Logo

மூடு பனி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5967
Moodupani

சுராவின் முன்னுரை         

1964-ஆம் ஆண்டில் எம்.டி. வாசுதேவன் நாயர் (M.T.Vasudevan Nair) எழுதிய ‘மஞ்ஞு’ (Manju)  என்ற புதினத்தை ‘மூடுபனி’ (Moodupani) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைதியான உலகத்திற்கு நம்மை இந்த நாவல் மூலம் அழைத்துக் கொண்டு போகிறார் வாசுதேவன் நாயர். மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை நித்தமும் தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். அந்தத் தேடல் ஒன்றாக இருக்கலாம். பலவாக இருக்கலாம். எனினும், தேடல் தேடல்தானே !        

அந்தத் தேடலில் சிலர் தேடியதைக் கண்டுபிடிக்கிறார்கள். பலர் வாழ்க்கையின் முடிவு வரை தேடி, கடைசி வரை தேடியது கிடைக்காமலே வாழ்க்கையை முடிக்கிறார்கள். இப்புதினத்தில் வரும் விமலா டீச்சர், புத்து இருவரும் தத்தம் வழிகளில் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கண்களில் மின்ன தேடுகிறார்கள்… தேடுகிறார்கள்… தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தத் தேடலுக்குப் பலன் கிடைத்ததா ? அவர்களின் அமைதியற்ற மனதிற்கு ஆறுதல் கிடைத்ததா ?

இப்புதினத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் உயிர்ப்புடன் எழுதியிருக்கிறார் எம்.டி. வாசுதேவன் நாயர். நாமும் விமலா டீச்சர்தான், புத்துதான் என்று இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். அப்படியென்றால் எம்.டி. வாசுதேவன் நாயர் தன் எழுத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்!

 இந்த புதினம் 'மஞ்ஞு' (Manju) என்ற பெயரில் 1982 - ஆம் ஆண்டில் திரைப்படமாக மலையாளத்தில் உருவாக, அதை எம்.டி.வாசுதேவன் நாயரே இயக்கினார்.  விமலா டீச்சராக ஸ்மிதா பாட்டீல் (Smita Patil) நடிக்க, புத்துவாக நஸிருத்தீன் ஷா (Naseeruddin Shah)  நடித்தார்.

‘மூடுபனி’ கதை அல்ல… இது வாழ்க்கை. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் கண்ணாடியைப் போல் இதில் நாம் பார்க்கலாம்.

சந்தோஷப் பெருமிதத்துடன் உங்கள் முன் இந்தப் படைப்பைச் சமர்ப்பிக்கிறேன்.

இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


டிப்பதற்கு எதுவுமில்லை. கட்டிலில் படுத்துக்கொண்டே கையை நீட்டினால் தொடக்கூடிய தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரியில் ஒழுங்காக அடுக்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன புத்தகங்கள். எல்லா புத்தகங்களும் அவள் பல நேரங்களில் படித்து முடித்தவைதாம். கடைசியில் கையில் கிடைத்த புத்தகத்தை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் புரட்டிப் பார்த்தாள். அழகான உடம்மை விற்று கிரீடம் வரை விலைக்கு வாங்கிய ஒரு அழகியின் கதை அது. நான்கைந்து பக்கங்கள் வாசித்தாள். அதற்குமேல் அவளால் முடியவில்லை. புத்தகத்தை மெத்தையில் போட்டுவிட்டு கண்களை மூடிப் படுத்தாள்.

மூடப்பட்டிருந்த கண்ணாடிச் சாளரத்தின் சிறு இடைவெளி வழியாகக் குளிர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.

எண்ணற்ற சிறு சிறு சத்தங்கள் ஒன்று சேர்ந்து தாளமாக அது மாறும்போதுதான் அமைதியே மனதில் தோன்றுகிறது. சத்தமில்லாமல் எதுவுமில்லை என்ற உண்மையை அவள் நினைத்துப் பார்த்தாள். இல்லாவிட்டால்... பாருங்கள் இப்போது சுற்றிலும் படு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். நிசப்தமே ஒரு சங்கீதம்தான். மேலே இருக்கும் ஒரு பழைய பலகை கிறீச்சிட்டு அதிலிருந்து தூள்தூளாக என்னவோ விழுந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பலகை கிறீச்சிடும் சத்தம் கேட்கிறது. தூரத்தில் எங்கோ காய்ந்த சுள்ளிகள் ஒடியும் சத்தம் கேட்கிறது. மின்மினிப் பூச்சிகள் தூரத்தில் உண்டாக்கும் சத்தம்!

வடகிழக்குப் பருவமழை காலத்தின் இரவு நேரத்தில் நடுங்கி ஆடிக் கொண்டிருக்கும் தோப்பிலிருந்துதானே அந்த மின்மினிப் பூச்சிகளின் சத்தம் கேட்கிறது? குமயூண் மலைகளில் பகல் நேர வெளிச்சத்தில் அவை அழுது கொண்டிருக்கின்றன... ஒன்பது வருடங்கள் உயிரியல் கற்றுத் தந்த அவளுக்கு மின்மினிப் பூச்சிகளின் பழக்க வழக்கங்கள் தெரியாது.

குமயூண் மலைகளில் பகல் வெளிச்சத்தில், நிசப்தமாக இருக்கும்போது மின்மினிப் பூச்சிகள் அழுகின்றன...

ஃபைலம் ஆர்த்ரோபோடா.... க்ளாஸ்...?

கடவுளே! என்னவெல்லாம் முட்டாள்தனமாகத் தோன்றுகிறது! நிசப்தத்தின் சங்கீதம். வெளியிலிருந்த மூடுபனி அறைக்குள் நுழைந்து முழுமையாக மூடுகிறது.

கதவை யாரோ தட்டும் சத்தத்தைக் கேட்டு அவள் கண்களைத் திறந்தாள்.

எவ்வளவு நேரமாக அவள் படுத்திருக்கிறாள்? அறைக்குள் மூடுபனி நுழையவில்லை. உறக்கத்தின் மெல்லிய படலம் உறைந்திருக்கும் கண்களைத்தான் குறை சொல்ல வேண்டியிருக்கிறது.

மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

மினுமினுப்பான மரப்பலகைகள் போடப்பட்டிருக்கும் தரையில் நல்ல குளிர்ச்சி இருக்கிறது.

அமர்சிங்காக இருக்கும் என்று எண்ணித்தான் அவள் கதவை திறந்தாள். ரஷ்மி வாஜ்பாய் அங்கு நின்றிருந்தாள்.

நேற்றும் இன்று காலையும் மற்ற மாணவிகள் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார்கள். ரஷ்மி மட்டும்தான் பாக்கி என்ற விஷயத்தை அப்போதுதான் அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

‘‘டீச்சர்ஜி, நான் புறப்படுகிறேன்.’’

‘‘நல்லது.’’

ரஷ்மியின் அடர்த்தியான பச்சை நிறத்திலுள்ள கம்பளி கோட் திறந்திருக்கிறது. நெற்றில் பெரிய கருப்புப் பொட்டும் கன்னத்தில் குழிகளும் உள்ள ரஷ்மியின் கண்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. உள்ளங்கை அளவிற்குப் பெரிதான மலர்கள் நிறைந்த கம்மீஸை அவள் அணிந்திருக்கிறாள். வயதிற்கு மேலான வளர்ச்சி அவளுக்கு இருக்கிறது. அந்த உணர்வுடன்தான் அவள் பனி பொழிந்து கொண்டிருக்கும்போது கூட கோட்டைத் திறந்து விட்டிருந்தாள்.

‘‘இப்போ பேருந்து இருக்கிறதா?’’

நாற்பத்து மூன்று மாணவிகள் மீது இருக்கும் பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதே!

‘‘இருக்கு... ஹல்தானிவரை...’’

‘‘அங்கேயிருந்து?’’

ரஷ்மியின் கண்களில் என்னவோ திருட்டுத்தனம் இருக்கிறது என்பது வெறுமனே தோன்றியதா என்ன? எப்போதும் இல்லாமல் கறுத்த இமைகள் துடித்தன.

‘‘அங்கேயிருந்து... அங்கேயிருந்து வேற பேருந்து இருக்கு டீச்சர்ஜி. கனெக்ஷன் பேருந்து இருக்கு. என் அப்பா ஆளை அனுப்பியிருக்காரு.’’

சாக்லெட் நிறத்திலிருந்த அவளுடைய கன்னங்களில் இரத்தத் துடிப்பு தோன்றி மறைந்தது.

‘‘ம்... சரி...’’

வெளியே வராந்தாவில் போய் நின்றபோது போர்டிக்கோவிற்குள் போகும் கூரைக்குக் கீழே பின்பக்கமாகத் திரும்பி நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை அவள் பார்த்தாள். சுவரில் கம்பிவலை போட்ட அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த தாள்களில் அவன் எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

‘‘யார் வந்திருக்கிறது ரஷ்மி?’’

சாதாரணமான குரலில் அவள் கேட்டாள்.

ஒரு நிமிடம் கழித்து ரஷ்மியின் பதில்:

‘‘ம்... அண்ணன்!’’

அதே இளைஞன் திரும்பி நின்றபோது விமலா அவனுடைய முகத்தைப் பார்த்தாள். வெள்ளை நிறக் கண்கள். ‘உன் அண்ணனுக்கு இந்த வெள்ளை நிறக் கண்கள் எங்கேயிருந்து வந்தன?’ என்று கேட்க வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. முகத்தில் நிழலும் வெளிச்சமும் தெரிய நின்றிருந்த ரஷ்மி வாஜ்பாயின் கண்களைப் பார்த்தபோது, மென்மையான ஒரு கெஞ்சல் இருப்பது தெரிந்தது.

‘‘ம்... போ...’’

‘‘நமஸ்தே, டீச்சர்ஜி’’

‘‘நமஸ்தே!’’

அவள் வராந்தாவின் வழியே நான்கடி தூரம் நடந்து மேலும் சிறிது அக்கறை தோன்ற திரும்பி நின்று புன்னகைத்தாள்.

‘‘டீச்சர்ஜி, நீங்க எப்போ போறீங்க?’’

‘‘நாளை!’’

எதையம் யோசிக்காமல் அவள் பதில் கூறலாம். விடுமுறை நாட்கள் ஆரம்பிக்கும் போது அவர்கள் எல்லோரும் கட்டாயம் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். திரும்பி வந்த பிறகும் கேட்பார்கள்:

‘‘டீச்சர்ஜி, நீங்க எப்போ வந்தீங்க?’’

சில நேரங்களில் அவள் எதுவும் பதில் சொல்ல மாட்டாள். திரும்பவும் கேட்டாள் கூறுவாள்:

‘‘நேற்று!’’

சௌக்கிதார் அமர்சிங் அதைக் கேட்டிருக்கிறான். வயதால் உண்டான கோடுகளும் சுருக்கங்களும் இருக்கும். அந்த முகத்தில் ஒரு சிறு சலனமும் இருக்காது.

நாளைக்கும் நேற்றுக்கும் நடுவில் விடுமுறைக்காலம் கடந்து போகிறது. வருடங்களின் வசந்தங்கள்....

விமலாஜி விடுமுறைக் காலத்தின் போது தன்னுடைய வீட்டிற்குப் போவதில்லை என்ற விஷயம் மாணவிகளில் யாருக்காவது தெரிந்துதான் இருக்கும். ஆனால், யாரும் அதைக் கேட்டதில்லை இதுவரையிலும். அந்த வகையில் அதைப்பற்றி அவளுக்கு நிம்மதிதான்.

கறுப்பு நிற ட்ரவுசரும் சட்டையும் அணிந்த பையன் முதுகில் தோல்பெட்டியைச் சுமந்து கொண்டு வெளியே போகிறான். அவனுக்குப் பின்னால் இளம் மஞ்சள் கலந்த நிறமும் வெள்ளை நிறக் கண்களையும் கொண்ட அந்த இளைஞன். அவனுக்குப் பின்னால் தலையைக் குனிந்துகொண்டு ரஷ்மி வாஜ்பாய்.

ரஷ்மி இன்று இரவு வீட்டிற்குப் போய் சேர்ந்து விடுவாளா? நேரடியாகச் செல்லும் பேருந்து காலை ஏழரை மணிக்குத்தான் இருக்கிறது. ஹல்தானியிலிருக்கும் சுற்றுலாப் பயணிகள் இல்லத்தைப் பற்றிய நினைவு அவளுக்கு வந்தது. அவளுடைய கன்னங்களில் இருந்த மினுமினுப்பும் கண்களில் தெரிந்த பிரகாசமும் வரப்போகிற நிமிடங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தன.

பிரசிடெண்ட் ட்யூட்டர் என்ற அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வேண்டுமானால் கிரிஜா சங்கர் வாஜ்பாய்க்கு தந்தி கொடுக்கலாம். ‘‘ரஷ்மி மூன்று முப்பதுக்கு உள்ள பேருந்தில் ஹல்தானிக்குப் புறப்படுகிறாள்.’’


சூறாவளி வீசிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பமும், வெளிறிப் போய் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணும் - அந்தக் காட்சியை இப்போதே அவள் தன்னுடைய மனதில் பார்த்தாள். அது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டாள் விமலா.

மலையிலிருந்து கீழே நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாகத் தவிட்டு நிறத்திலிருக்கும் ஷுக்களை அணிந்திருக்கும் இளைஞனுடன் சேர்ந்து வேகமாக நடந்து செல்லும் ரஷ்மியை அவள் பார்த்தவாறு நின்றிருந்தாள். பர்ச் மரங்களின் கூட்டத்திற்குப் பின்னால் அவள் அணிந்திருந்த கோட்டின் அடர்த்தியான பச்சை நிறம் மறைந்ததும் விமலா கோபத்துடன் தனக்குள் கூறிக் கொண்டாள்: ‘நீ என்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்ளாதே, பெண்ணே!’

பதினாறாம் வயதில் அவள் பெண்ணாகி இருக்கிறாள்.

திரும்பவும் அவள் தன்னுடைய அறைக்கு வந்தாள். அறை அலங்கோலமாகிக் கிடந்தது. பெட்டி மீதும் ஸ்டாண்டிலும் கிடக்கும் புடவைகளை மடித்து வைக்க வேண்டும் என்று காலையிலேயே நினைத்தாள். பழமையான மேற் கூரையிலிருந்து இரவும் பகலும் ‘சொட் சொட்’ என்று விழுந்து கொண்டிருக்கும் நீர்த் துளிகள் மேஜை மீதும் தரையிலும் சிதறிக் கிடந்தன. மூலையில் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த தாள் பூக்கள் நிறம் மங்கலாகிப் போய்ப் பார்க்கவே சகிக்க முடியாமலிருந்தன. சூரியனின் படத்தைப் போட்டிருக்கும் பேட்டரி நிறுவனத்தாரின் காலண்டர் இப்போதும் ஜனவரி மாதத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்று தேதி என்ன? ஏப்ரல் பதினொன்று.

புது வருடம் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறது.

அடைக்கப்பட்டிருந்த ஜன்னலை அவள் திறந்து விட்டாள். குளிர்ந்த காற்று வேகமாக வந்து மோதியவுடன் அறையில் ஒருவித குற்ற உணர்வுடன் ஒரு ஓரத்தில் போய் அவள் நின்றாள்.

மலைச்சரிவில் போர்டிங் ஹவுஸின் எல்லையைத் தாண்டியிருக்கும் காட்டேஜ் பகுதியில் ஒரு நேப்பாளி இளைஞன் வேலை செய்கிறான். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அல்மோராவைச் சேர்ந்த ஒரு காண்ட்ராக்டர் செய்த வீடுகளில் ஒன்று அது. உரிமையாளர் இறக்கும் வரை அதன் பெயர் ‘சந்திரகாந்த்’ என்றிருந்தது. இளைஞனான மகன் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட போது எல்லா காட்டேஜ்களின் பெயர்களையும் அவன் மாற்றினான். அவள் இந்த போர்டிங் ஹவுஸுக்கு வந்த வருடம் சந்திராகாந்த் ‘கோல்டன் நூக்’ என்று பெயர் மாறியது.

வானம் சாம்பல் நிறத்தில் வெளிறிப் போய் காணப்பட்டது. மென்மையான பனிப்படலம் தூரத்தில் பைன் மரக் காடுகளுக்கு மத்தியில் நகர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. மரக் கூட்டங்களையும் ஆப்பிள் தோட்டங்களையும் தாண்டினால் கண்ணில் தெரியும் மலைகள் நன்கு வெட்கப்பட்டு நிர்வாணமாக இருக்கின்றன. டிசம்பர் மாதத்தில் மதிய நேரத்தில் தினமும் இந்த ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு நீண்ட நேரம் அவள் அதையே பார்த்தவாறு நின்றிருப்பாள். பார்க்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பனிப்படலம் மூடிக் கிடக்கும்.

நாட்கள் பச்சையின், வெள்ளையின்... உலகத்தில் ஒவ்வொரு நாளும் மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. கடைசியில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் தெரியும் மேகக் கூட்டங்கள், உருகி முடியாமலிருக்கும் குளிர்காலத்தின் ஞாபகச் சின்னங்கள் மீதி இருக்கும்.

மலைகள் பல மாதங்களுக்குப் பிறகு இளம் வெப்பத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் பகல் நேரங்கள்... வெயில் அதிகமாகும்போது மலைச்சரிவுகளில் பனி உருகி வெள்ளி அருவிகளென மேலிருந்து கீழாக வழிந்து கொண்டிருக்கிறது. நேற்றின் கண்ணீர்ச் சோலைகள் அவை.

அவள் பார்த்துக் கொண்டு நின்றிருக்கும் போது, மங்கலாக இருந்த வானம் மேலும் தெளிவானது. சிறிது சிறிதாக மலையோரத்தில் இளம் வெயில் பரவியது. அடிவாரத்தில் நடைபாதையின் திருப்பத்தில் உயரமான பர்ச் மரத்தின் ஈரமான இலைகள் பிரகாசமாகத் தெரிந்தன.

பனிப்படலமும் மேகமும் கலந்து நின்றிருந்த தூர வெளியில் மலை உச்சிகளின் நரைத்த தலைகள் தெரிந்தன.

போர்டிங் ஹவுஸின் இருபத்து மூன்று அறைகளில் இந்த ஒரு அறைக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது. மதிய நேரத்தில் வெயில் இருக்கும்போது ஜன்னல் வழியாக மலைகள் பளிச்சிடுவதை இங்கிருந்தே பார்க்கலாம்.

குமாரி புஷ்பா சர்க்காரின் பிரபலமான அறை. மூன்று வருடங்கள் அவள் தங்கியிருந்த அறை. ராஜினாமா கடிதம் எழுதி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வெளியே போகும் நிமிடத்தில்தான் அவளை விமலா பார்த்தாள். வராந்தாவில் வைத்து யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

போர்டிங் ஹவுஸின் இரவுகளின் தனிமையில் தன்னுடைய அறையில் ஒரு இளைஞனை வரவேற்க தயாராக இருந்த புஷ்பா சர்க்கார் என்ற தைரியம் கொண்ட பெண்ணைப் பற்றித்தான் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொருவரும் கூறி அவள் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும், இந்த மெலிந்து போய் காணப்படும் இளம்பெண்ணைப் பற்றியா இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்? பார்த்தபோது அதுதான் முதலில் தோன்றியது.

தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து வெளியே போகச் சொன்ன சமயத்தில் வந்த விடுமுறையின்போது தன்னுடைய இடத்தைப் பிடிப்பதற்காக வந்திருப்பவளிடம் ஆபத்தில் இருக்கும் அந்தப் பெண் எப்படி நடந்து கொள்வாள்? நினைக்கும்போது விமலாவிற்கே பயமாக இருந்தது.

‘‘என் அறையை எடுத்துக்கங்க. அதுதான் இருப்பதிலேயே மிகச்சிறந்த அறை.’’

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவள் சொன்னாள்.

எனினும், இரண்டடி தூரம் நடந்த பிறகு திரும்பி நின்றாள்.

‘‘இந்த விஷயத்துல நான் சொன்னதை நீங்க கேட்கலாம். தப்பு வராது.’’

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. கடவுளே, ஒன்பது வருடங்கள்!

புஷ்பா சர்க்கார் இப்போது எங்கு இருப்பாள்? இஸத் நகரத்தைச் சேர்ந்த ஹோம் சயின்ஸ் டீச்சர் அவ்வப்போது புஷ்பார் சர்க்காரைப் பற்றி ஞாபகப்படுத்துவதுண்டு. மூன்று திருமணங்கள், நீதிமன்ற வழக்குகள், வீட்டை விட்டு ஓடியது. இறுதியில் கிடைத்த தகவல் ஒரு மதம் மாற்றம் சம்பந்தப்பட்டது.

புஷ்பா சர்க்காருக்கு முன்னால் - விமலா பார்த்திராத ஐம்பது வயதைக் கொண்ட செல்வி பட்.

அதற்கு முன்பு.

மலையோரங்கள் பனி விழுந்து மங்கலாகிப் பின்னர் தெளிந்து கொண்டிருப்பதற்கு இடையில் ஜன்னல் வழியே பார்க்கும்போது சில நேரங்களில் முகங்கள் மாறும்.

வெளியே பிரகாசமான ஒரு மாலை நேரம் வடிவமெடுத்துக் கொண்டிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு.

சிறிது வெளியே போய் விட்டு வரலாம்.

ஜன்னலை அடைத்துக் கொக்கியை மாட்டினாள். ஸ்டாண்டில் குவித்துப் போடப்பட்டிருந்த புடவைக் கூட்டத்திலிருந்து இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த சிவப்பு நிற இலைகள் போட்ட ஒரு புடவையை அவள் தேர்ந்தெடுத்தாள். சிவப்பு நிற ஜாக்கெட்டின் கைப்பகுதியிலிருந்த ஜரிகை சற்று மங்கிப் போயிருந்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.


கண்ணாடிக்கு முன்னால் நின்றபோது வழக்கம்போல தன்னைத்தானே அவள் தேற்றிக் கொள்ள முயன்றாள். முன்பு இருந்து சோர்வு இப்போது இல்லை. முகம் வெளிறிப் போய் காணப்பட்டது சற்று குறைந்திருக்கிறது. வெளிச்சம் அதிகம் விழாத ஒரு மூலையில் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. கட்டப்பட்ட கூந்தலில் அவ்வப்போது தோன்றுகிற நரைத்த முடிகள் ‘பளிச்’ என்று வெளியே  தெரியவில்லை.

பகல் வெளிச்சம் தெளிவாக விழும் இடத்தில் நின்றுகொண்டு கண்ணாடியை அவள் மார்பு துடிக்கத்தான் பார்ப்பாள்.

பனிப்படலம் மூடிக்கிடக்கும் இந்த மலையோரங்களுக்கு சமதளங்களிலிருந்து வரும் மதராஸிகளுக்கு வெகு சீக்கிரமே நரை தோன்ற ஆரம்பித்துவிடும் என்று சமையல் வேலை செய்யும் வயதான கிழவி சொன்னது, தன்னைச் சமாதானப் படுத்துவதற்காக இருக்குமோ என்று அவள் நினைத்தாள்.

முகம் எண்ணெய் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. அவள் கொஞ்சம் பவுடர் தேய்த்து, உதடுகளில் வாஸ்லின் தேய்த்தாள். கருப்பு நிறத்தில் மாறிவிட்டிருந்த உதடுகள் இப்போது இரத்த நிறத்தில் இருந்தன. ஹேங்கரில் தொங்கவிடப்பட்டிருந்த நீல நிறக் கோட்டை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்து அவள் கதவைப் பூட்டினாள்.

போர்ட்டிகோவிற்கு வெளியே ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அமர்சிங் ஹுக்கா இழுத்துக் கொண்டிருந்தான்.

அவன் காலில் செருப்பு இல்லை. காக்கி நிறத்தில் கால் சட்டையும், கசங்கிப் போய் அழுக்கு நிறத்தில் முழங்கால் வரை இருக்கும் சட்டையும் அவன் அணிந்திருந்தான். ஏராளமான ஓட்டைகள் விழுந்திருந்த ஸ்வெட்டரைத் திறந்து விட்டிருந்தான்.

‘‘அமர்சிங், நான் வெளியே போறேன்.’’

‘‘சரிம்மா!’’

அவன் மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் புகையை விட்டவாறு சுருக்கங்கள் விழுந்திருந்த தன்னுடைய கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தான்.

‘‘கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்.’’

‘‘சரிம்மா!’’

அவள் இறங்கி நடந்தாள்.

‘கோல்டன் நூக்’கின் படிகளைக் கடந்தால் மலைச்சரிவு வழியாக வளைந்து செல்லும் நடைபாதை ஆரம்பிக்கிறது. குதிரையில் பயணம் செய்பவர்களின் வசதிக்காகக் கருங்கற்கள் பதிந்து உண்டாக்கப்பட்டிருக்கும் வழியைக் கடந்தால் நடைபாதை பிறகும் உயரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். வருடத்தில் ஒரு நாள் பஹாடிகன் ராமலீலை நடத்தும் திறந்த வெளிக்கு மேலே,  அந்த வழிக்கு அருகில் நின்று பார்த்தால், மிகவும் சுவாரசியமாக இருக்கும். மலை அடுக்குகளுக்கு நடுவில் இருக்கும் ஏரி... இரண்டு பக்கங்களிலும் தெரியும் நகரத்தின் சிவப்பு நிற மேற்கூரைகள்... ஏரியை இரண்டு முறை சுற்றிச் செல்லும் பாதை... மரக்கூட்டங்களுக்கு மத்தியில் ஏரியின் மறுகரையில் தெரியும் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள்....

