Logo

நீலாம்பரி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6555
neelambari

முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தான் இழந்த ஏதோவொன்றைத் தேடி மதுரைக்கு வந்திருந்தாள் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சுபத்ராதேவி. நீங்கள் எதை இழந்து விட்டீர்கள் என்று யாராவது அவளைப் பார்த்து கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்குச் சரியான ஒரு பதில் சொல்ல சுபத்ராவால் முடியாது.

'பல வருடங்களுக்கு முன்பு இந்த நகரத்தில் அனுபவித்து முடித்த வேதனையைத் தேடி திரும்பி வந்திருக்கிறேனா நான்? அந்த வேதனையின் இனிமையைத் தேடி வந்திருக்கிறேனா நான்? அந்த வேதனையைத் தேடி மட்டும்தானே பலவித பொய்க்காரணங்களைச் சொல்லிவிட்டு நோயாளிகளையும் மருத்துவமனை அதிகாரிகளையும் விட்டுவிட்டு, ஏன் என்னுடைய டிரைவரையே கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு காரில் நான் மட்டும் இந்தப் பயணத்தைச் செய்து இங்கு வந்திருக்கிறேன். அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்ட ஒரு உறுப்பைத் தேடி நோயாளி மருத்துவமனைக்குத் திரும்பவும் வருவதுண்டா? அது எப்போதும் நடக்காத விஷயம். இந்தப் பயணம் என்னுடைய அறிவற்ற தன்மையைத்தான் காட்டுகிறது...'- சுபத்ரா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

மதுரையை விட்டுப் போய் சென்னையில் படித்திருந்தபோதும் அதற்குப் பிறகு கணவருடன் கோழிக்கோட்டில் வாழ்ந்தபோதும் மதுரை என்ற நகரம் ஒளி மங்கிய ஒரு கனவைப்போல சுபத்ராவின் மனதில் நிரந்தரமாகத் தங்கி இருந்தது. முல்லையும் பிச்சும் சாமந்தியும் காட்டு துளசியும் மணம் வீசும் தெருக்களும் புதுத்துணிகளின் வாசனை மிதந்து கொண்டிருக்கும் ஜவுளிக் கடைகளும் மீனாட்சி கோவிலின் குளிர்ச்சியான பளபளப்பான உட்பகுதிகளும் தீபங்களில் எரிந்து கொண்டிருக்கும் திரிகளும் மாலை நேரத்தில் தன்னுடைய குருநாதர் பாடிய நீலாம்பரியும் சுபத்ராவின் மனதில் நிலைபெற்று வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த நினைவுகளைக் குளத்திலிருந்து செடிகளை அகற்றுவதைப் போல் பறித்து எறிய அவளுடைய கணவர் பல நேரங்களிலும் முயற்சி செய்தார். அந்த நினைவுகள் அவளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வரையில் அவள் தனக்குச் சொந்தமாக மாட்டாள் என்று உள்ளபடியே பயந்தான் அவன்.

"மதுரையைப் பற்றி பேசுறப்போ சுபத்ரா, நீ இன்னொரு ஆளா மாறிடுறியோ!"- அவர் சொன்னார். தனக்கு சங்கீதம் கற்றுத்தந்த பிராமண இளைஞனைப் பற்றி சுபத்ரா எப்போதோ ஒருமுறை கூறுவாள். இருந்தாலும் அந்த குரு-சிஷ்யை உறவின் கருப்பு நிழல் அவளுக்கும் அவளுடைய கணவருக்கும் நடுவில் விழுந்து கிடந்ததென்னவோ உண்மை.

"உண்மையைச் சொல்லு... நீ வேற யாருக்கும் காதலியா இருந்திருக்கியா?" அவளுடைய கணவர் கேட்டார்.

"திருமணமாகும் வரை நான் கன்னியாகத்தான் இருந்தேன்"- அவள் சொன்னாள். அந்த உண்மையை அவள் மதிப்போடு சொல்லவில்லை. கன்னித்தன்மையை இழக்காமல் இருந்தது தன்னுடைய தவறு என்று தான் கருதுவதைப்போல் இருந்தது அவள் பதில் சொன்ன முறை. அவளின் கணவர் கவலையில் மூழ்கிவிட்டார்.

டாக்டர் சுபத்ராதேவியும் அவளுடைய கணவர் சந்திரசேகரமேனனும் ஆதர்ஷத் தம்பதிகள் என்று நண்பர்களும் தெரிந்தவர்களும் எல்லோருக்கும் தெரிய அறிவித்தபோது சுபத்ரா அப்படி அவர்கள் சொன்னதை எதிர்க்கவில்லை. அந்த அறிவிப்பில் அவள் ஆனந்தம் கொள்ளவுமில்லை. இதயத்தின் தெரியாத ஒரு மூலையில் உண்டான மரத்துப்போன உணர்வுடன் அவள் கணவருடன் படுத்தாள். தன் மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நல்ல இந்துப்பெண்ணின் இல்லறக் கடமைகளை இரவும் பகலும் நிறைவேற்றினாள். எனினும் கணவர் அவள் மீது குறை சொல்லிக்கொண்டே இருந்தார்.

"நீ நூறு சதவிகிதம் உண்மையா இருக்குறது உன்னோட நோயாளிகள் கிட்ட மட்டும்தான். டாக்டருக்கும் நோயாளிகளுக்கும் இருக்கும் உறவை மட்டுமே உன்னால புரிஞ்சுக்க முடியும். உன்னோட நோயாளிகளைப் பார்க்குறப்போ எனக்கு சொல்லப் போனா பொறாமையா இருக்கு."

அவளுடைய கணவரின் அந்த வார்த்தைகளைக் கேட்டு அவளுக்கு என்னவோ போல் இருந்தது. மனைவி என்ற நிலையில் தான் தோல்வி அடைந்து விட்டோமோ, பெண் என்ற நிலையில் தான் முழுமையற்ற ஒருத்தியாய் ஆகிவிட்டோமோ என்றெல்லாம் அவள் பயந்தாள்.

