Logo

உருகும் பனி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7664
urugum pani

கர மாத மூடுபனி மலைத்தொடர்களை மறைத்திருந்தது. எதையும் பார்க்க முடியவில்லை. சூரியன் உதயமாகிவிட்டதா என்பது கூட தெரியவில்லை. குவார்ட்டர்ஸின் மேல்மாடியில் சூஸன் நின்றிருந்தாள். எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருந்த பனிப்படலம் உள்ளேயிருக்கும் கவலையைப் போல இருந்தது. முன்பு பனியைப் பார்த்துக் கொண்டிருப்பது என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு முதன்முதலாக வந்த காலத்தில். அப்போது குளிர்காலக் காலை வேளைகளில் இந்த மாடியில் பிரம்பு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்காருவது உண்டு. அவளுடன் போபனும் இருப்பான். போபன் தாமஸ் என்ற அவளுடைய அன்புக் கணவன்... போபன் தாமஸ் என்ற எஞ்சினியர்.

‘‘இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். போபன், நீங்க கூட இருந்தால்...” அவள் கூறுவாள்.

‘‘நான் கூட இல்லைன்னா?” - போபன் குறும்புத்தனமாகக் கேட்பான்.

‘‘கூட இல்லாம இருக்க முடியாதே!”

‘‘உறுதியா சொல்ல முடியுமா?”

‘‘நான் உறுதியா சொல்வேன்.”

அந்த நினைவு சூஸனின் கண்களை ஈரமாக்கியது. இலை நுனியில் ததும்பி நின்றிருக்கும் பனித் துளியைப் போல ஒரு நீர்த்துளி அவளுடைய கண்ணின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. இன்று போபன் அருகில் இல்லையே! பல காலை வேளைகளிலும் போபன் அவளுடன் இல்லாமல் இருப்பதுண்டு. வேலை விஷயமாக கோட்டயத்திற்கோ திருவனந்தபுரத்திற்கோ போனால், சில நேரங்களில் இரவில் திரும்பி வரமுடியும் என்று கூறுவதற்கில்லை. ஆனால், அந்தச் சமயங்களில் இந்த அளவிற்கு இதயம் பாதிக்கக்கூடிய வகையில் தனிமையை அவள் உணர்ந்ததில்லை. அப்போதெல்லாம் வெளியே இருக்கும் மூடுபனி உள்ளே நுழைந்து மனதிற்குள் நிறைந்து நின்றுகொண்டு இந்த மாதிரி இருட்டை உண்டாக்கினதில்லை. இப்போதிருக்கும் தனிமை உணர்வு தாங்கிக் கொள்ள முடியாதது. இப்போதைய மூடுபனி அதிகமான கவலையைத் தரக்கூடியது. கடுமையான கவலையை.

சில நாட்களாகவே போபன் இங்கு இல்லாமல் இருப்பது தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இருட்டை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அதற்கேற்ற காரணமும் இருக்கிறது. போபன் முற்றிலும் மாறிப்போய்விட்டான். எந்தச் சமயத்திலும் சிறிதும் எதிர்பாராத அளவிற்கு மாற்றங்கள் போபனிடம் உண்டாக்கிக் கொண்டிருந்தன.

அன்று நினைவில் குளிர்ந்து போயிருந்தாலும் அந்த இனிமையான அதிகாலை வேளையில் போபன் சொன்னான்: ‘‘சூஸன், அவ்வளவு உறுதியா சொல்றியா? உறுதியான நம்பிக்கை கட்டாயம் காப்பாற்றும்.”

நம்பிக்கை உறுதியானதாக இருந்தது.

‘‘இங்கே பாருங்க போபன். இந்த மூடுபனி பூமியை முழுசா மூடியிருக்கு. நமக்கு மிகவும் அருகில் இருக்கும் இடங்களைக்கூட பார்க்க முடியல. அதை நினைக்கிறப்போ கவலை தோணத்தான் செய்யும். ஆனால், அந்தக் கவலை கொஞ்ச நேரத்திற்குத்தான். நிமிட நேரத்திற்கு இருக்கும் கவலையைப் போலவே, இந்த மூடுபனியும் கொஞ்சம் கொஞ்சமா குறைந்து கொண்டே வரும். குறைந்து குறைந்து இறுதியில் இல்லாமலே போகும். அப்போ மகர மாதத்தின் பிரகாசமான சூரியன் மெல்லியக் கதிர்களுடனும், இதயம் நிறைய கருணையுடனும் தன்னுடைய தேரை ஒட்டிக் கொண்டு வரும்” - அவளுடைய வார்த்தைகள் ஒரு கவிதையைப்போல தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

‘‘இது யாரு? வேர்ட்ஸ்வர்த்தா? லேடி வேர்ட்ஸ்வர்த். இயற்கையைக் காதலிக்கும் கவிஞர். அருமை! மிக மிக அருமை! தொடர்ந்து சொல்லு... கவிதையைத் தொடர்ந்து சொல்லு.”

‘‘கிண்டல் பண்ண வேண்டாம்.”

‘‘கிண்டலா?  நானா?”

நாற்காலியைப் பின்னால் இழுத்துப் போட்டுவிட்டு, போபன் எழுந்தான். சூஸனைப் பிடித்து எழ வைத்தான். அவளை அப்படியே தூக்கி மார்பிலும் வயிற்றிலும் தொடர்ந்து முத்தமிட்டான். அவள் கூச்சத்தால் நெளிந்தாள்.

‘‘ச்சே... இப்படியா போரடிக்குறது!”- அவள் எதிர்ப்பைக் காட்டினாள். ஆனால், அவளுடைய எதிர்ப்பு வெறும் நடிப்பு என்பதும், அவளுடைய மனமும் உடலும் எதற்கும் சம்மதிக்கக்கூடிய நிலையில்தான் இருக்கின்றது என்பதும், அவை எதையெதையோ விரும்பிக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அவளை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு அவன் படுக்கையறையை நோக்கி நடந்தான்.

‘‘ச்சே... விடுங்க”... அவள் கைகளையும் கால்களையும் உதறினாள். ‘‘அந்த தேவகி இங்கே ஏறி வந்துட்டா?”

அவளுடைய வார்த்தைகள் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் தன் உதடுகளைக் கொண்டு முத்திரை பதித்தான். அவளை மெத்தையில் எறிந்த அவன் நடந்து போய் கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டான்.

அப்படித் தாழ்ப்பாளை இட்டபோது, மனமெங்கும் ஓடிக் கொண்டிருந்த கனவுகளுக்கு, அன்றைய இளமையின் வெறித்தனமான ஆசைகளுக்கு இப்போது தாழ்ப்பாள் விழுந்திருக்கிறது. அந்தத் தாழ்ப்பாளை எடுத்தால், அந்தக் கதவைத் திறந்தால், மீதமிருப்பது மகரமாத மூடுபனி மட்டுமே. பனிப்படலத்திற்குப் பின்னாலிருந்த சூரியன் எங்கே போனது? குளிர்காலத்திற்குப் பின்னால் வரும் என்று கவிஞர் சொன்ன வசந்தம் எங்கே?

சூரியனும் வசந்தமும் எங்கோ போய் மறைந்து விட்டிருக்கின்றன. ஒரு ஆயுள் காலத்தின் தாங்க முடியாத கெட்ட காலத்தைப்போல, ஒரு யுகத்தின் கடுமையான இருளைப்போல மூடுபனி சுற்றிலும் பரவிக் காணப்பட்டது. இந்த ஆயுள்காலத்தின் துன்பம் நீங்கி விடாதா? இந்த யுகத்தின் இருள் மாறிவிட்டதா? சூஸனின் மனம் ஒரு ஒழுங்கே இல்லாமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. அவளுடைய மனம் அலையடித்து உயர்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளின் இனம்புரியாத ஒரு பேய்த்தனமான நடனம் ஆடப்பட்டுக் கொண்டிருக்கும் மண்டபமாக மாறியது. அவள் மாடியை விட்டு, உள்ளே நுழைந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்தாள்.

மணி ஆறரை ஆகியிருந்தது. ஆனால், சூரியன் எங்கே?

பனிப்படலம் மூடிய மலைத்தொடர்களுக்குப் பின்னால் எங்கோ சூரியன் மறைந்திருக்கிறது. அந்தப் பச்சைப் போர்வைகளின் அடர்த்திக்குள் எங்கோ அவளுடைய போபனும் மறைந்திருக்கிறான்.

அவளுடைய புலர்காலைப் பொழுது மழைக்காலத்தைப் போல இருண்டிருந்தது. அங்கு சூரியனும் சந்திரனும் மறைந்துவிட்டார்கள். நட்சத்திரங்கள் இல்லாமற்போயின. பிணம் தின்னிக் காகங்கள் மட்டும் கண்விழித்து, சத்தம் எழுப்பிப் பறந்து திரிந்தன. பித்ருக்கள் முடிவற்ற தலைமுறையின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிக் காத்துக் கிடந்தார்கள். பாவத்தைக் கழுவுபவர்கள் மத்தியில் குளியல் உண்டாக்கும் ஆரவாரம். கரைகளில் அலைகள் அடித்து உண்டாக்கும் சத்தம்.

மழைக்காலத்தின் இருட்டிற்கு மத்தியில் இருக்கும் புனிதத் தன்மையைப்போல, இருட்டின் ஆழமான கருணையைப் போல, சுற்றிலும் நிறைந்திருக்கும், எல்லாவற்றையும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் மூடுபனி... மனதிற்குள் மூடுபனி ஏற்படுத்தும் சோக உணர்வின் கடுமையான சுமை... சூஸனின் பெருமூச்சுகள் மூடிக் கொண்டிருக்கும் பனிப்படலத்தை அகற்றக்கூடிய வெப்பமாக வெட்டவெளியில் உயர்ந்தபோது, அவளுடைய கண் இமைகளுக்கு நடுவில் வேதனை எரிமலையாக வெளிப்பட்டபோது, அவளுடைய மனதின் உதடுகளிலிருந்து ஒரு மவுன வேதனை பிறந்தது.


‘‘போபன், என் போபன்...”

எங்கேயோ ஒரு பல்லி சத்தமிட்டது.

சூசனுக்கு கல்லூரியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்ததற்கு அடுத்த நாள்.

பொது நூல் நிலையத்தின் அடுக்குகளுக்கு நடுவில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தினமும் சந்திக்கக்கூடிய இடமாக இருந்தது அந்த நூல் நிலையம்தான். அப்போதே சூஸனுக்கு போபனை மிகவும் பிடித்திருந்தது. அது மட்டுமல்ல- அவன்மீது மிகப்பெரிய மதிப்பையே அவள் வைத்திருந்தாள். எஞ்சினியரிங் கல்லூரியின் திறமையான மாணவன். பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கிக் கொண்டிருந்தவன். அத்துடன் நிற்காமல், ஒரு புரட்சி அமைப்பின் தீவிரமான செயல்வீரனாகவும் அவன் இருந்தான். அவனுடைய புரட்சி அமைப்பின் கொள்கைகள் சூஸனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் அவனுடைய ஆற்றல்களை அவள் மதித்தாள். அவனுக்குள் இருந்த மனிதனை அவள் காதலித்தாள்.

‘‘ஹலோ சூஸன், வாழ்த்துக்கள்!”

நூல் நிலையத்தின் அடுக்குகளுக்கு மத்தியிலிருந்து கொண்டு அவன் சொன்னான்.

‘‘தேங்க் யூ...” - வழக்கமான பதில்.

‘‘அன்று என்னிடம் காட்டிய கவிதைக்குத்தானே பரிசு கிடைச்சிருக்கு?”

‘‘ஆமாம்...”

‘‘அருமையான கவிதை. உங்களுடைய கல்லூரியில் கவிதை எழுதத் தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை போலிருக்கிறது.”

முகத்தில் அடித்ததைப்போல இருந்த அவனுடைய கருத்து அவளைக் கோபம்கொள்ளச் செய்தது. அவள் வெறுமனே சிரித்தாள்.

‘‘நான் ஒண்ணு கேட்கட்டுமா சூஸன்?”

போபன் அவளை விடுவதாக இல்லை. ‘‘இந்த மூடுபனியும் மலையும் கடலும் நதியும் மட்டும்தான் உலகத்தில் இருக்கின்றனவா? மனிதன் இல்லையா? பட்டினி கிடக்கும் மனிதன், இரவு - பகல் பார்க்காமல் வியர்வை வழிய கடுமையாக உழைக்கும் மனிதன், ஒருநேர சோற்றுக்காக, தலை சாய்க்க ஒரு இடம் வேண்டும் என்பதற்காகக் கெஞ்சுகிற, கண்ணீர்விட்டு அழுகிற மனிதன்... உங்களுடைய நூல்களில் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியில்லாமல் உடலை விற்றுப் பிழைக்கும் தாய்மார்கள் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத் திருடுவதற்குக்கூட தயங்காத ஆண்கள் இல்லை. சுரண்டலுக்கு எதிராக நிரந்தரமாகப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் இல்லை. இந்த நாட்டின் பிரச்சினைகள் இல்லை. மொத்தத்தில் இருப்பவை- நதி, மலை, மூடுபனி, வெயில்... பிறகு... கொஞ்சம் பக்குவப் படாத இளம் மனங்களின் கனவுகள்...”

அவன் கூறுவதை சூஸன் அமைதியாகக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தாள்.

‘‘ஒரு உன்னதமான படைப்பின் நோக்கம் மனிதனாக இருக்க வேண்டும்”- போபன் தொடர்ந்து சொன்னான்: ‘‘ஒருகவிஞனுடைய எண்ணங்களின் உறைவிடம் உண்மையாக இருக்க வேண்டும். பரவலான மனிதத் தன்மை இருக்க வேண்டும். அப்படின்னாத்தான் மகத்தான இலக்கியங்கள் உண்டாகும்.”

‘‘மகத்தான இலக்கியத்தைப் படைப்பேன் என்று நான் யாரிடமும் சொல்லல...” - இறுதியில் அவள் சொன்னாள்: ‘‘அது மட்டுமல்ல. இப்படி மனிதர்கள்மீது ஈடுபாடு இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டு திரிகிறவர்களுக்கு வளைகுடா நாடுகளில் ஒரு வேலை கிடைத்துவிட்டால், புரட்சியைக் கடல்ல வீசிட்டு கடல்கடந்து போவதைத்தானே நாம இந்த நாட்டுல வழக்கமா பார்த்துக்கிட்டு இருக்கோம்! புரட்சியைப் பற்றி பேசுவதற்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லையே! நாளைக்கு போபன், நீங்களும் அப்படி நடக்க மாட்டீங்கன்னு யாருக்குத் தெரியும்?”

போபன் அதைக்கேட்டு உஷ்ணமாகிவிட்டான். ‘‘எனக்குத் தெரியும்”- அவன் சொன்னான்: ‘‘இந்த போபன் அப்படிப்பட்டவன் இல்ல. இந்த உடலும் மனமும் சக மனிதர்களுக்காகன்னே இருப்பவை” - திடீரென்று தன்னுடைய குரலைத் தாழ்த்திக் கொண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவன் சொன்னான்:”பிறகு... என் சூஸனுக்காகவும்...”

அடுத்த நிமிடம் பனி உருகியது.

‘‘போபன், என் போபன்...” - அவள் உணர்ச்சிக்கு அடிமையானாள். அவனுடைய கைகளை எடுத்துத் தன்னுடைய கன்னங்களில் வைத்துக் கொண்டாள். அவன் அவளுடைய கன்னங்களைக் கிள்ளினான். பிறகு, மென்மையாக இருந்த தலைமுடியை வருடினான்.

