Logo

காதலிக்க நேரமில்லை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6599
kathalika neramillai

ன்று ஓணம் பண்டிகை. மதிய நேரமாகியும், நான் இதுவரை ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. சொல்லப்போனால் இன்னும் குளிக்கக் கூட இல்லை. குளிக்க வேண்டும் என்றோ; சாப்பிட வேண்டும் என்றோ கொஞ்சம் கூட தோன்றவில்லை.

பார்ப்பவர்கள் யாருக்கும் பொறாமை தோன்றக் கூடிய விதத்தில் என்னுடைய குளியலறை இருக்கும். மார்பிளால் ஆன ஒரு குளியல் தொட்டி அதற்குள் இருக்கிறது. அந்தக் குளியல் தொட்டியில் சுத்தமான நீர் முழுமையாக நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

நான் வெறுமனே அதில் இறங்கிக் குளித்தால் போதும். ஆனால், எனக்குத்தான் குளிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என்னிடம் அன்பான நான்கு வார்த்தைகள் சொல்லி, என்னை வற்புறுத்தி குளிக்கச் செய்ய எனக்கென்று யாருமே இல்லை.

ஒன்றல்ல... இரண்டு பேர் இருக்கிறார்கள் சமையல் பண்ணுவதற்கு, கிருஷ்ணனும் பரமனும். காய்கறிகளை நறுக்கி சமைப்பதில் கிருஷ்ணன் பயங்கர திறமைசாலி. பரமன் வைக்கும் மீன் குழம்பையும் கறி வறுவலையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அவர்கள் தங்களுடைய பணியை முழுமையாகச் செய்து முடித்து, நான் உணவு உட்கொள்வதற்காகக் காத்திருந்தார்கள். ஆனால், எனக்குத்தான் சாப்பிட வேண்டும் என்ற உணர்வே உண்டாகவில்லை. அன்புடன் என்னை வற்புறுத்தி சாப்பிடச் செய்வதற்கு இந்த அகன்ற உலகத்தில் ஒரு உயிர்கூட எனக்கென்று இல்லையே.

நான் சாப்பிட்டு முடித்தபிறகுதான் கிருஷ்ணனும் பரமனும் அவர்களின் வீட்டுக்குச் செல்ல முடியும். அவர்களின் இல்லத்தில் அந்த இருவரையும் எதிர்பார்த்து அவர்களுடைய தாய்களும், மனைவிகளும், குழந்தைகளும் காத்திருப்பார்கள். அவர்கள் வீட்டிற்குப் போன பிறகுதான் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்து சாப்பிடுவார்கள். இங்கு இருப்பதைப் போல ருசியான உணவு நிச்சயம் அவர்களின் வீடுகளில் இருக்கப் போவதில்லை. ஆனால், இந்த இரண்டு பேரும் எந்தக் காரணத்தைக் கொண்டும் இங்கு சாப்பிட மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, இந்த ஓணம் பண்டிகை நாளில் தங்களின் வீட்டிற்குப் போய் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். இங்கு இல்லாத ஏதோவொன்று அவர்களுக்கு- அவர்களின் வீடுகளில் கிடைக்கிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்? அந்த ஒரே காரணத்தால் அவர்களின் வீட்டில் இருக்கும் உணவு இங்கிருக்கும் உணவைவிட ருசி அதிகம் கொண்டதாக அவர்களுக்குத் தெரிகிறது. அப்படி இங்கில்லாத எது அங்கே இருக்கிறது? எது எப்படியோ - அவர்களுக்கு அவர்களின் வீட்டில் கிடைக்கிற அது எனக்கு இங்கு கிடைக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது. அந்த ஒரே காரணத்தால்தான் நான் இன்னும் குளிக்காமலும், சாப்பிடாமலும், அவற்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட மனதில் எழாமல் இருக்கிறேன்.

காலையில் ஒரு கப் நிறைய தேநீர் குடித்தேன். மேஜை மேல் பலவிதப்பட்ட பலகாரங்களும் வைக்கப்பட்டிருந்தன. நான் எப்போதும் விரும்பிச் சாப்பிடக்கூடிய பிட்டு கூட தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நான் அதைக் கண்ணால் கூட திரும்பிப் பார்க்கவில்லை. நின்றுகொண்டே தேநீரை எடுத்துக் குடித்தேன். நாக்கில் ருசி என்ற ஒன்றே இல்லாமற் போய்விட்ட மாதிரி இருந்தது. எனக்கு எப்போதும் பிடித்தமான பால் பாயசம் தயார் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. நான் வெறுமனே அதைக் காட்சிப் பொருளைப் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு விருப்பமான காளான் சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைக் கொஞ்சமாவது எடுத்துச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உண்டானால் தானே. நான் காலங் காலமாக கஷ்டப்பட்டு எவ்வளவோ பணம் சம்பாதித்தேன். இப்போதும் ஓடி ஓடி சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் காதலிக்கவும் என்னைக் காதலிக்கக்கூடியதுமான ஒரு இதயத்தைச் சம்பாதிக்க எனக்கு நேரமே இல்லாமல் போனது.

தேநீர் குடித்து முடித்ததும் மனதிற்குள் நினைத்தேன். வெறுமனே நகரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தால் என்ன என்று! வாசுவை உடனே வரும்படி அழைத்தேன். அப்போதுதான் எனக்கே ஞாபகத்தில் வந்தது. அவனுக்கு இன்று நான் ஏற்கனவே விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டேன் என்று. சொல்லப் போனால் அவனுக்கு நான் விடுமுறை தந்து அனுப்பி வைத்தேன் என்று கூறுவது கூட சரியான ஒன்றாக இருக்காது. அவனே என்னிடம் கேட்டு விடுமுறையை வாங்கிக் கொண்டான் என்பதே உண்மை. அவன் என்னுடைய டிரைவர் என்பதால் அவனுக்கு நான் நல்ல சுதந்திரம் கொடுத்திருந்தேன். என்ன இருந்தாலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மிகவும் குறியாக இருந்தான். வாரத்தில் ஒருநாள் கட்டாயம் அவன் வீட்டிற்குப் போயே ஆகவேண்டும் அந்த மாதிரியான நேரங்களில் என்னுடைய பஸ் டிரைவர்களில் யாராவது ஒரு ஆளை அழைத்து என்னுடைய காரை ஓட்டுவதற்கு வைத்துக் கொள்வேன். ஆனால் இன்று அதையும் செய்ய முடியாது. இன்று ஓணம் பண்டிகையாக இருப்பதால் எல்லா டிரைவர்களுமே தங்களுடைய வீட்டில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். அதனால், இன்று எந்தவித காரணத்தைக் கொண்டும் விடுமுறை அளிக்க முடியாது என்று வாசுவிடம்

திட்டவட்டமாகச் சொன்னேன். எப்போதும் என்னிடம் மதிப்பும் மரியாதையுடனும் பழகக் கூடிய அவன் நான் இந்த வார்த்தைகளைச் சொன்னதுதான் தாமதம்! அடிபட்ட பாம்பைப் போல படமெடுத்து ஆட ஆரம்பித்து விட்டான். “ஓணப் பண்டிகைக்கு என்னோட தாயைப் பார்க்கப் போக முடியலைன்னா, எனக்கு இந்த வேலையே வேண்டாம்...” - அவன் பயங்கர கோபத்துடன் சொன்னான்.

வாசுவிற்கு வயதான ஒரு தாயும், விதவையான ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். அவனுடைய அந்தச் சகோதரிக்கு மூன்றோ நான்கோ குழந்தைகள் இருக்கிறார்கள். நான் வாசுவிற்குத் தரும் சம்பளத்தை வைத்துத்தான் அந்த மொத்தக் குடும்பமும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு வேலையென்ற ஒன்று இல்லாமல் போனால், அந்தக் குடும்பமே பட்டினி கிடக்க வேண்டியதுதான். ஆனால், அவன் அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை. வேலை போனால் கூட பரவாயில்லை. வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் பட்டினி கிடந்தால் கூட பரவாயில்லை. ஓணத்திற்குத் தன்னுடைய தாயின் அருகில் இருக்க வேண்டும் - இதுதான் வாசுவின் ஆசை. தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைவிட, சாப்பாட்டைவிட அவனுக்குப் பெரிதாக ஏதோவொன்று தெரிகிறது. எல்லாவற்றையும் வேண்டாமென்று தூக்கியெறிந்து விட்டு, அங்கே போகத் துடிக்கும் அளவிற்கு அங்கிருக்கும் ஏதோவொன்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது.

நான் எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தேன். அவன் தன் விருப்பப்படி போய் விட்டான்.


யாரோ முணுமுணுக்கும் சத்தம் காதில் கேட்கிறது. கிருஷ்ணனும் பரமனுமாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு இப்போது மிகவும் அவசரமான நிலை. உடனடியாக அவர்கள் தங்களின் வீட்டிற்குப் போக வேண்டும். இங்கிருக்கும் ஆர்ப்பாட்டமான விருந்தை விட, அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட, வேறு ஏதோவொன்று அவர்களை ‘வா வா’ என அங்கே இழுத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அங்கே அவர்களுக்காகக் காத்திருப்பது வெறும் கஞ்சித் தண்ணீராகக் கூட இருக்கலாம். ஆனால், அந்தக் கஞ்சித் தண்ணீரில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. ஏழைகள் அன்புமயமானவர்கள். நான் ஏன் தேவையில்லாமல் அவர்களைக் கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டும்? தாராளமாக அவர்கள் போகட்டும்.

“கிருஷ்ணா! பரமா! நீங்க ரெண்டு பேரும் தாராளமா புறப்படலாம்... நான் இன்னைக்கு ஒண்ணும் சாப்பிடல. எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கு...”

