Logo

வெளுத்த இரவுகள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6227
velutha iravugal

சுராவின் முன்னுரை

ஷ்ய மொழியில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஃப்யோடர் தாஸ்தாயெவ்ஸ்கி (Fyodor Dostoevsky) 1848ஆம் ஆண்டில் எழுதிய ‘White Nights’ என்ற புதினத்தை ‘வெளுத்த இரவுகள்’ என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

நாஸ்தென்கா என்ற அழகு தேவதையை இரண்டு இளைஞர்கள் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரிடமும் மிகுந்த நட்புணர்வுடன் பழகுகிறாள் நாஸ்தென்கா. ஆனால், வாழ்க்கை என்று வரும்போது, அவர்களில் ஒருவனைத்தான் அவள் காதலனாக ஏற்றுக் கொள்ள முடியும்.

அவள் அவர்களில் யாரைக் காதலனாக ஏற்கிறாள்? இதுதான் ‘வெளுத்த இரவுகள்’ நாவலின் கதை.

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வத்தைத் தூண்டும் அளவிற்கு கதையை நகர்த்திச் செல்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. இது இத்தாலி மொழியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

இக்கதையை அடிப்படையாக வைத்து இந்தியில் ‘சாவேரியா’ (Saawariya) என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்ஸாலி (Sanjay Leela Bhansali) இயக்கியிருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


முதல் இரவு

ரு அழகான இரவாக அது இருந்தது. அன்பான வாசகர்களே, மிகவும் இளம் வயதில் இருக்கும்போது மட்டுமே நாம் உணரக் கூடிய ஒரு இரவு அது. வானம் நட்சத்திரங்கள் சகிதமாக இருந்தது. அது மிகவும் பிரகாசமானதாக இருந்தது. அதைப் பார்க்கும்போது நாம் கேட்போம்- நகைச்சுவை உணர்வு உள்ளவர்களும் தான்தோன்றித்தனமாகத் திரிபவர்களும் என்று இருக்கும் பலவகைப்பட்ட மனிதர்களும் இதைப் போன்ற ஒரு ஆகாயத்திற்குக் கீழே எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று.

கனிவான மனம் கொண்ட வாசகர்களே, இதுவும் இளமை தவழும் ஒரு கேள்விதான். மிக மிக இளமை நிறைந்த ஒரு கேள்வி. எனினும், இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுடைய இதயங்களை அவ்வப்போது உலுக்குவதற்கு தெய்வம் சூழ்நிலைகளை உண்டாக்கட்டும்! நகைச்சுவை உணர்வு கொண்டவர்களையும் தான்தோன்றித்தனமாக இருப்பவர்களைப் பற்றியும் கூறும்போது, அந்த நாள் முழுவதும் என்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் இருந்தது என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. காலையிலிருந்து நான் ஒரு குறிப்பிடத்தக்க கவலையில் மூழ்கிப்போய் விட்டிருந்தேன். எல்லாரும் என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள் என்பதைப்போலவும் என்னைக் கை கழுவிவிட்டார்கள் என்பதைப் போலவும் நான் உணர்ந்தேன். யார் இந்த எல்லாரும் என்று நியாயமாக கேள்வி கேட்கலாம். காரணம்- நான் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசிக்க ஆரம்பித்து எட்டு வருடங்கள்

ஆகிவிட்டன. வெளியே கூறிக் கொள்கிற அளவுக்கு பழக்கமான மனிதர்களைச் சம்பாதிப்பதற்கு என்னால் முடியவில்லை. அதேநேரத்தில் நான் எதற்காக பழக்கமான மனிதர்களைச் சம்பாதிக்க வேண்டும்? அவர்கள் இல்லாமலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் முழுவதும் எனக்கு நன்கு தெரிந்துவிட்டிருக்கிறது. அதனால்தான் நகரத்தை ஒரேயடியாக மூட்டை கட்டி வைத்து விட்டு, திடீரென்று கிராமப்புறத்தைத் தேடிப் புறப்பட்டபோது, எல்லாரும் என்னை கைகழுவி விட்டார்கள் என்று எனக்குத் தோன்றியது. இந்தத் தனிமை என்னை பயமுறுத்தியது. முழுமையான விரக்தியில் மூழ்கி, எனக்கு என்ன ஆனது என்பதைப் புரிந்துகொள்வதற்கே ஆற்றல் இல்லாத நிலைக்கு ஆளாகி, நான் மூன்று நாட்கள் முழுவதும் தெருக்களில் சுற்றிக்கொண்டு திரிந்தேன். நான் நேவ்ஸ்கி ப்ராஸ்பெக்டிற்குச் சென்றேன். பூங்காவிற்குச் சென்றேன். நதிக்கரையில் இருந்த பாதையின் வழியாக எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்தேன். கடந்த ஒரு வருடமாக அதே இடத்தில் அதே நேரத்தில் நான் கண்டு பழகிய மனிதர்களை சென்ற இடங்களில் எங்கும் பார்க்கவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு என்னைத் தெரியவில்லை. ஆனால், எனக்கு அவர்களைத் தெரியும். நன்றாகவே தெரியும். நான் அவர்களின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய முகம் உற்சாகமாக காணப்படும்போது நான் சந்தோஷப்படுகிறேன். வாடிய முகங்களுடன் இருக்கும்போது நான் கவலைப்படுகிறேன். ஃபொன்தான்காவின் கரையில் ஒரு நாள்கூட விடாமல் எல்லா நாட்களிலும் ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான மனிதருடன் நான் நட்பு கொண்டிருந்தேன் என்றுகூட கூறலாம். அவருடைய முகம் மிடுக்கு நிறைந்ததாகவும் சிந்தனைகள் வயப்பட்டதாகவும் இருந்தது. அவர் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். இடது கையால் சைகை செய்து காட்டுவார். தங்க முலாம் பூசிய ஒரு மரக்கொம்பை வலது கையில் பிடித்திருப்பார்.

அவர் என்னையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். என்மீது உண்மையான ஆர்வத்தைக் கொண்டிருந்தார். ஃபொன்தான்காவில் அதே இடத்தில் அதே நேரத்தில் என்னைப் பார்க்க முடியாமல் போனால் அவர் ஏமாற்றமடைவார் என்று நான் உறுதியாக நினைத்தேன். அந்த காரணத்தால்தான் சில நேரங்களில்- குறிப்பாக இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கும் சமயங்களில் நாங்கள் ஒருவரோடொருவர் விசாரித்துக்கொள்வதில் ஈடுபட்டோம். சமீபத்தில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருவரையொருவர் பார்த்தபோது நாங்கள் உண்மையாகவே தொப்பியை உயர்த்திக் காட்ட ஆரம்பித்தோம். நல்லவேளை- நாங்கள் உரிய நேரத்தில் எங்களை நாங்களே கட்டுப்படுத்திக் கொண்டோம். கையை கீழே இறக்கிக் கொண்டு, இதயத்தில் தோன்றிய சந்தோஷ உணர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், நாங்கள் ஒருவரையொருவர் கடந்து சென்றோம்.

கட்டிடங்களும் என்னுடைய நண்பர்கள்தான். நான் தெருவின் வழியாக நடந்து செல்லும்போது அவை அனைத்தும் முன்னால் வந்து சாளரங்களின் வழியாக என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு என்னிடம் நலம் விசாரிப்பதைப்போல எனக்குத் தோன்றும். "என்ன விசேஷம்? நானும் நலமாக இருக்கிறேன். மே மாதம் எனக்கு மேலும் இன்னொரு மாடி வந்துசேரும்” என்றோ, "சுகமா? நாளையிலிருந்து எனக்கு மராமத்து வேலைகள் நடக்கப் போகின்றன” என்றோ, "எனக்கு நெருப்பு பிடிக்க ஆரம்பித்து விட்டது. நான் மிகவும் பயந்து போய் விட்டேன்” என்றோ அவை கூறலாம். அந்தக் கட்டிடங்களின்  கூட்டத்தில் எனக்கு மிகவும் விருப்பமான நண்பர்களும் மிகவும் நெருக்கமான நண்பர்களும் இருப்பார்கள். அவற்றில் ஒன்று இந்த கோடை காலத்தில் சிற்பிகளின் சிகிச்சையில் இருக்கும். ஆபத்து எதுவும் உண்டாகாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நான் தினமும் வந்து பார்க்கப் போகிறேன். ஆனால், இந்த இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் அழகான ஒரு சிறிய வீட்டுக்கு என்ன நடந்தது என்பதை நான் எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டேன். அந்த அழகான சிறிய வீடு எந்த அளவுக்கு நட்புணர்வுடன் என்னை நோக்கிப் புன்னகைத்தது! எந்த அளவுக்கு இரக்கத்துடன் அலங்கோலமாகிப் போய் கிடந்து பக்கத்து வீடுகளை அது பார்த்தது? அதற்கு அருகில் நடந்து செல்லும்போதெல்லாம் என்னுடைய இதயத்தில் சந்தோஷம் அலை மோதிக் கொண்டிருக்கும். கடந்த வாரம் அந்தத் தெருவின் வழியாக நடந்து செல்லும்போது, நான் பரிதாபமான ஒரு ஓலத்தைக் கேட்டேன். "அவர்கள் எனக்கு மஞ்சள் வண்ணத்தைப் பூசுகிறார்கள்!”  நான் என்னுடைய நண்பனைப் பார்த்தேன். மிருகங்கள்! காட்டுமிராண்டிகள்! அவர்கள் எதையும் வெறுமனே விட்டு வைக்கவில்லை. தூண்கள், கல் வேலைப்பாடுகள் எதையும்... என்னுடைய நண்பன் ஒரு காட்டுப் பறவையைப்போல மஞ்சள் நிறத்தில் இருந்தான். அதைப் பார்த்து, எனக்கு மஞ்சள் பித்தம் பிடித்துவிடும் போல தோன்றியது. சீனாக்காரனின் நிறத்தைப் பூசி அவலட்சணமாக்கப்பட்ட அந்த அப்பாவி நண்பனைப் போய் பார்க்க வேண்டும் என்று இன்று வரை எனக்கு மனம் வரவில்லை.

அன்புள்ள வாசகர்களே, மொத்தத்திலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னுடைய நண்பன் என்ற விஷயம் இப்போது புரிகிறது அல்லவா?

நான் மிகவும் கவலையில் மூழ்கி இருந்தேன் என்று முன்பு கூறினேன் அல்லவா? மூன்று நாட்கள் முழுவதும் அதே நிலை தொடர்ந்து கொண்டிருந்தது.


அதற்குப் பிறகுதான் அதற்கான காரணமே தெரிய வந்தது. வீட்டுக்கு வெளியே எனக்கு நடக்கக் கூடாத ஒரு விஷயம் நடந்துவிட்டது. (அந்த மனிதர் அங்கு இல்லை. அவர் இங்கு இல்லை. இப்போது அவருக்கு என்ன ஆனது?) வீட்டிற்கு உள்ளும் அமைதியற்ற நிலை நிலவியது. இரண்டு இரவுகள் தொடர்ந்து நான் தலைக்குள் அமைதி இல்லாமல் சிந்தனையில் மூழ்கினேன். வீட்டில் என்ன பிரச்சினை? என்ன காரணத்திற்காக எனக்கு அது இந்த அளவுக்கு வெறுப்பளிக்கக் கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது? பதிலைக் கண்டு பிடிப்பதற்காக நான் சுற்றிலும் பார்த்தேன்.

அழுக்கடைந்த பச்சை நிற சுவர்களையும். மத்ரயோனா சேர்த்து வைத்து ஆங்காங்கே இலைகள் கிடந்த மாடியையும் பார்த்தேன். எல்லா பொருட்களையும் ஆராய்ந்து பார்த்தேன். ஒருவேளை, குழப்பத்திற்கான வேர் இருப்பது அங்குதான் என்று நினைத்து ஒவ்வொரு நாற்காலியையும் உற்றுப் பார்த்தேன். (காரணம்- ஒரு நாற்காலிகூட முந்தின நாள் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் இருந்தால் நான் நிலை குலைந்து போய்விடுவேன்.) நான் சாளரத்தின் வழியாகப் பார்த்தேன். அதற்குப் பிறகும் மனதில் நிம்மதி உண்டாகவில்லை. மத்ரயோனாவை அழைத்து இலைகளைப் பெருக்காமல் இருப்பதற்கும், பொதுவாக வீட்டைச் சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதற்கும் ஒரு தந்தையைப்போல திட்டுவதற்குக்கூட நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை பதைபதைப்புடன் பார்த்த விஷயம் மட்டும்தான் நடந்தது. ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசாமல், அறையை விட்டு அவள் வெளியேறிச் சென்றாள். இலைகள் முன்பு இருந்தது மாதிரியே இப்போது இருக்கின்றன. இறுதியாக இன்று இரவுதான் எனக்கு விஷயம் புரிந்தது. ஆட்கள் எனக்கு அருகில் இருப்பதிலிருந்து கிராமப்புறங்களைத் தேடிச் செல்கிறார்கள். இந்த நாகரீகமற்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மன்னிக்க வேண்டும். ஆனால், பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு என்னால் முடியவில்லை. ஏனென்றால், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் எல்லாருமே பொதுவாக கிராமப் பகுதிகளைத் தேடி போய்க் கொண்டிருந்தார்கள். அல்லது போய் விட்டிருந்தார்கள்.

ஏனென்றால், வண்டியை வாடகைக்கு எடுக்கும், உயர்குடியைச் சேர்ந்தவர் என்று தோன்றக் கூடிய ஒவ்வொரு மனிதனிடமும், அன்றைய வேலையை முடித்து தன்னுடைய வீட்டில் இருப்பவர்களைத் தேடிப் போக வேண்டும் என்று அவசரப்படக்கூடிய ஒரு குடும்பத் தலைவனைப் பார்த்தேன். எதை வைத்துக் கூறுகிறேன் என்றால், தெருவில் பார்த்த ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு வித்தியாசமான பார்வை தெரிந்தது- "மனிதர்களே, நாங்கள் இந்த வழியே வந்திருக்கிறோம். அவ்வளவுதான். இரண்டு மணி நேரங்களுக்குள் நகரத்தை விட்டு வெளியே சென்றுவிடுவோம்” என்று ஒவ்வொரு வழிப் போக்கரிடமும் கூறுவதைப் போன்ற பார்வை. சாளரம் தள்ளித் திறப்பதைப் பார்க்கும்போது, சர்க்கரை போல வெண்மையாக இருந்த மெல்லிய விரல்களை கண்ணாடியில் வைத்து தாளம் போட்டுக்கொண்டே, ஒரு அழகான இளம் பெண் தன் தலையை நீட்டி பூச்சட்டி விற்பவனை அழைப்பதைப் பார்க்கும்போது, அந்தப் பூக்களை வாங்குவது நகரத்தில் காற்றோட்டமே இல்லாத ஒரு வீட்டில் வசந்தத்தையும் மலர்களையும் அனுபவிப்பதற்காக அல்ல- வெகு சீக்கிரமே அவர்கள் எல்லாரும் அந்தப் பூக்களுடன் கிராமப் புறங்களைத் தேடிச் செல்லப்போகிறார்கள் என்பதை அந்த நிமிடத்திலேயே என்னால் கண்டுபிடித்துவிட முடியும். பார்த்தவுடன் உண்மை எது என்பதைக் கண்டுபிடித்து விடுவதில் நான் தேவையான அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தேன். ஒவ்வொரு மனிதர்களின் வெளி நடவடிக்கைகளைக் கொண்டே அவர்களின் குளிர்கால வீடு எங்கே இருக்கிறது என்பதை தவறே இல்லாமல் கூறுவதற்கு நான் கற்றிருந்தேன். காமென்னி தீவிலிருந்து- அப்தேக்கர்ஸ்கி தீவிலிருந்து- இல்லாவிட்டால் பீட்டர்ஹாஃப் சாலையிலிருந்து வருபவர்களை, அவர்களுடைய  நடவடிக்கைகளில் வெளிப்பட்ட படித்த வாசனையையும், அழகான குளிர்கால ஆடைகளையும், அவர்களை நகரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்த பெரும்பாலான வண்டிகளையும் வைத்து அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். பர்கோலோவேயிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் வருபவர்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளும் உயர்வான போக்குகளும் அந்தக் கணமே மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அதேநேரத்தில், க்ரெஸ்தோவிஸ்கி தீவில் கோடைகாலத்தைக் கழித்து கொண்டிருப்பவர்களிடம் வெளிப்படக்கூடிய விஷயங்களோ சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். பொருட்கள் ஏற்றப்பட்டிருக்கும் வண்டிகளுக்கு அருகில் கையில் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு அலட்சியமாக வண்டிக்காரர்கள் நீளமான வரிசையில் நடந்து செல்வதை சில நேரங்களில் நான் பார்ப்பேன். நாற்காலிகள், மேஜைகள், ஸோஃபாக்கள் உட்பட்ட எல்லா வகையான வீட்டுப் பொருட்களையும் வண்டிகளில் ஒன்று சேர்த்து வைத்திருப்பார்கள். எல்லாவற்றின் தலைப் பகுதியிலும், தன்னுடைய எஜமானின் பொருட்களை எச்சரிக்கை உணர்வுடன் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்டு எலும்புக் கூடாக மட்டுமே காட்சியளிக்கும் ஒரே சமையல்காரி உட்கார்ந்திருப்பாள். சில நேரங்களில் வீட்டுப் பொருட்களும் பாத்திரங்களும் ஏற்றப்பட்டிருக்கும் படகுகள் நேவாவின் வழியாகவோ ஃபொன்தான்காவின் வழியாகவோ ச்யோர்னயா நதிக்கோ தீவுகளுக்கோ செல்வதை நான் பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன். இரண்டு இடங்களில் எங்குச் சென்றாலும், அந்த வண்டிகளும் படகுகளும் என்னுடைய கண்களில் பல மடங்கு, நூறு மடங்கு பெருகித் தெரியும். எல்லா வண்டிகளும் புறப்பட்டுப் போய்விட்டன என்றும் பாதைக்குச் சென்றுவிட்டன என்றும் கூட்டம் கூட்டமாக கிராமப் புறங்களை நோக்கிச் சென்றிருக்கின்றன என்றும் எனக்குத் தோன்றியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கே ஒரு பாலைவனமாக ஆகிவிடுமோ என்றுகூட தோன்றியது. அப்போது எனக்கு வெட்கமும்  வேதனையும் கவலையும் தோன்றியது. கிராமப் பகுதிகளை நோக்கிச் செல்வதற்கு எனக்கு எந்தவொரு காரணமும் இல்லை. இடமும் இல்லை. ஒவ்வொரு பொருட்கள் ஏற்றப்பட்டிருக்கும் வண்டியுடனும் சேர்ந்து, சவாரி வண்டியை வாடகைக்கு எடுக்கக் கூடிய உயர்குடியைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றக் கூடிய ஒவ்வொரு மனிதனுடனும் சேர்ந்து செல்வதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால் யாரும்- ஒரு ஆள் கூட என்னை அழைக்கவில்லை. என்னை மறந்துவிட்டதைப்போல அவர்களுக்கு நான் ஒரு அன்னியனாகி விட்டதைப்போல தோன்றியது.

நான் நீண்ட நேரம்... நீண்ட நேரம் நடந்தேன். இறுதியில் எங்கு போய்ச் சேர்ந்தேன் என்ற ஒரு வடிவமே கிடைக்கவில்லை. பல நேரங்களில் எனக்கு இது நடக்கக் கூடியதுதான். திடீரென்று நான் நகரத்தின் எல்லையை அடைந்துவிட்டதைப்போல தோன்றியது. அந்த நிமிடமே எனக்கு சந்தோஷம் உண்டானது. நான் வெளியே கடந்து பச்சை வயல்கள் வழியாகவும் புற்பரப்புகளின் வழியாகவும் நடந்தேன். சிறிதுகூட களைப்பு தோன்றவில்லை. என்னுடைய மனச்சுமை விலகிக் கொண்டிருக்கிறது என்பதை எனக்குள் இருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் உணர்ந்தேன். வண்டியில் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் என்னை நோக்கி நட்புணர்வு கலந்த பார்வைகளைச் செலுத்தினர். நலம் விசாரிக்கவில்லை. அவ்வளவுதான்.


