Logo

மோகத்தீ

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7338
Mohaththee

பெயர் பெற்ற ஒரு குடும்பம் ‘மீத்தலேடத்து’.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் எவ்வளவோ தியாகங்கள் செய்து நீதியையும் தர்மத்தையும் காப்பாற்றுபவர்கள். பெண்களை எடுத்துக் கொண்டால் உயிரை விட்டாவது தங்களின் கற்பைப் போற்றி பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இப்போது குடும்பத்தின் தலைவராக இருப்பவர் அதோ அங்கு வாசலில் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் மீத்தலேடத்து ராமுண்ணிதான். அவருக்கு இப்போது ஐம்பது வயது நடந்து கொண்டிருக்கிறது.

“முன்பு வீட்டுல ஒரு பெட்டி இருந்தது. மாலைகள், கொலுசுகள், தலையில் அணியும் நகைகள்... என்னவோவெல்லாம் நகைகள் இருந்தன அதற்குள்! கடவுளே...” -மீத்தலேடத்து ராமுண்ணி பழைய காலத்தை நினைத்துக்கொண்டே சொன்னார். “எல்லாம் போயிடுச்சு வம்சம் அழிஞ்சிடுச்சு. ம்... என்ன செய்யிறது? எல்லாம் கடவுளோட விதிப்படி நடக்குது...”

“எல்லாம் அழிஞ்சு போனாலும் வம்சத்தோட புகழ் இன்னைக்கும் இருக்குதே!”

“அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தர்ற விஷயம். என் அச்சு வாத்தியாரே, என்ன நடந்தாலும் என்னவெல்லாம் அழிஞ்சாலும் என் காலத்துல வம்சத்துக்கு கொஞ்சம்கூட கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்றது ஒண்ணுதான் என்னோட பிரார்த்தனை.”

“மனசு நல்லா இருந்தா போதும் ராமுண்ணி. நல்ல மனசு உள்ளவங்களோட பிரார்த்தனையை கடவுள் கேட்காம இருப்பாரா?”

அச்சு வாத்தியார் சொன்னார். அவர் மிகவும் மெலிந்துபோய் காணப்பட்டார். கொஞ்சம் பலமாக ஊதினால் மனிதர் பறந்து போய் விடுவார். தூரத்தில் வயல் வரப்பு வழியாக நாவிதன் நடந்து வருவதைப் பார்த்த அச்சு வாத்தியார் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். அச்சு வாத்தியாருக்கு ராமுண்ணியைவிட ஒரு வயது அதிகம்.

“கொஞ்சம் தாமதமாயிடுச்சு. ராத்திரி முழுக்க கொஞ்சம்கூட கண்ணை மூடித் தூங்கல. என் பெண்டாட்டிக்கு உடம்புக்கு முடியல...” என்று அச்சு வாத்தியாரிடம் சொன்னான் நாவிதன்.

“இதே விஷயத்தை என்கிட்ட எத்தனை தடவை சொல்லுவே? அவளை மருத்துவமனையில கொண்டுபோயி காட்ட வேண்டியது தானே?”

“மருந்தும ஊசியும் குணமாக்குற ஒரு நோய் இல்ல இது. அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு. எங்க அம்மாவுக்குக்கூட சாகுறது வரை பேயோட தொந்தரவு இருந்துச்சு.”

அவன் கத்தியை எடுத்து தோலால் ஆன பட்டையில் அதை வைத்து தேய்த்து கூர்மையாக்கினான். அவனுடைய வீட்டில் ஒரு பசுவும், இரண்டு ஆடுகளும் இருக்கின்றன.

“பேய்களுக்கு அப்படியென்ன நாவிதப் பெண்கள்மேல் விருப்பம்?”

“அதுதான் எனக்கும் புரியல. இந்த ஊர்ல தட்டான் வீட்டு பெண்களும், வண்ணாத்திகளும், கொல்லத்திகளும் கூடதான் இருக்காங்க. அவங்கமேல பேய்களுக்கு ஏனோ விருப்பமே இல்ல...”

நாவிதன் சொன்னான். குஞ்சு நாவிதன் என்றுதான் ஊரிலுள்ள எல்லோரும் அவனை அழைப்பார்கள். அவனுடைய சிறிய உருவத்தைப் பார்த்துத்தான் அவர்கள் அவனை அப்படி அழைத்தார்கள்.

“குஞ்சு நாவிதன்னோ கஞ்சி நாவிதன்னோ எப்படி வேணும்னாலும் என்னை அழைச்சிக்கோங்க. தாடியைச் சிரைச்சா கடன் சொல்லக் கூடாது. அதுதான் நான் சொல்ல விரும்புறது...”

சவரம் செய்தால் சரியாக காசு கொடுக்கும் மனிதர் ஊரிலேயே ஒரே ஒருவர்தான். அவர் அதோ ஒரு முற்றத்தில் தாடிமீது சோப் தேய்த்து உட்கார்ந்திருக்கும் மீத்தலேடத்து ராமுண்ணிதான். அந்த ஒரே காரணத்தால்தான் பெருமழை பெய்தாலும், நாவிதன் முறை தவறாமல் அவரைத் தேடிவந்து தாடியைச் சவரம் செய்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். ஊரிலுள்ள மற்ற எல்லா மனிதர்களும் கடன் சொல்லுவார்கள். நாவிதனுக்கு மிகவும் அதிகமாக காசு தரவேண்டியவன் நீலகண்டன்தான். அவனுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு முறையாவது தலைமுடி வெட்ட வேண்டும். கால் அங்குலம் முடி நீண்டு வளர்ந்திருந்தால்கூட போதும் - அவனுக்கு ஜலதோஷம் பிடிக்க ஆரம்பித்துவிடும். நீலகண்டன் கறுத்துப்போய் காணப்படும் ஒரு இளைஞன். அவனுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் அவனுக்கு இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை அடிக்கடி சிறுநீர் கழிப்பதுதான்.

“நாவிதனுக்குப் பேயோட தொந்தரவு. நீலகண்டனுக்கு சிறுநீர் தொந்தரவு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொந்தரவு...”

ஒரு வேதாந்தியைப் போல அச்சு வாத்தியார் சொன்னார். அவர் அதோ அந்த வயலின் கரையில் இருக்கும் பெட்டிக்கடைக்கு முன்னால் நின்றுகொண்டு வெற்றிலை, பாக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். குஞ்ஞாப்புவிற்கு சொந்தமான பெட்டிக்கடை அது.

குஞ்ஞாப்புவிற்கு நான்கு பிள்ளைகள். நாவிதனுக்கு ஒரு பசுவும் இரண்டு ஆடுகளும் இருக்கின்றன.

“அதோ... அந்த நீலகண்டன் வந்துக்கிட்டு இருக்காரு. நீங்கதான் அவர்கிட்ட சொல்லி எனக்கு வரவேண்டிய காசை வாங்கித் தரணும்...”

நாவிதன் கத்தியை மடக்கி சவரப் பெட்டிக்குள் வைத்தான். நாற்பது வருடங்களுக்கு முன்னால் சோயி ஆசாரி பலா மரத்தால் செய்து கொடுத்த பெட்டி அது. சோயி ஆசாரி இப்போது உயிரோடு இல்லை. அவரின் மனைவி இப்போதும் இருக்கிறாள்.

மீத்தலேடத்து ராமுண்ணி தந்த ஒரு அணாவை வாங்கி மடிக்குள் வைத்த நாவிதன் படிகளில் இறங்கிப் போனான். நீலகண்டன் படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தான்.

மீத்தலேடத்து வீட்டிற்கு இப்படிப் பலரும் வருவார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். பெண்களுக்கு கணவன் கிடைப்பதாக இருந்தால் ராமுண்ணியிடம் அந்த விஷயத்தைச் சொல்லாமல் திருமணம் நிச்சயம் செய்ய பெண்ணின் பெற்றோர் விரும்பமாட்டார்கள். கள்ளுக்கடைப் பக்கம் நடந்து திரியும் ஆண்களுக்குள் ஏதாவது சண்டை உண்டானால், அதைத் தீர்த்து வைப்பது ராமுண்ணியாகத்தான் இருக்கும். எல்லோருக்கும் எல்லா விஷயங்களுக்கும் ராமுண்ணி கட்டாயம் வேண்டும்.

“என்ன நீலகண்டா, காலை நேரத்துல இந்தப் பக்கம்? காசுக்காக இருக்கும். அப்படித்தானே?

நீலகண்டன் கண்களில் ஒருவித கவலை தெரிய மௌனமாக நின்றிருந்தான்.

“அந்த பெஞ்ச்ல உட்காரு. நான் போயி முகத்தைக் கழுவிட்டு வர்றேன்.”

காசுக்காக அல்லாமல் நீலகண்டன் அந்த வீட்டுப்படிகளில் ஏறுவதே இல்லை. அந்த மனிதருக்கு அது நன்றாகவே தெரியும்.

ராமுண்ணி பாத்திரத்திலிருந்து நீரை எடுத்து முகத்தைக் கழுவி விட்டுத் திரும்பிவந்தார். சவரம் செய்த அவருடைய முகம் பிரகாசமாக இருந்தது.

“சரி... நீ அந்த நாவிதனுக்கு எவ்வளவு காசு தரணும்?”

நீலகண்டன் எதுவும் பதில் சொல்லவில்லை. கண்களில் தங்கியிருந்த கவலை கீழ்நோக்கி இறங்கியது.

“உனக்கு இப்போ எவ்வளவு வேணும்?”

“ஒரு ஆயிரம்...”

“ஆயிரமா? என்ன நீலகண்டா, உனக்கு மூளை ஏதாவது குழம்பிப் போயிடுச்சா?”

“அவசரமா எனக்கு தேவைப்படுது. நீங்க என்னைக் கைவிட்டுடக் கூடாது...”

நீலகண்டன் இப்போது அழுதுவிடுவான் போல இருந்தது. அழுவதற்கு அடையாளமாக கன்னங்களில் சதைகள் துடித்தன.

“ஏன் நீலகண்டா, இந்த மீத்தலேடத்து குடும்பத்துக்கு இப்போ இருக்குறது பழைய புகழ் மட்டும்தான். எல்லாம் போயிடுச்சு சேமிப்பெல்லாம் காலி ஆயிடுச்சு...”


“இருந்தாலும் நீங்க நினைச்சா...”

“சுற்றி வளைச்சு பேசுறது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அஞ்சு, பத்துன்னு நீ எத்தனை தடவை இங்கே வந்து வாங்கிட்டுப் போயிருக்கே. நீ எப்பவாவது ஒரு பைசாவையாவது திருப்பித் தந்திருக்கியா? இனி நான் உனக்கு எதுவும் தர்றதாக இல்ல.”

“நீங்க சும்மா தர வேண்டாம்.”- நீலகண்டன் மடியிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை வெளியே எடுத்தான். “என் மேல நம்பிக்கை இல்லைன்னா இந்தாங்க இதை வச்சுக்கோங்க...”

நீலகண்டன் பொட்டலத்தை நீட்டினான்.

“இதுல என்ன இருக்கு?”

“தங்கம் மூணு பவுன் இருக்கு”

“என் நீலகண்டா, மீத்தலேடத்து குடும்பத்தை நீ அவமானப்படுத்துற. புரியுதா? இது என்ன நகையை அடகு வைக்கிற வங்கியா? இங்கேயிருந்து கிளம்பு, உனக்கு ஒரு காசுகூட நான் தர்றதா இல்ல...”

மீத்தலேடத்து ராமுண்ணியின் முகம் சிவந்தது. அவர் மீண்டும் வாசலில் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து நீரை எடுத்து முகத்தைக் கழுவிவிட்டு திரும்பி வந்தார்.

“என்ன, நீ இன்னும் போகலியா?”

திடீரென்று சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் நீலகண்டன் ராமுண்ணியின் காலில் விழுந்தான். டயர் செருப்பின் வாசனை வந்து கொண்டிருந்த- தடித்து வெளுத்த காலில் அவன் தன் நெற்றியைப் பதித்தான்.

“என்ன செய்யற நீலகண்டா?”

மீத்தலேடத்து ராமுண்ணி வேகமாகத் தன் கால்களைப் பின்னால் இழுத்தார். நீலகண்டன் நடந்துகொண்ட முறை அவரை ஒருமாதிரி ஆக்கிவிட்டது. அவர் என்னவோ சிந்தித்தவாறு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து பணப்பெட்டியைக் கொண்டுவந்து முன்னால் வைத்து திறந்து என்னவோ கணக்குகள் போட்டார். தொடர்ந்து ஐநூறு ரூபாயுடன் அவர் வெளியே வந்தார்.

“இந்தா, இதை உன் கையில வச்சுக்கோ.”

நீலகண்டனின் கண்கள் ஒளிர்ந்தன. அவன் பணத்தை வாங்கி எண்ணி மடியில் வைத்தான். ராமுண்ணி பலமுறை வற்புறுத்தியும் அவன் தங்க நகையைத் திருப்பி வாங்க மறுத்துவிட்டான். மீத்தலேடத்து ராமுண்ணி நகை சுற்றப்பட்டிருந்த பொட்டலத்தை என்ன செய்வது என்பது தெரியாமல் பார்த்தவாறு நின்றிருந்தார். அவரால் அந்த அவமானத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அடிக்கொருதரம் அவருடைய முகம் சிவந்து கொண்டேயிருந்தது. கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். சாயங்காலம் நடக்கப் போகிறபோது அந்த நகையை நீலகண்டனின் மனைவி சாவித்திரியிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்தார். ஐந்து, பத்து என்று எத்தனையோ முறை அவரிடமிருந்து நீலகண்டன் பணம் வாங்கிக்கொண்டு போயிருக்கிறான். வாங்கிய பணத்தை அவன் ஒரு முறைகூட திருப்பித் தந்ததில்லை. இந்த ஐநூறைக்கூட அவன் திருப்பித் தராமல் இருக்கலாம். அதற்காக நகையை அடகு வாங்கி பணம் கடன் கொடுக்க முடியாது. மீத்தலேடத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு கீழ்த்தரமானவர்கள் அல்ல. அவர் அந்தப் பொட்டலத்தை பணப்பெட்டியில் வைத்துப் பூட்டி கீழே இறங்கி வந்தார். இல்லை... மீத்தலேடத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த அளவிற்கு தரம்தாழ்ந்து போகமுடியாது. அப்படி நடந்தால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் தன்னை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார் ராமுண்ணி.

