Logo

ஐந்து சகோதரிகள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6662
Aindhu Sahodharigal

சுராவின் முன்னுரை

1961-ஆம் ஆண்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) எழுதிய இந்தக் கதையை ‘ஐந்து சகோதரிகள்’ (Aindhu Sahodharigal) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பதற்காகப் பெருமைப்படுகிறேன். நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் மக்கள்மீது தகழி எந்த அளவிற்கு ஈடுபாடும், பாசமும் கொண்டிருந்தார் என்பதை, இந்நூலை வாசிக்கும்போதும், மொழிபெயர்க்கும் போதும் உணர்ந்திருக்கிறேன்.

காலத்தை வென்று நிற்கக்கூடிய அமர காவியங்களைப் படைத்த தகழி இப்போது நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் படைத்த சாகாவரம் பெற்ற இலக்கியக் கருவூலங்கள் என்றென்றும் வாழும் என்பதென்னவோ நிச்சயம்.

‘ஐந்து சகோதரிகள்’ நிச்சயம் ஒரு கற்பனைக் கதை அல்ல. தான் பார்த்த விஷயங்களைப் புதினமாகத் தகழி ஆக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மையாக இருக்கவேண்டும். இதில் வரும் ஜானகி. திரேஸ்யா, அப்து- இவர்களில் யாரை நம்மால் மறக்க முடியும்? ஜானகியைப் போன்ற மெழுகுவர்த்திகள், தியாக தீபங்கள் இன்றும்கூட நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்கள் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பி வணங்குவோம்.

அருமையான ஒரு இலக்கியப் படைப்பை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறோம் என்ற உணர்வும், திருப்தியும் இதை மொழி பெயர்த்து முடிக்கும்போது எனக்கு உண்டானது. அத்தகைய உணர்வை இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


ங்கு போகிறோம் என்று தெரியாமலே ஜானகி போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய தலைக்குள் நெருப்பு பிடிக்க வைத்துக் கொண்டிருப்பது அந்தச் சிந்தனையல்ல. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு... அப்போது அவளுடைய தாயும், தந்தையும் இருந்தார்கள். இந்த மாதிரியே ஒரு பதைபதைப்பான சூழ்நிலை அப்போதும் உண்டானது. அன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த பப்பு மரியாதை கெட்டத்தனமாக நடந்து கொண்டான். அவளைக் காதலிப்பதாக அவன் சொன்னான். அவள் பல நாட்கள் அந்த நினைப்பு தந்த சுகத்துடன் திரிந்தாள். அப்போது ஜானகிக்கு இருபது வயது நடந்து கொண்டிருந்தது.

அந்த நாட்களில் பப்பு தன்னைக் காதலிக்கிறான், காதலிப்பான் என்ற எண்ணங்களுடனே அவள் இருந்தாள் என்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்சினையும் உண்டாகவில்லை. எப்படியோ அப்போது அவள் தப்பித்து விட்டாள். பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு ஆபத்து நடந்திருக்கிறது. ஆனால் மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் என்பதுதான் வித்தியாசம். யாரும் அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை. அவள் சிந்தித்துப் பார்த்தாள்- முப்பத்து எட்டாவது வயதில் ஒருத்தி கர்ப்பிணியாவாளா என்ற விஷயத்தை.

ஜானகி ஒரு வீட்டில் கடந்த பத்து பதினைந்து நாட்களாக வேலைக்காரியாகப் பணியாற்றினாள். அங்கு போய்ச் சேர்ந்தஒரு வாரத்திலேயே அந்த வீட்டின் சொந்தக்காரர் தன்னை நோட்டமிடுகிறார் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். நேற்று இரவில் அது நடந்தது. அவளால் அந்த மனிதரை எதிர்க்க முடியவில்லை. அழவும் முடியவில்லை. பொழுது புலர்வதற்கு முன்னால் அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறி, எங்கு போகிறோம் என்று தெரியாமலே போய்க் கொண்டிருக்கிறாள்.

அவள் பயப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவள் தாலுகா நீதிமன்றங்களில் குமாஸ்தாவாகப் பணியாற்றிய பரமு பிள்ளையின் மூத்த மகள். பரமு பிள்ளைக்கு அவளையும் சேர்த்து மொத்தம் ஐந்து மகள்கள் மட்டும் இருந்தார்கள். ஐந்து மகள்களும் திருமண வயதைத் தாண்டிய பிறகும், யாருக்கும் திருமணம் செய்து வைக்க பரமு பிள்ளையால் முடியவில்லை. தந்தையும், தாயும் அதற்காக எவ்வளவோ முயற்சி பண்ணினார்கள். அப்படி இருக்கும்போதுதான் அவர் மரணத்தைத் தழுவினார். நிலைமை அப்படி இருக்க, ஒரு குழந்தை உண்டாவது, அதுவும் பெண் குழந்தை என்ற விஷயங்களை நினைத்தால் அவளுக்குப் பயம்தான். வீடும் கூடும் இல்லாத அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால்...? அவள் என்ன செய்வாள்?

அந்த வீட்டில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு சிறிது நாட்கள் அவள் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்தாள். அங்கிருந்தும் அவள் யாருக்கும் தெரியாமல் ஓடவே செய்தாள். அங்கு வேலை செய்த நாட்களில் அவளால் இரவு நேரங்களில் தூங்கவே முடியாது. ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள் அவளைத் தொந்தரவு செய்தார்கள். ஒரு பெண்ணாகப் பிறந்ததற்கான சிரமங்கள் இவ்வளவு இருக்கின்றனவா என்று அவள் அறிந்திருக்கவில்லை.

முடிவற்ற ஒரு பாதை வழியே அவள் போய்க் கொண்டிருந்தாள். உச்சிப் பொழுது வந்ததும், ஒரு மர  நிழலில் அவள் உட்கார்ந்தாள். அந்த மர  நிழலில் அமர்ந்து சிறிது நேரமானதும் வேறொரு தளத்தை நோக்கி அவளுடைய சிந்தனை சென்றது. அந்த வீட்டிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று அவள் சிந்தித்துப் பார்த்தாள். அந்த வீட்டின் சொந்தக்காரர் அதற்குப் பொறுப்பேற்றிருப்பார். அவர் எல்லா விஷயங்களைப் பற்றியும் சிந்திக்காமலா இருந்திருப்பார்? ஊரும் சொந்தக்காரர்களும் இல்லாத அவள் பெண்களின் புனிதத்தன்மையைப் பற்றி இந்த அளவிற்கு சிந்திக்கத்தான் வேண்டுமா? அந்த இரவில் தனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி அவளுக்கே தெளிவாகத் தெரியாது.

நீதிமன்ற குமாஸ்தா பரமுபிள்ளை தன்னுடைய ஐந்து மகள்களையும் தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். அதற்குப் பிறகு அதிக நாட்கள் அந்தப் பெண்ணால் அவ்வளவு பெரிய சுமையைச் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை. நான்கு மகள்களையும் மூத்த மகளிடம் ஒப்படைத்து விட்டு அவள் இறந்துவிட்டாள். அந்த மூத்த மகள்தான் ஜானகி. இப்படித்தான் நான்கு தங்கைமார்களையும் காப்பாற்றக் கூடிய பொறுப்பு ஜானகி மீது விழுந்தது.

இருபது சென்ட் உள்ள வீடும் நிலமும்தான் அவர்களின் ஒட்டுமொத்த சொத்து. ஐந்து பெண்கள் வாழ வேண்டும். அந்த வீட்டில் வாழ்வதற்காக ஒரு பெரிய போராட்டமே நடந்தது. சகோதரிகளில் தைரியசாலியாக இருந்தவள் பாரதி. ஒருநாள் காலையில் அவள் காணாமல் போய்விட்டாள். அவர்களின் வீட்டிற்குச் சற்று தூரத்திலிருந்த ஒரு பெரிய கிறிஸ்தவர்கள் வீட்டில் வேலைக்காரனாக இருந்தவனும் அதே நேரத்தில் காணாமல் போனான். இரண்டு பேரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டார்கள் என்று நினைப்பதற்கு நியாயங்கள் இருக்கின்றன. எப்படியென்றால் அந்த உறவைப் பற்றி ஜானகிக்கும் சந்தேகங்கள் இருந்தன. முதலில் அவள் அறிவுரைகள் சொன்னாள். பிறகு அவனைப் பார்க்காமல் அவள் இருக்கும்படி செய்தாள்.

எப்படி எங்கேயிருந்து கிடைத்தது என்று தெளிவில்லாத காசை அந்த வீட்டிற்காக பாரதி செலவழித்திருக்கிறாள். அந்தக் காசைக் கொடுத்து வாங்கிய அரிசியை வேக வைத்து உண்டான சோற்றை ஜானகியும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு, இல்லை என்று கூற முடியாது. எனினும் ஒரு நாள் ஜானகிக்கும் பாரதிக்குமிடையே ஒரு பெரிய சண்டை உண்டானது. அந்த மாப்பிள (கிறிஸ்தவன்)யுடன் கொண்டிருக்கும் உறவு ஜாதிக்கு ஒத்து வராது. வர்க்கியை இரவில் அந்த வீட்டிற்குப் போய் ஜானகி பார்த்து விஷயத்தைச் சொன்னாள். அதையெல்லாம் தாண்டி பாரதி தன்னுடைய தீர்மானம் என்னவென்று முடிவாகச் சொல்லிவிட்டாள்.

பிறகு பாரதியைப் பற்றி நம்புகிற செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை. சங்ஙனா சேரியிலோ வேறு ஏதோ ஒரு ஊரிலோ அவளை ஒரு பெண் குழந்தையுடன் பார்த்ததாக யாரோ சொன்னார்கள். தங்கை தங்களை விட்டு போய் விட்டாலும் பாரதி தப்பித்துப் போய்விட்டாள் என்று பல நேரங்களில் ஜானகிக்கும் பவானிக்கும்மெல்லாம் கூட மனதில் தோன்றும். ஆனால், அவள் உண்மையிலேயே தப்பித்து விட்டாளா? என்ன இருந்தாலும், பாரதி மிகவும் பிடிவாதக்காரிதான். தான் எங்கிருக்கிறோம் என்பதைப் பற்றியோ எப்படி வாழ்கிறோம் என்பதைப் பற்றியோ அவள் அவர்களுக்குத் தெரியப்படுத்தவேயில்லை. அவள் நிரந்தரமாக அவர்களை விட்டுப் பிரிந்து போய்விட்டாள் என்பது மட்டுமே உண்மை.

ஒருவேளை பாரதி நல்ல நிலைமையுடன் எங்கேயாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் அந்த வாழ்க்கை தகர்ந்து போயிருக்கலாம். ஆரம்பத்தில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏதாவது வரும் என்று நான்கு சகோதரிகளும் காத்திருந்தார்கள். அது மட்டுமல்ல.


அவள் போனது ஒரு ஆணுடன். ஏதாவது சிறு சிறு உதவிகள் கிடைக்காதா என்று கூட அவர்கள் எதிர்பார்த்தார்கள். என்ன இருந்தாலும், அவர்களுடன் பிறந்தவளாயிற்றே! எப்போதாவது ஒருமுறை பாரதி தங்களைப் பற்றி நினைக்காமல் இருக்கமாட்டாள் என்று அவர்கள் நினைத்தார்கள். அவளுடைய வாழ்க்கை தகர்ந்து போயிருக்கலாம் என்று அவர்கள் பிறகு நம்பத் தொடங்கினார்கள்.

ஆலப்புழை கயிறு தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஒரு பெண் பவானியை அழைத்துக் கொண்டு போனாள். அந்தப் பெண் அவர்களின் வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு வரக்கூடியவள். அவள் அவர்களுக்கு அறிமுகமானாள். அப்படித்தான் பவானி அந்தப் பெண்ணுடன் சென்றாள். பவானிக்கு வேலை கிடைக்கவும் செய்தது. அந்த விவரங்களைச் சொல்லி அவள் கடிதம் எழுதி அனுப்பினாள். பவானிக்குத் தன்னுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட சில லட்சியங்கள் இருந்தன. ஆனால், அவளைப் பற்றியும் எந்தவொரு தகவலும் இல்லாமற்போனது. அவளுக்கு என்ன நடந்ததோ? என்னவோ? அவளை அழைத்துக் கொண்டு போன பெண்ணும் இறந்துவிட்டாள்.

இவற்றையெல்லாம் விட துக்கம் நிறைந்த கதை கவுரியுடையது. அவள் எர்ணாகுளத்திற்கு ஒரு வீட்டில் வேலை செய்வதற்காகச் சென்றாள். பரமுபிள்ளையின் அலுவலகத்தில் சிப்பாயியாக இருந்த ஒரு ஆள்தான் அவளை அழைத்துக் கொண்டு போனான். அவள் வேலைக்குப் போன நாளிலிருந்து அந்த வீட்டிற்குக் கணிசமான அவளில் பிரயோஜனம் இருந்தது. ஒவ்வொரு மாதமும் அவள் ஏழு ரூபாய் அனுப்பி வைப்பாள். எல்லா மாதமும் பத்தாம் தேதிக்கு முன்பு ஒருநாள் தபால்காரன் அங்கு வருவான். அந்தக் குடும்பத்திறகு முழுமையான ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது என்றால் அது அந்தச் சமயத்தில் மட்டும்தான். எங்களுக்கு இது இருக்கிறது என்று நம்பிக்கையுடன் அவர்களால் கூற முடிந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. ஒருநாள் ஒரு கடிதம் வந்தது- கவுரி இறந்துவிட்டதாக. மருத்துவமனையில்தான் அவள் இறந்திருக்கிறாள். அதற்கடுத்த நாள் இருபத்தைந்து ரூபாய் கொண்ட ஒரு மணியார்டர் வந்தது. அத்துடன் கவுரி சம்பந்தப்பட்ட எல்லா கணக்குகளும் முடிவுக்கு வந்தன.

ஜானகியும் இளைய தங்கையும் தனியானார்கள். மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவள் பத்மினி. அவளுக்காகவது முறைப்படி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஜானகி பிரியப்பட்டாள். ஒரு தந்தை- தாய்க்குப் பிறந்த பிள்ளைகளெல்லாம் எங்கோ போய்விட்டார்கள். ஒருத்திக்காவது நல்ல வாழ்க்கை கிடைத்து அந்த வம்சம் நிலைபெறட்டும். அதற்காக ஜானகி ஒரு திட்டமே தீட்டி வைத்திருந்தாள்.

அவர்களுக்கென்று இருந்தது இருபது சென்ட் நிலம் மட்டும்தானே! பரமு பிள்ளையின் சம்பாத்தியம் அது. மூத்த மகள் ஜானகியின் பெயருக்கு அதை எழுதி வாங்கியிருந்தார் பரமுபிள்ளை. அந்த இருபது சென்ட் நிலத்தையும் வீட்டையும் பொருத்தமான ஒருத்தன் பத்மினியைத் திருமணம் செய்து கொள்ள வரும் சூழ்நிலையில் அவனுக்கு மனப்பூர்வமாகக் கொடுக்க தயாராக இருந்தாள் ஜானகி.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்மினிக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது. அவனுக்கு ஒரு சிறு வேலை இருந்தது. ஆள் பார்ப்பதற்கும் பரவாயில்லை என்று இருந்தான். பத்மினிக்குப் பொருந்தக் கூடியவன்தான். அதற்குப் பிறகு எந்த விஷயத்தைப் பற்றியும் ஜானகி யோசிக்கவில்லை. அதற்கு மேல் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையும் அவளுக்கு இல்லை. அவன் பெயருக்கு ஜானகி அந்த நிலத்தை எழுதிக் கொடுத்தாள். அதுதான் அப்போதைய வழக்கமாக இருந்தது. பத்மினியின் திருமணம் நடந்தது. பிறகு உண்டான ஒரு நீளமான கதையின் சுருக்கம். கொச்சு மாது மது அருந்தக்கூடியவனாக இருந்தான். சரியான முட்டாளாகவும் இருந்தான். அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே ஜானகி அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உண்டானது. அவள் அடித்து விரட்டப்பட்டாள் என்று கூறுவதே சரியாக இருக்கும். பத்மினியும் அதற்கு உடந்தையா என்று கேட்டால், அப்படிப்பட்ட ஒரு தவறை அவள் செய்துவிட்டாள் என்று கூறுவதற்கு இடம் கொடுக்காமல் ஜானகி வெளியேறிவிட்டாள் என்று கூறுவதுதான் பொருத்தமானது. கடைசி தங்கையாவது கணவனுடன் சேர்ந்து வாழட்டும் என்று ஜானகி நினைத்தாள். அந்தக் குடும்பத்தில் ஒரு திருமணம் நடந்தது என்றால் அது பத்மினியின் திருமணம் மட்டும்தான். அந்த உறவுக்குப் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று அவள் நினைத்தாள்.

அப்போது வீட்டைவிட்டு வெளியேறிய ஜானகி தனக்கு முன்னால் நீண்டு கிடந்த சாலை வழியே நடந்தாள். அவள் வேலைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிடியில் சிக்கிச் செயலற்று நின்று விட்டபோது ஆண் தொட்டால் பெண்மை கிளர்ச்சி பெற்று எழும் என்ற பொதுவான நம்பிக்கை பொய்யென்று அவளுக்குப்பட்டது. இரண்டாவது தடவையாக அவள் விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்டாள். ஆனால், அந்தப் பழத்தின் சுவையை அவள் அறியவில்லை. அவளுக்கு அது பயத்தைத் தந்தது. அந்தப் பயத்துடன் அவள் வீட்டை விட்டு வெளியேறினாள். அந்தப் பயத்துடன் தான் சிறிது நேரம் அவள் நிற்கவும் செய்தாள். இப்போது அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். அந்தப் பயத்துடன்தான் அவள் நிற்கவும் செய்தாள். இப்போது அந்த வீட்டை விட்டு அவள் நீண்ட தூரம் வந்து விட்டாள். பசியும் தாகமும், களைப்பும் இருந்தாலும், கிளைகளைப் பரப்பி நின்றிருந்த அந்த மரத்தின் குளிர்ந்த நிழலில் அவளுடைய சிந்தனை பல திக்குகளுக்கும் ஓடியது.

நேற்று இரவு நடைபெற்ற சம்பவத்தை அவள் நினைத்துப் பார்த்தாள். அது ஒரு இனிமையான அனுபவமாக இருந்ததைப் போல் தோன்றக்கூடிய ஒரு உணர்வு அவளிடம் இருந்தது. நீண்ட நேரம் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் விரும்பாமலேயே அந்த அனுபவக் கீற்றுகள் அவளுடைய நினைவில் தோன்றிக்கொண்டே இருந்தன. அப்படி அதை நினைக்க வேண்டும் என்று கூட அவள் விரும்பவில்லை.

முப்பத்தெட்டு வயதான ஒரு பெண்ணின் பெண்மைத்தனம் விகசிப்பு அடைகிறது. அவள் அந்த வீட்டிலேயே இருந்திருந்தால், ஒருவேளை அதற்குப்பிறகும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மெதுவாகக் கதவைத் திறந்து அவருடைய மனைவிக்குத் தெரியாமல் ஜானகி இருந்த அறைக்குள் நுழைந்திருப்பார். ஜானகி கர்ப்பம் தரிப்பதாக இருந்தால், அதற்குக் காரணமான அந்த மனிதர் அதற்குப் பரிகாரம் செய்யாமலா இருப்பார்? எனினும், பிள்ளை பெற அவள் விரும்பவில்லை. ஜானகிக்கு கர்ப்பத்தைப் பற்றி முன்பு இருந்த அளவிற்கு இப்போது பயம் இல்லை. தனக்கு அப்படி ஆபத்து எதுவும் இல்லை. தனக்கு அப்படி ஆபத்து எதுவும் வராது.


என்றொரு நம்பிக்கை எப்படியோ அவளுக்கு வந்துவிட்டது. ஆனால், அப்படி ஏதேனும் ஆபத்து வந்தால்? அப்படியானால் அந்த வீட்டை விட்டு வெளியேறியது ஒரு முட்டாள்தனமான செயலோ?

ஜானகி எழுந்து நடந்தாள். அந்த வீட்டிற்குத் திரும்பி அல்ல எந்த இலக்குமில்லாமல் முன்னோக்கி அவள் நடந்தாள்.

மாலை நேரம் வந்தது. எங்காவது ஒரு கூரைக்குக் கீழே அபயம் தேட வேண்டும். பாதையோரத்தில் இருந்த ஒரு சிறு வீட்டின் வாசலில் ஒரு மனைவியும் கணவனும் அமர்ந்திருப்பதை அவள் பார்த்தாள். அவள் அங்கு சென்றாள். அன்று இரவு அங்கு தங்கிச் செல்ல தன்னை அனுமதிக்க முடியுமா என்று கெஞ்சிக் கேட்டாள். ஆனால், சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. கணவன் மனைவியிடம் கேட்டார்: "என்னடி, அந்தப் பெண் கேட்டது காதுல விழலியா!"

மனைவி பதில் சொன்னாள்: "ம்... இன்னைக்குத் தங்கிக்கட்டும்!"

அந்த இல்லத்தரசியின் அனுமதி கிடைத்தது, ஒரு மனதில்லா  மனதுடன்தான் என்பதை ஜானகி புரிந்து கொண்டாள்.

அந்த இரண்டு பெண்களும் இரவில் இருட்டுவது வரை பேசிக் கொண்டிருந்தார்கள். ஜானகி தன்னுடைய கதையை விரிவாகக் கூறுவதற்கு நேரம் அதிகம் ஆகுமல்லவா? அந்தக் கதை சற்று நீளமானதுதானே? பகலில் நடந்து வந்த களைப்பு அதிகமாக இருந்தாலும், ஜானகிக்கு உறக்கமே வரவில்லை. சாதாரணமாக ஒரு ஆள் தூங்குவதற்குப் படுத்து, தூக்கம் வரக்கூடிய நேரம் தாண்டிய நேரத்தில் பக்கத்து அறையில் கணவர் மனைவியிடம் கேட்பது அவள் காதில் விழுந்தது.

"அடியே! அந்தப் பெண் எங்கேயிருந்து வர்றாப்ல?" மனைவி ஜானகியின் கதையை விளக்கி அவரிடம் சொன்னாள். அந்தப் பெண் சொன்னாள்: "அவள் ஒரு வீட்டு வேலைக்காகப் போயிருக்கா. நேத்து அந்த வீட்டின் சொந்தக்காரர் அவ அறைக்குள்ள நுழைஞ்சிட்டாருன்னு அவ சொல்றா. வீட்டில இருக்கிறவங்க கண் விழிக்கிறதுக்கு முன்னாடி அங்கேயிருந்து கிளம்பியாச்சாம்..."

ஒரு நிமிடம் கழித்து அந்தப் பெண் தொடர்ந்தாள்:

"எனக்குத் தோணுறது என்னன்னா, அந்தப்பெண் அந்த வீட்டுச் சொந்தக்காரரை கைக்குள்ள போடப் பார்த்திருக்கா. வீட்டம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. ராத்திரியோட ராத்திரியா அவங்க அடிச்சு வெளியே விரட்டிட்டாங்க. அதுதான் உண்மையிலேயே நடந்திருக்கும். இருந்தாலும் நம்மகிட்ட அவ கற்புக்கரசி மாதிரி நடிக்கிறா. நேற்றுத்தான் அவளுக்கு அப்படி ஒரு அனுபவம் உண்டானதுன்னு அவ சொல்றா. அவ அதைச் சொன்னப்பவே, எல்லாம் சுத்தமான பொய்யின்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு. அதுக்கு முன்னாடி வரை அவ மேல நான் இரக்கப்படத்தான் செய்தேன். வீட்டு வேலை செய்யிற பெண்தானே! மோசமானவளாத்தான் இருப்பா!”

அந்த மனிதர் சொன்னார்.

"இல்லடி... அந்தப் பெண்ணைப் பார்க்குறப்போ அவ ஒரு கேவலமான பெண் மாதிரி மனசுக்குத் தோணல. அந்தப் பெண்ணோட முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சுக்கலாம்!"

கிண்டலுடன் அந்த மனைவி சொன்னாள்:

"அப்படின்னா நாம இங்கேயாவது அவளைக் குடி வச்சிடலாம். சரிதானா?"

ஒரு செயலற்ற மனிதரைப் போல அவர் கூறுவது ஜானகியின் காதில் விழுந்தது.

"அப்படின்னு நான் சொன்னேனா?"

மனைவி கேட்டாள்:

"எனக்குத் தெரியும் யார் எப்படின்னு. உடம்பு முழுக்கத் துணி சுத்தினா, தூக்கிப் பார்க்கிற ஆளு அவன்றது பார்த்தாலே தெரியுதே!"

"இருட்டுல வீட்டைத் தேடி வந்த ஒரு பெண்ணோட முகத்தைப் பார்த்து நல்லா தெரிஞ்சுக்கிட்ட! பொழுது விடியட்டும். நான் சொல்லி அனுப்பிடுறேன்!"

அவருக்கு அதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், அவர் ஒன்று சொன்னார். தெருவே கதி என்ற நிலையில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி எதையும் பேசக்கூடாது என்று அவர் சொன்னார். அதைக் கேட்டு அந்த மனைவி பயறு வறுப்பதைப் போல சொன்னார்:

"ஒருத்தி ராத்திரி நேரத்துல வீட்டைத் தேடி வந்துட்டா. அதுனால எனக்குத்தான் ஈட்டி மேல படுத்து இருக்குற மாதிரி இருக்கு!"

கணவர் கேட்டார்! "ஏன் அப்படிச் சொல்றே?"

"என்னால உறங்க முடியுமா? ராத்திரி நேரத்துல என்கிட்ட இருந்து எந்திரிச்சுப் போய் நீங்க அவ இருக்குற அறைக்குள்ள நுழைஞ்சிட்டா?"

"அவ படுத்திருக்குற இடத்துக்கு வீட்டுல இருக்குற ஆண் எப்படி எழுந்திருச்சுப் போக முடியும்?"

"அப்படித்தானே நேற்று நடந்திருக்கு. அதுனாலதானே அவளை அடிச்சு விரட்டியிருக்காங்க..."

மறுநாள் காலையில் பொழுது புலர்வதற்கு முன்பே ஜானகி எழுந்து வெளியேறினாள். வீட்டின் சொந்தக்காரி அவளைப் போகச் சொல்வதற்கு முன்பே அவள் புறப்படத் தயாராக இருந்தாள். எனினும், தான் உண்மையானவள் என்பதை அந்தப் பெண்ணுக்குப் புரிய வைக்க வேண்டுமென்று ஜானகி விரும்பினாள். எப்படி அவளுக்குப் புரிய வைப்பது? அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல- உலகத்திற்கே அவள் எப்படி அதைப் புரிய வைப்பாள்? சத்தியம் பண்ணிச் சொல்லலாம். காலைப் பிடித்துக்கொண்டு கூறலாம். எல்லாவற்றையும் பொய் என்றுதான் மனிதர்கள் கூறுவார்கள். இந்த அகன்ற சாலையில் நடக்கும் போது அவளைப் பார்க்கும் ஆட்கள் ஒரு நல்ல பெண் நடந்து போகிறாள் என்று கூறமாட்டார்கள். இந்த உலகத்தில் அவள் யாருடனும் எதைப் பற்றியாவது பேச வேண்டிய சூழ்நிலை உண்டானால், நல்லவளாக இல்லாத ஒரு பெண் பேசுகிறாள் என்ற எண்ணத்தில்தான் அவர்கள் அவள் சொல்வதைக் காதில் வாங்குவார்கள். அவளுடைய துரதிர்ஷ்டம் என்றுதான் இதையெல்லாம் கூறவேண்டும்! அவள் வீட்டின் சொந்தக்காரரை கைக்குள் போடப் பார்த்தாளாம்! தெருவே கதி என்றிருக்கும் அவளுக்கு இரவு நேரத்தில் தங்கிச் செல்ல அனுமதி அளித்த பெண்ணின் கணவர் மெதுவாக ஊர்ந்து போய் அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்து விடுவாராம்! இனியும் இப்படிப்பட்ட எத்தனையெத்தனை பேச்சுக்களை அவள் சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கும்!

மனைவியும் கணவரும் தூக்கத்திலிருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை. அவள் வாசலில் நின்றவாறு சொன்னாள்:

"நான் கிளம்புறேன்!"