அவர்கள் எல்லாரும் என்ன காரணத்தாலோ மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். எல்லாருடைய வாயிலும் ஒவ்வொரு சுருட்டு இருந்தன. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் உண்டானது. திடீரென்று இத்தாலியில் வந்து இறங்கிவிட்ட ஒரு தோணல். நெருங்கி நெருங்கி இருந்த தெருக்களில் மூச்சுவிட முடியாமல் பாதி நோயாளியாகி விட்டிருந்த ஒரு நகரத்து மனிதனான என்னிடம் இயற்கையுடன் உள்ள நட்பு உண்டாக்கிய விளைவு அந்த அளவுக்கு பலம் கொண்டதாக இருந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த கிராமப் பகுதிகளில் இதயத்தைத் தொடக் கூடியதாகவும் மறைந்து போக முடியாததுமான ஏதோவொன்று இருந்தது. வசந்தத்தின் நறுமணத்துடன் இயற்கை, உடனடியாக அதன் அனைத்து பெருமைகளையும் தெய்வீக சக்தி படைத்த முழு தன்மையையும் வெளிப்படுத்தியது. பிரகாசித்துக் கொண்டிருந்த... மலர்களை அணிந்துகொண்டு அது மிகவும் மிடுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தது. சயரோகம் பாதித்து வெளிறிப் போய் காணப்படும் ஒரு பெண்ணிடம் உண்டாகக்கூடிய மாற்றத்தை என்ன காரணத்தாலோ நான் நினைக்கத் தொடங்குகிறேன். சில நேரங்களில் பரிதாப உணர்ச்சி கலந்த பாசம் உண்டாகும். சில நேரங்களில் நமக்கு அவளிடம் இரக்கம் உண்டாகும். சில நேரங்களில் நாம் அவளை முழுமையாக அலட்சியப்படுத்தவும் செய்யலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று ஒரே நிமிடத்தில், அவள் விநோதமாக, ஆச்சரியப்படும் வகையில், அழகியாக மாறுகிறாள். நாம் அதிர்ச்சியடைந்து, திகைத்துப் போய், நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்கிறோம். கவலைகளும் சிந்தனைகளும் நிறைந்த அந்தக் கண்களில் நெருப்பை எரிய வைத்துக் கொண்டிருப்பது எந்த சக்தி? வெளிறி சோர்வடைந்து காணப்பட்ட முகம் இந்த அளவுக்கு மிகுந்த உணர்ச்சிகளுடன் எப்படி ஆனாது! அந்த மார்பகம் எதை வைத்து இப்படி உயர்ந்து தாழ்ந்து கொண்டிருக்கிறது? இந்த ஏழைப் பெண்ணின் முகத்தில் இந்த அளவுக்கு கவர்ச்சியான புன்னகையை அரும்பச் செய்வதற்கும் இந்த அளவுக்கு பலமான சிரிப்பை எழச் செய்வதற்குமான ஆற்றலும் உத்வேகமும் அழகும் இவ்வளவு சீக்கிரம் எங்கிருந்து வந்தன? நாம் ஆச்சரியத்துடன் சுற்றிலும் பார்க்கிறோம். அப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறது. ஆனால், அந்த நிமிடம் கடந்து போய் விடுகிறது. ஒருவேளை நாளை நாம் காணப் போவது சிந்தனைகள் நிறைந்த, செயலற்ற அதே பார்வையாக இருக்கும்... வெளிறி சோர்வடைந்த அதே முகமாக இருக்கும். வெட்கமும் கோழைத்தனமும் நிறைந்த அதே மனநிலையாக இருக்கும். அந்த நிமிட பாதிப்பின் மூலம் ஒரு வேளை- பரிதாப உணர்ச்சியைக்கூட தாங்கமுடியாத வேதனைகளின், கோபத்தின் வெளிப்பாடுகளைக்கூட சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.... ஒரு நொடி மட்டுமே தோன்றிய அந்த அழகு மலர் இவ்வளவு வேகமாக, என்றென்றைக்குமாக, வாடிக்கரிந்து போய்விட்டதே என்பதை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். அதன் மீது அன்பு செலுத்துவதற்கு ஒரு வாய்ப்புகூட கிடைக்கவில்லையே என்பதை நினைத்து நாம் மன வருத்தப்படுகிறோம்....

எனினும், என்னுடைய இரவு, பகலைவிட சிறப்பானதாக இருந்தது! நடைபெற்றது இதுதான்:

நான் மிகவும் தாமதமாகத்தான் நகரத்திற்குத் திரும்பி வந்தேன். வீட்டை நெருங்கியபோது, கடிகாரத்தில் பத்து மணி அடித்து விட்டிருந்தது. ஏரியின் கரையின் வழியாகத்தான் நான் வீட்டிற்குச் செல்ல வேண்டியதிருந்தது. இரவின் அந்த நேரத்தில் அங்கு எந்த இடத்திலும் ஒரு உயிரைக்கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய வீடு நகரத்தின் ஒரு தொலைதூர மூலையில் இருந்தது. என்னுடைய வீடு என்பது என்னவோ உண்மைதான். நான் பாடிக்கொண்டே நடந்தேன். சந்தோஷம் தோன்றும் போதெல்லாம் நான் ஏதாவது பாட்டை முணுமுணுப்பேன். தன்னுடைய சந்தோஷத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு நண்பர்களோ அறிமுகமானவர்களோ இல்லாமலிருக்கும் எந்தவொரு ஆளும் இதைத்தான் செய்வான். திடீரென்று சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு சாகசச் செயலில் நான் போய் குதித்தேன்.

என்னிடமிருந்து சற்று தள்ளி சுவரோடு சேர்ந்து ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் சுவரில் சாய்ந்து கொண்டு கலங்கலாகக் காட்சியளித்த ஏரியின் நீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. அழகான ஒரு மஞ்சள் நிறத் தொப்பியையும் மெல்லிய ஒரு சிறிய கறுப்பு நிறப் போர்வையையும் அவள் அணிந்திருந்தாள். "இளம்பெண்தான். தலைமுடி கறுப்பாக இருக்கிறது.” -நான் முடிவு செய்தேன். அவள் என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்கவில்லை என்று தோன்றியது. அடக்கி வைக்கப்பட்ட சுவாசத்துடனும் உரத்து துடித்துக்கொண்டிருந்த இதயத்துடனும் நான் கடந்து சென்றபோது, அவள் அசையவேயில்லை. "ஆச்சரியம்தான்!” -நான் நினைத்தேன்: "அவள் ஏதோ ஆழமான சிந்தனையில் மூழ்கிவிட்டிருக்க வேண்டும்.” திடீரென்று நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். அடக்கி வைக்கப்பட்ட கேவல் சத்தம் காதில் விழுந்ததைப்போல இருந்தது.

ஆமாம்... நான் நினைத்தது சரிதான். அந்த இளம்பெண் அழுது கொண்டிருந்தாள். தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். கடவுளே! என் இதயம் சுருங்கி விட்டது. பெண்களுடன் நெருங்குவது என்பது எனக்கு வெட்கமுள்ள விஷயமென்றாலும், அது ஒரு அசாதாரணமான நிமிடமாக இருந்தது. நான் திரும்பி அவளை நோக்கி நடந்தேன். "மேடம்...” என்று அழைக்க இருந்தேன். உயர்ந்த சமுதாயத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் எல்லா ரஷ்யன் நாவல்களிலும் சர்வசாதாரணமாக  பல முறைகள் திரும்பத் திரும்ப அந்தச் சொல் வரக் கூடியதாயிற்றே என்பது தெரிந்திருந்த காரணத்தால், நான் அந்த வார்த்தையைக் கூறவில்லை. எப்படி ஆரம்பித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பற்றி நான் மிகவும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்ததற்கு மத்தியில் அந்த இளம்பெண் தன்னுடைய சுயஉணர்வு நிலைக்கு மீண்டும் வந்தாள். சுற்றிலும் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து கொண்டு என்னைக் கடந்து, ஏரியின் கரையின் வழியாக நடந்து சென்றாள்.  நான் உடனடியாக அவளைப் பின்பற்றி நடந்து சென்றேன். ஆனால், என்னுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அவள் தெருவைக் குறுக்காகக் கடந்து எதிர் பக்கத்தின் ஓரத்தின் வழியாக தன்னுடைய நடையைத் தொடர்ந்தாள். நான் தெருவைக் குறுக்காகக் கடந்து செல்வதற்கு முயற்சிக்கவில்லை. கையில் பிடிபட்ட கிளியிடம் வெளிப்படுவதைப்போல என்னுடைய இதயம் துடித்தது. அப்போது

இயல்பாக ஒரு எதிர்பாராத சம்பவம் என்னுடைய துணைக்கு வந்து சேர்ந்தது.

மாலை நேர ஆடைகள் அணிந்திருந்த ஒரு நாகரீகமான மனிதன் திடீரென்று அந்த இளம்பெண்ணின் அருகில் வந்தான். வயதில் நல்லவனாகத் தெரிந்தாலும் நடவடிக்கைகள் அப்படிப்பட்டதாக இல்லை. கீழே விழாமல் இருப்பதற்காக சுவரைப் பிடித்துக் கொண்டு அவன் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டே நடந்தான். ஒரு அம்பின் வேகத்துடனும் பக்குவத்துடனும் அந்த இளம்பெண் நடந்தாள்.


இரவில் வீட்டை அடைவதற்காக, தங்களுடன் யாரும் வருவதை விரும்பாத எல்லா பெண்களும் செய்யக் கூடிய காரியமே அது. என்னுடைய பக்கம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விதியின்படி, அந்த ஆடி ஆடி நடந்துகொண்டிருந்த மனிதனை எல்லையைக் கடந்த நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டாமல் விட்டிருந்தால், அவன் எந்தச் சமயத்திலும் அவளின் அருகில் சென்று சேர்ந்திருக்க முடியாது.

திடீரென்று ஒரு வார்த்தைகூட வாய்திறந்து கூறாமல், அந்த நாகரீக மனிதன் முன்னால் வேகமாகப் பாய்ந்து அவளுக்குப் பின்னால் ஓடினான். அவள் காற்றின் வேகத்தில் வேகமாக நடந்தாலும், அவர்களுக்கிடையே இருந்த தூரம் குறைந்து குறைந்து கொண்டேயிருந்தது. இறுதியில் அவன் அவளை நெருங்கிவிட்டான். அந்த இளம்பெண் உரத்த குரலில் சத்தம் போட்டாள். என்னுடைய வலது கையில் அந்த நேரத்தில் கூர்மையைக் கொண்ட அருமையான ஒரு மரக்கொம்பு இருந்தது என்னுடைய நல்ல நேரம் என்றுதான் கூற வேண்டும். நொடி நேரத்தில் நான் தெருவின் எதிர் பக்கம் சென்றேன். கண் இமைக்கும் நேரத்தில் அந்த தொந்தரவு செய்யும் மனிதன் விஷயத்தைப் புரிந்துகொண்டான். மரக்கொம்பின், எதிர்த்து நிற்க முடியாத அடிக்கு பயந்து, அவன் ஒரு வார்த்தைகூட பேசாமல் பின்னால் திரும்பி நடந்தான். நாங்கள் தூரத்தை அடைந்த பிறகுதான், அவன் தன்னுடைய எதிர்ப்பை கிட்டத்தட்ட கடுமையான மொழியில் வெளிப்படுத்தினான். ஆனால், அவனுடைய வார்த்தைகளை யாரும் பொருட்படுத்தவே இல்லை.

“என்னிடம் கையைக் கொடுங்க...'' நான் அந்த இளம்பெண்ணிடம் சொன்னேன்... “இனிமேல் அவன் பின்னால் தைரியத்துடன் வரமாட்டான்.''

அவள் மிகவும் அமைதியாக தன்னுடைய கையைத் தந்தாள். பயத்தாலும் களைப்பாலும் அது நடுங்கிக் கொண்டிருந்தது. ஹே! யாரென்று தெரியாத மனிதா! அந்த நிமிடம் நான் உன்னை எந்த அளவிற்கு வாழ்த்தினேன் தெரியுமா? நான் அவளை அருகில் சென்று பார்த்தேன். அழகான கறுப்பு நிற தலைமுடியைக் கொண்ட பெண்! நான் மனதில் நினைத்தது சரிதான்.... சற்று முன்பு உணர்ந்த பயத்தின்- அல்லது கவலையின் காரணமாக உண்டான கண்ணீர் அவளுடைய கறுத்த இமைகளில் அப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனினும், அழகான ஒரு புன்னகை அவளுடைய உதடுகளில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவள் என்னை நோக்கி சிறிது பார்த்தாள். முகம் சற்று சிவந்தது. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“என்னை சற்று முன்பு விட்டெறிந்திருக்கக் கூடாது என்று இப்போது புரிகிறதா? நான் உங்களுடன் இருந்திருந்தால், எதுவுமே நடந்திருக்காது.''

“ஆனால், எனக்கு உங்களைத் தெரியாதே! நான் நினைத்தேன்- நீங்களும்...''

“மேடம், இப்போது என்னைத் தெரிகிறதா?''

“கொஞ்சம்... முதலிலேயே கேட்கிறேன்- நீங்கள் ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?''

“மேடம். நீங்கள் சரியாகவே மனதில் நினைத்திருக்கிறீர்கள். யாருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தற்காலிகமாக நினைத்துப்  பார்த்தேன்.'' என்னுடைய தோழி புத்திசாலி என்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டே நான் சொன்னேன்: “வெறும் அழகு மட்டுமல்ல; பெண்களுடன் பழகுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது என்பதும் உண்மைதான். சற்று முன்பு அந்த மனிதன் பயமுறுத்தியபோது மேடம், உங்களுக்கு உண்டான அளவிற்கு பதைபதைப்பு எனக்குள்ளும் உண்டானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு இப்போது கொஞ்சம் பயமும் தோன்றுகிறது. ஒரு கனவைப்போல இது இருக்கிறது. ஒரு பெண்ணுடன் உரையாடுவேன் என்பதை நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.''

“நினைத்துப் பார்த்ததில்லையா? உண்மையாகவா?''

“ஆமாம்... என்னுடைய கை இப்போது நடுங்கிக் கொண்டிருக்கிறது என்றால்... மேடம், உங்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு அழகான சிறிய கையை எந்தச் சமயத்திலும் தொட்டதில்லை என்பதுதான் காரணம். நான் பெண்களுடன் சிறிதுகூட நெருங்கிப் பழகியதில்லை. வேறு வகையில் கூறுவதாக இருந்தால், பழகியதே இல்லை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். நான் இப்போது தனியாகவே இருக்கிறேன். அவர்களுடன் எப்படி உரையாடுவது என்ற விஷயம் கூட எனக்குத் தெரியாது. மேடம், இப்போதுகூட நான் உங்களுக்கு முன்னால் ஏதாவது முட்டாள்தனமாக நடந்து கொண்டிருப்பேன். சரிதானா? உண்மையைக் கூறுங்கள். நான் பதைபதைப்பு அடையவே மாட்டேன். அது மட்டும் உண்மை...''

“இல்லவே இல்லை. இதற்கு நேர்மாறாக நடந்ததுதான் உண்மை... உண்மையைக் கூற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், கூறுகிறேன்- பெண்களை ஈர்க்கக்கூடிய ஒரு குணம்தான் வெட்கம். மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இதையும்கூட கூறுகிறேன்- அது என்னையும் ஈர்க்கவே செய்கிறது. நான் வீட்டில் போய் சேரும் வரை, உங்களைப் போகச் சொல்ல மாட்டேன்.''

“மேடம், என்னுடைய வெட்கம் முழுவதையும் ஒரே நிமிடத்தில் இல்லாமல் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறதே!'' சந்தோஷ மிகுதியால் மூச்சை அடக்கிக்கொண்டு நான் சொன்னேன்: “அப்படியென்றால், என்னிடம் இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆயுதமும் இல்லாமல் போய்விடும்.''

“ஆயுதமா? என்ன ஆயுதம்? அப்படிக் கூறியது அழகாக இல்லை.''

“மன்னிக்க வேண்டும். இனிமேல் கூறமாட்டேன். என்னையும் மீறி நாக்கிலிருந்து வந்துவிட்டது. ஆனால், இதைப் போன்ற ஒரு நிமிடத்தில் எனக்கு ஒரு ஆசை உண்டாகாமல் இருக்கும் என்று கருதுகிறீர்களா?''

“என்ன ஆசை? விருப்பப்படுவதா?''

“ஆமாம்... அதேதான். என்னிடம் கனிவை வெளிப்படுத்துங்கள். கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு கனிவைக் காட்டுங்கள். நான் யார் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். இருபத்து ஆறு வயதாகிறது. எனினும், இதுவரை யாரையும் தெரியாது. பிறகு எப்படி அழகாகவும் அறிவுப் பூர்வமாகவும் மிகச் சிறப்பாகவும் நான் பேசுவேன்? எல்லா விஷயங்களையும் மனதைத் திறந்து, மறைத்து வைக்காமல் கூறுவதுதானே உங்களுக்கும் பிடித்த விஷயமாக இருக்கும்? என்னுடைய இதயம் எனக்குள் கிடந்து சத்தம் போட்டு கூக்குரல் எழுப்பும்போது, என்னால் அமைதியாக இருந்து கொண்டிருக்க முடியாது. அது இருக்கட்டும்... மேடம், நீங்கள் நம்புகிறீர்களா? ஒரு பெண்கூட இல்லை. எந்தச் சமயத்திலும் இருந்தது இல்லை. ஒரு நண்பன்கூட இல்லை. என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு இடத்தில் யாரையாவது சந்திப்பேன் என்று நான் கனவு கண்டுகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் நான் எவ்வளவோ முறைகள் காதல் வயப்பட்டிருக்கிறேன்.''

“எப்படி? யாருடன்?''

“யாருடனுமல்ல... கற்பனைக் கதாபாத்திரத்துடன். என்னுடைய கனவில் காணும் யாருடனும்... கனவில் நான் ஒரு கற்பனைக் கதையை உருவாக்குவேன். ஹா! மேடம், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. உண்மையாகவே நான் இரண்டு மூன்று பெண்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எப்படிப்பட்ட பெண்களாக இருந்தார்கள்! இல்லத்தரசிகள்... ஆனால், கேட்டால் சிரிப்பை வரவழைக்கும் ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்.


நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஏதாவது பெண்ணைத் தெருவில் சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமில்லாமல் எப்படி உரையாடலை ஆரம்பிப்பது என்பதைப் பற்றி நான் பல நேரங்களிலும் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே நான் அவர்களுடன் உரையாடுவது மிகவும் பணிவுடன் இருக்கும்... உணர்ச்சி நிறைந்ததாக இருக்கும். எனக்கு தனிமையில் இருப்பது வெறுப்பை அளிக்கக்கூடிய விஷயமாக ஆகிவிட்டது என்றும், என்னை விரட்டியடித்து விடாதீர்கள் என்றும் நான் அவர்களிடம் கூறுவேன். எந்தவொரு பெண்ணுடனும் பழகுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்று கூறுவேன். என்னைப் போன்ற ஒரு அதிர்ஷ்டமில்லாதவனின் எளிய வேண்டுகோளை காது கொடுத்துக் கேட்பது என்பது அவர்களுடைய பெண் தர்மத்தின் பகுதி என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுவேன். சகோதரனுடன் இருக்கக் கூடிய இரக்க உணர்வுடன் என்னிடம் இரண்டு வார்த்தைகள் கூற வேண்டும்... என்னை அப்போது விரட்டியடிக்கக் கூடாது... என்னை நம்ப வேண்டும்... நான் கூற விரும்புவதைக் கேட்க வேண்டும். சிரிக்க வேண்டுமென்று நினைத்தால், சிரித்துக் கொள்ளுங்கள். ஆனால், எனக்கு கொஞ்சமாவது வாக்குறுதிகள் தரவேண்டும். இனி எந்தச் சமயத்திலும் சந்திக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, என்னிடம் சில வார்த்தைகளைக் கூற வேண்டும். கொஞ்சம் வார்த்தைகள் போதும்... இவ்வளவுதான் வேண்டும் என்று நான் கூறுவேன். ஆனால், மேடம்... நீங்கள் சிரிக்கிறீர்களே! அதற்கென்ன? அதற்காகத்தானே நான் இவற்றையெல்லாம் கூறினேன்?''

“வருத்தப்படக் கூடாது. நான் சிரித்ததற்குக் காரணம் வேறொன்றுமல்ல. உங்களுக்கு தனிமை உணர்வு தோன்றுகிறதென்றால், குற்றம் உங்களுடையதுதான். அதுமட்டுமல்ல; முயற்சித்துப் பார்த்தால் -ஒருவேளை நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்றுகூட வரலாம். தெருவில் வைத்து அந்த விஷயம் நடைபெறுகிறது என்றாலும்கூட காரியம் எளிதில் நடைபெற்று விட்டால், அந்த அளவிற்கு அது நல்லது. விவரம் இல்லாதவளோ, அந்த நிமிடத்தில் ஏதாவது காரணத்தால் கோபத்துடன் இருப்பவளோ, அல்லது நல்ல மனம் கொண்ட ஒரு பெண்ணோ கூட ஏதாவது சில வார்த்தைகளைப் பேச வேண்டும் என்ற உங்களுடைய பணிவான வேண்டுகோளை நிறைவேற்றாமல் உங்களை விரட்டியடிக்க முயற்சிக்க மாட்டாள். அப்போது... நான் என்ன கூறுகிறேன்? உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள். சந்தேகமேயில்லை! நான் என்னுடைய விஷயத்தைச் சொன்னேன். அவ்வளவுதான். பெண்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது.''