‘‘சூஸன்...” - அவன் முனகினான்: ‘‘சூஸன்... சூஸன்... நீ என்ன வேணும்னாலும் எழுது. நீ எனக்குச் சொந்தமானவள். எனக்குன்னே இருக்குறவ. என்னுடைய சொத்து. எனக்கு மட்டும்... எனக்கு வேற எந்த சொந்த சொத்தும் இல்ல. பிரைவேட் பிராப்பர்ட்டி என்ற விஷயத்தில் நான் ஏத்துக்குறது இதை மட்டும்தான். சமூகம் திரும்பவும் ஒரு சுற்று சுற்றி பழைய கம்யூனிஸத்திற்குத் திரும்பிப் போனால்கூட, எனக்குன்னு சொந்தத்துல ஒரு சொத்து இருக்கு. என் சூஸன்... பெரியவர்கள் மன்னிக்கட்டும்...”

நூல் நிலையம் என்பது ஞாபத்தில் வந்ததும், அவன் தன் கைகளைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.

சூஸனின் கண்களில் ஆழமான காதல் ஈரத்தை உண்டாக்கியது.

‘‘போபன், உங்களை எனக்குத் தந்தது கடவுள்தான். இயற்கைதான். அதனால் தான் நான் இயற்கையை வழிபடுறேன்...” - அவளுடைய வார்த்தைகள் மீண்டும் பக்தி கலந்த காவிய அலைகளாக மாறின.

‘‘டாமிட்!” - அவன் மீண்டும் கோபப்பட்டான்: ‘‘கடவுள்! இயற்கை! இவற்றிலெல்லாம் கொஞ்சம்கூட அர்த்தமே இல்ல. இது எதுவுமே உண்மை இல்லை. மனிதன் மட்டுமே உண்மை. பசி என்பது உண்மை. கஷ்டம் என்பது உண்மை. மனம் என்பது உண்மை. ‘நான் சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்’ என்று கேள்விப்பட்டிருப்பேல்ல?”

‘‘கேள்விப்பட்டிருக்கேன்... கேள்விப்பட்டிருக்கேன்... நிறைய...” - அவள் சிரித்தாள். அவனுடைய கோபம் அவளை வாய்விட்டுச் சிரிக்கச் செய்தது. ‘‘வேற எவ்வளவோ விஷயங்களையும் கேள்விப்பட்டிருக்கேன். சேகுவேரா எதற்காக பொலிவியன் காடுளில் இருந்து கொண்டு ஒரு கையில் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு காதல் கவிதை எழுதினார்?”

‘‘அது வேற விஷயம்...” - அவன் தன்னையே அறியாமல் எதிர்ப்பு என்ற படுகுழியை நோக்கி நகர்ந்தான்.

வெற்றி பெற்றுவிட்ட எண்ணத்துடன் அவள் சொன்னாள்: ‘‘மனித சமுதாயத்திற்காக, மனிதனின் நிரந்தர விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு மனிதர் எதற்காக ஒரு பெண்ணைத் தன்னுடைய சொந்த சொத்தாக நினைக்கணும்?”

போபனிடம் பதில் இல்லாமல் போய்விட்டது. இறுதியில் அவன் சொன்னான்: ‘‘சூஸன், உன்னைத் தவிர்க்க முடியாது.”

அவள் குலுங்கிச் குலுங்கிச் சிரித்தாள்.

அவனுக்கும் சிரிப்பு வந்தது. அவன் சொன்னான்: ‘‘போதும்... வா... காஃபி ஹவுஸுக்குப் போயி காஃபி குடிக்கலாம்.”

காஃபி பருகுவதற்கு இடையில் சூஸன் சொன்னாள்: ‘‘என் போபன், நீங்க சொன்ன ஒவ்வொண்ணும் என் மனசுல இருக்கு. மனித சமுதாயத்தைப் பற்றி சொன்ன விஷயங்கள்... இனிமேல் நான் எழுதறப்போ அவை அனைத்தும் என் மனசுல இருக்கும். நான் வாழ்க்கையின் முட்களில் விழுகிறேன்.”

‘‘தேர் யூ ஆர்! சூஸன், எனக்குத் தேவையானது அந்த பாயிண்ட்தான்.


ஓட் டூ தி வெஸ்ட் வின்ட்... அதில்தானே ஷெல்லியின் வரிகள்! ஒரு ரொமான்டிக் கவிஞருக்குக் கூட எழுதவேண்டிய சூழ்நிலை உண்டானதை நினைத்துப் பாரு. ‘ஓ... என்னை ஒரு அலையைப் போல, ஒரு மேகத்தைப் போல உயர்த்திக் கொண்டு போ! நான் வாழ்க்கையின் முட்கள்மீது விழுகிறேன். என்னிடமிருந்து குருதி வழிகிறது! கற்பனை கவிதை கூட மனிதனின் துக்கத்துடன் எவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறது! என்னுடைய குற்றச்சாட்டு... நம்முடைய கவிஞர்கள் மேற்கத்திய காற்றைப் பார்க்கிறார்கள். மேகங்களையும் அலைகளையும் பார்க்கிறார்கள். அதைத் தாண்டி இருக்கும் வாழ்க்கையின் முட்களையும், முட்கள் குத்தித் குருதி சிந்தி விழும் மனிதர்களையும் பார்ப்பதில்லை. அதைப் பார்க்கும் இடத்தில்தான் மனிதநேயம் என்ற ஒன்று உண்டாகிறது. அது ஷெல்லியின் காலம். அதற்குப் பிறகு இப்போது மனித வரலாறு எவ்வளவோ மாறிவிட்டது. இப்போதைய மனிதன் மேற்கத்திய காற்றிடம் கெஞ்சிக்கொண்டு நிற்பவன் அல்ல. காற்றுக்கு எதிராக வாளை எடுப்பவன். அடுத்த வசந்தத்திற்காகப் போராடிக் கொண்டிருப்பவன்” - போபன் ஒரு சொற்பொழிவாளனாகவே மாறிவிட்டிருந்தான்.

‘‘அப்படின்னா, அதற்கான பாயிண்டையும் மீதி இருக்குறவங்க தரணும்ல!” - அவளுடைய குரலில் காதலின் ஆழமும் கிண்டலின் கூர்மையும் கலந்திருந்தன. ‘‘இருந்தாலும், நான் ஒண்ணு சொல்லட்டுமா போபன்? கோபப்படக்கூடாது. இந்த வாளைத் தூக்கும் கவிதை, கவிதையே அல்லன்னுதான் நான் சொல்லுவேன். வாளை எடுக்குற அளவுக்கு தைரியமுள்ளவன் அதை எடுக்கட்டும். அதற்கு பதிலா கோஷம் போடுவதைப்போல வீரப்பாட்டு எழுதுறது நல்லது இல்ல. எழுதி முடிச்சிட்டு, லத்தியைக் கண்டவுடன், துப்பாக்கியைப் பார்த்தவுடன் ஓடி ஒளியிறது நல்லது இல்ல. இங்கு சாதாரணமா நடந்து கொண்டிருப்பது இது. இங்கு இருக்குற மிகப்பெரிய புரட்சிவாதி விலை உயர்ந்த ஒரு காரைப் பார்த்து விட்டால், மிகப்பெரிய ஒரு மாளிகையைப் பார்த்துவிட்டால், மிகப்பெரிய பதவியைப் பார்த்துவிட்டால் புரட்சியையே மறந்துடுறாங்க. எவ்வளவு உதாரணங்களை வேண்டுமானாலும் நான் சுட்டிக் காட்டுவேன். அதே நேரத்தில் ஒரு ஆமையோ, ஒரு நண்டோ, ஒரு பல்லியோ ஈர்ப்புகளுக்கு முன்னால் தங்களின் தனித்துவத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அவை அதை எதிர்த்து நிற்கின்றன. அழிகின்றன. ஒரு மலை, ஒரு மரம், ஒரு மலர், ஒரு காய் - இவை எல்லாமே அப்படித்தான் நடக்கின்றன. அவற்றின் தர்மம், அவற்றின் கர்மன் நிலையானது. மாறாதது. அப்படித்தான் தனிப்பட்ட உணர்ச்சிகளும். நான், என்னுடைய சின்னச் சின்ன சந்தோஷங்கள், என்னுடைய சின்னச்சின்ன துக்கங்ககள், என்னுடைய சிறிய சரிகள், சிறிய தவறுகள் - இவற்றைப் பற்றி பாடல்கள் பாடுகிறேன். அதற்காக என்னைச் சிலுவையில் அறைந்து விடாதீர்கள்னு நான் சொல்ல விரும்புறேன். எல்லா புரட்சிகளும் இறுதியில் சமரசத்தில் போய் முடிவடைந்து விடுகின்றன. இல்லாவிட்டால் காட்டிற்குள் ஓடி மறைந்துவிடுகின்றன. வரலாற்றைப் பாருங்க- ஒவ்வொரு புரட்சியின் முடிவும் எப்படி இருந்தன என்று. ஃப்ரெஞ்ச் புரட்சியின் முடிவு என்ன? கொடுமையான வன்முறையின் நகரத் தீ! நினைச்சுப் பாருங்க வேண்டாம்... அரசியல் புரட்சியை விடுங்க. தொழில் புரட்சி எதில்போய் முடிந்தது? மனிதனை மேலும் பைத்தியம் பிடித்தவனாகவும், வன்முறையாளனாகவும் ஆக்கியது. அப்படித்தானே? இல்லைன்னு சொல்ல முடியுமா?”

‘‘சூஸன், பழமையான கூட்டுக்குள் இருந்து கொண்டு பேசும் ஒரு தத்துவவாதி நீ.” - காஃபி பருகும்போதும், வாதம் செய்யும்போதும் அவனுடைய உள்மனதில் சூஸன் மீது கொண்டிருந்த மதிப்பு வளர்ந்து கொண்டிருந்தது. ‘‘சில கொள்கைகளுக்காக எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான் என்று உனக்குத்தான் தெரியுமே!”

‘‘முதல்ல கொள்கைகள் இருக்கும். அப்படித்தானே?”- சூஸன் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்.

‘‘அதனால்தான் நான் சொன்னேன்- நீ ஒரு பழைய தத்துவவாதியைப்போல பேசுறேன்னு...”

சூஸன் மீண்டும் சிரித்தாள்.

அவள் நிகழ்காலத்தின் பனிப்படலம் மூடிய, சூரியன் இல்லாத, போபன் இல்லாத அதிகாலைப் பொழுதிற்குத் திரும்பி வந்தாள். அந்த காலங்கள் எங்கு போயின? அப்போதைய போபன் எங்கே? அப்போதைய மனிதாபிமானம் எங்கே? அப்போதிருந்த கொள்கைகள் எங்கே? அவனுடைய கொள்கைகளுடன் ஒத்துப் போகவில்லையென்றாலும், கொள்கைகள் மீது அவன் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை அவள் ஆதரிக்கவே செய்தாள்.

இன்று?

மூடுபனி குறைவதற்கு பதிலாக, அதன் அடர்த்தி மேலும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறதோ?

2

சிஸ்டண்ட் எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினியராகப் பதவியில் உயர்வு கிடைத்து இந்த மலைப்பகுதிக்கு வந்த பிறகுதான் போபனிடம் மாறுதல் உண்டாக ஆரம்பித்தன. வந்தவுடன் அல்ல- சில நாட்கள் கழித்துத் தான். படிப்படியாக.

ஆரம்பகாலங்களில் அவன் எல்லா அதிகாலைப் பொழுதுகளிலும் பால்கனியில் ஒன்றாக உட்கார்ந்து மலைத் தொடர்களில் உதயமாகும் சூரியனைப் பார்த்துக் கொண்டிருப்பான். மூடுபனி இல்லாத அபூர்வ நாட்களில் கிழக்குப் பக்கம் பார்க்கும்போது தெரியும் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தன. தேயிலைச் செடிகள் வளர்ந்து நின்றிருக்கும் மலைகளும், அடிவாரங்களும், அவற்றுக்கு நடுவில் சுற்றிப் போய்க் கொண்டிருக்கும் கறுப்பு நிறச் சாலைகளும... தேயிலைக் காடுகளின் பச்சைநிற அழகுத் தோற்றங்கள்... பச்சை புடவை அணிந்து ஒரு பெண்ணைப் போல தோற்றம் தரும் பூமி என்ற மங்கை... அவளுடைய உடலைத் தழுவி வளைந்து நெளிந்து பாய்ந்தொழுகிக் கொண்டிருக்கும் சிறிய அருவிகள்... தேயிலை மலைகளைத் தாண்டியிருக்கும் காடுகள்... அதற்கப்பாலுள்ள உயரமான மலைகள்...

அந்தக் காடுகளிலும், மலை உச்சிகளிலும் பழங்கால மனிதர்களும காட்டு மிருகங்களும் வாழ்ந்தார்கள். ஆதிவாசிகளின் தெய்வங்களும்! அந்த தெய்வங்கள் அவர்களை எப்போதும் பத்திரமாகக் காப்பாற்றும் என்று ஆதிவாசிகள் நம்பினார்கள். அவர்களுடைய மிகவும் பழமையான நம்பிக்கைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு புதிய தெய்வங்கள் உள்ளே நுழைந்தன. அரசாங்கத்தின் தெய்வங்கள்- காட்டு இலாகா அதிகாரிகள், எஞ்சினியரிங் வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள், டிப்பார்ட்மெண்ட் அதிகாரிகளின் உதவியுடன் மரங்களைக் கடத்துவதற்காக வந்திருக்கும் காண்ட்ராக்டர்கள், அவர்களை வசதி படைத்தவர்களாக ஆக்குவதாகச் சொல்லி போலித்தனமான நாகரீகம் கொண்ட சமூகத்தின் கபடத்தனங்களை நோக்கி, அவர்களையும் இழுத்துக் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட படித்த தடியர்கள்...

வறுமையில் வாடும் ஆதிவாசிகளையும், அவர்களுடைய கன்னித்தன்மை கொண்ட காடுகளையும், அவர்களின் புனிதத் தன்மை கொண்ட அருவிகளையும், கள்ளங்கபடமற்ற மண்ணையும் நினைத்துப் பார்த்து சூஸன் கண்ணீர் விட்டாள். போபன் அப்போது அவளைக் கிண்டல் பண்ணிச் சிரித்தான்.

‘‘நீ காலத்திற்கேற்ற மாதிரி வளரவில்லை சூஸன்...” அவன் சொன்னான்: ‘‘ஆதிவாசிகளை முன்னேறச் செய்ய வேண்டாமா? அவர்களை இந்த சமூகத்தின் பகுதியாக ஆக்க வேண்டாமா?


சமூகத்தில் உண்டாகும் விஞ்ஞான ரீதியான, தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியின் பயன்கள் அவர்களுக்கும் கிடைக்கும்படிச் செய்ய வேண்டாமா? காட்டில் இருக்கும் பொருட்கள், காட்டின் செல்வம் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கிடைக்கும்படிச் செய்ய வேண்டாமா? நீ இப்படி ஒருதலைப்பட்சமாக சிந்திக்கிறது நல்லதா?”

‘‘இது ஒருதலைபட்சமான சிந்தனைன்றதே சரியில்ல... மனிதநேயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. மனிதனின் கள்ளங்கபடமற்ற தனித்துவம் பற்றிய பிரச்சினை இது. இயற்கையின் கன்னித் தன்மை குறித்த பிரச்சினை இது” - அவள் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள்.

‘‘நீ உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் பேசுற!”

‘‘நிச்சயமா...” - சூஸன் சொன்னாள்: ‘‘நான் உணர்ச்சிகளை மதிக்கிறேன்.”

‘‘இருந்தாலும் அந்தக் காலம் முடிவடைந்துவிட்டது” - அவன் சொன்னான்: ‘‘இது அறிவு கோலோச்சும் யுகம். செயல்களின் யுகம். நாம் செயல் ரீதியாக சிந்திக்க வேண்டியதிருக்கிறது.”