வீட்டின் சொந்தக்காரர்கள் வெளியே வந்தார்கள். நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் ஜானகி சொன்னாள்:

"என் வாழ்க்கையில் நான் இதை மறக்க மாட்டேன். அவ்வளவு பெரிய உதவியை நீங்க செய்திருக்கீங்க..."

வீட்டின் சொந்தக்காரி அந்த நன்றி வார்த்தைகளைக் காதில் வாங்கின மாதிரி தெரியவில்லை. ஜானகியின் கண்கள் நீரால் நிறைந்திருப்பதை அந்த மனிதர் பார்த்தார்.

மிகவும் சோர்வுடன் நடந்து செல்லும் அவளையே பார்த்தவாறு அவர் நின்றிருப்பதை நீண்ட நேரமாக அந்த மனைவி கவனித்துக் கொண்டிருந்தாள். அந்த மனிதர் தன்னையே மறந்துவிட்டதைப்போல் இருந்தது. அதைப் பார்த்து அவளுக்கு எரிச்சல் வந்தது.

மனைவி அவரைத் திட்டினாள்:


"அவள் இதயத்தை உங்ககிட்ட இருந்து பறிச்சிட்டுப் போயிட்டாளா? என் கடவுளே, இப்படியும் ஆம்பளைங்க இருப்பாங்களா? ரோடு ரோடா விபச்சாரம் பண்ணிக்கிட்டு திரியிற ஒருத்தி இங்கே வந்தா. அவளைப் பார்த்துக்கிட்டு நிக்கிற கோலத்தை நீ பார்த்தியா?"

அந்தக் கணவர் ஒரு கனவிலிருந்து எழுந்ததைப் போல சொன்னார்:

"இல்லடி... நீ சொல்றது மாதிரி பெண் இல்லை. அவ அந்தப் பெண்ணைப் பார்க்குறப்பவே ஒரு குடும்பத்தனம் தெரியுது!"

அந்த வகையில் ஒரு மனிதரின் மனதில் தன்னைப் பற்றிப் பரிதாபப்படும்படியான ஒரு தோற்றத்தை அவளால் உண்டாக்க முடிந்தது. அவ்வளவுதான் அந்த மனிதரின் இரக்கம் என்றாவது எப்போதாவது அவளுக்குப் பயன்படுமா?

2

ச்சிற கோவிலில் இருந்த ஒரு ஆலமரத்திற்குக் கீழே காவி ஆடை அணிந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது தள்ளி ஒரு இடத்தில் வயதான மூன்று நான்கு சாதுக்கள் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு வயதான பெண் சொன்னாள்:

“நீங்க அதைப் பார்த்தீங்களா?”

மற்றொரு கிழவி சொன்னாள்:

“அந்தப் பெண் சாதுவா என்ன? பார்க்குறதுக்கு வயசு குறைவு மாதிரி தெரியுதே?”

முதல் கிழவி அந்த நோக்கத்தில் இந்த விஷயத்தைப் பார்க்கவில்லை. அவள் கேட்டாள்: “இந்தக் கோவிலோட பேரு இந்த மதாரி விஷயங்களால்தான் கெட்டுப்போகுது. கோவிலுக்குச் சாதுவா வர்றவங்க உண்மையான துறவுத் தன்மையுடன் இருக்கணும். அதை விட்டுட்டு காதல் செய்யிறதுக்கு இல்ல... இந்தத் திருச்சந்நிதியில உட்கார்ந்துக்கிட்டு இதெல்லாம் செய்யக் கூடாது!”

மூன்றாவது ஒரு கிழவி இடையில் புகுந்து சொன்னாள்:

“அவங்க என்ன செய்யிறாங்கன்னு சொன்னே?”

முதல் கிழவி ஒரு பெரிய வாக்குவாதத்துக்குத் தயாரானாள். துறவு எண்ணத்துடன், பக்தி மனதில் இருக்க வருபவர்கள் மட்டுமே இந்த இடத்திற்கு வரணும்” - அவள் சொன்னாள்.

இரண்டாவது கிழவி அதற்குப் பதில் சொன்னாள்: “அப்படிச் சொல்றதா இருந்தா நாம யாருமே இங்கே வந்திருக்கக் கூடாது. நம்ம விஷயத்தையே கொஞ்சம் நினைச்சுப் பாரு. வீடோ , அங்கு ஒரு நேர உணவு கொண்டு வந்து தர ஆளுங்களோ இருந்தா நாம யாராவது இங்கே கோவிலைத் தேடி வருவோமா? பிழைக்கிறதுக்காக கடவுள் பேரைச் சொல்லிக்கிட்டு நாம இங்கே வந்து இருக்குறோம். இப்போ அந்த ஜானகி விஷயத்தையே எடுத்துக்குவோம். அவ வயசுல சின்னவதானே? சந்தோஷமா ஒருத்தன்கூட வாழவேண்டிய வயசு. நல்ல பெண் அவ. நம்மளைப் பற்றி கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும். அவ வயசுல நாம எப்படி இருந்தோம்? நாம இந்த மாதிரி காவி ஆடை அணிஞ்சுக்கிட்டு கடவுள் பெயரைச் சொல்லிக்கிட்டு திரிஞ்சோமா?

முதல் கிழவி இரண்டாவது கிழவி சொன்னதை ஒத்துக்கொள்ளக் கூடிய குணத்தைக் கொண்டவள் அல்ல. இப்படிப்பட்ட ஆட்கள் வந்து கோவிலைச் சுற்றியுள்ள இடங்களையும் கோவிலின் புனிதத் தன்மையையும் அசுத்தமாக்கி விடுகிறார்கள் என்பது அவளுடைய குற்றச்சாட்டு. அந்தக் காரணத்தால் கோவிலுக்குக் கடவுளைத் தொழுவதற்காக வரும் பக்தர்களுக்குக் கோவிலைப் பற்றிய நம்பிக்கை கெடுகிறது. அதன் பலன் என்ன ஆனது என்பதைப் பற்றி அந்தக் கிழவி இப்படிச் சொன்னாள்:

“நாம இங்கே வந்த காலத்துல நமக்குக் கிடைச்ச காசுல பாதியாவது இப்போ கிடைக்குதா?”

மூன்றாவது கிழவி சொன்னாள்: “தர்மம் கேக்குறவங்களோட எண்ணிக்கை கூடிப்போனதுதான் அதுக்குக் காரணம்!”

முதல் கிழவி அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தர்மம் கேட்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிற அதே நேரத்தில் ஓச்சிற கோவிலின் புகழும் அதிகரித்திருக்கிறது. முன்பு வந்ததைவிட பத்து மடங்கு பக்தர்கள் கோவிலைத் தேடி வருகிறார்கள். அவள் கோபத்துடன் சொன்னாள்: “இப்போ யாராவது இங்கே வர்றாங்கன்னு வச்சுக்கோ... அதோ, அங்கே பாருங்க அவள் தலையைக் குனிஞ்சுக்கிட்டு வெட்கத்தோட உட்கார்ந்திருக்குறதையும் அந்த ஆளு அவ காதுக்குள்ள என்னவோ சொல்றதையும் பார்த்தா, தர்மம் யாசிப்பவர்களுக்கு, தர்மம் கொடுக்குறதுக்காக வர்ற ஆளுகளுக்கு என்ன தோணும்?”

கிழவிகள் எல்லாரும் அந்தப் பக்கம் பார்த்தார்கள். முதல் கிழவி சொன்ன அந்தக் காட்சியைப் பார்த்தார்கள். உண்மையாகச் சொல்லப் போனால் கிழவி சொன்னபடிதான் அந்தக் காட்சி இருந்தது. ஜானகி அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய காதுக்குள் அந்த ஆள் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். அது காதலைச் சொல்லும் பிரணவ மந்திரம் அல்ல என்று யாருக்குத் தெரியும்? எப்படித் தெரியும்?

தெருவே கதி என்று ஆகிப்போன ஒரு பெண், தெய்வத்தை ஏமாற்றுவதற்காக அல்ல, தொல்லைகள் இல்லாமல் இரவு நேரத்தில் இருக்கலாம் என்றுதான் ஓச்சிற பரப்ரம்ம சந்நிதியைத் தேடிவந்தாள். அங்கு காவி ஆடை கட்டாயம் அணிய வேண்டும் என்பது அவளுக்குத் தெரிந்தது. அவளிடம் ஒரு புடவையும் ஒரு கைலியும் இரண்டு இரவிக்கைகளும் மட்டுமே இருந்தன. அதைக் காவியில் நனைத்து அவள் ஓச்சிற கோவிலின் சாதுக்களில் ஒருத்தியாக ஆனாள்.

அங்கு வரும் பக்தர்கள் சுத்தமான மனதுடன் பிரார்த்தித்தால் பச்சிலையும் கத்திரியும்போல உடனடியாகக் காரியம் நிறைவேறும் என்று பரவலாக எல்லாரும் கூறி, ஜானகியின் காதிலும் அது விழுந்தது. அங்கு வரும் சாதுக்கள், பக்தர்கள் எல்லாருமே அத்தகையவர்கள்தான். ஜானகிக்குக் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய எதுவும் இல்லை. அவள் எதைச்சொல்லி பிரார்த்திப்பாள்? தாய், தங்கைமார்களை அவளிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டாள். அப்போது அவளுக்குப் பிரார்த்தனை செய்வதற்கு விஷயங்கள் இருந்தன. பாரதிக்கும் பவானிக்கும் பத்மினிக்கும் நல்லது நடக்க வேண்டுமென்று அடிக்கடி அவள் அப்போது கடவுளிடம் வேண்டியிருக்கிறாள். இப்போது பாரதியும் பவானியும் உயிருடன் இருக்கிறார்களோ இல்லையோ? நிச்சயமாக கவுரி உயிருடன் இல்லை. பத்மினிக்குக் கஷ்டங்கள் வரக்கூடாது என்று அவளுக்காக வேண்டுமானால் ஜானகி கடவுளிடம் வேண்டிக் கொள்ளலாம். தனக்கென்று பிரார்த்திக்க ஜானகிக்கு என்ன விஷயம் இருக்கிறது? அங்கு வந்த சில நாட்களில் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு விஷயம் எப்படியோ அவளுக்கும் வந்து சேரத்தான் செய்தது. அவள் ஓச்சிற தெய்வத்திடம் இப்படி வேண்டினாள்:

“என் தெய்வமே, எனக்குக் கெட்ட எண்ணங்கள் வராம இருக்கணும்!”

அங்கு வரும் பக்தர்களிடமிருந்து ஏதாவது கிடைக்கும். அதை வைத்து அவள் வாழ்ந்து கொள்வாள். கோவிலை விட்டு அவள் போகவில்லை. அந்தக் கோவில் வாழ்க்கையில் அவளுக்கு ஒரு தனி மெருகு வந்து சேர்ந்தது. உடல் முன்பிருந்ததை விட நல்ல நிலைக்கு வந்தது. கன்னங்களுக்கு முன்பு இல்லாத பிரகாசம் உண்டானது. யாரும் ஒருமுறை அவளைக் கட்டாயம் பார்ப்பார்கள்.


சில நாட்களாக அவள் ஒரு சாதுவை அங்கு பார்க்கிறாள். அவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஆலமரத்திற்குக் கீழே பிரதட்சணம் செய்வார்கள். அது எப்படி நடக்கிறது என்று அவர்கள் இருவருக்குமே தெரியாது. மனப்பூர்வமாகப் பேசி வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அந்த ஆணுக்குத் தீராத நோயோ, உடல் உறுப்புகளில் ஏதாவது குறைபாடோ எதுவும் இல்லை. நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குள் இருக்கக்கூடிய ஒரு மனிதன். வேண்டுமானால் பணி செய்து வாழ்க்கையை அவன் நடத்தலாம். அவனின் தோற்றம் அந்த மாதிரி இருந்தது. அவன் எதற்குச் சாதுவாக ஆனான் என்று பல நேரங்களில் ஜானகி சிந்தித்துப் பார்ப்பாள். ஏதாவது காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காகக் கோவிலைத் தேடி வந்திருப்பானோ என்று அவள் நினைப்பாள். தன்னையே அறியாமல் ஒரு ஆர்வம் அவளுக்குள் வளர்ந்தது. அந்த மனிதனைப் பற்றி மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள மற்ற யாரைப்பற்றியும் எதுவும் தெரிந்துகொள்ள வேண்டாம்.

தினமும் மதியத்திற்குப் பிறகு ஆலமரத்திற்குக் கீழே அமர்ந்து அந்த மனிதன் புராணப் பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தர்மம் யாசிப்பவர்கள் அதைக் கேட்பதற்காக அங்கு வந்து கூடுவார்கள். எப்போதும் அந்தச் சமயத்தில் அங்கு வந்து சேரக்கூடிய ஒருத்தி ஜானகி. பாகவதத்திலிருந்து தன் கண்களை எடுத்து சில வரிகளை அவளுடைய முகத்தைப் பார்த்தவாறு அவன் சொல்லுவதை அவள் பார்த்திருக்கிறாள். அப்போது தன்னையே அறியாமல் அவளுடைய தலை தரையை நோக்கி குனிய ஆரம்பிக்கும். என்ன காரணத்திற்காக அந்த மனிதன் அப்படி அவளுடைய முகத்தைப் பார்க்கிறான்?

அப்போது அவளுடைய தலை குனிந்து போவது மட்டுமல்ல- கன்னங்களில் ஒருவித பளபளப்பு உண்டாகும். வாழ்க்கையில் அனுபவித்திராத ஏதோவொன்றை அவள் அனுபவித்தாள். பல வருடங்களுக்கு முன்னால் அவளுக்கு இருபது வயது நடக்கும்போது மாமரத்திற்குக் கீழே பப்புவைப் பார்த்தபோது உண்டான மனக்கிளர்ச்சி அல்ல இது. அப்போது இருந்ததைப்போல அவளுடைய நெஞ்சு இப்போது அவளுக்குத் தோன்றவில்லை. உடம்பு நடுங்கவில்லை. சூடு உண்டாகவில்லை. ஆனால், அந்த மனிதன் தன்னைப் பார்க்கும்போது ஒரு வித்தியாசமான உணர்வு தன்னிடம் உண்டாகிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

பாகவத பாராயணம் நடக்கும் நேரங்களில் மட்டுமல்ல அந்த மனிதன் அவளைப் பார்ப்பது. அப்போது, அவள் கேட்க வேண்டும் என்பதற்காகப் படிப்பதைப்போல அவளை அவன் பார்ப்பான். அவள் நடந்து போகும்போது தனித்து இருக்கும்போது- அந்த மாதிரி எல்லா நேரங்களிலும் அவனுடைய பார்வை அவளைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஒரு பெண், அவளைக் கூர்ந்து பார்ப்பதென்பது அப்போதுதான் முதல்தடவை என்று சொல்ல வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் அப்படி தான் பார்க்கப்படுகிறோம் என்று அவளுக்கு உண்டாவது அது முதல் தடவையாக இருக்கலாம். எந்தப் பெண்ணுக்கும் அதன் விளைவாக ஒரு புத்துணர்ச்சி உண்டாகும். அவளுக்கும் அந்தப் புத்துணர்ச்சி உண்டானது.

ஒரு கண்ணாடி இருந்திருந்தால் கட்டாயம் அவள் தன் முகத்தை அதில் பார்த்திருப்பாள். குங்குமச்சிமிழ் இருந்திருந்தால் அவள் குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்திருப்பாள். அந்தக் காவியில் நனைத்த ஆடைகள் மட்டுமே அவளிடம் இருந்தன. அதை வைத்து அவள் தன்னை எப்படி அழகுபடுத்திக் கொள்ள முடியும்? எனினும், அவள் அடர்ந்த தன்னுடைய தலைமுடியைக் கோதி அழகாக முடிச்சு போட்டுத் தொங்கவிடுவாள்.

ஒருநாள் அவள் குளித்து முடித்து போய்க் கொண்டிருந்தாள். அவள் ஆலமரத்திற்குக் கீழே வந்தாள். அந்த மனிதன் அங்கு நின்றிருந்தான். வேறு யாரும் அருகில் இல்லை. அவன் கேட்டான்:

“உங்க வீடு எங்கே இருக்கு?”

யாராவது பார்க்கிறார்களா என்று பயந்தவாறு அவள் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். அவள் நிற்கவில்லை. அவளுடைய முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவள் சொன்ன பதில் இதுதான்:

“அதைத்தான் நானும் கேக்குறேன்!”

அவனுடைய கேள்வி பிடிக்காமல் அவள் அந்தப் பதிலைச் சொல்லவில்லை. ஒரு புன்சிரிப்பு அவளுடைய உதடுகளில் களிநடனம் புரிந்து கொண்டிருந்தது. அவளுடைய கண்கள் மேலே உயர்ந்தன. வேண்டுமென்றால் கூறிக்கொள்ளுங்கள். அவர்களின் கண்கள் ஒன்றோடொன்று சந்தித்தன என்று. அவள் சொன்னாள்:

“எனக்கு வீடுன்னு எதுவும் இல்ல.”

அப்போது அவனுக்கும் கூறுவதற்கு இருந்தது.

“எனக்கும் வீடு இல்ல...”

நம் இரண்டு பேருக்குமே வீடு இல்லை என்று அவள் கூற வேண்டியிருந்தது. ஆனால், அவள் கூறவில்லை. ஒருவேளை, அந்த வார்த்தைகள் மனதில் தோன்றியிருக்குமோ என்னவோ!

அவள் அந்த இடத்தை விட்டு நடந்தாள்.

அதற்குப் பிறகு அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவன் தன்னுடைய கதையைச் சொன்னான். அது அப்படியொன்றும் பெரியதாக இல்லை. அந்த மனிதனுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் தன் மனைவியைக் காப்பாற்றினான். அவன் அவள் மீது ஏராளமான அன்பை வைத்திருந்தான். அப்படியிருக்கும்போது, அவள் அவனை ஏமாற்றினாள். அவனுடைய கதை அவ்வளவுதான்.

ஜானகி கேட்டாள்:

“அப்படியில்லாத ஒருத்தி கிடைக்கணும்னு வேண்டிக்கணும்னா இந்தக் கோவிலைத் தேடி வந்திருக்கீங்க?”

அவள் தன்னுடைய கதையை முழுமையாகக் கூறி முடித்தபிறகு, அவனும் கேட்டான்:

“ஒரு நல்ல கணவன் கிடைக்கணும்ன்றதுக்காகவா நீ இந்தக் கோவிலைத் தேடி வந்திருக்கே?”

“இல்லையே!”

அப்போதிலிருந்து தான் தனக்குக் கெட்ட எண்ணங்கள் வந்துவிடக் கூடாது என்று அவள் கடவுளிடம் வேண்டிக்கொள்ள ஆரம்பித்தாள். மனமொன்றி அவள் அதற்காகப் பிரார்த்தனை செய்தாள்.

இப்போது அவள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அது அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருந்தது. சொன்னாலும் கொன்னாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கமாட்டாள்.

ஒருநாள் ஒரு நூறு தடவைகளாகவது அவன் அவளுடைய காதுக்குள் முணுமுணுப்பான்.

“நான் உன்னை விரும்புறேன்!”

“எந்த நாளாக இருந்தாலும் எப்போதெல்லாம் அந்த வார்த்தைகளை அவன் கூறுகிறானோ, அப்போதெல்லாம் ஒரு குளிர்ச்சியான புத்துணர்வு அவளுடைய நரம்புகளில் ஓட ஆரம்பிக்கும். அது ஒரு ஆனந்த அனுபவமாக அவளுக்கு இருந்தது. தன்னையே அறியாமல் அவள் கூறுவாள்:

“நானும் விரும்புறேன்!”

உண்மையாகவே அவனுக்கும் அவளுக்கும் உண்டானதைப் போலவே புத்துணர்ச்சி உண்டாகியிருக்கும்.

அந்த வயதான கிழவிகள் இந்த நிலையில்தான் அவர்களைப் பார்த்தார்கள். இரண்டு பறவைகள்- ஆணும் பெண்ணும்- மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு ‘சலபல’ என்று சத்தம் உண்டாக்கியவாறு காதலில் ஈடுபட்டிருக்கும் அல்லவா? அதே மாதிரி...


‘நான் உன்னை விரும்புறேன்’ ‘நானும் விரும்புறேன்’ என்று கூறி நீண்ட நாட்களாகிவிட்டன. அந்த அன்பு ஏதோ ஒரு அணைக்கட்டுக்குள் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதைப் போல் இருந்தது. அதற்குப் பிறகு சிறிது கூட அது முன்னோக்கி நகரவில்லை. அதற்கடுத்து என்ன என்று இருவருக்கும் தெரியவில்லையா என்ன? அன்பின் தொடர்ச்சியான பகுதி! நிச்சயமாக அந்த அசைவற்ற நிலையில் ஆணும் பெண்ணும் நீண்ட நாட்கள் அப்படியே இருந்து கொண்டிருக்க முடியாது. ஆனால், அப்படி ஓச்சிற பரப்ரம்ம சந்நிதியில் ஒரு ஆணும் பெண்ணும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த அணைக்கட்டுதான் என்ன?

ஜானகி தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அவனிடம் சொன்னாள்- ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. பப்பு, அவள் வேலைக்காரியாகத் தங்கிய வீட்டின் சொந்தக்காரர் இருவரையும் தவிர மீதி எல்லா மனிதர்களும் அந்த வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்றிருந்தார்கள். அந்த இரண்டுபேர் மட்டும் இடம்பெறவில்லை. அவர்கள் இடம்பெற வேண்டியவர்களாயிற்றே! அவர்கள் இல்லாமல், அந்த வாழ்க்கை வரலாறு முழுமையாக இருக்குமா? அவன் அவளைக் கட்டிப்பிடித்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஒருவேளை ஒரு குற்ற உணர்வுடன் அந்தப் பெயர்களையும் அவள் கூறவேண்டும் என்று இருக்கலாம். அந்தப் பெயர்களை அவள் சொல்லும்பட்சம், ஒருவேளை முப்பத்தெட்டு வயதை மனதில் வைத்து அவன் அவளை மன்னித்தாலும் மன்னிக்கலாம். அப்போது அவனுடைய அணைப்பில் இறுக்கம் இல்லாமல் கூட இருக்கலாம். முத்தத்தின் உஷ்ணமும்தான். அவள் அதைச் சொல்லவில்லை. எந்தப் பெண்ணாவது அதைக் கூறுவாளா?

ஜானகி அவ்வப்போது கேட்கும் ஒரு கேள்வி இருக்கிறது. அவனுடைய ஊர் எது என்ற கேள்விதான். அவனுடைய மனைவியின் பெயர், வயது,  அவள் இப்போது யாருடன் இருக்கிறாள்- இதுபோன்ற அந்தப் பெண்ணைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவள் நினைத்தாள். அவள் எப்படி அந்த மனிதனை ஏமாற்றினாள் என்ற கதையை அவள் தெரிந்துகொள்ள விரும்பினாள். ஆனால், அவளால் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு மனைவி காதலியைப் பற்றி அப்படிக் கேட்பாள். இரண்டாவது மனைவி முதல் மனைவியைப் பற்றி அப்படிக் கேட்பாள். அது பெண்களின் இயற்கையான குணம். தனக்கு முன் இருந்த மனைவியோ, காதலியோ தன்னுடைய வாழ்க்கையில் பங்கு பெறப்போவதில்லை என்ற விஷயம் உறுதிபடத் தெரிந்தாலும், அவள் அதைக்கேட்கவே செய்வாள். எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டாலும், போதும் என்ற எண்ணம் வராது. அவன் எல்லா விஷயங்களையும் என்று கூறுவதைவிட ஒரு விஷயத்தைக் கூட அவளிடம் சொல்லவில்லை என்பதே உண்மை. அந்த விஷயத்தை விட்டு அவன் விலகி நிற்கவே விரும்பினான். அப்படி விலகி நிற்பதற்கு எந்தக் காரணமும் இல்லையென்றால் அவன் ஏதோ பிரச்சினையில் சிக்கிக்கொண்டு கவலையில் மூழ்கியிருப்பதைப் போல் தோன்றும். அதற்குப் பிறகு ஜானகி எதைப்பற்றியும் கேட்கமாட்டாள். எதற்காக அதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தனக்குத்தானே சில சமயங்களில் அவள் கேள்வி கேட்டுக்கொள்வாள். அப்படி தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை தனக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் அப்போது அவளுக்கு எழும். இனிமேல் அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று அவள் முடிவெடுப்பாள். ஆனால், நீண்டநேரம் அவளால் அப்படியொரு தீர்மானத்தில் இருக்கமுடியாது. தன்னையே அறியாமல் தன்னுடைய தலைமுடியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து அவள் கேட்டாள்:

“உங்க பொண்டாட்டிக்குத் தலைமுடி அடர்த்தியா இருந்ததா?”

சில நேரங்களில் அவன் பயப்படுவதைப்போல் தோன்றும். வேறு சில நேரங்களில் கோபத்தால் அவனுடைய கண்கள் உருள்வதைப் போலவோ பற்களைக் கடிப்பதைப் போலவோ அவளுக்குத் தோன்றும். அப்போது அவள் நடுங்கிப் போவாள். வேறு சில நேரங்களில் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த முகம் கள்ளங்கபடமில்லாமல் இருக்கும். அவனைப் பார்த்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டு இருக்கும்பொழுது தான் பார்ப்பது இல்லாமல் வேறு ஏதோவொன்று தான் அவன் என்று அவள் தன் மனதிற்குள் நினைத்துக் கொள்வாள். அந்த அடர்த்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் தாடி ஏதோவொன்றை ஒளிப்பதைப்போல் அவளுக்குத் தோன்றும்.

“முகத்துல இருந்து இந்தக் காட்டை எடுத்துட்டா... இப்போ சில நேரங்கள்ல தாடியைப் பார்க்குறப்போ பயமா இருக்கு!”

அந்த மீசைக்கு நடுவில் மலரும் ஒரு புன்சிரிப்புடன் அவன் சொன்னான்:

“சாதுவாச்சே!”

“ஆமாமா... பெரிய பக்தன்தான்... சாதுதான்...” - அவள் சிரித்தாள்.

அவன் கேட்டான்.

“இப்போ வரை நான் சாதுன்றதை மீறி இருக்கேனா?”

அவளுக்குச் சிறிது வெட்கம் உண்டானது. தரையிலிருந்த ஒரு கல்லை எடுத்து அதை வைத்து என்னவோ வரைந்தவாறு அவள் சொன்னாள்:

“அப்படி எதுவும் நடக்கல. ஆனா, சந்நியாசியா இருக்குதுன்றது வேறு!”

அவன் கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தான். மீசைக்கு நடுவே ஒரு புன்சிரிப்புடன் மலர்ச்சி தெரிந்தது. அவன் சொன்னான்:

“நான் ஒரு பகவதியைப் பூஜிக்கிறேன். பரப்ரம்மத்தில் பகவதியும் இருக்குறா!”

அவள் அவனுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு கல் துண்டால் வரைந்து கொண்டிருந்தாள். அப்படி உட்கார்ந்து கொண்டே அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அவன் கேட்டான்:

“ஜானகி, என்ன பெருமூச்சு விடுற?”

“ம்... ஒண்ணுமில்ல...”

மெதுவாகத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்த அவள் மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள். ஏதோ கூறவேண்டும் என்பதற்காகத்தான் அவள் தலையை உயர்த்தினாள் என்பதைப்போல் இருந்தது. அவள் சொன்னாள்:

“என் கடவுள் என் கண்களுக்கு முன்னால் தெரிஞ்சது. ரொம்பவும் தாமதமாகத்தான்!”

அதன் தொடர்ச்சி என்பதைப்போல் ஒரு வாக்கியம் வெளியே வந்தது.

“முப்பத்தெட்டாவது வயசுல!”

அவன் கேட்டான்:

“அதுனால என்ன?”

அவனுடைய முகத்தைப் பார்த்தவாறு அவள் கேட்டாள்:

“அந்தச் சமயதுத்துல... எனக்கு பத்தொன்பது வயசு நடக்குறப்பேப, நீங்க எங்க இருந்தீங்க?”

பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு தான் எங்கிருந்தோம் என்பதை அவன் ஞாபகப்படுத்தித்தான் பார்க்கவேண்டும்.