“மேடம், உங்களுக்கு நன்றி!'' நான் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினேன்: “மேடம், நீங்கள் எனக்கு எவ்வளவு பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.''

“நிறுத்துங்கள்... ஆனால், நான் ஒன்று கேட்கட்டுமா? உங்களுடைய  அக்கறைக்கும் அன்பிற்கும் பாத்திரமான... நீங்கள் முன்பு கூறியதைப் போன்ற ஒரு இல்லத்தரசி அல்ல நான் என்று நீங்கள் எப்படி தீர்மானித்தீர்கள்?''

“ஏன் அப்படி கேட்கிறீர்கள்? மேடம், நீங்கள் தனியாக இருந்தீர்கள். அந்த மனிதன் தாறுமாறாக நடந்தான். போதாததற்கு இரவு நேரம் வேறு. மேடம், நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.... ஒரு மனிதனின் கடமை...''

“இல்லை... இல்லை... அதற்கு முன்பு தெருவின் எதிர்பக்கத்தில் இருக்கும்போது... அப்போது நீங்கள் என்னை நெருங்கி வர முயற்சித்தீர்கள். இல்லையா?''

“ஓ... எதிர்பக்கத்திலா? அதை எப்படி கூறிப் புரியவைப்பது என்பதைப் பற்றி உண்மையிலேயே எனக்கு ஒரு வடிவமும் கிடைக்கவில்லை. இன்று எனக்கு பெரிய அளவில் சந்தோஷம் உண்டான ஒரு நாள். நான் பாடிக் கொண்டே நடந்தேன். நகரத்திற்கு வெளியே போய்விட்டேன். இந்த அளவிற்கு அதிகமான சந்தோஷத்தை நான் முன்பு எந்தச் சமயத்திலும் அடைந்ததே இல்லை. மேடம்... ஆனால் எனக்கு வெறுமனே தோன்றியிருக்கலாம். நான் அதை ஞாபகப்படுத்துவதற்காக மன்னிக்க வேண்டும். எனக்குத் தோன்றியது... மேடம், நீங்கள் அழுகிறீர்கள் என்று. என்னால்... என்னால்... அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது என்னுடைய இதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியது.

கடவுளே! மேடம், உங்களின் பெயரைச் சொல்லி கவலைப்படுவதற்கு எனக்கு உரிமை இல்லையா? மேடம், உங்களிடம் சகோதரனுக்கு உண்டாகக் கூடியதைப் போன்ற இரக்கம் உண்டானது பாவம் என்று கூறுகிறீர்களா? நான் இரக்கம் என்று கூறியதற்கு மன்னிக்க வேண்டும். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், மேடம், உங்களின் அருகில் வரவேண்டும் என்று எனக்கு திடீரென்று தோன்றிய ஆசையை ஒரு வரம்பு மீறிய விஷயம் என்று நினைக்கிறீர்களா?''

“நிறுத்துங்கள். இதற்குமேல் பேச வேண்டாம்.'' என்னுடைய கையை அழுத்தியவாறு அவள் சொன்னாள்: “குற்றம் என்னுடையது தான். அப்படி நடந்து கொண்டது நான்தானே? எனினும், உங்களைப் பற்றி மனதில் தோன்றிய அபிப்ராயம் தவறான ஒன்றல்ல என்பதைத் தெரிந்து கொண்டதில் நான் சந்தோஷப்படுகிறேன். இதோ நாம் வந்து சேர்ந்து விட்டோம். நான் இந்த வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். இங்கிருந்து ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைத்தால் போதும். நான் வரட்டுமா? நன்றி...''

“நாம்- நாம் இனி எந்தக் காலத்திலும் ஒருவரையொருவர் பார்க்க மாட்டோம் என்று கூறுகிறீர்களா? இந்த இடத்திலேயே எல்லா விஷயங்களும் முடிவடைந்து விட்டனவா?''

“இதோ பாருங்கள்...'' அந்த இளம்பெண் சிரித்துக் கொண்டே கூறினாள்: “முதலில் சில வார்த்தைகள் உங்களுக்குத் தேவைப்பட்டன. ஆனால், இப்போது... ஆனால், இதற்குமேல் நான் எதுவும் கூற மாட்டேன். ஒருவேளை, நாம் நாளை மீண்டும் ஒருவரையொருவர் பார்த்தாலும் பார்க்கலாம்.''

“நான் இங்கு நாளைக்கு வருவேன்.'' நான் சொன்னேன்: “மன்னிக்க வேண்டும். நான் இதற்குள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன்...''

“ஆமாம்... உங்களுக்கு பொறுமையே இல்லை. பிடிவாதம் கொஞ்சம் அதிகம்தான்...''

“தயவு செய்து இதைக் கொஞ்சம் கேளுங்கள்.'' நான் இடையில் புகுந்து சொன்னேன்: “நான் கூறக் கூடாதது எதையும் கூறிவிட்டால்,  மன்னிக்க வேண்டும். ஆனால்,என் விஷயம் அப்படித்தான். நாளை நான் இங்கு வந்தே ஆக வேண்டும். நான் ஒரு கனவு கண்டு கொண்டிருக்கும் மனிதன். இயல்பான வாழ்க்கை என்னிடம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதைப் போன்ற நிமிடங்கள் எனக்கு கிடைப்பது என்பது மிகமிக அரிதான ஒரு விஷயம். அதனால் என்னுடைய கனவுகளில் அவற்றைத் திரும்பத் திரும்ப கொண்டு வந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இரவு முழுவதும், ஒரு வாரம் முழுவதும், ஒரு வருடம் முழுவதும்- மேடம், நான் உங்களைப் பற்றி கனவு கண்டு கொண்டிருப்பேன். உண்மையாகவே நான் நாளை இதே இடத்திற்கு இதே நேரத்திற்கு வருவேன்.


முந்தைய நாளைப் பற்றி மனதில் நினைத்துப் பார்த்து ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருப்பேன். இந்த இடம் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடமாக ஆகி விட்டது. பீட்டர்ஸ்பர்க்கில் எனக்கு இதைப் போன்ற இரண்டு மூன்று இடங்கள் இருக்கின்றன. ஒருமுறை என்னுடைய நினைவுகள் என்னை அழவைக்கக்கூட செய்திருக்கின்றன- மேடம், நீங்கள் அழுததைப்போல. யாருக்குத் தெரியும்? ஒருவேளை, சற்று முன்பு நீங்கள் அழுதது உங்களின் நினைவுகளை நினைத்துப் பார்த்ததால் கூட இருக்கலாம். தயவு செய்து மன்னித்து விடுங்க. நான் மீண்டும் நினைத்துப் பார்க்காமல் கூறிவிட்டேன். ஒருவேளை, ஒரு காலத்தில் இந்த இடம் உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கலாம்.''

“சரி...'' அந்த இளம்பெண் கூறினாள்: “நான் நாளை பத்து மணிக்கு இங்கு வருவேன் என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வருவதை விலக்குவதற்கு இயலாது என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் இங்கே வந்தே ஆகவேண்டும் என்பதுதான் விஷயம். நான் உங்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன் என்று மனதில் கற்பனை பண்ணிக்கொள்ளாதீர்கள். என்னுடைய சொந்த காரணங்களுக்காக நான் இங்கு வந்தாக வேண்டியிருக்கிறது என்பதை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன். ஒரு விஷயம் மட்டும். அல்லது வெளிப்படையாகவே கூறுகிறேன்... உங்களுடன் சேர்ந்து வருவதில் எனக்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. முதல் காரணம்- இன்று உண்டானதைப்போல ஏதாவது தொந்தரவு உண்டாகலாம். ஆனால், அதுவல்ல விஷயம். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால்- உங்களைப் பார்ப்பதற்கு, உங்களுடன் சிறிது பேசுவதற்கு நான் விரும்புகிறேன். உங்களுக்கு என்னைப் பற்றி எந்தவொரு அபிப்ராயமும் தோன்றாது அல்லவா? நான் சொல்வது சரிதானே? நினைத்தபடியெல்லாம் உடன்பாடுகள் நடத்திக் கொண்டிருப்பவள் அல்ல நான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதற்குக் கூட நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால்... அது என்னுடைய ரகசியமாக இருக்கட்டும். அதே நேரத்தில், ஒரு நிபந்தனை இருக்கிறது.''

“நிபந்தனையா? சொல்லுங்கள். இப்போதே கூறுங்கள். நான் எப்படிப்பட்ட நிபந்தனைக்கும் சம்மதிப்பேன். நான் எதற்கும் தயார்.'' ஆனந்தக் கடலில் மூழ்கிய நான் உணர்ச்சி வசப்பட்டு சொன்னேன்: “நான் பொறுப்புணர்வுடனும் நீங்கள் கூறியபடியும் நீங்கள் விருப்பப்படுகிற மாதிரியும் நடந்துகொள்வேன். மேடம், என்னை தெரியுமல்லவா?''

“தெரிந்து கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால்தானே நான் உங்களை நாளை வருமாறு அழைக்கிறேன்?'' அந்த இளம்பெண் குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே சொன்னாள்: “எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். ஆனால், ஆனால், ஒரு நிபந்தனையின்படி வந்தால் போதும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து நான் கூறுவதன்படி பின்பற்றி நடக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். நான் எந்த அளவிற்கு வெளிப்படையாக மனதைத் திறந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பார்த்தீர்கள் அல்லவா? என்னை காதலிக்கக் கூடாது... உண்மையாகவே கூடாது... நான் உங்களுடைய சினேகிதியாக இருப்பதற்குத் தயார். இதோ என்னுடைய கை... ஆனால், என் மீது காதல் கொண்டு விடாதீர்கள் என்று நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.''

“நான் ஆணையிட்டுக் கூறுகிறேன்.'' அவளுடைய கையைப் பிடித்து அழுத்திக்கொண்டே நான் சொன்னேன்.

“ஆணையிட்டுக் கூற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வெடி மருந்தைப்போல வெடித்துச் சிதறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் இப்படிக் கூறுகிறேன் என்பதற்காக பதைபதைப்பு அடையக் கூடாது. என்னுடைய நிலையை நீங்கள் அறிந்திருந்தால்....

எனக்கும் பேசுவதற்கு யாருமில்லை. அறிவுரை கூறுவதற்கு யாருமில்லை. உண்மையாகவே அறிவுரை கூறுபவர்களைத் தேட வேண்டிய இடம் தெருவில் அல்ல என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர் எதிர். உங்களை நெருக்கமாகத் தெரியும் என்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. இருபது வருடங்களாக நாம் சினேகிதர்களாக இருந்ததைப்போல... நீங்கள் வார்த்தை தவற மாட்டீர்கள் அல்லவா?''

“பாருங்கள்... ஆனால், இடையில் உள்ள மணித்துளிகளை நான் எப்படி கடத்தப் போகிறேன் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை.''

“சுகமாக உறங்குவதுதான் நல்லவழி. நான் புறப்படுகிறேன். நான் உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன் என்ற விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும்- சகோதரத்துவம் நிறைந்த கனிவுக்குக்கூட- காரணம் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று நீங்கள் கூறியது மிகவும் சரியானது. அதை அந்த அளவிற்கு அழகாகக் கூறியதால் தான் உங்களிடம் என்னுடைய மனதில் உள்ள விஷயங்களைக் கூறலாம் என்று உடனடியாகத் தீர்மானித்தேன்.''

“கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு கூறுங்கள். ஆனால், என்ன கூறப் போகிறீர்கள்?''

“நாளை கூறுகிறேன். அதுவரை அது ஒரு ரகசியமாகவே இருக்கட்டும். உங்களுக்கும் அதுதான் நல்லது. கற்பனையிலாவது அது ஒரு காதல் கதையைப்போல இருக்குமல்லவா? ஒருவேளை, நாளை நான் உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன் என்று வரலாம். சில நேரங்களில் சொல்லவில்லை என்றும் வரலாம். முதலில் உங்களிடம் பேசுகிறேன். அப்போது ஒருவரையொருவர் அதிகமாக நன்கு தெரிந்துகொள்ள முடியும்.''

“சரிதான்... மேடம், நான் நாளை உங்களிடம் என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கூறுகிறேன். ஆனால், என்ன இது! எனக்கு ஏதோ அற்புதம் நிகழ்வதைப்போல தோன்றுகிறது. கடவுளே, நான் எங்கிருக்கிறேன்? ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா? வேறு யாரும் செய்வதைப்போல கோபப்பட்டு, ஆரம்பத்திலேயே என்னை விரட்டியடிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? மேடம், இரண்டே இரண்டு நிமிடங்களில் நீங்கள் எனக்கு என்றென்றைக்குமாக சந்தோஷத்தைத் தந்திருக்கிறீர்கள். ஆமாம்... சந்தோஷம்! ஒருவேளை... மேடம், நீங்கள் என்னுடைய சந்தேகங்களை நீக்கிவிட்டு, எனக்கு என்மீது ஈடுபாடு உண்டாக்கி செயல்படும்படி செய்துவிட்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்? ஒரு வேளை, நான் இடையில் அவ்வப்போது அப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான செயல்களுக்கு அடிபணியவும் செய்யலாம். எது வேண்டுமானாலும் நடக்கட்டும்... நாளை நான் உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுகிறேன். மேடம், நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வீர்கள்.... எல்லாவற்றையும்...''

“அப்படியென்றால் அப்படியே நடக்கட்டும்... நீங்கள்தான் ஆரம்பிக்க வேண்டும்.''

“அதுதான் விருப்பமென்றால் அப்படியே நடக்கட்டும்.''

நாங்கள் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தோம். இரவு முழுவதும் நான் நடந்து திரிந்தேன். வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவிற்கு நான் சந்தோஷத்தில் மூழ்கியிருந்தேன். நாளை வரை...


இரண்டாவது இரவு

“பார்த்தீர்களா... நீங்கள் பொழுதைக் கழித்து விட்டீர்களே?'' என்னுடைய கைகள் இரண்டையும் பிடித்துக் குலுக்கிக் கொண்டே அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு சொன்னாள்.

“நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. இந்த நாளை நான் எப்படிக் கழித்தேன் என்ற விஷயம்... மேடம்... உங்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.''

“முடியும்... முடியும்... ஆனால், நாம் விஷயத்திற்கு வருவோம். நான் இங்கு எதற்காக வந்திருக்கிறேன் என்று தெரியுமா? நேற்று இரவைப் போல தமாஷாக பேசிக் கொண்டிருப்பதற்காக வரவில்லை. மேலும் அதிகமாக அறிவுப்பூர்வமாக நாம் நடந்துகொள்ள வேண்டும். நேற்று இரவு இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் நான் நீண்ட நேரம் சிந்தித்தேன்.''

“ஆனால், நாம் எப்படி மேலும் அதிகமாக அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும்? நான் தயார்தான். ஆனால், உண்மையாகக் கூறுவதாக இருந்தால் என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமாக நடைபெற்ற சம்பவம் இதுதான்!''

“உண்மையாகவா? முதல் விஷயம்- என்னுடைய கையை இப்படி இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இரண்டாவது விஷயம்- நான் இன்று நீண்ட நேரம் உங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விருப்பப்படுகிறேன்.''

“அதற்குப் பிறகு என்ன நினைத்தீர்கள்?''

“நினைத்த விஷயமா? நாம் முதலிலிருந்தே தொடங்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். காரணம்- எனக்கு உங்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதையும், ஒரு குழந்தையைப்போலவும் மடத்தனமான பெண்ணைப்போலவும் நேற்று நான் நடந்து கொண்டேன் என்பதையும் இன்று காலையில் நான் புரிந்து கொண்டேன். குற்றம் என்னுடைய விசாலமான மனதால் உண்டானது என்பதை உணரமுடிந்தது. அதாவது சொந்த நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது நாம் எப்போதும் செய்வதைப்போல நான் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதில் போய் சேர்ந்துவிட்டேன். என்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் உறுதியாக முடிவெடுத்தேன். ஆனால்,வேறு யாரிடமும் கேட்பதற்கு வழி இல்லாத காரணத்தால் நீங்களே என்னிடம் எல்லாவற்றையும் கூற வேண்டும்- எல்லா ரகசியங்களையும். சொல்லுங்கள்... நீங்கள் எப்படிப்பட்டவர்? சீக்கிரமாக பதில் சொல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கைக் கதையைக் கேட்கிறேன்.''

“என் கதையா?'' நான் பதைபதைப்புடன் கேட்டேன்: “என்னுடைய கதையையா? எனக்கு ஒரு கதை இருக்கிறது என்று உங்களிடம் யார் கூறினார்கள்? எனக்கு கதையே இல்லை.''

“கதை என்ற ஒன்று இல்லையென்றால், பிறகு எப்படி வாழ்ந்தீர்கள்?'' ஒரு குலுங்கல் சிரிப்புடன் அவள் இடையில் புகுந்து கேட்டாள்.

“என் வாழ்க்கைக்கு எந்தவொரு கதையும் இல்லை. நான் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்- தனி மனிதனாக. முற்றிலும் தனியாக. தனி மனிதனாக என்றால் என்ன என்று தெரியுமா?''

“தனியாகவா? அது எப்படி? நீங்கள் யாரையும் பார்த்ததே இல்லை என்கிறீர்களா?''

“அப்படி இல்லை. உண்மையாகவே நான் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். எனினும், நான் தனிமனிதன்தான்.''

“நீங்கள் யாரிடமும் பேசுவது இல்லையா?''

“உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- இல்லை.''

“நீங்கள் எப்படிப்பட்டவர்? தயவு செய்து சொல்லுங்கள். ஒரு நிமிடம்... எனக்குப் புரிந்துவிட்டது என்று தோன்றுகிறது. ஒரு வேளை, உங்களுக்கு ஒரு பாட்டி இருக்கலாம். எனக்கு இருப்பதைப் போல... அவளுடைய கண்களுக்குப் பார்வை சக்தி இல்லை. என்னை வெளியே எங்கும் போவதற்கு அனுமதி தந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. அதனால் உரையாட வேண்டும் என்ற பழக்கத்தையே நான் மறந்து போய்விட்டேன் என்றுதான் கூற வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் நான் ஏதோ குறும்புத்தனமாக நடந்துவிட்டேன். என்னை அடக்கி நிறுத்தி வைப்பதற்கு இயலவில்லை என்ற விஷயம் பாட்டிக்குப் புரிந்துவிட்டது. அவள் என்னை அருகில் அழைத்து, எங்களுடைய ஆடைகளை ஒன்றாக இணைத்து ஒரு "பின்”னைக் கொண்டு குத்தி வைத்தாள். அன்றிலிருந்து நாங்கள் அந்த "பின்"னால் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டு அதே இடத்தில் இருப்போம். கண் பார்வை தெரியாவிட்டாலும் அவள் ஒரு காலுறையைப் பின்னிக் கொண்டிருப்பாள். பின்னிக்கொண்டோ எதையாவது வாசித்து கேட்கச் செய்து கொண்டோ நானும் அவளுக்கு அருகில் இருந்தே ஆக வேண்டும். ஒருத்தியை இரண்டு வருடங்கள் முழுவதும் "பின்”னைக் குத்தி உட்கார வைப்பது என்றால்...? எந்த அளவுக்கு வினோதமான ஒரு பழக்கம் அது!''

“கடவுளே! என்ன ஒரு கஷ்டம்! ஆனால், இல்லை... எனக்கு அப்படியொரு பாட்டி இல்லை...''

“அப்படி யாரும் இல்லையென்றால், பிறகு எதற்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.''

“நான் கேட்கட்டுமா? நான் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?''

“உண்மையாகவே!'' உண்மையான அர்த்தத்தில்..?''

“சரி... கூறுகிறேன். நான் ஒரு டைப்பான மனிதன்.''