தன்னுடைய நரம்புகளுக்கு வெப்பம் தர தன் கணவரால் முடியவில்லை என்பதை சுபத்ரா நினைத்துப் பார்த்தாள். சாஸ்திரிகள் குளிக்கும் கோவில் குளத்தில் அவரின் அக்கா மகள் ஞானாம்பாளுடன் தான் நீந்துவதற்காக இறங்கியதையும் நீரைக்குடித்துக் கீழே மூழ்கியதையும் அவள் மீண்டும் நினைத்துப் பார்த்தாள். ஞானாம்பாளின் கூச்சல் கேட்டு அவர் நீந்தி வந்து தன்னைத் தூக்கிக் காப்பாற்றியதையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். தன்னை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவர் நீந்தியபோது தன்னுடைய உடம்பு நீர் சுழிவுகள் கொண்ட சமுத்திரம் போலாகி விட்டதை அவள் உணர்ந்தாள். ஊஞ்சலில் அமர்ந்திருக்கும்போது திடீரென்று கீழே விழுந்ததைப்போல் ஒரு தோணல் அவளின் அடிவயிற்றில் அனுபவப்பட்டது. அதுதான் காமத்தின் முதல் ஆக்கிரமிப்போ? பூணூல் ஒட்டிக்கிடக்கும் அந்த மார்பின் ஸ்பரிசம் மீண்டும் கிடைக்காதா என்று அவள் எத்தனை முறை மனதிற்குள் ஏங்கினாள்! வியர்வையில் நனைந்த செந்தூரப்பொட்டும் அந்தக் கழுத்தில் அணிந்திருந்த ஒரு ருத்ராட்ச மாலையும் அவளின் கனவுகளில் சதா நேரமும் தோன்றிக் கொண்டே இருந்தன. திருமணமான பிறகும் அந்த செந்தூரப்பொட்டு ஞாபகத்திலிருந்தோ கனவிலிருந்தோ சிறிதும் மறையவேயில்லை.

மதுரையில் பிரபல கண் டாக்டராக இருந்தார் சுபத்ராவின் தந்தை. தன்னுடைய தோழிகள் ராமானுஜம் சாஸ்திரிகளின் மடத்திற்குப் போய் சங்கீதம் படிப்பதாகச் சொன்னபோது, சுபத்ராவும் அந்த வகுப்பில் சேர அனுமதி தந்தார் அவளின் தந்தை. தனக்கு மிகவும் பிடித்தமான சினேகிதி ஞானத்தின் மாமாதான் சாஸ்திரிகள் என்று சுபத்ரா சொன்னபோது, அவளின் தந்தை அவளை சாயங்கால நேரத்தில் மடத்திற்கு அனுப்ப சிறிதும் யோசிக்கவில்லை. ஞானத்துடன் சேர்ந்து அவள் போவாள். அவளுடனே மீண்டும் திரும்பி வருவாள்.

ஞானம் ஆட்டின் முகத்தைக் கொண்டிருந்தாள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவள் சுபத்ராவை 'தடிச்சி' என்று அழைத்து கிண்டல் பண்ணுவாள். சுபத்ரா அணிந்திருந்த ஆடைகளின் அடர்த்தியான நிறங்கள் அவளின் கருத்த உடம்பிற்குச் சிறிதும் பொருத்தமாக இல்லை என்று ஞானம் ஒவ்வொரு நேரமும் திரும்பத் திரும்பக் கூறுவாள். சுபத்ராவின் அடர்த்தியான கூந்தல் அசுரர்களிடம் இருக்கும் முடி என்று ஞானம் சொன்னாள். ஞானம் அப்படிச் சொல்ல சொல்ல சுபத்ராவிடம் அது ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கியது. தான் ஒரு உயர்ந்த குலத்தில் பிறந்த பெண் என்பதை அவ்வப்போது இந்தச் செயல்கள் மூலம் ஞானம் தன் தோழிக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள்.

"நீ மீனும் மாமிசமும் சாப்பிடுறவதானே? உன்னால சங்கீதத்துல பெருசா வரவே முடியாது.


மாமிசம் சாப்பிடுற வாய் கீர்த்தனைகளுக்கு சரியா வரவே வராது" ஞானம் சொன்னாள்.

அவள் அப்படிச் சொன்ன பிறகு சைவம் மட்டுமே சாப்பிடக்கூடிய பெண்ணாக சுபத்ரா மாறினாள். மகளின் உணவு முறையில் உண்டான திடீர் மாற்றத்தைப் பார்த்து அவளுடைய தாய், தந்தை மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். வறுத்த மீன் இல்லாமல் சாப்பாடு சாப்பிட மறுக்கும் சுபத்ராவா தயிர் சாதமும் ஊறுகாயும் விரும்பிச் சாப்பிடுவது என்று அவர்கள் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்கள்.

ஞானத்தின் பிடிவாதம் காரணமாக சுபத்ரா ஃப்ராக்குகள் அணிவதை நிறுத்தினாள். பாவாடையும் தாவணியும் மட்டும் அணிய ஆரம்பித்தாள். முடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினாள். முடியில் மாலை நேரங்களில் முல்லைப் பூமாலை சூட ஆரம்பித்தாள். அவளுடைய நாக்கில் எந்த நேரமாக இருந்தாலும் ராகங்கள் புறப்பட்டு வந்த வண்ணம் இருந்தன.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்பொழுது ஒருநாள் ராமானுஜம் சாஸ்திரிகள் தன்னுடைய வயதான தாயை அழைத்துக் கொண்டு தன் மருத்துவமனைக்குச் சென்றார். அவரின் தாய்க்கு கண்ணில் சதை வளர்ந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவளை அவர் சுபத்ராவின் தந்தையிடம் அழைத்து வந்திருந்தார்.

"நான் சுபத்ராவுக்கு சங்கீதம் கற்றுத்தருகிற சாஸ்திரிகள்..."- அவர் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பாகவதர் என்றால் மிகவும் வயதான கிழவராக இருப்பார் என்றுதான் இதுவரை சுபத்ராவின் தந்தை நினைத்திருந்தார். புராண இதிகாசங்களிலிருந்து எழுந்துவந்த ஒரு ஆணழகன் அவர் என்பதைப் பார்த்தவுடன் சுபத்ராவின் தந்தை புரிந்து கொண்டார். இந்த அழகான பிராமண இளைஞனின் மடத்திற்கா தன்னுடைய ஒரே மகள் தினமும் மாலை நேரங்களில் போய்க் கொண்டிருக்கிறாள் என்பதை அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

தன் மகளிடம் உண்டாகிக் கொண்டிருக்கும் மாற்றங்கள் ஒவ்வொன்றாக அப்போது அவருடைய மனதில் வலம் வந்தன. பிடிவாதம் பிடித்து மூக்கு குத்திக் கொண்டது, மாலை நேரங்களில் பூமாலைகள் சூடியது, புதிய முறையில் ஆடைகள் அணிந்தது, சைவ உணவுகள் சாப்பிட ஆரம்பித்தது... இவை ஒவ்வொன்றும் தன் மகள் தன்னுடைய குருநாதரைக் காதலித்ததால் உண்டான விளைவுகள் என்று அந்தத் தந்தை நினைத்தார். எப்படி அவர்மீது அவள் ஈர்க்கப்படாமல் இருப்பாள்? பதினாறு வயதே ஆன ஒன்றுமே தெரியாத அந்தக் கள்ளங்கபடமில்லாத பெண், குருநாதர் மேல் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கலாம். அவர் அவளை வசீகரித்திருக்கலாம்.

