Logo

காதல்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
kadhal

மாதவி அம்மாவின் ஒரே மகள் நிர்மலா. ஒரே ஒரு மகள். ஒரே ஒரு வாரிசு.

மாதவி அம்மா சமையலறையில் இருந்தாள். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது. கேட் திறக்கும் சத்தம். அந்தச் சத்தத்திற்காக அவள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு காத்திருந்தாள்- சாயங்காலம் ஐந்து மணி முதல். வழக்கமாக ஐந்து மணி நெருங்கும் நேரத்தில்தான் நிர்மலா கல்லூரியை விட்டுத் திரும்பி வருவாள்.

சில நேரங்களில் பேருந்து கிடைத்தால் அதற்கும் முன்பேகூட அவள் வந்து விடுவாள். ஏதாவது காரணத்தால் வருவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்றால் அவள் முன்கூட்டியே தொலைபேசி மூலம் விவரத்தைச் சொல்லி விடுவாள். அந்தப் பழக்கத்தை அவள் எப்போதும் கைவிட்டதில்லை.

அன்று நேரமாகி விட்டிருந்தது. எனினும் நிர்மலா வந்து சேரவில்லை. தொலைபேசியும் வரவில்லை.

வேக வைப்பதற்காக முந்தைய நாள் நீரில் கழுவி எடுத்த வேர்க்கடலை ப்ரஷர் குக்கருக்குள் போடப்பட்டு அடுப்பிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்தது. அது வேக அப்படியொன்றும் அதிக நேரம் ஆகாது. கியாஸ் அடுப்பு. கியாஸ் தீரும் நிலையில் இருக்கிறது. எந்த நிமிடத்தில் அது தன் இறுதி மூச்சை விடும் என்று யாருக்கும் தெரியாது. மனிதனின் நிலைதான் அதற்கும். ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று அது அணைந்துவிடும். அதற்குப் பயந்துதான் மாதவி அம்மா அடுப்புக்கு அருகிலேயே நின்றிருந்தாள்.

வெறுமனே அப்படி நின்றிருந்தபோது அவளுடைய மனம் தன் மகளைத் தேடி அலைந்தது. பார்வை திறந்து கிடந்த ஜன்னல் வழியே சிறிது நேரம் வானவெளியில் சஞ்சரித்தது. வானம் இன்னும் இருட்டவில்லை. சிறிய சிறிய வெள்ளை நிற மேகங்கள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருந்தன. நீல நிறத்தில் இருந்தது வானம்.

வடக்குப் பக்கமிருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த வேலிக்கருகிலுள்ள வாகை மரத்தின் கிளைகளுக்கு மத்தியில் முன்பே வந்தடைந்திருந்த மாலை நேரத்தின் இருட்டில் காகங்கள் தனியாகவும் கூட்டமாகவும் படுப்பதற்காக வந்திருந்தன. அந்த மரத்தின் கன்றைக் கொண்டு வந்து வேலிக்கருகில் குழி தோண்டி நடும்போது தன் கணவர் சொன்னதை அவள் நினைத்துப் பார்த்தாள். "இது பெருசா வளர்ந்து பூ பூக்குறப்போ, அதைப் பார்க்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்" என்றார் அவர்.

"அப்படின்னா இனிமேல் நடவேண்டாம். அதே நேரத்துல, ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்கு வேண்டியதுன்னு நினைச்சா எல்லா காரியத்தையும் செய்யிறாங்க?"- அவள் கேட்காமல் இல்லை: "யாருக்காகச் செய்தாலும் தேவையில்லாமல் இதையெல்லாம் சொல்லணுமா? எப்போ யாரைப் பார்ப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்?"

"நீ சொல்றது சரிதான். மனிதனோட நிலைமை அதுதான். ஆனா, மரங்களுக்கு மாரடைப்பு வந்து இறந்ததாக நீ கேள்விப்பட்டிருக்கியா?" - அவர் விளையாட்டாகக் கேட்டார்.

எவ்வளவோ நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. எனினும், அன்று அவை ஒவ்வொன்றையும் அவள் நினைத்துப் பார்த்தாள்.

மாலை நேரத்தின் நெருக்கடி நிறைந்த சாலையில் வாகனங்களின் சத்தமும் இரைச்சலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதன் மீது கொண்டிருக்கும் வெறுப்பை வெளிப்படுத்துவது மாதிரி மரக்கிளைகளில் உறங்குவதற்காகக் காத்திருந்த காகங்கள் தங்களுக்குள் முணுமுணுத்தன. நேரம் இருட்ட ஆரம்பித்தது. எனினும், பகல் வெப்பத்தின் அடையாளம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. வேனில் காலம் என்றால் எப்போதும் அப்படித்தான். பகல், இரவு எல்லா நேரமும் ஒரே மாதிரி புழுக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

மாதவி அம்மாவின் உடலில் வியர்வை அருவியென வழிந்து கொண்டிருந்தது. தாங்க முடியாத அளவிற்கு அவளுக்கு வெறுப்பு உண்டானது. உடலில் தண்ணீர் ஊற்றினால்தான் சரியாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். அந்தப்பெண் வீடு வந்து சேர்ந்துவிட்டால், அவளுக்கான தேநீரைத் தயாரித்துக் கொடுத்துவிட்டு வேகமாகக் குளித்து விட்டு வரலாம் என்று நினைத்தாள். கல்லூரி விடும் நேரம் எப்போதோ முடிந்து விட்டது. 'இப்போ அவ வரட்டும்...'- அவள் மனதிற்குள் கூறினாள்.

அப்போது வெளியே அழைப்பு மணி ஒலித்தது. மாதவி அம்மா வேகமாக ஸ்டவ்வை அணைக்க முயற்சித்தாள். ஆனால், செய்யவில்லை. அவளுக்குச் சந்தேகமாக இருந்தது. கடலை முழுமையாக வெந்திருக்குமா என்பதைப் பற்றித்தான். எப்படி இருந்தாலும் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கான நேரம் அப்போது இல்லை. அதனால் தோளில் போட்டிருந்த துவாலை முனையால் வியர்வை அரும்பியிருந்த நெற்றியையும் கழுத்தின் கீழ்ப்பகுதியையும் அழுத்தித் துடைத்துவிட்டு அவள் ஹாலை நோக்கி நடந்தாள்.

அழைப்பு மணி மீண்டும் ஒலித்தது.

அப்போது கதவும் திறக்கப்பட்டது.

புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு முகத்தைக் குனிந்தவாறு ஒரு பக்கமாகச் சற்று ஒதுங்கியவாறு தன் தாயை உரசிக்கொண்டு நிர்மலா உள்ளே போனால். பள்ளிக்கூடத்தில் சேட்டை பண்ணியதற்காகத் தண்டனை கிடைத்த சிறுமியைப் போல அவளுடைய செயல் இருந்தது. மாதவி அம்மா கதவைத் திறந்து பிடித்தவாறு அங்கேயே நின்றிருந்தாள். அப்போது கேட்டுக்கு வெளியே ஒரு காரின் சத்தம் கேட்டது. நின்றிருந்த கார் 'ஸ்டார்ட்' ஆகிப் புறப்படும் சத்தம் கேட்டது. மாதவி அம்மா ஒரு எட்டு முன்னால் வைத்து யாருடைய கார் அதுவென்று பார்த்தாள். சுவருக்கு அப்பால் ஓடி மறைந்த காரின் மேற்பகுதியை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. கறுப்பு நிறத்தில் அந்தக் கார் இருந்தது.

மாதவி அம்மாவிற்குச் சந்தேகம் தோன்றியது. வேகமாகக் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே வந்தாள். படுக்கையறையில் நிர்மலா அலமாரியைத் திறந்து அடைக்கும் சத்தம் கேட்டது. கல்லூரிக்கு அணிந்துகொண்டு போயிருந்த ஆடைகளை அவள் அவிழ்த்து மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். எனினும் அவள் வீட்டுக்குள் நுழைந்து சிறிதுகூட முகத்தை உயர்த்தி தன்னைப் பார்க்காமல் போனது ஏன் என்று மாதவி அம்மா நினைத்தாள். அது ஒரு நல்ல விஷயமாக அவளுக்குத் தோன்றவில்லை. வாய்திறந்து கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இருக்கலாம். தலையை உயர்த்திப் பார்க்க வேண்டிய தேவையும் இல்லாமல் இருக்கலாம். அதற்காக அப்படி நடக்கலாமா என்று அவள் நினைத்தாள். மனதில் நினைத்த அந்த நினைப்பு அந்த நிமிடத்திலேயே முடியவேண்டும் என்றும் அவள் விரும்பினாள். அந்தக் கருப்பு நிற கார் மட்டும் கண்களில் படாமல் இருந்திருந்தால், அவள் அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டாள். அந்தக்காரின் கறுப்பு நிறம்தான் அவளுடைய மனதைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது. அந்தக் கறுப்பு நிறக் காரில்தான் நிர்மலா வந்திருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்.


"மகளே"- படுக்கையறைக்குள் நுழையாமல் ஹாலில் நின்றவாறே மாதவி அம்மா அழைத்தாள்.

"என்னம்மா?"- நிர்மலா கேட்டாள்.

"நீ அங்கே என்ன செய்யற?"

"ஒண்ணும் இல்ல..."

அப்போதும் மாதவி அம்மாவின் மனதில் அந்தக் கறுப்பு நிறக் கார்தான் ஓடிக் கொண்டிருந்தது. அது உண்டாக்கிய சந்தேகம் மீண்டும் மீண்டும் அவளுடைய மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. கேட்கலாமா, வேண்டாமா என்று அவள் தடுமாறினாள். அதனால் சிறிது நேரம் தயங்கியவாறு அந்த இடத்திலேயே நின்றிருந்தாள். பிறகு தயங்கிய குரலில் கேட்டாள்: "மகளே, நீ கார்லயா வந்தே?"

"ஆமாம்மா..."- நிர்மலா சொன்னாள்.

"யார் கார்ல வந்தே?"

"சசி கார்ல."

"சசி கார்லயா?"

"ம்..."

"நீ சசியை எங்கே பார்த்தே?"

"கல்லூரியை விட்டு வெளியே வர்றப்போ."

"சசி கல்லூரிக்கு வந்திருந்தானா?"

"ம்..."

"எதுக்கு?"

"அம்மா, நீங்க என்ன தெரிஞ்சுக்கணும்?"

"தெரியறதுனால என்ன தப்பு? எது வேணும்னாலும் இருக்கட்டும்- இங்கே வரை வந்துட்டு அவன் வீட்டுக்குள்ள வராம ஏன் போனான்?"

"எனக்குத் தெரியாது."

"நீ அவன அழைக்கலியா?"

"இல்ல..."

"ஏன் கூப்பிடல?"

"வர்றதா இருந்தா கூப்பிடாமலே வரமாட்டாரா? அவர் எங்கேயோ அவசரமா போகணும்னார். அதுனாலதான் வரல."

"அப்படி அவசரம்னா ஏன் இப்படி தாமதமா வரணும்?"

- இந்தக் கேள்விக்கு அவள் பதில் எதுவும் சொல்லவில்லை.

"ம்..."- மகள் பதில் எதுவும் கூறாவிட்டாலும் அவள் என்ன கூற வேண்டுமோ அதைத் தான் புரிந்துகொண்டு விட்டாகிவிட்டது என்பதைப் போல மெதுவாக முணுமுணுத்துவிட்டு மாதவி அம்மா வேறு எதையோ எதிர்பார்த்ததைப் போல அங்கேயே நின்றிருந்தாள். அப்போது அடுப்பில் வைத்திருந்த பிரஷர் குக்கர் விசிலடிக்க ஆரம்பித்தது.

மாதவி அம்மா வேகமாகச் சமையலறையை நோக்கி ஓடினாள். அவளுடைய உடல் மட்டுமே அந்தச் சூழ்நிலையில் அந்தச் செயலுடன் உறவு கொண்டிருந்தது. மனம் அவளுடைய மகளுடன் படுக்கையறையிலேயே தயங்கி நின்றிருந்தது. அவளிடம் அதற்குப் பிறகும் என்னவோ தெரிந்து கொள்ள வேண்டுமென்று மாதவி அம்மா நினைத்தாள். சசியை அவள் தினந்தோறும் சந்திக்கிறாளா? சசியுடன் இந்த அளவிற்கு இருட்டும்வரை அவள் எங்கு போயிருந்தாள்? சசியைச் சந்திக்கும் நிமிடங்களில் அவன் இப்போது செய்ததைப் போல நிர்மலாவைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு போவானோ? அதுதான் உண்மையென்றால் வழக்கமாக அவர்கள் எங்கு போவார்கள்? என்ன செய்வார்கள்? இதுதான் வழக்கமான செயல் என்றால் இந்த நிமிடம் வரை இந்த விஷயத்தை அவர்கள் ஏன் தன்னிடம் கூறவில்லை? இப்படி நூறாயிரம் கேள்விகள் மாதவி அம்மாவின் மனதில் வலம் வந்தன.

ஸ்டவ்வை அணைத்து விட்டு அவள் பிரஷர் குக்கரை எடுத்து கீழே வைத்தாள். குழாயைத் திறந்து ஒரு குவளையில் சிறிது நீர் எடுத்து கையில் ஊற்றி, அந்தக் குக்கருக்கு மேலே தெளித்தாள். கோபம் கொண்ட பாம்பைப் போல அது 'ஸ்...' என்று சீறியது. அவள் மீண்டும் சிறிது நீரைத் தெளித்தாள். குக்கரின் கோபம் அடங்கியது. அப்போது அவளுடைய பார்வை ஜன்னல் கம்பிகள் வழியே வெளியே பாய்ந்தது. அந்த மரக்கிளைகள் இருட்டில் பயங்கரத்தைத் தரும் நிழல்களாகத் தெரிந்தன. காகங்களை எங்கும் காணவில்லை. வானத்தில் மேகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. வாகை மரத்தின் உச்சியில் தேவாலயத்தின் சிலுவைக்கு மேலே விளக்கு போல ஒரு நட்சத்திரம் தெரிந்தது. சாலையில் அப்போதும் வண்டிகளின் ஓட்டம் குறைந்திருக்கவில்லை. சுவருக்கு அப்பால் அந்தக் கறுப்புநிறக் கார் அப்போதும் இருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள்.

கறுப்புநிறக் கார்! அது வெறுமனே அப்படியொரு தோற்றத்தை அவளுக்குத் தந்தது. அங்கு கறுப்பாகத் தெரிந்தது சுவரோடு சேர்ந்து இருந்த செம்பருத்திச் செடியின் நிழலாக இருக்குமோ? இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், நிச்சயமாக அது கார் இல்லை. காரின் மேற்பகுதி இப்படி கூர்மையாகவும், ஊசிமுனை போன்றும், உயரமாகவும், இறங்கியும் வடிவமில்லாமல் இருக்காது அல்லவா?

கல்லூரியை விட்டு மிகவும் தாமதமாக வந்தாலும நிர்மலா அறைக்குள்ளேயே இருந்தாள். உட்கார்ந்திருக்கவில்லை. கட்டிலில் காலை நீட்டிப் படுத்திருந்தாள். அவளுடைய மனதில் அப்போது சசிதான் முழுமையாக நிறைந்திருந்தான். வேறு எந்த விஷயத்திற்கும் சிறிது கூட இடமில்லை என்ற அளவிற்கு அவன் ஆக்கிரமித்திருந்தான். தன்னுடைய சசியை இறுக அணைத்துக்கொண்டு அவள் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். படுத்துக்கொண்டே அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள். "என் சசி..." -அவனுடைய தோளில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டு அவனை அழைத்தாள். அவனுடைய கையைத் தன் மார்புடன் சேர்த்து அவள் இறுக அணைத்திருந்தாள்.

அவள் அப்போது ஒரு கனவு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவளும் அவளுடைய சசியும் மட்டுமே இருக்கம் மாய உலகத்தில்... மேகங்கள் சிறிதும் தொந்தரவுகள் உண்டாக்காத வானத்திற்குக் கீழே.

நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஞாபகத் திரைச்சீலையை நீக்கி மன அரங்கிற்குக் கொண்டு வந்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.

'திருடன்! நேர்ல பார்க்குற மாதிரி இல்ல ஆள்'- அவள் தனக்குள் கூறிக்கொண்டாள். அன்று யாருக்கும் தெரியாமல் நடந்த விஷயம்!

அன்று கல்லூரியின் ஆண்டு விழாவையொட்டி பரதநாட்டியம் ஆடிவிட்டு க்ரீன் ரூமிற்குள் நுழைந்து அணிந்திருந்த ஆடைகளை நீக்கிக் கொண்டிருந்தபோது எந்தவித சந்தடியும் உண்டாக்காமல் சசி அங்கு வந்தான். அப்போது மற்ற நிகழ்ச்சிகளில் எல்லாரும் ஈடுபட்டிருந்ததால், வேறு யாரும் அங்கு இல்லை.

திடீரென்று க்ரீன் ரூமிற்குள் சசியைப் பார்த்ததும் நிர்மலா பதைபதைத்துப் போனாள்.

"ம்... என்ன இங்கே?"- அவள் கலக்கத்துடன் கேட்டாள்.

"உன்னைப் பார்க்கறத்துக்குத்தான்"- அவன் சொன்னான். அதைச் சொன்னபோது அவனிடம் ஒரு பதட்டம் தெரிந்தது.

"சரிதான்... இதென்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு? சீக்கிரம் போங்க. யாராவது பார்த்துறப் போறாங்க?"- அவள் எழுந்து திரும்பி நின்று அவனையே உற்றுப் பார்த்தவாறு தாழ்வான குரலில் சொன்னாள்.

அதை அவள் கூறி முடிக்கவில்லை. அதற்குள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவளுடைய முகத்தைத் தன்னுடைய கைகளுக்குள் அடக்கி அவளின் உதடுகளில் ஆவேசத்துடன் ஒரு முத்தத்தைப் பதித்து வேகமாகத் திரும்பிய அவன் படுவேகமாக அந்த இடத்தை விட்டு நீங்கினான். அவள் அதிர்ச்சியடைந்துபோய் ஒரு சிலையைப்போல நின்றுவிட்டாள். அவளுடைய உடல் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது. கால்கள் தளர்வதைப்போல அவள் உணர்ந்தாள்.

அந்த அளவிற்குச் சிறிதும் எதிர்பார்க்காமல், விரல் சொடுக்கும் நேரத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

ஆரம்பம் அப்படித்தான் இருந்தது.


அதற்குப் பிறகு ஒன்றிரண்டு நாட்களுக்கு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவே அவர்களுக்கு வெட்கமாக இருந்தது. அத்துடன் பதைபதைப்பும்.

ஆனால், அந்த வெட்கமும் பதைபதைப்பும் அந்த இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தன. அதற்குப் பிறகு சம்பவங்களின் போக்கே முழுமையாக மாறிவிட்டது. சசி அவளுடன் முன்பு இருந்ததைவிட நெருங்கிப் பழக ஆரம்பித்தான். ஆனால், நிர்மலா முட்டாளாக இருக்கவில்லை. எதுவரை எல்லை என்பதைப் பற்றிய அறிவு அவளுக்கு முழுமையாக இருந்தது. அதைத் தாண்டி தன்னை மறந்துகூட வழுக்கி விழுந்து விடாமல் இருப்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள். அந்த விஷயத்தில் அவள் வெற்றி பெறவும் செய்தாள்.  

ஒருநாள்... அதை நினைத்துப் பார்த்தபோது அவளையும் மீறி அவளுடைய உதடுகளுக்கும் இதயத்தின் துடிப்பு படர்ந்தது. ஒரு முட்டாளைப்போல அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்- தனிமையாகப் படுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல். ஒருநாள்... கல்லூரியிலிருந்து திரும்பி வரும் வழியில் பூங்காவிலிருந்த பாறைக்குப் பின்னால் உட்கார்ந்திருக்கும்பொழுது சசியின் கை இரையை விழுங்கிய பாம்பைப் போல தன்னுடைய உடம்பில் படர்ந்து கொண்டிருப்பதை நிர்மலா உணர்ந்தாள். "எங்கே கை போகுது?"- சுற்றிலும் பார்த்தவாறு அவள் கேட்டாள்.

"என்ன இருந்தாலும் நீ நடனம் ஆடுகிற பெண் ஆச்சே! கண் போகுற இடத்துக்கு கை போகணும், கை போகுற இடத்துக்கு மனம் போகணும்... இதுதான் நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லித் தர்ற ஆரம்பப் பாடமே. இதுவே உனக்குத் தெரியல..."

"எடுங்க..."- பலமாக அவனுடைய கையை விலக்கியவாறு அவள் சொன்னாள். "ம்... நேரம் வரட்டும். அப்போ என் கையை எங்கே வைக்கணுமோ, அங்கே வைக்கிறேன். எங்கே வைக்கணும்னு எனக்குத் தெரியும்."

"அப்படியா? எனக்காக நீங்க காத்திருக்க வேண்டாம்."

"நான் சொல்றதும் அதைத்தான். யாரும் எதுக்காகவும் காத்திருக்க வேண்டாம். எல்லாமே நடக்குறபடி நடக்கும்."

"போதும்... போதும்... இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்."- அவள் கோபமாகச் சொன்னாள்.

அப்போது அவன் அவளை பலமாகப் பிடித்து தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவளுடைய உதடுகளில் ஒரு முத்தத்தைப் பதித்தான். அவளுக்கு மூச்சு விடவே கஷ்டமாக இருந்தது.

"இப்படியா நடக்கறீங்க? இங்கே பாருங்க... இப்படி நடக்கறதா இருந்தா நான் இனிமேல் வரவே மாட்டேன்."- அவள் பொய்க் கோபம் காட்டியவாறு சொன்னாள். அதுவெறுமனே சொல்லப்படும் வார்த்தைகள் என்பது அவளுக்கும் சசிக்கும் நன்றாகவே தெரியும்.

இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது அவளுடைய உடல் தலையிலிருந்து பாதம் வரை சிலிர்த்தது. தன்னை மறந்து மீண்டும் மீண்டும் அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

ஆமாம்- ஒரு முட்டாளைப் போல.

2

டையை மாற்றியவுடன் மகள் வெளியே வருவாள் என்ற எண்ணத்துடன் மாதவி அம்மா சமையலறையில் அவளுக்காகக் காத்திருந்தாள். கல்லூரியிலிருந்து வந்தவுடன் அவள் தேநீர் குடித்தாக வேண்டும். அதுதான் தினந்தோறும் நடப்பது. அதற்காக பேய் பிடித்தவளைப் போல சமையலறையை நோக்கி அவள் வேகமாக ஓடிவருவாள். சில நேரங்களில் சிறிதுகூட ஓசை உண்டாக்காமல் பதுங்கிப் பதுங்கி வந்த தன் தாய்க்குப் பின்னால் நின்றுகொண்டு இரு கைகளாலும் அவளை நிர்மலா கட்டிப் பிடிப்பாள்.

"இந்த அம்மா எனக்கு தேநீரே தரல..." அவள் பரிதாபமாகக் கூறுவாள்.

"சரிடா கண்ணு... இதுக்காக கோவிச்சுக்காதே"- தன் கழுத்தைச் சுற்றியிருக்கும் அவளுடைய கைகளை விலக்க முயற்சித்துக்கொண்டே மாதவி அம்மா கேட்பாள். "நான் தேநீர் தந்தாத்தான் குடிப்பியா? நீயே தேநீர் தயாரிச்சுக்கக் கூடாதா?"

"நீங்க தேநீர் தயாரிச்சுத் தரலைன்னா, நான் தேநீர் குடிக்காமலே இருந்திடுவேன்னு நினைக்கிறீங்களா?" நிர்மலா மிடுக்கான குரலில் கூறுவாள். "குடிப்பே... குடிப்பே... எவ்வளவு தேநீர் குடிப்பேன்னு நானும் பார்க்கத்தானே போறேன்! தேநீர் குடித்த கோப்பையைக் கழுவி வைக்கக் கூட உனக்குத் தெரியாது. நீ தேநீர் போடப் போறியா?"

"என் செல்ல அம்மால்ல... என் அம்மா எனக்கு இருக்கறப்போ நான் எதுக்கு தேநீர் தயாரிக்கணும்? பிறகு... யார் தேநீர் தயாரிச்சாலும் நீங்க தயாரிக்கிறது மாதிரி நல்லா இருக்காது..."

அவள் தன் தாயின் கன்னத்தில் முத்தமிடுவாள்.

அப்படிப்பட்ட சம்பவங்கள் சிறு சிறு மாற்றங்களுடன் வழக்கமாக நடந்துவரக் கூடியவையே. தாய்க்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்த சம்பவங்கள் அவை.

ஆனால், அன்று அவள் தேநீருக்காக சமையலறையைத் தேடி வரவில்லை. கல்லூரியை விட்டு வந்தவுடன் அணிந்திருந்த ஆடைகளை மாற்றிவிட்டு படுக்கையறையிலேயே படுத்துக்கிடந்தாளே தவிர, அறையை விட்டு வெளியிலேயே வரவில்லை. வழக்கமில்லாத அந்தச் செயலைப் பார்த்து மாதவி அம்மாவிற்கு கலக்கம் உண்டானது. எங்கேயோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்ற சந்தேகம் அவளுக்கு உண்டானது. போதாததற்கு சசியுடன் சேர்ந்து அவள் அவனுடைய காரிலேயே வந்திருக்கிறாள். எது எப்படி இருந்தாலும் எதுவுமே நடக்காதது மாதிரி அவள் அழைத்துக் கேட்டாள்: "மகளே, உனக்கு தேநீர் வேண்டாமா?"

"வேண்டாம்மா"- நிர்மலா சொன்னாள்.

சமையலறையில் சாப்பாட்டு மேஜையின்மீது உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தபோதுதான் அதற்குப் பிறகு அவள் தன் மகளைப் பார்த்தாள். குளித்து விட்டு தலைமுடியை அவிழ்த்துப் பரவ விட்டு இரவு நேரத்தில் அணியக் கூடிய மெல்லிய நைட் கவுனை அணிந்து நிர்மலா சாப்பிடுவதற்காக வந்திருந்தாள்.

மாதவி அம்மா தன் மகளைக் கால்முதல் தலைவரை கூர்மையாகப் பார்த்துவிட்டு வேகமாகத் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். தன்னைப்போலவே மகளையும் ஏதோ ஒரு பிரச்சினை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒரே பார்வையில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வளவுதான்- அவளிடம் பதைபதைப்பு இரண்டு மடங்குகளாகக் கூடியது.

நிர்மலா நாற்காலியை இழுத்து மேஜையோடு சேர்த்துபோட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள்.

"என்ன மகளே, உனக்கு உடம்புக்கு ஏதாவது ஒத்துக்கலையா?"- மாதவி அம்மா கேட்டாள்.

ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக அந்தக் கேள்வியை அவள் கேட்டாள். கேள்வியைக் கேட்டுக்கொண்டே மகள் சாப்பிட வேண்டிய இரவு உணவை நிர்மலாவிற்கு முன்னால் எடுத்து வைத்தாள். அப்படி ஏதாவது கேட்காமலோ, செயல்படாமலோ இருந்தால் தன்னுடைய மனதிற்குள் அடக்க முடியாமல் நிறைந்திருக்கும் வெப்பத்தை எங்கே தன் மகள் கண்டுபிடித்து விடுவாளோ என்று அவள் பயந்தாள்.  

"ஒண்ணுமில்ல"- நிர்மலா அலட்சியமாகச் சொன்னாள்.

"பிறகு ஏன் நீ எப்போதும் இருக்கிற மாதிரி இல்லாம...?"

"எப்படி?"

"நீ... நீ... இன்னைக்கு ஏன் இவ்வளவு தாமதமா கல்லூரியை விட்டு வந்தே?"- மாதவி அம்மா வேகமாக விஷயத்தை மாற்றினாள்.


"நான்தான் சொன்னேனே; சசி வந்து என்னை அழைச்சார்னு"

"எப்போதும் இல்லாம இப்போ மட்டும்..?"

"எப்போதும் இல்லாதது ஒண்ணுமில்ல. கல்லூரி விடுற நேரத்துல அந்த வழியே அவர் வர்றதா இருந்தா என்னையும் அழைச்சிட்டுத்தான் வருவாரு."

"கார்ல வர்றதா இருந்தா, வழக்கமா வர்ற நேரத்துக்கு முன்னாடி வந்திருக்கலாமே?"

