Logo

ஒரு காதல் கதை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5966
oru kathal kathai

சுராவின் முன்னுரை

நான் மிகவும் மதிக்கும் எஸ்.கெ. பொற்றெக் காட் (S.K.Pottekkatt) எழுதிய ‘ஒரு காதல் கதை’(Oru kadhal kadhai) என்ற புதினத்தை தமிழ் இலக்கிய அன்பர்களுக்காக மொழிபெயர்த்திருக்கிறேன். ‘ஒரு தேசத்தின் கதை’(Oru Desathin Kadhai) என்ற புதினத்திற்காக தேசிய சாகித்ய அகாடமி (National Sahitya Academy Award) பரிசைப் பெற்றவர் எஸ்.கெ. பொற்றெக்காட். 1980-ல் அவருக்கு ‘ஞானபீடம்’ (Gnanapeedam) வழங்கப்பட்டது. 

1982-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய அவர் எழுதிய ‘கிராமத்துக் காதல்’ நாவலையும் சில குறு நாவல்களையும் பல சிறுகதைகளையும் நான் முன்பே மொழிபெயர்த்திருக்கிறேன். கதை எழுதுவது எப்படி என்பதை பொற்றெக்காட்டிடம் கற்றுக்கொள்ள வேண்டும். கோழிக்கோட்டின் முக்கிய சாலையில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே பொற்றெக்காட்டின் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம். ‘ஒரு காதல் கதை’ நான் மிகவும் கவனம் செலுத்தி மொழி பெயர்த்த அருமையான கதை. கதையின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரு விறுவிறுப்பு இருந்து கொண்டே இருப்பதுதான் இக்கதையின் சிறப்பம்சம்.

ஒரு நல்ல புதினத்தை மொழிபெயர்த்த மகிழ்ச்சியுடன் தமிழ் மக்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


ஒருபழையகோட்டையும்அதன்நிழலும்

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஒரு பழைய துறைமுக நகரமான மொம்பாஸாவில் நான் கழித்த அந்த இரவுப் பொழுதை எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டேன்.

கருப்பு  இன மக்கள் வாழும் அந்த ஊரில் மூன்று மணி நேரங்கள் என்னை ஒரு பேயாக மாற்றிய அந்த சம்பவத்தை நினைக்கும்போது, ஒரு பேயாக மீண்டும் நான் மாறுவதைப்போல உணர்கிறேன். உங்களுக்கு சிறிதுகூட அறிமுகமே இல்லாத அந்தப் பகுதியில், இருட்டு வேளையில், எங்கோ ஒரு மூலையில் படுத்துத் தூங்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு இனிமையான கனவு கண்டு அதிகாலையில் கண் விழிக்கும்போது, உங்களுக்கு முன்னால் பார்ப்பது பழமையான ஒரு சுடுகாடு என்பதை நீங்கள் அறிய வரும்போது, உங்களுடைய உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு அனுபவம்தான் எனக்கு உண்டானது. ஆபத்தின் அணைப்பில் சிறிது நேரம் தன்னை மறந்து உறங்கிக் கிடப்பது, பிறகு கண் விழித்து அதைப்பற்றி நினைத்துப் பார்ப்பது - மிகுந்த ஆபத்தில் சிக்கியிருக்கும் போது இருக்கக்கூடிய பயத்தைவிட இதயத்தை நடுங்கச் செய்யும் ஒரு விஷயம் அது!

அந்தக் கதையை ஆரம்பிப்பதற்கு முன்னால், கதை நடைபெற்ற இடமான மொம்பாஸாவைப் பற்றி...

கருப்பின மக்களும் கருப்பு நிறத்தில் இருக்கும் அரேபியர்களும் சற்று வெள்ளை நிறத்தில் இருக்கும் அரேபியர்களும் இந்தியர்களும் கொஞ்சம் வெள்ளைக்காரர்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான துறைமுக நகரம். இரவு நேரத்தில் அரேபியக் கதையில் இருந்து உயிர்பெற்று எழுந்து வந்த ஒரு காட்சி என்றே தோன்றும். கறுத்த முகமூடி அணிந்த உருவங்கள் எங்கிருந்தோ வெளியே வந்து பேய்களைப்போல் தெருக்களின் மூலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. அகலம் குறைவான, பழமையான தெருக்கள் எங்கேயோ மறைகின்றன. சத்தமோ கூக்குரலோ இல்லை. இருட்டிற்கு நிலவின் நரைத்த உலகத்தில் உண்டான நரைத்த நிழல் கூட்டங்கள் மட்டும்... அங்கிருக்கும் சோலை மரங்கள் கூட முகமூடி அணிந்து நின்று கொண்டிருக்கின்றனவோ என்று தோன்றும்.

மனிதர்களும் முகமூடிகள் அணிந்துதான் நடக்கிறார்கள். அந்த முகமூடிகளை உங்களால் பார்க்க முடியவில்லை என்பதுதான் விஷயம். வெள்ளைத் தலைப்பாகை அணிந்த அந்த அரேபியன், கடல் கொள்ளைக்காரர்களுடைய ஒரு ஒற்றனாக இருக்கலாம். கறுப்பு நிறத்தில் நீளமான சட்டையை அணிந்து நடந்து கொண்டிருக்கும் மெலிந்து, உயரமாக இருக்கும் அந்த அபீஸியன் கறுப்பின மனிதன் ஒரு மந்திரவாதியாக இருக்கலாம். (அவனுடைய பையில் காளையின் பிறப்புறுப்பைப் பிடித்து இழுத்துக் காய வைத்து உண்டாக்கிய ஒரு மந்திர தாயத்து இருக்கிறது). துறைமுகத் தொழிலாளியின் வேடத்தில் வந்து கொண்டிருக்கும் அந்த கூன் விழுந்த கறுப்பின மனிதனும் ஏதோ மந்திரச் செயலைச் செய்வதற்காகச் செல்லும் ஒரு கெட்ட மந்திரவாதியாக இருக்கக்கூடாது என்றில்லை. (அவனுடைய சுண்டு விரலின் நகத்திற்குள் கடுமையான விஷ மாத்திரை மறைத்து வைத்திருக்கலாம்). ஐந்து ஷில்லிங் விலையாகக் கொடுத்தால் அவன் யாரை வேண்டுமானாலும் விஷம் கொடுத்து மரணமடையச் செய்வான்.

தூரத்தில் உள்ள ஏதோ கிராமத்தின் மூலையில் இருந்து பறை அடிக்கும் சத்தம், ஓர் அரக்கனின் குரலைப்போலக் கேட்கிறது. அது ஒரு கூட்டு இசை. கறுப்பின மக்கள் பக்தி வயப்பட்டு நடனம் ஆடுவதன் சத்தமும் கூக்குரலும் அந்தப் பறை சத்தத்துடன் சேர்ந்து கேட்கிறது. இருண்ட ஆப்பிரிக்காவின் இதயத் துடிப்புகள்தான் அங்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. அது நம்மை ஒரே நேரத்தில் பயமுறுத்தவும் ஈர்க்கவும் செய்கிறது.

மொம்பாஸாவின் கடலுக்குள் பாய்மரக் கப்பல்கள் சிறகை விரித்துக் கொண்டு நிற்கின்றன. மூவாயிரம் வருடங்களாக வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருவதை அந்த அரேபியப் பாய்மரக் கப்பல்கள் வெளிப்படுத்தி வருகின்றன. பாரசீகக் கடலுக்கு அருகில் இருக்கும் ஓமான் அரேபியர்கள் எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் கைப்பற்றி ஆட்சி செய்தவைதான் தென் ஆப்பிரிக்காவின் கடற்கரையில் இருக்கும் இந்தத் தீவுகள். இடைக்காலத்தில் போர்த்துக்கீசியர்கள் இங்கு ஆக்கிரமித்துக் கைப்பற்றப் பார்த்தார்கள் என்றாலும், அரேபியர்கள் அவர்களை விரட்டியடித்து, தங்களின் ஆட்சியை மீண்டும் நிறுவிக் கொண்டார்கள். மொம்பாஸாவில் ஆட்சி செய்பவர்கள் பிரிட்ஷ்காரர்களாக இருந்தாலும், சட்டப்படி மொம்பாஸா இப்போதும் ஸாஞ்சிபார் சுல்தானின் பூமிதான். பிரிட்டிஷ்காரர்கள் இப்போதும் மொம்பாஸாவின் பெயரில் ஸாஞ்சிபார் சுல்தானுக்கு வருடத்திற்கு பதினாறாயிரம் பவுன் கப்பமாகக் கொடுத்து வருகிறார்கள்.

ஆப்பிரிக்கக் கரையில் இருந்து எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் கறுப்பின அடிமைகளையும் யானைத் தந்தங்களையும் காண்டாமிருகங்களின் கொம்புகளையும் ஏற்றிக்கொண்டு சென்ற அந்தப் பாய்மரக் கப்பல்களில் இப்போது ஐரோப்பிய பொருட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அந்தப் பாய்மரக் கப்பல்கள் அரேபியாவிற்குத் திரும்பிச் செல்லும் வழியில், சூடானின் கிழக்குக் கரையிலிருந்து தானாகவே அடிமைகளைப் பிடித்து ஓமான் நாட்டிற்குக் கடத்திச் செல்லும் வழக்கம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நல்ல நிலவு வெளிச்சம் உள்ள இரவு நேரமாக இருந்தது. நான் மொம்பாஸாவில் உள்ள பழைய போர்த்துக்கீசியர்களின் கோட்டையான ஃபோர்ட் ஜீசஸுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தேன். நான் அந்த மூலையில் போய் எப்படி சிக்கிக் கொண்டேன் என்பது பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. அங்கு என்னை யாரும் வழியை மாற்றி அழைத்துச் செல்லவில்லை. மாலை நேரத்தில் சற்று நடந்துவிட்டு வரலாம் என்று வந்தேன். மொம்பாஸாவில் ‘கிராமப் பகுதியினரின் மூலை’யில் பல பழமையான தெருக்களையும் தாண்டிக் கடந்து, ஒரு குறிக்கோளும் இல்லாமல் இடத்தைப் பற்றியும் நேரத்தைப் பற்றியும் எதுவும் நினைக்காமல் இறுதியாக அந்த சிதிலமடைந்த கோட்டைக்கு முன்னால் வந்து நின்றேன். மொம்பாஸாவில் எனக்கு இரண்டு நாட்களே அறிமுகம் இருந்தது. கறுப்பின மனிதர்களின் வாழ்க்கைப் பகுதியின் அழகும் சுறுசுறுப்பும் எனக்குள் ஏதோ பேய் பிடித்ததைப்போல ஒரு மாற்றத்தை வரவழைத்து விட்டதோ என்று நான் அவ்வப்போது சந்தேகப்பட்டேன். ஆனால், எனக்கு சிறிதுகூட பயம் தோன்றவில்லை. ஆப்பிரிக்கா என்ற அருங்காட்சியகத்திற்கு முன்னால் போய் நின்றிருக்கும் ஒரு சிறிய குழந்தையின் ஆர்வம் கலந்த உற்சாகம்தான் எனக்குள் தலையை நீட்டிக்கொண்டு நின்றிருந்தது.

ஜீசஸ் கோட்டைக்கு முன்னால் ஒரு புல்வெளியும், புல்வெளியின் மூலையில் அலரி மரங்களும், சில பூஞ்செடிகளும் வளர்ந்து நின்றிருக்க, அவற்றுக்கு அருகிலேயே ஒரு பழைய கல்லாலான திண்ணையும் இருந்தது. நான் அந்தக் கற்திண்ணையில் அமர்ந்து கோட்டையையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தேன். நிலவு வெளிச்சத்தில் அந்தக் கறுப்பு நிறக் கோட்டை ஒரு பிரம்மாண்டமான கல்லறையைப்போலத் தோன்றியது.


ஜீசஸ் கோட்டை உண்மையாகவே சொல்லப்போனால் ஒரு கல்லறையேதான். வரலாற்றின் சவக் கல்லறை. போர்த்துக்கீசியர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் செய்த அக்கிரமங்கள், அவர்கள் செய்த கூட்டக் கொலைகள், சதி, பகை ஆகியவற்றைக் காட்டும் ஒரு நினைவுச் சின்னம் அது.

முந்நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஜான் பாப்டிஸ்ட் கைரோன் என்ற வெள்ளைக்காரர், ஏசுநாதரின் புனிதப் பெயரில் கட்டிய அந்தக் கருங்கல் கோட்டையில், தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் சைத்தானின் கூத்தாட்டம்தான் நடந்தது. அந்தக் கோட்டையைக் கட்டப் பயன்படுத்திய கருங்கற்களைவிட பல மடங்கு பிணங்களை அங்கிருந்து எடுத்திருக்கிறார்கள். ரத்த ஆறுகள் அங்கு ஓடியிருக்கிறது. பட்டினியாலும் நோயாலும் பாதிக்கப்பட்டு, செயல்பட முடியாமல் போன பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கோட்டைக்குள் பேய்களைப்போல மனித மாமிசத்தைச் சாப்பிட்டிருக்கிறார்கள். அந்தக் கோட்டையின் வரலாற்றை அறிந்தவர்கள் அதை தூரத்தில் இருந்து சிறிது நேரம் பார்ப்பதற்குக்கூட பயப்படுவார்கள்.

ஜீசஸ் கோட்டையின் ஒரு பகுதியை மொம்பாஸாவின் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரிகள் இப்போது ஒரு சிறையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் தங்களுடைய முக்கிய எதிரிகளான அரேபியர்களுடன் போராடி நிற்பதற்கான ஓர் இடமாக, மொம்பாஸா தீவில் ஒரு மறைவான இடத்தில் போர்த்துக்கீசியர்கள் இந்தக் கோட்டையை உண்டாக்கினார்கள். கோட்டையை உண்டாக்கி இரண்டு வருடங்கள் கடந்தபோது, 1594-ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவைத் தங்களுக்குக் கீழே கொண்டு வரக்கூடிய முழுமையான அதிகாரங்களைக் கொண்ட ஒரு கவர்னரை ஜீசஸ் கோட்டையின் கமான்டராக நியமித்தார்கள். அதற்கு முன்பே மொம்பாஸா மீது சில அதிகாரங்களைப் போர்த்துக்கீசியர்கள் தாங்களாகவே உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், அரேபியர்கள் வெள்ளைக்காரர்களின் அந்த அதிகாரங்களை ஒப்புக் கொள்ளவில்லை.

பல வழிகளையும் பயன்படுத்தி, குறுநில மன்னர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வந்து, இறுதியில் அவர்களுடைய தலையிலேயே ஏறி நின்று நாடு முழுவதையும் பிடித்து அடக்குவது என்ற அந்தப் பழைய தந்திரத்தைத்தான் போர்த்துக்கீசியர்கள் இங்கும் பயன்படுத்தினார்கள். மலிந்தியின் முஸ்லிம் மன்னரான ஹஸ்ஸன் பின் அலியை போர்த்துக்கீசியர்கள், போர்ச்சுக்கல் மன்னரின் ஆசீர்வாதங்களுடன் மொம்பாஸாவின் மன்னராக ஆக்கினார்கள். ஜீசஸ் கோட்டையின் வெள்ளைக்காரப் படையின் தலைவன்தான் உண்மையிலேயே மொம்பாஸாவில் வாழும் மன்னர் என்பதைப் புரிந்து கொண்டபோது ஹஸ்ஸன் பின் அலி கவர்னருடன் மோதினார். போர்த்துக்கீசிய கவர்னருடன் மோதினால் தன்னுடைய தலை தப்பிக்கவே முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஹஸ்ஸன் பின் அலி ஆப்பிரிக்கா கரையைத் தேடி ஓடி, அங்கு ரப்பாயி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். போர்த்துக்கீசிய ஒற்றர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். ஹஸ்ஸன் பின் அலி உயிருடன் இருந்தால், ஆபத்து உண்டாகும் என்று போர்த்துக்கீசியர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலை உண்டாகாமல் இருப்பதற்காக போர்த்துக்கீசியர்கள் ஒரு ரப்பாயி கூட்டத்திற்கு நல்ல ஒரு தொகையைக் கைக்கூலியாகக் கொடுத்து ஹஸ்ஸன் பின் அலியின் தலையை வெட்டினார்கள்.

ஹஸ்ஸன் பின் அலிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் யூஸுஃப். யூஸுஃபை நல்லவனாகக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் போர்த்துக்கீசியர்களின் அடுத்த முயற்சியாக இருந்தது. ஒரு குறுநில மன்னன் தங்களிடம் இருந்தால், ஒரு பெரிய ராணுவத்தை வைத்துக் காப்பாற்ற வேண்டிய சுமை இல்லாமல் போகும். அந்தக் குறுநில மன்னனை மக்கள் அனுசரித்து ஏற்றுக்கொள்வார்கள் அல்லவா? இளவரசனான யூஸுஃபிற்கு உயர்தரக் கல்வி அளிப்பதற்காக போர்த்துக்கீசியர்கள் அவனை கோவாவிற்கு அனுப்பினார்கள். யூஸுஃபிற்காக மொம்பாஸாவை போர்த்துக்கீசியர்களே ஆட்சி செய்தனர்.

போர்த்துக்கீசியர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக பல மாறுதல்களை கோவா வாழ்க்கை யூஸுஃபிடம் உண்டாக்கியது. அவன் ஒரு போர்த்துக்கீசிய பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவளைத் திருமணம் செய்வதற்காக அவன் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டு ஒரு ரோமன் கத்தோலிக்கனாக மாறினான்.

ஜோசப் ஆக மாறிய யூஸுஃப் 1630-ல் மொம்பாஸாவிற்குத் திரும்பி தன்னுடைய ஆட்சி அதிகாரத்தைத் திரும்பத் தரும்படிக் கேட்டான். வெளிநாட்டு வாழ்க்கையும், உயர்தர படிப்பும், திருமணமும், மதமாற்றமும் யூஸுஃபின் நரம்புகளில் ஓடிக் கொண்டிருந்த அரேபிய ரத்தத்தின் வீரியத்தைக் குறைக்கவில்லை. யூஸுஃபிற்கு ஆட்சி அதிகாரத்தைத் திருப்பித்தர போர்த்துக்கீசியர்கள் தயாராக இல்லை. யூஸுஃபிற்காக வாதாட வந்த அரேபியர் கூட்டத்தை ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளையர் பட்டாளம் ஒருவரைக்கூட விடாமல் கொலை செய்தது. அதைத் தொடர்ந்து யூஸுஃபின் ஆட்களுக்கும் போர்த்துக்கீசியர்களுக்கும் இடையில் பயங்கரமான மோதல்கள் நடந்தன. போர்த்துக்கீசியர்களின் ஆயுத பலத்திற்கு முன்னால் அதிக காலம் எதிர்த்து நிற்க முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டதும் யூஸுஃப் அரேபியாவிற்கு ஓடித் தப்பித்துக் கொண்டான். தந்தையின் அனுபவம்தான் இறுதியில் யூஸுஃபிற்கும் உண்டானது. போர்த்துக்கீசியர்களிடம் கைக்கூலியைப் பெற்று, ஒரு அரேபியக் கூட்டம் யூஸுஃபின் தலையை அறுத்தது.

போர்த்துக்கீசியர்களின் கூட்டக் கொலை, சதிச் செயல்கள் ஆகியவற்றின் வரலாற்று சம்பவங்களுக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கும் கோட்டையைத்தான் நான் எனக்கு முன்னால் பார்க்கிறேன்.

ஜீசஸ் கோட்டையில் வரலாற்றுத் தொடர்பு அங்கேயே முடிந்து விடவில்லை. மொம்பாஸாவின் வரலாற்றிலேயே மிகவும் நீண்ட காலம் நீடித்த போர், யூஸுஃப்பின் தலை வெட்டப்பட்டு முப்பது வருடங்கள் கடந்த பிறகுதான் ஆரம்பமானது. 1696-ல் ஓமானின் சுல்தானான ஸெய்ஃப், மொம்பாஸாவில் இருந்த போர்த்துக்கீசிய வெள்ளைப் பேய்களை விரட்டியடிப்பதற்காக மிகப்பெரிய முயற்சியைத் தொடங்கினார். ஓமான் அரேபியர்கள் படை மொம்பாஸாவில் இறங்கி நகரத்தைக் கைப்பற்றியது. கடற்கரையில் இருந்த பழைய ஜோசப் கோட்டைக்குள் நுழைந்து ஜீசஸ் கோட்டையை நோக்கிப் போர் செய்ய ஆரம்பித்தார்கள். ஐம்பது போர்த்துக்கீசிய வெள்ளைப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் ஜீசஸ் கோட்டைக்குள் இருந்தார்கள். உள்ளூர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும், போர்த்துக்கீசிய பாதிரியார்கள் மதம் மாற்றம் செய்த அந்த ஊரைச் சேர்ந்த கொஞ்சம் புதிய கிறிஸ்தவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் அடங்கிய இரண்டாயிரம் பேர் இருக்கக்கூடிய ஒரு கறுப்பின மக்களின் கூட்டமும் அந்தக் கோட்டைக்குள் அபயம் தேடித் தங்கியிருந்தன.

