Logo

சிவந்த நிலம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6564
sivanda nilam

சுராவின் முன்னுரை

கிஷன் சந்தர் (Kishan Chander) உருது மொழியில் எழுதிய கதையின் தமிழாக்கமே `சிவந்த நிலம்’ (Sivandha Nilam) என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இதுவரை தெலுங்கானா போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள், இந்த நூல் மூலம் அதைத் தெரிந்து கொள்ளலாம். அதற்குப் பிரகாசமாக விளக்கொளி காட்டியிருக்கிறார் கிஷன் சந்தர்.

ஆந்திராவின் கிராமத்து விவசாயிகளையும், அடிமைத் தொழிலாளிகளையும், அவர்களின் இலட்சிய கனம் கொண்ட போராட்டத்தையும் மையமாக வைத்து முற்போக்குச் சிந்தனையுடன் எழுதப்பட்ட உயர்ந்த படைப்பு இது. விவசாயிகள் படும் பாட்டைப் பார்க்கும்போது, நம் கண்களில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியாது. இந்நாவலில் வரும் போராட்ட வீரன் ராகவராவ் நம் இதயங்களில் காலத்தைக் கடந்து வாழ்வான். அவனைப் போன்ற இளைஞர்கள் இன்னும் பலர் இருந்தால், இந்த நாடு இதற்கு மேலும் எத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்கும்!

இந்த நூலை மொழி பெயர்த்ததற்காக உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். மிகவும் கவனம் செலுத்தி, நான் மொழிபெயர்த்த நூல் இது. இந்நூலை மொழிபெயர்க்கும்போது பல இடங்களில் என் இதயம் கனமாகியிருக்கிறது, கண்களில் நீர் அரும்பியிருக்கிறது. நூலின் மகத்துவத்தைப் பறைசாற்றக் கூடிய அடையாளச் சின்னங்கள்தானே அவை!

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


ராகவராவுக்கு இப்போது இருபத்து இரண்டு வயது. சிறைக்குள் இன்று அவனுடைய கடைசி இரவு. நாளை காலையில் அவனைத் தூக்கில் போடப் போகிறார்கள்.

ராகவராவ் சிறையின் இருட்டறையில் படுத்தவாறு கடந்து போன நாட்களை மனதில் நினைத்துப் பார்க்கிறான். தன்னுடைய கடந்து போன வாழ்க்கையை அவன் மனதில் ஓட்டிப் பார்த்தான்.

மிகுந்த ஈடுபாட்டுடன் ராகவராவ் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்துப் பார்த்தான். விவசாயி காசை இடுப்புத் துணியில் வைப்பதற்கு முன்பு ஒவ்வொன்றையும் இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்ப்பான். அதைப்போல மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ராகவராவ் திருப்பித் திருப்பிப் பார்த்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தான். இது எதற்கென்றால் வாழ்க்கையின் நிமிடங்களான அந்த ஒவவாரு நாணயமும் அவன் தன் சொந்தக் கைகளால் வடிவம் கொடுத்து உருவாக்கியது. வாழ்க்கையின் சில நிமிடங்கள் அவனுடைய தந்தையும் தாயும் தந்தவை. அதாவது பிறப்பும் வளர்ப்பும். தாயின் மடியிலும் தந்தையின் தோளிலும் கிடந்து வளர்ந்த காலகட்டம். சில நிமிடங்கள் சமுதாயத்தின் பங்கேற்புடன் உண்டாக்கியவை. வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதும் விலை மதிப்பு உள்ளதும் அழகானதும் என்று சொல்லக்கூடிய நிமிடங்கள் ராகவராவ் தன் சொந்த முயற்சியால் படைத்தவையே. தன்னுடைய சொந்த ஆர்வத்தாலும் கடின உழைப்பாலும் அழகான அந்த சில நிமிடங்களை ராகவராவ் உருவம் கொடுத்து உண்டாக்கினான். அதாவது- ராகவராவ் என்னவாக ஆனானோ, எதையெல்லாம் சிந்தித்தானோ, எந்தவிதமாக வளர்ச்சி நிலையை அடைந்தானோ அவற்றில் தன்னுடைய சொந்த முத்திரையை ஆழமாக அவன் பதித்தான் என்பதென்னவோ உண்மை. அதில் சிறிது கூட கடவுளின் அல்லது கண்ணுக்குத் தெரியாத சக்தியின் பங்கு இல்லை.

எனினும், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையின் நிமிடங்களான சில்லறை நாணயங்களில் சில நல்லவையும், சில செல்லாதவையுமாக இருக்கின்றன. அதனால் அதைப் பரிசோதனை செய்து பார்ப்பது என்பது உண்மையிலேயே அவசியத் தேவைதான். அவனுக்காக என்று இல்லையென்றாலும், மற்றவர்களுக்காக வேண்டியாவது பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது ஒரு கட்டாயத் தேவை என்றாகிறது. ராகவராவின் வாழ்க்கை முடியப்போகிறது என்றாலும், அவன் கடைசியாக தன்னைத்தானே பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வதற்காகத் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய அகலமான நெற்றியில் சிந்தனை செய்வதை வெளிப்படுத்தும் அடையாளங்கள் தெரிந்தன. அவனுக்குச் சங்கிலியால் ஆன விலங்கும் கைகளில் சாதாரண விலங்கும் போடப்பட்டிருந்தன. எனினும், அவனுடைய சிந்தனைகளும் யோசனைகளும் உடலையும் தாண்டி வேகமாகப் பயணம் செய்து கடந்த காலத்தின் நல்லதையும் கெட்டதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தன. ராகவராவைப் போன்ற மனிதர்களாக இல்லாதவர்கள் இந்த மாதிரியான விஷயங்களை வெறும் பொழுதுபோக்கு என்று சாதாரணமாக எண்ணி வெறுப்புடன் அந்தச் செயலைப் பார்க்கலாம். நேரத்தைப் பூமியின் சட்டமாகவும் அதிகாரமாகவும் எண்ணக்கூடியவர்களின் இனத்தைச் சேர்ந்தவனல்ல ராகவராவ். மனிதன் தன்னுடைய விருப்பத்திற்கேற்றபடி நேரத்தை வடிவமைத்துக் கொள்கிறான். நேரத்தை தனக்கேற்றபடி பயன்படுத்தி உலகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்ற உண்மையைத் தன்னுடைய தேடல்கள் மூலம் கண்டுபிடித்த ஒரு மனிதன் ராகவராவ். அவன் தன்னிடமிருக்கும் அளவற்ற ஆற்றலையும் துணிச்சலையும் பயன்படுத்தி செய்ய நினைத்ததும் அதுதான். அதில் தான் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறோம்- எந்த அளவுக்குத் தோல்வியைத் தழுவியிருக்கிறோம் என்பதைத்தான் இப்போது எடைபோட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதற்காகத் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிமிடங்களாக இருந்த நாணயங்களைத் தனக்கு முன்னால் அவன் சிதறி விட்டிருக்கிறான். அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து நல்லவற்றையும் நல்லவை அல்லாதவற்றையும் அவன் பிரித்துக் கொண்டிருக்கிறான்.

ராகவராவிற்கு மூன்று வயது நடக்கும்போது, அவனுடைய தாய் இந்த உலகை விட்டுப் போய்விட்டாள். தாயைப்பற்றி ஒரு நிழல் மட்டுமே இப்போது அவனுடைய ஞாபகத்தில் இருக்கிறது. அவனுடைய அன்னைக்குப் பெரிய கண்கள் இருந்தன. ராகவராவ் தாயிடமிருந்து பால் குடிக்கும்போது, பால் அவனுடைய உதடுகள் வழியாகக் கீழே வழியும். மென்மையானதும் உஷ்ணமானதுமான தன் தாயின் மடியில் படுத்துக்கொண்டு ராகவராவ் கண்களை மூடித் தூங்குவான். அப்போது அவனுடைய கை தன் தாயின் மார்பகங்களில் இருக்கும். அது மட்டுமே அவனுடைய ஞாபகத்தில் இருக்கிறது. ராகவராவ் அந்த நாணயத்தை முத்தமிட்டுவிட்டு, பக்கத்தில் பிரியம் மேலோங்க அதை ஒரு இடத்தில் வைத்தான்.

பிறகு அவனுடைய தந்தை வீரய்யா! ராகவராவின் தந்தை, தாய், விளையாட்டுத் தோழன்- எல்லாமே வீரய்யாதான். குருவும் அவன்தான். வீரய்யா ஏராளமான தனித்துவத்தின் ஒரு கூட்டாக இருந்தான். அந்தத் தனித்துவம் ராகவராவிற்குத் தனித்தனியாகக் கிடைத்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அதன் விளைவாக வாழ்க்கை கூடுதல் மகிழ்ச்சியும் அடர்த்தியும் அழகும் மிக்கதாய் அமைந்திருக்கலாம். மற்ற நாணயங்கள் சமுதாயமும் சுற்றுச் சூழ்நிலையும் என்றிருந்ததால் அதைக் கட்டாயம் அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.

வீரய்யா விவசாயத் தொழிலாளியாகவும் அடிமை வேலைக்காரனுமாக இருந்தான். அவன் முழுமையாக வறுமையின் பிடியில் சிக்கிய மனிதனாக இருந்ததால், இரண்டாவது திருமணம் என்ற விஷயம் அவனுடைய வாழ்க்கையில் சாத்தியமே இல்லாமற் போனது. மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கவேண்டிய வசதியும் அவனுக்கு இல்லாமலிருந்தது. அதனால் மகனைப் பொறுத்தவரையில் வீரய்யா தாயாகவும் நண்பனாகவும் அவனுக்கு ஆகியிருந்தான். இதில் தவறு என்று கூற என்ன இருக்கிறது?

ராகவராவ் தந்தையின் முக முத்திரையைக் கொண்ட நாணயத்தை எடுத்து இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பார்த்தான். வீரய்யா உயரம் குறைவான ஒரு மனிதன். எனினும், அவனுடைய ஆரோக்கியத்திற்கு ஒரு குறைவும் இல்லை. தலையை மொட்டையடித்திருப்பான். கண்கள் மிகவும் சிறயனவாக இருக்கும். பாதங்கள் எப்போதும் நிர்வாணமாக இருக்கும். அவனுக்குச் செருப்பிற்கான தேவையே எந்தச் சமயத்திலும் இருந்ததில்லை. வளர்ந்து பெரியவனானபோது ராகவராவின் கால்களும் அவனுடைய தந்தையின் கால்களைப் போல கறுத்தும் தடித்தும் பலம் கொண்டவையாகவும் இருந்தன. ராகவராவ் தன்னுடைய கால்களைப் பார்க்க முயற்சித்தான். ஆனால், கால்களில் விலங்கு மாட்டப்பட்டிருந்ததால் அவற்றைச் சரியாக அவனால் பார்க்க முடியவில்லை. அவன் அதை நினைத்துப் புன்னகைத்தான்.

வீரய்யா தன் மகன் ராகவராவ் சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே கஷ்டங்களைச் சகித்துக் கொள்ளவும் அதைச் சந்தித்து மனதை பலப்படுத்திக் கொள்ளவும்- அவனுக்குப் பயிற்சி தந்திருந்தான்.

காரணம் என்னவென்றால் ஒரு தாயைப்போல பாசம் செலுத்தி அவனால் மகனை வளர்க்க முடியவில்லை.


அதே நேரத்தில் வயல்களுக்கு வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை எப்படிக் கொஞ்சிக் குலாவி வளர்ப்பார்களோ அந்த மாதிரி வளர்க்கவும் வீரய்யாவால் முடியவில்லை.

பொழுது புலரும் நேரத்திலிருந்து மாலை மயங்கும் நேரம் வரை வீரய்யா மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வான். சொந்தத்தில் நிலம் எதுவும் அவனிடம் இல்லை. நிலம் ஜமீன்தாருக்குச் சொந்தமானது. வீரய்யாவும் அவனுடன் வேலை செய்யும் மற்றவர்களும் ஜமீன்தாரின் அடிமை வேலைக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் ஜமீன்தாரின் வளர்ப்பு மிருகங்கள் என்று கூட கூறலாம். சிலநேரங்களில் அவர்கள் ஜமீன்தாரின் சவாரி குதிரையாகவோ அல்லது கோழியாகவோ அவர்கள் மாறவேண்டும். சிலவேளைகளில் அவர்களின் மனைவிமார்களின் அல்லது மகன்களின் எடுபிடிகளாக மாறவேண்டும். பசியை இல்லாமற் செய்வதற்காக இத்தனையையும் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிற ஒரு மனிதன் தன்னுடைய சொந்த மகனின் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளவும் அவனுக்கு வேலை செய்யச் சொல்லித் தராமலும் இருந்தால் அவன் தன் சொந்த மகனுக்கு நம்பிக்கை மோசம் செய்கிறான் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

வீரய்யா எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அவன் உண்மையில் நம்பிக்கை மோசம் செய்யக்கூடிய ஒரு தந்தை அல்ல. அதனால் சிறு வயதிலிருந்தே ராகவராவ் பட்டினியையும் பசியையும் சகித்துக்கொண்டு செருப்பு இல்லாத நிர்வாணக் கால்களுடன் வாழ்வதற்குக் கற்றுக் கொண்டிருந்தான். பட்டினியும் பசியும் செருப்பு இல்லாத கால்களும் அடங்கிய வாழ்க்கையின் காய்ந்து வறண்டு போன நிமிடங்களில் கூட அவன் சிறு சிறு சந்தோஷங்களைக் காண்பதற்குப் பழகிக் கொண்டான். அதற்கு மேலாக அவனுக்கு எந்தவொரு ஆசையும் மனதில் இருக்கவில்லை. அப்படியே இருந்திருந்தால் கூட சமுதாயச் சூழ்நிலை பலம் பொருந்தியதாகவும் கடுமையானதாகவும் இருந்ததால் மனதில் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல ராகவராவால் முடியவில்லை என்பதே உண்மை.

அவனுக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. எனினும் அவ்வப்போது தெளிவற்ற ஒரு ஓவியம் அவன் கண்ணுக்கு முன்னால் தோன்றுவதுண்டு. அப்போது ராகவராவ் மிகவும் சிறியவனாக இருந்தான். ஜனவரி மாதத்தின் குளிர் நிறைந்த காலம். இன்னும் சிறிது நேரம் பாயில் படுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால், அவனுடைய தந்தை அவனைத் துணிக்குள் போட்டு மூடி முதுகில் வைத்துக்கொண்டு ஜமீன்தாருக்குச் சொந்தமான பருத்தித் தோட்டத்திற்கு வேலை செய்வதற்காகப் புறப்படுவான். அப்போது ராகவராவ் அழுது கொண்டிருப்பான். வீரய்யா அழுது கொண்டிருக்கும் தன்னுடைய மகனை முதுகில் போட்டுக்கொண்டு தோட்டத்தில் பருத்தி சேகரித்துக் கொண்டிருப்பான். பிறகு ராகவராவ் அழுகையை மறந்து அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டான். பாலுக்குப் பதிலாகச் சோறும் அரிசிக் கஞ்சியும் சாப்பிட அவன் கற்றுக் கொண்டான். சப்பாத்தி தயாரிப்பது எப்படி என்பதையும் ஒருநாள் தெரிந்து கொண்டான். வயலில் எப்படி வேலை செய்வது என்பதைக் கற்றுக்கொள்ளும் வரை அவன் தன் தந்தைக்காக சமையல் செய்தான். சப்பாத்தி தயாரித்து அவன் வயலுக்கு எடுத்துச் செல்வான்.

ராகவராவைப் பொறுத்தவரையில் சப்பாத்தி தயாரிப்பது என்பது அப்படி ஒன்றும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கவில்லை. முதன் முதலாக அவன் கோதுமையை அரிசியைப் போல நீரில் வேக வைப்பான். அப்போது கொஞ்சம் சட்னியும் அரைப்பான். பிறகு அதை வாழை இலையில் கட்டி தன் தந்தைக்கு வயலுக்கு எடுத்துச் சென்று கொடுப்பான். சில வேளைகளில் ஜமீன்தார் வீட்டிலிருந்து எல்லோருக்கும் மோர் வரும். மோர், சட்னி இரண்டையும் சேர்த்து கோதுமை சப்பாத்தி சாப்பிட்டு முடிக்கும்போது களைத்துப்போன கைகளுக்கு மீண்டும் பலம் கிடைத்தது மாதிரி இருக்கும். தொடர்ந்து வீரய்யா தன் வேலையில் தீவிரமாக மூழ்கி விடுவான். ராகவராவ் பருத்தியை ஒரு இடத்தில் குவித்து வைப்பான். அப்போது ராகவராவிற்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது. விதைப்பதும் விளைச்சலை எடுப்பதும் தாங்களாக இருந்தாலும் தங்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை என்பதுதான் அது. அவன் முழுமையான விவசாயத் தொழிலாளியாக மாறிய நாளன்று அவனுக்கு அன்றுவரை கிடைத்திருந்த அரவணைப்பும் இல்லாமற் போனது.

சுமையைச் சுமக்கும் கழுதை கர்வத்துடனும் அன்புடனும் சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் தன் குட்டியைப் பார்ப்பது போல அடிமை வேலைக்காரனான வீரய்யாவும் அசாதாரணமான மதிப்புடன் அடிமை வேலைக்காரனான தன்னுடைய மகனைப் பார்த்தான். தன் மகனின் தலையில் வைக்கப்பட்டிருக்கும் பாரத்தைக் கொஞ்சம் குறைப்பதன் மூலம் தந்தை- பிள்ளைப் பாசத்தை வெளிப்படுத்தினான். அதே மாதிரி தன் தந்தையின் தலையில் இருக்கும் பாரத்தைத் தன் தலையில் ஏற்றிக் கொள்வதன் மூலம் மகன் தந்தையின் மீது தான் கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்தினான். அவர்கள் இரண்டு பேரின் தலையிலும் அதிகமான பாரத்தை ஏற்றிச் சுமக்கச் செய்வதில் ஆர்வமாக இருந்தார் ஜமீன்தார்.

ராகவராவ் அந்த நாணத்தை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் பார்த்தான். அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் இடையில் ஒரு நல்ல ஒற்றுமை இருந்தது. தந்தையின் உடல்வாகு, தந்தையின் நிறம், தந்தையின் வறுமை எல்லாமே ஒரு தொடர் உரிமை என்பதைப் போல அவனுக்குக் கிடைத்திருந்தன. தன்னுடைய உடல் வாகையும் நிறத்தையும் மாற்றிக்கொள்ள ராகவராவால் முடியாது. அப்படிப்பட்ட ஒரு விருப்பமும் அவனுக்கு இல்லை. எனினும், வறுமையை இல்லாமற் செய்யவேண்டும் என்ற உறுதி மட்டும் அவனுக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒரு வெறி வாலிபப் பருவத்தை நோக்கிக் கால் வைத்தபோது அவனுக்குத் தோன்றியது என்று கூற முடியாது. சிறுவனாக இருந்த காலத்திலேயே அப்படிப்பட்ட ஒரு சிந்தனை அவனை ஆட்கொண்டு விட்டது.

தன் வயதிலிருக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் ராகவராவின் மனதில் இருந்த சிந்தனை தீவிரமாகத் தொடங்கியது. புத்தகத்திற்கும் சிலேட்டிற்கும் நல்ல ஆடைகளுக்கும், அவற்றைத் தொட்டுப் பார்ப்பதற்கும், அன்பிற்கும் அவனுடைய இதயம் ஏங்கியது. தங்களுடைய உண்மையான நிலைமையை வீரய்யா அவனுக்குச் சொல்லிப் புரியவைத்தான். அந்த ஆசை எந்தக் காலத்திலும் நிறைவேறப் போவதில்லை. அடிமையின் மகன் அடிமையாகித்தான் தீருவான். ஜமீன்தாரின் மகன் ஜமீன்தாராகவும் புரோகிதரின் மகன் புரோகிதராகவும் ஆவதைப்போலத்தான் அதுவும். அதனால் சில பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குப் போகிறார்கள். சில பிள்ளைகள் வயலில் வேலை செய்கிறார்கள். அதில் அநியாயம் ஒன்றுமில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக இதுதான் நடந்து வந்திருக்கிறது. இந்த விஷயங்களை வீரய்யா சொன்னதைக் கேட்ட பிறகு ராகவராவிற்குக் கூறுவதற்கு எதுவுமே இல்லை. அவன் அமைதியாக இருந்தான். மகன் தன்னைப் போலவே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டான் என்பதை வீரய்யா புரிந்து கொண்டான். உண்மையில் நடந்தது அதுதானா?


ராகவராவ் தன்னுடைய வாழ்க்கையின் வேறொரு நிமிடத்தைத் தன் கையில் எடுத்தான். அப்போது அவனுக்குப் பதினோரு வயது நடந்து கொண்டிருந்தது. அவர்களுடைய கிராமமான ஸ்ரீபுரத்தில் அப்போது ஒரு திருவிழா நடந்தது. பத்து வருடங்களுக்கொரு முறை அங்கு இந்த திருவிழா நடக்கும். ஸ்ரீபுரத்தில் உள்ள ஒவ்வொரு குடிசையிலும அப்போது சந்தோஷத்தின், உற்சாகத்தின் அலை புரண்டு உயரும். வீரய்யா அன்று முதல் தடவையாகத் தன் மகனுக்குப் புதிய கதராடையும் கதர் வேட்டியும் கதரால் ஆன தலைப்பாகையும் அணிவித்தான். கழுத்தில் சந்நியாசியிடம் வாங்கிய ஒரு தாயத்தை அணிவித்தான். அன்று ராகவராவ் போகாவதி நதியில் குளித்து, புத்தாடைகள் அணிந்து அழகாக இருந்தான். அவன் வேகமாகச் சோற்றை உண்டுவிட்டு, தன் தந்தையுடன் சேர்ந்து திருவிழா நடக்கும் இடத்தை நோக்கி நடந்தான். போகும் வழியில் சிறுவர்கள் மர நிழல்களில் கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரிய ஒரு ஆலமரத்திற்குக் கீழே சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். திருவிழா நடக்கும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி இருக்கிறது அந்த மண்டபம். கருங்கல்லால் அமைக்கப்பட்ட ஒரு தரை. நரிக்குறவர்கள் விற்பனைக்காகப் பாத்திரங்களையும், வளையல்களையும், சீப்பையும், எண்ணெய் போன்ற பலவிதப்பட்ட பொருட்களையும் அங்கு பரப்பி வைத்திருந்தனர். புகையிலையும் சர்க்கரையும்கூட அங்கு இருந்தன. சிறுவர், சிறுமிகளுக்காக மண்ணால் ஆன விளையாட்டுப் பொருட்களும் ஓலையால் செய்யப்பட்ட கூடைகளும் கூட அங்கு இருந்தன. ஜப்பான் பட்டால் ஆன ஆடைகளை விற்கும் கடைகளும் அங்கு இருந்தன. ராகவராவ் சற்று அதிக நேரம் கடைக்கு முன்னால் நின்று கொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆடைகள் இப்படியெல்லாம் அழகாக இருக்குமா என்ன? இந்த அளவிற்கு மென்மையாகவும், மின்னி ஒளி வீசக் கூடியதாகவும் இருக்குமா என்ன? ராகவராவ் இப்போதுகூட அதை நினைத்துப் பார்க்கிறான். அவன் கடைக்கு முன்னால் சென்று தன்னை மறந்து அங்கிருந்த ஜப்பான் பட்டுத்துணியை மெதுவாகத் தொட்டுப் பார்த்தான். ஆடைகள் மனிதனின் கனவைப் போல இந்த அளவுக்கு மென்மையாகவும் பளபளப்பு கொண்டதாகவும் இருக்குமா என்ன? அந்த ஒரு நிமிடநேரம் அவன் அந்தப் பட்டுத் துணியைத் தொட்டுப் பார்த்ததற்கு அதுதான் காரணம்! இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு கூட அந்தத் தொடலில் கிடைத்த ஆனந்தம் இருளடைந்து போய் கிடக்கும் இந்தச் சிறையறைக்குள் இருக்கும் அவனை மெய்சிலிர்க்கச் செய்வதென்னவோ உண்மை. ராகவராவின் காதுகளில் அதன் இசைமயமான அலைகள் இப்போதும் வேகமாக வந்து மோதிக் கொண்டிருக்கின்றன. அதோடு சேர்ந்து ராமய்யா செட்டியின் கோபக்குரலும் ஞாபகத்தில் வந்தது. "அடிமையோட மகனா இருக்குற ஒருத்தன் பட்டுத் துணியில கை வைக்கிறதா? சாத்தான்! அடிச்சு உன் முதுகுத் தோலை உரிக்கிறேன்..."

அப்போது வீரய்யா தன் மகனின் கையைப் பிடித்து இழுத்து அவனை முன்னோக்கிக் கொண்டு போனான். விஷயம் என்னவென்று புரியாமல் ராகவராவ் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டான். வாழ்க்கையில் இந்த நிர்வாணக் கோலம் தனக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று என்பது போல் அவனுக்குத் தோன்றியது. அந்தப் பட்டுத் துணியும் அதன் அழகும் மினுமினுப்பும் தனக்கு உண்டாக்கப்பட்டதல்ல என்பதை அவன் புரிந்துகொண்டான். ராகவராவ் இதுவரை எடுக்காத இன்னொரு நாணயத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்து அதைப் பரிசோதனை செய்தான். அந்த நாணயத்தை அவனுடைய ஆசையும் எதிர்பார்ப்பும் கொண்ட கடைவீதியில் செலவழிக்க முடியவில்லை. செலவழிக்கப்படாத அந்த நாணயத்தின் சொந்தக்காரர்கள் ராகவராவோ அவனுடைய தந்தையோ இல்லை. அந்த நாணயம் அவர்களின் உழைப்பின் விளைவும் அல்ல. அது அவர்களுக்கு லாபம் என்ற கணக்கில் சமுதாயத்திடமிருந்து கிடைத்தது. அந்தக் கணத்திலேயே ராகவராவின் இதயத்தில் ஒரு உதாசீன உணர்வு உண்டானது. அவனுடைய தந்தை அவனுக்கு என்னதான் தைரியம் சொன்னாலும், அந்தச் சம்பவத்தை அவனால் மறக்க முடியவில்லை. அதற்காக அவனை இராட்டினத்தில் உட்கார வைத்து வீரய்யா ஆட்டிக்கூட பார்த்தான். சர்க்கரை போட்ட சர்பத் வாங்கிக் கொடுத்தான். அதனால் ராகவராவின் தாகம் சற்று குறைந்தது என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, அவனுடைய மனம் அப்போதும் பட்டுத்துணி மீதுதான் பதிந்திருந்தது.

மாலையில் தந்தையும் மகனும் திருவிழா நடந்த இடத்திலிருந்து திரும்பி வந்தபோது வழியில் பட்டேலின் கணக்குப் பிள்ளையையும் துர்கய்யாவையும் பார்த்தார்கள். இரண்டு பேரின் கண்களும் மதுவின் போதையால் சிவந்து கிடந்தன. அவர்கள் இருவரின் கையிலும் 'பிஸ்டல்' இருந்தது. அவர்கள் வீரய்யாவையும் அவனுடைய மகனையும் தடுத்து நிறுத்தினார்கள்.

"நல்லா இருக்கீங்களா அய்யா?"- வீரய்யா அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

"நேரா போறதுதான் நல்லது. இல்லாட்டி..."- துர்கய்யா கர்ஜித்தான்.

"எங்கே போகச் சொல்றீங்க ஐயா?"

"அடிமை வேலை செய்யிறதுக்கு சூரியபேட்டைக்குப் போகணும். இப்பவே போகணும். ஜமீன்தார் அய்யா போகச்சொல்லி இருக்காரு."

ராகவராவ் தன் தந்தையின் இடுப்பை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னான்: "அப்பா, இன்னைக்குத் திருவிழா நாளாச்சே!"

கணக்குப் பிள்ளை பீமய்யா ராகவராவின் கழுத்தைப் பிடித்து அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அடிகொடுத்தான். பிறகு அவன் தலையிலிருந்த தலைப்பாகையைத் தட்டி கீழே விழ வைத்தான். அவனுடைய மேலாடையைப் பிடித்துக் கிழித்து தரையில் எறிந்தான். வேட்டியை அவிழ்த்து ராகவராவை நிர்வாணக் கோலத்தில் நிற்கவைத்தான்.

ராகவராவ் பீமய்யாவை எதிர்த்து நிற்க நினைத்தான். ஆனால், பீமய்யா மிகவும் பலசாலியாக இருந்தான். ராகவராவ் வெறும் பதினோரு வயதே ஆன சிறுவன்! பீமய்யா ராகவராவின் நெஞ்சுக்கு நேராக பிஸ்டலைக் காட்டியபோது வீரய்யா அவனுடைய கையைப் பிடித்து கெஞ்சினான்: "அய்யா! இவன் சின்னக் குழந்தை. நான் உங்க அடிமைன்ற விஷயம் இவனுக்குத் தெரியாது. ஜமீன்தார் அய்யா திருவிழா நடக்குற இடத்துல இருந்து கூப்பிட்டாலும் நான் வந்திடுவேன்."

"எதுக்குப் போகணும்?"- ராகவராவ் கோபத்துடன் கேட்டான்.

"பேசாம இருன்னு சொல்றேன்ல..."- வீரய்யா தன் மகனின் முகத்தில் ஒரு அடி கொடுத்தான்.

ராகவராவின் வாயிலிருந்து இரத்தம் ஒழுக ஆரம்பித்தது. வீரய்யா அதுவரை தன் மகனுக்கு நேராக ஒரு நாள் கூட கையை ஓங்கியது இல்லை. அதனால் ராகவராவ் ஆச்சரியத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். உதடு வழியாக வெளியே வந்து கொண்டிருந்த இரத்தத்தைத் துடைக்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. அவன் மேலும் சிறிதுநேரம் அங்கு நின்றுவிட்டு தன் கையால் இரத்தத்தைத் துடைத்தான். மீதி எஞ்சியிருந்த இரத்தம் நின்றபிறகு, அதைத் தன் நாக்கை நீட்டி இல்லாமற் செய்தான்.


வீரய்யா தன் மகனைக் குறை சொல்லும் விதத்தில் சொன்னான்: "நான் அடிமை அய்யா! உங்ககிட்ட அடிமை வேலை செய்யிறது என் தொழில். என் மகனும் அடிமைதான். அவனையும் நான் வேலை செய்ய அழைச்சிட்டு வர்றேன். எங்களை மாதிரி அடிமைகளுக்குத் திருவிழாவோட என்ன தொடர்பு இருக்கு?"

"இப்போதான் சரியான வழிக்கு நீ வந்திருக்கே. அடிமையா பிறந்தவன் புதுத்துணி அணியலாமா?"- பீமய்யா கோபத்துடன் கூறியவாறு முன்னோக்கி நடந்தான்.

துர்கய்யா ராகவராவைத் தள்ளி, நடக்கச் செய்தான்.

வீரய்யா கைகளைக் கூப்பியவாறு சொன்னான்: "தப்பு நடந்து போச்சு அய்யா. நான் வேண்டாம்னுதான் சொன்னேன். ஆனா, இந்த அடங்காத பய நான் சொன்னதைக் கேட்கல. இன்னைக்குத் திருவிழா. எனக்குப் புதுத்துணிதான் வேணும்னு சொல்லி அழ ஆரம்பிச்சிட்டான்."

"எங்க முன்னாடி யாரும் புது ஆடைகள் அணியக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?"

"தெரியும் அய்யா!"

"பிறகு எதுக்கு புது ஆடை அணியணும்?"

"தவறுக்கு மன்னிக்கணும், அய்யா. இனி ஒருமுறை அப்படிப்பட்ட ஒரு விஷயம் நடக்காது."

"அதுனாலதான் நான் உன்னோட ஆடைகளைக் கிழிச்சு எறிஞ்சேன். இனி ஒருமுறை அந்தத் தப்பு நடக்கக்கூடாது. அடிமைகள் எப்பவும் எப்படி வாழணுமோ, அப்படித்தான் வாழணும்"- பீமய்யா கடுமையான குரலில் சொன்னான்.

பீமய்யாவும் துர்கய்யாவும் திருவிழா நடந்த இடத்திலிருந்தும் குடிசைகளிலிருந்தும் வேறு அறுபது அடிமைத் தொழிலாளிகளைத் திரட்டி ஆட்டுக் கூட்டத்தைக் கொண்டு செல்வதைப்போல அவர்களை விரட்டி ஜமீன்தாரின் வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள்.

ஜமீன்தாரின் வீடு வானத்தை முட்டிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஒரு மாளிகையாக இருந்தது. அதன் முன்பகுதி பார்ப்பதற்கே உயரமாக, கம்பீரமாக இருந்தது. உயரமான வெளிச்சுவர்களுக்குள் நின்றிருந்த அந்த மாளிகையின் உட்பகுதியை இதுவரை ஒரு அடிமைத் தொழிலாளி கூட பார்த்ததில்லை.

