Logo

நெருப்பு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
neruppu

சுராவின் முன்னுரை

லையாளத்தில் பேசப்படும் நவீன எழுத்தாளர்களில் ஒருவர் இ.ஹரிகுமார் (E.Harikumar). அவர் எழுதிய பல கதைகளை நான் படித்திருக்கிறேன். அவரது படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்ற என் எண்ணத்தின் விளைவே இந்த நூல். வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத பல புதிர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஆன்மிகத்துடன் கலந்து நாவலாக எழுதியிருக்கிறார் ஹரிகுமார். மூத்த மலையாளக் கவிஞரான இடசேரி கோவிந்தன் நாயரின் மகனான ஹரிகுமாரும் மிகச் சிறந்த எழுத்தாளரே. அவரின் கதை எழுதும் திறமையை இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் உணரலாம். காலம் என்ற புதிரால் விளைந்த மாற்றத்தைப் பல வருடங்களுக்கு முன்பு நான் ‘ரிப் வேன் விங்கிள்’ என்ற ஆங்கிலக் கதையில் படித்திருக்கிறேன்.

அந்த விஷயத்தை ஹரிகுமார் தன் கதையில் கையாண்டிருப்பதைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். உண்மையிலேயே காலம் என்பது புதிரானதுதான். அதில் சிறிதளவுகூட சந்தேகமே இல்லை.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி

அன்புடன், 

சுரா (Sura)


ஆஸ்ரமம்

ஸ்ரமம் மலை உச்சியில் இருந்தது. அடிவாரத்தில் அல்லிக் கோடு கிராமம். கிராமத்திலிருந்து பார்த்தால், மரங்கள் அடர்ந்த மலை உச்சியில் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த பர்ணசாலைகள் பனி மூடிய உய்ர்ந்த சிகரங்களுக்கு மத்தியில் தெரியும்.

ஆஸ்ரமம் பல வினோதச் செயல்களின் உறைவிடமாக இருந்தது. அதைப் பற்றி பலரும் கூறிக் கொண்டிருந்த வியப்பூட்டக்கூடிய கதைகள் நிறைய இருந்தன. வாயால் விளக்கிக் கூறுவதற்கு அப்பாற்பட்ட வினோதமான சம்பவங்கள். இரவு நேரத்தில் ஆஸ்ரமம் மலைகளும் இருட்டில் மூழ்கிவடும்போது வேலப்ப சுவாமிகளின் பர்ணசாலைக்கு முன்னாலிருக்கும் ஹோமகுண்டத்தில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். இரவின் அச்சமூட்டக்கூடிய இறுதி யாமங்கள் வரை எரிந்துகொண்டிருக்கும் அந்த நெருப்பு, மலைக்கு ஒரு எரிமலை என்ற அடையாளத்தைத் தந்து கொண்டிருந்தது. எங்கே நின்றுகொண்டு பார்த்தாலும் கண்ணில் தெரியும் அந்தக் காட்சி கிராமத்து மக்களிடையே ஆர்வத்தையும் பயத்தையும் உண்டாக்கியது.

அந்த ஹோமகுண்டம்தான் சுவாமிகளின் சக்தி என்று அவர்கள் நம்பினார்கள். பகல் நேரத்தில் ஆஸ்ரமம் அந்த அளவிற்குப் பயத்தை ஏற்படுத்தவில்லை. பண்டிகை நாட்களில் அவர்கள் பழங்களையும், தேங்காய்களையும்,தேங்காய் எண்ணெயையும் தூக்கிக் கொண்டு மலையேறி வந்து சுவாமிகளைப் பார்த்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கினார்கள். பிறந்த நாட்களின்போது அதிகாலையிலேயே குழந்தைகளைக் குளிக்கச் செய்து, பகவதி கோவிலில் விளக்கேற்றி வணங்கி சுவாமிகளின் தரிசனத்திற்காக அவர்களைக் கொண்டு செல்வார்கள். சுவாமிகள் அரிசியையும் மலர்களையும் தலையில் தூவி, அவர்களை ஆசீர்வதித்தார். தேங்காய், சர்க்கரை, மலர் ஆகியவற்றைப் பிரசாதமாகக் கொடுத்தார்.

இருபது வருடங்களுக்கு முன்பு வேலப்ப சுவாமிகள் சமாதி ஆகிவிட்டார். அதற்குப் பிறகு ஆஸ்ரமத்தின் பொறுப்பை ஏற்று நடத்திய ஆனந்த குருவிற்குத் தன்னுடைய குருநாதரான வேலப்ப சுவாமிகள் அளவிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. ஒரு வரலாற்று நாயகன் உருவாக வேண்டுமென்றால், அதற்குப் பல யுகங்கள் ஆகும். வேலப்ப சுவாமிகளை எடுத்துக் கொண்டால், கிராமத்து மக்களுக்கு நினைவு தெரியும் காலத்திலிருந்து அவர் மலையின் மேல்தான் இருந்தார்.

இப்போதும் அவர்கள் பண்டிகை நாட்களிலும் பிறந்த நாட்களிலும் ஆஸ்ரமத்திற்குச் சென்று ஆனந்த குருவின் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஷயங்கள் மேலும் நன்கு நடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வேலப்ப சுவாமிகளின் சமாதி மண்டபத்திற்குச் செல்வார்கள். அதற்கு முன்னால் எரிந்து கொண்டிருக்கும் ஒற்றைக்கல் விளக்கில் எண்ணெய் ஊற்றி அவர்கள் விளக்கை எரிய வைப்பார்கள். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமாதியில் குளிர்ந்து போய்க் காணப்படும் திண்ணைமீது நெற்றி படும்படி மண்டியிட்டு பிரார்த்தனை செய்வார்கள். கல் விளக்கின் கரியை நெற்றியில் பூசிக் கொள்வார்கள். அது தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்தி அவர்களைக் காப்பாற்றும்.

கூறப்போகும் அற்புதச் செயல் நடந்தது பல வருடங்களுக்கு முன்பு வேலப்ப சுவாமிகளின் காலத்தில். அப்போதெல்லாம் கிராமத்து மனிதர்கள் வருடங்களின் கணக்கைச் சரியாக மனதில் வைத்திருந்தார்கள். அதற்கு பிறகு கணக்குகள் வைத்திருந்த தலைமுறையின் நினைவுகளில் நரை விழுந்தபோது கணக்குகள் சிதிலமடைந்துவிட்டன. வெள்ளப்பெருக்கு உண்டான ஒரு காலத்தில்தான் அது நடந்தது என்பது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து மழைக் காலத்தின்

கடுமையான குளிரிலும் மலையிலிருந்து வந்த நீர் உண்டாக்கிய சேதங்களுக்கு மத்தியிலும்கூட அதைப் பற்றிய பேச்சு மிகவும் சூடாகவே நடந்துகொண்டிருந்தது. பிறகு அவ்வப்போது வெள்ளப்பெருக்கு உண்டானதால், அது அறுபத்து இரண்டாம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளப்பெருக்கா அல்லது அறுபத்து நான்காம் ஆண்டு நடைபெற்ற வெள்ளப்பெருக்கா, இல்லாவிட்டால் அவற்றுக்கெல்லாம் முன்பு ஐம்பத்தாறாம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளப்பெருக்கா என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டானது. நடந்த சம்பவத்தின் ஆச்சரியத் தன்மையைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், கால நிர்ணயம் அந்த அளவிற்கு முக்கியமில்லை என்பது தெரியும்.

அறுவடை முடிந்து வெறுமனே கிடந்த வயலில் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள்தான் அந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறினார்கள். சாயங்காலம் ஆகியும் நிறைந்திராத வயிறுடன் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்த பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள், கூட்டமாகக் கடல் காகங்கள் மலைக்கு மேலே அடைவதற்காகப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஒரு பெரிய கவணைப் போல அவை பறந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் எவ்வளவு பறவைகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கலாமா என்ற ஒருவனின் கேள்விக்குப் பதிலாக மற்றொரு சிறுவன் அவற்றை எண்ணத் தொடங்கினான். ஐந்து என்று எண்ணியபோது பறவைகள் ஆஸ்ரமம் இருந்த மலைக்குச் சரியாக மேலே இருந்தன. திடீரென்று அந்தப் பறவைகள் அத்தனையும் மறைந்து போயின. அங்கு சில பறவைகள் பறந்துகொண்டிருந்தன என்பதற்கான அடையாளமே இல்லாமல் அவை வானத்தின் நீல நிறத்தில் மறைந்து காணாமல் போயின.வானத்தில் மேகங்கள் கொஞ்சம்கூட இல்லை. எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் உடனிருந்த இன்னொரு சிறுவனைப் பார்த்தபோது, அவனும் வாயைப் பிளந்து திகைத்துப்போய் நின்றிருந்தான்.

அருகிலிருந்த பகவதி கோவிலில் தீபாராதனை நடப்பதற்கான மேளச் சத்தம் கேட்டது. ஆலமரத்திற்குக் கீழே வெடிகள் வெடித்தன.அப்போதும் திகைப்பில் மூழ்கிப் போயிருந்த சிறுவர்கள் பசுக்களை மேய விட்டுவிட்டு, அப்புண்ணியின் தேநீர்க் கடையை நோக்கிச் சென்றார்கள். அங்கு சிறு கூட்டமாக நின்றிருந்தவர்களிடம் கிராமத்திலேயே முட்டாளாக இருந்த கோபாலன் கைகளை இப்படியும் அப்படியுமாக ஆட்டியவாறு பறந்து கொண்டிருந்த பறவைகள் எப்படி வானத்தில் ஆச்சரியப்படும் வகையில் காணாமல் போயின என்பதை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தான். வழக்கம்போல அதை ஒரு தமாஷ் என்று  எடுத்துக்கொண்ட மக்கள் கூட்டம் அவனைக் கேலி பண்ண ஆரம்பத்தது. அப்போதுதான் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த  இரண்டு சிறுவர்களும் ஓடி வந்ததும், பறவைகளைப் பற்றிய விஷயத்தைக் கூறியதும் நடந்தது.

திடீரென்று அங்கு அமைதி நிலவியது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆஸ்ரமத்தில் மலர்கள் சாற்றச் சென்ற ஒரு தாயும் மகளும் அங்கு கேள்விப்பட்ட, திகைப்பு உண்டாக்கக்கூடிய ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்ட ஒவ்வொருவரும் ஆச்சரியப்பட்டு சிலையென நின்றுவிட்டனர். அவர்களுக்கு அதை நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது. பறவைகளைப் பற்றிய விஷயம் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், மனிதர்கள்?


பயணத்தின் முடிவு

ளைந்து திரும்பி மலைமீது ஏறிப் போய்க்கொண்டிருந்த மணல் நிறைந்த பாதை முடிவடையும் இடத்தில் ஒற்றைக் காளைவண்டி நின்றது.காவி ஆடை அணிந்திருந்த தேவிகாவைப் பின்பற்றி சரளா இறங்கினாள். கடந்த சில நிமிடங்கள் வரை அவர்களைச் சூழ்ந்திருந்த அடிவாரம் இப்போது மறைந்துவிட்டது. சுற்றிலும் மரங்கள் மட்டும் இருந்தன. ஒரு சிறு காற்றின் குளிர்ச்சியில் அவர்கள் நீண்ட பயணத்தின் களைப்பை மறந்தார்கள்.

வண்டியை ஓட்டி வந்த மனிதன் ஒரு வயதானவன். நீளமான நரைத்த தாடியையும் கொஞ்சம் தலை முடியையும் கொண்டிருந்த அவன் ஒரு சந்நியாசியைப் போல இருந்தான். தேவிகா நீட்டிய பணத்தை இரண்டு கைகளாலும் வாங்கி, தேவைக்கும் அதிகமாக நீளமாக இருந்த சட்டைப் பாக்கெட்டிற்குள் வைத்த அவன் சொன்னான்:

“அதோ... அதுதான் ஆஸ்ரமம். ஐந்து நிமிடங்கள் மேல ஏறணும்.”

வண்டிக்காரன் சுட்டிக்காட்டிய இடத்தை சரளா பார்த்தாள். மரங்களுக்கு மத்தியில் மலையின் உச்சியில் வைக்கோலால் வேயப்பட்ட பர்ணசாலையின் ஒரு பகுதி தெரிந்தது. திடீரென்று அவள் உணர்ச்சி வசப்பட்டாள். தான் மனதில் அடைய வேண்டும் என்று நினைத்திருந்த இடத்தை நெருங்க நெருங்க அவளுக்குள் உற்சாகம் கூடிக் கொண்டேயிருந்தது.

இரு பக்கங்களிலும் புற்களும் புதர்களும் வளர்ந்திருந்த ஒற்றையடிப் பாதை வழியாக தேவிகாவுடன் சேர்ந்து சரளா நடந்தாள்.

தேவிகா பேசுவதில் மிகவும் விருப்பம் கொண்டவளாக இருந்தாள்.காலையில் எட்டு மணிக்குப் பயணம் ஆரம்பமானபோது அவள் நிறைய பேசினாள். தன்னுடைய மனதின் கதவுகளை முழுமையாகத் திறந்து வைத்து மற்றவர்களை உள்ளே அழைக்கக் கூடிய ஒரு தனி குணத்தை அவள் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு வழியில் எப்போதோ, பேச்சின் உபயோகமற்ற தன்மையைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, அவள் அமைதியாகிவிட்டாள். சந்நியாசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிவந்த சூழ்நிலைக்கான காரணங்களைப் பற்றித்தான் தேவிகா கூறிக்கொண்டிருந்தாள்.

அவளுடைய பதினான்காம் வயதில் தந்தை இறந்துவிட்டார். பட்டினியில் கிடந்தபோது, அவளுடைய தாய் இரண்டாவது திருமணம்  செய்துகொள்ள சம்மதித்தாள். ஆனால், இரண்டாவது தந்தை முழுமையான குடிகாரனாக இருந்தான். தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியைக் கொடுமைப்படுத்துவான். மகளுக்குத் தொந்தரவுகள் கொடுப்பான். ஆரம்பத்தில் அவளுடைய தாய் சண்டை போட்டாள்,எதிர்த்தாள். பிறகு அது தினமும் நடக்கக் கூடிய ஒரு செயல் என்று ஆனபோது, பட்டினியாலும், துன்பத்தாலும் உண்டான கசப்பான அனுபவங்களுக்கு மத்தியில் அவள் சிறிதும் எதிர்ப்பு காட்டாமல் ஒரு மரத்துப்போன பெண்ணைப் போல மாறிக் கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிருந்தாள்.

மூன்று வருடங்கள் அவள் தன்னுடைய இரண்டாவது தந்தையின் செயல்களுக்கு எதிராக தைரியத்துடன் நின்றாள். ஒரு இரவு நேரத்தில்  தூங்கிக் கொண்டிருந்தபோது, தன்மீது கனமாக அழுத்துவதை உணர்ந்த அவள் கண்விழித்தபோது, தான் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாணக் கோலத்தில் இருப்பதை அவள் பார்த்தாள். எப்படியோ அந்த மனிதனின் கையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவள் வேகமாக ஓடினாள். ஓடுகிறபோது, கிடைத்த ஒரே ஒரு ஆடையை மட்டும்  அணிந்து கொண்டு இரவு முழுவதும் பயந்து யாருக்கும் தெரியாமல் மறைந்து திரிந்தாள். காலையில் யாருடைய உதவியாலோ பிரபாமயிதேவியின் ஆஸ்ரமத்தை அடைந்த அவள் சந்நியாசகோலம் பூண்டாள்.

பேருந்தின் இரைச்சலுக்கு மத்தியில் தேவிகா கூறிக்கொண்டிருந்ததை மிகவும் கவனத்துடன் கேட்டவாறு சரளா உட்கார்ந்திருந்தாள்.

“பாவம் அம்மா... இப்போ அவங்க என்ன செய்வாங்களோ?”

தேவிகா சிறிது நேரம் பேருந்திற்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதைப் போல் இருந்தது.

“வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை... அப்படித்தானே அக்கா?” - சரளாவின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டு தேவிகா சொன்னாள்: “சரி... அக்கா... நீங்க வீட்டைவிட்டு வந்ததுக்கான காரணம் என்ன?

தன்னுடைய கதையைச் சொல்லி முடித்தவுடன், அதற்குப் பதிலாக சரளாவின் கதையைக் கேட்கக்கூடிய உரிமை தனக்கு இருக்கிறது என்று அவள் நினைத்திருக்க வேண்டும். குற்ற உணர்வு இல்லாத கள்ளங் கபடமற்ற மனதிற்குச் சொந்தக் கதைகளைக் கேட்பது என்பது சர்வசாதாரணமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அவளுக்கு?

சரளா எதுவும் கூறவில்லை. அவளுடைய முகம் இருண்டுபோய் இருப்பதைப் பார்த்த தேவிகா சொன்னாள்:

“அக்கா, கவலைப்படாதீங்க. எல்லா விஷயங்களும் சரியாயிடும்.”

பேருந்து நிலையத்திலிருந்து ஒற்றைக் காளை வண்டியில் ஏறிச் செல்லும் பயணத்தின்போது தேவிகா எதுவும் பேசவில்லை. இப்போது தேவிகாவிற்குப் பின்னால் நிழலைப்போல நடக்கும்போது, சரளா சந்தேகத்துடன் நினைத்துப் பார்த்தாள்-‘தனக்கு என்றைக்காவது வாழ்க்கையில் அமைதி கிடைக்குமா?’

வெளி வீட்டைப் போல அமைக்கப்பட்டிருந்த கதவுக்கு அப்பால் பர்ணசாலை இருந்தது.

ஆனந்த குரு

வெகு சீக்கிரமே சந்நியாசத்தை ஏற்றுத் தனக்கு முன்னால் மண்டியிட்டு நின்றிருக்கும் இளம் பெண்ணின் தலையில் கையை வைத்து, பத்மாசனத்தில் இருந்த ஆனந்தகுரு ஆசீர்வதித்தார்.

“மகனே, எழுந்திருங்க.”

சரளா எழுந்து நின்றாள். கன்னத்தின் வழியாக வழிந்துகொண்டிருந்த கண்ணீரை புடவைத் தலைப்பால் துடைத்தாள்.

“அழாதீங்க....”

அது ஒரு கட்டளையைப் போல் இருந்தது. சாளரத்தின் வழியாக உள்ளே வந்த மாலைநேர வெயில் அவளுடைய முகத்தைப் பொன் நிறத்தில் மின்னச் செய்ததை குரு கவனித்தார். சதைப்பிடிப்பான கன்னங்கள் கண்ணீரால் நனைந்திருந்தன. ஒரு பொன்னால் ஆன சிலையைக் கழுவி வைத்ததைப்போல அவள் இருந்தாள். மெல்லிய பச்சைக் கரை போட்ட வெள்ளைப் புடவையை அவள் அணிந்திருந்தாள். கூச்சம் காரணமாகப் புடவையைத் தோளில் இட்டு உடலை முழுமையாக அவள் மூடியிருந்தாள்.

குரு சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் இருந்தார். எங்கிருந்தோ வந்து தனக்கு முன்னால் நின்றிருக்கும் இந்தப் பெண் யார்? அவளின் கவலைக்கான காரணம் என்ன? மாலை நேர சொற்பொழிவு முடிந்து திரும்பி வந்தபோதுதான், முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணை அவர் பார்த்தார். அவரை எதிர்பார்த்திருந்ததைப் போல அவள் சொன்னாள்:

“நான் சந்நியாசினியா ஆகணும்.”

சந்நியாசத்திற்கு தீட்சை கொடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. ஏராளமான பேர் ஆஸ்ரமத்திற்கு வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு பஜனம் இருக்க வேண்டும் என்று வருவார்கள். அதற்குள் மனஅமைதி கிடைத்துவிட்டால், அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள். தீராத நோயைக் கொண்டவர்கள், கெட்ட நேரத்தால் எல்லாவற்றையும் இழந்தவர்கள், மனதில் அமைதி இல்லாதவர்கள்- இப்படி உலகத்தில் உள்ள பலவிதப்பட்ட பிரச்சினைகளைத் தாங்கிக்கொண்டு வருபவர்கள் பஜனம் இருப்பதற்காக ஒதுக்கப் பட்டிருக்கும் பர்ணசாலையில் ஒரு வாரகாலம் இருப்பார்கள்.


அற்புதங்களை எதிர்பார்த்திருக்கும் அந்த நாட்களில் அவர்கள் வேலப்ப சுவாமிகளின் சமாதிக்கும் சென்று தொழுவார்கள். சில நேரங்களில் அற்புதங்களும் நடக்கத்தான் செய்கின்றன. தீராத நோய்கள் குணமாகின்றன. குழப்பங்கள் நிறைந்திருக்கும் மனங்களுக்கு அமைதி திரும்பக் கிடைக்கிறது. வலிப்பு நோய் குணமாகும். உடல் நிலை சரியானாலும் சரியாகாவிட்டாலும் ஏதோ ஒன்றை அடைந்தோம் என்ற திருப்தியுடன் அவர்கள் திரும்பிச் செல்வார்கள்.