சுபத்ராவின் தந்தை சொன்னார்: "சுபத்ரா, நாளை முதல் பாட்டு படிக்க வரமாட்டா. மாலை நேரங்கள்ல வீட்டுக்குத் திரும்பி வர்றப்போ எங்கே அவளை நாய் கடிச்சிடுமோன்னு நினைச்சு எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது.”

தான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களின் வீட்டிற்கே வந்து சுபத்ராவிற்கு சங்கீதம் கற்றுத் தருவதாக சாஸ்திரிகள் பவ்யமான குரலில் சொன்னார்.

"வேண்டாம்... சுபத்ராவை சென்னைக்குக் கொண்டுபோயி கல்லூரியில சேர்க்கலாம்னு நான் இருக்கேன்!"- சுபத்ராவின் தந்தை சொன்னார்.

அடுத்த சில நாட்களிலேயே சுபத்ரா சென்னைக்கு வந்து விட்டாள். காதல்வயப்பட்ட மனதுடன் விரக்தியடைந்து அவளின் நாட்கள் அங்கு ஓடிக்கொண்டிருந்தன. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சொந்த முயற்சியால் டாக்டராகி வீட்டிற்குத் திரும்பி வந்தாள்.

அவளுடைய திருமணத்தை அந்த வருடத்திற்குள்ளேயே நடத்த அவளின் தந்தை தீர்மானித்தார். அவர் தேர்ந்தெடுத்த மணமகன் பெரிய பணக்காரர். நிறைய படித்தவர். அவள் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.

சாஸ்திரிகள் அப்போது தன்னுடைய மருமகளான ஞானத்தைத் திருமணம் செய்துவிட்டிருந்தார். ஞானம் பிறந்தது முதல் அவளுக்கும் சாஸ்திரிக்குமிடையேதான் திருமணம் என்று அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தார்கள். திருமணமான ஞானம் புதிய பட்டுச்சேலை அணிந்து முகத்தில் மஞ்சள் தேய்த்து சுபத்ராவைக் காண வந்தாள். அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். சாஸ்திரிகளுக்குத் தன்மீது இருக்கும் பிரியத்தைப் பற்றி ஞானம் குசலம் சொல்லத் தொடங்கியபோது, சுபத்ரா அவளின் வாயைப் பொத்தினாள்.

"இந்த ரகசியங்களையெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு விருப்பமில்லை"- அவள் ஞானத்திடம்` சொன்னாள்.

"உனக்கு என்னைப் பார்த்து பொறமை வருது இல்லையா? உன் மனசுல அவரைச் சொந்தமாக ஆக்கணும்னு விருப்பம் இருந்தது எனக்குத் தெரியும்."

"ஏன் இப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசுற? ஒரு சாஸ்திரிகள்கிட்ட ஒரு சிஷ்யைக்கு இருக்கவேண்டிய பக்தியும் மதிப்பும்தான் என்கிட்ட இருந்துச்சு. அதை விட்டுட்டு..." சுபத்ரா சொன்னாள்.

அதைக் கேட்டு ஞானம் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"உன் பக்தியும் மதிப்பும் என்னன்னு எனக்குத் தெரியும். அவர் உன்னைத் தண்ணீர்ல இருந்து காப்பாத்தினப்போ நீ அவர் உடம்பை இறுகக் கட்டிப்பிடிக்கிறதை நான்தான் பார்த்தேனே! தண்ணியில மூழ்கி சாகுற நிலையில இருக்குற யாரோட கைகளுக்கும் தன்னைக் காப்பாத்தின மனிதனை இறுகப் பிடிக்கிற சக்தி இருக்காது!"- ஞானம் சொன்னாள்.

"தேவையில்லாம ஏதாவது பேசிக்கிட்டு இருக்காதே. எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாயிடுச்சு"- சுபத்ரா மெதுவான குரலில் சொன்னாள்.

தன்னுடைய படுக்கையறை ரகசியங்கள் ஒவ்வொன்றையும் தான் கூறப்போவதாக ஞானம் சொன்னதுதான் தாமதம், ஒருவகை வெறுப்புடன் சுபத்ரா இருந்த இடத்தைவிட்டு எழுந்து வெளியேறினாள். சாஸ்திரிகளைப் பார்க்கவேண்டுமென்றோ அவரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டுமென்றோ சுபத்ரா நினைக்கவில்லை.

2

சுபத்ராவின் கணவர் அவளின் அன்பில்லாத நடத்தையை பல நேரங்களிலும் விமரிசித்தார். க்ளினிக்கிற்கு வருகிற நோயாளிகளோ அல்லது நோயாளிகளுடன் வருபவர்களோ நோயைத் தாண்டி ஏதாவது சில விஷயங்களைப் பேசும்போது அவர் ஒருவகை படபடப்புடன் வெளியே இருக்கும் வராந்தாவில் உலாத்திக் கொண்டிருப்பார். அவரின் காலடிச் சத்தத்தைக் கேட்டு நோயாளிகள் அமைதியாகி விடுவார்கள்.

