Logo

குட்டி அக்கா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6552
kutti akka

சுராவின் முன்னுரை

ம்.டி.வாசுதேவன் நாயர் (M.T.Vasudevan Nair) ‘குட்டியேடத்தி’ என்ற பெயரில் மலையாளத்தில் எழுதிய கதையை ‘குட்டி அக்கா’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

குட்டி அக்காவிற்கும், வாசு என்ற சிறுவனுக்கும் இடையே உள்ள ஆழமான அன்பையும், பாசத்தையும் மையமாகக் கொண்ட கதை இது.

வாசுவின் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் குட்டி அக்காவின் வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. எப்போதும் கண்ணீருடன் வாழும் அவள் ஒரு நாள் எல்லோரையும் அழச் செய்கிறாள். எப்படி?

நம் இதயங்களில் குட்டி அக்காவும் வாசுவும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்தக் கதை 1971ஆம் ஆண்டில் ‘குட்டியேடத்தி’ (Kuttiyedathi) என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வந்தது. பி.என்.மேனன் இயக்கி பலரின் பாராட்டையும் அது பெற்றது.

உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


பெரியம்மாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். குட்டி அக்காவும் ஜானு அக்காவும்.

ஜானு அக்கா பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். நல்ல வெள்ளை நிறம். நீல நிற நரம்புகள் தெளிவாகத் தெரியும் கைகள் வாழைக் குருத்தைப் போல மினுமினுப்பாக இருக்கும். அவள் அருகில் வரும்போது சந்தன சோப்பின் வாசனை இருக்கும்.

எப்போதும்  அவளுடைய முண்டும் ரவிக்கையும் வெள்ளை வெளேரென்று இருக்கும். ஆனால், எனக்கு அதிக விருப்பம் குட்டி அக்காவிடம்தான். குட்டி அக்கா கறுப்பு நிறத்தில் இருப்பாள். ஜானு அக்காவின் கருத்துப்படி, தொட்டு கண்ணில் மை இடலாம். சிரிக்காமல் இருக்கும்போதுகூட பெரிய இரண்டு பற்களின் நுனியும் வெளியே தெரியும். அவளுடைய கையைப் பிடிக்கும்போது, காய்ந்த விறகுக் கொள்ளியைப் பிடிப்பதைப்போல இருக்கும். என்ன ஒரு சொரசொரப்பு! கறுத்த புள்ளிகள் போட்ட ரவிக்கையைத்தான் அவள் தினமும் அணிந்திருப்பாள். அவற்றில் நிறைய அழுக்கு இருக்கும். முண்டில் மண்ணும் கரியும் இல்லாத நேரமே இல்லை. அருகில் வரும்போது, வியர்வை, எண்ணெய், நனைத்துக் காயப் போடாமல் அணிந்த  ஈரத்துணி ஆகியவற்றின் வாசனை வரும்;வாந்தி வரும்.

ஒரு விஷயம் விட்டுப் போய்விட்டது. குட்டி அக்காவின் இடது காதில் ‘மணி’ இருக்கும். மணி என்றால் ஒரு துண்டு சதை  துருத்திக் கொண்டு நின்றிருக்கும். அவள் அருகில் வந்து நிற்கும் போது, பேசும்போது, தலையை விரித்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது எல்லாம் நான் ‘மணி’யையே பார்த்துக் கொண்டிருப்பேன். குட்டி அக்கா அதைத் தொடுவதைப் பார்க்கும்போது, வெறுப்பு தோன்றுவது எனக்குத்தான்.

எனினும் குட்டி அக்காவை எனக்குப் பிடிக்கும்.

வீட்டில் யாருக்கும் குட்டி அக்காவைப் பிடிக்காது. பெரியம்மா பார்க்கும்போதெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டுவாள். காரணங்கள் எப்போதும் ஒன்றுதான். அடக்கம் இல்லை, நாணம் இல்லை. தோட்டம் முடியப்போகிற காலத்தில் பூ பூக்கும் என்றொரு தத்துவத்தையும் திட்டுவதோடு சேர்த்து பெரியம்மா கூறுவாள். அதனாலும் முடியவில்லையென்றால், “நீ ஆகுற காலத்தில் நக்கப் பூவும் நாராயணக் கல்லும் இருக்காது” என்பாள்.

எப்போதும் கேட்கக் கூடியதுதானே என்பதாக இருக்கலாம்- குட்டி அக்கா அப்போது சத்தம் போட்டுச் சிரிப்பாள். அதைப் பார்த்தால் பெரியம்மாவிற்கு கோபம் பயங்கரமாக வரும். பக்கத்தில் கிடக்கும் வெட்டுக் கத்தியையோ மரக்கொம்பையோ எடுத்து அடிப்பதற்காக ஓங்கியவாறு கூறுவாள்: “போ... என் முன்னால இருந்து போயிடு. இது என் வயித்துல உண்டானப்போ என் பிறவியே பாழாயிடுச்சு.”

பெரியம்மா கூறுவதை குட்டி அக்கா பெரும்பாலும் கேட்க மாட்டாள். என்னுடன் நடந்து திரிந்து விளையாடுவதில்தான் அவளுக்கு விருப்பம் அதிகம். வேலிக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு கல் விளையாட்டு விளையாடுவாள். மணலில் குழி தோண்டி வண்டு படித்துத் தருவாள். இவையெல்லாம் பெரியம்மாவின் கண்களில் படாமல் நடக்க வேண்டும். என்னுடைய தாயும் பார்க்கக்கூடாது. பார்த்தால் திட்டுதல் கிடைப்பது எனக்கல்ல; குட்டி அக்காவிற்குத்தான்.

“மாளுக்குட்டி!”

பெரியம்மா அழைப்பாள் -இடி முழங்குவதைப் போன்ற குரலில்.

அவள் அழைப்பதைக் கேட்காவிட்டால் அதற்குப் பிறகும் ஒரு அழைப்பு கேட்கும்.

“அடியே நாசமாப் போறவளே!”

“அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு?”

குட்டி அக்காவிற்கு அது பிடிக்காது.

“ஒண்ணைப் பார்க்கப் போற பெண்ணடி நீ? நீ என்ன சின்ன குழந்தையாடீ? தெரியாமலா ரெண்டு ரவிக்கைகளோட ஒருத்தன் வராமல் இருக்கான்?”

குட்டி அக்கா விளையாடித் திரியக்கூடாது. தோஷம் இருக்கிறது- குட்டி அக்காவைத் தேடி ஒரு ஆள் வரப்போவது இல்லை!

பெரியம்மா என்னைத் திட்டமாட்டாள். அறிவுரை கூறுவாள்:

“வாசு, நீ ஒரு ஆண் பிள்ளை. நீ இந்தப் பெண்ணின் வாலைப் பிடிச்சுக்கிட்டு திரியக்கூடாது.”

பெரியம்மாவிற்கு நானும் ஒரு தத்துவத்தைக் கூற விரும்பினேன்.

‘கல் ஆடும் முற்றத்தில் நெல் ஆடாது.’

குட்டி அக்கா ஒரு இடத்தில் அடங்கி இருக்க மாட்டாள். எல்லோருடனும் சண்டை போடுவாள். குளத்தின் படித்துறைக்கு ஒவ்வொரு நாளும் போவதே ஒரு பிரச்சினையை உண்டாக்குவதற்குத்தான். மீனாட்சி அம்மாவின் வெள்ளிக் கிண்ணத்தை நீருக்குள் வீசி எறிந்துவிட்டாள். சும்முக் குட்டியின் முதுகில் அடித்து ஒரு வழி பண்ணி விட்டாள். ‘நீர் பிசாசு’ என்று  அழைக்கப்பட்ட மூகாமி அம்மாவின் உடல் மீது  நீரைத் தெறிக்கும்படி செய்து விட்டாள். இப்படிப் பல குற்றச்சாட்டுகள். அம்மாவும் பெரியம்மாவும் நூறு தடவை தடுத்தாலும், நாழியில் நீர் கோரத்தான் செய்வாள்.

மதிய நேரத்தில் குட்டி அக்காவிற்கென்று ஒரு சுற்றும் பழக்கம் இருந்தது. வீட்டைத் தாண்டி இருக்கும் வளைவு, வடக்குப்பக்க வீடு, காளியின் வீடு, ஆமினும்மாவின் வீட்டு வாசல் ஆகிய எல்லா இடங்களிலும் சுற்றி நடந்து விட்டுத்தான் திரும்பி வருவாள். குட்டி அக்கா, ‘ஒண்ணைப் பார்க்கப் போகும் பெண்ணாக இருப்பதால், அப்படி நடந்து திரியக்கூடாது’ என்று என் தாய் சொன்னாள், பெரியம்மா சொன்னாள். பெரியம்மா புளியமரத்தின் குச்சி ஒடியும் வரை அடித்துப் பார்த்தாள். ஆனால், குட்டி அக்கா அதை நிறுத்தவில்லை.

சாப்பிட்டு முடித்துவிட்டால் பெரியம்மா நடுக்கூடத்தில் படுத்துத் தூங்க ஆரம்பித்து விடுவாள். அம்மா வடக்குப்பக்க அறையில் படுப்பாள். ஜானு அக்காவின் அறை மாடியில் இருக்கிறது. சாப்பிட்டு முடித்துவிட்டால் வெற்றிலை போட்டு உதட்டைச் சிவப்பாக்கிக் கொண்டு மாடியிலிருக்கும் அறையின் படியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அவள் ‘சரோஜினியின் கொடுமை’யைப் பாட ஆரம்பித்துவிடுவாள்- மெதுவாகத்தான். ஜானு அக்காவிற்குப் படிக்கத் தெரியும். எழுதுவதற்கும் படித்திருக்கிறாள். குட்டி அக்காவுடன் சண்டை போடும்போதெல்லாம் அவள் கூறுவாள்:

“குட்டி அக்கா, நான் இரண்டெழுத்து படிச்சவளாக்கும்.”