ஏரிக்கும் நகரத்திற்கும் மேலே ஏப்ரல் மாதத்தின் இளம் பனிப்படலம் முன்பு எப்போதோ பகல் தூக்கத்தின் போது கண்ட ஒரு கனவைப் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

2

லகத்தின் மேற்பரப்பில் நீங்கள் நின்று கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் அறையின் மூடப்பட்ட ஜன்னலின் இடைவெளி வழியாக உள்ளே நுழையும் பகல் வெளிச்சத்திலிருந்து மானத்தைக் காப்பாற்றுவதற்காக இழுத்து தாழ்த்திய கொசுவலைச் சுருள்கள் சுற்றிலும் இருக்கின்றன. சிவப்பு கலந்த மாலை நேர வெளிச்சம் தாண்டவமாடும் மலைச் சிகரங்கள்தான் உங்களின் கண்களின் எல்லைகளைக் குறிக்கின்றன. பிரியத்துடன் ஒருநாள் கூட நினைத்துப் பார்த்திராத இடத்தின் எல்லைகள். குளிர்ச்சியான காற்றுக்குப் பச்சிலைகளின், ஈர மண்ணின் வாசனை இருக்கிறது.

குளிர்காலத்தின் இறுதியில் ஒரு நிமிடம்.

ஒரு நிமிடம். வாழ்க்கையில் ஒரு நிமிடம்.                                     

‘‘காலத்தின் நடைபாதையில் இந்த நிமிடம் முன்பே இடம் பிடித்துவிட்டது.’’

                                                                                                                                                                     சுதீர்குமார் மிஸ்ரா

                                                                                                                                                                          1955 மே, 19

ஓடி மூச்சு விட்டும் கால் இடறியும் இறுதியில் நீங்கள் இதற்கருகில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

யுகங்களுக்கு முன்பே உங்களுக்காகக் குறிக்கப்பட்டிருக்கும் நிமிடம்.            

3

பாதை வெறிச்சோடிப் போய் காணப்பட்டது. ஏரியின் கரையில் ஆங்காங்கே நீரில் இறக்கிக் கட்டப்பட்டிருக்கும் செங்கல்லான சிறிய தங்குமிடங்களில் ஒன்றின்மீது நீல நிற ஆடையணிந்த ஒரு இளைஞன் சாயம் பூசிக் கொண்டிருக்கிறான்.

பிரகாசித்துக் கொண்டிருந்த விளக்குக் கம்பங்களில் ‘ஈரமான சாயம். கவனமாக இருக்கவும்’ என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

மே மாதத்திற்காக நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. தூர இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரும்போது கால வழக்கத்தில் நிறம் மங்கலாகிப் போன முகம் மினுமினுப்பாகிறது. முதுமையை அறிவிக்கும் வெள்ளை முடிகள் மறைக்கப்படுகின்றன.

பெரும்பாலான படகுகள் இரண்டு முனைகளிலும் மரக்கால்களில் இணைக்கப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கின்றன. வெண்மணல் தெரியும் கரைகளில் வாத்துகள் கொத்தியவாறு மேய்ந்து கொண்டிருந்தன. நீரோட்டத்தில் மிதந்து வந்து பல வண்ணங்கள் பூசப்பட்ட மிதவைகளில் ஒன்று நீரில் சாய்ந்து கிடக்கும் மரத்துண்டுகளுக்கு நடுவில் கிடந்தவாறு இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.

உறுதியாக அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவாறு அமைதியாக இருந்த ஏரியையே பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா.

தூக்கம் முடிந்து உற்சாகமில்லாத முகத்துடன் யாருக்காகவோ வேடம் பூண்டு கொண்டிருந்தது சூழல். நகரத்தின் இதயத்தை அவளால் படிக்க முடிந்தது. அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

மே மாதத்தில் இந்தச் சிறிய நகரம் பரபரப்பாகவும், சிரித்து ஆரவாரம் உண்டாக்கிக் கொண்டும் வண்ணங்களையும் வாசனைகளையும் தூவி எறிந்து கொண்டும் இருப்பதை விமலா விரக்தியுடன் பார்த்தவாறு நிற்பதுண்டு.

அவை எல்லாம் யாருக்காக?

ஒன்பது வருடங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்டிருக்கும் நண்பன் என்ற நிலையில் கேள்வி அவளுடைய மனதை விட்டு வெளியே வரவில்லை.

தல்லித்தாளிலிருந்து படகொன்று புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. அதில் சிறுவர் -  சிறுமிகள்  உட்கார்ந்திருந்தார்கள்.

நைனீதேவி கோவிலின் பெரிய மணிகள் ஒலித்தன.

சிறு பெண்ணாக இருந்தபோது அவள் வெள்ளிக் கிழமையிலும், செவ்வாய்க்கிழமையிலும் கோவிலுக்குப் போயிருக்கிறாள். வயலைக் கடந்து சிறுமணல் கிடக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சாலையை அடைந்தால் அங்குதான் கோவில் இருக்கிறது. பாதையின் இருபக்கங்களிலும் மஞ்சள் நிற மலர்கள் ஏராளமாக விரிந்து நின்று அழகு செய்யும். உருளைக் கற்கள் நிறைந்த பாதை இப்போது முன்னால் இருக்கத்தான் செய்கிறது. பாதையோரத்தில் நெசவு நெய்பவர்களின் குடிசைகளின் வாசலில் நீளமாக நூல்கள் கட்டியிருப்பது இப்போதும் அவளுடைய ஞாபகத்தில் இருக்கிறது. ஓட்டுத் துண்டுகள் சிதறிக் கிடக்கும் கோவில் வாசலை விட்டு புறப்படும்போது வேலிக்கருகில் கிடக்கும் குன்றிமணிகளை அவள் சேகரித்து எடுப்பாள்.

அப்போது அவளுடைய தந்தை எங்கோ தூரத்தில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவதை யாரும் பொதுவாக விரும்பவில்லை. தன்னுடைய வீட்டிலுள்ளவர்களிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியபோது அவளுடைய தந்தைக்கு எங்கும் ஒரு இடமில்லாமற்போனது.


இனியொருமுறை வீட்டிற்குத் திரும்பிப் போகும் சூழ்நிலை உண்டாகவேயில்லை.

சமையலறை இடிந்து கிடக்கும் அந்தக் கோவில் இப்போதும் இருக்கிறதா?

பாக்குத் தோட்டத்திற்கு மேலே நின்று கொண்டிருக்கும் வைக்கோல் வேய்ந்த அந்த வீட்டிற்குத் திரும்பச் செல்லும் சூழ்நிலை உண்டாகப் போவதில்லை.

அவளுடைய தந்தை கிராமத்தை எப்போதும் வெறுப்புடன் மட்டுமே பார்த்திருக்கிறார்.

‘‘எனக்கு அங்கே யார் இருக்குறது?’’

அல்மோராவில் ஆப்பிள் தோட்டமும் சொந்தத்தில் வீடும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சியாளர் என்ற பெயரும் வாங்கித் தந்த பதவியைத் தெரிந்தவர்கள் ஊரில் யார் இருக்கிறார்கள்?

அது சரியாக இருக்கலாம்.

அவளுடைய தாயால் ஊரை எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. அந்தத் தட்பவெப்ப நிலையை அவளால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

அது தட்பவெப்ப நிலையின் குற்றமா என்ன?

அவளுடைய தந்தை கம்பளிக்குள் படுத்துக் கொண்டு முனகிக் கொண்டிருக்கும் போது அவளின் தாய் கண்ணாடிக்கு முன்னால் நின்று தலை வாரிக் கொண்டிருப்பாள். ஊரின் தட்பவெப்ப நிலையின் பயங்கரத்தை அவள் அப்போது யாரிடம் என்றில்லாமல் கூறுவாள்.

ஒருவேளை, அவளுடைய தாய் பயந்திருக்கலாம்; அவளுடைய தந்தை இறுதியின் முடிவை மாற்றிக் கொண்டு விட்டால்...?

தட்பவெப்ப நிலை!

திருமதி சக்ரவர்த்தியின் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே இருப்பதற்கு காரணம்... அங்கு இருக்கும் அதிக வெப்பமாக இருக்கலாம். திருமதி சக்ரவர்த்தியின் வீட்டை அடைய வேண்டுமானால் ஆல்ஃப்ரட் கோமஸ்ஸின் வீட்டைக் கடக்க வேண்டியதிருக்கும்!

போட் க்ளப்பிற்கு அருகில், அல்க்கா ஹோட்டலுக்கு எதிர் திசையில் ஏரியையொட்டி கட்டப்பட்டிருக்கும் இதுபோன்ற அந்த மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு ஒருமுறை அவள் தன்னுடைய கிராமத்தைப் பற்றி நினைக்க முயன்றாள்.

- எனக்கு ஞாபகத்தில் இல்லை.

- முழுவதுமாக?

- பதினாறு வருடங்களுக்கு முன்பு, சுதீர்.... பதினாறு வருடங்கள்....

மே மாதத்தில் பிரகாசமான இரவு. தூரத்தில் மரங்கள் நீலப் புகையைப் போல நின்று கொண்டிருக்கின்றன.

ஐந்து வயதில் நடந்ததெல்லாம் எனக்கு ஞாபகத்தில் இருக்கு. நினைச்சுப் பாரு.

இழைகள் ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்ப்பது மாதிரி இருந்தது ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது ஓசைகளும் வண்ணங்களும் திரும்ப வந்தன. முந்திரி எண்ணெயின் வாசனை கொண்ட படகு... பச்சைக் கிளிகள் பறந்து கொண்டிருக்கும் வயல் வரப்பில் சாய்ந்து கிடக்கும் கதிர்கள்... காளை வண்டிகளின் சக்கரங்கள் உண்டாக்கும் சத்தம்... வேடர்களின் குடிசைகளில் இரவு நேரங்களில் கேட்கும் துடியோசை....

‘சொல்லு... கேக்குறேன்...

மனம் பரபரத்தது. ‘வேண்டாம். வற்புறுத்த வேண்டாம், சுதீர். நினைத்துப் பார்க்க எனக்கு அது மட்டுமே இருக்கு. இந்த நிமிடங்கள்... இப்போ சிகரெட்டின் வாசனை கலந்த வார்த்தைகள், கன்னங்களை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் நான் வாழ்கிறேன்....’- அவள் தனக்குள் கூறிக்கொண்டாள்.

‘‘சிக்ஸ்டீன் இயர்ஸ்... மை காட்! நாம ஒரு தடவை, அங்கே போகணும். ப்ரிப்பேர்ட் ஃபார் அன் அட்வென்சர்.’’

கேரளத்திற்குக் குறிப்பாக அவளுடைய கிராமத்திற்கு வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் வந்து சேர்கிறார்கள்... திருமதி அன்ட் திரு சுதீர்குமார் மிஸ்ரா.

‘‘நான் உன் ஊரைப் பார்க்க விரும்புறேன். ஐரோப்பாவையும், தென்கிழக்கு ஆசியாவையும், இலங்கையையும் நான் பார்த்துட்டேன். கேரளத்தைப் பார்க்கணும். என் கிராமத்தில் பச்சை நிறத்துக்கு குளிர்ச்சி இல்ல. பெண்கள் குடிப்பதற்கு மூணு மைல் தூரத்துல இருந்து நீர் கொண்டு வர்றாங்க. உலகளாவிய உறவுகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய நான் இந்தியா முழுவதையும் பார்க்காம இருக்கேன்றது உண்மையிலேயே அவமானமான ஒரு விஷயம்!’’

‘‘என்ன சொல்ற விமலா?’’

‘‘சொல்றதுக்கு என்ன இருக்கு? எனக்கு இந்த நிமிடங்கள் போதும். நாம அங்கே போவோம்.’’

‘‘போவோம்ணு இல்ல. கட்டாயம் நாம போய் ஆகணும்.’’

‘‘கட்டாயமா?’’

இதற்கு முன்பு தெரிந்தே இராத மாதிரி இளம் வயதில் ஒடித் திரிந்த பாதைகள் வழியாகவும், வயல் வரப்புகளிலும் நடக்க வேண்டும்!

திரு. சுதீர்குமார் மிஸ்ரா.

திருமதி விமலா மிஸ்ரா.

மலை உச்சிகளிலிருந்த வெள்ளித் தலைப்புகள் மறைந்து விட்டிருந்தன. மலை அடுக்குகளிலிருந்து இன்னொரு மேகக் கீற்றைப் போல இளம் நீல வண்ணம் கலந்தப் பனிப்படலம் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. கீழே செடி, கொடிகளுக்கு மத்தியில் சிக்கிக் கிடந்த வண்ணமயமான மரக்கிளை விடுதலை பெற்றது.

அவள் எழுந்தாள். கோவிலைச் சுற்றி ஏரிக்கு அருகிலிருந்த பாதை வழியே நடந்தாள்.

வட்டவடிவில் அமைக்கப்பட்ட மண்டபத்திற்கு அப்பால் மணல் பரவியிருக்கும் வெட்டவெளி ஆள் அரவமற்று கிடந்தது. அதன் எல்லையிலிருந்த திரை அரங்கிற்கு முன்னால் ஆட்கள் சிலர் கூட்டமாக நின்றிருந்தார்கள். படகுத்துறைக்கு அருகில் வந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த படகுகளை ஓட்டுபவர்களுக்கு உயிர் வந்தது.

‘‘வர்றீங்களா, மேம் ஸாஹிப்? நாலணா போதும், மேம்ஸாஹிப்.’’

எல்லோரும் அழைத்தார்கள். படகுக் கூட்டத்திலிருந்து விலகித் தனியாக கிடக்கிறது அவளுக்கு நன்கு அறிமுகமான ‘மேஃப்ளவர்.’

மேஃப்ளவர்! என்ன அழகான பெயர்!

வருடங்களின் தழும்புகள் மேஃப்ளவரிலும் இருக்கின்றன.

பழைய படகோட்டி ப்ரதாப் அல்ல. சிவப்பு நிற குஷன்களிலொன்றில் உட்கார்ந்து கொண்டு பீடி புகைக்கும் மஞ்சள் நிறப் பற்களைக் கொண்ட ஒரு இளைஞன். அவன் கண்களைச் சுருக்கிக் கொண்டு சிரிப்பை நிறைத்தவாறு அவளைப் பார்த்து நின்றிருக்கிறானே தவிர, அவளைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்ததே இல்லை. அவன் மணல் வெளியில் இறங்கியபோது, சுருங்கிய கண்கள் விரிந்தன. வெள்ளை நிறக் கண்களில் எதிர்பார்ப்பு இருந்தன.

அவர்கள் சுற்றி வளைத்தபோது, படகு ஓட்டுபவர்களில் யாராவது தன் கையைப் பிடித்து இழுத்துப் படகில் ஏறச் செய்து விடுவார்களோ என்று அவள் பயப்பட ஆரம்பித்தாள்.

‘மே ஃப்ளவரை’ நோக்கி இரண்டடிகள் வைத்தபோது அந்த இளைஞன் இழுத்துக் கொண்டிருந்த பீடியை நீரில் எறிந்துவிட்டு, உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு வேகமாக எழுந்தான்.

அவன் படகைப் பிடித்து நிறுத்தினான். இரண்டு பேர் உட்காரக் கூடிய இருக்கையில் அவள் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அந்த இளைஞன் படகைச் செலுத்த ஆரம்பித்தான். படகு கரையை விட்டு நீங்கியவுடன் அவள் ‘மே ஃப்ளவ’ரின் புதிய படகோட்டியை ஆர்வத்துடன் பார்த்தாள். செம்பு நிற முடி, வெள்ளை நிறக் கண்கள், வீங்கிய முகத்தில் தவிட்டு நிறத்திலிருக்கும் ஏராளமான தழும்புகள்....

‘‘ப்ரதாப் எங்கே?’’

‘‘இறந்தாச்சு, மேம்ஸாஹிப்...’’

‘‘எப்போ?’’

‘‘நான்கு வருடங்கள் ஆச்சு. போன மாதம் எனக்கு வாடகைக்குத் தந்தாங்க. ப்ரதாப்பின் தம்பி பட்ஜியை பண விஷயத்துல ஏமாத்தினதுனால, வேலையை விட்டு போகச் சொல்லிட்டாங்க.’’


‘‘ம்...’’

சிறிது நேரம் சென்ற பிறகு, அவள் கேட்டாள்:

 ‘‘உன் பேர் என்ன?’’

‘‘புத்து... ஆட்கள் அப்படித்தான் அழைப்பாங்க.’’

அவன் ஒரு முட்டாள்தனமான சிரிப்பு சிரித்தான்.

விமலாவின் உதடுகளில் மெல்லிய ஒரு புன்னகை மலர்ந்தது. மஞ்சள் நிற பற்களைக் காட்டி அவன் முட்டாள்தனமாகச் சிரித்ததைப் பார்த்து அவனுக்கு அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.

‘‘சிலர் ‘கோரா ஸாப்னு’ ( வெள்ளைத் துரை ) அழைச்சு கிண்டல் பண்ணுவாங்க.’’

‘‘கோரா ஸாப்பா?’’

‘‘ஆமா, மேம் ஸாஹிப். என் அப்பா ஒரு வெள்ளைக்காரர்.’’

‘‘உண்மையாகவா?’’

‘‘உண்மைதான், மேம் ஸாஹிப். நான் அவரைப் பார்த்தது இல்ல. என் அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.’’

‘‘அம்மா என்ன செய்றாங்க?’’

‘‘அவங்க இறந்துட்டாங்க’’ என்று சொன்ன அவன் தூரத்தில் சுட்டிக் காட்டினான். ‘‘அந்தக் கட்டிடம் கட்டிய வருடத்தில்... ஆறேழு வருடங்கள் ஆகியிருக்கும்.’’

துடுப்பு சீராக விழுந்து கொண்டிருந்தபோது ஆழத்தை ஞாபகப்படுத்தி நீர்ப்பரப்பில் ஓசை உண்டானது.

‘‘மேம் ஸாஹிப், நீங்க பெண்கள் படிக்கிற பள்ளிக்கூடத்தில் ஆசிரியரா வேலை பார்க்குறீங்கள்ல?’’

அவன் தன்னை எப்படித் தெரிந்து வைத்திருக்கிறான் என்பதைப் பற்றி ஆச்சரியப்பட்டவாறு, ‘‘ஆமாம்...’’ என்ற அர்த்தத்தில் அவள் தலையைத் தாழ்த்தினாள்.

‘‘நான் பார்த்திருக்கேன்.’’

‘‘ம்...’’

அவன் மீண்டும் சாதாரணமாக எந்தவித சத்தமும் இல்லாமல் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தான்.

‘‘உன் அப்பா எங்கே இருக்காரு?’’

‘‘தெரியாது. ஆனால், நான் கண்டுபிடிப்பேன்.’’

‘‘பேரு?’’

‘‘தெரியாது, மேம் ஸாஹிப். என் அம்மா ஒரு வாரம்தான் என்கூட இருந்தாங்க. இருந்தாலும் கண்டுபிடிக்க வழி இருக்கு!’’

சிந்தித்துப் பார்த்தபோது மனதில் ஒரு காட்சி தெளிவாகத் தெரிந்தது.

பதினேழோ, பதினெட்டோ வருடங்களுக்கு முன்பு இவனுக்கு என்ன வயதிருக்கும்? பதினெட்டுக்கு மேல் இருக்காது.

பதினேழோ, பதினெட்டா வருடங்களுக்கு முன்பு ஒரு மே மாதத்தில் ஏரிக்கரைக்கு வந்த ஒரு வெள்ளைக்காரன் தங்கியிருந்த இடத்திற்கு தரகர்களில் யாரோ ஒருவன் ஒரு இளம்பெண்ணைக் கொண்டு வருகிறான்.

அவர்கள் ஒருவரோடொருவர் பேசுவதற்கு எதுவும் இல்லை. வெள்ளைக்காரனுக்கும் ஒரு இரை கிடைத்திருக்கிறது.

வெள்ளைக்கார துரையின் சந்தோஷ வாழ்க்கையின் நினைவுச் சின்னங்களில் ஒன்று - இதோ படகில் வெள்ளைநிறக் கண்களுடனும், செம்பு நிற முடியுடனும், தழும்புகள் விழுந்த முகத்துடனும் இருக்கும் ஒரு இளைஞனாக உட்கார்ந்திருக்கிறது.

ஏரியின் கிழக்கு மூளையில் பிரகாசத்தின் ஒரு கீற்று தெரிந்து கொண்டிருந்தது. மேற்கு திசையிலிருக்கும் சியீலமடைந்த கோவிலுக்குக் கீழே, ஏரிக்கு அருகில் கொத்திக் கொண்டிருக்கும் வாத்துக் கூட்டத்தை நீலநிற நீர்ப்பரப்பின் மீது தெரியும் நுரைகளைப் போல நாம் பார்க்கலாம்.

‘‘சீசன் தொடங்க இந்த முறை தாமதமாகும், இல்லையா மேம் ஸாஹிப்?’’

‘‘ஆமா...’’

‘‘போன வருடம் வெள்ளைக்காரர்கள் குறைவாக இருந்தாங்க. இந்த வருடம் எப்படியோ?’’

அவன் யாரிடம் என்றில்லாமல் சொன்னான்:

‘‘இந்த முறை பார்ப்பேன்னு நினைக்கிறேன். என்... என்...’’

அவன் சொல்ல வந்ததை முடிக்க சிரமப்படுவதைப் பார்த்தபோது, அவளுக்கே தமாஷாக இருந்தது. அவள் அதை முடித்தாள்.

‘‘பிதாஜி...’’

அவனுடைய முகத்தில் ஒரு மலர்ச்சி தோன்றி மறைந்தது.

‘‘ம்... பேருந்து நிலையத்தில் தின்னுவின் பெரியம்மா என் கையைப் பார்த்துச் சொன்னாங்க.’’

தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு ஏரியின் மையப் பகுதியைப் பார்த்தவாறு துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்த புத்துவின் கண்களில் எதிர்பார்ப்பின் ஒளி தெரிந்தது.

‘‘பார்க்குறப்போ நீ என்ன கேட்பே?’’

‘‘என்ன கேக்குறது? நான் எதுவும் கேட்க மாட்டேன். வெறுமனே பார்க்கணும்... அவ்வளவுதான்.’’

விமலாவால் சிரிக்க முடியவில்லை. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு பனிக்கட்டி உருகும் அனுபவத்தை அவள் உணர்ந்தாள்.

எனக்கு எதுவும் வேண்டாம். சும்மா பார்த்தா போதும்...

முட்டாளைப் போல சிளீக்கவும், பேசவும் செய்யும் அந்த இளைஞனிடம் சொன்னால், அவனால் புரிந்துக் கொள்ள முடியுமா? நானும் வெறுமனே பார்த்தால் போதும் புத்து. அதுக்கு மேல எதுவும் வேண்டாம்...

கடையிலும் மலைச்சரிவிலிருந்த வீடுகளிலும் விளக்குகள் எரிந்தன. மண்டபத்திற்கு மேலே பெரிய விளக்கு பால் நிறத்தில் வெளிச்சத்தைப் பரவவிட்டுக் கொண்டு கண்ணைத் திறந்தது. பைன் மரக்காடுகள் நிழல்களாக மாற ஆரம்பித்தன.

படகுத் துறை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘‘நிறுத்தவா, மேம் ஸாஹிப்? இல்லாட்டி, இன்னொரு சுற்று...?’’

‘‘வேண்டாம்...’’

கல் மேடையிலிருந்து நீருக்குள் இறக்கிக் கட்டப்பட்டிருந்த மரப்பலகைகளாலான ப்ளாட் ஃபாரத்திற்கு அருகில் அந்த இளைஞன் படகை நிறுத்தினான்.

அவள் வெளியே வந்தாள்.

ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு எட்டணா நாணயத்தைத் தேடி எடுத்து நீட்டினாள். அவன் சட்டையின் உள் பாக்கெட்டிற்குள் கையை விட்டு தேடுவது மீதி காசுகளைத் தருவதற்காகத்தான் என்று அவள் நினைத்தாள்.

‘‘ம்... வச்சுக்கோ... மீதி ஒரு தேநீர் குடிக்க...’’

அவன் தன் மஞ்சள் நிறப் பற்களைக் காட்டிச் சிரித்தான். பாக்கெட்டிற்குள்ளிருந்து அவன் வெளியே எடுத்தது தோலாலான ஒரு பை.

அதற்குள்ளிருந்து மிகவும் கவனமாக வெளியே எடுத்தத் தாளை நீட்டிக் கொண்டு அவன் சொன்னான்:

‘‘பாருங்க, மேம் ஸாஹிப்.’’

தாள் அல்ல. பழைய ஒரு புகைப்படம் கால ஒட்டத்தால் அவனுடைய முகத்தில் இருப்பதைப் போல புள்ளிகள் விழுந்து தவிட்டு நிறத்தில் மாறி விட்டிருந்த ஒரு புகைப்படம் படகுத்துறைக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில், குதிரை மீது அமர்ந்திருக்கும் அரைக்கால் சட்டையும் கோட்டும் அணிந்திருக்கும் ஒரு இளம் வெள்ளைக்காரனின் உருவம் அதில் இருந்தது. அவள் ஒரு நிமிடம் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

திரும்பத் தந்தபோது அவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்:

‘‘நான் கண்டு பிடிப்பேன்னு சொன்னதற்கான ரகசியம் இதுதான், மேம் ஸாஹிப். யார்கிட்டயும் நான் இதைச் சொன்னது இல்ல.’’

பேருந்து நிலையம் காலியாகக் கிடந்தது. கருப்புச் சட்டைகளும், முதுகில் கயிறுகளுமாக இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் கால தூதர்களைப் போல குனிந்து உட்கார்ந்து கொண்டு காவல் இருந்தார்கள்.

