
ஒடெஸ்ஸா துறைமுகத்தில்தான் நான் அந்த மனிதனைப் பார்த்தேன். கிழக்குத் திசையில் இருப்பவர்களின் முக அமைப்பையும், அழகான தாடியையும் வைத்திருந்த அந்த உயரம் குறைவான மனிதன் கடந்த மூன்று நாட்களாக என் கவனத்தை ஈர்த்திருந்தான்.
பல சமயங்களிலும் அவன் என் கண்பார்வையில் வந்து பட்டுக்கொண்டேயிருந்தான்.
தன் கையிலிருந்த குச்சியின் நுனியைக் கடித்து மென்றவாறு பாதாமின் அளவில் இருந்த கறுப்பான கண்களால் துறைமுகத்தின் கலங்கிய நீரைப் பார்த்துக்கொண்டு அந்தக் கருங்கல்லால் ஆன தூணின் மீது சாய்ந்தவாறு அவன் நின்று கொண்டிருப்பதை நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இந்த உலகத்தைப் பற்றிய எந்த நினைப்பும் இல்லாத மனிதனைப் போல தினமும் பன்னிரண்டு தடவையாவது அவன் எனக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருப்பான். அவன் யாராக இருக்கும்?
நான் அந்த மனிதனை கவனிக்கத் தொடங்கினேன். என்னுடைய கவனத்தை ஈர்ப்பதற்கென்றே அவன் பல சமயங்களிலும் எனக்கு முன்னால் தோன்றினான். அதன்மூலம் அவனுடைய இளம் நிறத்தில் கோடுகள் போட்ட ஃபாஷன் பேன்ட்டும், கறுப்பு பூட்ஸும், அலட்சியமான நடையும், சோர்வைத் தரும் பார்வையும் எனக்கு நன்கு பழக்கமாகி விட்டன. தூரத்திலிருந்து பார்த்தால் கூட அவனை எனக்கு அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. கப்பல்களின் ஓசையும் இயந்திரங்களின் சத்தமும் சங்கிலிகள் ஒன்றோடொன்று மோதும்போது உண்டாகும் ஓசைகளும், கப்பல் தொழிலாளிகளின் ஆரவாரமும்- எல்லாம் கலந்த சத்தங்களும் ஆரவாரங்களும் நிறைந்த அந்தத் துறைமுகத்தின் எந்தச் சிறப்பு அம்சங்களும் அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அங்குள்ள மனிதர்களில் எந்நேரமும் தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், களைத்துப்போய் காணப்படுபவர்கள், கடுமையாக உழைப்பவர்கள், வியர்வை ஒழுகிக் கொண்டிருப்பவர்கள், அழுக்கில் புரண்டவர்கள், உரத்த குரலில் கத்துபவர்கள், பிறரை வாய்க்கு வந்தபடி திட்டுபவர்கள் என்று பல தரப்பட்டவர்களும் இருந்தார்கள். அந்த ஆரவாரங்களிலிருந்து அமைதியாக இருந்த அந்த மனிதன் வேறுபட்டுத் தெரிந்தான். எல்லாவற்றிலிருந்தும் விலகி கள்ளங்கபடமற்ற முகத்துடன் இருந்தான் அவன்.
கடைசியில் நான்காவது நாள் மதிய உணவு நேரத்தில் அவனை நான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. எப்படியும் அவன் யாரென்று கண்டுபிடித்தாக வேண்டும் என்று நான் மனதில் முடிவெடுத்தேன். அவனிடமிருந்து மிகவும் தூரத்தில் இல்லாமல் ஒரு கை நிறைய ரொட்டியும் இன்னொரு கையில் ஒரு தண்ணீர் பழத்தின் பாதியையும் வைத்துக்கொண்டு நான் அவனை கவனித்துக்கொண்டு நின்றிருந்தேன். அந்த மனிதனுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் உருவாகுவதற்கான சூழ்நிலையை மனதில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
தேயிலைப் பைகள் அடங்கிய பெட்டிகள் மீது சாய்ந்து நின்றவாறு புல்லாங்குழலைப் பிடித்திருப்பதைப் போல தன் கையிலிருந்த குச்சியில் விரல்களை அசைத்தவாறு எங்கேயோ அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அவன்.
தெருவில் சுற்றிக்கொண்டிருப்பவன் என்பதைப் பறைசாற்றுகிற மாதிரி கரிபடிந்த ஆடைகளை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்த அவனைப் பார்ப்பது என்பது எனக்கே சற்று சிரமமான காரியமாக இருந்தது.
ஆனால், நானே ஆச்சரியப்படுகிற மாதிரி அவன் தன் கண்களால் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். மிருகத்தனமான பார்வையும் ஆர்வமும் அந்தக் கண்களில் இருந்தன. அவனுக்குப் பசி எடுத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுற்றிலும் பார்த்துக்கொண்டு நான் அவனிடம் கேட்டேன்: "சாப்பிடுறதுக்கு ஏதாவது வேணுமா?"
பரபரப்படைந்து, ஆர்வத்துடன் அவன் என்னையே பார்த்தான். அவனுடைய பற்கள் பிரகாசித்தன.
யாரும் எங்களைப் பார்க்கவில்லை. கோதுமை ரொட்டியின் ஒரு துண்டையும், தண்ணீர்ப் பழத்தின் பாதியையும் நான் அவனுக்குக் கொடுத்தேன். அதை வாங்கிய அவன் பிரம்புக் கூடைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியின் பின்னால் போய் ஒதுங்கி நின்றான். இங்கிருந்து அவனுடைய தலை தெரிந்தது. தொப்பி சற்று மேலே வைக்கப்பட்டிருந்ததால் வியர்வை அரும்பிய சிவந்த நெற்றி தெரிந்தது. அவனுடைய முகத்தில் மலர்ந்த புன்சிரிப்பு இருந்தது. அவனுக்கு மட்டும் தெரியக்கூடிய ஏதோ காரணத்தால், அவன் என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான். ஆனால், அப்போதும் உணவு உண்ணும் விஷயத்தை ஒரு நிமிடம் கூட அவன் நிறுத்தி வைக்கவில்லை. அவனிடம் சிறிது காத்திருக்கும்படி சைகை செய்த நான் கொஞ்சம் மாமிசம் வாங்கிக்கொண்டு வந்தேன். அதை அவனுக்கு நேராக நீட்டினேன். அவன் அதைச் சாப்பிடும்போது, அந்த வழியாக கடந்து சென்றவர்கள் அவனைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, நான் அந்தக் கூடைகளின் ஓரத்தில் அவனை மறைத்துக்கொண்டு நின்றேன்.
தன்னுடைய உணவை வேறு யாராவது தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்த ஒரு மிருகத்தைப் போல அவன் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது அவன் முன்பிருந்ததைவிட அமைதியாக உணவைச் சாப்பிடத் தொடங்கினான். எனினும் வேகவேகமாகச் சாப்பிட்டான். அவனுடைய பசியை நினைத்து எனக்கு மனதில் சங்கடம் உண்டானது. நான் அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு திரும்பி நின்றேன்.
"ரொம்ப நன்றி. ரொம்ப நன்றி"- அவன் என் தோளைப்பிடித்துக் குலுக்கினான். பிறகு என் கைகளைச் சேர்த்துப் பிடித்து அவை வலிக்கும் அளவிற்குக் குலுக்கினான்.
ஐந்து நிமிடங்களில் அவன் தன்னுடைய கதையின் மீது ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தான்.
குற்றைஸியைச் சேர்ந்த ஒரு நிலச்சுவான்தாரின் ஒரே மகனான 'ப்ரின்ஸ்' ஷாக்ரோடாட்ஸெ ஒரு ஜார்ஜியாக்காரன். ட்ரான்ஸ் காஸ்பியன் ரெயில்வேயில் க்ளார்க்காக வேலை பார்த்துக்கொண்டிருந்த அவன் தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து வசித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஷாக்ரோவின் பணத்தையும் விலை மதிப்புள்ள மற்ற பொருட்களையும் திருடிக்கொண்டு அந்த நண்பன் ஓடிவிட்டான். அவனைக் கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்டான் ஷாக்ரோ. பற்றூமிற்குச் செல்வதற்காக அந்த நண்பன் பயணச்சீட்டு எடுத்திருந்ததாக அவனுக்குத் தகவல் கிடைத்தது. ப்ரின்ஸ் ஷாக்ரோ அவனைப் பின் தொடர்ந்தான்.
பற்றூமியை அடைந்தபோது அந்த நண்பன் ஒடேஸ்ஸாவிற்குப் போயிருப்பதாக அவனுக்குத் தகவல் கிடைத்தது. அப்போது ஷாக்ரோ தன்னுடைய இன்னொரு நண்பனான வானெ ஸ்வானிஸ்டெ என்ற முடிவெட்டும் தொழில் செய்பவனைப் பார்த்தான். அவனுக்கு ஷாக்ரோவின் வயதுதான். ஆனால், உடல் ரீதியான அளவுகளும், உயரமும் அவனை மாதிரி இல்லை. அவனைப் போய்ப் பார்த்த ஷாக்ரோ அவனுடைய பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு ஒடேஸ்ஸாவிற்குப் புறப்பட்டான். ஒடேஸ்ஸாவை அடைந்ததும் அவன் தன் பொருட்கள் திருடு போன விஷயத்தை போலீஸ்காரர்களிடம் சொன்னான். திருடிய மனிதனைக் கண்டுபிடிப்பதாக போலீஸ்காரர்கள் அவனுக்கு உறுதியளித்தனர். அவன் இரண்டு வார காலம் அதற்காக அங்கே தங்கியிருந்தான். அதற்குள் அவன் கையிலிருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது.
சிறிது கூட உணவு உட்கொள்ளாத இரண்டாவது நாள்தான் இப்போது நடந்து கொண்டிருந்தது.
நான் அந்த மனிதனின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் அவன் தன் பொருட்களைத் திருடிய நண்பனை வாய்க்கு வந்தபடி திட்டினான். நான் அவனுடைய கதையைக் கவனமாகக் கேட்டேன். அவன் சொன்னதை நான் நம்பினேன். அவன் மீது எனக்குப் பரிதாபம் தோன்றியது. அவனுக்கு இருபது வயது நடந்து கொண்டிருந்தது. அவனுடைய கள்ளங்கபடமற்ற தன்மையைப் பார்த்தால் வயது அதைவிடக் குறைவு என்பது மாதிரியே தோன்றும். தன்னுடைய பணத்தையும், பொருட்களையும் திருடிய அந்த மனிதனுடன் நட்பு கொள்ளும் சூழ்நிலை தனக்கு ஏற்பட்டதை விளக்கியபோது அவன் மிகவும் வருத்தப்பட்டான். அந்தத் திருடப்பட்ட பொருட்களை மீண்டும் பெறவில்லையென்றால் அவனுடைய தந்தை அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார் என்றான் அவன்.
யாராவது உதவி செய்யவில்லையென்றால் ஆரவாரம்மிக்க இந்த நகரம் அவனை விழுங்கப்போவது நிச்சயம் என்று என் மனதில் தோன்றியது. கையில் காசு இல்லாத மனிதர்களுக்கு இந்த நகரத்தில் என்ன நடக்கும். அவர்கள் யாருடைய கூட்டத்தில் போய் சேர்வார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். மனிதர்கள் சிறிதும் மதிக்காத, சமூகத்தில் அனுமதிக்க முடியாத மனிதர்களிடம் போய் அவன் சிக்கிக் கொள்வான் என்று எனக்குத் தோன்றியது. அவனுக்கு உதவ வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
போலீஸ் அதிகாரியிடம் போய் ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம் என்று நான் சொன்னதைக் கேட்டு அவன் பதைபதைப்பு அடைந்துவிட்டான். அவன் போகப்போவதில்லை என்று சொன்னான். எதற்காகப் போகவில்லை? அவன் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை பாக்கி இருக்கிறதாம். வீட்டு வாடகையைக் கேட்டதற்கு வீட்டின் உரிமையாளரை அடித்திருக்கிறான். அதற்குப்பிறகு அவன் அந்த வீட்டிற்குப் போகாமல் வெளியிலேயே தங்கியிருந்திருக்கிறான். வாடகை கொடுக்காததற்கும், வீட்டுச் சொந்தக்காரரை அடித்ததற்கும் போலீஸ் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்கு நன்றி சொல்லாது என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். வீட்டுச் சொந்தக்காரருக்கு அவன் கொடுத்தது ஒரு அடியா, இரண்டு அடிகளா; இல்லாவிட்டால் மூன்று அடிகளா என்று அவனுக்கே சரியாக ஞாபகத்தில் இல்லை.
நிலைமை மிகவும் மோசமானது. அவனைப் பற்றூமிக்கு அனுப்புவதற்குத் தேவையான பணம் கிடைப்பது வரை நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைத் தொடர்வது என்று முடிவெடுத்தேன். ஆனால் வேறொரு பிரச்சினை பெரிதாகத் தலையை நீட்டியது. பசி, உணவு ஆகியவற்றை நன்கு அனுபவித்திருக்கும் ஷாக்ரோ நாளொன்றுக்கு மூன்று தடவைகளுக்கு மேலாக உணவு சாப்பிட்டான்.
வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மனிதர்கள் ஏராளமான பேர் அந்த நகரத்தில் வந்து குடியேறியதால் துறைமுகத்தில் கிடைக்கக்கூடிய நாள்கூலி மிகவும் குறைந்துவிட்டது. எண்பது கோபெக் கூலியாகக் கிடைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது அறுபது கோபெக் உணவுக்காக மட்டும் செலவழிக்கவேண்டிய சூழ்நிலை உண்டானது. இது ஒருபுறமிருக்க, ஷாக்ரோவைப் பார்ப்பதற்கு முன்பு, க்ரிமியாவிற்குப் போகவேண்டும் என்று நான் தீர்மானித்திருந்தேன். ஒடேஸ்ஸாவில் அதிக நாட்கள் தங்கியிருக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அதனால் இப்போது சொல்லப்போகிற நிபந்தனைகளுடன் இங்கிருந்து கால்நடையாகவே கிளம்பலாம் என்று ஷாக்ரோவிடம் நான் சொன்னேன். டிஃப்லிஸுக்குப் போவதற்கு அவனுக்குத் துணையாக யாரும் இல்லையென்றால் நான் அவனுடன் போக வேண்டும். அதே நேரத்தில் வேறு துணை கிடைத்து விட்டால், நான் அவனிடமிருந்து பிரிந்து போவதாக முடிவெடுத்தேன். தன்னுடைய தொப்பியையும், ஆடைகளையும், காலணிகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த பிறகு அவன் அதற்குச் சம்மதித்தான். கடைசியில் ஒடேஸ்ஸாவிலிருந்து டிஃப்லிஸ் வரை நாங்கள் கால்நடையாகவே நடந்து செல்வது என்று தீர்மானித்தோம்.
கெர்ஸனை அடைவதற்கு முன்பு எனக்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது. என் பயண நண்பன் ஒரு அப்பிராணி என்பதையும் இளமைத்தனம் அவனிடம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். வயிறு நிறைந்து விட்டால் சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கும் அவன் வயிறு நிறையாவிட்டால் ஒரு கொடூரமான மிருகத்தைப் போல் மாறிவிடுவதையும் நான் பார்த்தேன்.
நடக்கும்போது காக்கஸஸ் பகுதியைப் பற்றியும் ஜார்ஜியாவின் நிலச்சுவான்தார்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அவர்களின் ஆடம்பரங்களைப் பற்றியும் விவசாயத் தொழிலாளர்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைப் பற்றியும் அவன் என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தான். அவன் சொன்ன கதைகள் ஒவ்வொன்றும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அந்தக் கதைகளுக்கு அசாதாரணமான ஒரு அழகு இருந்தது. அதே நேரத்தில் கதை சொல்லிக் கொண்டிருந்த மனிதனைப் பற்றிய மிகைப்படுத்தல் இல்லாத ஒரு தெளிவான வரைபடத்தை எனக்கு அவை தந்தன. அவன் சொன்ன கதைகளில் ஒன்று இப்படி இருந்தது.
