிருந்து புறப்பட்டு வரும் சோப் வாசனை அவரின் மனதில் எந்தவித உணர்ச்சியையும் உண்டாக்கியதாக அவள் பார்த்ததேயில்லை. மாறாக, இரயில் தண்டவாளத்திற்கு மிகவும் அருகில் மண் அப்பிய ஒரு கறுப்புப் பெண்ணைப் பார்த்து அவர் உணர்ச்சிவசப்பட்டு நின்றதைக் கண்டபோது அவளுக்கு அவரைப்பற்றிய சில நுட்பமான விஷயங்கள் புரிந்தன. ஒருநாள் அவர் தரையிலிருந்து ஒரு பிடி மண்ணைக் குனிந்தெடுத்து அவளுடைய மார்புகளின் மொட்டுகளிலும் தொப்புளிலும் தடவினார்.

விமர்சகன்: முன்பொருமுறை அவள் நிர்வாணமாக ஒட்டகத்தின் மீது அமர்ந்து பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்வதைப் போல் அவர் கற்பனை பண்ணியது போல, அவளின் நிர்வாண உடம்பில் மண்ணை அப்புகிற அவரின் இந்த ஒரு செயலும் பாரத அழகுணர்வு கொள்கைகளுக்கு சற்றும் பொருந்தாததாகவும் மேல்நாட்டு ஆக்கிரமிப்பு கலந்ததாகவும் இருக்கிறது என்பதை உறுதியான குரலில் நான் கூறுகிறேன்.

கோவிந்தன் தோழியிடம்: நாம ரெண்டு பேரும் எவ்வளவோ வருடங்களாகப் பழகிக்கிட்டு வர்றோம் என்ற உண்மை நான் சொல்லாமலே உனக்குத் தெரியும். இளமையின் வெகுளித்தனங்கள் விலகிப்போகாத ஒரு பெண்ணாக நீ இருக்கும்போதுதான் உன்னை முதல்முறையா பார்த்தேன். என் கண் முன்னால் மாதவிலக்கைத் தாண்டி இந்த நிலைக்கு வளர்ந்து வந்திருக்கிற பெண் நீ. உன்னோட பார்வைகளும் சிரிப்புகளும் எனக்கு இன்னைக்கும் மனப்பாடம். மாதவிலக்கு நாட்களில் உன் உடம்போட வெப்பம் எத்தனை டிகிரி இருக்கும்னு என்னால துல்லியமா சொல்ல முடியும்.

பட்டுப் புடவை அணிந்து நிற்பதை விட மண் அப்பி இருக்கும் ருஸ்ஸி அழகாக இருந்தாள். அதனால் அவர் அவள் மீது அவ்வப்போது மண்ணைத் தடவிப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார்.

தன்னுடைய சோகங்கள் நிறைந்த வாழ்க்கையில் இப்படிப்பட்ட செயல்கள் மூலம் புதிய அர்த்தங்களைக் கண்டுபிடிக்க தனக்கு உதவியாக இருந்த ருஸ்ஸியை எதிர்பாரத்து கையில் ரெக்ஸின் பெட்டியுடன் அவர் புகைவண்டி நிலையத்தில் காத்து நின்றிருந்தார். அவளைப் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது என்ற உண்மையை மனதில் வருத்தத்துடன் அவர் மீண்டும் நினைத்துப் பார்த்தார். ஒரு போர்க்காலத்தில் நடப்பதைப்போல பயணிகள் ஒருவகை பரபரப்புடன் வருவதும் போவதுமாக இருந்தனர். புகைவண்டி நிலையத்தில் அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் எந்தவித பரபரப்புமில்லாமல் நின்றிருந்தது அவர் மட்டும்தான்.

“வருவாள்... வராம இருக்க மாட்டா...”

கோவிந்தனின் அலுவலக அறையில் அமர்ந்து கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்தால் நாம் பார்ப்பது வேறொன்றுமல்ல- காலிஃபிளவர் தோட்டங்களைத் தான். உரிய காலம் வந்ததும் விரிந்து பெரிதாகும் முத்தின் நிறத்தைக் கொண்ட அந்த காலிஃபிளவர்களை கிராமத்து மனிதர்கள் வந்து வெட்டி வண்டிகளில் ஏற்றி சந்தைகளுக்குக் கொண்டு செல்வார்கள். தோட்டங்கள் வழியாகக் குலுங்கிக் குலுங்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்த மாட்டு வண்டிகளைப் பார்த்தவாறு கோவிந்தன் ஜன்னலருகில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருப்பார். அந்தத் தோட்டங்களைத் தாண்டி பெரிய பெரிய பாறைகள் நிறைந்த தரிசு நிலங்கள் இருந்தன. அதோடு நகரம் முடிகிறது.

கோவிந்தன் வயதான மனிதராக மாறிய இப்போது அந்தத் தரிசு நிலங்கள் இருந்த இடத்தில் நவநாகரீகமாக இருப்பிடங்களும் சிறிது கூட இடைவெளி இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களும் நம் கண்ணில் படும். கோவிந்தனுக்க அது ஒரு மந்திர வித்தையைப் போல் தோன்றுகிறது என்றால் அதற்காக நாம் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. புதிய பணக்காரர்களின் ஆடம்பரத்தையும் செழுமையையும் பறை சாற்றும் கைலாஸ் காலனிக்குள் காலிஃப்ளவர் தோட்டங்கள் மறைந்து போனதற்காக வருத்தப்படுபவர் கோவிந்தன் மட்டும்தான். இளைஞனான கோவிந்தன் தன்னுடைய கதரால் ஆன கோட்டின் மேல் பொத்தானைப் போட்டு கழுத்தில் மஃப்ளர் சுற்றி உதட்டில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டோடு தன்னுடைய தோழியுடன் சேர்ந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும் காலிஃப்ளவர் தோட்டங்கள் வழியே நடந்து சென்றார். ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பவர்கள் மரங்களின் அழிவைப் பற்றி பாடுவதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பே காளிதாஸனின் சகுந்தலை வாடிக் கொண்டிருக்கும் மரங்களைப் பற்றி சிந்தித்து கவலைப்பட்டிருக்கிறாள்’ என்று அவர் அவளிடம் சொன்னார்.

வயதான கோவிந்தன் தன்னுடைய தோழியை எதிர்பார்த்து புகைவண்டி நிலையத்தில் பொறுமையுடன் நின்றிருந்தார்.

நாம் கடைசியாக வாசித்த மேலே இருக்கும் இரண்டு பாராக்களுக்கு இடையில் எத்தனை வருடங்களின் எத்தனை எத்தனை கதைகள் மறைந்து கிடக்கின்றன என்பதை நாம் யோசித்திருக்கிறோமா? காலிஃப்ளவர் தோட்டத்தில் நடந்து செல்லும் இளைஞனான கோவிந்தன் புகைவண்டி நிலையத்தை அடையும்போது வயதான மனிதராக இருப்பதை நாம் பார்த்தோம். அவருடைய தலையில் அடர்த்தியாக இருந்த தலைமுடி உதிர்ந்து போனது. நெற்றியின் இருபக்கங்களிலும் உள்ளங்கை அளவிற்கு (நாம் உள்ளங்கைகளைப் பார்த்ததில்லை என்பது வேறு விஷயம்) வழக்கை ஏறியிருக்கிறது. அதுமட்டுமல்ல- அந்தக் கறுத்து இருண்டு போயிருந்த தலைமுடியில் எழுபது சதவிகிதம் நரைத்துப் போய்விட்டது. (இந்த அளவிற்கு எப்படி சதவிகித கணக்கைக் கூறமுடிகிறது என்பது வேறு விஷயம்). பிரபஞ்சத்தில் மிகவும் வேகமாகப் பாய்ந்து செல்லக்கூடியது ஒளிதான் என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால், நட்சத்திர ஒளியை விட வேகமாகப் பாய்ந்து செல்லக்கூடிய திறமை பேனாமுனைக்கு உண்டு என்பதை மேலே இருக்கும் இரண்டு பாராக்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.