தபால் அலுவலகத்தின் வாசலுக்கு அடுத்து நின்றுகொண்டிருக்கும் பட்டாளக்காரர்களின் கண்களை முகத்தைத் திருப்பாமலே பார்க்க முடிந்தது. அவள் நடையில் சற்று வேகத்தைக் காட்டினாள்.

மேற்குப் பக்கமிருந்த பாதையிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் வழி திரும்பும் இடத்தில் நின்று கொண்டு பார்க்கும் போது, போர்டிங் ஹவுஸின் வாசலில் இருக்கும் உயரமான கம்பித் தூணில் இலைகளுக்கு நடுவில் அழுது கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தைப் போல விளக்கு தெரிந்தது.


4

யிற்றுக் கட்டிலில் போர்வைக்குக் கீழே படுத்திருந்தபோது, தன்னைத் தானே அவள் தேற்றிக் கொண்டாள். மேலும் ஒரு நாள் முடிகிறது.

எப்போதும் இருப்பதையும் விட அதிக களைப்பு தோன்றியது. கண்களை மூடிய போது எப்போதையும் விட முன்னால் இன்று தூக்கம் வந்து அணைத்துக் கொள்ளும் என்று தோன்றியது. உறக்கம் அல்ல -  முடிவு இல்லாத ஆழத்தில் விழுகிறோம் என்ற உணர்வு....

உடல் மட்டுமல்ல, கயிற்றுக் கட்டிலும் அறையும் முழுக் கட்டிடமும் மலைச்சிகரத்தின் உச்சியிலிருந்து கீழ் நோக்கி, ஒரு பஞ்சுத் துண்டைப் போல மிதந்து செல்கிறது...

அதிர்ச்சியில் உறைந்து போய் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவள் படுத்திருந்தாள். கண்களை மூடும் போது ஆழத்திற்கு... ஆழத்திற்கு....

மனம் சலனமடைந்த ஒரு மரக்கிளையைப் போன்றது. இல்லாவிட்டால், ரஷ்மியைப் பற்றி இப்போது நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஹல்தானியிலிருக்கும் சுற்றுலா பயணிகள் பங்களாவின் மூன்று அறைகளில் ஒன்றிற்குள் இருண்ட பல மைல் தூரங்களைக் கடந்து அவள் தன் கண்களைச் சுருக்கி வைத்துக் கொண்டு பார்த்தாள்.

வேறு பல விஷயங்களைப் பற்றியும் கூட அவள் நினைக்க வேண்டியதிருக்கிறது.

ஏரிக்கரையில் எங்கோயிருந்து முரசொலியும், குழலோசையும், ஆரவார ஒலிகளும் மூடப்பட்ட ஜன்னல்களைத் தாண்டி காதுகளில் வந்து விழுந்தன.

பஹாடிகளின் ஒரு திருமணக் கொண்டாட்ட ஊர்வலமாக இருக்க வேண்டும். பெட்ரோமாக்ஸ் விளக்குகள்...

தலைப்பாகையும், பட்டுச்சட்டையும் அணிந்து இடுப்பில் வாளைச் சொருகிக் கொண்டு குதிரை மீது அமர்ந்திருக்கும் மணமகனும் அவனுடைய நண்பனும்... பல நேரங்களில் பார்த்த அந்தக் காட்சி மனதில் தெளிவாக வலம் வந்தது.

மலைச் சரிவில் எங்கோ பைன் மரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு நதியில் மணப்பெண் வாத்திய ஒலிகள் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காதைத் தீட்டி வைத்துக் கொண்டு எதிர்பார்த்தவாறு காத்திருப்பாள். அவளுடைய நிமிடங்கள், ஆலிப் பழங்களைப் போல உதிர்ந்து கொண்டிருக்கும்.

பேருந்து நிலையத்திலோ, படித்துறை வாசலிலோ பழைய ஒரு தோலாலான பையை மார்புக்குப் பக்கத்தில் மிகவும் கவனமாக வைத்துக் கொண்டு  படகோட்டி புத்து படுத்து இப்போது உறங்கிக் கொண்டிருப்பான். ஒரு நாள் அவனுடைய ‘கோரா ஸாஹிப்’ வராமல் இருக்க மாட்டான்.

ஒருநாள் வராமல் இருக்கமாட்டான்.

- நானும் நீங்களும் எல்லோரும் பல யுகங்களாக எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

காலமென்னும் பாறையின் மீது பனி விழுகிறது, உருகுகிறது. திரும்பவும் பனிப்படலம் குளிச்சியாகி உறைந்து கட்டியாக மாறுகிறது.

நாம் எல்லோரும் காத்திருக்கிறோம்.

மஞ்சள் நிற பற்களும் முகத்தில் தழும்புகளும் உள்ள புத்துவிடம் அவளுக்கு ஒருவித பாசம் உண்டானது. அவனுடைய கதையைக் கேட்டவர்கள் எல்லோரும் அவனைக் கேலிதான் செய்திருப்பார்கள்.

அவளால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குக் காரணம் - ஒன்பது வருடங்களுக்கு முன் அவள் இழந்த ஒரு கனவு திரும்பவும் தனக்கு முன்னால் உயிருடன் வந்து நிற்குமென்று, ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் அவள் நினைப்பதுதான்.

மலை அடிவாரம் எங்கிருந்தோ வரும் பயணிகளுக்காகத் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்போது உள்ளே அடக்கி மறைத்து வைக்கப்பட்ட ஒரு மூலையிலிருந்து முனகல் சத்தம் கேட்கிறது.

‘‘நான் யாரையும் எதிர்பார்த்திருக்கவில்லை’’ - அவள் தனக்குத்தானே கூறிக் கொள்ள முயன்றாள்.

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?

ஆப்பிள் தோட்டங்களில் மலர்கள் மலரும்போது, மலைச்சரிவுகளில் பனி உருகும்போது, காய்ந்து கொண்டிருக்கம் வெயிலில் தூரத்திலிருக்கும் மலைச் சிகரங்கள் தெரியும்போது அவள் நினைக்கிறாள் - இதோ... குமயூண் மலைகளில் இன்னொரு வசந்தம்!

சுற்றிலும் இயற்கையின் முகம்மாறிக் கொண்டிருப்பதை அவள் கவனிக்காமல் இருக்கிறாள். ஒரு இரவு நேரத்தில் வெளியே எங்கோ ஒரு ஆரவாரம் கேட்டது.

காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு கேட்டபோது சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பு அது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

‘‘ஹோலி கங்கா சாகர்மே

பார் கங்கா சாகர்மே

ஹோலி ஹே....’’

இதோ இன்னொரு ஹோலி வந்து சேர்ந்திருக்கிறது.

‘‘பீபிஜி, நாளை மறுநாள்தான் ஹோலி.’’

பக்ஷுஷைப் பற்றி அமர்சிங் முன்கூட்டியே ஞாபகப்படுத்தினான்.

இப்போது பயணிகளின் ஒட்டு மொத்த காலோசைகளைக் கேட்பதற்காக இரவுகள் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன.

ஏரியின் நீரைப் போலவே காலம் சலனமற்று நின்று கொண்டிருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு வருபவர்கள் ஒவ்வொருவரும் கூறுவார்கள் - இங்கு  முன்பு பார்த்ததைப் போல்தான் எல்லாமும் என்று.

ஒன்பது வருடங்களுக்கு இடையில் என்னவெல்லாம் மாறியிருக்கின்றன? வாழ்க்கையிலிருந்து ஓடி திரும்பவும் வருபவர்களே, உங்களால் அதைப் பார்க்க இயலவில்லை. காரணம் - இருண்ட முடிச் சுருள்களுக்கு நடுவில் நரையின் அடையாளங்கள் மறைந்து கிடக்கின்றன. விளக்கு மரங்களின் பச்சை சாயத்திற்கு உள்ளே விழுந்திருக்கும் பள்ளங்களும், ஓட்டைகளும் மறைந்து கிடக்கின்றன.

பூமியின் கிரீடத்தை மிதித்த வெற்றிப் பெருமிதத்துடன் நானும் நீங்களும் உட்கார்ந்திருந்த பாறையின் பெயர் கூட மாறிவிட்டது.

இருட்டின் ஆழத்தில் விழுந்து விழுந்து வந்து சேரும்போது, கடவுளே.... இங்கு  வெண் மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

கருங்கற்கள் போடப்பட்ட பாதை வழியாக நடந்து கொண்டிருக்கும் குதிரைகளின் குளம்போசை...

கருத்த குதிரைக்காரன்.... அழுக்கடைந்த உரோம கோட்டின் பாக்கெட் கனமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. தலையில் வட்ட தொப்பி... கழுத்தில் சுற்றப்பட்டிருக்கும் மஃப்ளர்... வெள்ளை, தவிட்டு நிறங்களில் இருக்கும் குதிரைகள்.

‘‘எனக்கு இந்த வெள்ளைக் குதிரை போதும்.’’

‘‘யுவர் சாய்ஸ்.’’

‘‘யெஸ்... இவனோட பேர் என்ன?’’

‘‘இவன் இல்லை. இவள். உயிரியல் படித்தும் அது தெரியல...’’

முகம் வெட்கத்தால் குனிந்து கொண்டது.

ஸைஸ் சொன்னான். ‘‘மோத்தி.’’

தாழ்ந்த குரலில்: ‘‘இந்த ஊர்ல குதிரைகளுக்கு ஒரே ஒரு பெயர்தான்... மோத்தி...’’

மலைக்கு மேலே குதிரைகளைக் கட்டிப் போட்டுவிட்டுத் திரும்பவும் நடந்தபோது சிறிய ஒரு கோவில் கண்ணில் பட்டது. கழுத்தில் கேமராவைத் தொங்கவிட்டுக் கொண்டு கோவில் வாசலில் பல பயணிகள் இருந்தார்கள். இரும்புக் கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகள் கிணுகிணுத்தன. பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

‘‘நாம இந்த வழியில ஏறிப் பார்ப்போம்.’’

பிரகாசமான காலைப்பொழுது . காற்றில் நறுமணம் தங்கி நின்றிருந்தது.

‘‘இந்த வழி வந்ததுண்டா?’’

‘‘இல்ல...’’

‘‘பேர் தெரியுமா?’’

காலடிகளைப் பார்த்து சிரித்து விட்டாள். தெரியும். ஆனால் வெளியே சொல்லவில்லை.

‘‘நல்ல பெயர்... லவர்ஸ் ட்ராக்.’’

வெட்டவெளியின் மார்பில் குத்தி நிற்கும் ஒடிந்த அஸ்திரத்தைப் போல பாறை  இருந்தது.


‘‘ஆட்கள். பாறைக்கு ஏன் பெயர் வைக்கல?’’

காதலின் நடைபாதை முடிவடையும் இடத்தில் - ‘‘எதன் பாறை என்று சொல்வது?’’

பாறையில் ஆங்காங்கே சில பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன.

1953 சிவா - கிஷோர்

பி எஸ்.

‘‘நேற்று ஹோட்டலில் அறிமுகமான இரண்டு இளம் தலைமுறையினர் இந்த  இடத்தைப் பற்றி சொன்னாங்க.’’

பாறையின் கூர்மையான நெற்றியில் நின்று பார்த்தால் பயம் தோன்றும். இதயத்தின் சங்கீதத்தைக் கேட்பதற்காக வரும் ஜோடிகளுக்குப் பாறையின் சரிவில் உலகம் தனிமையான மார்பகங்களைத் தயார் பண்ணி வைத்திருக்கிறது.

‘‘பழைய பெயர்கள் மறைந்து போகின்றன. புதிய பெயர்கள் அதிகமாகின்றன.’’

குளிர்ந்த காற்றும் இளம் சூடுள்ள வெயிலும்... அவன் தான் பயணம் செய்த நகரத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். பலவற்றைப் பற்றியும் அவன் சொன்னான். ஜிம்கார்பட்.. வைஸ் சான்ஸலர்... ஆட்டோபான்... கிஸ்ஸிங் கேம்...

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த மனிதனை ஐந்து நாட்களுக்கு முன்புதான் அவள் பார்த்தாள். ஏரியின் கரையில் சிரித்துக் கொண்டே நேரம் என்ன என்று கேட்டது ஐந்து நாட்களுக்கு முன்பா ? பேருந்தில் அருகில் உட்கார வேண்டி வந்தது அன்று காலையிலா ? ஐந்து வருடங்களையும் தாண்டி அப்பால் அல்லவா ?

அடைக்கப்பட்ட ஜன்னலுக்குக் கீழே நகரத்தின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, போர்வைக்கும் கீழே கனமான கை மீது தலையை வைத்துப் படுத்திருக்கும் போது கூற வேண்டும் போல் இருந்தது.

‘‘நான் தனியாக இல்ல... நான் தனியாக இல்ல...’’

தெரியுமா ? அந்தப் பாறை மேல் பயணிகள் இப்போது ஏறுவதில்லை. ஒரு ஜூன் மாதத்தில் பாறையின் கூர்மையான தலையில் ஏறி நின்று ஒரு இளம்பெண் கீழே குதித்துவிட்டாள். ஜோடிகள் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து உருளக்கூடிய மலைச் சரிவுகள் இப்போது ஆள் அரவமற்றுக் கிடக்கின்றன. பாதை திரும்பும் இடத்தில் யாரோ ஒரு கல்லில் சுத்தியல் கொண்டு, பதிந்து வைத்திருக்கிறார்கள். ‘திஸ் வே டூ ஈஸி டெத்’.  ஒரு மண்டையோடும் கீழே சேர்த்து வைத்த இரண்டு அஸ்தியும்.

சொல்லிச் சொல்லி அந்தப் பாதைக்குப் புதிய ஒரு பெயர் வந்து சேர்ந்தது : ‘‘டெவில்ஸ் ட்ராக்’’.

வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாறையின் மேலிருந்து அதல பாதாளத்திற்கு...

5

மர்சிங் இரண்டு கடிதங்கள் கொண்டு வந்தான்.

கடிதங்கள் முன்னால் விழும்போது என்னதான் கட்டுப்படுத்தினாலும் நெஞ்சு வழக்கத்தைவிட வேகமாக அடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒன்பது வருடங்கள் கடந்தோடிய பிறகும் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஒரு முறை கவரைத் திறந்து பேப்பரைப் பிரித்தபோது,

நடனமாடிக் கொண்டிருக்கும் வயலட் நிற எழுத்துக்கள்.

‘என் பிரிய விமலா’

தபால் அலுவலகத்திலிருந்து அமர்சிங் வரும்போதெல்லாம் எதிர்பார்ப்புகள் அடங்கிய ஒரு மாய உலகம் சில நிமிடங்களில் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. அது வந்து வேகத்திலேயே நீர்க்குமிழியைப் போல உடைந்தும் போகிறது.

அவற்றில் ஒன்று பாபு எழுதிய கார்டு. அவன் எப்போதும் இந்தியில்தான் எழுதுவான். பாபுவிற்கும் அனிதாவிற்கும் மலையாளம் எழுதவும் படிக்கவும் தெரியாது.

இறுதியாக இருந்த இரண்டு மூன்று வரிகளைப் பார்த்தபோது அவளுக்கு விஷயம் புரிந்தது : ‘அதனால் கடிதம் கிடைத்த உடன் அக்கா, நீங்கள் எனக்கு இருபத்தைந்து ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும்’.

ஐம்பத்து மூன்று மைல்களுக்கப்பால் உருளைக்கிழங்கு தோட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் தன்னுடைய வீட்டைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

இரண்டு மணி நேர தூரத்தைத் தாண்டித் தன்னுடைய குடும்பம் இருக்கிறது. தந்தை, தாய், பாபு, அனிதா எல்லோரும் இருக்கிறார்கள்.

வீட்டிலிருக்கும் போது விமலாவும் அனிதாவும் சாப்பாட்டு அறைக்கு அருகிலிருக்கும் படுக்கையறையில்தான் எப்போதும் தூங்குவார்கள். அதற்கடுத்து இருக்கும் ஸ்டோர் அறையில் போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டில் பாபுவிற்குச் சொந்தமானது.

ஆனால், இரவு நேரங்களில் கட்டில் எப்போதும் காலியாகத்தான் இருக்கும். வீடு இருளில் மூழ்கியவுடன், வெளியே இருக்கும் கதவைத் திறந்து அவன் வெளியேறி விடுவான். டாக் பங்களாவிற்கு அருகிலிருக்கும் கடைக்கு மேலே கஞ்சா புகை மண்டியிருக்கும் அறையில் அமர்ந்து, அவன் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பான். அது அவளுடைய அன்னைக்கு நன்றாகவே தெரியும். நீர் எடுப்பதற்காகச் சாப்பிடும் அறைக்கு வந்து ஸ்விட்சைப் போடும்போது ஸ்டோர் அறையில் வெளிச்சம் விழும். காலியாகக் கிடக்கும் கட்டிலைத் தான் பார்க்காதது மாதிரி காட்டிக் கொண்டு அவள் திரும்பச் சென்று விடுவாள்.

‘‘பாபு தூங்கிட்டானா ?’’

‘‘ம்...’’

‘‘இவ்வளவு சீக்கிரமாகவா -?’’

‘‘ம்...’’

தன் தாயிடம் அப்படித்தான் கூறமுடியும். காரணம் -அவளின் தாய் தன் மகனின் கண்களை உற்றுப் பார்க்கும்போது அவன் சிறிதுகூட பயம் இருப்பது மாதிரி வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.

பாபுவின் கண்களில் எப்போதும் ஒரு பய உணர்வு இருந்தபடி இருக்கும்.

ஒரு நாள்...

கல்லூரி அடைக்கப்பட்டிருந்த காலம். அவளுடைய தந்தை குளியலறையில் இருந்தார்.

‘‘எனக்கு ஐம்பது ரூபாய் வேணும்.’’

‘‘என் கையில பணம் இல்ல.’’

‘‘தயார் பண்ணணும். ரொம்பவும் முக்கியமா தேவைப்படுது.’’

‘‘அப்பாக்கிட்ட கேளு. நானா இங்கே பணம் கொண்டு வர்றேன் ?’’

‘‘பணம் தரலைன்ன...--?’’

அவன் ஒரு நிமிடம் நிறுத்தினான்.

அவனின் தாயின் அமைதி அழுகையாக மாறியது.

‘‘ஒரு கடிதம் கொடுத்தால் போதும். நான் மிஸ்டர் கோமஸ்கிட்ட போய் வாங்கிக்குவேன்.’’

‘‘பாபு...’’

தாயும் மகனும் ஒருவரோடொருவர் வார்த்தைகளில் மோதிக் கொண்டு நின்றிருந்த போது, தன்னுடைய நெஞ்சு அடித்துக் கொள்வதை மட்டுமே அவள் கேட்டாள்.

அவள் முன்னறையிலிருந்த இருக்கையில் தளர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள்.

அவளுடைய தாய் உள்ளே போனாள். பெட்டிகள் திறக்கப்படுவதும், மூடப்படுவதும் கேட்டது. சில நிமிடங்களில் அவளுடைய தம்பி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறிச் செல்வதை அவள் பார்த்தாள்.

அவளுடைய தந்தை பெரிய படுக்கையறைக்கு அருகில் போடப்பட்டிருந்த பெரிய இரட்டைக் கட்டிலில் கண்களை மூடிப் படுத்திருப்பார்.

தூங்காத நேரத்திலும் கண்களை மூடித்தான் அவர் படுத்திருப்பார். கண் இமைகள் ஆட்களின் காலடி ஓசையைக் கேட்டுத் துடிக்கும் மிகவும் சிரமப்பட்டு அவர் தன் கண்களை அப்போது திறப்பார்.

அவளுடைய தந்தை பேசும் போதுதான் வேதனையாக இருக்கும். மெதுவாக வரும் தெளிவற்ற சப்தங்கள்...

போன வாரம் அவளுடைய தாய் எழுதியிருந்தாள் : ‘இப்போது சிறிதுகூட பேச முடியவில்லை. கண் இமைகள் மட்டும்தான் சிறிது அசைகின்றன.


இரண்டு வருடங்களாக இதே படுத்த படுக்கை நிலைமைதான். கட்டிலுக்கு அருகில் போய் நிற்கும் நிமிடங்களில் மனதில் தோன்றுவதுண்டு மரணம் தன் தந்தைக்கு ஒரு கொடுப்பினைதான் என்று. காரணம் - அவள் மனதில் போற்றி வைத்திருந்த தந்தை பல வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டார். க்ரீம் நிறத்தில் சூட்டும் தலையில் பெல்ட் தொப்பியும் அணிந்து பிரம்பைக் கையில் வைத்துக் கொண்டு அதை வீசியவாறு நடந்து வரும் தன்னுடைய தந்தையின் மெலிந்து நீண்ட உருவத்தைத்தான் அவள் மனதில் எப்போதும் வைத்திருக்கிறாள். அவளுடைய தந்தை அந்தக் குடும்பத்தின் தலைவர் மட்டுமல்ல-  சக்கரவர்த்திகூட அவர்தான். சாப்பிடும் அறையில் அவளுடைய தந்தைக்கு சிம்மாசனத்தைப் போல சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு பெரிய நாற்காலி போடப்பட்டிருக்கும். அதை வேறு யாரும் தொடக்கூடாது. அதன் வழியாகக் கடந்து போகும்போது, ஒருவித பயத்துடன் அவள் அந்த நாற்காலியைப் பார்ப்பாள்.

அவளுடைய தந்தை வீட்டிற்கு வந்து விட்டால், அதற்குப் பிறகு எந்தச் சத்தமும் இருக்கக்கூடாது. எரிந்து கொண்டிருக்கும் பைப்பின் வாசனை வீடு முழுக்க நிறைந்திருக்கும். எல்லோரும் தாழ்ந்த குரலில்தான் பேசிக்கொள்வார்கள். 

மதிய நேரம் சாப்பிட்டு முடித்து படுத்தால் அவளுடைய தாய்க்கு கண்களை மூட பயமாக இருக்கும்.

மணி எவ்வளவு ஆகிவிட்டது? மூன்று மணிக்கு வேலை செய்ய ஆரம்பித்தால்தான் நாலரைக்கு அவளுடைய தந்தை திரும்பி வரும்போது, காப்பியும் பலகாரங்களும் தயார் நிலையில் இருக்கும். ஆடைகளை மாற்றாமல் நேராக அவர் வந்து உட்காருவது சாப்பாட்டு அறையில்தான். மேஜை மீது எல்லாம் நிறைந்து இருக்கவில்லையென்றால், ஒரு பெரிய சூறாவளியே அங்கு வீச ஆரம்பித்துவிடும்.

தன் தந்தையுடன் உணவு சாப்பிட்ட உட்காருவதென்பது அவள் பயப்படக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது.

‘‘விமலா எங்கே? பாபு எங்கே?’’

‘‘அவங்களுக்கு இன்னும் தயாராகல. அவங்க பின்னாடி சாப்பிடுவாங்க.’’

‘‘விமலா... பாபு... கம் அண்ட் ஜாய்ன் மீ...’’

டம்ளர்கள் ததும்பி விட்டால், ஏப்பம் விட்டால், தும்மினால், அவளுடைய தந்தையின் முகம் கோபத்தால் சிவந்துவிடும். அவர் திட்டமிட்டார். திட்டுவதைவிட பயம் அந்தப் பார்வைக்குத்தான்.

அனிதா ஒருநாள் சொன்னாள்:

‘‘நாம ஊருக்குப் போகணும், அப்பா.’’

‘‘ஊர்ல உன் தாத்தா இருக்காரா?’’

அதைக் கேட்டு அனிதாவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. சொந்த ஊரைப்பற்றி அவளுடைய தந்தை பாசத்துடன் பேசி யாரும் கேட்டதில்லை.

அவளுடைய தந்தையைப் பார்த்து எப்போதும் எல்லோரும் பயந்தார்கள்.

தன் தந்தைக்கு கடிதம் எழுதும்போதுகூட அவள் பயந்தாள். ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுத வேண்டும் என்று கட்டாயமாக அவர் கூறியிருந்தார். அனுப்பும் ஒவ்வொரு கடிதமும் தவறாக இருக்கும் பகுதிகள் அடிக்கோடு இடப்பட்டு திரும்பி வரும்.

அத்துடன் ஒரு குற்றச்சாட்டும்.

‘கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைச் செலவழித்து நீ படிக்கிறாய் என்ற ஞாபகம் இருக்க வேண்டும்.’

இதெல்லாம் முன்பு இருந்த விஷயங்கள். இப்போது யாரும் அவளுடைய தந்தையைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவரால் எழுந்திருக்க முடியாது. கண்களில் மட்டும் பழைய நெருப்பு ஜுவாலைகள் மீதி இருக்கின்றன.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவள் தன் வீட்டிற்குச் சென்றாள். ஒரு இரவு வீட்டில் தங்கியபோது அவளுக்கே வெறுப்பாக இருந்தது. காலை பேருந்திலேயே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

சாயங்காலம் வீட்டில் அவளுடைய தந்தையும் அவளும் மட்டும் தனியாக இருந்தார்கள். கட்டிலுக்கு அருகில் நின்றிருந்தபோது குழைந்த நாக்கு என்னவோ சொல்ல சிரமப்படுவதை அவள் பார்த்தாள்.

‘‘அப்பா... பேச வேண்டாம்... களைச்சுப் போவீங்க.’’