இடையில் அவ்வப்போது நான் ஜானு அக்காவின் அறையைத் தேடிச் செல்வேன். பாட்டுப் புத்தகம் படிக்காத வேளைகளில் அவள் கண்ணாடிக்கு முன்னால் உட்கார்ந்து, நெற்றியில் தலைமுடியைச் சுருட்டி வைத்துகொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுடைய உடலை எங்காவது தொட்டு விட்டால் அவள் கூறுவாள்:

“நீ என் உடம்பை அழுக்காக்கி விட்டாய்.”

படுக்கையைத் தொடக்கூடாது. பாட்டுப் புத்தகத்தைத் தொடக்கூடாது. பெட்டியின்மீது வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியையும் சாந்து புட்டியையும் கண்மை டப்பாவையும் தொடக்கூடாது. உண்மையாகச் சொல்லப்போனால், ஜானு அக்காவின் மை டப்பாவைப் பார்ப்பதற்காகத்தான் நான் அங்கு போகிறேன். நல்ல அழகான மை டப்பா. அதில் முக்கால் வட்டத்தில் ஒரு கண்ணாடி பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் நான் அறைக்குள் நுழைந்தவுடன், ஜானு அக்கா பதைபதைப்பு அடைந்து விடுவாள். “பையா, பேசாமல் இரு. இதைத் தொடக் கூடாது... பையா, இதைத் தொடாதே... பையா, அதைத் தள்ளி விட்டுடாதே.” 


அவள் என்னைப் பெயர் சொல்லி அழைத்தால் என்ன? என் பெயர் ‘பையன்’ அல்ல. குட்டி அக்கா என் பெயரைக் கூறித்தான் அழைப்பாள். பாசத்துடன் அவள் ‘வாசு...’  என்று நீட்டி அழைப்பாள். அதைக் கேட்பதற்குத்தான் எனக்குப் பிடிக்கும்.

குட்டி அக்கா அறைக்குள் நுழைந்தால், ஜானு அக்கா பெரியம்மாவை அழைத்து அழ ஆரம்பத்து விடுவாள். எதைத் தொட்டாலும் அழுகைதான். தொட்டது எதுவாக இருந்தாலும், அது கெட்டுப் போய்விட்டது என்பாள். பெரியம்மா கூறுவாள்: “அடியே -அவள் உன்னுடைய தங்கைதானே?”

குட்டி அக்கா அதற்கு பதில் கூறுவாள்:

“நான் அவளுடைய அக்காதானே?”

ஒருநாள் உலரப் போட்டிருந்த ஒரு ஜரிகை போட்ட முண்டை எடுத்து குட்டி அக்கா அணிந்து பார்த்தாள். அதைப் பார்த்ததும், ஜானு அக்காவால் தாங்க முடியவில்லை.

“அவள் அதை கரி ஆக்கிட்டா... இனி நான் கோவிலுக்குப் போறப்போ... என் கடவுளே, நான் என்ன செய்வேன்!”

குட்டி அக்கா தன் கைகள் இரண்டையும் விரித்துக் காட்டியவாறு கேட்டாள்:

“எங்கேடி என் கையில கரி இருக்கு?”

அதைக் கேட்காமல் ஜானு அக்கா உரத்த குரலில் சொன்னாள்:

“அம்மா இந்த முண்டை கரி ஆக்கிட்டா.”

“நான் என்னடி தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவளா?”

“இருக்கலாம்...”

“நீ பெரிய அழகிதான்...”

குட்டி அக்கா முண்டை அவிழ்த்து, சுருட்டி, அவளுடைய முகத்தில் வெறுப்புடன் எறிந்தாள். அவள் அப்படிச் செய்ததுதான் சரி என்று நான் நினைத்தேன். அவளுக்கு அது தேவைதான்.

“குட்டி அக்கா, நான் அழகாக இருப்பதால் உனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லையே?”

“உன் திமிர் தனத்தை என்கிட்ட வச்சுக்காதே. தெரியுதா பெண்ணே? கழுத்தை நான் அடிச்சு திருப்பிடுவேன். வா வாசு...”

குட்டி அக்கா என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் இருக்கும் மாமரத்தடிக்கு நேராகச் சென்றோம். வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். மாங்காய் எறிவதற்கு சரியான நேரம் அதுதான்.

“நாம மாங்காய் எறிவோமா?”

“குட்டி அக்கா, உங்களுக்கு கல் எறியத் தெரியுமா?”

“ஏன்? எனக்கு தெரிஞ்சிருக்கக் கூடாதா?”

“பெண்களுக்கு மாங்காய் எறியத் தெரியுமா?”

“இந்தா பாரு...”

அது எனக்கு மிகவும் சுவாரசியமான விஷயமாக இருந்தது. ஆண்களுக்குத்தான் கல் எறியத் தெரியும் என்று நான் நினைத்திருந்தேன்.குட்டி அக்கா எறிவதற்கான கற்களைப் பொறுக்கியபோது அவள் சொன்னாள்:

“கல் எடுத்து எறிந்தால் சத்தம் கேட்கும். குச்சி போதும்.”

சத்தம் கேட்டால் குஞ்ஞு நம்பூதிரி வாசலுக்கு வந்து தன் தலையில் கை வைத்துகொண்டு உரத்த குரலில் சத்தம் போடுவார். குஞ்ஞு நம்பூதிரி மிகவும் மோசமான மனிதர். கீழே விழுந்து கிடக்கும் ஒரு மாங்காயைக்கூட எடுப்பதற்கு அவர் சம்மதிக்கமாட்டார்.

குட்டி அக்கா குச்சியை வெட்டினாள்.

“நீ தள்ளி நில்லு.”

நான் மரியாதையாக விலகி நின்றேன். குட்டி அக்கா குச்சியை வீசி எறிந்தாள். பார்த்தபோது, அது எவ்வளவு உயரத்திற்குப் போயிருந்தது! துப்ரன் எறிந்தால்கூட அந்த அளவிற்கு போயிருக்காது. எனக்கு தெரிந்த வரையில், அப்போது மிகவும் நன்றாக எறியக்கூடியவன் துப்ரன்தான்.

ஆனால், மாங்காய் விழவில்லை. குட்டி அக்கா மீண்டும் மீண்டும் எறிந்தாள். நான்காவது தடவை எறிந்தபோது, குச்சி மேலே இருந்த ஒரு கிளையில் சிக்கிக் கொண்டது. கவலையுடன் நான் குட்டி அக்காவைப் பார்த்தேன். இனி என்ன செய்வது?

அப்போது குட்டி அக்காவிற்கு எரிச்சல் உண்டானது.

“வாசு... நீ அந்த வேர்மேல ஏறி நில்லு. நம்பூதிரி அய்யா வாசலுக்கு வர்றப்போ சொல்லிடு.”

நான் அவள் சொன்னபடி உயரமான வேரின் மீது ஏறி காவலுக்கு நின்றேன். குட்டி அக்கா என்னதான் செய்கிறாள் என்று பார்த்தேன். அவள் சுற்றிலும் கண்களை ஓட்டினாள். அணிந்திருந்த முண்டின் கீழ் நுனி இரண்டையும் எடுத்து இடுப்பில் சொருகிய அவள் நேராக மாமரத்தில் ஏற ஆரம்பித்தாள்.

ஓ! அந்த அளவிற்கு நான் நினைத்திருக்கவில்லை.

வீட்டின் வாசலையும் மாமரத்தின் மேலேயும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு, வேர்மீது நான் நின்றிருந்தேன். அணிலைப் போல குட்டி அக்கா ஏறினாள். அதை ஜானு அக்கா பார்க்க வேண்டும். அவளுக்கு பொட்டு வைக்கவும், ‘சரோஜினியின் கொடுமை’யைப் படிக்கவும் மட்டும்தான் தெரியும். மரம் ஏறத் தெரியாது. மாங்காய் பறிக்கத் தெரியாது.

“இங்கே பார் வாசு.”

பார்த்தபோது, குட்டி அக்கா கிளையில் நின்று கொண்டு ஒரு காலை ஆட்டிக் கொண்டு சிரித்தாள். நான் கைகளைத் தட்டி சிரித்து விட்டேன். குட்டி அக்கா மாங்காயைப் பறித்து காய்ந்த இலைகள் மூடிக் கிடந்த இடத்தில் எறிந்தாள்.

அப்போது புதர்களுக்கப்பால் ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, குட்டி நாராயணன் நின்று கொண்டு கேலியாகச் சிரித்துக் கொண்டிருந்தான். குட்டி அக்கா அவனைப் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.

“பெண் மரத்தில் ஏறி இருக்கிறாள்... பெண் மரத்தில் ஏறி இருக்கிறாள்...”

அவன் சத்தம் போட்டு சொன்னான். அந்தப் பையன் ஏன் இப்படிச் சத்தம் போடுகிறான்?

இல்லாவிட்டாலும் அவன் அப்படித்தான். குட்டி அக்கா பதைபதைப்பு எதுவும் இல்லாமல் கீழே இறங்கி வந்தாள். இடுப்பில் சொருகிய முண்டின் முனைகளை எடுத்து கீழே விட்ட அவள், மாங்காய்களைப் பொறுக்கிச் சேர்த்தாள். அப்போதும் குட்டி நாராயணன் நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

“பெண் மரத்தில் ஏறி விட்டாள்-பெண் மரத்தில் ஏறி விட்டாள்!”

‘கடவுளே! குஞ்ஞு நம்பூதிரி கேட்டுவிடக் கூடாது!’ -நான் வேண்டிக் கொண்டேன். தேக்கு இலையில் மாங்காய்களை வைத்து மூடி என்னிடம் தந்துவிட்டு, குட்டி அக்கா நாராயணனின் அருகில் சென்றாள். எதுவும் கேட்காமல் அவனுடைய கன்னத்தில் ஒரு அடி கொடுத்தாள்.