அதற்குப் பிறகு அவர் குளித்து முடித்து வேஷ்டியைப் புதிதாகக் கட்டிக்கொண்டு தன்னுடைய எண்ணெய் மில்லை நோக்கிப் புறப்பட்டார். பழைய ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்தான் அந்த எண்ணெய் மில் இருந்தது. மீத்தலேடத்து குடும்பத்தைச் சேர்ந்த இடம் அது. பள்ளிக்கூடம் சொந்தக் கட்டிடத்திற்கு இடம்மாறியபோது, ராமுண்ணி எண்ணெய் மில்லை பழைய பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்கு மாற்றினார். மில்லைச் சுற்றியிருந்த சுவர்களிலும் அதற்கருகிலிருந்த பஞ்சாயத்து விளக்குத் தூண்களிலும் எண்ணெய் வாசனை தங்கியிருந்தது. மில்லிற்கு வெளியே தேங்காய்களுடன் வந்த மாட்டு வண்டிகள் வரிசையாக நின்றிருந்தன. ஒரு சிறுவன் தேங்காயை யாருக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு போவதை அவர் பார்த்தார்.

“டேய், அங்கேயே நில்லு...”

சிறுவன் தன் கையைப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு பயத்துடன் ராமுண்ணியையே பார்த்தவாறு நின்றிருந்தான். எல்லா சிறுவர்களுக்குமே ராமுண்ணி என்றால் பயம்தான். அவரின் குடும்பப் பெருமையும் செல்வமும் சொத்தும்தான் அந்த பயத்திற்கு காரணங்களாக இருப்பவை.

“என்னடா உன் கையில?”

மேலும் பயம் அதிகமான அந்த சிறுவன் தன்னை ஒடுக்கிக் கொண்டு ஒரு மூலையில் நின்றான். அவனுடைய கையில் ஒரு தேங்காய்த் துண்டு இருந்தது.

“இங்கே வா...”

சிறுவன் அசையவில்லை. அவனுடைய திறந்து கிடந்த நெஞ்சுப் பகுதி பயத்தில் சிக்கிய ஒரு புறாவின் கழுத்துப் பகுதியைப் போல நடுங்கியது. ராமுண்ணி இரண்டு பெரிய தேங்காய்களை எடுத்து சிறுவனின் கையில் தந்தார். சிறுவனின் கண்களில் தெரிந்த பதைபதைப்பைப் பார்த்து அவருக்குச் சிரிப்பு வந்தது.

“மகனே, உன் பேர் என்ன?”

“பாலகோபாலன்”

அவன் தேங்காய்களுடன் ஓடி மறைந்தான். மீத்தலேடத்து ராமுண்ணி மில்லைச் சுற்றி நடந்தார். எண்ணெய் எடுத்து மீதமிருந்த புண்ணாக்கு வாசலில் குன்றைப் போல குவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலே காகங்கள் கத்தியவாறு பறந்து கொண்டிருந்தன. பொழுது விடிந்துவிட்டால் ஊரிலுள்ள எல்லா காகங்களும் மில்லைத் தேடி வந்துவிடும். சிறிது நேரம் அங்கு நின்றதும் ராமுண்ணியின் முகத்தில் எண்ணெய் பசை வந்து ஒட்டிக் கொண்டது. எண்ணெய் மணம் கலந்த கனமான காற்றைச் சுவாசிக்கிறபோது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் அவர் நீண்டநேரம் மில்லில் இருப்பதில்லை. வெளிச்சுவருக்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருக்கும் குதிரை வண்டியைக் கைகாட்டி நிறுத்தி அவர் அதில் தன்னுடைய மாளிகையை நோக்கிப் புறப்பட்டார்.

மீத்தலேடத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாகவே எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள்தாம்.

“முன்னாடி இருந்ததைப்போல வருமானம் இப்போ கிடையாது, அச்சு வாத்தியாரே! மனிதர்களைப்போல தென்னை மரங்களுக்கும் நோய் பிடிச்சிடுச்சு. தேங்காய்களோட விலையும் குறைஞ்சு போச்சு.” அச்சு வாத்தியார் தலையை ஆட்டினார்.

“இனி வர்ற காலத்துல தேங்காயையும் எண்ணெயையும் மட்டும் நம்பி வாழ்றது ரொம்பவும் கஷ்டம். கள்ளக்கடத்தலோ இல்லாட்டி வேற ஏதாவதோ செஞ்சாத்தான் சரியா வரும்.”

 அவரின் அந்த நகைச்சுவையான பேச்சில் இருவரும் சிரித்தார்கள். ராமுண்ணி இப்படி யாருடனாவது நகைச்சுவை ததும்ப பேசுகிறார் என்றாலோ, சிரிக்கிறார் என்றாலோ அது அச்சு வாத்தியாருடன் மட்டுமாகத்தான் இருக்கும். அவர்கள் இருவரும் அதோ அந்த எண்ணெய் மில் இருக்கும் இடத்தில் இருந்த பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்து வளர்ந்தவர்கள். மீத்தலேடத்து ராமுண்ணி தன்னுடைய மனைவி சரோஜினியுடன்கூட ஒரு இடைவெளி விட்டுத்தான் பழகுவார். அவர் தன் மனைவியிடம் மனம் திறந்து சிரிக்கிறாரென்றால் அது குளியலறையில் இருக்கும்போது மட்டும்தான்.


தினமும் காலையில் உடம்பில் எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு அவர் வாசலிலும் நிலத்திலும் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருப்பார். எண்ணெய் மில் உரிமையாளரான அவருக்கு எண்ணெய்க்கு பஞ்சமா என்ன? தூளாக்கப்பட்ட சிறு பயறின் பருப்பை உடம்பில் நன்றாகத் தேய்த்துவிட்டு எண்ணெய் பசை சிறிதுகூட இல்லாமல் நீக்க வேண்டிய பொறுப்பு சரோஜினியைச் சேர்ந்தது. மனைவியின் மோதிரங்கள் அணிந்த கை விரல்கள் தன்னுடைய கையிடுக்குகளில் படும்போது ராமுண்ணிக்கு மிகவும் கூச்சமாக இருக்கும். அவர் மனைவியைப் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரிப்பார். அந்த அபூர்வமான சிரிப்பைப் பார்ப்பதற்காகவே சரோஜினி மீண்டும் மீண்டும் தன் கணவருக்கு கிச்சுக் கிச்சு மூட்டுவாள். அவளும் தன் கணவரின் சிரிப்பில் சேர்ந்துகொண்டு சிரிப்பாள். குளியலறைக்குள் புகுந்துகொண்டு இப்படி கணவனும் மனைவியும் விடாமல் சிரித்துக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் வேலைக்காரர்கள் விழிப்பார்கள்.

“ராமுண்ணி ஐயா, எங்கே போறீங்க?”

“அதோ அந்த நீலகண்டனோட வீடுவரை போயிட்டு வரணும்”

மீத்தலேடத்து ராமுண்ணி இடது கையால் வேஷ்டியின் ஒரு நுனியை தூக்கிப் பிடித்துக்கொண்டு வலது கையில் பற்றியிருந்த குடையை நிலத்தில் ஊன்றியவாறு நீலகண்டனின் வீட்டை நோக்கி நடந்தார். குடை பிடித்த கையை உயர்த்தி எதிரில் வந்து கொண்டிருந்த ஊர்க்காரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டபடி நடந்தார்.

அவர் இப்போது நடந்துசெல்லும் தெரு முன்பு ஒரு ஒற்றையடிப் பாதையாக இருந்தது. இரண்டுபேர் ஒன்றாகச் சேர்ந்து நடந்து போகமுடியாத அளவிற்கு மிகவும் குறுகலாக இருக்கும். அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்துசெல்லும்போது ராமன் செட்டியாரின் கூர்மையான கொம்புகளைக் கொண்ட பருத்த பசு எதிரில் வந்தால் தான் என்ன செய்வது என்பதை நினைத்துப் பார்த்து சிறுவனான ராமுண்ணி பயந்த நிமிடங்கள் எவ்வளவோ. சில இரவுகளில் அந்த எண்ணம் கெட்ட கனவுகளாக மாறி ராமுண்ணியின் தூக்கத்தை முழுமையாகக் கெடுத்ததும் உண்டு. ராமுண்ணியும் அச்சு வாத்தியாரும் ஆறாம் வகுப்பில் படிக்கும்போதுதான் அந்த ஒற்றையடிப் பாதை சற்று அகலமாக மாறியது. செட்டியாரின் பருமனான பசுவும் அதை மேய்க்கும் கிட்டனும் எந்தவித பிரச்சினையுமில்லாமல் அந்தப் பாதையில் தாராளமாக நடந்துபோகலாம் என்ற நிலை உண்டானது. இருந்தாலும் ராமுண்ணி பழைய கெட்ட கனவுகளை இரவு நேரங்களில் காண்பது மட்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. செட்டியாருடைய பசுவின் இடத்தை திருவிழாவிற்கு வரும் ஆண் யானை பிடித்துக் கொண்டது என்பது மட்டுமே வித்தியாசம். ராமுண்ணியும் அச்சு வாத்தியாரும் பத்தாம் வகுப்பில் சேர்ந்தபோது அந்தப் பாதைக்கு மீண்டும் அகலம் கூடியது. அது தெருவாக மாறியது அப்போதுதான். இப்போது திருவிழாவிற்கு வரக்கூடிய யானைகளும் யானைப் பாகர்களும் திருவிழாவைப் பார்க்கவரும் குழந்தைகளும் எந்தவித பயமுமில்லாமல் அந்தத் தெரு வழியே நடந்து போகிறார்கள்.

அதோ... அங்கு தெரிவதுதான் நீலகண்டனின் வீடு. குளித்து முடித்து வாசலில் வந்து நின்று தலைமுடியை வாரிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்தான் நீலகண்டனின் மனைவி சாவித்திரி. கன்னங்கரேல் என்று இருக்கும் நீலகண்டனுக்கு இப்படியொரு சிவந்த நிற உடம்பைக் கொண்ட பெண் எப்படி மனைவியாக வந்து வாய்த்தாள் என்று பொதுவாக ஊரைச் சேர்ந்த எல்லாருமே ஆச்சரியப்படுவார்கள். மீத்தலேடத்து ராமுண்ணியின் மனைவி சரோஜினிக்கு சாவித்திரியின் நிறத்தில் பாதிகூட இல்லை என்பதே உண்மை. நீலகண்டன் கிணற்றின் கரையில் உட்கார்ந்து பல் தேய்த்துக் கொண்டிருந்தான். அவன் தொண்டைக்குள் கைவிரல்களை நுழைத்து உரத்துத் துப்பும் சத்தத்தை இங்கு வயல் வரப்புவரை நாம் கேட்கலாம். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். சாணம் மெழுகிய தரையில் அமர்ந்து ஸ்லேட்டில் எழுத்துக்கள் எழுதிப் படித்துக் கொண்டிருக்கும் இந்திராதான் இளையவள். மூத்தவன் பாலகோபாலன்.

நகையை சாவித்திரியின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும். நகையை அடமானம் வாங்கி பணம் கடனாகத் தருவதென்பது மீத்தலேடத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ற ஒரு செயல் அல்ல என்று அவளிடம் சொல்ல வேண்டும். ராமுண்ணி வயல் வரப்பு வழியே நடந்தார். அவ்வப்போது அவரின் டயர் செருப்புகள் மழை நீரில் நனைந்தன. வரப்பை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்துவரும் ராமுண்ணியை சாவித்திரி பார்க்கவில்லை. கிணற்றின் கரையில் அமர்ந்தவாறு பல் தேய்த்துக்கொண்டிருந்த நீலகண்டன் அதோ... இறங்கிப் போகிறான். அவன் அருகில் இருக்கும் வாய்க்காலில் குளிப்பதற்காகப் போயிருக்க வேண்டும். ராமுண்ணி மடியைத் தொட்டுப் பார்த்தார். பொட்டலம் பத்திரமாக இருந்தது. அப்போது அவருடைய மனதில் திடீரென்று ஒரு ஆர்வம் பிறந்தது. மூன்று பவுன் நகை என்பது தெரியுமே தவிர, அந்த நகை என்ன என்பதை அவர் இதுவரை பார்க்கவில்லை. நீலகண்டன் தந்த பொட்டலத்தை அதே நிலையில் பணப்பெட்டிக்குள் வைத்து அவர் பூட்டி விட்டார். இப்போது ஒரு ஆர்வம். பொட்டலத்திற்குள் இருப்பது மாலையாக இருக்குமோ? வளையலாக இருக்குமோ? ராமுண்ணி பொட்டலத்தைப் பிரித்து உள்ளேயிருந்த நகையை எடுத்துப் பார்த்தார். உள்ளே அகலம் சற்று குறைவாக இருந்தாலும் அருமையான கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு தங்க இடுப்புக் கொடி இருந்தது. ராமுண்ணி அதை மீண்டும் பொட்டலமாக ஆக்கி மடியில் வைத்துக் கொண்டார். அவர் ஒரு கையால் வேஷ்டியை தூக்கி பிடித்துக்கொண்டு குடையைத் தரையில் ஊன்றியவாறு ஏறி வீட்டு வாசலில் வந்து நின்றார். சிறிதும் எதிர்பார்க்காமல் தன்னுடைய வீட்டின் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கும் மீத்தலேடத்து ராமுண்ணியைப் பார்த்து சாவித்திரி ஒருவித பதைபதைப்பிற்கு ஆளானாள். தலையை வாரிக் கொண்டிருந்த அவளுடைய கை தலைக்கு மேலே ஒரு நிமிடம் அசையாமல் நின்றது.

“இங்கே நீலகண்டன் இல்லியா?”

அவர் கண்களுக்கு நன்கு தெரியும்படிதான் நீலகண்டன் வாய்க்காலை நோக்கி சென்றதே. இருப்பினும் எதற்காக இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை நாம் கேட்டோம் என்பதை ராமுண்ணியால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாவித்திரி ஒரு முண்டை எடுத்து பெஞ்சைத் துடைத்து அதில் அவரை உட்காரச் சொன்னாள். அவளின் பதைபதைப்பைப் பார்த்து அவருக்கு சுவாரசியம் உண்டானது. அவளின் கன்னங்கள் எவ்வளவு வெண்மையாக இருக்கின்றன! தலைமுடி எவ்வளவு கறுப்பாக இருக்கிறது!

‘என் கடவுளே! மீத்தலேடத்து ராமுண்ணி எதற்காக என்னை இப்படி வச்ச கண் எடுக்காம பார்க்குறாரு?” -சாவித்திரி மனதிற்குள் நினைத்தாள்.

"உன் கையும் கழுத்தும் ஏன் நகை எதுவும் இல்லாமல் சும்மா இருக்கு?” - அவர் கேட்டார். "எல்லாத்தையும் அவன் கொண்டுபோய் அடமானம்  வச்சிட்டானா?”


தலைகுனிந்து நின்ற சாவித்திரியின் கன்னங்களில் இருந்த பிரகாசம் அடுத்த நிமிடம் காணாமல் போனது. தன்னுடைய மடியில் இருக்கும் நகை அவள் இடுப்பில் கட்டி நடக்கின்ற கொடி என்பதை அவர் புரிந்துகொண்டார்.

"உன் இடுப்புக் கொடியை அவன் கொண்டுபோய் அடமானம் வச்சிட்டான் அப்படித்தானே?"