அப்போது முதல் தடவையாக அந்தக் கண்களில் கையற்ற நிலை இருப்பதை அவள் உணர்ந்தாள். ஊரில் யாருக்கும் தேவைப்படாத ஒரு இளைஞன் பெரிய ஒரு வீட்டைச் சேர்ந்து இளம் பெண்ணைத் திருமணம் செய்தான். அது ஒரு வீரபராக்கிரமத்தின் கதையாக இருந்தது. இளம் வயதில் பலமுறை அந்தக் கதைகளை அவள் கேட்டிருக்கிறாள். தோட்டத்தில் கணக்கு எழுதும் வேலை பார்த்தார். தபால் மாஸ்டராக ஆனார். அவளுடைய தாயின் கழுத்தில் இருந்த தாலியை விற்று எங்கோ போனார். பிறகு கேள்விப்பட்ட செய்தி என்னவென்றால் சென்னையில் அவர் படித்துக் கொண்டிருக்கிறாராம். திருமணம் முடிந்து மூத்த அக்காவுடன் சண்டை உண்டானபோது, தனக்கு பங்கு எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய அந்த தைரியச் செயலை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

பலவற்றையும் வாழ்க்கையில் பார்த்த அந்த மனிதர்தான் தெருச்சுற்றிச் சிறுவர்கள் சுழற்றி எறிந்து விட்டுப் போன தவளையைப் போல செயலற்ற நிலையில் இப்படிப் படுத்துக்கிடக்கிறார்.

நீண்ட நேரம் அந்த அறைக்குள் அவளால் நிற்க முடியவில்லை. வெளியே வாசலைக் கடந்து சென்று ஒரு மூலையில் போய் நின்றாள்.

அவளுடைய தாய் வழக்கம்போல திருமதி பட்நாகரின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே போயிருந்தாள்.மினுமினுத்துக் கொண்டிருக்கும் புடவை, உதட்டில் சாயம் பூசி வரவழைத்த அசிங்கமான சிவப்பு, லோமா தேய்த்து கருப்பு தவிட்டு நிறங்களில் இருந்த தலைமுடி ஒப்பனை சகிதமாக வெளியே நடந்து செல்வதைப்பார்க்கும் போது வெறுப்புதான் தோன்றியது.

வெளியே வாசலுக்கு அருகில் அவளுடைய தங்கை நின்றிருக்கிறாள். மாலை நேரங்களில் அவளும்கூட தேவைக்கும் அதிகமாக தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள். அதற்குத் தேவை இருக்கலாம். டாக்டரின் மகன் ப்ரதீப் சந்திர சர்மா தோல் மேலாடை அணிந்து அந்த வழியில் எங்காவது நின்றிருக்கலாம்.

அவளுடைய தந்தையை க்ளப்பின் குளியலறையிலிருந்து ஆட்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டு வந்த நாளுக்கு முன்பு -

யாரும் வாசலில்கூட வந்து நிற்க முடியாது.

இப்போது அவளுடைய தம்பி பாபு, பஹாடிகளுடன் சேர்ந்து பங்க் புகைத்து, பணயம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். அவளுடைய தங்கை, வேலையாள் பீர் பகதூர் மூலம் காதல் கடிதங்கள் கொடுத்தனுப்புகிறாள். அவளுடைய தாய்க்கு அவற்றையெல்லாம் பார்க்க நேரமில்லை. வயதானதால் உண்டான சுருக்கங்களில் க்ரீமும் பவுடரும் தடவி தலைமுடியைக் கறுப்பாக்கி வருடங்களைத் தடுத்து நிறத்த அவள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தந்தைக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியுமா? தெரிந்திருக்க வேண்டும். ஒளி குறையாத கண்கள் குழைந்து போன நாக்கின் இடத்தைப் பிடித்திருக்கிறது.

அன்று தன் தந்தையின் நோயைப் பற்றி விசாரிப்பதற்காக ஜீப்பில் முக்தேஸ்வரத்திலிருந்து டாக்டர் மேனனும் திருமதி மேனனும் வந்திருந்தார்கள். வீட்டில் அப்போது யாரும் இல்லை.


திருமதி மேனன் கேட்டாள்:

‘‘விமலா, அம்மா எங்கே?’’

‘‘வெளியே எங்கோ போயிருப்பாங்க.’’

திருமதி மேனனின் முகத்தைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. அவளும் கேள்விப்பட்டிருக்க வேண்டும். கோமஸ்ஸுடன் இருக்கும் அவளுடைய  தாயின் உல்லாசப் பயணங்கள்....

குடும்பத்திற்குள் இரவு நேரத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தபோது தூக்கம் வரவில்லை. இதுதான் குடும்பம்!

‘‘வெறுக்கிறேன்... எல்லாவற்றையும் நான் வெறுக்கிறேன்.’’

மார்ச் மாதத்தில் ஒரு நாள் பாபு போட்டிங் ஹவுஸிற்கு வந்தான்.

ஹோலிப் பண்டிகை வரப்போகிறது. அவளுடைய தாய் ஞாபகப்படுத்தி இருக்கிறாள்.

அனிதா எழுதியிருந்தாள். ‘அக்கா, நீங்கள் வரவேண்டும்.’

‘வருவதாகச் சொல்லி தன் தம்பியை அவள் அனுப்பி வைத்தாள். தன் தங்கைக்குக் கடிதம் எழுதினாள்: ‘வேலை அதிகம் இருக்கிறது. தற்போதைக்கு வரமுடியாது.’

ஒரு நாள் காலையில் அவளுடைய தம்பியோ, வேலையாள் பீர் பகதூரோ வந்து வாசல் கதவைத் தட்டுவார்கள்.

‘‘என்ன?’’

‘‘அப்பா இறந்துட்டாரு.’’

இல்லாவிட்டால்....

‘‘ஸாஹிப் நம்மை விட்டுப் போயிட்டாரு, பீபிஜி....’’

ஒரு நாள்...

இழந்த சாம்ராஜ்யத்தின் தரைக் கற்களை வெட்டி உடைக்கும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு படுத்திருக்கும் அவளுடைய தந்தைக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும்!

6

ரண்டாவது கடிதம்: விஞ்ஞான ஆசிரியை சாந்தா தன்னுடைய வேலையை ராஜினாமா செய்கிறாள். அவளுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாம். ஒரு புகைவண்டி நிலையத்தில்தான் அவள் முதல் தடவையாகத் தனக்கு மணமகனாக வரப்போகிறவனை அவள் பார்த்தாள்.

தேதியை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். ஒரு தந்தி அடிக்க வேண்டும்.

‘‘கோட் எண் எட்டு, பதினான்கு... பதினேழு...’’

வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்ட உயிரற்ற வாசகங்களைத் தபால் துறையினர் பலவகையாகப் பிரித்து தயார் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

போர்டிங் ஹவுஸின் மேலிருந்து ஒவ்வொருத்தராகத் தப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

‘‘இங்கிருந்து செல்பவர்களே, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!’’

பகல் முழுவதும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது.

வெளியே செல்ல வேண்டாம் என்று அவள் தீர்மானித்திருந்தாள். அறையில் இங்குமங்குமாகச் சிதறிக் கிடக்கும் பொருட்களையெல்லாம் அவள் எடுத்து அடுக்கி வைத்தாள். பெரிய தோல் பெட்டிக்கு உள்ளே புடவைகளை எடுத்து மடித்து வைக்கும்போது கருப்பு நிறத்தில் மெல்லிய இசைச் சின்னங்கள் பின்னி இணைக்கப்பட்டிருந்த ரோஸ் நிற ஸ்வெட்டர் அடியில் கிடப்பதை அவள் பார்த்தாள். அவள் ஒருமுறை கூட அதை அணிந்ததில்லை.

விடை பெற்றுக் கொள்ளுவதற்கு முந்தின நாள் மாலை நேரத்தில் மல்லித்தாளில் சாய் தேய்த்த தாடியைக் கொண்ட வயதான பெரியவரின் கடையில் வாங்கிய ஸ்வெட்டர் அது. அவள்தான் அதைத் தேர்ந்தெடுத்தாள்.

‘‘நல்ல ஒரு ஸ்வெட்டர் வாங்கலாமா?’’

‘‘யாருக்கு?’’

‘‘ஒரு இளம்பெண்ணுக்கு.’’

குறும்புடன் முகத்தைப் பார்த்தாள். பொறாமையின் நிழல் தெரிகிறதா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.’’

கடைக்காரரான பெரியவர் எழுந்து வந்து பொருட்களை அவர்களுக்கு முன்னால் பரப்பி விட்டார்.

ம்யூசிக் நோட்ஸ் பின்னப்பட்டு இணைக்கப்பட்டிருந்த ஸ்வெட்டரை அவள் முதல் தடவையாகப் பார்க்கிறாள். நிறமும் நன்றாக இருந்தது.

‘‘இது நல்லா இருக்கு...’’

‘‘பிடிச்சிருக்கா?’’

‘‘கிடைக்கப் போகிறவளுக்குப் பிடிச்சிருக்குமான்னு எனக்குத் தெரியாது. எனக்குப் பிடிச்சிருக்கு.’’

ம்... அது போதும். விமலா நீ சொல்லிட்லேல், நல்லா இருக்குன்னு...

ப்ளாஸ்டிக் சுவரில் இட்டு அதைக் கையில் வைத்திருந்தது, அவள்தான்.

நேராகத் தியேட்டரை நோக்கி அவர்கள் நடந்தார்கள்.

‘புஷ்பா சர்க்காரி’ தியேட்டரின் ஒரு பகுதியாக மாடியிலிருந்த ரெஸ்ட்டாரெண்டில் அவர்கள் சாப்பிட்டார்கள்.

ஒன்பதாவது வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமியும், அவளுடைய வீட்டைச் சேர்ந்தவர்களும் அருகிலிருந்த மேஜையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவள் ‘நமஸ்தே’ சொல்லியவாறு அருகில் வந்தாள்.

அவள் இனி தன்னுடைய தோழிகளிடம் செய்தியைப் பரப்புவாள். விமலாஜிக்கு நீலநிறக் கண்களும் நெற்றியில் விழுந்து கிடக்கும் தலை முடியும் உள்ள ஒரு இளைஞன் பாய் ஃப்ரெண்டாக இருக்கிறான் ! புஷ்பா சர்க்காரின் காதலனைப் பற்றி ஊர் முழுக்க பரப்பி விட்டது மாணவிகள்தான்.

தேவையே இல்லாமல் அந்தச் சிறுமியை அவள் அறிமுகப்படுத்தி வைத்தாள் : ‘‘என் ஸ்டூடண்ட் இது என்னோட கஸின். சீசனுக்கு வந்திருக்கார்.’’

எல்லா விஷயங்களையும் அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள்.

ஹோட்டல்களிலிருந்த இருக்கைகள் இப்போதும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கின்றனவா ? பண வசதி கொண்டவர்கள் மட்டுமே நுழையக்கூடிய அந்த ரெஸ்ட்டாரெண்டிற்குள் அதற்குப் பிறகு அவள் நுழைந்ததில்லை. வெள்ளைச் சிறகுகள் குத்தப்பட்ட கஸாட்டா ஐஸ்கிரீமை அவர்கள் இப்போதும் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்களா ?

தியேட்டருக்குள் மனித உடல்களாலும், மூச்சுகளாலும் ஒரு இளம் உஷ்ணம் இருந்தது.

இருப்பதிலேயே இறுதியாக இருந்த வரிசையில் அடுத்தடுத்த இருக்கைகளில் போய் அமர்ந்தார்கள்.

ஆழமான கடலில் மூழ்கி முத்தெடுக்கும் அடிமைகளைப் பற்றிய கதை அது. கழுத்தில் பூமாலை அணிந்த அழகிய பெண்களின் கூட்டு நடனம்... நாயகனின் உதடுகள் செம்பு நிறத்திலிருந்த இளம்பெண்ணின் ஈரமான உதடுகளைத் தொட்டபோது ஒன்றையொன்று கோர்த்துக் கொண்டிருந்த கைகளில் விரல்கள் இறுகின.

‘‘அதிர்ஷ்டசாலி !’’

காதில் முணுமுணுப்பு

அப்போது சிகரெட்டின் வாசனை நிறைந்த மூச்சுக்காற்று கன்னத்தின் மீது பட்டது.

போர்ட்டிங் ஹவுஸுக்குச் செல்லும் பாதை திரும்புகிற இடத்தில் நின்று கொண்டு விடை பெறும் போது ப்ளாஸ்ட்டிக் கவரிலிருந்த ஸ்வெட்டரை அவள் திரும்பத் தந்தாள்.

அப்போது...

‘‘அது உனக்குத்தான்...’’

அவள் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள். எதிர்பாராத அந்தப் பரிசை வேண்டாம் என்று அவள் கூற நினைத்தாள்.

‘‘நான்... எனக்கு...’’

அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

‘‘உனக்காகத் தான் அதை வாங்கினேன். குட்நைட் !’’

தனியே நடந்து சென்றபோது புதர்களுக்கு நடுவில் ஓசை எழுப்பியவாறு வந்த குளிர்ந்த காற்றிடம் அவள் சொன்னாள் :

‘‘தேங்க்யூ... தேங்க்யூ... ஃபார் எவ்திரிங்...’’

போர்ட்டிங் ஹவுஸின் நடு முற்றத்தில் மஞ்சள் வெயில் இருப்பதைப் பார்த்ததும் ஜன்னலைத் திறந்து அவள் வெளியே பார்த்தாள்.

கால்ன் நூக்கிற்கு பெட்டிகளையும், சாமான்களையும் சுமந்து கொண்டு இரண்டு கூலியாட்கள் ஏறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த வருடத்திற்கான பயணிகள் வந்து சேர்ந்திருக்கின்றனர்.

போன வருடம் டெல்லியிலிருந்த ஒரு எஞ்ஜினியரின் குடும்பம் வந்திருந்தது. பதினாறுக்கும் மூன்றுக்கும் இடையில் இருக்கும் ஒன்பது குழந்தைகள். அவர்கள் போவது வரை சூழலே மிகவும் கோலாகலமாக இருந்தது.

அதற்கு முந்தைய வருடம் தேனிலவிற்காக வந்திருந்த ஒரு பிராமண தம்பதிகள்.

வெளியே காலநிலை திடீரென்று இனிமையாக இருப்பது போல் தோன்றியது. வெளியே செல்ல வேண்டாம் என்று எடுத்த முடிவு மாறிவிட்டது.


போகும் வழியில் அவள் அமர்சிங்கைப் பார்த்தாள். கடையிலிருந்த அவன் வந்து கொண்டிருந்தான். மரியாதை மேலோங்க சற்று வழியிலிருந்த ஒதுங்கி நின்ற அவன் ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டினான்.

சாயங்கால தபாலில் இன்னொரு கடிதமும் வந்திருக்கிறது !

நெஞ்சு அடித்துக் கொள்ள அந்தக் கடிதத்தை அவள் வாங்கிப் பார்த்தாள்.

ஓ... ரஷ்மி வாஜ்பாய் !

அமர்சிங் கடந்து சென்றவுடன் தேவைக்கும் அதிகமாகக் காட்டிய மரியாதைக்கான காரணம் என்னவென்பதை அவள் புரிந்து கொண்டாள். சாராயத்தின் வாசனை !

நடந்து கொண்டே அவள் கடிதத்தைப் படித்தாள்.

‘மதிப்பிற்குரிய டீச்சர்ஜி,

நான் நேற்று இரவே வீடு வந்து சேர்ந்து விட்டேன். வழியில் எந்தப் பிரச்சினையும் உண்டாகவில்லை. பிதாஜி தன்னுடைய வணக்கத்தை உங்களுக்குக் கூறச்சொன்னார்.

- ரஷ்மி.

ராம் நகரின் முகவரி அதில் எழுதப்பட்டிருந்தது.

தபால் முத்திரையைப் பார்த்தபோது, தன்னையும் மறந்து அவள் புன்னகைத்து விட்டாள். ஹல்தானி !

 பயணிகள் பங்களாவின் பணியாளிடம் காலையிலேயே கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தபோது ரஷ்மியின் முகத்தில் தெரியும் வெற்றிப் பெருமிதத்தைக் கற்பணை பண்ணிப் பார்க்க அவளால் முடிந்தது.

‘‘உனக்கு நான் மன்னிப்பு தர்றேன். எப்போதும் நினைச்சுப் பார்க்குற மாதிரியான ஒரு இரவு உனக்குச் சம்பாத்தியமாகக் கிடைச்சிருக்குல்ல...’’

தினமும் ஏறவும் இறங்கவும் செய்கின்ற வழியில் செல்லாமல் மலைச்சரிவு வழியாக அவள் நடந்தாள். இடிந்து கிடக்கும் ஒரு வீடு புதர்களிலும் மரங்களிலும் குரங்குகள் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.

அரக்கனின் மண்டை ஓட்டைப் போல தாழ்வுகளும் உயரங்களுமாக இருந்த பாறையின் நெற்றிப் பகுதியில் போய் அவள் அமர்ந்தாள். அங்கு அமர்ந்திருந்தால் ஏரியின் ஒரு பகுதியை நன்கு பார்க்க முடியும்.

போர்ட் க்ளப்பிற்கு அப்பால் இருக்கும் ஹோட்டலின் மூலையை அங்கிருந்து பார்க்கலாம். வெள்ளை மாடத்தில் யாரோ நின்று கொண்டிருக்கிறார்கள். வானத்திற்குக் கீழே ஒரே ஒரு மனித உருவம் !

ஹோட்டல் மூன்று முறை கைகள் மாறியிருக்கின்றன. அதன் பெயரும்தான்.

உருண்டைத் தூண்களும் சாயம் தேய்க்கப்பட்ட இரும்புக் கம்பிகளைக் கொண்டு செய்யப்பட்ட பேஸ்கட் நாற்காலிகளும் மாறியிருக்க வாய்ப்பில்லை.

 பல வருடங்கள் கடந்து ரஷ்மி மனைவியாகி, தாயாகி ஹல்தானியின் பயணிகள் பங்களாவிற்கு முன்னால் நடந்து செல்லும்போது, முழுமையான ஆனந்தத்துடன் ஜன்னல்களில் ஒன்றை அவள் பார்ப்பாள்.

முதல் பாவம், பெண்மையின் மூடுபடலத்தைக் கிழிக்கும் முதல் வேதனை, முதல் சந்தோஷம், முதல்.....

மூன்றாவது மாடியின் வலது எல்லையில் வெண்மாடத்திற்குச் செல்லும் மூலைக்கு அருகில் மூடிக் கிடக்கும் அந்த ஜன்னல் தெரிகிறதா ?

7

சிவப்பு நிற விரிப்பு விரிக்கப்பட்ட தரை, காற்றில் சிகரெட் புகையும் பால் அன்காவின் பட்டு போன்ற மிருதுவான குரலும் கலந்திருந்தது.

கதவைத் திறந்தபோது இறுக்கமாக இருக்கும் அடர்த்தியான சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் சட்டை அணிந்த இளைஞனின் முகத்தில் நம்பிக்கையின்மையும் ஆச்சரியமும் தெரிந்தன.

‘‘ஓ மை காட்!’’

‘‘என்ன?’’

‘‘வரமாட்டேன்னு நான் நினைச்சேன்.’’

பிரம்புக் கூடையைப் போல் வட்டமாகச் செய்யப்பட்ட இரும்பு நாற்காலியைச் சற்ற நகர்த்திக்கொண்டே வரவேற்றான்;

‘‘உட்காரு.’’

அவளுடைய கண்கள் அறை முழுவதும் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. தரை விரிப்பில் இசைத் தட்டுகள் சிதறிக் கிடந்தன. மேஜை மீது புத்தகங்களின் குவியல். ஸ்டாண்டில் தோல்பையில் சுற்றப்பட்ட கேமரா.

பாடகன் பாடிக்கொண்டிருக்கிறான்: ‘‘புட் யுவர் ஹெட் ஆன் மை ஷோல்டர்ஸ்.’’

‘‘என் தோளில் உன் தலையைச் சாய்த்துக் கொள். உன் உதடுகளை என் உதடுகளோடு இணைத்துக்கொள்.’’

ஏரியிலிருந்த படகிலும் பைன் மரங்களின் நிழல்களிலும் ‘காதலின் நடைபாதை’யிலும் பல மணி நேரங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வார்த்தைகள் கொண்டு பூமாலைகள் கோர்க்கக்கூடிய அவன் மவுனமாக இருந்தான்.

அவள் கூறுவதற்கு எதுவுமில்லை. தொண்டையின் கனமாக ஏதோவொன்று சிக்கிக் கிடக்கிறது. ரெக்கார்ட் ப்ளேயரின் ஊசி கரகர ஓசையுடன் தன்னுடைய செயலை நிறுத்தியபோது அறையில் முழு அமைதி உண்டானது.

தாங்கிக் கொள்ள முடியாத அமைதி. மிகவும் சிரமப்பட்டவாறு அவன் என்னவோ சொன்னான். அர்த்தமற்ற வார்த்தைகள். நிறைய அர்த்தம் கொண்டிருக்கும் ஒலிகள்... ஒலி ஆவேசமாக வந்தது. அவள் கஷ்டப்பட்டு சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளின் சிரிப்பல்ல.

அவன் முன்னால் நின்று கையை நீட்டி விரல்களைப் பிடித்து உயர்த்திய போது தலைக்கு இரத்தம் வேகமாக ஏறியது. நடுங்கிய கால் விரல் நுனிகளிலிருந்து என்ன என்று புரிந்துகொள்ள முடியாத வேதனையின் பெருக்குகள் எண்ணற்ற வழிகள் வழியாகப் படர்ந்து ஏறியது.

வார்த்தைகள், சப்தங்கள் மிகவும் தூரத்தில்...

‘‘வா...’’

அடைக்கப்பட்ட ஜன்னல் வழியாக உள்ளே மெதுவாக வந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் கண்களை மூடிப் படுத்திருந்தபோது, தேர்ந்த விரல்கள் உடலில் நகர்ந்தபோது, வட்டம் வட்டமாக மலர்ந்து கொண்டிருக்கும் நீர் வளையங்களுக்கு நடுவில் மூழ்கிப் போன கல்லின் தெளிவற்ற இடத்தைப் போல ஒரு ஞாபகம் மட்டுமே மீதமிருந்தது.

இது நடக்கும் என்று நினைத்ததுதான்...

‘‘வேண்டாம்... என்னால் முடியாது.’’

குரல் மிகவும் பலவீனமாக இருந்தது.

‘‘பரவாயில்ல....’’ கண்களைத் திறக்க முயன்றபோது பிரகாசமான அந்த நீலநிறக் கண்கள், எண்ணெய் பளபளப்பு இறங்கி வந்து திரும்பிப் போனதைப் போல ஒரு நிமிடம் தோன்றியது.

வேதனை... வேதனையால் இப்படியும் அப்படியுமாகப் புரண்டபோது, உயரவும் தாழவும் செய்து கொண்டிருந்த கழுத்தில் கைகளைச் சுற்றி உதடுகளைக் கடித்து அழுத்தியவாறு அவள் படுத்திருந்தாள்.

‘‘அழக்கூடாது... என்னுடைய... என்னுடைய எல்லாவற்றையும் தருகிற இந்த நிமிடத்தில் அழக்கூடாது.’’

மனம் என்பது பனி இறங்குகிற இன்னொரு அடிவாரம்!

‘‘என்னுடைய மட்டும்... என்னுடன் முழுமையாகச் சங்கமமாகும் இந்த நிமிடத்தில் அழக்கூடாது.’’

பல வருடங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்தபோது ஈரமான உதடுகளைக்  கன்னத்தில் அழுத்திக் கேட்டான்: ‘‘வலிச்சதா?’’

எதுவும் சொல்ல முடியவில்லை. அழலாம். சிரிக்கலாம். உடல் முழுவதும் பயங்கரமாக வலித்தது. எழுவதற்கே பயமாக இருந்தது. கண்களை மூடி அவள் படுத்திருந்தாள். அப்போது மே மாதத்தின் தெளிந்து காணப்பட்ட வானத்தில் நட்சத்திரங்கள் பூத்திருப்பதை அவள் பார்த்தாள். தூரத்தில் யாரோ காற்றில் பறக்கவிட்ட வெள்ளை நிற துணியைப் போல ஒரு மேகக்கூட்டம் போய்க் கொண்டிருந்தது.

தலையை வெளியே சாய்த்து தரையில் கையூன்றி ரெக்கார்ட் ப்ளேயரை மீண்டும் இயக்குவதற்காகக் கட்டிலை நோக்கிச் சாய்ந்தபோது அவள் ஒரு மாதிரி ஆகிவிட்டாள்.


போர்வையை இழுத்து உடம்பு முழுக்க மூட ஆரம்பித்தபோதுதான் இரத்தத் துளிகள் படர்ந்த மூன்று இடங்களை அவள் பார்த்தாள்.

‘‘என்னுடைய இனிமையான நாட்களையும் தனிமையான இரவுகளையும்’’ பற்றி பெண்ணின் குரல் பாடத் தொடங்கியிருந்தது.

சரிந்து படுத்துக் கொண்டு அவன் தன் கையை நீட்டிய போது நெஞ்சிலிருந்து வியர்வைத் துளிகள் உருண்டு கீழே விழுந்து கொண்டிருந்தன.

‘‘விமலா...’’

துடித்துக் கொண்டிருந்த கண் இமைகளை பலவந்தமாக மூடிக்கொண்டு அவள் படுத்திருந்தாள். கூறுவதற்கு ஒர பெரிய நூல் அளவிற்கு அவளுடைய மனதில் விஷயங்கள் இருந்தன. தொண்டை முழுமையாக வற்றிவிட்டிருந்தது.

‘‘நான் நானாக இல்லை...’’

நடுங்கிக் கொண்டிருந்த உதடுகளில் குரல் மரத்துப் போய் விட்டது. உடலுக்கு எடையே இல்லாமல் இருந்தது. அவள் மிதக்கிற மாதிரி நடந்தாள். - வானத்தின் சரிவிலிருக்கும் மேகக் கூட்டத்தைப் போல, அடிவாரத்தின் சுழல் காற்றில் யாரோ பறக்கவிட்ட வெள்ளைத் துணியைப் போல..