அவனுக்கு அது வேண்டும் பெண்கள் மரம் ஏறினால் என்ன? அப்போது அவன் எப்படி பழிக்குப் பழி வாங்குவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அதைப் புரிந்துகொண்டதால் இருக்க வேண்டும். குட்டி அக்கா கையை உயர்த்திக் கொண்டு சொன்னாள்:

“கெட்ட எருமை! போடா.”

குட்டி நாராயணன் அங்கிருந்து கிளம்பினான்.ஓடினான் என்பதுதான் சரியாக இருக்கும்.

ஆனால் அந்த வழக்கு பெரியம்மாவிற்கு முன்னால் வந்தது. இரண்டு குற்றங்கள் முன் வைக்கப்பட்டன. ஒன்று- மாமரத்தில் ஏறியது. இரண்டு -ஆண் பிள்ளையான நாராயணனை அடித்தது.

“அடியே மாளுக்குட்டி, நீ மரத்தில் ஏறினியா?”

“ஏறினேன்.”


“ஏறினியாடீ?”

“ஏறினேன். அதற்கு என்ன?”

நான் பயந்து எதுவும் தெரியாதவனைப்போல அம்மாவிற்கு அருகில் போய் நின்றுகொண்டேன்.

“ஒண்ணை பார்க்கப் போகிற பெண் நீ. உண்மையாடீ?”

குட்டி அக்கா எதுவும் பேசவில்லை.

“ஆணுக்குப் பயப்படவில்லையென்றால், நான்கு வீடுகளின் தூணுக்காவது பயப்படணும்டி...”

அதற்கும் பதில் இல்லை.

“உன்னை நான் சரிப்படுத்துறேன்.”

தொடர்ந்து அடி விழும் சத்தம். ஒன்று...இரண்டு...மூன்று...

“இனிமேல் மரம் ஏறுவியா?”

ஒன்று...இரண்டு...மூன்று...

“இனிமேல் ஆண் பள்ளையை அடிப்பியா?”

ஒன்று.. .இரண்டு... மூன்று-

நான் காதுகளை மூடிக்கொண்டு வாசலுக்குச் சென்று நின்றேன். என்னால் முடியவில்லை. சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றபோது நடுமுற்றத்தின் ஓரத்தில் தூணில் சாய்ந்து உட்கார்ந்து அழுது கொண்டே பெரியம்மா தனக்குத்தானே கூறிக் கொண்டிருந்தாள்:

“இந்த வீட்டில் இப்படியொண்ணு பிறந்திடுச்சே என் குருவாயூரப்பா!”

நான் தயங்கி நின்றிருப்பதைப் பார்த்து பெரியம்மா அழைத்தாள். நான் பயத்துடன் அவளுக்கு அருகில் சென்றேன். ஆனால், பெரியம்மா என்னைப் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழுதாள்:

“நீ ஒரு ஆண் பிள்ளைடா மகனே. நாளைக்கு நீதான் இருக்கே.”

பெரியம்மாவின் பிடியிலிருந்து விலகி, நான் என் தாயின் அருகில் சென்றேன். அப்போது அம்மாவும் கண்களைத் துடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெரியம்மா எதற்காக அழுதாள்? அவள் அழாத நாள் இல்லை. பெரியம்மாவுக்கு யாரும் இல்லை என்று அம்மா சொன்னாள்.

பெரியம்மாவிற்கு யாருமில்லை... பெரியம்மாவிற்குப் பணமில்லை. என் தாய்க்கு ஒரு ஆண் பிள்ளை இருக்கிறேன். மாதந்தோறும் என் தந்தை பணம் அனுப்பி வைக்கிறார்.

என் தாய்க்கு பெரியம்மாவைப் பற்றி நினைக்கும்போது மனதில் கவலை உண்டாகிறது. அதைக் கூறும்போது தொண்டை அடைக்கிறது. ஒரு இரவு வேளையில் என் தாய் பல விஷயங்களையும் சொன்னாள். பெரியம்மா குட்டன் நாயரின் மனைவியாக இருந்தவள். குட்டன் நாயர் அந்தப் பெரிய குடும்பத்தின் தலைவராக இருந்தார். வியாபாரம் இருந்தது. பெரியம்மா அவருடைய வீட்டில்தான் வசித்தாள். இந்த வீட்டிற்கு வருவதும் போவதும் பல்லக்கில்தான்!

என் தாய் அப்போது சிறு குழந்தை. பெரியம்மாவுடன் போய் என் தாயும் அங்கு தங்கியிருக்கிறாள். என் தாய்க்கு கழுத்தில் அணிவதற்கு தங்கத்தாலான டாலரைச் செய்து தந்தது அவள்தான். தானியங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து பெரியம்மா கீழே இறங்கி வருவதே இல்லை. யாரும் பெரியம்மா கூறுவதற்கு எதிராக நடக்க மாட்டார்கள். ஊரில் உள்ளவர்களுக்கு பெரியம்மாவை மிகவும் பிடிக்கும். குளத்தின் படித்துறைக்கு மூன்று நாழிகள் நிறைய எண்ணெய்யை எடுத்துக் கொண்டுதான் பெரியம்மா போவாள். தேவைப்படுகிறவர்களுக்கெல்லாம் அவள் எண்ணெய்யை ஊற்றித் தருவாள். வருடத்தின் இறுதியில் வேட்டி தேவைப்படுபவர்களுக்கு வேட்டி; காசு கேட்பவர்களுக்கு காசு...

“எவ்வளவு கொடுத்த கையடா அவங்களோடது!” என்று என் தாய் கூறுவாள்.

ஆனால், பெரியம்மாவின் நல்ல காலம் ஒரு நாளில் திடீரென்று முடிந்தது. ஒரு இரவு வேளையில் குட்டன் நாயர் தன் கடையை அடைத்துவிட்டு வந்தபோது அவர் ஒரு மாதிரியாக இருந்தார். சாப்பிடுவதற்காக உட்கார்ந்த இடத்தில் அவர் வாந்தி எடுத்தார். நள்ளிரவு நேரத்தில் மரணத்தைத் தழுவினார்.

அப்போது குட்டி அக்காவுக்கு மூன்று வயது நடந்து கொண்டிருந்தது ஜானு அக்கா கைக்குழந்தையாக இருந்தாள் .

அதிகாலையிலேயே மருமகன் சாவியை வாங்கிக் கொண்டான். பிணத்தை எரிய வைப்பதற்கு முன்பே பெரியம்மாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள். துணைக்கு வேலைக்காரி பாருவும் இருந்தாள். பெரியம்மாவும் பிள்ளைகளும் துணிகளைச் சுமந்து

கொண்டு வந்த பாருவும் வீட்டிற்குள் வந்து நுழைந்ததை அம்மா நன்றாக ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்.

“எவ்வளவு கொடுத்த கையடா அவளுடையது! எல்லாம் விதி...”

முழங்கால்களில் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் பெரியம்மாவையே நான் பார்த்தேன்.

குட்டி அக்காவைப் பற்றி அப்போதுதான் எனக்கு நினைவு வந்தது. கீழே எங்கும் காணவில்லை. மேலே வந்தபோது புவனேஸ்வரி பூஜை செய்யப்படும் அறைக்குள் தேம்பி அழும் சத்தம் கேட்டது. பகல் நேரத்திலும் அந்த அறைக்குள் இருட்டாகவே இருக்கும்.

நான் சந்தேகத்துடன் உள்ளே நுழைந்தேன்.

“குட்டி அக்கா...”

குட்டி அக்கா நான் அழைத்ததைக் கேட்கவில்லை.

“குட்டி அக்கா...”

நான் குட்டி அக்காவின் அருகில் சென்று தோளைப் பிடித்துக் கொண்டு கேட்டேன்: “பெரியம்மா நிறைய அடிச்சிட்டாங்களா?”

அழுவதற்கு மத்தியில் குட்டி அக்கா முனகினாள்:

“ம்... ம்...”

“ரொம்பவும் வலிச்சதா?”

“ம்... ம்...”

“குட்டி அக்கா, பிறகு ஏன் அழறீங்க?”

குட்டி அக்கா என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, என் கன்னத்தில் கன்னத்தை அழுத்தி வைத்து கொண்டு சொன்னாள்:

“நான் அழல...”

வியர்வையாலும் கண்ணீராலும் நனைந்த மார்பில் முகத்தை அழுத்திக் கொண்டு படுத்திருந்தபோது, என்னுடைய நெஞ்சமும் அழுதது.

“வாசு, என்மேல உனக்குப் பிரியமா?”

“ஆமா...”

“என்னை யாருக்கும் பிடிக்கல...”

என் முகத்தில் கண்ணீர் விழுந்தது.

பல நேரங்களிலும் நான் சிந்தித்திருக்கிறேன். குட்டி அக்காவை யாருக்கும் பிடிக்கவில்லையா? பெரியம்மா திட்டுகிறாள். சில நேரங்களில் அடிக்கிறாள். என் தாயும் திட்டுகிறாள். ஜானு அக்கா அவளைப் பார்க்கவே விரும்பவில்லை.

குட்டி அக்கா கறுப்பு நிறத்தில் இருப்பதால் இருக்க வேண்டும். காதில் மணி உள்ளதால் இருக்க வேண்டும்.

ஜானு அக்காவை யாரும் திட்டுவதில்லை. அவளுக்கு நல்ல ஒரு ஆள் வருவான் என்று சொன்னார்கள்.