ஒருவேளை அப்போது அவன் அவளுடைய வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தானென்றால், ஜானகியின் வாழ்க்கை மட்டுமல்ல- அவளுடைய தங்கைகளின் வாழ்க்கையும் கூட வேறுமாதிரி ஆகியிருக்கும் என்பதை அவள் மனதில் நினைத்திருக்கலாம். அது சரியான சிந்தனையும்கூட. தன் மீது அன்பு வைத்திருக்கும் ஒரு கணவன் அப்போது கிடைத்திருந்தால், அந்தக் குடும்பம் இந்த அளவிற்கு அழிந்திருக்காது என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். மற்ற தங்கைகளுக்கும் கணவன்மார்கள் கிடைத்திருப்பார்கள்.


அப்படியே இல்லையென்றால் கூட இந்த அளவிற்கு ஒரு நாசம் குடும்பத்திற்கு நிச்சயம் உண்டாகியிருக்காது. அவன் அவளைப் பார்த்து கேட்டது அவள் காதில் விழவே இல்லை.

“இந்தப் பத்தொன்பது வருடங்களுக்கு இடையில்... ம்... உனக்கு ஏதாவது நடந்துச்சா? அப்படியே நடந்திருந்தாலும்...”

அவன் தான் கூறிக்கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு முன்பே அவள் இடையில் புகுந்து சொன்னாள்:

“நான் என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லிட்டேன். நான் எதையும் மறைச்சு வைக்கல. எனக்கு எதுவுமே நடக்கல. அஞ்சு வயசுல நான் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இப்பவும் இருக்கேன்!”

அதை அவள் சொல்லி முடித்தபோது, அவளுடைய மனக்கண்களுக்கு முன்னால் பப்புவும் அந்த வீட்டின் சொந்தக்காரரும் தோன்றினார்கள். அவன் அவர்களைப் பார்க்கிறான் என்று நினைத்து அவள் பயந்தாள் ஓ! அவர்கள் மறைவாகத் தெரியவில்லை. திரும்பத் திரும்ப அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். வேகமான குரலில் அவள் சொன்னாள்:

“அது இல்ல. ரொம்பவும் தாமதமாயிடுச்சு. அதைத்தான் சொன்னேன். நான் என்னோட எல்லாத்தையும் உங்ககிட்ட கொடுத்துர்றேன். பத்திரமா வச்சுக்கோங்க. ஆனா... ஆனா... முப்பத்தெட்டாவது வயசுல...”

அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளுடைய வார்த்தைகளைத் தொண்டைக்குள்ளே தடுத்து நிறுத்தியது.

அன்று மாலை நேரத்தில் அவன் திடீரென்டு தன்னுடைய ஒரு முடிவை அவளிடம் சொன்னான். அன்றுவரை அவள் அதைப் பற்றி நினைத்திருக்கவில்லை.

அவன் சொன்னான்:

“நான் இன்னைக்குப் போறேன்.”

அவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை. அவன் மீண்டுமொருமுறை சொன்னான்:

“நான் இன்னைக்குப் போறேன்.”

அவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை. அவன் மீண்டுமொருமுறை சொன்னான்:

“நான் இன்னைக்குப் போறேன்!”

அந்த வார்த்தைகள் அவளுடைய தலைக்குள் சென்றன.

அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு அவளுக்குச் சிறிது நேரம் ஆனது. அவள் அதைக்கேட்டு உறைந்து போனது மாதிரி ஆகிவிட்டாள். ‘போவது’ என்ற செயலின் அர்த்தத்தை மெதுவாகத்தான் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. நாளை முதல் அவன் அங்கு இருக்கமாட்டான். அதற்குப் பிறகு எப்போதும் அவன் இருக்க மாட்டான் என்ற சூழ்நிலை உண்டாகும். எங்கு, எதற்காகப் போகிறான் என்பதைக் கூட கேட்பதற்கு அவளால் முடியவில்லை. தன்னுடன் வர முடியுமா என்று அவளிடம் அவன் கேட்கவில்லை. அவன் போகிறான்.

அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் அவன் நடந்தான். கோவிலைச் சுற்றிலுமிருந்த இருட்டை நோக்கி நடந்த அவன் மறைந்து போனான்.

அவன் போய்விட்டானா?

பாவம் ஜானகி! அவள் யாருக்கும் ஒரு துரோகம் செய்தது இல்லை. அவள் கடவுளின் சந்நிதிக்குள் போய் உட்கார்ந்தாள். எதற்காக அவளைத் தட்டி எழுப்பவேண்டும்? எதற்காக அவளுக்குள் எதிர்பார்ப்புகளை உண்டாக்கவேண்டும்? அவள் ஒரு மூலையில் அமைதியாக இருந்திருப்பாளே!

ஆனால், அவன் ஒருநாள் கூட ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி தன் கால்களை எடுத்து வைத்ததில்லை. தன்னையே அறியாமல் ஜானகி அவனிடம் ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிவிட்டாள் என்பதே உண்மை. அவன் அவளைக் கெடுத்துவிட்டான் என்று கூறுவதற்கில்லை. அப்படிச் செய்ய நினைத்திருந்தால், நிச்சயம் அவன் அதைச் செய்திருக்கலாம். இந்த அளவிற்கு அவளுடைய இதயத்தைப் பல துண்டுகளாக அறுத்துவிட்டு அவன் போகிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அவன் அவளுடைய கன்னித்தன்மை பற்றி சந்தேகம் கொள்கிறானோ? அப்படித்தான் ஜானகி நினைத்தாள்

3

லகமே முழுமையாக சுயநினைவு இழந்து உறங்கும் நேரம் சிறிது இருப்பதுண்டு. இரவு நேரத்தில் தூங்காமல் இருக்கும் அந்த நிமிடத்தில், நம் கண்கள் மூடப்பட்டிருக்க வேண்டிய அந்த நேரத்தில், நாம் கண்களை முழுமையாகத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்போம். அந்தநேரம் எதுவென்று கைதேர்ந்த திருடர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆலமரத்திற்குக் கீழே இங்குமங்குமாக வாழ்க்கையில் எல்லா நிலைகளிலிருந்தும் காலால் மிதித்து வெளியேற்றப்பட்ட பல உயிர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தன. பயந்து போய் அழுவதும், கோபமும், வாய்க்கு வந்ததை உளறுவதும்- எல்லாமே அங்கு கேட்டுக்கொண்டுதானிருந்தன. அந்தத் தீராத நோய் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனும், நொண்டியும், கிழவனும், கிழவியும், சமூகத்தின் பிரச்சினைக்குரியவர்கள்தானே? அப்படியென்றால் உறக்கத்தின் சுயநினைவற்ற சூழ்நிலையில் அவை எல்லாம் உண்டாகத்தான் செய்யும். ஆனால், மனிதர்கள் முழுமையாகத் தூக்கத்திற்கு அடிமையாகிப் போகும் அந்தச் சில நிமிடங்களுக்கு ஓச்சிற படு அமைதியாக இருக்கும். ஜானகி மட்டும் தூங்காமல் இருந்தாள். அவள் ஆலமரத்தில் சாய்ந்தவாறு தலையைக் குனிந்துகொண்டு உட்கார்ந்திருந்தாள். விரல் சொடுக்கப்படும் ஒலியைக்கொண்டு அவள் தன் தலையை உயர்த்தினாள். அந்தத் தாடிக்காரன் அவளுக்கு முன்னால் வந்து நின்றிருந்தான். அவனுக்கு இப்போது முன்பிருந்ததை விட உயரம் அதிகரித்திருப்பதைப் போல் தோன்றியது. ஒரு பெரிய மாற்றமும் அவனிடம் தெரிந்தது.

ஜானகி எழுந்தாள். அவன் திரும்பி நடந்தான். தன்னைப் பின் தொடர்ந்து வரும்படி அவன் செய்கை காட்டுவதாக அவள் உணர்ந்தாள். அவளுடைய கால்சுவடுகள் ஒவ்வொன்றாக அவனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன.

அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்தார்கள். அவன் நடந்து கொண்டிருந்தான். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவள் தனக்குப் பின்னால் இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியுமா என்பது கூட சந்தேகமாக இருந்தது. எங்கோ தூரத்தை நோக்கி கண்களைப் பதித்தவாறு அவன் உடம்பை நேராக வைத்துக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் கனவில் நடப்பதைப் போல அவள் நடந்தாள்.

ஓணாட்டுக்கரை பகுதிகளில் இருக்கும் நெல் வயல்கள் வழியாகவும் இரு பக்கங்களிலும் செடிகள் அடர்ந்திருக்கும் ஒற்றையடிப் பாதைகள் வழியாகவும் அவர்கள் நடந்தார்கள். ஆள் அரவமற்ற ஒரு தென்னந்தோப்பை அவர்கள் அடைந்தார்கள். முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு இரவு அது. அவன் திரும்பி நின்று கொண்டு கேட்டான்:

“நீ வர்றியா?”

அந்த நிமிடத்திலேயே அவளிடமிருந்து பதில் வந்தது:

“நான் வர்றேன்!”

சிறிதுநேர அமைதிக்குப் பிறகு அவன் கேட்டான்:

“எங்கேன்னு தெரியுமா?”

அதற்கும் உடனடியாகப் பதில் வந்தது.

“நீங்க எங்கே போறீங்களோ, அங்கே!”

மீண்டும் ஒரு அமைதி. அது சற்று கனம் கொண்ட ஒன்றாகத் தோன்றியது. அவனுடைய கண்கள் உருள்வதையும், ஏதோ ஒரு பிரகாசம் அவற்றில் தெரிவதையும் அவள் பார்த்தாள். பல்லைக் கடித்துக் கொண்டு அவன் பேசுகிறானோ என்று அவள் சந்தேகப்பட்டாள்.

“உன்னை... உன்னை... நான் கொல்லப்போறேன்னு வச்சுக்கோ... அப்படின்னா...”

“நான் சாகத் தயார்!”


சிறிது தூரத்தில் எங்கேயோ ஒரு கோவிலில் ஒரு இரவுப் பாடகன் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தான். உலகம் உறக்கத்தின் போர்வைக்குள்ளிருந்து அசைந்ததைப் போல ஒரு சிறிய காற்று வீசியது. அவனுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது. அந்தக் கைகளுக்குள் அவள் தன்னை அடக்கிக்கொண்டு அவன் உடம்போடு ஒட்டிக்கொண்டாள். பிறகு? அவள் அவனுடைய கழுத்தளவே இருந்தாள். தலையைப் பின்னால் சாய்த்துக் கொண்டு அவள் அவனின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். என்னவோ எதிர்பார்த்து... நிலவு ஒளியில் அந்தப் பெண்ணின் முகத்தைஅவன்பார்த்தான். அவனுடைய தாடி முடிகள் அவளுடைய கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தாடியில் ஒரு முடி கூட அசையவில்லை. ஆனால், அவளுக்கு ஏதோ கிடைக்க வேண்டும்... அதற்காகத் தன்னுடைய பெருவிரலைத் தரையில் ஊன்றியவாறு அவள் மேலே பார்த்தாள். அவளுடைய முகம் அவனுடைய முகத்தில் சேர அதற்குப் பிறகும் முடியவில்லை. அவனுடைய முகம் கீழே குனியவில்லை.

தொண்டை இடற, அவள் கேட்டாள்:

“எனக்கு... எனக்கு... தரமாட்டீங்களா?”

அவன் மெதுவான குரலில் “இல்ல...” என்று தலையை ஆட்டினான்.

அவள் நடந்தாள். அவன் முன்னாலும், அவள் அவனுக்குப் பின்னாலும். அப்போது அவன் முன்பு மாதிரி விரைத்துக் கொண்டு தூரத்தில் பார்த்தவாறு நடக்கவில்லை. அவள் கனவில் நடப்பது மாதிரியும் நடக்கவில்லை.

அவள் சொன்னாள்:

“நான் என் துணிக்கட்டை எடுக்கல. என்னை சைகை காட்டி அழைச்சீங்க. நான் பின்னாடியே வந்துட்டேன்!”

அவன் அதற்குக் கேட்டான்:

“துணிக்கட்டுல என்ன இருக்கு?”

“என் புடவையும் ஒரு ரவிக்கையும். நாளைக்குக் காலையில ஒரு பூகம்பம் வெடிக்கப் போகுது!”

அவன் சொன்னான்:

“என்ன பூகம்பம்? நாம ரெண்டு பேரும் ஓடிட்டோம்னு சொல்லுவாங்க!”

அவன் கூறுவதற்கு மேலும் சில விஷயங்கள் இருந்தன.

“அங்கே சில கிழவிகள் இருக்காங்க. கொஞ்ச நாட்களுக்கு அவங்களுக்குப் பேசுறதுக்கு விஷயம் கிடைச்ச மாதிரி ஆச்சு!”

சிறிது நேரம் கழித்து அவள் கேட்டாள்:

“இவ்வளவு அவசரமா புறப்படணும்னு நினைச்சதுக்குக் காரணம் என்ன?”

அவனுக்கு அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஒரு சிறு தயக்கம் இருந்தது. அந்தப் பதிலுக்காக அவள் காத்திருக்கவில்லை. அவள் தொடர்ந்து சொன்னாள்:

“அப்படியே இருந்தாலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் எவ்வளவு நாட்களுக்குத்தான் நாம அந்த இடத்துலேயே இருக்க முடியும்? எப்போ அந்த இடத்தை விட்டு நாம போவோம்னு நான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். எல்லா நாட்களிலும் தர்மம் யாசிப்பவர்களா நாமளும் அங்கே அந்தக் கோவில்ல இருக்குறதுன்றது... உண்மையாகவே அதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டேன். இருந்தாலும் நீங்க சரியான கல் மனசு கொண்ட ஆளுதான். சாயங்காலம் வந்தப்போ நீங்க மட்டும் தனியா கிளம்புறதாத்தானே சொன்னீங்க? அதைக்கேட்டு நான் ஒரு மாதிரியா ஆயிட்டேன், தெரியுமா?”

அவன் எதுவும் பேசவில்லை. அவள் தொடர்ந்து கேட்டாள்:

“தனியா எதுவுமே சொல்லாம இருக்கீங்க? நீங்க மட்டும் தனியா போறதாத்தான் முதல்ல இருந்தீங்களா?”

“ஆமாம்...” - அவன் உறுதியான குரலில் சொன்னான். தொடர்ந்து அவன் சொன்னான்:

“உன்னை ஏன் என் கூட அழைச்சிட்டுப் போய் கஷ்டப்பட வைக்கணும்னு நினைச்சேன். என்கூட வர்றது உனக்கு ரொம்பவும் சிரமமான ஒரு விஷயம்ன்ற மாதிரி என் மனசுக்குப் பட்டது. ஆனா, புறப்படுற நேரத்துல எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. நீ இல்லாம புறப்படுறது சரியா இருக்காது. உன்னை வந்து பார்த்து ஒரு வார்த்தை கேட்டுடுவோம்னு நினைச்சேன். அதுவரை என் மனசுல ஒரே கவலைதான்...”

அவளைச் சந்தோஷம் கொள்ளச் செய்த ஒரு விஷயமாக அது இருந்தது. அவள் இல்லாமல் புறப்படுவது சரியாக இருக்காது என்று அவன் சொன்னான். அதாவது- அவள் இல்லாமல் வாழ முடியாத ஒரு ஆண் உலகத்தில் இருக்கிறான். ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாவது அந்த மாதிரியான வார்த்தைகளின் மூலம்தானே? அன்றுதான் அந்த நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த இரவு வேளையில்தான், ஒரு எள்ளு தோட்டத்திற்கு நடுவில் நடந்து செல்லும் நிமிடத்தில் தான் வாழ்க்கையில் முதல் தடவையாக அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு மதிப்பு கிடைத்தது. யாரும் அவனிடம் இதுவரை அப்படிப்பட்ட ஒரு வார்த்தையைக் கூறியதில்லை.

அவன் எங்கு போகிறான் என்பதையோ என்ன செய்யப் போகிறான் என்பதையோ அவன் கூறவேயில்லை. அவள் அதைக் கேட்கவுமில்லை. அந்த விஷயங்கள் எதுவுமே அவளுடைய மனதில் இல்லை. அவள் அதைப் பற்றியெல்லாம் எதற்காக நினைக்க வேண்டும்? அவள் ஒரு ஆணுடன் இருக்கிறாள். வெறுமனே ஒரு ஆணுடன் அல்ல. அவள் இல்லாமல் வாழமுடியாத ஒரு ஆணுடன் அவள் இருக்கிறாள். அவளைக் காப்பாற்றுவதற்கென்று ஒரு ஆண் இருக்கிறான். முன்பு மாதிரி தனக்கென்று யாருமே இல்லாத ஒரு அனாதை ஜானகி அல்ல இது.

சிறிது தூரம் சென்றதும் அவன் சொன்னான்: “எனக்கு கால் வலிக்குது” சிறிது அர்த்தம் வைத்துக் கொண்டு அவன் சொன்னான்:

“இப்படியே நடந்து போறப்போ, சில நேரங்கள்ல நடக்க முடியாத அளவுக்கு கால் சோர்ந்து போகும். கால் ஒடிஞ்சாலும் ஒடியலாம். சில நேரங்கள்ல என்னையும் சுமந்துக்கிட்டு போகவேண்டியதிருக்கும். என்ன, புரியுதா?”

அவன் கூறிய எல்லா விஷயங்களும் அவளுக்கு நன்கு புரிந்தது. ஆனால், ஜானகி அந்த வார்த்தைகளில் இருந்த கடுமையை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சொன்னாள்:

“அப்படின்னா, அப்படியே நில்லுங்க. நான் உங்களைப் பூவை எடுத்துட்டுப் போறது மாதிரி எடுத்துட்டுப் போறேன். கொஞ்சம் கூட உங்களைக் கீழே வைக்கமாட்டேன்.”

இந்த வார்த்தைகளைச் சொன்ன அவள் மணி குலுங்குவதைப் போல குலுங்கி குலுங்கிச் சிரித்தாள். அவன் திரும்பிப் பார்த்தபோது அவள் நின்றிருந்தாள். சில எட்டுகள் பின்னால்! அவன் அவள் நின்றிருந்த இடத்திற்குத் திரும்பி வந்தான்.

அந்த ஒற்றையடிப் பாதைக்கு அருகில் ஒரு வயதான மரம் நின்றிருந்தது. அதற்குக் கீழேதான் அவள் நின்றிருந்தாள். அவன் அருகில் வந்தபோது, அவள் இதயபூர்வமான ஒரு சிரிப்புடன் கேட்டாள்:

“நான் தூக்கி வச்சுக்கிட்டு போகட்டுமா?”

ஜானகி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவன் உடம்போடு சேர்த்து நின்றாள். அவளுடைய கைகள் அவனுடைய இடுப்பைச் சுற்றின. அவளுக்குப் பல்வேறு ஆசைகள் இருந்தன. அதிலொன்றை அவள் சொன்னாள்:

“எனக்கு... எனக்கு... இந்த மடியில தலையை வச்சு உறங்கணும் போல இருக்கு...”- தொடர்ந்து அவள் சொன்னாள்:

“எனக்கு ஒரு முத்தம் கூட தரலையே!”


அந்த மரத்திற்கடியில் அவனுடைய மடியில் தன் தலையை வைத்து அவள் படுத்துத் தூங்கினாள். நிம்மதியாகத் தூங்கினாள். அவளுடைய தூக்கத்திற்கு சிறு தொந்தரவு கூட இருக்கக்கூடாது என்று அவன் அசையாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். அவள் தன் கண்களைத் திறந்தபோது, அவளுடைய முகத்தையே பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான்.

பசி, தாகம், களைப்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு ஊரையும் பார்த்தவாறு ஜானகி அவனுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஓணாட்டுக்கரையின் சமதளப் பகுதிகளையும், மரவள்ளிக் கிழங்கும் மிளகும், பலாவும், மாங்காயும் விளையும் இடங்களையும் தாண்டி, செடிகளும், ரப்பர் தோட்டங்களும் இருக்கும் மலைச்சரிவுகளில் ஏறி உயரத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவை எதுவும் அவள் பார்த்த இடங்கள் இல்லை. அவள் பறந்து கிடக்கும் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறாள். அந்தச் சந்தோஷம் அவள் மனதில் இருக்கத்தானே செய்யும்!

எனினும், எங்கு போகிறோம் என்று அவன் கூறவில்லை. அவள் அதைக் கேட்கவுமில்லை. ஒரு பெரிய மலையின் பள்ளத்தைத் தாண்டி வளைந்து நெளிந்து ஏறிச் செல்லும் சாலை எங்குபோகிறது என்று தனக்கு உண்டான ஆர்வத்தில் ஒருமுறை அவனிடம் கேட்டாளே தவிர, தாங்கள் எங்கு நோக்கிப் போகிறோம் என்று அவள் கேட்கவேயில்லை. சாலையை விட்டு விலகி குறுக்குப் பாதைகள் வழியாகவும் அவர்கள் பயணம் செய்தார்கள். அப்போது மேல்நோக்கி ஏறி பழக்கமில்லாத அவளுக்கு அவன் ஊன்றிக் கொள்வதற்காக ஒரு காட்டுக்கொம்பை வெட்டிக் கொண்டுவந்து கொடுத்தான். அவள் பல இனங்களைச் சேர்ந்த குரங்குகளைப் பார்த்தாள். பறவைகளைப் பார்த்தாள். அவளைப் பார்த்து பற்களைக் காட்டிய கருங்குரங்கைப் பார்த்து அவள் வக்கணை காட்டினாள். காட்டிற்குள் எங்கோயிருந்துகொண்டு ஒரு பறவை தன் துணையைச் சத்தம் எழுப்பி அழைத்தது. அவள் பதிலுக்குக் கூவினாள். சிறிதும் நிறுத்தாமல் வெட்டுக்கிளிகள் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்த ஒரு பகுதியைத் தாண்டிச் சென்றபோது ஒரு சத்தம் நிறைந்த உலகில் இருக்கும் வாழ்க்கையின் அபூர்வ அனுபவம் அவளுக்கு உண்டானது. அவனைத் தவிர வேறு யாரையும் பார்க்காமலே அவளுக்கு இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. அன்று அவள் அவனிடம் சிரித்துக் கொண்டே கேட்டாள்:

“இடம் அருமையா இருக்கு. ஏன் உங்களுக்குப் பிடிக்கல?”

அவர்கள் ஒரு தேயிலைத் தோட்டத்தை அடைந்தார்கள். அப்போது அவளிடம் அவன் சொன்னான்:

“நாம இங்கேதான் வந்தோம். புரியுதா?

அந்தத் தேயிலைத் தோட்டம் பீருமேட்டில் இருந்தது. அப்போது அங்கு தோட்டத்தைப் பெரிதாக ஆக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சிரமமில்லாமல் அவனுக்கு அங்கு ஒரு வேலை கிடைத்தது. பெண்களுக்கும் அங்கு வேலை இருக்கிறது.

தனக்கும் ஒரு வேலை வாங்கித் தரும்படி அவள் சொன்னாள்.

பணியாட்களுக்கு வசிப்பதற்கென்று கட்டப்பட்டிருந்த வீடுகளில் அவளுக்கும் ஒரு வீடு கிடைத்தது. அதில் அவள் தனியாக இருக்க முடியாது.

அவர்கள் அங்கு சென்று ஐந்து நாட்கள் ஆகியிருக்கும். வேலை முடித்து ஒருநாள் அவன் வந்து நின்றபோது அவனை அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. அந்த முகத்தில் அந்த அளவிற்கு மாற்றம் தெரிந்தது. ஒரு நிமிடம் அவள் ஆச்சரியப்பட்டு நின்று விட்டாள். வட்ட முகம் கொண்ட ஒரு மனிதன் அவளுக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டிருந்தான். அவள் சிரிப்புடன் சொன்னாள்:

“நான் விரும்பியதும் என்னை விரும்பியதும் ஒரு தாடிக்கார மனிதன்தான்!”

அதற்கு அவன் கேட்டான்: “அப்படின்னா இந்தத் தாடி இல்லாதவனை நீ விரும்பலையா?”

“முன்னாடி இருந்ததைவிட இப்போத்தான் அதிக விருப்பம்!”

ஜானகி தன்னுடைய வாழ்க்கை நாயகனின் உண்மைத் தோற்றத்தைப் பார்த்துப் பார்த்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு வாரத்திற்குள் அவனுடைய காவி வேஷ்டியும் மாறியது. அவளும் தன்னுடைய காவித் துணியிலிருந்து விடுபட்டாள். வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் அந்த வகையில் முடிந்து விட்டதாக அவள் நினைத்தாள்.

அவளுக்கு வேலை கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு ரூபாய் கூலியாகக் கிடைத்தது. படிப்படியாக எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் அவளிடம் உருவாயின. ஒரு வீட்டிற்குக் கட்டாயம் தேவைப்படக்கூடிய பொருட்களை முதலில் வாங்கி சேகரிக்க வேண்டும். நீர் அருந்துவதற்குப் பாத்திரமெதுவும் இல்லை. அன்று மாலையில் தன்னுடைய திட்டங்களை அவனிடம் அவள் சொன்னாள். அந்தத் திட்டங்கள் தேவையற்றவை என்று கூறுவதற்கில்லை. அவளுடைய நிலைமையைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு வரையறைக்குள் இருந்த ஆசைகளே அவை. அங்கு வேலை செய்து பத்து சக்கரம் (திருவிதாங்கூர் நாணயம்) சம்பாதிக்க வேண்டும். காலம் முழுவதும் அந்த மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. கிராமப் பகுதியைத் தேடிச் சென்று எங்காவது ஒரு சிறு வீட்டைக் கட்டி வாழ வேண்டும். அவளுடைய அந்தத்திட்டங்களைப் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை.

ஒரு பெண்ணுக்கு ஒரு வீடும் காப்பாற்றுவதற்கு ஒரு மனிதனும் கிடைத்துவிட்டான் என்பது மட்டுமல்ல, ஜானகியின் வாழ்க்கையில் நடந்தது- கிடைத்த அந்த மனிதன், அவள் மீது உண்மையான அன்பு வைத்திருந்தான் என்பது கூட குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான். ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்வதோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்று கொஞ்சுகிற குரலில் அவள் அடிக்கடி அவனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.

“இருந்தாலும் நீங்க பிடிவாதக்கார ஆளுதான். அடடா என்ன பிடிவாதம்.”

சில நேரங்களில் அவன் அதற்குப் பதில் கூறுவான்:

“அப்படி பிடிவாதக்காரனா இருக்குறதுதான் நல்லது, பெண்ணே!”

அந்த வாழ்க்கையில் ஒரு முழுமையற்ற தன்மை இருந்தது. குறிப்பிட்டுக் கூறக் கூடிய முழுமையற்ற தன்மை. ஆனால், அந்த முழுமையற்ற தன்மை அவர்களுக்கிடையே இருந்த உறவை பாதிக்கவில்லை. சாதாரண சூழ்நிலையாக இருந்தால், அந்த உறவைக் கிழக்கு மலைப் பகுதியின் மரங்களுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் பனியில் உறைந்து போயிருக்கும் அந்தச் சிறிய வீட்டிற்குள் எல்லா இரவுகளிலும் பரிதாபமான ஒரு கெஞ்சல் குரல் ஒலிக்கும்.”

“என் கூட நெருக்கமா படுக்கக்கூடாதா?”

அதற்குப் பதில் வரும்:

“வரட்டும், பெண்ணே… வரட்டும்.”

அவள் பதைபதைக்கும் குரலில் கூறுவாள்:

“ஓ... எப்போ பார்த்தாலும் வரட்டும் வரட்டும்னு ஒரு பல்லவி. இப்படியே எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக்கிட்டு இருப்பீங்க?”

ஓய்வாக இருக்கும் நேரங்களில் இந்த விஷயம் பேசப்படும் விஷயமாக இருந்தது. அவன் உறுதியான குரலில் ஒருநாள் அறிவுரை கூறுவதைப்போல் அவளிடம் சொன்னான்: “உனக்கு ஒரு குழந்தை வேண்டாம்!”


