Logo

பப்பு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5968
pappu

சுராவின் முன்னுரை

1944-ஆம் ஆண்டில் பி.கேசவதேவ் எழுதிய புதினம் ‘ஓடையில் நின்னு’ (Odaiyil Ninnu). கை ரிக்ஷா இழுக்கும் பப்பு என்ற ஈர மனம் கொண்ட மனிதனை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்தக் கதை பின்னர் மலையாளத்தில் திரைப்படமாகவும் வந்தது. சத்யன் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். மலையாளத்தில் வெற்றி பெற்ற அப்படம் பின்னர் தமிழிலும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.

1971-ஆம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க, ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய அப்படத்தின் பெயர் ‘பாபு’(Babu). கருப்பு - வெள்ளையில் தயாரான அப்படத்தில் நடிகர் திலகம் ஒரு கை ரிக்ஷாக்காரராகவே வாழ்ந்திருந்தார் என்பதுதான் உண்மை. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ‘பாபு’ படத்தை மதுரையில் உள்ள ஒரு திரையரங்கத்தில் பார்த்து, படம் முழுக்க நான் அழுதுகொண்டே இருந்தது இப்போது என் ஞாபகத்தில் வருகிறது. நான் மட்டுமல்ல, படம் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருமே அழுது கொண்டிருந்தார்கள். அந்த அளவிற்கு சிவாஜி படம் பார்ப்போரைக் கண்ணீரில் குளிப்பாட்டினார். முழுக்க முழுக்க சோகக் காட்சிகள் நிறைந்த அப்படம் திரையிடப்பட்ட எல்லா திரையரங்குகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் இடம் பெற்ற ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ என்ற பாடலை எத்தனை வருடங்கள் ஆனாலும், நம்மால் மறக்கத்தான் முடியுமா ? பி. கேசவதேவ் புதினத்தில் படைத்த ரிக்ஷாக்காரருக்கு நூறு சதவிகிதம் சிவாஜி உயிர் கொடுத்திருந்தார்.

இளம் வயதில் திரைப்படமாகப் பார்த்த கதையை இப்போது ‘பப்பு’ (Pappu) என்ற பெயரில் மொழி பெயர்க்கும் போதும், பல இடங்களில் என்னை மறந்து நான் அழத்தான் செய்கிறேன். பப்பு என்ற அந்த நல்ல மனம் கொண்ட மனிதனை கோவில் கட்டி வணங்க வேண்டும் போல் இருக்கிறது. அவனைப் படைத்த கேசவதேவ்வின் எழுத்தாற்றலுக்கு முன்னால் தலை குனிந்து தொழ வேண்டும் போல் இருக்கிறது. தன்னைப் பற்றி சிறிதும் எண்ணாமல், பிறர் மகிழ்ச்சியில் இன்பம் காணும் பப்புவைப் போன்ற மனிதர்கள் இந்த உலகில் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்களேயானால், இந்த உலகம் எவ்வளவு இன்பம் நிறைந்ததாக இருக்கும் !

என் இதயத்தில் பப்பு நிரந்தரமாக வாழ்வான். இதைப் படிக்கும் ஒவ்வொருவரின் இதயங்களிலும்தான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் சாகா வரம் பெற்று நம்முள் வாழ்ந்து கொண்டே இருப்பான் என்பது நிச்சயம்.

இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


ப்புவைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால், அவனால் உண்டாகக்கூடிய தொல்லைகள் முழுமையாக இல்லாமல் போய்விடும் என்று அவனுடைய தாய் நினைத்தாள். தந்தையும் அண்ணனும் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டார்கள்.

அவர்கள் ஜமீந்தாருக்குச் சொந்தமான நிலத்தில் கொஞ்சத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்களும், ஜமீந்தாரை நம்பி இருப்பவர்களும் ஆவார்கள். அதனால் பப்புவைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதாக இருந்தால், ஜமீந்தாரிடம் அதற்கு அனுமதி வாங்கவில்லையென்றால், அது ஒரு குற்றச் செயலாக அங்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.

‘‘ம்... உன் விருப்பப்படி செய்...” இப்படி ஒரு பாதி சம்மதம் மட்டுமே ஜமீந்தாரிடமிருந்து கிடைத்தது எனினும், பப்புவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செல்வது குறித்து அவனுக்கு மிகவும் விருப்பம்தான். படிப்பில் இருக்கும் விருப்பத்தால் அல்ல. விளையாடுவதற்குரிய சந்தர்ப்பங்களே காரணம். வகுப்பில் இருப்பவர்களிலேயே சற்று வயது அதிகமான மாணவன் அவன்தான். அதே மாதிரி உடலமைப்பிலும்கூட அவன்தான். வகுப்பிலும் வகுப்பிற்கு வெளியிலும் அவன் எப்போதும் ஏதாவது குறும்புத் தனங்கள் செய்து கொண்டே இருப்பான். ஆசிரியர்களுக்கு அவன் தொந்தரவு தரக்கூடிய ஒரு பையனாக இருந்தான். அதிகாரச் சக்திகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பதும், பணிவுள்ளவனாக நடிப்பது என்பதும் இயற்கையாகவே அவனால் முடியாத ஒன்று. வீட்டிலிருந்த தொல்லை பள்ளிக்கூடத்திற்கு மாறிவிட்டது என்பதைத் தவிர அவன் பள்ளிக்கூடத்திற்குப் போவதால் எந்தவிதப் பிரயோஜனமும் உண்டாகவில்லை. எனினும், உடன்படிக்கும் மற்ற மாணவர்களுக்கெல்லாம் அவன் மீது பயம் கலந்த ஒரு மரியாதை இருந்தது. அவன் என்ன சொன்னாலும், அவர்கள் அதன்படி நடப்பார்கள். காலப்போக்கில் அவன் மாணவர்களுக்கெல்லாம் தலைவனாக ஆனான். ஜமீந்தாரின் மகளுடைய மகனும் பப்புவின் வகுப்பில் உடன் படித்துக் கொண்டிருந்தவன்தான். அவனும் பப்புவைப் பின்பற்றுபவர்களில் ஒருவனாகிவிட்டிருந்தான். பள்ளிக்கூடத்திலும், பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் தலைவனாகவே பப்பு நடந்தான்.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டுமென்றால் எந்நேரமும் அவன் முன்னால் போய் நின்றான். அவன் இல்லாமல் அவர்களுக்கு வேறு எந்த விஷயமும் இல்லை என்றானது.

ஒரு நாள் பப்புவும் அவனுடைய நண்பர்களும் தங்களுடன் ஒரு பறவையைப் பிடித்து வகுப்பறைக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அவன் பறவையின் காலில் சணலைக் கட்டி பறக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். உரத்த சிரிப்பு சத்தமும், கைதட்டல்களும், கூக்குரல்களும் என்று மொத்த வகுப்பறையும் படு ஆரவாரமாக இருந்தது. அப்£து ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். அடுத்த நிமிடம் ஆரவாரம் முற்றிலுமாக அடங்கியது. எல்லோரும் அவரவர் இடங்களில் போய் அமர்ந்தார்கள். பறவை அப்போதும் பப்புவின் கையில்தான் இருந்தது. ஆசிரியர் கோபத்தில் உரத்த குரலில் கத்தினார்: “இந்தக் கிளியைப் பிடித்து வகுப்பறைக்குக் கொண்டு வந்தது யாரு?”

‘‘நான்தான் சார்” - பப்பு அந்த நிமிடத்திலேயே பதில் சொன்னான்.

‘‘நீ வகுப்பறையை விட்டு வெளியே போ!”

அவன் எழுந்து, பறவையையும் எடுத்துக்கொண்டு மெதுவாக வராந்தாவிற்குப் போய் நின்றான்.

‘‘முற்றத்துல இறங்கி நில்லுடா போக்கிரி” - ஆசிரியர் கத்தினார்.

பப்பு அதற்காகச் சிறிதும் கூச்சப்படவில்லை. அவன் முற்றத்தில் போய் நின்றான்.

‘‘வகுப்பறையில் சத்தம் உண்டாக்கியது யார் யார்?” - அந்தக் கேள்வியை மற்ற மாணவர்களைப் பார்த்து ஆசிரியர் கேட்டார். அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை.

‘‘எல்லாரும் எழுந்து நில்லுங்க.”

எல்லாரும் எழுந்து நின்றார்கள்.

சிறிய பிரம்பொன்றை எடுத்துக்கொண்டு அவர் முதலில் நின்றிருந்த மாணவன் அருகில் சென்றார்.

‘‘கையை நீட்டு...”

அவன் கையை நீட்டினான். ஆசிரியர் அவனுடைய உள்ளங்கையில் இரண்டு அடிகள் கொடுத்தார். இரண்டாவதாக நின்றவனுக்கு இரண்டு அடிகளும், மூன்றாவதாக நின்ற மாணவனுக்கு அதே அடிகளும் கிடைத்தன. நான்காவதாக நின்றிருந்தவன் ஜமீந்தாரின் மருமகன். அவனைப் பார்த்ததும் ஆசிரியரின் முகத்திலிருந்த் கோபம் சற்று குறைந்தது. அவர் அன்பு பொங்கக் கேட்டார்: ‘‘குழந்தை... நீ சத்தம் போட்டியா?”

‘‘ம்...” - அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

‘‘இனிமேல் இப்படி சத்தம் போடக்கூடாது. இந்தப் பசங்ககூட நீ சேராதே”- இப்படி ஒரு அறிவுரையும் அன்புடன் ஒரு தடவலும் கொடுத்துவிட்டு ஆசிரியர் அடுத்து நின்றிருந்த மாணவனைக் கையை நீட்டச் சொன்னார். அவன் கையை நீட்டினான். அவனுக்கு அவர் இரண்டு அடிகள் கொடுத்தார்.

முற்றத்தில் நின்றிருந்த பப்பு வராந்தாவிற்கு வேகமாகப் பாய்ந்து வந்தான். ‘‘அடிக்காதீங்க...” அவன் உரத்த குரலில் கத்திக் கொண்டே வகுப்பறைக்குள் வேகமாக வந்தான்.

‘‘ச்சீ! வெளியே போடா!” - ஆசிரியர் பப்புவைப் பார்த்துச் சொன்னார்.

‘‘இனி அடிக்கக் கூடாது. இனி யாரையும் தொடக்கூடாது” - அவனுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறந்தது.

‘‘அடிச்சா நீ என்ன செய்வேடா? அடிக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாருடா?”

‘‘அந்தப் பையனை மட்டும் நீங்க ஏன் அடிக்கல? அவனும் எங்களை மாதிரி தப்பு பண்ணினவன்தானே?”

‘‘எனக்கு எல்லாம் தெரியும். அதைக் கேட்க நீ யாருடா? போடா... போடா... வெளியே...” அவர் பப்புவின் கழுத்தைப் பிடிப்பதற்கு முயன்றார்.

பப்பு முன்னோக்கி வேகமாக வந்தான்: ‘‘என்னைத் தொட்டா...” அந்தச் சிறு சிங்கத்தின் கர்ஜனை அந்த ஆசிரியரை அதிர்ச்சியடையச் செய்தது. அநியாயத்தில் அதிகாரச்சக்தி நியாயத்தின் ஆத்ம சக்திக்கு முன்னால் தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. பப்பு நண்பர்கள் பக்கம் திரும்பிச் சொன்னான்: ‘‘நாம யாரும் இனிமேல் இங்கே படிக்கக்கூடாது. இங்கே எல்லாம் ஆள் பார்த்து நடக்குது. ஒருத்தருக்கு ஒரு மாதிரி இன்னொருத்தருக்கு வேற மாதிரின்னு....”

அவன் திரும்பி வெளியே நடந்தான். வராந்தாவில் நின்றவாறு அவன் திரும்பிப் பார்த்தான். ஆசிரியர் கோபத்தால் கண்களை அகல விரித்து வைத்துக்கொண்டு நின்றிருந்தார். மாணவர்கள் அவருக்கு முன்னால் தலையைக் குனிய வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர்கள் யாரும் அவனுடன் வெளியே செல்லத் தயாராக இல்லை.

‘‘நீங்க எல்லாரும் நாய்கள்டா... நாய்கள்” என்று சொல்லியவாறு அவன் அங்கிருந்து ஓடினான்.

அந்தச் சம்பவத்தை ஜமீந்தார் அறிந்தார். அவருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. அவர் பப்புவின் தந்தையை உடனே வீட்டிற்கு வரவழைத்தார். ‘‘உன் மகன் ஒரு அதிகப் பிரசங்கி. அவனை இனிமேல் நீ வீட்டுக்குள்ளே நுழையவிடக் கூடாது. சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது” என்று அவனுக்கு அவர் கட்டளையிட்டார்.

ஜமீந்தார் சொன்னபடி நடக்கவில்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும். அவன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியிடம் பப்புவை வீட்டிற்குள் விடக்கூடாது என்றும், சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது என்றும் சொன்னான்.


எவ்வளவு பெரிய தவறான செயலுக்கும் மன்னிப்பு தரும் ஒரு நீதிமன்றம் இருக்கத்தான் செய்கிறது. அது - தாயின் இதயம்.

வீட்டிற்கு வராமல் ஒளிந்து திரிந்த பப்புவிற்கு அவனுடைய தாய் யாருக்கும் தெரியாமல் சோறு தருவாள். இரவில் அவன் பதுங்கியவாறு சமயலறை வாசலில் வந்து நிற்பான். அவன் தாய் அவனுக்குச் சாதம் கொடுப்பாள். அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி விடுவான். சில நாட்கள் கடந்த பிறகு, அவனுடைய தந்தைக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. ஆனால் அவன் அதைத் தெரிந்துகொண்ட மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்குள் நுழையவிடாமல் தண்டிக்கப்பட்ட மகனுக்குத் தாய் யாருக்கும் தெரியாமல் உணவு கொடுத்தால், அதற்காக எந்த ஒரு தந்தையும் சந்தோஷப்படத்தான் செய்வான்.

பள்ளிக்கூடத்திலிருந்து ஓடிப்போன பப்பு தன் நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து அறிவுரைகள் சொன்னான்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாகுபாடாக நடந்து கொள்வதைப் பற்றி அவன் ஒரு சொற்பொழிவே ஆற்றினான். அவர்களில் சிலரின் மரியாதையை அதன் மூலம் அவன் பெற்றான். தொடர்ந்து நான்கைந்து நாட்கள் முயற்சி செய்ததில் அவன் ஏழு பேர்களின் மனதை மாற்றினான். அவர்கள் ஏழு பேரும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே போகவில்லை. அவர்களும் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். அவர்களுக்கும் அவர்களின் அன்னைமார்கள் இருந்ததால், சாப்பாட்டிற்குப் பிரச்சினைகள் எதுவும் உண்டாகவில்லை.

அந்தக் கிராமத்திலிருந்த மலையின் உச்சியில் அடுத்தடுத்து இரண்டு மாமரங்களும், நடுவில் ஒரு பாறையும் இருந்தது. பப்புவும் அவனுடைய ஏழு நண்பர்களும் பகல் நேரம் முழுவதும் அங்குதான் இருப்பார்கள். அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்க்கும் பையன்கள் சிலரையும் கூட உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டார்கள்.

பப்புதான் தலைவன். அவன் பாறையில் ஏறி இடது காலின் மீது வலது காலை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பான். மற்றவர்கள் புற்களின் மீது உட்கார்ந்திருப்பார்கள்.

ஒரு நாள் பப்புவின் நண்பர்களில் ஒருவனான கொச்சுநாணு அவனுடைய வீட்டிலிருந்த மாமரத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் மாங்காய்களைத் திருடி எடுத்துக் கொண்டு வந்தான். சிறிது உப்பும், மிளகாய் பொடியும் சேர்த்து அந்த மாங்காய்களை அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து தின்றார்கள். அடுத்த நாளும் மாங்காய் கொண்டுவர வேண்டுமென்று பப்பு உத்தரவிட்டான். கொச்சு நாணு யாருக்கும் தெரியாமல் மாங்காய் பறிக்கச் சென்றபோது அவனுடைய தந்தை அவனைப் பார்த்து பலமாக அடித்து விட்டார்.

அந்தச் சம்பவம் சிறுவர்கள் கூட்டத்தில் பெரிய கோபக் கனலை உண்டாக்கியது. அடி உண்டாக்கிய தடங்களை பப்புவிடம் காட்டியபோது, கொச்சுநாணு வாய் விட்டு அழுதுவிட்டான். அதற்குப் பதிலடி கொடுப்பது மாதிரி ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்று எல்லோரும் ஒருமித்த குரலில் கருத்துச் சொன்னார்கள். பப்பு கேட்டான்: ‘‘கொச்சு நாணு, உன் வீட்டுல எத்தனை மாமரங்கள் இருக்கு?”

‘‘ஆறு”

‘‘எல்லா மரங்கள்லயும் மாங்காய்கள் இருக்கா?”

‘‘ஆமா...”

‘‘அப்பிடியா? அந்த மாங்காய்கள் எல்லாவற்றையும் இன்னைக்கு ராத்திரி நாம பறிச்சிடணும்” - அதுதான் பப்புவின் கட்டளையாக இருந்தது.

அன்று இரவே அந்தக் கட்டளை நிறைவேற்றப்பட்டது. கொச்சு நாணுவின் தந்தைக்கு எல்லா விஷயங்களும் புரிந்தன. அவன் பப்புவின் வீட்டிற்குச் சென்று அவனுடைய தந்தையிடம் சொன்னான்: ‘‘உன் மகனை ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்லாட்டி அவனோட கழுத்தை நான் ஒடிச்சிடுவேன்.”

‘‘என்ன? என்ன விஷயம்?” - பப்புவின் தந்தை கேட்டான்.

‘‘மரத்துல இருந்த மாங்காய்கள் முழுவதையும் அவனும் அவனோட நண்பர்களும் சேர்ந்து பறிச்சிட்டுப் போயிட்டாங்க. என் மகனைப் பாழாக்கினதே அவன்தான்!”

“அவன் விஷயமா என்கிட்ட எதையும் பேச வேண்டாம். புகையிற விறகை வீசி தெருவுல எறிஞ்சிடணும்ன்றது என் கொள்கை. அவனை நான் வீட்டுக்குள்ளே நுழைய விடுறதே இல்ல. எதையும் தர்றதும் இல்ல” - அவன் பொறுப்பேற்றுக் கொள்வதிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டான்.

பப்புவின் சிறுவர்கள் கூட்டம் அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. அவர்களைப் பிரிப்பதற்கும், பப்புவை அடிப்பதற்கும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஒன்று கூட பலிக்கவில்லை.

ஜமீந்தாரின் மூத்த மகன் இரவு நேரங்களில் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருப்பான். இளம் பெண்கள் இருக்கக் கூடிய வீடுகள் அவனுக்குக் கோவில் மாதிரி. பப்புவின் சிறுவர்கள் கூட்டம் அவனுக்கு ஒரு தொந்தரவான விஷயமாக இருந்தது. அவன் இரவு நேரங்களில் எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் அந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் கூட்டம் வெளியே நின்று கூக்குரல் எழுப்பி அந்த இடத்தையே ஒரு வழி பண்ணி விடுவார்கள். இல்லாவிட்டால் கற்களை எடுத்து எறிவார்கள். அவனுடைய இரவு நேர நடமாட்டத்திற்கு மிகப் பெரிய தடையாக இருக்கக் கூடிய அந்தச் சிறுவர்கள் கூட்டத்தை அடக்கியே ஆக வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். இரண்டு வேலைக்காரர்களும் அவனும் சேர்ந்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்த ஒவ்வொரு சிறுவனையும் தனித்தனியாக பிடித்து நன்றாக உதைத்தார்கள். சில சிறுவர்களை வீட்டில்  கட்டி வைக்கும்படி அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் சொன்னார்கள். மலைமீது இருந்த இரண்டு மாமரங்களையும் அவர்கள் வெட்டி விட்டார்கள்.

கடைசியில் பப்புவிற்கு வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அவனுடைய நண்பர்களில் சிலர் வீட்டில் கட்டப்பட்டுக் கிடந்தார்கள். வேறு சிலர் பயந்து போய் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை. எனினும், அவன் தான் மட்டும் தனியே தலையை உயர்த்திக் கொண்டு ஒற்றையடிப் பாதைகள் வழியாகவும் வயலின் வரப்புகளிலும் நடந்து திரிந்தான். அவன் மலையின்மீது ஏறி சுற்றிலும் பார்த்தவாறு நின்றிருப்பான். அந்தக் கிராமத்தில் தனக்கு ஒத்துவராத பல விஷயங்களையும் அவன் பார்க்கத்தான் செய்தான். அவற்றை எதிர்த்து நிற்க அவன் துடிப்பான். அந்த நேரங்களில் முஷ்டியை மடக்கி வைத்துக் கொண்டு காற்றில் வேகமாக வீசுவான்.

ஒரு காலை நேரத்தில் வயலின் கரை வழியாக அவன் அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான். காலை வேளையின் பொன் நிறமும் காற்றில் சாய்ந்தாடிக் கொண்டிருந்த நெற்கதிர்களும் பறவைகளின் பாடல்களும் பப்புவின் மனதில் சந்தோஷமான ஒரு சூழ்நிலையை உண்டாக்கின. அவனுடைய அன்னை பாடக்கூடிய ஒரு பாடலைப் பாடியவாறு அவன் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். ஜமீந்தாரின் மூத்த மகன் அப்போது எதிரில் வந்து கொண்டிருப்பதை அவன் பார்க்கவில்லை. அந்த ஆள் வயலின் கரையிலிருந்த ஒரு பலா மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டான். பப்பு அருகில் வந்ததும அவன் சடாரென்று அவனுக்கு முன்னால் வேகமாக வந்து நின்று அவனை ஓங்கி ஒரு அடி அடித்தான்.


பப்புவின் தலை சுற்றுவதைப் போல் இருந்தது. மூன்று நான்கு நிமிடங்கள் அவன் செயலற்று சிலையென நின்றிருந்தான். அடுத்த நிமிடம் அவனுடைய கை உயர்ந்தது.

‘‘உனக்குப் படமெடுக்கவும் தெரியுமாடா சின்னப் பாம்பே?” அந்த ஆள் பப்புவின் நெஞ்சின்மீது ஓங்கி மிதித்தான். பப்பு மல்லாக்கப் போய் விழுந்தான். அந்த ஆள் அங்கிருந்து நீங்கினான்.

பப்பு அந்த இடத்தை விட்டு எழுந்தபோது அவனை அடித்த அந்த ஆள் தூரத்தில் போய்விட்டிருந்தான். பப்பு சிறிது நேரம் அவன் போன திசையை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். வயலில் நின்றிருந்த நெற்கதிர்கள் அப்போதும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ஜமீந்தாரின் கறுப்பு நிறப் பசு வயல் வரப்பில் மேய்ந்து கொண்டிருந்தது. பப்பு ஓடிச் சென்று பசுவை அவிழ்த்து விட்டான். அடுத்த நிமிடம் அது வயலுக்குள் குதித்துக் கொண்டு இறங்கியது. பப்பு அதற்குப் பிறகு சுற்றிலும் பார்த்தான். அவனுக்குள் பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சி மேலும் உயர்ந்து கொண்டிருந்தது. தூரத்தில் இன்னொரு பசு மேய்ந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அந்தப் பசுவையும் அவிழ்த்து வயலுக்குள் விட்டான். இப்போது அவன் வயலைப் பார்த்தவாறு பற்களைக் கடித்துக் கொண்டே சொன்னான்: ‘‘எல்லாம் நாசமாகட்டும்.”

ஒரு புலையச் சிறுவன் கல்லை விட்டெறிந்து பசுக்களை வயலிலிருந்து விரட்டுவதற்காக முயன்றான். பப்பு அவனுடைய கன்னத்தில் இரண்டு அடிகள் கொடுத்தான். அவ்வளவுதான் - அந்தச் சிறுவன் அழுதுகொண்டே அங்கிருந்து ஓடினான்.

தூரத்தில் ஒரு மிகப் பெரிய ஆரவாரம் கேட்டது. ஜமீந்தாரின் வேலைக்காரர்கள் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். பப்பு அப்போதும் வயலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். ‘‘எல்லாம் நாசமாகட்டும்.”

‘‘அவனைப் பிடிங்கடா...” ஒரு பணியாள் உரத்த குரலில் சொன்னான்.

பப்பு அந்த இடத்தில் நின்றுகொண்டே திரும்பிப் பார்த்தான். அடுத்த நிமிடம் அங்கிருந்து அவன் ஓடினான். அதற்குப் பிறகு அவன் அந்த கிராமத்தில் கால் வைக்கவே இல்லை.

2

கரம் பப்புவிற்குப் புதுமையான ஒன்றாக இருந்தது. அகலமான தெருக்கள், உயர்ந்த கட்டிடங்கள், கார்கள், புகைவண்டிகள், மின் விளக்குகள் என்று பல விஷயங்களையும் பார்த்து அவன் திகைத்துப் போய் நின்றான். பகல் முழுவதும் நடந்து கிட்டத்தட்ட மாலை நேரம் நெருங்கிய நேரத்தில் அவன் நகரத்தை அடைந்தான். வரும் வழியில் இரண்டு தடவை அவன் பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்தான். அதற்குப் பிறகு பசியையும் தாகத்தையும் மறந்து அவன் பலவிதப்பட்ட காட்சிகளையும் பார்த்தவாறு சுற்றித் திரிந்தான்.

பசியும் களைப்பும் அதிகமானவுடன் அவன் ஒரு கடையின் வாசலில் போய் உட்கார்ந்தான். தனக்குத் தெரிந்த ஒரு முகத்தைக் கூட அவனால் பார்க்க முடியவில்லை. நகரத்திற்கு அவன் வந்திருக்கும் விஷயம் ஒரு மனிதனின் கவனத்தைக் கூட திருப்பவில்லை என்பதே உண்மை. அவன்மீது ஒரு பரிதாபப் பார்வை கூட யாராலும் செலுத்தப்படவில்லை. அந்தக் கடையின் வாசலில் பிச்சைக்காரர்கள் பலரும் இடம் பிடித்திருந்தார்கள். அவனும் அவர்களில் ஒருவனாக இருந்தான். உடம்பில் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக அவன் தன்னை மறந்து உறங்கிவிட்டான். நகரத்திற்கு வந்த அவனுடைய முதல் இரவில் அவன் உணவே இல்லாமல் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் ஓருவனாக இருக்க வேண்டிவந்தது.

அடுத்த நாள் காலையில் அவன் அங்கிருந்து எழுந்து நடந்தான். அவன் வேலை தேடி அலைந்தான். ஆனால், அவன் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. என்ன வேலை வேண்டும் என்றோ என்ன வேலை தன்னால் செய்ய முடியும் என்றோ அவனுக்கே தெரியாது. யாரிடம் அதைப் பற்றி கேட்க வேண்டுமென்றும் எப்படிக் கேட்பது என்றும் அவனுக்கே தெரியாது.

நடந்து நடந்து அவன் புகைவண்டி நிலையத்தை அடைந்தான். அவனுடைய வயதில் இருக்கும் சில சிறுவர்கள் ஒரு இடத்தில் பீடி பிடித்தவாறு விளையாட்டாகப் பல விஷயங்களையும் பேசி உரத்த குரலில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பப்பு சற்று தூரத்தில் அவை ஒவ்வொன்றையும் பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தான்.

தூரத்தில் புகைவண்டியின் விசில் சத்தம் கேட்டது. ‘‘வண்டி வந்திருச்சுடா... வண்டி வந்திருச்சு...” ஒருவன் உரத்த குரலில் சொன்னான்.

அடுத்த நிமிடம் எல்லோரும் அந்த இடத்தைவிட்டு எழுந்து, பிளாட்ஃபாரத்தை நோக்கி வேகமாக ஓடினார்கள். ‘‘கூலி.... கூலி...” என்று சத்தம் போட்டுக் கூறியவாறு அவர்கள் பயணிகளுக்கு நடுவில் ஓடினார்கள். சிறிது நேரம் சென்றதும் அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு சுமையைச் சுமந்தவாறு பயணிகளின் பின்னால் நடக்க ஆரம்பித்தார்கள். பப்புவும் ப்ளாட்ஃபாரத்தை நோக்கி நடந்தான். ஒரு இளைஞன் பெட்டியையும் படுக்கையையும் முன்னால் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். ‘‘நான் இதை எடுக்கட்டுமா?” அவன் அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டான். அந்த இளைஞன் அதற்குச் சம்மதித்தான்.

அந்தச் சுமைக்கு இரண்டு அணாக்கள் கூலியாகக் கிடைத்தன. பப்பு அந்தக் காசுடன் ஒரு தேநீர்க் கடையைத் தேடிச் சென்றான். தேநீரும் பலகாரமும் வாங்கி தின்றான். அதற்குப் பிறக அவன் மீண்டும் புகை வண்டி நிலையத்தை நோக்கி நடந்தான்.

ஒரு புதிய கூலியாள் அங்கு நின்று கொண்டிருப்பது மற்ற கூலியாட்கள் விரும்பக் கூடிய ஒரு விஷயமாக இருக்கவில்லை. அவர்களில் ஒருவன் பப்புவைப் பார்த்துக் கேட்டான்: ‘‘நீ யார்டா?”