அதைக்கேட்டு அவளிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது.  அவளை அவளுடைய தந்தை நீலகண்டனுக்குத் திருமணம் செய்து அனுப்பி வைக்கும்போது அவர் பதினைந்து பவுன் நகை போட்டிருந்தார். எல்லாவற்றையும் அவன் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டான்.

“எதுவுமே இல்லைன்னா ஒரு நாலு கண்ணாடி வளையல்களையாவது கையில போட்டிருக்கக் கூடாதா, சாவித்திரி?”

நகை எதுவும் இல்லாமல் இருக்கும்  தன்னுடைய வெண்ணிறக் கையை வாசல் படியின் மீது வைத்து நின்றுகொண்டிருந்த சாவித்திரியிடமிருந்து மீண்டும் ஒரு பெருமூச்சு வந்தது.

தூரத்தில் வயலிலிருந்து வாய்க்காலுக்கு வந்து சேரும் நீரில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்த நீலகண்டன் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தான்.

“நான் புறப்படுறேன். மில்லுக்குப் போகணும். பஞ்சாயத்து  அலுவலகத்திலயும் கொஞ்சம் வேலை இருக்கு. நீலகண்டன் வந்த பிறகு மீத்தலேடத்து ராமுண்ணி வந்துட்டு போனதாகச் சொல்லு...”

“இந்திராவோட அப்பா இப்போ வந்திடுவாரு...”

மீத்தலேடத்து ராமுண்ணி நீலகண்டனைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தால் வீட்டுப் பக்கம் வரச்சொன்னால் போதாதா? இவ்வளவு தூரம் நடந்து இங்கு வரவேண்டுமா என்ன? ஏதோ ஒரு முக்கிய விஷயம் காரணமாகத்தான் அவர் தங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறார் என்பதை சாவித்திரியால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைத் தொடர்ந்து அவளிடமிருந்த பதைபதைப்பு மேலும் அதிகமானது.

நீலகண்டன் ஒரு எருமை மாட்டைப் போல வாய்க்காலில் பாதி அளவில் மூழ்கி குளித்துக் கொண்டிருப்பதை வீட்டு வாசலில் நின்றிருந்த சாவித்திரி பார்த்தாள். ராமுண்ணி இடது கையால் வேஷ்டியைத் தூக்கி பிடித்தார். அவர் உடனே புறப்படுகிறார் என்று அதற்கு அர்த்தம்.  சாவித்திரி என்ன செய்வதென்ற தவிப்புடன் ஒரு ஓரத்தில் ஒடுங்கி நின்றிருந்தாள்.  அவரை அவளால் தடுக்க முடியவில்லை. எதற்காக அவர் அங்கு வந்தார் என்பதையும் அவளால் விசாரிக்க முடியவில்லை. சாவித்திரி ஒருவித தயக்கத்துடன் நின்றிருந்தாள்.

நகை பத்திரமாக மடியில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர் வேஷ்டியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு குடையை தரையில் ஊன்றியவாறு நடக்கத் தொடங்கினார். மாளிகைக்குப் போகும் வழியில் அச்சு வாத்தியாரின் வீட்டைத் தேடி அவர் சென்றார். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறையாவது அச்சு வாத்தியாரைப் பார்த்து பேசவில்லையென்றால் ராமுண்ணிக்கு எதையோ இழந்ததைப் போல் இருக்கும். செந்தென்னை மரத்திலிருந்து பறிக்கப்பட்ட இளநீரைக் குடித்துவிட்டு மாளிகையை அவர் அடைந்தபோது, அங்கு வாசலில் நின்றிருந்தான் நீலகண்டன்.

“யார்கிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லியனுப்பி இருந்தா நான் இங்கே வந்திருப்பேன்ல”.

நீலகண்டன் ஒருவித குற்றவுணர்வுடன் சொன்னான்-

“பரவாயில்ல... அச்சு வாத்தியாரோட வீட்டுக்குப் போற வழியில உன் வீட்டுப் பக்கம்  நான் வந்தேன். விசேஷம் ஒண்ணும் இல்ல...”

அச்சு வாத்தியாரின் வீட்டைத் தாண்டித்தான் நீலகண்டனின் வீட்டிற்கே போக முடியும் என்ற உண்மையை ராமுண்ணி மறந்துவிட்டாரா?

“நீலகண்டன், நீ புறப்படு. பணம் விஷயம் அப்படியொண்ணும் அவசரம் இல்ல. எப்போ முடியுமோ அப்ப கொடு”.

நீலகண்டனுக்கு ஒன்றுமே புரியவில்லை. வாய்க்காலில் மூழ்கி குளித்துக் கொண்டிருந்த தன்னை அழைத்து மாளிகைக்கு உடனே போகும்படி சொன்ன சாவித்திரிமீது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.

“ஒரு அவசரமும் இல்ல...”

மீத்தலேடத்து ராமுண்ணி மீண்டும் சொன்னார்.

2

மாடியிலிருக்கும் படுக்கையறையில் வெளிச்சம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதனால் அவர் ஜன்னலின் அருகில் சென்று பொட்டலத்தைத் திறந்து பார்த்தார். அவரின் தடிமனான கை விரல்கள் இடுப்புக் கொடியை மெதுவாக வருடின. தங்கத்தின் குளிர்ச்சியை உணர்ந்தவாறு சிறிது நேரம் அவர் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். நீலகண்டனை ஆள் அனுப்பி வரவழைக்க வேண்டும். நகையைத் திருப்பி அவன் கையில் தரவேண்டும். அந்த இடுப்புக்கொடி தன்னுடைய பணப்பெட்டியில் இருக்கக் கூடியதல்ல. அது சாவித்திரியின் இடுப்பிலேயே இருக்கட்டும்.

படியில் சரோஜினியின் காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன் அவர் படு வேகமாகப் பொட்டலத்தை மடியில் வைத்துக்கொண்டு ஜன்னல் திண்டின் மீது கிடந்த விசிறியை எடுத்து வீசியவாறு வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.

“எதற்கு இந்த உஷ்ணத்துல மாடியில வந்து நின்னுக்கிட்டு இருக்கீங்க?”

சரோஜினி அருகில் வந்து அன்பு மேலோங்க தன்னுடைய கணவரின் தோளில் கையை வைத்தாள்.

“எதற்கு அந்த நீலகண்டன் இன்னொரு தடவை வீட்டுக்கு வந்தான்? அவனுக்கு கொடுத்த பணத்துக்கு கணக்கு வச்சிருக்கீங்களா? இனிமேல் அவனுக்கு ஒரு பைசாகூட தரக்கூடாது...”

அவள் தன் கணவனைப் பார்த்து கடுமையான குரலில் சொன்னாள். தன்னைத் தேடிவந்து யார் எதைக்கேட்டாலும் அவர் கொடுத்து விடுவார். இருப்பதையெல்லாம் அவர் கண்டவர்களுக்கெல்லாம் இப்படி வாரிக் கொடுத்துவிட்டால் கையிலிருக்கும் இருப்பு நாளடைவில் குறைந்து போகுமல்லவா? குடும்பத்தின் சொத்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.

“என் சரோஜினி, நாம ஒண்ணு கொடுத்தா தெய்வம் நமக்கு ரெண்டா திருப்பித் தரும்ன்ற விஷயம் உனக்கு தெரியாதா?”

மீத்தலேடத்து குடும்பத்தில் ராமுண்ணியைப் போல இளகிய மனம் படைத்த ஒரு ஆண் பிறந்ததே இல்லை. அச்சு வாத்தியாரின் வாயில் இருக்கும் போலிப் பல்கூட ராமுண்ணி கொடுத்த பணத்தில் வாங்கியதுதான். ஏழு பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்கும் வாத்தியாருக்கு எப்போதும் வாழ்க்கையில் வறுமைதான். ஆனால், மதிப்பு- மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் நீலகண்டனைப் போல பார்ப்பவர்களிடமெல்லாம் கடன் வாங்குவதில்லை. ராமுண்ணி தன்னுடைய நண்பருக்கு அவ்வப்போது ஏதாவது தந்து உதவியிருக்கிறாரென்றால், அது நிச்சயம் அச்சு வாத்தியார் கேட்டு நடந்ததல்ல. புரிந்துகொண்டு ராமுண்ணி கொடுத்துக் கொண்டிருப்பவையே அவை. அச்சு வாத்தியாரைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு கரை காண முடியாத கடல் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்குப் பிறந்த நான்கு பெண்களில் மூத்தவளை மட்டுமே திருமணம் செய்து வைத்து அவர் அனுப்பியிருக்கிறார். சாயங்காலம் பெட்டிப்பாலத்தின் மீது அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருக்கும்பொழுது ராமுண்ணி கூறுவார். “அச்சு, நான் உயிரோடு இருக்குறவரை நீ எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். அதையும் இதையும் நினைச்சு தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்க வேண்டாம். மூணு இல்ல; முப்பது பெண்களைத் திருமணம் செய்து அனுப்பி வைக்கிற அளவுக்கு வசதி கடவுள் அருளால் மீத்தலேடத்து குடும்பத்துக்கு இப்பவும் உண்டு.”


அதற்குப் பிறகு எதற்குத் தேவையில்லாமல் அச்சு வாத்தியார் அதையும் இதையும் நினைத்து தன்னுடைய தலையைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டும்?

ராமுண்ணியும் அவர் மனைவியும் மரப்படிகளில் இறங்கி கீழே வந்தார்கள். அவருக்கு வெளியே நடந்துபோக நேரமாகிவிட்டது. அச்சு வாத்தியார் பெட்டிப்பாலத்தின் மீது அமர்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம். உண்மையிலேயே அவர் அங்கு ராமுண்ணிக்காகக் காத்துக் கொண்டுதானிருந்தார்.

“நீலகண்டனோட நகையைத் திருப்பித் தந்தாச்சா?” அச்சு வாத்தியார் கேட்டார்.

சிறிது தயங்கியவாறு ராமுண்ணி சொன்னார்.

“தந்தாச்சு...”

நாற்பது வருட நட்புக்கிடையில் முதல் தடவையாக ராமுண்ணி அச்சு வாத்தியாரிடம் பொய் சொன்னார்.

“என் ராமுண்ணி, நீ சுத்தமான மனசைக் கொண்டவன். நீலகண்டனுக்கு நீ கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும்னு நினைக்கிறியா? உன் பணம் கையைவிட்டுப் போச்சுன்னு வச்சுக்கோ...”

“பரவாயில்ல... யார் யாருக்கோ நான் எவ்வளவு பணம் கொடுத்திருக்கேன்.”

“அதுனாலதான் சொல்றேன்.... நீ ஒரு பரிசுத்தமான இதயத்தைக் கொண்டவன்னு...”

சொல்லிவிட்டு அச்சு வாத்தியார் போலிப் பல்லைக் காட்டி சிரித்தார். உமிக்கரியால் நன்றாகத் தேய்க்கும் அவருடைய பற்களுக்கு இந்த வயதிலும் நல்ல பிரகாசம் இருந்தது. மங்கலான போலிப் பல் மற்ற பற்களிலிருந்து மாறுபட்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. புழு விழுந்ததால் அவரின் அந்தப் பல் கீழே விழவில்லை. கால் தடுக்கி வாசலில் தலைக்குப்புற விழுந்ததன் விளைவாகத்தான் அவருடைய அந்த முன்வரிசைப் பற்களில் ஒன்று கீழே விழுந்துவிட்டது.

ஏழரை மணிக்குச் செல்லும் லோக்கல் வண்டி பாலத்திற்கு மேலே கடந்து போனதும் அந்த நண்பர்கள் இருவரும் தத்தம் வீடுகளை நோக்கி திரும்பி நடந்தார்கள்.

வீட்டை அடைந்தவுடன் இளம் வெப்பத்திலிருந்த நீரால் கை, கால்களையும் முகத்தையும் கழுவி சுத்தமாக்கிய பிறகு ராமுண்ணி நேராக மாடிக்குச் சென்றார். மில்லில் வேலை பார்க்கும் இரண்டு பணியாளர்களும் தேங்காய் வியாபாரம் செய்யும் சாப்பன் நாயரும் வெளியே அவருக்காகக் காத்து நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்க்காதது மாதிரி ராமுண்ணி படுக்கையறையை நோக்கிச் சென்றார். மீத்தலேடத்து ராமுண்ணிக்கு இன்று என்ன ஆகி விட்டது என்று சாப்பன் நாயர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தேங்காய்கள் பற்றிய கணக்கையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார் அவர். சிறிதுநேரம் வாசலில் காத்து நின்றிருந்த அவர் திரும்பிப் போனார். ராமுண்ணிக்கு கணக்கும் பணமும் இப்போது தேவைப்படாமல் இருக்கலாம். அதைவிட மிகவும் முக்கியமான வேலை அவருக்கு இருக்கலாம். மீத்தலேடத்து ராமுண்ணிக்குப் பணம் வாங்குவதற்கு நேரமில்லையென்றால் தட்டும்புறத்து சாப்பன் நாயருக்கு பணம் கொடுப்பதற்கு நேரமில்லை என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், சாப்பன் நாயர் போனதைப்போல மில்லில் வேலை பார்க்கும் பணியாட்கள் போகவில்லை. அவர்கள் கூலி வாங்குவதற்காக வந்தவர்கள். ‘கள்ளுக் கடையை இந்நேரம் அடைத்திருப்பார்களே. அட கடவுளே!’ என்ற ஒரே சிந்தனைதான் அவர்களின் மனதை ஆக்கிரமித்திருந்தது. நின்று நின்று கால் வலித்தவுடன், அவர்கள் வாசலில் உட்கார்ந்தார்கள். ராமன் என்பதும் பொக்கன் என்பதும் அவர்களின் பெயர்கள். ராமன் உயரமானவனாகவும் பொக்கன் குள்ளமானவனாகவும் இருந்தார்கள்.

படிகளின் மேற்பகுதியில் நின்றுகொண்டு சரோஜினி மேலே பார்த்தவாறு சொன்னாள்.

“அந்த ராமனும், பொக்கனும் எவ்வளவு நேரமா உங்களுக்காகக் காத்திருக்காங்க. அவங்களுக்குத் தர வேண்டியதைத் தந்து அனுப்பி வைக்கக் கூடாதா?”

தன் மனைவியின் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமுண்ணி வேகமாக இடுப்புக் கொடியை மடியில் மறைத்து வைத்தார். கனவில் நடக்கும் ஒரு மனிதனைப்போல அவர் கீழே இறங்கி வந்தார். ராமனுக்கும் பொக்கனுக்கும் தரவேண்டிய கூலியைத் தந்தார். அவர்கள் இருவரும் கள்ளுக் கடையை நோக்கி நடந்தார்கள்.

“மேலே என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? அந்த சாப்பன் நாயர் உங்களுக்காகக் காத்து நின்று முடியாம திரும்பியே போயிட்டாரு...”

“போகட்டும்...”

மீத்தலேடத்து ராமுண்ணி யாரிடம் சொல்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சுரத்து இல்லாத குரலில் சொன்னார். அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை.