ஆனால், ஜானகியின் விருப்பம் அதுவல்ல. அவளுக்கொரு குழந்தை வேண்டும். ஒரு காலத்தில் அவள் அதற்காகப் பயப்பட்டாள். இன்று அவள் ஒருவனைக் காதலிக்கிறாள். அவன் மீது அன்பு செலுத்துகிறாள். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் அன்பிற்கு அடையாளமாக இருப்பது ஒரு குழுந்தைதான். அன்பின் பிரகாசத்தில் அவளின் மனதின் அடித்தளத்தில் தங்கி நின்றிருந்த கவலைகள் இல்லாமல் போய்விட்டன. ஒரு வீட்டை எப்படி உருவாக்குவது என்ற அவளுடைய திட்டத்தில் ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது. ஒரு குழந்தையைப் பற்றிய அவளின் கனவுகள் நாளுக்கு நாள் பெரிதாக வளர்ந்து கொண்டேயிருந்தன.

ஒரு வீட்டிற்குள் அவர்கள் நீண்ட நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவள் கூறுவதைப் போல அவன் ஒரு பிடிவாதக்காரன்தான். அந்த அன்புமயமான உறவு இப்போது வரை முழுமையை அடையவில்லை என்பதென்னவோ உண்மைதான்.

இன்னொரு நாள் அவன் அவளிடம் கேட்டான்:

“நீ மட்டும் ஒரு குழந்தையைச் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டானால்...?”

அந்த நிமிடமே அவளால் பதில் சொல்ல முடிந்தது:

“நான் சுமப்பேன்!”

பிறகு அவன் சொன்னான்:

“காலம் கடந்த பிறகு ஒரு குழந்தை பிறந்தால், வயசான காலத்துல தான் அதை வளர்க்க வேண்டியது வரும்!”

ஒரு பெண் ஒரு குழந்தை வேண்டுமென்று ஏங்குவதை ஒருவேளை அவனைப் போன்ற ஒருவனால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். அவன் ஒரு அசாதாரண குணம் கொண்டவன் ஆயிற்றே! அவள் இல்லாமல் வாழ முடியாது என்று சொன்ன அவனுடைய அன்பு ஒரு குறிப்பிடத்தக்க குணத்தைக் கொண்டதே.

அது நடந்தது. அவன் கீழ்ப்படிந்தான். பெண் வெற்றி பெற்றாள். அந்தத் தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் ஒரு காட்டாறு ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்டாற்றின் கரையில் அது நடந்தது. தோல்வியடைந்த அந்த ஆண் அந்தச் சம்பவத்தின் இறுதியில் உண்டான வெறுப்பில் இப்படிக் கத்தினான்:

“ஓ... இது வெற்றி பெறாம இருந்தா...”

வெற்றி பெற்ற அவள் வெற்றியின் உற்சாகத்துடன் பதில் சொன்னாள்:

“அது வெற்றி அடைஞ்சாச்சு. அது வெற்றி பெறணும்.”

அந்த ஆண் ஆளே முற்றிலும் மாறிப்போனான். அவனை அப்படி ஒரு குண வெளிப்பாட்டில் அவள் பார்த்ததேயில்லை. அவன் கேட்டான்:

“என்னைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

அவள் சொன்னாள்:

“என் தெய்வம்... என்னைப் பாதுகாப்பவர்... எனக்கு எல்லாமும்...”

அவன் தன்னைப் பற்றிய அந்தப் பெரிய உண்மையை வெளிப்படுத்தினான்.

“உன் தெய்வம் ஒரு கொலைகாரன். உன்னைப் பாதுகாப்பவனை போலீஸ்காரங்க தேடிக்கிட்டு இருக்காங்க. உனக்கு எல்லாமாக இருக்கும் அந்த மனிதன் தாலி கட்டிய மனைவியைக் கொலை செய்தவன்...”

அவள் சிலையைப் போல நின்றுவிட்டாள்.

4

வனைப் போலீஸ்காரர்கள் பிடித்து விட்டார்கள். அந்தத் தோட்டத்தில் வைத்து அல்ல. தேவிகுளத்தில் இருக்கும் ஒரு ஏலக்காட்டில் அவனை அவர்கள் பிடித்தார்கள். அவனை அவர்கள் பிடித்துக்கொண்டு போவதை அவள் பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் பயந்து கொண்டிருந்த அந்த விஷயம் நடந்து விட்டதை மற்றவர்கள் சொல்லி அவள் தெரிந்து கொண்டாள்.

தன்னுடைய ரகசியத்தை வெளிப்படையாகக் கூறிய நாளிலிருந்து அவன்அவளிடம் சில விஷயங்களைப் பற்றி கூறுவதுண்டு. அவள் அந்தக் குழந்தையை வளர்க்க முயற்சிக்க வேண்டும். பல நேரங்களில் அது சாத்தியமில்லை என்பது மாதிரி தோன்றலாம். தூக்குமரத்திலிருந்து தப்பிக்க முடிந்தால் என்றாவதொருநாள் அவன் சிறையிலிருந்து திரும்பி வருவான். அப்போது ஓச்சிற கோவிலில் அவள் அந்தக் குழந்தையுடன் அவனுக்காகக் காத்திருக்க வேண்டும்.

அவன் அவளைக் குற்றம் சொல்லவில்லை. அது தேவையில்லாத ஒன்றுதானே என்று வேண்டுமானால் அவன் அவளைப் பார்த்துக் கேட்டிருக்கலாம். அவன் தன்னைப் பற்றிய ரகசியத்தை ஏற்கெனவே அவளிடம் கூறியிருந்தானென்றால் அப்படிப்பட்ட ஒன்று நடந்திருக்குமா? அன்று ஓச்சிற கோவிலில் இருந்த சமயத்திலேயே அவளிடம் அவன் எல்லா விஷயங்களையும் கூறியிருக்க வேண்டும். அப்படிக் கூறியிருந்தால் ஒருவேளை அந்த அன்பு இல்லாமற்கூட போயிருக்கலாம். ஆனால், இந்த விஷயங்கள் எதுவுமே அவளுக்குப் புரியக்கூடியது இல்லை என்பதே உண்மை.

மீண்டும் ஜானகி தெருவே கதி என்ற நிலைக்கு ஆளானாள். முன்பு இருந்ததைவிட கஷ்டமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டாள். முன்பு அவள் மட்டும் ஒரு தனிக்கட்டையாக இருந்தாள். இன்று அவள் ஒரு கர்ப்பிணிப்பெண். அவள் பிரசவம் ஆக வேண்டும். அந்தக் குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. தேவிகுளத்தின் ஏலக்காட்டில் எப்படி அவள் வாழ முடியும்? மனிதர்கள் இருக்கும் ஊருக்குத் திரும்பிச்செல்ல அவள் முடிவெடுத்தாள்.

கோட்டயத்தை அடைந்தபோது அவளிடம் கொஞ்சம் காசு இருந்தது. இருபது ரூபாய் பிரசவத்தின்போது செலவழிப்பதற்காக அதை அவள் தன்னிடம் பத்திரமாக வைத்திருக்க நினைத்தாள். அதுவரை எப்படி வாழ்வது என்பது மற்றொரு பெரிய பிரச்சினையாக இருந்தது. நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெண்கள் சாலை வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதனால் அவளுக்கு அந்த வேலையைச் செய்ய எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், அதைச் செய்வதற்கான சக்தி அவளுக்கு இருந்தால்தானே!

ஒரே ஒரு வழிதான் அவளுக்கு முன்னால் தெரிந்தது. பிச்சை எடுப்பது. அப்படி ஏதாவது கிடைத்தால் கூட, இரவு நேரத்தில் படுப்பதற்கு அவளுக்கு ஒரு இடமில்லை.

பிச்சை எடுப்பதிலும் அவளுக்குத் தொந்தரவுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது. வீங்கிய வயிறுடன் வீட்டில் முன்னால் வந்து நிற்கும் பிச்சைக்காரியைப் பார்த்து யாருக்கும் பரிதாபம் தோன்றவில்லை. அவள் தெருத்தெருவாக அலைந்து விபசாரம் செய்யக்கூடிய ஒரு பெண்ணாக இருப்பாள் என்றே எல்லாரும் நினைத்தார்கள். அந்தக் காதல் உறவைப் பற்றிய கதையை அவளே சொன்னாலும் அதை யாரும் நம்புவார்களா என்ன? “சரியான திருடியா இருப்பா போலிருக்கே? அவள் ஒரு கதையையும் வேற இல்ல பார்க்குறவங்க கிட்டயெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கா!” என்றுதான் கதையைக் கேட்பவர்கள் கூறுவார்கள்.

பகல் முழுவதும் வீடு வீடாக அலைந்து பிச்சை எடுத்தால் அவளுக்கு ஏதாவது கிடைக்கும். எனினும் கையிலிருந்த பணத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் அவளுக்கு வந்தது. பிரசவ காலத்திற்கென்று கையில் பணம் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்- அதற்கு முன்பே அதில் மீதமென்று ஏதாவது இருக்குமா என்ற சந்தேகம் அவளுக்கு உண்டாக ஆரம்பித்தது.

இரவில் படுப்பதற்கு அவள் ஒரு இடத்தைக் கண்டுபிடித்தாள். பேருந்து நிலையத்தில் பயணிகள் அறையில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடம்தான் அது.


அந்த இடத்தில் சுருண்டு படுத்திருக்கும்போது தினமும் அவள் தன்னுடைய முழு வாழ்க்கையையும் மனதில் நினைத்துப் பார்ப்பாள். நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்த அவளுடைய தந்தை பரமுபிள்ளை தினமும் ஏதாவது ஜானகியின் தாயிடம் கொண்டுவந்து கொடுப்பார். அன்று அந்த வீட்டிலுள்ளவர்களுக்குப் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. அந்த நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தன.

அவளுடைய தாய் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவள் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தை, தாயையும், தாய் தந்தையும் ஒருவரோடொருவர் முழுமையாக அன்பு செலுத்தி, நம்பிக்கையுடன் வாழ்ந்த ஒரு வீட்டில்தான் அவள் பிறந்தாள், வளர்ந்தாள். வக்கீல் குமாஸ்தா பரமு பிள்ளை ஒரு கள்ளங்கபடமில்லாத நல்ல மனிதனாக இருந்தார். அவளின் தாயும் எந்தத் தவறும் செய்யாத தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவம் எப்படி உண்டானது என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள்.

பாரதி இப்போது உயிருடன் இருப்பாளா? இருக்கலாம். அவளும் ஏதாவது பேருந்து நிலையத்திலோ கடையின் திண்ணையிலோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கலாம். பவானி உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கை ஜானகிக்கு இல்லை. அவர்களில் கொடுத்து வைத்தவள் என்று கவுரியைத்தான் சொல்ல வேண்டும். இந்தக் கஷ்டங்கள் எதுவுமே தெரியாமல் அவள் இறந்து விட்டாள். பத்மினி ஒரு மோசமான மனிதனிடம் அடியும் உதையும் வாங்கி அனேகமாக இப்போது இறந்திருப்பாள்.

ஈவு, இரக்கமற்ற கடவுள்! இந்த விளையாட்டுகளையெல்லாம் நிறுத்தியிருக்கக் கூடாதா? எதற்காக, அவள் செய்த தவறுக்காக, இப்படியெல்லாம் அவளைக் கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டுமா? ஓச்சிற கோவில் வரை அவளை அது தள்ளிக்கொண்டு போனது. அங்கு தான் காப்பாற்றப்பட்டு விட்டதாக அவள் நினைத்தாள். அதற்குப் பிறகும் துன்பம் என்ற அதலபாதாளத்திற்கு கடவுள் அவளை வீசி எறிகிறது என்றால்...!

இந்த வாழ்க்கையை அப்படியே முடித்துக் கொண்டு விட்டால் என்ன என்று பல நேரங்களில் அவள் நினைத்திருக்கிறாள். ஆனால், அவளுடைய தெய்வம் சில பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்திருக்கிறதே! அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு அவள் முயற்சிக்க வேண்டும். தூக்குமரத்திலிருந்து தப்பித்துவிடும்பட்சம், சிறையிலிருந்து வெளியே வரும்போது அந்தக் குழந்தையுடன் ஓச்சிற கோவிலுக்குச் சென்று அங்கு அவனுக்காக அவள் காத்திருக்க வேண்டும். அது ஒரு கடமை. அந்தக் கடமையை அவள் நிறைவேற்ற வேண்டும். அப்படியென்றால் அவன் தூக்குமரத்தில் தொங்குவானா இல்லையா என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும். என்றைக்கு, தான் ஓச்சிற கோவிலில் போய் நிற்கவேண்டும் என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பகல் முழுவதும் அலைந்து திரிந்து மிகவும் களைத்துப் போய் பேருந்து நிலையத்தை அடைந்தாலும் அவளுக்கு உறக்கமே வராது. சில நேரங்களில் இரவில் பல்வேறு சமயங்களில் அவளைப் போன்ற சில பிச்சைக்காரப் பெண்கள் அங்கு வந்து படுப்பார்கள். அவர்கள் யாருக்கும் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. உடல் தரையில் படுவதற்கு முன்பே அவர்கள் உறங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒருவகையில் பார்க்கப்போனால் அவர்கள் அவளைவிட கொடுத்து வைத்தவர்கள் என்று கூட கூறலாம்.

ஒருநாள் களைப்பு அதிகமாக இருந்ததன் காரணமாகவோ என்னவோ, அவள் தன்னை மறந்து உறங்கிவிட்டாள். அந்த அறையில் யார் எப்போது வந்தார்கள் என்ற விஷயம் எதுவும் அவளுக்குத் தெரியாது. கண்களைத் திறந்தபோது, பதின்மூன்று வயது மதிக்கக்கூடிய அளவில் ஒரு கிறிஸ்தவப் பெண் தன்னையே உற்றுப் பார்த்தவாறு தனக்கு அருகில் நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அந்தச் சிறுமி வைத்த கண் எடுக்காமல் ஜானகியையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜானகி எழுந்து உட்கார்ந்தாள். அப்போதும் அந்தப் பெண் தன் பார்வையை அகற்றவில்லை. ஜானகி கேட்டாள்:

“என்னடா கண்ணு, என்னையே இப்படி பார்க்குற?”

அந்தச் சிறுமி பதில் கூறுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்பே அவளை வேறு எங்கோ பார்த்திருக்கிறோம் என்பது போன்ற ஒரு உணர்வு ஜானகிக்கு உண்டானது.

அந்தச் சிறுமி சொன்னாள்:

“நான் உங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன், அம்மா!”

“அதுதான் ஏன்னு நான் கேக்குறேன்.”

தன்னுடைய முண்டின் நுனியில் கட்டப்பட்டிருந்த முடிச்சை அந்தச் சிறுமி ஒருவேளை பார்த்திருப்பாளோ என்று ஜானகி நினைத்தாள். அந்தப் பொட்டலம் அங்கு பத்திரமாக இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். அது அங்கேயேதான் இருந்தது.

ஜானகி கேட்டாள்:

“திருடுறதுக்கு ஏதாவது இருக்குமோன்னு நீ பார்த்தியா?”

அதைக்கேட்டு அந்தச் சிறுமி ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவள் தான் நினைத்ததை மனம் திறந்து கூறினாள்:

“அம்மா, நீங்க படுத்திருந்ததைப் பார்த்தப்போ, செத்துப்போன என் தாயைப் பார்த்தது மாதிரி இருந்துச்சு. அதுனாலதான் அப்படிப் பார்த்தேன்!”

ஜானகிக்கு அந்தச் சிறுமி மீது இரக்கம் உண்டானது. பாவம் அந்தச்சிறுமி! அவளுடைய தாய் இறந்துவிட்டாள். அவளுக்கு ஆதரவு என்று யாரும் இல்லை போலிருக்கிறது. அவளும் பிச்சை எடுத்து பிழைத்துக் கொண்டிருப்பவள்தான். அந்தச் சிறுமியின் குரலிலும் அவள் அதைச் சொன்ன விதத்திலும் ஒரு பரிதாபம் கலந்திருந்தது.

ஜானகி கேட்டாள்:

“உன் தாய் இறந்துட்டாளா?”

“இறந்துட்டாங்க!”

அவளுடைய கண்களில் நீர் நிறைவதை ஜானகி பார்த்தாள்.

“உனக்கு அப்பா இல்லையா?”

“இல்ல. அப்பா முன்னாடியே இறந்துட்டாரு!”

அப்படியென்றால் அவள் யாருமே இல்லாத ஒரு அனாதை. தனக்கு முன்னால் நீண்டு கிடக்கும் வருடங்களில் அந்தச் சிறுமி இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை ஜானகி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள். எதற்காக இப்படிப்பட்ட அப்பாவிகளெல்லாம் உலகத்திற்குள் தள்ளிவிடப்படுகிறார்கள்?

பேருந்து நிலையத்தின் பயணிகள் அறையில் தினமும் வந்து படுத்துறங்கும் பல பெண்களில் அவளும் ஒருத்தியாக இருக்க வேண்டும். இல்லை... அப்படி இருக்க வழியில்லை. அவளின் நடத்தையையும் பேச்சையும் பார்க்கிறபோது அப்படி நினைக்க முடியவில்லை. அவள் ஏழை!

அந்தச் சிறுமி தன்னையே மறந்து சொன்னாள்:

“அய்யோ! என்னைப் பெற்ற தாயே என் முன்னாடி வந்து இருக்குறது மாதிரி இருக்கு!”

அவளுடைய முகம் பிரகாசித்தது.

அவள் கேட்டாள்:

“அம்மா, நீங்க எங்கே இருக்கீங்க?”

ஜானகிக்குப் பதில் வரவில்லை. எனினும், அவள் உண்மையைச் சொன்னாள்:

“என் கண்ணு, எனக்கு ஊர், வீடு எதுவும் இல்ல!”

அந்தப் பெண்ணும் தன்னைப் பற்றிய உண்மையைச் சொன்னாள்:

“எங்களுக்கும் ஊர், வீடு எதுவும் இல்ல. என் அம்மா இந்தக் கோட்டயத்துல ஒரு கடைத் திண்ணையில படுத்திருக்குறப்போ இறந்துட்டாங்க!”

அவள் தன்னுடைய தாயைப் புதைத்த கதையை விளக்கிச் சொன்னாள்:


ஒரு ஏழை கிறிஸ்தவப் பெண்ணுக்குக் கிடைக்கக் கூடிய தர்ம குழிக்குள் அவளுடைய தாய் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், அந்த மகள் பிச்சை எடுத்தும் பிறரிடம் கெஞ்சியும், கிடைத்த காசில் ஒரு மரச்சிலுவை வாங்கி தன் தாயின் தலைக்குப் பக்கத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறாள். அவள் தினந்தோறும் அங்கு போவாள். தன் தாய்க்காக அவள் தினமும் பிரார்த்தனை செய்வாள்.

சிறிதும் நிறுத்தாமல் அந்தச் சிறுமி தன்னுடைய தாயைப் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒருவேளை தன் தாயைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்ததால் உண்டான உற்சாகத்தில் அவள் அப்படிப் பேசியிருக்கலாம். இல்லாவிட்டால் ஜானகியும் அந்தச் சிறுமியின் தாயும் தோற்றத்தில் ஒரே மாதிரி  இருந்ததால் உண்டான நெருக்கத்தால் அவள் தான் கூற நினைத்தவற்றையெல்லாம் கூறியிருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி அவள்பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுடைய நடவடிக்கை ஒவ்வொன்றும் அவளை எங்கோ பார்த்திருக்கிறோம் என்றொரு உணர்வை ஜானகியிடம் உண்டாக்கியது.

தானும் தன்னுடைய தாயும் எப்படி வாழ்ந்தோம் என்பதை அந்தச் சிறுமி சொன்னாள். அவளுடைய தாய் ஏதாவது வேலை செய்வாள். அந்தச் சிறுமி பிச்சை எடுப்பாள். அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். எல்லாவற்றையும் கூறிவிட்டு அவள் ஜானகியிடம் கேட்டாள்:

“அம்மா, நீங்க நாயரா?”

ஜானகி  ‘ஆமாம்’ என்றாள். அந்தச் சிறுமி தொடர்ந்து சொன்னாள்:

“என் அம்மா கூட நாயர் ஜாதிதான். என் அப்பா கூட சேர்ந்து வீட்டை விட்டு என் அம்மா வந்துட்டாங்க. அம்மாவோட வீடு வைக்கத்துல இருந்தது. நான் அங்கே போனது இல்ல. அம்மாவுக்கு ஒரு அக்காவும் மூணு தங்கச்சிகளும் இருந்தாங்க. யாருக்கும் கல்யாணம் ஆகல...”

அந்தச் சிறுமி தான் சொல்லிக் கொண்டிருந்ததைச் சிறிதும் நிறுத்தாமல், ஜானகி எப்படி அவள் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தாள் என்பதையோ, அந்தப் பேச்சு அவளிடம் எப்படிப்பட்ட மாற்றங்களையெல்லாம் உண்டாக்கியது என்பதையோ கொஞ்சமும் கவனிக்காமல் அவள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ஜானகி அதைக்கேட்டு குலுங்கி குலுங்கி அழுதவாறு ‘என் மகளே’ என்று அழைத்து அந்தச் சிறுமியை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுடைய தலையில் ஜானகியின் கண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுமியும் திடீரென்று அமைதியாகிவிட்டாள். ஜானகி அந்தச் சிறுமியின் முகத்தை உயர்த்தினாள். அந்த முகத்தையே ஆச்சரியத்துடன், மகிழ்ச்சியுடன் பாசத்துடன் அவள் உற்றுப் பார்த்தாள்.

“அய்யோ... என் பாரதியின் சாயல் அப்படியே இந்த முகத்துல இருக்கு...”

ஜானகி அந்த முகத்தில் நூறு முத்தங்கள் கொடுத்தாள். அந்தச் சிறுமி சொன்னாள்:

“அம்மா, அதுதான் என் அம்மா நாயரா இருந்தப்போ இருந்தப் பேரு. எல்லா விஷயத்தையும் என் அம்மா என்கிட்ட சொல்லி இருக்காங்க. பழைய விஷயங்களைச் சொல்றப்போ, அம்மா அந்தக் கதையைச் சொல்லுவாங்க!”

ஜானகியின் எல்லா சந்தேகங்களும் தீர்ந்துவிட்டன. ஆனால், அந்தச் சிறுமிக்கு எதுவும் புரியவில்லை. ஜானகியின் அணைப்பிற்குள் சிக்கிக்கொண்டு நின்றிருந்தது அவளுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருந்தது. இனியொருமுறை கிடைக்காது என்று நினைத்திருந்த ஏதோ ஒன்று தனக்குக் கிடைத்திருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். இனியும் ‘மகளே’ என்று அழைத்து யாராவது தனக்கு முத்தம் தருவார்கள் என்று அந்தச் சிறுமி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சிறிதும் எதிர்பார்க்காமல் அந்தச் சுகத்தை அனுபவிக்கக் கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பதே அவளுக்குப் பெரிய விஷயமாகத் தெரிந்தது. அவள் கேட்டாள்:

“அம்மா, நீங்க யாரு?”

மகிழ்ச்சி பொங்க ஜானகி சொன்னாள்:

“என் மகளோட... பெரியம்மா!”

அந்தச் சிறுமி ஒரு குழந்தையைப் போல ஜானகியை இறுக அணைத்துக் கொண்டாள். குழந்தை ஓடிச்சென்று தாயை இறுகக் கட்டிப் பிடித்துக்கொள்ளும் அல்லவா, அதைப்போல. ஜானகி அவளை வாரி எடுத்துக்கொள்ள நினைத்தாள். ஆனால், இப்போது அவளால் அதைச் செய்ய முடியவில்லை. அந்தச் சிறுமி அவளுடைய இன்றைய நிலைமைக்குச் சற்று வளர்ந்துவிட்டிருந்தாள். அவள் ஒரு சிறு குழந்தையைப் போல் ஆகிவிட்டிருந்தாள் என்பது வேறு விஷயம். எனினும், சிறுமி அவளைப் பார்த்து கேட்டாள்:

“பெரியம்மா, உங்க பேரு ஜானகிதானே!”

அந்தச் சிறுமிக்கு எல்லாமும் தெரிந்திருந்தது. பாரதி எல்லா விஷயங்களையும் அவளுக்கு ஏற்கெனவே கூறியிருக்கிறாள்.

உண்மையாகச் சொல்லப் போனால் பாரதி யாரையும் மறக்கவில்லை. அது மட்டுமல்ல- அவள் எப்போதும் எல்லோரையும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

மிகப் பெரிய அதிர்ஷ்டம் தனக்கு வாய்த்திருப்பதைப் போல மலர்ந்த முகத்துடனும் பாரம் இல்லாத இதயத்துடனும் சிறுமி சொன்னாள்:

“பெரியம்மா, உங்களைப் பற்றி அம்மா எப்போ பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எல்லார் மேலயும் ரொம்பவும் நீங்க பிரியமா இருப்பீங்கன்னு அம்மா சொல்லுவாங்க. சில நேரங்கள்ல உங்களைப் பற்றி சொல்றப்போ அப்போ வாய் விட்டு அழுதிடுவாங்க. அம்மா உங்களை ரொம்பவும் வேதனைப்படுத்திட்டதாக சொல்லுவாங்க.”

அந்தச் சிறுமி வேறொரு தகவலையும் சொன்னாள். பாரதி ஒருமுறை வைக்கத்திற்குப் போயிருக்கிறாள். ஆனால், அவர்களின் வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு முன்பு இருந்தவர்கள் அந்த ஊரைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த இடத்தை விலைக்கு வாங்கியவர்கள்தான் புதிதாக கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தச் சிறுமி கதையை இப்படிச் சொல்லி முடித்தாள்.

“அம்மா சாகுறதுக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடிதான் அங்கே போனாங்க. என்னை இங்கேயே விட்டுட்டு. அவங்களாகவே கிளம்பிப் போனாங்க. நாலஞ்சு நாட்கள் கழிச்சி அம்மா திரும்பி வந்தாங்க. எல்லாமே அழிஞ்சு போச்சுன்னு அவங்க அழுதுக்கிட்டே சொன்னாங்க.”

அது இன்னொரு இதயத்தைப் பிளக்கக் கூடிய செய்தியாக இருந்தது. அப்படியென்றால் பத்மினியும் தெருவிற்கு வந்துவிட்டாள் என்று அர்த்தமா? அந்தச் சிறுமி தன்னுடைய தாயின் கடைசி கால நோக்கங்களைச் சொன்னாள்:

“தான் செத்துப் போயிடுவோம்னு அம்மாவுக்கு நல்லா தெரியும். அதுக்கு முன்னாடி பெரியம்மா, உங்கக்கிட்ட என்னை எப்படியாவது கொண்டு போய் சேர்த்துடணும்னு அவங்க நினைச்சாங்க.”

ஜானகி பாசம் மேலோங்கக் கேட்டாள்.

“வர்க்கிக்கு வீடும் சொந்தக்காரங்களும் இல்லையாடி கண்ணு?”

ஆச்சரியத்தில் அந்தச் சிறுமியின் கண்கள் அகல விரிந்தன. அவள் கேட்டாள்:

“அப்படின்னா அப்பாவை உங்களுக்குத் தெரியுமா, பெரியம்மா?”

“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்டா, கண்ணு, பெரிய தப்பு பண்ணிட்டேன்.”

“என்ன தப்பு, பெரியம்மா?”