பெரியம்மாவிற்கு ஜானு அக்காமீது அதிக அன்பு இருந்தது. திருநாவாய்க்கு திருவிழாவிற்குச் செல்லும்போது ஜானு அக்காவைத்தான் தன்னுடன் அழைத்துச் செல்வாள். ஆரியம்பாடத்திற்கு கூத்து பார்க்கப் போகும்போது ஒருமுறை குட்டி அக்காவும் கிளம்பினாள். அப்போது பெரியம்மா திட்டினாள்: “பெண்ணே, பேசாமல் ஒரு இடத்தில் இரு.”

அதற்குப் பிறகு அழைத்தாலும் குட்டி அக்கா போகமாட்டாள். வடக்கு வீட்டில் இருக்கும் பார்வதி அம்மாவின் குழந்தையைப் பார்க்க போனபோது, சோலையில் இருக்கும் பெரியம்மாவின் உடல்நிலை மோசமாக, அதை பார்க்க போனபோது, காலாயக்களத்தில் அய்யப்பன் விளக்கிற்குப் போகும்போது- எல்லா வேளைகளிலும் பெரியம்மா அழைத்தாள்.

ஆனால் குட்டி அக்கா சொன்னாள்: “அம்மா, உங்ககூட அழைச்சிட்டுப் போற அளவுக்கு நான் அழகானவள் இல்லை.”

அதைக் கேட்டவுடன் பெரியம்மாவின் குணம் மாறியது. அவள் சபக்க ஆரம்பித்தாள்: “அறிவு இல்லாதவளே! நீ இருக்கும் இடத்தில் முத்தங்காய் புல்கூட முளைக்காது.”

குட்டி அக்காவிற்கு சாபங்கள்மீது பயம் இல்லை. சாத்தான், பிரம்மராட்சசன் ஆகியோருக்கும்கூட பயப்படுவது இல்லை. குட்டி அக்காவின் சீடனான நானும் தைரியசாலிதான்.


அவள் எனக்குப் பல விஷயங்களையும் கற்றுத் தந்திருக்கிறாளே! பிரம்மராட்சசன் வந்தால், திரும்பிப் பார்க்காமல் ஒரு கல்லை எடுத்து எறிந்தால் போதும். சாத்தான் வந்தால்...? ‘நாராயணாய நம’ என்று சத்தம் போட்டு மூன்று தடவை கூற வேண்டும். நாராயணனின் பெயரைக் கேட்டால், சாத்தான் நிற்க மாட்டான்.

ஆனால், பகவதிக்கு நான் பயந்தேன். மாடியில் உள்ளே இருக்கிறது பகவதி. அதற்கு முன்னால் எச்சிலுடனோ, சுத்தமில்லாமலோ நடக்கக் கூடாது. மீன் கொண்டு போகக்கூடாது. மாடியின் வாசலுக்கு நேராகப் படுக்கக்கூடாது. ஏதாவது பகவதிக்கு விருப்பமில்லாததைச் செய்தால், அதை நினைத்து பார்ப்பதற்கே பயமாக இருந்தது. ‘அம்மா வித்தினை எறிவாள்.’ அம்மா என்றால் பகவதி. வித்து என்றால் அம்மை நோய் என்று அர்த்தம்.

மாடி அறைக்குள் எனக்கு மட்டுமே நுழைவதற்கு அனுமதி இருந்தது. செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக் கிழமையும் விளக்கு ஏற்றுவதும் கற்பூரம் கொளுத்துவதும் நான்தான். சிறிய பெண் குழந்தைகள் உள்ளே செல்லலாம். வயதான பெண்களும் உள்ளே நுழையலாம். மற்றவர்கள் உள்ளே போக முடியாது.

குட்டி அக்கா ஒருமுறை மாடி அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, குத்து விளக்கில் இருந்த எண்ணெய்யை எடுத்து தன் தலையில் தேய்த்தாள். பெரியம்மா அதைப் பார்த்துவிட்டாள்.

“நாசம் பண்ணிட்டே. மாளுக்குட்டி, நீ என்ன காரியம்டி செஞ்சே?”

“என்னம்மா... எண்ணையை எடுக்கக்கூடாதா?”

பெரியம்மா தலையில் கையை வைத்துக் கொண்டு சொன்னாள்:

“உன்னுடைய சிறுப்பிள்ளைத்தனமான செயல்களால் இங்கே எல்லாம் முடியப் போகுது. என்ன சொல்றது? பார்த்துக்கிட்டு இருக்கேல்ல... அதோகதின்னு ஆகப் போகுது!”

பெரியம்மா அன்றே நம்பூதிரியை வைத்து புண்ணிய காரியங்களைச் செய்தாள். அதற்குப் பிறகுகூட எப்படிப்பட்ட ஆபத்துக்களெல்லாம்  வரப் போகின்றனவோ என்று பயத்துடன்தான் பெரியம்மா இரண்டு  மூன்று நாட்களையும் கடத்தினாள்.

மாடியில் பகவதியின் புதையல் இருக்கிறது என்று எல்லோரும் நம்பினார்கள். அப்புக்குட்டப் பணிக்கர் வந்து ராசி வைத்தால் கூறுவார்: “இந்த வீட்டில் ஒரு செவ்வாய் இருக்கிறது. செவ்வாய் என்றால் பகவதி. உக்கிரமூர்த்தி... மழை போல வந்ததைப் பனிபோல ஆக்கிவிடும். செவ்வாயைச் சேர்ந்த தனம் இங்கே இருக்கு. புதையல் நிறைந்த வீடு இது.”

அந்தப் ‘புதைய’லைத் தொட்டுப் பார்க்க ஒருமுறை குட்டி அக்கா முயன்றாள்.

குட்டி அக்கா சொன்னாள்:

“நாம மாடி அறையைத் தோண்டிப் பார்க்கணும்.”

நான் நடுங்கிவிட்டேன். பகவதி இருக்கும் மாடி அறையைத் தோண்டுவது என்றால்...!

“பயப்பட வேண்டாம். நீ காவலுக்கு நில். புதையல் இருக்குதான்னு பார்க்கலாம்ல!”

அம்மா வித்து எறியும் விஷயத்தை நினைத்தவுடன்,நான் தளர்ந்து போய் விட்டேன்.

“பகவதியின்...”

“பகவதிக்கு எதற்குப் புதையல்?”

சிந்தித்துப் பார்த்தபோது, அது சரிதான் என்று பட்டது. அங்கு மண்ணுக்குள் புதையல் இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அது கிடைத்தால், செய்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனிலும் பகவதி வெறுமனே விடுமா?

“தோஷம் வராதா?”

“அதற்கு ... யாருடா புதையலை எடுக்கப் போறது? புதையல்! பொய் சொல்றாங்கடா. தரையை நாம தோண்டணும். பிறகு... அந்தப் பணிக்கர் சுவடிப்பையை எடுத்துக் கொண்டு இங்கே வரட்டும்.”

குட்டி அக்காவின் எண்ணம் நல்லதற்காகத் தெரியவில்லை. குட்டி அக்கா மாடி அறைக்குள் நுழையவே கூடாது. வெளியே விலகியிருக்கும் பெண்கள் உள்ளே வந்தால் எல்லாம் அசுத்தமாகி விடும். அது போதாதென்று, மாடி அறையின் தரையைத் தோண்டுவது வேறு! சிந்தித்துச் சிந்தித்து இரவில் தூக்கமே வரவில்லை. வெளியே சொல்லவும் முடியாது. சொன்னால் குட்டி அக்காவிற்கு அடிகள் கிடைக்கும்.

பெரியம்மாவும் அம்மாவும் கோவிலுக்குப் போகும் நாளன்று குட்டி அக்கா மாடி அறையைத் தோண்ட திட்டமிட்டிருந்தாள். நான் காவலுக்கு நிற்க வேண்டும். ஜானு அக்கா பார்த்துவிட்டால்...?என் தாயிடம் கூறுவாள். என் தாயும் அடிப்பாள். பகவதியின் தண்டனை இல்லாமல்.

“ஜானு அக்கா சொல்லிவிடுவாள்.”

“அவளை நான் அடிப்பேன்.”

மூன்று நாட்கள் கடந்தால் அங்கு ஒரு பெரிய ஆபத்து உண்டாகப் போகின்றது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அந்த நாள் வெள்ளிக்கிழமை வருகிறது. அறையின் தரையைத் தோண்டும் போது காவலுக்கு நிற்கவில்லையென்றால், குட்டி அக்கா கோபித்துக் கொள்வாள். எனக்கு குட்டி அக்காவிடம் பயம் இருந்தது.

ஆனால் குட்டி அக்கா மாடி அறையின் தரையைத் தோண்டவில்லை. கோவிந்தன் மாமா வந்தார். என் தாயும் பெரியம்மாவும் கோவிலுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்கள். எனக்கு நிம்மதி உண்டானது.

கோவிந்தன் மாமா என்று கூறப்படுபவர் குடும்பத்திலேயே மிகவும் பெரியவர். பாகத்தைப் பிரித்துக் கொண்டு வாழ்கிறார். மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். மிகப் பெரிய குடும்பமாயிற்றே! கோவிந்தன் மாமாவிற்கு மிகவும் வயதாகிவிட்டது. காதுகள் கேட்காது. மிகவும் சத்தமாகப் பேச வேண்டும். வந்தால் சிறிது நேரம் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். முற்றத்திலோ தோட்டத்திலோ கருப்பன் வேலை செய்து கொண்டிருந்தால் அவனை அழைத்து ஒரு குலை பழுத்த பாக்கைப் பறிக்கச் செய்து வாங்குவார். அவற்றில் இரண்டை அவனிடம் தருவார். பிறகு கூறுவார்:

“கருப்பா உனக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? நூற்று இருபத்து நான்கு ஆட்கள் இருந்த வீடு இது!”

கருப்பன் உரத்த குரலில் கூறுவான்.

“ம்... ஆமாம்... அந்த மேலே இருக்குற இடத்தில்தான் மாட்டுத் தொழுவம் இருந்தது. நான் அப்போ இந்த சின்ன தம்பிரான் அளவுக்குத்தான் இருந்தேன்.”