அவர் அவளிடம்: ஆனால், ஒளியை விட வேகமாகப் பாய்ந்து போகக் கூடிய பேனாமுனையைவிட வேகமானது நம்ம கண்கள். ஒளிக்கீற்றுக்கு ஒரு நட்சத்திரத்துல இருந்து இன்னொரு நட்சத்திரத்திற்குச் செல்ல ஒளி வருடங்கள் ஆகின்றன என்றால், நம்மோட பார்வைக்கு ஒரு நட்சத்திரத்திலிருந்து இன்னொரு நட்சத்திரத்திற்குப் போக ஒரு நிமிடம் கூட ஆகாது என்பதை தோழியே, நீ புரிஞ்சுக்கணும்.

வயதான கோவிந்தன் இப்போதும் புகைவண்டி நிலையத்தில் தான் எதிர்பார்த்து நின்றிருக்கிறார். தன்னுடைய வாலிபப்பருவம் முழுவதும் தன்னுடன் இருந்து பங்கெடுத்த தன்னுடைய தோழி என்ன காரணத்திற்காகத் தன்னை வரவேற்க வரவில்லை என்பதை மனதில் நினைத்துப் பார்த்துக்கொண்டு அவர் வெறுமனே நின்றிருந்தார்.


பல வகைப்பட்ட கால்கள் அவர் இருக்குமிடத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தன. எல்லாக் கால்களிலும் செருப்புகள் இருந்தன. இந்த விஷயம் அவருக்கு ஒருவித திருப்தியை உண்டாக்கியது. சுதந்திரத்திறகுப் பிறகு தன்னுடைய நாடு பெற்றிருக்கும் மிகப்பெரிய வளர்ச்சி என்று அவர் இந்த விஷயத்தை நினைத்தார். பசித்துக் கொண்டிருக்கும் வயிறுகளைவிட கால்களின் அழகுதான் முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார். புகைவண்டி நிலையத்திலிருந்து கீழே இறங்கிச் செல்லும் படிகளுக்குக் கீழே கிடந்த ஆணியொன்றை கோவிந்தன் பார்த்தார். அந்த ஆணியிலிருந்து சரியாக ஏழரை அங்குல தூரத்தில் ஒரு சோடா மூடி கிடந்தது. அதன் பெரும்பகுதி நசுங்கிப் போயிருந்தது.

கோவிந்தன் (தனக்குள்): அவள் வருவா... வராம இருக்க மாட்டா....

4

டினமான மன உழைப்பாலும் சரியாக உணவு சாப்பிடாததாலும் தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்ததாலும் ஒரு நாள் இளைஞனான கோவிந்தன் பாதையோரத்தில் தலைசுற்றி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசத்தால் (யாருடைய அதிர்ஷ்டவசத்தால்?) வாகனங்கள ஒன்றையொன்று முந்திக்கொண்டு போய்க்கொண்டிருந்த சாலையைக் குறுக்காகக் கடக்கும்போதல்ல- நடைபாதை வழியாக வாடகைக்கார்கள் நிறுத்துமிடத்திற்கு நடந்து போகும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கால்களின் பலம் குறைந்து இடது பக்கம் சாயும்போது வலது பக்கமிருந்த பெரிய சாலையும் அதில் வேகமாகப் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த மோட்டார் வாகனங்களும் அதைத்தாண்டி அடுக்கடுக்காக நின்று கொண்டிருந்த வீடுகளும் திடீரென்று மேல்நோக்கி உயர்வதைப் போலவும் தலைகீழாக அவை கவிழ்ந்து தன்னுடைய உடல்மீது விழுவதைப் போலவும் கோவிந்தனுக்குத் தோன்றியது. ஒரு பக்கம் சாய்ந்து விழுந்த கோவிந்தன் எழுவதற்காக ஒரு முயற்சி பண்ணினாலும் அதில் அவர் தோல்வியடைந்து சுயநினைவில்லாமல் கிடந்தார். வெயில் காய்ந்து கொண்டிருந்த சில இளைஞர்களும் கால்நடையாக நடந்து சென்ற சிலரும் கோவிந்தனைச் சுற்றி நின்றிருந்தார்கள். அவருடைய கையிலிருந்த சிகரெட் பாக்கெட்டும் முகத்திலிருந்த வெயில் கண்ணாடியும் அவர்களின் கால்களுக்கு அருகில் தரையில் கிடந்தன. இப்படி ஒரு மனிதன் சுய நினைவில்லாமல் கிடப்பதைப் பார்த்தால் அவரை உடனே பாதையின் ஓரத்திற்குக் கொண்டு சென்று படுக்க வைத்து முகத்தில் சிறிது குளிர்ந்த நீரைத் தெளிக்க வேண்டும் என்று அவர்களில் யாருக்கும் படவில்லை. அதே நேரத்தில் ஒரு சைக்கிளில் வந்து இறங்கிய ஒரு வயதான கிழவர் சேறு படிந்திருந்த தன்னுடைய செருப்புகளில் ஒன்றைக் கழற்றி கோவிந்தனின் முகத்திற்கருகில் வைத்து மணம் பிடிக்க வைக்க மறக்கவில்லை. கோவிந்தனிடம் வலிப்பு நோய்க்கான அறிகுறி சிறிதுகூட காணப்படவில்லையென்றாலும், அதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்குத் திடீரென்று அந்த வயதான கிழவர் வந்தார்.

ஒரு பத்திரிகையாளர் கோவிந்தனிடம்: உங்களின் தோழி அப்போ அங்கே வந்து சேராம இருந்திருந்தா உங்களுக்கு என்ன நடந்திருக்கும்ன்றதைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

கோவிந்தன்: இந்தக் கேள்விக்கு இங்கே அவசியமே இல்ல. காரணம்- அவளால அந்த நேரத்துல அங்கு வராம இருக்க முடியாது. எங்கே கோவிந்தன் இருக்கானோ, அங்கே ருஸ்ஸியும் இருப்பா.

பத்திரிகையாளர்: உங்க உயிரைக் காப்பாற்றியதால், நீங்க ருஸ்ஸிக்கு கடமைப்பட்டிருக்கீங்கன்னு நான் நினைக்கிறதுல தவறு எதுவும் இல்லையே!

கோவிந்தன்: இல்லை என்பது மட்டுமல்ல. இன்னொரு சூழ்நிலையிலும் அவள் என்னை அருகிலிருந்து பார்த்து, என்னோட உயிரைக் காப்பாற்றியிருக்கான்றதையும் நான் இங்கே சொல்ல விரும்புகின்றேன். எனக்கு அப்போ மஞ்சள் காய்ச்சல் வந்துருந்துச்சு.

“மஞ்சள் காய்ச்சல்னு சொன்னால்... அது என்னன்னு விளக்கமா சொல்ல முடியுமா?”

“இந்தியர்களான நமக்கு நம்ம பழைய காலனியலிஸ்ட் மொழியான ஆங்கிலத்தில் சொன்னா மட்டும்தான் பல விஷயங்களையும் புரிஞ்சிக்க முடியும் என்பதை என்னால அறிய முடியுது. மஞ்சள் காய்ச்சல்னா ஜான்டிஸ். உங்களுக்கு நல்லா புரியணும்ன்றதுக்காக இனிமேல் சொல்ல வர்றதை ஆங்கிலத்திலேயே நான் சொல்ல விரும்புறேன். எ யெல்லோயிஷ் கலர் ஆஃப் தி ஸ்கின் அன்ட் தி ஒயிட்ஸ் ஆஃப் தி ஐஸ் கால்ட் பை தி ப்ரஸன்ஸ் ஆஃப் டூ மச் பைல் இன் தி ப்ளட். இன் மெனி கேஸஸ் ஆஃப் ஜான்டிஸ் தி ஸ்டூல் (அமரும் நாற்காலி ஸ்டூல் அல்ல) பிகம்ஸ் லைட். அன்ட் தி யூரின் டார்க். ஜான்டிஸ் ஈஸ் நாட் இன் இட் ஸெல்ஃப் எ டிஸீஸ், பட் ராதர் எ ஸிம்டம் ஆஃப் அதர் டிஸீஸஸ் அன் டிஸார்டர்ஸ்...”