ஒரு பணக்காரரின் மகன் வீட்டில், பெரிய ஒரு விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான ஆட்கள் அந்த விருந்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் நிறைய மது அருந்தினார்கள். சுரேக், ஷஷ்லிக், லவாஷ் போன்ற சுவைமிக்க உணவுப் பொருட்களைச் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு பணக்காரரின் மகன் அவர்களைத் தன்னுடைய குதிரைகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றான். குதிரைகள் மிகவும் பலசாலிகளாகக் காணப்பட்டன. பணக்காரனின் மகன் அங்கு இருந்ததிலேயே மிகவும் நல்ல ஒரு குதிரையின் மீது ஏறி அதை மைதானத்தில் வேகமாக ஓடும்படி செய்தான். அந்தக் குதிரை பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தது. விருந்தாளிகள் அந்தக் குதிரையின் உடல் பலத்தையும் தோற்றத்தையும் புகழ்ந்து பேசினார்கள். அதைக் கேட்ட பணக்காரரின் மகன் அந்தக் குதிரையை மேலும் ஒருமுறை வேகமாக ஓடவிட்டான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு விவசாயத் தொழிலாளி ஒரு வெள்ளைநிறக் குதிரை மீது ஏறி இடி முழங்குவதைப் போல வேகமாகப் பாய்ந்து வந்தான். அந்தக் குதிரை பணக்காரரின் மகனின் குதிரையைத் தாண்டி வேகமாகப் பாய்ந்து ஓடியது. அந்த விவசாயி ஆணவத்துடன் விழுந்து விழுந்து சிரித்தான்.
விருந்தாளிகளாக வந்தவர்களுக்கு முன்னால் அந்தப் பணக்காரரின் மகனுக்கு மிகவும் வெட்கக்கேடாகி விட்டது. அவனுடைய புருவங்கள் உயர்ந்தன. அடுத்த நிமிடம் அவன் தொழிலாளியை அருகில் வருமாறு அழைத்தான். அவன் அருகில் வந்தவுடன் பணக்காரரின் மகன் தன்னுடைய வாளை உருவி ஒரே வெட்டில் விவசாயத் தொழிலாளியின் தலையைக் கீழே விழும்படி செய்தான். குதிரையின் கன்னத்தின் வழியாக குண்டு வேகமாகப் பாய்ந்து சென்றது. அடுத்த நிமிடம் அந்தக் குதிரை செத்துக் கீழே விழுந்தது.
அந்தச் சம்பவம் நடந்து முடிந்த பிறகு அவன் நீதிபதியின் முன்னால் போய் நின்று தான் செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொன்னான். அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அவன் மீது பரிதாபம் உண்டாகும் வண்ணம் ஷாக்ரோ என்னிடம் அந்தக் கதையைச் சொன்னான். ஆனால், இந்த விஷயத்தில் அவனுடைய அனுதாப உணர்ச்சி இடம்மாறி இருப்பதாக நான் சொன்னேன். அவனோ இந்த விஷயத்தில் நான் புரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன என்றான்.
"பணக்காரர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்காங்க. ஆனால், தொழிலாளர்கள் எண்ணிக்கையில் ஏராளமான பேர் இருக்குறாங்க. ஒரு விவசாயத் தொழிலாளி செத்துப் போயிட்டான்றதுக்காக ஒரு பணக்காரனுக்குச் சிறைத் தண்டனை தரக்கூடாது. அந்த விவசாயத் தொழிலாளின்றது யார்?"- ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து என்னிடம் காட்டியவாறு அவன் சொன்னான்: "அதே நேரத்துல, ஒரு பணக்காரன் ஒரு நட்சத்திரம்..."
நாங்கள் இந்த விஷயத்தைப் பற்றி நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தோம். அவனுக்குப் பயங்கரமான கோபம் வந்தது. கோபம் வந்தவுடன் ஒரு ஓநாயைப் போல அவன் தன் பற்களைக் கடித்தான். அவனுடைய முகம் கோபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
"பேசாதீங்க, மாக்ஸிம்! காக்கஸஸ்ல இருந்து பார்த்தாத்தான் தெரியும்"- அவன் உரத்த குரலில் அலறினான்.
அவனுடைய கோபக் குரலுக்கு முன்னால் என்னுடைய அறிவு பூர்வமான வாதம் எடுபடவில்லை. பகல் வெளிச்சத்தைப் போல மிகவும் தெளிவாக எனக்குத் தோன்றிய விஷயங்களைக் கேட்டு அவன் விழுந்து விழுந்து சிரித்தான். என்னுடைய வாதங்களை விளக்கமாகக் கூறி அவனைத் தெளிவுபடுத்தலாம் என்று நான் முயற்சிக்கும்போது அதைச் சிறிதும் காதில் போட்டுக்கொள்ளாமல் அவன் கூறுவான்: "நீங்க காக்கஸஸ்ல வசிச்சுப் பாருங்க. நான் சொல்ற விஷயங்கள் சரின்னும், அங்கே இருக்கிற ஆளுங்க அப்படித்தான் நடக்குறாங்கன்றதையும் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. அதுக்குப் பிறகுதான் உங்களுக்கே உண்மை புரியும். நீங்க ஒரு ஆள் மட்டும் சொல்றீங்க அது சரியில்லைன்னு. ஆயிரக்கணக்கான பேர் நீங்க சொல்றதுக்கு நேர் எதிராக சொல்றப்போ, நீங்க சொல்றதுதான் சரின்னு, நான் எதுக்கு நம்பணும்?"
வார்த்தைகள் மூலம் விஷயங்களை விளக்கமுடியாதென்றும், உண்மைகளால் மட்டுமே அது முடியுமென்றும் வாழ்க்கையில் சரியான விஷயங்கள் மட்டுமே இருக்கின்றன என்றும் கூறிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் எதைச் சொல்லியும் பிரயோஜனமில்லை என்று முடிவெடுத்த நான் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன். நான் மவுனமாக இருந்தாலும் அவனிடமிருந்த ஆவேசம் சிறிதும் குறையவில்லை. முரட்டுத்தனமும், ஆவேசமும், இனிமையும் கலந்த காக்கஸஸின் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும்போது அவனுடைய உதடுகள் வித்தியாசமான ஓசையை உண்டாக்கின. என்னை சுவாரசியப்படுத்தவும், எனக்கு ஆர்வம் உண்டாக்கவும் செய்ததுடன், அவன் சொன்ன அந்தக் கதைகள் அவற்றின் குரூரத்தனத்தாலும், பணம் படைத்தவர்களைப்பற்றிய தெளிவான விளக்கத்தாலும் எனக்கு ஒருவகையில் பார்த்தால் கோபத்தைத்தான் உண்டாக்கின. இயேசு கிறிஸ்துவின் அறிவுரைகளைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்.
"நல்லா தெரியுமே"- அவன் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு கூறினான்.
அதற்குப்பிறகு அவன் பேசியதிலிருந்து அவனுக்குத் தெரிந்த விஷயங்கள் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். அது இதுதான். யூதர்களின் சட்டங்களுக்கு எதிராக இயேசு கிறிஸ்து என்றொரு மனிதர் வளர்ந்து வந்தார். அதனால் யூதர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். ஆனால், கடவுளாக இருந்ததால் அறைந்த பிறகும், அவர் இறக்கவில்லை. அதற்குப் பதிலாக அவர் சொர்க்கத்திற்குச் சென்றார். அதன்பிறகு அவர் மனிதர்களுக்குப் புதிய சட்டங்களையும் வாழ்க்கையையும் அளித்தார்.
"எந்த விதமான சட்டம்?"- நான் கேட்டேன்.
கிண்டல் கலந்த பதைபதைப்புடன் என்னைப் பார்த்தவாறு அவன் கேட்டான்:
"நீங்க ஒரு கிறிஸ்துவரா? இல்லாட்டி நீங்க ஏன் இதையெல்லாம் கேட்கணும்? மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்னு பார்த்தாலே உங்களுக்குத் தெரியுதுல்ல? அதுதான் புதிய சட்டம்."
அதைக்கேட்டு என் நரம்புகளில் ரத்தம் வேகமாக ஓட ஆரம்பித்தது. இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி நான் அவனிடம் கூறத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவன் நான் சொன்ன விஷயங்களை கவனத்துடன் கேட்டான். பிறகு படிப்படியாக அது குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் ஒரு கொட்டாவியில் போய் அது முடிந்தது.
நான் கூறுவதைக் கேட்கக்கூடிய காதுகள் அவனுடைய மனதிற்கு இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். அத்துடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும், அறிவின் பயன்களைப் பற்றியும், சட்டம் சரியான முறையில் செயல்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் அதன் நன்மையைப் பற்றியும் நான் சொல்லத் தொடங்கினேன்.ஆனால், என்னுடைய பேச்சு வாழ்க்கையைப் பற்றிய அவனுடைய கோட்பாடுகளைத் தகர்த்தெறிந்தது.
"வலிமையுள்ளவன் சொல்வதுதான் சரி. அவன் சொல்றதுதான் சட்டம், அவனே ஒரு சட்டம்தான். அவன் சட்டம் படிக்க வேண்டிய அவசியமில்லை. அவனால் தன் கண்களை மூடிக்கிட்டு நடக்க முடியும்" ஷாக்ரோ அலட்சியமாக சொன்னான்.
தான் சொல்வதுதான் சரியானது என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தான் அவன். அவன் மீது எனக்கு ஈடுபாடு வந்ததற்கு அது ஒரு காரணம். ஆனால், அவன் ஒரு முரட்டுத்தனம் கொண்டவனாகவும், குரூரமான ரசனை கொண்டவனாகவும் இருந்தான். அதனால் பல நேரங்களில் அவன் மீது எனக்கு வெறுப்பு உண்டானது. அதே நேரத்தில் அவனுடன் உறவைத் தொடர பொதுவான ஒரு இணைப்பை உண்டாக்கி அதன்மூலம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை அமைய நான் முயற்சி செய்தேன்.
நாங்கள் யாயிலாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். க்ரிமியாவின் தெற்கு எல்லையை மனதில் கற்பனை பண்ணியவாறு நான் நடந்து கொண்டிருந்தேன். ப்ரின்ஸ் ஷாக்ரோ பற்களைக் கடித்துக் கொண்டு பழக்கமே இல்லாத பாடல்களைப் பாடியவாறு தலையைக் குனிந்து கொண்டு நடந்து கொண்டிருந்தான். எங்கள் கையிலிருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. பணத்தைச் சம்பாதிப்பதற்கான வழிகள் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. தியோடோஸியாவை இலக்கு வைத்து நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். அங்குள்ள துறைமுகத்தின் கட்டுமான வேலைகள் ஆரம்பநிலையில் இருந்தன.
வேலை செய்ய ஆர்வமுடன் இருப்பதாக ஷாக்ரோ என்னிடம் சொன்னான். தேவைப்படும் பணத்தைச் சம்பாதித்து விட்டால், பிறகு கடல் வழியே பற்றூமிக்குப் போய் விடலாம் என்று அவன் மனதில் நினைத்திருந்தான். பற்றூமியில் அவனுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். அங்கு போய் சேர்ந்து விட்டால் உடனடியாக எனக்கு ஒரு காவலாளி வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக அவன் சொன்னான்.
அதே நேரத்தில் என் உடல் நலத்திற்குச் சில பிரச்சினைகள் உண்டாகிக் கொண்டிருந்தன. எங்களுக்கு முன்னாலிருந்த பாதை மிகவும் கடினமானதாக இருந்தது. ஷாக்ரோவுடன் உள்ள என்னுடைய உறவு கொஞ்சம் கொஞ்சமாகத் தலைவலி நிறைந்ததாக மாறிக் கொண்டிருந்தது. அவனுக்குச் சாப்பாடு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை என்பதைப் போல அவன் நடக்க ஆரம்பித்தான். "நீங்க என்னோட வழிகாட்டி. எனக்கு வழிகாட்ட வேண்டியது உங்க கடமை. இவ்வளவு தூரத்தை நான் தனியாக நடந்து கடக்க முடியுமா? எனக்கு இப்படியெல்லாம் நடந்து பழக்கமில்ல. நான் செத்தே போயிடுவேன். நீங்க ஏன் என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நான் செத்துப்போனா என்ன நடக்கும்னு தெரியுமா? என் அம்மா அழுவா. அப்பா அழுவாரு. நண்பர்கள் அழுவாங்க. இந்த இடமெல்லாம் கண்ணீரால நிறைஞ்சிடும்."
அவன் சொன்னது என் காதில் விழுந்தாலும், எனக்குக் கொஞ்சம் கூட கோபம் உண்டாகவில்லை. ஆனால், அவன் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்கும் அளவிற்கு எனக்குச் சக்தியைத் தந்த, நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மனநிலை எனக்கு அப்போது வாய்த்திருந்தது. அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது, கள்ளங் கபடமில்லாமல் மிகவும் சாந்தமாகக் காட்சியளித்த அவனுடைய முகத்தில் எதையோ தேடுவதைப்போல நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'இவன்தான் என் பயண நண்பன். என் பயண நண்பன்' என்ற சிந்தனை என்னையே அறியாமல் என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சிந்தனை என்னை மிகவும் பலமாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது.
ஷாக்ரோ என்னை அடிமையாக்கிக் கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. அவனுடைய பிடிவாதத்தில் அவனுடைய வழக்கமான குணத்தின் பாதிப்பு இருந்தது. அவனுடைய வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து கொண்டு அவனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் சுகமாக உணவு உண்டு, தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய மனதை சைத்தான் ஆக்கிரமிக்கும்போது, அவன் என்னைப் பார்த்துக் கிண்டல் பண்ணுவான்.
சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட நாங்கள் ஒருவரையொருவர் பிரிந்து செல்வோம். அவனுக்குத் தேவையான உணவையும் பணத்தையும் கொடுத்துவிட்டு எனக்காகக் காத்திருக்க வேண்டும் என்று நான் அவனிடம் கூறுவேன். சந்தேகத்துடனும் கோபத்துடனும் என்னை வழியனுப்பி வைக்கும் அவன் மீண்டும் என்னைப் பார்த்ததும் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விடுவான். அப்போது மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு அவன் கூறுவான்: "என்னைத் தனியா விட்டுட்டு நீங்க ஓடிப்போயிட்டீங்கன்னு நான் நினைச்சேன்! ஹ...ஹ...ஹ..."
நான் அவனுக்கு உணவு அளித்தேன். பயணத்துக்கிடையில் சந்திக்கும் நல்ல மனிதர்களைப் பற்றியும் இடங்களைப் பற்றியும் சொன்னேன். பங்கிஸராய் என்ற இடத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தபோது, புஷ்கினைப் பற்றி நான் அவனிடம் கூறினேன். புஷ்கினின் சில கவிதைகளை அவனிடம் சொன்னேன். ஆனால், அது எதுவும் அவனிடம் எந்தவொரு விளைவையும் உண்டாக்கவில்லை.
"ஓ... கவிதைகள்! அப்படின்னா பாட்டுத்தானே? கவிதை இல்லையே! பாட்டு பாடத் தெரியிற ஒரு ஜார்ஜியாக்காரனை எனக்குத் தெரியும். நல்லா பாடுவான்! அவன் பாடுறதைக் கேட்கணுமே! ஆய் ஆய் ஆய்ன்னு சத்தம் போட்டுப் பாடுவான். அப்போ அவனைப் பார்க்குறப்போ அவனோட கழுத்துல கத்தியைக் குத்தி இறக்கினதைப் போல இருக்கும்... அவன் சத்திரம் நடத்திக் கொண்டிருந்த ஆளை குத்திக் கொன்னுட்டான். இப்போ அவன் ஸைபீரியாவுல இருக்கான்."