"அம்மா, எதுக்கு ஒரு புலனாய்வு அதிகாரியைப் போல துருவித் துருவி கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க?"- நிர்மலா வெறுப்புடன் தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

"நான் துருவித் துருவி ஒண்ணும் கேட்கல. எப்போதும் இல்லாதது மாதிரி இப்போ ஏன் வீட்டுக்குத் தாமதமா வந்தேன்னு கேக்குறேன். ஒரு பெற்ற தாய்க்கு இதைக் கேக்குறதுக்குக்கூட உரிமை இல்லையா என்ன?"

"அதிகாரம் இல்லைன்னு ஆயிடுமா... ஏதாவது காரணத்தால கொஞ்சம் தாமதமா வர்றது மாதிரி சூழ்நிலை உண்டானா, தாமதமா வர்றதுக்கான சுதந்திரம் எனக்கும் இருக்குல்ல? நானும் ஒரு வளர்ந்த பெண்தானே? மற்ற பெண்களைப் போல எனக்கும்..." - அவள் தான் சொல்லிக் கொண்டிருந்ததை முழுமையாக முடிக்கவில்லை. அதை அவள் முடிக்காமலே தயங்கினாள்.

"என் மகளே... நீ ஒரு வளர்ந்த பெண் இல்லைன்னு நான் சொன்னேனா? ஏன் இவ்வளவு தாமதமா வந்தேன்னு மட்டும்தான் கேட்டேன்... பிறகு... வளர்ந்த பொண்ணுன்றதுக்காக நீ செய்யறது எல்லாம் சரியா இருக்கும்னு சொல்றதுக்கு இல்ல. அதையும் நான் சொல்லலாம் இல்ல..."

- அவள் சொன்னது எதுவும் காதில் விழாத மாதிரி நிர்மலா சொன்னாள்: "சசி வற்புறுத்தி சொன்ன ஒரே காரணத்துக்காக வர்ற வழியில காபி ஹவுஸ்ல காபி குடிச்சேன். அங்கே கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு உட்கார்ந்திருந்தோம். நான் அதைச் செய்யக்கூடாதா?"

"அப்படின்னா நீ ஏற்கெனவே சொன்ன மாதிரி அவனுக்கு அப்படியொண்ணும் அவசரம் இல்ல... அப்படித்தானே?"

அதற்கு என்ன பதில் கூறுவது என்பது தெரியாமல் நிர்மலா தயங்கினாள். அவன் அவசரத்தில் இருந்தான் என்று முன்பு கூறியது தான் தவறாகப் போய்விட்டது என்று அவள் நினைத்தாள். எது எப்படி இருந்தாலும் மாதவி அம்மா அந்த விஷயத்தைப் பற்றி அதற்குமேல் அவளிடம் கேட்கவில்லை. அவளுடைய மனதில் என்னவெல்லாமோ சிந்தனைகள் குருவிகளைப் போல கூடுகள் கட்டிக் கொண்டிருந்தன. அதை வெளியே தெரியவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் அவள் வேகமாக மகளின் பாத்திரத்தில் உணவைப் பரிமாறினாள்.

நிர்மலா முகத்தை உயர்த்திப் பார்த்தாள். தன் தாயின் முகபாவம் மாறி விட்டிருந்ததை அவள் கவனிக்காமல் இல்லை. இந்த அளவிற்கு முகத்தில் மாறுபட்ட உணர்ச்சிகள் தெரியக்கூடிய மாதிரி அப்படி என்ன நடந்து விட்டது? அவளுக்கு அதுதான் ஆச்சரியமாக இருந்தது.

"அம்மா, எதுக்கு வீணா கவலைப்படுறீங்க? நான் என்ன செய்யறேன்னு எனக்கு நல்லா புரிஞ்சுதான் செய்யறேன். நீங்க அதைப்பற்றி கவலையே படவேண்டாம். நான் ஒண்ணும் விரலைக் கடிக்கிற குழந்தை இல்ல..."

மாதவி அம்மா அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை.

"அம்மா, நீங்க சாப்பிடலியா?"- நிர்மலா கேட்டாள்.

"இல்ல... எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நான் மெதுவா சாப்பிடுறேன். நீ சாப்பிட்டுட்டுப் போ!"

நிர்மலா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

பேசியது அவளுடைய தாய்தான். சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவள் மீண்டும் தன் மகளைப் பார்த்துக் கேட்டாள்: "நீ சசிகூட அடிக்கடி இப்படிப் போறது உண்டா?"

"அம்மா, திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா? சசிக்கு என்னைத் தலையில வச்சுக்கிட்டு நடக்கிறதுதான் வேலையா?"- அவள் கோபத்துடன் கேட்டாள். "நான் அதைக் கேட்கல. நான் கேக்குறதுக்கு நீ பதில் சொன்னா போதும். வளர்ந்த பொண்ணுன்றதுக்காகத் தான்தோன்றித்தனமா நீ பேசக்கூடாது."

"நான் அப்படி தான்தோன்றித்தனமா இப்போ என்ன பேசிட்டேன்?"

"நீ சசிகூட இந்த மாதிரி அடிக்கடி போவியான்னு மட்டும்தான் கேட்டேன்."

"ம்..."- அவள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.

அதற்குப் பிறகு சிறிது நேரத்திற்கு மாதவி அம்மா எதுவும் பேசவில்லை. பேசுவாள் என்றும் தோன்றவில்லை.

தன் தாய் மவுனமாக இருக்கவே, நிர்மலா கேட்டாள்: "சசிகூட நான் போகுறது உங்களுக்குப் பிடிக்கலையா, அம்மா?"

"நீ சாதத்தை முழுமையா சாப்பிடு... அதையும் இதையும் பேசிக்கிட்டு நேரத்தை வீண் பண்ணுறியே தவிர, சாதத்தை நீ ஒழுங்கா சாப்பிடல. இவ்வளவு நேரமான பிறகும், சாப்பாட்டுல கொஞ்சம் கூட மீதி இருக்கக்கூடாது. சின்னக் குழந்தைகளைவிட நீ மோசம்..." -மாதவி அம்மா வேகமாக விஷயத்தை மாற்றினாள். அது வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள நிர்மலாவிற்கும் அதிகக் கஷ்டமாக இல்லை. அதைத் தொடர்ந்து அவளும் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.

சில அமைதியான நிமிடங்கள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கடந்து சென்றன.

'சாயங்காலம் காப்பி குடிச்சதுனால, பசி இல்லாமல் போயிருக்கும். கண்ட இடத்துக்குள்ளேயும் நுழைஞ்சு அதையும், இதையும் சாப்பிட்டா, பசி இல்லாமத்தான் போகும். கல்லூரி விட்ட உடனே நேரா வீட்டுக்கு வரணும் பிள்ளைங்க... ம்... வளர்ந்த பொண்ணாம், வளர்ந்த பொண்ணு!"

மாதவி அம்மா முணுமுணுத்தாள். தொடர்ந்து அவள் மேஜை மீதிருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒதுக்கி வைத்தாள். அது எதையுமே கேட்காதது மாதிரியும், காணாதது மாதிரியும் காட்டிக் கொண்ட நிர்மலா மெதுவாக எழுந்து கையைக் கழுவுவதற்காகச் சென்றாள்.

கை கழுவிக் கொண்டிருந்தபோது அவளுடைய மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தது திடீரென்று வெளியே வந்தது.

-அவள் சொன்னாள்: "அம்மா, எதையும் ஒரு அளவோட பேசுங்க."

3

வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு, சமையலறையிலும், ஹாலிலும் இருந்த விளக்குகள் ஒவ்வொன்றையும் அணைத்து விட்டு மாதவி அம்மா படுக்கையறையை நோக்கிச் சென்றாள். நிர்மலா இன்னும் தூங்கவில்லை. அவள் எதையோ படித்துக்கொண்டு படுத்திருந்தாள். மேற்கத்திய இசையை வெளியிட்டுக்கொண்டிருந்த ட்ரான்சிஸ்டரின் ஓசையை மிகவும் குறைவாக்கிக் கொண்டு அதை அவள் தன் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தாள்.

மாதவி அம்மா அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக எழுந்து படுக்கையின் மத்தியில் சம்மணம் போட்டு அமர்ந்த கொண்டு சுவரைச் சுட்டிக் காட்டியவாறு நிர்மலா சொன்னாள்: "அம்மா... அந்தப் பல்லி திரும்பவும் வந்திருக்கு."

"அது அதன் போக்குக்கு வரும், போகும். எது வேணும்னாலும் செய்யட்டும். அதைப்பற்றி உனக்கு என்ன? உன் மேல அது ஏறி வருதா என்ன?"- மாதவி அம்மா கேட்டாள். தொடர்ந்து அவள் தன் தலைமுடியை அவிழ்த்து, சிக்கலெடுக்க ஆரம்பித்தாள்.


"எனக்கு பல்லியைப் பார்த்தா ஒரே பயம்னு உங்களுக்குத் தெரியாதா, அம்மா?"

"சரிதான். நீதான் வளர்ந்த பொண்ணாச்சே!"

"அம்மா, அதை இன்னும் விடாம பிடிச்சிக்கிட்டு இருக்கீங்களே?"

"நீ சொன்னதுக்காக நான் சொன்னேன். அவ்வளவுதான்."

"சரி... சரி... நான் ஒத்துக்குறேன்.அது இருக்கட்டும்... அம்மா, அதை நீங்க அடிச்சுக் கொல்லக்கூடாதா? அதைப் பார்க்கவே பிடிக்கல..."

"நான் அதைச் செய்யமாட்டேன். அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா?"

"என்ன பெரிய பாவம்?"

"அப்படின்னா நீயே அதைக் கொல்லேன்..."

அதைச் சொன்ன மாதவி அம்மா நிலைக்கண்ணாடிக்கு முன்னால் அமர்ந்து தலைமுடியை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.

நிர்மலா கட்டிலை விட்டு எழுந்து நின்று "சூ...சூ..." என்று கூறியவாறு சிறிது நேரம் கையை வீசியதும், பல்லி அந்த இடத்தை விட்டு நீங்கியது. அடுத்த நிமிடம் அவள் கட்டிலில் போய் 'பொத்'தென்று மல்லாக்க விழுந்து, மீண்டும் படித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள். அவளுடைய தாய் சீப்பில் சிக்கிய தலைமுடிகளைக் கையால் எடுத்து இடது கையின் சுட்டு விரலில் ஒரு வளையத்தைப் போல சுற்றி குப்பைக் கூடையில் போட்டாள். பிறகு எப்போதும் செய்வதைப் போல தலைமுடியை இழுத்து மேலே கட்டினாள். நிர்மலா படித்துக் கொண்டிருந்தாலும், அவளின் பார்வை சுவரிலேயே இருந்தது. ஓடிப்போயிருந்த பல்லி இதற்கிடையில் மீண்டும் திரும்பி வந்திருந்தது. அது சுவரில் இருந்தபடி வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் சிறிது தூரத்தில் விளக்கின் நிழலுக்குக் கீழே வேறொரு பல்லியும் வந்து சேர்ந்திருந்தது. அதுவும் வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

அறையின் முன் மூலையில் இருந்த ஒரு பீடத்தின்மீது குருவாயூரப்பனின் கண்ணாடி போட்ட படம் இருந்தது. மாதவி அம்மா அதற்கு முன்னால் இரண்டு மூன்று சாம்பிராணி வர்த்திகளை எரிய வைத்தாள். பிறகு சிறிது நேரம் கண்களை மூடி நின்றவாறு கடவுளை மனதில் நினைத்து விட்டு ஒரு சிறு டப்பாவிலிருந்து சிறிது திருநிறை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

அத்துடன் அவளின் அன்றைய எல்லா வேலைகளும் முடிவடைந்தன. "சுவாமி குருவாயூரப்பா, கடவுளே!"- சாலையில் போகும் யாரையோ அழைக்கிறாள் என்று மற்றவர்கள் நினைக்கும் வண்ணம் ஜன்னல் வழியே வெளியே பார்த்து உரத்த குரலில் கூறியவாறு அவள் கட்டிலில் காலை நீட்டிப் படுத்தாள்.

"என்ன வினோதமான வாசனை!" -நிர்மலா முணுமுணுத்தாள். அந்த சாம்பிராணிவர்த்தி எரிந்து கொண்டிருக்கும் நிமிடத்திலெல்லாம் அவள் அப்படிக் கூறுவதுண்டு. அதன் வாசனை அவளுக்குச் சிறிது கூடப் பிடிக்காது. "நீ இன்னும் தூங்கலையா?"- மாதவி அம்மா கேட்டாள்-

"அம்மா, நீங்க தூங்குங்க. நான் விளக்கை அணைக்கிறேன்"- நிர்மலா சொன்னாள்.

"இந்த மின்விசிறியை ஏன் இவ்வளவு வேகமா வச்சிருக்கே? கொஞ்சம் மெதுவா வைக்கக்கூடாதா?"

"கொசு கடிச்சு, தூங்க முடியல. அதுனாலதான் வேகமா வச்சேன்." மாதவி அம்மா திரும்பிப் படுத்தாள்.

"குட் நைட் மம்மி."

"குட் நைட் மகளே."

தூரத்தில் எங்கோ ஒருபுகை வண்டி போய்க்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. ஸ்டேஷனுக்கு வெளியே சிக்னலுக்காகக் காத்திருக்கும் ஏதோ ஒரு    வண்டியின் ஓசை அது. ஒரு பிடிவாதம் பிடித்த குழந்தையைப் போல அது முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால், என்னதான் பிடிவாதம் பிடித்தாலும் அதைப்பற்றி கவலையில்லை, தாய்க்கு எப்போது நேரம் ஒத்து வருகிறதோ அப்போது மட்டுமே அவள் குழந்தையைப் பற்றி கவலைப்படுவாள். அதுவரையில் வெறுமனே கிடந்து ஓசை எழுப்பிக் கொண்டிருக்க மட்டுமே முடியும்.

வடக்குப் பக்கம் ஒரு நாய் இடைவிடாமல் குரைத்துக் கொண்டேயிருந்தது. இரவு நேரம் வந்துவிட்டால் பொழுது புலரும் வரையில் அது குரைத்துக் கொண்டேயிருக்கும். அந்தக் குரைப்பொலியை ஊர் முழுவதும் நாம் கேட்கலாம். அந்த அளவிற்கு உரத்த குரலில் அது கத்தும். சாலையில் போகும் யாருடைய அசைவைக் கேட்டாலும் போதும், அது தன் குரைக்கும் வேலையை ஆரம்பித்து விடும். ஒரு ஆண் நாயோ, பெண் நாயோ அருகில் வருவதைப் பார்த்து விட்டால் கூட போதும், அது தன் குரைக்கும் வேலையை ஆரம்பித்துவிடும். ஆனால், சிக்னலுக்கு வெளியே நின்றிருக்கும் புகைவண்டியின் சத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாயின் நடத்தையில் ஒரு வித்தியாசம் இருக்கவே செய்தது. தான் குரைப்பதை யாராவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதற்குச் சிறிதும் இல்லை.

இப்படியே பல நிமிடங்கள் அமைதியாகத் திரும்பிப் படுத்திருந்த மாதவி அம்மா மீண்டும் மல்லாக்கப் படுத்தாள். ஏதோ ஒரு விஷயம் அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.

நிர்மலா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. புகை வண்டியின் இரைச்சலோ நாயின் இடைவிடாத குரைக்கும் சத்தமோ படுவேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் பட்டு பறந்து கொண்டிருந்த காலண்டர் தாள்களின் சத்தமோ எதுவும் அவளைச் சிறிதும் பாதிக்கவில்லை. ட்ரான்சிஸ்டரிலிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்த மேற்கத்திய இசையின் வெறிபிடித்த தாள மேளங்களும் இரைச்சலும் அவளுடைய கவனத்தில் பதிந்திருக்குமா? அதுவும் கூட சந்தேகம்தான்.

வாசிப்பதில் மூழ்கிவிட்டால் அவள் மற்ற எல்லாவற்றையும் மறந்து விடுவாள்.

"நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா? இதைக் கேக்கறதுக்காக நீ என் மேல பாயக்கூடாது தெரியுதா?" மாதவி அம்மா மெதுவான குரலில் சொன்னாள். "ம்.."- நிர்மலா புத்தகத்தை விட்டு தன் கண்களை எடுக்காமல் சொன்னாள். "உனக்கும் சசிக்கும் இடையில்... அப்படி உண்மையிலேயே ஏதாவது?"

தான் எதிர்பார்த்த ஒன்றுதான் அது என்பதைப் போல நிர்மலா மெதுவாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். பிறகு சந்தேகக் குரலில் அவள் கேட்டாள்: "அம்மா, இன்னைக்கு ஏன் விடாம நீங்க எங்க பின்னாடியே திரும்பத் திரும்ப வந்துக்கிட்டு இருக்கீங்க?"

"இல்ல... தெரிஞ்சிக்கிறதுக்குத்தான் கேட்டேன். நீங்க இப்போ சின்ன பசங்க ஒண்ணுமில்ல- முன்னாடி இருந்த மாதிரி விளையாடிக்கிட்டு இருக்கிறதுக்கு!"

"அப்பாடா! இப்பவாவது நீங்க ஒத்துக்கிட்டீங்களே- நாங்க சின்னப்பிள்ளைங்க இல்லைன்றதை. அந்த அளவுக்கு சந்தோஷம். அதே நேரத்துல, பிள்ளைங்க வளர்ந்த பிறகு முன்னாடி இருந்த மாதிரி நட்பா இருக்கக்கூடாதா என்ன? அது என்ன சட்டம்? சசியை நான் இன்னைக்கோ நேற்றோ பார்த்தது இல்லையே! நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவரை நான் பார்த்து வந்திருக்கேனே!"

"அதுனாலதான் நான்..."

"என்ன?"

"இல்ல... அப்படி ஏதாவது இருந்தா அம்மா நான் தெரிஞ்சிக்கக்கூடாதா?"


"அப்படின்னா?"

"புரியலைன்னு நடிக்காதே. இருக்குற விஷயத்தை மனம் திறந்து சொல்லு. அப்படி ஏதாவது இருந்தா...?"

உடனடியாக அதற்குப் பதில் சொல்ல நிர்மலாவால் முடியவில்லை. என்ன கூற வேண்டும் என்பதைப் பற்றி அவள் சிந்திக்க வேண்டியிருந்தது. நன்கு ஆலோசனை செய்த பிறகு மட்டுமே தன் தாயின் கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய ஒரு விஷயமாக அது இருந்தது.

"அம்மா, நீங்க அதைக் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னா நான் சொல்றேன். நேரம் வர்றப்போ சொல்லலாம்னு நான் நினைச்சிருந்தேன். நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்புறோம்"- கடைசியில் அவள் சொன்னாள்.

"அது எனக்கும் தெரியும். ஆனால், நான் கேட்டது அதை அல்ல. ஒருத்தரையொருத்தர் விரும்புறோம்னு சொன்னா மட்டும் போதாது."

"அதுக்குமேல உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும் அம்மா?"

"அந்த நெருக்கம் எந்த அளவு வரை வந்திருக்கு?"

"யானைத் தலை அளவு..."

"விளையாட்டா பேசாத..."

"பிறகு?"

"விருப்பம் விருப்பம்னு சொல்லிட்டா மட்டும் போதாது. எனக்கு வேற சில விஷயங்களும் தெரியணும்."

"வேற என்ன நீங்க தெரிஞ்சிக்கணும், அம்மா?"

"நீங்க ரொம்பவும் நெருங்கியாச்சா?"

"ஆமான்னு நான் சொல்லிட்டேனே!"

"அப்படியா?"- மாதவி அம்மா அலறினாள். அவளால் அதை நம்ப முடியவில்லை. அதனால் அவள் உண்மையாகவே கலங்கிப் போய்த்தான் அப்படிக் கேட்டாள்.

"ம்..."-நிர்மலா மெதுவான குரலில் சொன்னாள்.

"எவ்வளவு நாட்களாச்சு?"

"எது?"

"உங்க நெருக்கம்!"

"அம்மா உங்களுக்குத் தெரியாதா? சின்னப்பிள்ளைகளா இருக்குறப் போலயிருந்தே நாங்க ஒண்ணா சேர்ந்து விளையாடினவங்கதானே!"

"சின்ன பிள்ளைங்க விளையாட்டு வேறு. இது வேறு."

"இதுன்னு சொன்னா எது? எனக்குப் புரியல."

"எல்லாம் புரியுது. என்னை முட்டாளாக்க நினைக்காதே. உன் வயசைத் தாண்டித்தான் நான் இந்த அளவுக்கு வந்திருக்கேன். அதை முதல்ல ஞாபகத்துல வச்சுக்கோ!"

"சரி... அம்மா, உங்களுக்கு இது பிடிக்கலையா?"

"ஆமா... பிடிக்கல. உண்மையை மனம் திறந்து சொல்றதுதானே சரி! உங்களுக்குள்ள இரக்குற இந்த நெருக்கத்தை நான் விரும்பல. அவங்க நமக்கு ஏற்றவங்க இல்ல. பல காரணங்களை வச்சு நான் இதைச் சொல்றேன். அதை மட்டும்தான் இப்போ என்னால சொல்ல முடியும். சசி மேல எனக்கு எந்தவித பகையும் இல்ல. பகை இல்லைன்றது மட்டுமில்ல, என் சொந்த மகனை மாதிரித்தான் அவனை நான் நினைக்கிறேன். ஆனா..."

"பிறகு என்ன அம்மா ஒரு ஆனா...?"

"எல்லாம் ஒரு எல்லைவரை மட்டுமே இருக்கணும். அதைத்தாண்டி போகக்கூடாது."

"நீங்க ஏன் கதை எழுதுறது மாதிரி பேசுறீங்க, அம்மா? இங்கே என்ன எல்லை இருக்கு? அந்த எல்லையை முடிவு செஞ்சது யாரு?"

"இப்படியெல்லாம் கேட்டா நான் என்ன பதில் சொல்றது? பல காரணங்களால நமக்கு அப்படி ஒரு உறவு சரிவராதுன்னு நான் செல்றேன். இப்போ நீ அதை மட்டும் மனசுல வச்சுக்கிட்டா போதும்."

"எனக்குத் தெரியும். உங்களுக்கு சசியோட வீட்டுல இருக்குறவங்க கூட ஏதோ பகை இருக்கு. ஒருவேளை அவங்க நம்ம ஜாதியைச் சேர்ந்தவங்களா இல்லைன்றது காரணமா இருக்கலாம்..."

"அப்படி நினைக்கிறதா இருந்தா நினைச்சுக்கோ. பிறகு... உனக்குத் தெரியும்ல அவன் அம்மாவோட குணம் எப்படின்னு?"

"வாட் நான்சென்ஸ்... நான் சசியைப் பற்றி மட்டும்தான் பேசுறேன். சசியோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஊர்க்காரங்களுக்கும் இந்த விஷயத்துல என்ன தொடர்பு இருக்கு?"

"இப்படியெல்லாம் ஏதாவது நாடகங்கள்லயோ திரைப்படங்கள்லயோ நாவல்கள்லயோ வேணும்னா சொல்லலாம். ஆனால், நடைமுறையில எல்லாரையும் ஒரு ஓரத்துல நிற்கச் சொல்லிட்டு நாம எதுவுமே செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அதுதான் வழக்கத்துல இருக்குறது."

"வழக்காம் வழக்கு! நான்சென்ஸ்! அந்தக் காலமெல்லாம் எப்பவோ முடிஞ்சிடுச்சு. இந்தக் காலத்துல நாங்க யாரும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படமாட்டோம். நம்ம ஒவ்வொரு பழமையான பழக்கவழக்கங்களும் முட்டாள்தனம்... அட்டர் நான்சென்ஸ்... அம்மா, பேசாம இருங்க. அதையும் இதையும் நினைச்சு தேவையில்லாம அலட்டிக்காதீங்க. எங்க விஷயத்தை நாங்களே பார்த்துக்கறோம்."

அதைச் சொல்லி விட்டு நிர்மலா மீண்டும் புத்தகத்தை எடுத்துத் திறந்தாள். "நான் சொல்றதைக் கேளு. அதுதான் நல்லது. உன் நன்மைக்குத் தானே தவிர, உனக்கு கேடு வர்றது மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேன்னு உனக்கு உறுதியா தெரியும்ல. இதுவரை உனக்கு அப்படி நான் எதையாவது செய்திருக்கேனா, மகளே? எனக்குன்னு இருக்குற ஒரே பொண்ணு நீதான். நிலைமை அப்படி இருக்குறப்போ, என்னைக் கவலைப்பட வைக்கிற..." -அதைச் சொன்னபோது மாதவி அம்மாவின் தொண்டை இடறியது. நிர்மலாவால் அதை நம்பவே முடியவில்லை. தனக்கும் சசிக்குமிடையே இருக்கும் உறவிற்கு இந்த அளவிற்கு எதிர்ப்பான சூழ்நிலை இருக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதுவும் தன்னுடைய தாய் இப்படி எதிர்ப்பாள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கிடையே, அந்த இரண்டு குடும்பங்களுக்கிடையே இருந்தது வெறும் அறிமுகம் மட்டுமல்ல. ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மாதிரிதான் அவர்கள் நடந்து கொள்வார்கள். நிர்மலாவின் தந்தை உயிரோடு இருக்கும்வரை அப்படித்தான் நடந்தது. அவளுடைய தந்தை இறந்தபிறகும் அந்த உறவு அப்படியே தொடர்ந்தது.

அதற்குப் பிறகுதான் காரணமே இல்லாமல் அவர்களுக்கிடையில் சிறிது சிறிதாகக் கீறல்கள் உண்டாக ஆரம்பித்தன. காலப்போக்கில் அந்தக் கீறல் பெரிதாகிப் பெரிதாகி பெரிய ஒரு இடைவெளியே உண்டாகிவிட்டது. இப்போது அதைச் சிந்தித்துப் பார்த்தால் எதற்காக அப்படியொரு மாற்றம் உண்டானது என்பதை நிர்மலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை சசியின் தாய் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பெண்களுக்கென்று இருக்கும் சாதாரண குண வெளிப்பாடே அது. அதைத்தவிர பெரிய அளவில் எதிர்ப்போ பகையோ வெளியே தெரிகிற மாதிரி எந்த காரணங்களோ நிர்மலாவிற்குத் தெரிந்த அளவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இருப்பதற்குரிய அவசியங்களும் இல்லை. பிறகு ஜாதி வேறுபாடு... அவர்களுக்கிடையில் ஒருமுறை கூட சிறிது அளவில் கூட இந்த விஷயம் தலையை நீட்டிப் பார்த்ததில்லை. அவர்கள் யாருக்கும் ஜாதி என்ற விஷயம் ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை.

நிர்மலாவின் மனதில் அந்த கடந்த கால நினைவுகள் ஒரு திரைப்படத்தைப் போல தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அதில் தெளிவற்றதாகவோ புரிந்து கொள்ள முடியாமலோ அப்படி எதுவும் இல்லை. அதனால்தான் இன்று தன்னுடைய தாயிடம் காணும் குழப்பமான வெளிப்பாட்டிற்கு அடிப்படையான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை எவ்வளவு முயன்றாலும் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.


அதனால்தான் அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்த அதிர்ச்சி அவளுடைய முகத்திலும் குரலிலும் தெளிவாகத் தெரிந்தது.

"யார் என்ன சொன்னாலும் சரி... எங்களுக்குச் சரின்னு படுறதை நாங்க நடத்தியே காட்டுவோம். இந்த விஷயத்துல யார் எதிர்த்தாலும், அதனால ஒரு பிரயோஜனமும் இல்ல. நாங்க என்ன செய்யறோம்னு எங்களுக்குத் தெரியும்" கடைசியில் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உறங்குவதற்காகத் திரும்பிப் படுத்தபோது நிர்மலா உறுதியான குரலில் சொன்னாள்: "அம்மா, இதுல நீங்க தலையிடாம இருக்கறதே நல்லது. எங்களுக்குத் தெரிஞ்சு நாங்க எந்தத் தப்பும் பண்ணமாட்டோம்னு உங்களுக்குத் தெரியும்ல? பிறகு எதுக்கு தேவையில்லாம கவலைப்படுறீங்க?"

