
நான் ஹரியின் சினேகிதியாக மாறியபோது அவன் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி மனம் திறந்து சொல்ல ஆரம்பித்தான். அப்படி பல விஷயங்களைப் பற்றியும் என்னிடம் பேசுவதன் மூலம் ஒருவகை நெருக்கத்தை இந்த உறவில் தான் வெளிப்படுத்துவதாக அவன் உணர்ந்தான். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவன் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களைக் கேட்பதற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் அவன் காதலியாகவோ மனைவியாகவோ ஆக வேண்டும் என்றும் துடிக்கவில்லை.
எந்த விஷயத்தையும் மிகவும் மெதுவாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனநிலை கொண்டவன் அவன். ஒரு நேர சாப்பாட்டை உட்கொள்வதற்கு அவன் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் செலவிடுவான். ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லி என்னை அவன் அழைப்பதுண்டு. உடன் பணியாற்றும் வேறு எந்தப் பெண்ணையும் அவன் இப்படி தன்னுடன் வந்து சாப்பிட வேண்டும் என்று அழைப்பதில்லை. அவன் என்னை மட்டும் அழைத்து என்னுடன் அமர்ந்து சாப்பிட விருப்பப்பட்டதைச் சொல்லி பல நேரங்களில் என்னுடன் பணியாற்றுபவர்கள் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். ஹரியின் இலக்கு என்னைத் திருமணம் செய்வதுதான் என்று அவர்களில் சிலர் கூறினார்கள்.
"உஷா டெல்லியில் பிறந்து வளர்ந்தவ. அதனாலதான் ஹரி உஷாவை மட்டும் தனியா அழைச்சிட்டுப் போறான். நாங்க எல்லாரும் சாதாரண கிராமப் பகுதிகள்ல இருந்து வந்தவங்க. கிராமங்கள்ல பிறந்து வளர்ந்து ஒழுங்கா படிச்சதை மட்டும் வச்சுக்கிட்டு திருவனந்தபுரத்துல வேலை பார்க்குறவங்க நாங்க..." ருக்மணி ஒருநாள் சொன்னாள்.
"ஒரு தனிப்பட்ட நாகரீகம்னு சொல்ற மாதிரி ஹரிக்கிட்ட அப்படியொண்ணும் கிடையாது"- நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
ஹரி திருவனந்தபுரத்தில் பிறந்து, அங்கேயே கல்வி கற்று, தானே வரைபடம் போட்டுக் கொடுத்து கட்டப்பட்ட வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு திருமணமாகாத இளைஞன். அதனால்தானோ என்னவோ அவனுடன் பேசுவதற்கு என்னுடன் பணியாற்றும் திருமணமாகாத இளம்பெண்கள் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
மது அருந்தும் பழக்கமோ, காபி குடிக்கும் பழக்கமோ எதுவுமே இல்லாதவன் ஹரி. கன்னாபின்னாவென்று தேவையில்லாமல் செலவழிக்காமல் ஒவ்வொரு மாதமும் கனரா வங்கியில் பணத்தைச் சேமித்துக் கொண்டிருப்பவன் அவன். வரதட்சணையும் காரும் மற்ற பொருட்களும் தந்து ஹரியை மருமகனாக ஏற்றுக்கொள்ள பணக்காரர்களான நாயர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவனோ திருமணமே செய்து கொள்ளாமல், சுதந்திர மனிதனாக உலவிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு பகல் உணவு சாப்பிட என்னை அழைத்துச் சென்றிருந்தான்.
"இங்கே ஒவ்வொரு உணவுப் பொருளையும் கொண்டு வந்து வைக்கிறதுக்கு ஏகப்பட்ட நேரம் ஆகும் உஷா. அதனாலதான் உன்னை நான் இந்த ஹோட்டலுக்கு அழைச்சிட்டு வந்தேன். கொஞ்சநேரம் மனசை விட்டு ஏதாவது பேசிக்கிட்டு இருக்கலாமேன்னு நினைச்சேன்."- ஹரி எனக்காக ஒரு நாற்காலியைப் பின்னால் இழுத்தவாறு சொன்னான்.
"நல்ல வியாபாரம் நடக்குற இடமா பார்த்துப் போனா நம்மால இப்படி உட்கார்ந்து பேச முடியாது. உஷா, உன் கிட்ட சில முக்கியமான விஷயங்களை நான் பேச விரும்புறேன்" என்றான் ஹரி.
"என்னைத் திருமணம் செய்ய விருப்பப்படுற விஷயமா இருந்தா ஆரம்பத்துலயே அதை நான் நிராகரிச்சுடறேன். அதை மட்டும் புரிஞ்சுக்கங்க ஹரி. உங்களைப் போல ஒரு ஆளை என் கணவனா என்னால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது" என்று நான் சொன்னேன்.
"என்னைப் பற்றி இதுதான் உன் மனசுல இருக்குற எண்ணம்னா எதற்கு என்கூட நீ திரைப்படம் பார்க்கவும், ஹோட்டல்ல சாப்பிடவும் வரணும்?"- ஹரி கேட்டான். அவன் உதடுகள் லேசாகத் துடித்தன. கோபத்தால் அவனுடைய முகத்தில் இருக்கும் தசைகள் இறுகியதைப் போல் எனக்குத் தோன்றியது.
"நான் திருவனந்தபுரத்துல வளர்ந்தவ இல்ல. இதைவிட பெரிய நகரத்துல வளர்ந்தவ. ஒரு ஆளுகூட நான் திரைப்படம் பார்க்கவோ ஹோட்டல்ல சாப்பிடவோ போறேன்னா அதற்காக என்னை அந்த ஆளுக்கு எழுதிக் கொடுத்திடணும்னு அவசியம் ஒண்ணும் இல்ல" - நான் சொன்னேன்.
ஹரி மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த பூக்களை தன் விரல்களால் தடவிக் கொண்டிருந்தான். அவன் உணர்ச்சி வசப்பட்டு அமர்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
"அப்படின்னா... உஷா, உன்னை நான் வீட்டுல கொண்டு போயி இப்பவே விட்டுர்றேன். என் மேல உனக்கு அந்த அளவுக்கு வெறுப்பு இருக்குறதா இருந்தா, உன் நேரத்தை நான் ஏன் தேவையில்லாம பாழாக்கணும்?" என்றான் அவன்.
அதைக்கேட்டு நான் விழுந்து விழுந்து சிரித்தேன். "தாலி கட்டி உன் வீட்டுக்கு வர எனக்கு விருப்பமில்லைன்னு மட்டும்தான் நான் சொன்னேன், ஹரி... நம்மோட நட்பு இன்னைக்கோட முடிஞ்சு போகணும்னு ஒண்ணும் நான் சொல்லலியே." ஹரி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்.
"ஸாரி, உஷா, நான் என்னென்னவோ சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடு. மனசுல உண்டான ஏமாற்றத்துல வாய்க்கு வந்தபடி பேசிட்டேன். உஷா, உன்னை உன் எதிர்கால மனைவியா மனசுல நினைச்சு ஒண்ணரை வருஷமாச்சு. உன்னைப் பற்றி நான் என் தாய்கிட்டயும், சகோதரன்கிட்டயும்கூட பலமுறை பேசியிருக்கேன். நாம ரெண்டுபேரும் வேற வேற ஜாதியைச் சேர்ந்தவங்கன்றதைக் கூட அவங்க பார்க்கலைன்னு சொல்லிட்டாங்க. தாராவை மனைவியா அடைய முடியாத வேதனை உன்னை நான் பார்த்த பிறகுதான் எனக்கே தீர்ந்தது, உஷா" - ஹரி சொன்னான்.
நான் என் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவனிடம் விளக்க விரும்பவில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் தாரா மீது தனக்கிருந்த காதலை ஹரியே என்னிடம் மனம் திறந்து சொன்னான். அவன் செய்த மிகப்பெரிய தவறே அதுதான். தன்னுடைய முறைப் பெண்ணான தாராவுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்கும், கல்லூரிக்கும் ஒன்றாகப் போனது, அவளுடன் சேர்ந்து இளைஞர்கள் திருவிழாக்களில் பாடவும் ஆடவும் செய்தது, கடைசியில் அமெரிக்காவிலிருந்து வந்த மலையாளியான விஞ்ஞானியை அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானபோது தனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது- இப்படி எல்லா விஷயங்களையும் அவன் என்னிடம் கூறியிருந்தான். தாராவின் உடலழகைப் பற்றி அவன் விளக்கமாகக் கூறும்போது எனக்குப் பொதுவாக அவன்மேல் வெறுப்புத்தான் தோன்றும். அந்த அளவுக்குப் பேரழகியான தன்னுடைய காதலியை தன்னைவிட பணக்காரனாக இருந்தாலும் அழகில்லாத ஒரு மனிதனுக்கு தாராவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து தந்தபோது அவன் ஏன் பலமாக அதை எதிர்க்காமல் விட்டான்?
அவளைத் தொட்டதை மறப்பதற்கு தன்னுடைய கைகளுக்கு மூன்று வருடங்கள் ஆகின என்று ஒருமுறை அவன் என்னிடம் கூறியிருக்கிறான். அன்றே நான் தெளிவாக மனதிற்குள் தீர்மானித்து விட்டேன். ஹரியை என்னுடைய கணவனாக எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளவே கூடாது என்று. நான் அவன் அணைப்பில் இருக்கும் நிமிடத்தில் கூட அவன் தாராவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பான். அமைதியாக தன்னுடைய மனதிற்குள் யாருக்குமே தெரியாமல் என்னையும் தாராவையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பான். பன்னீர் பூவின் இதழ்களைப் போல மிகவும் மிருதுவாக இருக்கும் தாராவின் தோல் என்று ஒருநாள் என்னிடம் ஹரி சொன்னான். அவன் அப்படிச் சொன்னபோது நான் என்னுடைய கன்னங்களையும் கைகளையும் தடவிப்பார்த்துக் கொண்டேன். நிச்சயமாக என்னுடைய தோல் மலரின் மென்மையைக் கொண்டதாக இல்லவே இல்லை. என் தோலுக்கு அந்த மென்மைத்தனம் வரவும் வராது.
பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஹரி சொன்னான்.
"தாரா அமெரிக்காவுல இருந்து ஒரு மாத விடுமுறையில் இங்க வர்றா, அவ கூட அவளோட கணவன் ராமன் குட்டியும் வர்றான். தாராவோட அப்பா எழுதின உயிலைப் படிச்சு சொத்தைப் பிரிச்சு வாங்குறதுக்காக அவங்க வர்றாங்கன்னு நினைக்கிறேன். சித்தி மேல தாராவுக்கு பொதுவா நம்பிக்கை கிடையாது."
"நீங்க அவளை அஞ்சு வருஷத்துக்குப் பிறகு மீண்டும் பார்க்கப் போறீங்க. உங்க மகிழ்ச்சியில நானும் சேர்ந்துக்கறேன்"- நான் சொன்னேன்.
"நான் அவ மேல வச்சிருந்த உயர்ந்த எண்ணமும் பிரியமும் என்னை விட்டுப் போய் எவ்வளவோ நாட்களாயிடுச்சு. அவ ஒரு சுயநலம் கொண்ட பெண்ணா மாறிட்டா. என்கிட்ட சொன்ன உறுதி மொழிகளை காத்துல பறக்க விட்டுட்டா. எல்லாத்தையும் மறந்துட்டு, அவதான் பணக்காரனுக்கு மனைவியா புறப்பட்டுட்டாளே. அமெரிக்காவுக்கும் போன பிறகு, அவ தன்னோட அப்பாவுக்கு அஞ்சோ ஆறோ கடிதங்கள் மட்டுமே எழுதினா. அதுக்குப் பிறகு கடிதங்களோ, தொலைபேசியில் பேசுறதோ எதுவுமே இல்லாமப் போச்சு. அவங்க அப்பா உடல் நலம் பாதிக்கப்பட்டு ரொம்பவும் மோசமான நிலையில இருக்குறதா சொல்லி கடிதம் எழுதினப்போ கூட, அவக்கிட்ட இருந்து எந்தக் கடிதமும் வரல. இப்போ சொத்துல தன்னோட பங்கைப் பிரிச்சு வாங்குறதுக்காக வர்றா"- ஹரி சொன்னான்.
"திருமணம்ன்ற ஒண்ணு ஆயிட்டா பெரும்பாலான பெண்கள் இப்படித்தான். கணவர்கள்ன்ற வட்டத்துக்குள்ளயே முழுசா தங்களை நிறுத்திக்குவாங்க. கணவன் என்ன சொல்றானோ, அதன்படி தான் அவங்க நடப்பாங்க" என்று நான் சொன்னேன்.
"உஷா, உன்னால தாராவைப் புரிஞ்சிக்க முடியாது. அவ இன்னொருத்தர் சொல்றபடியெல்லாம் அனுசரிச்சுப் போகக் கூடியவ இல்ல. அவ சின்னக் குழந்தையா இருக்குறப்பவே, அவளோட அம்மா செத்துப் போயிட்டாங்க. அவளோட சித்தி அவள ரொம்பவும் அன்பா வளர்த்தாங்க. இருந்தாலும், அவங்களைப் பற்றி தாரா மற்றவங்கக்கிட்டஇல்லாத விஷயங்களையெல்லாம் சொல்லி அதை வச்சு தன்மேல எல்லாருக்கும் அனுதாபம் வர்ற மாதிரி பார்த்துக்கிட்டா. பல நேரங்கள்ல என் மனசுக்குள்ளே நானே நினைச்சிருக்கேன், நிச்சயம் நான் வச்சிருக்கிற காதலுக்குத் தகுதியானவ இந்தத் தாரா இல்லைனு. என் உள்மனசு பலதடவை இதை என்கிட்ட சொல்லவும் செஞ்சிருக்கு. 'தாராவை மறந்துடு. அவள் ஒரு சம்ஹார குணம் கொண்ட பொண்ணு. எந்த விஷயத்தையும் கெடுக்க மட்டும்தான் அவளுக்குத் தெரியும்'னு பலமுறை அது என்னை எச்சரிச்சது. ஆனா, அவளோட பெரிய கண்களைப் பார்க்குறப்போ உள் மனசு சொன்ன எச்சரிக்கையையெல்லாம் கூட நான் மறந்து போயிடுவேன். அவள் இல்லாம வாழணும்னு நான் ஒரு நிமிடம்கூட மனசுல நினைச்சுப் பார்த்தது இல்ல..."
"அவளோட நடவடிக்கைகளைப் பார்த்து அவ மேல உங்களுக்கு ஈர்ப்பு உண்டாச்சா? அல்லது அந்த அகலமான கண்களையும் உடலழகையும் பார்த்து உங்களை நீங்க இழந்திங்களா?"- நான் ஹரியிடம் கேட்டேன்.
"இயற்கையாகவே அவ ஒரு பேரழகியா இருந்தா. அந்த அழகு என்னை முழுமையா அவ மேல சரணடைய வச்சிருச்சு. என் மனசையும் உடம்பையும் கடிவாளம் போட்டு தடுக்குறதுக்கே எனக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு. எல்லாத்தையும் தாண்டி அவளை நெருங்கினா, அவ என் கைகளை தன் கைக்குள்ள போட்டுக்கிட்டா. தன்னோட மூச்சு மணம் என் மூச்சுல படுற மாதிரி அவ என்னைப் பார்த்து கேட்டா, 'ஏன் நீங்க எங்கிட்ட இருந்து இவ்வளவு விலகி இருக்கீங்க?'ன்னு. அவளோட மூச்சுக்கு பனை நுங்கோட மணம் இருந்துச்சு. இப்பவும் பனை நுங்கைத் தின்னுறப்போ, நான் அவளோட உதடுகளை மனசுல நினைச்சுக்குவேன்."
"ஹரி, இந்த உடம்பு உண்டாக்கின பாழ்குழியில இருந்து இன்னும் நீங்க மேல ஏறி வரலைன்னுதான் நான் நினைக்கிறேன்" - நான் விழுந்து விழுந்து சிரித்தவாறு சொன்னேன்.
"அதுல இருந்து... உஷா, நீதான் என்னைக் காப்பாற்றணும். அவ மேல் நான் கொண்டிருந்த காதல் ஒரு இருளடைஞ்ச அறை மாதிரி எனக்குத் தோணுது. அதுல இருந்து தப்பிச்சு வந்தா மட்டும்தான் என்னால மத்தவங்களைப் போல சுதந்திரமான மனிதனா வேலை செய்து ஒழுங்கான வாழ்க்கை வாழ முடியும். வகுப்புல மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தர்றப்போகூட அவ முகம் முழு நிலவைப் போல கண் முன்னாடி வந்து நிற்குது. அதற்குப் பிறகு என்னால ஒருவார்த்தைகூட பேச முடியாமப் போகுது. என் தொண்டை வற்றிப் போயிடுது. என் பார்வையிலிருந்து வகுப்பு அறை... மாணவர்கள் எல்லாமே மறைஞ்சு போறாங்க. நீளமான இமைகளைக் கொண்ட தாராவின் கண்கள் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறது மாதிரி நான் உணர ஆரம்பிச்சிடுவேன். அவளின் மென்மையான கைகள் ரெண்டும் என் கழுத்தைச் சுற்றி வளைப்பதுபோல எனக்கு அந்த நிமிடத்துல தோணும். அவளைப் பற்றிய நினைவுகள் என் வாழ்க்கையையே நாளுக்கு நாள் அழிச்சிக்கிட்டு இருக்கு"- ஹரி தன் தலையைக் குனிந்து கொண்டு முகத்தைக் கைகளால் மறைத்துக் கொண்டான்.
"நீங்க இப்பவும் அவளை உயிருக்குயிரா காதலிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்க. இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தாக் கூட இந்தக் காதல் நினைவுகள்ல இருந்து நீங்க விடுபடுவீங்கன்னு எனக்கு தோணல. ஆசை தீர்றவரைக்கும் அவளோட நெருக்கத்தை அனுபவிச்சா மட்டுமே உங்களால அதுல இருந்து முழுமையாக விடுபட முடியும்"- நான் சொன்னேன்.
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ் க்ரீமில் கொஞ்சம் எடுத்து ஸ்பூனின் உதவியால் அதை ஹரியின் வாயில் வைத்தேன்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவன் என் கைகளை தன் விரல்களால் மெதுவாக வருடினான்.
"உஷா, நீ எனக்கு உதவினா, என் கூட எப்பவும் இருக்குறதா இருந்தா, நான் காலப் போக்குல தாராவை மறந்திடுவேன்" என்றான்.