கோவிந்தனைப் பொறுத்தவரை சுயநினைவில்லாமல் விழுவது என்பது ஆர்வமான ஒரு நிகழ்ச்சி அல்ல. ஒருமுறை நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு தனக்கருகில் அவர் எந்த அசைவுமில்லாமல் படுத்திருப்பதைப் பார்த்து, ஏதோ உறங்குகிறார் என்று அவள் முதலில் நினைத்தாள். உண்மையாகப் பார்க்கப்போனால் அவர் அப்போது சுயநினைவில்லாமல் இருந்தார்.

மருத்துவமனையில் கிடந்த கோவிந்தனின் உடலில் மஞ்சள் நிறம் படரத் தொடங்கியது. அடித்துக் கொன்றுபோட்ட ஒரு தவளையைப் போல அவர் கிடந்தார். இன்னும் மறையாமலிருக்கும் மஞ்சள் வண்ண சூரியனுக்குக் கீழே கஷாய நிறத்தில் சிறுநீர் கழித்துக் கொண்டு சுயநினைவு சிறிதும் இல்லாமல் கோவிந்தன் நான்கு நாட்கள் கிடந்தார்.

நகரத்தின் ஆங்கில பத்திரிகைகளிலும் வார இதழ்களிலும் கோவிந்தனின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டு வருவது என்பது ஒரு வாடிக்கையான விஷயமாக இருந்தது. அவரின் பேட்டி கட்டுரையொன்று அப்போது வெளியான முன்னணி பத்திரிகையொன்றின் ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் வந்தது. ஆட்கள் அவரை அடையாளம் கண்டு அருகில் வந்து கைகொடுப்பதோ அவரிடம் குசலம் விசாரிப்பதோ வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. அதை அவர் மனதிற்குள் மிகவும் விரும்பினார்.

அன்றாடம் வாழ்க்கையில் பயன்படும் பொருட்கள் விற்பனை ஆக எந்த அளவிற்கு விளம்பரங்கள் அவசியத் தேவையாக இருக்கின்றனவோ, அதே மாதிரி இப்போதைய மனிதர்களுக்கு தாங்கள் யாரென்று காட்டிக்கொள்ள விளம்பரங்கள் கட்டாயம் தேவைப்படுகிறது. ஆனால் தன்னைப் பற்றிய கட்டுரைகளோ பேட்டிகளோ புகைப்படங்களுடனோ அல்லது புகைப்படங்கள் இல்லாமலோ, அவை பத்திரிகைகளில் பிரசுரமாகி வரவேண்டுமென்பதற்காக அவர் பத்திரிகைக்காரர்களுக்குப் பின்னால் எப்போதும் அலைந்து திரிந்ததில்லை. அப்படிப்பட்ட செயல்களை அவர் முழுமையாக எதிர்த்தார்.

மனித நாகரீக வரலாற்றில் மனிதன் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இந்த அளவுக்கு ஆர்வத்தை இதற்கு முன்பு எப்போதும் காட்டியதேயில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார் அவர்.

ருஸ்ஸி கோவிந்தனிடம்: இப்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நார்ஸிஸஸ்ஸாக மாறுவதைத் தான் நாம் பார்க்கிறோம். தன்னுடைய முகத்தைத் தானே பார்த்து மகிழ்ச்சியடைய கண்ணாடி தேடி அலையும் நார்ஸிஸஸ்களின் போக்குதான் இப்போ எல்லா இடத்துலயும் இருக்கு. அவர்களுக்குக் கண்ணாடி கொடுத்து பத்திரிகைக்காரர்கள் தங்களின் பாக்கெட்டை பெரிதாக்கிக் கொள்கிறார்கள்.


வயதான கோவிந்தன் இப்போதும் தன்னுடைய தோழியை எதிர்பார்த்து புகைவண்டி நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

இளைஞனான கோவிந்தனுக்கு ஆடிக்கொருதரம் சுயநினைவு இல்லாமற்போவதைப் பற்றி நாம் மேலே சொன்னோம். அது அவரின் ஆன்மிக வளர்ச்சியின் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தது. கோவிந்தன் நடுத்தர வயதை அடைந்தபோது மற்றொரு முக்கியமான விஷயமும் அவர் வாழ்க்கையில் நடந்தது. அதைப் பற்றித்தான் நாம் இப்போது இங்கு கூறப்போகிறோம்.

ஒருநாள் ஒரு குழந்தை காணாமல் போவதைப் போல நடுத்தர வயது மனிதரான கோவிந்தன் காணாமல் போனார். வெள்ளை வெளேர் என்று இருக்கும் சுவர்களும், பிரம்பு நாற்காலிகளும் மட்டும் கொண்டு அலங்காரப் பொருட்கள் எதுவுமில்லாமல் ஜன்னல் திரைச்சீலைகள் கூட இல்லாத தன்னுடைய அறையில் பின்னோக்கி சாய்ந்து அமர்ந்து அவர் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். இசையைக் கேட்கும்பொழுது அவர் பேசுவதோ, உடம்பை இலேசாக அசைப்பதோகூட இல்லை. சமையலறையில் கட்வாள் மலையிலிருந்து வந்த அவருடைய சமையல்காரன் அவருக்காக சப்பாத்தி சுடுவதிலும் பருப்பு வேக வைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். அப்போதுதான் அவர் காணாமல் போனார். மறுநாள் அதே நேரத்தில் காணாமல் போனதைப் போலவே அவர் திரும்பி வரவும் செய்தார். அவர் எங்கே போனார் என்று கேட்க அவருக்கு அங்கு யாருமில்லை. அவரின் அந்தப் பெரிய வீட்டில் அவர் தனியாகத்தான் இருக்கிறார். சமையல்காரன் காலையில் வந்து மதியத்திற்குப் பிறகு போய்விடுவான். உணவுமேல் அந்த அளவிற்கு நாட்டமில்லாத கோவிந்தனுக்குச் சிறிது ஆகாரம் இருந்தாலே போதும். சமையல்காரன் என்ன சமையல் பண்ணிக் கொடுத்தாலும் பசியிருந்தால் அவர் சாப்பிடுவார். அழகுக்கலை போல உணவு விஞ்ஞானம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும், உணவு உண்பது என்பது புத்தகம் படிப்பதைப்போலவோ இசையைக் கேட்பது போலவோ உள்ள ஒரு இனிமையான அனுபவம் என்பதையும் அவர் அறியாமலில்லை என்பதையும் நான் இங்கு கூற விரும்புகிறேன். உடலுறவு கொள்வது தன்னுடைய சொந்த வம்சத்தை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே என்று கூறுவதைப்போல சாப்பிடுவது உயிர் வாழ்வதற்காக மட்டுமே என்று கருதக்கூடிய அளவிற்கு முட்டாள்தனம் நம் கோவிந்தனிடம் இருக்கிறது என்று நாம் நினைத்தோமானால் அது அவருக்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

திரைச்சீலைகள் இல்லாத கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும் கோவிந்தனின் அறையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தூரத்தில் நின்றவாறு பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் பார்க்கும் அளவிற்கு ஈர்க்கக்கூடிய எந்தவொரு செயலும் அவரின் அறையில் நடப்பதில்லை என்ற உண்மை அவர்களை வெறுப்படையச் செய்திருக்க வேண்டும். எந்த நேரமும் தன்னுடைய பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இசையைக் கேட்டுக் கொண்டோ புத்தகத்தைப் படித்துக் கொண்டோ அல்லது ஏதாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டோ இருக்கும் அவர் தன்னைப் பற்றி முழுக்க முழுக்க வெறுப்படையச் செய்யும் ஒரு கருத்தைத்தான் மற்றவர்களுக்கு வழங்கினார்.