நான் இப்படிச் சொன்னதும் அவர்கள் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவர்கள் அடுத்த நிமிடம் புறப்பட்டார்கள். என்னைத் தனியாக விட்டுவிட்டு எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் கிளம்பினார்கள். அவர்கள் முன் நான் ஒரு சிறு கடுகைப் போல் ஆகிவிட்டேன். ஒரு சிறு துகளைப் போல சுருங்கிப் போனேன். அவர்கள் முன் நான் இதுவரை சம்பாதித்த பணமும், புகழும் கண்ணாடியைப் போல் உடைந்து நூறு துண்டுகளாகச் சிதறிப் போயின.

கேட் திறந்தது மீண்டும் அடைக்கப்பட்டது. அவர்கள் வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள். தங்களின் தாய்மார்களையும், மனைவிகளையும், குழந்தைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் பார்ப்பதற்காக அவர்கள் ஆவலுடன் குதித்தோடி போய்க் கொண்டிருக்கிறார்கள். மற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் காலால் மிதித்துத் தள்ளிவிட்டு அவர்கள் தங்கள் போக்கில் ஆர்வத்துடன் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

நான் மட்டும் தனியே அமர்ந்திருந்தேன். நான் ஒரு உப்பு சேர்க்காத காளான். சர்க்கரை இல்லாத பால் பாயசம்...

எனக்கும் ஒரு தாய் இருந்தாள். என் தாய் என் மேல் உயிரையே வைத்திருந்தாள். எனக்கும் என் தாயின் மீது கொள்ளைப் பிரியம். என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன் விளைவாக என்னையும் என்னுடைய அண்ணனையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள் என் தாய்.

நிறைய பணம் சம்பாதித்து என் தாயின் கஷ்டங்கள் அனைத்தையும் போக்க வேண்டுமென்றும், என் தாயை அருகிலேயே அமர்ந்து கவனிக்க வேண்டுமென்றும் மனப்பூர்வமாக நான் ஆசைப்பட்டேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் நான் என்னுடைய தாயைப் பிரிந்து, இந்த நகரத்தைத் தேடியே வந்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடனே இருபத்து நான்கு மணி நேரமும் இருந்ததால், வேறு எந்த விஷயத்திற்குமே எனக்கு நேரம் இல்லாமற் போனது. எதற்காகப் பணம் சம்பாதிக்கிறோம் என்ற விஷயத்தையும் நான் முழுமையாக மறந்தே போனேன்.

ஆரம்பத்தில் நான் ஒரு சைக்கிள் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கப் போனேன். அதற்குப் பிறகு சொந்தத்தில் ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை வைத்தேன். என் வெற்றிலைப் பாக்குக் கடை பஸ் நிலையத்திற்குள் இருந்தது. இரவு -பகல் எந்நேரமும் வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இரவு நேர வியாபாரம் பகல் நேரத்தில் நடக்கும் வியாபாரத்தைவிட லாபகரமானதாக இருக்கும்.

எனக்குப் பெரிய செலவு என்று ஒன்றுமில்லை. கடைக்குள்ளேயே அடுப்பு வைத்து சோறு சமைப்பேன். இரவு நேரத்தில் தூக்கம் வராமல் இருப்பதற்காக பால் இல்லாத தேநீர் தயாரித்து குடிப்பேன். வெற்றிலையும் பீடியும் சர்பத்தும் வாங்க ஆட்கள் வராமல் இருக்கிற நேரத்தில் லேசாக சாய்ந்து கண்களை மூடுவேன். இப்படித்தான் இரவு-பகல் எந்நேரமும் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன்.

என் வெற்றிலைப் பாக்குக் கடைக்குப் பின்னால் ஒரு வீடு இருந்தது. அங்கு இருப்பவர்கள் ஏழைகள்தான். இருந்தாலும் மானம், மரியாதையைப் பெரிதாக நினைத்து வாழ்பவர்கள் அவர்கள். அங்கிருக்கும் கிணற்றில் இருந்துதான் நான் நீர் இறைப்பேன். சில நேரங்களில் அந்த வீட்டிலிருக்கும் மீனாட்சி எனக்கு நீர் இறைத்துத் தருவதும் உண்டு.

மீனாட்சிக்குப் பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும். ‘புன்னகை’ என்றுதான் நான் பொதுவாக அவளைப் பார்த்து அழைப்பேன். அவளின் புன்சிரிப்பில் ஏதோ ஒரு காந்தசக்தி இருப்பதாக நான் உணர்ந்தேன். அப்படி மனதை ஈர்க்கக்கூடிய விதத்தில் புன்னகை செய்கிற வேறொரு இளம் பெண்ணை என் வாழ்க்கையில் இதுவரை நான் சந்தித்ததே இல்லை.

சில நேரங்களில் பாக்கு விற்பதற்காக என்னுடைய கடைக்குப் பின்னால் வந்து நிற்பாள். சில நேரங்களில் வெற்றிலையோ புகையிலையோ வாங்குவதற்காக வந்து நிற்பாள். நான் பின்னால் போய் பார்க்கும்போது, யாரிடமும் இல்லாத ஒரு அழகான புன்னகை தவழும் முகத்துடன் அவள் அங்கு நின்றிருப்பாள். அவள் கொண்டு வந்திருக்கும் பாக்கை நான் காசு கொடுத்து வாங்குவேன். வெற்றிலையும் புகையிலையும் நான் அவளுக்குத் தந்தால், அப்போதே அவளிடம் அதற்கான காசை வாங்கி விடுவேன். யாருக்கும் கடன் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை.

அவளின் புன்சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றும் அவளுடன் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கு எனக்கு நேரம் கிடைத்தால்தானே? என்னுடைய கடையில் எப்போது பார்த்தாலும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். பீடி வாங்குவதற்கோ- வெற்றிலை வாங்க வேண்டுமென்றோ சர்பத் குடிக்க வேண்டுமென்றோ ஆட்கள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். என் கடையில் வாடிக்கையாகப் பொருட்கள் வாங்கக் கூடிய யாரும் வேறொரு கடையைத் தேடிப் போகும் அளவிற்கு நான் ஒருபோதும் நடக்க மாட்டேன். கடையில் பொருள் வாங்க வருபவர்களின் நலம்தான் எனக்கு முக்கியம். என்னுடைய கடைக்குப் பக்கத்திலேயே மூட்டை தூக்குபவர்களின் குழந்தைகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருப்பார்கள். லேசாகக் கண்ணை மூடினால் போதும், கையில் கிடைக்கும் ஏதாவதொரு பொருளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி விடுவார்கள். அதனால் கடைக்குப் பின்னால் புன்னகை தவழ நின்று கொண்டிருக்கும் மீனாட்சியைப் பார்ப்பதற்கோ; அவளுடன் ஆசையாக நான்கு வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதற்கோ எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் மீண்டும் அழுத்திச் சொல்கிறேன் - அவளைப் பார்க்கவும், அவளுடன் பேசவும் என் மனதின் அடித் தளத்தில் ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், அதைச் செயலில் காட்டுவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.


இதற்கிடையில் எம்.கெ.பாறேல் என்ற பெயரைக் கொண்ட ஒரு இளைஞனுடன் எனக்கு அறிமுகம் உண்டானது. அவன் தன்னை ஒரு கல்லூரி மாணவன் என்றும், தற்போது கல்லூரிக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் சொன்னான். ஆனால், அவன் கல்லூரிக்குப் போய் ஒருநாளும் பார்த்ததே இல்லை. சுருண்ட முடியையும் கடைந்தெடுத்ததைப் போன்ற வெளுத்த தேகத்தையும் கொண்ட இளைஞன் அவன். இலேசாக பெண்வாடை அடிக்கக் கூடிய முக அமைப்பை அவன் கொண்டிருந்தான். எதையுமே பெரிதாக நினைக்காத மாதிரி இருக்கும் அவனின் போக்கு. யாருடனாவது அவன் உரையாடும் போது, கூச்சத்துடன் அவன் இருப்பது மாதிரி தோன்றும்.

அவன் ஒர பெரிய எஸ்டேட் உரிமையாளரின் மகன். கல்லூரியில் படிப்பதாகச் சொல்லி விட்டு வீட்டை விட்டு வந்தவன் அவன். என்னுடைய வெற்றிலைப் பாக்குக் கடைக்கு நேர்எதிரில் இருக்கும் கட்டிடத்தில் ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து அதில் அவன் தங்கியிருக்கிறான். கையிலிருக்கும் பணத்தை கன்னா பின்னாவென்று அவன் இஷ்டப்படி வாரி இறைத்துக் கொண்டிருப்பான். என் கடையில்தான் எப்போதும் வெற்றிலை வேண்டுமென்றாலும்- சிகரெட் வேண்டுமென்றாலும் வாங்குவான். அவனுக்கென்றே நான் தனியாக சிகரெட் வாங்கி கடையில் வைத்திருப்பேன். அவனிடமிருந்து மட்டும் உடனுக்குடன் நான் காசு வாங்குவதில்லை.அவன் வாங்கக் கூடிய பொருட்களுக்கு நான் வெறுமனே கணக்கு எழுதி வைப்பேன். அதை அவன் ஒருநாளும் பார்த்தது கூட இல்லை. நான் எப்போது பணம் கேட்கிறேனோ, அந்த நிமிடத்திலேயே பணத்தை என் கையில் தருவான். அவ்வளவுதான்.

அவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதுதான் பெண்கள் விஷயம். ஒரு பெண்ணைப் பார்த்து விட்டால் போதும். அந்தக் கணத்திலேயே உலகத்திலுள்ள மற்ற எல்லா விஷயங்களையும் அவன்  மறந்து விடுவான். நடந்து போகும் அந்தப் பெண்ணையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருப்பான். இல்லாவிட்டால், அந்தப் பெண்ணுக்குப் பின்னாலேயே தன்னையும் மறந்து அவன் நடந்து போக ஆரம்பித்து விடுவான். கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும் இளம் பெண்களைப் பார்க்கும்போது, அவனுடைய உடம்பிலுள்ள நரம்புகள் ஒவ்வொன்றும்  புடைக்க ஆரம்பித்து விடும். பிச்சைக்கார சிறுவர்கள் தேநீர்க் கடையில் இருக்கும் அலமாரியை உற்றுப் பார்ப்பதைப் போல, அவன் அந்தப் பெண்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஆனால், அவன் இதுவரை ஒரு பெண்ணைக் கூட எனக்குத் தெரிந்து தொட்டதில்லை. ஒரு பெண்ணுடனாவது அவன் வாய் திறந்து பேசி நான் பார்த்ததில்லை. காரணம்- அதற்கான தைரியம் அவனிடம் கொஞ்சமும் இல்லை. கல்லூரி மாணவிகள் யாராவது அவனுக்கு நெருக்கமாக நடந்து போனார்களென்றால், அவனுடைய உடம்பு 'கிடு கிடு'வென நடுங்க ஆரம்பித்து விடும். அந்தப் பெண்கள் வெறுமனே அவனுடைய முகத்தைப் பார்த்தால் கூட போதும், அவன் வாயெல்லாம் வறண்டு போய், உடல் தளர்ந்து நின்றிருப்பான். அவனுடைய இந்த தர்மசங்கடமான நிலையை நான் நன்றாகவே அறிந்து வைத்திருந்தேன்.

ஒரு நாள் அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்- என்னுடைய கடைக்குப் பின்னால் வந்து நிற்கும் பெண் யாரென்று. அவள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் என்பதையும், அவளின் பெயர் மீனாட்சி என்பதையும், நான் அவளை 'புன்னகை' என்று அழைப்பேன் என்றும், அவளுக்கு என்னை மிகவும்  பிடிக்கும் என்றும் நான் அவனிடம் சொன்னேன். என்னை அவளுக்குப் பிடிக்கும் என்றாலும், சில நேரங்களில் அவள் பாறேல் வசிக்கும் கட்டிடத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருப்பதை நான் பல நேரங்களில் பார்த்திருப்பதாக அவனிடம் சொன்னேன். நான் இப்படி கூறுவதற்குப் பிறகு அவன் அடிக்கடி என் கடையைத் தேடி வர ஆரம்பித்தான். அப்படி வரும் நேரங்களில், சீக்கிரம் கடையை விட்டு அவன் நகர்வது கிடையாது. நீண்ட நேரம் கடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருப்பான்.

நான் சில நேரங்களில் அவனிடம் பத்து ரூபாயோ பதினைந்து ரூபாயோ கடனாகக் கேட்பேன். நான் அப்படி கடன் கேட்கிறபோது, மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக அவன் நான் கேட்ட தொகையைத் தரவும் செய்வான். எனக்கு கடன் வாங்கக் கூடிய அளவிற்கு தேவை எதுவும் இல்லையென்றாலும், நான் அடிக்கொரு தரம் அவனிடம்  கடன் வாங்கிக் கொண்டிருப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். அவன் நான் கேட்கும் போதெல்லாம் பணத்தைத் தந்ததற்குக் காரணம் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மீனாட்சி தவறாமல் கடைக்குப் பின்னால் வந்து நிற்பாள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான். மீனாட்சி அவனைப் பற்றி என்னிடம் அடிக்கொருதரம் விசாரிப்பது உண்டு என்றும், அவளின் கேள்விக்குப் பின்னால் ஏதோ ஒரு எண்ணம் மறைந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவனிடம் நான் கூறினேன்.

ஒருநாள் அவன் என்னைப் பார்த்து பயங்கரமாகக் கெஞ்ச ஆரம்பித்து விட்டான். மீனாட்சியுடன் தான் சிறிது நேரமாவது பேச வேண்டுமென்றும்; தான் எழுதித் தரும் கடிதத்தை அவளிடம் நான் சேர்க்க வேண்டுமென்றும் என்னைப் பார்த்து அவன் கேட்டான். நான் அதைச் செய்து தருவதாகச் சம்மதித்தேன். சொன்னதோடு நிற்காமல், அவனிடம் அன்று பத்து ரூபாய் கடனாக வாங்கினேன். அன்றே அவன் மீனாட்சிக்கு எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் கடையில் வந்து உட்கார்ந்து கொண்டான். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு, மீனாட்சி வெற்றிலையும் புகையிலையும் வாங்குவதற்காக கடைக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு, "இங்கே யாருமில்லையா?" என்று கேட்டாள். நான் "என்ன வேணும்?" என்று அவளைப் பார்த்து கேட்டேன். "வெற்றிலையும் புகையிலையும் வேணும்" என்றாள். "என்னால அந்தப் பக்கம் வரமுடியாது. இதோ வர்ற ஆளுக்கிட்ட காசு கொடுத்து அனுப்பு" என்று சொல்லிவிட்டு பறேலிடம் மெதுவான குரலில் சொன்னேன்."அங்கே போ".

அவ்வளவுதான் - பாறேலின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவனுடைய வாயே வறண்டு போனது மாதிரி ஆகிவிட்டது. "போ அந்தப் பக்கம்... போய் விஷயத்தைச் சொல்லு!" - நான் அவனிடம் சொன்னேன். அவன் மெதுவாக எழுந்து, தயங்கித் தயங்கி பின்பக்கமாய் நடந்து சென்றான். நான் பலகையின் நடுவில் இருந்த இடைவெளி வழியாக என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அவளுக்கு நேராகப் போய் நின்றான். அவள் வழக்கமான தன்னுடைய புன்சிரிப்புடன்  நின்றிருந்தாள். அந்தப் புன்சிரிப்பில் அவன் விழப் போவது உறுதி என்று நான் நினைத்துக் கொண்டேன். "காது..."- அவன் அவளைப் பார்த்துச் சொன்னான்.


அவனுடைய வாய் முழுமையாக வற்றிப் போனதால் 'காசு' என்று கூறுவதற்குப் பதிலாக "காது" என்று கூறினான். அடுத்த நிமிடம் கையை நீட்டினான். அவள்  அவனுடைய கையில் காசைத் தந்தாள். அவ்வளவுதான் - நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கைகளில் இருந்து காசு கீழே விழுந்தது. "என்ன, கை இந்த அளவுக்கு நடுங்குது?" - அவள் அவனிடம் கேட்டாள். கீழே விழுந்த காசை எடுத்து மீண்டும் அவனுடைய கையில் தந்தாள். அதை வாங்கியது தான் தாமதம் அவன் என் கடையை நோக்கி ஓடி வந்துவிட்டான். "என்ன, உன் கடிதத்தை அவளின் கையில் தந்தாச்சா?" என்று நான் அவனைப் பார்த்து கேட்டேன். "முதல்ல குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்க" என்றான் அவன். அருகில் இருந்த மரப் பெட்டியின் மேல் அமர்ந்த அவனுக்கு நான் நீர் மொண்டு தர, அவன் படு வேகமாக அதைக் குடித்தான். வெற்றிலையும் புகையிலையும் தருவதற்காக நான் பின்பக்கமாய் சென்றபோது அவள் கேட்டாள். "காசு வாங்குறதுக்கு அந்த ஆள் யார்?" என்று. "அவன் ஒரு வாத நோய் பிடிச்ச ஆள்" என்று பொய் சொன்னேன்.

சைக்கிள் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த போதே என் மனதிற்குள் நான் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டிருந்தேன். அது சொந்தத்தில் ஒரு சைக்கிள் கடை கட்டாயம் வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காக கையில் கிடைக்கும் ஒவ்வொரு பைசாவையும் நான் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வைத்தேன். ஒரு நிமிடத்தைக் கூட வீண் செய்யாமல் நான் பணம் சம்பாதிப்பதிலேயே என்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டேன். இருந்தாலும் சைக்கிள் கடையைச் சொந்தத்தில் ஆரம்பிக்கும் அளவிற்கு என்னிடம் பணம் சேரவில்லை. கடைசியில் நான் தீர்மானித்தேன் - பாறேலை எப்படியாவது கைக்குள் போட்டு, இந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்று. இந்தச் சிந்தனை வந்தபிறகு நான் பாறேலுடன் மேலும் நெருக்கமாகப் பழகத் தொடங்கினேன். அவன் மீது மீனாட்சிக்கு காதல் இருக்கிறது என்றும், அவளுடன் அவன் அன்று சரியாகப் பேசாததால், அவன் மீது அவளுக்குக் கோபமும், வருத்தமும் இருக்கிறது என்றும், இதேமாதிரி மேலும் பல பொய்களை அவனிடம் அவிழ்த்து விட்டேன். அதே சமயம் மீனாட்சியின் தந்தை பயங்கரமான மனிதன் என்றும், கண்டபடி பேசக் கூடியவன். இந்த விஷயம் தெரிந்தால் அவன் அவளைக் கொன்று விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அதனால் கொஞ்ச நாட்களுக்கு மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நான் எல்லா விஷயங்களையும் கட்டாயம் சரிபண்ணித் தருகிறேன் என்றும் அவனிடம் சொன்னேன். இது போதாதா? அவன் நானே கதி என்று இருக்க ஆரம்பித்து விட்டான்.