நான் அவனை நெருங்கிச் செல்லும்போது, அவன் என்னை அலட்சியமாகப் பார்த்தான். என்னிடமிருந்து அவன் எதையும் மறைத்து வைக்க முடியவில்லை. எங்களுக்குள் இருந்த உறவு மிகவும் மோசமாகிக் கொண்டிருந்தது. வாரத்திற்கு ஒன்றரை ரூபிள் கூட என்னால் சம்பாதிக்க முடியவில்லை. இரண்டு பேர் வாழ அந்தப் பணம் போதுமானதாக இல்லை. ஷாக்ரோவின் பிச்சைக்காசு எங்களின் உணவுக்குக்கூட போதுமானதாக இல்லை. எந்தப் பொருள் உள்ளே போனாலும், அக்கணமே மறைந்து போகிற ஒரு பாதாளமாக இருந்தது. அவனுடைய வயிறு. முந்திரி, தண்ணீர்ப்பழம், பக்குவம் செய்யப்பட்ட மீன், ரொட்டி, உலர்ந்த பழங்கள் இப்படி எதை வேண்டுமென்றாலும் அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நேரம் செல்லச் செல்ல அதன் அளவு கூடிக் கொண்டேயிருந்தது. முன்பு சொன்னதைவிட மேலும் அதிகமான உணவுப் பொருட்கள் மீது அவனுக்கு ஆர்வம் பிறந்து கொண்டிருந்தது.
மழைக்காலம் என்றும், இனியும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்றும் சொல்லி க்ரிமியாவிலிருந்து வேறு எங்காவது போகலாம் என்றும் ஷாக்ரோ என்னை வற்புறுத்தினான். அவன் சொன்னது சரிதான் என்று எனக்கும் பட்டது. க்ரிமியாவில் நான் பார்க்கவேண்டிய எல்லா இடங்களையும் பார்த்து விட்டேன். அதனால் தியோடோவியாவில் கொஞ்சம் காசு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் அங்கு சென்றோம்.
அலுஷ்டாயிலிருந்து கிட்டத்தட்ட இருபது மைல் நடந்து சென்ற பிறகு இரவாகி விட்டது. அந்த இரவில் நாங்கள் அங்கேயே தங்கினோம். சிறிது வளைந்த பாதையாக இருந்தாலும், கடற்கரையை ஒட்டி இருக்கும் பாதையில் போகலாம் என்று நான் ஷாக்ரோவிடம் கூறினேன். கடல்காற்றை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. ஒரு நெருப்புக் குண்டத்தை உண்டாக்கி அதன் இரு பக்கங்களிலும் நாங்கள் படுத்து உறங்கினோம். மிகவும் சுகமான இரவாக அது இருந்தது. அடர்த்தியான பச்சை நிறத்திலிருந்த கடல் எங்களுக்குக் கீழே பாறைகளில் மோதிக் கொண்டிருந்தது. வெளிறிப்போய்க் காணப்பட்ட ஆகாயம் கம்பீரமான மவுனத்துடன் எங்களுக்கு மேலே விரிந்து கிடந்தது. எங்களைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் காற்றில் அசைந்து ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன.
நிலவு உதித்துக் கொண்டிருந்தது. மரங்களின் நிழல்கள் சுற்றிலும் தெரிந்தன. ஏதோ ஒரு இரவுப் பறவை இனிமையாகக் பாடிக் கொண்டிருந்தது. அலைகள் உண்டாக்கிய சத்தத்துடன் அந்தப் பறவையின் இனிமையான பாடலும் சேர்ந்து ஒலித்தது.அந்தச் சத்தம் நின்றவுடன், வேறு ஏதோ ஒரு மெல்லிய சத்தம் கேட்க ஆரம்பித்தது.
நெருப்பு மகிழ்ச்சியுடன் எரிந்து கொண்டிருந்தது. அதன் நாக்குகள் சிவப்பு, மஞ்சள் நிற இதழ்களைக் கொண்ட பூக்களைப் போல மலர்ந்து காணப்பட்டன. அவற்றின் நிழல்கள் தங்களின் சக்தி எவ்வளவு பெரிது என்று வெளிக்காட்டும் விதத்தில் பரவித் தெரிந்தன. கடலுக்கு மேலே வானத்தின் விளிம்பு மேகங்களற்று அமைதியாகத் தெரிந்தது. ஆள் அரவமற்று ஏதோவொரு உலகத்தைப் பார்த்தவாறு நான் இந்த பூமியின் எல்லையில் இருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. வார்த்தையால் விளக்க முடியாத, விசாலமான, ஆழமான ஏதோ ஒரு குரல் என் மனதை ஆக்கிரமித்தது.
திடீரென்று ஷாக்ரோ உரத்த குரலில் சிரித்தான்: “ஹா... ஹா... ஹா... உங்க முகம் என்ன மாதிரியான முகம்! சரியா சொன்னா ஒரு பெண் செம்மறி ஆட்டோட முகம் உங்களுக்கு. ஹா... ஹா... ஹா...”
என் தலையின் மீது இடி விழுந்ததைப்போல நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். உண்மையாகச் சொல்லப்போனால், அதைவிட நான் உஷ்ணமாகிவிட்டேன். அவன் அதை ஏதோ விளையாட்டாகச் சொல்வதைப்போல்தான் சொன்னான். ஆனால், என்னுடைய உணர்ச்சிகளை அது மிகவும் வேதனைப்பட வைத்துவிட்டது. சிரிப்பு முற்றி முற்றி கடைசியில் ஷாக்ரோ அழ ஆரம்பித்து விட்டான். வேறொரு காரணத்தால் நானும் அழும் நிலையில்தான் இருந்தேன். என் தொண்டையில் என்னவோ சிக்கிக் கொண்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. வெறித்த கண்களால் அவனைப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது. அதைப் பார்த்ததும் அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். சிரிப்பை அடக்க முடியாமல் வயிறைக் கையால் இறுகப் பிடித்துக்கொண்டு அவன் தரையில் படுத்து உருண்டான். அவன் உண்டாக்கிய அவமானத்திலிருந்து தப்பிக்க என்னால் முடியவில்லை. எனக்குத் தாங்க முடியாத ஒரு அவமதிப்பை அவன் ஏற்படுத்தி விட்டான் என்பதென்னவோ உண்மை. எப்படிப்பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும் நான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் என்பது சிலருக்கு மட்டுமாவது புரியும் என்று நான் நினைத்தேன். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு இதை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
“நிறுத்துடா!” -நான் கோபத்துடன் உரத்த குரலில் கத்தினேன். பயந்து போய் வேகமாக எழுந்தாலும், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விடாமல் அவன் சிரித்துக் கொண்டே இருந்தான். அவனுடைய கன்னங்கள் வீங்கின. கண்கள் வெறித்துப் பார்த்தன. சிரிப்பால் உண்டான உற்சாகத்தில் அவன் மீண்டும் தரையில் விழுந்தான். நான் அங்கிருந்து எழுந்து நடந்தேன். மனதில் எந்தவித சிந்தனையும் இல்லாமல் நான் முன்னோக்கி நடந்தேன். என் மனதில் அவமானப் பட்டதன் விஷம் கலந்திருந்தது.
இயற்கையின் அழகை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நான் என் இதயத்தைத் திறந்து வைத்தேன். மனதில் ஒரு கவிஞனை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்ற நான் அவளை (இயற்கையை) எந்த அளவுக்கு ஆழமாகக் காதலிக்க விரும்புகிறேன் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இயற்கை ஷாக்ரோ வடிவத்தில் என்னைப் பார்த்து கேலி செய்து சிரித்தது. பின்னால் பாதத்தின் ஓசை கேட்காமலிருந்தால், இயற்கையையும், ஷாக்ரோவையும் குறை சொல்வதை இனியும் நான் தொடர்ந்து கொண்டிருப்பேன்.
“கோபப்படாதீங்க” -மெதுவாக என் தோளைத் தொட்டவாறு சிறிது வெட்கம் கலந்த குரலில் ஷாக்ரோ சொன்னான்: “நீங்க பிரார்த்தனை செஞ்சுக்கிட்டு இருந்தீங்கள்ல? எனக்கு அது தெரியாமப் போச்சு.”
“தவறு செய்த, சற்று பயந்த நிலையில் இருக்கும் ஒரு குழந்தையைப் போல அவன் பேசினான். என் மனம் மிகவும் கவலையடைந்திருந்தாலும் அவனுடைய முகத்தைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அவன் முகத்தில் வருத்தமும் பயமும் கலந்து முகமே என்னவோ போல் இருந்தது.
“நான் இனிமேல் ஒருநாள் கூட உங்களை வேதனைப்பட விடமாட்டேன். சத்தியமா நீங்க வேதனைப்படுற மாதிரி நடக்க மாட்டேன்” என்று சொல்லியவாறு அவன் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினான். தொடர்ந்து அவன் சொன்னான்.
“எனக்குத் தெரியும். நீங்க ஒரு அப்பிராணி மனிதர். நீங்க வேலை பார்ப்பீங்க. என்னை வேலை செய்யச் சொல்ல மாட்டீங்க. காரணம்- நீங்க ஒரு முட்டாள். பெண் செம்மறி ஆட்டைப்போல ஒரு முட்டாள்...”
இப்படி அவன் என்னைத் தேற்றிக் கொண்டிருந்தான். அவன் என்னிடம் மன்னிப்புக் கேட்டான். அவனுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும், மன்னிப்பு கேட்டதற்கும் நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அளவில் அவன் இதுவரை செய்த தவறுகளுக்கும் இனிமேல் செய்யப்போகிற செயல்களுக்கும் மன்னிப்பு அளிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை என்றாகிவிட்டது.
அரைமணி நேரம் சென்றதும் அவனுக்கு உறக்கம் வந்துவிட்டது. அவனைப் பார்த்துக் கொண்டே அவனுக்குப் பக்கத்தில் நான் இருந்தேன். தூக்கத்தில்தான் ஒரு முரட்டுத்தனமான மனிதன் பலவீனமானவனாகவும், எதிர்ப்பு சக்தி இல்லாதவனாகவும் மாறுகிறான். ஷாக்ரோவைப் பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. திறந்த உதடுகளும் வளைந்த புருவங்களும் அவனுக்கு ஒரு குழந்தையின் ஆச்சரியம் படர்ந்த முக அமைப்பைத் தந்தன. அவன் சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். சில நேரங்களில் அவன் தலையை ஆட்டியவாறு ஜார்ஜியின் மொழியில் என்னவோ முனகினான்.
ஷாக்ரோவைப் பார்த்துக் கொண்டிருந்த நான் நினைத்தேன். “இவன் என்னுடைய பயண நண்பன். நான் அவனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தாராளமாகப் போகலாம். ஆனால், அவனை விட்டு நான் ஓட நினைக்கவில்லை. மனதில் நினைக்க முடியாத தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட மனிதன் அவன். வாழ்நாள் முழுவதும் என்னுடன் வரப்போகும் பயண நண்பன் அவன். நான் மண்ணில் மூடப்படும் வரை அவன் என்னுடன் இருப்பான்.
தியோடிஸியா நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எங்களைப் போல வேலை தேடி சுமார் நானூறு ஆட்கள் அங்கு வந்திருந்தாலும், பாலம் கட்டும் வேலையை வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்க மட்டுமே அவர்களால் முடிந்தது. துர்க்கிகளும், க்ரீக் நாட்டைச் சேர்ந்தவர்களும், ஜார்ஜியாக்காரர்களும், ஸ்மோளன்கியிலிருக்கும் ரஷ்யாக்காரர்களும், போல்ட்டாவாயிலிருக்கும் ரஷ்யர்களும் பாலம் கட்டும் வேலையில் தொழிலாளர்களாக ஈடுபட்டிருந்தார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை மீது அவநம்பிக்கை குடிகொள்ள ஏராளமான மனிதர்கள் அந்த நகரத்தில் இங்குமங்குமாய் அலைந்து திரிந்தனர். க்ரிமியாவிலிருந்தும் அஸோவ் கடற்கரைப் பகுதியிலிருந்தும் வந்த நாடோடிகளும் அங்கு நடந்து திரிந்தனர்.
‘நாங்கள் கெர்ஷிலை நோக்கி நடந்தோம்’ என்று என்னுடைய பயண நண்பன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினான். அவன் என்னைப் பார்த்து கிண்டல் செய்வதை நிறுத்தியிருந்தான். ஆனால், அவனுக்கு நல்ல பசி இருந்தது. அவன் ஒரு ஓநாயைப் போல பற்களைக் கடித்துக் கொண்டிருந்தான். தான் உள்ளே தள்ள நினைக்கும் பலவிதப்பட்ட உணவுப் பொருட்களின் அளவுகளைப் பற்றிக் கூறி அவன் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தான். சமீப நாட்களாக அவன் பெண்களைப் பற்றி நினைக்க ஆரம்பித்திருந்தான். ‘கிழக்கு திசையில் உள்ளவர்களின்’ குணங்களை அவன் காட்ட ஆரம்பித்திருந்தான். எங்களுக்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந்த பெண்களை அவர்கள் எந்த வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, காதல் வயப்பட்ட வார்த்தைகளைக் கூறாமல் அவன் அவர்களைப் போகவிடுவதேயில்லை.
சில நேரங்களில் அவர்களை அவன் பார்க்க மட்டும் செய்வான். வேறு சில வேளைகளில் அவர்களிடம் அவன் ஏதாவது சில்மிஷங்கள் செய்வான். பெண்கள் விஷயத்தில் தனக்கு நிறைய தெரியும் என்பதைப் போல அவன் பேசினான். தன்னுடைய மாறுபட்ட கோணத்தில் அவன் பெண்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, நான் அவனை வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கும்படி சொன்னேன்.
பெண்கள் அவனை விட கீழானவர்கள் அல்ல என்பதை அவனுக்கு உணர்த்த நான் முயற்சி செய்தேன். ஆனால், தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணி அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டான். சொல்லப்போனால் அதற்காக என் மீது அவன் கோபப்பட்டான். கடைசியில் வயிறு நிறைய உணவு கொடுத்த பிறகுதான் அவனிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது என்று நான் முடிவெடுத்தேன்.
கெர்ஷிலை நோக்கிய எங்களது பயணத்தின்போது கடலையொட்டி வளைந்து வளைந்து போவதற்குப் பதிலாக ஸ்டெப்பி(சமநிலை பகுதி) வழியாக நடந்து போக நாங்கள் முடிவெடுத்தோம். எங்கள் கையில் மொத்தம் இருந்ததே மூன்று பவுண்ட் எடையுள்ள ஒரு கேக் மட்டும்தான். அதனால்தான் நாங்கள் அப்படியொரு முடிவை எடுத்தோம். டார்ட்டார் கிராமத்தில் ஐந்து கோபெக்குகள் கொடுத்து அந்த கேக்கை வாங்கினோம். அந்த கிராமத்து மக்களிடம் உணவை யாசித்து வாங்கும் ஷாக்ரோவின் முயற்சி வெற்றி பெறவில்லை. மிகவும் குறைவான வார்த்தைகளிலேயே ஆட்கள் அவனிடம் பேசினார்கள். "உங்களுக்கு உணவு தர எங்களால் முடியாது" என்று அவர்கள் கூறி விட்டார்கள். அவர்கள் கூறியது உண்மைதான். அந்த கஷ்டமான சூழ்நிலையில் ஒரு நேர உணவுக்கு சிரமப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.