அந்தக் கேள்வியில் இருந்த அதிகாரத் தொனி பப்புவிற்குச் சிறிதும் பிடிக்ககில்லை. எனினும் அதை அவன் பொறுத்துக் கொண்டு சொன்னான்: ‘‘நான் தூர இடத்துல இருந்து வந்திருக்கேன்.”

‘‘நீ எதற்கு இங்கே வந்தே?”

‘‘சும்மாதான்”

‘‘சும்மா வந்தவனுக்குப் புகைவண்டி நிலையத்துல என்ன வேலை?”

அதைக் கேட்டு பப்புவால் வெறுமனே இருக்க முடியவில்லை. அவன் கேள்வி கேட்ட ஆளைப் பார்த்துக் கேட்டான்: ‘‘உனக்கு இங்கு என்ன வேலை?”

அந்த ஆளுக்கு அதைக் கேட்டு பயங்கரமாகக் கோபம் வந்தது. அவன் கேட்டான்: ‘‘நீ யார்டா என்னைப் பார்த்து அதைக் கேக்கறதுக்கு?”

அடுத்த நிமிடம் அவன் முன்னோக்கி நடந்து வந்து பப்புவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான்.

அடியை வாங்கிக் கொண்டு பப்பு வெறுமனே இருக்கவில்லை. அவன் தன் கையை சுருட்டி வைத்துக் கொண்டு ஒரு அடி கொடுத்தான். அடி எதிரில் நின்றிருந்த மனிதனின் மூக்கில் விழுந்தது. அடியை வாங்கிய அடுத்த நிமிடம் அவன் தலை சுற்றிக் கீழே விழுந்தான். அவனுடைய நண்பர்கள் ஓடி வந்து அவனைத் தரையிலிருந்து எழுப்பினார்கள். பப்பு அப்போதும் அலட்சியமாக அந்த இடத்தில் நின்று கொண்டுதான் இருந்தான்.


எல்லாரும் சேர்ந்து பப்புவைத் தாக்குவதற்காகத் தயாரானார்கள்.

பப்பு தான் நின்றிருந்த இடத்தைவிட்டு சிறிதும் அசையவில்லை. அவன் தன் கையைச் சுருட்டிக் காட்டியவாறு சொன்னான்: ‘‘என்னைத் தொட்டா, உங்க எல்லாருடைய மூக்குகளையும் ஒரு வழி பண்ணிடுவேன்.”

அவன் அப்படிச் சொன்னதும் அவர்கள் ஒரு மாதிரி ஆகி விட்டார்கள். பப்புவிடம் அதற்கு மேலும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அவர்கள் யாரும் தயாராக இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட தோல்வியடைந்தவர்கள் மாதிரி ஆகிவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் யாரும் அவன் நின்று கொண்டிருக்கும் இடத்திற்குப் போகவில்லை. அவனை அவர்கள் பார்க்கவும் இல்லை. அவர்கள் அவனைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பது மாதிரி காட்டிக் கொண்டார்கள். அவனும் அவர்களைப் பார்க்காதது மாதிரி காட்டிக் கொண்டான்.

அதற்குப் பிறகும் புகை வண்டி வந்தது. பப்பு ப்ளாட்ஃபாரத்திற்குச் சென்று ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்றான். எல்லாரும் சுமைகளைத் தூக்கிக் கொண்டு சென்ற பிறகு அவனுக்கும் ஒரு சுமை கிடைத்தது. ஒவ்வொரு முறை வண்டி வரும்போதும் அவனுக்கு ஒரு சுமை கட்டாயம் கிடைத்தது. மதிய நேரம் அவன் ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டான். சாயங்காலம் தேநீர் அருந்தினான். இரவு நேரம் வந்ததும் புகை வண்டி நிலையத்திலேயே ஒரு பெஞ்சில் படுத்து அவன் தூங்க ஆரம்பித்தான்.

மறுநாள் கூலியாட்கள் ஒவ்வொருவராக பப்புவைத் தேடி வந்து அன்பு காட்ட ஆரம்பித்தார்கள். பப்பு அவர்களிடம் அன்புடன் நடந்தான். ஒவ்வொருவரும் தங்களைப்பற்றியும், தங்களின் ஊர்களைப் பற்றியும் அவனிடம் சொன்னார்கள். கடைசியில் தங்களில் ஒருவனாக பப்புவை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அன்று மாலை நேரம் ஆனபோது, பப்பு அவர்களின் தலைவனாக ஆனான்.

புகை வண்டி நிலையத்தில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாரின் மீது மற்றவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள். ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து போர்ட்டர் வரை உள்ள இரயில் பணியாளர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், வெற்றிலைப் பாக்கு கடைக்காரர்கள் ஆகிய எல்லோரின் கட்டளைகளையும் ஏற்று நடக்க வேண்டியது சுமை தூக்குபவர்களின் கடமை என்பது பொதுவான நியதியாக இருந்தது. அது மட்டுமல்ல- அவ்வப்போது மற்றவர்களின் அடி - உதைகளையும், திட்டுதல்களையும் கூட அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் நடைமுறையில் இருந்தது. பப்புவின் நரம்புகளில் அடிமைத்தனத்தின் ஒரு சிறு அணுவிற்குக் கூட இடமில்லாமல் இருந்தது.

மற்ற கூலி வேலை செய்பவர்கள் யார் என்ன திட்டினாலும் கேட்டுக்கொள்வார்கள். மற்றவர்கள் அடி, உதை கொடுத்தால் கூட வாங்கிக்கொள்வார்கள். அவை எல்லாம் அவர்களுக்கு ஒரு சாதாரண விஷயமாக  இருந்தது. அதை அவர்கள் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார்கள்.

மற்றவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவதையும் அடிமைத்தனமாக நடத்துவதையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று பப்பு அவர்களிடம் சொன்னான். அவர்களுக்கு அதைப் புரிந்துக் கொள்வது கூட கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது. சுமைகளைச் சுமந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் வயது குறைந்த பையன்கள் தங்களைவிட வயது அதிகமான மனிதர்களை எதிர்த்து நிற்பதா? அவர்களில் ஒருவன் சொன்னான்: ‘‘அவர்களை எதிர்த்தா, அதற்குப் பிறகு நாம இங்கே நுழையவே முடியாது.”

இன்னொரு ஆள் சொன்னான்: ‘‘அவர்கள் நம்ம தலையை உடைச்சிட்டுதான் வேற வேலையைப் பார்ப்பாங்க.”

‘‘அவர்களை எதிர்த்தா, பசி எடுக்கறப்போ நாம என்ன செய்யிறது?”- இப்படி வேறொருவன் கேட்டான்.

அந்த வகையில் தலைவனுக்கும் அவனைப் பின்பற்றுபவர்களுக்கு மிடையில் கருத்து வேறுபாடு உண்டானது. எனினும், பப்பு அவர்களுக்குக் கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறிக் கொண்டுதான் இருந்தான். நீண்ட நாட்களாக முயற்சி செய்ததற்குப் பிறகு, அவனுக்கு ஒரு நண்பன் கிடைத்தான். அவன் பெயர் மக்கார். தங்களை யாரும் மரியாதைக் குறைவாக நடத்தினால், பதிலுக்கு அவர்களை மரியாதைக் குறைவாக நாம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் இருவரும் வந்தனர்.

ஒரு நாள் புகை வண்டி நிலையத்தில் இருந்த வெற்றிலை, பாக்கு கடைக்காரன் கடை வீதியிலிருந்து ஒரு சுமையைத் தூக்கிக் கொண்டு வரும்படி மக்காரிடம் சொன்னான். அதற்குக் கூலி கேட்டதற்கு, அவன் மக்காரிடம் சண்டை போட ஆரம்பித்துவிட்டான். பயணிகளிடம் கூலி கேட்பதை போல, தன்னிடம் கூலி கேட்டது தன்னைக் கேவலப்படுத்தியது மாதிரி ஆகிவிட்டது என்றான் அவன். கடனாக இரண்டு பீடிகள் வாங்கியிருப்பதை கூலிக்குப் பதிலாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவன் சொன்னான். போலீஸ்காரன் ஒரு பீடியை  எடுத்துப் பற்ற வைத்தவாறு வெற்றிலை, பாக்குக் கடைக்காரனுக்கு ஆதரவாகப் பேசினான். கூலி வாங்காமல் தான் அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை என்றான் மக்கார். அவ்வளவுதான்- வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் அவனை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்ட ஆரம்பித்துவிட்டான். மக்காரும் பதிலுக்கு வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் பேசினான். அப்போது மக்காருக்கு ஆதரவாக அங்கு வந்து சேர்ந்தான் பப்பு. சண்டை பெரிதானது. வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் மக்காரின் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். பப்பு அருகில் கிடந்த ஒரு மரத்துண்டை எடுத்து வெற்றிலை, பாக்குக் கடைக்காரரின் முழங்காலில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான். அந்த ஆள் பப்புவின் பக்கம் திரும்பினான். அந்தத் தருணம் பார்த்து மக்கார் கடைக்குள்ளிருந்து ஒரு இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு வந்து கடைக்காரன் முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டான். அவ்வளவுதான், அடுத்த நிமிடம் அடி தாங்காமல் வெற்றிலை, பாக்குக் கடைக்காரன் கீழே விழுந்தான். பப்புவும் மக்காரும் அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.

மக்கார் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கு அவனுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள். அவனுடைய வாப்பா ஒரு பீடி தொழிலாளியாக இருந்தான். இலை வெட்டவும், பீடி சுற்றவும் அவன் சிறிது தெரிந்து வைத்திருந்தான். அவன் பப்புவையும் அழைத்துக் கொண்டு நகரத்தின் எல்லையிலிருந்த ஒரு பீடிக் கடைக்குச் சென்றான். மக்காரின் வாப்பாவை மனதில் நினைத்து அவனுக்கு வேலை போட்டுத் தருவதாக பீடிக்காரன் சொன்னான். பப்புவிற்கும் சேர்த்து வேலை தரவில்லையென்றால் தனக்கு அந்த வேலை வேண்டவே வேண்டாமென்று மக்கார் பிடிவாதகமாகச் சொல்லிவிட்டான். கடைசியில் பீடிக் கடைக்காரன் பப்புவிற்கும் வேலை கொடுத்தான்.

இரண்டு மாதங்களில் மக்கார் பப்புவிற்கு இலை வெட்டுவதற்கும் பீடி சுற்றுவதற்கும் கற்றுத் தந்தான். நான்கரை மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு வேலை பார்த்தார்கள். அதற்குள் பப்புவிற்கு அந்த வேலையில் வெறுப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டது. எப்போதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் அந்த வேலை பப்புவிற்குப் பிடிக்காமல் போய்விட்டது.


சுதந்திரமான, போராட்டங்கள்  நிறைந்த வாழ்க்கையையே அவன் விரும்பினான். மக்கார் அந்த வேலையில் இருந்து விடுபட்டு வர மறுத்ததால், பப்பு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அதற்குப் பிறகு பப்புவிற்கு சோடா தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. சோடாவை நிறைப்பது, வாடிக்கையாளர்களுக்கு சோடாவைக் கொண்டு போய் கொடுப்பது - இதுதான் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலை. அது பப்புவிற்கு விருப்பமான வேலையாக இருந்தது. ஆனால், மேனேஜர் மிகவும் கருமியாக இருந்ததால் சம்பளம் குறைவாகவே கிடைத்தது. மிகவும் சிக்கனமாக இருந்தால்தான் வாழ்க்கையையே நடத்த முடியும் என்றொரு நிலை அங்கு இருந்தது. எனினும், ஏழு மாத காலம் அங்கு அவன் தாக்குப் பிடித்தான்.

அந்தச் சமயத்தில் சணல் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியின் உதவியால் அவனுக்கு அந்தத் தொழிற்சாலை மேஸ்திரியின் அறிமுகம் கிடைத்தது. அந்த ஆள் சிபாரிசு செய்ததன் பலனாக அவனுக்கு அந்தத் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வேலை செய்து மிகவும் அடக்க ஒடுக்கமான ஒரு வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்துடன்தான் அவன் தொழிற்சாலைக்குள் நுழைந்தான். ஆனால், முதலாளியிலிருந்து மேஸ்திரி வரை அவர்கள் செய்த கொடுமைகள் அவனுக்குள் ஒளிந்திருந்த எதையும் எதிர்த்து நிற்கும் மனிதனை உசுப்பேற்றி விட்டன. மற்றவர்களை நசுக்க முயல்பவனின் காற்பாதத்தை நக்கும் கோழைத்தனத்தைப் பார்த்து அவன் வெகுண்டெழுந்தான்.

ஒருநாள் சிறுநீர் கழிப்பதற்காகச் சென்ற ஒரு தொழிலாளி திரும்பி வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டது என்ற காரணத்தை வைத்துக் கொண்டு அந்த  மனிதனை மேஸ்திரி அடித்து விட்டான். அவன் அடி வாங்கிவிட்டு வெறுமனே அழுது கொண்டு நின்றிருந்தான். அடிமைத்தனத்தின் அந்தக் கண்ணீரைப் பார்த்து பப்புவின் குருதி கொதித்தது. அவன் அந்தத் தொழிலாளியை மேஸ்திரிக்கு முன்னாலேயே கடுமையான வார்த்தைகளால் திட்டினான். பப்பு உரத்த குரலில் சொன்னான்: ‘‘நீங்க எல்லாரும் நாய்கள்டா. மிதிக்கிற கால்களை நக்குகிற நாய்கள்டா நீங்க.”

அடுத்த நிமிடம் மேஸ்திரி பப்புவைப் பார்த்து கத்தினான்: ‘‘உன்னை மிதிச்சா, நீ என்ன செய்வேடா நாயே?”

‘‘நான் என்ன செய்வேன்றதை மிதிக்கறப்போ பார்க்கலாம்டா, நாயே!”

ஒவ்வொரு நாளும் ஏராளமான தொழிலாளிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசக் கூடிய நாக்கு மேஸ்திரியின் நாக்கு. அந்த நாக்கு பப்புவிற்கு முன்னால் செயலற்று நின்றுவிட்டது. அவன் சிறிது நேரம் பப்புவையே வெறித்துப் பார்த்தவாறு அதே இடத்தில் நின்றிருந்தான். பிறகு அவன் மேனேஜரின் அறையை நோக்கிச் சென்றான்.

அடுத்த நாள் சம்பளம் கொடுக்கும் நாள் தொழிலாளிகள் ஒவ்வொருவராகச் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போனார்கள். எல்லோரையும் விட கடைசியாகத்தான் பப்புவிற்குச் சம்பளம் கிடைத்தது. அவனுடைய கணக்குப்படி வாரத்திற்கு நான்கே முக்கால் ரூபாய். அவனுக்கு சம்பளம் வரவேண்டும். அவனுக்கு இரண்டே முக்கால் ரூபாய்தான் சம்பளமாகத் தரப்பட்டது.

அவன் க்ளார்க்கைப் பார்த்துக் கேட்டான்: ‘‘இது என்ன? எனக்கு முழு சம்பளத்தையும் தரணும்.”

‘‘முழுசையும் தந்தாச்சே!”

‘‘எனக்கு வரவேண்டிய சம்பளம் நாலே முக்கால் ரூபாய். இதுல ரெண்டே முக்கால் ரூபாய்தான் இருக்கு.”

‘‘ரெண்டு ரூபாய் அபராதம் போட்டிருக்கு.”

‘‘எதுக்கு?”

‘‘எதுக்குன்னு மேனேஜர்கிட்ட போயி கேளு.”

‘‘சரி... நான் கேக்குறேன்” - அவன் மேனேஜரின் அறையை நோக்கி வேகமாக ஓடினான்.

அவனை காவலாளி தடுத்தான்.

‘‘தள்ளி நில்லு... எனக்கு ஏன் அபராதம் போட்டாங்கன்னு கேட்கணும்”- அவன் அறைக்குள் நுழைய முயன்றான். காவலாளி அவனுடைய கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான். அடுத்த நிமிடம் பப்பு காவலாளியை ஓங்கி ஒரு அடி அடித்தான். அவ்வளவுதான் - மேஸ்திரிமார்களும் க்ளார்க்குகளும் அங்கு ஓடி வந்தார்கள். அவர்கள் எல்லோரின் கைகளும் பப்புவின் உடம்பை ஒரு வழி பண்ணின. அவன் சுயநினைவை இழந்து கீழே விழுந்தான்.

சுயநினைவு திரும்ப வந்தபோது, தனக்கு முன்னால் ஒரு போலீஸ்காரன் நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் பப்புவைப் பிடித்து இழுத்தவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

3

ரு வருடமும் இரண்டு மாதங்களும் கடந்த பிறகு பப்பு சிறையிலிருந்து திரும்பி வந்தான். அவனை வரவேற்பதற்கு யாரும் வரவில்லை. அவனுடைய சுதந்திர உணர்ச்சியை யாரும் பாராட்டவில்லை. அது எதையும் அவன் எதிர்பார்க்கவுமில்லை. கயிறு தொழிற்சாலையின் வாசலுக்கு சென்று அவன் கம்பீரமாகத் தலையை உயர்த்திக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான். அவனுடைய நண்பர்கள் தொழிற்சாலைக்குள் போய்க் கொண்டிருந்த நேரமது. அவர்கள் யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் யாரும் அவனை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. ஆண்மைத்தனமும், அன்பும் வெளிப்படும் அந்தக் கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பதற்கான தைரியம் அவர்கள் யாருக்கும்  இல்லை. ஒருவகை குற்ற உணர்வால் உந்தப்பட்ட அவர்கள் தலையைக் குனிந்துக்கொண்டே உள்ளே போனார்கள்.

அவன் அங்கிருந்து மெதுவாக நடந்தான். அடுத்த நேர உணவைப் பற்றிய சிந்தனை மட்டுமே அப்போது அவனுக்கு இருந்தது. வாழ்க்கை என்பது அவனுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. விரக்தியின் இருண்ட நிழல் அவனுடைய முகத்தில் எந்தச் சமயத்திலும் பட்டதில்லை. எதிர்பாலத்தைப் பற்றி அவனுக்கு மிகப்பெரிய ஆர்வம் எதுவும் இல்லை. வருத்தப்படக்கூடிய அளவிற்கு ஒரு கடந்த காலமும் அவனுக்கு இல்லை. அவனுடைய வரலாற்றில் ‘நேற்று’ம் ‘நாளை’யும் இல்லவே இல்லை. அவன் ‘இன்று’ வாழ்பவன். அவன் ஒரு ரிக்ஷா வண்டியை வாடகைக்கு எடுத்தான். அதை எடுத்துக் கொண்டு அவன் நேராகப் படகுத் துறையை நோக்கிச் சென்றான். அன்று முதல் அவன் ஒரு ரிக்ஷாக்காரனாக ஆனான்.

பப்புவின் ரிக்ஷா வண்டிக்குச் சிறிதும் ஓய்வு என்பதே இல்லை. அது எல்லா நேரங்களிலும் நகரத்தின் சாலைகளில் காற்றின் வேகத்தில் வேகமாகப் போய்க் கொண்டிருப்பதை யாரும் பார்க்கலாம். ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு ஓடுவதைப் பார்த்தால், அவனுடைய கால்கள் தரையில் படுகின்றனவா, இல்லையா என்று நமக்கே சந்தேகம் வந்துவிடும். பப்புவிற்கு நடக்கவே தெரியாது என்று பொதுவாக மற்ற ரிக்ஷாக்காரர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறுவது சரிதான். அவன் ஓடி ஓடி நடப்பது எப்படி என்பதையே மறந்து விட்டான்.

வண்டியில் ஆள் ஏறி உட்கார்ந்து விட்டால் வெடிச்சத்தம் கேட்ட போர்க்குதிரையைப் போல அவன் உற்சாகமாகி விடுவான். வெயில், மழை எதைப் பற்றியும் அவன் கவலைப்படுவது இல்லை.


அவன் ஓடிக்கொண்டேயிருப்பான். இடது கையால் வண்டியை அழுத்திப் பிடித்துக் கொண்டு, வலது கையை அலட்சியமாக மணிக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு உடலை முன்னோக்கி இலேசாக வளைத்து தலையை உயர்த்தியவாறு வேகமாக அவன் பாய்ந்தோடும் காட்சி கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

புகைவண்டி நிலையத்திலும், பேருந்து நிலையத்திலும், படகுத் துறையிலும், திரையரங்கு வாசலிலும், நீதிமன்ற வாசலிலும் - இப்படி எங்கெல்லாம் ரிக்ஷா தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் பப்பு கட்டாயம் போய் நிற்பான். புகை வண்டியும் பேருந்தும் படகும் எப்போது வரும், எப்போது போகும் என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். புதிய திரைப்படங்கள் வந்தால் அது எத்தனை நாட்கள் திரையரங்கில் ஓடும் என்பதும், எத்தனை மணிக்கு அது முடியும் என்பதும் அவனுக்கு நன்கு அத்துப்படியான விஷயங்கள். நீதிமன்றத்திற்குக் காரில் பயணம் செய்யும் வக்கீல்கள் எவ்வளவு பேர் என்பதும், நடந்து செல்பவர்கள் எவ்வளவு பேர் என்பதும் ரிக்ஷாவில் பயணம் செய்கிறவர்கள் எவ்வளவு பேர் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் மற்ற ரிக்ஷாக்காரர்களைப் போல ஆட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குமங்குமாய் அலைந்து திரிவதில்லை. அலட்சியமாகச் சிரித்தவாறு ரிக்ஷாவிற்கு முன்னால் அவன் நின்றிருப்பான். அவ்வளவுதான். பப்புவின் ரிக்ஷாவில் ஒரு தடவை ஏறிய ஆள் அதற்குப் பிறகு அவனுடைய ரிக்ஷாவைத்தான் தேடுவான்.

பப்புவிற்குத் தாராளமாகப் பணம் வந்து கொண்டிருந்தது. கையில் கிடைத்த பணத்தை எல்லாம் அவன் ஒரு தேநீர்க் கடைக்காரனிடம் கொடுத்து வைத்தான். உணவு, தேநீர், படுக்கை எல்லாமே அவனுக்கு அங்குதான். அவன் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த நண்பனாக இருந்தான் அந்தத் தேநீர்க் கடைக்காரன். பப்பு கொடுக்கும் பணத்திலிருந்து அவனுடைய செலவுக்கு ஆகும் தொகையைக் கழித்து மீதி இருக்கும் பணத்தை அவன் பத்திரமாக வைத்திருந்தான்.

ஒரு நாள் தேநீர்க் கடைக்காரன் பப்புவிடம் சொன்னான்: ‘‘பப்பு, எல்லா நாட்களிலும் இதே மாதிரி ரிக்ஷாவுக்கு வாடகை கொடுத்து வருவதுன்றது நஷ்டமான ஒண்ணாச்சே?”

‘‘எனக்கென்ன நஷ்டம்? கிடைக்குற காசுல ரிக்ஷா சொந்தக்காரனுக்கு ஒரு பகுதியைக் கொடுக்குறேன் அவ்வளவுதான்.”

‘‘சொந்தத்துல ரிக்ஷா இருந்தா வாடகை தர வேண்டியது இல்லையே?”

‘‘சொந்தத்துல ரிக்ஷா வேணும்னா அதற்குப் பணம் வேண்டாமா?”

‘‘வேணும்.”

‘‘பணத்துக்கு எங்கே போறது?”

‘‘பணம் இங்கே இருக்கு.”

‘‘உனக்கு எங்கேயிருந்து பணம் வந்தது?”

‘‘நீ கொண்டு வந்து தந்ததுதான்!”

‘‘எனக்கு ஆகற செலவுக்குத்தானே நான் பணம் தந்தேன்?”

‘‘உன் செலவு போக மீதி இருக்கு!”

‘‘அது ஒரு ரிக்ஷா வாங்குற அளவுக்கு இருக்குமா என்ன?”

‘‘இருக்கும். ஒரு ரிக்ஷாவை விலை பேசி வச்சிருக்கேன். நாளைக்கு அதை நாம வாங்கலாம்.”

மறுநாள் பப்பு தன்னுடைய சொந்த ரிக்ஷாவுடன் சென்றான்.

4

மாலை நேரம். சாலை மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. கார்கள், பேருந்துகள், ஜட்கா வண்டிகள், மாட்டு வண்டிகள், ரிக்ஷாக்கள்.... புதுமையின் இளமையும் பழமையின் முதுமையும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் உரசிக் கொண்டும், வேகமாகப் பாய்ந்து கொண்டும் மெதுவாக ஊர்ந்து கொண்டும் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு நடுவில் வாழ்க்கை ததும்பி உயர்ந்து கொண்டும், பதுங்கி ஒளிந்து கொண்டும், சாய்ந்தும், சரிந்தும், சிரித்துக் கொண்டும் அழுதுகொண்டும் நீங்கிக் கொண்டிருந்தது.

பப்புவின் ரிக்ஷா பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் மத்தியில் மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. அவனுடைய வலது கை மணிக்கு அருகில் இருந்தாலும், அதை அவன் பயன்படுத்தவில்லை. வாகனங்களையும், சாலையில் நடந்து செல்வோரையும் கடந்து அவன் தன்னுடைய ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு ஓடும் காட்சி உண்மையிலேயே ஒரு அற்புதமான காட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

ரிக்ஷாவில் அமர்ந்திருப்பவர்கள் எங்கே வாகனங்களுடன் மோதி விபத்து உண்டாகிவிடப் போகிறதோ என்று பயப்படுவார்கள். சாலையில் நடந்து செல்பவர்கள் எங்கே ரிக்ஷா தங்கள் உடல்மீது வந்து ஏறி விடப் போகிறதோ என்று நினைப்பார்கள். எல்லோர் மீதும் தொட்டும் தொடாதது மாதிரியும் ரிக்ஷாவை மிகவும் அலட்சியமாக இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் கொண்டு சிரித்தவாறு பப்பு போய்க்கொண்டிருப்பான். எதைப் பார்த்தும் பயப்படாதவர்களால் மட்டுமே அதைப் பார்க்க முடியும். பப்பு எதைப் பார்த்தும் பயப்படாதவன்.

அந்த மாலை நேரத்தில் படகுத் துறையிலிருந்து புகை வண்டி நிலையத்திற்கு ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு பப்பு ஓடிக் கொண்டிருந்தான். புகை வண்டி ப்ளாட்ஃபாரத்திற்கு வந்து சேர்ந்து விட்டது. அங்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே அது நிற்கும். பப்பு பேருந்து நிலையத்தை அடைந்தான். அங்கிருந்து புகை வண்டி நிலையத்திற்கு மூன்று நிமிடங்கள் ஓட வேண்டும் புகை வண்டியில் ஏற்றி விடுவதாக அவன் பயணம் செய்யும் ஆளிடம் உறுதி அளித்திருந்தான்.

‘‘வண்டி கிடைக்குமா?”- பயணம் செய்த மனிதன் பொறுமையில்லாமல் கேட்டான். பப்பு வெறுமனே ‘‘ம்...” என்று முனக மட்டும் செய்தான். அவன் மூச்சுக்கூட விடாமல் ஓடிக்கொண்டிருந்தான்.

‘‘வண்டி புகை வண்டி நிலையத்துல எவ்வளவு நிமிடங்கள் நிற்கும்?”

பப்பு அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை.

பயணம் செய்த மனிதர் பொறுமையை இழந்து விட்டான். அவன் சொன்னான்: ‘‘வண்டி கிடைக்கும்னு தோணல.”

ரிக்ஷா திடீரென்று நின்றது. பப்பு அந்த ஆளை நோக்கித் திரும்பிச் சொன்னான்: ‘‘சார்... கொஞ்சம் பேசாம இருங்க.” தன்னுடைய வார்த்தைகளை நம்பாமல் போனது, தன்னுடைய திறமையைச் சோதித்துப் பார்த்தது. இந்த விஷயங்களை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அதற்குப் பிறகு அந்தப் பயணி எதுவும் பேசவில்லை. பப்பு கோபத்துடன் வண்டியைப் பின்னோக்கித் தள்ளிவிட்டு முன்னோக்கி ஒரு இழு இழுத்தான். வண்டிக்குப் பின்னால், ‘‘அய்யோ!” என்றொரு சத்தம் கேட்டது. உடனே அங்கு வந்து நின்றவர்களும், ‘‘அய்யோ!” என்று கத்தினார்கள். தூரத்திலிருந்தவர்கள் பப்புவின் ரிக்ஷாவை நோக்கி ஒடிவந்தார்கள். அவன் வண்டியின் கைப் பகுதியைக் கீழே வைத்து பின்னால் ஓடினான்.

ஒரு சிறுமி ஓடையில் மல்லாக்க விழுந்து கிடந்தான். அவன் வேகமாக அந்தச் சிறுமியைத் தூக்கினான். சிறுமி சுற்றிலும் திகைத்துப் போய் பார்த்தாள். ‘‘என் அரிசி... என் அரிசியெல்லாம் போச்சு...” அவள் அவனுடைய பிடியிலிருந்து விலகினாள்.

ஒரு சிறிய கூடை சற்று தூரத்தில் தரையில் சாய்ந்து கிடந்தது. அதற்குப் பக்கத்தில் கொஞ்சம் அரிசியும், மூன்று மிளகாய்களும், சிறிது உப்பும் சிதறிக் கிடந்தன.