சந்திரசேகரமேனன் தன்னுடைய மனைவியின் நோயாளிகளிடம் எப்போதும் பேசுவதேயில்லை. அவர்களில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால்கூட, அவர்களைப் பார்த்து சிரிப்பதில்லை. தன்னிடமிருந்து தன்னுடைய மனைவியைப் பிரிக்கிற எதிரிகள் என்ற எண்ணத்தில்தான் அவர்களை அவர் மனதில் நினைத்தார். சுபத்ராவும் தானும் மட்டும் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருப்பது, ஒருவரையொருவர் புத்தகங்களை வாசிக்கச் சொல்லிக் கேட்பது, காலார நடந்து செல்வது, மாலை நேரத்தில் சவாரி போவது- இவைதான் அந்தக் கணவரின் ஆசைகளாக இருந்தன. ஆனால் க்ளினிக்கிற்கு முன்னால் எப்போதும் மக்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். எப்போது பார்த்தாலும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. மருத்துவமனைகளிலிருந்து அவசரத் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய நோயாளிகளைப் பற்றி மருத்துவமனையில் இருந்தவர்கள் சுபத்ராவுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தனர். சில நேரங்களில் சுபத்ரா நன்றாகத் தூங்கிக் னகொண்டிருக்கும் பொழுது மேனன் தொலைபேசியில் கூறுவார்: "டாக்டர் சுபத்ரா இங்க இல்லை.


தன்னோட தாயைப் பார்க்க குருவாயூருக்குப் போயிருக்காங்க" இப்படிப்பட்ட பொய்கள் சுபத்ராவை மிகவும் வேதனையடைச் செய்தன.

"என்னோட நோயாளி செத்துப்போனா உங்களுக்கு ஒண்ணுமில்ல...அப்படித்தானே?"- அவள் கேட்டாள்.

"சாகுற அதிர்ஷ்டம் இருந்தா நோயாளி சாகத்தான் செய்வான். உன்னால நிச்சயம் அப்படிச் சாகப்போகுற நோயாளியைக் காப்பாத்தவே முடியாது, கடவுளைவிட டாக்டர் பெரியவங்களா என்ன?"

சில இரவுகளில், தொலைபேசி ஒலிக்காத அபூர்வமான வேளைகளில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த அழகியின் தலைமுடியிலிருந்து வரும் இனிய மணத்தை முகர்ந்தவாறு மேனன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பார். தலைமுடியில் நரைவிழுந்த பிறகும் தன்னுடைய மனைவியின் அழகிற்கு எந்தவொரு குறைவும் உண்டாகவில்லை என்பதை நினைக்கும்போது அவருக்கே ஆச்சரியமாக இருக்கும். அவளைக் கட்டிப்பிடிக்கும்போது எந்தவித மறுப்பும் சொல்லாத அந்த மனைவி தானே வலியவந்து கட்டிப்பிடிப்பதோ, காதலை வெளிப்படுத்துவதோ ஒருநாள் கூட நடந்ததில்லை.

"உன் நோயாளிகளைப் பார்க்குறப்போ எனக்குப் பொறாமை வருது"- மேனன் சொன்னார்.

"ஒரு டாக்டர் தன்னுடைய நோயாளிகளுடன் நெருங்கிப் பழகுவது தவறா?" என்று சுபத்ரா தன் கணவரைப் பார்த்துக் கேட்டாள்.

"அப்படி நெருக்கமா பழகுறது நல்லதே இல்ல. அப்படி நட்பா பழகுறது ஸென்டிமென்டாலிட்டிக்கு வழி உண்டாக்கிக் கொடுக்கும். சிகிச்சை செய்யிற டாக்டருக்கும் சிகிச்சை பெறுகிற நோயாளிகளுக்கும் ஒரே நேரத்துல அது ஆபத்தை உண்டாக்கும். அப்படி நெருங்கிப் பழகுற நோயாளியோட வயிறை அறுக்குறப்போ, உன்னோட விரல்கள் நடுங்குறதை நீ பார்த்ததே இல்லியா?"

சந்திரசேகரமேனன் திட்டமிட்டு தனக்கென்று வகுத்துக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகிறார். அவருக்கு இருப்பதே மூன்றோ நான்கோ நண்பர்கள் மட்டும்தான். அவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு சாப்பிட அவர் தயங்கியதில்லை. அவர்களை மட்டும் தன்னுடைய வீட்டிற்கு அவர் அழைப்பார். தனக்குத் தெரிந்தவர்களை க்ளப்களிலோ பொது இடங்களிலோ பார்க்கும்போது வெறுமனே சிரிப்பார். இல்லாவிட்டால் மூன்றே வார்த்தைகளில் ஏதாவது நலம் விசாரிப்பார். அவ்வளவுதான். தனக்கு அறிமுகமில்லாத மனிதர்கள் முன்னால் பூட்டப்பட்ட வீடு மாதிரி ஆகிவிடுவார் அவர்.

வருடத்திற்கொரு முறை சுபத்ரா தன் கணவருடன் சேர்ந்து குருவாயூர் கோவிலுக்கு சாமி கும்பிடச் செல்வதுண்டு. கோவிலுக்குச் செல்லும் பாதையில் நடந்து செல்லும்போது கையை நீட்டிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுப்பதற்காக ஐம்பது ரூபாய் நோட்டை நாணயங்களாக மாற்றி மேனன் தன்னுடைய துவாலையில் முடிச்சுப் போட்டு வைத்திருப்பார். சுபத்ரா மீது அந்தக் கூட்டத்தில் யாரும் வந்து விழுந்துவிடக்கூடாது என்று ரோமம் வளர்ந்திருக்கும் தன்னுடைய கையால் அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கிக் கொண்டுதான் மேனன் கோவிலுக்கு அவளுடனே நடப்பார்.

ஐம்பது ரூபாயையும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்து முடித்து விட்டால் ஐம்பத்தொன்றாவதாக இருக்கும் பிச்சைக்காரனிடம் அவர் சண்டை போடுவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். திடீரென்று அதுவரை அவரின் முகத்திலிருந்த சாந்தம் வேறெங்கோ போய் மறைந்து கொள்ளும். "போ... போ...ஆளைத் தொந்தரவு பண்ணாம இங்கேயிருந்து போறியா இல்லியா?"- மேனன் உரத்த குரலில் கத்துவார். கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நிற்கும்போது யாராவதொரு ஆண் தன்னை அறியாமல் தன்னுடைய மனைவியின் மீது தொட்டுவிட்டால், அவ்வளவுதான் ஒரு ரகளையே பண்ணிவிடுவார் மனிதர்.

"முகத்துல கண்ணு இல்லியா என்ன? பெண் மீது கை படுதுன்ற நினைப்பு இருக்க வேண்டாமா?"- அவர் கேட்பார். ஆறடி உயரத்தைக் கொண்ட ஆஜானுபாகுவான மனிதராக இருந்ததால், யாரும் அவருடன் சண்டை போட பொதுவாக வரமாட்டார்கள். ஆனால், வெட்கத்தாலும் அவமானத்தாலும் சுபத்ராவின் முகம்தான் என்னவோ போலாகிவிடும்.