உலக வரலாற்றிலேயே மிகவும் பயங்கரமானதும் இரக்கமற்றதுமான அந்தப் போர் இரண்டு வருடங்கள், ஒன்பது மாதங்கள் நடந்தது. ஜீசஸ் கோட்டையில் இருந்த மக்களைப் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தி சாகச் செய்ய வேண்டும் என்பது ஓமான் அரேபியர்களின் திட்டமாக இருந்தது. அது நடந்தது. ஓமான் அரேபியர்கள் ஜோசப் கோட்டைக்குள் பட்டாசுகள், பாட்டு, கூத்து, விருந்து என்று களிப்பில் ஈடுபட்டிருக்க, ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுடன் இருந்தவர்களும் பட்டினி, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, துயரங்களை அனுபவித்து அழிந்து கொண்டிருந்தார்கள்.


வெள்ளைக்காரர்களுடனான பகையை மனதில் வைத்துக் கொண்டு இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே அரேபியர்கள் மொம்பாஸாவில் செய்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட அந்தப் போரைப் பற்றி பல வகைகளிலும் சிந்தித்தவாறு நான் அந்தக் கல்லாலான திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நிலவு வெளிச்சத்தில் ஜீசஸ் கோட்டை மேலும் தெளிவாகத் தெரிந்தது. அந்தப் பகுதியில் நிழல்களின் பலம் அதிகரித்தது. கடலில் இருந்து ஏறி வந்த இளம் வெப்பத்தைக் கொண்ட காற்று என்னை மெதுவாக வருடிவிட்டுக் கடந்து சென்றது. நான் அப்போதும் ஜீசஸ் கோட்டையையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டே முக்கால் வருடங்களுக்கு இடையில் இரண்டாயிரம் மனிதப் பிறவிகள் அங்குலம் அங்குலமாக இறந்து விழுந்த மண். வெள்ளைக்காரர்கள், கறுப்பின மக்கள், சுத்த கிறிஸ்தவர்கள், புதிய கிறிஸ்துவர்கள், வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் ஆவிகள் அங்கு கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருக்கும். பட்டினியால் மெலிந்து, நோயால் பாதிக்கப்பட்டு, காயங்களைக் கட்ட மருந்து இல்லாமல், பருக நீர் இல்லாமல், அந்தப் போர் சூழ்நிலையில் சிக்கி வெள்ளைக்காரர்கள் இறுதி மூச்சுவிடும் காட்சியை எனக்கு முன்னால் பார்ப்பதைப்போல இருந்தது.

திடீரென்று எனக்கு அருகில் ஒரு நிழல் நகர்ந்து வந்தது. ஒரு மனித வடிவம்தான். நான் சற்று பதைபதைப்பு அடையாமல் இல்லை. காரணம் - ஒரு ஆவியைப்போல அந்த உருவம் காற்றிலிருந்து தோன்றுவதைப்போல எனக்கு இருந்ததுதான். நான் கூர்ந்து பார்த்தேன். நிழலில் நின்றுகொண்டு அந்த உருவமும் என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. என்னுடைய முகத்தில நிலவு வெளிச்சம் விழுந்து கொண்டிருந்ததால், என் முகத்தை அந்த மனிதனால் தெளிவாகப் பார்க்க முடிந்திருக்கும்.

சிறிது நேரம் அப்படியே கழிந்தது. பிறகு அந்த உருவம் நிழலில் இருந்து எனக்கு முன்னால் - நிலவு வெளிச்சத்திற்கு நகர்ந்து வந்தது.

நாகரிக கோலத்தில் பேன்ட்டும் கோட்டும் அணிந்த அரேபியன். அவனுடைய தலையில் ஒரு சிவப்பு நிற துர்க்கி தொப்பி இருந்தது.

நான் சினேகத்துடன் ஒரு புன்சிரிப்பை வெளியிட்டேன். அவனுடைய முகத்தில் எந்த ஒரு உணர்ச்சி வேறுபாடும் தெரியவில்லை. அவன் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டே அங்கேயே ஒரே இடத்தில் நின்றிருந்தான்.

நான் மீண்டும் ஒருமுறை புன்னகைத்தேன்.

அவன் ஸ்வஹிலி மொழியில் என்னவோ கேட்டான். அப்போது எனக்கு ஸ்வஹிலி மொழி தெரியாது. புரியவில்லை என்று நான் சைகை மூலம் காட்டினேன். ‘ஐ டோன்ட் நோ ஸ்வஹிலி’ என்று ஆங்கிலத்தில் கூறவும் செய்தேன்.

பிறகு அவனுடைய கேள்வி ஆங்கிலத்தில் வந்தது. வெள்ளைக்காரர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரைகுறை ஆங்கிலம் என்பதை அவனுடைய உச்சரிப்பில் இருந்தே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

“நீங்க எவ்வளவு நேரமாக இங்கே உட்கார்ந்திருக்கீங்க?” அவனுடைய அடுத்த கேள்வி அதுதான்.

“அரை மணி நேரம் இருக்கும்”- நான் அமைதியான குரலில் பதில் சொன்னேன்.

‘’இங்கே யாராவது வந்தார்களா? ஒரு ... ஒரு... பர்தா அணிந்த ஒரு பெண்?...”

“அப்படி யாரும் இங்கே வந்ததை நான் பார்க்கவில்லை”

அவன் என்னவோ சிந்தித்துக்கொண்டு சிறிது நேரம் அதே இடத்தில் நின்றிருந்தான். பிறகு அவன் நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு, மெதுவாக எனக்கு அருகில் அந்தக் கல் திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.

நான் அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். நீண்டு வளைந்த மூக்கையும், நீண்டு கூர்மையாக இருந்த தாடை எலும்பையும் கொண்ட ஒரு நடுத்தர வயது மனிதன். ஒரே கண்தான் இருந்தது. அந்தக் கறுப்பு நிற முகத்தில் அந்த ஒற்றைக்கண், நிலவு வெளிச்சத்தில் ஒரு கண்ணாடித் துண்டைப்போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“உங்களுடைய டுக்கா எங்கே?”

நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்றும்; அதனால் ஒரு வியாபாரி என்றும் நினைத்துக்கொண்டுதான் அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். என் கடை எங்கே இருக்கிறது என்று அவன் கேட்டான்.

அவனுடைய தவறை நான் திருத்தினேன்.

“ஓ... நீங்கள் மொம்பாஸாவைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் ஒரு புதிய ஆள். இல்லையா? மொம்பாஸா முழுவதையும் பார்த்தீங்களா?”

“முழுவதையும் பார்க்கவில்லை. நான் இங்கே வந்தே இரண்டு நாட்கள்தான் ஆகின்றன.”

“எங்கே தங்கியிருக்கீங்க?”

நான் இடத்தைச் சொன்னேன். சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது.

“நீங்கள் இந்தக் கோட்டை மூலையில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்?”

சிறிது குரல் மாற்றத்துடன் திடீரென்று அந்தக் கேள்வி புறப்பட்டு வந்தது. நான் ஏதோ குற்றம் செய்துவிட்டதற்காகக் கேள்வி கேட்பதைப்போல அந்தக் குரல் இருப்பதாக எனக்கு தோன்றியது. அவனுடைய ஒற்றைக் கண் கத்தி முனையைப்போல மின்னிக் கொண்டிருந்தது.

“நான் வெறுமனே நடப்பதற்காக வெளியே வந்தேன். அப்படியே இங்கே வந்து சேர்ந்துட்டேன். அவ்வளவுதான்.” நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“இந்த மூலையில் உங்களை ஈர்க்கக்கூடிய அளவிற்கு என்ன இருக்கிறது? தெரிஞ்சுக்கிறேன்.”

என்னவோ சந்தேகத்தை உள்ளே வைத்துக்கொண்டு அவன் கேள்வி கேட்பதைப்போல எனக்குத் தோன்றியது.

நான் சொன்னேன்: “நான்... அதோ.... அந்தக் கோட்டையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதன் வரலாறு... இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் அங்கு அரேபியர்கள் செய்த அந்த நீண்ட போரின் கதை...”

அதைக் கேட்டதும் அந்த மனிதனுடைய முகம் சற்று மலர்ந்தது. அவன் மெல்ல சிரித்தான்.

“ம்... அந்தக் கதைகள் எல்லாவற்றையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

“வரலாற்றுப் புத்தகத்தில் கொஞ்சம் படித்திருக்கிறேன்.”

“அதைப் பற்றி அப்படி கொஞ்சம் தெரிந்து கொண்டால் போதாது. விரிவாகக் கேட்க வேண்டிய ஒரு கதை அது.”

யாராவது விளக்கிக் கூறுவதாக இருந்தால், நான் ஆர்வத்துடன் கேட்பதற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னேன்.

“மணி என்னாச்சு?” - திடீரென்று எதையோ நினைத்ததைப்போல அவன் கேட்டான்.

“என் கையில் கடிகாரம் இல்லை”.

நான் அதைச் சொன்னதும், ஜீசஸ் கோட்டையின் கோபுர மணி அடித்ததும் ஒரே நேரத்தில் நடந்தது.

ஒன்று... இரண்டு... முன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... ஒன்பது.


ஜீசஸ் கேட்டையின் மணிச் சத்தம் கேட்டு அந்த மனிதனின் முக வெளிப்பாடு மாறுவதை நான் கவனித்தேன். நான்குமுறை மணி அடித்தவுடன் எதையோ கேட்கக் கூடாததைக்கேட்பதைப்போல அவன் தன் காதுகளை மூடிக்கொண்டான்.

“எத்தனை முறை அடித்தன?” காதில் இருந்து கைகளை எடுத்துக்கொண்டு நிலையற்ற தன்மையுடன் அவன் கேட்டான்.

‘’ஒன்பது அடிச்சது” - நான் சொன்னேன்.

மணியோசையைக் கேட்டு பயப்படக் கூடிய அந்த மனிதன் மீது எனக்கு பரிதாபம் தோன்றியது.

“மணியோசையைக்  கேக்குறப்போ ஏன் ஒரு பதைபதைப்பு?” - நான் இரக்கத்துடன் கேட்டேன்.

அவன் என்னுடைய கேள்வியைக் காதில் வாங்கியதாகவே காட்டிக் கொள்ளவில்லை. சிறிது நேரம் சென்றதும், அவன் மெதுவான குரலில் சொன்னான்: “ஒன்பதரை மணிக்கு நான் திரைப்படம் பார்க்கப் போகணும்.”

இந்த அரேபியன் யாராக இருப்பான்? அவன் தன்னை அறிமுகம் செய்யவில்லை என்ற விஷயத்தை நான் நினைத்துப் பார்த்தேன். என்னிடம் சொல்ல விருப்பமில்லையென்றால் நானே கேட்க வேண்டியதுதான்.

“சரி... மிஸ்டர். உங்களைப் பற்றி நீங்க எதுவும் சொல்லலையே? பெயர் என்ன?”

அவன் உடனடியாக பதில் தரவில்லை. அரை நிமிடம் கடந்ததும் அவன் உரத்த குரலில் சொன்னான்.

“ஹஸ்ஸன் பின் அலி.”

மோதிரத்தின் புன்சிரிப்பு

ஸ்ஸன் பின் அலி! அந்த அரேபியனின் பெயரை நான் மனதில் திரும்பத் திரும்பக் கூறிப் பார்த்தேன். போர்த்துக்கீசியர்கள் முந்நூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் மொம்பாஸாவின் மன்னராக இருக்கச் செய்து, பின்னர் சதி செய்து கொலை செய்த பழைய மலிந்தி மன்னரின் பெயர்தான் அது. ஹஸ்ஸன் பின் அலி!

நான் ஹஸ்ஸனுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுக்தேன். அவன் தலையைக் குலுக்கி வேண்டாம் என்று சொன்னான். “நான் புகை பிடிப்பதில்லை.”

நான் சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையை விட்டுக்கொண்டே ஹஸ்ஸனிடம் கேட்டேன்: “மிஸ்டர் ஹஸ்ஸன், நீங்கள் மொம்பாஸாவில் என்ன செய்றீங்க?”

உடனடியாக பதில் வரவில்லை.

ஒரு நிமிடம் கழித்து பதில் கிடைத்தது.

“கப்பலுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்யும் ஏஜெண்டாக நான் இருக்கிறேன்.”

கப்பலுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை செய்யும் அந்த ஏஜெண்டிற்கு இங்கு இப்போது கோட்டையின் மூலையில் என்ன வேலை என்று கேட்க எனக்கும் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை.

ஹஸ்ஸனின் முகத்தில் இருந்த பயம் சற்று குறைந்து விட்டிருந்தது. அமைதியற்ற தன்மை மாற ஆரம்பித்திருந்தது. அவனுடைய உதடுகளில் இருந்து ஒரு அரேபியப் பாடல் மெதுவாகப் புறப்பட்டு வந்தது.

கேட்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அரேபிய சங்கீதத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அர்த்தம் புரியவில்லையென்றாலும், அந்த பாடலின் இனிமை என் இதயத்தில் இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்குவதுண்டு. இதயத்தின் அடித்தளத்தில் இருந்து தொண்டை வழியாக வெளியே பாய்ந்து வரும் அந்த அபூர்வ சங்கீதத்திற்கு ஒரு மந்திரசக்தி இருக்கத்தான் செய்கிறது.

“ஹா! என்ன ஓர் இனிமையான பாடல்?” - நான் ஹஸ்ஸனின் பாடும் ஆற்றலைப் பாராட்டினேன். ஹஸ்ஸன் ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு தலையை ஆட்டியவாறு ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் என்னுடைய பாராட்டை ஏற்றுக்கொண்டான்.

“மிஸ்டர் ஹஸ்ஸன், அந்தப் பாடலின் அர்த்தம் என்ன? கொஞ்சம் சொல்ல முடியுமா?”

ஹஸ்ஸனின் ஒற்றைக் கண்ணில் வெட்கத்தின் வெளிப்பாடு தடை செய்ததைப்போல தோன்றியது.

அது ஒரு காதல் பாடல். அதன் அர்த்தம் இதுதான். ‘ஸாஞ்சிபாரில் கறாம்பூ மணம் கமழ

சாயங்கால காற்று பயணிக்க

குதிக்கின்றன காதல் ஜுரத்தால்

ஹா இளம் இதயங்கள், ஆப்பிரிக்காவில்!

ஸாஞ்சிபாரில் புல்லாங்குழல் இசைக்க,

தேன் சொரிய, கரைகளில்

ஹா... அழகிகள் கிழக்கு ஆப்பிரிக்கா

எங்கும் நடனமாடுகின்றனர்!’

அந்த அரேபியப் பாடலின் குரல் இனிமையைக் கேட்டு நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சரியப்படுகிறேன் என்று நான் சொன்னதும், ஹஸ்ஸன் மீண்டும் ஒருமுறை அந்தப் பாடலை எனக்குப் பாடிக் காட்டினான்.

ஹஸ்ஸன் சொன்னான் : “ஹ! கறாம்பூவின், கறுத்த அழகிகளின், காதல் பாடல்களின் நறுமணம் வீசும் ஸாஞ்சிபார்... நான் ஸாஞ்சிபாரில் பிறந்தவன்.”

“ஓ... நீங்கள் ஸாஞ்சிபார் தீவைச் சேர்ந்தவரா?”

நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

“ஆமாம்... நான் ஷிராஸி”.

சிறிது நேரத்திற்கு மவுனம் நிலவியது.

“இரண்டு விஷயங்களை நான் மிகவும் விரும்புகிறேன்” - ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு உதட்டை ஒரு பக்கமாக சுளித்துக் கொண்டு, ஒரு குறும்புத்தனமான சிரிப்பை உண்டாக்கிக் கொண்டு, அந்த ஷிராஸி என் காதில் சொன்னான்.

“அந்த இரண்டு விஷயங்கள் என்ன?” நான் ஆர்வத்துடன் கேட்டேன். “ஒன்று - காதல் பாடல்கள்.”

“இன்னொன்று?”

ஹஸ்ஸன் ஒற்றைக் கண்ணால் என்னுடைய முகத்தில் ஏதோ அர்த்தம் நிறைந்த ஒரு பார்வையைப் பதித்தான்.

“இன்னொன்று?” - நான் மீண்டும் கேட்டேன்.

“கொலை?” அவன் என் காதில் முணுமுணுத்தான்.

நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். ஹஸ்ஸன் திரைப்படத்தைப் பற்றிப் பேசுகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். மொம்பாஸாவில் இருந்த ராக்ஸி திரைப்பட அரங்கில் ‘கொலைகாரன்’ என்றொரு அடிபிடிகள் நிறைந்த கொலைகள் செய்யும் படம் ஓடிக்கொண்டிருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.

நான் சொன்னேன் : “அப்படிப்பட்ட அடிபிடிகளும் கொலைகளும் நிறைந்த படங்களை நான் விரும்புவது இல்லை. எனக்குப் பிடித்தவை காதல் கதைகள்தான்.”

ஹஸ்ஸன் எதுவும் பேசவில்லை. அவன் அமைதியற்ற மனதுடன் நான்கு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஓ... காதல் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமா?”- சிறிது நேரம் சென்றதும் அவன் கேட்டான்.

“ஆமாம்... ஸாஞ்சிபாரில் இருக்கும் அழகிகளைவிட நான் விரும்புவது ஆயிரத்தொரு இரவுகளில் வரும் காதல் கதைகளைத்தான்.”

“அற்புதமான ஒரு காதல் நாடகம், இந்த ஜீசஸ் கோட்டையில் நடந்த கதை உங்களுக்குத் தெரியுமா?” - ஹஸ்ஸன் என்னிடம் கேட்டான்.

“இல்லை. எனக்குத் தெரியாது. ஜீசஸ் கோட்டையில் நடந்த கூட்டக் கொலைகளைப் பற்றிய சில கதைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“ஸாஞ்சிபார் சுல்தானின் பேகம் ஒரு வெள்ளைக்காரப் படைவீரன்மீது காதல் கொண்ட கதை அது.”

“அதை நான் கேட்கிறே.” - நான் ஹஸ்ஸனிடம் சினேகத்துடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன.


தன்னிடம் கதையைக் கூறும்படி கேட்டுக்கொண்ட விஷயத்தை ஒரு மதிப்பான காரியமாகவே ஒரு அரேபியன் கருதுவான். ஆயிரத்தொரு இரவுகளின் அற்புதக் கதைகளின் உலகத்தில் வளர்ந்த வனாயிற்றே அவன்!

ஹஸ்ஸன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். கதை கூறுவதற்கான ஒரு தயார் பண்ணலாக அது இருக்கலாம்.

நிலவு வெளிச்சம் சற்று குறைந்தது. அந்த மங்கலான நிலவொளியில் ஜீசஸ் கோட்டை அகன்று அகன்று போவதைப்போல இருந்தது. இளம் வெப்பத்தைக் கொண்ட கடல்காற்று அவ்வப்போது வீசிக் கொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்த தரைக்குப் பின்னால் சில அசைவுகள் உண்டாயின. வவ்வால்களின் அசைவுகளே அவை. பர்தா அணிந்த பெண்கள் மரங்கள் மீது பறப்பதைப்போலத் தோன்றியது.

“இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இந்த ஜீசஸ் கோட்டையில் நடந்த ஒரு காதல் கதையைத்தான் நான் சொல்லப் போகிறேன்” - ஹஸ்ஸன் கதையை ஆரம்பித்தான். நான் மேலும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்தவாறு உற்காசத்துடன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“மொம்பாஸாவிற்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஒரு இறுதிப் போருக்குத் தயாராகிக் கொண்டு, பாரசீக வளைகுடாவிற்கு அடுத்து இருக்கும் ஓமானிலிருந்து இருபத்தைந்து போர்க்கப்பல்களுடன் ஒரு பெரிய அரேபியர்களின் கூட்டம் மொம்பாஸாவில் வந்து இறங்கினார்கள். அந்தக் கூட்டத்தில் என்னுடைய முன்னோரான அப்துல் கத்தீபும் இருந்தார். அப்துல் கத்தீப் எழுதி வைத்துச் சென்ற நூலில் இருந்துதான் இந்த வரலாற்றுச் சம்பவங்கள் எல்லாவற்றையும் நான் தெரிந்து கொண்டேன்.”