அவன் இறுதியில் கூறிய வார்த்தைகள் அவளை அதிர்ச்சியடையவும், வேதனை கொள்ளவும் செய்தன. அப்படியென்றால், அங்கிருந்துதான் எழுத்துப் பிழை ஆரம்பமானதோ? அங்கிருந்துதான் போபனிடம் உண்டாகிக் கொண்டிருக்கும் மாற்றத்தின் வாசனையை அவள் உணர ஆரம்பித்தாளோ?

அப்போது அவளுக்கு மாதம் முடிந்திருந்தது.

‘‘இப்போ நாம விவாதங்களில் ஈடுபட வேண்டாம்” - போபன் அன்புடன் அவளைத் தழுவியவாறு சொன்னான்: ‘‘உன் உடல் ஆரோக்கியம் அதற்கேற்ற மாதிரி இல்ல. இரண்டு மூன்று மாதங்கள் கடக்கட்டும். அப்போ இன்னொரு ஆளும் இருக்குமே விவாதத்தில் பங்குகொள்ள! நம்ம மகள்...”

சூஸன் பூமிக்குத் திரும்பி வந்தாள்.

‘‘மகளா? மகள் என்று யார் சொன்னது?”

‘‘அதை யாராவது சொல்லணுமா என்ன? எனக்கு எப்பவோ தெரிஞ்ச விஷயமாச்சே அது!”

‘‘எப்பவோன்னா?”

‘‘எப்பவோ... எப்பவோ... வரலாறு, டைனஸர், நினைவு, காலம்... எல்லாவற்றுக்கும் முன்னால்...”

அவர்கள் இருவரும் சிரித்தார்கள்.

பிரசவம், பிரசவத்திற்கு பின்னாலிருக்கும் கவனிப்பு எல்லாம் சேர்த்து மூன்று மாதங்கள் ஊரில் இருந்துவிட்டு சூஸன் திரும்பி வந்தபோது, போபனிடம் நிறைய மாற்றங்கள் உண்டாகியிருந்தன.

மாளிகைபுரத்து குரியச்சன் என்ற மிகப்பெரிய பணக்காரரின் பென்ஸ் காரில் சூஸனையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போவதற்காக போபன் வந்திருந்தான். அதைப் பார்த்து சூஸனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அசிஸ்டண்ட் எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினியராக ஆன பிறகும் தனக்கென்று சொந்தத்தில் இருக்கும் புல்லட்டிலோ, டிப்பார்ட்மெண்ட்டிற்குச் சொந்தமான வாகனத்திலோ, பேருந்திலோ, புகைவண்டியிலோ அல்லாமல் வேறொரு மனிதருக்குச் சொந்தமான வாகனத்தில் பயணம் செய்வது என்பதை போபன் எந்தச் சமயத்திலும் விரும்பியதில்லை. பல நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட, போபன் அதற்குச் சம்மதித்ததில்லை. ஒருமுறை பிரபாகரன் என்ற நெருங்கிய நண்பனிடம் போபன் கூறியதை அவளே கேட்டாள்.

‘‘டேய், ஒருவகையில் பார்க்கப்போனால் நீ சொன்னது உண்மைதான். அது லஞ்சம் இல்ல. ஊழல் இல்ல. அதுல எந்தத் தப்பும் இல்ல. இருந்தாலும் அது ஒரு நன்றிக் கடன்தானே? அப்படிப்பட்ட ஒரு நன்றிக்கடனை எதற்காக உண்டாக்கி வைக்கணும்? அது நடக்காம பார்த்துக்குறதுதானே நல்லது!”

அந்த போபன்தான் காண்ட்ராக்டரும் எஸ்டேட் உரிமையாளருமான குரியச்சனின் காரில் தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறான். சூஸன் தன்னிடம் உண்டான ஆச்சரியத்தைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். ஆனால், அவளின் உள்மனதை நன்கு உணரக்கூடிய போபன் கேட்கப்படாத கேள்விக்கு பதில் சொன்னான்:

‘‘கிழக்கு மலைப் பகுதிக்கு நாம போகணும். டாக்ஸி அம்பாசடர் தானே கிடைக்கும்? அதில் பயணம் செய்வது மிகவும் சிரமமானது. குழந்தைக்கும் உனக்கும். அதனாலதான்...” -கூறிக் கொண்டிருந்த வாக்கியத்தை முடிக்காமலே அவன் நிறுத்தினான்.

அப்போது சூஸன் சிரித்தாள். அவளுடைய சிரிப்பிற்கான அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அவன் உணரவும் செய்தான்.

சிரிக்கும்போதே அவள் தனக்குள் அழவும் செய்தாள்.

‘என் போபன், எங்கேயோ, ஏதோ புரிந்துகொள்ள முடியாத தவறு நேர்ந்திருக்கிறது. என்னையோ உங்களையோ பெற்றெடுத்து வீட்டிற்குக் கொண்டு வந்தது பென்ஸ் காரில் அல்ல. அன்று பாதைகள் இப்போது இருப்பதைவிட குண்டும் குழியும் நிறைந்தவையாக இருந்தன. மனிதன் தன் கையால் இழுக்கும் ரிக்க்ஷாவிலோ மாட்டு வண்டியிலோதான் நம்முடைய முதல் பயணம் இருந்திருக்கும். அதை நினைக்கும்போது இநத் பென்ஸ்...’ - அவளுடைய மவுனம் அவளுக்குள்ளேயே முடியாமல் இருந்தது.

‘‘சூஸன், உன்னுடைய சிரிப்பிற்கான அர்த்தம் எனக்குப் புரியுது” - அவளை உற்று நோக்கியவாறு நின்றிருந்த போபன் சொன்னான். அவள் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதும்; அந்த அழுகையின் குரலை இந்த பூமியின் எல்லா கடல்களும் ஏற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்குத் தெரியும். வார்த்தையால் கூற முடியாத ஒரு குற்ற உணர்வு அவனை நெருப்பென சுட்டது. மனதில் உருகிக் கொண்டிருந்த அவன் மெதுவான குரலில் கேட்டான்: ‘‘நீ எதற்கு என்மேல கோபப்படாமல் இருக்கே? என்னிடம் ஏன் விளக்கங்கள் கேட்கல? என்னை ஏன் திட்டாமல் இருக்கே?”

அந்த நேரத்தில் சூஸனின் ஞாபகம் ஆகாயத்தில் உற்பத்தியான நதியைப்போல ஒளிர்ந்தது. தடைகள் இல்லாத, தடுமாற்றம் இல்லாத அவளுடைய நினைவுகள்... அதேநேரத்தில், அது மிகவும் தெளிவாகவும் இருந்தது. போபன் போபனாக இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பதை பல தடவை இடையில் அவ்வப்போது அவன் வந்தபோதெல்லாம் அவள் உணர்ந்திருக்கிறாள். அந்த எண்ணம் என்ற ஞாபகம் அதன் முடிவை அடைய மட்டுமே பென்ஸ் உபயோகமாக இருந்தது.

அவள் குழந்தையுடனும், போபனுடனும் பென்ஸில் பயணம் செய்தாள். அந்தப் பயணம் அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது என்று கூறுவதற்கில்லை. ஆனால், அவள் தன்னுடைய மனக் கவலைகளை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய கவலைகளை அவள் மவுனத்தின் ரகசிய அறைகளுக்குள் மறைத்துக் கொண்டாள்.

அவள் எஞ்சினியரிங் கல்லூரி மாணவனான போபனை நினைத்துப் பார்த்தாள். புரட்சிவாதியான போபனை வீடுவீடாக ஏறி இறங்கிய போபனை, குடிசைகளுக்குள் நுழைந்து மூக்கு ஒழுகிக் கொண்டிருந்த கறுப்பு நிறக் குழந்தைகளைத் தோளில் வைத்துக் கொண்டு முத்தம் தரும் போபனை, பற்கள் இல்லாத ஈறைக் காட்டிச் சிரிக்கும் வயதான கிழவிகளைக் கட்டிப் பிடிக்கும் போபனை, வயலில் வேலை செய்யும் பணியாட்களுக்கு உதவும் போபனை, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகப் பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போபனை, மனிதர்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த போபனை, ஒரேயொரு சொத்தே தனக்கென்று சொந்தமாக இருக்கிறது என்று சொன்ன போபனை, அந்த சொந்தச் சொத்தை ஆதிவாசிகள் இருக்கும் இடங்களுக்கு முதல் தடவையாக அழைத்துச் சென்ற போபனை...


அப்போது போபன் ஆதிவாசிகளின் கள்ளங்கபடமற்ற தன்மையைப் பற்றியும் அவர்களுடைய மண்ணின், அந்தக் காட்டின் புனிதத்தைப் பற்றியும் வாயே வலிக்காமல் பேசினான். அவர்களுடைய காட்டில் இருந்த கோவிலுக்கு அவர்கள் போனார்கள். அவர்களுடைய திருவிழாவைப் பார்த்தார்கள். அவர்களின் பழமையான சடங்குகளில் பங்கு கொண்டார்கள். அவர்களுடைய காட்டு மதுவையும், காட்டுத் தேனையும் கலந்து குடித்தார்கள். போதை தலைக்கேறிய போபன் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடுகிற காட்சி அவளுக்குள் இப்போதும் ஒரு மறையாத நினைவாக இருந்து கொண்டிருக்கிறது. அவளை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற ஒரு நினைவு... இனிமையான ஒரு ஞாபகம்...

அந்தப் போபனும் அவனுக்குச் சொந்தமான சொத்தும் வேறொரு மனிதனுக்குச் சொந்தமான பென்ஸ் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை அவளுக்குள் கவலையையும், அதைவிட ஆச்சரியத்தையும் உண்டாக்கியது. போபனின் இன உணர்வு மாறிவிட்டதோ.

அவர்கள் போய்ச் சேரும்போது மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. தேவகியம்மா ஓடிவந்து சூஸனின் கையிலிருந்து குழந்தையை வாங்கினாள். போபனின் அலுவலகத்தில் ப்யூனாகப் பணியாற்றும் சங்கரன் நாயரும், குரியச்சனின் ஓட்டுனர் மோகனும் சேர்ந்து காரிலிருந்து பொருட்களை இறக்கி வைத்தார்கள். மாடியிலிருந்த படுக்கை அறையில் அழகான ஒரு தொட்டிலும் ஏராளமான விளையாட்டு பொம்மைகளும் இருப்பதைப் பார்த்தபோது சூஸன் மனதில் நினைத்துப் பார்த்தாள். தந்தைக்குக் குழந்தையிடம் பாசம் இருக்கிறது. அதை அவள் குறிப்பாக உணர்த்தவும் செய்தாள். போபன் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவன் சொன்னான்:

‘‘தேவகியம்மா, தேநீர்...”

குழந்தையை சூஸனிடம் கொடுத்துவிட்டு, தேவகியம்மா சமையலறைக்குள் நுழைந்தாள். தேநீர் வந்தபோது போபன் தான் அணிந்திருந்த ஆடைகளை நீக்கி சாதாரண ஆடைகளுடன் இருந்தான். தேநீர் குடித்து முடித்து, அவன் குளியலறைக்குள் நுழைந்தான். குளித்து முடித்து வேறு ஆடைகளை அணிந்தான்.

‘‘சூஸன், நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்.”

அவள் குழந்தையுடன் அவனுக்குப் பின்னால் சென்றபோது வேகமாகப் படிகளில் இறங்கி முடித்திருந்தான். சில நிமிடங்களில் பென்ஸ் ‘ஸ்டார்ட்’ செய்கிற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் அவளுக்குள் குழப்பமான, தெளிவற்ற உணர்வுகளை உண்டாக்கியது.

கண்விழித்த குழந்தையை அன்புடன் தடவிக் கொடுத்துக் கொண்டே, பால் கொடுத்தவாறு தேவகியம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த அவள் அவனுக்காகவே காத்திருந்தாள்.

‘‘மகளே, தேநீர் ஆறிக் கொண்டிருக்கு”... தேவகியம்மா ஞாபகப்படுத்தியபோதுதான் அவள் தேநீர் அருந்தினாள்.

நேரம் இருட்டான பிறகும், மகள் உறங்கிய பிறகும்கூட போபன் வரவில்லை. வெளியே இருள் உண்டாக்கிய வர்ண மாறுதலைப் பார்த்தவாறு அவள் பால்கனியில் அவனுக்காகக் காத்திருந்தாள். நாற்காலியைத் தாண்டி தரையில் தேவகியம்மா உட்கார்ந்திருந்தாள்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் போபன் வரவில்லை. தேவகியம்மாவிடம் சாப்பிட்டு முடித்து தூங்கும்படி சூஸன் கூறிய பிறகும், அவள் அங்கிருந்து செல்லவில்லை.

‘‘மகளே, உன்னைத் தனியா விட்டுட்டு நான் போறதா? அவர் வரட்டும்.”

‘‘நான் தனியா இல்லையே! என் மகள் என் கூட இருக்காளே!”- அவள் சிரிக்க முயற்சித்தாள்.

தேவகியம்மா தரையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். சூஸன் கண் விழித்துக்கொண்டு இருந்தாள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. போபனின் நடவடிக்கையில் உண்டாகியிருக்கிற மாறுதலைப்பற்றி அவள் தெளிவாக உணர்ந்திருந்தாள். அந்தப் புரிதல்தான் தன்னுடைய தூக்கத்தை முழுமையாக அபகரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.

இறுதியில் பைக் சத்தம் கேட்டது.

தேவகியம்மா திடுக்கிட்டு எழுந்து கீழே ஓடினாள். சூஸனும் எழுந்தாள். அவள் படிகளில் இறங்க ஆரம்பித்தபோது, போபன் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தான். அவன் நன்கு குடித்திருந்தான்.

மாடிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு ஷூக்களைக் கழற்றிக் கொண்டே போபன் சொன்னான்: “குரியச்சன் வீட்டில் ஒரு பார்ட்டி. சூப்பிரண்டிங் எஞ்சினியர் வந்திருந்தார்.”

சூஸன் எதுவும் பேசவில்லை.

ஷூக்களை அவள் ஒரு மூலையில் நகர்த்தி வைத்தாள். போபன் அறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றினான்.

‘‘சாப்பாடு பரிமாறட்டுமா?” சூஸன் கேட்டாள்.

அலைபாயும் கண்களுடன் அவன் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான். ‘‘நான் அங்கேயே சாப்பிட்டாச்சு. நீ எதுவும் சாப்பிடலையா?” என்றான். அவளுடைய மவுனத்தின்மீது அவனுடைய வார்த்தைகள் விழுந்தன. ‘‘சாப்பிடலைன்னா, சாப்பிட்டு முடிச்சு தூங்கு. எனக்கு உறக்கம் வருது.”

‘‘மகள்...” - அவள் ஞாபகப்படுத்தினாள்.

‘‘ஓ... நான் அதை மறந்துட்டேன். என் தங்க மகள் எங்கே?”- அவன் எழுந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு முத்தமிட்டு அதை எழுப்பிவிட்டான். குழந்தை கண் விழித்து அழ ஆரம்பித்தது. அழுது கொண்டிருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு சூஸன் அறைக்கு வெளியே நடந்தாள். நிலவு ஒளி இல்லாத இரவு வேளையில், நட்சத்திரங்களின் மங்கலான வெளிச்சத்தில், காற்றில் இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்த மரங்களின் நிழல்கள் தெளிவில்லாமல் தெரிந்தன. இரவு நீளமானதாகவும், கனமானதாகவும் அவளுக்குத் தோன்றியது.