கற்பனைக்கெட்டாத காலம் தொட்டு உலகில் இருந்துவரும் கற்கள் மீது ஆர்வம் பிறப்பதற்கு முன்பு கோவிந்தனுக்கு ஆர்வம் உண்டானது கண்ணாடிகள் மீதுதான். ஐதீகங்களிலும் கட்டுக் கதைகளிலும் மற்ற கதைகளிலும் வரும் கண்ணாடி மாளிகைகளைப் பார்த்து அவருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆர்வம் உண்டாகவில்லை. நாம் சுற்றிலும் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கு உள்ளேயும் அதற்கென்று இருக்கும் புதர்களில் சொந்த விஷயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. பாய்ந்து செல்லும் ஒளி தனக்குள் இருப்பதையெல்லாம் வெளிச்சம் போட்டு வெளியே காட்டும். அதேநேரத்தில் உள்ளே எதுவுமே இல்லாத கண்ணாடிகளுக்கு எந்தவித ரகசியமும் இல்லை. கண்ணாடியின் இந்த புனிதத் தன்மையும், வெளிப்படையான குணமும், எளிமையும்தான் கோவிந்தனின் கவனத்தை அதை நோக்கி திரும்பச் செய்தது. ஒரு கண்ணாடியைப் போல எந்தவித மறைவும் இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் அவர் தனக்கென்று தீர்மானித்தார். ஆனால், அவருக்குக் கிடைத்ததோ வினோதமும், துக்கங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கைதான். இல்லாவிட்டால் அவரின் தோழி அவளுடைய படுக்கையறையில் அவரை எதிர்பார்த்து காத்திருக்கும்போது அவர் எதற்காகப் போய் மறையவேண்டும்? நடுத்தர வயதைக் கொண்ட கோவிந்தன் நான்காவது முறையாக காணாமற் போனார்.

அலங்காரப் பொருட்களோ ஆடம்பரங்களோ இல்லாத வெளுத்துப்போன சுவர்களும் பிரம்பு நாற்காலிகளும் உள்ள அவருடைய அறை மிகவும் எளிமையானது என்று நாம் நினைத்து விடக்கூடாது. அழகைத்தேடி அலையும் ஒரு மனிதனின் வெளிப்பாடு அந்த அறையின் ஒவ்வொரு விஷயத்திலும் இருப்பதை நம்மால் உணரமுடியும். பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் விதமும் அவற்றுக்கு இடையில் இருக்கும் தூரமும் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் கிடைக்கக்கூடிய அறையின் காட்சியும் மிகவும் நடைமுறையில் இருக்கும் ஒரு அழகுணர்வுத் தன்மையை சட்டென்று பறைசாற்றக்கூடியவையாக இருக்கும். நான்கு வெண்மையான சுவர்களும் நான்கு பிரம்பு நாற்காலிகளும் மட்டும் வைத்து ஒட்டு மொத்தத்தில் தனிமை நிறைந்த ஒரு அருமையான இடமாக அதை அவர் ஆக்கியிருந்தார்.

கோவிந்தன் நான்காவது முறையாகக் காணாமல் போனது குறிப்பாக அவருடைய தோழிக்கு ஒருவகை ஆர்வத்தை உண்டாக்கியது. மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை அவரிடம் கூறவேண்டும் என்பதற்காகவும் அதைப்பற்றி அவருடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும் அவருடன் அதைப்பற்றி நீண்டநேரம் விவாதிக்க வேண்டுமென்பதற்காகவும் அவள் அவரைத் தன்னுடைய படுக்கையறைக்கு அழைத்ததே. கோவிந்தனின் படுக்கையறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருந்தது அவளுடைய படுக்கையறை. குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த அந்தப் பெரிய அறைக்கு இரண்டு பெரிய ஜன்னல்கள் இருந்தன. கனவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும், தூக்கத்தை வரவழைக்கக் கூடியதாகவும்- இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால்- அதற்கேற்ற முறையில் அமைந்த ஒரு காமரசம் சொட்டும் படம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. குளிர்ந்த நீரும் டின் பீர்களும் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ஃப்ரிட்ஜைக்கூட நாம் அங்கு பார்க்கலாம். நகரத்தில் இன்னும் பிரபலமாகாத வெளிநாடுகளில் புதுமையானது என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காம்ப்பேக்ட் டிஸ்க் ப்ளேயரும், டிஸ்க்குகளும் இருப்பதை நாம் அங்கு பார்க்கலாம். பழமையான பாணியில் அமைக்கப்பட்ட அருமையான புத்தக அலமாரியும் அதில் நிறைய புத்தகங்கள் இருப்பதையும் நாம் பார்க்கலாம். பித்தளைக் கைப்பிடி கொண்ட ட்ராயர் உள்ள எழுத்து மேஜையும் அதன் மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் தாள்களும் இங்க் பேனாக்களும் (அவளுக்கு பால்பாயிண்ட்களைப் பிடிக்காது) இருப்பதை நாம் அங்கு பார்க்கலாம்.


நடுத்தர வயது மனிதரான கோவிந்தன்: எதற்காக நீ என்னை உன் படுக்கையறைக்கு வரச்சொன்னே?

அவள்: ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயத்தை உங்ககிட்டே நான் பேசணும்.

அவர்: அதை நான் தொலைபேசி மூலமாக சொன்னா போதாதா?

அவள்: அது காதல் கடிதத்தை டைப் செய்து அனுப்பியது போல இருக்கும். கையால் எழுதப்படுகிற காதல் கடிதத்துல இருக்குற நெருக்கம் டைப் செய்யப்பட்ட காதல் கடிதத்துக்கு நிச்சயம் இருக்காது. அதற்கான காரணம், கடிதத்தை எழுதுபவரின் உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் அவை பதிவாகும் தாளுக்கும் நடுவில் டைப்ரைட்டர் ஒரு தடையா நின்னுக்கிட்டு இருப்பதுதான். மொழி பெயர்க்கப்பட்ட கவிதை எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் டைப் செய்யப்பட்ட காதல் கடிதம். தொலைபேசி மூலமா நாம பேசுறப்பவும் இதைப்போல மொழிமாற்றம்தான் நடக்குது. தொண்டையின் இடறலும் கண்களின் பிரகாசமும் வாயால் உச்சரிக்கும் வார்த்தைகளைவிட நம்முடைய உணர்ச்சிகளை அருமையாக வெளிப்படுத்தக்கூடியவை. தொலைபேசி மூலமா சொல்ல நினைக்கிறதைச் சொல்ல முயலுறப்போ இந்த இடறலும், பிரகாசமும் நிச்சயமா இருக்காது. மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, வியாபார அரசியல் கொள்கைகளைப் பரப்புவதற்காக உள்ளதுதான் தொலைபேசி என்று நான் நினைக்கிறேன்.

கோவிந்தன் அவளிடம்: அப்போ மனசுல உள்ளதை வெளிப்படுத்துறதுக்காகத்தான் என்னை நீ உன்னோட படுக்கையறைக்கு வரச்சொன்னியா? அப்படின்னா, தோழியே... நான் ஒண்ணு கேட்கட்டுமா? பூக்களும் பறவைகளும் மான்களும் உள்ள நகர பாரஸ்ட்டுகளோ, பூக்களும், பறவைகளும் உள்ள தோட்டங்களோ; பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் மைதானங்களோ; எந்தவிதமான சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் நதிக்கரையோ... இவற்றில் ஏதாவதொன்றுதானே உன்னோட படுக்கையறையைவிட பொருத்தமான இடமாக இருக்கும்?

அவள் கோவிந்தனிடம்: படுக்கையறையைவிட நெருக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய மற்றொரு இடம் வேறெங்கே இருக்கு?