ராகவராவ் இப்போதுதான் முதல் தடவையாக அந்த வீட்டைப் பார்க்கிறான். மிகவும் தூரத்தில் நின்றுகொண்டு அவன் அதைப் பார்த்திருக்கிறான். அப்போது காவல்காரர்கள் அதைக் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளிச்சுவருக்கருகில் போவதற்கான தைரியம் அவனுக்கு எப்போதும் இருந்ததில்லை. அடி, உதை வாங்கிய அனுபவமும், அணிந்திருந்த புத்தாடைகளை இழந்த அனுபவமும் இருந்தாலும், ராகவராவ் சிறுவர்களுக்கே இருக்கும் ஒரு ஆர்வத்தடன் ஜமீன்தாரின் அந்த மாளிகையையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று வீரய்யா அவனுடைய முதுகில் அடித்து, கடுமையான குரலில் சொன்னான்:

"மேலே பார்க்காதே. தலையைக் குனிந்து பாதத்தைப் பார். இல்லாட்டி அய்யாவுக்குக் கோபம் வந்திடும்."

ராகவராவ் திரும்பிப் பார்த்தான். அவன் சொன்னது சரிதான். எல்லா அடிமைகளும் கரத்தைக் குவித்து, தலைகுனிந்து நின்றிருந்தார்கள். சிறிது நேரம் சென்றதும் முரட்டுத்தனமான குரல் கேட்டது:

"துர்கய்யா."

"எஜமான்!"

"எவ்வளவு அடிமைகளைக் கொண்டு வந்திருக்குற?"

"மொத்தம் ஐம்பத்தெட்டு பேர்கள் இருக்காங்க எஜமான்!"

"போதும். இவ்வளவு பேரை வச்சு வேலையை முடிச்சிடலாம். இவங்களுக்குத் தேவையான உணவுக்காக ஏற்பாட்டைச் செய்திடு. ரொம்ப தூரம் போகணும்ல?"

"அவங்கவங்களுக்குத் தேவையான உணவை இவங்களே கொண்டு வந்திருக்காங்க, எஜமான்."

'எவ்வளவு பெரிய பச்சைப் பொய்யைச் சொல்றான்!'

வீரய்யா மனதிற்குள் கூறிக் கொண்டான்.

"சரி... புறப்படுறதுக்கான ஏற்பாடுகளைச் செய்" மீண்டும் அந்தக் கரகரப்பான அதிகாரக் குரல்.

2

பீமய்யாவும் துர்கய்யாவும் அடிமைகளை சுவருக்கு வெளியே கொண்டு வந்தார்கள். அவர்களின் தலையில் சுமைகளைத் தூக்கி வைக்கத் தொடங்கினார்கள். ஜமீன்தாரின் மகன் சூரியப்பேட்டையில் திருமணம் செய்து கொள்ளப்போகிறான். அந்தப் பொருட்களை அங்கு கொண்டுபோய் சேர்க்கவேண்டும். நான்கு பல்லக்குகள் தயாராக நின்றிருந்தன. ஒரு பல்லக்கில் ஜமீன்தார் ஜகன்னாத ரெட்டி உட்கார்ந்து கொள்ளுவார். ஸ்ரீபுரம் முதல் பத்திபாடொ வரை இருக்கும் நாற்பது கிராமங்களின் சொந்தக்காரர் அவர். இரண்டாவது பல்லக்கில் ஜமீன்தாரின் மகன் ப்ரதாபரெட்டி பயணம் செய்வான். மூன்றாவது பல்லக்கில் ப்ரதாப ரெட்டியின் தாய் பயணம் செய்வாள். தன் மகனின் திருமணத்திற்காக அவள் சூரியப்பேட்டைக்குச் செல்ல வேண்டும். முதல் இரண்டு பல்லக்குகளின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாவது, நான்காவது பல்லக்குகளின் கதவுகளில் அழகான பர்தாக்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. நான்காவது பல்லக்கு இருப்பதிலேயே மிகவும் புதியது. அதில் தொங்கவிடப்பட்டிருக்கும் பர்தாக்களில் பின்னல் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. பர்தாக்கள் காற்றில் பறக்கும்போது சிறு சலங்கைகளின் ஓசை காதில் விழும்.

ராகவராவ் ஆச்சரியத்துடன் அந்தப் புதிய பல்லக்கையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதைப்பற்றி தன் தந்தையிடம் கேட்டான். ஆனால், அவனுடைய தந்தை பதில் கூறுவதற்குப் பதிலாக அவனை அடிக்க ஆரம்பித்தான்.

பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் முடிவடைய ஒன்றரை மணி நேரம் ஆனது. அதற்குப் பிறகுதான் ஜமீன்தாரின் ஊர்வலம் சூரியப்பேட்டையை நோக்கி ஆரம்பமானது.

ஒவ்வொரு பல்லக்கையும் சுமப்பதற்கு எட்டு அடிமைகள் இருந்தார்கள். முதல் பல்லக்குப் பெரிய ஜமீன்தாருக்குரியது. இரண்டாவது பல்லக்கில் சிறிய ஜமீன்தார் உட்கார்ந்தான். மூன்றாவது பல்லக்கில் ஜமீன்தாரம்மா. நான்காவது பல்லக்கில் யாரும் இல்லை. யாருமே இல்லாத பல்லக்கைக் எதற்காக கொண்டு செல்ல வேண்டும் என்பதை ராகவராவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பெரிய ஜமீன்தார் இருந்த பல்லக்கைச் சுமக்கும் வேலை வீரய்யாவிற்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

பெரிய ஒரு கண்ணாடியைச் சுமக்கும் பொறுப்பு ராகவராவிற்குத் தரப்பட்டிருந்தது. அவன் அடிக்கொருதரம் அந்தக் கண்ணாடியைப் பார்த்தான். தன்னுடைய உருவம் அதில் தெரிவதைப் பார்த்து அவன் சந்தோஷப்பட்டான். நான்காவது பல்லக்குடன் சேர்ந்து ராகவராவ் அந்தக் கண்ணாடியைத் தலையில் வைத்து நடந்து போய்க் கொண்டிருந்தான். அந்தப் பல்லக்குச் சுமப்பவர்களில் ஒரு அடிமையின் பெயர் அகந்து. அகந்து ராகவராவின் தந்தையின் நண்பன். முன்னால் கொண்டு போய்க் கொண்டிருந்த மூன்று பல்லக்குகள் சற்று தூரத்தில் போன பிறகு, ராகவராவ் நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில் அகந்துவிடம் கேட்டான்:

"சித்தப்பா! உள்ளே யாருமே இல்லாத இந்தப் பல்லக்கை யாருக்காகக் கொண்டு போறாங்க?"

"எனக்கு எப்படித் தெரியும்?"

அகந்து சிறிதும் ஆர்வம் இல்லாத குரலில் சொன்னான்.

"சொல்லுங்க, சித்தப்பா!"- ராகவராவ் கெஞ்சினான்.

ஜமீன்தாரின் கணக்குப்பிள்ளை திருவிழா நடந்த இடத்திலிருந்து தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்ததற்காக அகந்து அவர்கள் மீது பயங்கரமான கோபத்தில் இருந்தான். வருடத்தின் மற்ற எல்லா நாட்களும் ஜமீன்தாருக்கு உரியவையே. திருவிழா நடக்கும் அந்த ஒரே ஒருநாள் மட்டுமே அடிமை வேலைக்காரர்களுக்குச் சொந்தமானது. அதனால் அகந்து மிகவும் மனதில் கவலையும், கோபமும் கொண்டான். இருந்தாலும், சிறுவனான ராகவராவ் கள்ளங்கபடமில்லாமல் கேட்ட கேள்வியைக் காதில் கேட்டபோது, அவனிடமிருந்த கோபமும் கவலையும் சற்று குறையவே செய்தது.


அகந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு மெதுவான குரலில் சொன்னான்: "இந்தப் பல்லக்குல ஜமீன்தாரோட அம்மாவின்... வருவான்"

"யார் வருவாங்க?"- ராகவராவ் மீண்டும் கேட்டான்.

"அவனோட அம்மாவின்... அவனோட மகனின்... இவங்கதான் வரப்போறது" அவன் சொன்னதன் இறுதிப்பகுதி மிகவும் அசிங்கமாக இருந்தது.

ராகவராவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் ஆச்சரியத்துடன் அகந்துவையே பார்த்தான்.

அகந்து காறித்துப்பி விட்டு சொன்னான்: "ஒரு வருடத்துக்குப் பிறகு பெரிய ஜமீன்தாரோட மகன் திருமணம் செய்யப்போற மணப்பெண்ணை இந்தப் பல்லக்குல சூரியப்பேட்டையில இருந்து ஸ்ரீபுரத்துக்குக் கொண்டு வருவாங்க. அப்போ நானும் நீயும்தான் அனேகமா இந்தப் பல்லக்கைச் சுமப்போம்..."

இதற்கிடையில் ஜமீன்தாரின் ஒரு பணியாள் ஓடிவந்து அகந்துவின் முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டு கோபக்குரலில் சொன்னான்: "என்னடா மெதுவா நடக்குற! மற்ற பல்லக்கெல்லாம் எவ்வளவு தூரம் முன்னாடி போயிருக்குன்னு தெரியுதுல்ல! வேகமா நட... இல்லாட்டி...!"

அகந்துவும் மற்ற பல்லக்குச் சுமப்பவர்களும் கழுதைகளைப் போல ஓடத் தொடங்கினார்கள். ராகவராவ் கண்ணாடியைச் சுமந்து கொண்டு அவர்களுடன் ஓடினான்.

ஸ்ரீபுரத்திலிருந்து சூரியப்பேட்டைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்தது. அப்படியே இருந்தாலும், இரண்டு விஷயங்களை ராகவராவால் இப்போதும் மறக்க முடியவில்லை. முதல் விஷயம், இப்போதும் அவனுடைய இதயத்தில் பிரகாசமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கிராமத்திலிருந்து நீண்டதூரம் போனபிறகு ஒரு மலை மீது அவர்கள் ஏற வேண்டும். வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் ஏறி மலை உச்சியை அடைந்த ராகவராவ் அங்கு நின்றவாறு பல கிராமங்களையும் பார்த்தான். அந்தக் கிராமங்கள் கண்ணாடியைப் போல இப்போதும் அவனுடைய மனதில் தோற்றம் தருகின்றன. பரந்துகிடக்கும் பருத்தித் தோட்டங்கள் பிரகாசமாகத் தெரிகின்றன. அந்தப் பருத்தி ஆந்திராவின் தெளிந்த பனி என்று கூறுவதே பொருத்தமானது. தென்னையோலைகளால் வேயப்பட்டும் மறைக்கப்பட்டும் உண்டாக்கப்பட்ட குடிசைகள் ஒவ்வொன்றும் கல் மண்டபங்களைப் போல் காட்சியளிக்கின்றன. அந்த மண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் மனிதர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சற்று தூரத்தில் இருட்டிற்கு அடர்த்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பறவைகள் தங்குவதற்காக அந்தப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தன.

கஷ்டங்கள் நிறைந்த அந்த வழிப்பயணத்தை ராகவராவ் நினைத்துப் பார்த்தான். அவனுடைய வீடும் கிராமமும் குளங்களும் அசாதாரணமான ஒரு ஓவியத்தைப் போல அவனுடைய கண்ணுக்கு முன்னால் தோன்றியது. அவன் இதற்கு முன்பு ஒருமுறை கூட தன்னுடைய வீட்டையும் கிராமத்தையும் இவ்வளவு தூரத்திலிருந்து பார்த்ததில்லை. அதனால் வாழ்க்கையில் அவன் கண்ட அந்த அழகு, குறிப்பாக தனித்துவம் தெரியும் அந்தப் பேரழகு இப்போது அவனுடைய இதயத்தின் அடித்தளத்தில் தோன்றி அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. வீடும் கிராமமும் கிராமத்தின் அழகும் இப்போது அவனுடைய மனமென்னும் மணிமாளிகையில் இனம் புரியாத பல நினைவுகளை உண்டாக்கின. சிறையின் அந்த இருண்ட அறைக்குள் இருந்துகொண்டுகூட ராகவராவால் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தவாறு அந்த அழகை தொட்டுணரவும் அனுபவிக்கவும் அதை எரித்து சாம்பலாக்கி அழிப்பதற்கான உரிமையும் அவனுக்கு இருக்கிறது காரணம் அந்த அழகுக்காகத்தானே அவன் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் போராடியிருக்கிறான்!

அந்தப் பயணத்தில் வேறொரு சம்பவம். இப்போதுகூட அது சிறிதும் மறையாமல் பசுமையாக அவனுடைய மனதில் இருக்கிறது. சூரியப்பேட்டையில் இரவு நேரத்தில் ஒரு குதிரை லாயத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. கிராமத்தின் தலைவர் ஸ்ரீராமபுண்டுலு, புரோகிதர் சீதாராம் சாஸ்திரி, காவல்துறை லட்சுமி காந்தராவ் போன்ற முக்கிய மனிதர்களின் குதிரைகளை அந்த லாயத்தில்தான் கட்டிப் போட்டிருந்தார்கள். அங்குதான் அடிமைப்பணி செய்பவர்களுக்கு இரவு நேரத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராகவராவின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது குதிரைகளின் சாணமோ, சிறுநீரோ குதிரை லாயத்தின் கெட்ட நாற்றமோ, தரையின் குளிர்ச்சியோ அல்ல. அன்று இரவு அதே குதிரை லாயத்தில் சதரேபத்திபாடியைச் சேர்ந்த ஹரிகதா காலட்சேபம் நடத்துபவர்கள் பாடிய நாடோடிப் பாட்டுகள் இப்போதுகூட ராகவராவின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

அந்தப் பாடகர்கள் ஜகன்னாத ரெட்டியால் வரவழைக்கப்பட்டவர்களே. திருமணம் நிச்சயம் செய்யப்போகும் அந்த நல்ல வேளையில் அவர்களை அவர்தான் வரவழைத்திருந்தார். மூன்று பேர்களைக் கொண்ட அந்தப் பாடகர்கள் குழுவில் ஒரு மனிதருக்கு வெள்ளை நிறத்தில் தாடி இருந்தது. அவர் ஹரி கதையைக் கூறக் கூடியவர். தீபத்தின் மங்கலான வெளிச்சத்தில் அவருடைய முகம் ஆந்திராவின் சிவந்த மண்ணைப்போல மிகவும் பிரகாசமாக இருந்தது. அவருடைய முகத்தில் இருந்த கோடுகள் ஆந்திராவின் கீறல் அடையாளங்களாகத் தோற்றம் தந்தன. அவரிடம் ஒரு ஒற்றைக்கம்பி வீணை இருந்தது. இரண்டாவது ஆள் ஒரு கோமாளி. வயது குறைவான இளைஞன் அவன். அவன் தலையில் பெரிய தலைப்பாகை கட்டப்பட்டிருந்தது. அவனுடைய முகம் மதுவிலிருந்து வழியும் நுரையைப் போல வாழ்க்கையின் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் ஹரிகதா காலட்சேபத்துக்கு மத்தியில் நகைச்சுவை வார்த்தைகள் மூலமும் கோமாளித்தனங்கள் காட்டியும் எல்லோரையும் மகிழ்ச்சியில் மூழ்க வைத்துக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவன் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்பான். அதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். மூன்றாவது மனிதர் மிருதங்கம் வாசிப்பவர்.

இரவு நீண்டு கொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் படுஅமைதி நிலவிக் கொண்டிருந்தது. குதிரைகள் தானியம் சாப்பிட்டும்- அடிமை வேலைக்காரர்கள் கோதுமை உண்டும் தங்களின் வயிற்றை நிரப்பினார்கள்.

கதாகாலட்சேபம் நடத்துபவர்கள் குதிரை லாயத்திற்கு முன்னாலிருந்த கிணற்றின் சுவர் மீது ஒரு விளக்கை எரிய வைத்திருந்தார்கள். அந்த விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் தங்களின் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கதாகாலட்சேபம் செய்பவர் தாளத்தைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தார்: "பல வருடங்களுக்கு முன்னால்..."

கோமாளி அடுத்த வரியைப் பாடினான்.

"அன்னைக்கு ஜகன்னாத ரெட்டியோட ஒரு சின்ன தூசு கூட இல்ல..."

மிருதங்க வாசிப்பிற்குப் பிறகு கதாகாலட்சேபக்காரன் தொடர்ந்தான்:

"அன்னைக்கு வெள்ளை அரிசியால் ஆன சோற்றை எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. வெண்மை நிறத்துல சட்டை அணிஞ்சிருந்தாங்க. இப்போயிருந்து நூறு வருடங்களுக்கு முன்னாடி, வாரங்கல்ல காகித ராஜ்யம் உண்டானப்போ, அந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தது உர்மாதேவி. அன்று... அன்று... வேலம் தேவாலயத்துக்கு மிகவும் பக்கத்துல ஒரு யோகி இருந்தான்...

கதாகாலட்சேபம் ஆரம்பமானது. மிருதங்கமும் ஒற்றைக் கம்பி வீணையும் அதற்கென்று இருந்த இசையை வெளிப்படுத்தி காற்றை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கச் செய்துகொண்டிருந்தன. ராகவராவ் பரந்து கிடக்கும் ஆந்திராவின் செழிப்பு நிறைந்த புராதன மண்ணில் வாழ ஆரம்பித்தான்.


அடிமைகள் சில நிமிடங்களுக்குத் தங்களுடைய எல்லாவித கவலைகளையும் மறந்து கதாகாலட்சேபத்தில் மூழ்கிப் போனார்கள்.

கதை இளைஞனான ஒரு யோகியைப் பற்றியும் ராஜகுமாரியைப் பற்றியும் இருந்தது. ராஜகுமாரியின் தந்தை வைணவன். யோகி சிவனை வழிபடக் கூடியவன். இந்த உலகத்தில் அநீதியும் அக்கிரமங்களும் இல்லாமற் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அந்த யோகியே பிறப்பெடுத்தான். அவன் தன்னுடைய புதிய லட்சியங்களை வெளியே பரப்ப ஆரம்பித்தான். அப்போது ஒருநாள் தான் செல்லும் வழியில் அவன் ராஜகுமாரியைச் சந்தித்தான்.

ஒற்றைக் கம்பி வீணையின் நாதம் நீண்ட நேரம் காற்றில் கலந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. இதயத்தை மயக்கக்கூடிய அந்த நாத வெளியில் அடிமைகள் ராஜகுமாரியின் முகம் தெரிவதைப் பார்த்தார்கள். விளக்கு வெளிச்சம் கிணற்று நீரில் தெறித்து ஒரு ஆவேச உணர்வை அங்கு உண்டாக்கியது. நீலநிற வானத்தில் எண்ணிக்கையில் அடங்காத நட்சத்திரங்கள் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

தான் உறங்கிக் கொண்டிருக்கிறோமா? இல்லாவிட்டால் விழித்திருக்கிறோமா என்பதை ராகவராவால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொழுது புலரும் நேரத்தில் புதிய நாள் வந்து இரவின் கனவைத் தகர்த்து சாம்பலாக்கியபோதுதான், உதயசூரியனின் மெல்லிய கதிர்கள் வந்து கண் இமைகளைத் தழுவியபோதுதான், அவனுக்குச் சுய உணர்வே மீண்டும் வந்தது. அவனுடைய தந்தை அப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப் போயிருந்தான். குதிரைகள் சீ... சீ... என்று ஓசை உண்டாக்கி தரையில் அழுத்தமாக மிதித்துக் கொண்டிருந்தன. அதற்குப்பிறகு சில நிமிடங்கள் ராகவராவின் மனம் மிகவும் அலட்சியமாக இருந்தது. அவ்வப்போது அல்லது வாழ்க்கையின் சில குறிப்பிடத்தக்க நிமிடங்களில் ஒவ்வொரு கோபமும் குமிழிகளைப் போல மனதில் வடிவமெடுக்கத்தான் செய்கின்றன. அப்போது ஜகன்னாதரெட்டி, காவல்துறை அதிகாரி, கிராமத்தின் மற்ற ஜமீன்தார்கள் ஆகியோரின் முகங்கள் கண்களுக்கு முன்னால் தோன்றி மறையும். அந்த நேரங்களில் ராகவராவ் கோபத்தின் மீது தன் கவனத்தை அதிகமாகச் செலுத்துவதில்லை. அது எதற்காக என்றால் தன்னுடைய மனதில் முளைத்திருக்கும் முட்செடிக்குத் தன்னுடைய கோபமென்னும் உரத்தைத்தான் போட்டிருக்கிறோம் என்ற உண்மை அவனுக்கு நன்றாகவே தெரியும். கோபம் வரவேண்டும் என்பதற்காகக் கோபம் என்ற தத்துவத்தின் மீது ராகவராவிற்கு எப்போதும் நம்பிக்கையில்லை. அதனால் அவன் பல நிலைகளையும் வேகமாகக் குதித்துக் கடந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆயிரம் வகைப்பட்ட சில்லரை நாணயங்களைப் பரிசோதித்துப் பார்த்த பிறகு அவை எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டு, அவன் சிறுவனாக இருந்த பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கு வந்தான். திடீரென்று அவன் தன்னுடைய நண்பனான நாகேஸ்வரனைப் பற்றி நினைத்தான். நாகேஸ்வரன் இப்போது அவனுக்கு அருகிலிருக்கும் சிறை அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறான்.

நாகேஸ்வரன் ராகவராவைப் போல மெலிந்து போய் உயரம் குறைவாக இருக்கும் மனிதனல்ல. அவன் ஆறடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்டவன். அதற்கேற்ற உடல்வாகும் அவனுக்கு இருக்கிறது. பேசும்போது அடித்தொண்டையில் இருக்கும் அவனுடைய குரல். நாகேஸ்வரன் போகாவதி நதியின் இன்னொரு கரையிலிருக்கும் காட்டில் ஆடு, மாடுகளை மேய்த்துத் திரிந்து கொண்டிருந்தான். ராகவராவ் அவ்வப்போது அடிமை வேலைகளிலிருந்து ஒளிந்து ஓடி அலைந்து திரியும்போது அவனுக்கு இருக்க இடம் தந்தவன் நாகேஸ்வரன்.

ராகவராவிற்கும் நாகேஸ்வரனுக்கும் இடையில் ஒரு நெருங்கிய அன்பும் பிணைப்பும் பலமாக உண்டாவதற்குப் பின்னால் காரணமாக இருந்தது கோப உணர்வே. நாகேஸ்வரன் ஜமீன்தாரை வெறுத்தான். அந்த வெறுப்பு வந்ததற்குக் காரணம்- பணம் எதுவும் தராமல் ஜமீன்தார் மூன்று அல்லது நான்கு தடவைகள் அவனுடைய ஆடுகளை பலவந்தப்படுத்தி பிடித்துப் போய்க் கொண்டிருந்தார். ராகவராவிற்கும் ஜமீன்தார் மீது பயங்கர வெறுப்பு இருந்தது. அதற்கான காரணம்- அவன் அந்த ஆளின் அடிமையாக இருந்தான். அவனுடைய தந்தையும் அடிமை. வீரய்யா பல நேரங்களில் அவனிடம் கூறியிருக்கிறான். தாங்கள் அடிமைகளாக இல்லாமலிருந்த ஒரு காலம் முன்பு இருந்தது என்றும்; கலப்பையும் காளைகளும் விளைபொருட்களும் தங்களுக்குச் சொந்தமாக இருந்தன என்றும்; குழந்தைகளின் உதடுகளில் கொஞ்சலும், பெண்களின் தொண்டையில் பாட்டுகளும் இருந்தன என்றும் அவன் கூறியிருந்தான். கோபமும் வெறுப்பும் பொறுத்துக்கொள்ள முடியாத எல்லையைத் தாண்டுகிறபோது வீரய்யா விசிலடிக்க ஆரம்பிப்பான்.

"நமக்கு முன்னால் ஜமீன்தாரோட கம்பீரமான மணிமாளிகை நின்று கொண்டிருப்பதை நீ பார்க்குறேல்ல? அந்த மாளிகை எங்ககிட்ட இருந்த எல்லாத்தையும் தட்டிப் பறித்தது... மனிதர்களா இருந்த எங்களை மிருகங்களா ஆக்கியது அதுதான். என் தந்தை எனக்கு இந்தக் கோபத்தைத் தந்துட்டுப் போனாரு. நீ இப்போ வளர்ந்து பெரியவனா ஆயிட்டே. என்கிட்ட இருக்குற எல்லா கோபங்களையும் வெறுப்பையும் நான் உனக்குத் தர்றேன். மனிதன் தன்னோட பிள்ளைகளுக்குச் செல்வத்தைத் தர்றான். பூமியைத் தர்றான். என்கிட்ட செல்வமோ, பூமியோ இல்ல. கோபமும் பகையும் மட்டும்தான் என்கிட்ட இருக்கு. அதை வாரிசு உரிமைன்ற முறையில உனக்கு நான் தர்றேன். சுமையைத் தூக்கித் தூக்கி நான் கிழவனாஆயிட்டேன். என்கிட்டே இப்போ கொஞ்சமும் பலமே இல்ல. பலத்தை எப்படி சேகரிக்குறதுன்ற விஷயம் எனக்குத் தெரியாது. சொத்துன்னு சொல்லிக்கிறதுக்கு என்கிட்ட இந்தக் கோபம் மட்டும்தான் இருக்கு. நான் அதை உனக்கு விட்டுட்டுப் போறேன். ஏதாவது வழியைத் தேடிக் கண்டுபிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கோ..."

அன்று முதல் ராகவராவ் தனக்குள் இருந்த கோபத்தைத் தன் தந்தையிடமிருந்து பெற்ற சொத்து என நினைத்து மனதில் பூட்டி வைத்திருந்தான். தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலமாக அவன் அந்தக் கோப உணர்வை நாளும் வளர்த்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ராகவராவை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. "ஜமீன்தாரோட இந்தப் பிரம்மாண்டமான மாளிகை உன் குடும்பத்திற்கு அல்லது உன் வம்சத்திற்கு மட்டும் எதிரி இல்லை. ராமலு, அகந்து, சோமப்பா, வெங்கட்டராவ் போன்ற ஆயிரக்கணக்கான அடிமைகளுக்கும் அது எதிரிதான். அவர்களின் பொன்னென மின்னிக் கொண்டிருக்கும் தாவரங்கள், வயல், வீடு, பாட்டு, பருத்தியின் வெள்ளை நிறப் பூக்கள், மனைவிமார்களின் சிரிப்பு- இவை எல்லாவற்றையும் இந்தப் பிரம்மாண்டமான மாளிகை தட்டிப் பறித்துவிட்டது" என்ற குரல் அவனுக்குள் முழங்கிக் கொண்டேயிருந்தது.

அந்தக் கோபமும் வெறுப்பும் ராகவராவிற்கும் நாகேஸ்வரனுக்குமிடையே இருந்த நட்பை பலம் பொருந்தியதாக ஆக்கியது. அந்தக் கோபம் ராகவராவை உண்மைகளுக்கு முன்னால் கொண்டு வந்து அவனை நிறுத்தியது. இந்த உலகத்தில் ஜகன்னாதரெட்டி போன்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ராகவராவைப் போன்ற அடிமைகள் ஒன்று சேர்ந்தார்களென்றால் அந்தப் பிரம்மாண்ட மாளிகைகளும் அதன் சுவர்களும் அதிக நாட்கள் நிலைத்து நிற்க முடியாது.


தகர்ந்து தூள் தூளாவதைத் தவிர வேறு வழியே இல்லை. இப்படிப்பட்ட ஒரு சிந்தனை ஒரே நாளில் ராகவராவின் மனதில் தோன்றிவிடவில்லை. மிகவும் மெதுவாகத் தெளிவற்ற ஒரு புகையைப்போல காற்றில் கலந்து வந்து அவனுடைய மூளைக்குள் அது நுழைந்தது. எனினும், கோபத்தை மிகவும் பலம் பொருந்தியதாக ஆக்கியதும் கம்பீரமாகத் தோற்றம் தருவது மாதிரி ஆக்கியதும் ஜமீன்தார் மீது கொண்ட வெறுப்பு அல்ல. தன் மீதும் வாழ்க்கை மீதும் மிகப்பெரிய அளவிலும் அசாதாரணமான விதத்திலும் அவன் கொண்ட ஈடுபாடே அதற்குக் காரணம். 

3

ராகவராவ் மெதுவாக வாழ்க்கை என்னும் முஷ்டியை விரித்தான். விரித்த முஷ்டிக்குள் கோபத்தால் வெந்து போன கணக்கற்ற நிமிடங்களுக்கு மத்தியில் அன்பு ஒளிவீசும் ஒரு மலர் அவனுடைய பார்வையில் பட்டது. அடுத்த நிமிடம் அவனுடைய முகம் ஆனந்தத்தால் பிரகாசமானது. 

சுந்தரி!

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. பருத்தித் தோட்டத்தில் நடைபெற்ற அந்தச் சம்பவம் ராகவராவின் மனதில் வலம் வந்தது. தோட்டத்தில் பனிப்போர்வையைப்போல வெள்ளை நிறத்தில் பருத்திப்பூக்கள் காணப்பட்டன. அவன் காலை முதல் பருத்தி சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். வெள்ளை மலர்களுக்கு மத்தியில் சாம்பல் நிறத்தில் ஒன்றோ இரண்டோ பூக்களைக் கண்டால் அதைப் பறித்து வேறொரு பையில் அவன் போடுவான். அவன் படுவேகமாகத் தன் கைகளை இயக்கி பருத்தியைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையால் அன்று வேலைக்கு வர முடியவில்லை. அதனால் இரண்டு ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ராகவராவ் மட்டும் செய்து முடிக்க வேண்டும்.

ராகவராவ் வாய்க்குள் பாட்டொன்றை முணுமுணுத்தபடி பருத்தி பறித்துக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு பெண் பருத்தி சேகரித்துக் கொண்டு தோட்டத்தின் எதிர் பகுதியிலிருந்து தான் இருக்குமிடத்திற்கு வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ராகவராவ் அவளைப் பார்த்து பாட்டு பாடவில்லை. வெறுமனே வேலைக்கு மத்தியில் களைப்பு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் பாடினான். பாட்டின் ஒவ்வொரு வரியிலும் உழைப்பின் இசை ததும்பியிருந்தது. ராகவராவ் திடீரென்று பாட்டை நிறுத்தினான். அந்தப் பெண் பருத்திச் செடிகளுக்கு நடுவில் அவனுக்கு முன்னால் வந்து நின்றபோது அவன் அவளுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தான்.

ராகவராவ் சிறையின் இருட்டறைக்குள் படுத்துக்கொண்டு அந்தக் காட்சியை நினைக்க முயற்சித்தான். முதல்நாள் சுந்தரியை அவன் எப்படிப் பார்த்தானோ அதே மாதிரி இப்போதும் பார்க்க முயன்றான்.

சுந்தரியின் வெண்மையான பற்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் தோன்றின. அந்தப் பற்கள் முத்துமாலையைப்போல அவளுடைய உதடுகளுக்கு நடுவில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. சுந்தரியின் ப்ளவ்ஸ் அப்போது அவனுடைய ஞாபகத்தில் வந்தது. சிவப்பு நிற ப்ளவ்ஸுக்கு மேலே சிறிய கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அவள் திரும்பி நின்றபோது ப்ளவ்ஸின் பின்பகுதி திறந்து கிடப்பதை ராகவராவ் பார்த்தான். அதன் நூல்கள் அவளுடைய வெண்மையான உடலில் பன்னீர் மலர்களின் இதழ்களைப் போல தெரிந்தன. முடியில் சிறு சலங்கைகளைக் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தாள். சிவப்பு நிற நாடாவால் தலைமுடியைக் கட்டிவிட்டிருந்தாள். சுந்தரியிடம் ஒருவித பதைபதைப்பு இருப்பது தெரிந்தது. அவள் வேகமாகத் தாவணியின் முனையை மார்பு நோக்கி இழுத்துவிட்டாள். அவளுடைய தாவணியும் சிவப்பு நிறத்தில்தான் இருந்தது. அதன்மீதும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. வெயில் பலமாக அடிக்கும்போது அந்தக் கண்ணாடித் துண்டுகள் பிரகாசிக்கும் அந்தப் பிரகாசம் பருத்தியின் வெள்ளை நிறத்தின் மீது படும்போது கண்கள் பயங்கரமாகக் கூசும்.

சுந்தரி பருத்தியைப் பறிப்பதற்காக கையை உயர்த்தினாள். அவள் முழங்கை வரை கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள்.