“டைப்பா? என்ன டைப்?'' என்று உற்சாகத்துடன் கேட்டவாறு அந்த இளம்பெண் சந்தோஷத்துடன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ஒரு வருடமாக அவளுக்கு சிரிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைப்போல தோன்றியது. “நீங்கள் நல்ல ஒரு ரசிகனாக இருக்கிறீர்களே? பாருங்கள்... அதோ ஒரு பெஞ்ச் கிடக்கிறது. நாம் அங்கு சென்று உட்காருவோம். இங்கு யாரும் வர மாட்டார்கள். நம்முடைய உரையாடலை யாரும் கேட்கப் போவதில்லை. உங்களுடைய கதையை இப்போதே கூற ஆரம்பியுங்கள். நீங்கள் என்னதான் கூறினாலும், உங்களுக்கு ஒரு கதை இருக்கிறது என்பது மட்டும் உண்மை. நீங்கள் அதை ரகசியமாக வைத்திருக்கிறீர்கள். அவ்வளவுதான். முதலிலேயே கேட்டுவிடுகிறேன். டைப் என்றால் என்ன?''

“டைப்பா? வேண்டிய அளவுக்கு சிரிப்பதற்கான வாய்ப்பை அளிக்கக்கூடிய ஒரு அரைப் பைத்தியத்தைத்தான் டைப் என்று கூறுவார்கள்.'' அவளுடைய குழந்தைத்தனமான சிரிப்பில் பங்கு பெற்றுக்கொண்டு நான் சொன்னேன்: “அப்படிப்பட்ட ஒரு குணத்தைக் கொண்டவன்... அது இருக்கட்டும்... ஒரு கனவு காணும் மனிதன் என்று எடுத்துக் கொண்டால் அது யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

“கனவு காணும் மனிதனா? சரிதான்... யாருக்குத்தான் தெரியாது? நானே ஒரு கனவு காணும் பெண்தான். பாட்டியின் அருகில் அமர்ந்திருக்கும்போது, சில நேரங்களில் என் தலைக்குள் எப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றன? நான் கனவுகளைக் காண ஆரம்பிப்பேன். அவை என்னை வெகு தூரத்திற்குக் கொண்டு சென்றுவிடும். நான் ஒரு சைனாவைச் சேர்ந்த இளவரசனை திருமணம் செய்துகொள்வதைப்போலகூட கனவில் கண்டிருக்கிறேன். சில நேரங்களில் கனவு காண்பவளாக இருப்பதுகூட நல்லதுதான். குறிப்பாக சிந்திப்பதற்கு வேறு ஏதாவது விஷயங்கள் இருக்கும்போது.'' மேலும் அதிகமான மிடுக்கு கலந்த குரலில் அந்த இளம்பெண் சொன்னாள்.


“மிகவும் நல்லது... மேடம், ஒரு சீன இளவரசனை திருமணம் செய்து கொள்வதைப்போல கற்பனையில் பார்த்திருக்கும் உங்களுக்கு நான் கூறுவது நன்றாகவே புரியும். இதோ கேளுங்கள்... ஆனால், இருங்கள் வருகிறேன்... மேடம், இதுவரை நான் உங்களின் பெயரைக்கூட தெரிந்துகொள்ளவில்லையே!''

“இப்போதாவது கேட்டீர்களே! இவ்வளவு சீக்கிரம் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றுகிறதா?''

“நல்ல விஷயம்! நான் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தையே மறந்துவிட்டேன். அது இல்லாமலே நான் தேவையான அளவுக்கு சந்தோஷம் உள்ளவனாக இருந்தேன்.''

“நாஸ்தென்கா என்பதுதான் என்னுடைய பெயர்.''

“நாஸ்தென்கா! அவ்வளவுதானா?''

“அவ்வளவுதானாவா? ஏன்... போதாதா? அதற்கும்மேலே வேண்டுமா?''

“போதாது என்றா சொன்னேன்? போதும்... போதும்... தாராளம்... நாஸ்தென்கா... மேடம், நீங்கள் ஒரு இரக்க குணம் கொண்ட பெண் என்று தோன்றுகிறது. காரணம்- ஆரம்பத்திலேயே நாஸ்தென்கா என்று அழைக்க என்னை அனுமதித்து விட்டீர்களே!''

“இருக்கலாம்... சரி... கூறத் தொடங்குங்கள்.''

“நாஸ்தென்கா, இந்த சுவாரசியமான கதையைக் கேளுங்கள்.''

நான் அவள் அருகில் போய் உட்கார்ந்தேன். மிகவும் கம்பீரமான ஒரு உணர்ச்சியை முகத்தில் வரவழைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்து படித்த ஒரு பகுதியைக் கூறுவதைப்போல நான் கூற ஆரம்பித்தேன்.

“பீட்டர்ஸ்பர்க்கில் வினோதமான சில மூலைகள் இருக்கக் கூடிய விஷயம்... நாஸ்தென்கா, உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நகரத்தின் எஞ்சிய பகுதிகளில் முழுமையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சூரியன், அந்த இடங்களை எந்தச் சமயத்திலும் எட்டிப் பார்ப்பதே இல்லை என்று தோன்றும். அங்கு பிரகாசித்துக் கொண்டிருப்பது இன்னொரு சூரியன். புதிய ஒரு சூரியன்... அது எல்லாவற்றின்மீதும் மாறுபட்ட, விசேஷமான, ஒரு பிரகாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும். வாழ்க்கையுடன் எந்தவொரு சாயலும் இல்லாமல் அந்த தூரத்து மூலைகளின் விஷயங்கள் இருக்கும். இந்த சிரமங்கள் நிறைந்த காலத்தில் இந்த கிரகத்தில் அல்ல- வினோதமான ஏதோ கற்பனை உலகில் நிலவக் கூடிய ஒரு வாழ்க்கை... இந்த வாழ்க்கையை எடுத்துக்கொண்டால்- முற்றிலும் கற்பனை நிறைந்ததாகவும், தீவிரமான கொள்கைகளைக் கொண்டதாகவும், மோசமான விஷயங்கள் நிறைந்த சர்வசாதாரணமானதாகவும், நம்பமுடியாத அளவுக்கு தகுதிகள் கொண்டதாகவும் அது இருந்தது. கஷ்டம் என்றுதான் கூற வேண்டும் நாஸ்தென்கா.''

“கடவுளே... என்ன ஒரு ஆரம்பம்! நான் என்னவெல்லாம் கேட்கப் போகிறேனோ?''

“நாஸ்தென்கா... (அந்தப் பெயரை எத்தனை முறை அழைத்தாலும் போதும் என்று தோன்றாது என்று தோன்றுகிறது. நாஸ்தென்கா, அந்தத் தொலைவில் இருக்கும் மூலையில் சில வினோதமான மனிதர்கள் வசிக்கிறார்கள்- கனவில் வாழ்பவர்கள். ஒரு கனவு காணும் மனிதன்- அந்த வார்த்தைக்கான ஆழமான விளக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், கூறுகிறேன். உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- அவன் ஒரு மனிதன் அல்ல. ஒரு இரண்டும் கெட்டவன் என்று கூறக்கூடிய படைப்பு... பகல் வெளிச்சத்திலிருந்து ஒளிந்திருக்கிறோம் என்பதைப்போல அந்தப் பிறவி யாருக்கும் தெரியாத ஏதாவது ஒரு மூலையில் போய் இருந்து கொண்டிருப்பான். தன்னுடைய இருப்பிடத்திற்குள் நுழைந்துவிட்டால், அதற்குப் பிறகு அவன் ஒரு ஓணானைப்போல அந்தச் சூழலுடன் இரண்டறக் கலந்து விடுவான். அதாவது- இந்த விஷயத்தில் அவனுக்கு மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய இன்னொரு உயிரினத்துடன்தான் மிகுந்த ஒற்றுமை... வீடும் உயிரும் ஒன்றாகச் சேர்ந்த நிலையில் இருக்கும் ஆமையுடன்... பச்சை நிற சாயம் பூசப்பட்டதும் அழுக்கு படிந்ததும் புகை பிடித்துப் பார்க்கப் பிடிக்காத அளவுக்கு கறுத்துப் போய் காணப்படுவதுமான தன்னுடைய நான்கு சுவர்களையும் அவன் இந்த அளவுக்கு விரும்புவதற்கு என்ன காரணம் என்று தோன்றுகிறது? அவனுடைய குறைவான நண்பர்களில் ஒருவன் (இறுதியில் அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை என்ற நிலை உண்டாகிறது) அவனை வந்து பார்க்கும்போது, நம்முடைய வினோத மனிதன் தன்னைப் பார்க்க வந்திருக்கும் விருந்தாளியை இந்த அளவுக்கு பதைபதைப்புடன் வரவேற்பதற்குக் காரணம் என்ன? அவனுக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? அவனுடைய முகத்தில் ஏன் இந்த மாறுதல்கள்? அதைப் பார்த்தாலே தோன்றும்- தன்னுடைய நான்கு சுவர்களுக்குள் அவன் ஏதோ பாதகமான செயலைச் செய்திருக்கிறான் என்பது. அதாவது- கள்ள நோட்டுகளை அச்சிடுகிறான் என்பது. அதுவும் இல்லாவிட்டால் தன்னுடைய இறந்துபோன நண்பனான கவிஞரின் படைப்பைப் பிரசுரிப்பது தன்னுடைய தலையாய கடமை என்று நினைப்பதாகக் கூறிக்கொண்டு, பெயர் எழுதப்படாத ஒரு கடிதத்துடன் அனுப்புவதற்காக சில வார்த்தைகளை எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது... சொல்லுங்கள், நாஸ்தென்கா. அவர்களுடைய உரையாடல் ஏன் இந்த அளவுக்கு பொய்யானதாக இருக்கிறது? வேறு இடங்களில் ஒரு ரசிகனாகவும், நகைச்சுவையாக பேசக் கூடியவனாகவும், பெண்களைப் பற்றியும், சுவாரசியமான அப்படிப்பட்ட பிற விஷயங்களைப் பற்றியும் பேசுவதற்கு விருப்பப்படுபவனுமான விருந்தாளி, பதைபதைப்பு அடைந்து சிரிக்கவோ தமாஷாகப் பேசவோ செய்யாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? தன்னுடைய முதல் வருகையில் இருக்கும் (இது இறுதி வருகையாகக்கூட இருக்கலாம். காரணம்- அவன் இதற்கு மேல் வர மாட்டான் என்பது உண்மை) இந்த சமீபகால நண்பன் எந்த அளவுக்கு கூர்மையான அறிவைக் கொண்ட மனிதனாக இருந்தாலும் (அப்படி இருக்கும்பட்சம் என்று அர்த்தம்) தான் பார்க்க வந்திருக்கும் மனிதனின் பதைபதைப்பு நிறைந்த முக வெளிப்பாட்டைப் பார்க்கும்போது, முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு நிற்பதும், அதே நேரத்தில் அங்கிருப்பவன் இடைவெளியைச் சரி செய்து நிலைமையைச் சீராக்குவதற்கும் சமூக மரியாதைகள் தனக்கும் தெரியும் என்று காட்டுவதற்கும் பெண்களைப் பற்றி ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு, அப்படியாவது தன்னைப் பார்ப்பதற்காக தவறுதலாக வந்திருக்கும் அந்த அப்பாவி மனிதனின் அன்பைப் பெறுவதற்காக செய்த சாகச முயற்சிகள் அனைத்தும் வீண் என்பதை உணர்ந்து தன்னுடைய செயல்களில் முழுமையாக மூழ்கி, சமநிலை தவறி, திகைத்துப் போய் நின்று கொண்டிருப்பதற்கும் காரணம் என்ன? மிகவும் முக்கியத்துவமற்ற- ஒரு இல்லாத காரியத்திற்கு போக வேண்டியதிருக்கிறது என்பதை திடீரென்று நினைத்துக் கொண்டு, பார்க்க வந்திருக்கும் விருந்தாளி தன்னுடைய நண்பனின் வெப்பமான கைப்பிடியிலிருந்து தன் கையைப் பின்னோக்கி இழுத்து, தொப்பியை அணிந்து கொண்டு வேகமாக வெளியேறிச் செல்வதும், அங்கிருக்கும்  மனிதன் மனதிற்குள் வேதனைப்பட்டு கவலையை வெளிக்காட்டுவதும், இந்த மோசமான நிலைமை மாற வேண்டும் என்பதற்காக முடிந்த வரையில் முயற்சிகள் செய்வதும் எதற்காக? அறைக்கு வெளியே வந்தவுடன், வந்திருந்த விருந்தாளி குலுங்கிக் குலுங்கி சிரிப்பதும் இனிமேல் எந்தச் சமயத்திலும் அந்த வினோதமான உயிரினத்தை வந்து பார்க்கப் போவதே இல்லை என்று அந்த நேரத்தில் அதே இடத்தில் வைத்து சபதம் செய்வதும் எதற்காக?


அந்த வினோதமான பிறவி உண்மையிலேயே நல்ல ஒரு மனிதன் என்ற விஷயம் அந்த மனிதனுக்குத் தெரியும். எனினும், தன்னுடைய எண்ணத்தைச் சிறிது அவிழ்த்து விடாமல் இருக்க அவனால் முடியவில்லை. அதாவது- சற்று கடந்து சென்ற ஒரு ஒப்பிடலை நோக்கி அவனுடைய கவனம் செல்கிறது.

உரையாடும் நேரத்தில் தான் பார்க்க வந்திருக்கும் மனிதனின் முக வெளிப்பாட்டையும், ஒரு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பூனைக் குட்டியின் முக வெளிபாட்டையும் அவன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். சில குட்டிகள் மோசமான பாதைகளின் மூலம் யாரென்று தெரியாத எல்லாரையும் பயமுறுத்தி, தொல்லைகள் கொடுத்து, தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, ஓடிச்சென்று ஒரு நாற்காலிக்குக் கீழே மறைந்து கொள்ளும் பூனைக்குட்டி அது. உரோமங்கள் சிலிர்த்து நிற்க, சீறிக் கொண்டே தன்னுடைய இரண்டு உள்ளங்கைகளையும் கொண்டு, பரிதாபமான பிஞ்சு முகத்தை நக்கித் துடைத்துக் கொண்டே ஒரு மணி நேரம் முழுவதும் அது அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டியதிருந்தது. அதற்குப் பிறகு நீண்ட நேரம் அது உலகத்தையே கூர்ந்து பகையுணர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது. இரக்க குணம் கொண்ட வேலைக்காரி, இல்லத் தலைவனின் சாப்பாட்டு மேஜையிலிருந்து அதற்காக எடுத்து வைத்த எச்சில் பொருட்களின் மீதுகூட அதற்குப் பகைதான்.''

“நான் ஒரு விஷயத்தைக் கூறட்டுமா?'' இவ்வளவு நேரம் நான் கூறியதை கண்களை விரித்துக் கொண்டு, உதடுகளை மலரச் செய்து, ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நாஸ்தென்கா இடையில் புகுந்து சொன்னாள்: “இவையெல்லாம் எதற்காக நடந்தன என்பதையோ, நீங்கள் என்னிடம் இந்த வினோதமான கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள் என்பதையோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. இந்த அனுபவங்கள் அனைத்தும் முதலிலிருந்து கடைசி வரை உங்களுக்கு நேர்ந்திருப்பவை.''

“சந்தேகமேயில்லை.'' முழுமையான மிடுக்குடன் நான் சொன்னேன்.

“அப்படியென்றால், மீதி விஷயங்களையும் கூறுங்கள்.'' அவள் சொன்னாள்: “காரணம்- இவை அனைத்தும் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.''

"கதாநாயகன்... அதாவது- நான்... காரணம்- இந்தக் கதையின் நாயகன் நான்தான். சாதுவான இந்த நான்- அந்த தூரத்து மூலையில் என்ன

செய்து கொண்டிருந்தேன் என்பதை மேடம், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தானே நாஸ்தென்கா? என்னுடைய நண்பனின் எதிர்பாராத வருகை என்னுடைய சமநிலையைத் தவறச் செய்ததும், ஒருநாள் முழுவதையும் என்னை பதைபதைப்பிற்குள்ளாக்கியதும் ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையா? திடீரென்று கதவைத் திறந்ததும், நான் அதிர்ச்சியடைந்து பதைபதைப்பு அடைந்ததற்கும், என்னைப் பார்க்க வந்த மனிதனுக்குத் தரவேண்டிய வரவேற்பைத் தருவதற்கு இயலாமல் போனதற்கும் என்னுடைய உபசார மரியாதை என்ற விஷயத்தின் கனத்தில் சிக்கி, அவமானப்பட்டு கீழே விழுந்ததற்கும் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையா?''

“ஆமாம்... அதேதான்...'' நாஸ்தென்கா கூறினாள். “நான் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம் அதுதான். நீங்கள் அதை அழகாகக் கூறுகிறீர்கள். எனினும் சற்று கவர்ச்சியைக் குறைத்துக் கூறக் கூடாதா? காரணம்- ஏதோ புத்தகத்தை வாசிக்கச் செய்து கேட்பதைப்போல தோன்றுகிறது.''

“நாஸ்தென்கா...'' சிரிப்பு வந்ததை அடக்கிக் கொண்டே நான் மிடுக்கும், கறார் தன்மையும் நிறைந்த குரலில் சொன்னேன்: “அன்பான நாஸ்தென்கா- என்னுடைய பேச்சு அழகாக இருந்தது என்ற விஷயம் எனக்கு தெரியும். ஆனால், வேறு மாதிரி என்னால் பேச முடியாது என்பதைக் கூறுவதற்காக நான் வருத்தப்படுகிறேன். இந்த நிமிடத்தில் நாஸ்தென்கா... நான் சாலமன் மன்னனின் பிணத்தைப்போல... ஏழு முத்திரைகள் வைத்து மூடப்பட்ட ஒரு பெட்டிக்குள் அதை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். இறுதியில் அது ஏழு முத்திரைகளையும் உடைத்தெறிந்துவிட்டது. அன்பான நாஸ்தென்கா, நீண்ட ஒரு பிரிவுக்குப் பிறகு நாம் இப்போது மீண்டும் சந்தித்திருக்கிறோம் அல்லவா? மேடம், உங்களை எனக்கு எவ்வளவோ காலமாகத் தெரியும் நாஸ்தென்கா, நீண்ட நாட்களாக நான் ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் தேடிக் கொண்டிருந்தது, உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன் என்பதற்கும் நம்முடைய இந்தச் சந்திப்பு விதியின்படி நடக்கிறது என்பதற்குமான அடையாளம்தான் அது. என்னுடைய தலைக்குள் ஓராயிரம் மூடப்பட்டிருந்த விஷயங்கள் பிளந்து திறக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் வார்த்தைகளை வெளியே பாய்ந்தோடுவதற்கு அனுமதிக்கவில்லையென்றால், எனக்கு மூச்சு அடைக்க ஆரம்பித்துவிடும். அதனால்... நாஸ்தென்கா, நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டாம். நான் கூறுவதை அமைதியாகவும் கவனத்துடனும் கேளுங்கள். இல்லாவிட்டால் நான் பேச மாட்டேன்.''

“அய்யோ... கூடாது. தயவு செய்து பேச்சை ஆரம்பியுங்கள். நான் ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.''

“சரி... தொடர்ந்து கூறுகிறேன். என்னுடைய அன்புத் தோழியான நாஸ்தென்கா, எனக்கு என்னுடைய ஒரு நாளில் குறிப்பாக பிரியமான ஒரு மணி நேரம் இருக்கும். அன்றைய வேலைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக செய்து முடித்துவிட்டு உணவு சாப்பிடுவதற்கோ சிறிய அளவில் தூங்குவதற்கோ ஒவ்வொருவரும் தங்களுடைய வீடுகளுக்கு வேக வேகமாக செல்லக்கூடிய நேரமது, அப்போது அந்த சாயங்கால வேளையிலும் இரவிலும் எஞ்சியிருக்கும்  ஓய்வு நேரம் முழுவதையும் எப்படிப்பட்ட பொழுதுபோக்கு விஷயங்களில் கழிக்கலாம் என்பதைச் சிந்தித்துக்கொண்டே அவர்கள் நடப்பார்கள். நம்முடைய கதாநாயகனும் சிரமப்பட்டு செலவழித்த ஒரு பகலுக்குப் பின்னால் மற்றவர்களுடன் சேர்ந்து வேகமாக நடந்து செல்வான். ஆனால், ஆனந்தத்தை வெளியே காட்டும் ஒரு தனிப்பட்ட பிரகாசம் அவனுடைய வெளிறிப்போன, ஏறக்குறைய களைத்துப் போன முகத்தில் தெரியும். செயின்ட் பீட்டாஸ்பர்க்கின் குளிர்ச்சியான வானத்தில் மறைந்து கொண்டிருக்கும் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருப்பதை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். ஆனால், அவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று நான் கூறுவது பொய். அவன் அதை கவனிப்பதில்லை. அலட்சியமாக இருப்பவனைப்போல, களைத்துப்போய்விட்டவனைப் போல, ஆர்வம் உள்ள வேறு ஏதோ விஷயத்தில் மூழ்கிவிட்டவனைப் போல, இந்த உலகத்தின் சூழலால் தனக்கு அளிக்க முடிந்தது- சாதாரண ஒரு நொடி மட்டுமே நீடித்து இருக்கக் கூடிய ஒரு குறிப்பிடத்தக்க தருணம் மட்டுமே என்ற நினைப்புடன் அவன் அதை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மறுநாள் வரை எந்தவொரு காரியமும் தொல்லைகள் தரப்போவதில்லை என்பதால் அவன் சந்தோஷத்துடன் இருந்தான். வகுப்பறையை விட்டு வெளியேறிச் செல்வதற்கு அனுமதி கிடைத்த, விரும்பக்கூடிய விளையாட்டுகளிலும் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவதற்காகத் திறந்து விடப்பட்ட ஒரு பள்ளிக்கூட சிறுவனைப்போல அவன் மகிழ்ச்சி நிறைந்த சிந்தனைகளில் மூழ்கி விட்டிருந்தான்.


