Logo

தந்தையும் மனைவியும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6633
thandhaiyum manaiviyum

"அதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டாமா?"- குழந்தையை மடியில் வைத்தவாறு பாரு முணுமுணுத்தாள். "என்னைப் போல இருக்குற பொம்பளைங்க ஒவ்வொரு மாசமும் நோட்டை எண்ணி எண்ணி வாங்குறதைப் பார்க்குறப்ப..." - பாருவின் குரல் உயர்ந்தது. "அவங்களுக்குக் கிடைச்ச மாதிரி ஒரு புருஷன் எனக்குக் கிடைக்கலியே!"

நீலாண்டச்சார் வாசலில் வெயில் காய்ந்து கொண்டிருந்தான். அவனுடைய ஒரே மகனான மாதவனின் மனைவி தான் பாரு. அவன் கோபத்தை அடக்கிக்கொண்டு பாரு சொல்லிக் கொண்டிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

பாரு மனவேதனை மேலோங்கக் கூறிக்கொண்டிருந்தாள். "இல்லாட்டி நான் ஏன் சொல்றேன்? ம்... எல்லாம் என் தலைவிதி..."

அதற்கு மேல் கிழவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. கையில் இருந்த கம்பை ஊன்றியவாறு எழுந்து நின்றான். "என்னடி... என் ஒரே மகன் உயிரோட இருக்குறது ஒனக்குப் பிடிக்கலியா?"

அதைக் கேட்டு பாருவிற்குக் கோபம் வந்துவிட்டது. "ம்... உங்களுக்கு மட்டும்தான் மகன் இருக்கிறாரா? வேற யாருக்கும் மகன் இல்லைன்ற நினைப்பா? பட்டாளத்துக்குப் போறவங்க எல்லாம் செத்தா போறாங்க? இந்த ஊர்ல இருந்து எவ்வளவு பேரு பட்டாளத்துல போய்ச் சேர்ந்திருக்காங்க. அவங்க யாருமே சாகலியே! அவங்க எல்லாரும் அங்கே போயி அவங்களோட பொண்டாட்டிக்கு அஞ்சு பத்துன்னு பணத்தை அனுப்பிக்கிட்டுத்தான் இருக்காங்க."

"அந்த அஞ்சு, பத்து இல்லைன்னு வச்சுக்கோ. அதுக்கா? உனக்கு இங்கே என்ன குறை இருக்கு...? சொல்லு"

"இப்படி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும் சொல்லிட்டேன்."

"உனக்கு கோபம் வந்து என்னை என்னடி பண்ணப்போகுது? நான் சாகுறப்போ என் வாயில ஒரு துளி தண்ணீர் ஊத்த அவன் மட்டும்தான் இருக்கான். அவனைப் பட்டாளத்துக்கு அனுப்ப நிச்சயமா நான் சம்மதிக்க மாட்டேன்."

அவ்வளவுதான்- தனியே உட்கார்ந்து தனக்குள் முணு முணுக்க ஆரம்பித்துவிட்டாள் பாரு. அவள் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு எழுந்து நின்றாள். வாசல் கதவை பயங்கர கோபத்துடன் வேகமாக அடைத்துவிட்டு தெற்குப் பக்கம் இருந்த வீட்டை நோக்கி நடந்தாள்.

"பட்டாளத்துல இருந்து ஏதாவது வந்திச்சாடீ ஜானம்மா?"- என்று கேட்டவாறு பாரு தெற்குப் பக்கம் இருந்த வீட்டுப்படியின் மேல் ஏறினாள்.

ஜானம்மா ஒரு பெட்டியைத் திறந்து ஒரு புடவையையும் ப்ளவ்ஸுக்குரிய துணிகளையும் எடுத்துக்கொண்டு வந்தாள். பாரு ஒவ்வொரு துணியையும் எடுத்துப் பார்த்தாள். புடவையை கையில் எடுத்து விரித்தவாறு கேட்டாள். "இந்தப் புடவையோட விலை என்ன இருக்கும்?"

"எங்க வீட்டுக்காரர் பட்டாளத்துல இருந்து அனுப்பி வச்ச புடவைதானே இது! இதோட விலை என்னன்னு எனக்கு என்ன தெரியும்? இதைப் பார்த்தவங்க சொல்றாங்க இதோட விலை எழுபத்தஞ்சு ரூபா இருக்கும்னு."

அதைக் கேட்டதும் பாரு அலட்சியமான குரலில் சொன்னாள். "ஓ... இந்தப் புடவையோட விலை எழுபத்தஞ்சு ரூபாயா? அப்போ நல்ல புடவையோட விலை என்னவா இருக்கும்?"

அவ்வளவுதான்- ஜானம்மாவின் முகம் வாடிப் போய்விட்டது. அவள் எதற்கு வீண் வம்பென்று தன்னுடைய பேச்சை மாற்றினாள். "நாங்க இன்னைக்கு சினிமாவுக்குப் போறோம். பாரு அக்கா, நீங்க வர்றீங்களா?"

"நான் வரல... நான் பாட்டுக்கு சினிமாவுக்குப் போயிட்டா, எப்படி நீ போகலாம்னு கேக்குறதுக்கு என் வீட்ல என்னோட புருஷன் இருக்காரு..."

பாருவின் பேச்சுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மனக்குறையை ஜானம்மா புரிந்து கொள்ளாமல் இல்லை. அவள் கேட்டாள். "பாரு அக்கா, உங்களுக்கு ஏன் இப்படி ஒரு பொறாமை? நாங்க என்ன தினந்தோறுமா சினிமா பார்க்கப் போய்க்கிட்டு இருக்கோம்?"

"நான் ஏன் பொறாமைப்படணும்? அப்படிப் பொறாமைப்பட்டு என்ன பிரயோஜனம்? என் வீட்லதான் புருஷன்னு ஒரு ஆள் இருக்கே! கண்டவங்கக்கிட்ட எல்லாம் வேலைக்குப் போகாம பேசாம பட்டாளத்துக்குப் போயிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? எல்லாமே என்னோட தலைவிதி! நான் வேற என்ன சொல்ல முடியும்!"

"ஆமா... மாதவன் அண்ணன் ஏன் பட்டாளத்துக்குப் போகல?"

"அதை ஏன் கேக்குற? வீட்ல இருக்குற கிழவன், மகன் மகன்னு எப்போ பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருந்தா...? மகனும் அப்பனைப் போலவே... அவரைப் பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்குறது இல்ல..."

"சாவு இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்குற கிழவன்தானே பாரு அக்கா? அவருக்குன்னு இருக்குறது ஒரே ஒரு மகன்தானே!"

"அதைப் பற்றி இப்போ பேசி என்ன பிரயோஜனம் ஜானம்மா? எல்லாம் என் தலைவிதி!"

அன்று மாலையில் மாதவன் வேலை முடிந்து வந்தவுடன், ஜானம்மாவிற்கு பட்டாளத்திலிருந்து துணிமணிகள் வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் கூறினாள் பாரு. "ப்ளவ்ஸ்... புடவை- எல்லாமே வந்திருக்கு. புடவையோட விலை எப்படியும் நூறு ரூபா வரும். எல்லாம் அவளோட புருஷன் பட்டாளத்துல இருந்து அனுப்பினதுதான். ஒவ்வொரு மாசமும் தவறாம பத்து, பதினைஞ்சு, இருபதுன்னு அந்த ஆளு பணம் அனுப்பி வச்சிக்கிட்டுத்தான் இருக்காரு. ஆம்பளைன்னா இப்படி காடும் மலையும் ஏறி பொண்டாட்டியைக் காப்பாத்தணும்."

அதற்கு மாதவன் எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்தான். பட்டாளத்தில் சேர அவனுக்கும் விருப்பம்தான். பக்கத்து வீடுகளைத் தேடி தபால்காரன் போகிறபோது அவனுடைய மனதிற்கு என்னவோ போல் இருக்கும். பட்டாளத்திற்குப் போனவர்கள் விடுமுறையில் ஊர் திரும்புகிறபோது, அவர்களின் வீட்டைச் சேர்ந்தவர்களும், சொந்தக்காரர்களும் அவர்களுக்குத் தரும் உற்சாகமான வரவேற்பையும் கொஞ்சம் கூட கணக்குப் பார்க்காமல் அவர்கள் பணத்தைச் செலவழிப்பதையும் அவன் பார்த்து உண்மையிலேயே பொறாமைப்படுவான். ஆனால், வயதான தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடக்க அவனுக்குச் சிறிது கூட விருப்பம் இல்லை. சொல்லப்போனால் அதற்கான தைரியம் அவனுக்குக் கிடையாது.