நெற்றியில் பச்சை நிறத்தில் பொட்டு வைத்திருந்தாள். ராகவராவின் பார்வை சிறிது நேரம் சுந்தரியின் முகத்தின் மீது நிலைபெற்று விட்டது. பிறகு மெதுவாகப் பார்வையைக் கீழ்நோக்கிச் செலுத்தினான். அவளுடைய நீல நிறக் கண்களில் ராகவராவ் தன்னையே இழந்து விட்டான். எவ்வளவு வெள்ளையாக இருக்கிறாள்! அழகான உதடுகள்! எல்லாம் ஒரு நிமிடத்தில் முடிந்துவிட்டது. சுந்தரி மீண்டும் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முதன்முதலில் சிரித்தபோது இருந்த வசீகரமோ அசாதரணமோ இல்லை. முதல் சிரிப்பின் வசீகரத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க அவன் முயன்றான். காடுகளில் ஒளிந்து நடந்து கொண்டிருந்தபோதும்- போலீஸ், இராணுவம் ஆகியவற்றின் கூர்மையான பார்வையில் சிக்காமல் தப்பித்து ஓடிக்கொண்டிருந்த நேரத்திலும்- பேப்பர் தொழிற்சாலையில் வேலை செய்தபோதும் மலைகளில் மறைந்து திரிந்தபோதும்- ஜமீன்தாரின் சாட்டையடியை வாங்கியபோதும்- சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் அவன் சுந்தரியின் முதல் சிரிப்பை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ரசிக்க முயன்றான். அந்தச் சிரிப்பிலிருந்து ராகவராவ் பலத்தைச் சேகரித்திருந்தான். சில நேரங்களில் அந்தச் சிரிப்பு பற்றிய நினைப்பு அவனை மென்மையான இதயத்தைக் கொண்டவனாகவும் சாதுவாகவும் மாற்றியது. அதனால் அவன் அந்தக் காட்சியை சிறிதும் தயங்காமல் ஒரு ஓரத்தில் விலக்கி வைத்தான். எனினும், அந்தக் காட்சி அவனையும் மீறி அவனுக்கு முன்னால் தோன்றுவது உண்டு. அது அவனிடம் கவலையையும் வேதனையையும் உண்டாக்கும். பாலைவனத்தில் தாகம் உண்டாகித் தவிக்கும் மனிதன் ஒரு துளி நீருக்காக ஏங்கும் போது நீர் கற்பனை வடிவத்தில் அவன் முன்னால் வந்து நிற்கும். அதைப்போல ராகவராவும் தாகத்தின் கடுமையை அவ்வப்போது அனுபவிக்கிறான். முதல் சிரிப்பில் இருந்த அந்த அசாதாரண அழகும் அந்த அழகின் இதயத்தைக் கொள்ளை கொள்ளக் கூடிய தன்மையும் அவனுக்கு நன்கு பழகிப் போன ஒன்றே.

இப்போது அந்தக் காட்சியை மீண்டும் காண ராகவராவ் விரும்பினான். அதற்காக ஆசைப்பட்டபோது தேனைப்போல இனிய ஒரு அசாதாரண அமைதியையும் பயங்கரமான வேதனையையும் ஒரே நேரத்தில் அவன் அனுபவித்தான்.

சுந்தரி லம்பாடி சமுதாயத்தைச் சேர்ந்தவள். அவளுடைய தந்தையின் பெயர் பாக்யா. பாக்யா நன்றாகப் பாடக்கூடிய ஒரு நாடோடி. அவன் தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் சில நாட்களுக்குப் போகாவதி நதிக்கரையில் முகாமிட்டான். பருத்தி பறிக்கும் சமயங்களில் ஜமீன்தார் அந்த நாடோடிகளைப் பணிக்காக அமர்த்துவார். அதனால் சுந்தரியும் பருத்தி பறிக்கும் வேலைக்காக வந்திருந்தாள். பருத்தி பறிக்கும் வேலை முடிந்துவிட்டால் அவர்கள் காட்டிலிருந்து விறகு, காட்டுப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதில் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் கிக்கர் மரங்களிலிருந்து பசை சேகரித்து, அதைத் தெருக்களில் உரத்த குரலில் கூவி விற்பார்கள்.

முதல் சந்திப்பிற்குப் பிறகு பல வேளைகளில் ராகவராவும் சுந்தரியும் ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.


அது ஏன் நடந்தது என்றால் ராகவராவ் இளைஞனாகவும் சுந்தரி இளம் பெண்ணாகவும் இருந்ததுதான். அதனால் அவர்களுக்குள் ஒருவித உணர்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுத்தது. வித்து விதைக்கவும் அறுவடை செய்யவும் முடியும். மணம் கமழும் விளைச்சல் நிறைந்த தோட்டம்... இணக்கம், பிணக்கம் ஆகியவற்றின் அரங்கேற்றம்... ஓடிப்போய்விடுவேன் என்ற பொய்யான மிரட்டல்... நதி ஓடிக்கொண்டிருப்பதும் அதில் சிறு சலனங்கள் தோன்றுவதும் கூட இயல்பான ஒன்றுதானே!

சுந்தரி உண்மையிலேயே ராகவராவ் திருமணம் செய்து கொள்ளப்போகிற பெண் என்ற நிலை உண்டானபோது, அவள் தன்னையுமறியாமல் நடனமாடத் தொடங்கிவிட்டாள். ஆனால், தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்போ அல்லது வேறு ஆண்களுக்கு முன்னாலோ அவள் ஒருமுறை கூட நடனம் ஆடியதில்லை. தன்னுடைய எதிர்காலக் கணவனுக்கு முன்னால் மட்டும் சுந்தரி நடனமாடுவாள். நாகேஸ்வரனின் காட்டிலுள்ள குடிசையில் அவள் பூக்கள் போட்ட 'காக்ரா' அணிந்து நடனம் ஆடுவாள். ஒன்றரை அடி அகலத்தில் வெள்ளை ஓரம் கொண்ட காக்ரா. அது கணுக்கால் வரை தொங்கிக் கொண்டிருக்கும். பாதத்தில் சிலம்பு நடனத்தைப் பார்த்து தன்னை மறந்து உட்கார்ந்திருக்கும் ராகவராவின் கண்களுக்கு முன்னால் கதவு அடைக்கப்பட்ட ஒரு பல்லக்குத் தோன்றும். அதன் இரண்டு பக்கக் கதவுகளிலும் பின்னல் வேலைப்பாடுகள் கொண்ட சில்க் பர்தா தொங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பல்லக்கு இப்போது ஆள் இல்லாமல் இல்லை.

ராகவராவிற்கு மீண்டும் அந்த நாட்கள் நினைவில் வந்தன. பருத்தி சேகரிப்பு முடிந்தபிறகு சுந்தரி தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் போகாவதி நதிக்கரைக்குத் திரும்பிச் சென்றாள். போகும் வழியில் அவள் ராமுலுவைப் பார்த்தாள். சுந்தரியைப் பார்த்து ராமுலு புன்னகைத்தான். அவனுடைய புன்னகையில் கவலையின் நிழல் தெரிந்தது. சுந்தரி அதைப் பொருட்படுத்தவில்லை. பிறகு அவள் ரங்கடு சித்தப்பாவைப் பார்த்தாள். சித்தப்பா அவளைப் பார்த்து சத்தம் போட்டு சிரித்தான். ஆனால், சுந்தரி அப்போது சந்தோஷத்தில் தன்னையே முழுமையாக மறந்து போயிருந்தாள்.

ராகவராவும் முன்னோக்கி நடந்தான். சுந்தரி அன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதை நினைத்துத்தான் கிழவன் சிரித்திருக்கிறான் என்ற விஷயத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்! அதனால் ராகவராவிற்கு எதுவும் வரப்போவதில்லை! அவன் சிவ்லி மரங்களுக்கு மத்தியில் முன்னோக்கி நடந்து சென்றான். அந்த வழி நாடோடிக்காரர்கள் முகாமிற்குச் செல்லக்கூடியது. சுமார் அரை மைல் தூரம் நடந்தபிறகு அவன் நாடோடிகளின் கழுதைகள் மேயும் இடத்தை அடைந்தான்.

அதற்கு மிகவும் அருகிலேயே அவர்களின் குடிசைகள் இருந்தன. சுள்ளிகளாலும் சால மரங்களின் இலைகளாலும் உண்டாக்கப்பட்ட குடிசைகள்! ஆண்கள் பாய் பின்னிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் கொடிகளைக் கொண்டு கூடை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கிழவி தனியே அமர்ந்து இளமை ததும்பும் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள். இளம்பெண்கள் அவளைப் பார்த்து கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவை ஒவ்வொன்றையும் பார்த்தவாறு ராகவராவ் பாக்யாவின் குடிசையை அடைந்தான். பாக்யா வெற்றிலையையும் கரயாம்பூவையும் சேர்த்து வனஸ்பதி தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அது எதற்காகத் தயாரிக்கப்படுகிறது என்று கேட்டதற்கு பாக்யா ராகவராவைப் பார்த்து கண்களைச் சிமிட்டியவாறு சொன்னான்: "வெற்றிலையையும் கரயாம்பூவையும் சேர்த்து சூடாக்கி வனஸ்பதி தயாரிச்சா, அதுக்கு அசல் நெய்யின் வாசனை இருக்கும்."

"ஏன் சுத்த நெய்யா விற்கக்கூடாது?"

"சுத்த நெய்யை யார் வாங்குறாங்க? அதோட விலை எவ்வளவு அதிகம்! அதுனால கலப்படம் செய்த நெய்யை, சுத்த நெய்னு சொல்லி விக்கிறேன்."

"சுந்தரியை எங்கே காணோம்? அவள் எங்கே போனா?"

"அவள் இப்போ வந்திடுவா. நீ உட்காரு!"

"அவ எங்க போயிருக்கா?"

"ஜமீன்தாரோட மாளிகைக்குப் போயிருக்கா. ஜமீன்தாரோட மகன் அவளை வரச் சொல்லியிருந்தாரு."

அதைக் கேட்டு ராகவராவ் அதிர்ச்சிக்கு உள்ளானான். அவனுடைய இதயத்துடிப்பு அதிகமானது. சிறிது நேரம் கழித்து அவன் கேட்டான்: "ஜமீன்தாரோட மகன் சுந்தரியை ஏன் அழைக்கணும்?"

"எதுக்கு அவளை அழைச்சார்னு நான் எப்படிச் சொல்லுறது?" - பாக்யா நெய்யை உருக்கிய பிறகு சொன்னான்: "அவள் போயி நிறைய நேரமாச்சு. இப்போ வந்திடுவா!"

ராகவராவ் தரையில் உட்கார்ந்தான்.

மாலை மயங்கியது. சூரியன் மறைந்தபிறகு வானத்தில் இருந்த சிவப்பு நிறமும் இல்லாமற்போனது. அப்போதுதான் சுந்தரி ஜமீன்தாரின் மாளிகையிலிருந்து திரும்பி வந்தாள். ராகவராவின் முகம் கோபத்தால் பயங்கரமாகச் சிவந்திருந்தது. அதைப் பார்த்து சுந்தரி பயப்பட்டாள். கடைசியில் அவள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ராகவராவிற்கு முன்னால் வந்து சிரித்துக்கொண்டே கேட்டாள்: "நீங்க எப்போ வந்தீங்க?"

ராகவராவ் அந்தக் கேள்விக்கு எந்தப் பதிலும் கூறவில்லை. சுந்தரி அவனுக்கு முன்னால் நின்றுகொண்டு தாவணியின் நுனியைத் திருகிக் கொண்டிருந்தாள். பிறகு அவள் இயல்பான குரலில் கேட்டாள்: "சர்பத் குடிக்கிறீங்களா?"

"வேண்டாம்... வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம்!"- ராகவராவ் கோபக் குரலில் சொன்னான்.

"என்ன நடந்தது? இந்த அளவுக்குச் சூடாகுறதுக்கு...?" - சுந்தரி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"நீ எங்கே போயிருந்தே?"

"என்னை பிரதாப ரெட்டி வரச் சொல்லியிருந்தாரு."

"எதுக்கு அங்கே போனே?"

"போகாம எப்படி இருக்க முடியும்? கூப்பிட்டது ஜமீன்தாரோட மகனாச்சே!"

"அங்கே என்னல்லாம் நடந்தது?"

சுந்தரி அதுவரை நின்றுகொண்டே பேசினாள். இப்போது அவள் ராகவராவிற்கு அருகில் உட்கார்ந்து கொண்டு மெதுவான குரலில் சொன்னாள்: "புதுசா ஒண்ணும் நடக்கல. சாதாரணமா என்ன நடக்குமோ அதுதான் நடந்தது."

"தேவிடியா!"- ராகவராவ் கோபத்துடன் கத்தினான்.

"இல்ல... நான் தேவிடியா இல்ல!"- சுந்தரி கோபக்குரலில் சொன்னாள்: "நான் அந்த ஆள்கிட்ட மனசைத் திறந்து சொன்னேன். 'நீங்க என்னை எது வேணும்னாலும் பண்ணிக்கங்க. ஆனா, என் மார்பை மட்டும் தொடக்கூடாதுன்னு'

"அதோட அர்த்தம் என்ன?"

"ஏன் அப்படி சொன்னேன்னா- என் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்ல!" இப்படிச் சொன்ன சுந்தரி காதல் வயப்பட்ட கண்களுடன் ராகவராவின் முகத்தைப் பார்த்தாள். ஆனால், ராகவராவால் அவளின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் அமைதியான குரலில் சொன்னான்:

"சுந்தரி! உன்னோட இந்த மார்பகம் மட்டும்தான் புனிதமானதா? உடல்ல இரத்தம் ஓடிக்கிட்டு இருக்குற நரம்புகள் புனிதமானவை தானே? குழந்தையை முத்தமிடுகிற உதடுகள் புனிதமானவைதானே! இந்தக் கைகளால குழந்தையைத் தூக்கி மடியில் வைப்பே. இந்தக் கைகள் புனிதமானவைதானே? நீ உன் முழு உடம்பையும் புனிதமானதா வச்சிருக்க முடியும்.  நீ எதுக்கு உன் புனிதத் தன்மையை இப்படிப் பாழ்படுத்திட்டே? எதுக்காக இப்படி நடந்தே?"


சுந்தரி ராகவராவின் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கூறவில்லை. காரணம் என்னவென்றால்- அவளுடைய சமுதாயத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணுக்கும் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாது. இப்படிப்பட்ட அக்கிரமங்களையும்- மானக்கேடான செயல்களையும் நிறுத்த தங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு அழுவதைத் தவிர, வேறு வழியே இல்லை.

ராகவராவ் அமைதியாய் உட்கார்ந்து சுந்தரியின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவளுடைய கண்ணிலிருந்து வந்து கொண்டிருந்த நீர் நின்றது. வறண்டு போயிருந்த அந்த மண்ணில் அந்த அழுகைக்கான ஒரு அடையாளம் கூட எஞ்சியிருக்கவில்லை.

ராகவராவ் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு உண்மை தோன்றியது. இப்படிப்பட்ட அவமானமான செயல்களும் கண்ணீரும் இனிமேல் ஆந்திராவின் மண்ணை நனைக்காமல் இருக்கவேண்டும். அதற்காக விவசாயிகள் கட்டாயம் மார்பில் இரத்தம் சிந்தியே ஆக வேண்டும். 

ராகவராவ் ஒரே நிமிடத்தில் தன்னுடைய காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் படுவேகமாகக் கடந்தான். அந்த நிமிடங்களுக்கு நடுவில் அவன் தன்னுடைய நினைவுகளின் சுவர்களைத் தாண்டினான். தான் முழுமையாகப் புதிய ஒரு சிந்தனையின் கையை இறுகப் பற்றியிருக்கிறோம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அன்று இரவு ராகவராவ் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. கிராமத்தை விட்டு அதிர்ஷ்டத்தைத் தேடி வெளியேறினான். அப்படிப் போகும் வழியில் அவன் ஒருநாள் அடிமையான விஷயமும் நடந்தது. எனினும், அவன் இப்போது அடிமை அல்ல. முழுமையான சுதந்திரத்தைக் கொண்ட மனிதன் அவன். இப்போது ராகவராவின் கையில் இருப்பது ஒரு புதிய கண்ணாடி. அவன் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பல்லக்குடன் ஒரு புதிய இளம்பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

4

ன்று வரை தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களைக் கோர்வையாகச் சிறிதும் பிசிறின்றி நினைத்துப் பார்க்க ராகவராவால் முடியவில்லை. அந்தச் சம்பவங்களை ஒன்றோடொன்று இணைக்கக்கூடிய சங்கிலியின் கண்ணிகள் இடையில் ஆங்காங்கே விட்டுப்போயிருந்தன. அந்தக் கண்ணிகள்தான் ஒன்றோடு இன்னொன்றை இணைத்து வாழ்க்கையை ஒரு முனையிலிருந்து இறுதிக்குக் கொண்டு செல்கின்றன. அதே நேரத்தில் அந்தச் சங்கிலியைத் தாண்டி நடந்த சம்பவங்களை நாணயத்தைப் போல பரிசோதித்துப் பார்க்க ராகவராவால் முடியவில்லை. அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், இல்லாவிட்டால் சந்தர்ப்பத்தை எடுத்துப் பரிசோதனை செய்து பார்க்கும்போது அவனுடைய எதிர்பார்ப்புகளும் அவற்றோடு வந்து சேர்ந்து கொள்கின்றன. சம்பவங்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமானவையே. அந்தச் சுவாரசியம்தான் சம்பவங்களை ஒன்றோடொன்று கோர்த்து முன்னோக்கி அழைத்துச் செல்கின்றன. ராகவராவ் சில நேரங்களில் அளவுக்கு மீறி உண்டாகும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து கீழே விழுந்து விடுவான். சில நேரங்களில் பாலைவனத்திற்கு நடுவில் மாட்டிக்கொண்டு வழிதெரியாமல் தவிப்பான். எனினும் எல்லா பிரச்சினைகளுக்கும், ஆபத்துகளுக்கும் நடுவில் அவன் ஒரு தீபத்தின் வெளிச்சத்தைப் பார்க்கவே செய்கிறான். அந்த தீபத்தின் வெளிச்சம் மட்டும் இல்லாமற் போயிருந்தால், ராகவராவ் ஆபத்துகளுக்கு மத்தியில் எப்படி முன்னோக்கிச் செல்ல முடியும்? கடந்த மூன்று வருடங்களாக அவன் அத்தகைய ஆபத்துகளைச் சந்தித்துக் கொண்டு தானிருக்கிறான்.

தான் எங்கு போகிறோம், என்ன செய்ய விரும்புகிறோம் போன்ற விஷயங்கள் ராகவராவிற்குத் தெரியாமலே இருந்தது. வாழ்க்கையைப் பற்றி தெளிவில்லாத ஒரு கொள்கையே அவனுக்கு இருந்தது. அக்கிரமம், அநீதி ஆகியவற்றுக்கு எதிராகப் பக்குவமற்ற கோபம், காதலைப் பற்றி ஒரு வெறுப்பான பார்வை... இவைதான் அவனிடமிருந்தது. நகரத்தில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் மூன்று, நான்கு வருடங்கள் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்த பிறகும் அந்தக் கோபத்தையும் வெறுப்பையும் இல்லாமற் செய்ய ராகவராவால் முடியவில்லை. அவன் வேலை செய்த பணக்கார வீட்டின் இல்லத்தரசி எலும்பே ஒடிந்து போகும் அளவிற்கு அவனிடம் வேலை வாங்கினாலும் அவனுக்குச் சாப்பிடத் தருவதென்னவோ சொற்பம்தான். அதைச் சாப்பிட்டு ஏதோவொரு விதத்தில் தன் உயிரைப் போகாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. ராகவராவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த பிரதாப ரெட்டியும் அப்படித்தான் நடந்தார். பணக்காரனின் வீட்டில், நேரம் கெட்ட நேரத்தில் விருந்தாளிகள் வரும் நாட்களில் ராகவராவ் பட்டினி கிடக்க வேண்டிய நிலை கூட உண்டாகும். கிராமத்திலும் அவன் இதே போல எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறான்.  

வேலை செய்வதற்கு மத்தியில் ராகவராவிற்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பணக்காரருக்கு ஒரு கிராமத்தில் ஏராளமான நிலங்கள் இருந்தன. இனியும் நிலம் வாங்க அவர் முயன்று கொண்டிருந்தார். எச்சில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு மத்தியில் ராகவராவ் இன்னொரு ஜகன்னாதரெட்டி பிறந்திருப்பதைப் பார்த்தான். அந்தப் பணக்காரரின் வீடு மிகப்பெரிய மாளிகையாக இருக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். வீட்டைச் சுற்றிலும் சுவர்களும், படிகளும் இல்லைதான்.

அவன் பாத்திரம் தேய்த்துக் கழுவும் வேலைக்காரனாக மாறிய தன்னுடைய பசியையும் கிராமத்திலிருக்கும் அடிமைகளின் பசியையும் ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னுடைய தொழிலையும் அதற்குத் தான் வாங்கும் கூலியையும், அடிமைகளின் தொழிலையும் அதற்கு அவர்கள் வாங்கக்கூடிய கூலியையும் ஒப்பிட்டுப் பார்க்க ராகவராவால் முடியும். அடிமைகள் கிராமங்களில் மட்டுமல்ல; நகரங்களிலும் இருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். கடவுள் தன் கைகளால் ரெட்டிமார்களை மட்டும் படைக்கவில்லை. இருட்டின் மறைவில் அடிமைகளையும் தான் அவன் படைத்திருக்கிறான்.

பணக்காரர் மூன்று நான்கு தடவைகள் கடத்தல் பொருட்களைப் பல இடங்களிலும் கொண்டு போய் சேர்க்கும் வேலையை ராகவராவிடம் ஒப்படைத்தான். அப்போதுதான் அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள அவனால் முடிந்தது. ஒவ்வொரு முறையும் பணக்காரரின் மடி பணத்தால் நிறைந்து காணப்படும். ராகவராவின் வயிறு எப்போதும் காலியாகவே இருக்கும். பணக்காரரின் மடியுடன் தன்னுடைய வயிறை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவன் உணர்ந்தான். ராகவராவ் ஒரு பொருளாதார நிலைமையையும் அதன் அசுரத்தனமான வடிவத்தையும் நேரில் பார்த்தான். குரூரமான ஒரு தமாஷான விஷயம் அவனுக்கு முன்னால் அரங்கேறிக் கொண்டிருந்தது. ஜகன்னாத ரெட்டியின் அரண்மனைக்குள் நுழையவோ அதைப் பார்ப்பதற்கான வாய்ப்போ ராகவராவிற்குக் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது அவன் எதிரியின் அந்தப்புரத்திலேயே வசித்துக் கொண்டிருக்கிறான். இரவும், பகலும் பணக்காரரும் அவருடைய மனைவியும் பேசிக் கொண்டிருப்பதை அவன் கேட்பான். அந்தப் பேச்சு பணம், நிலம் ஆகியவற்றைப் பற்றித்தான் பெரும்பாலும் இருக்கும். அவர்கள் ஒருமுறைகூட ராகவராவின் பசியைப் பற்றி பேசியதே இல்லை.


கள்ளக்கடத்தல் வியாபாரம் செய்வதற்கிடையில் மிகவும் ஆபத்தான அந்த விளையாட்டை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஒன்றிரண்டு தடவைகள் ராகவராவ் நினைத்தான். ஆனால், எப்படி அதை நிறுத்த முடியும்? அவன் தன்னுடைய கிராமத்தின் பட்டினியையும் வறுமையையும் நன்கு தெரிந்தவன் ஆயிற்றே!

ராகவராவின் கிராமத்திலிருக்கும் சாம்பட்டேலுக்கும் போலீஸ் அதிகாரிக்குமிடையே இருக்கும் நட்பு இப்போது அவனுடைய மனதை விட்டு மறைந்து போகவில்லை. அவன் இந்த மாதிரி விஷயங்களை பத்திரிகைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் அவன் அதை அனுபவித்து அறிந்திருக்கிறான். அதனால் நான்கு மாதங்கள் தொடர்ந்து சூரியப்பேட்டையில் இருந்தாலும் போலீஸ்காரர்களிடம் போய் புகார் கூறுவதால் ஏதாவது பிரயோஜனம் உண்டாகும் என்று ராகவராவ் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் போலீஸ் ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்று யாராவது லட்சம் தடவைகள் சொன்னாலும் ராகவராவ் அதை நம்பமாட்டான். போலீஸிடம் கூறும்படி எப்போதாவது யாராவது சொன்னால் ராகவராவ் கிண்டலாகச் சிரித்து அதற்குப் பதில் கூறுவான்.

ராகவராவ் வசித்த தெருவில் அவனைப்போல மற்ற வீடுகளில் வேலைசெய்யும் பணியாட்கள் நிறைய இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நகரத்திலிருக்கும் அடிமைகள். அவனைப்போல எண்ணிக்கையில் அடங்காத அடிமைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் பலவகைப்பட்ட கிராமங்களிலிருந்தும் நகரத்தைத் தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வினோதமான ஒரு பழக்கமுண்டு. அவர்கள் வீட்டு உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் குற்றங்களையும் குறைகளையும் ஒருவரோடொருவர் கூறிக் கொள்வார்கள். ஆனால், கிராமத்திலிருக்கும் அடிமைகள் சாதாரணமாக இந்த மாதிரி தங்களின் எஜமானர்களைப் பற்றி கேவலமாகப் பேசமாட்டார்கள். அதனால் இப்படிப்பட்ட வசைப் பாடல்களில் ராகவராவிற்கு எந்தவொரு மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கேவலமாகப் பேசுவதாலும், எண்ணுவதாலும் மனதிலிருக்கும் கோபம் வேண்டுமானால் தணியலாம். ஆனால், வயிற்றின் பசி குறையவே குறையாதே!

ஒருநாள் ராகவராவ் தன் பக்கத்து வீட்டின் வேலைக்காரனான வெங்கிட்டனிடம் இந்த விஷயத்தை மனம் திறந்து பேசியபோது, அவன் உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரித்தான்.

"ராவ், நீ ஒரு வடிகட்டின முட்டாள். நீ சொல்றதுல கொஞ்சம் கூட அர்த்தமே இல்ல. பசியை இல்லாமச் செய்யிறதுக்கான வழி என்ன தெரியுமா? எஜமான் உன்னை விழுங்கப் பார்க்குறான்னா, அதுக்கு முன்னாடி நீ அவனை விழுங்கிடணும். காய்கறி, பருப்பு, ரொட்டி, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றிலிருந்து பெருசா எடுக்க முடியலைன்னா, முதலாளிமார்களோட நகைகளை எடுத்துட்டு ஊரைவிட்டே ஓடிடவேண்டியதுதான்! இன்னும் வாய்ப்பு கிடைச்சா, முதலாளியோட பொண்டாட்டியையும் தூக்கிட்டுப் போயிடு. நீ ஒரு இளைஞன். பார்க்குறதுக்கும் அழகா இருக்கே. கிராமத்தை விட்டு நீ வந்து அதிக நாட்கள் ஆகல. உன் உடம்புல இப்பவும் இரத்தமும் உணர்ச்சியும் இருக்கு."

இவ்வளவையும் சொல்லி விழுந்து விழுந்து சிரித்து முடித்த வெங்கிட்டன் ராகவராவின் தொடையில் அடித்தான். வெங்கிட்டன் அந்தத் தெருவிலுள்ள வேலைக்காரர்களுக்குத் தலைவனாக இருப்பவன். ஏராளமான குளங்களில் நீர் குடித்தவன். எவ்வளவு இடங்களில் திருடிவிட்டு அவன் யாருக்கும் தெரியாமல் ஓடிவந்திருக்கிறான் என்பதற்கு ஒரு கணக்கே இல்லை. இதுவரை அவன் தன் பெயரை இருபது முறைகள் மாற்றியிருக்கிறான். இனியும் இருபது தடவைகள் அவன் தன் பெயரை மாற்றிக்கொண்டாலும், அதனால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. பக்கத்துத் தெருக்களிலிருக்கும் வீடுகளில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் திருடினார்கள் என்றால், அதில் ஒரு பகுதியை வெங்கிட்டனுக்குத் தந்துவிடவேண்டும்.

இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட வேலைக்காரர்கள் மது அருந்துவதும் போதைப் பொருட்கள் உட்கொள்ளுவதும் எஜமானர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதும் வழக்கமான ஒரு விஷயமே. அடுத்த நிமிடம் அவர்கள் நனைந்த பூனையைப்போல எஜமானர்களின் வீடுகளில் அடிவருடிகளாக மாறி வேலை செய்பவர்களாக மாறிவிடுவார்கள்.

வெங்கிட்டன் பல நேரங்களில் ராகவராவைப் பலவந்தப்படுத்தி தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறான். எனினும், ராகவராவ் எப்போதும் அவனிடமிருந்து விலகியே நின்றான். அந்த அடிமைகளின் எந்த விஷயத்தில் தனக்கு வெறுப்பு என்பதை அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தச் சின்னஞ்சிறு கோழிக்கூடுகள் மிகப்பெரிய சூளைகளும் கூட என்ற நம்பிக்கை ராகவராவிற்கு இருந்தது. மனிதர்கள் தங்களின் அப்பாவித்தனத்தை மெதுவாக எரிந்து கொண்டிருக்கும் அந்தச் சூளையை நோக்கி உந்தித் தள்ளிவிட வேண்டியது ஒன்றுதான் நடக்கவேண்டியது. வெங்கிட்டனுடைய வாழ்க்கை முறையும் மற்ற வேலைக்காரர்களின் வாழ்க்கை முறையும் பீமய்யா, வீரய்யா ஆகியோரின் வாழ்க்கையையும் ராகவராவ் நினைத்துப் பார்க்கும்படி செய்தன. பீமய்யாவுக்கும் வீரய்யாவுக்கும் ஒருகாலத்தில் தங்களைப் போல வீடும் நிலமும் இருந்தன என்று தன் தந்தை கூறியதை ராகவராவ் நினைத்துப் பார்த்தான். நிலத்தை இழந்தபோது, அவர்கள் விவசாயத் தொழிலாளிகளாக மாறினார்கள். பிறகு அடிமைகளாக ஆனார்கள். கடைசியில் தேஷ்முக் ஜமீன்தார் ஆகியோரின் வாடகை குண்டர்களாக ஆனார்கள். பீமய்யாவும் வீரய்யாவும் மது அருந்துவதையும் போதை மருந்துகள் உட்கொள்ளுவதையும் பொறுக்கித்தனமாக நடப்பதையும் ராகவராவ் நேரிலேயே பார்த்திருக்கிறான். நகரத்தின் அந்த அடிமைகள் தன் கண் முன்னால் பீமய்யாமார்களாகவும் வீரய்யாமார்களாகவும் ஆகிக் கொண்டிருப்பதை அவனே உணர்ந்தான். அதாவது- அவர்கள் அழிந்து கொண்டிருந்தார்கள். பசி என்ற நெருப்பில் கிடந்து முனகிக் கொண்டு கிராமத்தில் இருந்தபோது அவர்களுக்குச் சில குணங்கள் இருந்தன. நகரத்திற்கு வந்தபிறகு அந்தக் குணங்களை அவர்கள் இழந்து விட்டார்கள். அவர்கள் மீது ராகவராவிற்கு அளவுக்கு மீறிய கோபமும் வெறுப்பும்தான் இருந்தனவே தவிர, வேறு எதுவும் இல்லை. அதனால் அவர்களைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. 

ராகவராவ் தன்னுடைய சொந்த அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி தான் தப்பித்தால் போதும் என்று நினைத்தான். அவன் மனப்பூர்வமாகப் பணக்காரரின் வீட்டில் வேலைகளைச் செய்து, நம்பிக்கைக்குரிய மனிதனாகத் தன்னைக் காட்டிக்கொண்டான். தன் சொந்த கிராமத்தில் கூட அவன் இந்த அளவிற்கு வேலை செய்ததில்லை. ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தும் அவனுக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. சில நாட்களில் பரிசு என்ற முறையில் இரண்டு சப்பாத்திகள் அதிகமாகக் கிடைக்கும். சில நாட்களில் பணக்காரருடைய மனைவியின் செயற்கையான சிரிப்பும் பாராட்டும் கிடைக்கும். 'பையன் நல்லவன்' என்பாள் அவள். மூன்று, நான்கு நாட்கள் நல்ல நிலையில் அவன் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தாலும், அடுத்த நாள் பழைய கதை திரும்ப ஆரம்பித்து விடும். மீண்டும் பசியும் பட்டினியும்...

ஒருநாள் சமையலறையில் ஒரு கைக்குட்டை காணாமல் போனது.