“என் கடவுளே, இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?”

சரோஜினி தன் கணவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தாள். அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள். மது அருந்தும் பழக்கம் தன் கணவருக்கு இல்லை என்பதை அவள் நன்கு அறிவாள். எனினும் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர் அவரின் வாயை முகர்ந்து பார்த்தாள். பாக்கு மணம்தான் அவரின் வாயிலிருந்து வந்தது.

“உடம்புக்கு முடியலைன்னா, கஞ்சி குடிச்சிட்டு சீக்கிரம் போய்படுங்க...”

யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு சரோஜினி தன் கணவரின் கையை எடுத்துத் தன் கைமீது வைத்துக் கொண்டு அதை மெதுவாகத் தடவினாள். அப்படி அவள் தடவியது அவரிடம் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. மாறாக, மேலும் அவரை சோர்வு கொள்ள வைத்தது.

ராமுண்ணி வேகமாக கஞ்சியைக் குடித்தார். தொடர்ந்து அதே வேகத்தில் மாடியிலிருக்கும் படுக்கையறையை நோக்கிச் சென்றார். யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுவர் கதவுகளை அடைத்து தாழ் போட்டார்.

அதற்குப் பிறகு சாவித்திரியின் இடுப்புக் கொடியை எப்போது பார்த்தாலும் தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டே அவர் நடந்து திரிந்தார். மில்லுக்குப் போகும் வழியில் சுற்றிலும் ஆட்கள் யாரும் இல்லை என்றால் அவர் அந்த இடுப்புக் கொடியை மடியிலிருந்து எடுத்துப் பார்ப்பார். சில நேரங்களில் அதை ஆசையுடன் தடவவோ, வருடவோ செய்வார். வீட்டிலிருக்கும்பொழுது அடிக்கொருதரம் அவர் மாடியிலிருக்கும் படுக்கையறையை நோக்கிப் போவதைப் பார்க்கலாம். ஒரு நாள் அவரின் மனைவி அவரைப் பின்தொடர்ந்து மேலே சென்றாள். அவருக்கு மனைவி வருவது தெரியவில்லை. அறையை அடைந்தவுடன் அவர் இடுப்புக்கொடியை வெளியே எடுத்து அதையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். வாசலில் இருந்த பலகைமீது பட்ட காலடிச் சத்தத்தைக் கேட்ட பிறகுதான் அவருக்கு சரோஜினி அங்கு வந்து நின்றிருக்கிறாள் என்பதே தெரியவந்தது. ஒரு புலியின் பாய்ச்சலுடன் அவர் இடுப்புக்கொடியை மடிக்குள் மறைத்து வைத்தார்.

“தனியா இங்கே என்ன செய்றீங்க?”

மனைவி அருகில் வந்து நின்றாள். கடவுளின் கருணை என்றுதான் சொல்ல வேண்டும். இடுப்புக்கொடி அவள் கண்களில் படவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.

நீலகண்டன் அடமானம் வைத்தது சாவித்திரியின் இடுப்புக்கொடி என்ற விஷயம் சரோஜினிக்குத் தெரியாது. மூன்று பவுன் எடையுள்ள நகையை அவன் அடமானமாகத் தந்திருக்கிறான் என்பதை மட்டுமே அவள் அறிவாள்.


அந்த நகை மாலையா, வளையலா என்பதைத் தெரிந்துகொள்ளக் கூடிய- சாதாரணமாக பெண்களிடம் காணக்கூடிய ஆர்வம்கூட அவளிடம் இல்லை. பொதுவாகச் சொல்லப்போனால் கணவர் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவள் தலையிட்டுக் கொள்வதில்லை. மில்லில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு எண்ணெய் தயாராகிறது என்பதைப் பற்றியோ- அங்கு எத்தனைப் பேர் வேலை பார்க்கிறார்கள் என்பதைப் பற்றியோ தெரிந்துகொள்ள அவள் எந்தச் சமயத்திலும் விருப்பப்பட்டதில்லை. கண்ணில் பார்ப்பவர்களுக்கெல்லாம் தானம் கொடுக்கும் செயல் சற்று அதிகமாகப் போகிறது என்று மனதில் தோன்றும்போது மட்டும் அவள் தன் கணவரிடம் ஏதாவது கூறுவாள். அவ்வளவுதான்.

“கொஞ்சம் படுக்கட்டுமா? என்னால முடியல என் சரோஜினி.”

ராமுண்ணி படுக்கையில் படுத்தபோது கட்டில் ஓசை உண்டாக்கியது. நூறு வருடங்கள் பழமையான கட்டில் அது. ராமுண்ணியின் தாய் அவரைப் பெற்றெடுத்ததுகூட இந்தக் கட்டிலில் படுத்துதான். அவருடைய நான்கு பிள்ளைகளையும் சரோஜினி கர்ப்பம் தரித்தது இந்தக் கட்டிலில் படுத்துத்தான். விரலைச் சப்பிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போல சாவிரித்தியின் இடுப்புக் கொடியைத் தன்னுடைய மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவர் சுருண்டு படுத்திருந்தார். அன்று இரவு தங்கத்தால் ஆன அந்த இடுப்புக்கொடியை அணிந்த சாவித்திரியின் இடையை அவர் கனவு கண்டார்.

நிம்மதியற்ற நிலையுடனே ராமுண்ணி காலையில் படுக்கையை விட்டு எழுந்தார். வழக்கமாக தாடியைச் சவரம் செய்வதற்காக வந்த நாவிதனை அவர் வேண்டாமென்று திருப்பி அனுப்பினார். நீண்டநேரம் அவர் வாசலில் இங்குமங்குமாய் நடந்து கொண்டே இருந்தார். குளிக்கவில்லை. மில்லுக்குக்கூட செல்லவில்லை.

“என்ன ஆச்சு உங்களுக்கு? ரெண்டு நாளா நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன். நீங்க பழைய மாதிரி இல்லையே! அப்படி என்ன தீவிரமான சிந்தனை? எது இருந்தாலும் என்கிட்ட மனசைத் திறந்து சொல்லக்கூடாதா? நான் என்ன வேற ஆளா? உங்க மனசுல என்ன இருக்குன்றதை நானும் தெரிஞ்சிக்கிறேனே!...”

சரோஜினி ஒருமுறைகூட தன் கணவரிடம் இப்படிப் பேசியதில்லை. அவள் இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை.

“என் சரோஜினி, உனக்குத் தெரியாம என்கிட்ட என்ன ரகசியம் இருக்கு?”

மீத்தலேடத்து ராமுண்ணி தன் மனைவியைப் பார்த்து சிரித்தார். யாருக்கும் தெரியாமல் அவளின் பின்பகுதியை அவர் கையால் தடவினார். அவர் அப்படி நடந்துகொண்டதைப் பார்த்து சரோஜினி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். அவள் உள்ளே சென்றாள். அவளுக்கு எல்லா நேரத்திலும் சமையலறையில் வேலை இருந்தது.

உட்கார்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் எல்லா நேரங்களிலும் முந்தைய நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார் ராமுண்ணி. வெண்மையான இடையில் சுற்றிக் கட்டப்பட்டிருந்த நிறம் மங்கிப்போன தங்க இடுப்புக்கொடி...

‘என் கடவுளே! நான் என்ன தப்பு செய்யறேன்? எனக்கு இப்போ ஐம்பது வயசு நடக்குது. மனைவியும் நாலு பிள்ளைகளும் இருக்காங்க. இருந்தாலும் யாரோ ஒருத்தனோட பொண்டாட்டியின் இடுப்பை நான் கனவு கண்டுக்கிட்டு இருக்கேன்.’ -இப்படி சிந்தித்தவாறு அவர் நீலகண்டனின் வீட்டை நோக்கி நடந்தார். வழக்கம்போல் வேஷ்டியின் ஒரு நுனியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு குடையைத் தரையில் ஊன்றியவாறு கம்பீரமாக அவர் நடந்து சென்றார்.

வாசலில் அமர்ந்திருந்த அச்சு வாத்தியார் கையால் சைகை செய்ததையும், என்னவோ கூறுவதற்காக அழைத்ததையும் ராமுண்ணி பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை.

மீண்டும் ராமுண்ணி தன் வீட்டு வாசலில் வந்து நின்றிருப்பதைப் பார்த்த சாவித்திரி ஒருவித பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டால். நீலகண்டன் அப்போது வீட்டில் இல்லை. தனக்கென நிரந்தர வேலை எதுவும் இல்லாத அவன் எப்போது வீட்டிற்கு வருவான், எப்போது போவான் என்றே சொல்ல முடியாது. வெயில் காலமாக இருந்தால் அவனுடைய முக்கியமான பொழுதுபோக்கே வாய்க்காலில் இறங்கி குளிப்பதுதான் என்றாகிவிட்டது. ஒருநாள் அப்படி நீரில் மூழ்கி குளித்துக்கொண்டிருந்த அவன் அங்கேயே உறங்கிவிட்டான். கொஞ்சம் நீர் கண்ணிற்குள்ளும் மூக்கிற்குள்ளும் போய்விட்டது. சிறிது நீர் குடலுக்குள்ளும் நுழைந்துவிட்டது. அந்தச் சம்பவத்தைக் கேட்டு சாவித்திரி அன்று முழுவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“நீலகண்டன் இல்லியா?”

“இல்ல...”

அவள் கதவிற்குப் பின்னால் மறைந்து நின்றிருந்தாள். தொடர்ந்து என்ன சொல்வது என்று தெரியாமல் ராமுண்ணி தயங்கியவாறு நின்றார். மறைந்து நின்றிருந்த அவளுடைய இடுப்பின் ஒரு பகுதி மட்டும் அவருக்குத் தெரிந்தது. கனவில் கண்ட இடுப்பிற்கும் நேரில் பார்க்கும் இடுப்பிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கனவில் கண்ட இடுப்பு பெரியதாக இருந்தது.

“வாய்க்கால்ல குளிக்கப் போயிருக்கானா?”

“நீலகண்டன் வந்தா நான் விசாரிச்சதா சொல்லு...”

சாவித்திரி அடுத்த நிமிடம் கதவிற்குப் பின்னாலிருந்து வெளியே வந்தாள். அவள் கண்கள் கறுப்பு நிறத்தில் இருந்தன.

“ராமுண்ணி ஐயா, கொஞ்சநாள் பொறுத்துக்கங்க. எல்லா ரூபாயையும் நாங்க சீக்கிரம் திருப்பித் தந்தர்றோம்.”

அப்போது ராமுண்ணியின் மனதில் தோன்றிய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. எனினும் அவர் மறைத்துக்கொண்டு வேண்டுமென்றே தன்னுடைய குரலைக் கடுமையாக்கிக் கொண்டு சொன்னார்.

“என் சாவித்திரி, மீத்தலேடத்து குடும்பத்துக்கு இன்னைக்கு பெருசா சொல்ற அளவுக்கு என்ன இருக்கு? எனக்கு நாலு பிள்ளைகள காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்குல்லே?”

அதைக் கேட்டு சாவித்திரியின் முகம் வாடிவிட்டது. இனிமேல்  விற்பதற்கும் அடமானம் வைப்பதற்கும் அவளிடம் எதுவும் இல்லை. இறுதியாக அவளிடம் இருந்தது அந்த இடுப்புக் கொடி மட்டும்தான். அதை அவளுடைய கணவன் நீலகண்டன் அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இடுப்பிலிருந்து கழற்றி எடுத்துக்கொண்டு போய்விட்டான். ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் புற்களின் மறைவில் வாய்க்காலில் இறங்கிக் குளிக்கும்போது இடுப்புக் கொடி இல்லாத தன்னுடைய இடையைப் பார்த்து அவள் பெருமூச்சு விடுவாள். இனிமேல் அடமானம் வைப்பதற்கும் விற்பதற்கும் அவளிடம் இருப்பது அவள் பெற்ற பிள்ளைகள் மட்டுமே. ஒரு நாள் நீலகண்டன் இந்திராவையும் பாலகோபாலனையும் கொண்டுபோய் அடமானம் வைத்தால் நிச்சயம் அவள் ஆச்சரியப்படமாட்டாள்.

அவள் இப்படி பல விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவர் அவளின் இடையையே பார்த்தவாறு நின்றிருந்தார்.


3

மாலை நேரத்தில் நீலகண்டன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது கண்களில் நீர் வழிய நின்று கொண்டிருந்த சாவித்திரியை அவன் பார்த்தான்.

“மீத்தலேடத்து ராமுண்ணி ஐயா இன்னைக்கும் வந்திருந்தார்.”

“பணத்துக்காகவா?”

“பிறகு எதுக்கு அவர் இங்கே வரணும்?”

“சாகுறதுக்கு முன்னாடி எல்லா கடன்களையும் நான் கொடுத்திடுவேன்.”

அவன் வெறுப்புடன் அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்தான். அவனுடைய ஆடை வியர்வையில் நனைந்திருந்தது. அவன் அதைக் கழற்றிக் கொடியில் போட்டான்.

“நீ ஏன் அழுதுக்கிட்டு இருக்கே?”

“என் இடுப்புக்கொடி எனக்கு வேணும்.”

“இடுப்புக்கொடியைக் கட்டிக்கிட்டு நடக்குறதுக்கு நீ என்ன சின்னப்பிள்ளையா?”

“நீங்க எதை வேணும்னாலும் வித்துக்கங்க. எனக்கு என் இடுப்புக் கொடி திரும்பி வந்தாகணும்.”

“நீ எனக்கு பைத்தியம் பிடிக்க வச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பே போலிருக்கு!”

அவன் மேற்துண்டை எடுத்துக்கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தான்.

சாவித்திரி அவனைத் தன்னுடன் படுக்க அனுமதிக்கவில்லை. மீத்தலேடத்து ராமுண்ணிக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை உடனே தரவில்லையென்றால் இந்திராவையும் பாலகோபாலனையும் அழைத்துக்கொண்டு தான் தன்னுடைய வீட்டிற்குப் போகப் போவதாக அவள் பயமுறுத்தினாள். அதன் விளைவாக நீலகண்டன் மீண்டும் ஒருநாள் மீத்தலேடத்து ராமுண்ணியைப் பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றான். ராமுண்ணி அப்போது படுக்கையறையில் இருந்தார். கதவை உள்பக்கமாக அவர் மூடியிருந்தார். நீலகண்டன் தன்னைப் பார்ப்பதற்காக வந்திருப்பது தெரிந்து அவர் கீழே இறங்கிவந்தார்.

“என்ன நீலகண்டா? பணம் ஏதாவது வேணுமா?”

ராமுண்ணி தன்னிடம் விளையாடுகிறாரோ என்று நீலகண்டன் சந்தேகப்பட்டான்.

“தயங்க வேண்டாம். சொல்லு...”

“சாவித்திரி என்கூட சரியா பேசமாட்டேன்கிறா...”

“என்ன காரணம் நீலகண்டா?”

