Logo

இரண்டாம் பிறவி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7243
irandaam piravi

ரணத்திற்கு முன்னாலிருந்த வாழ்க்கையின் போது ஊர்மக்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும், பழகியவர்களுக்கும் பிடித்த ஒரு மனிதராக இருந்தார் ஆட்டக்களத்தில அவறாச்சன். அவர் ஒரு நல்ல மனிதர் என்றே பொதுவாக எல்லோரும் அவரைப் பற்றிச் சொல்லுவார்கள். நல்ல மனிதர் என்று அவரைச் சொல்லாதவர்கள் கூட அவர் ஒரு கெட்ட மனிதர் என்று ஒரு முறைகூட சொன்னதில்லை.

கிழக்கு பக்கம் இருந்த மலைகளில் சூரியன் உதித்து, வளர்ந்தது. நாலா பக்கங்களிலும் வெப்பத்தை அது பரவவிட்டது. மதிய நேரத்தில் ஆட்டக்களம் குடும்பத்திற்குச் சாந்தமான வயல்கள் பயங்கர வெப்பத்தால் தகித்தன. மாலைநேரம் வந்தது. சூரியன் நிலத்திற்குப் பின்னால் எங்கோ போய் மறைந்தது. கிழக்குப் பக்கமிருந்த மலைகளிலிருந்து பண்ணையாறு என்றொரு ஆறு உற்பத்தியாகி ஓடி வந்து கொண்டிருந்தது. ஆட்டக்களத்துக்காரர்களின் நிலத்தின் எல்லையில் அஸ்தமிக்காமல் காணாமல் போன சூரியனைத் தேடிக் கண்டுபிடிக்கப்போவது மாதிரி அந்த ஆறு மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. ஆட்டளக்களத்துக்காரர்களின் தெற்கு எல்லை வழியாகத்தான் ரயில்பாதை போய்க் கொண்டிருந்தது. ரயில்பாதை கிழக்குப் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறதா அல்லது மேற்கு திசையிலிருந்தா என்பதைக் கூறுவதற்கில்லை. அது ஒரு திசையுடன் தன்னை ஒரு போதும் சம்பந்தப்படுத்தி நிறுத்திக் கொள்ளாது. சில நேரங்களில் கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கி ரயில் செல்லும். சில நேரங்களில் மேற்கிலிருந்து கூவி அழைத்தவாறு வண்டி வரும்.

ஆட்டக்களத்தில் அவறாச்சன் அசாதாரணமான மனிதரொன்றும் இல்லை. அவர் ஆட்டக்களத்தில் அவறாச்சன்; அவ்வளவுதான். அதைத் தாண்டி அவரைப் பற்றி அதிகமாகச் சொல்வதற்குமில்லை. குறைவாகச் சொல்வதற்குமில்லை. தேவைக்கேற்ற உயரம், அளவான எடை, நல்ல ஆரோக்கியமான உடம்பு, ஒரு சாதாரண கிராமிய முகம், கிராம மணம் கொண்ட கண்களும் மூக்கும், கிராமத்தனமான தலைமுடி, கிராமிய வாசனை கொண்ட பேச்சும் நடத்தையும், கிராமத்தின் பழக்க- வழக்கங்களை வாழ்க்கையில் பின்பற்றி நடக்கும் போக்கு- இதுதான் அவறாச்சன். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பார்ப்பதற்கு அப்படித் தெரியாது. சாதாரண ஒரு மனிதரைப் போலவே தோன்றுவார். எல்லோரும் பின்பற்றக்கூடிய விஷயங்களையே அவரும் வாழ்க்கையில் பின்பற்றுவார். ஆட்டக்களத்தில் அவறாச்சன் மனித தர்மத்தை மீறி நடந்ததாக இதுவரை யாரும ஒருமுறை கூட சொன்னதில்லை. அவறாச்சனுக்கு எதிராக பத்து வருடங்களுக்கும் மேல் சிவில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் குஞ்ஞுக்குறுப்பு கூட அவரைப் பற்றி எந்தக்குற்றச்சாட்டும் கூறியதில்லை. பல விஷயங்களில் குஞ்ஞுக்குறுப்பிற்கும் அவறாச்சனுக்குமிடையே கருத்து வேறுபாடுகளும், வாய்ச்சண்டையும், மோதல்களும் உண்டாகியிருக்கின்றன. இருந்தாலும் "அவறா மாப்பிள... யோக்கியமான ஆளுடா. நல்ல தைரியசாலியும் கூட" என்று குஞ்ஞுக்குறுப்பு தன்னுடைய ஆட்களிடம் கூறுவார்.

"குறுப்பச்சன் நல்ல குடும்பத்துல பிறந்தவரு" அவறாச்சன் தன்னுடைய மனைவியான சாராம்மாவிடம் கூறுவார்: "ஆம்பளைன்னா அப்படி இருக்கணும். இவ்வளவு வம்பு, வழக்குன்னு ஆன பிறகும் குறுப்பச்சனோட வாயில இருந்து தேவையில்லாம ஒரு வார்த்தை வெளியே வந்து நீ கேட்டிருக்கியா...? சொல்லுடி... நீ கேட்டிருக்கியா?"

சாராம்மா வாயைத் திறந்து ஒரு பதிலும் சொல்லவில்லையென்றாலும் 'இல்லை' என்ற அர்த்தத்தில் அவள் தன் தலையை ஆட்டினாள். அவறாச்சன் தொடர்ந்து சொன்னார்: "அதுதான் நல்ல அப்பனுக்குப் பொறக்கணும்னு சொல்றது..."

அவர்கள் இருவருமே ஊரில் மதிப்பிற்குரிய மனிதர்கள்தாம். அவர்களின் மரியாதைக்குரிய நடத்தையைப் பார்த்து ஆட்கள் ஒவ்வொருவரும் ஆச்சர்யப்பட்டார்கள். பொறாமையை வெளிப்படுத்த அப்போது குறுக்கு வழிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததால், என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றிருந்த மக்கள் தங்களிடம் தோன்றிய பொறாமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். உள்ளே பற்களை 'நறநற'வென்று அவர்கள் கடித்திருக்கலாம்.

அந்த அளவிற்கு ஒருவரையொருவர் மதிக்கக்கூடிய எதிரிகள் உலகத்தில் வேறு எங்காவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான். நாட்டில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில்; போராளிகளுக்கும், போலீஸ்காரர்களுக்குமிடையில் இப்படிப்பட்ட ஒரு அன்னியோன்யமான உறவு இருந்தால் பிரச்சினைகள் ஏதாவது உண்டாகுமா என்ன? உலக நாடுகள் அவறாச்சனையும் குஞ்ஞுக்குறுப்பையும் மாதிரிகளாக எடுத்துக் கொண்டிருந்தால் எவ்வளவோ மிகப்பெரிய போர்களையும், எவ்வளவோ குருதிச் சிந்தல்களையும் நிறுத்தியிருக்கலாம். வேதவியாசன் இந்த இருவரையும் முன்பே பார்த்திருந்தால் குருச்சேத்ரப் போர் என்ற ஒன்றே இல்லாமற் போயிருக்கும். ஒருவிதத்தில் பார்க்கப்போனால் அந்த மனிதர் அவர்களைப் பார்க்காமல் போனதுகூட நல்லதுதான். இல்லாவிட்டால் நமக்கு பகவத்கீதையும் மகாபாரதமும் கிடைக்காமலே போயிருக்குமே!

எது எப்படியே அவறாச்சனுக்கும் குறுப்பிற்குமிடையே இருந்த நட்பும் விரோதமும் அபூர்வமான ஒன்றாகவும், அசாதாரணமானதாகவும், பொறாமைப்படத்தக்கதாகவும் இருந்தன என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியாது. அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதுக்காரர்கள்தான். ஒரே சூரியனின் வெப்பத்தை ஏற்று வளர்ந்தவர்களே. ஒரே ஆற்றில் இறங்கி குளித்தவர்கள்தான் அவர்கள் இருவரும். ஒரே ஆற்று நீரில் தூண்டில் போட்டவர்கள். ஒரே காற்றை இருவரும் பங்கு போட்டு சுவாசித்தவர்கள். ஒரே மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் இருவரும் பங்குபோட்டு அனுபவித்தவர்கள். ஒரே பாதையை மிதித்து நடந்தவர்கள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஒரே மண்ணில் விவசாயம் செய்தவர்கள். மலையும், மலையடிவாரங்களும், காலங்களும அவற்றின் பரிணாமங்களும், மண்ணும், மண்ணின் வினோதச் செயல்களும், ஆகாயமும், அதிலிருக்கும் கோடானு கோடி நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும், மேகங்களும், அவர்களின் பொதுச் சொத்துக்களாக இருந்தன.

மத நம்பிக்கையில் அவர்களில் ஒருவர் கிறிஸ்துவர். இன்னொருவர் இந்து. அவர்களின் கிராமத்தில், அவர்களின் மலைச்சரிவில், அவர்களின் ஆற்றங்கரையில் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. கடவுளை யார் எந்தப் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்பது அங்கு ஒரு முக்கியமான விஷயமாக இருக்கவில்லை. கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் அவறாச்சனும் அவரின் ஆட்களும் போட்டிபோட்டுக் கொண்டு பங்கெடுத்தார்கள். அதே மாதிரி தேவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் குறுப்பும் அவரின் ஆட்களும் கலந்து கொண்டார்கள். கிறிஸ்துவப் பாம்புகள் மட்டுமே கிறிஸ்துவர்களைக் கொத்த வேண்டும். இந்துப் பசுக்களின் பாலை மட்டுமே இந்துக்கள் குடிக்க வேண்டும் என்று பிற்காலத்தில் பின்பற்றப்பட்ட எந்த விதிகளும் அவர்களின் காலத்தில் வழக்கத்தில் இல்லாமல் இருந்தன. அவர்களின் கிராமங்களில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் ஆடு, மாடுகள் மேய்ந்து திரிந்தன. மதத்தை மறந்து மரங்கள் வளர்ந்தன. ஆறு பாய்ந்தோடியது. ஊற்றுகள் பிறந்தன. மழை பெய்தது. காற்று அடித்தது. பூக்கள் மலர்ந்தன. நாய்கள் குரைத்தன. கோழிகள் கூவி வளர்ந்தன. முட்டைகள் விரிந்தன. ஜாதி, மத சிந்தனைகள் மறந்து இயற்கை கிராமத்தை வளர்த்தது, பாதுகாத்தது, தண்டித்தது.

அவறாச்சனுக்கும் குறுப்பிற்கும் இடையில் இருக்கும் நட்பும் பாசமும் சண்டைகளும் அவர்களின் சிறு பிள்ளைப் பிராயத்திலேயே தொடங்கிவிட்டன.


பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது படிப்பில் அவர்கள் இருவருக்குமிடையே பலத்த போட்டி இருந்தது. ஒரு பாடத்தில் ஒருவர் அதிக மதிப்பெண்கள் வாங்கினால், இன்னொரு பாடத்தில் மற்றொருவர் அதிக மதிப்பெண்களைப் பெறுவார். சுருக்கமாகச் சொல்லப்போனால் மொத்த மதிப்பெண்களையும் கூட்டிப் பார்க்கும்போது ஒருமுறை அவறாச்சன் முன்னாலிருந்தால், இன்னொருமுறை குறுப்பு அவரைவிட அதிக மதிப்பெண்களை வாங்கியிருப்பார். விளையாட்டு விஷயத்திலும் அதே நிலைதான். கிளித்தட்டு, கோலி, கம்பு விளையாட்டு, தலைப்பந்து, தோல்பந்து, கயிறு இழுத்தல், ஓட்டப்பந்தயம், குழிப்பந்து, நீச்சல், தாண்டுதல் ஆகியவைதான் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டு அம்சங்கள். பலரும் சேர்ந்து விளையாடும்போது எதிர் அணிகளின் தலைவர்களாக அவறாச்சனும் குறுப்பும் இருப்பார்கள். எந்தப்போட்டியாக இருந்தாலும், இறுதிப்போட்டி அவறாச்சன் அணிக்கும், குறுப்பு அணிக்குமிடையேதான் இருக்கும். அப்போது கூட இறுதி வெற்றி இரு அணிகளுக்கும் மாறி மாறித்தான் கிடைக்கும். விளையாட்டுக்கான தேவதை இருவரையும் மாறி மாறி கவனித்துக் கொண்டாள் என்பதே உண்மை.

இப்படிப்பட்ட 'ஒருமாதிரி' என்று கூறக்கூடிய விதத்தில் இருக்கும் நட்பு வேறு யாராவது இரண்டு ஆட்களுக்கிடையே இருந்ததாக இதுவரை நாம் கேட்டதில்லை. வரலாற்றில் அப்படி ஏதாவது இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா- இல்லையா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்கு நேரம் கிடைப்பவர்கள் முயற்சி செய்து கொள்ளட்டும். இந்த வரலாற்றுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களே போதும்.

அவறாச்சனுக்கும் குறுப்புக்குமிடையே சரிக்கு சமமாக ஒவ்வொரு விஷயத்திலும் போட்டி இருந்து கொண்டே இருந்தது என்ற உண்மையை இதுவரை கூறிய விஷயங்களிலிருந்து எல்லோரும் புரிந்து கொண்டிருக்கலாம். அதே நேரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களுக்கிடையே போட்டி என்பதே சிறிதும் இல்லை என்பதுதான் ஆச்சர்யத்தைத் தரக்கூடிய ஒரு தகவல்.

அது - ஊருக்கு யார் தலைவர் என்பது. அவறாச்சன் ஊரில் பெரிய தலைவரல்ல என்பதைத்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! ஊருக்குப் பெரிய மனிதரும், தலைவருமாக இருந்தவர் குறுப்புதான். இந்த விஷயத்தை அவறாச்சன் முழுமையான மனதுடன் ஒப்புக் கொண்டிருந்தார்.

"அதற்குச் சரியான ஆள் குறுப்பச்சன்தான்..." என்று அவறாச்சனே ஊர் மனிதர்களிடம் வெளிப்படையாகக் கூறுவும் செய்தார்: "பாட்டத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவங்க அதிகார குணம் படைச்சவங்க. அவங்க மாதிரி செல்வாக்கும், மதிப்பும் உள்ள குடும்பம் இந்தப் பகுதியில வேற யார் இருக்காங்க? பணம் சம்பாதிக்கறதுன்னா, அதை நாய் கூட செய்யும். பணம் கொடுத்து கிடைக்கறதா செல்வாக்குன்றது? எங்க குடும்பத்துக்கும் செல்வாக்கு இருக்கு. இருந்தாலும், அந்த அளவுக்குச் சொல்ல முடியாது. பாட்டத்தில் குடும்பத்தைச் சேர்ந்த குறுப்பச்சன் ஊர்த் தலைவரா இருந்தா, நானே இருக்குற மாதிரிதான். ஆனா, பாட்டத்தில் குறுப்பச்சன் இருக்குற காலம் வரை இங்கே வேற ஒருத்தன் ஊர் தலைவரா ஆகுறதுன்றது கொஞ்சமும் நடக்காத ஒரு விஷயம் புரியுதா,"

"பார்த்தீங்களாடா?"- குறுப்பு தன்னுடைய ஆட்களைப் பார்த்து ஒரு வித ஆணவத்துடன் கூறுவார்: "டேய் அவறா மாப்பிளையும் நானும் பல விஷயங்கள்ல மோதிட்டுத்தான் இருக்கோம். இருந்தாலும் அந்த ஆளு நல்ல குடும்பத்துல பிறந்தவரு. மத்த கிறிஸ்துவர்களைப் போல இல்ல. ஆட்டக்களத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்னா சும்மாவா? ஒரு ஆணுக்குத்தான் ஒரு ஆணைப் புரிஞ்சுக்க முடியும். தெரியுதாடா?"

அவறாச்சனுடைய வீட்டின் மேல்மாடியில் ஒரு தனியறை இருக்கிறது. அங்கு நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்களில் குஞ்ஞுக்குறுப்பும் ஒருவர். அவரைத் தவிர, அவறாச்சனுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருக்கும் கொல்லத்திலிருந்து வரக்கூடிய முந்திரிப்பருப்பு வியாபாரிகள் சிலரும் இருக்கிறார்கள். யாரும் அங்கு வராமல் இருக்கும்போது, அவறாச்சனும் குறுப்பும் அமர்ந்து அங்கு செஸ் விளையாடுவார்கள். இருவரின் முன்னோர்களும் அந்தக் காலத்தில் சதுரங்கம் விளையாடக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால், அவறாச்சனும் குறுப்பும் நவீன விளையாட்டான செஸ் விளையாடினார்கள். புதிய விளையாட்டுக்களிலும், விளையாடக்கூடியவர்கள் மீதும் அவர்கள் இருவருக்குமே நல்ல ஈடுபாடு இருந்தது. விளையாடும்போதோ, விளையாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதோ அவர்கள் சிறிது மது அருந்துவதுண்டு. இந்த விஷயம் வீட்டில் இருப்போருக்கு மட்டுமே தெரியும். அவர்களில் யாராவது இந்த விஷயத்தை வெளியே சொன்னால், சொன்ன ஆளைத்தான் ஊர்க்காரர்கள் உதைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் உள்ள மனிதர்களாக அவர்கள் இரண்டு பேரும் இருந்தார்கள்.

அவறாச்சனுக்கு அரசியல் விஷயங்களில் ஆர்வம் எதுவும் இருந்ததில்லை. குறுப்பு ஒருமுறை- ஒரே ஒருமுறை பஞ்சாயத்து தேர்தலில் நின்றார். குறுப்பிற்காக பெரிய அளவில் பிரச்சாரம் செய்ததே அவறாச்சன்தான். குறுப்பு வெற்றி பெற்றதுடன், பஞ்சாயத்து தலைவராகவும் ஆனார். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தபடி ஒவ்வொரு வீடாக அவர்கள் ஏறி இறங்கி நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களுக்கிடையே இருந்த சிவில் வழக்கும் படு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிவில் வழக்கு என்பது ஒரு வழக்கா என்ன என்பது மாதிரி இரு பக்கங்களிலும் நடந்து கொண்டார்கள்.

"உண்மையிலேயே பார்க்கப்போனா வழக்கு அவங்க ரெண்டு பேருக்குமிடையே இல்ல..." - ஊர்க்காரர்கள் சொன்னார்கள்: "அவங்களோட வக்கீல்மார்களுக்கு இடையேதான் வழக்கே..."