அதற்கு ராகவராவின் மீது திருட்டுக்குற்றம் சுமத்தினார்கள். பணக்காரரின் மனைவி அவனை அடித்து விட்டாள். பணக்காரர் அவனைப் போலீஸிடம் ஒப்படைக்கப்போவதாகப் பயமுறுத்தினார். சொன்னதோடு நிற்காமல் அவர் அவனை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போவதற்காக நின்று கொண்டிருந்த ஒரு இடத்தில் அந்தக் கைக்குட்டை வேறொரு அறையின் படுக்கைக்குக் கீழே இருந்து கிடைத்தது. பணக்காரரும் அவருடைய மனைவியும் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எஜமானன் அடிமையிடம் மன்னிப்புக் கேட்பது வழக்கம் இல்லையே!

ராகவராவ் நினைத்துப் பார்த்தான்- எவ்வளவோ சாதாரண தவறுகளுக்குத்தான் எத்தனை தடவைகள் மன்னிப்புக் கேட்டிருக்கிறோம் என்பதை என்ன இருந்தாலும் அவன் வேலைக்காரன்தானே! அதுவும் சாதாரண அடிமை. திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்ட நாளன்று ராகவராவின் மனம் உண்மையிலேயே வெறுத்துப்போனது. அவனுடைய மன அமைதியின்மையை அகற்றுவதற்காக வெங்கிட்டன் பல ஆபாசம் நிறைந்த கதைகளையும் சொல்லிப் பார்த்தான். அதனால் ஒன்றும் ராகவராவின் மனம் சமாதான நிலைக்கு வந்துவிடவில்லை. வெங்கிட்டன் அவனிடம் சரஸ் புகைத்து மனதின் அமைதியற்ற நிலைமையைக் போக்கும்படி ஆலோசனை சொன்னான். ஆனால், அதற்கு ராகவராவ் ஒத்துக்கொள்ளவில்லை. ராகவராவ் இரவில் வேலை முடிந்து வெளியே வந்தபோது, வெங்கிட்டன் பலவந்தப்படுத்தி அவனை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான். பெண்கள் தங்களின் உடம்பை விற்கக்கூடிய இடம் அது.

ராகவராவ் இதற்கு முன்பு ஒரு முறை கூட அந்தத் தெருப்பக்கம் போனதில்லை. ஆனால் வெங்கிட்டன் தன்னை எங்கு அழைத்து வந்திருக்கிறான் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கையின் எல்லாவித கவலைகளையும் பிரச்சினைகளையும் மறப்பதற்கு உதவக்கூடிய இடம் அது என்று வெங்கிட்டன் சொல்லியிருந்தான்.

தனக்கு முன்னால் ஒரு இளம்பெண் நின்றிருப்பதை ராகவராவ் பார்த்தான். வெங்கிட்டன் அவனை அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் தள்ளிவிட்டு, அவன் பின்னால் நின்று கொண்டான். அந்த அறை புகை படிந்து சிறியதாக இருந்தது. அங்கு ஒரு பலகையால் ஆன கட்டில் இருந்தது. அங்க இருந்த பெண் அவர்களைப் பார்த்துச் சிரித்தாள். ராகவராவ் திரும்பி நின்று வெங்கிட்டனிடம் கேட்டான்: "இதெல்லாம் என்ன?"

வெங்கிட்டன் ராகவராவின் கையில் அரை ரூபாயைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்: "போயி சந்தோஷமா இருந்துட்டு வா!"

இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வெங்கிட்டன் இருளில் மறைந்து போனான்.

அந்த அறையில் அப்போது ராகவராவையும் அந்த இளம்பெண்ணையும் தவிர வேறு யாருமில்லை. அந்தப் பெண் பலகைக் கட்டிலை நோக்கி சுட்டிக்காட்டியவாறு சொன்னாள்:

"உட்காருங்க."

ராகவராவ் உட்காரவில்லை. அவன் அந்த இளம் பெண்ணைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

"என்ன, என்னையே பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க? உட்காருங்க."- அவள் சொன்னாள்.

ராகவராவ் நின்றுகொண்டே கேட்டான்:

"உன் மார்பகத்தைத் தொட என்னை நீ அனுமதிப்பியா?"

ராகவராவின் கேள்வியைக் கேட்ட அந்தப் பெண் ஆச்சரியப்பட்டாள்.

"நீங்க காசு தந்திருக்கீங்க. மார்பகத்தை மட்டுமல்ல; என் உடம்புல எந்த உறுப்பையும் நீங்க தாராளமா தொடலாம்."

அடுத்த நிமிடம் ராகவராவின் நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது. பிறகு அவன் எதுவும் கேட்காமல் அந்த அறையை விட்டு வெளியேறி வேகமாக ஓடினான்.

அந்த இளம்பெண் ராகவராவைப் பின்னாலிருந்து அழைத்தாள். அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமலே சாலைக்கு வந்தான். அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல் எங்கிருந்தோ வந்த வெங்கிட்டன் அவனை மீண்டும் அந்தப் பெண்ணிடம் அழைத்துக் கொண்டு போக முயன்றான். ஆனால், ராகவராவ் ஓடிக்கொண்டேயிருந்தான். சூரியப் பேட்டையிலிருந்து ஒரேயடியாக ஓடினால்தான் சரியாக இருக்குமென்று அவன் நினைத்தான். கிராமத்திலிருந்த இளம்பெண் குறைந்த பட்சம் தன்னுடைய மார்பகத்தையாவது புனிதமாக வைத்துக் காப்பாற்றினாள். ஆனால், சூரியப்பேட்டையிலிருக்கும் பெண்கள் தங்களுடைய எல்லா உறுப்புகளையும் விற்கிறார்கள். இந்த சூரியப்பேட்டையிலும் அவனால் வாழ முடியவில்லை.

சிறையின் இருட்டான அறைக்குள் உட்கார்ந்து கொண்டு ராகவராவிற்குள் இருக்கும் லட்சியவாதி காதல்வயப்பட்ட இதயத்தை நோக்கி பார்வையைப் பதித்துவிட்டு, புன்னதைத்தான். அந்த லட்சியவாதி அவனை சூரியப்பேட்டையிலருந்து உடனடியாகக் கிளம்பும்படி செய்தான். முதலில் அவன் தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து சூரியப்பேட்டைக்கு வந்தான். அங்கிருந்து ஹைதராபாத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு அவன் ரிக்ஷா இழுக்கத் தொடங்கினான்.

அவனுடைய கைகளுக்கு அசாதாரணமான பலம் இருந்தது அல்லவா? இதயத்தில் லட்சியமும் கால்களில் தெம்பும் இருந்தன அல்லவா? ஏற்றத்தில் ஏறும்போது கூட ராகவராவிற்குக் களைப்பு உண்டாகாது. சிறிதும் சோர்வடையாமல் இறக்கத்திலும் இறங்குவான். முதலில் அந்தக் கான்க்ரீட் சாலைகளும் மின்சார விளக்குகளும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. ரிக்ஷாவின் மணியோசை அவனுடைய இதயத்தில் சங்கீதம் இசைப்பதைப் போல் இருந்தது.

இரவில் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ராகவராவ் நினைத்துப் பார்ப்பான். தனக்கு இந்த வாழ்க்கையில் கிடைக்கக்கூடியது முழுவதும் கிடைத்திருக்கிறது. ரிக்ஷா வின் சொந்தக்காரன் ராகவராவிற்கு இரண்டு சட்டைகள் கொடுத்திருக்கிறான். அந்தச் சட்டைகளை அணியும்போது அவன் எல்லாவற்றையும் மறந்து விடுகிறான். அவன் திடகாத்திரமான ஒரு குதிரையைப் போல ஹைதராபாத் நகரத்தின் சாலைகளில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறான். தானொரு மனிதன், தன்னைக் குதிரையைப் போல வண்டியில் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தை அவன் முழுமையாக மறந்துவிட்டான்.

மனிதர்களில் சிலர் மட்டுமே ரிக்ஷா வில் சவாரி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் மற்ற சிலர் ரிக்ஷா இழுக்கக் கூடியவர்கள் என்பதையும் அவன் மறந்து விட்டான். தான் ஹைதராபாத்திற்கு எதற்கு வந்தோம் எந்ற விஷயத்தையும் ராகவராவ் மறந்து போனான்.

5

ரண்டு நேர உணவும் இரண்டு சட்டைகளும் கொஞ்சம் நாணயங்களும் ராகவராவின் கண்களுக்கு முன்னால் வண்ணமயமான கனவுகளை விரித்தன. தன் தந்தை வீரய்யாவிற்கு இருபது ரூபாய் மணியார்டர் மூலம் அனுப்பிவைத்த நாளன்று தன்னைப் போல அதிர்ஷ்டசாலி ஹைதராபாத்தில் வேறெவரும் இல்லை என்று அவன் நினைத்தான். பிறகு பீடி... அதை விட நல்ல சிகரெட்... ருசியான மாமிசம்.

ராகவராவ் ஐந்தாறு மாதங்கள் இப்படிப்பட்ட வசதியிலும் சந்தோஷத்திலும் நிறைவிலும் வாழ்க்கையை ஓட்டினான். பிறகு ஒருநாள் அவனுக்கு நோய் பிடித்தது. நோயைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை, சீக்கிரம் குணமாகிவிடும் என்றுதான் முதலில் நினைத்தான். ஆனால், நோய் கடுமையானதாக இருந்தது. ஒருநாள் ராகவராவிற்கு மேட்டில் ஏறும்போது தலை சுற்றியது. அவன் மிகவும் சிரமப்பட்டே கீழே விழாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. பிறகு இருமல் ஆரம்பித்தது. சாயங்கால நேரம் வந்துவிட்டால் காய்ச்சலும் வந்துவிடும். ஒரு மாதகாலம் படுத்த படுக்கையாக ஆனான் அவன்.


அந்த நேரத்தில் ரிக்ஷா சொந்தக்காரன் அவனுக்கு உதவினான். அவன் அப்படி உதவியதற்குக் காரணம்- ராகவராவ் திடகாத்திரமான ரிக்ஷாக்காரனாக இருந்தான். பிறகு ராகவராவின் கணக்கில் கொஞ்சம் பணம் இருந்தது. அது அவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தபோது உதவியது.

ஒரு மாதத்திற்குப் பிறகு ராகவராவ் நோயிலிருந்து குணமாகி விட்டாலும், அவனிடம் நிறைய சோர்வு இருந்தது. எனினும், அவன் ரிக்ஷா இழுக்க ஆரம்பித்தான். ரிக்ஷா இழுக்கும்போது, அவன் இருமுவான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவான். மேலும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருந்தார். ஆனால், வேலை செய்யாவிட்டால் அவன் எப்படி வாழ முடியும்? அதனால் அந்தச் சூழ்நிலையிலும் அவன் ரிக்ஷா இழுக்க வேண்டிய நிலை உண்டானது. ரிக்ஷா இழுக்கும்போது அவனுக்கு மூச்சுத் திணறல் உண்டாகும். உடல் பயங்கரமாக வியர்க்கும். நரம்புகள் வெடித்துச் சிதறுவதைப் போல் இருக்கும். மார்பில் கறுத்த புகையைப் போல இருமல் ஆக்கிரமிக்கும். எனினும், அவன் ரிக்ஷா இழுத்துக் கொண்டே இருப்பான்.

இருட்டிற்கு மேலும் அடர்த்தி கூடியது. ராகவராவ் ஒரு நிமிடத்திற்குத் தன்னுடைய சிந்தனையை நிறுத்தி வைத்தான். பிறகு தன்னுடைய ரிக்ஷா வண்டியில் சவாரி செய்த மனிதர்களை அவன் நினைத்துப் பார்த்தான். வாடகை கூடுதல், குறைவைச் சொல்லி குமாஸ்தாக்கள் சண்டை போடுவார்கள். வேகமாக ரிக்ஷா வை இழுக்கவில்லையென்றால் மாணவர்கள் கோபப்படுவார்கள். இரவு நேரங்களில் குண்டர்கள் கத்தியுடன் சவாரி செய்வார்கள். பர்தா விலை மாதர்களுக்குத் திரை அரங்கின் திரைச்சீலையைக் கிழிப்பதைப் பற்றி சிறிதும் வருத்தமில்லை. அவர்கள் தான் உடம்பை விற்கக்கூடிய பெண்களை அழைத்துக் கொண்டு ரிக்ஷாவில் ஏறி துணியைக் கீழே இறக்கிவிட்டு காதல் லீலைகள் நடத்துவார்கள். ராகவராவ் ரிக்ஷா வை இழுத்தவாறு இருமும்போது, அவர்கள் கெட்ட வார்த்தைகள் சொல்லி அவனைத் திட்டுவார்கள். சில நேரங்களில் பணம் தராமல் ரிக்ஷாவிலிருந்து இறங்கி வேறு ரிக்ஷாவில் ஏறிப்போவதும் நடக்கக்கூடியதுதான். மவ்லவிமார்கள் பர்தாக்கள் போடப்பட்டிருக்கும் ரிக்ஷாக்களைத்தான் பயன்படுத்துவார்கள். கதராடை அணிந்தவர்கள் ரிக்ஷாவை எச்சில் பாத்திரமாகவும், பணக்காரர்கள் பொருட்களைக் கடத்தக்கூடிய வண்டியாகவும் அதைப் பயன்படுத்துவார்கள். பெண்கள் ரிக்ஷாவை குழந்தைகளின் அனாதை இல்லமாக நினைத்தார்கள். ராகவராவ் ரிக்ஷாவை இழுக்கும்போது பலவகைப்பட்ட மனிதர்களையும் சந்தித்தான். கிராமத்தில் இருந்தபோது அவன் கஷ்டங்களைச் சகித்துக்கொள்ளப் பழகியிருந்தான். நகரத்திற்கு வந்தபிறகு அவன் பிறரைக் கண்டு புன்னகைக்கவும் ஒவ்வொருவரையும் பார்த்துச் சிரிக்கவும் தெரிந்து கொண்டிருந்தான்.

ராகவராவ் மீண்டும் மனிதர்கள் கூட்டத்தில் தன்னுடைய பார்வையைச் செலுத்தினான். தான் கண்ட எத்தனையோ மனிதர்களில் ஒரே ஒரு மனிதரை அவன் தேர்ந்தெடுத்தான். ஒருநாள் இரவு அந்த மனிதர் ஆபிதலி சாலையில் அவனுடைய ரிக்ஷாவில் ஏறினார். அவருடைய கையில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. பேசும்போது மிகவும் நட்புணர்வுடன் பேசினார். அவர் ரிக்ஷாவை அழைத்தது அதிகாரக் குரலிலோ, ஆணவம் தொனிக்கும் குரலிலோ அல்ல. கூலி கூட எவ்வளவு என்று அவரே சொன்னார். அவர் சொன்னது அப்படியொன்றும் குறைவாக இல்லை. உண்மையாகச் சொல்லப்போனால் நியாயமான கூலி. அதனால் கூலிக்காகப் பேரம் பேசவேண்டிய கட்டாயம் ராகவராவிற்கு உண்டாகவில்லை. ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தபிறகு அந்த மனிதர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சாதாரணமாக ரிக்ஷாவில் பயணம் செய்யக் கூடியவர்கள் வினோதமான பல கேள்விகளைக் கேட்பார்கள். ரிக்ஷாவை இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்பொழுது ரிக்ஷாவை இழுப்பவனால் பேசமுடியாது என்ற விஷயத்தை அவர்கள் மறந்துவிடுவார்கள். ரிக்ஷாவை இழுக்கவும் வேண்டும், பேசவும் வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஒரே நேரத்தில் நிச்சயம் நடக்காது. ஒன்று- ரிக்ஷா இழுக்கலாம். இல்லாவிட்டால் சவாரி செய்யும் மனிதனின் கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டு இருக்கலாம். சுருக்கமாகச் சொல்லப்போனால் எந்த விதத்தில் பார்க்கப் போனாலும் மிகவும் வித்தியாசமான மனிதராக இருந்தார் அந்த மனிதர்.

பாதி வழி போகும்வரை அந்த மனிதர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். ரிக்ஷா ஜியாயி சாலை சந்திப்பை அடைந்தபோது அவர் மெதுவான குரலில் சொன்னான்: "அக்தர் சாலை பக்கம் திருப்புங்க."

மேட்டில் சிறிது தூரம் வந்தபோது ராகவராவிற்கு மூச்சுவிடுவதே மிகவும் சிரமமானதாக இருந்தது. அவனுடைய மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் மூச்சுக்காற்று, 'புஸ், புஸ்' என்று வெளியே வந்து கொண்டிருந்தது. அதோடு சேர்ந்து இருமலும்.

" ரிக்ஷாவை நிறுத்துங்க."- அந்த மனிதர் மெதுவான குரலில் சொன்னான்.

"பயப்படாதீங்க, சாஹிப்! எனக்கு இப்போ மூச்சு சரியாயிடும். நீங்க எங்கே போகணுமோ அங்கே கொண்டு வந்துவிட முடியும்!"

" ரிக்ஷாவை நிறுத்துங்க."- அவர் மீண்டும் சொன்னார்.

ராகவராவ் ரிக்ஷாவை நிறுத்தினான். அந்த மனிதர் ஒருவேளை அவனை வாய்க்கு வந்தபடி திட்டலாம்! இல்லாவிட்டால் கூலியைத் தராமல் நடையைக் கட்டலாம்!

ஆனால், அந்த மனிதர் அப்படியெல்லாம் நடக்கவில்லை. அவர் ராகவராவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

"மேட்டுல ஏறி இறங்குறது வரை நீங்க ஆளே இல்லாம ரிக்ஷாவை இழுங்க. மேடு முடிஞ்ச பிறகு நான் ரிக்ஷாவுல ஏறிக்கிறேன்."- அவர் சொன்னார்.

ராகவராவ் நன்றி உணர்வுடன் அந்த மனிதரை உற்றுப் பார்த்தான். அப்போதுதான் அவன் அந்த மனிதரை நன்றாகப் பார்க்கிறான். மாநிறம். கண்களில் இரக்க உணர்வும் நட்புணர்வும் தெரிந்தது!

"எவ்வளவு நாட்களா இந்த இருமல் இருக்கு?"- அந்த மனிதர் கேட்டார்.

"ஒரு மாசத்துக்கும் அதிகமா இருக்கு."

"எங்கே இருக்குறீங்க?"

"கோவிந்தராமோட ஷெட்ல."

"சங்கத்துல உறுப்பினரா இருக்கீங்களா?"

"என்ன?" ராகவராவிற்கு கேள்வி சரியாகப் புரியவில்லை. 

அந்த மனிதர் அதற்குப் பிறகு வேறெதுவும் பேசாமல் ராகவராவுடன் சேர்ந்து நடந்தார். பிறகு ராகவராவின் தோளில் கையை வைத்து நட்புணர்வு கொண்ட குரலில் சொன்னார். "நகரத்துல உங்களை மாதிரி பல ரிக்ஷாக்காரர்கள் இருக்காங்க. எல்லோரும் ஒரே மாதிரிதான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அந்தக் கஷ்டங்கள் இல்லாமச் செய்றதுக்கு ஒரு வழி இருக்கு. ரிக்ஷாக்காரர்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்கு. அவர்கள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்து தங்களோட பிரச்சினைகளைப் பற்றி அங்கே பேசறாங்க!"

ராகவராவ் வெறுப்புடன் அந்த மனிதரைப் பார்த்தான். சூரியப்பேட்டையிலிருந்த வேலைக்காரர்களின் கூட்டம் அப்போது அவனுடைய ஞாபகத்தில் வந்தது. அவனுக்குக் கோபம் வந்தது. அவன் அந்த மனிதரின் கையைத் தன் தோளிலிருந்து நீக்கிவிட்டு சொன்னான்: "இல்ல சாஹிப், நான் எந்தச் சங்கத்திலும் உறுப்பினர் இல்ல. உறுப்பினரா இருக்க விருப்பமும் இல்ல."


அந்த மனிதர் மீண்டும் அமைதியாகி ராகவராவுடன் சேர்ந்து நடந்தார். சிறிது தூரம் சென்றதும் அவர் ராகவராவிடம் தனிப்பட்ட முறையில் விசாரிக்க ஆரம்பித்தார். ராகவராவின் பெயர், கிராமம், இறக்கத்தில் எப்படி ரிக்ஷாவை இழுக்க வேண்டும், குறைந்த விலைக்கு உணவு எங்கு கிடைக்கும், உணவும் ஆடைகளும் தலைசாய்க்க இடமும் தரக்கூடிய முதலாளி ரிக்ஷா இழுப்பவர்களிடம் எவ்வளவு லாபத்தை அடைகிறான் போன்ற விஷயங்களே அவை. ராகவராவைப் பொறுத்தவரையில் அந்தத் தகவல்கள் உண்மையிலேயே விலை மதிப்பு கொண்டவையே. அவன் மிகவும் கவனமாக எல்லா விஷயங்களையும் கேட்டான். நடந்து கொண்டிருக்கும்பொழுது மேட்டை எப்போது கடந்தோம் என்பதே அவனுக்குத் தெரியாமற்போனது. பேசியவாறு ராகவராவ் அந்த மனிதரின் வீட்டிற்கு முன்னால் வந்துவிட்டான். அவ்வளவு தூரம் வந்தபிறகும் அந்த மனிதர் ரிக்ஷாவில் ஏறவே இல்லை.

வீட்டை அடைந்ததும் அவர் ராகவராவிற்குக் கூலியைக் கொடுத்து விட்டு சொன்னார்: "ஒரு கப் தேநீர் குடிச்சிட்டுப் போங்களேன்."

ராகவராவ் தேநீர் பருக விரும்பவில்லை.

"அப்படிச் சொல்லக்கூடாது. குளிர் காலத்துல தேநீர் குடிச்சா, உடம்புல சூடும் உற்சாகமும் உண்டாகும்!"- அந்த மனிதர் ராகவராவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு சென்றார்.

வீடு அப்படியொன்றும் பெரியது அல்ல. சிறியதாக இருந்தாலும் படு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. இரண்டு அறைகளே இருந்தன. ஒன்று ராகவராவ் நின்றிருந்தது. இன்னொன்று உள்ளே இருந்தது. இரண்டுக்கும் நடுவில் பூக்கள் பிணைக்கப்பட்ட திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வெளியே இருந்த அறையில் மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் குஷன் வைக்கப்பட்டிருந்தது. தரையில் சிவப்பு நிறத்தில் உள்ள விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. சுவர்களில் மரத்தால் ஆன அலமாரி இருந்தது. அலமாரி நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ராகவராவ் ஆச்சரியத்துடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தபோது திரைச்சீலைக்கு அப்பாலிருந்து ஒரு பெண் அந்த அறைக்குள் வந்தாள். அவளுக்குப் பின்னால் ஓடிவந்த பெண் குழந்தை அந்த மனிதரின் காலை இறுகப் பிடித்துக் கொண்டது.

அந்த மனிதர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "என் பேரு மக்புல். இவள் என் மனைவி. இது என் மகள்- ஆமினா." தொடர்ந்து அவர் ஆமினாவைத் தூக்கியவாறு சொன்னார்: "இங்கே நிக்கிறது என்னோட தோழர் ராகவராவ். தோழருக்கு லால் சலாம் சொல்லு ஆமினா."

ராகவராவ் ஆச்சரியத்துடன் மக்புல்லையும், அவருடைய மனைவியையும் ஆமினாவையும் பார்த்தான். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும், அன்பும் மரியாதையும் ததும்பிக் காணப்பட்டன. இந்த அளவிற்கு ஆழமான அன்பையும், மன நெருக்கத்தையும், இயல்பான சிரிப்பையும் இதற்கு முன்பு ராகவராவ் வேறெங்கும் பார்த்ததேயில்லை. ஆனால் 'லால் சலாம்' என்று சொன்னதன் அர்த்தம் அவனுக்குத் தெரியவில்லை. அவர்களின் பிரகாசமான முகங்களைப் பார்த்தபோது, 'லால் சலாம்' என்றால் ஏதோ விலை மதிப்புள்ள ஒரு பொருள் போலிருக்கிறது என்று ராகவராவ் நினைத்தான். அதனால் அவன் ஆமினாவைத் தழுவியவாறு சொன்னான்: "லால் சலாம்."

அதைக் கேட்டு ஆமினா விழுந்து விழுந்து சிரித்தாள். மக்புலின் மனைவியும் சிரித்தாள். மக்புல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தவாறு சொன்னார்: "தோழர், இன்னைக்கு இரவு உணவை இங்கேதான் நீங்க சாப்பிடணும்."

ராகவராவ் வியப்புடன் மக்புல்லைப் பார்த்துக் கொண்டே இருந்தானே தவிர, பதிலெதுவும் கூறவில்லை.

தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பிற்கு மேலே தட்டுகளை வைத்து, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினார்கள். ஆமினா ராகவராவின் கையிலிருந்து உணவுக் கவளத்தை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ராகவராவிற்குத் தன்னுடைய சிறு பிள்ளைப் பருவம் அப்போது ஞாபகத்தில் வந்தது. அவன் இந்த மாதிரிதான் தன் தந்தையிடம் உணவுக் கவளம் வாங்கி குழந்தையாக இருக்கும்போது சாப்பிடுவான். மக்புல்லின் மனைவி சுரய்யா மீண்டும் மீண்டும் ராகவராவின் தட்டில் சாதத்தையும் குழம்பையும் பரிமாறிக் கொண்டேயிருந்தாள்.

ராகவராவ் மக்புல்லிடம் பல விஷயங்களைப் பற்றியும் கேள்விகள் கேட்க விரும்பினான். தோழர் என்று அழைப்பது யாரை? லால் சலாம் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பிறகு... இந்த அன்பிற்கும் சகோதரத்துவத்திற்கும் நோக்கம் என்ன?- இவை போன்ற பல கேள்விகள்.

சாப்பிட்டு முடித்தபிறகு சுரய்யா ராகவராவிற்கு ஒரு கப் தேநீர் தயார் பண்ணிக்கொண்டு வந்தாள். தேநீர் குடித்துவிட்டு அவன் மக்புல்லையே ஆர்வத்துடன் பார்த்தான். அவன் எதுவும் கேட்பதற்கு முன்பு மக்புல் சொன்னார்: "இந்த இருமல் தீர்றது வரை நீங்க இரவு நேரத்துல வேலை செய்யாம இருக்குறதுதான் நல்லது."

அதற்கு ராகவராவ் கருத்து என்று எதுவும் கூறவில்லை.

"எங்க சங்கத்துல ஒரு டாக்டர் இருக்காரு. கட்டணம் எதுவும் இல்லாம அவர் உங்களுக்குச் சிகிச்சை செய்வாரு."

ராகவராவ் அப்போதும் மவுனத்தைக் கடைப்பிடித்தான். 

"இந்தக் குளிர்ல நீங்க வெளியே போயி என்ன பண்ணப் போறீங்க? இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிருங்க."

"தோழர்னு சொல்றாங்களே... அப்படின்னா என்ன அர்த்தம்?"- ராகவராவ் திடீரென்று கேட்டான்.

மக்புல் நாற்காலியை விட்டு எழுந்து தன் மனைவியிடம் சொன்னார்:

"சுரய்யா! தோழர் இன்னைக்கு இங்கேயே தூங்குறாரு."

சுரய்யா ஒரு கோரைப் பாயையும் கம்பளியையும் தலையணையையும் தரை விரிப்பிற்கு மேலே கொண்டு வந்து போட்டு, பாயை விரித்துப் போட்டாள். மக்புல் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து ராகவராவிற்கு அருகில் அமர்ந்தார்.

ராகவராவ் ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தின் தாள்களைப் புரட்டிப் பார்த்தான். அவனுக்குப் படிக்கத் தெரியாது. மக்புல் அந்தப் புத்தகத்தின் முதல் பகுதியிலிருந்த ஒரு பூகோள படத்தை விரித்தான். அது- இந்தியா வரைபடம். மக்புல் அதற்கு மேல் தன் விரலை வைத்தவாறு சொன்னார்: "இது நம்ம நாடு இந்தியா." தொடர்ந்து அவர் இந்தியாவின் வடக்குப் பகுதியிலிருந்த ஒரு நாட்டின் வரைபடத்தில் விரலை வைத்தவாறு "முப்பது வருடங்களுக்கு முன்னாடி இந்த நாட்டிலும் நம்ம நாட்டுல இருக்கிறது மாதிரி அடிமைகள் இருந்தாங்க."

இரவு நீண்டு கொண்டிருந்தது. பேச்சும் நீண்டு கொண்டேயிருந்தது. அதே நேரத்தில் அன்றைய பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் ராகவராவைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும். சுந்தரியின் புனிதமான மார்பகத்தில் புதிய வசந்தத்தை அவன் பார்த்தான். அந்த வார்த்தைகளில் அவற்றுக்கே உரிய ஒளிக் கீற்றுகளை அவனால் உணர முடிந்தது. தனக்குள் நூறு வருடங்களாகத் தெரியாமலிருந்த பல விஷயங்கள் தெரிய வந்திருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். ஜமீன்தார்களுடைய பிரம்மாண்டான மாளிகைகளின் அலங்காரங்கள் ராகவராவைத் தலைகுனியச் செய்தன.


அதைவிட அழகான- ஏராளமான அலங்காரங்களை அடிமைகள் தங்களின் பலத்தைப் பயன்படுத்தி மிதித்து நசுக்கினார்கள். மக்புல் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ராகவராவின் இதயத்தைத் தொட்டன. ராகவராவ் ஒவ்வொரு விஷயத்திற்குள்ளும் மறைந்திருக்கும் திருட்டுத்தனங்களைப் புரிந்து கொண்டான். அதோடு ஒவ்வொரு வழியாக அவனுக்கு முன்னால் தோன்றிய வண்ணம் இருந்தன. இதற்கு முன்பு தெரிந்திராத வார்த்தைகளுக்கான அர்த்தம் இப்போது அவனுக்குத் தெரிய ஆரம்பித்தது. முன்பு அவனிடம் இருந்தது குருட்டுத்தனமான அனுபவங்களும் கோபமும் மட்டும்தான். இப்போது அங்கு பிரகாசத்தின் அலைகள் உயர்ந்து கொண்டிருந்தன.

இதற்கு முன்பு வாழ்க்கை மீது ஒரு சிறு ஈடுபாடு கூட அவனிடம் உண்டானதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு மண் மீது ஆழமான காதல் உண்டானது. ராகவராவ் அந்த மண்ணில் பலமாகத் தன் கால்களை ஊன்றி நின்றவாறு உரத்த குரலில் உள்ளத்திலிருந்து சொன்னான்: "நான் ஒரு இளைஞன். நான் கேக்குறது ஒவ்வொண்ணும் துடிப்பும் புத்துணர்ச்சியும் உள்ள விஷயங்களா இருக்கு. அவற்றின் உதவியுடன் வித்து விதைக்கவும் அறுவடை செய்யவும் முடியும்!"

அன்று இரவு எவ்வளவு நேரம் வரை பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது என்று இப்போது கூட ராகவராவிற்குத் தெரியாது. எப்போது உறங்கினோம் என்பதும் அவனுடைய ஞாபகத்தில் இல்லை. இந்த விஷயங்கள்தான் அவன் ஞாபகத்தில் இருக்கின்றன. அவனும் மக்புலும் போர்வையை மூடிக்கொண்டு படுத்திருந்தார்கள். ராகவராவ் கேட்டுக் கொண்டிருந்தான். மக்புல் கூறிக் கொண்டிருந்தார்.

இரவு நீண்ட நேரம் ஆனபிறகு அவன் கண்களைத் திறந்தான். கம்பளி பாதத்திற்கு மேலே நகர்ந்திருந்தது. சுரய்யா அதை அவனுடைய பாதம் வரைக்கும் இழுத்து விட்டாள். அவளுடைய விரல்கள் அவனுடைய பாதங்களைத் தொட்டன. அந்த விரல்கள் ராகவராவின் ஏதோ ஒரு மூலையைத் தொட்டன. அடுத்த நிமிடம் அவனுடைய கண்கள் நீரால் நிறைந்தது. சுரய்யா பிறகு தன் கணவனின் கம்பளியை இழுத்து சரி பண்ணினாள். மகளைக் கட்டிப் பிடித்தவாறு அவள் படுத்து உறங்கினாள். ராகவராவ் தன் கண்ணீரைத் துடைக்கவில்லை. ஏனென்றால்- அது ஆனந்தக் கண்ணீராக இருந்ததுதான். தான் இன்று தன்னுடைய சொந்த வீட்டில் இருப்பதைப் போல் அவன் உணர்ந்தான்.