‘‘என் அரிசி, உப்பு, மிளகாய் எல்லாம் போச்சு.”


அவள் கூடை கிடந்த இடத்தை நோக்கி ஓடினான்.

‘‘வீட்டுக்குப் போனா, அம்மா என்னை நல்லா அடிப்பாங்க” அவள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே கீழே கிடந்த அரிசியைப் பொறுக்க ஆரம்பித்தாள்.

பப்பு சிலையென அந்தச் சிறுமியைப் பார்த்தவாறு நின்றிருந்தான். கடந்த பதினெட்டு மாதங்களாக அவன் ரிக்ஷா இழுத்துக் கொண்டிருக்கிறான். இந்த மாதிரியான ஒரு சம்பவம் இப்போதுதான் முதல் தடவையாக நடக்கிறது. அந்தச் சிறுமி மீது பரிதாப உணர்ச்சி தோன்றியது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ரிக்ஷாக்காரன் என்ற நிலையில் தான் இதுவரை வாங்கியிருந்த நல்ல பெயருக்கு ஒரு களங்கம் உண்டாகி விட்டதே என்ற வருத்தமும் அவனைப் பாடாய்ப்படுத்தியது.

‘‘வண்டி இப்போ போகும்” - அந்த பயணி சொன்னான். பப்பு அப்போதுதான் சுய உணர்விற்கு வந்தான். பயணியைப் புகை வண்டி நிலையத்தில் கொண்டு போய்விட வேண்டும். அந்தச் சிறுமியை அமைதிப்படுத்த வேண்டும். அவன் தர்மச்சங்கடமான நிலையில் இருந்தான். அவன் சிறுமியைப் பிடித்துத் தூக்கினான். ‘‘அரிசி போனா போகட்டும் குழந்தை.... அழாதே. நான் அரிசி வாங்கித் தர்றேன்.”

‘‘ராத்திரி சாப்பாட்டுக்கு உள்ள அரிசி அது. அம்மா என்னை அடிப்பாங்க.”

‘‘உன்னை அடிக்க மாட்டாங்க. அரிசி, உப்பு, மிளகாய் எல்லாத்தையும் நான் வாங்கித் தர்றேன். நீ கொஞ்சம் தள்ளி நில்லுடா, கண்ணு. நான் இதோ கொஞ்ச நேரத்துல வந்திர்றேன்.” அவன் அவளைச் சாலையின் ஒரு ஓரத்தில் நிற்க வைத்துவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு ஓட்டமாக ஒட ஆரம்பித்தான்.

அந்தச் சிறுமி அப்போதும் அழுகையை நிறுத்தவில்லை. தூரத்தில் நின்றிருந்த தெருப் பையன்கள் எல்லோரும் அவளைச் சுற்றிக் கூட்டமாக நின்றிருந்தார்கள். அவர்கள் பரிதாபம் மேலோங்க அவளைப் பார்த்து கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். யாருடைய ரிக்ஷா அவள்மீது மோதியது. அவள் எங்கே விழுந்தாள், ஏதாவது காயம் உண்டானதா, எவ்வளவு அரிசி இருந்தது, வீடு எங்கே இருக்கிறது, அவளின் பெயர் என்ன - இப்படி பல விஷயங்களையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் எதுவும் பேசவில்லை. சிதறிக் கிடந்த அரிசியைப் பார்த்து அழுது கொண்டிருந்தாள்.

நடந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஒரு பையன் சொன்னான்: ‘‘அந்தச் சிறுமியை இடித்துக் கீழே தள்ளிவிட்டது பப்புவின் ரிக்ஷாதான்” என்று. அதை மற்ற சிறுவர்கள் சிறிதுகூட நம்பவில்லை. பப்புவின் ரிக்ஷா இதுவரை யார் மீதும் இடித்ததில்லை. - இடிக்கவும் செய்யாது என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. அதைப் பற்றி அவர்களுக்குள் பலமான வாதங்களும் எதிர்வாதங்களும் நடந்தன. கடைசியில் பப்புவின் ரிக்ஷாதான் இடித்தது என்று ஒரு பிச்சைக்காரப் பெண் சாட்சி சொன்னாள். அதன் மூலம் அங்கு நடந்த வாக்குவாதம் ஒரு முடிவுக்கு வந்தது. பப்பு உடனே திரும்பி வருவான் என்றும், அவன் அந்தச் சிறுமிக்கு அரிசி வாங்கித் தருவதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான் என்ற விஷயத்தையும் அந்தப் பிச்சைக்காரி அவர்களிடம் சொன்னாள். அதுவும் ஒரு மாறுபட்ட கருத்தை அங்கு உண்டாக்கிவிட்டது.

‘‘ஓ... சும்மா அப்படிச் சொல்லியிருப்பான்...” என்று ஒருவன் சொன்னான்.

‘‘குளத்துல மூழ்கி கிணற்றுல எழுந்திரிக்கிற ஆளாச்சே, பப்பு” - இது இன்னொரு மனிதனின் கருத்து.

அவர்கள் பல வகைகளிலும் வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருந்ததை அந்தச் சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மனதிற்குள்ளும் அதே மாதிரியான ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அருகில் நின்றிருந்த ஒரு பையனிடம் அவள் கேட்டாள்: ‘‘உனக்கு அந்த ஆளைத் தெரியுமா?”

‘‘ம்... தெரியும்... சொன்னா சொன்னபடி நடக்குற ஆளுதான்.”

அதைக் கேட்டு இன்னொருவன் அவனைப் பலமாக எதிர்த்தான்.

‘‘சொன்னா சொன்னபடி நடக்குற ஆளா அவன். உனக்கு எப்படி அது தெரியும்டா?”

‘‘அந்த ஆளை இனிமேல் பார்க்கணும்னா, ஒரு வருடம் பொறக்கணும்”- வேறொருவன் சொன்னான்.

அதைக் கேட்டு அந்தச் சிறுமி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். ‘‘இரவு சாப்பாட்டுக்கான அரிசி அது. அம்மா என்னைக் கொன்னுடுவாங்க.”

‘‘உங்களுக்கு இங்கே என்னடா வேலை?” என்று கூறியவாறு பப்பு அப்போது அங்கு வந்தான். அவனைப் பார்த்ததும் எல்லா பையன்களும் விலகி நின்றார்கள். அவன் அவளுடைய கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரையும் உடம்பில் இருந்த அழுக்கையும் கையால் துடைத்து விட்டான். பரிதாபம் மேலோங்க அவன் கேட்டான்: ‘‘நீ இன்னைக்கு ஏதாவது சாப்பிட்டியா?”

‘‘ம்... மத்தியானம் ஒரு சட்டி நிறைய பச்சைத் தண்ணி குடிச்சேன்.”

‘‘வா...” - அவன் நடந்தான். கூடையை எடுத்துக் கொண்டு அவள் அவனுக்குப் பின்னால் நடந்தாள்.

ஒரு கடையில் பப்பு ஆறு பழங்களை வாங்கி அவளின் கைகளில் தந்தான். ஆறு பழம் - நல்ல தரமான ஆறு பாளேங்கோடன் பழம்! அவளுடைய வறண்டு போயிருந்த உதடுகளில் புன்னகை மலர்ந்தது. பழங்களைக் கூடைக்குள் போட்ட அவள், கூடையை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

‘‘என்ன, நீ அந்தப் பழத்தைச் சாப்பிடலையா?”

‘‘வீட்டுக்குப் போயி சாப்பிட்டுக்குறேன்.” - அவள் சிரித்தாள். அவனும் சிரித்தான்.

 ‘‘இப்போ சாப்பிட்டா என்ன?”

வீட்டுல அம்மா இருக்காங்க. அம்மாவும் நானும் சேர்ந்து சார்ப்பிடுறோம்.

அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். அவன் கேட்டான்: ‘‘உனக்கு அப்பா இல்லையா?”

‘‘இறந்துட்டாரு.”

‘‘உனக்கு மூத்தவங்க, இளையவங்க யாரும் இல்லையா?”

‘‘நான் மட்டும்தான்.”

“உன் வீடு எங்கே இருக்கு?”

‘‘அங்கே...” - அவள் கையால் சுட்டிக் காட்டினாள். பப்பு அதைக் கவனிக்கவில்லை.

‘‘உன் பேர் என்ன?”

‘‘லட்சுமி.”

‘‘அம்மா பேர் என்ன?”

‘‘கல்யாணி...”

அவன் ஒரு கடையில் ஏறினான். அப்போது அவன் கேட்டான்: ‘‘அந்தக் கூடையில எவ்வளவு அரிசி இருந்துச்சு?”

‘‘ஒரு ஆழாக்கு. பிறகு... உப்பு, மிளகாய் எல்லாம் இருந்தது?”

ஒரு படி அரிசியும் அதற்குத் தேவையான உப்பும் மிளகாயும் தரும்படி பப்பு கடைக்காரனிடம் சொன்னான். லட்சுமி பழத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கூடையைக் கடைக்காரன் கையில் கொடுத்தாள். அவன் சாமான்களை எடுப்பதற்கு மத்தியில் லட்சுமி பப்புவிடம் கேட்டாள். ‘‘இதை எங்கே வாங்கினேன்னு அம்மா கேட்டா, நான் என்ன சொல்றது?”

‘‘நீ என்ன சொல்வே?”

‘‘என்ன சொல்லணும்?”

‘‘உண்மையைச் சொல்லணும்.”

‘‘பேர் என்ன?”

‘‘பப்பு.”

‘‘பப்பு உங்க வீடு எங்கே இருக்கு?”

‘‘எனக்கு வீடு இல்ல.”


‘‘வீடு இல்லையா?” - அவளுக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அம்மா இருக்காங்களா?”

‘‘இல்ல...”

‘‘அப்பா இருக்காரா?”

‘‘இல்ல...”

‘‘அது பொய்.... அது பொய்...” - அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். அவனும் சிரித்தான்.

கடைக்காரன் கூடையில் அரிசியை அளந்து போட்டான். அதற்கு மேலே இரண்டு தாளால் கட்டிய பொட்டலங்களை வைத்தான். லட்சுமி தன் கையிலிருந்த பழங்களைக் கூடையில் வைத்துவிட்டு, அதைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாள். அவள் கேட்டாள்: ‘‘நான் போகட்டுமா?”

‘‘நீ தனியா போயிடுவியா?”

‘‘போயிடுவேன்.”

‘‘சரி... அப்போ போ.”

அவள் நன்றிப் பெருக்குடன் பப்புவைப் பார்த்தவாறு திரும்பி நடந்தாள். பப்புவும் அவளுடன் சேர்ந்து நடந்தான். அவளுடன் அப்படிச் சேர்ந்து நடப்பதை அவன் விரும்பினான்.

‘‘நீ நாளைக்கு வருவியா?” - அவன் கேட்டான்.

‘‘எதுக்கு?”

‘‘சும்மாதான்...”

‘‘இனி என்னைக் கீழே தள்ளிவிடுவீங்களா?” அவள் சிரித்தாள்.

‘‘இல்ல...” அவனும் சிரித்தான்.

‘‘அப்படின்னா வர்றேன்.”

பப்பு நின்றான். அவள் நடந்து தூரத்தில் மறையும் வரை அவன் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தான். போய் மறைந்த பிறகுகூட அவள் தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் போலவே அவன் உணர்ந்தான். அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பும் நன்றியுணர்வு நிறைந்த பார்வையும்!

‘‘நாளை... நாளை...” - அவன் மெதுவான குரலில் முனகினான். அது வரையில் அவனுடைய வாழ்க்கையில் ‘நாளை’ என்பது இல்லவே இல்லை. அன்று முதல் முறையாக அவனுக்கு ஒரு ‘நாளை’ உண்டானது.

‘‘நாளை... நாளை...” என்று முணுமுணுத்தவாறு அவன் திரும்பி நடந்தான்.

5

றுநாள் மாலை நேரம் வந்தது. சற்று தூரத்திலிருந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பயணியைக் கொண்டு போய்விட்ட பப்பு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலை வழியாக ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தான். வழியில் இரண்டு பயணிகள் நின்றிருந்தார்கள். அவர்களுக்குப் புகை வண்டி நிலையத்திற்குச் செல்ல இரண்டு ரிக்ஷாக்கள் வேண்டும். இன்னொரு ரிக்ஷாக்காரன் நண்பன் வேண்டும் என்பதற்காகச் சாலையைப் பார்த்து ஒரு ரிக்ஷாக்காரன் நின்று கொண்டிருக்கும்போதுதான் பப்பு அங்கே வந்தான். ‘‘பப்பு... பப்பு...” அவன் உரத்த குரலில் அழைத்தான்.

‘‘என்ன?” - பப்பு அவன் அழைத்ததைக் கேட்டானே தவிர ரிக்ஷாவை நிறுத்தவில்லை.

‘‘புகை வண்டி நிலையத்திற்கு ஒரு ஆள் இருக்கு வா... வா...”

‘‘நான் வரலை. நான் ஒரு இடத்துக்குப் போக வேண்டியது இருக்கு” என்று சொல்லிய பப்பு வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடினான்.

நேற்று அந்தச் சம்பவம் நடைபெற்ற இடம்! அங்கு போய்ச் சேர்ந்ததும் பப்பு நின்றான். ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். நன்றாக நிமிர்ந்து நின்று யாரையோ எதிர்பார்த்ததைப் போல சுற்றிலும் பார்த்தான். ரிக்ஷாவின் கைப்பகுதியைக் கீழே வைத்துவிட்டு, அவன் அங்குமிங்குமாய் நகர்ந்து நின்றவாறு பார்த்தான். முந்தைய நாள் பழம் வாங்கிய கடைக்குச் சென்று அங்கும் அந்தப் பகுதியிலும் பார்த்தான். அரிசி வாங்கிய கடைக்குச் சென்றான். அங்கும் பார்த்தான். ரிக்ஷா இருக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான். அந்தப் பகுதியெங்கும் பார்த்தவாறு நடந்தான்.

ஒரு கூலிக்காரப் பையன் அவனுக்கு அருகில் வந்து சொன்னான்: ‘‘நேற்று உருண்டு கீழே விழுந்த அந்தப் பொண்ணு இன்னைக்கும் வந்திருந்தா?”

‘‘எங்கே? அவள் எங்கே?”- பப்பு ஆர்வத்துடன் கேட்டான்.

‘‘அவள் என்கிட்ட கேட்டா தன்னைக் கீழே தள்ளிவிட்ட ஆள் எங்கேன்னு. பார்க்கலைன்னு நான் சொன்னேன். அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணு போயிட்டா.”

‘‘போயி ரொம்ப நேரம் ஆயிடுச்சா?”

‘‘ஆமா...”

அவனுடைய முகத்தில் ஏமாற்றத்தின் நிழல் படிய ஆரம்பித்தது. வாழ்க்கையில் முந்தைய நாள் தோன்றிய ‘நாளை’ இன்று மறைந்து விட்டதாக அவன் நினைத்தான். அவனுடைய இதயத்தில் ஒரு மெல்லிய சோகம் கடந்து சென்றது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

நாட்களும் வாரங்களும் பல கடந்தன. ஒரு இரவு நேரம் பப்பு நகரத்தின் உட்பகுதியிலிருந்த ஒரு ஒடுகலான ஒற்றையடிப் பாதையின் அருகில் ரிக்ஷாவின் படியில் ஏறி உட்கார்ந்திருந்தான். ரிக்ஷாவில் பயணம் செய்த மனிதன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றிருந்தான். அவன் திரும்பி வந்த பிறகு, அவனை ஏற்றிக் கொண்டு பப்பு செல்ல வேண்டும்.

‘‘கொஞ்சம் மண்ணெண்ணெய் கிடைக்குமா?” - இருட்டிற்கு மத்தியில் ஒலித்த அந்தக் கேள்வியைக் கேட்டு பப்பு திரும்பிப் பார்த்தான். யாரும் அங்கு இல்லை.

கேள்வி மீண்டும் ஒலித்தது: ‘‘இந்த விளக்குல ஊற்றணும். கொஞ்சம் மண்ணெண்ணெய் தர முடியுமா?”

‘‘யார் அது?” - பப்பு மிடுக்கான குரலில் கேட்டான்.

இருட்டுக்கு மத்தியில் ஒரு சிறுமி பாதையில் இருந்த வெளிச்சத்தில் வந்து கொண்டிருந்தாள். ‘‘இந்த விளக்குல ஊற்றக் கொஞ்சம் மண்ணெண்ணெய் வேணும்” - அவள் ஒரு மண்ணெண்ணெய் விளக்கை நீட்டிக் காட்டினாள்.

‘‘யார் அது? லட்சுமியா?” -பப்பு துள்ளி எழுந்தான். ‘‘லட்சமி என்னைத் தெரியுதா?”

‘‘தெரியுது... தெரியுது...” - அவள் மகிழ்ச்சியடன் ஓடிவந்து பப்புவின் கையைப் பிடித்தாள். ‘‘அன்னைக்கு என்னை வரச்சொன்னீங்கள்ல? நான் அங்கே வந்து பார்த்தப்போ, நீங்க அங்கே இல்லையே!”

‘‘நான் வர்றது வரை நீ நிற்கலாம்ல?”

‘‘நான் ஒரு ஆளுக்கிட்ட கேட்டேன். நீங்க வர மாட்டீங்கன்னு அந்த ஆளு சொன்னாரு.”

‘‘அப்படியா? சரி.... உன் வீடு எங்கே இருக்கு?”

‘‘அதோ அங்கே...” - அவள் இருட்டுக்குள் சுட்டிக் காட்டியவாறு சொன்னாள். ‘‘அம்மா சொன்னாங்க... அம்மா உங்களைப் பார்க்கணுமாம்.”

‘‘நாம அங்கே போகலாம்.”

‘‘அங்கே வெளிச்சம் இல்ல.”

‘‘அந்த விளக்குல மண்ணெண்ணெய் ஊற்றித் தர்றேன்.” - பப்பு அவளுடைய கையிலிருந்து விளக்கை வாங்கி ரிக்ஷாவில் வைத்திருந்த விளக்கிலிருந்து மண்ணெண்ணெய் அதில் ஊற்றி தீப்பெட்டியை உரசி எரிய வைத்து அவளின் கையில் தந்தான். அவள் விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு முன்னால் நடந்தாள். பப்பு அவளைப் பின் தொடர்ந்து நடந்தான்.

ஒரு இடிந்துபோன குடிசை அது. அவர்கள் திண்ணையில் ஏறினார்கள். குடிசை வாசலில் மறைந்து நின்று கொண்டு கல்யாணி கேட்டாள்: ‘‘அது யாரு மகளே?”

‘‘அன்னைக்கு என்னைக் கீழே தள்ளிவிட்ட ஆளு.”


‘‘அன்னைக்கு ஒரு படி அரிசியும், உப்பும் மிளகாயும் வாங்கித்தந்த ஆள்தானே” நிறைந்த நன்றியுடன் அவள் சொன்னாள். ‘‘மகளே அந்தப் பலகையை அங்கே தள்ளிப் போடு. அங்கே அவர் உட்காரட்டும்.”

லட்சுமி விளக்கைக் கீழே வைத்து விட்டு பலகையைத் தள்ளி வைத்தாள். பப்பு அதில் உட்காரவில்லை. அவன் அந்த இடிந்து போயிருந்த குடிசையையும் குடிசை வாசலில் ஓரு ஓரத்தில் மறைந்த நின்றிருந்த கல்யாணியின் முகத்தையும் லட்சுமியையும் மாறி மாறிப் பார்த்தவாறு அமைதியாக நின்றிருந்தான்.

‘‘கல்யாணி கேட்டாள்: ‘‘நீ இவரை எங்கே பார்த்தே, மகளே!”

‘‘மண்ணெண்ணெய் வேணும்னு நான் கேட்டுப் போனப்போ, நீ லட்சுமிதானேன்னு இவர் கேட்டாரு. அப்போதான் எனக்கு ஆள் யாருன்னே தெரிஞ்சது.”

‘‘அங்கே உட்காரச் சொல்லு மகளே!”

பப்பு சொன்னான்: ‘‘வேண்டாம்.... நான் இங்கேயே நிக்கிறேன்.” அவன் ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தவாறு கேட்டான்: ‘‘லட்சுமியின் அப்பா இறந்து எவ்வளவு நாட்களாச்சு?”

‘‘இவளுக்கு இப்போ அஞ்சு வயசாகுது. முணு வயது இருக்குறப்போ இவளோட அப்பா இறந்தாரு.”

‘‘நீங்க எப்படி வாழ்றீங்க?”

‘‘கடவுளோட கருணையால்தான் நாங்க வாழ்றோம். குடிச்சும் குடிக்காமலும்.... இடி மாதிரி இருந்த ஒரு ஆளை தெய்வம் கொண்டு போயிடுச்சு” அவளின் தொண்டை இடறியது. ‘‘நாங்க இப்படியெல்லாம் கஷ்டபடணும்ன்றது கடவுளோட விருப்பமா இருக்கும்.”

பப்புவின் பீடி அணைந்தது. அவன் மீண்டும் தீப்பெட்டியை உரசி பீடியைப் பற்ற வைத்தான்: ‘‘உங்களுக்கு இன்னைக்கு ராத்திரி சாப்பாடு இருக்குதா?”

‘‘ராத்திரி சாப்பாடு சாப்பிட்ட நாளே எங்களுக்கு மறந்து போச்சு. லட்சுமியின் அப்பா இறந்த பிறகு நாங்க கஞ்சி மட்டும்தான் குடிச்சிக்கிட்டு இருக்கோம். எனக்கு இருக்குறது ஒரே ஒரு விருப்பம்தான். என் பொண்ணுக்கு ஒரு நேரமாவது வயிறு நிறைய சாப்பாடு போடணும்.” அதைச் சொல்லி விட்டு அவள் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.

பப்பு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவன் எதுவும் பேசாமல் அசையாமல் இருந்த தீபத்தையே பார்த்தவாறு சிலையென நின்றிருந்தான்.

வெளியே ரிக்ஷாவின் மணி அடிக்கப்படும் சத்தம் கேட்டது. பப்புவின் ரிக்ஷாவில் ஏறி வந்த ஆள் அவனை அழைக்கிறான். பப்பு குடிசையின் வாசல் பக்கம் சென்றான். இடுப்பிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து நீட்டியவாறு அவன் சொன்னான்: ‘‘இதை வாங்கிக்கங்க. லட்சுமிக்கு வயிறு நிறைய சாப்பாடு போடணும்.”

கல்யாணி அதை வாங்கத் தயங்கினாள்.

“தயங்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் வயிறு நிறைய சாப்பிடணும். இதை வாங்கிக்கங்க.”

கல்யாணி கையை நீட்டினாள். பப்பு அவளின் கையில் பணத்தைத் தந்துவிட்டு லட்சுமியைப் பிடித்து அருகில் நிற்க வைத்து அவளின் தலையை வருடியவாறு சொன்னான்: ‘‘கண்ணு... நான் நாளைக்கு வர்றேன்.”

‘‘நாளைக்கு வருவீங்களா?”

‘‘வருவேன்... நிச்சயமா வருவேன்.”

‘‘எப்போ வருவீங்க?”

‘‘மத்தியானம்.”

வெளியே அதற்குப் பிறகும் மணி ஒலித்தது. பப்பு வேகமாக வெளியேறினான்.

காலையிலிருந்து லட்சுமி பப்புவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். அவள் கல்யாணியிடம் கேட்டாள்: ‘‘அம்மா, அந்த ஆளை நான் எப்படிச் சொல்லிக் கூப்பிடணும்?”

‘‘மாமான்னு கூப்பிடு.”

‘‘ம்... மாமா... மாமா.... இப்படிச் சொன்னா போதுமா?”

சாலையில் ஏதாவது ரிக்ஷா வருவது தெரிந்தால் போதும். அவள் தன் தாயை அழைத்துக் கூறுவாள். ‘‘அம்மா, மாமா வந்தாச்சு.”

கல்யாணி வெளியே வந்து பார்ப்பாள். அப்போது அவள் கூறுவாள்: ‘‘ஓ... அது வேற யாரோ. நீ பேசாம இரு. மத்தியானம் வர்றதாதானே அவர் சொன்னாரு?”

கல்யாணி அன்று சாதமும் குழம்பும் கூட்டும் தயார் பண்ணினாள். அவளுடைய மகளுக்கு வயிறு நிறைய சாதம் கொடுக்கும் நல்ல நாள் அது. அவள் சொன்னாள்: ‘‘மகளே, இன்னைக்கு உனக்கு வயிறு நிறைய சாதம் தர்றேன். போயி குளிச்சிட்டு வா.”

‘‘அம்மா நாம மாமா வந்த பிறகு சாப்பிட்டா போதும். மாமாவுக்கும் சாதம் தரணும். சாப்பிடுவாரு.... நான் சொன்னா மாமா சாப்பிடுவாரு.

‘‘அப்படின்னா நாம பிறகு சாப்பிடுவோம். மகளே, நீ போய் குளிச்சிட்டு வா.”

லட்சுமி குளித்து முடித்து வந்தாள். கல்யாணியும் குளித்தாள்.

‘‘மாமா வர்றப்போ இந்த முண்டையா உடுத்தி நிக்கிறது?” - லட்சுமி கேட்டாள்.

‘‘பிறகு என்ன செய்றது? நமக்கு வேற நல்ல முண்டு எங்கே இருக்கு?”

‘‘அம்மா, நல்ல முண்டு வாங்கித் தரச்சொல்லி நான் மாமாகிட்ட சொல்லட்டுமா?”

மகளுடைய அந்தக் கேள்வி தன்னுடைய கவுரவத்தைத் தொட்டுப் பார்ப்பதைப் போல் கல்யாணி உணர்ந்தாள். அவள் தன் மகளைத் திட்டினாள்: ‘‘வேண்டாம்... எதுவும் கேட்க வேண்டாம்... முண்டு வாங்கித் தர நமக்கு என்ன அவர் சொந்தக்காரரா?”

அதைக் கேட்டு லட்சுமியின் முகம் அந்த நிமிடமே வாடி விட்டது. திரும்பவும் அது பிரகாசமானது. ‘‘மாமா நமக்கு யாரும் இல்லைன்னா பிறகு எதுக்கு அவர் நமக்கு அரிசி வாங்கித்தரணும்? நமக்கு எதுக்கு அவர் ரூபாய் தரணும். இப்போ அவர் ஏன் இங்கே வரணும்?” லட்சுமி கேட்டாள்.

‘‘அது எல்லாம் நாம கேட்காமலே அவர் தந்ததுதானே? நாம எதுவும் அவர்கிட்ட கேட்கக் கூடாது. அவருக்கே மனசுல பட்டு வாங்கித் தந்தார்னா வாங்கிக்குவோம்.”

அப்போது ஒரு ரிக்ஷா வாசலில் வந்து நின்றது.

‘‘மாமா... மாமா...” - லட்சுமி ஓடிச்சென்று பப்புவை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ‘‘மாமா... மாமா” - அவள் அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

பப்புவின் கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. அதை அவன் லட்சுமியின் கையில் கொடுத்தான்.

‘‘இது என்ன மாமா?”

‘‘பிரிச்சு பாரு...”

அவள் அந்தப் பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்தாள். ஒரு பாவாடையும் ஒரு ஜாக்கெட்டும் இருந்தன. அவள் தன்னை மறந்து ஒரு குதி குதித்தாள்.

கல்யாணி தன் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.

பப்பு லட்சுமிக்குப் பாவாடை அணிவித்து ஜாக்கெட் இட்டு, தலை முடியை அழகாகக் கட்டி விட்டான். அவள் சமையலறைக்குள் சென்றாள். ‘‘அம்மா, இதை பார்த்தீங்களா?”- லட்சுமி கேட்டாள்.

கல்யாணியின் கண்கள் ஈரமாயின. அவள் சொன்னாள்: ‘‘இதை இப்போ போட்டு அழுக்காக்க வேண்டாம். கழற்றி வச்சிடு... எங்காவது போறப்போ போட்டுக்கலாம்.”

அதைக் கழற்றி வைக்க பப்பு ஒத்துக் கொள்ளவில்லை. ‘‘இவ இதை உடுத்தியிருக்கட்டும். எங்காவது போறப்போ உடுத்திக்கிறதுக்கு நான் வேற வாங்கித் தர்றேன்” - அவன் சொன்னான்.


கல்யாணி லட்சுமியிடம் சொன்னாள் : ‘‘மகளே, மாமாவைச் சாப்பிட வரச் சொல்லு.”

‘‘சாப்பிட வாங்க மாமா” - அவள் பப்புவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

அவன் மறுக்கவில்லை. பப்புவும் லட்சுமியும் ஒரே தட்டில் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும் பப்பு கேட்டான் : ‘‘வயிறு நிறைஞ்சதா?”

‘‘நெறஞ்சிருச்சு. வயிறே வெடிக்கிற மாதிரி இருக்கு” - அவள் சிரித்தாள்.

இனி தினமும் வயிறு நிறைய சாப்பிடணும். தெரியுதா?”

‘‘மாமா, உங்கக்கூட உட்கார்ந்து சாப்பிட்டாதான், என் வயிறே நிறையுது.”

பப்பு அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவன் ஆழமான சிந்தனையில் மூழ்கினான்.

‘‘மாமா, ராத்திரியும் உங்கக்கூட உட்கார்ந்து நான் சாப்பிடணும்.”