அதுதான் கிட்டத்தட்ட உண்மையான விஷயம்.

வக்கீல்மார்கள் பணத்தை வாங்கினார்கள். வழக்கு நடத்தினார்கள். வழக்கு வருடக்கணக்கில் நடந்து கொண்டே இருந்தது. வழக்கிற்காகச் சென்றவர்கள் போனது, வந்தது எல்லாமே பெரும்பாலும் ஒன்று சேர்ந்துதான். நகரத்திற்குப் போனபிறகு அவர்கள் உணவு உண்டது, ஹோட்டலில் தங்கியது எல்லாமே ஒன்றாகத்தான்.

"இதெல்லாம் அவங்களுக்குள்ளே திட்டம் போட்டு செய்யற ஒரு சதிவேலைன்னுதான் தோணுது!"- ஊரில் உள்ள சில இளைஞர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்: "ஊர்க்காரங்களை ஏமாத்துறதுக்காக அவங்க ஒருவேளை இப்படிப் பண்ணுறாங்களோ!"

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..."- அவர்களில் சிலர் அதை எதிர்த்து கூறினார்கள்: "ஊர்க்காரங்களை ஏமாற்றி அவங்களுக்கு என்ன ஆகப்போகுது? அவங்களுக்குத் தேவையானது எல்லாம் அவங்க கிட்ட இருக்கு. சொல்லப்போனா தேவைக்கும் அதிகமாகவே இருக்கு. பிறகு எதற்கு அவங்க மத்தவங்களை ஏமாத்தணும்?"

"அப்படின்னா அவங்க செயலுக்குப் பின்னாடி இருக்குற ரகசியம் என்ன?"

"என்ன ரகசியம்? ஒரு ரகசியமும் இல்ல. சொத்து சம்பந்தமாகவோ நிலம் சம்பந்தமாகவோ தகராறு இருக்குன்னு சொல்லிக்கிட்டு அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் அடிச்சு காயப்படுத்திக்கிடணும்னு சொல்றியா? பெரிய மனிதர்கள் மாதிரி மதிப்பா நடந்துக்குறதுதானே நல்லது? சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறது நல்லதா என்ன?"

"ஒருவிதத்துல பார்த்தா, நீ சொல்றது சரிதான்."


கொல்லத்திலிருந்து வரும் முந்திரிப்பருப்பு வியாபாரிகளின் ஒத்துழைப்புடன் அவறாச்சன் முந்திரிப்பருப்புத் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தில் முதல் தடவையாக ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதும், ஒரு தொழிலதிபர் உருவானதும் அப்போதுதான். அதுவரை அந்த கிராமம் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தது. ஒரு தொழிற்சாலையைத் தொடர்ந்து, மேலும் ஒன்றிரண்டு தொழிற்சாலைகளை அவறாச்சன் தொடங்கியது தான் தாமதம், என்னவோபோல் ஆகிவிட்டார் குறுப்பு. அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவர் மனம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. இரவு நேரங்களில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த அவர் பல விஷயங்களைப் பற்றியும் மனதில் அசை போட்டார். அதற்குப் பதிலாக மிக விரைவில் தான் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அவர் வந்தார். வேண்டுமானால் தானும் ஒரு முந்திரிப்பருப்பு தொழிற்சாலை ஆரம்பிக்கலாமே என்றுகூட அவர் சிந்தித்தார். ஆனால் அப்படிச் செய்வது நல்லதல்ல என்ற முடிவுக்கும் அவர் வந்தார். தான் முந்திரிப்பருப்புத் தொழிற்சாலை தொடங்கினால், அவறாச்சன் மாப்பிள்ளையைப பின்பற்றுவதாக மக்கள் நினைப்பார்கள் என்பதை மனதில் யோசித்துப் பார்த்தார் குறுப்பு. வேண்டுமென்றே மனதில் வைராக்கியத்தை வைத்துக் கொண்டு அவருடன் தான் போட்டிபோட வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தச் செயலைச் செய்வதாக அவர்கள் நினைப்பார்கள். அதே நேரத்தில் தான் நிச்சயம் ஏதாவது செய்தே தீரவேண்டுமென்று பல விஷயங்களையும் குறுப்பு மனதில் அசை போட்டார். புதிதாக வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதில் அப்படியொன்றும் அங்கு பிரச்சினையும் இல்லை. ஒரு கிராமத்திற்கு ஒரு வியாபாரி மட்டும் போதுமா என்ன? இதையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் குறுப்பு அந்த ஊரில் ஸ்டார்ச் தொழிற்சாலையை ஆரம்பித்தார். குறுப்பிற்குச் சொந்தமான முந்திரிப்பருப்பு முழுவதையும் அவறாச்சன் வாங்கிக் கொள்ள, அவரின் மர வள்ளிக் கிழங்கை குறுப்பு எடுத்துக் கொண்டார்.

இருவரின் வியாபாரமும் நல்லமுறையில் நடந்தது. இரண்டும் வெவ்வேறு வகைப்பட்ட வியாபாரங்களாக இருந்ததால், அவர்களுக்கிடையே போட்டி என்ற பிரச்சினையே இல்லை. அது மட்டுமல்ல; இரண்டு பேரும் பெரும்பாலான மாலை நேரங்களில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதும், வியாபார வளர்ச்சி குறித்துப் பேசிக் கொள்வதும், ஒருத்ததருக்கொருத்தர் ஆலோசனை சொல்லிக் கொள்வதுமாக இருந்தார்கள். இருவரும் வெளியிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், நிர்வாகிகளையும் தங்கள் தொழிற்சாலைக்குக் கொண்டு வந்தார்கள். மற்ற வேலைகளில் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நியமித்தார்கள். பாட்டத்தில் ஸ்டார்ச் தொழிற்சாலையும் ஆட்டக்களத்தில் முந்திரிப்பருப்பு தொழிற்சாலையும் ஒருவிதத்தில் அந்த ஊருக்குப் பெருமை சேர்க்கக் கூடியனவாகவும், அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய நிறுவனங்களாகவும் வளர்ந்து கொண்டிருந்தன. அந்த ஊரின் முன்னேற்றத்திற்கு அவை இரண்டும் மிகப்பெரிய தூண்களாக இருந்தன.

"சில நேரங்கள்ல அவங்க ரெண்டு பேருக்குமிடையே போட்டி இருக்கத்தான் செய்யும். அதனால என்ன? அதனால நம்ம ஊரைச் சேர்ந்த எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைச்சிருக்கு!"- அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.

தொழிற்சாலையுடன் சேர்ந்து தொழிற்சங்கங்களும், போராட்டங்களும், கொடிகளும் தோன்றின. போராட்டங்கள் இறுதியில் பெரும்பாலும் ஒருவகை உடன்பாட்டில் போய் முடிந்து கொண்டிருந்தன. தொழிற்சங்கத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்களாகவும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகவுமே இருந்ததே அதற்குக் காரணம். தொழற்சாலைகள் வளர, வளர அந்த ஊரும் வளர்ந்தது. தொழிற்சாலைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் வேறு பல வர்த்தக நிறுவனங்களையும் கூட அவர்கள் இருவரும் ஆரம்பித்தார்கள். குறுப்பு பெட்ரோல் பங்க் திறந்தபோது, அவறாச்சன் ஆட்டோமொபைல் ஒர்க்க்ஷாப் திறந்தார். ஒரே மாதத்தில் இருவரும் கார் வாங்கினார்கள். இருவரும் சேர்ந்து வழக்கிற்காகச் சென்றதுகூட மாறி மாறி ஒவ்வொருவரின் காரில்தான். இந்த விஷயத்திலும் அவர்கள் ஒரே கொள்கையைக் கொண்டிருப்பதை எல்லோருக்கும் தெரிய வெளிப்படுத்தினார்கள். ஒரே இடத்திற்கு ஒரே இடத்திலிருந்து இரண்டு பேர் பயணம் செய்யும்போது இரண்டு கார்களுக்கும் எரிபொருள் ஊற்றுவது என்பது நாட்டின் பொருளாதாரத்தை வீண் செய்யும் ஒரு செயலென்று இருவருமே நம்பினார்கள்.

வழக்கைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் எதிரெதிர் கட்சிக்காரர்களே. ஆனால், ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் படித்து வளர்ந்தவர்கள். அவர்கள் ஒரே காரில் பயணம் செய்வதும், ஒரே ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடுவதும் தவறான ஒரு காரியமா என்ன? அது தவறல்ல என்றும்; தாங்கள் செய்வது தான் சரி என்றும் இருவரும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்கள்.

2

ட்டக்களத்தில் அவறாச்சனின் வம்சத்தைப் பற்றி இங்கு விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. அவரின் தந்தையின் பெயர் கீவறீச்சன். அவறாச்சன் எல்லா அடையாளப் பத்திரங்களிலும் ஆப்ரஹாம் வர்கீஸ் என்றே குறிப்பிடப்பட்டார். அவறாச்சனின் தந்தை மூத்தமகன். அதனால் வர்கீஸ் ஆப்ரஹாம், வல்யப்பன் ஆப்ரஹாம் வர்கீஸ்... இப்படி இருக்கும் அவர்களின் பெயர்கள்.

பிற்காலத்தில் வரலாற்றில் இடம்பெற்ற எம்.பி.நாராயணபிள்ளை சொன்னபடி ஒரே மகனைக் கொண்ட கிறிஸ்துவருக்குப் பெயர் மாறாது. ஆப்ரஹாம் வர்கீஸ், வர்கீஸ் ஆப்ரஹாம், ஆப்ரஹாம் வர்கீஸ்... இப்படி தொடர்ந்து கொண்டிருக்கும் பெயர்கள்.

எத்தனையோ தலைமுறைக்கு முன்பே ஆட்டக்களத்தில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராமத்திற்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார்கள். ஏதோ ஒரு அவறாச்சனோ; ஒரு கீவறீச்சனோ முதலில் அங்கு வந்து கால் ஊன்றியிருக்கிறார்கள். மலையையும் ஆற்றையும் பார்த்திருக்கிறார்கள். அவற்றுடன் அவர்கள் ஒன்றிப் போயிருக்கிறார்கள். மண்ணின் மீது அவர்களுக்கு ஒரு ஈடுபாடு உண்டாகியிருக்கிறது. அதன் மீது அவர்கள் கொண்ட காதல் காலப்போக்கில் அதிகமாகியிருக்கிறது. அந்த மண்ணின் மீது அவர்கள் கொண்ட காதல் தீவிரமாகி இருக்கிறது. அந்த மண்ணை அவர்கள் மனப்பூர்வமாக விரும்பியிருக்கிறார்கள். அந்த மண்ணிலேயே அவர்கள் காலூன்றி தங்களின் சந்ததிகளை உண்டாக்கியிருக்கிறார்கள். அவர்களை வளர்த்திருக்கிறார்கள். இப்படித்தான் அவர்களின் பரம்பரை அந்த ஊரில் தொடர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் குறுப்பின் குடும்பம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையில் அங்கு இருந்திருக்கிறது. மீதி இருந்தவர்கள் அவர்களை நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்தவர்கள். அத்துடன் அவர்களுக்குக் கீழே அடிமை வேலை பார்த்துக் கொண்டிருந்த சிலரும் இருந்தார்கள். குறுப்பின் குடும்பம் இருந்த இடத்தில் அரண்மனையில் கதகளி ஆடக்கூடியவர்கள் வந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் என்பது வரலாறு. அவர்கள் அப்படி கதகளி ஆடிய இடத்தை பிற்காலத்தில் அவறாச்சனின் முன்னோர்களுக்கு விற்றிருக்கிறார்கள். அதற்குப்பிறகுதான் அவர்களுக்கு 'ஆட்டக்களம்' என்ற பெயர் வந்து சேர்ந்தது. இது விஷயமாக அவறாச்சன் யாரிடமும் சண்டைக்குப் போனதில்லை. இது அவருக்கே தெரியாத ஒரு விஷயம்.


எந்தப் பெரிய மனிதன், எந்தக் காலத்தில் இப்படியொரு விஷயத்தை ஆரம்பித்து வைத்தான் என்பதை அறிந்து கொள்ள அவறாச்சன் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. என்ன இருந்தாலும் தான் ஆட்டக்களத்தில் அவறாச்சன்தான் என்று அவரே பூரணமாக நம்பினார்.

"நாம இப்போ இருக்குறது குறுப்பச்சனோட இடம் தெரியுமா?"- அவறாச்சன் சாராம்மாவிடம் சொன்னார்: "ஆனா ஒரு விஷயம்... நம்ம அப்பாமார்கள் பணம் கொடுத்துத்தான் அவங்கக்கிட்ட இருந்து இதை விலைக்கு வாங்கியிருக்காங்க. அதனால அவங்களுக்கு இதுல எந்தவிதமான உரிமையும் இல்லை. யாருக்கு? குறுப்பமார்களுக்கு..."

அவர் அப்படிச் சொன்னதில் உள் அர்த்தம் ஏதாவது இருக்குமோ? அதைப்பற்றி இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றில் நாம் பேசப்போவதில்லை. இனி எழுதப்போகும் விஷயங்களில் கூட இதைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருக்கவேண்டும் என்ற அவசியமுமில்லை.

அவறாச்சனின் ஏதோ ஒரு தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இங்கு குடிபுகுந்திருக்கிறார். இங்குதான் அவறாச்சன் பிறந்தார். வளர்ந்தார். பள்ளிக்கூடம் சென்றார். ஆற்றில் குளித்தார். ஆற்றின் கரையில் இருக்கும் கோவிலில் குடிகொண்டிருக்கும் தேவியைத் தொழுதார். அத்துடன் புனித வேதப் புத்தகத்தையும் வாசித்தார். மோசஸைப் பற்றிப் படித்தார். பத்து கட்டளைகளைப் படித்தார். தாவீதைப் பற்றியும் சாலமனைப் பற்றியும் படித்தார். ஸீனாயி மலையைப் பற்றியும் செங்கடலைப் பற்றியும் மனப்பாடமாகப் படித்தார். அவரின் மலைகளில், அவரின் முந்திரித் தோட்டங்களில் தேவி, கிறிஸ்து இருவருமே இருந்தார்கள். புனிதமேரி அவருக்கு தேவமாதாவாக இருந்ததோடு தேவியுமாக இருந்தாள். அவள் பார்வதியுமாக இருந்தாள். பராசக்தியுமாக இருந்தாள். பிரபஞ்சத்திற்கு அன்னையாக இருந்தாள். அவள் எல்லாமாக இருந்தாள். இப்படி, எல்லா ஜாதி- சமய சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டு வளர்ந்தவரே அவறாச்சன்.

ஆனால், அவறாச்சன் தேவாலயத்திற்குப் போனார். ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். மதக் கொள்கைகளைப் பின்பற்றினார். மதம் என்ன சொல்கிறதோ, அதன்படியே வாழ்ந்தார். கிறிஸ்துவ முறைப்படிதான் திருமணம் செய்தார். எல்லாவற்றையும் முறைப்படி தான் செய்தார். ஆனால், எந்தச் சமயத்திலும் அவறாச்சன் ஒரு மதவெறியனாக இருந்ததில்லை. மதத்திற்குத் தான் கொடுக்க வேண்டியதைத் தவறாது கொடுத்தார். தேவாலயத்திற்கு ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டிய வரியை ஒழுங்காகக் கட்டினார். திருவிழா சமயங்களில் நன்கொடை தந்தார். அதே நேரத்தில் இந்துக் கோவில்களுக்கு நன்கொடை தருவதிலும் அவறாச்சன் சற்றும் பின்தங்கி இருந்ததில்லை.

குறுப்பிற்குத்தான் முதலில் திருமணம் நடந்தது. பொன் நதியென ஓடிய திருமணம் அது என்று கூட சொல்லலாம். நூறு பவுனோ அதைவிட அதிகமோ தெரியவில்லை. பவுன் நிறைய விளையாடிய திருமணம் அது. அன்று குறுப்பிற்குக் குடைபிடித்துக் கொண்டு கோவிலுக்கு அவரை அழைத்துக் கொண்டு நடந்ததே அவறாச்சன் தான். திரும்பி வந்து விருந்தின்போது அவருடன் இருந்ததுகூட அவர்தான். குறுப்பிற்கு வேறு சகோதரர்கள் யாரும் இல்லையே!

அவறாச்சனின் திருமணத்தின்போது அவருடன் இருந்தது முழுக்க முழுக்க குறுப்புதான். தேவாலயத்திலிருந்து அவறாச்சனை வீட்டிற்கு குறுப்புதான் அழைத்துச் சென்றார். அந்த அளவிற்கு நட்புடன் இருந்தார்கள் அவர்கள். அவறாச்சன் சாராம்மாவைத் திருமணம் செய்த அன்று ஒரு தமாஷான நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் பாதிரியார் நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தார்.

"ஆப்ரஹாம், சாரா என்ற இவர்களை வாழ்த்திய இறைவனின் கிருபையால் இவர்களை நான் வாழ்த்துகிறேன். கிருபை செய்திட வேண்டும் நீ. இஸ்ஹாக், ரிபேகா ஆகியோரை வாழ்த்திய இறைவன்..."

இடையில் குறுப்பு குறுக்கிட்டார்: "போதும், ஃபாதர், அவறாச்சன்- சாரா இவங்க ரெண்டு பேரோட விஷயம் முடிஞ்சிடுச்சில்ல... அதுக்குப்பிறகு இன்னும் பாடணுமா?"

அதைக்கேட்டு பாதிரியார் ஆச்சர்யப்பட்டார். அவர் கேட்டார்: "குறுப்பச்சா, உங்களுக்கு வேதப்புத்தகம் நல்ல மனப்பாடம். அப்படித்தானே?"

அதற்கு குறுப்பு வெறுமனே சிரித்தார். அவ்வளவுதான்.

சாராம்மாவும் அதைக் கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.

பின்னால் ஒரு நாள் அவள் சொன்னாள்: "இந்த குறுப்பச்சன் பயங்கரமான ஆளுபோல இருக்கே!"

"ஏண்டி அப்படிச் சொல்ற?"- அவறாச்சன் கேட்டார்.

"நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கு பாதிரியாரை அவர் விரட்டினாரு பார்த்தீங்களா?"