ஒரு நாள் அவனைப் பார்த்து சொன்னேன் -"நான் இந்த நகரத்தை விட்டு போகப் போகிறேன்" என்று. எனக்கு முன்னூறு ரூபாய் கடன் இருக்கிறதென்றும், கடன் கொடுத்த ஆள் என் மீது புகார் பண்ணி இருக்கிறானென்றும்,  மிக விரைவிலேயே என்னை போலீஸ் வந்து கைது செய்யப் போகிறதென்றும், என்னுடைய வெற்றிலைப் பாக்குக் கடையை கடன் தொகைக்காக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்றும் நான் என் இஷ்டப்படி அவனிடம் பொய் சொன்னேன். அதைக் கேட்டு ஒருமாதிரி ஆகிவிட்டான் பாறேல். என்னை வருத்தத்துடன் பார்த்தான். என்னை போலீஸ் கைது செய்வதைப் பற்றியோ, என்னுடைய கடையை நான் வாங்கிய கடனுக்காக அவர்கள் ஜப்தி செய்வதைப் பற்றியோ, அவன் வருத்தப்படவில்லை என்பது எனக்குத் தெரியாதா என்ன? அவனுக்கிருந்த ஒரே பயம் நான் இல்லாவிட்டால், அவனுடைய காதல் கைகூடாமல் போய் விடுமே! அது முழுமையாக பாதிக்கப்பட்டு விடுமே என்பதைப் பற்றி மட்டும்தான். பிறகென்ன? நான் மனதிற்குள் நினைத்தது மாதிரியே அவன் நான் வாங்கிய கடன் தொகையை தானே தருவதாகச் சொன்னான்.

'புன்னகை'  மீது எனக்கு உண்மையாகவே காதல் இருந்தது. ஆனால், அவளுடன் பேசிக் கொண்டிருக்கவோ, அவளிடம் நான் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தவோ எனக்கு நேரமில்லை. அப்படியே காதல் படிப்படியாக வளரும் பட்சம், அவளை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரியும். எனக்குப் போதும் என்று எப்போது தோன்றுகிறதோ, அதுவரை விடாமல் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றும், அதற்குப் பிறகுதான் திருமணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியும் என்றும் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்திருந்தேன். அப்படி நடக்கும் திருமணம் நிச்சயம் ஒரு காதல் திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் என்னுடைய தீர்மானமாக இருந்தது. நான் மிகப் பெரிய பணக்காரனாக மாறுகிறபோது, மீனாட்சியைவிட இன்னும் பல மடங்கு அழகும், படிப்பும் கொண்ட ஒரு இளம்பெண்ணை சர்வ சாதாரணமாக என்னால் காதலிக்க முடியும் என்ற நம்பிக்கை என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது. அதனால் மீனாட்சி மீது நான் கொண்ட காதலை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

நான் கேட்ட பணத்தை எப்படியோ பாறேல் தயார் பண்ணிக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் கையிலிருந்து பணத்தை வாங்கிய நான், அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தேன். மீனாட்சி அவனுக்கு எழுதிய காதல் கடிதம் அதுவென்றும், அவனிடம் கொடுக்கச் சொல்லி மீனாட்சி என்னிடம் தந்தாளென்றும் சொன்னேன். காதலைப் பற்றி எனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அது எல்லாவற்றையும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தேன். "காதல் நதி பாய்ந்தோட வேண்டுமென்றால், அது பலவித தடைகளையும் தாண்டித்தான் வரவேண்டும்" என்று அதில் தத்துவத்தையெல்லாம் உதிர்த்திருந்தேன். என் வழக்கமான கையெழுத்தை நான் சற்று மாற்றி எழுதியிருந்தேன். அவன் கடையில் வைத்தே முழு கடிதத்தையும் படித்து முடித்தான். அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. அப்போதே நான் நினைத்தது நடந்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். என்மேல் உள்ள வழக்கு விஷயமாக நான் இரண்டு நாட்களுக்கு நீதிமன்றம் வரை போய்வர வேண்டுமென்றும், எல்லா வேலைகளும் முடித்து வந்த பிறகு அவன் தனிப்பட்ட முறையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மீனாட்சியைச் சந்தித்துப் பேச நான் ஏற்பாடு செய்து தருவதாகவும் அவனிடம் கூறினேன். தன்னைப் பற்றி நினைத்து நினைத்து மீனாட்சி மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாளென்றும்; தனியாக தான் அவளைச் சந்திக்கும் நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு மேல் தள்ளிப் போடக் கூடாதென்றும் அவன் என்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். நான் அதற்குச் சரியென்று சம்மதித்தேன்.


அன்றே என்னுடைய வெற்றிலைப் பாக்குக் கடையை விற்பதற்கான வேலைகளை முடித்தேன். மீனாட்சி பாக்கு விற்பதற்காக என்னிடம் வந்தபோது நான் அவளைப் பார்த்து பாக்கு வேண்டாமென்று சொன்னேன். நான் சொன்ன பிறகும் நீண்ட நேரமாக அவள் கடைக்குப் பின்னாலேயே நின்றிருந்தாள். அவளின் அருகில் சென்று அவளுடைய அழகான புன்னகையை கண்குளிரக் காண வேண்டுமென்றும், அவளுடன் மணிக்கணக்கில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அவள் மீது எனக்குத் தோன்றியிருக்கும் காதலை அவளிடம் இதயத்தைத் திறந்து வெளிப்படுத்த வேண்டுமென்றும் மனப்பூர்வமாக நான் ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கான நேரம் எனக்குக் கிடைத்தால்தானே. நான் ஒவ்வொரு பொருளையும் எடுத்து வைத்து கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன சொல்வது? காதலிக்க என் மனதில் விருப்பம் இல்லாமல் இல்லை. காதல் என்ற உணர்வு அங்கு தோன்றாமலும் இல்லை. காதலிக்க எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. நான் என்ன செய்வது?

அதுவரை நான் சம்பாதித்த பணம், பாறேலிடம் நான் வாங்கிய பணம், வெற்றிலைப் பாக்குக் கடையை விற்றதன் மூலம் கிடைத்த பணம்- எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு யாரிடமும் ஒருவார்த்தைகூட கூறிக் கொள்ளாமல் பஸ் ஏறினேன். ஒருவாரம் கழிந்த பிறகு மாவட்ட நீதிமன்றத்தில் அருகில் ஒரு சைக்கிள் கடையை சொந்தத்தில் ஆரம்பித்தேன். சைக்கிளுக்கு ஏதாவது கேடு உண்டாகும் சூழ்நிலை உண்டானால், அதைச் சரி செய்வது எப்படி என்ற விஷயத்தை நான் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால், பழைய சைக்கிள்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றைப் புதிய சைக்கிள்களைப் போல மாற்றி வாடகைக்கு விட்டேன். கேடு உண்டாகக்கூடிய சைக்கிள்களைக் கொண்டு வந்தால், நான் அவற்றை ரிப்பேர் பண்ணிக் கொடுக்கவும் செய்வேன். இரவில் தங்குவது கூட சைக்கிள் கடையில்தான். பக்கத்திலேயே ஒரு ஹோட்டல் இருந்தது. அங்கேதான் எனக்கு சாப்பாடு.

வேலை பளு மிகவும் அதிகமாக இருந்ததால் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குளிப்பேன். குளிப்பதற்காக ஹோட்டலைத் தேடிச் செல்லும்போது, ஹோட்டல் உரிமையாளரின் மகள் சுசீலாதான் எனக்கு குளிப்பதற்காக நீர் மொண்டு கொடுப்பாள். அவளுக்கு வயது கிட்டத்தட்ட இருபது இருக்கும். நல்ல சதைப் பிடிப்பான  உடம்பைக் கொண்டவள் அவள். தலையில் அடர்த்தியான கூந்தல் இருக்கும். என்னைக் கண்டுவிட்டால் போதும் தன்னுடைய தலையை நாணத்துடன் கவிழ்த்துக் கொள்வாள். சில நேரங்களில் கடைக் கண்ணால் என்னையே பார்ப்பாள். நீரை மொண்டு வைத்துவிட்டு, சோப்பை எடுத்து வைத்திருப்பாள். நான் குளித்து முடித்தவுடன், கண்ணாடியையும் சீப்பையும் என் முன்னால் வைத்துவிட்டு சற்று தள்ளி மறைவாக நின்றிருப்பாள். வானத்தைப் பார்த்தவாறு சில நேரங்களில் அவள் என்னைப் பார்த்து ஏதாவது கேட்பாள். நானும் வானத்தைப் பார்த்தவாறு அவளுக்கு ஏதாவது பதில் சொல்வேன். அதற்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்தவாறு சிரித்துக் கொள்வோம். ஆனால், இப்படி அவளையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கவோ, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கவோ, அவளுடன் பேசிக் கொண்டிருக்கவோ நேரம் எங்கே இருக்கிறது? குளித்து முடித்து, தலை முடியை வாரி விட்டால், நான் அங்கேயிருந்து கிளம்பி சைக்கிள் கடைக்கு வந்து விடுவேன்.