"இல்ல ஹரி... உங்க மனசுல என்றென்றைக்கும் தாரா இருந்துக்கிட்டுத்தான் இருப்பா. உங்க மனசை விட்டு தாராவோட உருவம் மறையவே மறையாது. அவகூட நீங்க படுக்கல. அதனாலதான் அவளைப் பற்றிய நினைவுகள் இந்த அளவுக்கு பலமா மனசுல இருந்துக்கிட்டு இருக்கு. அமெரிக்காவிலயோ ஸ்வீடன்லயோ நாம இருக்குறதா இருந்தா நான் என்ன சொல்வேன் தெரியுமா? எவ்வளவு சீக்கிரமா அவகூட படுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவகூட படுங்கன்னு சொல்லி இருப்பேன். ஆசை முழுசா அடங்குறதுக்கு வேற வழியே இல்ல. காமம்ன்றது ரொம்பவும் பழமையானது. அது உண்டாக்குற பிரச்னைகளுககு பழமையான ஒரே ஒரு பரிகாரம்தான் இருக்கு. அது என்ன தெரியுமா? அவளை ரகசியமா எங்கேயாவது கொண்டு போயி அவகூட படுக்குறதுதான்..." என்று நான் சொன்னேன்.
ஹரி ஆச்சரியத்துடன் என்னையே வெறித்துப் பார்த்தான்.
"நாம இருக்குறது ஒண்ணும் பாரீஸ் இல்லியே. திருவனந்தபுரத்துலதானே நாம இருக்கோம். கல்வி வட்டாரங்களில் எல்லோராலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதன் நான். நான் எப்படி ஒரு ஆதி மனிதனாக மாறமுடியும்? அப்படியே தாராவைக் கற்பழிக்கிற அளவிற்கு நான் தைரியத்தை வரவழைச்சிக்கிறேன்னு கூட வச்சுக்குவோம். அப்படி ஒரு காரியம் நடந்தபிறகு, அப்படி நான் கேவலமா நடந்துகிட்டதுக்காக அவ என்னை வெறுக்க ஆரம்பிச்சிட மாட்டாளா?"- ஹரி கேட்டான்.
"பலாத்காரம் செய்த மனிதனையே விரும்பத் தொடங்கிய பல பெண்களை நான் பார்த்திருக்கேன். சொல்லப் போனா பலாத்காரம்ன்றது முகஸ்துதி செய்யிற மாதிரி. தான் கற்பழிக்கப் போற பெண்ணின் அழகைப் பற்றி பலாத்காரம் செய்கிற ஆண் புகழ்ந்து பேசுறதுதானே உண்மையில் நடப்பது?" என்றேன் நான்.
நான் பேசியது ஹரிக்குப் பிடிக்கவில்லை.
"உஷா, உன்னோட வார்த்தைகளை என்னால முழுசா ஏத்துக்க முடியாது. என் தாரா எந்தக் காலத்திலும் தன்னைக் கற்பழிச்சவனை மன்னிக்க மாட்டா. அவ ரொம்பவும் குடும்பத் தனமான ஒரு பொண்ணு. கோவிலுக்குப் போயிட்டு நெற்றியில சந்தனம் வச்சிக்கிட்டு திரும்பி வர்றப்போ எப்படி இருப்பா தெரியுமா? முகத்துலயும் உடம்புலயும் தெய்வீகக் களைன்னு சொல்வாங்களே, அது அப்படியே அவகிட்ட இருப்பதை நாம பார்க்கலாம்" என்றான் ஹரி.
நான் மெதுவான குரலில் சொன்னேன். "தெய்வீகக் களை! எந்த அளவுக்குப் பொய்யான ஒரு வார்த்தை தெரியுமா அது? ஆண்கள் மட்டும்தான் பொதுவா அந்த வார்த்தையை உச்சரிப்பாங்க."
ஹரியின் வற்புறுத்தல் காரணமாக தாராவை வரவேற்பதற்காக நானும் அவனுடன் விமான நிலையத்திற்குச் சென்றிருந்தேன். ஹரியின் கை விரல்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதனால் அவனை இடது பக்கம் அமரச் சொல்லிவிட்டு நானே காரை ஓட்ட ஆரம்பித்தேன்.
"இந்த அளவுக்கு பரபரப்பா இருக்க வேண்டிய அவசியம் என்ன?"- நான் ஹரியைப் பார்த்துக் கேட்டேன்.
"அவள் ஆளே மாறிப் போயிருப்பா. ஒருவேளை என்னைப் பார்க்காதது மாதிரி நடிச்சாலும் நடிக்கலாம். தன் கணவன் முன்னாடி தான் ஒரு குடும்பப் பெண்ணா நடக்கணும்னு அவ பிரியப்படலாம்."
"அவ உண்மையிலேயே ஒரு குடும்பப் பெண்தானே ஹரி! உங்களுக்கு அவ கடிதம் கூட எழுதலையே!"
"நீ சொல்றது சரிதான். அவ தன்னை முழுசா மறந்துட்டான்னு அவளோட அப்பா ஒருநாள் என்கிட்ட ஒரேயடியா புலம்பினாரு. அவள் கல்மனசு கொண்ட பெண்ணா மாறிட்டாள்னு நினைக்கிறேன். அமெரிக்காவின் வசதியான வாழ்க்கை அவக்கிட்ட சுயநல எண்ணத்தை மேலும் அதிகரிச்சிருக்கலாம்"- ஹரி சொன்னான்.
"கடிதம் எழுதுறதுக்கு ஒருவேளை அவளுக்கு நேரம் கிடைக்காமல் இருக்கலாம். அமெரிக்காவுல உதவிக்கு ஆள் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம். சமையல் பண்றது, துணி துவைக்கிறது, குழந்தைகளைப் பார்த்துக்கிறது- இப்படி எவ்வளவு வேலைகளை அவ ஒருத்தியே பார்த்துக்க வேண்டியதிருக்கும்"- நான் சொன்னேன்.
அடுத்த நிமிடம் ஹரி என்னை நோக்கித் திரும்பினான்.
"அவளுக்கு இன்னும் குழந்தை எதுவும் பிறக்கலைன்னு அமெரிக்காவுல இருந்த இங்கு வந்த என் நண்பன் ஒருவன் சொன்னான். எப்படி குழந்தை பிறக்கும்? அவளோட கணவனா இருக்கும் விஞ்ஞானிக்கு அணுக்கதிர்களோட பாதிப்பு இருக்குமே. பொதுவாக விஞ்ஞானிகளுக்கு குழந்தைகள் பிறக்காது. அப்படியே குழந்தைகள் பிறந்தாலும், அந்தக் குழந்தைகளோட உடம்புல ஏகப்பட்ட குறைபாடுகள் இருக்கும்."
"அப்படியா? எனக்கு அதைப் பற்றி ஒண்ணும் தெரியாது." என்றேன் நான்.
"நானும் தாராவும் எங்களுக்குப் பிறக்கப் போகிற குழந்தைகளைப் பற்றி பல நேரங்கள்ல பேசியிருக்கோம். எங்களுக்குப் பிறக்கிற முதல் குழந்தைக்கு அபர்ணான்னு பேரு வைக்கணும்னு ரெண்டு பேருமே தீர்மானிச்சிருந்தோம். பேரழகு படைத்த மகளையும் மகனையும் அழைச்சிக்கிட்டு இந்தியாவுல இருக்கிற எல்லா புண்ணிய இடங்களுக்கும் போயிட்டு வரணும்னு நாங்க திட்டம் போட்டு வச்சிருந்தோம். மகளை மூகாம்பிகை கோவிலுக்கு அழைச்சிட்டுப் போயி அங்கே எல்லோருக்கும் சமையல் பண்ணி சாப்பாடு போடணும்னு நாங்க வேண்டியிருந்தோம்."
நாங்கள் விமான நிலையத்தை அடைந்தபோது, எதிர்பார்த்த விமானம் வந்து சேர்ந்திருந்தது. கண்ணாடி வழியாக கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், அவர்களிடம் கூச்சத்துடன் தங்களின் பெட்டிகளைத் திறந்து காட்டிக் கொண்டிருந்த பயணிகளையும் பார்த்தவாறு நாங்கள் நின்றிருந்தோம்.
"தாராவைக் காணோமே?"- ஹரி முணுமுணுத்தான்.
"நின்னுக்கிட்டு இருக்குற அந்தப் பெண்கள்ல யாரும் தாரா இல்லைன்னு உறுதியா சொல்ல முடியுமா? அவள் தோற்றத்துல முழுசா மாறியிருக்கலாம்"- நான் சொன்னேன்.
"இருட்டுலகூட நான் தாராவைக் கண்டுபிடிச்சிடுவேன்" என்றான் ஹரி.
அப்போது நாங்கள் இருவரும் தாராவைப் பார்த்து விட்டோம். அவள் ஒரு கருப்பு வண்ண பட்டுப் புடவையைக் கட்டியிருந்தாள். பளிங்குக் கல்லால் செய்யப்பட்ட ஒரு அழகான சிலையை அவள் ஞாபகப்படுத்தினாள். அவளின் தோளில் கை வைத்தவாறு பெட்டிகளுக்கு மத்தியில் அவளுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் அழகில்லாத தோற்றத்தைக் கொண்டிருக்கும் மனிதன்தான் அவளுடைய கணவன் ராமன்குட்டி என்பதை நான் புரிந்து கொண்டேன்.
"அந்த மனிதனின் விருப்பத்திற்கேற்றபடி நடக்குற ஒரு பொம்மையைப் போல இருக்குறா தாரா"- நான் சொன்னேன்.
"அவ ஒரு புத்திசாலிப் பெண். கண்களை மூடிக்கிட்டு, இன்னொரு ஆளு சொல்றபடி நடக்குறவ அவ இல்ல. அவ எப்படி நடப்பான்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது"- ஹரி சொன்னான்.
பல வருடங்களுக்குப் பிறகு தாராவை நேரில் பார்ப்பதாலோ என்னவோ, ஹரியின் குரலில் ஆவேசத்தால் உண்டான பதற்றம் இருந்தது. அவன் கண்கள் தாராவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
"தாரா தடியா ஆயிட்டாளா என்ன? அமெரிக்காவுல பல வருடங்களா இருந்ததால் அவளோட நிறம்கூட ரொம்பவும் வெளுத்துடுச்சுன்னு நினைக்கிறேன்"- நான் சொன்னேன்.