"என்ன சொல்ற சாராம்மா?"- கேட்டது குறுப்புதான். அவறாச்சனும் குறுப்பும் ஒன்றாக அமர்ந்து அப்போது உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.

"ஆமா... இனியும் நீளமா பாடணுமான்னு நீங்க பாதிரியாரைப் பார்த்து கேட்டீங்களே!"- சாராம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

"ஓ... அதைச் சொல்றியா?"- குறுப்பு உரத்த குரலில் சிரித்தார். "ஆப்ரஹாம், சாராம்மா ஆகியோரோட கல்யாணம் ஏற்கனவே முடிஞ்சிடுச்சு. அதற்குப்பிறகு எதற்காக வாழ்த்தணும்?"

"நீங்க சொல்றதும் சரிதான்."- சாராம்மா சொன்னாள்.

"இருந்தாலும்..."

அவறாச்சனும் குறுப்பும் ஒருத்தருக்கொருத்தர் வெளியே சொல்லிக் கொள்ளாத, அதே நேரத்தில்- இருவருக்கும் நன்கு தெரிந்த ஒரு ரகசியம் அவர்கள் இருவருக்குமிடையில் இருந்தது. காலை நேரத்தில் அவறாச்சன் ஆற்றங்கரைப் பக்கம் போவது எதற்கு என்பதை குறுப்பும், மாலை நேரங்களில் குறுப்பு தேவி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏன் சுற்றித்திரிகிறார் என்பதை அவறாச்சனும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு நாள் கூட பேசிக் கொண்டதில்லை. இருவரும் தங்களுக்குள்ளேயே இந்த ரகசியத்தைப் பூட்டி மறைத்துக் கொண்டார்கள். ஆற்றங்கரையின் சுத்தமான காலை நேரமும், கோவிலில் குடி கொண்டிருக்கும் தேவியின் பிரகாசமான மாலை நேரமும் இந்த ரகசியங்களுக்குச் சாட்சிகளாக இருந்தன. எனினும், இந்த ரகசியத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை.

அந்த ரகசியம்தான் சாரி என்ற செல்லப்பெயரைக் கொண்ட சாரதா. கேசவப் பணிக்கரின் மகள் அவள். நல்ல அழகி. கிராமத்திற்கே தேவதை என்றுகூட அவளைச் சொல்லலாம். ஆற்றங்கரையின் காலை நேரத்தை விட கோவிலின் மாலை நேரத்தைவிட அவளிடம் அதிக அழகு இருந்தது. ஒரு கோடைகால சூரியனின் பிரகாசத்தை அவள் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் ஒரு குளிர்காலச் சந்திரனின் குளிர்ச்சியையும் கொண்டிருந்தாள் அவள். வெப்பத்தையும், குளிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தன்னுடம்பில் கொண்டிருந்த அவள் ஆறுகளையும் மலைகளையும் சூரியனையும் சந்திரனையும் பைத்தியம் பிடிக்கச் செய்யும் பெண்ணாக இருந்தாள். சாரியின் கண்கள் நெருப்பைக் கக்கின. சாரியின் உதடுகள் மலர்ந்தபோது, வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் இனிய சூழ்நிலை எங்கும் உண்டானது. அவளது நீண்டு வளர்ந்திருந்த தலைமுடி தரைவரை தொங்கிக் கொண்டிருந்தது. அவள் ஒரு போதையாக கிராமம் முழுக்க நிறைந்திருந்தாள். அவளைக் காதலிக்காமலிருக்க அவறாச்சனாலும் குறுப்பாலும் முடியவில்லை. அவர்கள் மட்டுமல்ல; அவளைப் பார்த்த யாராலும் அவளைக் காதலிக்காமல் இருக்கமுடியவில்லை.


சாரதா எல்லா நாட்களிலும் காலை நேரத்தில் ஆற்றுக்குப் போய் குளிப்பாள். மாலை நேரங்களில் கோவிலுக்குப் போய் தேவியை வணங்குவாள். அவள் இப்படிச் செய்ததன் மூலம் ஆற்றுக்கும், கோவிலுக்கும் பொறாமை உண்டாகும்படி செய்தாள். ஊரில் உள்ள ஒவ்வொருவரும் அவளைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

சாரதாவின் தந்தை ஒரு ஏழை கல் தொழிலாளி. குஞ்ஞுக்குறுப்பு, அவறாச்சன் இருவருக்கும் அந்த வீட்டில் முக்கிய இடமும் அங்கீகாரமும் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் குறுப்பிற்குச் சற்று அதிகமாகவே இடம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த விஷயத்தில். அதற்காக அவறாச்சனுக்கு சிறிது கூட மனக்குறையோ, குற்றச்சாட்டோ இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருப்பது நியாயமே என்று அவறாச்சன் தன் மனதில் நினைத்தார். ஊருக்குப் பெரிய மனிதன் என்று குறுப்பை அவறாச்சனே ஏற்றுக் கொண்டிருக்கிறாரே!

சாரதா ஒரு பட்டாம்பூச்சியைப் போல கிராமம் முழுவதும் சுற்றித்திரிந்தாள். ஒளி வீசிக் கொண்டிருந்த அவளின் அழகு கிராமத்தைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அவள் அந்த கிராமத்தின் சகுந்தலையாக இருந்தாள். குமாரசம்பவத்தில் தவம் செய்யும் பார்வதியாக இருந்தாள். அந்த கிராமத்தின் மோனாலிஸாவாக அவள் இருந்தாள். ஒரு காளிதாசனும் ஒரு டாவின்ஸியும் அவளை ஏற்கனவே பார்த்திருப்பார்களோ என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டானது. சாரதா கிராமத்தின் செல்லப்பெண்ணாக இருந்தாள். அங்கு கவிஞர்கள் யாரும் தோன்றாததால், அவளைப் பற்றி அங்கு யாரும் காவியங்கள் உருவாக்கவில்லை.

கடைசியில் சாரதாவை ராமச்சந்திரன் என்பவன் திருமணம் செய்தான். அவனும் ஒரு கல் தொழிலாளிதான். ஒரு நல்ல கணவனாக அவன் இருக்கவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். உண்மை எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், ராமச்சந்திரன் ஒரு குடிகாரனாக இருந்தான். அவன் மனம் போனபடி மது அருந்தக்கூடியவனும், சாரதாவைக் கொடுமைப்படுத்தக் கூடியவனாகவும் இருந்தான். அதிகமாக மது அருந்தியதாலோ என்னவோ ராமச்சந்திரன் அதிக நாட்கள் உயிருடன் இருக்கவில்லை. அவனுடைய மரணம் சிறிதும் எதிர்பார்க்காமல் நடந்துவிட்டது. அவன் இறந்து சில வாரங்கள்தான் கடந்திருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த சாரதாவின் பிணம் கோவில் திருவிழா நாளன்று ஆற்றில் மிதந்தது. நினைத்துப் பார்க்க முடியாத மரணமது. சாரதாவின் ஆவி கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்று ஊர்மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவறாச்சனும் குறுப்பும்கூட அதை நம்பினார்கள். அந்த நினைப்பு அவர்களை பயப்படச் செய்ததுடன், மகிழ்ச்சி கொள்ளவும் செய்தது. சாரதாவின் ஆவியை ஒரு தடவையாவது பார்க்க முடியாதா என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் இரவு முழுவதும் பொழுது புலரும் வரை காத்திருந்தார்கள்.

இருவரும் சாரதாவை விரும்பினார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்களின் விருப்பம் நிறைவேறியதா என்பது யாருக்கும் தெரியாது. இந்த வரலாறு எழுதக்கூடியவனுக்குக் கூட தெரியாது. இருந்தாலும், இந்த வரலாற்று ஆசிரியனின் கனவுகளில் சாரதா பலமுறை தோன்றியிருக்கிறாள். ஒருமுறை அவள் ஜூலியட்டைப் போல ஆடையணிந்து வருகிறாள் என்றால் இன்னொருமுறை ஹெலனாக தோன்றுவாள். கிருஷ்ணனின் ராதையாகவும் மஜ்னுவின் லைலாவாகவும் கூட அவள் தோன்றினாள். எவ்வளவோ விஷயங்களை அவள் பேசினாள். ஆனால், ஒரே ஒரு ரகசியத்தை மட்டும் அவள் சொல்லவேயில்லை.

சாரதாவின் மரணத்திற்குப் பிறகு ஆற்றில் குளிக்கும் இடம் கிட்டத்தட்ட ஆள் இல்லாத ஒரு இடமாகிவிட்டது. கோவிலில் திருவிழா என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. சுருக்கமாகச் சொல்லப்போனால் அந்தக் கிராமமே ஒரு சுடுகாட்டைப்போல ஆகிவிட்டது. மகிழ்ச்சியே இல்லாத ஒரு ஊராக அது ஆகிவிட்டது. கிராமத்தில் ஏதோ ஒரு அமைதி இல்லாத சூழ்நிலை உண்டானது. இந்தநிலை நீண்ட காலம் அங்கு நீடித்தது. பகல்கள் இருண்டு போனதாகவும் இரவுகள் மேலும் அதிக பயங்கரத்தன்மை கொண்டதாகவும் இருந்தன. சாரதா இல்லாமற்போனது கிராமத்தையே ஒரு சோர்வு நிலைக்குள் ஆழ்த்தியது.

குறிப்பாக அவள் மரணத்தால் எதையோ பறி கொடுத்ததைப் போல் ஆகிவிட்டார்கள் அவறாச்சனும் குறுப்பும். இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. திருமணங்களும், வர்த்தகங்களும், மரணங்களும் நடந்தன. கிராமம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தது. அப்படியே அவறாச்சனும் குறுப்பும் வாழ்ந்தார்கள்.

காலப்போக்கில் சாரதா அந்தக் கிராமத்தின் சரித்திரமாக மாறினாள். திருவிழாக்கள் நடைபெறும் கோவில்களிலும், கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சப்ளாக் கட்டையைக் கையில் வைத்துக் கொண்டு பாட்டு பாடியவாறு புத்தகம் விற்கும் பாடகர்களுக்கு அவள் ஒரு முக்கிய விஷயமாக ஆனாள். அவர்களின் அந்தப் பாட்டுகள் மூலம் அவள் நீண்ட காலம் வாழ்ந்தாள். பாட்டு பாடுபவர்கள் யாரும் இல்லையென்றாலும் அவறாச்சன், குறுப்பு இருவர் மனதிலும் அவள் கொஞ்சமும் மறையாமல் நீங்காத நினைவுச் சின்னமாக இருந்தாள். சதா நேரமும் அவர்களின் மனதின் அடித்தளத்தில் அவள் முகம் வலம் வந்துகொண்டேயிருந்தது.

3

வறாச்சன், குறுப்பு இருவரின் வாழ்க்கையும், வாழ்க்கையில் பின்பற்றிக் கொண்டிருந்த வழிமுறைகளும் மிகவும் சாதாரணமாகவே இருந்தன என்பதை நான்தான் முன்கூட்டியே கூறியிருக்கிறேனே! அவர்கள் கிராமத்துடனும், கிராம மக்களுடனும் ஒன்றிப் போய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நட்புணர்வும், அமைதியான சூழ்நிலையும் கிராமத்தில் நிலவிக் கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் அவர்கள் இருவரும்தான். என்ன பிரச்சினையாக இருந்தாலும், மக்கள் அவர்களைத்தான் அணுகினார்கள். அவர்களின் தீர்மானம்தான் இறுதியானதாக இருந்தது. அவர்களின் பேச்சுக்கு எதிர் பேச்சே அங்கு இல்லை என்ற நிலைதான் இருந்தது.

இரண்டு பேரும் போட்டி மனப்பான்மையுடன் நன்கு வளர்ந்து கொண்டிருந்தார்கள். போட்டி எண்ணத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். போட்டி மனப்பான்மையுடன் வர்த்தகம் தொடங்கினார்கள். போட்டி மனப்பான்மையுடன் பணம் சம்பாதித்தார்கள். போட்டி மனப்பான்மையுடன் ஊரின் நன்மைக்காகவும், ஊரில் உள்ளவர்களின் நன்மைக்காகவும் பணத்தைச் செலவழித்தார்கள்.

சிறிது கூட போட்டி மனப்பான்மை இல்லாமல் திருமணம் செய்தார்கள். குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். அவர்களைப் படிக்க வைத்து வளர்த்தார்கள். உரிய நேரத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். சொத்துக்களைப் பாகம் பிரித்துத் தந்தார்கள். தங்களை விட்டுப் பிரிக்க வேண்டிய நேரத்தில் அவர்களைப் பிரித்தும் விட்டார்கள்.

அவர்கள் ஊரின் அதிர்ஷ்ட தேவதையான பண்ணையாரைப் போல, அவர்களின் ரயில் தண்டவாளத்தைப் போல, அவர்களின் சூரிய உதயத்தைப் போல, கிராம வாழ்க்கையும், அவர்களின் சொந்த வாழ்க்கைகளும் மிகவும் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. பளிச்சென்று வெளியே தெரிந்த அமைதிக்குப் பின்னால் நீரோடையென பலவும் ஓடிக் கொண்டிருந்தாலும், அவை யாருக்கும் தெரியாத ரகசியங்களாக இருந்தன என்பதே உண்மை. சாரதா என்ற ரகசியம் சிறிது வெளியே தெரிந்த விஷயமாகவும் இருந்தாள்.


இருந்தாலும் ராமச்சந்திரன் என்ற கல் தொழிலாளியின் சற்றும் எதிர்பாராத மரணத்திற்குப் பின்னாலும், சாரதாவின் மோசமான சாவிற்குப் பின்னாலும் ஏதாவது சதி வேலைகள் இருக்குமோ என்று யாராவது கேட்டால் உடனடியாகப் பதில் சொல்வது என்பது கஷ்டமான ஒரு விஷயமே. சாரதா மரணம் அடைந்து சில நாட்கள் ஆவதற்குள்ளாகவே அவளின் தந்தையின் உடல் ஒரு மாமரத்தின் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த விஷயம் மேலும் பல ரகசியங்களை நோக்கி பலரையும் விரல் நீட்ட வைத்தது.

ஊர்க்காரர்களோ பக்கத்து ஊர்க்காரர்களோ போலீஸ்காரர்களோ யாரும் அந்த விஷயத்தைப் பற்றி அதற்கு மேல் கிளறவில்லை. ராமச்சந்திரனின் மரணம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் என்றும்; மற்ற இரு மரணங்களும் முழுமையான தற்கொலையென்றும் விஷயம் தெரிந்த நிபுணர்கள் முடிவாக எழுதினார்கள். அதன் மூலம் போலீஸையும் மக்களையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதற்கு முன்பு ஆங்காங்கே சில முணுமுணுப்புகளும் தாழ்ந்த குரலில் சில விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஊரில் உள்ள இளைஞர்களின் ரகசியக் கூட்டங்களில் அவர்களால் மெதுவாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த விஷயமாகவும் அது இருந்தது.

ஒருவன் சொன்னான்: "அப்படின்னா இந்த விஷயத்துல ஏதோ இருக்கு! அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சது குறுப்பச்சனும், அவறாச்சனும சேர்ந்துதானே! அவங்கதானே எல்லா செலவையும் ஏத்து கல்யாணத்தையே பண்ணி வைச்சாங்க! பையனைக் கண்டுபிடிச்சு கொண்டு வந்தது குறுப்பச்சன். அவனுக்கு வேலை கொடுத்தது அவறாச்சன். இதையெல்லாம் பார்க்கிறப்போ..." இது இன்னொருவன்.

"சே... சே... அப்படியெல்லாம் பேசாதே"- இன்னொரு இளைஞன் அதை எதிர்த்துப் பேசினான்: "இந்த ஊர்ல இருக்குற எவ்வளவோ பேருக்கு அவங்க உதவியிருக்காங்க. இங்கே எந்த வீட்டுல யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் அவங்க உதவியிருக்காங்க. கூட இருந்து பார்த்திருக்காங்க. அவங்க அப்படி இருக்குறப்போ, அவங்க மேலயே நாம சந்தேகப்பட்டா எப்படி? இதையெல்லாம் யோசிச்சுப் பாருங்க..."

"நீ சொல்றது சரிதான்"- பெரும்பாலானவர்கள் இரண்டாவது கருத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

"அப்படிப் பார்த்தா..."- கோபால கணகன் என்ற மனிதன் சொன்னான்: "நம்மளை நாமே சந்தேகப்பட்டது மாதிரி இருக்கும். நம்ம பொண்டாட்டிமார்களையும், அக்கா- தங்கச்சிகளையும் நாமே சந்தேகப்படுறது மாதிரி இருக்கும். பிறகு... எதுக்கெடுத்தாலும் நமக்குச் சந்தேகம்தான் வரும். அதற்காக ராத்திரி- பகல் எல்லா நேரங்கள்லயும் வேலைக்குப் போகாம வீட்டுலயே நாம உட்கார்ந்துக்கிட்டு இருக்க முடியுமா? வீட்டுல இருக்கிற பெண்களுக்கு எந்த நேரமும் காவலா இருந்துக்கிட்டு இருக்க முடியுமா?"

"கணியான் அண்ணன் சொன்னது ரொம்பவும் சரின்றதுதான் என்னோட கருத்து." - அங்கிருந்த இளைஞர்களில் சற்று வயது அதிகமானவனும் ஸ்டார்ச் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளியும் பருமனான உடம்பைக் கொண்டவனுமான பார்கவன் தன்னுடைய முறுக்கு மீசையை விரலால் தடவி விட்டவாறு தன்னுடைய மனதில் இருக்கும் கருத்தைச் சொன்னான்: "டேய், ஆலும்காவில் இருந்த பொண்ணு... அவ பேரு என்ன? ம்... மாதவி... அவ ரயில் தண்டவாளத்துல தலையை வச்சு செத்தாளே! அது யாரோட தப்பு? தெற்குப் பக்கம் இருந்த உண்ணிகிருஷ்ணன் ஆத்துல குதித்து செத்தானே! அது யாரோட குத்தம்? இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ஊர்ல நடந்த எல்லா கொலைகளையும் சந்தேகத்துக்கிடமான மரணங்களையும் நம்ம போலீஸ்காரங்க நல்லாவே கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்களை எந்த விதத்திலேயும் நாம குறை சொல்றதுக்கு இல்ல. எந்த விஷயமா இருந்தாலும் அவங்க எப்படியாவது கண்டுபிடிச்சிருக்காங்கள்ல?"