சைக்கிள்களை வாடகைக்கு விடுவது, ஒவ்வொரு சைக்கிளும் எடுக்கப்பட்ட நேரத்தையும் சைக்கிளை எடுத்த ஆளின் முகவரியையும் ஒரு நோட்டில் எழுதி வைப்பது, சைக்கிள்களைத் திருப்பிக் கொண்டு வந்தபோது அதில் ஏதாவது கோளாறு இருந்தால், அதை மீண்டும் சரிபண்ணுவதற்காக அவர்களிடம் ஏதாவது காசு கேட்டு வாங்குவது, கேடுகள் ஏதாவது இருக்கும் சைக்கிள்களை யாராவது கொண்டு வந்தால், அதைச் சரி செய்து கொடுத்து அதற்கான காசை வாங்குவது - இப்படி தொடர்ந்து வேலைகள் பொழுது புலர்வது முதல் நள்ளிரவு வரை இருந்துகொண்டே இருக்கும். இதற்கிடையில் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போவோரில் சிலர் பயங்கரமாக சட்டம் பேசக் கூடியவர்களாகவும், தில்லுமுல்லு செய்யக் கூடிய மனிதர்களாகவும் இருப்பார்கள். இந்த மாதிரியான ஆட்களிடம் சண்டை போட்டு காசை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இந்த வேலைகளுக்கு இடையில் நான் ஹோட்டல்காரனின் மகளைப் பற்றியும் மீனாட்சியைப் பற்றியும் மனதில் அசை போட்டுப் பார்ப்பேன். அவர்களைப் பார்க்க வேண்டுமென்றும், அவர்களுடன் பேச வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். ஆனால், என்னால் என்ன செய்ய முடியும்? அதற்கு நேரம் கிடைக்க வேண்டாமா? சைக்கிளை வாடகைக்கு எடுப்பதற்கு எப்போது ஆட்கள் வருவார்கள் என்றே கூற முடியாதே. வாடகைக்கு எடுத்த சைக்கிள்களை எப்போது திருப்பிக் கொண்டு வருவார்கள் என்பதையும் சரியாகக் கூற முடியாதே. ஏதாவது கோளாறு இருக்கும் சைக்கிளை யாராவது கொண்டு வந்து, நான் அந்த நேரத்தில் கடையில் இல்லாமல் போனால், வேறு கடையைத் தேடி அவர்கள் போய் விட மாட்டார்களா? என் மனதில் காதல் என்ற உணர்வு அரும்பி ஜ்வாலை விட்டு எரிந்தாலும், நான் அதை முழுமையாக அடக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு நாள் காலையிலும் ஒன்பது மணி ஆகிறபோது ஒரு இளம்பெண் என்னுடைய சைக்கிள் கடையைத் தாண்டி போவாள். மாநிறத்தைக் கொண்டவள் அவள். அளவான உடலமைப்பு. முகத்தில் பவுடர் பூசியிருப்பாள். நெற்றியில் சாந்துப்பொட்டு இருக்கும். கூந்தலில் முல்லைப் பூ சூடியிருப்பாள். உடம்போடு ஒட்டிக்கிடக்கும் புடவையும் ப்ளவ்ஸும் அணிந்து, காலில் செருப்புகளை அணிந்து கொண்டு அவள் நடந்து போவதைப் பார்க்கலாம். சாயங்காலம் ஐந்தரை மணி ஆகிறபோது, அவள் திரும்பி வருவதையும் பார்க்கலாம். தலையை லேசாக குனிந்தவாறு, இருபக்கங்களிலும் பார்க்காமல், மெதுவாக தயங்கித் தயங்கி அவள் நடந்து போய்க் கொண்டிருப்பாள். எனக்கு அவளைப் பார்த்த நாள் முதல் மனதிற்குள் இனம் புரியாத ஒரு வகையான இன்ப உணர்வு தோன்றியதென்னவோ உண்மை. அந்த உணர்வு நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே இருந்தது.

நான் மட்டுமல்ல... வேறு பலரும் கூட அவளைப் பார்ப்பதுண்டு. அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சில இளைஞர்கள் சாலையோரத்தில் இங்குமங்குமாய் நின்றிருப்பார்கள். சிலர் அவளுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். என்னுடைய சைக்கிள் கடைக்கு வரக் கூடிய சிலரிடம் விசாரித்துப் பார்த்ததில் அவளைப் பற்றிய சில விவரங்கள் எனக்குத் தெரிய வந்தன. அவள் அரசாங்க அலுவலகமொன்றில் டைப்பிஸ்ட்டாக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் பெயர் கமலம்.


அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு மூன்று காதல் அனுபவங்கள் அவளுக்கு உண்டாயின. ஆனால், அவை எதுவும் திருமணத்தில் போய் முடியவில்லை. இப்போது அவளுடைய அலுவலகத்தில் அவளுக்கொரு காதல் அனுபவம் இருக்கிறதென்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் தயக்கமான விஷயமாகவே இருந்தது. ஆனால், நெற்றியில் அந்த சாந்துப் பொட்டு, கூந்தலில் முல்லை மலருமாக என்னுடைய சைக்கிள் கடைக்கு முன்னால் அவள் நடந்து போகிறபோது, நான் இந்த உலகத்தையே மறந்து போய்விடுகிறேன். அவளை திருமணம் செய்து கொண்டால் என்ன என்று நினைப்பேன். ஆனால், அவளோ என்னுடைய கடை இருக்கும் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஒரு நாள் அவள் என் கடைக்கு முன்னால் வந்தபோது, நான் லேசாக இருமினேன். அடுத்த நாள் நான் தொடர்ந்து மூன்று நான்கு முறை இருமவும், தொண்டையைச் செருமி சரி பண்ணுவதுமாய் இருந்ததைப் பார்த்து அவள் என் கடைப் பக்கமாய் திரும்பிப் பார்த்தாள். திடீரென்று தோன்றிய வெறுப்புடன் அடுத்த நிமிடம் தன்னுடைய தலையை அவள் திருப்பிக் கொண்டாள். கீழே வேகமாக எறியும் ரப்பர் பந்து மேல் நோக்கி எழுவதைப் போல என்னுடைய இதயம் அவளுக்குப் பின்னால் படுவேகமாக பாய்ந்தோடியது. அவள் மீது எனக்கு காதல் மட்டும் உண்டாகவில்லை. அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாத அளவிற்கு ஒருவித வெறியே உண்டாகிவிட்டது.

அவளுக்குப் பின்னால் போனால் என்ன என்று நினைத்தேன். ஆனால், கடையை விட்டு, அவளுக்குப் பின்னால் இங்குமங்குமாய் நான் போய்க் கொண்டிருக்க முடியுமா? என் இதயத்தில் தோன்றிய காதலையும், அவள் மீது எனக்கு உண்டான அளவுக்குமதிகமான ஈடுபாட்டையும் கடிவாளம் போட்டு நிறுத்தி வைத்தேன். மறுநாள் காலையில் அவள் நடந்து சென்றபோது, வழக்கம் போல இருமினேன். அவள் திரும்பிப் பார்த்தாள். அடுத்த நிமிடம் பார்த்த வேகத்திலேயே தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொள்ளவும் செய்தாள். ஆனால், அன்று சாயங்காலம் அவள் வேலை முடிந்து திரும்பிப் போனபோதும், நான் அவளைப் பார்த்து இருமினேன். அவள் திரும்பிப் பார்த்தாள். முகத்தில் எந்தவித வேறுபாடும் தெரியவில்லை. அதற்குப் பிறகு நான் அவளைப் பார்த்து இருமாவிட்டாலும், அவள் என் கடையை நோக்கி திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள். அவள் அப்படிப் பார்க்கிறபோது, அவளைப் பார்த்து நான்  புன்னகைப்பேன். அவளும் என்னைப் பார்த்து புன்னகை செய்வது போல எனக்குத் தோன்றும். சாயங்காலம் அவள் அலுவலக வேலைமுடிந்து திரும்பிச் செல்கிறபோது, அவளுக்குப் பின்னாலேயே நடந்து சென்று யாருக்கும் தெரியாமல் அவளுடன் சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று ஆசை உண்டானது. ஆனால், நான் கடையை விட்டு வெளியே சென்றிருக்கும் நேரத்தில், யாராவது இங்கு புகுந்து கடையில் இருக்கும் பொருட்களில் ஏதாவதொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு போய் விட்டால் நான் என்ன செய்ய முடியும்? வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு போன யாராவது மீண்டும் சைக்கிளைக் கொண்டு வரும்போது, வாடகை வாங்க கடையில் யார் இருக்கிறார்கள்? அவள் மீது எனக்கு காதல் இல்லாமல் இல்லை. ஆனால், அதை வெளிப்படுத்துவதற்கான நேரமும், சூழ்நிலையும் எனக்கு அமைய வேண்டாமா?

நான் படுப்பதற்கு கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம் ஆகிவிடும். படுத்த பிறகும் கூட, சாலையில் தேவதை என நடந்து போகும் கமலத்தைப் பற்றியே நான் நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால், கொஞ்சம் கூட உறங்காமல் அவளைப் பற்றிய நினைப்புடனே படுத்துக் கிடந்தால், பொழுது விடிந்த பிறகு என்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியுமா? அதனால், அவளைப் பற்றிய நினைப்பை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு, நான் தூங்க ஆரம்பிப்பேன். இருந்தாலும், அவளைப் பற்றிய நினைவு மனதில் வர, அடிக்கொரு தரம் தூக்கத்தை விட்டு நான் எழுந்திருப்பேன். அவள் என்னைப் பார்த்து புன்னகை செய்கிறாள் என்றும், என்னுடைய கடைக்குள் அவள் வருவதைப் போலவும், என்னை இறுகக் கட்டிப் பிடிப்பதைப் போலவும்... இப்படிப் பல மாதிரியும் நான் அவளைப் பற்றி கனவு காணுவேன். காலையில் எழுந்து கடையைத் திறந்து எந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அடிக்கொரு தரம் நான் சாலையையே பார்த்தவண்ணம் இருப்பேன். அவள் சாலையில் நடந்து போகிறாளா என்று பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது.