கோவிந்தனுக்கு மிகவும் விருப்பமான புடவையை உடுத்திக் கொண்டு, தலைமுடியைக் கீழே தொங்கவிட்டு தன்னுடைய படுக்கையறையில் அவள் அவருக்காகக் காத்திருந்தாள். ஆனால், இதோ பத்து நிமிடத்திற்குள் நான் வந்து விடுவேன் என்று தொலைபேசியில் சொல்லி வாசல் கதவைப் பூட்டி வெளியே வந்த கோவிந்தன் வரும் வழியில் காணாமல் போனார். முன்பு அவருடைய சுயநினைவில்லாத சம்பவங்கள் எப்படி அவளைக் கவலைக்குள்ளாக்கினவோ, அதைவிட இப்போது அவர் காணாமல் போவது அவளை நிலைகுலையச் செய்தது. பாதையோரத்திலோ தான் எப்போதுமிருக்கும் அறையிலோ அலுவலகத்திலோ அவர் சுயநினைவில்லாமல் கிடக்கும்போது, விஷயமறிந்த அவள் ஓடிவந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வாள். ஒரு சிறிய மரணத்தைத் தாண்டி வரும் அவர் தன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்து இதயம் திறந்து புன்னகைப்பார். அந்தச் சிரிப்பு அவளுக்குத் திருப்தியையும் ஆனந்தத்தையும் தந்தது. சுயநினைவுக்கும் வாழ்க்கைக்கும் அவர் திரும்பி வரும் அந்த நல்ல நிமிடங்களில்தான் அவருடன் இருப்பதை எண்ணி அவள் மனதிற்குள் மகிழ்ச்சி கொள்ளுவாள். ஆனால், அவர் காணாமல் போகும்போதோ, பிறகு ஒருநாள் திடீரென திரும்பி வரும்போதோ நான் அவருடன் இருப்பதில்லையே என்பதை நினைக்கும்போதோ அவளுக்கு வருத்தமாக இருக்கும்.

படுக்கையறையில் அவரை எதிர்பார்த்து வெறுத்துப்போன அவள் அவருடைய வீட்டிற்கு ஃபோன் செய்ய, யாரும் எடுக்காமற்போகவே, அடுத்த நிமிடம் அவள் அங்கு செல்ல, வீடு பூட்டியிருப்பதைக் கண்டாள். அவர் வழக்கமாகச் சென்று அமர்ந்திருக்கக் கூடிய சில தனி இடங்களைப் போய் பார்த்தாள். அங்கு எங்கும் அவரைக் காணவில்லை. பிறகு அவர் சில வேளைகளில் போகக்கூடிய சில இடங்களைப் போய் பார்த்தாள். அங்கும் அவர் இல்லாமற்போகவே பல இடங்களுக்கும் ஃபோன் செய்து அவர் வந்தாரா என்று அவள் விசாரித்தாள். கடைசியில் அவள் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பும்போது, பாதி இரவு தாண்டியிருந்தது.

மறுநாளும் அவரைப் பற்றிய எந்தவிதத் தகவலும் கிடைக்காமற் போகவே அவள் மருத்துவமனைகளில் விபத்து பிரிவுகளில் போய் விசாரித்தாள். பிண அறையைப் போய்ப் பார்த்தாள். கடைசியில் போலீஸிடம் போய் புகார் செய்தாள்.

இப்போது அவர் காணாமல் போகும்போது அவள் அதற்காக பதைபதைப்பு அடைவதோ வருத்தப்படுவதோ கிடையாது. அவருடைய அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அவர் காணாமல் போவதையும் அவள் எடுத்துக்கொண்டு விட்டிருந்தாள்.

புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்த வயதான கோவிந்தன் கைகளில் தன்னுடைய எளிமையான ரெக்ஸின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன்னந்தனி மனிதனாக தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஒரு சர்க்கஸ் விளையாட்டுக்காரன் கயிறு மீது நடப்பதைப்போல மெதுவாக மிகவும் கவனத்துடன் அவர் நடந்தார். அவருடைய தளர்ந்துபோன மனதில் ருஸ்ஸியின் முகம் மட்டுமே இருந்தது. ‘நீ என்னைத் தேடி வரலைன்னா நான் உன்னைத் தேடி வருவேன்’ - அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார். தொடர்ந்து அவர் அவளை நோக்கி நடந்தார்.

5

நாம் நம்முடைய இந்த எளிமையான கதை புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் இப்போது இருக்கிறோம். கோவிந்தனின் துயரம் நிறைந்த கதையைத் தொடர்வதற்கு முன்பு மதிப்பிற்குரிய நம்முடைய விமர்சகர் நான்கு அத்தியாயங்களைப் படித்தபிறகு இந்தச் சிறு நூலைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதைப் பார்ப்போம். எந்தவொரு இலக்கியமாக இருந்தாலும் அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான விமர்சனம் ஒரு அவசியத் தேவை அல்லவா?

விமர்சகர்: இந்த சிறு நூலின் தலைப்பைப் பற்றித்தான் நான் முதல்ல சொல்ல விரும்புறேன். எதற்காக ‘ரஷ்யா’ என்று இதற்குப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது? கம்யூனிஸ்ட் மயமாக்கப்பட்ட ஒரு மனதைக் கொண்டவர்கள் மலையாளிகள். நம்மைப் பொறுத்தவரை ‘ரஷ்யா’ என்பது ஒரு மந்திரச் சொல். இந்த உண்மையை நன்கு தெரிந்திருக்கும் கதாசிரியர் தெளிவான மனதுடன்தான் அப்படிப்பட்ட ஒரு பெயரைத் தன்னுடைய நூலுக்கு வைத்திருக்கிறார் என்பதையும் வாசகர்களின் கவனத்தை முழுமையாக இழுப்பதற்காகக் கையாண்ட ஒரு தந்திரம்தான் அது என்பதையும் நான் முழுமையாக நம்புகிறேன்.

விமர்சகர் தன்னுடைய கண்டுபிடிப்பைத் தொடர்ந்து சொன்னார்: எழுத்தாளர்கள் பொதுவாக தந்திரசாலிகள்னுதான் சொல்லணும். மக்களின் பசியையும், வறுமையையும் ஏமாற்றங்களையும் எழுதி பணமும், புகழும் சம்பாதிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த விஷயங்கள் பணத்தையும், புகழையும் அடைவிக்கும் கருவிகள். அவ்வளவுதான்…

விமர்சகர்களின் கண்டுபிடிப்புகளை நாம் திடீரென்று இங்கு நிறுத்த வேண்டியிருக்கிறது. காரணம்- வயதான கோவிந்தன் தன்னுடைய பெரிய ரெக்ஸின் பையைத் தூக்கிப் பிடித்தவாறு புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியே வந்துவிட்டார். மதிப்பிற்குரிய விமர்சகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நாம் கோவிந்தனின் கதையைத் தொடருவோம்.


‘நீ என்னைத் தேடி வரலைன்னா நான் உன்னைத்தேடி வருவேன்’- அவர் யாரிடம் என்றில்லாமல் சொன்னார்: ‘ஒரு காலத்தில் நீ என்னோட கனவாகவும் எதிர்காலமாகவும் இருந்தே!’

தூசும் அசுத்தமும் கலந்த காற்றை சுவாசித்துக் கொண்டு அவர் கூட்டத்திற்கு மத்தியில் நடந்தார். ருஸ்ஸியைப் பற்றிய நினைவுகளை மனதில் அசைபோட்டவாறு அவர் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு புதிய சிந்தனை அவருடைய மனதில் தோன்றியது. கடந்த இருபது வருடங்களில் அவருடைய எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் எந்தவித நோக்கமும் இருந்ததில்லை. இப்போது முதல் தடவையாக ஒரு நோக்கம் உண்டாகியிருக்கிறது. ருஸ்ஸியைக் கண்டுபிடித்து அவளுக்குள் தன்னை அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதே அது.

ருஸ்ஸியைப் பற்றி பலவித நினைவுகளும் அவருடைய மனதில் வலம் வந்து கொண்டேயிருந்தன. ஒருமுறை அவர் அவளைப் பற்றி ஒரு கனவு கண்டார். வெயிலில் அலைந்து நடந்து களைப்படைந்து போன இளைஞனான கோவிந்தன் தன்னுடைய வீட்டை அடைந்து வாசல் கதவைத் திறந்தபோது தன் படுக்கையில் படுத்திருந்த அவளைப் பார்த்தார். கடலுக்குள்ளிருந்து பிடித்துக் கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய மீனைப்போல நிர்வாணமாய் படுத்திருக்கும் அவளுக்கருகில் சீருடையும் சாதனை முத்திரைகளும் அணிந்த பருமனான ஒரு ராணுவ அதிகாரி படுத்திருக்கிறார்.