நீலாண்டச்சாரைப் பொறுத்தவரை, மாதவனின் மடியில் கிடந்தவாறு, மாதவனின் கையால் நீரைக் குடித்தவாறு, மாதவனைப் பார்த்தவாறு மரணத்தைத் தழுவ வேண்டும் என்ற ஒரு விருப்பத்தைத் தவிர, இந்த வாழ்க்கையில் அவருக்கு வேறு எந்த விருப்பமும் இல்லை.

போர் தொடங்கிவிட்டது என்பதைக் கேட்டவுடன் கிழவன் சொன்னான். "ஜெர்மன்காரனோட விளையாட்டு ஆரம்பமாயிடுச்சா? எல்லாம் முடிஞ்ச மாதிரிதான்..."

முதல் உலகப்போரின் போது நாட்டு மக்கள் அனுபவித்த கஷ்டங்களும், பிரச்சினைகளும் கிழவனின் மனதை விட்டு இன்னும் நீங்காமல் இருந்தன. இனிமேலும் அத்தகைய கஷ்டங்கள் வரப்போகின்றன என்பதை நினைத்துப் பார்த்தபோது, கிழவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவன் கூறினான், "இவனுங்களால மானம், மரியாதையோட இருக்க முடியலியா? ஒருத்தனுக்கொருத்தன் ஏன்தான் அடிச்சிக்கிறானுங்களோ தெரியல..."


பட்டாளத்தில் சேர்வதற்காக ஆள் எடுக்கிறார்கள் என்றும், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பல இளைஞர்கள் பட்டாளத்தில் சேர்ந்து விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டபோது கிழவனுக்கு ஒருவித பதைபதைப்புதான் உண்டானது. அவன் பாருவைப் பார்த்துச் சொன்னான். "பாரு... மாதவன்கிட்ட சொல்லு பட்டாளத்துக்குப் போகக் கூடாதுன்னு. அங்கே போனா குண்டு பாய்ஞ்சு செத்துப்போவான். உனக்குத் தெரியும்ல?"

மாதவன் பட்டாளத்திற்குச் செல்லக்கூடாது என்றுதான் ஆரம்பத்தில் பாருவும் நினைத்திருந்தாள். ஆனால், பக்கத்து வீடுகளில் பணம் சரளமாக புரள ஆரம்பித்ததும், பாருவின் மனம் நாளடைவில் மாறத் தொடங்கியது. "போனவங்க என்ன செத்தா போயிட்டாங்க! என் வீட்டுக்காரரும் பட்டாளத்துக்கு போனாத்தான் என்ன?"- இப்படி பேச ஆரம்பித்தாள் அவள்.

பாருவின் இந்த மனமாற்றத்தைப் பார்த்து கிழவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவளின் இந்தக் கருத்தைக் கேட்டு அவன் மனம் பதறினான். அவனுக்குத் தெரியும், தன்னுடைய மகன்மேல் தான் கொண்டிருக்கும் பாசத்தைவிட பாரு மாதவன் மீது அதிகமாக ஆட்சி செய்ய முடியும் என்பதை பட்டாளத்துக்குப் போயிருப்பவர்களின் வீடுகளில் உள்ள விசேஷ செய்திகளைப் பாரு சொல்லும்போது, எதுவுமே பேசாமல் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருப்பான் மாதவன். எனினும், அந்த மாதிரியான சமயங்களில் அவனுடைய முகத்தில் தெரியும் உணர்ச்சிகளை ஒரு பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருப்பான் கிழவன். அடுத்த நிமிடம் அவன் தனியாக அமர்ந்து தனக்குத் தானே ஏதாவது முணுமுணுக்க ஆரம்பித்து விடுவான். "அவளுக்குப் பணம்தான் முக்கியம். ஆனா, எனக்கு என் மகன்தான் பெரிசு..."

இரவு, பகல் எந்நேரமும் மனதிற்குள் பதைபதைப்புடனேயே இருந்தான் கிழவன். மாதவன் வேலைக்குப் போய்விட்டு உரிய நேரத்திற்குள் திரும்பி வரவில்லையென்றால், அவன் கம்பை எடுத்து ஊன்றியவாறு அவனைத் தேடி வெளியே புறப்பட்டு விடுவான்.

இரவு நேரத்தில் தெற்குப் பக்கம் இருக்கும் அறையில் படுத்திருக்கும் அவன் வடக்குப் பக்கம் இருக்கும் அறையைப் பார்த்துக் கூப்பிடுவான்." மாதவா..."

"ம்..."

சிறிது நேரம் கழித்து கிழவன் மீண்டும் அழைப்பான்.

"மாதவா..."

"ம்..."

பாருவிற்கு அப்போது பயங்கர கோபம் வரும். அவள் மெதுவான குரலில் கூறுவாள். "இதென்ன? கிழவனுக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சுப் போச்சா?"

மாதவன் முணுமுணுக்கும் குரலில் சொல்லுவான். "ச்சீ... பேசாம இருடி..."

கிழவன் மீண்டும் அழைப்பான்."மாதவா..."

"என்னப்பா? உங்களுக்கு என்ன வேணும்?"

"சும்மா கூப்பிட்டேன்டா மகனே."

இப்படி ஒவ்வொரு இரவிலும் அவன் தன் மகனை அழைத்துக் கொண்டே இருந்தான்.

பட்டாளத்தில் போய்ச் சேர்ந்த மத்தாயி விடுமுறையில் வீட்டிற்கு வந்தான். மத்தாயியும் மாதவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

மத்தாயி வந்திருக்கும் விஷயம் தெரிந்து பாரு அவனுடைய வீட்டிற்குச் சென்றாள். அங்கு நடக்கும் கோலாகலத்தைப் பார்த்து பாருவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மீன் வாங்கிக் கொண்டு வருவதற்கு சில்லரை இல்லாததால் மத்தாயியின் தாய் முழு பத்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து மாற்றிக்கொண்டு வரும்படி சொன்னதைப் பார்த்து பாருவிற்கு இதயமே வெடித்துவிடும் போல் இருந்தது.

மத்தாயி பாருவிடம் மாதவனைப் பற்றி விசாரித்தான். கொஞ்சம் பிஸ்கட்டை எடுத்து தாளில் சுற்றி குழந்தைக்குக் கொடுக்கும்படி அவளிடம் தந்தான். பாரு அவனைப் பார்த்துக் கேட்டாள். "நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் பிறகு ஏன் என் வீட்டுக்காரரை மட்டும் இங்கே விட்டுட்டு நீங்க மட்டும் தனியா பட்டாளத்துக்குப் போயிட்டீங்க?"

"ம்... மாதவனை இந்தத் தடவை கூட்டிட்டுப் போகலாம்னுதான் இருக்கேன்."

மத்தாயியைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு பாரு கிளம்பினாள்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மாதவனிடம் ஓடிப்போய் மத்தாயி பட்டாளத்திலிருந்து வந்திருக்கும் செய்தியைச் சொன்னாள் பாரு. "நீங்க இப்போ அவரைப் பார்க்கணுமே! முன்னாடி இருந்த ஆளு மாதிரியே இல்ல.. ஆளு ரொம்பவும் தடிச்சிப் போயி, முரட்டுத்தனமான மீசையை வச்சிக்கிட்டு... பார்த்தா அடையாளமே தெரியாது. ஒரு பெரிய ட்ரங்குபெட்டி நிறைய பணமும், சாமான்களும் கொண்டு வந்திருக்காரு. இங்க உங்களைப் பார்க்கிறதுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு."

பாரு தன் கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கிழவனும் கேட்டான்.

சாயங்காலம் ஆனதும் மத்தாயி மாதவனைப் பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு வந்தான். பட்டாளத்தில் அணியும் ஆடைகளுடன் உதட்டில் சிகரெட்டை வைத்து புகைத்தவாறு 'லெஃப்ட் ரைட்' போட்டு நடந்து வந்து கொண்டிருந்தான். வாசலில் பூட்ஸ் ஒலியைக் கேட்டு சமையலறையில் இருந்த பாரு வெளியே ஓடி வந்து பார்த்தாள்.