கல்யாணியும் ஆழமான சிந்தனையில் மூழ்கினாள். அவள் குடிசையின் வாசலில் மறைந்து நின்றுகொண்டு பப்புவையே பார்த்தாள். பப்பு அவளிடம் கேட்டான்: ‘‘எனக்கு தினமும் சோறு கிடைக்குமா?”

கல்யாணி அதற்குப் பதிலெதுவும் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

‘‘என்ன, பதிலையே காணோம்?”

அவள் முகத்தை உயர்த்தி பப்புவைப் பார்த்துவிட்டு மீண்டும் அமைதியானாள்.

லட்சுமி சொன்னாள்: ‘‘சொல்லுங்க அம்மா... மாமாவுக்குத் தினமும் சோறு தர்றதா சொல்லுங்க. அப்படின்னா நான் தினமும் மாமாகூட உட்கார்ந்து சாப்பிடலாம்ல...”

குடிசையின் வாசற் கதவிடம் கூறுவதைப் போல அவள் சொன்னாள் : ‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க?”

பப்பு அழுத்தமான குரலில் சொன்னான்: ‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க? ஆளுங்க சொல்லாதது என்னதான் இருக்கு?”

‘‘ஆணும் தூணும் இல்லாத இடத்துல ஒரு ஆம்பளை வந்து தங்குறதுன்னா...”

‘‘ம்... தங்கினா என்ன?”

‘‘பெத்த குழந்தைக்குப் பால் கொடுக்காத ஆளுங்க...”

‘‘அதுக்காக பெத்த குழந்தைக்குப் பால் கொடுக்குறது இல்லையா என்ன? சும்மா இருக்கணும். ஆளங்க பேசுவாங்களாம்... அவங்க பேச்சுக்கு மதிப்பே இல்ல...”

அந்த வார்த்தைகளில் அளவுக்கும் அதிகமான வெறுப்பு கலந்திருந்தது. அவன் லட்சுமி இருந்த பக்கம் திரும்பினான். ‘‘கண்ணு. நான் ராத்திரி வருவேன். நீ இனிமேல் தினமும் என்கூட உட்கார்ந்து சாப்பிடலாம். சரியா?” அவன் சொன்னான்.

சொல்லிவிட்டு அவன் சாலையில் இறங்கி ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு நடந்தான். அன்று சாயங்காலம் ஒரு கூடை நிறைய அரிசியும் சாமான்களும் இருக்க ஒரு சுமை தூக்கும் மனிதன் அங்கு தூக்கிக் கொண்டு வந்தான்.

அன்று இரவு வந்தபோதும் பப்புவின் கையில் ஒரு தாள் பொட்டலம் இருந்தது. கல்யாணி அதை அவிழ்த்துப் பார்த்தாள். ஒரு முண்டும் ஜாக்கெட்டும் பாடீஸூம் இருந்தன.

‘‘என்ன இது?”

‘‘அணியிறதுக்கு...”

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னாள்: ‘‘எனக்கு இதை உடுத்தத் தகுதி இல்ல...”

‘‘முண்டு உடுத்தறதுக்கு தகுதி வேணுமா என்ன?”

‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க?”

பப்பு அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.

பப்புவும் லட்சுமியும் இரவுச் சாப்பாடு சாப்பிட உட்கார்ந்தார்கள். கல்யாணி பரிமாறினாள். பப்பு கேட்டான்: ‘‘லட்சுமி, உனக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகணும்ன்ற ஆர்வம் இருக்கா?”

‘‘ம்... நான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும். மாமா, நான் படிக்கணும்.”

தாய் மகளைப் பின் தொடர்ந்து சொன்னாள்: ‘‘படிக்கிறதுல இவளுக்கு ரொம்ப ஆர்வம்.”

‘‘அப்படின்னா நாளைக்கே நான் இவளைப் பள்ளிக்கூடத்துல சேர்த்திடுறேன்.”

‘‘அதுக்குப் பணம் செலவாகுமே!”

‘‘செலவைப் பற்றிய நினைப்பை நீங்க விட்டுடுங்க. எல்லாம் சரியா நடக்கும்.”

மறுநாள் பப்பு லட்சுமியைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து அவளுக்கு சிலேட்டும் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்தான்.

6

ந்தக் குடிசைக்குப் பல வளர்ச்சிகள் உண்டாயின. ஓலைக்குப் பதிலாக மூங்கில் பாய் கொண்டு அழகாக மறைக்கப்பட்டது. இரண்டு அறைகளும் ஒரு சமையலறையும் இருந்தன. அவற்றுக்கு இப்போது ஒரு புதுத் தன்மையும் அழகும் வந்து சேர்ந்திருந்தன. தெற்குப் பக்கம் இருந்த அறை பப்புவின் அறை. பப்புவின் தகரப்பெட்டி அங்குதான் வைக்கப்பட்டிருந்தது. லட்சுமியின் பாவாடைகளும் ஜாக்கெட்டுகளும் கொடியில் தொங்கிக் கொண்டிருந்தன. அவளுடைய புத்தகங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதும் அவள் அமர்ந்து பாடம் படிப்பதும் அந்த அறையில்தான். கல்யாணி அந்த அறைக்குள் வருவதேயில்லை.

லட்சுமி உற்சாகமாகப் பாடம் படித்தாள். பாவாடையும் ஜாக்கெட்டும் அணிந்து, கண்ணாடி வளையல்கள் அணிந்து, தலை முடியைப் பின்னி அவள் பள்ளிக்கூடம் செல்வதை பப்புவும் கல்யாணியும் சந்தோஷத்துடன் பார்த்தவாறு நின்றிருப்பார்கள். ஒவ்வொரு நாளும் வேலை முடித்து வரும்போது பப்பு அவளுக்காக ஏதாவது கொண்டு வராமல் இருக்க மாட்டான். பப்பு ஏதாவது கொண்டு வந்து தரவில்லையென்றால் அவளும் சந்தோஷமாக இருக்க மாட்டாள். பப்புவிற்கு அருகில் இருக்கும்போது அவள் ஒரு முழுமையான வாயாடியாக இருந்தாள். பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சம்பவங்கள், வழியில் பார்த்த காட்சிகள், தன்னுடைய தோழிகளின் குணங்கள், பக்கத்து வீட்டிலுள்ளவர்களைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கள், தன்னுடைய தேவைகள், ஆசைகள் - இப்படி பல விஷயங்களைப் பற்றியும் அவள் பேசிக் கொண்டிருப்பாள். பப்பு அவள் சொல்லும் எல்லாவற்றையும் மிகவும் அக்கறையுடன் கேட்டுக் கொண்டிருப்பான். அவளுக்கு நன்றாகப் பாடத் தெரியும். பிறவியிலேயே அவளுக்கு அமைந்த ஒரு திறமை அது. அவள் பல பாடல்களையும் பாடுவதற்குத் தெரிந்து வைத்திருந்தாள். அவை ஒவ்வொன்றையும் பப்புவிற்கு முன்னால் அவள் பாடுவாள். அவளுக்கு மனதில் பல கேள்விகள் இருந்தன. இசைத்தட்டிலிருந்து எப்படி பாடல் கேட்கிறது, மோட்டார் வண்டிகள் எப்படி ஓடுகின்றன, எண்ணெயும் திரியும் இல்லாமல் எப்படி தெருவிளக்குகள் எரிகின்றன - இப்படி அவளிடம் எத்தனையோ கேள்விகள். பப்பு தனக்குத் தெரிந்ததை அவளுக்குக் கூறுவான்.

பப்புவும் கல்யாணியும் ஒருவரோடொருவர் அதிகமாகப் பேசிக் கொள்வதில்லை. மிகவும் குறைவான வார்த்தைகளில் வீட்டு விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்வார்கள். அவ்வளவுதான்.  ஆனால் கல்யாணியின் விஷயத்தில் பப்புவிற்கும், பப்புவின் விஷயங்களில் கல்யாணிக்கும் எப்போதும் அக்கறை இருந்தது. அவன் மேலும் இரண்டு மூன்று முண்டுகள் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்தான். லட்சுமிக்குப் பாவாடையும் ஜாக்கெட்டும் தைக்கும் போதெல்லாம் கல்யாணிக்கும் ஜாக்கெட் தைப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. அவள் அவை எதையும் அணிவதேயில்லை. பழைய முண்டையும் ஜாக்கெட்டையும் சோப்போ காரமோ போட்டு சலவை செய்து அணிந்து கொள்வாள். புதிய ஆடைகளை அணிய அவளுக்குக் கூச்சமாக இருந்தது.

ஒரு நாள் அவள் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் பட்டினியால் உண்டான அடையாளங்களெல்லாம் முழுமையாக மறைந்து போயிருந்தன. எண்ணெய் தேய்க்காததால் செம்மைப் படர்ந்திருந்த தலைமுடி கருப்பு நிறத்தில் மாறிவிட்டிருந்தது. புருவங்களுக்கு ஒரு அடர்த்தியும் கண்களுக்கு முன்பு எப்போதும் இருந்திராத ஒரு பிரகாசமும் வந்து சேர்ந்திருந்தன. அவள் சிறிது நேரம் அப்படியே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அன்று அவள் குளித்து முடித்து, புதிய முண்டு உடுத்தி, பாடீஸும், ஜாக்கெட்டும் அணிந்தாள். தலைமுடியை வாரி, குங்குமத்தை எடுத்து கண்ணாடியில் பார்த்தவாறு நெற்றியில் வைத்துக்கொண்டு அவள் புன்னகைத்தாள். அவளுடைய அந்தப் புன்னகையில் ஒரு தனிச்சிறப்பு இருந்தது. ஒரு அழகு இருந்தது.

மாலை நேரம் ஆனதும் பப்பு வந்தான். லட்சுமி விளக்குப் பக்கத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தாள். கல்யாணி மகளுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். பப்பு திண்ணையில் ஏறியவுடன், கல்யாணி எழுந்தாள்: ‘‘மகளே, மாமா வந்தாச்சு...”

லட்சுமி ஓடிச்சென்று பப்புவின் கையைப் பிடித்துத் தொங்கினாள்: ‘‘மாமா, அம்மா புது முண்டு உடுத்தி, ஜாக்கெட் அணிஞ்சு நிக்கிறதைப் பார்த்தீங்களா?”

கல்யாணி சமையலறைக்குள் நுழைந்தாள்.

இரவு சாப்பாடு முடிந்து கஞ்சா இருந்த சிறு டப்பாவை எடுத்துக் கொண்டு பப்பு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். ரிக்ஷா இழுக்க ஆரம்பித்த பிறகு, நண்பர்களிடமிருந்து தொற்றிக் கொண்ட ஒரு கெட்டப் பழக்கம் கஞ்சா புகைப்பது. அவன் கஞ்சாவையும் புகையிலையையும் சேர்த்து பலகையில் வைத்து அரைத்தான். கல்யாணி வாசலில் மறைந்தவாறு பப்புவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். பப்பு திரும்பிப் பார்த்தான்: ‘‘என்ன, இன்னும் படுக்கல?”

‘‘படுக்கலாம்.”

‘‘லட்சுமி தூங்கியாச்சா?”

‘‘அவள் தூங்கிட்டா.”

ஒரு படு அமைதி! பப்பு கஞ்சா அரைக்கவில்லை. அவள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

மீண்டும் பெருமூச்சு!

பப்பு திரும்பிப் பார்த்தான். கல்யாணி என்னவோ சொல்ல நினைத்தாள். ஆனால், அவள் சொல்லவில்லை.

பப்பு கேட்டான்: ‘‘லட்சுமி தூங்கியாச்சா?”

‘‘அவள் தூங்கிட்டா.”

முன்பு அதே கேள்வியைக் கேட்டதும் அவள் பதில் சொன்னதையும் அவர்கள் இருவரும் மறந்து விட்டார்கள். அவர்கள் என்னவோ கூற நினைத்தார்கள். சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் இருக்க அவள் முயற்சித்தாள்.

பப்பு சொன்னான்: ‘‘நான் அவளை பி.ஏ. படிக்க வைப்பேன்.”

‘‘அவள் படிப்புல கெட்டிக்காரி.”

‘‘அவள் ஒரு அழகான குழந்தை.!”

`‘‘அவள் என் மகள்...”

‘‘ஆமா...”

அமைதி!

கஞ்சா இழுத்து முடித்து, பப்பு தெற்குப் பக்கம் இருந்த அறையில் போய் படுத்தான். கல்யாணி வடக்குப் பக்கம் இருந்த அறையில் போய் படுத்தாள். அந்த இரவு முழுவதும் அவர்கள் இருவரும் ஒரு பொட்டுகூட தூங்கவில்லை.

பக்கத்து வீடுகளிலுள்ளவர்கள் பல மாதிரியும் பேசினார்கள். அவர்கள் கல்யாணியைப் பார்க்கும்போது அர்த்தம் நிறைந்த ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். அவர்களுக்குள் மெதுவான குரலில் என்னவோ முணுமுணுப்பார்கள்.

எங்கோயிருந்து வந்த ஒரு ஆள் இந்த வீட்டில் வந்து எதற்காக இருக்க வேண்டும்?

அவளுக்கும் அவளுடைய மகளுக்கும் அவன் எதற்காகச் செலவுக்குப் பணம் தர வேண்டும்? அவளுடைய மகளைப் பள்ளிக்கூடத்தில் எதற்காகச் சேர்க்க வேண்டும்? வீட்டை ஏன் புதுப்பிக்க வேண்டும்? நல்ல நல்ல முண்டும் ஜாக்கெட்டும் சோப்பும் சீப்பும் கண்ணாடியும் குங்குமமும் வாங்கிக் கொடுப்பதற்குக் காரணம் என்ன? இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளைத் தங்களுக்குள் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

‘‘அவளை இப்போ பார்த்தா, பதினெட்டு வயசு பொண்ணு மாதிரியே இருக்கா” - பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண் கல்யாணியைப் பற்றி இப்படிச் சொன்னாள்.

‘‘அவளை பிள்ளை பெத்தவள்னு யாரும் சொல்லமாட்டாங்க.” - இன்னொரு பெண்ணின் கருத்து இது.

ஒரு பெண் கல்யாணியிடம் கேட்டாள்: ‘‘அந்த ஆளு நல்ல அன்பு உள்ள ஒரு மனிதன். அப்படித்தானே?”

கல்யாணி அதற்கு வெறுமனே ‘‘உம்” கொட்டினாள்.

‘‘அந்த ஆளு ஒரு கஞ்சன் இல்ல... அப்படித்தானே கல்யாணி?”

அதற்கும் அவள் வெறுமனே ‘‘உம்” கொட்டினாள்.

‘‘மற்ற ரிக்ஷாக்காரர்களை மாதிரி இல்ல அந்த ஆளு. பெரிய ஆளுகளெல்லாம் அந்த ஆளோட ரிக்ஷாவுலதான் ஏறுறாங்க. நல்ல பணம் கிடைக்கும். கடவுள் கருணையுள்ளவர், கல்யாணி.”

அதற்கும் அவள் ‘‘உம்” மட்டுமே கொட்டினாள்.

ஒரு நாள் கல்யாணி பப்புவிடம் சொன்னாள்: ‘‘இப்படியெல்லாம் வாழ்றதா இருந்தா பணம் வேண்டாமா? செலவைக் கொஞ்சம் குறைக்கணும்?”

‘‘செலவு விஷயத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அது எல்லாமே நடக்கும். அதற்காகத் தேவைப்படுறதைக் குறைச்சிக்கணும்னு அவசியமில்லை...”

‘‘இருந்தாலும் வரவுக்கேற்ற மாதிரி செலவு செய்யிறதுதானே நல்லது.”

‘‘செலவு அதிகரிக்கிறப்போ, வரவும் அதிகமாகும்.”

அவன் சொன்னது சரிதான். பப்புவின் செலவுகள் அதிகமானபோது, வரவும் அதிகமாகவே வந்தது. வேலை செய்வதில் இப்போது அவனுக்கு ஈடுபாடும் ஆர்வமும் அதிகமானது. அவனுடைய வாழ்க்கைக்கு இப்போது ஒரு நோக்கம் இருந்தது. அவன் தன்னுடைய தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டான். காலையில் கஞ்சி குடித்துவிட்டு வேலைக்குப் போகும்போது ஒரு பொட்டலத்தில் சாதத்தைக் கட்டி எடுத்துச் செல்வான். அதை ரிக்ஷாவின் இருக்கைக்குக் கீழேயிருக்கும் பெட்டியில் வைத்திருப்பான். மதிய நேரம் வந்ததும் அதை எடுத்துச் சாப்பிடுவான். அவசியம் என்று தோன்றினால் மட்டுமே தேநீர் அருந்துவான். முன்பெல்லாம் கொடுக்கும் கூலியை அவன் பொதுவாக வாங்கிக் கொள்வான். இப்போது பேரம் பேசி கூலி வாங்குவதை அவன் வழக்கமாகக் கொண்டான். அதன் மூலம் லட்சுமிக்காகவும் கல்யாணிக்காகவும் தன்னுடைய செலவுகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து வரவைப் பெருக்குவதில் கவனமாக இருந்தான். ஒவ்வொரு நாளும் கஞ்சா புகைப்பதை மட்டும் கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை.

ஒரு நாள் பப்பு லட்சுமியிடம் கேட்டான்: ‘‘கண்ணு, நீ திரைப்படம் பார்க்கணுமா?”

‘‘ம்... பார்க்கணும் மாமா, பார்க்கணும்...”

அவன் கல்யாணியிடம் கேட்டான்: ‘‘திரைப்படம் பார்க்க வர்றீங்களா?”

அவள் முகத்தைக் குனிந்து கொண்டாள்: ‘‘ஆளுங்க என்ன சொல்லுவாங்க?”

பப்பு அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை.

லட்சுமி திரைப்படம் பார்க்கப் புறப்பட்டாள். பப்பு அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தபோது, கல்யாணி கேட்டாள்: ‘‘எப்போ வருவீங்க?”

‘‘பதினொண்ணு ஆயிடும் திரும்பி வர்றதுக்கு.”

‘‘அதுவரை நான் தனியா இருக்கவா?”

‘‘நாங்க வர்றது வரை தெற்கு வீட்டுல இருக்குற கிழவியை வர வச்சு கூட இருக்க வேண்டியதுதான்.”

‘‘அவங்க வர மாட்டாங்க.”

‘‘அப்ப என்ன செய்யிறது?”

‘‘எனக்கு என்ன தெரியும்?”

‘‘அப்படின்னா வாங்க.”

அவள் உள்ளே சென்று சலவை செய்த ஆடைகளை எடுத்து அணிந்து வெளியே வந்தாள். தலைமுடியை வாரி, குங்குமத்தை நெற்றியில் வைத்து, மேல் துணி ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கு வந்து அவள் நின்றாள்.


பப்பு கடைக் கண்களால் அவளைப் பார்த்தான். கல்யாணி புன்னகைத்தாள். அவள் கேட்டாள்: ‘‘அந்தப் பழைய லுங்கியை உடுத்திக்கிட்டா போறது?”

‘‘ஏன்? இதை உடுத்திக்கிட்டு போனா என்ன?”

‘‘அது வேலைக்குப் போறப்போ உடுத்துகிற லுங்கி ஆச்சே! அதை உடுத்திக்கிட்டா திரைப்படம் பார்க்கப் போறது? மகளே, பெட்டியில சலவை செய்து வச்சிருக்கிற லுங்கியையும் சட்டையையும் எடுத்துக் கொண்டு வந்து மாமாகிட்ட கொடு?”

அடுத்த நிமிடம் லட்சுமி வீட்டிற்குள் ஓடினாள். அவள் லுங்கியையும் சட்டையையும் எடுத்துக் கொண்டு வந்தாள். பப்பு அதை வாங்கி அணிந்தான். அன்று முதல் தடவையாக அவன் தன் தலைமுடியை வாரினான். கல்யாணி அவனை ஓரக்கண்களால் பார்த்துப் புன்னகைத்தாள். அவள் கதவைப் பூட்டி சாவியை பப்புவின் கையில் கொடுத்தாள்.

பப்பு லட்சுமியின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். கல்யாணி அவர்களைப் பின் தொடர்ந்து நடந்தாள்.

பக்கத்து வீட்டுக்காரி ஜானு எதிரில் வந்து கொண்டிருந்தாள். அவள் பப்புவை உற்றுப் பார்த்துவிட்டு அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் கல்யாணியிடம் மெதுவான குரலில் கேட்டாள். ‘‘எங்கே போறீங்க?”

‘‘திரைப்படம் பார்க்க...” கல்யாணி முகத்தைக் குனிந்து கொண்டாள்.

அவர்கள் பிரதான சாலைக்கு வந்தார்கள். பப்புவின் நண்பர்களில் ஒருவன் கேட்டான். ‘‘எங்கே போறாப்ல?”

‘‘திரைப்படத்துக்கு...”

‘‘இந்தக் குழந்தை யாரு?”

‘‘அவங்க மகள்.” - அவன் பின்னால் சுட்டிக் காட்டினான்.

மற்றொருவன் கேட்டான். ‘‘எங்கே போறாப்ல?”

‘‘திரைப்படம் பார்க்க...”

‘‘அந்தப் பெண் யாரு?”

‘‘இந்தக் குழந்தையோட அம்மா.”

‘‘ம... அர்த்தம் நிறைந்த ஒரு முனகல்.

பத்து மணிக்குத் திரைப்படம் முடிந்து அவர்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

புதிய திரைப்படங்கள் வரும்போதெல்லாம் பப்பு லட்சுமியையும் கல்யாணியையும் படம் பார்ப்பதற்கு அழைத்துச் செல்வான்.

ஒரு இரவு நன்கு இருட்டின பிறகும் பப்பு வேலை முடிந்து வரவில்லை. கல்யாணி இரவுச் சாப்பாடு சாப்பிடாமல் அவனுக்காகக் காத்திருந்தாள். லட்சுமிக்கு அவள் சாதம் தந்தாள். அவள் தூங்க ஆரம்பித்தாள். நீண்ட நேரமாகியும் பப்பு வராததால், கல்யாணி வெளியே சென்று சாலையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். சிறிது நேரம் அங்கேயே நின்ற பிறகு, பப்பு ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு வருவதை அவள் பார்த்தாள்.

வீட்டிற்கு அருகில், பாதையோரத்தில், பப்புவின் ரிக்ஷா பத்திரமாக இருக்கும் வண்ணம் ஒரு சிறிய ‘ஷெட்’ உண்டாக்கப்பட்டிருந்தது. அவன் ரிக்ஷாவுடன் அதற்கள் சென்றான். ரிக்ஷாவை அங்கு நிறுத்திவிட்டு, அவன் வாசலுக்கு வந்தான்.

‘‘யார் நிக்கிறது? - அவன் கேட்டான்.

‘‘நான்...”

‘‘இங்கே எதுக்கு நிக்கணும்?”

உங்களைக் காணோம்னு...”

அவன் அருகில் சென்றான். ‘‘ஏன் தூங்கல?”

‘‘தூக்கம் வரலை...”

‘‘சாப்பிட்டாச்சா?”

‘‘இல்ல...”

‘‘ஏன் சாப்பிடல?”

‘‘வரலையேன்னு...”

அமைதி!

பப்பு மேலும் சற்று அவளுக்கு அருகில் வந்தான். அவனுடைய வலது கை அவளுடைய தோள் மீது விழுந்தது. அவளுடைய முகம் அவனுடைய மார்பின் மீது சாய்ந்தது. அவன் கைகள் அவளின் உடலை அணைத்தன.

7

ட்சுமி நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். அவளை ஆங்கிலம் படிக்க அனுப்ப வேண்டுமென்று முன்கூட்டியே பப்பு தீர்மானித்திருந்தான். ஆங்கிலம் படிக்க வேண்டுமென்பது அவளின் விருப்பமும்கூட.

தன்னுடைய மகளை ஆங்கிலம் படிக்க வைத்துப் பெரிய அதிகாரியாக ஆக்க வேண்டுமென்ற விருப்பம் கல்யாணிக்கும் இருந்தது. எனினும், அந்த ஆசையை மனதில் அடக்கிக் கொண்டு அவள் கேட்டாள்: ‘‘மலையாளம் படிக்கிறது மாதிரி ஆங்கிலம் படிக்க முடியுமா? படிப்புக் கட்டணம் கட்டணும். புத்தகங்கள் வாங்கணும். மற்ற பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து போறப்போ நல்ல உடைகள் அணிந்து போகணும். அதுக்கெல்லாம் பணமிருக்கா என்ன?”

பப்புவிற்கு அதுவெல்லாம் சாதாரண விஷயம். லட்சுமி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் செய்யும் எந்தவொரு செயலும் அதிகப்படியான ஒன்று என்றோ, சிரமமான ஒன்று என்றோ அவன் எப்போதும் நினைத்ததேயில்லை. அவன் உறுதியான குரலில் சொன்னான்:

‘‘எல்லாம் நடக்கும். அவளை நான் ஆங்கிலம் படிக்க அனுப்புவேன். அவளுக்குக் கல்வி கட்டணம், புத்தகங்கள் எல்லாவற்றையும் நான் தருவேன். நான் வேலை செய்றதே அவளுக்காகத்தான்.”

அதைக் கேட்டு கல்யாணியின் இதயம் நிறைந்துவிட்டது. அவள் மேல்நோக்கிக் கைகளைக் குவித்து வணங்கினாள்.

லட்சுமி ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் மாணவியாக ஆனாள். ஒவ்வொரு நாளும் தான் படித்த எழுத்துக்களையும் வார்த்தைகளையும் அவள் வீட்டில் வந்து கூறுவாள். சில நேரங்களில் அவள் பப்புவைப் பார்த்துக் கேட்பாள்: ‘‘வாட் ஈஸ் யுவர் நேம்?” அவள் பப்புவை ‘அங்கிள்’ என்றும் கல்யாணியை ‘மம்மி’ என்றும் அழைக்க ஆரம்பித்தாள்.

குறிப்பிட்ட நாளன்று கல்விக்கட்டணத்தைக் கட்டவேண்டுமென்பதிலும் மற்ற பிள்ளைகளைப் போல அவளும் நன்றாக ஆடைகள் அணியவேண்டுமென்ற விஷயத்திலும் பப்பு மிகவும் பிடிவாதமாக இருந்தான். அவள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பே அவன் வேலைக்குப் போய்விடுவான். அவன் வழியில் எங்காவது அவளுக்காகக் காத்து நின்றிருப்பான். அவள் பள்ளிக்கூடம் செல்வதைப் பார்ப்பதற்காகத்தான். பெரிய வசதி படைத்த செல்வந்தர்களின் வீட்டுப் பெண்களுக்கு இணையாக அவள் சாலையில் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும். அவன் உணர்ச்சிவசப்பட்டுப் போய் நின்றிருப்பான். ஒருநாள் அவள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அருகில் அவன் அப்படி நின்றிருந்தபோது நீதிபதியின் மகள் நளினி, லட்சுமியின் தோளில் கையைப் போட்டவாறு வருவதைப் பார்த்தான். அடடா! அன்று உண்டான அளவிற்கு ஒரு மிகப் பெரிய சந்தோஷத்தை அவன் அதற்கு முன்பு ஒருமுறை கூட அனுபவித்ததில்லை என்பதே உண்மை.

கல்யாணி மிகவும் கவனமாக வாழ்க்கையை நடத்தினாள். அவளுக்கு நன்றாகத் தெரியும் - பப்பு தன்னால் தாங்க முடியாத அளவிற்கு ஒரு பெரிய சுமையைத் தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்று. அவள் வீட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்த ஆரம்பித்தாள். வீட்டைச் சுற்றிலும் காய்கறிகளை வளர்த்தும் கோழிகளை வளர்த்தும் பப்புவின் செலவுகளைக் குறைப்பதற்குத் தன்னால் ஆன மட்டும் முயன்றாள்.

ஒருநாள் லட்சுமி பப்புவிடன் சொன்னாள் நீதிபதியின் மகள் அணிந்திருப்பதைப் போல ஒரு ஜாக்கெட்டும் பாவாடையும் தனக்கு வேண்டுமென்று. அந்தத் துணியின் ஒரு துண்டையும் அவள் கொண்டு வந்திருந்தாள். பப்பு வாங்கித் தருவதாக ஒப்புக்கொண்டான். மறுநாள் தைத்து வாங்கித் தருவதாகவும் சொன்னான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கல்யாணிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘பொண்ணு தட்டுற தாளத்துக்கெல்லாம் ஆடிக்கிட்டு இருக்கிறதா? இருக்குறதை உடுத்திக்கிட்டு போனா போதாதா? பணக்காரங்களுக்கு இணையா இருக்கணும்னு நினைச்சா, எதுவுமே இல்லாமல் போகும்” என்றாள் அவள்.


அதைக் கேட்டு லட்சுமிக்கு கோபம் வந்தது. அவள் கேட்டாள்: ‘‘அம்மா, நான் உங்ககிட்ட கேட்கலையே?”

‘‘ஆமா... இவள் என்கிட்டதானே கேட்டா!” - பப்பு லட்சுமிக்கு ஆதரவாகப் பேசினான். ‘‘இவளுக்குத் தேவைப்படுறது எதுவானாலும் நான் வாங்கித் தருவேன்.தோழிகளுக்கு மத்தியில் இவளுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாது.”