அவனைச் சற்று பாருங்கள், நாஸ்தென்கா... அவனுக்கு உண்டாகக் கூடிய சந்தோஷம் அவனுடைய பலவீனமான நரம்புகளுக்கும் ஆரோக்கியமற்ற உணர்வுகளுக்கும் நல்லது செய்கிறது என்பதை உடனடியாகப் பார்க்க முடியும். இப்போது அவன் சிந்தனையில் மூழ்கியிருக்கிறான்.

அவன் சிந்தித்துக் கொண்டிருப்பது உணவைப் பற்றித்தான் என்று தோன்றுகிறதா? இல்லாவிட்டால் சாயங்கால பொழுதுபோக்குகளைப் பற்றியா? அவன் யாரை இப்படி கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்? சுறுசுறுப்பான குதிரைகள் இழுத்துக்கொண்டு தோன்றி மறைகிற வண்டியில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணை வணங்கும்... கம்பீரமான முக வெளிப்பாட்டுடன் நின்று கொண்டிருக்கும் மனிதனையா? இல்லை... நாஸ்தென்கா... இந்த மாதிரியான மிகவும் சாதாரணமான காரியங்களில் இப்போது அவனுக்கு என்ன ஆர்வம்? தனக்கென்றிருக்கும் தனி உலகத்தின் செல்வத்தைக் கொண்டு பணக்காரனாக இருப்பவன் அவன். திடீரென்றுதான் அவனுக்கு இந்த செல்வம் வந்து சேர்ந்தது. மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் இறுதி கீற்றுகள் அவனுடைய இதயத்தை உற்சாகப்படுத்திக்கொண்டும், அதில் எவ்வளவோ உணர்வுகளை எழுப்பிவிட்டுக்கொண்டும் அவனுடைய கண்களுக்கு முன்னால் சந்தோஷத்துடன் மின்னிப் பிரகாசித்துக் கொண்டிருந்தது என்றால் அது வெறுமனே அல்ல. தான் நடந்து செல்லும் சாலையைக்கூட அவன் கவனிப்பதில்லை. ஒரு நிமிடத்திற்கு முன்பு எடுத்துக் கொண்டால்... அப்போதைய மிகவும் சாதாரணமான காரியங்கள் கூட அவனுடைய கண்களில் தெரிந்து கொண்டிருந்தன. அன்பான நாஸ்தென்கா, ஷுக்கோவ்ஸ்கியின் மொழியில் கூறுவதாக இருந்தால் "கற்பனை தேவதை” தன்னுடைய கைகளில் தங்க நூல்களை விருப்பம்போல சுற்றிக்கொண்டு அவனுக்காக கனவுகளை நெய்யத் தொடங்கியிருக்கிறது. இனம்புரியாத மாயத்தன்மை நிறைந்த ஒரு வாழ்க்கையைப் பற்றிய கனவுகளை யாருக்குத் தெரியும்? ஒருவேளை, அவன் வீட்டுக்கு நடந்து செல்லும் கருங்கற்கள் போடப்பட்ட மிக அருமையான நடைபாதையிலிருந்து, மந்திர சக்தி கொண்ட தன்னுடைய கையால் அவள் அவனை பளிங்குகளாலான ஏழாவது சொர்க்கத்திற்குக் கொண்டு செல்லலாம். நீங்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்றோ, எந்தெந்த தெருக்களின் வழியாக அவன் நடந்து வந்தான் என்றோ திடீரென்று கேட்டால், ஒருவேளை அவனுக்கு எதுவுமே ஞாபகத்தில் இருக்காது என்ற நிலைகூட வரலாம்- எங்கு இருந்தோம் என்பதோ எங்கு இருக்கிறோம் என்பதோ எதுவுமே... பதைபதைத்துப்போய், முகம் சிவந்து அவன் தன்னுடைய மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதாவதொன்றைச் செய்வான் என்பது மட்டும் உண்மை. அதனால்தான் மிகவும் மதிக்கத்தக்க ஒரு வயதான பெண் நடைபாதையின் நடுவில் வைத்து அவனை மரியாதையுடன் தடுத்து நிறுத்தி வழி கேட்கும்போது, அவன் நடுங்கிப் போய் விடுகிறான். பதைபதைப்புடன் நான்கு திசைகளிலும் பார்த்துக் கொண்டே சத்தம் போட்டுக் கத்த ஆரம்பிக்கிறான். கோபத்திற்கு ஆளாகி, முகம் கறுத்து, அவன் கால்களை நீட்டி வைத்து நடக்கிறான். அவனைப் பார்த்து புன்னகை செய்து கொண்டே கடந்து செல்லும்போது திரும்பிப் பார்க்கும் வழிப்போக்கர்களைப் பற்றியோ, பயந்து போய் அவனுக்கு வழி உண்டாக்கிக் கொடுக்கும், அதே நேரத்தில்- அதற்குப் பிறகு அவனுடைய சிந்தனை கலந்த புன்சிரிப்பையும் கைகளால் காட்டும் சைகைகளையும் பார்த்து குலுங்கிக் குலுங்கி சிரிக்கக் கூடிய சிறுமியைப் பற்றியோ அவனுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதே கற்பனை தேவதை அந்த வயதான பெண்ணையும் சுறுசுறுப்புடன் நடந்து போய்க் கொண்டிருக்கும் வழிப்போக்கர்களையும் அவ்வப்போது சிரித்துக் கொண்டிருக்கும் சிறுமியையும் ஃபொன்தான்காவில் (அதாவது- நம்முடைய கதாநாயகன் அந்தச் சமயத்தில் அங்கு கடந்து போவதாக இருந்தால் என்று அர்த்தம்) கூட்டமாக இருக்கும் படகுகளில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படகோட்டிகள் எல்லாரையும் தன்னுடைய பயணத்தில் சேர்த்துக் கொள்வாள். எல்லாரையும்... எல்லாவற்றையும் அவள் தன்னுடைய பொன்னான மனதிற்குள் நெய்து சேர்த்து வைக்கிறாள்- சிலந்தி வலையில் ஈக்களை நெய்து சேர்ப்பதைப்போல. இந்த புதிய செல்வச் சேர்க்கையால் வரப்பிரசாதமாக கிடைத்த தன்னுடைய சந்தோஷமான சிறிய வீட்டுக்குள் நம்முடைய வினோத மனிதன் நுழைகிறான். அமர்ந்து உணவு சாப்பிடுகிறான். சிந்தனை வயப்பட்டவளும் எப்போதும் கவலையில் இருக்கக் கூடியவளுமான வேலைக்காரி மத்ரயோனா மேஜையின்மீது இருந்த பாத்திரங்களை எடுத்து ஓரத்தில் வைத்துவிட்டு, பைப்பைக் கொடுக்கும்போதுதான்

அவன் கனவுகளில் இருந்து விழித்தெழுந்தான். அவன் அசைந்தான். உணவு சாப்பிட்டு முடித்து காரியங்களை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தான். காரணம்- அப்படிப்பட்ட ஒரு செயல் நடைபெற்றதாக அவனுக்குத் தெரியவேயில்லை. அறையில் இருட்டு பரவியது. வெறுமையும் கவலையும் அவனுடைய இதயத்தில் நிறைந்தன. கற்பனைகளாலான ஒரு சாம்ராஜ்ஜியமே அவனைச் சுற்றி இடிந்து விழுந்து கொண்டிருந்தது. சத்தமோ ஆரவாரமோ இல்லாமல் நொறுங்கி சாம்பலாகிக் கொண்டிருந்தது. ஒரு கனவைப் போல அது நடந்து கொண்டிருந்தது. தான் என்ன கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கு ஞாபகத்தில்கூட இல்லை. ஆனால், இப்போது ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு, புதிய ஒரு சிந்தனை அவனுடைய இதயத்திற்குள் நுழைந்து, அவனை சற்று வேதனைப்படச் செய்து கொண்டிருந்தது. அவனுடைய கற்பனையை வசீகரமாகவும் யாருக்கும் தெரியாமலும் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தது. உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது. புதிய கற்பனைக் காட்சிகள் கூட்டமாக அவனுக்கு முன்னால் அணிவகுத்து நின்றிருந்தன. அந்தச் சிறிய அறை மிகவும் அமைதியாகக் காணப்பட்டது. தனிமையிலும் களைப்பிலும் அவனுடைய மனம் மூழ்கி விட்டிருந்தது. அது சற்று பற்றி எரிந்து கொண்டிருந்தது. அருகிலிருந்த சமையலறையில் எதைப் பற்றிய சிந்தனையுமில்லாமல் காப்பி தயாரித்துக் கொண்டிருப்பதில் மூழ்கிப் போய் விட்டிருந்த கிழவி மத்ரயோனாவின் காப்பி பாத்திரத்திலிருக்கும் நீரில் என்பதைப் போல அதில் குமிழ்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன. தொடர்ந்து அவனுடைய கற்பனைகள் சிறுசிறு நெருப்பு ஜுவாலைகளாக கிளம்பி வெளியே வந்து கொண்டிருந்தன. எந்தவித நோக்கமும் இல்லாமல் எடுத்த புத்தகம், ஒன்றோ இரண்டோ பக்கங்கள் வாசித்து முடிப்பதற்கு முன்னால், நம்முடைய கனவு மனிதனின் கையிலிருந்து கீழே விழுகிறது. அவனுடைய கற்பனை மீண்டும் வேகமாக செயல்பட ஆரம்பிக்கிறது. திடீரென்று புதிய ஒரு உலகம், புதிய ஒரு மாய உலகம் அதற்கென்றிருக்கும் எல்லாவித அம்சங்களுடனும் அவனுடைய மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. புதிய ஒரு கனவு! புதிய அனுபவம்! சந்தோஷமும் உணர்ச்சிகளும் நிறைந்த விஷம் கலந்த ஒரு உலகம்! நம்முடைய யதார்த்த வாழ்க்கை அவனைப் பொறுத்த வரையில் ஒரு பொருட்டே அல்ல. அவனுடைய கூர்மையான பார்வையை வைத்துக் கூறுவதாக இருந்தால்... நாஸ்தென்கா, மந்தத்தன்மை நிறைந்ததாகவும், அலட்சியமானதாகவும் செயலற்றதுமான ஒரு வாழ்க்கையைத்தான் நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


நாம் அனைவரும் நம்முடைய தலைவிதியைப் பற்றி நினைத்து சந்தோஷமற்று இருப்பதாகவும், நம்முடைய வாழ்க்கையில் முழுமையான வெறுப்பு அடைந்தவர்களாக இருப்பதாகவும் அவன் காண்கிறான். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், எந்த அளவுக்கு அலட்சியமாகவும், உணர்ச்சியே இல்லாமலும், உயிரற்றும் நாம் வெளியே தெரியக்கூடிய அளவுக்கு ஒருவரோடொருவர் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

"அப்பிராணிகள்...” நம்முடைய கனவு மனிதன் நினைக்கிறான். அவன் அப்படி நினைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. அந்த கற்பனைக் காட்சிகள் அவனுக்காக இந்த அளவுக்கு இதயப்பூர்வமாகவும் முழுமையாகவும் ஈடுபாட்டுடனும் நெய்து உண்டாக்கும் அழகான மந்திரத்தன்மை கொண்ட ஓவியத்தைச் சற்று பாருங்கள். எப்போதும் முன்வரிசையில் காணப்படும் அதன் மிக முக்கியமான கதாநாயகன் நம்முடைய கனவு மனிதன்தான் என்பதைக் கூற வேண்டியதில்லையே! அந்த வீரச் செயல்களின் மாறுபட்ட தன்மைகளை சற்று பாருங்கள். அவனை ஆனந்தக் கடலில் மூழ்க வைக்கும், அந்தக் கனவுகளின் நினைத்துப் பார்க்க முடியாத பிரவாகத்தைச் சற்று பாருங்கள். அவன் எதைக் கனவு காண்கிறான் என்று கேட்கலாம். எதற்கு கேட்கிறீர்கள்? எல்லாவற்றைப் பற்றியும்.. தான் முதலில் சாதாரண மனிதனாகவும், பின்னால் புகழின் உச்சியில் ஏறிய ஒரு கவிஞனாக ஆனதைப் பற்றி... ஹாஃப்மனின் நட்பையும் செயின்ட் பர்த்தோலோமியாவின் இரவையும் டயானா வெர்னோனேயையும் பற்றி... கஸானுக்கு எதிராக இவான் மன்னர் நடத்திய படையெடுப்பில் வீரத்தனமான ஒரு பங்கு வகித்ததைப் பற்றி... க்ளாராமொம்ப்ராவையும் எஃபி டீன்ஸினையும் விளக்கிக் கூறும் மதக் குழுவைப் பற்றி... "பேயாக மாறிய ராபர்ட்” என்ற இசைப் பாடலில் சுடுகாட்டின் வாசனை கொண்ட அதன் இசை ஞாபகத்தில் இருக்கிறதா? இறந்தவர்கள் உயிருடன் எழுந்து வந்ததைப் பற்றி... மின்னயேவையும் ப்ரெண்டாயேவையும் பற்றி... பெர்யோஸினாவில் நடந்த போராட்டத்தைப் பற்றி... வி.டி. பிரபுவின் வரவேற்பறையில் கவிதைகள் வாசிப்பதைப் பற்றி... டான்டனேவையும் கிளியோ பாட்ராவையும் பற்றி... கொலோனாவில் உள்ள தன்னுடைய சிறிய இல்லத்தைப் பற்றி... தனக்கு மட்டுமே சொந்தமென இருக்கும் அந்த மூலையில் இனிமையான இரவு வேளையில் தான் கூறுவதை, என் சிறிய தேவதையே, நீங்கள் இப்போது செய்வதைப்போல, நம்பிக்கை கொண்ட கண்களுடனும் மலர்ந்த உதடுகளுடனும் கேட்டவாறு சமீபத்தில் அமர்ந்திருக்கும் அழகான பெண்ணைப் பற்றி... இல்லை... நாஸ்தென்கா, நீங்களும் நானும் சுவைத்துப் பார்ப்பதற்கு ஏங்கும் வாழ்க்கையைப் பற்றி அந்த ஆதரவற்ற உணர்ச்சிகள் நிறைந்த மனிதனுக்கு வெறுப்பு. மிகவும் மோசமான, வெறுத்து ஒதுக்கக்கூடிய ஒரு வாழ்க்கை அது என்று அவன் நினைக்கிறான்.

ஒருநாள் தனக்கும் மரணத்திற்கான மணி ஒலிக்கும் என்பதும், அந்த நேரத்தில் இந்த கேவலமான வாழ்க்கையின் ஒரு நொடிக்காக கற்பனை உலகத்தில் தான் கடந்து வந்த எல்லா வருடங்களையும் விட்டுச் செல்வதற்குத் தான் தயாராக இருப்போம் என்பதும் அவனுக்குத் தெரியாது. அது கையை விட்டு விலகிச் செல்வது சந்தோஷத்திற்காகவோ சுகத்திற்காகவோ அல்ல. கவலை, இரக்கம், அடக்க முடியாத துக்கம் ஆகியவை நிறைந்திருக்கும் அந்த வேளையில் எது கிடைத்தாலும் அவன் அதை எடுத்துக்கொள்வான். ஆனால், அந்த பயங்கரமான நேரம் வரும் வரை அவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. அவன் ஆசைப்படுவதிலிருந்து விலகி இருக்கிறான். காரணம்- அவனிடம் அனைத்தும் இருக்கின்றன. போதும் என்று கூறக்கூடிய அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால்- புதிய ஒரு ஆசைக்கான தூண்டுதல் உண்டாகும் போதெல்லாம், புதிய புதிய சாம்ராஜ்ஜியங்களை தனக்காக படைக்கும் கலைஞன் அவன். அது மட்டுமல்ல- இந்த மாய உலகம், இந்த கற்பனை சாம்ராஜ்ஜியம்- அது ஒரு கற்பனை படைப்பே அல்ல என்பதைப் போல மிகவும் அலட்சியமாகவும் இயல்பாகவும் உண்டாக்கப்படக் கூடியதே. இந்த உலகம் ஒரு மாயை அல்ல என்று, என்னுடைய வெற்றி பெற்ற உணர்ச்சிகளின் படைப்பு அல்ல என்று, என்னுடைய கற்பனையின் அடையாளம் அல்ல என்று, அதற்கு நேர்மாறாக- சக்தி படைத்த... உண்மையான... நடைமுறையில் உள்ள... ஒரு உலகம்தான் இது என்று நான் சில நேரங்களில் உண்மையாகவே நம்பி விடுவதுண்டு. நாஸ்தென்கா, பிறகு எதற்கு இதைப் போன்ற நிமிடங்களில் என்னுடைய மனம் வேதனைப்பட வேண்டும்? என்ன காரணம், கூறுங்கள்? கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் மனிதனின் நாடித் துடிப்பின் வேகம் அதிகமாவதற்கும் கண்கள் நிறைவதற்கும் அவனுடைய கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும் விரிந்த கண்களில் பிரகாசம் பரவி இருப்பதற்கும், அவனுடைய உடல் முழுவதும் சொர்க்கத்திற்கு நிகரான ஆனந்தம் நிறைந்து இருப்பதற்கும் காரணம்  என்ன? எந்த இனம்புரியாத சக்தியின் காரணமாக அது நடக்கிறது? அவனுடைய உறக்கமில்லாத இரவுகள் அடக்க முடியாத ஆனந்தத்துடனும் சந்தோஷத்திலும் மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதைப்போல தோன்றுவதற்குக் காரணம் என்ன? சூரியனின் முதல் செங்கதிர்கள் சாளரத்தின் வழியாகப் பிரகாசித்துக் கொண்டும், இங்கு... செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்... நடப்பதைப்போல புலர்காலைப்பொழுது தன்னுடைய அழகான, உயிரோட்டமுள்ள வெளிச்சத்தை அறைக்குள் பரவச் செய்து கொண்டும் இருக்கும்போது, என்ன காரணத்திற்காக நம்முடைய கனவு கண்டுகொண்டிருக்கும் மனிதன் தளர்ந்து போய், உணர்ச்சிவசப்பட்டு மெத்தையின்மீது விழுந்து தூங்க வேண்டும்? அவனுடைய மென்மையான, அமைதியான மனதை ஆக்கிரமித்து விட்டிருக்கும் ஆனந்தமும் அவனுடைய இதயத்தில் ததும்பி நின்று கொண்டிருக்கும் தாங்கிக் கொள்ள முடியாத இனிய வேதனையும் அவனை இனம்புரியாத ஒரு உணர்வில் மூழ்கச் செய்திருப்பது ஏன்? ஆமாம்...நாஸ்தென்கா, அது நம்மை ஏமாற்றுகிறது. அவனுடைய மனதில் நிறைந்திருக்கும் உணர்ச்சி, இயல்பானது... உண்மையானது என்பதை நாம் நினைத்துப் பார்க்காமல் நம்பி விடுகிறோம். பலம் கொண்ட, பிரிக்க முடியாத ஏதோவொன்று அவனுடைய ஆழமான கனவுகளில் இருக்கிறது என்பதாக நாம் நம்புகிறோம். அது என்ன ஒரு வஞ்சனையான விஷயம்! உதாரணம்- காதல் தன்னுடைய அனைத்து ஆனந்தத்தின் அடையாளங்களுடனும் பலத்துடனும் அவனுடைய இதயத்திற்குள் நுழைகிறது. அவனை நோக்கி வெறுமனே சற்று கண்களைச் செலுத்தினாலும் அது தெரியும்- தன்னுடைய சந்தோஷமான கனவுகளில் தோன்றும் காதல் ராணியை  அவன் எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை என்பதை... அன்பான நாஸ்தென்கா, அவனைப் பார்த்தால் நம்புவீர்களா? அவன் அவளை தன்னுடைய ஏமாற்றத்தைத் தரும் கனவுகளில் மட்டுமே பார்த்திருக்கிறான் என்பதும், இந்த உணர்வைப் பற்றி கனவு காண மட்டுமே செய்திருக்கிறான் என்பதும்தான் உண்மையோ? உலகம் முழுவதையும் முழுமையாக மறந்துவிட்டு, தங்களுடைய செயல்களை- தங்களுடைய இரண்டு சொந்த உலகங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு அவர்கள் இருவர் மட்டும் கைகளைக் கோர்த்துக் கொண்டு கடந்து சென்ற வருடங்கள் எல்லாவற்றையும் தாண்டி வரவில்லை என்பதுதான் உண்மையோ?