"இல்ல... அவக்கிட்ட எந்த மாற்றமும் இல்ல. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எல்லார்க்கிட்டயும் விடை பெற்று போறப்போ எப்படி இருந்தாளோ அதே தோற்றத்துலதான் இப்ப திரும்பி வந்திருக்கா. பயணம் செய்து வந்த களைப்புகூட அவக்கிட்ட இருக்குறது மாதிரி தெரியல. அவ முகம் என்ன பிரகாசமா இருக்கு"- ஹரி தாராவின் மீது இருந்த தன் கண்களை அகற்றாமல் சொன்னான்.
கடைசியில் அவர்கள் கஸ்டம்ஸ் அதிகாரியிடமிருந்து விடுபட்டு வெளியே வந்தபோது ஹரி, ராமன் குட்டியின் கைகளைப் பிடித்து குலுக்கினான்.
"ராமன் குட்டி, உங்களுக்கு நான் யார்னு தெரியல. அப்படித்தானே? நான் தாராவோட கஸின், ஹரி. இவங்க என் கூட வேலை பார்க்குறவங்க ப்ரொஃபஸர் உஷா."
"ஹரி, உண்மையாகவே உங்களைப் பார்த்ததும் எனக்கு அடையாளமே தெரியல. நீங்க ஆள் எவ்வளவோ மாறிப் போயிட்டீங்களே! முடிகூட நரைக்க ஆரம்பிச்சுடுச்சு" - ராமன்குட்டி சிரித்தவாறு சொன்னான். நான் தாராவைப் பார்த்தேன். அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாட்டையும் பார்க்க முடியவில்லை. தன் காதில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளியால் செய்யப்பட்ட தொங்கட்டானைக் கையால் தொட்டவாறு அவள் புன்னகை செய்தாள். தலைகீழாக இருக்கும் ஒரு கோபுரத்தைப் போல செய்யப்பட்டிருந்தது அந்தத் தொங்கட்டான். அதில் ஒரு சிவப்பு வண்ணக் கல் பதிக்கப்பட்டிருந்தது.
"தாரா, தங்க நகைகள் அணியிறதை அடியோடு நிறுத்திட்டியா என்ன? நீ வெள்ளியால் ஆன தொங்கட்டான் அணிஞ்சு பார்க்குறப்போ உண்மையிலயே எனக்கு ஆச்சரியமாக இருக்கு. இந்தியாவை விட்டு புறப்படுறதுக்கு முன்னாடி வரை உடல் முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே வர்ற நீதானா நகையே இல்லாத கழுத்தோடும், வளையங்கள் இல்லாத கைகளோடும் இங்கே வந்து இறங்கியிருக்கிறது?"- ஹரி அவளை பாதத்திலிருந்து தலை வரை ஆராய்ந்து பார்த்துவிட்டு கேட்டான்.
அதற்கு தாரா எந்த பதிலும் கூறவில்லை. "அமொக்காவுல பொதுவா யாருமே தங்க நகைகள் அணியறது இல்லை. தாராவோட காதுகளில் தொங்கிக்கிட்டு இருக்குற ஆபரணங்கள் ப்ளாட்டினத்தால் செய்யப்பட்டது. வைரம் பதிச்ச தங்க நகையின் விலையை விட இந்த நகையோட விலை நாலு மடங்கு அதிகம்."- ராமன் குட்டி சொன்னான்.
"பெரியவர் இறந்ததுக்கு எங்களால வர முடியாமப் போச்சு. விமானத்துல வர்றதுக்கு டிக்கெட் கிடைக்கல"- அவன் தொடர்ந்து சொன்னான்.
தாராவின் தந்தை நோய் வாய்ப்பட்டு கஷ்டப்பட்டதையும், கடைசி நிமிடங்களில் அவர் சொன்ன வார்த்தைகளையும் ஹரி அவர்களிடம் விளக்கிச் சொல்லும்போது, நான் தாராவைப் பார்த்தேன். இல்லை. அவள் அழவில்லை. அவள் முகத்தில் இருந்த பிரகாசம் சிறிதாவது குறைய வேண்டுமே. அதைப் பார்க்கும்போது அவள் தன்னுடைய தந்தையைப் பெரிய அளவிற்கு நேசிக்க வில்லையோ என்று நான் சந்தேகப்படத் தொடங்கிவிட்டேன்.
"உயிலை இன்னும் யாரும் எடுத்து படிக்கல. தாரா வந்தப்புறம் படிச்சா போதும்னு வக்கீல் சொல்லிட்டாரு. முக்கிய வாரிசு தாரா தானே?"- ஹரி கேட்டான்.
"தாராவோட சித்தி என்ன சொன்னாங்க? வீடும் தேயிலை எஸ்டேட்டும் அவங்களுக்கு வேணும்னு பிடிவாதம பிடிக்கிறாங்களா என்ன?"- ராமன்குட்டி கேட்டான்.
"வீட்டுல அவங்கதானே இருக்காங்க? அவங்கள வெளியில போகச் சொல்ல முடியுமா? பதிவு செய்த திருமணமாக்கும் அது. வீட்டை அவங்களுக்குக் கொடுத்துத்தான் ஆகணும். வேற வழியே இல்ல. எஸ்டேட் விஷயத்தை எடுத்துக்கிட்டா, முக்கால் பாகம் தாராவுக்குத்தான்னு வக்கீல் சொன்னது காதுல விழுந்துச்சு"-ஹரி சொன்னான்.
"சரி... தாராவோட சித்தி இப்போ கர்ப்பமா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நான் கேள்விப்பட்டது உண்மையா? அவங்க வயசானவங்களாச்சே!"- ராமன்குட்டி கேட்டான்.
"அப்படியொண்ணும் அவங்களுக்கு வயசாகி விடல. அவங்களுக்கு இப்போ நடக்குறது நாற்பத்து மூணு வயசு. இந்த வயசுல பெண்கள் பிரசவமாகுறதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? அவங்களுக்குப் பிறக்கிற குழந்தைக்கும் சொத்துல உரிமை இருக்கு. தாராவுக்குக் கிடைக்கிற சொத்துல மூணுல ஒரு பாகம் பிறக்கப் போற அந்தக் குழந்தைக்கு இருக்குன்னு வக்கீல் ஜாடை மாடையா என்கிட்ட சொன்னாரு" என்றான் ஹரி.
"தாராவோட அப்பா செத்துப் போயிட்டாரு. செத்துப்போன ஒரு மனிதரைப் பற்றி கிண்டல் பண்ணி பேசக்கூடாதுன்றது எனக்கும் தெரியும். ஆனால், அறுபது வயதைத் தாண்டின ஒரு மனிதன் ரெண்டாவது கல்யாணம் பண்ணி திரும்பவும் ஒரு குழந்தைக்குத் தகப்பனா ஆகுறார்னா... அதை நினைக்கிறப்போ உண்மையிலேயே எனக்கு வாந்தி வருது. காமத்துக்கும் ஒரு வரைமுறை இல்லையா?"- ராமன்குட்டி கேட்டான்.
தாரா அப்போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன் தந்தையைப் பற்றி தாறுமாறாக ராமன்குட்டி பேசும் போது, இடையில் புகுந்து அவனை அவள் தடுப்பாள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், அவளோ காரின் பின்னிருக்கையில் சாய்ந்து கிடந்தாள். தன்னுடைய இடது காதில் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஆபரணத்தை அவள் கைகளால் தடவிக் கொண்டிருந்தாள். வெளியே வரிசையாக அமைந்திருக்கும் கடைகளில் இருந்த ஆரஞ்சுப் பழங்களும், வாழைக் குலைகளும் அவளுடைய கண்களில் தெரிந்தன. அவளின் அந்தக் கண்கள் மிகவும் பெரியவையாகவும், ஒளி பொருந்தியவையாகவும் இருந்தன. அவள் ஒருவேளை போதைப் பொருட்கள் ஏதாவது பயன்படுத்துவாளோ என்று அந்த நிமிடத்தில் உண்மையாகவே சந்தேகப்பட்டேன்.
தாராவையும் அவளுடைய கணவனையும் வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, என்னுடன் ஹோட்டலுக்கு வந்து உணவு சாப்பிடலாம் என்று திட்டமிட்டிருந்தான் ஹரி. ஆனால், தாராவின் சித்தி எங்களை வீட்டில் சாப்பிடாமல் போகக்கூடாது என்று கூறிவிட்டாள். பிரசவ காலம் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்ததால் அந்த அம்மா மிகவும் வெளிறிப்போய் தடித்து காணப்பட்டாள். அவள் தாராவை வரவேற்பதற்காக முன்னோக்கி நடந்து வந்தபோது எந்தவித உணர்ச்சி மாறுபாடும் இல்லாமல் தாரா சித்தியின் அணைப்பில் நின்று கொண்டிருந்தாள். தாராவைப் பொறுத்தவரை அவளுக்கு தன்னுடைய சித்தியின் மீது உண்டாகியிருந்த வெறுப்பைப் பற்றி ஏற்கனவே பலமுறை என்னிடம் கூறியிருக்கிறான் ஹரி. அந்த வெறுப்பு தாராவின் முகத்தில் தெரியவில்லை. நான் ஹரியின் கண்களையே பார்த்தேன்.
தாராவின் தோள் மீது தன்னுடைய தலையை வைத்துக்கொண்டு அவளின் சித்தி தேம்பித் தேம்பி அழுதாள்.