சிகரெட்டை உதட்டில் இருந்து எடக்காமலே மத்தாயி பந்தாவான குரலில் கேட்டான். "மாதவன் எங்கே போயிருக்கான்?"

பாரு மனம் நிலைகொள்ளளாமல் தவித்தவாறு சொன்னாள். "பீடி வாங்குறதுக்காக கடைப்பக்கம் போயிருக்காரு. இதோ இப்ப வந்திடுவாரு."

அவள் உள்ளே நின்றுகொண்டு மண்ணெண்ணெய் விளக்கை எடுத்து வாசல் திண்ணையின் வடக்குபக்கத்தில் ஒரு ஓரத்தில் வைத்தாள். மரியாதை மேலோங்க சற்று ஒதுங்கி நின்றவாறு அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள். "எப்போ பட்டாளத்துக்குத் திரும்பவும் போறதா இருக்கு?"

மடை திறந்த அணையைப் போல மத்தாயி பேசிக் கொண்டே இருந்தான். பட்டாளத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீடு வார்த்தைகளையும், உருது மொழியில் சில வார்த்தைகளையும், ஆங்கில வார்த்தைகளையும் மத்தாயி சர்வ சாதாரணமாக பேச்சினூடே பயன்படுத்துவதைப் பார்த்து அதிசய மனிதன் ஒருவனைப் பார்ப்பதைப் போல அவள் மத்தாயியைப் பார்த்தாள். தனக்கு விடுமுறை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமென்றும், அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு அவனை மிகவும் பிடிக்கும் என்பதால், விடுமுறை தரவே அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவன் சொன்னான். அவன் தான் பார்த்த நகரங்களின் பெயர்களை மருந்து விற்பனை செய்யக்கூடிய மனிதன் மருந்துகளின் பெயர்களை எப்படி தங்கு தடையில்லாமல் கூறுவானோ, அப்படி மூச்சு விடாமல் கூறுவதைப் பார்த்து பாருவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அதைக் கேட்டு அவளுக்கு மூச்சுவிடக்கூட சிரமமாக இருப்பதைப் போல் இருந்தது.

கிழவன் திண்ணையின் தெற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தான். விளக்கு வடக்குப் பக்கத்தில் இருந்ததால், மத்தாயி கிழவனைப் பார்க்கவில்லை. மத்தாயி வீட்டைத் தேடி வந்த நிமிடத்திலேயே, கிழவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏதாவது சொல்லி மத்தாயியை அந்த இடத்தை விட்டு இந்த நிமிடத்திலேயே விரட்டிவிட்டால் என்ன என்று அவன் மனதிற்குள் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் மனதிற்குள் தோன்றிய பதைபதைப்பை முழுமையாக அடக்கிக் கொண்டு அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான்.


மத்தாயி பாருவைப் பார்த்துக் கேட்டான். "ஆமா... அப்பாவை எங்கே காணோம்?"

"அதோ இருக்காரே!"- அவள் விரலால் சுட்டிக்காட்டியவாறு விளக்கை எடுத்து கிழவனுக்குப் பக்கத்தில் வைத்தாள்.

மத்தாயி கிழவனுக்கு அருகில் போய் நின்றுகொண்டு கேட்டான். "என்னப்பா, அட்டன்ஷனா உட்கார்ந்திருக்கீங்க?"

"என்ன?" - அவரின் குரலில் வெறுப்பும் கோபமும் சரிசமமாக கலந்திருந்தன.

"நல்லா இருக்கீங்களா?"

அதற்கு கிழவன் பதிலெதுவும் கூறாமல் வெறுமனே அவனை கண்களால் பார்க்க மட்டும் செய்தான்.

அப்போது மாதவன் அங்கு வந்தான். இரு நண்பர்களும் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். கிழவன் எழுந்து வீட்டிற்குள் போனான்.

அன்று இரவு முழுவதும் கிழவனுக்கு சிறிது கூட தூக்கம் வரவில்லை.

மறுநாள் பாருவின் முகத்தில் இதற்கு முன்பு இல்லாத ஒரு பிரகாசம் தெரிந்தது. வாயில் ஏதோ பாட்டை முணுமுணுத்தவாறு அவள் வீட்டைப் பெருக்கி மாதவனின் வேட்டி, சட்டை ஆகியவற்றைச் சலவை செய்து தயாராக வைத்தாள். எந்த விஷயத்தைப் பற்றியும் அவள் அன்று யாரிடமும் கொஞ்சம் கூட குறை கூறிப் பேசவில்லை. யாரைப் பற்றியும் குறைப்பட்டுக் கொள்ளவும் இல்லை.

அன்று காலையிலேயே மாதவன் எழுந்து வெளியே போனான். அடுத்த சில மணி நேரங்கள் கழித்து அவனும் மத்தாயியும் ஒன்றாகத் திரும்பி வந்தார்கள். பின்னர் இருவரும் ஒன்றாகவே வெளியே போனார்கள். மாதவன் அன்று வேலைக்குப் போகவில்லை. அன்று மதியம் மத்தாயியின் வீட்டிலேயே அவன் சாப்பிட்டான்.

 கிழவன் பாருவைப் பார்த்துக் கேட்டான். "அவன் ஏன் இன்னைக்கு வேலைக்குப் போகல?"

"அவரோட நண்பர் பட்டாளத்துல இருந்து வந்திருக்கார்ல? அதான் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்குறாங்க. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்து ஒரு வருஷம் ஆச்சே!"

கிழவனின் மனதில் சந்தேகம் உண்டாக ஆரம்பித்தது. இனி மத்தாயி வீட்டுப் பக்கம் வந்தால், அவனிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமென்றும் மகனுக்கு அறிவுரை கூற வேண்டியது கட்டாயத் தேவை என்பதையும் கிழவன் உணர்ந்தான்.

மாலை நேரம்ஆனதும் மாதவன் வந்தான். கிழவன் அவனைப் பார்த்துக் கேட்டான். "என்ன நீ இன்னைக்கு வேலைக்கே போகலையா?"

"இல்ல... உடம்பு பயங்கரமா வலிச்ச மாதிரி இருந்தது."

"அப்படியா? ஒரு விஷயம் நான் சொல்லணும்னு நினைச்சேன். மத்தாயி கூட நீ சுத்திக்கிட்டு இருக்குறது நல்ல விஷயமா என் மனசுக்குப் படல. அவன் நல்லவன் இல்ல. ஒரு மாதிரியான ஆளு..."

மாதவன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. மத்தாயி அதற்குப் பிறகு அவனுடைய வீட்டுப் பக்கமே வரவில்லை.

அடுத்த சில நாட்கள் கடந்தோடின. மாதவன் வேலைக்குப் போவதே இல்லை. கிழவன் இந்த விஷயத்தைப் பற்றி பாருவிடமும் மாதவனிடமும் கேட்பது கூட இல்லை. அவன் சதா நேரமும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டதைப் போல் இருந்தான்.

ஒரு நாள் இரவு மாதவன் சாப்பிடவே வரவில்லை. மாதவன் வருகிறானா என்று பார்த்தவாறு கிழவன் வாசல் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தான். பாரு கிழவனை உணவு சாப்பிடுவதற்காக அழைத்தாள்.

"ஆமா... மாதவனை எங்கே காணோம்?"

"இன்னைக்கு வரமாட்டேன்னு ஏற்கெனவே என்கிட்ட சொல்லிட்டுத் தான் போனாரு?"

"அவன் அப்படி எங்கே போயிருக்கான்?"

"அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்கோ போறதா சொன்னாரு."

"எனக்கு சாப்பாடும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்."

அவள் உள்ளே போய் படுத்துக் கொண்டாள்.

பொழுது விடிவதற்கு முன்னால் கிழவன் பாருவை அழைத்தான். "அவன் வந்துட்டானா?"

"இல்ல..."

பொழுது விடிந்தது.

கிழவன் கேட்டான். "அவன் என்ன சொன்னான்?"

"எனக்கென்ன தெரியும்?"

"உனக்கு ஒண்ணுமே தெரியாது, இல்ல?"- கிழவன் உரத்த குரலில் கத்தினான்.

அடுத்த நிமிடம் கம்பை ஊன்றியவாறு அவன் நடக்க ஆரம்பித்தான். மத்தாயியின் வீட்டின் முன்னால் போய் நின்றான்.