பார்கவன் தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தான். அவன் சொன்னதற்கு எதிராக யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் சொன்னதை ஒன்றாக அங்கு கூடியிருந்தவர்கள் இறுதியாக ஒத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. நட்சத்திரங்கள் சிரித்தனவா என்பதை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை

இப்படிப்பட்ட சிறு சிறு விவாதங்கள் பல இடங்களிலும் நடந்து கொண்டுதானிருந்தன.

பெண்கள் கூடும் இடங்களில் பெரும்பாலும் இப்படிப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டன. இரண்டு பக்கங்களிலும் பேசுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஆனால் அங்கேயும் கடைசியில் அவறாச்சனும் குறுப்பச்சனும் நிரபராதிகளாகவே கருதப்பட்டார்கள். ஆற்றில் குளிக்குமிடம்தானே பெரும்பாலும் அவர்கள் உட்கார்ந்து பேசக்கூடிய இடமாக இருந்தது. ஆற்றின் நீர்க்குமிழிகள் சிரித்தனவா இல்லையா என்பது அவர்கள் யாருக்குமே தெரியாது.

ஆறு மீண்டும் ஓடியது. சூரியனும் சந்திரனும் உதித்தார்கள். இரயில் ஓடிக் கொண்டிருந்தது. அவற்றோடு சேர்ந்த கிராம வாழ்க்கையும் ஓடியது.

எல்லாம் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எங்கும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.

இப்படி அமைதியும் நல்ல சூழ்நிலையும் ஊரில் நிலவிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று ஆட்டக்களத்தில் அவறாச்சன் மரணத்தைத் தழுவினார்.

4

வறாச்சனின் மரணம் ஊரையும், ஊரில் உள்ள மனிதர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் அனைவரும் தாங்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

மரணம் மிகவும் இயல்பாக, நடந்த ஒன்று என்ற உண்மையை நன்கு அறிந்து இருந்தாலும், அவர்களுக்கு உண்டான அதிர்ச்சிக்கும், பதைபதைப்புக்கும் ஒரு அளவே இல்லை. என்னதான் மரணத்தைப் பற்றிய முழுமையான அறிவு அவர்களுக்கு இருந்தாலும், அது எந்த விதத்திலும் அவர்களுக்கு ஆறுதல் தரவே இல்லை. அவறாச்சன் இல்லாத ஒரு உலகத்தை அவர்களால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. அவறாச்சன் இல்லாத ஒரு பண்ணையாறா? அவறாச்சன் இல்லாத ஒரு ஆகாயமா? அவறாச்சன் இல்லாத ஒரு ரயில் பாதையா? அவறாச்சன் இல்லாத காற்றா? அவறாச்சன் இல்லாத ஒரு வாழ்க்கையா?

ஆனால், எப்போதும்போல சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. பண்ணையாறு சூரியனைப் பிரதிபலித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. காற்று மாமரங்களுக்கிடையே 'உய்'யென்று வீசிக் கொண்டிருந்தது. இப்போதும் இந்த கிராமம் வாழ்ந்து கொண்டிருக்கிறதா என்ன? இந்த ஆறும் இந்த காற்றும் இந்த இரயில் பாதையும் எந்த விஷயத்தையும் இதுவரை அறியாமல் இருக்கின்றனவா என்ன?

எது எப்படியோ கடுமையான ஒரு நடுக்கத்துடன், ஆழமான ஒரு பயத்துடன், மிகவும் பலமான ஒரு கவலையுடன் புதிரான ஒரு இருட்டில் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாமல் சிக்கிக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருந்தனர். அந்த முழு கிராமத்து மக்களும் என்பதை மறுப்பதற்கில்லை.

இரவு நேரத்தில்தான் அவறாச்சனின் மரணம் நடந்தது. அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்பே அவறாச்சனின் மரணச் செய்தி கிராமம் முழுக்கப் பரவிவிட்டது.


செய்தியைத் தெரிந்து கொண்டதும், அந்தக்கணமே அவறாச்சனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது ஊர் தலைவரான குறுப்பும் அவரின் குடும்பமும்தான். தொடர்ந்து ஊர்க்காரர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஆட்டக்களத்தில் வீட்டின் முற்றமும், நிலமும் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருக்கும் மனிதர்கள் மயமாக மாறியது. தங்கள் குழந்தைகளுடன் ஊர் மக்கள் முழுவதுமாக அங்கு குழுமியிருந்தார்கள். ஜாதி- மத வித்தியாசமில்லாமல் மக்கள் அங்கு கூடியிருந்தனர்.

குறுப்பச்சனைப் பார்த்ததும், "என் குறுப்பச்சா, நேற்று நடுராத்திரி வரை நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தானே இருந்தீங்க?" என்று உரத்த குரலில் அழுதவாறு ஒரு பெரிய தேக்கு மரம் வெட்டப்பட்டு கீழே சாய்ந்ததைப்போல் சாராம்மா நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.

குறுப்பச்சனின் மனைவி பாகீரதியம்மா மயக்கமடைந்து கீழே விழுந்த சாராம்மாவைத் தூக்கி தன்னுடைய மடிமேல் வைத்துக் கொண்டு, ஒரு கையால் சாராம்மாவின் தலையைத் தாங்கிக் கொண்டு இன்னொரு கையால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு பலமாகத் தன்னுடைய நெஞ்சில் அடித்தவாறு உரத்த குரலில் ஓலமிட்டாள்.

இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் அவறாச்சனின் உடலைச் சுற்றி நின்று கொண்டு உரத்த குரலில் அழுதார்கள். அவறாச்சனின் உடலை எட்டிப் பார்க்க முடியாத அளவிற்கு வெளியே கூடியிருந்த மக்கள் அவரை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு, மற்றவர்களைவிட தாங்களொன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டும் விதத்தில் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார்கள். 'என் குரல்தான் மற்றவர்களின் குரலைவிட உச்சத்தில் கேட்க வேண்டும்' என்ற பிடிவாதத்துடன் ஒவ்வொருவரும் சத்தமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது.

"என் அப்பா... என்னை விட்டுப் போயிட்டீங்களே!” - யார் இப்படி அழுவது என்று அங்கு குழுமியிருந்தவர்கள் பார்த்தார்கள். அப்படி அழுது கொண்டிருந்தது அவறாச்சனின் மூத்தமகன் தான். "அப்பா... அன்னக்குட்டியை இப்படி தவிக்கவிட்டுட்டு போயிட்டீங்களே!"- அவறாச்சனை நினைத்து இப்படி உரத்த குரலில் அழுதது அவருடைய மகள். அவரின் பிள்ளைகளும் மருமக்களும் உரத்த குரலில் போட்டி போட்டுக் கொண்டு அழுததில் அவர்களின் தொண்டையே கட்டிக் கொண்டு விட்டது.

இதற்கிடையில் யாருடைய குரல் இது என்று எல்லோரும் அதிசயத்துடன் பார்க்கும் வண்ணம் ஒரு உரத்த அழுகைக்குரல் கேட்டது: "என் அவறாச்சா... இனிமேல் என்னைப் பாசமா பாகீரதியம்மான்னு யாரு கூப்பிடுவாங்க! என் ஏற்றுமானூரப்பா, நான் இதை எப்படி தாங்குவேன்?"

பாகீரதியம்மாவின் அந்தக் குரல் மரங்களின் உச்சியை அடைந்து எதிரொலித்ததைப் போல், அங்குள்ள எல்லோரும் உணர்ந்தார்கள். இதற்கிடையில் அன்னக்குட்டியின் குரலும் கேட்டது: "கீவறீச்சா, சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லியாச்சா?"

தொடர்ந்து வர்கீஸ் ஆப்ரஹாம் என்ற அவளுடைய சகோதரனின் ஓலக்குரல்: "என் அப்பாவை இப்படியொரு நிலைமையில விட்டுட்டு நான் எப்படிடி போறது? உன் புருஷன் அவுஸேப்பச்சன் போயிருக்காரு. இருந்தாலும் நானும் போறேன். எல்லாத்தையும் கவனிக்கத்தான் இங்கே ஆளுங்க இருக்காங்களே!"

"நீ வருத்தப்படாம போயிட்டு வாடா மகனே!"- பாட்டத்தில் குறுப்பச்சன் கீவறீச்சனைப் பார்த்துச் சொன்னார்: "இங்கே நான் தான் இருக்கேனே! போதாததற்கு நம்ம பிள்ளைகளும் இருக்கு!"

"குறுப்பச்சா, நீங்க இங்கே இருக்கீங்கன்ற ஒரே தைரியத்துலதான் நான் போறேன்" என்று சொன்ன கீவறீச்சன் உரத்த குரலில் அழுதான்.

"கவலைப்படாம போடா, கீவறீச்சா. குறுப்பச்சன் கூடத்தான் நாங்க எல்லோரும் இருக்கோமே!"- அவன் வயதையொத்த ஒரு நண்பன் சொன்னான்.

ஆழமான கவலையில் இருந்த மூத்த மகன் அழுதவாறு, கூடியிருந்தவர்களைத் தாண்டி வெளியேறி காரைக் கிளப்பினான்.

அங்கு கூடியிருந்த மக்களில் பெரும்பாலோருக்கு அப்போது கூட என்ன செய்வது என்றே தெரியவில்லை. பலரும் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் எப்படி அழ வேண்டும் என்று தெரியாமல் விழித்தவாறு நின்றிருந்தனர். அவறாச்சனின் மரணம் உண்டாக்கிய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சூரியன், ஆறு, காற்று, இரயில்பாதை எல்லாம் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அவறாச்சன் இல்லாத ஒரு உலகத்தை அவர்களால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. பயங்கரமான இருட்டுக்குள் தாங்கள் சிக்கிக் கொண்டு கிடப்பதாக முழு கிராம மக்களும் நினைத்தனர்.

கார்கள் வந்த வண்ணம் இருந்தன. உறவினர்களின், நண்பர்களின் தொலைபேசி விசாரிப்புகளும், தந்தி அனுதாபங்களும் காலை முதல் ஒரு தொடர்கதையாக இருந்தன. கார்கள் வரிசை வரிசையாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்த கிராமத்து ஆட்கள் அவற்றுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். வந்த கார்களில் பெரும்பாலானவற்றில் கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தன. ஊரில் உள்ள இரண்டாம் நிலை முக்கிய மனிதர்கள் சிலர் குடைத்துணிகளைக் கிழித்து பேட்ஜ்களாக அவற்றை ஆக்கி மக்களுக்கு அவற்றை விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்காக பழைய குடைகளைக் கண்டுபிடித்து, அவற்றைக் கிழித்து பேட்ஜ்களாக ஆக்கி, குண்டூசிகள் வாங்கி, பேட்ஜ்களை மக்களுக்கு வினியோகம் செய்து... இவை எல்லாவற்றையும் முன்னின்று செய்தது குறுப்பின் ஸ்டார்ச் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவர்தான். அவர் அப்படி நடந்து கொண்டதுகூட பாராட்டப்படக்கூடிய ஒன்றுதானே! தொழிற்சாலைகளுக்கும், ஊரில் உள்ள எல்லா வர்த்தக நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. முழுமையான விடுமுறை. நாவிதர் கடைகளும், தேநீர்க் கடைகளும் அடைக்கப்பட்டன. மீன் பிடிப்பவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வயலுக்கு வேலை செய்ய யாரும் போகவில்லை. ஆற்றுக்கு யாரும் குளிக்கச் செல்லவில்லை. கோவிலுக்கு யாரும் தொழச் செல்லவில்லை. கிராமத்தில் பஸ்கள் ஓடவில்லை. சைக்கிள்களைக்கூட தெருக்களில் பார்க்க முடியவில்லை. தெருக்களில் ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள் ஆட்டக்களத்தில் வீட்டிற்கும், அங்கிருந்து வெளியேயும் போய்க் கொண்டிருந்தவை மட்டுமே.

இப்படிப்பட்ட ஒரு மரணம் இதற்கு முன்பு அந்த ஊரில் நடந்ததில்லை என்று ஊரின் வரலாற்றை நன்கு அறிந்த எல்லோரும் ஒரே குரலில் கூறினார்கள்.

உயர்ந்த பதவிகளில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், வக்கீல்மார்கள் ஆகியோருடன் குறுப்பச்சனின் செல்வாக்கில் இரண்டு அமைச்சர்களும் அங்கு வந்திருந்தார்கள். கீவறீச்சனின் செல்வாக்கால் இரண்டு திரைப்பட நடிகர்களும் ஒரு நடிகையும்கூட அங்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகிலுள்ள ஒரு ஊரில் படப்பிடிப்பு இருந்ததே அதற்குக் காரணம். எது எப்படியோ அவர்களின் வரவால் செயலற்றுப்போய் ஸ்தம்பித்து நின்றிருந்த மக்களின் போக்கிற்கு ஒரு முடிவு வந்தது. உதித்தது சூரியன் என்பதையும், ஓடிக்கொண்டிருப்பது புகைவண்டி என்பதையும், ஆகாயமும் காற்றும் எப்போதும் போல் இருக்கின்றன என்பதையும் அவர்கள் படிப்படியாக நம்ப ஆரம்பித்தார்கள். மவுனங்களும், ஓலங்களும் இயல்பாக வரக்கூடிய பெருமூச்சுகளாக, பெருமூச்சுகளின் பெருக்கல்களாக மாறின.


அப்போதும் ஆற்றில் குளிக்கும் இடம் ஆட்கள் இல்லாமல்தான் இருந்தது. கோயிலில் குடிகொண்டிருக்கும் தேவி அனாதையாகத் தான் இருந்தாள்.

அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றது குறுப்பும், அவரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளிகளும், மரணத்தைத் தழுவிய அவறாச்சனின் பிள்ளைகளும், மருமக்களும்தான்.

சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தது எங்கே என்பதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே- குறுப்பின் வீட்டில்தான். அவர்களை உபசரிப்பதற்காக அழுது வீங்கிப்போயிருந்த முகங்களுடன் பாகீரதியம்மாவும் அவரின் பிள்ளைகளும் சில பணியாளர்களும் அங்கு இருந்தார்கள். மனதில்லா மனதுடன் குறுப்பும் கீவறீச்சனும் அவுஸேப்பச்சனும் அவ்வப்போது அங்கு போய் தலையைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

சுய உணர்வுக்கு வந்தவுடன் சாராம்மா உரத்த குரலில் சொன்னாள்: “என்ன இருந்தாலும் குறுப்பச்சா... அவரு உங்க நண்பராச்சே!”

அதற்குப் பதில் சொல்ல குறுப்பச்சன் அங்கு இருந்தால்தானே!

“குறுப்பச்சனை எங்கேடி மகளே?”

“வீட்டுக்குப் போயிருக்காரு. இப்போ வந்திடுவாரு. யாரோ மந்திரிமாருங்க வந்திருக்காங்க.”

அன்னக்குட்டி தன் தாயைத் தேற்றினாள்.

“மந்திரிமாருங்க வந்திருக்காங்களா?” - சாராம்மாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

“எத்தனை மந்திரிங்க வந்திருக்காங்க?”

“ரெண்டு மூணு பேர் வந்திருக்கிறதா சொன்னாங்க.” - அன்னக்குட்டி சொன்னாள்.

“எல்லாம் கர்த்தாவோட கிருபை! நாம செஞ்ச புண்ணியம்!” - சாராம்மா கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினாள்.

மார்பில் அடித்து அழுது கொண்டிருந்த மக்களில் சிலர் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை அல்லவா?

அங்கு கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலைதான். தங்களை இதுவரை காப்பாற்றி வந்த அவறாச்சனிடம் தங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை வெளியே நான்கு பேருக்குத் தெரிகிற மாதிரி காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. அதனால்தான் ஆட்டக்களத்தில் வீட்டின் முன் நின்று கொண்டு அவர்கள் அப்படி அழ வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் திரைப்பட நட்சத்திரங்களையும் அமைச்சர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கவே செய்தது. ஊரில் முக்கிய மனிதர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களின் குழப்பநிலையில் ஒரு மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மக்கள் இங்குமங்குமாய் போகத் தொடங்கினர். மரணமடைந்து கிடக்கும் அவறாச்சனுக்கு முக்கியத்துவம் தருவதா? தங்களின் அன்பிற்கு ஆளான திரைப்பட நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருவதா என்பதைத் தீர்மானிக்க முடியாத குழப்பநிலை உண்டானபோது, இரண்டு பக்கங்களுக்கும் சரிநிகரான முக்கியத்துவம் தருவதே சரியான ஒரு விஷயமாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

மக்கள் இங்குமங்குமாய் நடமாடிக் கொண்டே இருந்தனர்.

ஆட்டக்களத்தில் வீடும் பாட்டத்தில் வீடும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவற்கு ஆள் இல்லை என்ற நிலைமை உண்டானது. மக்கள் ஒருவரையொருவர் இடித்துக்கொள்வதும், கீழே விழுவதுமாக இருந்தனர். கைபலம் உள்ளவன் சக்தி பெற்ற மனிதனாக அங்கு ஆனான். உடம்பில் பலம் இல்லாதவர்கள் கூட்டத்திற்குள் சிக்கி கீழே விழுந்தபோது, அவர்களை ஆட்கள் காலால் மிதித்துக் கொண்டு நடந்தார்கள். இதன்மூலம் பலருக்கும் உடம்பில் காயம் உண்டானது.

மக்கள் கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்: “மரணமடையிறதுன்னா இப்படி மரணம் அடையணும். மரணத்திலும் அவறாச்சன் கொடுத்து வச்சவர்தான்!”

அவறாச்சன் அல்லது குறுப்பச்சன் - இரண்டு பேர்களில் யாராவது ஒருவரிடம் பணியாற்றும் பணியாட்களில் ஒருவர்தான் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்க வேண்டும்.