அந்த வகையில் ஹஸ்ஸன் தன்னுடைய கதையின் உண்மைத் தன்மைக்கு ஒரு சாட்சிப் பத்திரத்தை முன்னால் வைத்தான். அப்துல் கத்தீபுடன் தானும் இருந்ததைப்போல ஹஸ்ஸன் கதையைச் சொன்னான்.

“நாங்கள் மொம்பாஸாவில் இறங்கி கடற்கரையில் இருந்த பழைய ஜோசப் கோட்டையைக் கைப்பற்றி அங்கு தங்கினோம். அதற்கு முன்பே மொம்பாஸா நகரத்தை நாங்கள் கைப்பற்றி இருந்தோம். ஓமான் அரேபியர்களுடன் படையெடுப்பு நடந்தவுடன், சில ஊர் பட்டாளக்காரர்களும், வெள்ளைக்கார பாதிரியார்கள்   பிரச்சாரம் செய்து கிறிஸ்துவர்களாக மாற்றிய கொஞ்சம்  கறுப்பின மக்களும், அவர்களுடைய குடும்பங்களும், வெள்ளைக்காரர்களின் எச்சிலைத் தின்று வாழ்ந்து கொண்டிருக்கும் உள்ளூரைச் சேர்ந்த சில பெரிய மனிதர்களும் ஜீசஸ் கோட்டைக்குள் அபயம் தேடினார்கள். பெண்களும் குழந்தைகளும் உட்பட இரண்டாயிரம் பேர் இருந்தார்கள். வெள்ளைக்காரர்களான போர் வீரர்கள் அங்கு நூறு பேர் இருந்தார்கள்.

ஓமான் அரேபியர்கள் ஜீசஸ் கோட்டையைக் கைப்பற்ற முயல்வார்கள் என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தார்கள். அப்போது அரேபியர்களை வெடிகள் வைத்து மரணத்தைத் தழுவச் செய்யலாம் என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள். அரேபியர்களிடம் இருப்பதைவிட அதிகமான ஆயுத பலம் போர்த்துக்கீசியர்களிடம் இருந்தது.

ஆனால், நாங்கள் ஜீசஸ் கோட்டையைச் சுற்றி வளைக்கவே இல்லை. நாங்கள் இன்னொரு தந்திரம் செய்தோம். ஜீசஸ் கோட்டையை முடிவற்ற காலம்வரை கண்டு கொள்ளாமல் இருப்பது... அதுதான் எங்களின் திட்டமாக இருந்தது.

அந்த வெள்ளைக்காரர்களையும், அவர்களிடம் அபயம் தேடிச் சென்ற தைரியமற்ற உள்ளூர்க்காரர்களையும் நாங்கள் ஜீசஸ் கோட்டைக்குள் தனிமைப்படுத்தினோம். அவர்களுக்கு வெளியில் இருந்து நீர், உணவு, ஆயுதங்கள் ஆகியவை கிடைக்கக்கூடிய எல்லா வழிகளையும் நாங்கள் தடுத்துவிட்டோம். ஆப்பிரிக்கக் கரையில் போர்த்துக்கீசியர்களின் படைக்களமான மொஸாம்பிக்கில் இருந்து பட்டாளத்தையும் போர்க்கருவிகளையும் இறக்குவதற்கு போர்த்துக்கீசியர்கள் முயற்சிப்பார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். அந்தப் பெரும் முயற்சிகள் ஒவ்வொன்றையும் நாங்கள் தோல்வியடையச் செய்தோம். மொம்பாஸா கரை தெரிவதற்கு பதிலாக கடலின் அடிப்பகுதிதான் அவர்களுக்குத் தெரிந்தது. கடல் கொள்ளைக்காரர்களான எங்களைக் கடலில் வைத்து எதிர்த்து நிற்பதற்கு ஒரு வெள்ளைக்காரப் போர் வீரனுக்கும் தைரியம் இல்லை.

நாங்கள் ஜோசப் கோட்டையில் மனிதர்களையும் ஒட்டகங்களையும் அறுத்து மிகப் பெரிய விருந்துகள் நடத்தி, சந்தோஷத்தில் திளைத்திருக்கும்போது, ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரர்களும் கறுப்பின மக்களும் தூக்க நோயால் பாதிக்கப்பட்டு கால்நடைகளைப் போல தாங்களாகவே செத்து மடிந்து கொண்டிருந்தனர்.”

ஹஸ்ஸன் கதையைச் சற்று நிறுத்திவிட்டு, நான்கு பக்கங்களிலும் ஒற்றைக் கண்ணைச் செலுத்திப் பார்த்தான். அலரி மரத்திற்கு மேலே வவ்வால்கள் சிறகை அடித்துக்கொண்டு பறக்கும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

“அங்கு அந்தக் கோட்டையில் ஓமான் அரேபியர்களின் அட்டகாசம் அப்படியே நடந்து கொண்டிருக்கட்டும். நாம் ஸாஞ்சிபார் சுல்தானின் அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்து போய் பார்ப்போம்.”

ஹஸ்ஸன் திடீரென்று கதையின் களத்தை மாற்றினான்.

“ஸாஞ்சிபார்... ஹ! அடிமைச் சந்தைகள் நடத்தி ஏராளமான பணத்தைச் சம்பாதித்த நாடு கறாம்பூவின், கறுத்த பேரழகிகளின் நாடு. அங்கு சுல்தானின் அந்தப்புரத்தில், சுல்தானின் மிக சமீபத்திய மனைவியான பேகம் கறாம்பூ - ஆமாம். கறாம்பூ என்பதுதான் அந்த புதிய பேகத்தின் பெயர் - தன்னுடைய படுக்கையறையில் சந்தனத் தாலான கட்டிலில், பச்சை நிற மெத்தையில், ஒரு சிவப்பு நிறப்பட்டுத் தலையணையில் முகத்தை அணைத்துக் கொண்டு கவிழ்ந்து படுத்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அறையின் மேலேயிருந்து தொங்கிக் கொண்டிருந்த - முற்றிலும் கண்ணாடிகளால் ஆன மலர் மொட்டுகளுடன் அமைந்த சர விளக்கில் ஒரு கிளி தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சர விளக்கிற்குக் கீழே, மெத்தைக்கு அருகில் ஒரு கறுப்பு பணியாள் ஒரு கருங்கல் சிலையைப் போல நின்றிருந்தான்.

கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்த பேகத்தின் கையில் கண்ணீரில் நனைந்த ஒரு கடிதம் இருந்தது. அது ஒரு கறுப்பின பணியாள் மொம்பாஸாவில் இருந்து கொண்டு வந்த கடிதம் அது. மொம்பாஸாவில் ஜீசஸ் கோட்டையில் சிக்கிக் கிடக்கும் வெள்ளைக்கார போர்  வீரர்களில் ஒருவனான கேப்டன் இயாகோ, ஸாஞ்சிபார் சுல்தானின் கறாம்பூ பேகத்திற்குக் கொடுத்தனுப்பிய ஒரு தனிப்பட்ட தகவல் அது.

பேகம் சிறிது நேரம் அழுகையை நிறுத்திவிட்டு, கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மீண்டும் ஒருமுறை வாசித்தாள்.

பிரியமுள்ள பேகம்,

உங்களுடைய நீல மலர் இதழ்களைப் போன்ற கரங்களில் இயாகோவின் முத்தம்.

இந்தச் செய்தி உங்களுக்குக்  கிடைக்குமோ என்று எனக்கு நிச்சயமில்லை. கிடைத்தால், அந்த நேரத்தில் நான் உயிருடன் இங்கு இருப்பேனா என்பதும் நிச்சயமில்லை.


நானும், என்னுடைய நாட்டைச் சேர்ந்த சுமார் ஐம்பது படை வீரர்களும், ஊர் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும், எங்களை நம்பி வந்திருக்கும் சுமார் ஆயிரம் கறுப்பினப் பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் இங்கு - இந்த ஜீசஸ் கோட்டையில் ஓமான் அரேபியர்களின் படையெடுப்பிற்கு ஆளாகி மிகவும் சிரமப்பட்டு இருந்து கொண்டிருக்கிறோம். சிறைக் கைதிகளைவிட மிகவும் மோசமான நிலையில் நாங்கள் இருக்கிறோம். கைதிகளுக்குத் தண்ணீரும் உணவும் கிடைக்குமே! எங்களுக்கு அவைகூட கிடைப்பதற்கான வழியில்லை. ஜோசப் கோட்டையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஓமான் அரேபியர்கள் ஜீசஸ் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல தந்திரங்களையும் பயன்படுத்தி எங்களுடைய வெடிமருந்துகளை வெறுமனே வீண் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வெடிமருந்தோ ஆயுதங்களோ கிடைப்பதற்கான வழியே இல்லை. ஜீசஸ் கோட்டைக்கான எல்லா உதவக்கூடிய வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன. ஓமான் அரேபியர்கள் தடை செய்து வைத்திருக்கிறார்கள். மொஸாம்பிக்கில் இருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காக வந்த போர்த்துக்கீசியக் கப்பல்கள் எல்லாவற்றையும் அரேபியர்கள் மூழ்கச் செய்துவிட்டார்கள் என்பது எங்களுக்கு வந்த தகவல். அவர்களை எதிர்த்து நிற்பதற்கு வெடிமருந்தும், ஆயுதங்களும், உணவுப் பொருட்களும் இல்லாமல் நாங்கள் உயிர் இருந்தும் பிணங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொற்று நோய்களும் எங்களை அழித்து நாசம் செய்து கொண்டிருக்கின்றன. எங்களை இப்படிப் பட்டினி போட்டுக் கொல்வது என்பதுதான் அரேபியர்களின் திட்டம். இந்த பயங்கரமான சதிச் செயலுடன் போராடி எத்தனை நாட்கள் இருக்க முடியும் என்பதை மனதில் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. போர்த்துக்கீசிய படையைச் சேர்ந்த பத்தொன்பது பேர் இதுவரை மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். இந்தக் கடிதம் அங்கு கிடைக்கும்போது எங்களில் இன்னும் சிலர் பிணமாக ஆகியிருப்பார்கள். அந்தக் கூட்டத்தில் உங்களின் பழைய நண்பனான இயாகோ வாகிய நானும் இருக்கலாம். (அப்படி ஒரு சூழ்நிலை உண்டானால், இந்தக் கடிதத்தை இயாகோவின் இறுதி விடை பெறலாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.)

எங்களை இந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்ற ஒரு ஆளால் முடியும். ஸாஞ்சிபார் சுல்தான்தான் அது. அப்படிப்பட்ட ஒரு ஆசையை மனதில் வைத்துத்தான் உங்களுக்கு இந்தத் கடிதத்தை எழுதுகிறேன். சுல்தானின் புதிய மனைவியாக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் அல்லவா? நீங்கள் சொன்னால், ஒரு கூட்டம் அரேபிய போர் வீரர்களை இங்கு அனுப்பி வைக்காமல் இருக்க மாட்டார். நீங்கள் அதைச் செய்வீர்களா? இயலாது என்றால் இந்த விஷயத்தை மறந்து விடுங்கள். இயாகோவையும் மறந்துவிடுங்கள்.

சொந்தம்,

இயாகோ வயாஸ்

(கேப்டன்)

அந்தக் கடிதத்தை முத்தமிட்டுக் கொண்டு கறாம்பு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

மொம்பாஸாவின் ஜீசஸ் கோட்டையில் மரணத்தை எதிர்பார்த்து இருக்கும் இயாகோவின் முகத்தை அவள் மனதில் நினைத்துப் பார்த்தாள். அந்த நீலநிற விழிகளில் பரிதாபமான கெஞ்சல் இருப்பதையும் பார்த்தாள்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஸாஞ்சிபாரில் இருந்த ஒரு கிராமத்து நடன சாலையில் இருக்கும்போது, அந்த அழகான தோற்றத்தைக் கொண்ட வெள்ளைக்கார போர் வீரனை முதல்முறையாகச் சந்தித்த மாலை நேரம் அவளுடைய ஞாபகத்தில் வந்தது. அவள் அப்போது ஸாஞ்சிபாரில் புகழ்பெற்ற நடனப் பெண்ணாக இருந்தாள். நடனம் முடிந்தவுடன், பார்வையாளர்களுக்கு மத்தியில் இருந்து உயர்ந்து, மெலிந்து காணப்பட்ட அழகான ஒரு வெள்ளைக்கார இளைஞன் அவளுக்கு அருகில் வந்து அவளுடைய கையைப் பிடித்து முத்தமிட்டு, தன்னுடன் சேர்ந்து நடனமாட அவளை கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அந்த வெள்ளைக்காரனின் இளமையான தோற்றத்தைவிட அவனுடைய பணிவும் சினேகத்துடன் நடந்து கொண்ட விதமும் அவளுக்குப் பிடித்தன. வெள்ளைக்காரர்கள் பொதுவாக உள்ளூரைச் சேர்ந்த நடனம் நடக்கும் இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். கறுப்பின மக்களுடைய ‘பேய் நடனங்கள்’ மீது கிண்டல் கலந்த ஒரு வெறுப்பு அவர்களுக்கு இருக்கும். ஒருவேளை அவர்கள் வருகிறார்கள் என்றால், அந்த வருகையின்போது அவர்கள் மது அருந்தி, சுய உணர்வு இல்லாமல், வெளிப்படையான பலாத்கார எண்ணத்துடன்தான் அவர்கள் இருப்பார்கள். இந்த இளைஞனான வெள்ளைக்காரப் போர்வீரன் மது அருந்தியிருக்கவில்லை. ஒரு பணிவும், சந்தோஷமும், மனித அன்பும் அவனுடைய நீலநிறக் கண்களில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கறாம்பூவும் இயாகோவும் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடனமாடினார்கள். பார்வையாளர்களாக இருந்த கறுப்பின மக்கள் அவர்களின் நடனத்திற்கு சீராக கைகளைத் தட்டினார்கள்.

அன்று முதல் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

கறாம்பூ தன்னுடைய கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தை மெதுவாகத் தடவி அதை ஒருமுறை முத்தமிட்டாள். இயாகோ பரிசாகத் தந்த ரத்தின மோதிரம் அது. அந்த மோதிரத்தில் இருந்த ரத்தினக் கல்லைப் பற்றிய கதையை இயாகோ கூறியதை அவள் நினைத்துப் பார்த்தாள். இந்தியாவில் இருந்த ஏதோ ஒரு கோவிலின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த மாலையில் இருந்த ஒரு ரத்தினம் அது.

வெள்ளைக்காரப் படை வீரர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கு கண்ட தங்கத்தையும் ரத்தினத்தையும் கொள்ளையடித்து, சிலையை அடித்துப் பெயர்த்து, அங்கு ஒரு மரத்தாலான சிலுவையை வைத்து விட்டுத் திரும்பிச் சென்று விட்டார்கள். அன்று அந்தஆலயத்தைக் கொள்ளைடித்த கூட்டத்தில் இருந்த வெள்ளைக்காரர்களில் இயாகோவைத் தவிர, எல்லோரும் கடலில் பயணம் செய்யும் போது, அரேபியர்களுடன் உண்டான மோதலில் மரணமடைந்த கதையையும் இயாகோ கூறியிருந்தான். ‘நான் இனிமேலும் இந்தியாவிற்குச் செல்வேன். ரத்தின மூட்டையுடன் ஸாஞ்சிபாருக்குத் திருப்பி வந்து உங்களின் காலடிகளில் அந்த ரத்தின மூட்டையைச் சமர்ப்பணம் செய்வேன்’- இயாகோவின் வார்த்தைகளை அவள் நினைத்துப் பார்த்தாள்.

இந்தியாவில் உள்ள தெய்வத்தின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த ரத்தின மாலையைக் கொள்ளையடித்த வெள்ளைக்காரர்களில் எஞ்சியிருந்த இயாகோவும் இதோ ஜிசஸ் கோட்டையில் மரணத்தை எதிர்பார்த்துக் கிடக்கிறான்.

கறாம்பூ அந்த மோதிரக் கல்லையே உற்றுப் பார்த்தாள். ‘இது சாபம் ஏற்ற ரத்தினமாக இருக்குமோ?’

இருக்காது என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். அந்த ரத்தினக்கல் அவளுடைய கையில் வந்த பிறகுதான் சுல்தான் அவளைச் சந்தித்தார். மறுநாளே சுல்தான் அவளைக் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டு அந்தப்புரத்திற்கு அழைத்துச் சென்றும் விட்டார். அதற்கு முன்பே இயாகோ இந்தியாவிற்குப் போய்விட்டான்.

அவள் இயாகோவைப் பற்றி நினைக்காத இரவுகள் இல்லை. சுல்தானின் அரண்மனையில் இருந்த அற்புதமான சுக போகங்களுக்கு மத்தியிலும், கறாம்பூ இயாகோவின் கை அணைப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்.

அவள் மெத்தையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். காதலைப் பற்றி சிந்தித்து நேரத்தைக் கடத்துவது இந்த சூழ்நிலையில் ஆபத்தானது. உடனடியாக ஏதாவது தீர்மானித்தாக வேண்டும். கறுப்புநிறப் பணியாள் அங்கு காத்து நின்றிருந்தான்.


அவள் காப்பாற்றுவதற்கான வழிகள் பலவற்றையும் பற்றி சிந்தித்தாள். வெள்ளைக்காரர்களுக்காக ஓமான் அரேபியர்களுடன் போர் செய்ய ஸாஞ்சிபார் சுல்தான் தன்னுடைய படையை அனுப்பி வைப்பார் என்ற விஷயத்தைப்பற்றி சிந்தித்துக்கூட பார்க்கக்கூடாது. ஓமான் அரேபியர்களுடன் போரிடாமல் ஜிசஸ் கோட்டையில் இருந்து இயாகோவைக் காப்பாற்ற வேண்டுமென்று சுல்தானிடம் கேட்டுக் கொள்வதும் ஆபத்தான விஷயமே. கறாம்பூவின் காதலனாக இயாகோ என்றொரு போர்வீரன் இருக்கிறான் என்ற கதையை சுல்தான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தில் இருக்கும் விஷயங்களை சுல்தான் அறிய நேர்ந்தால் கறாம்பூவின் தலைக்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் சிந்திக்கச் சிந்திக்க கறாம்பூ பேகத்தின் தலை சுற்ற ஆரம்பித்தது. பழைய காதலன்மீது கொண்டிருக்கும் காதல் என்பதை விட, ஒரு ஆண் - அதுவும் ஒரு ஐரோப்பிய போர்வீரன் - உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழியைத் தேடி தன்னை தொடர்பு கொண்டிருக்கிறான் என்ற உண்மைதான். அந்தக் கறுப்பினப் பெண்ணை அதிகமாக உணர்ச்சிவசப்படச் செய்தது. அந்தக் கடிதத்தில் ஜீசஸ் கோட்டையில் நரக  வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய  இனத்தைச் சேர்ந்தவர்களை அவள் பார்க்கவில்லை. மற்ற வெள்ளைக்காரர்களை அவள் பார்ப்பவில்லை. இயாகோவின் முகத்தை மட்டுமே அவள் பார்த்தாள். உணர்ச்சி வசப்பட்டு தன்னுடைய கன்னத்திலும் கண்களிலும் மார்பிலும் முத்தங்களைத் தந்த அந்த உதடுகள்  தாகமெடுத்து வறண்டுபோய் இருப்பதை அவள் எப்படிப் பொறுத்துக் கொள்வாள்? காதல் வேட்கையுடன் தன்னைப் பார்த்த அந்த நீலநிற கண்கள் மரணத்தை எதிர்பார்த்து மயங்கிக் கிடக்கின்றன. அந்தக் கண்களில் இருந்த ஆசைகளில் எஞ்சியிருந்த ஓர் ஒளிக்கீற்று - கறாம்பூ மட்டும்தான்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கறாம்பூ சற்று அதிர்ச்சியடைந்தாள். சுல்தான் வருகிறார் என்பதை அவள் உடனடியாகப் புரிந்துகொண்டாள்.

சத்தம் உண்டாக்கக் கூடாது என்று சைகை செய்தவாறு, அவள் அந்தக் கறுப்பு நிறப் பணியாளை அறையின் ஒரு மூலையில் திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். இயாகோவின் கடிதத்தைத் தலையணைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, வேகமாக முகத்தைப் பிரகாசமாக ஆக்கி, சந்தோஷமாக இருப்பது மாதிரி காட்டிக்கொண்டு நடனம் ஆடியவாறு அவள் கதவைத் திறந்தாள்.

கறாம்பூவின் நடனத்தைப் பார்த்து சுல்தான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

‘ஸாஞ்சிபார் சுல்தானுக்கு மிகவும் பிரியமான பேகத்தை நடனப் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவிக்கிறதே! என்ன இது?’ சுல்தான் கறாம்பூவின் தோள்களைப் பிடித்துக் குலுக்கியவாறு கேட்டார்.