தன்னுடைய கணவரின் மரணம்தான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று என்று அந்த அம்மா சொன்னாள். தன்னுடைய வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்ற விஷயத்தை அந்த அம்மா திரும்பத் திரும்பச் சொன்னாள். "என் வயித்துல இருக்கிற குழந்தையின் முகத்தை ஒருமுறை பார்க்கிறதுக்காவது அவர் உயிரோடு இருந்திருக்கக்கூடாதா?" என்று அவள் மிகுந்த மனவருத்தத்துடன் சொன்னாள். அந்தக் குழந்தை பிறந்தால் இப்போதிருக்கும் தனிமைக்கும் கவலைக்கும் ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்று ஹரி சொன்னான். அவன் வார்த்தைகளைக் கேட்டு அந்த அம்மா மீண்டும் அழுதாள்.
தாராவும் ராமன்குட்டியும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையறைக்குள் ஆடைகளை மாற்றுவதற்காகச் சென்றிருந்த போது நானும் ஹரியும் மேஜைக்கருகில் அமர்ந்துகொண்டு ஆளுக்கு ஒரு டம்ளர் மோர் குடித்தோம்.
"உங்க கல்யாணம் எப்போ? எவ்வளவு நாட்களுக்கு இப்படியே ஒண்ணா சேர்ந்து சுத்திக்கிட்டு இருப்பீங்க?" தாராவின் சித்தி கேட்டாள்.
"அத்தை, நீங்க இந்தக் கேள்வியை உஷாவைப் பார்த்து கேளுங்க. உஷாவின் முடிவை எதிர்பாத்து வாழ்ந்துக்கிட்டு இருக்கற மனிதன் நான்" ஹரி என்னைப் பார்த்தவாறு சொன்னான்.
"எல்லா நட்பான உறவுகளும் திருமணத்தில்தான் போய் முடியணும்னு நான் நினைக்கல" நான் சொன்னேன்.
"உஷா, நாம இருக்கிறது ஐரோப்பாவோ அமெரிக்காவோ இல்லைன்றத முதல்ல மறந்துடக்கூடாது. நாம இருக்கிறது திருவனந்தபுரத்துல. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு சவுத்பார்க்குக்குப் போறீங்க. அங்கே போயி சாப்பிடுறீங்க. நாளைக்கு கோவளத்துக்குப் போறீங்க. அதைப் பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? இனி ஹரியைத்தவிர உஷா, நீ யாரைக் கணவனா அடைய முடியும்? உன்னைத்தவிர ஹரி வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது"-தாராவின் சித்தி சொன்னாள். ஹரிக்கு இன்னொரு டம்ளர் குளிர்ந்த மோர் கொண்டுவந்து கொடுத்தாள். அவள் விதவைகளுக்கென்றே விதிக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்திருந்தாள். வெண்மையான பருத்திப் புடவையைக் கட்டியிருந்தாள். நெற்றியில் திலகம் வைக்கவில்லை. உடம்பில் ஒரு பொட்டு தங்க நகைகூட அணிந்திருக்கவில்லை.
"உஷாவுக்கு என்னைப் பற்றி ஒரு சரியான முடிவு எடுக்க முடியல. நான் இப்பவும் தாராவைத்தான் காதலிக்கிறேன்றது உஷாவோட எண்ணம்"- ஹரி மெதுவான குரலில் சொன்னான்.
"தாராமேல் அன்பு வைக்காம ஹரியால இருக்க முடியாது. அவங்க ஒண்ணாவே சேர்ந்து வளர்ந்தவங்க. ஹரியின் தங்கை ஸ்தானத்துல தாரா எப்பவும் இருக்கலாமே?"- தாராவின் சித்தி சொன்னாள்.
"தாராவோட அம்மா மட்டும் இன்னைக்கு உயிரோடு இருந்திருந்தாங்கன்னா, தாராதான் என் மனைவி. எனக்குப் பிறக்கும் குழந்தைகளோட அம்மா" ஹரி தடுமாறிய குரலில் சொன்னான்.
"ஹரி, என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு நீ பேசற. நான் கட்டாயப்படுத்துறேன்றதுக்காகவா தாரா ராமன்குட்டியைக் கல்யாணம் பண்ணினா? அவளுக்கு அமெரிக்காவுக்குப் போகணும்ன்ற ஆசை மனசுல இருந்துச்சு. அது உனக்கும் நல்லா தெரியுமே!" - தாராவின் சித்தி அமைதியான குரலில் சொன்னாள்.
"தாராவை இன்னொரு ஆளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுனால, உங்களுக்குக் கிடைச்ச லாபம் என்ன? அவ வீட்டுக்குக் கடிதம் எழுதுறதைக் கூட நிறுத்திட்டா" என்றான் ஹரி.
என்னால் அதற்கு மேல் அந்த சாப்பாட்டு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்க முடியவில்லை. குடும்ப விஷயங்களை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தக் குடும்பத்துடன் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத நான் அங்கு உட்கார்ந்திருப்பதை, தாராவின் சித்திவிரும்பவில்லை என்று நான் மனதிற்குள் எண்ணினேன. அதனால் நான் எழுந்து நின்று என்னுடைய புடவையில் இருந்த சுருக்கங்களை நீக்கினேன்.
"இன்னொரு நாள் வந்து இங்கே சாப்பிடுறேன். நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்" ஹரியின் அத்தையிடம் சொன்னேன்.
அந்த அம்மா என்னைத் தடுத்து நிறுத்த முயன்றாள்.
"தாராவும் ராமன்குட்டியும் அஞ்சு நிமிஷத்துல வந்திடுவாங்க. அவங்க குளிக்கப் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். குளிச்சாதான் பயணக் களைப்பு முழுசா போகும்!" அவள் சொன்னாள்.
நான் விடைபெற்றுக்கொண்டு வாசலைக் கடந்த போது ஹரியும் எனக்குப் பின்னால் வந்தான். அவனுடைய முகம் சிவந்திருந்தது.
"நான் ட்ரெஸ் பண்ணிட்டு வீட்டுல கொண்டு வந்துவிடுறேன். ராத்திரி ஆயிருச்சுல்ல?"- ஹரி சொன்னான்.
காரில் ஏறி அமர்ந்த ஹரி என்னையே வெறித்துப் பார்த்தான்.
"உஷா, என் மேல ரொம்பவும் வெறுப்பு தோணியிருக்கணுமே!"
"எதற்கு? வெறுப்பு தோணுற அளவுக்கு நீங்க என்ன குற்றம் செஞ்சுட்டீங்க,"- நான் கேட்டேன்.
"நான் தாராவைப் பற்றி பேசினது, உனக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். நான் இப்பவும் தாராவை காதலிச்சிக்கிட்டுதான் இருக்கேன்னு உனக்குப் பட்டிருக்கலாம்"- ஹரி சொன்னான். அப்போது அவன் விரல்கள் காரணம் இல்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தன.
"நான் காரை ட்ரைவ் செய்யட்டுமா?" நான் கேட்டேன்.
"வேண்டாம்"- ஹரி சொன்னான்.
"ஹரி, என்னை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. உங்களை சொந்தமாக்கணும்னு எந்தச் சமயத்துலயும் நினைச்சது இல்ல. தாராவைக் காதலிக்கிற, என்றென்றைக்கும் தாராவைக் காதலிக்கிற உங்களை நான் என்னோட நண்பனாகத்தான் நினைக்கிறேன். எந்தவிதமான ஆபத்து நேரத்துலயும்கூட நிச்சயமா நான் உங்களுக்கு உதவுவேன். அது மட்டும் நிச்சயம்."
நான் சொன்னதைக் கேட்டு ஹரியின் கண்கள் கலங்கிவிட்டன.
"இந்த மாதிரி நான் நடந்துக்கிட்டதுக்கு உண்மையாகவே நான் வெட்கப்படுறேன். அவளைத் திரும்பவும் நான் பார்த்திருக்கவே கூடாது. மறைஞ்சு காணாமல் போயிருந்த சில உணர்ச்சிகள் என்னைத் திரும்பவும் அடிமையாக்கிடுச்சி. நீ சொன்னது சரிதான். தாராவை மட்டுமே என்னால இந்த மாதிரி காதலிக்க முடியும். எனக்கும் அவளுக்குமிடையே உண்டான உறவு எங்களோட சின்ன வயசிலேயே ஆரம்பமாயிடுச்சு. அவளோட வியர்வை மணம் என் உடம்பைவிட்டு எந்தக் காலத்துலயும் நீங்காது. நாங்க ஒண்ணா போட்டி போட்டு நீந்தியிருக்கோம். மண்ணுல கிடந்து உருண்டிருக்கோம். அவள் வயசுக்கு வந்தவுடனே, அந்த விஷயத்தை என் காதுல வந்து அவ சொன்னா. அவளுக்கு நெற்றியில நான் திலகம் இட்டிருக்கேன். தலை முடியை வாரி பின்னி விட்டிருக்கேன்"- ஹரி சொன்னான்.
கார் காவடியார் வந்ததும் நின்றது. நாங்கள் சில நிமிடங்கள் ஒன்றுமே பேசாமல் ஒருவரையொருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தோம்.
"ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரட்டுமா?"- ஹரி கேட்டான். ஐஸ்க்ரீம் விற்கும் இடத்தில் நான்கோ ஐந்தோ இளைஞர்கள் நின்றிருந்தார்கள். அறிமுகமில்லாத நபர்களைப் பார்க்கிற நேரங்களில் எனக்கு சிறிதுகூட விருப்பம் இருக்காது.
"நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்!"- நான் சொன்னேன்.
"என்னை மன்னிக்கணும் உஷா, நான் உன்னை ரொம்ப வேதனைப்படுத்திட்டேன்."- ஹரி என்னுடைய வலது கையைப் பற்றியவாறு சொன்னான்.