5

ல முக்கிய விருந்தனர்கள் கூடியிருந்த இடத்தில், எல்லோருக்கும் கேட்கும் வண்ணம், அதே நேரத்தில் தன்னுடைய வக்கீல் லம்போதரன் பிள்ளைக்கு முக்கியத்துவம் தந்து, கவலை தோய்ந்த குரலில் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு சொன்னார்: “இருந்தாலும் வக்கீல் சார்... நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து போனேன். நானும் அவறா மாப்பிள்ளையும் நேற்று ராத்திரி பிரியறப்போ சரியா பதினோரு மணி இருக்கும். அதுவரை நாங்க ரெண்டு பேரும் அவர் வீட்டுல செஸ் விளையாடிட்டு இருந்தோம். நேத்து நான் சாப்பிட்டதுகூட அங்கேதான். அருமையான மீன்குழம்பு, பொரிச்ச நாட்டுக்கோழி, இடியாப்பம்... அடடா... சாராம்மாவோட மீன் குழம்பையும், பொரிச்ச கோழியையும் நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?”

அதைக்கேட்டதும் லம்போதரன் பிள்ளைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது. அவர் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு உதட்டால் துடைத்தபோது, அவறாச்சனின் வக்கீல் குஞ்ஞுராமக் கைமன் சொன்னார்: “அட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மதுவும் அருந்தியிருக்கீங்கள்ல?”

“அது இல்லாமலா?” - குறுப்பின் உதடுகளில் ஒரு திருட்டுத்தனமான சிரிப்பு தோன்றி மறைந்தது. இருந்தாலும் குரலில் ஒரு கவலை தொனிக்க அவர் கூறினார்: “பொழுது விடியிற நேரத்துல எனக்கு தொலைபேசி மூலம் செய்தி வருது - அவறாச்சன் மரணமடைஞ்சிட்டார்னு.”

“அதைப்பார்த்து சிரிக்கிறதா அழுவுறதான்றதுதான் பிரச்னையே...” - பொரித்த கோழியையும் மீன் குழம்பையும் மனதில் நினைத்து சுவைத்துக் கொண்டே லம்போதரன் பிள்ளை சொன்னார்.

இந்தச் சந்தர்ப்பத்தை வெறுமனே விட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் குறுப்பு. அவர் சொன்னார்: "உங்க ரெண்டு பேருக்கும்தான் நல்லா தெரியும்ல? எங்களுக்குள்ள வழக்கு, சண்டைன்னு ஆயிரம் இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம். ஒரே கிளையில இருக்கிற ரெண்டு மலர்களைப் போல வளர்ந்தோம் நாங்க... நான் சொல்றது புரியுதா?"- குறுப்பு சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"என்னோட ஒரு சிறகு போயிடுச்சு, வக்கீல் சார்! இனிமேல் நான் எதுக்கு வாழணும்னுகூட நினைக்கிறேன். இன்னைக்குக் காலையில அவரோட மரணச்செய்தி என் காதுல வந்து விழுந்ததுல இருந்து நானே செத்துப்போயிட்ட மாதிரிதான் உணர்றேன். இது ஒரு பக்கம் இருக்கட்டும்... அவருக்கு இது என்ன சாகுற வயசா? என்னைவிட அவரு நாலுமாசம் இளையவரு. எனக்கு ஐம்பது வயசு பிறந்து ரெண்டு மாசம்தான் ஆகுது. எல்லாம் கடவுளோட திருவிளையாடல்ன்றதைத் தவிர, நாம இதைப் பற்றி என்ன சொல்றதுக்கு இருக்கு?"- இதைச் சொல்லிவிட்டு குறுப்பு தேம்பித்தேம்பி அழுதார்.

"கேட்கும்போது மனசுக்கு சங்கடமாகத்தான் இருக்கு!"- கைமள் குறுப்பைத் தேற்றினார். "நீங்க இப்படி சின்னப்பிள்ளையைப் போல அழலாமா? மற்றவங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டியது யாரு? நீங்கதானே?"

"இருந்தாலும்..."- குறுப்பு மீண்டும் ஈரமாக இருந்த தன்னுடைய கண்களைத் துடைத்தார். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சாதாரண நிலைக்கு வந்தார். அவர் சொன்னார்: "ஒரு விஷயத்துல உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும். அவறா மாப்பிள்ளை கடைசியா பேசினது என்கிட்டதான்.


அவரு தூங்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் படுக்கவே போனேன். அதுக்குப் பிறகு அவரு எழுந்திருக்கவே இல்லைன்னு போனேன். அதுக்குப்பிறகு அவரு எழுந்திருக்கவே இல்லைன்னு சாராம்மா சொல்லித்தான் எனக்கே தெரியும்.”

"நிச்சயம் அது ஒரு அதிர்ஷ்டமான விஷயம்தான்."- லம்போதரன் பிள்ளை சொன்னார்: "அது மட்டுமல்ல. இந்த இறுதிச் சடங்கை இவ்வளவு பிரமாதமா நடத்திக்கிட்டு இருக்கிறது யாரு? நீங்கதானே?"

"வேற யாராவது இதை நடத்தணும்னு நினைச்சாக்கூட அது நடக்குற காரியமா?"- கைமள் தன்னுடைய வக்கீல் நண்பர் சொன்னதை ஆமோதித்தார்.

அவர்கள் பேசியது குறுப்பிற்கு மிகவும் பிடித்திருந்தது.

உண்மையிலேயே பார்க்கப்போனால் குறுப்பின் செயல் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடிய விதத்திலும், ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு கம்பீரமாகவும் இருந்ததை யாராக இருந்தாலும் நிச்சயம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயமும் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இப்படியொரு மக்கள் கூட்டம் இதற்கு முன்பு அந்த கிராமத்திலோ, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ எப்போதும் இருந்ததில்லை என்பதே உண்மை. இது என்ன சாதாரண விஷயமா?  இரண்டு அமைச்சர்களும், மூன்று பிரபலமான திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் அந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! கிறிஸ்துவ தேவாலயத்தில் நடக்கும் பெருநாள் விசேஷத்திற்கும், கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கும் சேர்த்து எவ்வளவு மக்கள் வருவார்களோ அதைவிட பல மடங்கு அதிக அளவில் மக்கள் அங்கு கூடியிருந்தார்கள்.

"நம்ம ஃபிலிம் யூனிட்டை இங்கேயே அழைச்சிட்டு வந்திருக்கலாம்"- உதவி இயக்குநராக பட உலகிற்குள் நுழைந்து இப்போது சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருக்கும் ரூபகுமார் சொன்னான்: "இந்த மக்கள் கூட்டத்தை சில ஷாட்கள் எடுத்து வச்சா எங்கேயாவது பயன்படுத்திக்கலாமே!"

"ரூபன் அண்ணன் சொன்னது நூறு சதவிகிதம் சரி."- நட்சத்திர அந்தஸ்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான முன்முனா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் கோயிவிள என்ற ஊரைச் சேர்ந்த நளினிக்குட்டி சொன்னாள்: "ஹரித்வாரில் கும்பமேளாவுக்குக் கூட இவ்வளவு பெரிய க்ரௌட் கூடினதில்லை..."

"அப்படின்னா நீ கும்பமேளா பார்த்திருக்கியா? ஹரித்வாருக்குப் போயிருக்கியா?" படவுலகில் ரூபாகுமாருக்குச் சமமாக இருக்கும்- அதே நேரத்தில் அவன் மீது சிறிது பொறாமை உணர்வு கொண்ட குஸுமோகன் கேட்டான்.

"நான் போகாட்டி என்ன? - முன்முனா விடுவதாக இல்லை: "என் டாடி சொல்லி நான் கேட்டிருக்கேன்."

"நீயும் உன் தாடியும்..."

"கேட்டீங்களா ரூபன் அண்ணே... இந்த குஸும் அண்ணன் வம்பு இழுக்கிறதை..."- முன்முனா கொஞ்சியவாறு சொன்னாள்.

"சரி விடு. இதுக்குப் போயி சண்டை போட்டுக்கிட்டு."- ரூபகுமார் இருவரையும் பார்த்துச் சொன்னான்: "சண்டை போடுற சூழ்நிலை இல்லை இது."

"தட் ஈஸ் தி பாயிண்ட்!"- குஸுமோகன் சொன்னான்.

தேவையில்லாத ஒரு சண்டை அங்கு நிறுத்தப்பட்டது.

பிணத்தை எடுக்கப்போகும் நேரத்தில் சடங்குகளுக்கேற்ப எல்லோரும் உரத்த குரலில் அழுதார்கள். அந்த விஷயம் நன்றாகவே நடந்தது. ஒவ்வாருவரும் தங்களின் கதாபாத்திரங்களைப் புரிந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடித்தார்கள். எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாகவும் இயக்குநராகவும் இருந்து செயல்பட்டது குறுப்புதான். முதன்மை உதவி இயக்குநராகப் பணியாற்றியவன் மரணமடைந்த அவறாச்சனின் மகனான வர்கீஸ் என்ற கீவறீச்சன். கேமராக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தன. பொழுது விடிந்தது முதல் மூன்று வீடியோ யூனிட்டுகள் அந்த சவச்சடங்கைப் படம் பிடித்துக் கொண்டிருந்தன. அமைச்சர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் இருந்த இடத்தில் மிகப்பெரிய கூட்டம் நின்றிருந்தது. அவர்கள் அனைவரும் ரூபகுமாரைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று வந்தவர்கள். குஸுமோகனையும் முன்முனாவையும் வைத்த கண் எடுக்காது பார்க்க வந்தவர்கள். அமைச்சர்களுடன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வந்தவர்கள்.

அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் அங்கிருந்த பலரும் மரணத்தைத் தழுவிய ஆட்டக்களத்தில் அவறாச்சனைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அமைச்சர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் தவிர இரண்டு பாதிரிமார்களும் அவறாச்சனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள்.

எல்லோரும் பாடியவாறு சொர்க்கத்திற்குப் பயணம் செய்யும் அவறாச்சனைப் பின் தொடர்ந்தார்கள். அவர்களின் பாடல் சொர்க்கத்தின் சுவர்களை- சொர்க்கத்திற்கு சுவர் என்ற ஒன்றிருந்தால்- நிச்சயம் இடித்துத் தள்ளியிருக்கும். சொர்க்கத்தில் இருப்பவர்கள் சிறிதும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பயந்து நடுங்கி வேறெங்காவது ஓடிப்போய் ஒளிந்திருப்பார்கள்.

யார் எது சொன்னாலும் ஆட்டக்களத்தில் அவறாச்சனின் இறுதிப்பயணம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த பயணமாக அமைந்து விட்டதென்னவோ உண்மை. இந்த அளவிற்கு வண்ணமயமான ஒரு இறுதிப்பயணம் கடந்த நூறு வருடங்களில் நடந்ததே இல்லை என்பதை பத்து, பன்னிரண்டு வயதுள்ளவர்கள்கூட ஒப்புக் கொண்டார்கள்.

கூப்பாடுகள் வித்தியாசமாக, ஆச்சர்யப்படும்படியாக, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியதாக மாறிவிட்டிருந்தன. பிணத்திற்குப் பின்னால் அழுது போய்க் கொண்டிருந்த பலரும் அப்போதும் இருக்கவே செய்தார்கள். எனினும், அவர்களை எல்லோரும் மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே மறந்துவிட்டார்கள் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

இறுதியில் ஊர்வலம் கிறிஸ்துவ தேவாலயத்தை அடைந்தது. தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மக்களைவிட பலமடங்கு அதிகமான மக்கள் வெளியே நடைபெற்ற கொண்டாட்டச் சடங்குகளில் இருந்தார்கள். இடுகாட்டிலும் இதே நிலைதான். அவறாச்சனுக்காக அமைக்கப்பட்ட கல்லறையே ஒரு கண்காட்சி போல அமைந்து விட்டது. அந்த அளவிற்கு ஒரு அழகான கல்லறையை சில மணி நேரங்களில் அமையச் செய்தவர் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? தாஜ்மஹாலைப் பார்ப்பவர்கள் மும்தாஜை மறந்து விட்டு ஷாஜஹானை மனதில் நினைப்பதைப் போல, அந்தக் கல்லறையைப பார்க்க வரும் எதிர்கால பார்வையாளர்கள் ஆட்டக்களத்தில் அவறாச்சனை அல்ல; கல்லறையை உண்டாக்கிய குஞ்ஞுக்குறுப்பைத்தான் நினைப்பார்கள். அந்த அளவிற்கு அழகாக அமைந்திருந்தது கல்லறை.

அந்த அழகான கல்லறையில் பாதிரியார்களின் பிரார்த்தனைகள் ஒலிக்க, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்விட்டு நினைத்துக் கொண்டிருக்க, ஆட்டக்களத்தில் அவறாச்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் மீண்டும் உரத்த குரலில் அழுதார்கள்.

சிறிது நேரத்தில் தங்கள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவர்கள் மனதில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு சாந்தா திரை அரங்கத்தை நோக்கி வேகமாக நடையைக் கட்டினார்கள். அங்குதான் அஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மட்டும் அந்தத் திரை அரங்கின் பெயர் 'ஆட்டக்களத்தில் நகர்' என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்படியொரு காரியத்தைச் செய்தவர் வேறு யாராக இருக்க முடியும்? குறுப்புதான் என்று நாம் இங்கு சொல்ல வேண்டுமா என்ன? அந்தத் திரை அரங்கின் உரிமையாளர் குறுப்பின் சொந்தக்காரர் என்பதை அறிவாளிகளான வரலாற்றாசிரியர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.


அஞ்சலி கூட்டம் ஒரு திருவிழாவைப் போல நடைபெற்றது. யானை மட்டும்தான் அங்கு இல்லை. அந்த அளவிற்கு திருச்சூர் பூரம் திருவிழாவையே தோற்கடிக்கக்கூடிய விதத்தில் அந்தக் கூட்டம் படு ஆர்ப்பாட்டமாக இருந்தது.

ஒரு அமைச்சர்தான் அந்த அஞ்சலி கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தை ஆரம்பித்து வைத்தது திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார். அப்படியென்றால் இன்னொரு அமைச்சருக்குத் தகுதியான ஒரு பதவி தர வேண்டுமல்லவா?  அவர் சிறப்புப் பேச்சாளராக்கப்பட்டார். மற்ற சிறப்பு விருந்தினர்கள் மரணமடைந்த அவறாச்சனைப் பற்றி பேசுவதாக ஏற்பாடு. எல்லோரையும் வரவேற்று பேசுபவர் வேறு யார்- குஞ்ஞுக்குறுப்புதான்.

குஞ்ஞுக்குறுப்பின் வரவேற்புரை முழுக்க முழுக்க ஒரு இரங்கல் காவியமாகவே இருந்தது. தாமஸ் க்ரையையே தோற்கடிக்கக்கூடிய இரங்கல் காவியம் அது. பள்ளிக்கூடத்தில் நடந்த பேச்சுப் போட்டிகளுக்குப் பிறகு குஞ்ஞுக்குறுப்பு இவ்வளவு அழகான, இந்த அளவிற்கு இதயத்தைத் தொடக்கூடிய விதத்தில், இந்த அளவிற்கு உணர்ச்சி பூர்வமாகப் பேசியதே இல்லை. மிகப்பெரிய முதலைகளையும் விட மிகவும் அழகாக குறுப்பு கண்ணீர் விட்டார் என்று சில விவரம்கெட்ட மனிதர்கள் சொன்னாலும் சொல்லலாம். அத்தகைய மனிதர்கள் வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசத்தான் செய்வார்கள். தன் கணவனுக்கு இந்த அளவிற்குச் சிறப்பான குணங்கள் இருந்தன என்பதையே அப்போதுதான் சாராம்மா தெரிந்து கொண்டாள். "எங்க அப்பா அந்த அளவிற்கு பெரிய மனிதரா!" என்று கீவறீச்சனும் அன்னக்குட்டியும் ஆச்சர்யப்பட்டு நின்று விட்டனர். அவர்கள் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களின் கண்களிலிருந்து சந்தோஷத்தால் ஆனந்தக்கண்ணீர் முத்து மணிகளைப் போல வழிய ஆரம்பித்தது. குறுப்பின் உணர்ச்சிமயமான அந்தப் பேச்சில் அங்கு கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களையே மறந்து போயிருந்தார்கள்.

தொடர்ந்து குறுப்பு தன்னுடைய கடமையைச் செய்ய ஆரம்பித்தார். ஊருக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசி, அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, அவர்களின் சிறப்பு இயல்புகளை விளக்கிப் புகழ்ந்து தன் சார்பாகவும் கிராமத்து மக்கள் சார்பாகவும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் குறுப்பு நடந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு வெற்றிகரமாக நன்றாக நடந்ததற்கு மூலகாரணமாக இருந்த கிராமத்து மக்களை வரவேற்றுப் பேசவும் குறுப்பு மறக்கவில்லை.

வரவேற்புரை முடிந்து பல நிமிடங்கள் கடந்த பிறகும் இடி முழங்கியதைப் போல மக்களின் கைத்தட்டல் திரை அரங்கிற்குள் (ஆட்டக்களம் நகர் என்று தயவுசெய்து திருத்தி வாசிக்கவும்) கேட்டுக் கொண்டே இருந்தது.

குறுப்பு பேசியதைத் தொடர்ந்து மற்றவர்கள் பேசினார்கள். 'ஜனகனமன'வுடன் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

அதிகமான அன்பு வைத்திருந்த மக்கள் எங்கே கட்டுப்பாட்டை மீறி ஏதாவது பண்ணி விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்த அமைச்சர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் ஏதோ தப்பித்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.

எல்லாம் முடிந்தவுடன் குஞ்ஞுக்குறுப்பிற்கு எதிராக இருந்த ஒரே ஒரு நபரும் இந்த உலகத்தை விட்டுப்போய் விட்டார் என்று யாராவது மனதில் நினைத்திருப்பார்களா? அப்படி நினைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம்- ஆட்டக்களத்தில் அவறாச்சன் உண்மையாகப் பார்க்கப்போனால் குறுப்பிற்கு எதிராக இருந்த ஒரு மனிதர் இல்லையே!

மாறாக, பிள்ளைப் பருவத்திலிருந்து அவருடன் இருந்த நெருங்கிய நண்பரும்- இணைபிரியாத சினேகிதரும் ஆயிற்றே அவர்!

6

ட்டக்களத்தில் அவறாச்சனின் மரணத்திற்குப்பிறகு உள்ள சடங்குகள் ஒவ்வொன்றும் முறைப்படி நடைபெற்றன. பிரார்த்தனைகள், குர்பானாக்கள், விருந்துகள்- எல்லாம் மிகவும் ஆர்ப்பாட்டமாக, கொண்டாட்டத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டன. அவறாச்சனின் பெயரில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. ஊரில் இருந்த பல நிறுவனங்களின் பெயர்கள் அவறாச்சனின் பெயரைத் தாங்கும்படி மாற்றப்பட்டன. பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு, அவரிடம் பணியாற்றும் ஆட்கள், அவறாச்சனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஊரில் அடுத்த நிலையில் முக்கிய நபர்களாகயிருப்பவர்கள் எல்லோரும் அதற்குத் தூண்டுகோலாக இருந்தார்கள். ஊர்க்காரர்களின் முழுமையான ஒத்துழைப்புடன்தான் எல்லா காரியங்களும் நடைபெற்றன. இப்படியே வாரங்களும் மாதங்களும் கடந்து கொண்டிருந்தன.

நான்கு பேர் கூடி நிற்கும் எந்த இடமாக இருந்தாலும், சில நாட்கள் வரை அவர்களின் பேச்சு அவறாச்சனைப் பற்றியதாகத் தான் இருந்தது. ஆற்றில் குளிக்கும் இடத்திலும், தேநீர் கடைகளிலும், வாசக சாலைகளிலும் ஊர் மனிதர்கள் அவறாச்சனின் பெருமைகளைப் பற்றி வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவறாச்சன் ஊருக்கும், ஊர் மக்களுக்கும் செய்த நல்ல காரியங்களை மனம் திறந்து அவர்கள் பாராட்டினார்கள். கிராமத்து ஆட்களுக்கு தங்களின் சொந்த அனுபவங்களைப் பற்றி பேசுவதற்கே நேரமில்லாமல் இருந்தது.

காலப்போக்கில் அந்நிலை மாற ஆரம்பித்தது. பிற விஷயங்களையும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்க்கையிலேயே ஆயிரம் விஷயங்கள் நடந்து கொண்டிருந்தனவே! ஊரிலும் பல புதிய திட்டங்களும், புதிய பல மாற்றங்களும் நித்தமும் நடந்து கொண்டிருந்தன. இந்த மாதிரியான நிகழ்கால உண்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உண்டான போது, அவறாச்சன் என்ற மனிதர் ஒரு கடந்தகால நினைவாக மட்டும் மாறிப்போவது என்பது நடைமுறையில் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதானே! உலக வாழ்க்கையின் போக்கு அப்படித்தான் இருக்குமென்பதால், அதற்காக கிராமத்து மக்களையோ, அவறாச்சனின் நண்பர்களையோ, அவரின் வீட்டில் உள்ளவர்களையோ நாம் குறை சொல்வதில் அர்த்தமே இல்லையே!

மறைந்த அவறாச்சனிடம் ஊரில் யாராவது தவறாக நடந்து கொண்டார்கள் என்பதை இறந்து போன அவறாச்சன் கூட ஒப்புக் கொள்ளமாட்டார். ஊர்க்காரர்கள் அவரை முழுமையாக மறந்துவிட்டார்கள் என்றும் கூறுவதற்கில்லை. பல இடங்களிலும் மறைந்துபோன அந்த மனிதரைப் பற்றி பலரும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். பல இடங்களிலும் அவரின் பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும் நிமிடங்களில் மக்கள் அவரை மிகவும் பாசத்துடன் தங்கள் மனத்திரையில் நினைத்துப் பார்ப்பார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலைகளும் இருந்தன அல்லவா? மக்களுக்கு மட்டுமல்ல, அவறாச்சனுக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும்தான். அதாவது- அவறாச்சனின் குடும்பத்தில் உள்ளவர்கள், குறுப்பு போன்ற எல்லாருக்கும்தான். அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன. நிகழ்கால பிரச்சினைகளை மறந்துவிட்டு ஒரு கடந்தகால ஞாபகத்தை மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பதென்பது நிச்சயம் ஒரு ஆளுக்கு முடியாத விஷயம்தான்.

இப்படித்தான் காலப்போக்கில் அவறாச்சன் ஒரு நினைவுச் சின்னமாக மட்டும் மாறினார். வரலாற்றின் ஒரு பகுதியாக அவர் ஆனார். நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு அவர் பறந்து சென்றார். கடந்த காலத்தின் மூடுபனிக்கு அப்பால் அவறாச்சன் சிறிது சிறிதாக ஒதுங்கிப் போனார்.


சூரியன் அப்போதும் கிழக்குத் திசையில் உதயமாகி மேற்குத் திசையில் மறைந்து கொண்டுதானிருந்தது. பண்ணையாறும் அப்படித்தான். இரயில் பாதை இரு பக்கங்களிலும் சதா இயங்கிக் கொண்டே இருந்தது. மழை வந்தது. வெயில் வந்தது. விதை விதைத்தார்கள். பயிர்கள் வளர்ந்தன. தொழிற்சாலைகள் முறைப்படி இயங்கின. இயந்திரங்களுக்கு எந்தவொரு குறைபாடும் உண்டாகவில்லை. புதிய இயந்திரங்கள் வந்தபோது, தொழிற்சாலைகள் புதிய பாதைகளில் நடைபோட்டன. புதிய இரசாயன உரங்கள் தோன்றிய போது, விவசாய உற்பத்தி பல மடங்கு பெருகியது. மொத்தத்தில் ஊர் செழிப்பிலிருந்து அதிக செழிப்பிற்கும், வேஷ்டியிலிருந்து முழுக்கால் சட்டைக்கும், பாவாடையிலிருந்து சுரிதாருக்கும், ரேடியோவிலிருந்து டெலிவிஷனுக்கும் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அநத் வளர்ச்சிகள் காலப்போக்கில் உண்டான நாகரீக வளர்ச்சியின், தொழில் நுட்ப வளர்ச்சியின், விஞ்ஞான வளர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்தவையே. அந்த ஊரில் மட்டுமே உண்டான ஒரு வளர்ச்சி என்று அதைக் கூற முடியாதே! உலகம் முழுவதும் மனித வாழ்க்கையில் உண்டான பொதுவான வளர்ச்சி அந்த ஊரிலும் உண்டானது என்று கூறுவதே பொருத்தமானது.

ஆட்டக்களத்தில் அவறாச்சன் ஒரு கடந்த கால ஞாபகச் சின்னமாக மாறுவதற்கு முன்பே ஆட்டக்களத்தில் காரர்களுக்கும் பாட்டத்தில் குடும்பத்தாருக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த சிவில் வழக்கு ஒரு சமாதானத்தில் வந்து முடிந்தது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் சாட்சாத் குஞ்ஞுக்குறுப்புதான். சாராம்மாவும் அவளின் பிள்ளைகளும் அதற்காக தேவையான அளவு ஒத்துழைத்தார்கள். வழக்குகள் சமாதானமாக முடிவுக்கு வர இரண்டு வக்கீல்களும்- லம்பபோதரன் பிள்ளையும் குஞ்ஞிராமக்கைமளும்- உடனிருந்தார்கள். அவர்களின் தேர்ந்த சட்ட வழிகாட்டுதல்களுடன் விஷயங்கள் மிகவும் சிறப்பாக முன்னோக்கி நடந்தன. சாராம்மாவின் மீன் குழம்பையும், பொரித்த கோழியையும் ஒருபிடி பிடிக்க லம்போதரன் பிள்ளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. வழக்கு ஒரு முடிவுக்கு வந்ததில் தனக்குக் கிடைத்த பெரிய லாபமே அதுதான் என்று அவரே எல்லோரிடமும் மனம் திறந்து கூறவும் செய்தார்.

"ஃபீஸ்ன்ற முறையில நான் எவ்வளவோ ரூபாய்களை வாங்கியிருக்கேன். ஆனா, இந்தச் சுவையான சாப்பாடு எனக்கு இங்கே மட்டும்தான் கிடைச்சது. குறுப்பச்சன் சொன்னது நூறு சதவிகிதம் உண்மை. சாராம்மா அக்காவோட சமையல் அபாரம்! அபாரம்! அதுல எந்த விதமான சந்தேகமும் இல்ல..."

லம்போதரன் பிள்ளை அப்படிப் புகழ்ந்தது சாராம்மாவை உச்சியில் உட்கார வைத்தது. ஆனால், அந்தப் பாராட்டுக்கு அவள் பதில் சொல்லவில்லை. மாறாக வெட்கப்பட்டவாறு அவள் சொன்னாள்: "வக்கீல் சார்... என்னை அக்கான்னு கூப்பிட வேண்டாம். எனக்கு அப்படியொன்னும் வயசாயிடல. என் கணவர் இறந்துட்டார்- அவ்வளவுதான்!" திடீரென்று முகத்தில் வந்து ஒட்டிக் கொண்ட துக்கத்துடன் அவள் சொன்னாள்: "அவரை கர்த்தர் முன்னாடி அழைச்சிக்கிட்டாரு. எல்லாம் கடவுளோட விருப்பம். கடவுளோட வணக்கம்."

புத்திசாலியான கைமள் சாராம்மா பேசுவதையே கேட்டவாறு என்னவோ சிந்தனையில் இருந்தார். லம்போதரன்பிள்ளை அப்போதும் சாப்பாடு உண்டாக்கிய சுவையான அனுபவத்திலிருந்து விடுபடாமலே இருந்தார்.

குறுப்பின் காரில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நகரத்திற்குச் செல்லும் போது கைமள் சொன்னார்: "அவறாச்சனோட மனைவி அப்படியொண்ணும் மோசம்னு சொல்ல முடியாது இல்லியா?" அவரும் குறுப்பும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்: "அப்படியொண்ணும் சொல்லமுடியாதுதான்..."

"கைமள், நீங்க அப்படி சொல்றதுக்குக் காரணம்?"- அப்போது மீன் குழம்பின் வாசனையை மறக்காமலிருந்த லம்போதரன் வெள்ளை மனதுடன் கேட்டார்.

"நீ சரியான மடையன்டா. யாரோ உன்னை நல்லா புரிஞ்சுதான் உனக்கு இந்தப்பேரையே வச்சிருக்காங்க!” - கைமள் அவரைப் பார்த்து கிண்டல் பண்ணினார்: "உன்கிட்ட இருக்குறுது இது ஒண்ணுதான். நீளமான பெரிய வயிறு. நீ எப்படி இந்த வக்கீல் படிப்புல தேர்ச்சி பெற்றேன்றதைத்தான் என்னால புரிஞ்சிக்கவே முடியல!" அதைக் கேட்டு குறுப்பு குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

"ஓ... நீங்க என்னைப் பார்த்து கிண்டல் பண்றீங்க!"- லம்போதரன் பிள்ளை ஒரு சிறு குழந்தையைப் போல சொன்னார்: "நான் பி.எல்.ல. தேர்ச்சி பெற்றது முதல் வகுப்புலயாக்கும். புரியுதா?"

"அதுதான் கஷ்டமே! இது பல்கலைக்கழகம் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். நீ வெட்கப்படுறதுக்கு இதுல என்ன இருக்க?"- கைமள் பயங்கரமாகச் சிரித்தவாறு சொன்னார்.

குறுப்பும் அவரின் சிரிப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

"குறுப்பச்சா, அங்கே ஏதோ ஒரு விஷயம் மறைஞ்சிருக்கு. என்ன... நான் சொல்றது சரிதானா?"- கைமள் குறுப்பைப் பார்த்துக் கேட்டார்.

"என் தங்க வக்கீல் ஸார்... தேவையில்லாதது எதையாவது பேசி என்னை வீண் வம்புல மாட்டி விட்டுடாதீங்க. இப்போ ஆளை விடுங்க... போதும்."

வழக்கு சமாதானமாக முடிந்ததை நகரத்தில் அவர்கள் கொண்டாடினார்கள். ஆட்டக்களத்தில் குடும்பத்திலிருந்து வர்கீஸ் ஆப்ரஹாம் அங்கு நடந்த விருந்தில் கலந்து கொண்டான். நள்ளிரவு நேரம் ஆனபிறகும் கூட விருந்து ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. கடைசியில் குஞ்ஞராமக்கைமகளின் வற்புறுத்தல் காரணமாக மற்றவர்கள் விருந்து கொண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர சம்மதித்தார்கள்.

மது அருந்தி கட்டுப்பாட்டை இழந்த பொழுது புலரும் நேரத்தில் தன் வீட்டை அடைந்த குஞ்ஞுக்குறுப்பு தான் அணிந்திருந்த ஆடைகளைக் கூட கழற்றாமல் அப்படியே போய் படுக்கையில் விழுந்தபோது நாக்குக் குழைய அவர் சொன்னார்:

"அடியே... பாகீரதி, வழக்கு முடிஞ்சிடுச்சு..."

அதற்கு பாகீரதியம்மா எந்தப் பதிலும் சொல்லவில்லை. இனியாவது வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஆட்டக்களத்தில் குடும்பத்தைத் தேடி எப்போதும் போய்க் கொண்டிருக்கும் ஒரு வழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுமே என்று அவள் மனம் நினைத்தது. ஆனால், வாய்திறந்து அவள் எதுவும் பேசவில்லை.

"அடியே பாகீரதியம்மா..."- உறக்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த குறுப்பு மீண்டுமொரு முறை அழைத்தார்.

"என்ன, சொல்லுங்க..."- பாகீரதியம்மா கேட்டாள்.

"அடியே பாகீரதியம்மா, அடியே மூதேவி"- குறுப்பு மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார்.

அதற்குப் பிறகு அவர் வாய்க்குள் முனகுவது தெளிவில்லாமல் கேட்டது: "அவறா மாப்பிள்ளைக்கும் எனக்கும் இருந்த விஷயம் ஒரு முடிவுக்கு வந்தாச்சு. என்ன... அடியே!"

அடுத்த நிமிடம் அவர் உறக்கத்தில் ஆழ்ந்து போனார்.

"எல்லாம் முடிவுக்கு வந்திருச்சு. அப்படித்தானே?"- பாகீரதியம்மா மவுனமாகக் கேட்டாள். தொடர்ந்து அவள் தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

அவள் எதற்காகச் சிரிக்க வேண்டும்?


7

நீண்ட நாட்களாகவே பாகீரதியம்மாவின் இரவும், பகலும் தனிமை நிறைந்ததாகவும், பொறுக்க முடியாததாகவும், அனாதை உணர்வை உண்டாக்கக் கூடியதாகவுமே அமைந்து விட்டது. மிகவும் கொடுமையாக இருந்தது இரவு நேரம்தான்.

பகல் நேரமாக இருந்தால் என்னவாவது செய்து கொண்டிருக்கலாம். நிலத்தில் இறங்கி நடக்கலாம். அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம் ஏதாவது உத்தரவுகள் போட்டுக் கொண்டிருக்கலாம். வீட்டிற்குள் வேலைக்காரர்களுடன் ஏதாவது நாட்டு நடப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். வாயாடி நாணி கிழவி வருவாள். அவள் வந்தால் நேரம் போவதே தெரியாது. ஊரில் நடந்த நடக்காத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவள் பேசிக் கொண்டிருப்பாள். அவள் சொல்வதில் பாதி என்ன, கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் அவளாகவே மனதில் கற்பனை பண்ணிச் சொல்லும் கட்டுக் கதைகள்தான் என்ற விஷயம் பாகீரதியம்மாவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவள் சொல்வதை பாகீரதியம்மா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பாள். அவ்வப்போது நாணி கிழவிக்கு பால் கலக்காத காப்பியும், வெற்றிலை பாக்கும் கொண்டு வந்து தரும்படி அவள் அம்மு என்ற வேலைக்காரியிடம் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தாள். அதற்குக் காரணமிருக்கிறது. கிழவி சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஆர்வம் தரக்கூடிய ஒரு அனுபவமே. பொழுது போகாமல் வெறுப்பைத் தந்து கொண்டிருக்கும் நிமிடங்களை இனிமையான பொழுதாக மாற்றக் கூடிய மந்திரசக்தியும், செப்படி வித்தையும் நாணி கிழவியின் வார்த்தைகளுக்கு இருந்தன. அவள் என்ன சொன்னாலும் அதைக் கேட்பவர்கள் அதை முழுமையாக நம்பக் கூடிய அளவிற்கு அவளின் வாய்ச் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்தது. கூர்மையான வார்த்தைகள், யாரையும் கவரக்கூடிய நகைச்சுவை உத்திகள், கதையைப் போல ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துச் சொல்லும் பாங்கு... எழுதவும் படிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் நாணி கிழவி மற்ற எவரையும் தோற்கடிக்கக் கூடிய அளவிற்கு ஒரு கதை எழுதும் பெண்ணாக வெற்றி பெற்றிருப்பாள் என்று உறுதியாக நம்பினாள் பாகீரதியம்மா. பல கதைகளைப் பத்திரிகைகளில் படித்திருப்பதால் அவளுக்கு அப்படியொரு எண்ணம் உண்டானது. கிழவி தன்னை ‘தம்புராட்டி’ என்று அழைப்பதை பாகீரதியம்மா சிறிதும் விரும்பவில்லை. ஆனால், சிறு வயதிலிருந்து இருக்கும் ஒரு பழக்கத்தை கிழவியால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அவ்வப்போது தன்னை ‘குழந்தை’ என்று அழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாலும், வழக்கமாக தான் அழைக்கும் முறையிலிருந்து நாணி கிழவியால் சிறிதும் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும் என்பதே உண்மை. அவள் எப்போதும் அழைப்பதைப் போலவே அழைத்துவிட்டுப் போகட்டும் என்று பாகீரதியம்மாவும் அதற்குப் பிறகு வெறுமனே இருந்து விடுவாள். கதையை சுவாரசியமாக விவரித்துக் கொண்டு வரும் போது, எங்கே அதற்கு தடை உண்டாகிவிடுமோ என்று அவள் நினைத்ததே அதற்குக் காரணம். வெற்றிலை போடும்போது, இடையில் கிழவி எச்சிலைத் துப்புவதற்காக வெளியே போவாள். எதற்கு வீணாக அந்த நேர இடைவெளி என்று நினைத்த பாகீரதியம்மா, கிழவி நாணிக்கு ஒரு எச்சில் துப்பும் பாத்திரத்தை வாங்கிக் கொடுத்தாள். ஒருமுறை வெற்றிலை போட்டு முடிக்கும் நாணி கடைசி வெற்றிலையை மென்று முடித்து அதைத் துப்பிவிட்டாள் என்றால், தன்னுடைய வாயை அடுத்து கழுவ ஆரம்பித்து விடுவாள். அது முடிந்துவிட்டால் அவளுக்குப் பால் கலக்காத காப்பி வேண்டும். அதுவும் நல்ல சூடாக இருக்க வேண்டும். அம்முவிற்கு எப்போது நாணி கிழவிக்கு காப்பி தர வேண்டும் என்ற விஷயம் நன்றாகத் தெரியும். ஒரு கம்ப்யூட்டரே ஆச்சரியப்படுமளவிற்குச் சரியான நேரத்தில் எந்தவித தாமதமுமின்றி அம்மு காப்பி போட்டுத் தருவாள். காப்பி குடித்து முடித்து விட்டால், மீண்டும் வெற்றிலையை வாய்க்குள் நுழைத்து குதப்ப ஆரம்பித்து விடுவாள் கிழவி.

“தம்புராட்டி, நம்ம வேலாயுதனை உங்களுக்குத் தெரியுமா? அதான்... நம்ம நிலத்துல முன்னாடி வேலை பார்த்துக்கிட்டு இருந்த வேலாயுதனை. தண்டாரு பறம்புல இருக்குற வேலாயுதன்...” - ஒருநாள் வந்தபோது நாணி கிழவி கேட்டாள். அவள் யாரைச் சொல்கிறாள் என்பது ஞாபகத்தில் இல்லையென்றாலும் பாகீரதியம்மாள் சொன்னாள்: “எனக்கென்ன வேலாயுதத்தைத் தெரியாதா?”

“சரிதான்... அந்த வேலாயுதத்திற்கு ஒருமகள் இருக்கா. பேரு ருக்மணி. நடந்த விஷயம் என்ன தெரியுமா? முந்தாநாளு அவள் ஒரு சின்னப் பையன்கூட வீட்டை விட்டு ஓடிட்டா. அவனுக்கு வயசு இருபத்தொண்ணு. அவளுக்கு நாற்பத்து மூணு வயசு. அவளுக்கு மூணு பிள்ளைங்க. அதுல மூத்தது ரெண்டும் வயசுக்கு வந்து நிக்கிற பொம்பளைப் பசங்க. ச்சே... இந்த உலகம் போற போக்கைப் பாருங்க. எல்லாம் கலிகாலத்தோட விளையாட்டு...” -  இதைச் சொல்லிவிட்டு நாணி கிழவி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“நீ சொல்றது உண்மையா கிழவி?” - பாகீரதியம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“உண்மைதான் தம்பிராட்டி நான் இதுவரை உங்கக்கிட்ட பொய் சொல்லியிருக்கேனா? எனக்குப் பொய் சொல்லத் தெரியாதுன்றது உங்களுக்குத் தெரியாதா தம்புராட்டி? என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்றேன். கோவில்ல இருக்கிற அம்மாமேல சத்தியமா சொல்றேன். அந்தப் பொம்பளை பசங்களோட அப்பன் வேலாயுதன் தான் இந்த விஷயத்தையே என்கிட்ட சொன்னான்.”

“அட கடவுளே! இப்படியெல்லாமா ஊர்ல நடக்குது!”- பாகீரதியம்மா மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

தான் சொன்னது உண்மைதான் என்பதை பாகீரதியம்மா ஒப்புக் கொண்டாள் என்பது தெரிந்ததும் கிழவி நாணியின் உதடுகளில் ஒருவகை புன்னகை மலர்ந்தது. இப்போதுதான் அவளுக்குத் திருப்தியாக இருந்தது. பாகீரதியம்மாவிற்கும் திருப்தி உண்டானது போல் இருந்தது.

ஒருநாள் கிழவி நாணி வரவில்லையென்றால் ஒருமாதிரி ஆகி விடுவாள் பாகீரதியம்மா. ஒரு இடத்தில் உட்காராமல் இங்குமங்கும் நடந்து கொண்டே இருப்பாள். எப்போதோ வாசித்து முடித்து வைத்திருக்கும் புத்தகத்தை மீண்டும் எடுத்து படிக்க ஆரம்பிப்பாள். அதுவும் ஒருவித சோர்வை உண்டாக்குகிறபோது, அதை மடக்கி வைத்துவிட்டு வீட்டின் பின்பக்கத்திற்கு செல்வாள்.

“அந்த நாணி கிழவி இதுவரை வரலையாடி, அம்மு?”

“இல்லையம்மா...” - அம்மு தன் கைகளை விரித்தவாறு சொல்லுவாள்.

“அவ ஏன் இதுவரை வரல?”

“அது எனக்கு எப்படி தெரியும் அம்மா?”

“அவ உடம்புக்கு ஏதாவது ஆகியிருக்குமோடி, அம்மு? கொஞ்சம் விசாரிச்சுப் பாக்குறியா?”

“அதெல்லாம் தேவையில்லம்மா. அவங்களுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. அப்படி ஏதாவது நடந்திருச்சுன்னா, உடனடியாக தகவல் இங்கே தெரிஞ்சிருக்கும்ல?” - அம்மு பாகீரதியம்மாவிடம் கூறுவாள்:

“நீ சொல்றதும் சரிதான்.”


பாகீரதியம்மா மீண்டும் தன்னுடைய அறைக்குத் திரும்பி வருவாள். ஏற்கனவே படித்து வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் கையில் எடுப்பாள். படித்த புத்தகத்தையே மீண்டும் புரட்டுவாள். ஏற்கனவே படித்த வரிகளையே மீண்டும் படிப்பாள்.

சிறிது நேரத்தில் பகல் தூக்கத்தில் முழுமையாக அவள் ஆழ்ந்து விடுவாள்.

சாப்பிடுவதற்கோ, காப்பி குடிப்பதற்கோ, வேலை செய்பவர்களுக்கு காசு கொடுக்கவோ, வேறு எந்த விஷயத்திற்கோ அம்மு போய் அழைத்தால்தான் அவள் எழுந்தே வருவாள்.

அவளின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் எப்போதோ ஒரு முறைதான் அந்த வீட்டிற்கு வருவார்கள். அப்போது பாகீரதியம்மாவின் மனதில் உண்டாகும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களைப் பார்த்ததும் அவள் குழந்தையாகவே மாறிவிடுவாள். பேரக் குழந்தைகளின் சினேகிதியாக மாறி அவர்களுடன் சேர்ந்து விளையாடுவாள். விளையாட்டு, சிரிப்பு, தமாஷ், பிள்ளைகளுக்கு தின்பதற்கு ஏதாவது தருதல்... என ஒரே ஆரவாரம்தான். ஆனால், அந்த மகிழ்ச்சி சிறிது நேரத்திற்குத்தான் கண்மூடி கண் திறப்பதற்குள் அந்த ஆனந்தம் அவளிடம் இல்லாமல் போய்விடும். காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு அவசர கோலத்தில்தான் எப்போதும் அவள் பிள்ளைகள், மருமக்கள், பேரக் குழந்தைகள் எல்லோரும் வருவார்கள். வந்தவேகத்திலேயே திரும்பிப் போக வேண்டும் என்ற அவசரத்தில் இருப்பார்கள் அவர்கள். வீட்டில் எவ்வளவோ வேலைகளை அவர்கள் விட்டு விட்டு வந்திருப்பார்கள். உடனே திரும்பி வருவதாக அங்கு சொல்லி விட்டு வந்திருப்பார்கள். இங்கு நிற்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது.

“சரி... அப்படின்னா பேரப் பிள்ளைகளாவது ரெண்டு நாளு இங்கே இருக்கட்டுமே!”- பாகீரதியம்மா கேட்பாள். கேட்பாள் என்று சொல்வதை விட கெஞ்சுவாள் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

“அய்யோ... அது முடியாதும்மா!” - கறாரான - சிறிதும் ஈவு இரக்கமற்ற பதில் வரும்.

காரைக் கிளப்புவார்கள். பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் விடைபெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்து செல்வார்கள். போய்க்கொண்டிருக்கும் காரையே பார்த்தவாறு, அதன் ஓசையைக் கேட்டவாறு, அதன் தோற்றம் கண்களில் கடைசியாகத் தெரியும் வரை நின்றுவிட்டு இறுதியில் தாங்கிக் கொள்ள முடியாத தன்னுடைய தனிமைக்குள் வந்து மீண்டும் அடைக்கலமாகிக் கொள்வாள் பாகீரதியம்மா.

“இந்த உலகத்தில் எல்லோரும் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்னையும் சேர்த்துத்தான்.’ - அவள் தனக்குத்தானே தேம்பியவாறு சொல்லிக் கொள்வாள். அவளின் துக்கம் அவளின் மனதிற்குள்ளேயே சுழன்று சுழன்று வலம் வந்து கொண்டிருக்கும்.

இரவில் குறுப்பு வீட்டிற்குத் திரும்பி வரும்போது மிகவும் தாமதமாகிவிடும். வரும்போதே மதுவின் போதையுடன்தான் மனிதர் வருவார். ‘தொழிற்சாலையில வேலை ரொம்பவும் அதிகம் வெளியேயிருந்து ஆட்கள் வந்திருந்தாங்க, பார்ட்டி நடந்துச்சு.” - இப்படி ஏதாவதொன்றை வந்தவுடன் கூறுவார். பெரும்பான்மையான நேரங்களில் அவர் பேசும் நிலையிலேயே இருக்க மாட்டார். அணிந்திருக்கும் ஆடையைக் கூட உடம்பிலிருந்து நீக்காமல் அப்படியே போய் படுக்கும் நிலையில் தான் அவர் வருவார்.

தனக்கென்று ஒரு கணவன் இல்லாமற் போய் எவ்வளவோ காலம் ஆகிவிட்டது என்பதை பாகீரதியம்மா உணராமல் இல்லை. நீண்ட காலமாகவே தான் ஒரு விதவை என்ற உணர்வுதான் அவளின் மனதில் இருந்தது.

குறுப்பிடமிருந்து ஒரு கணவனிடம் கிடைக்கக் கூடிய சுகத்தை எந்தக் காலத்திலும் தான் பெற்றதில்லை என்பதை மிகுந்த கவலையுடனும், ஒருவித வெறுப்புடனும் அவள் நினைத்துப் பார்த்தாள். இந்த விஷயத்தில் தன்னிடம் ஏதாவது தவறு இருக்கிறதா என்பதைத் தன்னைத்தானே பலமுறை அவள் கேட்டுக் கொண்ட நிமிடங்களும் உண்டு. அந்தக் கேள்விக்கான பதில் அவளின் மனதில் உள்ளறைகளில் எங்கேயோ இருக்கும் ஒரு ரகசியப் பெட்டியில் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.

இரவில் தனியாக இருக்கும் நிமிடங்களில் நீண்ட நேரம் ஆனாலும் அவளுக்குத் துணையென்று இருந்தது. எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் சற்றும் அலுப்பைத் தராத பாகவதம்தான்.

நாணி கிழவி ஒருமுறை சொன்ன கதை- ஒரு பொய் கதை- அவள் தனியாக இருக்கும் நேரங்களில் பலமுறை அவள் மனதில் திரும்பத் திரும்ப வலம் வந்திருக்கிறது.

“தம்புராட்டி, நான் இப்போ சொல்லப் போறதை நீங்க நம்பாம இருக்கலாம். ஆனா, இது எங்க ஊர்ல நடந்த கதை. எங்க ஊர்னா என் புருஷனோட ஊர்ல. ஊரு பேரு பன்னிவெழ.”

அங்கு ஒரு பெரிய கிறிஸ்தவக் குடும்பம் இருந்தது. ஏராளமான சொத்துக்களைக் கொண்ட குடும்பமது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை ஒருவன் திருமணம் செய்து அழைத்துக் கொண்டு போனான். வடக்கில் ஏதோ ஒரு நகரத்தில் பெரிய ஒரு பதவியில் இருப்பதாக அந்த இளைஞனின் பெற்றோர்களும் திருமணத்தை ஏற்பாடு செய்த தரகரும் சொன்னார்கள்.

“பொண்ணுன்னா அந்தப் பொண்ணுதான் பொண்ணு. தம்பிராட்டி, தங்க விக்கிரகம் மாதிரி அவ இருப்பா. மாப்பிள ஜாதியைச் சேர்ந்தவளா அவ இருந்தா என்ன? இப்படியொரு அழகான பொண்ணை நான் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. சொக்கத் தங்கத்தோட நிறம்னு சொல்லலாம் அவள் நிறத்தை!” - நாணி கிழவி தொடர்ந்து சொன்னாள்: “நிலாவைப் போல வட்டமான முகம் அவளுக்கு. பனங்குலையைப் போல முடி... ம்... இதுக்கு மேல என்ன சொல்றது? பொண்ணுக்கு பணத்துக்கும் குறைவே இல்லை. சரி... என்னதான் நடந்தது? அவங்க சொன்ன எல்லா கதைகளையும் பாவம் அந்த தோமா மாப்பிளச்சன் முழுசா நம்பினாரு. கல்யாணம் நடந்து முடிஞ்சது. பொண்ணை அழைச்சிக்கிட்டு அந்தப் பையன் போனான். பேசினபடி பணம், பொன் எல்லாம கொடுத்து அனுப்பினாங்க. தம்புராட்டி, அதற்குப் பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை...”

அந்தப் பொண்ணைத் திருமணம் செய்து கொண்டு போன ஒரு இளைஞனுக்கு அவன் வேலை பார்த்த இடத்தில் ரகசியமாக ஒரு காதலி இருந்திருக்கிறாள். அவர்கள் இருவரும் தனியாக அமர்ந்து ரகசியமாகத் திட்டம் போட்டிருக்கிறார்கள். கொலை செய்யும் நபர்களுக்கு பணத்தைத் தந்து கிராமத்திலிருந்து திருமணம் செய்து கொண்டுபோன பெண்ணைக் கொலை செய்துவிட்டார்கள். இறந்துபோன பெண்ணின் பிணத்தை மறைத்து விட்டார்கள். இந்த விஷயம் யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. அவன் தன் காதலியுடன் சுகமாக வாழ்ந்தான். வியாபாரம் செய்தான். வளர்ந்தான். பெரிய மனிதனாக ஆனான். சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க ஒரு புள்ளியாக வளர்ந்தான்.

கதை அத்துடன் முடிந்து விடவில்லை. அதற்குப் பிறகுதான் சுவாரசியமான விஷயமே இருக்கிறது.


ஒருநாள் இரவு இறந்துபோன அவனுடைய மனைவி திரும்பி வந்தாள். அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தாள். வீட்டிற்குள் நுழைந்தாள். தன் கணவனையும் அவனுடைய காதலியையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினாள்.

பாகீரதியம்மாவால் அதை நம்பவே முடியவில்லை.

ஆனால், நாணி கிழவி சத்தியம் பண்ணி சொன்னாள்: “தம்புராட்டி, அந்தப் பொண்ணுதான் வந்தா. பூதமோ, பேயோ வரல. பூதத்திற்கு துப்பாக்கியால சுடத்தெரியுமா? மனிதப் பிறவிக்குத்தானே இந்த விஷயமெல்லாம் தெரியும்? அவ திரும்பி வந்து துப்பாக்கியால எப்படி சுடுறதுன்றதை தெரிஞ்சிக்கிட்டு அவங்க ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிட்டா. நான் சொல்றது சத்தியம்! சத்தியம்! சத்தியம்! நான் வணங்குற அம்மன் மேல சத்தியம்! செத்துப்போன என் புருஷன்மேல சத்தியம்! மறுபிறவின்னு ஒண்ணு இருக்குல்ல? இந்துக்கள் நாம் ஒவ்வொருவரும் அப்படி ஒண்ணு இருக்குன்றதை நம்புறோம்ல? அதுதான் உண்மையிலேயே நடந்தது. சத்தியமாச் சொல்றேன்!” - நாணி கிழவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாகீரதியம்மாவின் காதுகளுக்குள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அவள் அதை நம்பவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அந்தக் கதையின் நடுங்க வைக்கக் கூடிய பாதிப்பிலிருந்து தன்னால் முழுமையாக விடுபட முடியவில்லை என்ற உண்மையை மட்டும் நன்கு அறிந்திருந்தாள் பாகீரதியம்மா.

ஆட்டக்களத்தில் அவறாச்சனின் மரணத்திற்குப் பிறகு நாணி கிழவி சொன்ன அந்தக்கதை அடிக்கடி மனதில் வலம் வருவதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவறாச்சனின் மரணத்திற்குப் பிறகு அந்தக்கதை மீண்டும் மீண்டும் மனதில் தோன்றுவதற்கு என்னவோ காரணம் இருக்கிறது என்று அவள் நினைத்தாள்.

அந்தக் காரணத்தால் காற்றும் மழையுமாக இருந்த ஒரு இரவில் ஆட்டக்களத்தில் அவறாச்சன் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று தன்னுடைய படுக்கையறைக்குள் சிரித்துக் கொண்டே நுழைந்தபோது, பாகீரதியம்மா ஆச்சரியமே படவில்லை. முதலில் அவள் நடுங்கிப் போனதென்னவோ உண்மை. ஆனால், அவறாச்சனின் குரலைக் கேட்டதும், அந்த நடுக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

“பயப்படாதே பாகீ... நான்தான். ஆட்டக்களத்தில் அவறாச்சன் உன்னோட பழைய குட்டன்.”

8

ங்கு ஒரு பழைய கதை வெளியே வருகிறது…

ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையின் முதல் ஆணை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது என்ற பழைய நம்பிக்கையின்படி பாகீரதியம்மா அவறாச்சனை பற்றிய இனிய நினைவுகளை தன்னுடைய மிகப் பெரிய ரகசியமாக மனதின் உள்ளறைக்குள்ளிருந்த ஒரு பெட்டியில் இவ்வளவு காலமும் யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்தாள். தான் தனியே இருக்கும் நிமிடங்களில் தான் மட்டும் வெளியே எடுத்து தன் மார்போடு சேர்த்து ஆர்வத்துடன் அணைத்துக் கொள்வதற்காக அதை வைத்திருந்தாள்.

அது ஒரு காலம். அப்போதும் சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. பண்ணையாறும் அப்படித்தான். இரயில்தண்டவாளம் கிழக்கிலும் மேற்கிலுமாக ஓடிக் கொண்டிருந்தது. மாந்தோப்புகளும், கோவிலில் இருக்கும் பெரிய மரங்களும், தேக்கு மரக்காடுகளும் அப்போதும் இருந்தன. அப்போது அவை சற்று இளம் வயதில் இருந்தன என்பதுதான் வித்தியாசம். பாகியையும் அவளுடைய குட்டனையும் போல என்று கூட சொல்லலாம். அதை வாலிபப்பருவம் என்றுகூட சொல்ல முடியாது. சிறுபிள்ளை பிராயத்திற்கும் வாலிபப் பருவத்திற்கும் இடையில் ஒரு நிலை என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அது அவர்களின் உயர்நிலைப்பள்ளி வயது. இருவரும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வயதிற்கு முன்பே பாகிக்கும் குட்டனுக்குமிடையே உறவு இருந்தது. பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பின் மாமா மகள்தான் பாகி என்ற விஷயம் அப்போதே எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், குஞ்ஞுக்குறுப்பின் தந்தை கோபாலன், பாகியின் தந்தை ராகவக்குறுப்பும் மைத்துனர்மார்களாக இருந்தாலும், கீரியும் பாம்பையும் போலத்தான் அவர்களுக்கிடையே இருந்த உறவு இருந்தது. அவர்களுக்கிடையே நல்ல உறவு எப்போதும் இருந்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். குஞ்ஞுக்குறுப்பின் தாய் தன்னுடைய சொந்த சகோதரனைப் போய் பார்ப்பதை கோபாலன் நாயர் முழுமையாகத் தடை செய்திருந்தார். அதனால் ராகவக்குறுப்பு தன் சகோதரியைப் பார்க்கப் போகவுமில்லை. ராகவக்குறுப்பும் அவறாச்சனின் தந்தை கீவறீச்சனும் நெருங்கிய நண்பர்களும் பக்கத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுமாக இருந்தார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல அவர்கள் வாழ்ந்தார்கள். குட்டன் பாகியின் தாய்க்குச் சொந்த மகனைப் போல என்று கூடச் சொல்லலாம். பாகி குட்டனின் தாய்க்கு சொந்த மகளைப் போல என்பதும் உண்மை. ஒரே வீட்டில் பிறந்த பிள்ளைகளைப்போல அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த உறவும் வளர்ந்தது.

வளர்ந்த பிறகுதான் பாகி குஞ்ஞுவின் முறைப்பெண் என்ற விஷயமே அவறாச்சனுக்குத் தெரிய வந்தது. ஆனால், அவர்களுக்கிடையே திருமணம் நடக்கும் என்று யாரும் கனவுகூட காணாத காலமது. அதனால் அவறாச்சனின் முறைப்பெண் பாகி என்ற விஷயம் குட்டன்-பாகி இருவருக்கும் இடையில் இருந்த உறவை- பிள்ளைப் பருவத்துக் காதலை- எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. நடக்கும் உண்மையை அறிந்து கொண்டு, ஒருவரையொருவர் கெடுக்க முயற்சி செய்து, யாரோ ஒருவர் பணம் சம்பாதிக்க வழி வகுக்கும் எந்தத் திட்டத்திலும் யாரும் இறங்கவில்லை.

அவர்கள் இருவரும் கோவிலில் குடிகொண்டிருக்கும் அம்மனின் முன்னால் போய் நின்று மனமுருக வணங்கினார்கள். அம்மனின் காலடிகளை இருவரும் சேர்ந்து முத்தமிட்டார்கள். சதா நேரமும் அம்மனின் காலடிகளிலேயே இருவரும் கிடந்தனர். தங்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை அவர்கள் அம்மனிடம் வெளியிட்டனர். இளமை பூக்க ஆரம்பித்தபோது, அவர்களிருவரிடமும் சில புதிய கனவுகள் தோன்ற ஆரம்பித்தன.

இரவு நேரங்களில் தனியாகப் படுத்திருக்கும்போது, பகீரதனின் மகள் கங்கையாக குட்டன் என்ற அவறாச்சனின் கனவில் பாகி வந்தாள்.

கங்கோத்ரியிலும் மானஸரோவரிலும் அவன் அவளைக் கண்டான். இமயமலையின் பனி மூடிய சிகரங்களில் அவளின் அழகிய உருவத்தைப் பார்த்தான். தான் படிப்படியாக ஒரு காதல் உணர்வு கொண்ட இளைஞனாக மாறிவிட்டிருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் புரிதல்தான் நாளடைவில் அவனை ஒரு பைத்தியக்காரனாக மாற்றியது.

அவனைப் போலவே, பாகியும் கனவு கண்டாள். எல்லாக் கனவுகளும் மனதைப் பித்து பிடிக்கச் செய்யும் வயது அது. அந்த கனவுகள்தான் அவர்கள் இருவரையும் ஒன்றாக மாற்றின.

எல்லா நாட்களிலும் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவும், அப்படி சந்திப்பதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கவும் செய்தபோது, ஒருவரோடொருவர் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்திக் கொண்டபோது, மனதில் இருக்கும் சில ஆசைகள் தங்களை வெளிக்காட்டிக் கொண்டபோது அதனால் அவர்களின் உடலில் ஆங்காங்கே புதுவகை உணர்ச்சிகள் அரும்பியதை அவர்களாலேயே உணர முடிந்தது.


கடைசியில், ஒருநாள்- ஒரு திருவிழா நாளன்று கோவிலில் வாத்தியங்களின் இசை முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பாகியின் வீட்டு வைக்கோல் போருக்கருகில் இருட்டில் அந்தச் சம்பவம் நடந்தது. அப்படி நடந்திருக்கக் கூடாது என்று அவர்களுக்கு தோணாத- பின்பு எப்போதும் மனதில் தோன்றியே இராத அந்த உறவு என்பது கடந்த சில நாட்களாகவே அவர்கள் இருவர் மனதிலும் முகிழ்ந்து நின்ற, ‘என்றும் நிலை பெற்று நிற்கக்கூடியது’ என்று அவர்கள் முழுமையாக நம்பிய ஒரு ஆத்ம உறவின் உடல்ரீதியான வெளிப்பாடு என்றுதான் அவர்கள் இணைந்த அந்தச் சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

அந்தக் கதை அப்படித்தான் ஆரம்பித்தது. எத்தனை நாட்கள் கடந்தாலும்- எத்தனைப் பருவங்கள் மாறினாலும் ஆகாயமே இடிந்து கீழே விழுந்தாலும் யாராலும் சிறிதும் அழிக்க முடியாத காதல் கதை அது.

அந்தக் கதை நாளும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. காலம் எவ்வளவு மாறினாலும் சூழ்நிலைகள் எவ்வளவு மாறினாலும் அந்தக் கதையின் உண்மையான ஓட்டத்திற்கு எந்தவொரு தடையும் உண்டாகவில்லை.

பாகீரதி கங்கையாக இருந்தாள். சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்தவளாக இருந்தாள். அவள் யாருக்கும் பயப்படவில்லை. யாருக்கும் வெட்கப்படவில்லை. தன்னுடைய ஓட்டம் சுதந்திரமானது என்பதை அவள் நன்கு உணர்ந்தே இருந்தாள். எந்த நிமிடத்திலும் அவள் சொர்க்கத்திற்குத் திரும்பச் செல்லலாம். ஆனால், பூமியோடும், பூமியில் உள்ள எல்லா உயிர்களோடும் கொண்ட அன்பாலும், ஈடுபாட்டாலும் அவள் திரும்பப் போகவில்லை.

குட்டன் அவளை முழுமையாக நம்பினான். அவளுடைய தைரியம் தன்னை எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையிலும் உறுதியாகக் காப்பாற்றும் என்று திடமாக நம்பினான் அவன். அதனால் அவன் எதற்கும் பயப்படவில்லை. அவள்தான் தன்னை எப்போதும் காக்கக்கூடிய கோட்டை என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானே! இந்த அளவிற்கு நம்பிக்கைக்குரிய - உன்னதமான உறவு வேறு எங்கும் இருக்காது என்று அவன் மனதில் எண்ணினான். இந்த உறவைக் கெடுக்க உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது என்று உறுதியாக அவன் நினைத்தான்.

தேக்குக் காடுகளைக் கடும் காற்று அடித்து வீழ்த்தியபோதும் பெருமழை பண்ணையாறைக் கடலாக மாற்றியபோதும் அவன் சிறிது கூட கலங்கவில்லை. அவள் அவனுக்கு அபயமாக இருந்தாள். இந்த உலக வாழ்க்கையிலும் பரலோக வாழ்க்கையிலும் அவள் தன்னுடன் இருப்பாள் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

தான் வெறும் ஆட்டக்களத்தில் அவறாச்சன் மட்டுமல்ல என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்.

9

“நீங்க வருவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்!” பாகீரதியம்மா குட்டன் என்ற அவறாச்சனின் கால்களில் விழுந்தாள்.

“எழுந்திரு பாகி..” - அவர் அவளைப் பிடித்து எழுப்பினார்.

“சாப்பிட ஏதாவது...?” - பாகீரதியம்மா கேட்டாள்.

“வேண்டாம்... குடிக்க ஏதாவது தா...”

மணிக்கணக்கான அமர்ந்து அவர்கள் ஊர் விசேஷங்களைப் பேசிப் பொழுதைப் போக்கினார்கள்.

கடைசியில் அவறாச்சன் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.

அவர் நேராகச் சென்றது ஆட்டக்களத்தில் இல்லத்திற்குத்தான். முன்பக்க வாசலைத் திறந்து அவர் உள்ளே நடந்தார். அப்போது அங்கு பூட்டு, சாவி எதுவும் தேவையாக இல்லை.

முன்பக்கமிருந்த திண்ணைமேல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனை அவறாச்சன் காலால் தட்டி அழைத்தார்.

“ஏய்...”

அடுத்த நிமிடம் அவன் வேகமாக எழுந்து நின்றான். அவறாச்சனைப் பார்த்தான். அடுத்த நிமிடம் “அய்யோ” என்று அலறியவாறு அவன் மயக்கமடைந்து கீழே விழுந்தான். அவறாச்சன் அவனின் முகத்தைப் பார்த்தார். குறுப்பின் டிரைவர் வேலப்பன் என்பதை அவர் தெரிந்து கொண்டார். அவறாச்சன் மேலே செல்லும் படிகளில் ஏறினார். படுக்கையறைக் கதவு அடைத்திருந்தது. அவர் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து குரல் எதுவும் வரவில்லை.

மீண்டும் தட்டியபோது உள்ளேயிருந்து சாராம்மாவின் தூக்கக்கலக்கம் கலந்த- அவருக்கு ஏற்கனவே நன்கு பழக்கமாயிருந்த குரல் கேட்டது.

“யாரு?”

அவறாச்சன் எதுவும் பேசவில்லை. மீண்டும் கதவை சத்தம் வரும் வண்ணம் தட்டினார்.

“யார்டா அது? வேலப்பனா? உனக்கென்ன ஆச்சு?”

“யாரு சாராம்மா அது?” அவரின் நெருங்கிய நண்பரான குஞ்ஞுக்குறுப்பின் குரல்.

“அது... அது... அந்த வேலப்பனாத்தான் இருக்கும்.எதையாவது பார்த்து அந்த ஆளு பயந்திருப்பான். அதனாலதான் எதுவும் பேசாம இருக்கான். பயந்தாங்கொள்ளி...”

“சரி; எது வேணும்னாலும் இருக்கட்டும். கதவைத் திற!” - குறுப்பு கட்டளையிட்டார். அவர் சொன்னபடி ஆட்டக்களத்தில் அவறாச்சனின் மனைவி கதவைத் திறந்தாள். ஒரு புயலைப்போல வேகமாக அவறாச்சன் அறைக்குள் நுழைந்தார்.

“கடவுளே, பேய்!” - அவள் உரத்த குரலில் அலறினாள்.

“பேய் ஒண்ணும் இல்லடி உன் பழைய புருஷன்தான் ஆட்டக்களத்தில் அவறாச்சன்.”

அவர் சொன்னது சாராம்மாவின் காதில் விழவேயில்லை. அதற்கு முன்பே ஒரு பெரிய தேக்கு மரம் கீழே சாய்வதைப்போல அவள் தரையில் விழுந்து கிடந்தாள்.

அறையின் ஒரு மூலையில் பயந்தாலும் நம்பமுடியாமலும் நடுங்கிய உடலுடன் எந்தவித அசைவுமில்லாமல் நின்று கொண்டிருந்தார் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு.

“டேய், நான்தான். பயப்படாதே பூதமோ, பேயோ இல்ல. நானேதான்... அவறாச்சன்... தொட்டுப் பாரு. அப்போது தெரியும். பேயா மனிதனான்னு...” - அவறாச்சன் தன் கைகளை நீட்டினார். குறுப்பு அந்தக் கையைத் தொடவில்லை என்பது மட்டுமல்ல; - அவறாச்சனின் அருகில் வரவோ, நகரவோகூட செய்யவில்லை. அவரின் கண்கள் ஒரு செத்துப்போன மீனின் கண்களைப் போல அசைவற்று நிலைத்து விட்டன.

அவறாச்சன் அருகில் சென்று அவனைப் பிடித்து குலுக்கினார்.

“அவறாச்சா, நீங்க இறந்துபோயி எவ்வளவோ நாட்களாயிடுச்சே” - குறுப்பின் குரல் திக்கித்திக்கி அடிவயிற்றின் ஏதோ ஒரு மூலையிலிருந்து புறப்பட்டு வருவது மாதிரி மெதுவாக வந்தது.

“நீ என்னைக் கொன்னே!” - அவறாச்சன் சொன்னாள்: “நீயும் என் பொண்டாட்டியும் கூடிப்பேசி என்னைக் கொன்னுட்டீங்க. கோழையா இருந்ததுனாலயும் என்னை நேருக்கு நேராக சந்திக்கிறதுக்கான தைரியம் இல்லாததுனாலயும் என்னை நீ கொன்னுட்டே. நீ இந்த ஊர்ல இருந்த பல பெண்களைக் கெடுத்தது, அவங்களோட புருஷன்மார்களைக் கொலை செய்தது- எல்லாமே எனக்கு நல்லா தெரியும்ன்றதை நீ தெரிஞ்சிக்கிட்டே. எங்கே உன் ரகசியங்களை நான் வெளியே சொல்லிடுவேனோன்னு நீ பயந்தே. நீ உண்மையான ஆண்மைத்தனம் உள்ளவனா இருந்திருந்தா, என்கிட்ட நேர்ல வந்து சொல்லியிருக்கணும். அதைச் செய்றதுக்கான தைரியம் இல்லாததால, நீ குறுக்குவழி கண்டுபிடிச்சே. அந்த ரகசியங்கள் வெளியே தெரிஞ்சிடக்கூடாதுன்றதுக்காக மட்டும் என்னை நீ கொலை செய்ய நினைக்கலன்றது எனக்கு நல்லாவே தெரியும்.


எனக்கும் பாகிக்குமிடையே உள்ள உறவு உனக்கு நல்லா தெரியும். அது தெரிஞ்சுதான் நீ அவளைக் கல்யாணம் செஞ்சே. டேய், எங்க ரெண்டு பேருக்குமிடையே இருந்த உறவு பல பிறவிகளின் தொடர்ச்சியா இருந்தது. அது தெரியாம நீ அவளைக் கொடுமைப்படுத்தினே. சரி... அது இருக்கட்டும். அவளுக்கு அதைத் தாண்டியும் சகிச்சிக்கிட்டு இருக்குற அளவுக்கு மனதைரியம் இருக்கு. அவ யார்னு உனக்குத் தெரியாது.”

“அவறாச்சா, என்னை மன்னிச்சிடுங்க...”

“உன்னை நான் மன்னிக்கணுமா?  இங்கே பாரு... சாராம்மா பயந்து போய் செத்து கிடக்கா. என்னோட பழைய பொண்டாட்டி. நீ அவ்வளவு சீக்கிரம் சாவேன்னு நான் நினைக்கல...”

அவர் குறுப்பை நெருங்கினார். அவரின் கழுத்தைப் பிடித்து நெறித்தார். சிறிது நேரத்தில் ஒரு கோழியைக் கொல்வதைப் போல கழுத்தை முறுக்கி, அவரைக் கீழே போட்டார். ஒரு சிறு அலறலோ அசைவோ எதுவும் இல்லாமல் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு செத்துக் கீழே விழுந்தார்.

அவறாச்சன் மெதுவாகப் படிகளில் இறங்கினார். கீழே வேலப்பன் அப்போதும் சுயநினைவில்லாமல் கிடந்தான்.

அவறாச்சன் வெளியே இருட்டில் நடக்க ஆரம்பித்தார்.

பொழுது புலரும் நேரத்தில்தான் வேலப்பன் கண்களைத் திறந்தான். அவன் முதலில் மாடிக்குச் சென்று பார்த்தான். அடுத்த நிமிடம் ஒரு அலறல் சத்தத்துடன் கீழே இறங்கி ஓடிவந்தான்.

வெளியே சென்று அவன் உரத்த குரலில் கத்தினான்: “ஆட்டக்களத்தில் அவறாச்சன் திரும்பி வந்திருக்காரு...”

“போடா, பைத்தியக்காரத்தனமா ஏதாவது உளறாதே.”

“நான் சொல்றது பைத்தியக்காரத்தனம்னு நினைக்கிறவங்க போய் பாருங்க. ஆட்டக்களத்தில் வீட்டுல ரெண்டு பேரை அவர் கொன்னு போட்டிருக்காரு!”- பைத்தியம் பிடித்தவனைப் போல அவன் சொன்னான்.

போலீஸ்காரர்களும் பொதுமக்களும் அங்கு போய் பார்த்தபோது, படுக்கையறையில் இரண்டு பிணங்கள் கிடந்தன. ஒன்று பயத்தால் இறந்ததென்றும், இன்னொன்று கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதென்றும் ‘போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’ சொன்னது.

கழுத்தில் இருந்த விரல் அடையாளங்கள் அவறாச்சனுடையவை தான் என்பதை நிபுணர்கள் கண்டுபிடித்தார்கள்.

அதற்குப் பிறகு அவறாச்சனை யாரும் பார்க்கவில்லை. ஆட்டக்களத்தில் வீட்டின் படுக்கையறையை விட்டு வெளியேறிய அவர் அந்த இருட்டில் அதற்குப் பிறகு எங்கு போனார் என்ற விஷயம் உண்மையாகவே சொல்கிறேன்- இதை எழுதுகின்ற ஆளுக்குக்கூட தெரியாது.

மன்னிக்க வேண்டும்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.