சுல்தானின் விரிந்த மார்பை வருடியவாறு அவரை மெத்தையை நோக்கி அழைத்துச் சென்று கொண்டே கறாம்பூ இப்படிச் சொன்னாள்:

‘நான் உறங்கிக் கொண்டிருந்தேன். தூக்கத்தில் ஓர் அற்புதமான கனவு கண்டேன். ஓர் அழகான பூந்தோட்டம். அங்கு நீங்களும் நானும் மட்டுமே இருக்கிறோம். ஒரு புல்வெளியில், ஒரு சந்தனத்தாலான மேஜை மீது பொன்னாலான குவளைகளில் மது நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. மதுவை அருந்தியவாறு நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள் - ‘கறாம்பூ, உன்னால் எவ்வளவு நேரம் நடனம் ஆட முடியும்?’ என்று.

நான் சொன்னேன். - ‘நீங்கள் நிறுத்தும்படி கூறுவதுவரை என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் நடனம் ஆட முடியும். சோதித்துக் கொள்ளுங்கள்’ என்று.

‘அப்படியென்றால் அதையும் பார்ப்போம்!’ என்று சொன்ன நீங்கள் என்னிடம் நடனம் ஆடும்படிக் கூறினீர்கள். நான் அந்த புல்வெளியில் நடனமாட ஆரம்பித்தேன். நீங்கள் மதுவை அருந்தியவாறு என்னுடைய நடனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுடைய மது அருந்தும் செயலும் என்னுடைய நடனமும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருந்தது. சற்று நேரம் ஆனதும், நீங்கள் மதுவின் போதையில் கண்ணயர்ந்து தூங்கிவிட்டீர்கள். நடனத்தை நிறுத்தலாம் என்ற உங்களின் உத்தரவை எதிர்பார்த்து நான் நடனத்தைத் தொடர்ந்து கொண்டே இருந்தேன். அப்போதுதான் நீங்கள் கதவைத் தட்டினீர்கள். நான் கண் விழித்து நடனத்தைத் தொடர்ந்து கொண்டே உங்களை வரவேற்கிறேன்.

அந்த கனவு கதையைக் கேட்டு சுல்தான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். ‘உண்மையிலேயே இது ஓர் அற்புதமான கனவு. உன் கனவின் ஒரு காட்சி இன்று உண்மையிலேயே நடக்கப் போகிறது. மது அருந்தியவாறு உன்னுடைய நடனத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.’

கறாம்பூ சுல்தானின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே சொன்னாள்: “அப்படியென்றால் நீங்கள் நிறுத்தும்படிக் கூறுவது வரையில் நான் நடனம் ஆடுவேன்.”

சுல்தான் மதுக் கோப்பையைத் தனக்கு முன்னால் வைத்துக் கொண்டு பருக ஆரம்பித்தார். கறாம்பூ நடனத்தைத் தொடங்கினாள்.”

ஹஸ்ஸன் சிறிது நேரம் கதை கூறுவதை நிறுத்தினான். யாரோ வருவதை எதிர்பார்ப்பதைப்போல அவன் நான்கு பக்கங்களிலும் பார்த்தான். அப்போது ஜீசஸ் கோட்டையில் மணிகள் ஒலிக்க ஆரம்பித்தன.

ஒன்று .... இரண்டு...

ஹஸ்ஸனின் முகம் பயங்கரமாக ஆவதையும், அவன் இரண்டு கைகளையும் தூக்கித் தன் காதுகளை மூடிக் கொள்வதையும் நான் கவனித்தேன்.

மூன்று... நான்கு.... ஐந்து.... ஆறு.... ஏழு.... எட்டு.... ஒன்பது.... பத்து.

மணி பத்து அடித்தது.

ஹஸ்ஸன் ஒன்பது மணிக்கு ‘கொலைகார’னைப் பார்ப்பதற்குப் போக வேண்டும் என்ற விஷயத்தை மறந்துவிட்டான் என்று நினைக்கிறேன். மறந்துவிட வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டேன். அந்தக் கதையை அங்கே அப்படியே நிறுத்திவிட்டு ஓடிப்போக அவனை நான் அனுமதிக்க மாட்டேன்.

ஒரு நிமிட நேரத்திற்கு அமைதி நிலவியது. அது ஒரு யுகத்தைப் போல எனக்கு இருந்தது. நிலவு வெளிச்சத்தில் ஜீசஸ் கோட்டையின் நிழல் ஒரு சாய்ந்த யானையைப்போல எங்களுக்கு முன்னால் தெரிந்தது. மரங்களுடைய நிழல்கள் ஒன்றோடொன்று கட்டிப் பிடித்துக் கொண்டு, நீர்ப்பாம்புகளைப்போல எங்களின் இரு பக்கங்களிலும் நெளிந்து கொண்டிருந்தன. கறுத்த முகமூடி அணிந்த அரேபியப் பெண்களைப்போல வவ்வால்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தன. நிழல்களின் அமைதியான காட்சி. அங்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது ஒன்றே ஒன்று மட்டும்தான். ஹஸ்ஸனின் ஒற்றைக் கண்! அந்தக் கண், நிழலில் புலியின் கண்ணைப்போல ஒரு பச்சை வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

“மிஸ்டர் ஹஸ்ஸன், நீங்கள் கறாம்பூவை சுல்தானுக்கு முன்னால் நடனம் ஆடுவதோடு நிறுத்தியிருக்கீங்கல்ல...” நான் ஹஸ்ஸனுக்கு கதை விஷயமாக ஞாபகப்படுத்தினேன்.

“ஓ... ஆமாம்... ஆமாம்....” - ஹஸ்ஸன் ஏதோ சிந்தனையிலிருந்து விடுபட்டது மாதிரி என்னுடைய முகத்தைப் பார்த்தான். பிறகு தன்னுடைய ஒற்றைக் கண்ணைச் சிறிது நேரம் மூடியவாறு உட்கார்ந்திருந்தான்.


கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த ஹஸ்ஸனின் முகம் அழகாக இருந்தது. சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டே ஹஸ்ஸன் கதையைத் தொடர்ந்தான்:

“ஷிராஸில் மது அருந்திக் கொண்டிருக்கும் சுல்தானுக்கு முன்னால் கறாம்பூ பேகம் அப்படியே நடனம் ஆடிக்கொண்டிருக்கட்டும். அந்த நாட்களில் ஜீசஸ் கோட்டையில் என்னவெல்லாம் நடக்கிறது என்று நாம் போய்ப் பார்ப்போம்.”

அணி வகுக்கும் முகமூடிகள்

“ஜீசஸ் கோட்டையின் நிலை எப்படி இருந்தது? கோட்டைக்குள் - சரியாக சொல்லப்போனால் ஒரு மோசமான உலகமாக மாறி விட்டிருந்தது. தாகமும் பசியும் வெள்ளைக்காரனையும் கருத்த மனிதனையும் சமமான நிலையில் பாதிக்கும் என்ற விஷயம் அங்கு பிரச்சினையை உண்டாக்கியது. அங்கு யாருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும்? வெள்ளைக்காரர்களுடைய உயிரா, கறுப்பின மக்களின் உயிரா? சந்தேகமே இல்லை. வெள்ளைக்காரனின் உயிர்தான் விலைமதிப்பு உள்ளது என்று வெள்ளைக்காரனே தீர்ப்பு எழுதிவிட்டான். கறுப்பு மனிதர்களை ஆட்சி செய்யக்கூடிய கடவுளுக்கு நிகரான உரிமையைக் கைவசம் வைத்திருப்பவர்கள் வெள்ளைக்காரர்கள்தான் என்ற பிரச்சாரத்தை - புதிய மதத்தை போதனை செய்து வந்த கூட்டத்தில், வெள்ளைக்கார பாதிரியார்கள் விருப்பப்படும் அளவிற்கு செய்திருக்கிறார்கள். ஆனால் பசி என்ற ஒன்று வந்தபோது, புனித வேதங்களின் உபதேசங்களைப் பின்பற்ற புதிய கிறிஸ்துவர்களான கறுப்பின மக்களில் சிலர் தயாராக இல்லை. உடல் பலம் அதிகமாக இருந்தது கறுப்பின மக்களிடம்தான். துப்பாக்கியும் வெடிமருந்தும் வெள்ளைக்காரர்களின் கையில் இருந்தது. அந்த வகையில் ஜீசஸ் கோட்டையில் மிக முக்கியமான உணவு என்ற விஷயத்திற்காக வெள்ளைக்காரர்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் இடையில் கொள்ளையும் சண்டையும் உண்டாகும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. கறுப்பர்கள் முதலில் சண்டையை ஆரம்பிக்க வேண்டும் என்பது போர்த்துக்கீசியர்களின் விருப்பமாக இருந்தது. அப்படி நடந்தால் அதன் மூலம் கொஞ்சம் கறுப்பின மக்களை உயிரை விடும்படி செய்யலாமே! ஜீசஸ் கோட்டையில் இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசைப்படுவது. அப்படி நடந்தால் எஞ்சியிருப்பவர்களின் உயிரை பட்டினியால் உண்டாகும் மரணத்திலிருந்து சிறிது காலத்திற்குக் காப்பாற்றலாம். அந்தக் கெட்ட எண்ணத்துடன் கறுப்பின மக்களை மரணமடையச் செய்ய தயார் பண்ணுவதற்கு மிருகத்தனமான பல உத்திகளையும் போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள். அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு விபத்து அந்தக் கோட்டையைத் தேடி வந்தது. ப்ளேக்... பசியைப் போலவே ப்ளேக்கும் வெள்ளைக்காரர்கள் என்றோ கறுப்பு மனிதர்கள் என்றோ இன வேறுபாடு பார்ப்பதில்லை. அந்த பயங்கரமான தொற்றுநோய் வெள்ளைக்காரர்களையும் கறுப்பின மக்களையும் ஒரே மாதிரி பாதித்தது. எந்தவொரு உடனடி புரட்சியும் இல்லாமலேயே இரு இனத்திலும் பலர் இறந்தார்கள்.

ஜோசப் கோட்டையில் ஷேக் சம்சுதீனும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும் இரவு உணவுக்காக அமர்ந்திருந்தார்கள். மொஸாம்பிக்கில் இருந்து வந்த போர்த்துக்கீசிய படைக் கப்பலை எதிர்த்தபோது, வெள்ளைக்கார கப்பல் படையினர் காட்டிய எதிர்ப்புகளையும் முட்டாள்தனங்களையும் பற்றி பல வகைகளிலும் கிண்டல் பண்ணி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். சிரித்துக்கொண்டே அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஷேக்கின் நம்பிக்கைக்கு உரிய படை வீரரான நூரியூசுஃப், அந்தக் கூட்டத்தில் ஒரு கோமாளியாகவும் இருந்தான். பின்பாகத்தில் குண்டடிபட்ட ஒரு வெள்ளைக்காரக் கிழவனின் மரணத்தின்போது அவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நூரி யூசுஃப் மிகவும் ஈடுபாட்டுடன் நடித்துக் காட்டினான். அதைப் பார்த்து பானை வயிற்றைக் கொண்ட ஷேக் வயிற்றில் அடித்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபோது, ஷேக்கின் வாயில் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் ஒரு துப்பாக்கியிலிருந்து குண்டுகள் சிதறுவதைப்போல, முன்னால் இருந்த அரேபியர்களின் முகத்திலும் நெஞ்சிலும் தெறித்து விழுந்தன.

அரேபியர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வலிப்பு நோய் வந்தவர்களைப்போல நடந்து கொண்டார்கள்.

நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தன. ஓமான் அரேபியர்கள் தங்கியருந்த ஜோசப் கோட்டையில் அன்று எப்போதையும்விட அதிகமான உற்சாகம் நிலவிக் கொண்டிருந்தது. மொத்தத்தில், ஒரு திருவிழாவிற்கான சூழ்நிலை அங்கு இருந்தது. ஜீசஸ் கோட்டையில் இருக்கும் வெள்ளைக்காரர்களைக் காப்பாற்றுவதற்காக வந்த மொஸாம்பிக்கைச் சேர்ந்த ஒரு கப்பலையும் அதில் இருந்த வெள்ளைக்கார படை வீரர்களையும் ஓமான் அரேபியர்கள் எதிர்த்து விரட்டினார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஓமானில் இருந்து உணவுப் பொருட்களுடன் ஒரு கப்பல் வந்து சேர்ந்தது. அரேபியர்கள் ஒரு ஒட்டகத்தை அறுத்து ஒரு மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.

நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்த இரவு நேரமாக அது இருந்தது. முகமூடி அணிந்த ஒரு கூட்டம் பெண்களும், அவர்களுக்கு முன்னால் ஒரு அரேபிய இளைஞனும் ஜோசப் கோட்டைக்கு முன்னால் நடந்து சென்றார்கள். கோட்டை வாசலில் இருந்த காவலாளியான கிழவன் ஹமீத் அந்தக் கூட்டத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். சந்தேகப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. இரவு நேரத்தில் - குறிப்பாக நிலவு வெளிச்சம் இருக்கும் இரவு வேளையில் - நல்ல குடும்பங்களைச் சேர்ந்த அரேபியப் பெண்கள் கறுத்த முகமூடி அணிந்து உறவினர்களின் அல்லது நண்பர்களின் இல்லத்திற்குப் போவது என்பதோ, இல்லாவிட்டால் வெறும் பொழுதுபோக்கிற்கு கூட்டமாகப் போவது என்பதோ அங்கு அசாதாரணமான ஒரு விஷயமல்ல. அவர்களுடைய நடவடிக்கைகளை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டிருந்த கோட்டை வாசல் காவலாளி ஹமீத்தின் பார்வையில் சற்று சந்தேகம் உண்டானது. அவன் அந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை மிகவும் கூர்மையாகப் பார்த்தான். ஆமாம் - அந்த பர்தா அணிந்தவர்கள் ராணுவத்தில் இருப்பவர்களைப் போல சரியாக எட்டுகள் வைத்து முன்னோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பெண்கள் அந்த மாதிரி பட்டாளக்காரர்களைப் போல நடப்பது என்பது ஒரு புதுமையான விஷயம்தானே? ஹமீத்தின் சந்தேகம் அதிகரித்தது. அவன் சோதனை செய்து பார்ப்பதற்காக வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டான். குண்டு சத்தம் கேட்ட பிறகும் அந்த முகமூடி அணிந்தவர்கள் மத்தியில் எந்தவித அதிர்ச்சியும் உண்டாகவில்லை. அந்தப் பட்டாள முறைக்கு எந்த ஒரு மாறுதலும் உண்டாகவில்லை. ஏதோ உத்தரவை எதிர்பார்த்திருப்பதைப்போல அந்த பர்தா அணிந்த கூட்டம் திடீரென்று நின்றது. அவ்வளவுதான்.

ஹமீத் தன் ஆடையில் நெருப்பு பிடித்ததைப்போல அங்கிருந்து ஓடி, கோட்டைக்குள் சென்று படைத் தலைவரான ஷேக் சம்சுதீனைத் தேடினான்.

‘எழுந்திருங்க...! வெளியே ஓடி வாங்க! ஆபத்து... சதி! ஒரு கூட்டம் பர்தா அணிந்தவர்கள் கோட்டைக்கு முன்னால் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் பெண்கள் அல்ல என்பதையும், வேடம் மாறிய பட்டாளக்காரர்கள் என்பதையும் அல்லாஹுவின் அருளால் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் பட்டாளக்காரர்களைப்போல அடிகள் வைத்து நடக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு அரேபிய இளைஞன் இருக்கிறான்.’

அரேபியப் படைத் தலைவனும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும் சாப்பாட்டை நிறுத்திவிட்டு, வேகமாக எழுந்து துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கோட்டையின் கோபுரத்தை நோக்கி நடந்தார்கள்.

பர்தா கூட்டம் அப்போது கோட்டையில் இருந்து நூறடிகள் நகர்ந்திருந்தது.

அரேபியர்களின் படைத் தலைவன் கூர்ந்து கவனித்தான். அவர்கள் தெருவிற்குச் செல்லும் பாதையில் அல்ல - ஜீசஸ் கோட்டையை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். ஜீசஸ் கோட்டையில் இருக்கும் வெள்ளைப் பன்றிகளைக் காப்பாற்றுவதற்காக வந்திருப்பவர்கள்தான். தலைவனான அரேபிய இளைஞனும் மாறுவேடம் அணிந்திருக்கும் ஒரு வெள்ளைக்காரனாகத்தான் இருக்க வேண்டும். மொஸாம்பிக்கில் இருந்து வந்திருக்கும் கூட்டமாகத்தான் அது இருக்க வேண்டும்.

அரேபியப் படைத் தலைவன் விழுந்து விழுந்து சிரித்தான். ‘அப்பிராணிகள்! சகோதரர்களே, இன்று இரவு உணவுக்குப் பிறகு நமக்கு நன்கு பொழுது போவதற்கு விஷயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தயாராக இருங்கள். காவலாளியே பள்ளத்தின் பாலத்தை இழுக்க உத்தரவிடு.’

ஜோசப் கோட்டையிலிருந்து தொடர்ந்து மூன்று முறை துப்பாக்கி சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கோட்டைக்கு மேலே இருந்து ஒரு சிவப்பு நிற விளக்கு விசேஷமான முறையில் ஒளியை வீசிக் கொண்டிருந்தது- பாலத்தைத் திறப்பதற்கான தகவல்.

ஜோசப் கோட்டையில் இருப்பவர்களுக்குத் தெரிந்தோ அவர்களின் சம்மதமோ இல்லாமல் அந்த வழியே ஜீசஸ் கோட்டையை அடைய யாரும் ஆசைப்படக் கூடாது. அந்த வழியில், ஜோசப் கோட்டையில் இருந்து முந்நூறு அடி தூரத்தில் ஒரு பெரிய பள்ளத்தையும் அந்த பள்ளத்தை  மூடி மறைத்துக்கொண்டு ஒரு மரப்பாலத்தையும் அரேபியர்கள் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். கடலில் இருந்து வெட்டி உண்டாக்கப்பட்ட பள்ளம் அது. பள்ளத்தில் கடல் நீர்தான் நிறைந்திருக்கிறது. ஜோசப் கோட்டையில் இருந்து ஆபத்தை அறிவிக்கும் எச்சரிக்கை கிடைத்தவுடன், பள்ளத்திற்கு அருகில் மறைந்திருக்கும் காவலாளி, சந்தேகத்திற்கு இடமான பயணிகள் அந்தப் பாலத்தில் வரும் நேரத்தைப் பார்த்து, பாலத்திற்கு அடியில் இருக்கும் இணைப்பைத் தளர்த்தி உருவுவான். கதவு திறப்பதைப் போல பாலத்தின் இணைப்புகள் இரண்டும் கீழே நீருக்குள் ‘ப்ளும்’ என்று தலைக்குப்புற விழுவார்கள். பள்ளத்தில் - நீர்ப்பரப்பில் இருந்து ஐந்தாறு அடிகளுக்குக் கீழே, ஒரு பெரிய வலையும் வைக்கப்பட்டிருந்தது. பாலத்திலிருந்து நடப்பவர்கள் தலைகுப்புற விழுவது அந்தப் பெரிய வலையில்தான். அந்த வகையில் எதிரிகளை பெரிய மீன்களைப்போல வலையில் விழ வைத்து கரைக்கு கொண்டு வருவது என்பது அந்த அரேபியர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது.

தலைவனும் பன்னிரண்டு முகமூடி அணிந்தவர்களும் பாலத்திற்கு மேலே நடந்து சென்றபோது,  அந்த தந்திரப் பாலம் திடீரென்று பிளந்து எல்லோரும் தலைக்குப்புற நீருக்குள் விழுந்தார்கள். நூரி யூசுஃப்பின் தலைமையில்   கோட்டையில் இருந்த ஓமான் அரேபியர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பாலத்திற்குப் பின்னால் நின்றிருந்த மீதமுள்ள பர்தா உருவங்களை அவர்கள் பின்னாலிருந்து தள்ளி நீருக்குள் விழ வைத்தார்கள்.

‘எலேலம் அல்லா’ என்று பாடியவாறு அரேபியர்கள் வலையை கரைக்கு இழுத்தார்கள். அதற்குள் இருந்த உருவங்கள் மொத்தத்தில் பயத்தாலும் நனைந்ததாலும் நடுங்கி கொண்டிருந்தன. சிலர் நீரைக் குடித்து வயிறு வீங்கியும், மூச்சுவிட முடியாமலும் வெறுப்புடன் அந்த தடிமனான முகமூடியை விட்டு வெளியே குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

முகமூடிகளைப் பார்த்தபோது கண்ட காட்சி ஓமான் அரேபியர்களை ஆச்சரியப்படச் செய்தது. ஆயுதங்கள் ஏந்திய ஏதோ அரேபியப் போர் வீரர்கள் நனைந்த கோழிகளைப்போல கூனிக் குறுகி நின்றிருந்தார்கள். முகமூடி இல்லாத தலைவனின் நனைந்த உடலைப் பார்த்து அவர்கள் விழித்து நின்றார்கள். அந்த ‘தலைவ’னின் தலைக்கட்டு போய், கருநீலத் தலைமுடி இரண்டு மார்புக் கலசங்களிலும் நனைந்து ஒட்டிக் கிடந்தன. பெண்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஆண்களாகவும், ஆண் வேடத்தில் பார்த்த ஆள் பெண்ணாகவும் நீரிலிருந்து மேலே வந்தார்கள். என்ன ஒரு தமாஷ்!