“அவளுக்கு அவளோட இடுப்புக்கொடி வேணுமாம்.”

அதைக் கேட்டதும் ராமுண்ணியின் முகம் என்னவோ மாதிரி ஆகிவிட்டது. நீலகண்டன் சொன்னதை எங்கே சரோஜினி கேட்டிருப்பாளோ என்று அவர் பயந்தார். நீலகண்டனைப் பார்த்தால் நிச்சயம் அவள் பயங்கர கோபத்திற்கு ஆளாவாள் என்பது மட்டும் நிச்சயம். ராமுண்ணி மெதுவாக வெளி வாசலைத் தாண்டி வெளியே வந்தார். நீலகண்டனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவர் நடந்தார். வெளியே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. சரோஜினியின் பார்வைபடாத இடமாகப் பார்த்து வெளிச்சுவரின் மறைவில் அவர்கள் நின்றார்கள். சுவரில் இருந்த பாசி வெயில் பட்டு கருகிப்போய் சாம்பல் நிறத்தில் ஆங்காங்கே காட்சியளித்தது.

“நீ என்கிட்ட ஏதாவது சொல்ல நினைச்சா, நான் உன் வீட்டுக்கு வந்துர்றேன். நீ இங்கே வர வேண்டாம்.”

ராமுண்ணி பேசிய முறையையும் நடந்துகொண்ட விதத்தையும் பார்த்து நீலகண்டன் உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானான். மீத்தலேடத்து ராமுண்ணி, தனக்கென்று எந்த ஒரு வேலையும் இல்லாமல் தெருவில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கும் நீலகண்டனைப் பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு வருவதாகச் சொல்வதா? ராமுண்ணிக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று நினைத்தவாறு அவரைப் பார்த்தான் நீலகண்டன்.

“சரி... நீ புறப்படு. சாயங்காலம் மில்லுல இருந்து திரும்பி வர்றப்போ நான் உன் வீட்டுக்கு வர்றேன். நீ என்கிட்ட என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ, அதை அந்தச் சமயத்துல சொல்லு.”

நீலகண்டன் புறப்படவில்லை. என்ன செய்வதென்பதே தெரியாமல் அவன் நின்றிருந்தான். ராமுண்ணி சட்டை பைக்குள் கையை நுழைத்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவன் கையில் தந்தார்.

“நீலகண்டா, இதை வச்சுக்கோ. போயி தேநீர் குடி...”

நீலகண்டன் போனதும் ராமுண்ணி ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார்.

அவர் சொன்னபடி செய்தார். மில்லில் இருந்து திரும்பிவரும் வழியில் அவர் நீலகண்டனின் வீட்டை நோக்கி நடந்தார். மீத்தலேடத்து ராமுண்ணியை மீண்டும் தன் வீட்டு வாசலில் பார்த்து சாவித்திரி ஆச்சரியப்பட்டாள். “இதோ ராமுண்ணி ஐயா வந்திருக்காரு...” -அவள் சொன்னாள். அடுத்த நிமிடம் அவிழ்ந்துப் போயிருந்த வேஷ்டியை இடுப்பில் இறுகக் கட்டியவாறு வாசலுக்கு வந்தான் நீலகண்டன். ராமுண்ணி கையிலிருந்த குடையைத் தரையில் ஊன்றியவாறு சற்று முன்னால் வந்தார். நீலகண்டன் அமரச் சொல்வதற்கு முன்பே அவர் அங்கிருந்த பெஞ்சில் போய் அமர்ந்தார்.

“சொல்லு... என்ன விஷயம்னு சொல்லு...”

அவர் கேட்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தார். ஆனால் நீலகண்டன் வாயே திறக்கவில்லை. சாவித்திரி வற்புறுத்திச் சொன்னாள் என்பதற்காகத்தான் காலையில் அவன் மீத்தலேடத்து இல்லத்திற்கே சென்றான்.

“என்ன நீலகண்டா, என்கிட்ட சொல்றதுக்கு ஒண்ணும் இல்லியா?”

“இல்ல...”

“பிறகு எதுக்கு காலையில பொழுது புலர்ற நேரத்துலயே நீ என் வீட்டுப் பக்கம் வந்தே? மத்தவங்க முன்னாடி நின்னுக்கிட்டு இதையும் அதையும் சொல்லிக்கிட்டு இருந்தியே!”

“ராமுண்ணி ஐயா, அந்த இடுப்புக்கொடியைத் திருப்பித்தரணும்...”

“நீ அதை அடகுல்ல வச்சிருக்கே!”

“நான் சீக்கிரம் பணத்தைத் தந்திர்றேன்.”

“எனக்கு அப்படியொண்ணும் அவசரமில்ல நீலகண்டா.”

தொடர்ந்து என்ன சொல்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான் நீலகண்டன். அன்று அடகு வைத்துக் கொள்ளும்படி கூறி நகையைத் தந்தபோது ராமுண்ணி அதை வாங்கிக் கொள்ள சம்மதிக்கவில்லை. தான் வற்புறுத்தி அவரிடம் அந்த இடுப்புக்கொடியை ஒப்படைத்துவிட்டு வந்ததை அவன் நினைத்துப் பார்த்தான்.

வாசல் பக்கம் ஏதோ ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்த ராமுண்ணி வேகமாக அங்கே பார்த்தார். சாவித்திரியின் தலைமுடியையும் அவள் இடுப்பின் ஒரு பகுதியையும் வாசல் கதவின் மறைவில் அவர் பார்த்தார். அவருடைய இதயம் ‘டக்டக்’கென்று அடிக்க ஆரம்பித்தது.

“என் நீலகண்டா, அந்த இடுப்புக் கொடியை மட்டும் நீ என்கிட்ட கேட்காதே. வேற எது வேணும்னாலும் நான் உனக்குத் தர்றேன்.”

கெஞ்சுகிற குரலில் ராமுண்ணி சொன்னார். அவர் தொடர்ந்து சொன்னார்.

“அந்த இடுப்புக் கொடியோட எடை மூணு பவுன்தானே? நான் அஞ்சு பவுனுக்கான பணத்தை உனக்கு தர்றேன். போதுமா?”

அதைக் கேட்டு நீலகண்டனின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது. ஒருவேளை தான் தந்த இடுப்புக்கொடியை ராமுண்ணி தொலைத்து விட்டாரோ என்று அவன் நினைத்தான். அதே நேரத்தில் அப்படி நடந்திருந்தால்கூட பரவாயில்லை. வேலையென்று எதுவும் இல்லாத தன்னால் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பதென்பது முடியவே முடியாத ஒன்று என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். ஐந்து பவுனுக்கான விலையைக் கூட ராமுண்ணி தனக்கு தர வேண்டியதில்லை. மூன்று பவுன் நகைக்கான விலையையும் தட்டானின் வேலைக்கான பணத்தையும் அவர் தந்தால் போதும். தான் தர வேண்டிய ஐந்நூறு ரூபாயைக் கழித்துக் கொண்டு மீதிப் பணத்தை அவர் தந்தாலே தனக்கு திருப்திதான் என்று அவன் நினைத்தான்.

“என்ன, உனக்கு சம்மதம்தானே?”

சம்மதம்தான் என்று நீலகண்டன் தலையை ஆட்டினான்.

“அப்படின்னா நாளைக்கு இந்த நேரம் நான் பணத்தோட இங்கே வர்றேன்.”

நீலகண்டன் மீண்டும் தலையை ஆட்டினான்.

வேஷ்டியை உயர்த்திப் பிடித்தவாறு குடையைத் தரையில் ஊன்றிக் கொண்டே படிகளில் இறங்கிச் செல்லும்போது தன்னை ஒரு வெற்றி வீரனைப்போல உணர்ந்தார் ராமுண்ணி. ஒரு நாட்டைப் பிடித்த மகிழ்ச்சி அவரிடம் குடிகொண்டிருந்தது.


வயல் வரப்பில் நின்றவாறு இடுப்பிலிருந்த கொடியை எடுத்து அவர் கண்குளிரப் பார்த்தார். அதைத் தன்னுடைய இரண்டு கன்னங்களிலும் சேர்த்து வைத்து சந்தோஷப்பட்டார். அந்த இடுப்புக் கொடியை அவர் முத்தமிட்டார்.

4

ண்ணெய் மில்லில் நடக்கும் வேலைகள் எப்போதும் போல ஒழுங்காக நடந்தன. மாட்டு வண்டிகளில் தேங்காய்கள் வந்து இறங்கின. தயாரான எண்ணெய் நிரப்பப்பட்ட தகர டின்கள் அடுக்கப்பட்ட மாட்டு வண்டிகள் நகரத்தை நோக்கிச் சென்றன. மீத்தலேடத்து ராமுண்ணின் தேங்காய் சாம்ராஜ்யத்தில் எவ்வளவு ஆட்டினாலும் தீராத அளவிற்கு தேங்காய்கள் குவிந்து கிடந்தன. மீதி கிடந்த தேங்காய்களை சாப்பன் நாயர் விற்பனைக்கு எடுத்தார். ராமுண்ணி நீலகண்டனைத் தன்னுடைய உதவியாளராக ஆக்கிக் கொண்டார். தேவைப்படும் தேங்காய்களையும், எண்ணெயையும் அவன் எடுத்துக் கொள்ளலாம். நீலகண்டன் வாய்க்காலில் குளித்துவிட்டு மேலே வரும்போது நீருக்கு மேலே தேங்காய் எண்ணெய் பரவிக் கிடந்தது. பாலகோபாலன், இந்திரா- இருவரின் தலையிலிருந்தும் முகத்திலிருந்து எண்ணெய் எப்போதும் வழிவதைப் போல் இருக்கும்.

“சும்மா கிடைக்குறதுன்றதுக்காக தலையிலயும் முகத்துலயும் இப்படியா எண்ணெயைத் தேய்க்கிறது?”

அச்சு வாத்தியார் விளையாட்டாகக் கேட்டார்.

அவர் அப்படிச் சொன்னதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. நீலகண்டனை எதற்காக ராமுண்ணி தன்னுடைய உதவியாளராக வைத்துக் கொண்டார் என்பதற்கான காரணத்தை அச்சு வாத்தியாரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு இடத்தில் நிலையாக இருக்கக் கூடியவனல்ல நீலகண்டன். இரண்டு பிள்ளைகள் உண்டான பிறகும் தனக்கென்று ஒரு நிரந்தர வேலை இல்லாமல் இவ்வளவு காலமாக அவன் இருப்பதற்குக் காரணம்கூட அதுதானே? ராமுண்ணி விஷயத்தை எடுத்துக்கொண்டால் அவருக்கு ஒரு உதவியாளர் நிச்சயம் தேவையே இல்லை. தேங்காய்களையும் மில்லையும் பார்த்துக் கொள்வதற்குத் தேவைக்கும் அதிகமாகவே பணியாட்கள் அவரிடம் இருக்கிறார்கள்.

“எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் ஒரு வேலையும் இல்லாம வெறுமனே சுத்திக்கிட்டே கிடப்பான். ஒண்ணுக்கு ரெண்டு பிள்ளைங்க வேற இருக்காங்களே?”

ராமுண்ணி சொன்னார்.

நீலகண்டனின் வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்தவண்ணம் இருந்தது. தேங்காய் அரைத்து வைத்த குழம்புடன் சாதம் சாப்பிட்டதாலும் தேங்காய் எண்ணெய் தேய்த்து குளித்ததாலும் நீலகண்டனின் பிள்ளைகள் இரண்டும் மினுமினுப்பாகத் தெரிய ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் நீலகண்டன் மில்லில் புண்ணாக்கு ஏற்றிக் கொண்டிருப்பதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ராமுண்ணி மாட்டு வண்டியில் ஏறி வேகமாக அவனுடைய வீட்டை நோக்கிச் சென்றார். வண்டியை வயலின் கரையோரத்தில் நிறுத்திவிட்டு அவர் வீட்டு வாசலை நோக்கி நடந்தார்.

“யாரும் இங்கே இல்லையா?”

“அம்மா குளிச்சிக்கிட்டு இருக்காங்க.”

“எங்கேடா மகனே?”

“அதோ அங்கே...”

பாலகோபாலன் வாய்க்காலை நோக்கி விரலால் காட்டினான். அங்கே ஒரு ஆள் உயரத்திற்கு புற்கள் வளர்ந்திருந்தன. இந்திரா வாசலில் உட்கார்ந்து சிரட்டையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு சோறு, குழம்பு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். ராமுண்ணி அங்கு வளர்ந்திருந்த புற்களைப் பார்த்தார். அதைத் தாண்டி நிறைந்து ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் தெரிந்தது. ஓடிக் கொண்டிருந்த நீர் இங்கிருந்து பார்த்தபோது தெளிவாகத் தெரிந்தது. புற்களை ஒட்டிக் கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கட்டாயம் விரால் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்குமென நினைத்தார் ராமுண்ணி.

“நீங்க புறப்படுறீங்களா?”

“கொஞ்சம் வேலை இருக்கு மகனே.”

அவர் சட்டைப் பைக்குள்ளிருந்து இரண்டு கால் ரூபாய் நாணயங்களை எடுத்து பாலகோபாலன் கையிலும் இந்திராவின் கையிலும் தந்தார்.

“இது எவ்வளவு காசு?”

“கால் ரூபா.”

“இதுக்கு ஆரஞ்சு மிட்டாயி கிடைக்குமா?”

“நிறைய கிடைக்கும்.”

“அய்யோ... அம்மா அடிப்பாங்க. எனக்கு வேண்டாம்”

பாலகோபாலன் காசைக் கீழே வைத்தான். அதைப் பார்த்து இந்திராவும் அப்படியே செய்தாள்.

“அம்மா அடிக்க மாட்டா. ராமுண்ணி ஐயா தந்தார்னு சொன்னா போதும்...”

பிள்ளைகள் தயக்கத்துடன் நாணயத்தைத் திரும்ப எடுத்தார்கள்.

ராமுண்ணி வேகமாக இறங்கி நடந்தார். தூரத்தில் வயலோரத்தில் மாட்டு வண்டி நின்றிருந்தது. மாடுகள் காலையில் தின்ற வைக்கோலையும் குடித்த நீரையும் ஜீரணம் செய்து கொண்டிருந்தன. அவற்றின் வாயிலிருந்த பெரிய புற்களுக்கிடையே நுரை ததும்பிக் கொண்டிருந்தது. மாடுகளின் பின்னங்கால்களுக்கிடையில் தரையில் சாணம் விழுந்து கிடந்தது.

அதோ, மீத்தலேடத்து ராமுண்ணி தன்னைவிட உயரமாக வளர்ந்து நின்றிருக்கும் புற்களுக்கிடையே தன்னை மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அவரின் டயர் செருப்புகள் அணிந்த கால்கள் சேற்றில் இருக்கிறது. தன்னுடைய மடியில் வைத்திருக்கும் இடுப்புக்கொடியின் தடம் பதிந்த இடையை ஒரு கனவில் பார்ப்பதைப் போல அவர் பார்த்தார். பச்சைப் புல், நீர் ஆகியவற்றின் குளிர்ச்சியில் ஒரு சிலையைப் போல அவர் நின்றிருந்தார். நேரம்போனதே ராமுண்ணிக்கு தெரியவில்லை.