"என் மகன் எங்கே?"

மத்தாயியின் தாய் சொன்னாள். "அவன்தான் மத்தாயி கூட பட்டாளத்துக்குப் போயிருக்கானே! உங்களுக்குத் தெரியாதா?"

"எங்கே? எங்கே போயிருக்கான்னு சொன்னே?"

"பட்டாளத்துக்கு... பட்டாளத்துக்கு..."

அவ்வளவுதான். கிழவன் உடல் பயங்கரமாக நடுங்க ஆரம்பித்தது. கையில் இருந்த கம்பு கீழே விழுந்தது. அடுத்த நிமிடம் அவன் தரையில் விழுந்தான்.

மத்தாயியின் தாய் பக்கத்தில் இருந்த வீட்டுக்காரர்களை அழைத்து கிழவனைத் தூக்கிக்கொண்டு போய் அவனுடைய வீட்டிலிருந்த கட்டிலில் படுக்கச் செய்தாள்.

ஒரு மாதம் படுவேகமாக கடந்தோடியது. கிழவன் எப்போதாவது படுத்திருக்கும் கட்டிலை விட்டு எழுந்திருப்பான். எப்போது பார்த்தாலும் ஏதாவது வாய்க்கு வந்தபடி முணுமுணுத்தபடி கட்டிலிலேயே படுத்துக் கிடப்பான். பாருவைப் பார்த்து ஒரு வார்த்தை கூட அவன் பேசுவதில்லை. கிழவனிடம் ஏதாவது பேசலாம் என்றாலோ அதற்கான தைரியம் பாருவிற்கு இல்லை. இருந்தாலும், அவள் தன்னுடைய மனதிற்குள் உற்சாகம் நிரம்பியவளாகவே இருந்தாள்.

மாதவனிடமிருந்து எந்தவித தகவலும் வரவில்லை. வீட்டுச் செலவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், பெரிய எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு இப்போது இருக்கும் உற்சாகத்திற்கு எந்தவித குறையும் உண்டாகாமல் ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருந்தாள் பாரு.

தபால்காரன் பாதையில் போவதைப் பார்த்தால், அவள் அடுத்த நிமிடம் ஓடி வந்து படியில் நிற்பாள். அவனோ அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் தன் வழியே போய்க் கொண்டிருப்பான்.

ஒரு நாள் அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள். "எங்களுக்கு எதுவும் வரலியா?"

தபால்காரன் திரும்பிப் பார்த்துக் கேட்டான். "என்ன பேரு?"

"வீட்டு பேரு ஒணக்கய்யத்து. என் பேரு கல்யாணி பாரு."

"எதுவுமே இல்ல..." - அவன் அடுத்த நிமிடம் அந்த இடத்தை விட்டுப் போனான்.

அடுத்த நாள் பாதையில் போய்க் கொண்டிருந்த தபால்காரனைப் பார்த்து அவள் வாசலிலேயே நின்றிருந்தாள். அவன் அவள் வீட்டு வாசலில் நின்றவாறு பாருவைப் பார்த்துக் கேட்டான். "இந்த வீட்டு பேரு ஒணக்கய்யத்து தானே? இங்கே நீலகண்டன்றது யாரு?"

அவ்வளவுதான்- பாருவின் இதயம் 'படபட'வென்று துடிக்க ஆரம்பித்தது. அவள் கேட்டாள். "ஏதாவது வந்திருக்கா?"

"ம்..." - அவன் சிரித்தவாறு ஒரு கடிதத்தையும், மணியார்டர் ஃபாரத்தையும் எடுத்துக் காட்டியவாறு சொன்னான்."ஒணக்கய்யத்து நீலகண்டன்- அவரு எங்கே?"

"ம்... உள்ளே இருக்காரு. உடம்புக்கு ஆகாம படுத்திருக்காரு"- அவள் உள்ளே ஓடிப்போய் சொன்னாள். "பணம் வந்திருக்கு"

"எங்கே என் மகன்?"- கிழவன் அடித்துப்பிடித்து எழுந்தான். அவன் வேக வேகமாக வாசல் திண்ணையை நோக்கி வந்தான். “எங்கே என் மகன்?”


தபால்காரர் வாசலில் நின்றவாறு கேட்டான். “உங்க பேருதான் நீலகண்டனா?”

“ஆமா... அதுதான் என் பேரு. அவன் பேரு மாதவன். நான் அவனோட அப்பா.”

தபால்காரன் சிரித்தவாறு சொன்னான். “உங்களுக்கு ஒரு கடிதமும் மணியார்டரும் வந்திருக்கு” -அவன் வாசல் படியேறி கடிதத்தை கிழவனிடம் நீட்டினான்.

நடுங்குகிற விரல்களால் கிழவன் அந்தக் கடிதத்தை வாங்கினான். “இது அவன் எழுதின கடிதம்தானே? அவனுக்கு ஏதாவது?” -அவன் தொண்டை குமுறியது. “எனக்கு மகன்னு அவன் ஒருத்தன்தான் இருக்கான். அவனைப் பார்த்துக்கிட்டே நான் சாகணும்.”

“இவங்க?” - தபால்காரன் சுவரோடு சேர்ந்து நின்று கொண்டிருந்த பாருவைச் சுட்டிக்காட்டி கேட்டான்.

“இது அவனோட பொண்டாட்டி. அவனுக்கு ஒரு சின்ன பையன் இருக்கான். உள்ளே இப்போ தூங்கிக்கிட்டு இருக்கான்.”

தபால்காரன் மணியார்டர் ஃபாரத்தையும், பேனாவையும் கிழவனின் கையில் தந்தான். வாழ்க்கையிலேயே முதல் முறையாக கிழவன் பேனாவைப் பிடித்து அன்றுதான் கையெழுத்துப் போட்டான்.

பாருவின் முகத்தில் இதற்கு முன்பு இல்லாத ஒரு உணர்ச்சி வேறுபாடு தெரிந்தது. அவளின் முகத்தில் புரிந்துகொள்ள முடியாத ஒரு கார்மேகம் வந்து மூடிவிட்டிருந்தது.

தபால்காரன் மூன்று ஐந்து ரூபாய் நோட்டுகளை எண்ணி கிழவனின் கையில் கொடுத்தான்.

அதற்கு மேல் பாரு அங்கே நிற்கவில்லை. அவள் ‘விசுக்’கென்று வீட்டிற்குள் போனாள். சமையலறையில் ஒரு சட்டி உடையும் சத்தம் வெளியே கேட்டது.

தபால்காரன் போனவுடன், கிழவன் பாருவை அழைத்தான். கையில் இருந்த கடிதத்தைப் படிக்கும்படி அவளிடம் சொன்னான். அவள் மூன்றாம் வகுப்பு வகை படித்திருக்கிறாள். பாரு என்ன நினைத்தாளோ கிழவனையே முறைத்துப் பார்த்துவிட்டு தன்னுடைய முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு வேகமாக நடந்து போனாள்.

தான் இதுவரை எழுதப்படிக்கத் தெரியாமல் போனதற்காக முதல் தடவையாக கிழவன் கவலைப்பட்டான். அவன் வருத்தமான குரலில் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “ம்... நான் நாலு எழுத்து படிச்சிருந்தா இந்த நிலை வருமா?”

அடுத்த நிமிடம் கிழவன் கடிதத்தையும் பணத்தையும் மடியில் வைத்துக்கொண்டு கம்பை ஊன்றியவாறு பாதையில் இறங்கி நடந்தான். தெற்குப் பக்கம் இருக்கும் வீட்டைச் சேர்ந்த ஜானம்மாவின் இளைய சகோதரன் பாலகிருஷ்ணன் எதிரில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த கிழவன் சொன்னான். “கொஞ்சம் நில்லுடா மகனே. இந்தக் கடிதத்தை எனக்குப் படிச்சுக் காட்டு...”