8

ண்ணில் தெரியும் ஏரியின் மூலையில் வழி விளக்குகள் தெரிந்தன. பகல் வெளிச்சம் இனியும் சிறிது நேரம் இருக்கும்.

ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்த மனித உருவம் திடீரென்று அமைதியானவுடன் அவள் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

‘‘மேம் ஸாஹிப்...’’

ஒரு நிமிடம் ஆனது... பற்கள் முழுவதையும் வெளியே காட்டி சிரித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனைத் தெரிந்து கொள்வதற்கு. புத்து...

‘மேம் ஸாஹிப், நீங்க இன்னைக்கு ஏரிப்பக்கம் வராததுக்கு என்ன காரணம் ?’’

‘‘ஒண்ணுமில்ல...’’

‘‘தினமும் இங்கே இருப்பீங்களா ?’’

‘‘சில நேரங்கள்ல...’’

‘‘மேம் ஸாஹிப்... தினமும் படகு சவாரி செய்ய வாங்க. எனக்கு மூணு அணா தந்தா போதும்.’’

‘‘சரி...’’

அவள் எழுந்தாள்.

‘‘சீஸன் ஆரம்பமாயிருச்சு, மேம் ஸாஹிப். டில்லியில இருந்து ஒரு சிறப்புப் பேருந்து வந்திருக்கு.’’

அது அப்படித்தான். தினமும் சிலர் வந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஒர நாள் அந்தச் செய்தி காதில் விழும். சீஸன் ஆரம்பமாகிவிட்டது. அதற்குப் பிறகு அடிவாரம் மிகவும் சுறுசுறுப்பாகிவிடும்.

‘‘எல்லாம் நம்ம நாட்டுக்காரங்கதான் !’’

வெளிநாட்டுக்காரர்கள் யாரும் இல்லாததால் அவனுக்குச் சிறிது ஏமாற்றம் உண்டாயிருக்குமோ என்னவோ!

‘‘நீ எதுக்கு இங்கே வந்தே புத்து?’’

‘‘ஒரு துடுப்பு உடைஞ்சு போச்சு, மேம் ஸாஹிப், அதோ அங்கே இருக்குற அன்னுவின் மிட்டில் ஒர பழைய துடுப்பு இருக்குறதா சொன்னான்.’’

அவன் சைனா பீக்கிற்குக் கீழே ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான்.

அவள் போக ஆரம்பித்தபோது புத்து கேட்டான்:

‘‘புறப்பட்டுட்டீங்களா?’’

‘‘ஆமா...’’

‘‘மேம் ஸாஹிப், நான் வந்து பேசினதுனாலையா நீங்க கிளம்பிட்டீங்க?’’

‘‘இல்ல... நேரம் அதிகமாயிடுச்சு.’’

அவள் நடந்தபோது புத்து, சில அடிகள் வரை பின்னால் வந்தான்.

‘‘ஒரு விஷயம் கேட்கலாமா, மேம் ஸாஹிப்?’’

‘‘ம்...’’

‘‘வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டு போயிட்டாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையா?’’

அவனுடைய முகத்தில் இருந்த பதைபதைப்பைப் பார்த்தபோது அவள் பீறிட்டுக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

‘‘சும்மா சொல்றாங்க.’’

‘‘அதைத்தான் நானும் சொன்னேன். இவ்வளவு அருமையான நம்ம நாடு இருக்குறப்போ, யாராவது போவாங்களா?’’

மனதில் திருப்தியடைந்து அவன் திரும்பி நடந்தன். அவனுக்குப் பின்னால் அவனுடைய மெதுவான பாட்டுச் சத்தம் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

கான்க்ரீட் படி ஆரம்பிக்கும் இடத்தில் வெறும் தரையில் அமர்சிங் குறட்டை விட்டவாறு தூங்கிக் கொண்டிருந்தான். இன்னொரு முறை கிழவன் மலைச்சரிவிலிருக்கும் குடிசைகளில் ஏதோ ஒன்றைத் தேடிப் போய் சாராயம் குடித்திருக்க வேண்டும். ஒருவாரம் படு சந்தோஷமாக  இருந்தது அவனுக்கு. வீட்டிற்குச் செல்லும் மாணவிகள் கொடுத்த சில்லரைப் பணம் இவ்வளவு நாட்கள் அவனுடைய கையில் நீடித்து இருந்தே பெரிய விஷயம்.

விடுமுறை நாட்களில் மட்டும்தான் இந்தச் சுதந்திரம். அதுவும் விமலா ரெஸிடெண்ட் ட்யூட்டராக ஆனதிலிருந்துதான் இது நடைமுறைக்கே வந்தது. மாணவிகள் இல்லாமல் அமர்சிங் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தனக்குப் பதிலாக பள்ளிக்கூடத்தில் தோட்ட வேலை செய்பவனைக் காவலுக்குக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

சிறிது குடித்துவிட்டால், அமர்சிங்கிற்கு அதிக மரியாதை தோன்ற ஆரம்பித்துவிடும். கொஞ்சம் அதிகமானால், அழுதுகொண்டே பழைய கதைகளைக் கூற ஆரம்பித்து விடுவான். தன் மனைவி வீட்டை விட்டு ஓடிப்போனது, மகன் தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டியது போன்ற விஷயங்களை, அந்த மாதிரி நேரங்களில் அவன் கூறுவான். தேவைப்படுகிற அளவிற்குச் சாராயம் வாங்க முடிந்தால், தனியாக இருக்கும் ஒரு கல்லிலோ அல்லது தரையிலோ படுத்து அவன் தூங்கி விடுவான்.

மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்ட விஷயமிது. ஒரு நாள் காலை நேரத்தில் ஒரு ரெஸிடெண்ட் ட்யூட்டர் போர்ட்டிக்கோவில் வந்து பார்த்தபோது அமர்சிங் அங்கு இல்லை. சுற்றிலும் பார்த்தபோது கம்பி வேலியில் அமர்சிங்கின் கோட்டும் காற்சட்டையும் மடித்து தொங்கிக் கொண்டிருந்தன. மீண்டும் அழைத்தபோதுதான் விஷயமே புரிந்தது. கம்பி வேலியில் மடங்கி தொங்கிக் கொண்டிருந்தது ஆடைகள் அல்ல - அமர்சிங்கேதான்.

அறையில் மேஜை மீது ஆட்டாரொட்டியும் சப்ஜியும் மூடி வைக்கப்பட்டிருந்தன. தெர்மோ ஃப்ளாஸ்கில் பால்.

மலையில் ஏறி வந்தது காரணமாக இருக்கலாம் - உஷ்ணம் அதிகமாக இருந்தது. அவள் ஜன்னலைத் திறந்து விட்டாள். அப்போது கோல்டன் நூக்கின் விளக்குகள் எரிவதை அவள் பார்த்தாள். ஸ்வெட்டரைக் கழற்றிவிட்டு மீண்டும் அவள் ஜன்னலுக்கருகில் வந்தாள்.

வாசலில் செடிகள் கருகிப் போயிருந்த பூச்சட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் இரண்டு கைகளையும் நெற்றியில் அழுத்தி வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் மீது கால்களைத் தூக்கி வைத்தவாறு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். இந்த வருடம் கோல்டன் நூக்கிற்குக் கிடைத்த விருந்தாளி யார் என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் உண்டானது. அங்கு உட்கார்ந்திருந்தது ஒரு சர்தாஜி. வயதான ஆள் மாதிரி தெரிந்தது.

தலைக்கட்டை தன் மடியில் அவர் வைத்திருந்தார். முன் தலையில் உருண்டையாகக் கட்டி வைக்கப்பட்ட முடியின் நிழல் முற்றத்தில் ஒரு மலை உச்சியின் ஓவியத்தை வரைந்தது. எந்தவித அசைவுமில்லை. கையுள்ள நாற்காலியில் யாரோ ஒரு சடலத்தை வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்பது மாதிரி இருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த மனிதச் சிலை சற்று அசைந்தது. தலையை உயர்த்தி நாற்காலியின் பின்னால் சாய்ந்து உட்கார்ந்தபோது, விமலா ஜன்னலை விட்டு விலகி நின்று அதை அடைந்தாள்.


ஒற்றைக் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் முழம் நீளத்தில் இருக்கும் ‘இக்தாரா’வின் இசை பெரிதாக ஒலித்தபோது விமலா அதைக் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டாள்.

அந்த மனிதர்தானா? அப்படியென்றால் தளர்ந்து போன விரல்கள் எவ்வளவு திறமையாக அந்த ஒற்றைக் கம்பியில் சஞ்சரிக்கின்றன.

மெத்தை ஏதோ ஒரு புழுவின் உடலைப் போல குளிர்ந்து போய் துவண்டுக் கிடந்தது.

சர்தார்ஜியின் குரலாகத்தான் இருக்க வேண்டும். நடுங்கிய குரல்.

அவள் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டாள்.

‘உட்டீ உட்டீ வேதிலீ ஆர் காகா

லம்பீ லயி வே உடாரீ

ஜா ஆகீம் மேரே நாஹி நு

கோரீ மனோம் க்யோம் பிஸாரி’

பழமையான ஏதோ ஒரு பஞ்சாபி கிராமத்துப் பாடல் அது.

அறுவடை செய்து குவிக்கப்பட்ட சோளக் கதிர்களுக்கு நடுவில் கடுமையான வெயிலில் நிலவைப் போல கயிறைச் சுழற்றிக்கொண்டு நடந்து செல்லும் ஒரு பஞ்சாபி இளம் பெண்ணின் வாடிய முகம் மனதில் அப்போது தோன்றியது.

தலை முடியையும் தாடியையும் நீளமாக வைத்துக்கொண்டு வெங்காய வாசனை வரும் பலசாலிகளான பஞ்சாபிகளைப் பார்க்கும்போது அவளுக்கு எப்போதும் மனதில் வெறுப்புதான் வரும். தேவையில்லாமல் அவர்களைப் பார்த்து அவளுக்குப் பயம் தோன்றும். ஆனால், அவர்களின் பாடல்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆக்ராவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அம்ருதா என்றொரு பஞ்சாபி இளம்பெண் அவளுக்குத் தோழியாக இருந்தாள். அவள் ஏராளமான காதல் பாடல்களை அவளுக்குப் பாடிக் கேட்க வைத்திருக்கிறாள். முரட்டுத்தனமான இளைஞர்களின் கண்களில் மலரும் பகல் கனவுகள்தான் அப்பாடல்கள் என்று அவள் நினைப்பாள்.

சுவருக்கு அப்பாலிருந்து நடுங்குகிற குரலும் இக்தாராவின் அழுகையும் காற்றில் மிதந்து வந்தன.

‘தில்கா டுகடா மை காகஜ் பகாவாம்

உம்கலியா கட்ட கானீ

அக்காம் தா கஜ்ஜலா மைம் சாஹீ பணாவாம்

ஹஸீ ஆம் தா பாணீ ஆ பாணீ’

விமலாவின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

‘காகமே, பறந்து செல் நீண்ட தூரம். என் காதலனிடம் போய்க் கேள், என்னை ஏன் மறந்தான்?’ அவள் அந்தப் பாடலில் தன்னையே பொருத்திப் பார்த்தாள். முப்பத்தொரு வயதான ஒரு பெண் நாடோடிப் பாடலைக் கேட்கும்போது கலக்கமடையக் கூடாது.

துன்ப நினைவுகளில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கிராமத்துப் பெண்ணின் குரலை அவள் கேட்டாள்.

‘தில்கா டுகடா மை காகஜ் பகாவாம்...’

இதயத்தின் ஒரு பகுதியைத் தாளாக்கி, விரலை ஒடித்து பேனாவாக ஆக்கி, கண்ணீரை மையாக ஆக்கி நான் செய்தியை எழுதட்டுமா?’’

சர்தார்ஜியின் விரல்கள் மீட்டுவது தன் உள்ளே எங்கேயோ என்று அவள் நினைத்தாள். கவனத்தைத் திருப்புவதற்காக ஏதாவது படிக்கலாம் என்று அவள் நினைத்தாள். ஸ்டாண்டில் இருந்த புத்தகங்களைப் பல தடவைகள் எடுத்து அவள் அதைப் படித்திருப்பதால், அதன் மேலட்டை கிழிந்துபோயிருந்தது. வயலட் நிற மையால் முதல் பக்கத்தில் நீளமாக கையெழுத்து இடப்பட்டிருந்தது.

சுதீர்குமார் மிஸ்ரா ஜனவரி, 55

அருகில் வயலட் நிற மையால் கோடிட்ட வரிகள் பெரும்பாலான பக்கங்களிலும் இருந்தன. அவனுக்கு மிகவும் விருப்பப்பட்ட நான்கு வரிகள் இருந்தன. பல நேரங்களிலும் அவன் அதைச் சொல்ல, அவள் கேட்டிருக்கிறாள்.

I am dying my own death

                And the deaths of those after me

I am living my own life

                And the lives of those after me.

ஒற்றைக் கம்பியால் ஆன இசைக் கருவியின் சப்தம் குளிர்ந்த காற்றில் மிதந்து  வந்து கொண்டிருந்தது.

‘கோல்டன் நூக்’கிற்கு சீஸனில் வரும் பயணிகள் பலவகைகளிலும் இந்த அறையின் வாழ்க்கையைப் பாதித்திருக்கிறார்கள். போன வருடம் இரவும் பகலும் சிறுவர், சிறுமிகளின் ஆரவாரம்தான். அதற்கு முந்தின வருடம் வந்த புதுமணத் தம்பதிகள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். முன் தலையில் குங்குமமும் நெற்றியில் நிறைந்து நிற்கும் பெரிய ஒரு பொட்டும் அணிந்திருந்த புது மணப்பெண். ஒரு மாதம் அவர்கள் அங்கு தங்கினார்கள். இரவும் பகலும் அவர்கள் காட்டெஜுக்கு உள்ளேயே இருந்தார்கள். வெளியே நடந்து செல்வதுகூட மிகவும் அபூர்வமாகத்தான். திரைச்சீலைக்கு அப்பால் அவர்களின் நிழல்கள் நெருங்கியும் விலகியும் தெரிந்து கொண்டிருக்கும். பேச்சுச் சத்தம் வெளியே கேட்காது.

ஏரியையும் நந்தாதேவியின் மஞ்சள் நிற கிரீடத்தையும் பார்ப்பதற்காக வந்து சேரும் பயணிகளின் ஆரவாரங்களுக்கு நடுவில் ஒருவரையொருவர் மட்டும் பார்த்துக் கொண்டு முப்பது நாட்கள் இருப்பது!

அது சாத்தியமானதுதான் - மூடப்பட்ட கதவுகளுக்கு உள்ளே மிகவும் இனிமையான ஒரு உலகம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்போது!

ஒருமுறை வயதான ஒரு கிழவனும் பதினேழோ பதினெட்டோ வயது இருக்கக் கூடிய ஒரு இளம்பெண்ணும் அங்கு தங்க வந்தார்கள். அவர்கள் தந்தையும் மகளுமாக இருப்பார்கள் என்றுதான் அவள் நினைத்தாள். அமர்சிங்தான் கண்டுபிடித்தான். கிழவனின் புதுப் மணப்பெண்ணாம் அந்த இளம்பெண்.

புஷ்பா சர்க்காரால் புகழின் உச்சிக்க உயர்த்தப்பட்ட அந்த அறையில் காலம் தளம் அமைத்து நின்று கொண்டிருந்தபோது, கோல்டன் நூக்கில் வாழ்க்கையின் பல முகங்களும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.

சர்தார்ஜியின் வீணை அமைதியானது.

அவர் தனியாக வந்திருக்கிறாரா?

வயதான ஆளாக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும் அவர் தனியாகவா வந்திருக்கிறார்?

தனியாக.... தனியாக....

9

மாலயத்தின் சரிவில் குளிர்ச்சியான இரவுகளில் நீங்கள் உறங்கியிருக்கிறார்களா? அடுத்த இரவின் தனிமை மட்டுமே நினைக்க இருக்கும்போது? நவம்பரிலும் மேயிலும் வாசல் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன. குளிரின் உஷ்ணத்தின் பாதிப்புகள் இல்லாத மரப்பலகைகளால் ஆன  சுவர்கள் சுற்றிலும். திறந்த ஜன்னல் வழியாக இரவு நேரத்தில் உறக்கம் கலைந்து அதிர்ந்து கண்களைத் திறந்தபோது, பிரபஞ்சத்தின் ஒரு கீற்றில் பங்குபெற முடியவில்லை. வானம் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை. பூமியின் நிழல்களும் நிலவில் வெளிறிப்போய் நிற்கும் மர உச்சிகளும் இல்லை. மூடுபனியின் நிறத்திலிருக்கும் ஜன்னல்கள்.... மங்கலான கண்ணாடித் துண்டுகள்... உங்கள் உலகத்தின் பார்வையை இழந்த கண்கள்....

‘என்னுடையதும் எனக்குப் பின்னால் உள்ளவர்களுடையதுமான

மரணத்தை நான் மரணிக்கிறேன்.

என்னுடையதும் எனக்குப் பின்னால் உள்ளவர்களடையதுமான

வாழ்க்கையை நான் வாழ்கிறேன்....’’

இக்தாராவின் ஓசை எங்கோ தூரத்தில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.


10

காலையில் போர்ட்டிக்கோவிற்குப் போனபோது அமர்சிங் யாருடனோ சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அவள் அந்த வழியாகச் சென்றபோது அங்கிருந்த கல்லுக்குக் கீழே நின்று கொண்டு சர்தார்ஜி பேசிக் கொண்டிருந்தார்.

ஜன்னல் வழியாக பார்த்தபோது நினைத்த அளவிற்கு அவர் வயதானவராக இல்லை. வயது நாற்பதிலிருந்து அறுபதுக்குள் எது வேண்டுமானாலும் இருக்கலாம். பிரகாசமில்லாது வறண்டு போய் காணப்பட்ட முகத்தில் சுருக்கங்களும் கோடுகளும் விழுந்திருந்தன. கண்களுக்குக் கீழே கறுத்த இரவுகள் உறங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் முக்கால் பகுதி கறுப்பு நிறத்தில் இருந்தது. பார்க்கச் சகிக்காத அந்த முகத்தைப் பார்த்தபோது திடீரென்று ஒருவித வெறுப்புதான் அவளுக்கு உண்டானது.

அவள் திரும்பிப் போக முயன்றாள்.

‘‘நமஸ்தே டீச்சர்ஜி.’’

விமலா திரும்பி நின்றாள்.

‘‘நமஸ்தே!’’

‘‘நீங்க நிறைய புத்தகங்கள் படிப்பீங்கன்னு சௌக்கிதார் சொன்னாரு.’’

விமலா அமர்சிங்கைச் சிறிது கோபத்துடன் பார்த்தாள். அவன் காலை நேரத்தில் வராந்தக்களைப் பெருக்கிச் சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக, எங்கிருந்தோ வந்த அந்த மனிதரிடம் தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறான்!

அதற்கு ‘ஆமாம்’ என்றோ ‘இல்லை’ என்றோ அவள் எதுவும் சொல்லவில்லை.

‘‘உங்களுக்குப் பிரச்சினை இல்லைன்னா எனக்குக் கொஞ்சம் புத்தகங்கள் கடனாகத் தாங்க. வர்றப்போ நான் கொஞ்சம் புத்தகங்கள் வாங்கினேன். வழியில் மூன்றே நாட்கள்ல நான் எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிட்டேன்.’’

அந்த வார்த்தைகளைக் கேட்டபோது விமலாவின் உதடுகளில் ஒரு சிரிப்பு மலர்ந்தது.

ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக விமலா சொன்னாள்:

‘‘என்னிடம் நல்ல புத்தகங்கள் குறைவாகத்தான் இருக்கு.’’

‘‘நான் பார்க்குற எல்லா புத்தகங்களையும் படிப்பேன். மருந்து சம்பந்தப்பட்ட கேட்லாக் ரயில்வே கைடு, டெலிஃபோன் டைரக்டரி... எதுவா இருந்தாலும் பரவாயில்ல...’’

அப்போது விமலாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அளவுக்கு அதிகமாக ‘தொளதொள’வென இருக்கக்கூடிய சட்டையையும் மிகவும் பெரிய ஒரு நீல நிற காற்சட்டையையும் அவர் அணிந்திருந்தார். பேசும்போது இடைவெளிவிட்டு காணப்படும் தேய்ந்து போன பற்களிலிருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள் வெறுப்பை உண்டாக்கின.

‘‘பார்க்குறேன்.’’

குளியலறையிலிருந்து திரும்பி வரும்போது சமையலறைக்குள் நுழைந்து பார்த்தாள். நெருப்பு அணைந்து விட்டிருந்தது. ஹாலின் முனையிலிருந்த வராந்தாவிலிருந்து கீழ்நோக்கிப் பார்த்தபோது, அமர்சிங்கும், சர்தார்ஜியும் தோட்டத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. சர்தார்ஜி ஜெரானியா செடியைக் கையால் தடவிக் கொடுத்தார்.

இரண்டு வாரங்களாக யாருக்கும் கடிதம் எழுதவில்லை. பதில் எழுதாத கடிதங்களை மேஜை டிராயருக்குள் மொத்தமாக வைத்திருந்தாள். இன்று பதில் எழுதவேண்டும் என்று அவள் தீர்மானித்தாள்.

‘பிரியமுள்ள சாந்தா, நீ திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருமண நாளை அறிவிப்பாய் அல்லவா?’

‘பிரியமுள்ள அம்மாவிற்கு, நான் இங்கு நலமாக இருக்கிறேன். அங்கு நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.’

‘பிரியமுள்ள ஷிரின், நான் ஒருமாத காலம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். அதனால்தான் தாமதமாகப் பதில் எழுதுகிறேன்.’

ஸ்டாண்டிலிருந்து நான்கைந்து புத்தகங்களைத் தேர்வு செய்து எடுத்தாள். மூன்று புதினங்கள் ஒரு ஓவியனின் வாழ்க்கை வரலாறு, ஒரு ஹாலிவுட் நடிகனின் சத்திய வாக்குகள்.

முன்பு கலை வேலைப்பாடுகள் இருந்தன என்று ஞாபகப்படுத்தும் வால்நட் ட்ரேயில் அமர்சிங் வெண்ணெய் புரட்டிய டோஸ்ட்டும் காப்பியும் கொண்டு வந்தான்.

மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை நீக்கி, தட்டை வைத்தபோது கிழவன் கேட்டான்:

‘‘சர்தார்ஜிக்கா?’’

‘‘ம்... கொடுத்திடு.’’

‘‘அவர் நல்ல மனிதர். சர்தார்ஜி இந்தி, பஹாடி ரெண்டையும் ஒரே மாதிரி பேசுவாரு. என்னைப் பார்த்தவுடன் கேட்டாரு - நீ அமர்சிங்தானேன்னு.’’

‘‘உன்னை முன்னாடியே தெரியுமா?’’

‘‘பத்து... பதினெட்டு வருடங்களுக்கு முன்னாடி இந்தக் கல்லூரயில வந்து தங்கியிருக்காரு. என்ன ஞாபக சக்தி!’’

‘‘ம்...’’

ஆர்வம் இருப்பது மாதிரி காட்டிக்கொண்டால், அமர்சிங் பழைய காலத்தின் தன்னுடைய வீரக் கதைகளைக் கூற ஆரம்பித்துவிடுவான். இளம் வயதில் தன்னுடைய உடல் பலம், அடிபிடி சண்டையில் தன்னுடைய கழுத்தில் வெட்டு விழுந்தது, ஒரு முறை ராம லீலா திருவிழாவின் போது ஸ்ரீராம் மகாராஜாவாக வேடம் போட்டது... இப்படி எத்தனையோ விஷயங்களை அவன் கூறுவான்.

‘‘சர்தார்ஜி நல்ல பணக்காரர்னு தோணுது பீபிஜி...’’

அதைக் கேட்டு அவளுக்குக் கோபம் வந்தது: ‘‘நீ என்ன அந்த ஆளோட கணக்குப் பிள்ளையா?’’

‘‘இல்ல, பீபிஜி. டில்லியில இருந்து அவர் வாடகைக் கார்ல வந்திருக்காரு. பன்னிரண்டு ரூபாய்க்கு பேருந்து இருக்குறப்போ, முந்நூறு செலவழிச்சு வந்திருக்காரு.’’

‘‘பணம் உள்ளவர்கள் செலவு செய்யட்டும். உனக்கு என்ன?’’

தபால் தலை வாங்கிக் கொண்டு வருவதற்காக சில்லறை காசுகளை எடுத்துத் தந்து அமர்சிங்கை அவள் அனுப்பி வைத்தாள்.

வழக்கம்போல கிழவன் ஞாபகப்படுத்தினான்:

‘‘கடிதம் எழுதித் தாங்க, பீபிஜி. நான் சரியா தபால் தலைஒட்டி பெட்டியில் போடுறேன். ஒரு நடை மிச்சமாகும்ல?’’

அமர்சிங்கை அவள் இன்றோ நேற்றோ தெரிந்து கொண்டவள் இல்லையே! அவன் கடிதத்தைக் கிழித்து காற்றில் பறக்க விட்டுவிடுவான். பிறகு தபால் தலைக்கான காசை வைத்து பங்க் வாங்குவான். எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம் என்பதால், நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினாலும் அதற்காக அவன் சிறிதும் கவலைப்படுவதில்லை.

கதவை அடைத்துக் கொண்டு கடிதம் எழுதுவதற்காக அவள் உட்கார்ந்தபோது, அமர்சிங்கின் குரல் வெளியே கேட்டது.

‘‘பீபிஜி, சீக்கிரமா வாங்க...’’

வெளியே வந்தபோது, அங்கு காக்கிச் சீருடையும் கருப்பு நிறத்தில் கம்பளியும் அணிந்திருந்த தபால் கூலி நின்றிருந்தான்.