"நான் எதுவும் சொல்லுறதா இல்ல. சொன்னா உன் தலையில எதுவும் ஏறாது. இருந்தாலும் ஒரு விஷயத்தை நான் உறுதியா சொல்றேன். இப்படிப்பட்ட ஒரு உறவு நமக்கு ஏற்றதல்ல. நமக்கு மட்டுமல்ல, நம்மோட உறவு கொண்டவர்களுக்கும்தான். ஜாதியும் மதமும் நமக்குப் பிரச்சினையில்லாம இருக்கலாம். ஆனால், நாம இருக்குற சமூகத்துக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்கும். அந்தச் சமூகத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு நாம மட்டும் தனியா வாழமுடியாது. உனக்கு அது புரியவே மாட்டேங்குது. அதனாலதான் நான் அதைத் திரும்பத் திரும்ப உன்கிட்ட சொல்றேன். என் விருப்பமும் என் மன அமைதியும் கொஞ்ச அளவிலாவது உனக்குச் சாதகமா இருக்குறது மாதிரி இருந்தா நீ அந்த வழியில இனிமேல் ஒரு எட்டுகூட முன்னோக்கி வைக்க வேண்டாம். நான் சொல்ல நினைக்கிறது அது ஒண்ணுதான்!"

மாதவி அம்மா சொன்னதை நிறுத்தினாள்.

"என்ன பேசுறீங்க? எல்லாம் ஒரே பைத்தியக்காரத்தனமா இருக்கு!"

மாதவி அம்மா அதற்கு எதுவும் பேசவில்லை.

தன் தாயின் அசாதாரணமான நடத்தை நிர்மலாவின் பதைபதைப்பை மேலும் அதிகரிக்கவே செய்தது. அவளிடம் உண்டான உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு மாதவி அம்மாவின் அன்றைய நடத்தை இல்லை. அவளுடைய தாய் ஒரு பயங்கர பிடிவாதக்காரி என்பதென்னவோ உண்மைதான். அது அவளுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும், இந்த விஷயத்தில்...!

பக்கத்து வீட்டு நாய் அப்போதும் குரைத்துக் கொண்டிருந்தது.

"நாசமாப் போச்சு! அந்த நாய் அமைதியா இருக்கக்கூடாதா?"- யாரிடமோ கோபத்தைப் போக்குவதைப் போல நிர்மலா சொன்னாள்.

"அது அது பாட்டுக்கு குரைக்குது. நீ உறங்கற வழியைப் பாரு. நேரம் எவ்வளவு ஆயிடுச்சு தெரியுமா? நாளைக்குக் காலையில சீக்கிரமா கல்லூரிக்குப் போகணும்ல!"- மாதவி அம்மா சொன்னாள்.

"சரி மம்மி... குட்நைட்."

"குட்நைட் மகளே!"

தலையணைக்கு அருகில் வைத்திருந்த புத்தகத்தை மேஜைமீது வைத்துவிட்டு படுத்த நிலையிலேயே சற்று கையை நீட்டி அவள் விளக்கின் பொத்தானை அழுத்தினாள். ட்ரான்சிஸ்டரையும்தான்.

விளக்கு அணைந்தது. பாட்டும் நின்றது.

அதற்காக வெளியே எங்கோ பொறுமையுடன் காத்து நின்றிருந்த இருட்டு அறைக்குள் வேகமாக நுழைந்தது.

அந்த நாய் அப்போதும் குரைத்துக் கொண்டுதானிருந்தது.

அதை நீக்கி விட்டுப் பார்த்தால்,

பேரமைதி!

4

டு நிலையான மனநிலையுடன் சிந்தித்துப் பார்த்தபோது தன்னுடைய நிலைக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் செய்யும் நிர்மலாவின் போக்கை மாதவி அம்மாவிற்குப் புரிந்து கொள்ள அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை. அவளின் நிலையில் வேறு யாராக இருந்தாலும் அப்படித்தான் நடப்பார்கள். நினைவு தெரிந்த நாளிலிருந்து நிர்மலாவிற்கு சசியையும் அவனுடைய வீட்டில் உள்ளவர்களையும் நன்கு தெரியும். தெரிவது மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஒரு உறவு அந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே இருந்தது. சொல்லப்போனால் அந்த உறவு நிர்மலாவின் பிறப்பிற்கு முன்பே ஆரம்பித்திருந்தது. சசி, நிர்மலா ஆகியோரின் தந்தைகள் தொழில் விஷயமாக அந்த நகரத்திற்கு வந்திருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அதில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். சசியின் தந்தை திருமணம் செய்து கொள்ளும் வரையில் அந்த அறையில்தான் இருந்தார். திருமணம் முடிந்த பிறகு மனைவியுடன் சசியின் தந்தை பிரபாகருடன் அப்போது வரை வசித்த இடத்தை விட்டு சற்று தூரத்திலிருந்த கொஞ்சம் சுமாரான ஒரு வீட்டிற்குத் தன் குடியிருப்பை மாற்றினார். அதற்குப் பிறகும் அந்த இரண்டு நண்பர்களின் நட்புறவில் சிறிதும் இடைவெளி உண்டாகவில்லை. இரண்டு பேரும் ஒரு தாயின் பிள்ளைகளைப் போலத்தான் அப்போதும் இருந்தார்கள். பிரபாகரின் மனைவி விஜயம் தன் கணவனின் நண்பர் குமாரமேனனைத் தன் உடன்பிறந்த சகோதரனைப் போல நினைத்தாள். அந்த அளவிற்கு அன்புடனும் பாசத்துடனும் அவர்கள் பழகினார்கள்.

அதற்குப் பிறகு வருடங்கள் படுவேகமாகக் கடந்தோடின. காலத்தின் அந்தப் பயணத்திற்கு ஏற்றபடி அவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் உண்டாயின. தங்களுடைய தொழிலில் அனுபவங்களும் அறிவும் அதிகமாக உண்டாக உண்டாக அதற்கேற்றாற்போல் உயர்ந்த பதவிகளை நோக்கி அவர்கள் உயர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த வளர்ச்சிக்கேற்றபடி இயற்கையாகவே அவர்களின் வாழ்க்கை முறையிலும் சூழ்நிலைகளிலும் மாற்றங்கள் உண்டாயின.

சொல்லக்கூடிய விதத்தில் மாற்றம் உண்டாகாமல் இருந்தது இருவரின் நட்பு விஷயத்தில் மட்டும்தான். பிரபாகர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்திருந்தாலும், அந்தக் குடும்பத்தின் ஒரு நபர் என்ற நிலையில்தான் அப்போதும் குமாரமேனன் இருந்தார். பெரும்பாலும் எல்லா நாட்களிலும் மேனன் பிரபாகரின் வீட்டிற்கு வந்துவிடுவார். அது வெறும் சடங்காக நடக்கவில்லை. அது ஒரு கட்டாயம் என்ற நிலையிலேயே நடந்தது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள் விஜயம் சசியைப் பெற்றெடுத்தாள். சசி பிறந்த பிறகு சிறிது நாட்களில் மேனனும் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவியின் பெயர் மாதவி அம்மா. திருமணம் முடிந்து தன் கணவருடன் அவர் தொழில் செய்யும் இடத்திற்குச் சென்றபோது, தன்னுடைய சொந்த வீட்டைத் துறந்து அறிமுகமே இல்லாத ஒரு திசையில் ஒரு புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் போடுகிறோம் என்ற பிரச்சினை மாதவி அம்மாவின் மனதில் சிறிதுகூட உண்டாகவில்லை. ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான எல்லா சூழ்நிலைகளையும் வசதிகளையும் அவர்கள் கேட்காமலே உண்டாக்கிக் கொடுப்பதற்கு அங்கு பிரபாகரும் அவருடைய மனைவியும் தயாராக இருந்தார்கள்.

இப்படி எல்லா விதங்களிலும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் அந்த இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையும் ஒளிமயமாக விளங்கியது.

பகலின் வெப்பத்தில்- காலை நேரத்தின் குளிர் மறைந்து போய் விட்டிருந்த வேளையில் சிறிதும் எதிர்பார்க்காமல் மோசமான ஒரு பாதிப்பிற்கு விஜயம் ஆளாக வேண்டி வந்தது. அவளை விஷக் காய்ச்சல் பாதித்தது.


ஆரம்பத்தில் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் அந்தக் காய்ச்சலின் தீவிரம் அதிகமாகியது. மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை செய்தனர். ஒரு சூழ்நிலையில் காப்பாற்ற முடியுமா என்ற எண்ணம் எல்லாரிடமும் உண்டாக ஆரம்பித்தது. ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன என்ற நிலை வந்தபோது கடவுள் சக்தி துணைக்கு வந்தது. வந்ததைப் போலவே நம்ப முடியாத அளவிற்கு நோய் போகவும் செய்தது. எல்லாருக்கும் அப்போதுதான் நிம்மதி வந்தது.

ஆனால், டாக்டர்களின் கருத்து என்னவென்றால் தங்களின் சிறப்பான சிகிச்சை முறைகளோ கடவுள் சக்தியோ விஜயத்தைக் காப்பாற்றவில்லை என்பதுதான். விஜயத்தை ஆபத்தான கட்டத்திலிருந்து காப்பாற்றியது மாதவி அம்மாவின் சுயநலமற்ற கவனிப்பு மட்டுமே என்றார்கள் அவர்கள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்கள் அதைச் சொன்னார்கள். ஒருவேளை அது உண்மையாகக்கூட இருக்கலாம். விஜயம் உடல் ரீதியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற உண்மை தெரிந்த நிமிடத்திலிருந்து அவளுடைய படுக்கையை விட்டு ஒரு நொடி கூட அகலாமல் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் அக்கறையுடன் கவனிப்பதைவிட ஈடுபாட்டுடனும் உண்மையுடனும் மாதவி அம்மா பார்த்துக் கொண்டாள். அந்த நாட்களில் எந்தவொரு விஷயத்துக்காகவும் தன்னுடைய வீட்டுப்பக்கம் கூட அவள் போகவில்லை. இரவு, பகல் எந்நேரமும் உறக்கத்தைக்கூட விலக்கி விஜயத்தின் அருகிலேயே அவள் இருந்தாள்.  விஜயம் தன்னுடைய சுகமற்ற நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டு படுக்கையை விட்டு எழுந்து தன்னுடைய வேலைகளைத் தானே பார்க்கக்கூடிய நிலையை அடையும் வரை மாதவி அம்மா அவளுடனே இருந்தாள். அந்த அளவிற்கு இருக்க வேண்டியதில்லை என்று மற்றவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், மாதவி அம்மாவுக்கென்று தனிப்பட்ட தீர்மானங்கள் இருந்தன.

அதற்குப் பிறகு அந்த இரண்டு குடும்பங்களின் வாழ்க்கைப் பெருவெள்ளம் ஒன்றாகச் சேர்ந்து மலையிலிருந்து ஓடிவரும் அருவியைப் போல எதிரில் இருக்கும் அமைதியான புல்வெளியை நோக்கி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. முழுமையான மகிழ்ச்சியுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு வாழ்க்கைப் பெருவெள்ளம்... ஆனால், மீண்டும் போட்ட கணக்குகள் தவறாயின.

எது நிலையானது, எது நிரந்தரமானது என்று பலரும் கேட்கலாம்.

அவர்கள் அப்படிக் கேட்பது சரியே. எதுவும் நிலையானது இல்லை எதுவும் நிரந்தரமானது இல்லை.

இல்லாவிட்டால் இப்படியெல்லாம் நடக்குமென்று யாராவது கனவில் கூட நினைத்திருப்பார்களா? ஆனால், நடந்தது... கனவில் கூட நினைக்காதது நடந்தது.

நிர்மலாவிற்கு பத்து வயது ஆகியிருந்தது. அப்போதுதான் அந்த வருத்தப்படக் கூடிய சம்பவம் நடந்தது.

அவளுடைய தந்தை மரணத்தைத் தழுவினார். அது ஒரு விபத்தில் நடந்தது. அவர் ஓட்டிக்கொண்டிருந்த கார் சரக்குகள் ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி விட்டது. அந்த நிமிடத்திலேயே அவருடைய மரணமும் நடந்துவிட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டிய நிலைமையே உண்டாகவில்லை.

அந்தச் சம்பவம் மாதவி அம்மாவை மிகவும் நிலைகுலையச் செய்துவிட்டது. எனினும், அவள் அதை எப்படியோ தாங்கிக் கொண்டாள். அவளுக்கு அது ஒரு கட்டாயமும் கூட தனக்காக அவள் வாழ வேண்டியதில்லை என்றாலும் வளர்ந்து கொண்டிருக்கும் தன் மகளுக்கு நிழல் தருவதற்காகவும் அவளைப் பத்திரமாகக் கரையில் கொண்டு சேர்ப்பதற்காகவும் உள்ள பொறுப்பு தன்னிடம் தரப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தப்பொறுப்பு தனக்கு மட்டுமே இருக்கிறது என்பதையும் உணர்ந்த அவள் அந்தத் தளர்ந்து போகச் செய்யும் சூழ்நிலையில் தன்னை மூழ்கச் செய்துவிடாமல் தான் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை நினைக்க ஆரம்பித்தாள். அந்த ஒரே காரணத்தால் அவளிடம் உண்டான சோர்வு, ஒரு நிரந்தர சோர்வாக நீடிக்கவில்லை.

பொறுப்புணர்வு அவளுக்கு தைரியத்தைத் தந்தது. வாழ்க்கையில் தனக்கு இனியும் ஒரு லட்சியம் இருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். அந்தப் புரிதலும் மன தைரியமும் கவலையென்ற சுழலில் சிக்கி மூழ்கிப்போய் விடாமல் அவளை அந்தந்த நேரத்தில் கையைப் பிடித்துத் தூக்கி கரை ஏற உதவிக் கொண்டிருந்தன. அதற்குப் பக்கபலம் என்று கூறுகிற மாதிரி அப்போது சசியின் குடும்பம் இருந்தது என்பதென்னவோ உண்மை. அந்த உதவி கிடைப்பதற்காக அவள் எந்த அளவிற்குக் கஷ்டப்பட்டிருக்கிறாள்! ஆனால், மீண்டும்...

கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சில சம்பவங்கள் அங்கு நடக்கத்தான் செய்தன. அரக்கு கொண்டு ஒட்டியதைப்போல உறுதியாக இருந்த அந்த இரண்டு குடும்பங்களின் நட்பிற்கிடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு அடியோட்டம், ஒரு அழுக்கு நீர் ஓட்டத்தைப்போல ஓட ஆரம்பித்தது. அது எப்படி ஆரம்பித்தது, எங்கிருந்து வந்தது என்று யாருக்குமே தெரியவில்லை. தன்னுடைய சொந்த தங்கையைப் போல எண்ணியிருந்த மாதவி அம்மாவிற்கும் உடன்பிறந்த அக்காவைப்போல எண்ணியிருந்த விஜயத்திற்குமிடையில் தான் அந்த அழுக்கு நீரோட்டம் ஓடிக்கொண்டிருந்தது. யாரும் அதைக் கவனிக்கவில்லை. அந்த இரண்டு பெண்களும்கூட அதைப்பற்றி தெரிந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். எனினும் யாருடைய கவனத்திலும் படாமல் யாருக்கும் தெரியாமல் அந்த நீரோட்டம் பெரிதாகி வளர்ந்து கொண்டிருந்தது.

அதற்குக் காரணம் என்ன? ஒரு காரணமும் இல்லாமல் எதுவும் நடக்கக்கூடியது இல்லையே! ஆனால், தெளிவான ஒரு காரணத்தை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. செயலும் செயலுக்கான காரணமும் அந்த அளவிற்குப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தன.

ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தனர் அந்த இரு குடும்பத்தினரும். ஆனால்...!

அது அல்ல... சிறிய நீரோட்டமல்ல... ஒரு வெள்ளப்பெருக்கே வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத ஒரு மனிதர் இருந்தார். சசியின் தந்தை... எவ்வளவு பெரிய பூகம்பம் உண்டானாலும் அந்த மனிதரின் சமநிலையைக் குலைக்கவே முடியாது. தன்னுடைய தொழில், எல்லாருடனும் நட்பு, பிறகு சிறித மது அருந்தும் பழக்கம் இதுதான் அவருடைய வாழ்க்கை முறையாக இருந்தது.

மாதவி அம்மாவின் குடும்பத்துடன் முன்பு எந்தவிதத்தில் உதவியாக இருந்தாரோ அதேபோல் தான் இப்போதும் அவருடைய அணுகுமுறை இருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் மேனனின் மறைவுக்குப்பிறகு, அந்த உறவின் இறுக்கம் அதிகமானதே தவிர, சிறிதும் அது குறையவில்லை. மாதவி அம்மாவின் விஷயத்திலும் அவளுடைய மகளின் விஷயத்திலும் தன்னுடைய நண்பரின் மரணத்திற்குப் பிறகு அவர் சற்று தனியான கவனத்தைச் செலுத்தினார் என்பதும் உண்மை. அவர்களுக்குத் தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் யாரும் கேட்காமலேயே தானே கண்டும் தெரிந்தும் அவர் செய்தார். 

எனினும், மனதில் வருத்தம் உண்டாவது மாதிரியான சூழ்நிலை அங்கு உண்டாகவில்லை என்று கூறிவிடுவதற்கில்லை.


தன்னுடைய கணவரின் நண்பர் ஒரு எல்லைக்கும் மேலே தங்கள் மீது ஈடுபாடு கொண்டிருப்பதையும், தங்களுக்கு உதவுவதையும் தேவை என்று மாதவி அம்மா நினைக்கவில்லை. தேவையில்லை என்று நினைத்தது மட்டுமல்ல, அவர் அப்படி நடந்து கொள்வது தங்களின் மனத்துணிச்சலைக் குறைக்கச் செய்கிறது என்று அவள் நினைத்தாள். அவள் அப்படி நினைத்தது நியாயமாகக் கூட இருக்கலாம். ஆனால், மாதவி அம்மாவின் குணமோ, அவள் அப்படி மனதில் நினைத்து நடந்ததோ அவரை எதுவும் செய்யவில்லை. அந்தக் குடும்பத்துடன் அவர் கொண்டிருந்த உறவில் சிறிதுகூட மாற்றம் உண்டாகவில்லை. அவரைப் பொறுத்தவரையில் எல்லாமே முன்பு இருந்ததைப் போலவே நடந்து கொண்டிருந்தன.

சசிக்கு மட்டுமே மாறிய சூழலால் உண்டான மாற்றத்தை வருத்தத்துடன் பார்க்க முடிந்தது. தன்னுடைய தாயின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக உண்டாகியிருந்த மாற்றத்தைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான். ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்ல-அது அவனைக் கவலை கொள்ளவும் வைத்தது. அப்படிப்பட்ட குணமாற்றம் எதையும் அவன் தன் தந்தையிடம் பார்க்கவில்லை. என்றாலும், தன்னுடைய வீட்டுச் சூழ்நிலையில் என்னவோ பிரச்சினை உண்டாகியிருக்கிறது என்று அவன் சந்தேகப்பட்டான். எனினும், எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல- அதே நேரத்தில் அப்படி எதுவும் நடந்திருந்தால் கூட அது தனக்குச் சிறிதும் தெரியாது என்பதைப் போல அவன் நடந்து கொண்டான். முன்பிருந்தே அவனுடைய தாய் சிறிது முன் கோபமும் வீண் பிடிவாதம் கொண்ட பெண்ணாகவுமே இருந்து விட்டாள். வானத்தின் முகத்தைக் கருமி ஆக்கிவிட்டு, பெய்யாமலே போய்விடுகிற மழை மேகத்தைப் போல அவனுடைய தாயின் குணம் அவ்வப்போது இந்த மாதிரி வெளிப்படும். வெளிப்பட்ட அடுத்த நிமிடம் போயும் விடும். போகாமல் இருக்கின்ற நேரத்தில் மட்டும் காற்றில் கொஞ்சம் வெப்பம் இருப்பதை உணர முடியும். அது இயற்கையில் கலந்திருக்கும் குணம். அந்த குணம்தான் சசியின் தாயிடமும் இருந்தது. சசி அதை ஏற்கெனவே நன்கு தெரிந்திருந்தான்.

சசியின் ஒரு பிறந்த நாளன்றுதான் அந்தப் பெட்டியின் மூடியைத் திறக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. அன்று வரை வெறுப்பையும் கோபத்தையும் அந்த இரண்டு தாய்மார்களும் மிகவும் ஆழத்தில் அந்தப் பெட்டிக்குள் மூடி வைத்திருந்தார்கள். சசியின் பிறந்த நாளுக்கு நிர்மலாவின் குடும்பமும் நிர்மலாவின் பிறந்த நாளுக்கு சசியின் வீட்டைச் சேர்ந்தவர்களும் பங்கு பெறாமல் ஒருமுறை கூட இருந்தது இல்லை. மற்ற எந்த விஷயத்தில் சாக்குப்போக்கு சொல்லி விலகியிருந்தாலும் பிள்ளைகளின் பிறந்த நாளன்று ஒன்று சேர்வது என்பது ஒரு கட்டாய விஷயமாக இருந்தது. எனினும் அந்தப் பிறந்த நாளுக்கு நிர்மலாவுடன் சசியின் வீட்டிற்குச் செல்ல மாதவி அம்மா தயாராக இல்லை.

"நீ போயிட்டு வா, குழந்தை... நான் வரல. அங்கே சசி வயசுல இருக்குற அவனாட நண்பர்கள்தான் பெரும்பாலும் வருவாங்க. அவங்களுக்கு மத்தியில நான் இருந்து என்ன செய்யப் போறேன்?"- நிர்மலா தொடர்ந்து கட்டாயப்படுத்தியபோது மாதவி அம்மா சொன்னாள்.

"என்னம்மா பேசறீங்க? இதுக்கு முன்னாடி நீங்க இப்படியெல்லாம் பேசினது இல்லையே! சசியோட பிறந்த நாளுக்கு நாம இதுவரை போகாம இருந்திருக்கோமா?"- நிர்மலா கேட்டாள். அவளுக்கு கவலையுடன் கோபமும் இருந்தது.

"இதுவரை போகாம இருந்ததில்லைங்கறதுக்காக இனிமேல் போகாம இருக்கக்கூடாதா என்ன? அப்படி இருக்கக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் கிட்டம் இருக்குதா? ஒவ்வொரு நேரத்துக்கும் ஏற்றபடி தானே நாம ஒவ்வொண்ணையும் செய்யணும். அப்படிச் செய்யறது தானே சரி!"

அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள் நிர்மலா. அப்படியொரு பேச்சை தன் தாயின் வாயிலிருந்து அவள் அப்போதுதான் முதல் தடவையாகக் கேட்கிறாள். அதனால் அவள் சொன்னாள்: "அம்மா, இப்போ நீங்க நடந்துக்கறதை என்னால புரிஞ்சுக்கவே முடியல."

"வயது ஏற ஏற இப்போ புரிஞ்சிக்க முடியாத பலதையும் அப்போ உன்னால புரிஞ்சிக்க முடியும். நம்ம வாழ்க்கையில புரிஞ்சிக்க முடியாத பல விஷயங்களும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. என் அளவு வயசு ஆகறப்போ அதுல பலவற்றை நீ அனேகமா புரிஞ்சுக்குவே!"

"என்ன, முட்டாள்தனமா பேசுறீங்க!"

"அப்படியே இருக்கட்டும். முட்டாள்தனம்னே நீ நினைச்சுக்கோ!"

"அம்மா, நீங்க வரலைன்னா நானும் போகல"- அதைச் சொன்னபோது அவளுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது. அதற்குப் பிறகு அவள் எதுவும் பேசாமல் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டாள்.

"நீ போயிட்டு வா, குழந்தை. எனக்கு உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு. அதனாலதான் சொல்றேன். நீ போயிட்டு வா. நீங்க ஒரே வயசைச் சேர்ந்தவங்க தானே! நான் வந்து என்ன பிரயோஜனம்?"- மாதவி அம்மா மென்மையான குரலில் சொன்னாள்.

"இல்ல... அம்மா, நீங்க வராம நான் போறதா இல்ல. உங்க உடம்புக்கு முடியலைன்னா, நானும் போகல"- நிர்மலா உறுதியான குரலில் சொன்னாள். கடைசியில் வெற்றி பெற்றதென்னவோ அவள்தான். சிறிது தாமதமானால்கூட தன் தாயையும் அழைத்துக்கொண்டுதான் நிர்மலா சென்றாள். அவர்களை அழைத்துக்கொண்டு போவதற்காக சசியே காருடன் வந்திருந்தான்.

சசியின் தந்தையும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து முன்பக்கத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரபாகர் மிகவும் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். மதுவின் போதையில் மிதந்து கொண்டிருந்த கொடுங்கல்லூர்புரம்! சிறிது மது உள்ளே நுழைந்தால் கூட போதும், பிரபாகர் முற்றிலும் மாறிவிடுவார். அதற்குப் பிறகு பாட்டுதான், ஆட்டம்தான். அந்தப் பாட்டிலும் ஆட்டத்திலும் யார் இருந்தாலும், என்ன செய்தாலும் அவருக்குத் தெரியாது. அந்தச் சமயத்தில் ஆண், பெண் குழந்தைகள், வயதானவர்கள் எல்லாருமே அவருக்கு ஒரே வயதைச் சேர்ந்தவர்கள்தாம். நிர்மலாவிற்கும் அவளுடைய வயதையொத்த சினேகிதர்கள் இருந்தார்கள். பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண்கள்.  இடையில் அவ்வப்போது அவர்களைத் தேடி இளைஞர்கள் வருவதுண்டு. ஆனால் தீப்பந்தத்தைப் போன்ற கண்களுடன் காவல் காத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு முன்னால் அப்படி நாடி வரும் இளைஞர்களின் ஆசை முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிடும். தனியாக நின்றிருந்தது மாதவி அம்மா மட்டும்தான். இடையில் ஒன்றிரண்டு தடவைகள் சசியின் தந்தை வந்து என்னவோ பொழுதுபோக்குக்காகப் பேசிவிட்டுச் சென்றார். சசியின் தாய், தனக்கு அதிகமாக வேலை இருப்பதைப் போல் காட்டிக்கொண்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாளே தவிர, மாதவி அம்மாவை அவள் சிறிது கூட கவனிக்கவே இல்லை.

அறிமுகமான ஒன்றிரண்டு பெண்களுடன் சிறிது நேரம் குசலம் விசாரித்த மாதவி அம்மா தன் மகளை அழைத்தாள். 


"நிர்மலா, நான் போறேன். நீ வர்றியா?"

"இப்பவே போறதா?"- அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

"ம்... எனக்கு உடம்புக்குச் சரியா இல்ல..."- மாதவி அம்மா சொன்னாள்.

நிர்மலாவால் அதை நம்பவே முடியவில்லை. எனினும் உடல்நலமில்லை என்ற சூழ்நிலையில் அங்கிருந்து போவதே நல்லது என்று நினைத்த அவள் சசியை அழைத்தாள். தன் தாயை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.

போகும் விஷயத்தைவேறு யாரிடமும் சொல்லாமல் யாருடைய கவனத்தலும் படாமல் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்றுதான் மாதவி அம்மா விரும்பினாள். ஆனால், அவளின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த சசியின் தாய், மாதவி அம்மா கிளம்பப் போகிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அங்கு ஓடி வந்து கேட்டாள்.

"என்ன, சாப்பிடாமலே போறீங்களா?"

"ம்..." மாதவி அம்மா முணுமுணுத்தாள்.

பிறகு எதையும் கேட்பதற்கு முன்னால் அவள் படுவேகமாக வெளியே நடந்து அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

5

பிரபாகர் அப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தார். அறைக்குள் பழைய தரை விரிப்பின் வாசனை நிறைந்திருந்தது. அவர் மேஜை மேலிருந்த அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினார். மணியோசை மனித வடிவம் எடுத்தது போல் அடுத்த நிமிடம் கதவைத் திறந்து கொண்டு ப்யூன் உள்ளே நுழைந்தான். அவனிடம் அவர் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. உள்ளே நுழைந்தவுடன் அவன் ஏர்கண்டிஷனரை இயங்கச் செய்தான். அதிர்ச்சியடைந்து எழுந்து எதிர்ப்பைக் காட்டுவது போல அது சீறிக்கொண்டு இயங்கியது. வந்ததைப் போலவே ப்யூன் வெளியே போகவும் செய்தான். தரை விரிப்பைப் போலவே அவனிடமும் ஒரு தனிப்பட்ட நாற்றம் இருந்தது.

அவர் தன்னுடைய ப்ரீஃப்கேஸைத் திறந்து கண்ணாடியையும் பேனாவையும் நேற்று வீட்டிற்குக் கொண்டு போயிருந்த அவசர ஃபைல்களையும் வெளியே எடுத்து மேஜைமீது வைத்தார். பிறகு கோட்டு பைக்குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் வெளியே எடுத்து ஒரு சிகரெட்டைப் புகைத்து விட்டு கோட்டைக் கழற்றி நாற்காலியின் சாய்வுப் பகுதியில் எப்போதும் போல தொங்க விட்டார்.

அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அவர் அதைக் காதில் வாங்காததைப் போல இருந்தார். ஆனால், பிடிவாதம் பிடித்த ஒரு குழந்தையைப் போல அது நிற்காமல் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதற்குப் பிறகும் அதைக் காதில் வாங்காமலேயே அவர் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். பிடிவாதம் பிடிக்கும் குழந்தையின் தாயைப்போல அவர் நடந்து கொண்டார். தொலைபேசி நிற்காமல் ஒலித்துக்கொண்டிருந்தது காரணமாக இருக்கவேண்டும் வெளியே நின்றிருந்த ப்யூன் கதவை மெதுவாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். சார் உள்ளேதான் இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் அவன் வேகமாக மீண்டும் கதவை மூடினான்.

தொலைபேசி அதற்குப் பிறகும் குறைந்தபட்சம் பத்து தடவைகளாவது அடித்திருக்கவேண்டும். மீண்டும் அது ஒலிக்க ஆரம்பிக்கவே, பொறுமையை இழந்த அவர் சற்று முன்னால் நகர்ந்து ரிஸீவரைக் கையில் எடுத்தார். அதைக் கையில் வைத்துக் கொண்டு கடவுளின் நாமத்தைச் சொல்வது போல உதட்டை நக்கிக் கொண்டு மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தார். அவர் ரிஸீவரைத் தன் காதோடு சேர்த்து வைத்தார். காதின் கீழ்ப்பகுதி வரை வளர்ந்திருந்த அவருடைய தலைமுடி நன்கு நரைத்திருந்தன. நெற்றியின் இருபக்கங்களிலும் வழுக்கை கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி ஏறிக்கொண்டிருந்தது என்றாலும் மீதி இருந்த தலைமுடி அவ்வளவாக நரைக்காமலே இருந்தன. அது மட்டுமல்ல- மழை பெய்யும் காட்டில் வளர்ந்திருக்கும் புதர்களைப் போல இடைவெளி விட்டு அவை வளர்ந்திருந்தன.

மொத்தத்தில் இளமை அவரிடமிருந்து விடைபெற்றிருந்தாலும், பிரபாகர் பார்ப்பதற்குக் கம்பீரமாகவே இருந்தார். தலையில் இருந்த சிறு வழுக்கை அந்த கம்பீரமான தோற்றத்திற்கு மெருகு சேர்க்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது.

"பிரபாகர் ஹியர்..."- அவர் தொலைபேசியில் சொன்னார்.

அடுத்த நிமிடம் அவருடைய முகம் முற்றிலுமாக மாறியது. சிறிதும் எதிர்பார்த்திராத ஏதோவொன்று நடந்ததைப் போல அந்த முக மாறுபாடு ஒரு நிமிடம் மட்டுமே நிலைத்து நின்றது. அடுத்த நிமிடம் அவர் விளையாடுகிற தொனியில் கேட்டார்: "இல்ல... இல்ல... இப்படியும் சிலர் ஊர்ல இருக்காங்களா என்ன?"

மாதவி அம்மாவிற்குப் பொழுது போவதற்கான நேரமல்ல அது.

"உங்களை நான் முக்கிய விஷயமா பார்க்கணும்"- அவள் தொலைபேசியில் கூறினாள்.

"என்னையா?"

"ஆமா..."

"இப்பவே பார்க்கணுமா?"

"எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்."

"இப்போ வரமுடியாது."

"ஓ... அப்படின்னா அந்த அளவுக்கு முக்கியம் இல்லைன்னு அர்த்தம். அது இருக்கட்டும்... என்ன விஷயம்? யாருக்கும் உடம்புக்கு எதுவும் இல்லையே!"- அவளின் குரலில் ஏதோ பாதிக்கக்கூடிய விஷயம் மறைந்திருக்கிறது என்று தோன்றியதால் அவர் விளையாட்டுத்தனத்தை விட்டு சீரியஸாகக் கேட்டார்.

"இல்ல..."

"பிறகு?"

"பார்க்கறப்போ சொல்றேன். எப்போ நான் உங்களைப் பார்க்கறது?"

"நான் இன்னைக்கே அங்கே வர்றேன். அலுவலகத்துல இருந்து போற வழியில... ஆனா, அப்போ நான் நல்ல பசியா இருப்பேன்."

"இங்கே வரவேண்டாம்"- மாதவி அம்மா அப்போதும் தன்னிடமிருந்த கம்பீரத்தை விட்டுத்தரவில்லை. அவள் சொன்னாள்:

"நாளைக்கு மதியம் பார்க்க முடியுமா?"

"நாளைக்கு நான் என் பல் டாக்டரைப் பார்க்கணும். அங்கே போயிட்டு வர்ற வழியில..."

"எத்தனை மணிக்கு நீங்க பல் டாக்டரைப் பார்க்கப் போறீங்க?"

"பதினோரு மணிக்கு. பன்னிரண்டு மணிக்கு நான் அஸ்டோரியா ஹோட்டலுக்கு முன்னாடி வந்திர்றேன். அங்கே பார்ப்போமா?"

"பார்க்காம என்ன? கட்டாயம் பார்ப்போம்."

"மதிய உணவை அஸ்டோரியா ஹோட்டல்லயே சாப்பிடுவோம் என்ன?"

"வேண்டாம்..."

"அப்படின்னா ரேடியோ க்ளப்ல..."

ஒரு நிமிட நேரத்திற்கு அமைதி நிலவியது. மாதவி அம்மா கூறுவதற்கான பதிலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

"ஹலோ... ஹலோ..."- குரலைக் கேட்காததால் பிரபாகர் அழைத்தார்.

"ம்... சரி.."- மாதவி அம்மா சொன்னாள்: "ஓ.கே. நாளைக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கு நான் அஸ்டோரியா ஹோட்டலுக்கு முன்னாடி காத்திருக்கேன். அது இருக்கட்டும்... இப்பவும் பல்வலி இருக்கா என்ன?"

"இல்ல..."

"பிறகு எதுக்கு பல் டாக்டரைப் பார்க்கப் போறீங்க?"

"போன தடவை போனப்போ இன்னும் ரெண்டு தடவை வரணும்னு சொன்னாரு."

"ஆளு கொஞ்ச வயசா?"

"ஷட்டப்..."

"வெறுமனே பணம் புடுங்குற வேலை இது. இந்த மாதிரியான ஆளுங்ககிட்ட போகவே போகாதீங்க. என் பல்லை எடுக்கறதா இருந்தா, பல்லோட விலையை எனக்குத் தரணும்."

"சரி... நாளைக்குப் பார்ப்போம். தொலைபேசியை வைக்கட்டுமா?"

"ஓகே... பை..."


'டக்' என்ற ஒலியுடன் தொலைபேசி உறவு முடிந்தது. எனினும், அவர் தொலைபேசியைத் தன் காதோடு சேர்த்து வைத்துக் கொண்டு சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் மூழ்கியவாறு உட்கார்ந்திருந்தார். அந்த அளவிற்கு என்ன பெரிய பிரச்சினை இருக்கும்? அவர் ஆச்சரியப்பட்டார். ஆனால், என்னதான் சிந்தித்துப் பார்த்தாலும், அவரால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

"எது வேண்டுமென்றாலும் இருக்கட்டும். நாளைக்குத் தெரிந்து விடுமே!" என்று மனதிற்குள் கூறியவாறு அவர் ரிஸீவரை அதற்குரிய இடத்தில் வைத்தார்.

6

ரே பார்வையில் என்னவோ பிரச்சினை இருக்கிறது என்பதை சசி தெரிந்து கொண்டான். அவன் கல்லூரிக்கு வெளியே நிர்மலா வருவதை எதிர்பார்த்துக்கொண்டு ஸ்கூட்டருடன் காத்திருந்தான். நிர்மலா முகத்தையே உயர்த்தாமல் தரையைப் பார்த்தவாறு ஒரு ஓரத்தில் நடந்து வருவதை தூரத்திலேயே அவன் பார்த்துவிட்டான்.

தூய வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற பார்டர் போட்ட பருத்திப் புடவையை அவள் அணிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. பருத்திப்புடவைதான் அவளுக்குப் பொதுவாகவே பொருத்தமாக இருக்கும். அவளுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனால், இன்னும் உடம்பில் சிறிது சதை பிடித்தால் பருத்திப் புடவையை அவள் அணிய முடியாது. ஊதிப் பெரிதாக்கினதைப் போல அது இருக்கும். இல்லை... இதற்கு மேல் அவளுக்கு உடம்பில் சதை பிடிக்கும் என்று தோன்றவில்லை. அவளுடைய தாயின் உடலைப்போலத்தான் அவளுக்கும். நிறமும் நடக்கும் முறையும் தலையை ஒருபக்கம் சாய்ந்தவாறு பார்ப்பதும் எல்லாமே அவளுடைய தாயைப் போலவே தான்.

இப்படிப் பல விஷயங்களையும் சிந்தித்தவாறு அவன் நின்று கொண்டிருந்ததில் அவள் தனக்கு அருகில் வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை.

அவள் அவனுக்கு அருகில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். அப்போதுதான் சசி தன் எண்ணங்களிலிருந்து திடுக்கிட்டு விடுபட்டான்.

"ஓ..."- தன்னிடம் உண்டான தவறை மறைத்துக்கொண்டு அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்: "வந்து ரொம்ப நேரம் ஆச்சா?"

"இல்ல... இப்போதான் வந்தேன். சரி... அது இருக்கட்டும்"- அவள் கிண்டலாகச் சொன்னாள்: "என்ன, ஒரு மணி நேரமா இங்கே வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க? பொண்ணுகளை சைட் அடிக்கிறதுக்கா?"

அதைக்கேட்டதும் அவளுக்குள் ஏதோ பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் தான் நினைத்தது மாதிரி அவள் சாதாரணமாக இல்லை என்பதையும் அவன் புரிந்து கொண்டான். எனினும் அதே விளையாட்டுத்தனத்துடன் மீண்டும் கேட்டான்: "நீ என்ன சொன்னே?"

"கல்லூரி விட்டு வர்ற பொண்ணுகளை சைட் அடிக்கிறதுக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே இங்கே வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டேன்."

"உண்மையாகச் சொல்லப்போனா சைட் அடிக்கனும் போலத்தான் இருந்துச்சு. ஆனா, நான்... நின்னு என்னையே மறந்துட்டேன்.அந்த சுயநினைவற்ற நிலையில ஒரு கனவு கண்டேன்."

"இந்தப் பழக்கம் எவ்வளவு நாளா இருக்கு?"

"எந்தப் பழக்கம்?"

"மறதியும் கனவு காண்றதும்..."

"எதுவும் பேச வேண்டாம். கறுப்புக்கரை போட்ட வெள்ளை பருத்திப் புடவை கட்டிக்கிட்டு நடந்து வந்த ஒரு பொண்ணைப் பார்த்த பிறகுதான் எல்லாமே!"

"அவ நல்ல புத்திசாலிப் பொண்ணா இருக்கணுமே! அவ யாரு?"

"வா... காட்டுறேன்"- அவன் திரும்பி ஸ்கூட்டரில் ஏறி அமர்ந்து கொண்டு சொன்னான்: "ஏறி உட்காரு. சீக்கிரம்... இன்னைக்கு இந்த வெயில்லதான் போயி ஆகணும். காரை அப்பா எடுத்துட்டுப் போயிட்டாரு. சரி... சீக்கிரம் ஏறி உட்காரு. ஒவ்வொருத்தரும் கழுகு மாதிரி நம்மைப் பார்க்கறதைப் பாரு..."

"அவங்க பார்க்கறதுல தப்பு என்ன இருக்கு? இந்தத் தலைமுடியை வாரியிருக்குற ஸ்டைலையும் சட்டையோட டிஸைனையும் மீசையையும் பார்த்தா ஏதோ தமிழ் சினிமாவுல நடிக்கிற எக்ஸ்ட்ரா நடிகர் போலன்னு எந்தப் பொண்ணுதான் நினைச்சுப் பார்க்காம இருப்பா?"

"ம்... என்னைப்பற்றி நீ அப்படி நினைக்கிறியா? ஏறி உட்காரு. இந்த சினிமாவுல எக்ஸ்ட்ரா இதே இடத்துல நின்னுக்கிட்டு மெதுவா விரலைச் சுண்டிவிட்டா போதும்... மணிமணியா ஒரு டஜன் பொண்ணுக என்னைத்தேடி ஓடி வருவாங்க. ம்... உனக்கு என்ன தெரியும்? சரி, அது இருக்கட்டும். நீ இப்போ ஏறி உட்காரு"- அவன் சொன்னான்.

கால்கள் இரண்டையும் ஒரே பக்கத்தில் வைத்துக்கொண்டு அவள் அவனுக்குப் பின்னால் ஸ்கூட்டரில் உட்கார்ந்தாள்.

வண்டியை ஓட்டியபடியே அவன் உரத்த குரலில் பாடத் தொடங்கினான்.

"ச்சீ... பேசாம இருங்க. வழியில போறவங்க எல்லாரும் கேட்கணுமா? மனுசனா இருந்தா, நாணம்னு ஒண்ணு இருக்கணும்."

"இப்படி ஒருத்தி என் பின்னாடி உட்கார்ந்திருக்குறப்போ எனக்கு எப்படி நாணம் வரும்? தேர் இஸ் எ உமன் பிஹைண்ட் வெரி ஷேம்லெஸ் மேன் என்றொரு பழமொழியை நீ கேட்டதில்லையா?"

"ஷட்டப்!"

"ஓகே... ஓகே...

அவன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

ஸ்கூட்டர் வழியிலிருந்து விலகி இடது பக்கமாகத் திரும்பியபோது அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்: "நாம எங்கே போறோம்?"

"நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கனவு கண்ட அந்தத் திசைக்கு."

அவள் அவனுடைய தோளின் மீது கையை வைத்து இறுகப் பற்றினாள். ஒதுங்கி நின்ற இளம் பெண்களில் சிலர் பொறாமையுடன் அவர்களைப் பார்த்தார்கள்.

பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி வலது பக்கமாகத் திரும்பியபோது எங்கே போகிறோம் என்பதை அவள் புரிந்து கொண்டாள். எப்போதும் போகக்கூடிய இடமான நேஷனல் பார்க்கை நோக்கித்தான் ஸ்கூட்டர் போகிறது என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

பூங்காவிற்குள் நுழையும் இடத்தை அடைந்தவுடன் அவன் ஸ்கூட்டரை நிறுத்தினான். பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தவாறு கேட்டான்: "பசி எடுக்குதா?"

"இல்ல..."- அவள் சொன்னாள்.

ஸ்கூட்டர் மீண்டும் ஓடத் தொடங்கியது. அது பூங்காவிற்குள் நுழைந்து ஆட்கள் இல்லாத அகலம் குறைவான பாதைகள் வழியே ஓடிக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான்: "இறுக்கமா பிடிச்சுக்கோ. பாதை ரொம்பவும் மோசமா இருக்கு."

"இறுக்கிப் பிடிக்கணுமா?"

"விழாம இருக்கணும்னா..."

"இன்னைக்குன்னு பாதை திடீர்னு மோசமாயிருச்சா என்ன?"- அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

"பிடி பெண்ணே- அதிகமா பேசிட்டு இருக்காம."

"அய்யோ..."- சசி உரத்த குரலில் கத்தினான்.

"இறுக்கினது போதுமா?"- அவள் கேட்டாள்.

"இப்படியா வயசுக்கு வந்த பொண்ணுங்க இறுக்குவாங்க."

"அந்த வயசு வரட்டும். அதுவரை இப்படித்தான்."

"அப்படின்னா நான் சொல்லித் தர்றேன். நீ மெதுவா அந்த வயசுக்கு வந்தா போதும். சரியா?"

"தேவை இல்ல... தேவையே இல்ல. வகுப்புல பாடத்தைப் படிக்கிறதுக்கே நேரமில்ல. இந்த நிலைமையில..."


"முட்டாள்... நான் சொல்லித் தரப்போறது தியரி இல்ல. ப்ராக்டிக்கல். ஒன்லி ப்ராக்டிக்கல். பிறகு எக்ஸ்பெரிமெண்ட்ஸ்..."

"ஷட் அப்... ஸ்டுப்பிட்..."

"இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்கு முன்னாடி இப்படி ஸ்டுப்பிட்னு அழைக்க ஆரம்பிச்சிட்டியா! அந்தச் சடங்கு நடக்கட்டும். அதுக்குப் பின்னாடி பேரைச் சொல்லிக் கூப்பிட்டாப் போதாதா?"

"வில் யூ ஷட் அப்?"

"ஓகே... ஓகே..."

அவன் ஸ்கூட்டரை நிறுத்தினான்.

அவள் அவனுக்குப் பின்னாலிருந்து குதித்து இறங்கி முன்னாலிருந்த ஒற்றையடிப் பாதை வழியாக மேலே நடந்தாள்.

ஸ்கூட்டருக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு சசியும் அவளுக்குப் பின்னால் நடந்தான்.

அங்கு சற்று மேலே பெரிய கருங்கற்கள் சுற்றிலும் அழகாக அடுக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கொன்றை மரம் இருந்தது. அதுதான் அவர்கள் எப்போதும் அமரும் இடம். சில நேரங்களில் அந்த இடத்தை வேறு யாராவது முன்னால் வந்து ஆக்கிரமித்துக் கொள்வதும் உண்டு.

சசி தன் பாக்கெட்டிற்குள் மடித்து வைத்திருந்த ஒரு ப்ளாஸ்டிக் விரிப்பை வெளியே எடுத்து தரையில் விரித்தான்.

"உட்காரு"- அவன் சொன்னான்.

"உட்காரவா? இப்படியா பெண்கள்கிட்ட பேசுறது! ப்ளீஸ் உட்காருன்னு சொல்லுங்க."

"போடி இவளே... நான் இதோ வர்ற பொண்ணுகிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்."

தரையில் விரித்திருந்த பிளாஸ்டிக் விரிப்பில் முழங்கால்களை மடக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தவாறு அவள் கேட்டாள்: "ஓ... கனவு காண ஆரம்பிச்சாச்சா?"

"பல வருடங்களுக்கு முன்னாடி ஒரு நாட்டுல ஒரு ராஜகுமாரி இருந்தா"- அவளுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அவளின் கேள்வியைக் காதில் வாங்காதது மாதிரி அவன் கூறிக் கொண்டிருந்தான்.

"நான் கேட்க விரும்பல"-அவள் சொன்னாள்.

"அந்த ராஜகுமாரி இருக்காளே... அந்த ராஜகுமாரி. அவள் ரொம்பவும் அழகா இருப்பா."

"அய்யோ... நான் கேட்க விரும்பலைன்னு சொன்னேன்ல"- அவள் தன் கைகளால் காதுகளை மூடிக்கொண்டாள்.

"அந்த ராஜகுமாரியோட முகம் முழு நிலவைப்போல இருந்தது.  அவளோட கண்கள்..."

"செத்துப்போன மீனைப் போல இருந்துச்சு"- அவள் சொன்னாள்.

"உன் மனசுல எப்பவும் இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள்தான் இருக்குமா?"- அவளுடைய பின் பாகத்தை கையால் கிள்ளியவாறு அவன் கேட்டான்.

"என் அம்மா..."- அவள் உரத்த குரலில் கத்தினாள்.

"மெதுவா... ஆளுங்க ஓடி வந்திடப் போறாங்க"- சசி சொன்னான்.

"அதுக்காக? இப்படியா?"

"நீதான் எல்லாத்துக்கும் காரணம்..."

"கொஞ்சம்கூட உங்களுக்கு வெட்கமா இல்லையா? யூ ஹேட் நோ ஷேம் ஆல்ஸோ!"

அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் பதிலாக அவன் மெதுவாக அவளுடைய கையைப் பற்றி தன் மடியில் வைத்தான். பிறகு மேலும் சற்று அவளை நெருங்கி உட்கார்ந்தான்.

அப்போது, உரிய சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்ததைப் போல சற்று தயங்கிய குரலில் அவள் சொன்னாள்: "கதை சொல்றது எல்லாம் முடிஞ்சுதா? எல்லாம் முடிஞ்சதுன்னா, நான் ஒரு விஷயம் சொல்றேன். இது விளையாட்டு இல்ல. ஆனா..."

"ஒண்ணு என்ன ஆயிரம்கூட சொல்லு. எவ்வளவு அதிகமா சொல்றியோ, அவ்வளவு நல்லது. நீ நிறுத்தாம சொல்லிக்கிட்டே இரு. நான் என் விஷயத்தைப் பார்க்கறேன்!"

"இது விளையாட்டு இல்ல. தெரியுதா?"

"எனக்குத் தெரியாதா? எது விளையாட்டு, எது சீரியஸ்னு. சரி எது வேணும்னாலும் இருக்கட்டும், நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு. அதுக்குப் பிறகு விளையாட்டை வச்சுக்குவோம். சரிதானா?"

"சசி..." - சொல்ல வந்ததை அவள் உடனே நிறுத்தினாள். பிறகு ஒரு நிமிடம் கழித்து என்னவோ நினைத்துவிட்டு அவள் சொன்னாள்: "எப்போ பார்த்தாலும் இப்படி விளையாட்டுத்தனமாகவே இருக்கறது நல்லது இல்ல. தெரியுதா? நான் சொல்லப் போறது சாதாரண விஷயம் இல்ல..."

"அப்படியா? ஐ ஆம் ஸாரி..."- அவன் தன் இரண்டு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது மாதிரி முகத்தைக் குனிந்து கொண்டு சொன்னான்.

"அன்னைக்கு... அன்னைக்கு... வீட்டுக்குத் தாமதமா போனேன்ல?"

"ஆமா...?"

"அம்மா அதுக்காகக் கோபப்பட்டாங்க."

"அப்படியா? எதுக்குக் கோபப்படணும்?"- சசி ஆச்சரியத்துடன் கேட்டவாறு அவளையே உற்றுப் பார்த்தான்.

"வீட்டுக்கு ரொம்பவும் தாமதமா திரும்பி வந்ததுக்காக..."

"நானும் உன்கூட இருந்தேன்னு நீ சொல்லலியா?"

"சொன்னேன்."

"அதுக்குப் பிறகுமா?"

"அம்மாவுக்கு அப்படி வந்தது பிடிக்கலன்னு நான் நினைக்கிறேன்."

"நீ என்கூட வந்தது அம்மாவுக்கு பிடிக்கலையா?"

"ஆமா..."- அவள் தலையை ஆட்டினாள். தொடர்ந்து எதுவுமே பேசாமல் தீவிர சிந்தனையில் அவள் இருந்தாள்.

சசிக்கு அது ஒரு ஆச்சரியமானஅனுபவமாக இருந்தது. தன்னுடன் நிர்மலா நெருக்கமாகப் பழகுவது அவளுடைய தாய்க்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கும் என்றுதான் அவன் நினைத்திருந்தான். அதுதான் நிர்மலாவின் தாய் மனதில் மறைந்திருக்கக்கூடிய பெரிய ஆசையாக இருக்கும் என்று அவன் எண்ணியிருந்தான். சிறு வயது முதல் ஒருவரையொருவர் நன்கு அறிந்த பிள்ளைகள்... ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள்... உறவினர்களைப் போல நெருக்கமான இரண்டு குடும்பங்களின் வாரிசுகள்... அவர்களுக்கிடையில் ஏதாவது பொருத்தமின்மை சில விஷயங்களில் இருக்கலாம். அது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. அது தனி நபர்களின் குணத்தால் உண்டான வித்தியாசம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஜாதி காரணமாக இருக்கலாம்.

பொருளாதார நிலையின் ஏற்ற இறக்கத்தாலும் அப்படிப்பட்ட வேறு சில சிறு காரணங்களாலும் அப்படி உண்டாகலாம். எனினும், நிர்மலாவிடமும் அவளுடைய தாயிடமும் இப்படிப்பட்ட எண்ணங்கள் உண்டாக வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை தெரிந்தவர்களும் ஊர்க்காரர்களும் என்ன சொல்வார்கள் என்பது பிரச்சினையாக இருக்கலாம். கல்லூரி விட்டவுடன் தாமதமாக வீட்டுக்கு வருவதும், ஒரு இளைஞனுடன் சேர்ந்து ரெஸ்ட்டாரெண்ட்டுக்குப் போய் காபி குடிப்பதும் ஒரு தாய் விரும்பக்கூடிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். அங்கு தலைமுறை இடைவெளி என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. என்னதான் முற்போக்கான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், ஒரு எல்லைக்கு அப்பால் போக அந்த இடைவெளி அனுமதிப்பதில்லை என்பதே உண்மை.

ஆனால்...

சசி ஒரு கையால் அவளுடைய இடுப்பை அணைத்து அவளைத் தன்னுடன் நெருக்கமாக இருக்கும்படி செய்தவாறு மெதுவான குரலில் கேட்டான்:

"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னதான் தோணினாலும் இது நம்ம ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம். நீ அதை வாயைத் திறந்து சொல்லி இருக்கலாம்ல?"

"நான் சொன்னேன். ஆனா, இது நம்ம ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்ன்றதை அம்மாவும் நினைச்சுப் பார்க்கணும்ல... அம்மா... அம்மா..."


அவளுடைய குரல் தடுமாறியது. சாதாரண விஷயத்திற்குக்கூட கலங்கக் கூடிய பெண் அவள்! ஒன்று கூறி இரண்டாவதாகக் கூறுவதற்கு முன்பே அவளுடைய கண்களில் கண்ணீர் அரும்பிவிடும். எதையும் தாங்கக்கூடிய தைரியம் அவளுக்கு இல்லை. இந்த வீம்பு காட்டுவது போன்ற விஷயமெல்லாம் வெறுமனே ஒரு நடிப்பு. அவ்வளவுதான். மனதில் எதையும் மறைத்து வைக்கத் தெரியாது. தனியாக நின்று எதையும் சந்திக்கக்கூடிய ஆற்றலும் அவளுக்கு இல்லை. தந்தை இல்லாமல் தாயின் செல்ல மகளாக வளர்ந்ததன் விளைவு அது. 'பாவம்...' - அவன் தனக்குள் கூறினான்.

"நாம ஒருவரையொருவர் விரும்புறோம்னு நீ அம்மாகிட்ட சொன்னியா?"

"சொன்னேன்..."

"பிறகு?"

"நான்தான் சொன்னேனே... அம்மா ரொம்பவும் கோபப்பட்டாங்க. கோபப்பட்டது மட்டுமில்ல. இந்த விஷயத்துல கொஞ்சம்கூட நமக்கு உதவி செய்ய முடியாதுன்னு அம்மா உறுதியான குரல்ல சொல்லவும் செஞ்சிட்டாங்க!"

"மை காட். ஆனா, என்னால அதைப்புரிஞ்சிக்க முடியுது, நிர்மலா.உன் அம்மாவுக்கு நாம பல வருடங்களுக்கு முன்னாடி பார்த்த சின்ன பசங்க இல்ல. அம்மாவோட பார்வையில நாம வளர்ந்திருக்கோம். அதுனால இந்த மாதிரி நாம நெருக்கமாக இருக்கறதும் நடக்கறதும் அவங்களோட பழக்கவழக்கங்களுக்குக் கொஞ்சம்கூட ஒத்து வராது. அதுக்காக நாம அம்மாவைக் குற்றம் சொல்லக்கூடாது. நாம அதைப் புரிஞ்சிக்கிட்டு, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கணும். கொஞ்சம் கொஞ்சமா எதிர்ப்புகளெல்லாம் இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும். என்னதான் நெருங்கிப் பழகினாலும் நாம நிச்சயம் தப்பு பண்ண மாட்டோம்னு அம்மாகிட்ட நம்பிக்கை உண்டாகணும். அதுதான் முக்கியம்."

"எது எப்படி இருந்தாலும், சசி, நீங்க வருத்தப்படக்கூடாது"- நிர்மலா சொன்னாள்.