அந்த பிரியும் இரவு வேளையில் மூடிக் கிடந்த வானத்திற்குக் கீழே, மிகவும் வேகமாக வீசியடித்துக் கொண்டிருந்த சூறாவளியைப் பொருட்படுத்தாமல், தன்னுடைய கறுத்த இமைகளிலிருந்து கண்ணீர்த் துளிகளை விழச் செய்து கொண்டு போன காற்றிற்கு பயப்படாமல், அவனுடைய மார்பில் தலையை சாய்த்து, கவலையுடன் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தது அவள் இல்லையா என்ன? இவை அனைத்தும் வெறும் ஒரு கனவா என்ன? பாசி படர்ந்த நடைபாதைகளின் வழியாக யாரும் திரும்பிக்கூட பார்க்காமல் காடு பிடித்துக் கிடந்த அந்தத் தோட்டம்- ஆசைப்பட்டும் ஏமாற்றமடைந்தும் காதலித்தும் ஆமாம்... ஆழமாகவும் கண்டதும் ஒருவரையொருவர் காதலித்தும்... நடந்து திரிந்த அந்த இருளடைந்த அமைதியான தோட்டம் ஒரு கனவாக இருந்ததோ? வெறுக்கப்படக் கூடியவனும், எப்போதும் மிடுக்காகக் காணப்படுபவனும், முன் கோபம் கொண்டவனுமான கணவனுடன் சேர்ந்து- தங்களுடைய காதலை பயத்துடனும் ஏமாற்றத்துடனும் ஒருவரோடொருவர் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் கோழைகளான இரண்டு குழந்தைகளைப்போல அவர்கள் யாருக்காக பயந்து கொண்டிருந்தார்களோ, அந்த வயதான கிழவனுடன் சேர்ந்து இந்த வருடங்கள் முழுவதும் அவள் தனிமையாகவும் சோகங்கள் நிறைந்தவளாகவும் வாழ்ந்த அந்த பழமையான வீடு கனவாக இருந்ததோ? அவர்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவித்தார்கள்! எந்த அளவிற்கு பயந்தார்கள்? அவர்களுடைய காதல் எந்த அளவிற்கு மிகவும் தூய்மையானதாகவும் கள்ளங்கபடமற்ற தன்மை கொண்டதாகவும் இருந்தது! (மனிதர்கள் எந்த அளவிற்கு கெட்டவர்களாக இருந்தார்கள் என்பதைப் பற்றி பிறகு கூறுவோம் என்று நினைக்கிறீர்களா, நாஸ்தென்கா?) அப்போது... கடவுளே, நீண்ட நாட்களுக்குப் பிறகு, சொந்த ஊரிலிருந்து மிகவும் தூரத்தில், ஒரு அன்னியமான கட்டடத்திற்குக் கீழே, அழகானதும் எல்லையற்றதுமான நகரத்தின் வெப்பமும் ஈரமும் நிறைந்த வானத்திற்குக் கீழே, விளக்குகள் எரிந்து கொண்டிருந்த ஒரு அரண்மனையில் வைத்து (அது அரண்மனையாகத்தான் இருக்க வேண்டும்!) வாத்திய மேளங்களின் ஆரவாரத்துடன் நடந்து கொண்டிருக்கும் உற்சாகமான நடன வேளையின்போது அவன் மீண்டும் சந்தித்தது அவளை இல்லையா? பன்னீர் செடிகளும் கதம்பக் கொடிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து படர்ந்து கிடக்கும் மாளிகையின் முகப்புப் பகுதியில் அவன் பார்த்தது அவளை இல்லையா? அவனைக் கண்டவுடன் மிகவும் வேகமாக முகமூடியை விலக்கி "நான் இப்போது சுதந்திரமானவள்” என்று மெதுவானகுரலில் முணுமுணுத்துக் கொண்டே தன்னையே மறந்து அவனுடைய கரங்களின் வளையத்திற்குள் விழுந்தவள் அவள் இல்லையா? சந்தோஷக் குரல்களுடன் அவர்கள் ஒருவரையொருவர் இறுக அணைத்துக் கொள்கிறார்கள். ஒரு நிமிடத்திற்குள் எல்லா விஷயங்களும் மறந்துபோய் விடுகின்றன- அவர்களுடன் கவலைகளும் ஏக்கங்களும் துன்பங்களும் இருளடைந்த வீடும் மிடுக்கான கிழவனும் தூரத்திலிருக்கும் சொந்த ஊரில் இருக்கும் அழகான புல்வெளியும்- கடுமையான ஏமாற்றம் உண்டாக்கிய வேதனையால் மரத்துப் போன அவனுடைய கைகளுக்குள் இருந்து அவள் உணர்ச்சிவசப்பட்ட ஒரு முத்தத்துடன் வேகமாக விலகிக் கொண்டு அவனுக்கு விடை கொடுத்த புல்வெளியும் மறக்கப்பட்டு விட்டன. ஹ! நாஸ்தென்கா, அந்தச் சமயத்தில் திடீரென்று- ஒரு நண்பன்- நல்ல உயரத்தையும் அதற்குப் பொருத்தமான உடலமைப்பையும் கொண்டிருந்த ஒரு ரசிகன்- அழைக்கப்படாமலே கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே வந்து, குறிப்பாக எதுவும் நடக்காததைப் போல "ஏய்... நண்பா, நான் இப்போதுதான் பாவ்லாவ்ஸ்கியிலிருந்து, திரும்பி வந்தேன்” என்று கூறினால், நீங்கள் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள் என்பதை- அருகில் உள்ளவனின் தோட்டத்திலிருந்து ஒரு ஆப்பிள் பழத்தைத் திருடி, பாக்கெட்டிற்குள் வைத்த ஒரு பள்ளிக்கூட மாணவியைப்போல பதைபதைப்புடன் நடந்து கொள்வீர்கள் என்பதை... நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா? கடவுளே! அந்த வயதான பிரபு இறந்து நிரந்தரமான சந்தோஷம் நிலவிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் தான் பாவ்லாவ்ஸ்கியிருந்து ஒரு மனிதன் உள்ளே நுழைகிறான்!''

என்னுடைய நாடகத்தனமான விளக்கத்தின் இறுதியில் நான் நாடகத்தனமாகவே அமைதியாக இருந்தேன். அந்த நிமிடத்தில் சற்று சிரிப்பதற்கு நான் மிகவும் முயற்சித்ததை நினைத்துப் பார்க்கிறேன். காரணம்- என்னுடைய இதயத்தில் ஒரு துரோக புத்தி கொண்ட குட்டிச்சாத்தானின் நடமாட்டம் உண்டாகத் தொடங்கியிருந்தது. என்னுடைய மூச்சு தொண்டையில் அடைத்தது. என்னுடைய தாடைப்பகுதி நடுங்க ஆரம்பித்து. என்னுடைய கண்களில் மேலும் மேலும் நீர் அரும்பியது... தன்னுடைய அறிவுப்பூர்வமான கண்களை அகல விரித்துக் கொண்டு என்னுடைய பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நாஸ்தென்காவிடமிருந்து குழந்தைத்தனமான ஒரு பெரிய சிரிப்பு நினைத்துப் பார்க்காமலே வெளிப்படுமோ என்பது தான் என்னுடைய பயமாக இருந்தது. கூறக்கூடிய பரப்பளவைத் தாண்டியதற்காக- என்னுடைய இதயத்தை எவ்வளவோ காலமாக நசுக்கிக் கொண்டிருந்ததும், மனப்பாடம் செய்த ஒரு பகுதியைப் போல என்னால் கூற முடிகிற இந்த விஷயத்தை தேவையில்லாமல் அவளிடம் கூறியதற்காக நான் கவலைப்பட்டேன். காரணம் நான் முன்பே என் மீது விதியை எழுதி விட்டிருந்தேன். அதை அவளிடம் வாசித்து கேட்கச் செய்வதற்கு நான் ஆசைப்பட்டேன். நான் கூறுவதை அவளால் புரிந்துகொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இல்லாமலிருந்து என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். சிறிது நேரம் கழித்து என்னுடைய கையை மெதுவாக சற்று அழுத்திக் கொண்டே அவள் மெல்லிய ஒரு ஆர்வத்துடன் கேட்டாள்:

“நீங்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தது இப்படித்தானா?''

“வாழ்க்கை முழுவதும்... நாஸ்தென்கா...'' நான் சொன்னேன்: “வாழ்க்கை முழுவதும்... இறுதி வரை இப்படித்தான் வாழ்வேன் என்று எனக்குத் தோன்றுகிறது.''

“இருக்காது... அப்படி... இருக்காது...'' அவள் பதைபதைப்புடன் கூறினாள்: “அது அப்படி இருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம்- இல்லாவிட்டால், வாழ்நாள் முழுவதும் நான் என் பாட்டியின் அருகிலேயே இருக்க வேண்டியதிருக்கும். இப்படி வாழ்வது சிறிதும் நல்லதல்ல என்பது தெரியுமா?''

“தெரியும், நாஸ்தென்கா. தெரியும்...'' என்னுடைய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயற்சிக்காமல் நான் சொன்னேன்: “என் வாழ்க்கையின் மிகவும் நல்ல காலத்தைப் பாழாக்கிவிட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் நான் அதைப் பற்றி மிகவும் அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்போது அது எனக்குத் தெரிகிறது. அந்தப் புரிதல் என்னை மேலும் வேதனை கொள்ளச் செய்கிறது. காரணம்- என்னிடம் இதைக் கூறுவதற்கும் என்னுடைய புரிதல் சரிதான் என்பதை உணர்த்துவதற்கும்... என்னுடைய கனிவு நிறைந்த தேவதையே, கடவுள்தான் உங்களை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார். மேடம், உங்களிடம் பேசிக்கொண்டு உங்களுக்கு அருகில் இப்போது அமர்ந்திருக்கும் நான் எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்போது பயத்திற்கு ஆளாகிறேன்.


காரணம்- மீண்டும் தனிமையைத் தவிர, அர்த்தமற்றதும் அழுகி நாற்றமெடுத்தும் இருக்கும் வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் எனக்கு முன்னால் எதிர்காலத்தால் காட்ட முடியவில்லை. மேடம், உங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து உண்மையிலேயே இந்த அளவிற்கு சந்தோஷத்தை அனுபவித்த நான் இனி எதைப் பற்றி கனவு காண்பேன்? இல்லையா அன்பு தோழியே! என்னை விரட்டி விடாத நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்! ஏனென்றால், நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு சாயங்கால வேளைகளிலாவது வாழ்ந்தேன் என்பதை இப்போது கூற முடியும்!''

“இல்லை... இல்லை...'' -நாஸ்தென்கா சொன்னாள். அவளுடைய இமைகளில் கண்ணீர் துளிகள் பளிச்சிட்டன: “அது அப்படி நடக்க வாய்ப்பில்லை. நாம் இப்படி பிரிய மாட்டோம். இரண்டு சாயங்கால வேளைகளில் என்ன இருக்கிறது!''

“நாஸ்தென்கா... ஹா... நாஸ்தென்கா! மேடம், இனி நீண்ட காலத்திற்கு எனக்கு என்மீது ஈடுபாடு இருக்கும் வண்ணம் செய்துவிட்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா? சில நேரங்களில் நான் என்னைப் பற்றி மிகவும் மோசமாக சிந்திப்பதற்கு முயல்வேன் என்றாலும், இதற்குமேல் அப்படி நடக்காது என்பது தெரியுமா?

நான் வாழ்க்கையில் எந்தவொரு பாதகச் செயலையும் பாவச் செயலையும் செய்தேன் என்று அதற்குமேல் வெறுப்புடன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்று தெரியுமா? காரணம்- என்னுடைய வாழ்க்கையைப் போன்ற ஒரு வாழ்க்கை பாதகமும் பாவமும் நிறைந்ததே. நான் கூறியதில் ஏதாவது ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்று நினைக்காதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நாஸ்தென்கா, கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு, அப்படி நினைத்து விடாதீர்கள். காரணம்- கவலை நிறைந்த சிந்தனை, எதற்கென்றே இல்லாத கவலை நிறைந்த சிந்தனை சில நேரங்களில் என்னை ஆட்கொள்ளுவதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் தோன்ற ஆரம்பிக்கும் புதிய, உண்மையான வாழ்க்கையை என்றாவது ஆரம்பிப்பதற்கு நான் இயலாத நிலையில் இருக்கிறேன் என்று நான் உணர்கிறேன். உண்மையுடன் உள்ள எல்லா உறவுகளையும், அதைப் பற்றி உள்ள அனைத்து அறிவையும் நான் இழந்து விட்டிருக்கிறேன் என்று... நான் என்னுடைய ஆன்மாவை விற்றுக்கொண்டிருக்கிறேன் என்று... என்னுடைய மன உலகத்தின் இரவுகளைத் தொடர்ந்து இப்போது வந்து கொண்டிருப்பது விவேகத்தின் நிமிடங்கள்... அவையோ பயப்படக்கூடிய விதத்தில் இருக்கின்றன. இந்த நேரம் முழுவதும் சுற்றிலும் மனிதர்களுக்குள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கையின் ஆரவாரத்தைக் கேட்கலாம். மனிதர்கள் வாழ்வதை... ஒரு உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை.... நீங்கள் கேட்கவும் பார்க்கவும் செய்யலாம். கூறி உண்டாக்கிய ஒன்றல்ல அவர்களுடைய உலகம் என்பதையும், ஒரு கனவைப் போலவோ காட்சியைப்போலவோ அது இடிந்து விழப் போவதில்லை என்பதையும், எப்போதும் இளமைத் துடிப்புடனும் புதிது புதிதாக இளமை கொப்பளிக்கக்கூடியதாகவும் இருக்கக் கூடியதுதான் அவர்களுடைய வாழ்க்கை என்பதையும், அதன் ஒவ்வொரு நொடியும் முன்பு இருந்ததிலிருந்து வேறுபட்டது என்பதையும் பார்க்கலாம். அதற்கு நேர்மாறாக- கோழைத்தனமான குணமோ வெறுப்பு உண்டாக்கக் கூடியதாகவும் வேறுபாடு அற்றதாகவும் சோர்வைத் தரக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு நிழலின், எண்ணத்தின் அடிமை அது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் சூரியனை பொக்கிஷத்தைப்போல நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உண்மையான நகரவாசியின் இதயத்தையும் கவலையில் மூழ்கச் செய்துகொண்டு சூரியனை மறைக்கும் முன்னணி கரு மேகங்களின் அடிமை அது. கவலை நிறைந்த சிந்தனையில் என்ன இருக்கிறது? நிரந்தரமான போராட்டத்தின் பலனாக உங்களின் இயல்பு குணம் இறுதியில் தேய்ந்து போவதைப்போல, அழிந்து போவதைப் போல தோன்றுகிறது. காரணம்- உங்களுக்கு பக்குவம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் முன்பு மனதில் வைத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. தகர்ந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு வாழ்வதற்கு இன்னொரு வாழ்க்கை இல்லையென்றால், அதே உடைந்த துண்டுகளிலிருந்தும் சிதறல்களிலிருந்தும் அதைத் திரும்பவும் கட்டி உண்டாக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டாகிறது. அதே நேரத்தில் உங்களுடைய மனம் ஏங்கிக் கொண்டிருப்பதும் ஆசைப்படுவதும் வேறுபட்ட ஒன்றுக்காக. நம்முடைய கனவு கண்டு கொண்டிருக்கும் மனிதன் தன்னுடைய பழைய கனவுகளின் சாம்பல்களுக்கு மத்தியில் வீணாகத் தேடிக்கொண்டிருக்கிறான். மீண்டும் ஊதி எரிய வைப்பதற்காக சிறிய ஒரு நெருப்புப் பொறியையாவது அந்த நொறுங்கிய எச்சங்களுக்கு மத்தியில் கண்டுபிடித்து விட முடியும் என்பது அவனுடைய எதிர்பார்ப்பு. அப்படி மீண்டும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு தன்னுடைய குளிர்ந்துபோய் விட்ட இதயத்திற்கு வெப்பத்தைத் தரும் என்றும், முன்பு அதற்கு விருப்பத்திற்குரியதாக இருந்த அனைத்தையும்- அதை அசையச் செய்து கொண்டிருந்த அனைத்தையும்- தன்னுடைய இரத்தத்தை சூடுபிடிக்கச் செய்த, கண்களை ஈரமாக்கிய, தன்னை அழகாக ஏமாற்றிய அனைத்தையும்- அது திரும்பவும் தரும் என்று அவன் மனதிற்குள் ஆசைப்பட்டான். நான் இப்போது எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைந்திருக்கிறேன் என்பது தெரிகிறதா, நாஸ்தென்கா? என்னுடைய முன்பு இருந்த உணர்வுகளின்- கடந்து போன- அதே நேரத்தில் எந்தச் சமயத்திலும் நடந்திராதவற்றின்மீது எனக்கு இருக்கும் ஈடுபாட்டின் வருட விழாவை நான் இப்போது கொண்டாட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது தெரியுமா? காரணம்- அறிவற்ற, பொருத்தமற்ற அதே கனவுகளை அனுசரித்துத்தான் இந்த கொண்டாட்டத்தையும் நடத்த வேண்டியதிருக்கிறது. அந்த அர்த்தமற்ற கனவுகளின் வருகை நின்று போய்விட்ட காரணத்தால், அவற்றுக்கு பிரயோஜனமாகும் வண்ணம் என்னிடமிருந்து எதுவுமே இல்லாத காரணத்தால் நான் இவ்வாறு நடந்து கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறேன். ஒருகாலத்தில் நான் எனக்கென்றிருந்த தனிப்பட்ட வழிகளில் சந்தோஷத்தை அனுபவித்த இடங்களை நினைத்துப் பார்ப்பதற்கும், சில குறிப்பிட்ட நாட்களில் அவற்றை மீண்டும் பார்ப்பதற்கும் நான் இப்போது விரும்புகிறேன் என்ற விஷயம் தெரியுமா? திரும்ப அழைக்க முடியாத கடந்த காலத்துடன் என்னுடைய நிகழ் காலத்தை சமரசம் செய்து கொண்டு போக நான் விரும்புகிறேன். எந்தவொரு நோக்கமோ இலக்கோ இல்லாமல், நிராசையுடனும் செயலற்றவனுமாக, ஒரு பிணத்தைப்போல நான் பல நேரங்களில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெருக்களின் வழியாகவும் சந்துகள் வழியாகவும் அலைந்து திரிந்ததுண்டு. ஹா! என்னுடைய நினைவுகள்! உதாரணத்திற்கு கூற வேண்டுமானால்... சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நேரத்தில், இதே நடைபாதையின் வழியாக இன்று நடந்ததைப்போலவே தனி மனிதனாகவும் ஏமாற்றமடைந்தவனாகவும் நான் அலைந்து திரிந்ததை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய கனவுகள் இப்போது இருப்பதைப் போலவே கவலைகள் நிறைந்தவையாக இருந்தன என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.