‘‘பீபிஜி, உங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கு.’’

தபால் பணியாள் அதை விளக்கிச் சொன்னான்:

‘‘ட்ரங்க் கால்....’’

அதைக் கேட்டு அவளுக்குள் ஒரு நடுக்கம் உண்டானது. ஒரு நிமிடம் அவள் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டு அறைக்குள் நுழைந்து சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

‘‘அமர்சிங், அறையை மூடல...’’

‘‘சரி... சரி, பீபிஜி.... தபால் தலைகளை நீங்களே வாங்கிக்கிறீங்களா?’’

அவள் எதுவும் சொல்லாமல் வேகமாக வெளியேறினாள்.

மலையிலிருந்து இறங்கி சமதளத்திலிருந்த வழியை அடைந்தபோது, நடையை நிதானத்திற்குக் கொண்டு வந்தாள். வாழ்க்கையில் என்னவோ நடக்கப் போகிறது!

தூரத்தில் எங்கிருந்தோ அவளுக்கு நன்கு தெரிந்த ஒரு குரல்....

‘பப்ளிக் கால்’ அலுவலகத்தின் கதவை அடைத்து, தொலைபேசி ரிஸீவரை அவள் மிகவும் நிதானமாகக் கையில் எடுத்தாள். அவளுடைய மனம் அப்போது மிகவும் சாந்த நிலையில் இருந்தது.

‘‘யாரு?’’

பாபுவின் குரல். ‘‘பாபு!’’

‘‘என்ன?’’


‘‘ஆமா... காலையில.... ஆமா அக்கா... ஐந்தரை மணிக்கு...’’

தபால் அலுவலகத்தில் வெளியே கற்துண்டுகள் நிறைய இருக்கும் வெளியிடத்தில் ஒரு நிமிடம் அவள் நின்றாள். இளம் வெயில்... பயணிகளின் மகிழ்ச்சியான காலை வேளை சுற்றிலும்... பின்னால் பேருந்து நிலையம் இரைந்து கொண்டிருந்தது.

உறங்கிக் கொண்டிருந்த அந்த இடம் எவ்வளவு வேகமாக எழுச்சியுடன் எழுந்திருக்கிறது! பயணிகளின் கூட்டங்கள்... பெட்டிகள், ஹோல்டால்ள் ஆகியவற்றைச் சுற்றி கழுகளைப் போல கூடியிருக்கும் போட்டி கூலியாட்கள்.... சைக்கிள் ரிக்ஷாக்காரர்களும் ஹோட்டல் ஏஜெண்ட்களும், சேர்ந்து உண்டாக்கும் ஆரவார ஒலிகள்...

‘‘ஆமா... காலை ஐந்தரை மணிக்கு...’’

‘‘எனக்கு எதுவும் ஆகல...’’- அவள் தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

வண்ணங்களின், சப்தங்களின் அலைகள் பயணித்துக் கொண்டிருந்தன. அறிமுகமில்லாத ஆயிரக்கணக்கான முகங்கள்... அந்தக் கூட்டத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஒரு இளம் பெண்ணைத் தேடுகிற கண்கள் இருக்கின்றனவா? மை எழுதியதைப் போன்ற கண்கள்? நெற்றியில் சிதறி விழுந்து கிடக்கும் முடிக்குக் கீழே நீல நிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள்?

புத்து எங்கே? வழுக்கைத் தலை விழுந்த அந்த அரைக்கால் சட்டை அணிந்த மனிதன் வெள்ளைக்காரனா? அவனுடைய புகைப்படம் எங்கே, புத்து? படகுத் துறையில் மனிதர்களைப் பிடிப்பதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் படகோட்டிகள் கூட்டத்திற்குள் இருந்துகொண்டு ‘கோரா ஸாஹிப்’பின் படத்தைப் பத்திரமாக கையில் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கண்கள் அந்த ஆரவாரங்களுக்கு மத்தியிலிருந்து உற்று பார்க்கின்றனவா?

விமலா நடந்தாள்.

கடவுளே, எனக்கு என்னவோ பிரச்சினை இருக்கிறது. சிறிதுகூட என்னால் அழமுடியவில்லையே!

தன்னுடைய காலடி வைப்புகளில் தடுமாற்றம் இல்லை என்பதை அவள் நினைத்துக் கொண்டாள். கவலையின் நீர்த் தடங்கள் மனதிற்கு இறங்கி வருவதில்லை.

அதிகாலை நேரத்தில், ஐந்தரை மணிக்கு, என்னுடைய தந்தை இறந்துவிட்டார்....

மரணத்தைப் பற்றிய செய்திக்கு முன்னால், நீர்ச்சுழிக்குள் அடிப்பட்டுக் கொண்ட ஒரு புல்கொடியைப் போல, இப்படியும் அப்படியுமாக ஆடி தான் தவித்துக் கொண்டிருப்பதை அவள் மன அளவில் உணர்ந்தாள்.

எதுவும் நடக்கவில்லை. ஆழ்ந்த அமைதி நிலை மட்டுமே மனதில்.

கோல்டன் நூக்கின் எல்லையில் வெட்டிவிடப்பட்ட முட்செடிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் சர்தார்ஜியின் கண்கள் பிரகாசித்தன.

‘‘யார் டீச்சர்ஜி, விருந்தாளி?’’

அவளுக்குப் புரியவில்லை.

‘‘சௌக்கிதார் ட்ரங்கால் வந்திருப்பதாகச் சொன்னார். யார் விருந்தாளி?’’

‘மரணம்... மரணம்தான் என்னுடைய விருந்தாளி?’ உரத்த குரலில் கூற வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. தன்னுடைய அமைதித் தன்மையை கவனித்து, கண்களில் இருந்த குறும்புத்தனமான சிரிப்பை இல்லாமல் செய்து மெலிதான பதைபதைப்புடன் நின்றுகொண்டிருந்த அந்த மனிதரின் முகத்தை தைரியத்துடன் அவள் பார்த்தாள்.

தன் குரலில் தடுமாற்றம் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

‘‘யாரும் வரல. போயிட்டாங்க. என் அப்பா...

தபால் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது தன்னுடைய ஒவ்வொரு காலடி வைப்பிலும் திட்டமிட்டு சேர்த்து வைத்திருக்கும் அமைதித் தன்மை முழுவதும் எங்கே ஒரே நிமிடத்தில் தகர்ந்து காணாமல் போய் விடுமோ என்று அவள் பயந்தாள். அழக்கூடாது... அழக்கூடாது... கண்களின் பகுதியில் எங்கோ... வேர்களில் உண்டாவதைப் போல ஒரு குடைச்சல் அரும்புவதை அவளால் உணரமுடிந்தது.

அறைக்குள் செல்லவேண்டிய நிமிடங்களுக்கு எத்தனை தூரம்!

11

ரண வீடு வந்திருப்பவர்களின் கூட்டத்தால் நிறைந்திருக்கும் என்றுதான் அவள் நினைத்தாள். வீட்டு வாசலில் கால் வைத்தபோது அவளுடைய முகம் என்னவோ போல் ஆகிவிட்டது. தூணுக்குப் பக்கத்தில் ஆல்பர்ட் கோமஸ் நின்றிருந்தான். சுருக்கங்கள் விழாத சூட் அணிந்து, இரண்டு பக்கங்களிலும் காதுகளுக்கு மேலே நரை விழுந்த தலையைத் தூக்கிக் கொண்டு நிமிர்ந்த நிலையில் அவன் நின்றிருந்தான். தங்க நிறத்தில் இருந்த ஹோல்டரில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிகரெட்டை இழுத்து அவன் புகைவிட்டுக் கொண்டிருந்தான். டான்ஸ் ஹாலிலிருந்து சற்று விலகி காற்று வாங்குவதற்காக வெளியே வந்து நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளின் செயலாக அது இருந்தது. பரிதாபத்தை வரவழைத்துக் கொண்டு புன்னகைத்தவாறு என்னவோ சொன்னபோது, முகம் கறுத்துவிட்டது. அந்தப் பரிதாபம்தான் சகித்துக் கொள்ள முடியாதது.

ஒரு கவலையில் பங்கு பெற வந்திருக்கிறான்! அவனுக்கு இன்று ஒரு சுப தினம்!

முன்னறைக்குள் நுழைந்தபோது தலைக்குள் ஈக்கள் கூட்டம் பறந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தாங்க முடியாத நிலையை அவள் உணர்ந்தாள். திண்ணையிலும் நாற்காலிகளிலும் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மூலையில் நகத்தைக் கடித்துக் கொண்டு பாபு இருந்தான்.

சாப்பிடும் அறையிலிருந்த மேஜை மீது ஏர்பேக்கை வைத்துவிட்டு, சிறிய படுக்கையறைக்குள் நுழைந்தபோது முதலில் எதுவும் புரியவில்லை. தலைக்குள் அதிகமான சிறகடிப்புகள் நடந்து கொண்டிருந்தன.

மங்கலான வெளிச்சத்தில் கட்டிலில் அவளுடைய தாய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப் பின்னர் கண்டால் பெண்கள் யார் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் யாரும் சிறிதுகூட அசையவில்லை. வெளிறிப்போன சிரிப்புகளை எங்கெல்லாமோ பார்த்து, குளிர்ந்து நிற்கும் சூழல் சற்று மாறியது. அவளுடைய தங்கை அழுது கொண்டே அவளை கட்டிக் கட்டிப் பிடித்தாள். கண்ணீரால் நனைந்திருக்கும் அவளுடைய முகம் தோளில் பட்டபோது, முதுமை தடவிக் கொண்டு விமலா அமைதியாகச் சொன்னாள் ‘‘அழாதே.... அழாதே...’’

பெண்களில் சிலர் பேசினார்கள். அவளுடன்தான். பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.

பாபுவின் தோளில் கை வைத்து நடந்து வந்த யாரோ வெளியே நின்று அழைத்தார்கள்.

‘‘விமலா, வா...’’

மலையாளத்தில்தான். கேட்டபோது இனம்புரியாத நிம்மதி தோன்றியது.

மேனன் ஸாப்தான் அது.

‘‘ஊருக்கு விஷயத்தை அறிவிக்கணுமா?’’

‘‘தெரியாது.’’

‘‘அறிவித்து என்ன பிரயோஜனம்? ஆள் வந்து சேர ஐந்து நாட்கள் ஆகும். காத்திருக்க முடியாதே!’’

அப்போது மிஸ்டர் கோமஸ் அங்கு வந்தான்.

அவன் அதைக் கேட்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. திருமதி மேனனுக்கு விமலாவின் தாயின் மாலை நேர பயணத்தின் ரகசியம் நன்கு தெரியும். அதை மேனன் ஸாபின் காதுகளில் அவள் கட்டாயம் போட்டிருப்பாள்.

‘‘இனி யாருக்காவது காத்திருக்கணுமா, விமலா?’’

‘‘யாருக்காகக் காத்திருப்பது?’’

இறுதிச் சடங்குகள் முடிந்து கடைசியாக அங்கிருந்து பிரிந்து சென்றது மிஸ்டர் கோமஸ்தான்.

அவன் விமலாவின் தாயிடம் விடைபெறுவதற்காக அறைக்குள் வந்தபோது அவள் வெளியே வந்துவிட்டாள். ஆறுதல் கூறட்டும்.... வசதிப்படி ஆறுதல் கூறட்டும்...

வெளியே வராந்தாவில் சமையலறையிலிருந்து அழுக்கு நீர் வெளியேறிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தபோது அனிதா பின்னால் வந்து  நின்றாள்.


‘‘போகட்டுமா, மிஸ் விமலா?’’

கோமஸ்ஸின் குரல்.

அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

அனிதாவின் கலங்கிய கண்கள் தன் முகத்தில் பதிவதை அவள் அறியாமல்  இல்லை.

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி செய்யும் கட்டிடங்கள், இங்குமங்குமாய்ச் சிதறிக் கிடக்கும் மலைகள்... அவளுடைய தந்தை வேலை செய்த அறையைக் கொண்ட கட்டிடம்தான் இருப்பதிலேயே உயரமானது. எத்தனையோ வருடங்களாக அவளுடைய தந்தை ஆட்சி செய்த இடமது. சிவப்பு நிற மேற்கூரைகளுக்குக் கீழே இருந்தது அந்தச் சாம்ராஜ்யம்.

இரவு நெருங்க நெருங்க மனதில் கவலை அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

அவளுடைய தந்தையின் படுக்கையறைக்கு அன்று யாரும் செல்லவில்லை.

மேஜை மீது இரவு உணவைக் கொண்டுபோய் வைத்த பீர்பகதூர் வந்து அழைத்தான்.

யாரும் உணவு சாப்பிடவில்லை.

சிறிய படுக்கையறையில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து படுத்திருந்தார்கள். விளக்கைக் கூட அணைக்கவில்லை.

அனிதாவின் கை விமலாவை இறுக அணைத்திருந்தது. கவலையை விட அனிதாவுக்குப் பயம்தான் அதிகமாக இருப்பதாக விமலா நினைத்தாள்.

தூக்கம் வராமல் விளையாட்டு காண்பிக்கிற ஒரு கொடூரமான இரவை நினைத்து மனதில் பயந்துகொண்டே படுத்திருந்தாள் விமலா. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக அவள் சீக்கிரமே தூங்கிவிட்டாள். பனிப்படலம் வந்து மூடி எதையும் பார்க்க முடியவில்லை.

நீர் வளையங்கள், சிறிய நீர் திவளைகள் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கின்றன.... நீரோட்டத்துடன் சேர்ந்து மெதுவாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஓடவில்லை... முன்னால் அன்னப்பறவை சிறகு விரித்து நின்றுகொண்டிருக்கும் படகில் அது பயணம் செய்து கொண்டிருக்கிறது.

முதலில் புத்துதான் படகைச் செலுத்தினான். பேச ஆரம்பித்தபோது புத்துவல்ல - முகச் சவரம் செய்து இளம் சிவப்பு நிறத்திலிருந்த முகம் புத்துவிற்குச் சொந்தமானது அல்ல. நீல நரம்புகள் முகத்தில் துடித்துக் கொண்டிருந்தன. நெற்றியில் முடி விழுந்து கிடந்தது.

‘‘வேண்டாம்... அங்கு போக வேண்டாம்....’’

‘‘என்ன?’’

‘‘பள்ளம்.... பள்ளத்துல காசு எறியணும்.’’

‘‘காசுக்கு அதைவிட வேற உபயோகம் இருக்கு.’’

‘‘அங்கே கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க படகு மூழ்கி இறந்துடுவாங்கன்னு சொல்லுவாங்க.’’

‘‘இறக்க பயமா இருக்கா?’

பூத்து மலர்ந்து நிற்கிறது வாழ்வு. பார்வைபடுகிற இடங்களிலெல்லாம் மரணத்தைப் பற்றி நினைச்சு முடியவில்லை.

நீர் வளையங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் ஆழங்களின் மேற்பரப்பில் படகு சுற்றுகிறபோதும் புத்துவின் கண்களில் பயமில்லை. அவனுடைய முகம் மீண்டும் மாறுகிறது. புத்துவல்ல. நீல நரம்புகள் துடிக்கும் முகம்.

வட்டமாகச் சுற்றும் படகின் ஓரம் வானத்தைத் தொடுகிறது. அடுத்த நிமிடம் கீழ்நோக்கி... கீழ்நோக்கி...

இப்போது... இப்போது...

‘‘அம்மா!’’

‘‘விமலா!’’

‘‘அம்மா, நீங்க கூப்பிட்டீங்களா?’’

‘‘ஒண்ணுமில்ல...’’

கண்கள் அடுத்த கணமே கலங்கிவிட்டன. தன் தாயை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும்போல் அவளுக்கு இருந்தது.

மீண்டும் கண்களை மூடிப் படுத்தாள். தூக்கத்தில் பாபு பற்களைக் கடித்தான். தெளிவற்ற எதையெதையோ சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான்.

அனிதாவின் கைப்பிடி இறுகியது.

முற்றத்தின் மூலையில் நின்றபோது முதல் பேருந்து அங்கிருந்து புறப்படுவது தெரிந்தது. கீழே நான்கைந்து கடைகள் இருக்கும் வீதிக்கு முன்னால்தான் பேருந்துகள் வந்து நிற்கும்.

அடுத்த பேருந்து எட்டரை மணிக்கு.

ஒர் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தபோது அவளுடைய தாய் கேட்டாள்.

‘‘நீ என்ன செய்ற?’’

‘‘நான் போறேன்.’’

‘‘அக்கா, இப்பவாவது கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கக் கூடாதா?’’

பாபுவின் குரலில் கோபம் இருந்தது.

அவள் எதுவும் சொல்லவில்லை.

சமையலறையிலிருந்து வெளியே வந்த பீர்பகதூர் பேக்கை எடுத்துக் கொண்டு முன்னால் நடந்தான். அவள் அனிதாவின் தோளை மெதுவாகத் தட்டிவிட்டு வெளியேறினாள்.

பேருந்து அங்கிருந்து கிளம்பியபோது மனதில் குளிர்ச்சி தோன்றியது. தன்னுடைய உலகத்திற்குத் திரும்பிச் செல்கிறோம் என்பதை அவள் உணர்ந்தாள்.

தன்னுடைய உலகம்... மலைகளையும் மூடுபனியையும் குளிரையும் ஏரியையும் தேடி வறண்ட இடங்களிலிருந்து வரும் பயணிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்கலாம்.... தன்னுடைய கல்லறையைச் சுற்றிலும்...                                                                                       

12

பாதை விளக்குகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் கம்பியாலான தூண்கள் பச்சை நிறத்தில் இருந்தன. நடைபாதைகளில் இடைவெளிவிட்டு கறுப்பு, வெள்ளை நிறங்களில் போடப்பட்டிருக்கும் தடிமனான கோடுகள்...

ஏரியில் நின்றால் உயரத்திலிருக்கும் மலைப்பாதை வழியாக சீனா பீக்கிற்குப் போய்க் கொண்டிருக்கும் பயணிகளின் குதிரைக் குளம்போசைகளைத் தொடர்ந்து கேட்கலாம்.

குளிர்ச்சியான மாதங்களில் வெட்ட வெளியின் சலனமற்ற தன்மையைப் பார்த்துக்கொண்டிருக்கும் மேற்குக் கரையிலிருக்கும் கற்சுவருக்கு அருகில் நின்றுகொண்டு யாரோ தூண்டில் போடுகிறார்கள். பாதை வழியாக அடர்த்தியான நிறங்களைக் கொண்ட ரோம ஆடைகளணிந்த ஜோடிகள் ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். புகையிலை மணமும் சிரிப்புச் சத்தமும் கலந்தொலிக்கிறது.

பாதைக்கும் ஏரிக்கும் நடுவிலிருக்கும் புல்வெளியில் விமலா வாத்துக் கூட்டத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறாள். கடந்துபோன படகிலிருந்த பயணிகளில் யாரோ எறிந்துவிட்டுச் சென்ற வேர்க்கடலைகளுக்காக அவை சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன. கரைக்கு அருகில் கடந்துபோன ஒரு படகிலிருந்து யாரோ உரத்த குரலில் அழைத்துச் சொன்னார்கள்:

‘‘நமஸ்தே... மேம்ஸாப்.’’

புத்து. புத்துவின் மஞ்சள் நிறப் பற்கள் பிரகாசித்தன. காதில் பெரிய வளையல் அணிந்த ஒரு இளம்பெண்ணும் இரண்டு இளைஞர்களும்தான் அவனுடைய பயணிகள்.

அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.

‘‘சீஸன் ஆயா, மேம்ஸாப்.’’

மே ஃப்ளவர் கடந்து போன பாதை ஒரு வால் நட்சத்திரத்தைப் போல நீளமாகத் தெரிந்தது.

கழுத்தில் கேமராவைத் தொங்க விட்டுக் கொண்டு கால்சட்டை பாக்கெட்டுகளுக்குள் கையை விட்டுக்கொண்டு விசிலடித்தவாறு ஒரு கறுப்பு நிறத்திலுள்ள வழுக்கைத் தலை மனிதன் சற்று அருகில் வந்து நின்றான். அவனுடைய கண்கள் தூண்டில் முனையைப் போல உடம்பில் தைத்தன.

அவள் திரும்பி நடந்தாள்.

பாதையைக் குறுக்காகக் கடந்தாள். புல்வெளியின் இரண்டு பெரிய வட்டங்களைச் சுற்றி கருங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. ஒற்றையடிப் பாதையை அவள் அடைந்தாள். மேல்நோக்கி அவள் நடந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் மீண்டும் அந்தப் பாதையில் நடக்கிறாள். நகரத்தில் பயணிகள் அதிகமாக நிறையும்போது அந்தப் பாதையும் பாறை இருக்கும் பகுதியும் ஆள் அரவமற்றுக் கிடக்கும்.

மனிதர்களின் ஆர்வம் எவ்வளவு வேகமாக மறைந்து போகிறது. உதடுகளால் முத்தமிடும் ஜோடிக் குருவிகள்தான் முன்பு அந்தப் பாதையில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

மலையின் ஒரு அடுக்கிலிருந்து இன்னொரு அடுக்கிற்குத் திரும்புகிற இடத்தை அடைந்தபோது அவள் நின்றாள். மேல்நோக்கி ஏறியதன் காரணமாக அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அங்கதான் கோவில் இருந்தது. சுற்றிலும் ஆக்கிரமித்து விட்டிருந்த புதர்களுக்கு மத்தியில் கோவிலின் பாதி மறைந்து போயிருந்தது.


இரும்புக் கம்பியில் தொங்க விடப்பட்டிருந்த நாக்கு இல்லாத மணிக்குக் கீழே அமர்ந்துகொண்டு வயதான பூசாரி ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்தார். முன்பு அந்த இடத்தைத் தாண்டிச் செல்பவர்கள் கடவுளுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பூசாரி பாறையின் மேலிருந்து குதித்து இறந்த இளம்பெண்ணை தினமும் மனதில் திட்டிக் கொண்டிருப்பார். கோவில் தூங்குகிறது. கடவுள் தூங்குகிறார்.

பின்னாலிருந்து யாரோ சத்தமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்ததைக் கேட்டு  அவள் திரும்பிப் பார்த்தாள்.

சர்தார்ஜி நெஞ்சை அழுத்திப் பிடித்தவாறு நின்று கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். வறண்டு போயிருந்த முகம் குருதி கட்டியதைப் போல் இருந்தது.

‘‘ப...ழை...ய... குதிரைகளின் காலம் போயிடுச்சு.’’ சிரிப்பும் பெருமூச்சும் கலந்த குரலில் அவர் கேட்டார்:

‘‘மேலேயா போறீங்க, டீச்சர்ஜி?’’

‘‘ஆமா...’’

‘‘நானும் வர்றேன். கொஞ்சம் மூச்சு சரியாகட்டும்.’’

நினைவுகள் தூங்கிக் கொண்டிருக்கும் தனிமையான அந்த நடைபாதையில் யாரும் உடனிருப்பது சிறிதும் விருப்பமில்லாத ஒரு விஷயமாக இருந்தது.

எனினும், எதுவும் சொல்லவில்லை.

அவள் நடந்தபோது அவரும் பின்னாலிருந்தார்.

புதர்களுக்கு மத்தியில் பலநூறு வருடங்களாக அங்கு இருக்கும் பழமையான ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு அந்த மனிதர் கேட்டார்.

‘‘அந்த மரத்தைப் பார்த்தீங்களா, டீச்சர்ஜி? முன்பு அதற்குக் கீழே எவ்வளவு பூக்கள் விழுந்து கிடக்கும்! அதன் கீழே இருக்குற பொந்தில் வருடத்துக்கு ஒருமுறை கடவுள் கழுத்துல இருக்கும் பாம்பு தரிசனம் கொடுக்கும்னு சொல்லுவாங்க. அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?’’

அவள், ‘‘இல்லை’’ என்று தலையை ஆட்டினாள்.

‘‘கடவுளே தேவையில்லைன்னு ஆயிட்டப்போ பாம்புக்கு எங்கே இடம்? ம்...’’

பாறைக்கு அருகில் செல்லும்வரை அவர் எதுவும் பேசவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முக்கி முனகியவாறு மேல்நோக்கி ஏறிக்கொண்டிருந்த அவருடைய கண்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனித்தாள். மேலே போய்ச் சேர்ந்தபோது அவர் முழுமையாக வியர்வையில் நனைந்திருந்தார்.

‘‘மன்னிக்கணும் டீச்சர்ஜி. நான் கொஞ்சம் உட்காரட்டுமா?’’

அவர் ஒரு இடத்தில் அமர்ந்தார். அவள் அடிவாரத்தைப் பார்த்தாள். சுகமான காற்றில் பின்னால் வட்டமாகச் சுருட்டி வைத்திருந்த தலைமுடி அவிழ்ந்து பறக்க ஆரம்பித்தது.

‘‘உட்காருங்க டீச்சர்ஜி.’’

நெருங்கியோ விலகியோ இல்லாத ஒரு நிலையில் உயரமாக இருந்த ஒரு கல்லில் கால்களைத் தொங்கவிட்டாறு அவள் அமர்ந்தாள். பின்னால் கரும் பாறைகள் வானத்தை நோக்கி உயரமான ஒரு கோபுரத்தைப் போல கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன.

‘‘அப்பாவுக்கு என்ன வயசாயிடுச்சு, டீச்சர்ஜி?’’

‘‘ஐம்பத்தெட்டு.’’

அவர் மெதுவான குரலில் முணுமுணுத்தார்.

‘‘ம்... ஆறுதல் சொல்லல... யார் யாருக்கு ஆறுதல் சொல்லுறது?’’