6

சில நிமிடங்களுக்கு ராகவராவால் அந்த இனிமையான காட்சிகளை விட்டு பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை. எனினும், திடீரென்று யாரோ அவனுடைய சிந்தனைச் சங்கிலியின் கண்ணிகளை அறுத்தார்கள். முதலில் சங்கிலியின் 'க்ணிங் க்ணிங்' சத்தம் கேட்டது. தொடர்ந்து சிறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதற்குப் பிறகும் ராகவராவ் இருந்த இடத்தை விட்டு சிறிதும் அசையவில்லை. அவனால் அசைய முடியவில்லை என்பதே உண்மை. பிறகு தரையில் கனமான காலடி ஓசை கேட்டது. வார்டன் வந்து அவனுடைய கைவிலங்கை அவிழ்த்தான். சிறை சூப்பிரெண்டெண்ட் ராகவராவிடம் எழுந்து நிற்கும்படி கட்டளையிட்டார். அவன் மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றான். ஹா! எழுந்து நிற்கும்போது கிடைக்கும் ஆனந்தம் என்ன இருந்தாலும் தனிதான். அந்த ஆனந்தம் ராகவராவின் நரம்புகள் வழியாக ஓடியது. அதே சமயம் கால்களில் மாட்டப்பட்டிருந்த விலங்கு காலில் பட்டு பயங்கரமான வேதனையைத் தந்தது. இருந்தாலும் அவன் நிமிர்ந்து நின்றான்.

சூப்பிரரெண்டெண்டின் கையில் கசங்கிப்போன ஒரு தாள் இருத்து. அவருடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தாளில் இருந்த விஷயத்தைப் படித்துச் சொல்லும்போது சூப்பிரரெண்டெண்டின் முகம் பயங்கரமாக வியர்ப்பதை ராகவராவ் கவனித்தான். அந்தத் தாளில் ராகவராவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், தூக்குத் தண்டனை கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நாளை காலையில் ஏழு மணிக்கு ராகவராவைத் தூக்கில் போடப்போகிறார்கள். 

சிறை சூப்பிரெண்டெண்ட் கையிலிருந்த துவாலையால் தன்னுடைய முகத்தைத் துடைத்துக் கொண்டு ராகவராவிடம் கேட்டார்: "நீ ஏதாவது சொல்ல விரும்புறியா?"

அந்தக் கேள்விக்குப் பதில் என்பது மாதிரி ராகவராவ் சிறிதாகப் புன்னகைத்தான்.

சிறை சூப்பிரெண்டெண்ட் சில நிமிடங்கள் அவனுடைய முகத்தையே பார்த்தவாறு செயலற்று நின்றிருந்தார். அவர் தன் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக இப்படிப்பட்ட ஒரு கைதியைச் சந்திக்கிறார். தன்னுடைய முப்பது வருட பணியில் அவர் எத்தனையோ கைதிகளைப் பார்த்திருக்கிறார். பயங்கரமான கொள்ளைக்காரர்கள் தூக்குத் தண்டனைக்குப் பயப்படவே மாட்டார்கள். ஆனால், தூக்குத்தண்டனை போடப்போவதாகத் தீர்ப்பு கூறியவுடன் அவர்கள் நீதிபதியை வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். அழக்கூடிய, சிறுநீர் இருக்கக்கூடிய பைத்தியத்தைப்போல அட்டகாசம் செய்யக்கூடிய, மயக்கமடைந்து கீழே விழக்கூடிய எத்தனையோ கைதிகளை அவர் பார்த்திருக்கிறார். சிலர் கைகளைக் குவித்துக் கொண்டு கடவுளைப் பார்த்துத் தொழுவார்கள். ஆனால், தூக்கில் போடப்போவதாகச் சொன்னதைக் கேட்டபிறகு அமைதியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் கைதியை இதுவரை சிறை சூப்பிரெண்டெண்ட் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை. அவர் மீண்டும் ராகவராவின் முகத்தை உற்றுப் பார்த்தார். ஒருவேளை அந்தச் சிரிப்பிற்குப் பின்னால் ஏதாவது பயம் மறைந்திருக்கலாம். ஏதாவது ஆசையோ அல்லது உறங்கிக் கிடக்கும் வெறியோ அங்கு இருக்கலாம். ஆனால், அதைப் பார்க்கக்கூடிய கண்கள் சிறை சூப்பிரெண்டெண்டுக்கு இல்லை. அவர் வாழ்க்கை முழுவதும் குற்றவாளிகளுடைய முகத்தின் அர்த்தத்தை மட்டுமே படித்திருக்கிறார். பிறகு எப்படி அவரால் ஒரு மனிதனின் முகத்தைப் புரிந்து கொள்ள முடியும்? சிறிது வெட்கத்துடனும் கோபத்துடனும் சிறை சூப்பிரெண்டெண்ட் அங்கிருந்து கிளம்பினார்.

சூப்பிரெண்டெண்ட் அங்கிருந்து போனபிறகும் வார்டன்கள் இருவரும் அங்கேயே நின்றிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் சற்று வயது அதிகமான மனிதன் முன்னால் வந்தான். "உன் கைகளுக்கு விலங்கு போடணும்னு எங்களுக்குக் கட்டளை போடப்பட்டிருக்கு. ஆனா, நாங்க உன் கைகள்ல விலங்கு போட விரும்பல. நீ சிறை அறைக்குள்ளே நடக்கலாம்..."

"உங்க வேலைக்கு ஏதாவது பிரச்சினை வரும்ன்றது மாதிரி இருந்தா, நீங்க விலங்கு போடுங்க." ராகவராவ் சாதாரணமாகச் சொன்னான்.

"இல்ல... நாங்க அதை மனசுல நினைச்சு பயப்படல!"- வார்டன்மார்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

ராகவராவ் அமைதியாக இருந்தான்.

வயதான வார்டன் சற்று நெருக்கமாக வந்து தாழ்ந்த குரலில் கேட்டான்: "மகனே, நீ ஏதாவது சாப்பிட விரும்புறியா? அதாவது சர்பத்தோ வேற ஏதாவதோ... சொல்லு... நான் வாங்கிக் கொண்டு வந்து தர்றேன்!"

"வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இப்போ மணி என்ன இருக்கும்?"

வயதான வார்டன் 'டூட்டி' அறைக்குச் சென்றுவிட்டு, திரும்பி வந்து சொன்னான்: "அஞ்சு மணி..."


இரவு முழுவதும் மீதியிருக்கிறது. ராகவராவ் முகத்தைத் திருப்பிக் கொண்டான். வார்டன்மார்கள் இருவரும் தலைகுனிந்தவாறு, வெளியே சென்றார்கள். மீண்டும் சங்கிலிச் சத்தம். சிறையறையின் கதவு அடைக்கப்பட்டது. ஆழமுள்ள கிணற்றில் எடை அதிகமுள்ள கல் விழுந்ததைப் போல தாழ்ப்பாள் பூட்டப்படும் ஓசை பெரிதாகக் கேட்டது. மீண்டும் படு அமைதி!

ராகவராவ் கால்களை அகல வைத்து மெதுவாகச் சிறையறைக்குள் நடக்க ஆரம்பித்தான். நடக்கும்போது காலில் கட்டப்பட்டிருந்த விலங்கு கணுக்காலில் படாமல் இருக்கவேண்டும். முன்னும் பின்னும் நடக்க ஐந்தடி இடமே அங்கு இருந்தது. நான்கு சுவர்களுக்குள் மொத்தம் ஐந்தடி இடம். ஐந்தடி நடந்தபிறகு திரும்பி நடக்க வேண்டும். சிறையறைக்குள் அவன் நன்றாக நீட்டிப் படுக்க முடியாது. ராகவராவ் ஆச்சரியத்துடன் தன்னுடைய உடம்பைப் பார்த்தான். கைகளையும் கால்களையும் மார்பையும் பார்த்தான். மூக்கையும் முகத்தையும் காதுகளையும் தடவிப் பார்த்தான். எல்லாப் பொருட்களையும் போல அவையும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. எதற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. உடம்பு நல்ல சூடாக இருந்தது. உயிர் இருக்கிறது. மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. நாளை இந்தச் சூடும் இதயத்துடிப்பும் உயிர்ப்பும் நிரந்தரமாக இல்லாமல் போய்விடும். ஆனால் எதற்காக ராகவராவ் மரணத்தைப் பார்த்துப் பயப்படவில்லை? பிறப்பு- வளர்ப்பு கனவைப் போன்ற அழகான வாழ்க்கைச் சக்கரம். பிறகு அது உதிர்ந்த இலைகளைப் போல படிப்படியாக முதுமையை நோக்கி நகர்கிறது. கடைசியில் ஒரு புதிய வாழ்க்கையின் மலர்ச்சியை அது சந்திக்கிறது. இந்தச் செயல்களுக்கு இடையில் மரணத்தை அல்ல- வாழ்க்கையின் படைப்புத் தன்மையும்- முடிவில்லாத நிலையையும் கொண்ட ஒரு நாட்டியத்தை அவன் பார்க்கிறான். அப்படியென்றால் நாளைய மரணம்? அது எப்படிப்பட்டதாக இருக்கும்? ராகவராவிற்கு இப்போது வயதாகிவிடவில்லை. அவனுடைய உடலில் இலை காய்ந்து விழுந்ததற்கான அடையாளம் இல்லை. பூ மொட்டு இனியும் விரியக்கூட இல்லை. புன்னகைத்தவாறு இதழ்கள் மலரவில்லை. இனியும் மழை பெய்யவில்லை. வானவில் தோன்றவில்லை. குயில்கள் பாட்டுப் பாடவில்லை. அவை பாட்டுப் பாடவில்லையென்றால், மரங்களுடைய உயிருக்கு ஒரு முழுமை கிடைக்கவில்லை என்று அர்த்தம். பிறகு எதற்காக இந்த வாலிபத்தைத் தேடி மரணம் இறங்கி வந்திருக்கிறது?

ராகவராவ் குளிர்ந்த தரையில் முழங்கால்களை மடக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். தாடைப் பகுதியை கால் விலங்கிற்கு மேலே வைத்தவாறு ஏதோ சிந்தனையில் அவன் ஆழ்ந்திருந்தான்.

மக்புல் அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற வைத்தார். எழுதவும் படிக்கவும் கற்றுத் தந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்ததும் ராகவராவை இனிமேல் ரிக்ஷா இழுக்கக்கூடாது என்ற கறாராகக் கூறிவிட்டார் மக்புல். அதற்குப் பதிலாக ஒரு பேப்பர் தொழிற்சாலையில் அவர் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். தொழிற்சாலையில் நுழைந்தவுடன் மக்புல்லிடம் கற்றதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்பு ராகவராவிற்குக் கிடைத்தது. தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் அவன் கூட்டு ஆலோசனைகளையும் நான்கு திசைகளிலும் நடக்கக்கூடிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்குப் பின்னால் பாரதத்தின் நகரங்களிலுள்ள பணக்காரர்களும் கிராமங்களிலிருக்கும் ஜமீன்தார்களும் இருந்தார்கள். அது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் விஷத்தின் ஓட்டமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கால் வைப்பிலும் புதிய வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல இருக்கும் சூழ்நிலையைச் சிறப்பானதாக்க, மனிதர்களை மேலும் சிறப்பான மனிதர்களாக ஆக்க இடுப்பையும் தலையையும் முறுக்கி மற்போர் புரிய வேண்டியதிருக்கிறது என்பதை ராகவராவ் புரிந்து கொண்டான். தொழிற்சாலைக்கு வேலைக்குப் போனபிறகு ராகவராவ் போராட கற்றுக் கொண்டான். அங்கு அவன் புதிய வாழ்க்கையை விரும்பக் கூடியவர்களைச் சந்தித்தான். அவர்கள் தங்கள் கைகளால் பழைய மரத் துண்டுகளையும் பழைய தாள்களையும் அழகான புதிய பேப்பர்களாக உருவாக்கினார்கள். உறுதியான இரும்பு கூட அவர்கள் கரங்கள் பட்டு இதயத்தைப் போல மென்மை குணம் கொண்டதாக மாறியது.அந்த இரும்பு விவசாயிகளின் பணிக் கருவிகளாகவும், இயந்திரப் பொருட்களாகவும், பூமாலை கோர்க்கப் பயன்படுகிற ஊசிகளாகவும் மாறின. புதிய வாழ்க்கையின் இந்த ஆர்வலர்களைப் பார்த்தபோது மண்ணுக்குக் கீழே போய்விட்ட கடந்த காலத்தை அவன் நினைத்துப் பார்த்தான். அந்தக் கடந்த காலம் நிலக்கரியாக மாறியது. அது இன்று உலோகத்தை உருக்கப் பயன்படும் எரிபொருளாக ஆகியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டபோது சந்தோஷத்தால் ராகவராவின் தலை மேலும் கொஞ்சம் உயர்ந்தது. அவன் மன நம்பிக்கையுடன் உடன் பணியாற்றுபவர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறான். மண்ணுக்குக் கீழேயிருக்கும் பொக்கிஷங்களைத் தோண்டி வெளியே கொண்டு வரும் ஆற்றல் அந்தக் கைகளுக்கு இருக்கின்றன என்பதை அவன் புரிந்து வைத்திருக்கிறான். மனித வாழ்க்கையை மேலும் அழகானதாக்க அந்தக் கைகளால் முடியும். ராகவராவ் எந்தச் சமயத்திலும் அந்தக் கைகளை விடமாட்டான். அந்தக் கைகள் எதிர்காலத்தை அழிக்கக்கூடிய- அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற பணவெறியர்களின் கைகள் அல்ல; அது தொழிலாளிகளின் கைகள். புதிய வாழ்க்கையைப் படைப்பவர்களின் கைகள்!

பேப்பர் தொழிற்சாலையில் ஒரு வருடம் பணி செய்ததில் ராகவராவ் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொண்டான். வேறு எங்காவது பத்து வருடங்கள் போராட்டம் நடத்தினாலும் இவ்வளவு விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. மன நம்பிக்கையுடன் போராடுவது, தோல்வி கிடைத்தாலும் ஏமாற்றம் அடையாமல் இருப்பது போன்ற விஷயங்களை அவன் அங்குதான் கற்றான். ஹர்த்தால் மூலமாகப் போராட்டத்தை எந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அவன் கற்றான். அங்கு முதலாளிமார்களின் அடியாட்களுடன் பெரும்பாலும் சண்டை போடவேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. அந்த அடியாட்கள் நடந்து கொண்ட முறையில் முதலாளிமார்களின் குணமும்  நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்தன. அதே நடத்தையைத்தான் ராகவராவ் கிராமத்திலிருந்த ஜமீன்தார்மார்கள், தேஷ்முக்மார்கள் ஆகியோரின் அடியாட்களிடமும் பார்த்திருந்தான். இங்குள்ள அடியாட்களின் போக்கு கிராமத்து அடியாட்களின் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. எனினும் ராகவராவிற்குப் பல நேரங்களில்அடியாட்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டானது. அதனால் தொழிற்சாலையிலிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். ஆறுமாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு ஏற்பட்டது.

ராகவராவ் சிறையில் இருக்கும்போது தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்தவனும், இடையனுமான நாகேஸ்வரனைச் சந்தித்தான். அவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டான் ராகவராவ். அவனுடைய அந்த ஆச்சரியத்தை நாகேஸ்வரனே போக்கினான். நாகேஸ்வரன் விளக்கமாக எல்லா விஷயங்களையும் சொன்னான். ஸ்ரீபுரம் இப்போது முன்பு கண்ட கிராமம் அல்ல. அங்கும் மாற்றத்தின் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.


நூற்றாண்டுகளாக அடியும், உதையும், சுரண்டலும் மட்டுமே பார்த்த அடிமைகளும் விவசாயத் தொழிலாளர்களும், இடையர்களும், ஆதிவாசிகளும் கிராமத்தில் நிலத்தை இழந்த எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து பலம்மிக்கவர்களாக மாறியிருக்கிறார்கள். எல்லோரும் ஒரே அணியாக நிற்கிறார்கள். நாற்பது கிராமங்களுக்கு அதிபதியான ஜகன்னாத ரெட்டியிடம் தங்களின் நிலத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சண்டையும், அடிதடியும் நடந்து கொண்டிருக்கிறது. அடிமைகள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது அசுரத்தனமான அடிகளும், அக்கிரமங்களும் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. நூற்றாண்டுகளாக காலால் மிதித்து நசுக்கப்பட்ட அடிமைகள் இன்று சிங்கத்தைப் போல கம்பீரமாக எழுந்து நிற்கின்றனர். சில இடங்களில் ஜமீன்தாரின் கட்டளையைக் காற்றில் வீசி எறிந்து விட்டு, அவர்கள் பூமியில் விவசாயம் செய்ய இறங்கி விட்டனர். அந்தக் குற்றத்தைச் செய்ததற்குத்தான் நாகேஸ்வரனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

எல்லா விவரங்களையும் கேட்ட ராகவராவ் ஆச்சரியப்பட்டான். அதற்காகச் சந்தோஷப்படவும் செய்தான். வாழ்க்கை முழுவதும் அக்கிரமங்களையும், அநீதியையும் சகித்துக் கொண்டு வாழ்ந்த கிராம மக்களின் இதயத்தில் இந்த அளவிற்குத் தைரியம் வந்திருக்கிறது என்பதை ராகவராவால் நம்பவே முடியவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்கள் பழக்கம் கொண்ட அடிமைச் சங்கிலியைத் தகர்த்தெறிந்து மனிதர்கள் இவ்வளவு வேகமாக யதார்த்த மனிதர்களாக மாறமுடியுமா என்று அவன் உண்மையாகவே  ஆச்சரியப்பட்டான்.

"ஆதிவாசிகள்தான் இந்தப் போராட்டத்துல முன்னாடி நிக்கிறாங்க. அவங்களோட ஒற்றுமையைப் பார்த்தால் நீ ஆச்சரியப்பட்டு நின்னுடுவே. இடையர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறே?"

நாகேஸ்வரன் சிரித்துக் கொண்டே தன் தலையைத் தடவினான். திடீரென்று அவன் முகம் சோகமாக மாறியது.

"என்ன ஆச்சு நாகேஸ்வரன்?” ராகவராவ் கேட்டான்.

நாகேஸ்வரன் தன் தலையிலிருந்த ஒரு காயத்தின் தழும்பைக் காட்டினான். நெற்றி முதல் முன் தலைவரை நீளமாக இருக்கும் காயம். இரும்பைப் பழுக்க வைத்து சூடுபோட்டது போல் இருந்தது அது. அந்த இடத்தில் சிறிது கூட முடி இல்லை.

"இது எப்படி வந்துச்சு?"- ராகவராவ் மீண்டும் கேட்டான்.

"ஜமீன்தாரோட அடியாட்கள் என்னைப் பிடிச்சுக் கொண்டு போய் குதிரை லாயத்துல கட்டி வச்சாங்க. ரெண்டு நாட்கள் எந்த உணவும் எனக்குத் தரல. தொடர்ந்து அடி, உதைகள், கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. அதுக்குப் பிறகும் என்கூட வேலை செய்யிறவங்க யாரோட பேரையும் நான் சொல்லல. அவங்க அப்போ என் தலையில பழுக்க வச்ச இரும்பை வச்சுட்டாங்க. தலையில இருந்த முடியெல்லாம் பொசுங்கிடுச்சு. மத்தவங்க சிரிச்சுக்கிட்டிருந்தாங்க. உன் தலையில நாங்க மாஸ்கோ சாலை வெட்டியிருக்கோம்னு உரத்த குரல்ல சொன்னாங்க. வேதனையைத் தாங்க முடியாம நான் மயங்கிக் கீழே விழுந்துட்டேன்."

நாகேஸ்வரன் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. ராகவராவும் எதுவும் பேசவில்லை. பிறகு நாகேஸ்வரன் தன் தலையைத் தடவியவாறு தீவிரமான குரலில் கேட்டான்: "மாஸ்கோ எங்கேயிருக்கு சகோதரா?"

"மாஸ்கோ எங்கேயிருக்குன்னு உனக்குத் தெரியாதா?"

"தெரியாது, சகோதரா!"

"மாஸ்கோன்றது ஒரு நகரத்தோட பேரு."- சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் சொன்னான்: "மாஸ்கோன்றது ஒரு கொள்கையும் கூட."

நாகேஸ்வரனுக்கு எதுவும் புரியவில்லை. அவன் விரக்தியாகத் தலையை ஆட்டியவாறு சொன்னான்: "எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. நான் காட்டுல இருக்குற இடையன். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். என் வாழ்க்கையில்... எதுக்கு அப்படிச் சொல்லணும்? என் தந்தையின், தாத்தாவின் அவர்களோட ஏழு தலைமுறையிலும் யாரும் பூமியைப் பார்த்தது இல்ல. இருந்தாலும் எங்களுக்கு இப்போ பூமி கிடைக்கும்ன்ற தீவிரமான எதிர்பார்ப்பு! அந்த எதிர்பார்ப்பு உயிர் இருக்கிற காலம் வரைக்கும் போகவே போகாது."

"இந்த எதிர்பார்ப்பு, ஆசை-இவற்றோட பேர்தான் மாஸ்கோ"- ராகவராவ் சொன்னான்.

"இந்த ஆசை, எதிர்பார்ப்பு ஆகியவற்றின் பேர்தான் மாஸ்கோன்னா என் தலையில இருக்குற இந்தக் காயத்தோட தழும்பும் அதாகவே இருக்கட்டும். அவங்க வேணும்னா என் தலையில மட்டுமில்ல; உடம்பு முழுவதும் கூட மாஸ்கோ சாலையை வெட்டட்டும். எவ்வளவு வேதனை தோணினாலும் நான் எதிர்பார்ப்பையும் ஆசையையும் இறுகப் பிடிச்சுக்குவேன்."

ராகவராவ் நாகேஸ்வரனின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு சொன்னான்:

"தண்டனை முடிஞ்சபிறகு நானும் உன் கூட கிராமத்துக்கு வர்றேன்."

ஆனால், ராகவராவிற்கு விடுதலை கிடைத்த நாளன்று நாகேஸ்வரனைச் சிறையிலிருந்து விடவில்லை. அவனுடைய தண்டனைக் காலம் முடிவடைய இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன. அதனால் ராகவராவ் மட்டும் தனியாகத் தன்னுடைய கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய சூழ்நிலை உண்டானது. மக்புல்லும் மற்ற தோழர்களும் அவனை வரவேற்பதற்காகச் சிறை வாசலுக்கு வந்திருந்தார்கள். தன்னுடைய கிராமத்திற்குச் செல்ல தான் விரும்புவதாக மக்புல்லிடம் ராகவராவ் சொன்னான். அதைக் கேட்டு மக்புல் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ராகவராவ் தன்னுடைய கிராமத்திற்குச் சென்று விவசாயப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டியது அவசியம் என்று அவனுக்குத் தோன்றியது! மக்புல் விளக்கிச் சொன்னார்: "விவசாயப் போராட்டத்தின் எழுச்சியைத் தங்களால் மட்டும் அடக்கி ஒடுக்க நிஸாம் ஆட்சியின் காவல் படையால் முடியல. அதனால் நிஸாம் காவல் துறையும் ரஸாக்கர் படையும் ஒரே நேரத்துல ஜகன்னாத ரெட்டியோட பகுதியில கொலைத்தாண்டவம் நடத்திக்கிட்டு இருக்காங்க."

"ஆனா, ஜகன்னாத ரெட்டி இந்து. ரஸாக்கர் படையில் இருப்பதோ முஸ்லிம்கள்! இந்த ரெண்டும் எப்படி ஒண்ணு சேர முடியும்."

"அமைப்புகளின் விருப்பங்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கும் தனிப்பட்ட மதமோ, தர்மமோ கிடையாது. பிற்போக்குச் சக்திகள் தோல்வியைத் தழுவ ஆரம்பிக்கும்போது, வர்க்கபேதம் மறைந்துவிடும் என்பதுதான் நம் நாட்டோட நிலை."

மக்புல் ராகவராவிடம் சிலரின் முகவரிகளைக் கொடுத்துக் கொண்டு சொன்னார்: "வழியில இந்த முகவரியில இருக்கிறவங்களைப் பார்த்து பேசுங்க. அந்தப் பகுதியோட சூழ்நிலைகள் அவங்களுக்குத்தான் நல்லாத் தெரியும்."

ராகவராவ் மக்புலிடமும் மற்ற தோழர்களிடமும் கை குலுக்கிவிட்டு தன்னுடைய கிராமத்திற்குத் திரும்பினான்.


7

ராகவராவ் ஹைதராபாத்திலிருந்து கிராமத்தை அடைவதற்குள் கூடுதலான சமூக இடிபாடுகள், விரக்தி, படிப்படியான வளர்ச்சி ஆகியவற்றின் அடையாளங்கள் கண்களில் பட்டன. ஹைதராபாத்திற்கு அருகில் இருந்த கிராமங்களில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஆனால், தூரத்தில் செல்லச் செல்ல மனிதர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. வயல்களில் உயரமாக வளர்ந்திருந்த களைகளைத் தவிர, வேறு எதுவும் கண்களில் படவில்லை. சாலையோரத்தில் வேப்பமரங்களும் புளியமரங்களும் முட்செடிகளும் இருந்தன. அருகிலிருந்த மலைகளில் கடும்பாறைகள் ஒன்றின் மீது இன்னொன்று என்ற கணக்கில் நிறைய இருந்தன.

யாரோ ஒரு அரக்கனின் மகன் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாறைகளை ஒன்றுக்கு மேல் இன்னொன்று என்று அடுக்கி வைத்து விட்டுப் போயிருக்கலாம். இவை ராகவராவ் தினமும் பார்த்த காட்சிகளில் சில மட்டுமே. அப்படியென்றால் வயல்களில் விதை விதைத்தவர்களும் வரப்புகளில் மரங்களை நட்டு வளர்த்தவர்களும் கிணறுகள் தோண்டியவர்களும் வயலின் மத்தியில் சாலை உண்டாக்கியவர்களும் எங்கு போனார்கள்? பூமியின் விளைச்சலும் இயற்கையின் அழகும் சுற்றிலுமுள்ள மாற்றங்களும் நடந்தது அவர்கள் இருந்ததால்தானே? அப்படிப்பட்டவர்களில் யாரையும் காணவில்லையே!

மீதியிருந்த காட்சிகளெல்லாம் முன்பு இருந்ததைப் போலவேதான் இருந்தன. எனினும், ஒவ்வொரு பொருளும் ஏதோ குறை இருப்பதைப் போலவும் உயிர்ப்பு இல்லாதது போலவும் தோன்றுவதற்குக் காரணம் என்ன? யாரோ இந்தக் காட்சிகளின் மார்பில் கத்தியால் குத்தியதைப் போல் ஒரு தோணல்! ராகவராவின் கண்கள் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளைப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தன. அந்தக் கண்கள் இல்லாத ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தன. ஆனால், அவை எங்கோ போய் மறைந்துவிட்டன.

கரிம்நகர் கிராமத்தில் யெல்ல ரெட்டியைப் பார்க்கவேண்டும் என்று ராகவராவுக்குச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கிராமத்தை அடைந்தபோது அவனுடைய கண்களில் பட்டது வீடுகளின் சாம்பல் குவியல்கள் மட்டுமே. கிராமத்தை முழுமையாக நெருப்பு வைத்து எரித்துப் பொசுக்கியிருந்தார்கள். அந்தக் கிராமத்தில் அறுபது வீடுகள் இருந்தன. வைக்கோல், தென்னை ஓலை ஆகியவற்றால் வேயப்பட்ட வீடுகள்! அவற்றில் சில வீடுகளின் மண்சுவர் மட்டும் எஞ்சியிருந்தன.

யெல்லரெட்டியின் வீட்டின் சுவர்கள் மண்ணால் செய்யப்பட்டிருந்தன. எனினும், மற்ற வீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த வீட்டின் நிலை சற்றுப் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். சுவர்கள் தரையில் சாயவில்லை. யெல்லரெட்டி கிராமத்திலுள்ள மற்ற விவசாயிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்று பரவாயில்லாத விவசாயி என்று சொல்லலாம். மேற்கூரை எரிந்து சாம்பலான வீட்டின் கதவு திறந்தே கிடந்தது. யெல்ல ரெட்டியின் இறந்து போன உடல் வாசலில் கிடந்தது. தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. கண்கள் அப்போதும் திறந்தே இருந்தன. ராகவராவ் கருங்கல் சிலையைப் போல யெல்லரெட்டியின் கண்களையே உற்றுப் பார்த்தவாறு நின்றிருந்தான். பிறகு அவன் மிகவும் கஷ்டப்பட்டு தன் முகத்தை வேறு பக்கம் திருப்பினான். தொடர்ந்து தலையைக் குனிந்தவாறு மெதுவாக அங்கிருந்து வெளியே வந்தான்.

யெல்லரெட்டிக்கு மக்புல் கொடுத்தனுப்பியிருந்த செய்தியுடன்தான் ராகவராவ் அங்கு வந்திருந்தான். இனிமேல் அந்தச் செய்தியைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே! யெல்லரெட்டி உயிரைக் கொடுத்து முன்கூட்டியே அந்தச் செய்தியிலிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் காப்பாற்றியிருக்கிறான். தன்னுடைய செயல்மூலம் அவன் அதைக் காட்டியிருக்கிறான்.

ராகவராவ் மீண்டும் கிராமத்தை நோக்கி நடந்தான். நெருப்பில் எரிந்து கிடக்கும் விரிந்து பரந்த கோதுமை வயல்கள்... புதர்களைத் தாண்டி ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. நரியொன்று அந்தப் பிணத்தைத் தின்றுகொண்டிருந்தது. ராகவராவைப் பார்த்ததும் அந்த நரி ஓடியது. ராகவராவ் அந்தப் பெண்ணின் பிணத்தை எடுத்து வயலில் படுக்க வைத்தான். மண்ணாலும் கற்களாலும் பிணத்தை மூடிய அவன், மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். ராகவராவின் கண்கள் நெருப்பென ஜொலித்தன. தொண்டையில் முள் இருப்பதைப் போல் அவனுக்கு இருந்தது. தாங்க முடியாத தாகத்தை அவன் உணர்ந்தான். நீருக்குப் பதிலாக இரத்தம் கிடைத்தால் கூட அந்தச் சூழ்நிலையில் அவன் குடித்துவிடுவான்.

காட்டின் நடுவிலிருந்த பாதை வழியே நடந்தபோது ராகவராவின் உடலிலிருந்த வெப்பம் சற்று குறைந்தது. மரங்களிலிருந்த பறவைகள் ஓசை உண்டாக்கின. தன்னுடைய காற்பாதங்களின் சத்தத்தைத் தவிர வேறெதுவும் அவனுடைய காதில் விழவில்லை. அமைதியும் பயங்கரமும் நிறைந்த சூழ்நிலை அப்போதும் ராகவராவ் எச்சரிக்கையுடன் தான் இருந்தான். அவனுக்கு நம்பிக்கை முழுமையாகப் போய்விடவில்லை. யாராவது கண்களில் படமாட்டார்களா என்று அவன் நினைத்தான். நடக்கும்போது மரங்களுக்குப் பின்னாலிருந்து ஏராளமான கண்கள் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்ததைப் போல் அவன் உணர்ந்தான். நிறைய கைகள் பின்னாலிருந்து அவனுடைய முதுகில் கத்தியை இறக்குவதற்காக உயர்வதைப் போல் அவனுக்குத் தோன்றியது. ராகவராவ் பயத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தான். ஆனால் அருகில் எந்த இடத்திலும் ஒரு உயிர்கூட கண்ணில் படவில்லை. காட்டில் அவன் மட்டும் தனியே இருந்தான். ஒரு மலையின் உச்சியில் புதர்கள் இருந்தன. அந்த மலைச்சரிவு வழியாக ராகவராவ் முன்னோக்கி நடந்தபோது யாரோ கத்தினார்கள்: "அங்கேயே நில்லு..."

ராகவராவ் திகைத்துப் போய் நின்றான்.

மலை உச்சியில் ஒரு பெண்! அவளுடைய நிறம் அடர்த்தியான கறுப்பு நிறத்தில் இருந்தது. வயதும் சற்று அதிகம்தான். கோபம் ஆக்கிரமித்திருக்கும் முகம். நரைத்த முடி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. அந்தக் கிழவி ராகவராவுக்கு நேராகத் துப்பாக்கியைக் காட்டினாள். ராகவராவ் அந்தக் கிழவியை யாரென்று தெரிந்து கொண்டான். அவன் சந்தோஷத்துடன் அழைத்தான்.

"கண்ணம்மா!"

கிழவி துப்பாக்கியைக் கீழே இறக்கிவிட்டு புருவத்திற்கு மேலே கையை வைத்து ஆளை அடையாளம் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

ராகவராவ் மீண்டும் உரத்த குரலில் சொன்னான்: "என் பேரு ராகவராவ். மக்புல்லோட சக பயணி!"

அந்தக் கிழவி மலையின் உச்சியிலிருந்து ராகவராவை நோக்கி ஓடி வந்தாள். மலையில், அடர்ந்த புதர்களுக்குப் பின்னால் மறைந்திருந்த நான்கைந்து ஆண்களும் ஓடிவந்தார்கள். அருகில் வந்தபிறகுதான் கண்ணாம்மாவால் ராகவராவை அடையாளம் காணமுடிந்தது. அவள் அவனுடைய தலையைத் தடவி பாசத்தை வெளிப்படுத்தியவாறு சொன்னாள்: "மகனே, நீ ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டேல்ல!... உன்னைப் பார்த்து என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியல..."