"இல்ல ஹரி... நான் திரும்பத் திரும்பச் சொல்றேன். நான் உங்களோட காதலி இல்ல. வெறும் சினேகிதி. நீங்க தாரா மேல வச்சிருக்கிற காதல்ல அடைஞ்ச ஏமாற்றத்தைப் பார்த்து உண்மையிலேயே எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. தாராவோட அப்பாவும் சித்தியும் ஒரு தப்பு பண்ணிட்டாங்க. இனி செஞ்ச அந்த தப்பை எப்படி திரும்பவும் சரிபண்ண முடியும்? ராமன் குட்டியை விட்டு விலகிவர தாரா ஒத்துக்குவாளா?"- நான் கேட்டேன்.
"அஞ்சு வருடங்கள்ல ஒரு குழந்தை கூட தாராவுக்குப் பிறக்கல. அவளுக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். காலொடிஞ்சு கஷ்டப்பட்ட ஒரு தெருநாயை அவ வீட்டுக்குள் கொண்டு வந்து பால் தந்து குளிப்பாட்டி கண்ணும் கருத்துமா பார்த்தா. நான் அதை மதிப்பா பார்த்தேன். உண்மையாவே சொல்றேன்... அவளுக்கு அமெரிக்க வாழ்க்கை அலுத்துப் போயிருக்கணும்..."- ஹரி சொன்னான்.
"அமெரிக்கா வாழ்க்கை அவளோட உடல் ஆரோக்கியத்தை கொஞ்சமும் பாதிக்கல. இந்த அளவுக்கு ஆரோக்கியமான ஒரு பெண்ணை நான் முதன் முதலா இப்பதான் பார்க்குறேன்"- நான் சொன்னேன்.
"அவ ஆரோக்கியமான பெண்தான். அந்தக் கன்னத்துல இருக்கிற சிவப்பைப் பார்த்தியா? கண்கள்ல இருக்கிற ஒளியைப் பார்த்தியா? நடக்குறப்போ இருக்கிற கம்பீரத்தைப் பார்த்தியா? உஷா, என் தாரா உண்மையிலேயே ஒரு இரத்தினம், தெரியுமா? அவ என் வீட்டை அலங்கரிச்சுக்கிட்டு இருக்க வேண்டியவ அவளோட வாழ்க்கையை நிறைவு உள்ளதா ஆக்க என்னால மட்டுமே முடியும்"- ஹரி சொன்னான்.
"நான் இந்த விஷயத்தைப் பத்தி ரெண்டு மூணு நாள் சிந்திக்கணும். ஹரி, உங்களுக்கு எந்த விதத்திலும் உதவ நான் தயாரா இருக்கேன். தாராவுடன் பேசி அவளோட மனசை மாற்ற என்னால முடிஞ்சா..."- நான் சொன்னேன். ஹரி என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
ஹரியை நான் அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் பார்த்தேன். அவன் வழக்கம்போல் காலையில் கல்லூரிக்கு வகுப்பு எடுக்கவும் வரவில்லை. தொலைபேசியிலும் ஹரியிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை. என்னை வேண்டுமென்றே ஒதுக்குகிறானோ என்று என் மனதில் ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஒரு மாலை நேரத்தில் நான் அவனுடைய வீட்டிற்கச் சென்றேன். நான் போகும்போது அவன் வீட்டில் இல்லை. சமையல்காரன் என்னை வரவேற்று, உபசரித்து அங்கிருந்த சோபாவில் அமரச் சொன்னான். அந்த வீட்டின் தலைவியாக சீக்கிரமே நான் வர இருக்கிறேன் என்று அவன் மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது என்பதை அந்த மனிதன் நடந்து கொண்ட முறையிலேயே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
"அவரோட மாமா மகளையும், அவளோட கணவரையும் அழைச்சிக்கிட்டு ஐயா ராமேஸ்வரத்துக்கு காரியம் செய்ய போயிருக்காரு" என்றான் அந்த சமையல்காரன்.
"என்னிக்கு திரும்பி வர்றாப்ல?"- நான் கேட்டேன்.
"நாளைக்கு வரணும். அவரோட அத்தைக்கு உதவிக்குன்னு இங்கே யாரும் இல்ல. பிரசவம் நெருங்கிக்கிட்டு இருக்கு"- அவன் சொன்னான்.
அடுத்த நாள் ஹரி என் வீட்டின் முன்னால் புன்னகை தவழும் முகத்துடன் வந்து நின்றான். வெயிலின் காரணமாக சற்று கறுத்துக் காணப்பட்டாலும், அவனுடைய கண்களில் ஒரு தன்னம்பிக்கை பளிச்சிட்டதை என்னால் பார்க்க முடிந்தது.
"தாரா என்ன சொன்னா? ஹரி, தாரா உனக்கு திரும்பவும் கிடைப்பாளா?"- நான் சிரித்தவாறு அவனைப் பார்த்துக் கேட்டேன்.
"தாராவை என் கைக்குள்ள கொண்டு வர்றது ஒண்ணும் கஷ்டமான விஷயமில்லைன்றது தெரிஞ்சுப் போச்சு. ராமன்கட்டி தனியா வாக்கிங் போயிருந்தப்போ, நான் தாராவை கட்டிப் பிடிச்சேன். எதிர்ப்பு எதுவும் அவ தெரிவிக்கலை. பேசாம உட்கார்ந்திருந்தா. என் மடியிலேயே ரொம்ப நேரம் சாஞ்சிருந்தா. உண்மையிலேயே எனக்கு அது கனவு மாதிரி இருக்கு. என்னால இப்போ கூட அதை நம்ப முடியலை. அவ என் காதலியா இருக்க மனசுக்குள்ள பிரியப்படுறான்றதை நினைக்கிறப்போ... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவள் ஏற்கனவே திருமணமானவ. குடும்பப் பெண். இருந்தாலும் அவள் என் கைகளை தன் உடம்புல இருந்து எடுக்கச் சொல்லல"- ஹரி சொன்னான்.அவனுடைய சந்தோஷம் என் மீதும் வந்து ஒட்டிக்கொண்டது.
"அப்படின்னா இனிமேல் தாராவை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய அவசியமே இல்ல. ராமன்குட்டிக்கிட்ட எல்லா விஷயங்களையும் வாய்திறந்து பேசிட வேண்டியதுதான். உங்களோட முறைப் பெண்ணைத் தான் அந்த ஆளு கூட்டிட்டுப் போயிருக்கான். தப்பு, அந்த ஆளோடதுதான். தாராவை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுத்தர தயாரா இல்லைன்னு வாயைத் திறந்து நீங்க சொல்லிடணும். அவளும் தான் உங்க மேல வச்சிருக்கிற காதலைத் தயங்காம ராமன்குட்டிக்கிட்ட சொல்லிடட்டும்"- நான் ஹரியைப் பார்த்து சொன்னேன்.
"தாரா சொல்லமாட்டா. தாராவோட நாக்கு அடங்கிப் போயிடுச்சு. அவ என்கிட்ட கூட எதுவுமே சொல்லல. நான் சொல்றதைக் கேட்டு சிரிப்பா. நான் சொல்றபடி நடப்பா. அவளுக்குன்னு சொந்தமா ஒரு கருத்தும் இல்லைன்ற மாதிரிதான் அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கு"- ஹரி சொன்னான்.
"இயந்திர பொம்மைகளை தயார் பண்ணுகிற ஒரு தொழிற்சாலையில்தான் ராமன்குட்டி வேலை செய்கிறான். அங்கே தயார் பண்ணுற இயந்திர பொம்மைகளுக்கு கதவைத திறக்கவும், டைப் அடிக்கவும், பாட்டில்ல இருந்து டம்ளர்ல விஸ்கி ஊற்றித் தரவும் தெரியும். அந்தப் பொம்மைகளைப் போலவே என் தாராவும் நடக்குறாளோன்னு நான் சந்தேகப்படுறேன்"- ஹரி சிரித்தவாறு சொன்னான்.
"நாளைக்கு பகல்ல ஒரு மலையாளப்படம் பார்க்கலாம்னு நாங்க தீர்மானிச்சிருக்கோம். எம்.டி. வாசுதேவன் நாயரோட 'சதயம்'. உஷா, நீயும் எங்ககூட வரணும்"- ஹரி சொன்னான்.
பகல் காட்சி படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தாரா மிகவும் குறைவாகவே பேசினாள். தன்னுடைய வெள்ளை காது தொங்கட்டானைத் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ஹரியின் இடது கையை தன்னுடைய கைகளில் வைத்து அவள் தடவுவதை நான் மங்கலான வெளிச்சத்தில் பார்த்தேன். தாரா கம்பீரமானவளாகவும், அதே நேரத்தில் அமைதி நிரம்பியவளாகவும் காணப்பட்டாள். அவள் கள்ளங்கபடமில்லாத பெண்ணைப் போல அமர்ந்திருப்பதைப் பார்த்து உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன்.
"டாக்டர் ராமன்குட்டி ஏன் திரைப்படம் பார்க்க வரல?"- நான் தாராவைப் பார்த்துக் கேட்டேன்.
"டாக்டர் ராமன்குட்டி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி"- தாரா சொன்னாள். நான் அவளின் அந்தப் பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டேன்.
"விஞ்ஞானிகளுக்கு திரைப்படம் பார்க்க விருப்பம் இருக்காதா என்ன?"- நான் கேட்டேன்.
"விஞ்ஞானிகள் சோதனைகள்ல ஈடுபடுறாங்க"- தாரா சொன்னாள்.
நான் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தேன்.
"ராமன்குட்டி ஒரு ரசனையே இல்லாத ஆளு"- ஹரி சொன்னான்.