"ம்ஹும்... நான் ஏன் வருத்தப்படணும்? எனக்கு உன்னைப் பற்றி மட்டும்தான் கவலை, நிர்மலா. என்னை யாரும் ஒண்ணும் செய்யமுடியாது. நான் யாரையும் ஒரு புல் அளவுக்குக்கூட பெருசா நினைக்கல. நீ சொன்ன இந்த விஷயங்களெல்லாம் என் வீட்டுலயும் உண்டாகலாம். என் அம்மாவோட குணம் எப்படின்னு உனக்குத்தான் தெரியுமே! என் தாய்க்கும் அவங்களுக்குன்னே இருக்குற சில எண்ணங்களும், கருத்துகளும், அதைவிட அதிகமா பிடிவாதமும் இருக்கு. அப்பாவைப்போல இல்ல அம்மா. ஆனா, அப்பாவாக இருந்தாலும் அம்மாவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் சரி... என் விருப்பத்துக்கு எதிராக அவங்க இருக்குற பட்சம்... ஐ கேர் ஐ டாம் ஃபார் எனிபடி அண்ட் எவ் படி... சரி அது இருக்கட்டும். நீ என்ன முடிவு செஞ்சே?"

"நானும் அதைத்தான் சொன்னேன். அவங்க எப்படி நடந்தாலும், எனக்கு அதைப்பற்றி கவலை இல்ல!"

"யார் எப்படி எதிர்த்தாலும் நாம என்ன நினைக்கிறோமோ, அதன்படி நடப்போம்னு சொன்னியா? அப்படி சொல்லியிருந்தா, உண்மையிலேயே பெரிய விஷயம்தான். உண்மையாகவே நீ அப்படிச் சொன்னியா?"

அவள் 'ஆமாம்' என்று தலையை ஆட்டினாள்.

"குட். தட் ஈஸ் தி ஸ்பிரிட். ஒரு தாயும் தந்தையும் தாத்தாவும்! நான் அதைக் கேட்கவே விரும்பல. நான் வர்றேன். வந்து உன் அம்மாகிட்ட ஒண்ணு கேட்கட்டுமா?"- என்றான் அவன்.

"வேண்டாம், சசி. அது இருக்கட்டும். நீங்க உங்க அப்பாக்கிட்ட கேட்டீங்களா?"

"நானா? இல்ல... அதுக்கான தேவையே இல்ல. நான் யார்கிட்டயும் எதைப்பத்தியும் கேட்கப்போறதும் இல்ல. எனக்கு இப்போ இருபத்து ரெண்டு வயசு முடிஞ்சாச்சு. அது உனக்குத் தெரியாம இருக்கலாம். நான் ஒண்ணும் இப்போ அம்மாகிட்ட பால் குடிக்கிற குழந்தை இல்ல!"

"அப்போ யார்கிட்ட குடிக்கிறீங்க?"

"போடி..."- அவன் சிரித்தான்.

"எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். நீங்க இதைப்பற்றி வீட்டுல கேளுங்க. கேட்கலைன்ற சொல் வரக்கூடாது"- அவள் சொன்னாள். "அதெல்லாம் எதுக்கு? அப்பாகிட்ட கேட்டா, அவர் 'வெல்... கோ அண்ட் டூ இட்'னு சொல்லிடுவார். அம்மா விஷயம் அப்படி இல்ல. அவங்களைப் பற்றி உறுதியா சொல்ல முடியாது. நல்ல நேரமா இருந்தா சம்மதிப்பாங்க. இல்லாட்டி ஏதாவது காரணங்கள் சொல்லி சண்டைக்கு வருவாங்க. அதே நேரத்துல நான் பிடிச்ச பிடியில நின்னா, அம்மாவும் சரி அப்பாவும் சரி... யாருக்கும் எனக்கு எதிரா நிற்க தைரியம் கிடையாது."

"அதெல்லாம் சரிதான். அதே நேரத்துல, ஆன்ட்டியும் பிடிச்ச பிடியிலேயே நின்னா?"

"நின்னா அங்கேயே நிற்கட்டும். அவ்வளவுதான். உன் அம்மா இந்த விஷயத்துல எதுக்காக எதிர்ப்பா இருக்கணும்? என்னால அதைத்தான் புரிஞ்சிக்க முடியல..."

"ஏதாவது காரணம் இருக்கும்... நம்மைவிட இந்த மாதிரியான விஷயங்கள்ல அவங்களுக்கு அறிவு அதிகம் இருக்கும். அதுதான் காரணம்."

"புல்ஷிட்! அறிவாம் அறிவு! சுருக்கமா சொல்லப்போனா, நீயும் உன் அம்மா பக்கம்னு சொல்லு!"

"இப்படியெல்லாம் கேட்டா எப்படி சசி! எனக்கு நீங்கதான் முக்கியம். உங்களுக்குப் பின்னாடிதான் மத்தவங்களெல்லாம்..."

"பிறகு... வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்! நீ உன் அம்மாகிட்ட சொல்லு. தேவையில்லாம பிரச்சினைகள் உண்டாக்கக்கூடாதுன்னு. உனக்குப் பதினெட்டு வயது முடிஞ்சிடுச்சு. எனக்கு இருபத்திரெண்டு முடிஞ்சிடுச்சு. இதையெல்லாம் உன் அம்மாகிட்ட சொல்லு..."

"சரி சொல்லுறேன்! அதுக்கு என்ன சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியாது. அம்மாவுக்கு விருப்பம் இல்லைன்னா..."

"விருப்பமில்லைன்னா... விருப்பம் வர்றது மாதிரி செய்யணும். விருப்பமில்லாதவங்களை விருப்பம் வர்றது மாதிரி ஆக்க எனக்குத் தெரியும்!"

"என் அம்மாவுக்கு நான் மட்டும்தானே இருக்கேன்!"- அவள் அழத் தொடங்கினாள்.

"நீ ஏன் அழறே? இப்போ என்ன நடந்திருச்சு? முட்டாள்... அழாம இரு. சமத்தா இருக்கப் பாரு. நமக்கு நல்ல நேரம் எப்போ வரும்னு காத்திருப்போம். நீ இப்போ சொன்னேல்ல உன் தாய்க்கு நீ மட்டும்தான் இருக்கேன்னு. அதுதான் நமக்கு இருக்கிற சரியான அஸ்திரமே. நான் ஆன்ட்டியை நேர்ல பார்த்துப் பேசுறேன். ஆன்ட்டி நிச்சயமா எதிர்த்துப் பேச மாட்டாங்கன்னு நான் நம்புறேன். நீ வேலை பார்த்து பணம் சம்பாதிச்சுத்தான் அம்மா வாழணும்ன்ற நிலை இருக்குன்னா, என்னால அதைப் புரிஞ்சிக்க முடியும். கடவுள் அருளால் இப்போ ஆன்ட்டிக்கு அப்படியொரு நிலைமை இல்ல. கடவுளே! ஆன்ட்டி ஏன் இதற்கு எதிரா இருக்கணும்? சரி, அது இருக்கட்டும்... ஒரு விஷயம் கேக்கறேன். உன் அம்மாவுக்கு என் ஜாதி ஒரு பிரச்சினையா இருக்கா என்ன?"

"எனக்குத் தெரியாது."

"சரி இன்னொரு விஷயம்... உண்மையைச் சொல்லணும். உனக்கு இந்த விஷயத்துல எதிர்ப்பு எதுவும் இல்லையே? அதாவது நாம தீர்மானிச்சு இருக்கறதுல..."


"நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணுமா, சசி?"

"அப்படின்னா நீ தைரியமா இரு. வேற வழியே இல்லைன்னா நான் அந்த அஸ்திரத்தை எடுப்பேன். அம்மாவுக்கு மகள் வேணுமா? வேண்டாமா? இதுதான் கடைசியா நான் கேட்கப்போறது!"

"எனக்குத் தெரியாது. எனிவே... நாம புறப்படலாம். நேரம் இன்னைக்கு அதிகமாயிடுச்சு..."

"சரி... அப்படின்னா முதல்ல கண்ணைத் துடை."

அவள் பேக்கைத் திறந்து கைக்குட்டையை எடுத்து தன் முகத்தைத் துடைத்தாள்.

"குட். இப்போ ஸ்மைல் பண்ணு... ம்... சிரி!"

அவள் மெதுவாக முகத்தை உயர்த்திப் பார்த்தாள். அப்போது அவளுடைய உதடுகளுக்கிடையில் சிறு முல்லை மொட்டுகள் விரிந்தன.

சசி தன் வலது கையின் சுண்டு விரலால் அவளுடைய கீழுதடை மெதுவாகத் தொட்டான். பிறகு இரண்டு விரல்களைக் கொண்டு அந்த உதடுகளை மெதுவாக நசுக்கினான்.

ஒரு செம்பருத்தி மலருக்குப் பின்னால் அந்த முல்லை மொட்டுகள் நாணம் கொண்டு ஒளிந்து நின்றன.

சசிக்கு அப்போது அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அந்த உதடுகளிலிருந்த சிவப்பு நிறத்தை தன் சிரிப்பால் ஒற்றி எடுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அவர்களுக்கு அருகில் இங்குமங்குமாய் அவர்களைப் போன்ற வேறு சில ஜோடிப்புறாக்கள் ஒட்டி உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தன. அவர்கள் பார்க்க...

"போகலாம்"- அவள் மீண்டும் சிரித்தாள்.

"எனக்கு ஒரு வெறி"- சசி தன் ஜோடிப்புறாவைப் பார்த்துச் சொன்னான். "என்ன?"

"அந்த உதடுகள்ல ஒரு முத்தம் தரணும்போல இருக்கு."

"அம்மா காதுல விழுந்துடப்போகுது!"

"விழுந்தா என்ன? என்னைக் கொன்னுடுவாங்களா?"

"வீர வசனம் பேசிக்கிட்டு இருக்காம எழுந்திரிங்க, சார். அம்மா முன்னாடி நிக்கிறப்போ காலோட முட்டிகள் இடிக்கப்போகுது"

"யாரைப் பார்த்து சொல்ற?"

அவள் எழுந்து நடந்தாள்.

நிர்மலாவின் வீட்டின் முன்னால் வந்தவுடன் அவன் கேட்டான்: "நானும் வரட்டுமா?"

"இப்போ வேண்டாம்!"

"இங்கே வரை வந்துட்டு உள்ளே வராமப்போனா ஆன்ட்டி அதுக்காக முகத்தை ஒரு மாதிரி வச்சுக்கப் போறாங்க..."

"பரவாயில்ல..."

"ஓகே... ஆனா, நீ கவலைப்படாதே. நம்ம வழியில யாரும் குறுக்கே வரமுடியாது. ஜாதி ஆர் யூ நோ ஜாதி... ஐ ஆம் மை ஃபாதர்ஸ் ஸன் அதை மறந்துடாதே!"

"பட் ஐ நோ யுவர் மதர் ஆல்ஸோ"- அவள் விளையாட்டாகச் சொன்னாள். "அதுவும் சரிதான்"- அவன் ஒப்புக் கொண்டான். "ஆனா, அப்பாவோ அம்மாவோ யாரும் இந்த ஒரு விஷயத்துல தலையிடுறதை நான் அனுமதிக்கவே மாட்டேன். அது மட்டும் நிச்சயம்!"

"ஓகே... குட்பை!" - திரும்பி கேட்டைத் திறக்கும் போது நிர்மலா சொன்னாள்.

"குட் பை அன்ட் குட் நைட்!"

சசி ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தான்.

7

ன்னிரண்டு மணிக்கு முன்பே மாதவி அம்மா அஸ்டோரியா ஹோட்டலுக்கு முன்னால் வந்திருந்தாள். பாதையோரத்தில் வரிசையாக அமர்ந்து வர்த்தகம் செய்து கொண்டிருந்தவர்களின் விற்பனைப் பொருட்களில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தவாறு அவள் அந்த நடைபாதையில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு அவசியம் தேவைப்படும் பொருள் எதுவும் அங்கு இல்லை. வழிப்போக்கர்களில் சிலர் தன்னை கவனிக்கிறார்களோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அப்படி கவனிக்கும் அளவிற்குச் சிறப்பான விஷயமெதுவும் தன்னிடம் இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனினும் ஆண்களாயிற்றே! சிலர் பார்க்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு வயது ஒரு பிரச்சினையில்லை. முகம், இல்லாவிட்டால் மார்பகம், இல்லாவிட்டால் இடுப்பு, அதுவும் இல்லையென்றால் நடை... இப்படி ஒரு முறை பார்க்கத் தகுதியில்லாத ஒரு பெண்ணும் உலகத்தில் இல்லாமல் இருக்கமாட்டாள். அப்படியொருத்தி இருந்தால், அவளையும் பார்க்கவே செய்வார்கள். பெண்களிடமிருக்கும் அவலட்சணம் கூட சிலரைச் சுண்டி இழுக்கத் தான் செய்கிறது என்பதை அவளும் புரிந்து கொண்டிருந்தாள்.

இங்குமங்குமாய் நடந்தும் வாங்குவதற்கு எதுவும் இல்லாது போகவே கடைசியில் இருபத்தைந்து பல்லி உருண்டை இருக்கக்கூடிய ஒரு பாக்கெட்டை வாங்கி அதை பேக்கைத் திறந்து உள்ளே வைத்தாள். பிறகு பேக்கை மூடும் நேரத்தில் தனக்கு நெருக்கமாக யாரோ நின்றிருப்பதை அவள் உணர்ந்தாள். அடுத்த நிமிடம் அவள் வேகமாக ஒரு பக்கம் தள்ளி நின்றாள். பிறகு தலையை உயர்த்திப் பார்த்தாள்.

அவளுக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு பிரபாகர் நின்றிருந்தார். அவர் சிறிது தயங்குவதைப் போல இருந்தது. பிறகு ஒரு நிமிடம் சுற்றிலும் அவர் தன் கண்களை ஓட்டினார். தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது அந்த இடத்தில் எங்காவது தென்படுகிறார்களா என்று ஆராய்ந்தார். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

"வா... ஷாப்பிங் முடிச்சாச்சு இல்ல...?"- அவர் கேட்டார். அதற்கு பதிலெதுவும் சொல்லாமல் அவள் அவருடன் சேர்ந்து நடந்தாள். அவர் ஹோட்டலுக்கு முன்னாலேயே காரை நிறுத்தியிருந்தார். அவர் காரின் முன் கதவைத் திறந்தவாறு நின்றார். மாதவி அம்மா வேகமாக உள்ளே ஏறி உட்கார்ந்தாள். அப்போதும் அவர் சுற்றிலும் எதையோ தேடுவதைப்போல பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

ரேடியோ கிளப்பை இலக்கு வைத்து கார் படுவேகமாக ஓடியது.

சிக்னலுக்கு பின்னால் வண்டி நின்றபோது மட்டுமே அவர் மாதவி அம்மாவைப் பார்த்தார். அவள் தீவிர சிந்தனையில் மூழ்கியவாறு தனக்கு முன்னால் இருந்த ஏதோவொன்றில் பார்வையைப் பதித்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய சிறிது மேலே வளைந்த மூக்கும் சிவந்த கீழுதடும் நாற்பது வயது நெருங்கினாலும் சிறிதும் கவர்ச்சி குறையாத பூவிதழைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கன்னமும் கறுமையான அடர்த்தியான தலைமுடியும்... மொத்தத்தில் சுண்டி இழுக்கக்கூடிய அளவிற்கு அவளுடைய முகம் இருந்ததென்னவோ உண்மை.

சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது.

இதுவரை இரைந்தவாறு நின்றிருந்த எல்லா வண்டிகளும் முன்னோக்கி ஓடின.

இவ்வளவு நேரமும் இரண்டு பேரும் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. ஓராயிரம் விஷயங்கள், ஊர் விஷயங்கள், வீட்டு விஷயங்கள், அலுவலக விஷயங்கள், சொந்த விஷயங்கள்... இப்படி எத்தனையோ...

எனினும், அவர்கள் இருவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

மாதவி அம்மாவை வேண்டுமென்றால் அப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால், பிரபாகரைப் பொறுத்தவரையில் அவர் குணத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாத ஒன்றாக இருந்தது அது. எதுவும் பேசாமல் இருப்பது என்பது அவருடைய குணமே அல்ல. அவர் எப்போதும் சலசலவென்று பேசிக் கொண்டேயிருப்பார். எப்போதும் எதைப் பற்றியாவது பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் அவர்.


ஆனால், பெரிய வாயாடியாக அவர் இருந்தாலும், அவருடைய பேச்சைக்கேட்கப் பொதுவாகவே எல்லாரும் விரும்புவார்கள். எல்லாருக்கும் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. பெரும்பாலானவர்களுக்கு என்று கூறுவதே சரியாக இருக்கும். ஒரு ஓட்டை வாய் மனிதர் என்று அவரைப் பற்றி சொல்பவர்களும் இருந்தார்கள். ஆளும், தரமும் பார்க்காமலே எதையும் பேசிக்கொண்டிருப்பார். ஆனால், எந்தவொரு சூழ்நிலையாக இருந்தாலும் அவருடைய பேச்சைக் கேட்பவர்கள் யாராக இரந்தாலும், அவர்கள் கட்டாயம் சிரித்து விடுவார்கள். எவ்வளவு பெரிய கர்வம் கொண்ட ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவருடைய பேச்சில் கூச்சமோ, தயக்கமோ, கட்டுப்பாடோ எதுவும் இருக்காது. என்ன, எங்கு போன்ற பிரச்சினைகள் எதுவும் அந்த மனிதரை ஒரு நாளும் பாதித்ததில்லை. மருத்துவமனையில் இன்டென்சிவ் கேட் வார்டும் திருமணப் பந்தலும் மது அருந்தும் பார்ட்டியும் அவரைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். வாயில் வந்ததை அப்படியே கூறுவார். அது என்ன விஷயமாக இருந்தாலும், எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும். சில நேரங்களில் பேசுவது முழுவதுமே நெருப்பில் கக்கிய வார்த்தைகளாக இருக்கும். வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார். எது எப்படியிருந்தாலும் அவருக்கு என்ன?

ஆனால், அவை எல்லாமே வீட்டிற்கு வெளியில்தான். வீட்டிற்குள் அவரும் அவருடைய வாய்க்குள் இருக்கும் நாக்கும் பெரும்பாலும் எதுவும் பேசாமல் அமைதியாகத்தான் இருக்கும். அங்கு அவருடைய கோமாளித்தனமான விளையாட்டுகளும் கொண்டாட்டங்களும் வாடி உலர்ந்து போய் காணப்படும். நீர் கிடைக்காத செடிகளைப் போல அங்கு அவர் காணப்படுவார். வீட்டிற்குள் எல்லாவற்றையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தது அவருடைய மனைவி. அவளுடன் ஆயுள் முழுவதும் வாழ்ந்தாலும் அவளுடைய வாய்க்குள் நாக்கு என்ற ஒரு உறுப்பு இருக்கிறதா என்ற விஷயத்தில் எல்லாருக்குமே சந்தேகம் இருந்ததென்னவோ உண்மை. ஏதாவது சாப்பிடும் நேரத்தில் மூக்கிற்குக் கீழே ஒரு இடைவெளி பெரிதாகத் தோன்றுவதால் வாய் இருக்கிறது என்ற விஷயத்தில் அப்படிப்பட்ட ஒரு சந்தேகம் உண்டாவது அடிப்படையில்லாத ஒன்று என்று கூற வேண்டியிருக்கிறது. அவள் மீது சந்தேகம் கொண்டவர்கள் ஒப்புக் கொண்டாலும் சரி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் சரி பெரியதாகத் தோன்றக்கூடிய அந்த இடைவெளிக்குள் ஒரு நாக்கும் இருக்கும் என்பது பொதுவான உண்மைதானே! இப்படித்தான் தன்னுடைய மனைவியின் குணத்தைப் பற்றி பிரபாகர் மற்றவர்களிடம் கூறுவார்.

எது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு வாயும், வாய்க்குள் ஒரு நாக்கும் இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். எனினும், தன் கணவருடைய நடவடிக்கைகளுக்கும், குறுக்கு வழியில் போகும் போக்கிற்கும் அவளுக்கும் சிறிது கூட ஒட்டாது. தன்னுடைய சிரிப்புகளுக்கிடையில் மெல்லிய ஒரு புன்னகையைக் கூட அவளிடம் உண்டாக்க பிரபாகரால் இதுவரை முடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமான ஒரு விஷயம். சுருக்கமாகச் சொன்னால் அந்த அளவிற்கு கர்வம் கொண்ட பெண்ணாக இருந்தாள் பிரபாகரின் மனைவி விஜயம்.

அவளுடைய குணம் இப்படி இருந்தாலும் திருமதி பிரபாகரைப் பற்றி யாரும் மோசமாக ஒரு கருத்துகூட கூறமாட்டார்கள். அவளைத் தெரிந்த எல்லாருமே அவளை மிகவும் நல்லவள் என்றுதான் கூறுவார்கள். தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் சற்று கர்வமாக நடந்து கொள்வதை கெட்ட குணம் என்று எடுத்துக் கொள்ள முடியாதே!

அவள் எப்போதும் நல்ல முறையில் ஆடைகள் உடுத்தியே காணப்படுவாள். வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் போனாலும் சரி நல்ல விலை மதிப்புள்ள, பளபளப்பான நகைகளை அவள் எப்போதும் அணிந்திருப்பாள். அவள் பெரிய விஷயங்களை மட்டும் தான் பேசுவாள். தன் கணவரைப் போல எப்போதும் வளவளவென்று பேசக்கூடியவள் இல்லை அவள். இப்படிப் பல விஷயங்களாலும் ஒரு சாதாரண பெண்ணைவிட உயர்ந்த நிலையில் இருந்தாள். போதாததற்கு சாதாரண நிலையிலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு பதவியில் அமர்ந்திருந்த ஒரு மனிதரின் மனைவி என்ற பதவி வேறு அவளுக்கு இருந்தது.

ரேடியோ கிளப்பின் வலது பக்கம் திரும்பி பொதுச் சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பக் கூடிய தெருவோரமாக வெயில் அதிகம் இல்லாத ஒரு இடமாகப் பார்த்து பிரபாகர் தன் காரை நிறுத்தினார். காரின் கதவைத் திறந்து பிரபாகர் வெளியே இறங்கியபோதும் மாதவி அம்மா சுற்றிலும் கண்களால் பார்க்காமல் இல்லை. கஷ்ட காலத்தில் தெரிந்தவர்கள் யாராவது பார்க்க நேர்ந்துவிட்டால்...! அது ஒன்று போதாதா? அதனால்தான் ரேடியோ கிளப்பிற்குப் போனால் போதும் என்ற முடிவையே அவள் எடுத்தாள். அங்கு அவளைத் தெரிந்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஒரு தனி ரகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு வருவார்கள். அந்த ரகத்தைச் சேர்ந்தவர்களில் அவள் இல்லை என்பது மட்டும் உண்மை.

நடந்து கொண்ட முறையும் அப்படித்தான் இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்து யாரும் அதிகம் கவனிக்காத ஒரு மூலையில் இரண்டு பேர் மட்டுமே உட்காரும் அளவிற்கு வசதி கொண்ட ஒரு மேஜைக்கு முன் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக உட்கார்ந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. மதிய உணவுக்கான நேரம் அப்போதுதான் வந்திருக்கிறது என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

"எல்லாம் சரிதான். இங்கே உட்கார்ந்துக்கிட்டு எப்பவும் போல சத்தம் போட்டு பேசிக்கிட்டே இருக்காதீங்க. அப்படி பண்ணினா நான் பாட்டுக்கு எழுந்திரிச்சி போயிடுவேன். சொல்றதைச் சொல்லிட்டேன்"- மாதவி அம்மா சொன்னாள்.

"சரி... உன் விருப்பம் போல. டென்டிஸ்ட்டைப் பார்த்த விஷயம் என்னாச்சு? பல்லை விற்றாச்சா? நல்ல விலை கிடைச்சிருக்கும். இருந்தாலும் கொஞ்சம் நாள் கழிச்சு விற்றால், பல்லோட விலை அதிகரிச்சிருக்கும். அப்போ விற்றால் போதாதா?"

அப்போது பணியாள் அங்கு வந்தான்.

"என்ன வேணும்?"- மெனு அட்டையைப் பார்த்துக்கொண்டே பிரபாகர் கேட்டார். "விருப்பமுள்ளதைச் சொல்லுங்க. ஆனா, எனக்கு சைவம் போதும்."

"அது என்ன? இன்னைக்கு சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ, சஷ்டியோ எதுவுமே இல்லையே! அப்படி ஏதாவது இருக்குதா என்ன?"

"எது வேணும்னாலும் இருக்கட்டும். எனக்கு சைவம் போதும்."

"சரி... அப்படியே இருக்கட்டும்."

தொடர்ந்து அவர் சில உணவுப் பொருட்களின் பெயர்களைச் சொல்லி ஆர்டர் கொடுத்தார். அதோடு சேர்ந்து ஒரு பாட்டில் பீரையும் கொண்டு வரச் சொன்னார்.

அடுத்த சில நொடிகளில் குளிர்ந்த பீர் வந்து சேர்ந்தது. பணியாள் இரண்டு கண்ணாடிக் குவளைகளில் பீரை ஊற்றினான். டம்ளரில் நுரையுடன் மேலே உயர்ந்து கொண்டிருந்த பீரைப் பார்த்தவுடன் பிறவிப் பயனை அடைந்துவிட்ட உற்சாகம் அவருடைய முகத்தில் தெரிந்தது.


டம்ளரிலிருந்து கொஞ்சம் பீரைக் குடித்துவிட்டு அதை மேஜை மீது வைத்துவிட்டு அவர் சொன்னார்: "அடடா­! என்ன இருந்தாலும் குளிர்ந்த பீர் குளிர்ந்த பீர்தான். நான் கேக்கறேன்னு தப்பா நினைக்கக்கூடாது. நீ ஏன் கொஞ்சம் பீர் சாப்பிடக்கூடாது?"

"வேண்டாம்"- மாதவி அம்மா சொன்னாள்.

"உண்மையாகவேவா?"

"ஆமா..."

"அப்படின்னா சரி... நௌ, ஐ ஆம் ரெடி டூ ஃபேஸ் தி அட்டாக். சரி... சொல்லு"- நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பிரபாகர் சொன்னார்: நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு சூழ்நிலை அமைஞ்சிருக்கு..."

அடுத்த நிமிடம் வரை மாதவி அம்மாவின் மனதில் ஒரே ஒரு சிந்தனை மட்டுமே இருந்தது. என்ன கூறுவது, எப்படி கூறுவது என்பதைப் பற்றி அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். எது எப்படி இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. இன்று இல்லாவிட்டாலும் நாளை கூறியே ஆகவேண்டும். அதனால் அவள் மனதைப் பக்குவப்படுத்திக்கொண்டு மெதுவாக என்னவோ கூற முயன்றாள். அப்போது அவர் கேட்டார்: "இந்த அளவுக்கு ஆழமா சிந்திக்கிற அளவுக்கு அப்படி என்ன நடந்திடுச்சு? இப்படி இருக்குறதைப் பார்த்தா...?"

அவர் அதை முடிப்பதற்கு முன்பே பணியாள் மீண்டும் அங்கு வந்தான். அவர்களுக்கு முன்னால் தட்டுகளையும் டம்ளர்களையும் வைத்தான்.

"சசி... ரெண்டு நாட்களுக்கு முன்னாடி அங்கே வந்திருந்தான். ஆனா, வீட்டுக்குள்ளே வராமலே அவன் போயிட்டான்..."- சொல்ல ஆரம்பித்ததை முடிக்காமல் மாதவி அம்மா திடீரென்று நிறுத்தினாள்.

"ஓ... இதைத்தான் பெரிய விஷயமா நினைச்சிக்கிட்டு சொல்ல வந்தியா? என்ன இருந்தாலும் சின்ன பிள்ளைதானே! அவனுக்கு எப்படி நடந்துக்கணும்னெல்லாம் தெரியுமா? இதையெல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம். இன்னும் சொல்லப்போனா அப்படி நடந்துக்கிட்டது வேற யாருமல்ல... நம்ம சசிதானே! அவன் அந்த வீட்டுல ஒரு அன்னியன் ஒண்ணுமில்லையே! அவன் வீட்டுக்குள்ள வரலைன்னு நீ குற்றம் சொல்ற. அவன் வயசுல ஏதாவது பொண்ணுங்க இருக்குற வீட்டுக்குள்ள எனக்கே தெரியாம நான் உள்ளே நுழைஞ்சேன்னு வச்சுக்கோ, வீட்டுக்காரங்க என் காலை ஒடிச்சிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க..."- தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகைத்தவாறு அவர் சர்வசாதாரணமாகச் சொன்னார்.

"நான் சொல்ல வந்ததை முழுசா சொல்லிடுறேன். அதுக்கு முன்னாடியே துப்பாக்கியில குண்டு போட்டு சுட ஆரம்பிச்சா எப்படி?"- மாதவி அம்மாவிற்குக் கோபம் வந்தது.