சில ஓமான் அரேபியர்களுக்கு அந்தக் காட்சியை நம்ப முடியவில்லை. அவர்கள் ‘சைத்தான்! சைத்தான்!’ என்று உரத்த குரலில் சத்தமிட்டார்கள்.

வலையில் சிக்கிய எதிரிகளை, ஆடைகளை அவிழ்த்து, நிர்வாணமாக்கி, நடத்திக்கொண்டு செல்வதுதான் பொதுவாக நடப்பது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் ஓமான் அரேபியர்கள் திகைத்தார்கள். ஒரு பெண் அவர்களுடைய வலையில் விழுந்தது என்பது அதுதான் முதல் தடவை. ஆயுதங்களை வைத்திருந்தாலும், அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்த உண்மையும் ஓமான் அரேபியர்களை ஆச்சரியப்படச் செய்தது.

அந்த நனைந்த ஆடைகளுடனே அவர்கள்  அனைவரையும் ஓமான் அரேபியர்கள் படைத்தலைவனான ஷேக் சம்சுதீனுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினார்கள். அந்தப் பெண்ணையும் சேர்த்து அவர்கள் இருபத்தோரு பேர் இருந்தார்கள்.

ஷேக் சம்சுதீன் அந்த கறுத்த போர் வீரர்களையும், அந்த நீல அழகியையும் மாறி மாறிப் பார்த்தான். அவனுக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் அரேபியர்கள்.

‘நீங்கள் யார்? எங்கேயிருந்து வர்றீங்க?’

ஷேக் கர்ஜித்தான்.

பதில் இல்லை.

ஷேக் அந்தப் பெண்ணைப பார்த்தான். அவள் காலில் இருந்து தலை வரை நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.

ஷேக் உத்தரவிட்டான்: ‘இவர்களுக்கு மாற்றுவதற்கு ஆடைகள் கொடுங்க. அதற்குப் பிறகு மீண்டும் எனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்க’

ஒரு அலி அவர்கள் எல்லோரையும் கோட்டைக்குள் குளிக்கும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அரைமணி நேரம் தாண்டியதும் நீளமான ஆடைகளை அணிந்து அந்தப் போர் வீரர்கள் ஷேக்கிற்கு முன்னால் மீண்டும் கொண்டு வரப்பட்டார்கள். பெண்களுக்கான ஆடை அங்கு இல்லை. அதனால் ஆண்களைப்போல நீளமான ஆடையை அணிந்து கொண்டுதான் அந்த அரேபியப் பெண்ணும் நின்றிருந்தாள். அவளுடைய நீல நிற முடி மார்பின் இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தது.

‘நீங்க யார்? எங்கேயிருந்து வர்றீங்க?’

ஷேக் கேள்வியைத் திரும்பவும் கேட்டான்.

அப்போதும் பதில் இல்லை.

ஓமான் அரேபியப் படை வீரர்களும், கோட்டையின் பணியாட்களும், பண்டித கிழவனான அப்துல் கத்தீப்பும் விசாரணையைக் கேட்பதற்காகக் கூடி நின்றிருந்தார்கள். திடீரென்று பணியாட்கள் மத்தியில் இருந்து ஒருவன் முன்னால் வந்து ஷேக்கை வணங்கினான்.


‘அல்லாஹுவின் அருளால் ஷேக் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்! ஒரு விஷயத்தைச் சொல்ல இந்த அடிமையை அனுமதிக்க வேண்டும்!’

‘சொல்லு! என்ன?’- ஷேக் கேட்டான்.

‘இங்கு நின்று கொண்டிருக்கும்’ இந்த அரேபிய மங்கையை எனக்குத் தெரியும். இவங்க ஸாஞ்சிபார் சுல்தானின் புதிய பேகம். பெயர்... கறாம்பூ. சுல்தான் இவங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் இவங்க ஸாஞ்சிபாரிலேயே மிகவும் புகழ்பெற்ற நடனப் பெண்ணாக இருந்தார்கள்.

‘ஸாஞ்சிபார் சுல்தானின் பேகமா?’ - ஷேக் வாயைப் பிளந்து, வயிறைத் தடவியவாறு விழித்துக் கொள்ணடிருந்தான்.

‘இவன் கூறுவது உண்மையா?’ - ஷேக் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டே சாந்தமான குரலில் கேட்டான்.

‘ஆமாம்... உண்மைதான். நான் ஸாஞ்சிபார் சுல்தானின் பேகம்தான்? கறாம்பூதான்’.

அவளுடைய மணிநாதம் அங்கு முழங்கியது.

‘இவர்களெல்லாம்?’ - அவளுடன் வந்தவர்களைச் சுட்டிக்காட்டிய வாறு ஷேக் கேட்டான்: ‘ஸாஞ்சிபார் சுல்தானின் படை வீரர்கள்... அப்படித்தானே?’

‘ஆமாம்... ஸாஞ்சிபார சுல்தானின் படை வீரர்கள் தான்’ - அவள் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொன்னாள்.

‘எதற்காக நீங்கள் மொம்பாஸாவிற்கு வந்திருக்கிறீர்கள்? வெள்ளைக்காரப் பன்றிகளுக்கு உதவுவதற்கு... அப்படித்தானே?’

‘நீங்கள் சொன்னது முற்றிலும் சரி என்று கூறுவதற்கில்லை’ - கறாம்பூ சற்று கோபத்துடன் சொன்னான்.

‘பிறகு உங்களுடைய நோக்கம்தான் என்ன?’

சற்று நேர மவுனத்திற்குப் பிறகு கறாம்பூ பதில் சொன்னாள்:

‘ஜீசஸ் கோட்டையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் என்னுடைய ஒரு பழைய நண்பரைப் பார்ப்பதற்காக நான் வந்திருக்கிறேன்’

‘உங்களுடைய அந்த நண்பர் யார்?’

கறாம்பூ முகத்தைக் குனிந்தாள். சற்று நேரத்திற்கு அவள் எதுவும் பேசவில்லை. ஷேக் சிறிது கோபத்துடன் குரலை உயர்த்தி மீண்டும் கேட்டான்: ‘அந்த நண்பர் யார்?’

கறாம்பூ தடுமாறிய குரலில் அவனுடைய பெயரைச் சொன்னாள்: ‘கேப்டன் இயாகோ’

சுடுகாட்டில் ரத்தினங்கள்

புல்வெளியில் ஜீசஸ் கோட்டையின் நிழலின் வடிவம் பயத்தை வரவழைக்கக்கூடிய அளவிற்கு இருந்தது. கடற்காற்று சற்று கோபித்தது. ஹஸ்ஸன் திடீரென்று எழுந்து மீண்டும் அங்கேயே உட்கார்ந்தான்.

அவன் அந்த ஒற்றைக் கண்ணை என்னுடைய முகத்தில் பதித்து ஆண்மைத் தனமான குரலில் கேட்டான்: “நாம் எங்கே கதையை நிறுத்தினோம்?”

நான் சொன்னேன். “ஷேக் ஜோசப் கோட்டையில் பேகம் கறாம்பூவை விசாரணை செய்கிறார். அவள் பார்ப்பதற்காக வந்த நண்பரின் பெயர் இயாகோ என்று அவள் ஷேக்கிடம் கூறுகிறாள்”.

ஹஸ்ஸன் சொன்னான்: “சரி சரி... ஷேக் அவளை விசாரணை செய்யட்டும். நாம் ஜீசஸ் கோட்டையில் இயாகோ என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் போய் பார்ப்போம். ஜீசஸ் கோட்டையில் வெள்ளைக்கார போர் வீரர்களில் இயாகோவும் வேறு பதினேழு பேர்களும் மட்டுமே இறக்காமல் எஞ்சியிருக்கிறார்கள். உயிருடன் இருந்த வெள்ளைக்காரர்கள் தங்களுக்கிடையே நல்ல நட்புணர்வுடன் இருக்கவில்லை. அங்கு நட்புணர்வுடன் இருந்தது பட்டினியும் நோயும் மரணமும்தான்.

இந்தியாவில் உள்ள ஆலயங்களிலிருந்து கொள்ளையடித்துக் கிடைத்த ஏராளமான ரத்தினங்கள் ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரர்களின் கையில் இருந்தன. மிகவும் விலைமதிப்பு கொண்ட ரத்தினங்கள் இயாகோவின் கையில்தான் இருந்தன. அவனுடைய நண்பர்களுக்கு இந்த ரகசியம் நன்றாகத் தெரியும். அந்த ரத்தின மூட்டை முழுவதும் இயாகோவிற்குச் சொந்தமானவை அல்ல. மனிதர்கள் பொன்னின் மீதும் ரத்தினங்கள் மீதும் வைத்திருக்கும் ஆசை உலகம் ஆரம்பித்த காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பொருட்களுக்காக உலகத்தில் எத்தனையோ சண்டைகளும் போர்களும் கூட்டக் கொலைகளும் நடந்திருக்கின்றன. இப்போதும் நடந்து வருகிறது. அதற்காக மனிதர்கள் அழிகிறார்கள். ஆனால், பூமியில் இருக்கும் பொன்னும் ரத்தினங்களும் எந்தச் சமயத்திலும் அழிவதில்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த உலோகத் துண்டுகளும் கற்களும் கண்ணாமூச்சு விளையாட்டு விளையாடுகின்றன. ஒரு மனிதனின் கையில் இருந்து இன்னொரு மனிதனின் கைக்கு, ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்கு, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இந்தப் பயண வேளைகளுக்கு மத்தியில் அவை ஏராளமான உயிர்களை பலி வாங்குகின்றன. மேற்கு இந்தியாவில் உள்ள ஆலயங்களில் இருந்த கடவுள் சிலைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த விலை மதிப்பற்ற ரத்தினங்களை வெள்ளைக்காரப் படைவீரர்கள் அபகரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவற்றைக் தங்களுடைய நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு முன்னால் அவர்கள் மொம்பாஸாவில் - ஜீசஸ் கோட்டையில் சிக்கிக் கொண்டார்கள். கேப்டன் பெரேரா என்ற வெள்ளைக்காரரிடம் கோழி முட்டை அளவில் ஒரு மாணிக்கக் கல் இருந்தது. மலபார் கரையில் இருந்த ஒரு சிவன் கோவிலில், சிவனுடைய மூன்றாம் திருக்கண்ணாக கருங்கல் சிலையில் பதிக்கப்பட்டிருந்த ரத்தினம்தான் அது. லாரன்ஸ் என்ற வெள்ளைக்காரப் போர்வீரன் காற்சட்டைப் பையில் ஒரு சிரட்டைத் துண்டை எந்நேரமும் வைத்துக்கொண்டு  திரிந்தான். அந்த சிரட்டை நிறைய வைரக் கற்கள் இருந்தன.

பின்டோ என்ற இன்னொரு வெள்ளைக்காரப் படைவீரனிடம் விலை மதிக்க முடியாத ஒரு ஓவர்கோட் இருந்தது. பச்சைத் துணியால் முழுமையாக மூடித் தைக்கப்பட்ட மரகதக் கற்கள்தான் அந்தக் கோட்டின் பொத்தான்களுக்குப் பதிலாக வைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் வெள்ளைக்காரர்கள் ஒவ்வொருவரும் கொள்ளையடித்த ரத்தினங்களைப் பல இடங்களிலும் மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்தனர். சிலர் சில ரகசிய இடங்களில் ரத்தினங்களைக் குழி தோண்டி மூடி வைத்தும் இருந்தார்கள்.

ஜீசஸ் கோட்டையின் சூழ்நிலை மிகவும் மோசமானவுடன், இந்த வெள்ளைக்காரப் போர் வீரர்களின் ஒரே சிந்தனை இந்த ரத்தினங்களைப் பற்றித்தான் இருந்தது. அவர்கள் ஒரவரையொருவர் நம்பவில்லை. கோட்டையில் பட்டினியும் நோய்களும் அதிகமாக பாதித்தவுடன், மரணம் அவர்களுக்கு முன்னால் கொடூர நடனத்தை ஆரம்பித்தவுடன், அந்த வெள்ளைக்காரர்கள் சுயநலம், கெட்ட எண்ணம் ஆகியவற்றின் பிறப்பிடமாக மாறினார்கள். நோயால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் படுத்துக் கிடக்கும் சகோதரனை கழுத்தை நெறித்துக் கொன்று, அவனுடைய கையில் இருந்த ரத்தினங்களை அபகரித்து தங்களுடைய கையிருப்பைக் கூட்டுவதற்கு அவர்கள் தயங்கவில்லை.

ஜீசஸ் கோட்டையில் இருந்த வெள்ளைக்காரப் போர் வீரர்களின் கையில் - அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்து திரும்பி வந்தவர்களாக இருந்தார்கள். ஏராளமான ரத்தினங்கள் இருக்கின்றன என்ற கதையை ஓமான் அரேபியர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.


கோட்டைக்குள் இருப்பவர்கள் எல்லோரும் மரணமடைந்துவிட்டால், அந்தச் சுடுகாட்டில் கிடைக்கக் கூடிய ரத்தினக் குவியல்களைப் பற்றிய இனிய கனவுகள் அரேபியர்களை சந்தோஷம் கொள்ளச் செய்தன. அவர்களுடைய கற்பனையில் ஜீசஸ் கோட்டை ஒரு ரத்தினக் கோட்டையாக இருந்தது.

கோழி முட்டையின் அளவில் உள்ள மாணிக்கக் கல்லின் சொந்தக்காரரான கேப்டன் பெரேரா மரணத்தை எதிர்பார்த்துக் கிடந்தார். லிஸ்பனில் இருக்கும் தன்னுடைய காதலிக்குப் பரிசாகத் தருவதற்காக வைத்திருந்த ரத்தினக் கல் அது. சிவனின் சிலையை அடித்து உடைத்து அந்த ரத்தினத்தைக் கையில் எடுத்தபோது, ஊரில் இருக்கும் தன்னுடைய காதலியின் மார்பகம்தான் அவருடைய ஞாபகத்தில் வந்தது. அந்த மார்பில் அந்த ரத்தினக் கல் பதித்த பதக்கம் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியை பெரேரா தினந்தோறும் மனதில் நினைத்துக் கொண்டிருந்தார். மரணம் நெருங்கிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் கேப்டன் பெரேரா, கேப்டன் இயாகோவை அருகில் அழைத்து அந்த மாணிக்கக் கல்லைக் கையில் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொன்னார்:

‘கேப்டன் இயாகோ, கவனமாகக் கேளுங்கள். நான் இறப்பதற்கு முன்னால் இந்த ரத்தினத்திற்கு ஒரு புதிய உரிமையாளரைக் கண்டுபிடிக்க நான் விரும்புகிற÷ன். அந்த புதிய உரிமையாளராக நீங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். காரணம் வேறொன்றுமில்லை. அங்குள்ள நம்முடைய நாட்டைச் சேர்ந்தவர்களின் கூட்டத்தில் நான் மிகவும் அதிகமாக வெறுக்கக்கூடிய மனிதர் நீங்கள்தான். ஆமாம்... நீங்கள்தான்... கேப்டன் இயாகோ.’

பெரேரா போய்த்தனமான ஒரு சிரிப்பைச் சிரித்தார்.

‘இது சாபம் பிடித்த ரத்தினம். இந்த ரத்தினம் உங்களிடம் இருக்கட்டும்.’

அந்த மாணிக்கக் கல்லைக் கையில் நீட்டிப் பிடித்துக்கொண்டே கேப்டன் பெரேரா இறந்தார்.

இயாகோ அந்த விலை மதிப்பற்ற ரத்தினத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, பேந்தப் பேந்த விழித்தான். கேப்டன் பெரேரா வார்த்தைகளைக் கேட்டதற்குப் பிறகு, அவருடைய பரிசை வாங்குவதற்கு இயாகோவிற்கு கோபமாகவும் அவமானமாகவும் இருந்தது. எனினும் அது ஒரு ரத்தினக் கல். விலை மதிக்க முடியாத ஒரு ரத்தினக்கல். அதை எப்படி நிராகரிக்க முடியும்? இயாகோ நெளிந்தவாறு நின்றான். சாபம் பிடித்த ரத்தினக் கல்! - ச்சீ... என்ன பொருத்தக் கேடு! பெரேராவிற்கு பைத்தியம் பிடித்திருந்தது. கோட்டையில் கிடந்து இறப்பவர்கள் அனைவருக்கும் இறுதியில் பைத்தியம் பிடிக்கத்தான் செய்கிறது. ரத்தினங்கள் உண்டாக்கும் பைத்தியம்.

பெரேராவின் மாணிக்கக் கல்லைக் கையில் எடுத்துக்கொண்டு இயாகோ தன்னுடைய அறையை நோக்கி நடந்தான். அவன் நடக்கவில்லை; ஊர்ந்தான். இயாகோ உணவு சாப்பிட்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. அவன் எலும்புக்கூடாக மாறிவிட்டிருந்தான். ஒரு துண்டு ரொட்டிக்காக அந்த மாணிக்கக் கல்லைத் தருவதற்கு அவன் தயராக இருந்தான்.

அங்கு, அந்த ஜீசஸ் கோட்டையில் பசியால் மனிதன் பிசாசாக மாறிய எவ்வளவோ சம்பவங்களை இயாகோ பார்த்திருக்கிறான்! தனக்கு அந்த மாணிக்கக் கல்லைப் பரிசாகத் தந்துவிட்டு மரணமடைந்த அந்த கேப்டன் பெரேரா அப்படிப்பட்ட ஒரு பிசாசாக இருந்தார். கோட்டையில் இருந்த உணவுப் பொருட்களில் இறுதியாக இருந்த தானியம் தீர்ந்து, சில நாட்கள் முழுப் பட்டினியாக இருந்தபோது, கேப்டன் பெரேரா கோட்டையில் இருந்த கறுப்பின மக்களுக்கு மத்தியிலிருந்து ஒரு பிஞ்சுக் குழந்தையைத் திருடி தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டார். பிறகு அவரை இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் வெளியே பார்த்தார்கள். அப்போது பெரேரா சற்று சதைப்பிடிப்புடன் இருந்தார்.

இயாகோ தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து விட்டு, தரையில் ஒரு மூலையில் விரித்திருந்த கம்பளியை இழுத்து, அங்கு குழிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழந்துணியால் ஆன மூட்டையை எடுத்தான். அவன் அந்த துணி மூட்டையை அவிழ்த்து அதற்குள் இருந்தவை அனைத்தையும் அந்த பச்சைக் கம்பளியில் கொட்டினான்.

நரியின் இருப்பிடத்தைப்போல இருந்த அறை திடீரென்று ஒரு நாகலோக படுக்கையறையாக மாறியது. பல நிறங்களிலும் அளவிலும் இருந்த ரத்தினங்கள், வைரங்கள், பத்ம ராகங்கள், மரகதங்கள், இந்திர நீலங்கள். இயாகோ அந்த ரததினக் குவியலையே வெறித்துப் பார்த்தான். அவற்றின் அற்புதமான பிரகாசததில் அவனுடைய விழிகள் மங்கலாயின. அவனுடைய தலைசுற்ற ஆரம்பித்தது. அந்த ரத்தின ஒளியில் புரிந்துகொள்ள முடியாத விஷ ஜூவாலைகள் இருக்கின்றன. அவனுடைய மூளையில் என்னவோ போராட்டங்கள் நடக்கின்றன. வலி இல்லை- ஏதோ ஒரு தலை சுற்றல்! அதைத் தொடர்ந்து ஒரு மயக்கம். மீண்டும் ஒரு உணர்வு ஒரு புதிய சிந்தனை மண்டலம் தோன்றுகிறது. அவன் அந்த ரத்தினக் குவியலையே மீண்டும் உற்றுப் பார்த்தான். அந்த ரத்தினக் கற்களின் கோலம் மாறியிருக்கிறது. அந்த முத்துக்கள் பிணத்தின் பற்களாக மாறிவிட்டிருக்கிறது. பத்மராகங்கள் ரத்தத் துளிகளாக ஆகி விட்டிருக்கின்றன. மொத்தத்தில் ஒரு கொலை நடக்கும் இடத்தின் அடையாளம். இயாகோவிற்கு சத்தம் போட்டுக் கத்த வேண்டும்போல இருந்தது. ஆனால் அதற்குப் பதிலாக அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். ஒரு பேய்த்தனமான அட்டகாசம்! அவன் பெரேராவின் மாணிக்கக் கல்லைப் பார்த்தான். - ‘ஹு... பாம்பின் கண். பாம்பின் கண்...’ என்று முணுமுணுத்தாவாறு அவன் அந்த ரத்தினத்தை மற்ற ரத்தினங்களின் கூட்டத்தில் சேர்த்து வைத்தான். அவை அனைத்தையும் எடுத்துப் போட்டுக் கட்டி தலையில் வைத்துக்கொண்டு மீண்டும் உரத்த குரலில் சிரித்தான்.