கடைசியில் ஒரு நாள் நான் அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதுவது என்று தீர்மானித்தேன். அன்று நள்ளிரவு நேரம் வந்தபோது, கதவை மூடினேன். பெஞ்சின் மீது பாயை விரித்து, அதில் அமர்ந்தவாறு என்ன எழுதலாம் என்று யோசித்துப் பார்த்தேன். நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று எழுத முடியாது. பெரிய ஒரு பணக்காரனாகாமல் திருமணம் செய்ய நினைப்பதென்பது அவ்வளவு நல்ல ஒரு விஷயமாக இருக்காது. நான் அவளுடைய வீட்டிற்கு வருகிறேன் என்றும் எழுதுவதற்கில்லை. நான் அவளுடைய வீட்டிற்குப் போனால் இங்கு கடையைப் பார்க்க யார் இருக்கிறார்கள்? அவள் மீது எனக்குத் தணியாத காதல் இருக்கிறது என்றும், அவளைப் பற்றிய நினைவாகவே ஒவ்வொரு நிமிடமும் நான் இருந்து கொண்டிருக்கிறேன் என்றும் தற்போதைக்கு எழுதினால் போதும் என்று நினைத்தேன். அப்போது நீதிமன்றத்தில் இருக்கும் கடிகாரம் இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. சரி.. கடிதத்தை நாளைக்கு எழுதலாம் என்று தீர்மானித்தவாறு படுத்து உறங்க ஆரம்பித்தேன்.

மறுநாள் நள்ளிரவு நேரத்தில் நான் கடையை மூடிவிட்டு, பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக்கொணடு கடிதம் எழுத ஆரம்பித்தேன். அப்போதுதான் அன்றைய கணக்கு எழுதியபோது ஒரு தவறு நேர்ந்துவிட்டது என் ஞாபகத்திற்கு வந்தது. கணக்கு முழுவதும் முடிந்து கையிருப்பில் இருக்கும் காசில் சிறிது தவறு உண்டானதை நான் உணர்ந்தேன். அப்படியொரு தவறு எப்படி நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் இறங்கினேன். செலவினங்களை எழுதும்போது, எதையாவது எழுத நான் மறந்துவிட்டேனா என்று யோசித்தேன். செலவு என்ற ஒன்று எனக்கு இருந்தால்தானே அதைப் பற்றி நான் எழுதும்போது ஏதாவது தவறு உண்டாக வாய்ப்பிருக்கிறது? எனக்கு வர வேண்டிய பணத்தில் எதையாவது ஒரு வேளை எழுத மறந்திருப்பேனா? கணக்குப் புத்தகத்தை எடுத்து ஒவ்வொன்றாக கவனமெடுத்துப் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாம் சரியாகவே இருந்தது.


பணம் வைத்திருக்கும் பெட்டியில் இருந்து யாராவது பணத்தை எடுத்திருப்பார்களோ? அதற்கும் வாய்ப்பில்லை. காரணம் பணப் பெட்டியைப் பூட்டிய பிறகு, அதன் சாவியை என்னுடைய இடுப்பில் நன்றாகச் செருகிய பிறகுதான் நான் அந்த இடத்தைவிட்டே எழுந்திருப்பேன். அதனால், பெட்டியிலிருந்து பணத்தை எடுப்பது என்பது என்னைவிட்டால் வேறு யாருக்குமே சாத்தியமில்லாத ஒரு காரியமே. அப்படியென்றால் மீதி இருக்கும் இருப்பில் எப்படி குறைவு உண்டானது? பொழுது விடிவது வரை நான் இந்தக் கணக்கு விஷயத்திலேயே மூழ்கிப் போனேன். கொஞ்ச நேரம்தான் படுத்திருப்பேன். அதற்குள் பொழுது விடிந்துவிட்டது. இப்படி எத்தனையோ நாட்கள் நான் கமலத்திற்கு காதல் கடிதம் எழுத முயற்சிப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி ஏதாவது தடங்கல்கள் வந்து அதை என்னால் செயல்படுத்த முடியாமலே போய்விடும்.

நான் என்ன செய்வது? மனதிற்குள் காதலிக்கும் எண்ணம் இருக்கவே செய்கிறது. காதலைப் பற்றி உயர்ந்த கருத்தும் இருக்கிறது. ஆனால், காதலிப்பதற்கான நேரமும் அதற்கான சூழ்நிலையும் சரிவர அமையாமல் இருக்கிறபோது, நான் என்னதான் செய்ய முடியும்?

கடைசியில் காதலுக்காக ஒரு பெரிய தியாகத்தைச் செய்வது என்று நான் தீர்மானித்தேன். காதலிக்கக் கூடிய எல்லோருக்கும் முன் மாதிரியாக இருப்பது மாதிரி நான் தியாகியாக மாற விரும்பினேன். அது என்னவென்றால் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் கடையைப் பூட்டி விடுவது, அதற்குப் பிறகு காதல் கடிதத்தை எழுதி முடித்து கமலத்தின் வீட்டைத் தேடிச் செல்வது என்பது தான். மதிய நேரத்திற்குப் பிறகு கடையைத் திறக்காமல் இருப்பது என்பது சாதாரண ஒரு விஷயமல்ல. அப்படி கடையைப் பூட்டினால், கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு ரூபாய் எனக்கு நஷ்டம் வரும். சில நேரங்களில் இந்த நஷ்டமே பத்து, பன்னிரண்டு என்று அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த இழப்பைக்கூட தாங்கிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். காதலுக்காக இதைக்கூட தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் எப்படி?

அன்று காலையில் ஆறு இளைஞர்கள் வந்து ஆறு சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். எட்டு மைல்களுக்கு அப்பால் இருக்கும் வீட்டிற்கு ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்காக அவர்கள் போயிருக்கிறார்கள். மதியம் பன்னிரண்டு மணிக்குத் திரும்பி வருவதாக என்னிடம் கூறியிருந்தார்கள். பன்னிரண்டு மணிக்கு வந்தவுடன், அவர்கள் தரவேண்டிய வாடகையை கணக்குப் பார்த்து வாங்கி, சைக்கிள்களை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு, ஹோட்டலுக்குப் போய் நன்றாகக் குளித்து, சாப்பிட்டு விட்டு, சலவை செய்து வைத்திருக்கும் வேஷ்டியையும் சட்டையையும் அணிந்து, காதல் கடிதத்தை எழுதி முடித்து கமலத்தின் வீட்டிற்குப் போக வேண்டும் என தீர்மானித்து வைத்திருந்தேன்.

என்னுடைய போதாத நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு இதற்கு வேறு என்னதான் சொல்வது! அன்று மதிய நேரத்திற்கு முன்பு பெய்ய ஆரம்பித்த மழை சாயங்காலம் ஆன போதுதான் நிற்கவே செய்தது. கல்யாண நிச்சயதார்த்தத்திற்கு சைக்கிளில் போனவர்களால் மழையின் காரணமாக சொன்ன நேரத்திற்குத் திரும்பி வர முடியவில்லை. அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாததால், என்னால் கடையைப் பூட்டி விட்டு வெளியே போக முடியவில்லை. சாயங்காலம் ஆனபோதுதான் அவர்கள் திரும்பியே வந்தார்கள். நான் அவர்களிடம் சைக்கிள் வாடகையைக் கணக்குப் பார்த்து வாங்கினேன். ஆனால் காதலுக்காக நான் செய்ய இருந்த தியாகச் செயலை கமலத்திடம் கூறுவதற்கான வாய்ப்புதான் எனக்கு இல்லாமற் போனது.

இதற்கிடையில் நான் ஒரு காரை விலைக்கு வாங்கினேன். சைக்கிள் கடையிலேயே ‘கார் வாடகைக்கு கிடைக்கும்’ என்றொரு அறிவிப்புப் பலகையை எழுதி வைத்தேன். சைக்கிள் கடையில் சம்பளத்திற்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்ணிவிட்டு, காரை நானே ஓட்டினேன். இரவில் கொஞ்சம் கூட உறங்காமல் கார் ஓட்டக் கற்று, நான் லைசன்ஸ் எடுத்தேன். அப்போதெல்லாம் இப்போதிருப்பது மாதிரி அதிகமாக வாடகைக் கார்கள் கிடையாது. போதாதற்கு, காரின் உரிமையாளர், டிரைவர், க்ளீனர் எல்லாமே நான் ஒருவனாக இருந்ததால் பல விதத்திலும் எனக்கு வசதியாகப் போனது. இதனால் எனக்கு நல்ல லாபம் கிடைத்தது. சிறிது நாட்களில் சைக்கிள் கடையை விற்றேன். இன்னொரு புதிய காரை வாங்கி அதற்கொரு டிரைவரை சம்பளத்திற்கு அமர்த்தினேன். அதற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையின் வளர்ச்சியே படு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் நகரத்தில் எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் என்னைப் பார்த்துச் சொன்னார்- நான் கமலத்தின் வீட்டிற்கு ஒரு முறை போய் வரவேண்டுமென்று. நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார் அந்த மனிதர். கமலத்திற்கும் என்னை திருமணம் செய்து கொள்ளத்தான் விருப்பமாம். திருமணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்க முடியாத நிலையில் அப்போது நான் இருந்தேன். என்றாலும், கமலத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அவள் மீது நான் கொண்டிருந்த காதலையும், அந்தக் காதலுக்காக நான் செய்ய இருந்த தியாகத்தையும் அவளிடம் சொல்ல வேண்டும் என்றும் மனப்பூர்வமாக ஆசைப்பட்டேன். அவளுடைய வீட்டிற்கு நான் கட்டாயம் வருவதாகவும் சொன்னேன்.