என்னுடைய பயண நண்பன் வறட்சியால் பாதிக்கப்பட்டு பிழைப்புத் தேடி வந்தவர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டான். கேட்டபோது உணவு தரமுடியாது என்று கூறியதன் மூலம் என் நண்பனுக்கு அவர்கள் எதிரிகளாகி விட்டதால், தூரத்திலிருந்து அவர்களைப் பார்க்கும்போதே அவன் "அதோ அவன்க வந்துட்டாங்க. ஃபூ... ஃபூ... ஃபூ... அவன்க இங்க எதுக்கு வரணும்? எதுக்கு ரஷ்யாவுல இவ்வளவு தூரம் தாண்டி அவங்க இங்கே வரணும்? என்னால புரிஞ்சிக்கவே முடியல. ரஷ்யர்கள் உண்மையிலேயே முட்டாளுங்க தான்" என்று கூறத் தொடங்கி விடுவான்.
ரஷ்யாவிலிருந்து க்ரிமியாவிற்கு மனிதர்கள் உணவு தேடி வருவதற்கான காரணம் என்னவென்று நான் அவனுக்கு விளக்கிக் கூறினேன். அதற்குப் பிறகும் நம்பிக்கை வராமல் தலையை ஆட்டியவாறு அவன் சொன்னான்: "எனக்கு எதுவுமே புரியல. அது எப்படி நடக்கும்? ஜார்ஜியாவுல நாங்க அப்படிப்பட்ட முட்டாள் தனங்களையெல்லாம் காட்டவே மாட்டோம்."
மாலை நேரத்தில் நாங்கள் கெர்ஷிலை அடைந்தோம். துறைமுகத்தில் தொழிலாளர்களுக்காக அங்கு தற்காலிகமாக உண்டாக்கப்பட்டிருந்த ஒரு மரக்குடிலில் அன்று இரவு நாங்கள் தங்கினோம். எங்களைப் பொறுத்தவரை அங்கு யாருக்கும் தெரியாமல் நாங்கள் இருப்பதுதான் சரியானது. அனுமதி இல்லாமல் அங்கு வசிக்கும் வெளியாட்களை கெர்ஷிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அலைந்து திரிந்தோமானால், நிச்சயம் நாங்கள் போலீஸ்காரர்களின் கண்களில் பட்டுவிடுவோம் என்பது உறுதி. தவிர, ஷாக்ரோ வேறொரு ஆளின் பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்து கொண்டிருந்தான் என்ற காரணத்தால் நாங்கள் அதிலிருந்த ஆபத்தைப் புரிந்திருந்தோம். எங்களின் தொடரும் பயணத்தை எந்தவிதத்தில் பார்த்தாலும் அது பாதிக்கும் என்பதையும் நாங்கள் உணர்ந்திருந்தோம்.
மேலெழுந்து வந்த அலைகள் அலட்சியமாக எங்களின் உடலைத் தொட்டுச் சென்றன. பொழுது புலரும் நேரத்தில் நனைந்து, குளிரில் நடுங்கியவாறு நாங்கள் அந்தக் குடிலை விட்டு வெளியேறினோம். பகல் முழுவதும் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்குகளுக்கு இடையில் நாங்கள் சுற்றித் திரிந்தோம். ஒரு சாக்கு தண்ணீர்ப் பழத்தைச் சுமந்து தந்ததற்குக் கூலியாக ஏதோ ஒரு பாதிரியாரின் மனைவி எனக்கு ஒரு வெள்ளி நாணயத்தைத் தந்தாள்.
தமானை அடைய வேண்டுமென்றால் அந்தக் கடற்பகுதியைத் தாண்டி கடந்தால்தான் முடியும். எவ்வளவு கெஞ்சியும் படகோட்டிகளில் ஒருவர் கூட எங்களை அந்தக் கரையில் கொண்டுபோய் விடுவதற்குத் தயாராக இல்லை. அலைந்து திரியும் நாடோடிகளை அவர்களுக்குப் பிடிக்காது. நாங்கள் அங்கு போய் சேர்வதற்கு முன்பு நாடோடிகள் அந்தப் படகோட்டிகளிடம் அப்படியொரு எண்ணத்தை உண்டாக்கிவிட்டிருந்ததால், எந்தவொரு காரணமும் இல்லாமல் அந்தப் படகோட்டிகள் எங்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.
மாலை நேரம் வந்ததும், எங்களின் முயற்சியில் வெற்றி கிடைக்காததால், சிறிது ஆபத்து உள்ள வேறொரு முயற்சியைச் செய்து பார்ப்பது என்று நான் முடிவெடுத்தேன். இரவு நேரத்தில் அதைச் செயல்படுத்துவது என்று நான் தீர்மானித்தேன்.
இரவில் நானும் ஷாக்ரோவும் மெதுவாக கஸ்டம்ஸ் போஸ்ட்டிற்கு அருகில் சென்றோம். அங்கு மூன்று படகுகளை சங்கிலியில் கட்டிப் போட்டிருந்தார்கள். அந்த இடத்தில் நல்ல இருட்டு இருந்தது. காற்றில் அந்த படகுகள் ஒன்றோடொன்று மோதி சங்கிலிகள் கிணுகிணுத்தன. அவற்றில் ஒன்றை சங்கிலியிலிருந்து கழற்ற எனக்கு கஷ்டமாக இருக்கவில்லை.
நாங்கள் இருந்த இடத்திலிருந்து பத்து அடி உயரத்தில் ஒரு காவலாளி விசிலடித்தவாறு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். எங்களுக்குப் பக்கத்தில் வந்து அந்த ஆள், நடப்பதை நிறுத்தியவுடன், நானும் என் வேலையை நிறுத்தி விடுவேன். ஆனால், அதை மிகவும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியிருந்தது. தனக்குக் கீழே கழுத்து வரை இருக்கும் நீருக்குள் மூழ்கிக் கிடக்கும் ஒரு மனிதனை அங்கு அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டான். இது ஒருபுறமிருக்க, என் உதவியே இல்லாமல் சங்கிலிகள் ஓசை எழுப்பிக் கொண்டேயிருந்தன. படகுக்குக் கீழே படுத்தவாறு ஷாக்ரோ என் காதில் ஏதோ முணுமுணுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால், அலைகளின் ஓசையால் அவன் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. அந்தச் சங்கிலியின் வளையம் என் கையில் கழன்று தனியாக வந்தது. ஒரு பெரிய அலை அந்தப் படகை நகர்த்திக் கொண்டு போனது. சங்கிலியைப் பிடித்தவாறு அந்தப் படகுடன் சேர்ந்து நீந்தி, பிறகு உள்ளேயிருந்த இரண்டு பலகைகளைத் தேடி எடுத்து துடுப்புகளுக்குப் பதிலாக அதைப் பயன்படுத்தி நீரைத் துழாவினோம்.
அலைகள் மிகவும் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தன. படகின் ஓரத்திலிருந்த ஷாக்ரோவை என்னால் பார்க்கவே முடியவில்லை. திடீரென்று அவன் மேலே உயர்ந்து வந்தான். பிறகு ஒரு அலறலுடன் என் உடல் மீது வந்து விழுந்தான். காவலாளி அந்த அலறலைக் கேட்பான் என்றும், உரத்த குரலில் சத்தம் போட வேண்டாம் என்றும் நான் அவனிடம் சொன்னேன்.
அப்போது அவன் அமைதியாக இருந்தான். அவன் முகம் தாளைப்போல வெளிறிப்போய் காணப்பட்டது. படகின் ஒரு பக்கத்தை விடாமல் அவன் இறுகப் பற்றியிருந்தான். இருவரும் இடம் மாறி உட்காருவதற்கான நேரம் எங்களுக்கு இல்லாமலிருந்தது. படகில் சற்றுத் தள்ளி உட்காருவதற்குக் கூட நாங்கள் பயந்தோம். படகு எந்தத் திசையில் போக வேண்டும் என்று நான் அவனிடம் கூறினேன். பிறந்ததிலிருந்தே தான் ஒரு படகோட்டி என்பதைப் போல, மிகவும் திறமையாக அவன் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
துடுப்புக்குப் பதிலாக நாங்கள் பயன்படுத்திய பலகைகள் எந்தவிதத்திலும் உபயோகமாக இல்லை. எங்களுக்குப் பின்னால் காற்று பலமாக மோதிக் கொண்டிருந்தது. நாங்கள் எந்தப் பக்கம் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை நான் கவனிக்கவேயில்லை. ஆனால், படகின் முன்பக்கம் கரைக்கு நேர் எதிர் திசையில் இருக்கும்படி மட்டும் நான் பார்த்துக் கொண்டேன். கெல்ஷியெ விளக்குகள் இருந்ததால், அந்த வேலை கஷ்டமாக இருக்கவில்லை.
அலைகள் படுவேமாகப் படகிற்குள் வந்தது. கடலுக்குள் அதிகமாகப் போகப்போக எங்களின் படகு அதிக உயரத்திற்குச் சென்றது. அடர்த்தியும், பலமும் கொண்ட அலைகளின் ஆரவாரம் கேட்டுக் கொண்டேயிருந்தது. படகு மேலும் அதிக வேகத்துடன் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. படகின் திசையை ஒழுங்குபடுத்துவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருந்தது.
இப்போது பெரிய பெரிய வெள்ளை நிறக் குழிகளுக்குள் நாங்கள் விழுந்து கொண்டேயிருந்தோம். குன்றென உயர்ந்து நின்ற நீரின் உச்சியை நோக்கி நாங்கள் படகுடன் வீசி எறியப்பட்டோம். இரவு மேலும் அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. மேகங்கள் அதிகமாகக் கீழே இறங்கிக் கொண்டு வந்தன. படகில் இருந்த வெளிச்சம் இல்லாமல் போனது. அப்போதிருந்த சூழ்நிலை உண்மையாகவே எங்களை அச்சப்பட வைக்கும் நிலையில் இருந்தது. கோபம் கொண்ட அந்தக் கடலுக்கு ஒரு முடிவே இல்லை என்று தோன்றியது. இருட்டைக் கிழித்துக் கொண்டு எங்களுக்கு நேராகப் பாய்ந்தோடி வரும் அலைகளைத் தவிர வேறெதுவும் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. பெரிய அலையொன்று என் கையிலிருந்த மரப்பலகையைத் தட்டிப் பறித்துக்கொண்டு சென்றது. அப்போது கையிலிருந்த இன்னொரு மரப்பலகையை படகிற்குள் போட்டுவிட்டு, இரண்டு கைகளாலும் படகின் இரு பக்கங்களையும் பலமாகப் பிடித்துக்கொண்டு நான் நின்றேன். ஒவ்வொரு முறையும் படகு மேலே உயர்கிறபோதும், ஷாக்ரோ உரத்த குரலில் சத்தம் போட்டான். அலைகளின் கோபமும் அவற்றின் காதுகளை அடைக்கும் சத்தமும் சேர்ந்து அந்த இருட்டில் என்னை முழுமையாகச் செயல்படவிடாமல் ஆக்கின.
என்னுடைய நம்பிக்கைகளெல்லாம் தகர்ந்து விட்டன. உப்புச் சுவை கொண்ட வெள்ளை நுரை தவழும் அலைகளைத் தவிர வேறெதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அலைகளைப் போல மேலே ஆகாயத்தில் திரண்டு நின்றிருந்த ஆக்ரோஷமான கருமேகங்கள்... ஒரு விஷயம் எனக்குப் புரிந்துவிட்டது. என்னைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பவங்கள் மிகவும் ஆக்ரோஷம் கொண்டவையாக இருந்தன. எனினும், அதன் முழுமையான பலத்தை அது வெளிக்காட்டவில்லை. மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. நெருப்பில் சிக்கி இறப்பது, சேற்றில் சிக்கி இறப்பது... இந்த இரண்டில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், முதலில் இருப்பதைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். அதுதான் கண நேரத்திற்குள் நடக்கும் மரணமாக இருக்கும்.
"நம்மோட துடுப்பு போயிருச்சே!"- ஷாக்ரோ உரத்த குரலில் அலறினான். "இனிமேல் துடுப்பு எங்கேயிருந்து கிடைக்கும்?" நான் கேட்டேன்.
"என் கோட்டைப் பிடிங்க..."
"அதை இங்கே எறி. படகை ஆட்டாதே. பிடியை விடாம பார்த்துக்கோ."
ஷாக்ரோ அமைதியாகத் தன் முயற்சியைத் தொடர்ந்தான்.
"இந்தாங்க... பிடிங்க..."
அவன் அந்தக் கோட்டை என்னை நோக்கி வீசி எறிந்தான். படகின் அடியிலிருந்து தேடி வேறொரு பலகையை நான் துழாவி எடுத்தேன். கோட்டின் கைக்குள் அதை நுழைத்துவிட்டு, நான் கோட்டின் அடுத்த கையைப் பிடிப்பதற்காக முயன்றேன். அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல் மிகவும் உயரத்திற்குச் சென்ற அந்தப் படகு கீழ்நோக்கி வந்தது. ஒரு கையில் கயிறும் மறு கையில் கோட்டுமாக நான் நீரில் விழுந்தேன். அலைகள் என்னுடைய தலைக்கு மேலே காதுகளைச் செவிடாக்கும் சத்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. நான் உப்பு நீரைக் குடித்தேன். என் காதுகளுக்குள்ளும், வாய்க்குள்ளும் மூக்கிற்குள்ளும் நீர் புகுந்தது. கயிறை இறுகப் பிடித்தபோது படகின் மீது என் தலை மோதியது. கோட்டை படகில் போட்ட நான் படகின் மீது ஏற முயன்றேன்.
பலமுறை முயற்சி செய்ததில் ஒருமுறை வெற்றி கிடைத்தது. தொடர்ந்து நான் படகை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். அப்போது ஷாக்ரோ நீரில் தலைகுப்புற விழுந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் தூக்கிப் போட்ட கயிறைப் பிடிக்க அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"இதோ இங்கே!"- நான் உரத்த குரலில் கூவினேன்.
அவன் உயர குதித்துப் படகைப் பிடிக்க முயற்சி செய்தான். அவனைக் காப்பாற்றுவதற்காக நான் என் கைகளை முன்னால் நீட்டினேன். நாங்கள் முகத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு நெருக்கமாக இருந்தோம். ஒரு குதிரையின் மீது அமர்ந்திருப்பதைப் போல நான் அந்தப் படகின் மீது அமர்ந்திருந்தேன். இரு பக்கக் கயிறுகளிலும் நான் என் காலை வைத்திருந்தேன். ஆனால், நான் அமர்ந்திருந்தது வசதியில்லாமல் இருந்தது. அவை என்னை அந்த இடத்திலிருந்து தள்ளின. ஷாக்ரோ என் முழங்காலைப் பிடித்திருந்தான். தலையை என் மார்பின் மீது வைத்திருந்தான். அவன் கீழிருந்து மேல்வரை நடுங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய பற்கள் கிடுகிடுப்பதை நான் கேட்டேன்.
ஏதாவது உடனடியாகச் செய்தாக வேண்டும். எண்ணெய் தேய்த்ததைப் போல படகின் அடிப்பகுதி வழுவழுப்பாக இருந்தது. ஷாக்ரோவிடம் கயிறைப் பிடித்துக் கொண்டு நீரில் குதிக்கும்படி நான் சொன்னேன். படகின் மறுபக்கத்தில் அதே போல விழுந்து கிடப்பது என் திட்டமாக இருந்தது. அதற்கு பதில் கூறுவதற்குப் பதிலாக அவன் தன் தலையால் என்னை அடிக்க ஆரம்பித்தான்.
ஒவ்வொரு முறையும் அலைகளின் ருத்ரதாண்டவம் படகை எங்களின் தலைக்கு மேலே கொண்டு போனது. எங்களின் பிடி தளர்ந்து கொண்டிருந்தது. கயிறில் ஒன்று என் காலில் பட்டு காயத்தை உண்டாக்கியது. ஓங்காரமிட்டு வந்து கொண்டிருந்த அலைகளின் குவியல்களைத் தவிர என் கண்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை.
முன்பு சொன்ன விஷயத்தை நான் மீண்டும் செய்தேன். ஷாக்ரோ தன்னுடைய தலையால் பலமாக என் மார்பின் மீது இடித்துக் கொண்டிருந்தான்.