மறுநாள் புதிய ஜாக்கெட்டும் பாவாடையும் அணிந்து கொண்டுதான் அவள் பள்ளிக்கூடத்திற்கே சென்றாள்.

லட்சுமி படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். அவளுக்கு நன்கு சொற்பொழிவாற்றத் தெரியும். பாடுவதற்குத் தெரியும். அவளுடைய சொற்பொழிவிற்கொரு அழகு இருந்தது. அவளுடைய பாட்டிற்கு ஒரு ஈர்ப்புச் சக்தி இருந்தது. சுறுசுறுப்பும் பேச்சுத் திறமையும் அவளிடம் இயற்கையாகவே இருந்தன. அவள் ஆசிரியர்களின் பிரியத்திற்குரிய மாணவியாகவும் - மாணவிகளின் அன்புக்குரிய தோழியாகவும் இருந்தாள். அவளுடைய தோழிகள் அனைவரும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள். அவர்களின் வீடுகளுக்கெல்லாம் அவள் போயிருக்கிறாள். அவர்களுடைய தாய், தந்தைகளை அவள் பார்த்திருக்கிறாள்.

தன் தோழிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்றொரு மிகப்பெரிய ஆசை அவளுக்குமிருந்தது. ஆனால் அந்தக் குடிசைக்கு அவள் எப்படி அவர்களை அழைக்க முடியும்? அப்படி அவர்களை வரவழைக்கும்போது கல்வியறிவற்ற தன்னுடைய தாயையும் ரிக்ஷாக்காரனான பப்புவையும் தோழிகளுக்கு அவள் எப்படி அறிமுகப்படுத்தி வைப்பாள்?

அவளுடைய வீட்டைப் பற்றியும், தாய், தந்தையைப் பற்றியும் அவளுடைய தோழிகள் கேட்பார்கள். அவள் அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் வேறு எதைப் பற்றியாவது பேச்சை மாற்றுவாள். அவர்கள் எல்லாரும் அவள்மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார்கள். அவளுடைய வீடு ஒரு சிறு குடிசை என்ற விஷயம் தெரிந்தால், அவளுடைய பாதுகாவலன் ஒரு ரிக்ஷாக்காரன் என்ற உண்மை தெரிந்தால் அந்த அன்பும் மதிப்பும் இல்லாமல் போய்விடும் என்று அவள் பயப்பட்டாள்.

ஒரு நாள் நளினி சொன்னாள்: ‘‘லட்சுமி, உன் வீட்டுக்கு நான் வரணும்.”

லட்சுமியின் மனதில் ஒரு அதிர்ச்சி! அவள் சொன்னாள்: ‘‘அங்கே ஒரு வேலைக்காரன் இருக்கான். எதுவுமே தெரியாத பிணம் அவன். நளினி, வேற வேலைக்காரன் வந்தபிறகு, நீ வா.”

‘‘லட்சுமி, நான் என்ன வேலைக்காரனைப் பார்க்குறதுக்காக உன் வீட்டுக்கு வர்றேன்னு சொல்றேன். உன் அம்மாவைப் பார்க்கத்தானே நான் வர்றேன்?”

‘‘அம்மா உடம்புக்குச் சரியில்லாம படுத்திருக்காங்க. உடல் நல்லா ஆன பிறகு, நான் உன்னை அழைச்சிட்டுப் போறேன் நளினி.”

எப்படியோ, அப்போது வந்த அந்த ஆபத்திலிருந்து அவள் தப்பித்துக் கொண்டாள்.

ஒரு விடுமுறை நாளன்று வீட்டு வாசலில் லட்சுமி புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். சாலையில் ஒரு ஹார்ன் சத்தம் கேட்டு அவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். அவளுடைய தோழி சந்திரிகாவின் முகத்தை அவள் அங்கு பார்த்தாள். சந்திரிகாவும் அவளுடைய தந்தையும் காரில் எங்கோ போய்க் கொண்டிருந்தார்கள். சந்திரிகா லட்சுமியைப் பார்த்துச் சிரித்தாள். லட்சுமியின் முகம் இருண்டு போனது. மறுநாள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோது சந்திரிகா கேட்டாள்: ‘‘லட்சுமி, அதுதான் உன் வீடா?”

‘‘இல்ல இல்ல... அதற்கு அடுத்த இருக்குறது என் வீடு. அங்கே வந்து நான் சும்மா நின்னுக்கிட்டு இருந்தேன். அவ்வளவுதான்...”

 பப்புவை வழியில் எங்காவது பார்த்தால் லட்சுமி அவனைப் பார்க்காதது மாதிரி அங்கிருந்து நடந்துவிடுவாள். வீட்டிற்குச் சென்ற பிறகும் அவள் பப்புவிடம் அதிகமாக எதுவும் பேசுவதில்லை. கல்யாணியுடனும் மிகவும் முக்கியமான விஷயங்களை மட்டுமே பேசுவாள். பப்பு அவளிடம் ஏதாவது கேட்டால், ஒன்றோ, இரண்டோ வார்த்தைகளில் பதில் கூறிவிட்டு, அவள் அங்கிருந்து நகர்ந்து விடுவாள். பாடச் சொன்னால் படிக்க வேண்டியதிருக்கிறது என்று கூறிவிட்டு அங்கிருந்து போய்விடுவாள். அவர்களுடன் எந்தவொரு உறவும் இல்லாதவளைப் போல, அவர்களிடமிருந்து மிகவும் தூரத்தில் இருப்பதைப் போல அவள் எப்போதும் அறையில் இருந்து கொண்டு படித்துக் கொண்டே இருப்பாள். அவளுக்குத் தன்னுடைய காரியங்களில் மட்டுமே எப்போதும் கவனம்.

அவள் தெற்குப் பக்கம் இருந்த அறையை வண்ணத்தாள்கள் கொண்டு அலங்கரித்தாள். அவள் அமர்வது, படுப்பது, படிப்பது, எல்லாமே அங்குதான். அங்கு யாரும் உள்ளே நுழையக்கூடாதென்று அவள் உத்தரவு போட்டாள். அங்கு யாரும் நுழைவதில்லை. பப்பு படுப்பது வடக்குப் பக்கம் இருந்த அறையில்தான். அவனுடைய தகரப் பெட்டியும் கஞ்சா வைத்திருக்கும் சிறு டப்பாவும் வடக்குப் பக்கமிருந்த அறைக்கு மாற்றப்பட்டன.

மகளிடம் உண்டான இந்த மாறுதல்களைக் கல்யாணி புரிந்து கொண்டாள். ஆனால், அவள் எதுவும் சொல்லவில்லை. எல்லாவற்றையும் மனதிலேயே அடக்கிக் கொண்டு அவள் அமைதியாக இருந்தாள்.

ஒரு நாள் பப்பு வடக்குப் பக்க அறையிலிருந்து தெற்குப் பக்க அறையை நோக்கிச் சொன்னான். ‘‘லட்சுமி, ஒரு பாட்டு பாடு!”

‘‘என்னால இப்போ பாட முடியாது. நான் இப்போ படிக்கணும்.”

அதைக் கேட்டு கல்யாணிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘என்னடி! உன்னால பாட முடியாதா? பாட்டுப் பாடின பிறகு படிச்சா போதும். பெரிசா படிக்கிறாளாம்...”

லட்சுமியிடம் உண்டான மாற்றங்களை பப்புவும் உணராமலில்லை. அது எதுவும் அவன் மனதில் ஒரு சிறு சலனத்தையும் உண்டாக்கவில்லை. அவள் தன்னை மதிக்க வேண்டும் என்றோ, நன்றியுணர்வுடன் இருக்கவேண்டுமென்றோ அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கை என்றால் அதற்கு ஏதாவது ஒரு சிறு நோக்கம் இருக்க வேண்டும். அன்பு செலுத்த யாராவது ஒரு ஆள் இருக்க வேண்டும். அவனுக்கு அதற்கு அவள் தேவைப்பட்டாள்.

லட்சுமி ஒவ்வொரு வருடமும் தேர்ச்சி பெற்று விடுவாள். அவள் பள்ளிக்கூடத்திற்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒரு மாணவியாக இருந்தாள். ஆசிரியர்கள் அவளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று உறுதியான குரலில் சொன்னார்கள்.

அவளுக்கு ஆகும் செலவுகள் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெற வெற்றி பெற அவளுடைய கல்விக்கான கட்டணமும் கூடிக் கொண்டே வந்தது. புத்தகங்களுக்கும் நோட்டுப் புத்தகங்களுக்கும் ஆகும் செலவும் கூடிக்கொண்டே வந்தது. கல்விக் கட்டணம், புத்தகம், பேப்பர், நோட்டுப் புத்தகங்கள், பென்சில், ஃபவுண்டன் பேனா, பவுடர்,சோப் - இப்படிப் பல தேவைகளின் பட்டியலை அவள் ஒவ்வொரு நாளும் பப்புவின் முன்னால் கொண்டு வந்து வைப்பாள். பப்பு அந்தத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாள்.

பப்பு சிறிதும் ஒய்வே இல்லாமல் வேலை செய்தான். பொழுது புலர்வதற்கு முன்பே வீட்டிலிருந்து எழுந்து கிளம்பி விடுவான்.


நள்ளிரவு தாண்டிய பிறகுதான் திரும்பியே வருவான். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு சில நேரங்களில் தூங்குவான். சில நேரங்களில் தூங்காமலே இருந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் எழுந்து வெளியே கிளம்பி விடுவான். இரவில் மட்டுமே அவன் சாப்பிடுவான். இடையில் எப்போதாவது தேநீர் குடிப்பான். பயணிகள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது ரிக்ஷாவின் படியில் இருந்தவாறே இலேசாகக் கண்களை மூடுவதுதான், அவனைப் பொறுத்தவரை உறக்கம் மட்டுமல்ல, குளிப்பதுகூட எப்போதோ ஒருமுறைதான்.

அவன் வீட்டில் லட்சுமியை பார்ப்பதில்லை. வேலைக்குப் போகும்போது அவள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க மாட்டாள். வேலை முடிந்து திரும்பி வரும்போது, அவள் நன்கு தூங்கிக் கொண்டிருப்பாள். அவளுடைய தேவைகள் ஒவ்வொன்றையும் கல்யாணி மூலம்தான் அவன் தெரிந்து கொள்வான். அவள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் அவளுக்குத் தெரியாமல் அவன் மறைந்து நின்று கொண்டு அவளைப் பார்ப்பான்.

ஒரு நாள் பொழுது விடிவதற்கு முன்னால் அவன் தூக்கத்திலிருந்து கண் விழித்தான். கட்டிலை விட்டு எழுந்தான். கீழே பாயில் படுத்திருந்த கல்யாணியும் எழுந்தாள். மிகவும் களைப்பாக இருந்ததால், அவன் திரும்பவும் கட்டிலில் போய் அமர்ந்தான். கல்யாணி கெஞ்சுகிற குரலில் அவனிடம் சொன்னாள்: ‘‘பேசாம படுங்க... பொழுது விடியட்டும். அதற்குப் பிறகு போனா போதும்.”

‘‘வண்டி வர்றதுக்கு நேரமாச்சு. நான் கிளம்பணும்.”

‘‘வண்டியில வர்றவங்க எப்படியாவது போய்க்குவாங்க. இன்னைக்குப் பொழுது விடிஞ்சு, கஞ்சி குடிச்சிட்டு போனா போதும்.”

‘‘லட்சுமிக்கு இன்னைக்கு ஃபீஸ் கட்டணும். என் கையில் பணம் எதுவும் இல்ல...” - அவன் எழுந்தான்.

‘‘நான்கைந்து நாட்கள் கழிச்சு ஃபீஸ் கட்டினா போதாதா?”

‘‘இன்னைக்கு ஃபீஸ் கட்டலைன்னா, அதற்குப் பிறகு நாம அதற்கு அபராதமும் சேர்த்துக் கட்டணும். அபராதம் தர்றது அவளுக்குக் குறைச்சலான ஒரு விஷயம்.”

சொல்லிவிட்டு அவன் வெளியேறினான். கல்யாணி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

ஒன்பது மணி ஆன பிறகும் கல்விக் கட்டணத்திற்கான பணம் முழுமையாகச் சேரவில்லை. பப்பு அதற்காகக் கவலைப்பட்டான். கல்விக் கட்டணம் கட்டாமல் தேநீர் கூட குடிக்கக் கூடாது என்று அவன் மனதிற்குள் தீர்மானித்து வைத்திருந்தான். அவன் ரிக்ஷாவுடன் அப்படியே நடந்தான். பள்ளிக்கூட வாசலில் அவன் சிறிது நேரம் நின்றான். அதுவரை கிடைத்த கூலியை எண்ணிப் பார்த்தான். இனிமேலும் பணம் தேவைப்பட்டது. ஒன்றரை ரூபாய் வேண்டும். பயணிகள் யாரும் கிடைக்கவில்லை. லட்சுமி தன் தோழிகளுடன் தூரத்தில் வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அடுத்த நிமிடம் அவன் அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

மணி பத்தானது. பப்புவிற்கு ஒருவித பதைபதைப்பு உண்டானது. இனியும் ஒன்றரை ரூபாய் வேண்டும். அதற்கு என்ன வழி? இதுவரை அவன் யாரிடமும் ஒரு பைசாகூட கடன் என்று வாங்கியதில்லை. யாரிடமும் கடன்படுவது என்ற விஷயம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று. அவனுக்கு வேறொரு வழியும் தோன்றவில்லை. ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு அவன் அப்படியே நடந்து கொண்டிருந்தான். நடந்து நடந்து அவன் முன்பு தங்கியிருந்த தேநீர் கடைக்கு முன்னால் வந்து விட்டான். ஏதோ ஒரு சிந்தனையில் அவன் அந்தக் கடையின் முன்னால் நின்றுவிட்டான். தேநீர்க் கடைக்காரன் பப்பு நிற்பதைப் பார்த்துவிட்டு கேட்டான்: ‘‘என்ன பப்பு, கவலையோட நின்னுக்கிட்டு இருக்கே?”

‘‘எனக்கு ஒண்ணரை ரூபா வேணும்.”

‘‘நான் தர்றேன்.”

‘‘நான் கடன் வாங்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்ல?”

‘‘நீ என்கிட்ட சேர்த்து வைக்கச் சொன்ன பணத்துல இன்னும் மீதி இருக்கு. அதைத்தான் நான் தர்றேன்னு சொன்னேன்.”

‘‘இனியும் மீதி இருக்கா?”

‘‘இருக்கு.”

அவன் ஐந்து ரூபாயைக் கொடுத்தான். ரிக்ஷாவை அந்தக் கடைக்கு முன்னாலேயே இருக்க வைத்துவிட்டு, பப்பு கிடைத்த பணத்துடன் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒடினான்.

வகுப்பு அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. பப்பு வகுப்பறைக்குள் நேராகச் சென்றான். எல்லோரும் பரபரப்புடன் பார்த்தார்கள். லட்சுமியின் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

‘‘ச்சீ... வெளியே போடா”- ஆசிரியர் கட்டளைக் குரலில் கத்தினார். பப்புவின் மரியாதைக்கு அங்கு காயம் ஏற்பட்டது. இரண்டு மூன்று நிமிடங்கள் அவன் அசையாமல் அங்கேயே நின்றான். கண்கள் கலங்கின. உதடுகள் நடுங்கின. அவனுடைய வலது கை தலைக்கு மேலே உயர்ந்தது.

‘‘அய்யோ!” - லட்சுமி உரத்த குரலில் கத்தினாள்.

பப்புவின் கை அப்படியே நின்றுவிட்டது. அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். அவனுடைய கை தளர்வடைந்தது. அது மெதுவாகக் கீழே இறங்கியது.

பள்ளிக்கூடத்தின் ப்யூன் ஓடிவந்தான். ஆசிரியர் ப்யூனிடம் அதிகாரக் குரலில் சொன்னார். ‘‘இந்த ஆளைப் பிடிச்சு வெளியே தள்ளு...”

ப்யூன் பப்புவை நெருங்கினான். ‘‘பக்கத்துல வந்தேன்னா நான் உன் மண்டையை உடைச்சிடுவேன்.” - பப்பு கத்தினான். அவன் லட்சுமியின் அருகில் சென்றான். ‘‘இந்தா ஃபீஸ்...” - மடியிலிருந்த பணத்தை எடுத்து அவளுக்கு முன்னால் வைத்துவிட்டு அவன் வெளியேறினான். கோபத்துடன் பின்னால் ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு படுவேகமாக அவன் அங்கிருந்து கிளம்பினான்.

ஆசிரியர் அதிகாரக் குரலில் கேட்டார் ‘‘அது யாரு லட்சுமி?”

‘‘ஒரு ரிக்ஷாக்காரன். அந்த ஆளுக்கு எதுவும் தெரியாது.” அன்று முழுவதும் அவள் வகுப்பறையில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

சோர்வு அதிகமானதால் பப்பு மாலை ஆனதும் வேலையை நிறுத்திவிட்டு வீட்டிற்குத் திரும்பினான். அவன் வீட்டு வாசலில் கால் வைத்தபோது உள்ளே பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

லட்சுமி கூறிக் கொண்டிருந்தாள்: ‘‘அம்மா, நான் திரைப்படம் பார்க்கப் போகணும்.”

அடுத்த அறையிலிருந்த கல்யாணி பதில் சொன்னாள்: ‘‘அதை என்கிட்ட ஏன் சொல்லணும்?”

‘‘பிறகு யார்கிட்ட சொல்றது?”

‘‘சொல்ல வேண்டியவங்கக்கிட்ட சொல்லணும்.”

‘‘மாமாகிட்ட சொல்லச் சொல்றீங்களா? அது என்னால முடியாது. நான் இனிமேல் மாமாகூட எங்கேயும் போகமாட்டேன்?”

‘‘ஏன்?”

‘‘நான் மாமாகூட போகுறதை யாராவது பார்த்தாங்கன்னா, எனக்குத்தான் குறைச்சல்.”

‘‘என்ன சொன்னே?” - கல்யாணியின் குரல் உயர்ந்தது. அவளுடைய குரல் அவ்வளவு சத்தமாக ஒலிப்பதை, அந்த அளவிற்குக் கோபத்துடன் இருப்பதை அப்போதுதான் முதல் தடவையாகக் கேட்கிறான் பப்பு.

‘‘என்னடீ சொன்னே?” - அவள் லட்சுமியின் அறைக்குள் வேகமாகச் சென்றாள்: ‘‘மாமாகூட போகுறது உனக்குக் குறைச்சலா தெரியுதாடீ? இது எப்போ இருந்து ஆரம்பமாச்சுடீ நன்றி கெட்ட நாயே?” - கோபத்தால் அவள் உடலே நடுங்கியது.


லட்சுமி அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். கல்யாணி தன்னுடைய கோபம் அடங்குவது வரை அவளைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

பப்புவின் இதயம் துடித்தது. தன்னுடன் போவது தனக்கு மதிப்பு குறைவான செயல் என்று சொன்ன அந்த நாக்கை அறுத்து எறிந்தால் என்ன என்று அவன் நினைத்தான். வீட்டிற்கு நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அவன் முஷ்டிகளைச் சுருட்டி வைத்துக் கொண்டு காற்றில் வீசினான். அவன் முன்னோக்கி வேகமாக வந்தான். பின்னர் என்ன நினைத்தானோ, தன்னைத் தானே அவன் கட்டுப்படுத்திக் கொண்டான். அறையில் விளக்கிற்கு முன்னால் எந்தவிதமான அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்த லட்சுமியின் முகத்தை அவன் பார்த்தான்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஓடையிலிருந்து பிடித்துத் தூக்கிய ஒரு சிறுமி - அவள்தான் அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை உண்டாக்கினாள். அவனுடைய ஒன்பது வருட கடுமையான உழைப்பின் பலன் அவள். கொடுமையான வறுமையின் வெம்மையில் கருகிக் கொண்டிருந்த அந்த ஒதுக்கப்பட்ட செடி இன்று வாழ்க்கை என்னும் வசந்தத்தில் விரிந்து கொண்டிருக்கும் மொட்டுகளுடன் நின்று கொண்டிருக்கிறது. சூழ்நிலைகளின் வீணான பகட்டுகளைப் பார்த்து மயங்கி அவள் தவறாக நடந்திருக்கலாம். பாவம்! அவளை ஏன் பழி சொல்ல வேண்டும்? ஒன்பது வருட தொடர் உழைப்பால் உண்டாக்கப்பட்ட அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை ஒரு நிமிடத்தில் உடைத்தெறிவதா? பப்பு இருட்டைப் பார்த்துப் புன்னகைத்தான்.

பப்பு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கல்யாணி அவளிடம் சொன்னாள்: ‘‘இவளோட படிப்பை இதோட நிறுத்திடுறதுதான் நல்லது.”

அதைக்கேட்டு பப்புவிற்குச் சிரிப்புதான் வந்தது. அவன் கேட்டான்: ‘‘ஏன் இவளோட படிப்பை நிறுத்தணும்?”

‘‘இவ ஆங்கிலம் படிச்சு படிச்சு உருப்படாமல் போயிட்டா. இவ தலையை மறந்து எண்ணெய் தேய்க்கிறவ.”

‘‘ம்... என்ன இருந்தாலும் இவ சின்னப் பிள்ளைதானே! இவ சொல்றது எதையும் பெருசா எடுத்துக்கக் கூடாது.”

8

ட்சுமி பள்ளி இறுதி வகுப்பிற்குத் தேர்வு பெற்றாள். கல்விக் கட்டணம் அதிகமானது. மற்ற தேவைகளும் அதிகரித்தன.

பப்புவின் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டு வந்தது. அவனுக்குச் சரியான உணவு இல்லை. தூக்கம் இல்லை. எப்போதும் வேலை செய்து கொண்டேயிருந்தான். ஒரு நாளில் எப்போதாவது ஒரு தடவை வீட்டுக்குத் தேவைப்படும் சாமான்களைக் கொண்டு வருவான். லட்சுமியின் தேவைகள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். அந்தத் தேவைகளையெல்லாம் நிறைவேற்றி விட்டு, அவன் ஏதாவது சாப்பிட்டாலும் சாப்பிடலாம். இல்லாவிட்டால் சாப்பிடாமலே இருப்பதும் உண்டு. அப்போது அவன் அங்கிருந்து கிளம்பி விடுவான்.

முன்பு எவ்வளவு தூரம் ஓடினாலும் பப்புவிற்கு இளைப்பு உண்டாகவே உண்டாகாது. இப்போது ஒரு ஃபர்லாங் ஓடினால் அவன் மேல் மூச்சு கீழ் மூச்சு விட ஆரம்பித்து விடுகிறான். சில நேரங்களில் அவன் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு மிக மிக மெதுவாக நடந்து செல்வதை நாம் பார்க்கலாம். ஒரு நாள் அவனுடைய ஒரு நண்பன் இன்னொருத்தனிடம் சொன்னான்: ‘‘பப்புவின் காலம் முடிஞ்சதுடா. ஆள் ரொம்பவும் தளர்ந்து போயாச்சு.”

‘‘எவ்வளவோ வருடங்கள் ரிக்ஷா இழுத்தாச்சு. இனி இது போதும். ஆமா... அந்த ஆளு எதுக்காக இப்படி பாடுபடணும்?”

‘‘ஓரு தாயையும் மகளையும் காப்பாற்ற வேண்டாமா?” பாடுபடாம இருக்க முடியுமா?”

‘‘நமக்குக் கூடத்தான் தாயும் மகளும் இருக்காங்க. நாம அப்படியொண்ணும் பாடுபடறது இல்லையே!”

‘‘அந்தப் பொண்ணை அந்த ஆளு ஆங்கிலம் படிக்க வச்சிருக்காப்ல... பி.ஏ. படிக்க வைக்கிறதா திட்டம்...”

‘‘எதைச் செய்ய இயலுமோ அதைத்தான் செய்யணும். இல்லாட்டி இந்த நிலைமைதான்...”

பப்புவிற்குச் சில நேரங்களில் காய்ச்சல் வரும். ஆனால் அவன் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்வதில்லை. வெயில், மழை, பனி எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவன் வேலை செய்வான். படிப்படியாக காய்ச்சல் அதிகமானது. ஜலதோஷமும் குணமாவது மாதிரி தெரியவில்லை. சில நாட்கள் கழித்து இருமலும் ஆரம்பித்தது.

சோறு, கஞ்சி எதையும் அவனால் சாப்பிட முடியவில்லை. அவ்வப்போது தேநீர் மட்டும் குடிப்பான். அப்போதுகூட வழக்கமாகப் பிடிக்கும் கஞ்சாவை நிறுத்தவில்லை. குழல் வழியாக கஞ்சாப் புகையை வாய்க்குள் இழுக்கும்போது இருமல் அதிகமாகும். இருமி இருமி மூச்சை அடைத்து கண்கள் வெறிக்கும். எனினும், அவன் அதை நிறுத்த மாட்டான்.

அவன் அங்குலம் அங்குலமாக அழிந்து கொண்டிருப்பதைக் கல்யாணி பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஏதாவதொரு டாக்டரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று அவள் அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வாள்.

அவன் அப்போது வெறுமனே ‘உம்’கொட்டுவான். அவ்வளவுதான், பகலில் மட்டும் வேலை செய்தால் போதும் என்றும், இரவு வேளைகளில் உறங்க வேண்டும் என்றும் அவள் கூறுவாள். அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டான். அவள் யாருக்கும் தெரியாமல் அழுவாள். ஒரு நாள் அவள் அவனிடம் கேட்டாள்: ‘‘நான் ஏதாவது கூலி வேலைக்குப் போகட்டுமா?”

‘‘அதுக்கான நேரம் இன்னும் வரல” - இதுதான் அவனுடைய பதிலாக இருந்தது.

அந்த வருடம் லட்சுமி படிக்கும் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டிருந்தார்கள்.

மாணவிகள் இசை, நடனம், நாடகம், கவிதைப் போட்டி, சமயச் சொற்பொழிவுப் போட்டி, பொதுக்கூட்டம் என்று பலவித அம்சங்களையும் கொண்டு ஒரு செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆசிரியர்களும், மாணவிகளும் ஒன்று சேர்ந்து ஆண்டு விழாவின் வெற்றிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

லட்சுமிக்கு எல்லா விஷயங்களிலும் முக்கிய பங்கு இருந்தது. அவளுடைய கருத்துகளுக்கு ஆசிரியர்கள் மத்தியில் முக்கியத்துவம் தரப்பட்டது. மாணவிகள் மத்தியில் அவற்றுக்கு வரவேற்பு இருந்தது.

ஆண்டு விழா நாள்! அந்த நாளைப் பற்றிய இனிய நினைவுகளுடன் இருந்தாள் லட்சுமி. அன்று எப்படிப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என்றும், எப்படி தலை முடியை வாரிக்கட்ட வேண்டும் என்றும் அவள் மனிதில் சிந்தித்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிறத்தில் ஜாக்கெட்டும், பச்சை நிறம் கொண்ட பூமாலைச் சூடி, செருப்புகள் அணிந்து பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டுமென்று அவள் தீர்மானித்திருந்தாள். பச்சை நிறத்தில் அவளிடம் புடவை எதுவும் இல்லை. அதை வாங்க வேண்டும் என்ற விஷயத்தை பப்புவிடம் நேரடியாகக் கூற வேண்டுமென்பதற்காக அவன் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.


நடு இரவு ஆனபோது பப்பு காய்ச்சலுடனும், இருமலுடனும் அங்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்தபோது இருமல் மேலும் அதிகமானது. அங்கிருந்த மரத்தூணைப் பிடித்துக் கொண்டு அவன் இருமிக் கொண்டேயிருந்தான். மூச்சு விடுவதற்கே அவன் மிகவும் சிரமப்பட்டான். பின்னால் நின்றவாறு கல்யாணி அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மனதிற்குள் வேதனை அதிகமாக இருந்தது. அவள் அவனைத் தாங்கிப் பிடித்து உள்ளே கொண்டுபோய் படுக்க வைத்துவிட்டு, வெந்நீர் கொண்டு வருவதற்காகச் சமையலறைக்குள் சென்றாள்.

லட்சுமி தெற்குப் பக்க அறையிலிருந்து வடக்குப் பக்கமிருந்த அறைக்கு வந்தாள். பப்பு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டே கேட்டான்: ‘‘இதுவரை ஏன் தூங்காம இருக்கே?”

அவள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.

‘‘தூங்காம இருக்கக் கூடாது. போய்த் தூங்கு...”

அவள் என்னவோ கூற முற்படுவதைப் போல அவனுடைய முகத்தையே பார்த்தாள். அவன் கேட்டான்: ‘‘என்ன! ஏதாவது சொல்லணுமா?”

‘‘எனக்கு ஒரு புதுப் புடவை வேணும்.”

‘‘உன்கிட்ட புடவை இல்லையா?”

பச்சை நிறத்துல ஒரு புதுப் புடவை வேணும். பள்ளிக்கூடத்துல ஆண்டு விழாவுக்குக் கட்டுறதுக்கு.”

பப்புவின் கண்கள் மூடின. அவன் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்திருந்தான். அவனுடைய மனதில் பலவிதப் போராட்டங்கள். அவன் கண்களைத் திறந்தான்: ‘‘எப்போ வேணும்?”

‘‘நாளைக்கு நாளை மறுநாள் ஆண்டு விழா.”