மோட்டார் வாகனங்கள் வேகமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாலையில் ஒரு நிமிடம் வயதான கோவிந்தன் தயங்கி நின்றார். அவருக்கு எங்கு போகிறோம் என்பது தெரியும். ஆனால், வழி தெரியவில்லை.

இப்படிப்பட்ட நிலையை அவர் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ முறை அனுபவித்திருக்கிறார். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகள் வரும்போது எந்தவிதமான லட்சியமும் இல்லாத வாழ்க்கைதான் எல்லாவற்றையும்விட சிறந்தது என்ற எண்ணம் அவருடைய மனதில் உண்டாகும். தான் இப்போது கையில் பிடித்திருக்கும் இந்த ரெக்ஸின் பெட்டியைப்போல ஒரு வாழ்க்கை. அதை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொண்டு நடக்கலாம். எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு சென்று வைக்கலாம். பயன்படுத்தி முடித்துவிட்டால் தூக்கி எறிந்து விடலாம்.

இருபது வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தனியாக நடந்து செல்லும் வயதான கோவிந்தனை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. முன்பு நகரத்தின் தெருக்களில் நடந்து செல்லும்போது ஆட்கள் அவரை அடையாளம் கண்டுபிடித்து, அருகில் வந்து பாராட்டுவார்கள். சிலர் அவரின் கையைப் பிடித்துக் குலுக்குவார்கள். ஒருமுறை பள்ளிக்குழந்தைகள் பலர் கூட்டமாக அவருக்கருகில் வந்து தங்களின் ஆட்டோக்ராஃப் புத்தகங்களில் அவரின் கையெழுத்தை வாங்கினார்கள். கோவிந்தன் அவை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தார். பாதையில் நடந்து செல்பவர்களில் யாராவது தன்னை அடையாளம் கண்டுபிடிக்க மாட்டார்களா என்று அவர் மனம் ஏங்கியது. வேகமாக நடந்து செல்லும் ஒருவரின் தலை மெதுவாகத் தன்னை நோக்கித் திரும்புவதைப் பார்த்து கோவிந்தனின் மனம் அடித்துக் கொண்டது. ‘கடைசியில் இந்த ஒரு ஆளாவது என்னை யார்னு கண்டுபிடிச்சாரே!’ என்று அவர் மனதில் நினைத்துக் கொண்டார். ஆனால், கோவிந்தன் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. அந்த மனிதரின் பார்வை பதிந்தது கோவிந்தனின் கையிலிருந்த அந்த பெரிய ரெக்ஸின் பெட்டியில். கோவிந்தனின் அந்த நீண்ட நடைபயணத்தில் சாலையில் நடந்து சென்ற எல்லோருடைய கவனமும் அவரின் கையிலிருந்த பெரிய பெட்டியில் தான் இருந்தது. யாருடைய கண்களும் அவரின் முகத்தின் மீது திரும்பவில்லை. ஒன்றுமேயில்லாத பெட்டியின் மதிப்பு கூட இன்று தன்னுடைய வாழ்க்கைக்கு இல்லாமல் போய்விட்டதா என்ன? அவர் தன்னைத்தானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டார்.

கடினமான வெப்பமிருந்தாலும், மிகவும் களைத்துப் போயிருந்தாலும் ருஸ்ஸியின் வீடுவரை எப்படியும் நடக்கவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அவ்வளவு தூரம் நடப்பதற்குத் தன்னுடைய கால்களுக்கு சக்தியில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எனினும், எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தன்னுடைய சொந்தக் கால்களால் நடக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். வாழ்க்கையில் எப்போதும் அப்படி நடந்தவர்தான் கோவிந்தன். வாடகைக் கால்களில் நடப்பவர்களை அவருக்குப் பொதுவாகப் பிடிக்காது.

கடைசியில் வியர்வை அரும்பி நடுங்கிக் கொண்டிருந்த கால்களுடன் அவர் ருஸ்ஸியின் வீட்டுக்கு முன்னால் போய் நின்றார். மது அருந்தியதைப்போல அவர் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தார். இந்த வயதான காலத்தில் பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரம் தன்னால் நடக்க முடிந்ததற்காக அவர் மகிழ்ச்சியடைந்தார்.

ருஸ்ஸியின் பெரிய அரண்மனையைப் போன்ற வீடு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டதைப்போல இடிந்து விழுந்து கிடப்பதை கோவிந்தன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். மரமும் கல்லும் கொண்டு உண்டாக்கப்பட்ட அந்த மாளிகை உறுதியானதாகவும் கம்பீரமானதாகவும் இருந்தது. அதன் மேலே இருக்கும் துருக்கி விரிப்பு விரிக்கப்பட்ட அவருடைய அறையில் அமர்ந்து புத்தகங்கள் படித்துக் கொண்டும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டும் எவ்வளவோ இரவுகள் அவர் அவளுடன் இருந்திருக்கிறார். அந்த மாளிகை இவ்வளவு சீக்கிரம் இப்படி இடிந்து விழுமென்று அவர் நினைத்ததே இல்லை.

எல்லாம் இடிந்து விழுகின்றன. கொள்கைகள், கனவுகள்... எல்லாம். இடிந்து விழுகின்ற ஒரு காலகட்டத்தில் தான் வந்து நின்றிருப்பதை மீண்டும் ஒருமுறை கோவிந்தன் மனதில் எண்ணிப் பார்த்தார். அவருக்குள்ளிருந்து நீண்ட பெருமூச்சுகள் வந்து கொண்டிருந்தன.

என்ன செய்யவேண்டும் என்பது தெரியாமல் அவர் அங்கேயே தயங்கியவாறு நின்றார். சாலையின் இரு பக்கங்களிலும் கார்கள் இடைவெளியில்லாமல் நின்றிருந்தன. அங்கு ஆட்களைவிட கார்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்பதை அவர் அறிந்து கொண்டார். பக்கத்திலிருந்த பங்களாவிலிருந்து ஒரு நாயைப் பிடித்துக்கொண்டு தடிமனான ஒரு மனிதர் வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கோவிந்தன். அவர் அந்த மனிதரிடம் கேட்டார்:

“இடிஞ்சு விழுந்த இந்த வீட்டுல இருந்தவங்க எங்கே போனாங்க சார்?”

“ஸாரி ஜென்டில்மேன்”- அந்த மனிதர் சொன்னார்: “அந்தத் தபால் அலுவலகத்துல போய் கேளுங்க. ஒருவேளை அவங்களுக்குத் தெரியலாம்.”

அவர் சற்று தூரத்தில் தெரிந்த தபால் அலுவலகத்தைச் சுட்டிக் காட்டினார். தபால் அலுவலகத்துக்கு முன்னால் ஒரு பெரிய சிவப்பு முக்கோணத்தை தூரத்தில் வரும்போதே கோவிந்தன் பார்த்தார்.

தபால் அலுவலகத்தில் இருந்தவர்களுக்கு ருஸ்ஸியின் முகவரியைத் தவிர, மற்ற எல்லோருடைய முகவரிகளும் நன்கு தெரிந்திருந்தன.

ஒரு காலத்தில் வாலிபனான கோவிந்தன் சுறுசுறுப்புடன் நடந்திருந்த அதே பாதையின் வழியாக வயதான கோவிந்தன் தளர்ந்து போய் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நடந்தார். ஒரு காலத்தில் அவருக்கு இதே நகரத்தில் நூற்றுக்கணக்கானோர் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.


அவர்களின் பெயர்களைக் கூட அவர் மறந்துபோய் விட்டார். பெயர்கள் மறந்து போனவர்களின், முகவரிகள் இல்லாமல் போனவர்களின் ஒரு நகரமாக இப்போது அவருக்கு அது தெரிந்தது.