இதற்கு மேல் நேரத்தைக் கடத்தினால் நன்றாக இருக்காது என்று நான் நினைத்தேன். அவனுடைய கைகளை என் உடம்பை விட்டு விடுவித்து, கயிறைப் பிடிக்கச் செய்து, நான் அவனை நீரில் தள்ளிவிட முயற்சி செய்தேன். ஆனால், என்னை மிகவும் பதைபதைப்புக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் தான் அடுத்து நடந்தது.
"நீங்க என்னை நீர்ல மூழ்கடிச்சு கொல்லப்போறீங்களா?"- என் முகத்தைப் பார்த்தவாறு அவன் கேட்டான்.
அந்தக் காட்சி உண்மையாகவே அச்சம் உண்டாகக்கூடிய ஒன்றாக இருந்தது. அவனுடைய அந்தக் கேள்வியைக் கேட்டு நான் நடுங்கிவிட்டேன். உயிர் தப்புவதற்கான கடைசி முயற்சியும் தோல்வியடைந்த ஒரு மனிதனின் புலம்பலாக, கெஞ்சுகிற குரலாக இருந்தது அது. அதே நேரத்தில் என்னை மிகவும் பயமுறுத்தியது. அந்தக் குளிர்ச்சியில் உறைந்து போன முகத்திலிருந்த மரணத்திற்கு நிகரான வெளிறிப் போன கண்கள்தான்.
"பிடியை விட வேண்டாம்"- நான் அவனிடம் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன். நான் நீரில் குதித்தேன். கயிறிலிருந்த என் பிடியை நான் விடவில்லை. கனமாக இருந்த ஏதோவொன்றில் என் கால் இடித்தது. காலில் தாங்க முடியாத அளவிற்கு வேதனை உண்டானதை முதலில் நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு வேறொரு விஷயமும் புரிந்தது. என் மூளையில் சந்தோஷம் படர்வதை உணர்ந்தேன். முன்பு இல்லாத புத்துணர்ச்சி எனக்கு அப்போது உண்டானது. மகிழ்ச்சியின் உச்சியில் நான் இருந்தேன்.
"கரைக்கு வந்துட்டோம்"- நான் உரத்த குரலில் சத்தமிட்டேன்.
ஒருவேளை புதிய இடங்களைப் பார்க்க நேரும் கப்பல் மாலுமிகள் என்னைவிட உணர்ச்சிவசப்பட்டு மேலும் அதிக சத்தத்தில் கத்தியிருக்கலாம். என் அளவிற்கு அவர்கள் உரத்த குரலில் கத்தியிருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். உரக்கக் கத்தியவாறு ஷாக்ரோ நீருக்குள் குதித்தான். ஆனால், நாங்கள் மீண்டும் வேறொரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருந்தோம். எங்களின் மார்புகள் வரை நீர் இருந்தது. நீரில்லாத இடம் அங்கு எங்கும் இல்லை. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் படகைக் கைவிடவில்லை. ஷாக்ரோவும் நானும் படகின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டோம். கயிறு கையில் இருந்ததால் அந்தப் படகை இழுத்தவாறு நாங்கள் எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்தோம்.
ஷாக்ரோ என்னவோ முணுமுணுத்தவாறு சிரித்தான். நான் உள் ஆர்வத்துடன் சுற்றிலும் பார்த்தேன். சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது. எங்களுக்குப் பின்னாலும் வலது பக்கத்திலும் அலைகளின் சத்தம் பலமாகக் கேட்டது. முன்னாலும் இடது பக்கத்திலும் அலைகள் அந்த அளவிற்குப் பலமில்லாமல் இருந்தன. அதன் சத்தம் மிகவும் குறைவாக இருந்தது. நாங்கள் இடது பக்கத்தை நோக்கி நடந்தோம். கீழே மணல் இருந்தது. அதே நேரத்தில் ஆழமான குழிகளும் படகின் கயிறைப் பிடித்தவாறு மிகவும் கவனமாக நாங்கள் முன்னோக்கி நடந்தோம். இப்போது நீர் எங்களின் முழங்கால் வரை இருந்தது. ஆழமான இடத்தை அடையும்போது ஷாக்ரோ உரத்த குரலில் அலறினான். நான் பயந்து போய் நடுங்கினேன். அதே நேரத்தில் எதிலிருந்தோ தப்பித்து விட்டதைப் போல் ஒரு தோணல் எங்கள் மனதில் உண்டானது. எங்களுக்கு முன்னால் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஷாக்ரோ தன்னால் முடிந்த வரைக்கும் உரத்த குரலில் அழுதான். ஆனால், அந்தப் படகு அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்ற விஷயம் என்னுடைய ஞாபகத்தில் வந்தது. சிறிதும் தாமதப்படுத்தாமல் நான் இந்த விஷயத்தை அவனிடம் சொன்னேன். அவன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் சென்ற பிறகு அவன் அழ ஆரம்பித்தான். அவனை என்னால் தேற்ற முடியவில்லை. தேற்றும் வழி தெரியாமல் நான் தவித்தேன்.
கடலின் ஆழம் குறைந்து கொண்டு வந்தது. நீர் முழங்கால் அளவிலிருந்து பாதம் அளவிற்கு வந்தது. அப்போதும் நாங்கள் படகை இழுத்துக்கொண்டு நடந்தோம். இழுத்துக்கொண்டு நடக்க முடியாமல் போனபோது நாங்கள் அதை வெறுமனே விட்டோம். எங்களுக்கு முன்னால் இருட்டு நிறத்தில் பெயர் தெரியாத ஒரு மரத்தின் கிளை கீழே விழுந்து கிடந்தது. அதைக் குதித்துத் தாண்டி நாங்கள் கால்களைக் குத்தும் புற்கள் நிறைந்த ஒரு பூமியில் கால் வைத்தோம். அந்தப்புல்லின் மீது கால்களை வைத்தபோது எங்களுடைய கால்கள் பயங்கரமாக வலித்தன. எங்களுக்கு அது வசதியாக இல்லை. ஆனால், அதைப் பெரிதாக எண்ணாமல் அந்த வெளிச்சம் கண்ட திசையை நோக்கி நாங்கள் ஓடினோம். சுமார் ஒரு மைல் தூரத்தில் சந்தோஷத்துடன் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறு அந்த வெளிச்சம் நின்று கொண்டிருந்தது.
மூன்று உயரமான நாய்கள் இருட்டிலிருந்து எங்களை நோக்கி தாவிக் குதித்தன. பைத்தியம் பிடித்தவனைப் போல அழுது கொண்டிருந்த ஷாக்ரோ உரத்த குரலில் கூப்பாடு போட்டவாறு தரையில் தலை குப்புற விழுந்தான். என் கையிலிருந்த ஈரமான கோட்டை நான் அந்த நாய்கள் மீது எறிந்தேன். அவற்றை விரட்டுவதற்கு வேறு ஏதாவது கிடைக்குமா என்று நான் கீழே தேடினேன். ஆனால், கூர்மையான புற்கள் மட்டுமே அங்கு இருந்தன. அவை என் கைவிரல்களைப் பதம் பார்த்தன என்பது மட்டும்தான் மிச்சம். அந்த நாய்கள் ஒன்றாகச் சேர்ந்து என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இரண்டு விரல்களை வாய்க்குள் வைத்து நான் உரக்க விசில் அடித்தேன். அதைக்கேட்டு அவை பின்னால் ஓடின. அப்போது அங்கு எங்களை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்த ஆட்களின் பாத ஒலிகளை நான் கேட்டேன்.
ஒரு நெருப்பு குண்டத்தின் சுற்றிலும் அமர்ந்து தீ காய்ந்து கொண்டிருந்த செம்மறியாட்டின் தோலை அணிந்த ஆட்டிடையர்களுக்கருகில் நாங்கள் இருந்தோம். மொத்தம் அங்கு நான்கு பேர் இருந்தார்கள். இரண்டு பேர் தரையில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். உயரமான, கறுத்த தாடியைக் கொண்ட கோஸாக்குகளைப் போல உரோமத்தால் ஆன தொப்பி அணிந்த மனிதன் முனையில் பெரிய கைப்பிடியைக் கொண்ட ஊன்றுகோலை ஊன்றியவாறு எங்களுக்குப் பின்னால் குனிந்து நின்றிருந்தான். மண்ணின் நிறத்தில் தலைமுடியைக் கொண்ட நான்காவது ஆள் தரையில் படுத்துக் கொண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த ஷாக்ரோவின் ஆடைகளைக் கழற்ற உதவிக் கொண்டிருந்தான். அங்கிருந்து சிறிது தூரத்தில் வசந்த காலத்தின் பனிப்படலத்தை ஞாபகப்படுத்துகிற மாதிரி சாம்பல் நிறத்தில் ஒரு படலம் பூமிக்கு மேலே மூடிக் கிடந்தது. கூர்மையாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது. பலவகைப்பட்ட செம்மறி ஆடுகள் ஒன்றாகச் சேர்ந்து அங்கு இருக்கின்றன என்ற உண்மையே. அவை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
இரவின் இருட்டும் உறக்கமும் அவற்றைப் புல் மேடுகளின் அலங்காரத்தைப் போல் காட்சியளிக்க வைத்தன. ஆடுகள் அப்போது கத்திக் கொண்டிருந்தன. நான் என் கோட்டை உலரப்போட்டேன். நடந்த விஷயங்களைக் கொஞ்சம் கூட மறைக்காமல் நான் ஆட்டிடையர்களிடம் சொன்னேன். நாங்கள் படகில் பயணம் செய்த விஷயத்தையும் அவர்களிடம் கூறினேன்.
நான் அதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, என் முகத்திலிருந்து கண்களைச் சிறிதும் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நரைத்த முடியைக் கொண்ட மனிதன் கேட்டான்.
"அப்போ அந்தப் படகு எங்கே?"
நான் அவனிடம் விஷயத்தை விளக்கிச் சொன்னேன்.
"மைக்கேல், நீ போய் பார்த்துட்டு வா!"
அடுத்த நிமிடம் கறுத்த தாடியைக் கொண்ட மைக்கேல் தன் கையிலிருந்த ஊன்றுகோலை தோளில் வைத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஷாக்ரோ, நனைந்து போயிருந்தாலும் சிறிதளவிலாவது உஷ்ணத்தைத் தரக்கூடிய அந்தக் கோட்டைத் தரும்படி என்னிடம் சொன்னான். ஆனால், அந்த வயதான மனிதன் அதைத் தர வேண்டாம் என்று சொன்னான். அவன் சொன்னான்: "நடுக்கம் இருக்கட்டும். இரத்தம் சூடாகணும்னா கொஞ்ச தூரம் ஓடு அந்த நெருப்பு குண்டத்தைச் சுற்றி ஓடு!"
அவன் என்ன சொல்கிறான் என்பது ஷாக்ரோவிற்குப் புரியவில்லை. ஆனால், சிறிது நேரம் சென்ற பிறகு அவன் தான் இருந்த இடத்தை விட்டு வேகமாக எழுந்து கன்னா பின்னாவென்று நடனம் ஆட ஆரம்பித்தான். கைகளை வீசிக்கொண்டு அந்த நெருப்பு குண்டத்திற்கு மேலே பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு பந்தைப் போல அவன் வட்டம் போட்டு நடனமாடிக் கொண்டிருந்தான். அதோடு சேர்த்து அவன் பாட்டுப் பாடவும் செய்தான். கைகளை இப்படியும் அப்படியுமாக வீசினான்.
உண்மையிலேயே அது ஒரு நல்ல காட்சியாக இருந்தது. இரண்டு இடையர்கள் தரையில் படுத்தவாறு உருண்டார்கள். அவர்கள் நிறுத்தாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள். ஆனால், வயதான மனிதன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் நடனத்திற்கேற்றபடி தன் கைகளைத் தட்டினான். ஆனால், சரியாகத் தாளம் போட அவனுக்குத் தெரியவில்லை. அவன் ஷாக்ரோ வட்டம் போட்டு நடனமாடுவதைப் பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் தன் தலையை ஆட்டியவாறு, மீசையைக் கையால் ஒதுக்கி விட்டுக் கொண்டான். பிறகு உரத்த குரலில் சொன்னான்:
"ஹா...ஹா...! ஸோ...! ஸோ...! ஹாய்ஹ... பட்ஸ்... பட்ஸ்..."
நெருப்பு நாக்குகளின் ஒளியில், ஷாக்ரோ ஒரு பாம்பைப்போல நெளிந்து நெளிந்து ஆடினான். சில நேரங்களில் ஒற்றைக் காலைக் கொண்டும், சில நேரங்களில் இரண்டு கால்களாலும் அவன் சீராகத் துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தான். நெருப்பு ஜுவாலையின் சிவப்பில் அவனுடைய உடல் ஜொலித்தது. நெருப்பின் சிவப்பொளியில் அவனுடைய உடலிலிருந்த வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகளைப் போல் தோன்றின.
இப்போது அந்த மூன்று பேரும் கைகளைத் தட்டினார்கள். நான் நெருப்பு காய்ந்து கொண்டிருந்தேன். ஜூல்ஸ் வெர்ணினெயோ ஃபெனிமோர் கூப்பற்றையோ விரும்புவர்களுக்கு அன்றைய எங்களின் சாகச அனுபவங்கள் நிச்சயம் பிடிக்கும் என்று நான் நினைத்தேன். படகு விபத்து, அதற்குப் பிறகு ஆட்டிடையர்களைப் பார்த்தது, இரவில் நெருப்பு குண்டத்தைச் சுற்றி நடனம் ஆடியது...
கோட்டால் உடம்பு முழுவதையும் மூடிக்கொள்ள முயற்சித்த ஷாக்ரோ எதையோ தின்று கொண்டிருந்தான். அவனுடைய கறுத்த கண்கள் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அதில் அபூர்வமாகக் காணப்படும் ஒளி எனக்குப் பிடிக்கவில்லை. நெருப்பு குண்டத்திற்கு அருகில் ஊன்றப்பட்டிருந்த கொம்புகளில் அவனுடைய ஆடை உலர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் பன்றிக் கொழுப்பும் தந்தார்கள்.
மைக்கேல் திரும்பி வந்தான். எதுவும் பேசாமல் அவன் வயதான மனிதனுக்கு அருகில் போய் உட்கார்ந்தான்.
"என்ன ஆச்சு?"- கிழவன் கேட்டான்.
"படகு அங்கேதான் இருக்கு"- மைக்கேல் சொன்னான்
"அது நீர்ல நழுவிப் போயிடாதா?"
"போகாது."
அவர்கள் அமைதியாக என்னைப் பார்த்தார்கள்.
எல்லாரையும் பார்த்து மைக்கேல் கேட்டான்: "சரி... நம்ம தலைவர்கிட்ட கொண்டு போய் காட்டுவோமா? இல்லாட்டி எக்ஸைஸ் அதிகாரிங்ககிட்ட கொண்டு போவோமா?"
யாரும் எதுவும் பேசவில்லை. இது எதைப்பற்றியும் தனக்குக் கவலையே இல்லை என்பது மாதிரி ஷாக்ரோ தின்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
"நாம நம்ம தலைவர் கிட்ட கொண்டு போய் காட்டுவோம். இல்லாட்டி எக்ஸைஸ்காரங்ககிட்ட கொண்டு போய் காட்டுவோம். இதுல எது செஞ்சாலும் பிரச்சினையில்ல..."
"தாத்தா... கொஞ்சம் மன்னிக்கணும்!"- நான் சொன்னேன். ஆனால், கிழவன் நான் சொன்னதைக் கேட்கவேயில்லை. "அப்போ விஷயங்கள் அதுதான்... படகு அங்கேதானே இருக்கு மைக்கேல்?"
"ஆமா... அங்கேதான் இருக்கு."
"அது அலையில சிக்கி கடலுக்குள்ள போயிடாதா?"
"இல்ல...போகாது."