பாலகிருஷ்ணன் கிழவனிடமிருந்து கடிதத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான். ‘தந்தையின் ஆசியால் வழியில் எந்தவித பிரச்சினையும் உண்டாகவில்லையென்றும், தன் தந்தையைத்தான் கடவுளைப் போல மனதில் நினைத்துக் கொண்டிருப்பதாகவும், போகும்போது ஒரு வார்த்தை சொல்லாமல் கிளம்பியதற்காக தன்னை மன்னிக்க வேண்டுமென்றும், தன் தந்தையின் மனதில் தன்னைப் பற்றி வெறுப்பு இருக்கக் கூடாதென்றும், தான் அனுப்பும் மணியார்டர் பணத்தை தன் தந்தை விருப்பப்படி செலவழித்துக் கொள்ளலாம் என்றும், ஒவ்வொரு மாதமும் தவறாமல் தான் கடிதமும் மணியார்டரும் அனுப்பி வைப்பதாகவும் எழுத்துத் தகராறுகளுடனும் இலக்கணத் தகராறுகளுடனும் மாதவன் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான். பாலகிருஷ்ணன் அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்த கணத்திலிருந்தே கிழவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. கடிதத்தைப் படித்து முடித்தபோது, அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

கடிதத்தின் முடிவில் பாருவையும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி மாதவன் வேண்டிக் கேட்டுக் கொண்டிருந்தான். முழு கடிதத்தையும் படித்து முடித்தவுடன் கிழவன் சொன்னான். “மகனே, கடிதத்தை இன்னொரு தடவை படி...”

பாலகிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை அந்தக் கடிதத்தைப் படித்தான். கிழவன் கண்களில் நீர் வழிய அந்தக் கடிதம் படிக்கப்படுவதைக் கேட்டான். இரண்டாவது தடவையாக கடிதத்தைப் படித்து முடித்த பாலகிருஷ்ணன் எங்கே கிழவன் மூன்றாவது முறை கடிதத்தை வாசிக்கச் சொல்லி விடுவானோ என்று பயந்து போய், அதை கிழவனின் கையில் கொடுத்துவிட்டு வேகமாக ஓடியே போய்விட்டான்.

அதற்குப் பிறகும் கிழவனுக்குத் திருப்தியாகவில்லை. அவன் அருகிலிருந்த தேநீர் கடைக்குச் சென்றான். தேநீர் கடையில் அமர்ந்திருந்த ஒருவன் "மாதவனிடமிருந்து கடிதம் ஏதேனும் வந்ததா?" என்று விசாரித்தான். அவ்வளவுதான். மாதவன் எழுதியிருந்த கடிதத்தையும் அவன் அனுப்பி வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் காட்டியவாறு கிழவன் சொன்னான். "அவன் என் பேருக்கு அனுப்பி வச்சிருக்கான். இதைக் கொஞ்சம்படி..." அந்தக் கடிதத்தை எடுத்துக் கொடுத்து வாசித்துக் காட்டும்படி சொன்னான்.

அந்த ஆள் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தான். கிழவன் கடிதத்தைப் படிக்கப் படிக்க வாய்விட்டு அழு ஆரம்பித்தான். கடிதம் படிக்கப்பட்டு முடித்தவுடன், "கிழவன் அதை வாங்கிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தான். அப்போது தேநீர்க் கடை சொந்தக்காரன் கிழவனைப் பார்த்துக் கேட்டான். "பெரியவரே, சாயா குடிக்கலியா? உங்க மகன்கிட்ட இருந்து பணம் வந்திருக்கு. ஒரு சாயா வாங்கிக் குடிச்சிட்டுப் போக வேண்டியதுதானே!

கிழவன் மீண்டும் பெஞ்சில் அமர்ந்தான். "அப்படின்னா இரண்டு சாயா போடு."

தேநீர் கடைக்காரன் இரண்டு தேநீர் போட்டான். ஒரு தேநீரைக் கிழவன் கையில் கொடுத்துவிட்டு அவன் கேட்டான். "இன்னொரு சாயா யாருக்கு?"

கிழவன் கடிதத்தைப் படித்த ஆளை விரலால் காட்டினான். "இந்த ஆள்கிட்ட கொடு பிறகு... ரெண்டு அப்பத்தைப் பேப்பர்ல கட்டி தா. மாதவன் மகனுக்குக் கொடுக்கணும்..." என்றான்.

தேநீர் குடித்து முடித்த கிழவன் சற்று உடலை நெளித்தவாறு இடுப்பிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து பந்தாவாக தேநீர்க் கடைக்காரனிடம் நீட்டியவாறு சொன்னான். "மீதி காசைத் தா..."

ஐந்து ரூபாய் நோட்டின் மீதியை வாங்கி மடியில் வைத்தவாறு, பொட்டலமாகக் கட்டப்பட்ட அப்பத்தையும் வாங்கிக்கொண்டு கிழவன் வீட்டை நோக்கி நடந்தான். வழியில் பார்த்த எல்லோரிடமும் மாதவன் பட்டாளத்திற்குப் போயிருப்பதையும், அவனிடமிருந்து கடிதமும் பணமும் வந்திருக்கும் விஷயத்தையும், கடிதத்தில் தன்னைப் பற்றி அவன் எழுதியிருப்பதையும் அவன் ஆர்வம் பொங்கச் சொன்னான்.

பாரு பயங்கர கோபத்துடன் வீட்டில் நின்றிருந்தாள். நீர் எடுக்கக்கூடிய குடத்தை எரிச்சல் மேலோங்க அவள் ஏற்கனவே உடைத்து விட்டிருந்தாள். வாசலைப் பெருக்கியவாறு கிழவன் வெற்றிலை இடிக்கப் பயன்படுத்தும் கல்லை எடுத்து கோபத்துடன் தூரத்தில் விட்டெறிந்தாள். பையனுக்கு இரண்டு மூன்று அடிகளைக் கொடுத்தாள். அவன் வாசலில் உட்கார்ந்து அடி தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தான்.

கிழவன் படியில் நின்றவாறு கேட்டான். "பாரு... ஏன் குழந்தையை அழ விடுற?"

சமையலறையிலிருந்த பாரு அதைக் கேட்டு முணுமுணுத்தாள்.


கிழவன் பையன் கையில் ஒரு அப்பத்தைப் பிரித்து தந்தான். "மகனே... அப்பம்... அப்பம்..." என்றான் பாசத்துடன்.

பாரு வாசலில் நின்றவாறு கட்டளை இடும் குரலில் சொன்னாள். "கொடுக்க வேண்டாம்... குழந்தைக்கு அப்பம் தரவேண்டாம்."

"ஏன்? கொடுத்தா என்ன?"

"கொடுக்கக் கூடாதுன்னு நான் சொல்றேன்ல!" - என்று சொல்லிய பாரு வாசலிலிருந்து வேகமாக வந்து குழந்தை வாய்க்குக் கொண்டு சென்ற அப்பத்தைப் பிடுங்கி தூரத்தில் எறிந்தாள். குழந்தை மண்ணில் புரண்டு அழ ஆரம்பித்தான். கிழவன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தான்.

"அப்பாவும் பிள்ளையும் சாப்பிட்டா போதும். நானும் என் மகனும் பிச்சை எடுத்து பிழைச்சிக்கிறோம்..."- அவள் குழந்தையைத் தரையில் இருந்து எடுத்து இடுப்பில் வைத்தவாறு உள்ளே போனாள். குழந்தையின் அழுகையைத் தாண்டி பெரியதாகக் கேட்கும்படியான உரத்த குரலில் சமையலறையில் இருந்தவாறு அவள் சொன்னாள். "நான் சொல்லித்தான் அவர் பட்டாளத்துக்கே போனது. ஆனா, இப்போ..." அவள் தொண்டை அடைக்க தொடர்ந்து சொன்னாள். "என் பேருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காரா அந்த ஆளு?" சொல்லிவிட்டு அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

அன்று மாலையில் ஜானம்மா பாருவைப் பார்த்துக் கேட்டாள். "கடிதமும் பணமும் வந்திருக்கிறதா கேள்விப்பட்டேனே, பாரு அக்கா!"

"ம்... கடிதமும் வந்திருக்கு. பணமும் வந்திருக்கு."

"பிறகு ஏன் உங்க முகத்துல ஒரு ஒளியே இல்லாம இருக்கு"

"கடிதத்தையும் பணத்தையும் வாங்கினவுங்க முகத்தைப் போய் பாரு ஒளி இருக்கான்னு..."

"என்ன அப்படிப் பேசுறீங்க? கடிதமும் பணமும் உங்க பேருக்கு வரலியா?"