பொழுது புலர்ந்தபோது, போபன் வேறொரு மனிதனாக மாறியிருந்தான். அன்பு நிறைந்த கணவன்... பாசம் கொண்ட தந்தை... தூக்கம் கலைந்து எழுந்தவுடன் ஓடிவந்து அவன் சூஸனை இறுகத் தழுவிக் கொண்டான். முத்தங்களால் அவளை மூச்சடைக்கச் செய்தான். முந்தைய இரவில் தான் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்புக் கேட்டான். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டான். குழந்தை கண் விழித்து அழ ஆரம்பித்தபோது, சூஸனிடம் கொடுக்காமல் ‘ஆரிரரோ’ பாடியவாறு மாடியில் நடந்தான். குழந்தை அழுகையை நிறுத்தியது சூஸனை ஆச்சரியப்படச் செய்தது. காலைக் கடன்கள் முடிந்து அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அலுவலகத்திற்குப் புறப்படுவதற்கு முன்னால் குழந்தையையும் தாயையும் அவன் மாறி மாறி முத்தமிட்டான். ‘டாட்டா’ கூறியவாறு மகிழ்ச்சியுடன் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். சூஸன் மிகவும் சந்தோஷப்படடாள். கடந்து சென்ற இரவை அவள் அந்தக் கணமே மறந்துவிட்டாள்.

மதியம் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட அவன் வந்தான். அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு அவன் சென்றான்.

ஆனால், அவனுடைய இன்னொரு பக்கம் தினமும் இரவில் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏதாவதொரு பார்ட்டி தினமும் இருந்தது.

குடி, சொல்லப்போனால் சற்று அதிகம் என்று கூறக்கூடிய அளவிற்கு போபனுடைய ஒரு வழக்கமாக ஆகிவிட்டிருக்கிறது என்ற உண்மையை தேவகியம்மாவின் வார்த்தைகளிலிருந்து மட்டுமல்ல, தன்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாகவும் சூஸன் கவலையுடன் உணர்ந்தாள்.


பகல், இரவு இரு நேநங்களிலும் இரு மாறுபட்ட போபனைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை நினைத்து அவள் மிகவும் வேதனைப்பட்டாள்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பயணமும் போய்விட்டுத் திரும்பி வரும்போது போபன் அவளுக்கும் குழந்தைக்கும் விலை மதிப்புள்ள ஆடைகளை வாங்கிக் கொண்டு வருவதைப் பார்த்து அவளுடைய பதைபதைப்பும் கவலையும் அதிகரித்தன.

‘‘இதெல்லாம் எதுக்கு?”- ஒரு விடுமுறை நாளில் ஒரு குளிர்கால பகல் நேரத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து வெளியே போயிருக்கும் சூழ்நிலையில் அவள் கேட்டாள்: ‘‘எனக்கும் குழந்தைக்கும் தேவைக்கும் அதிகமாக ஆடைகள் இருக்கே!”

காடு ஆரம்பிக்கும் இடத்தில், ஒரு ஆற்றோரமிருந்த புல்வெளியில் பெட்ஷீட் விரித்து அவர்கள் அமர்ந்தார்கள். அன்னமோள் சிறிய மெத்தையில் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். போபன் அவளுடன் சேர்ந்து உட்கார்ந்தான். அவளுடைய தோளில் தன் கையை வைத்தான். ‘‘இங்கே பாரு சூஸன்... எனக்குன்னு இருக்குறதே நீயும் மகளும்தான். பிறகு என்னுடைய ஒரே ஒரு தங்கச்சி லிஸி. அவளை நல்லபடியா கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க நான் முடிவு செய்திருக்கேன். பிறகு மீதி இருக்குறது நமக்குத்தான். நாம நான்கு மனிதர்களுக்கு முன்னால் மதிப்புடன் வாழ வேண்டாமா?”

‘‘நமக்கு இப்போ இருக்குற மதிப்பு போதாதா?” - அவனைச் சிறிதளவு கூட வேதனைப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, முடிந்தவரையில் சாந்தமான குரலில் அவள் பேசினாள். எனினும், எங்கே அவன் தன் வெறுப்பைக் காட்டிவிடப் போகிறானோ என்று அவள் பயந்தாள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவன் அவளைத் தன்னுடன் சேர்த்து அவன் முன்பைவிட அதிகமாக அணைத்துக் கொண்டான். ‘‘நீ என்னிடம் இப்படித்தான் சின்னப் பிள்ளைத்தனமா ஏதாவது பேசுவேன்னு எனக்கு நல்லா தெரியும்” - அவன் மென்மையான குரலில் சொன்னான்: ‘‘நாம வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல்கள் மாறியிருக்கின்றன. நம்முடைய சமூக நிலை.”

அவன் கூற வந்ததை முடிப்பதற்கு முன்பே, தன்னைச் சுற்றியிருந்த அவனுடைய கையை மெதுவாக எடுத்து நீக்கிய அவள் ஆற்றின் ஓரமாக நடந்தாள். அவள் தங்கள் இருவரின் கடந்த காலங்களையும் நோக்கிப் பயணித்தாள். அதை அவனும் புரிந்துகொள்ளாமல் இல்லை.

குழந்தைக்குப் பெயர் வைக்கும் நாளன்று ஏராளமான பொருட்கள் - எல்லாம் மிகவும் விலை மதிப்புள்ளவை - கிடைத்ததை அவள் நினைத்துப் பார்த்தாள். போபனுடைய அன்னையின் பெயரைத்தான் அவளுக்கு வைத்தார்கள். அன்னமோளின் முதல் பிறந்த நாள் அதைவிடச் சிறப்பாக இருந்தது. பரிசு தரும் விஷயத்தில் காண்ட்ராக்டர்களும், அவர்களுடைய மனைவிமார்களும் போட்டி போட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அன்னமோள் மீதோ அவளுடைய தாய், தந்தை மீதோ அன்பு செலுத்தவில்லை என்பதையும் மாறாக அசிஸ்டெண்ட் எக்ஸிக்யுட்டிவ் எஞ்சினியர் என்ற பதவி மீது அவர்களுக்கு மரியாதை இருந்தது என்பதையும் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் சூஸனுக்கு இருந்தது. அவர்கள் வர்த்தகம் நடத்தினார்கள். ஒன்று - ஏற்கெனவே அடைந்து விட்டதற்கான நன்றிக் கடன். இல்லாவிட்டால் அடையப் போவதற்காக முன்கூட்டியே செய்யப்படும் உதவி.

குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு திருமண விருந்தைவிடச் சிறப்பாக நடந்தது. எவ்வளவு புட்டிகள்... எவ்வளவு கோழிகள்... எத்தனை வாத்துகள்... எவ்வளவு தட்டுகள்... சூஸன் எல்லோரிடமும் நலம் விசாரித்தாள். வெளியே அன்புடன் அவர்களிடம் பேசினாள். உயர்ந்த நிலையில் இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தற்பெருமையுடன் பேசிய விஷயங்களை அவள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள். ஆனால் அவர்களின் அர்த்தமற்ற, முழுக்க முழுக்க லௌகீக வளர்ச்சியில் மட்டும் திருப்தியடைந்திருக்கும் ‘உயர்ந்த பேச்சில்’ பங்கு கொள்ள அவளால் முடியவில்லை. அவள் தனிமைப்பட்டு இருந்தாள். அவர்களுடைய பேச்சுக்களில் நிறைந்திருந்த தற்பெருமைப் பெருவெள்ளத்தில் எந்த நிவீடமும் மூழ்கிவிடக் கூடிய ஒரு தீவாக அவள் இருந்தாள். அதில் மூழ்கிப் போய், பிறகு எந்தச் சமயத்திலும் வெளியே வராமலே இருந்துவிடக் கூடாதா என்று அவள் உண்மையாகவே ஆசைப்பட்டாள்.

போபன் தாமஸின் சமூக அந்தஸ்து வளர வளர அவளுக்குள் பதை பதைப்பும் பயமும் கடுமையான கவலையும் வளர்ந்து கொண்டிருந்தன. அவள் ஆற்றையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். மலை உச்சியில் எங்கிருந்தோ சிறு சிறு நீரூற்றுகளாகப் பிறந்து, ஒன்று சேர்ந்து ஒரு சிறிய ஆறாக மாறி, இன்னும் சற்று பெரிதாக இருக்கும் ஆற்றிலோ ஒரு நீர்நிலையிலோ கலப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கும் அந்த ஆறுதான் எவ்வளவு அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது! அதைப் பார்க்கும்போது மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! அவளுடைய சந்தோஷமும் அமைதியும் நிரந்தரமானவை. நம்பிக்கையில் இருந்து அன்பு... அன்பிலிருந்து சேவை செய்யும் எண்ணம்... சேவையிலிருந்து கிடைக்கும் நிரந்தரமான சாந்தியும் சமாதானமும்.

போபன் அருகில் வந்து நின்றிருக்கிறான் என்பதையே அவன் தன் தோளில் கைவைத்த போதுதான் அவள் தெரிந்து கொண்டாள். அவள் திரும்பிப் பார்த்தாள். அவனுடைய கண்கள் பகல்நேர சூரியனின் வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

அன்று போபன் க்ளப்பிற்குச் செல்லவில்லை. வெளியிலும் எங்கும் செல்லவில்லை. இரவு உணவிற்கு முன்னால் அவன் இரண்டு பெக்குகள் குடித்தான். இரவில் போபன் - சற்று குற்ற உணர்வுடன் என்றுதான் சொல்லவேண்டும் - கூறினான்: ‘‘நான் ரொம்பவும் மாறிட்டேன். அப்படித்தானே சூஸன்?” அதைக் கேட்டு அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அவனுடைய மார்பின் மீது தன் முகத்தைப் பதிய வைத்து, அழுகையை அடக்கிக் கொண்டு அழுகைச் சத்தம் வெளியே கேட்காமல் இருக்கும் வண்ணம் சிரமப்பட்டு முயற்சி செய்தவாறு படுத்திருந்தாள்.


3

சூஸனின் கவலைகள் அவ்வப்போது வெளியே தெரிந்தது அவளுடைய கவிதைகள் மூலம்தான். முதல் தடவையாக போபன் அந்தக் கவிதைகள் மீது ஆர்வம் செலுத்தினான். ஒரு கவிதையை அவளை வற்புறுத்தி பிரசுரம் செய்வதற்காக அவன்தான் அனுப்பி வைக்கச் செய்தான். அது பிரசுரமாகி வந்த வார இதழுடன் போபன் வீட்டிற்கு வந்தான். அவனுடைய உற்சாகத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது.

‘‘ஐ ஆம் ப்ரவுட் ஆஃப் யூ” - அவன் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டேயிருந்தான். அன்று எந்த விருந்திற்கும் அவன் செல்லவில்லை. மதியத்திற்குப் பிறகு விடுமுறை எடுத்துவிட்டு, அவன் அவளையும், அன்னமோளையும் அழைத்துக் கொண்டு சுமார் முப்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பெரிய நகரத்திற்குப் போய் திரைப்படம் பார்த்தான். நகரத்தில் இருப்பதிலேயே பெரிய ஹோட்டலுக்குச் சென்று உணவு சாப்பிட்டார்கள். இதற்கிடையில் அவனுடைய பழைய குறும்புத்தனம் வெளியே வந்தது.

‘‘ஒவ் யூ ஹேவ் கம் டு தி பாய்ண்ட் - இதுதான் கவிதை. முன்பு இருந்த ஒன்றுமே இல்லாத கவிதை இல்லை. இதில் மனிதன் இருக்கிறான். அவனை எப்போதும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. முன்பு இருந்த நிலவும் மென்மையான காதல் விஷயங்களும் மாறியிருக்கின்றன!”

அன்று இரவு அவன் மது அருந்தவேயில்லை.

ஆனால், படிப்படியாக அவனுடைய ஆர்வம் குறைந்து கொண்டே வந்தது. கவிதையின் தரம் குறையவில்லை. அது அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவனுக்கு வாசிப்பதற்கு நேரம் கிடைக்க வேண்டாமா? அவனுக்கு அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருக்கின்றனவே? மீண்டும் விருந்துகள் இல்லையா? பிசினஸ் இல்லையா? சமுதாயத்தில் அந்தஸ்தை உயர்த்த வேண்டாமா? அவனுடைய ஈடுபாடு குறைந்ததை அவளும் உணரவே செய்தாள். ஆனால், அது அவளுடைய படைப்பாற்றலைச் சிறிதுகூட பாதிக்கவில்லை. அவள் மேலும் அதிகமாக எழுதினாள். முன்பு இருந்ததைவிட நன்றாக எழுதினாள். அவளுடைய அழுத்தப்பட்ட வேதனைகளுக்கு வடிகாலாக இருந்தது அது மட்டும்தானே! அவளுடைய ஒட்டுமொத்த நிம்மதியே அன்னமோளும் கவிதைகளும்தான். எனினும் அவளுடைய மனக்கவலை அப்படியே தான் இருந்தது. சில நேரங்களில் அவள் நீண்ட நேரம் எதுவுமே பேசாமல் அமைதி நிலையில், இனம்புரியாத ஆழமான கவலையில் மூழ்கிவிடுவாள்.

போபனின் தங்கை லிஸியின் படிப்பு முடிந்து திருமணமும் முடிந்தது. திருமணம் போபன் விரும்பியதைப்போல மிகவும் ஆடம்பரமாகவே நடந்தது. வரதட்சணையாக ஒரு மிகப்பெரிய தொகையும் ஒரு காரும் தரப்பட்டன. அதற்கு மிகவும் முன்பே போபன் ‘ஸ்டேட்டஸ் சிம்பல்’ என்ற முறையில் கார் வாங்கியிருந்தான். தன் கணவனுடைய கார் என்றாலும்கூட அதில் பயணம் செய்யும்போது சூஸனுக்கு தாங்க முடியாத ஒரு குற்ற உணர்வு - தவறு செய்கிறோம் என்ற எண்ணம் என்றுகூட கூறலாம் - உண்டானது. வேறு யாரோ ஒருவருடைய கார் அது என்ற எண்ணம் அவளுக்கு உண்டாகும்.

லிஸியின் திருமண நேரத்தில் போபன் சூஸனுக்காகவும் சில தங்க நகைகளை வாங்கினான். அது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

‘‘எனக்கு இது எதுவும் தேவையில்லை” - அவள் எப்போதும் போல உற்சாகம் இல்லாமல் சொன்னாள்: ‘‘எனக்கு இப்போ இருக்குறதே போதும்.”

‘‘போதாதுன்னு நான் நினைச்சேன்.”

‘‘எனக்கு அப்படித் தோணல.”

‘‘சூஸன்...” - அவன் குரலை உயர்த்தினான். அவள் குழந்தையை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். அவர்கள் இருவருக்குமிடையில் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு விரிசல் உண்டானது அன்றுதான்.

லிஸியின் திருமணத்திற்குக்கூட அந்த நகைகளை அணிய அவள் விரும்பவில்லை. போபன் அதை ஒரு ‘இன்ஸல்ட்’ ஆக எடுத்துக் கொண்டிருக்கலாம். அப்படிக் கூறுவதைவிட எடுத்துக் கொண்டான் என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

‘எடுத்துக் கொள்ளட்டும்’ - அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள்: எடுத்துக் கொள்ளட்டும். எனக்கும் கொஞ்சம் பிடிவாதம் இருக்கு. எனக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. தனித்துவம், கருத்து... இவை ஒரு ஆளுக்கு மட்டும் சொந்தம் இல்லையே!”

இப்படி தனக்குள் ஒரு நியாயத்தை அவள் கூறிக்கொண்டாலும், பிறகு அவளுக்கு ஒரு வருத்தம் உண்டாகவே செய்தது. போபன் மிகவும் சங்கடப்பட்டிருப்பான். அவள் மீண்டும் கவலை படர்ந்த மவுனத்தில் மூழ்கினாள்.