வயதான கோவிந்தன் ஒரு தேநீர்க்கடைக்குள் நுழைந்து தன்னுடைய பெரிய பெட்டியை அருகில் வைத்து அங்கு அமர்ந்தார். அங்கு கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயில் உருளைக்கிழங்கு பக்கோடா வெந்து கொண்டிருந்தது. புழுக்கம் நிறைந்திருந்த அந்தச் சிறிய தேநீர்க் கடையில் ஒரு மண் பொம்மையைப் போல அவர் எந்தவித அசைவுமில்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்து கொண்டே இறந்துபோன ஒரு மனிதனைப்போல் அவர் இருந்தார்.

தேநீர் கடைக்காரன் குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று கேட்டவாறு அருகில் வந்தபோது, ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி, தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு அவர் வெளியே வந்தார். அசைகின்ற ஒரு பிணத்தைப் போல அவரின் நடை தொடர்ந்தது. உண்மையாகப் பார்க்கப்போனால் இறந்து போன ஒரு பிணமாகத்தான் தான் நகரத்திற்குத் திரும்பி வந்திருக்கிறோம் என்று அவருக்குத் தோன்றியது. அவரின் வியர்வை வழிந்து கொண்டிருந்த உடம்பில் ஒரு பிணத்தின் குளிர்ச்சி மெதுவாக நுழைந்து கொண்டிருந்தது. முதலில் அவரின் மூளையில்தான் அந்தக் குளிர்ச்சி பாதித்தது. தொடர்ந்து அது நெஞ்சுக்கூடு வழியாகக் கீழே இறங்கி நரம்புகள் ஓடிக்கொண்டிருக்கும் கைகளுக்கும் கால்களுக்கும் பரவியது. மாலையின் நிழல்கள் நீண்டு கொண்டிருந்தன.

கோவிந்தன் என்ன செய்வார்? எங்கு போவார்? எங்கு சென்று ருஸ்ஸியைத் தேடுவார்?

முகவரி இல்லாத ஒரு ஆளை வீணாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அவரைச் சோர்வடையச் செய்தது.

நிலைமை இப்படி இருக்க, கோவிந்தனுக்கு ஒரு சிறிய வெளிச்சம் கிடைத்தது. ஒரு பழைய ஆட்டோ ரிக்ஷாவில் பெட்டியுடன் ஏறிய கோவிந்தன் ஒரு வீட்டின் முன்னால் அதை நிற்கச் சொன்னார்.

“எனக்கு ஆளைச் சரியா அடையாளம் தெரியல” அந்த ஆள் சொன்னார்: “இருபது வருடங்களுக்கு மேல் ஆச்சுல்ல...?”

வயதான கோவிந்தன் அந்தப் பழைய கவலை தோய்ந்த சிரிப்பைச் சிரித்தார்.

“எப்போ வந்தீங்க?”

“ஒரு வாரமாச்சு.”

“இருந்தாலும் என்னை அழைக்கணும்னு தோணலியே!”

கோவிந்தனின் கையில் யாருடைய முகவரியும் இல்லை. தொலைபேசி எண்கள் இல்லை. தனக்கென்று எந்த முகவரியும் இல்லாத அவர் எதற்காக மற்றவர்களின் முகவரிகளைத் தன்னிடம் வைத்திக்க வேண்டும்?

அந்த மனிதன் கோவிந்தனுக்கு பருக ஒரு டம்ளர் குளிர்ச்சியான பாதாம் சர்பத் கொண்டு வந்து கொடுத்தார். அவரின் உடல் நன்கு தடித்தும், முகம் சிவந்து போயும் இருந்தன. அந்த மனிதரும் கோவிந்தனின் வயதையொத்தவர்தான். எனினும், அவர் கோவிந்தனை விட பத்துவயது குறைந்தவரைப்போல காணப்பட்டார். ஒரு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த மனிதருக்கு இப்போது சொந்தமாக பெரிய வீடும் இரண்டு கார்களும் இரண்டு நாய்களும் இருக்கின்றன என்பதை கோவிந்தன் அறிந்து கொண்டார். அந்த மனிதர் ஒரு பழைய கம்யூனிஸ்ட்காரர். ஒரு புதிய பணக்காரர்.

“நிர்வாணமாக இருக்கும் பெண்களுக்கிடையில் புரட்சி வீரர்களையும் ராணுவ அதிகாரிகளையும் கொண்டுவந்து நிறுத்துற அந்தப் பழைய வேலைகளை இப்பவும் செய்றீங்களா?” - அந்த மனிதர் கேட்டார்: “நீங்க முன்பு கண்டதாகச் சொன்ன ஒரு கனவு இப்பவும் என் ஞாபகத்துல அப்படியே இருக்கு. உங்க படுக்கையில் கடலுக்குள்ளே போயி பிடிச்சிட்டு வந்த ஒரு பெரிய மீனைப்போல நிர்வாணமா ருஸ்ஸி படுத்திருக்கா. அவளுக்குப் பக்கத்துல சீருடையும் முத்திரைகளும் அணிந்த ஒரு ராணுவ அதிகாரி படுத்திருக்கார்.”

மற்றவர்களின் கனவுகளை ரகசியமாகத் தோண்டி வெளிக் கொணர்வது அந்த மனிதருக்கு ஒரு பொழுதுபோக்கு விஷயமாக இருந்தது.

அத்தகைய கனவுகளைக் காணக்கூடிய மனநிலையில் இப்போது வயதான கோவிந்தன் இல்லை.

“நான் ருஸ்ஸியைப் பார்த்து எவ்வளவோ காலமாச்சு!” - அந்த மனிதர் சொன்னார்: “ஆனா, அவ எங்கே இருக்கான்னு எனக்குத் தெரியும்.”

அதைக்கேட்டு கோவிந்தனின் இதயம் அவரின் நெஞ்சுக்கூட்டை விட்டு வெளியே குதித்துவிடும் போலிருந்தது. தன்னுடைய இதயம்தான் இப்படி துள்ளிக் குதித்து விளையாடுகிறதா என்று அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். அது தன்னுடைய நெஞ்சு கூட்டிற்குள்தான் இருக்கிறது என்று தெரிந்தபிறகுதான் அவருக்கு நிம்மதியே வந்தது. முகவரிகளும் தொலைபேசி எண்களும் தன்னிடம் இல்லாமற் போய்விடவில்லையே என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டார் கோவிந்தன்.

“பேசாம இரு” - குறும்பு செய்யும் குழந்தையை அதன் தந்தை திட்டுவதைப்போல கோவிந்தன் தன்னுடைய இதயத்தை அடக்கினார். தான் திடீரென்று ஒரு இளைஞனாக மாறிவிட்டதைப்போல் உணர்ந்தார்.

“ஏன் இந்த வீடு இப்படி இடிந்து விழுந்துச்சு? அதற்கான காரணம் என்ன?” - நண்பர் கோவிந்தனைப் பார்த்துக் கேட்டார். “எனக்கு ஒண்ணுமே புரியலை...”

உருவாக்கப்படுவதில் அல்ல- அழிவதன் மூலம்தான் மனிதனின் வரலாறு முன்னோக்கி நகர்கிறது என்று சொல்ல மீண்டும் இளைஞனாக மாறிய கோவிந்தன் நினைத்தார். ஆனால், அவர் சொன்னது- “குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்” என்பதுதான்.

நண்பர் உள்ளே போய் அவரே ஒரு டம்ளர் நீரைக்கொண்டு வந்து கொடுத்தார். பாதாம் சர்பத் கோவிந்தனின் தாகத்தை அதிகரிக்கவே செய்தது.

அந்த மனிதர் பணக்காரரான ஒரு பழைய கம்யூனிஸ்ட் நண்பர். கம்யூனிஸத்தை அவர் உதறி எரிந்து விட்டாலும் அதிலிருந்த கருணையை அவருடைய கண்களில் இப்போதும் நாம் பார்க்கலாம்.

“கோவிந்தா, நீங்க என்ன யோசிக்கிறீங்க?” - அவர் கேட்டார். கோவிந்தனின் பதிலுக்குக் காத்து நிற்காமல் அவர் தானே தன்னுடைய கேள்விக்கு பதிலம் சொன்னார்: “நீங்க ருஸ்ஸியைப் பற்றி நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.”