"அப்படியா? டாக்டர் ராமன்குட்டி ரசனையே இல்லாத ஒரு ஆளா என்ன?"- தாராவைப் பார்த்து நான் கேட்டேன்.
"டாக்டர் ராமன்குட்டி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி" தாரா சொன்னாள்.
திரையில் அர்த்தமே இல்லாமல் சில கொலைகள் நடந்து கொண்டிருந்தன. தாராவின் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. அவள் தன் தலையை ஹரியின் மார்பில் வைத்தவாறு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
ஹரி அவளை எப்படியும் இரண்டு மூன்று நாட்களுக்குள் சொந்தமாக்கிக் கொண்டுவிடுவான் என்று அந்த நிமிடத்தில் எனக்குத் தோன்றியது. ஒரு சினேகிதி என்ற முறையில் அவனுடைய வெற்றியை மனப்பூர்வமாக நான் விரும்பினேன்.
நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து மாலை நேரத்தில் அருங்காட்சியகத்தைச் சுற்றியும் கடற்கரையிலும் நடந்தோம். நிறைய திரைப்படங்கள் பார்த்தோம். ஒன்றாகச் சேர்ந்து போய் ஹோட்டல்களில் சாப்பிட்டோம். இருந்தாலும் என்ன காரணத்தினாலோ தாராவுடன் மானசீகமாக என்னால் சிறிதுகூட நெருங்க முடியவில்லை. அதற்கு நேர் மாறாக அவளின் சித்தியுடன் நாங்கள் செல்லச் செல்ல எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உண்டாகத் தொடங்கியது. நானும் அந்த விதவைப் பெண்ணும் அறையின் ஒரு மூலையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தோம். அப்படி நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவித சந்தேகத்துடன் எங்களையே பார்த்தவாறு இருந்தான் ஹரி.
"உங்க ரெண்டு பேருக்குமிடையே எந்த ஒற்றுமையும் இருக்கிறதா தெரியல. தரித்திர குடும்பத்துல பிறந்து படிப்பைக்கூட ஒழுங்கா முடிக்க முடியாம ஒரு கிழவனை அந்த ஆளு வச்சிருந்த பணத்துக்காக மட்டுமே கல்யாணம் செஞ்சிக்கிட்ட அந்தப் பொம்பளைகூட உன்னால எப்படி ஒரு சினேகிதி மாதிரி நட்பா இருக்க முடியுது, உஷா! உங்க நட்புமேல சொல்லப்போனா எனக்கு நம்பிக்கையே கிடையாது. ஒண்ணு உஷா, நீ நடிச்சிக்கிட்டு இருக்கே. இல்லாட்டி அத்தை நடிக்கிறாங்க" என்று ஹரி காரில் என்னைத் திரும்பக் கொண்டு போகும்போது சொன்னான்.
"நட்புக்கு படிப்பு கட்டாயம் இருக்கணும்னு நான் நினைக்கல"- நான் வெறுப்பு கலந்த குரலில் சொன்னேன்.
"படிப்பை மட்டும் மனசுல வச்சு நான் அதைச் சொல்லல. பழக்க வழக்கங்களையும் வச்சுதான் சொல்றேன். அத்தைக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்துல பேசத்தெரியாது. அந்த ஒரே காரணத்துக்காக பெண்களை எந்த விருந்துக்கும் தன்கூட அவரு அழைச்சிட்டுப் போகமாட்டாரு. ஒருமுறை மஸ்கட்ல நடந்த ஒரு விருந்துல வெள்ளைக்காரர்களுக்கும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கலந்துக்கிட்டாங்க. பலரும் பார்த்துக் கொண்டிருக்க அத்தை தன் தட்டுல சாதத்தை எடுத்துப்போட்டு உருண்டைகளா உருட்டி கையால சாப்பிட்டான்னு மாமா என்கிட்ட சொல்லியிருக்காரு. மாமா சில விஷயங்கள்ல இந்த மாதிரிதான் நடக்கணும்ன்ற சில கொள்கைகள் வச்சிருந்தாரு"- ஹரி சொன்னான்.
"சாதத்தை உருண்டையாக்கி சாப்பிடுறதை மிகப் பெரிய ஒரு தப்பான ஒரு விஷயமாக நான் நினைக்கல. திருவனந்தபுரத்துல மேல்தட்டு நாகரிகத்தைப் பின்பற்றுறதா சொல்றவங்க சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை சர்க்கரைப் போலன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். அதாவது- சர்க்கரை சாப்பிடுறதுக்கு இனிப்பா இருந்தாலும், அதைச் சாப்பிடுற மனிதனோட உடல் நலத்துக்கு அது கேடுதான் செய்யும்"- நான் சொன்னேன்.
"நாகரிகத்துக்கும், பழக்க வழக்கங்களுக்கும் நடந்து கொள்ளுற முறைக்கும், நீ அவ்வளவு முக்கியத்துவம் தர்றது இல்லைன்றது தெரியுது. அதனாலதான் தாராவை பலாத்காரம் செய்யும்படி என்கிட்ட சொன்ன போல இருக்கு..."- ஹரி கசப்பான ஒரு புன்சிரிப்பை வெளியிட்டான்.
"என்னால சகிக்கவே முடியாத ஒரு விஷயம் இங்கே இருக்கு. அது என்னன்னா- ஹிப்போக்ரஸி பொய் சொல்லியும், துதி பாடியும், புன்சிரிப்பை வெளிப்படுத்தியும் மக்கள் ஒருத்தரையொருத்தர் இங்கே ஏமாற்றிக்கிட்டு இருக்காங்க. உண்மையின் பழைய இடத்தை நான் மனப்பூர்வமா வரவேற்கிறேன். தாராவோட சித்தி நேற்று என்கிட்ட எல்லா விஷயங்களையும் மனம்திறந்து பேசினாங்க. செத்துப்போன புருஷன்கிட்ட உடல் ரீதியாக அவங்களுக்கு கொஞ்சம்கூட எந்தவித விருப்பமோ ஈடுபாடோ கிடையாதாம். அவர் படுக்கையில் வந்து படுக்குறப்போ, அந்த அம்மாவுக்கு வாந்தி வர்றமாதிரி இருக்குமாம். அவங்களைப் பார்க்கவே ரொம்பவும் பாவமா இருந்துச்சு. அவங்க என்னைப் பார்த்து கேட்டாங்க, "கணவன்கூட கொஞ்சம் கூட பிரியமே இல்லாம படுத்துப் பிறக்கிற குழந்தைக்கு மனரீதியாக ஏதாவது பாதிப்பு இருக்குமோ?"ன்னு.
"மாமா மேல அன்பே இல்லைன்னா எதற்காக அவர்கூட அவங்க வாழணும்? அவர்கிட்ட இருந்த பொருட்களும், பணமும் அவங்களுக்குப் பிடிச்சிருந்துச்சா?"- ஹரி உரத்த குரலில் கேட்டான்.
"பணம் தர்ற பாதுகாப்புக்காகத்தான் இங்க பல பெண்களும் வர்ற வாழ்க்கையை ஏத்துக்குறாங்க. ஹரி, உண்மை என்னன்றதை கூர்மையா பார்க்கணும். இல்லாட்டி கடைசியில உண்மை என்னன்றது தெரிஞ்சு நெஞ்சு வெடிச்சு சாகுறது மாதிரி ஆயிடும்"- நான் சொன்னேன்.
"உண்மையைப் பற்றி இந்த அளவுக்கு அலசி ஆராய்ந்து பேசறதா இருந்தா... உஷா, எனக்கும் தாராவுக்கும் இடையே வளர்ந்து வர்ற உறவைப் பற்றி நீ தெளிவா ஒரு விளக்கம் கொடு பார்ப்போம். தாரா என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டாளா? அவ திரும்பவும் ராமன்குட்டி கூட அமெரிக்காவுக்குப் போவாளா?" - ஹரி கேட்டான்.
பாறையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த விளக்குகள் அவன் கண்களில் எதிர்பார்ப்பின் கீற்றுகளைப் பிரதிபலிப்பதை நான் வியப்புடன் பார்த்தேன்.
"தாரா உங்களைக் காதலிக்கலை..."- நான் சொன்னேன்.
"காதலிக்கலைன்னா நான் அவளுக்கு முத்தம் தர்றப்போ அவ ஏன் என்னைத் தடுக்கலை?"- ஹரியின் குரலில் கோபம் கலந்திருந்ததை என்னால் உணர முடிந்தது.
"காதலிக்கிற பெண்ணின் உணர்ச்சிகள் எதையும் தாரா வெளிப்படுத்தலையே! காதலிக்கிற பெண்ணின் மேலுதடு வியர்த்திருக்கும். அவள் தலை முடியை வெறுமனே விரல்களால் வருடிக் கொண்டிருப்பா. அவளோட ஜாக்கெட்டின் கையிடுக்கிள் நனைஞ்சு போயிருக்கும். அவ ரொம்பவும் தளர்ந்துபோய் கொட்டாவிகூட விடுவா. தாராவுக்கு கொஞ்சம்கூட வியர்க்கலை. அவளோட செயல்கள் எல்லாமே உயிரோட்டமே இல்லாம இருக்கு..."- நான் சொன்னேன்.
"உஷா, உனக்கு தாராவைப் புரிஞ்சுக்க முடியலை. அவ என் குழந்தையைப் பெற்றெடுப்பா. அவ என்கூட இங்கே இருக்கப் போறது உறுதி"- ஹரி சொன்னான்.
நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
"ஹரி, உங்க கைகள் நடுங்குது. நான் காரை டிரைவ் பண்ணுறேன்" - நான் சொன்னேன்.