அந்தத் தப்பு என்னவென்று சொன்னால் அந்தச் சிறுமிக்குப் புரியாது. பல வருடங்களுக்கு முன்னால் பாரதியின் இதயம் வர்க்கியின் மீது பதிந்தபோது, அந்தக் காதல் உறவை ஜானகி எதிர்த்தாள் அல்லவா? அப்படி தான் எதிர்த்தது ஒரு தவறான விஷயம் என்று இப்போது, இந்த நிமிடத்தில்தான் ஜானகி உணர்கிறாள். அன்று ஜாதி மீது கொண்ட வெறுப்பில் அவள் அந்த உறவை எதிர்த்தாள். பாரதி, வர்க்கியுடன் வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டாள். அன்று அந்தக் காதல் உறவை அவள் ஏற்றுக் கொண்டிருந்தால், வர்க்கி பாரதியின் கணவனாக அங்கேயே இருந்திருப்பான். அந்த வீட்டில் ஆண் துணை என்று ஒரு ஆள் இருந்திருப்பான். அப்படி ஒரு சூழ்நிலை உண்டாகியிருந்தால், அந்த வீட்டில் இருந்தவர்களின் வாழ்க்கை நிலை இந்த மாதிரி ஆகியிருக்காது. ஒன்றுமே இல்லையென்றாலும் பவானியைத் தேடிப் போவதற்கு வீட்டில் ஒரு ஆள் இருந்திருப்பான். கொச்சு மாது பிள்ளைக்கு பத்மினியைக் கல்யாணம் செய்து வைப்பது நல்லதுதானா என்று கேள்வி கேட்பதற்கு ஒரு ஆண் இருந்திருப்பான். எல்லாருக்கும் வர்க்கி ஒரு ஆதரவு தரும் ஆணாக இருந்திருப்பான். அந்த வீட்டிற்கு உறவுக்காரன் என்று மனப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டு வந்தவன் அவன். வாழ்க்கையில் தான் முதல் தடவையாகச் செய்த தப்பை ஜானகி கோட்டயம் பேருந்து நிலையத்தில் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பயணிகள் அறையில் இருக்கும்போது உணர்ந்தாள். அது ஒரு மிகப் பெரிய தப்பு என்பது அவளுக்குப் புரிந்தது.

பாரதி ஒரு ஆணை விரும்பினாள். அதற்கு அவளுக்கு உரிமை இல்லையா? எப்படி ஒரு பெண் தன்னையே அறியாமல் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள் என்பதை நன்கு தெரிந்திருப்பவள் ஜானகி. அந்தக்காதலை ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். அதற்குப் பதிலாக அவள் பக்கத்து வீட்டுக்காரர்களை வாய்க்கு வந்தபடி திட்டினாள். ஜாதியையும் மதத்தையும் குறிப்பிட்டு அவர்கள் என்னவெல்லாமோ சொல்லி அவளை வெறுப்படையச் செய்தார்கள். அந்த ஜாதியும் மதமும் அவர்கள் யாரையும் காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை. உண்மையாகப் பார்க்கப் போனால் பாரதி, வர்க்கி இருவரின் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டு அவள் அவர்களை மன்னித்திருக்க வேண்டும். அவளுக்கு அன்று உண்டான அறிவுத் தடுமாற்றம்தான் அந்தக் குடும்பத்தையே இந்த அளவிற்குத் தகர்த்து எறிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள் ஜானகி. அவள் பாரதிக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தீங்கு இழைத்துவிட்டாள். எல்லாரின் வாழ்க்கையையும் நாசம் பண்ணிவிட்டாள்.

திரெஸ்யா மூலம்- அதுதான் அந்தச் சிறுமியின் பெயர் வர்க்கியின் கதையைக் கேட்டபோது தான் செய்த தவறு எந்த அளவிற்குப் பெரியது என்பதை ஜானகியால் புரிந்து கொள்ள முடிந்தது. வர்க்கி உண்மையிலேயே நல்லவன்தான். பாசமானவன். அவனுடைய தாயும், தந்தையும் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பாரதியை ஞானஸ்நானம் செய்து முடித்து மதச் சடங்குகளின்படி திருமணம் செய்திருந்தாலும், அவள் வரதட்சணை எதுவும் கொண்டு வராத மருமகள் அல்லவா? வர்க்கி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினான். திடீரென்று ஒருநாள் வர்க்கி மரணத்தைத் தழுவிவிட்டான். அவனுடைய மரணத்திற்குப் பிறகு பாரதியும் குழந்தையும் அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.

அப்போது அவனுடைய தந்தையும் தாயும் இறந்துவிட்டிருந்தார்கள். தம்பிமார்கள் அவர்களை வீட்டிற்குள் விடவில்லை. அதற்குப் பிறகு அவர்கள் தெருவே கதி என்று ஆனார்கள். உண்மையாகவே சொல்லப் போனால் வர்க்கி நல்லவன்தான்.

அந்தச் சிறுமி இப்படித்தான் அந்தக் கதையை கூறி முடித்தாள்:

“அப்பா இறந்த நாளன்னைக்கு ஒவ்வொரு வருடமும் அம்மா வழிபாடு செய்வாங்க. தான் இறந்தபிறகு நான் அதை ஒவ்வொரு வருடமும் கட்டாயம் நிறுத்தாம செய்யணும்னு அம்மா என்கிட்ட சொல்லியிருக்காங்க.” கண்களில் நீர் மல்க, அவள் கூறி முடித்தாள். “பெரியம்மா, அப்பா பாவம்... அவர் ரொம்பவும் நல்லவர்...”

அந்தச் சிறுமி தன் கால்களைச் சற்று மடக்கியவாறு, நெற்றியிலும், மார்பிலும், தோளிலும் சிலுவை வரைந்தாள். தன்னுடைய தந்தையின் மன சாந்திக்காக அவள் பிரார்த்தனை செய்தாள்.

மதத்தையும் ஜாதியையும் விட்டு நிரந்தரமாக வெளியே போய் விட்டதால், பாரதி இனிமேல் திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் ஜானகி நினைத்தாள். அன்று அவள் வீட்டை விட்டுப் போனது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான். ஜானகி அதைத் தெளிவாக நினைத்துப் பார்ப்பாள். திரும்பி வந்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பாரதி நினைத்திருப்பாள். இல்லாவிட்டால், தான் இனிமேல் திரும்பி வரவே போவதில்லை என்ற உறுதியான தீர்மானத்துடன் அவள் உறுதியாக இருந்திருக்கலாம். அப்படியென்றால் இறப்பதற்கு முன்பு வீட்டைத் தேடி எதற்காக அவள் வரவேண்டும்? அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகளை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு இறக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். மரணத்திற்கும் அவளுக்குமிடையே ஒரு பெரிய போட்டியே நடந்திருக்க வேண்டும். குழந்தையைத் தனியாக விட்டுப் போக முடியாமல் இருந்திருக்கலாம்.

தான் எதற்காக கோட்டயத்திற்கு வந்தோம் என்பதை ஜானகி நினைத்துப் பார்த்தாள். வேறு எந்த இடத்திற்கும் போகாமல் இங்கு வந்து அவள் சேர்ந்தாள். ஒருவேளை பாரதியின் ஆத்மா அவளை தேவிகுளத்தின் மலைகளிலிருந்து சிறு காற்றாக வந்து மோதி வருடி அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கும் தனக்கு முன்னால் பாரதி, தன்னுடைய செல்ல மகளைக் கொண்டு வந்து நிறுத்தி, அந்தச் சிறுமியின் கண்களைத் திறந்து அவளின் பெரியம்மாவைப் அந்தக் கண்கள் பார்க்கும்படி செய்திருக்க வேண்டும்.

இனிமேல் மற்றவர்களையும் இதே மாதிரி பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையலாம். பவானியையும், பத்மினியையும்... இல்லாவிட்டால்... அவர்களின் பிள்ளைகளை! அதுவும் இல்லாவிட்டால் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தை அவர்களில் யாரையாவது பார்த்து என்ற சூழ்நிலை உண்டாகலாம்.

எதுவாக இருந்தாலும் இந்த உலகத்தில், தான் தனியாக இல்லை என்ற ஒரு நிம்மதி ஜானகிக்கு உண்டானது. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். பாசமான ஒரு மகள். இனி எந்த நாளிலும் அவள் தனியாக இருக்கப் போவதில்லை.

அந்தச் சிறுமி உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள். அவளுக்கு மூன்று நான்கு தோழிகள் இருந்தார்கள். அவர்களிடம் அந்தச் சிறுமி சொன்னாள்: “என் பெரியம்மாவைப் பார்த்தீங்களா?”

தனக்குப் பெரியம்மாவும் சித்திமார்களும் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் நாயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்களிடம் திரேஸ்யா நூறு தடவைகளாவது கூறியிருப்பாள். அந்தப் பெண்கள் எல்லாரும் வந்து ஜானகியைப் பார்த்தார்கள். ஜானகி அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்து தெரிந்துகொண்டாள்.


பேருந்து நிலையத்தில் இருந்த ஒவ்வொருவரையும் அந்தச் சிறுமியின் உற்சாகக் குரல் திரும்பிப் பார்க்கச் செய்தது. அந்தச் சிறுமியின் பெரியம்மாவை எல்லாரும் பார்த்தார்கள். அவளுக்கு உண்மையிலேயே அது ஒரு மிகப் பெரிய விஷயம்தான். எல்லாருக்கும் அப்படியா?

5

ல்லறையில் ஒரு பிணம் அடக்க செய்யப்பட்ட இடத்திற்கு முன்னால் தாயும் மகளும் என்று தோன்றக்கூடிய இரண்டு பேர் முழங்காலிட்டு அமர்ந்திருக்கின்றனர். அது ஜானகியும், திரேஸ்யாவும்தான். அந்தப் பிணம் புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலே குவிக்கப்பட்டிருந்த மண்ணில் புல் முளைத்துக் கொண்டிருந்தது. அங்கு ஒரு புதிய மரச்சிலுவை வைக்கப்பட்டிருந்தது. அங்குதான் பாரதி நிரந்தர ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

முழங்காலிட்டு அமர்ந்திருந்த திரேஸ்யாம்மா கண்ணீருடன் சிலுவை வரைந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாயின் ஆத்மாவிற்கு நிரந்தர சாந்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவள் பிரார்த்தித்தாள். ஜானகி கையில் முகத்தை வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அந்த அழுகைக்கு நடுவில் தெளிவில்லாமல் என்னவோ அவள் கூறவும் செய்தாள். தன்னுடைய செல்லத் தங்கையிடம் அவள் கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவளுடைய தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததிலிருந்து தந்தையின் ஒரு தொடையில் அவளும் இன்னொரு தொடையில் பாரதியும் உட்கார்ந்திருப்பார்கள். தந்தை மாறி மாறி புளிக்குழம்பு ஊற்றப்பட்ட சாதத்தை உருண்டைகளாக உருட்டி ஊட்டி வளர்ந்ததிலிருந்து, கடைசியில் பிரிந்தது வரை உள்ள அந்த வாழ்க்கைக் கதை முழுவதையும் ஜானகி நினைத்துப்பார்த்தாள். சில நாட்களுக்கு முன்பே அவள் கோட்டயத்திற்கு வந்திருந்தால் பாரதியைப் பார்த்திருக்கலாம்.

திரேஸ்யா சொன்னாள்:

“பெரியம்மா, பிரார்த்தனை செய்யுங்கள். அம்மாவோட ஆத்மாவுக்காக பிரார்த்திங்க...”

ஜானகி அவள் சொன்னபடி செய்தாள். பாரதிக்காக அவள் பிரார்த்தித்தாள்.

மீண்டும் சில திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருக்கிறது. கோட்டயத்தில் ஏதாவது ஒரு மருத்துவமனைக்குப் போய் பிள்ளை பெற வேண்டும் என்பதை மட்டும்தான் ஜானகி நினைத்திருந்தாள். இப்போது அது மட்டும் போதுமா? இப்போது அவளுக்குப் பதின்மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள். உண்மையாகவே தான் அனாதை இல்லை என்ற மனநிம்மதி ஜானகிக்கு இருக்கிறது. அதோடு சேர்ந்து சில பொறுப்புகளும். அந்தப் பொறுப்புகள் ஏற்பட்டது குறித்து ஜானகி உண்மையாகவே சந்தோஷப்பட்டாள்.

திரேஸ்யாவை எடுத்துக் கொண்டால், அவள் தரையிலேயே நிற்கவில்லை. அவளுக்கு ஐந்தாறு வயதுகள் குறைந்துவிட்டதைப் போல் இருந்தது. அவள் எப்போதும் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தாள். அது இயற்கைதானே! கன்னிமாதாவும், தாயும் சேர்ந்து தன்னுடைய பெரியம்மாவைத் தன்னுடன் இருக்கும்படி கொண்டு வந்துவிட்டார்கள் என்று அவள் எல்லாரிடமும் கூறிக்கொண்டிருந்தாள். அவள் அப்படித்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பினாள்.

திரேஸ்யாவிற்கு உடுத்த ஒரு கைலியும் ஒரு சட்டையும் மட்டுமே இருந்தன. உள்பாடி அணிய வேண்டிய வயது அவளுக்கு வந்திருந்தது. அந்தக் கைலியும், சட்டையும் நாற்றமெடுத்தன. அவளுக்கு ஒரு புடவையும், சட்டையும், உள்பாடியும் வாங்கித்தர வேண்டும். அவளை முதலில் நன்கு குளிக்கச் செய்ய வேண்டும்.

ஒரு புதிய துணியும், சட்டையும், உள்பாடியும் தனக்குக் கிடைக்கப்போகின்றன என்ற விஷயம் தெரிந்தபோது திரேஸ்யாவிற்கு உண்டான சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவள் துள்ளிக் குதித்தாள். ஆனால், அவள் பெரியம்மாவுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அவளுடைய முகத்தைப் பார்த்து ஒரு சிறு குழந்தையைப் போல சைகை காட்டியவாறு கேட்டாள்:

“ஆனால், அதுக்கு நிறைய காசு வேணுமே, பெரியம்மா?”

அவளுடைய நெற்றியில் சிதறிக் கிடந்த தலைமுடிகளை கையால் தடவி அவற்றைக் காதுக்குப் பின்னால் இருக்கும்படி செய்த ஜானகி சென்னாள்:

“அதுக்குத் தேவையான காசு என்கிட்ட இருக்கு.”

தொடர்ந்து ஜானகி சொன்னாள்:

“இங்க பாரு... முடி எவ்வளவு நீளமா இருக்கு. சரியா கவனிக்காமலும், குளிக்காமலும் இருந்ததுனால முடியெல்லாம் எப்படி ஆயிடுச்சு பார்த்தியா? நான் உன்னை ஒழுங்கு பண்ணப் போறேன். பார்த்துக்கோ..”

அந்தச் சிறுமி ஜானகியின் கூந்தலைக் கையால் தொட்டவாறு சொன்னாள்:

“அம்மாவுக்கும் நிறைய தலைமுடி இருந்துச்சு. அவங்க சாகுற வரை தினமும் என் தலைமுடியை வாரி கட்டி விடுவாங்க.”

ஜானகி சொன்னாள்:

“நம்ம நிறைய தலைமுடி இருக்குற ஜாதிக்காரங்க. கவுரிக்கு இருந்த மாதிரி தலைமுடி எங்க யாருக்குமே இல்ல!”

ஜானகியின் அவிழ்ந்து கிடந்த தலைமுடியைக் கட்டுவதற்கு அந்தச் சிறுமி முயற்சித்தாள். நீண்ட நேரம் முயற்சி செய்தும் ஜானகி கட்டியிருந்தது மாதிரி அவளால் கட்டமுடியவில்லை. “ஓ... என்னால முடியல...” என்று கூறியவாறு அவள் எழுந்து தள்ளி உட்கார்ந்தாள். ஜானகி அவளைப் பாசத்துடன் குற்றம் சொன்னாள்:

“பதிமூணு வயசு ஆகுற ஒரு பொண்ணுக்குத் தலைமுடியைக் கட்டத் தெரியல.”

திரேஸ்யாவிற்கு சட்டை வேண்டாம். பெரியம்மா அணிந்திருப்பதைப் போன்ற ரவிக்கை வேண்டுமென்று அவள் சொன்னாள். அவளை ஜானகியே உட்கார வைத்து நன்கு தேய்த்து குளிப்பாட்டினாள். பிறகு அவளுடைய தலைமுடியை வாரி, நுனியில் முடிச்சுப் போட்டாள். புதிய முண்டை அணியச் செய்து உள்பாடியையும் ரவிக்கையையும் அணிவித்து ஜானகி சற்று தள்ளி நின்று அவளைப் பார்த்தாள். ஜானகியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. ஒருவேளை, ஜானகி பாரதியை சிறுமியாகப் பார்த்திருக்கலாம்.

அந்தச் சிறுமிக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்!

அவள் ஜானகியிடம் குளித்துவிட்டு போகும்போது சொன்னாள்:

“ஆனால் பெரியம்மா, இந்த நல்ல துணியும், ரவிக்கையும் நாளைக்குக் காலையில அழுக்காயிடும். நாம படுத்திருக்குற இடம் அப்படி...”

அன்று வேலைக்குப் போகவில்லையே என்று நூறு தடவையாவது அவள் கூறியிருப்பாள். போயிருந்தால் முக்கால் ரூபாய் கிடைத்திருக்கும்.

“அப்படின்னா போகட்டுமா? என்ன இருந்தாலும், பெரியம்மா உங்களை நான் பார்த்த நாளாச்சே!”

அவளுக்கும் சில திட்டங்களும், காரியங்களும் இருக்கவே செய்தன. அவை எல்லாவற்றையும் அவள் ஜானகியிடம் கூறினாள்:

“பெரியம்மா, இந்த வயிறை வீங்க வச்சிக்கிட்டு நீங்க எங்கேயும் போக வேண்டாம். உங்களுக்கு ரொம்பவும் களைப்பா இருக்கும் நான் வேலைக்குப் போறேன். மதியம் இங்கே சோறு கொண்டு வந்து தர்றேன். அதுதான் நல்லது.”

ஜானகிவேலைகஅகுப் போக வேண்டாமென்று சொன்னாள். அதற்கு திரேஸ்யா சொன்னாள்:

“மாதாவோட கருணையால எனக்கு நாளொன்றுக்கு முக்கால் ரூபாய் கிடைக்கும். நமக்கு அதுபோதும் பெரியம்மா, நீங்க வீடு வீடா அலைய வேண்டாம்.”

மறுநாள் காலையில் வெளியே போகக்கூடாது என்று கண்டிப்புடன் அவள் சொன்னாள். சரி என்று அதற்குச் சம்மதித்தாள் ஜானகி. ஆனால், திரேஸ்யாவிற்கு நம்பிக்கை வரவில்லை.

“பெரியம்மா, சத்தியம் பண்ணி சொல்லுங்க.”


ஜானகி சத்தியம் செய்தாள். “என் மகள் திரேஸ்யா மேல ஆணையா சொல்றேன்... நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன்.”

அது போதாதென்று திரேஸ்யா நினைத்தாள்.

ஜானகி கேட்டாள்:

“வேற யார் மேல சத்தியம் பண்ணணும் மகளே?”

திரேஸ்யா சொன்னாள்:

“வயித்துல இருக்குற சின்னத்தம்பி மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க!”

ஜானகிக்கு அதைக்கேட்டு சிரிப்பு வந்தது. அது ஒரு சின்னத்தம்பி என்பது வரை அவள் மனதில் நினைத்து வைத்திருக்கிறாள். திரேஸ்யாவிற்கு நம்பிக்கை வரும் வண்ணம் ஜானகி சொன்னாள்:

“இல்ல, மகளே... நான் எங்கேயும் போகமாட்டேன்!”

அந்த மகளைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்காக ஜானகி விதிக்கு நன்றி உள்ளவளாக இருந்தாள். ஆனால், ஜானகிக்கு ஒரு விஷயத்தில் மனதில் சமாதானம் உண்டாகவில்லை. எதற்காக விதி அவர்களைச் சந்திக்க வைத்தது? திரேஸ்யாவிற்கு அவள் என்ன செய்துவிடமுடியும்? நல்ல ஒரு சிறுமி! ஒருவேளை அவள் கோட்டயத்தின் தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒருத்தியாக ஆகாமல் இருக்கலாம். அவள் சுத்தமும் தைரியமும் கொண்ட நல்ல ஒரு பெண்ணாக இருக்கலாம். முன்பு நான்கு பேர் ஜானகியின் பாதுகாப்பில் இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் அப்படித்தான் தைரியமும் சுத்தமும் கொண்டவர்களாகவும், நல்லவர்களாகவும் வைத்திருக்க ஜானகியால் முடிந்தது. அவர்களின் வீட்டில் இருந்தவர்களிலேயே ஒரே ஒருத்திதான் அந்த நெறிமுறையை மீறி நடந்தாள். அவள்தான் பாரதி. ஆனால், அவளைத் தப்பு செய்தவள் என்று பார்க்க ஜானகியால் முடியவில்லை. அது ஒரு காதல் உறவின் கதை ஆயிற்றே! இன்று நான்கிற்குப் பிறகு ஐந்தாவது பெண் அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள்.

தன்னுடைய வாழ்க்கைக் கதையை நினைத்துப் பார்க்கும்போது அது அவளுக்கு மனதில்அமைதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறதா என்ன? நான்கு பேர் ஒரு காலத்தில் அக்கா என்ற முறையில் அவளுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று ஐந்தாவதாக ஒருத்தி ‘அம்மா’ என்ற முறையில் அவளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறாள். விதி எதற்காகப் பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்ற கொடுமையை அவள் மீது வந்து திணிக்கிறது? அவள் அப்படி என்ன தப்பு செய்தாள்? ஜானகி தன்னுடைய விருப்பங்களை நினைக்காமல் இருக்கக் கற்றுக் கொண்டவள். அவள் குலையில் மூத்தவளாயிற்றே! வக்கீல் குமாஸ்தா பரமுபிள்ளையின் மூத்தமகள்! திரேஸ்யாவைச் சந்தித்தது என்பது உண்மையிலேயே ஜானகிக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். தன்னுடைய எல்லாவற்றையும் பத்மினிக்காக கொடுக்கத் தயங்காத ஜானகியால், இந்த ஒன்பதாவது மாதத்தில் திரேஸ்யா வந்து சேர்ந்திருப்பது, தன்னுடைய காரியங்களுக்கு ஒருவிதத்தில் ஒத்தாசையாக இருக்கும் என்று நினைக்க முடியவில்லை.

சரியாகப் பன்னிரண்டரை மணிக்கு திரேஸ்யா ஒரு பொட்டலத்தைக் கொண்டு வந்தாள். அதில் சாதம் இருந்தது. பெரியம்மா இந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை அறிந்த திரேஸ்யா அளவற்ற சந்தோஷமடைந்தாள். அந்தச் சிறுமிக்கு ஜானகி எவ்வளவு சாப்பிட்டாலும் போதாது என்றே பட்டது. ஜானகி சொன்னாள்:

“மகளே, என் வயிறு பெருசா இருக்குல்ல?”

அவள் சிரித்தாள். அது மட்டுமல்ல- அந்தச் சிறுமி ஜானகியின் வீங்கிய வயிற்றின் மீது முத்தமிட்டாள். அவள் தன்னுடைய தம்பிக்கு முத்தம் தந்தாள்.

திரேஸ்யாவின் வாழ்க்கையிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் வந்து சேர்ந்தன. வேலை முடிந்து அவள் தெருவில் தன்னுடைய தோழிகளுடன் அலைந்து திரிவதில்லை. அவள் நேராகத் தன்னுடைய பெரியம்மாவைத் தேடி வந்து விடுவாள். இரவில் தன் பெரியம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் அவள் உறங்குவாள். பெரியம்மாவின் கைக்குக் கீழே சூடு உண்டாகப் படுத்திருப்பது எவ்வளவு சுகமான அனுபவம்! தினமும் அவள் குளித்து விடுவாள். இல்லாவிட்டால் பெரியம்மா அவளைக் குளிக்கச் செய்வாள். பிறகு அவளுடைய தலைமுடியைக் கோதிவிட்டு உயர வைத்துக் கட்டிவிடுவாள்.

மருத்துவமனைக்குப் போகும் நாள் நெருங்கி வரவர ஜானகிக்கு மனக்கவலை அதிகமாகிக் கொண்டு வந்தது. தான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது திரேஸ்யா என்ன செய்வாள்? திரேஸ்யாவைத் தனியாக விட்டுச் செல்ல ஜானகிக்கு கஷ்டமாக இருந்தது. அந்தச் சிறுமி, வயதுக்கு வரும் நிலையில் இருந்தாள். உடம்பில் இப்போதே பளபளப்பு தெரிந்தது. ஒரு தாய் தான் பெற்ற மகளுக்கு எப்படி அறிவுரை கூறுவாளோ அப்படி திரேஸ்யாவிற்கும் அவள் அறிவுரை கூறுவாள். அவற்றை திரேஸ்யாவும் புரிந்து கொண்டாள். எனினும் ஜானகிக்கு மனதில் திருப்தி உண்டாகவில்லை. வேறு யாரையும் துணைக்கு இருக்க வைக்கவும் வாய்ப்பில்லை. ஒரு சாலை வேலைக்காக மண் சுமப்பதுதான் அவளுடைய வேலை. அவளுடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாருமே தவறு செய்கிறவர்கள் என்பதுதான் ஜானகியின் எண்ணம்.

மருத்துவமனைக்குப் போகவேண்டிய நாளன்று, விஷயங்கள் தெரிந்த ஒருத்தியைப்போல திரேஸ்யாக்குட்டி சொன்னாள்:

“பெரியம்மா எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும்.”

ஜானகி மருத்துவமனையில் இருந்தாள். தினமும் காலையிலும் மாலையிலும் திரேஸ்யா மருத்துவமனைக்கு வருவாள். பெரியம்மாவைப் பார்ப்பாள். அவளுடைய நடத்தையிலும் ஒழுங்கிலும் எந்தவித மாற்றமும் இல்லை. அது மட்டுமல்ல. அவள் தனக்குக் கிடைக்கும் கூலிக் கணக்கை தினமும் கூறுவாள். இதற்கிடையில் தன்னுடைய தந்தையின் நினைவு நாளன்று வழிபாடு நடத்தினாள். பெரியம்மா எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பிள்ளை பெற வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்வதாகவும் அவள் நேர்ந்தாள்.

ஜானகிக்கு பிரசவம் ஆனது. திரேஸ்யா கூறியதைப் போல அது ஒரு ஆண் குழந்தைதான்.

வயதுக்கு வந்திருக்கும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும்... பேருந்து நிலையத்தின் பயணிகள் அறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். சிறிது உடல்நிலை சரியானவுடன், ஜானகியும் திரேஸ்யாவுடன் சேர்ந்து வேலைக்குப் போக ஆரம்பித்தாள். அவளுக்கும் பன்னிரண்டு அணா கூலியாகக் கிடைத்தது. குழந்தையையும் வேலை செய்யும் இடத்திற்கு அவள் கொண்டு செல்வாள். அந்த வகையில் நாளொன்றுக்கு அவர்களுக்கு ஒன்றரை ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.

நாகம்படத்து ஆற்றின் அக்கரையில் சாலையைத் தாண்டி உள்ளே போனால் ஒரு சிறு வீடு இருப்பதாக அவர்களுடன் வேலை செய்த ஒரு பெண் சொன்னாள். நாளொன்றுக்கு இரண்டணா வாடகை தரவேண்டும். அவர்கள் அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்கள். இப்போது அவர்களுக்கு, வீட்டிற்குப் போகிறோம் என்று கூறுவதற்கு ஒரு இடம் இருந்தது.

ஜானகியை எப்போதும் ஒரு பிரச்சினை அலைக்கழீத்துக் கொண்டேயிருந்தது. அது நாளடைவில் ஒரு குற்றஉணர்வாகவே மாறியது. அவருடைய மகன் வளர்ந்து வரும்போது கட்டாயம் அவன் தன் தந்தையைப் பற்றி அவளிடம் கேட்பான்.


ஒரே ஒரு பதிலைத்தான் அப்போது அவளால் கூற முடியும். அவன் தூக்குமரத்திலிருந்து தப்பித்துவிட்டான் என்றால், சில வருடங்களுக்குப் பிறகு ஓச்சிற கோவிலில் வந்து தங்களை வந்து பார்ப்பான் என்பதை மட்டுமே அவளால் கூற முடியும். அவனுடைய தந்தையின் கழுத்து, கொலைக்கயிறின் சுருக்கிலிருந்து தப்பியதா என்பதைஎப்படி தெரிந்து கொள்வது? தப்பித்துவிட்டான் என்றால் எத்தனை வருடங்கள் கழித்து அவள் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு ஓச்சிற கோவிலில் போய் நிற்க வேண்டும். எதையும் அவளால் தெளிவாகத் தீர்மானிக்க முடியவில்லை.

அவன் துருவித் துருவி கேள்விகள் கேட்டால் எப்படிப்பட்ட நீளமான கதையை அவனுக்கு அவள் சொல்ல வேண்டியதிருக்கும்? அவன் வளர்ந்து நான்கு விஷயங்கள் தெரியும் நிலைக்கு வருகிறபோது நம்பமுடியாத அளவிற்கு இருக்கும் ஒரு கதை அல்லவா இது!