தங்களுக்குக் குழந்தைகள் பிறக்காததற்காக மிகவும் வருத்தப்பட்ட மேனன் சுபத்ராவின் தொழில் பக்தியையே ஒரு காரணமாகக் காட்டி சொன்னார்:

"குழந்தைகளைப் பார்த்துக்கிறதுக்கு உன்னால முடியாது. அதற்காக நேரமே உனக்குக் கிடைக்காது. உனக்கு எப்போ பார்த்தாலும் நோயாளிகளைப் பற்றிய நினைப்புத்தான்..."

நோயாளிகளை எப்போது பார்த்தாலும் திட்டிக் கொண்டிருந்த அந்த மனிதர் திடீரென்று ஒருநாள் நோயாளியாக மாறியபோது சுபத்ராவிற்கே ஒருவித குற்றஉணர்வு உண்டாக ஆரம்பித்தது. அவருக்குத் தரவேண்டிய அன்பையும் பாசத்தையும் தான் தரவில்லை என்று அப்போது அவள் நினைக்க ஆரம்பித்தாள். அவரைவிட பத்து மடங்கு அதிகமாகச் சம்பாதித்ததால் தன்னிடம் அந்த ஆணவம் வந்து ஒட்டிக்கொண்டதோ என்று அவள் நினைத்தாள்.

ஆரம்ப காலத்தில் அவள் அவரிடம் மிகவும் மரியாதை வைத்திருக்கத்தான் செய்தாள். அவரைப் பார்த்து அவள் பயப்பட்டாள். பழமையும் மதிப்பும் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து ஒரு மனிதர் தன்னுடைய கணவராக வரப்போகிறார் என்பதை அவள் சிறிதும் எதிர் பார்த்திருக்கவில்லை. தான் தமிழ்நாட்டில் வளர்ந்ததாலும், தன்னுடைய நிறம் தவிட்டு நிறத்தில் இருந்ததாலும் தன் தாயின் ஊருக்கு ஓணம் பண்டிகையின்போது போகும்போது அங்குள்ள தன்னுடைய சொந்தக்காரர்கள் தன்னை 'செட்டிச்சி' என்று அழைத்ததை சுபத்ரா நினைத்துப் பார்ப்பாள். நினைத்திருந்தால் சந்திரசேகர மேனன் அழகியாக இருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருக்கலாம். நவநாகரீகமான ஒரு பெண்ணைத் தமிழ் கலந்த மலையாளம் பேசும் தன்னை எதற்காக அவர் மனைவியாகத் தேர்ந்தெடுத்தார்? இதைப் பல நேரங்களிலும் நினைத்துப் பார்த்திருக்கிறாள் சுபத்ரா.

ஒருநாள் அவர் சொன்னார்: "திரௌபதியின் உடலமைப்பு கொண்டவள் நீ. ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது உன்னோட அமைதியான குணம்தான்."

அந்த அமைதியான குணம் எங்குபோய் ஒளிந்து கொண்டது? நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் கண்கண்ட கடவுளாகத் தான் மாறியபோது தன்னைப்பற்றி மிகவும் உயர்ந்த மதிப்பு அவளுக்கு உண்டாக ஆரம்பித்தது. தான் உலகத்தின் தூண்களில் ஒன்றாக மாறிவிட்டதைப்போல் அவள் உணர்ந்தாள். வீட்டைப் புதுப்பித்தாள். படுக்கையறையில் குளிர்சாதன மெஷினைக் கொண்டு வந்து பொருத்தினாள். வேலைக்காரர்களின் எண்ணிக்கை அதிகாரித்தது. கரையில்லாத விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மட்டுமே அவள் அணிய ஆரம்பித்தாள். புதிய இருக்கைகளைக் கொண்டு வந்து போட்டாள். திரைச்சீலைகளையும், விரிப்புகளையும் புதிதாக வாங்கினாள். புதிதாகக் கொண்டு வரமுடியாதது அவளுடைய கணவர் மட்டும்தான். அவர் வீட்டு வாசலிலும், உட்பகுதியிலும் பழைய பனியனும், வேஷ்டியும் அணிந்து உலாத்திக் கொண்டிருந்தார். முன் பக்கமிருந்த ஒரு பல் விழுந்தபோது, செயற்கைப் பல் வாங்கிப் பொருத்திக் கொள்ள அவர் கறாராக மறுத்துவிட்டார்.

"பல் இருந்தாலும் இல்லைன்னாலும் சந்திரசேகரமேனன் சந்திரசேகரமேனன்தான்"- அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தச் சிரிப்பில் பங்கு கொள்ள சுபத்ராவால் முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஒருவித அலுப்பு தட்டியிருக்கிறது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.


மாலை நேரத்தில் குளித்து முடித்து வாசலில் நின்றவாறு கூந்தலை விரலால் வருடிக்கொண்டிருக்கும் பொழுது அவள் நீலாம்பரி பாடும் சாஸ்திரிகளை நினைத்துப் பார்ப்பாள். தூரத்தில் சூரியன் பொன் நிறத்தில் மறைந்து கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பாடகனுடைய கண்களின் கூர்மையை நினைத்துப் பார்ப்பாள்.

"நாம மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போயிட்டு வரணும். நான் ரெண்டு நாட்கள் விடுமுறை போட்டுர்றேன்"- சுபத்ரா ஒருநாள் தன் கணவரிடம் சொன்னாள்.

"குருவாயூர் இருக்குறப்போ மலையாளிகளான நமக்கு இன்னொரு கோவில் தேவையில்லை..."- மேனன் சொன்னார். நோயாளியாக ஆவதற்கு முன்புதான் அவர் அப்படிச் சொன்னார். வாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் தளர்ந்து ஒன்றுக்குமே முடியாமல் படுத்திருக்கும்போது அவர் அமைதியாகக் கண்ணீர்விட்டபடி இருப்பார். அவரின் கவலைக்கான காரணங்கள் என்னவென்பது சுபத்ரா அறியாத ஒன்றாக இருந்தது.அவள் தன்னுடைய கைகளால் பிழிந்தெடுத்த சாத்துக்குடி நீரை அவரின் வாய்க்குள் ஊற்றுவாள். அவரின் உடம்பை வெந்நீரில் நனைய வைத்துப் பிழிந்த துவாலையால் அவளே துடைத்து சுத்தம் செய்வாள். டாக்டர் சுபத்ராவின் பணிவிடைகளைப் பார்க்கும் வேலைக்காரர்களும் நண்பர்களும் அவளின் கடமையுணர்வை மனம் திறந்து பாராட்டினர்.