5

ராமுண்ணியின் நடவடிக்கையில் என்னவோ குறைபாடு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் அச்சு வாத்தியார். காலையில் ராமுண்ணிக்கு தாடியை மழிப்பதற்காகச் சென்ற நாவிதன் தாடியை மழிக்காமல் திரும்பிச் செல்வதைத் தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அச்சு வாத்தியார் கவனித்தார். தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தவாறே வழியில் போவோரையும் வருவோரையும் அச்சு வாத்தியாரால் பார்க்கமுடியும். ஊரிலேயே மிகவும் முக்கியமான வழி அவரின் வீட்டிற்கு முன்னால்தான் இருக்கிறது. மில்லிற்கு தேங்காய்களை ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகள் அந்த வழியேதான் கடந்துபோகும். வழக்கம்போல ராமுண்ணியும் அச்சு வாத்தியாரும் இப்போதும் மாலைவேளைகளில் நடப்பதற்காகச் செல்வார்கள். அந்தச் சமயத்தில் ராமுண்ணி சில வேளைகளில் எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பார். அச்சு வாத்தியார் கூறுவது எதையும் அவர் தன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை என்பதைப் போல் அப்போது தோன்றும். ராமுண்ணி வேறு ஏதோவொரு உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். அப்படி அவர் எந்த உலகத்தில் உலவிக்கொண்டிருக்கிறார்? யாருடைய உலகம் அது? இந்த விஷயங்களைத்தான் அச்சு வாத்தியாரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

சரோஜினியும் தன் கணவரிடம் சமீபகாலமாக இருந்துவரும் மாற்றங்களைக் கவனிக்காமலில்லை. காலையில் மாடியைவிட்டு கீழே இறங்கி வந்தால் மீண்டும் மதிய உணவு சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் படுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் மாடிக்குச் செல்வார். இப்போது என்னவென்றால் நாளொன்றுக்கு பத்து தடவைகளாவது படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் கீழே இறங்கிவந்த மறுநிமிடமே என்னவோ யோசித்தவாறு மீண்டும் மாடியை நோக்கி அவர் வேகமாகச் செல்வதை அவளே பார்த்திருக்கிறாள்.

‘பேசாம மாடியிலயே இருந்தட வேண்டியதுதானே? எதுக்கு நூறு தடவை ஏறுறதும் இறங்குறதுமா இருக்கணும்?’

ஒருநாள் தன் கணவன் மாடிக்குச் சென்றபோது, அவருக்கு தெரியாமல் சிறிதும் ஓசையின்றி அவள் அவரைப் பின்தொடர்ந்தாள்.


அவர் படுக்கையறைக்குள் நுழைந்து கதவுகளை அடைத்து ஜன்னலுக்கருகில் முதுகைக் காட்டியவாறு நின்றிருந்தார். சரோஜினி கதவுகளின் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தாள். தன் கணவன் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் அவள் இதுவரை தலையிட்டதேயில்லை. அவரின் எந்த விஷயத்தையும் அவள் சந்தேகப்பட்டு பார்த்ததுமில்லை. அவருடைய காரியங்களைத் தெரிந்துகொள்ள அவள் எந்தச் சமயத்திலும் ஆசைப்பட்டதுமில்லை. தன் கணவனின் சமீபகால நடவடிக்கைகள் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருப்பது தெரிந்துதான் அவள் இப்படி ஒளிந்து கவனிக்கும் நிலைக்கே வந்தாள். சிறிய ஜன்னலுக்கருகில் லேசான வெளிச்சம் தெரிந்தது. ராமுண்ணி ஏதோவொன்றை மடியிலிருந்து எடுத்து வெளிச்சத்தில் மிகவும் கவனமாக பார்ப்பதையும் அதை நெற்றியிலும் மார்பிலும் இறுகச் சேர்த்து அணைத்துக் கொள்வதையும் அவள் பார்த்தாள். அவர் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்ததால் அவர் கையில் என்ன இருக்கிறது என்பதை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது அவர்களின் இளைய மகன் தாயைத் தேடி அழுதவாறு படியில் ஏறி அங்கு வந்தான். பையன் வரும் சத்தத்தைக் கேட்டு சுயஉணர்விற்கு வந்த ராமுண்ணி இடுப்புக் கொடியை வேகமாக மடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்.

“இங்கே தாய்க்கும் மகனுக்கும் என்ன வேலை?” - ராமுண்ணிக்குக் கோபம் கோபமாக வந்தது. “ஒரு இடத்துல நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா அதுக்கு விட்டால்தானே?”

“அப்படின்னா என்னையும் பிள்ளைகளையும் கொன்னு போட்டுடுங்க. அதுக்குப் பிறகு நிம்மதியா இருக்கலாம்ல...”

அவள் தன் மகனை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவனுடைய மூக்கைத் துடைத்துவிட்டாள். அவனுடைய மூக்கு எப்போது பார்த்தாலும் ஒழுகிக்கொண்டே இருக்கும் அவன் பெயர் சகாதேவன். அவள் மகனைத் தூக்கியவாறு கீழே இறங்கிப் போனாள். ராமுண்ணி என்னவோ தீவிரமாகச் சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார். அன்று அவர் தாடியை மழிக்கவோ, குளிக்கவோ எதுவும் செய்யவில்லை.

அன்று சாயங்காலம் அவர் நடப்பதற்கும் போகவில்லை. பெட்டிப் பாலத்தில் கீழே தண்டவாளத்தைப் பார்த்தவாறு தன்னந்தனியாக அச்சு வாத்தியார் நின்றிருந்தார். அதோ, தண்டவாளத்தின் வழியாக புகையை விட்டவாறு ஒரு வண்டி வந்து கொண்டிருக்கிறது!

மழை மேகம் கூடியிருந்ததால் அன்று சற்று சீக்கிரமே இருள் வந்து கவிந்துவிட்டது. வழக்கத்தைவிட சற்று முன்பே அச்சு வாத்தியார் தன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார். அப்போது நீலகண்டனின் வீட்டிற்குச் செல்லும் வழியில் ராமுண்ணி நடந்து செல்வதை அவர் பார்த்தார். ‘அடிக்கடி நீலகண்டனின் வீட்டைத் தேடிச் செல்வது, நீலகண்டனைத் தன்னுடைய உதவியாளராக வைத்துக் கொள்வது... ராமுண்ணியின் இந்தச் செயல்களுக்கு என்ன அர்த்தம்? என் கடவுளே...’ -தனக்குள் கூறிக்கொண்டார் அச்சு வாத்தியார்.

“ராமுண்ணியை கவனிச்சுப் பார்க்கணும் உனக்கு இருக்குறது உலகம்னா என்னன்னே தெரியாத சின்னப் பசங்க. ஞாபகத்துல வச்சுக்கோ...” -சரோஜினியைப் பார்த்து சொன்னார் அச்சு வாத்தியார்.

“எனக்கு ஒண்ணுமே புரியல அச்சு வாத்தியாரே...”

“எல்லாம் உனக்குப் புரியும். இப்போ இந்த அளவுக்குத் தெரிஞ்சிருக்குறதே போதும்”

“நான் என்ன செய்யறது? அடக் கடவுளே...”

சரோஜினியின் கண்கள் கலங்கின.

“நீ கவலைப்படாதே, சரோஜினி. நான் என் மனசுல இருந்ததைச் சொல்லிட்டேன். ஆரம்பத்துலயே கவனமா இருந்தா பின்னாடி வருத்தப்பட வேண்டியது இருக்காதுல்ல...”

அச்சு வாத்தியார் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார். சகாதேவனை இடுப்பில் வைத்தவாறு நின்றிருந்த சரோஜினி தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மீத்தலேடத்து ராமுண்ணி இதுவரை தன் மனைவியை ஒரு நாளும் அழவிட்டதில்லை. அவளுக்குத் தேவையான சந்தோஷம் அனைத்தையும் அவர் தந்திருந்தார். இப்போது என்னவென்றால் கழுத்தில் தாலியைக் கட்டி கால் நூற்றாண்டு காலம் ஆனபிறகு அவர் தன்னுடைய மனைவியைக் கண்ணீர்விட வைக்கிறார். அச்சு வாத்தியாரின் வார்த்தைகளிலிருந்து தன்னுடைய கணவனின் மனதிற்குள் வேறு யாரோ ஒரு பெண் நுழைந்திருக்கிறாள் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஐம்பதாவது வயதில் அவரை வசீகரித்த அந்த சாமர்த்தியசாலிப் பெண் யாராக இருக்கும்? அவள் யார் என்பதை இப்போதே தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவள் நினைத்தாள். அதற்காக அவள் ராமுண்ணியை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆனால், ராமுண்ணி வந்தபோது அவருடைய சவரம் செய்யப்படாத முகத்தையும் குழி விழுந்துபோன கண்களையும் பார்த்த அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வெறுமனே நின்றுவிட்டாள். அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல் அவளுடைய பார்வை அவரின் மடியை நோக்கிச் சென்றது. மடியில் ஏதோ பிரகாசமாக இருப்பது தெரிந்தது. பல தடவை அருகில் சென்றபோது தன் கணவர் மடியில் ஏதோவொன்றை மறைத்து வைப்பதை அவள் கண்டிருக்கிறாள். மடியில் தெரிந்த அந்தப் பிரகாசத்தைப் பார்த்ததும் அவளின் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது. மீத்தலேடத்து ராமுண்ணி தன்னுடைய இதயத்தில் எதை மறைத்து வைத்திருக்கிறாரோ, அதைத்தான் தன்னுடைய மடியிலும் மறைத்து வைத்திருக்கிறார் என்பதை சரோஜினியால் புரிந்துகொள்ள முடிந்தது. அது என்னவென்பதை அறிந்துகொள்ள ஆசைப்பட்டாள் சரோஜினி. அவள் தன் கணவனின் அருகில் போய் நின்றாள்.

“மடியில் என்ன வச்சிருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல...”

“இவ்வளவு நாட்களாக மறைச்சு வச்சு நடந்தீங்கள்ல? இப்போ எனக்கு அது என்னன்னு தெரியணும்...”

“என் மடியில ஒண்ணுமில்ல, சரோஜினி...”

“இருபத்தஞ்சு வருடங்கள் கூடப்படுத்த என்கிட்டயா பொய் சொல்றீங்க?”

அவர் பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்தார்.

“அது நீலகண்டன் அடமானம் வச்ச நகை...”

“நீலகண்டனோட நகையை நான் பார்க்கக் கூடாதா?”

“நீ அதைப் பார்க்க வேண்டாம் சரோஜினி.”

அவர் மாடிக்கு ஏறினார். அவள் அவரைப் பின் தொடர்ந்தாள்.

“இப்போ எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்...”

“உனக்கு என்ன தெரியணும்?”

“இருக்க வேண்டியது ஒண்ணு நான். இல்லாட்டி அவ...”

அதைக் கேட்டு அதிர்ந்துபோய்விட்டார் ராமுண்ணி.

“என்ன சரோஜினி, நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசுற...!”

“எதையும் மறைச்சு வைக்கவேண்டாம். எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். உங்களுக்கே வெட்கமா இல்லியா? இருபது வயது தாண்டின பிள்ளைங்க இருக்காங்க. இந்த வயசுல இது தேவையா?”

ராமுண்ணி மீண்டும் பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்தார். அவர்கள் இருவரின் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தபோது, அவர் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

“நீங்க இனிமேல் உங்களுக்குப் பிறந்த பிள்ளைங்களை எப்படி முகத்தோடு முகம் முழிப்பீங்க?”

அவளுக்குக் கவலை உண்டானதைவிட கோபம்தான் அதிகம் உண்டானது. அடிபட்ட ஒரு மிருகத்தைப்போல அவள் தன் கணவரைப் பார்த்தாள். அடுத்த நிமிடம் அவள் அவரின் மடியிலிருந்த நகையை வெடுக்கென்று எடுத்தாள். இப்படி ஆக்ரோஷத்துடன் தன் மனைவி நடப்பாள் என்று சிறிதுகூட அவர் மனதில் நினைக்கவில்லை.


அவர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றிருக்க அவள் இடுப்புக் கொடியைப் பிரித்துப் பார்த்தாள். அவளின் கண்கள் நெருப்பென கொழுந்துவிட்டு எரிந்தன.

“உங்களுக்கு அறிவு வேலை செய்யாமல் போச்சா என்ன? யாரோ ஒருத்தி இடுப்புல கட்டி நடக்குற கொடியை மடியில வச்சுக்கிட்டா நடந்து திரியிறீங்க?”

அவர் அந்த இடுப்புக் கொடியை அவளிடமிருந்து வாங்கி கையில் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

“யார் அவ?”

அவளின் அந்தக் கேள்விக்கு அவர் பதிலெதுவும் சொல்லவில்லை. அவர் மீண்டும் கீழே வந்தார். கனவில் நடக்கும் ஒரு மனிதனைப் போல வெளியே அவர் நடந்தார். அவரின் நடையில்கூட முழுமையாக மாறுதல் தெரிந்தது. ஒரு கையால் வேஷ்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மறு கையால் குடையைத் தரையில் ஊன்றியவாறு கம்பீரமாக நடக்கும் அவரின் பழைய நடை அல்ல அது. பார்வை சக்தி குறைந்துபோன ஒருவனைப்போல அவர் தட்டுத் தடுமாறி நடந்து போய்க் கொண்டிருந்தார். பல நேரங்களில் எதிரில் வருகின்ற ஆட்களைக்கூட அவர் கவனிப்பதில்லை. யாராவது ஏதாவது சொன்னால்கூட அவரின் காதுகளில் அந்தச் சொற்கள் விழுவதில்லை. உண்மையாகவே சொல்லப்போனால் அது பழைய மீத்தலேடத்து ராமுண்ணியே அல்ல.

6

ன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த அச்சு வாத்தியார் தூரத்தில் பாதை வழியாக நடந்து வரும் ராமுண்ணியைப் பார்த்தார். அங்கு அமர்ந்து கொண்டே எவ்வளவு தூரத்தில் வரக்கூடிய ஆளையும் அவரால் யாரென்று பார்க்கமுடியும். அவரின் கண்களுக்கு அந்த அளவுக்குக் கூர்மையான பார்வை சக்தி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை அவர் இளநீரைத் தன்னுடைய கண்களில் ஊற்றிக் கொள்வார். எவ்வளவோ வருடங்களாக இந்த விஷயத்தை சிறிதும் தவறாமல் அவர் செய்து வருகிறார். தொண்ணூறு வயது ஆனாலும் தன்னால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எழுத்துக்களைப் படிக்க முடிய வேண்டும். அதற்கான பார்வை சக்தி தனக்கு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர் கடவுளிடம் வேண்டுவார்.