என்னைச் சுட்டிக் காட்டியவாறு அதை அவன் கூறுவான்.

கோவிந்தன் மாமாவிற்கு எவ்வளவு பேசினாலும் போதும் என்றே தோன்றாது. பல தடவை நான் கேட்டிருக்கும் விஷயங்கள்தான். வாழையும் முருங்கைக்காயும் நிற்கின்ற இடத்தில் தான் வேலி இருந்திருக்கிறது. அப்போதைய சமையலறை கிணற்றை மண்ணால் மூடியதுதான் அதோ தெரிகிற பள்ளம்.ஐந்தாவது அறை இருந்த இடத்தில்தான் பெரியம்மாவின் கோழிக்கூடு இருக்கிறது.

கோவிந்தன் மாமா முற்றத்திற்கு வந்து நான்கு முறை அங்குமிங்குமாக நடப்பார். சுவரைப் பிடித்து நின்று கொண்டு  தோட்டம் முழுவதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு யாரிடம் என்றில்லாமல் கூறுவார்:

“வாழை குலை தள்ளப் போகிறது.”

யாரும் அதை கவனிப்பதே இல்லை. கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் மாமாவிற்கும் இல்லை என்றுதான் தோன்றும்.

“தானிய அறையின் பெட்டியை மாற்றணும்.”

கருப்பன் கேட்டால் ‘உம்’ கொட்டுவான்.

“கருப்பா!”

“அடியேன் இங்கே இருக்கேன்.”

“உனக்கு ஞாபகத்துல இருக்குதா? அப்போ எழுத்தச்சன் இந்த அறையிலதான் இருந்தாரு!”


தானிய அறையின் கீழே இருந்த அறையைச் சுட்டிக் காட்டியவாறு கூறுவார்: “நாயர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் முழுவதும் இங்கே எழுத வருவாங்க.”

அப்போது என் தாயும் பெரியம்மாவும் உணவு சமைத்து முடித்திருப்பார்கள். பெரியம்மா கூறிக் கேட்டிருக்கிறேன்.

“நீங்க ஒரு பிடி சாப்பிடறதுக்காக சமைச்சிருக்கு.”

கோவிந்தன் மாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த விஷயத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். திண்ணையில் அமர்ந்திருக்கும் நேரம் முழுவதும் பழைய கதைகளைக் கூறிக் கொண்டிருப்பார். சாப்பிட்டு முடித்துக் கீழே இருக்கும் அறையில் புல்லாலான பாயை விரித்து சிறிது நேரம் படுத்துவிட்டு, போகலாம் என்று நினைக்கும்போது உள்ளே ஒரு கேள்வியை வீசுவார். “விசேஷம் ஒண்ணும் இல்லையே?”

யாரும் பதில் கூறுவதில்லை.

“நான் தூங்குறேன்.”

தெற்கினி இல்லத்தில் இருட்டு வேளையில்தான் விடைபெற்று புறப்படுவார்கள்.

சில நேரங்களில் முற்றத்திற்கு வந்த பிறகு, குரலைத் தாழ்த்திக் கொண்டு அழைப்பார்: “உண்ணி மாயா, இங்கே வா.”

என் தாய் முற்றத்திற்குச் செல்வாள்.

ரகசியமாக என்னவோ கூறுவார்.குடும்ப விஷயம் என்று தோன்றும்.என் தாய் எட்டணாவைக் கொண்டு வந்து கொடுப்பாள்.அதை இடுப்பில் சொருகிவிட்டு கைத்தடியை ஊன்றி ஓசை உண்டாக்கிக் கொண்டே நடந்து போவார். பெரியம்மா என் தாயைத் திட்டுவது உண்டு.

“கேக்குறப்போ நீ ஏன் கொடுக்குறே? பங்கோடருடைய கள்ளுக்கடையில செலவழிக்கிறதுக்கா?”

“நம்முடைய குடும்பத்துல பெரியவராச்சே!”

என் தாய்க்கு சமாதானம் சொல்ல அதுதான் இருந்தது.

மாடி அறையைத் தோண்ட தீர்மானித்திருந்த நாளன்றுதான் கோவிந்தன் மாமா வந்தார். படிக்கல்லில் மிதித்து சத்தம் உண்டாக்கிக் கொண்டு வந்தபோது, என் தாய் எப்போதும்போல அழைத்துச் சொன்னாள்: “மாளுக்குட்டி ஒரு கிண்டியில் நீர் கொண்டு வா.” 

மாடி அறையைத் தோண்டுவது எப்படி என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த குட்டி அக்கா மனதிற்குள் திட்டிக் கொண்டே நீரைக் கொண்டு வந்து வைத்தாள். கால்களைக் கழுவி விட்டு, படியில் ஏறி உட்கார்ந்து மேற்துண்டைச் சுழற்றி வீசியவாறு கோவிந்தன் மாமா சொன்னார்: “காலையிலேயே வெப்பமா இருக்கு.”

என் தாய் கதவிற்கு அப்பால் நின்று கொண்டு எப்போதும் போல உரக்க கேட்டாள்: “அக்கரையில நல்லா இருக்காங்கள்ல?”

“ம்... ம்... என்ன வெப்பம்!”

பிள்ளைகளுக்கு விசேஷமா ஒண்ணுமில்லைல்ல...?”

“ஒண்ணுமில்ல...”

என் தாய் தன்னுடைய பொறுப்பை நிறைவேற்றிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.

பெரியம்மா திட்டிக் கொண்டிருந்தாள்: “கோவிலுக்குப் போகலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்குற நேரத்துல இவர் இங்கே வந்திருக்காரு.”

முற்றத்தில் இறங்கி நடந்துவிட்டு, மீண்டும் சாயும் படியில் ஏறி உட்கார்ந்த கோவிந்தன் மாமா உள்ளே பார்த்து அழைத்தார்: “அங்கே நாராயணி இருக்காளா? பார்க்கணுமே!”

பெரியம்மா வாசலுக்கு வந்தாள்.

“பெருமண்ணூரில் இருந்து கிட்டுண்ணியார் நேற்று வந்திருந்தார்- மற்ற விஷயத்தைப் பற்றி பேசுவதற்குத்தான்...”

பெரியம்மா ‘உம்’ கொட்டினாள்.

“பையனுக்கு கொஞ்சம் நிலம் இருக்கு. அப்பா நம்பூதிரி. பத்து ஐம்பது தென்னை மரங்கள் இருக்கும். தோப்பு சொந்தமா இருக்கு.....” சிறிது நேரம் சிந்தித்துவிட்டு கோவிந்தன் மாமா கேட்டார் : “பெண்ணுக்கு என்ன வயது?”

“மாளுக்குட்டிக்கு பத்தொன்பது வயது நடக்குது. ஜானுவிற்கு வர்ற கன்னியில் பதினாறு வயது...”

“ஹூம்... பரவாயில்ல... நாளை மறுநாள் அவங்க இங்கே வருவாங்க.”

பெரியம்மாவிற்கு பதைபதைப்பு உண்டானது.

“அண்ணா நீங்க இருப்பீங்கள்ல?”

“என்ன?”

இன்னொரு முறை உரத்த குரலில் பெரியம்மா கேட்டாள்: “நீங்க இருப்பீங்கள்ல?”

“எனக்கு வேலைகள் இருக்கு. ஆனால் காரியத்திற்கு வராமல் இருக்க முடியுமா? நான் வர்றேன்.”

பெரியம்மா தொண்டை அடைக்க சொன்னாள்: “நீங்க நினைச்சால்தான் நடக்கும்.”

“எல்லாம் விதிப்படி நடக்கும். மனசுல நினைச்சா மட்டும் போதாது.”

அன்று கோவிந்தன் மாமா திரும்பிப் போகும்போது பெரியம்மா என் தாயின் கையிலிருந்து ஒரு ரூபாயை வாங்கிக் கொடுத்து, என் தாயிடம் கூறவும் செய்தாள்: “அவர்தான் எவ்வளவு பாசத்துடன் இருக்கிறார்!”

யாரோ வரப்போகிறார்கள். நல்ல நேரம் பார்த்து என் தாயிடம் கேட்டதற்கு அவள் சொன்னாள்: “டேய், உன் குட்டி அக்காவைப் பெண் கேட்டு ஆளுங்க வர்றாங்க.”

நான் குட்டி அக்காவைக் கண்டுபிடித்துச் சொன்னேன்:

“குட்டி அக்கா, உங்களைப் பார்க்க ஆளுங்க வர்றாங்கா.”

குட்டி அக்கா சிரித்துக்கொண்டே சொன்னாள்: “போடா.”

“இல்ல குட்டி அக்கா... உண்மைதான். அம்மா சொன்னாங்க.”

குட்டி அக்காவின் ஆள் வரும் நாள் எனக்கு சந்தோஷமான நாளாக இருந்தது. காலையிலேயே பெரியம்மா குட்டி அக்காவிற்கு அறிவுரை சொன்னாள்: “அடியே அடக்க ஒடுக்கமா இருக்கணும். உன் குறும்பு விளையாட்டுகள் அவங்களுக்குத் தெரிய வேண்டாம்.”

குட்டி அக்கா காலையில் குளித்தாள். கரைபோட்ட சலவை செய்த முண்டினை அணிந்தாள். சிவப்பு, நீல நிறங்களில் புள்ளிகள் போடப் பட்டிருந்த ரவிக்கையை அணிந்து, சிவப்பு நிற செந்தூரத்தாலான பெரிய ஒரு பொட்டையும் வைத்தாள். நான் குட்டி அக்காவைக் கிண்டல் பண்ணினேன்: “குட்டி அக்காவின் மிடுக்கோ மிடுக்கு”

ஜானு அக்கா பாடம் சொல்வதைப்போல நீட்டிக் கொண்டு சொன்னாள்:

“காகம் குளித்தால் கொக்காக ஆகிவிடுமா?”