"சிறை... மாமா வீடொண்ணும் இல்லியே!"

"உன்னை எப்போ விட்டாங்க?"

"முந்தா நாள்."

"மக்புல் நல்லா இருக்குறாரா?"- கண்ணம்மாவின் குரலில் பெருமையும் தன்னம்பிக்கையும் கலந்திருந்தன.

ராகவராவிற்குத் தொண்டையை அடைத்தது. கண்ணம்மா யெல்லரெட்டியின் தாய். ராகவராவ் கரீம் நகரில் அவனுடைய பிணத்தைப் பார்த்துவிட்டு வருகிறான். அந்தத் தாய் ராகவராவைப் பற்றி குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிறாள். மக்புல்லைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறாள். ஆனால், விவசாயிகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த தன்னுடைய ஒரே மகனைப் பற்றி அவள் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

"இந்தச் சம்பவம் எப்போ நடந்தது, அம்மா?" ராகவராவ் இடறிய குரலில் கேட்டான்.

கண்ணம்மா ராகவராவின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்வதற்குப் பதிலாகச் சிறிது விளக்கமாகச் சொன்னாள்:


"எங்க கிராமங்கள்ல இப்படிப்பட்ட சம்பவங்கள் புதுசு இல்ல. விவசாயிகள் ஜமீன்தார்மார்களுக்கும் தேஷ்முக்மார்களுக்கும் வரி கட்ட முடியாதுன்னு சொன்ன கிராமங்களிலெல்லாம் இப்படிப்பட்ட, ஏன் இதைவிட பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கு. அவங்க ராத்திரி நேரம் பார்த்து கிராமத்தை ஆக்கிரமிச்சுட்டாங்க. முழு கிராமத்தையும் நெருப்பு வச்சி எரிச்சுட்டாங்க. பகல் நேரத்துல அவங்களால கிராமத்தை ஆக்கிரமிக்க முடியாது. ராத்திரி நேரமா இருந்ததுனால கிராமவாசிகள்ல பலர் காட்டுக்குள்ளே ஓடித் தப்பிக்க முடிஞ்சது. அவங்க எல்லோரும் இப்போ எங்ககூட கைகோர்த்து பிடிச்சு நின்னுக்கிட்டு இருக்காங்க."

ராகவராவ் கண்ணம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவளின் முகத்தில் பயத்தின் அடையாளமோ, கவலையின் ரேகைகளோ சிறிதும் இல்லை. எந்தவொரு உணர்ச்சி மாறுபாடும் இல்லாமல் அவள் பேசினாள். யெல்லரெட்டியின் தாய் உண்மையிலேயே ஒரு புதிய தாயாக மாறியிருந்தாள். அவளின் பயமின்மை, தைரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல சம்பவங்களை ராகவராவ் கேள்விப்பட்டிருக்கிறான். அவள் விவசாயிகள் சங்கத்தில் தன்னுடைய மகன் யெல்லரெட்டிக்கு எதிராகப் பேசியவள். ஏனென்றால், யெல்லரெட்டி கிராமத்தில் பணக்கார விவசாயிகளில் ஒருவனாக இருந்தான். அதனால் அவன் மக்களின் உணர்ச்சிகளை மதிக்கத் தயாராக இல்லை. அவனுடைய அன்னைதான் அவனைச் சரியான பாதைக்குக் கொண்டு வந்தவள். கண்ணம்மாவிற்கு முன்னால் நின்றிருந்த ராகவராவிற்குத் தெலுங்கு மொழியிலிருந்த ஒரு நாடோடிக் கதை ஞாபகத்தில் வந்தது. அந்தக் கதையின் நாயகி சேவை செய்வதில் தாசியாகவும், அறிவுரை கூறுவதில் மந்திரியாகவும், காதல் விஷயத்தில் ரம்பையாகவும், போர்புரிவதில் வீராங்கனையாகவும் இருப்பாள்.

"இனி என்ன செய்வது? எல்லா விவசாயிகளும் பயந்து போய் காட்டில் மறைஞ்சிருக்காங்க."- கண்ணம்மா சொன்னாள்.

"மக்புல், மற்ற தோழர்கள் ஆகியோர் சொன்னது இதுதான். இப்போ வரி கொடுக்க முடியாதுன்னு சொல்லியாச்சு. இனிமேல் பூமியைச் சரியான முறையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யணும்னு கேட்டுக்குறதுதான் விவசாய சங்கத்தின் செயல்பாடா இருக்கும். பூமி சொந்தத்தில் இல்லாதவர்கள் இப்படி ஓடிப்போய் காட்டுல ஒளியாம வேறென்ன செய்வாங்க? கிராமத்துல தாங்கள் பாதுகாத்து வைக்கணும்னு நினைச்சு திரும்பி வர்றதுக்கு அவங்ககிட்ட என்ன இருக்கு?அவங்களுக்குக் கிராமத்துல நிலம் தரணும்."- ராகவராவ் சொன்னான்.

கண்ணம்மாவிற்குப் பின்னால் நின்றிருந்த ஒரு ஆள் சொன்னான்: "ராகவராவ், நீங்க சொல்றது உண்மையிலேயே நியாயமானது. காட்டுல இருக்கிறவங்களுக்கும் நிலம் கிடைக்க வேண்டியது அத்தியாவசியம்தான். அப்படின்னாத்தான் கிராமத்திற்கும் காட்டுக்குமிடையே இருக்கக்கூடிய உறவு மேலும் பலமுள்ளதா ஆகும்."

"ஆந்திராவுல மலைவாழ் மக்கள் வெளிநாட்டினருக்கு எதிரா கொஞ்சம் போராட்டமா நடத்தியிருக்காங்க? மலைவாழ் மக்களின் தலைவர் அல்லூரி சீதாராம்ராஜுவின் போராட்டக் கதை ஆந்திராவுல உள்ள குழந்தைகளுக்குக் கூட தெரியும். அவர் இப்பவும் ஆந்திர காட்டுக்குள்ள இருக்கார்னு மக்கள் நம்பறாங்க. தைரியம் மிக்க மலைவாழ் மக்களை அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராட இப்பவும் அவர் தூண்டிவிட்டுக்கிட்டு இருக்காரு."- மற்றொரு மனிதன் சொன்னான்.

"ஆமா... ஆமா..."- கண்ணம்மாவின் தோழர்களில் ஒரு ஆளான சக்கிலியனும் இன்னொரு ஆளான விவசாயத் தொழிலாளியும் சொன்னார்கள். அவர்கள் இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்: "சரிதான். எங்களுக்கு நிலம் கிடைச்சபிறகு அதை எங்ககிட்ட இருந்து தட்டிப் பறிக்கிறதுக்கு எந்த அம்மாவோட மகன் வர்றான்றதை நாங்களும் பார்க்கத்தானே போகிறோம்! கிராமத்துல இருக்கிற சக்கிலியர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலம் கிடைக்கணும்."

கண்ணம்மா சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் மூழ்கிவிட்டு தனக்குப் பின்னால் நின்றிருந்த ஆதிவாசி தோழரிடம் சொன்னாள்: "ராமலு! நாம காட்டுல இருந்து கரீம் நகருக்குப் போகறம்னு காட்டுல இருக்கிற எல்லா விவசாயிகள் கிட்டயும் சொல்லு. அங்கே இருக்குற நிலத்தை விவசாயிகளுக்கு வினியோகம செய்யணும்."

ராமுலு காட்டிற்குள் ஓடினான். சக்கிலியனும் விவசாயத் தொழிலாளியும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

"எனக்கு ரொம்பவும் தாகமாக இருக்கு."- ராகவராவ் சொன்னான்.

கண்ணம்மா ஓடிப்போய் மலைச்சரிவிலிருந்து ஒரு மண்பானை நிறைய நீர் எடுத்துக்கொண்டு வந்தாள். ராகவராவ் அந்தக் குடத்திலிருந்த நீரில் பாதியைக் குடித்து முடித்தான்.

தாகம் அடங்கியபிறகு அவன் கேட்டான்: "அம்மா! இந்த வேலை முழுவதையும் தனியா செய்து முடிக்க உங்களால முடியுமா? இல்லாட்டி உதவிக்கு நானும் வரணுமா?"

"தனியா செய்து முடிக்க என்னால முடியும் ராகவா! நீ உன் வேலையைப் போய்ப் பார்!"- கண்ணம்மா சொன்னாள்.

ராகவராவ் சிறிது நடந்து சென்ற பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான். கண்ணம்மா மலைச்சரிவில் உட்கார்ந்திருந்தாள். துப்பாக்கியை மடியில் வைத்தவாறு அவள் ராகவராவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராகவராவ் அதைப் பற்றி அதற்கு மேல் சிந்திக்கவில்லை. அவன் மீண்டும் முன்னோக்கி வந்தான். திடீரென்று கண்ணம்மா அவனை அழைத்துச் சொன்னாள்:

"ராகவா! கேள்..."

ராகவராவ் மீண்டும் திரும்பி நின்றான். கண்ணம்மா அலட்சியமாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அதே நிலையில் உட்கார்ந்திருந்த பிறகு அவள் கேட்டாள்: "அவனோட கண்கள் இப்பவும் அதே மாதிரி திறந்துதான் இருக்கா?"

தன் தலை சுற்றுவதைப் போல் ராகவராவ் உணர்ந்தான். அவனுடைய நாவிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை. ராகவராவ் வெறுமனே தலையைக் குனிந்தவாறு நின்றிருந்தான்.

கண்ணம்மா சிறிது நேரம் வானத்தை நோக்கிய பிறகு தன் முகத்தை முழங்கால் மீது வைத்தாள். அவளுடைய சூடான கண்ணீர் துப்பாக்கிக் குழாய்க்கு மேலே விழுந்து கொண்டிருந்தது.

மேற்கூரை நெருப்பில் எரிந்தபிறகு மீதமிருந்த மண்சுவர் ராகவராவின் மனதில் தோன்றியது. தலை உடலை விட்டுப் பிரிந்த நிலையில் வாசலில் கிடந்த பிணம், மூடாத கண்கள் தன்னிடம் ஏதோ கேட்பதைப் போல் ராகவராவிற்குத் தோன்றியது. ராகவராவ் மனதைச் சமநிலைப்படுத்திக் கொண்டு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்பட்டான். அவனிடம் சிறிது கூட சகிப்புத்தன்மை இல்லை என்று இதற்கு அர்த்தமில்லை. அவனுடைய இதயத்தில் அன்பும் தன்னுடைய சகபயணியான யெல்லரெட்டி மீது பரிவு உணர்ச்சியும் இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை. இவை எல்லாம் இருந்தும் ராகவராவ் தன்னுடைய லட்சிய இடத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போது இரண்டு விஷயங்கள் அவனுடைய மனதில் தோன்றின. மனிதனுடைய வளர்ச்சியை நோக்கிய பயணம் எப்போதும் சோதனைகளும் கஷ்டங்களும் நிறைந்ததே. அது கண்ணீரும் காயங்களும் கொண்டதே. எரிந்து கரிந்து சாம்பலாகிப் போன இதயத்தைக் காலால் மிதித்துக் கொண்டுதான் மனிதன் வளர்ச்சிப் பாதையில் ஒவ்வொரு அடியையும் வைத்து நடக்க வேண்டியதிருக்கிறது!


கண்ணம்மா ஒரு புதிய அன்னையே. அவளின் கவலைகள் நிறைந்த மனதும் அன்பும் என்றாவதொரு நாள் புதிய வழியைத் தேடிக் கண்டுபிடிக்கப் போவதென்னவோ நிச்சயம். அந்தத் தாயின் ஒரு மகன் இல்லாமற் போன இடத்தில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அபயம் தேடி ஓடி வருவார்கள். அதனால் கண்ணம்மாவை நினைத்து ராகவராவ் கவலைப்பட வேண்டியதில்லை. கண்ணம்மாவின் கண்ணீர் வற்றிப் போகும் வரை வழியட்டும்!

8

நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு வேறொரு காட்சியை ராகவராவ் பார்க்க நேர்ந்தது. இப்போது, இங்கே இந்தச் சிறை அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அந்தக் காட்சியைப் பார்ப்பது என்பது ராகவராவைப் பொறுத்தவரை சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஏனென்றால் அவன் ஆயிரக்கணக்கான கிராம மக்களின் அழுகையைச் சிரிப்பாக மாற்றிய காட்சி அது. பிறகு எப்படி அவன் 'ரன்னர்' ஆகாமல் இருப்பான்? அசாதாரணமான அந்தச் செய்தி எப்படி தூர இடங்களில் போய் சேராமல் இருக்கும்? அதோடு எப்படி செயல் வடிவில் வராமல் இருக்கும்?

ராகவராவ் வேலாம்பள்ளி கிராமத்தில் நிலங்களை வினியோகம் செய்யும் பணியில் தீவிரமாக மூழ்கியிருந்தான். படுப்பதற்கு ஒரு வீடும் ஒரு துண்டு நிலமும் இல்லாத விவசாயிகளின் மன திருப்தியையும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அவன் நேரடியாக அனுபவித்தான். எரிந்து கரிந்து போன வீடுகள் மீண்டும் வசிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டன. கிராமங்களில் மீண்டும் மக்களின் வாழ்க்கை உயிர்த்துடிப்புடன் இயங்க ஆரம்பித்தது. வயல்களில் பயிர்கள் நடப்பட்டன. விவசாயிகளின் தைரியத்தைப் பார்த்து ஆக்கிரமிப்பாளர்களுடைய இதயம் நடுங்க ஆரம்பித்தது. நேற்றுவரை விதியை நிர்ணயிப்பவர்களாக இருந்தவர்கள் நகரங்களில் அபயம் தேடி வாலைச் சுருட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.

வேலாம்பள்ளியிலிருந்த விவசாயிகள் ராகவராவின் பணியில் உதவ ஒரு குழு அமைத்தார்கள். அவர்கள் நிலம் வினியோகம் செய்யும் விஷயத்தில் ராகவராவிற்கு உதவியாக இருப்பார்கள். ராகவராவ் நிலத்தை வினியோகம் செய்தவாறு ஒரு கிராமத்திலிருந்து வேறொரு கிராமத்திற்குச் செல்வான். உண்மையிலேயே அது ஒரு உணர்ச்சி மயமான முயற்சிதான். அந்த உணர்ச்சியைத் தடுக்க எந்தவொரு சத்தியாலும் முடியவில்லை. அது மலை வெள்ளத்தைப் போல, ஒரு நீரோட்டத்தைப் போல எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து முன்னோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த நீரோட்டமும் இவ்வளவு காலமாக ஊனம் உண்டான பாதங்களைப் போல முடங்கிக் கிடந்தது. அந்தப் பாதங்களை வைத்து நடக்க முடியவில்லை. ஆனால், இப்போது அரக்கத்தனமான பலத்துடன் அந்தப் பாதங்கள் இயங்க ஆரம்பித்து விட்டன. அந்த மலையிலிருந்து வரும் வெள்ளத்தின் பாதங்கள் மண்ணில் படுகின்றன. தலை ஆகாயத்தைத் தொடுகிறது. அதன் இசை உலகத்தின் எல்லா இடங்களிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வயல்களை உழுது கொண்டிருக்கும் விவசாயி இன்று தன்னுடைய அதிர்ஷ்டத்தை உழுது கொண்டிருக்கிறான். இன்று வானம் முழுவதும் அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறது. மண் பொம்மைகள் ஒவ்வொன்றாகத் தகர்ந்து கொண்டிருக்கின்றன.

வேலம்பள்ளியிலிருந்து பாத்திபாடொ, அங்கிருந்து ஸ்ரீபுரம் வரை வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய திருவிழாவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த மகா உற்சவம் இதற்கு முன்பு ஒருமுறை கூட இந்த மண்ணில் கொண்டாடப்பட்டு அவர்கள் பார்த்ததில்லை. இப்போது சிறையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அந்தத் திருவிழாவின் ஆனந்தமும் உற்சாகமும் எதிரொலிப்பதாக ராகவராவிற்குத் தோன்றியது. அதன் அலைகள் ராகவராவை ஸ்ரீபுரத்திற்கு அழைத்துச் சென்றன.

ராகவராவ் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தான். பாத்திபாடொ முதல் ஸ்ரீபுரம் வரை விவசாயிகளின் நீண்ட ஊர்வலம். ஊர்வலத்திற்கு முன்னால் ஆதிவாசி இளைஞர்களின் தொண்டர் படை. அவர்களுக்குப் பின்னால் இடையர்கள் இடையர்களுக்குப் பின்னால் அடிமை வேலை செய்பவர்கள். அவர்களுக்குப் பின்னால் கொடிகளைக் கையில் ஏந்தியவர்களும் இசைக் குழுவினரும். ஊர்வலத்தின் நடுவில் அழகான ஒரு பல்லக்கு! பல்லக்கின் இரு பக்கங்களிலிருக்கும் கதவுகளில் சிவப்பு நிற திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. திரைச்சீலை காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. அந்தப் பல்லக்கிற்குள் நிலங்களைப் பற்றிய தகவல்களும் சான்றிதழ்களும் இருந்தன. நிலம், பணயம், அடிமை ஒப்பந்தம் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள். எழுச்சியை வெளிப்படுத்தும் அடையாளங்கள். அந்த அடையாளங்கள் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அடிமைத்தனத்தையும் அக்கிரமங்களையும் வெளிப்படுத்தக் கூடியன. விவசாயிகள் அந்த அக்கிரமங்களுக்கும் அடிமைத்தனத்திற்கும் மூலகாரணமாக இருந்தவர்களைப் பிடித்து தங்கள் கைவசம் ஆக்கினார்கள். சில இடங்களில் அவர்களைப் பிடிக்க வேண்டிய தேவையே உண்டாகவில்லை. ஜமீன்தார்மார்கள் தங்களின் பிரம்மாண்டமான மாளிகைகளை விட்டு வேறெங்கோ ஓடிப்போயிருந்தார்கள்.

அந்தப் பல்லக்கிற்குப் பின்னால் விவசாயிகள் வற்புறுத்தி ராகவராவை இன்னொரு பல்லக்கில் உட்கார வைத்து சுமந்து கொண்டு சென்றார்கள். தான் நடந்து செல்வதாக ராகவராவ் பிடிவாதமாகச் சொன்னான். ஆனால், விவசாயிகள் அவன் சொன்னதைக் கேட்கவில்லை. அவனுடைய பல்லக்கிற்குப் பின்னால் நாகேஸ்வரனின் பல்லக்கு. அவன் சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு, தன்னுடைய நண்பனைப் பார்ப்பதற்காக பாத்திபாடொவிற்கு வந்திருந்தான். கிராமத்திலுள்ள எல்லா விவசாயிகளும் ஊர்வலத்தில் இருந்தார்கள். இன்று யாரும் தங்களின் வீடுகளைப் பூட்டவில்லை. கிராமத்தில் திருடர்களோ- குற்றவாளிகளோ இல்லை. இன்று எல்லோரும் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள்.

பல்லக்குகள் மெதுவாக ஜமீன்தாரின் மாளிகையை நெருங்கின. பல்லக்கைச் சுமந்து சென்றவர்கள் மாளிகையின் சுவர்களுக்குள் பல்லக்குகளை இறக்கி வைத்தார்கள். கிராமத்தின் பெண்கள் அனைவரும் முன்கூட்டியே அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்கள் குலவை இட்டு ஆரத்தி எடுத்து பல்லக்குகளை வரவேற்றார்கள். மலர்களையும் காசுகளையும் எறிந்து வரவேற்றார்கள்.

அழகான அந்தக் காட்சியிலிருந்து கண்களை எடுக்க ராகவராவால் முடியவில்லை. அவன் பல தடவைகள் திரும்பத் திரும்பப் பார்க்க நினைத்தான். தங்களின் கிராமத்தில் புரட்சி உண்டாகும்போது, அதன் வடிவம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தான் ராகவராவ். பல்வேறு வகைகளில் கற்பனை பண்ணி வண்ணம் தீட்டி புரட்சி உண்டாவதை ராகவராவ் மனதில் நினைத்துப் பார்த்தான். புரட்சி என்பது ஒரு சூறாவளியைப் போல என்று சில நேரங்களில் தோன்றும். மலையிலிருந்து பாய்ந்துவரும் வெள்ளத்தைப்போல ஆவேசத்துடன் வரும் போர்ப்படையைச் சில நேரங்களில் அவன் மனதில் கற்பனை பண்ணிப் பார்ப்பான். சில நேரங்களில் வெடிகுண்டுகளுக்கு இரையான கணக்கற்ற பிணங்கள் மலையைப் போல குவிந்து கிடப்பதை மனதில் கற்பனை பண்ணிப் பார்ப்பான். ஆனால், தன்னுடைய கிராமத்தில் உண்டாகப் போகும் புரட்சி நாணம் கொண்ட புது மணப்பெண்ணைப் போல சிவப்பு நிறத் திரைச்சீலைகள் தொங்கும் பல்லக்கில்தான் என்பதை ராகவராவால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.


சிலர் அதற்குக் குத்துவிளக்கேற்றி வைத்து வரவேற்பு தருவார்கள். சிலர் சங்கு ஊதி வரவேற்பார்கள். பெண்கள் குலவை இட்டும் மந்திரங்கள் சொல்லியும் வரவேற்பார்கள். தைரியம்மிக்க விவசாயிகள் தங்களின் துப்பாக்கிக் குழாயில் திலகம் இட்டு வரவேற்பார்கள். இப்படியெல்லாம் அவன் நினைக்கவில்லை.

தான் இப்படி சிந்தித்தது தப்பான ஒன்று என்று ராகவராவ் நினைத்தான்.  இந்தியாவில் புரட்சி இந்திய முறையிலேயே வரும். அந்தப் புரட்சி நம்முடைய பண்பாடு, கலாசாரம், நாடோடி பாடல்கள் ஆகியவற்றின் நறுமணம் கமழத்தான் வரும். அதில் வெளிநாட்டுத்தனமான எந்த அடையாளமும் இருக்காது. அதன் வடிவம் அசாதாரணமானதாகவும் புதியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் பார்க்கவோ, கேட்கவோ செய்யாத முறையில் அந்தப் புரட்சி இருக்கும். எனினும், அது முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டதாகவே இருக்கும். அதைப் பார்த்து நமக்குச் சொல்லத் தோன்றும்- இந்தப் புரட்சி எங்களுக்குச் சொந்தமானது என்று ஆமாம்... "இந்தக் காட்சி எங்களின் கிராமத்தின் காட்சிதான்!"- ராகவராவ் மெதுவான குரலில் சொன்னான்.

அந்தச் சமயத்தில் கிராமத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த பெரியவரான நாராயணன் ராகவராவின் கையில் நிலத்தை அளக்கப் பயன்படும் சங்கிலியைக் கொடுத்தவாறு சொன்னார்: "மகனே, நிலத்தை அளந்து எல்லோருக்கும் வினியோகம் பண்ணு..."

சங்கிலியைக் கையில் வாங்கிக் கொண்டு ராகவராவ் சொன்னான்: "இந்த நேரத்துல கிராம அதிகாரி இருந்தா நல்லா இருக்கும். ஸ்ரீராம் புத்தலு எங்கே?"

ராகவராவ் சொன்னதைக் கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் உரத்த குரலில் சிரித்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான்: "அந்த ஆள் ஜமீன்தார்மார்களோட அதிகாரியா இருந்தான். ஸ்ரீராம் புத்தலு ஏழைகளான நம்மோட அதிகாரியா எப்போ இருந்தான்? அவன் நமக்காக ஒருநாள் கூட நிலம் அளந்தது இல்ல. அதனால் அவனும் ஜமீன்தார் கூட்டத்தோட சேர்ந்து ஓடிட்டான்.."

"கிராமத்தின் புரோகிதர் சீதாராம் சாஸ்திரி எங்கே? இந்த நல்ல நிகழ்ச்சியில் அவரோட ஆசீர்வாதம் இருந்தா நல்லா இருக்கும்?"

மீண்டும் சிரிப்பு உயர்ந்தது.

"ஜமீன்தாரோட மங்கல நிகழ்ச்சின்னா புரோகிதர் கட்டாயம் இருந்திருப்பார். ஆனா, இது விவசாயிகளோட மங்கல நிகழ்ச்சியாச்சே!"- நாகேஸ்வரன் சொன்னான்.

பொறுமையை இழந்த விவசாயிகள் ஒரே குரலில் சொன்னார்கள்: "ராகவராவ், நேரத்தை வீண்பண்ண வேண்டாம். நிலம் சம்பந்தப்பட்ட விஷயத்துல நாங்க எந்தவொரு அதிகாரியையும் புரோகிதரையும் எதிர்பார்க்கல. எத்தனையோ நூற்றாண்டுகளா நாங்க இந்த நல்ல வேளைக்காகக் காத்திருந்தோம்."

ராகவராவ் அளவுச் சங்கிலியை எடுத்துக் கொண்டு சொன்னான்: "கொட்டும் குலவையும் சங்கநாதமும் முழங்கட்டும்! எல்லோரும் வயலுக்குப் போவோம். இன்று ஸ்ரீபுரம் விவசாயிகளின் வெற்றி முன்னேற்றம் தொடங்குது."

ராகவராவ் முன்னோக்கி நடந்ததும், இசை முழங்கியது. விவசாயிகள் சந்தோஷத்தில் தங்களையே மறந்து போயிருந்தார்கள். வயதான கிழவர்கள் சந்தோஷத்தாலும் உணர்ச்சிப் பிழம்புகளாய் ஆனதாலும் சில நேரங்களில் சிரிக்கவும் அழவும் செய்தார்கள். பெண்கள் வெற்றிக் கதையைப் பாடலாகப் பாடினார்கள். ஆண்கள் அதைப் பின்தொடர்ந்து பாடினார்கள். பாடல் படிப்படியாக கர்ஜனையாக மாறியது. அது காற்றில் கலந்து பல மடங்கு எதிரொலித்தது.

"ஆந்திர மக்களுக்கு கோழைத்தனத்துடனும்

பலவீனத்துடனும் எந்தவொரு

உறவும் இல்லை.

இன்று நம்முடைய மக்களுக்கு

தேர்தல் நாள்.

எழுந்து நில்லுங்கள்!

எல்லோரும் வாருங்கள்!

வெற்றிப்பயணம் புறப்பட்டது."

ராகவராவ் அமைதியாகக் கண்ணீரைத் துடைத்தான். விவசாயிகளுக்கு நிலம் கிடைத்த நாள், அதற்கு முன்பு ஸ்ரீபுரத்தில் நிலம் வினியோகம் செய்த நான்கு நாட்கள் இவை எதையும் அவனால் மறக்க முடியாது. ராகவராவின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க நாட்கள் அவை. நிலம் வினியோகம் செய்யும்போது சிறிய அளவில் சண்டையும் மோதலும் உண்டானது. சிலர் நிலத்தின் இந்தப் பகுதி வேண்டுமென்றும், சிலர் அந்தப் பகுதி வேண்டுமென்றும் பிடிவாதம் பிடித்தார்கள். சிலர் தேவைக்கும் அதிகமாக நிலத்தைச் சொந்தமாக்க ஆசைப்பட்டார்கள். சிலர் முன்பு தங்களுக்கு இருந்ததைவிட குறைவாக நிலம் இருந்தால் போதும் என்றார்கள். ஆனால், நிலத்துடன் நல்ல அனுபவம் கொண்ட கிராமத்தலைவர் ஊராட்சியின் உதவியுடன் யாரும் குறை கூறாத வண்ணம் நில வினியோகத்தை அருமையாக நடக்கும்படி பார்த்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் தன் தந்தை வீரய்யா நடந்து கொண்ட விதத்தை ராகவராவ் நினைத்துப் பார்த்தான். எல்லோருக்கும் நிலம் தந்தபிறகுதான், தன்னுடைய நிலத்தைத் தரவேண்டும் என்று ராகவராவ் முடிவெடுத்திருந்தான். கிராமத்தைச் சேர்ந்த எல்லா விவசாயிகளுக்கும் நிலம் கொடுத்த பிறகு மீதமிருந்தால் வீரய்யாவிற்குத் தருவான். ஏனென்றால் வீரய்யா ராகவராவின் தந்தை ஆயிற்றே!

ஆனால், வீரய்யா பிரச்சினையைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் ராகவராவ் நிலத்தை வினியோகம் செய்து கொண்டிருந்தபோது அவன் மீண்டும் மீண்டும் முன்னால் வந்து தனக்கும் நிலம் தந்தாக வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தான். ராகவராவ் அதைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அளவுச் சங்கிலியுடன் முன்னோக்கி நடந்தான். தன்னுடைய சொந்த மகனின் கடுமையான நடத்தையில் மனம் நொந்துபோன வீரய்யா மற்ற விவசாயிகளிடம் குறைபட்டுக் கொண்டான். சில விவசாயிகள் ஆரம்பத்திலேயே வீரய்யாவிற்கு நிலம் தரவேண்டும் என்று ராகவராவிடம் சொன்னார்கள். அவன் தன் தந்தைக்குக் கிராமத்தில் இருப்பதிலேயே நல்ல நிலத்தைத் தருவதற்குத் தயாராக இருந்தான். ஆனால், அவனுடைய தந்தையின் பொறுமையின்மையைப் பார்த்து அவன் அந்த முடிவிலிருந்து மாறிவிட்டான்.

கடைசியில் மனம் வெறுப்படைந்து வீரய்யா அந்த இடத்தை விட்டு ஒதுங்கி நின்றபோது, அவனுக்கு நிலம் கிடைத்தது. ராகவராவ் எதிர்த்தும், கிராம ஊராட்சி வீரய்யாவுக்குத் தேவைக்கும் அதிகமாக நிலம் தந்தது. வீரய்யா மகிழ்ச்சிப் பெருமிதத்தில் தன்னை மறந்து துள்ளிக் குதித்து தன்னுடைய நிலத்தைப் பார்ப்பதற்காக ஓடினான். அவன் இரண்டு பிடி மண்ணை வாரி காற்றில் பரவவிட்டவாறு சொன்னான்: "இந்த நிலம் எனக்குச் சொந்தம். தொடர்ந்து வீரய்யா ஓடிவந்து தன் மகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தான்.


9

ந்தே நாட்களில் நிலம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. உண்மையான உரிமை கொண்டவர்களுக்கு நிலத்தை ஒப்படைத்த பிறகு ராகவராவ் ஒருநாள் சுற்றிப் பார்க்கலாம் என்று கிராமத்திற்கு வெளியே சென்றான். மாலை நேரம் வருவதற்கு அதிக நேரம் ஆகவில்லை. பறவைகள் கூட்டுக்கு வர ஆரம்பித்திருந்தன. சாலையின் நடுவில் சுழல்காற்று இங்குமங்குமாய் காய்ந்த இலைகளைப் பரப்பி விட்டுக் கொண்டிருந்தது. காய்ந்த இலைகள் வட்டம் வட்டமாகச் சுழன்று மீண்டும் தரையில் விழுந்தன. ராகவராவ் தீவிரமான சிந்தனையில் மூழ்கி நின்றவாறு, போகாவதி நதிக்கரையை அடைந்தான். அந்த நேரத்தில் மேற்குத் திசையில் தெளிவற்ற சிவப்பு வண்ணம் வானத்தில் தெரிந்தது.

ராகவராவ் ஒரு பாறை மீது போய் உட்கார்ந்தான். கணக்கிலடங்காத சிந்தனைகளுக்கு மத்தியில் சுந்தரி தன் கண்களுக்கு முன்னால் தோன்றியதைப் போல் அவன் உணர்ந்தான். அவளுடைய உதடுகளில் குறும்புத்தனம் நிறைந்த புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது.

சுந்தரி தனக்கு முன்னால் எப்படி வந்து தோன்றினாள் என்பதை ராகவராவால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையற்ற சூழ்நிலைகளுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் அவள் எப்படி கற்பனை உலகத்தில் தோன்றினாள்? ராகவராவ் கற்பனையில் சுந்தரியைப் பார்த்துக் கேட்டான்: "சுந்தரி! நீ இதுவரை எங்கே போயிருந்தே? எந்த நதிக்கரையில் யாரோட உதவியுடன் யாருக்காகக் காத்திருந்தே? உன் மார்பகங்கள் இப்போதும் புனிதமானவையா இருக்கா? இல்லாட்டி தேடிவந்த யாருக்காவது அதைத் தானம் பண்ணிட்டியா?"