நடந்து வரும் ராமுண்ணி தூரத்தில் பாதையோரமாக நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். முகத்திற்கு நேராக எதையோ உயர்த்திப் பிடித்து அதையே பார்த்தவாறு ஒரு சிலையைப் போல ராமுண்ணி நின்றிருந்தார். பாதையின் இரு பக்கங்களிலும் வயல்கள் இருந்தன. காய்ந்துகொண்டிருந்த அந்த வெயிலிலிருந்து சற்றுக் காப்பாற்றிக்கொள்ள நிழல் தருவதற்கு அங்கு ஒரு மரம்கூட இல்லை. சிறிதுநேரம் சென்றதும் ராமுண்ணி மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தார். ஆனால், பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகில் உள்ள திருப்பத்தை அடைந்தபோது அவர் மீண்டும் சிலையாக மாறினார். கண்ணுக்கு நேராக எதையோ உயர்த்திப் பிடித்தவாறு அவர் சிறிதுநேரம் எந்தவித அசைவுமில்லாமல் அப்படியே நின்றிருந்தார்.

அச்சு வாத்தியார் இப்போது தனியாகத்தான் சாயங்கால வேளைகளில் நடந்து போகிறார். ராமுண்ணி அவருடன் வருவதில்லை. காலையில் படகோட்டும் குட்டி, வாத்தியாருக்கான செய்தித் தாளைக் கொண்டுவந்து கொடுப்பான். வழக்கம்போல செய்தித் தாளுடன் மீத்தலேடத்து வீட்டிற்குச் சென்று வயலிலிருந்து வரும் காற்றை அனுபவித்தவாறு அமர்ந்து அவர் உரத்த குரலில் செய்தித்தாளை வாசிக்கும்போது ராமுண்ணி அதைக் கவனிப்பதே இல்லை. அவருடைய மனம் முழுக்க வேறெங்கோ இருக்கும். அச்சு வாத்தியாரின் கேள்விகளுக்கு ராமுண்ணி தெளிவாகப் பதில் கூறமாட்டார். வார்த்தைகளும் சொற்களும் விட்டுவிட்டு வரும். ஒரு வாக்கியத்தைக் கூட அவரால் தெளிவாகக் கூற முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார். சிலநேரங்களில் அவர் சொல்லும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருப்பதாக அச்சு வாத்தியார் உணர்ந்தார். ராமுண்ணியின் மனதில் உண்டான மாற்றம் அவருடைய உடம்பையும் பாதித்துவிட்டிருப்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. பொன் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் ஆங்காங்கே கறுமை படர்ந்து காட்சியளித்தது. தலையையும், மார்பையும் நிமிர்த்தியவாறு குடையின் முனையைத் தரையில் ஊன்றிக்கொண்டு கம்பீரமாக செல்வதற்குப் பதிலாக ஒரு கூனனைப்போல முன்பக்கமாக வளைந்து இப்போது நடந்து போய்க் கொண்டிருந்தார் ராமுண்ணி.

மீத்தலேடத்து ராமுண்ணி நடந்து அச்சு வாத்தியாரின் வீட்டின் முன்னால் வந்தார். வாசலில் அமர்ந்திருந்த வாத்தியாரை அவர் பார்க்கவில்லை. சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் கவனிக்கக்கூடிய சுய நினைவை இழந்தவராக ஆகிவிட்டிருந்த அவர் தன் நடையைத் தொடர்ந்தார். அச்சு வாத்தியார் வேகமாக வேலியைத் தாண்டி பாதையில் இறங்கி ராமுண்ணியைப் பின்தொடர்ந்தார். கணியானின் வீட்டைத் தாண்டி பஞ்சாயத்து விளக்குக்கருகில் சென்றபோது ராமுண்ணியின் கால்கள் மெதுவாக நின்றன. அவர் மடியிலிருந்த இடுப்புக்கொடியை எடுத்து முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்து அதையே பார்த்தவாறு ஒரு கற்சிலையைப் போல நின்றார். அவருக்கு மிகவும் நெருக்கமாக வந்து நின்ற அச்சுவாத்தியாரை அவர் பார்க்கவேயில்லை.

“ராமுண்ணி, கையில என்ன இருக்கு?”

அப்போதும் ராமுண்ணி சிறிதும் அசையவில்லை. அவர் அச்சு வாத்தியாரைப் பார்க்கவில்லை. அவர் கேட்டதைக் காதில் வாங்கவுமில்லை.

சிறிது நேரம் சென்றதும் இடுப்புக் கொடியை மடியில் வைத்துக் கொண்டு ராமுண்ணி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அச்சு வாத்தியார் அவரைப் பின் தொடர்ந்து செல்லவில்லை. அவர் பஞ்சாயத்து விளக்கிற்குக் கீழே நின்றவாறு வயல் வழியே இறங்கிப் போகும் ராமுண்ணியையே பார்த்துக் கொண்டிருந்தார். வயலைக் கடந்து வாய்க்கால் கரை வழியாக நடந்துபோனால் நீலகண்டனின் வீட்டை அடையலாம்.

ராமுண்ணி குழந்தைப் பருவத்திலிருந்தே அச்சு வாத்தியாரின் மிகவும் நெருங்கிய நண்பர். அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரே வகுப்பில் படித்து வளர்ந்தார்கள். அவர்களுக்கிடையில் எந்தவொரு ரகசியமும் இதுவரை இருந்ததில்லை. ஒரே வயதைக் கொண்டவர்களென்றாலும் அச்சு வாத்தியாருக்கு கூடுதலான மனப்பக்குவமும் உலக அனுபவமும் இருந்தன. அதனால் எல்லா விஷயங்களிலும் ராமுண்ணி பொதுவாகவே அச்சு வாத்தியாரின் அறிவுரைகளை நாடுவது உண்டு. ராமுண்ணியின் நடத்தையில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டபோது ஊர்க்காரர்கள் ஆரம்பத்தில் தேடிச் சென்றது அச்சு வாத்தியாரைத்தான். ராமுண்ணி ஏதோ ஒரு பெரிய ஆபத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் விளக்கு மரத்திற்குக் கீழே நின்றிருந்த அச்சு வாத்தியாரால் புரிந்துகொள்ள முடிந்தது. என்ன செய்தாவது ராமுண்ணியை இந்த ஆபத்திலிருந்து கட்டாயம் தான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அது தன்னுடைய தலையாய கடமை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அச்சு வாத்தியார் வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு நேராக நடந்து வலது பக்கம் திரும்பி வயலில் இறங்கினார். அவர் வாய்க்கால் கரையை அடைந்தபோது சற்று தூரத்தில் வளர்ந்து நின்றிருந்த புல்லுக்குள் ராமுண்ணி மறைவதைப் பார்த்தார்.


பூச்சிகளும் பாம்புகளும் வசிக்கும் அந்த புற்புதருக்குள் ராமுண்ணி என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் அச்சு வாத்தியாரை ஆச்சரியத்திற்குள்ளாக்கின.

புற்களுக்கருகில் ராமுண்ணியின் டயர் செருப்புகளில் ஒன்று நீரில் விழுந்து கிடந்தது. அச்சு வாத்தியாருக்கு அந்தச் செருப்பை அடையாளம் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. அந்த ஊரிலேயே மீத்தலேடத்து ராமுண்ணி மட்டும்தான் செருப்புகள் அணியக்கூடிய ஒரே மனிதர். புற்களை கைகளால் நீக்கியவாறு அச்சு வாத்தியார் உள்ளே நுழைந்தார். வாய்க்கால் கரையோரம் புற்களின் மறைவில் யாரையோ எதிர்பார்த்திருப்பதைப் போல ராமுண்ணி உட்கார்ந்திருந்தார். அச்சு வாத்தியாரின் கால்கள் நீரில் பட்டு ஓசை உண்டாக்கிய பிறகும் ராமுண்ணி அதைக் கவனிக்காமல் உட்கார்ந்திருந்தார். அவர் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த தெளிந்த நீரைப் பார்த்தவாறு எந்தவித அசைவுமில்லாமல் அமர்ந்திருந்தார். சாறுபிழிந்த மூலிகை இலைகளும் ஒரு காலியான எண்ணெய் புட்டியும் ஒரு கல்லின் மீது இருந்தன. துணி சலவை செய்த சோப்பின் வாசனை அந்த இடத்தில் தங்கியிருந்தது. மீத்தலேடத்து ராமுண்ணிக்கு இப்படி அந்த இடத்தில் வந்து இருக்கவேண்டிய அவசியமென்ன என்பதை அச்சு வாத்தியார் நினைத்துப் பார்த்தார்.

திடீரென்று அச்சு வாத்தியாருக்கு சுயநினைவு வந்தது. ஊரிலுள்ள குழந்தைகளுக்கு எழுத்துக்கள் சொல்லித்தரும் ஆசிரியர் தான் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். பெண்கள் குளிக்கக் கூடிய வாய்க்காலுக்கருகில் புற்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கும் தன்னை யாராவது பார்க்க நேர்ந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? யோசித்துப் பார்த்த அச்சு வாத்தியார் அதிர்ச்சிக்குள்ளானார். அவர் ஓசையெதுவும் உண்டாக்காமல் மெதுவாகத் திரும்ப நடந்து புற்களைவிட்டு வெளியே வந்தார். நான்கு திசைகளிலும் பார்த்து யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துக் கொண்டார். அதற்குப் பிறகு முழுமையான நிம்மதியுடன் அவர் திரும்ப நடந்தார்- மீத்தலேடத்து ராமுண்ணியை அங்கேயே விட்டு விட்டுத்தான்.

இரண்டு நாட்கள் சென்ற பிறகு ராமுண்ணியின் மனைவி சரோஜினி அச்சு வாத்தியாரைப் பார்ப்பதற்காக வந்தாள். அவன் கண்களில் அழுததற்கான அடையாளம் தெரிந்தது. எல்லா விஷயங்களையும் அச்சு வாத்தியார் பொறுமையுடன் கேட்டார். யாரோ ஒரு பெண் இடுப்பில் கட்டி நடந்த கொடியை ராமுண்ணி மடியில் வைத்துக்கொண்டு நடந்து திரிகிறார் என்பதை அறிந்த அவருக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. சரோஜினி முகத்தைப் பார்ப்பதற்குக்கூட அவருக்கு என்னவோபோல் இருந்தது.

“என்னையும் என் பிள்ளைகளையும் தெருவுல நிற்க வைக்கப் பாக்குற அவளோட ரெண்டு கண்களையும் நான் பிடுங்காம விட மாட்டேன்...”

“அமைதியா இரு. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இல்லாமலா இருக்கும்.”

“யார் அவள்னு எனக்குத் தெரியணும், அச்சு வாத்தியாரே...”

“நாம அதைக் கண்டுபிடிப்போம்.”

என்னவோ முணுமுணுத்தவாறு அழுதுகொண்டே அவள் திரும்பிப் போனாள். அச்சு வாத்தியாருக்கு எல்லா விஷயங்களும் நன்கு புரிந்தன. அந்த இடுப்புக் கொடிதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம். அது யாருடைய இடுப்புக் கொடி என்பதைத்தான் அவர் நன்கு அறிவாரே!

நீலகண்டனைப் பார்த்து விஷயத்தைச் சொல்லவேண்டும் என்றுதான் அவர் முதலில் நினைத்தார். ஆனால், நீலகண்டனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? ராமுண்ணி அவனுக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். தன்னுடைய உதவியாளராக அவனை அவர் ஆக்கினார். எண்ணெய் மில்லின் மேற்பார்வைப் பொறுப்பு அவனுடையதுதான். இருந்தாலும் நீலகண்டனால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? தன்னுடைய சொந்த மனைவியின் இடுப்பிலிருந்து கழற்றிய கொடியை வேறொரு ஆள் மடியில் வைத்துக்கொண்டு நடந்து திரிவது, அந்த இடுப்புக் கொடி மயக்கத்திலேயே சதா நேரமும் இருப்பது... நீலகண்டன் என்றல்ல; வேறு யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு செயலைப் பார்த்து வெறுமனே நின்றிருக்க மாட்டார்கள். அதனால் வேண்டாம்... நீலகண்டனுக்கு இந்த விஷயம் இப்போது தெரியாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தார் அச்சு வாத்தியார்.

ஆனால் அன்றே அவர் சாவித்திரியைப் போய்ப் பார்த்தார். படிகளில் ஏறி வந்துகொண்டிருக்கும் அச்சு வாத்தியாரைப் பார்த்து சாவித்திரி மிகவும் ஆச்சரியப்பட்டாள். இதென்ன கதை என்று அவள் நினைத்தாள். சமீபகாலமாக ஊரிலுள்ள முக்கிய மனிதர்கள் அடிக்கொரு தரம் தன்னுடைய வீட்டைத்தேடி வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அவள் ஆராய முற்பட்டாள். வழியில் பார்த்தால் ‘என்ன சாவித்திரி?’ என்று குசலம் விசாரிக்கும் பழக்கம் கூட இல்லாத, கண்டால் முகத்தைக்கூடப் பார்க்க நினைக்காத அச்சு வாத்தியார் இதோ தன்னுடைய வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறார் என்பதை நினைக்கும்போது அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

“நீலகண்டன் இங்கே இருக்கானா?”

“இல்ல... மில்லுல இருக்காரு...”

அச்சு வாத்தியாருக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. நீலகண்டன் அங்கு இருந்தானேயானால், எதுவுமே பேசாமல் திரும்பிச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் அவர்.

“மில்லுக்கு போனா பார்க்கலாம்.”

“நான் நீலகண்டனைப் பார்க்க வரல. உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

“அதைக் கேட்டு சாவித்திரியின் முகத்தில் ஒருவித கலவரம் படர்ந்தது. அவள் தன்னுடைய ஈரக் கைகளைக் கட்டியிருந்த முண்டில் துடைத்தாள். ப்ளவ்ஸுக்கும் முண்டுக்கும் இடையில் தெரிந்த அவளின் வெண்மையான வயிற்றுப் பகுதியைப் பார்த்து அச்சு வாத்தியார் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அவளின் இரு கைகளிலும் கறுப்பு நிறத்தில் கண்ணாடி வளையல்கள் இருந்தன. அச்சு வாத்தியார் தன்னுடைய சட்டைப் பைக்குள்ளிருந்து பணத்தை வெளியே எடுத்தார். பத்து ரூபாய், ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் என்று பல நோட்டுகள்...

“இந்தா... இதுல ஐந்நூறு ரூபாய் இருக்கு...”

“இது எதுக்கு?”

“நீ முதல்ல இதை வாங்கு...”

எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லையென்றாலும், அச்சு வாத்தியார் நீட்டிய பணத்தை சாவித்திரி வாங்கிக் கொண்டாள். பணத்தைப் பார்த்தால் யார்தான் வாங்காமல் இருப்பார்கள்?

“நீ இதைக் கொண்டுபோய் கொடுத்து உன்னோட இடுப்புக்கொடியைத் திரும்ப வாங்கு.”