"வேண்டாம். என் கைகள் அப்படியொண்ணும் நடுங்கல. உஷா, நீதான் அப்படி கற்பனை பண்ணிக்கிற. ராமன்குட்டியைப் போல இருக்கிற ஒரு தடிமாடோட மனைவியா தாரா வாழ்க்கை முழுவதும் வாழணும்னா நினைக்கிறே?"- ஹரி உணர்ச்சி பொங்கக் கேட்டான். கார் என்னுடைய வீட்டுப்படியின் அருகில் வந்து நின்றது. நான் வெளியே இறங்கினேன்.
"உள்ளே வர்றீங்களா? அம்மா நமக்கு நல்ல காப்பி தயாரிச்சுத் தருவாங்க"- நான் சொன்னேன். ஹரி என்னைப் பார்க்கவே இல்லை. அவன் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
"தடிமாடா இருக்கலாம். ஆனா, ராமன்குட்டியைப் போல உள்ள ஒரு அறிவாளி அரக்கனை கணவனா அடையறதுக்கு ஆசைப்படாத இளம்பெண் யார் இருக்காங்க?"- நான் சொன்னேன்.
"அறிவாளி... மண்ணாங்கட்டி! அவன் ஒரு மிருகம்" காரில் இருந்தவாறு ஹரி சொன்னான்.
நான் குளித்து முடித்து வெளியே வந்தபோது என் தாய் கேட்டாள்.
"ஹரி ஏன் சீக்கிரமே போயாச்சு?"
என் தாய்க்கு ஹரியுடன் பேசவேண்டும் என்ற ஆவல் இருந்தது. தன்னுடைய வருங்கால மருமகன் என்றே ஹரியை என் தாய் மனதில் நினைத்திருந்தாள். "அம்மா... தேவையில்லாமல் மனக்கோட்டை கட்ட வேண்டாம். அவன் திரும்பவும் தன்னோட முறைப் பெண்மேல காதல் கொள்ள ஆரம்பிச்சிருக்கான்" நான் சொன்னேன்.
"உன் தவறாலதான் அவன் அப்படி நடக்கிறான். நீங்க ரெண்டு பேரும் பேசறதை நானும் தள்ளியிருந்து கேட்டிருக்கேன். நீ எப்போ பார்த்தாலும் அவன்கூட சண்டை போட்டுக்கிட்டே இருப்பே. இந்த சண்டையைக் கேட்டுக் கேட்டு வெறுத்துப் போனதாலதான் ஹரி உன்னை வேண்டாம்னு ஒதுக்க ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறேன்"- என் தாய் சொன்னாள்.
நான் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
"எனக்கு ஹரி மேல காதல் எதுவும் கிடையாது. அந்த ஆளோட மனைவியா ஆகணும்ன்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லவே இல்ல" - நான் மெதுவான குரலில் சொன்னேன்.
"விருப்பமில்லைன்னா நீ அவன் கூட எதற்கு கார்ல போகணும்- வரணும்?" என் தாய் கேட்டாள்.
"எனக்குன்னு சொந்தத்துல ஒருகார் இல்லாததால..." என்றேன் நான்.
மறுநாள் நானும் ஹரியும் தாராவும் ராமன்குட்டியும் கோவளம் அசோக் ஹோட்டலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீந்தினோம். தாராவின் ஒவ்வொரு அசைவும் ஒரு தாளலயத்திற்கேற்ப அமைந்திருந்தது. அவள் நீரில் மல்லாக்க கிடந்தவாறு நீண்ட இமைகளைக் கொண்ட கண்களால் வானத்தைப் பார்த்த போது ஹோட்டலில் இருந்த மற்றவர்கள் எந்தவித கூச்சமும் இல்லாமல் அவளின் அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தார்கள். வாயில் இருந்த நீரைத் துப்பியவாறு ராமன்குட்டி என்னிடம் சொன்னான்,
"இந்த வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளும் அறிவுகளும் மட்டுமல்ல மனிதனின் மூளையில் சேகரிக்கப்பட்டு இருப்பது. மிருகம் மனிதனா மாறினதற்கு முன்னாடி படிச்ச பாடங்கள் கூட மூளை என்ற அந்த கம்ப்யூட்டர்ல இருக்கத்தான் செய்யுது. இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டிய பாடங்கள். இப்படி லட்சக்கணக்கான மிகப்பெரிய பாடங்கள்... மனிதனின் மூளையில் இருந்து கம்ப்யூட்டருக்கு டௌன் லோட் செய்து ஒரு சோதனை நடத்திப் பார்த்தா நம்மால பலம் பொருந்திய, அபார சக்தி படைத்த ஒரு மனிதனை உருவாக்க முடியும். மனிதர்கள் உண்டாக்கிய கிரகங்களைப் போல... இப்படியே சிந்திச்சா விஞ்ஞானத்தோட எல்லையில்லாத பரப்பு நமக்குத் தெரியும்..."
ராமன்குட்டியின் கண்கள் சிவந்திருந்தன.
"நீந்தினது போதாதா? நாம மேல ஏறி உணவு சாப்பிடுவோம்" - நான் சொன்னேன். இப்போதும் தாராவும் ஹரியும் ஒருவரையொருவர் பார்த்தவாறு அந்த நீலவண்ண நீரில் நீந்திக் கொண்டுதான் இருந்தார்கள். "இவங்க நீர்நாய்களைப் போல இருக்காங்க..." அவர்களைப் பார்த்து ராமன்குட்டி சொன்னான். நாங்கள் ஆடைகளை அணிந்து சாப்பிடும் அறைக்குள் வந்த பிறகும் தாராவோ ஹரியோ அங்கு வரவில்லை.
"தாராவை நான் தேடிப் பார்க்கட்டுமா?" நான் ராமன்குட்டியிடம் கேட்டேன்.
அவன் தலையை துவட்டினான். "அவ ஒண்ணும் பச்சைப் பிள்ளை இல்லையே! அவகூடத்தான் ஹரி இருக்கிறானே. வாங்க உஷா, நாம ஏதாவது சாப்பிடுறதுக்கு ஆர்டர் பண்ணலாம்" -ராமன்குட்டி சொன்னான். எதற்கும் கலங்காத அவனுடைய அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அழகில்லாத தோற்றம் சிறிது சிறிதாக ஆண்மைத்தனமாக விஸ்வரூபமெடுப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ராமன்குட்டி தான் பணியாற்றும் இடத்தில் கடந்த ஐந்து வருடங்களாக செய்து வந்த விஞ்ஞான சோதனைகளைப் பற்றி விளக்கமாக என்னிடம் சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டேன்.
"அறிவாளிகளுக்கு அமெரிக்காவுல எத்தனையோ கதவுகள் திறக்கும். நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்னு சொல்லணும்"- ராமன்குட்டி சொன்னான்.
நாங்கள் சாப்பிட்டு முடித்த பிறகும் ஹரியும் தாராவும் அங்கு வந்து சேரவில்லை.
"அவங்க திரும்பவும் மாட்னி ஷோ படம் பார்க்கப் போனாலும் போயிருக்கலாம். தாரா ஏற்கனவே என்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தா, ஏதோ ஒரு மலையாளப் படத்தை இன்னிக்கு கட்டாயம் பார்த்தே ஆகணும்னு" ராமன்குட்டி சொன்னான்.
என்னால் அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை. தாரா, ராமன்குட்டியை ஏமாற்றி ஹரியின் காதலியாக மாறியிருக்க வேண்டும் என்பதை என்னால் கற்பனை பண்ண முடிந்தது. ராமன்குட்டியைப் போன்ற ஒரு அறிவாளி தனக்குக் கணவனாக கிடைத்தும், ஹரியைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுடன் படுக்கையைப் பங்கு போட தயாராகும் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது எனக்கு வெறுப்புதான் உண்டானது.
"சரி... நாம கிளம்பலாம்... ஹரி காரை எடுத்துட்டுப்போயிருப்பான். உஷா, உங்களை நான் ஒரு வாடகைக் கார்ல வீட்டுல கொண்டு வந்து விடுறேன். உங்க அம்மாவை நான் பார்க்கணும்னு நினைக்கிறேன்"- ராமன்குட்டி சொன்னான்.
எங்கள் வீட்டில் ஒரு கோப்பை தேநீர் அருந்தும் நேரம் மட்டுமே ராமன்குட்டி இருந்தான். அவன் போன பிறகு நான் கட்டிலில் மிகவும் களைத்துப்போய் படுத்துவிட்டேன். அப்போது திடீரென்று ஹரி என் அறைக்குள் நுழைந்தான். அவன் மிகவும் வியர்த்துப் போயும் சிவந்தும் காணப்பட்டான். நிலைகுலைந்து அவன் தரையில் விழுந்தான்.
"தாராவின் மார்புகளுக்கு நடுவில் உலோகத்தால் ஆன ஒரு 'ஸிப்' இருக்கு. அதை கீழ்நோக்கி இழுத்தப்போ, அந்த வயிற்றுல கடிகாரத்துக்குள்ள இருக்கிற மாதிரி சக்கரங்களும் சிறிய இயந்திரங்களும் இருப்பதை நான் பார்த்தேன். அவளோட காதுல தொங்குற நகையில இருக்கிற சிவப்புக் கல்லு ஒரு எரியுற பல்பா இருந்துச்சு. அவகிட்ட இருந்து 'பீப்பீப்'னு ஒரு சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு... அவ தாரா இல்லை.
இந்த இயந்திர பொம்மை என்னோட தாரா இல்ல..."- அவன் மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு புலம்பினான். அப்போது நான் முதல் தடவையா ஹரியை என் கைகளால் அன்புடன் அணைத்தேன். என் இதயமும் கடிகாரத்தைப் போல வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது.