
சுராவின் முன்னுரை
காக்கநாடன் (Kakkanadan) மலையாளத்தில் எழுதிய ‘ஒரோதா’ என்ற புதினத்தை ‘வெள்ளம்’ (Vellam) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
கேரளத்தில் பல வருடங்களுக்கு முன்பு உண்டான பெரும் வெள்ளத்தில் பெண் குழந்தையொன்று மிதந்து வருகிறது. அதை கண்டெடுக்கும் ஒரு ஏழை மனிதன், அதற்கு ‘ஒரோதா’ என்று பெயரிட்டு வளர்க்கிறான். ஒரோதா வளர்ந்து பெரியவளாகி, திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று ஒருநாள் திடீரென்று காணாமல் போகிறாள். அவள் எங்கு போனாள்?
கேரள சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற நாவல் இது.
இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
செம்பேரி ஆற்றின் கரையில் நாங்கள் அமர்ந்திருந்து, ஒரோதாவை மனதில் நினைத்துப் பார்த்தபோது எங்களுக்கு அழுகைதான் வந்தது.
ஒரோதாவை நினைக்கிறபோது அழுகையை பொதுவாக எங்களால் எப்போதுமே அடக்க முடியாது. அவளைப் பற்றி நினைக்காமலும் இருக்க முடியாது.
எங்களின் வீட்டுக்கு மிகவும் அருகில் ஓடிக் கொண்டிருக்கிறது செம்பேரி ஆறு. ஆற்றின் இரு பக்கங்களிலும் பச்சைப் பசேலென பயிர்கள் முகம் காட்டி சிரித்துக் கொண்டிருக்கின்றன.
பயிர்கள் விளையும் நிலங்களைத் தாண்டி இப்போதும் பயங்கரமான மிருகங்கள் வாழக்கூடிய அடர்ந்த காடு மலைப் பக்கம் இருக்கிறது. எங்களைச் சுற்றிலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த மாதிரி மலைகள் சூழ்ந்திருக்கின்றன. ஆற்றையொட்டி இருக்கும் இயற்கையின் வனப்பில் மனிதர்களின் கடுமையான உழைப்பும், இடைவிடாத முயற்சியும் எந்தக் காலத்திலும் ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடிய ஒரு சரித்திரமும் மறைந்து கிடக்கிறது. அந்தச் சரித்திரத்தின் பக்கங்களில் ஏதோ ஒரு இடத்தில் ஒரோதா தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள். ஆற்றையொட்டி இருக்கும் ஒவ்வொரு பசுமையான தாவரமும் ஒவ்வொரு புல்லும் ஒரோதாவின் பெயரைச் சொல்லும் நினைவுச் சின்னங்கள் என்பதை மனதில் நினைத்துப் பார்த்தபோது எங்களுக்குத் திரும்பவும் அழுகை வந்தது.
செம்பேரி ஆற்றையொட்டி உள்ள கிராமங்கள் அனைத்தும் இன்று நல்ல செழிப்பாகவும் பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையிலும் இருக்கின்றன. நல்ல விளைச்சல் தரும் விவசாய நிலங்கள் அங்கு இருக்கின்றன. கிராமங்களின் தலைநகரமான செம்பேரி என்ற கிராமம் இன்று ஒரு சிறு நகரம் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
செம்பேரியில் சர்ச் இருக்கிறது. பள்ளிக்கூடம் இருக்கிறது. மருத்துவமனை, தந்தி அலுவலகம், தொலைபேசி, சந்தை, மதுக்கடைகள் எல்லாமே இருக்கின்றன. அங்கு பெருநாள் இருக்கிறது. திருவிழாக்கள் இருக்கின்றன. கல்வி கற்கும்... மன்னிக்க வேண்டும்... தவறாக வந்துவிட்டது- கல்லூரிக்குப் போய் வந்த இளைஞர்கள் உண்டு. ஹிப்பிகள் உண்டு. மேல்நாட்டு இசை உண்டு. யெஹீதிமெனுஹின் உண்டு. ரவிசங்கர் உண்டு. உஷா உதூப் உண்டு. போணி எம் உண்டு. கஞ்சா உண்டு. பஸ் உண்டு. கார் உண்டு. லாரி உண்டு. மாட்டு வண்டி உண்டு. முதலாளிமார்கள் உண்டு. ரவுடிகள் உண்டு. விலைமாதர்கள் உண்டு. பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் உண்டு. பிக்பாக்கெட்டுகள் உண்டு. திருடர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் உண்டு. எதற்கு இதெல்லாம்... மனித நாகரீகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களுமே அங்கு உண்டு. ரெயில்வே ஸ்டேஷனும், விமான நிலையமும், எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் அங்கு வந்து விட்டால் செம்பேரி அடுத்த நிமிடம் நியூயார்க்காக மாறிவிடும். தேம்ஸ் நதி இந்த வழியே ஓடினால் செம்பேரி லண்டனாகிவிடும். லோவர் பேலஸ்ஸைப் பெயர்த்து அங்குள்ள பள்ளிக்கூடத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தினால் செம்பேரி பாரீஸாக மாறிவிடும். ரெட் ஸ்கொயரும் க்ரெம்ளின் அரண்மனையும் இருந்தால் செம்பேரி மாஸ்கோவாக மாறும். ஜப்பானிய மொழியைப் பேசிக் கொண்டு கெய்ஷா இளம் பெண்கள் சுற்றித் திரிந்தால் அதுவே டோக்யோவாக ஆகிவிடும். இதெல்லாம் எதற்கு... உலகத்தின் நவநாகரீகமான நகரங்களுக்கும் செம்பேரிக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக மிகக் குறைவு.
சமீபத்தில் செம்பேரியைப் போய்ப் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், அங்கு பார்வையாளர்களின் கருத்தை எழுதி வைப்பதற்கான குறிப்புப் புத்தகம் எதுவும் வைக்கப்படாததால், ஆங்கில வார்த்தைகளில் செம்பேரியைப் பற்றிய தன்னுடைய கருத்தை இப்படி கூறினார். “உங்களின் செம்பேரி மிக மிக அழகானது. நான் இந்த இடத்தைக் காதலிக்கிறேன். இங்கேயே எனக்கு வாழவேண்டும் போல் இருக்கிறது.”
இப்படிச் சொன்னது ஒரு வெள்ளைக்காரர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தியர்களுக்கு இந்த வார்த்தைகளின் முக்கியத்துவமும், மதிப்பும் என்ன என்பது புரிகிறது அல்லவா? காரணம்- வெள்ளைக்காரர்கள் எப்போதும் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைக் கொஞ்சமும் மறைக்காமல் கூறுபவர்கள் ஆயிற்றே!
சுருக்கமாகச் சொல்லப்போனால் செம்பேரி ஒரு வளர்ச்சியடைந்த ஊர்.
இது செம்பேரியின் இன்றைய முகம். இதன் பழைய கதை இதுவல்ல. அன்று செம்பேரிக்கு ஒரு முகம் என்பதே கிடையாது. செம்பேரி பகுதியில் மனிதர்களோ விவசாய நிலங்களோ அன்று இல்லை. கடைகளோ, சந்தையோ, சாலைகளோ, தெருக்களோ எதுவுமே இல்லை. செம்பேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் அப்போது அடர்த்தியான காடுகளாக இருந்தன. மூடிக் கிடக்கும் பனிப் படலத்திற்குக் கீழே, மலைகளின் அடிவாரத்தில், ஆற்றின் கரையை ஒட்டி, காட்டு விலங்குகள் இரையைத் தேடி அலைந்து கொண்டிருந்த பயங்கரமான காடுகள் இருந்த பகுதி இது. காட்டுக்குள் நுழைவதற்கான வாசலாக செம்பேரி அன்று திகழ்ந்தது. அன்று செம்பேரி பகுதிக்குள் வருவதற்கு மனிதர்கள் பயந்தார்கள். நாகரீகம் அச்சப்பட்டது. தெய்வங்கள் கூட அஞ்சி நடுங்கின. இல்லாவிட்டால் கோவில்களோ சர்ச்சோ இங்கு உண்டாகியிருக்கும் அல்லவா?
பிறகு மனிதர் இந்தப் பகுதியில் வாழலாம் என்று வந்தபிறகும், அவர்கள் பயங்கர மிருகங்களுடனும், எந்தவிதத்திலும் ஒத்துழைக்காத மண்ணுடனும், காட்டு மரங்களுடனும் போராடி இங்கு தங்களின் வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து பல வருடங்களுக்குப் பிறகு கூட செம்பேரிப் பகுதிக்கு வர தெய்வங்களும், நாகரீகமும் மிகவும் தயங்கின. அந்தக் கால கட்டத்தில் செம்பேரியில் வசித்தவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும், தெய்வங்களைத் தொழுது தங்களின் கஷ்டங்களைச் சொல்லி வேண்டிக் கொள்வதற்கும் தனிப்பறம்பு வரை போக வேண்டி இருந்தது. செம்பேரியில் இருக்கும் குழந்தைகள் படிப்பதற்காக ஸ்ரீகண்டபுரத்திற்கோ தனிப்பறம்பிற்கோ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு படிப்படியாகத்தான் இங்கு வசிப்பவர்கள் செம்பேரியில் தெய்வங்களைக் கொண்டுவந்தார்கள். நாளடைவில் நாகரீகம் கொஞ்சம் கொஞ்சமாக செம்பேரிக்குள் நுழைய ஆரம்பித்தது.
இப்படி செம்பேரிப் பகுதியின் வரலாறு கடந்த போன பலநூறு வருடங்களில் உண்டான ஒரு மிகப் பெரிய மாற்றம் அல்லது பல மாற்றங்களை உள்ளடக்கிக் கொண்ட ஒன்று என்று கூறுவதே சாலச்சிறந்தது. இந்த வரலாற்றை ஒரு இதிகாசம் என்று கூடக் கூறலாம். இந்த இதிகாசம் எத்தனையோ தியாகங்களின், போராட்டங்களின், துக்கங்களின், சண்டைகளின் அன்பின், உணர்ச்சி வெள்ளத்தின், பிரிவுகளின் உயிரோட்டமான சின்னச்சின்ன கதைகளால் நிரம்பியிருக்கிற ஒன்று. அந்தக் கதைகளுக்கு எல்லாக் காலங்களிலும் சாட்சியாக இருந்தது மழைக்காலத்தில் வயிறு பெருத்து பூரண கர்ப்பிணியாகவும், கோடை காலத்தில் வறண்டு போன மணலின் நரம்புகளைப் போன்று சின்ன நீரோட்டமாக ஓடிக் கொண்டிருந்த செம்பேரி ஆறு மட்டுமே.
செம்பேரி ஆற்றின் கரையில் அமர்ந்து, சுற்றிலும் தெரியும் பசுமையின் செழிப்பையும், அதனையும் தாண்டி கம்பீரமாக நின்றிருக்கும் மிகப் பெரிய மலைத் தொடர்ச்சியையும் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் அந்தப் பழைய கதைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அந்தக் கதைகளில் ஒரோதா வந்தாள்.
அதனால்தான் செம்பேரி ஆற்றின் கரையில் இருந்தவாறு ஒரோதாவை நினைத்துப் பார்த்து நாங்கள் அழுதோம்.
ஒரோதா துக்கமாக இருந்தாள். ஒரோதா தியாகமாக இருந்தாள். ஒரோதா சிந்திப்பவளாக இருந்தாள். வாழ்ந்த காலத்தில் ஒரோதா ஒரு சரித்திரமாக இருந்தாள்.
அவளை- ஒரோதாவை நினைக்கும்போது அழாமல் இருக்க முடியாது. நினைத்துப் பார்க்காமலும் நம்மால் இருக்க முடியாது.
வடக்கு திருவிதாங்கூரில் மீனச்சில் ஆற்றின் கரையில் பாலா என்ற ஊரைத் தாண்டிப்போனால் சேர்ப்புங்கல் என்றொரு கிராமம் இருக்கிறது.
அந்தக் கிராமத்தில்தான் எத்தனையோ நூறு வருடங்களுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து வந்த வேளையில், ஒரோதா தன் முகத்தைக் காட்டினாள்.
மலையாள வருடம் தொண்ணூற்று ஒன்பதில் உண்டான அந்த வெள்ளப் பெருக்கு திருவிதாங்கூரின் சரித்திரத்திலேயே அதற்கு முன்பு எப்போதுமே உண்டானதில்லை என்று கூறக் கூடிய அளவிற்கு ஏகப்பட்ட பாதிப்புகளையும் சேதங்களையும் உண்டாக்கிவிட்டுச் சென்றது. அன்றைய கேரளம் ஒன்றுபட்டு இருக்கவில்லை. திருவிதாங்கூர், கொச்சி, பிரிட்டிஷ் மலபார் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலபார் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தப் பகுதி கவர்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. கொச்சியை பரீட்சித் தம்புராக்கன்மார்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். திருவிதாங்கூர் பகுதியை மகாராஜாவும் திவானும் சேர்ந்து ஆண்டார்கள்.
கொல்ல வருடம் 1099-ல் கிழக்குப் பக்கம் இருந்த மலைப் பிரதேசங்கள் பயங்கரமான கர்ஜனையுடன் வெள்ளத்திற்கு இரையாகின. பெரியாறு முதல் தாமிரபரணி வரை உள்ள எல்லா நதிகளும் பயங்கர சத்தத்துடன் பாய்ந்தோடி வந்தன. ஆர்ப்பாட்டத்துடன் வந்து பூமியையே நடுங்கச் செய்தன. கரைகளில் மோதி அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கின. பைத்தியம் பிடித்ததைப் போல் அவை ஓடின. மணிமலயாறு, பம்பை, மீனச்சிலாறு, அச்சன் கோவிலாறு என்று எல்லா நதிகளின் கரையில் இருந்த இடங்களும் வெள்ளப் பெருக்கில் பயங்கர பாதிப்பிற்கு உள்ளாகின. பூமி அழியப் போகிறதோ என்று மனிதர்கள் நடுங்க ஆரம்பித்தார்கள். இந்த வெள்ளத்தின் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பாற்ற ஒரு புதிய வராகமூர்த்தியின் அவதாரத்திற்காக பக்தர்கள் சர்வசக்தி படைத்த கடவுளிடம் நித்தமும் வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
குடத்தூர், குடமுருட்டி ஆகிய மலைகளில் இருந்து வந்த வெள்ளம் பயங்கர வேகத்துடன் கீழ் நோக்கிப் பாய்ந்து வந்தது. அந்த நீர் மீனச்சிலாற்றில் கலந்து ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடியது. பூத்தார், ஈராற்றுப்பேட்டை, பாலா ஆகிய பகுதிகளை நடுநடுங்க வைத்து கரையில் இருந்த மரங்களையும், வீடுகளையும், கடைகளையும், சந்தைகளையும் நாசம் செய்து பயங்கர கோபத்துக்கு ஆளான தேவியைப் போல தலையை விரித்துப் போட்டுக்கொண்டு ஓடி வந்தது. வீடுகளும் மரங்களும் மட்டுமல்ல, மிருகங்களும் மனிதர்களும் கூட அந்த வெள்ளப் பெருக்குக்கு பல இடங்களிலும் இரையாகினர். பாலா சந்தையும், சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கின. மொத்தத்தில் காடு, ஊர் எல்லாமே வெள்ளத்தில் சிக்கி நாசமாயின. காட்டில் இருந்த செடி- கொடிகளும், விலங்குகளும், ஊரிலிருந்த மனிதர்களும் தெய்வங்களும் மீனச்சில் ஆற்றின் பயங்கரமான வெள்ளப் பெருக்கில் மிதந்து வந்து கொண்டிருந்தன.
ஆற்றின் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளப் பெருக்கில் சிக்கிய மனிதர்களுக்கு முழுமையாக சுயஉணர்வு என்ற ஒன்றே இல்லாமல் அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல நடந்து கொண்டார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல- அவர்கள் வளர்த்த மிருகங்களுக்கும் கூட பைத்தியம் பிடித்தது. ஆற்றில் இழுத்துக் கொண்டு போகும்போது கரையைப் பார்த்த மனிதர்களும், மிருகங்களும் உரத்த குரலில் அலறினார்கள். எங்கு போகிறோம் என்பதே தெரியாமல் யார் யாரெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் ஒருவரையொருவர் மோதிக்கொண்டு, கீழே விழுந்துகொண்டு, மறுபடியும் எழுந்து, மீண்டும் மீண்டும் விழுந்து இங்குமங்குமாய் மோதி நதியின் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகாயத்தில் பறவைகள் மிதமிஞ்சிய பயத்தால் உள்ளுக்குள் உண்டான பைத்தியம் பிடித்த நிலையுடன், கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, சத்தமிட்டு மற்ற பறவைகளை அழைத்து, எந்தவிதமான இலக்கும் இல்லாமல் பறந்து திரிந்தன. பறந்து பறந்து அதற்கு மேல் பறக்க முடியாமல் அவற்றின் சிறகுகள் ஓய்ந்து கீழே விழுந்து மடிந்தன. அந்தச் செத்துப்போன பறவைகளின் உடல்களையும் தாங்கிக் கொண்டு தெய்வ கோபம் என்பது மாதிரி நதி வெறி பிடித்து ஓடிக் கொண்டிருந்தது.
வெள்ளப்பெருக்கில் மூழ்கிப் போகாத சில கட்டிடங்களின் கூரைகளிலும் சில மரங்களின் உச்சிகளிலும் சில பாறைகளின் மேலும் அபயம் தேடிய சிலருக்கு அதிர்ஷ்டவசமாக கொஞ்சம் சுயநினைவு இருந்தது. அவர்கள் ஆகாயத்தை நோக்கி கைகளை உயர்த்தி அச்சத்தால் பயத்தால் தோன்றிய தீவிர பக்தியுடன், துடித்துக்கொண்டிருக்கும் இதயத்துடன் மனதை முழுமையாகத் திறந்து ஞாபகத்திற்கு வந்த எல்லா தெய்வங்களின் பெயர்களையும் சொல்லி உரத்த குரலில் அழைத்து மார்பில் கைகளால் அடித்துக் கொண்டு அழுதார்கள். அவர்கள் தங்களின் விவசாய நிலங்களையும் மிருகங்களையும், வீடுகளையும், சொத்துக்களையும், சொந்த பந்தங்களையும் முழுமையாக இழந்துவிட்டிருந்தார்கள். உலகின் அழிவையே நேரில் பார்ப்பது போல் இருந்தது அவர்களுக்கு. தங்களை இந்தத் தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றக் கூடிய நோஹாவை எதிர்பார்த்து அவர்கள் பேசுவதற்கே சக்தியில்லாமல் நின்றிருந்தார்கள். நோஹாவின் வருகைக்காக அவர்கள் கடவுளுக்கு நேர்த்திக்கடன்கள் செய்வதாகச் சொன்னார்கள். சபரிமலை சாஸ்தாவும் ஏற்றுமாதூரப்பனும் பகவதியும் எந்த நேரத்திலும் ஏதாவது அற்புதங்கள் செய்து தங்களைக் காப்பாற்றுவார்கள் என்று மனதிற்குள் உறுதியாக நம்பினார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கைகளை முழுமையாகத் தகர்த்தெறிந்துவிட்டு நதி பயங்கர கொடூரத்தன்மையுடன் பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த வெள்ளப் பெருக்கில்தான் ஒரோதா மிதந்து வந்தாள்.
சேர்ப்புங்கல் என்ற கிராமத்தில் அந்தக் காலத்தில் வெட்டுக்காட்டு பாப்பன் என்றொரு நாற்பது வயது மதிக்கக்கூடிய மனிதன் வாழ்ந்து கொண்டிருந்தான். திருமணமாகாத மனிதன் அவன். படகு ஓட்டுவதுதான் பார்ப்பனுக்குத் தொழில். அவனுக்குப் பக்கத்து ஊர்களில் சொந்தக்காரர்கள் என்று பலரும் இருந்தாலும், அவர்களுடன் அவனுக்கு எந்தவிதமான உறவும் இல்லை. சொல்லப் போனால் அவர்கள் யாரையும் அவன் போய்ப் பார்ப்பதே கிடையாது. அவன் மட்டும் தனி மரமாக வாழ்ந்து கொண்டிருந்தான். காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன், படகுத் துறைக்குப் போய் அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஆட்களை மீனச்சில் ஆற்றின் அக்கரைக்கும், அக்கரையில் இருப்பவர்களை இக்கரைக்கும் கொண்டுவந்து சேர்ப்பதுதான் பாப்பனின் வேலை.
பொழுது சாய ஆரம்பித்துவிட்டால் பனங்கள்ளு குடிக்க ஆரம்பித்து விடுவான். உருக்கு போல உறுதியான உடம்பைக் கொண்ட பாப்பனின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கும். தலை முடியை ஒட்ட வெட்டி இருப்பான். உடம்பு முழுக்க முடி இருக்கும். கழுத்துப் பகுதியில் லேசான தழும்பு இருக்கும். அவனுக்கு ஜானம்மா என்றொரு பெண்ணுடன் ரகசிய உறவு இருந்தது. ஜானம்மாவின் கணவன் அவளை வேண்டாமென்று உதறித்தள்ளிவிட்டு மூத்த இரண்டு பிள்ளைகளுடன் ஓடிப்போனான். கடைசிப் பிள்ளை முத்துகிருஷ்ணனுடன் ஜானம்மா அங்கேயே தங்கிவிட்டாள். கணவன் தன்னை விட்டுப் போன பிறகுதான் பாப்பனுடன் அவளுக்கு உறவு உண்டாக ஆரம்பித்தது. ஜானம்மா ஒரு கொல்லர் பணி செய்கிற பெண் என்பதால் பாப்பனின் ரகசியத்தைத் தெரிந்துகொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒரு அட்டையையோ பாம்பையோ பார்ப்பது மாதிரி அருவருப்புடன் பாப்பனைப் பார்ப்பார்கள். பாப்பன் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை. அவனைப் பற்றி தாறுமாறாகப் பேசிய ஒன்றிரண்டு ஆட்களைக் கூட உண்டு இல்லை என்று பார்த்துவிட்டான் பாப்பன். அதற்குப் பிறகு அந்த விஷயத்தைப் பற்றி பாப்பனிடம் பேசுவதற்கான தைரியம் ஒரு ஆளுக்குக் கூட இல்லை. கள்ளுக் கடையில் இருந்து பாப்பன் நேராகச் செல்வது ஜானம்மாவின் நிர்வாண உடம்பைப் பார்க்கத்தான். பனங்கள்ளு தரும் போதையும், பெண் தரும் இன்பமும் அவனைத் திக்குமுக்காடச் செய்யும். எல்லாம் முடிந்து வியர்வை வழிய உட்காரும்போது அன்றைய வருமானத்திலிருந்து ஒரு பகுதியை ஜானம்மா கையில் தருவான். அதற்குப் பிறகு தனக்கென்று சொந்தமாக இருக்கும் குடிசையை நோக்கி அவன் வருவான். கிணற்றில் நீர் இறைத்து குளித்து, நெஞ்சில் சிலுவை வரைந்தவாறு படுக்கையில் போய் விழுவான். வாழ்க்கையே அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கட்டுப்பாடே இல்லாத சுதந்திர மனிதனாக நல்ல நிம்மதியுடன் அவன் உறங்க ஆரம்பிப்பான்.
பாப்பனுக்கென்று சில கொள்கைகள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் படகை கையிலேயே எடுப்பதில்லை. சர்ச்சுக்குப் போனால் போரடிக்குமென்று கள்ளுக் கடையில் போய் உட்காருவான். ஆனால், முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகிற நாட்களிலும், சொந்தக்காரர்களின் திருமண விசேஷங்களுக்கும் சர்ச்சுக்குப் போக பாப்பன் ஒரு நாளும் மறந்ததில்லை.
“பாப்பன் அண்ணே... நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கல?”
தன்னிடம் விசாரித்தவர்களுக்குக் கூறுவதற்கு பாப்பனிடம் ஒரே ஒரு பதில்தான் இருந்தது. “எனக்கு அந்த எண்ணமே தோணல...”
பாப்பனின் ரோமங்கள் அடர்ந்த மார்பில் அரும்பியிருந்த வியர்வை உப்பை ருசித்தவாறு அவனுடன் ரொம்பவும் நெருக்கமாக இருந்த ஒரு வேளையில் ஜானம்மாவே பாப்பனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டாள். அப்போது கூட அவனுடைய பதில் அதுவாகத்தான் இருந்தது.
அதற்குப் பிறகு அவள் ஒரு நாளும் அந்தக் கேள்வியை அவனைப் பார்த்துக் கேட்டதே இல்லை.
ரவுடிப்பாப்பன் என்றும் கள்ளு பாப்பன் என்றும் கொல்லப் பாப்பன் என்றும் பாப்பனின் காதில் விழாமலே அவனைப் பற்றி பல்வேறு வகைகளில் பேசிக் கொண்டிருந்த கிராமத்து ஆட்கள் வெட்டு காட்டு பாப்பனைப் பற்றி உண்மையாகவே தெரிந்து கொண்டது வெள்ளம் பெருக்கெடுத்து வந்த நாட்களில்தான். மற்ற எல்லோருமே உன்மத்தம் பிடித்த நிலையில், பயந்து போய் பந்தங்கள் அனைவரையும் விட்டு விட்டு தங்களின் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன வழி என்று தெரியாமல் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருக்க, வேறு சிலரோ மெழுகுவர்த்திகளையும், அர்ச்சனைகளையும் கடவுளுக்கு பயபக்தியுடன் வழங்கிக் கொண்டிருந்தனர். பாப்பன் இந்த இரண்டு கூட்டத்திலுமே இல்லை. வெள்ளத்தைப் பார்த்து அவன் பயந்தோடவும் இல்லை. மாறாக, ஆற்றின் கரைகளில் அவன் ஓடி ஓடி மனிதர்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றினான். தண்ணீரில் மிதந்து வேகமாக வந்து கொண்டிருந்தவர்களை அவன் வெறித்தனமாக ஓடி வந்து கொண்டிருக்கும் நதி நீரின் மேல் பாய்ந்து காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தான்.
“பயப்படாம இருங்கடா. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.”
மற்றவர்களுக்கு தைரியம் உண்டாகும் வகையில் பாப்பன் பேசினான். அபூர்வமாக சில இளைஞர்கள் தயங்கித் தயங்கி பாப்பனுடன் நிற்கத் தயாராயினர்.
தண்ணீரில் மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்த போதுதான் வெள்ளத்தின் ஓட்டத்தோடு சேர்ந்து மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு வீடு பாப்பனின் கண்களில் பட்டது. அடுத்தடுத்து இருந்த இரண்டு மரங்களில் பட்டு வந்த வீடு தண்ணீரில் அப்படியே நின்றது. வீட்டுக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்பது போல் பாப்பன் அப்போது உணர்ந்தான். எது நடந்தாலும் நடக்கட்டும் என்று துணிந்த பாப்பன் அடுத்த நிமிடம் வீட்டிற்குள் புகுந்தான். அருகில் நின்றிருந்தவர்கள் தடுத்தது எதுவும் அவன் காதுகளில் விழவே இல்லை. அவன் காதுகளில் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டுமே கேட்டது.
வீட்டிற்குள் கண்ட காட்சி பாப்பனை நடுங்கச் செய்து விட்டது. துணியால் ஆன தொட்டிலில் படுத்தவாறு ஒரு குழந்தை கை கால்களை உதைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தது. அந்தக் குழந்தை பிறந்தே அதிக பட்சம் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள்தான் இருக்கும். வீட்டிற்குள் வேறு யாருமே இல்லை. வீடு கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. பாப்பன் இடுப்பில் இருந்து மடக்கு கத்தி ஒன்றை எடுத்து விரித்தான். தொட்டிலின் கயிறை கத்தியால் அறுத்தான். துணித் தொட்டிலால் சுற்றி குழந்தையைக் கையிலெடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான். கரைகளில் இங்குமங்குமாய் மோதி அப்போதும் வீடு நீரோடு போய்க் கொண்டிருந்தது. குழந்தையுடன் பாப்பன் வீட்டு வாசலில் வந்து நின்றான். மீண்டும் வீடு கரையை நெருங்கியபோது, பாப்பன் குழந்தையுடன் வெளியே குதித்தான். பாதி கரையிலும் பாதி நீரிலுமாக பாப்பன் விழுந்தான். இருப்பினும் கஷ்டப்பட்டு அவன் கரையை நோக்கி முக்கி முனகி நகர்ந்தான்.
அப்போது குழந்தை உரத்த குரலில் அழுதது.
ஒரோதாவிற்குப் பெயர் வைத்தது வெட்டுக்காட்டு பாப்பன்தான். தன்னுடைய இறந்து போன தாயின் ஞாபகத்தில் அந்தப் பெயரை குழந்தைக்கு வைத்தான்.
பாப்பன் தனக்குள் கூறிக் கொண்டான். “எனக்குன்னு ஒரு மகள் இருந்தா, அவளுக்கு என் தாயோட பேரைத்தானே வைப்பேன் திருச்சபையோட சட்ட பிரகாரம்... அதனால...” - குழந்தையை மார்போடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு பாப்பன் அதனுடைய காதில் உதட்டைச் சேர்த்து சொன்னான். “ஒரோதா... என் தங்க ஒரோதா...”
வெள்ளத்தில் கிடைத்த குழந்தையுடன் பாப்பன் தன்னுடைய குடிசையை நோக்கி நடந்தான். வழியில் பார்த்த ஒவ்வொருவரும் அவனைப் பார்த்துக் கேட்டதற்கு அவன் சொன்னான். “கடவுள் எனக்கு இந்தக் குழந்தையைப் பரிசா தந்திருக்காருடா. இந்தக் குழந்தையை நான் தங்கத்தைப் போல வளர்ப்பேன்.”
குடிசையை அடைவதற்குள் குழந்தை அழுது அழுது மிகவும் களைத்துப் போயிருந்தது. அதனாலோ அல்லது தன்னைக் காப்பாற்றிய மனிதனின் மார்பில் இருந்த சூட்டாலோ குழந்தை கண்களை மூடி தூங்கத் தொடங்கியது. குழந்தையை ஒரு பாயில் படுக்க வைத்த பாப்பன், துணியால் ஒரு தொட்டிலைக் கட்டினான். குழந்தையை எடுத்து அந்தத் தொட்டிலில் படுக்க வைத்தான் முரட்டுத்தனமான குரலில் “ஆராரி ராரோ” என்று பாடியவாறு அவன் தொட்டிலை ஆட்டினான்.
அன்று சாயங்காலம் பாப்பன் கள்ளுக் கடையைத் தேடி போகவில்லை. சாயங்காலத்திற்குப் பிறகு ஜானம்மாவின் வீட்டிற்குப் போனான். அவளின் வீடு வெள்ளத்தில் மூழ்கிப் போகாமல் பத்திரமாக இருந்தது. ஆனால், வீட்டின் முற்றத்தில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது.
“இன்னைக்கு என்ன சீக்கிரமாவே வந்துட்டீங்க?” - ஜானம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
அதற்குப் பாப்பன் பதிலெதுவும் கூறவில்லை. அவன் மனதில் அப்போது ஜானம்மாவின் சதைப் பிடிப்பான உடலைப் பற்றிய எண்ணம் சிறிது கூட இல்லை. அவன் மனம் முழுக்க ஒரோதாதான் நிறைந்திருந்தாள். அந்தப் பச்சிளம் குழந்தையை தான் வளர்ப்பது எப்படி என்ற ஒரே சிந்தனைதான் அவனிடம் அப்போது குடிகொண்டிருந்தது.
அருகில் வந்து வாசனை பிடித்துப் பார்த்த ஜானம்மா கேட்டாள்.
“ஆமா... இன்னைக்கு கள்ளுக் கடைக்குப் போகலியா?”
அவன் ‘இல்லை’ என்று தலையை ஆட்டினான்.
“காரணமே இல்லாம இப்படி உட்கார்ந்திருக்க மாட்டீங்களே! ஒரு சிரிப்போ கிண்டலோ ஒண்ணு கூட இல்லியே!”
பாப்பன் மீண்டும் மவுனமாக இருந்தான். அவன் அவளைப் பார்க்கக்கூட இல்லை.
“இங்க பாருங்க... கையில காசு இல்லைன்னா நான் தர்றேன். என் கையில அஞ்சாறு சக்கரம் இருக்கு”- அவனைப் பார்த்து ஒரு காந்த சிரிப்பு சிரித்தவாறு அவள் சொன்னாள்.
பாப்பன் அவளையே பார்த்தான். அவள் முகத்தில் இருந்த கவர்ச்சியோ காந்தமென ஈர்த்த தன்மையோ அவனிடம் சிறிது கூட மாற்றத்தை உண்டாக்கவில்லை. தன்னுடைய கரகரப்பான குரலை லேசாக தாழ்த்திக்கொண்டு அவள் மார்பையே சில நிமிடங்கள் உற்று பார்த்த அவன் கொஞ்சங்கூட காம எண்ணங்களின் நிழலே படியாமல் அவளைப் பார்த்துக் கேட்டான். “உன் மார்புல பால் இருக்கா?”
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டதும் முதலில் ஜானம்மா அதிர்ச்சியடைந்தாலும், அடுத்த நிமிடம் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள். பாப்பன் சிரிக்கவில்லை. அவள் அப்படிச் சிரித்தது- சொல்லப் போனால்- பாப்பனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. குரலை உயர்த்திக் கொண்டு, மிடுக்கான தொனியில் அவன் சொன்னான். “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. அதை விட்டுட்டு சிரிச்சிக்கிட்டு இருக்குறியே!”
வந்த சிரிப்பை அடக்க முயன்றவாறு கொஞ்சும் குரலில் சொன்னாள்.
“இதென்ன கேலிக்கூத்தா இருக்கு. உங்களுக்குத் தெரியாததா என்ன. எங்கிட்ட எப்படி பால் இருக்கும்?”
அதைக் கேட்டு பாப்பனின் முகம் வாடிப் போய்விட்டது.
“நீ ஏற்கெனவே ரெண்டு மூணு பிள்ளைகளைப் பெத்திருக்கேல்ல?”
அதைக் கேட்ட பிறகும் ஜானம்மாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. “அதுக்காக? என் கடைசி மகன் பால் குடிக்கிறதை நிறுத்தியே ரெண்டு வருஷம் ஆயிடுச்சே!”
“அப்போ இல்லைன்னு சொல்ற... அப்படித்தானே?” -பாப்பனின் குரலில் பயங்கர ஏமாற்றம் தெரிந்தது.
அவனுக்கு உண்டான கவலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய குரலைத் தாழ்த்திக் கொண்டு அன்பு மேலோங்க அவள் கேட்டாள். “எதுக்கு இப்போ உங்களுக்குத் தாய்ப்பால் தேவைப்படுது? ஏதாவது மருந்துக்குன்னா, நான் வேணும்னா பக்கத்துல யாருக்கிட்டயாவது போயி கொஞ்சம் வாங்கிட்டு வந்து தர்றேன்.”
“மருந்துக்கு இல்ல... என் குழந்தையை வளர்க்குறதுக்கு...”
“குழந்தையா? உங்களுக்கு குழந்தையா? யாரு பெத்த பிள்ளை?” -வியப்பான குரலில் கேட்டாள் ஜானம்மா.
“நான்தான் பெத்தேன்னு வச்சுக்கயேன்...” -பாப்பன் லேசான கோபத்துடன் சொன்னான். “நீ இப்போ இதுக்கு ஒரு வழி சொல்லு...”
ஜானம்மா என்ன செய்வதென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது.
மனிதர்களையும், விலங்குகளையும், செடி, கொடி, மரங்களையும் இழுத்துக் கொண்டு போன வெள்ளம் ஒரு நிறைந்த வெற்று நிலம்தான். எல்லாம் முடிந்து கடைசியில் பார்த்தபோது மீதமாக இருந்தது வெறும் பிணக்காடுதான். அந்தப் பிணக்காட்டில் விலங்குகளும், மனிதர்களும், மரங்களும் செத்துப் போய் மண்ணுக்குக் கீழே புதையுண்டு கிடந்தார்கள். வெள்ளம் குறைந்து விட்டதை அறிந்து ஆர்வத்துடன் தங்களின் சொந்த மண்ணைத் தேடிப் புறப்பட்ட அப்பிரானி மக்கள் காப்பியும் மரவள்ளிக்கிழங்கும் சேனையும், மாமரமும், பலாமரங்களும் செழித்து வளர்ந்திருந்த தங்களின் நிலம் ஒன்றுமே இல்லாத பாழ்நிலமாகக் கிடப்பதைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பெரும்பாலான அவர்களின் வீடுகள் முழுமையாகப் பெயர்ந்து ஆற்று வெள்ளத்தோடு சேர்ந்து போயிருந்தன. சில வீடுகளின் தரை மட்டும் புதைந்து போன மண்ணுக்கு மேலே லேசாகத் தெரிந்தன. கீழே விழாத சில மரங்களில் கட்டப்பட்டிருந்த அறுந்து போகாத கயிறுகளின் நுனியில் ஆடு, மாடுகள் செத்து சேற்றில் புதைந்து கிடந்தன. வெள்ளப் பெருக்கு மலைகளிலிருந்து காட்டு மரங்களையும் மலைப்பாம்புகளையும் கொண்டு வந்திருந்தன. சில அதிர்ஷ்டசாலி மனிதர்களின் நிலங்களில் பெரிய பெரிய காட்டு மரங்கள் வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப்பட்டு கிடந்தன. கிடைப்பதற்கே மிகவும் கஷ்டமான விலை மதிப்புள்ள காட்டு மரங்கள் எந்தவிதமான காசு செலவும் இல்லாமல் கிடைத்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். வேறு சிலரின் நிலங்களில் வேரோடு வீழாமல் இன்னும் நின்றிருந்த பெரிய பெரிய மரங்களுக்குக் கீழே அவற்றின் வேர்களைப் போலவே இன்னும் சாகாமல் இருக்கும் மலைப்பாம்புகள் சுருண்டு கிடந்தன.
உயர் அதிகாரிகளும் தாசில்தாரும் மற்ற முக்கிய புள்ளிகளும் கிராமத்திற்கு வந்தார்கள. திருவனந்தபுரத்திலிருந்து அன்னதாதாவான தம்புரான் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுத்தனுப்பிய வேலை செய்யப் பயன்படுத்தும் கருவிகளும் உதவிப் பணமும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. புதிய வேலைக் கருவிகளுடனும் புதிய மனதுடனும் விவசாயிகள் புதிய மண்ணில் கால் வைப்பது மாதிரி பாழாகிப் போன தங்களின் நிலங்களில் வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.
“என்ன இருந்தாலும் எனக்கு வெள்ளம் நன்மையைத்தான் செய்திருக்கு!” -வெட்டுக்காட்டு பாப்பன் சொன்னான். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒரோதாவின் நெற்றியில் முத்தமிட்ட அவன் மகிழ்ச்சிப் பெருக்குடன் சொன்னான். “எனக்கு இதை விட வேற என்ன பெருசா நிதி வேணும்?”
பாப்பனுக்குக் கிடைத்த அந்த நிதி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.
காலையில் குழந்தையை ஜானம்மாவின் வீட்டில் விட்டுவிட்டு பாப்பன் படகு ஓட்டப் புறப்படுவான்.
ஜானம்மாவின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த தாய்ப்பால் உள்ள பெண்கள் ஒரோதாவிற்குப் பால் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதற்காக காசு தர பாப்பன் தயாராக இருந்தான். அரைப் பட்டினி கிடப்பவர்களாக அவர்கள் இருந்தாலும், வெள்ளப் பெருக்கால் நிறைய இழப்புகளை அடைந்து மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே அவர்களின் வாழ்க்கை நிலை தாழ்ந்து போயிருந்தாலும் அவர்கள் பாப்பன் தந்த காசை வாங்கவே முடியாதென்று கூறி விட்டார்கள்.
“அய்யோ... தங்கக் குடம் போல குழந்தை இருக்கு. அதுக்கு பால் கொடுக்குறதுக்கு காசா. இதுக்குக் காசு வாங்கினா கடவுளுக்கே தாங்காது.” - அந்தப் பெண்கள் ஒருமித்த குரலில் கூறினார்கள்.
இருந்தாலும் அவர்கள் செய்த உதவிக்குப் பதிலாக என்றில்லாமல் ஜானம்மாவின் மூலமாக அவர்களுக்குத் தன்னால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு பலவித உதவிகளையும் பாப்பன் செய்யவே செய்தான்.
இப்படிப் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த, பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல பெண்களின் மார்பிலிருந்து வந்த பாலைக் குடித்துத்தான் ஒரோதா வளர்ந்தாள்.
இரவு நேரத்தில் ஜானம்மாவின் வீட்டிலிருந்து தனக்குக் கிடைத்த நிதியான ஒரோதாவுடன் பாப்பன் தன்னுடைய குடிசைக்கு வருவான். இரவு நெடுநேரம் ஆனபிறகும் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் ஒரோதாவின் சின்னஞ்சிறு கண்களையும், தூக்கத்தில் புன்னகை தவழ இருக்கும் அவளுடைய உதடுகளையும், பிஞ்சு கை, கால்களையும் பார்த்தவாறு அவன் அமர்ந்திருப்பான். அதுவரை தன்னுடைய வாழ்க்கையிலேயே அவன் அனுபவித்திராத மகிழ்ச்சியான நிமிடங்களாக அவை அவனுக்கு இருக்கும். கடவுள் தனக்கு அளித்த நிதி படிப்படியாக- அங்குலம் அங்குலமாக வளர்ந்து கொண்டிருப்பதை அவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.
இரண்டு மூன்று வயதில் ஓடி விளையாடி துள்ளிக் குதித்து கொஞ்சிக் கொஞ்சி நடக்கும் ஒரோதா, ஐந்தாவது வயதில் ஓலையும் எழுத்தாணியுமாக மாட்டேல் ஆசானின் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு காதுகளில் தொங்கட்டான் ஆட துள்ளி ஓடும் ஒரோதா, ஏழாவது வயது முதல் பள்ளிக் கூடத்திற்குப் போகிற ஒரோதா, பதினாறாம் வயதில் புதிய ஆடைகள் அணிந்து கையில் பூக்களுடன் வெட்கம் முழுமையாக ஆட்சி செய்ய, குனிந்த தலையுடன் புது மாப்பிள்ளையோடு சர்ச் படிகளில் இறங்கி வரும் ஒரோதா... பாப்பன் ஒரு பொட்டு கூட உறங்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்தவாறு கனவு கண்டு கொண்டிருந்தான். அவன் தூங்கும்போது கூட அந்தக் கனவுகள் அவனை விடுவதாக இல்லை. விடாமல் பாப்பனை அவை துரத்திக் கொண்டிருந்தன. முன்பு எந்தக் காலத்திலும் கனவு கண்டிராத பாப்பனிடம் அந்தக் கனவுகள் பல மாற்றங்களையும் உண்டாக்கின. தன்னுடைய புதிய பொறுப்பு என்ன என்பதை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான்.
தன்னுடைய பொறுப்புகளை எண்ணிய நாள் முதல் பாப்பன் வீட்டில் ஒரு மரப்பெட்டி உண்டாக்கினான். ஒவ்வொரு நாளும் அதில் ஏதாவதொரு தொகையை அவன் கொண்டு வந்து போடுவது வாடிக்கையாகி விட்டது.
பாப்பனின் கனவுகளைப் போலவே, பாப்பனின் கனவாக ஒரோதா வளர்ந்தாள்.
ஒரு நாள் காலையில் வழக்கம்போல வேலைக்குப் புறப்பட்ட பாப்பன் குழந்தையுடன் ஜானம்மாவின் வீட்டிற்கு வந்தான். ஜானம்மா குழந்தையை வாங்கி வயிற்றில் கிள்ளி குழந்தையைச் சிரிக்க வைத்தவாறு பாப்பனைக் காட்டினாள். விரலால் அவனைக் காட்டியவாறு ஜானம்மா கேட்டாள். “இது யாரு? மகளே... உனக்கு இது யாரு? சொல்லு...”
தன்னுடைய சின்னக் கண்களால் பாப்பனைப் பார்த்த ஒரோதா வாய் திறந்து சிரித்தவாறு, கை, கால்களை உதைத்தவாறு சொன்னாள், “ப்பா...”
அவ்வளவுதான்-
அடுத்த நிமிடம் குழந்தையை வாரி எடுத்த பாப்பன் குழந்தைக்கு நூறு முத்தங்கள் தந்தான். அவனுடைய பெரிய கண்கள் கண்ணீரில் மிதந்தன. குழந்தையைத் திரும்பவும் ஜானம்மாவின் கையில் கொடுத்து விட்டு அவன் கேட்டான். “உனக்குத் தெரியுதா அவள் என்ன சொல்றான்னு?”
“எனக்குத் தெரியாம என்ன? அப்பான்னு சொல்றா...” -ஜானம்மா சிரித்தாள்.
“இல்ல... பாப்பன்னு சொல்றா.”
பாப்பன் திரும்பி நடந்தான்.
அன்று சாயங்காலம் அவன் ஒரு குப்பி கள்ளு அதிகமாகக் குடித்தான். இரவு நேரத்தில் ஜானம்மாவின் வீட்டிற்குப் போகும்போது அவன் குழந்தைக்கு இரண்டு உடுப்புகளுக்கும் ஜானம்மாவிற்கு ஒரு ப்ளவ்ஸ் துணியும் எடுத்துக்கொண்டு போனான். அவன் ஜானம்மாவின் வயிற்றில் முத்தம் தந்தபோது, ஜானம்மா வேண்டாமென்று தடுத்தாள். “குழந்தை முழிச்சிட போகுது. அது முழிச்சிட்டா நாம...” அவனிடம் காமம் அரும்பத் தொடங்கியது.
“போடி...” -பாப்பன் சிரித்தான்.
பிறகு அவன் கையிலிருந்த பேப்பர் பொட்டலத்தைப் பிரித்தான்.
“இங்க பார்த்தியா? இது என் மகளுக்கு. இது உனக்கு அவளை அப்பான்னு கூப்பிட வச்சதுக்காக...”
“ஓ... அப்பனுக்கு பயங்கர சந்தோஷம்தான்!”
அவள் அவனுடைய கழுத்தைக் கட்டிப் பிடித்தாள்.
அடுத்த மழைக்காலம் வந்தபோது சேர்ப்புங்கல்லைச் சேர்ந்த மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். வழக்கம்போல அந்த வருடமும் மழை நிறையவே பெய்தது. மீனச்சிலாறு பெருக்கெடுத்து ஓடி வருவதற்கு முன்பே தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். ஆற்றையொட்டி வசித்துக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நிலத்தின் ஓரத்தில் பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள். எந்த நிமிடத்திலும் திடீரென்று வீட்டை விட்டு ஓட வேண்டிய நிலை உண்டானால், அந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்வது என்பதற்கு முன் கூட்டியே மெழுகுவர்த்திகள் கொளுத்தினார்கள். சர்ச்சுகளிலும், கோவில்களிலும் நேர்த்திக்கடன்கள் தருவதாகச் சொல்லி சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள்.
மழைக்கால இரவுகளில் ஒரோதாவை ஒரு சிறு கம்பளியால் போர்த்திவிட்டு, வெளியே பெரிதாக ஆர்ப்பரித்து பெய்துகொண்டிருக்கும் மழையைப் பார்த்தவாறு கையிலிருந்த பட்டைச் சாராயத்தைக் குடித்தவாறு வெட்டு காட்டு பாப்பன் சிறிது கூட தூங்காமல் ஜாக்கிரதை உணர்வுடன் குழந்தைக்குக் காவல் இருப்பான்.
மக்கள் பயந்தது மாதிரி நடக்கக் கூடாது எதுவும் நடந்து விடவில்லை. மழை பலமாகவே பெய்தது. மீனச்சில் ஆறு நிரம்பி ஓடியது. சீக்கிரமே மழை நிற்கவும் செய்தது. வெள்ளம் வடிந்தது. மனிதர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
ஒரோதா வளர்ந்தாள்.
பறித்து நட்ட ஒரு பூச்செடிக்கு நீர் ஊற்றி ஒவ்வொரு நாளும் அது வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியின் ஆர்வத்துடன் பாப்பன் ஒரோதாவின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தலைமுடி சுருண்டு படர்ந்து கிடந்தது. சின்னக் கண்கள் படு பிரகாசமாக இருந்தன. ஜானம்மா கண்களுக்கு மை தீட்டிய பிறகு, அந்தக் கண்கள் மேலும் பிரகாசமாகத் தெரிந்தன. தன்னுடைய சின்ன அரிசிப் பற்களால் அவள் சிரித்தபோது, பாப்பனுக்கு சூரியனே உதித்து வருகிற மாதிரி தோன்றியது.
கழுத்தில் ஒரு தங்கத்தால் ஆன காசு மாலையும், இடுப்பில் வெள்ளியால் ஆன கொடியும் புத்தாடை அணிந்து கொண்டு ஒரோதா பாப்பனின் வீட்டு முன்னாலும், ஜானம்மாவின் வீட்டு முற்றத்திலும் துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள். பாப்பனின் முதுகின் மேல் ஏறி அவள் யானை விளையாட்டு விளையாடினாள். பாப்பன் படகு ஓட்டப் போகும் போது ஜானம்மாவின் மகன் முத்துகிருஷ்ணனுடன் சேர்ந்து மண்ணில் விளையாடினாள்.
குழந்தை வளர வளர பாப்பனிடம் மேலும் பல மாற்றங்கள் உண்டாக ஆரம்பித்தன. அவன் மதிய நேரத்தில் கள் குடிக்கும் பழக்கத்தை முழுமையாக நிறுத்தினான். மதிய நேரத்தில் கடையில் கொஞ்சம் கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவான். ஜானம்மாவின் வீட்டிலிருந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வந்து காலையில் வேலைக்குப் போவதற்கு முன்பு வைத்து விட்டுச் சென்றிருந்த சாதத்தை அவளுடன் இருந்து சாப்பிடுவான். அவளுக்கு அவனே ஊட்டி விடுவான். சாப்பிட்டு முடிந்து, அவளுடன் சில நிமிடங்களை செலவழித்த பிறகு மீண்டும் ஜானம்மாவிடம் கொண்டு போய் குழந்தையை விட்டு விட்டு, ஆற்றை நோக்கிப் போவான்.
இந்த விதத்தில் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் இரவில் பாப்பனின் அணைப்பிற்குள் இருக்கும் இடத்தில் ஜானம்மா சொன்னாள். “குழந்தை இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டான்னா, நீங்க இந்தப் பக்கம் வரவே மாட்டீங்கன்னு நான் உண்மையாவே பயப்படுறேன்.”
“ஒரு வேளை அப்படி நடந்தாலும் நடக்கும்டி! அவள் எனக்குக் கிடைச்ச நிதி... நான் இப்போ யாருன்னு உனக்குத் தெரியுமா?”
“அப்பா... அதுதானே?” -ஜானம்மா சிரித்தாள்.
“இல்லடி...” - அவளைக் கிள்ளியவாறு பாப்பன் திருத்தினான். “நிதியைக் காத்துக்கிட்டு இருக்குற பூதம்.”
ஜானம்மா விழுந்து விழுந்து சிரித்தவாறு அவன் மேல் முழுமையாகத் தன்னை சாய்த்துக் கொண்டாள்.
ஒரோதாவிற்கு மூன்று... மூன்றரை வயது ஆனது முதல் பாப்பன் வேலைக்குச் செல்லும்பொழுது அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.
“அப்போ நான் எப்படி குழந்தையைப் பார்க்குறது?” -ஜானம்மா மனவருத்தத்துடன் கேட்டாள்.
“நான் பார்த்த பிறகு நீ பார்த்தா போதும்...”
மாலை நேரத்திற்கு முன்பு அவன் குழந்தையை ஜானம்மாவிடம் கொண்டு வந்து விடுவான். அதற்குப் பிறகு வேலை முடிந்து, பனங்கள்ளு குடித்தவாறு இரவு நேரத்தில் திரும்பி வந்த பிறகு ஜானம்மாவின் வீட்டில் நல்ல தூக்கத்தில் இருக்கும் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கி நடப்பான் பாப்பன்.
பகலில் நேரம் கிடைக்கும்போது தன்னுடைய கைகளில் குழந்தையைப் படுக்கப் போட்டு, அவளுக்கு பாப்பன் நீச்சல் கற்றுத் தந்தான். அவளையும் அழைத்துக்கொண்டு கடை வீதிக்குச் செல்வான். அவளுக்குப் பலகாரங்கள் வாங்கிக் கொடுப்பான். அவளைத் தோள் மேல் ஏற்றி வைத்துக் கொண்டு பெருநாளுக்குப் போவான். வேடிக்கைகள் ஒவ்வொன்றையும் காட்டுவான். கைகளில் வளையல் போட வைப்பான். காலுக்குக் கொலுசு வாங்கித் தருவான். விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தருவான். அவளை மாடியில் அமர வைத்து நிறைய கதைகள் சொல்லுவான். மானமுள்ள மூப்பன் தன்னை நையாண்டி செய்த பாட்டியைத் தட்டி விட்டு முற்றத்தில் விழ வைத்த கதை, மண்ணாங்கட்டியும் காய்ந்து போன இலையும் காசிக்குப் போன கதை, சொன்ன சொல்லைக் கேட்காத ஆட்டுக் குட்டியின் கதை,தொண்ணூற்றொன்பதில் உண்டான வெள்ளப் பெருக்கின் கதை, அரீத்ர புண்ணியவாளன், பாறேப்பள்ளி மாதா ஆகியோரின் அற்புதங்கள் பற்றிய கதை... இப்படி தனக்கு எதுவெல்லாம் தெரியுமோ எல்லாவற்றையும் குழந்தை ஒரோதாவிற்கு இரவு பகலாக உட்கார்ந்து பாப்பன் சொல்லித் தந்தான்.
“என் தங்க மகளுக்கு நல்ல அறிவு இருக்கு” - அவன் ஜானம்மாவிடம் சொன்னான். பிறகு ஒரோதாவின் பக்கம் திரும்பிக் கூறுவான். “மகளே... மண்ணாங்கட்டியும் காய்ஞ்ச இலையும் காசிக்குப் போன கதையைச் சொல்லு...”
குழந்தை கொஞ்சிக் கொஞ்சி தன் மழலைக் குரலில் கதையைக் கூறுவாள்.
“என்ன சொல்லிக் கொடுத்தாலும் மறக்குறதே இல்ல. நல்ல ஞாபக சக்தி...”
“நல்ல குடும்பத்துல பிறந்த குழந்தையா இருக்கும்.” ஜானம்மா கூறுவாள்.
“போடி...”- பாப்பன் கோபத்துடன் கூறுவான். “நான் சொல்லித் தந்த குணமாக்கும் இது.”
குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருப்பாள்.
“இவ இப்போ பிரமாதமா நீந்துவா... உனக்குத் தெரியுமா?” சவால் விடும் குரலில் சொல்வான் பாப்பன்.
ஒரோதாவிற்கு ஐந்து வயது ஆவதற்கு முன்பு பாப்பன் அவளுக்கு காது குத்தினான். அவளுக்கு கம்மலும் ஜிமிக்கியும் போட்டு விட்டான். பிறகு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தான். அவன் நான்கு வருடங்களுக்கு முன்னால் மனதில் கற்பனை பண்ணிய மாதிரி ஒரோதா ஓலையும் எழுத்தாணியும் வைத்துக் கொண்டு காது தொங்கட்டான் ஆட துள்ளிக் குதித்து ஓடுவதை பாசத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, பாப்பனின் கண்கள் பனித்தன.
“எல்லாம் நான் மனசுல நினைச்ச மாதிரியே நடக்கணும். அப்படி நடக்க வைக்கணும்; என் கர்த்தாவோட தாயே!” - அவன் மனமுருக வேண்டி நின்றான்.
ஒரு நாள் மாட்டேல் ஆசான் படகுத் துறைக்கு வந்தபோது பாப்பனிடம் சொன்னார். “ஒரோதாக்குட்டி நல்ல புத்திசாலி. இப்படியொரு குழந்தையை நான் பார்த்ததே இல்ல. ஒரு விஷயத்தைச் சொன்னா, அவ அதை மறக்குறதே இல்ல...” அதைக் கேட்டு பாப்பனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கும் பெருமைக்குள் அளவே இல்லை. ஆசானிடம் படகுக் கூலி கூட அவன் வாங்கவில்லை.
ஏழாவது வயது வந்தபோது பாப்பன் ஒரோதாவை பள்ளிக்கூடத்தில் சேர்த்தான். முதல் வகுப்பு ஆசிரியர் குழந்தையின் பெயரைக் கேட்டதற்கு பாப்பன் சொன்னான், “ஒரோதா”.
தன்னுடைய பெயரையும் வீட்டுப் பெயரையும் மற்ற விவரங்களையும் அவர் கேட்டபோது, பாப்பன் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்தது மாதிரி ஒப்பித்தான்.
ஆசிரியர் குழந்தையின் பிறந்த தேதியைக் கேட்டபோதுதான் பாப்பன் உண்மையிலேயே குழம்பிப்போய் நின்றுவிட்டான். குழந்தையின் பிறந்ததேதி யாருக்குத் தெரியும்? எங்கோ யாருக்கோ பிறந்த குழந்தை...
தொண்ணூற்றொன்பதாம் ஆண்டில் வெள்ளப் பெருக்கு உண்டானபோது ஆற்று நீர் இழுத்துக் கொண்டு வந்த ஒரு வீடு அவனுக்கு பரிசாகத் தந்த குழந்தை... அந்தக் குழந்தையின் பிறந்த தேதியை அவன் எப்படித் தீர்மானிக்க முடியும்? இந்த விஷயங்களை ஆசிரியரிடம் அவன் கூற முடியுமா? என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தான் பாப்பன்.
கடைசியில் எது வேண்டுமானாலும் வரட்டும் என்ற எண்ணத்துடன்- அன்று குழந்தையைக் காப்பாற்ற வெள்ளப் பெருக்கில் மிதந்து வந்து வீட்டை நோக்கிப் பாய்ந்தோடிய அதே உணர்ச்சிப் பெருக்குடன் -எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாப்பன் சொன்னான். தொண்ணூத்தொம்பது சிங்ஙம் ஒண்ணு.”
“ஓ... வெள்ளம் வந்த அன்னைக்குப் பொறந்தவளா?” பதிவேட்டில் பிறந்த தேதியை எழுதும்போது சிரித்துக் கொண்டே கேட்டார்.
அவ்வளவுதான்-
பாப்பன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.
“வெள்ளம் வந்த நாளன்று பிறந்தவளா என்று ஆசிரியர் கேட்கிறாரே! ஒரு வேளை எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரிந்திருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டான் பாப்பன்.
“சரி... போகலாம்” - ஆசிரியர் சொன்னார்.
அதற்குப் பிறகுதான் பாப்பனுக்கு நிம்மதியே வந்தது.
தலைமுடியைப் பின்னி, ரிப்பன் வைத்துக் கட்டி, காதுகளில் தொங்கட்டானை ஆட்டிக்கொண்டு, தையல்காரன் அப்பச்சன் தைத்துக் கொடுத்த உடுப்பை அணிந்து கொண்டு ஜானம்மாவின் மகன் முத்துகிருஷ்ணனுடன் சேர்ந்து துள்ளிக் குதித்துக் கொண்டு பள்ளிக் கூடத்திற்குப் போகும் ஒரோதாக்குட்டியைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும்போது தன்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை அடைந்து விட்டோம் என்பது போல் பாப்பனுக்குத் தோன்றும்.
படிப்பில் ஒரோதா மிகவும் கெட்டிக்காரியாக இருந்தாள். வீட்டில் அவள் பாப்பனுக்கு உதவியாக இருந்தாள். அவன் வேண்டாமென்று தடுத்தாலும் அவள் கேட்பதேயில்லை. வீட்டு வேலைகளில் பாப்பனுக்கு அவள் உதவினாள். அடுப்பை எப்படி எரிய வைப்பது என்பதைத் தெரிந்து கொண்டாள். காப்பி தயாரிக்கக் கற்றுக்கொண்டாள். ஞாயிற்றுக்கிழமைகளில் தன் தந்தையுடன் படகில் போவாள். துடுப்பை எப்படிப் பிடிப்பது என்பதைத் தெரிந்து கொண்டாள். ஆற்றில் இறங்கி நீந்தி விளையாடினாள்.
ஒரு நாள் சாயங்காலம் படகு கரைக்கு வந்த பிறகு ஒரோதாவை படகிலேயே இருக்கச் சொல்லி விட்டு, இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு பாப்பன் கடைப்பக்கம் போனான். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, ஆற்றில் படகைக் காணவில்லை. அவ்வளவுதான்- பாப்பன் நடுங்கிப் போய்விட்டான். நேரம் இன்னும் இருட்டவில்லை.
“பூ...ய்...”- அவன் பதைபதைத்துப் போய் கத்தினான்.
“பூ...ய்...” ஒரு பிஞ்சு குரல் காற்றில் கலந்து ஒலித்தது.
யாருக்காகவும் எதற்காகவும் எந்தக் காலத்திலும் பயப்படாத வெட்டுகாட்டு பாப்பன் பயந்து போன தன்னுடைய கண்களுடன் குரல் வந்த திசையை நோக்கி பார்த்தான். அவன் கண்களில் என்ன தெரிந்தது தெரியுமா? அக்கரையை நோக்கி ஒரோதா படகை துடுப்பு போட்டு ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அடுத்த நிமிடம் கட்டியிருந்த வேட்டியை தார் பாய்ச்சி கட்டிய பாப்பன் ஆற்றுக்குள் குதித்தான். நீந்திப் போய் படகை அடைந்தான். படகை இழுத்துப் பிடித்து அதில் ஏறினான். கோபத்துடன் அவன் கேட்டான். “நீ என்ன காரியம்டா பண்ணினே?”
“அப்பா... நீங்க ஏன் பயப்படுறீங்க? எனக்குத் துடுப்பு போடத் தெரியும்...” அவள் சிரித்தாள்.
“வேண்டாம்... வேண்டாம்... இப்படி நீ நடந்தா நான் இனிமேல் உன்னை படகுப் பக்கமே கொண்டு வரமாட்டேன்”- அவனுடைய கோபம் இன்னும் நின்றபாடில்லை.
அவள் தன்னுடைய பெரிய கண்களால் அவனைப் பார்த்தாள். அவளின் கண்கள் கலங்குகின்றன என்பதைப் பார்த்ததும் பாப்பனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன் அவளை இறுகத் தழுவிக் கொண்டான்.
“என் மகள் போயிட்டா எனக்குன்னு யார் இருக்குறது? அதனாலதான் அப்பா கோபப்படுறேன்.”
அதைக் கேட்டு மீனச்சில் ஆற்றின் கண்களே கலங்கின.
ஒரோதா படிப்பு விஷயத்தில் தீவிர அக்கறை காட்டினாள். மாலை நேரத்தில் சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் அவள் அமர்ந்து உரத்த குரலில் படித்துக் கொண்டிருக்கும் போது வெட்டுக்காட்டு பாப்பன் தன் காதுகளை முழுமையாக தீட்டி வைத்துக்கொண்டு சமையலறையில் சாப்பாடு தயார் பண்ணிக் கொண்டோ; இல்லாவிட்டால் சமையல் வேலை முடிந்து பீடி புகைத்தவாறு சிறிது நேரம் துணியால் ஆன நாற்காலியில் சாய்ந்தவாரோ அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
வகுப்பில் ஒரோதா முதல் தரம் பெற்ற பெண்ணாக இருந்தாள். வகுப்புத் தேர்வு முடிந்து சிலேட்டில் ஆசிரியர் எழுதிக் கொடுத்த மதிப்பெண்களுடன் கம்பீரமாக நடந்து வந்து சிலேட்டைத் தூக்கிக் காட்டியவாறு அவள் சொன்னாள் : “இங்க பாருங்கப்பா- எனக்கு இருபத்தைஞ்சுக்கு இருபத்தஞ்சு மார்க் கிடைச்சிருக்கு...”
எழுத்தும் எண்ணும் தெரியாது என்றாலும், எல்லாமே தெரிந்து கொண்டதைப் போல் சிலேட்டைப் பார்த்து மனதிற்குள் பெருமிதம் உண்டாக்கிய புன்னகையுடன் பாப்பன் கூறுவான். “என் மகள் எவ்வளவு பெரிய கெட்டிக்காரி. அவ ஒரு புத்திசாலி பொண்ணாச்சே! ஆனா இவ்வளவு மார்க்கையும் என் மகளுக்கே கொடுத்திட்டா, மற்ற பசங்க மார்க்குக்கு என்ன பண்ணுவாங்க? அவங்க யாருக்கும் மார்க்கே இல்லியா?”
அதைக் கேட்டு ஒரோதா விழுந்து விழுந்து சிரிப்பாள். “இந்த அப்பாவுக்கு எதுவுமே தெரியல. இந்த அப்பா ஒரு முட்டாள். மற்ற பசங்களுக்குக் கொடுக்குறதுக்கு வேற மார்க் இல்லியா என்ன?” என்பாள்.
கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பது மாதிரி பாப்பனும் அவளின் சிரிப்பில் சேர்ந்து கொள்வான். “அப்பா வேணும்னே அப்படிச் சொன்னேன்டா...” என்பான். இந்த விஷயத்தை இதற்குமேல் தொடர்வது புத்திசாலித்தனமல்ல என்பதைப் புரிந்துகொண்ட அவன் சொல்லுவான். “நேரம் இருட்டிடுச்சு. மகளே வா... நாம சாப்பிட்டு படுக்கலாம் காலையில சீக்கிரம் எந்திரிக்கணும்ல?”
கிறிஸ்துமஸ் வந்தது. பெரிய சர்ச்சில் ராக்குளி பெருநாள் வந்தது.
ராக்குளி பெருநாள் என்றால் நினைவு தெரிந்த நாளில் இருந்தே வெட்டுக்காட்டு பாப்பனுக்கு மிகவும் பிடித்த ஒரு திருநாளாக இருந்து வந்திருக்கிறது. குழந்தை இயேசு பிறந்த பிறகு பதின்மூன்றாம் நாளைக் கொண்டாடுகிற ராக்குளி பெருநாள் பாலா பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு திருவிழாவாக இருந்து வந்திருக்கிறது. பிரார்த்தனைகள், சர்ச்சைச் சுற்றுவது, பொருட்கள் விற்பனை, தகராறு, அடிதடி... இப்படி பல விஷயங்களும் அங்கு நடக்கும். கடைசி விஷயத்தில்தான் பாப்பனுக்கு எப்போதும் விருப்பம். ஒன்றிரண்டு பேர்களையாவது கத்தியால் குத்தி கொல்லாமல் இருந்த ஒரு ராக்குளி பெருநாளை அவன் கனவில் கூட நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை.
பனங்கள்ளும் பன்றி மாமிசமும் சாராயமும் சாப்பிட்டு அவை உண்டாக்கிய போதையில் யாருக்காவது இரண்டு அடி கொடுக்காமல் ராக்குளி பெருநாளுக்குப் போய் விட்டு பாப்பன் திரும்பி வந்ததில்லை. ஒரோதாவையும் அழைத்துக் கொண்டு ராக்குளி பெருநாளைப் பார்க்கப் போன பிறகுதான், பாப்பன் பெருநாளன்று இருக்கும் குடிக்கும் அடிக்கும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தான். இரண்டு குப்பி கள்ளு மட்டும் குடித்துவிட்டு குழந்தையின் கையைப் பிடித்தவாறு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பவர்களின் பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் இருக்கும் இடத்தில் சுற்றித் திரிந்தானே தவிர, அடிபிடி தகராறு நடக்கும் இடத்தைப் பாப்பன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
“பாப்பன் அண்ணன்கிட்ட இருந்த சுறுசுறுப்பும் சொரணையும் இப்போ இல்லாமலே போச்சு” என்று சேர்ப்புங்கல்லைச் சேர்ந்த அவனுக்கு மிகவும் வேண்டியவர்கள் கூறியபோது பாப்பன் அவர்களைப் பார்த்துச் சொன்னான். “எதுவுமே என்னை விட்டு போகலடா... என் குழந்தை வளரட்டும். அவளைப் பார்க்குறதுக்கு என்னை விட்டா யார் இருக்குறது?”
ராக்குளி பெருநாள் முடிந்ததும், பனிக்காலம் வந்தது. பனிக்காலம் போனதும் கோடை காலம் வந்தது. அது முடிந்ததும் வானம் இருண்டது. வடக்கு திசை வானத்தில் கருமேகங்கள் காட்டு யானைக் கூட்டங்களைப் போல் திரண்டு நின்றன. மழை அலறிக் கொண்டு பெய்தது. நதி நீர்ப் போக்கால் நிறைந்தது. கரைகளை நடுநடுங்க செய்து ஓரத்தில் கட்டப்பட்டிருந்த படகுகளை ஒரு வழி பண்ணிக் கொண்டு மீனச்சில் ஆறு நிறைந்து ஓடியது.
மழைக்காலம் முடிந்தது. நீர் இறங்கியது. வானம் தெளிந்தது. மனிதர்களின் முகங்களும் மனதும் அதோடு சேர்ந்து தெளிந்தன.
பள்ளிக்கூடம் விட்டு திரும்பிய ஒரோதா தூண்டிலுடன் ஆற்றின் கரையில் உட்கார்ந்திருந்தாள். மாலை மயங்குவதற்கு முன்பு கிடைத்த மீனுடன் குடிசைக்குத் திரும்பினாள். ஜானம்மா சொல்லித் தந்த மாதிரி அவள் மீனை அறுத்தாள். பாப்பன் வருவதற்குள் அதை வறுத்து வைத்தாள். முதல் நாள் அதைப் பார்த்ததும் பாப்பன் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போய்விட்டான். அவனால் நம்பவே முடியவில்லை. தன் மகள் ஒரோதா இந்த மீனைப் பிடித்துக்கொண்டு வந்து, அறுத்து, வறுத்து வைத்திருக்கிறாள் என்பதை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஒரோதா வீட்டு முற்றத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தாள். வெண்டையும் பாகற்காயும் கத்திரிக்காயும் அவள் நட்டு வைத்து, தேவைப்படும் போது அவற்றிற்கு அவள் நீர் ஊற்றி மிகவும் கவனமாக பார்த்தாள். அவள் சொன்னாள் என்பதற்காக அதுவரை நான்கு வள்ளிக்கிழங்கு குச்சிகளைக் கொண்டு வந்து நட்டதைத் தவிர விவசாயத்தைப் பற்றிய எந்த விஷயமுமே தெரியாமல் இருந்த பாப்பன் வாழைக்கன்றை பூமியில் நட்டான். சேனையும் சேம்பும் நட்டான். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரோதா ஏற்றுக் கொண்டாள்.
“அருமையான குழந்தை...!”- ஒரு நாள் இரவில் முத்துகிருஷ்ணன் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாப்பனின் ரோமங்கள் அடர்ந்த உடம்பைத் தடவிக்கொண்டே ஜானம்மா சொன்னாள். “நீங்க அப்போ சொன்னது உண்மைதான். அவ உண்மையாகவே ஒரு நிதிதான்.”
“நான் சொன்னது உண்மைதான்டி. உண்மை இல்லாதது எதையும் இன்னைக்கு வரை இந்த வெட்டுக்காட்டு பாப்பன் சொன்னது கிடையாது” - பட்டைச் சாராயத்தின் போதையுடன் அவன் அவளை ஆக்கிரமித்தான்.
தையல்காரன் அப்பச்சன் கோட்டயத்திற்குப் போய் படித்து வந்து, பெண் குழந்தைகளுக்கான ஆடைகளின் புதிய மாடல்களை சேர்புங்கல் பள்ளிக் கூடத்தில் முதல் முதலாக வெளிப்படுத்தியதே ஒரோதா மூலம்தான்.
“என் மகள்தான் பள்ளிக்கூடத்துல படிக்குற பிள்ளைகளிலேயே நல்ல ஸ்டைலா போறது...” -பாப்பன் பலரிடமும் கூறுவான்.
ராக்குளி பெருநாள்கள் மீண்டும் வந்தன. போயின. பனிக்காலங்கள் வந்தன. பார்க்குமிடங்களிலெல்லாம் பனி உருகிக் கிடந்தது. மழை அலறிக்கொண்டு வந்தது. மீனச்சில் ஆறு நீரால் நிறைந்து பலமுறை பெருக்கெடுத்து ஓடியது. பலமுறை அது வடியவும் செய்தது.
ஒரோதா வளர்ந்து கொண்டிருந்தாள்.
நான்காம் வகுப்பு முடிந்ததும் பாப்பன் அவளை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் சேர்த்தான். அந்த விஷயத்தை ஜானம்மா பொதுவாக விரும்பவே இல்லை.
“பெண் குழந்தையை இங்கிலீஷ் படிக்க அனுப்பணுமா என்ன?” அவள் கேட்டாள். “அவளை என்ன வக்கீலாவா ஆக்கப் போறீங்க?”
அதைக் கேட்டு மற்ற நேரங்களைப் போல பாப்பன் கோபப்படவில்லை. அதற்குப் பதிலாக அவளுடைய வாதத்திலும் உண்மை இல்லாமல் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அவன் சொன்னான். “அவள் சின்னக் குழந்தை தானே ஜானம்மா? நல்லா படிக்கிறா. படிக்கிறது வரை படிக்கட்டும். நாம அதுக்குத் தடையா இருக்கக்கூடாது...”
“இல்ல... நான் சும்மா பேச்சுக்குச் சொன்னேன்...”
ஜானம்மாவின் மகன் முத்துகிருஷ்ணன் ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்றுக்கும் அதிகமான வருடம் படித்து நான்காம் வகுப்பில் தோற்று, படிப்பை அதோடு நிறுத்திக் கொண்டான். மாமா உறவு வரக்கூடிய ஒரு மனிதருடன் கொல்லர் வேலை செய்வதற்காக அவன் போக ஆரம்பித்தான். அதனால் ஒரோதாவுடன் விளையாட என்று யாருமே இல்லாமற் போன நேரத்தில் வெட்டுக்காட்டு பாப்பனைத் தேடி ஒரு சொந்தக்காரப் பையன் வந்தான். பாப்பனின் பெரியப்பாவின் மகள் த்ரேஸ்யாம்மாவின் இரண்டாவது மகன் குஞ்ஞுவர்க்கி ஒரு நாள் பாப்பனைத் தேடி வந்தான்.
“என்னடா?” - பாப்பன் கேட்டான்.
“நான் இனிமேல் இங்கேயே இருக்கப் போறேன்.”
“ம்... என்ன விஷயம்?”
“நான் நாலாம் வகுப்புல தோற்றுப் போனேன். அங்கே ஒரு வேலையும் இல்ல. என்னை இங்கேயே இருந்து படகு ஓட்டவோ இல்லாட்டி வேற ஏதாவது வேலையோ கத்துக்கச் சொல்லி அம்மா அனுப்பினாங்க...”
பாப்பன் அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். அவன் சின்னப் பையனாக இருந்தபோது எப்போதோ அவனைப் பாப்பன் பார்த்திருக்கிறான். அப்போதே அவன் ஒரு முட்டாளாகத்தான் இருந்தான். இப்போதும் அவன் அதே நிலையில்தான் இருக்கிறான் என்பது அவன் பெரிய கண்களையும் அசட்டுத்தனமான சிரிப்பையும் பார்க்கும் போது தெரிந்தது.
“ம்...” -பாப்பன் சிறிது இடைவெளிவிட்டு கேட்டான்.
“உங்கப்பன் எங்கேடா?”
“அங்கதான் இருக்காரு.”
“அந்த ஆளு என்ன சொன்னாரு?”
“ஒண்ணும் சொல்லல...”
“ம்...”- பாப்பன் முனகினான்.
குஞ்ஞுவர்க்கி பாப்பனுடன் சென்றான். படகு ஓட்ட கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். விவசாயம் செய்வதிலும் சமையல் வேலைகளிலும் அவன் ஒரோதாவிற்கு உதவியாக இருந்தான். ஞாயிற்றுக் கிழமைகளிலோ மற்ற நாட்களிலோ அபூர்வமாகவே முத்துகிருஷ்ணனைப் பார்க்க முடியும் என்றிருந்த குறைபாட்டை குஞ்ஞுவர்க்கி நிவர்த்தி பண்ணினான்.
அதனாலோ என்னவோ, குஞ்ஞுவர்க்கி அங்கு வந்தது ஒரோதாவின் மீது ஏகப்பட்ட பிரியம் வைத்திருந்த முத்துகிருஷ்ணனுக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. குஞ்ஞுவர்க்கி தன்னுடைய வயதை ஒத்தவன்தான். இருந்தாலும் குஞ்ஞுவர்க்கி ஒரு கிறிஸ்தவன் என்பதை முத்துகிருஷ்ணன் நினைத்துப் பார்த்தான். போதாததற்கு அவன் பாப்பனுக்குச் சொந்தக்காரனும் கூட. அங்கேயே வேறு அவன் தங்கியிருந்தான். குஞ்ஞுவர்க்கிக்கு தன்னைவிட சுதந்திரமாக ஒரோதாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதையும், அவன் அவனுடன் நெருங்கிப் பழுகுவதற்கான சூழ்நிலை அதிகம் இருக்கிறது என்பதையும் நினைத்துப் பார்த்த போது குஞ்ஞுவர்க்கி மேல் அவனுக்கு இனம் புரியாத பொறாமையும் வெறுப்பும் உண்டானது.
பணம் படைத்தவர்களின் நிலத்திலிருக்கும் பெரிய மாமரங்களில் ஏறி ஒரோதாவிற்கு தான் மாங்காய் பறித்துத் தந்த நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். அப்போது அவன் மரத்தின் உச்சியில் அமர்ந்திருப்பான். எறும்புகள் அவனைக் கடித்துக்கொண்டிருக்கும். ஒரு கையை மரக்கிளையில் பற்றிக்கொண்டு இன்னொரு கையால் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கும் எறும்புகளை விரட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் அந்த கஷ்டமான நிமிடங்களை மனதில் அசை போட்டுப் பார்த்தான். இப்போது எறும்புகள் மனதைக் கடித்துக் கொண்டிருக்கின்றன. அதை விரட்டி எறிய அவனால் முடியவில்லை.
ஒரோதாவிற்கு ஒவ்வொரு காரியமும் செய்வதில் முத்துகிருஷ்ணனுக்கும் குஞ்ஞுவர்க்கிக்கும் ஒரு போட்டியே நடைபெற்றது. ஒரோதாவின் முன்னால் தங்களின் திறமையைக் காட்டுவதில் இருவருமே போட்டி போட்டனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாமரங்களில் ஏறி எறும்பிடம் நன்றாகக் கடி வாங்கினார்கள். மாம்பழத்தை முதலில் ஒரோதாவிற்கு யார் எறிவது என்பதில் இருவருக்குள்ளும் போட்டி. ஒரோதா மரத்திற்குக் கீழ் நின்று சிரித்தவாறு கைகளைத் தட்டி இருவரையும் உற்சாகப்படுத்தினாள். ஒரோதாவை சாட்சியாக நிறுத்தி அவர்கள் ஓட்டப் பந்தயம் வைத்தார்கள். போட்டிப் போட்டு நீந்தினார்கள். இருவரும் கடுகுமணி அளவு கூட விட்டுக்கொடுக்காமல் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இருந்தாலும் இலேசாக முன்னால் நின்றதென்னவோ முத்துகிருஷ்ணன்தான். ஆனால் அந்த விஷயத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு குஞ்ஞுவர்க்கிக்கு ஒரு வழி இருந்தது. ஒரோதாவுடன் அதிக நேரம் செலவழிக்க அவனுக்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. மாமனிடம் ஏதாவது காரணத்தை கூறிவிட்டு சீக்கிரமே ஆலையிலிருந்து ஓடிவரவும், கிடைத்த நேரத்தில் ஒரோதாவிடம் வந்து பேசிக் கொண்டிருக்கவும் பல நேரங்களில் முயற்சித்தான் முத்துகிருஷ்ணன்.
ஒருநாள் பல்வேறு காரணங்களாலும் முத்துகிருஷ்ணனுக்கும் குஞ்ஞுவர்க்கிக்கும் இடையில் சண்டை உண்டாகிவிட்டது. ஒருவரையொருவர் அடித்துக் கெண்டார்கள். இருவரும் மணலில் கிடந்து உருண்டார்கள். ஒருவரையொருவர் பிடித்துக் கீழே தள்ளினார்கள். மிதித்து உதைத்துக் கொண்டார்கள். கடைசியில் ஒரோதா வந்து சத்தம் போட்டபிறகுதான் சண்டையே முடிவுக்கு வந்தது. காரணம் அப்படியொன்றும் பெரிதில்லை. விபரத்தைத் தெரிந்து கொண்ட பாப்பன் இருவரையும் பிடித்து அடித்தான்.
“அவன் என்னை கெட்ட வார்த்தையால் திட்டினான்” - என குஞ்ஞுவர்க்கி சொன்னான்.
“கடவுள் சத்தியமா சொல்றேன். அவன்தான் முதல்ல சொன்னான்” - இது முத்துகிருஷ்ணன்.
“அவன்தான்...!”
“அவன்தான்...”
“ச்சீ... பேசாம இருங்கடா...” பாப்பன் உரத்த குரலில் சத்தமிட்டான். சிறுவர்கள் அமைதியானவுடன் அவன் தொடர்ந்தான். “இன்னிக்கு உங்களை சும்மா விடுறேன். இனி இந்த மாதிரி நடந்தால், ரெண்டு பேரையும் நான் சும்மா விடுறதா இல்லை. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.”
அதற்குப் பிறகு முத்துகிருஷ்ணனுக்கும் குஞ்ஞுவர்க்கிக்கும் இடையில் அடிதடி எதுவும் உண்டாகவில்லை. ஆனால் பொறாமையும் எரிச்சலும் இருவரின் மனதிற்குள்ளும் நீறுபூத்த நெருப்பாய் புகைந்து கொண்டிருந்தன.
சம வயதைக் கொண்ட மற்ற சிறுமிகளைவிட சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் ஒரோதாவிற்கு அதிகமாக இருந்தன. அந்தக் காரணத்தாலோ என்னவோ ப்ரிப்பரேட்டரி வகுப்பிலிருந்து ஃபர்ஸ்ட் ஃபாரத்திற்கு தேர்ச்சி பெற்ற ஒரு கோடை விடுமுறையின் போது பிரகாசமான பகல் வேளையில் அவள் பூப்பெய்தினாள்.
ஜானம்மா சொல்லித்தான் பாப்பனுக்கே விஷயம் தெரியவந்தது. ஜானம்மா வீட்டிற்கு பாப்பன் அதிகம் போகாமல் குறைத்துக் கொண்டிருந்த காலம் அது. அவள் விஷயத்தைச் சொன்னதும் அவன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டான்.
“அடியே!” விஷயம் எந்த அளவுக்கு ஆயிருக்கு பார்த்தியா? என் குழந்தை வயசுக்கு வந்துட்டான்னா என்ன அர்த்தம்? நான் எந்த நேரத்திலும் தாத்தாவாகப் போறேன்னுதானே அர்த்தம்?” பாப்பனின் பரபரப்பிற்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது... “இனிமேல் நான் இப்படி நடக்குறது சரியாடி...?”
“எப்படி?” -கவர்ச்சியாக சிரித்தபடி ஜானம்மா கேட்டாள்.
“இல்ல... சின்னப் பசங்களைப் போல உன்கூட...”
“நீங்க பேசுறத யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க? என்கூடத்தான் எப்பவும் நீங்க இருக்கீங்கன்னு நினைப்பாங்க. நீங்க என் கூட இருந்து எவ்வளவு நாட்களாச்சு? நான் ஒவ்வொரு நாளும் கண்ணுல எண்ணெயை ஊத்திக்கிட்டு நீங்க வரமாட்டீங்களான்னு வாசல்படியிலேயே உட்கார்ந்துகிட்டு இருப்பேன். வந்தா உண்டு... இல்லாட்டி இல்ல. ஆனா இப்ப நீங்க பேசறதைப் பார்த்தா... இங்க பாருங்க.... இங்கே வாங்க... உங்களை நான் விடமாட்டேன்” என்று சொல்லியவாறு அவள் அவனைப் பிடித்து இழுத்து தன்னுடன் சேர்த்து வைத்து அணைத்துக் கொண்டாள்.
இனிமேல் ஒரோதாவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று ஜானம்மா கூறியதை பாப்பன் கேட்டுக் கொண்டான். விவசாய வேலை, சமையல் செய்வது, படகு ஓட்டுவது, தூண்டில் போடுவது ஆகியவற்றுடன் முத்துகிருஷ்ணன், குஞ்ஞுவர்க்கி ஆகியோருடன் சேர்ந்து ஒரோதாவும் வளர்ந்தாள். அவளுடைய கை, கால்களில் சதைப் பிடிக்க ஆரம்பித்தது. முகத்திலும்தான். உதடுகள் சிவக்க ஆரம்பித்தன. கண்களின் மேலும் பிரகாசம் கூடியது. ராக்குளி பெருநாள்களும், மழைக்காலங்களும் வந்து போய்க்கொண்டிருந்தன. ஆபத்தான குமரிப்பருவத்தின் உச்சத்தை நோக்கி ஒரோதா சின்னச் சின்ன எட்டாக வைத்து நடைபோட்டுக் கொண்டிருந்தாள்.
நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் உதடுகளுக்கு மேல் முளைத்த அரும்பு மீசைகளுடன் முத்துகிருஷ்ணனும் குஞ்ஞுவர்க்கியும் வாலிபப் பருவத்தில் கால் வைத்தனர். ஜானம்மா சொன்னபடி ஒரோதா ஆண் பிள்ளைகளுடன் பழகாமல் ஒதுங்கியிருக்கக் கற்றுக்கொண்டாள். அவர்கள் அருகில் நெருங்கி வரும்போது அவள் வெட்கத்துடன் ஒரு மூலையில் ஒதுங்கி கதவுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள்.
இதற்கிடையில் ஒருநாள் சாயங்காலம் முத்துகிருஷ்ணனின் மாமா மகள் கமலாட்சியும் ஒரோதாவும் சேர்ந்து கடை வீதிக்குப் போய்விட்டு வரும்போது சேர்ப்புங்கல்லின் முக்கிய புதுப் பணக்காரனான மடுக்காம்குழி தேவஸ்யாவின் மகன் கொச்சு தொம்மியும் அவனுடைய நண்பர்களும் வழியில் நின்றிருந்தார்கள். கொச்சு தொம்மி ஒரோதாவைப் பார்த்து கிண்டல் பண்ணினான். ஒரோதா திரும்பி நின்று அவனைப் பார்த்து திட்டினாள்.
“உன்னை நான் பார்த்துக்கிறேன்” என்று அவன் அவளைப் பார்த்து சவால் விட்டான். “மடுக்காம்குழி தேவஸ்யாவோட மகன் எப்படிப்பட்ட ஆள்னு நீ புரிஞ்சுக்குவ” என்றான்.
“வெட்டுக்காட்டு பாப்பனோட மகளை பயமுறுத்துறதுக்கு நீ இல்ல... உன் அப்பனே நினைச்சாலும் நடக்காதுடா” அவள் அவனைப் பார்த்து சவால் விட்டாள்.
“நீ யாரோட மகள்னு பாப்பன்கிட்ட போயி கேளு.”
கொச்சு தொம்மியின் நண்பர்கள் அதற்கு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“ப்பூ... ஆத்து வெள்ளத்துல மிதந்து வந்த ஊத்தை நீ...” -கொச்சுதொம்மி சொன்னான். அதைக் கேட்டு அவனுடைய நண்பர்கள் உரத்த குரலில் கேலியாகச் சிரித்தார்கள்.
அவமானத்தால் குன்றிப்போன ஒரோதா, நேராக வீட்டிற்குப் போகவில்லை- படகுத்துறைக்குப் போனாள். பாப்பனின் முன்னால் போய் நின்று அவள் தேம்பித் தேம்பி அழுதாள். “அப்பா... நான் யாரு? சொல்லுங்க... நான் யாரு? நான் எங்கேயிருந்து வந்தேன்?”
“நீ என் மகள்டா...” - அவன் அவளைத் தேற்ற முயன்றான்.
“இல்ல... இல்ல... இல்ல...” - அவள் அழுதுகொண்டே இருந்தாள். அவன் திரும்பத் திரும்பக் கேட்டும் அவள் எதுவுமே சொல்லத் தயாராக இல்லை. கடைசியில் கமலாட்சியிடம் கேட்ட பிறகுதான் நடந்த விஷயங்கள் பாப்பனுக்குத் தெரிய வந்தன. அவ்வளவுதான் பாப்பன் எரிமலையானான். ஒரு புயலைப்போல எழுந்து அவன் மடுக்காம்குழி தேவஸ்யாவின் பெரிய பலசரக்குக் கடைக்குச் சென்றான்.
“உன் பையனை இங்கு கொண்டு வர்றியா இல்லியா தேவஸ்யா?” - பாப்பன் கத்தினான். “இல்லைன்னா அப்பன், பிள்ளை ரெண்டு பேரோட பொணமும் மீனச்சில் ஆத்துல மிதக்கும். வெட்டுக்காட்டு பாப்பன் சொல்றேன்றதைப் புரிஞ்சுக்கோ...” என்றான். புதுப்பணக்காரனான தேவஸ்யா அஞ்சி நடுங்கி, “என்ன விஷயம்?” என்று கேட்டான். உண்மை தெரிந்தவுடன் தேவஸ்யா சொன்னான். “பாப்பன்... மன்னிச்சிடு... நான் என் பையன்கிட்ட கேட்டுக்கறேன். இனியொரு தடவை இப்படிப்பட்ட சம்பவமே நடக்காது.”
எல்லோருக்கும் தெரியும்படி நடைபெற்ற இந்த அவமான சம்பவத்தை தேவஸ்யாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாப்பனை அவன் தன்னுடைய விரோதியாக நினைக்க ஆரம்பித்தான். அவனை அழிப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி அந்த இடத்திலிருந்தே திட்டமிட்டு செயல்பட ஆரம்பித்தான் தேவஸ்யா.
ஒரோதாவைத் தேடி வந்த ஒவ்வொரு திருமண விஷயமும் நடக்காமல் போனதற்குப் பின்னால் மடுக்காம்குழி தேவஸ்யாவின் சதி வேலைகள் மறைந்திருக்கின்றன என்பதை வெட்டுக்காட்டு பாப்பன் கனவில் கூட எண்ணிப் பார்க்கவில்லை. வந்து பெண்ணைப் பார்த்தவர்கள் அவளை மிகவும் பிடித்துப் போய், மற்ற விவரங்களை ஊருக்குப்போய் தெரிவிக்கிறோம் என்று கூறிவிட்டுப் போவார்கள். பிறகு பார்த்தால் யாராவது ஒரு ஆள் மூலம், “இந்த கல்யாணத்துல எங்களுக்கு விருப்பம் இல்ல...” என்று கூறி அனுப்பி விடுவார்கள். எல்லோரும் சொன்னது ஒரே காரணம்தான் வெட்டுக்காட்டு குடும்பத்தைப் பற்றி அவர்கள் தவறுதலாக எதுவும் கூறவில்லை. ஆனால் என்னதான் இருந்தாலும் ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த குழந்தைதானே? அதன் குலம் என்ன, குடும்பப் பின்னணி என்ன, ஜாதி என்ன, மதம் என்ன என்று யாராலும் கூற முடியுமா? இது ஒன்றுதான் அவர்களின் குற்றச்சாட்டு.
இதையெல்லாம் பார்த்து பாப்பன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். வெளியே இருள் மூடிக்கிடக்கும் இரவு நேரங்களில் பக்கத்து அறையில் முத்துகிருஷ்ணன் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருக்க , காமக்களியாட்டங்கள் எதிலும் ஈடுபடாமல் கடந்த காலங்களில் தாங்கள் கொண்ட உடல்ரீதியான தொடர்பு நிகழ்ச்சிகளை முற்றிலுமாக மறந்துவிட்டு பாப்பனும் ஜானம்மாவும் அருகருகில் அமர்ந்து பொறுப்புகள் உள்ள இரண்டு பாதுகாவலர்களைப் போல இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இரவு மேலும் இருண்டு போய்க் கொண்டிருந்தாலும் மண்ணெண்ணெய் விளக்கு முழுமையாக எரிந்து முடிந்ததுதான் உண்மையிலேயே நடந்ததே தவிர, இந்த பிரச்சினைக்கு எந்தவொரு முடிவையும் அவர்களால் எடுக்கவே முடியவில்லை.
கடைசியில் ஒருநாள் இரவு நேரத்தில் ஒரு எண்ணம் ஜானம்மாவின் மனதில் உதித்தது. பாப்பனின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்தவளாகையால் தயங்கித் தயங்கித்தான் அந்த விஷயத்தையே அவள் பாப்பனிடம் சொன்னாள்.
“நான் ஒரு விஷயம் சொல்றேன். உங்களுக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம். தேவையில்லாமல் என்னை அடிக்ககிடிக்க வந்துராதீங்க...”
“சரி... சொல்லு...”
“நான் சொல்றதைக் காது கொடுத்துக் கேட்கணும். என்கிட்ட தேவையில்லாம ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது...” ஜானம்மா மீண்டும் தயங்கியவாறு நின்றாள்.
“ச்சே... சீக்கிரம் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?”
தயங்கித் தயங்கி அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவாறு ஜானம்மா கடைசியில் அந்த விஷயத்தைச் சொன்னாள். “நம்ம குஞ்ஞுவர்க்கியை ஒரோதாக்குட்டிக்கு...”
“குஞ்ஞுவர்க்கியையா?” -பாப்பன் கோபத்துடன் எழுந்தான்.
“அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேன். கோபப்பட்டு என்கிட்ட தகராறு பண்ணக்கூடாதுன்னு” -ஜானம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள். “உக்காருங்க... நான் முழுசா சொல்லி முடிச்சிர்றேன்...” -அவள் அவன் கையைப் பிடித்து உட்கார வைத்தாள். “ஆமா... தெரியாமத்தான் கேக்குறேன். அவனுக்கு என்ன குறைச்சல்? அப்படியே அவனுக்கு கொஞ்சம் அறிவும் புத்திசாலித்தனமும் குறைச்சலா இருக்குன்னுகூட வச்சுக்குவோம். கடவுள் அதைச் சரி பண்ணுற மாதிரி தேவையான அறிவையும் புத்திசாலித்தனத்தையும் நம்ம ஒரோதாவுக்கு கொடுத்திருக்காரு.”
அதைக் கேட்டு வெட்டுக்காட்டு பாப்பன் அவளைத் தட்டிவிட்டு எழுந்தான். வாசலுக்கு வந்தான். ஆகாயத்தில் கண் சிமிட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்குக் கீழே, இரவின் மங்கலான ஒளியில் எதையோ ஆழமாகச் சிந்தித்தவாறு இங்குமங்குமாய் நடந்தான். கடைசியில் அவன் ஜானம்மாவிடம் ஒரு வார்த்தைகூட கூறாமல் தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான்.
“என்ன... ஒண்ணுமே பேசாம போறீங்க?”
ஜானம்மாவின் கேள்வியே காதில் விழாத மாதிரி பாப்பன் இருட்டிலிருந்து இருட்டை நோக்கி நடந்தான்.
திருமணச் சடங்குகள் அனைத்தும் படுவேகமாக நடந்தன. திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன், முத்துகிருஷ்ணனின் நடத்தையே முற்றிலும் மாறிவிட்டது. அவன் உண்மையான அன்புடன் குஞ்ஞுவர்க்கியை கட்டிப் பிடித்துக்கொண்டான். அவன் கன்னத்தில் முத்துகிருஷ்ணன் முத்தமிட்டபின், “குஞ்ஞுவர்க்கி, நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ஒரோதாவைப் போல ஒரு பொண்ணு கெடைக்கிறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்.” என்றான் அவன். அதைக் கேட்டு குஞ்ஞுவர்க்கி வெட்கத்துடன் சிரித்தான். திருமண நாளன்று இரவு வெட்டுக்காட்டு பாப்பன் தன் விருப்பப்படி குடித்தான். இரவில் வேகவேகமாய் அவன் ஜானம்மாவின் வீட்டிற்கு வந்தான். சிம்னி விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு அவள் வெளித்திண்ணையில் அவனுக்காகக் காத்திருந்தாள். முத்துகிருஷ்ணன் சமீப காலமாக இரவில் தூங்குவது கமலாட்சியின் வீட்டில் என்று வைத்துக்கொண்டிருந்ததால், ஜானம்மா மட்டும் தனியே வீட்டில் இருந்தாள். வேகமாக வந்த பாப்பன் கீழே விழப்போவது மாதிரி திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த மரத்தூண் மேல் சாய்ந்தவாறு குழைந்த குரலில் கேட்டான். “உன் மகன் எங்கேடி?”
“அவன் அவனோட மாமா வீட்டுக்குப் போயிருக்கான்.”
“ரொம்ப நல்லதாப்போச்சு” - பாப்பன் குழைவான குரலில் கூறியவாறு சிரித்தான். “நான் இன்னைக்கு இங்கேதான் தூங்கப்போறேன்.”
“அப்படியா?” ஜானம்மா சிரித்தாள். “இந்த வயசுக் காலத்தில சின்னப் பையன்னு நினைப்பா?”
“யாரைப் பார்த்து வயசாச்சுன்னு சொல்ற?” பாப்பன் கையை நீட்டி அவளை இழுத்து தன் மடியின்மேல் படுக்கப் போட்டான். ஜானம்மா அடுத்த நிமிடம் விளக்கை வாயால் ஊதி அணைத்தாள்.
சிறிது நேரம் சென்றதும் பாப்பன் சொன்னான். “அடியே ஜானு... நீ சொன்னது சரிதான். நமக்கு வயசாயிடுச்சு. நமக்கு இல்ல; உனக்கு... இப்போ வயசு அறுபதை நெருங்கிடுச்சு...!”
ஒரு பூனைக்குட்டியைப் போல அவன் நெஞ்சோடு சேர்ந்து படுத்துக்கொண்டு அவன் நெஞ்சுப் பகுதியில் இருந்த ரோமங்களை விரல்களால் தடவியவாறு ஜானம்மா கொஞ்சுகிற குரலில் சொன்னாள். “ஆயிரம் சொல்லுங்க... என்னைப் பொறுத்தவரை நீங்க என்னைக்குமே இளவட்டம் தான். அன்புக்கு வயசிருக்கா என்ன?” பனியின் கொடுமையிலிருந்து காப்பாற்றும் எண்ணத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். நடுத்தர வயதைத் தாண்டிய அவர்கள் தங்களின் இளமையைப் புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
திருமணம் முடிந்தவுடன், சிறுபிள்ளைகளுக்கே உரிய பல பழக்க வழக்கங்களும் ஒரோதாவை விட்டுப் போக ஆரம்பித்தன. பக்குவப்பட்ட ஒரு மனைவியைப் போல, குடும்ப வாழ்க்கையில் நன்கு தேர்ந்த ஒரு இல்லத்தரசியைப் போல அவள் நடந்து கொண்டாள். பகல் முழுவதும் அவள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்தாள். கணவனையும் தந்தையையும் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டாள். இரவு நேரங்களில் கணவனுடன் சேர்ந்து உறங்கினாள். காலையில் எழுந்து தன் கணவனின் காலைத் தொட்டு வணங்கி அன்றைய காரியங்களைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டாள்.
ஒரோதா கர்ப்பவதி ஆனாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஒரோதாவைத் தூக்கிக் கொண்டு நடந்த மாதிரி, தன்னுடைய பேரக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.
“நல்லவேளை... இவனுக்கு பால் எங்கே கிடைக்கும்னு பொம்பளைகளைத் தேடி அலைய வேண்டியது இல்ல...” - பாப்பன் ஜானம்மாவிடம் சொன்னான்.
“இதைச் சொல்றதுக்கு வெட்கமாக இல்லியா?” ஜானம்மா செல்லமாக அவனைப் பார்த்து கோபித்தாள்.
பாப்பன் மீண்டும் இளைஞனைப் போல மாறினான். அவன் கஷ்டப்பட்டு வேலை செய்தான். விருப்பப்படி குடித்தான். அடிபிடி சண்டைக்குப் போனான்.
ஒரோதாவின் இரண்டாவது குழந்தைக்கு ஏழுமாதம் ஆனபோது அந்த வருடத்தின் ராக்குளிபெருநாள் வந்தது. திருவிழாவிற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து பாலா பெரிய சர்ச்சுக்குப் போனார்கள். திரும்பும்போது ஒரோதாவிடம் பாப்பன் சொன்னான். “மகளே நீயும் பிள்ளைகளும் குஞ்ஞுவர்க்கி கூட போங்க. நான் பிறகு வர்றேன்...”
அவர்கள் கிளம்பினார்கள். பிள்ளைகளும் கணவனும் உறங்கின பிறகுதான் ஒரோதா தூங்கவே ஆரம்பித்தாள். என்றாலும், அவள் பொழுது புலர்வதற்கு முன்பே தூக்கம் கலைந்து எழுந்தாள். வாசலில் தன் தந்தையைக் காணோம் என்றதும் அவள் வீட்டிற்குள் வந்து குஞ்ஞுவர்க்கியைத் தட்டி எழுப்பினாள். “இங்க பாருங்க... அப்பா வரவே இல்லை போல இருக்கே.” பாப்பனுக்கும் ஜானம்மாவுக்கும் இடையில் இருக்கும் உறவை நன்கு தெரிந்து வைத்திருந்த குஞ்ஞுவர்க்கி லேசாகச் சிரித்தவாறு கூறினான். “எப்படியும் வருவாரு. கவலைப்படாதே...” அப்போது முத்துகிருஷ்ணன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தான். “ஒரோதா... குஞ்ஞுவர்க்கி… சீக்கிரம் துணியை மாத்திட்டு கிளம்புங்க. ராத்திரி வழியில கத்தி குத்து நடந்திருச்சு. மடுக்காம்குழிக்காரங்களோட ஆளுங்க ஒரு இடத்துல மறைஞ்சிருந்து பாப்பன் அண்ணனை தாக்கியிருக்காங்க. பாப்பன் அண்ணன் அவங்களைக் குத்திட்டாரு. வந்தவங்கள்ல ரெண்டுபேரு அந்த இடத்துலேயே செத்துப் போயிட்டாங்க. பாப்பன் அண்ணனுக்கும் கத்தி குத்து விழுந்திருச்சு. இப்போ அவரு ஆஸ்பத்திரியில இருக்காரு. சீக்கிரம் கிளம்புங்க. நாம எல்லாரும் அங்கே போகணும்...”
“அப்பா... என் அப்பா...” -ஒரோதா நின்றிருந்த இடத்திலேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தாள்.
கிழக்குத் திசையில் ஆகாயத்தில் அந்த அதிகாலை வேளையில் சூரியனின் முதல் கதிர்கள் தெரிய ஆரம்பித்தன.
மடுக்காம்குழி கொச்சுதொம்மி ஆற்று வெள்ளத்தில் மிதந்து வந்த ஊத்தை என்று தன்னைப் பற்றி கூறிய நாளன்று இரவில் பாப்பன் தன்னிடம் சொன்ன கதை, தன்னை அவன் பார்த்த வரலாறு, தன்னுடைய பிறப்பைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை ஆகியவற்றைக் கேட்டபோது ஒரோதாவிற்கு மனதில் இனம் புரியாத வேதனை தோன்ற ஆரம்பித்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தான் ஒரு அனாதை என்ற எண்ணம் அவளுக்கு உண்டாக ஆரம்பித்தது. தனக்கென்று உலகில் யாரும் இல்லை என்ற சிந்தனை அவள் மனதில் ஒருவித வெற்றிடத்தை உண்டாக்கியது. அந்த வெற்றிடத்தை அவள் மறக்க கண்டுபிடித்த வழி- தனக்கு உயிர் தந்த அந்தப் பெரிய மனிதனிடம், தன்னுடைய சொந்தத் தாயின் பெயரை தனக்கு வைத்து அந்தப் பெயரால் தன்னை அழைத்து அன்புடன் தன்னை வளர்த்த வளர்ப்புத் தந்தையிடம் மேலும் நெருக்கத்தை உண்டாக்கிக் கொண்டதுதான். மனைவியாக ஆனபோது, தாயாக ஆனபோது அவள் மேல் புதிய பொறுப்புகள் வந்து சேர்ந்தன. அந்தப் பொறுப்புகளையும் சுமைகளையும் பெரிதாக எண்ணி அவள் செயல்பட்ட போது தான் ஒரு அனாதை என்பதையும், தான் ஒரு முக்கியத்துவம் இல்லாத பெண் என்பதையும் மனதில் தோன்றிய வெற்றிடத்தையும் கிட்டத்தட்ட அவள் மறந்தே போனாள். ஆனால், அவளுக்கு எல்லாமுமாக இருந்த வளர்ப்புத் தந்தை கொஞ்சமும் எதிர்பார்க்காமலேயே அவளை விட்டு நிரந்தரமாக நீங்கியது பார்வையே தெரியாத அளவிற்கு இருள் நிறைந்த ஒரு அதலபாதாளத்தில் அவளை விழச்செய்துவிட்டது. சிறிது கூட வெளிச்சத்தின் ரேகையே தெரியாத அந்தக் குழிக்குள் கிடந்து அவள் புழுவென துடித்துக் கொண்டிருந்தாள்.
உலகம் என்றால் என்னவென்றே தெரியாத இரண்டு குழந்தைகள் அவளுக்கு. குழந்தைகளை விட குழந்தையாக இருந்த அவளின் கணவன் குஞ்ஞுவர்க்கி காலை நேரம் வந்ததும் படகு ஓட்டக் கிளம்பி விடுவான். தொழிலில் பாப்பன் மாதிரி பணம் சம்பாதிப்பதற்கான சாதுரியம் அவனிடம் கிடையாது. மாமனிடம் இருந்த கள்ளுக் குடி பழக்கம் மட்டும் பரம்பரை நோய் மாதிரி அவனையும் தொற்றிக் கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பனங்கள்ளைக் குடித்துவிட்டு சீட்டு விளையாடிவிட்டு நடக்க முடியாமல் நடந்து வீட்டுக்குள் நுழையும் குஞ்ஞுவர்க்கியின் மடியில் மருந்துக்குக்கூட காசு இருக்காது. சில நேரங்களில் மூத்த பையனுக்காக இரண்டு வாழைப்பழத்தையோ, இல்லாவிட்டால் இரண்டு நெய் அப்பத்தையோ அவன் வாங்கிக் கொண்டு வருவான்.
சீட்டு விளையாடும் நாட்களில் பொதுவாக அவன் ரொம்பவும் தாமதமாகத்தான் வீட்டுக்கே வருவான். வந்தவுடன் வீட்டில் என்ன இருக்கிறதோ அதைச் சாப்பிட்டுவிட்டு அடுத்த நிமிடம் பாயில் போய் விழுவான். விழுந்த அடுத்த நிமிடமே புதர்களில் காற்றடிக்கிற மாதிரி குறட்டை விட்டுக்கொண்டே அவன் உறங்கிப் போவான். பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் குஞ்ஞுவர்க்கியை, சுற்றியிருக்கும் இருட்டையே பார்த்தவாறு உட்கார்ந்திருக்கும் ஒரோதா மனதிற்குள் நினைத்துப் பார்ப்பாள். அவன் மீது அவளுக்கு வெறுப்புத் தோன்றவில்லை. மாறாக, ஒருவகை பரிதாப உணர்ச்சியே உண்டானது. கள்ளு குடிப்பதற்கு எதிராகவும், சீட்டு விளையாடுவதற்கு எதிராகவும் அவள் கடுமையான வார்த்தைகளைச் சொல்லி அவனைத் திட்டுகிற நிமிடங்களில் அவன் ஒருபோதும் அவளிடம் வாதம் செய்ததில்லை. அதற்கு மாறாக செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு அழுதவாறு அவள் கால்களில் விழுவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனைப் பார்த்து அவள் எப்படி கோபம் கொள்ள முடியும்? அதனால் அவள் தன் மனதிற்குள் தோன்றிய வேதனையை தானே யாருக்கும் தெரியாமல் அடக்கிக் கொண்டாள். விளக்கை அணைத்துவிட்டு படுத்தாலும் அவளுக்கென்னவோ ஒரு பொட்டு தூக்கம் கூட வராது. தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய கவலை நிறைந்த சிந்தனைகள் அவளைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கும். இப்படிச் சிந்தித்து சிந்தித்து தளர்ந்து போய் பின்னிரவு நேரத்தில்தான் அவளுக்குத் தூக்கம் என்பதே வரும். எவ்வளவு தாமதமாய் படுத்தாலும் அதிகாலையில் மீண்டும் சீக்கிரமே எழுந்துவிடுவாள். கவலை நிறைந்த அவளின் பகல் பொழுது மீண்டும் தொடரும்.
குடிப்பழக்கம் குஞ்ஞுவர்க்கியை ஒரு பயங்கர சோம்பேறியாக மாற்றிவிட்டிருந்தது. விவசாய வேலைகளில் பொதுவாக அவன் ஆர்வமே எடுத்துக்கொள்வதில்லை. வயல் வேலைகளையும் வீட்டில் சமையல் வேலைகளையும் ஒரோதா ஒருத்தி மட்டுமே பார்த்துக் கொண்டாள். சில நேரங்களில் மீன் பிடிப்பதற்கும் படகு ஓட்டவும்கூட அவள் போவாள்.
அவளைச் சுற்றியிருந்த வாழ்க்கைச் சூழலும் பயங்கரம் நிறைந்ததாகவே வெட்டுக்காட்டு பாப்பன் என்ற ஒரு மனிதன் இல்லாததால் மடுக்காம்குழிக்காரர்களின் செல்வாக்கு பல மடங்கு அதிகரித்திருந்தது. அவர்கள் பல நேரங்களில் தேவையில்லாமல் குஞ்ஞுவர்க்கியிடம் தகராறு பண்ணினார்கள். ஒன்றிரண்டு முறை ஒரோதாவுடன் வீண் வம்புக்கு வரக்கூட அவர்கள் முயன்றார்கள். ஆனால், அவள் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை. முத்துகிருஷ்ணனும் ஜானம்மாவும் மட்டும்தான் அவளுக்குத் துணையாக இருந்தவர்கள். இதற்கிடையில் முத்துகிருஷ்ணன் கமலாட்சியைத் திருமணம் செய்துகொண்டான். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரோதா மனப்பூர்வமாக சந்தோஷப்பட்ட நாள் அதுதான்.
ஊரில் வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும் நிறைந்ததாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் வெளியே போய்விட்டு திரும்பி வந்த குஞ்ஞுவர்க்கி, ஒரோதாவிடம் சொன்னான். “இங்க இருக்கவங்கள்ல நிறைய பேரு மலபாரைத் தேடி போறாங்க. எங்க சித்தப்பாமார்களும், பெரியப்பன்மார்களும், சொந்தக்காரங்களும் எல்லாருமே போறாங்க. மலபார் பக்கம் குறைவான விலையில் பூமி கிடைக்குதாம். இங்கே இருக்குற எல்லாத்தையும் வித்துட்டு நாமும் மலபார் பக்கம் போனா என்ன?”
ஒரோதா அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. ஆனால் அந்த விஷயத்தைப் பற்றி தீவிரமாக அவள் சிந்தித்துப் பார்த்தாள். பலரும் மலபார் பக்கம் போய் குடியேறிக் கொண்டிருப்பதை அவளும் நித்தமும் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள். அங்கே போனால் குறைவான விலைக்கு நிலம் கிடைக்கும். வாங்குவதற்குத் தேவையான நல்ல இடத்தை அங்கு வாங்கலாம். நல்ல மண். ஆனால், கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். வேலை செய்தால், கட்டாயம் அதற்குரிய பலன் இருக்கவே செய்கிறது. ஒளிமயமான ஒரு எதிர்காலம் அவளின் மனதில் உதித்து வந்தது. மலபார் ஒரு இனிய கனவாக அவளுடைய உள்ளத்தின் அடித்தளத்தில் முகம் காட்டியது. இந்த விஷயத்தைக் குறித்து முத்துகிருஷ்ணன், கமலாட்சி, ஜானம்மா எல்லோரிடமும் அவள் பேசிப் பார்த்தாள். அவர்கள் பொதுவாகவே இது ஒரு நல்ல தீர்மானம்தான் என்று கூறினார்கள். திரும்பி வந்த அவள் குஞ்ஞுவர்க்கியிடம் சொன்னாள். “இன்னொரு விஷயம்... அங்கே போன பிறகு கள்ளு குடிச்சிட்டு சும்மா சுற்றித் திரியக்கூடாது. அது நடக்காத விஷயம். அங்கே இருக்கிறதா இருந்தா ஒழுங்கா வேலை செய்யணும்.”
நன்கு குடித்திருந்த குஞ்ஞுவர்க்கி நாக்கு குழைய திணறித் திணறிச் சொன்னான். “அப்படியே நான் ஒழுங்கா நடப்பேன்... ஒழுங்கா... ஒழுங்கா... போதுமா?”
அதற்குப் பிறகு அவள் தாமதிக்கவில்லை. எல்லா வேலைகளும் படுவேகமாக நடந்தன. கையில் இருந்த நிலத்தை அவள் விற்றாள்.
பூவரணி, பைகா, பிண்ணாக்கநாடு, தம்பலக்காடு ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட ஏராளமான சொந்தக்காரர்களும், நன்கு தெரிந்தவர்களும் இதற்கு முன்பு அறிமுகமே இல்லாதவர்களும் அடங்கிய ஒரு பெரிய கூட்டத்தில் ஒரோதாவும் குஞ்ஞுவர்க்கியும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் இணைந்து கொண்டார்கள். கமலாட்சி கர்ப்பமா இருந்ததால், முத்துகிருஷ்ணனும் அவன் குடும்பமும் அப்போது புறப்படவில்லை. எல்லோரும் கிளம்புகிற நேரத்தில் முத்துகிருஷ்ணன் சொன்னான். “நாங்க பின்னாடி வர்றோம். எங்களுக்கும் கொஞ்சம் பூமியைப் பார்த்து வச்சிரு...”
ஜானம்மா ஒரோதாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். “மகளே ஒன்பது மாத குழந்தையா நீ இருந்தப்போ உங்கப்பா உன்னை என்னிட்ட கொண்டு வந்து தந்தாரு. இதுவரை நாம ஒண்ணாவே இருந்தோம். ஆனா, இப்போ... நாம பார்ப்போம் மகளே... உன்னைப் பார்க்கிறதுக்கு நான் அங்கே வருவேன். கடவுள் எனக்கு வாழுறதுக்கான பாக்கியத்தைத் தந்தால்...”
பயணம் கஷ்டமாக இருந்தாலும், அது ஒரு புதிய அனுபவமாகவும் இருந்தது.
மாட்டு வண்டியில்தான் அவர்கள் கொச்சிவரை பயணம் செய்தார்கள். வழியில் சுங்க வரி வசூலிப்பதும், எல்லையைக் கடப்பதும் ஒருவித மாறுபட்ட அனுபவமாக ஒரோதாவிற்கு இருந்தது.
சொந்த வீட்டை விட்டுப் போகிறோம் என்ற கவலையை விட புதிதாக ஏதோவொன்றைத் தேடிப் போகிறோம் என்ற உத்வேகம்தான் அவள் மனதில் அப்போது இருந்தது. நான்கரை வயதான தன்னுடைய மூத்த மகனுக்குப் போகும் வழியில் பார்க்கும் விஷயங்களைப் பற்றி தனக்குத் தெரிந்த அளவில் அவள் சொல்லித்தர மறக்கவில்லை.
எர்ணாகுளம் நகரத்தைப் பார்த்தபோது உண்மையிலேயே வாயடைத்துப் போய்விட்டாள் ஒரோதா. அவள் அதுவரை பார்த்த நகரங்களில் மிகப்பெரிய நகரமாக இருந்தது பாலாதான். எர்ணாகுளத்தைப் பார்த்தவுடன் பாலா ஒரு சாதாரண மாட்டுத் தொழுவத்தைப் போல் தோன்றியது ஒரோதாவிற்கு. உயரமான கட்டிடங்கள், அகலமான சாலைகள், அவற்றில் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும ஆயிரக்கணக்கான வாகனங்கள், மக்கள் கூட்டம், பாட்டுகள் ஒலித்துக்கொண்டிருக்கும் உணவு விடுதிகள், படகுகள் நிற்கும் இடம், துறைமுகம்- எல்லாவற்றையும் அவள் கண் குளிரப் பார்த்தாள்.
வண்டிக்கு இன்னும் நேரம் இருந்ததால் அவர்கள் பிண்ணாக்கநாடு என்ற ஊரைச் சேர்ந்த வட்டைக்காட்டு இட்டியவீரா என்ற மனிதனின் தலைமையில் நகரம் முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். இட்டியவீரா தன்னுடன் வந்தவர்களுக்கு கப்பல்களைக் காண்பித்தான். கடலை அதிசயம் மேலோங்கப் பார்த்தாள் ஒரோதா. நங்கூரம் இடப்பட்டு நின்றிருக்கும் கப்பல்கள் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்தவை என்று இட்டியவீரா சொன்னபோது ஒரோதாவின் வியப்பு மேலும் பல மடங்கு அதிகமானது. இந்தக் கப்பல்களில் ஏதாவதொன்றில் ஏறி பூமியில் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று அவள் அப்போது ஆர்வத்துடன் நினைத்துப் பார்த்தாள்.
“கப்பலுக்கு உள்ளே போயி நாம பார்க்க முடியுமா?” ஆர்வத்தை அடக்க முடியாமல் அவள் இட்டியவீராவைப் பார்த்துக் கேட்டாள்.
தன் நரைத்த தலைமுடியைக் கைகளால் தடவியவாறு அவன் சிரித்தான். “பார்க்கலாம் மகளே. ஆனா, இப்போ நடக்குறதுதான் கஷ்டம். அதை உள்ளே போயி பார்க்கணும்னா ரெண்டு நாளாவது நாம இங்கே தங்கணும். அதற்குன்னு இருக்கிற சிலரைப் போய்ப் பார்த்து அதுக்கு அனுமதி வாங்கணும். அனுமதி வாங்கிடலாம்னு வச்சுக்கோ. என்ன... இங்கே தங்கி பார்த்துட்டே போவமா?” எல்லோரையும் பார்த்து அவன் கேட்டான்.
“வேண்டாம்... வேண்டாம்... உனக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா என்ன? என்று குஞ்ஞுவர்க்கியும் மற்றவர்களும் ஒரோதாவைப் பார்த்துக் கேட்டார்கள். அதைப் பார்த்து ஒரோதாவிற்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
“இதுக்காக வருத்தப்படாதே மகளே...” -இட்டியவீரா என்ற அந்த வயதான மனிதன் அவளிடம் சொன்னான். “இதைப் பார்க்கிறதுக்கு உனக்கு ஒரு நாள் வராமலா இருக்கப் போகுது?”
புகைவண்டியைப் பார்த்தபோது அதைவிட ஒரு ஆச்சரியம் அவர்களுக்கு உண்டானது. நான்கரை வயதான அவளது மகன் வக்கச்சன் ஓசை எழுப்பியவாறு நெருப்பைத் துப்பிக் கொண்டு உரத்த குரலில் சக்-சக் என்று சத்தத்தை உண்டாக்கியவாறு சீறிக்கொண்டு பாய்ந்து வரும் இதற்கு முன்பு தான் பார்த்திராத அந்த அறிமுகமில்லாத மிருகத்தைப் பார்த்து பயந்தான். அச்சம் கலந்த நடுக்கத்துடன் தன் தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்ட அவன் அலற ஆரம்பித்தான். அவன் அச்சத்தைப் போக்குவதற்காக தன் மனதில் உண்டான ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் மறைத்து வைத்துக்கொண்டு ஒரோதா சொன்னாள். “அழாதே மகனே... அது ஒண்ணும் செய்யாது...”
ஆச்சரியமும் ஆர்வமும் கலந்த பார்வையுடன், ஒருவித பதைபதைப்புடன் சற்றுத் தள்ளி நின்றவாறு புகை வண்டியையே பார்த்தவாறு நின்றிருந்தான் வக்கச்சனின் தந்தை குஞ்ஞுவர்க்கி. வட்டைக்காட்டு இட்டியவீராவைத் தவிர அங்கு கூடியிருந்த எல்லாருமே அபாயகரமான ஒரு விநோத காட்டு விலங்கைப் பார்ப்பது மாதிரி பயத்துடன் புகை வண்டியைப் பார்த்தார்கள். இருந்தாலும் இட்டியவீரா சொன்னபடி ‘நன்மை நிறைந்த மரியம்’ கொண்டிருக்கும் வரிகளை வாய்க்குள் கூறிக் கொண்டே அவர்கள் வண்டிக்குள் ஏறினார்கள். ஒரு வயதான பெண் இன்னொரு பெண்ணிடம் கூறினாள். “இது மாதா படைச்சதா இருக்காதுடி. எது எப்படியோ நாம புறப்பட்டு வந்துட்டோம். எது நடக்கணுமோ அது நடக்கட்டும். இதுக்குள்ள நுழையிறதைத் தவிர நமக்கு வேற வழியே இல்ல, வா...”
வண்டி சீறியது. தொடர்ந்து மதம் பிடித்த யானையைப் போல ஒரு ஓசையை உண்டாக்கியது. வக்கச்சன் ஒரோதாவின் மடியில் தலையைப் புதைத்துக்கொண்டு அழுதான். குஞ்ஞுவர்க்கி, புகைவண்டி “ஊ...” என்று ஓசை உண்டாக்கியபோது தன்னுடைய இரண்டு காதுகளையும் கைகளால் மூடிக் கொண்டான். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று முறை “ஊ...” என்று ஓசை உண்டாக்கிய புகைவண்டி என்ற அந்த மிருகம் சக்... சக்... என்று சத்தம் உண்டாக்கியவாறு மெதுவாக நகர ஆரம்பித்தது. வெளியே பார்த்தவாறு, பயணத்தை ரசித்தவாறு ஒரோதா உட்கார்ந்திருந்தாள். வண்டியின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க கல்லைப் பொறுக்கி எறிவதைப் போல நிலக்கரித் துகள்கள் அவர்கள் மேல் வந்து விழுந்தன. ஒரு நிலக்கரித் துகள் ஒரோதாவின் கண்ணில் வந்து விழுந்தது. அவள் கண்களைக் கசக்கியதைப் பார்த்து குஞ்ஞுவர்க்கி சொன்னான். “இரு... நான் ஊதி விடுறேன்...” அவன் ஊதி விட்டான். நிலக்கரித்துகள் நீங்கியது. ஒரோதாவின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“நீ ஏன் அழுறே?” - குஞ்ஞுவர்க்கியின் அண்ணன் ஒளதக்குட்டி கேட்டான்.
“அழல... கண்ணுல நிலக்கரி விழுந்திருச்சு...” அவனைக் கொஞ்சமும் பிடிக்காத ஒரோதா சொன்னாள்.
வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
பல ஸ்டேஷன்களிலும் வண்டி நின்றது. சில ஸ்டேஷன்களில் ஏற்கனவே சில புகைவண்டிகள் நின்றிருந்தன. புகைவண்டி நிலையங்களின் பெயர்களைப் படித்தவாறு நிலக்கரித் துகள்களை கையால் தடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஒரோதா. நான்கரை வயது வக்கச்சன் அவளின் மடியில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான். அதற்கடுத்த பையனான பாப்பன் குஞ்ஞுவர்க்கியின் தோள் மேல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
ஷொர்னூர் என்ற புகைவண்டி நிலையத்தை அடைந்தபோது வட்டைக்காட்டு இட்டியவீரா சொன்னான். “எல்லாரும் இங்கே இறங்கணும்...” இறங்கிய பிறகு அவன் சொன்னான். “நாளைக்குக் காலையில்தான் நமக்கு வண்டி வெளியிலே போயி தங்குறதுன்னா நிறைய செலவாகும். அதனால இங்கேயே இருந்திடுவோம்...”
ஷொர்னூர் ப்ளாட்ஃபார்மில் உட்கார்ந்திருக்கும்போது குஞ்ஞுவர்க்கி அப்பாவித்தனமாக தன் மனதிற்குள் இருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினான். “இட்டியவீராண்ணே... நாம எர்ணாகுளத்துல இருந்து வர்ற வழியில மூணு நாலு வண்டி தெற்கை நோக்கி ஓடுச்சு. வடக்குப் பக்கம் போற வண்டியும் நாம வந்ததும் ஒண்ணுதானா?” என்று அவன் கேட்டான்.
அதைக் கேட்டு இட்டியவீராவுடன் சேர்ந்து ஒரோதாவும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“டேய் மடையா... நாம வந்த வண்டிக்குப் பின்னாடி வர்ற வண்டிகளை நாம பார்க்க முடியுமா?” என்றான் இட்டியவீரா.
அன்று இரவு அவர்கள் எல்லோரும் ப்ளாட்ஃபாரத்திலேயே தங்கினார்கள். இட்டியவீராவும், குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் மற்ற ஆண்களும் வெளியே போய் வந்தார்கள். வரும்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பிட சோறு வாங்கிக் கொண்டு வந்தார்கள். குழந்தைகளைப் படுக்கப் போட்டு, அவர்களுக்கு அருகில் ஒரோதா படுத்துக் கொண்டாள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை. அவளின் மனதில் முழுக்க முழுக்க நாளை காணப்போகும் கனவுபூமி மட்டுமே அப்போது நிறைந்திருந்தது. ஷொர்னூர் புகைவண்டி நிலையத்தில் இங்குமங்குமாய் போய்க்கொண்டிருக்கும் புகைவண்டிகளின் ஓசையைக் கேட்டவாறு கனவு பூமியைப் பற்றிய சிந்தனைகளுடன் படுத்துக் கிடந்த ஒரோதாவின் கண்களில் கிழக்குப் பக்க வெளிச்சம் தெரிந்தது.
மறுநாள் பகல் நேரத்தில் அவர்கள் கண்ணூரில் வண்டியை விட்டு இறங்கினார்கள்.
நிலக்கரியால் ஓடும் லைன் பஸ்ஸைப் பிடித்து, பிறகு மாட்டு வண்டியில் ஏறி, பிறகு நடந்து, பொழுது இருட்டும் நேரத்தில் அவர்கள் செம்பேரியில் இருக்கும் வட்டைக்காட்டு இட்டியவீராவின் இடத்தை அடைந்தார்கள். இட்டியவீராவிற்கென்று சொந்தமாக பத்து ஏக்கர் நிலமும் இரண்டு ஷெட்டுகளும் அங்கு இருந்தன.
“பெண்களும் குழந்தைகளும் அந்த ஷெட்டுல படுத்துக்கட்டும். மற்றவங்க வெளியே படுக்கலாம். மழையில்லாத காலம்தானே? எந்தவித பிரச்சினையும் இருக்காது...” இட்டியவீரா சொன்னான்.
தனிப்பறம்பில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த அரிசியையும் மற்ற பொருட்களையும் வைத்து அவர்கள் உணவு தயாரித்தார்கள். நள்ளிரவு நேரம் ஆனபோது படுக்க ஆரம்பித்தார்கள். நள்ளிரவு நேரம் ஆனபோது படுக்க ஆரம்பித்தார்கள். எப்போது பொழுது புலரும் என்ற ஆர்வத்துடன் ஒரோதா படுத்துக் கிடந்தாள்.
சுற்றிலும் படர்ந்திருந்த பனிப்படலத்தைக் கிழித்துக் கொண்டு அதிகாலை வேளையின் முதல் கதிர்களை இளம் சிவப்பு நிறத்தில் கிழக்குப் பக்கம் இருந்த மலைகளுக்குப் பின்னாலிருந்து கிளிகளின் சத்தங்கள் ஒலிக்க சூரியன் பாய்ச்சிக் கொண்டு வந்தபோது, தூக்கத்தை விட்டு எழுந்த ஒரோதா கொட்டாவி விட்டவாறு பிரிந்து தாறுமாறாகக் கிடந்த கூந்தலைச் சரிசெய்த வண்ணம் வெளியே வந்து சுற்றிலும் பார்த்து ஒரு மிகப் பெரிய அற்புதக் காட்சியைப் பார்ப்பது மாதிரி வியந்து நின்று விட்டாள். அவளைச் சுற்றிலும் பச்சைப் பசேலென காடுகள், மலைகள். அவற்றுக்கு மேலே விரிந்து கிடக்கும் ஆகாயம். சுற்றிலும் நாலா பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருக்க, தாழ்வாரத்தில் அவள் நின்றிருந்தாள்.
அவளைச் சுற்றிலும் கன்னித்தன்மை கொண்ட பூமி. அந்த பூமி யாரின் கையோ படவேண்டும் என்பதற்காக, அந்தத் தொடுதல் மூலம் உண்டாகப் போகிற சாப விடுதலைக்காக காத்துக் கிடக்குறதோ என்பது மாதிரி தெரிந்தது. கறைபடியாத, களங்கம் என்பது சிறிதுகூட படாத அந்த இயற்கையின் ஒரு பாகமாக தான் மாற அவள் மனப்பூர்வமாகத் துடித்தாள். உறங்கிக் கொண்டிருந்த தன்னுடைய குழந்தைகளின் உடம்பிலிருந்து விலகிப் போயிருந்த ஆடைகளைச் சரி பண்ணிவிட்டாள். அவர்களை நன்கு மூடிவிட்டாள். வெளியே வெறுமனே அவள் நடந்தாள். இதுக்கு முன்பு தான் அறிந்திராத மண்ணை மிதித்து அவள் நடந்தபோது, அந்த மண் காலில் பட்டதால் உண்டான ஒரு இன்ப உணர்வு அவள் மனதில் ஒரு குதூகலமான அனுபவத்தைத் தந்தது. இதற்கு முன்பு பார்த்திராத பூமியாக அது அவளுக்குத் தெரியவில்லை. பூமி எந்தக் காலத்திலும் அறிந்திராத ஒன்றாக இருக்க முடியாது என்பதை அவள் நன்றாகவே அறிவாள். பூமி தாய் ஆயிற்றே! மகளுக்குத் தெரியாமல் ஒரு தாய் எப்படி இருக்க முடியும்? அதுவும் தன்னைப் போலவே தாயை உயிருக்குயிராக நேசிக்கிற ஒரு மகளுக்கு, ஒவ்வொரு அடியை அவள் எடுத்து வைக்கும் போதும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தவாறேதான் அவள் அடியையே எடுத்து வைத்தாள். அந்த அதிகாலை வேளையில் தூக்கம் கலைந்து எழுந்த பறவைகள் அவளுக்காக ஒரு இசை விருந்தே படைத்துக் கொண்டிருந்தன. பறவைகளின் இசையைக் கேட்டவாறு அவள் வட்டைக்காட்டு இட்டியவீராவின் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் பண்ணியிருக்கும் நிலம் இருக்குமிடத்திற்கு வந்துவிட்டாள். அதைத் தாண்டி இருந்தது முழுவதும் காய்ந்து போன பூமியாக இருந்தது. அவளின் கண்கள் ஈரமே இல்லாத புற்களின் மேல் பதிந்தன. புல்லும் புதர்களும் பாறைக்கூட்டங்களுமாக அதற்கப்பால் இருந்தன. புதர்களில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைப் போல தெச்சிப் பூக்கள் பூத்திருந்தன. பறவைகளின் ஒலி இல்லாமல், வேறொரு ஓசை கேட்க, அவள் அது என்ன ஓசை என்று காதைத் தீட்டிக் கொண்டு கேட்டாள். அப்போதுதான் அவளுக்கே தெரிந்தது,ஆச்சரியப்படும் விதத்தில் சற்று தள்ளிக் கீழே ஆறொன்று ஓடிக் கொண்டிருப்பது. இனம்புரியாத ஒரு உணர்வால் உந்தப்பட்ட ஒரோதா ஆற்றையே பார்த்தவாறு நின்றிருந்தாள். பிறகு என்ன நினைத்தாலோ ஆற்றுக்குள் இறங்கினாள். கண்ணீரைப் போல தெளிவான நீர். நீருக்கு அடியில் உருண்டையான கற்கள் தெரிந்தன. ஆற்றுக்குள் இறங்கிய அவள் லேசான சூடாக இருந்த நீரை கையால் மொண்டு ஆர்வம் மேலோங்க முகத்தைக் கழுவினாள்.
நீண்ட காலமாக அவளின் உள்மனதில் எங்கோ ஒரு மூலையில் யாருக்குமே தெரியாமல் மறக்கப்பட்டு மறைந்து கிடந்த காம உணர்ச்சி மெதுவாக மேலே எழும்பி வருவதைப் போல அவள் உணர்ந்தாள். இந்த மண், இந்த அதிகாலை வேளை, இந்தப் பறவைகளின் இசை, இந்த ஆற்று வெள்ளத்தின் சூடு, இந்தப் பழமையான இயற்கைச் சூழல் இயற்கையின் களங்கமற்ற தனிமை- எல்லாமே சேர்ந்து அவளைப் பித்துப் பிடிக்கச் செய்தன. அவளுக்கு நிர்வாண கோலத்தில் நிற்க வேண்டும்போல் ஆசை உண்டானது. கட்டியிருக்கும் ஆடைகளை அவிழ்த்தெறிந்து, இளமைத் துடிப்புடன் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிர்வாண உடம்புடன் ஆற்றுக்குள் விழுந்து, ஆற்று நீரின் அரவணைப்பில் சிக்குண்டு இதற்கு முன்பு தனக்குக் கொஞ்சம் கூட கிடைத்திராத அந்த திருப்தி நிலையை அவள் அடைய ஆசைப்பட்டாள். ஆற்று நீரின் நிர்வாணத்தைக் கட்டிப் பிடிக்க வேண்டும் என்ற அடங்காத வெறியுடன் அவள் தான் அணிந்திருந்த ப்ளவ்ஸைக் கழற்றினாள். ஆனால், அடுத்த நிமிடமே யாராவது தூங்கியெழுந்து இந்தப் பக்கம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற சிந்தனை அவளை வந்து ஆக்கிரமித்தது. அதனால் மீண்டும் ப்ளவ்ஸை அணிந்து கொண்டு அவள் ஆற்றுநீரைக் கைகளால் அள்ளி ஆசை தீரும் அளவிற்குக் குடித்தாள். தன் உடம்பிலிருந்த தளர்ச்சி, மனதில் இருந்த கவலைகள் எல்லாமே தன்னை விட்டு ஓடி விட்டதைப் போல் அவள் உணர்ந்தாள். இதுவரை திருப்தி என்ற ஒன்றைக் கண்டிராத தன்னுடைய மனதிற்குத் திருப்தியைத் தர இந்த ஆற்று நீருக்கும் இயற்கைக்கும் மட்டுமே முடியும் என்று திடமாக நம்பினாள். அப்போது தன்னுடைய தெய்வமான வளர்ப்புத் தந்தையை அவள் நினைத்துப் பார்த்தாள். தன் தந்தை மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் இந்த இயற்கைச் சூழலைப் பார்த்து தன்னை முழுமையாக மறந்துவிட்டு ஒரு சிறு குழந்தையைப் போல அவன் துள்ளிக் குதிப்பான் என்பதை நினைத்தபோது அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட்டது.
வந்திருந்த எல்லோரும் ஒன்று சேர்ந்து வட்டைக்காட்டு இட்டிய வீராவுக்குச் சொந்தமான நிலத்தில் மேலும் இரண்டு பெரிய ஷெட்டுகளை உண்டாக்கினார்கள். அவற்றில்தான் அடுத்து வந்த இரண்டு வாரங்களும் அவர்கள் தங்கினார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாக சமைத்துச் சாப்பிட்டார்கள்.
ஒரோதாவும் குஞ்ஞுவர்க்கியும் குழந்தைகளும் ஔதக்குட்டியும் அவனுடைய மனைவி சேச்சம்மாவும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் ஒரே இடத்தில் சமைத்து உண்டு வாழ்க்கையை நடத்தினார்கள். ஒரோதாவிற்கு ஔதக்குட்டியைக் கொஞ்சம் கூட பிடிக்காது என்றாலும், அவனுடைய மனைவி சேச்சம்மாவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒளி நிறைந்த கண்களையும், வெளிறிப் போன முகத்தையும், வெளுத்து மெலிந்து போன உடம்பையும் கொண்ட அவள் மெதுவான குரலில் பேசும் பேச்சும், அடக்க ஒடுக்கமான தன்மையும், அவளின் ஒவ்வொரு அசைவும் ஒரோதாவிற்கு பிடித்திருந்தது. ஔதக்குட்டியைத் தன்னுடைய கணவனின் சகோதரன் என்பதைவிட தன்னுடைய சகோதரன் என்கிற அளவிற்கு அவனைப் பெரிதாக அவள் முன்பு நினைத்தாள். ஆனால், அவனோ ஆரம்ப நாட்களில் இருந்தே தன்னுடைய தம்பியைப் பற்றி கிண்டல் பண்ணுவதும் அவன் அறிவின்மையைச் சொல்லி கேலி செய்வதும், தம்பியைத் தாழ்வாகப் பேசி தன்னை உயர்வான ஒரு மனிதனாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். அதை எப்போது கண்டுபிடித்தாளோ அன்றிலிருந்தே ஒரோதா அவனை வெறுக்க ஆரம்பித்து விட்டாள். இருந்தாலும் அண்ணனின் குடும்பமும் தம்பியின் குடும்பமும் ஒன்றாகச் சமையல் பண்ணி ஒரே இடத்திலேயே வாழ்க்கையை நடத்தினார்கள்.
பகல் நேரங்களில் ஆண்கள் வட்டைக்காட்டு இட்டியவீராவுடன் இடங்களைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் சென்றார்கள். வியாபாரம் பேசி முடிப்பதற்கு முன்னால் பெண்களுக்கு இடங்களைக் கொண்டு போய் காட்ட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். இதற்கிடையில் இட்டியவீராவின் மூத்த மகள் அன்னக்குட்டியும் ஒரோதாவும் மிகவும் நெருங்கிய தோழிகளாக ஆனார்கள். பார்க்க கறுப்பாக இருந்தாலும் அன்னக்குட்டி ஒரு அழகி என்றுதான் சொல்ல வேண்டும். சுருண்ட தலைமுடி, ஒளிர்ந்து கொண்டிருந்த கண்கள், சிறிய மூக்கு, அளவான அதரங்கள், சதைப் பிடிப்பான உடம்பு... அவளைப் பார்க்கும் யாருமே அவளை ஒரோதாவின் தங்கை என்றுதான் எண்ணுவார்கள். ஒரோதாவின் குழந்தைகள் அன்னக்குட்டியுடன் மிகவும் நெருக்கமாகப் பழகின. குறிப்பாக - பாப்பன் என்ற இளைய பையன். ஒரோதாவும் அன்னக்குட்டியும் எப்போதுமே ஒன்றாகவே காணப்பட்டார்கள். அவர்கள் ஒன்றாகவே குளிக்கப் போவார்கள். ஒன்றாகவே விறகு வெட்டுவதற்காக காட்டைத் தேடிப் போவார்கள். சேச்சம்மா வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரோதாவும் அன்னக்குட்டியும் போட்டிப் போட்டுக்கொண்டு உழைத்தார்கள். அன்னக்குட்டி ஒரோதாவை அழைத்துக்கொண்டு போய் எல்லா இடத்தையும் சுற்றிக் காட்டினாள். அன்று செம்பேரியில் மொத்தமே இருபத்தைந்து வீடுகள்தான் இருந்தன. இன்றிருக்கும் செம்பேரி நகரம் அன்று இல்லை. அப்போது கடைவீதிகள் கிடையாது. சர்ச்சும் பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் கிடையாது. சிறக்கடவுக்காரன் பாறேக்காட்டு குஞ்ஞச்சனின் சிறிய பலசரக்குக் கடையும், நாவிதன் பாப்பனின் பார்பர் ஷாப்பும், மஞ்சள் பள்ளிக்காரன் காரைக்காட்டு குட்டிச்சனின் தேநீர்க் கடையும்தான் செம்பேரியில் குறிப்பிட்டுக் கூறும்படியானவையாக இருந்தன. காலையில் ஆட்கள் குட்டிச்சனின் தேநீர்க் கடைக்குப் போய் பால் கலக்காத காப்பியைக் குடித்துக் கொண்டே பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் பாப்பனுக்குச் சொந்தமான சலூனுக்குள் நுழைந்து முகத்தைச் சவரம் செய்வார்கள். சாயங்காலம் வந்துவிட்டால் குஞ்ஞச்சனின் கடையில் பயங்கரக் கூட்டம் இருக்கும். அரிசியும் உப்பும் மிளகும் வாங்குவதற்காக ஆட்கள் அந்தக் கடையைத் தேடி வருவார்கள். தளிப்பறம்பில் இருந்து வாரத்திற்கொருமுறை கருவாடு கொண்டு வரும் அலியாரிடமிருந்து குஞ்ஞச்சன் அதை வாங்கிக் கடைக்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பான். இவை எல்லாவற்றையும் ஒரோதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது அன்னக்குட்டிதான். அவர்கள் இருவரும் ஒன்றாக குட்டிச்சனின் தேநீர்க் கடைக்குப் போய் தேநீர் அருந்துவார்கள். அன்னக்குட்டியை பொதுவாக எல்லோருக்குமே தெரியும். அன்னக்குட்டியின் மூலமாக அவர்கள் ஒரோதாவைத் தெரிந்து கொண்டார்கள்.
மரம் வெட்ட காட்டுக்குப் போனபோதுதான் ஒரோதாவின் பலம் என்னவென்பதை அன்னக்குட்டி நேரிலேயே பார்த்தாள். கோடாரியை எடுத்து ஆண்கள் மரங்களை வெட்டும் லாவகத்துடன், சொல்லப்போனால்- அதைவிட வேகமாக ஒரோதா ஒரு காட்டு மரத்தை வெட்டிக் கீழே சாய்த்ததைப் பார்த்து அன்னக்குட்டி உண்மையிலேயே வாய் பிளந்து நின்று விட்டாள்.
“அக்கா... நீங்க எல்லா விஷயங்களையும் நல்ல தெரிஞ்சி வச்சிருக்கீங்களே!” ஒரோதாவைப் பாராட்டும் குரலில் சொன்னாள் அன்னக்குட்டி.
“இது ஒரு பெரிய விஷயமில்லே.” - ஒரோதா சிரித்தவாறு சொன்னாள். “இது படகு ஓட்டின கையாக்கும்.”
“நான் ஒரு வருஷமா வெட்டினாக்கூட இந்த மரம் கீழே விழாது”- சேச்சம்மா சொன்னாள். “சொல்லப் போனா அசையக் கூட செய்யாது.”
“அதே நேரத்துல அக்கா வைக்கிற மாதிரி சுவையா மீன் குழம்பு வைக்க எனக்குத் தெரியாதே!” ஒரோதா சிரித்தவாறு சொன்னாள்.
செம்பேரி ஆற்றுக்குத் தென் கிழக்கு திசையிலிருந்த ஒரு காட்டுப் பகுதிதான் கடைசியில் வியாபாரமானது. ஏரிவேசியிலுள்ள ஒரு நாயனாருக்குச் சொந்தமான நிலமது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நூற்றைம்பது ஏக்கருக்கு மேலிருக்கும் அந்த மலையடிவாரம் சொந்தமானது. இந்த மலைநாட்டிற்கு தானும் சொந்தக்காரி என்பதை மனதில் நினைத்துப் பார்த்தபோது ஒரோதாவிற்குப் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. “இந்தக் காட்டை நான் சொர்க்கம் போல ஆக்குவேன்” - அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். “இந்த மண்ணை நான் பொன்னா மாத்துவேன்.” உயர்ந்து எழுந்து நின்ற மன வைராக்கியத்துடன், வேலை செய்து பழகிய உடம்பின் உழைக்கும் சக்தியைப் புரிந்துகொண்ட மனதுடன் ஒரோதா காட்டுக்குள் காலைத் தூக்கி வைத்தாள்.
அந்தக் காட்டுப் பகுதி அவர்கள் எல்லோருக்கும் ஒரு பயங்கர சவாலாக இருந்தது.
தனி ஆளாகவும் இரண்டு பேர் சேர்ந்தும் மூன்று பேர் சேர்ந்தும் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து காடு அவர்களுக்கு கீழடங்குவதாகத் தெரியவில்லை. பகல் முழவதும் வேலை செய்துவிட்டு இட்டியவீராவின் ஷெட்டுக்கு மாலையில் திரும்பி வந்த அவர்களின் முகங்களில் சோகம் தெரிந்தது.
“இந்தக் கணக்கில் நாம வேலை செஞ்சா அடிவாரத்தை வெட்டி சரி பண்ணி ஒரு ஷெட் உண்டாக்குறதுக்கே குறைஞ்சது ஒரு மாசமாவது ஆயிடும்!”- குஞ்ஞுவர்க்கியின் சித்தப்பன் சொன்னான்.
“நீங்க சொல்றது உண்மைதான்” - மற்றவர்கள் சொன்னார்கள்.
“அதுக்கு இப்போ என்ன செய்றது? ஒரு மாசம் ஆனா ஆயிட்டுப் போகுது...” - ஒரோதா சொன்னாள்.
“அந்தச் சமயத்துல மழை பெய்ய ஆரம்பிச்சிடுமே!”- அனுபவம் கொண்ட மனிதனான இட்டியவீரா சொன்னான். “அது மட்டுமில்ல... அந்த நேரத்துல கையில இருக்குற காசு கூட முழுசா தீர்ந்து போயிருக்கும்.”
“அதுவும் உண்மைதான்.” - எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“அப்படின்னா என்னதான் செய்யிறது?” - யாரோ கேட்டார்கள்.
ஒரோதா மெதுவான குரலில் அருகில் அமர்ந்திருந்த அன்னக்குட்டியிடம் சொன்னாள். “அடியே பெண்ணே... எனக்கு ஒரு எண்ணம் தோணுது.”
அன்னக்குட்டி அந்த விஷயத்தை உரத்த குரலில் எல்லோரையும் அழைத்துச் சொன்னாள்.
“என்ன? என்ன? சொல்லு...” - எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்லும்படி சொன்னார்கள்.
“நாம மொத்தம் இவ்வளவு பேரு இருக்கோம்ல. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து எல்லாரோட நிலத்திலயும் கீழ்ப்பகுதிய ஒழுங்குபடுத்துவோம். ஷெட் கட்டுவோம். அப்படின்னா வேலை சீக்கிரம் நடக்கும்.”
“நீ சொல்றது சரிதான்...” -பல குரல்கள் சொல்லின. இட்டியவீராவும் அந்த எண்ணத்தை ஒப்புக்கொண்டான். “காட்டு மிருகங்களை விரட்டியடிக்கிறதுக்கும் நாம ஒண்ணா சேர்ந்து இருக்கிறதுதான் நல்லது.”
அப்போது ஔதக்குட்டி ஒரு பெரிய பிரச்சினையை எழுப்பினான். “சரி... நான் ஒத்துக்குறேன். ஆனா, யாரோட நிலத்துல முதல்ல வேலையை ஆரம்பிக்கிறது?”
குஞ்ஞுவர்க்கி, ஔதக்குட்டி- இருவரின் நிலங்களும் ஒன்று சேர்ந்தே இருந்தன. அவை இரண்டிற்கும் எல்லை உண்டாக்கப்படவில்லை.
ஔதக்குட்டியின் கேள்வியை ஒரோதா சிறிது கூட விரும்பவில்லை. ஆட்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தார்கள். என்ன சொல்வது என்று யாருக்குமே தெரியவில்லை.
கடைசியில் ஒரோதாதான் மீண்டும் பேசினாள். “நீங்க கேட்ட கேள்வியையே நான் பொதுவா விரும்பல. நிலம் யாரோடதுன்னு ஏதாவது இருக்கா என்ன? இங்க இருக்குற நிலம் எல்லாமே நமக்குச் சொந்தமானதுதானே? ஒரு எல்லையில இருந்து ஆரம்பிப்போம். நான் சொல்றதுபடி எல்லாரும் நடந்தா சீக்கிரம் நம்மோட வேலைகள் முடிஞ்சிடும்...”
“அதை நான் ஒத்துக்க முடியாது” -ஔதக்குட்டி கோபத்துடன் சொன்னான். “இதென்ன விளையாட்டா? நாம என்ன முட்டாள்களா?”
ஒரு தீர்மானத்துடன் அந்த இரவு முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலங்களில் தங்களால் முடிந்த அளவுக்கு வேலை செய்தார்கள். வேலை நடப்பதற்கிடையில் சேச்சம்மா ஒரோதாவிடம் சொன்னாள். “நீ சொன்னதுதான் சரி... இவரோட பிடிவாதத்தை நான் விரும்பவே இல்ல... இந்தப் பிடிவாதத்துக்கு நல்லா அனுபவிப்பாரு...”
குழந்தைகளை பார்த்துக் கொள்வது, சாப்பாடு தயாரிப்பது ஆகிய பொறுப்புகள் சேச்சம்மாவிற்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரோதாவும் குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் மாலை மயங்கும் வரை எலும்பே நொறுங்கிப் போகும் அளவிற்கு கஷ்டப்பட்டு மரங்களை வெட்டினார்கள். புல் மேடுகளையும் நெருஞ்சிக் காடுகளையும் நெருப்பிட்டு அழித்தார்கள். மண்ணை மண் வெட்டியால் கிளறினார்கள். மூன்று பேர்களும் கஷ்டப்பட்டு உழைத்தும், ஒரு கூடாரம் கட்டி முடிப்பதற்கே ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. மற்ற யாருக்குமே கூடாரம் கட்டி முடிக்கும் வேலை முடியாமல் இருந்தது. ஒரோதாவின் வீட்டு வேலை முடிவதற்கு முன்பே மழைக்காலம் வந்துவிட்டது. இடியும் மின்னலும் ஆகாயத்தில் பயங்கரமாக விளையாடின. இடி இடிப்பதைப் பார்த்து குழந்தைகளும் பெரியவர்களும் நடுங்கினார்கள். மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. செம்பேரி ஆற்றில் வெள்ளம் வர ஆரம்பித்தது. ஒரு பெரும் மழை பெய்து கொண்டிருந்தபோதுதான் குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் குடும்பத்துடன் புதிய வீட்டிற்கு மாறினார்கள். வரும் வழியிலேயே பயங்கரமாக மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழையில் எல்லோருமே நன்கு நனைந்தார்கள். அன்று இரவு குழந்தைகளுக்குக் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. மறுநாள் குஞ்ஞுவர்க்கி, இட்டியவீராவுடன் ஏரிவேசிக்குப் போய் ஒரு நாட்டு வைத்தியரைப் பார்த்து, குழந்தைகளுக்கு மருந்து வாங்கிக் கொண்டு வந்தான்.
கையில் இருந்த பணம் கிட்டத்தட்ட செலவாகி முடிந்திருந்தது. விவசாய வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. உணவுக்கும் வேறு வழி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது ஒரு எண்ணம் தோன்ற, ஒரோதாதான் சொன்னாள். “விறகு விற்போம்” காட்டில் சேகரித்த விறகுகளை ஔதக்குட்டியும் குஞ்ஞுவர்க்கியும் மனதில் விருப்பமே இல்லாமல் ஸ்ரீகண்டபுரம் வரை தலையில் சுமந்து சென்று விற்றார்கள். சில நேரங்களில் அங்கிருந்து மாட்டு வண்டியில் ஏற்றி தனிப்பறம்பு வரை கொண்டு போய் அங்கே அந்த விறகுகளை விற்பார்கள். அதில் கிடைக்கும் பணத்திற்கு அரிசியும், உப்பும், மிளகாயும் வாங்கினார்கள். பிறகு வீடு திரும்பினார்கள்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரோதா வீடு உண்டாக்கு வேலை இன்னும் முடியாமல் இருப்பவர்களுக்கு உதவினாள். அந்த விஷயம் ஔதக்குட்டிக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவன் அதை குஞ்ஞுவர்க்கியிடம் கூறவும் செய்தான். குஞ்ஞுவர்க்கி ஜாடை மாடையாக அதைக் கூறியபோது, ஒரோதா அவனையே முறைத்துப் பார்த்தாள்.
“உதவி செய்யிறதுனால நமக்கு எந்தவித கேடும் வரப்போறதில்ல...” - அவள் உரத்த குரலில் சொன்னாள்.
அதற்கு மேல் குஞ்ஞுவர்க்கி ஒர வார்த்தை கூட பேசவில்லை.
மழைக்காலம் முடிந்தது.
விவசாய வேலைகள் ஆரம்பித்தன. முதல் மரவள்ளிக் கிழங்கு குச்சியை மண்ணுக்குள் நட்டு வைத்த நாளன்று மண்ணைப் பதப்படுத்தியவுடன் “இதோ வர்றேன்” என்று கூறிய ஒரோதா குடிசையை நோக்கி ஓடினாள். அங்கிருந்த பழைய தகரப் பெட்டி ஒன்றைத் திறந்து, ஒரு குப்பியுடன் திரும்பி வந்தாள். குப்பியில் இருந்த தண்ணீரிலிருந்து சில துளிகளை பதப்படுத்திய மண்ணின் மேல் தெளித்தாள். வியப்படைந்து நின்றிருந்த குஞ்ஞுவர்க்கி, ஔதக்குட்டி, சேச்சம்மா ஆகியோரிடம் ஒரோதா சொன்னாள். “இது மீனச்சில் ஆற்று தண்ணி. நான் இங்கே வர்றப்போ கையிலயே எடுத்துட்டு வந்தேன்...”
பசியும், பட்டினியுமாக நாட்கள் கடந்தன.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும்போது எல்லோருமே பயங்கர கஷ்டத்தில் இருந்தார்கள். இருந்தாலும் ஔதக்குட்டியும் குஞ்ஞுவர்க்கியும் எங்கேயோ போய் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இரவில் திரும்பி வந்தார்கள்.
“குழந்தைகளைப் பட்டினி போட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் போயி நல்லா குடிச்சிட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கே வெட்கமா இல்லியா?” -ஒரோதா குஞ்ஞுவர்க்கியிடம் சண்டை போட்டாள்.
“என்ன இருந்தாலும் கிறிஸ்துமஸ் ஆச்சே, ஒரோதா என்ன மன்னிச்சிடு.”
“மன்னிப்பு!” - ஒரோதா குரலை உயர்த்திக்கொண்டு சொன்னாள். உங்க ரெண்டு பேருக்கு மட்டும்தானா கிறிஸ்துமஸ்? மத்தவங்க எல்லாம் பட்டினி கிடந்தாக்கூட அதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்ல, அப்படித்தானே?”
“ஒரோதா... என் தங்கக் கட்டி... என் மேல கோபப்படாதே” - அவன் ஒரு வாடிய வாழைத் தண்டைப் போல கீழே விழுந்தான். சுய நினைவே இல்லாமல் கீழே விழுந்து, அடுத்த நிமிடம் குறட்டை விட்டு உறங்க ஆரம்பித்த கணவனைப் பார்த்து அவள் நீண்ட பெருமூச்சு விட்டாள்.
ராக்குளிப் பெருநாளன்று அவள் வெளியே எந்த வேலைக்கும் போகவில்லை. அவள் மனம் முழுக்க பாலா பெரிய சர்ச்சில் நடக்கும் ராக்குளி பெருநாளைப் பற்றிய ஞாபகங்களாகவே இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி அவள் மனம் முழுக்க நிறைந்து நின்றது வெட்டுக்காட்டு பாப்பன்தான்.
அவளைத் தோள்மேல் உட்கார வைத்து பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பவர்களின் பெட்ரோமாக்ஸ் விளக்குக்கு முன்னால் சுற்றித் திரிந்த அவளின் தந்தை- அவளைக் கீழே இறக்கி விட்டு பொருட்கள் விற்பனை செய்பவர்களிடமிருந்து பல வண்ண வளையல்களை வாங்கி அணிவிக்கும் அவளின் தந்தை- பெருநாள் நடக்கும் இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கடைகளில் பால் கலந்த தேநீரும் பலகாரமும் வாங்கிக் கொடுக்கும் அவளின் தந்தை- ராக்குளி பெருநாள் இரவில் சாலையோரத்தில் இரத்தம் சிந்த கிடந்த அவளின் தந்தை- மருத்துவமனையில் இறந்து கிடந்த அவளின் தந்தை- இறுதி யாத்திரை புறப்படுவதற்கு முன்பு தன் தந்தையின் சடலத்திற்கு முன்னால் நின்று ஆசீர்வாதம் வாங்கி தான்- எல்லாவற்றையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அன்று அவள்- அவள் மட்டும் தன் தந்தையின் குரலைக் கேட்டாள். “என் மகளே நீ போ. எங்கே வேணும்னாலும் நீ போய் வாழ். யாருக்கும் பயப்படாதே. யார் முன்னாடியும் தலை குனிஞ்சு நிக்காதே.” தன் தந்தை கம்பீரமாக- பூரணமான ஆரோக்கியத்துடன் தன் முன்னால் நின்று கொண்டிருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். அன்று அவள் தன் தந்தையின் ஆத்மா நிரந்தர சாந்தி அடைவதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தாள். இரவில் குஞ்ஞுவர்க்கியிடம் அவள் கேட்டாள். “இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகத்துல இருக்கா?”
“என்ன கேட்ட? இன்னைக்கு என்ன விசேஷம்?”
“இன்னைக்குத்தான் ராக்குளி பெருநாள்.”
“அப்படியா?” - குஞ்ஞுவர்க்கி சிரித்தான். “அதுக்கு இப்போ என்ன செய்றது? ஊர்ல இருந்திருந்தா இப்போ பாலா சர்ச்சுக்குப் போயிருப்போம்.”
அதைக் கேட்டு அவளுக்கு எரிச்சல்தான் உண்டானது. “இன்னைக்கு அப்பா இறந்த நாள்- அது ஞாபகத்துல இல்லியா?”
“ஆமாமா... நான் மறந்துட்டேன்.”
அவன் திரும்பி படுத்து குறட்டை விட ஆரம்பித்தான்.
மலைக்கும் மண்ணுக்கும் நடந்த யுத்தத்தில் ஒரோதா கொஞ்சம் கூட பின்வாங்கவில்லை. குஞ்ஞுவர்க்கியும், சில வேளைகளில் ஔதக்குட்டியும் தளர்ந்து போயிருக்கும் நேரத்தில் கூட அவள் கஷ்டப்பட்டு வேலை செய்து கொண்டிருந்தாள்.
“இந்தப் பெண்ணுக்கு எங்கே இருந்துதான் இப்படிப்பட்ட ஒரு பலம் கிடைச்சுதோ?” - எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டார்கள்.
“இவளுக்கு இப்படிப்பட்ட ஒரு அழகு எங்கேயிருந்துதான் கிடைச்சுதோ?” - சிலர் இப்படிக் கூறி ஆச்சரியப்பட்டார்கள்.
பலரும் அவளை நோட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். சில முக்கிய மனிதர்கள் அவள் மேல் ஒரு கண் வைத்திருந்தார்கள்.
“அவ புருஷன் ஒரு முட்டாள். எதுக்குமே லாயக்கில்லாதவன். அவளை விட்டுட்டு அவன் எப்படித்தான் தன்னை மறந்து தூங்குறானோ தெரியல. ரெண்டு பிள்ளைகளைப் பெத்தவள்னு யார் பார்த்தாலும் நம்ப மாட்டாங்க. ஒரு வேளை பக்கத்துல நெருங்கிப் போய் முயற்சி பண்ணினா நடந்தாலும் நடக்கலாம்...”
“ஆனா... அவளை நம்ப முடியாது. திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்னா, அவ்வளவுதான் அவ கையில மட்டும் நாம கிடைச்சோம், நம்ம கதி என்ன ஆகும்னு சொல்லவே முடியாது...”
“அது சரிதான். சும்மா அவளைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும். பொன்னே கொடியேன்னு சொல்லி.,...”
எது எப்படியோ- தைரியம் யாருக்கும் வரவில்லை.
தைரியம் வந்தது குஞ்ஞுவர்க்கியின் அண்ணன் ஔதக்குட்டிக்குத்தான். ஐம்பது நாள் நோன்பின் கடைசி நாள் அது. வலையில் விழ வைத்து அடித்துக் கொன்ற காட்டுப் பன்றியின் மாமிசம், காட்டுக் கோழியின் மாமிசம் இவைதான் அன்றைய விருந்தின் சிறப்பம்சங்கள். குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் காலையிலிருந்து கள்ளச்சாராயம் குடித்துக் கொண்டிருந்தார்கள். மதிய உணவு சாப்பிட்டு முடித்து எல்லோரும் முற்றத்தில் அமர்ந்து பொழுதுபோக்காக பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரோதாவும் சேச்சம்மாவும் கூட கொஞ்சம் சாராயம் குடித்திருந்தார்கள். குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் பயங்கர போதையில் இருந்தார்கள்.
ஔதக்குட்டியின் கண்களில் பனிப்படலத்தைப் போல ஒரோதாவின் உருவம் தெரிந்தது. என்னவோ சொல்லியவாறு அவள் தலையை உயர்த்தி சிரித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் எப்போதும் இருப்பதை விட பேரழகியாக இருந்தாள். ஒரே நிமிடத்தில் ஔதக்குட்டி இருந்த இடத்தைவிட்டு எழுந்தான். வேக வேகமாக நடந்து ஒரோதாவிடம் வந்தான்.
“வாடி ஒரோதா... நீதான் என் தங்கச்சி. தைரியசாலி... பயங்கர தைரியசாலி...” - அவன் அவளின் தோள் மேல் கையைப் போட்டான்.
ஒரோதா உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து போனாள். அவள் அவனின் கைகளை விலக்கினாள்.
“நீங்க நடக்குறது சரியில்ல. போய் அங்கே உட்காருங்க. இல்லாட்டி பேசாம போய் படுங்க...” அவள் சொன்னாள்.
“சரி... படுக்குறேன்” -ஒரு மாதிரியாக சிரித்துக் கொண்டு ஔதக்குட்டி சொன்னான். “நீ என் கூட வந்து படு...”
“ச்சே... ஏன் இப்படி கேவலமா நடக்குறீங்க?” - சேச்சம்மா இடையில் புகுந்து சொன்னாள்.
“நீ போடி தேவிடியா...” -ஔதக்குட்டி தன் மனைவியைப் பார்த்து கோபத்துடன் சொன்னான். “இப்போ செமையா என்கிட்ட நீ உதை வாங்கப் போறே...”
“அக்கா... நீங்க இந்தப் பக்கம் தள்ளி நில்லுங்க...” -ஒரோதா முன்னால் வந்து நின்றாள். சேச்சம்மாவைப் பிடித்து பின்னால் நிற்க வைத்தாள்.
“அப்படி வா... நீதான் புத்திசாலிப் பெண்...”- ஔதக்குட்டி கையை நீட்டியவாறு அவளை நெருங்கி வந்தான்.
“என்னைத் தொடக்கூடாது...” -ஒரோதா தன் குரலை உயர்த்திக் கொண்டு சொன்னாள். அவள் ஔதக்குட்டியையே முறைத்துப் பார்த்தாள். அவளின் பார்வையை அவனால் நேரடியாகச் சந்திக்க முடியவில்லை.
அப்போது வேகவேகமாக அங்கு எழுந்து வந்த குஞ்ஞுவர்க்கி கேட்டான். “என்னடி நீ அண்ணனை ஒரேயடியா பயமுறுத்துறே?”
“அதை நான் பின்னாடி சொல்றேன். இப்போ மரியாதையா இங்கேயிருந்து போயிடணும். அண்ணன், தம்பி ரெண்டு பேர்கிட்டயும் உங்களோட போதை தெளிஞ்ச பிறகு நான் எல்லாத்தையும் சொல்றேன்.”
அவள் சொன்னதும், சகோதரர்கள் அமைதியானார்கள்.
ஈஸ்டர் முடிந்ததும், சிறிது கூட தாமதிக்காமல் ஒரோதா குஞ்ஞுவர்க்கியிடம் சொன்னாள். “நமக்கு தனியா ஒரு வீட்டை கட்டிக்கிட்டு போயிடலாம்...”
“ஏன்? இந்த வீட்டுலயே இருந்தாப் போதாதா?”
“போதாது...” -ஒரோதா குரலை உயர்த்திக் கொண்டு சொன்னாள்.
“அண்ணனும் தம்பியும் சண்டை போட்டுக்கிட்டாங்கன்னு எல்லாரும் பேசுறதுக்க?”
“இல்ல... ரெண்டு குடும்பங்களும் தனித் தனியாகத்தான் இருக்கணும்...”
மழைக்காலத்திற்கு முன்பு இன்னொரு வீடு புதிதாக உருவாக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு மாறியபோது ஒரோதா சேச்சம்மாவைப் பார்த்துச் சொன்னாள். “அக்கா... நீங்க இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் எப்பவும் இங்கேதான் இருப்பேன். படுக்குறதுக்கு மட்டும்தான் நான் அங்கே போவேன். மீதி நேரம் முழுவதும் இங்கேதான்...”
அந்தக் கொடுமையான மழைக்காலத்தில் மலையிலிருந்து ஒரு பெரிய வெள்ளப் பெருக்கு உண்டானது. அப்போது மலையிலிருந்து ஏராளமான மண் வெள்ளத்தில் வந்து சேர்ந்தன. விவசாயத்திற்கு மிகப் பெரிய கேடு உண்டானது. மக்களின் வாழ்க்கை மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டது. வெள்ளப் பெருக்கில் மண் வந்தது எல்லா விவசாயிகளையும் மிகப் பெரிய அளவில் பாதித்தது. பல வருடங்களாக செம்பேரியில் வாழ்ந்து கொண்டிருந்த வட்டைக்காட்டு இட்டியவீராவிற்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்பு உண்டாகியது. எட்டு குழந்தைகள் கொண்ட அந்தப் பெரிய குடும்பம் திடீரென்று வறுமையின் பிடியில் சிக்கியது.
இந்தச் சூழ்நிலையில்தான் இட்டியவீராவின் மகள் அன்னக்குட்டியும் ஒரோதாவும் ஒன்று சேர்ந்து காஞ்ஞிரப் பள்ளியைச் சேர்ந்த பாலத்துங்கல் அவுசேப்பச்சனின் தோட்டத்திற்கு ரப்பர் வெட்டுவதற்காகப் போகத் தொடங்கினார்கள். ஒரோதாவிற்கு ரப்பர் வெட்டும் வேலையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், அன்னக்குட்டியிடமிருந்து அவள் அந்தத் தொழிலை வெகு சீக்கிரமே கற்றுக்கொண்டாள். ரப்பர் வெட்டுவதன் மூலம் கிடைக்கும் கூலியைக் கொண்டு ஒரோதா குடும்பத்தை நடத்தினாள். தாங்கள் மட்டும் தனியே இருந்தாலும், சேச்சம்மாவின் வீட்டுக்குப் போய் ஏதாவது தேவைப்படுகிறதா என்பதை விசாரித்து அதற்கேற்றபடி அவளுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய அவள் எப்போதும் மறந்ததில்லை.
அவுசேப்பச்சனின் தோட்டத்தில் வேலை செய்யும் காலத்தில்தான் ஒரோதா இட்டுப்பு என்ற கங்காணியின் கன்னத்தில் அறைந்த நிகழ்ச்சி நடந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இட்டுப்பு ஒரோதாவிடமும் அன்னக்குட்டியிடமும் தேவையில்லாமல் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனைப் பொதுவாக இருவருமே வெறுத்தார்கள். ஒரோதா பல முறை அவனிடம் எடுத்துச் சொன்னாள். ஒரு நாள் ஒரு பாறையின் மறைவில் ஒரோதா தனியாக நின்றிருந்தபோது அங்கே வந்த இட்டுப்பு, வெறி பிடித்த மனிதனைப் போல அவளை இறுகக் கட்டிப் பிடித்து அணைக்க ஆரம்பித்துவிட்டான். ஒரோதா அவனைப் பிடித்து கீழே தள்ளிவிட்டாள். கீழே விழுந்தவன் மீண்டும் எழுந்து அவளை அணைக்க முற்பட்டபோதுதான், அவள் அவன் கன்னத்தில் அடித்தாள். அடுத்த நிமிடம் நாயைப் போல முனகியவாறு ஓடிய இட்டுப்பு முதலாளியின் பங்களாவிற்குப் போய் அவளைப் பற்றி அவரிடம் புகார் பண்ணினான். அவுசேப்பச்சன் ஒரோதாவை அழைத்து நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார். அவள் ஒரு வார்த்தை விடாமல் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறினாள். அதன் விளைவாக இட்டுப்பின் வேலை பறிக்கப்பட்டது. பயங்கர போதையில் இருக்கும் நேரங்களில் மற்றவர்களிடம் இட்டுப்பு சொல்லுவான். “அவளை நான் சரி பண்றேன்...”
“ம்... சரி பண்ணிப் பாரு” - மற்றவர்கள் கூறுவார்கள்.
ஒரோதா இட்டுப்பைக் கன்னத்தில் அறைந்த விஷயம் ஊர் முழுக்க எல்லோருக்கும் தெரிந்து போனதால், அவள் பாதையில் நடந்து போகும்போது அவளின் அழகை யாருக்கும் தெரியாமல் மற்றவர்கள் ரகசியமாகப் பார்த்து ரசித்தார்களே தவிர, அவளின் முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் தைரியம் யாருக்குமே வரவில்லை.
அடுத்த வருடம் மழைக்காலம் வந்தபோது மலையிலிருந்து மண் வந்து கொட்டவில்லை. ஆனால், கேழை என்று சொல்லப்படும் காட்டு ஆடுகளின் கூட்டம் நிறைய வந்து இறங்கிவிட்டது. அதன் விளைவாக பயிர்கள் முழுவதும் நாசமாயின. அங்கு வசித்தவர்கள் அனைவரும் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உண்டானது. அதற்கடுத்த வருடம் அவர்களை அழிப்பதற்கென்றே வறட்சி வந்து சேர்ந்தது. பிறகு காட்டுப் பன்றிகளின் தொந்தரவு. காட்டுப் பன்றிகளையும் காட்டு ஆடுகளையும் தேடி கீழே இறங்கி வந்த புலிகளின் தொல்லைகள். எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரி ஏதோ ஒரு சாபத்தைப் போல அங்கு குடியேறி வாழ வந்தவர்களின் வாழ்க்கையில் இப்படிப் பல்வேறு விதங்களில் தொந்தரவுகள் உண்டாகி அவர்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தன.
புலிகள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில்தான் பிண்ணாக்கநாடு என்ற ஊரைச் சேர்ந்த தேக்கின் காட்டில் மத்தாயச்சன் ‘புலியை வென்றவன்’ என்ற பெயரைப் பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னுடைய ஆடு ஒன்றை புலி பிடித்துக் கொண்டு போக, அதைக் காப்பாற்றும் எண்ணத்தில் புலியின் மேல் குபீரெனப் பாய்ந்தார் மத்தாயச்சன். அவர் புலியிடமிருந்து ஆட்டைப் பிடித்து இழுத்தார். ஆட்டை விட்ட புலி மத்தாயச்சன் மேல் பயங்கர கோபத்துடன் பாயந்தது. ஆனாலும் புலியிடமிருந்து தப்பிவிட்டார்.
“நான் நீண்ட நாள் வாழணும்னு இருக்கு...” என்று மட்டுமே அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசும்போது மத்தாயச்சன் சொல்லுவார்.
பழைய ஈஸ்டரைப் பற்றி நினைவுகள் அவ்வப்போது மனதில் தலைகாட்டி ஔதக்குட்டியை அலைக்கழித்துக் கொண்டிருக்கும். ஒரோதாவின் அழகு அவனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. எப்படியாவது அவளைத் தன்வசப்படுத்த வேண்டும் என்று சதா நேரமும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். மென்மையான அணுகுமுறையால் மட்டுமே இந்த விஷயத்தில் சாதிக்க முடியும் என்பது அவன் மனதிற்குப் புரிந்தது. அதனால் அவன் முன்பு தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக ஒரோதாவிடம் மன்னிப்பு கேட்டான். அவளின் பேச்சும் நடத்தையும் தன்னை முழுமையாகத் திருத்திவிட்டன என்றான். அவளிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் அவன் நடந்து கொண்டான். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிலை உண்டாகும். அப்படிப்பட்ட வேளைகளில் எதேச்சையாக அவன் கை தன் மேல் படும்போது, பொதுவாக ஒரோதா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஔதக்குட்டிக்கு அப்படி தொடுவது ஒருவித ஆனந்த அனுபவத்தைத் தந்து கொண்டிருந்தது. அவனிடம் மிகப் பெரிய ஒரு மாற்றம் உண்டாகியிருப்பதாக மனப்பூர்வமாக நம்பினாள் ஒரோதா.
நான்காவது ஈஸ்டர் வந்தது.
ஒரோதா மதிய உணவு தயாரித்தாள். எல்லோரும் அவள் வீட்டில் உண்டார்கள். இரவு உணவை சேச்சம்மா தயாரித்தாள். அங்கு எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும், குழந்தைகள் உறங்க ஆரம்பித்தார்கள். குஞ்ஞுவர்க்கியும் நன்கு குடித்துவிட்டு சுயநினைவில்லாமல் ஒரு ஓரத்தில் படுத்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பலமுறை அவனை அழைத்தும், அவன் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை.
“அவன் பேசாம தூங்கட்டும். எந்திருச்சு வர்றப்போ வரட்டும். நான் உன்னைக் கொண்டு போயி வீட்டுல விடுறேன்” என்று சொன்ன ஔதக்குட்டி மூத்த பையனைத் தூக்கித் தோளில் போட்டவாறு திரும்பி நின்று சேச்சம்மாவை அழைத்தான். “நீயும் என் கூட வர்றியா?” சேச்சம்மாவும் ஔதக்குட்டியும் சேர்ந்துதான் ஒரோதாவை அவளின் வீட்டில் கொண்டு போய்விட்டார்கள். அவளை வீட்டில் விட்டுவிட்டு, அவர்கள் திரும்பிவிட்டார்கள். ஒரோதா படுக்க ஆரம்பித்தாள்.
நீண்ட நாட்களாக மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டிருந்த காம உணர்ச்சி சாராயம் உண்டாக்கிய போதையில் அவளிடம் மீண்டும் மேல் நோக்கி எழ ஆரம்பித்தது. தனக்கு முழுமையான திருப்தியைத் தர முடியாதவன் என்றாலும், குஞ்ஞுவர்க்கி அப்போது தன் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். உறக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாய் புரண்டு கொண்டிருந்த ஒரோதா பின்னர் எப்படியோ தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தும் போனாள்.
ஏதோ ஒரு இனிய கனவில் மிதந்தவாறு அவள் தூங்கிக் கொண்டிருக்க, யாரோ அவளைக் கட்டிப் பிடிப்பது மாதிரி தெரிந்தது. பாதி மயக்கத்தில் திரும்பிப் படுத்த அவள், உணர்ச்சிவசப்பட்டு கட்டிப்பிடித்த மனிதனை இறுக அணைத்துக் கொண்டாள். ஓரிரு நிமிடங்களில் அவளுக்கு முழுமையாக சுயநினைவு வந்தது. இதற்கு முன்பு இங்கு இல்லாத ஒரு வாசனை... அவள் வேகமாக தன்னை விலக்கிக் கொண்டாள்.
“ஒரோதா... என் தங்கமே... என்னை மன்னிச்சிடு. நீ இல்லாம என்னால வாழ முடியாது” -ஔதக்குட்டியின் உணர்ச்சிவசப்பட்டு உச்சத்தில் நின்றிருக்கும் குரல் அவளின் நடுங்கிக் கொண்டிருந்த காதுகளில் விழுந்தன. அவள் அடுத்த நிமிடம் படுத்திருந்த இடத்தை விட்டு வெகு வேகமாக எழுந்தாள். விளக்கை எரிய வைத்தாள். அவளுக்கு முன்னால் கைகளால் தொழுதவாறு கெஞ்சுகிற பாணியில் நின்றிருந்தான் ஔதக்குட்டி.
“நீங்களா இருக்கிறதுனால நான் சத்தம் போடாம இருக்கேன். உடனே இந்த இடத்தை விட்டு போங்க. இனிமேல் இந்த எண்ணத்தை மனசுல வச்சிக்கிட்டு இங்கே வராதீங்க. ம்... போங்க...”
“ஒரோதா...”
“போங்கன்னு சொல்றேன்ல...” - அவளின் குரலில் இருந்த கடுமையைப் பார்த்து ஔதக்குட்டி பயந்தான். அடுத்த நிமிடம் அவன் அங்கிருந்து நடந்தான்.
ஒரோதா தன்னுடைய மூத்த மகன் வக்கச்சனையும், இளையமகன் பாப்பனையும் வீட்டில் உட்கார வைத்து எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்தாள். அடுத்த வருடம் செம்பேரியில் பள்ளிக்கூடம் வரப்போவதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாவது வயதிலாவது வக்கச்சனை எப்படியும் பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டுமென்றும், அதற்கடுத்த வருடம் பாப்பனைப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றும் அவள் முடிவு செய்திருந்தாள்.
அந்த வருட கோடைகாலம் மிகவும் கடுமையாக இருந்தது. பயிர்கள் நாசமாகிப் போய் விடக்கூடாது என்பதற்காக ஆற்றிலிருந்து நீரைச் சுமந்து கொண்டு வந்து அவள் பயிர்களுக்கு ஊற்றினாள். பயிர்கள் முழுவதுற்கும் நீர் கொண்டு வந்து அவள் மட்டுமே ஊற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமான காரியமா என்ன? சில நேரங்களில் குஞ்ஞுவர்க்கி அவளுக்கு உதவுவான். எப்போதும் வக்கச்சன் அவளுடன் இருப்பான். வைத்த பயிரில் பாதிக்கு மேல் வெயிலின் கொடுமையால் காய்ந்து கருகிப் போவதை வெறுமனே அவளால் பார்த்துக் கொண்டிருக்க தான் முடிந்தது. இருந்தாலும் முடிந்தவரை நீரை ஆற்றிலிருந்து கொண்டு வந்து ஊற்றி கொஞ்சம் பயிர்களையாவது அவள் காப்பாற்றினாள்.
அந்தக் கோடையில் செம்பேரி பகுதியில் அம்மைநோய் பரவ ஆரம்பித்தது. குஞ்ஞுவர்க்கியின் சித்தப்பா வீட்டில்தான் முதலில் அது வந்தது. சித்தப்பாவின் இளைய மகள் ஆலீஸுக் குட்டிக்குத்தான் அந்த நோய் பிடித்தது.
“மலையை வெட்டி சரி பண்ணியது மலையை அடக்கி வாழுற மலை மேல் இருக்கும் தேவிக்கு கொஞ்சமும் பிடிக்கல” - ஏரிவேலியில் இருக்கும் நாயனார்மார்களின் ஜோதிடர்கள் சொன்னார்கள். “எல்லாம் தேவியோட கோபத்தின் அறிகுறி.”
அதைக் கேட்ட ஒரோதா சொன்னாள். “மலையை வெட்டி ஒழுங்குபடுத்தினது தேவிக்கு உண்மையிலேயே விருப்பமானதுதான். மனிதர்கள் உழைச்சு வாழ்றதுக்கு நிச்சயம் தேவி எந்தக் காலத்திலயும் எதிரா இருக்க மாட்டா.”
நோய் பீடித்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடமே ஒரோதா சித்தப்பாவின் குடிசையை நோக்கி ஓடினாள். அம்மை நோய் வந்திருக்கும் வீட்டிற்குப் போவதென்பது புத்திசாலித்தனமல்ல என்று குஞ்ஞுவர்க்கியும் ஔதக்குட்டியும் அவளைத் தடுத்தார்கள். சேச்சம்மா கூட அவளைப் போக வேண்டாமென்றுதான் சொன்னாள். ஆனால், அவர்கள் சொன்னதை ஒரோதா கேட்கவில்லை.
“அறிமுகம் இல்லாத ஒரு இடத்துல வந்து இருக்குறவங்களுக்கு உடம்புக்கு சரியில்லைன்னா, நம்மளைத் தவிர வேற யாரு அவுங்களைப் பார்க்க முடியும்?” - அவள் மற்றவர்களைப் பார்த்துச் சொன்னாள்.“சாகுறதா இருந்தா நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாவோம்.” யாரும் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. யாரும் அவளுடன் சேர்ந்து போகவுமில்லை. ஒரோதா குடிசையைத் தேடி வந்தபோது ஆலீஸுக்குட்டியின் தாயும் தந்தையும் கூட உண்மையிலேயே பதைபதைத்துப் போனார்கள். அவர்கள் நிலத்தின் மேற்பகுதியில் ஓலையால் ஒரு தடுப்பு உண்டாக்கி, மண்ணில் வாழை இலையை வெட்டிப் போட்டு அதற்குமேல் ஆலீஸுக்குட்டியைப் படுக்க வைத்திருந்தார்கள். ஒரோதா அவர்களைப் பார்த்து கத்தினாள், “நீங்க இவளை நோய் வந்திருக்குன்னு ஒதுக்கி வச்சா, நான் இவளைக் கொணடு போயிடுவேன்.”
"அதுக்காக இல்ல மகளே..."- சின்னம்மா சொன்னாள்.
"இது ஏதோ சாபத்தால வந்திருக்கு. இதை மத்தவங்களும் அனுபவிக்கணுமா என்ன?"
"ஒரு சாபமும் இல்ல… உடம்புக்குச் சரியில்ல... அவ்வளவுதான்."
அவள் ஆலீஸுக்குட்டியின் அருகில் வந்தாள். அவளுக்கு ஆறுதல் சொன்னாள். உணவு தந்தாள். யாரோ சிலர் சொல்லி ஞாபகத்தில் வைத்திருந்த சில பச்சிலை மருந்துகளை அவளுக்குத் தந்தாள்.
ஆலீஸுக்குட்டியிடமிருந்து அவளுடைய குழந்தைக்கும் அதைத் தொடர்ந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் அந்த நோய் தொற்றிக் கொண்டது. ஒரோதாவின் குழந்தைகளுக்கும் சேச்சம்மாவின் பிள்ளைகளுக்கும் கூட நோய் பீடிக்க ஆரம்பித்தது.
ஔதக்குட்டி ஒரோதாவைப் பார்த்து கோபத்துடன் கத்தினான். "எல்லாத்துக்கும் காரணம் இவதான். இவ ஆலீஸுக்கிட்ட இருந்து கொண்டு வந்ததுதான் இந்த வியாதி" தன் அண்ணன் சொன்னதை உண்மைதான் என்று குஞ்ஞுவர்க்கியும் ஆமோதித்தான். சேச்சம்மா மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பது மாதிரி பேசாமல் நின்றிருந்தாள். ஒரோதா எந்தப் பதிலும் கூறவில்லை. அவள் மனதில் வேதனை நிறைந்து நிற்க, கடவுளிடம் "மாதாவே... இந்தக் குழந்தைகளுக்குப் பிடிச்சு இருக்குற நோயை எனக்குத் தந்திடு. அவங்களை நோய்ல இருந்து காப்பாத்திடு" என வேண்டினாள். ஆனால், குழந்தைகளுக்குப் பிடித்த நோய் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பிள்ளைகளை எல்லோரும் நிலத்தின் மேலே இருந்த குடிசைக்கு மாற்றினார்கள். ஒரோதா அவர்களை கவனித்துக் கொண்டு அங்கேயே இருந்தாள். மற்றவர்கள் நிலத்தின் கீழே இருந்த வீட்டில் இருந்தார்கள். எப்போதாவது ஒரு முறை சேச்சம்மா மேலே சென்று அங்கு ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவாள். ஔதக்குட்டியும் குஞ்ஞுவர்க்கியும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்ததில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை அவளால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அதற்கான நேரம் அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. தான் ஊன்றி வைத்த விதைகள் முளைத்து அது கருகி விழுவதையும், தான் உயிரையே வைத்திருக்கும் குழந்தைகளை அம்மை நோய் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பதையும் எதுவுமே செய்ய முடியாமல் வெறுமனே பார்த்தவாறு நின்றிருக்கும் ஒரோதா தன்னை மறந்து கண்ணீர் விட்டு அழுதாள். ஒரு நாள் வேக வேகமாக மேலே இருந்த குடிசைக்கு வந்தான் குஞ்ஞுவர்க்கி. அவன் குடித்திருக்கிறானோ என்று ஒரோதா சந்தேகப்பட்டாள். ஆனால்-
"இன்னையில இருந்து நானும் இங்கேதான் இருக்கப் போறன், ஒரோதா"- என்றான். அவன் "எனக்கும் அந்த நோய் வந்திடுச்சு. கண்ணுக்குத் தெரியாத ஒரு ஊர்ல வந்து சாகணும்ன்னு எனக்கு எழுதியிருக்கு. நான் என்ன செய்ய முடியும்?"
வீடு கடுமையான வறுமையின் பிடியில் சிக்குண்டு கிடந்தது. மருந்து வாங்கவோ, அரிசி வாங்கவோ எதற்குமே காசு இல்லை. போன வருடம் தீயில் வாட்டி எடுத்து வைத்திருந்த மரவள்ளிக் கிழங்கை வைத்து நாட்களை ஓட்டினார்கள். ஔதக்குட்டி ஒவ்வொரு இடமாக ஓடி கடன் கேட்டான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை. கடைசியில் குஞ்ஞுவர்க்கிதான் ஒரோதாவிடம் சொன்னான். "ஒரோதா... நான் யோசிச்சுப் பார்த்தேன். ஒரே ஒரு வழிதான் இருக்கு. நீ போய் விவரத்தைச் சொன்னா அந்தப் பாலத்துங்கல் அவுசேப்பச்சன் முதலாளி நமக்கு உதவுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அந்த ஆளுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும். அவர் நல்லவரும் கூட. உன்கிட்ட கண்டபடி பேசின ஆளை வேலைய விட்டே தூக்கின ஆளு இல்லியா அவர்!"
ஒரோதாவிற்கு தயக்கமாக இருந்தது. அவளுக்கு அங்கு போவதற்கே விருப்பமில்லை. குஞ்ஞுவர்க்கியும், கடைசியில் சேச்சம்மாவும் சேர்ந்து மிகவும் வற்புறுத்திய பிறகுதான் அவள் அங்கு செல்லவே தயாரானாள்.
அவள் அங்கு சென்றபோது, பங்களாவுக்குள் இருந்த ஒரு பெரிய விசாலமான அறையில் ஊஞ்சல் கட்டிலின் மேல் விரிக்கப்பட்ட மெத்தையில் அமர்ந்து தலையணையில் சாய்ந்தவாறு ஆடிக்கொண்டிருந்தார் அவுசேப்பச்சன். அவர் கரை போட்ட வேஷ்டி மட்டும் கட்டியிருந்தார். நெஞ்சில் படர்ந்து கிடந்த ரோமங்களுக்கு மத்தியில் தங்கத்தால் ஆன ஒரு சிலுவை மாலை தொங்கிக் கொண்டிருந்தது. நரைத்த தன்னுடைய தலை முடியைத் தடவியவாறு அவர் கேட்டார்.
“யாரும்மா நீ?”
அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். கங்காணி இட்டுப்பை பற்றிச் சொன்னதும், அவர் அவளை ஞாபகப்படுத்திக் கொண்டார்.
“என்ன விஷயமா வந்திருக்கே?”
அவள் எல்லா விஷயங்களையும் சொன்னாள். எல்லாவற்றையும் “உம்” கொட்டியவாறு கேட்டுக் கொண்டிருந்த அவுசேப்பச்சன் கடைசியில் சொன்னார். “சரி... ஒரு தடவை உனக்காக நான் உதவினேன். உனக்காக வேலையில இருந்தே ஒருத்தனை விரட்டி விட்டேன். அதற்குப் பிரதிபலனா எனக்கு நீ என்ன செஞ்சே? இப்போ திரும்பவும் நான் உனக்கு உதவணும்னு வந்து நிக்கிறே. செஞ்சா, பிரதிபலனா நீ எனக்கு என்ன செய்வே? உதவின்னா ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா?”
ஒரோதா ஒரேயடியாக குழம்பிப்போய் நின்றாள். “ஏழையான நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் முதலாளி?”
குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு அவுசேப்பச்சன் இருந்த இடத்தை விட்டு எழுந்தார். ஒவ்வொருத்தரும் நினைச்சா இப்படியும் அப்படியுமா பல மாதிரி உதவ முடியும்” என்றார். சொல்லிவிட்டு அவளின் அருகில் நின்று, அவளின் கண்களையே பார்த்தவாறு அவர் சிரித்தார். அவரின் பார்வையிலும் சிரிப்பிலும் ஏதோவொன்று மறைந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.
“எனக்குப் புரியல...”- அவள் பதறிய குரலில் சொன்னாள்.
“நான் புரியிற மாதிரி சொல்லித் தர்றேன்”- அவுசேப்பச்சன் நெஞ்சில் தொங்கிக் கொண்டிருந்த மாலையைக் கையால் பற்றியவாறு சிரித்தார். “என் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் ஊர்ல இருக்காங்க. நான் மட்டும்தான் இங்கே இருக்கேன். எப்பவாவது நீ இங்கே வந்து என் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போக முடியுமா?”
அவர் சொன்னதைக் கேட்டு உண்மையிலேயே ஒரோதா அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாள். அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரிடமிருந்து, இவ்வளவு வயதான ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.
“ஆனா... முதலாளி...”- தன் கழுத்தில் இருந்த வெள்ளை நூலைப் பிடித்தவாறு அவள் தயங்கியவாறு சொன்னாள்.
அவுசேப்பச்சன் சிரித்தார். “உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு எனக்கு நல்லா தெரியும். எனக்கும் கூடத்தான் கல்யாணம் ஆயிடுச்சு... அதுக்காக...”
“இருந்தாலும்... முதலாளி... என் வாழ்க்கையில இந்த நிமிஷம் வரை...”
இடையில் புகுந்து அவுசேப்பச்சன் சொன்னார். “நீ தப்பா நடந்தது இல்லைன்னு எனக்குத் தெரியும். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் உன்னை நான் விருப்பப்படுறேன்.”
“ஆனா... முதலாளி...”
“நீ தீர்மானிச்சா போதும். உன் புருஷனும் பிள்ளைங்களுமா உனக்குப் பெரிசு... சொல்லப்போனா...”
அவர் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லி முடிக்கவில்லை. இருந்தாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
“முதலாளி...” - அவளின் கெஞ்சல் தொண்டைக் குழிக்குள்ளேயே நின்றுவிட்டது.
அவுசேப்பச்சன் சொன்னார்.
“இங்க பாரு ஒரோதா... நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். தீர்மானிக்க வேண்டியவ நீதான். உனக்கு இந்த விஷயத்துல விருப்பமில்லைன்னா தாராளமா நீ போகலாம். நான் அதைப் பற்றி கவலையே படமாட்டேன்.” -அவுசேப்பச்சன் திரும்பி ஊஞ்சல் கட்டிலை நோக்கி நடந்தார். ஊஞ்சலின் மேல் போய் உட்கார்ந்தார். மெல்ல ஊஞ்சல் ஆடியது.
பருந்துக்கும் கடலுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட மாதிரி உணர்ந்தாள் ஒரோதா. ஒரு பக்கம் நோய் நாளுக்கு நாள் தின்று கொண்டிருக்கும் ஐந்து உயிர்கள். இன்னொரு பக்கம்...
‘என் கற்பை இதுவரை நான் பாதுகாத்து வந்திருக்கேன்...’ - அவள் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். “ஆனால், இப்போ...? அஞ்சு மனித உயிர்களை விட முக்கியமா இந்த உடம்பு? என் புருஷனுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படாத உடம்பு எனக்கு இருந்து என்ன பிரயோஜனம்? என் மனசு நிச்சயமா தப்பு பண்ணல. என் மனசை ஒரு பக்கம் களங்கப்படாம ஒழுங்கா வச்சிக்கிட்டு, மண்ணால் ஆன இந்த உடம்பை... மண்ணோடு மண்ணாகச் சேரப் போற இந்த உடம்பை இன்னொரு ஆளுக்கு வாடகைக்கு கொடுக்குறதுல என்ன தப்பு இருக்கு?”
அவள் நீண்ட நேரம் சிந்தித்தவாறு நின்றிருந்தாள். தன்னுடைய உடம்பை விட அந்த ஐந்து மனித உயிர்கள் மிகவும் உயர்ந்தவை என்று அவளுக்குத் தோன்றியது. தான் செய்வது நிச்சயம் தப்பான ஒன்றல்ல என்பதையும் அவள் உணர்ந்தாள். மனரீதியாக தான் தவறே செய்யவில்லை என்று திடமாக அவள் நம்பினாள். கடைசியில் ஒரு முடிவை எடுத்த மாதிரி அவள் கேட்டாள். “நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க முதலாளி?”
அவுசேப்பச்சன் உள்ளம் குளிர்ந்து போய் சிரித்தார்.
“முதல்ல நீ போய் அந்தக் கதவை அடைச்சிட்டு வா. பிறகு என் பக்கத்துல வந்து உட்காரு...”
அவுசேப்பச்சன் சொன்னபடி ஒரோதா செய்தாள். ஒரு இயந்திரத்தைப் போல அவள் தன்னுடைய உடம்பை அவுசேப்பச்சனின் விருப்பத்திற்கேற்றபடி விட்டுக் கொடுத்தாள். ஆனால், என்ன பிரயோஜனம்? பணத்துடன் அவள் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, அவளுடைய மூத்த மகன் வக்கச்சன் அவளை விட்டுப் போயிருந்தான். அவன் அம்மை படர்ந்த உடலில் முத்தங்களைக் கொடுத்தவாறு அவள் வாய்விட்டு கதறினாள். அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, இறுதி மூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு மருந்து வாங்குவதற்காக ஔதக்குட்டி வெளியே போனான்.
மறுநாள் அதிகாலை வேளையில் பாப்பனும் இந்த உலகை விட்டு நீங்கினான். அவள் இரண்டு மகன்களையும் ஒரே குழியில் போட்டு மூடினார்கள். குழியை மண்ணால் மூடிய பிறகு, குழிக்கு மேல் ஒரோதா இரண்டு கற்களை கொண்டு வந்து வைத்தாள். இரண்டு கற்களுக்கும் நடுவில் இரண்டு மரக்குச்சிகளை கொண்டு வந்து சிலுவை உண்டாக்கி அதையும் நட்டு வைத்தாள்.
ஔதக்குட்டியின் குழந்தைகள் பிழைத்துக் கொண்டன. குஞ்ஞுவர்க்கி பிழைத்துக் கொண்டாலும், ஒரு நிரந்தர நோயாளியாக அவன் மாறினான்.
அம்மை நோயில் சிக்கி ஏராளமானவர்கள் இறந்து போனார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில உயிர்களே அந்த நோயின் பிடியிலிருந்து தப்பின. கோடைக்காலம் முடிந்தது. மழைக்காலத்தின் முதல் மழை மண்ணில் விழுந்து, ஒரு புதுவித உணர்வை எல்லோரிடமும் உண்டாக்கியது.
அந்த மழைக்காலத்தின்போதுதான் ஒரோதாவின் இன்னொரு முகத்தை எல்லோரும் பார்த்தார்கள். தேநீர் கடைக்காரன் காரைக்காட்டு குட்டிச்சனின் மகன் பேபி நீர் நிறைந்து வந்து கொண்டிருந்த ஆற்றில் கால் வழுக்கி விழுந்து விட்டான். தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி நீரைக் குடித்துச் செத்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் காப்பாற்ற ஆற்றோரம் நின்றிருந்தவர்களில் ஒருவர்கூட தயாராக இல்லை. அந்த நேரத்தில் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்தாள் ஒரோதா. சிறுவனின் தலை நீருக்கு மேல் தெரிந்ததை அவள் பார்த்தாள். யாரிடமும் ஒரு வார்த்தை கூட கேட்காமல், அவள் பாய்ந்தோடிக் கொண்டிருந்த நீருக்குள் குதித்தாள். அங்கு நின்றிருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு நின்றிருக்க, நீருக்குள் விழுந்த சிறுவனுடன் ஒரோதா நீந்தி கரைக்கு வந்தாள். அவன் வயிறை அமுக்கி, உள்ளே அவன் குடித்த நீர் முழுவதையும் வெளியேற்றினாள். சிறுவன் பிழைத்துக் கொண்டான்.
“ஒரோதா... நீ ஒரு மனிதப் பெண் இல்ல... நீ ஒரு தேவி...” -குட்டிச்சன் ஒரோதாவின் காலைத் தொட்டு வணங்கியவாறு சொன்னான். அவள் சிரித்தாள்.
அந்த மழைக்காலம் முடியும் நேரத்தில் யாரிடமும் முன்கூட்டி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் யாருமே எதிர்பார்த்திராத ஒரு சூழ்நிலையில் முத்துகிருஷ்ணன் செம்பேரிக்கு வந்தான். அவன் மட்டும் தனியாகத்தான் வந்திருந்தான். ஆனால், ஒரோதாவிற்கும் குஞ்ஞுவர்க்கிக்கும் குழந்தைகளுக்கும் ஜானம்மாவின் ஆசீர்வாதங்களையும், அவள் கொடுத்தனுப்பியிருந்த பலகாரங்களையும் கொண்டு வந்திருந்தான்.
குழந்தைகள் இறந்துபோன விஷயத்தைச் சொன்னதும் ஒரு சிறு பிள்ளை போல் அவன் தேம்பித் தேம்பி அழுதான்.
தன் குழந்தைகள் இந்த உலகைவிட்டு போய் விட்டதும், கணவன் குஞ்ஞுவர்க்கி நிரந்தர நோயாளியாக மாறியதும் வாழ்க்கையில் எல்லாமே போய் விட்டதைப் போல் ஒரு உணர்வை ஒரோதாவிடம் உண்டாக்கின. தனக்கு ஏற்பட்ட இழப்பை மனதிற்குள்ளேயே வைத்து ஒவ்வொரு நிமிடமும் குமுறிக் கொண்டிருந்தாள் அவள். அதே நேரத்தில் அந்த இழப்புகளும், கவலையும் அவளை ஒரு மூலையில் முடக்கிப் போட்டு விடவில்லை. இந்தக் காடும், இந்த மலைகளும், இந்த நதியும், நதிக்கரையில் இருக்கும் இந்த மண்ணும் மனிதனின் முயற்சிக்கு ஒரு சவாலாக நின்று கொண்டிருக்கும் காலம் வரையிலும் கவலையில் மூழ்கிப் போய் ஒரு மூலையில் உட்காருவதென்பது நல்ல ஒரு செயல் அல்ல என்பதையும், அது ஒரு மிகப் பெரிய பாவம் என்பதையும் அவள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள். வக்கச்சன் இறந்துவிட்டான், பாப்பன் இறந்துவிட்டான். ஆனால், இன்னும் குழந்தைகள் இருக்கின்றனவே! அடுத்த தலைமுறையை முழுமையாகத் துடைத்தெறிய அம்மைநோயால் அவர்களுக்குச் சாப்பிட உணவு வேண்டும். அவர்கள் கல்வி கற்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்கள் பெரிய மனிதர்களாக வளர வேண்டும். அதற்கான பாதையைப் போட்டுத் தருவது தன்னுடைய தலைமுறையின் தலையாய கடமை என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள். அந்தக் கடமையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது- அந்தப் பொறுப்புகளிலிருந்து பயந்தோடுவது என்பது பயங்கரமான ஒரு தவறு என்பதை அவள் தெளிவாக அறிந்திருந்தாள். அதனால் அதிகாலை வேளையில் குழந்தைகளின் கல்லறைக்கு முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும்போது அவள் மண்ணை முத்தமிட்டவாறு சொன்னாள். “பிள்ளைகளே... நான் கொஞ்ச நாள் கழிச்சுதான் அங்கே வருவேன். அதுக்கு முன்னாடி இங்கே சில வேலைகளை நான் செய்ய வேண்டியதிருக்கு...” நோயாளியான தன் கணவனை கவனித்துக் கொள்ளும் நேரம் போக, மீதி இருக்கும் நேரம் முழுவதும் அவள் முழுமையாகத் தன்னை அந்த வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டாள்.
பள்ளிக்கூடம் கட்டுவதற்காக மண்ணைத் தோண்டுவதிலும், கற்கள் சுமப்பதிலும், பாதை உண்டாக்குகிற விஷயத்திலும் குளம் உண்டாக்குகிற முயற்சியிலும்- எல்லாவற்றிலும் ஒரோதா முன்னால் நின்றாள். தயங்கிப் பின்னால் ஓட முயன்றவர்களுக்கு உற்சாகம் தந்து, அவள் அவர்களையும் தன்னுடன் நிற்கச் செய்தாள். கஷ்டப்பட்டு வேலை செய்தாள்.
“இவ்வளவு உழைப்பையும் ஒரோதா நம்ம நிலத்துல காட்டியிருந்தாள்னா எப்படி இருக்கும்!” -ஔதக்குட்டி சொன்னான்.
“நான் வளர்க்குறதுக்கு என்கிட்ட எந்தப் பிள்ளையும இல்ல. என் அப்பிரானி புருஷனுக்கு ஏதாவது சாப்பிடுறதுக்குத் தயார் பண்ணி கொடுக்கணும். மீதி நேரங்கள்ல இங்கே இருக்குற மனிதர்களுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும். அவ்வளவுதான்” அவள் சொன்னாள். “இதோட பலன் உங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் யாருக்குமே கிடைக்கும்.”
முத்துகிருஷ்ணனை மற்றவர்களுக்கு ஒரோதாதான் அறிமுகப்படுத்தி வைத்தாள். முதலில் அவள் அறிமுகம் செய்து வைத்தது காரைக்காட்டு குட்டிச்சனிடம்தான்.
“ஒரோதா அறிமுகப்படுத்தி வைக்கிற யாரா இருந்தாலும் என் சொந்தக்காரங்க மாதிரி...” -குட்டிச்சன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். தொடர்ந்து வெள்ளத்திலிருந்து எப்படி தன்னுடைய மகன் பேபியை ஒரோதா நீருக்குள் துணிச்சலுடன் பாய்ந்து காப்பாற்றினாள் என்பதை அவன் முத்துகிருஷ்ணனிடம் விளக்கிச் சொன்னான். இறுதியில் அவன் சொன்னான்: “அதனால... முத்துகிருஷ்ணன்... என்ன உனக்குத் தேவைப்பட்டாலும் தயங்காம என்கிட்ட கேளு. என்னால என்ன முடியுமோ, அதை நிச்சயம் உனக்குச் செய்வேன்!”
தேநீர் கடைக்குப் பக்கத்திலேயே முத்துகிருஷ்ணனுக்கு ஷெட் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை அவன் வாடகை இல்லாமல் கொடுத்தான். முத்துகிருஷ்ணன் ஷெட் கட்டினான். கொல்லர் வேலைகள் நடைபெறும் ஒரு பட்டறையையும் அங்கு உண்டாக்கினான். இப்படித்தான் செம்பேரியின் முதல் கொல்லர் வேலைகள் நடைபெறும் ஒரு இடம் உருவானது. விவசாயிகளுக்கு அந்தப் பட்டறை பலவிதத்திலும் பயனுள்ள ஒரு விஷயமாக இருந்தது.
ஔதக்குட்டியும் குஞ்ஞுவர்க்கியும் மற்றவர்களும் வாங்கிய நிலத்திற்கு சற்று மேற்பகுதியில் மலையில் முத்துகிருஷ்ணன் கொஞ்சம் நிலம் வாங்கினான். அந்த இடத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்ததும், இடத்தை முத்துகிருஷ்ணனுக்குக் காட்டிக் கொடுத்ததும் குட்டிச்சன்தான்.
முத்துகிருஷ்ணனின் வரவு ஒரோதாவிற்கு மட்டுமல்ல, குஞ்ஞுவர்க்கிக்கும் சந்தோஷமும் புத்துணர்ச்சியும் தந்த ஒரு விஷயமாக இருந்தது. ஒரோதாவைப் பொறுத்தவரை அவளின் எல்லா வேலைகளுக்கும் உதவியாக இருந்தான் முத்துகிருஷ்ணன். குஞ்ஞுவர்க்கிக்கோ ஏதோ ஒரு நெருங்கிய சொந்தக்காரன் தன்னைத் தேடி வந்திருப்பதைப்போல இருந்தது. வேலை இல்லாத நேரங்களில் முத்துகிருஷ்ணன் குஞ்ஞுவர்க்கியுடன் தன்னுடைய நேரத்தை செலவிட்டான். சேர்ப்புங்கல்- பாலா சம்பந்தப்பட்ட கதைகளைப் பேசி, அவர்களின் இளம் பிராயத்து நினைவுகளில் மூழ்கி அவர்கள் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரோதா அந்த நேரங்களில் அவர்களுக்கு பால் கலக்காத காப்பி தயார் பண்ணிக் கொடுப்பாள். சமையல் வேலையும், தோட்ட வேலையும் இல்லாத நேரங்களில் அவர்களின் பேச்சில் அவளும் கலந்து கொள்ளுவாள். புதிதாக வாங்கிய இடத்தில் ஷெட் கட்டி முடிப்பது வரை முத்துகிருஷ்ணன் வேலை செய்யும் இடத்திலோ; இல்லாவிட்டால் குஞ்ஞுவர்க்கியின் வீட்டிலோதான் இரவு நேரங்களில் தூங்குவான். அவனுக்கு ஒரோதா மதிய உணவு கொடுத்தனுப்புவாள். அவள் வீட்டில் உணவு தயாரித்து வைத்திருப்பாள். முத்துகிருஷ்ணனுக்கு உதவியாக பட்டறையில் வேலை செய்யும் பையன் வீட்டிற்கு வந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போவான்.
“இந்தப் பட்டறைக்காரனுக்கும் இவளுக்கும் நடுவுல அப்படியென்ன பெரிய நட்பு?” -ஔதக்குட்டி ஒரு நாள் சேச்சம்மாவை பார்த்து கேட்டான்.
“அவங்க ரெண்டு பேரும் சின்னப் பசங்களா இருக்குறப்போல இருந்தே ஒருத்தருக்கொருத்தர் நல்லா தெரிஞ்சவங்களாச்சே!”
“உனக்குத் தெரியாத ஒரு உறவு அவங்களோட நட்புக்குப் பின்னாடி இருக்கு...” -கள்ளத்தனமான ஒரு சிரிப்புடன் ஔதக்குட்டி சொன்னான்.
“எனக்குத் தெரியாமலா? அப்படியென்ன உறவு?” - சேச்சம்மா ஆர்வத்துடன் கேட்டாள்.
“இவனோட அம்மா பாப்பனோட ஆளா இருந்தா...”
“சும்மா சொல்லக்கூடாது...”
"சும்மா யாராவது சொல்லுவாங்களா? வேணும்னா நீ குஞ்ஞுவர்க்கிக்கிட்டயே கேளு. ஏன்... கொல்ல வேலை செய்கிற அவன் கிட்டயே கூட கேளு..."
"சேச்சே... நான் யார்கிட்டயும் கேட்க விரும்பல."
முத்துகிருஷ்ணனும் குஞ்ஞுவர்க்கியும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒரோதாவிற்கு தொண்ணூற்றொன்பதாம் வருடம் உண்டான மிகப் பெரும் வெள்ளத்தில் ஆற்று நீரில் தான் மிதந்து வந்த மீனச்சில் ஆற்றின் கரையில் உள்ள சேர்ப்புங்கல் என்ற அந்த கிராமத்திற்கே பயணம் செய்து போவதைப் போல் இருந்தது. அங்கிருக்கும் பழைய மனிதர்களை அவள் சந்தித்தாள். அவளின் நினைவுகள் வெட்டுக்காட்டு பாப்பன் என்ற அவளின் தந்தைமேல் போய் நின்றன. அப்போது அவள் கண்கள் நனைந்தன. பிறகு கண்ணீரால் நிறைந்தன. அந்தக் கண்ணீர் பெருகி வழிய ஆரம்பித்தது. கன்னத்தின் வழியே அருவியென விழந்து கொண்டிருந்த கண்ணீரை அவள் தன்னுடைய முண்டு முனையால் துடைத்தாள். கண்ணீரைத் துடைத்தவாறு, அடுப்பை நோக்கி நடந்தாள்.
முத்துகிருஷ்ணன் பட்டறையில் இருக்கும்போது, அவன் நிலத்தில் உள்ள வேலைகளைப் பார்த்துக் கொண்டது ஒரோதாதான். கூலிக்காரர்களை வைத்து வேலை செய்ய வைப்பது மட்டுமல்ல, அவர்களில் தானும் ஒருத்தியாய் நின்று அவளும் வேலை செய்வாள்.
"அந்த ஒரோதா அக்காவுக்குச் சரிசமமா நின்னு வேலை பார்க்குறது ரொம்பவும் கஷ்டம்..."- வேலை முடிந்து சாயங்காலம் காரைக்காட்டு குட்டிச்சனின் தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும்போது, கூலி வேலைக்காரர்கள் பேசிக் கொண்டார்கள். "அந்த அக்கா நம்மளை விட அருமையா வேலை செய்யிறாங்க. அப்படி இருக்குறப்போ நாம எப்படி வேலை செய்யாம திருட்டுத்தனம் பண்ண முடியும்?"
சற்று தள்ளி பட்டறையில் இருந்தவாறு அதைக் கேட்க நேர்ந்த முத்துகிருஷ்ணன் சிரித்தவாறு சொன்னான்:
"அப்படின்னா ஒரோதாவுக்குப் பதில் அங்கே நான் இருந்திருந்தா, என்னை நீங்க நல்லா ஏமாத்துவீங்கன்னு சொல்லுங்க..."
வேலை செய்பவர்களில் ஒருவன் சொன்னான். "அதுல என்ன சந்தேகம்?"
அதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்- குட்டிச்சனும்தான்.
மலை மேலிருந்து மண் வருவதைத் தடுப்பதற்கு மேலே இருக்கும் எல்லையில் பாறைக்கற்களால் சுவர் அமைக்கலாம் என்ற எண்ணத்தை முதலில் சொன்னது ஒரோதாதான். எல்லா விவசாயிகளும் ஒரே மாதிரி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், எல்லோரும் ஒன்று சேர்ந்து அதற்குத் தேவையான செலவுகளைச் செய்ய வேண்டும் என்றாள் ஒரோதா. அப்படிச் செய்வதால் உண்டாகும் பலன் என்ன என்பதை ஒரோதா விளக்கமாக எடுத்துச் சொன்னதைக் கேட்ட எல்லோரும் அவள் எண்ணத்திற்குச் சம்மதித்தார்கள். ஔதக்குட்டி கூட அதற்கு எதிராக ஒரு வார்த்தை பேசவில்லை.
ஸ்ரீகண்டபுரத்தில் இருந்த ஆட்களை அழைத்து வந்து பாறைகளைப் பிளக்கச் செய்தார்கள். எல்லா காரியங்களும் படுவேகத்தில் நடந்தன. ஒன்றாகச் சேர்ந்து எந்த காரியத்தைச் செய்தாலும், அது நினைப்பதைவிட மிகவும் வேகமாக நடக்கும் என்பதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தார்கள். முன்பு இந்த மாதிரி எல்லா விஷயங்களிலும் ஒன்று பட்டு நிற்காமல் போனோமே என்பதற்காக கடந்து போன நிகழ்ச்சிகளை மனதில் அசை போட்டுப் பார்த்து வருந்தினார்கள். மலை மேலிருந்து மண் வருவது என்ற விஷயம் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.
முத்துகிருஷ்ணனின் நிலத்தில் ஷெட் வேலை முடிவுற்றதும் அவன் அங்கேயே இரவு நேரங்களில் உறங்கத் தொடங்கினான். இருந்தாலும், பெரும்பாலும் அவன் சாப்பிடுவது ஒரோதாவின் வீட்டில்தான். மாலை நேரம் ஆனதும் அவன் பட்டறையைப் பூட்டி விட்டு ஒரோதாவின் வீட்டிற்கு வந்தான்.
இரவு வெகு நேரம் ஆன பிறகும் கூட அவனும் குஞ்ஞுவர்க்கியும் பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். சில நாட்களில் முத்துகிருஷ்ணன் வாங்கிக் கொண்டு வரும் பட்டைச் சாராயத்தைக் குடித்து முடித்த பிறகு அவர்கள் சாப்பிட உட்காருவார்கள். சாப்பிட்டு முடிந்து, பீடி பிடித்து முடிக்கும்வரை முத்துகிருஷ்ணன் அங்கே இருந்தான். பிறகு அவன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.அவன் சென்ற பிறகு, ஒரோதா உணவு முடித்து படுத்தாள். அவளுக்கு உறக்கமே வரவில்லை. ஒன்றுக்குமே லாயக்கில்லாத குஞ்ஞுவர்க்கியின் மார்பின் மீது தன் கைகளை வைத்துப் படுத்திருந்த ஒரோதா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவளுக்குள் இருந்த பெண்மை- திருப்தியற்ற ஒரு தனிமை எதையோ எதிர்பார்த்து ஏங்கியது. தனக்குள் அது ஊமையாக அழுது கொண்டிருந்தது. அவள் உடலுறுப்புகள் ஆடைகளுக்குள் முறுக்கேறி நின்றன. அணிந்திருக்கும் ஆடைகளை முழுமையாக அவிழ்த்தெறிந்து நிர்வாணக் கோலத்தில் நிற்க வேண்டும் என்றும், அந்த நிர்வாணத்துடன் இன்னொரு உருவத்தின் நிர்வாணத்தை இரண்டறக் கலக்கச் செய்ய வேண்டுமென்றும்; நிர்வாணத்தோடு நிர்வாணத்தால் மறையச் செய்ய வேண்டுமென்றும்; அந்த ஆதி உணர்ச்சப் பெருவெள்ளத்தில் தன்னையே முழுமையாக மூழ்கடிக்க வேண்டுமென்றும் அவளின் முப்பதுகளைத் தாண்டிய உடலில் பெருகியிருந்த அளவற்ற சக்தி விரும்பியது. சில நாட்களுக்கு முன்பு தனக்கு உண்டான உடலுறவு அனுபவத்தை நினைத்துப் பார்த்த போது அவளுக்கு வாந்தி எடுக்க வேண்டும் போல் இருந்தது. அதை ஒரு அனுபவம் என்றே அவளால் சொல்ல முடியவில்லை. பாலத்துங்கல் அவுசேப்பச்சன் என்ற மாமிசப் பிண்டத்திற்கு சிறிது பணத்திற்காக அவள் தன்னுடைய சதையை வாடகைக்குக் கொடுத்தாள் என்பதே உண்மை. அவள் அதை மனம் விருப்பப்பட்டு செய்யவில்லை. அவளின் மனம் அப்போது வேறெங்கோ வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவு மோசமான, வெறுப்பை உண்டாக்கக்கூடிய ஒரு அனுபவம் தன் வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் நடந்ததே இல்லை என்பதையும் ஒரோதா நினைத்துப் பார்த்தாள்.
ஆனால், இந்த தர்மசங்கடமான நிலை, உணர்ச்சிப் பெருக்கின் ஆர்ப்பரிப்பு- இதற்கு என்னதான் வழி? எங்கே தன் நிலையை விட்டு தவறி விழுந்து விடுவோமோ என்று உண்மையாகவே பயந்தாள் ஒரோதா. சாயங்காலம் வேலை முடிந்து, குளித்து முடித்து வீட்டில் உறங்கலாம் என்று படுக்கும்போது ஒரு முத்தம், ஒரு அணைப்பு, ஒரு தழுவல், ஒரு கொஞ்சலான வார்த்தை, ஒரு உணர்ச்சித் தூண்டுதல், கடைசியில் அந்த உணர்ச்சிகளின் வாசல் கதவுகள் திறந்து விடப்படுகிறபோது உண்டாகிற இனம் புரியாத ஆனந்த அனுபவம், உடல் முழுவதையும் சிலிர்ப்படைய வைத்து பாய்ந்து கொண்டிருக்கும் அலைகளின் பெருவெள்ளம்... அவள் படுத்தவாறு இப்படியும் அப்படியுமாய் புரண்டு கொண்டிருந்தாள். இறுதியில் அந்த இனிய கனவுடனேயே உறங்கியும் போனாள்.
அந்த இனிய கனவு நடைமுறையிலும் சாத்தியமானது. அவளே கொஞ்சமும் எதிர்பார்க்காமலே இருந்த சூழ்நிலையில்தான் முத்துகிருஷ்ணனின் நிலத்தில் வெட்டி வீழ்த்தப்பட்ட ஒரு மரத்தின் கிளைகளை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள் ஒரோதா. அப்போது மாலை நேரம். முத்துகிருஷ்ணன் அந்தச் சமயத்தில் அங்கே வந்தான்.
“மரக் கிளைகளை எடுத்துப் போட்டுக்கிட்டு இருக்கியா?” - என்ற அவன் கேள்வி காதில் விழுந்த பிறகுதான், ஒரோதா திரும்பியே பார்த்தாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. சாதாரணமாக அந்த நேரத்தில் அவன் வர மாட்டான்.
“என்ன.... என்னைக்கும் இல்லாம இந்த நேரத்துல இங்கே?” - அவள் கேட்டாள்.
“வர்றதா இல்லைதான். திரும்பவும் போகணும். குட்டிச்சன் கோழிக்கோட்டுக்குப் போறாரு- நாளைக்குப் பொழுது விடியிற நேரத்துல. சில சில்லறை சாமான்கள் வாங்க வேண்டியதிருக்கு. காசு எடுக்குறதுக்காக வந்தேன்...”- முத்துகிருஷ்ணன் சொன்னான். அவன் கன்னம் மாலை நேர வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவளின் நெற்றியிலும் மூக்கிற்குக் கீழே மேலுதட்டிற்கு மேலும் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்தவாறு அவன் சொன்னான். “என்ன... இந்த அளவுக்கு வேர்த்து நாசமாப் போயிருக்கே!”
“வேர்த்திருக்கு. ஆனா, நாசமாப் போகல...” - அவள் சிரித்தாள். “சரி... இன்னொரு விஷயம். உடனே போகணுமா?”
“கொஞ்ச நேரம் கழிச்சு போனாக்கூட போதும். என்ன விஷயம்?”
“வா...” - என்று சொன்ன அவள் நிலத்தில் மேற்பகுதியை நோக்கி நடந்தாள். அவன் அவளைப் பின்தொடர்ந்து நடந்தான்.
சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு பெரிய காட்டு மரத்திற்குக் கீழே அவள் நின்றாள். “மரத்துல ஏறின நிகழ்ச்சியையெல்லாம் மறந்தாச்சா?” - அவள் கேட்டாள். “இல்லை” என்று அவன் தலையை ஆட்டினான். அவள் மரத்திற்கு மேலே விரலால் காட்டியவாறு சொன்னாள். “அதோ அங்கே ஒரு தேன்கூடு இருக்கு. அதுல நிறைய தேன் இருக்கு. மரத்துல ஏறி தேன் எடுத்துட்டு வர முடியுமா?”
“நிச்சயமா...”- அடுத்த நிமிடமே முத்துகிருஷ்ணன் தான் அணிந்திருந்த சட்டையை அவிழ்த்தான். கட்டியிருந்த வேஷ்டியை மடித்துக் கட்டினான். மரத்தின் மேல் ஏறினான். “தேனீ கொட்டிடும்... பார்த்து...” என்றாள் ஒரோதா.
“மாமரத்துல இருந்த எறும்பை விடவா இந்தத் தேனீ மோசமா இருக்கப் போகுது...?”
அடுத்த நிமிடம் கடந்து போன நாட்களுக்குள் முழுமையாக மூழ்கிப் போனாள் ஒரோதா. நினைக்க நினைக்க இன்பம் தரும் அந்த இளமைக் கால நினைவுகளை அவள் அசை போட்டவாறு சிலையென நின்றிருந்தாள்.
முத்துகிருஷ்ணன் எந்தவித பிரச்சினையுமில்லாமல் தேன் கூட்டுடன் இறங்கி வருவதற்கும், கல்லை விட்டு எறிவதைப் போல் மழை பெய்யவும் சரியாக இருந்தது.
“இதென்ன வெயிலடிச்சிக்கிட்டே ஒரு மழை!”- ஒரோதா ஆச்சரியத்துடன் சொன்னாள்.
"வீட்டுக்கு ஓடிடுவோம்"- அவன் கழற்றி வைத்திருந்த சட்டையை ஒரோதா தன்னுடைய கைகளில் எடுத்தாள். அவர்கள் ஓட ஆரம்பித்தார்கள். ஓடும்போது அவன் தன் கையை நீட்டினான். அவள் அவனுடைய கைகளைப் பற்றினாள். ஒருவர் கையை இன்னொருவர் பற்றியவாறு இருவரும் குழந்தைகளைப் போல ஓடி குடிசையை அடைந்தபோது, அவர்கள் இருவருமே நன்றாக நனைந்து விட்டிருந்தார்கள். குடிசையின் வாசலில் அவர்கள் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு நின்றிருந்தார்கள். நன்கு நனைந்திருந்த ஆடைகளுக்குள் அபூர்வமாகத் தெரிந்த அவளின் உடலின் அழகைப் பார்த்தான் முத்துகிருஷ்ணன். அவன் பார்வையில் தெரிந்த ஒரு மாற்றத்தை அவளும் கவனித்தாள். அவளால் அடக்க முடியவில்லை. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
"ஒரோதா... இப்ப நீ என்ன நினைக்கிறேன்னு நான் சொல்லட்டுமா?”
"ம்..."
"நம்மளோட சின்ன வயசு நாட்களைப் பற்றி..." அவன் சொன்னது சரிதான் என்பது மாதிரி அவள் சிரித்தாள்.
"நனைஞ்ச துணியோடயே நின்னா காய்ச்சல் வந்துடாதா? கைலியும் துண்டும் போதும்னா நான் கொண்டு வந்து தர்றேன். மாத்திக்கோ..."- முத்துகிருஷ்ணன் சொன்னான்.
அவர்கள் இருவரும் தலையைத் துவட்டினார்கள். உடம்பைத் துடைத்து ஆடைகளை மாற்றினார்கள். கைலியைக் கட்டி, துண்டால் மார்புப் பகுதியை மறைத்தவாறு ஒரோதா வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள். சிறிது தள்ளி பீடியொன்றைப் புகைத்தவாறு அவளையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் முத்துகிருஷ்ணன்.
வெளியே மழை பயங்கர இரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது. அவ்வப்போது மின்னல்களும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. இடி முழக்கம் பூமியையே நடுங்கச் செய்தது.
மழை நின்றபோது முத்துகிருஷ்ணன் என்ற கொல்லர் வேலை செய்யும் மனிதனின் படுக்கையில் குப்புறப்படுத்தவாறு, அவனின் ஆண்வாடை அடித்துக் கொண்டிருந்த தலையணையில் தன்னுடைய முகத்தை வைத்து ஒரோதா தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவள் அருகில் அமர்ந்து அவள் தலைமுடியையும் தோளையும் அன்பு மேலோங்கத் தடவியவாறு, முத்துகிருஷ்ணன் சொன்னான். "அழாதே ஒரோதா... அழாதே..."
அவன் கையை அவள் விலக்கி விட்டாள். அழுது கொண்டிருப்பதற்கு நடுவில் கடுமையான குரலில் ஒரோதா சொன்னாள். "நீங்க புறப்படுங்க... இனிமேல் நீங்க என் வீட்டுக்கு வரக்கூடாது. இனிமேல் நாம பார்க்கவும் கூடாது. பார்த்தாலும் பேசக்கூடாது. நம்ம ரெண்டு பேருக்குமிடையே இருந்த உறவு இந்த நிமிடத்தோட முடியுது."
"ஒரோதா!"
"அதான்... போங்கன்னு சொல்றேன்ல!"- அவள் குரல் வழக்கத்தை விட உயர்ந்திருந்தது. அவள் அழுவதை நிறுத்திவிட்டிருந்தாள்.
பெட்டியைத் திறந்து, காசை எடுத்துக் கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் முத்துகிருஷ்ணன் வெளியேறி நடந்தான். அவன் போன பிறகு, அவள் மீண்டும் அழுகையில் மூழ்கினாள்.
என்ன நடந்தது என்பதை ஒரு நிமிடம் அசை போட்டுப் பார்த்தாள். மதம் பிடித்து பெய்து கொண்டிருந்த மழை, மதம் பிடிக்கச் செய்யும் ஆண் வாசனை, மதம் பிடிக்கச் செய்யும் ஆணின் தொடல்... முப்பதுகளைத் தாண்டியிருக்கும் அவளின் வெளியே தெரியாமல் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகளை அவை தட்டியெழுப்பியபோது, உண்மையிலேயே அவளுக்குப் பைத்தியம் பிடிப்பதைப் போலிருந்தது. அவள் தன்னையே முழுமையாக மறந்துவிட்டாள். அவள் பெண்ணாக மாறினாள். முத்துகிருஷ்ணன் ஆணாக ஆனான். வெறும் ஆணாகவும் பெண்ணாகவும் அவர்கள் ஆனார்கள். ஆனால், அவர்கள் இளம் பருவத்து தோழனும், தோழியுமாக இருந்தவர்கள். வாலிபப் பருவத்தில் அவர்கள் சினேகிதனாகவும், சினேகிதியாகவும் இருந்தவர்கள். பெண்மை என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொண்ட காலத்தில் அவர்கள் ஒன்றாகவே இருந்தார்கள். மாமரத்தினடியில் கைகளைக் கோர்த்தவாறு ஓடி விளையாடிக் கொண்டிருந்த காலத்தில், மீனச்சில் ஆற்றில் நீந்தித் திரிந்தபோது, மரத்தின் கிளைகளில் அமர்ந்து சிரித்து மகிழ்ந்த காலத்தில்... மொத்தத்தில் அப்போதிருந்தே தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஈர்க்கக் கூடியவர்களாகவும், நெருங்கிய நேச மனப்பான்மை கொண்டவர்களாகவும் விளங்கி வந்திருப்பதை ஒரோதாவால் தெளிவாக உணர முடிந்தது. முத்துகிருஷ்ணன் தான் அவள் தேடிக் கொண்டிருந்த ஆணாக இருந்திருக்க வேண்டும். அவனுடன் உடலுறவு கொண்டபோதுதான் வாழ்க்கையில் முதல் தடவையாக உடலுறவால் கிடைக்கக்கூடிய இன்பம் எந்த அளவிற்கு மகத்தானது என்பதையே அவளால் உணர முடிந்தது. அதைத் தெரிந்து கொள்வதற்கு அவளுக்கு இத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்திருக்கிறது. வாழ்க்கையிலேயே தன்னுடைய சொந்த சுகத்திற்காக தான் செலவழித்த நிமிடங்கள் இப்போது கடந்து போன நிமிடங்கள் மட்டுமே என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். தான் அப்படி நடந்து கொண்டது தவறான ஒன்றா? அது ஒரு பாவச் செயலா, ஆயுள் காலத்தில் ஒரு தடவையாவது ஒருவனோ அல்லது ஒருத்தியோ தங்களின் சொந்த சுகத்திற்காக முயற்சிப்பதை எப்படி தவறென்று கூற முடியும்?
அது பாவச் செயலாக இருக்கும் பட்சம், அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள். "மாதாவே, நான் இந்தப் பாவத்தைச் செய்ததா நானே ஒத்துக்குறேன். இந்தப் பாவம் என்னைப் பைத்தியம் பிடிச்சவ மாதிரி ஆக்கியிருக்கு. எனக்கு ஒரு திருப்தி நிலையைக் கொடுத்திருக்கு. என்னை வெறி பிடிச்சவ மாதிரி ஆக்கியிருக்கு. இருந்தாலும் மாதாவே, நான் இதே விஷயத்தை இன்னொரு தடவை செய்ய மாட்டேன். சாகுற வரைக்கும் மறக்காம இருக்குறதுக்கு எனக்கு இந்த ஒரு அனுபவம் போதும்."
மாலை மயங்கிக் கொண்டிருந்தது. மழை நன்கு பெய்து ஓய்ந்திருந்தது. மர இலைகளிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகள் உண்டாக்கிய சத்தத்தைத் தவிர, வேறு எந்த சத்தமும் அங்கு கேட்கவில்லை. ஒரோதா இருந்த இடத்தை விட்டு எழுந்தாள். முகத்தையும் உடம்பையும் கழுவி, துடைத்தாள். காயப் போட்ட முண்டையும் சட்டையையும் எடுத்து அணிந்தாள். முத்துகிருஷ்ணனின் குடிசையை விட்டு இறங்கி கீழ் நோக்கி நடந்தாள்.
சமையலறையில் அவளின் காலடிச் சத்தத்தைக் கேட்டதும் குஞ்ஞுவர்க்கி கேட்டான். "ஒரோதா, வந்துட்டியா?"
"ம்..."
"இங்கே வா."
"காப்பி போட்டுட்டு வர்றேன்."
"காப்பி பிறகு போட்டுக்கலாம். முதல்ல இங்கே வா."
அவள் அவன் அருகில் வந்தாள். மரத்தூணின் மேல் தலையணையைச் சாய்த்து வைத்தவாறு, அதன் மேல் சாய்ந்து, கால்களை நீட்டி அமர்ந்திருந்தான் குஞ்ஞுவர்க்கி. பக்கத்தில் கையால் காட்டியவாறு அவன் சொன்னான்.
"இங்கே வந்து உட்காரு."
அவள் தயங்கியவாறு வந்து அமர்ந்தாள்.
"பெருசா மழை பெய்ஞ்சது... இல்லே?"
"ஆமா..."
"நீ நல்லா நனைஞ்சிட்டியா?"
"இலேசா..."
"புதுமழை... காய்ச்சல் வந்திடும். தலையில கொஞ்சம் மிளகுப் பொடியைத் தேய்ச்சு விடு..."
அதுவரையில் ஒரோதா அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் தடையை உடைத்தெறிந்து விட்டு வெளியே பாய ஆரம்பித்தது. தேம்பித் தேம்பி அழுதவாறு அவள் அவனை இறுக கட்டிப் பிடித்தாள். அவன் நெற்றியிலும் கழுத்திலும் காதுகளிலும் முத்தங்கள் பதித்தவாறு தேம்பித் தேம்பி அழுதுகொண்டே அவள் அழைத்தாள். "என் தங்கமே!"
"இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு ஒரோதா? நீ ஏன் இப்ப அழுதுக்கிட்டு இருக்கே?"
"ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல..."- அவள் அழுது கொண்டேயிருந்தாள்.
அன்று இரவு குஞ்ஞுவர்க்கி மரணத்தைத் தழுவினான்.
அதற்குப்பிறகு எட்டு வருடங்கள் ஒரோதா வாழந்தாள். தன்னுடைய கணவன் இறந்த பிறகு, விசேஷங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஒரு நாள் அவள் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி சொன்னாள். "எனக்குன்னு இனிமேல் வாழ்றதா இருந்தா, அது இந்த ஊருக்காகத்தான். இங்கே போராடி வாழணும்னு வந்திருக்குற மனிதர்களுக்காகத்தான்..."
ஔதக்குட்டியும் சேச்சம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் அவர்களுடன் தங்க சம்மதிக்கவில்லை. அவளைத் திருமணம் செய்து கொள்வதாக பலரும் வந்தார்கள்.
ஆனால், அப்படி வந்த திருமண விஷயம் எதையும் அவள் ஒப்புக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் ஒரு வகை பற்றற்ற தன்மை அவளை வந்து ஆக்கிரமித்து விட்டிருந்தது. அதே நேரத்தில், செய்ய வேண்டிய வேலைகளை அவள் செய்யவே செய்தாள். எந்தவித வேலையாக இருந்தாலும், அதற்கு முன்னால் போய் ஒரோதா நின்றாள். ஆபத்தான நேரங்களில் புறமுதுகு காட்டிக் கொண்டு ஓடியவர்களைக் கண்டபடி திட்டி தன்னுடன் அவர்களை நிறுத்தினாள். வட்டைக்காட்டு இட்டிய வீராவைப் போன்ற தைரியசாலிகள் கூட பயந்து பின்வாங்கிய இடங்களில் உயிரைக் கையிலெடுத்துக் கொண்டு ஒரோதா வரும் ஆபத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மனதில் பயங்கர தைரியத்துடன் போய் நின்றாள். மற்றவர்களின் நலனுக்காக அவள் எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டாள். பாலம் உண்டாக்குகிற இடத்திலும், கிணறு தோண்டுகிற இடத்திலும், காட்டு மரத்தை வெட்டுமிடத்திலும், மண்ணைத் தோண்டுகிற இடத்திலும்- எல்லா இடங்களிலும் ஒரோதா முன்னால் நின்றாள். தான் செய்த வேலைக்கு அவள் யாரிடமும் கூலி வாங்கியதில்லை. ஏதாவது வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்று தகவல் வந்தால், அவர்களை கவனிக்க அடுத்த நிமிடமே அவள் அங்கு போய் நிற்பாள்.
ஊரில் நடைபெற்ற எல்லா காரியங்களிலும் ஒரோதா பங்கு பெற்றாள். தவறைத் தவறென்றும், சரியானதைச் சரியானதென்றும் உள்ளத்தைத் திறந்து அவள் சொன்னாள். எந்தப் பக்கம் உண்மை இருக்கிறதோ, அந்தப் பக்கம் அவள் உறுதியுடன் நின்றாள். அவளை எதிர்க்கும் தைரியம் மொத்தத்தில் யாருக்குமே இல்லை.
இதற்கிடையில் வட்டைக்காட்டு இட்டிய வீராவின் மகள் அன்னக்குட்டியின் திருமணம் நடைபெற்றது. செம்பேரியிலிருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்த பேராவூர் என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன்தான் மணமகன். திருமணச் சடங்குகளில் ஒரோதாவும் கலந்து கொண்டாள். திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து, அன்னக்குட்டியின் கணவன் அவளை திரும்பக் கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டு போய் விட்டான். இட்டியவீரா தான் கொடுப்பதாகச் சொன்ன நாளில் மீதி வரதட்சணை தொகையைத் தரவில்லை என்பதே காரணம். இட்டியவீரா அதைப் பார்த்து உண்மையிலேயே பதைபதைத்துப் போனான். அவனுக்கு வாழக்கையில் ஒரு அவமானமான காரியமாக அது பட்டது. அன்னக்குட்டிக்குப் பிறகு திருமண வயதை எட்டிய பெண்களை வீட்டில் வைத்திருந்த இட்டியவீராவால் பணத்தைத் தயார் பண்ண முடியாமல் போய் விட்டதென்பதுதான் உண்மை.
விவரத்தைத் தெரிந்து கொண்ட ஒரோதா அன்னக்குட்டியைப் போய் பார்த்தாள். அவளுடைய ஆறு மாதமே ஆன சிறுவனைக் கையில் தூக்கி அவனுக்கு முத்தம் தந்தவாறு அவளிடமும் வீட்டிலுள்ள மற்ற வயதானவர்களிடமும் கேட்டு எல்லா விஷயங்களையும் அறிந்து கொண்டாள். அன்னக்குட்டியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அவள் பேராவூருக்குப் புறப்பட்டாள். அன்னக்குட்டியின் கணவன் வீட்டிற்கு அவள் சென்றாள். பரணங்ஙானத்துக்காரன் கல்லிக்கட்டில் ஆன்ட்ரூஸின் மகன் ஜோஸ்தான் அன்னக்குட்டியைத் திருமணம் செய்திருந்தான். அவர்கள் சென்றபோது ஜோஸும் அவன் தந்தையும் அங்கேதான் இருந்தார்கள். ஒரோதாவை நன்றாக அறிந்திருந்த ஆன்ட்ரூஸ் அவளைப் பார்த்ததும் இலேசாக நெளிந்தான். இருந்தாலும் அவன் முன்னால் வந்து வரவேற்றான். "உட்காருங்க பிறகு... அங்கே என்ன விசேஷங்கள்?" என்றான். உள்ளே திரும்பி தன்னுடைய மனைவியை அழைத்தான். "அடியே... இங்க யாரு வந்திருக்கிறதுன்னு வந்து பாரு..."
அடுத்த நிமிடம் ஆன்ட்ருஸின் மனைவி அங்கு வர ஒரோதா விஷயத்திற்கு வந்தாள். வட்டைக்காட்டு இட்டியவீராவின் தற்போதைய கஷ்டமான நிலையை அவர்களுக்கு அவள் விளக்கினாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஆன்ட்ரூஸ் சொன்னான். "நீங்க சொல்றது சரிதான். ஆனா, நாங்க என்ன சொல்றோம்னா... எங்களுக்குள்ள வாய் வார்த்தையா பேசிக்கிட்ட விஷயம் இது. இது எங்களோட சொந்த விஷயம். ஒரோதா, இதுல நீங்க தலையிட வேண்டாம்..."
"அன்னக்குட்டியோட வீட்டுல ஒரு விஷயம்னா அதை என் வீட்டு விஷயமாத்தான் நான் நினைக்கிறேன்."- ஒரோதா கடுமையான குரலில் சொன்னாள். "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? உங்களுக்குள்ளே இருக்குற விவகாரத்தால இந்தக் குழந்தை ஏன் பாதிக்கப்படணும்? இவன் என்ன தப்பு செஞ்சான்?" அவள் ஜோஸின் பக்கம் திரும்பினாள். அவனைப் பார்த்துக் கேட்டாள். "ஜோஸ்... நீ ஒரு வாலிபப் பிள்ளைதானே? நீ வேலை செஞ்சி இந்தப் பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்ற முடியாதா?"
ஜோஸ் அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை. அவனுடைய தந்தையும் தாயும் பலவகைகளில் வாதாடினார்கள். கடைசியில் ஒரோதா சொன்னாள். “சரி... உங்களுக்கு எந்தவித இழப்பும் வேண்டாம். எனக்கு கொஞ்சம் அங்கே நிலம் இருக்கு. விவசாயம் செஞ்ச நல்ல மண்ணு. என்னோட காலத்துக்குப் பிறகு அந்த நிலம் அன்னக்குட்டிக்கும் ஜோஸுக்கும்தான். இப்ப இருந்தே அவுங்க வேணும்னா அங்கேயே தங்கிக்கட்டும்..."
அவள் சொன்னதை ஆன்ட்ரூஸும் அவனின் மனைவியும் ஏற்றுக் கொண்டார்கள். விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட வட்டைக்காட்டு இட்டிய வீராவின் வயதாகிப் போன கண்கள் ஈரமாகி விட்டன. முன்பு காரைக்காட்டு குட்டிச்சன் சொன்ன அதே வார்த்தைகளை இட்டியவீரா தன்னுடைய குரலில் திரும்பச் சொன்னான். "ஒரோதா... நீ ஒரு அவதாரம்தான்."
செம்பேரியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தன. அந்த வளர்ச்சியின் ஒவ்வொரு படியையும் கட்டி உயர்த்துவதில் ஒரோதா முக்கிய பங்கு வகித்தாள்.
குஞ்ஞுவர்க்கியின் மரணத்தையடுத்து ஏழு வருடங்களுக்குப் பிறகு ஒரோதா ஒரு மிகப்பெரிய முயற்சியில் தன் காலை எடுத்து வைத்தாள். கோடை காலத்தில் விவசாய நிலங்களுக்கு நீர் கொண்டு வரும் ஒரு பெரிய திட்டமது. மலையின் உச்சியில் தேவி இருப்பதாகவும், தேவி குடி கொண்டிருக்குமிடத்திற்கு அருகில் எந்தக் காலத்திலும் வற்றாத ஒரு ஊற்று இருப்பதாகவும் யாரோ ஒரோதாவிடம் சொன்னார்கள். பலரிடமும் பேசிப் பார்த்ததில் கேள்விப்பட்ட அந்தச் செய்தி உண்மைதான் என்று அவளுக்குத் தெரிய வந்தது.
"எந்தக் காலத்திலும் வற்றாத ஊற்று அங்கே இருக்குறதா இருந்தா..." அவள் சொன்னாள். "அதுல இருக்குற தண்ணியை நாம கோடை காலத்துல பயன்படுத்தலாம்."
"அப்படியா?"
தன்னுடைய வார்த்தைகளைச் சந்தேகத்துடன் பார்த்தவர்களைப் பார்த்து ஒரோதா சொன்னாள் "அந்தத் தண்ணியை நாம இங்கே கொண்டு வரணும். தெரியுதா?"- அவள் அவர்களைப் பார்த்து சிரித்தாள்.
"யாரு கொண்டு வர்றது-?"- மீண்டும் நம்பிக்கையில்லாமல் கேட்டார்கள்.
"யாருக்கு வேணுமோ அவுங்க. வேற யாரு கொண்டு வருவாங்க?"- ஒரோதா மீண்டும் சிரித்தாள்.
ஒரோதா அதற்கான திட்டங்களை வகுத்தாள். பெரும்பாலானவர்கள் அந்த முயற்சியிலிருந்து நழுவினார்கள். புதிய தலைமுறையைச் சேர்ந்த சில இளைஞர்கள், வயதானவர்களின் வார்த்தைகளைக் கொஞ்சம் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் தங்களின் ஒரோதா அக்காவின் தலைமையில் அணி சேர்ந்து நிற்கத் தயாரானார்கள். மலையின் மேற்கு சரிவில் வழி உண்டாக்கி மலை மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது திட்டம். பிக்காக்ஸுகளும், கோடரிகளும், கத்திகளும், வெட்டரிவாள்களும், மண்வெட்டிகளும் எடுத்துக்கொண்டு சுமார் அறுபது பேர் பெரும்பாலும் இளைஞர்கள்- ஒரோதாவின் தலைமையில் மலையடி வாரத்தை அடைந்து வேலையைத் தொடங்கினார்கள். இளைஞர்கள் கூட்டத்தில் ஒரோதா ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய காரைக்காட்டு குட்டிச்சனின் மகன் பேபியும் இருந்தான். அவன் ஒரோதா அக்கா பக்கம் நின்றிருந்தான்.
வேலை மிகவும் கஷ்டம் நிறைந்ததாக இருந்தது. இரண்டு நாட்கள் வேலை முடிந்து மூன்றாம் நாள் வந்தபோது அந்தக் கூட்டத்திலிருந்து இரண்டு பேர் விலகிக் கொண்டார்கள். ஒரோதா அதற்காக மனம் தளரவில்லை. எல்லோருக்கும் வழிகாட்டுவதைப் போல் அவள் முன்னால் சென்றாள். சிறிது மேலே சென்றதும் கூக்குரலிட்டு அழைத்தாள். அப்போது கீழே நின்றிருந்தவர்கள் வழியை வெட்டி தெளிவாக்கி மேலே வந்தார்கள். இப்படித்தான் அவர்கள் வேலை செய்யும் முறை வகுக்கப்பட்டிருந்தது. நாட்கள் அதிகம் ஆக ஆக கடினமான உழைப்பும், அப்படி உழைத்ததால் உண்டான சோர்வும் அவர்களிடம் அதிகம் தெரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்து மேலும் சிலர் காணாமல் போனார்கள். மீதி இருந்தவர்களைப் பார்த்து ஒரோதா தைரியம் சொன்னாள். "நாம மிகப் பெரிய ஒரு சாதனையைச் செய்ய இருக்கோம். நிறைய கஷ்டப்பட்டாத்தான் அந்தச் சாதனையை நம்மால செய்ய முடியும். நாம செய்யப் போற அந்தச் சாதனையோட ஒப்பிடுறப்போ, நம்மோட கஷ்டங்கள் ரொம்ப ரொம்ப சாதாரணம்."
ஒரு வாரம் வேலை முடிந்தபோது, ஒரோதாவிற்கு பத்து வயது கூடி விட்டதைப் போல் இருந்தது.அவளின் முகம் மிகவும் கறுத்துப் போய்விட்டது. கண்ணுக்குக் கீழே கோடுகள் தெரிந்தன. உடம்பு மிகவும் மெலிந்து விட்டது. ஆனால், மனம் மட்டும் கொஞ்சம் கூட தளரவில்லை. மாறாக, அது மேலும் வலிமை பெற்று திகழ்ந்தது.
ஒரு நாள் சாயங்காலம் தன்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொஞ்சம் காட்டை வெட்டி சுத்தமாக்க வேண்டுமென்றும்; காட்டு மிருகங்களை குரலெழுப்பி விரட்ட வேண்டுமென்றும் ஒரு இடத்தில் இருக்கச் செய்து விட்டு, ஒரோதா மட்டும் தனியே காட்டுச் செடிகளையும், புதர்களையும் வெட்டி நீக்கியவாறு மேலே போனாள். ஏறுவதற்கு முன்பு மேலே விரலால் சுட்டியவாறு அவள் சொன்னாள்: "அதோ தெரியுதே! அந்தப் பாறைக் கூட்டத்துக்குப் பக்கத்துல போனதும் நான் சத்தம் எழுப்பி கூப்பிடுறேன். அப்போ நீங்க வந்தா போதும். ரொம்பவும் தாமதமாயிடுச்சுன்னா, நீங்க வரவேண்டாம். நான் திரும்பி இறங்கி வந்திர்றேன்."
"எல்லோரும் அதற்கு "சரி" என்றார்கள்.
"நானும் உங்க கூட வரட்டுமா, ஒரோதா அக்கா?"- காரைக்காட்டு பேபி கேட்டான்.
"வேண்டாம், மகனே. நீ இங்கேயே இரு. நீங்க எல்லாரும் ஒண்ணா வந்தா போதும்."
காட்டை வெட்டி வழி உண்டாக்கி, அதில் ஒரோதா நடந்து முன்னால் ஏறினாள்.
எல்லோரும் காத்து நின்றிருந்தார்கள். ஒரோதா சொன்ன இடத்தை அடையும் நேரம் ஆன பிறகும் கூட, அங்கிருந்து எந்த கூக்குரலும் கேட்கவில்லை. அவர்கள் அதற்கு மேலும் காத்திருந்தார்கள். வெயில் முழுமையாக மறைந்தது. வானம் லேசாக மங்கலானது. ஒரோதா வரவில்லை. வானம் மேலும் மங்கலானது... வானம் முழுமையாக இருண்டது... ஒரோதா வரவில்லை.
அங்கு காத்திருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
கடைசியில் எல்லோரும் கீழே இறங்க முடிவெடுத்தார்கள். அவர்கள் கீழே இறங்கினார்கள். கிராமத்து மனிதர்களிடம் நடந்த விவரத்தைச் சொன்னார்கள். கிராமத்தின் எல்லையில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காத்திருந்தார்கள். ஒரோதா வரவில்லை.
ஒரோதா அதற்குப் பிறகும் செம்பேரி பகுதிக்குத் திரும்பி வரவில்லை.
அடுத்த நாள் பகலில் ஆட்கள் ஒரோதாவைத் தேடிச் சென்றார்கள். ஆனால், அவள் கிடைத்தால்தானே!
ஒரோதா எல்லோரிடமிருந்தும் மாயமாக மறைந்து விட்டிருந்தாள்.
பிற்காலத்தில் நாங்கள், செம்பேரி பகுதியில் வசிப்பவர்கள், அந்த மலையின் மேல் ஏறி, உச்சியில் தேவி குடிகொண்டிருக்குமிடம் என்று சொல்லப்பட்ட இடத்தை அடைந்தோம். அங்கு வற்றாத நீரூற்று என்று எதுவும் இல்லை. அங்கிருந்ததென்னவோ வெறும் பாறைகள்தான்.
போகும் வழியில் போனவர்கள் யாருமே ஒரோதாவைப் பார்க்கவில்லை. ஒரோதா சம்பந்தப்பட்ட எதுவுமே யார் கண்ணிலும் படவில்லை. ஒரோதாவின் குரல் கேட்கவில்லை. ஒரோதாவின் மணம் மட்டும் அந்த மலைப்பகுதி முழுவதும் பரவி இருந்தது. இன்னொரு வகையில் சொல்லப் போனால், அந்த மலைப்பகுதியில் இருந்த மணமே ஒரோதாவின் மணம்தான் என்று இந்த ஊர்க்காரர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
இன்று செம்பேரி பகுதி நல்ல செழிப்புடன் இருக்கிறது. இங்கு மனிதர்களுக்குத் தேவையான எல்லாமே இருக்கின்றன. தேவைப்படாததும் கூட இருக்கிறது.
வட்டைக்காட்டு இட்டியவீரா மரணமடைந்து விட்டான். ஆனால், அவனின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இப்போது இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரோதாவின் கணவனின் அண்ணன் ஔதக்குட்டி இறந்து விட்டான். என்றாலும், சேச்சம்மாவும், அவளின் பிள்ளைகளும் இப்போது இருக்கவே செய்கிறார்கள்.காரைக்காட்டு குட்டிச்சனும் பாறைக்காட்டு குஞ்ஞாச்சனும் பார்பர் பாப்பனும் கொல்ல வேலை செய்யும் முத்துகிருஷ்ணனும் இப்போதும் இங்கு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் ஒரோதாவைப் பற்றி கதை கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரோதா ஏறிச் சென்ற மலையை அவர்கள் ஒரோதா குன்று என்று அழைக்கிறார்கள்.
அவர்கள் கதை கூறும் போது, ஒரோதா உயிருடன் இருப்பதைப் போலவே எங்களுக்குத் தோன்றுகிறது. ஒரோதாவின் முகத்தை, முகங்களை நாங்கள் பார்க்கிறோம். மீனச்சில் ஆற்றின் வெள்ளத்தில் மிதந்து வந்த வீட்டிற்குள் துணியால் ஆன தொட்டிலில் படுத்துக் கொண்டு அழும் ஒரு வயது கூட ஆகாத குழந்தையின் முகம், வெட்டுக்காட்டு பாப்பனின் முதுகில் அமர்ந்து யானை விளையாட்டு விளையாடும் சுட்டிக் குழந்தையின் முகம், மாமரத்திற்குக் கீழே நின்று கொண்டு மேலே பார்த்தவாறு மாங்காய்க்காக காத்திருக்கும் பாவாடை அணிந்த சிறுமியின் முகம், குஞ்ஞுவர்க்கியைத் திருமணம் செய்து சர்ச்சை விட்டு வெளியே வரும் புதுப்பெண்ணின் பிரகாசமான முகம், தன் தந்தையின் பிணம் கிடக்கும் கட்டிலுக்கு அருகில் நின்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் வளர்ப்பு மகளின் கவலை நிரம்பிய முகம், கடுமையான உழைப்பின் சின்னமான ஒரோதாவின் எதையும் சவால்விட்டு அழைக்கிற முகம், கங்காணி இட்டுப்பின் கன்னத்தில் அறைந்த தன்மானம் கொண்ட பெண்ணின் முகம், தன்னுடன் சிறுவயதில் சேர்ந்து விளையாடியவனுடன் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை உடல் சுகம் அனுபவித்த பெண்ணின் காம வயப்பட்ட முகம், கணவனின் முன்னால் அழுது விழும் ஆதி பாவத்தின் முகம், மலையை வெட்டிக் காட்டை அழித்து உயரத்தை நோக்கி, மேலும் உயரத்தை நோக்கி நீரைத் தேடி ஏறிப் போகும் வெற்றி வீராங்கனையின் கறுத்துப் போன முகம்... அந்த முகங்கள் எங்களுக்கு முன்னால் வரிசையாகத் தெரிகின்றன.
செம்பேரி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் போது நாங்கள் அந்த முகங்களைப் பார்க்கிறோம். அப்போது நாங்கள் ஒரோதாவை நினைத்துப் பார்க்கிறோம். ஒரோதாவை நினைக்கும்போது, நாங்கள் கண்ணீர் விட்டு அழுகிறோம்.
ஒரோதாவை நினைக்கும்போது அழாமல் இருக்க முடியாது. ஒரோதாவை நினைக்காமலும் எங்களால் இருக்க முடியாது.
ஒரோதா!