சுந்தரியைச் சிறிது கூட மறக்க முடியாது என்பதை ராகவராவ் புரிந்து கொண்டான். மரணமடையும் நிமிடம் வரை அவன் அவளுக்காகக் காத்திருப்பான். ஏனென்றால் ஆண் முதன்முதலாகக் காதலிப்பவளை எந்தச் சமயத்திலும் மறக்கமாட்டான். அவள் தனக்குக் கிடைக்கவில்லையென்றால், வாழ்க்கை முழுவதும் அவளைப் பற்றி நினைத்து அவன் மனதில் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால், வாழ்க்கையில் அது எந்நேரமும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொந்தரவு என்று கூறி விடுவதற்கில்லை. மனதை அரித்துக் கொண்டிருக்கின்ற வேதனையாக அது இருக்கலாம். பார்க்க விருப்பப்படவில்லையென்றாலும், அந்தப் பெண் கண்களுக்கு முன்னால் தோன்றுவாள். நினைக்க முயற்சிக்கவில்லையென்றால் கூட நினைவில் அவள் வருவாள். மரணம் நெருங்கும் நேரத்திலும் அவளுடைய உருவம் மனதில் தோன்றும். அது அழகான கற்பனையின் புனிதமான நினைவு. அந்த நினைவை எந்தச் சமயத்திலும் மனதைவிட்டு அகற்ற முடியாது என்பதே உண்மை. சுந்தரியை நிரந்தரமாகத் தன்னுடைய நினைவுகளிலிருந்து துடைத்து எறிய வேண்டும் என்று சிறிது நேரத்திற்கு முன்பு கூட ராகவராவ் நினைத்திருப்பான். பூமியுடன் கொண்ட அன்பு, காதலைவிட உயர்ந்தது என்பதை அவன் செயல்வடிவில் காட்டிவிட்டான். அதே நேரத்தில் ஒரு காதலால் இன்னொரு காதலை இல்லாமல் செய்ய முடியாது என்பதை ராகவராவ் இப்போது புரிந்து கொண்டான். இரண்டு காதலும் வெவ்வேறு வகைப்பட்டாலும், ஒன்று மற்றொன்றின் தோழி என்பதே உண்மை.

போகாவதி நதிக்கரையில் சுந்தரி மற்றும் அவளைச் சேர்ந்தவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியாமல் போனபோது ராகவராவின் இதயம் மிகவும் கவலைக்குள்ளானது. இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி அவனால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சட்டப்படியான நில வினியோகத்தின் மூலம் நிலத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியும். ஆனால், காதல் பிரச்சினையை அப்படித் தீர்க்க முடியாது. நிலத்தை அளக்க முடியும். ஆனால், காதலை அளந்து ஒரு முடிவுக்கு வர முடியாது.

இருப்பதிலேயே மிகவும் அதிகமாக ஒதுக்கப்பட்டவர்கள் ஆதிவாசிகளும் அரிஜனங்களும் மலைவாழ் மக்களும் நாடோடிகளும்தான் என்பதை ராகவராவும் அவனுடன் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றவர்களும் புரிந்து கொண்டார்கள்! அவர்களுக்கும் கிராமத்தில் நிலம் கொடுக்க வேண்டும்! ஒருவேளை சுந்தரியைப் போன்ற இளம் பெண்களின் கண்ணீர் புனிதமானதும் கள்ளங்கபடமற்றதும் என்பதை ராகவராவுடன் பணியாற்றும் மற்றவர்கள் புரிந்து கொண்டிருக்கலாம். மனிதனுக்குப் பூமியுடன் கொண்டிருக்கும் காதல் இயல்பானது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால் நிலம் கிடைப்பதுடன், சுந்தரியின் உடம்பும் புனிதமானதாக ஆகிவிடும்.

ராகவராவிற்கு இனி எந்தச் சமயத்திலும் சுந்தரி கிடைப்பாள் என்று கூறுவதற்கு இல்லை. இனிமேல் அவளுடைய முகத்தைப் பார்க்க முடியும் என்ற நிலை வராமல் கூட போகலாம். அழுது கொண்டிருந்த சுந்தரியின் அருகிலிருந்து ராகவராவ் எழுந்து போன நாளன்று அவனுக்குக் கூறுகின்ற அளவுக்கு வாழ்க்கையைப் பற்றிய அறிவோ அனுபவங்களோ இல்லை என்பதே உண்மை. அன்று கோபத்தில் ராகவராவால் சுந்தரியின் செயலற்ற தன்மையையும் ஆதரவில்லாத நிலைமையையும் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. சுந்தரி நாடோடி இனத்தைச் சேர்ந்தவள். வீடும் படுப்பதற்கு இடமும் இல்லாத அவள் ஜமீன்தார்மார்களின் அதிகபட்ச அக்கிரமங்களையும், அத்துமீறல்களையும் சகித்துக்கொண்டு வாழவேண்டிய சூழ்நிலை உண்டானது. அவளுடைய நிலை ஆதரவற்ற அடிமை வேலை செய்யக் கூடியவர்களின் நிலையைவிட பரிதாபமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் மிருகங்களை விட அவளுடைய வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுந்தரியைத் 'தேவிடியா' என்று அழைத்தது உண்மையிலேயே அநியாயமான ஒன்றுதான். உண்மைக்கு நேர் எதிராக இருந்தது அது. அன்று சுந்தரியின் இதயத்தில் காதலின் தீப்பந்தமும் கண்களில் சந்தோஷமான வாழ்க்கையை எதிர்பார்த்து உள்ள ஏக்கமும் இருந்தது. சுந்தரிக்காக இனிமேல் எந்தச் சமயத்திலும் வீடு உண்டாக்க ராகவராவால் முடியாது. அவளுடைய குழந்தையை இடுப்பில் தூக்கவும் அவனால் முடியாது. பட்டைப்போல மென்மையாகவும் அழகாகவும் இருக்கும் அவளுடைய உடலைத் தொடவும் ராகவராவால் முடியாது. எனினும் கிராமத்திலுள்ள மக்களுக்கும் நிலத்திற்கும் இடையே ஆழமான நட்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது. அந்த நட்பு மிகவும் அழகானது. அதன் வசந்த ஒளி வீச்சால் வாழ்க்கையின் மற்ற உறவுகளை இறுகப் பிணைக்க முடியும். சுந்தரி இனி எந்தச் சமயத்திலும் தன்னுடைய மார்புகளின் புனிதத் தன்மைக்காக அழப்போவதில்லை.

ராகவராவ் இப்படிப்பட்ட ஆழமான சிந்தனைகளுடன், கவலை கொண்ட மனதுடன் போகாவதி நதிக்கரையிலிருந்து கிராமத்திற்குத் திரும்பினான். சுந்தரி மீது கொண்ட காதல் ராகவராவின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தது. அதே நேரத்தில் ஜமீன்தாரின் அரண்மனை ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் பிரச்சினையாக இருந்தது. அந்த அரண்மனையை என்ன செய்வது? ஜமீன்தாரும் அவருடன் இருந்தவர்களும் ஓடிப்போனவுடன் அரண்மனை யாரும் இல்லாமல் காலியாகக் கிடந்தது. கிராமத்து மக்கள் முதன்முறையாக அரண்மனையின் உட்பகுதியைப் பார்த்தார்கள். இதற்கு முன்பு அவர்கள் அதன் வாசலை மட்டுமே பார்த்திருக்கிறார்கள். அடிமை வேலைகளுக்காகவும் வரி கொடுப்பதற்காகவும் ஜமீன்தார்மார்களின் அடியாட்களிடம் சாட்டையடி வாங்குவதற்கும் அவர்கள் முன்பு அங்கு வந்திருக்கிறார்கள்.

சிலர் ஜமீன்தாரின் கச்சேரி அறையையும் பார்த்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டசாலிகளான சில பெண்கள் ஜமீன்தாரின் படுக்கையறையையும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஜமீன்தாரின் அரண்மனையின் மற்ற பகுதிகளில் என்னவெல்லாம் இருக்கின்றன என்று ஒரு விவசாயியால் கூட கூற முடியவில்லை. முதல் மூன்று நான்கு நாட்கள் நிலம் வினியோகம் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டதால் அரண்மனையைப் பற்றிய நினைப்பு யாருக்கும் வரவில்லை. ஆனால், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முடிவுக்கு வந்தவுடன், விவசாயிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் பிள்ளைகளும் அரண்மனையைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையின் கதவையும் அடைத்தும் திறந்தும் பார்த்தார்கள். சிலர் பளிங்குக் கற்கள் இடப்பட்ட தரையில் படுத்தார்கள்.


குழந்தைகள் தூண்களைச் சுற்றி ஓடி விளையாடினார்கள். கையைத் தட்டி, எதிரொலிப்பதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள். காட்சிப் பொருளைப் பார்ப்பதைப் போல வயதான கிழவர்கள் அரண்மனையைப் பார்த்தார்கள். அரண்மனையில் ஆச்சரியப்படும் வகையில் பொருட்கள் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட அரண்மனைகள் ஆந்திராவின் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கவே செய்கின்றன. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் உண்டாக்கியது விவசாயிகளின் சூடான ரத்தம் என்பது மட்டும் உண்மை.

அரண்மனையை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பெண்களே தீர்மானித்தார்கள். அந்தப்புரத்தை மகளிர் சங்கத்திற்குத் தந்துவிட வேண்டும். அவர்கள் வேலை முடிந்த பிறகு அங்கு ஒன்று கூடுவார்கள். பலவிதப்பட்ட கைத்தொழில்களை அங்கு கற்றுக் கொள்வார்கள். கச்சேரி அறை பஞ்சாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெயிலில் பூஜை மண்டபத்தின் தரை மிகவும் வெப்பமாக இருக்கும். அதனால் அங்கு உட்கார்ந்து கொண்டு விசாரணைகள் நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கும்.

அரண்மனையில் நிலவறைகளில் தானியங்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். ஜமீன்தாரின் கேளிக்கை அறை மிகவும் பெரியதாக இருந்தது. அங்கு குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் தொடங்குவது நல்ல ஒரு விஷயமாக இருக்குமென்று ராகவராவ் சொன்னான். ஆனால், பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஜமீன்தாருடன் சேர்ந்து கிராமத்தை விட்டு ஓடிப்போயிருந்தார்கள்.

"குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர்றது யார்?" கிழவியான புன்னம்மா கேட்டாள்.

அது ஒரு அர்த்தமுள்ள கேள்விதான். கிராமத்தில் படித்தவர்களாக இருந்தவர்கள் போலீஸ்காரர்களும் பட்டேல்மார்களும் புரோகிதர்களும் ஜமீன்தாரின் பணியாட்களும்தான். அவர்கள் எல்லோரும் கிராமத்தை விட்டு ஓடிப்போய்விட்டார்கள். கிராமத்தில் எழுதவும் படிக்கவும் தெரிந்த ஒரு மனிதன் கூட இல்லை. எழுதவும் படிக்கவும் தெரிவதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என்று ஜமீன்தார் நினைத்திருந்தார். கல்வி கற்றால் புதிய சிந்தனைகள் மூளையில் தோன்றும். விவசாயிகள் செக்கில் கட்டப்பட்ட காளைகள். தாங்களும் மனிதர்கள் என்பதை அவர்கள் சிந்தித்துத் தெரிந்து கொள்வார்கள். புரட்சிகரமான சிந்தனைகளுக்கு அவர்கள் தங்களை ஆட்படுத்திக் கொள்வார்கள். ஜமீன்தாருக்குச் செக்கில் கட்டப்பட்ட காளைகள் மட்டுமே தேவை. அவருக்கு மனிதர்கள் தேவையே இல்லை.

சிறிது நேரம் சிந்தித்தபிறகு ராகவராவ் சொன்னான்: "நான் ஹைதராபாத்துல இருந்து பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லித் தர்றதுக்குத் தகுதியுள்ள ஆளைக் கொண்டு வர்றேன்."

"அதுக்கான செலவுக்கு என்ன பண்றது?" புன்னம்மா மீண்டும் கேட்டாள்.

"இல்லாட்டி நானே ஒவ்வொரு நாளும் பாடம் சொல்லித் தர்றேன்."

சந்தோஷத்தால் புன்னம்மாவின் கண்கள் மலர்ந்தன.

"நீங்க இந்த அளவுக்குச் சந்தோஷப்படுறதுக்குக் காரணம் என்ன? உங்களுக்குப் படிச்ச குழந்தைகள் எதுவும் இல்லையே!"- ராகவராவ் கேட்டான்.

புன்னம்மா தலையை ஆட்டியவாறு சொன்னாள்: "நான் எழுதவும் படிக்கவும் கத்துக்கப்போறேன்."

10

ராகவராவ் சிறையறையின் குளிர்ச்சியான தரையை விட்டு எழுந்து தலையைக் குனிந்தவாறு அங்குமிங்குமாய் நடந்தான். அதுவரை எல்லாம் அவன் நினைத்தபடியே நடந்தன. ஆனால், அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களை நினைத்தபோது, ராகவராவுக்கு என்னவோ போலிருந்தது. அவனுடைய கிராமத்தில் நிலம் வினியோகம் செய்யப்பட்டதைப் போல எண்ணற்ற கிராமங்களிலும் நிலம் வினியோகம் செய்யப்பட்டது. மூன்று நான்கு மாதங்களுக்குள் ஆந்திராவில் பத்து லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. ஜமீன்தார்மார்களும் அவருடைய ஆதரவாளர்களும் நகரத்தில் அபயம் தேடிக் கொண்டார்கள். அவர்கள் அங்கிருந்தவாறு ரஸாக்கர்மார்கள், ராணுவம், போலீஸ் ஆகியோரின் உதவியுடன் கிராமங்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தார்கள்.

ஜகன்னாதரெட்டி ஸ்ரீபுரம் கிராமத்திற்கு எதிராக இரண்டு முறை ஆக்கிரமிப்பு செய்தார். கிராமத்திலிருந்த விவசாயிகள் தைரியமாகப் போராடி இரண்டு தடவைகள் நடந்த அந்த முயற்சியைத் தவிடு பொடியாக்கி, தங்களுடைய நிலத்தையும் வீட்டையும் பெண்களின் மரியாதையையும் காப்பாற்றினார்கள். இரண்டு தடவைகளும் ஜகன்னாதரெட்டி தோல்வி அடைந்ததுடன், பெரிய அளவில் இழப்பையும் சந்தித்தார். ஸ்ரீபுரம் கிராமத்தில் ஏராளமான மனிதர்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள். ராகவராவிற்கும் சிறிய அளவில் காயங்கள் உண்டாயின.

நிலைமை இப்படி இருக்க, காங்கிரஸ் அரசாங்கம் ஹைதராபாத்தைக் கையகப்படுத்தி அதிகார நாற்காலியில் உட்கார்ந்துவிட்ட தகவலை கிராமத்து மக்கள் அறிந்தார்கள். எல்லோருக்கும் அந்தச் செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. இந்தமுறை மாநிலத்தில் மக்களின் ஆட்சி அமைந்தது. இனிமேல் அரசாங்கம் தங்களின் விஷயங்களில் கவனம் செலுத்தும்- ஜகன்னாத ரெட்டியைக் கட்டாயம் தண்டிக்கும் என்றெல்லாம் அவர்கள் மனதில் எண்ணினார்கள். அதனால் கிராமங்களில் மக்கள் தீபாவளி கொண்டாட தீர்மானித்தார்கள்.சிலர் அதற்கு எதிர்ப்பு கூறவும் செய்தார்கள். ராகவராவிற்கு மீண்டும் மீண்டும் சந்தோஷம் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஆனால், அவன் தன் கருத்து என்று எதையும் கூறவில்லை. எது எப்படியோ ஸ்ரீபுரம் கிராமம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிப்பது என தீர்மானித்தது. கிராமத்திலுள்ள கோவில்களிலும், மண்டபங்களிலும், ஜமீன்தாரின் அரண்மனையின் உச்சியிலும் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. அரண்மனையின் கோபுரத்தில் ஆயிரக்கணக்கான தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. தீபாவளி கொண்டாட்டத்தைப் பார்ப்பதற்காகத் தூரத்து கிராமங்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்தார்கள். சொந்தத்தில் நிலம் கிடைத்த சந்தோஷத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக் கொண்டார்கள். பெண்கள் மந்திரங்கள் சொல்லி நடனங்கள் ஆடினர். அரண்மனைக்கு முன்னாலிருந்த மைதானத்தில் குழந்தைகள் கோலாட்டம் நடத்தினார்கள்.

சரியாக அந்த நேரத்தில் கிராமத்திற்கு மேலே ஒரு விமானம் வட்டமிட்டுப் பறப்பதை எல்லோரும் பார்த்தார்கள். ஆட்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அந்த விமானத்தையும் பார்த்தார்கள். விமானம் கிராமத்திற்கு மேலே சுற்றியவாறு ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களைக் கீழே போட்டது. அதற்குப் பிறகு ஆகாயத்தில் அந்த விமானம் மறைந்து போனது. ஏராளமான ஆட்கள் வயலை விட்டு அந்தத் துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்குவதற்காக ஓடினார்கள். துண்டுப் பிரசுரங்கள் மரக்கிளைகளிலும் வீடுகள் மீதும் விழுந்து கிடந்தன. குழந்தைகள் மைதானத்தில் அந்தத் துண்டுப் பிரசுரங்களை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார்கள். ஒரு பெண்ணின் மடியில் ஒரு துண்டுப்பிரசுரம் வந்து விழுந்தது. அவள் அதை எடுத்துக்கொண்டு ராகவராவைத் தேடி ஓடி வந்தாள். சிறிது நேரத்திற்குள் ராகவராவிற்கு முன்னால் நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வந்து சேர்ந்தன.

ராகவராவ் அந்தத் துண்டுப் பிரசுரத்தை வாசித்தான். ஆயிரக்கணக்கான விவசாயிகள் அவனைச் சுற்றிக் குழுமி நின்றிருந்தார்கள். "ராகவராவ், இதுல என்ன எழுதியிருக்குன்னு சொல்லு..." என்றார்கள் அவர்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துண்டுப் பிரசுரத்தை ராகவராவிற்கு நேராக நீட்டியவாறு சொன்னார்கள்: "என்கிட்ட இருக்கிற துண்டுப்பிரசுரத்துல என்ன எழுதியிருக்குன்னு படிச்சுச் சொல்லு இதைக் கொஞ்சம் பாரு."

ராகவராவ் இரண்டு மூன்று துண்டுப் பிரசுரத்தைப் படித்துவிட்டு சொன்னான்: "இது காங்கிரஸோட துண்டுப் பிரசுரம் எல்லாத்துலயும் ஒரே விஷயம்தான் அச்சடிக்கப்பட்டிருக்கு."


"நம்ம காங்கிரஸ் என்ன சொல்லுது. சீக்கிரமா சொல்லு..."

"காங்கிரஸ் சொல்றது இதுதான். விவசாயிகள் கைப்பற்றிய நிலங்களை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தந்திடணும். ஏனென்றால் ஜமீன்தார்மார்களும் விவசாயிகளும் சகோதரர்கள். சகோதரனின் உரிமையை இன்னொரு சகோதரன் தட்டிப் பறிப்பது நியாயம் இல்ல. அதனால் விவசாயிகள்கிட்ட வேண்டிக்கிறது என்னன்னா, அவர்கள் நிலத்தை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தந்திடணும்..."

துண்டுப் பிரசுரத்தைப் படித்துவிட்டு ராகவராவ் விவசாயிகளின் முகத்தைப் பார்த்தான். திடீரென்று அதிர்ச்சியும் படு அமைதியும் அங்கு உண்டானது. யாராலும் எதுவும் பேசமுடியவில்லை.

கடைசியில் ஒரு விவசாயி உரத்த குரலில் சொன்னான்: "நிலம் உழுது புரட்டிப் போட்டு விளைச்சல் உண்டாக்கி பாடுபடுறவனுக்குத்தான் சொந்தம். இன்னொருத்தனோட கஷ்டங்களுக்கும், வருமானத்துக்கும் மேலே அரண்மனை கட்டிக்கிறவன் நிலத்தோட சொந்தக்காரனா எப்படி ஆக முடியும்? ஆந்திராவுல இருக்குற விவசாயிகளிடம் நிலத்தை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தந்திடணும்னு காங்கிரஸ் சொல்லுது. அதே நேரத்துல எத்தனையோ நூற்றாண்டுகளா நம்ம நிலத்தை நம்மகிட்ட இருந்து எமாற்றிப் பிடுங்கினவங்களைப் பார்த்து அது ஒண்ணும் சொல்லமாட்டேங்குது."

"ஜமீன்தார் உங்களோட சகோதரன்னு இந்தத் துண்டுப் பிரசுரத்துல அச்சடிச்சிருக்கு."- ராகவராவ் சொன்னான்.

"ஜமீன்தார்மார்கள் எங்களோட சகோதரமார்கள் இல்ல. அவங்க காங்கிரஸோட சகோதரர்களா இருக்கலாம். ஜமீன்தார்மார்கள் எங்களோட விரோதிகள்!"- மற்றொரு விவசாயி போர்க்குரலில் சொன்னான்.

கிழவி புன்னம்மா சீறினாள்: "யார் என்ன சொன்னாலும் சரி. விமானம் இல்ல; கடவுளே வந்தாலும் சரி. நாங்க எங்களோட நிலத்தை ஜமீன்தார்மார்களுக்குத் திருப்பித் தர்றதா இல்ல."

புன்னம்மா ஜமீன்தாரின் அரண்மனையை நோக்கி ஓடினாள். அங்கு கோபுர வாசலில் எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தை எடுத்து நிலத்தை நோக்கி வீசி எறிந்தாள். தொடர்ந்து அவள் எல்லா விளக்குகளையும் எடுத்து ஊதி அணைக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் அரண்மனை இருட்டில் மூழ்கியது. கிராமங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. விவசாயிகள் பலவித சிந்தனை ஓட்டங்களுடன் தங்கள் முகத்தை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிறகு ஒருநாள் ஜகன்னாத ரெட்டியும் பிரதாப ரெட்டியும் போலீஸ், இராணுவம் ஆகியவற்றின் துணையுடன் கிராமத்திற்கு வந்தார்கள். அவர்கள் கிராமத்தைக் கையில் எடுத்தார்கள். ராகவராவ் அந்தச் சமயத்தில் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை கைது செய்தார்கள்.

ரஸாக்கர்களைக் கொன்றதாக ராகவராவின் மீது குற்றம்  சுமத்தப்பட்டது. தொடர்ந்து வழக்கு நடந்தது. ராகவராவிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நாளை காலை எழு மணிக்கு அவனைத் தூக்கு மரத்தில் தொங்கவிடப் போகிறார்கள்.

ராகவராவ் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். தான் உண்மையில் கொலைகாரனா? கொலைச் செயலின் வடிவமும்,  குணமும் பலவிதத்தில் இருக்கலாம். மனதில் வெறுப்பையும், பகையையும் வைத்துக்கொண்டு, இல்லாவிட்டால் வேறு ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலை செய்யலாம். ரஸாக்கர்மார்கள் இரவு நேரங்களில் போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தார்கள். கிராமத்தைக் காப்பாற்றத் தயாரான சமயத்தில் ராகவராவிற்கு முன்னால் என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு தெளிவான முடிவே இல்லை. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்குத் தேவைப்பட்ட ஆவேசத்தால் உண்டான குருட்டுத்தனமான ஒரு பலம் மட்டுமே அவனிடம் இருந்தது. இதற்கு முன்பு ராகவராவ் கிராமங்கள் எரிந்து சாம்பலானதைப் பார்த்திருக்கிறான். அறுவடை செய்யப்படும் நிலையில் இருக்கும் வயல்கள் நெருப்புக்கு இரையாவதையும் பார்த்திருக்கிறான். யெல்லரெட்டியின் இறந்துபோன கண்களையும் பார்த்திருக்கிறான். அவை எல்லாவற்றையும் பார்த்து அவன் தனக்குள் ஒரு உறுதிமொழி எடுத்தான். அவன் தனிப்பட்ட ஒரு மனிதனையோ, உருவத்தையோ பார்க்கவில்லை. அவன் தன்னுடைய கிராமத்திற்கு எதிராக நடந்து கொண்டிருந்த பயங்கரமான அக்கிரமங்களின் கறுத்த நிழலை மட்டுமே பார்த்தான். அவன் முன்னோக்கி நடந்தான்.அந்த ஆக்கிரமிப்பின் மார்பில் ஈட்டியைச் சொருகி இறக்கினான். அக்கிரமங்களை எதிர்ப்பது இம்சையா என்ன? தன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதும் தாயின், சகோதரிகளின் மானத்தைக் காப்பாற்றுவதும் தனக்குச் சொந்தமான வயலில் விளைந்திருக்கும் பொன் நிறக் கதிர்களைக் காப்பாற்றுவதும் இம்சையா என்ன?

ராகவராவ் தன் இதயத்தைப் பார்த்துக் கேட்டான். எனினும் ஒரு குற்ற உணர்வின் முகமும் அவனுக்கு முன்னால் தோன்றவில்லை. ஏன் அதைச் செய்தோம் என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு அவன் எதையும் செய்யவில்லை. இதுவரை நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் மனதில் நினைத்துப் பார்த்த ராகவராவ் தன் வாழ்க்கைக் கதையின் தாள்களை மடக்கி வைத்தான். அவன் பிறகு சந்தோஷத்துடன் மரணத்தைத் தழுவிக் கொள்வதற்குத் தயாரானான்.

சிறையறையின் இரும்புக் கதவு மெதுவாகத் திறக்கப்பட்டது. ராகவராவ் வெளியே நடந்து வந்து கொண்டிருக்கும் தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான். அவனுக்குப் பின்னால் வயதான வார்டன் நின்றிருந்தான். அந்த மனிதனின் கண்களில் நீர் நிறைந்திருந்தது.

வீரய்யா மெதுவாக நடந்து தன் மகனுக்கு அருகில் வந்தான். ராகவராவ் மெதுவாகத் தன் தந்தையின் பக்கம் திரும்பி தாழ்ந்த குரலில் சொன்னான்: "அப்பா, உட்காருங்க."

வீரய்யாவும் ராகவராவும் சிறையறையின் தரையில் அமர்ந்தார்கள். வீரய்யாவின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவனுடைய முஷ்டி பலம் கொண்டதாக இருந்தது. தலை வினோதமான முறையில் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவோ விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால், எதையும் சொல்ல அவனால் முடியவில்லை. தன் தந்தையின் இந்த நிலைமையைப் பார்த்து ராகவராவின் இதயம் ஒருமாதிரி ஆகிவிட்டது. தான் இப்போது அழுது விடுவோமோ என்று அவன் பயந்தான். ராகவராவ் மிகவும் கஷ்டப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன் தந்தையைப் பார்த்துக் கேட்டான்:

"கிராமத்துல நிலைமை எப்படி இருக்கு?"

"கிராமத்துல மனிதர்கள் யாரும் இல்ல. இளைஞர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டுட்டாங்க. சிக்காத ஆட்கள் காட்டைத் தேடி ஓடிட்டாங்க. அவங்களை கைது பண்றதுக்காக ராத்திரியும் பகலும் வீட்டு வாசல்ல போலீஸ் காவல் நிக்குது. சில நேரங்கள்ல நடுராத்திரி நேரத்துல காட்டுல இருந்து வெடிச் சத்தம் கேட்கும். அது காதுல விழுறப்போ கிழவி புன்னம்மா உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவா. 'இன்னொரு ஆளும் போயாச்சு. ஹா... ஹா...'ன்னு அவளோட குரல் கேட்டுக்கிட்டே இருக்கும்."

"புன்னம்மா பாட்டியா?"

"ஆமா... புன்னம்மாவுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சு."

ராகவராவால் சில நிமிடங்களுக்கு எதுவுமே பேசமுடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவன் கேட்டான்: "அப்போ ஜகன்னாதரெட்டி?"

"ஜமீன்தார் தன்னோட அரண்மனையை விட்டு வெளியே வர்றதே இல்ல. அரண்மனைக்குள்ளேயே ராணுவமும் போலீஸும் எப்பவும் காவல் காத்துக்கிட்டு இருக்கு.


அது போதாதுன்னு சாலையின் ஒவ்வொரு சந்திப்பிலும் போலீஸ் காவல்... ஒரு கிராமத்துல இருந்து இன்னொரு கிராமத்துக்குப் போறதா இருந்தா விவசாயிகள் போலீஸ்காரர்கள்கிட்ட அனுமதி வாங்கணும்."

மீண்டும் சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது.

வீரய்யாவின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் தழுதழுத்த குரலில் சொன்னான்:

"உன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதுன்னு ஊர்க்காரங்க பேசிக்கிட்டாங்க."

"எனக்கும் தெரியும்."

"ராகவராவ் மன்னிப்புக் கேட்டு மனு போட்டிருந்தா, தண்டனையைக் குறைச்சிருப்பாங்கன்னு ஜகன்னாதரெட்டி சொன்னதா ரங்கடு சொல்லித் திரியிறான்."

"எதுக்கு மன்னிப்பு கேட்கணும்?"- ராகவராவ் கோபக்குரலில் கேட்டான்.

"நான் சொல்லல. வண்ணான் ரங்கடு சொன்னான்."- வீரய்யா சாந்தமான குரலில் சொன்னான்.

"அப்பா, உங்களோட விருப்பம் என்ன?"

வீரய்யா நிறுத்தி நிறுத்திச் சொன்னான்:

"நீ செய்தது முழுவதும் சரின்னு சில நேரங்கள்ல தோணும். நீ என்னோட ஒரே மகனாச்சேன்னு சில நேரங்கள்ல தோணும்..."- வீரய்யா தலையைக் குனிந்தவாறு சொன்னான்.

ராகவராவ் தன் தந்தையின் தோளில் கையை வைத்தவாறு சொன்னான்: "அப்பா, அரண்மனையை வெறுக்கணும்னு எனக்குச் சொல்லித் தந்ததே நீங்கதான். இப்போ அந்த வெறுப்பை என்கிட்ட இருந்து நீங்க திரும்ப வாங்கலாம்னு வந்திருக்கீங்களா?"

"இல்ல, மகனே. நான் எதுவுமே தெரியாத ஒரு விவசாயத் தொழிலாளி. சில நேரங்கள்ல எவ்வளவு சிந்திச்சாலும் புரிய மாட்டேங்குது. என் ஒரே மகனை என்கிட்ட இருந்து எதுக்கு தட்டிப் பறிக்கணும்? ராத்திரி நேரங்கள்ல காட்டுல இருந்து வெடிச் சத்தம் கேக்குறப்போ ராத்திரி அதிகமா பயமுறுத்துறதைப் போல் இருக்கும்."

ராகவராவ் தன் தந்தையின் தோளிலிருந்து கையை எடுப்பதற்குப் பதிலாக முன்னிலும் அதிக பலத்துடன் பிடித்தான். அதற்குப் பிறகு மெதுவான குரலில் சொன்னான்: "அப்பா, நீங்க அன்னைக்குத் திருவிழாவுல நடந்த விஷயத்தை மறந்திருக்க மாட்டீங்களே! நான் அன்னைக்கு ராமய்யா செட்டியோட துணிக்கடைக்கு முன்னால தொங்கவிடப்பட்டிருந்த பட்டுத் துணியை லேசா தொட்டுப் பார்த்ததற்கு அந்த ஆள் என்னை எப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி கெட்டவார்த்தைகள்ல பேசினான்! நீங்க என் கையை சடார்னு அந்தத் துணியில இருந்து இழுத்தீங்க. ஒருவேளை நீங்க அப்போ உங்க மகனோட மனநிலை என்னன்றதைப் புரிஞ்சிருக்கலாபம். தன் மகன் ஜகன்னாதரெட்டியோட மகனைப்போல பட்டுத்துணி அணிய ஆசைப்படுறான்னு நீங்க மனசுல நினைச்சிருக்கலாம். ஆனா, பட்டுத்துணி அடிமைகளுக்கு உள்ளது இல்லைன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஒரு பக்கம் பட்டினி. இன்னொரு பக்கம் செழிப்பு. ஒரு பக்கம் அவமானமும் கஷ்டங்களும். இன்னொரு பக்கம் மரியாதையும் கொண்டாட்டமும். அப்பா! உங்க மகன் பட்டுத்துணிய லேசா தொட்டுப்பார்த்தது பெரிய குற்றம் ஒண்ணும் இல்ல. அவன் அந்தப் பட்டுத் துணியைத் தொட்டது அந்த யுகத்தை தன்கிட்ட நெருங்க வைக்கிறதுக்காகத்தான். பட்டுத்துணிக்காகவும் கோதுமை மணிகளுக்காகவும் வயல்கள்ல பணத்துக்காகவும் விவசாயிகள் கஷ்டப்படத் தேவையில்லாத அந்த யுகம்... அந்த யுகத்தில் சொந்த வடிவமும் அழகும் மனிதனுக்காகக் காத்திருக்கும். இந்தத் தூரத்துப பார்வை பார்த்த குற்றத்துக்குத்தான் உங்க மகனை நாளைக்குக் காலையில தூக்குல போடப்போறாங்க. அதைத் தவிர, உங்க மகன் செய்த குற்றம் என்ன? அவன் ஒரு தப்பும் செய்யல..."