பைத்தியம் அவனுடைய மூளையில் அவ்வப்போது தோன்றிக் கொண்டிருந்தது. அந்தச் சமயங்களில் அவனுக்கு பலம் கூடி வந்தது.

அந்த ரத்தின மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு அவன் அறையிலிருந்து வெளியே வந்து, அந்தக் கோட்டை மூலையில் அங்குமிங்குமாகச் சுற்றித் திரிந்தான்.

ஒரு வேதனை கலந்த முனகல் சத்தம் இயாகோவின் காதுகளில் விழுந்தது. அது சற்று தூரத்தில் கடலில் இருந்து வருவதைப்போல முதலில் அவனுக்குத் தோன்றியது. அவன் அங்கேயே நின்றான். கோட்டையில் கறுப்பினப் பெண்கள் தங்கியிருந்த ஒரு மூலையில் இருந்துதான் அந்த முனகல் சத்தம் மிதந்து வருகிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். ஒரு குளிர்காற்று அவனுடைய முகத்தை வருடி விட்டுக் கடந்து சென்றது. அவன் மெதுவாக மூலையை நோக்கி நடந்தான்.

அங்கு மரத்திற்குக் கீழே ஒரு கறுப்பினப் பெண் கிடந்து நெளிந்து உரத்த குரலில் அழுது கொண்டிருந்தாள். இயாகோ அவளையே வெறித்துப் பார்த்தான். அவள் முழுவதுமாக ரத்தத்தில் மூழ்கியிருந்தாள். பிரசவ வேதனையால் உண்டான கூப்பாடுதான் அது என்பதை அவன் புரிந்து கொண்டான்.


அந்த வேதனையான சூழ்நிலையில் மரணத்தைப் போலத்தான் பிறப்பும் நடக்கிறது. இயாகோ என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரம் சென்றதும் அந்த அழுகைச் சத்தம் நின்றுவிட்டது. அந்த உடலில் அசைவே இல்லை. பிரசவமும் மரணமும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தன.

இயாகோ அந்த இறந்த குழந்தையையே வெறித்துப் பார்த்தான். அது ஒரு வெள்ளை நிறக் குழந்தை. நிலவு வெளிச்சத்தில் அந்த பச்சைக் குழந்தை யாருடைய இதயத்தையோ பிசைந்தெடுத்ததைப்போல கிடக்கிறது.

இயாகோவிற்கு தலைச் சுற்றல் உண்டானது. அவன் அந்த மரத்திற்குக் கீழே உட்கார்ந்தான். தான் பூமிக்கு அடியில் மொதுவாகத் தாழ்ந்து போவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் எழுந்து தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சற்று கூர்ந்து பார்த்தான். அது புதிதாக மண் இட்டு மூடிய ஒரு குழி. அங்கு யாரோ எதையோ மண்ணைத் தோண்டிப் புதைத்து அதிக நேரம் ஆகவில்லை.

இயாகோ அங்கு தோண்டி பார்த்தபோது, ஒரு பாத்திரம் கையில் பட்டது. அவன் அந்த பாத்திரத்தை வெளியே எடுத்துத் திறந்து பார்த்தான். நிலவு வெளிச்சம் பட்டப்போது, உள்ளேயிருந்து சில ஒளி மின்னல்கள் தோன்றின. அவன் அந்த பாத்திரத்தில் இருந்த பொருட்களை புழுதி மண்ணில் கொட்டினான். ஒரு குவியல் ரத்தினங்கள்!

இயாகோ அந்த ரத்தினங்ளையே கூர்ந்து பார்த்தான். அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே புதிய குவியலில் இருந்த ரத்தினங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய பழந்துணி மூட்டைக்கு மாற்றினான். மூட்டையைக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு அதற்குப் பிறகும் கோட்டையின் மூலையில் சுற்றி நடந்து கொண்டிருந்தான்.

கோட்டையில் இருந்த சிறிய சுடுகாட்டிற்கு முன்னால் இயாகோ நின்று கொண்டிருந்தான். அது ஒரு தற்காலிக சுடுகாடு. சமீப நாட்களில் மரணமடைந்தவர்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர்களில் பெர்னான்டஸும் செபாஸ்டியனும் இயாகோவின் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். ப்ளேக் நோய் பாதித்து பெர்னான்டஸ் மரணமடைந்தான்.

செபாஸ்டியனின் கையில் இருந்த ரத்தினங்கள் அந்த சுடுகாட்டில் எங்கோ இருக்கிறது. அவன் இறப்பதற்கு முன்னால் அதை வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாத விதத்தில் எங்கோ மறைத்து வைத்துவிட்டான். செபாஸ்டியனின் ரத்தினங்கள் மட்டுமல்ல - அந்தக் கோட்டையில் மரணமடைந்த பலருடைய ரத்தினங்களும் அந்த சுடுகாட்டில் எங்கெல்லாமோ மறைந்து கிடக்கின்றன. உலகத்தில் இருப்பவற்றிலேயே மிகுந்த செல்வச் செழிப்பு கொண்ட சுடுகாடு அதுதான் என்பதை இயாகோ நினைத்துப் பார்த்தான். ரத்தினங்களின் சுடுகாடு. அவனுக்கு அங்கிருந்து நகர மனமே வரவில்லை.

இயாகோ தன்னுடைய ரத்தின மூட்டையை கக்கத்தில் வைத்துக் கொண்டு அங்கு ஒரு இடத்தில் படுத்துக் கண் அயர்ந்தான்”.

கப்பல்கள் வருகின்றன

ஸ்ஸன் சொன்னான்: “இனி நாம் ஜீசஸ் கோட்டையில் இருந்து ஜோசப் கோட்டைக்குச் செல்வோம். அங்கு ஷேக் சம்சுதீன் கறாம்பூ பேகத்தை விசாரணை செய்கிறான்.

கேப்டன் இயாகோவின் பெயர் கறாம்பூவின் உதட்டில் இருந்து வந்தவுடன்,  ஷேக் முரட்டுத்தமான குரலில் தன்னை மறந்து கூறினான்: ‘இயாகோ... ஒரு வெள்ளைக்காரப் பன்றி!’

ஷேக் மிடுக்கான குரலில் கறாம்பூவிடம் கேட்டான்: ‘அப்படியென்றால் நீ இஸ்லாமின் பிறவி எதிரியான வெள்ளைக்காரன் பக்கம்... அப்படித்தானே?’

கறாம்பூ பதறிய குரலில் பதில் சொன்னாள்:

‘இஸ்லாம் சகோதரர்களுக்கு எதிராக இருக்க வேண்டுமென்பது என்னுடைய நோக்கம் இல்லை. என்னுடைய நண்பரை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். அது மட்டும்தான் என்னுடைய நோக்கம்.’

ஷேக் குரலை உயர்த்தினான்: ‘அது மட்டும் அல்ல உன்னுடைய நோக்கம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆயுதங்கள் தாங்கிய இருபது படை வீரர்களை முகமூடி அணிவித்து ஜீசஸ் கோட்டைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஜீசஸ் கோட்டையில் உயிருடன் எஞ்சியிருக்கும் வெள்ளைக்காரப் போர்வீரர்களை அந்த முகமூடிகளுக்குப் பின்னால் மறைத்துக் காப்பாற்றிக்கொண்டு போய்விட வேண்டும் என்பதுதானே உன்னுடைய நோக்கம்? ஸாஞ்சிபார் படைவீரர்களை ஜீசஸ் கோட்டையில் எங்களை எதிர்ப்பதற்கு விட்டுவிட்டுப் போனது மாதிரியும் இருக்கும். நல்ல தந்திரம்தான்!’

கறாம்பூ பதில் சொல்லவில்லை.

ஷேக் கோபத்துடன் சொன்னான்: ‘ம்ஹூம்... நான் உன்னிடம் ஒண்ணு கேட்கட்டுமா? ஸாஞ்சிபார் சுல்தானுக்குத் தெரிந்துதான் நீ இந்த துணிச்சலான காரியத்தில் இறங்கினாயா?’

கறாம்பூ தடுமாறிய குரலில் சொன்னாள்:

‘இல்லை. முற்றிலும் என்னுடைய விருப்பப்படிதான் நான் இந்த விஷயத்தில் இறங்கினேன். நான் ஸாஞ்சிபார் சுல்தானையும் ஸாஞ்சிபாரையும் உதறி வந்து விட்டேன்.’

ஷேக், அப்துல் ஹத்தீப்பின் முகத்தை அர்த்தத்துடன் பார்த்தான்:‘ஸாஞ்சிபாரையும் அரசி சொன்னதைக் கேட்டியா?’

அப்துல் ஹத்தீப் சொன்னான்: ‘காதல் வயப்பட்ட பெண்ணும் செல் கடித்த ஒட்டகமும் ஒரே மாதிரி என்று சொல்லலாம். அவர்களைத் தடுத்து நிறுத்த இந்த உலகத்தில் யாராலும் முடியாது.’

ஷேக் மீண்டும் கறாம்பூவை நோக்கித் திரும்பி இப்படிக் கேட்டான்: ‘நீ சொல்கிறாய்... உன்னுடைய நண்பனுக்காக நீ சுல்தானையும் ஸாஞ்சிபாரையும் உதறிவிட்டு வந்துவிட்டேன் என்று ஜீசஸ் கோட்டையில் உன்னுடைய நண்பன் இயாகோ உயிருடன் இருக்கிறான் என்று உறுதியாக உனக்கு தெரியுமா?’

‘இயாகோ உயிருடன் இருப்பார் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை’- கறாம்பூ முகத்தைக் குனிந்து கொண்டு சொன்னாள்.

ஷேக் அதற்குப் பிறகு ஸாஞ்சிபார் படைவீரர்கள் பக்கம் திரும்பி மிடுக்கான குரலில் கேட்டான்: ‘நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?’

ஸாஞ்சிபார் படைவீரர்களின் தலைவன் சொன்னான்:

‘நாங்கள் நிரபராதிகள். ஸாஞ்சிபார் சுல்தானின் உத்தரவுப்படி தான் நாங்கள் வருகிறோம் என்றுதான் கறாம்பூ பேகம் எங்களிடம் சொன்னாங்க.’

‘வஞ்சகி! வஞ்சகி!’- ஓமான் அரேபியர்கள் உரத்த குரலில் சொன்னார்கள்.

ஷேக், கறாம்பூ இருந்த பக்கம் திரும்பி இப்படிக் கேட்டான்: ‘கேப்டன் இயாகோ கோட்டையில் உயிருடன் இருக்கிறான் என்று நம்பும் அளவிற்கு உனக்கு ஏதாவது ஆதாரம் கிடைத்திருக்கிறதா?’

‘ம்... இயாகோ எழுதிய ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது’ - கறாம்பூ சொன்னாள்.

‘அதற்குப் பிறகு ஜீசஸ் கோட்டையில் என்னெவெல்லாம் நடந்து முடிந்திருக்கணும்! அங்கு ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டு சிலர் இறந்து விட்டார்கள். அந்த கூட்டத்தில் இயாகோவின் பெயரும் இல்லை என்று எப்படித் தெரியும்? உன்னால் இயாகோவைப் பார்க்க முடியவில்லை யென்றால் .... இயாகோ இறந்து விட்டிருந்தால்...? உன் நிலைமை என்னவாக இருக்கும்?’

‘நான் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. இயாகோ உயிருடன் இருப்பார் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.’


‘நம்பிக்கை உன்னக் காப்பாற்றட்டும்! அது வேறு விஷயம் வெள்ளைக்காரர்களுக்காக ஒற்றர் வேலை செய்யக்கூடிய ஒரு ஆளாகவே உன்னை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.’

ஷேக், அப்துல் கத்தீப்பை அருகில் அழைத்து உட்காரச் செய்தான். இருவருக்கும் இடையில் சிறிது நேரம் தனிப்பட்ட முறையில் பேச்சு நடந்தது. அது முடிந்தவுடன், ஷேக் கறாம்பூவை நோக்கிச் சொன்னான்:

‘ஸாஞ்சிபார் சுல்தானின் பேகமாகிய கறாம்பூ, கவனமாகக் கேள். போர் சட்டப்படி நீ மரண தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான். அந்த தண்டனையிலிருந்து உன்னை விலக்குவதற்கு வழியில்லை.’

ஷேக், ஸாஞ்சிபார் படைவீரர்கள் பக்கம் திரும்பினான். ‘ஸாஞ்சிபார் படைவீரர்களான உங்கள் எல்லோருக்கும் நான் மன்னிப்பு அளிக்கிறேன். நீங்கள் நிரபராதிகள். உங்கள் அனைவரையும் நான் என்னுடைய படையில் எடுத்துக் கொள்கிறேன்.’

ஷேக் கம்பீரத் தன்மையை விட்டு, புன்னகை புரிந்தவாறு கறாம்பூவின் முகத்தைப் பார்த்துச் சொன்னான்: ‘கறாம்பூ பேகம், நான் ஓமான் அரேபியர்களின் படைத்தலைவனான ஷேக் சம்சுதீன் பின் முராத், உங்களுடைய தைரியத்தைப் பாராட்டுகிறேன். உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். உங்களுடைய காதல் தியாகத்தை வரவேற்கிறேன். அந்த விஷயங்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன். நீங்கள் இறப்பதற்கு முன்னால் ஒரு இரவு இயாகோவுடன் இருப்பதற்கு அனுமதி தருகிறேன்’

ஷேக் கூறிய தீர்ப்பைக் கேட்டு கறாம்பூ சிறிது நேரம் திகைப்படைந்து நின்றுவிட்டாள். பிறகு அவள் கேட்டாள்:

‘நீங்கள் சொன்னதற்கான அர்த்தம் புதியவில்லை. ஜீசஸ் கோட்டைக்குப் போக நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா? இயாகோவை நான் எப்படி சந்திப்பேன்?’

ஷேக் சொன்னான்: ‘நீ எப்படி இயாகோவைச் சந்திக்க நினைத்தாயோ அப்படித்தான் செய்தியுடன் ஒரு தூதுவனை இயாகோவிடம் அனுப்பு. கிலிந்தினி கடற்கரையில் ஆட்கள் யாரும் இல்லாத ஒரு கட்டிடம் இருக்கிறது. அங்கு வரச்சொல்லி இயாகோவிற்கு ஒரு செய்தி அனுப்பு.’

சிறிது நேரத்திற்கு மவுனம்.

கறாம்பூ பரிதாபமான குரலில் கேட்டாள்:

‘நீங்கள் ஏமாற்றி விடுவீர்களா? நீங்கள் இயாகோவக் கொன்றுவிடுவீர்களா?’

ஷேக் சொன்னான்: ‘அந்தச் சேந்தேகமே வேண்டாம். அழைத்து வர வைப்பவர்களுக்கும் அபயம் தேடி வந்தவர்களுக்கும் அரேபியர்கள் நம்பிக்கை துரோகம் செய்வது இல்லை. அது மட்டுமல்ல: (ஷேக் அர்த்தம் நிறைந்த புன்சிரிப்புடன் அப்துல் கத்தீப்பின் முகத்தைப் பார்த்தவாறு) உனக்கு இயாகோமீது இருக்கும் காதலைப் போலவே, பலமான காதல் இயாகோவிற்கும் உன்மீது இருக்கிறது என்பது தெரியும் பட்சம், அந்தச் சோதனையில் இயாகோ வெற்றி பெற்றால்- உன்னுடைய உயிர் திரும்பத் தரப்படும் என்பதற்கும் நான் வாக்களிக்கிறேன்.’

கறாம்பூ சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தாள். ஷேக்கின் வார்த்தைகளை அவள் பல கோணங்களிலும் ஆராய்ந்து பார்த்தாள். ஷேக்கின் நோக்கம் என்னவாக இருக்கும்? அவளுக்கு அது புரியவே இல்லை. இறுதியில் அவள் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். வருவது வரட்டும். மரணத்தில் இருந்து விடுதலை கிடைத்த ஒவ்வொரு நாளும் விலைமதிப்பு உள்ளதுதான். இறப்பதற்கு முன்பு இயாகோவை ஒருமுறை பார்க்க முடிந்தால், அதுதான் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கலாம்.

ஷேக் கறாம்பூவிடம் சொன்னார் : ‘எழுது இயாகோவிற்கு அனுப்ப வேண்டிய செய்தியை...’

அப்துல் கத்தீப் ஒரு பேனா தூவலையும் தாளையும் கறாம்பூவின் முன்னால் வைத்தான்.

ஷேக் அனுப்ப வேண்டிய செய்திக்கான வார்த்தைகளைச் சொன்னான்:

‘உங்களுடைய கடிதம் கிடைத்தது. அதன்படி நானும் இருபது ஸாஞ்சிபார் படைவீரர்களும் கப்பலில் இதோ கிலிந்தினியை அடைந்திருக்கிறோம். இந்த தூதுவருடன் உடனடியாக முகமூடி அணிந்து புறப்படுங்கள். நாங்கள் கோட்டைக்கு வருவது ஆபத்தான விஷயம். ஓமான் அரேபியர்கள் கண்டுபிடித்து விடலாம். நீங்கள் முதலில் காப்பாற்றப்பட்டு விட்டால், பிறகு வெள்ளைக்காரர்கள் ஒவ்வொருவரையும் முகமூடிக்குள் காப்பாற்றி கொண்டு வந்து விடலாம். நாம் இன்று இரவே மொஸாம்பிக்கிற்குப் புறப்பட்டு விடுவோம்.

கிலிந்தினி கடற்கரையில் இருக்கும் ஆள் அரவமற்ற ஒரு கட்டடித்தில் நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்.

உங்களுடைய சொந்தம்’

கறாம்பூ.’

தகவலை எழுதி முடித்தவுடன், ஷேக் கறாம்பூவிடம் கேட்டான்: ‘தகவலுடன் சேரத்துக் கொடுத்தனுப்ப அடையாளம் ஏதாவது இருக்கிறதா?’

கறாம்பூ, இயாகோ முன்பு பரிசாகத் தந்த ரத்தின மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தாள்.

ஷேக் தன்னுடைய நம்பிக்கைக்குரிய படைவீரர்களில் ஒருவனை அழைத்து, சில தனிப்பட்ட கட்டளைகளைச் சொன்னான். பிறகு கறாம்பூ எழுதிய கடிதத்தையும் அடையாள மோதிரத்தையும் ஜீசஸ் கோட்டையில் இருக்கும் கேப்டன் இயாகோவிற்குக் கொண்டு போய் கொடுக்கும்படி அவனை அங்கு அனுப்பி வைத்தான்.

தூதுவன் ஜீசஸ் கோட்டைக்குப் புறப்பட்டுச் சென்றவுடன், ஷேக் தன்னுடைய படையைச் சேர்ந்த இருபது வீரர்களையும் அப்துல் கத்தீப்பையும் கறாம்பூவையும் அழைத்துக்கொண்டு கிலிந்தினிக்கு நடந்தான். அங்கு ஸாஞ்சிபாரில் இருந்து கறாம்பூவும் மற்றவர்களும் வந்த கப்பல் இருந்தது. ஷேக் தன்னுடைய படை வீரர்களை அந்தக் கப்பலில் ஏற்றினான். கப்பல் புறப்படுவதற்கான தயார் நிலையில் நிறுத்தும்படி அவர்களுக்குக் கட்டளை  பிறப்பித்தான். தொடர்ந்து       அப்துல் கத்தீப்பையும், கறாம்பூவையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு பழைய வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த ஒரு அறையில் கறாம்பூவைக் கொண்டுபோய் உட்காரச் செய்துவிட்டு ஷேக் அவளிடம் சொன்னான்:

‘நானும் அப்துல் கத்தீப்பும் பக்கத்து அறையில் இருப்போம். இந்த வீட்டில் வேறு ஒரு மனிதப் பிறவி இருக்கிறது என்பதற்கான அறிகுறியைக்கூட நீ இயாகோவிடம் பேசும்போது கூறிவிடக் கூடாது. உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு அங்கத்தின் அசைவுகளையும் நாங்கள் பக்கத்து அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். சந்தேகப்படும் விதத்தில் ஏதாவது நீ சொல்லவோ, நடக்கவோ செய்தால் உன்னுடைய உயிரும், உன் காதலனுடைய உயிரும் ஆபத்தில் முடிந்துவிடும் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.’

கறாம்பூ பணிவுடன் தலை குனிந்தாள்.

அந்த ஆள் அரவமற்ற வீட்டின் - அது அடிமைக் கூட்டங்களை கட்டி வைப்பதற்கு பயன்படும் ஒரு பிரம்மாண்ட கட்டிடம் - தெற்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய அறையில், சுவரின் துவாரத்தின் வழியாக ஆர்வத்துடன் வெளியே பார்த்துக்கொண்டு ஷேக் சம்சுதீனும் அப்துல் கத்தீப்பும் அமர்ந்திருக்கிறார்கள். நேரம் நள்ளிரவு தாண்டியிருக்கிறது. நிலவு வெளிச்சத்தில் கிலிந்தினி கடற்கரை பொன் நிற மண்ணால் மெழுகிய முற்றத்தைப் போல பிரகாசமாக இருக்கிறது. அவ்வப்போது அலைகளின் தெளிவான சத்தம் கேட்கிறது. ஓர் அரக்கன் படுத்திருப்பதைப் போல பனங்குலைகளின் நிழல்கள் பரவிக் கிடக்கின்றன.


சிறிது நேரம் கடந்த பிறகு, இரண்டு உருவங்கள் பனைகளின் நிழல்களைத் தாண்டி அந்த வீட்டிற்கு நேராக நடந்து வருவதைப் பார்க்க முடிந்தது. பின்னால் வந்து கொண்டிருந்தது ஒரு பர்தா அணிந்த உருவம். எறும்பு நகர்வதைப்போல அது வந்து கொண்டிருந்தது.

‘நம்முடைய தந்திரம் பலித்துவிட்டது!’ - ஷேக் அப்துல் கத்தீப்பின் காதில் முணுமுணுத்தான்.

ஆமாம்... இரண்டு உருவங்களும் வீட்டின் வாசலில் ஏறி நேராக கறாம்பூ இருக்கும் அறையை நோக்கி நடந்தன. முகமூடி அணிந்த உருவத்தை அறையில் இருக்கச் செய்துவிட்டு, உடன் வந்த தூதுவன் வெளியே சென்றான்.

அந்த உருவம் தன்னுடைய முகமூடியை நீக்கியது. துணியில் மூடப்பட்டிருந்த ஒரு எலும்புக்கூடு தோன்றியது!

‘இயாகோ... இயாகோ... என் உயிர் நாயகனான இயாகோ...’- கறாம்பூ அந்த எலும்புக் கூட்டைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.

ஷேக், அப்துல் கத்தீப் ஆகியோரின் கவனம் அந்தக் காதல் வயப்பட்ட செயல்களில் இல்லை. அந்த எலும்புக்கூட்டின் கையில் இருந்த துணி மூட்டையில்தான் அவர்களுடைய பார்வை பதிந்திருந்தது.

கறாம்பூவின் அணைப்பு கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் அந்த எலும்புக்கூடு அந்தத் துணி மூட்டையைக் கையில் இறுகப் பிடித்திருந்தது.

ஷேக், அப்துல் கத்தீப் ஆகியோரின் முகங்கள் மலர்ந்தன. ‘இந்தியாவைச் சேர்ந்த ரத்தினம் அந்த பழந்துணி மூட்டையில் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. அது... இதோ... நம்மைத் தேடி வந்திருக்கு’ - கத்தீப் புன்னகைத்தான்.

ஷேக் சொன்னான்:  ‘இப்படி ஒரு வழியைச் செயல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்த ரத்தினங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.’

திடீரென்று கடற்கரையில் இருந்து சில சத்தங்களும் கூக்குரல்களும் கேட்டன. ஷேக்கும் அப்துல் கத்தீப்பும் சற்று அதிர்ச்சியடைந்தார்கள். அந்த ஆரவாரம் அதிகமாகி... அதிகமாகிக் கொண்டே வந்தது. அவர்கள் வேகமாக எழுந்து அறையின் மேற்குப்பக்க சுவரில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார்கள். கடலில் நான்கைந்து கப்பல்கள். படைகள் கரையில் குதித்து வருகிறார்கள். மொஸாம்பிக்கில் இருந்து வரும் வெள்ளைக்காரர்களாக இருக்குமோ? இல்லை. அரேபியர்கள். ஸாஞ்சிபாரைச் சேர்ந்த அரேபியர்கள். ஸாஞ்சிபார் சுல்தானின் கப்பல்கள்.”

கடலில் போன ரத்தினங்கள்

“கரைக்கு வந்து சேர்ந்த கப்பல்கள் ஸாஞ்சிபார் சுல்தானின் கப்பல்கள்தான் என்பதை ஷேக்கால் நம்பவே முடியவில்லை. கடற்கரையில் என்னவோ ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. சற்று பதைபதைப்புடனும் பயத்துடனும் ஷேக் கடற்கரையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அங்கு பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. சத்தமும் அழைப்புகளும் கேட்டுக் கொண்டிருந்தன. போர்தான். யார் யாருடன் போர் செய்கிறார்கள் என்பது புரியவில்லை. வெள்ளைக்காரர்ளுடைய படைக் கப்பல்களும் கூட்டத்தில் இருக்குமோ? சொல்ல முடியாது.

அடுத்த அறையிலிருந்து அந்த எலும்புக்கூடு செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து அமைதியற்ற மனிதனாகி விட்டான் ஷேக். அந்தக் குலுங்கல் சிரிப்பின் அர்த்தம் என்ன? ரத்தின மூட்டையைக் கக்கத்தில் வைத்து இறுகப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்த எலும்புக் கூட்டின் அருகில் இருந்து போவதற்கு ஷேக்கிற்கு மனமே வரவில்லை. கடந்த சில மாதங்களாக ஜீசஸ் கோட்டையில் இருக்கும் ரத்தினங்களைப் பற்றிய சிந்தனைகள் ஷேக்கின் மனதில் ஆழமான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஜீசஸ் கோட்டையை ஆக்கிரமித்து, அங்குள்ள வெள்ளைக்காரர்கள் அனைவரையும் பரலோகத்திற்கு அனுப்பியருக்க முடியும். அந்த ரத்தினங்கள் மறைந்து போய் விடுமே என்ற சிந்தனைதான் ஷேக்கை அந்தக் கூட்டக் கொலையிலிருந்து பின்வாங்க வைத்தது. இப்போது அந்த ரத்தினங்கள் எல்லாம் இதோ வெளியே வந்திருக்கின்றன. கையை நீட்டினால் கிடைக்கக்கூடிய நிலையில் அவை இருக்கின்றன. கண் தவறினால் அவை மீண்டும் மறைந்து விடும். மின்னல் வேகத்தில் இந்த சிந்தனைகள் அனைத்தும் ஷேக்கின் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.

கிலிந்தினி கடற்கரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் என்ன என்பதைப் பார்த்து வருவதற்காக ஷேக் கத்தீப்பை அனுப்பினான்.

அடுத்த அறையில் கறாம்பூவும் எலும்புக்கூடும் முகத்தோடு முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் கோலாகலங்கள் அவர்களுடைய - அவர்களின் கவனத்தில் படவே இல்லை என்றே தோன்றுகிறது.

ஷேக்கின் பார்வைகள் பதிந்து நின்றிந்தது எலும்புக் கூட்டின் கக்கத்தில் இருக்கும் பழந்துணி மூட்டையில்தான். அந்த மூட்டையில் இருப்பவற்றை வைத்து சாம்ராஜ்ஜியங்களை விலைக்கு வாங்க முடியும். இந்து ஆண், பெண் கடவுள்களின் கண்களில் இருந்தும், கழுத்தில் இருந்தும், காதில் இருந்தும், மார்பில் இருந்தும் கொள்ளையடித்த அற்புத ரத்தினங்கள்... இந்தியாவில் இருக்கும் ரத்தினங்களைப் பற்றி ஷேக் பல நேரங்களில் கனவு கண்டிருக்கிறான். அங்கே போய்வரக்கூடிய அதிர்ஷ்டம் ஷேக்கிற்குக் கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவின் ரத்தினங்கள்  இதோ ஷேக்கையே தேடி வந்திருக்கிக்கின்றன. அது ஒரு பெரிய அதிர்ஷ்டமல்லவா?”

அந்த மூட்டைக்குள் இருப்பவற்றைப் பார்க்க ஷேக்கின் கண்கள் ஏங்கிக் கொண்டிருந்தன. அந்தக் காதலியையும் காதலனையும் ஷேக் பொறுமையை இழந்து கோபத்துடன் பார்த்தான். அவர்கள் பிரிவது மாதிரி தெரியவில்லை.

ஷேக் மனதிற்குள் கூறிக் கொண்டான்: ‘பாவம் கறாம்பூ... அவள் நினைத்திருக்கலாம் - அந்த வெள்ளைக்காரனுக்காக அவள் செய்த தியாகத்தைவிட மிக்பபெரிய தியாகத்தை அவளுக்காக அவன் செய்யத் தயாராக இருப்பான் என்று. நாம் பார்ப்போம்.’

அந்தக் காதல் சோதனைக்காக தான் தீட்டிய தந்திரங்களை நினைத்து ஷேக் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டான். ஒரு குறிப்பு தந்தால், உடனடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து கறாம்பூவை பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போவதற்கு தன்னுடைய ஒரு கூட்டம் படை வீரர்களை ஷேக் ஏற்பாடு செய்து வைத்திருந்தான். (ஜோசப் கோட்டையில் இருந்து புறப்பட்டு அந்தப் படை வீரர்கள் வீட்டில் இருந்து அழைக்கும் தூரத்தில் காத்து நின்றிருக்க வேண்டும்). அரேபியர்கள் பிடிக்கும்போது கறாம்பூ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சத்தம் போடாமல் இருக்க மாட்டாள். தன்னுடைய கண்களுக்கு முன்னால் நடக்கக்கூடிய இந்த அவமானச் செயலை - ஆக்கிரமிப்பை - இயாகோ எப்படிப் பார்க்கிறான் என்பதைப் பார்க்கலாமே! அது மட்டுமல்ல; அந்தச் சூழ்நிலையில் ‘கப்பலை மொஸாம்பிக்கிற்கு விடுவதற்காக ஏறிக் கொள். எதிரிகள் கப்பலைப் பிடிப்பதற்கு முன்னால் ஏறிக்கொள்’ என்று அழைத்துக் கூறுவதற்கு ஸாஞ்சிபார் கப்பலில் ஷேக் நிறுத்தியிருக்கும் இருபது ஓமான் அரேபியர்களின் தலைவனான நூரி யாக்குப்பை ஏற்கெனவே தயார் நிலையில் வைத்தாகிவிட்டது. இயாகோ இந்தச் சூழ்நிலையில் என்ன தீர்மானிப்பான்? தன்னுடைய காதலி இல்லாமல் தான் கப்பலில் ஏற முடியாது என்று உறுதியான முடிவு எடுத்து அங்கேயே நின்று கொண்டிருப்பானோ?


இல்லாவிட்டால்... அந்த ரத்தின மூட்டையைக் கையில் இறுகப் பிடித்துக்கொண்டு மொஸாம்பிக்கிற்குத் தப்பித்துப் போய்விடும் எண்ணத்துடன் கப்பலுக்குள் குதிப்பானா? இயாகோ போய் ஏறும் ஸாஞ்சிபார் கப்பலின் மாலுமிகள் ஓமான் அரேபியர்கள் என்ற உண்மை அந்த பாவத்திற்குத் தெரியுமா? மொஸாம்பிக்கிற்குப் போவதற்கு பதிலாக கப்பல் ஜோசப் கோட்டையை நோக்கித் திரும்பும்போது தான் தமாஷ்! இயாகோவின் காதலுக்கான விலை கறாம்பூவிற்கு அப்போது புரிய வரும். கறாம்பூவும் இயாகோவும் ஒருவரையொருவர் ஜோசப் கோட்டையில் மீண்டும் சந்திக்கும் காட்சியை நினைத்து ஷேக் உற்சாகத்துடன் தான் மட்டும் சிரித்துக் கொண்டான்.

இயாகோவின் எலும்புக்கூடு போன்ற தோற்றத்தைக் கண்டவுடன் ஷேக் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அந்த எலும்புக்கூட்டைப் பார்த்து கறாம்பூ காதலை மறந்து பயந்து ஓடி விடுவாள் என்று ஷேக் நினைத்தான். ஆனால் நடந்ததோ நேர்மாறானது. அந்த எலும்புக் கூட்டை அவள் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டாள். கறாம்பூ தன்னுடைய காதலியின் வலிமையைத் தெளிவாகக் காட்டிவிட்டாள்.

அடுத்த அறையில் இருந்த எலும்புக்கூட்டின் அட்டகாசச் சிரிப்பு ஷேக்கை விழிக்கச் செய்தது. அந்தச் சிரிப்பிற்கு என்ன அர்த்தம்?

திடீரென்று அப்துல் கத்தீப் மூச்சை அடக்கிப் பிடித்துக்கொண்டு ஷேக்கிற்கு பின்னால் வந்து தயங்கியவாறு நின்று, என்னவோ கூற முயன்றான். ஆனால், பதைபதைப்பு காரணமாக வார்த்தைகள் வெளியே வரவில்லை.

‘அங்கே என்ன நடக்குது?’ ஷேக் கத்தீப்பின் தோள்களைப் பிடித்து குலுக்கினான்.

‘போர்... போர்...’ - கத்தீப் தயங்கித் தயங்கி சொன்னான்: ‘ஸாஞ்சிபார் அரேபியர்களுக்கும் ஓமான் அரேபியர்களுக்கும் இடையில் பயங்கரமான போர்... கறாம்பூ ஏறி வந்த ஸாஞ்சிபார் கப்பலில் நீங்கள் நிறுத்தியிருந்த நூரி யாக்கூப்பையும் இருபது படை வீரர்களையும் அவர்கள் கொன்று விட்டார்கள். ஸாஞ்சிபார் சுல்தானின் பத்து கப்பல்களும் படை வீரர்களும் சுல்தானின் தலைமையில் ஜோசப் கோட்டையை நோக்கிச் செல்வதற்காகத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.’

ஷேக்கிற்கு அந்த செய்தியை நம்பவே முடியவில்லை. ஸாஞ்சிபார் அரேபியர்களுக்கும் ஓமான் அரேபியர்களுக்கும் இடையில் போர் செய்வதற்கு எந்வொரு காரணமும் இல்லை.

ஷேக், அடுத்த அறையில் இயாகோவும் கறாம்பூவும் இருக்கிறார்கள் என்ற விஷயத்தை நினைக்காமல் உரத்த குரலில் கேட்டான்: ‘அப்துல் கத்தீப், இது உண்மையா? இல்லாவிட்டால் உனக்கு பைத்தியம் பிடித்து சொல்கிறாயா?’

‘உண்மைதான். நான் என்னுடைய கண்களால் பார்த்தேன். நீங்கள் சொன்னபடி ஜோசப் கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்த இரண்டாவது கூட்டத்தைச் சேர்ந்த அரேபிய போர் வீரர்களுடன் ஸாஞ்சிபார் படைவீரர்கள் இப்போது போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது முடிந்தவுடன் அவர்கள்  ஜோசப்          கோட்டையை நோக்கிச் செல்வார்கள். சீக்கிரமா ஜோசப்              கோட்டைக்குப் போங்க.’

ஷேக் மார்பில் கையை வைத்துக்கொண்டு சொன்னான்:

‘அல்லாஹ்... அங்கு தலைவன் இல்லாத படை. சொல்லு கத்தீப்… ஸாஞ்சிபார் சுல்தானின் இந்தப் படையெடுப்பிற்கு காரணம் என்ன?’

கத்தீப் நெற்றியில் இருந்த வியார்வையைத் துடைத்துக் கொண்டு சொன்னான்: ‘ஓ... அதைச் சொல்ல மறந்து விட்டேன். அதற்குக் காரணம் அதோ... அங்கு இருக்கும் கறாம்பூதான்.’

‘கறாம்பூவா?’

‘ஆமாம்... கறாம்பூதான். ஓமான் அரேபியர்கள் கறாம்பூ பேகத்தையும் கப்பலையும் கடத்திக்கொண்டு வந்து விட்டார்கள் என்று சுல்தான் புரிந்து கொண்டிருக்கிறார். கறாம்பூ பேகம் ஜோசப் கோட்டையில் இருக்கும் நம்பிக்கையுடன் சுல்தான் அங்கே போகிறார்.’

ஷேக் தன்னைத்தானே நெற்றியில் அடித்துக்கொண்டு சொன்னான்: ‘எல்லாமே பிரச்சினை!’

அரேபியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் இப்படிப் போர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தால் ஜீசஸ் கோட்டையில் இருக்கும் வெள்ளைக்காரர்கள் தப்பிப்பதற்கு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் என்று கத்தீப் சொன்னதற்கு ஷேக் கோபத்துடன் கேட்டான்: ‘அரேபியர்கள் இரண்டு பக்கங்களிலும் சாவதைப் பற்றி எதுவும் சொல்றதுக்கு இல்லையா? இதை நிறுத்தியே ஆகணும்.’

‘அப்படியென்றால் வாங்க’ - கத்தீப் ஷேக்கின் கையைப் பிடித்தான். ‘இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நிறைய அரேபியர்கள் இறந்துவிட்டிருப்பார்கள். கறாம்பூ பேகத்தை உடனடியாக சுல்தானுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரலாம்.’

‘அவள் அதற்கு சம்மதிப்பாளா? சுல்தானையும் ஸாஞ்சிபாரையும் உதறிவிட்டு வந்தவளாச்சே அவள்?’

‘அது சரிதான். ஆனால் சுல்தானுக்கு அவள்மீது ஒரு சந்தேகமும் இல்லை. ஓமான் அரேபயிர்கள் அவளைக் கடத்திக்கொண்டு வந்துவிட்டார்கள் என்று சுல்தான் நினைக்கிறார்.’

‘கறாம்பூ இந்த எலும்புக்கூட்டை விடுறது மாதிரி தெரியவில்லை.’

‘அந்த வெள்ளைக்காரனை உடனடியாகக் கொல்லுங்க. அதுதான் தப்பிப்பதற்கு ஒரே வழி’ - கத்தீப் சொன்னான்.

‘அதை நான் செய்ய மாட்டேன். கூப்பிட்டு வரவழைத்த அந்த வெள்ளைக்காரனைக் கொல்லமாட்டேன்னு நான் வாக்குறுதி கொடுத்திருக்கேன்.’

‘அப்படியென்றால் வேறொரு காரியம் செய்யலாம்’ - கத்தீப் சொன்னான்: ‘கறாம்பூவை வலுக்கட்டாயமாகப் பிடித்து சுல்தானுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்துங்க.’

‘அப்போது இந்த எலும்புக்கூட்டை என்ன செய்வது?’

‘அவனுடைய கையில் இருக்கும் மூட்டையைப் பறிச்சிட்டு, அவனைத் திரும்பவும் ஜீசஸ் கோட்டைக்கே அனுப்பிடுங்க.’

அப்துல் கத்தீப் அதைக் கூறி முடிக்கவில்லை. அதற்குள் ஆயுதங்கள் ஏந்திய ஒரு கூட்டம் ஸாஞ்சிபார் அரேபியர்கள் ஆரவாரம் செய்தவாறு அந்த வீட்டை வளைத்தார்கள்.

ஷேக்கும் கத்தீப்பும் மூச்சை அடக்கி பிடித்துக்கொண்டு அங்கேயே பதுங்கிக் கிடந்தார்கள்.

ஸாஞ்சிபார் அரேபியர்கள் நேராக கறாம்பூ இருக்கும் நடுவில் உள்ள அறைக்குள் நுழைந்தார்கள். ஸாஞ்சிபார் சுல்தானும் அக்கூட்டத்தில் இருந்தார்.

மயக்கமடைந்து விழுந்து கிடக்கும் கறாம்பூவை சுல்தான் பார்த்தார்.

அந்த எலும்புக்கூடு முகமூடி அணிந்து எங்கோ மறைந்து விட்டிருந்தது.

இரவின் கடைசி யாமம்.

சுல்தானும் ஸாஞ்சிபார் அரேபியர்களும் வெற்றி முரசு அடித்துக் கொண்டு பத்து கப்பல்களில் கலிந்தினியில் இருந்து ஸாஞ்சிபாருக்குத் திரும்புகிறார்கள். வெள்ளி நிலவொளியில் கடல்நீர் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பாய் விரிக்கப்பட்ட கப்பல்களைப் பார்க்கும்போது, புலர்காலைப் பொழுதில் இதழ்களை விரிக்க ஆரம்பித்திருக்கும் வெள்ளைத் தாமரை மலர்களைப்போல இருந்தன. அவை கூட்டத்துடன் தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன.