நிரந்தரமாக பக்தர்களைத் தங்க வைப்பதும் அவர்களுக்குத் தீட்சை தருவதும் நீண்ட சிந்தனைக்குப் பிறகுதான்! அவர்களுடைய  வாழ்க்கைப் பின்புலத்தைப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். தனக்கு முன்னால் இருக்கும் இளம் பெண்ணைப் பார்த்தபோது  ஆனந்த குருவிற்குச் சந்தேகங்கள் உண்டாயின. அவளால் சந்நியாசத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவளைவிட வயது குறைவான பெண்கள் ஆஸ்ரமத்தில் சந்நியாசம் ஏற்று இருக்கத்தான் செய்கிறார்கள். வயது என்பது முக்கியம் அல்ல. இந்த இருபத்து ஐந்து வயதை கொண்ட இளம் பெண்ணின் கண்களில்,  உடலுறுப்புகளின் அசைவுகளில் வாழ்க்கை துடித்து நின்று கொண்டிருந்தது. அங்கு விரக்தி அல்ல, ஆசை இருப்பது தெரிந்தது.அது குருவைக் குழப்பமடையச் செய்தது.

“அழாதீங்க” -ஆனந்தகுரு மீண்டும் சொன்னார்: “உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு என்னால் புரிஞ்சிக்க முடியல. எது இருந்தாலும், சந்நியாசம் இருக்குறதா இருந்தா இருங்க. சந்நியாசியின் வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்தது. உங்களால அவற்றைத் தாங்கிக் கொண்டிருக்க முடியுமா? அது உங்களுக்குத் தேவைதானா என்பதைப் பார்க்கணும். சிறிது நாட்கள் பஜனம் இருங்க. சுற்றிலும் பசுமையான மரங்கள் இருக்கு. நம்மை எந்தச் சமயத்திலும் தொந்தரவே செய்யாத இயற்கை... அவற்றுக்கு மத்தியில் இருக்கும் வாழ்க்கை உங்களுக்கு, நீங்கள் இழந்த மனஅமைதியைத் திரும்பத் தரும். ஒருவேளை, கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு நேர்ந்தது என்ன என்பதை நீங்கள் என்கிட்ட சொல்லலாம். எதுவாக இருந்தாலும் நாம அதைத் தீர்த்து வைக்கலாம். உங்களால வாழ்க்கைக்கு தைரியமாகத் திரும்பிப் போக முடியும். கவலைப்படாதீங்க. தினமும் மத்தியத்திற்குப் பின்னாடி ஒரு மணிநேரம் சொற்பொழிவு இருக்கு. அதைக் கேட்க வாங்க. மனதை பலமா வைத்திருக்க அது உதவும்.”

பின்னால் நின்றிருந்த சந்நியாசினியைச் சுட்டிக்காட்டி குரு சென்னார்:

“இவங்க பஜனம் இருப்பதற்கான இடத்தைக் காட்டுவாங்க.”

இன்னொரு முறை காலில் விழுந்து வணங்கி எழும் அந்த இளம் பெண்ணை ஆனந்த குரு ஆசீர்வதித்தார்.

“நல்லது நடக்கட்டும்.”

சரளா பர்ணசாலையை விட்டு வெளியேறி நடந்தாள். சந்நியாசினியும் அவளுடன் வந்தாள்.சரளா கேட்டாள்:

“தேவிகா?”

“இல்ல. என் பேரு சுனந்தினி. வாங்க.”

தேவிகா எங்கு இருக்கிறாள் என்று கேட்கத்தான் சரளா நினைத்தாள். அவள் போயிருக்க வேண்டும் என்று சரளா நினைத்தாள். அவளுடைய நோக்கம் அங்கு வந்து சேர்வதுதானே! ஆனால், சொல்லாமல் அவள் போனது சரளாவை வேதனை கொள்ளச் செய்தது. ஒருவேளை அவள் இப்போதுகூட ஆஸ்ரமத்தில் வேறு எங்காவது இருக்கலாம் என்று சரளா தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

ஆனந்தகுரு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அந்த இளம் பெண்ணைப் பார்த்த நிமிடத்திலிருந்து அவருடைய இதயம் காரணமே இல்லாமல் படுவேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது. ஆசைகளுக்குத் தன்னுடைய மனதில் இடமில்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். பல வருடங்களாகப் பின்பற்றி வந்த கடுமையான தவத்தின் விளைவாக  மனதை வாழ்வுமீது கொண்ட பற்றிலிருந்தும்- செயல் பற்றுகளிலிருந்தும் விலக்கி, சுத்தமான மனதுடன் இருக்க அவர் பழகிக்கொண்டிருந்தார். நினைவுகளின் தேவையற்ற தூரங்களுக்குப் பயணம் செய்ய அவர் தன்னுடைய மனதை அனுமதிக்கவில்லை. அது பயனற்ற ஒன்று என்பதை அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். வாழ்க்கையின் ஓரத்தைச் சுற்றிப் பயணம் செய்வது, பற்று சிறிதும் இல்லாமல், தனியனாக...

பாம்புப் புற்றில் நிழல்கள்

வெளியே கடந்துபோன போதுதான் ஆஸ்ரமம் எவ்வளவு பரந்திருக்கிறது என்பதே அவளுக்குத் தெரிந்தது. மலையின் மேற் பகுதியில் மூன்று கட்டிடங்கள். அவை செங்கற்களால் கட்டப்பட்டு வைக்கோலால் வேயப்பட்டிருந்தன. பிறகு, மலையின் வேறொரு சரிவில் பல அடுக்குகளாக ஏராளமான சிறுசிறு குடில்கள்.அவை பனையோலைகளால் வேயப்பட்டிருந்தன. மேலே இருந்து பார்க்கும்போது மரங்களுக்கு மத்தியில் ஓலைக்குடைகளின் ஊர்வலம் போலத் தெரிந்தது.

கற்களால் உண்டாக்கப்பட்ட படிகள் வழியாக இறங்கி அவர்கள் ஒரு வீட்டை நோக்கி நடந்தார்கள்.காவி நிறத்தில் சிமெண்ட் பூசப்பட்ட  தரை எந்தவித இல்லப் பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது. இரண்டு சிறிய அறைகள்.ஒரு அறையுடன் சேர்ந்த குளியலறை.

“அக்கா இங்கே வந்து உட்காருங்க”- சுனந்தினி சொன்னாள்: “நான் போயி படுக்குறதுக்கான ஜமுக்காளத்தையும் குடிக்கிறதுக்குத் தண்ணியையும் கொண்டு வர்றேன்.”

சரளா இப்போது தனியாக இருந்தாள், பஜனத்திற்குப் பெண்கள் யாருமில்லை என்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. இரவில் தனியாக அந்த வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுமோ என்ற பயம் சரளாவிற்கு உண்டானது.

அகலமான சாளரத்தின் வழியாக அவள் வெளியே பார்த்தாள். கீழே மரங்களுக்கு மத்தியில் சிறுசிறு வீடுகளை இணைக்கக்கூடிய செம்மண்ணால் ஆன பாதையில் காவி ஆடை அணிந்தவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சாயங்கால நேரத்தின் நிழல்கள் விழ ஆரம்பத்திருந்தன. படிப்படியாகத் தன்னுடைய மனதிற்குள்ளும் நினைவுகளின் வேதனை தரும் நிழல் படிவதை அவளால் அறிந்து கொள்ள முடிந்தது. வெளியே இருந்து குளிர்ந்த காற்று உள்ளே வந்தது.

மதிய உறக்கத்தின் சோர்வு குறைந்து வரும் சாயங்கால வேளைகளில் மேலே இருக்கும் தனியான சாளரத்தின் வழியாக அவள் வெளியே பார்த்தவாறு நிற்பதுண்டு.வெளியே ஒரு விநோதமான உலகம் இருக்கலாம். அப்போதும் கடுமையான வெயில் வயலின் பசுமையில் பட்டு மாற்றம் உண்டாக்கிக் கொண்டிருக்கும். அங்கிருக்கும் நிலத்தில் நின்றிருக்கும் மரங்களின் கிளைகள் காற்றில் இப்படியும் அப்படியுமாக ஆடிகொண்டிருக்கும். பறவைகள் ஓசைகள் உண்டாக்கிக் கொண்டிருக்கும். சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகத்தைப்போல அவள் கவலையுடன் நின்றிருப்பாள். வேண்டுமென்றால், அவள் வெளியே செல்லலாம். வெளியே நடந்து காற்றையும், வெயிலையும் அனுபவிக்கலாம். காலையில் நீர் பாய்ச்சல் முடிந்து, அப்போதும் விடாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்களில் வெறும் பாதங்களுடன் நடக்கலாம். வாய்க்கால்களின் இரு பக்கங்களிலும் இருக்கும் ஈர மண்ணில் எப்படியோ வளர்ந்து வரும் செடிகளைப் பார்த்துக்கொண்டே நின்றிருக்கலாம். இவை ஒவ்வொன்றும் மனதில் சந்தோஷத்தை உண்டாக்கக் கூடியவை. ஆனால் ஏதோ புரிந்துகொள்ள முடியாத சக்தி ஒன்று அவளைப் போட்டு அலைக் கழித்துக் கொண்டிருந்தது. இந்த அளவிற்கு அவள் அருகில் இருந்தும், அந்த இயற்கை அழகு தாண்டவமாடும் உலகம் அவளை வேதனைப்படுத்தவே செய்தது.


கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய  பார்வை பாம்புப் புற்றை நோக்கித் திரும்பும். சூரியன் மரங்களுக்கு மத்தியில் மறையும் நேரத்தில் நிழல்கள் புற்றில் தெளிவற்ற உருவங்களைப் படைத்துக் கொண்டிருக்கும். அந்த நிழல்கள் அவளுடைய மனதில் என்னவென்று  கூறமுடியாத வேதனையை உண்டாக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன் கணவன் வயலில் வரப்பு வழியாக நடந்து வருவது அவளுக்குத் தெரியும்.அவள் மரத்தாலான படிகளில் சத்தம் உண்டாக்கியவாறு இறங்கி வருவாள்.

“அம்மா.... கோபி அத்தான் வர்றாரு தேநீருக்கு நீர் வைக்கட்டுமா?”

கோபி வந்தவுடன் வாசல் திண்ணையில் அவனை எதிர்பார்த்து நின்றிருக்கும் சரளாவின் கையிலிருந்து துண்டையும்,சோப்பையும் வாங்கிக் கொண்டு நேராக அவன் குளத்தை நோக்கி நடப்பான். குளித்து முடித்து வரும்போது தேநீரும் பலகாரங்களும் தயாராகி மேஜைமீது  வைக்கப்பட்டிருக்கும். பலகாரம் செய்வது அவனுடைய தாய். மதிய நேரத்தில் தூக்கம் இல்லாததால் சாப்பிட்டு முடித்தவுடன், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு அவள் பலகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

தேநீர் குடித்துக் கொண்டே அவன் விவசாயத்தின் வளர்ச்சியைப்பற்றி கூறிக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால், வேலைக்காரர்களின் பிரச்சினைகளைப் பற்றி கூறுவான். பக்கத்திலிருக்கும் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அதைக் கவனத்துடன் சரளா கேட்டவாறு தேநீர்  குடிப்பாள். அவளிடம் அதைப் பற்றி எந்தவொரு கருத்தும் இருக்காது. திருமணம் முடித்து ஆறு வருடங்கள் ஆனபிறகும், அவளால் தன்னுடைய கணவனின் உலகத்திற்குள் முழுமையாக நுழைய முடியவில்லை.

சமையலைறையிலும் சாப்பிடும் அறையிலும் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டே அன்னை தன் மகன் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகக் கேட்டுத் தன் கருத்தையும் கூறுவாள்.

“அக்கா என்ன கனவு காண்றீங்களா?”

சுனந்தினி சரளாவைக் கனவு உலகத்திலிருந்து சுய உணர்விற்குக் கொண்டு வந்தாள். அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள்- இழந்து விட்ட உலகத்தைப் பற்றி. இதற்கிடையில் சுற்றியிருக்கும் உலகம் கண்களை விட்டு மறைந்துவிட்டது. வெளியே மரங்கள் இருட்டின் கூம்புகளாக மாறிவிட்டிருந்தன.

சுனந்தினி தன் கையிலிருந்தவற்றைத் தரையில் போட்டாள். இன்னொரு கையிலிருந்த கூஜாவையும் டம்ளரையும் அறையின் ஒரு மூலையில் கொண்டு போய் வைத்தாள்.

“குடிக்கிற தண்ணி...” சுனந்தினி சொன்னாள்: “அக்கா, பஜனத்திற்கு வேற பெண்கள் வர்றது வரை நான் உங்ககூட வந்து படுத்துக்குறேன்.”

இரவில் உணவாகக் கஞ்சி குடித்தார்கள். சாப்பிடும் இடத்தில் ஒன்றாக உட்கார்ந்து வேகவைத்த சிறுபயிறு கூட்டுடன் கஞ்சியைக்குடித்தபோது, சரளா தன் தலையை உயர்த்தவே இல்லை. சுற்றிலும் நிறைய ஆட்கள்... பெரும்பாலும் காவி உடை அணிந்தவர்கள். வெள்ளை நிற ஆடை அணிந்திருந்ததாலும், புதுமுகமாக இருந்ததாலும் தான் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோம் எனற உணர்வு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

ஜமுக்காளத்தை விரித்துப் படுத்தபோது, சுனந்தினி கேட்டாள்:

“அக்கா உங்க கவலைக்கான காரணம் என்ன? எப்போ பார்த்தாலும் நீங்க ஏதாவது யோசனையில் இருக்குறது மாதிரியே இருக்கே?”

சரளா அதற்குப் பதில் எதுவும் கூறாமல் சுனந்தினியின் இடுப்பின் மீது தன் கையைப் போட்டாள். அவள் எதுவும் யோசிக்கவில்லை. யோசிக்காமல் இருக்க முயற்சித்தாள். இதற்கிடையில் மனம் நழுவிப் போய்க்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அது கிராமத்தின் ‘நாலுகெட்டை’ அடைந்தது. அத்துடன் இதயம் இரண்டாகப் பிளக்கிறது. அழுகையாக நினைவுகள் உள்ளே நுழைகின்றன. அவள் தனக்குள் கேட்கிறாள்?

“வினோத், நீ எதற்காக இதைச் செய்தே?”

“அக்கா உங்க கவலைகள் எதுவா இருந்தாலும் ஆனந்தகுருவைப் பார்த்தால் எல்லாம் சரியாயிடும்”- சுனந்தினி அவளைத் தேற்றினாள்: “வெறுமனே குருவுக்குப் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தால் போதும். நம்ம கவலைகள் இருந்த இடமே தெரியாமல் போயிடும்.”

காலையில் கண் விழித்தபோது, சுனந்தினி அங்கிருந்து போய்விட்டிருந்தாள். வெளியில் பலவகைப்பட்ட கிளிகளின் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது. ஒரு துயில் எழுப்புப் பாடலின் புனிதத்தையொத்திருந்த அந்தச் சப்தங்களைக் கேட்டவாறு சிறிது நேரம் அவள் படுத்திருந்தாள். ஒரு புதிய இடம், புதிய நாள், ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பமோ அது?

உயர்ந்து நின்றிருந்த மலை உச்சிகளை வருடிக்கொண்டு வந்த காற்று மிகவும் குளிர்ச்சியானதாகவும் பலம் கொண்டதாகவும் இருந்தது. அவள் எழுந்து சாளரத்தின் வழியாகப் பார்த்தாள். மரங்கள் அவற்றின் அழகை முழுமையாக வெளிப்படுத்தி அவளை ஈர்த்தது. இளம் சூரியக் கதிர்கள் இலைகளுக்கு மத்தியில் தெரிந்தன.

திடீரென்று அவளுக்கு தான் தனியாகிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வும், அத்துடன் அறைக்குள் அமைதியாக அடங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டானது. தான் ஒரு அனாதை என்ற எண்ணம்  கொஞ்சம் கொஞ்சமாக  வளர்ந்துவர,  அவளுடைய கணவன்  ஒருமுறை சொன்னது அவளின் ஞாபகத்தில் வந்தது.

“இவ்வளவு பெரிய வீட்டுல நாம மூணுபேர் மட்டும். அம்மாவின் காலம் முடிந்தால், நாம இரண்டு பேர் மட்டும்தான் இருப்போம். அது போதுமா?”

அவன் எதை மனதில் வைத்து அப்படிப் பேசுகிறான் என்பதை சரளாவால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் அதைக் கேட்டு மனதில் வேதனைப்படுவாள். எதுவும் கூறாமல் அவனுடைய அணைப்பில் சிக்குண்டு அவள் படுத்திருப்பாள். தூங்கிக் கொண்டிருக்கும்போதும் அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டிருப்பான். திருமணம்   முடிந்த நாட்களில் அவளுக்கு அது மிகவும் தொந்தரவான ஒரு விஷயமாக இருந்தது. உறக்கம் வரும்போது, தனியாகப் போய் படுக்க முயற்சித்தபோது,  அவன் மீண்டும் அவளை இறுகத் தன்னுடன் சேர்த்து  அணைத்துக் கொள்வான். எங்கே தன்னை விட்டு அவள் போய்விடப் போகிறாளோ என்று பயப்படுவதைப்போல் இருக்கும் அவனுடைய செயல். நாட்கள் செல்லச் செல்ல அதுவே பழகிப் போய்விட்டது.  அதற்குப் பிறகு தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு கண் விழிக்கிறபோது முதலில் அவள் பார்ப்பதே கோபியின் கை தன் இடுப்பில் இருக்கிறதா என்பதைத்தான்.

தூக்கம் வராத இரவு வேளைகளில் அவள் நாலுக்கெட்டின் இசையைக் கேட்டவாறு படுத்திருப்பாள். நாலுக்கெட்டு உயிருள்ள ஒரு வினோத உயிரைப் போல அவளுக்குத் தோன்றும். கீழே வடக்குப் பக்கம்  அம்மா படுத்திருப்பாள். அதைத் தாண்டி இருக்கும் அறையில்  தேவதைகள் காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பூஜை அறையில் இருந்து சந்தனத்திரியின் மணமும்,  குத்துவிளக்கின் அணைந்த எண்ணெய்த் திரியின் வாசனையும் அவளைத் தேடி வந்து கொண்டிருக்கும். கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் அங்கு இருப்பதை அவள் உணர்வாள்.

வினோத் கல்லூரியிலிருந்து விடுமுறையில் வந்தால், மாடியிலிருக்கும் தெற்குப் பக்க அறையில்தான் படுப்பான். இரவு நீண்ட நேரம் ஆன பிறகும் அவனுடைய அறையில் வெளிச்சம் இருந்து கொண்டிருக்கும்.


பகலில் படுத்து உறங்கிவிட்டு, இரவு நேரங்களில் படிப்பதுதான் அவனுடைய பழக்கம். இடையில் கண்விழித்தால், கீழே சமையலறைக்கு வந்து தன் தாயிடம் கல்லூரி ஹாஸ்டலில் சாப்பிட்ட உணவுக் பொருட்களை விளக்கி அவற்றைத் தயார் பண்ணித் தரச் சொல்லிச் சாப்பிடுவான். சில நேரங்களில் அவனே சமையல் பண்ணுவான். எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டு நின்றிருக்கும் சரளாவிடம் அவன் கூறுவான்:

“அண்ணி, இதை அறுத்துத் தாங்க... சீக்கிரம்.”

பிறகு சிறிது நேரத்திற்கு வினோத் வறுக்கும், பொரிக்கும், அரைக்கும் சத்தம்தான். வாயில் நீர் ஊறும் அளவிற்கு வாசனை அங்கு உண்டாகும்.

கோபி கூறுவான்: “எனக்கு இந்த உணவுப் பொருட்களெல்லாம் வேண்டாம். அம்மா, நீங்க தயாரிக்கிற வெண்டைக்காய் சாம்பாரும் பாவைக்காய் கூட்டும் எனக்குப் போதும்.”

ஆனால், வினோத்தின் சமையலை அங்கு சாப்பிடுவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அன்னைக்கு அது மிகவும் பிடித்திருந்தது. சரளாவும் அதில் கொஞ்சத்தை எடுத்து சுவை பார்ப்பாள். வாசனையைப் போலவே ருசியும் இருந்தது.

“அண்ணி, என் சமையல் எப்படி இருக்கு?”

“வாசனையை உணர்ந்தப்போ நல்ல ருசி இருக்கும்ன்ற மாதிரி  இருந்தது.”

“சாப்பிட்டுப் பார்த்தப்போ, ருசியே கொஞ்சமும் இல்ல.... அப்படித்தானே?”

“ஆமா....”

“அப்படின்னா இனி வேண்டாம்ல?”

“அய்யோ... நான் சும்மா சொன்னேன். எனக்கு இன்னும் கொஞ்சம் தா.”

“வேண்டாம்... வேண்டாம்... எனக்கு வேற வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அப்படித்தானே அம்மா?”

அன்னை அதைக் கேட்டு சிரிப்பாள். தொடர்ந்து வினோத் விளையாட்டுக்காகத் தள்ளி வைத்த பாத்திரத்தை சரளாவை நோக்கி நீட்டுவான்.

“இவ்வளவு அருமையான உணவுப் பொருட்களையா நீ ஹாஸ்டல்ல இருக்குறப்போ சாப்பிடுறே?” - சரளா கேட்பாள்.

“அவனோட மெஸ் பில் அதிகமா இருக்குறதுல ஆச்சரியப்படுறதுக்கே இல்ல...” - கோபி கூறுவான்.

அவன் விளையாட்டுக்காக அதைக் கூறுவான். ஆனால், வினோத் அமைதியாக உட்கார்ந்திருப்பான். தன் அண்ணன் மீது அவனுக்குப் பாசத்துடன், பயமும் இருந்தது. அவனுக்குப் பத்து வயது நடக்கும்போது அவர்களின் தந்தை மரணத்தைத் தழுவி விட்டார். அப்போது இருபது வயதைக் கொண்ட அவனுடைய அண்ணன்தான் சவ அடக்கம் நடந்தபோது அழுது தளர்ந்து போயிருந்த அவனைத் தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன். அன்றிலிருந்து சொல்லப்போனால் அவன்தான் தம்பியைத் தாங்கிக் கொண்டிருந்தான். ப்ரீ டிகிரி படித்துக்கொண்டிருந்த அவன் தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு வயலில் இறங்கினான் - தன் தந்தையின் தொழிலைத் தொடரவேண்டும் என்ற எண்ணத்துடன். பொறியியல் வல்லுனராக ஆகவேண்டும் என்ற தன்னுடைய ஆசையைத் தம்பி மூலம் நிறைவேற்றிக் கொள்ள அவன் முயற்சித்தான். சேற்றின் மணத்திலும் முளைத்து வரும் நெல் வித்துகளின் உயிர்த்துடிப்பிலும் அவன் நிம்மதி அடைந்தான்.

தன்னுடைய இருபத்தாறாவது வயதில் அவன் திருமணம் செய்துகொண்டது உண்மையாகச் சொல்லப் போனால் அந்தப் பெரிய வீட்டில் பகல் முழுவதும் தனியாக இருக்கும் தன்னுடைய தாய்க்குத் துணையாக ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். மகனின் ஒவ்வொரு விஷயத்தையும் அந்தத் தாய் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொண்டாள். காலையில் அவன் படுக்கையை விட்டு எழும்போது தேநீர் தயாரித்து மேஜைமீது கொண்டுபோய் வைப்பாள். அது முடிந்தவுடன் காலை உணவு தயாரிப்பதில் இறங்கிவிடுவாள். ஒன்பது மணிக்குக் காலை உணவு சாப்பிட்டு முடித்து அவன் வயலைத் தேடிப் புறப்பட்டுவிடுவான். மதிய உணவிற்காக ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவான். இதற்கிடையில் நல்ல ஆற்றுமீன் ஏதாவது கிடைத்தால், பணியாட்கள் மூலம் அவன் கொடுத்தனுப்புவான். மதிய உணவு சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் ஓய்வு- கீழே இருக்கும் அறையில்.

திருமணம் முடிந்த பிறகும் இதே மாதிரிதான் எல்லா காரியங்களும் தொடர்ந்து நடந்தன. மதிய நேரம் தூங்கி எழுகிறபோது, குடிப்பதற்கான நீரை கண்ணாடி டம்ளரில் ஊற்றி கட்டிலின் தலைப்பகுதியில் இருக்கும் ஸ்டூலின்மீது வைத்துவிட்டு சரளா மாடிக்குப் போவாள். ஆரம்பத்தில் கீழே மாமியாருடன் தான் அவள் இருப்பாள். ஒருநாள் அங்கு உட்கார்ந்து அவள் தூங்குவதைப் பார்த்து மாமியார்தான் சொன்னாள்:

“மகளே, போயி நீ படுத்துத் தூங்கு.”

அதற்குப் பிறகு மதிய நேரம் தூங்குவதற்காக அவள் மாடிக்குப் போய்விடுவாள். வார்னீஷ் பூசப்பட்ட மேற்கூரையின் ஒரு மூலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் பல நிறங்களைக் கொண்ட கண்ணாடி உருண்டைகளைப் பார்த்தவாறு அவள் தனியாகக் கட்டிலில் படுத்திருப்பாள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பாள். ப்ளவ்ஸின் கொக்கிகளை அவிழ்ப்பாள். சுதந்திரமாக்கப்பட்ட மார்பகங்களை அவளுடைய மெல்லிய விரல்கள் வருடும். விரல் நுனியில் மலரும் உணர்ச்சித் துளிகளின் ஆனந்தத்தில் சிக்குண்டு அவள் கண்களை மூடிப் படுத்திருப்பாள். மார்பகங்களில் திரண்டு நிற்கும் வியர்வைத் துளிகளை நெல் செடிகளின் வாசனையுடன் வயலிலிருந்து புறப்பட்டு வரும் காற்று மெதுவாகத் தன்னுடன் எடுத்துச் செல்லும். கோபி மேலே வந்தால் நன்றாக இருக்கும் என்று அவள் ஏங்குவாள். அவன் வரமாட்டான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

அவன் மதிய நேரத்தின்போது எந்த நாளிலும் மாடிக்கு ஏறி வந்ததில்லை. தேவைப்படுகிற விஷயங்களெல்லாம் கீழேயேதான். நகரத்திற்குப் போகவேண்டுமென்றால் மாற்றி அணிய வேண்டிய ஆடைகள், பணம் எல்லாமே கீழ் அறையிலேயே இருக்கும். திருமணம் முடிந்த பிறகும் அவன் தனக்கென்று இருக்கும் ஒரு உலகத்தைத் தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டான். மதிய உறக்கம் முடிந்து அவன் போவது சரளாவிற்குத் தெரியாது. நிறைவேறாத உணர்ச்சிப் பெரு வெள்ளத்தின் நினைவுகளுடன் அவள் தன்னை மறந்து தூங்கிவிட்டிருப்பாள்.

இரவில் ஒரு சடங்கு என்பதைப்போல கோபி தன் மனைவியுடன் உடலுறவு கொண்டான். தன்னுடைய விருப்பங்களைப் பற்றி பேச அவனுக்குத் தயக்கமாக இருந்தது. தான் சொல்லாமலே தன் மனைவி அவற்றைப் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவன் நினைத்தான். அதனால், கோபி படுத்தால் அவள் தன்னுடைய ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்துவிடுவாள். புடவைகளை அவிழ்த்து ஒரு நாற்காலியில் போடுவாள். தொடர்ந்து தன் கணவன் பக்கம் திரும்பி ப்ளவ்ஸையும் உள்ளாடைகளையும் அவிழ்ப்பாள். எல்லாம் ஒரு சடங்கைப்போல நடக்கும். கோபி அதைத்தான் விரும்பினான். எல்லாவற்றையும் கழற்றிப் போட்டுவிடடு, அவள் அவனுக்குப் பக்கத்தில் போய் படுப்பாள்.


வெற்றிலை வாசனை வரும் மூச்சுக் காற்று தன்மீது படுவதைக் கவனித்தவாறு, தட்டி எழுந்திராத தன்னுடைய உணர்ச்சிகளில் மூழ்கியவாறு சரளா படுத்திருப்பாள். தன் மனைவியின் உணர்ச்சிகள் கவனம் செலுத்தப்படவேண்டியவை என்பதை அவன் நினைத்ததே இல்லை. உழுத நிலத்தில் வித்துகளை எறியும் விவசாயி எப்படி இயல்பாக அதைச் செய்வானோ, அப்படித்தான் அவன் உடலுறவு விஷயத்தில் இருப்பான்.

வித்துகள் முளைக்காமல் போனதற்கான காரணங்களை அவன் நினைத்துப் பார்த்ததில்லை. வித்தை எறிய வேண்டியதுதான் என்றும், அதை முளைக்கச் செய்வது கடவுள் என்றும் அவன் நம்பினான். கடவுளின் விருப்பம் அதுவாக இருக்கலாம். மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் அவன் விரும்பவில்லை. விசாரித்துப் பார்த்தால் இரண்டு பேரில் ஒருவரிடம் குறை இருப்பது தெரியும். குறை யாரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? குறை என்ற விஷயத்தில் தன் மனைவிமீது அதைச் சொல்லாமல் இருக்கும் அளவிற்கு அவன் அவள்மீது அன்பு வைத்திருந்தான்.

வற்றாத வாய்க்கால்கள்

“குழந்தை இல்லைன்றது சாபம்தான்”- ஆனந்தகுரு சொன்னார்: “எந்த சாபத்தையும் ஆசீர்வாதமாக மாற்ற நாம் முயற்சிக்கணும். புராணங்கள் முழுக்க இதற்கு உதாரணங்கள் உண்டு.”

குருவின் முகத்தில் மனித இனம் பலநூறு வருடங்களாகப் பெற்ற அறிவின் ஒளி தெரிந்தது.

“நீங்க இளம் வயது. பிள்ளைகள் பிறக்க இனிமேலும் வாய்ப்பு இருக்கு. அதைப் பற்றி நினைச்சு மனசைக் கெடுத்துக்க வேண்டாம்.”

அவள் குருவிடம் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகவே கூறினாள். கணவன், மாமியார், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் கொழுந்தன், திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. குழந்தைகள் இல்லை....

“திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகியும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு ஒரு பெண் சந்நியாசம் ஏற்றுக் கொள்ள வரமாட்டாள்” - குரு தொடர்ந்து சொன்னார்: “அதற்கு வேறு காரணங்கள் இருக்கணும். சொல்றதுக்கு கஷ்டமாக இருக்குற.... இல்லாட்டி.... சொல்ல விருப்பமில்லாத விஷயங்கள்... எனக்கு அதைத் தெரிஞ்சிக்கணும்னு விருப்பமில்ல...”

குருவின் குரலில் இரக்கம் இருக்கிறதா? ஒருவேளை தனக்கு அப்படித்  தோன்றியிருக்கலாம். குருவிடம் எல்லா விஷயங்களையும் மனதைத் திறந்து கூறமுடியாமல் இருப்பதற்காக அவள் கவலைப் பட்டாள். எப்படி எல்லா விஷயங்களையும் கூற முடியும்? குரு அமானுஷ்யமான சக்தியைப் பயன்படுத்தி தன்னுடைய மனதிற்குள் இருப்பதைப் படித்துத் தெரிந்துகொண்டு விடுவாரோ என்ற பயத்தால் தன் மனதின்மீது ஒரு போர்வையை மூடி மறைத்து கொள்ள சரளா ஆசைப்பட்டாள். தன்மீது படிந்த களங்கம் தன்னுடனே முடிந்து போகட்டும் என்று அவள் நினைத்தாள்.

“ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளணும். நாம எல்லோரும் கடவுளின் கையில் இருக்கும் காய்கள். அவ்வளவுதான். வெறும் அடையாளங்கள், பொம்மைகள்....”

மேலே கையால் சுட்டிக் காட்டியவாறு குரு தொடர்ந்தார். “கயிறு இழுக்குற கைகள் அவருக்குச் சொந்தமானவை. சரி.... நீங்க பகவத் கீதை படிச்சிருக்கீங்களா?”

“இல்லை” என்று அவள் தலையை ஆட்டினாள்.

“புத்தகம் அறைக்கு வர நான் ஏற்பாடு செய்றேன். படிங்க. சந்தேகங்களைக் கேளுங்க... என்னால் முடிஞ்சவரைக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறேன். கீதையின் மகத்துவமே என்னன்னா அது சந்தேகங்களை உண்டாக்குறது இல்ல... இருக்குற சந்தேகங்களை இல்லாம ஆக்குறதுதான்...”

சரளா அங்கிருந்து போனபிறகும் குரு சிறிது நேரம் பத்மாசனத்திலேயே உட்கார்ந்திருந்தார். அந்த முகம் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் எந்த இடத்தில் தான் அந்த முகத்தைப் பார்த்திருக்கிறோம்? பல வருடங்களைக் கடந்து வந்த தன்னுடைய பயணத்திற்கு மத்தியில் இழுத்துவிட்ட ஞாபகப் படலங்கைளை மீண்டும் கொண்டுவந்து நினைத்துப் பார்க்க அவர் முயற்சி செய்தார். எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. மனதில் நெருக்கமாக இருக்கும் உருவங்கள், தெளிவற்ற உருவங்கள் எல்லாம் அடுத்தடுத்து தோன்றிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் எங்கோ அந்த அழகிய முகம் இருக்கிறது. விடை கிடைக்காத தடுமாற்றத்துடன் ஆனந்த குரு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். சந்தியா வந்தனங்களுக்கான ஏற்பாடுகளுடன் சிஷ்யன் ஞானானந்தன் அங்கு வந்தான். அப்போதும் பத்மாசனத்தில் அமர்ந்திருந்த குருவைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். கண்களை மூடி தியானத்தில் இருக்கும் குருவைத் தொந்தரவு செய்யாமல் அவன் வெளியேறினான். பர்ணசாலையின் முற்றத்தில் ஹோமகுண்டம் எரிந்துகொண்டிருந்தது. கிழக்கு திசையில் இருந்த மலைகளுக்கு மேலே மாலைநேர வெயில் பட்ட மேகங்கள் பலவகை வடிவங்களைப் படைத்துக் கொண்டிருந்தன.

ஆனந்த குரு தியானத்தில் இருந்தார். அலைபாய்ந்துகொண்டிருந்த மனம் படிப்படியாகக் கனவு நிலைக்கு வந்தது. கடந்த காலத்தைப் பற்றிய தூரப் பயணத்தில் அவர் தன் தாயை நெருங்கிவிட்டார். அன்னையின் முகத்தை மனதில் கொண்டுவர முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை. அந்த முகம் தெளிவில்லாமல் இருந்தது. இளம் வயதில் தன்னை விட்டுப்போன மனைவியின் முகத்தை அவரால் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. எல்லா விஷயங்களும் மறதியின் எட்டாத இடங்களுக்குள் போய் மறைந்துவிட்டிருந்தன. அந்தப் புரிதல் குருவைக் கவலைக்குள்ளாக்கியது. ஒரு வகையில் பார்க்கப் போனால் அது ஒரு ஆசீர்வாதம் அல்லவா? குடும்ப பந்தத்தின் இறுதிக் கண்ணிகள்கூட அறுக்கப்பட்டுதான் விடுதலை ஆகியிருக்கிறோம் என்பதை அவரால் உணர முடிந்தது. ஆசைகள் என்னும் வாய்க்கால்கள் வற்றிப் போய் மனதில் செயலற்ற தன்மை என்ற வறட்சி முழுமையாக நிறைந்து இருக்கட்டும். அப்போதுதான் எல்லாம் முழுமை அடைந்ததாகிறது.

ஞானானந்தன்

தேவிகா ஒரு அற்புதமாகவே இருந்தாள். தேவிகா என்பவள் உண்மையிலேயே இருந்தாளா என்ற சந்தேகமே சரளாவிற்கு உண்டாகிவிட்டது. குருவின் முன்னாலிருந்து எழுந்த பிறகு அவளைப் பார்க்கவே இல்லை. மிகவும் ஆச்சரியமாக இருந்த விஷயம் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தவர்களுக்கு தேவிகாவைத் தெரியவே இல்லை என்பதுதான் ப்ரபாமயிதேவியின் ஆஸ்ரமத்தைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், யாரும் அங்கிருந்து இங்கு வருவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஏதோ தொடர்பு இருந்திருக்கிறதாம்.

தான் கனவு ஏதாவது கண்டிருப்போமோ என்று கூட அவள் நினைத்தாள். கடந்த சில நாட்களாகவே தான் கனவிற்கும் உண்மைக்கும் இடையில் உள்ள உலகத்தில்தான் இருக்கிறோம் என்று அவள் நினைத்தாள். இரண்டுக்குமிடையே எந்தவொரு வித்தியாசத்தையும் அவளால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. அவள் சாளரத்தின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு வெளியே பார்த்தாள். முன்னால் மலை மிகவும் அருகில் இருப்பதுபோல் தோன்றியது. சாயங்கால நேரமாகும் போது அது தள்ளித் தள்ளிப் போய் தூரத்தில் பனிப்படலத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டது.


முற்றத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட முள்ளாலான வேலிக்கு அப்பால் இருக்கும் காட்டில் மலர்கள் பறித்துக்கொண்டிருக்கும் இளைஞனை சரளா பார்த்தாள். அவனுடைய பின்பக்கம் மட்டுமே தெரிந்தது. திடீரென்று அவளுடைய இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. எதையும் யோசிக்காமல் அவள் உரத்த குரலில் சத்தம் போட்டு அழைத்தாள்:

“வினு....”

அழைத்தவுடன் தன்னுடைய முட்டாள்தனத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. திடீரென்று, கட்டுப்பாட்டை மீறி எழுந்த ஒரு உணர்ச்சியின் உந்துதலால் அவள் அப்படி அழைத்துவிட்டாள். வெளியே விட்ட வார்த்தைகளை மீண்டும் திரும்ப எடுக்க முடியாமல் முன்னோக்கியே பயணத்தைத் தொடர்ந்தாள். நிமிடங்களுக்குள் அவன் அந்த அழைப்பைக் காதில் வாங்காமல் இருக்க வேண்டுமே என்று அவள் பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை செய்தது வீணாகி விட்டது. அவன் மலர்கள் பறிப்பதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தான். சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சரளாவைக் கண்டதும், அவன் பூக்கடையைக் கையில் வைத்தவாறு வேலிக்கு அருகில் வந்தான்.

“என்ன அக்கா, என்னை அழைச்சீங்களா?”

இரண்டாவது தடவையாக அதிர்ச்சி உண்டானது அப்போது தான். அந்த முகம்.... அது வினோத்தின் முகமாக இருந்தது. இரண்டு முகங்களுக்குமிடையே இந்த அளவிற்கு ஒற்றுமை இருக்குமா என்ன? ஞானானந்தனை குருவுடன் இருக்கும்போது அவள் பார்த்திருக்கிறாள். ஆனால், இந்த முக ஒற்றுமையை அவள் கவனிக்கவேயில்லை. இப்போது உதயசூரியனின் இளம் சிவப்புக் கதிர்கள் அவனுடைய அழகான முகத்தில் படுவது காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் அவனும் வினோத்தைப்போல இடது கையால் ஒத்துழைக்காத தலைமுடியை வருடிக் கொண்டிருப்பது காரணமாக இருக்கலாம். எது காரணம் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஞானானந்தனுக்கு வினோத்தின் சாயல் உண்மையாகவே இருந்தது.

“அக்கா, எதுக்கு என்னை அழைச்சீங்க?”

“நான்...” - சரளா வார்த்தைகளைத் தேடினாள்! “நான் பூக்கள் பறித்து தரட்டுமா? பூஜைக்கான பூக்கள்தானே? ”

“இன்னைக்குத் தேவையான பூக்களைப் பறிச்சாச்சு” - ஞானானந்தன் பூக்கூடையை உயர்த்திக் காட்டினான். “அக்கா, நாளைக்கு வேணும்னா பூக்கள் பறிச்சுக் கொடுங்க. நான் குருவிடம் சொல்லிடுறேன்.”

“குருவிடம் சொல்லவேண்டாம்...” - உடனடியாக அவள் சொன்னாள். சொன்ன பிறகுதான் எதற்காக அதைச் சொன்னோம் என்ற குற்ற உணர்வு அவளுக்கு உண்டானது. தான் ஒரு குழிக்குள்ளிருந்து இன்னொரு குழிக்குள் போய் விழுகிறோம் என்பதை அவள் உணர்ந்தாள். ஞானானந்தனைப் பார்த்து வினோத் என்று நினைத்து அழைத்துவிட்டாள். அழைத்தவுடன் ஏதாவது காரணத்தைக் கூறவேண்டும் என்பதற்காகப் பூக்களைப் பற்றிச் சொன்னாள்.

“குருவிடம் கட்டாயம் சொல்லணும்ன்ற அளவுக்கு உள்ள மிகப் பெரிய காரியம் எதையும் நான் செய்யப்போறது இல்லையே!” - அவள் நிலைமையைச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகச் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “நான் பூக்கள் பறிச்சுத் தர்றேன். வினு.... இல்ல.... குழந்தை, அதை குருவிடம் கொடுத்தால் போதும்.”

ஞானானந்தன் சிரித்தான். அவனுடைய முகம் கள்ளங்கபடமில்லாமல் இருந்தது. மெல்லிய மீசையும் தாடியும் அப்போதுதான் முளைத்துக் கொண்டிருந்தன. அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்:

“அக்கா, வினுன்றது யாரு?”

சரளா அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.

ஞானானந்தன் அங்கிருந்து போய்விட்டான். சிறிதுநேரம் அவள் சாளரத்தின் அருகிலேயே நின்றிருந்தாள். வினோத்தைப் பற்றிய ஞாபகம் அவளை வேதனை கொள்ளச் செய்தது. கண்களை மூடிக்கொண்டு தான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப எடுக்க அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டின் முற்றத்திலிருந்து வெளிப் படிகளுக்குச் செல்லும் வழியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டடி உயரத்தில் அரைச் சுவர் இருக்கிறது. அந்த வழியில் கோபி நடந்து சென்று படிகளில் இறங்கிப் போவதை சரளா சாளரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். ஒரு வளைவு திரும்பினால், வயல் வந்துவிடும். வரப்பின் வழியாக கோபி நடந்துபோவதைச் சிறிது தூரத்திற்குப் பார்க்கலாம். வெயிலில் வரப்பின் வழியாக நடந்து செல்லும் உருவம் தூரத்தில் ஒரு புள்ளியாக முடிந்தபோது சரளா தன் பார்வையைத் திருப்பினாள். சுவரிலிருந்த கடிகாரம் மூன்று முறை அடித்தது. குதித்துக் கொண்டிருந்த மனதைக் கட்டுப்படுத்த அவள் கடிகாரத்தின் ஆடிக்கொண்டிருந்த பெண்டுலத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

வினோத் என்ன செய்து கொண்டிருப்பான்? சில நிமிடங்களுக்கு முன்புவரை அவனுடைய சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நாற்காலி இழுக்கப்பட்ட சத்தமோ, எதையோ தரையில் போடும் சத்தமோ கேட்டது. இப்போது அந்த அறை படு அமைதியாக இருந்தது. ஒருவேளை அவன் தூங்கியிருக்கலாம்.