அன்று இப்போது இருப்பதை விட பெரிய உயர்வு எதுவும் இல்லையென்றாலும், அந்தக் காலத்தில் வாழ்க்கை மேலும் சற்று எளிதானதாகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும் இருந்தது என்ற விஷயம் என்ன காரணத்தாலோ என் மனதில் தோன்றுகிறது. என்னை இப்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சந்தோஷமற்ற சிந்தனைகள் அந்தக் காலத்தில் என்னை பாதிக்கவே இல்லை என்றும், எனக்கு இரவும் பகலும் நிம்மதி அளித்திராத பலமான, வேதனைகள் நிறைந்த மனசாட்சியின் குத்தல்களுக்கு அன்று நான் இரையாகவில்லை என்றும் தோன்றுகிறது. நாம் நமக்குள் கேட்டுக் கொள்கிறோம். அந்த கனவுகள் எங்கு போயின? நாம் தலையை ஆட்டிக்கொண்டு கூறுகிறோம்: வருடங்கள் எவ்வளவு வேகமாக கடந்து செல்கின்றன. மீண்டும் நமக்குள் கேட்டுக் கொள்கிறோம்: உன்னுடைய வாழ்க்கையில் என்ன செய்திருக்கிறாய். உன்னுடைய மிகச் சிறந்த வருடங்களை எங்கு கொண்டு போய் புதைத்து மூடினாய்? நீ வாழ்ந்தாயா இல்லையா? இங்கே பார்... நாம் நமக்குள் கூறிக்கொள்கிறோம். பார்... உலகம் எந்த அளவிற்கு குளிர்ச்சியடைந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை... அமைதியான தனிமையை நிலை நிறுத்திக்கொண்டு வருடங்கள் இனியும் கடந்து செல்லும். பிறகு கொம்பு ஊன்றி, நடுங்கிக் கொண்டு முதுமையின் வருகை... அதையும் தாண்டி விட்டால்...? துன்பங்களும் வெறுமையும் மட்டும்... உங்களுடைய கற்பனை உலகம் ஒளி குறைந்ததாக ஆகிவிடும். கனவுகள் உயிரற்ற மஞ்சள் நிற இலைகளைப்போல வாடி உதிர்ந்து விடுகின்றன. ஹா... நாஸ்தென்கா! தனிமையில் வாழ்வது... இறுதி வரை தனித்து வாழ்வது எந்த அளவிற்கு கவலையான விஷயம் அது! வருத்தப்படுவதற்குக் கூட எதுவுமில்லை. எதுவுமே... காரணம்- எனக்கு இழப்பதற்கென்று இருப்பவை கனவுகள்தான்... இல்லாமை... கேவலம்... அர்த்தமே இல்லாத இல்லாமை!''

“அய்யோ... நிறுத்துங்க... எனக்கு இப்போது அழுகை வருகிறது.'' ஒரு கண்ணீர்த் துளியைத் துடைத்துக் கொண்டே நாஸ்தென்கா கூறினாள்: “அவை அனைத்தும் இன்றோடு முடிந்துவிட்டன. சொல்லப்போனால்... நாம் இரண்டு பேர் இருக்கிறோம். எனக்கு எது நடந்தாலும், நாம் இனி எந்தச் சமயத்திலும் பிரிய மாட்டோம். நான் ஒரு அப்பிராணிப் பெண். பாட்டி ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்து தந்திருந்தாலும், எனக்கு பெரிய அளவில் படிப்பு இல்லை. எனினும், நீங்கள் கூறுவதை  உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம்- நீங்கள் இப்போது என்னிடம் கூறிய அனைத்து விஷயங்களும், பாட்டியின் ஆடையுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் காலத்தில் நானே அனுபவப் பூர்வமாக உணர்ந்தவைதான். உண்மையாகவே அதை உங்களிடம் அழகாக விவரித்துக் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. காரணம்- எனக்கு படிப்பு இல்லை.'' அவள் சிறிது வெட்கத்தையும் சேர்த்துக் கொண்டு கூறினாள். என்னுடைய நாடகத்தனமான உரையாடல்மீதும் உயர்ந்த உரையாடல் முறைமீதும் அவளுக்குச் சிறிய மதிப்பு உண்டாகிவிட்டிருந்தது. “எனினும், எனக்கு முன்னால் உங்களுடைய இதயத்தை நீங்கள் திறந்து வைத்தது குறித்து, நான் சந்தோஷப்படுகிறேன். இப்போது உங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றாகவே புரிகிறது. என்னுடைய கதையை உங்களிடம் கூறுவதற்கு நானும் விரும்புகிறேன். காலவரையறை இல்லாமல் முழுவதையும்... பிறகு... நீங்கள் எனக்கு அறிவுரை கூற வேண்டும். நீங்கள் மிகவும் திறமையானவர். கதையைக் கேட்டு முடித்து, அறிவுரை கூறுவதற்கு ஒப்புக் கொள்வீர்களா?''

“நாஸ்தென்கா...'' நான் சொன்னேன்: “நான் இதுவரை அறிவுரை கூறக்கூடிய மனிதனாக இருந்ததில்லை. அதுவும் திறமைசாலியான ஒரு அறிவுரை கூறக்கூடிய மனிதனாக... எனினும், நாம் இப்படியே தொடர்கிறோம் என்றால், அதுதான் மிகச்சிறந்த ஒரே வழி என்று தோன்றுகிறது. நாம் ஒருவரோடொருவர் மிகச்சிறந்த அறிவுரைகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். நாஸ்தென்கா, என் அழகியே... நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்? என்னிடம் மனம் திறந்து கூறுங்கள். நான் இப்போது மிகவும் சந்தோஷம் கொண்ட மனிதனாகவும் மிகுந்த உற்சாகத்தைக் கொண்டவனாகவும் தைரியசாலியாகவும் புத்திசாலியாகவும் இருக்கிறேன் என்பதால், ஒரு பதிலுக்காக சிரமப்பட வேண்டியதில்லை.''

“இல்லை... இல்லை...'' நாஸ்தென்கா குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே இடையில் புகுந்து கூறினாள்:

“எனக்கு வேண்டியது வெறும் சாமர்த்தியமான அறிவுரை அல்ல. மனப்பூர்வமான, நட்புணர்வு கொண்ட அறிவுரை... வாழ்க்கை முழுவதும் என்மீது விருப்பம் கொண்டிருக்கும்பட்சம், தரக்கூடிய தரத்தைக் கொண்ட அறிவுரைகள்.''

“சம்மதிக்கிறேன், நாஸ்தென்கா... சம்மதிக்கிறேன்.'' சந்தோஷத்துடன் நான் சொன்னேன்: “இருபது வருடங்கள் விருப்பம் கொண்டிருந்தாலும், மேடம், எனக்கு இப்போது தோன்றுவதைவிட அதிக விருப்பம் உங்கள்மீது தோன்றியதில்லை.''

“கையைக் கொடுங்கள்..'' நாஸ்தென்கா சொன்னாள்.

“இதோ!'' நான் அவளிடம் கையை நீட்டினேன்.

“அப்படியென்றால்... என் கதையை ஆரம்பிக்கலாம்.''

நாஸ்தென்காவின் கதை

“என் கதையின் பாதிப் பகுதி உங்களுக்கு இப்போதே தெரியும். குறைந்தபட்சம்- எனக்கு ஒரு பாட்டி இருக்கிறாள் என்ற விஷயமாவது தெரியுமே!''

“இன்னொரு பகுதியும் இந்த அளவிற்குச் சிறியதாக இருந்தால்...'' -நான் ஒரு சிறிய சிரிப்புடன் சொன்னேன்.

“பேசாமல் கேளுங்கள். ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே கூறி விடுகிறேன். இடையில் புகுந்து கூறாதீர்கள். இல்லாவிட்டால் நான் எல்லா விஷயங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வேன். பேசாமல் உட்கார்ந்து கேளுங்கள்.

எனக்கு வயதான ஒரு பாட்டி இருக்கிறாள். என் தந்தையும் தாயும் இறந்து போய் விட்டதால், நான் குழந்தையாக இருந்தபோதிலிருந்தே பாட்டியுடன்தான் வாசம். இப்போது இருப்பதைவிட அன்று பாட்டியிடம் பணவசதி இருந்தது என்று தோன்றுகிறது. காரணம்- அவள் இப்போதும் நல்ல காலத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டு. அவள்தான் என்னை ஃப்ரெஞ்ச் படிக்க வைத்தாள். பிறகு ஒரு ஆசிரியரை ஏற்பாடு செய்தாள். எனக்கு பதினைந்து வயது ஆனபோது (இப்போது பதினேழு வயது) என்னுடைய படிப்பு நின்றுவிட்டது. அந்தச் சமயத்தில் நான் ஒரு குறும்புத்தனம் காட்டினேன். அது என்ன என்று கூறமாட்டேன். அந்த அளவிற்கு முக்கியமான ஒன்று அல்ல என்று கூறினால் போதுமல்லவா? ஆனால், ஒருநாள் காலையில் பாட்டி என்னை அருகில் அழைத்தாள். கண் பார்வை இல்லாததால், என்னை கண் பார்வையில் நிறுத்துவது என்பது முடியாத விஷயம் என்று கூறிக்கொண்டே, அவள் ஒரு சேஃப்ட்டி பின்னை எடுத்து என்னுடைய ஆடையையும் அவளுடைய ஆடையையும் சேர்த்து இணைத்துவிட்டாள். என்னுடைய நடத்தை சரியாக இல்லையென்றால், இனி இருக்கக் கூடிய காலம் முழுவதும் இதே மாதிரிதான் இருக்க வேண்டுமென்று அப்போது அவள் சொன்னாள். ஆரம்பத்தில் வெளியே தப்பித்துப் போவதற்கு எந்தவொரு வழியும் இல்லாமலிருந்தது. படிப்பதாக இருந்தாலும் வாசிப்பதாக இருந்தாலும் தைப்பதாக இருந்தாலும் பாட்டியின் அருகில் இருந்தே ஆக வேண்டும்.


ஒருநாள் நான் ஒரு வழியைக் கையாண்டு பார்த்தேன். என்னுடைய இடத்தில் இருப்பதற்கு ஃப்யோக்லாவை ஒப்புக்கொள்ள வைத்தேன். எங்களுடைய வேலைக்காரியின் பெயர்தான் ஃப்யோக்லா. காது கேட்காது. அவள் நான் இருந்த இடத்தில் இருந்தாள். அந்த நேரத்தில் பாட்டி நாற்காலியில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அருகிலிருந்த ஒரு தோழியைப் பார்ப்பதற்காக சென்றேன். காரியம் குழப்பத்தில் போய் முடிந்துவிட்டது என்று கூறினால் போதுமல்லவா? பாட்டி கண் விழித்தாள். நான் மிகவும் அடக்கமாக அருகில் இருக்கிறேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு என்னவோ கூறினாள். பாட்டி என்னவோ கேட்கிறாள் என்பது ஃப்யோக்லாவிற்கு புரிந்தாலும், அவளால் அதைக் கேட்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று அவள் ஆழமாக சிந்தித்திருக்கிறாள். இறுதியில் "பின்"னைக் கழற்றிவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டாள்.''

இந்த அளவிற்கு விஷயத்தைக் கூறியவுடன், நாஸ்தென்கா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன். திடீரென்று அவள் சிரிப்பை நிறுத்தினாள்.

“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? நீங்கள் பாட்டியை கேலி பண்ணிச் சிரிக்கக் கூடாது. என்னால் சிரிக்காமல் இருக்க முடியும். சிரிப்பு வரக்கூடிய விஷயமாக இருப்பதால், பாட்டியால் உண்மையாகவே வேறு மாதிரி நடக்க முடியாது. எனினும், பாட்டி மீது எனக்கு கொஞ்சம் அன்பு இருக்கிறது. அன்று எனக்கு சரியான தண்டனை கிடைத்தது. என்னை மீண்டும் பழைய இடத்திலேயே கொண்டு போய் இருக்கும்படி செய்தாள். அதற்குப் பிறகு ஒரு சிறு விரலை அசைக்கக்கூட எனக்கு வழி இல்லாமல் போய்விட்டது.

ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு மறந்துவிட்டேன். எங்களுக்கு- பாட்டிக்கு என்று கூறுவதுதான் மிகவும் சரியாக இருக்கும்- சொந்தத்தில் ஒரு வீடு இருக்கிறது. தெருவைப் பார்க்கும் வண்ணம் மூன்றே மூன்று சாளரங்களைக் கொண்டிருக்கும் ஒரு சிறிய வீடு. முற்றிலும் மரத்தைக் கொண்டு கட்டப்பட்டது. பாட்டியின் வயது அதற்கும் இருக்கும். அதன் மாடியில் ஒரு அறை இருந்தது. ஒருநாள் புதிய ஒரு வாடகைக்காரன் அங்கு வந்து தங்கினான்.''

“அப்படியென்றால் பழைய ஒரு வாடகைக்காரன் இருந்தான் என்று அர்த்தம்.'' -நான் வெறுமனே கூறினேன்.

“உண்மை...'' நாஸ்தென்கா கூறினாள்: “அவன் உங்களைப்போல பேசிக்கொண்டே இருப்பவனல்ல. உண்மையாகக் கூறுவதாக இருந்தால், நாக்கை அசைப்பதற்கே முடியாத நிலையில் அவன் இருந்தான். மெலிந்து, கால் ஊனமுற்று, காது கேட்காமல், கண்களால் பார்க்க முடியாத ஒரு வயதான கிழவன். இறுதியில் அதிக நாள் வாழ முடியாமல், அவன் இறந்துவிட்டான். அதனால் தான் எங்களுக்கு புதிதாக ஒரு வாடகைக்கு வரும் மனிதன் தேவைப்பட்டான். காரணம்- எங்களுக்கு வாடகைக்கு ஒரு ஆள் இருந்தே ஆக வேண்டும். அவன் தரும் வாடகைப் பணமும் பாட்டிக்குக் கிடைக்கக் கூடிய பென்ஷன் தொகையும் மட்டுமே எங்களுடைய ஒட்டுமொத்த வருமானமாக இருந்தது. விதி என்றுதான் கூற வேண்டும். புதிதாக வாடகைக்கு வந்த மனிதன் ஒரு இளைஞனாக இருந்தான். அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல. வெளியிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த ஆள்.

வாடகை விஷயத்தில் பேரம் பேசாததால், பாட்டி அவனுக்கு அறையைக் கொடுத்துவிட்டாள். அவள் என்னிடம் கேட்டாள்: "நாஸ்தென்கா... நம்முடைய வாடகைக்காரன் இளைஞனா?” பொய் கூறுவதற்கு தயங்கிக் கொண்டே நான் சொன்னேன்: "அந்த அளவிற்கு இளைஞன் என்று கூறுவதற்கில்லை, பாட்டி... வயதான ஆளுமல்ல.” அப்போது பாட்டி கேட்டாள்: "பார்ப்பதற்கு ஆள் நன்றாக இருக்கிறானா?”

மீண்டும் பொய் கூறுவதற்கு தயங்கிக் கொண்டே நான் சொன்னேன்: "பார்ப்பதற்கு பரவாயில்லை.” அதற்கு பாட்டி சொன்னாள்: "வெட்கம்! வெட்கம்! பேத்தியே, எச்சரிக்கையாக இரு. அவனைப் பார்க்கவோ நினைக்கவோ கூடாது. கஷ்டம்! உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? ஒரு விஷயத்தை நினைத்துப் பார். மேல் மாடியிலிருக்கும் அறையில் தங்கியிருக்கும் வெறும் ஒரு வாடகைக்காரன்! போதாததற்கு... பார்ப்பதற்கும் அவன் பரவாயில்லை என்று வேறு கூறுகிறாய். என்னுடைய காலத்தில் இப்படியெல்லாம் நடக்காது.”

பாட்டி எப்போதும் தன்னுடைய காலத்தைப் பற்றி கூறிக்கொண்டே இருப்பாள். தன்னுடைய காலத்தில் தான் மிகவும் இளமையாக இருந்ததாக... தன்னுடைய காலத்தில் சூரியனுக்கு அதிகமான வெப்பம் இருந்ததாக... பாலாடை இந்த அளவிற்கு புளிப்பாக இல்லை என்று... பேசும்போதெல்லாம் தன்னுடைய காலத்தைப் பற்றிப் பேச்சு. நான் அங்கேயே உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பேன். வாடகைக்கு இருப்பவன் இளைஞனா, அழகான தோற்றத்தைக் கொண்டவனா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டு பாட்டி எதற்காக என்னுடைய தலைக்குள் பலவிதப்பட்ட சிந்தனைகளை நுழைத்துவிட வேண்டும்? அதே நேரத்தில், நான் அதைப் பற்றி இயல்பாகவே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பின்னுவதற்காக நூலை எடுத்து பின்ன ஆரம்பித்தவுடன் நான் அந்த விஷயத்தை மறந்துவிட்டேன்.

எங்களுடைய வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் அறையில் புதிய சுவர் தாள் ஒட்டித் தருகிறோம் என்று நாங்கள் கூறியிருந்தோம்.. ஒரு நாள் காலையில் அவன் அந்த விஷயத்தைப் பற்றி கேட்பதற்காக வந்தான். பேச்சு ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பாட்டி நன்கு உரையாடக் கூடிய ஒரு பெண்.  அவள் என்னிடம் சொன்னாள்: "நாஸ்தென்கா, நீ என்னுடைய படுக்கையறைக்குச் சென்று அந்த கணக்குப் போடும் பலகையை எடுத்துக் கொண்டு வா." நான் அப்போதே வேகமாக எழுந்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை- என்னுடைய  முகம் சிவந்துவிட்டது. "பின்”னால் இணைத்து வைக்கப்பட்டிருந்த விஷயத்தை நான் மறந்துவிட்டேன். வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞனுக்குத் தெரியாமல், தந்திரமாக "பின்"னைக் கழற்றுவதற்கு பதிலாக பாட்டியின் நாற்காலியை தரையில் இழுத்துக் கொண்டே நான் வேகமாக எழுந்தேன். என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அந்த இளைஞன் புரிந்துகொண்டான் என்பதைத் தெரிந்துகொண்டவுடன், நான் நின்ற இடத்திலேயே சிறிதும் அசையாமல் நின்று கொண்டு திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுதேன். அந்தக் கவலையையும் வெட்கக் கேடான விஷயத்தையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. "நீ ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?" என்று பாட்டி கோபமாகக் கேட்டதும், நான் மேலும் உரத்த குரலில் அழுதேன். என்னுடைய அவமானத்திற்குரிய செயலுக்கு தான்தான் காரணம் என்பதை உணர்ந்த அந்த வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் அந்த நிமிடமே விடை பெற்றுக் கொண்டு வெளியேறினான்.

அதற்குப் பிறகு ஹாலில் சத்தம் கேட்கும்போதெல்லாம் எனக்கு உயிரே போய் விடுவதைப்போல இருக்கும். வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் இளைஞன் வருகிறான் என்று நினைத்து நான் மெதுவாக "பின்”னைக் கழற்றுவேன்.


ஆனால், எந்தச் சமயத்திலும் அவன் வரவில்லை. அவன் வரவே இல்லை. இரண்டு வாரங்கள் கடந்தன. ஒருநாள் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் ஃப்யோக்லாவின் மூலம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினான். தன்னிடம் ஏராளமான ஃப்ரெஞ்ச் மொழிப் புத்தகங்கள் இருக்கின்றன என்பதையும், நான் அவற்றை வாசித்துக் கேட்கச் செய்தால் அது பாட்டிக்கு விருப்பமான விஷயமாக இருக்குமா என்பதையும் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதுதான் அதிலிருந்த விஷயம். பாட்டி அவனுடைய விருப்பத்தை நன்றியுடன் ஏற்றுக் கொண்டாள். எனினும், அந்தப் புத்தகங்கள் ஒழுக்கமானவையா என்பதை அவள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தாள். "ஒழுக்கக்கேடானவையாக இருந்தால் அவற்றை வாசிப்பது நல்ல விஷயமில்லை, நாஸ்தென்கா”அவள் சொன்னாள்: "காரணம்- அவை உன்னைத் தவறு செய்வதற்கு கற்றுத் தரும்.”

"ஆனால், அவை எனக்கு எதைக் கற்றுத் தரும், பாட்டி? அவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?'

"சரிதான்...” அவள் சொன்னாள்: "இளைஞர்கள் நல்ல வசதி படைத்த பெண் பிள்ளைகளை வசீகரித்து, திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி, அவர்களுடைய தாய்- தந்தையரின் வீடுகளிலிருந்து கடத்திக்கொண்டு போவதையும், பிறகு அந்த அப்பாவிப் பெண்களை தெருக்களில் அனாதைகளாக விட்டுப் போவதையும்தான் அவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வந்துசேரும் துன்பங்கள் வாயால் விவரித்துக் கூற முடியாத அளவிற்கு கவலைகள் நிறைந்தவை. நான் அப்படிப்பட்ட புத்தகங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.” -பாட்டி தொடர்ந்து சொன்னாள்: "எந்த அளவிற்கு அழகாக இந்த விஷயங்கள் அந்தப் புத்தகங்களில் கூறப்பட்டிருக்கின்றன. வேறு யார் கண்களிலும் படாமல், இரவு முழுவதும் தூக்கத்தை விலக்கிவிட்டு உட்கார்ந்து வாசிப்பேன். நாஸ்தென்கா, அதனால் நீ அப்படிப்பட்ட புத்தகங்களை எந்தச் சமயத்திலும் வாசிக்கக் கூடாது. அவன் எப்படிப்பட்ட புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியிருக்கிறான் என்று நீ சொன்னாய்?"