தான் மூன்று நாட்கள் கோழிக் கோட்டை விட்டுச் செல்வதாக சுபத்ரா மருத்துவமனையில் அறிவித்தபோது நோயாளிகளின் உறவினர்கள் என்னவோ போல் ஆகிவிட்டார்கள்.

"ஏன் பயப்படுறீங்க? என்னை மாதிரி இங்க எத்தனை டாக்டர்மார்கள் இருக்காங்க! எனக்கு இப்போ வயசாக ஆரம்பிச்சிடுச்சு. நான் காலாகாலத்துக்கும் உயிரோட இருக்கப்போறேனா என்ன?"- டாக்டர் சுபத்ரா சொன்னாள்.

கோழிக்கோடு நகரத்திலேயே பெரிய அளவில் பெயர் பெற்ற ஒரு டாக்டரென்றால் உண்மையிலேயே அது சுபத்ராதான். மக்களுக்காக சேவை செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை பொதுவாக எல்லோருமே விரும்பினார்கள்.

அவ்வளவு தூரம் தானே சொந்தமாகக் காரை ஓட்டிக் செல்வதாகச் சொன்ன போது அவருடைய நண்பர்கள் எல்லோரும் அதைத் தடுத்தார்கள். டிரைவரை உடன் அழைத்துச் செல்ல விருப்பமில்லையென்றால் நன்கு கார் ஓட்டத்தெரிந்த உறவினர் ஒருவரை உடன் அழைத்துச் செல்லலாமே என்றார்கள் அவர்கள்.

தனக்கு இப்போது தனிமை தேவைப்படுகிறது என்றாள் சுபத்ரா. தனிமையும் மௌனமும்தான் இப்போது எதிர்பார்ப்பது என்று அவள் மனம் திறந்து சொன்னாள்.

ஒரு விதவைக்குப் பொருத்தமான ஆடைகளையே சமீபகாலமாக அவள் அணிந்து வந்தாள். ஆனால், மதுரைக்குப் போகும்போது அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பட்டுப்புடவைகளை அவள் பெட்டியில் அடுக்கி வைத்தாள். தேனிலவுக்குச் செல்லும் மணப் பெண்ணின் இதயத் துடிப்புடன் அவள் பொருட்களை அடுக்கினாள். வாசனை திரவியங்கள், முத்து மாலைகள், சிவப்பு கல் வைத்த நகைகள்- எல்லாவற்றையும் அவள் பெட்டிக்குள் எடுத்து வைத்தாள்.

3

முப்பத்தியிரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்க்கும்பொழுது மதுரை மிகவும் மாறிவிட்டிருப்பதை சுபத்ராவால் புரிந்து கொள்ள முடிந்தது. பழைய வீடுகளில் முக்கால் பகுதி வீடுகள் இப்போது காணாமல் போயிருந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பூக்கள் விற்பனை செய்து கொண்டிருந்த தெருக்களில் வட இந்தியக்காரர்களின் பழைய துணிகளும் வெளிநாட்டுத் துணிகளும் விற்பனை செய்யும் கடைகள் இருப்பதை அவள் பார்த்தாள். தானும் தன்னுடைய தாய், தந்தையும் வசித்த கட்டிடம் ஒரு சிறுவர் பள்ளிக்கூடமாக மாறியிருப்பதைப் பார்த்தாள்.

அங்கிருந்து தெற்குப் பக்கமாகச் சென்று கோவில் குளத்தையும் அதைத் தாண்டி பாசி படர்ந்துபோய் அலங்கோலமாகக் காட்சி அளித்த மடத்தையும் அவள் பார்த்தாள். மடத்தை நோக்கி சுபத்ரா நடந்தாள். வாசல்படிகள் இடிந்துபோய் காணப்பட்டன. அடைக்கப்பட்டிருந்த வாசல்கதவை பல தடவை தட்டியும் யாரும் அதைத் திறப்பதாகத் தெரியவில்லை. சாஸ்திரிகளும் அவருடைய குடும்பமும் இந்த இடத்தைவிட்டு வேறு எங்காவது போயிருக்கலாம் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். மனிதர்கள் வசிக்கக்கூடிய ஒரு இடமாக அது தெரியவில்லை. கட்டிடத்தைச் சுற்றி புதர்களும் முள்செடிகளும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.

அவள் திரும்பிச் செல்லலாம் என்று படிகளில் இறங்கியபோது, கேட் திறக்கப்பட்டு ஒரு வயதான உருவம் அவளை நோக்கி வந்தது. அது- ஞானாம்பாள் என்பதைப் பார்த்தவுடன் அவள் புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகியிருக்கும் அவளுக்கு. ஆனால், பார்க்கும்போது எழுபது வயது ஆன பெண்ணைப் போல் அவள் காட்சியளித்தாள். ஞானத்தைப் பார்த்து உண்மையிலேயே அதிர்ந்து போய்விட்டாள் சுபத்ரா. என்ன ஆயிற்று ஞானத்திற்கு? தலைமுடி முழுக்க விழுந்து வழுக்கையாகிப் போன தலையையும், நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் கைகளையும், ஒட்டிப் போன கன்னங்களையும், விழுந்துபோன பற்களையும் கொண்ட அந்தப் பெண் பார்ப்பதற்கே மிகவும் அவலட்சணமாக இருந்தாள். பழைய புடவை கட்டிய எலும்புக்கூடாக அவள் காட்சி தந்தாள்.

"யாரு?"- ஞானம் கேட்டாள்.

"என்னைத் தெரியலையா? நான்தான்... சுபத்ரா. உன்கூட சாஸ்திரிகள்கிட்ட சங்கீதம் படிச்சவ..."- சுபத்ரா சொன்னாள்.

"சுபத்ராவா?"- ஞானம் கேட்டாள்.

"ஆமா... சாஸ்திரிகள் எங்கே? மதுரைக்கு வந்தவுடன் உங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்னு தோணுச்சு. முப்பத்துமூணு வருடங்கள் கழிச்சு நான் மதுரைக்கு வந்திருக்கேன்."