இரண்டு முறை அவளுடைய வீட்டிற்குப் போவதற்காக நேரத்தை ஒதுக்கினேன். வீட்டிற்கு வருவதாகச் செய்தி கூட சொல்லி அனுப்பினேன். ஆனால், இரண்டு தடவையும் என்னால் அவளின் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. அதற்கான நேரமும் சூழ்நிலையும் சரியாக அமையாதபோது என்னால் என்ன செய்ய முடியும்? என்னிடம் இருக்கும் இரண்டு வாடகைக் கார்களில் ஒன்றை நானே ஓட்டுகிறேன். இன்னொரு காரைத்தான் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஒரு டிரைவரிடம் ஒப்படைத்திருக்கிறேனே! அவன் அந்தக் காரை எங்கேயாவது கொண்ட போய் இடித்துவிட்டால், எனக்குத்தானே நஷ்டம்? அந்தக் காரை யாராவது திருடிக்கொண்டு போய்விட்டால் நான் என்ன செய்வது? கார் திருடு போகாமல் பார்க்க என்ன வழி என்று யோசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சேர்த்து வைத்து ஒரு பஸ்ஸை விலைக்கு வாங்க வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானம் போட்டேன். அதனால் ஒரு நிமிடத்தைக் கூட தேவையில்லாமல் வீண் செய்யக்கூடாது என்று நினைத்தேன். இருந்தாலும், காதலுக்காக தியாகம் செய்வதற்கு நான் தயாராகவே இருந்தேன்.


ஒரு நாள் இரவில் நான் தீர்மானித்தேன்- என்னதான் முக்கிய வேலையாக இருந்தாலும் மறுநாள் காலையில் கட்டாயம் கமலத்தின் வீட்டிற்கு நான் போக வேண்டுமென்று. நீண்ட தூரம் சவாரி போய்விட்டு வந்ததால் நான் அன்று சீக்கிரமே படுத்துவிட்டேன். காலையில் நான் கமலத்தின் வீட்டிற்கு வருவதாக முன்கூட்டியே ஒரு பையனிடம் செய்தியும் சொல்லி அனுப்பிவிட்டேன். நான் எப்போதும் படுப்பது கார் ஷெட்டிற்குள்தான். பெஞ்ச், பாய், தலையணை எல்லாமே அங்கு இருக்கின்றன. சில நேரங்களில் காரின் பின்னிருக்கையிலேயே கூட நான் படுத்து உறங்குவதும் உண்டு. அன்று இரவு பாயும் தலையணையும் போட்டு பெஞ்ச் மீது உறங்கினேன். அதிகாலை நான்கு மணி இருக்கும். கார் ஷெட்டின் கதவை யாரோ தட்டுவதைக் கேட்டு எழுந்தேன். கதவைத் திறந்து பார்த்தபோது, வக்கீல் மாதவன் பிள்ளையின் சமையல்காரன் வெளியே நின்றிருந்தான். வக்கீலுடைய மனைவியின் தாய் மரணமடைந்துவிட்டாளென்று தந்தி வந்ததென்றும், அதனால் உடனடியாக வடக்கன் பறவூருக்குப் போக வேண்டியதிருக்கிறதென்றும், உடனே காரை எடுத்துக் கொண்டு என்னை வரும்படி வக்கீல் சொல்லி அனுப்பினாரென்றும் அவன் சொன்னான். நான் என்ன செய்வது? கமலத்தின் வீட்டிற்கு காலையில் வருவதாகச் சொல்லி இருக்கிறேன். இரண்டு முறை நான் அவளின் வீட்டிற்கு வருவதாகச் சொன்ன சமயங்களில் எனக்காக அவர்கள் ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து வைத்திருப்பார்கள். நான் அங்கு போகாமலிருந்தால் எப்படி இருக்கும்?

ஆனால், வக்கீல் அழைக்கும்போது என்னால் போகாமலும் இருக்க முடியாது. அவருக்கு எப்போது கார் தேவைப்பட்டாலும் என்னுடைய காரைத்தான் கொண்டுவரும்படி கூறுவார். வடக்கன் பறவூர் வரை போய் வருவது என்றால் பெட்ரோல் செலவு போக, கட்டாயம் எழுபது ரூபாய் வரை கையில் நிற்கும். நான் யோசிக்கவே இல்லை. அந்த நிமிடமே காரை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து கமலத்தின் திருமண விஷயமாக என்னிடம் பேசிய மனிதரை நான் பார்த்தேன். இந்த மாதிரி நான் கீழ்த்தரமாக நடந்திருக்கக் கூடாது என்று கடுமையான குரலில் அந்த ஆள் என்னைப் பார்த்து பேசினார். அவர் அப்படிப் பேசும்போது நான் கேட்டுத்தானே ஆக வேண்டும்? காதல் என்ற ஒன்றின் மீது எனக்கு விருப்பமில்லாமல் இல்லை. காதல் என்னுடைய மனதில் தோன்றவில்லை என்றும் கூறுவதற்கில்லை. அதற்கான நேரமும் சூழ்நிலையும் சரிவர அமையாமல் போகிறபோது என்னதான் செய்ய முடியும்?

நான் பஸ் வாங்கினேன். பஸ் சர்வீஸ் ஆரம்பித்தேன். இரண்டே வருடங்களில் நகரத்தின் மிகப்பெரிய பஸ் உரிமையாளராக மாறினேன். பெரிய பணக்காரனாக ஆனேன். எப்படி பணக்காரனாக ஆனேன் என்றால், அதற்கான பதிலை என்னால் சொல்ல முடியாது. எனக்குச் சொல்லவும் தெரியாது. நான்கு பக்கங்களிலுமிருந்து அதிர்ஷ்ட தேவதை என் மேல் அருள் மழை பொழியச் செய்தது என்று கூறுவதே சரியாக இருக்கும். இதற்கிடையில் சில பெரிய அரசாங்க கான்ட்ராக்ட்களும் என்னைத் தேடி வந்தன. பணம் தண்ணீரைப் போல என்னிடம் வந்து சேர்ந்து கொண்டே இருந்தது. பெரிதாக ஒரு வீட்டைக் கட்டினேன். கிட்டத்தட்ட அந்த வீட்டைக் கட்டுவதற்கு ஒரு (அந்தக்காலத்தில்) ரூபாய் செலவாகி இருக்கும். அந்த வீட்டில் எல்லா வகையான வசதிகளும் இருக்கும்படி அமைத்திருந்தேன்.

வருடங்கள் கடந்தோடின. என்னிடமிருந்த பணமும் என்னுடைய புகழும் பல மடங்கு அதிகரித்தன. டிரைவர்கள், கண்டக்டர்கள், க்ளீனர்கள், ஒர்க் ஷாப்பில் பணியாற்றுபவர்கள், க்ளார்க்குகள் என்று கிட்டத்தட்ட முந்நூறு பேருக்கும் மேலானவர்கள் என்னுடைய பஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இது தவிர, கான்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பணியாற்றுபவர்கள் வேறு. எனக்கு இருபத்து நான்கு மணி நேரமும் வேலை இருந்துகொண்டே இருந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்தால் பேப்பர்களில் கையெழுத்து இடுவதற்கும், வேலை செய்பவர்களுக்கு உத்தரவு கொடுக்கவுமே நேரம் சரியாக இருந்தது. சொல்லப்போனால் எனக்கு கிடைத்த நேரமே போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமுதாயத்தில் என்னுடைய நிலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் என்னைப் பார்ப்பதற்காக பெரிய மனிதர்கள் பலரும் அவ்வப்போது வந்து கொண்டிருப்பார்கள். எல்லா வேலைகளும் முடிந்து வீட்டிற்குத் திரும்பி வருகிறபோது, கிருஷ்ணனும் பரமனும் எனக்காகக் காத்திருப்பார்கள். என்னை அக்கறை எடுத்துப் பார்ப்பதற்கு, என்னுடைய உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு வேறு பலரும் கூட இருந்தார்கள். ஆனால் எனக்கோ குளிக்க வேண்டுமென்றோ; சாப்பிட வேண்டுமென்றோ எதுவுமே தோன்றாது. இருப்பினும், ஒரு இயந்திரத்தைப் போல நான் குளிக்கவும், உண்ணவும் செய்து கொண்டிருந்தேன். படுக்கையில் படுத்தால் சிறிது கூட தூக்கம் வராது. நான் ‘புன்னகை’ என்று அழைத்த மீனாட்சி பாக்குடன் எனக்கு முன்னால் வந்து நிற்பதைப்போல் பல நேரங்களில் தோன்றும். அந்த ஹோட்டல்காரனின் மகள் என்னை மறைந்து நின்று பார்ப்பதைப் போல் உணர்வேன். என்னுடைய சைக்கிள் கடைக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் நடந்து போகும் கமலம் என்னைக் கண்களால் ஜாடை காட்டி அழைப்பதைப் போல் பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். இப்படியே பலவற்றையும் நினைத்துக்கொண்டு கொஞ்சம் கூட தூக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாய் புரண்டு படுத்தவாறு கிடக்கும்போதே பொழுது விடிந்துவிடும்.

எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றிரண்டு நண்பர்கள், ஒரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவை என்று என்னிடம் வற்புறுத்தினார்கள். ஆனால், இந்த விஷயத்தில் நான் அதிகமாக ஆர்வம் காட்டிக் கொள்ளாததால் அவர்களும் அதற்குமேல் என்னை வற்புறுத்தவில்லை.

நான் காதல் என்ற ஒன்றின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டவன்தான். என்னாலும் காதலிக்க முடியும். ஆனால் எனக்கு காதலிக்க நேரம் கிடைக்கவில்லை. இப்போது...