“அதை ராமுண்ணி அய்யாவுக்கு ஏற்கனவே விற்றாச்சே! தங்கத்துக்கான விலையையும் தட்டானோட வேலைக்கான கூலியையும் அவர் ஏற்கனவே தந்துட்டாரே!”

இந்த விஷயம் அச்சு வாத்தியாருக்குத் தெரியாது. அவர் தலையைச் சொறிந்து கொண்டார். ராமுண்ணியின் வாழ்க்கையில் நடக்கும் எந்த விஷயமும் இப்போது தனக்கு தெரியவில்லை என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். அச்சு வாத்தியார் ராமுண்ணிக்கு இப்போது வேற்று ஆளாகிப் போனார்!

“என்ன வாத்தியாரே, ஒண்ணுமே பேசாம இருக்கீங்க...”

“பேசுறதுக்கு என்ன இருக்கு சாவித்திரி?”

“இடுப்புக் கொடியைத் திரும்ப வாங்கணும்னு நீங்க ஏன் சொன்னீங்க?”

அவர் அதற்குப் பதிலெதுவும் கூறாமல் தலையைக் குனிந்தவாறு திண்ணைமீது அமர்ந்திருந்தார்.


“இந்தாங்க வாத்தியாரே, நீங்க தந்த பணம்...”

அவர் பணத்தை வாங்கி சட்டைப் பைக்குள் வைத்தார். சாவித்திரிக்கு எதுவுமே புரியவில்லை... அச்சு வாத்தியார் எதற்காகப் பணத்துடன் வரவேண்டும்? அவருக்கு எதற்குத் தன்னுடைய இடுப்புக்கொடி? மீத்தலேடத்து ராமுண்ணி பலதடவை படிகளில் ஏறி இங்கு வந்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் அவருடைய தலைக்குள் குழப்பம் உண்டானதே. ஒருமுறை கூட இந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத அச்சு வாத்தியார் இதோ இந்த வீட்டைத்தேடி வந்திருக்கிறார். ராமுண்ணியைப்போல அச்சு வாத்தியாருக்கும் தலைக்குள் ஏதாவது நடக்குமோ? சாவித்திரி இப்படிப் பல விஷயங்களையும் எண்ணியவாறு அவரையே உற்றுப் பார்த்தாள்.

“சாவித்திரி...”

எங்கோ தூரத்திலிருந்து ஒலிப்பது மாதிரி இருந்தது அச்சு வாத்தியாரின் குரல்.

“மீத்தலேடத்து ராமுண்ணி இந்த ஊரிலேயே பேர் வாங்கின ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். தன்னோட அந்தஸ்து குறைகிற அளவுக்கு ராமுண்ணி இதுக்கு முன்னாடி எப்பவும் நடந்தது இல்ல. ஆனா, இப்போ ராமுண்ணியோட நிலைமையைப் பார்த்தியா? சரியா சாப்பிடுறது இல்ல... தூங்குறது இல்ல... குளிக்கிறது இல்ல... ஆடை உடுக்குறது இல்ல... ஓரு பைத்தியம் பிடிச்ச மனுசனைப் போல அவர் நடந்து திரியிறாரு. ரெண்டு நாட்களுக்கு முன்னாடி ராமுண்ணியை கள்ளுக்கடையில பார்த்தேன். தோட்டிங்ககூட உட்கார்ந்து அவர் கள்ளு குடிச்சிக்கிட்டு இருக்காரு”

அதைக் கேட்டு சாவித்திரியின் முகம் மங்கலானது.

“சரி... இந்த விஷயங்களை என்கிட்ட ஏன் நீங்க சொல்றீங்க?”

“உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட இதைச் சொல்ல முடியும்? எல்லாத்துக்கும் காரணக்காரியே நீதானே? நீயும் உன்னோட இடுப்புக்கொடியும்தான் எல்லாத்துக்கும் காரணம்...”

அதைக் கேட்டு சாவித்திரி ஒன்றும் புரியாமல் விழித்தாள். மீத்தலேடத்து ராமுண்ணியிடம் ஏதோ சில பிரச்சினைகள் உண்டாகி விட்டிருக்கின்றன என்பதை அவளும் கேள்விப்பட்டிருந்தாள். நீலகண்டனே அவளிடம் அதைக் கூறியிருந்தான். ஆனால், ராமுண்ணியின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்றால்...?

“உன்னோட இடுப்புக்கொடி ராமுண்ணியோட மடியில இருக்குற காலம் வரைக்கும் அவருக்கு விமோசனமே இல்ல... சாவித்திரி, நான் உன் காலைப் பிடிச்சு கேட்டுக்குறேன். நீ போயி அந்த இடுப்புக் கொடியைத் திருப்பி வாங்கிட்டு வா...”

அப்போதும் அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அதனால் அவளுக்கு எல்லா விஷயங்களையும் அச்சு வாத்தியார் விளக்கிக் கூற வேண்டிய நிலை உண்டானது. எல்லாவற்றையும் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் சாவித்திரி.

7

தூரத்தில் எங்கோ மழை பெய்து வாய்க்காலில் நீர் சிவப்பாக வந்து கொண்டிருந்தது. கலங்கிப்போய் காணப்பட்ட நீரிலிருந்த விறால் மீன்கள் சாவித்திரியின் கால் பாதங்களில் மோதி விளையாடிக் கொண்டிருந்தன. அவள் நீருக்குள் மூழ்கி எழும்போது உண்டான சிறிய நீர் வளையங்கள் ஓரத்தில் வளர்ந்திருக்கும் புற்களின் மீது மோதி மறைந்துகொண்டிருந்தன. ஆளுயுரத்திற்கு வளர்ந்திருக்கும் புற்களுக்கு மத்தியில் இரண்டு பட்டாம்பூச்சிகள் விளையாடிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவள் வாய்க்காலுக்குள் இறங்கும்போதே அந்த இரண்டு பட்டாம்பூச்சிகளும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தன. அவள் மீண்டும் நீருக்குள் மூழ்கி எழுந்து நீரைக் கிழித்துக்கொண்டு நடந்தாள். சாவித்திரிக்கு நன்றாக நீந்தத் தெரியும். அவள் சிறுமியாக இருந்தபோது அவளுடைய தந்தைதான் கோவில் குளத்தில் இறக்கிவிட்டு அவளுக்கு நீச்சல் கற்றுத்தந்தான். நீரில் நீண்டு கிடக்கும் முடிகள் அடர்ந்த தன் தந்தையின் தடிமனான கைகளில் குப்புறப் படுத்தவாறு கைகளால் நீரைத் துழாவியும் கால்களால் உதைத்தும் அவள் நீந்தக் கற்றுக்கொண்டாள். குளத்தில் பெண்கள் குளிப்பதற்கென்று தனியாக இடம் இருக்கிறது. அவள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்தது. குளித்து முடித்து வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பார்த்தால் அவளுடைய இடுப்பில் இருந்த கொடியைக் காணோம். அவ்வளவுதான்- அவளுடைய தாய் அழுதுகொண்டே குளிக்கும் இடத்தை நோக்கி ஓடினாள். வழியில் ஒரு இடத்திலும் இடுப்புக்கொடி இல்லை. அழுதவாறே அவளின் தாய் மீண்டும் வந்தாள். அவளுடைய தந்தை உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தபோது விஷயத்தைத் தெரிந்துகொண்டு அந்த நிமிடமே அவன் குளத்தை நோக்கி நடந்தான். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஒவ்வொரு மூலையாகப் போய் ஒளிந்து கொண்டனர். அவர்கள் மறைந்து பார்த்துக் கொண்டிருக்க, சாவித்திரியின் தந்தை வெயில் விழுந்து கொண்டிருந்த நீருக்குள் குதித்து அடுத்த நிமிடம் காணாமல் போனான். நிமிடங்கள் பல கடந்தும் அவளின் தந்தை வெளியே வரவில்லை. ஒளிந்திருந்த பெண்களின் இதயங்கள் வேகமாக அடிக்கத் தொடங்கின. சாவித்திரி பயந்துபோய்விட்டாள். எல்லோரும் ஒருவித பதைபதைப்புடன், பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அதோ... கையில் தங்க இடுப்புக் கொடியுடன் சாவித்திரியின் தந்தை நீருக்கு மேலே தலையை உயர்த்திக் கொண்டிருந்தான்.

அவள் தன் கையை நீட்டி தங்கத்தால் ஆன இடுப்புக்கொடியை வாங்கி தன்னுடைய அழகான இடுப்பில் கட்டிக் கொண்டாள்.

‘இனி ஒருமுறைகூட நான் இடுப்புக்கொடியைக் கழற்ற மாட்டேன். ஒருமுறைகூட...’

அவள் கண்ணீர் மல்க தனக்குத்தானே கூறினாள்.

சாவித்திரி வளர்ந்து பெரிய பெண்ணாக ஆனபோது இடுப்புக்கொடி அவளின் இடையை இறுக்கியது. அங்கு நிரந்தரமாக தடங்கள் விழ ஆரம்பித்தன. எனினும், அவள் அதைக் கழற்றி வைக்கவில்லை. இடுப்பு மேலும் பெரிதானபோது ஒருநாள் இடுப்புக்கொடி அறுந்துவிட்டது. பாவாடைக்கு அடியில் கால்களில் உரசியவாறு அது கீழே விழுந்தது. அறுந்து கீழே விழுந்த இடுப்புக்கொடியைக் கையில் வைத்துக்கொண்டு அவள் அதைப் பார்த்தவாறு தேம்பித் தேம்பி அழுதாள்.

“அய்யோ... எதுக்கு சாவித்திரி நீ அழுறே?”

அவளுடைய தாய் சொன்னாள். “தட்டான்கிட்ட கொடுத்து நாம அதைச் சரி பண்ணிடலாமே?”

அவளின் தாய் தன் மகளின் தலையைத் தடவியவாறு அவளைத் தேற்றினாள்.

தன் கணவன் வந்தபோது இடுப்புக்கொடி அறுந்து கீழே விழுந்த விஷயத்தை சாவித்திரியின் தாய் சொன்னாள்.

“பரவாயில்ல... தட்டானை சாயங்காலம் இங்கே வரச் சொல்றேன்...”

சாயங்காலம் தட்டான் வந்து இடுப்புக்கொடியை வாங்கிக் கொண்டு போனான். கூடுதலாக முக்கால் பவுன் சேர்த்து அவன் இடுப்புக் கொடியைப் புதிதாகச் செய்தான். முழுமையாக அதைச் செய்து முடிக்க நான்கு நாட்கள் ஆனது. இடுப்பில் கொடி இல்லாமல் நடந்த அந்த நான்கு நாட்களும் சாவித்திரி யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. எங்கோ எதையோ மறந்து வைத்துவிட்டு வந்ததைப் போல... எதையோ இழந்ததைப் போல...

“இனிமேல் யானையே பிடிச்சு இழுத்தாலும், இந்தக் கொடி அறுந்து போகாது” - தட்டான் இடுப்புக் கொடியை சாவித்திரியிடம் தந்தான். “போயி இடுப்புல கட்டிக்கோ.”


“நல்ல வேலைப்பாடு!”

தட்டான் போனபிறகு இடுப்புக்கொடியை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் பார்த்த சாவித்திரியின் தாய் சொன்னாள்.

“எப்பவும் கள்ளு குடிச்சிக்கிட்டு நடந்தாலும் அவனோட வேலை அருமைதான்...”

தன்னுடைய அறைக்குள் ஓடிச்சென்று கதவை அடைத்துக் கொண்ட அவள் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டாள்.

அதற்குப் பிறகு அவள் அதை இடுப்பிலிருந்து கழற்றியதே இல்லை. திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். நீலகண்டனுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருக்கும்பொழுது அவன் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி கொடியை அவளுடைய இடுப்பிலிருந்து உருவிக்கொண்டு போய்விட்டான். இப்படித்தான் அது மீத்தலேடத்து ராமுண்ணியின் மடியில் போய்ச் சேர்ந்தது.

பெற்ற பிள்ளைகளைக்கூட பிரிந்திருக்கலாம். ஆனால், இடுப்பில் கொடி இல்லாமல் அவளால் இருக்கமுடியாது. அவளுக்கு இரவு முழுக்க தூக்கமே வராது. அப்படியே உறக்கம் வந்தாலும், பாதி இரவில் தூக்கத்தைவிட்டு எழுந்து அவள் தன் இடையைத் தடவுவாள். இடுப்பிலிருந்த கொடி கண், மூக்கைப் போல அவளுக்கு உடம்பில் ஒரு உறுப்பு என்றுகூட கூறலாம். தான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நீலகண்டன் அதைக் கழற்றிக் கொண்டுபோய்விட்டான் என்பது தெரிந்தபோது அவள் எப்படியெல்லாம் அழுதாள்.

மார்பு வரை நீரில் மூழ்கி நின்றவாறு அவள் இப்படிப் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தாள். கரையில் புல் காடும் வாய்க்காலும் வெயிலில் குளித்துக் கொண்டிருந்தன. அவள் நீருக்குள் மூழ்கி எழுந்தபோது, அவளின் கூந்தலிலிருந்து வழிந்தநீர் சிறுசிறு அருவிகளைப் போல தோளிலும் மார்புகள் மீதும் வழிந்தன.

இப்போதும் பட்டாம்பூச்சிகள் புற்களின் இலைகளில் உரசியபடி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு சிறுமியைப் போல அவள் அமைதியாக நீரைக் கிழித்துக்கொண்டு நடந்துபோய் பட்டாம்பூச்சிகளை நோக்கி கையை நீட்டினாள். அந்தப் பட்டாம்பூச்சிகளை கையில் வைத்து விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு உண்டானது. புற்களுக்குக் கீழே நிறைந்து நின்றிருந்த நீருக்குள் கீழே முழுவதும் சேறாக இருந்தது. அவளுடைய பாதங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. பட்டாம்பூச்சிகள் புற்களுக்கு நடுவில் மறைவதும் தெரிவதுமாக இருந்தன. ஒரு சிறுமியின் பிடிவாதத்துடன் புற்களைக் கைகளால் நீக்கியவாறு அவள் நீர் வழியே பட்டாம்பூச்சிகளைப் பின்தொடர்ந்து நடந்தாள்.

உயர்த்திப் பிடித்த இடுப்புக் கொடியுடன் சோர்ந்துபோன இரண்டு கைகள் புற்களுக்கு நடுவில் தனக்கு நேராக நீண்டு வருவதைப் பார்த்து அவள் சிறிதும் அசையாமல் செயலற்று நின்று விட்டாள்.

அதோ... நடுங்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய கைகளால் ராமுண்ணி தங்கத்தால் ஆன இடுப்புக் கொடியை சாவித்திரியின் இடுப்பில் கட்டுகிறார். முன்பு சரோஜினியின் கழுத்தில் தாலி கட்டியபோது, அவருடைய கைகள் இப்படித்தான் நடுங்கின.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.