வீரய்யா அமைதியாக அழ ஆரம்பித்தான்.

"அப்பா! நீங்க இந்த மாதிரி அழுறதைப் பார்த்தா மத்தவங்க என்ன சொல்வாங்க? கிராமத்து மக்கள் என்ன நினைப்பாங்க? பிறகு... ஜமீன்தாரோட அரண்மனை உங்க அழுகையைப் பார்த்துச் சந்தோஷப்படாதா?"

வீரய்யா அடுத்த நிமிடம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

11

ராகவராவ் சீரான மனநிலையுடன்தான் எல்லா விஷயங்களையும் தன் தந்தையிடம் சொல்லி அவனைப் புரிய வைத்தான். அவன் இதற்கு முன்பு ஒருமுறைகூட இந்த அளவிற்கு மனதைத் திறந்து ஆத்மார்த்தமாகத் தன் தந்தையிடம் பேசியதே இல்லை. தான் நினைத்திருந்தது, செய்ய விரும்பியது போன்ற எல்லா விஷயங்களையும் அவன் வீரய்யாவிடம் விளக்கமாகச் சொன்னான்.

பட்டுச்சட்டை விஷயம் தன் தந்தையை அதிகம் வேதனைப்படுத்தக் கூடிய ஒன்று என்பதால் ராகவராவ் ஹைதராபாத் சம்பவங்களை மட்டும் கூறினான். பட்டுச் சட்டைக்காக அவனுடைய இதயம் இந்த அளவிற்கு ஆசைப்பட்டது எதற்காக? அப்படிப்பட்ட ஒரு சட்டையை வாங்க வேண்டும் என்பதற்காக அவன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தான்! பிறகு என்னவெல்லாம் நடந்தது? ராகவராவின் அந்த ஆசை ஒருமுறை கூட நிறைவேறவில்லை. ஒருவேளை அது ஒரு சாதாரணமான சம்பவமாக இருக்கலாம். மிகவும் சிறிய ஒரு விஷயம், ஒரு பட்டுச் சட்டை என்பது. வயலில்- விளைச்சல்- உயிர் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு சிரிப்பு- அழகான இந்தப் பிரகாச ஒளிக்கதிர்களுக்காக அடிமைகளின் உலகத்தில் எந்த அளவிற்குப் பெருமூச்சுகள் கேட்கின்றன! இல்லாமை, வறுமை ஆகியவை நிறைந்திருக்கும் அந்த வறண்ட பூமியில் பசுமை முளைக்க வேண்டும். அந்தச் சூழ்நிலையை உண்டாக்குவதற்காக வானத்திலிருந்து யாரும் இறங்கிவர மாட்டார்கள். அடிமைகள்தான் அந்த வேலையை ஏற்றெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரமாயிரம் வருடங்களாக இருந்து வந்ததைப் போல பட்டு ஒரு பக்கத்திலும் நிர்வாணமும் அவமானமும் இன்னொரு பக்கத்திலும் இருந்த வண்ணம் இருக்கும்.

வீரய்யா மிகவும் கவனமாகத் தன் மகன் சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டிருந்தான். தந்தையும் மகனும் எல்லாவற்றையும் மறந்து பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டால் அவர்கள் சிறையறையில் இல்லை- அதற்குப் பதிலாகக் கிராமத்திலுள்ள மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற மற்றவர்கள் நினைத்து விடுவார்கள்.

அப்போது யாரோ சிறையறையின் கதவைத் தட்டினார்கள். ராகவராவும் வீரய்யாவும் திடுக்கிட்டு பார்த்தார்கள்.

வயதான வார்டன் கதவுக்கருகில் நின்றிருந்தான்.

"என் வேலை நேரம் இப்போ முடியப்போகுது. நீங்க இப்போ கிளம்பணும். புது வார்டன் பார்த்தா தேவையில்லாத பிரச்சினைகள் வரும். அவன் ஈவு, இரக்கமே இல்லாத ஒரு மனிதன்..."

வீரய்யா எழுந்தான். அவன் கண்களில் நீர் வழிய தன் மகனைப் பார்த்தவாறு சொன்னான்: "நான் கிராமத்துக்குப் போறேன். நாளைக்குக் காலையில திரும்பவும் வருவேன்!"

"கிராமத்துக்கு ஏன் போகணும்? இந்த நகரத்துல எங்கேயாவது இல்லாட்டி சிறை வாசல்ல படுத்துக்க வேண்டியதுதானே?"

"இல்ல. நான் கிராமத்துக்குப் போகணும். காலையில வர்றேன். இன்னைக்கு ராத்திரி முழுவதும் நடக்க முடிஞ்சா நல்லது. அப்படி நடந்தா..."

வீரய்யா தான் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்காமலேயே அங்கிருந்து கிளம்பினான். அவன் கிராமத்தை அடைந்தபோது எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.


புன்னம்மாவின் குடிசையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குடிசையின் வாசல் கதவு திறந்தே கிடந்தது. வீரய்யா புன்னம்மாவின் குடிசைக்குள் நுழைந்தான். இரவின் அந்த நேரத்தில் கூட அவள் தூங்காமல் விழித்திருப்பதைப் பார்த்த வீரய்யா ஆச்சரியப்பட்டான். அவளுடைய கண்களில் தூக்கம், பயம் ஆகியவற்றின் நிழல் படர்ந்திருந்தது!

வீரய்யாவைப் பார்த்ததும் புன்னம்மா கட்டிலை விட்டு வேகமாக எழுந்து அருகில் வந்தாள். பிறகு நான்கு பக்கங்களிலும் பார்த்துக்கொண்டே தாழ்ந்த குரலில் கேட்டாள்: "என் மகன் எப்படி இருக்கான்?"

"நல்லா இருக்கான். அவன் உங்களை விசாரிச்சதா சொல்லச் சொன்னான்."

"என் தங்கமகன் நீண்ட காலம் வாழட்டும்!"- புன்னம்மா என்னவெல்லாமோ சொன்னாள். அதற்குப் பிறகு அவள் அமைதி காத்தாள். பிறகு எந்தவொரு காரணமும் இல்லாமல் உரத்த குரலில் சிரித்தாள்.

வீரய்யா பதைபதைப்புடன் அவளையே பார்த்தான்.

சிறிது நேரம் சிரித்தபிறகு புன்னம்மா வீரய்யாவை உற்றுப் பார்த்தவாறு சொன்னாள்: "வீரய்யா, என் புத்திக்கு எந்தவொரு பிரச்சினையும் உண்டாகல. நான் பைத்தியம் இல்ல. ஆமா... அப்பப்போ என் மனசு விழிப்படையும். பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். அப்போ சிரிக்காம என்னால இருக்க முடியாது. அப்படி வாய்விட்டு சிரிக்கலைன்னா, நான் செத்துப்போயிடுவேன்டா..."- புன்னம்மா தொடர்ந்து சொன்னாள்:

"வீரய்யா! உன்னை எனக்கு நல்லாத் தெரியும். உண்மையா சொல்லப்போனா உன் மனசில ஏதோ ஒரு விஷயம் மறைஞ்சிருக்கு. அது உன்னை ரொம்பவும் வேதனைப்படுத்திக்கிட்டு இருக்கு. அது என்னன்னு சொல்லு..."

"ஒண்ணுமில்ல, அம்மா. என்னை ஒரு சிந்தனையும் ஆட்டிப் படைக்கல..."- வீரய்யா பதைபதைப்புடன் சொன்னான்.

"உண்மையாகவே இருக்கு. அது என்னன்னு சொல்லு. இல்லாட்டி நான் சத்தம் போட்டு சிரிப்பேன்."

"அம்மா! என் மகன் பட்டுச்சட்டை போட ஆசைப்படுறான்னு என் மனசுல தோணுது!"

"பட்டுச் சட்டையா?"- புன்னம்மா உரத்த குரலில் சிரித்தாள்: "பட்டுச் சட்டையா? நீ என்ன சொன்னே? ராகவராவ் உன்கிட்ட நேரடியா அதைச் சொன்னானா?"

"இல்ல. அவன் என்கிட்ட ஒண்ணும் சொல்லல. நானே அப்படி இருக்குமோன்னு யூகிச்சேன். அவனுக்கு இந்தச் சமயத்துல ஒரு பட்டுச்சட்டை அணிவிக்க முடிஞ்சா மரண சமயத்துல அவன் பெருசா சந்தோஷப்பட்ட மாதிரி இருக்கும்..."

அதைக் கேட்டு புன்னம்மா உரத்த குரலில் சிரிக்க ஆரம்பித்தாள். "பட்டுச்சட்டை... ஹ... ஹ... பட்டுச்சட்டை! நீ ஒரு தமாஷ் சொன்னேல்ல? ஹ... ஹ... வீரய்யா, நீ இப்பவும் முட்டாள்தான். பட்டுச்சட்டை... ஹ... ஹ... இந்தக் கிராமத்துல... யார்கிட்ட பட்டுச்சட்டை இருக்கு? வீரய்யா, நீ ஒரு வடிகட்டின முட்டாள்..."- புன்னம்மா சொன்னாள்.

வீரய்யா மரியாதை தொனிக்கும் குரலில் சொன்னான்: "புன்னம்மா! உங்களுக்குப் புரியல. உங்களுக்கு எப்படி ஒரு தகப்பனோட மனநிலையைப் புரிஞ்சுக்க முடியும்? அன்னைக்கு நடந்த சம்பவத்தை இப்பவும் நான் மறக்காம ஞாபகத்துல வச்சிருக்கேன். நான் ஓலைக்குடை வாங்கிக் கொடுத்த நாளன்று அவன் எவ்வளவு சந்தோஷமா இருந்தான் தெரியுமா? அவன்கிட்ட இருந்த ஒவ்வொரு விளையாட்டுச் சாமான்களையும் நான் இப்போ நினைச்சுப் பார்க்கிறேன். அடிமைகள் தங்கள் பிள்ளைகளுக்கு அவங்க பிரியப்படுற விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடியாதுன்ற விஷயம் உங்களுக்கத் தெரியும்ல! அடிமைகளோட பிள்ளைகள் ரொம்பவும் குறைவான விளையாட்டுச் சாமான்களைத்தான் பார்த்திருப்பாங்க. பலவகைப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வைத்து விளையாடணும்ன்ற ஆசையை மனசில வச்சிக்கிட்டே அவங்க அடங்கிப் போயிடுறாங்க. இப்போ இருபத்துரெண்டு வயசு நடக்குற என் மகன் பட்டுச் சட்டையைப் பற்றி சொன்னப்போ அவனோட கண்கள்ல அவன் சின்னப்பையனா இருந்தப்போ பார்த்த அந்தப் பிரகாசத்தைப் பார்த்தேன். அந்த ஆசை அவனோட அப்பனோட இதயத்துக்குள்ள நுழைஞ்சிருச்சி. புன்னம்மா, நீங்களும் ஒரு தாய்தான். உங்க மனசுல இந்த மாதிரி ஆசை இல்லியா? கிராமத்துல யார்கிட்ட பட்டுச்சட்டை இருக்கு?"

புன்னம்மா மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தாள். அவளுடைய சிரிப்புச் சத்தத்தை கேட்டு அருகிலிருந்த விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் குடிசைகளை விட்டு வெளியே வந்தார்கள். வீரய்யாவைப் பார்த்ததும் அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. அவர்கள் கேட்டார்கள்: "என்ன விஷயம்? பைத்தியக்காரி ஏன் இப்படிச் சிரிக்கிறா?"

"பைத்தியம் எனக்கா? தன் மகனுக்குப் பட்டுச் சட்டை வேணும்னு சொல்றவனுக்கா?"- புன்னம்மா கேட்டாள்.

வீரய்யா தன் ஊர்க்காரர்களிடம் எல்லா விஷயத்தையும் மனம் திறந்து சொன்னான்.

ஒரு விவசாயி பயம் கலந்த குரலில் சொன்னான்: "வீரய்யா! என்னால் உன் மனநிலையைப் புரிஞ்சிக்க முடியுது. ஆனால், இந்தச் சமயத்துல சட்டைக்கு எங்கே போறது? யார்கிட்ட சட்டை இருக்குன்னு கூட நமக்குத் தெரியாதே. காலையில ராகவராவைத் தூக்குல போட்டுடுவாங்க. நீங்க என்னடான்னா இப்போ பட்டுச் சட்டையைத் தேடிக்கிட்டு இருக்கீங்க. தகப்பன் தனக்காக இந்தக் கடைசி நிமிடத்துல பட்டுச் சட்டைக்காக அலையிறீங்கன்ற விஷயம் ராகவராவுக்குத் தெரிஞ்சா, அவன் நிச்சயம் கோபப்படமாட்டானா?"

"கவுரம்மாவோட கல்யாணம் அடுத்த மாதம் நடக்குது. அவ கல்யாணத்துக்கு நல்ல பட்டுத்துணிகள் ஏதாவது வாங்கியிருக்கீங்களான்னு அவளோட அப்பன்கிட்ட கேட்டு பார்ப்போம். இருந்தா, உங்க ஆசை நிறைவேறின மாதிரி இருக்கும்." இன்னொரு ஆள் சொன்னான்.

"நீங்க ஒரு முட்டாள் மகளுக்காகப் பட்டுத்துணி வாங்குறதுக்கு கவுரம்மாவோட அப்பன்கிட்ட காசு இருக்கா என்ன?"- மூன்றாவது ஆள் கேட்டான்.

"கேட்டுப் பார்க்குறதுல என்ன தப்பு இருக்கு?" வீரய்யா கோபத்துடன் சொன்னான்.

சிலர் ஒன்று சேர்ந்து வீரய்யாவின் கருத்துப்படி கவுரம்மாவின் வீட்டுக்குப் போக முடிவெடுத்தார்கள்.

"இந்த ஒரு ராத்திரி நேரத்துல நீங்க கூட்டமா கூடி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு போலீஸ்காரங்க கேட்டா, என்ன சொல்வே?"- ஒரு கிழவன் கேட்டான்.

"அதை அப்போ பார்ப்போம். இப்போ நாம கவுரம்மாவோட வீட்டுக்குப் போவோம்." வேறொரு ஆள் சொன்னான்.

அவர்கள் கடந்து சென்ற கிராமத்திலிருந்த விவசாயிகள் அனைவரும் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்கள். அவர்களும் வீரய்யாவையும் மற்ற விவசாயிகளையும் பின்பற்றி நடக்க ஆரம்பித்தார்கள். பட்டுச்சட்டை விஷயத்தை அருகிலிருந்த கிராமங்களைச் சேர்ந்த எல்லோரும் அறிந்தார்கள். அவர்கள் கவுரம்மாவின் வீட்டை அடைவதற்கு முன்பே, விஷயத்தை அந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் அறிந்திருந்தார்கள். கவுரம்மாவின் தந்தை கைகளைக் குவித்து கூப்பியவாறு சொன்னான்: "கவுரம்மாவின் கல்யாணத்துக்காக வாங்கிய துணிகள் முழுவதும் கட்டிலுக்கு மேலதான் வைக்கப்பட்டிருக்கு. அதுல ஒண்ணு கூட பட்டுத்துணி இல்ல. என் வீட்டை வேணும்னா கூட சோதிச்சுப் பாத்துக்குங்க. ராகவராவுக்காகப் பட்டுத்துணி என்ன, என் உயிரையே கூட கொடுக்க நான் தயாரா இருக்கேன்."


அவர்கள் கவுரம்மாவின் வீட்டை விட்டு வெளியே வந்து மற்ற வீடுகளில் கேட்டுப் பார்த்தார்கள். குறுகிய நேரத்திற்குள் விவசாயிகள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று துணிகளைச் சோதித்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கிருந்தாவது ஒரு பட்டுச்சட்டை கிடைத்தாக வேண்டும்! வயதான கிழவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். இளைஞர்களும் அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தாலும், அவர்களுக்கு இதில் பெரிய அளவில் ஆர்வம் உண்டாகவில்லை. வீரய்யாவின் அளவுக்கு மீறிய ஆசை என்று மட்டுமே அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி மனதில் நினைத்தார்கள். இதற்கிடையில் வண்ணான் ரங்கடு ஒரு கட்டுத் துணிகளுடன் ஓடி வந்தான். அவன் துணிக்கட்டை வீரய்யாவிற்கு முன்னால் வைத்து விட்டுச் சொன்னான்: "இதுல ரெண்டு பட்டுச் சட்டைகள் இருக்கு. ஒரு சட்டை ஜகன்னாதரெட்டிக்குச் சொந்தமானது. இன்னொரு சட்டை பிரதாபரெட்டியோடது."

அதைக் கேட்டு வீரய்யா வெறுப்புடன் சொன்னான்: "என் மகன் ஜமீன்தார்களோட பழைய சட்டையை அணிவதா? ரங்கடு! நீ என்ன சொல்றே?"

ரங்கடு கவலையுடன் சொன்னான்: "இந்தக் கிராமத்துல வேற யார்கிட்டயும் பட்டுச்சட்டை இல்ல..."

வீரய்யா பதிலெதுவும் சொல்லவில்லை. கூட்டத்திலிருந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். வீரய்யா திடீரென்று எதையோ நினைத்தான். அடுத்த நிமிடம் அவன் தன்னுடைய குடிசையை நோக்கி ஓடினான். அங்கு சென்று பெட்டியிலிருந்த ஆடைகள் முழுவதையும் எடுத்து வெளியே போட்டான். பெட்டியின் அடியில் ராகவராவுடைய தாயின் திருமண ஆடைகள் இருந்தன. மற்ற எல்லா ஆடைகளும் பயன்படுத்தப்பட்டு பழையனவாக ஆகிப்போயிருந்தாலும், தலையில் அணியும் ஒரு பட்டுத்துணி மட்டும் பாழடையாமல் அப்படியே இருந்தது. அதை ராகவராவின் தாய் தன் மகன் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிற்குப் பரிசாகத் தரவேண்டும் என்பதற்காகப் பாதுகாத்து வைத்திருந்தாள். அவள் அதை அவ்வப்போது வெளியே எடுத்து ராகவராவிடம் காட்டிக் கூறுவாள்: "எந்த அடிமை வேலை செய்ற ஆளோட பொண்டாட்டிக்கிட்டயாவது இப்படிப்பட்ட பட்டுத்துணி இருக்கா? இந்தத் துணியை நான் உனக்கு வரப்போற பொண்டாட்டிக்குத் தரப்போறேன்."

வீரய்யா மிகவும் கவனமாகப் பெட்டியின் அடியிலிருந்த அந்தப் பட்டுத் துணியை வெளியே எடுத்தான். சிவப்பு நிறத்திலிருந்த அந்தப் பட்டுத்துணி விளக்கு வெளிச்சத்தில் மின்னியது. அங்கு கூடி நின்றிருந்தவர்கள் சந்தோஷத்தால் ஆர்ப்பரித்தார்கள். தாங்கள் ஏதோ போரில் வெற்றி பெற்று விட்டதைப் போல் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

"இந்தத் துணியை வைத்து சட்டை தைக்க முடியுமா?" வீரய்யா கேட்டான்.

"ஏன் முடியாது? தையல்காரன் சோமப்பனை உடனே அழைச்சிக்கிட்டு வா நேரம் அதிகம் இல்ல."- ஒரு விவசாயி சொன்னான்.

அவன் சொன்னதுதான் தாமதம்- சோமப்பனை அழைத்து வருவதற்காக ஒரு ஆள் போனான். அவன் அந்த ஆளை அழைத்துக்கொண்டு வந்தான்.

துணியை விரித்துப் பார்த்துவிட்டு சோமப்பன் சொன்னான்: "இதை வச்சு சட்டை தைக்க முடியாது. கை இல்லாத சட்டை தைக்கலாம்."

"அதுபோதும். ஆனால், சீக்கிரம் தச்சுத் தரணும்! - இளைஞர்கள் வேகம் காட்டினார்கள்.

"தையல் இயந்திரம் வீட்டுல இல்ல இருக்கு?"- சோமப்பன் சொன்னான்.

ஒரு விவசாயி தையல் இயந்திரத்தை எடுப்பதற்காகச் சோமப்பனின் வீட்டிற்கு ஓடினான். இதற்கிடையில் அவன் பட்டுத்துணியைப் பரிசோதித்துப் பார்த்தான். ஒன்றிரண்டு இடங்களில் சிறிய துவாரங்கள் இருந்தன. சிறு பூச்சிகள் உண்டாக்கியவை அவை.

"இனி என்ன செய்றது?"- வீரய்யா மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"பரவாயில்ல. துவாரங்களை நீக்கிட்டு நான் பட்டுத்துணியைக் கிழிச்சி தைக்கிறேன். ராகவராவ் போடப்போற சட்டையில துவாரங்கள் இருக்கக்கூடாது."

சோமப்பன் சொன்னான்.

சோமப்பன் மிகவும் கவனமாக அந்தத் துணியைக் கிழித்து சட்டை தைக்க ஆரம்பித்தான். கிராமத்திலுள்ள முக்கால்வாசி மக்கள் அப்போது அங்கு குழுமியிருந்தார்கள். இந்த அளவிற்கு விலை மதிப்புள்ள துணியை வைத்து சட்டை தைப்பதை இதற்கு முன்பு அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறை கூட பார்த்ததில்லை. பட்டுத் துணியின் ஒவ்வொரு இழையுடனும் தங்களின் மூச்சுக் காற்றையும் சேர்த்து தைப்பதைப் போல் அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களின் எல்லாவித ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பட்டுத்துணியின் மடிப்புகள் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. தைப்பதற்கு இடையில் சோமப்பன் அந்தப் பட்டுத் துணியைச் சிறிது கிழித்தான். அப்போது அங்கு கூட்டமாகக் கூடியிருந்த மனிதர்களின் நாக்குகள் ஒரே நேரத்தில் 'உச்' கொட்டின. யாரோ தங்களுடைய இதயத்தைக் குத்திக் கிழிப்பதைப் போல் அவர்கள் நினைத்தார்கள்.

சோமப்பன் மிகவும் கவனமாகச் சட்டையைத் தைக்க முயன்றான்.

"சோமப்பா, சீக்கிரம் சட்டையைத் தைத்து முடி. நாங்க அதுக்கு மேல பூக்களைப் பின்னணும்.- ஒரு பெண் சொன்னாள். இளைஞர்கள் ஆச்சரியத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்தார்கள்.

"மகளிர் சங்கமும் ராகவராவிற்கு மரியாதை செலுத்தும்!"- அந்தப் பெண் சொன்னாள்.

பட்டுச்சட்டை வீரய்யாவின் மகனுக்கு மட்டும் ஆனது என்ற நிலை மாறி முழு கிராமத்தின் மக்களுக்கும் சொந்தமானது என்றாகிவிட்டது. ஐந்து பெண்கள் பாட்டுப் பாடியவாறு அதன்மேல் பூக்களைப் பின்னினார்கள். சட்டையின் முன்பக்கத்தின் இடதுபாகத்தில் அரிவாள், சுத்தியல் சின்னத்தை அவர்கள் பின்னினார்கள். இதற்கிடையில் மற்ற பெண்கள் பூமாலை கோர்த்தார்கள். பிறகு சட்டையைப் பூமாலையாய்க் கட்டினார்கள்.

எல்லாம் முடிந்தது. பட்டுத் துணிக்கு இஸ்திரி போடவில்லை என்ற விஷயத்தை யாரோ ஞாபகப்படுத்திச் சொன்னார்கள். சோமப்பனிடம் இஸ்திரி பெட்டி இல்லை. வண்ணானிடமிருந்த இஸ்திரிபெட்டி ரிப்பேர் செய்யப்படுவதற்காக நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. ஜமீன்தாருடைய தையல்காரனிடம் ஒரு இஸ்திரிபெட்டி இருந்தது. அவனுடைய வீடு ஜமீன்தாருடைய வீட்டுக்குப் பின்னால் இருந்தது. அங்கு யார் செல்வது? அங்கு போலீஸ்காரர்கள் காவல் காத்து நின்றிருந்தார்கள். அவர்கள் யாருடைய காலடிச் சத்தத்தையாவது காதில் கேட்டால் போதும், துப்பாக்கியைத் தூக்கி விடுவார்கள். இரண்டு இளைஞர்கள் முன்னால் வந்து சொன்னார்கள்: "நாங்க போயி இஸ்திரிபெட்டி வாங்கிட்டு வர்றோம்."

அவர்கள் போன பிறகு அகந்து சொன்னான்: "காட்டுக்கும் கிராமங்களுக்கும் செய்தியைச் சொல்லி அனுப்பணும். நாம பட்டுச் சட்டையை ஊர்வலமா கொண்டுபோயி சிறையில தரணும்."

சிறிது நேரத்திற்குள் கிராமத்தின் மொத்த ஆட்களும் மண்டபத்தில் ஒன்று சேர்ந்தார்கள். பந்தத்தை எரிய வைத்து கொள்கைகளை முழங்கினார்கள். இப்போது அவர்களுக்கு ஜமீன்தாரிடமோ, அவருடைய பணியாட்களிடமோ கொஞ்சமும் பயமில்லை. இளைஞர்கள் இஸ்திரிபெட்டி கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவனுடைய முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிக் குண்டுபட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவனும் ஆவேசம் பொங்க கொள்கை முழக்கம் செய்தான்.


கொள்கை முழக்கக்குரல் மற்ற கிராமங்களையும் ஆவேசம் கொண்டு எழச்செய்தது. அவர்களும் அதே கொள்கை முழக்கங்களைப் பின்பற்றி கூறினார்கள். இஸ்திரி போட்ட பட்டுச் சட்டையைத் திரும்பவும் பூமாலை கொண்டு கட்டினார்கள். அப்போது பத்திபாடி கிராமத்திலிருந்து வாத்திய, மேளக்காரர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அன்றைய இரவை யாராலும் மறக்க முடியாது. அன்று இரவு அய்யாயிரம் விவசாயிகள் பந்தம் கொளுத்தி, கொள்கைகளை முழங்கினார்கள். ஜமீன்தாருடைய அரண்மனைக்கு முன்னால் கோஷங்களை முழங்கியவாறு அவர்கள் ஊர்வலமாக நடந்து சென்றார்கள். அந்தச் சமயத்தில் அரண்மனையில் யாரும் இல்லை. ஜமீன்தாரும் அவருடைய ஆட்களும் அரண்மனையை விட்டு மீண்டும் ஓடிப்போயிருந்தார்கள்.

ஊர்வலம் கடந்து போய்க்கொண்டிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் ஊர்வலத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கொள்கை முழக்கம் காற்றைக் கிழித்துக் கொண்டு எதிரொலித்தது. ஊர்வலம் சிறையின் வெளிவாசலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

ராகவராவ் அப்போது வாழ்க்கையின் கடைசி இரவை சிறையில் கழித்துக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரம் சென்றால் பொழுது விடிந்துவிடும்.

ராகவராவ் பொழுது புலர்வதற்கு முன்பு அந்தப் பட்டுச் சட்டையைக் கையில் எடுத்தபோது ஆச்சரியத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். ஆவேசத்தாலும், மகிழ்ச்சியாலும் அவனுடைய கண்கள் விரிந்தன. தன் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு அந்தச் சட்டையைத் தயார் பண்ணினார் என்பதையும் பத்தாயிரம் கிராம மக்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்து அதை அங்கு சேர்த்தார்கள் என்பதையும் அறிந்தபோது தனக்குள் உண்டான சந்தோஷத்தை ராகவராவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனுடைய முகத்தில் பிரகாசமான எதிர்காலம், ஒளிமயமான இலக்கு ஆகியவற்றின் அறிகுறி தெரிந்தது. அவன் ஒரு குழந்தையைப் போல தன் தந்தையின் மார்பில் முகத்தைப் பதித்தான். தந்தை ராகவராவின் தலையை வருடிக் கொண்டிருந்தான்.

"நேரம் இன்னும் அதிகம் ஆகல. நீ இந்தச் சட்டையை அணியணும். இது என்னோட விருப்பம் மட்டுமில்ல. முழு தெலுங்கானாவோட விருப்பமும் இதுதான். வேணும்னா இந்தச் சட்டைக்கு மேலே சிறை ஆடையை அணிஞ்சிக்கோ!"- வீரய்யா சொன்னான்.

ராகவராவ் சிரித்துக்கொண்டே சிறை ஆடையைக் கழற்றிவிட்டு, மிகுந்த ஆர்வத்துடன் அந்தப் பட்டுச் சட்டையை அணிந்தான். வீரய்யா அதை மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு நின்றிருந்தான். சிவப்பு நிற பட்டுச்சட்டையை அணிந்த பிறகு ராகவராவிற்குத் தோன்றியது இததான். தான் அணிந்திருப்பது வெறும் பட்டுச் சட்டை அல்ல. தங்களுடைய போராட்டத்தின் சின்னமும் மக்களின் கொடியும் கூட அதுதான் என்று அவன் நினைத்தான். சொந்த இரத்தத்தால் தன்னுடைய உடலை அவர்கள் எழுச்சி பெறச் செய்திருக்கிறார்கள். சொந்த வயல்களால் உடலை மறைத்திருக்கிறார்கள். தான் அணிந்திருப்பது தன் தாய், தந்தையின் பெருமைக்குரிய சின்னம் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அந்தச் சட்டையின் புனிதமும் அழகும், மரக்கிளைகளில் ஊர்ந்து செல்லும் பட்டு நூல் புழுக்களுடைய தியாகத்திற்கு நிகரானவை. மானிட இதயத்தில் உதயமான புதிய லட்சியங்களின், எதிர்பார்ப்புகளின் அணிகலன் அது. அதேபோல இளம்பெண்களின் மென்மையான கைகள் சுற்றுகிற சர்க்காவிற்கு நிகரானது அது. ராகவராவ் பட்டுச்சட்டை மீது தன் விரல்களால் தடவியவாறு தன் தந்தையை உற்றுப் பார்த்தவாறு என்னவோ சிந்தனையில் மூழ்கினான். அதிகாலை சூரியன் இரவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. அந்த அடியின் தீவிர விளைவால் சிறையின் இரும்பு அறைகள் சூரியனின் கதிர்கள் பட்டு காணாமல் போயின. ஒன்றிரண்டு சிறையறைகள் மட்டும் எப்படியோ மீதமிருந்தன. தாயின் புடவை முந்தானைக்கு அடியிலிருந்து குழந்தை முகத்தை வெளியே நீட்டி கண்களைத் திறந்து பார்ப்பதைப் போல ஆகாயத்திலிருந்து சூரியன் சிறைக்குள் தன்னுடைய கதிர்களைப் பாய்ச்சியது. ராகவராவ் விசிலடித்தவாறு தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சொன்னான்: "அப்பா, பாருங்க! சிறையறைகளால் கூட சூரியனைத் தடுக்க முடியல."

வீரய்யாவின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணீரை அவன் துடைக்கவில்லை. புனிதமான கண்ணீர் தன் சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வழியட்டும் என்று வீரய்யா வெறுமனே அதை விட்டு விட்டான்.

சிறை அதிகாரிகள் சூழ தன்னுடைய மகன் ராகவராவ் தூக்கு மரத்தை நோக்கி நடந்து போவதை வீரய்யா பார்த்தான். கோஷங்களுடன் ஊர்வலமாக வந்த எண்ணற்ற கிராம விவசாயிகளின் 'ஜெயில் மார்ச்' பாடல் சிறையின் சுவர்களையும் வெளி உலகத்தையும் அதிர வைப்பதாக இருந்தது.

"பார்...

முழு தெலுங்கானாவும் உயிர்த்தெழுந்திருக்கிறது.

தபலா ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!

வெற்றி முழக்க ஊர்வலத்தின் வழியைக் காட்டுங்கள்!

வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரட்டும்!

ஒன்று சேருங்கள்! ஒன்று சேருங்கள்

ஆந்திராவின் பிள்ளைகளே

ஒன்று சேருங்கள்!"

சிறைக்கு வெளியிலிருந்து ஒலித்த அந்தப் பாடலை வீரய்யாவின் உதடுகளும் உச்சரித்தன. அந்தப் பாடல் வீரய்யாவின் நம்பிக்கையையும், லட்சியத்தையும் மேலும் பலம் கொண்டதாக ஆக்கின. ஆந்திராவில் விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரை அவர்களின் உறுதி படைத்த லட்சியங்களுக்கும் வெற்றிகளுக்கும் பிரகாசக் குறைவு உண்டாகாது. பரம்பரை பரம்பரையாக அவர்களின் பிள்ளைகள் வழியே அந்தக் கொள்கைகளும், லட்சியங்களும் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர்களுடைய கிராமங்களுக்கு இனியொருமுறை தேஷ்முக்மார்கள் திரும்பி வரப்போவதில்லை!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.