"ஓகே... துப்பாக்கியில குண்டு போடவும் இல்ல. சுடவும் இல்ல... போதுமா? ஆனால், ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தா மட்டும் போதாது. அப்படியே சாப்பிடவும் செய்யணும். காசு கொடுத்து வாங்குறதை வீண் செய்திடக்கூடாது."

அது எதுவும் மாதவி அம்மாவின் காதில் விழவில்லை. அவள் தான் சொல்ல வந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். தான் நிறுத்திய இடத்திலிருந்து அவள் மீண்டும் தொடர்ந்தாள்:

"சசியும் நிர்மலாவும் சமீபகாலமா கொஞ்சம் நெருக்கம்னு தோணுது... அது..."

"அப்படியா? ஒண்டர்ஃபுல்! ஆனா சமீப காலமா ஒண்ணும் இல்லையே! சின்னப் பசங்களா இருக்கறப்ப இருந்தே அவங்க அப்படித்தானே வளர்ந்து வந்திருக்காங்க! அன்னைக்கும் இன்னைக்கும் அவங்க ஒண்ணும் தெரியாதவங்க இல்லையே! அப்படி இருக்குறப்போ அதுல என்ன குற்றம் இருக்கு?"- அவர் கேட்டார்.

"ஆனா, இது குழந்தைப் பருவம் இல்ல."

"அதுனால?"

"அந்த நெருக்கம் வேண்டாம்."

"வெல்... எனக்கு புரியல"- அவள் சொன்னதை நம்பமுடியாமல் பிரபாகர் விழித்தார்.

"அந்த நெருக்கம் வேண்டாம்னு நான் சொல்றேன்!"

"அப்படிச் சொல்றியா? அப்படின்னா நான் ஒண்ணு கேட்கட்டுமா? அவங்க நெருங்கிப் பழகுறதுல தப்பென்ன இருக்கு? அதை விட நல்ல விஷயம் நம்ம மத்தியில வேற ஒண்ணு இருக்கான்னுகூட நான் நினைக்கிறேன். உண்மையா சொல்லப்போனா, அப்படியொரு விஷயம் நடக்குறதை நான் விரும்புறேன்."

"இருக்கலாம். ஆனா, விஜயத்தைப் பற்றி நினைக்க வேண்டாமா? அவுங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியாதா, எங்க நிலையோ..."

"மாதவி அம்மா, இது தந்தையும் தாயும் நீர்மானம் செய்யுற ஒரு விஷயம் இல்ல. அந்தப் பிள்ளைங்க முடிவு செய்ய வேண்டிய விஷயம். அங்கே தந்தையும் தாயும் மற்றவங்களும் நுழையவேண்டிய தேவை இருக்குன்னு நான் நினைக்கல. அப்படி நுழையிறதுனால ஏதாவது பிரயோஜனம் உண்டாகப்போறதும் இல்ல. காலம் மாறிடுச்சு. பிறகு... விஜயத்தோட விஷயம்... அவள் அப்படித்தான் இருப்பா... இருந்துட்டுப் போகட்டும்..."

"ஆனா, ஒரு உறுதியான முடிவு எடுக்குற அளவுக்கு நம்ம பிள்ளைங்க இன்னும் வளரல. அவங்க இப்பவும் குழந்தைத்தனம் மாறாமத்தான் இருக்காங்க."

"அப்படி நாம நினைக்கிறோம்."

"எது எப்படி இருந்தாலும், இதை நான் விரும்பல."

"காரணம்?"

"காரணம் எது வேணும்னாலும் இருக்கட்டும்."

"ஆனா, நம்மோட விருப்பத்தையும் எதிர்ப்பையும் யார் பெருசா நினைக்கப் போறாங்க? முடிவு எடுக்க வேண்டியவங்க முடிவு எடுப்பாங்க. நாம அதுல என்ன செய்ய முடியும்?"

"கட்டாயம் செய்யணும்!"

"விஷயம் என்னன்னு சொல்லு!"

"ஏதாவது விஷயம் இல்லேன்னா இதைச் சொல்றதுக்காக நான் இங்கே வருவேனா?"

"சரி... அப்படின்னா ஒண்ணு செய். இதைச் சாப்பிடு"- அவர் ஒரு தட்டை அவளுக்கு முன்னால் நகர்த்தி வைத்தவாறு சொன்னார்.

"என் மனைவியோட குணம் ஒரு தனி ரகம். அது எனக்குத் தெரியும். இரண்டு தலை சேர்ந்தாலும் நாலு மார்பகங்கள் சேராது. சும்மாவா அப்படிச் சொன்னாங்க! ஆனா, அது நம்மை மட்டும் பாதிச்சா போதும். நம்ம பிள்ளைகளையும்..."

"அதிகமா பேச நான் தயாரில்ல. இப்படிப்பட்ட ஒரு உறவை நான் விரும்பல. யார் என்ன சொன்னாலும் சரி!"

"இது தேவையில்லாத பிடிவாதம்!"

"பிடிவாதம்னு சொன்னாலும் பரவாயில்ல."

அவர் உண்மையிலேயே ஆச்சரியத்தில் உறைந்து போனார். இந்த அளவிற்கு எதிர்பார்த்து அவர் வரவில்லை. பணவிஷயம், இல்லாவிட்டால் நிர்மலாவின் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயம், இல்லாவிட்டால் அப்படிப்பட்ட வேறு ஏதாவது பிரச்சினையாக இருக்கும். அதற்காகத்தான் தன்னை உடனடியாகப் பார்க்க அவள் விரும்புகிறாள் என்றுதான் அவர் நினைத்திருந்தார்.

இப்போது அவர் தீவிரமான சிந்தனையில் மூழ்கிவிட்டார்.

சிறிது நேரம் அப்படியே சிந்தனையில் மூழ்கிய பிறகு அவர் சொன்னார்: "சரி... எது வேணும்னாலும் இருக்கட்டும்... உணவைச் சாப்பிடு. அதற்குப் பிறகு மற்ற விஷயங்களைப் பார்ப்போம். உணவு சாப்பிடறப்போ மனசுக்குள்ளே ஜீரணம் ஆகாம எதுவும் இருக்கக்கூடாதுனு பொதுவாகச் சொல்லுவாங்க."

மாதவி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.


ஆர்டர் தந்த உணவுப்பொருட்கள் அதற்குள் மேஜைமீது வந்து சேர்ந்திருந்தன. எதுவும் பேசாமல் இரண்டு பேரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

கடந்த காலத்தைப் பற்றி இரண்டு பேரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அவற்றுக்குள் மறைந்திருந்த மறக்க முடியாத சம்பவங்களைப் பற்றி... மகிழ்ச்சியுடன், வருத்தத்துடன், கூச்சத்துடன், ஏக்கத்துடன், அமைதியாக, வேதனையுடன் கடந்து சென்ற நூறு நூறாயிரம் நிமிடங்களைப் பற்றி...

"எது எப்படி இருந்தாலும் இதைப்பற்றி இப்போதைக்கு நாம கவலைப்பட தேவையே இல்ல. அடுத்த வருடம் சசி அமெரிக்காவுக்குப் போக வேண்டியதிருக்கும். படிப்பு முடிவடையணும்னா மூணு நாலு வருடங்கள் அங்கேயே அவன் படிச்சாகணும். ஒரு வேளை அவன் அங்கேயே இருக்குற ஒரு பொண்ணைப் பார்த்து காதலிக்கலாம். இப்படி பல விஷயங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு. அதுக்குப்பிறகுதான் நம்ம விஷயங்களைப் பற்றி நாம நினைக்கணும். அதற்குள் என்னென்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? அவங்களோட தலையில என்ன எழுதியிருக்குன்னு நமக்குத் தெரியாதே! நிலைமை அப்படி இருக்குறபோ, வர்றது வரட்டும். வர்றதைச் சந்திப்போம். நீ சொல்றது மாதிரி அவங்க சிறுபிள்ளைத்தனம் மாறாதவங்களா இருந்தா, நாம பயப்படுறதுக்கு ஒண்ணுமேயில்ல. எது எப்படி இருந்தாலும் அந்தக் காலத்துல யாரோ சொன்னது மாதிரி நாலு மைல்களுக்கு அப்பால் இருக்குற ஆற்றைக் கடக்குறதுக்கு இங்கேயே துணியைத் தூக்கணுமா என்ன? ஆற்றுல தண்ணியே இல்லாம வெறும் மணல் மட்டும் இருக்கலாம்."

 "இன்னொரு முறை சொல்றேன். அது எப்படி இருந்தாலும் அவங்களுக்குள்ளே இருக்குற உறவு தொடர நாம அனுமதிக்கக்கூடாது. எனக்கு வேண்டியது அது ஒண்ணுதான்"- அதைச் சொன்னபோது மாதவி அம்மாவின் கண்களில் நீர் நிறைய ஆரம்பித்தது.

"ஓ... மை காட்! யூ ஆர் சீரியஸ்! இந்த அளவுக்கு நான் நினைக்கல. சரி, அது இருக்கட்டும்... நாங்க தாழ்ந்த ஜாதிக்காரங்கள்னுதான் பிரச்சினையா?"

"அதை எல்லாம் என்கிட்ட கேட்காதீங்க. எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோங்க. நாம நினைக்கிற மாதிரி பல விஷயங்கள் நடக்குறது இல்ல. ஒண்ணு மட்டும் நான் சொல்லுவேன். நான் உயிரோடு இருக்குறப்போ அப்படி ஒரு விஷயம் நடக்காது."

"அதைத்தான் தேவையில்லாத பிடிவாதம்னு சொல்லுறது. சாதாரண பிடிவாதம் இல்ல. கெட்ட பிடிவாதம். நாம என்னதான் முயற்சி பண்ணினாலும் நாம நினைக்கிறதைப் போல எல்லாம் நடக்குறது இல்ல. இதுவரை இல்லாமலிருந்த இந்த ஜாதி சிந்தனை இப்போ திடீர்னு எங்கேயிருந்து வந்துச்சு? அதுதான் எனக்குப் புரியாதது. யாராவது சொல்லியிருப்பாங்க. ஊர்க்காரங்களுக்கு வேற வேலையே இல்ல..."

"அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். என் முடிவை நான் உறுதியா சொல்லிட்டேன்."

"முடிவு உறுதியானதா? பிறகு எதுக்கு என்கிட்ட கேட்க வரணும்?"

அவருக்குக் கோபம் வர ஆரம்பித்தது. எனினும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு அவர் சொன்னார்: "நாம சொல்லி அவங்க கேட்பாங்கன்னு தோணுதா?"

"நான் பார்க்குறேன்- என் மகள் நான் சொல்றதைக் கேக்குறாளான்னு..."

"சண்டை போடுறதா திட்டம் போட்டாச்சா?"

"தேவைப்பட்டால்..."

"தேவையில்லாம எதுக்கு? ஏதாவதொரு ஹோட்டல் அறையில நம்ம பிள்ளைங்க ரெண்டு பேரும் செத்துக் கிடக்குறதா..."- அவ்வளவுதான் அவரால் சொல்ல முடிந்தது. அதைக்கூற வேண்டும் என்று கூட அவர் நினைத்திருக்கவில்லை.

ஆனால், அப்படிச் சொன்னது அளவுக்கும் அதிகமான ஒரு பாதிப்பை மாதவி அம்மாவிடம் உண்டாக்கிவிட்டது. அவள் அதைக்கேட்டு நடுங்கிவிட்டாள்.  அவளுடைய முகம் வெளிறிப் போய்விட்டது. அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் முழுமையாகத் தளர்ச்சியடைந்து விட்டாள். அதற்கு மேல் அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. ஒரு கற்சிலையைப் போல அவள் மரத்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.

அவளைவிட நிலை குலைந்த மனதுடன் அமர்ந்திருந்தது அவர்தான். சொல்லக்கூடாத ஒன்றைத்தான் சொல்லிவிட்டதை நினைத்து தன்னைத்தானே குற்றம் சுமத்திக்கொண்டார்.

எது எப்படி இருந்தாலும் அதற்குப்பிறகு இரண்டு பேரும் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

சாப்பிட்டு முடித்து வெளியே வந்த போது அவர் சொன்னார்: "வா... நான் வீட்டுல கொண்டு போய் விடுறேன்."

"வேண்டாம்."

"இன்னைக்கு ஏன் எல்லா விஷயங்கள்லயும் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே?"

"பிடிவாதத்தால இதைச் சொல்லல. போற வழியில வேற சில வேலைகள் இருக்கு... பிறகு பார்ப்போம்."

அதைச் சொல்லிவிட்டு அவர் வேறு ஏதாவது தடை சொல்லுவதற்கு முன்பு அவள் திரும்பி நடந்தாள். அவள் வெறுமனே பொய் சொன்னாள். வேறு வேலைகள் எதுவும் இருக்கிறது என்பதற்காக மாதவி அம்மா அப்படிச் சொல்லவில்லை. மனப்பூர்வமாக அப்படிப்பட்ட ஒரு உதவி தேவையில்லை என்று நினைத்ததால்தான் அவள் அப்படி நடந்து கொண்டாள்.

அவள் கண்களை விட்டு மறையும் வரை அவர் அங்கேயே நின்றிருந்தார். தான் இதுவரை பார்த்திராத, இதுவரை அறிமுகமாயிராத யாரோ ஒரு பெண் தூரத்தில் மக்கள் கூட்டத்திற்குள் நடந்து மறைந்து போகிறாள் என்றுதான் அவர் நினைத்தார்.

அவர் காரில் ஏறி 'ஸ்டார்ட்' செய்தபோது ஒரு பிச்சைக்காரப் பெண் அருகில் வந்து அவரை அழைத்தாள்: "ஸாப்!"

"ச்சீ... போ இங்கேயிருந்து."

அவர் பட்டாசு வெடிப்பதைப் போல் வெடித்தார். அதைக் கேட்டு அந்தப் பெண் நடுங்கிவிட்டாள். அவர் சொன்ன மொழியை அவளால் பிரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அவர் மனதில் என்ன நினைத்துத் திட்டுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல மொழிகளிலும் பலரிடமிருந்தும் அவளுக்கு எப்போதும் கிடைப்பது ஒரே அர்த்தத்தைக் கொண்ட திட்டுதல்தான். எனினும், அவள் அதே இடத்தில்தான் நின்றிருந்தாள்.

அவர் திரும்பிப் பார்க்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்து முன்னோக்கி நகர்ந்தபோது அவள் தனக்குள் முணுமுணுத்தாள்.

"ஸாலா... பான்சோத்..."


8

சியின் கழுத்தில் தன் கைகளைச் சுற்றி இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டு நிர்மலா நீண்ட நேரம் அழுதாள். ஒரு விதத்திலும் அவளைத் தேற்ற சசியால் முடியவில்லை.

"இங்கே பாரு... அமைதியா இரு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா நான் திரும்பி வந்திடுவேன். வந்தவுடன் நாம திருமணம் செஞ்சிக்குவோம். உன் அம்மா அதற்கு எதிரா இருந்தாங்கன்னா, எதிர்த்துக்கிட்டு அங்கேயே இருக்கட்டும். நம்ம விஷயத்தை நாம பார்த்தால் போதும்"- அவன் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கொண்டிருந்தான். "இருந்தாலும் என்னால அமைதியா இருக்க முடியல சசி. ஏன்னே தெரியலை... எனக்கு ஒரே பயமா இருக்கு. நீங்க போயிட்டா அதுக்குப் பிறகு நாம நிச்சயம் ஒருவரையொருவர் சந்திக்கப் போறது இல்லைன்னு என் மனசுல தோணிக்கிட்டே இருக்கு!"

"உனக்கு எல்லா விஷயங்கள்லயும் தேவையில்லாத பயம்தான்."

"இல்ல சசி... ஐ ஃபீல்... ஐ ஃபீல்... வீ வில் நாட் மீட் அகெய்ன்!"

"நான்சென்ஸ்!"

அப்போதும் அவள் அழுதாள்.

அவன் அவளை தன் மார்போடு சேர்த்து இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவளுடைய தலையிலும் நெற்றியிலும் ஒரு சிறு குழந்தைக்குக் கொடுப்பதைப் போல மாறி மாறி முத்தங்கள் பதித்தான். அவளுடைய கண்களிலிருந்து தொடர்ந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரில் அவளின் மார்புப் பகுதி நனைந்தது.

கடைசியில் அவன் அவளைத் தன்னிடமிருந்து அகற்றிக் கொண்டு சொன்னான்: "அழாதே. நீ இப்படி அழறதைப் பார்த்து நான் எப்படி போக முடியும்? அழாம மகிழ்ச்சியா என்னை அனுப்பி வை. நான் எங்கேயிருந்தாலும் என் மனசு எப்பவும் உன்கூடத்தான் இருக்கும். அழாதே... கண்களைத் துடை!"

அவள் புடவைத் தலைப்பால் கண்ணீரை ஒற்றினாள்.

"கொஞ்சம் சிரி. அந்தச் சிரிப்பைப் பார்த்துக்கிட்டே நான் போறேன். அந்தச் சிரிப்பு என்றென்றைக்கும் என் இதயத்துல ஆழமா பதிஞ்சு இருக்கட்டும். எப்போ வேணும்னாலும் நான் அந்தப் பெட்டியைத் திறந்து வெளியே எடுத்து பார்த்துக்கற மாதிரி... ம்... சிரி..."

அவளுடைய அழுது கொண்டிருந்த உதடுகள், மீட்டப்பட்ட வீணைக் கம்பியைப் போல சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டு துடித்தன. பிறகு அது ஒரு தாமரைப் பூவைப் போல மலர்ந்தது. அழகான ஒரு தாமரைப்பூ! சிறிதும் வாடாத ஒரு தாமரைப்பூ! அதன் இதழ்களில் நீர்த்துளிகள் தங்கி நின்றிருந்தன. அவன் அதை அதே நிலையில் தன்னுடைய மெல்லிய சிரிப்பையும் சேர்த்து பத்திரமாக எடுத்து இதயத்தின் கருவறைக்குள் வைத்துப் பூட்டினான். கடைசியில் அவளுக்கு மட்டும் கேட்பது மாதிரி அவளுடைய காதில் அவன் மெதுவாகச் சொன்னான்:

"யார் கிட்டயும் சொல்லாதே. நான் அங்கே போயி ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணிடுறேன். அதற்குப்பிறகு உன்னையும் நான் அங்கே அழைச்சிட்டுப் போயிடுறேன். ரகசியமா இந்த விஷயத்தை உன் மனசுல வச்சுக்கோ!"

அவள் தலையை ஆட்டினாள்.

சசியை வழியனுப்பி வைப்பதற்காக நிர்மலா விமான நிலையத்துக்குச் சென்றிருந்தாள். ஆனால், அவள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டுக் கொண்டும், எவ்வளவு வற்புறுத்தியும் அவளுடன் வர மாதவி அம்மா ஒப்புக் கொள்ளவேயில்லை. ஒரு கெட்ட பிடிவாதத்தை அவள் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

"நான் வரலைன்னு சொல்லிட்டேன்ல... நீ போ... அதுவும் போகணும்னு கட்டாயமிருந்தா..."- கடைசியில் மகளின் தொந்தரவைத் தாங்க முடியாத நிலை வந்தபோது மாதவி அம்மா அவளிடம் சண்டை போட்டாள். நிர்மலாவிற்குத் தன் தாயின் அந்த நினைக்கமுடியாத நடத்தையைச் சிறிதும் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு எந்த விஷயத்திலும் தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக இதுவரை நடந்திராத தன்னுடைய தாய் இப்போது தன் விருப்பத்திற்கு எதிராக நடப்பது மட்டுமில்லை தன்னுடைய விருப்பங்களையும் நிறைவேற்றித் தர சிறிதும் தயங்காத தன்னுடைய தாய் இப்படி சில எதிர்பாராத சம்பவங்களின்போது காரணங்களே இல்லாமல் முழுமையான எதிர்ப்புத் தெரிவித்து நடப்பதைப் பார்த்து அவள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டாள். சசியின் தாயிடமிருந்து கடந்த பல நாட்களாகவே எந்த அளவிற்கு விலகி இருக்கவேண்டுமோ அந்த அளவிற்குத் தன் தாய் விலகி நிற்கிறாள் என்பதையும் நிர்மலா புரியாமல் இல்லை. அந்த மாற்றம்கூட திடீரென்று நடந்ததுதான். அதாவது- அவளுடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு அந்த மாற்றத்திற்கான காரணம் எது வேண்டுமென்றாலும் இருக்கட்டும்- இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அந்த வெறுப்பையும் பகையையும் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு சிறிது நாகரீகமாக நடந்து கொள்வதுதானே மரியாதைக்குரிய செயலாக இருக்கும்! அதற்குக்கூட தன் தாய் தயாராக இல்லை என்பதை நினைக்கும்போது தன்னுடைய சொந்தத் தாயாகவே இருந்தாலும் அவளுடைய நடத்தையை நிர்மலாவால் சிறிதும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அப்படி அவள் நிலைமையை விளக்கி தன் தாயை மாற்ற முயற்சிசெய்த போது, அது இறுதியில் சண்டையில் போய்தான் முடிந்தது. வாக்குவாதத்தில் ஆரம்பித்து சண்டையில் முடிந்தது. கண்ணீரில் ஆரம்பித்து பிணக்கத்தில் முடிந்தது. அதற்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு இரண்டு பேரும் எதுவும் பேசாமல் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருந்தார்கள். இதே விஷயம் பலமுறை நடந்து நடந்து அதுவே இப்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சசி போன பிறகு தன்னுடைய வாழ்க்கையை மிகவும் பலமாகப் பிடித்திருந்த ஏதோ ஒன்று கயிறை அறுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டதைப் போல் நிர்மலா உணர்ந்தாள். கண்களுக்குப் பார்வை இல்லாமற் போனதைப் போல, கால்கள் சோர்ந்து போனதைப் போல, முதுகெலும்பு ஒடிந்து போனதைப் போல... மொத்தத்தில் எல்லாம் ஒரே நேரத்தில் நடந்ததைப் போல் இருந்தது. எதுவும் நடக்காதது மாதிரியும் எதையும் இழக்கவில்லை மாதிரியும் எந்தத் தளர்ச்சியும் தன்னிடம் உண்டாகவில்லை என்றும் நினைத்துக் கொண்டு, அந்த நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொண்டு தைரியத்துடன் முன்னோக்கி நடக்க அவள் முடிந்தவரையில் முயற்சி செய்தாள். ஆனால், இறுதியில் தோல்விதான் அவளுக்குக் கிடைத்தது.

காரணமே இல்லாமல் அவளிடம் உண்டான அந்த வெற்றுணர்வு அவளை விட்டு நீங்குவதாகவே இல்லை. அதனால், திட்டமிட்டே அதைத் தன்னுடன் வைத்துக் கொண்டு அவள் தன் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தாள். நிச்சயமற்ற ஒன்றாக இருந்தது அந்தப் பயணம்.

9

சி ஒவ்வொரு வாரமும் தவறாமல் நிர்மலாவிற்குக் கடிதம் எழுதினான். கடிதம் வந்தாலும் தாமதமாக வந்தாலும் அவளும் எல்லா வாரங்களிலும் ஒரு கடிதமாவது சசிக்கு எழுதுவாள். முன்பு நேரில் காணும்போது கூறுவதற்குத் தயங்கிய, கூறுவதற்குச் சிரமமாக இருந்த, கூற பயப்பட்ட பல விஷயங்களையும் அவர்கள் கடிதங்களில் பரிமாறிக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் கடிதங்களுக்காகக் காத்திருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் முக்கால் பகுதி அந்தக் கடிதங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டன. அந்தக் கடிதங்களைப் படித்து அவர்கள் சிரித்தார்கள், அழுதார்கள், கனவுகள் கண்டார்கள். அதற்குப் பிறகு உள்ள மற்ற விஷயங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் இல்லாத சாதாரண விஷயங்களாக மட்டுமே இருந்தன.

இந்நிலை தொடர்ந்து கொண்டிருக்க, அவர்களின் கடிதங்கள் அந்த இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாத ரகசியமாகவும் இருக்கவில்லை. சொல்லப்போனால் அதை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையென்றாலும் இரு வீட்டைச் சேர்ந்த அம்மாக்களும் அதை விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வெளிப்படையாக அதை எதிர்க்கவோ அந்தச் செயல்களுக்குத் தடங்கல்கள் உண்டாக்கவோ அவர்களால் முடியவில்லை.


அதற்கு ஏற்ற காரணங்களைக் கண்டுபிடிக்க அவர்களால் இயலவில்லை.அதுதான் அவர்களுக்குப் பெரிய தடையாக இருந்தது.

எனினும், தங்களால் முடியாமற்போன அந்த வேலையை காலம் தன் கையில் எடுத்துக்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யும் என்ற நம்பிக்கையில் அவர்கள் நிம்மதி ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். அப்படி ஒரு சூழ்நிலை வருவதற்காக அவர்கள் வேண்டிக் கொள்ளவும் செய்தார்கள்.

இதற்கிடையில் இன்னொரு சம்பவம் நடந்தது. சசியின் தந்தைக்கு இடமாற்றம் உண்டானது கல்கத்தாவிற்கு. அங்கு போக அவருக்கு விருப்பமேயில்லை. பதவி உயர்வும் சம்பள உயர்வும் வேறு பல நலன்களும் அதன் மூலம் கிடைக்குமென்ற விஷயம் தெரிந்திருந்தும் அதிலிருந்து எப்படியாவது தன்னுடைய தலையை உருவிக்கொள்ள முடியுமா என்றுதான் அவர் விரும்பினார். அதற்கான முயற்சியும் செய்தார்.

அதற்கு நேர்மாறாக சசியின் தாய் கல்கத்தாவிற்குச் செல்வது மிகவும் அருமையான ஒரு வாய்ப்பு என்று அவள் நினைத்தாள். கடவுளின் அருளால்தான் அப்படியொரு காரியம் நடந்திருக்கிறது என்று நினைத்தாள். தன்னுடைய நீண்ட கால பிரார்த்தனைக்கு கடவுள் இப்போது செவி சாய்த்திருக்கிறார் என்று நம்பினாள். நெடு நாட்களாகவே அவள் அதை எதிர்பார்த்திருந்தாள். எப்படியாவது அங்கிருந்து ஏதாவதொரு இடத்திற்கு மாறிப்போக வேண்டும் என்று மனப்பூர்வமாக அவள் ஆசைப்பட்டாள். அதற்குத் தகுந்த காரணமும் அவளுக்கிருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்தபோது, அவள்தான்- அவள் மட்டும்தான் அதற்காக சந்தோஷமடையக் கூடியவளாக இருந்தாள்.

அவள் கடவுளின் கருணையை நினைத்து வழிபாடுகளும் பூஜைகளும் செய்ய ஆரம்பித்தாள். கடவுளிடம் முன்கூட்டியே வேண்டியிருந்தபடி நேர்த்திக் கடன்களைச் செய்தாள். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக நிர்மலா போயிருந்தாள். விமான நிலையத்திற்கு அவள் மட்டும் சென்றிருந்தாள். அவளுடைய தாய் ஏதோ சில காரணங்களைச் சொல்லி அதிலிருந்து நழுவிக் கொண்டாள். அவள் எப்போதும் அப்படித்தான். கடந்த சில வருடங்களாகவே அவள் அப்படித்தான் நடந்து வருகிறாள். குறிப்பாக சமீப காலமாக சசியின் வீட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து விலகி நிற்கவே மாதவி அம்மா ஆசைப்பட்டாள். ஆசைப்பட்டது மட்டுமல்ல, அதே மாதிரி உறுதியான மனதுடன் அவள் நடக்கவும் செய்தாள். அதே போல மறுபக்கத்தில் சசியின் தாயின் நடவடிக்கைகளும் அப்படியொன்றும் வேறுபட்டதாக இல்லை. விலகியிருக்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பார்கள். அப்போது கூட அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளி நன்கு தெரியும்.

காலத்தின் கைகளிலிருந்து கறுப்பான, வெளுப்பான நாட்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கீழே விழுந்து கொண்டிருந்தன. அதில் இயற்கை எதிர்காலத்தில் நடக்கப்போகும் பலவற்றையும் குறித்துக் கொண்டிருந்தது. யாரிடமும் கூறாமல் யாரிடமும் அறிவிக்காமல் யாருடைய கருத்தையும் கேட்காமல் அது இயல்பாகவே நடந்து கொண்டிருந்தது. அவை இந்த அகண்ட யுகத்தின் வரலாற்றுத் தாள்களாகவே வடிவமெடுத்துக் கொண்டிருந்தன.