போபன் உற்சாகமாக இருந்த ஒரு நேரத்தில் அவள் தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்தாள்.

அவன் அதற்காகக் கோபப்படவில்லை. வருத்தப்படவும் இல்லை.

‘‘நீ கவலைப்படாதே. நான் அந்த விஷயத்தைப் பெருசா எடுத்துக் கொள்ளவே இல்லை” - அவளை இறுக அணைத்துக்கொண்டு அவன் சாந்தமான குரலில் சொன்னான்: ‘‘அதைவிட நான் ஃபீல் பண்ணுற ஒரு விஷயம் இருக்கு. நீ என்னுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு வர கொஞ்சமும் ஆர்வம் காட்டுறது இல்ல. இவ்வளவு காலத்துல இரண்டோ மூணோ முறைகள் மட்டுமே நீ பார்ட்டிகளுக்கு வந்திருக்கே. பார்ட்டிக்கு வர்ற எல்லோரும், குறிப்பாகப் பெண்கள் சூஸன் எங்கே... சூஸன் எங்கேன்னு கேட்பாங்க. அப்போ நான் அவமானத்துல தலை குனிஞ்சு நின்னுடுவேன்.”

அவன் கவலைப்படுவது அவனைப் பொறுத்தவரையில் நூறு சதவிகிதம் சரிதான் என்பதை அவளும் உணர்ந்தாள். ஆனால், இந்த விஷயத்தில் அவனுக்கு உதவ தன்னால் முடியாது என்பதையும், முயற்சித்தால் கூட முடியாது என்பதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த மாதிரியான பார்ட்டிகள் அவளுடைய எண்ணத்தில் பிணவறைக்கு ஈடாகத் தெரிந்தன. வாழ்க்கையின் பிரகாசம் எதுவும் இல்லாத பிணப் பைகள். நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக ஆடைகள் அணிந்து காட்சியளிக்கும் சில பெண்கள்... சூட்டும் கோட்டும் அணிந்து ஜோக் புத்தகங்களை வாசித்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருக்கும் சில பெண் சபலக்காரர்கள்... புட்டிகள், கோழி, பன்றி, ஆடு, மாடு... தாங்கள் தின்று முடிக்கும் பறவைகள், மிருகங்களுக்கு இருக்கும் சுயஉணர்வுகூட இல்லாமல், இருக்கும் சுய உணர்வையும் புட்டிகளுக்குள் மூழ்கச் செய்துவிட்டு, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் தற்பெருமைக்காரர்களின் உயிரற்ற ஒரு உலகம்... அது உயர்வானது என்றும், அது உண்மையானது என்றும், அதுதான் வாழக்கையின் ஆனந்தம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அது ஒரு சுடுகாடு என்பதையும் தாங்கள் அனைவரும் வெறும் பிணங்கள் என்பதையும் அவர்கள் சிறிதும் உணர்வதில்லை, உணரப்போவதும் இல்லை.

அந்தக் கூட்டத்தைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் சூஸனுக்கு வேடிக்கையும் வெறுப்பும் உண்டாவதைவிட பரிதாபமும் வருத்தமும் தான் அதிகமாக உண்டாயின. ‘பாவங்கள்...’ என்று அவள் மனதிற்குள் கூறிக்கொள்வாள். ஆனால், அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக இருக்க அவள் தயாராக இல்லை.

‘‘என் போபன், வருத்தப்படக்கூடாது...” - அவள் சொன்னாள்: ‘‘போபன், நான் உங்களை வேண்டுமென்றே சிரமத்திற்குள்ளாக்கவோ வேதனைப்படுத்தவோ இல்லை. அப்படிப்பட்ட கூட்டங்களில் நான் கொஞ்சம்கூட பொருந்தாமல் இருப்பேன்னு எனக்கு நல்லா தெரியும். அதைவிட அன்னமோள்கூட எதையாவது பேசிக்கொண்டு, இவளுக்கு பழைய கதைகள் எதையாவது கூறிக்கொண்டு இந்த பால்கனியில உட்கார்ந்திருக்கிறது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது தெரியுமா? இல்லைன்னா, இந்த ஒற்றையடிப் பாதைகள் வழியா காலாற நடந்து தேயிலைகளைப் பறிக்கிற ஏழைத் தமிழ்ப் பெண்கள் கூட பேசிக் கொண்டு இருப்பதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கு!”

போபன் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனினும், ஒரு நீண்ட மவுனத்திற்குப் பிறகு அவன் ஒரு கேள்வியைக் கேட்டான்: ‘‘சரி, சூஸன்... நீ இந்த அளவுக்கு சொல்லிட்டேல்ல... என் நண்பர்களை உனக்கு நல்லா தெரியும். பெரும்பாலானவர்கள் இங்கே வந்திருக்காங்க.


அப்படி வராதவர்களும் உனக்கு ஏற்கெனவே அறிமுகமானவங்கதான். அவர்களில் யாராவது உன்னிடம் தவறுதலாகவோ, மரியாதைக் குறைவாகவோ நடக்கவோ பேசவோ செய்திருக்காங்களா?”

‘‘எப்பவும் இல்ல”- உடனடியாக பதில் சொன்னாள் சூஸன். அது உண்மையும் கூட.

அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் எத்தனையோ வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அவை ஓரளவுக்கு - ஓரளவுக்கு என்று கூறுவதற்கில்லை, பெரும்பாலும் சூஸனின் காதுகளில் வந்து சேரவும் செய்கின்றன. தேவகியம்மா மூலமாக, டிரைவர் மூலமாக, அலுவலகங்களிலும் எஸ்டேட்டுகளிலும் சாதாரண நிலையில் வேலை பார்ப்பவர்கள் மூலமாக அவை வந்து சேரும். ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லோரும் நல்ல மரியாதையுடன் பழகக்கூடிய நல்லவர்களே. அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்குள் மறைந்து கொண்டு பார்ப்பது என்பது அவளுடைய வேலை இல்லையே! அவர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் அன்பாகவும் பிரியமாகவும் பழகினார்கள் என்பதே உண்மை குறிப்பாகக் கூற வேண்டுமானால் மாளிகைபுரத்து குரியச்சன். அவரைப் பற்றிதான் அதிகமான கெட்ட தகவல்களை அவள் கேள்விப்பட்டிருந்தாள்.

அவற்றிலிருந்து எவ்வளவோ மாறுபட்ட மனிதர் அவர் என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். அவர் வீட்டிற்கு வந்தால் அன்ன மோளுடன்தான் பெரும்பாலும் இருப்பார். மகளுக்கு யானை விளையாட்டைக் காட்டுவது, அவளுக்கு புதிய விளையாட்டு பொம்மைகளை வாங்கிக் கொண்டு வந்து தருவது, புதிய புதிய கதைகளைக் கூறுவது - இவைதான் அவருடைய வேலைகள். வழுக்கைத் தலை அங்கிளை மகளுக்கும் உயிரெனப் பிடிக்கும். அவருக்கு ஒரு பேத்தி இல்லாத குறையைச் சரி பண்ணுவதே அன்னமோள்தான் என்று அவரே அடிக்கொருதரம் குறிப்பிடுவார். சூஸனை அவர் ஒரு மகளைப் போலவோ அல்லது ஒரு தங்கையைப் போலவோதான் தன் மனதில் நினைத்தார். போபனை ஒரு தம்பி என்றுதான் அவர் நினைத்தார்.

குரியச்சனின் மனைவி மரியம்மா மிகவும் நல்ல ஒரு பெண்ணாக இருந்தாள். நல்ல பழக்க, வழக்கங்களைக் கொண்ட ஒரு நடுத்தர வயதைக் கொண்ட பெண். ரூஷும் பவுடரும் பூசுவதில் அவளுக்கு எந்தச் சமயத்திலும் விருப்பம் இருந்ததில்லை. பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் விஷயத்தில் அவளும் சூஸனைப்போல விருப்பமில்லாமல் இருந்தாள். அவள் அப்படியொன்றும் அதிகமாக படித்திருக்கவில்லை. எனினும் எப்போதாவது ஒருமுறை சூஸன் சந்தித்துப் பேசக்கூடிய ஒரு பெண்ணாக அவள் இருந்தாள். அவர்கள் அடிக்கடி சந்திப்பதில்லை. ஆனால், சந்திக்கும் நேரங்களில் சகோதரிகளைப்போல உரையாடினார்கள். பல நேரங்களில் தொலைபேசி மூலமே அவர்கள் உரையாடிக் கொள்வார்கள். சூஸனின் கவிதைகள் பிரசுரமாகி வரும்போது, மரியம்மா தொலைபேசி மூலம் பேசுவாள். எப்போதும் அவள் கூறும் வார்த்தைகள் இவைதான்.

‘‘மகளே, கவிதை மிகவும் அருமையாக இருக்கு தெரியுதா? ஆனால், இது எதுவும் எனக்குப் புரியல. அதற்கேற்ற அறிவெல்லாம் எனக்கு இருக்கா என்ன?”

அதைக்கேட்டு சூஸன் சிரிப்பாள்: ‘‘இதுல புரிஞ்சிக்கிறதுக்கு என்ன இருக்கு அக்கா? உங்களுக்குப் பிடிச்சிருக்குல்ல...? அது போதும்.”

‘‘எனக்கு என் தாத்தாவிடம் இருந்த அறிவெல்லாம் இல்ல மகளே” - ஒருமுறை அவள் கவலையுடன் சொன்னாள்: ‘‘என் அப்பாவோட அப்பா பெரிய கவிஞர். எவ்வளவோ எழுதியிருக்காரு. அவருக்கு சமஸ்கிருதம் நல்லா தெரியும். சமஸ்கிருதத்துல இருந்து பல விஷயங்களையும் மலையாளத்துக்கு மொழி பெயர்த்துக் கொண்டு வந்திருக்காரு. நிறைய விருதுகளும் வாங்கியிருக்காரு. அதைச்சொல்லி என்ன பிரயோஜனம்? அந்தத் திறமையில கொஞ்சமாவது என்னிடம் இருக்க வேண்டாமா?”

‘‘அக்கா, அந்தத் திறமை உங்களிடம் இருக்கு” - சூஸன் அவளைத் தேற்றினாள்: ‘‘அக்கா, நீங்க எழுதிப் பார்க்கல.”

குரியச்சனின் மனைவி அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்: ‘‘நானா? எழுதுறதா? எழுதுறதுன்னா எல்லா எழுத்துக்களும் தெரிஞ்சிருக்க வேண்டாமா? என்கிட்ட விளையாடாதே மகளே” என்று அவள் கூறினாலும், மரியம்மா அக்கா பழைய மலையாள இலக்கியங்களை  நன்றாகப் படித்திருக்கிறாள் என்ற விஷயத்தை அவளுடன் உரையாடும்போது சூஸன் நன்றாகப் புரிந்து கொள்வாள். ஏராளமான பழைய கதைகளையும் தத்துவங்களையும் அவள் தெரிந்து கொண்டதே மரியம்மா அக்காவிடமிருந்துதான்.

குரியச்சனைப் பற்றி மரியம்மா சொன்ன விஷயம் சூஸனுக்கு மிகவும் புதுமையாக இருந்தது. ‘‘அவர் எங்கே போயிருக்காரு, எப்போ வருவாருன்ற விஷயத்தையெல்லாம் நான் விசாரிக்கிறதே இல்லை மகளே. அது அவரோட விஷயம். சொல்லப்போனால், இந்த ஆம்பளைங்க விஷயத்துல நம்மள மாதிரி பொம்பளைங்க எதற்குத் தேவையில்லாமல் ஈடுபடணும்? பிறகு... அவர் எங்கே போனாலும் அவருக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாதுன்னு நான் தினமும் கடவுள்கிட்ட வேண்டிக்குவேன். அவ்வளவுதான்.அவர் போயிட்டா எனக்கு யார் இருக்குறது. கொஞ்சம் சொத்தும் பணமும் இருக்கும். அது இங்கே எந்த நாய்க்கு வேணும்?”

அதைக் கேட்கும்போது வினோதமாகத் தோன்றினாலும், சூஸனுக்கு மரியம்மாவின் பார்வை சரியானதாகப் படவில்லை - இறுதியில் சொன்ன ஒன்றைத் தவிர.

குரியச்சனைப் போல அன்புடன் நடந்துகொள்ளக் கூடியவர்களாகத் தான் இருந்தார்கள் போபனின் மற்ற நண்பர்களும்.

ஆனால், எங்கேயோ ஒரு குறை தெரிந்தது. குறை தன்னிடம்தான் இருக்கிறதா என்று சூஸன் பல நேரங்களில் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் தான் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவள் அல்ல என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கூட அநத் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க அவளால் முடியாது. இங்கு அவள் அன்னியப்பட்டவள்தான். தனிமைப்பட்டவள்தான். சமூகம் என்ற இந்த வெள்ளப் பெருக்கில் மூழ்கி சாகப் போகிறவள்தான். அவள் பிடித்து ஏற ஒரு சிறு துரும்பாவது கட்டாயம் வேண்டும். அந்தச் சிறு துரும்புதான் போபன். அது துருப்பிடித்து விடக்கூடாது.

தான் சுயநல எண்ணம் அதிகம் கொண்டவள் என்ற விஷயம் சூஸனுக்குப் பல நேரங்களிலும் தோன்றும். ஆனால், அவள் தனக்குள் கூறிக்கொள்வாள்: ‘நான் அப்படிப் படைக்கப்பட்டவள். என்னுடைய இயற்கையான குணமே அதுதான் என்னும்போது எந்தவொரு அறுவை சிகிச்சையாலும் என்னை மாற்ற முடியாது.’

சிறு வயதாக இருக்கும்போதிலிருந்தே தான் இப்படித்தான் என்பதை சூஸன் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கென்று தோழிகள் இருந்ததில்லை... பணிக்கர் சாரின் மகள் விஜயம்மாவைத் தவிர. விஜயம்மா பாம்பு கடித்து இறந்துவிட்டாள். விஜயம்மாவின் நீல நிறம் படர்ந்து காணப்பட்ட உயிரற்ற உடலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவள் வாய்விட்டு அழுதாள். பிறகு அவ்வப்போது விஜயம்மா ஒரு சிரிப்புடன் அவளுடைய கனவுகளில் தோன்றினாள். அவளிடம் தமாஷாக எதையாவது பேசினாள். கற்களை வைத்து விளையாடுவதற்கு அழைத்தாள். கோவிலுக்குச் செல்வதற்காகக் கூப்பிட்டாள்.


பழம் பறிக்கப் போகலாம் என்று அழைத்தாள். சூஸன் பயந்துபோய் விட்டாள். விஜயம்மாவின் மரணத்திற்குப் பிறகு இன்றுவரை வேறொரு தோழியைக் கண்டுபிடிக்க அவளால் முடியவில்லை. இப்போதுகூட பல நேரங்களில் விஜயம்மா அவளுடைய கனவுகளில் வந்து கொண்டுதான் இருக்கிறாள்.

‘‘விஜயம்மா ஒரு ஆணாக இருந்திருந்தால், நீ அவளைத்தான் காதலிச்சிருப்பே! அப்படித்தானே?”... போபன் ஒரு முறை அவளைக் கேலி பண்ணினான். ஆனால், அந்த வார்த்தைகள் முற்களைப் போல அவளைக் குத்தின. அவள் வாய்விட்டு அழுதபோது போபன் அவளைத் தேற்றினான் : ‘‘நான் விளையாட்டுக்காகச் சொன்னேன் சூஸன் ! ஐம் ஆம் ஸாரி...”

தன்னுடைய இனம் புரியாத கவலைக்குக் காரணமே சிறு வயதில் தான் இழந்த அந்தத் தோழியாகத்தான் இருக்க வேண்டும் என்று பல நேரங்களில் சூஸன் நினைத்திருக்கிறாள்.