"அப்படின்னா இன்னைக்கு அது அங்கேயோ கிடக்கட்டும். நாளை படகுக்காரங்க கெர்ஷிலுக்குப் போவாங்க. அவங்க அதைக் கொண்டு போயிடுவாங்க. ஆள் இல்லாத வெற்றுப் படகைக் கொண்டு போறதுல அவங்களுக்கென்ன கஷ்டம்! என்ன நான் சொல்றது? அப்போ... அதுதான் சரி. இப்போ உங்க விஷயத்துக்கு வருவோம். டேய் நாத்தமெடுத்த மனிதர்களே... நீங்க... நான் அதை எப்படிச் சொல்றது? நீங்க ரெண்டு பேரும் பயந்து போயிட்டீங்களா? இல்ல... ஹி... ஹி... ஆனால், அரைமைல் தாண்டி நீங்க போயிருந்தீங்கன்னா, நீங்க நடுக்கடல்ல சிக்கியிருப்பீங்க. அப்போ நீங்க என்ன செய்வீங்க? ம்... தண்ணிக்குள்ள கல் மூழ்குறது மாதிரி உங்க ரெண்டு பேரோட கதையும் முடிஞ்சிருக்கும். அதுக்குப் பிறகு எதுவும் மீதியிருக்காது..."
அந்த வயதான மனிதன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. தன் மீசைக்கு அடியில் பற்களைக் காட்டி சிரித்தவாறு அவன் என்னைப் பார்த்தான்.
"அப்போ... நீங்க சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. அப்படித்தானே, பிள்ளைகளே?"
அந்த மனிதனின் பேச்சு எனக்கு சோர்வைத் தந்தது. அவன் எதை மனதில் வைத்துப் பேசுகிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அதை வெறும் தமாஷாக மட்டுமே எடுத்துக் கொண்டேன்.
"நான் நீங்க பேசுறதை கவனமாக கேக்குறேன்" எதையும் தொடாமல் நான் சொன்னேன்.
"சரி... இருக்கட்டும். நான் சொல்றதுல இருந்து நீ என்ன புரிஞ்சுக்கிட்டே?" அந்த வயதான மனிதன் கேட்டான்.
"தலையும் வாலும் புரியல."
"அப்படின்னா நீ எதுக்கு பற்களை வெளியில காட்டுற? வயதானவங்களைப் பார்த்து சிரிக்க... அப்படித்தானே?"
நான் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.
“இனி சாப்பிடுவதற்கு ஏதாவது வேணுமா?” -அந்தக் கிழவன் கேட்டான்.
“வேண்டாம்...”
“சரி... அப்படின்னா வேண்டாம். உன்னை யாரும் கட்டாயப்படுத்தல. ஆனா, நடக்குறதுக்கு இடையில சாப்பிடுறதுக்கு உங்களுக்கு வேணும்னா கொஞ்சம் ரொட்டி கொண்டு போங்க.என்ன, வேணுமா?”
நான் சந்தோஷத்தில் திகைப்படைந்து நின்று விட்டேன். ஆனால் அதை நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“வழியில தேவைப்படும்...” - நான் அமைதியான குரலில் சொன்னேன்.
“ஹேய்... இவங்களுக்கு வழியில சாப்பிடுறதுக்குக் கொஞ்சம் ரொட்டியும் பன்றிக் கொழுப்பும் கொடுங்க... வேற ஏதாவது சாப்பிடுறதுக்கு இருந்தாக்கூட, அதையும் கொடுங்க. புரியுதா?”
“அப்படின்னா இவங்களை நாம விட்டுர்றமா?” -மைக்கேல் கேட்டான்.
“விடாம? இவங்களை இங்கே வச்சிக்கிட்டு என்ன செய்யிறது?”
“ஆனா... நான் நினைச்சது என்னன்னா இவங்களை நம்ம இனத் தலைவர் முன்னாடியோ எக்ஸைஸ்காரங்க கிட்டயோ கொண்டுபோயி நிறுத்துவோம்னு...” -சிறிது ஏமாற்றம் உண்டான குரலில் மைக்கேல் சொன்னான்.
ஷாக்ரோ நெருப்பு குண்டத்திற்கு அருகில் படுத்து அசைந்து கொண்டிருந்தான். அவன் இடையில் தன் தலையை உயர்த்திப் பார்த்தான். அவனிடம் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் தெரியவில்லை.
“இனத் தலைவர்கிட்ட இவங்களுக்கு என்ன வேலை? ஒரு வேலையும் இல்லைன்னுதான் நான் நினைக்கிறேன். இவங்க இப்போ போகட்டும் இவங்களுக்கு வேணும்னா பின்னாடி வந்து பார்த்துக்கட்டும்...”
“அப்போ படகு விஷயம்” -மைக்கேல் கேட்டான்.
“ம்... படகு!” - அந்தக் கிழவன் அந்தக் கேள்விக்கு இன்னொரு கேள்வியால் பதில் சொன்னான்: “படகு அங்கேதான் இருக்கா?”
“ஆமா...”- மைக்கேல் பதில் சொன்னான்.
“அப்படின்னா அது அங்கேயே இருக்கட்டும் காலையில இவாஷ்கா அந்தப் படகை படகுத் துறைக்குக் கொண்டு போகட்டும். அங்கேயிருந்து யாராவது அதை கெர்ஷிலுக்குக் கொண்டு போயிருவாங்க. படகு விஷயத்துல நாம வேற எதுவுமே செய்ய முடியாது.”
நான் அந்தக் கிழவனையே பார்த்தேன். அவன் முகத்தில் நெருப்பு ஜுவாலைகள் நிழல் பரப்பின. அவனுடைய வயதான முகத்தின் சிறு சலனங்களைக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"அதுனால பின்னாடி ஏதாவது பிரச்சினைகள் வந்ததுன்னா..." - மைக்கேல் சொன்னான்-.
"தேவையில்லாததை எல்லாம் நினைச்சு நீ எதையாவது சொல்ல வேண்டாம். இதுல என்ன ஆபத்து வரப்போகுது? என்னால புரிஞ்சுக்க முடியல. நாம இவங்களை நம்ம இனத்தலைவர் முன்னாடி கொண்டு போயி நிறுத்தினா, அதுனால நமக்கும் அவங்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். நாம நம்ம வேலையைப் பார்ப்போம். அவங்க அவங்களோட வேலையைப் பார்க்கட்டும். நடக்குறது... அதை அவங்க தொடரட்டும்... என்ன தெரியுதா? நீங்க இனிமேலும் நடக்க வேண்டியது இருக்கா?"-அந்த மனிதன் எங்களைப் பார்த்துக் கேட்டான்.
"டிஃப்ஸிஸ் வரை நடக்கணும்."
"அப்படியா? ரொம்ப தூரம் போகணுமே! கேட்டியா மைக்கேல்? இனத் தலைவர்கிட்ட போனா, இவங்களோட பயணம் தாமதமாயிடும். இவங்க அங்கே எப்போ போயி சேர்றது? இவங்க போகணும்னா போகட்டும். என்ன?"
"சரி... அப்படின்னா இவங்க போகட்டும்" வயதான மனிதனின் ஆட்கள் சொன்னார்கள். தன்னுடைய கருத்தைச் சொல்லி முடித்தவுடன் உதடுகளை மூடிக்கொண்டு விரல்களால் தாடி உரோமங்களைச் சொறிந்து கொண்டிருந்தான் அவன்.
"சரி... கடவுள் உங்க கூட இருப்பார், பிள்ளைகளே..." - எங்களை வழியனுப்பும் வகையில் கையால் சைகை செய்த அந்த வயதான மனிதன் தொடர்ந்து சொன்னான்: "படகு அது முன்னாடி இருந்த இடத்துக்குப் போயிடும். சரிதானா?"
"ரொம்பவும் நன்றி, தாத்தா"- நான் என் தொப்பியைக் கழற்றிவிட்டு சொன்னேன்.
"நீ ஏன் எனக்கு நன்றி சொல்ற?"
"நன்றி சகோதரா நன்றி"- மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
"நீ எதுக்கு எனக்கு நன்றி சொல்ற? இது ஒரு அசாதாரண விஷயம்தான். கடவுள் உங்க கூட இருப்பார்னுதானே நான் சொன்னேன்! அதுக்கு நீ சொல்ற 'நன்றி சகோதரா'ன்னு. நான் உன்னை சைத்தான்கிட்ட விட்டுடுவேன்னு நினைச்சியா என்ன?"
"மன்னிக்கணும்..."- நான் சொன்னேன்.
"ம்..."-வயதான மனிதன் புருவத்தை உயர்த்தினான்.
"நான் எதுக்கு ஒரு ஆளை கஷ்டங்கள் நிறைந்த பாதையில நடக்க வைக்கணும்? நான் நடந்து போற பாதையில அவனை நடக்குமாறு சொல்லி அனுப்புறதுதானே சரி! நாம இனிமேலும் பார்க்கமாட்டோம்னு யாருக்குத் தெரியும்? இப்போ மாதிரி... எப்போவாவது பார்க்கும்படி நேரலாமே! நமக்கு யாரோட உதவி தேவைப்படும்னு யாருக்குத் தெரியும்? சரி பார்ப்போம்..."
அந்த மனிதன் உரோமத்தால் ஆன தன்னுடைய தொப்பியைக் கழற்றிவிட்டு எங்களுக்கு முன்னால் தன் தலையைக் குனிந்தான். அவனுடைய ஆட்களும் அதே மாதிரி செய்தார்கள். அவர்களிடம் அனாபாயிலேக்குப் போகக்கூடிய வழியைக் கேட்டறிந்து விட்டு, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
ஷாக்ரோ எதையோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
"நீ எதைப் பார்த்துச் சிரிக்குற? "- நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்.
அந்தக் கிழவனான ஆட்டு இடையனின் அணுகுமுறையையும் வா*க்கையைப் பற்றிய பார்வையும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. உற்சாகத்துடன் வந்த காற்று எங்கள் மீது வீசிக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் மேகங்கள் இல்லாததால், அழகான சூரிய உதயத்துடன் ஒரு இனிய நாள் தொடங்கியது.
ஷாக்ரோ ஒரு மந்திரவாதியைப் போல என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான். அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான்.
அவனுடைய சந்தோஷம் நிறைந்த சிரிப்பைப் பார்த்து நானும் சிரித்தேன். மணிக்கணக்கான நீண்ட கஷ்டங்கள் நிறைந்த அந்த சாகசங்களுக்குப் பிறகு ஆட்டு இடையர்களின் கிராமத்தை அடைந்ததும், அங்கு நெருப்பு காய்ந்ததும், சுவை நிறைந்த ரொட்டியும் கொழுப்பும் சாப்பிட்டதும் எங்களின் எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் ஒருவித வேதனையை உண்டாக்கின. ஆனால், அந்த வேதனை எங்களின் ஆர்வத்தைச் சிறிதும் குறைக்கவில்லை.
“நீ இப்போ எதைப் பார்த்து சிரிக்கிற? உனக்கு இப்போ நல்ல சந்தோஷம். அப்படித்தானே? வயிறு நிறைய சாப்பிட்டதும், தெம்பு வந்திருச்சு... அப்படித்தானே?”
ஷாக்ரோ ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினான். முழங்கையால் என்னை இடித்த அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு கொச்சைத்தனமாக ரஷ்ய மொழியில் சொன்னான்: “தமாஷான விஷயம் என்னன்னு உங்களுக்குப் புரியலையா? நான் சொல்றேன். அவங்க நம்மளை தலைவர்கிட்ட அழைச்சிட்டுப் போனாங்கன்னா, நான் என்ன சொல்வேன் தெரியுமா? நான் சொல்வேன் - நீங்க என்னை தண்ணியில மூழ்கடிச்சு கொல்லப் பார்த்தீங்கன்னு. நான் அழுவேன்! பரிதாபப்பட்டு, அவர் என்னை சிறையில போடமாட்டாரு. புரியுதா?”
ஆரம்பத்தில் அதை நான் ஒரு தமாஷாக மட்டுமே நினைத்தேன்.
ஆனால், என்ன செய்வது? அவன் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை இப்போது மிகவும் தெளிவாக அவன் எனக்குக் காட்டினான். கோபமும் வெறுப்பும் தோன்றுவதற்குப் பதிலாக எனக்குப் பரிதாப உணர்ச்சிதான் தோன்றியது. ஒளி வீசும் கண்களையும் கள்ளங்கபடமற்ற குணத்தையும் கொண்ட அந்த மனிதன், தன்னை நான் கொல்ல முயற்சித்தேன் என்று கூறும்போது என்ன தோன்றும்? தன்னுடைய செயல் வெறும் தமாஷ் என்று நினைக்கும் அவனை நாம் என்ன செய்ய முடியும்?
ஷாக்ரோவின் எண்ணத்தில் இருக்கும் குறைபாடுகளை அவனிடம் கூறி அறிவுறுத்த முயற்சி செய்தேன். அவனுடைய மனதில் இருப்பதைப் புரிந்து கொள்வதற்கான சக்தி எனக்கு இல்லையென்றும் போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்து கொண்டிருக்கும் தன்னை யாரும் தோளில் தட்டிப் பாராட்டப்போவதில்லை என்றும் அவன் சொன்னான்.
திடீரென்று கொடூரமான ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியது.
“நான் உன்னை தண்ணியில மூழ்கடிச்சு, கொல்ல முயற்சி செய்தேன்னு நீ நினைக்கிறியா?”
“இல்ல. நீங்க என்னை தண்ணியில தள்ளிவிட முயற்சி செய்தப்போ, நான் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, நீங்க என்கூட தண்ணியில குதிச்சப்போ, நான் அப்படி நினைக்கிறதை நிறுத்திட்டேன்.”
“கடவுளே, நன்றி!” - நான் உரத்த குரலில் சொன்னேன்.
“நான் உனக்கு நன்றி சொல்லியே ஆகணும்.”
“வேண்டாம். நன்றி சொல்லாதீங்க. நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். அங்கே நெருப்பு காய்ஞ்சுக்கிட்டு இருக்குறப்போ நீங்க குளிர்ல நடுங்கிட்டு இருந்தீங்க. அந்தக் கோட்டு உங்களோடது. ஆனா, நீங்க அதைக் காயவச்சு எனக்குத் தந்தீங்க. உங்ககிட்ட ஒண்ணுமே இல்ல. அதுக்கு நான் நன்றி சொல்லணும். நீங்க நல்ல மனிதர். எனக்குத் தெரியும். நாம டிஃப்லிஸ்ல போய் சேர்ந்தவுடன் எல்லாத்துக்கும் சேர்த்து உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். நான் உங்களை என் முதலாளிகிட்ட அழைச்சிக்கிட்டுப் போவேன். ‘இதுதான் நான் சொன்ன ஆள். இவருக்குச் சாப்பிடத் தரணும். குடிக்கிறதுக்குத் தரணும்’னு சொல்லுவேன். பிறகு கழுதைகள் கூட்டத்தைக் காட்டுவேன். நீங்க எங்க கூட தங்குவீங்க. உங்களுக்கு ஒரு தோட்டக்காரன் வேலை கிடைக்கும். மது அருந்தலாம். நீங்க நினைக்கிறதையெல்லாம் சாப்பிடலாம். ஆஹ்... ஆஹ்... ஆஹ்... உங்களுக்கு ஒரு அருமையான வாழ்க்கை கிடைக்கும். நான் சொல்லட்டுமா? நாம ஒரே பாத்திரத்துல சாப்பிடலாம் ஒரே புட்டியில குடிக்கலாம்.”
டிஃப்லிஸை அடைந்தவுடன் எனக்கு தான் செய்ய நினைத்திருக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை அவன் ஆர்வத்துடன் கூறிக் கொண்டிருந்தான்.
பகல் தோன்ற ஆரம்பித்திருந்தது. இப்போது கடல் தங்க நிறத்தில் ஜொலித்தது.
“எனக்குத் தூங்கணும் போல இருக்கு” -ஷாக்ரோ சொன்னான்.