அவள் அவளிடம் ஒரு பெயரைக் கூறியிருந்தான். இடம் மாற மாற பெயரை மாற்றி மாற்றிச் சொன்னான். தான் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதை ஒருமுறை கூட கூறியதில்லை. தேவிகுளத்தில் இருக்கும்போது போலீஸ்காரர்கள் அவளைப் பிடித்துக் கொண்டு போனார்கள். எங்கு கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை. அவளுடைய இதயத்தை வேதனைப்படுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் அது.

வீட்டிற்கு வசிக்க வந்து சில நாட்கள் ஆகிவிட்டன. பக்கத்து வீட்டிற்குப் புதிதாக ஆட்கள் வந்திருந்தார்கள். அது ஒரு போலீஸ்காரரின் குடும்பம். அவர் சாலையில் சீருடை அணிந்து போவதை ஜானகி பார்த்தாள். ஒருவேளை அந்த ஆளை விசாரித்தால் தகவல்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று ஜானகிக்குத் திடீரென்று தோன்றியது. அன்று ஜானகி வேலைக்குப் போகவில்லை. தனியான நோக்கம் அதற்கு இருந்தது. அவள் அன்று போலீஸ்காரருடைய மனைவியுடன் பழக்கம் உண்டாக்கிக் கொண்டாள். மறுநாள் போலீஸ்காரரிடம் அவள் விஷயத்தைச் சொன்னாள்.

பிறகு தினமும் ஏதாவது தகவல் வருமா என்று காத்திருந்தாள். ஒருநாள் அந்தப் போலீஸ்காரர் அவளை அழைத்தார். அவர் விவரங்களைத் தெரிந்து வைத்திருந்தார். துடிக்கும் இதயத்துடன் அவள் ஓடினாள். தன்னுடைய உயிர் நாயகனின் கழுத்திற்குக் கயிறு விழுந்ததா, இல்லாவிட்டால் சில வருடங்கள் கழித்தாவது அவனைப் பார்ப்பதற்கும் மகனுக்கு அவனுடைய தந்தையைக் காண்பிப்பதற்கும் வாய்ப்பு இருக்குமா என்பதும் சில நிமிடங்களில் அவளுக்குத் தெரிந்து விடும். அந்தக் காதல் நாடகங்களின் கதையைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். நிச்சயமாக அவர்கள் ஒருவரையொருவர் மனப்பூர்வமாகக் காதலித்தவர்களே.

அவள் அந்தப் போலீஸ்காரருக்கு முன்னால் போய் நின்றாள். அவர் அவளைத் தலையிலிருந்து பாதம் வரை மூன்று நான்கு முறைகள் உற்றுப்பார்த்தார். பிறகு கேட்டார்:

“அப்படின்னா, உன் குழந்தையோட தகப்பன் அவன்தானா?”

அவள் சொன்னாள்: "தேவிகுளத்துல இருக்குற ஏலத்தோட்டத்துல போலீஸ்காரர்கள் பிடிச்ச ஆளு!"

அவர் சொன்னார்: "அதுதான்டி... அவனைப் பற்றித்தான் நான் கேக்குறேன்!"

ஜானகியின் கண்ணில் இருள் புகுந்தது. காதுகள் அடைத்து விட்டதைப் போல் இருந்தது. ஒரு கேள்வி அவளுடைய இதயத்தின் அடியிலிருந்து கிளம்பி வந்தது:

"என்ன ஆச்சு?"

அதற்கு அவர் பதில் கூறவில்லை. அவர் கேட்டார்:

"உனக்கு ஒரு குழந்தைதான் இருக்கா?"

"ஆமாம்" என்று அவள் பதில் சொன்னாள். மற்றொரு கேள்விக்குப் பதிலாக "ஒரு குழந்தைதான் பெற்றேன்" என்றாள். சிறிது ஆச்சரியம் கலக்க அவளைப் பார்த்த அந்தப் போலீஸ்காரர் சொன்னார்:

"அப்படின்னா நீ உன் குழந்தைக்குத் தகப்பனா ஆக்கிய ஆளு பரவாயில்லையேடி! நீ எவ்வளவு நாட்கள் அவன் கூட இருந்தே?"

அவள் "ஒன்றரை வருடங்கள்" என்றாள்.

"நீ எப்படி அவன் கூட வாழ்ந்தேடி?"

பக்கத்தில் நின்றிருந்த அவருடைய மனைவி உள்ளே நுழைந்தாள்.

"என்ன இது? ஒரே கூத்தா இருக்கு. இந்தக் கூத்தெல்லாம் ஸ்டேஷன்ல நடக்குறது போதாதா? இந்த அப்பாவிப் பெண் மனசு வெடிச்சு நிக்கிறப்போ, பூனை எலியைப் பாடாய்ப்படுத்துறது மாதிரி கொல்லணுமா என்ன?"

அவர் தன் மனைவியின் பக்கம் திரும்பிச் சொன்னார்:

"அவன் பத்து வருடங்களா யாருக்கும் பிடி கொடுக்காம திரிஞ்சான். ஒரு போலீஸ்காரரோட தொப்பியைக் கழட்டினவன் அவன். பொண்டாட்டியைக் கொன்னுட்டு, அவன் வேற ஒருத்தனையும் கொன்னான். அந்த அளவுக்குப் பயங்கரமான ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."

போலீஸ்காரரின் மனைவி கேட்டாள்:

“அதுக்கு இந்தப் பெண் என்ன செய்ய முடியும்? அதுக்கு இவள் என்ன பொறுப்பா? இவளோட குழந்தைக்குத் தகப்பனாயிட்டான் அவன்!”

போலீஸ்காரர் சொன்னார்:

“இவளும் சாதாரண ஆள் மாதிரி தெரியலை. பார்க்குறதுக்கு வேணும்னா பாவம் போல இருக்கலாம். ”

போலீஸ்காரரின் மனைவி அந்த பேச்சை எதிர்த்தாள்:

“தேவையில்லாம எதையாவது சொல்லிக்கிட்டு இருக்காதீங்க.”

போலீஸ்காரர் சொன்னார்:

“இல்லாட்டி அப்படிப்பட்ட ஒருத்தனைத் தன் குழந்தைக்கு அப்பனா ஆக்கியிருப்பாளா?”

அதற்குப் பிறகும் அந்தப் போலீஸ்காரரின் ஆச்சரியம் நிற்பதாக இல்லை. அவ்வளவு பயங்கரமான ஒரு கொலைகாரனுடன் எப்படி அவள் வாழ்ந்தாள் என்பதுதான் அந்த ஆச்சரியத்துக்கான காரணம்.

போலீஸ்காரரின் மனைவி சொன்னாள்:

“அது இந்தப் பெண்ணுக்கு அப்போ தெரியாம இருந்திருக்கலாம்!”

போலீஸ்காரரின் நடவடிக்கை சற்று மாறியது. “ஆமா அப்படிக்கூட இருக்க வாய்ப்பு இருக்குல்ல...?”

அவர் சொன்னவை எல்லாம் ஆட்சேபத்திற்குரியவையே. அவள் அப்படி நடக்கவில்லை. அவன் அவளை ஏமாற்றவில்லை. அவள் எப்படி அவனுடன் வாழ்ந்தாள் என்பதைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை. அவள் எந்தத் தகவலுக்காக காத்திருக்கிறாளோ, அது அவளுக்குக் கிடைத்தால் போதும்.

அதற்குப் பிறகும் அந்தப் போலீஸ்காரர் எதுவும் சொல்லவில்லை. ஒரு மனதுடன் இப்படியெல்லாமா குரூரத்தனமாக விளையாடுவது? அவர் ஒரு போலீஸ்காரராக இருப்பதால் அப்படி நடந்து கொள்கிறாரோ? அவர் கேட்டார்:

“அந்த ஆளோட பேர் என்னன்னு நீ சொன்னே?”

அவள் சொன்னாள்: “கோவிந்தன்...”

அவர் கிண்டல் கலந்த ஒரு சிரிப்புடன் சொன்னார்:

“அவன் பேரு கோபாலன். அவன் உன்னையும் ஏமாத்திட்டான்.”

அவனுடைய பெயர் எதுவாக இருந்தால் அவளுக்கு என்ன?

போலீஸ்காரர் தொடர்ந்தார்: “அவன் எர்ணாகுளம் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இருப்பவன். அங்கேதான் அவன் கொலை செய்திருக்கிறான். அவனை செஷன்ஸுக்கு கமிட் செய்திருக்காங்க. ஒரு மாதத்துல அவனோட தலைவிதி என்னன்னு தெரியும்!”

அது போதும். அவளுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. அப்படியென்றால் எதுவும் நடக்கவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு தெரியும்.

போலீஸ்காரர் அவளை அந்த அளவிற்கு கஷ்டத்திற்குள்ளாக்கினாலும், ஒரு தகவலை அவளிடம் அவர் சொன்னார்:


“அவன் இப்போ எர்ணாகுளம் லாக்-அப்ல இருப்பான். அங்கே அவன் கட்டாயம் இருப்பான்.”

அன்று இரவு பெரியம்மாவும் மகளும் அமர்ந்து யோசித்தார்கள். கோட்டயமும் எர்ணாகுளமும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். அங்கேயும் கோட்டயத்தில் இருப்பதைப் போல சாலை வேலையும் மண் சுமக்கும் வேலையும் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஒரு தயக்கம் திரேஸ்யாவிற்கு இருந்தது. அவளுடைய தாயை அடக்கம் செய்திருப்பது கோட்டயத்திலாயிற்றே!

அதற்கு அவளே சமாதானமும் கூறிக்கொண்டாள். “நான் எப்போ தோணுதோ, அப்போ கோட்டயத்துக்கு வருவேன்.”

6

கூர்மையாகக் கவனித்தால் அதைக் கண்டுபிடிக்கலாம். மிளகு அள்ளிக் கொண்டிருக்கும்பொழுது கோணியைப் பிடித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கு கோணிகளை அடுக்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞன் மீது அவளையே அறியாமல், அவளுடைய பார்வைகள் போய்க் கொண்டிருந்தன. அவள் வெளியே போகவேண்டுமென்றால் அவன் நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கதவைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அவனுடைய கண்கள் அவளைப் பார்ப்பதுண்டு. அவன் பார்க்கிறான் என்ற விஷயம் தெரியும்போது மனதில் உண்டாகும் கிளர்ச்சி அவளுக்கு ஒரு புதிய அனுபவம்தான். அப்போது அவளுடைய கன்னங்களில் பிரகாசம் உண்டாகும். கண்களில் பிரகாசம் உண்டாகும். கண்களில் ஒருவித மலர்ச்சி தெரியும். உதடுகள் புன்னகையால் மலரும். அப்போது வேலை செய்வதில் எப்படி முழுமையாகக் கவனத்தைச் செலுத்த முடியும்? அப்படிப்பட்ட அனுபவங்கள் ஒவ்வொரு நாளும் நூறு தடவைகளாவது உண்டாகும்.

அவனைத் தாண்டி வெளியே போகும்போது, தன்னுடைய முகத்தில் மலர்ந்திருக்கும் புன்னகையுடன் ஒதுங்கியவாறு, சற்று இப்படியும் அப்படியுமாக அசைந்து அவள் நடந்து செல்வாள். யார் தன்னைக் கவனிக்க வேண்டுமென்று அவள் விரும்புகிறாளோ, அவன் தன்னைக் கவனிக்கிறான் என்ற உணர்வால்தான் அந்த ஒதுங்கலும், அசைதலும், புன்னகையும் உண்டாகின்றன. நரம்புகளில் ஒரு புத்துணர்ச்சி வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கும். உண்மையிலேயே அது ஒரு சுகமான அனுபவம்தான்.

அந்தத் தொழிற்சாலையில் அது பல நாட்களாக நடந்து வருகிறது. அங்கு வேலை பார்க்கும்போது ஒரு இளம்பெண்ணும் அங்கு பணி செய்யும் ஒரு இளைஞனும் ஒருவரோடொருவர் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அந்தத் தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் எல்லாருமே வேலை பார்க்கிறார்கள். அவர்களில் கணவன்- மனைவிமார்கள் இருக்கிறார்கள். அங்கேயே திருமணம் நிச்சயிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். கள்ள உறவுகளுக்கான தயாரெடுப்புகளும் அங்கு நடக்கவே செய்கின்றன. அவற்றில் எப்படி என்று இருவராலும் உறுதியாகக் கூற முடியாத- நினைத்துப் பார்த்திராத - ஒரு உறவு உண்டானது. இருவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் சலனங்கள் உண்டாயின. ஆனால், அதை யாரும் கவனிக்கவில்லை. அங்கு யாரும் அதைக் கவனிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அந்த இளம்பெண்ணைப் பொறுத்தவரையில், அவளின் நடவடிக்கைகளைக் கவனிக்க கடமைப்பட்டிருக்கும் ஆள் ஒன்றே ஒன்றுதான். அது ஜானகிதான். ஜானகி வேலை செய்வது அங்கு அல்ல.

திரேஸ்யா சமீப காலமாக மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருந்தாள். அதை ஜானகியும் கவனிக்காமல் இல்லை. கடுமையான வெயிலில் கல்லும் மண்ணும் சுமப்பதிலிருந்து கஷ்டமான வேலைகள் பலவற்றையும் திரேஸ்யா கறுத்துப்போய் சோர்வுடன் திரும்பி வருவாள். இளமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் திரேஸ்யா நெஞ்சு வெடிக்கிற அளவிற்கு வேலை செய்வதை ஜானகியால் சிறிதும் ஜீரணிக்க முடியவில்லை. அது மொட்டிலேயே வாடக்கூடிய ஒரு விஷயமாயிற்றே! ஆனால், வேலை செய்யாமல் எப்படிப் பிழைக்க முடியும்? அதனால் தான் திரேஸ்யாவைத் தொழிற்சாலை வேலைக்கு அவள் அனுப்பி வைத்தாள். அது அந்த அளவிற்கு கஷ்டமான வேலை இல்லை. காற்றையும் வெயிலையும் தாங்க வேண்டியதில்லை. ஒரு கட்டிடத்திற்குள் இருந்துகொண்டு செய்யக்கூடிய வேலை. எதுவுமே இல்லையென்றாலும், உடம்பின் பிரகாசம் குறைய வாய்ப்பில்லை. அவள் நினைத்தது சரியாகவே இருந்தது. தொழிற்சாலைக்கு வேலைக்குப் போன பிறகு, திரேஸ்யாவின் உடம்பில் பளபளப்பு உண்டானது. இரத்த ஓட்டத்தால் நிறம் ஏறியது. முகத்தில் ஒளி கூடியது. முன்பு மிகவும் தளர்ந்துபோய் அவள் வீட்டிற்குத் திரும்பி வருவதைப் பார்த்து ஜானகி வாய்விட்டு அழுதிருக்கிறாள். பொழுது விடிந்தால், திரேஸ்யாவால் பாயை விட்டு எழுந்திருக்கக் கூட முடியாது. இப்போது உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகியிருந்தாலும், சில நேரங்களில் அவளுக்கு எரிச்சலும் கோபமும் வருகின்றன. அந்த மாற்றத்தை உண்டாக்கியது இப்போது கிடைத்திருக்கும் சந்தோஷம்தான் என்று ஜானகி நினைத்தாள். திரேஸ்யா ஒரு இளைஞனை இதயத்தில் குடி அமர்த்தியிருக்கிறாள் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது.

திரேஸ்யா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு ஜானகி என்ற தாயின் மனம் குளிர்ந்தது. ஆனால், ஜானகி மனதுக்குள் ஒரு விஷயத்தைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். திரேஸ்யாவிடம் சமீபகாலமாகத் தென்படும் மகிழ்ச்சிக்கும் சிரிப்பிற்கும் காரணம் என்னவாக இருக்கும்? அதுதான் அவளைப் பயமுறுத்தியது. சிரிப்பிற்குப் பின்னால் அழுகை இருக்கும். அவள் அழவேண்டிய சூழ்நிலை உண்டாகக் கூடாது என்று ஜானகி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள். திரேஸ்யாவின் உடல் பளபளவென மின்னியது. அதைப் பார்த்து ஜானகியின் மனம் குளிர்ந்தது. உண்மையிலேயே திரேஸ்யா அழகிதான். அந்த அழகு நாள் ஆக ஆக அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதைப் பார்த்து ஜானகி பயந்தாள். திரேஸ்யாவைப் பார்த்துப் பார்த்து ஜானகி பயந்தாள். திரேஸ்யாவைப் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டு நின்று கொண்டிருக்கும்பொழுது ஜானகி சொன்னாள்:

“மகளே, நமக்கு நம்மை விட்டால் வேறு யாரும் இல்ல. அதுனால ரொம்பவும் கவனமா இருக்கணும், மகளே. மனசையும் உடலையும் பத்திரமா பார்த்துக்கணும்!”

திரேஸ்யாவுக்கு அவள் சொன்னதன் முழு அர்த்தமும் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

அவளைப் பார்த்த நாளிலிருந்து ஜானகி தைரியசாலியாகவும், சுத்தம் பேணுபவளாகவும் இருந்தாள். அந்த விஷயத்தில் ஜானகி உறுதியாக இருந்தாள். ஏழையாக இருந்தாலும், வறுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் தைரியசாலியாகவும் சுத்தமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். திரேஸ்யா அந்த விஷயத்தில் ஜானகியைவிட ஒருபடி அதிகமாகவே இருந்தாள். அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருந்தாள். அவள் நெற்றியில் திலகம் இட்டாள். தலைமுடியை வாரி பூச்சூடினாள். நல்ல ரவிக்கை அணிவதிலும் புடவை உடுத்துவதிலும் அவளுக்கு விருப்பம் இருந்தது.

மனதில் இருக்கும் ஆசையை அவள் கூறுவதுண்டு. எப்போதும் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் விஷயத்தில் அவள் புதிது புதிதாக ஏதாவது செய்து கொண்டிருப்பாள். வயது உண்டாக்கக் கூடிய ஒரு விஷயம் என்று அதை நினைத்துக் கொள்வாள் ஜானகி. திரேஸ்யா தனக்கே தெரியாமல் ஒரு ஆணின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் புதுமையுள்ள ஒரு பெண்ணாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயம் ஜானகிக்குத் தெரியாது.


மேல் கூரை வரை அடுக்கி வைத்திருந்த சாக்கு மூட்டைகளின் மறைவில் இருந்தவாறு அந்த இளம்பெண்ணும் இளைஞனும் இரண்டு வார்த்தைகளை ஒருவரோடொருவர் பரிமாறிக் கொண்டார்கள்.

குரல் தடுமாற அவன் சொன்னான்:

“நாம காதலிப்போம்!”

பதைபதைப்புடன் அவள் அதற்குப் பதில் சொன்னாள்:

“அய்யோ... பெரியம்மாகிட்ட கேட்கணும்.”

அவர்கள் இருவரும் இரு வெவ்வேறு வழிகளில் நடந்து போனார்கள். அவளுடைய இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. உடல் பயங்கரமாக நடுங்கியது. எனினும், ஒரு பாரம் இறங்கியதைப் போல அவள் உணர்ந்தாள்.

அந்தப் பதைபதைப்பு இல்லாமற் போனவுடன், அவள் ஆளே முழுமையாக மாறிப் போனாள். தனக்கு ஒரு புதிய ஒரு மதிப்பு வந்து சேர்ந்திருப்பதைப் போல் அவள் உணர ஆரம்பித்தாள். மதியத்திற்கு முன்பு இருந்த பெண் அல்ல தான் என்று அவள் நினைத்தாள்.

எப்போதாவது அந்தத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு அப்துக் குட்டியைப் பற்றி அவள் கூறுவதுண்டு. அவன் ஒரு திறமைசாலியான பணியாள், எல்லாரிடமும் மரியாதையாக பழகக் கூடியவன் என்றெல்லாம் அவள் கூறுவாள். அங்கு மோசமான நடத்தை கொண்ட பணியாட்களும் இருக்கிறார்கள். அப்படி பலரைப் பற்றியும் சொல்லும்போது அப்துக்குட்டியைப் பற்றியும் அவள் கூறுவாள். அவன் பெயரை உச்சரிக்கும்போது அவள் ஒரு மாதிரி ஆகிவிடுவாள். ஆனால், ஜானகி அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. இப்போது அப்துக் குட்டியைப் பற்றி மணிக்கு நாற்பது தடவைகள் திரேஸ்யா பேசிக் கொண்டிருந்தாள்.

அதிகாரத் தொனியில் ஒருநாள் ஜானகி கேட்டாள்:

“ம்... என்ன இது?”

“என்ன பெரியம்மா?”

ஜானகி அவளைப் பார்த்து கேட்டாள்:

“அப்துக்குட்டின்ற பேரை நீ இப்போ அடிக்கடி சொல்றியே!”

அதைக்கேட்டு திரேஸ்யா ஒரு மாதிரி ஆகிவிட்டாள். ஜானகி பாசத்துடன் அவளுக்கு அறிவுரை சொன்னாள்:

“மகளே... நான் சொல்றத உனக்காகத்தான். உன்னைப் பாதுகாக்க உன் கூட யாரும் வர்றது இல்ல. உன்னை கைக்குள்ள போட வாலிபப் பசங்க முயற்சிப்பாங்க. கவனமாக இருந்துக்கோ, அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.”

அதற்கு திரேஸ்யா எந்தவித பதிலும் கூறவில்லை.

திரேஸ்யா எப்போதும் இப்படியே வாழ வேண்டும் என்பது ஜானகியின் எண்ணம் இல்லை. அவளை ஒருத்தனுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டிய வயதை அவள் அடைந்துவிட்டாள் என்பதும் ஜானகிக்கு நன்றாகவே தெரியும்.

ஜானகி பிறகு சொன்னாள்:

“என்ன இருந்தாலும் மகளே... எனக்குப் பயம்தான். ஒருத்தன் வந்தான்னா, அவன் எப்படிப்பட்ட ஆளா இருப்பான்னு எனக்குத் தெரியாது. நமக்கு ஆம்பளைங்கன்னு யாராவது இருக்காங்களா, மகளே? அஞ்சு வருடங்கள் கழியட்டும். சிறைக்குப் போயிருக்கிற ஆளு திரும்பி வந்தபிறகு, உன்னை ஒரு நல்ல பையனுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். இதெல்லாம் ஆம்பளைங்க செய்ய வேண்டிய விஷயங்கள்...”

சிறையில் தண்டிக்கப்பட்டுக் கிடக்கிற அவளுடைய உயிர்நாயகன் திரும்பி வரவேண்டும். அதற்குப் பிறகு ஜானகி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அப்போது மட்டும் அவர்களுக்கென்று ஒரு வீடு உண்டாகும். ஒரு நல்ல பையனைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். இப்போது அவர்கள் ஆணும் தூணும் இல்லாத அனாதைகள். அப்போது முதலில் செய்வது திரேஸ்யாவின் திருமணமாகத்தான் இருக்கும்.

அப்போது ஜானகி தன்னுடைய குடும்பம் எப்படி அழிந்தது என்பதை விளக்கிச் சொன்னாள். கவுரியைப் பற்றியும் பத்மினியைப் பற்றியும் எதுவுமே தெரியவில்லை. அதை முழுமையான கவலையுடன் ஜானகி சொன்னாள். திரேஸ்யாவையும் அந்த மாதிரி ஒரு கடலில் தாளால் செய்யப்பட்ட படகில் ஏற்றி அனுப்பி வைக்க ஜானகி விரும்பவில்லை. கிடைத்திருக்கக் கூடியவர்களை வைத்து அந்தக் குடும்பத்தைச் சரி செய்ய வேண்டும் என்பதே அவள் விருப்பம்.

திரேஸ்யா எதுவும் பேசவில்லை. ஜானகி சொன்ன விஷயங்கள் அவளுக்குப் புரிந்ததோ என்னவோ! வெட்கத்தின் காரணமாக அவள் எதுவும் பேசாமல் இருக்கிறாள் என்று ஜானகி மனதில் நினைத்திருக்கலாம். எனினும், மீண்டும் ஒருமுறை ஜானகி அவளை எச்சரித்தாள்:

“என் மகளே, நீ போய் வலையில மாட்டிக்காதே!”

‘இல்லை’ என்று திரேஸ்யா சொல்லவில்லை. அப்படி ஒரு வார்த்தையை அவளால் கூறமுடியுமா? அவள் வலையில் விழுந்துவிட்டாளே!

அந்தக் காதலனும் காதலியும் பேசுவதற்கு ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். எதற்காக? அவர்களுக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவர்களுடைய உறவுக்கு இடையில் ஜானகி வேறு புகுந்திருந்தாள்.

திரேஸ்யா அப்துவிடம் சொன்னாள்:

“நாம இப்போ காதலிக்க வேண்டாம்”- அடுத்த நிமிடம் அவர் தொடர்ந்து சொன்னாள்:

“ஆனால், நான்...”

அவள் அந்த வார்த்தையை முழுமை செய்யவில்லை.

அப்து கேட்டான்:

“திரேஸ்யா, உன் அம்மாகிட்ட கேட்டியா?”

அவள் உண்மையைச் சொன்னாள்:

‘இல்ல... ஆனா, பெரியம்மா சொன்னாங்க...”

அப்துவின் மனதில் அந்தக் காதல் உறவிற்குத் தடை என்று தோன்றியது ஒரே ஒரு விஷயம்தான்.

“நான் முஸ்லீமா இருக்குறேன்றதுதான் காரணமா?”

ஒரு நிமிடம் கழித்து அவன் சொன்னான்:

“திரேஸ்யா, உன்மேல எனக்குக் காதல் வந்துடுச்சு...”

திரேஸ்யாவிற்கும் கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. எல்லாம் தடுமாறித் தடுமாறி வெளியே வந்தது. எதை முதலில் கூறவேண்டும் என்று அவளுக்குத் தெரியாது. எனினும், முதலில் வெளியே வந்ததென்னவோ இந்த வார்த்தைகள்தான்:

“நாங்க யாருமே இல்லாதவங்க. ரெண்டு பெண்கள். பெரியம்மாவும் நானும். பிறகு... ஒரு சின்ன குழந்தையும். பெரியப்பா சிறையில இருக்குறாரு. அஞ்சு வருடங்கள் கழிச்சு பெரியப்பா வருவாரு. பெரியம்மாவுக்குப் பயம். அதுனாலதான் அஞ்சு வருடங்கள் கழிச்சு காதலிக்கலாம்னு நான் சொன்னேன்!”

திடீரென்று அவள் கூறி வந்தது நின்றது. கூறவேண்டியதை அவள் கூறிவிட்டாள் என்பதல்ல காரணம். இனியும் கூறுவதற்கு எவ்வளோ விஷயங்கள் இருக்கின்றன. அவளையும் அடக்கிய குடும்பத்தின் வரலாறு. எல்லாவற்றையும் அப்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்து கேட்டான்:

“திரேஸ்யா, அப்படின்னா என்னைப் பற்றி நீ உன் பெரியம்மாகிட்ட சொன்னியா?”

பதில் உடனே வந்தது.

“இல்ல. நான் கவனமா இருக்கணும்னு பெரியம்மா சொன்னாங்க. அஞ்சு வருடங்கள் கழிச்சு காதலிச்சா போதும்னு அவங்க சொன்னாங்க. பெரியப்பா எல்லா விஷயங்களையும் சரியா பண்ணித் தருவாருன்னு சொன்னாங்க. நீங்க நல்ல ஆளா கெட்ட ஆளான்னு பெரியம்மாவுக்குத் தெரியாது. அதுனால அவங்க பயப்படுறாங்க. அஞ்சு வருடங்கள் கழித்து நாம காதலிப்போம்!”

அது அந்தப் பெண்ணின் வேண்டுகோளாக இருந்தது. அமைதியாக அப்துக்குட்டி கேட்டான்:

“திரேஸ்யா, அப்படின்னா நீ என்னைக் காதலிக்கலையா?”


கள்ளங்கபடமில்லாத ஒரு இதயத்திலிருந்து வெளிவருவதைப் போல ஒரு வார்த்தை வெளியே வந்தது:

“அப்து, உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!”

அவன்கேட்டான்: “இந்த விஷயத்தை நீ உன் பெரியம்மாகிட்ட சொல்லலாமே, திரேஸ்யா?”