இரவில் நீண்ட நேரம்வரை அவனுடைய அறையில் வெளிச்சம் இருந்துகொண்டே இருந்தது. தேர்வு தலைக்குள் நுழைந்துவிட்டதால் விடாது படித்துக்கொண்டிருந்தான். கோபியின் கைகளில் படுத்துக் கொண்டு தூக்கம் வராமல் கடிகாரத்தின் “டிக் டிக்” சத்தத்தைக் கேட்டவாறு, அந்தச் சத்தத்தை மீறி பக்கத்து அறையிலிருந்து கேட்கும் மெல்லிய ஓசைகளுக்காக அவள் காதுகளைத் தீட்டி வைத்துக் காத்திருந்தாள். வினோத்தின் மேஜை விளக்கு மேற்குப் பக்க முற்றத்தில் இருந்த மாமரத்தின் கிளைகளை வெளிச்சமயமாக்குவது சாளரத்தின் வழியாகப் பார்க்கும்போது தெரிந்தது. அதையும் பார்த்தவாறு அவள் சிறிது நேரம் தூங்காமல் படுத்திருந்தாள்.

முந்தைய நாள் காலையில்தான் வினோத் வந்தான். வந்தவுடன் தன் தாய் தயாரித்துக் கொடுத்த தேநீரைக் குடித்துவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டான்.

காலையில் கோபி போன பிறகுதான் சரளா குளிப்பாள். அவள் தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காயைக் குழைத்து கிண்ணத்தில் வைத்து, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டு குளத்தை நோக்கி நடந்தாள். குளத்தில் குளிக்கும் இடத்தை அடைந்தபோதுதான், வினோத் அங்கு குளித்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரிய வந்தது. நீரில் இறங்கி நின்றுகொண்டு அவன் சோப்புப் போட்டுக் கொண்டிருந்தான்.

தன் கணவனின் சகோதரன் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக அவள் நினைக்கவில்லை. ஒரு குறும்புக்காரச் சிறுமியின் மனதுடன் எந்தவித ஓசையும் உண்டாக்காமல் சீயக்காய் இருந்த கிண்ணத்தையும் சலவை செய்ய வேண்டிய ஆடைகளையும் படியில் வைத்துவிட்டு அவள் உட்கார்ந்தாள். வினோத் குளத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்ததால் ஆபத்து அண்ணியின் வடிவத்தில் வந்திருப்பதை அவன் கவனிக்கவில்லை. கட்டியிருந்த ஒற்றைத் துண்டு நனைந்து அவனுடைய நிறத்தைக் கொண்ட பின் பாகத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். விரிந்த முதுகுப் பகுதியில் சிறுசிறு ரோமங்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவள் திடீரென்று ஆசை வயப்பட்டாள்.


சரளா மூச்சுவிடாமல் உட்கார்ந்திருந்தாள். அவன் சோப்புப் போட்டுக்கொண்டிருந்தான். கைகளில், நெஞ்சில், கால்களுக்கு நடுவில். இறுதியாக முகத்திலும் தலையிலும் சோப்பு தேய்த்துவிட்டு, அவன் திரும்பவும் நீந்தினான். மல்லாக்கப் படுத்து நீந்தியதால், அவன் அப்போதும் சரளாவைப் பார்க்கவில்லை. மல்லாக்கப் படுத்தவாறு குதிக்கும்போது நீருக்கு மேலே தெரிந்த முழங்கால்கள் அழகாக இருந்தன.

கரைக்கு வந்து எழுந்து நின்றபோதுதான் சரளா மேலேயிருக்கும் படியில் உட்கார்ந்து தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அடுத்த நிமிடம் நீருக்குள் குதித்தான். கழுத்து வரை நீரில் நின்றுகொண்டு அவன் கேட்டான்:

“அண்ணி, நீங்க எப்போ வந்தீங்க?”

“கொஞ்ச நேரமாச்சு...”

வினோத்தின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

“ஏன் என்கிட்ட சொல்லல?”

“ஏன் சொல்லணும்?”

“அண்ணி நீங்க போங்க. நான் குளிச்சிட்டு வர்றேன்...” - அவன் கெஞ்கிற குரலில் சோன்னான்.

“நீ குளிச்சிட்டு வா. நான் இங்கேதான் இருப்பேன்.”

“அண்ணி, ப்ளீஸ்... நீங்க போங்க. நான் குளிச்சிட்டு வர்றேன்.”

வினோத்தின் சிரிப்பும், சங்கடமும் ஒரே நேரத்தில் வந்தன.

சரளாவின் மனதிலும் கண்களிலும் குறும்புத்தனம் தெரிந்தன. அவள் கேட்டாள்: “எனக்கு நீச்சல் கற்றுத் தர்றியா?”

“ம்...” - அவன் விளையாட்டுக்காகச் சொன்னான்: “தண்ணியில குதிங்க.”

சரளா எழுந்து படிகளில் இறங்க ஆரம்பித்தாள். அண்ணி இதுவரை உண்மையாகவே நீந்துவதைப் பற்றித்தான் பேசியிருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொண்டான். அவன் வேகமாக நீரிலிருந்து வெளியே வந்து இடுப்பில் கையை வைத்துக்கொண்டு குளக்கரையில் இருந்த ஆடைகள் மாற்றும் அறைக்கு ஓடினான். சரளா சிரித்துக்கொண்டே படிகளில் இறங்கினாள்.

இப்போது அவை ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து சரளா சிரித்தாள். வினோத் பக்கத்து அறையில்தான் இருக்கிறான் என்ற நினைப்பு அவளுக்குச் சந்தோஷத்தைத் தந்தது. ஒரு ஈர்ப்பு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டதைப்போல அவள் அறையை விட்டு வெளியேறி நடந்தாள். வினோத்தின் அறை மூடியிருக்கவில்லை. அவள் வாசலில் நின்றவாறு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு உள்ளே பார்த்தாள்.

வினோத் படுக்கையில் மல்லாக்கப் படுத்திருந்தாள். திறக்கப்பட்ட புத்தகத்தை மார்பில் கவிழ்த்து வைத்திருந்தான். படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பாவம்... தூங்கிவிட்டிருக்கிறான். அவள் உள்ளே நுழைவதற்காகக் காலை எடுத்து வைத்தாள். அடுத்த நிமிடம் முன் வைத்த காலை பின்னால் இழுத்துக்கொண்டாள்.

நேற்றுவரை இல்லாமலிருந்த ஒரு சுவர் அவர்கள் இருவருக்குமிடையில் உயர்ந்து நின்றது. பண்பாடு, மனக்கட்டுப்பாடு ஆகியவற்றைத் தாண்ட முடியாத சுவர்... நேற்றுவரை வினோத்தின் அறைக்குள் நுழைய அவளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருந்ததில்லை. அவளுடைய திருமணம் முடிந்த காலத்தில் வினோத் அரைக்கால் சட்டை அணிந்து நடந்து திரிந்தான். அவளுடைய கண்களுக்கு முன்னால் அவன் வளர்ந்ததும் வேட்டி அணிய ஆரம்பித்ததும் நடந்தன. கல்லூரியில் சேர்ந்தபோது அவன் பேண்ட் அணிய ஆரம்பித்தான். தன்னுடைய சொந்த தம்பியிடம் நடந்து கொள்வதைப்போல அவள் அவனிடம் நடப்பாள். ஆனால், நேற்று குளத்தின் படித்துறையில் அவளிடம் மாறுதல் உண்டாகி விட்டது.

முன்னாலிருக்கும் சுவர் எந்த அளவிற்குப் பலம் கொண்டதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு அதை உடைத்து எறிவதற்கு இச்சை சக்திக்குப் பலம் இருந்தது. அவள் உள்ளே நுழைந்தாள். ஒரு ஆணின் உடலை முதல் தடவையாகப் பார்க்கும் ஆர்வத்துடன், அவள் வினோத்தின் உடம்பைப் பார்த்தாள். மார்பிலும் கை இடுக்கிலும் சிறிதாக வளர்ந்திருக்கும் ரோமங்கள்.... முகத்தில் மெல்லியதாக மீசை... வயிற்றின் மீது வைத்துப் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அவள் எடுத்து வைத்தாள். வினோத் தன் பாதி கண்களைத் திறந்தான்.

“அண்ணியா? என்னை நாலு மணிக்கு எழுப்புங்க. தெரியுதா? தேநீர் உண்டாக்கிட்டு...”

அதைச் சொல்லிவிட்டு அவன் திரும்பிப் படுத்தான். அது அவன் பொதுவாகச் செய்ய கூடியதுதான். குறிப்பாகத் தேர்வு நேரத்தில் பகலில் தூங்கும்போது. அவன் அப்போதும் சிறு குழந்தையைப் போலவே இருந்தான். நடக்கப் போகும் விஷயங்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாமல் அவன் சாந்தமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆஸ்ரமத்தின் சாளரத்தின் கையை வைத்து ஞானானந்தன் போன வெற்றிடத்தையே பார்த்துக் கொண்டு, ஒரு விசும்பலுடன் சரளா நினைத்துப் பார்த்தாள். துயரத்தின் ஆரம்பம் அதுதான்.

அவள், தூங்கிக் கொண்டிருந்த வினோத்தின் இடுப்பில் தன் கையை வைத்தாள். அவன் திடுக்கிட்டு எழுந்து மல்லாந்து படுத்தான். சரளாவின் முகத்தில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உணர்ச்சி வெளிப்பாடு இருந்தது. அது அவனைப் பதைபதைப்புக்குள்ளாக்கியது. அவன் கேட்டான்:

“என்ன அண்ணி?”

சரளா எதுவும் சொல்லாமல் படுக்கையில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளுடைய தொண்டை வறண்டு போயிருந்தது. அவளுடைய கைகள் வினோத்தின் இடுப்பில்தான் இப்போதும் இருந்தது.

அங்கிருந்து அது வயிற்றின் வழியாகப் பயணித்தது. மார்பில் இருந்த ரோமங்களை அவளுடைய விரல்கள் வருடின.

“அண்ணி என்ன செய்றீங்க?”

ரோமங்களைத் தொட்டதால் அவனுடைய மார்பு உணர்ச்சி வசப்பட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.

“என்ன செய்றீங்க?” - அவன் மீண்டும் கேட்டான். அவனுடைய குரல் அதிர்ச்சியாலும் உந்தப்பட்ட உள்ளுணர்வாலும் அடைத்து விட்டிருந்தது. மார்பில் வருடிக்கொண்டிருந்த வளையல்கள் அணிந்த சதைப்பிடிப்பான கையை அவன் பிடித்தான். வேறு இடத்தில் அதை நீக்கி வைப்பதற்காகத்தான் அவன் பிடித்தான். அந்த நிமிடத்தில் அழகான ஒரு முகம் அவனுடைய முகத்தை நோக்கித் தாழ்ந்து வந்தது. அவன் என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்றவனாகிவிட்டான்.

அழகான ஒரு பெண்ணின் உடல் அவனுக்கு முன்னால் நிர்வாணமாகிக் கொண்டிருந்தது. படிப்படியாகப் புடவை அவிழ்ந்து படுக்கையிலும் தரையிலுமாக விழுந்தது. ப்ளவ்ஸ் என்ற சிறைக்குள்ளிருந்து வெளியே குதித்த மார்பகங்கள் உணர்ச்சி வசப்பட்டு இறுகிப் போயிருந்தன. வினோத் பெண்ணுடம்பில் புதிய அர்த்தங்களை கண்டான்.

வெளியே நிழல் சாயத் தொடங்கியது. வடக்கு திசையிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றில் இலஞ்சிப்பூவின் வாசனை இருந்தது. வினோத் சொன்னான்:

“அண்ணி எழுந்து புடவையை உடுத்துங்க.”

அவனுடைய கழுத்தைச் சுற்றியிருந்த தன் கைகளை எடுக்காமல், களைப்புடன் சரளா சொன்னாள்:

“ம்... ம்....”

“கோபி அண்ணன் வரவேண்டிய நேரமாச்சுல்ல! எழுந்திரிங்க.”

அவள் அடுத்த நிமிடம் எழுந்து உட்கார்ந்தாள். வெளியே பார்த்தாள். வெயில் அப்போதும் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்தது. நேரம் அப்படியொண்ணும் அதிகம் ஆகவில்லை. கீழேயிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை.


எழுச்சியுடன் நின்றுகொண்டிருந்த சரளாவின் மார்பகங்களைப் பார்த்ததும், வினோத் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அவளை இழுத்து அணைத்துக்கொண்டு அவன் சொன்னான்:

“கொஞ்ச நேரம் கழிச்சுப் போனால் போதும்.”

சுனந்தினி

ரு குரல் கேட்டு சரளா கனவிலிருந்து விடுபட்டாள்.

“அக்கா...”

அவள் திரும்பிப் பார்த்தாள்.

“தேவிகா?”

“இது நான் அக்கா...” - சுனந்தினி சொன்னாள்: “அக்கா, எப்போ பார்த்தாலும் ஒரு தேவிகாவைப் பற்றியே சொல்லிக்கிட்டு இருக்கீங்களே! யாரு அது?”

சரளா எதுவும் சொல்லவில்லை. தேவிகா யாரென்று அவளுக்கே தெரியாது.

ஆச்சரியப்படும் விதத்தில் தன்னைச் சுற்றிலும் என்னவோ நடக்கிறது என்று சரளாவிற்குத் தோன்றியது. தான் வந்த ஒற்றை மாட்டுவண்டியைப் பற்றியும் அதைச் செலுத்திக் கொண்டு வந்த தாடிக்காரனைப் பற்றியும் அவள் சொன்னபோது ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் ஆச்சரியத்தையும், தாங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத விஷயம் அது என்பதையும் வெளிப்படுத்தினார்கள். கடந்த பதினைந்து வருடத்திற்கும் மேலாக மலை உச்சிக்கு ஆட்டோ ரிக்ஷா தான் வருகிறது. அடிவாரத்தில் இருக்கும் கிராமத்திலும் யாரிடமும் ஒற்றை மாட்டு வண்டி இருப்பதாகத் தங்களுக்குத் தெரியாது என்றார்கள் அவர்கள். சரளா வாழ்க்கையில் ஒருமுறைகூட ஆட்டோ ரிக்ஷாவில் ஏறியதில்லை.

அதேபோலத்தான் இருந்தது தேவிகாவின் விஷயமும். சரளா தனியாகத்தான் ஆஸ்ரமத்திற்கு வந்தாள் என்று சுனந்தினி உறுதியான குரலில் கூறுகிறாள்.

“அக்கா... நீங்க ஆனந்தகுருகிட்ட பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே நான் இருந்தேன். நான் எந்த தேவிகாவையும் பார்க்கல.”

உண்மையாகவே அது ஒரு பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயமாக இருந்தது. ஒன்று தன்னுடைய மூளையில் ஏதாவது கோளாறு உண்டாகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆஸ்ரமத்தில் இருப்பவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் சரளா. அவை இரண்டுமே இல்லாவிட்டால்? அதை நினைக்கும்போது அவளுக்கு உடனடியாக பயம் வந்தது. இங்கு இந்த மலை உச்சியில் அவளுடைய அறிவு எல்லைக்கு அப்பால் வேறு என்னவோ இருக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது. இரவில் சுனந்தினி தூங்கியபிறகு, தூக்கமில்லாமல் படுத்திருக்கும் நேரங்களில் மனதைப் பாடாய்ப் படுத்தும் அந்த எண்ணம் சரளாவிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

“அக்கா, என்ன இங்கு தனியா இருக்கீங்க?” - சுனந்தினி கேட்டாள்: “அங்கே வாங்க... அங்கே நேரம் போறதே தெரியாது.”

“எனக்குத் தனியா இருக்கத்தான் பிடிக்குது.”

சுனந்தினி போய்விட்டாள். அவள் அப்படித்தான். திடீரென்று காற்றைப்போல அங்கு வருவாள். ஒரு சிரிப்புடன், நட்பு என்ற குளிர்ச்சியைப் போர்த்திவிட்டு அங்கிருந்து போய்விடுவாள். மீண்டும் அவள் தனியாகிவிடுவாள்.

தனியாக இருக்கும்போது நினைவுகள் வந்து அவளை வளைத்துக்கொள்ளும். மனதில் வேதனைகளை உண்டாக்கும், இனிமையான நினைவுகள்... அவற்றை விட்டு ஓடிப்போய் விடவேண்டும் என்று முயற்சிக்கும்போது அவள் அந்த நினைவுகளை நோக்கிப் பிடித்து இழுக்கப்பட்டு விடுகிறாள்.

வினோத் கூறுவதுண்டு:

“நான் செய்யிறது சரியில்லைன்னு எனக்குத் தெரியும். ஆனால் என்னால அதைக் கட்டுப்படுத்த முடியல.”

கவலை உண்டாக்கும் நிமிடங்கள் அவை.

“அண்ணி ஒவ்வொரு தடவையும் நீங்க எழுந்து போறப்போ நான் மனசுல முடிவு செய்வேன் இது கடைசி தடவையா இருக்கணும்னு. இனி இதைச் செய்யக்கூடாதுன்னு நான் நினைப்பேன். ஆனால் மறுநாள் மதியநேரம் வந்திடுச்சுன்னா, நான் உங்கக் காலடிச் சத்தத்துக்காகக் காதுகளைத் தீட்டி வச்சிக்கிட்டு காத்திருக்கேன். அந்தச் சத்தம் வர்றதுக்கு தாமதமாயிடுச்சுன்னா மனசு முழுக்க கவலை வந்து ஒட்டிக்குது.”

சரளா அமைதியாக அவனை முத்தமிடுவாள்.

“அண்ணி, நீங்க உண்டாக்குற ஒவ்வொரு ஓசையும் எனக்கு இப்போ தெரியும். படி ஏறுறது... பிறகு உங்க அறையில இருந்து வர்ற ஒவ்வொரு அசைவும்... இவ்வளவு காலமா நான் இது எதையும் கவனிச்சது இல்லன்றது எனக்கே ஆச்சரியமான ஒரு விஷயமா இருக்கு.”

ஆனால், சரளாவிற்கு அதைப்பற்றி எந்த வருத்தமும் உண்டாகவில்லை. மதிய உணவு முடிந்தால், வினோத் மாடிக்குச் செல்வான். கோபி கீழே இருக்கும் அறையில் படுத்திருப்பான். அவள் குடிப்பதற்கான நீரைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றிக்கொண்டு போய் வைப்பாள். சாயங்காலம் கடையிலிருந்து ஏதாவது வாங்க வேண்டுமென்றால் அப்போதுதான் கூறுவாள். திரும்பிப் போய் சமையலறையைச் சுத்தம் செய்ய மாமியாருக்கு உதவுவாள். அவள் எப்போதும் கூறுவதைக் கூறுவாள்:

“போயி கொஞ்ச நேரம் படு, மகளே...”

இப்போது அதைப் பாதி கேட்டு, பாதி கேட்காமல் அவள் மாடிக்குச் செல்வாள். கடிகாரத்தில் இரண்டரை மணி ஆகியிருக்கும். காலடிச்சத்தத்தை உண்டாக்காமல் பக்கத்து அறையை நோக்கி நடப்பாள். கட்டிலில் படுத்துப் படித்துக் கொண்டிருக்கும் வினோத்திற்கு குனிந்து முத்தம் தருவாள்.

“மன்னிச்சுக்கோ குழந்தை... நான் இப்போ வந்திடுறேன்.”

அவன் அவளுடைய கையைப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுக் கூறுவான்.

“சீக்கிரமா வாங்க.”

அவள் திரும்பி அறையை நோக்கி நடப்பாள். கடிகாரத்தின் பெண்டுலம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவாறு படுத்திருப்பாள். மூன்று மணி ஆகிவிட்டால், கீழேயிருந்து வரும் சத்தத்திற்காக அவள் காதுகளைத் தீட்டிக்கொண்டிருப்பாள். வாசல் கதவு திறக்கப்படும், அடைக்கப்படும் சத்தம் கேட்கும் அவள் சாளரத்தின் வழியாகப் பார்ப்பாள். கோபி வயலின் பரந்துகிடக்கும் பசுமையில் தூரத்தில் போய் மறைந்துவிட்டால், அவள் வினோத்தின் அறையை நோக்கி நடப்பாள்.

வினோத் தூங்காமல் விழித்திருப்பான்.

மறுபிறவி

ஞானானந்தன் மலர்கள் விஷயத்தை மறக்கவில்லை. காலையில் பூக்கூடையுடன் வந்த அவன் கேட்டான்:

“அக்கா இன்னைக்கு நீங்கதானே பூக்கள் பறிக்கணும்?”

சரளா தலையில் கை வைத்தாள். ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காகச் சொன்ன பொய்பை அவன் உண்மையென நினைத்திருக்கிறான். அவள் கூடையைக் கையில் வாங்கிக் கொண்டு வாசலில் சந்தேகத்துடன் நின்றிருந்தாள்.

“எங்கே பூக்கள் கிடைக்கும்னு எனக்குத் தெரியாதே.”

“ஆஸ்ரமத்தைச் சுற்றிலும் பூச்செடிகள்தான்” - ஞானானந்தன் சொன்னான்: “ரொம்பவும் சிரமப்படாமலே கிடைக்கும்.”

“குழந்தை, ஒருமுறை என்கூட நீ வரமுடியுமா?”- சரளா தயங்கியவாறு சொன்னாள். “ஒரு தடவை வந்தால் போதும். எனக்குக் கொஞ்சமும் அறிமுகமே இல்லாத இடமாயிற்றே!”

அவன் அழகாகச் சிரித்தான். அவனுடைய முகத்தில் உயிர்த்துடிப்பின் பிரகாசம் இருந்தது. ‘எனக்கு தெரியுமே!’ என்ற அர்த்தம் அவன் முகத்தில் தெரிந்தது.

“சரி... வாங்க...”

ஆஸ்மரத்திற்குப் பின்னாலிருக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக அவர்கள் நடந்தார்கள். சிறிது தூரம் நடந்தபோதுதான் சரளாவிற்கே தெரியவந்தது தாங்கள் மலையையே ஒரு வலம் வந்துகொண்டிருக்கிறோம் என்பது.


ஒற்றையடிப்பாதை மலையைச் சுற்றிச் சுற்றி போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சுற்றும்போதும் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது.

“மழைக்காலம் முடிந்தால் இங்கு மலர்களின் ஆட்சிதான். ஐந்து நிமிடங்கள் நடந்தால் போதும், பூக்கூடை நிறைஞ்சிடும்.”

இப்போது காடு கிட்டத்தட்ட காய்ந்து போய்க் கிடந்தது. மரங்கள் மட்டும் பசுமை படர்ந்து நின்றிருந்தது. ஆனால், செடிகள் வாடியும் காய்ந்து போயும் இருந்தன.

“இது மலைதானே! ஆனா, இது யந்த்ரம்” – நடந்து கொண்டிருக்கும்போது ஞானானந்தன் சொன்னான்: “அந்தக் காலத்துல இங்கே ஒரு கோவில் இருந்ததுன்னு சொல்லுவாங்க. நம்ம குருவோட குருநாதரா ஒரு சுவாமிகள் இருந்தாரு. வேலப்ப சுவாமிகள். அவர் ஆஸ்ரமம் உண்டாக்குவதற்காக இந்த மலைமேல வந்தப்போ இடிஞ்சு கிடந்த கோவிலைப் பார்த்திருக்காரு. அந்தக் கோவில் இருந்த இடத்துலதான் ஆஸ்ரமத்தைக் கட்டினாரு.”

“கோவிலை ஏன் சுவாமிகள் புதுப்பிச்சுக் கட்டல?”

“அப்போ தேவப்பிரசன்னம் வச்சு பார்த்தப்போ அது எமதேவனின் கோவில்னும் புதுப்பித்து அதைக் கட்டக்கூடாதுன்னும் அதுல வந்தது. அமானுஷ்ய சக்திகள்தான் தானே அந்தக் கோவிலை உண்டாக்கின! அந்தக் கோவிலை மனிதர்கள் புதுப்பித்துக் கட்டக்கூடாதுன்னும், அதற்காக முயற்சி செய்யக்கூடாதுன்னும் பிரசன்னத்துல தெரிஞ்சது.

ஆஸ்ரமம் உண்டாக்குறதைப் பற்றி எந்தவித பிரச்சினையும் இல்லைன்னு பிரசன்னத்தில் வந்ததால், இந்த இடத்திலேயே ஆஸ்ரமத்தை உண்டாக்கியாச்சு. கோவிலின் கருவறையில் இருந்த சிலைக்குக் கீழே மலையின் ஆழத்தில் இருக்குற யந்த்ரம் ரொம்பவும் சக்தி படைச்சது. அதனாலதான் வேலப்ப சுவாமிகளுக்குப் பல சித்திகளும் கிடைச்சது.”

ஒரு இடத்தை அடைந்தவுடன், ஞானானந்தன் நின்றான்.

“அக்கா, நான் உங்களுக்கு ஒரு இடத்தைக் காட்டுறேன்.”

அவன் ஒற்றையடிப் பாதையை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தான். வறண்ட மண் வழியாக, பாறைகளுக்கு மத்தியில் அவன் நடந்தான். சரளா அவனைப் பின்தொடர்ந்து நடந்தாள். அவர்கள் மேலே பார்த்தார்கள். ஆஸ்மரத்தின் புல்லால் ஆன மேற்கூரைகள் இப்போது தெரியவில்லை. மரங்கள் மட்டுமே தெரிந்தன. இங்கிருந்து பார்க்கும் போது அவை இடைவெளியின்றி இருப்பது மாதிரி தெரிந்தன. இரண்டு பெரிய பாறைகள் அவர்களின் வழியில் குறுக்கிட்டன. அவற்றுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கடந்து செல்லும்போது ஞானானந்தன் சொன்னான்:

“அக்கா, கவனமா நடக்கணும்.”

பாறைகளின் மறுபக்கத்தில் ஒரு இறக்கம் இருந்தது. அந்த இறக்கத்தில் ஒரு சமதளம். ஒரு பெரிய அறை அளவிற்கு அது இருந்தது. சுற்றிலும் உயர்ந்த பாறைகள். மேலே ஒரு பெரிய ஆலமரம் குடை பிடித்து நின்று கொண்டிருந்தது.

“பாருங்க.”

ஞானானந்தன் சுட்டிக்காட்டிய இடத்தை அவள் பார்த்தாள். அவளுடைய கண்கள் மலர்ந்தன. பெரிய ஒரு பாறையின் பிளவிற்குள்ளிருந்து தெளிந்த நீர் கொண்ட ஊற்று புறப்பட்டு வெளியே      வந்துகொண்டிருந்தது.

“எவ்வளவு அழகா இருக்கு!” சரளா சொன்னாள்.

மெல்லிய அந்த நீரோட்டம் தரையிலிருந்த பாறையில் சிறிய ஒரு தேக்கத்தை உண்டாக்கி, ஒரு ஓரமாக வெளியே ஓடியது.

“இதை மறுபிறவி தீர்த்தம்னு சொல்லுவாங்க” - ஞானானந்தன் சொன்னான்: “யாரும் இந்த நீரைத் தொடமாட்டாங்க. அது நம்மோட மறுபிறவிகளை பாதிக்குமாம். அதுனால...”

அவள் கேள்வியுடன் ஞானானந்தனைப் பார்த்தாள்.

“அதாவது நம்மோட கர்மங்களை வைத்துதான் நமக்கு ஒரு பிறவி கிடைக்குது. இந்தப் பிறவியில் செய்யிற கர்மங்களின் பலனுக்கு ஏற்றபடி அடுத்த பிறவியில் நாம் என்னவாக ஆவோம் என்பது தீர்மானிக்கப்படுது. இந்தத் தீர்த்தத்தைத் தொட்டால் நம்மோட கர்மங்களெல்லாம் அழிஞ்சு போயிடும். நாம நினைக்கிற பிறவி நமக்கு கிடைக்காது. அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். எவ்வளவு ஆயிரம் சாதாரண பிறவிகளை எடுத்த பிறகு, ஒரு மனிதப் பிறவி கிடைக்குது! அந்தப் பிறவிகள் முழுவதையும் திரும்பவும் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால்...?”

அதைக் கேட்டு சரளாவிற்குப் பயம் வந்துவிட்டது. மீண்டும் புழுவாக, சாதாரண உயிரினங்களாக, மிருகங்களாக, பறவைகளாக ஓராயிரம் பிறவிகள்!

“அக்கா, உங்களுக்கு மறுபிறவிமேல நம்பிக்கை இருக்குதா?”

“எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது.” - சரளா சொன்னாள்: “நான் அந்த அளவிற்கு வாசிச்சதோ, படிச்சதோ இல்ல...”

“இந்த மலையில் பல அற்புதச் செயல்கள் இருக்குதுன்னு சொல்லப்படுறது உண்மைதான். நான் அவ்வப்போது இந்தப் பாறையில உட்கார்ந்து தியானம் செய்வதுண்டு. அப்போ மிகவும் ஆச்சரியமான உணர்வுகளை நான் அடைஞ்சிருக்கேன். எனக்கே அது என்னன்னு தெரியாது.”

“அப்படின்னா?”

“அதை வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அனுபவிச்சுத்தான் தெரிஞ்சிக்கணும். சில நேரங்கள்ல இந்த மலைகள் முழுவதிலும் ஏராளமான குகைகள் இருக்கின்றன என்றும் அந்தக் குகைகளில் நம்மோட கற்பனையைத் தாண்டிய ஒரு காலமும் அந்தக் காலத்துல இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களும் இருக்காங்கன்னு தோணும். ஒருவேளை, நம்மோட சாயலிலேயே இருக்கக்கூடிய மனிதர்களாக அவங்க இருக்கலாம். எல்லாம் என்னோட தோணல்களாகூட இருக்கலாம்.”

சரளாவிற்கு அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. ஆஸ்ரமத்தில் ஆச்சரியப்படக்கூடிய ஏதோவொன்று இருக்கிறது என்ற உணர்வு ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு இருந்தது. அவள் கேட்டாள்.

“ஞானானந்தன், நீ எதற்கு ஆஸ்ரமத்துல சேர்ந்தே?”

“கடவுளோட தீர்மானம்” - அவன் தயங்காமல் சொன்னான்: “நான் ரொம்பவும் சின்ன வயசிலேயே சந்நியாசத்தை ஏற்றுக் கொள்வேன்னு என் ஜாதகத்துலேயே இருக்கு. என் தந்தையும் தாயும் அதை நம்பல. காரணம் - நான் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த ஒருத்தன் இல்ல. கடவுள் மீது நம்பிக்கையில்லாத ஒருவன் எப்படி சந்நியாசியாக ஆக முடியும்? ஆனால், நான் உண்மையான கடவுள் நம்பிக்கையாளனா இருந்தேன் - எனக்குன்னு இருந்த வழியில அவ்வளவுதான். சில நேரங்கள்ல எனக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். அது என்னை வீட்டை விட்டு வெளியேறும்படிச் சொல்லும். என் ஆன்மாவின் குரலாக அது இருக்கலாம். நான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கலைன்ற தோணல் மேலும் மேலும் பலமாகும். வேறொரு தெரியாத இடத்தைப் பற்றித் தெளிவற்ற எண்ணங்கள் மனதில் தோணும். நிழல்களைப் போல... நான் மன அமைதி இல்லாம தவிப்பேன்.”

“நேரம் அதிகமாயிடுச்சு...” - சரளா சொன்னாள்: “நாம திரும்பிப் போவோம்.”

பாறையிலிருந்து எளிதாக இறங்கியதைப் போல மேல் நோக்கி ஏறுவது முடியாத விஷயம் என்பதை அவள் புரிந்துகொண்டாள். ஞானானந்தன் மேலே அடைந்துவிட்டிருந்தான்.


“என் கையைப் பிடிச்சுக்கோங்க.” - அவன் தன் கையை நீட்டிக் கொண்டு சொன்னான்: “காலை வைக்கிறப்போ கவனமா இருக்கணும்.”

அவள் ஞானானந்தன் கையைப் பிடித்தாள். அந்த நிமிடத்தில் ஒரு சிலிர்ப்பு அவளுடைய உடம்பெங்கும் பரவியது. அவள் ஞானானந்தனில் வினோத்தைப் பார்த்தாள். அதற்காக அவள் தன்னைத்தானே பழித்துக்கொண்டாள். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுவதே நல்லது என்று அவள் நினைத்தாள்.

ஆஸ்ரமத்தை அடைந்தபோது அவள் கூடையை ஞானானந்தனிடம் கொடுத்துவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றாள். தரையில் உட்கார்ந்து குரு கொடுத்த பகவத்கீதையை வாசிக்க முயற்சித்தாள். ஆனால், மனம் அவள் நினைத்த மாதிரி ஒத்துழைக்கவில்லை.

ஞானானந்தன் எதைப் பற்றியும் சிறிதும் சந்தேகப்படவில்லை. பாறைகளுக்கு மத்தியில் இருந்த சமதளத்தைப் பார்த்தபோது ஒரு நிமிட நேரத்திற்கு, சரளாவிற்குச் சுற்றியிருந்த சூழ்நிலையே மறந்து போய்விட்டது. அது வினோத்தின் படுக்கையறை என்றும் அவள் நினைத்துவிட்டாள். மிகவும் இயல்பாகத் தோன்றிய அந்த அறிவு தடுமாறிய நிலை அவளை மிகவும் பயத்திற்குள்ளாக்கியது. மீண்டும் வினோத்தைப் பார்க்க வேண்டும் என்றும், அவனுடைய கைகளில் போய் விழவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அந்த விஷயம் இனிமேல் நடக்க வாய்ப்பில்லை என்ற புரிதலும் அவளுக்கு உண்டானது.

முழங்கால்மீது தன் முகத்தை வைத்துக்கொண்டு சரளா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

குரு

ரளாவிடம் உண்டான மாற்றங்களை ஆனந்தகுரு கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தன்னுடைய சொற்பொழிவுகள் நடக்கும் போது கூடத்தின் ஒரு ஓரத்தில் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த அவள் திடீரென்று சொற்பொழிவைக் கேட்க ஆரம்பித்தாள். அவளுடைய செயல்களிலும், பேச்சுகளிலும் முன்னேற்றம் தெரிந்தது. பிடுங்கி நட்ட நாற்றைப் போல இருந்தாள் அவள். வாடிப்போயிருந்த வேர்கள் ஈர மண்ணில் பரவி நீரையும், உரத்தையும் இழுத்து வாட்டத்தை நீக்கிக் கொண்டிருந்தன. அவர் அதற்காகச் சந்தோஷப்பட்டார். அவளுக்கு ஆஸ்ரம வாழ்க்கைமீது ஒரு விருப்பம் உண்டாகி இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தார். பூஜைக்குத் தேவையான பூக்களைச் சேகரிப்பதில் சரளா உதவியாக இருக்கிறாள் என்று ஞானானந்தன் ஏற்கெனவே அவரிடம் கூறியிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஆஸ்ரம வாழ்க்கையுடன் பொருந்திப் போய்விடுவாள். மனதில் இருந்த காயத்தை ஆற்ற அது அவளுக்கு உதவும்.

மனதில் இருந்த காயம் என்ன என்று குரு அவளிடம் கேட்கவில்லை. அவள் கூறவுமில்லை. காரிய காரண நியாயங்களுக்கு முக்கியத்துவமேயில்லை என்ற உண்மையைத் தன்னுடைய இருபது வருட ஆஸ்ரம வாழ்க்கையில் அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். கர்மத்தை மட்டுமே செய்ய வேண்டும். அதற்கான பலன் பல பிறவிகள் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இயற்கையின் சட்டங்களுக்கு முன்னால் மனிதன் எவ்வளவு சாதாரணமாகிவிடுகிறான்!

அவர் தன்னுடைய தினசரி கடமைகளில் உறுதியாக நின்றிருக்க வேண்டும். பிறப்பால் அவருக்குக் கொடுக்கப்பட்ட கர்மம் விவசாயம் செய்வது. அந்தக் கர்மத்தைதான் அவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் இதயத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும் இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டானபோது, அவரால் அதற்கு மேல் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. அப்போதுதான் ஒரு உள்மன அழைப்பின் புரிந்துகொள்ள முடியாத வீச்சுகள் அவரைத் தேடி வந்தன. அதைத் தொடர்ந்து அவர் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து விட்டார்.

வேலப்ப சுவாமிகள் அவரை ஏற்றுக்கொண்டார். புலன்களால் தெரிந்துகொள்ள முடியாத ஒரு உள்பார்வை மூலம் அவருடைய வரவை வேலப்ப சுவாமிகள் முன்கூட்டியே தெரிந்து கொண்டிருந்தார்.

“நான் உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்” – சுவாமிகள் சொன்னார். பர்ணசாலையின் வாசல் கதவுக்கு வெளியே எரிந்துகொண்டிருந்த ஹோம குண்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு சுவாமிகள் பேசினார்.

“அம்மா சாந்தியடைஞ்சிட்டாங்க... அப்படித்தானே?”

தன் தாயின் பதினாறாவது நாள் விசேஷம் முடிந்ததற்கு மறுநாள்தான் ஆனந்தகுரு அங்கு புறப்பட்டதே. மரணம் அமைதியாக முடிந்தது. இளைய மகனின் அகால மரணத்திற்குப் பிறகு அவள் பெரும்பாலும் படுத்த படுக்கையாகவே இருந்தாள். ஒருநாள் காலையில் தன் மூத்த மகனை அருகில் வரும்படி அழைத்தாள். நீர் அருந்திவிட்டுத் தன் மகனின் கையைப் பிடித்துக் கொண்டே கண்களை மூடிவிட்டாள்.

சுவாமிகள் சிந்தனையை ஒருமுகப்படுத்திக் கொண்டு ஹோம குண்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். மாயாக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே அவர் தொடர்ந்து சொன்னார்:

“இரண்டு வருடங்களுக்குள் நீ நான் இருக்குமிடத்தில் இருப்பே. உன்னை இங்கு இருப்பவர்கள் குருவாக ஏற்றுக் கொள்வார்கள். வயதான காலத்தில் பல வருடங்களுக்கு முன்னால் இழக்கப்பட்டவர்கள் உன்னைத் தேடி வருவார்கள். அவர்களை நீ அறியாமல் இருக்கலாம். அறியாமல் இருப்பதே நல்லது. அறிவது உனக்குத் தொந்தரவாக இருக்கும்.”

வார்த்தைகள் நின்றன. குரு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

கடந்த கால விஷயங்களைப் பற்றி அதற்குப் பிறகு சுவாமிகள் எந்தச் சமயத்திலும் பேசவில்லை. அறிவு சம்பந்தப்பட்ட அபாரமான, வினோதமான உலகத்தை அவருக்கு சுவாமிகள் திறந்துவிட்டார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதல் பகுதி நடந்தபோது, ஆச்சரியப்படவில்லை. விதியின் புரிந்துகொள்ள முடியாத பாதைகளைப் பற்றிய அறிவு ஆச்சரியப்படாமல் இருக்க உதவியது.

மலைத் தொடர்களைப் பற்றி சுவாமிகள் கூறுவதுண்டு. “நம்மோட அறிவுக்கு அப்பாற்பட்ட பலவும் இந்த மலைத்தொடர்களில் இருக்கு. அது என்னன்னு கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம். அது ஆபத்தானது.”

சரளாவுடன் பேசியபோது சுவாமிகள் சொன்ன வார்த்தைகள்தான் ஞாபகத்தில் வந்தன. அவள் சொன்னவை நம்ப முடியாத விஷயங்கள் தான். எனினும், அவள் கூறும்போது அதற்கு உண்மையின் சாயல் உண்டாகிவிடுகிறது. ஒற்றைக் காளை இழுத்துச் செல்லும் பயண வண்டியும், அதன் உரிமையாளரான தாடிக்காரனும் இருந்ததென்னவோ உண்மைதான். வண்டி இல்லாமல்போய் பத்து பதினைந்து வருடங்களாகிவிட்டன. அதன் சொந்தக்காரனான தாடிக்காரனும் எப்போதோ இறந்துவிட்டான். இருபத்தைந்து வயதைக் கொண்ட இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஆஸ்ரமத்திற்கு வந்தது அந்த வண்டியில்தான் என்று கூறுவது சாதாரணமல்ல. அது மறுக்கவும் முடியாத ஒரு உண்மை.

பிறகு-தேவிகா என்ற பெயரைக் கொண்ட பெண். அவளைப் பற்றி அதிகமாகக் கூற சரளாவால் முடியவில்லை. கேட்க ஆனந்த குருவிற்கும் பயமாக இருக்கிறது.

சரளாவுடன் பேசும்போது, பல யுகங்களைத் தாண்டி பயணம் செய்யும் உணர்வு உண்டாகிறது. நேர உணர்வு கொண்ட உலகம் மறைந்துபோய், தலைகீழான ஒரு நிலையில் அது போய் நிற்கிறது. நிமிடங்கள் மணிகளாகவும், மணிகள் நிமிடங்களாகவும் மாறுகின்றன. ஒரு நிமிடம் ஒரு யுகமாக நீளுவதைப் போன்ற ஒரு தோணல்... சரளாவின் முகத்தைப் பார்க்கும்போது அவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் குருவை பாடாய்ப் படுத்தும். தேடல் மனதின் இருள் நிறைந்த சந்துகளில் ஆங்காங்கே பாதை மோதி நிற்கும். நினைவுகள் இருக்கும். மேலும் சில இடங்களில் இருள் நிறைய வேண்டியிருக்கிறது. அதுவும் நடந்துவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.


எதிர்பாராதவை, ஒற்றுமைகள்

ஞானானந்தனுடன் சேர்ந்து மலர்கள் பறிக்கப் போகும் விஷயம் சரளாவிற்குப் பிடித்திருந்தது. அவனுடைய பேச்சு கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பிரபஞ்சம் படைக்கப்பட்டதிலிருந்து இருக்கும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவன் அவளுக்குச் சொல்லிக் கொடுப்பான். கோடானுகோடி கேலக்ஸிகள்... ஒவ்வொரு கேலக்ஸியிலும் கோடானுகோடி நட்சத்திரங்கள்... அவற்றுள் ஒரு நடுத்தர நட்சத்திரமான சூரியன்.

“அக்கா, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி நினைச்சா நம்மால நம்பாம இருக்க முடியாது.”

ஞானானந்தன் நிறைய விஷயங்களைப் படித்திருந்தான். அவனுடைய அறிவு, வயதையும் தாண்டி இருந்தது. அவள் விளையாட்டாகச் சொன்னாள்:

“இந்த அளவுக்கு அறிவு இருக்குன்னு தெரிஞ்சுதான் குரு உனக்கு ஞானானந்தன்னு பெயர் வச்சிருப்பாரோ?”

அவன் சிரித்தான். பிறகு சிந்தித்துவிட்டு சொன்னான்:

“அப்படிச் சொல்ல முடியாது. நாம எல்லோரும் நல்ல பெயர்களுக்கேற்றபடி நடக்க முயற்சிக்கிறோம். முதல்ல பெயர் கிடைக்குது - பெரிய எதிர்பார்ப்புகளுடன். பிறகு அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உயர, அந்தப் பெயரை நியாயப்படுத்த நாம முயற்சிக்கிறோம்.”

ஞானானந்தனுக்கு வினோத்திடம் இருந்த பல சாயல்களும் இருந்தன. பேச்சில், கைகளின் அசைவில்... அதனால் அவன் பேசிக் கொண்டிருக்கும்போது, சரளாவின் மனம் இனிமையான நினைவுகளில் மூழ்கிவிட்டது.

வினோத்தின் கையில் தளர்ந்து கிடந்தவாறு சரளா அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பாள்.

“அண்ணி, நீங்க பக்கத்துல இருக்குறப்போ எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? நீங்க பக்கத்துல இல்லாதப்போ, நீங்க மட்டும்தான் என் மனசுல இருக்கீங்க. ஒரு பார்வைக்காக, ஒரு தொடலுக்காக நான் ஏங்குறேன்.”

சரளா அவன் சொல்றதைக் கேட்டுக்கொண்டே படுத்திருப்பாள் - முழுமையான திருப்தியுடன், அவனை விட்டு நீங்குவதற்கு முடியாமல்.

“இரவு நேரத்தில்தான் ரொம்பவும் கஷ்டம்” - அவன் கூறுவான். “பத்து மணிக்கு கோபி அண்ணன் படிகளில் ஏறி வர்ற சத்தம் கேட்கும். அதற்குப் பிறகு பத்தே நிமிடங்களில் அண்ணி, உங்க காலடி சத்தம் கேட்கும். அந்தச் சத்தம் எவ்வளவு மெதுவா ஒலிக்கும் தெரியுமா? இருந்தாலும் நான் அதைக் கேட்பேன்.”

சரளா நினைத்துப் பார்ப்பாள். அவள் கூஜாவிலும் கண்ணாடி டம்ளரிலும் நீருடன் வருவதையும், கூஜாவிலிருந்த நீரை மேஜைமீது வைத்துவிட்டு, கண்ணாடி டம்ளரில் நீருடன் வினோத்தின் அறைக்குள் நுழைவதையும் எண்ணிப் பார்த்தாள். அவன் படித்துக் கொண்டிருந்த போது அருகில் சென்று அவனுடன் சேர்ந்து நின்று கொண்டு நீரை மேஜைமீது வைப்பாள். அவன் பரிதாபமாக கூறுவான்:

“இப்படியாவது நாம பார்க்க முடியுதே!”

சரளா எதுவும் பேசாமல் அவனைப் பார்ப்பாள். குனிந்து அவனுடைய கன்னத்தில் முத்தம் தந்துவிட்டு அங்கிருந்து வெளியேறுவாள்.

“அண்ணி, நீங்க போயிட்டா, எனக்கு ரொம்பவும் கவலை ஆயிடும்” - வினோத் கூறுவான்: “நீங்க கதவை அடைக்கிற சத்தம் கேட்கும். அண்ணி, நீங்க புடவையை அவிழ்க்கிறதை நான் மனசுல நினைச்சுப் பார்ப்பேன். விளக்கை ஊதி அணைச்சிட்டு ப்ளவ்ஸ், பாவாடையுடன் கோபி அண்ணன் பக்கத்துல போய் படுக்குறது, கோபி அண்ணன் கட்டிப் பிடிக்கிறது, முத்தம் தர்றது... சாய்ந்து படுக்குறப்போ தாலிச் சங்கிலியை மறைச்சு வைக்கிற அழகான மார்பகங்கள் நினைவுல வரும். நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சிடுவேன்.”

சரளா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே படுத்திருப்பாள். அவனுடைய முகத்தைத் தன்னுடைய நிர்வாணமான மார்பகங்ளின் மீது வைத்து அழுத்துவாள். அவனை எப்படிக் தேற்றுவாள்?

“நான் உன்னோடவ வினு” அவள் கூறுவாள்: “உன்னோடவ மட்டும்.”

“உண்மையாகவா?”

“ஆமா வினு, உண்மைதான்...”

அவன் சிறிது நேரம் அமைதியாக இருப்பான். ஆனால், அவனை வேதனைப்படுத்த மனசாட்சி காத்து நின்றிருக்கும். அவன் கூறுவான்:

“அண்ணன் எனக்கு அப்பா மாதிரி. எனக்காகத்தான் அவர் தன் படிப்பையே நிறுத்தினாரு- என்னைக் கல்லூரிக்கு அனுப்புறதுக்காக.... இருந்தும் அந்த அண்ணனுக்கு நான் துரோகம் பண்ணுறேன். நான் ஒரு பாவி...”

“அதுனால என்ன?” - சரளா அவனைத் தேற்ற முயற்சிப்பாள்: “இதுல துரோகம் ஒண்ணும் இல்ல. நான் ரெண்டு பேருக்கும் மனைவின்னு நினைச்சுக்கிட்டா எல்லாம் சரியாயிடும். அதாவது எனக்கு ரெண்டு கணவர்கள் இருக்காங்கன்னு.... அப்படி நினைக்கிறது தப்பு இல்லையே!”

உண்மையாகச் சொல்லப்போனால், சரளாவிற்கு மனசாட்சியின் குத்தல் எதுவும் இல்லை. அவளுடைய கணவர்கள் இருவரும் அண்ணன் - தம்பிகள். அவர்களுக்கிடையே பாசம் இருக்கிறது. பாசம் இல்லாமல் போகும்போதுதான் பிரச்சினைகள் உண்டாகும்.

ஆனால், சரளாவிற்கே தெரியாமல், அவளுடைய மனதிலும் பிரச்சினைகள் உண்டாகியிருந்தன. தனியாக இருக்கும்போது அவளுக்குள் இருக்கும் நீதிபதி எழுந்து, அவளை விசாரணை செய்வதுண்டு. எதற்காக வினோத்துடன் இப்படி நெருங்க வேண்டும்? ஆறு வருட திருமண வாழ்க்கையில் அவளுடைய கர்ப்பப்பை தரிசாக இருக்கிறது என்றாலும், மனதில் அன்பின்- கருணையின் நீரோட்டம் இருக்கத்தான் செய்தது. வினோத் ஒரு மகன் என்றே இதற்கு முன்பு மனதில் தோன்றிக் கொண்டிருந்தான். பிறகு, திடீரென்று ஏன் இந்த மாற்றம்?

இப்படிப்பட்ட சிந்தனைகளுக்கு மத்தியிலும் சரளா சந்தோஷம் நிறைந்தவளாகவே இருந்தாள். கவலைப்படும் நிமிடங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், வினோத்தும் மகிழ்ச்சி நிறைந்தவனாகவே இருந்தான்.

ஆனால், துயரம் அதிக தூரத்தில் இருக்கவில்லை.

ஞானானந்தன் மிகவும் சீக்கிரமே வந்து சேர்ந்திருந்தான். ஒரு திருப்பத்தில் அவன் காத்து நின்றிருந்தான். மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த சரளாவைப் பார்த்து அவன் கேட்டான்:

“அக்கா- களைச்சுப் போயிட்டீங்களா?”

அவனுடைய முகத்தில் குழந்தைத்தனம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே நடந்தபோது ஞானானந்தனுக்கும் வினோத்திற்கும் இடையிலுள்ள எதிர்பாராத உருவ ஒற்றுமையை நினைத்த அவள் தன்னைத்தானே மறந்து விட்டாள். அவள் சொன்னாள்:

“இல்ல வினு.”

ஆச்சரியம் வெளிப்பட்ட கண்களுடன் ஞானானந்தன் சரளாவைப் பார்த்தான். அவளுடன் சேர்ந்து நடக்கும்போது அவன் கேட்டான்,

“அக்கா, வினுன்றது யாரு?”

சரளாவின் முகம் அதைக் கேட்டு சிவந்துவிட்டது. தன்னுடைய வாயிலிருந்து வினுவின் பெயர் மீண்டும் வெளியே வந்திருக்கிறது என்பதை அப்போதுதான் அவள் நினைத்துப் பார்த்தாள்.

“சந்நியாசத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு என்னோட பேரு வினயான்னு இருந்தது. அம்மாவும் அப்பாவும் என்னை வினுன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, ஆஸ்ரமத்துல குருவுக்குத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பேரு தெரியாது.”

ஒற்றுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்று சரளா நினைத்துக் கொண்டாள்.


“அக்கா, ஞாபகத்துல இருக்குதா? ஒருநாள் நான் பூ பறிச்சுக்கிட்டு இருந்தப்போ நீங்க வினுன்னு என்னை அழைச்சீங்க. அது என் தாயோட சத்தம் மாதிரியே இருந்தது. நான் அன்னைக்கு நீண்ட நேரம் அழுதுகிட்டே இருந்தேன்.”

அவர்கள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தார்கள்.

“அக்கா....” அவன் தொடர்ந்தான். “சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டு விட்டோம்ன்றதுக்காகப் பற்று இல்லாமல் போயிடாது. நம்மோட மனதின் ஆழத்தில் அது என்னைக்கும் இருக்கத்தான் செய்யும்.”

“அம்மா இப்போ எங்கே இருக்காங்க.”

“அங்கே....” வானத்தைச் சுட்டிக் காட்டியவாறு அவன் சொன்னான். “எனக்குப் பத்துவயது நடக்குறப்போ அம்மா இறந்துட்டாங்க.” அதிகரித்துக்கொண்டிருந்த எதிர்பாராத ஒற்றுமைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள் சரளா. வினோத்தின் தந்தை, ஞானானந்தனின் தாய் - இரண்டு பேரும் இறந்ததும் பிள்ளைகளுக்குப் பத்து வயது நடக்கும்போதுதான். இருமையிலிருந்து ஒருமையை நோக்கிய இரண்டு ஆன்மாக்களின் பயணம்- அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள்.

“நாம கொஞ்சம் அதிகமா நடந்துட்டோம்ல?”

சரளா சுற்றிலும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“இங்கே பக்கத்துலதானே அன்னைக்கு நாம போன இடம்? அந்தப் பாறையும் வாய்க்காலும்?”

“அங்கே போகணுமா?”

“போவோம்.”

“அது ஒரு ஆபத்தான் இடம். நம்ம அறிவைக் குழப்புற ஏதோ ஒண்ணு அங்கே இருக்கு. அங்கே அதிகம் போகாம இருக்குறதே நல்லது.”

நேரம் என்ற புதிர்

லைத் தொடர்களிலிருந்து பனிப்படலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. உச்சியில் பனியால் மூடப்பட்டிருந்த சிகரங்கள் சூரிய வெளிச்சத்தில் ஒளிர்ந்தன. மலை மேலே இருக்கும் பாறைகளிலிருந்து கீழ்நோக்கி வேகமாக விழுந்துகொண்டிருக்கும் அருவி நீர் இப்போது தெளிவாகத் தெரிந்தது. பர்ணசாலையின் வாசல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தகுரு நிலைகுலைந்து போய்விட்டார். ஞானானந்தன் மலர்கள் பறிக்கச் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது.

குரு வெளியேறி நடந்தார். ஞானானந்தன் விஷயத்தில் தனக்கு இந்த அளவுக்கு ஏன் அக்கறை இருக்கிறது என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். ஞானானந்தனைப் பார்க்கும்போது ஆழத்தில் எங்கோ வேர்கள் இறங்கிச் சென்று பாசம் என்ற கிளைகளில் கனிவு என்ற தளிர்களை முளைக்கச் செய்யும். மற்ற எல்லா பந்தங்களையும் அறுத்து எறிந்த அவர் ஒன்றே ஒன்றைமட்டும் விட்டு வைத்தார். அதை மரணத்தால் மட்டுமே அறுக்க முடியும் என்பது கடவுளின் தீர்மானமாக இருக்கலாம். அந்தக் காரணத்தால்தான் கடவுள் ஞானானந்தனை தன்னிடம் அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். கடவுளின் முடிவுகள் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் இதற்கு முன்பு பார்த்திராதவையாகவும் இருந்தன.

காற்று ஹோமகுண்டத்தின் சாம்பலை முற்றத்தில் சிதறவிட்டது. அது கோவிலுக்கு முன்னால் போட்ட கோலத்தைப் போல இருந்தது.

பாறைக்குக் கீழே ஆலமரம் உண்டாக்கிய நிழலில் அவர்கள் நின்றிருந்தார்கள். மூன்று பக்கங்களிலும் பாறைகள் மட்டுமே இருந்தன. பாறைகள் இல்லாத இடங்கள் கொடிகளால் மூடப்பட்டிருந்தன. மேலே வானத்தை முழுமையாக மூடியிருந்தது ஆலமரம். வெளி உலகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் தங்களுக்கென்று உண்டாக்கிக் கொண்ட ஒரு சிறிய உலகம் மட்டுமே அங்கு இருந்தது.

சரளா கேட்டாள்:

“உன்னை நான் வினுன்னே அழைக்கட்டுமா?”

ஞானானந்தன் சிரித்தான். கள்ளங்கபடமில்லாத சிரிப்பு. அவள் மெதுவான குரலில் அழைத்தாள்:

“வினு....”

குழந்தைத்தனமான அந்த அழைப்பைக் கேட்டு ஞானானந்தன் சிரித்தான். ஆலமரத்திற்குக் கீழே பெஞ்சைப் போல அகலமாக இருந்த பாறையில் அவர்கள் உட்கார்ந்தார்கள்.

குரு தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை ஞானானந்தன் நினைத்துப் பார்த்தான். பூஜைக்கான நேரம் வந்துவிட்டது.

“அக்கா நாம போகலாம். குரு காத்திருப்பார்.”

“பரவாயில்ல, வினு... கொஞ்ச நேரம் மட்டும்...”

வினு என்ற அழைப்பில் மந்திர சக்தி கலந்திருந்தது. அவன் தன் தாயை மனதில் நினைத்துப் பார்த்தான். இறப்பதற்கு முந்தைய நாள் அவள் சோர்வான குரலில் அவனைப் பார்த்துக் கேட்டாள்:

“நான் இறந்ததை நினைச்சு கவலைப்படுவியா?”

அதற்கு அவன் என்ன பதில் கூறுவான் என்பது அவளுக்குத் தெரியும். அவள் மெலிந்துபோன தன் கையால் அவன் தலையைத் தடவினாள். பத்து வயதைக் கொண்ட ஒரு சிறுவனால் தன்னுடைய உணர்வுகளை முழுமையாக வெளியிட முடியும் என்று கூறுவதற்கில்லை. அன்று அழாமல் இருந்ததற்காக, தன் தாயிடம் அவள் அவ்வளவு சீக்கிரம் இறக்க மாட்டாள் என்று கூறித் தேற்றாமல் இருந்ததற்காக அவன் பின் நாட்களில் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறான்.

“வினு, நீ சந்நியாசம் பூண்டதுக்கு என்ன காரணம்?”

சரளா அவனுடைய தோளில் கையை வைத்தவாறு கேட்டாள். ஞானானந்தன் அந்தக் கையை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டு அதை அன்புடன் தடவினான்.

என்ன காரணம்? தன் தாய் சற்று சீக்கிரமே மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் இருப்பதை அவன் புரிந்துகொண்டான். ஒரு வருடம் ஆன பிறகு அவனுடைய தந்தை வேறொரு திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமண உறவின் மூலம் ஒரு மகன் பிறந்த பிறகு, இரண்டாவது தாயின் கொடுமைகள் ஆரம்பமாயின. இருக்கக்கூடிய பொருட்களை மூத்த மகனுக்கும் சேர்த்துப் பங்கிட வேண்டுமே! முணுமுணுப்புகள், இரவில் படுக்கையறையில் தாழ்ந்த குரலில் பேச்சுகள், ஒன்றுமே செய்ய முடியாத நிலையிலிருக்கும் அவனுடைய தந்தையின் கெஞ்சல் குரல்...

இதற்கிடையில்தான் நிசப்தமான அந்தக் குரல் அவனைத் தேடிவந்தது. அவன் மட்டும் தனியாக இருக்கும் நேரங்களில் அந்தக் குரல் அவனுடைய மனதிற்குள் நுழைந்தது. அதற்குப் பிறகு கனவு நிலைக்கு நிகரான காட்சிகள்.... அது வேறொரு உலகத்தைச் சேர்ந்ததாக இருந்தது. சில நேரங்களில் புரிந்துகொள்ள முடியாத சக்தியின்... சில நேரங்களில் ஆன்மிக சக்தியின் மகத்தான அனுபவங்கள்...

சரளா அவனுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள். அவன் சொன்னான்: “ஒரு குரலைக் கேட்டேன். நான் வீட்டை விட்டு கிளம்பிட்டேன். நேரா வந்து சேர்ந்தது மலைமேல இருந்த ஆஸ்ரமத்துக்குத்தான்...”

தான் கூறிக்கொண்டிருந்ததைச் சற்று நிறத்திய அவன் சொன்னான்: “நம்ம சுய உணர்வு மண்டலத்தைத் தாண்டி வேறு என்னென்னவோ இருக்கு. சில நேரங்களில் அது என்னைப் பயமுறுத்துது...”

வினு, நீ ஆஸ்ரமத்துக்கு வந்து எவ்வளவு காலமாச்சு?

“பத்து வருடங்கள்... அதாவது.... எழுபத்து நான்காம் வருடம்...”

“எழுபத்து நான்கு?”


“ஆமா... எழுபத்து நான்காம் வருடம் பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி.”

“அப்படின்னா... இது என்ன வருடம்?”

“இதுவா? இது தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு?”’

அவன் சந்தேகத்துடன் சரளாவைப் பார்த்தான்.

அவளுடைய முகத்தில் ஒரு திகைப்பு தெரிந்தது.

சரளா அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தொள்ளாயிரத்து எண்பத்து நான்கு! அப்படியென்றால்...?

அவள் சிந்தித்தாள். தான் வீட்டை விட்டு வெளியேறியது அறுபத்து இரண்டாம் வருடம் ஏப்ரல் இருபத்தெட்டாம் தேதி என்று ஞாபகம். தேதி உறுதி என்று கூறுவதற்கில்லை. மனம் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. ஏப்ரல் மாதம் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும். வினோத் தேர்வு எழுதச் சென்றது ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி.

அவள் ஞானானந்தனைப் பார்த்தாள். சரளாவின் மனதில் இருந்த சூறாவளியைப் பற்றி எதுவும் தெரியாமல், அதைப்பற்றி எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அவன் உட்கார்ந்திருந்தான். அவளுடைய கை அவன் கைகளில் இருந்தது. அதை மெதுவாக அழுத்தியவாறு அவன் கேட்டான்.

“என்ன பிரச்சினை?”

பதில் இல்லாத பிரச்சினைகளின் சூழலில் சிக்கி அவள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். ஞானானந்தன் விளையாட்டுக்காகக்கூட பொய் சொல்ல மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். அப்படியென்றால் என்ன நடந்தது?

வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளன்று நடைபெற்ற சம்பவங்களை முழுமையாக நினைத்துப் பார்க்க முடியவில்லை. புகை வந்து மூடியதைப் போல தெளிவற்று அவை இருந்தன. வினோத்தின் மரணத்திற்குப் பிறகு அவள் கீழே தன் மாமியாரின் அறையில்தான் படுப்பாள். கோபி அவளிடம் வழக்கத்திற்கு மாறாக எப்போதும் நடந்ததில்லை. ஆனால் அவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான் என்பதை மட்டும் அவளுடைய மனம் கூறிக்கொண்டே இருந்தது. அவள் வேதனையைக் கடித்துத் தின்று, அன்பின் விலையைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது அவள் சிந்தித்துப் பார்ப்பாள். அவன் எதற்காக அதைச் செய்தான்?

பதில் கிடைக்காமல் இருந்த இரவுகள் ஒன்றில் அவள் பயணம் கிளம்பிவிட்டாள். அவளுடைய மாமியார் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவள் கொடுத்து வைக்கப்பட்ட ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண்விழிக்காமல் இருந்தாள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். சரளா கட்டிலின் கால் பகுதியில் விழுந்து வணங்கினாள். கோபியின் அறையில் சாத்தப்பட்டிருந்த கதவுக்கு அருகில் அவள் சிறிது நேரம் நின்றாள். வினோத்தின் ஞாபகம் வந்தது. கண்ணீர் அருவியென வடிந்தது. மெதுவான குரலில் முணுமுணுத்தாள். “என்னை மன்னிச்சிடுங்க....”

“அக்கா, உங்களுக்கு என்ன ஆச்சு?” ஞானானந்தன் அவளுடைய முதுகில் கையை வைத்து தேற்றினான். அவள் அவனுடைய இடுப்பைப் பிடித்துக்கொண்டு அவனின் தோளில் தன் முகத்தை வைத்தாள். அவன் பாசத்துடன் அவளுடைய முன் தலையைத் தடவினான்.

மரங்களுக்கு மத்தியிலிருந்து வந்த குளிர்ந்த காற்று அவளுடைய கண்ணீரை ஒற்றி எடுத்தது. அவள் எழுந்து நின்றுகொண்டு சொன்னாள்:

“நாம போகலாம்.”

பர்ணசாலையின் முற்றத்தில் உலவிக்கொண்டிருந்த ஆனந்த குரு பொறுமையை இழந்துவிட்டார். பூஜைக்கான நேரம் கடந்து போய்க்கொண்டிருந்தது. அது பரவாயில்லை. ஆனால் ஞானானந்தன் எங்கே? இப்படித் தாமதம் ஆகாதே! முற்றத்தின் அருகில் சென்று அவர் மலைச்சரிவைப் பார்த்தார். திடீரென்று அவர் நிமிர்ந்து நின்றார். மரங்களுக்கு நடுவில் வளைந்து வளைந்து செல்லும் ஒற்றையடிப்பாதைகள் வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும் இரண்டு உருவங்கள். குரு கூர்ந்து கவனித்தார். பூக்கூடையைக் கையில் வைத்திருந்தது ஒரு பெண் உருவமாக இருந்தது.

துன்பங்களின் காலடிச் சத்தம் கேட்பதைப்போல இருந்தது. என்ன காரணத்தாலோ, குரு தன் மன அமைதியை இழந்தார்.

ஒரு வெளிப்பாடுக்காக

ணவு நேரத்தில் கூடத்தில் தொங்கவிடப்பட்டிருந்த நாட் காட்டியில் சரளா பார்த்தாள். ஞானானந்தன் சொன்னது உண்மைதான். 1984 மே மாதம், தேதியைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. ஆனால், எண்பத்து நான்கு என்ற உண்மை அவளைக் கவலைப்படச் செய்தது. ஞானானந்தன் சொன்னதை அவள் நினைத்துப் பார்த்தாள். ‘நம்மோட சுயஉணர்வு மண்டலத்தைத் தாண்டி, வேற என்னென்னவோ இருக்கு.’ அது அவளை முழுமையாகப் பயப்படச் செய்தது. வீட்டை விட்டு வெளியேறி ஆஸ்ரமத்திற்கு வந்து சேரும்வரை நடைபெற்ற சம்பவங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. நகரத்திலிருந்த ஆஸ்ரமமும் பெண் துறவியும் சிறிதளவில் ஞாபகத்தில் இருக்கிறார்கள். பிறகு தேவிகா... ஒற்றைக் காளை வண்டியை ஓட்டிச் செல்லும் தாடிக்காரன்.... தேவிகாவைப் பற்றியும், காளை வண்டியைப் பற்றியும் சொன்னபோது, ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கும் ஆட்கள் மத்தியில் உண்டான ஆச்சரியத்திற்கான காரணத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. விஷயங்கள் அனைத்தும் தெளிவாகிவிட்டதைப் போல் அவளுக்கு இருந்தது.

காலத்தின் மாயையைப் பற்றி குரு சொன்னார்:

“நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம்- காலம். இரண்டு சம்பவங்களுக்கிடையே இருக்கும் கால அளவை நாம நேரம் என்று சொல்றோம். சம்பவங்கள் இல்லாமல் இருந்தால் நேரம்ன்றதும் இல்லாமப் போகும். அப்படிப்பட்ட ஒரு நிலை உண்டாவதற்கு வழியில்லை. காரணம் ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குள் என்னென்னவோ நடந்துவிடுகிறது. கோடானுகோடி உயிர்கள்... அவற்றில் அணு அளவைக் கொண்ட பாக்டீரியா முதல் யானையைப் போன்ற மிருகங்கள் வரை... பிறகு மரங்கள்... எல்லாம் பிறக்கவோ, வளரவோ,இறக்கவோ செய்கின்றன. முடிவே இல்லாத இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே செயல்படாமல் இல்லை. ஒரு சிறு அணுவில்தான் எத்தனை அசைவுகள்! ஒரு துளியிலிருந்து இன்னொரு துளிக்கு உள்ள நகர்தலின் கால அளவுதான் நேரம். நேரத்தை நம்மால் நிறுத்த முடியாது. சரி... அது இருக்கட்டும். உங்க சந்தேகம் என்ன? ”

அவள் குருவிடம் தன்னுடைய சந்தேகம் என்ன என்பதைக் கூறவில்லை. துன்பங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் ஒரு உலகத்தில் அவள் தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கிறாள்.

“இந்த மலையில் ஏதோ புரிந்துகொள்ள முடியாத சக்திகள் இருப்பதைப்போல தோணுது....” சரளா சொன்னாள்.

ஆனந்தகுரு சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் தன்னுடைய குருநாதரான வேலப்ப சுவாமிகளை நினைத்துப் பார்த்தார். தன்னுடைய தொண்ணூறாவது வயதில் அவர் சமாதி அடைந்தார். அறுபது வருடங்கள் அவர் இந்த மலைத்தொடர்களில் அலைந்து திரிந்தார் - இங்கு மறைந்து கிடக்கும் ரகசியங்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்வதற்காக. ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியாமலே அவர் போய்விட்டார். தெரிந்துகொண்ட சில விஷயங்களைத் தன்னுடைய சிஷ்யனிடம் அவர் சொன்னார். ‘மறு பிறப்பின் ஆச்சரியங்களைப் பற்றி சுவாமிகள் கூறுவதுண்டு. அங்கு சந்தித்துக் கொள்ளும் ஆன்மாக்கள், கடந்த பிறவிகளின் பாவ புண்ணியங்களின் கணக்குகளை ஒப்பிட்டுப் பார்க்கின்றன கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சத்திற்கு அப்பால், கால வேறுபாடுகளைத் தாண்டிய ஒரு தளத்தில் கண்ணுக்குத் தெரியாத சக்திகள், கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சத்தின் செயல்களைத் தீர்மானிக்கின்றன. மனித மனத்திற்கு அப்பாலிருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பது ஆபத்தானது.’


ஆனந்தகுரு சரளாவை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு கேட்டார்:

“இப்படி சொல்றதுக்குக் காரணம் என்ன?”

சரளா அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. மனதிலிருந்த பயத்தைப் பற்றி, குழப்பங்களைப் பற்றி அவள் கூறுவதற்குத் தயங்கினாள். அவள் குருவின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தாள். குரு அவளுடைய தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

தன்னுடைய கை நடுங்குவதை குரு உணர்ந்தார்.

சரளா அங்கிருந்து போய்விட்டாள். குரு சிறிதுநேரம் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பயம் உண்டாகிவிட்டிருந்தது. பல வருடங்களாக இருந்த தவத்தின் பலனாகப் பெற்றிருந்த பரம சித்திகள் அனைத்தும் இறுதி நிமிடத்தில் கைவிட்டுப் போகின்றனவோ? சரளாவுடன் பேசும்போது அவருடைய மனம் பதறிப்போய்விடுகிறது. ஒரு பழைய பந்தத்தின் சிதிலமடைந்த நினைவு நாடிகளைத் தட்டி எழுப்புகிறது. சரளா ஒரு விடுகதையாக இருந்தாள். யாரும் பார்த்திராத ஒற்றைக்காளை வண்டியில் தனக்கு முன்னால் வந்து நின்ற இவள் யார்? எங்கிருந்து இவள் வருகிறாள்? எந்தவிதத் தொடர்பும் இல்லாத பழைய விஷயங்களைப் பற்றியே அவள் கூறுகிறாள். அவளுடைய சந்தேகங்கள் சாதாரண மனிதர்களிடம் இருக்கும் சந்தேகங்கள் இல்லை. அவற்றுக்கான பதில்கள் அவரிடம் இல்லவே இல்லை.

குரு கண்களைத் திறந்தார். தூரத்தில் மலைத்தொடர்கள் மூடியிருந்த பனிப்படலத்தைக் கீழே போகச் செய்தன. மலைச்சரிவில் இருந்த மரங்கள் நிழல் வடிவங்களாக மாறின. மேற்குத் திசையிலிருந்து வந்த காற்று ஆஸ்ரமத்தின் ஜன்னல் வழியாக உள்ளே வந்து குருவைத் தொட்டது.

முற்றத்தில் ஹோமகுண்டத்தைத் தயார் செய்யும் ஞானானந்தனின் முகம் தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தது.

நிமிடங்களுக்குள் நெருப்பு உயர பற்றி எரிந்தது. ஞானானந்தனின் முகம் அதில் பிரகாசமாகத் தெரிந்தது. அவன் வெறுமனே உட்கார்ந்திருந்தான். எதுவும் செய்யவில்லை. சுவாமிகளின் காலத்திலிருந்து இந்த வேலை நடக்கிறது. அன்று காட்டு மிருகங்களை விரட்டுவதற்காக இது தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஹோமகுண்டத்தை எரியச் செய்யும் செயல். இப்போது காட்டு மிருகங்களின் தொந்தரவு இல்லை. எனினும் அது ஒரு சடங்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனந்தகுரு ஹோமகுண்டத்தையே பார்த்தார். அசைந்து கொண்டிருந்த நெருப்பு ஜுவாலைகளுக்கு நடுவில் பற்றி எரிந்து கொண்டிருந்த விறகுகள் வினோதமான வடிவங்களை வெளிப்படுத்தின. அவர் தன்னுடைய குருநாதரான சுவாமிகளை தியானித்தார். ஒரு உண்மை வெளிப்பட வேண்டும் என்பதற்காக ரகசியங்களின் இருட்டறையில் வெளிச்சத்தின் உன்னதமான ஒரு தருணத்திற்காக.

எந்த உண்மையும் வெளிப்படவில்லை. ஆனந்தகுரு எழுந்தார்.

கோடை மழை

ரளா மிகவும் கவலையில் இருந்தாள். சந்தேகங்களைப் போக்கக் கூடிய எதுவும் ஆனந்த குருவின் வாயிலிருந்து வெளியே வரவில்லை. தன்னுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி நடத்திக் கொண்டிருப்பவை சாதாரண விஷயங்கள் அல்ல என்ற புரிதல் அவளுக்கு இருந்தது. குறைந்தபட்சம் தான் இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து சேர்ந்த பிறகாவது. இந்த எல்லாவற்றுக்கும் அர்த்தம் என்ன? இவ்வளவு காலம் தான் எங்கிருந்தோம்?

யாரையும் சந்தேகப்படாமல், பயமுறுத்தாமல் இந்தப் பிரச்சினைகளை அவளால் கூற முடியவில்லை. ஞானானந்தன்மீது அவளுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தது. ஆனால், தன்னுடைய பிரச்சினையைக் கேட்ட பிறகு எங்கே தன்னுடைய அறிவின் செயல்பாட்டைப் பற்றி அவன் சந்தேகம் கொண்டுவிடுவானோ என்று அவள் பயந்தாள். விஷயங்களை ரகசியமாகப் புரிந்துகொள்ள அது அவளைத் தூண்டியது.

இரவில் படுக்கும்போது, சுனந்தினி சொன்னாள்:

“மே மாதம் இருபத்து நான்காம் தேதி பகவதி கோவிலில் திருவிழா.”

“பகவதி கோவில் எங்கே இருக்கு?”

“கிராமத்துல... ஆஸ்ரமத்துல இருந்து எல்லாரும் போவாங்க. வருடத்துல அந்த ஒருநாள் மட்டுமே நாங்க கிராமத்துக்குப் போவோம்.”

திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் சுனந்தினியின் உதவியுடன் சரளா தன் புடவையைக் காவியாக மாற்றினாள். கிராமத்திற்குப் போகும்போது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தெரியக்கூடாது என்று அவள் நினைத்தாள். மலை உச்சிக்கு வந்த பிறகு அவள் கீழே இறங்கவேயில்லை. ஞானானந்தனுடன் சேர்ந்து பூப்பறிக்கச் செல்வது மிகவும் கீழே இல்லை. மலையைச் சுற்றி நடந்தாலும் மிகவும் குறைவான தூரமே கீழ்நோக்கிச் செல்வார்கள். தான் வண்டியை விட்டு இறங்கிய இடத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் சரளா.

அது அவளுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம்.

இரவில் மழை பெய்தது. கனமான மழை. அதோடு சேர்ந்து இடியும், இடி முழங்கியபோது மலையே அதிர்வதைப்போல அவள் உணர்ந்தாள்.

“திருவிழாவிற்கு முன்னால் ஒன்றிரண்டு முறை மழை பெய்வது வழக்கம்தான்...”

சுனந்தினி சொன்னாள். ஒவ்வொரு இடி முழங்கும்போதும் அவள் சரளாவுடன் மேலும் சேர்ந்து ஒட்டிக் கொண்டு படுத்தாள்.

“எனக்கு இடின்னா பயம்.”

“எனக்கும்தான்” - சுனந்தினியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சரளா சொன்னாள்: “பரவாயில்ல... நீ பயப்படாதே.”

அவள் ஞானானந்தனை நினைத்தாள். மழை நீரால் பாறைகள் கழுவப்பட்டிருக்கும். சீக்கிரம் பொழுது விடியாதா என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் சுனந்தினியை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். பாதித் தூக்கத்துடன் சரளாவுடன் சேர்ந்து படுத்தாள்.

காலையில் ஞானானந்தன் வரவில்லை. பூக்கூடையுடன் வரும் அவனுடைய உருவத்தை மனதில் நினைத்துக்கொண்டே அவள் வாசலில் நின்றிருந்தாள். ஞானானந்தன் வரவில்லை. மேலே குருவின் பர்ணசாலையிலிருந்து கை மணியின் ஓசையும் மந்திரங்களும் கேட்டன. சந்தனத்திரி, ஊதுபத்தி ஆகியவற்றின் மணம் இறங்கி வந்தது.

அவள் சுவருக்கு அருகில் போய் உட்கார்ந்து, முழங்கால்மீது தலையை வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

காலை உணவிற்கு அவள் கூடத்திற்குச் செல்லவில்லை. சுனந்தினி விசாரிப்பதற்காக வந்தபோது முகம் என்னவோ மாதிரி இருப்பதைப் பார்த்துக் கேட்டாள்:

“என்ன ஆச்சு, உடம்புக்கு ஆகலையா?”

“ஒண்ணுமில்ல...”

“அப்படின்னா உணவு?”

“எனக்கு வேண்டாம்...”

சுனந்தினி போனபிறகு சரளா சாளரத்தின் வழியாக வெளியே பார்த்து கொண்டு நின்றிருந்தாள். சுற்றியிருந்த இடங்கள் நீரால் சுத்தமாக்கப்பட்டிருந்தன. இலைகளில் பசுமை பளிச்சிட்டது. கிளிகளின் சத்தத்தில் ஒரு தனி உற்சாகம் வெளிப்பட்டது. கோடைமழை எல்லோருக்கும் ஓரு ஆசிர்வாதத்தைப் போல இருந்தது.

“அக்கா.”

அவள் அதிர்ந்து போனாள். ஞானானந்தன் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான்.

“அக்கா, உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சுனந்தினிதேவி சொன்னாங்க. ஏன் கஞ்சி குடிக்க வரல?” - அவன் கேட்டான்.

நீ ஏன் காலையில் வந்து என்னை அழைக்கல?

“அக்கா, நீங்க அதை நினைச்சு கவலைப்பட்டுட்டீங்களா?” - அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்:“இன்னைக்கு பூப்பறிக்கப் போனது நான் இல்ல. குரு கிருஷ்ணப்பிரியாவை அனுப்பிட்டாரு.”


“வினு, நான் உன்னை எதிர்பார்த்து ரொம்ப நேரம் நின்னேன். நீ வந்து என்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கலாம்ல?”

அவனுக்குக் குற்றஉணர்வு உண்டானது. அவன் வந்து கூறியிருக்கலாம்தான்.

“அக்கா, நீங்க காத்து நிற்பீங்கன்றதை நான் நினைக்கல. பரவாயில்ல.... கஞ்சி குடிக்க வாங்க.”

“வர்றேன். ஆனா ஒரு நிபந்தனை....”

“என்ன நிபந்தனை?”

“வினு, இன்னைக்குச் சாயங்காலம் நீ என்கூட பாறை இருக்கிற இடத்துக்கு வரணும்.”

“அவ்வளவுதானே?” – ஞானானந்தன் சிரித்தான்.

எமதேவனின் கோவில்

ழியில் இருந்த ஈரத்தை வெயில் மாற்றிவிட்டிருந்தது. பாறை மிகவும் சுத்தமாக இருந்தது. சிதறிக் கிடந்த காய்ந்த இலைகளைப் பெருக்கி நீக்கிவிட்டு சரளா உட்கார்ந்தாள். வரும் வழி முழுக்க சரளா பேசிக்கொண்டே வந்தாள். அவளுடைய பயங்களைப் பற்றி.... அலைக் கழித்துக்கொண்டிருக்கும் கற்பனைக் கதைகளைப் பற்றி.....

ஞானானந்தன் ‘உம்’ கொட்ட மட்டும் செய்தான். அவனுக்கு ஆச்சரியப்படும் வகையில் எதுவும் உண்டானதாகத் தெரியவில்லை.  அப்படி ஏதாவது நடக்கும் என்றே அவன் கூறுகிறான்.

“நான்தான் சொல்வேனே! இந்த மலை மேலே என்னவோ அற்புதங்கள் இருக்குன்னு.... அக்கா, இந்தப் பாறைகளில் உட்கார்ந்து தியானம் செய்யிறப்போ நேரம் அப்படியே தலைகீழா மாறுற உணர்வு உண்டாகுதுன்னு நீங்க சொன்னதை நான் முழுமையாக நம்புறேன்.  அது என்னோட சந்தேகங்களை மேலும் பலப்படுத்துது. ஆனா,  மற்றவர்கள் நம்பணும்னு அவசியம் இல்ல. அவர்கள் உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னுதான் சொல்லுவாங்க.”

ஞானானந்தன் கூறிய வார்த்தைகள் சரளாவைப் பயம்கொள்ளச் செய்தன.

“அக்கா, உங்க விஷயத்துல இதுதான் நடந்திருக்கணும். நீங்களும் தேவிகா என்ற பெயரைக் கொண்ட பெண் சந்நியாசியும் சேர்ந்து இந்த மலை உச்சிக்கு வந்த நேரம் இருக்கே! அது எந்த வருடம்னு சொன்னீங்க?”

“அறுபத்து இரண்டு....”

“அந்த நேரத்துல இந்த மலைத் தொடர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய ஏதோ காரணத்தால் நேரத்திற்கு ஒரு விரிசல் உண்டாயிடுச்சு. அந்த விரிசலில் அக்கா, நீங்களும் தேவிகாவும் சிக்கிக்கிட்டீங்க. இப்போ அதே சம்பவத்தின் தலைகீழ் நிகழ்வின் விளைவாக அந்த விரிசலிலிருந்து நீங்க தப்பிச்சிட்டீங்க. அக்கா, உங்களைப் பொறுத்தவரையிலே நேரத்தின் விரிசலில் சிக்கிக் கிடந்த இருபத்து இரண்டு வருடங்களுக்குக் கணக்கே இல்ல. அதாவது - அக்கா, உங்களுக்கு அப்போ என்ன வயது இருந்ததோ அதேதான் இப்பவும்.....”

“அப்படின்னா, தேவிகா?”

“அதுதான் என்னைக் குழப்புகிற ஒரு விஷயம். இரண்டு பேரும் ஒரே நேரத்துல காணாமல் போறப்போ, ஒண்ணா சேர்ந்துதானே திரும்பவும் வரணும்? எனக்கு அதைத்தான் புரிஞ்சிக்க முடியல. ஒருவேளை அவங்களும் வெளியே வந்திருக்கலாம். வேற ஒரு காலத்துல, வேற ஏதாவது நாட்டுல.... ஒருவேளை..... அவங்களோட ஆஸ்ரமத்துலயேகூட....”

“நேரத்திற்கு விரிசல் உண்டாவதற்குக் காரணம்?”

“தெரியல....”   ஞானானந்தன் சொன்னான். அவன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினான்.

“ஒருவேளை இந்த மலையில் இருக்குன்னு சொல்லப்படுற யந்திரம் காரணமாக இருக்கலாம்.  இங்கு எமதேவனின் கோவில் இருந்தது என்று குரு சொல்லியிருக்காரு. பிரசன்னம் வச்சுப் பார்த்தப்போ கோவில் கருவறைக்கு அடியில் மிகவும் சக்தி படைத்த ஒரு யந்திரம் புதைச்சு வைக்கப்பட்டிருக்குன்னு தெரிய வந்திருக்கு. பிரதிஷ்டையின் சக்தி முழுவதையும் எடுத்துக்குறது அந்த யந்திரம்தான். சில நேரங்கள்ல யந்திரத்தின் சக்தி நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாயிடுது. அந்தச் சமயத்துல அதன் காந்த வீச்சுகளோ இல்லாட்டி நம்மால புரிஞ்சிக்க முடியாத பெரிய சக்திகளோ சுற்றியிருக்குற நேரத்தை பாதிச்சிருக்கலாம். கிராமத்தில் இருக்குற பகவதி கோவிலில் திருவிழா நெருங்குற நேரத்துல இந்த மலையில் சில அற்புதச் செயல்கள் நடப்பது உண்டு. ஓருவேளை, அந்தக் கோவிலின் சக்தியையேகூட இந்த யந்திரம் உறிஞ்சி எடுத்திருக்கலாம்.”

சரளாவிற்கு இப்போது சமாதானம் உண்டானது மாதிரி இருந்தது.  ஞானானந்தன் நம்பாமல் இருக்கிறான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள். அவன் நம்புகிறான் என்பது மட்டுமல்ல, தன்னை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு தெளிவான விளக்கத்தையும் அவன் தந்திருக்கிறான்-அது முழுமையாகத் தனக்குப் புரியாவிட்டாலும்கூட.