அவன் பிறகும் சிறிது நேரம் கண்களை மூடிப் படுத்திருந்தான். அவன் கண்களைத் திறந்தான்: ‘‘ம்... நாளைக்குப் பார்க்கலாம். போய் தூங்கு...”

அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவன் தூங்கவில்லை. இருமிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ‘அதற்கு என்ன வழி?’ ‘அதற்கு என்ன வழி?’ என்று தன் மனதிற்குள் அவன் கேட்டுக் கொண்டேயிருந்தான். கல்யாணியும் உறங்காமலே படுத்திருந்தாள்.

‘‘அதற்கு என்ன வழி?” - அவன் உரத்த குரலில் கேட்டான்.

‘‘எதுக்கு?” - கல்யாணி கேட்டாள்.

‘‘லட்சுமிக்கு ஒரு புது பச்சைப் புடவை வேணுமாம்.”

‘‘புது பச்சைப் புடவையா?” - அவள் எழுந்தாள்: ‘‘எதுக்கு இப்போ அவளுக்குப் பச்சைப் புடவை?”

‘‘பள்ளிக்கூடத்துல என்னவோ நடக்குதாம். அதுக்கு உடுத்திக்கிட்டு போகணுமாம்.”

‘‘தேவையில்லை... பச்சைப் புடவை உடுத்தாமலே அங்கே போனா போதும். அவ கேக்குற ஒவ்வொண்ணையும் நீங்க வாங்கிக் கொடுத்துக்கிட்டேதானே இருக்கீங்க! அதுக்குப் பிறகும் அது வேணும். இது வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தா...”

‘‘மெதுவா பேசணும்... அவ காதுல விழுந்திடப் போகுது.”

‘‘விழுந்தா என்ன?”

‘‘அவ மனசு வேதனைப்படும்.”

‘‘மத்தவங்க மனசு வேதனைப்படாதா? மத்தவங்க உடம்பு வலிக்காதா? இதை எல்லாம் அவ உணர வேண்டாமா?”

‘‘பேசாம இருக்கணும். என்கிட்ட இல்லாம அவ வேற யாருக்கிட்ட கேட்பா? அவ விருப்பப்படுறதை வாங்கித் தர்றதுக்கு என்னைத் தவிர வேற யார் இருக்குறது? அவளுக்கு வாங்கித்தர முடியலைன்னா, பிறகு எதுக்கு நான் வேலை செய்யணும்? அவள்... அவள்...” இருமல் வார்த்தைகளைத் தடை செய்தது.

‘‘தெய்வமே! - கல்யாணி மேல்நோக்கிப் பார்த்துக் கைகளைக் கூப்பினாள். பொழுது புலர்வதற்கு முன்பே அவன் எழுந்து விட்டான்:

‘‘அதுக்கு என்ன வழி?”

‘‘அதுக்கு என்ன வழி?” - கல்யாணி அதே கேள்வியைத் திரும்பக் கேட்டாள்.

திறந்து கிடந்த ஜன்னல் வழியாகக் கிழக்குத் திசை வானத்தின் விளிம்பைப் பார்த்தவாறு அவன் அமைதியாக இருந்தான். திடீரென்று என்னவோ கூற நினைப்பதைப் போல கல்யாணி அவனைப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் அசைந்தன. ஆனால், அவள் எதுவும் கூறவில்லை.

‘‘பப்பு கேட்டான்: ‘‘என்ன, சொல்ல வந்தது என்ன?”

‘‘என் கையில...” - பாதி சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

ஆசை கலந்த ஒரு மெல்லிய ஒளி பப்புவின் கண்களில் தோன்றியது. அவன் ஆர்வத்துடன் கேட்டான்: ‘‘கையில என்ன இருக்கு? சொல்லணும். முழுசா சொல்லணும்.”

‘‘என் கையில் கொஞ்சம் ரூபாய் இருக்கு.”

‘‘ரூபாயா? - அவன் சந்தோஷத்துடன் எழுந்தான்: ‘‘அதை எதுக்கு வச்சிருக்கே?”

‘‘மருந்து வாங்குறதுக்காக வச்சிருக்கேன்.”

‘‘யாருக்கு மருந்து? எனக்கா?”

‘‘தினமும் இப்படி காய்ச்சலும் இருமலுமா இருக்க முடியுமா? டாக்டர்கிட்ட சொல்லி மருந்து வாங்கணும்.”

அதைக் கேட்டு அவன் சிரித்தான்: ‘‘இந்தக் காய்ச்சலும் இருமலும் எனக்குப் பிரச்சினையா? அது குணமாயிடும். பணத்தை இங்கே தா. அவளுக்கு நான் புடவை வாங்கித் தந்திடுறேன்.

ஆண்டு விழா நாள் வந்தது. பள்ளிக்கூடமும் அதன் சுற்றுப் பகுதிகளும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களும் மாணவிகளும் விருந்தினர்களும் விழாவிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

எல்லா விஷயங்களிலும் லட்சுமி இருந்தாள். மாணவிகளை ஒழுங்குப்படுத்துவது, ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்வது - எல்லாமே அவள் தான். பச்சை நிறப் புடவை உடுத்தி, முடியில் பூமாலை சூடி, மிடுக்கான ஒரு புன்னகையுடன் நடமாடிக் கொண்டிருந்த அவள் அங்குக் கூடியிருந்த எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தாள் என்பதே உண்மை.

நிகழ்ச்சி நிரலில் முதலில் இடம் பெற்றிருந்தது இசை நிகழ்ச்சி. மூன்று மாணவிகள் சேர்ந்து வரவேற்புப் பாடல் பாடினார்கள். பிறகு லட்சுமியின் இசை. லட்சுமி மேடையில் ஏறினாள். அரங்கில் சந்தோஷமயமான ஒரு ஆரவாரம் உண்டானது. தலைமை பீடத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த புல்லால் ஆன பாயில் அவள் சப்பணமிட்டு அமர்ந்தாள். அரங்கு படு அமைதியாக இருந்தது.

அடக்கியும் அடங்காத இருமல்! லட்சுமியின் கண்கள் அரங்கின் மூலையை நோக்கின. பப்பு தன் இரண்டு கைகளாலும் வாயை மூடி இருமலை அடக்க வீணாக முயற்சித்துக் கொண்டிருந்தான். அடுத்த நிமிடம் அவளுடைய முகம் இருண்டு போனது. அது இரண்டு மூன்று நிமிடங்களுக்குத்தான்... மீண்டும் மிடுக்கான அந்தப் புன்சிரிப்பு அவளுடைய முகத்தில் தோன்றியது.

லட்சுமி பாடலைப்பாட ஆரம்பித்தாள். தொண்டை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் இருமவில்லை. சுருதி சேர்ப்பவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவள் பாட ஆரம்பித்தாள். அவள் முறைப்படி சங்கீதம் கற்றவள் இல்லை. சங்கீத அரங்குகளில் பாடிய அனுபவமும் அவளுக்கு இல்லை. பிறவியிலேயே அமைந்த திறமையும், பல இடங்களிலும் காதால் கேட்ட அறிமுகமும் மட்டுமே அவளுக்கு மூலதனமாக இருந்தன. ஒன்றிரண்டு நிமிடங்களில் அந்த அரங்கே இசை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. அப்படியொரு சூழலை அவள் உண்டாக்கினாள். மலைச்சரிவில் புற்களையும், செடிகளையும் தடவியவாறு பாய்ந்தோடி வரும் வசந்த கால நதியைப் போல, அவளுடைய பாடல் அரங்கில் கூடியிருந்தவர்களின் இதயங்களில் இசை வெள்ளத்தை ஓடச் செய்து கொண்டிருந்தது. மொத்த அரங்கும் எந்தவித அசைவும் இல்லாமல் படு அமைதியாக இருந்தது.


பப்புவின் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்து கொண்டிருந்தது. முகத்தில் வளர்ந்திருந்த ரோமங்களில் கண்ணீர்த் துளிகள் வைரத்துண்டுகளைப் போல மின்னின. அவன் அந்தச் சூழலையும், ஏன்... தன்னையும் கூட முழுமையாக மறந்து விட்டான். ‘‘லட்சுமி... என் லட்சுமி...” என்று கூறியவாறு அவன் முன்னோக்கி நடந்தான். முன்னால் கிடந்த பெஞ்ச் அவனைத் தடுத்தது. ‘‘என் லட்சுமி... இவ என் லட்சுமி...” - அவன் மீண்டும் முன்னோக்கிப் பாய்ந்தான். முழங்கால்கள் பெஞ்சில் பலமாக மோதின. அடுத்த நிமிடம் பெஞ்ச் கீழே விழுந்தது. ‘‘என் லட்சுமி...” - அவன் மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

ஒரு நாள் லட்சுமியின் விரலை உற்றுப் பார்த்த கல்யாணி கேட்டாள்: ‘‘மகளே, அந்த மோதிரம் யாரோடது?”

‘‘என் பாட்டுக்கு பரிசா கொடுத்தது.”

‘‘யாரு பரிசு தந்தது?”

‘‘கோபி!”

‘‘கோபியா? யார் அது?”

‘‘கோபிநாதன்றது முழுப் பேரு. ஆனா கோபின்னுதான் கூப்பிடுறது.”

‘‘எங்கே இருக்குற ஆளு?”

‘‘அவர் வீடு இங்கேதான் இருக்கு. பெரிய தேர்வுகள் தேர்ச்சி பெற்ற ஆளு அவர். அவருக்கு என் பாட்டு ரொம்பவும் பிடிச்சிருந்ததாம். தன் விரல்ல இருந்த மோதிரத்தைக் கழற்றி எனக்குத் தந்தாரு.”

‘‘வயசான ஆளா?”

‘‘இல்ல... இளைஞன்தான்...” - அவளுடைய உதடுகளில் புன்சிரிப்பு தவழ்ந்தது. 

கல்யாணி ஆழமான சிந்தனையில் மூழ்கினாள்.

அன்று இரவு கல்யாணி பப்புவிடம் கேட்டாள்: ‘‘கோபின்ற ஆளை உங்களுக்குத் தெரியுமா?”

‘‘தெரியும்.”

‘‘அது யாரு?”

‘‘இந்த நகரத்துல அவரைத் தெரியாதவங்க யாருமே இல்ல. இளம் வயசா இருந்தாலும் அவர்மேல எல்லாருக்குமே மதிப்பு இருக்கு. பெரிய தேர்வுகள்ல வெற்றி பெற்ற ஆளு. நல்ல பண வசதி இருக்கு. எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பழகுற ஆளு. பணக்காரர்கள் கூட்டத்தைச் சேர்ந்த அவர் மட்டும்தான் ஏழைகளைக் கேவலமா நினைக்காத ஒரே ஆளு. அவரைத் தெரியுமான்னு கேட்டதற்குக் காரணம்?”

‘‘அவர் லட்சுமிக்கு ஒரு மோதிரம் கொடுத்திருக்காரு.”

‘‘எதுக்கு?”

‘‘அவளோட பாட்டைக் கேட்டு சந்தோஷப்பட்டு கொடுத்ததா அவ சொன்னா.”

‘‘அப்படியா? அவர் அப்படியெல்லாம் செய்யிற ஆளுதான். பலருக்கும் அவர் பரிசுகள் தந்திருக்காரு.

‘‘அவர் நடத்தை எப்படி?”

‘‘மோசமா நான் ஒண்ணும் கேள்விப்பட்டது இல்ல. ஆமா... எதுக்கு இதையெல்லாம் கேட்கணும்?”

‘‘அவரைப் பற்றி சொன்னப்போ, அவ முகத்துல ஒரு மலர்ச்சி தெரிஞ்சது.”

பப்பு ஆழமான சிந்தனையில் மூழ்கினான்.

நாட்கள் பல கடந்தன. லட்சுமி பள்ளிக்கூடத்திலிருந்து வழக்கமான நேரத்திற்கு வருவதில்லை. தாமதமானதற்குக் காரணம் என்ன என்று கல்யாணி கேட்டால், அவள் ஏதாவதொரு காரணத்தைக் கூறுவாள். ஒரு நாள் அவள் சொன்னாள்: ‘‘அம்மா, மாமா சிறையில இருந்திருக்காரு.”

‘‘என்ன? சிறையில இருந்திருக்கிறாரா? எதுக்கு?”

‘‘மாமா கயிறு தொழிற்சாலையில வேலை பார்த்தப்போ, அங்கே ஒரு அடிபடி தகராறு நடந்திருக்கு. அவங்க மாமாவை அடிச்சிருக்காங்க. பிறகு தண்டிக்கவும் செய்திருக்காங்க.”

‘‘உன்கிட்ட இதை யாரு சொன்னது.”

‘‘அவர்.”

‘‘யாரு?”

‘‘கோபி.”

‘‘அப்போ உங்களுக்குள்ளே பேச்சு வார்த்தை இருக்கு... அப்படித்தானே?”

லட்சுமி அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

9

ப்புவின் இருமலும் காய்ச்சலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் ஒரு நண்பன் பப்புவிடம் சொன்னான: ‘‘இது கவனமா இருக்க வேண்டிய நோய், பப்பு.”

‘‘நோயைக் கவனிச்சிக்கிட்டு இருந்தா, காரியங்கள் எப்படி நடக்கும்.”

‘‘கவனமா இல்லைன்னா நிலைமை அவ்வளவுதான். சயரோகம்... சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்... சயரோகம்!”

அந்த நோயின் கடுமை என்னவென்பது பப்புவிற்கும் தெரியும். அதன் மரண வலியை அவனும் அறிந்திருக்கிறான். வேதனைகள் அவனுக்குப் பழக்கமில்லாதவையும் அல்ல.

மரணம் அவனைப் பயமுறுத்தவும் இல்லை. ஆனால், அவனுக்கு வாழ்க்கையில் ஒரு விரதம் இருக்கிறது. ஒரு இலட்சியம் இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் வேதனைகளும், ஏன்... மரணமேகூட அவனைப் பயமுறுத்தவில்லை.

லட்சுமியின் கல்விக்கான செலவு கூடிக்கொண்டே வந்தது. பப்புவின் வரவோ குறைந்து கொண்டே வந்தது. அவனுடைய ரிக்ஷாவில் பெரும்பாலும் யாரும் ஏறுவது இல்லை. அவனுடைய ரிக்ஷாவில் ஏறினால் சேர வேண்டிய இடத்திற்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரமுடியாது. இருமியும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டும் மெதுவாக அவன் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு போகும் காட்சியைப் பார்க்கும்போது நமக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். பகலிலும் இரவிலும் வெயிலிலும் பனியிலும் மழையிலும் இருமிக்கொண்டும் நடுங்கிக் கொண்டும் வண்டி இழுத்தால்கூட செலவிற்கேற்ற வருமானம் கிடைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்தது.

ஒரு நாள் அவன் பயணியை ஏற்றிக் கொண்டு போகும்போது ரிக்ஷாவிலிருந்த பிடியை அவன் விட்டுவிட்டான். அடுத்த நிமிடம் வண்டி பின்னோக்கிச் சாய்ந்தது. பயணி தலைக்குப்புறக் கீழே விழுந்தான். அதற்குப் பிறகு அவனுடைய ரிக்ஷாவைப் பார்த்தாலே பயணிகள் பயப்பட ஆரம்பித்தார்கள். புதிதாக அங்கு வரும் வெளிநாட்டுக்காரர்கள் யாராவது ஏறினால் உண்டு.

கல்யாணி எங்கிருந்தோ சில மருந்துகளைக் கொண்டு வந்தாள். அதைக் குடிக்கும்படி அவள் பப்புவை வற்புறுத்தினாள். அவன் நகைச்சுவை உணர்வுடன் சிரித்தான்: ‘‘இந்த மருந்தைக் குடிச்சா, என் நோய் இல்லாமல் போயிடுமா?”

‘‘ஆமா...”

‘‘நோய் குணமாயிடும்னு டாக்டர் சொன்னாரா?”

‘‘சொன்னாரு.”

‘‘பாவம்! அவருக்கு என்ன நோய்னு தெரியாது?”

‘‘டாக்டருக்குத் தெரியாதுன்னா வேற யாருக்கு தெரியும்?”

‘‘எனக்கு மட்டும்தான் தெரியும் - எனக்கு என்ன நோய் இருக்குன்னு, இந்த நோய்க்கு ஒரே ஒரு மருந்துதான்.”

‘‘என்ன மருந்து?”

‘‘சொல்றேன்... பிறகு சொல்றேன்.”

கல்யாணி அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். பலமும் பளபளப்புமாக இருந்த அந்தச் சதைகள் இப்போது அந்த உடலில் இல்லை கையிலும் காலிலும் இருந்து தோல் எலும்புடன் சம்பந்தமே இல்லாமல் தொங்கிக் கிடந்தது. சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வளர்ந்து நின்றிருந்த ரோமங்களுக்கு மத்தியில் சில வெள்ளை அடையாளங்கள் தெரிந்தன. ஈரப்பசை இல்லாத பற்கள் நீட்டிக் கொண்டிருந்தன. கண்கள் உயிரற்று குழிக்குள் கிடந்தன. கல்யாணியின் கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்தது.

‘‘அழக்கூடாது என் நோய் குணமாகும்.” - அவன் அவளைத் தேற்ற முயற்சித்தான்.

லட்சுமி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வருவதற்கு மிகவும் தாமதமாகிக் கொண்டே வந்தது. சில நேரங்களில் அவள் பொழுது இருட்டும் நேரத்தில் தான் வீட்டிற்கு வருவாள். அவளுக்குப் படிப்பதில் ஒரு அலட்சியம் தோன்ற ஆரம்பித்தது. புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்திருப்பாள். சில வேளைகளில் எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டு காதல் வயப்பட்டு சிரித்துக் கொண்டிருப்பாள்.


ஒருநாள் கல்யாணி பப்புவிடம் சொன்னாள்: ‘‘சமீப நாட்களா லட்சுமி பள்ளிக்கூடத்துல இருந்து பொழுது இருட்டுற நேரத்துலதான் திரும்பி வர்றா, அதுக்கு என்ன காரணம்?”

‘‘கேட்கலையா?”

‘‘கேட்டா, அவ பொய்தான் சொல்றா அவ இப்போ வாசிக்கிறதோ படிக்கிறதோ இல்ல. புத்தகத்தைப் பார்த்து உட்கார்ந்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்கா.”

அதற்கு பப்பு எதுவும் சொல்லவில்லை. அவன் சிந்தனையில் மூழ்கினான்.

லட்சுமியின் தேர்வுக்குக் கட்டணம் கட்ட வேண்டிய நாள் நெருங்கியது. அதற்கு வழி என்ன என்பதுதான் பப்புவை அலட்டிக் கொண்டிருந்த ஒரே சிந்தனை. அவன் சிந்தித்துச் சிந்தித்துக் கடைசியில் சிந்திப்பதையே விட்டுவிட்டான். அப்போதும் இருமிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் அவன் வேலைக்குப் போய்க் கொண்டுதான் இருந்தான். எப்படியோ செலவுக்கான பணத்தைச் சம்பாதித்து விட்டுத்தான் திரும்பி வருவான்.

தேர்வுக் கட்டணம் கட்ட வேண்டிய நாளுக்கு முந்தின நாள் காலையில் லட்சுமி பப்புவின் அறையின் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். கல்யாணி கட்டிலுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். பப்பு எழுந்திருக்கவில்லை. அவனால் எழ முடியவில்லை.

கல்யாணி கூறினாள்: ‘‘லட்சுமி வந்து நிக்கிறதா?”

‘‘எதுக்கு”

‘‘அவளுக்கு ஏதாவது சொல்றதுக்கு இருக்கும்.”

‘‘என்னடா கண்ணு! சொல்லு...” - அவன் மிகவும் சிரமப்பட்டு அவளுடைய முகத்தைப் பார்த்தான்.

அவள் எதுவும் சொல்லவில்லை. அவள் அவனுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

கல்யாணி சொன்னாள்: ‘‘நாளைக்கு ஃபீஸ் கட்டணும்னு...”

‘‘நாளைக்கு ஃபீஸ் கட்டணும்ல? ம்... கட்டிடலாம்... நீ புறப்படுடா கண்ணு...

அவள் புறப்படவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றிருந்தாள்.

‘‘ம்... கிளம்பு...நாளைக்கு ஃபீஸ் கட்டிடலாம்.”

அவள் தெற்குப் பக்கமிருந்த அறைக்குள் சென்றாள். அங்கிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு கேட்டது.

கல்யாணி கேட்டாள்: ‘‘ஃபீஸ் கட்ட பணம் எங்கிருந்து வரும்?”

‘‘ஃபீஸ் கட்டணும். கட்டித்தான் ஆகணும்.” - அவனுடைய உயிரற்ற கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கீழுதடை பலமாகக் கடித்தவாறு அவன் கட்டிலிருந்து எழுந்தான்.

அவன் வாசலை நோக்கி நடந்தான்.

கல்யாணி அவனைத் தடுத்தாள்: ‘‘போகவேண்டாம். இப்போ போக வேண்டாம். வழியில் எங்காவது விழுந்திடுவீங்க.”

‘‘அவளுக்கு ஃபீஸ் கட்டணும். அவளுக்கு நான் ஃபீஸ் கட்டுவேன். அவளுக்கு ஃபீஸ் கட்ட என்னை விட்டா வேற யாருமில்லை...”

‘‘இப்போ போக வேண்டாம். வழியில் எங்காவது விழுந்திடுவீங்க.”

‘‘தள்ளி நிக்கணும்... நான் புறப்படுறேன்.” - அவன் கட்டளைக் குரலில் சொன்னான்.

அவன் விலகி நின்றாள். அவன் வெளியேறி வண்டி நின்றிருந்த ஷெட்டுக்குள் நுழைந்து ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு நடந்தான்.

கல்யாணி வாசலில் நின்றவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஒழுகியது.

லட்சுமி பின்னால் சென்று கேட்டாள்: ‘‘அம்மா, மாமா எங்கே போயிட்டாரு?”

வண்டியை இழுத்துக்கிட்டு போயிட்டாரு மகளே! வழியில் எங்காவது விழுந்திடுவாரோ என்னவோ! நமக்காக... நமக்காக...” - அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

‘‘எனக்காகக்தான் அம்மா” - லட்சுமியின் தொண்டை இடறியது. ‘‘எனக்காகத்தான் தன் வாழ்க்கையையே அவர் இழந்துட்டாரு. எனக்காக மாமா செத்துக்கிட்டு இருக்காரு” - அவள் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அந்தக் கண்ணீர் அவளுடைய இதயத்தில் படிந்திருந்த அழுக்குகளை முழுமையாகக் கழுவிச் சுத்தமாக்கியது.

தாயும் மகளும் தியாகத்தின் பாதங்களில் அவர்கள் கண்ணீரைக் கொண்டு  அர்ச்சனை செய்தார்கள்.

பொழுது இருட்ட ஆரம்பித்த பிறகும் பப்பு திரும்பி வரவில்லை. கல்யாணி படியில் காத்து நின்றிருந்தாள். லட்சுமி முற்றத்தில் என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தாள். அவள் அவ்வப்போது பொறுமையை இழந்து படி இருக்கும் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் தொடர்ச்சியாக இருமல் சத்தம் கேட்டது. கல்யாணி பாதையில் இறங்கினாள். பப்பு ஒரு கம்பித் தூணைப் பிடித்து நின்றவாறு இறுமிக் கொண்டிருந்தான். தினந்தோறும் ஏராளமான மனிதர்களை இழுத்துக் கொண்டு அந்த நகரத்தின் சாலையில் மின்னல் வேகத்தில் பாய்ந்தோடிக்கொண்டிருந்த அந்தக் கால்களுக்கு வெறும் எலும்புகள் மட்டுமே மீதியிருக்கும் அவனுடைய உடலைத் தாங்குவதற்கான சக்தி இல்லாமல் போய்விட்டது. அவள் அவனுக்கு அருகில் ஓடினாள். லட்சுமியும் அவளைத் தொடர்ந்து அங்கு வந்தாள். அவள் அவனைத் தாங்கினாள்.

பப்பு கம்பித் தூணில் இருந்த தன் பிடியை விட்டான். அவன் நிமிர்ந்து நின்றான். “தள்ளி நில்லு... என்னைப் பிடிக்க வேண்டாம். நானே நடக்குறேன்”- அவன் நடந்தான். அவர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

அவன் கட்டிலில் போய் விழுந்தான். லட்சுமி அருகில் நின்றாள். கல்யாணி விளக்கைப் பற்ற வைத்துவிட்டு அருகில் போய் அமர்ந்தாள்.

பப்புவும் லட்சுமியும் கண்களை இமைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் கடந்த காலத்தின் சுருள்களைப் பிரித்துப் பார்த்தார்கள்.

எதிர்ப்புகளும் துன்பங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கை அதோ தகர்ந்து போய் கிடக்கிறது. ஏராளமான எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், செயல்களும் நிறைந்த இன்னொரு வாழ்க்கை அதோ வாழ்க்கையின் வசந்தத்தை அடைந்து பூந்தேனைச் சுவைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் சாட்சியாக மூன்றாவதொரு வாழ்க்கை அதோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறது.

யாரும் எதுவும் பேசவில்லை. மிகவும் கனமான அர்த்தங்கள் நிறைந்த ஒரு பேரமைதி!

‘‘கண்ணு!” - அந்த அழைப்பில் பத்து நெடிய வருடங்களின் அன்பும், தியாகத்தின் சரித்திரமும் இருந்தது.

அவள் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

‘‘கண்ணு... இங்கே உட்காரு.”

அவள் உட்கார்ந்தாள். அவளுடைய சதைப்பிடிப்பான அழகான கை அந்த எலும்புக் கூட்டின் மார்பைத் தொட்டது. பப்புவின் நடுங்கிக் கொண்டிருந்த கை அவளுடைய கையைப் பிடித்தது. அந்தக் கைதான் அவளை ஓடையிலிருந்து தூக்கியது. அந்தக் கை அவளுக்காகப் பத்து வருடங்கள் வேலை செய்த கை. சோர்வு என்பதை அறிந்திராத அந்தக் கை - யாருடைய பிடியிலும் அகப்படாத அந்தக் கை - அதோ நடுங்கிக் கொண்டிருக்கிறது! அந்த நடுக்கம் அவளுடைய நரம்புகளையும் பாதித்தது. அது அவளுடைய இதயத்தை இறுகச் செய்தது.

‘‘கண்ணு!” - எந்த சமயத்திலும் தடுமாறாத அந்தத் தொண்டை இடறியது. அவன் அவளுடைய கையை நெஞ்சி அழுத்திப் பிடித்தான். அவனுடைய கண்கள் மூடின. அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

கல்யாணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கண்களைச் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தாள். அவள் எழுந்து தன் மகளின் தலையில் கையை வைத்தாள். அந்த மூன்று இதயங்களும் ஒன்றாயின.


அடைக்கப்பட்டிருந்த வாசல் கதவின் இடைவெளி வழியாக வெளியிலிருந்து பார்த்த இரண்டு கண்கள் மட்டும் உணர்ச்சிமயமான அந்தச் சம்பவத்திற்குச் சாட்சியாக இருந்தன.

பப்பு கண்களைத் திறந்தான். அப்போது அவனுடைய முகத்தின் உன்னதமான ஒரு அமைதித் தன்மை தெரிந்தது. ‘‘லட்சுமி...” - அந்த அழைப்பில் ஒரு மந்திரச் சக்தி கலந்திருந்தது. அவனுடைய கை உயர்ந்தது. தழும்பேறிப் போயிருந்த அந்தக் கை அவளுடைய சதைப் பிடிப்பான முகத்தை வருடியது. அவளுடைய கண்களிலிருந்து வழிந்த நீரை அது துடைத்தது.

லட்சுமியின் கை அவனுடைய ரோமங்கள் வளர்ந்திருந்த முகத்தைத் தடவியது. அவள் அவனுடைய கண்களில் இருந்த பீளையைத் துடைத்து விட்டாள்.

கல்யாணி பழைய நினைவுகளில் மூழ்கிப் போய் விட்டிருந்தாள்.

அவன் எழுந்து உட்கார்ந்தான். அவன் சொன்னான் தனக்கும் சோறு வேண்டுமென்று. அவனுக்குப் பசி எடுத்தது. ருசி உண்டானது. லட்சுமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவன் சாப்பிட்டான்.

சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பள்ளிக் கூடத்தின் ஆண்டு விழாவைப் பற்றியும், அவளுக்குப் பரிசு தந்த ஆளைப் பற்றியும் அவள் சொன்னாள். அதற்குப் பிறகு அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது உண்டென்றும், பேசுவது உண்டென்றும் அவள் மனம் திறந்து சொன்னாள். பப்பு அவள் சொன்ன எல்லாவற்றையும் ‘‘உம்” கொட்டியவாறு கேட்டான். கடைசியில் அவள் கேட்டாள்: ‘‘மாமா, உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று.

‘‘ம்...”

‘‘அவருக்கு உங்களைத் தெரியும். உங்க ரிக்ஷாவுல அவர் ஏறியிருக்கறதா சொன்னாரு.”

‘‘ம்...”

‘‘உங்க மேல அவருக்கு நல்ல அன்பும் மரியாதையும் இருக்கு.”

‘‘ம்...”