என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் கிளார்க்குகளுக்கு மத்தியில் ராஜம்மா என்ற ஒரு பெண் இருக்கிறாள். அவள் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து வந்தவள். மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரியில் சேர்ந்து படித்தவள். ஆனால் அவளால் படிப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அவளின் தந்தை என் முன்னால் வந்து அவர்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் சொன்னதால், நான் அவள் மேல் இரக்கப்பட்டு வேலை போட்டுக் கொடுத்தேன். ஒவ்வொரு மாதமும் சம்பளம் கிடைத்து அவர்களின் கஷ்டங்கள் கொஞ்சம் தீர்ந்ததைத் தொடர்ந்து அவள் உடம்பில் வனப்பு ஏறத் தொடங்கியது. நாள் ஆக ஆக அவள் அழகான பெண்ணாக மாறிக் கொண்டு வந்தாள். அவளின் கண்கள் சற்று பெரியவை. ஏதோ சொல்ல விரும்புவதைப் போல் இருக்கும் அவளுடைய கண்கள்.


எப்போது பார்த்தாலும் அவள் சிரிக்கும்போது அதில் லேசாக சோகம் தெரிந்தாலும் பார்ப்போரை வசீகரிக்கிற மாதிரி இருக்கும். என் மீது அவளுக்கு நிறைய மதிப்பும், மரியாதையும் உண்டு. என்னுடன் எப்போது பேச நேர்ந்தாலும் லேசாக கூச்சப்பட்டுக் கொண்டு தயங்கித் தயங்கிதான் பேசுவாள். அந்த அளவிற்கு கூச்சமும் மரியாதையும் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று பலமுறை அவளிடம் கூறிவிட்டேன். ஏதாவது பேப்பரில் நான் கையெழுத்துப் போட வேண்டுமென்றால், அவள் தூரத்தில் இருந்தவாறே பேப்பரை என்னுடைய மேஜை மேல் நீட்டி வைப்பாள். பக்கத்தில் வந்து நிற்கச் சொன்னால், அவளின் முகத்தில் ஒருவித பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். நான் சில நேரங்களில் அவளைப் பார்த்து புன்னகைப்பேன். அந்தச் சிரிப்பில் காதலின் சாயல் கலந்திருக்கும். நான் அவளைப் பார்க்கும்போது அவளோ முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஒரு நாள் என் மனதில் தோன்றியது, அவள் மீது நான் கொண்டிருக்கும் காதலை அவளிடம் மனம் திறந்து கூறிவிட்டால் என்ன என்று. நான் அவளைத் திருமணம் செய்ய தீர்மானித்திருப்பதாக அவளிடம் சொல்லிவிட வேணடும் என்று முடிவெடுத்தேன். ஆனால், இந்த விஷயத்தை அவளிடம் கூறுவதற்கான தைரியம்தான் எனக்கு இல்லை. இருந்தாலும் எப்படியும் இந்த விஷயத்தை அவளிடம் கூறித்தான் ஆவது என்று கடைசியில் முடிவெடுத்தேன். ஒருநாள் அவள் பேப்பர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்தபோது நான் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் அவளைப் பார்த்து கேட்டேன்.

“ராஜம்மா... உன்னை யாராவது பெண் கேட்டு வந்திருக்காங்களா?”

“ம்...” - அவளின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

“யார் வந்தது?”

“என்னோட அப்பாவின் மருமகன்.”

“அவன் என்ன வேலை பார்க்குறான்?”

“வாத்தியார் வேலை.”

“நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் காதலிக்கிறீங்களா?”

“ஆமா...” - அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்.

அதற்குப் பிறகு நான் இந்த விஷயத்தைப் பற்றி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவளுடைய திருமணத்திற்கு நான் கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அவள் அழைத்திருந்தாள். அன்று திருமணத்தில் கலந்து கொண்டவர்களிலேயே சிறப்பு அழைப்பாளர் நான்தான். மணமக்களுக்கு நான் கொண்டுப்போன பரிசுப் பொருட்களைக் கொடுத்தேன்.

அன்று இரவு எனக்கு சிறிதுகூட தூக்கம் வரவில்லை. ஆடும் நாற்காலியில் சாய்ந்தவாறு என்னை மறந்து முன்னும் பின்னுமாய் ஆடிக்கொண்டிருந்தேன். “புன்னகை” பாக்கை எடுத்துக் கொண்டு வந்து என்னுடைய வெற்றிலை பாக்குக் கடைக்குப் பின்னால் எனக்காகக் காத்து நிற்பதையும், ஹோட்டல்காரனின் மகள் கடைக்கண்களால் என்னைப் பார்ப்பதையும், கமலம் என்னுடைய சைக்கிள் கடைக்கு முன்னால் தேவதையென நடந்து செல்வதையும் நான் மனதிற்குள் நினைத்துப் பார்த்தேன். அன்று காதல் என்னை “வா வா” என்று இருகரம் நீட்டி அழைத்தது. ஆனால், நானோ பணத்திற்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தேன். காதலை அப்போது நான் துச்சமாக நினைத்து ஒதுக்கினேன்.

இப்போது என் கையில் ஏராளமான பணம் இருக்கிறது. நான் பணத்தில் படுத்து புரண்டு கொண்டிருக்கிறேன். ஆனால்... ஆனால்... ஆடும் நாற்காலியில் அமர்ந்து ஆடியவாறு நான் ஏதேச்சையாக எனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் பார்த்தேன். என் தலையில் இருந்த முடிகள் அத்தனையும் நரைத்து விட்டன. என் கன்னத்தில் வயதால் ஆன கோடுகள், சுருக்கங்கள்...

ஆனால், என் இதயத்தில் இப்போதும் நெருப்பு அணையவில்லை... காதல் தீ! இப்போது கூட நான் காதலிக்க விரும்புகிறேன். நான் எப்போதுமே காதலிக்க விருப்பப்பட்டிருக்கிறேன். அப்போது காதலிக்க எனக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இப்போது காதலிக்க நேரம், சூழ்நிலை எல்லாமே இருக்கின்றன. ஆனால்... ஆனால் வயதாகிப்போன என்னைக் காதலிப்பதற்குத்தான் இந்த உலகில் யாருமே இல்லை.

பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ஒரு நாள் காரில் போனபோது, பழைய ‘புன்னகை’யை நான் பார்த்தேன். தன்னுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். அவளின் மகன் அல்லது மகளின் குழந்தையாக இருக்க வேண்டும் அது. காரை மெதுவாகச் செலுத்தும்படி நான் டிரைவரிடம் சொன்னேன். காரில் இருந்தவாறு நான் அவளை எட்டிப் பார்த்தேன். இடுப்பில் இருந்த குழந்தையைப் பார்த்து அவள் பாசம் குடிகொள்ள புன்னகைத்தாள். அந்தக் காலத்தில் நான் பார்த்த அதே புன்னகை! மேகத்தைக் கிழித்துக்கொண்டு வெளியே தெரியும் நிலவொளியைப் போல அவளின் அந்தப் புன்னகையில் இப்போதும் அந்த காந்த சக்தி இருக்கவே செய்தது. காரைவிட்டு இறங்கி, ஓடிச்சென்று, அவளின் இடுப்பில் இருந்த குழந்தையை அவளிடம் இருந்து வாங்கி முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

ஹோட்டல்காரனின் மகள்! அவளை யாரோ ஒருவன் திருமணம் செய்து வேறு ஏதோ ஒரு ஊருக்குக் கொண்டு போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், இதே நகரத்தில் ஏதாவதொரு மூலையில் தனக்குப் பிறந்த பிள்ளைகளுடன், பிள்ளைகளின் பிள்ளைகளுடன் அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள்.

கமலம்! - அவளுக்கும் பிள்ளைகளும், பேரன்களும், பேத்திகளும் உண்டாகி இருப்பார்கள். அவள் எப்போதாவது என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாளா? அப்படியே நினைத்துப் பார்த்தாலும், ஒருவித கடின மனத்துடனும் அலட்சிய மன நிலையுடன்தான் என்னைப் பற்றி நினைத்துப் பார்ப்பாள்.

புன்னகையும், ஹோட்டல்காரனின் மகளும், கமலமும் இப்போது தங்களின் கணவர்கள், பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள்- எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து ஓணத்திற்காக தயார் செய்யப்பட்ட பலகாரங்களைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். என் வீட்டில் இருக்கும் அளவிற்கு பல்வேறு வகைப்பட்ட பலகாரங்கள் அவர்கள் வீட்டில் இருக்காதுதான். என்னிடம் இருக்கும் பணம் அவர்களிடம் இல்லைதான். ஒரு வேளை அவர்கள் குடிப்பது வெறும் கஞ்சித் தண்ணீராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் குடிக்கும் கஞ்சித் தண்ணீருக்கு சுவை இருக்கிறது. அதில் உப்பு இருக்கிறது!

எனக்கு அருகில் காளானும், பால் பாயசமும் இருக்கிறது. ஆனால், காளானில் உப்பு சேர்க்கவில்லை. பால் பாயசத்தில் சர்க்கரை சேர்க்கவில்லை.

கிருஷ்ணா...! பரமா...!

இல்லை- யாருமே இல்லை. எல்லோருமே ஓணச்சாப்பாடு சாப்பிட போய் விட்டார்கள். என்னிடமிருக்கும் பணமும், என்னுடைய வசதியான வாழ்க்கையும் அவர்களுக்கு ஒரு சிறு புல்லைப் போல... என்னுடைய இந்த வசதியான வாழ்க்கையில் உப்பு இல்லை. சர்க்கரை இல்லை...

அய்யோ! என் வாழ்க்கை இப்படியா ஆக வேண்டும்...?!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.