"மீனாட்சி கோவிலுக்குப் போயி சாமி கும்பிட்டியா?" ஞானம் கேட்டாள்.

"இல்ல... வர்ற வழி இது. உன்னையும் சாஸ்திரிகளையும் பார்த்துட்டு, அதற்குப் பின்னாடி ஹோட்டலுக்குப் போயி குளிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம்னு நான் தீர்மானிச்சிருந்தேன்"-சுபத்ரா சொன்னாள்.

"நீ ரொம்பவும் தாமதமா வந்துட்டே. சாஸ்திரிகள் இந்த உலகத்தைவிட்டு போயிட்டாரு. டைஃபாய்ட் காய்ச்சல்ல இறந்துட்டாரு. அவரு இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிடுச்சு"- ஞானம் சொன்னாள்.

"பேப்பர்ல அவர் இறந்த செய்தி எதுவும் வரலியே!"- சுபத்ரா ஆச்சரியம் தொனிக்கக் கேட்டாள்.

"பேப்பர்ல வர்ற அளவுக்கு உள்ள செய்தி ஒண்ணுமில்லையே அவரோட மரணம்! அவர் ஒரு சாதாரண பாகவதர். பேரோ பணமோ அவர் எதுவும் சம்பாதிக்கல. ரொம்பவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாரு. கஷ்டப்பட்டு செத்தாரு. குழந்தைகள் இல்லையேன்னு நான் குறைப்பட்டு சொல்றப்போ  அவர் சொல்வாரு; 'எல்லா சிஷ்யர்களும் என்னைப் பொறுத்தவரை குழந்தைங்கதான். 'என்னோட ஆபத்தான நேரங்கள்ல நிச்சயம் அவங்க வந்து உதவுவாங்க'ன்னு. ஆனா, நடந்தது என்ன? பழைய சிஷ்யர்கள் எல்லாத்துக்கும் கடிதம் எழுதிப்போட்டோம். யாரும் பதில்னு பேருக்குக்கூட எழுதல. யாரும் பணம் அனுப்பி வைக்கணும்னு நினைக்கல. அவரை சிகிச்சை செய்றதுக்குக்கூட பணம் பத்தல..." ஞானம் தடுமாறிய குரலில் சொன்னாள்.

சுபத்ரா ஞானத்திற்கு ஆறுதல் சொன்னாள். அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் மணம் சுபத்ராவிற்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.


தினமும் குளிக்காமலிருக்கும் ஒருவருடைய உடம்பிலிருந்து என்ன வாசனை வருமோ, அந்த வாசனை ஞானத்தின் உடம்பிலிருந்து வந்து கொண்டிருந்தது. சுபத்ராவின் மனதிற்குள் ஒரு புயலே வீசிக் கொண்டிருந்தது. எவ்வளவு விரைவாக ஹோட்டல் அறைக்குச் செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்று வாய்விட்டு அழுது அந்த அழுகையில் ஆறுதல் பெறவேண்டும் என்று அவள் நினைத்தாள்.

"நான் என்ன உதவி செய்யணும்?" அவள் ஞானத்திடம் கேட்டாள்.

"இனி எனக்கு என்ன உதவி தேவையிருக்கு? எதுவுமே வேண்டாம். நான் அவரோட முதல் தடவையா சண்டை போட்டதுக்குக் காரணமே நீதான். உனக்கு மட்டும்தான் 'த்யாயாமி' சொல்லித்தந்திருக்கிறதா அவர் ஒருதடவை சொன்னாரு. அதைக்கேட்டு நான் ஒருமாதிரி ஆயிட்டேன். எனக்கும் அந்த கடவுள் வாழ்த்தைச் சொல்லித்தரணும்னு நான் கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன். "உனக்கு அதைப் படிக்கிற அளவுக்கு பக்குவமில்லைன்னு அவர் சொல்லிட்டாரு.ஆமா சுபத்ரா... நீ எனக்குக் கல்யாணம் நடக்குறப்போ நீ விரோதி மாதிரி ஆயிட்டே."

சுபத்ரா ஞானத்தின் கைகளை தன்னுடைய உடம்பிலிருந்து அகற்றி விட்டு வேகமாக கேட்டை நோக்கி நடந்தாள்.

"நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்டே. ஒருநாளும் சாஸ்திரிகள் என்கிட்ட வேற மாதிரி நடந்துக்கல..."- அவள் சொன்னாள்.

கேட்டை அடைக்கும்போது சுபத்ரா திரும்பிப் பார்த்தாள். எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் இல்லாமல் வாசற்படி மீது ஞானம் ஒரு சிலையைப் போல உட்கார்ந்திருந்தாள்.அவளிடமிருந்து புறப்பட்டு வரும் கோப அலைகள் காற்றில் கலந்து வந்து எங்கே தன்னை பாதித்து விடப்போகிறதோ என்று சுபத்ரா அஞ்சினாள். அந்த பயத்தின் காரணமாக அவள் காருக்குள் ஏறி அமர்ந்து திரும்பிக் கூடப் பார்க்காமல், விடைகூடப் பெறாமல் ஹோட்டலுக்குத் திரும்பினாள்.

குளித்து முடித்து புதிய ஆடைகள் அணிந்து சுபத்ரா மதுரை மீனாட்சி கோவிலுக்குச் சென்றாள். அடுத்தநாளே மதுரையை விட்டு வேறு எங்காவது போகவேண்டும் என்று அவள் நினைத்தாள். கனவு காணக்கூடிய சந்தர்ப்பம் இன்றோடு தனக்கு இல்லாமற்போய் விட்டதே என்று நினைத்து அவள் மிகவும் வேதனைப்பட்டாள். ஒரு முறையாவது அவர் நீலாம்பரி ராகத்தில் பாடுவதைக் கேட்க வேண்டும் என்று அவள் எவ்வளவு காலம் காத்திருந்தாள்! சூரியன் ஒரு பட்டாடையைப் போல மேற்கு திசையில் மறையும்போது, காற்றைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் நீலாம்பரி... சுபத்ரா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இனி எதற்காகத் தான் வாழ வேண்டும்? இதுவரை ஒரு எதிர்பார்ப்பில்தான் தான் வாழ்ந்ததே. இனி எதை நம்பி வாழ்வது? – இப்படி பலவாறாக நினைத்தாள் அவள்.