“அக்கா, நீங்க எந்த வருஷம் ஆஸ்ரமத்துக்கு வந்தீங்க?”

“அறுபத்து இரண்டாம் வருஷம்.”

“அறுபத்து இரண்டிலா?”

“ஆமா.”

“அக்கா, நீங்க அறுபத்து இரண்டாம் வருஷம் வந்திருந்தால், நீங்க ஆனந்தகுருவைப் பார்த்திருக்க மாட்டீங்க. வேலப்ப சுவாமிகளைத்தான் இருக்கும். ஆனந்தகுரு அறுபத்து நான்காம் வருஷம்தான் வந்தாரு.  அக்கா, சுவாமிகளைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கா?”

அவளுக்கு ஞாபகத்தில் இல்லை. தேவிகாவுடன் சேர்ந்து வந்ததும் ஒரு சந்நியாசியின் முன்னால் உட்கார்ந்திருந்ததும் ஞாபகத்தில் இருக்கிறது. எழுந்தபோது முன்னால் இருந்தது ஆனந்தகுருதான். தேவிகா மறைந்துவிட்டிருந்தாள். ஆஸ்ரமத்திற்கு வந்தவுடன் பார்த்த சந்நியாசியும் ஆனந்தகுருவும் இரண்டு வெவ்வேறு நபர்களா என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.

ஞானானந்தன் அவளுக்கு அருகில் உட்கார்ந்தான். சரளா தோளில் வைத்திருந்த தன் கையை எடுத்து அவனுடைய கைகளில் வைத்துப் பாசத்துடன் அழுத்தினாள்.

திடீரென்று சரளா கேட்டாள்:

“நான் உன் மடியில் படுக்கட்டுமா?”

ஞானானந்தன் அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டான். அவன் சொன்னான்:

“நாம திரும்பிப் போவோம். குரு சில வேலைகள் எனக்குத் தந்திருக்காரு.”

“என்ன? நான் மடியில் படுக்குறது உனக்குப் பிடிக்கலையா?”

சரளா சிரித்துக்கொண்டே கேட்டாள். அவளுடைய சிரிப்பில் ஒரு காந்தத் தன்மை இருந்தது.

ஞானானந்தன் அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை வலது கையால் தொட்டவாறு, குரு காதில் ஓதிய மந்திரங்களை அவன் கூறிக்கொண்டிருந்தான்.  அந்த மந்திரத்தில் அவனுடைய ஆன்மா கலந்துவிட்டிருந்தது. வாழ்க்கையின் சாரம் இருந்தது. சுழலில் சிக்கிக் கீழ்நோக்கித் தாழ்ந்து கொண்டிருப்பவனுக்குக் கயிறு கிடைத்ததைப் போல, அவன் அந்த ருத்ராட்ச மாலைகளை இறுகப் பிடித்துக்கொண்டான்.

சரளா பாறைமீது மல்லாந்து படுத்து ஞானானந்தனின் மடியில் தன் தலையை வைத்துக்கொண்டு அவனுடைய மார்பிலிருந்த ரோமங்களை வருடினாள். ஒரு சிறு குழந்தையைப் பார்க்கும் ஆர்வத்துடன் ஞானானந்தன் சரளாவைப் பார்த்தான். அவளுடைய தலை முடியை அன்புடன் தடவிக்கொண்டே அவன் சொன்னான்:

“அக்கா, நான் ஒரு சந்நியாசி. பிரம்மச்சாரி. சந்நியாச தர்மத்தை வாழ்க்கையின் ஆதாரமாக நினைப்பவன் நான். அக்கா, என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க.”

சரளா எதுவும் பேசாமல் அவனுடைய மடியில் தன் தலையை வைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.

சூரிய வெளிச்சம் இரண்டு பாறைகளுக்கு நடுவில் வந்து அவர்கள் மீது விழுந்தது.

“அக்கா, எழுந்திரிங்க. நாம போகலாம்.”

அவள் மனமே இல்லாமல் எழுந்தாள்.


திருவிழா

ட்டுகளைக் கையில் வைத்திருந்த இளம் பெண்கள் இரண்டு வரிசைகளாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால், விளக்குகளைப் பிடித்துக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால் ஆனந்தகுரு நின்றிருந்தார்.  வெளிச்சப்பாடு (பூசாரி) வாளுடனும் சிலம்புகளுடனும் நின்றிருந்தார்.

சரளா ஒரு கனவு நிலையில் இருந்தாள். பஞ்சவாத்தியத்தின் மனதைச் சுண்டி இழுக்கும் சத்தம், வெளிச்சப்பாடு அணிந்திருந்த அரைமணி, சிலம்பு ஆகியவற்றின் ஓசையெல்லாம் சேர்ந்து அவளைப் பித்து பிடித்த ஒரு உலகத்தில் கொண்டுபோய் விட்டிருந்தன.

மலையை விட்டு இறங்கும்போது தான் வந்து இறங்கிய இடத்தை அதேபோல பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பு அவளுக்கு இருந்தது.  ஆஸ்ரமத்தின் முன் வாசலைக்கடந்தபோதே அவளுக்கு, தான் வழி தவறி வந்துவிட்டோம் என்ற உணர்வு உண்டானது. மூன்று வாரங்களுக்கு முன்பு வந்த வழி இதுவல்ல என்பதை அவள் புரிந்துக் கொண்டாள். அவள் ஏறி வந்த வழி மிகவும் அகலம் குறைவானதாக இருந்தது. இப்போது இறங்கிக்கொண்டிருந்த வழியோ மிகவும் அகலமானதும் இடையில் ஆங்காங்கே கற்களாலான படிகளைக் கொண்டதுமாகவும் இருந்தது. அவள் காளை வண்டியிலிருந்து இறங்கியதாக நினைத்த சமதளத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷா நின்றிருந்தது.  அங்கிருந்து கீழ்நோக்கிப் போன சாலை தார் போடப்பட்டு, அதிக அகலத்தைக் கொண்டதாக இருந்தது. அவள் வந்த வண்டியின் சக்கரங்கள் உருண்டது மணல் பரவியிருந்த பாதையாக இருந்தது.

இனி இதைப்பற்றி விசாரிக்க வேண்டிய தேவையில்லை என்பது அவளுக்குத் தெரியும். இப்போது அவளின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்த விஷயம் அவளுடைய இருப்பு பற்றியதுதான். யார் என்பது அல்ல- எதற்கு என்ற கேள்வி. ஞானானந்தனைச் சீக்கிரம் பார்க்க வேண்டும்போல அவளுக்கு இருந்தது. தன்னுடைய கேள்விகளுக்கான பதில் அவனிடம் மட்டுமே இருக்கிறது என்று அவள் நம்பினாள். அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தபிறகு அவள் ஞானானந்தனைப் பார்க்கவில்லை. அவள் சுற்றிலும் பார்த்தாள்.  அவளுடைய கண்கள் ஆனந்தகுருவின் கண்களைச் சந்தித்தன. நரை ஏறிய புருவத்திற்குக் கீழே முன்பு எப்போதோ பார்த்திருக்கிறோம் என்ற பரிச்சய உணர்வு அவளைத் திடீரென்று பயமுறுத்தியது. அவள் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

வெளிச்சப்பாடு ஆவேசமாகக் குதித்துக்கொண்டிருந்தார். பஞ்சவாத்தியம் முழங்கியது. ஆலமரத்திற்குக் கீழே வெடிகள் வெடித்தன.

பதில் இல்லாத கேள்வி

ஞானானந்தன் தன்னை விலக்கிவிட்டு நடக்கிறான் என்று சரளா நினைத்தாள். கூடத்தில் உணவு நேரத்திலோ, குருவின் பர்ணசாலையில் பூஜை நேரத்திலோ, சொற்பொழிவு வேளையிலோ ஞானானந்தனை அவள் கேள்விக்குறியுடன் பார்ப்பாள். அவன் சிரிப்பான். அவ்வளவுதான்.  சரளாவுடன் அவன் தனியாக இருக்க பயப்படுவதைப் போல இருந்தது.  ஆனால் அவள் விஷயத்திலோ, அவனுடன் பேசுவதற்கு அவளிடம் நிறைய விஷயங்கள் இருந்தன.

மீண்டும் மழை பெய்தது. மழைத்துளிகள் பாறைகள்மீது விழுந்துகொண்டிருப்பதை சரளா தன் மனதில் கண்டாள். இடிச்சத்தம் அவளைப் பயமுறுத்தவில்லை. கீழே மழையால் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட பாறையும் மறுபிறப்பை ஞாபகப்படுத்தும் தீர்த்தமும் அவளுக்காகக் காத்திருந்தன.

காலையில் அவள் கூடத்தில் உணவு சாப்பிடச் செல்லவில்லை.  தனியாக இருக்கவேண்டும்போல இருந்தது. ஆட்கள் கூட்டத்திலிருந்து விலகித் தனியாக இருக்க அவள் ஆசைப்பட்டாள். ஆஸ்ரமத்தில் இருப்பவர்கள் கூடத்தில் கூடியிருந்த நேரத்தில் அவள் அங்கிருந்து வெளியேறினாள். ஈரம் படிந்திருந்த பாதை வழியாக வெறும் பாதங்களுடன் அவள் நடந்தாள். காற்றில் இலைகளின், மலர்களின் மணம் கலந்திருந்தது. அந்த மணத்தை முகர்ந்தவாறு அவள் நடந்தாள்.

காய்ந்த இலைகள் எதுவும் இல்லாமல் பாறை சுத்தமாக இருந்தது. மறுபிறவியை ஞாபகப்படுத்தும் தீர்த்தம் மேலும் சற்று அதிகமாக வந்துகொண்டிருந்தது. அவள் பாறைமீது சப்பணமிட்டு அமர்ந்தாள்.

ஞானானந்தன் வருவான் என்பது அவளுக்குத் தெரியும். கூடத்தில் பார்க்கவில்லையென்றால், அவளைத் தேடி அறைக்கு வராமல் இருக்கமாட்டான். அங்கேயும் இல்லையென்றால், அவள் வேறு எங்கு இருப்பாள் என்பதை அவன் ஊகம் செய்துவிடுவான்.

இப்போது அவன் வரவில்லை என்றால்?

என்ன செய்வது என்பதை அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள். அவளின் மனம் மிகவும் சாந்த நிலையில் இருந்தது. வாழ்க்கையில் எப்போதும் இருந்திராத அமைதி நிலை. அவள் கண்களை மூடி உட்கார்ந்திருந்தாள்- தியானத்தில் இருப்பதைப்போல.

ஞானானந்தன் அங்கு வந்தான். பாறையின்மேலே இருந்தவாறு அவன் கண்களை மூடி தியானத்தில் இருந்த சரளாவைப் பார்த்தான். அவனுடைய மனம் இளகியது. பாறைகளில் இறங்கியவாறு அவன் அழைத்தான்.

“அக்கா....”

அவள் தன் கண்களைத் திறந்தாள். அவளுடைய முகம் பிரகாசித்தது. காற்று வீசப்பட்ட கனலைப்போல அது ஜொலித்தது. உறங்கிக் கிடந்த இந்திரியங்கள் கிளர்ந்தெழுந்து ஏக்கத்தை வெளிப்படுத்தின.

“அக்கா, இங்கே என்ன செய்றீங்க?”

பாதி போரை வென்ற போராளியைப் போல அவள் சிரித்தாள்.

“நீ வருவேன்னு எனக்குத் தெரியும்.”

பாறையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஞானானந்தன் கேட்டான்:

“அக்கா, நீங்க ஏன் காலை உணவு சாப்பிட வரலை?”

சரளா சிந்தித்தாள். தான் ஏன் காலை உணவு சாப்பிடவில்லை? எதற்காக இந்த இடத்திற்கு இறங்கி வந்தோம்? எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்விகளுக்கு முன்னால் பதில் இல்லாமல் அவள் உட்கார்ந்திருந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் சொன்னாள்:

“நான் ஏன், எதற்காக வாழ்கிறேன் என்பதைத் தெரியாமல் உணவு சாப்பிடுவது இல்லைன்னு முடிவு செய்தேன். ஒண்ணு- எனக்கு பதில் கிடைக்கணும். இல்லாட்டி இது என்னோட இறுதியா இருக்கணும்.”

ஞானானந்தனுக்கு சரளா கூறியது மிகவும் பிடித்திருந்தது. தான் யார் என்பது அல்ல- ஏன் என்ற அவளுடைய கேள்வி. சந்நியாசியாக மாறிய ஒருவரால் மட்டுமே கேட்க முடிகிற அந்தக் கேள்வியை எந்தவொரு ஆன்மிகப் பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண பெண் கேட்கிறாள். அவளுடைய மனம் எதை வேண்டுமானாலும் நினைக்கட்டும். தன்னிடம் அதற்கான பதில் இல்லை என்பதை மட்டும் ஞானானந்தன் புரிந்துகொண்டான். அவன் சொன்னான்:

“அக்கா, வாங்க... உணவு சாப்பிடுங்க. இங்கே இருக்குற மற்றவங்களை மாதிரி நடக்கப் பாருங்க.”

“நான் வரல...”

ஞானானந்தன் தர்மசங்கடமாக இருந்தது. என்ன கரணத்தாலோ அந்தப் பாறை அவனுக்கு பயத்தைத் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. அங்கு நீண்ட நேரம் நின்று கொண்டிருக்க அவனுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. சரளாவைத் தனியாக அங்கு விட்டுவிட்டுப் போகவும் அவனுக்கு விருப்பமில்லை.

“அக்கா, வாங்க... நாம குருவிடம் பேசலாம். ஏதாவது வழி பிறக்கும்.”

“நான் வரல...”

ஞானானந்தன் எழுந்து அவளுக்கு நேராக கையை நீட்டிக்கொண்டு சொன்னான்:

“வாங்க....”


திடீரென்று காற்றின் வேகத்தில் அவள் அந்தக் கைகளைப் பிடித்து அவனைத் தன்னை நோக்கி இழுத்தாள். கீழே விழாமல் இருக்க அவளுக்கு அருகில் கையை ஊன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை ஞானாந்தனுக்கு உண்டானது. அவள் திரும்பி அவனுடைய முகத்தைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்து உதடுகளில் முத்தமிட்டாள்.

சரளா செய்த காரியம் ஞானானந்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முன்பே அவன் அவளுடைய கைகளை அடைந்துவிட்டிருந்தான். அவனுக்கு பயங்கரமான கோபம் உண்டானது. போராடி எழுந்தவாறு அவன் சொன்னான்:

“அக்கா, என்ன செய்றீங்க? நான் போறேன்.”

அவன் வேகமாகப் பாறைகளில் மிதித்து ஏறி திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

சரளா கவலையுடன் உட்கார்ந்திருந்தாள். ஞானானந்தனைத் திரும்பவும் அழைக்க அவள் முயற்சிக்கவில்லை. பிரயோஜனமில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

வெயில் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் கிளைகள் வழியாக அவளைத் தேடி வந்த வெயில் கதிர்கள் மிகவும் வெப்பம் கொண்டவையாக இருந்தன. தகித்துக் கொண்டிருந்த மனதுடன் அவள் உட்கார்ந்திருந்தாள். சூரியன் வானத்தின் பாதிப் பகுதியைப் பயணம் செய்து முடித்த பிறகும், சரளா சிறிதும் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

திடீரென்று ஒரு முடிவு எடுத்ததைப் போல அவள் எழுந்து, பாறைக்கு நடுவில் வந்து நின்றாள். ஒரு வழக்கமான சடங்கைப் போல அவள் தன் புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள். புடவையை அவிழ்த்து வீசி எறிந்துவிட்டு, அவள் ப்ளவ்ஸின் கொக்கிகளைக் கழற்றி, அதையும் உடம்பிலிருந்து நீக்கினாள். உள்ளாடைகள் பாறைகளில் சிதறிக் கிடந்தன.

தும்பிக்கை அளவில் இருந்த நீரோட்டத்திற்குக் கீழே அவள் நின்றாள். மறு பிறவியை ஞாபகப்படுத்தும் தீர்த்தத்தின் சாபத்தைப் பற்றி அவள் சிறிதும் யோசிக்கவில்லை. தகித்துக்கொண்டிருந்த மனமும், உடம்பும் குளிரும் வரை அவள் நீரோட்டத்திற்குக் கீழே நின்றிருந்தாள். பிறகு துவட்டக் கூட செய்யாமல் திரும்பவும் பாறை மீது வந்து சப்பணமிட்டு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

பல பிறவிகளின் வலி ஒரு கனவைப் போல அவளுடைய கண்களுக்கு முன்னால் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஆரம்பமற்ற துக்கத்தின் முடிவற்ற தொடர்ச்சிகள்... சாப விமோசனம் கிடைக்காமலிருந்த நினைவுகள்...

பர்ணசாலையின் முற்றத்தில் ஞானானந்தன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தான். மதிய உணவிற்கும் சரளா வரவில்லை. அவள் அறைக்கு வந்து சேரவில்லை என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். சரளா என்ன செய்யப் போகிறாள் என்பதை நினைக்காமல் இருக்க அவன் முயற்சித்தான்.

சூரியன் மேற்கு திசையில் இருந்த மரங்களுக்கு மத்தியில் மறைந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்பி வந்த குரு, தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த சிஷ்யனைப் பார்த்தவாறு உள்ளே சென்றார். ஞானானந்தன் எழுந்து ஹோம குண்டத்தில் விறகுத் துண்டுகளை அடுக்க ஆரம்பித்தான். அவனுடைய முகம் மிகவும் அமைதியாக இருந்தது. உணர்ச்சிகளையே முழுமையாக இழந்துவிட்டவனைப் போல அவன் அமைதியாக விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.

ஹோம குண்டத்தைப் பற்ற வைத்து, மீதியை மேற்கிலிருந்து வீசிய காற்றிடம் ஒப்படைத்துவிட்டு ஞானானந்தன் வெளியே வந்தான். ஒரு கனவில் நடப்பதைப் போல அவன் நடந்தான்.

பாறைக்கு மேலே அவன் ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்றான். பாறை மீது சரளா சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நிர்வாண உடம்பில் நிலவொளி விழுந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சி ஞானானந்தனை வேதனை கொள்ளச் செய்தது. அவன் மெதுவாகப் பாறைகள் வழியாக இறங்கினான்.

சரளா கண்களைத் திறந்தாள். கண்களிலிருந்து திரண்டுவந்த கண்ணீர்த் துளிகள் கடைக்கண் வழியாகக் கன்னங்களில் உருண்டு சந்தன நிறத்தைக் கொண்ட மார்பகங்களில் போய் விழுந்தன.

“அக்கா, இது என்ன தண்டனை?”

அவள் எதுவும் சொல்லாமல் ஞானானந்தனையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்.

“அக்கா, எழுந்து ஆடைகளை அணியிங்க.”

அவள் அசையாமல் கண்களைக்கூட இமைக்காமல் உட்கார்ந்திருந்தாள். ஞானானந்தன் அவள் அருகில் சென்று உட்கார்ந்தான். அவளுடைய கையைத் தன் கைகளில் எடுத்தான். அவள் அசையவில்லை.

“அக்கா, உங்க கவலையைப் போக்க நான் என்ன செய்யணும்? ”

சரளாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென வழிந்தது. அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ஞானானந்தன் அவளுடைய முகத்தைத் தன் கைகளில் தாங்கி, நடுங்கிக் கொண்டிருந்த உதடுகளில் தன்னுடைய உதடுகளைப் பொருத்தினான்.

காமம் என்ற முரட்டு பாறைமீது விழுந்து உருளும்போது, ஞானானந்தன் நினைத்தது தன் கழுத்தில் இருந்த ருத்ராட்ச மாலையைத்தான். கை சுதந்திரமான ஒரு நிமிடத்தில், அவன் அந்த மாலையைப் பிய்த்துக் காட்டுக்குள் எறிந்தான்.

இரவு வளர்ந்து கொண்டிருந்தது. காமவயப்பட்ட நிமிடங்களில், இரவின் வாசனைகள், அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த வானத்திற்குக் கீழே பாறை ஒரு படுக்கையறையாகவும், மலைத் தொடர்கள் நாலுகெட்டு ஆகவும் மாறின. பாதி மூடிய கண்களுடன் படுத்திருந்த சரளாவின் முகம் ஞானானந்தனுக்குள் முன் பிறவியைப் பற்றிய ஞாபகங்களைத் தட்டி எழுப்பியது.

வெளிப்பாடு

கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த ஹோம குண்டத்திற்கு அப்பால் மலைத்தொடர்கள் இருளில் மூழ்கியிருந்தன. என்ன காரணத்தாலோ ஆனந்தகுரு வேலப்ப சுவாமிகளின் கடுமை நிறைந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார். குரு மிகவும் களைத்துப் போய்க் காணப்பட்டார். ஹோம குண்டத்தைப் பார்ப்பதற்கே அவர் பயப்பட்டார். உயர்ந்து எரிந்து கொண்டிருந்த நெருப்பு ஜுவாலைகள் என்னவோ கூற முயற்சிப்பதைப் போல இருந்தது.

ஒரு அதிர்ச்சியின் கசப்புடன், நம்ப முடியாத தெளிவுடன் அலை அலையாக வெளிப்பாடுகள் தோன்றிக் கொண்டிருந்தன.

வாழ்க்கையில் இரண்டாவதாக ஒரு துயரத்தின் கொடுமையைச் சந்திப்பதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக்கொண்டு குரு அமர்ந்திருந்தார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.