“சொல்லலாம்” என்று அவள் அடுத்த நிமிடம் சொன்னாள்.

அந்த அப்பாவிப் பெண்ணின் உற்சாகமெல்லாம் போய்விட்டது. அவள் இப்போதுமுன்பு மாதிரி இருப்பதில்லை. விளையாடுவதில்லை. தொழிற்சாலையிலும் அவள் எந்தவித உற்சாகமும் இல்லாமல் இருந்தாள். அப்துவைப் பற்றி அவள் அதற்குப் பிறகு வீட்டில் எதுவும் பேசவில்லை. ஆனால், அவளைப் பற்றி தன் பெரியம்மாவிடம் சொல்வதாக அவள் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். சிலநேரங்களில் தன் பெரியம்மா தனக்கு எதிராக இருக்கமாட்டாள் என்று அவள் நினைப்பாள். அப்துவைத் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னால், பெரியம்மா எதிர்க்கமாட்டாள் என்று அவள் நினைத்தாள். ஆனால், ஐந்து வருடங்கள் கழித்து அவளுடைய பெரியப்பா வரும்போது, அவன் எதிர்த்துவிட்டால்...

எதிர்த்துவிட்டால் என்ற சிந்தனை வந்தவுடன், திரேஸ்யாவின் நரம்புகளில் ஒரு நடுக்கம் உண்டானதைப் போல் இருந்தது. தன்னையே அறியாமல் அவள் மெதுவான குரலில் முணுமுணுத்தாள்: “எதிர்த்தால் நடக்குறதே வேற...” அந்த வார்த்தையின் பொருள் முழுமையாக திரேஸ்யாவிற்குப் புரிந்திருக்குமா என்பது கூட சந்தேகம்தான். ஆனால், அது ஒரு தெளிவான தீர்மானமாக இருந்தது. அந்தத் தீர்மானத்தில் நடுக்கம்தான் அவளிடம் உண்டானது.

கோட்டயத்தில் யாருமே இல்லாமல் தெருவில் நடந்து திரிந்த பெண்ணுக்கு ஒரு தாய் கிடைத்தாள். தாயும் மகளுமாகத்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது தனித்தனி கருத்துகளின் மோதல் கொண்ட ஒன்றாக ஆகாமல் இருக்கவேண்டும். அவளுக்கென்று தனி விருப்பம் உண்டானபோது அதற்குத் தடைகள் ஏற்பட்டபோது, அந்த உறவின் மதிப்பு குறைந்து கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அவளுக்கு ஒரு தைரியம் வந்தது.

திரேஸ்யாவிடம் உண்டான மாற்றம் ஜானகியின் கண்ணில் படாமல் இல்லை. அவளுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

ஜானகி கேட்டாள்:

“என்ன மகளே, இப்போல்லாம் நீ சரியாவே பேச மாட்டேங்கிறே?”

“ம்... ஒண்ணுமில்ல...” - என்று அவள் தயங்கியவாறு கூறினாலும், அந்தப் பதில் மூலம் தான் ஏதோ விஷயத்துடன் பேச நினைப்பதை பூடகமாக அவள் காட்டினாள். அப்படிப்பட்ட சூழ்நிலையை வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்திருக்கும் ஜானகி அழுத்தமான குரலில் சொன்னாள்:

“அப்படியெல்லாம் சொல்லாதே, மகளே. சொல்ல நினைக்கிறதை சொல்லு!”

பல வருடங்களுக்கு முன்பு நடந்த அமைதியான ஒரு காட்சியின் சூழ்நிலையில் மீண்டும் தான் இருப்பதைப் போல் ஜானகிக்குத்தோன்றியது.

அது கூற வேண்டிய நேரம்தான். கூற வேண்டிய விஷயம் திரேஸ்யாவின் தொண்டை வரை வந்துவிட்டது. ஆனால்,வெளியே வரவில்லை.

ஜானகியின் முன்னால் பாரதி நின்று கொண்டிருக்கிறாள். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வைக்கத்திலிருந்து அவர்களின் வீட்டில் இப்படியொரு காட்சி நடந்தது. இன்று அதே மாதிரியான ஒரு சம்பவம் கொச்சியில் ஒரு குடிசையில் நடக்கிறது. அவ்வளவுதான். ஜானகிக்கு மேலும் வயதுகள் ஆகிவிட்டிருக்கின்றன. அவள் வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களைக் கண்டிருக்கிறாள் என்பதுதான் வித்தியாசம். அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் பெண் பாரதியாகவே மாறிவிட்டிருக்கிறாள்.

"எனக்கு அப்துவைப் பிடிச்சிருக்கு!"

ஜானகி அதைக்கேட்டு அதிர்ச்சியடையவில்லை. அது முன்பு நடந்தது. அப்போது பாரதியை அவள் வாய்க்கு வந்தபடி திட்டினாள். குடும்பத்திற்கு அவமானம் உண்டாக்கிவிட்டதாகச் சொன்னாள். எல்லாமே நாசமாகிப் போய்விட்டது என்று நினைத்தாள். இப்போது அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் உண்டாகவில்லை.

பாரதி வர்க்கியுடன் வீட்டை விட்டு வெளியேறினாள். ஆனால், அவளுக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை. அவன் அவளைக் காதலித்தான். அவளுக்கு ஒரு காப்பாற்றக்கூடிய மனிதன் கிடைத்தான். திரேஸ்யா அப்துவுடன் ஏன் போகக்கூடாது? அனுமதி தர ஜானகி பயந்தாள்.

ஜானகி சொன்னாள்:

"அஞ்சு வருடங்கள் கழிச்சி பெரியப்பா வந்தபிறகு, அவர் சம்மதம் சொன்ன பிறகு நடந்தா போதாதா, மகளே?"

அவள் நேரடியாகக் கேட்டாள்:

"பெரியப்பா சம்மதிக்கலைன்னா?"

ஜானகிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் சொன்னாள்:

"பெரியப்பா நல்ல மனிதர். அவர் கட்டாயம் சம்மதிப்பார். உனக்குத் தெரியாது... இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் ஒரு ஆண்தான் தீர்மானிக்கணும்."

அதற்கும் திரேஸ்யாவிடம் பதில் இருந்தது.

"பெரியப்பாவை நான் பார்த்தது இல்ல. நான் மனசுக்குள்ளே நினைச்சுப் பார்த்தேன். பெரியப்பா என் விஷயத்தைப் பெருசா எடுத்துக்கமாட்டாரு!"

அதைக்கேட்டு ஜானகிக்குக் கோபம் வரவில்லை. அவள் கூறுவது உண்மைதான். திரேஸ்யாவிற்கு கோபாலன் யார், யாரும் அல்ல? அந்தக் குடும்பத்துடன் கோபாலனுக்கு என்ன உறவு இருக்கிறது? எந்தவொரு உறவும் இல்லை. ஓச்சிற கோவிலில் ஜானகி சந்தித்த ஒரு ஆண். ஜானகி அவளை விரும்பினாள். மேலும் சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஐந்து வருடங்கள் கழித்து அவன் ஓச்சிற கோவிலுக்கு வந்து ஜானகிக்காகக் காத்திருப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அவன் எந்தவிதத்திலும் உரிமை கோர முடியாத நிலைமையில் இருப்பவள் திரேஸ்யா. அவள் அவனுக்காக எதற்குக் காத்திருக்க வேண்டும்?

ஜானகி மேலும் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைத்தாள்:

"என் மகளே, எனக்கு அப்துவை நீ கொஞ்சம் காட்டுவியா?"

திரேஸ்யாவின் முகம் திடீரென்று ஒளிர்ந்தது.

பெரியம்மாவின் மார்போடு சேர்ந்து நின்றுகொண்டு, தோள் மீது தன் தலையை வைத்துக் கொண்டு, திரேஸ்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஜானகி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.

7

ந்தக் குடிசையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரிய விசேஷம் நடக்கப்போகிறது. அன்று ஒரு விருந்தாளி வரப்போகிறான் ஜானகியைப் பொறுத்தவரை அந்த உற்சாகத்தில் கவலையும் கலக்காமல் இல்லை. நான்கு தங்கைமார்கள் அவளுக்கு இருந்திருந்தாலும், ஒரு தங்கைக்காக மட்டுமே அவள் விருந்து வைத்தாள். இப்போது வாழ்க்கையில் இரண்டாவது தடவையாக விருந்து வைக்கிறாள். முன்பு யாருக்காக விருந்து வைத்தாளோ, அவன் ஜானகியை வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டான். அப்போது ஒரு தங்கை மட்டுமே அவளுக்கென்று எஞ்சியிருந்தாள். அந்தத் தங்கைக்கு அவள் வீட்டைவிட்டு வெளியே போவதில் எந்தவொரு வருத்தமும் இல்லாமல் இருந்தது.

இப்போது இரண்டாவது தடவையாக ஒருவனுக்கு விருந்து வைக்கிறாள். இந்த அளவிற்கு உற்சாகத்துடன் திரேஸ்யாவை அவள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அது இயற்கையும் கூட அவளுடைய காதலன் அன்று வருகிறான். அப்துவை ஜானகிக்குப் பிடிக்கும். அந்த விஷயத்தில் திரேஸ்யாவிற்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.


அப்து வந்தான். ஒரே பார்வையில் அவன் நல்லவன் என்ற எண்ணம் ஜானகிக்கு உண்டாகிவிட்டது. கபடமும், வெளியே பார்க்க முடியாத ஏதாவது விஷயங்களும் அவனுடைய மனதிற்குள் இல்லை என்பது தெரிந்தது. அவன் ஒரு கூச்ச சுபாவம் உடையவன். ஒரு சிறு பையனைப் போல அவன் வெட்கப்பட்டான். திரேஸ்யாவை விட அவன் அதிகக் கூச்சம் கொண்டவனாக இருக்கிறான் என்று ஜானகி நினைத்தாள். அவன் பிரச்சினைகள் எதையும் உண்டாக்கமாட்டான் என்று ஜானகி நினைத்தாள். அதனால் ஜானகிக்கு அவனைப் பிடித்துவிட்டது. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை விட அதிகமாக அவனுக்கு அவள் கூற நினைத்தாள். எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்ட பிறகு அவன் திரேஸ்யாவைக் காதலிப்பானா? அதைத்தான் அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜானகி மகனைப் போல அப்துவை வரவேற்றாள். அது திரேஸ்யாவின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக இருந்தது. பெரியம்மாவின் பாசம் அவளை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஜானகி அப்துவை 'மகனே' என்று அழைத்துப் பேசிக் கொண்டிருந்தைப் பார்த்து திரேஸ்யா மெய்சிலிர்த்துப் போய்விட்டாள். ஜானகி தாயாக மாறி அருகில் அமர்ந்து அப்துவிற்குச் சாதம் பரிமாறினாள். ஒரே ஒரு விஷயத்தைத்தான் அப்துவிடம் அவள் கூற நினைத்தாள். திரேஸ்யா மீது அன்பு வைத்திருக்க வேண்டும். அவள் ஒரு அப்பிராணியான நல்ல பெண். அவளுக்கு அப்துவைத் தவிர வேறு யாரும் இல்லை. அத்தனையையும் ஜானகி கூறி முடிந்தபோது, கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றிருந்த திரேஸ்யாவின் கண்களும் அப்துவின் கண்களும் ஒன்றோடொன்று சந்தித்தன. அவள் சுட்டு விரலை உயர்த்தி 'அதை மனசுல வச்சிக்கணும்' என்று முன்னறிவிப்பாகக் கூறுவது மாதிரி சைகை செய்தாள்.

ஜானகி தொடர்ந்து சொன்னாள்:

"சுடு தண்ணியில குதித்த பூனை பச்சைத் தண்ணியைப் பார்க்குறப்பவும் பயப்படும், மகனே. அதுனாலதான் நான் இதையெல்லாம் சொல்றேன்."

பிறகு ஜானகி கேட்டாள்:

"மகனே, நீ இந்தக் குடும்பத்துல ஒருவனா ஆகணும்னு நினைச்சா, எங்களைப் பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?"

தொடர்ந்து அந்தக் கதையை ஜானகி சொன்னாள். அவள் எதையும் மறைக்கவில்லை. நீண்ட அந்தக் கதையைக் கூறி முடிப்பதற்கு முன்பு பல தடவைகள் ஜானகி சொன்னாள்:

"எல்லாரும் சிதறிப்போய் வேற வேற வழிக்குப் போயிட்டோம். ஒருநாள் நானும் என் மகளும் சந்திச்சோம். இனிமேல் இதேமாதிரி சாலையில நடந்து போறப்போ பவானியையும், பத்மினியையும், இல்லாட்டி... அவங்க பிள்ளைகளையும் பார்க்குற மாதிரியான சூழ்நிலை வரலாம். அவர்களையும் உங்ககூட சேர்க்கணும். குடும்பத்துல மூத்தவளா ஆயிட்டதுனால அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!"

அந்தக் கதையை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அப்துவிற்குப் பக்கத்தில் ஜானகியின் மகன் பரமு இருந்தான். அவன் அப்துவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்து அவனுடைய முதுகைத் தடவிக் கொண்டிருந்தான்.

அந்தக் கதை பவானியைப் பற்றி கூறப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அப்து மேலும் கவனமாகக் கதையைக் கேட்டான். அவன் ஜானகியை முன்பை விட கூர்மையாகக் கவனித்தான். அவன் இடையில் புகுந்து சொன்னான்:

"அம்மா, பவானின்ற பேரைக்கொண்ட ஒரு பெண்ணை எனக்குத் தெரியும். இப்போதான் நான் அதை நினைச்சுப் பார்க்குறேன். அவங்களுக்கு உங்க முக சாயல் அப்படியே இருக்கும்."

ஆர்வத்தால் ஜானகி, திரேஸ்யா இருவரின் மூச்சும் நின்றுவிடும் போல் இருந்தது. இருவராலும் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசமுடியவில்லை. அப்போதும் அப்து ஜானகி, திரேஸ்யா இருவரின் முகத்தையும் உற்றுப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். அவன் சொன்னான்:

"அந்தப்பெண் உங்க தங்கச்சியாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன், அம்மா!"

ஜானகி கேட்டாள்:

"என் தங்க மகனே, அவ எங்கே இருக்கா? நாம உடனே புறப்படுவோம். என் பிள்ளையை நான் உடனே பார்க்கணும்!"

திரேஸ்யாவும் அதையேதான் கேட்டாள். அவள் தன் சித்தியைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள்.

அப்து அந்த இரண்டு பெண்களிடமும் இருந்த ஆர்வத்தைப் பார்த்தான்.

அவன் கூறுவதற்கு ஒரு நிமிடம் தாமதித்தான். ஜானகியால் அந்த ஒரு நிமிடத்தைக் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் ஒரு நிமிடம். ஆனால், அந்த நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது. ஜானகி அப்துவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

"எங்கே மகனே? சொல்லு... நாம போவோம். என் தங்கச்சியை நான் பார்க்கணும். அவள் என்னைப் பார்க்கட்டும்!"

அப்து ஒரு தர்மசங்கடமான நிலையில் இருந்தான். அந்தப் பெண்களிடமிருந்த ஆர்வத்தைப் பார்த்து அவனே ஒரு மாதிரி ஆகிவிட்டான். தான் தெரிந்திருப்பது முழுவதையும் கூற அப்துவால் முடியாது. அந்தக் கதையை அவன் எப்படி அவர்களின் முகத்தைப் பார்த்துக் கூறுவான்? ஒரு மெல்லிய சிரிப்புடன் அப்து சொன்னான்:

"அம்மா... திரேஸ்யா... கொஞ்சம் அமைதியா இருங்க... நீங்க ரெண்டு பேரும் இப்படி அவசரப்பட்டா எப்படி?"

தொடர்ந்து அவன் சொன்னான்:

"எனக்குத் தெரிஞ்ச அந்தப் பெண் அவங்கதான்னு எப்படித் தெரியும்? நான் அப்படி இருக்குமோன்னு நினைச்சேன். அவங்க அந்தப் பெண் இல்லைன்னா என்ன செய்யிறது?"

அதற்கு திரேஸ்யாதான் பதில் சொன்னாள்:

"ஆமா... அது நிச்சயமா சித்திதான்!"

ஜானகியும் சொன்னாள்:

"ஆமா... அவளேதான். நாங்க எல்லாருமே ஒரே சாயல்லதான் இருப்போம். ஒரு ஆளைப் பார்த்தா மத்தவங்களைப் பார்க்க வேண்டியதில்ல. நிச்சயமா இந்த விஷத்துல வேற மாதிரி இருக்கவே இருக்காது. மகனே, நீ நினைச்சதுல எந்தத் தப்பும் இருக்காது. திரேஸ்யா என்னை அப்படித்தான் கண்டுபிடிச்சா!"

அப்து அதற்கு விழுந்து விழுந்து சிரித்தான்.

"அப்படி உங்க மனசுல இப்போ தோணுது. பல வருடங்களா காணாமப் போயிருந்த தங்கச்சி உயிரோட இருக்குறதா சொன்னவுடனே அப்படி உங்களுக்குத் தோணுது. உலகத்துல பவானின்ற பேர்ல எத்தனையோ பேர் இருப்பாங்க!"

ஜானகியின் ஆர்வத்தைச் சற்று குறைக்கக்கூடியதாக இருந்தது அந்தப்பேச்சு. அப்து கூறியது ஒரு வேளை உண்மையாக இருக்கலாம். இல்லாவிட்டால் வேறொரு விஷயமும் இருக்கிறது. முன்பு பவானி என்ற பெயரைக் கொண்ட ஒரு பெண்ணை அப்து பார்த்திருக்கலாம். அவள் இப்போது இல்லாமல் இருக்கலாம். அப்துவின் முகத்தைப் பார்த்தபோது அவன் எதையோ மறைக்கிறான் என்பது போல் அவளுக்குத் தோன்றியது. அவன் எதையோ சொல்லத் தயங்குகிறான் என்று அவள் நினைத்தாள். எத்தனையோ அனுபவங்களைத் தாண்டி வந்தவளாயிற்றே ஜானகி!


தனக்குத் தெரிந்த அந்தக் கதையை எப்படிக் கூறுவது என்று தவித்தான் அப்து. எனினும், அவன் அந்தக் கதையைச் சொன்னான். சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. கிறிஸ்தவர்கள் வசிக்கக்கூடிய தெருவிலிருந்த ஒரு வீட்டில் பவானி என்ற பெயரைக் கொண்ட ஒரு வேலைக்காரப் பெண் இருந்தாள்.

அந்தச் சமயத்தில் கிறிஸ்தவர்களின் தெருவிலிருந்த ஒரு கடையில் அப்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்படித்தான் அவளை அவனுக்குத் தெரியவந்தது. அந்த வேலைக்காரி நாயர் ஜாதியைச் சேர்ந்தவள் என்பதும், பவானி என்பது அவளுடைய பெயரென்பதும் ஆட்கள் மூலம் அவனுக்குத் தெரியவந்தது. அப்து அதைச் சொன்னதும் ஜானகி சொன்னாள்:

"ஆமா, மகனே. அது அவளேதான்!"

ஜானகிக்கு அந்தக் கதையைத் தாங்கக் கூடிய மனப் பக்குவம் இருக்கிறது என்பது உறுதியானது. அப்து அந்தக் கதையைத் தொடர்ந்தான். அவள் அந்த வீட்டுக்காரர்களின் தேவைக்காகப் பொருட்கள் வாங்க கடைக்கு வருவதுண்டு. அந்தச் சமயத்தில் அவள் கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய கணவன் யாரென்று அப்துவிற்குத் தெரியாது. அந்தப் பெண் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிரசவம் ஆனவுடன் பவானி இறந்துவிட்டாள் என்று சிலரும், இறக்கவில்லை என்று சிலரும் கூறினார்கள். அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீம் குடும்பம் இப்போது எடுத்து வளர்த்துக் கொண்டிருக்கிறது.

துக்கம் நிறைந்த ஒரு கதை. அது ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான். அப்படித்தான் அந்த வாழ்க்கை போய் முடியும்.

குடும்பத்தில் இன்னொரு ஆளும் வந்து சேர்ந்திருக்கிறது என்ற சந்தோஷம் திரேஸ்யாவின் இதயத்தில் ஒரு உற்சாகத்தை உண்டாக்கியது. அதுவும் ஒரு ஆண் குழந்தை. அவளுக்கு ஒரு தம்பி வந்து சேர்ந்திருக்கிறான். இனியும் அவளுடைய ஆட்களைத் தேடி கண்டுபிடிக்கவேண்டியதிருக்கிறது. இப்படியே எல்லாரையும் கண்டுபிடித்துவிட்டால் அந்தக் குடும்பம் ஒரு முழுமையான குடும்பமாக ஆகிவிடும். ஜானகி தலைவியாக இருக்கக்கூடிய ஒரு குடும்பம்!

திரேஸ்யாவிற்குத் தன்னுடைய தம்பியைப் பார்க்க வேண்டும். அது ஜானகியின் விருப்பமும் கூடத்தான். அர்த்தம் நிறைந்த சிரிப்புடன் அப்து சொன்னான்:

"பார்க்கணும்ல?"

"அதிலென்ன சந்தேகம்?"- திரேஸ்யா கேட்டாள்:

"ம்... என்ன சொன்னே?"- அப்து தொடர்ந்து சொன்னான்: "அப்படி அந்தக் குழந்தையை ஓடிப்போய் பார்த்துவிட முடியாது. இந்தக் கொச்சி நகரத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியான குழந்தையா அது வளர்ந்துக்கிட்டு இருக்கு!"

அப்து அந்த சுவாரசியமான கதையைத் தொடர்ந்தான்:

"மட்டாஞ்சேரி அரண்மனைக்கு மேற்கு பக்கமா இருக்குற அந்தப் பெரிய வீடு இருக்குல்ல! அந்த வீட்டுலதான் அந்தக் குழந்தை வளருது. இப்போ அந்தப் பையனுக்குப் பத்து வயசு இருக்கும். சில நேரங்கள்ல நான் அந்தப் பையனைப் பார்த்திருக்கேன்."

திரேஸ்யா கேட்டாள்:

"அது என்ன? கூட்டுக்குள்ளே அடைச்சு வச்சா அவனை வளர்க்கிறாங்க?"

ஜானகி சொன்னாள்:

"அந்த அளவுக்கு கவனமா அவங்க வளர்ப்பாங்க போலிருக்கு!"

அப்து "ஆமாம்" என்று சொன்னான். தொடர்ந்து அவன் சொன்னான்: "பிள்ளையே இல்லாத ஒரு குடும்பத்துல அந்தப் பையன் போய்ச் சேர்ந்திட்டான். அது ஒரு சேட் குடும்பம். ஒரு குழந்தைக்காக சேட் செய்யாத மத சம்பந்தப்பட்ட சடங்குகளே இல்ல. உலகத்துல உள்ள எல்லா வைத்தியர்களையும் டாக்டர்களையும் போய் பார்த்தாச்சு. அன்னைக்கு இந்த அளவுக்குப் பணம சேட்கிட்ட இல்ல. அந்தக் குழந்தை வந்து சேர்ந்த பிறகு அந்த ஆளுக்கு உண்டான வளர்ச்சிக்கு அளவே இல்ல..."

ஜானகி சொன்னாள்:

"நல்ல தலையெழுத்து உள்ள பிள்ளை!"

அப்து நிறைவு செய்தான்:

"ஆமா... அந்தக் குழந்தை பிறந்த அதிர்ஷ்டம்னுதான் எல்லாரும் சொல்றாங்க. அதுனால அந்தப் பையனைப் பொன்னைப் போல கருதி வளர்க்குறாங்க. அந்தப் பையனை எத்தனை பேர் கூட இருந்து கவனிக்கிறாங்க, தெரியுமா? சேட்டுக்கும் அந்த ஆளாட பொண்டாட்டிக்கும் அந்தப் பையன்னா உயிர்!"

திரேஸ்யா இடையில் புகுந்து சொன்னாள்:

"என்ன இருந்தாலும் அது எங்க இனமாச்சே!"

அப்து ஒரு சூடான பதிலை அதற்குக் கொடுப்பது மாதிரி சொன்னான்:

"என் சித்தியோட மகன்னு சொல்லிக்கிட்டு அங்கே போ. அந்தப் படியைத் தாண்டி உன்னால போக முடியாது. கேட்ல காவல்காரங்க இருக்காங்க."

திரேஸ்யாவிற்கு ஒரு பிடிவாதம் வந்தது. அவள் திரும்பத் திரும்பச் சொன்னாள்:

"என்ன இருந்தாலும் அவன் என் சித்தி மகன் தானே!"

ஜானகி அதற்குச் சொன்னாள்:

"நல்லா இருக்கட்டும். எங்க வயித்துல பொறந்ததுல ஒண்ணாவது நல்லா இருக்குதேன்னு மனசுல நினைச்சுக்கலாம். செத்து மேலே இருக்கிற அப்பாவோட ஆத்மா அதைப் பார்த்துச் சந்தோஷடப்படுமே!"

ஜானகி ஒரு நிமிடம் தன்னுடைய தந்தையையும், தன்னையும் அடக்கிய ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தையும் மனதில் நினைத்துப் பார்த்தாள். ஐந்து பிள்ளைகளுக்கும் பரமுபிள்ளை ஜாதகம் எழுதி வைத்திருந்தார். ஜாதகப்படி எல்லா பிள்ளைகளுமே அதிர்ஷ்டம் செய்தவர்கள்தான் என்று பரமுபிள்ளை பொதுவாகக் கூறுவார். அப்போது வரை இருக்கும் அந்தக் குடும்பத்தின் வரலாரை ஒரு நிமிடம் மனதில் அவள் நினைத்துப் பார்த்தாள். அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அப்து சொன்ன கதை பவானியின் கதையாகத்தான் இருக்க வேண்டும். அந்த அதிர்ஷ்டம் செய்த குழந்தை பவானியின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். அவள் கேட்டாள்:

"அந்தத் தாய் இப்போ உயிரோட இருக்காளா, இல்லையா... மகனே?"

அதைப்பற்றி அப்துவிற்கு அதற்கு மேல் எதுவும் தெரியாது. அவன் தனக்குத் தெரிந்ததை மீண்டும் அவளிடம் விளக்கிச் சொன்னான்:

"பிரசவம் ஆனதோடு தாய் செத்துப் போய்விட்டதாகவும் அந்த முதலாளி குழந்தையை எடுத்து வளர்த்தார்னு சொல்றவங்களும் உண்டு. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல- தாய் குழந்தையை விலைக்கு வித்துட்டு, இனிமேல் குழந்தையைப் பார்க்கக்கூட நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டாள்னும் சொல்லுவாங்க. எது உண்மைன்னு யாருக்குத் தெரியும்? அந்த முதலாளிக்கு மட்டும்தான் அது தெரியும்."

எந்த விதத்தில் பார்த்தாலும் ஜானகியின் சிறிய குடிசைக்கு அது ஒரு முக்கியத்துவம் உள்ள நாளாக இருந்தது. திரேஸ்யாவின் காதல் அங்கீகரிக்கப்பட்டது. அன்றுதான். அதே நாளில்தான் பவானியைப் பற்றிய சில தகவல்களும் தெரிந்திருக்கின்றன.

மாலையில் அப்து, திரேஸ்யா, ஜானகி மூவரும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டார்கள். பரமு அப்துவின் கையில் இருந்தான். அவனுக்கு தன் அண்ணனைப் பார்ப்பதில் அளவுக்கு மீறிய சந்தோஷம். அவன் பவானியின் மகன் வளரும் வீட்டைப் பார்ப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தான்.

அதற்கு முன்பு ஜானகியும் திரேஸ்யாவும் அந்த வீட்டைப் பார்த்திருக்கிறார்கள். கொச்சியிலேயே மிகவும் பெரிய வீடு அதுதான்.


அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு வீட்டிற்கும் தங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கும் என்று அவர்கள் மனதில் கூட நினைத்ததில்லை. அதனால் அந்த வீட்டை அவர்கள் கவனம் செலுத்தி பார்த்ததில்லை.

வீட்டிற்கு முன்பக்கமிருந்த சாலையில் அவர்கள் நின்றார்கள். அப்து சொன்னது உண்மைதான். வாசலில் காவலாளி நின்றிருந்தான். நான்கு பக்கங்களிலுமிருந்த உயரமான வெளிச் சுவர்களுக்கு மேலே கண்ணாடித்துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு வீடு அது.