நாங்கள் நடப்பதை நிறுத்தினோம். கடற்கரையில் காற்று உண்டாக்கிய ஒரு மணல் மேட்டில் அவன் படுத்தான். அந்தப் பெரிய கோட்டால் தன்னை முழுமையாக மூடிய அவன் உறங்க ஆரம்பித்தான். நான் அவனுக்கு அருகில் அமர்ந்து கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சொந்தமான, முழுமையான, சுதந்திரமான, சக்தி படைத்த மிகப்பெரிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்தக் கடல் ஒன்றின் மீது ஒன்றாக கரையை நோக்கி வந்து சிதறிச் செல்லும் அலைகள் மீண்டும் கடலுக்குள்ளேயே செல்கின்றன. வெள்ளை நிற குளம்புகள் மூலம் கரைக்கு ஓடி வரும் பெரிய அலைகள் எப்போதும் முன்னால் இருக்கின்றன. கடைசியில் கரை முடிகின்றது. உதவிக்கு மற்ற அலைகள் அதற்குப் பின்னால் வந்து சேருகின்றன. ஒரு ஆழமான அணைப்பில் சிக்கிக் கிடப்பதைப் போல நுரைகளைத் தள்ளியவாறு அவை கரையில் கிடந்து உருள்கின்றன. வானத்தின் விளிம்பிற்கும் கரைக்கும் நடுவில் அந்தக் கடல் பரப்பில் அலைகள் உருண்டு பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஒரு இலக்கை உள்ளே வைத்துக்கொண்டு அவை ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றன.
சூரியன் அந்த அலைகளின் தலைக்கு ஒளி கொடுக்கிறான். தூரத்தில் வானத்தின் விளிம்பை நெருங்குகிற அலைகள் இரத்த நிறத்தில் இருக்கின்றன. கடலின் மார்பின் வழியாக, அலைகளை விலக்கிக் கொண்டு ஒரு நீராவிக் கப்பல் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதன் அழகான, உலோகத்தால் ஆன வெளிப்பகுதி வெயில் பட்டு மின்னுகிறது. மனிதனின் மரியாதைக்குரிய படைப்புகள் எப்படி அவனுடைய அறிவை இயற்கையின் மீது செலுத்துகின்றன என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்தது அது. ஆனால், எனக்கு அருகில் இயற்கையின் எல்லா மூலகங்களும் சேர்ந்த ஒரு அபூர்வ மனிதப்பிறவி மணலில் படுத்துத் தூங்க ஆரம்பித்தது.
நாங்கள் டெரக் மாவட்டத்தின் வழியே நடந்தோம். அங்கு பணம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவாக இருந்தாலும், ஷாக்ரோவிற்குப் பசியுடன் நடக்கும்படியான சூழ்நிலை உண்டாகவில்லை. எனினும் அவன் பயங்கரமான கோபத்தையும் நிலைகொள்ளாத மனதையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். தான் எந்தவொரு வேலைக்கும் பொருத்தமற்ற மனிதன் என்பதை அவன் தானே காட்டவும் செய்கிறான். மிதி இயந்திரத்திலிருந்து கீழே விழும் வைக்கோலை எடுத்துக் கட்டாகக் கட்டி வைக்க அவன் முயன்று பார்த்தான். ஆனால், மதிய நேரம் ஆன பிறகு, கையில் தோல் கீறி இரத்தம் வந்ததுதான் தாமதம்- அவன் அந்த வேலையை அந்தக் கணமே செய்யாமல் நிறுத்திக்கொண்டான். வேறொரு முறைகளை பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, கையிலிருந்த கருவியால் தன்னுடைய கழுத்தை அவன் சொறிய முயன்றான்.
எங்களின் பயணத்தின் முன்னேற்றம் மிகவும் மெதுவாகவே இருந்தது. இரண்டு நாட்கள் வேலை செய்தால், அடுத்த ஒருநாள் முழுவதும் பயணம்தான். கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதியை ஷாக்ரோவின் உணவுக்காகச் செலவிட வேண்டியது வந்ததால் அவனுக்கு ஒரு துண்டுத்துணி கூட வாங்கிக் கொடுக்க என்னால் முடியவில்லை. அவன் அணிந்திருந்த கோட்டில் நிறைய ஓட்டைகளும் தையல்களும் இருந்தன.
ஏதாவதொரு கிராமத்தை அடைந்து விட்டால் மிகவும் குறைவான நேரத்திலேயே நான் மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாத்து வைத்திருக்கும் ஐந்து ரூபிளும் காணாமல் போய்விடும். ஒருநாள் வேலை செய்த வீட்டிற்கு முன்னால் மது அருந்திய கோலத்தில், ஒரு தடிமனான கோஸாக் பெண்ணுடன் அவன் நின்றிருந்தான். அந்தப் பெண் என்னைத் தன்னுடைய நல்ல வார்த்தைகளால் ஆசீர்வதித்தாள்.
“டேய், நாசமா போறவனே! கடவுளுக்கு எதிரானவனே, நீ நாசமா போகணும்...”
அவளின் இந்த சாப வசனங்களைக் கேட்டு பதைபதைப்புக்குள்ளான நான் அவள் எதற்காக என்னைத் திட்ட வேண்டும் என்று கேட்டேன். அப்போது அந்தப்பெண் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தாள். "நீ ஒரு பிசாசு.
இந்த அப்பாவிப் பயலை பெண்கள் காதலிக்குறதுக்கு நீ விடுறதே இல்ல. அப்படித்தானேடா? சட்டம் அனுமதிக்கிற ஒரு விஷயத்தை நீ எப்படித் தடுக்கலாம்? சபிக்கப்பட்ட பிணமே..."- அவள் திட்டினாள்.
அவளுக்கு அருகில் நின்று அவள் சொன்னதையெல்லாம் ஒத்துக்கொள்கிற மாதிரி ஷாக்ரோ தலையை ஆட்டினான். அவன் நிறைய குடித்திருந்தான். மூட்டுக்கள் கழன்றுபோன ஒரு ஜந்துவைப்போல அவன் இப்படியும் அப்படியுமாக ஆடியவாறு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய கீழுதடு ஒரு பெண்டுலத்தைப்போல தொங்கியவாறு ஆடிக்கொண்டிருந்தது. ஒளி குறைந்து உயிர்ப்பே இல்லாமல் காட்சியளித்த கண்களால் அவன் என்னை வெறித்துப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"ஹேய்... நீ எதுக்கு வாயைப் பிளந்து எங்களைப் பார்க்குற? இவனோட பணத்தைத் தா"- அந்தப்பெண் உரத்த குரலில் கத்தினாள்: "பணத்தைக் கொண்டு வாடா. இல்லாட்டி உன்னை நான் போலீஸ்காரங்ககிட்ட சொல்லி கைது பண்ண வைப்பேன். ஒடேஸ்ஸாவுல நீ இவன்கிட்ட இருந்து திருடின நூற்றைம்பது ரூபிளை இப்பவே இவன் கையில கொடு!"
நான் என்ன செய்வது? அந்தப் பொல்லாத பெண் அப்போதிருந்த சூழ்நிலையில் போலீஸ்காரர்களிடம் புகார் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கின்ற கிராம சபை ஒருவேளை எங்களை போலீஸ்காரர்களிடம் சொல்லி கைது பண்ண வைக்கவும் முடியும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஷாக்ரோவின் வாழ்க்கையிலும், என் வாழக்கையிலும் எப்படிப்பட்ட பிரச்சினைகளை உண்டாக்கும்! அதனால் புத்திசாலித்தனமான அணுகுமுறை மூலம் அந்தப் பெண்ணை என் பக்கம் கொண்டு வர நான் முயற்சித்தேன். அதற்காக நான் அதிகமாகக் கஷ்டப்படவில்லை.
அந்த விஷயத்தை மூன்று புட்டி மதுவை வைத்து முடித்தேன். தண்ணீர்ப் பழம் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவள் ஆடி ஆடி விழுந்தாள். அங்கேயே படுத்து அவள் தூங்கினாள். நான் ஷாக்ரோவைப் பிடித்துக் தூக்கி அங்கு ஒரு இடத்தில் படுக்க வைத்தேன். மறுநாள் அதிகாலையில் நாங்கள் அந்த கிராமத்தை விட்டு புறப்பட்டோம்.
முதல் நாள் குடித்த மதுவின் விளைவால் ஷாக்ரோவின் முகம் சிவந்து வீங்கிப் போய்க் காணப்பட்டது. சுற்றிலும் தடவியவாறு ஷாக்ரோ நடந்தான். நான் அவனிடம் பேசினாலும், ஒரு செம்மறியாட்டைப் போல தலையை ஆட்டியதைத் தவிர வேறெதையும் அவன் செய்யவில்லை.
சிறிய ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக முன்னோக்கி நடக்கும்போது சிவப்பு நிறத்திலிருந்த சிறிய பாம்புகள் எங்களின் கால்களுக்கு இடையில் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. அந்த அமைதியான சூழ்நிலை பகல் கனவு காண்பதற்கு ஏற்றதாக இருந்தது. எங்களுக்கு மேலே வானத்தில் ஒரு மேகக்கூட்டம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மேலும் சிறிது தூரம் நடந்து சென்றபோது, முன்னாலிருந்த மேகக்கூட்டமும் பின்னாலிருந்த மேகக்கூட்டமும் ஒன்று சேர்ந்திருந்தன. அது வானத்தை மூடியது. எங்களுக்கு முன்னாலிருந்த வானம் மேகம் எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்தது. இடையில் சிறு மேகத்துண்டுகள் பின்னாலிருந்த மேகக்கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து முன்னோக்கி வந்து கொண்டிருந்தன. சிறிது தூரத்தில் இடியின் முழக்கமும் அதைத் தொடர்ந்து அதன் எதிரொலியும் கேட்டது. அது எங்களை மிகவும் நெருங்கி நெருங்கி வருவதைப்போல் இருந்தது. மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. புற்கள் காற்றில் ஆடி சலசலத்தன.
வழியில் கோவில்கள் எதுவும் கண்களில் படவில்லை. சுற்றிலும் இருள் படர்ந்திருந்தது. புற்களின் முணுமுணுப்பு மனதில் அச்சம் உண்டாகும் வகையில் அதிகமாகிக் கொண்டிருந்தது.
இடிமுழக்கம் பெரிய அளவில் இருந்தது. மேகங்கள் நீல வெளிச்சத்தை உண்டாக்கி நடுங்கச் செய்தன. மழை கனமாகப் பெய்ய ஆரம்பித்தது. ஒன்றிற்குப் பிறகு ஒன்றாக இடியோசை கேட்டுக் கொண்டேயிருந்தது. காற்றும் கனமான மழையும் ஒன்று சேர்ந்து புற்களையும், செடிகளையும் மண்ணில் சாய்த்தன. உடல் பயங்கரமாக நடுங்கியது. இடியும், மின்னலும் மேகங்களுக்குள் புகுந்து அவற்றை ஒரு வழி பண்ணின. அழகான நீல நிற வெளிச்சத்தில் தூரத்தில் மலைகள் தெரிந்தன. மின்னல் முடிந்ததும், இருட்டு விழுங்கியதைப் போல அவை காணாமல் போயின.
இடி, மழை ஆகியவற்றின் பாதிப்பு எல்லா இடங்களிலும் தெரிந்தது. இடியின் எதிரொலிப்பு எங்கும் கேட்டது. கோபமும், அழுகையும் கொண்ட அமைதியான வானம் பூமியின் தூசியையும், அழுக்கையும் தன்னுடைய நெருப்பு நாக்குகளைக் கொண்டு சுத்தம் செய்தது. வானத்தின் கோபத்தைப் பார்த்து பூமி அதிர்ந்து நடுங்கியது.
ஷாக்ரோ பயந்து நடுங்கும் நாயைப்போல முனகிக் கொண்டிருந்தான். தளத்திற்கு மேலே வீசப்போகும் கடுமையான காற்றை எதிர்பார்த்துக்கொண்டு பைத்தியம் பிடித்த நிலையில் நான் இருந்தேன். ஆகாயத்தில் தெரிந்த அந்த நீல வெளிச்சம் என் நெஞ்சுக்குள் மின்னுவதாக நான் உணர்ந்தேன். என்னுடைய அப்போதைய மனநிலையை நான் எப்படி விவரிக்க முடியும்? நான் பாட்டுப் பாடத் தொடங்கினேன்.என் சகல சக்தியையும் பயன்படுத்தி நான் பாட்டுப் பாடினேன். இடிச் சத்தம் கேட்டது. மின்னல் வெட்டியது. புற்களும், செடிகளும் சலசலத்தன. இந்த உலகத்தின் எல்லா ஒலிகளும் என் பாட்டுடன் இணைந்து விட்டதைப்போல் எனக்குத் தோன்றியது. நான் பாடிக்கொண்டிருந்தேன். கடலில் கடுமையான காற்று... சம தளத்தில் இடி முழக்கம்...
யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை என்ற உறுதியான நம்பிக்கையுடன் நான் உரத்த குரலில் பாடினேன். என்னை யாரும் திட்டப் போவதில்லை என்ற ஆழமான நம்பிக்கையுடன் நான் அதைத் தொடர்ந்தேன். திடீரென்று என் கால்கள், சேற்றில் வழுக்கி, நான் கீழே விழுந்தேன். கோபமும், மிடுக்கும் கலந்த கண்களுடன் ஷாக்ரோ என்னை முறைத்துப் பார்த்தான். "உங்களுக்கு என்ன சுய உணர்வு இல்லாமப் போச்சா? அப்படியொண்ணும் இல்லையே! பேசக்கூடாது.
நான்தான் பேசிக்கிட்டு இருக்கேனே! பேசக்கூடாது... நான் உங்க தொண்டைக் குழியைப் பிடுங்கிடுவேன்! சொல்றதைச் சொல்லிட்டேன். புரியுதா?"- அவன் சொன்னான்.
அவ்வளவுதான்- நான் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். எந்த விதத்தில் அவனுக்கு நான் தொந்தரவு தந்தேன் என்று அவனிடம் கேட்டேன்.
"நீங்க என்னை பயமுறுத்தினீங்க. புரியுதா? இடி, மின்னல்... அது கடவுளோட கொடை பாட்டுப் பாடுறேன்னு அதைச் செயல்படாம பண்ணிட்டீங்க. நீங்க யாருன்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?"
பாட்டுப் பாட அவனுக்கு இருப்பதைப் போல எனக்கும் சுதந்திரம் இருக்கிறது என்று நான் அவனிடம் சொன்னேன்.
"அப்படின்னா நான் இனிமேல் பாடல..."- அவன் அலட்சியமாகச் சொன்னான்.
"சரி... பாடாதே..."- நான் சொன்னேன்.
"அப்படின்னா நீங்களும் பாடக்கூடாது"- ஷாக்ரோ கோபமான குரலில் சொன்னான்.
"இல்ல... எனக்குப் பாடணும் போல இருக்கு."
"இங்க பாருங்க. நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?" - ஷாக்ரோ கோபத்துடன் சொன்னான்: "நீங்க யாரு? உங்களுக்கு வீடு இருக்கா? உங்களுக்கு அம்மா இருக்காளா? அப்பா இருக்காரா? சொந்தக்காரங்க இருக்காங்களா? சொத்துன்னு ஏதாவது இருக்கா? இந்த பூமியில நீங்க யாரு? நீங்க பெரிய ஆள்னு மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? இங்க பாருங்க... நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எல்லாமே இருக்கு..." - அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு சொன்னான்: "நான் ராஜகுமாரன்! ஆனா, நீங்க? நீங்க யாருமே இல்ல... யாருமே இல்ல... குதைஸில் இருப்பவங்களுக்கு என்னைத் தெரியும். டிஃப்லிஸில் இருப்பவர்களுக்கு என்னைத் தெரியும். புரியுதா? என்னை உங்களால ஒண்ணுமே செய்ய முடியாது. நான் சொல்றதை நீங்க கேட்டா போதும். தெரியுதா? தேவையில்லாத காரியங்களையெல்லாம் செய்யக்கூடாது. கூலிக்கு ஆசைப்படாமலே வேலை செய்யணும்னு கடவுள் சொன்னதா நீங்கதான் ஒரு தடவை சொன்னீங்க. நான் இதோ உங்களுக்குக் கூலி தர்றேன். பிறகு எதுக்கு என்னை கஷ்டப்படுத்தணும்? நீங்க என்ன மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? எதுக்கு பயமுறுத்தணும்? நான் உங்களைப் போல ஆகணும்ன்றது உங்க நினைப்பா? அது நல்லது இல்ல... தெரியுதா? ஹ...ஹ....ஆஹ்...ஹ...ஹ..."
இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கிடையில் அவன் தன்னுடைய உதடுகளைக் குவித்து, விரித்து எச்சிலைத் தெறிக்கும்படி துப்பினான். மூக்கைச் சிந்தினான். கடைசியில் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
சிறிது ஆச்சரியம் உண்டாக வாயைத் திறந்து கொண்டு நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். பயணத்தின் ஆரம்பம் முதல் என்னிடமிருந்து சகித்துக்கொண்டு வந்த கஷ்டங்களுக்கும், அவமானங்களுக்கும் எதிரான அவனுடைய கோபம் பெருமழையைப் போல் என்மீது பெய்தது. தன்னுடைய வார்த்தைகளுக்குப் பலம் சேர்ப்பதற்காக அவன் தன் சுட்டு விரலை எனக்கு நேராக உயர்த்தி, என் தோளைப் பிடித்துக் குலுக்கினான். அவனுடைய உடல் முழுவதும் என் உடல் மீது சாய்ந்தது. மழை எங்கள் மீது பெய்து கொண்டிருந்தது. இடி, மின்னல் ஆகியவை தொடர்ந்து தங்களை எங்களுக்கு மேலே வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. என் கவனத்தை ஈர்ப்பதற்காக ஷாக்ரோ தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தான்.
என் தர்ம சங்கடமான நிலையைப் பற்றி நினைத்தபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஷாக்ரோ காறித் துப்பி விட்டு நடையைத் தொடர்ந்தான்.
டிஃப்லிஸை நெருங்க நெருங்க ஷாக்ரோ அமைதியானவனாகவும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் மாறிவிட்டான். அவனுடைய கள்ளங்கபடமற்ற சோர்வடைந்த முகத்தில் புதியதாக ஏதோவொன்றை அடைந்த உணர்ச்சி வெளிப்பட்டது. வ்ளாடிக்காவ்காஸிலிருந்து சற்று தூரத்திலிருந்த ஸிர்காஸியன் கிராமத்தை நாங்கள் அடைந்தோம். இனிப்பு சோளம் அறுவடை செய்யும் காலமது. அறுவடைக்காக நாங்களும் வயலில் இறங்கினோம்.
ரஷ்ய மொழி தெரியாத அந்த கிராமத்து மக்கள் எங்களைக் கிண்டல் பண்ணியதுடன், திட்டவும் செய்தார்கள். இரண்டு நாட்கள் சென்ற பிறகு, நாங்கள் அந்த கிராமத்தை விட்டு புறப்பட்டோம். சுமார் பத்து கிலோ மீட்டர் தாண்டிய பிறகு, ஷாக்ரோ தன் சட்டைக்குள்ளிருந்து விலைமதிப்புள்ள ஒரு பட்டுத் துணியை வெளியே எடுத்து வெற்றிக் களிப்பை வெளியிட்டான். "இனிமேல் நாம வேலை எதுவும் செய்ய வேண்டாம். இதைவிற்றால் போதும். நமக்குத் தேவைப்படுறதையெல்லாம் வாங்கிக்கலாம். புரியுதா?" என்று வெற்றி பெற்ற குரலில் அவன் சொன்னான்.
அதைக்கேட்டு எனக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. நான் அந்தத் துணியை வாங்கி வயலில் எறிந்தேன். ஸிர்க்காஸிலிருக்கும் மனிதர்களைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. கோஸாக்குகளிடமிருந்து அவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட ஒரு கதை இது. ஒரு நாடோடி, அவன் வேலை செய்த வீட்டில் ஒரு வெள்ளித் தட்டைத் திருடி விட்டான். ஸிர்க்காஸைச் சேர்ந்த ஆட்கள் அவனை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடினார்கள். அவர்கள் அவனிடமிருந்த அந்த வெள்ளித்தட்டைக் கண்டுபிடித்த பிறகு, அவனுடைய வயிறைப்பிளந்து அந்த வெள்ளித்தட்டை அதற்குள் வைத்து மூடி, அவனை அங்கிருந்த வயலுக்குள் வீசி எறிந்து விட்டு போய்விட்டார்கள். சாகும் நிலையில் கிடந்த அவனை கோஸாக்குகள் பார்த்திருக்கிறார்கள். அவன் அவர்களிடம் தனக்கு உண்டான அனுபவத்தைக் கூறியிருக்கிறான். ஆனால், கிராமத்தை அடைவதற்கு முன்பு அந்த நாடோடி இறந்து விட்டான்.
இப்படிப்பட்ட கதைகளைச் சொன்ன கோஸாக்குகள் எங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தார்கள். அதை நம்பாமல் இருப்பதற்கான காரணம் எதையும் நான் பார்க்கவில்லை.
இந்த விஷயங்களைச் சொல்லி நான் ஷாக்ரோவை எச்சரித்தேன். அவன் திடீரென்று ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் பற்களை வெளியே காட்டியவாறு கண்களைச் சிமிட்டிக்கொண்டு ஒரு பூனையைப் போல அவன் எனக்கு நேராகப் பார்த்தான். ஐந்து நிமிடங்கள் நாங்கள் ஒருவரோடொருவர் கட்டிப் புரண்டோம். கடைசியில் ஷாக்ரோ கோபத்துடன் "போதும்..." என்று கத்தினான். சோர்வடைந்து போய், அமைதியாக ஒருவரையொருவர் பார்த்தவாறு நாங்கள் உட்கார்ந்திருந்தோம். நான் அந்தத் துணியை வீசியெறிந்த திசையைப் பார்த்தவாறு ஷாக்ரோ சொன்னான்: "நாம எதுக்கு சண்டை போடணும்? ஹா... நாம எப்படிப்பட்ட முட்டாளுங்க! நான் உங்ககிட்டயிருந்து எதையாவது திருடினேனா? என் கையில அந்தத் துணியைப் பார்த்ததுனாலதானே உங்களுக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு? உங்க மேல எனக்குப் பரிதாபம் தோணினதுனாலதான் நான் அந்தத் துணியைத் திருடவே செய்தேன். நீங்க வேலை செய்றீங்க... நான் செய்யல... பிறகு நான் என்ன செய்யிறது? உங்களுக்கு நான் உதவணும்..."
திருட்டு என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்பதை அவனுக்கு விளக்கிச் சொல்ல நான் முற்பட்டேன்.
"பேசாம இருங்க நீங்க ஒரு மரத்தலையன்"- அவன் என்னிடம் தனக்கு இருக்கும் வெறுப்பை வெளியிட ஆரம்பித்தான்.
எங்கே அவனுக்குக் கோபம் அதிகமாக வந்துவிடப்போகிறதோ என்று நினைத்து நான் எதுவும் கூறவில்லை. அவன் இரண்டாவது முறையாக இப்போது திருடுகிறான். கருங்கடலை நெருங்குவதற்கு முன்னால் க்ரீக் நாட்டைச் சேர்ந்த ஒரு மீனவனிடமிருந்து அவன் சில பொருட்களைத் திருடினான். அந்த முறை எங்கள் இருவருக்குமிடையே அடி, உதையே நடந்தது.
"சரி... நாம போகலாமா?"- சிறிது நேர ஓய்விற்குப் பிறகு சாதாரண நிலைக்கு வந்ததும் அவன் கேட்டான்.
நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். ஒவ்வொரு நாள் முடியும்போதும் அவனுடைய முகம் இருண்டு கொண்டே வந்தது. புருவங்களை உயர்த்திக்கொண்டு அறிமுகமில்லாத மனிதனைப் போல அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தாரியால் மலையிடுக்கைக் கடந்து கத்வாரிற்குள் நுழைந்தவுடன் அவன் பேச ஆரம்பித்தான். "ஒன்றிரண்டு நாட்கள்ல நாம டிஃப்லிஸை அடைஞ்சிடுவோம். டக...டக..."- அதிகமான உற்சாகத்துடன் அவன் சொன்னான்:
"அவள் கேட்பாள்.'நீ எங்கே போயிருந்தே'ன்னு. நான் சொல்லுவேன். 'நான் பயணத்துல இருந்தேன்'னு. பிறகு நான் வெந்நீர்ல குளிப்பேன். நல்லா சாப்பிடுவேன். என் அப்பாவைப் பார்த்து 'என்னை மன்னிக்கணும்'னு சொல்லுவேன். நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சேன். நான் வாழ்க்கையைப் பார்த்தேன். பலவகைப்பட்ட வாழ்க்கையையும் பார்த்தேன். நாடோடிகள் நல்லவங்க. நான்
ஒருத்தனைப் பார்த்தால், அவன் ஒரு ரூபிள் தருவான். நான் அவனைச் சத்திரத்துக்கு அழைச்சிட்டுப் போவேன். நிறைய மது வாங்கித் தருவேன். சாப்பிடுறதுக்கு வாங்கித் தருவேன். 'நானும் ஒரு பிச்சைக்காரனா இருந்தேன்'- நான் என் அப்பாக்கிட்ட சொல்லுவேன்: 'இந்த மனிதர் எனக்கு ஒரு அண்ணனைப்போல. இவர் எனக்கு அறிவுரைகள் சொன்னாரு. இவர் என்னை அடிச்சாரு. நாய்! இவர் எனக்குச் சாப்பிட வாங்கித் தந்தாரு. இனி இவருக்குச் சாப்பிட நாம வாங்கித் தரணும்'னு. ஒரு வருடம் முழுவதும் சாப்பிட நான் தருவேன். ஒரு வருடம்... இல்லாட்டி எவ்வளவு காலம் வேணும்னாலும்... நீங்க கேக்குறீங்களா, மாக்ஸிம்?"
அவன் அப்படிப் பேசுவதைக் கேட்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படிப் பேசும்போது அவன் ஒரு அப்பிராணிக் குழந்தையைப் போல இருந்தான். டிஃப்லிஸிலிருக்கும் யாரையும் எனக்கு அறிமுகமில்லாததால் அப்படி அவன் பேசியதை நான் விருப்பத்துடன் ரசித்தேன். மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. கத்வாரில் இருக்கும்போதே பனி இருப்பதை நாங்கள் பார்த்தோம்.
நாங்கள் மெதுவாக நடந்தோம். ஐபீரியாவின் பழைய தலைநகரமான மெக்க்ஷெட்டை நாங்கள் அடைந்தோம். அடுத்த நாள் டிஃப்லிஸை அடைய வேண்டும் என்பது எங்களின் திட்டம்.
சுமார் ஐந்து மைல் தூரத்தில் இருந்து கொண்டு, இரண்டு மலைகளுக்கு நடுவில் இருக்கும் கோக்காஸியாவின் தலைநகரத்தை நான் பார்த்தேன். பாதையின் இறுதியை நாங்கள் அடைந்து விட்டிருந்தோம். எனக்கு மகிழ்ச்சி தோன்றியது. ஷாக்ரோ அமைதியாக இருந்தான். அவனுடைய கண்களில் ஒளி இல்லை. வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. அவன் அவ்வப்போது வயிறைப் பிடித்துக்கொண்டு வலி இருப்பதைப் போல் நடித்தான். பாதையோரத்தில் இருந்த காரட்டை அவன் பச்சையாகப் பிடுங்கித் தின்றிருந்தான்.
"நான் ஒரு மரியாதையான ஜார்ஜியாக்காரன். கிழிந்த ஆடைகளுடன் பகல் நேரத்தில் இந்த நகரத்துக்குள் நான் நுழைவேன்னு நீங்க நினைச்சீங்களா? ஓ... வேண்டாம்... வேண்டாம். சாயங்காலம் வரை நாம வெளியே எங்கேயாவது இருப்போம். இப்போதைக்கு நடப்பதை நிறுத்துவோம்."
ஏதோவொரு ஆள் இல்லாத கட்டிடத்தின் சுவரில் சாய்ந்து நாங்கள் உட்கார்ந்தோம். குளிரில் நடுங்கிய போது ஒரு சுருட்டைப் பிடித்தேன். ஜார்ஜியன் ராணுவப் பாதையில் நல்ல பலமான காற்று வீசிக் கொண்டிருந்தது. பற்களைக் கடித்தவாறு ஷாக்ரோ ஒரு சோகமான பாடலைப் பாடினான். அலைந்து திரிந்த வாழ்க்கைக்கு பதிலாக இளம் வெப்பம் இருக்கும். படுக்கையறையையும் மற்ற வசதிகளையும் நான் விரும்பினேன்.
"நாம போவோம்"- எல்லாம் தீர்மானிக்கப்பட்டு விட்டதைப் போல எழுந்து கொண்டு ஷாக்ரோ சொன்னான்.
இருள் படர்ந்து கொண்டிருந்தது. நகரத்தில் விளக்குகள் எரியும் நேரம். அழகான காட்சி. அந்த மலை அடிவாரத்தில் பரந்து கிடந்த அந்த நகரத்தை மூடியிருந்த இருட்டில் ஒன்றிற்குப் பிறகு ஒன்றாக விளக்குகள் எரிய ஆரம்பித்தன.
"நீங்க அந்தத் துணியை எனக்குத் தாங்க. நான் முகத்தை மறைச்சிக்கிறேன். இல்லாட்டி நண்பர்கள் என்னை அடையாளம் கண்டு பிடிச்சிடுவாங்க."
நான் அவனிடம் அந்தத் துணியைத் தந்தேன். நாங்கள் ஓல்கின்ஸ்கயா தெருவில் நடந்து கொண்டிருந்தோம்.
ஷாக்ரோ ஏதோ அர்த்தம் தெரியாத ஒரு பாடலைப் பாடினான். "மாக்ஸிம்... அந்த ட்ராம் நிறுத்தத்தைப் பார்த்தீங்களா? வெரிஸ்கி பாலத்தைப் பார்த்தீங்களா? நீங்க அங்கே இருங்க. கொஞ்ச நேரம் அங்கே காத்திருங்க. நான் ஒரு வீட்டுல நுழைஞ்சு என் அப்பா, அம்மாவோட நிலைமையைப் பற்றி தெரிஞ்சுட்டு வர்றேன்."
"நீ வர்றதுக்கு நேரமாகுமா?"
"இல்ல... இதோ பக்கத்துலதான். ஒரு நிமிடத்துல வந்திடுவேன்."
இருளடைந்த ஒடுகலான ஒரு ஒற்றையடிப் பாதையை நோக்கி அவன் நடந்து சென்றான். அடுத்த நிமிடம் காணாமல் போனான்- நிரந்தரமாக.
பிறகு ஒருமுறை கூட அவனை- நான்கு மாதங்கள் என் பயண நண்பனாக இருந்த அந்த மனிதனை-நான் பார்க்கவேயில்லை. ஆனால், பாசத்துடனும் ஆர்வத்துடனும் நான் அந்த உருவத்தை நினைத்துப் பார்ப்பேன்.
மேதைகள் மிகப்பெரிய நூல்களில் எழுதியிராத பல விஷயங்களையும் அவன் எனக்குக் கற்றுத் தந்தான். மனிதனின் நூலறிவை விட வாழ்க்கையைப் பற்றிய நடைமுறை அறிவுதான் முக்கியமானது, எல்லாருக்கும் பயன்படக்கூடியது என்பதை அவன்தான் எனக்குக் கற்றுத் தந்தான்.