அடிவாரத்திலிருந்த மரக் குடிசைகளில் இருண்ட நீல நிறத்திலிருந்து தன் கண்களை அகற்றிய அவள் அந்த மனிதரைப் பார்த்தாள். நரையேறிப் போயிருந்த அடர்த்தியான தாடியைத் தடவியவாறு புன்னகைத்துக் கொண்டிருந்த அவருடைய கண்கள் தன்னுடைய மனதின் உள்ளறைகளுக்குள் பயணம் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

‘‘மரணம் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு கோமாளி... இல்லையா டீச்சர்ஜி?’’

அவள் வேதனையுடன் புன்னகைத்தாள்.

‘‘நான் அதைப் பற்றியெல்லாம் சிந்திச்சது இல்ல...’’

‘‘உண்மைதான். வேணும்னா எழுதி வச்சுக்கங்க. படிக்காத சிந்தனையாளனின் இந்த வார்த்தைகளை தேவைப்படுகிறப்போ நினைச்சுப் பாருங்க.’’

அதைச் சொல்லிவிட்டு அவர் தன்னைத் தானே ரசித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

எழுந்து உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்த பாறைக்கு முன்னால் நடந்தவாறு அவர் யாரிடம் என்றில்லாமல் சொன்னார்:

‘‘பெயர்கள் பலவும் மறைந்துபோய் விட்டன.’’ கருங்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைத் தடவிக் கொண்டே அவர் முணுமுணுத்தார்: ‘‘முன்பு பெயரைப் பொறித்து வைக்காமல் இருந்தது எவ்வளவு நல்லதா போச்சு!’’

அவளுக்கு அதைக் கேட்டு ஒருவித ஆர்வம் உண்டானது. ‘என்ன?’ அவள் தன் கண்களை உயர்த்தினாள்.

‘‘இப்போ அதைப் பார்த்து பெருமூச்சு விடாத இருக்கு முடியுதுல்ல? டீச்சர்ஜி, உங்களுக்குப் பிரச்சினை இல்லைன்னா சொல்லுங்க. எங்கே உங்களின் முதல் வருகையைப் பற்றிய நினைவுச் சின்னம்?’’

அவன் அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. தரையையே பார்த்தவாறு அவள் உட்கார்ந்திருந்தாள்.

அவர் விஷயத்தை மாற்றுவதைப் போல பேசினார்: ‘‘தற்கொலைக்குப் பொருத்தமான இடங்களை ஏன்தான் மனிதர்கள் காதல் புரிவதற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கிறார்களோ? வாழ்க்கையின் மலர்ச்சி இருக்கும் இடத்துலயே அதன் முடிவும் இருக்கட்டும்னு அவங்க நினைக்கலாம். மதரிஹட்டுக்குப் போயிருக்கீங்களா? அஸ்ஸாம் போயிருக்கீங்களா? அங்கேயிருந்து ரெண்டு மைல்கள் பயணம் செய்தால் அங்கே இதே மாதிரி ஒரு பாறை இருக்கு. எவ்வளவு ஜோடிகள் அதுலு எழுத்துகளையும் அம்பு பாயும் இதயங்களையும் பதிச்சு வச்சிருக்காங்க  தெரியுமா?’’

அவள் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிற மாதிரி தலையை ஆட்டினாள். பேசுவதில் அவருக்கு ஒரு பெரிய விருப்பம் இருப்பது தெரிந்தது.

‘‘அதற்கு அடுத்து ஒரு பெரிய காட்டு பங்களா இருக்கு. அங்கே படுத்தால் இரவு நேரங்கள்ல காட்டின் சங்கீதத்தைக் கேட்கலாம். ஆமா... காட்டுக்குன்னு ஒரு சங்கீதம் இருக்கு. மழைக்கும் காற்றுக்கும்கூட மொழியும் சங்கீதமும் இருக்கத்தான் செய்யுது...’’

அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு தன் நெஞ்சில் இடது கையின் மெலிந்து போன விரல்களை வைத்து அழுத்தியவாறு குரலைச் சற்று தாழ்த்தி வைத்துக் கொண்டு சொன்னார். ‘‘இன்னொரு தடவை அங்கே போகணும்போல இருக்கு. கடவுள் அதற்குச் சம்மதிப்பாரான்னு தெரியலையே?’’

‘‘நல்ல விஷயம்...’’

‘‘பயணம் செய்த இடங்களுக்கெல்லாம் திரும்பவும் நடந்து போறேன். தலைமை அலுவலகத்தில் வருடக்கணக்கு ஸ்டாக் எடுக்குற சாக்குல...’’

அவர் சிரிக்கும்போது வருடங்கள் அவரிடமிருந்து உதிர்ந்து விழுவதைப் போல இருந்தது. ஒரு சிறு குழந்தையின் சந்தோஷத்துடன் அவர் இருந்தார்.

‘‘டீச்சர்ஜி, எவ்வளவு வருடங்களாக நீங்க இங்கே இருக்கீங்க?’’

‘‘ஒன்பது வருடங்களாக.’’

‘‘ம்... முதல் முறையா இந்தப் பாறையில வந்து உட்கார்ந்தப்போ, தனியா வரல... அப்படித்தானே?’’

அவள் அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை.

‘‘நானும் தனியா வரல. ஆனால், அது ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி...’’

அவர் தலை குனிந்து கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்.

‘‘அப்போ எனக்கு இருபத்து மூணு வயது. ஒரு ஆணின் வாழ்க்கையில் மிகவும் அருமையான காலம் எதுன்னு தெரியுமா? நல்லா தெரிஞ்சு வச்சுக்குங்க... இருபத்து மூணு...’’

அவரிடம் அதற்கு ஒரு நீண்ட விளக்கமும் கைவசம் இருந்தது. இருபத்தைந்து ஒரு திருப்பத்தை உணடாக்கும் வயது. பக்குவமடைந்த ஒரு இளைஞனாக நாம் ஆகிவிட்டோம் என்று அப்போது தோன்றும்.


இருபத்து நான்காவது வயதில் மிகவும் நெருங்கியிருக்கும் திருப்புமனையைத் தனக்கு முன்னால் பார்ப்பான். பதினெட்டுக்கும் இருபத்து இரண்டுக்குமிடையில் இளமையின் அம்சங்கள் பலவும் எஞ்சி இருக்கும். இருபத்து மூன்று!

‘‘உங்க இனத்திற்கு பதினேழு வயசுல ஒரு முக்கியத்துவம் தந்த கடவுள் நம்ம விஷயத்துல மறந்துட்டாரு...’’

நிமிடங்கள் மீண்டும் அமைதியின் பள்ளத்தாக்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.

‘‘என்ன டீச்சர்ஜி, எதுவுமே பேச மாட்டேங்குறீங்க?’’

‘‘சொல்றதுக்கு என்ன இருக்கு?’’

‘‘எதையாவது பேசுங்க. முன்பு நானும் இப்படித்தான் இருந்தேன். என்கூட மட்டுமே நான் அதிகமா பேசுவேன். இப்போ நான் எதுகூட வேணும்னாலும் பேசுவேன். பாறைகளுடனும், மரங்களுடன், விளக்குத்தூண்களுடன்... பேச முடியும்ன்றது ஒரு கொடுப்பினைன்னுதான் நான் சொல்லுவேன் டீச்சர்ஜி. என்ன, நான் சொல்றது சரிதானா?’’

‘‘சரியாக இருக்கலாம்.’’

மலைச்சரிவில் நிழல்களுக்கு நீளம் கூடியது. பாறைக்குக் கீழேயிருந்த பள்ளத்தை நோக்கி மூடுபனி ஒரு மெல்லிய நீல நிறப்போர்வையைப் போல் மிதந்து போய்க் கொண்டிருந்தது.

‘‘நான் கொஞ்சம் மேலே ஏறிப் பார்க்கட்டுமா?’’

அவள் ‘வேண்டாம்’ என்று தடுக்கத்தான் நினைத்தாள். வயதான அந்த மனிதர் பாறையின் நெற்றிப் பகுதியில் ஏறிப்பார்ப்பது என்பது உண்மையிலேயே ஒரு வீரச் செயல்தான். ஆனால், அவள் எதுவும் சொல்லவில்லை.

மிகவும் சிரமப்பட்டுத்தான் அவர் அந்தப் பாறையில் ஏறினார். ஓட்டைகள் விழுந்த இலைகளிலிருந்து காற்று வீசுவதைப் போல அவர் ஓசை கேட்கும்படி மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். முகத்தில் இரத்தம் படர்ந்து கொண்டிருப்பதும், நெற்றியில் அந்தக் குளிர்ச்சியான நேரத்திலும் வியர்வை அரும்பி நிற்பதும் நன்கு தெரிந்தது.

கூர்மையான மேற்பகுதியில் நின்றுகொண்டு அவர் கீழ்நோக்கிப் பார்த்தார். காற்றில் அவருடைய அளவில் பெரிய காற்சட்டைகள் ‘படபட’வென்று அடித்துக்கொண்டன. தன் கண்களுக்கு முன்னால் ஒரு பஞ்சுத் துண்டைப் போல அந்த மனிதர் எங்கே காற்றில் பறந்து போய் விடுவாரோ என்று அவள் பார்த்தாள்.

‘‘டீச்சர்ஜி’’ - காற்றின் முனகலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் சற்று உரத்த குரலில் அழைத்துக் கேட்டார்.

‘‘டீச்சர்ஜி, மரணத்தின் முகத்தைப் பார்த்திருக்கீங்களா? பாருங்க...’’

மங்கலான வெளிச்சத்தில் சிரித்துக்கொண்டு ஒரு கையை உயர்த்தியவாறு நின்றுகொண்டிருந்த அந்த மனிதரை அவள் பயத்துடன் பார்த்தாள். அவருடைய காலடிகளைச் சுற்றி மரணம் வாயைப் பிளந்து வைத்துக்கொண்டு நின்றிருந்தது.

‘‘இறங்கி வாங்க...’’ என்று உரத்த குரலில் கத்தி அழைக்க வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. எனினும், தன்னைத் தானே அவள் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ஏறுவதற்குச் சிரமப்பட்டதைவிட மிகவும் கஷ்டப்பட்டு அவர் பாறையிலிருந்து கீழே இறங்கினார்.

திரும்பி நடந்தபோது அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவள் அந்த மனிதருக்குப் பின்னால் இரண்டடி தூரத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தாள். அவர் உற்சாகத்துடன் ஒரு பஞ்சாபி காதல் பாடலின் வரிகளைத் திரும்ப திரும்ப மெதுவான குரலில் பாடிக் கொண்டிருந்தார்.

‘கோல்டன் நூக்’கின் படிகளை அடைந்ததும், அவர் நின்றார். அவளும்தான்.

‘‘நன்றி!’’

‘‘எதற்கு?’’

‘‘நல்ல ஒரு மாலை நேரம் கிடைத்ததற்காக.... டீச்சர்ஜி, உங்களுக்கு நன்றி. கடவுளுக்கும் உலகத்திற்கும் நன்றி.’’

நல்ல ஒரு மாலை நேரம்! அந்த சர்தார்ஜி தன்னைக் கிண்டல் பண்ணுகிறாரோ!

‘‘நாளை சாயங்காலம் என்ன வேலை, டீச்சர்ஜி?’’

‘‘எதுவும் தீர்மானிக்கல...’’

‘‘ஒரு மாலை நேரத்தை நான் கடன் வாங்கிக் கொள்ளட்டுமா? இன்னைக்கு தானாகவே அமைந்தது. நாம ஒரு படகுப் பயணம் செல்வோம்.’’

தனக்கு இதற்கு முன்பு அறிமுகமே இல்லாத அந்த மனிதர் அதிகமான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதை அவள் உணர்ந்தாள். விலகி விலகி நிறுத்த பார்த்தால், அந்த மனிதர் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார்.

‘‘எல்லா மாலை நேரங்களையும் நான் கேட்கல டீச்சர்ஜி. நாளை மட்டும்...

‘‘பார்க்கலாம்.’’

‘‘நான் போர்டிங் ஹவுஸ் வாசல்ல வந்து அழைக்கிறேன்.’’

சரி என்றோ வேண்டாமென்றோ எதுவும் கூறாமல் அவள் தன்னுடைய கம்பி வேலியை நோக்கி நடந்தாள்.

‘‘ஒரு நிமிடம்... பிளீஸ்...’’

அவள் தன்னுடைய நடையை நிறுத்தினாள்.

‘‘இறந்து போனவர்களை நினைத்து உறங்காமல் இருக்கக்கூடாது. வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்களே பூமியில்!’’

போர்ட்டிக்கோவில் குழல் விளக்கைச் சரி பண்ணிக்கொண்டிருந்தான் அமர்சிங்.

‘‘நேரம் ரொம்பவும் அதிகமாயிடுச்சு பீபிஜி!’’

‘‘ம்...’’

‘‘மாலையில் சாயங்கால நேரத்துல தனியா நடக்காதீங்க பீபிஜி...’’

பற்களைக் காட்டிவிட்டு விசிலடித்தவாறு அவன் குழல் விளக்கை எரிய வைத்தான்.

‘‘சாயங்கால நேரமோ, நள்ளிரவு நேரமோ... எந்த நேரத்திலும் ஏரியைச் சுற்றி நடங்க. பயப்படுறதுக்கு எதுவுமில்ல. நைனீதேவி கண்ணுல படுற இடமாச்சே!’’

‘‘மாலையில?’’

கிண்டலாக அவள் கேட்டாள்.

‘‘விளையாட்டுக் சொல்லல பீபிஜி. சந்தன்சிங்கைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?’’

விமலா அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அமர்சிங் ஒரு வரலாற்றுக் கதையைத் திறந்து காட்ட ஆரம்பித்து விடுவான்.

‘‘அவன் ஒரு மிகப் பெரிய போக்கிரி. இடுப்புல ரெண்டு வாள்கள் இருக்கும். இது நடந்து நாற்பது வருடங்கள் இருக்கும். சுற்றுலா பங்களாவிற்கு அப்பால் இருக்கும் மைதானத்தில் ராமலீலா திருவிழா நடக்குற சமயத்துல அந்த வழியா சந்தன்சிங் வர்றப்போ பங்களா வாசல்ல ஒரு புர்ஹா அணிந்த பெண் உட்கார்ந்திருந்தா. ‘கோன் ஹை!ன்னு அவன் கேட்டான். சந்தன் சிங்கின் பெயரைக் கேட்டால் ஊரே நடுங்கும். ஆனா, அந்தப் பெண் வாயையே திறக்கல. பக்கத்துல போய் புர்ஹாவை நீக்கினப்போ, அவள் பற்களை இப்படிக் காட்டினா...’’

அமர்சிங் நடித்துக் காட்டினான்.

‘‘நாக்கு ஒரு கஜ நீளத்துல இருந்தது. ஒரே ஒரு அலறல்... மூணாவது நாள் சந்தன்சிங் இறந்துவிட்டான்.’’

புலியுடன் சண்டை போட்ட அவனுடைய தாத்தாவின் மரணத்தைப் பற்றி சொன்னபோதும் இதே கதையைத்தான் கூறியிருக்கிறோம் என்ற விஷயத்தை  அமர்சிங் மறந்துபோய் விட்டான்.

அறையில் சர்தார்ஜி க்கு கொடுத்த புத்தகங்கள் அனைத்தும் திரும்ப வந்திருந்தன. மேலே ஆங்கிலத்தில் ஒரு குறிப்பு இருந்தது.

‘‘நன்றி சாத்தானையும் தேவதைகளையும் மட்டுமே இதில் பார்த்திருக்கிறேன். மனிதர்களுடைய கதைகள் எதுவும் உங்களின் சேகரிப்பில் இருக்கின்றனவா?’’

அந்த மனிதரின் உருவத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத அழகான கையெழுத்து.

அவர் ஒரு வினோதமான பிறவி.

சிறிது நேரம் அவளுடன் அவர் இருந்தார். பல விஷயங்களைப் பற்றியும் அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அறிமுகத்தின் எல்லைகள் இப்போது அப்படியேதான் இருக்கின்றன. அந்த மனிதரைப் பற்றி எதுவும் கூறவில்லை. கேட்கவுமில்லை.

‘‘மரணம் எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கோமாளி.’’

                                                                                                                                                     -பெயர் தெரியாத ஒரு

                                                                                                                                                        மனிதன்.


மரணம் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கும் உடல். எலும்புகள் உந்திக்கொண்டிருக்கும் வெளிறிப்போன முகம் மூடிய கண்கள்.

மலைப் பாதையில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த குளம்போசைகள் தனித்தும், மெதுவாகவும் என்றாகி அமைதியானது. நடு முற்றத்தில் உயரமாக நின்றிருந்த விளக்குத் தூணைச் சுற்றி ஒரு காட்டுப்பறவை இரவின் நிழல்களுக்குள் ஓசையெழுப்பியவாறு சிறகடித்துப் பறந்துபோனது.

படுக்கையில் படுத்துக்கொண்டு அவள் கடவுளின் பெயரைச் சொல்ல முற்பட்டாள். சுவர்களின் இறந்த இதயத்தின் வழியாக இக்தாராவின் இனிய இசை மிதந்து வந்து கொண்டிருந்தது.

13

மாலை நேரத்தில் தன்னுடன் சேர்ந்து நடக்க ஒரு மனிதர் அழைத்திருக்கிறார். காலையில் முதலில் மனதில் தோன்றியதே அதுதான். எங்கிருந்தோ வந்திருக்கம் வயதைவிட கிழவனாகவும் அவலட்சணமாகவும் இருக்கும் ஒரு மனிதன்!

மாலை நேரங்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிமிடத்தை எதிர்பார்த்து அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்த எத்தனையோ நாட்கள் முன்பு இருந்தன. கடந்து செல்லும் இளம்பெண்களை அலட்சியமாகப் பார்த்தவாறு அலங்கரித்து இருந்த நாட்கள்...

நரைத்த தாடியைத் தடவி விட்டவாறு போர்ட்டிகோவிற்குக் கீழே இன்று மாலை நேரத்தில் சர்தார்ஜி வருவார். அதை நினைத்து அவளுக்கு அவமானமோ, சந்தோஷமோ எதுவும் தோன்றவில்லை.

மாலை நேரம் வந்ததும், ‘‘பீபிஜி, சர்தார்ஜி உங்களைக் கேட்டார்’ என்று கூறிக்கொண்டு அமர்சிங் வரவில்லை. அந்தச் சமயத்தில் காத்திருத்தல் என்ற விஷயத்திற்கு பலம் அதிகமாகி நிமிடங்கள் உள் மனப் பரபரப்பின் பிடியில் சிக்கி துடித்துக்கொண்டிருக்கின்றனவோ?

அப்போது வராந்தாவில் காலடிச் சதத்ம் கேட்டது. அமர்சிங்தான். அவன் சொன்னான்: ‘‘பீபிஜி, ஒரு தாள், சர்தார்ஜி தந்தார்.’’

அவள் படித்தாள்: ‘மன்னிக்க வேண்டும் என்னைக் காப்பவர். இன்று நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று விதித்திருக்கிறார். அதற்கேற்றபடி நடக்காமல் இருக்க முடியாதே! இழப்பு எனக்குத்தான்.’

பெயர் இல்லை. எழுத்துக்களைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் கீழே என்னவோ கிறுக்கியிருந்தார்.

அதற்காக மனதில் அவள் வருத்தப்படவில்லை. சிறுபிள்ளைத்தனமான ஒரு பிடிவாத உணர்வு அவளுக்கு அப்போது உண்டானது. இன்று ஏரிக்கரையில் ஒரு சுற்றுலாப் பயணியின் உற்சாகத்துடன் சுற்றித் திரிய வேண்டும் - படகில் சவாரி செய்ய வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள்.

படகுகள் நிற்கும் இடத்தில் நான்கைந்து படகுகள் மணலில் ஏறிக்கிடந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. அவளுக்கு அறிமுகமான படகோட்டி யாரையும் காணவில்லை. புத்து வரட்டும், தன்னால் அவனுக்கு ஆறணா வருமானமாகக் கிடைக்கட்டும் என்று அவள் காத்திருந்தாள்.

‘‘மேம்ஸாப்.... ஆயியே, மேம்ஸாப்...’’

அவள் ‘வேண்டாம்’ என்று தலையை ஆட்டினாள். ஏரியைப் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு சாதாரண பெண்தான் தான் என்பது மாதிரி அவள் காட்டிக்கொண்டாள். மண்டபத்திலும், மணல் விரித்த வெளியிலும் ஏராளமான ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். திரையரங்கிலிருந்து வெளியே இசைக் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது. பூனை அழுவதும், நாய்கள் குரைப்பதுமாக இருந்த திரைப்படப்பாடல்.

‘‘‘ஃபோட்டோ கார்டுகள்... பத்து புகைப்படங்கள் ரெண்டு ரூபாய்...’’

ஒரு விற்பனையாளன் அருகில் வந்தான். முகத்தைப் பார்த்த பிறகு மேலும் பார்த்துக் கொண்டிருக்காமல் திரும்பிச் சென்றான்.

சீஸனைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கும் சுற்றுலாப் பயணி அல்ல அவள் என்பதை அவன் கண்டுபிடித்திருப்பான்.

எப்படி? நரை ஏறிய முடியில், வாஸ்லின் தேய்த்ததால் கறுத்துப்போன உதடுகளில், கருநிழல்கள் விழுந்த கண்களின் கீழ்ப்பகுதியில் எழுதி வைத்திருக்கின்றனவோ - இதோ மலைகளின் குழிகளுக்குள் பல வருடங்களாகச் சிக்கிக் கிடக்கும் ஒரு கைதி அவள் என்று?

கீழே வந்து சேர்ந்த ஒரு படகிலிருந்து உரத்த ஒரு குரல் கேட்டது:

‘‘ஆயியே, மேம் ஸாப், ஆயியே...’’

சிறிய கண்களில் சிரிப்பை நிறைத்துக்கொண்டு மஞ்சள் நிறப் பற்களைக் காட்டியவாறு புத்து அழைத்தான்.

படகில் ஏறி உட்கார்ந்தபோது நைனீதேவியின் பெரிய மணிகள் ஒன்று சேர்ந்து ஒலித்தன.

‘மே ஃப்ளவர்’ மீண்டும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அன்னப்பறவையின் வாய்க்கும் சிறகுக்கும் சாயம் பூசப்பட்டிருந்தது.

‘‘சீஸன் எப்படியிருக்கு மேம் ஸாப்?’’

‘‘நல்லா இருக்கு.’’

‘‘இந்தத் தடவை ஆட்கள் வருகை அதிகமாச்சே!’’

‘‘ம்...’’

‘லேக் ஒட்டல்ல ஏராளமான வெள்ளைக்காரர்கள் இருக்காங்க.’’

விமலா அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை.

‘‘மேம் ஸாப், உங்க ஊர் இதுவா?’’

‘‘இல்ல...’’

‘‘ரொம்பவும் தூரத்துல இருக்கா?’’

‘‘ம்....’’

‘‘மதராஸ்...?’’

தான் மேம் ஸாபைத் தோற்கடித்தாகிவிட்டது என்ற எண்ணத்துடன் சிரித்தவாறு அவன் கேட்டான்.

அவள் ‘ஆமாம்’ என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினாள்.

‘‘ம்... மதராஸி மாஸ்டர்னு சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன்.’’

‘‘ம்...’’

‘‘மேம் ஸாப், நீங்க ஊருக்கப் போவீங்கள்ல?’’

‘‘போவேன்.’’

‘‘எப்போ?’’

‘‘எப்பவாவது....’’

மத்தியிலிருந்து கரையை நோக்கி துடுப்பைப் போட்டு ஏரியை வலம் வந்து கொண்டிருந்தான் புத்து.

அவன் ஓசை உண்டாக ஒரு முட்டாள்தனமான சிரிப்பைச் சிரித்தவாறு சொன்னான்:

‘‘ஏராளமான வெள்ளைக்காரர்கள் வர்றாங்க. நம்ம ஆளை மட்டும் காணவே காணோம்.’’

ஒருமுறை துடுப்பைச் செலுத்திவிட்டு, சட்டைக்கு அடியிலிருந்த தோல் பையைத் தொட்டுப் பார்த்தவாறு அவன் உறுதியான குரலில் சொன்னான்:

‘‘இந்த முறை வருவார். வராம இருக்கமாட்டார்.’’

‘நாம எல்லோரும் காத்திருக்கிறோம் புத்து. ஒவ்வொரு வருடமும் இந்த நகரமும் காத்திருக்கு. அதற்கு மத்தியில் நாட்கள் நகர்ந்து போய்க் கொண்டிருக்கு. துடுப்பு விழும்போது தெறிக்கிற நீர்த்துளிகள்... எதிர்பார்த்துக் கொண்டிருக்கு உனக்கு ஒரு கோரா சாஹிப்பின் சாயல் இருக்கு. அந்த ஆளுக்கு நீல நரம்புகள் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு முகம் இருக்க வாய்ப்பிருக்கு... கம்பிக் கால்களில் சாயம் பூசி நடைபாதைகளில் வெள்ளையும் கம்பளியும் விரித்து நகரம் காத்திருப்பது யாருக்காக புத்து? நீ பிரார்த்தனை பண்றது உண்டா? கடவுள் மீது நம்பிக்கை உண்டா? அடிவாரத்தில் தனியாக உட்கார்ந்து தவம் செய்யும் நைனீ தேவியின் மிகப்பெரிய மணிகளின் ஓசையைக் கேட்டு குனிந்த தலைகள் மேல்நோக்கிப் பார்ப்பது யாரை?’’ - அவள் தனக்குள் பேசிக்கொண்டாள்.

 ‘‘மேம்ஸாப், நீங்க ஏதாவது சொன்னீங்களா?’’