தன் தந்தை இடம் மாறுதல் பெற்று கல்கத்தாவிற்குப் போகும் விஷயத்தைத் தெரிந்து கொண்டபோது சசிக்கு மிகவும் மனக் கஷ்டமாக இருந்தது. தன் தந்தை அருகில் இருப்பது- அந்த உறவு அந்த அளவிற்கு ஒழுங்காக இல்லாமல் இருக்கலாம் என்பது வேறு விஷயம்- நிர்மலாவிற்கும் அவளுடைய தாய்க்கும் ஒரு தாங்கு கல்லைப் போல என்ற மன நிம்மதியுடன் இருந்தான் சசி. பொருளாதார ரீதியாக அவர்களுக்கு யாருடைய ஆதரவும் நிழலும் தேவையில்லை என்பது உண்மை. எனினும், மிகப்பெரிய ஒரு நகரத்தில் ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் மட்டும் இருக்கும்போது அவர்களுக்குப் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டுமல்ல, வேறு பல விஷயங்களையும் கூட சந்திக்க வேண்டியதிருக்கும். அதனால் ஒரு ஆண்துணை இருப்பதென்பது அவர்களுக்கு நிம்மதி தரக்கூடிய ஒன்றே. தன்னுடைய தந்தை யாருக்கும் எப்பொழுதும் எந்தவித உதவிகளையும் செய்யக்கூடியவர் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். நிர்மலாவின் தாய் பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்தபோதும், அவளுடைய தந்தையின் மரணத்தின்போதும், அதற்குப் பிறகும் அவர்களுக்குத் தேவைப்பட்ட எல்லா உதவிகளையும் முன்னின்று செய்தவர் சசியின் தந்தை. உதவிக்கு ஒரு ஆள் இல்லை என்ற கவலை அந்தக் குடும்பத்திற்கு ஒருமுறைகூட இருந்ததில்லை. அவர்கள் சொல்லாமலே அவர்களின் தேவைகளை அறிந்து அவர் செய்து வந்திருக்கிறார். அதற்கேற்ற சூழ்நிலை அவருக்கு வாய்த்திருந்தது. ஒரு நண்பருக்காக, அவருடைய குடும்பத்திற்காக, இந்த அளவிற்குக் கஷ்டங்களை அனுபவித்திருக்கும் மனநிலையைக் கொண்டிருக்கும் இன்னொரு மனிதரைப் பார்ப்பது அரிதானது என்று நிர்மலா கூட பல நேரங்களில் நினைத்திருக்கிறாள். தன் தந்தையை அவளுடைய தந்தையைப் போலவே நிர்மலா நினைத்திருந்தாள் என்ற விஷயம் சசிக்கு நன்றாகவே தெரியும். அதே போல நிர்மலாவின் தாயைத் தன்னுடைய தாயைப் போலத்தான் சசியும் நினைத்திருந்தான். நிர்மலாவிற்கு ஒரு சகோதரன் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்வதற்கென்றே சசி இருக்கிறான் என்று மனப்பூர்வமாக மாதவி அம்மா எல்லாரிடமும் கூறுவாள். ஆரம்ப நாட்களில் இந்த ஒரு விஷயத்தில் சசியின் தாய்கூட குறை கூறும்படி இல்லை. குழந்தைகள் இருவரையுமே தன்னுடைய சொந்த பிள்ளைகளைப் போலத்தான் அவளும் நினைத்தாள். சொல்லப்போனால் மனதிற்குள் இப்போது கூட அவள் அவர்களை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பாள். இடைவெளியும் பிரிவும் மூத்தவர்கள் அளவில்தான். இரண்டு தலைகள் சேர்ந்தாலும் நான்கு மார்பகங்கள் சேராது என்று சசியின் தந்தை எப்பொழுதும் பொழுதுபோக்காகக் கூறுவதுண்டு.

இதையெல்லாம் நினைத்துதான் தன் தந்தை இடம் மாறுதல் பெற்று கல்கத்தாவிற்குப் போய்விட்டார் என்பது தெரிந்ததும், சசி ஒரு மாதிரி ஆகிவிட்டான். ஆனால், இவ்வளவு தூரத்தில் இருந்து கொண்டு இதைப்பற்றி தான் கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் என்பதையும் அவன் நினைக்காமலில்லை. எனினும், அவன் தந்தைக்குக் கடிதம் எழுதினான். அவ்வப்போது தொலைபேசியில் பேசினான். போய் நிர்மலாவிற்கும் அவளுடைய தாய்க்கும் தேவைப்பட்ட உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டுமென்று அவருக்கு அவன் ஞாபகமூட்டிக் கொண்டேயிருந்தான். அதற்கு அவனுடைய உபதேசமும் வேண்டுகோளும் தேவையே இல்லை என்று அவனுடைய தந்தை பதில் எழுதினார். யாருடைய வேண்டுகோளும் இல்லாமலே அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர தான் கடமைப்பட்டவன் என்று அந்த மனிதர் தன் மகனிடம் சொன்னார். அதைக்கேட்ட பிறகுதான் சசிக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால், அந்த நிம்மதியும் அதிக நாட்களுக்கு நீடிக்கவில்லை. சிறிது சிறிதாக நிர்மலாவின் கடிதங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வந்தது. பல வேளைகளில் நீண்ட நாட்களுக்குக் கடிதமே இல்லை என்ற சூழ்நிலை கூட உண்டானது.


பல தடவைகள் தொலைபேசி மூலம் பேச சசி முயன்றும், அந்த மாதிரி நேரங்களில் நிர்மலா, அவளுடைய தாய் ஆகியோர் நடந்து கொண்ட விதம் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியதாகவும் இருந்தது.

அது சசியை மிகவும் வருத்தமடையச் செய்தது. அப்படிப்பட்ட ஒரு குண மாறுபாட்டை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனால் நாட்கள் படிப்படியாக நீங்க நீங்க அவனுடைய மனக்குழப்பமும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அது நாளடைவில் மிகவும் தீவிரமாகி பைத்தியம் பிடிக்கிற நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது. கடைசியில் அவனை மிகவும் நிலைகுலையச் செய்யும் அளவிற்கு அது அழைத்துச் சென்றது.

அவன் தேர்வில் வெற்றி பெறவில்லை. பட்டமெதுவும் வாங்கவில்லை. மூன்று வருடங்களின் முடிவில் போட்ட கணக்குகள் எல்லாம் தலைகீழாக மாறின. எல்லா ஆசைகளையும் நெருப்பில் பொசுக்கி விட்டு, எதையும் சாதிக்காமல், எதையும் பெறாமல் சசி ஊருக்குத் திரும்பினான்- பழி வாங்கும் எண்ணத்துடன், அடங்காத வைராக்கியத்துடன், பிடிவாதத்துடன்...

ஊரிலிருந்து படிக்கப்போன சசி அல்ல ஊருக்குத் திரும்பி வந்த சசி.

மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவன் மிகவும் மாறிப் போயிருந்தான். அவன் வளர்ந்திருந்தான். அவன் தன்னுடைய தந்தை அளவிற்கு உயரமாக இருந்தான்.

தாடி வளர்த்திருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். திடீரென்று பார்த்தால் ஒரு பார்வையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மாற்றங்கள் அவனிடம் உண்டாகியிருந்தன.

10

மூன்று வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பி ஊருக்கு வந்த சசி நேராகத் தன்னுடைய வீட்டுக்குப் போவதற்குப் பதிலாக நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றான். அது விவேகமற்ற செயல் என்பதை அவன் அறியாமல் இல்லை. உண்மை நிலை என்னவென்று நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று முன்அறிவிப்பு எதுவும் இல்லாமலே அவன் அங்கு சென்றான்.

விமான நிலையத்திற்கு அருகில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து பொருட்களையெல்லாம் அங்கு வைத்துவிட்டு ஒரு நொடி கூட தாமதமாகாமல் வந்த வேகத்தில் நேராக அவளைத் தேடி ஓடினான்.

அழைப்பு மணி ஒலித்தபோது மாதவி அம்மாதான் கதவைத் திறந்தாள். சிறிதும் எதிர்பார்க்காமல் திடீரென்று தனக்கு முன்னால் வந்து நின்றிருந்த சசியைப் பார்த்ததும் முதலில் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. யார் என்று தெரிந்தபோது அவள் ஆச்சரியத்தில் உறைந்து ஒரு சிலையைப் போல் மரத்துப்போய் நின்று விட்டாள்- ஒரு வார்த்தைக்கூட பேச முடியாமல், சிறிதுகூட அசையாமல்...

சசிக்கும் அதே அனுபவம்தான். நிர்மலாவின் தாய் முன்பு பார்த்த மாதவி அம்மா அல்ல. அவளும் நம்ப முடியாத அளவிற்கு மாறிப் போயிருந்தாள். நெற்றிக்கு மேலே ஒரு பக்கம் தலைமுடி முழுவதும் நரைத்திருந்தது. கண்களைச் சுற்றிலும் கறுப்பு வளையம் விழுந்திருந்தது. நெற்றியில் நீளமான கோடுகள் தெரிந்தன. தாடை எலும்புகள் சிறிது புடைத்துத் தெரிந்தன. மொத்தத்தில் உடல் மெலிந்திருந்தது.

முதலில் தோன்றிய மனக்குழப்பம் சற்று தணிந்தவுடன் அவன் மாதவி அம்மாவிடம் விசாரித்தான்: "நிர்மலா..."

குரலின் கடுமையாலும் முக வெளிப்பாட்டின் மாற்றத்தாலும் அவனுடைய மனதிற்குள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்த கோபத்தின் வலிமையை அவளுக்குப் புரிந்து கொள்ள சிரமமாக இல்லை. அதனால் அந்தக் கேள்விக்குப் பதிலெதுவும் கூறாமல் மாதவி அம்மா மெதுவாகத் திரும்பி நடந்தாள். அவளுடன் சேர்ந்து சசியும்.

அவர்கள் நேராகப் படுக்கையறைக்குச் சென்றார்கள்.

நிர்மலா அங்கு தன்னுடைய கட்டிலில் கம்பளியால் கழுத்து வரை மூடிக்கொண்டு மல்லாக்க படுத்திருந்தாள்.

அங்கு படுத்திருந்தது தன்னுடைய நிர்மலாதான் என்பதை அவனால் நம்பமுடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு பூப்போன்ற உதடுகளிலிருந்து வந்த புன்னகை மொட்டுகளுடன் தனக்கு விடை தந்த தன்னுடைய நிர்மலா...

அது என்ன தோற்றம்!

அந்த முகம் முற்றிலும் வெளிறிப்போய் காணப்பட்டது. தளர்ந்து ஒட்டிப்போய் இருந்த முகத்தில் இருட்டான குழிகளுக்குள் புகை படர்ந்த கண்ணாடித் துண்டுகளைப் போல காணப்பட்ட கண்கள் இறந்து போன மீனின் கண்களைப் போல விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் அவளுக்கு அருகில் போய் நின்றும் அப்படியொரு மனிதன் தனக்குப் பக்கத்தில் நிற்பதை அவள் உணரவில்லை என்பது தெரிந்தது. அப்போதும் அவளுடைய பார்வை அறையின் மேற்பகுதியில் எங்கேயோ இருந்தது. அவன் அவளை மேலும் நெருங்கி கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தபோது மட்டுமே அவள் அதை அறிந்தாள். அவள் மெதுவாக, மிக மெதுவாக முகத்தைத் திருப்பிப் பார்த்தாள். அவளுடைய தாய்க்கு உண்டான கஷ்டம் அவளுக்கு உண்டாகவில்லை. ஒரே பார்வையில் தனக்கு அருகில் உட்கார்ந்திருப்பது சசிதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஆனால், அந்தப் புரிதல் அவளுடைய உணர்வு நிலையில் பதிந்த பிறகும் ஆச்சரியம் நிறைந்த குழப்பத்துடன் மிரள மிரள விழிப்பதைத் தவிர வேறெதுவும் அவளால் செய்ய முடியவில்லை. அப்போது குழி விழுந்து போயிருந்த அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. உதடுகள் துடித்தன. உடல் தலையிலிருந்து கால்வரை நடுங்கியது. அடுத்த நிமிடம் கட்டுப்பாடே இல்லாமல் அவளுடைய விழிகளிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அருவியென அது இரு கண்களிலிருந்தும் வந்து கொண்டே இருந்தது.

அவள் என்னவோ கூற முயல்கிறாள் என்பதை சசி புரிந்து கொண்டான். ஆனால், நடுங்கிக் கொண்டிருந்த அந்த வறண்டு போன உதடுகளில் ஒலி வெறுமனே சுய உணர்வற்று கிடந்ததே தவிர, அது சிறிதும் வெளியே வரவில்லை. கண்களிலிருந்து அப்போதும் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் அவளுடைய மனத்தின் கட்டுப்பாட்டு எல்லை உடைந்து போயிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தவாறு எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்த சசி மிகவும் தளர்வடைந்து போயிருந்தான். அவனுடைய உள்ளுக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த கோப நெருப்பு அந்தக் கண்ணீரில் அப்படியே அணைந்து போனது.

அவன் கையை நீட்டி விரல் நுனியால் அவளுடைய கண்களைத் துடைத்தான்.

யாரும் எதுவும் பேசவில்லை. யாராலும் பேச முடியவில்லை. அசையக்கூட முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போன நிமிடங்கள் நிலைகுலைந்து போய் எங்கு போகிறோம் என்று தெரியாமலே அமைதியாக அந்த வழியே கடந்து சென்றது.

அப்போது அவளுடைய கை மெதுவாகத் தன்னை நோக்கி நீண்டு வருவதை அவன் கவனித்தான். மெலிந்து எலும்புகள் வெளியே தெரிந்த அந்தக் கையைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்துக் கொண்ட சசி அவற்றைத் தன் மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டான். அப்போது அவன் தன் கட்டுப்பாட்டை மீறி அழத் தொடங்கினான்.


ஒரு சிறு குழந்தையைப் போல அவன் தேம்பித் தேம்பி அழுதான். பிறகு அவனுக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. நீண்ட நேரம் சுய உணர்வின்றி ஒரு சிலையைப் போல அவன் அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

சசியின் தோளில் கையை வைத்து மாதவி அம்மா மெதுவாகக் குலுக்கினாள். அப்போதுதான் அவனுக்கு சுய உணர்வே வந்தது. ஒரு அதிர்ச்சியுடன் அவன் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். வெளியே வரும்படி சைகை காட்டியவாறு மாதவி அம்மா நடந்தாள்.

தன்னுடைய மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டிருந்த தளர்ந்துபோன நிர்மலாவின் கையை அங்கிருந்து அகற்ற அவனுக்கு மனமே வரவில்லை. இனி இருக்கும் காலம் முழுவதும், வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை இப்படியே இருக்க முடியாதா என்று மட்டுமே அப்போது அவன் விரும்பினான். எனினும், மனமில்லாமல் தன்னுடைய உயிர்த்தோழியின் கையை ஒரு ஈரத்துணியைப் போல கீழே இறக்கி வைத்துவிட்டு அவன் மாதவி அம்மாவின் பின்னால் வெளியே நடந்தான்.

உள்ளறையில் சாப்பிடுவதற்காகப் போடப்பட்டிருந்த மேஜையின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அவர்கள் உட்கார்ந்தார்கள். சமையலறையில் வேலைக்காரி பாத்திரம் தேய்க்கும் சப்தம் கேட்டது. குழாயில் விழுந்து கொண்டிருந்த தண்ணீரின் ஓசை கேட்டது.

நடுக்கூடத்திற்குச் செல்லும் வாசலின் மூலையிலிருந்து மேல் நோக்கிப் போயிருந்த, பூமி வரைபட புத்தகத்தின் நதிகளின் படத்தைப் போல தோன்றிய, சுவரிலிருந்த அந்தப் பழைய விரிசல் முன்பு இருந்ததை விட பெரிதாக இருப்பதாக சசிக்குப் பட்டது. முன்பும் அங்கு அந்த மேஜைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சந்தர்ப்பங்களில் அவன் அதை கவனித்திருக்கிறான். அதன் எதிர்ப்பக்கம் இருந்த சுவரில் ஈரத்தால் நிறம் மாறிப்போய் ஆப்ரிக்காவைப் போல காணப்பட்ட அந்தக் கறுப்புக் கறை முன்பு இருந்ததைப்போலவே இப்போதும் இருந்தது. அதுவும் முன்பு இருந்ததைவிட அதிகமாகக் கறுத்திருந்தது. பெரிதாகி விட்டிருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் விரிசல்களும், கறைகளும் முன்பு இருந்ததைவிட பெரிதாகிவிட்டிருந்தனவே தவிர, அவை மறைந்து போய் விடவில்லை. சுவர்களில் மட்டுமல்ல அங்கு வசித்துக் கொண்டிருந்தவர்களின் வாழ்க்கையிலும் கூட அப்படித்தான் இருந்தது. ஆனால், வாழ்க்கையில் காணப்பட்ட விரிசல்களும் கறைகளும் முன்பு இருந்த மாதிரி மட்டுமல்ல- முன்பு இல்லாத பலவும் கூட இப்போது புதிதாக வந்து சேர்ந்திருந்தன.

அவனுக்கு முன்னால் மேஜைமீது கைகளை ஊன்றி கையால் முகத்தைத் தாங்கிக் கொண்டிருந்த மாதவி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். என்ன பேசுவது என்றோ எப்படி சொல்வது என்றோ வடிவம் கிடைக்காமல் அவள் தடுமாறி உட்கார்ந்திருந்ததைப் போல் இருந்தது.

அவள் ஏதாவது சொல்லட்டும் என்று நினைத்து சசியும் உட்கார்ந்திருந்தான். ஆனால், நிமிடங்கள் வேகமாக ஓடிக்கொண்டேயிருந்தன. அவை அமைதியாக கால ஓட்டத்தில் கறைந்து காணாமல்போன பிறகும் யாரும் எதுவும் பேசாமலே இருந்தார்கள். குழப்பங்கள் நிறைந்த எண்ண ஓட்டங்களின் இறுக்கத்திலிருந்து விடுபட்டு ஒலியால் வெளியே குதித்து வர முடியவில்லை. கடைசியில் பொறுமையைக் கலைத்தது சசிதான். அவன் கேட்டான்: "என்ன? நிர்மலாவுக்கு என்ன ஆச்சு?"

அதற்கு உடனடியாக ஒரு பதிலைத் தர மாதவி அம்மாவால் முடியவில்லை. அப்போது சசி மீண்டும் சொன்னான்: "என்ன அவளுக்கு? எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க... தயங்க வேண்டாம்!"

"சசி..." - அவள் அவ்வளவுதான் சொன்னாள்.

"ம்..."

"நீ வருத்தப்படக்கூடாது. அவள் இனிமேல்..."- அவ்வளவுதான் அவளால் கூற முடிந்தது. அதற்குப்பிறகு அவளுடைய தொண்டை தடுமாறியது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

நிர்மலாவின் தாய் இந்த அளவிற்கு வருத்தமுற்ற நிலையில் இருந்து சசி முன்பு எப்போதும் பார்த்ததில்லை. எப்படிப்பட்ட இக்கட்டான நேரத்திலும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் தலையை உயர்த்தி அவள் நின்றிருக்கிறாளே தவிர, ஒருமுறை கூட அவள் தளர்ந்து போய் இருந்ததில்லை. ஆனால், இப்போது...!

சசியின் எண்ண ஓட்டங்கள் அந்த வழியில் போய்க்கொண்டிருந்த போது அவனை அதிலிருந்து தட்டியெழுப்பிய மாதவி அம்மா சொன்னாள்: "அவளால... அவளால இனிமேல் எழுந்து நடக்க முடியும்னு தோணல... கிட்டத்தட்ட ஒருவருடமா இதே நிலையிலதான் அவ இருக்கா. பாவம்... அவ வற்புறுத்தி சொன்னதுனாலதான் நான் உனக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தல... சொல்லப்போனா... உன் வீட்டுல இருந்தவங்களும் அதைத்தான் சொன்னாங்க. உனக்கு இந்த விஷயத்தைச் சொல்லவேண்டாம், படிச்சுக்கிட்டு இருக்கிற உனக்கு இதைத் தெரியப்படுத்தி தேவையில்லாம உன்னைக் கவலைப்படச் செய்ய வேண்டாம்னு அவங்க நினைச்சாங்க!

கனமான ஏதோவொன்றால் தலையில் அடித்ததைப் போல் இருந்தது அப்போது சசிக்கு, அந்த அதிர்ச்சியால் உண்டான உணர்வற்ற நிலையில் இருந்து மீண்டுவர அவனுக்குப் பல நிமிடங்கள் ஆனது கடைசியில் சுயஉணர்வு வந்தபோது அவன் சொன்னான்:

"சுருக்கமா சொல்லப்போனா, நீங்க எல்லாரும் சேர்ந்து அவளைக் கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிற வேலையைப் பார்த்திருக்கீங்க. அப்படித்தானே?"

"என் சசி..."- மாதவி அம்மா வாய்விட்டு கத்தினாள். அதில் பரிதாபமான ஒரு வேதனை தெரிந்தது. வேதனைகள் அதிகமாகி வீங்கிப் போயிருந்த ஒரு இதயம் வெடித்ததைப் போல் அது இருந்தது.

"வேண்டாம். இந்த நடிப்புகளையெல்லாம் பார்த்து நான் ஏமாறத் தயாரா இல்ல. ஆன்ட்டி...இது நீங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து உண்டாக்கினது. என்னால அதை உணர முடியுது. என் கண்கள்ல தூசியை எறிய முயற்சி பண்ணாதீங்க... நான் அந்த அளவுக்குக் குருடன் இல்ல..."

"என் மகனே... சசி, நீ என்ன சொல்ற?"

"உங்களை விட அந்த மகள் மீது அதிகமா அன்பு வச்சிருந்தது நான்தான். அது உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் இல்ல. இருந்தாலும் எல்லா விஷயங்களையும் என்கிட்ட இருந்து நீங்க மறைச்சுவச்சீங்க... திட்டம் போட்டு செய்யப்பட்ட ஒரு சதி இது... அது இருக்கட்டும். அவளுக்கு என்ன? எனக்கு அது தெரியணும்."

"எனக்குத் தெரியாது. லுக்கேமியாவா இருக்கும்னு இப்போ டாக்டர்கள் சொல்றாங்க... ப்ளட் கான்சர்..."

"ஓ மை காட்! ஓ மை காட்!"- சசி உரத்த குரலில் கத்தினான். இதயத்தில் குண்டு பாய்ந்ததைப் போல் இருந்தது அவனுக்கு. அவனுடைய முகம் வெளிறிப்போனது. உதடுகள் துடித்தன. பாதங்களிலிருந்து ஒரு வகை வேதனை மேல்நோக்கிப் பரவுவதைப் போல் அவனுக்கு இருந்தது.

"என்ன இருந்தாலும் நீங்க என் விஷயத்துல இப்படி இருந்திருக்கக்கூடாது. அவள் என்னைத் திருமணம் செய்யிறது உங்களுக்குப் பிடிக்கலைன்னா, அது நடக்காம தடுக்குறதுக்கு வேற எத்தனையோ வழிகள் இருக்கு.


அதுக்காக அந்த அப்பாவிப்பெண்ணை இப்படியா படுக்க வைக்கிறது? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நான் அவளை அமெரிக்காவுக்குக் கொண்டு போயி சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பேனே! திருமண விஷயம் அதுக்குப் பின்னாடிதானே? திஸ் ஈஸ் இன் மை ஒப்பீனியன் எ கேல்குலேட்டட் அட்டம்ப்ட் டூ மர்டர்"- தடுத்து நிறுத்தியதைப் போல அவனுடைய குரல் திடீரென்று அந்த இடத்தில் நின்றது.

"சசி... எங்களுக்கும் உண்மையான நிலைமை தெரியல. அவள் உடம்புல இவ்வளவு பெரிய நோய் இருக்குன்ற உண்மையே இப்பத்தான் எங்களுக்குத் தெரியும். முதல்ல மஞ்சள் பித்தம்னு நினைச்சுத்தான் சிகிச்சையே பண்ணினோம். ஆனால், நீண்ட நாட்கள் சிகிச்சை செய்த பிறகும், உடம்புல எந்தவிதமான முன்னேற்றமும் உண்டாகலைன்னதுக்கப்புறம் தான் எங்களுக்கே சந்தேகம் வந்தது. சமீபத்துலதான் எங்களுக்கே தெரிய வந்தது. அவளுக்கு இருக்குறது புற்றுநோய்னு. அப்போவாவது உனக்குத் தகவலைத் தெரிவிக்கணும்னு நான் விருப்பப்பட்டேன். ஆனா, அவள் வேண்டாம்னு சொல்லிட்டா. உனக்கு இந்த விஷயத்தைச் சொல்லவே கூடாதுன்னு உன் அம்மாவும் நினைச்சாங்க."

"அப்படியா?"- அவன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். என்ன சொல்வது என்றோ என்ன செய்ய வேண்டும் என்றோ அவனுக்கு அப்போது எதுவும் தோன்றவில்லை. கடைசியில் நீண்ட நேர அமைதிக்குப் பிறகு அவன் கேட்டான்: "அவளுக்குத் தெரியுமா?"

"என்ன?"

"தனக்கு இருப்பது என்ன நோய்னு?"

"அவள் கேட்கல... நாங்களும் சொல்லல. ஆனா, அவளே மனசுல நினைச்சிருப்பான்னு தோணுது. அதிர்ஷ்டம்ன்றது வாழ்க்கையில நிரந்தரமில்லாத ஒண்ணுன்னு அவள் சொன்னா, பாவம்..."

"மை காட்!"

கைகளில் தலையைச் சாய்த்துக் கொண்டு ஒரு உயிருள்ள பிணத்தைப் போல சசி அமர்ந்திருந்தான்.

அவனுடைய அறிவு வேலை செய்ய மறுத்தது. மூளைக்குள் இருட்டு நிறைந்தது. உடல் மரத்துப்போனதைப் போல் இருந்தது.

அவன் அழுதான். ஒரு குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதான். "எங்களுக்குன்னு உதவி செய்யறதுக்கு யார் இருந்தாங்க? எல்லா விஷயங்களுக்கும் நான் ஒருத்திதானே? உன் அப்பா ஒன்றிரண்டு தடவைகள் வந்து நலம் விசாரிச்சாரு. இடையில அவ்வப்போ தொலைபேசி மூலம் பேசினாரு. நான் அதை வேண்டாம்னு சொல்லிட்டேன். உன் அம்மாவுக்கு அது பிடிக்கலைன்னு தெரிஞ்சதும் அதைத் தொடர நான் அனுமதிக்கிறது நல்லது இல்லைதானே? விதிக்கப்பட்டவங்களுக்கு என்ன எழுதியிருக்கோ அதை அனுபவிச்சித்தான் ஆகணும் உதவிக்குன்னு ஒரு ஆள்கூட இல்ல..."

மாதவி அம்மா கூறிய ஒவ்வொன்றையும் கேட்டுக் கொண்டிருந்தானே தவிர சசி முகத்தை உயர்த்திப் பார்க்கக்கூட இல்லை. அப்போது அவன் அழுது கொண்டிருந்தான்- தன்னைச் சிறிதும் கட்டுப்படுத்த முடியாமல்.

அந்த அழுகைக்கு ஒரு முடிவு இருக்காது என்பது மாதவி அம்மாவிற்குத் தெரியும். ஆனால் மேலும் சில நிமிடங்கள் அப்படியே கழிந்தபிறகு, என்னவோ சிந்தித்து முடிவெடுத்த மாதிரி அவன் தன் முகத்தை உயர்த்தினான்.

"எது எப்படி வேணும்னாலும் போகட்டும். நான் அவளை என் கூட அழைச்சிட்டுப் போறேன். அவள் இப்படி அங்குலம் அங்குலமாக இறக்குறதை நான் உயிரோடு இருக்குறதுவரை அனுமதிக்க மாட்டேன். அது மட்டும் உண்மை. யார் சம்மதிச்சாலும் யார் வருத்தப்பட்டாலும்... கடவுள் இந்த விஷயத்துல உங்க யாரையும் மன்னிக்கப்போறது இல்ல... நெவர்... நெவர்..."

"நீ சொல்றதைப் பார்த்தா அவள் என் மகளே இல்லைன்றது மாதிரில்ல இருக்கு!"