அந்த நிமிடம் உண்மையாகவே கோவிந்தன் அவளைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய நண்பரின் யூகம் தவறாகி விட்டது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அந்த அறையில் உட்கார்ந்திருந்ததால் கோவிந்தனின் உடம்பிலிருந்த வியர்வை முழுமையாக இல்லாமற் போய்விட்டது. அறைகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதுடன் தனியாக இருக்கும் வழிப்போக்கர்களின் உடம்பில் இருக்கும் வியர்வையை இல்லாமற் செய்வது என்ற நோக்கமும் குளிர்சாதன பெட்டிக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார். உண்மையாகப் பார்க்கப்போனால் அந்த நிமிடம் கோவிந்தன் நினைத்துக் கொண்டிருந்தது அதைத்தான்.

“என்னால நம்ப முடியல...” - அந்த மனிதர் சொன்னார்:“இருபது வருடமா உங்க ரெண்டு பேருக்குமிடையே கடிதத் தொடர்பே இல்லைன்னு சொன்னா யார் நம்புவாங்க?”

கோவிந்தன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

“ஏன் ஒருத்தருக்கொருத்தர் கடிதம் எழுதல?”


கோவிந்தன் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் சென்றதும் கோவிந்தன் ஒரு சிறு குழந்தையைப்போல சொன்னார்: “நான் ருஸ்ஸியைப் பார்க்கணும்.”

“இன்னைக்கு அவளைப் பார்க்க முடியாது” - நண்பர் தன்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தார். “ஆறு மணிவரைத்தான் பார்வையாளர்களுக்கான நேரம்.”

தனக்கும் ருஸ்ஸிக்கும் இடையில் நேரமோ காலமோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. கோவிந்தன் ஒரு சிறு குழந்தையைப்போல பிடிவாதம் பிடித்தார். சற்று முன்பு வயதான கோவிந்தன் இளைஞனாக மாறினாரோ, அதேபோல இப்போது இளைஞனான கோவிந்தன் குழந்தையாக மாறினார்.

அந்த மனிதர் குழந்தை கோவிந்தனின் பிடிவாதத்தைப் பார்த்து அவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார். வெயில் மங்கலாகிக் கொண்டிருந்த பலதரப்பட்ட தெருக்கள் வழியாக கார் ஓடிக்கொண்டிருந்தது. வசதி படைத்த அந்த நண்பர் தன்னுடைய விலை மதிப்புள்ள காரை மிகவும் கவனத்துடன் ஓட்டினார். பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்துவிட்டது என்ற விஷயம் அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அத்தகைய சட்டங்கள் எதுவும் பணக்காரர்களைப் பொறுத்தவரை இல்லை என்பதையும் அவர் அறியாமல் இல்லை. மூடிக்கிடக்கும் எந்தக் கதவுகளையும் திறப்பதற்கு அவரால் முடியும். அவருடைய நடவடிக்கைகளிலிருந்து கோவிந்தன் புரிந்து கொண்ட விஷயம் இது.

ஒரு பழைய சிதிலமடைந்து போன வீட்டிற்கு முன்னால் போய் கார் நின்றது. நண்பர் உள்ளே போய், உடனே திரும்பி வரவும் செய்தார்.

“கோவிந்தா, நான் உங்களை ருஸ்ஸிக்குப் பக்கத்துல அழைச்சிட்டு வந்துட்டேன்” - அந்த மனிதர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “இனி நான் போறேன்.”

அவர் எதற்காக அப்போது சிரித்தார் என்பதை கோவிந்தனால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிரிக்க வேண்டிய இடத்தில் அல்ல அவர் சிரிப்பது என்ற உண்மையையும் அவர் ஏற்கனவே புரிந்து கொண்டிருந்தார்.

“எப்ப வேணும்னாலும் நீங்க என்னை வந்து பார்க்கலாம்.” - அவர் தொடர்ந்து சொன்னார்: “என் வீட்டுல வந்து நீங்க தங்கலாம்.”

பொருத்தமில்லாத இடங்களில் சிரிக்கும் அந்தப் பழைய நண்பர் கோவிந்தனிடம் விடைபெற்றுக் கொண்டு காரை ஓட்டியவாறு திரும்பிப் போனார்.

கோவிந்தன் கேட்டுக்கு முன்னால் உள்ளே பார்த்தவாறு நின்றிருந்தார்.

கேட்டுக்கு மேலே பிறைச் சந்திர வடிவத்தில் ஒரு பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது. கோவிந்தன் இதயம் ‘டக்டக்’கென்று துடிக்க அந்தப் பெயர்ப்பலகையை வாசித்தார். டில்லி ஆளுகைக்குட்பட்ட ‘நாரி நிகேதன்’ அது. அதாவது- பாதை தவறிப் போனவர்களுக்கும் அனாதைப் பெண்களுக்குமான காப்பகம்.

கோவிந்தன் கேட்டைக் கடந்து மெதுவாக நடந்தார். அவளுடைய மனம் உள்ளே அழுது கொண்டிருந்தது. பார்வையாளர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த அறையில் சென்று அவருடைய தலை மார்பு மீது தொங்கிக் கொண்டிருந்தது.

அவர் யாரோ நடந்து வரும் மென்மையான காலடி சத்தத்தைக் கேட்டார்.

அவர் முகத்தோடு முகம் பார்த்தவாறு நின்றார். அவளுடைய முகத்தில் எந்த ஒரு உணர்ச்சி வேறுபாடும் இல்லை. “அவள் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லையா?” - கோவிந்தன் ஒரு நடுக்கத்துடன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.

“ஹே, கோவிந்தா!”

மேலேயிருந்து வந்த குரலைக் கேட்ட வயதான கோவிந்தன் வானத்தை நோக்கி முகத்தை உயர்த்தினார்.

‘தத்துவங்கள் பிறக்கும், இறக்கும். இறக்காமல் இருப்பது மனதில் இருக்கும் கருணை மட்டும்தான்.”

கோவிந்தன் சிலையென காதைத் தீட்டிக்கொண்டு நின்றிருந்தார்.

‘மனதில் இருக்கும் கருணை இல்லாமல் போய்விட்டால், அதற்குப் பிறகு நீ இல்லை...’ - அசரீரி தொடர்ந்தது: “கருணை உனக்கு ஒரு ஒளியாக இருக்கட்டும்.”

வானத்தை நோக்கியிருந்த அவரின் பார்வை திரும்பவும் அவள் மீது வந்து நின்றது.

அவர் அவளின் மென்மையான கையைத் தன் கையால் தொட்டார். அவளுடைய மேற்தோல் காய்ந்து உதிர்ந்துபோய்க் காணப்பட்டது. அவளின் தலையும், முகமும் வாடிச் சுருங்கிப்போய் இருந்தது. அவர் அவளின் கையை மெதுவாக அழுத்தியபோது, அவள் எச்சிலை விழுங்கினாள்.

“இந்த ஒரு வாழ்க்கையை மட்டும்தான் நாம வீணாக்கிட்டோம். வாழுறதுக்கு இன்னும் எவ்வளவோ பிறவிகள் இருக்கு. வரப்போற பிறவிகளுக்கு உன்னை அழைச்சிட்டுப் போகத்தான் நான் வந்திருக்கேன்.”

படிகளிலிறங்கும்போது உடம்பில் சுற்றியிருந்த துணியில் சிக்கி அவள் விழ இருந்தாள். அவர் அப்போது அவளைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டார்.

“இடிந்து விழும் காலம் முடிந்து விட்டது.” - அவர் சொன்னார்: “இடிபாடுகளுக்கு இடையிலிருந்து நாம் ஒரு புதிய சிறு உலகத்தை உருவாக்கி உயர்த்துவோம்.”

பிறைச்சந்திர வடிவத்திலிருந்த பெயர்ப் பலகைக்குக் கீழே நடந்து அவர்கள் வெளியே வந்தார்கள். வெளியில் இருட்டு இருந்தாலும், ஆகாயத்தில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சத்தின் உதவியுடன் அவர்கள் மெதுவாக முன்னோக்கி நடந்தார்கள்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.