‘‘மகளே, கண் விழிச்சுத்தான் இருக்குறியா?”

நின்றுகொண்டே இருந்த தியானத்தில் இருந்து திடுக்கிட்டுத் திரும்பினாள் சூஸன். ஆவி பறந்து கொண்டிருந்த காப்பியுடன் தேவகியம்மா அவளுக்கு முன்னால் நின்றிருந்தாள்.

‘‘கீழே இறங்கி வராததால் நான் நினைச்சேன்... நீ தூங்கிக் கொண்டிருப்பேன்னு. எது எப்படியிருந்தாலும், வந்து எழுப்பலாம்னு நினைச்சேன். ஒரு காப்பி குடி.”

சூஸன் காப்பி கோப்பையைக் கையில் வாங்கினாள்.

‘‘நேற்றும் வரலையே! மூன்று நான்கு நாட்கள் ஆயிடுச்சே!” தேவகியம்மாவின் வார்த்தைகளுக்கு சூஸனிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.    

‘‘தொலைபேசியிலயும் அழைகக்ல... அப்படித்தானே?”

சூஸன் ‘இல்லை’ என்று தலையை ஆட்டினாள்.

‘‘குழந்தைக்கு இன்னைக்கு விடுமுறைதானே? தூங்கட்டும்... சரியா?”

அதற்கும் சூஸனின் பதில் மவுனமாக இருந்தது.

தொலைபேசி மணி ஒலித்தது. சூஸன் காப்பி கோப்பையை டீப்பாயின் மீது வைத்தாள். ஆர்வத்துடன் உள்ளே ஓடினாள். ரிஸீவரை எடுத்தாள்.

‘‘யெஸ்... என்ன...? ஸாரி... ராங் நம்பர்.”

ரிஸீவரைத் திரும்பவும் வைத்துவிட்டு அவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தபோது, கண்விழித்துப் படுங்ததிருந்த அன்னமோள் அழைத்தாள்: ‘‘அம்மா...” அவளுடைய குரலில் கவலை இருந்தது. ‘‘அம்மா, அப்பா எங்கே?”

‘‘வரல மகளே...” சூஸன் அவளுக்கு அருகில் சென்றாள்.

‘‘வந்தாச்சு... வந்தாச்சு... நான் இப்போ பார்த்தேனே? அம்மா, நீங்க பொய் சொல்றீங்க. அப்பாவை இங்கே கூப்பிடுங்க. அன்னமோள் கூப்பிடுறேன்னு சொல்லுங்க. அப்பா... அப்பா... நீங்க எங்கே ஒளிஞ்சிருக்கீங்க?” - சூஸன் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நிற்பதைப் பார்த்து அன்னமோள் சிரித்தாள்: ‘‘என்கிட்ட வேணும்னே விளையாடுறாரு. அது நடக்காது. அப்பா... அப்பா...” அடுத்த நிமிடம் அவள் அழ ஆரம்பித்தாள். பதைபதைத்துப் போன சூஸன் குழந்தையின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். பயங்கரமாக சுட்டது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. சூஸன் அருகில் உட்கார்ந்து குழந்தையை பலமாகப் பிடித்துக் கொண்டாள்.

சத்தம் கேட்டு உள்ளே ஓடிவந்த தேவகியம்மாவிடம் சொன்னாள்: ‘‘தேவகியம்மா, குழந்தைக்கு பயங்கரமா காய்ச்சல் அடிக்குது. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கா.”

குழந்தை கண்களை மூடிப் படுத்திருந்தாள்.

‘‘தேவகியம்மா, நீங்க இவள் பக்கத்துல வந்து உட்காருங்க. நான் டாக்டருக்கு ஃபோன் பண்ணுறேன்.”

அவள் தொலைபேசியை நோக்கி நடக்க ஆரம்பிக்க, தொலைபேசி மீண்டும் அடித்தது.

‘‘ஹலோ!”

‘‘மிசஸ் போபன் தாமஸா?”

‘‘ஆமா…”

‘‘கோட்டயத்துல இருந்து பேசுறேன். அவர் நாளைக்கு அங்கே வருவார்னு சொல்றதுக்காக ஃபோன் பண்ணினேன்.”

‘‘அவர் பக்கத்துல இருக்காரா? கொஞ்சம் கூப்பிட முடியுமா?”

அந்தப் பக்கம் சில நிமிடங்கள் ஒரே அமைதி. தொடர்ந்து போபனின் குழைவான குரல்: ‘‘என்ன சூஸன்?”

சூஸனின் குரல் கிட்டத்தட்ட ஒரு அழுகையைப் போலவே இருந்தது. ‘‘போபன், மகளுக்கு பயங்கரமா காய்ச்சல் அடிக்குது. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுறா. உங்களை உடனடியாக பார்க்கணும்னு சொல்றா.”

‘‘அதற்கு நீ ஏன் அழறே? டாக்டர் வர்மாவைக் கூப்பிடு. இல்லாட்டி டிரைவர் சங்கரன்குட்டி அங்கே இல்லையா? அவனை அழைச்சிக்கிட்டு டாக்டர்கிட்ட போ. நான் இன்னைக்கே அங்க வர முயற்சி பண்ணுறேன். இங்கே ஏராளமான வேலைகள் இருக்கு. பயப்படாதே. ஓகே... ஓகே...”

போபன் லைனைத் துண்டித்தான். கோட்டயத்தில் எங்கிருந்து பேசினான் என்று தெரியவில்லை.

அழுகையை அடக்கிக்கொண்டு சூஸன் டாக்டர் வர்மாவை அழைத்தாள். ஆறுதலான பதில் கிடைத்தது.

‘‘டோண்ட் ஒரி சூஸன். நான் ஐந்து நிமிடங்களில் அங்கே வர்றேன்.”

பறந்து வந்த டாக்டர் வர்மா இரட்டைக் கட்டிலில் குழந்தையின் கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு சுயஉணர்வு இல்லாமல் படுத்திருந்த சூஸனைப் பார்த்தார்.

‘‘அம்மா... அம்மா...” என்று அழைத்தவாறு அழுது கொண்டிருந்தாள் அன்னமோள். குழந்தையைத் தேற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த செயலற்ற தேவகியம்மா...

‘‘தேவகியம்மா...” - டாக்டர் சொன்னார்: ‘‘கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க, சீக்கிரமா...”

டாக்டர் சூஸனின் முகத்தில் நீரைத் தெளித்தார். தோளைப் பிடித்துக் குலுக்கினார்: ‘‘சூஸன்... சூஸன்...” அவள் கண்களைத் திறந்தபோது அவர், சொன்னார்: ‘‘என்ன இது? எழுந்திரு... எழுந்திரு.” ஒரு வெளிறிய புன்சிரிப்புடன் அவள் எழுந்திருக்க முயற்சித்தபோது, டாக்டர் சொன்னபடி தேவகியம்மா அவளைத் தாங்கிக் கொண்டாள்.

‘‘இப்போ நோய் தாய்க்கா, மகளுக்கா?”

சூஸன் வெட்கத்துடன் மீண்டும் சிரிக்க முயற்சித்தாள். டாக்டர் ஃபிரிட்ஜைத் திறந்து, சிறிது ஐஸை எடுத்து குழந்தையின் நெற்றியில் வைத்தார்.

‘‘பிரச்சினையில்ல... டெம்பரேச்சர் இப்போ குறைஞ்சிடும்” - டாக்டர் சொன்னார்: ‘‘இனிமேல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசமாட்டாள்.”

குழந்தை கண்களை மூடிப் படுத்திருந்தபோது, டாக்டர் முக்கியமான சோதனைகளைச் செய்துவிட்டு சொன்னார். ‘‘சூஸன் நாம மருத்துவமனைக்கு போறது நல்லது. கஷ்டமொண்ணும் இல்லையே?”

‘‘இல்ல டாக்டர்.”

‘‘அப்படின்னா தேவகியம்மாவையும் கூட அழைச்சிட்டுப் போ. கீழே சங்கரன்குட்டி இருக்கானா? “

‘‘ம்...”

‘‘அப்படின்னா முதல்ல நான் போறேன். நீங்க உடனடியா வந்துடணும்.”

‘‘சரி...”

மருத்துவமனையை அடைந்த டாக்டர் வர்மா, போனவுடன் க்ளப் செக்ரட்டரியை தொலைபேசியில் அழைத்தார்: ‘‘ஏய் சலீம்! டாக்டர் வர்மா ஹியர். நம்ம எஞ்சினியர் போபன் கோட்டயத்துல எங்கேயோ இருக்கார். எங்கே இருக்கார்னு கண்டுபிடிச்சு, உடனடியா இங்கே வரும்படி சொல்லுங்க. அவரோட மனைவியும் குழந்தையும் உடல் நலம் இல்லாமல் இங்கே, என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்காங்க. என்ன... கொஞ்சம் சீரியஸ்தான். ஆனால், பயந்துடுற மாதிரி எதுவும் சொல்ல வேண்டாம். என்ன... என்ன... தட்ஸ் ரைட்.. ஆனால், ஆள் உடனே இங்கே வரணும். இட் ஈஸ் எ மஸ்ட். ஓகே... ஓகே...”


இதற்கிடையில் டாக்டர் தலைமை நர்ஸை அழைத்து அறையைத் தயார் பண்ணுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அப்போது நோயாளிகள் வந்து சேர்ந்தார்கள்.

டாக்டர் நோயாளிகளைச் சோதனை செய்ய ஆரம்பித்தார்.

குழந்தையை நிமோனியா பாதித்திருந்தது. சற்று கடுமையாகவே பாதித்திருந்தது. இது எதுவும் தெரியாமல் அவள் படுத்திருந்திருக்க வேண்டும். முக்கியமாக செய்ய வேண்டியவற்றைச் செய்யச் சொல்லி நர்ஸிடம் கூறினார். பிறகு டாக்டர் சூஸனின் அருகில் வந்து அவளைச் சோதிப்பதற்கு மத்தியில் சொன்னார்:

‘‘குழந்தைக்கு நிமோனியாவின் அடையாளம் இருக்கு. பிரச்சினை எதுவும் இல்ல. சிகிச்சை பண்ணினா குணமாக்கிடலாம். உனக்கு வந்திருப்பது ஒரு ஸடன் மென்ட்டல் ஷாக். ஏன் இப்படி அதிர்ச்சியடையணும், பயப்படணும?  குழந்தைக்கு காய்ச்சல் வந்திருக்குன்றதுக்காக இப்படியா பயப்படுறது? சூஸன், இபப்டியா கோழையா இருக்குறது? இப்படியா விவரமே இல்லாதவங்க மாதிரி நடக்குறது? கொஞ்சமாவது மன தைரியத்துடன் இருக்க வேண்டாமா? இந்த அளவுக்கு டென்ஷன் இருக்கக்கூடாது. டென்ஷன் ஈஸ் நாட் குட். குறிப்பாக உன் விஷயத்துல. யுவர் ஹார்ட் ஈஸ் எ லிட்டில் வீக்.”

அதைச் சொன்னபோது சூஸனின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்ற விஷயம் டாக்டர் வர்மாவுக்கு நன்றாகத் தெரியும். சிறிய ஒரு மனரீதியான பாதிப்புகூட அவளுடைய இதயத்தை தாக்கக் கூடியதாக இருந்தது.

இரண்டு பேருக்கும் அவசியம் தரவேண்டிய மருந்துகளைக் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு டாக்டர் சொன்னார்: ‘‘தேவகியம்மா, நீங்க இங்கேயே இருங்க. மேரிக்குட்டி ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் வருவாள். நானும் இடையில் வருவேன். சூஸன், டேக் ரெஸ்ட். ம்... பிறகு... போபன் எங்கே இருந்தாலும் கண்டுபிடிச்சு இங்கே அனுப்பி வைக்கணும்னு சொல்லி இருக்கேன்...”           

4

டாக்டர் அங்கிருந்து போனவுடன் சூஸன் முதலில் நினைத்தது போபனைத்தான். பாவம் போபன்! இரண்டு பேரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள் என்ற விஷயத்தை டாக்டர் அவனுக்குத் தெரிவித்திருப்பாரோ? அப்படியென்றால் போபன் மிகவும் கவலைப்படுவான். அது உடனடியாக அவனுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்குமோ? டாக்டர் அப்படியெல்லாம் கூறியிருக்கமாட்டார் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும், போபனைப் பற்றி உண்டான கவலை அவளை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருந்தது. தங்களுடைய சந்தோஷமான நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். சந்தோஷமான நாட்களா? அவள்தானே தவறைத் திருத்திக் கொண்டாள். தங்களுடைய நாட்கள் எப்போதும் சந்தோஷமானவைதான் என்று அவள் நினைத்தாள். இனி வரப்போகும் நாட்கள் கூட அப்படித்தான் இருக்கும்.

அடுத்த நிமிடம் இன்னொரு வேதனை வந்து அவளை ஆக்கிரமித்துக் கொண்டது. மகளுக்கு - தங்க மகளுக்கு - உடல் நலமில்லை என்று சொன்னபோது எவ்வளவு அலட்சியமான குரலில் போபன் பதில் சொன்னான்! அந்த அளவிற்கு மிகவும் சர்வ சாதாரணமாகப் பேச போபனால் எப்படி முடிந்தது என்று அவள் ஆச்சரியப்பட்டாள். ஆனால் அதையும் போபனின் குற்றமாகப் பார்க்க அவள் தயாராக இல்லை. மதுதான் போபனை அப்படிக் கூற வைத்திருக்க வேண்டும். குடித்து நிலை குலைந்த நிலையில் இருக்கிறான் என்பது அவனுடைய குரலிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. இல்லாவிட்டால் தன்னுடைய செல்ல மகளுக்கு உடல் நலமில்லை என்பதைக் கேட்ட நிமிடத்தில் வேறு எந்த வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு போபன் உடனடியாக ஓடி வந்திருப்பானே! இதற்கெல்லாம் காரணம் அந்தஸ்து என்ற அடையாளத்திற்குப் பின்னால், பணத்திற்கும் புகழுக்கும் பின்னால் போபன் ஓடிக் கொண்டிருந்தான். அப்படியென்றால் அதற்குக் காரணம்? போபனிடம் இந்த அளவிற்கு நம்ப முடியாத வகையில் மாறுதலை உண்டாக்கக்கூடிய ஆற்றல் இந்த சமூகத்திற்கு இருக்கிறது என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

நல்ல குடும்பத்தில் பிறந்த, மனிதாபிமானம் கொண்ட, கொள்கைப் பிடிப்பு உள்ள போபனிடம்கூட மனரீதியான ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்க பணத்தையும் புகழையும் மட்டுமே விரும்பக்கூடிய இந்த சமூக அமைப்பிற்கு முடிந்திருக்கிறது. சூஸனுக்கு இந்த உலகத்தின் மீது மிகுந்த கோபம் உண்டானது. இங்கு அன்பிற்கும், தியாகத்திற்கும் சிறிதுகூட மதிப்பு இல்லை. அவளுடைய மனதில் கோபத்தின் வீச்சுகள் உண்டாயின.

அவள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தன் குழந்தையையே பார்த்தாள். நிமோனியா என்றுதானே டாக்டர் கூறினார்? ‘கடவுளே... என் குழந்தைக்கு... இல்லை... ஒரு ஆபத்தும் வராது’ - அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

இறுதியில்தான் அவள் தன்னைப் பற்றி நினைத்தாள். இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று டாக்டர் கூறியதை அவள் நினைத்துப் பார்த்தாள். எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்று அவர் கூறவில்லை. பரவாயில்லை. அவளுக்கு அவளுடைய போபனின் மடியில் தலையை வைத்துக் கொண்டு மரணமடையக் கூடிய அதிர்ஷ்டம் இருந்தால் போதும். அப்படியென்றால் தன்னுடைய போபன், தன்னுடைய அன்னமோள்... அவர்களை யார் பார்ப்பார்கள்? ‘நான் வாழணும்’ - அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாள். ‘அவர்களுக்காக.’

கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஒரு அரைத் தூக்கம் என்னும் இனிய அனுபவத்திற்குள் மூழ்கிப் போனாள்.

‘‘சூஸன், வா... நாம அந்த மலைப் பக்கம் போய் தெச்சிப் பூக்களைப் பறிப்போம்.”

விஜயம்மா வந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து மலைமீது ஏறினார்கள். தெச்சிச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்து குருதி நிறப் பூக்களுடன் காட்சியளிக்கும் சிவந்த மலை. அந்தச் சிவப்பில் அவர்கள் ஓடியும் குதித்தும் நடந்து போனார்கள். தெச்சிப் பூக்களைப் பறித்து ஒரு கூடையில் நிரப்பினார்கள். மலைப்பகுதியில் உட்கார்ந்து கல் விளையாட்டு விளையாடினார்கள். நேரம் போனதே தெரியவில்லை. மாலை மயங்கிக் கொண்டிருந்தது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. மலை உச்சியில் அப்போதும் வெளிச்சம் இருந்தது. ஆனால், மேற்கு திசையில் இருந்த வயல்களுக்கும் குறுவஞ்சி ஆற்றுக்கும் அப்பால் சூரியன் கீழே இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.

‘‘வா... வா... நேரம் அதிகமாயிடுச்சு” - சூஸன் சொன்னாள்: ‘‘இன்னைக்கு என் அம்மாகிட்ட இருந்து நல்ல உதை கிடைக்கப்போகுது.”

‘‘எனக்கு என் அப்பாக்கிட்ட இருந்து… அப்பா காதைப் பிடித்துக் கிள்ளுவாரு. காது சிவந்திடும்.”

அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மலையை விட்டு இறங்கியபோது, சுற்றிலும் இருட்டு பரவி விட்டிருந்தது.

அதற்கு அடுத்த நாள் விஜயம்மாவைப் பாம்பு கடித்துவிட்டது.

‘‘விஜயம்மா...” - அவள் அலறினாள்.

‘‘என்ன குழந்தை? என்ன ஆச்சு?” தேவகியம்மா பதைபதைப்புடன் கேட்டாள்.


பதில் எதுவும் வரவில்லை. சூஸன் உறங்கிக் கொண்டிருந்தாள். மதியத்திற்கு முன்பு போபன் வந்துவிட்டான். அப்போதும் அன்ன மோளும் அவளுடைய அன்னையும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள்.

தேவகியம்மா சூஸனை எழுப்ப முயன்றபோது டாக்டர் வேண்டாமென்று தடுத்தார். டாக்டர் போபனிடம் சொன்னார்: ‘‘வா... நாம என் தனியறையில் போய் இருப்போம். அவர்கள் எழுந்திருக்கட்டும். அப்போ வருவோம்.”

போபனின் கண்கள் சிவந்து கலங்கியிருந்ததையும் அவனுடைய முகத்தில் சிறு சிறு உரோமங்கள் நீல நிறத்தில் வளர்ந்து காணப்பட்டதையும் வர்மா கவனித்தார். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு குளிர்ந்த எலுமிச்சை ஜூஸ் குடித்தார்கள்.

‘‘உனக்கு நான் அறிவுரை சொல்றதுக்கு இல்ல” - டாக்டர்தான் பேச்சை ஆரம்பித்தார்: ‘‘உன் போக்கு சரியில்ல....”

‘‘யு மீன்?”

‘‘நீதான் உயிர் என்று சொல்லிக்கிட்டு இருக்குற ஒரு மனைவி. நீயும் உன் மனைவியும் உயிரைவிட பெரிதாக அன்பு செலுத்துகிற ஒரு மகள். ஒரேயொரு மகள். அவங்களை மறந்துட்டு...”

‘‘நான் அவங்களை மறந்துட்டேன்னு யார் சொன்ன்து?”

‘‘உன்கிட்ட வாதம் பண்ண நான் தயார் இல்ல. நீ உன் மனசாட்சிக்கிட்ட கேட்டுப்பாரு. டேய், நானும் மது அருந்துறவன்தான் ஆனால், அதற்கும் ஒரு அளவு இருக்கு. நீ சம்பாதிக்கிற பணத்தை புல் மாதிரி நினைக்கிற ஒரு பெண்தான் சூஸன் என்று பல நேரங்களில் எனக்குத் தோணியிருக்கு. ஆனால் அந்தக் குழந்தை வேற எதையும்விட அதிகமா உன்மேல அன்பு வச்சிருக்கு.”

‘‘எனக்கு அவள்மீது பாசம் இல்லைன்னா நீங்க சொல்றீங்க?”

‘‘ஏய்... அப்படி நான் சொல்லல” - டாக்டர் தன்னுடைய குரலை சாதாரணமாக இருக்கும் வண்ணம் கொண்டு வர முயற்சி செய்தார். “ஆனால், நீ அவர்களைவிட வேறு சிலவற்றின் மீது அதிக அன்பு வச்சிருக்கேன்னு எனக்குத் தோணுது. பணம், புகழ், உன்னுடைய ஆடம்பர வாழ்க்கை... இப்படி இப்படி...”

‘‘எந்தச் சமயத்திலும் இல்ல....” - போபன் உணர்ச்சிவசப்பட்டான்.

‘‘அப்படி இல்லைன்னா உனக்கும் உன் குடும்பத்திற்கும் நல்லது” - ஒரு புன்சிரிப்புடன் வர்மா சொன்னார்: ‘‘நான் பார்த்த சில விஷயங்களைக் குறிப்பா சொன்னேன். அவ்வளவுதான். ஒரு நண்பனைப் போல, ஒரு சகோதரனைப் போல...”

போபனின் முகம் அதைக்கேட்டு கடுமையாகிவிட்டது. அவனுடைய கண்கள் சுவரில் இருந்த கடிகாரத்தையும் காலண்டரையும் மனித உடலின் எலும்புக்கூடு வரையப்பட்டிருந்த படத்தையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. மேஜைமீது இருந்த பேப்பர் வெயிட்டைக் கையில் எடுத்து அவன் அதை உருட்டிக் கொண்டிருந்தான். பிறகு அவன் பேப்பர் வெயிட்டைக் கீழே வைத்துவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து அலட்சியமாக புகையை இழுத்தான். மொத்தத்தில் தெளிவற்ற மனநிலையில் இருக்கிறான் என்பதை டாக்டர் புரிந்து கொண்டார்.

‘‘இன்னொரு விஷயம்...” - வர்மா தொடர்ந்து சொன்னார்: ‘‘குழந்தையின் உடல் நிலை கொஞ்சம் மோசம்தான்... அநத் அளவுக்கு சீரியஸ் என்று நான் சூஸனிடம் சொல்லல. சூஸனை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் என்று நான் நினைச்சேன்.”

‘‘அந்த அளவுக்கு சீரியஸா?” போபன் பதறிப்போய் கேட்டான்.

‘‘அதாவது... சிகிச்சை செய்து குணமாக்கிடலாம். அதைவிட முக்கியமானது சூஸனைப் பற்றிய விஷயம். ஒரு சிறிய அதிர்ச்சியைக் கூட தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி அவளுடைய இதயத்துக்கு இல்ல. ஹெர் ஹார்ட் ஈஸ் ஸோ வீக். அவளுடைய இதயம் மிகவும் பலவீனமா இருக்கு. அது முழுமையா பாதிக்கப்பட பெரிய காரணம் எதுவும் தேவையில்ல.”

‘‘டாக்டர்!”

‘‘எந்தவிதமான மனரீதியான போராட்டங்களும் சூஸனுக்கு உண்டாகக் கூடாது. அப்படி உண்டானால் சில நேரங்களில் அதிகமாகக் கவலைப்பட வேண்டியதிருக்கும்.”

‘‘யு மீன்?”

‘‘ஐ மீன் வாட் ஐ ஸே” - டாக்டர் வர்மா உறுதியாக - அதே நேரத்தில் மெதுவான குரலில் சொன்னார்: ‘‘டேய், என்னால் அப்படி நினைக்கக் கூட முடியல.” போபன் மிகவும் நிலைகுலைந்து போயிருக்கிறான் என்பதை வர்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து அவரே சொன்னார்: ‘‘உன்னைக் கவலைப்பட வைக்கணும்ன்றதுக்காக நான் சொல்லல. நான் ஒரு டாக்டரின் கடமையைச் செய்யறேன். அவ்வளவு தான். ஒரு நண்பனின் கடமையையும் கூட...”

தன் கைகள் இரண்டையும் இரண்டு கன்னங்களிலும் அழுத்தி வைத்தவாறு போபன் எந்தவித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்கள் ஈரமாவதை வர்மா பார்த்தார்.

‘‘ஐ ஸே டேக் இட் ஈஸி” - வர்மா எழுந்து அவனுக்கு அருகில் வந்தார். அவனுடைய தோள் மீது தன் கையை வைத்தார்: ‘‘ஏய்... அப்ஸெட் ஆகக்கூடாது. எதுவும் கட்டுப்பாட்டை விட்டு மீறிப் போயிடல... நீ எழுந்திரு. அதோ அந்த பாத்ரூமிற்குள் நுழைஞ்சு முகம், உடம்பு எல்லாத்தையும் கழுவு. அங்கே துவாலை இருக்கு. தேவைப்பட்டால் சவரம்கூட செய்துக்கோ. உன்னை இந்தக் கோலத்துல பார்த்தால், சூஸன் நிச்சயம் அதிகமா கவலைப்படுவா” - டாக்டர் அவனைப் பிடித்து எழ வைத்தார். ‘‘கமான்... சியர் அப்... ஓல்ட் பாய்.”

சொன்னபடி கேட்கும் ஒரு குழந்தையைப்போல போபன் எழுந்தான். தன்னுடைய ப்ரீஃப்கேஸை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அந்தச் சமயம் நர்ஸ் மேரிக்குட்டி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.

‘‘என்ன மேரிக்குட்டி? ஸம்திங் ராங்...”

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல டாக்டர். போபன் ஸாரின் மனைவி கண் விழிச்சிட்டாங்க. அவர் இங்கே வந்திருக்காருன்னு அவங்ககூட இருக்குற பெண் சொன்னாங்க. உடனே அழைச்சிட்டு வரச் சொன்னாங்க.”

‘‘அவ்வளவுதானா விஷயம்? பரவாயில்ல... போபன் குளியலறையில் இருக்காரு. இதோ இரண்டு நிமிடங்கள்ல நாங்க அங்கே வர்றோம்.”

‘‘ஓகே சார்...”

குளித்து ஆடைகள் மாற்றிவிட்டு வந்த போபன் ஒரு மாறுபட்ட மனிதனாக மாறிவிட்டதைப் போல் இருந்தது. அவன் வேட்டியும் ஜிப்பாவும் அணிந்திருந்தான். சூஸனுக்கு மிகவும் பிடித்தமான ஆடைகள் அவை. அவனுடைய கண்களில் இருந்த கலவரம் மாறியிருந்ததை டாக்டர் பார்த்தார். போபன் இப்போது மலர்ந்த முகத்துடன் இருப்பதைப்போல் அவர் உணர்ந்தார்.

‘‘வாடா... நாம கீழே போகலாம். உன் மனைவி கண் விழித்து உன்னை அழைக்கிறா.”

‘‘அப்படியா?” - போபனின் முகம் மேலும் மலர்ந்தது. அவனுடைய மனம் திருவிழாவிற்குச் செல்வதற்குத் தயாராக இருக்கும் ஒரு குழந்தையின் மனதைப் போல உற்சாகத்தால் துள்ளிக் கொண்டிருந்ததை டாக்டர் வர்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது.

போபனை வரவேற்க நிற்பதைப்போல் சூஸன் அவனுக்காகக் காத்து நின்றிருந்தாள். முகத்தைக் கழுவி மலர்ச்சியுடன் நின்றிருந்த சூஸனைப் பார்க்கும்போது அவள் ஒரு நோயாளி என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது.


‘‘ஓ... சூஸன், யூ லுக் வெரி ஸ்மார்ட் நான் காலையில் பார்த்த கோலமே இப்போ இல்லையே!” - டாக்டர் சிரித்தார். போபனைக் கண்டதும் அவள் முழுவதுமாக மாறிவிட்டாள். அவளுடைய முகம் பிரகாசமாக இருந்தது. நிம்மதி, அன்பு, காதல் எல்லாமே வெளிப்படையாக அவளுடைய கண்களில் தெரிந்தது.

‘‘ஓ... போபன், நீங்க பறந்து வருவீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். என் உடம்புக்கு எந்தக் கெடுதலும் இல்லை போபன். நான் மகள்கூட இங்கே வந்தேன். அவ்வளவுதான். டாக்டர் எதையாவது சொல்லி பயமுறுத்திட்டாரா?”

‘‘ம்... வேற யார் மீதாவது குற்றத்தைச் சுமத்தக் கூடாதா? சீக்கிரம் வந்து சேருன்னு தகவல் தந்தவன் நான்... இப்போ இவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டாங்க” - டாக்டரின் பேச்சைக் கேட்டு தேவகியம்மா சிரித்துவிட்டாள். அவனுடைய சிரிப்பு மற்றவர்களிடமும் படர்ந்தது. ‘‘நான் ஒரு வார்த்தைகூட பேசல. பேச வேண்டியதை நீங்களே பேசிக்கோங்க.”

போபனுக்கு சூஸனை அப்படியே வாரி எடுத்து அணைத்துக் கொள்ள வேண்டும்போல் இருந்தது. சூஸனும் அதை விரும்பினாள் என்பது உண்மை.

போபன் அன்னமோளின் அருகில் சென்றான். அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்தான். நெற்றியில் முத்தமிட்டான். மெதுவான குரலில் அழைத்தான்: ‘‘மகளே!”

ஒரே அழைப்பில் குழந்தை கண்களைத் திறந்தாள்.

‘‘அப்பா!” - அவள் தன்னுடைய இரண்டு கைகளாலும் போபனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள்: ‘‘அப்பா... எங்கே போய் ஒளிஞ்சிக்கிட்டீங்க?  ஃப்ரிட்ஜிக்குப் பின்னாலா? இல்லாட்டி குளியலறைக்குள்ளா? நான் கண்களைத் திறந்து பார்த்தப்போ. அப்படி, உங்களைக் காணோம். இப்போ என் முன்னாடி நிக்கிறீங்க, நட்சத்திரத்தைப்போல.”

‘‘வா மேரிக்குட்டி. நாம போகலாம்” - டாக்டர் சொன்னார்: ‘‘இனி அவங்களாச்சு. அவங்க பாடாச்சு. தேவகியம்மா, நீங்களும் வாங்க. மேரிக்குட்டிகூட போயி ஏதாவது சாப்பிடுங்க. காலையிலிருந்து பட்டினிதானே?”

‘‘அய்யோ... பரவாயில்ல... இருக்கட்டும்” - தேவகியம்மா மறுத்தாள்.

‘‘வாங்க...” - மேரிக்குட்டி அவளின் கையைப் பிடித்து இழுத்தாள்.

‘‘போங்க தேவகியம்மா” - சூஸன் சொன்னதும், அவள் போகத் தயாரானாள்.

‘‘டேய்..” - டாக்டர் போபனிடம் சொன்னார்: ‘‘நீ கொஞ்சம் பேசிட்டு மேலே வா. நீ வந்த பிறகுதான் நான் சாப்பிடுவேன். சூஸனுக்கு இங்கே உணவு கொடுத்து அனுப்புறேன்.”

‘‘ஓகே.”