குட்டி அக்கா திட்டவோ, அடிக்கவோ தயாராக இல்லை. பெரியம்மா வழக்கத்தில் இல்லாத வண்ணம் ஜானு அக்காவைத் திட்டினாள்: “ஃப! என்னடீ சொன்னே?”

பெரியம்மா போனதும் ஜானு அக்கா அதற்குப் பிறகும் சொன்னாள்: “குட்டி அக்கா, உன்னைப் பிடிக்காமல் இருக்காது.”

“உனக்கு விருப்பப்படுறதைச் சொல்லிக்கோ.”

“காதில் இருக்கும் மணியும் சேர்ந்து போகணும்.”

அப்போது ஜானு அக்காவிற்கு ஒரு அடி கொடுத்தால் என்ன என்று நான் நினைத்தேன். ஆனால் குட்டி அக்கா சாளரத்தின் வழியாக வெளியே பார்த்துவிட்டு, மெதுவான குரலில் சொன்னாள்:

“தெய்வம் தந்ததுதானே ஜானு?”

கோவிந்தன் மாமாவும் வேறு மூன்று ஆட்களும் வந்தார்கள். பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கி வைக்கப்பட்டிருந்த நரியின் படம் போட்ட புல்லாலான பாயை விரித்துப் போட்டோம். காப்பியும் பலகாரங்களும் தயாராக இருந்தது. காப்பி பருகி முடித்து திண்ணையில் அவர்கள் வெற்றிலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் போது, நான் ஓசை உண்டாக்காமல் ஜன்னல் கம்பி வழியாகப் பார்த்தேன்.

குட்டி அக்காவிற்கு வந்த ஆள் யார்?

கோவிந்தன் மாமா இல்லாமல் மூன்று ஆட்கள் இருந்தார்கள். ஒரு ஆள் மட்டுமே சட்டை அணிந்திருந்தார். அந்த ஆள்தான்- சட்டை போட்ட மனிதராகத்தான் இருக்க வேண்டும்- நான் முடிவெடுத்தேன். கோவிந்தன் மாமா உள்ளே பார்த்துச் சொன்னார்.

“வாய் கழுவ கொஞ்சம் தண்ணி கொண்டு வா.”


பெரியம்மா அதை எதிர்பார்த்து நின்றிருப்பதைப்போல தோன்றியது. சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்து குட்டி அக்காவின் கையில் தந்த பெரியம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “போ...”

குட்டி அக்கா நீரை திண்ணையின் ஓரத்தில் வைத்து விட்டுத் திரும்பி வந்தாள்.

திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்கள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, இறுதியில் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள். கோவிந்தன் மாமாவும் அவர்களுடன் சேர்ந்து புறப்பட்டார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு கோவிந்தன் மாமா வந்தபோது பெரியம்மா வாசலுக்கு ஓடி வந்தாள்.

“என்ன சொன்னாங்க?”

“சரியா வரல. இளைய பெண்ணை அந்த ஆளு பார்த்திருக்கிறான். அவள் என்றால் சம்மதம்னு சொல்றான்.”

பெரியம்மா சிறிது நேரம் எதுவும் சொல்லவில்லை.

“என்ன நாராயணி?”

“மூத்தவள் இருக்குறப்போ, இளையவளை அனுப்புறது நல்லது இல்லையே?”

“அதெல்லாம் சரிதான். நம்ம குடும்பத்துல முன்பு அந்தப் பழக்கம் இல்லை. இருந்தாலும்...”

பெரியம்மா முண்டின் நுனியால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கோவிந்தன் மாமா சொன்னார்: “அதைப்பற்றி அந்த அளவுக்கு பார்க்க வேண்டியது இல்லை. நடக்குறது நடக்கட்டும்னு வச்சுக்கலாமே!”

பெரியம்மா சிந்தித்தாள்.

“அது வேண்டாம் அண்ணா. விதி இருந்தால் இனிமேலும் வருவாங்க.”

குட்டி அக்காவை சட்டை போட்ட மனிதருக்குப் பிடிக்க வில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். மேலே சென்றபோது இருள் நிறைந்த அறைக்குள் குட்டி அக்கா அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

“குட்டி அக்கா...” - நான் தயக்கத்துடன் அழைத்தேன்.

“என்ன வாசு?”

“அந்த ஆள் இனிமேல் வரமாட்டாரா?”

“வரமாட்டார்... யாரும் வரமாட்டார்கள்.”

அடுத்த மாதமும் கோவிந்தன் மாமா ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தார். அன்றும் குட்டி அக்கா குளித்து முடித்து, கண்களில் மை இட்டு, பொட்டு வைத்தாள். கரை போட்ட முண்டையும் புள்ளிகள் போட்ட ரவிக்கையையும் வெளியே எடுத்தாள். ஒரு கிண்டியில் நீரை எடுத்துக் கொண்டு அன்றும் குட்டி அக்கா திண்ணைக்குச் சென்றாள்.

அவர்கள் வெளியே சென்றவுடன், குட்டி அக்கா மாடியில் இருந்த இருட்டு அறைக்குள் அமர்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள்.

பத்து பன்னிரண்டு நாட்கள் கடந்தபிறகு, மீண்டும் கோவிந்தன் மாமா வந்து கொண்டிருந்தார். அவருடன் சில ஆட்களும் இருந்தார்கள். அன்று குட்டி அக்கா தன் குணத்தை வெளிப்படுத்தினாள்.

“நான் திண்ணைக்குப் போகமாட்டேன்.”

“ஏன்?”

“என்னை யாரும் பார்க்க வேண்டாம்னு...”

“மாளுக்குட்டி...”

பெரியம்மா பற்களைக் கடித்தாள்.

“என்னைக் கொன்னாலும் நான் போகமாட்டோன்.”

“மாளுக்குட்டி என் மகள் அல்லவா? பகவதிக்கு நான் கூட்டுப் பாயசம் நேர்ந்திருக்கிறேன்.”

“நான் போகமாட்டேன்.”

“இது சரியாக வரும்னு...”

குட்டி அக்காவின் குரல் உயர்ந்தது: “அம்மா, பேசாம போறீங்களா?”

பெரியம்மா பயமுறுத்தினாள்: “இப்படியே வயதாகி நரை விழுந்திடும்! அறிவு கெட்டவளே!”

“நரைக்கட்டும்.”

அம்மாவும் பெரியம்மாவும் மாறி மாறிக் கூறிப் பார்த்தார்கள். குட்டி அக்கா ஒப்புக்கொள்ளவில்லை.

பெரியம்மா குட்டி அக்காவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, தலையில் அடித்தாள். அம்மா அப்போது இடையில் புகுந்து சொன்னாள். “வேற்று ஆட்கள் இருக்காங்க அக்கா-வெளியில...”

நீர் கொண்டு வராததால் கோவிந்தன் மாமா மீண்டும் அழைத்தார். பெரியம்மா திண்ணைக்குச் சென்று தடுமாறிய குரலில் சொன்னாள்: “மாளுக்குட்டி தொட முடியாத நிலையில் இருக்கிறாள்.”

அவர்கள் வெளியேறியவுடன், பெரியம்மா குட்டி அக்காவைப் பிடித்து அடித்தாள். சில அடிகள் வாங்கிய பிறகு, குட்டி அக்கா பெரியம்மாவின் கையைத் தட்டிவிட்டு விலக்கியபடி சொன்னாள்:

“என்னைத் தொடாதீங்க.”

“உன் குறும்புத்தனத்தை நான் மாத்தப்போறேன்.”

"நான் ஒரு துண்டு கயிறைப் பயன்படுத்தப் போறேன்."

“அப்படியென்றால் அது அப்படி முடியட்டும்டீ...”

பெரியம்மா தலை முடியைச் சுற்றிப் பிடித்துத் தரையில் போட்டு இழுத்து மீண்டும் குட்டி அக்காவை அடித்தாள். என் தாய் திரும்பவும் வந்து பெரியம்மாவின் கையைப் பிடித்தாள்.

“அக்கா, அவளைக் கொன்னுடாதீங்க.”

“நான் சாகப் போறேன்.”

“அவள் சாகட்டும்.”

பெரியம்மாவின் பிடியிலிருந்து என் தாய் குட்டி அக்காவை விடுவித்தாள். குட்டி அக்கா திண்ணையின் மேற்குப் பக்க மூலையில் இருந்த தூணின்மீது சாய்ந்து உட்கார்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். எனக்கு வருத்தமாக இருந்தது. குட்டி அக்கா எவ்வளவு அடிகளை வாங்கியிருக்கிறாள்!

நான் அருகில் சென்று அழைத்தேன்: “குட்டி அக்கா...”

“இங்கேயிருந்து போயிடு.”

குட்டி அக்கா மிகவும் கோபமாக இருந்தாள்.

“குட்டி அக்கா...”

“போ என்று சொன்னேன்.”

என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குட்டி அக்காவின் அருகில் சென்று அமர்ந்து அழ ஆரம்பித்தேன். அப்போது குட்டி அக்கா என்னை மடியில் படுக்க வைத்தாள். முதுகைத் தடவியவாறு சொன்னாள்: “நான் தூக்குல தொங்கி சாகப்போறேன்.”

குட்டி அக்கா மரணமடையக்கூடாது. குட்டி அக்கா இறந்து விட்டால்-

நான் சொன்னேன். “வேண்டாம்...”

“ஒரு நாள் விட்டத்தில் தொங்கி சாகத்தான் போறேன். அப்போதுதான் எல்லாருக்கும் நிம்மதி.”

நான் எதுவும் பேசாமல் பயந்து போய் குட்டி அக்காவின் மடியில் தலையை வைத்துக்கொண்டு படுத்திருந்தேன்.

“வாசு... நீ போ.”