கறாம்பூ சுய உணர்வற்ற நிலையில் சுல்தானின் மடியில் படுத்திருக்கிறாள் - தொடர்ந்து நடனமாடிக் களைப்படைந்து விழுந்துவிட்டதைப் போல ஓமான் அரேபியர்களின் கோழைத்தனத்தைப் பற்றி ஒவ்வொரு கிண்டல்களையும் சொல்லிக்கொண்டு ஸாஞ்சிபார் படைவீரர்கள் கேலியாக சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் சேர்ந்து பாடல்களைப் பாடுகின்றனர். அரேபியர்களின் குழு பாட்டு உண்டாக்கிய அலைகள் கடல் அலைகளில் கலந்து கரைந்து கொண்டிருக்கின்றன.


மிகப்பெரிய சுறா மீன்கள் கடலில் கூட்டமாகத் தலைக்குப்புற விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.

முகமூடி அணிந்த ஒரு எலும்புக்கூடு கழுத்தில் ஒரு பழந்துணி மூட்டையைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சுல்தானின் கப்பல்களைப் பின் தொடர்ந்தவாறு கடலில் நீந்திக் கொண்ருந்தது. அந்த எலும்புக்கூடு அவ்வப்போது உரத்த குரலில் சத்தம் போடுவதும், இடையில் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதுமாக இருந்தது. அரேபியர்களின் பாடல் கொண்டாட்டத்தில் அந்தச் சத்தம் காணாமல் போனது.

கரையில் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இரண்டு உருவங்கள் நின்றுகொண்டிருக்கின்றன.

ஷேக்கும் கத்தீப்பும்”

கதை சொல்லியின் கதை

ந்த நிலையில் நிலவு வெளிச்சத்தில் ரத்தினத்தைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்த இரண்டு உருவங்களைக் கடற்கரையில் விட்டதுடன், ஹஸ்ஸன் கதையை முடித்துக் கொண்டான்.

நான் ஜீசஸ் கோட்டையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிலவு ஒளியில் அந்தக் கோட்டை ஒரு கெட்ட கனவு உலகத்தில் கறுத்து முகமூடி அணிந்து நின்று கொண்டிருக்கும் ஒரு எலும்புக்கூட்டைப்போலத் தோன்றியது.

ஹஸ்ஸன் என்னுடைய தோளை மெதுவாகத் தொட்டுக் குலுக்கி, பலவந்தமாக என்னுடைய கவனத்தைத் திருப்பி ஒரு மெல்லிய குரலில் இப்படிச் சொன்னான்:

“இயாகோவின் ஆவி- ரத்தின மூட்டையை கக்கத்தில் வைத்துக் கொண்டு நடக்கும், கறுத்த முகமூடி அணிந்த, எலும்புக்கூடு - சில இரவு வேளைகளில் கடலில் இருந்து வந்து இந்தக் கோட்டை இருக்கும் பகுதியில் சுற்றித் திரிவது உண்டு. நீங்கள் தனியாக இங்கே ஏதாவதொரு இடத்தில் காற்று வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது கறுத்த முகமூடி அணிந்த ஒரு உருவம் எங்கிருந்தோ உங்களுக்கு நேராக வந்து கொண்டிருக்கிறது. சுற்றிலும் கறாம்பூவின் வாசனை பரவி இருக்கிறது. காதலைத் தேடி நடக்கும் ஒரு மொம்பாஸா காதலியைப் பார்த்த இனிய எதிர்பார்ப்புகள் உங்களுடைய இதயத்தில் உண்டாகும். அந்த முகமூடி மெதுவாக நகர்ந்து வந்து உங்களுக்கு முன்னால் அமைதியாக நிற்கிறது.   பிறகு அது மெல்ல தன்னுடைய முகமூடியை அகற்றுகிறது. ஒரு எலும்புக்கூடு முன்னால் நிற்கிறது.   தன்னுடைய எலும்புக்கூட்டைக் காட்டி, அந்த ரத்தினக் கற்கள் கொண்ட பழந்துணி மூட்டையை உங்களுடைய முகத்திற்கு அருகில் வைத்து ஆட்டி, குலுங்கிச் சிரித்துவிட்டு, அது மறைந்து விடுகிறது.”

ஹஸ்ஸன் அவ்வளவையும் சொன்னபோது, என் உடலில் இருந்த நரம்புகள் அனைத்தையும் கூர்மை இல்லாத ஒரு கத்தியால் யாரோ அறுப்பதைப்போல எனக்குத் தோன்றியது. என்னுடைய உணர்ச்சிகளைச் சோதித்துப் பார்ப்பதைப்போல ஹஸ்ஸன் தன்னுடைய ஒற்றைக் கண்ணை ஒரு தேடும் விளக்கைப்போல என் முகத்தில் பிரகாசிக்கச் செய்தான். அப்போது சற்று தூரத்தில் மரங்களின் மறைவில் ஒரு நிழல் நாங்கள் அமர்ந்திருந்த கல் திண்ணையை நோக்கி வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அது மேலும் நெருங்கி வந்தது. ஒரு கறுத்த முகமூடி!

ஹஸ்ஸன் அசையாமல் தன்னுடைய வசீகரப் பார்வையை என் முகத்தில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். அந்த முகமூடி மேலும் நெருங்கி வந்தது. எங்களுக்கு முன்னால் அது வந்தது.

‘அதோ!’ - என்று சுட்டிக் காட்டுவதற்காக நான் என்னுடைய கையைத் தூக்க முயன்றேன். கையை உயர்த்த முடியவில்லை. என் வாயில் பாலைவனத்தில் வெப்பமாக இருக்கும் மணலை நிறைத்ததைப் போல இருந்தது. குரல் வரவில்லை.

திடீரென்று கோட்டையின் தென்கிழக்கு மூலையில் சில அற்புத வெளிச்சங்கள் தெரிவதைக் காண முடிந்தது. மெல்லிய முனகல்களும் பேச்சுக்களும் கலந்து கேட்டன. தொடர்ந்து சில சீட்டியடித்தல்கள்.

எங்களுக்கு முன்னால் நின்றிருந்த கறுத்த முகமூடி காற்றில் கரைந்து விட்டதைப்போல காணாமல் போனது. கதை சொல்லிக் கொண்டிருந்த ஹஸ்ஸனும் ஒரு மந்திர சக்தியைப்போல மறைந்து போனான்.

எனக்கு அங்கிருந்து எழுந்து ஓட வேண்டும்போல இருந்தது. எழ முடியவில்லை. கால்கள் தரையோடு ஒட்டிக் கொண்டிருந்தன. என்னுடைய உடலில் இருக்கும் நரம்புகள் அனைத்தையும் யாரோ அறுத்து ஒன்று சேர்த்துக் கட்டியதைப்போல இருந்தது. என்னுடைய மூளையில் ஏதோ மாய அசைவுகள் நடக்கின்றன. கறுத்த முகமூடிகளும், ரத்தினங்களும், எலும்புக்கூடும், ஸாஞ்சிபார் கப்பல்களும், கறாம்பூ பேகமும் என் மூளையில் குழு நடனத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சுமையைத் தாங்க முடியாமல் என் மூளை நொறுங்கி இறங்குகிறது. சீட்டியடித்தல்கள் அதற்குப் பிறகும் கேட்கின்றன. தேடும் விளக்குகள் சுற்றிலும் வெளிச்சத்தைப் பரப்புகின்றன. ஒரு பட்டாசு வெடிப்பதைப் பார்ப்பதுபோல அந்தக் காட்சியை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘டெ...டெ...டெ...’ ? மூன்று குண்டுகள் முழங்கின. என் சிந்தனைகள் அப்போதும் பதினேழாம் நூற்றாண்டிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பள்ளத்தின் பாலத்தை இழுக்க ஓமான் அரேபியர்கள் கொடுத்த கட்டளையை வெளிப்படுத்தும் வெடிகளா? நிழல்கள் நடனமாடுகின்றன. ஒரு கறுத்த முகமூடி கிடைத்தால் அதை அணிந்து கொண்டு அந்த நிழல்களுக்கு மத்தியில் மறைந்து நிற்க... நான் ஆசைப்படுகிறேன்.

என் காதில் யாரோ ஒரு அடி அடித்தார்கள். ஒரு கறுத்த உருவம். நான் வேகமாக எழுந்தேன். அந்த குளிர்ச்சியான கை என் நரம்புகளைத் தட்டி எழுப்பியது என்று தோன்றுகிறது. இறுகிப் போய் வெடிக்கும் நிலையில் இருந்த என் நரம்புகளுக்கு ஒரு விடுதலை கிடைத்தது!

அந்தக் கோட்டை மூலையில் என்னவோ ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த சத்தங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் கோட்டை கோபுரம் மணி நாதத்தை முழக்கியது. மணி பதினொன்று. அந்த மணிச்சத்தம் என்னுடைய மூளையைச் சற்று வருடியபோது எனக்கு சுய உணர்வு வந்தது.

‘ஓடுங்க! ஓடுங்க!’ - என்று இதயத்தின் உரத்த துடிப்புச் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. நான் அந்த நிழல்களுக்கு மத்தியில் ஓடினேன். முன்னால் முதலில் காணும் வழி மிகவும் எளிதான வழி என்ற முடிவுடன் நான் ஓடினேன்.

ஒரு அகலம் குறைவான பாதை வழியாக ஓடிப்போய்ச் சேர்ந்தது விசாலமான கடற்கரையில்...

அங்கு, கரையில் வயிறு வீங்கிய ப ஓபாப் மரங்கள் தனியாக நின்று கொண்டிருந்தன. சாம்பல் நிறத்தில் இருந்த கடலும், கடலில் கூட்டமாக நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கும் அரேபிய பாய்மரக் கப்பல்களின் நிர்வாணமான தூண்களும் நெருப்பு எரிந்து முடிந்த ஒரு பெரிய வானத்தை மனதில் தோன்றச் செய்தன.

நான் கடற்கரை வழியாக எவ்வளவு தூரம், எத்தனை மணி நேரங்கள் ஓடினேன் என்று நிச்சயமில்லை. சற்று தூரத்தில் தெரு வெளிச்சங்களைப் பார்த்து நான் என்னுடைய கால்களை அந்தப் பக்கமாகத் திருப்பினேன்.


மொம்பாஸாவில் என் மலையாளி நண்பரான திரு. குறுப்புவின் வீட்டிற்குத் திரும்பும் சாலையின் ஒரு மூலையில் நான் போய் சேர்ந்திருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். நெருப்பு பற்றி எரிந்து அழிந்த ஒரு வீட்டின் கோலம்தான் நான் கண்டுபிடித்த அடையாளம்.

குறுப்பு என்னை எதிர்பார்த்துப் பதைபதைப்புடன் வீட்டிற்கு முன்னால் சாலையிலேயே நின்றிருந்தார்.

“ஹாவ்!”  - குறுப்பு என்னைக் கண்டதும் நிம்மதியடைந்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார். பிறகு என்னை தலையிலிருந்து கால்வரை ஒருமுறை பார்த்துவிட்டு சந்தேகத்துடன் கேட்டார்: “நீங்கள் கடலில் குளிப்பதற்காகப் போயிருந்தீர்களா? முழுசா நனைந்திருக்கிறீர்களே?”

நான் வியர்வையில் நனைந்திருந்தேன். “நான் கொஞ்சம் வேகமாக நடந்தேன். அதனால் வியர்வை...” - நான் எப்படியோ கூறிவிட்டேன். மூச்சு விட்டதில் வார்த்தைகள் ஒழுங்காக வர மறுத்தன.

“பிறகு... நீங்கள் இவ்வளவு நேரமும் எங்கே இருந்தீங்க? நீங்க போய் விட்ட பிறகுதான் நான் அதை நினைத்தேன். ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். இந்த தெருவில் இருந்து வீடு இருக்கும் தூரத்திற்கு வேறு எங்கும் போயிடாதீங்க. மொம்பாஸாவில் கொலை செய்யும் கூட்டங்களின் தொந்தரவு சமீபகாலமாக மிகவும் அதிகமாயிருக்கு. நகரத்தின் தெற்குப் பகுதியில் இரவு எட்டு மணி தாண்டிவிட்டால் ஊரடங்குச் சட்டம் அமலாக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் அந்தப் பகுதிக்கு போய்விடப் போகிறீர்களோ என்பதுதான் என்னுடைய பயமாக இருந்தது. நீங்க எங்கே போயிருந்தீங்க?”

“ஓ... நான் இதற்கு அருகில் இருந்த ஏதோ ஒரு பூங்காவில் போய் உட்கார்ந்துகொண்டு, காற்று வாங்கியவாறு அப்படியே தூங்கி விட்டேன்”- நான் திடீரென்று தோன்றிய ஒரு பொய்யைச் சொன்னேன்.

“அங்கு போயிருக்க வேண்டியது இல்லை” - குறுப்பு என்னை அழைத்துக்கொண்டு வீட்டின் மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறியவாறு சொன்னார்: “அறிமுகமில்லாதவர்களை ஈர்த்து ஆபத்தான விஷயங்களில் சிக்க வைப்பவதற்கு சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துத் திரியும் மோசடி மனிதர்கள் இந்தப் பகுதியில் ஏராளமாக இருக்கிறார்கள். முகமூடி அணிந்து நடக்கும் மோகினிகள் - அவர்கள் பயங்கரமானவர்கள். நீங்கள் ஆபத்தில் எதிலும் சிக்காமல் திரும்பி வந்துவிட்டீர்கள் அல்லவா? அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இனிமேல் மாலை நேரம் தாண்டினால் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. புரியுதா?”

குறுப்பின் அறிவுரையைக் கேட்டு, சொன்னபடி கேட்கும் தம்பியைப்போல நான் வெறுமனே புன்னகைக்க முயற்சித்தேன். அது ஒரு இளித்துக் காட்டலாக ஆனதைப்போல எனக்கே தோன்றியது.

என்னுடைய நடவடிக்கைகளில் மொத்தத்தில் ஏதோ வேறுபாடு இருக்கிறது என்பதை குறுப்பு உணர்ந்திருக்க வேண்டும். அவர் சாந்தமான குரலில் சொன்னார்: “குளிர்ந்த நீரில் ஒரு குளி குளித்தால் நல்லது.”

நான் குழாய் நீரில் சிறிது நேரம் தலையை நனைய வைத்தேன். குறுப்பு சொன்னதைப்போல குளித்ததும் ஒரு சுகம் தோன்றியது. இரவு உணவு சாப்பிடவில்லை. ஒரு சூடான காப்பியை பருகிவிட்டு உறங்குவதற்காகக் கிடந்தேன்.

மறுநாள் காலையில் நான் கடினமான ஜுரத்துடன் கண் விழித்தேன். என்னுடைய நெற்றியிலும் மார்பிலும் கையை வைத்துப் பார்த்துவிட்டு குறுப்பு சொன்னார்: “மலேரியாவின் ஆரம்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆப்பிரிக்காவிற்கு வந்தால் மலேரியா பாதிக்காமல் திரும்பிப் போவது என்பது ஒரு மரியாதைக் கேடான விஷயம். நான் ஒரு டாக்டரை இங்கு அனுப்புகிறேன். நீங்கள் முழுமையாக ஓய்வு எடுக்கணும்.”

குறுப்பு அறிவுறுத்தியதைப்போல நான் படுக்கையிலேயே படுத்திருந்தேன். டாக்டர் வந்து சோதித்துப் பார்த்தார். மலேரியாவே தான். டாக்டர் ஒரு ஊசியைப் போட்டார் - விழுங்குவதற்கு சில மஞ்சள் நிற மாத்திரைகளையும்.

அன்று சாயங்காலம் குறுப்பு அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது கையில் ‘மொம்பாஸா டைம்ஸ்’ என்ற ஆங்கில நாளிதழின் மாலைப் பதிப்பு இருந்தது. என்னுடைய நோயின் நிலையை விசாரித்தவாறு பத்திரிக்கையை என் படுக்கையில் போட்டுவிட்டு குறுப்பு நல்ல ஒரு குளியலுக்காக குளியலறையைத் தேடிப் போனார்.

நான் பத்திரிகையைக் கையில் எடுத்து விரித்தேன். முன் பக்கத்தில் வெண்டைக்காய் எழுத்தில் ஒரு செய்தியின் தலைப்பு:

‘கொலை செய்யும் ரகசிய சங்கத்தின் தலைவன் போலீஸின் குண்டடிபட்டு மரணம்’.

அந்தச் செய்தி இப்படி விரிந்திருந்தது:

‘மோம்பாஸா,

செப்டம்பர் 15.

நேற்று இரவு 11 மணிக்கு ஜீசஸ் கோட்டைப் பகுதியில் பிரபலமான ஹம்தா ரகசிய சங்கத்தின் தலைவன் ஒற்றைக் கண்ணன் ஹமீத் என்ற ஹஸ்ஸனை போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

ஒற்றைக் கண்ணன் ஹமீத்தின் நண்பனும் மெய்க்காப்பாளனுமான யூசுப்பை காயம்பட்டு விழுந்த நிலையில் போலீஸ் கைது செய்தது.

கடந்த சில மாதங்களாக மொம்பாஸாவில் நடந்த பல கொலைகளுக்கும் காரணமாக இருந்தவர்கள் இந்த ஹம்தா ரகசிய சங்கம்தான் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த அக்கிரமச் செயல்களை அடக்குவதற்கு அரசாங்கம் தனி கவனம் செலுத்தி ஏற்படுத்திய குற்றங்களுக்கு எதிரான குழு, கேப்டன் கோல் அவர்களின் தலைமையில் செயல்பட ஆரம்பித்து மூன்று மாதங்களாகின்றன. அவர்களுடைய முதல் வெற்றி நேற்று கிடைத்திருக்கிறது.

ரகசிய சங்கத்தின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒருவனை போலீஸ் ஒற்றர்கள் ஜீசஸ் கோட்டையின் சமீபம் வரை பின் தொடர்ந்தார்கள். அவர்களைப் பற்றிய குறிப்பு கிடைத்தவுடன் இரண்டு வேன்கள் நிறைய ஆயுதங்கள் ஏந்திய போலீஸ்காரர்கள் கோட்டையின் தெற்குப் பகுதிக்கு விரைந்தார்கள். வானொலி, தேடும் விளக்குகள் ஆகிய நவீன பொருட்களுடன் அவர்களுடைய தொழில் நடந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. திடீரென்று போலீஸ்காரர்க்ள முற்றுகை இட்டார்கள். எனினும் ரகசிய சங்கத்தின் உறுப்பினர்களில் இரண்டு பேர்களைத் தவிர மீதி எல்லோரும் தப்பித்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடிந்த இருவரில் ஒரு ஆள் சங்கத்தின் தலைவனான ஒற்றைக்கண்ணன் ஹமீத் என்ற ஹஸ்ஸனும் இன்னொரு ஆள் ஹமீத்தின் மெய்க்காப்பாளனான யூசுப்பும்.

கொல்லப்பட்ட ஒற்றைக்கண்ணன் ஹமீத், ஒரு கொலைக் குற்றத்திற்கு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, ஜீசஸ் கோட்டையின் சிறையில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்பே தப்பித்துச் சென்ற ஒரு புள்ளி என்ற உண்மை இப்போது தெரிய வந்திருக்கிறது.

கறுத்த முகமூடி அணிந்து நடமாடும் ஹம்தா ரகசிய சங்கம் கொலை செய்வதற்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆட்களைக் கழுத்தை நெரித்துக் கொள்வதுதான் அவர்களுடைய செயல்முறையின் முக்கியத்துவம்.’

அந்தச் செய்தியின் ஒரு பக்கத்தில் ஒற்றைக் கண்ணன் ஹமீத் என்ற ஹஸ்ஸனின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.

நான் அந்தப் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தேன். ஹஸ்ஸனின் ஒற்றைக்கண் பிரகாசிப்பதைப்போல இருந்தது. அந்த விழியின் பச்சை பிரகாசத்தில் அற்புதமான ஒரு கதை உலகம் மனதில் தெரிந்தது. ஒரு கறுப்பினப் பெண்ணின் தீவிரக் காதலும், ஒரு வெள்ளைக்காரப் படைவீரனின் முழுமையான ரத்தினப் பைத்தியமும் அந்தக் கதையில் கண் சிமிட்டுகின்றன.

‘கொலைகாரனான ஹமீத்’ என்று அந்தப் பத்திரிகையில் புகைப்படத்திற்குக் கீழே அச்சடிக்கப் பட்டிருந்தது. நான் என்னுடைய பேனாவின் மையால் அதை அழித்து, அதற்கு பதிலாக இப்படி எழுதினேன்: ‘கதை சொல்லியான ஹஸ்ஸன்.’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.