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலைமதிப்புள்ள நிமிடங்களின் வழியாகத்தான் இப்போது படகைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்று சூஸன் நினைத்தாள். எஞ்சினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போபன். அனல் பறக்க சொற்பொழிவாற்றிய போபன், தன்னுடைய கவிதைகளைப் பார்த்து கிண்டல் செய்த போபன், தன்னுடைய எல்லாமுமாக ஆன போபன்... காலம் அவளுடைய கைப்பிடிக்குள் அடங்கியது. அவள் கட்டிலில் போபனுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள். மகள் இருப்பதைக்கூட மறந்து அவனுடைய மடியில் தன் தலையை வைத்துக் கொண்டு அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

‘‘சூஸன், என்ன இது?”

‘‘அம்மா, ஏன் அழறீங்க?”

‘‘அம்மா அழவில்லை மகளே!” - சூஸனின் பதில். நிற்காத ஒரு சோகப் பாடலைப் போல போபனுக்குத் தோன்றியது.

அவன் அவளுடைய தலைமுடியை வருடினான்.

அடிவாரத்திலிருந்து பனிப்படலங்கள் மலையை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தன. மீண்டும் அவை அடிவாரத்தை நோக்கிக் கீழே போயின. மேலும் கீழுமாக அவை போய்க்கொண்டே இருந்தன.

சூஸன் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தாள்.

போபன் அலுவலகத்திற்குப் போயிருந்தான். குழந்தை அவர்களின் தற்காலிக வீட்டில், அதாவது - வர்மாவின் மருத்துவமனையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். தேவகியம்மா ஏதோ பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குப் போயிருந்தாள்.

அன்னமோளின் உடல்நலக் கேட்டின் கடுமை குறைவது வரை அவர்களின் வீடு வர்மாவின் மருத்துவமனைதான். போபன் இரவில் டாக்டர்களுக்குச் சொந்தமான அறையில் உறங்கினான். அங்கு தங்கியிருக்கும் காலத்தில் அவனுடைய நண்பர்கள் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள்தான்.

‘‘என்ன இருந்தாலும் அப்பவே என்னைக் கொஞ்சம் கூப்பிட்டிருக்கக் கூடாதா மகளே?-” என்ற வருத்தத்துடன் மரியம்மா அக்கா அங்கு வந்தாள். அங்கு முதலில் வந்த பார்வையாளர்களே குரியச்சனும் அவனுடைய மனைவியும்தான்.

மருத்துவமனையிலிருந்து புறப்படுகிற நாளன்று டாக்டர் வர்மா சூஸனுக்குக் கூறப்பட வேண்டிய விஷயங்களைக் கூறினார்: ‘‘குழந்தையின் உடல்நலக் கேடு முழுவதுமாக குணமாகல. சரியான நேரத்திற்கு மருந்துகளைக் கொடுக்கணும். சொன்ன நேரத்திற்கு உணவு தரணும். அவளுக்கு அருகில் எப்பவும் ஆள் இருக்கணும். சூஸன், சொல்றது புரியுதுல்ல...?”

‘‘புரியுது டாக்டர்.”

டாக்டர், போபனிடம் மெதுவான குரலில் சொன்னார்: ‘‘டேய், நான் சொன்னதெல்லாம் ஞாபகத்துல இருக்குல்ல... சூஸன் விஷயத்துல அதிக அக்கறை எடுத்துக்கணும். அவளுக்கு எந்தச் சமயத்திலும் டென்ஷன் உண்டாகக்கூடாது. நீ அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் அது. எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு சூஸனுக்கு அன்பையும், அக்கறையும் கொடு... ஓகே!” 

‘‘ஒகே...” - அவர்கள் ஒருவரையொருவர் இறுக தழுவிக் கொண்டார்கள்.

கார் கிளம்புவதற்கு முன்னால் டாக்டர் சொன்னார்: ‘‘நான் சாயங்காலம் அந்த வழியா வர்றேன்.”

சொன்னது மாதிரியே சாயங்காலம் டாக்டரும் அவளுடைய மனைவியும் வந்தார்கள். இரவு உணவு முடிந்து நீண்ட நேரம் ஆன பிறகுதான் விருந்தாளிகள் அங்கிருந்து புறப்பட்டார்கள். அன்னமோளும் தேவகியம்மாவும் தூங்கிய பிறகும்கூட அவர்கள் நான்கு பேரும் அமர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

மனைவிமார்களைச் சாட்சியாக வைத்துக்கொண்டே போபனும் வர்மாவும் சிறிது பிராந்தி அருந்தினார்கள். இதற்கிடையில் டாக்டர் சொன்னார்: ‘‘டேய்... எப்போதாவது ரெண்டு பெக்குகள் குடிக்கிறதுனால பெரிய அளவுக்கு கெடுதல் எதுவும் வந்துடாது. கட்டுப்பாடு கட்டாயம் இருக்கணும். சரியாக உணவு சாப்பிடணும். இல்லாவிட்டால் குடலில் அல்ஸர் வந்திடும். ஆனால், ஒரு விஷயம்... நீ புகை பிடிக்கிறதை நிறுத்தணும். என்ன செய்ன் ஸ்மோக்கிங்! இதை நிறுத்தலைன்னா பிரச்சினைதான்...”

‘‘ஓ... நீங்களும் உங்களுடைய ஒரு மெடிக்கல் அட்வைஸும்...”

அடுத்த சிகரெட்டிற்கு நெருப்பு பற்ற வைத்தவாறு போபன் சிரித்தான். ‘‘இனிமேல் பிரச்சினையே இந்த மாதிரியான அட்வைஸ்கள் தான்!”

‘‘மெடிக்கல் அட்வைஸ்னா அப்படித்தான் இருக்கும். எப்படி வேணும்னாலும் நினைச்சிக்கோ, எது எப்படி இருந்தாலும் மேலும் கொஞ்ச வருடங்கள் வாழணும்னா...”

‘‘ஓ... கொஞ்ச வருடங்கள்...! - போபன் பிறகும் சிரித்தான். ‘‘வின்ஸ்டன் சர்ச்சில் எந்த வயதில் மரணமடைந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

‘‘அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்ல” - டாக்டர் சொன்னார்: ‘‘அவர் என்னுடைய நண்பர் இல்லையே!”

‘‘ஓ... தேங்க்யூ.”


‘‘டாக்டர் சொல்றதுல அர்த்தம் இருக்கு.”

சூஸன் சொன்னாள்: ‘‘இப்படியா விடாம புகை பிடிக்கிறது?”

‘‘ம்... இதோ இன்னொரு ஆளும் வக்காலத்துக்கு வந்தாச்சு.”

போபன் மிசஸ் வர்மாவின் பக்கம் திரும்பினான்: ‘‘ஷாலினி நீங்களாவது எனக்காக கொஞ்சம் வாதாடணும். ஷாலினி வர்மா சிரித்தாள். ‘‘வாதாடுறதுக்கு நான் வக்கீல் இல்லையே! அது மட்டுமல்ல. நான் இந்த இரண்டுக்குமே எதிரானவள். இந்தக் குடிப்பதற்கும் இந்த புகைப்பிடிப்பதற்கும் எதற்குத் தேவையில்லாம தொண்டையையும் இதயத்தையும் புண்ணாக்கிக்கணும்?”

‘‘சரிதான்...” - போபன் விழுந்து விழுந்து சிரித்தான்: ‘‘எனக்கு வக்காலத்து வாங்க அருமையான வக்கீலைத்தான் நான் கண்டுபிடிச்சிருக்கேன்!”

நட்பை வெளிப்படுத்தும் உற்சாகமான நிமிடங்கள் வெளியே இருந்த அழுத்தத்தைக் குறைத்தன.

மறுநாள் போபனின் வீட்டில் ஒரு பார்ட்டி என்ற தீர்மானத்துடன் அவர்கள் பிரிந்தார்கள்.

‘‘பார்ட்டி வைக்கிறது சரிதான்” - வர்மா முன்னெச்சரிக்கை என்பது மாதிரி சொன்னார்: ‘‘சூஸன், எந்தவொரு கடினமான வேலையையும் செய்யக்கூடாது. பார்ட்டி நடக்குறப்போ வந்திருக்குறவங்கக்கிட்ட நலம் விசாரிச்சா போதும். வேலை செய்றவங்களுக்கு உத்தரவு எதுவும் போட வேண்டாம். அதையெல்லாம் தேவகியம்மா பார்த்துக்குவாங்க. புரியுதா?”

‘‘ம்...”

‘‘டேய், இந்த விஷயத்துல நீ மிகவும் கவனமா இருக்கணும்” - வர்மா நண்பனிடம் சொன்னார்.

அந்த இரவு தங்களின் முதலிரவு என்பதாக சூஸன் நினைத்தாள். போபனும்தான். உதட்டுடன் உதட்டை உரசிக் கொண்டு, காதுகளில் ரகசியம் சொல்லி, நீண்ட நேரம் அவர்கள் கண்விழித்துப் படுத்திருந்தார்கள்.

‘‘நான் இப்போ பழைய போபன், சூஸன். உன்னுடைய பழைய போபன். நான் திரும்ப வந்திருக்கேன். திருந்திய மனிதனாகத் திரும்பி வந்திருக்கேன்.”

அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்- இனிமேல் விடவே மாட்டேன் என்பது மாதிரி. அவளுடைய நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்து முறுக்குகின்றன என்பதை அவன் உணர்ந்தான். அவனும் கண்விழித்திருந்தான். வெறிபிடித்த பழைய இரவுகள் திரும்பி வருவதைப் போல் அவன் உணர்ந்தான். ஒருவரையொருவர் தேடக்கூடிய ஆவேசம்... ஒருவரையொருவர் விழுங்கக்கூடிய வேட்கை... வெளியே காற்றில் இரத்தக் குழாய்களை சூடு பிடிக்கச் செய்த இரவு ராகங்கள் மட்டும்...

சூடு தணிந்தபோது, ராகங்கள் மவுனத்திற்குள் ஒளிந்து கொண்டபோது அவன் அவளிடம் சொன்னான்: ‘‘நான் மூன்று மாதங்கள் விடுமுறை வேண்டும்னு மனு கொடுத்திருக்கேன்.” அவள் காரணத்தைக் கேட்பதற்கு முன்பே  அவன் விளக்கினான்: ‘‘இங்கேயிருந்து கொஞ்ச நாட்கள் விலகி இருக்குறது உன்னுடைய உடல் நலத்திற்கும், குழந்தையின் உடல் நலத்திற்கும் நல்லதா இருக்கும் என்றார். ‘எனக்கும்’என்பதை இன்னொரு முறை சொன்ன அவன் சிரித்தான்.

சூஸனுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும்போல் இருந்தது. அவளுடைய மனம் முழுமையாகத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. அவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

‘‘நாளைய பார்ட்டியின் முக்கிய நோக்கமே- இந்தச் செய்தியைக் கூறுவதற்குத்தான். என்ன சொல்ற?”

அவள் எதுவும் சொல்லவில்லை. அதற்கு பதிலாக அவனுடன் எந்த அளவிற்கு ஒட்ட முடியுமோ அந்த அளவிற்கு ஒட்டிப் படுத்திருந்தாள். அவனை இறுக அணைத்துக் கொண்டிருந்த தன் கைகளால் மேலும் இறுக்கமாக அணைத்தாள்.

மறுநாள் பார்ட்டி மிகவும் சிறப்பாக நடந்தது. எல்லோரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த நேரத்தில் டாக்டர் வர்மா வெடிகுண்டை வெடித்தார்.

‘‘நம்முடைய நண்பர் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினியர் போபன் தாமஸ் மூன்று மாத விடுமுறையில் செல்கிறார்.”

‘‘என்ன?”- எல்லோரின் தொண்டைகளிலிருந்தும் ஒன்று போல, ஒரே நேரத்தில் அந்தச் சத்தம் வந்தது. அவர்கள் மத்தியில் குசுகுசுவென பேச்சு உண்டானபோது, வர்மா கைகளைத் தட்டினார். அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் தொடர்ந்து சொன்னார்: ‘‘உடல் நலத்தை முன்னிட்டு அவர் விடுமுறை எடுக்கிறார். யாரும் அது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. மூன்று மாதங்கள் ஆன பிறகு, அவர் இன்னும் அதிகமான உற்சாகத்துடன் திரும்பவும் வருவார். தற்போதைக்கு இது கட்டாயம் தேவை. அவருடைய மனைவி மற்றும் குழந்தையின் உடல்நலம் முக்கியமானது. அவர்களின் உடல்நலம்  காப்பாற்றப்பட வேண்டுமென்றால், அவர் அருகில் இருப்பது அவசியமாகிறது. அதனால் நாம் நம்முடைய கவலை, வருத்தம் ஆகியவற்றை அடக்கிக் கொண்டு அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஸோ... ஃபார் தி ஹெல்த் ஆஃப் போபன் தாமஸ் அன்ட் ஹிஸ் ஃபேமிலி!”

டாக்டர் குவளையை உயர்த்தினார்.

தொடர்ந்து வந்த நாட்களில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வீட்டில் போபனுக்கும் குடும்பத்திற்கும் விருந்து அளிக்கப்பட்டது.

இறுதியில் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முந்தைய நாள் க்ளப்பில் பொதுவான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. பலரும் கண்ணீருடன் விடை சொன்னார்கள். பெண்கள் சூஸனையும் குழந்தையையும் இறுக அணைத்துக் கொண்டு அழுதார்கள். மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் சூஸன் அவர்களைத் தேற்றினாள்:

‘‘நாம மீண்டும் சந்திப்போமே! இது தற்காலிகமானதுதானே?”

எனினும், பலரும் மூக்கைச் சிந்தினார்கள்.

மரியம்மா அக்கா அருகில் வந்து சூஸனிடம் சொன்னாள்: ‘‘மகளே, எங்கே இருந்தாலும் கடிதம் எழுதணும், தெரியுதா?”

மறுநாள் கலையில் மலை அடுக்குகளை விட்டுக் கார் கீழ்நோக்கி இறங்கியது. போபன்தான் காரை ஓட்டினான். முன் இருக்கையில் சூஸனும் அன்னமோளும் உட்கார்ந்திருந்தார்கள்.

சூஸன் விலகிப் போய்க் கொண்டிருக்கும் பனிப்படலம் மூடிய மலைகளைத் திரும்பிப் பார்த்தாள். பனி போர்த்திய மலைகள் சிறிது சிறிதாகிக் கொண்டே வந்தன.

‘‘பார்த்துக்கோ... பார்த்துகோ... காரணம்... நாம இனிமேல் எப்பவும் இந்தப் பகுதிக்கு திரும்பி வரப்போறது இல்ல...”

‘‘என்ன சொன்னீங்க?” - சூஸன் ஆச்சரியத்துடன் கேட்டாள். ‘‘விடுமுறை முடிந்த பிறகு நாம என்ன செய்வோம்?”

‘‘அதுதான் அதன் சர்ப்ரைஸ்” - போபன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்: ‘‘நான் கொடுத்திருப்பது விடுமுறைக்கான மனு இல்ல. ராஜினாமா கடிதம்...”

‘‘என்ன?” - சூஸன் அதிர்ச்சியடைந்தாள். ‘‘பிறகு நாம எப்படி வாழ்றது?”

‘‘நீ அதிர்ச்சியடைக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. உனக்கு மெண்டல் டென்ஷன் இருக்கக்கூடாது. உன் அன்னமோள் இல்லையா? உன் போபன் இல்லையா? நமக்கு மேலே வானமும் கீழே பூமியும் இல்லையா? வானத்தில் பறவைகள் இல்லையா? நாமும் அவற்றைப் போல பறந்து பறந்து...”

‘‘நானல்ல. போபன், நீங்கதான் கவிஞர்” - சூஸன் மனம் குளிரச் சிரித்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.