"பணம் அனுப்பின ஆளு அதை என்கிட்ட தரக் கூடாதுன்னு எழுதினா, என் கையில பணம் வந்து சேருமாடி ஜானம்மா?"

"அப்படியா? இப்படியெல்லாமா நடக்கும்?"- ஜானம்மா பாருவைப் பரிதாபமாகப் பார்த்தவாறு சொன்னாள்.

அதைக் கேட்டு பாருவின் கண்களில் நீர் அரும்பியது. "என்ன இருந்தாலும் அந்த ஆளுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசம் இல்ல, ஜானம்மா. பொண்டாட்டியையும் பிள்ளையையும் ஒழுங்கா பார்க்குற ஆளா இருந்தாத்தானே! ம்... இப்படியொரு வாழ்க்கை எனக்கு! எல்லாம் என் தலைவிதி!"

கண்களில் கண்ணீர் வழிய நீண்ட நேரம் தன் மனக்குறையை ஜானம்மாவிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் பாரு.

கிழவன் கடிதத்தையும் பணத்தையும் தலையணைக்குக் கீழே வைத்தவாறு எப்போதும் படுத்திருப்பான். வீட்டுச் செலவுக்குத் தேவையான பணத்தை மட்டும் பாருவின் கையில் தருவான். முதலில் அந்தப் பணத்தை வாங்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள் பாரு. ஆனால், வேறு வழியே இல்லாததால் அதைப் பின்னர் அவள் வாங்கிக் கொண்டாள். இருந்தாலும், பலவிதத்திலும் குறைகளைச் சொல்லி அவள் எந்த நேரம் பார்த்தாலும் முணுமுணுக்கும் குரல் சமையலறையில் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் அடிக்கடி கூறுவாள். "அப்பாவும் மகனும் நல்லா இருக்கட்டும். நானும் என் குழந்தையும் எங்கேயாவது பிச்சை எடுத்து பிழைச்சிக்கிறோம்."

அவள் மனதில் எப்போது பார்த்தாலும் வெறுப்புதான். கோபம்தான். குழந்தை ஏதாவது வேண்டுமென்று கேட்டால் அவள் உரத்த குரலில் அலறுவாள். "உன் அப்பன் என் கையில ஒண்ணும் தரல."

பையன் அழுதால், அவள் அவனைத் திரும்பத் திரும்ப அடிப்பாள். அவன் தன் தாத்தாவைத் தேடிப் போக அவள் விடுவதே இல்லை. கிழவன் பையனுக்கு தின்பதற்கு ஏதாவது வாங்கித் தருவதாக இருந்தால், அதைத் தருவதற்கு ஒத்துக் கொள்ளவே மாட்டாள். அவள் அந்த மாதிரியான நேரங்களில் கூறுவாள். "என்ன இருந்தாலும் அப்பா இல்லாத பிள்ளைதானே! ஒண்ணுமே இல்லாம கிடக்கட்டும்."

கிழவன் பாருவை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அவள் என்ன பேசினாலும், அவன் அதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. "நான் சாகுறதுக்கு முன்னாடி என் மகன் இங்கே வந்துட்டா அது போதும் எனக்கு" என்பது ஒன்றுதான் கிழவனின் பிரார்த்தனையாக இருந்தது. எந்தவித ஆபத்தும் இல்லாமல் தன் மகன் ஊருக்குத் திரும்பி வர வேண்டுமென்று அவன் பல கோவில்களுக்கும் போய் வழிபாடு நடத்தினான்.

ஒவ்வொரு மாதமும் தவறாமல் கடிதமும் மணியார்டரும் வந்து கொண்டிருந்தன. யாராவது கிழவனிடம் மாதவனைப் பற்றிக் கேட்டு விட்டால் போதும், அடுத்த நிமிடமே மாதவன் தனக்கு எழுதிய கடிதங்களைக் கொண்டுவந்து அவர்களிடம் காட்டுவான் கிழவன். மகனின் கடிதங்களை எத்தனை முறை படிக்கச் சொல்லி கேட்டாலும், கிழவனுக்கு கொஞ்சம் கூட திருப்தியே உண்டாவதில்லை. தன்னுடைய மகன் எழுதிய கடிதங்களை வாசித்துக் காட்டுபவர்களுக்கும், மகனின் குணவிசேஷங்களைப் பற்றித் தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்பவர்களுக்கும், கிழவன் தேநீர் வாங்கித் தருவான்.

பாரு வீட்டை விட்டு வேறு எங்குமே செல்வதில்லை. அவளுடைய சினேகிதிகளில் பலருக்கும் புதிய ப்ளவ்ஸுகளும், முண்டுகளும், புடவைகளும் வந்து சேர்ந்தன. சிலர் புது நகைகள் அணிந்திருந்தனர். தாராளமாக அவர்கள் கையில் பணம் புரண்டு கொண்டிருந்தது. பாருவிடம் அப்படி எதுவுமே இல்லை. அதனால் தன்னுடைய சினேகிதிகளைப் பார்ப்பதற்கு அவளுக்கே என்னவோ போல் இருந்தது. அவளின் தோழிகள் நன்றாக ஆடைகளணிந்து திரைப்படம் பார்க்கப் போவதைப் பார்த்தால், அவள் வீட்டிற்குள் போய் ஒளிந்து கொள்வாள். தன் கணவனை பட்டாளத்திற்கு அனுப்பி வைத்ததே தான் செய்த மிகப் பெரிய தவறு என்று இப்போது நினைக்க ஆரம்பித்தாள் பாரு. அவள் தனக்குத்தானே கூறிக் கொள்வாள். "அந்த ஆளு பட்டாளத்துக்குப் போனதால, என்னால நாலு பேரோட முகத்தைப் பார்க்க முடியாமப் போச்சே!"

ஒரு நாள் பாரு, ஜானம்மாவைப் பார்த்துக் கேட்டாள். "உன் வீட்டுக்காரர் பட்டாளத்துக்குப் போன பிறகு, திரும்பி எப்போ வீட்டுக்கு வந்தாரு?"

"ஒரு வருஷம் கழிச்சு வந்தாரு. ஒவ்வொரு வருஷமும் அவருக்கு விடுமுறை கிடைக்கும். ஒரு வருஷம் ஆயிட்டா, மாதவன் அண்ணனும் வருவாரு."

"அந்த ஆளு இந்தத் தடவை ஊருக்கு வந்தபிறகு, திரும்பவும் அவரை நான் பட்டாளத்துக்கு விடுறதா இல்ல, ஜானம்மா."

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

"அவர் பட்டாளத்துல இருக்குறதுனால எனக்கு என்ன பிரயோஜனம்? இங்கே அவரு ஏதாவது வேலை பார்த்தா, கிடைக்கிற காசை என் கையில கொண்டு வந்து தருவாரு. பட்டாளத்துக்குப் போன பிறகு அந்த ஆளுக்கு நானும் வேண்டாம் என் பையனும் வேண்டாம்னு ஆகிப் போச்சு."

"கிழவன் வர்ற பணத்தையெல்லாம் என்ன பண்றாரு, பாரு அக்கா?"


"அவர் அதை எடுக்கறதே இல்லடி... எடுக்குறதே இல்ல. தலையணைக்குக் கீழே வச்சிக்கிட்டே தூங்குறாரு. நிச்சயமா என் புருஷன் இந்தத் தடவை வர்றப்போ நான் பட்டாளத்துக்கு அவரை விட மாட்டேன்."

"வர்ற பணத்தைச் சேர்த்து வச்சா தோட்டமோ, வயலோ வாங்கலாம்ல!"

"தோட்டமும் வயலும் வாங்குற அளவுக்கு பணம் சேர்ற வரை நானும் என் பையனும் உயிரோட இருக்க வேண்டாமா? வேண்டாம். தோட்டமும் வேண்டாம், வயலும் வேண்டாம். இப்போ இருக்குறதை வச்சிக்கிட்டு சுகமாக வாழ்ந்தா போதும். நிச்சயமா அந்த ஆளை நான் திரும்பவும் பட்டாளத்துக்கு விடுறதா இல்ல."

"செலவுக்கு எதுவும் உங்க கையில தர்றது இல்லியா?"