"அப்படிப்பட்ட ஒரு சிந்தனை இருந்திருந்தா இவ்வளவு காலமா அதை மறைச்சி வச்சிருக்க வேண்டிய அவசியம் என்ன? எங்க திருமணத்துக்கு எதிரா நின்னப்பவே, எனக்குச் சந்தேகம் தோணுச்சு. நான் பல விஷயங்களையும் நினைச்சுப் பயந்தேன். ஆனா, அது இந்த அளவுக்கு மோசமா இருக்கும்னு நான் கனவுலகூட நினைக்கல. ஒரு கொலை... கொலை..."- அவன் திடீரென்று தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தினான்.

அந்த சந்தர்ப்பத்தில் மேலும் ஏதாவது பேசினால் அது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கிவிடும் என்று தோன்றியது காரணமாக இருக்கலாம். மாதவி அம்மா அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவள் அமைதியாக இருந்தாள்.

“அவளைத் திருமணம் செஞ்சிக்கிறதா நான் அவளுக்கு வாக்குறுதி தந்திருக்கேன். நான் சொன்ன வாக்கைக் காப்பாத்துவேன். யார் எதிர்த்தாலும் அதைப்பத்தி எனக்குக் கவலையில்ல"- நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு தன்னுடைய இறுதி முடிவு என்பதைப் போல சசி சொன்னான்: "நான் அவளோட உடல் கேட்டைச் சிகிச்சை பண்ணி மாற்றுவேன். அதற்குப் பிறகு அவளைத் திருமணம் செய்வேன் ஆன்ட்டி! நான் அவளை அமெரிக்காவுக்கு அழைச்சிட்டுப் போறதா முடிவு பண்ணியிருக்கேன். அங்கே கொண்டு போயி திறமையான மருத்துவர்களை வச்சு சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வேன். மஞ்சள் பித்தத்துக்கும் புற்று நோய்க்கும் வேறுபாடு தெரியாத முட்டாள்கள்! இடியட்ஸ்..."

"சசி... இதுக்காக நீ அமெரிக்கா போக வேண்டிய அவசியம் இல்ல. சிகிச்சை செய்தால் குணமாகுற வியாதியா இருந்தா எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் நாங்க இங்கேயே அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்போம். அப்படி செய்யாம இருப்போம்னு நினைக்கிறியா?"

"ஆமா, நினைக்கிறேன். அதுனால இந்த விஷயத்தைப் பற்றி என்கிட்ட என்னதான் வாதாடினாலும் பேசினாலும் என்ன செய்தாலும் அதுனால ஒரு பிரயோஜனமும் இல்ல என் கூட வர்றதுக்கு நிர்மலா தயாரா இருந்தான்னா, அவளை நான் அழைச்சிட்டுப் போயிடுவேன்."

"இந்த மோசமான நிலைமையிலயா?"

"ஒவ்வொரு நாள் கடக்குறப்பவும், அவளோட நிலை மேலும் மோசமாகத்தான் ஆகும்."

"ஆனா, சசி... அவளுக்கு... அவளுக்கு அவ உயிரோடு இருக்கப்போறது ரெண்டோ, மூணோ மாதங்கள்தான். அவ்வளவு நாட்கள் இருப்பான்றதே சந்தேகம்."

"சந்தேகப்பட வேண்டியதே இல்ல. இப்படி இங்கேயே இருந்தா ரெண்டோ, மூணோ வாரங்கள் உயிரோட இருந்தாலே பெரிய விஷயம்."

"என் சசி... நான் உன்கிட்ட எப்படி சொல்வேன்? எனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது!"

மாதவி அம்மா அழுதாள்.

"அவளுக்கு அது தெரியுமா?"- சசி குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டான்.

"இல்ல சசி... தெரியாது... அவள்... பாவம்..."

"ரெண்டு மாசம் இல்ல... ரெண்டு நாட்களே அவள் இருப்பான்னாக்கூட நான் அதைக் கட்டாயம் செய்வேன் ஆன்ட்டி! அது என் கடமை. என் சபதம் அது. நான் போய் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துட்டு வர்றேன். வந்தவுடன் நாங்க திருமணம் செஞ்சிக்குவோம்- உங்க எல்லோரோட ஆசீர்வாதங்களோடவும் ரெண்டு மாதங்கள் இல்ல ரெண்டு நாட்கள் இல்ல. ரெண்டு நிமிடங்கள் மட்டும் அவள் உயிரோட இருந்தாலும் அந்த சபதத்தை நான் கட்டாயம் நிறைவேற்றுவேன்.


அப்படியாவது அந்த அப்பாவிப் பொண்ணோட ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும்."

"வேண்டாம் சசி... வேண்டாம். நீ அப்படிப்பட்ட காரியத்துலயெல்லாம் இறங்க வேண்டாம்"- தேம்பித் தேம்பி அழுதவாறு மாதவி அம்மா சொன்னாள்.

"இந்த விஷயத்துல வேண்டியது வேண்டாதது எல்லாத்தையும் தீர்மானிக்க வேண்டியது நாங்க... நாங்க இல்ல... நான், ஆன்ட்டி! தேவையில்லாம பிடிவாதம் பிடிக்காதீங்க. நாங்க சின்னக் குழந்தைங்க இல்லையே! வேண்டிய அளவுக்கு எங்களுக்கு அறிவு வளர்ச்சி இருக்குல... புரிஞ்சிக்கிற அளவுக்கு வயசு இருக்குல்ல... அப்படின்னா எங்க விருப்பப்படி நடக்குறதுக்கான சுதந்திரமும் எங்களுக்கு இருக்கு!"

"இல்ல. நான் அதை அனுமதிக்கமாட்டேன். உனக்குச் சுதந்திரம் மட்டும்தான் இருக்கு. எனக்கு அதிகாரம் இருக்கு. நான் அதை அனுமதிக்க மாட்டேன்."

"எனக்கு யாரோட அனுமதியும் தேவையில்ல..."

"நீ ஒரு விஷயத்தப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. ஆவேசம் ஆபத்தை உண்டாக்கும். அதை நீ புரிஞ்சிக்கணும்."

"இவ்வளவு காலமா அதைத்தான் நான் செய்துக்கிட்டு இருந்தேன். புரிஞ்சிக்கிறதுக்கான முயற்சி... அதைத்தான் இப்போ பார்த்துட்டேனே!"

"பார்க்கல... பார்க்கப் போறதும் இல்ல. அதனாலதான் நான் திரும்பவும் சொல்றேன். நீ சொல்றது மாதிரி நீங்க நடக்க முடியாது. நீ நினைக்கிறது மாதிரி இது உங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயமும் இல்ல."

"எனக்குத் தெரியும் ஆன்ட்டி!"

"இல்ல...உனக்குத் தெரியாது. நீ அவளைத் திருமணம் செய்ய முடியாது."

"அதை நான் முடிவு செய்வேன். முடிவு செஞ்சாச்சு!"

"வேண்டாம் சசி... வேண்டாம்... அது நடக்காது. நடக்கக்கூடாது!"

"என்ன?"- சசி ஆச்சரியத்துடன் கண்களை அகல விழித்தான். இவ்வளவு பிடிவாதமா?

"ஆன்ட்டி, நீங்களா இதைச் சொல்றீங்க?"- சசி ஆச்சரியத்துடன் கேட்டான். "ஆமா... நான் அதுக்குச் சம்மதிக்க மாட்டேன்."

"ஒய்...ஒய்...ஒய்...? எதுனால? உங்களுக்கு என் மேல இந்த அளவுக்கு விரோதமா?"

"அந்த அளவுக்கு அன்பு. அதனால. நான் சொல்லாமலே உனக்குத் தெரியும்ல... நீ எனக்குச் சொந்த மகன் மாதிரி..."

"பிறகு என்ன?"

"என்னன்னு கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது!"

"எனக்குத் தெரியும். ஜாதி... மகனைவிட அது பெரியதாச்சே! ஜாதியும் குடும்ப உறவுகளும்... ஆனா, இவ்வளவு காலமா இந்த ஜாதி உணர்வும் சமூக உறவுகளும் எங்கே போயிருந்துச்சு? திடீர்னு அது எங்கேயிருந்து இங்கே வந்துச்சு? அன்பை விட பெருசா- ஆன்ட்டி, ஜாதியும், சமூகமும், ஊரும், ஊர்க்காரர்களும்?"

"எது வேணும்னாலும் இருக்கட்டும். இப்படிப்பட்ட ஒரு உறவுக்குத் துணையா மனசறிஞ்சு என்னால இருக்க முடியாது."

"அதுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கணுமே! ஆன்ட்டி, நான் உங்களுக்குச் சொந்த மகனைப் போலன்னு எப்பவும் சொல்வேன்ல! அதுக்காக இப்படியா?"

"ஆமாம், சசி... இப்பவும் அதைத்தான் நான் சொல்றேன். எனக்கு நீ மகன்தான். அதுதான் கடவுள் தர்ற தண்டனையும். இனிமேல் நான் அதை மறைச்சு வைக்கல. நீ... நீ..."

"ம்... சொல்லுங்க. இவ்வளவும் சொல்லியாச்சில்ல? இனி சொல்லாம என்ன இருக்கு?"

"நீ... நீ... நிர்மலாவோட அண்ணன். அவள் உன்னோட தங்கச்சி!"

"அதனால?"

"அண்ணன் தங்கச்சியைத் திருமணம் செய்ய முடியாது."

"சும்மா பைத்தியக்காரத்தனமா பேசாதீங்க, ஆன்ட்டி..."

"பைத்தியக்காரத்தனம் இல்ல, சசி. நிர்மலாவும் உன் அப்பாவோட..."

"என்ன?"

"ஆமாம், மகனே. உன் அப்பாவுக்குக் கூட அது தெரியாது. இப்போ வரைக்கும் நான் அதை யார்கிட்டயும் சொன்னதுமில்ல. என் வாழ்க்கையில இருந்து நிரந்தரமா நான் அதைத் துடைச்சு அழிக்கணும்னு முயற்சி பண்ணினேன். அந்தக் களங்கம்... அதன் ஞாபகங்கள்... அந்தக் கெட்ட சம்பவத்தின் நினைவு... அந்த முயற்சியில் நான் வெற்றி அடைஞ்சிட்டேன்னு நினைச்சு நான் அமைதியா வாழ்ந்துக்கிட்டு இருந்தேன்.ஆனா, இப்போ நான் தோத்துட்டேன். நான் தோத்துட்டேன்... தோத்துட்டேன்!"

மாதவி அம்மா கட்டுப்பாட்டை மீறி குலுங்கி குலுங்கி அழுதாள்.

சசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமர்ந்திருந்த இடத்தை விட்டு நீண்ட நேரமாகச் சிறிது கூட அசையாமல் உட்கார்ந்திருந்தான். அவன் செயலற்ற ஒரு கருங்கல் சிலையைப் போல அங்கேயே உணர்ச்சியற்றுப் போன நிலையில் இருந்தான்.

மாதவி அம்மாவும் அசையவில்லை. அந்த சில நிமிடங்களில் அவளுடைய ஞாபக அறையில் முன்பு எப்போதோ தன்னைக் கீழ்ப்படுத்திய அந்த மோசமான செயல் காட்சி வடிவில் ஒவ்வொன்றாகப் படுவேகமாக ஓடிக் கொண்டிருந்தது. கால ஓட்டத்தில் எப்போதோ கடந்து போன விஷயமாக அது இருந்தாலும் அதன் இழைகள் இப்போதும் தங்களை வெளியே காட்டிக் கொண்டுதானிருந்தன.

உண்மையாகச் சொல்லப்போனால் அது அவளுடைய பலவீனத்தால்- அடங்கிப் போனதால் நடந்த ஒன்றா? இல்லை. நிச்சயம் அப்படிக் கூறுவதற்கில்லை. அப்படியென்றால் அதை ஒரு பலாத்காரம் என்று கூறலாமா? இருக்கலாம். முதிர்ச்சி அடையாத இதயத்தின் சபலம்! மனதை மயக்கிய சூழ்நிலையின் சதி!

அதை நினைக்கும்போது இப்போது அவளுக்குச் சந்தேகம் தோன்றுவதுண்டு- எப்படி அது நடந்தது என்று. ஆனால், இப்போதும் அந்தச் சம்பவத்திற்கு உண்மையான ஒரு காரணத்தை அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இல்லை... அது பலாத்காரமில்லை. தான் அதில் பங்காளியாக இருக்கவில்லை என்று எப்படி உறுதியான குரலில் கூறமுடியும்?...

"அம்மா..."

உள்ளேயிருந்து நிர்மலாவின் மெல்லிய குரல் கண்ணீரைப் போல வெளியே வந்தது.

மாதவி அம்மா அதிர்ச்சியடைந்து எழுந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் மெதுவாகத் தன் மகளை நோக்கி நடந்தாள்.

அப்போதும் முன்பு இருந்ததைப் போலவே சசி அதே இடத்தில் எந்தவிதமான அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தான்- ஒரு கருங்கல் சிலையைப் போல.

உள்ளே சென்ற மாதவி அம்மா அடுத்த நிமிடமே திரும்பி வந்து மெதுவான குரலில் சொன்னாள்:

"சசி... மகள் கூப்பிடுறா."

அவன் உள்ளே சென்றபோது முன்பு பார்த்ததைப் போலவே அவள் கழுத்துவரை மூடிப் படுத்திருந்தாள். ஆனால், இப்போது அவளுடைய முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. துடிப்பு தெரிந்தது. அந்தக் கண்கள் நட்சத்திரங்களைப் போல மின்னின. அந்த உதடுகளுக்கிடையில் முன்பைப்போல முல்லை மொட்டு விரிந்தது.

அவன் அவளுக்கு மிகவும் நெருக்கமாக கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்தான். "சசி..."- அவள் அழைத்தாள். மிகவும் கவனமாகக் கேட்டால்தான் அந்தக்குரலே காதில் விழும் என்ற அளவிற்கு அது மிகவும் பலவீனமாக இருந்தது.

"ம்..."- அவன் மெதுவான குரலில் சொன்னான்.

ஆனால், அவளுக்கு அது புரிந்துவிட்டது. விருப்பமில்லாத ஏதோ ஒன்று இதற்கிடையில் நடந்திருக்கிறது என்பதை அவனுடைய முக வெளிப்பாட்டிலிருந்தே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.


அதனால் அவள் சொன்னாள்: "டோன்ட் ப்ளேம் மை மதர் ஆர் யுவர் பேரன்ட்ஸ் ப்ளீஸ்... அவங்க திட்டம் போட்டு ஒரு கெடுதலும் செய்யல. என்னை நம்புங்க."

"யெஸ்... நான் உன்னை நம்புறேன், டியர்..."- அவன் சொன்னான்.

பிறகு இரண்டு பேரும் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. கடைசியில் அவள் கேட்டாள்: "சசி, அமெரிக்காவுல இருந்து எனக்கு எதுவும் கொண்டு வரலையா?" அப்போது எவ்வளவோ நாட்களாக இல்லாமலிருந்த அந்தப் புன்சிரிப்பு அவளுடைய வறண்டுபோய் காணப்பட்ட உதடுகளில் பளிச்சிட்டது.

"நான் வந்துட்டேன்ல... அது போதாதா?" அவன் விளையாட்டாகக் கேட்டான்.

அதற்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக அவள் அவனுடைய கையை அழுத்திக் கிள்ளினாள்.

"இப்பவும் அந்தக் கெட்ட பழக்கம் உன்கிட்ட இருந்து போகவே இல்ல"- அவளுடைய கையை மெதுவாகத் தடவியவாறு அவன் சொன்னான்.

"எப்படி மறப்பேன்? யார் இறுகப் பிடிக்கிறது எப்படின்னு எனக்குச் சொல்லித் தந்ததுன்னு ஞாபகத்துல இருக்கா?"

"ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்."- திடீரென்று அவன் முகம் வாடியது.

இதற்கிடையில் அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை வெளியே எடுத்து திறந்தான்.

"என்ன அது?"- ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்துடன் அவள் கேட்டாள்.

சசி எதுவும் பேசவில்லை. பேசாமல் அவன் பொட்டலத்தைப் பரித்து அதற்குள் இருந்த ஒரு மோதிரத்தை வெளியே எடுத்தான். சிறிய சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ஒரு திருமண மோதிரம் அது. அதை அவன் அவளிடம் நீட்டினான்.

"ஓ! மை... மை..."- அவளிடம் ஆச்சரியம் ஒரு நீண்ட பெருமூச்சுடன் வெளிப்பட்டது. அப்போது அவளுடைய கண்களுக்கு அந்த வைரக் கற்களைவிட பிரகாசம் இருந்தது.

"உனக்கு இதைப் பிடிச்சிருக்கா?"- அவன் கேட்டான்.

"ப்யூட்டிஃபுல்... ப்யூட்டிஃபுல்... சிம்ப்ளி மார்வலஸ்"- அவளால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.

"உன்னை விட இது ஒண்ணும் ப்யூட்டிஃபுல் இல்ல..."- அவன் சொன்னான். அதைக் காதில் வாங்காமலே அவள் தன்னுடைய இடது கையின் மோதிர விரலை அவனுக்கு நேராக நீட்டினாள்.

அவன் மெதுவாக மிகவும் கவனத்துடன் அந்த மோதிரத்தை அவளுடைய விரலில் அணிவித்தான். மிகவும் மெலிந்து போயிருந்த விரலில் அது இறுக்கமற்று கிடந்தது.

அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல், என்ன கூறுவது என்று தெரியாமல் உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த உணர்ச்சிப் பெருக்குடன் அவளையே உற்றுப் பார்த்தவாறு அவன் அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

"என்ன, கனவு காணுறீங்களா?" அவனுடைய கையைத் தட்டியவாறு நிர்மலா சொன்னாள்.

அப்போதுதான் அவன் சிந்தனையிலிருந்து திடுக்கிட்டு விடுபட்டான்:

அப்போது அவள் கவலையுடன் கேட்டாள்:

"நீங்க எதையாவது மறந்துட்டீங்களா?"

"என்ன சொன்னே?"

அவள் உதடுகளை குவித்துக்கொண்டு அவனையே உற்றுப் பார்த்தாள்.

"ஓ! மை டியர்! - அவன் உரத்த குரலில் கத்தினான்.

உரத்த குரலில் அவ்வாறு கத்தியவாறு அவன் அவளுடைய மார்பின் மீது சாய்ந்தான். பிறகு ஒரு பைத்தியக்காரனைப் போல அவன் அவளுடைய நெற்றியிலும் முன் தலையிலும் கன்னத்திலும் மாறி மாறி தொடர்ந்து முத்தங்களைப் பதித்தான்.

"மை டார்லிங்... மை ஒன்லி டார்லிங்..." அவன் நிறுத்தாமல் கூறிக் கொண்டேயிருந்தான். அவன் மனக்கட்டுப்பாட்டை முழுமையாக அப்போது இழந்திருந்தான்.

அவளுடைய தளர்ந்து போன கொடிகளையொத்த கைகள் அவன் மீது கிடந்தன.

இரண்டு பேர்களின் கண்களிலிருந்தும் அணை திறந்ததைப் போல கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

நிமிடங்கள்! பெருமூச்சு விட்டு நின்றிருந்த நீண்ட நிமிடங்கள்!

சுய உணர்வு இல்லாமல் போன நிமிடங்கள்!

அந்த நீண்ட நிமிடங்களின் இறுதியில் அவன் மெதுவாக அவளுடைய தளர்ந்து போன கைகளுக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட போது அவள் கண்களை மூடி படுத்திருந்தாள்- மயக்கத்தில் இருப்பதைப்போல, கனவு கண்டு கொண்டிருந்ததைப் போல.

கட்டிலிலிருந்து ஓசை எதுவும் உண்டாக்காமல், அசைவு எதுவும் இல்லாமல் அவன் எழுந்து நிற்க முயற்சித்தபோது, அவள் திடீரென்று கண்களைத் திறந்தாள்.

அப்போது அவளுடைய உதடுகள் என்னவோ கூறுவதற்காகத் துடித்தன. மலர முயற்சிக்கும் பூவிதழ்களைப் போல அவை நடுங்கின.

"சசி..."- அவள் அழைத்தாள்- ஒரு கிளிக்குஞ்சின் அழுகையைப்போல மெல்லிய குரலில். அவள் என்னவோ கூற முயற்சிக்கிறாள் என்பது அவனுக்கும் புரிந்தது. அவன் முகத்தைக் குனிந்துகொண்டு அவளையே பார்த்தான்.

"சசி, நீங்க வீட்டுக்குப் போயிட்டா வந்தீங்க?"

"இல்ல... உன்னைப் பார்க்காம நான் வீட்டுக்குப் போவேன்னு நினைச்சியா?"

"அப்படின்னா போயிட்டு வாங்க. அங்கே அப்பாவும் அம்மா£வும் காத்திருப்பாங்கள்ல?"

"இல்ல, நிர்மலா... நான் யாருக்கும் முன்கூட்டி சொல்லாமத்தான் வந்திருக்கேன். நான் வந்தது உன்னைப் பார்க்கமட்டும்தான்..."

"இருந்தாலும் போயிட்டு வாங்க. நீங்க வர்றதுக்குள்ள என் உடல் நிலையும் சரியாயிடும்"- அவள் சொன்னாள்.

சசி அதற்கு 'சரி' என்று தலையை ஆட்டினாள்.

கடைசியாக விடை பெறுவதற்காக அவன் மீண்டும் உள்ளே சென்ற போது அவள் முதல் பிரசவம் முடிந்து குழந்தையை முதல் தடவையாகப் பார்க்கும் தாயைப் போல தன் கை விரலில் இருந்த வைர மோதிரத்திலிருந்து கண்களை எடுக்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுடைய உதடுகளுக்கிடையில் மலர்ந்து கொண்டிருந்த முல்லை மலர் அப்போது அமைதியாக இருந்தது. அந்த நட்சத்திரங்களெல்லாம் இருண்ட மேகங்களுக்குள் மறைந்து போயிருந்தன.

"நான் போயிட்டு வர்றேன்"- சசி சொன்னான்.

அவள் 'சரி' என்று தலையை ஆட்டினாள்.

அவனுடைய உதடுகள் அவளுடைய தகித்துக் கொண்டிருந்த நெற்றியில் மெதுவாக முத்தமிட்டன. சில நிமிடங்கள் அவை அங்கேயே இருந்தன. கடைசியில் கண்களைத் துடைத்தவாறு அவன் திரும்பி நடந்தபோது அவள் அழைத்தாள்: "சசி..."

அவன் திரும்பிப் பார்த்தான்.

"சசி... ஐ... ஐ லவ் யூ..."- பலமே இல்லாத மெல்லிய குரலில் அவள் சொன்னாள்.

அப்படியே திரும்பிப் பார்த்தவாறு சிறிது நேரம் அவன் அங்கேயே நின்றிருந்தான்- எதுவும் பேசாமல்...

கூடத்தின் இருட்டுக்குள் அப்போது நடந்து போய்க் கொண்டிருந்த சசிக்குப் பின்னால் அந்த இரண்டு பேரும் இனி எந்தக் காலத்திலும் ஒன்று சேர முடியாதபடி அவர்களுக்கிடையில் இருந்த அந்த படுக்கையறை கதவை விதியின் கரங்கள் அப்போது நிரந்தரமாக அடைத்தது.

மாலை நேரத்திற்கு முன்பே இருள ஆரம்பித்து விட்டிருந்த வானத்தில் காட்டு யானைகளைப் போல கூட்டம் கூட்டமாக கருமேகங்கள் திரண்டு நின்றிருந்தன. குளிர்ந்த ஈரக் காற்றுக்கு பலம் ஏறியது.


அது சீறிப் பாய்ந்து வேகமாக அடிக்க ஆரம்பித்தது. கருமேகங்கள் திரண்டு ஆர்ப்பரித்தன. கண்ணைக் கூசச் செய்யும் மின்னல் கீற்றுகள் நாலாபக்கங்களிலும் வெள்ளி நாகங்களைப் போல சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. பெருமழையில் சிக்கிய மரக்கிளைகள் பேய் பிடித்த பெண்களைப் போல முடிவை அவிழ்த்துவிட்டு ஊழித் தாண்டவம் ஆட ஆரம்பித்தன. திடீரென்று மழை விழத் தொடங்கியது. பாறைக் கற்களைப்போல மழைத்துளிகள் வீட்டிற்கு வெளியே விழுந்து கொண்டிருந்தன.

திடீரென்று மின்சாரம் இல்லாமற் போனது. வீட்டிற்குள் இருள் நிறைந்தது. அப்போதும் கட்டுப்பாடில்லாமல் பெருமழை பயங்கர ஆரவாரத்துடன் பெய்து கொண்டிருந்தது.

"அம்மா"- நிர்மலா அழைத்தாள்.

"என்ன மகளே"- அவள் அழைப்பதைக் கேட்ட மாதவி அம்மா தன் மகள் இருக்குமிடத்திற்கு வேகமாக ஓடி வந்தாள்.

"அம்மா எனக்குப் பயமா இருக்கு..."- மகள் சொன்னாள்.

"எதுக்குப் பயப்படணும்? மழை இப்போ நின்னுடும். அதுவரை நான் உன் பக்கத்துலயே உட்கார்ந்திருக்கேன். நீ பயப்படாம படுத்திரு" என்று கூறியவாறு மாதவி அம்மா கட்டிலின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தாள்.

அப்போது பயங்கரமான ஒரு சத்தத்துடன் வெளியே ஏதோவொன்று தரையில் விழுவதைப் போல இருந்தது.

அம்மாவும் மகளும் நடுங்கிப் போனார்கள்.

"என்னம்மா அது!" தன் தாயின் கையை இறுகப் பற்றியவாறு நிர்மலா கேட்டாள். அவளுடைய உடல் தலை முதல் கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தது.

"என்னன்னு பார்க்குறேன்" என்று கூறியவாறு மாதவி அம்மா மெதுவாக எழுந்து சென்று அடைக்கப்பட்டிருந்த சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள். மடை திறந்த வெள்ளத்தைப் போல காற்று படுவேகமாக உள்ளே பாய ஆரம்பித்தது.

வெளியே ஆக்கிரமித்திருந்த கடுமையான இருட்டில் மாதவி அம்மாவிற்கு எதுவும் தெரியவில்லை.

அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்! சிறிதும் எதிர்பாராமல் அப்போது அங்கு வெள்ளி முலாம் பூசிக்கொண்டு தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் அவளால் அதைப் பார்க்க முடிந்தது. அந்த மிகப்பெரிய வாகை மரம் அடியோடு பெயர்ந்து கீழே விழுந்திருந்தது. அது அங்கு விழுந்ததற்குப் பதிலாக வீட்டின் மீது விழுந்திருந்தால்...? மாதவி அம்மா அதிர்ச்சியடைந்து நின்றிருந்தாள்.

"இந்த மரம் வளர்ந்து பெருசாயி பூ பூக்குறப்போ அதைப் பார்க்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்"- அப்போது அந்த அடர்ந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒலித்த அந்தக் குரலை அவள் கேட்டாள். பல வருடங்களுக்கு முன்பு அவளுடைய கணவர் சொன்ன வார்த்தைகள் அவை. அவளுடைய உடல் கால் முதல் தலை வரை நடுங்கியது. உடம்பு முழுக்க மயிர்கள் சில்லிட்டு நின்றன.

"அம்மா"- நிர்மலா மீண்டும் அழைத்தாள்.

வேகமாகச் சாளரத்தை மூடிய மாதவி அம்மா தன் மகள் இருக்குமிடத்திற்கு வந்து மீண்டும் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள்.

"நம்ம அந்தப் பெரிய வாகை மரம் சாலையில விழுந்து கிடக்கு. அது இந்தப் பக்கமா விழுந்திருந்தா...?"

அப்போது தன் தாயின் கையை இறுகப் பற்றியவாறு நிர்மலா சொன்னாள்:

"மம்மீ... நீங்க கவலைப்படாதீங்க. நான் சசி கூட போக மாட்டேன். உங்களைத் தனியா விட்டுட்டு நான் வேற எங்கேயும் போகல!"

"என் மகளே"- தன் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மாதவி அம்மா உரத்த குரலில் அழுதாள்.

வானத்தைப் பிளந்து கொண்டு பயங்கர ஆர்ப்பரிப்புடன் ஒலித்துக் கொண்டிருந்த இடிச் சத்தத்தில் மாதவி அம்மாவின் அழுகைச் சத்தம் கரைந்து போனது.

அப்போது மின்சாரம் வந்தது.

விளக்குகள் மீண்டும் எரிந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.