நான் போகவில்லை. நான் போனால், குட்டி அக்கா தூக்கில் தொங்கி இறந்துவிட்டால்...?

பெரியம்மா குட்டி அக்காவுடன் சில நாட்களுக்குப் பேசாமலே இருந்தாள். பகல் நேரம் முழுவதும் குட்டி அக்கா பக்கத்து வீடுகளில் சுற்றித் திரிவாள். சாப்பாட்டு நேரம் வரும்போது சமையலறைக்குள் வருவாள். பெரியம்மா பாத்திரத்தில் எதையாவது பரிமாறி வைத்துவிட்டுக் கூறுவாள்: “இந்தா... நக்கிக்கோ.”

என் தாய் குட்டி அக்காவிற்கு அறிவுரை சொன்னாள்: “வயதுக்கு வந்த ஒரு பெண் இப்படிச் சுற்றித் திரியக்கூடாது.”

ஆனால் குட்டி அக்கா அதைக் கேட்கவில்லை.

ஜானு அக்காவின் சார்பாக அவளுக்கு ஒரு செல்லப் பெயர் கிடைத்தது: ‘ஊர் சுற்றி நீதிபதி.’

மழை பலமாகப் பெய்து கொண்டிருந்த ஒருநாள். அன்று குட்டி அக்கா வெளியே எங்கும் செல்லவில்லை. மதிய நேரத்தில் என்னை அழைத்துச் சொன்னாள்: “நீ அந்தக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வா.”

கண்ணாடியை எடுத்துக் கொண்டு போனபோது ஜானு அக்கா கேட்டாள்: “யாருக்கு பையா, கண்ணாடி?”

“குட்டி அக்காவுக்கு...”

“நல்லபடி அழகா இருக்கச் சொல்லு.”

மனதிற்குள் ஜானு அக்காவைத் திட்டிக்கொண்டே நான் கண்ணாடியைக் கொண்டு சென்றேன்.

குட்டி அக்கா கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். பல் விழுந்த சீப்பைக் கொண்டு தலையை வாரினாள். முகத்தை முண்டின் முனையால் துடைத்தாள். முகத்தைச் சாய்வாக வைத்துக் கொண்டு காதில் இருந்த ‘மணி’யைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள்:


“காதில் இருக்கும் மணி போய்விட்டால், நான் பார்க்க அழகா இருப்பேனா வாசு? போகும்... நான் அதற்கு ஒரு வழி வச்சிருக்கேன். நீ போய் அந்த கறிக்கத்தியை எடுத்துக்கொண்டு வா.”

நான் கறிக்கத்தியைக் கொண்டு வந்தேன். குட்டி அக்கா கல் திண்டில் தீட்டி கத்தியின் கூர்மையை அதிகரித்தாள். மூலையில் வைத்திருந்த எச்சில் பாத்திரத்தை எடுத்து கட்டிலுக்குக் கீழே வைத்துவிட்டு கதவை மூடினாள்.

“யாரிடமும் சொல்லக்கூடாது....”

என்ன? எனக்கெதுவும் புரியவில்லை. கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டு குட்டி அக்கா சொன்னாள்: “எச்சில் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நகர்த்தி வை.”

நான் அவள் கூறியபடி கேட்டேன்.

பதைபதைப்புடன் நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, குட்டி அக்கா கறிக்கத்தியை காதை நோக்கி கொண்டு போனாள். என் உடல் நடுங்கியது. கண்களை மூடிக்கொண்டேன்.

“அம்...மா...”

குட்டி அக்காவின் குரலைக் கேட்டு கண்களைத் திறந்தபோது காதில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ரத்தத்தைப் பார்த்து பதைபதைத்துப்போன நான் உரத்த குரலில் கத்தினேன்:

“அய்யோ... அம்மா! ஓடி வாங்க...”

தலையணையில் துடித்துக் கொண்டிருந்த தலையை அழுத்தமாக வைத்து படுத்திருப்பதற்கு மத்தியில் குட்டி அக்கா கோபத்துடன் என்னைப் பார்த்தாள்.

அம்மாவும் பெரியம்மாவும் ஜானு அக்காவும் ஓடி வந்தார்கள். குட்டி அக்கா தலையைத் தூக்காமல் படுத்திருந்தாள். தரையிலும் எச்சில் பாத்திரத்திலும் கட்டிலிலும் ரத்தமயம்... ரத்தம்!

பெரியம்மா மீண்டும் மீண்டும் சொன்னாள்:

“அறிவு கெட்டவளே... அறிவு கெட்டவளே...”

என் தாய் வேண்டினாள்: “குருவாயூரப்பா!”

அம்மா துணியை நனைத்து காதில் வைத்து அழுத்தினாள். பெரியம்மா, வண்ணான் நாணுவிடம் கருப்பனை விரட்டினாள்- முறிக்கக்கூடிய மருந்திற்காக.

காயம் உலர்வதற்கு ஏழெட்டு நாட்கள் ஆயின. மருந்தைத் தடவி கழுவும்போதுதான், நான் பார்த்தேன். மணி போகவில்லை! அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. குட்டி அக்கா கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள். ஒரு முறைதான் பார்த்தாள். அடுத்த நிமிடம் கண்ணாடி ஒரு மூலையில் விழுந்து உடைந்தது. தலையைப் பிடித்துக்கொண்டு அவள் வெளியே போனபோது நான் பார்த்தேன்- அவளுடைய கன்னத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

குட்டி அக்கா யாரிடமும் பேசுவதில்லை. என்னுடன் கூட அதிகமாகப் பேசுவதில்லை. மதிய நேரம் வெளியே செல்லும்போது என்னை அழைப்பதில்லை. நான் உடன் கிளம்பினால் அவள் கூறுவாள்:

“நீ வரவேண்டாம்”

எதிர்ப்பதற்கு எனக்கு தைரியம் இல்லை.

ஒருநாள் மேட்டுப்பகுதியில் களத்தின் அருகில் இருந்த மாமரத்திற்குக் கீழே மாங்காய் விழுந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு நான் திரும்பிப் போய்க் கொண்டிருந்தேன். நடுப்பகல் நேரம். ஒற்றையடிப் பாதையில் கால் வைத்தபோது, பாம்புக் கோவிலுக்கு அப்பால் இருந்து குட்டி அக்காவின் சிரிப்புச் சத்தம் கேட்டது. பார்த்தபோது நான் ஆச்சரியப்பட்டுப் போய்விட்டேன். குட்டி அக்கா அப்புண்ணியுடன் பேசிக் கொண்டிருந்தாள். வடக்கு வீட்டுக்காரர்களின் மேல்வீட்டில் இருக்கும் சிறிய வீட்டைச் சேர்ந்த வயதான பெண்ணின் மகன்தான் அப்புண்ணி. எனக்கு அவனைப் பிடிக்காது. முகத்தைப் பார்க்கவே விரும்பமாட்டேன். ஒரு கண் இறந்த மீன் வீங்கியதைப்போல இருக்கும். அவன் கல் வேலை செய்பவன். மண்ணின் நிறத்தைக் கொண்ட வேட்டி அணிந்தே அவனை நான் பார்த்திருக்கிறேன்.

நான் அருகில் சென்றும், அப்புண்ணி வேகமாக ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.

குட்டி அக்கா கோபத்துடன் கேட்டாள்:

“நீ எதற்கு இங்கே வந்தே?”

“குட்டி அக்கா, நீங்க எதற்கு இங்கே வந்தீங்க?”

“உன் தந்தைக்கு பிண்டம் வைக்க.”

அப்போது எனக்கு அழுகை வந்தது. என்னிடம் தேவையற்றதைப் பேசிவிட்டாளே! குட்டி அக்காவிற்கு அது புரிந்து விட்டது.

“அழக்கூடாது. நான் சும்மா சொன்னேன். நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது தெரியுதா?”

“நான் சொல்லுவேன். தந்தையைப் பற்றி சொன்னதைச் சொல்லுவேன்.”

“உன் தந்தையைப் பற்றித்தானே சொன்னேன்? அது அல்ல... மற்றதைச் சொல்லக்கூடாது.”

“என்ன சொல்றீங்க?

“ஆமாம்... அந்த அப்புண்ணியுடன் பேசிக் கொண்டிருந்ததைச் சொல்லுவியா?”

“இல்ல...”

நான் சொல்லவில்லை. குட்டி அக்கா மதிய நேரத்தில் பாம்பு புற்றுக்குப் பின்னால் அப்புண்ணியுடன் பேசிக்கொண்டிருப்பதை அதற்குப் பிறகும் பல நேரங்களில் நான் பார்த்திருக்கிறேன். ஒருநாள் குட்டி அக்கா, ‘அப்புண்ணி நல்ல ஆள்’ என்று சொன்னாள். குட்டி அக்காவிற்கு கண்ணாடி வளையல்களை அவன் கொடுத்திருக்கிறான். அவற்றை அவள் சோப்பு டப்பாவிற்குள் பத்திரமாக வைத்திருந்தாள்.

“சொல்லுவியா?”

“சொல்ல மாட்டான்.”

“உனக்கு நான் ரப்பர் பந்து கொண்டு வந்து தர்றேன்.”

“குட்டி அக்கா, பந்து உங்களுக்கு எங்கேயிருந்து வந்தது?”

“நான் கொண்டு வரச் சொல்றேன்.”

“யார்கிட்ட?”

“அவர்கிட்ட...”

குட்டி அக்கா என்னைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் தந்தாள்.

மாலை நேரம். திண்ணையில் தூணில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு நான் கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டிருந்தேன். என் தாய் சமையலறையில் என்னவோ வேலையில் ஈடுபட்டிருந்தாள். பெரியம்மா வாசலில் அமர்ந்துகொண்டு லாந்தர் விளக்கின் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அப்போது கருப்பன் வாசலில் தலையைச் சொறிந்துகொண்டு வந்து நின்றான். பெரியம்மா கேட்டாள்:

“என்ன கருப்பா?”