"தினமும் சாப்பாட்டுக்கு அரிசி வாங்குறதுக்கு மட்டும் காசு தருவாருடி... உப்பு, மிளகு எதுவுமே சேர்க்காமத்தான் ஒவ்வொரு நாளும் கஞ்சி குடிக்க வேண்டியதிருக்கு. இப்படி நான் எதுக்கு தேவையில்லாம கஷ்டப்படணும்? என்னால இதுக்கு மேல கஷ்டப்பட முடியாது. இங்கே ஏதாவது வேலையைப் பார்த்தாபோதும். இந்தத் தடவை வர்றப்போ நிச்சயம் நான் அந்த ஆளை பட்டாளத்துக்குப் போக விட மாட்டேன்."

அடிக்கொரு தரம் "இப்போ வர்றப்போ அந்த ஆளை திரும்பவும் பட்டாளத்துக்கு விடவே மாட்டேன்" என்பதை பாரு அவர்களின் உரையாடல் முடிவுக்கு வருவது வரை சொல்லிக்கொண்டே இருந்தாள்.

ஒரு வருடம் முடிந்தது. ஒரு நாள் இரவு கிழவன் தன்னுடைய மகன் மாதவனை மனதிற்குள் நினைத்தவாறு படுக்கையில் படுத்துக்கிடந்தான். வடக்குப் பக்கம் இருந்த அறையில் பாருவும் குழந்தையும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாசலில் பூட்ஸ் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்த கிழவன் உரத்த குரலில் கேட்டான். "யார் அது?"

"அப்பா..." - மாதவனின் குரல்.

அவ்வளவுதான். அடுத்த நிமிடம் "மகனே" என்று அழைத்தவாறு படுக்கையை விட்டு எழுந்தான் கிழவன். "மகனே..." என்று மீண்டும் அழைத்தவாறு அவன் இருட்டில் துளாவினான். வாசல் எந்தப் பக்கம் இருக்கிறது என்று அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. "மகனே..." என்று மீண்டும் அழைத்துப் பார்த்தான்.

கடைசியில் தட்டுத்தடுமாறி வாசலை எப்படியோ கிழவன் கண்டுபிடித்து விட்டான். வாசல் கதவைத் திறந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வெளியே வந்தான். தந்தையும் மகனும் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

பாரு கண் விழித்து கதவைத் திறந்தாள். விளக்கை எரிய வைத்தவாறு அவள் வாசலுக்கு வந்தாள். அங்கே மாதவன் பட்டாள ஆடையோடு கம்பீரமாக நின்றிருந்தான். ஒரு நிமிடம் அவனைப் பார்த்த பாரு பின்னர் என்ன நினைத்தாளோ முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். கையிலிருந்த விளக்கைக் கீழே வைத்துவிட்டு அவள் வீட்டிற்குள் சென்று வாசல் கதவிற்குப் பின்னால் மறைந்து நின்றாள். வாசலில் ஒரு நீளமான காக்கி வண்ணத்தால் ஆன பையும் ஒரு தகரப்பெட்டியும் இருந்தன. பாரு அந்தப்பையையும் தகரப்பெட்டியையும் மாதவனின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிழவன் மாதவனையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு பட்டாளத்துக்குச் செல்வதற்கு முன்னால் இருந்த மாதவன் அல்ல இப்போது அங்கிருந்து திரும்பி வந்திருக்கும் மாதவன். அவன் முகம் மிகவும் கறுத்துப் போய் இருந்தது. உதடுகள் தடிமனாகிவிட்டிருந்தன. பெரிதாக மீசை வைத்திருந்தான். அவனுடைய பார்வையில் ஒருவித பயங்கரத்தனமும் கூர்மையும் இருந்தன. இது எதுவுமே கிழவனுக்குப் பிடிக்கவில்லை.

பிரயாணத்தில் உண்டான வசதிக் குறைவுகளைப் பற்றியும், பட்டாள வாழ்க்கையைப் பற்றியும் மாதவன் பேசத் தொடங்கினான். தனக்குப் புரியாத ஏதேதோ வார்த்தைகளை அவன் பேசுவதைப் பார்த்த கிழவன் அவனைப் பார்த்து "நீ இப்போ என்ன மொழியிலடா பேசுற?" என்று கேட்டான்.

அதற்கு மாதவன் சொன்னான். "உருது மொழியிலயும் ஆங்கிலத்திலயும்."

"நம்ம மொழியை நீ அப்போ முழுசா மறந்திட்டியா? அங்கே யாருமே நம்மோட மலையாள மொழியைப் பேசுறது இல்லியா?"

"மிலிட்டரியில மலையாள மொழியை யாரும் பயன்படுத்துறது இல்ல. அங்கே பயன்படுத்துறது உருது, ஆங்கிலம் ரெண்டு மொழிகள்தாம்."

"அங்க இருக்குறவங்க எல்லாரும் வெளிநாட்டுக்காரங்களா என்ன?"

"ஐரோப்பியாவுல இருந்து வந்தவங்களும் இருக்காங்க. இந்தியர்களும் இருக்காங்க. ஒரு ஐரோப்பாக்காரனுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். அவுங்க எல்லாருமே 'படா ஆத்மிகள்' அப்பா. அவுங்களைப் பார்த்தவுடனே ஸ்டெடியா நின்னு நாம சல்யூட் அடிக்கணும்."

பாருவின் மனதிற்குள் மதிப்பும் அதே நேரத்தில் கோபமும் மாறி மாறி அரும்பிக் கொண்டிருந்தது. தன்னுடைய கணவனைப் பார்க்கும் போதெல்லாம், அவன் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் அவளுக்கு அவன் மீது மிகப் பெரிய மரியாதை உண்டானது. அதே நேரத்தில் கடிதத்தையும், பணத்தையும் தன் பெயருக்கு அவன் அனுப்பி வைக்காததால் உண்டான கோபம் மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தது.

மாதவன் தான் கொண்டுவந்திருந்த பெட்டியைத் திறந்தான். பாரு அதை எட்டிப் பார்த்தாள். மாதவன் பச்சை நிறத்தால் ஆன ஒரு போர்வையையும், ஒரு வேட்டியையும் எடுத்து தன்னுடைய தந்தையிடம் தந்தான். கிழவன் அவனைப் பார்த்துக் கேட்டான். "அவளுக்கும் குழந்தைக்கும் ஒண்ணும் கொண்டு வரலியா மகனே?"

"கொண்டு வந்திருக்கேனே!" - என்று கூறியவாறு மாதவன் ப்ளவ்ஸுக்கான சில துணிகளையும், ஒரு புடவையையும், ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் எடுத்து வெளியே வைத்தான்.

அதைப் பார்த்து பாருவின் முகத்தில் மலர்ச்சி தாண்டவமாடியது.

மாதவன் பாக்கெட்டில் கையை விட்டு மணிபர்ஸை வெளியே எடுத்தான். அதைத் திறந்து கொஞ்சம் ரூபாய் நோட்டுகளை எடுத்து தன் தந்தையின் கையில் தந்தான்.

அவ்வளவுதான்- பாருவின் முகத்தில் சற்று நேரத்திற்கு முன்பு இருந்த மலர்ச்சி இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்து கொண்டது.

மாதவன் பாருவை அழைத்தான். "பாரு... இது எல்லத்தையும் அங்கே எடுத்து வை."

அவள் அவன் சொன்னது காதில் விழாதது மாதிரி நடித்தாள்.

மாதவன் பெட்டியையும், சாமான்களையும் எடுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்தான். கிழவன் வீட்டிற்குள் சென்றான்.

மண்ணெண்ணெய் விளக்கை உயர்த்திப் பிடித்தவாறு தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையைப் பார்த்த மாதவன் கேட்டான். "என் மகன் ஏன்டி இப்படி மெலிஞ்சு போயிருக்கான்?"

"அப்பாவைப் பார்க்க முடியலையேன்னுதான்..."- கோபம் கலந்த அவளின் வார்த்தைகளில் ஒருவித பதற்றம் தெரிந்தது.

"ஆமா... உனக்கு ஏன் இப்படி ஒரு கோபம்?"

"நான் யாருக்காக கோபப்படணும்? எனக்குன்னு இங்கே யாரு இருக்காங்க? நான் கோபப்படவும் இல்ல.


கவலைப்படவும் இல்ல. போதுமா?"- இதைச் சொல்லிவிட்டு அவள் அழத் தொடங்கினாள்.

"அடியே... நீ ஏன் அழறே? நீ சொல்லித்தானே நான் பட்டாளத்துக்கே போனேன்?"