‘‘மாமா, உங்களைப் பற்றி நான் அவர்கிட்ட சொல்லுவேன். என்னை ஒடையிலே இருந்து தூக்கினதுல இருந்து எல்லா விஷயங்களையும் நான் அவர்கிட்ட சொல்லியிருக்கேன்.”

கல்யாணி மேலே பார்த்துக் கைகளைக் கூப்பினாள்: தெய்வமே, இப்பவாவது என் குழந்தைக்கு நல்ல புத்தி வந்ததே!”

‘‘அம்மா, நான் அறிவில்லாம என்னென்னவோ பேசிட்டேன். பல நேரங்கள்ல நான் தப்பா நடந்திருக்கேன். பெரிசுன்னு நான் மனசுல நினைச்சிக்கிட்டு இருந்தது எதுவும் உண்மையில் பெருசே இல்லைன்னு அவர்தான் எனக்குச் சொல்லித் தந்தாரு. இந்த நகரத்தில் இருப்பவர்கள்லயே பெரிய ஆள், எல்லாரையும் விட உயர்ந்த மனிதர் என் மாமாதான்னு அவர்தான் எனக்குப் புரிய வைச்சாரு. எனக்கு என் மாமாவோட மதிப்பைப் புரிஞ்சிக்கிறதுக்கு அவரோட உதவி தேவைப்பட்டது... அம்மா, என் எல்லா தப்புகளுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்...”

‘‘தெய்வத்துக்கிட்ட சொல்லு மகளே! தெய்வம் மன்னிப்பு தரும்.”

பப்பு எதுவும் பேசவில்லை.

மறுநாள் காலையில் அவன் லட்சுமியை அழைத்தான். ‘‘குழந்தை, இன்னைக்குத்தானே ஃபீஸ் கட்டணும்?”

‘‘ஆமா...”

அவன் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளுடைய கையில் தந்தான். அவள் கேட்டாள்: ‘‘இது எங்கேயிருந்து கிடைச்சது மாமா?”

‘‘என் வண்டியை வித்துட்டேன்.”

அதைக் கேட்டு கல்யாணி பதறி விட்டாள்.

‘‘அய்யோ! வண்டியை வித்தாச்சா?”

‘‘ஆமா... வித்தாச்சு. அதை விற்காம ஃபீஸ் கட்ட வேற வழியே இல்ல...”

‘‘இனிமேல் செலவுக்கு என்ன செய்றது?”

‘‘அதை விற்கலைன்னாகூட, செலவுக்கு வேற வழி தேடத்தான் செய்யணும். இனிமேல் வண்டி இழுக்க என்னால் முடியாது.”

‘‘லட்சுமி பப்புவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்: மாமா, இனிமேல், நீ வண்டி இழுக்க வேண்டாம். இனிமேல் வண்டி இழுக்க உங்கக்கிட்ட பலமில்ல. மாமா, எங்களுக்காகப் பத்து வருடங்கள் நீங்க வண்டி இழுத்தீங்க. வண்டி வித்து கிடைச்ச பணத்தையும் இதோ என் கையில் கொண்டு வந்து தந்திருக்கீங்க. இதுபோதும். மாமா, இனிமேல் நீங்க ஓய்வு எடுக்கணும்.”

பப்பு கவலையுடன் புன்னகைத்தான்: ‘‘குழந்தை... வாழ்க்கை ஓய்வு எடுக்குறதுக்காக இல்ல. வாழ்க்கையின் முடிவுலதான் ஓய்வுன்றதே இருக்கு. அதுக்குப் பேர்தான் மரணம்” - அவன் அவளுடைய தலையை வருடியவாறு சொன்னான்: ‘‘நீ போயி குளிடா கண்ணு. குளிச்சு முடிச்சு பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பு. ஃபீஸைக் கட்டிட்டு மீதி இருக்குற பணத்தை பத்திரமா வச்சிரு. உனக்கு ஏதாவது தேவைப்பட்டா, வாங்கிக்கோ” - அவன் அவளை ஆசீர்வதித்துவிட்டு வாசலுக்கு வந்தான்.

‘‘எங்கே போறீங்க?” - கல்யாணி கேட்டாள்.

‘‘சொல்றேன். நான் போயிட்டு வரட்டுமா?”- அவன் படியை நோக்கி நடந்தான்.

லட்சுமி ஓடி வந்து அவனைத் தடுத்தாள்: ‘‘மாமா, எங்கே போறீங்க?”

‘‘பிறகு சொல்றேன். நான் போகட்டுமா?”

‘‘மாமா, இனிமேல் நீங்க எங்கேயும் போகக்கூடாது.”

‘‘தள்ளி நில்லு இங்கேயிருந்து” - அது ஒரு கட்டளையாக இருந்தது.

அவள் விலகி நின்றாள். அவன் படியைக் கடந்து நடந்தான்.

லட்சுமி அறையில் போய் அமர்ந்தாள். அவள் ஆழமான சிந்தனையில் மூழ்கினாள்.

‘‘லட்சுமி!” - அன்பான ஒரு அழைப்பு கேட்டது.

அவள் திரும்பிப் பார்த்தாள். கோபி அவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறு முன்னறையில் நின்று கொண்டிருந்தான். அவள் எழுந்தாள். ஆச்சரியமும், ஆனந்தமும் சேர்ந்து அவளைத் திக்குமுக்காடச் செய்தன.” ‘‘இது... இது... இதை நான் எதிர்பார்க்கல.”

‘‘எதை எதிர்பார்க்கல?”

‘‘இங்கே நீங்க வருவீங்கன்னு...”

‘‘மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராகத்தான் நான் எப்பவுமே நடப்பேன். நான் இங்கே வர்றது இது முதல் தடவை இல்ல.”

‘‘இதுக்கு முன்னாடியும் இங்கே வந்திருக்கீங்களா?”

‘‘நேற்று இரவு நான் இங்கே வந்தேன்.”

‘‘இரவிலா? எப்போ?”

உணர்ச்சிமயமான அந்தக் காட்சியை நான் பார்த்தேன். அந்தக் கட்டிலில் படுத்திருந்த அந்தத் தியாகக் கடவுளின் பாதங்களில் விழுந்து வணங்க வேண்டும்போல எனக்கு இருந்தது. லட்சுமி, அவரோட கை உன் முகத்தைத் தடவினப்போ எனக்குப் பொறாமையா இருந்தது. அவர் எனக்கும் மாமாவா இருக்கக்கூடாதான்னு நான் ஆசைப்பட்டேன்.”

‘‘அந்த ஆசை...” - அவள் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தாள்.

‘‘ஆமா... அந்த ஆசையை நிறைவேற்றுறதுக்குத்தான் நான் இப்போ இங்கே வந்திருக்கேன். லட்சுமி, உனக்கு சம்மதம்தானா...?”

‘‘அது யார் மகளே?” என்று கேட்டவாறு, அப்போது கல்யாணி வடக்குப் பக்க அறையிலிருந்து தெற்குப் பக்க அறைக்குள் வந்தாள்.

‘‘அன்னைக்கு எனக்கு மோதிரம் பரிசு தந்தது இவர்தாம்மா?”

கல்யாணி கோபியை உற்றுப் பார்த்துவிட்டு லட்சுமியிடம் கேட்டாள்: ‘‘அவர் ஏன் உட்காராம இருக்காரு?”

அதற்கு கோபிதான் பதில் சொன்னான்: ‘‘வேண்டாம்... நான் இங்கேயே நிக்கிறேன். லட்சுமிக்கு நான் தந்த பரிசுக்குப் பதிலாக ஒரு பரிசை வாங்கறதுக்குத்தான் நான் வந்தேன்.”

‘‘அய்யோ! நாங்க ஏழைங்க... உங்களுக்கு நாங்க என்ன தர முடியும்?”

‘‘தர்றதுக்கு எதுவுமே இல்லைன்னா, உங்களையே எனக்குத் தரக்கூடாதா?”


கல்யாணி அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. அவள் லட்சுமியைப் பார்த்தாள். லட்சுமியை கோபியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

கோபி தொடர்ந்து சொன்னான்: ‘‘உங்க எல்லாரையும் என் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறதுக்குத்தான் நான் வந்தேன்.”

‘‘நாங்க ஏழைங்க...”

‘‘நான் பணக்காரனும்கூட. அதுனாலதான் உங்களை என் வீட்டுக்கு  அழைக்கிறேன். 

‘‘அதை என்கிட்ட சொன்னா போதாது?”

‘‘சொல்ல வேண்டியவர்கிட்ட சொல்றேன். உங்களுக்குச் சம்மதமா?”

‘‘அவருக்குச் சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான்.”

‘‘லட்சுமியோட மாமா எங்கே?”

‘‘வெளியே போயிருக்காரு.”

‘‘அவரை இனிமேல் வெளியே அனுப்ப வேண்டாம். இனி வேலை செய்தால், அவர் செத்துப் போயிடுவாரு. உடல்ல இருக்குற நோய்க்குத் தகுந்த சிகிச்சை செய்யணும்.”

‘‘யார் சொல்றதையும் கேக்குற ஆள் இல்ல.”

‘‘சரி... அது இருக்கட்டும். நான் இங்கே வந்திருந்தேன்ற விஷயத்தையும், அவரைப் பார்க்க விருப்பமா இருக்கேன்றதையும் சொல்லுங்க. நான் திரும்பவும் வருவேன்.” - அவன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அன்று இரவு கல்யாணி பப்புவிடன் கோபி வந்த விஷயத்தைச் சொன்னான். சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிய அவன் சொன்னான்: ‘‘அவளோட படிப்பு முடியட்டும்.”

10

ப்பு இரண்டு நாட்கள் முழுவதும் வேலை தேடினான். நகரமெங்கும் அலைந்து பார்த்தான். ஒரு வேலையும் கிடைக்கவில்லை. புகைவண்டி நிலையத்திற்குச் சென்று சுமை தூக்கும் வேலையைச் செய்யலாம் என்று எண்ணி  ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தபோது, அவன் கிட்டத்தட்ட கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்தான். அதனால் அந்த வேலையை அக்கணமே சரிப்படாது என்று விட்டுவிட்டான். பீடி சுற்றும் வேலை அவனுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்று. ஆனால், இருமிக் கொண்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டும் இருக்கக் கூடிய அவன் பீடிக்காரர்களுக்குத் தேவையில்லை.

இரக்கப்படவும், சிறு சிறு உதவிகள் செய்வதற்கும் பலரும் இருந்தார்கள். ஆனால் பரிதாபப்படுவதும் உதவிகளும் அவனுக்குத் தேவையில்லை. நண்பர்கள் பரிதாபப்பட்டு வாங்கித்தரும் தேநீரும் பீடியும் வேண்டாம் என்று அவன் மறுத்துவிடுவான். அவனுடைய கம்பீரமும் கட்டுப்பாடற்ற சுதந்திர உணர்வும் மற்றவர்களின் இரக்கத்திற்கு ஆளாகக் கூடிய மனிதனாக இருக்கவும், மற்றவர்களின் உதவிகளைப் பெறுபவனாக இருக்கவும் அவனை அனுமதிக்கவில்லை. அப்போதுகூட தலையை உயர்த்தி வைத்துக் கொண்டு கம்பீரமாகத்தான் அவன் நடந்தான்.

வீட்டிலிருந்த கஷ்டங்கள் எதையும் அவனுக்குத் தெரியாமல் இருக்கும்படி கல்யாணியும் லட்சுமியும் பார்த்துக் கொண்டார்கள். கல்யாணியின் கையிலிருந்த கொஞ்சப் பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் மிகவும் சிக்கனமாகச் செலவு செய்தார்கள். பப்புவை வெளியில் எங்கும் அனுப்பாமலும், மருந்து உட்கொள்ள வைக்கவும் அவர்கள் பிறகும்கூட முயற்சி செய்தார்கள். ஆனால், அதனால் ஒரு பயனும் உண்டாகவில்லை.

கோபி திரும்பவும் அங்கு சென்றான். பப்பு வீட்டில் இருக்கக்கூடிய நேரமாகப் பார்த்து அவன் சென்றான். பப்பு அவனை அன்புடன் வரவேற்றான். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். கோபிதான் அதிகம் பேசினான். பப்புமீது தான் கொண்டிருக்கும் உண்மையான மதிப்பையும் அன்பையும் கோபி மனம் திறந்து சொன்னான். லட்சுமியின் அறிவுத் திறமையையும் கலைமீது கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் அவன் பாராட்டிச் சொன்னான். தங்கள் இருவருக்குமிடையில் உள்ள காதலைப் பற்றியும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் விருப்பத்தைப் பற்றியும் சூசகமாக வெளிப்படுத்தினான்.

பப்பு சொன்னான்: ‘‘அது அவளின் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எனக்குச் சந்தோஷம்தான். இருந்தாலும், அவளின் படிப்பு முடியட்டும். அதுக்குப் பிறகு, கல்யாண விஷயத்தை முடிக்கலாம்.”

‘‘அது போதும்” என்று கோபியும் ஒப்புக் கொண்டான். போவதற்காக எழுந்தபோது அவன் ஒரு கவரைப் பப்புவின் கையில் தந்தான். அதில் நிறைய ரூபாய் நோட்டுகள் இருந்தன.

பப்பு கேட்டான்: ‘‘இது என்ன?”

‘‘என்னோட ஒரு அன்புக் காணிக்கை.”

பப்பு கவரைப் பிரித்துப் பார்த்தான். அவன் நகைச்சுவை உணர்வு கொண்ட புன்னகையுடன் சொன்னான்: ‘‘இதுதான் காணிக்கையா? இப்படிப்பட்ட காணிக்கைகள் எதுவும் எனக்கு வேண்டாம். இதை நீங்களே கொண்டு போயிடுங்க.

‘‘மனசுல மதிப்பு வச்சு கொடுக்குற காணிக்கையைத் திருப்பித் தர்றது வருத்தமா இருக்கு.”

‘‘குழந்தை, நான் இப்படி எதையும் வாங்கினது இல்ல. வாங்கவும் மாட்டேன்.”

‘‘அப்படின்னா லட்சுமிக்காகவாவது இதை நீங்க வாங்கணும்.”

அவன் சொல்லி விட்டுத் திரும்பி நடந்தான்.

பப்புவின் முக வெளிப்பாடே மாறிவிட்டது. ‘‘கொஞ்சம் நில்லுங்க”- அவன் கட்டளையிட்டான்.

கோபி திரும்பி நின்றான். அவனை நோக்கிக் கவரை நீட்டியவாறு பப்பு நடந்தான். ‘‘வேலை செய்தும் கூலி வாங்கியும் பழகிப்போன கை இது. இந்தக் கைக்கு காணிக்கை வாங்கிப் பழக்கம் இல்ல. இதை நீங்களே கொண்டு போயிடுங்க.”

கோபி கவரை வாங்கினான். சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்துவிட்டு அவன் மெதுவாகத் திரும்பி நடந்தான்.

கல்யாணியும் லட்சுமியும் நடந்த விஷயங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கோபி போனவுடன் கல்யாணி பப்புவின் அருகில் வந்தாள். ‘‘இது என்ன பழக்கம்? அன்பு இருக்கிறதுனாலதானே அவர் அதைத் தந்தாரு! அதைத் திருப்பி தர்றது சரியா?” - அவள் கேட்டாள்.

அதைக் கேட்டு பப்புவின் முகத்தில் கோபம் படர்ந்தது. அதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் அப்படியொரு கோப வெளிப்பாட்டை அந்த முகத்தில் அவள் பார்த்ததே இல்லை. ‘‘ம்...” - அவன் நீட்டி முனகினான். அதைப் பார்த்து அவள் அதிர்ந்து போய் பின்வாங்கினாள்.

லட்சுமி ஓடி வந்தாள். ‘‘அம்மா, நீங்க எதுவும் சொல்லாதீங்க. மாமாவோட விருப்பத்திற்கு மாறாக எதுவும் சொல்லக் கூடாது. எதையும் செய்யக் கூடாது.”

‘‘அவர் என்ன நினைப்பார்னு நினைச்சு நான் அப்படிச் சொன்னேன்.”

‘‘அவர் ஒண்ணும் தப்பா நினைச்சிருக்க மாட்டார். உங்களைவிட, என்னைவிட மாமாவைப் பற்றி அதிகமாக தெரிஞ்சிக்கிறவர் அவர்தான்.”

பப்புவின் முகத்திலிருந்த கோப உணர்ச்சி மறைந்து போனது. அவன் எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டு மவுனமாக நின்றிருந்தான். சிறிது நேரத்தில் அந்த முகத்தில் ஒரு ஆழமான சாந்த நிலை வந்து ஒட்டிக் கொண்டது. அவன் மெதுவாகப் படியை நோக்கி நடந்தான்.

மதியம் ஆகும் வரை அவன் ஒவ்வொரு தெருவாக அலைந்தான். பிறகு ஒரு பீடி பற்ற வைப்பதற்காக ஒரு பீடிக் கடையை நோக்கி நடந்தான். கடைக்கு முன்னால் முனையை எரிய விட்டுத் தொங்கிக் கொண்டிருந்த கயிறு எரிந்து முடியும் நிலையில் இருந்தது. பப்பு அதை எடுத்து பீடி பற்ற வைத்தபோது கடைக்காரன் சொன்னான்: ‘‘பப்பு, கயிறு கொண்டு வர முடியுமா? இங்கே கயிறு கொண்டு வர்ற ஆளு மூணு நாலு நாட்களாக வரவே இல்ல.”


பப்பு சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னான்: ‘‘நான் கொண்டு வர்றேன். சாயங்காலம் கொண்டு வந்தா போதுமா?”

‘‘அது போதும்.”

அவன் வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். அங்கு சென்று காய்ந்த தேங்காய்களை எடுத்து அதை அடித்து நசுக்க ஆரம்பித்தான்.

‘‘அது எதுக்கு?” - கல்யாணி கேட்டாள்.

‘‘கயிறு திரிக்க.”

‘‘எதுக்குக் கயிறு?”

‘‘பீடிக் கடையில கொடுக்க.”

‘‘உடம்பு அசைஞ்சா நோய் அதிகமாயிடும்.”

அவன் அதைத் தமாஷாக எண்ணிச் சிரித்தான்.

‘‘நான் அதை நசுக்கித் தர்றேன். நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க.” - அவள் அருகில் வந்தாள்.

‘‘வேண்டாம்... கயிறு திரிச்சுத் தந்தா போதும். தேங்காயை நான் நசுக்கித் தர்றேன்.”

அவன் அதை நசுக்கித் தந்தான். அவள் கயிறு திரித்துத் தந்தாள். அவன் அதைக் கொண்டு போனான். அதற்கு மூன்று அணாக்கள் கிடைத்தன.

அவன் ஒரு பீடிக் கடைக்கு வாடிக்கையாகக் கயிறு கொடுக்க ஆரம்பித்தான். வேறு இரண்டு கடைகளுக்கும் கூட அவன் வாடிக்கையாகக் கயிறு கொண்டு போய்க் கொடுத்தான். அதன் மூலம் அவன் செலவிற்கான பணத்தைச் சம்பாதிக்க ஆரம்பித்தான்.

லட்சுமியின் காதலைப் பற்றியும், திருமண விருப்பத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டதிலிருந்து பப்புவிடம் சில மாறுதல்கள் உண்டாயின. அவன் எப்போது பார்த்தாலும் எங்கோ தூரத்தில் பார்த்துச் சிந்தித்துக் கொண்டேயிருப்பான். அவன் மிட்டில் இருக்கும்போதெல்லாம் லட்சுமி அவனுடைய தேவைகளைக் கேட்டுக் கொண்டும் அவனைக் கவனித்துக் கொண்டும் இருப்பாள். தான் வாசித்த புத்தகங்களில் இருக்கும் சுவாரசியமான விஷயங்களை அவனுக்கு அவள் வாசித்துக் காட்டுவாள். அவள் பாடுவாள். பப்பு அவற்றை வெறுமனே ‘‘உம்” கொட்டிக் கேட்டுக் கொண்டிருப்பான். ஆகாயத்திற்கு அப்பால் எதையோ தேடுவதைப் போல அவன் தூரத்தில் பார்த்துக் கொண்டேயிருப்பான்.

லட்சுமியின் ஒரு பாட்டு அவனுக்கு மிகவும் பிடிக்கும். அன்று - பள்ளிக் கூட ஆண்டுவிழா நாளன்று பாடிய பாட்டு. அந்தப் பாட்டிற்கு அசாதாரணமான ஒரு ஈர்ப்புச் சக்தி இருந்தது. அந்தப் பாடலுக்கு ஒரு சோக ரசம் கலந்த இனிமை இருந்தது. அந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்தால் அவன் அவளுடைய முகத்தையே கண்களைக்கூட இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான். கண்களிலிருந்து கண்ணீர் இடைவெளி இல்லாமல் வழிந்தவண்ணம் இருக்கும். ஒருமுறை பாட்டைப் பாடி முடித்தவுடன் லட்சுமி கேட்பாள்: ‘‘மாமா, இந்தப் பாட்டு உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்ல?”

‘‘ஆமா... அந்தப் பாட்டு என்னை அழ வச்சிடும்.”

‘‘மாமா, உங்களுக்கு அழுறதுல விருப்பமா?”

‘‘ஆமா...”’

என் பாட்டைக் கேட்டு அழுறதுன்றது அவருக்கும் விருப்பமான ஒரு விஷயம்தான்.”

‘‘யாருக்கு?”

லட்சுமி அதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் அமைதியாக இருந்தாள். பப்பு கேள்வியை மீண்டும் கேட்கவில்லை. அவன் வானத்தில் விளிம்பையே சிறிது நேரம் பார்த்தவாறு அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். தொடர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு இருமத் தொடங்கினான்.

ஒரு நாள் அவள் கல்யாணியிடம் கேட்டாள்: ‘‘அம்மா, மாமாவுக்கு மனசுல ஏதோ கவலை இருக்குறது மாதிரி தெரியுதே! எப்போ பார்த்தாலும் தனியா உட்கார்ந்து என்னவோ சிந்திச்சக்கிட்ட இருக்காரே?”

‘‘எனக்கு என்ன தெரியும் மகளே! யாராலயும் அதைப் புரிஞ்சிக்க முடியாது...”

லட்சுமி பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றதாகச் செய்தி கிடைத்தது. அவள் அந்த மகிழ்ச்சியான செய்தியுடன் பப்புவைத் தேடி ஓடி வந்தாள்: ‘‘மாமா... நான் தேர்வுல வெற்றி பெற்றுவிட்டேன்.”

‘‘ம்....” - அவன் வெறுமனே ‘‘உம்” கொட்டினான். மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக ஒரு கவலையின் நிழல் அந்த முகத்தில் தெரிந்தது.

அவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்: ‘‘மாமா, நான் வெற்றி பெற்றது உங்களுக்குச் சந்தோஷமான விஷயம்தானே?”

‘‘ம்...”

‘‘பிறகு எதுக்கு உங்க முகத்துல ஒரு கவலை?”

‘‘குழந்தை...” - அந்த அழைப்பில் சோகமயமான ஒரு சாந்தம் கலந்திருந்தது. ‘‘இனி நான் யாருக்காக வேலை செய்வேன்?”

‘‘மாமா, இனி யாருக்காகவும் நீங்க வேலை செய்ய வேண்டாம். இனிமேல் வேலை செய்யிறதுக்கு உங்க கைக்குப் பலமில்லை.”

‘‘குழந்தை... இந்தக் கையும் இந்தக் காலும் வேலை செய்து பழகிப் போனது...”

‘‘அந்தப் பழக்கத்தை இனி மாற்றணும். மாமா, இவ்வளவு நாட்களும் அம்மாவுக்காகவும், எனக்காகவும் நீங்க வேலை செய்தீங்க. ஓடையில கிடந்த ஒரு புழுவாக இருந்தேன் நான். மாமா, நீங்க அந்தப் புழுவை எடுத்து மனுஷியா ஆக்கினீங்க. மாமா, எனக்கு நீங்க படிப்பையும் பண்பையும் தந்தீங்க. காய்ந்து காணாமல் போக இருந்த என்னோட பிறவித் திறமைகளை வெளியே தெரியவச்சது நீங்கதான்...” - அவள் உணர்ச்சிவசப்பட்டு அந்த எலும்புக் கூட்டைக் கட்டிப் பிடித்தாள். ‘‘மாமா... உங்களின் கடுமையான உழைப்பின் பலன் நான்... மாமா, நான் உங்க சொத்து, அதே மாதிரி மாமா, நீங்க என் சொத்து.”

ஊற்றுக் குழிகளுக்குள்ளிருந்து நீர் பொங்கி வருவதைப் போல பப்புவின் குழிவிழுந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் அவளுடைய தலையைப் பாசத்துடன் தடவினான். ‘‘குழந்தை, நான் என் இலக்கை அடைஞ்சிட்டேன். உன் உயர்வு, உன் சந்தோஷம் - இதுதான் என் நோக்கமா இருந்தது. அந்த நோக்கத்தை நான் அடைஞ்சிட்டேன். இனி நான் எங்கே போறது? யாருக்காக வாழ்வேன்?”

‘‘மாமா, நீங்க இனிமேலும் எனக்காக வாழணும். நீங்க இல்லைன்னா எனக்குச் சந்தோஷம் இல்ல. நீங்க சந்தோஷமா இருக்குறதைப் பார்த்து நான் சந்தோஷப்படுவேன். மாமா, உங்களை நான் மதனப்பள்ளிக்கு அனுப்பி சிகிச்சை செய்ய வைப்பேன். அவரும் அதைத்தான் சொன்னாரு.”

பப்புவின் உதடுகளில் ஒரு அலட்சியப் புன்னகை தோன்றியது. ‘‘இந்த நோய்க்கா சிகிச்சை! இதுக்கு யாரும் சிகிச்சை செய்ய வேண்டாம். இந்த நோய் சிகிச்சை செய்யாமலே குணமாயிடும்.

அப்போது கல்யாணி அறைக்குள் வந்தாள். ‘‘என் கடவுளே! இது என்ன குணம்? சிகிச்சை செய்யாம நோய் குணமாகுமா?”

‘‘குணமாகும்... என் நோய் சிகிச்சை செய்யாமலே குணமாகும்.”

‘‘சாகுறப்பவா இருக்கும்.”

‘‘ஆமா... சாகுறப்போ குணமாயிடும். சாகுறப்போதான் குணமாகும்.”

‘‘என் மாமா...” - லட்சுமி தேம்பித் தேம்பி அழுதாள். ‘‘என் மாமா, நீங்க சாக மாட்டீங்க... நீங்க எனக்காக வாழணும்.”

அவன் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தான். ‘‘குழந்தை... அழாதே. உனக்காக வாழ இனி வேற ஆள் இருக்காங்க.”

முன்னறையில் காலடிச் சத்தம் கேட்க, எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள்.

கோபி அங்கு நின்றிருந்தான்.


திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. கோபியின் வீட்டில் திருமணத்தை நடத்த வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பே அவர்கள்  எல்லாரும் அங்கு வந்து வாழ வேண்டும் என்று அவன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அந்த வேண்டுகோளை பப்பு நிராகரித்துவிட்டான்.

லட்சுமி மயில் குஞ்சைப் போல சந்தோஷப்பட்டாள். கல்யாணி மகிழ்ச்சியில் மிதந்தாள். பப்பு வழக்கம்போல கயிறு திரித்து எடுத்துக் கொண்டு கடையைத் தேடிப் புறப்பட்டான்.

கல்யாணி தடுத்தாள்: ‘‘இதை எடுத்திட்டு எங்கே போறீங்க?”

அப்போதுகூட அந்த வறண்ட உதடுகளில் அலட்சியப் புன்னகை தவழ்ந்து கொண்டுதான் இருந்தது. ‘‘தெரியாது... அப்படித்தானே? இதை எடுத்துக்கிட்டு நான் எங்கே போவேன்னு தெரியாது. அப்படித்தானே?”

‘‘இனிமேலும் இதை எடுத்துக்கிட்டு போறது அவளுக்கும் அவருக்கும் குறைச்சலான விஷயம் இல்லையா?”

‘‘குறைச்சல்!” - கண்ணீர் அரும்பிய அந்தக் கண்களிலிருந்து நெருப்புப் பொறி சிதறியது. மூக்கு விடைத்தது. ‘‘அவளுக்கும் அவருக்கும் குறைச்சல்.... அப்படித்தானே? குறைச்சல்.... குறைச்சல்...” -  இருமல் உண்டானது. இருமி இருமி அவனுக்கு மூச்சு அடைத்தது.

லட்சுமி ஓடி வந்து அவனைப் பிடித்தாள்: ‘‘மாமா, இதை எடுத்துட்டுப் போகாதீங்க. இனிமேல் நீங்க கயிறு விற்கப் போகக் கூடாது.”

‘‘நான் கயிறு விற்கப் போறது உனக்கும் அவருக்கும் குறைச்சலான ஒரு விஷயம்... அப்படித்தானே?”

‘‘இல்ல. மாமா, நீங்க என்ன செய்தாலும் எங்களுக்குக் குறைச்சல் இல்ல. இவ்வளவு நாட்களாக வேலை செய்து நோயாளியாயிட்ட நீங்க இனிமேல் ஓய்வு எடுக்கணும்ன்றதுதான் என்னோட விருப்பம்.”