என்ன இருந்தாலும், பணக்காரரின் வீடாயிற்றே அது!

வாசலில் இருந்த காவலாளி உறுதியான உடம்பு படைத்த மனிதனாக இருந்தான். அவனைப் பார்க்கும்போதே, பயம் வருவது மாதிரி இருந்தது.

அப்து திரேஸ்யாவிடம் கேட்டான்:

“என்ன, சித்தியோட மகனைப் பார்க்குறதுக்காக அக்காவான நீ உள்ளே போகப் போறியா?”

திரேஸ்யாவின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பிடிவாதம் உண்டானது.

“நான் அக்கான்னு தெரிஞ்சாச்சுல்ல... அதுபோதும் நான் உள்ளே போகலாமே...”

திரேஸ்யாவின் நிலைமையைப் பார்த்துக் கிண்டல் செய்வது மாதிரி அப்து சொன்னான்:

“அப்படியா?”

திரேஸ்யா கோபத்துடன் சொன்னாள்:

“ம்... என்ன நாங்கள்லாம் ஒரே குடும்பமாக்கும்...”

திரேஸ்யாவின் நிலைமையைப் பார்த்து ஜானகிக்குக் கூட சிரிப்பு வந்து விட்டது.

அப்து சொன்னான்:

“இவ, சரியான முட்டாள், அம்மா...”

ஜானகி அதற்குச் சொன்னாள்:

“என்ன செய்யிறதுன்னு தெரியாம நிற்கிற முட்டாள் பொண்ணு அதை நீ தெரிஞ்சுக்கிட்டா போதும்.”

அந்தக் காதலன்- காதலி இருவரின் கண்களும் அப்போது ஒன்றோடொன்று சந்தித்தன.

திரேஸ்யா அதற்குப் பிறகும் என்னவோ சொன்னாள்:

சில நிமிடங்களாகச் சாலையில் நின்றிருந்த அவர்களைக் காவலாளி கவனித்தான். அப்போது ஜானகி சொன்னாள்:

“நாம கிளம்பலாம். எதுக்காக நாம இங்கே நிற்கணும்?”

திரேஸ்யாவிற்கு மனதில் ஒரு ஆசை இருந்தது. அவனை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நின்றிருந்தால் கூட அந்தச் சிறுவனைப் பார்க்க முடியாது என்று அப்து சொன்னான்.

திரேஸ்யா கேட்டாள்:

“அப்போ கூட்டுக்குள் போட்டு வளர்க்குற கிளியா அவன்?”

அப்து அதற்குப் பதில் சொன்னான்:

“அவங்க அவனை அப்படித்தான் வளர்க்குறாங்க. அவர்களின் அதிர்ஷ்டம் அவன். அந்தச் சிறுவன்தான் எல்லாமே. முதலாளி கூட சில நேரங்களில் அந்தச் சிறுவனை நான் பார்த்திருக்கேன்!”

திரும்பிப் போகும்போது திரேஸ்யா கேட்டாள்:

“சித்தி இப்போ உயிரோட இருக்காங்கன்னு வச்சுக்கோங்க. அவங்கதானே அவனைப் பெத்தவங்க! அந்தச் சித்தி அவனைப் பார்க்கணும்னு பிரியப்பட்டா...”

அதற்கு அப்து உடனடியாகப் பதில் சொன்னான்:

“பார்க்க முடியாது!”

“அய்யோ... கேட்கவே கஷ்டமா இருக்குதே!”

“அது அப்படித்தான்!”

ஒரு நிமிடம் சென்றபிறகு அவள் வேறு ஏதோ கூறுவதற்காக முயன்றபோது ஒரு வார்த்தை அவள் வாயிலிருந்து வெளியே வந்தது அந்த வார்த்தை - ‘அப்பா!’

அப்து கேட்டான்:

“நீ என்ன சொல்ல வந்தே?”

யாரும் எதுவும் பேசவில்லை. அந்தப் பையனின் தந்தையைப் பற்றிய பேச்சை வளர்க்க அங்கு யாரும் தயாராக இல்லை. கிறிஸ்தவர்கள் தெருவில் இருப்பவர்களில் அந்தச் சிறுவனின் தந்தை தான்தான் என்று இப்போது பலரும் கூறுவார்கள். அன்று... அவன் பிறப்பதற்கு முன்பு, எல்லாரும் அவனை ஒதுக்கியிருப்பார்கள்.

ஜானகி சொன்னாள்:

“அம்மா, அம்மாவின் அக்கா, தங்கை, தங்கையின் பிள்ளைகள், அப்பா எல்லாருமே அவனுக்குத் தொந்தரவு தரக் கூடியவர்களாக இருக்கலாம்.

8

ல நாட்கள் காத்திருந்த பிறகுதான் ஜானகியால் அந்த அதிர்ஷ்டசாலி பையனைப் பார்க்க முடிந்தது. அந்தக் குழந்தையின் வளர்ப்புத் தந்தையும் தாயும் பொன்னைப் போல அவனை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எல்லாமுமாக இருப்பவன் அவன். அந்தக் குழந்தையை விலைக்கு வாங்கிய பிறகுதான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரராகவே ஆனார் என்று ஊரைச் சேர்ந்த எல்லாருமே கூறினார்கள். அது உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டமான குழந்தைதான். அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலியான அந்தக் குழந்தை அதைப் பெற்ற தாயிடம் இருக்க முடியாது. அது அவளிடம் இருக்கவும் செய்யாது. குழந்தையைப் பார்த்த நிமிடத்திலேயே அது பவானியின் குழந்தைதான் என்பதை ஜானகி கண்டுபிடித்தாள். அந்தக் கதை உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

அவனைக் கஷ்டப்பட்டு பெற்ற தாய் அவனை விற்றுவிட்டுப் போய் விட்டாள். இனி ஒருமுறை கூட அந்தக் குழந்தையைப் பார்க்க வரக்கூடாது என்று ஒரு ஒப்பந்தம் வேறு. அப்துக்குட்டி மட்டுமல்ல- அந்த ஒப்பந்தத்திற்கேற்ற ஒரு தொகையை அவள் ஏற்கெனவே வாங்கிக் கொண்டுவிட்டாள் என்றும், அதற்குப் பிறகு அவள் திரும்பவும் வந்ததே இல்லையென்றும் எல்லாருமே கூறினார்கள். இனிமேலும் அவள் வராமலே கூட இருக்கலாம். அது கூட தன்னுடைய குழந்தையின் மீது கொண்ட பாசமாக இருக்கலாம்.

அந்தக் குழந்தைக்குத் தந்தை, தாய் இருவருமே கிடைத்து விட்டார்கள். அவர்கள்தான் தன்னுடைய தந்தையும், தாயும் என்ற எண்ணத்திலேயே அவன் வளரட்டும். பவானி அந்த வாழ்க்கைக்குள் ஒரு நிமிட நேரம் நுழைந்தால் கூட, அதற்குப் பிறகு அந்தச் சூழ்நிலை முற்றிலும் மாறிப்போய் விடாதா? தன்னைப் பெற்றவள் வேறொருத்தி என்ற உண்மை அவனுக்குத் தெரிந்தால், தான் விலைக்கு விற்கப்பட்ட ஒரு பொருள் என்ற உண்மையை அவன் தெரிந்து கொண்டால், அதற்குப் பிறகு அவன் எப்படி இருப்பான்? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்காமலே இருக்கவேண்டும் என்று ஜானகி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

யாருக்கும் தெரியாமல் மறைத்தவாறு வந்து பவானி அந்தச் சிறுவனைப் பார்ப்பாள் என்று திரேஸ்யா சொன்னாள். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், பவானி மிகவும் தைரியமான ஒரு பெண். அன்று ஆலப்புழைக்குப் போன அவள் அதற்குப் பிறகு, திரும்பவும் வீட்டைத் தேடி வரவேயில்லை. அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்காமல் வாழ்வதற்கான மனத்திடம் அவளுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால், அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதற்கு உறுதி இல்லை.

எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்க்கும்போது, அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் ஒரு நிழல் விழாமல் இருப்பதே நல்லது என்று ஜானகி நினைத்தாள். அந்த விஷயத்தில் அவள் உறுதியாகவும் இருந்தாள். இவ்வளவு விஷயங்கள் தனக்குத் தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைத்தாள். பத்மினியின் வாழ்க்கையைப் போலவே, பவானியின் வாழ்க்கையும் யாருக்குமே தெரியாத ஒன்றாக இருப்பதால், யாருக்கு என்ன இழப்பு என்று அவள் நினைத்தாள். அந்த முதலாளி அவனை ஒருவித பயத்துடன்தான் வளர்க்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கிளை கூட்டைவிட்டு எங்கே பறந்துவிடப் போகிறதோ என்ற பயம். அதனால் அந்த மனிதர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். ஒரு குழந்தையை விலைக்கு வாங்கக் கூடிய ஒரு மனிதரின் பயம் அப்படித்தான் இருக்கும்.


ஆனால், அந்த விஷயத்தை திரேஸ்யாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னதான் சொன்னாலும், அவளுடைய தலைக்குள் அது நுழையவே இல்லை. என்ன கஷ்டமோ என்னவோ? அந்த ஊரைவிட்டு கிளம்பிவிட்டால் என்ன என்று ஜானகி நினைத்தாள். இனிமேல் அந்த ஊருக்கு மீண்டுமொருமுறை திரும்பி வரக்கூடாது என்று அவள் நினைத்தாள். ஒரு கரு நிழல் விழாத தூர இடம் எதையாவது தேடிப்போக வேண்டும் என்று அவளுடைய மனம் விரும்பியது.

திரேஸ்யா சொன்னாள்:

“என்னைக்காவது ஒருநாள் தன்னை அவங்க விலைக்கு வாங்கியிருக்காங்கன்ற உண்மையை அவன் தெரிஞ்சுக்கத்தான் போறான். அந்தச் சமயத்துல...”

ஜானகி சொன்னாள்:

“அப்பவும் யார்கிட்டயிருந்துன்ற விஷயம் அவனுக்குத் தெரியாம இருக்குறதுதானே நல்லது?”

சில நேரங்களில் அந்த முதலாளி மீது திரேஸ்யாவிற்குத் தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு வரும். அவள் கூறுவாள்:

“அந்த ஆளு மீன் சந்தையில மீனை விலைபேசி வாங்குறது மாதிரி சித்திகிட்ட பேரம் பேசியிருப்பாரு. எல்லாம் முடிஞ்சதும் அந்த மகாபாவி சித்திகிட்ட இனிமேல் திரும்பி இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னும் சொல்லியிருக்காரு. அந்த விஷயத்துக்காக அந்த ஆளுக்கு ஒரு பாடம் கத்துக்கொடுக்கணும்.”

அந்தக் குழந்தை அதனால் நன்றாக வளர்கிறது என்ற வாதத்தை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் அவள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அப்துக்குட்டி இந்த விஷயத்தில் ஜானகி அம்மாவின் பக்கம் நின்றான்.

திரேஸ்யா இந்த உறவு பற்றிய விஷயங்களைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மற்ற பெண்களிடமும், பிறகு தனக்கு நன்கு பழக்கமான பலரிடமும் சொன்னாள். சிலர் அதை முழுமையாக நம்பினார்கள். சிலர் அதை நம்ப மறுத்தார்கள். அந்தக் குழந்தைக்கு மிகவும் நெருக்கமான உறவு கொண்டவர்கள் எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் இப்போது இருக்கிறார்கள் என்ற உண்மையை அந்தப் பணக்காரர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் திரேஸ்யா. அந்த முதலாளி தங்களுக்கு கூட கொஞ்சம் பணம் தர வேண்டியதுதானே என்று கூட சில நேரங்களில் அந்த உறவைப் பற்றித் தெரிந்திருப்பது, அந்தச் சிறுவனுக்கும் அவர்களுக்கும் கூட நன்மை பயக்கக்கூடிய ஒரு விஷயமே என்று அவள் மனம் நினைத்தது.

ஆனால், ஒரே ஒரு ஆசை அவளுடைய மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அறிவு, பொறுமை எதற்குமே அந்த விஷயத்தில் இடமில்லை என்றாகி விட்டது. ஒரு பச்சிளம் குழந்தையை விட அவள் சில நேரங்களில் கஷ்டப்பட்டாள். அது எதற்காக? அந்தக் குழந்தையை ஒரு முறையாவது வாரி எடுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அடக்க முடியாத ஒரு விருப்பம் அது. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு, அந்த ஆசை தலையை உயர்த்திக் கொண்டு பலமாக நின்றது. அந்த அளவுக்கு அந்தச் சிறுவனின் பிறப்பின் மூலம் தங்களுக்கு உரிமை இருக்கிறதே என்று அவள் நினைத்தாள்.

“நான் சிறைக்குப் போகவேண்டிய சூழ்நிலை உண்டானாலும், அதைப்பற்றி எனக்குக் கவலை இல்ல. என்னை அடிச்சுக் கொன்னாலும் அதைப்பற்றி நான் கவலைப்படல. நான் அதை நிறைவேற்றியே தீருவேன்”

இப்படியும் அவள் கூறுவதுண்டு. தினமும் காலையிலும் மாலையிலும் அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு அந்தப் பெரிய வீட்டுப் பகுதியில் அவள் உட்கார்ந்திருப்பாள்.

திரேஸ்யாவிற்கு அது ஒரு பைத்தியம்போல ஆகிவிட்டது. அவளை எவ்வளவு திட்டினாலும், பயமுறுத்தினாலும் அதனால எந்த பிரயோஜனமும் உண்டாகவில்லை. பல விதங்களிலும் ஜானகிக்குப் பயம் வர ஆரம்பித்தது. தன் மனதில் நினைத்திருப்பதை அடைவதற்காக திரேஸ்யா எதைச் செய்யவும் அஞ்சாமல் இருக்கிறாள் என்ற விஷயம் ஜானகிக்கு நன்றாகவே தெரியும். சாகசங்கள் நிறைந்த, ஆபத்தான பல நூறு கதைகள் ஜானகியின் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன. திரேஸ்யா ஒரு கொள்ளைக்காரியைப் போல அந்த வீட்டிற்குள் நுழைந்த செய்தி காதில் விழலாம். ஒரு திருடியைப் போல வீட்டிற்குள் அவள் ஒளிந்திருக்கலாம். இந்த விஷயங்களைச் சொன்னபோது திரேஸ்யாவின் முகத்தில் ஏதாவது மாறுதல்கள் தெரிகின்றனவா என்பது கூட சந்தேகமாக இருக்கும். அப்படி ஏதாவது காரியம் நடந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது வேறு விஷயம். எனினும், என்றாவது, ஏதாவது தொந்தரவுகள் இருக்கக்கூடிய ஒரு சம்பவம் கட்டாயம் நடக்குமென்ற விஷயத்தில் ஜானகிக்குச் சிறிது கூட சந்தேகமில்லை.

ஒரு இடத்திலிருந்து புறப்பட்ட ஒரு நதி இரண்டு பாதைகளில் பிரிந்து போகிறது. அது ஓடுகின்ற திசையில் ஓடட்டும். அதுதானே சரியானது! அந்த நோக்கில்தான் ஜானகியால் சிந்திக்க முடிந்தது.

ஒரு புதிய ஊருக்கு இனி ஒருநாள் கூட இங்கு திரும்பி வராத மாதிரி. பயணம் செய்வது- அந்த ஒரு வழிதான் ஜானகிக்குத் தெரிந்தது. அந்தக் குழந்தையை அவனுடைய பாதையில் எந்தவிதத் தடைகளும் இல்லாத மாதிரி தனியே விட்டு விடுவது- - அதில் கவலைப்படுவதற்கு வழியே இல்லை. ஆனால், அதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. தன்னுடைய இந்தத் தீர்மானத்தை அப்துக்குட்டி ஒத்துக்கொள்வானா?

ஜானகியைப் பொறுத்தவரை குறிப்பிட்டுக் கூறுகிற வகையில் அவள் ஓச்சிற கோவிலை அடைய வேண்டியிருக்கிறது. அங்கு போய் சேரும் நாளை அவள் ஒவ்வொரு நாளும் எண்ணிக் கொண்டேயிருக்கிறாள். அந்த நாள் தவிர, மீதி எல்லா நாட்களிலும் உலகத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வாழ அவள் தயாராக இருந்தாள். எந்த இடமாக இருந்தாலும் அவளுக்கு ஒரே மாதிரிதான். ஆனால், இப்போது கொச்சி வாழ முடியாத இடமாக மாறிவிட்டிருப்பதென்னவோ உண்மை.

அவள் நினைப்பது மாதிரி பெரிய பிரச்சினைகள் எதுவும் உண்டாகவில்லை. அந்த ஊரைவிட்டு கிளம்புவதில் அப்துக்குட்டிக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஒரு நோக்கம் மனதில் இருப்பதைப் போல திரேஸ்யா மட்டும் கூறிக் கொண்டிருந்தாள்:

“கொல்லத்துக்குப் போனால் என்ன? கொல்லத்துல இருந்து கொச்சிக்கு வர்றதுக்குப் பாதை இருக்கு!”

அந்தப் பைத்தியக்காரத்தனம் திரேஸ்யாவை விட்டுப் போவது மாதிரி தெரியவில்லை.

அவர்களுக்குத் தோற்றம் தருவதைப் போல ஒருநாள் மாலை நேரத்தில் அந்தச் சிறுவன் மாடியில் தெரிந்தான். அங்கு அவன் தன்னுடைய வளர்ப்புத் தந்தையின் கழுத்தில் கையைச் சுற்றிக் கொண்டு அவரின் மடியில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய நிலை மிகவும் பத்திரமாக இருந்தது. பவானியையே எடுத்துக் கொண்டாலும், அதற்கு மேல் பார்ப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் வேறு என்ன இருக்கிறது? அந்தக் குழந்தையைக் கொன்றுவிடாமல், அது நன்றாக வளரவேண்டும் என்பதற்காக பவானி அதை விற்றாள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது? மனப்பூர்வமாகத் தெரிந்து செய்த ஒரு வியாபாரம்! ஜானகிக்குப் பூரண திருப்தி உண்டானது. அவளுடைய கண்கள் ஈரமாயின.


போகும் வழியில் ஜானகி தனக்கே உரிய மொழியில் ஒரு பெரிய தத்துவத்தைச் சொன்னாள்:

“உலகத்துல நாம பார்க்குற பெரிய பணக்காரர்களும் பிச்சைக்காரர்களும் கொஞ்சம் பின்னாடி போய்த் திரும்பிப் பார்த்தால், அவங்க ஒரே தந்தை, தாய்க்குப் பொறந்தவங்களா இருப்பாங்க சில நேரங்கள்ல...”

திரேஸ்யா அப்போது ஆதாம்- ஏவாள் கதையைச் சொன்னாள். கண்ணில் படும் மனிதருக்கெல்லாம் தந்தையும், தாயும் ஆதாமும் ஏவாளும்தானே! அங்கிருந்துதான் மனிதர்கள் கடற்கரை மணலைப் போல பெருகினார்கள். எனினும் அவளுக்கு ஒரு பதைபதைப்பு இருக்கவே செய்தது. அவளுடைய சித்தியின் மகன் மீது அவளுக்கு உரிமை இல்லையா என்ன? ஒரு முத்தம் தருவதற்கான உரிமையாவது! அப்து வேறொரு உண்மையைக் கூறுகிற சாக்கில் சொன்னான்:

“உன்னையும் உன் தாய் இதே மாதிரி யாருக்காவது விற்றிருந்தா...”

அவன் கூற வந்ததை முழுமையாகக் கூற அவள் விடவில்லை.

“என்னை என் அம்மா இந்த மாதிரி விற்கமாட்டாங்க. என் பெரியம்மாவும் விற்கமாட்டாங்க!”

அவளுக்குக் கோபம் வந்ததைப் போல் தோன்றியது.

கொல்லத்தில் போளேத்தோடு என்ற இடத்தில் ஒரு சிறு குடிசையில் அந்தக் குடும்பம் வசித்தது. இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் துணை இருக்கிறது. எனினும் அந்த வீட்டிற்கு தலைவனாக வேறொரு ஆண் இருக்கிறான் என்ற உணர்வு அப்துக்குட்டி வரை இருக்கவே செய்தது. அந்த மனிதன் வந்து சேரும் நாளைத்தான் அங்கிருந்த எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தினமும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான் பரமு.

ஜானகிக்கு நூற்றுக்கணக்கான கனவுகள் இருந்தன. ஒரு மனைவியின், இல்லத்தரசியின் கனவுகள்... ஒரு சிறிய வீட்டைக் கட்ட வேண்டும். இந்த நிமிடம் வரை அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. இந்த மாதிரியான நடைமுறைக்குச் சாத்தியமான ஆசைகள். எனினும், எவ்வளவோ அனுபவித்திருக்கும் ஜானகிக்கு இயற்கையாகவே அந்த அளவிற்கு எந்த விஷயத்திலும் முழுமையான நம்பிக்கை உண்டாகவில்லை. அடிக்கடி அவள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிடுவாள். ஓச்சிற கோவிலில் காத்திருப்பதாக கோபாலன் அவளிடம் கூறியிருக்கிறான். சிலநேரங்களில் அவளுக்கே சந்தேகம் உண்டாகிவிடும். சொன்னது மாதிரி கோபாலன் வந்துசேரவில்லை என்ற சூழ்நிலை உண்டாகி விடுமா? கோபாலனின் அன்பைப் பற்றி சந்தேகப்படுவதற்குக் காரணங்களே இல்லை. இருந்தாலும், சந்தேகம் என்ற வியாதி அவளை அவ்வப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. வழக்குமன்ற குமாஸ்தாவான பரமுபிள்ளையின் மகள் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்திருக்க உரிமையில்லை. அந்த நாள் கடந்து போய்விட்டாலும், அவள் ஓச்சிற கோவிலுக்குச் சென்று காத்திருப்பாள்.

திரேஸ்யா மெதுவான குரலில் அப்துவிடம் கேட்டாள்: “பெரியப்பா வருவாரா?”

அவளுக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. கதைகள் முழுவதையும் அவள் தெரிந்து வைத்திருந்தாள். ஓச்சிற கோவிலில் உண்டான அந்த உறவு ஒன்றுமில்லாமல் போய் விடக்கூடாது. ஆனால், நீண்ட சிறை வாழ்க்கை கோபாலனை வேறொரு மனிதனாக மாற்ற முடியாதா என்ன? எனினும், அவர்கள் எல்லாரும் ஆவலுடன் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஜானகியின் மனதில் ஓச்சிற கோவில் பசுமையான நினைவாக நின்றுகொண்டிருந்தது. அந்த இடத்தில்தான் அவளுடைய பெண்மைக்கு ஒரு மரியாதை கிடைத்தது. அவளுடைய பெண்மைத்தனம் எழுச்சி பெற்றது அங்குதான். அந்த நினைவு வாடிப்போகுமா என்ன? அந்த மனிதன் வெளியே வரும் நாள் நெருங்க நெருங்க அந்த நினைவுகள் கிளை பரப்பி மொட்டு உண்டாக்க ஆரம்பித்தன.

அப்துவும் திரேஸ்யாவும் சில நேரங்களில் தங்களுக்குள் யாருக்கும் தெரியாமல் சிரித்துக் கொள்வார்கள். எதை நினைத்து? ஜானகி கனவு கொண்டிருப்பதை நினைத்துத்தான். பல வருடங்களுக்குப் பிறகு மனைவி கணவனைக் காணப்போகிறாள். எனினும், வயதானவர்கள் கனவு காணுவதென்பது இளம் வயதைக் கொண்டவர்களுக்கு ஒரு கிண்டலான விஷயம்தான்.

சில நாட்களுக்கு முன்புதான் ஜானகியும் பரமுவும் அப்துவும் திரேஸ்யாவும் ஓச்சிற கோவிலுக்கு வந்தார்கள். பழைய காவி உடை தரித்த பெண்கள் யாரும் அப்போது அங்கு இல்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். ஜானகியின் காதல் காட்சிகளைப் பார்த்த ஆலமரத்திற்குக் கீழே இருந்த இடங்கள் இப்போதும் இருந்தன. அந்த ஆலமரத்தடி எத்தனை ஆயிரம் தர்மம் யாசிப்பவர்களின் எப்படிப்பட்ட கதைகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும்!

ஒரு புதிய வாழ்க்கையை அவள் ஆரம்பிக்கப் போகிறாள். அப்போது வரை அவர்கள் யாருக்குமே மதிக்கிற மாதிரியான ஒரு வாழ்க்கை அமைந்ததில்லை. ஒவ்வொரு மரமாக பறந்து திரியும் பறவைகளைப் போல அவள் இங்குமங்குமாக தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். குடும்பத் தலைவன் வரப்போகிறான். இனி அவளுக்கென்று ஒரு தெளிவான வாழ்க்கை அமையும்.

திரேஸ்யா கேட்டாள்:

“பெரியம்மா, நாம எங்கே வசிக்கலாம்?”

ஜானகி கேட்டாள்;

“எங்கே இருக்கணும்னு நீ பிரியப்படுறே?”

கொச்சியில் இருக்க வேண்டுமென்பதுதான் திரேஸ்யாவின் விருப்பம். மலைப்பகுதியில் எங்காவது இருந்தால் நன்றாக இருக்கும் என்பது ஜானகியின் எண்ணம். அங்கு போய் வாழ்ந்தால் பரமுவின் படிப்பு விஷயம் சரியாக இருக்காதென்று அப்துக்குட்டி சொன்னான்.

அந்த நாள் வந்து சேர்ந்தது. அதிகாலை வேளையில் பேருந்து நிற்கும் இடத்தில் அந்தக் குடும்பம் காத்திருந்தது. பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை சிறையிலேயே கொடுத்து விடுவார்கள் என்று சொன்னான் அப்து. அவ்வளவு அதிகாலை வேளையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவன் சொன்னான். திருவனந்தபுரத்திலிருந்து பேருந்து வரவேண்டாமா என்றான் அவன்.

ஒவ்வொரு பேருந்து வரும்போதும் ஆர்வத்துடன் அதைப் பார்த்தவாறு நின்றிருப்பாள் ஜானகி. அங்கு பயணிகள் இறங்குவார்கள். எனினும், அவர்களை ஏமாற்றிவிட்டு பேருந்துகள் தங்கள் விருப்பப்படி அந்த இடத்தைவிட்டு போய்க்கொண்டே இருக்கும். அவர்களின் ஆசையை அதிகரிக்கும் வண்ணம் அவன் அங்கு இருக்கிறான் என்ற எண்ணத்தை அவை உண்டாக்கின.

அந்த நாள் அப்படியே முடிந்தது. மறுநாள் அவன் வருவான் என்று அப்து, நம்பிக்கை ஊட்டினான். ஆனால், ஜானகிக்கு தூக்கம் வரவில்லை. மறுநாளும் அவள் எதிர்பார்த்து நின்றிருந்தாள். அன்று கோபாலன் வரவில்லை.

பரமு கேட்டான்:

“அம்மா, அப்பா எங்கே?”

உரிமை கலந்த கேள்வி அது. அவனுக்கு ஒரு தந்தை இருக்கிறான் என்று அவள்தான் அவனிடம் கூறியிருக்கிறாள். அந்தத் தந்தை எங்கே என்று அவன் கேட்கிறான்.

ஜானகி எவ்வளவோ விஷயங்களை அனுபவித்தவள். எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி படைத்தவள். ஆனால், அந்தக் கேள்வியைத் தாங்கிக்கொள்ள அவளால் முடியவில்லை.

ஒரு வாரம் முடிந்தது. கோபாலன் வரவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அப்துவும் திரேஸ்யாவும் கேட்டார்கள். ஒருவேளை ஜானகி சொன்ன கதை பொய் கதை என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

வருடங்கள் பல கடந்தன. ஜானகி கிழவியாகி விட்டாள். பரமு வளர்ந்து வாலிபனாகிவிட்டான். ஓச்சிற கோவிலில் அந்த ஆலமரத்திற்குக் கீழே அப்போதும் அந்த மனிதனை எதிர்பார்த்து அவள் காத்துக்கொண்டேயிருக்கிறாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.