“உங்ககிட்ட ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியதிருக்கு.”

“சொல்லு கருப்பா.”

“நீங்க தப்பா நினைக்கக்கூடாது.”

“என்ன விஷயம் கருப்பா?”

“எனக்கு சொல்றதுக்கு சங்கடமாத்தான் இருக்கு. நான் வேலிக்கு பக்கத்துல இருக்குற மேட்டுல ஒரு விஷயத்தைப் பார்த்தேன். தம்புராட்டி, நீங்க மனசுல வச்சுக்கிட்டா போதும்.”

“என்ன கருப்பா? என்ன?”

“இல்ல... இங்க இருக்குற பெரிய தம்புராட்டியும் அந்த அப்புண்ணி சேனாரும் ஒண்ணா பேசிக்கிட்டு இருக்குறதை நான் பார்த்தேன்.”

“சதி பண்ணிட்டாளா?”

பெரியம்மா தேள் கடித்ததைப்போல வேகமாக எழுந்தாள்.

“என் குருவாயூரப்பா! இந்த அறிவு கெட்டவ என்ன காரியத்தைச் செய்திருக்கிறா!”

பெரியம்மா உள்ளே சென்று இடி இடிப்பதைப்போல உரத்த குரலில் அழைத்தாள்:

“மாளுக்குட்டி...”

குட்டி அக்கா வந்தாள்.

அழுகையை அடக்கிக் கொண்டு பெரியம்மா கேட்டாள்:

“உன்னை தெற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் யாராவது...”- பெரியம்மாவால் கூற வந்ததை முழுமையாகக் கூற முடியவில்லை.

“என்ன அம்மா?”

“அடியே... நீ இந்தக் குடும்பத்தின் மானத்தைக் கெடுத்துட்டியேடீ...”

“என்னம்மா சொல்றீங்க?”

“அப்பு“ணியுடன் நீ பேசுறதுக்கு என்னடி விஷயம் இருக்கு?”

குட்டி அக்கா எதுவும் பேசவில்லை. பெரியம்மா இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி இரண்டிரண்டு அடிகளைக் கொடுத்து விட்டு உரத்த குரலில் கத்தினாள்: “சொல்லுடி...”

குட்டி அக்கா வாயைத் திறக்கவில்லை.


“நீ இனிமேல் கேட்கக் கூடாததையெல்லாம் கேட்கும்படி செய்வாய். இனிமேல் வீட்டு முற்றத்துல காலை எடுத்து வச்சா, உன் பிணம் இங்கே கிடக்கும்.”

குட்டி அக்கா அழாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றாள். பெரியம்மா அப்போது சொன்னாள்:

“ஆண் இல்லைன்னா வீட்டின் தூணுக்காவது பயப்படணும்டீ...”

அதற்குப் பிறகு குட்டி அக்காவிற்கு வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லாமல் போய்விட்டது. குட்டி அக்கா யாருடனும் பேசாமல் மாடியில் எங்காவது படுத்திருப்பாள். என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாள். கல் விளையாட்டு விளையாடவும், பதினைந்து நாயும் புலியும் விளையாட்டு விளையாடவும் வருவதில்லை.

ஒருநாள் மாலை மயங்கிய நேரத்தில் வேலிக்கு அருகில் நின்றுகொண்டு குட்டி அக்கா யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார்கள். பார்த்தது ஜானு அக்காதான். ஜானு அக்கா நெருப்பு கலந்த வார்த்தைகளைக் கொட்டினாள்:

“நான் பார்த்துட்டேன் குட்டி அக்கா!”

“பார்த்தது நல்லதுதான்.”

“வெட்கம் இருக்கணும் குட்டி அக்கா... தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருத்தனுடன்...”

“நீ என்னைத் திருத்த வேண்டாம்.”

சொல்லிச் சொல்லி ஜானு அக்கா, காதில் மணியை அறுத்த கதையைச் சொன்னாள். கருப்பு பூரான் என்று அழைத்தாள். ஜானு அக்கா ஒரு அடி வாங்க வேண்டிய நேரம் வந்தபோது, பெரியம்மா ஓடி வந்தாள்.

“சாயங்கால நேரத்துல என்னடீ பண்றீங்க?”

ஜானு அக்கா அழுதுகொண்டே விஷயத்தைச் சொன்னாள். வேலிக்கு அருகில் நின்றுகொண்டு குட்டி அக்கா ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததால்தான் இதெல்லாம் என்றாள் அவள். அது என்னுடைய குற்றமா என்று அவள் கேட்டாள்.

பெரியம்மா தலையில் கை வைத்து, தளர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள். என் தாய் முணுமுணுத்தாள்:

“குடும்பத்தின் பெயரை நாசமாக்கிடுவா.”

பெரியம்மா திடீரென்று மூலையில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தை எடுத்து குட்டி அக்காவை தலையிலிருந்து கால்வரை அடித்தாள்.

“ஒண்ணு... நீ திருந்தனும். இல்லாவிட்டால் சாகணும்.”

குட்டி அக்காவைக் கொன்று விடுவாள் என்பது மாதிரி தோன்றியது. நான் பயந்துபோய் என் தாயைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன்.

“சொல்லுடீ... இனி அப்படி பேசிக்கிட்டு இருப்பியா?”

மீண்டும் அடி...

“குட்டி அக்காவை அடிக்கக் கூடாது அம்மா”- நான் என் தாயிடம் அழுதுகொண்டே சொன்னேன்.

“அவளுக்கு அது தேவைதான் மூதேவி!”

குட்டி அக்கா அழவில்லை. அடி விழுந்தபோது, கதவின் பலகையைப் பிடித்துக்கொண்டு நெளிந்தாள்.

மீண்டும் அடி...

“இனி அப்படி பேசிக்கிட்டு இருப்பியா?”

அடி...

“நான் சாகப் போறேன்.”

“நீ சாகுடி...”

“நான் என் உயிரை விட்டுருவேன்.”

“நீ சாகுடி...”

துடைப்பத்தின் கட்டு அவிழ்ந்து ஈர்க்குச்சிகள் சிதறின. பெரியம்மா ஒரு பெரிய சத்தத்துடன் தரையில் விழுந்து உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். நான் என் தாயின் மார்பில் இருந்து முகத்தை எடுத்துப் பார்த்தபோது, கதவின் பலகையைப் பிடித்து நின்று கொண்டு, கண்களை மூடியவாறு குட்டி அக்கா சொன்னாள்:

“நான் சாகப் போறேன்.”

அன்று இரவு வீட்டில் எந்தவொரு சத்தமும் அசைவும் கேட்கவில்லை. யாரும் பேசவில்லை.

குட்டி அக்கா உள்ளறையின் ஒரு ஓரத்தில் பாயில் கவிழ்ந்து படுத்திருந்தாள்.

பெரியம்மா சாப்பிடவில்லை. என் தாய் போய் அழைத்தபோது, குட்டி அக்கா வேண்டாம் என்று கூறிவிட்டாள். அப்போது ஜானு அக்காவிற்கும் சோறு தேவையில்லை. எனக்கும் சோறு தேவையில்லை. என் தாய் வற்புறுத்தினாள். எனக்குத் தேவையில்லை. எப்போதும் இல்லாத வகையில் என் தாய் என்னுடைய தொடையில் ஒரு அடி கொடுத்தாள். ஒரு காரணம் கிடைப்பதற்காக நான் காத்திருந்தேன். குலுங்கிக் குலுங்கி அழுதவாறு நான் குட்டி அக்காவிடம் போய் விழுந்தேன். குட்டி அக்கா தளர்ந்துபோன குரலில் கேட்டாள்:

“வாசு, நீ சாப்பிட்டியா?”

“எனக்கு வேண்டாம்.”

என் தாய் படுக்க வரும்படி என்னை அழைத்தாள். யாரிடம் என்றில்லாமல் கோபத்துடன் நான் சொன்னேன்:

“நான் இங்கேயே படுத்துக்குறேன்.”

வெளிக்கதவும் சமையலறையின் கதவும் அடைக்கப்படும் சத்தம் கேட்டது. விளக்குகள் அணைந்தன. எனக்கு தூக்கம் வரவில்லை. குட்டி அக்காவும் தூங்கவில்லை என்று தோன்றியது. அவளுடைய மார்போடு சேர்ந்து கொண்டு படுத்திருந்தபோது, தேம்பி அழும் சத்தம் கேட்டது. இருட்டில் சிறிது நேரம் கண்களைத் திறந்து கொண்டு படுத்திருந்த பிறகு, நான் மெதுவான குரலில் அழைத்தேன்.

“குட்டி அக்கா!”

“தூங்கு...”

“ரொம்ப வலிச்சதா?”

“இல்ல... தூங்கு...”

அவளுடைய ஈரமான மார்புடன் ஒட்டிக்கொண்டு நான் படுத்திருந்தேன்.

“வாசு, நீ நல்ல பிள்ளையா வரணும். அம்மாவையும் பெரியம்மாவையும் நல்லா பாத்த்துக்கணும்.”

நான் ‘உம்’ கொட்டினேன். என் முதுகில் குட்டி அக்காவின் விரல்கள் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.

“தூங்கு மகனே... தூங்கு...”

படிப்படியாக நான் கண்களை மூடினேன்.

பொழுது விடியும் நேரத்தில் ஒரு அழுகைச் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு நான் எழுந்தேன். கண்களைக் கசக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது, என் தாயும் பெரியம்மாவும் தலையில் கை வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். ஜானு அக்காவும் இருந்தாள். அவள் பெரியம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தாள். பயத்துடன் நான் பார்த்தேன். அப்போது உள்ளறையின் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிறின் நுனியில் குட்டி அக்காவின் இறந்த உடல் ஆடி கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.