‘‘இல்லையே!’’

‘‘மேம் ஸாப் நீங்க என்னவோ சிந்திக்கிறீங்க!’’

‘சிந்திக்குறது... தால் ஏரியின் படகுத் துறையில் வால்நட் வடிவங்கள் விற்பனை செய்யும் ஒரு சிறுமி இருந்தாள். நல்ல அழகி. கண்கள் வைசாக்கின் வானத்தைவிட பிரகாசமாக இருக்கும். நான் சொல்றது கவிதை இல்லை. கதை சொல்றேன். கதைகள் ஆத்மாவில் இருந்து புறப்பட்டு வர்றப்போ கவிதையா மாறிடும். நான் என்ன சொன்னேன்? அந்தச் சிறுமியைப் பற்றி...


பல வருடங்களாக நான் கண்ட கனவின் உயிர் எனக்கு முன்னால்... நௌகா இல்லத்தின் சமையல்காரன் அன்று இரவில் முன்னால் கொண்டு வந்து நிறுத்திய பத்து ரூபாயின் தோழியைப் பார்த்தப்போ... இல்ல... இப்போ சொல்றதுக்குக் கவலைப்படல... என் இரவுகளின் கதைகளை நான்தான் கூறியிருக்கிறேனே! இப்போ வெட்கப்படுற மாதிரி எந்தக் கடந்த காலமும் இல்ல. எனக்கு முன்னால் இருப்பது நீ மட்டும்தான். உன்னுடைய எல்லாமே நானும் விரும்பக் கூடியதுதான். உன் மணம் என்னைச் சுற்றி எப்போதும் நின்னுக்கிட்டே இருக்கு. என்ன சொன்னேன்? ஒரு இரவின் தோழி... என் கனவின் உயிர் முன்னால்.... முன்னால் அல்ல... இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கும் கனவுகள் கால்களுக்குக் கீழே கிடக்கின்றன. மெத்தையின் உடல்களின் அழகு சில நிமிடங்களில் மறைந்து போய்விட்டது. இனி... இப்போ... எல்லாவற்றையும் சொல்லலாம். நான் ஒரு பத்தொன்பது வயது காதலன் இல்லை. நீ ஒரு பள்ளிக்கூட மாணவியும் இல்லை. இன்னொரு விஷயம் கேட்கணுமா? எக்ஸ்யூஸ் மீ இஃப் ஐ ஆம் வல்கர்... நான் கல்லூரி மாணவனாக இருந்த காலம். பக்கத்து வீட்டு இளம் பெண்ணை நான் காதலிப்பதை உணர்ந்தேன். அவளைப் பற்றியே இரவும் பகலும் நினைச்சுக்கிட்டு இருப்பேன். அவ உடல் எப்படி இருக்கும்? அவ முகம்? அவ முழுமையா எனக்கு வேணும். திரும்பவும் நான் தப்பா சொல்றேன். நான்தான் சொன்னேனே. நாம பார்த்த நிமிடத்திலிருந்து நான் சுத்தமானவன்னும்... அந்தப் பக்கத்து வீட்டு அழகான இளம்பெண்... பிரார்த்தனைகள்.... வேண்டுதல்கள்... கடைசியில் ஒரு நிமிடத்தில் வாழ்க்கை முழுமையடையுது. என்னுடைய உயிரின் ஒரு பகுதி அவளிடம் வடிவம் எடுத்தால்... ஒண்ணுமில்ல... உலகத்துக்கே சவால் விட்டுக்கொண்டு நான் உரத்த குரல்ல கூறுவேன்: ‘இவ எனக்கு சொந்தமானவள்!’ அதற்குப் பிறகு, அவள் தன்னை என்னிடம் ஒப்படைக்கிறப்போ, ‘நான் என்னோட டயஃப்ரத்தை அணிஞ்சிருக்கேன்.’ கனவுகளின் இரத்தம் புரண்ட இறந்த உடல்கள்! எந்தச் சமயத்திலும் நீ ஏமாற்றியது இல்லை. தூரத்திலும் பக்கத்திலும் அணிந்திருக்கும் ஆடைகளிலும் உள்ளேயும் மரியாதையுடன் நான் உன்னைப் பார்க்குறேன்...’ - அவளுக்குள் பல சிந்தனைகள்.

‘‘மேம் ஸாப்...!’’

‘‘ஓ... ஒண்ணுமில்ல புத்து. உன் வெள்ளைக்காரத் தந்தையைப் பார்க்க உனக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும்!’’

நாம் சந்திக்க வாய்ப்பிருந்தால்...

காலத்தில் உச்சியில் நின்றுகொண்டு, வருடங்களின்... தலைமுறைகளின் மறை துணிகளை நீக்கிப் பார்க்க முடிந்திருந்தால் சொல்ல முடியும்: ‘இந்த நாளில் உன்னோட கோரா ஸாஹிப்பை இந்தத் தெருவில், இந்த நேரத்தில் நீ பார்க்கலாம்...’

‘எதிர்பார்க்காம சந்திச்சது இல்ல விமலாதேவி! இருபத்தொரு வயது கொண்ட விமலா தேவி, அழகி, மேலுதட்டில் மெல்லி நீல ரோமங்களைக் கொண்டவள்.... இருபத்தொன்பது வயது உள்ள சுதீர்குமார் மிஸ்ரா.... ஆணவம் பிடித்த இளைஞன்.... சரியாக 1955 மே மாதம் 3-ஆம் தேதி காலை வேளையில் பேருந்தில் வைத்து சந்திக்கிறான். நாம பிறக்கிறதுக்கு முன்னாடியே காலமென்னும் மிகப்பெரிய புத்தகத்தின் ஒரு பக்கத்தில் அது எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. நான் ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சது இந்த நிமிடத்தை அடைவதற்காகத்தான். உன் அப்பா ஊருடன் கொண்ட தொடர்பை உதறி எறிஞ்சது அதற்காகத்தான். மிஸ்டர் கோமஸ் என்ற யாருமற்ற மனிதன் உன் தாயின் காதலனாக ஆனதற்கும் உன் தாயுடன் சண்டை போட்டுக் கொண்டு நீ வேலை தேடி வீட்டை விட்டு வெளியேறியதும் அதற்காகத்தான். இது ஒரு சாதாரண சம்பவம் இல்லை விமலா தேவி! வாழ்க்கையின் முழுமை ஆரம்பமாகும் மிகப்பெரிய நிமிடம்!’ - அவள் மனதிற்குள் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.

புத்து துடுப்பைப் போடாமல் அவளையே பார்த்தவாறு, புன்னகைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஏரிக்குள் செடிகளும் கொடிகளும் வளர்ந்து சாய்ந்து கிடந்த ஒரு ஓரத்தில் ‘மே ஃப்ளவர்’ நின்றிருந்தது.

‘‘திரும்பலாம்...’’

அவன் மஞ்சள் நிறப் பற்களைக் காட்டிச் சிரித்தவாறு துடுப்பைக் கையிலெடுத்தான்.

‘‘மேம் ஸாப், உங்க மனசு வேற எங்கேயோ இருக்கு...’’

‘‘நான் வேற எதையோ நினைச்சுக்கிட்டு இருந்தேன்.’’

‘‘நானும்...’’

‘‘நீ யாரைப் பற்றி நினைச்சே புத்து?’’

‘‘என் தாயைப் பற்றி...’’

‘‘கோரா ஸாஹிப்பைப் பற்றியும்...’’

அவன் மீண்டும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.

‘‘வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டு போனப்போ அவரும் போயிருப்பாரோ மேம் ஸாப்?’’

‘இந்த வழி விளக்கைத் தாண்டி நம்மால எதையும் பார்க்க முடியாதே புத்து’ -  மனதிற்குள் இப்படிச் சொல்லிக் கொண்ட விமலா அவனிடம் சொன்னாள்:

‘‘அப்படிப் போயிருக்க மாட்டார்.’’

‘‘எதை வச்சு சொல்றீங்க?’’

‘‘அவருக்கு உன் தாயை ரொம்பவும் பிடிச்சிருந்ததுல்ல? அதுனால இந்த ஊரும் பிடிச்சிருக்கும். போயிருந்தாகூட அவர் வருவார்... திரும்பி வருவார்.’’

உடலில் அதிகமான சோர்வு தோன்றியது. மீண்டும் மரப்பாலம்... படகுத் துறை... கால தூதர்களைப் போன்ற கூலியாட்கள்... ஒன்பது வருடங்கள் நடந்த பாதை... பங்கின் போதையில் மூழ்கிக் கண்களை மூடிப் படுத்திருக்கும் சௌக்கிதார்... ஆட்டா ரொட்டியும் பருப்பும்... குளிர்ந்த மெத்தை...

இக்தாராவின் இசை அன்று இரவு கேட்கவில்லை. அவள் ஜன்னலை திறந்து பார்த்தாள். கோல்டன் நூக்கில் வெளிச்சம் இருந்தது. இக்தாரா தூங்கிக் கொண்டிருந்தது. அதன் மெல்லிய ஒற்றைக் கம்பியில் காகத்திடம் எங்கோ தூர இடத்தில் இருக்கும் காதலனுக்குத் தன்னுடைய வேதனைகளைக் கூறும்படி சொன்ன பஞ்சாபி இளம்பெண்ணின் இதயமும் உறங்கிக் கொண்டிருந்தது.

அவள் ஜன்னலை மூடினாள்.

‘‘நாம் சந்திக்க வாய்ப்பிருந்தால்....’’

14

காலையில் தபாலில் ஒரு கடிதம் வந்திருந்தது. தெரியாதவர்கள் யாராவது பார்த்தால் அவளுடைய கையெழுத்துதான் அது என்று கூறிவிடுவார்கள். அந்த அளவிற்கு அவளுடைய கையெழுத்தைப் போலவே இருந்தது அனிதாவின் கையெழுத்து. அவள் கடிதத்தைப் படித்தாள்.

‘‘விமலாதீதி, என்னால் இங்கு வாழ முடியாது. அக்கா, நானும் உங்களுடன் வந்து இருக்கட்டுமா? பாபு அண்ணன் நேற்று மது அருந்திவிட்டு வந்து அம்மாவுடன் சண்டை போட்டார். பீர்பகதூரை அடிக்கச் சென்றார். விமலாதீதி, நீங்கள் இங்கு வரவேண்டும். இல்லாவிட்டால் நான் அங்கு வந்து உங்களுடன் தங்குகிறேன்.’’

மேஜையின் ட்ராயரில் இருந்த கடிதங்களுடன் அதையும் சேர்த்து வைத்தாள் விமலா.

அனிதாவிற்கு என்ன ஆனது? ப்ரதீப் சந்திரன் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டானா? இல்லாவிட்டால் அவளுடைய மனம் பக்குவமடைந்து விட்டதா?       


மாலை நேரத்தில் அமர்சிங் சிறிது நேரம் ஓய்வு வேண்டும் என்று கேட்டான். மூன்று மைல்கள் தூரத்திலிருக்கும் அவனுடைய சொந்தக்காரர்களில் ஒருவர் இறக்கும் நிலையில் இருப்பதாகவும், பொழுது இருட்டுவதற்கு முன்பே திரும்பி வந்து விடுவதாகவும் அவன் சொன்னான்.

அவள் போர்ட்டிகோவிற்குக் கீழே முற்றத்தில் நின்றிருந்தாள்.

கோல்டன் நூக்கிற்கு முன்னாலிருந்து படிகளில் சர்தார்ஜி நடந்து வருவது தெரிந்தது. அவர் கீழ்நோக்கி இறங்கிப் போவார் என்று அவள் நினைத்தாள். ஆனால், அவர் நேராக வேலிக்கு அருகில் வந்தார்.

‘‘குட் ஈவ்னிங்!’’

‘‘ஈவ்னிங்.’’

‘‘இன்றைய படகு சவாரி எப்படி இருந்தது?’’

‘‘நான் படகுப் பயணம் போனேன்னு யாரு சொன்னாங்க?’’

முள் வேலி இணைக்கப்பட்டிருந்த கான்க்ரீட் தூணைப் பிடித்துக் கொண்டு அவருடைய நீளமான விரல்களைப் பார்த்தவாறு அவள் கேட்டாள்.

‘‘நான் யூகிக்கக் கூடாதா? உங்க முழு மனதையும் வேணும்னா ஒரு புத்தகம் போல நான் படிக்கலாம். ஆரவாரங்கள்ல இருந்து எல்லாவற்றையும் பார்க்கணும்ன்றதுதான் உங்க விருப்பம். ஏரியில கூட்டம் அதிகமாக இருக்குறப்போ படகுப் பயணம் செய்றதுல விருப்பம் இல்லைன்னாலும் நான் அழைச்சுப்போ போகலாம்னு முடிவு எடுத்தீங்க. நான் வரல. அப்போ படகுல பத்து  தடவைகளாவது சுற்றியே ஆவது என்ற பிடிவாதத்துடன் நீங்க வெளியிலயே இறங்கியிருப்பீங்க.’’

‘என்ன, நான் சொல்வது சரிதானா?’ என்பது மாதிரி அவர் தன் கண்களை உயர்த்தினார்.

‘‘ஒரு சிகரெட் புகைக்கட்டுமா? யாருக்கும் தெரிய வேண்டாம்...’’

‘‘தெரிஞ்சா என்ன?’’

‘‘என்னைக் காப்பாற்றும் கடவுளுக்குத் தெரியக் கூடாதுன்னு நான் சொன்னேன்...’’

சிகரெட்டை இழுத்து சுவாரசியமாகப் புகை விட்டவாறு அவர் சொன்னார்:

‘‘எனக்கும் நண்பருக்குமிடையில் எப்பவும் ஒரு கயிறு இழுக்குற போட்டிதான்.’’

‘‘உங்களோட பாதுகாவலரை நான் பார்த்ததும் இல்லை.’’

‘‘பார்க்க முடியாது. அதுதான் அவரோட சிறப்பே...’’

அவர் வேலிக்கப்பால் சுதந்திரமாகச் சுற்றி நடந்தார் - பேசக்கூடிய தூரத்தில்.

‘‘டீச்சர்ஜி!’’

அவள் பார்த்தாள்.

‘‘நான் ஒரு தமாஷ் சொல்லட்டுமா?’’

‘கேட்கிறேன்’ என்பது மாதிரி அவள் நின்றாள்.

‘‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. எந்தக் காரணமும் இல்லாமல்...’’

அந்த மனிதரின் வறண்டுபோன அவலட்சணமான முகத்தில் இரத்தம் ஓடி மறைவதைப் பார்த்து, அவள் திகைத்துப் போய் நின்றாள்.

ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நினைத்து அவள் முயற்சி செய்தாள். இயல்பாக இருக்க முயற்சித்துக்கொண்டு அவள் சொன்னாள்: 

‘‘நான்... நான் யார்னுகூட உங்களுக்கு தெரியாதே?’’

‘‘அதுதான் வேண்டியது. உங்களுடைய சூழல் முழுவதையும் பற்றி நான் மற்றவர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். எத்தனையோ விஷயங்களை... எல்லாம் சேர்த்து வர்றப்போ உங்களைப் பற்றிய படத்துல ஆயிரம் வேர்களும் கிளைகளும் இலைகளும் வந்து சேரும். நீங்க ஒரு துளி... அவ்வளவுதான்.’’

சிகரெட்டின் கடைசி புகையை உள்ளே இழுத்த திருப்தியுடன் அவர் அதைத் தூரத்தில் எறிந்தார்.

‘நீங்கள் யார்? எங்கேயிருந்து வர்றீங்க?’ - வறண்ட முகத்தையும் நெற்றியில் அவலட்சணமான கறுப்பு நிறத்தையும் கண்களில் ஒளியையும் கொண்டிருந்த அந்த மனிதரைப் பற்றி கேட்பதற்குப் பல விஷயங்கள் இருந்தன.

‘‘ம்... பிறகு... டீச்சர்ஜி, ஒருவேளை...’’

அவள் அமைதியாகக் கேட்கத் தயாரானாள்.

‘‘இடையில் அவ்வப்போது கொஞ்சம் சிரிக்கணும். இல்லாட்டி நான் சொல்ல  வந்த விஷயத்தை மறந்திடுவேன்.’’

‘‘நான்... நான் அழலையே!’’

‘‘அழறதைப் பார்த்தா எனக்கு வெறுப்புத்தான் வரும். நீங்க சிரிக்கிறதைப் பார்க்குறதுன்றது மிகவும் அபூர்வமான ஒரு விஷயமா இருக்கு...’’

அவர் கைக் கடிகாரத்தைப் பார்த்தார்.

‘‘ம்... மருந்து சாப்பிடும் நேரம். என்னைக் காப்பவருக்குப் பயப்படணும்!’’

அவர் வேகமாகத் தொளதொளவென்றிருந்த ட்ரவுசரைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்து போவதை அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். பைத்தியமோ?

மாலை நேரத்தில் இருள் படர ஆரம்பித்தது. நடுமுற்றத்திலிருந்த முட்டை வடிவ விளக்கை அவள் போட்டாள். வெளிறிய இருட்டில் மூழ்கிக் கிடந்த அந்தக் கட்டிடத்திற்குள் தனியாக இருக்க அவளுக்குப் பயமாக இருந்தது. அமர்சிங் வருவதற்கு இனியும் எவ்வளவு தாமதமாகுமோ என்னவோ? வராந்தாவைச் சுற்றி நடந்து ஒரு கல்தூணுக்கும் இன்னொரு கல்தூணுக்கும் நடுவில் இருந்த கல்தூண்களிலிருந்த ஸ்விட்சை அழுத்தினாள்.

அறைக்குள் போய் உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தாள். பார்த்துப் பழகிப் மேலட்டைகள்... வெறுப்பு...

பகலில் மழை பலமுறை பெய்தது. காற்றுக்கு நல்ல குளிர்ச்சி இருந்தது. மலைச்சரிவில் வழி திரும்பும் இடத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட அரை வட்டத்திலிருந்து தெரிந்த காட்சியில் தூரத்தில் மலை உச்சிகள் புகைச் சுருள்களாக மாறின. மலைப் பாதையிலிருந்து அவ்வப்போது ஒரு குளம்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக மதிய நேரத்திலேயே மூடுபனி இறங்கியது. அது ஏரிக்க மேலே முழுமையான ஒரு அலங்காரம் போல பரவித் தெரிந்தது.

மாலை நேரத்தில் மலையிடுக்குகள் வழியாகச் சீறி அடிக்கத் தொடங்கிய காற்றில் மெல்லிய நீர்த்துளிகள் தங்கியிருந்தன.

பல நாட்களுக்குப் பிறகு இக்தாராவின் இசை காற்றில் தவழ்ந்து வந்தது. அதற்குப் பின்னால் சர்தார்ஜியின் மெல்லிய குரலும்.

ஜன்னலின் பாதியைத் திறந்தபோது உள்ளே நுழைந்த குளிர்ச்சியான காற்றில் உடல் நடுங்கியது. பனிப்படலத்தின் வழியாக ‘கோல்டன் நூக்’கின் பிரகாசமான கண்ணாடி ஜன்னல்கள் இளம் மஞ்சள் நிறத்தில் தெளிவாகத் தெரிந்தன.

‘உம் கலிய கட்ட கானீ...

அஹ்ஹாம் தா கஜ்ஜலாமைம்...’

காற்றின் இரைச்சலையும் மீறி வெற்றி பெற்றுக் கொண்டு இக்தாராவின் ஓசை உயர்ந்து கேட்டது. பஞ்சாபி இளம் பெண்ணின் பெருமூச்சுகள் குளிர்ந்து நடுங்கிக் காற்றில் ஏக்கங்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தன.

சர்தார்ஜியின் பாதுகாவலன் இன்று தூங்குகிறானோ? இன்று அவரைப் பாட அனுமதித்து விட்டதே!

ஜன்னலை அடைத்து தாழ்போட்டு விட்டு அவள் படுத்தாள்.

பகலில் கண்களைத் திறப்பதற்கு முன்பே கதவைத் தொடர்ந்து தட்டும் ஓசை கேட்டது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த அவள் நெஞ்சு அடிக்கக் கேட்டாள்:

‘‘கோன் ஹை?’’

‘‘நான்தான், பீபிஜி...’’

அவள் கதவைத் திறந்தாள். அமர்சிங் கண்களைக் கசக்கிக் கொண்டு வாசலில் நின்றிருந்தான்.

‘‘என்ன?’’

‘‘சர்தார்ஜி அழைக்கிறார்.’’

‘‘இவ்வளவு சீக்கிரமாவா?’’

‘‘உங்கக்கிட்ட சொல்லிவிட்டு போறதுக்காக...’’

கலைந்த ஆடைகளைச் சரி பண்ணாமல், சால்வையால் மூடியவாறு அவள் வராந்தா வழியாக போர்ட்டிகோவிற்கு நடந்தாள். காற்றின் குளிர்ந்தக் கைவிரல்கள் முகத்தைத் தடவிக் கொண்டிருந்தன.

பாதி மலர்ந்திருந்த பகல் வெளிச்சத்தில் அவர் முற்றத்தில் நின்றிருந்தார்.

‘‘தூக்கத்திற்குத் தொந்தரவு உண்டாக்கியதற்கு மன்னிக்கணும் டீச்சர்ஜி?’’

‘‘ம்... பரவாயில்லை...’’


தூக்கக் கலக்கத்தால் தொண்டை ‘கரகர’வென்றிருந்தது.

‘‘நான் போறேன் டீச்சர்ஜி.’’

என்ன சொல்வது என்று சிந்தித்த அவள் தடுமாறினாள். இறுதியில் சொன்னாள்:

‘‘இனிமேலும் பார்ப்போம்.’’

அவர் சிரித்தார்: ‘‘அப்படிச் சொல்ல எனக்குத் தைரியம் போதாது டீச்சர்ஜி. அதிகபட்சம் நான்கு மாதங்கள்தான்னு நம்மளைக் காப்பாத்துறவரு சொல்லிட்டாரு...’’

தூக்கக் கலக்கம் அவளுடைய கண்களிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.

‘ம்... அதுதான் எனக்கும் லாபம். அதற்குத் தெய்வத்திற்கு நன்றி சொல்லணும். நுரையீரல் புற்றுநோய்க்கு ஒரு வருடம்தான் விடுமுறை. ஒரு நான்கு  மாதங்கள் நமக்கு போனஸ்ஸாக அவர் தந்திருக்காரு.’’

தான் கூறிய வார்த்தைகளை ரசித்ததைப்போல அவர் சிரித்தார்.

அவள் எதுவும் பேசவில்லை.

‘‘நமஸ்தே டீச்சர்ஜி.... நல்லது வரட்டும்...’’

‘‘நம்ஸ்தே...’’

அவர் இரண்டு நான்கு அடிகள் நடந்த பிறகு திரும்பி நின்றார்.

அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்.

‘‘கடன் கேட்ட ஒரு மாலை நேரம் மீதமிருக்கு. மறந்துடாதீங்க...’’

அவர் உரத்த குரலில் சிரித்துக்கொண்டே கால்களை இழுத்து இழுத்து நடந்து சென்றார்.

சாமான்களைச் சுமக்கும் இரண்டு கூலியாட்கள் அவருக்குப் பின்னால் சென்றார்கள். அவருடைய பாதுகாவலர் எங்கே?

வராந்தா வழியாக அறைக்குத் திரும்பிச் சென்றபோது அமர்சிங்கை அவள் பார்த்தாள். அவனுடைய முகம் நிறைய சிரிப்பு இருந்தது.

‘‘சர்தார்ஜி நல்ல வசதி படைச்ச மனிதர் டீச்சர்ஜி. எனக்கு எவ்வளவு பக்ஷீஸ் தந்தார் தெரியுமா? பத்து ரூபாய்...’’

‘‘அமர்சிங், எங்கே அவரோட பாதுகாவலர்?’’

‘‘பாதுகாவலரா? அவர் தனியாகத்தான் இருந்தார் பீபிஜி.’’

அவள் கதவை மூடினாள்.                             

15

நிறம் மங்கிப் போய் காணப்பட்ட கம்பிக் காலைத் தாண்டியிருந்த கல்லால் ஆன தளத்தில் நன்கு மூடியிருந்த வானம் விழுந்து உறங்கிக் கொண்டிருந்த குளிர்ச்சியான ஏரியைப் பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள்.

கோவில் பகுதியும் மணல் விரிக்கப்பட்ட முற்றமும் மண்டபமும் ஆள் அரவமற்றுக் கிடந்தன.

மூன்று பஹாடி பையன்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் படகின் அன்னப்பறவை தலை தன் கால்களுக்குக் கீழே நெருங்கியதும், அவள் பார்த்தாள். புத்து தன்னுடைய மஞ்சள் நிறப் பற்களைக் காட்டிச் சிரித்தான்.

அவன் கீழே படகை நிறுத்தினான்.

‘‘சீஸன் எவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருச்சு... மேம் ஸாப்!’’

‘‘உண்மைதான்.’’

‘‘யாரும் வரல.’’

அவளும் உயிரற்ற குரலில் சொன்னாள்:

‘‘யாரும் வரல....’’

‘‘அடுத்த வருடம் பார்ப்போம். அப்படித்தானே மேம் ஸாப்?’’

அவன் என்ன கூறுகிறான் என்பதைக் கவனிக்காமலே அவள் மெதுவான குரலில் திரும்பிச் சொன்னாள்:

‘‘ம்... அடுத்த வருடம்...’’

மேம் ஸாப் வேண்டிய அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற சந்தேகத்துடன், தோல் நிறத்திலிருந்த கனமான சட்டையின் மார்புப் பகுதியைத் தட்டியவாறு சற்று உரத்த குரலில் புத்து கேட்டான்:

‘‘வராம இருக்கமாட்டார்... அப்படித்தானே மேம் ஸாப்?’’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.