பச்சை நிற பட்டுப்புடவை அணிந்து தங்க நகைகள் மின்ன தேவியின் சந்நிதியில் நிற்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சுபத்ரா தேம்பித்தேம்பி அழுதாள்: "நான் ஒரு விதவை, அம்மா..." அவள் தேவியிடம் மெதுவான குரலில் சொன்னாள்:"ஒரு மணப் பெண்ணைப் போல ஆடைகள் அணிந்து நின்னுக்கிட்டு இருந்தாலும் நான் ஒரு விதவைதான்... என்னை மன்னிக்கணும்."

அப்போது தனக்கு நன்கு பழக்கமான அந்தக் குரலை அவள் கேட்டாள். "சுபத்ரா, நீ எப்போ வந்தே?" திரும்பிப் பார்த்தபோது அங்கவஸ்திரம் அணிந்து மேலே எதுவும் அணியாத கோலத்தில் ராமானுஜம் சாஸ்திரிகள் அவளுக்கு அருகில் நின்றிருந்தார்! நரையேறிய சுருட்டை முடி, கழுத்தில் ஒரு ருத்திராட்ச மாலை, நெற்றியில் குங்குமம், படர்ந்த மார்பு, மார்பில் சுருண்டு காணப்படும் ரோமங்கள் நரைத்துவிட்டிருந்தன. சுபத்ரா உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துவிட்டாள். தன்னுடைய காதலால் ஈர்க்கப்பட்டு சாஸ்திரிகளின் ஆவி இந்த உலகத்தைத் தேடி வந்திருக்கிறதோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அவரின் ஆன்மா தன்னுடன் கலப்பதற்காக இங்கு வந்திருக்கிறதோ என்று அவள் நினைத்தாள்.

சுபத்ரா எதுவும் பேசாமல் அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தாள். எங்கே அது சிறிது சிறிதாக மறைந்து போய்விடுமோ என்று அவள் பயந்தாள்.

சாஸ்திரிகள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து ஒரு தூணுக்குப் பக்கத்தில் போய் நின்றார். சுபத்ராவை அருகில் வரும்படி அவர் கையால் சைகை காட்டினார். அவர் சொன்னபடி அவள் கேட்டாள்.

"சுபத்ரா, நீ எப்போ வந்தே?"- அவர் கேட்டார். அந்த நிமிடத்தில் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. பேசும் சக்தியை அவள் முழுமையாக இழந்துவிட்டிருந்தாள். அவர் அவளின் தோளில் கையை வைத்து இன்னொரு கையால் அவளின் நனைந்து போயிருந்த முகத்தை உயர்த்தினார்.

"சுபத்ரா, நீ ஏன் அழுவுறே? உனக்கு என்ன ஆச்சு?"- சாஸ்திரிகள் கேட்டார்.

"நீங்க இறந்துட்டதா ஞானம் சொன்னா. நான் அதை நம்பிட்டேன்"- அவள் சொன்னாள்.

"ஞானத்திற்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு. எவ்வளவு சிகிச்சை பண்ணியும், ஒரு பிரயோஜனமும் இல்ல. பெங்களூருக்கு அழைச்சிட்டுப் போயி ஷாக் சிகிச்சை கூட பண்ணியாச்சு" சாஸ்திரிகள் சொன்னார்.

"ஐயாம் ஸாரி..."- சுபத்ரா சொன்னாள்.

"எந்தவித சந்தோஷத்தையும் அனுபவிக்கக்கூடிய பாக்யம் எனக்கு கிடைக்கவே இல்ல. இப்பவும் குழந்தைகளுக்கு சங்கீதம் கற்றுத் தர்றேன். அரைப் பட்டினியோட வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன். சுபத்ரா, நீ எப்படி இருக்கே? நல்லா இருக்கியா? கணவரும் குழந்தைகளும் நல்லா இருக்காங்களா?- சாஸ்திரிகள் கேட்டார்.

"என்னோட கணவர் இறந்துட்டாரு. எனக்கு குழந்தை எதுவும் பிறக்கல. நோயாளிகளைக் குணமாக்கிக்கிட்டு தன்னந்தனியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்"- அவள் சொன்னாள்.

கோவிலில் ஆங்காங்கே தோன்றிக் கொண்டிருந்த மக்கள் தன்னையும் சாஸ்திரிகளையும் ஒருவித சந்தேகத்துடன் பார்ப்பதை சுபத்ரா உணராமல் இல்லை. வேறு ஏதாவதொரு இடத்தில் அவருடன் போய் அமரவேண்டும் என்று அவள் விரும்பினாள். முப்பத்து மூன்று வருடங்களாக தான் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த உணர்ச்சிகளை அவரிடம் கூற வேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஒரு முறையாவது தன்னுடைய காதலை எந்தவித பயமும் இல்லாமல் சொல்ல, அந்த மார்பின் மீது முகத்தைச் சாய வைத்து இருக்க அவள் பிரியப்பட்டாள்.

"இல்ல சுபத்ரா, நான் நீ தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு வர முடியாது. உன் பேருக்குக் களங்கம் உண்டாகிற மாதிரி நான் நடக்க விரும்பல"- சாஸ்திரிகள் சொன்னார்.

பாதையோரத்தில் நிறுத்தியிருந்த காரில் உட்கார்ந்திருந்தவாறு தன்னுடைய இறுதி முயற்சியான அழுகையை அவள் ஆரம்பித்தபோதும், சாஸ்திரிகள் தன்னுடைய மனக்கட்டுப்பாட்டை இழக்கவில்லை.

"நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கடமைகள் இருக்கு. அவற்றை நிறைவேற்றுவதுதான் நம்மோட வாழ்க்கையின் லட்சியமா இருக்கணும். நீ உன் கணவரின் நல்ல பெயரைக் கொஞ்சம் கூட கெடுக்காம காப்பாத்தணும். நான் பைத்தியம் பிடிச்ச என்னோட மனைவியைக் கவனிச்சிக்கிட்டு இங்கேதான் இருக்கணும். இந்தப் பிறவியில் நமக்கு வேறெந்த வழியும் விதிக்கப்படல..."- அவர் சொன்னார்.

பாதைக்குப் பின்னால் இருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து திடீரென்று நீலாம்பரியின் அலைகள் புறப்பட்டு காற்றில் கலந்து வந்தன. அதே நிமிடத்தில் ஆகாயத்தில் சந்திரன் தோன்றியதை சுபத்ரா பார்த்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.