மீண்டும் அந்த அலட்சியப் புன்னகை. ‘‘குழந்தை, ஓய்வு எடுக்கப் பிறந்தவன் இல்ல நான். இந்த வாழ்க்கை ஓய்வெடுக்குறதுக்காக உள்ளது இல்ல. விடு... நான் போறேன்.”

அவள் தன் பிடியை விட்டாள். அவன் நடந்தான். அவள் தன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தாள்.

தாய் மகளைத் தேற்றினாள்: ‘‘அவருக்குத் தோணினபடிதான் நடப்பாரு, மகளே. நீ அழாதே.”

‘‘அம்மா, ஒருவேளை அவர் சொன்னா கேட்பாரு.”

‘‘இல்ல மகளே... இல்ல... யாரு சொன்னாலும் கேட்க மாட்டாரு.”

உண்மைதான். யார் சொன்னாலும் கேட்கக் கூடிய ஆள் இல்லைதான். பப்பு. மற்றவர்கள் சொல்லிக் கேட்டுப் பழக்கமில்லாத மனம் அது. யாருக்கு முன்னாலும் குனிந்து பழக்கமில்லாத தலை அது.

கயிறைத் தோள் மீது இட்டுக் கொண்டு அவன் நடந்து சென்றான். அந்த வாழ்க்கைப் படகு எத்தனையெத்தனை அலைகளைக் கடந்து சென்றிருக்கிறது! நினைத்துப் பார்க்க முடியாத தியாகச் சிந்தனை, அடக்கினால் அடங்காத சுதந்திர உணர்வு - அவை இரண்டைத் தவிர அவனிடம் வேறு எதுவும் இல்லை. அந்தப் படகின் ஓட்டத்திற்கு உதவ வறுமைத் திமிங்கலத்தின் வாயிலிருந்து காப்பாற்றப்பட்ட இரண்டு உயிர்களின் சுமையையும் சேர்த்து அந்தப் படகு சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. இருட்டும் அலைகளும் ஆக்கிரமித்திருக்கும் திசைகளில் அந்தப் படகு வேகமாகப் பயணித்தது. அலைகளின் அடிகள் பட்டு படகின் ஓரங்கள் பாதிக்கப்பட்டன. எந்த நிமிடத்திலும் அது மூழ்கிப் போகலாம். எனினும், அது அப்படியே போய்க் கொண்டிருந்தது.

அன்று செலவுக்குத் தேவையான பணத்துடன் மாலை நேரம் வந்ததும் அவன் திரும்பி வந்தான். லட்சுமியின் அருகில் சென்றான். அவள் பல கேள்விகளும் கேட்டாள். அர்த்தம் புரிந்துகொள்ள முடியாத ஒரு பார்வை மட்டுமே அவளுக்குப் பதிலாகக் கிடைத்தது.

கல்யாணி அவன் இருக்கும் பக்கமே செல்லவில்லை. எதுவும் அவள் கேட்கவுமில்லை. அவளிடமும் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகியிருந்தது.

லட்சுமி சொன்னாள்: ‘‘அம்மா, மாமாகிட்ட கஞ்சி குடிக்கச் சொல்லுங்க.”

‘‘என்னால முடியாது. நல்லது சொன்னா கேட்காத ஆளுக்கிட்ட என்னால சொல்ல முடியாது.”

லட்சுமி கஞ்சி கொண்டு போய்க் கொடுத்தாள். அன்று இரவு இருமல் அதிகமாக இருந்தது. அவன் சிறிது கூட கண் மூடவில்லை.

மறுநாளும் பப்பு கயிறு எடுத்துக் கொண்டு கடைக்கு சென்றான். யாரும் அவனைத் தடுக்கவில்லை. லட்சுமி அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டு கண்ணீர் விட்டாள். கல்யாணி பற்களைக் கடித்தவாறு உள்ளே சென்றாள்.

அன்று பிற்பகல் நேரத்தில் கோபி அனுப்பி வைத்த ஆள் ஒரு பெரிய ட்ரங்க் பெட்டி நிறைய ஆடைகளும் அணிகலன்களும் கொண்டு வந்து லட்சுமியிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். பக்கத்து வீடுகளிலிருந்த பெண்கள் திருமண ஆடைகளைப் பார்ப்பதற்காக அங்கு வந்து கூடினார்கள். அவற்றின் உயர்ந்த தன்மையையும் அழகையும் அவர்கள் பாராட்டினார்கள். அவர்கள் லட்சுமியை ஆசீர்வதித்தார்கள். கல்யாணியைப் புகழ்ந்தார்கள்.

மாலை நேரம் ஆனபோது பப்பு இருமிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் திரும்பி வந்தான். கல்யாணி முன்னறையில் நின்றிருந்தாள். வாசலில் நின்றவாறு அவன் ஒரு சிறு தாள் பொட்டலத்தை அவளுக்கு நேராக நீட்டினான்.

‘‘என்ன அது?” - அவளுடைய கேள்வியில் அதற்கு முன்பு எப்போதும் இருந்திராத அதிகாரத் தொனி இருந்தது.

‘‘ம்...” அவன் நீட்டி முனகினான்.

‘‘நான் சொன்னேன்ல பீடிக் கடைக்குக் கயிறு கொண்டு போகக் கூடாதுன்னு” - அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் கோபத்தின் வீச்சு

கலந்திருந்தது. ‘‘என் மகளுக்கு அவமானம் உண்டாகனும்ன்றதுக்காகத் தானே இப்படியெல்லாம் நடக்கிறீங்க?”

ஒரு மின்னல்! பப்பு சகலத்தையும் மறந்துவிட்டான். உலகம் அவனுக்கு முன்னாலிருந்து மறைந்து போனது. ‘‘ம்...” - அந்த முனகல் ஒரு இடியைப் போல் முழங்கியது. அவன் அவளுக்கு முன்னால் வேகமாக குதித்தான். கம்பீரமும் அன்பும் நிறைந்த அந்த மனதின் வேகப் பாய்ச்சலுக்கு ஏற்றபடி குதிக்க உடலுக்குச் சக்தியில்லை. அவன் பின்னால் சாய்ந்து விழுந்தான். லட்சுமி ஓடி வந்து அவனைத் தாங்கிக் கொண்டாள்.

பாதி இரவு தாண்டியது. லட்சுமி தூங்கவில்லை. அவளுடைய மனம் வாழ்க்கையின் வசந்த காலங்களைப் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்து பறந்து பாடிக் கொண்டிருந்தது. கவலைகளை மறப்பதற்கும் எதிர்கால இனிய நினைவுகளில் மூழ்குவதற்கும் இளமைக்கு முடியும்.

வடக்குப் பக்க அறையில் ஒலித்த கல்யாணியின் குறட்டைச் சத்தத்தையும், வெளியே தெரிந்த மங்கலான நிலவொளியில் பறந்து கொண்டிருந்த வவ்வால்களின் சிறகடிப்பைத் தவிர வேறு சத்தங்கள் எதுவும் இல்லை. மறுநாளின் அதிகாலைப் பொழுதில்தான் லட்சுமியின் அதிர்ஷ்டச் சூரியன் உதயமாகப் போகிறான். கடந்த காலத்தின் நினைவுகள் எதுவும் அப்போது அவளுடைய மனதை அலைக்கழிக்கவில்லை. அவள் எதிர்காலத்தின் மடியில் படுத்தவாறு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

‘‘ம்...”- வெளியே ஒரு நீண்ட முனகல் சத்தம் கேட்டது.


லட்சுமி கவனமாகக் கேட்டாள்.

‘‘ம்....”- ஒரு தாங்க முடியாத முனகல்.

லட்சுமி எழுந்தாள். அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். வண்டியை நிறுத்தும் ‘ஷெட்’டுக்குப் பக்கத்தில் நிலவு வெளிச்சத்தில், ஒரு உருவம் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தது. அவள் அதையே கூர்ந்து பார்த்தாள்.

‘‘ம்...”- அந்த உருவம் கையைச் சுருட்டிக் காற்றில் வீசியது.

அவள் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவள் மெதுவாக நடந்தாள்.

‘‘யார் அது?” அவள் துணிச்சலை வரவழைத்துக் கேட்டாள்.

‘‘ம்....”

‘‘மாமா நீங்களா?”- அவள் அருகில் சென்றாள்: ‘‘மாமா நீங்க ஏன் இங்கே நிக்கிறீங்க? ஏன், தூங்கலையா?”

அவன் மவுனமாக நின்றிருந்தான். அவள் அவனுடைய கையைப் பிடித்தாள். ‘‘மாமா, நீங்க ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கறீங்க? அப்படியென்ன உங்களுக்குக் கவலை? என்கிட்ட இருந்து ஏன் விலகியே போறீங்க?”

‘‘குழந்தை...” - அந்த அழைப்பில் ஒரு பதைபதைப்பு இருந்தது.  ‘‘குழந்தை... நானல்ல விலகுறது. நீங்கதான் விலகுறீங்க. நீயும் உன் தாயும்.”

‘‘நாங்க விலகல, மாமா. நாங்க விலகவும் மாட்டோம். எனக்கு மிகவும் நெருக்கமே மாமா, நீங்கதான்.”

‘‘இல்ல குழந்தை.... இல்ல. நீயும் உன் தாயும் என்கிட்ட இருந்து விலகிப் போயிட்டீங்க. நீங்க என் பிடியில இருந்து விலகிப் போயிட்டீங்க. நீங்க என் கண்கள்ல இருந்து மறைந்து போயிட்டீங்க...” அவன் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.

எத்தனையெத்தனை ஆண்மகன்கள், எத்தனையெத்தனை பலம் பொருந்திய வீரர்கள் தேம்பித் தேம்பி அழுதிருப்பார்கள்? அழாத மனிதன் பிறக்கவில்லை. அழாத மனிதன் மனிதனல்ல.

லட்சுமியும் தேம்பித் தேம்பி அழுதாள். அவள் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். ‘‘என் மாமா, நீங்க என்னைக்கும் என் மாமாதான். யாரை விட்டு பிரிந்தாலும், மாமா, உங்களை விட்டு நான் பிரியமாட்டேன். நான் நன்றியுள்ளவள்.”

ஒரு மின்னல்! அவனுடைய அழுகை நின்றது. உடலிலிருந்த நடுக்கம் நின்றது. அவன் சிலையென நின்றான்! உணர்ச்சிவசப்பட்ட சில நிமிடங்கள்!

அவன் முகத்திலிருந்து கையை எடுத்தான். அவன் நிமிர்ந்து நின்றான். ‘‘நன்றி! நன்றி!” அந்தச் சத்தம் எங்கோ தூரத்தில் எதிரொலித்தது. ‘‘நன்றியை எதிர்பார்த்து இருக்குற நாய் இல்லை நான்.”

அவன் அவளுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பின்னோக்கி நகர்ந்து நின்றான். அந்த எலும்புக்கூடு மிகப்பெரிய மலையைப் போல கம்பீரமாக உயர்ந்து நின்றது. அந்த உயரமான மலைக்குக் கீழே ஒரு புழுவைப்போல அவள் நின்றிருந்தாள்.

‘‘ம்.... போ....” - அவன் கட்டளையிட்டான்.

அவள் தயங்கி நின்றாள்.

‘‘போ இங்கேயிருந்து....”

அவள் திரும்பினாள்.

‘‘போகச் சொன்னேன்ல...”

அவள் நடந்தாள்.

திருமண நாள். அதிகாலையில் கல்யாணி லட்சுமியை எழுப்பினாள்.

‘‘மாமா எங்கே?” என்று கேட்டவாறு அவள் பாதித் தூக்கத்திலிருந்து எழுந்தாள்.

‘‘அம்மா, மாமா எங்கே?” - அவள் மீண்டும் கேட்டாள்.

‘‘அங்கே படுத்திருக்காரு. எழுந்திரிக்கல...”

லட்சுமி வடக்குப் பக்கம் இருந்த அறைக்குச் சென்றாள். பப்பு கண்களை மூடி கால்களை நீட்டி எந்தவிதமான அசைவும் இல்லாமல் படுத்திருந்தான். அவன் உறங்கவில்லை. அவள் அவனுடைய கால் பக்கம் போய் நின்றாள். அழைப்பதற்கு அவளுக்கு தைரியம் இல்லை. அவள் மெதுவாக ஒருமுறை இருமினாள். அவன் கண்களைத் திறந்தான். முந்தைய நாள் இருந்த மிடுக்கு எதுவும் அப்போது அந்த முகத்தில் இல்லை. அதற்குப் பதிலாகச் சிந்தனை வயப்பட்ட ஒரு அமைதித் தன்மை அங்கு குடி கொண்டிருந்தது.

‘‘மாமா!” - அவள் அழைத்தாள்.

‘‘குழந்தை!” - அந்த அழைப்பில் பாசம் முழுமையாகக் கலந்திருந்தது. அவன் மெதுவாக எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். ஒரு துறவியைப் போல அவன் புன்னகைத்தான். ‘‘குழந்தை, பக்கத்துல நில்லு....”

அவள் அருகில் நின்றாள்.

‘‘உனக்கு நல்லது நடக்கும்.” - அவன் அவளுடைய தலையைத் தொட்டு ஆசீர்வதித்தான்.

அவளுடைய தலை குனிந்தது. அவளுடைய கண்கள் அவன் பாதங்களை தொட்டன. அவள் அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினாள். அவன் அவளை எழுப்பினான். மீண்டும் தலையில் கை வைத்தவாறு அவன் சொன்னான்.

‘‘என் குழந்தைக்கு எப்போதும் நல்லது நடக்கும். குழந்தை, அம்மாவை எப்பவும் மறக்கக் கூடாது.”

அவள் என்னவோ சொல்ல முயன்றாள். எதையும் சொல்வதற்கான சக்தி அவளுக்கு இல்லாமல் போய்விட்டது.

அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்ட அவன் சொன்னான்: ‘‘சந்தோஷமா இருக்கணும். திருமணத்திற்குப் போறதுக்கு நேரமாயிடுச்சு. போயி குளிச்சிட்டு வா.”

அவள் குளித்து முடித்து ஆடைகளும் நகைகளும் அணிந்து பப்புவிற்கு அருகில் வந்தாள். அவன் அப்போது கட்டிலில் சப்பணமிட்டு அமர்ந்து கொண்டிருந்தான்.

‘‘குழந்தை இங்கே உட்காரு.”

அவள் கட்டிலில் உட்கார்ந்தாள்.

‘‘பாட்டுப் பாடு. அந்தப் பாட்டை இன்னொரு தடவை எனக்கு கேட்கணும் போல இருக்கு.”

அவள் பாடினாள். அந்தக் குடிசையில் கான தேவதை நடனமாடினாள்.

ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு அவன் மீண்டும் அவளுடைய தலையில் கையை வைத்து ஆசீர்வதித்தான்.

வெளியே காரின் ஹார்ன் சத்தம் ஒலி கேட்டது. மணப்பெண்ணை மணமகனின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக கார் வந்து நின்றது.

கல்யாணி குளித்து முடித்து புதிய ஆடைகள் அணிந்து தயாராக நின்றிருந்தாள். மகளை அழைத்துக் கொண்டு காரில் ஏறுவதில் அவள் பரபரப்பாக இருந்தாள்.

பப்பு எழுந்தான்: ‘‘குழந்தை, அம்மாவை அழைச்சிட்டுப் போ.”

‘‘மாமா...?” - அவள் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தினாள்.

‘‘நான் பின்னாடி வர்றேன்.”

‘‘மாமா, நீங்க இல்லாம....”- அவள் முழுமையாக முடிக்கவில்லை.

‘‘நான் இல்லாம? போ. நான் பின்னாடி வர்றேன்.” அந்த முடிவில் எந்த மாறுதலும் இருக்காது என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். எனினும், கெஞ்சுகிற மாதிரி அவள் அவனைப் பார்த்தாள்.

‘‘ம்... போ....”- அவன் கட்டளையிட்டான். தன் தாயின் கையைப் பிடித்தவாறு, அவள் காருக்குள் ஏறினாள்.

விருந்தினர்கள் எல்லாரும் வந்து விட்டார்கள். வாத்தியங்கள் முழங்கின. லட்சுமி கேட்டாள்: ‘‘அம்மா, மாமா எங்கே?”

‘‘நான் பார்க்கல மகளே.”

அவள் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். கோபியும் பப்புவைத் தேடினான். பப்பு அங்கு எங்கும் கண்களில் படவில்லை. அவன் கல்யாணியிடம் கேட்டான். ‘‘மாமா ஏன் வரல?”

‘‘வருவார். வருவேன்னு சொன்னாரு.”

முகூர்த்த நேரம் வந்தது. மணமகனும் மணமகளும் திருமண மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். லட்சுமி அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பார்த்தாள். பப்புவைக் காணோம்.


தூரத்தில் ஒரு இருமல் சத்தம் கேட்டது. பப்பு வருவதற்கு அடையாளமாக அது கேட்டது. அவன் திருமண மண்டபத்திற்கு அருகில் வந்தான். லட்சுமி அவனுடைய பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோபியும் அதே போல பப்புவின் கால்களில் விழுந்தான்.

அவன் மணமகனையும் மணமகளையும் ஆசீர்வதித்தான்.

திருமணம் முடிந்து மணமகனையும், மணமகளையும் உள்ளே அழைத்துச் சென்றார்கள். விருந்து முடிந்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் புறப்பட்டார்கள். லட்சுமி கல்யாணியிடம் கேட்டாள்: ‘‘அம்மா, மாமா எங்கே?”

‘‘எங்கேயாவது மறைஞ்சு உட்கார்ந்திருப்பாரு.”

‘‘அப்படி மறைந்து உட்கார்ந்திருக்க வேண்டியவர் இல்ல என் மாமா. என் மாமா எங்கே?” - அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள். வீட்டிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் தேடினாள். ஒரு இடத்திலும் அவளுடைய மாமா இல்லை. அவள் மீண்டும் தன் தாயின் அருகில் வந்தாள். ‘‘அம்மா, மாமாவைக் காணோம். மாமா அங்கேதான் போயிருக்கணும்?”

‘‘போகட்டும், அட்டையைப் பிடிச்சு மெத்தைமேல் படுக்கச் சொன்னா, அது இருக்குமா?”

வெறுப்பு கலந்த அந்த வார்த்தைகளை லட்சுமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் முகத்தில் ஒரு தைரியம் நிழலாடியது. அவளுடைய வார்த்தைகள் மிகவும் கூர்மையாக வெளியே வந்தன: ‘‘நாமளும் அட்டைகளாகத்தாம்மா இருந்தோம். குப்பைக் குழியில நெளிஞ்சு திரிஞ்ச அட்டைகள். மாமாதான் நம்மை மனிதர்களா ஆக்கினாரு. நம்மளை இங்கே கொண்டு வந்து சேர்த்ததும், இந்த மெத்தையில் நம்மைப் படுக்க வச்சதும் மாமாதான். அப்படிப்பட்ட மாமாவை அட்டைன்னு சொல்றீங்க. அப்படித்தானேம்மா?”

‘‘நல்லது சொன்னா கேக்குறது இல்ல, மகளே, அதுனாலதான் அப்படிச் சொன்னேன்.”

‘‘மாமாவை அழைச்சிட்டு வர நான் போறேன். நான் கூப்பிட்டா என் மாமா கட்டாயம் வருவாரு. நான் மாமா கால்கள்ல விழுந்து அழுவேன்.” அவள் நடந்தாள்.

கல்யாணி அவளைத் தடுத்தாள்: ‘‘அய்யோ... மகளே! நீ போகக் கூடாது. நீ போனா, அவர் என்ன நினைப்பாரு? நான் போறேன் மகளே.... நான் போறேன்.”

‘‘அப்படின்னா, புறப்படுங்க. இப்பவே புறப்படுங்க.”

‘‘நான் கூப்பிட்டு வரலைன்னா, என்ன செய்யிறது?”

‘‘வரலைன்னா... அம்மா, நீங்க அங்கேயே இருங்க. நாளை அவரும் நானும் அங்கே வருவோம். அதுவரை நீங்க மாமாவைப் பத்திரமா பார்த்துக்கணும், அம்மா.”

கல்யாணி முழுமையான வருத்தத்துடன் வீட்டை நோக்கி நடந்தாள். சந்தோஷத்தில் தான் ஊன்றிய காலை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு உண்டானது.

ஜன்னல் வழியாக வானத்தின் விளிம்பைப் பார்த்தவாறு பப்பு எந்தவிதமான அசைவும் இல்லாமல் கட்டிலில் படுத்திருந்தான். வானத்திற்கு அப்பால் சந்தோஷமான ஏதோ ஒன்றைப் பார்த்து விட்டதைப் போல அவனுடைய முகம் பிரகாசமானது.

சாத்தப்பட்டிருந்த கதவைத் திறந்து கல்யாணி உள்ளே வந்தாள். பப்பு திரும்பிப் பார்த்தான்.

‘‘என்ன?” - அவன் புன்னகைத்தான்.

‘‘அங்கே போகணும்.”

‘‘எங்கே.”

‘‘உங்களைக் காணோம்னு அவ கவலையில இருக்கா. நாம அங்கே போவோம்.”

‘‘பரவாயில்ல... அவளோட கவலை மாறிடும்.”

‘‘அவள் அழுறா. இன்னைக்கு அவளை அழ வைக்கிறது நல்லது இல்ல. வாங்க போகலாம்.”

‘‘கொஞ்ச நேரம் கழிச்சு அவ சிரிக்க ஆரம்பிச்சிடுவா.”

‘‘உங்களைப் பார்த்தாதான் அவ சிரிப்பா.”

‘‘இல்லாட்டின்னாக்கூட அவ சிரிப்பா.”

‘‘நாம அங்கே போவோம்.”

‘‘போ...”

‘‘என் கூட நீங்களும் வரணும்.”

‘‘நானா?” - அவன் அலட்சியமாகச் சிரித்தான்.

அவள் அதற்குப் பிறகு எதுவும் சொல்லவில்லை. மாலை நேரம் வந்தது. பப்பு கேட்டான்: ‘‘புறப்படலையா?”

‘‘எப்படிப் போறது?” நீங்க இப்படிப் படுத்திருக்கிறப்போ....”

 ‘‘நான் படுத்திருக்கிறதைப் பெருசா எடுத்துக்க வேண்டாம். புறப்படு...”

‘‘நான் புறப்பட மாட்டேன்.”

அமைதி!

பாதி இரவு ஆனது. கல்யாணி ஒரு நீண்ட பெருமூச்ச விட்டாள்.

‘‘தூங்கலையா?” - பப்பு கேட்டான்.

‘‘எப்படித் தூங்குறது? அவள் என் மகளாச்சே! அவ இல்லாம நான் எப்படித் தூங்குவேன்?”

‘‘எதுக்கு அவளைப் பிரிஞ்சு வரணும்?”

‘‘பிரியாம என்ன செய்யறது?”

அமைதி!

இரவுக் கோழி கூவி இரண்டு நாழிகைகள் கடந்தன. நிலவு மறைந்தது. கல்யாணி குறட்டை விட ஆரம்பித்தாள். பப்பு ஓசை எதுவும் உண்டாக்காமல் கட்டிலை விட்டு எழுந்து மெதுவாக வாசல் கதவைத் திறந்தான்.

இருமல். அவன் தன் இரண்டு கைகளாலும் வாயை அழுத்தி மூடினான். கல்யாணி முனகியவாறு திரும்பிப் படுத்தாள். அவன் வாசலுக்கு வந்தான்.

இருமல்! வாயை இறுகப் பொத்திக் கொண்டு அவன் படிகளில் இறங்கி, பாதைக்கு வந்தான். இருமல் அதற்கு மேல் கட்டுப்பாட்டில் நிற்கவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று இருமினான்.

அவன் நடந்தான். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. இடையில் அவ்வப்போது இருமிக் கொண்டும் இருந்தான். முழுமையான வெற்றிடமும் அமைதியும். இருமிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும் அவன் நடந்து கொண்டிருந்தான்.

புதுமண தம்பதிகளின் முதல் இரவு! காதல் வயப்பட்ட இரண்டு இதயங்களின் சங்கமம்!

நள்ளிரவு நேரம் ஆன போது நித்திரை தேவி அவர்களின் அன்றைய காதல் லீலைகளுக்குத் திரைபோட்டாள்.

வீட்டு மாடியில் இருந்த படுக்கையறையின் பட்டு மெத்தை மீது அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தனர்.

லட்சுமியின் மனதில் அடித்தளத்தில் ஒரு பலமான சலனம் தோன்றியது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அவள் திடுக்கிட்டு எழுந்தாள். இருட்டில் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு சத்தமும் கேட்கவும் இல்லை.

தூரத்தில் ஒரு இருமல் சத்தம்! அவள் கூர்ந்து கவனித்தாள். மீண்டும் இருமல் சத்தம்! தொடர்ந்து இருமல்! அந்த இருமல் சத்தம் நெருங்கிக் கொண்டேயிருந்தது.

வெண்ணெயில் ஒட்டிக்கொண்ட நூலைப் பிரிப்பது போல அவள் தன்னுடைய மார்பிலிருந்த கணவனின் கையை எடுத்து மெத்தைமீது வைத்துவிட்டு மெதுவாக எழுந்தாள்.

இருமல்! இருமல்! அது அந்த மாளிகையின் முன்னாலிருந்த சாலையில் கேட்டது.

அவள் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். விளக்கு மரத்திற்குக் கீழே யாரோ நின்றிருந்தார்கள். அவளுடைய இதயம் பலமாக அடித்துக் கொண்டது. பூனையொன்று பதுங்கிப் பதுங்கி விளக்கு மரத்திற்கு அருகில் வந்து நின்று கொண்டிருந்தது.

அங்கு நின்றிருந்த உருவத்தைப் பார்த்து அது பயந்து போய் மெதுவாகப் பின்னோக்கித் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடியது.

இருமல்! இருமல்! அந்த உருவம்தான் இருமியது. இருமிக்கொண்டே அது நடக்க ஆரம்பித்தது.

‘‘மாமா....” - அவளுடைய உதடுகள் முணுமுணுத்தன.


ஏதோ கசாப்புக் கடையிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த எலும்புத் துண்டுடன் போராடித் தோல்வியடைந்த ஒரு நாய் மேலே பார்த்தவாறு குரைத்தது.

இருமல்! இருமல்! அந்த இருமல் சத்தம் ஆள் அரவமற்ற சாலையில் போய்க்கொண்டேயிருந்தது.

‘‘மாமா... மாமா...”- அவள் ஜன்னலின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.

பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த சுமை தாங்கிக் கல்லின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஒரு பைத்தியக்காரன் இடைவிடாமல் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தான். அதற்கருகில் இருக்கும் ஓடையில்தான் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு சாயங்கால வேளையில் அவள் மல்லாந்து விழுந்து கிடந்தாள். அந்த ஓடையிலிருந்துதான், ஒரு ரிக்ஷா வண்டிக்காரனின் தழும்பேறிய கைகள் அவளை வாரித் தூக்கின. அந்த ஓடையிலிருந்துதான் அவளுடைய வாழ்க்கை ஆரம்பித்தது. அந்த மாலை வேளையில்தான் அவளுடைய அதிர்ஷ்ட சூரியன் உதயமானான்.

இன்று அவள் அந்த உயரமான மாளிகையின் மேல் மாடியில் செல்வச் செழிப்பிற்கு நடுவில் நின்று கொண்டிருக்கிறாள். பத்து வருடங்களில் அவள் வாழ்க்கையின் வசந்தத் தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறாள். சந்தோஷத்திற்குப் பின்னால் நீண்டு கிடக்கும் துன்பக் கடலின் கம்பீரமான அலைகளின் ஆர்ப்பரிப்பை இப்போதும் அவள் கேட்டுக் கொண்டுதானிருக்கிறாள்.

அந்தப் பெருங்கடலில் கடுமையான காற்றையும் பெரும் அலைகளையும் எதிர்த்து அவளைக் கரையில் கொண்டு வந்து சேர்த்த படகு அதோ உடைந்தும், சிதைந்தும், சாய்ந்தும், சரிந்தும் அலைகளில் சிக்கி எந்தவித இலக்கும் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது.

சுமைதாங்கிக் கல்லையும் தேநீர்க் கடையையும் கடந்த இருமல் வங்கிக்கு முன்னால் போய் நின்றது. பிறகும் அது தாண்டித் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.

‘‘மாமா... என் மாமா....” - ஜன்னலின் இரும்புக் கம்பிகளைப் பிடித்து முன்னால் தள்ளினாள். அந்த இரும்புக் கம்பி அவளுக்கு வழி உண்டாக்கித் தரவில்லை. இதயத்தின் துடிப்புகள் இரும்புக்குத் தெரியுமா என்ன?

இருமல்! இருமல்! இருமல்! அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு இருமல் சத்தம் தூரத்தில் அஞ்சல் அலுவலகத்தைத் தாண்டிக் கேட்டது.

‘‘என் மாமா! என் மாமா!” - அவள் வேகமாக முன்னோக்கிப் பாய்ந்தாள்.

அவளுடைய தலை இரும்புக் கம்பியில் மோதியது. அவள் பின்னால் சாய்ந்து விழுந்தாள்.

இருமல்! இருமல்! இருமல்!... அந்த இருமல் சத்தம் எங்கோ தூரத்தில் கேட்டது. அதன் எதிரொலி சூனியத்தில் கலந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.