"அதைத்தான் நானும் சொல்றேன். நீங்க பட்டாளத்துக்குப் போனதே நான் சொல்லித்தான். அங்கே போன பிறகு உங்களுக்கு நானும் வேண்டாம்... என் பிள்ளையும் வேண்டாம்னு ஆகிப்போச்சு. நீங்களும் உங்க அப்பாவும் எப்படி வேணும்னாலும் வாழ்ந்துக்கோங்க. நானும் என் மகனும் இங்கேயிருந்து போயிக்கிறோம்."

மாதவன் சொன்னான். "அடியே! தலை இருக்குறப்போ வால் ஆடக்கூடாது, தெரியுமா?"

"அப்படின்னா தலை போதும்... வால் தேவையில்ல."

மாதவன் அவளைச் சமாதானப்படுத்த பல வகைகளிலும் முயன்றான். அவன் செய்த முயற்சி எதுவுமே பலிக்கவில்லை. கடைசியில் பொழுது விடிகிற நேரத்தில் அந்தக் காற்றும் மழையும் தானாகவே அடங்கின. அவள் சொன்னாள். "இனிமே நீங்க பட்டாளத்துக்குப் போக வேண்டாம். இங்கே வேலை செஞ்சு கிடைக்கிற காசே போதும்."

அதைக் கேட்டு ஏதோ நகைச்சுவையான ஒரு விஷயத்தைக் கேட்டதைப் போல் மாதவன் சிரித்தான்." உன் விருப்பப்படி நான் நடக்குறேன். போதுமா?" என்றான்.

கிழவனும் மனதிற்குள் தீர்மானம் செய்து வைத்திருந்தான் - மகனை இனிமேல் பட்டாளத்திற்கு எந்தவித காரணத்தைக் கொண்டும் அனுப்பக் கூடாதென்று. ஆனால், தான் அப்படி நினைத்திருந்த விஷயத்தை அவன் தன் மகனிடம் கூறவில்லை. பாருவின் தீர்மானமும் அதுதான் என்பதை அறிந்தபோது, கிழவனின் மகிழ்ச்சி மேலும் அதிகமாகியது.

மாதவன் வீட்டுக்கு வந்த பிறகு செலவுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருந்தாலும், புடவையும் ப்ளவ்ஸும் கிடைத்தாலும் பாரு எந்தவித பிரச்சினையும் உண்டாக்காமல் அமைதியாக இருந்தாள். என்றாலும், மாதவன் மீண்டும் பட்டாளத்துக்குப் போய்விட்டால் தன்னுடைய நிலை திரும்பவும் மிகவும் மோசமாகிவிடும் என்பதை நன்கு உணர்ந்து இருந்ததால், அவனை எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டாளத்துக்கு அனுப்பிவிடக் கூடாது என்ற விஷயத்தில் மட்டும் பாரு மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.

ஒரு நாள் மாதவன் தன்னுடைய பட்டாள உடைகளையெல்லாம் சலவை செய்து பையில் வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த கிழவன் அவனைப் பார்த்துக் கேட்டான் “என்னடா மகனே, அதை ஏன் பையில வைக்கிற?”

“நான் நாளைக்குப் போகணும்பா.”

“இனிமே அங்கே போக வேண்டாம்டா, மகனே பட்டாளத்துல கிடைக்கிற பணத்தை வச்சா நாம இதுவரை இங்கே வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்?”

“நான் கட்டாயம் போகணும்பா. அப்படிப் போகலைன்னா எனக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரும்.”

அதைக் கேட்டு கிழவன் வருத்தம் இழையோடிய குரலில் சொன்னான். “வேண்டாம் மகனே. நீ பட்டாளத்துக்குப் போயிட்டா நான் யாரைப் பார்த்துக்கிட்டே சாகுறது?”

தன் தந்தை இப்படிச் சொன்னதும் மாதவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன் முகத்தில் நிழல் படிந்தது. அவனுக்கும் பட்டாளத்துக்குப் போக விருப்பமில்லைதான். அவன் சொன்னான். “அப்படி நான் போகாம இருக்குறது மிகப் பெரிய தப்புப்பா. நான் அங்கே போகலைன்னா, என்னை ஆளுங்க வந்து பிடிச்சிட்டுப் போயிடுவாங்க. உங்க கண்முன்னாடி என் கையில விலங்கு மாட்டிக் கொண்டு போவாங்க.”

அதற்குப் பிறகு கிழவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் கடைசி ஆசையாக அவன் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கும் ஆசை- மகனைக் கண் குளிர பார்த்தவாறே மரணத்தைத் தழுவ வேண்டும் என்ற ஆசை நடக்கப் போகிற ஒன்றல்ல என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. தான் மனதில் பூட்டி வைத்திருக்கிற ஆசை நிறைவேறாமற் போனாலும் தன்னுடைய மகனுக்கு ஒரு ஆபத்து கூட உண்டாகக் கூடாது என்ற விஷயத்தில் அன்புத் தந்தை மாறாத கருத்தைக் கொண்டிருந்தான். கடைசியில் கிழவன் அழுதவாறு சொன்னான். “அப்ப மகனே, நீ பட்டாளத்துக்குப் புறப்படு. அப்பாவை நினைச்சு நீ வருத்தப்பட வேண்டாம். உனக்கு நல்லது நடக்கட்டும்...”

மாதவன் மறுநாள் பட்டாளத்திற்குக் கிளம்பிப் போகிறான் என்ற விஷயம் பாருவிற்குத் தெரிந்துவிட்டது. அவள் அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கூறாவிட்டாலும், அவள் மனதிற்குள் எடுத்திருந்த முடிவில் எந்தவித மாற்றமும் உண்டாகவில்லை.

மறுநாள் மாதவன் ஆடைகளை அணிந்து பயணத்திற்குத் தயாரானான். பாருவிடம் தான் புறப்படுவதாகச் சொன்னான். அவள் ஒரு வார்த்தை கூட வாயைத் திறக்கவில்லை. அவன் தன்னுடைய பையனைத் தூக்கி முத்தம் கொடுத்தான். தன்னுடைய தந்தையின் அருகில் சென்று பாதத்தில் தலையை வைத்து வணங்கினான்.

கிழவன் மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான். மாதவனும் கிழவனுடன் சேர்ந்து அழுதான்.

பையை எடுத்துக்கொண்டு மாதவன் வாசல் படியை நோக்கி நடந்தான்.

பாரு அப்போது அவனைத் தடுத்தாள். “போகக் கூடாது!”

மாதவன் நடந்தான். பாரு அவனுக்கு முன்னால் வந்து நின்றாள். “போகக் கூடாதுன்னு நான் சொல்றேன்ல!”

மாதவன் உரத்த குரலில் சத்தமிட்டான். “கொஞ்சம் தள்ளி நில்லுடி.”

“நான் உங்களைப் போக விடமாட்டேன்.”

கிழவன் வாசலுக்கு வந்து பாருவைப் பார்த்துச் சொன்னான். “கொஞ்சம் தள்ளி நில்லு, பாரு. அவன் போகட்டும்.”

அடுத்த நிமிடம் பாரு பத்ரகாளியைப் போல் மாறி கிழவனைப் பார்த்துச் சொன்னாள். “என்ன சொன்னீங்க? அவரைப் போகச் சொல்றீங்களா? ரூபாய் நோட்டை எண்ணி எண்ணி வாங்கி தலையணைக்குக் கீழே வைக்கிறதுக்குத்தான் மகனைப் பார்த்துப் போகச் சொல்றீங்க? மகன் செத்துப்போனாலோ, நானும் என் பிள்ளையும் பிச்சை எடுத்தாலோ அதைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்ல... உங்களுக்குத் தேவை பணம் அவ்வளவுதானே?”

கிழவனுக்கு தலையில் மின்னல் அடித்தது போல இருந்தது.

“என்னடி சொன்னே?” - மாதவன் அலறினான். அடுத்த நிமிடம் அவள் கழுத்தைப் பிடித்து அவன் வேகமாகத் தள்ளினான். அவள் மல்லாக்கப் போய் விழுந்தாள்.

மாதவன் படியைக் கடந்து நடந்தான்.

“மகனே!” - கிழவனின் உடல் நடுங்கியது. அடுத்த நிமிடம் அவன் தரையில் முன் பக்கமாய் சாய்ந்து விழுந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.