"சர் வால்ட்டர் ஸ்காட் எழுதிய புதினங்கள்தான் அவை அனைத்தும், பாட்டி.”

"சர் வால்ட்டர் ஸ்காட்டின் புதினங்களா? அவன் தந்திரத்தனமான காரியங்கள் எதையும் செய்யவில்லை அல்லவா? அவற்றில் ஒன்றில் ஏதாவது காதல் கடிதத்தை மறைத்து வைத்திருக்கிறானா என்று பார்.”

"இல்லை, பாட்டி...” நான் சொன்னேன்: "கடிதம் எதுவுமில்லை.”

"வெளி அட்டைக்கு உள்ளே பார். அந்த மாதிரியான இளைஞர்கள் சில நேரங்களில் அவற்றிற்கு அடியில் நுழைந்து வைப்பார்கள். போக்கிரிகள்!"

"இல்லை, பாட்டி... வெளி அட்டைக்குக் கீழேயும் எதுவுமில்லை.”

"சரி... அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்.”

அதைத் தொடர்ந்து நாங்கள் சர் வால்ட்டர் ஸ்காட்டின் நூல்களை வாசிக்க ஆரம்பித்தோம். ஒரே மாதத்தில் பாதி புத்தகங்களை வாசித்து முடித்தோம். எங்களுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் வேறு புத்தகங்களையும் கொடுத்தனுப்பினான். புஷ்கினின் சில நூல்களையும். இறுதியில் என்னால் புத்தகங்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை உண்டானது. நான் சீன இளவரசனைத் திருமணம் செய்துகொள்ளப் போவதைப் பற்றி கனவு காண ஆரம்பித்தேன்.

அப்படி போய்க் கொண்டிருந்தபோது, ஒருநாள் நான் எங்களுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞனை மாடிப் படிகளில் வைத்து சந்திக்க நேர்ந்தது. பாட்டி எதையோ எடுத்துக்கொண்டு வருவதற்காக என்னை அனுப்பி வைத்திருந்தாள். அவன் நின்றான். என் முகம் சிவந்துவிட்டது. அவனுடைய முகமும்... எனினும், அவன் புன்னகைத்தான். நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு அவன் கேட்டான்: "புத்தகங்களை வாசித்தீர்களா?" நான் சொன்னேன்: "வாசித்தேன்...” "எந்த புத்தகத்தை அதிகமாக விரும்பினீர்கள்?" என்று கேட்டதற்கு நான் சொன்னேன்: "எனக்கு மிகவும் பிடித்தமானவை ஐவன்ஹோவும் புஷ்கினின் நூல்களும்தான்”. அப்போது அந்த அளவிற்குத்தான் நடந்திருந்தது.

ஒரு வாரம் கழித்து நான் அவனைத் திரும்பவும் மாடிப்படியில் வைத்துப் பார்த்தேன். இந்தமுறை பாட்டி அனுப்பி வைக்கவில்லை. நானே எதையோ எடுப்பதற்காகச் சென்றேன். மணி இரண்டு கழிந்திருந்தது. எங்களுடைய வீட்டில் தங்கியிருந்த இளைஞன் சாதாரணமாகத் திரும்பி வரும் நேரமது. நாங்கள் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அவன் கேட்டான்: "பாட்டியின் அருகிலேயே தினந்தோறும் முழு நேரமும் உட்கார்ந்திருப்பது வெறுப்பாக இல்லையா?"

அவன் அதைக் கேட்டபோது, தாங்க முடியாத வெட்கமும் கவலையும் என்னை மீண்டும் சுட்டெரிப்பதைப்போல தோன்றியது. என்ன காரணத்தால் அது நடந்தது என்பதை உண்மையிலேயே என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, மற்றவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்திருப்பதால் இருக்கலாம். நான் எதுவும் பேசாமல் போக வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், அதற்கான துணிச்சல் இல்லாமலிருந்தது.

 "நீ ஒரு நல்ல இளம்பெண்.” அவன் சொன்னான்: "நான் உன்னிடம் இப்படிப் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். ஆனால், ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகக் கூற முடியும். உன்னுடைய விஷயத்தில் உன் பாட்டிக்கு இருப்பதைவிட எனக்கு அதிகமான ஆர்வம் இருக்கிறது. நீ சென்று பார்ப்பதற்கு சினேகிதிகள் யாரும் இல்லையா?”

தோழிகள் யாரும் இல்லையென்றும், மாஷென்கா என்ற ஒரு தோழி இருந்தாள் என்றும், அவள் பிஸ்கோவிற்குப் போய்விட்டாள் என்றும் நான் சொன்னேன்.

"ஒரு விஷயம் கேட்கட்டுமா?” -அவன் கேட்டான்: "என்னுடன் தியேட்டருக்கு வருகிறாயா?”

"தியேட்டருக்கா? ஆனால், பாட்டி என்ன சொல்லுவாள்?”

"பாட்டியிடம் சொல்லாமல் வா.”

"இல்லை... பாட்டியை ஏமாற்ற நான் விரும்பவில்லை” என்று கூறியவாறு நான் விடை பெற்றேன்.

அவனும் விடை பெற்றுக்கொள்வதைத் தவிர, அதிகமாக வேறு எதுவும் பேசவில்லை.

அன்றே மதிய உணவுக்குப் பிறகு அவன் எங்களுடைய அறைக்கு வந்தான். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, பாட்டியிடம் நீண்ட நேரம் பேசினான். வெளியே எப்போதாவது போவது உண்டா, நண்பர்கள் இருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டான். திடீரென்று அவன் சொன்னான்: "நான் இன்று இரவு ஆப்பராவிற்கு டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறேன். "செவில்லியில் நாவிதன்” நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய சில நண்பர்களும் அங்கு வருவதாக கூறியிருந்தார்கள். ஆனால், இறுதியில் அவர்கள் தங்களின் மனதை மாற்றிக்கொண்டார்கள். இப்போது என் கையில் டிக்கெட் தேவைக்கு அதிகமாக இருக்கின்றன.”

"செவில்லியில் நாவிதனா?” பாட்டி ஆர்வத்துடன் கேட்டாள்: "என்னுடைய காலத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதே நாவிதனா?”

"ஆமாம்...” -அவன் சொன்னான்: "அதே நாவிதன்தான்...” அவன் என்னை நோக்கி கண்களைச் செலுத்தினான். எனக்கு விஷயம் புரிந்துவிட்டிருந்தது. என்னுடைய முகம் சிவந்துவிட்டது. இதயம் எதிர்பார்ப்புடன் துள்ளிக் குதித்தது.

"சரிதான்...” -பாட்டி சொன்னாள்: "சரிதான்... எனக்கு தெரியாதா? அந்தக் காலத்தில் எங்களுடைய நகரத்தின் நாடகக் கொட்டகையில் நானே ரொஸீனாவின் வேடத்தை ஏற்று நடித்திருக்கிறேன்.”


"பாட்டி, நீங்க இன்று இரவு வரக்கூடாதா?” -எங்களுடைய வீட்டில் தங்கியிருந்த இளைஞன் கேட்டான்: "என் கையில் டிக்கெட்டுகள் இருக்கின்றன.”

"சரி... வருகிறேன்.” "பாட்டி சொன்னாள்:” "ஏன் முடியாது? இன்னும் சொல்லப்போனால், என் நாஸ்தென்கா இதுவரை தியேட்டருக்குச் சென்றதே இல்லை.”

கடவுளே! எனக்கு உண்டான சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே! நாங்கள் அந்தச் சமயமே தயாராக ஆரம்பித்தோம். நாங்கள் ஆடைகளை மாற்றி அணிந்து வெளியேறினோம். கண்களால் பார்க்க முடியவில்லையென்றாலும், பாட்டி நிகழ்ச்சியின் இசையைக் கேட்க விரும்பினாள். அது மட்டுமல்ல; அவள் ஒரு கனிவான இதயம் கொண்ட கிழவியாகவும் இருந்தாள். என்னைச் சிறிது சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவள் விரும்பினாள். நாங்கள் தனித்துப் போவது என்பது நடக்க முடியாத விஷயம். "செவில்லியில் நாவிதன்” நிகழ்ச்சியைப் பற்றிய என்னுடைய கருத்தைக் கூற முடியாது. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் கூற முடியும். அந்த சாயங்காலம் முழுவதும் எங்களுடைய வீட்டில் தங்கியிருந்த இளைஞன் என்னை நோக்கி கனிவான பார்வைகளைச் செலுத்திக் கொண்டேயிருந்தான். என்னிடம் மிகவும் இனிமையாகப் பேசினான். தன்னுடன் தனியாக வர வேண்டுமென்று அவன் அன்று காலையில் என்னிடம் கூறியது என்னைச் சோதித்துப் பார்ப்பதற்குத்தான் என்பதை என்னால் அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. நான் சந்தோஷத்தால் என்னையே மறந்துவிட்டேன். அன்று இரவு தூங்குவதற்காகப் படுத்தபோது, எனக்கு ஏனென்று கூற முடியாத பெருமையும் சந்தோஷமும் உண்டாயின. இதயம் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. சிறிய அளவில் ஒரு குளிர்ச்சிகூட தோன்றியது. அன்று இரவு முழுவதும் நான் "செவில்லியில் நாவிதன்” நிகழ்ச்சியைப் பற்றி புலம்பிக்கொண்டே இருந்தேன்.

இனி அவன் எங்களை அடிக்கடி வந்து பார்ப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால், எனக்கு தவறு நேர்ந்துவிட்டது. அவனுடைய வருகை முழுமையாக நின்றுவிட்டது என்றே கூற வேண்டும். மாதத்திற்கு ஒருநாள் வருகை தருவதே பெரிய விஷயமாக ஆகிவிட்டது. அதுகூட தியேட்டருக்குச் செல்வதற்காக அழைப்பதற்குத்தான். நாங்கள் ஒன்றிரண்டு முறை போகவும் செய்தோம். ஆனால், என்னால் அதை சிறிதுகூட ரசிக்க முடியவில்லை. என்னிடம் பாட்டி நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து அவனுக்கு என்மீது இரக்கம் தோன்றியிருக்கிறது என்பதைத் தவிர, அதைத் தாண்டி எதுவுமில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன். இறுதியில் எனக்குள் மொத்தத்தில் ஒரு மாறுதல் உண்டானது. அசையாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. வாசிக்க முடியவில்லை. பின்னுவதற்கு முடியவில்லை. சில நேரங்களில் நான் குலுங்கிக் குலுங்கி சிரிப்பேன். இல்லாவிட்டால் பாட்டியுடன் கொண்டிருக்கும் கோபத்தைத் தணிப்பதற்காக எதையாவது செய்வேன். சில நேரங்களில் நான் வெறுமனே குலுங்கி குலுங்கி அழுவேன். என்னுடைய உடல் மிகவும் சோர்வடைந்து போய்விட்டது. நான் படுத்த படுக்கையாகிவிட்டேன் என்றுகூட கூறலாம். ஆப்பராவின் காலம் முடிவடைந்தவுடன் எங்களுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞனின் வருகை முற்றிலும் நின்று போய்விட்டது. நாங்கள் எப்போதாவது- அதே மாடிப்படியில் வைத்து சந்திக்க நேர்ந்தால், என்னுடன் பேசுவதற்கு விருப்பமில்லாததைப்போல, முழுமையான மிடுக்குடனும் அமைதியாகவும் வணங்கிவிட்டு அவன் வாசலுக்கு நகர்ந்து வெளியேறிச் செல்வான். நானோ, செம்பருத்தி மலரைப்போல சிவந்த முகத்துடன் அந்த மாடிப்படியின் பாதி வழியில் நின்று கொண்டிருப்பேன். அவனைப் பார்க்கும் நேரங்களிலெல்லாம் என்னுடைய தலைக்குள் ரத்தம் பாய்ந்தோட ஆரம்பித்துவிடும்.

என் கதை முடிந்தது. கடந்த மே மாதத்தில் எங்களுடைய வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்த இளைஞன் என் பாட்டியை வந்து பார்த்தான். இங்குள்ள வேலைகள் முழுவதும் முடிவடைந்து விட்டதால் ஒரு வருட காலத்திற்கு மீண்டும் மாஸ்கோவிற்குச் செல்வதாகக் கூறினான். அதைக் கேட்டவுடன் நான், முகம் வெளிறி ஒரு நாற்காலியில் தளர்ந்து போய் விழுந்துவிட்டேன். பாட்டி அது எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அவனோ, தான் பிரிந்து செல்லும் விஷயத்தைக் கூறிவிட்டு, வணங்கிய பிறகு வெளியேறிச் சென்றுவிட்டான்.

நான் என்ன செய்வது? நான் தலைக்குள் குழப்பங்கள் நிறைந்திருக்க சிந்தித்தேன். மனம் புண்ணானது. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன். அவன் மறுநாள் புறப்படப் போகிறான். அந்த மாலை வேளையிலேயே, என் பாட்டி தூங்குவதற்காகப் படுத்த பிறகு, நான் இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனதிற்குள் உறுதியான முடிவு எடுத்தேன். அதை செயல் வடிவில் காட்டவும் செய்தேன். எனக்கான ஆடைகளையும் உள்ளாடைகளையும் சேர்த்து ஒரு மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை கையிடுக்கில் இறுகப் பிடித்துக் கொண்டு பாதி உயிருடன் நான் எங்கள் வீட்டில் தங்கியிருந்த இளைஞனின் அறைக்குச் செல்லும் படியில் ஏறினேன். அந்தப் படிகளில் ஏறுவதற்கு ஒரு மணி நேரம் ஆனது என்று தோன்றியது. நான் கதவைத் தள்ளித் திறந்தேன். என்னைப் பார்த்ததும் அவன் திகைத்துப் போய் வாயைப் பிளந்துவிட்டான். என்னை ஒரு பேய் என்று அவன் நினைத்திருக்க வேண்டும். அவன் ஓடிச் சென்று சிறிது நீரை எடுத்துக் கொண்டு வந்தான். எழுந்து நிற்பதற்கே எனக்கு சக்தி இல்லாமல் இருந்தது. இதயம் உரத்து அடித்துக் கொண்டிருந்த காரணத்தால், எனக்கு தலை வலித்தது. மனம் சுழன்று கொண்டிருந்தது. சுய உணர்வு மீண்டும் கிடைத்தவுடன், நான் என்னுடைய மூட்டையை அவனுடைய கட்டிலின்மீது வைத்து விட்டு அதற்கு அருகில் உட்கார்ந்துவிட்டேன். கைகளால் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதேன். அந்த நிமிடமே அவனுக்கு விஷயம் முழுவதும் புரிந்துவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். வெளிறிப்போன முகத்துடனும் கண்களில் சோகம் கலந்த பார்வையுடனும் அவன் எனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தபோது, என் இதயமே நொறுங்கி விட்டதைப் போல உணர்ந்தேன்.

"நாஸ்தென்கா...” அவன் சொன்னான்: "தயவு செய்து நான் கூறுவதைக் கேள். என்னால் எதுவுமே செய்ய முடியாது. நான் ஒரு ஏழை. இப்போது கூட நான் ஒன்றுமே இல்லை. நல்ல ஒரு வேலைகூட இல்லை. நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டால், நாம் எப்படி வாழ்வோம்?”

நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். இறுதியில் மனம் பதறிப்போய் காணப்பட்ட அந்தச் சூழ்நிலையில் நான் அவனிடம் எல்லா விஷயங்களையும் கூறினேன்- பாட்டியுடன் இதற்குமேல் சேர்ந்து வாழ இயலாது என்பதையும், நான் ஓடிப்போய் விடுவேன் என்பதையும், ஒரு சேஃப்ட்டி பின்னைக் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும் விஷயம் எனக்கு விருப்பம் இல்லாத விஷயம் என்பதையும், அவனுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் நான் அவனுடன் சேர்ந்து மாஸ்கோவிற்குச் செல்வேன் என்பதையும்,


ஏனென்றால் என்னால் அவன் இல்லாமல் வாழ முடியாது என்பதையும் கூறினேன். வெட்கமும் காதலும் பெருமையும்- அனைத்தும் அதில் அடங்கியிருந்தன. அனைத்தும் ஒன்று சேர்ந்து நுரை தள்ளிப் பொங்கியது. காய்ச்சல் உண்டாகி விட்டதைப்போல நான் அவனுடைய மெத்தையின்மீது விழுந்தேன். அவன் எங்கே எதிர்ப்பு தெரிவித்துவிடப் போகிறானோ என்று எண்ணி அந்த அளவிற்கு நான் பயந்தேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு அவன் எழுந்து எனக்கு அருகில் வந்து என் கையைப் பிடித்தான்.

"தங்கம்... என் இரக்கத்திற்குரிய நாஸ்தென்கா...” அவன் கூறினான். அவனுடைய முகத்தின் வழியாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. "நான் சொல்லப்போவது முழுவதையும் கேள். எனக்கு என்றாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை உண்டானால், எனக்கு சந்தோஷம் தரப் போவது உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். என்னை நம்பு- என்னை இப்போது சந்தோஷப்படுத்த உன்னால் மட்டுமே முடியும். இனி நான் கூறுவதை கவனமாகக் கேள். நான் மாஸ்கோவிற்குச் செல்கிறேன். சரியாக ஒரு வருட காலம் நான் அங்கு இருப்பேன். அதற்குள் என்னுடைய காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிட முடியும் என்று நான் நம்புகிறேன். நான் திரும்பி வரும்போது, நீ என்மீது கொண்டிருக்கும் காதல் மறையாமல் இருந்தால், நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். ஆனால், இப்போது அது சாத்தியமில்லாத விஷயம். உனக்குத் தருவதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. எனக்கு அதற்கான எந்தவொரு உரிமையும் இல்லை. ஒரு வருடத்திற்குள் என்று இல்லாவிட்டாலும், என்றாவதொரு நாள் இது கட்டாயம் நடந்தே தீரும் என்று நான் திரும்பவும் கூறுகிறேன். ஆனால், நீ எனக்கு பதிலாக வேறொரு ஆளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் மட்டுமே... காரணம்- உன்னிடமிருந்து எந்தவொரு உறுதிமொழியையும் வாங்க என்னால் இயலாது. நான் அதற்குத் தயாராக இல்லை.”

இதுதான் அவன் சொன்ன வார்த்தைகள். மறுநாள் அவன் புறப்பட்டுவிட்டான். என் பாட்டியிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அதுதான் அவனுடைய விருப்பமாக இருந்தது. என்னுடைய கதை முடிந்துவிட்டது என்றே கூறலாம். சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது. அவன் திரும்பி வந்தான். வந்து மூன்று நாட்கள் கடந்தன. பிறகு..''

“பிறகு...?'' கதையின் இறுதிப் பகுதியைக் கேட்கக் கூடிய ஆர்வத்துடன் நான் கேட்டேன்.

“பிறகு அவன் இதுவரை என்னை வந்து பார்க்கவே இல்லை.'' வெளிப்படையான வருத்தத்துடன் நாஸ்தென்கா கூறினாள்: “எந்தவொரு தகவலும் இல்லை.''

அவள் உரையாடலை நிறுத்தினாள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவள் தன்னுடைய தலையைத் தாழ்த்திக் கொண்டாள். இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டு பரிதாபம் உண்டாகும் வண்ணம் குலுங்கிக் குலுங்கி அழுதாள். என்னுடைய இதயத்தில் வேதனை நிறைந்தது.  இப்படி ஒரு சோகமான முடிவை நான் சிறிதும் எதிர்பார்க்கவேயில்லை.

“நாஸ்தென்கா...'' இரக்கம் கலந்த குரலில் சிறிது தயக்கத்துடன் நான் சொன்னேன்: “நாஸ்தென்கா... கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு அழாமல் இருக்க வேண்டும். மேடம், உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை, அவன் இன்னும் வராமல் கூட இருக்கலாம்.''

“வந்தான்! வந்தான்!'' நாஸ்தென்கா எதிர்த்துக் கூறினாள்: “அவன் இங்குதான் இருக்கிறான். எனக்குத் தெரியும். அவன் புறப்பட்டுச் செல்வதற்கு முந்தின நாள் இரவு நாங்கள் அதை பேசி உறுதி செய்து கொண்டோம். நான் உங்களிடம் இப்போது விளக்கிக் கூறியதைப் போல எல்லா விஷயங்களையும் கூறியபோது, நாங்கள் சிறிது காற்று வாங்கலாம் என்பதற்காக இதே இடத்திற்கு வந்தோம். நேரம் பத்து மணி. நாங்கள் இந்த பெஞ்சில் உட்கார்ந்தோம். என்னுடைய அழுகை முழுவதும் நின்று போய்விட்டிருந்தது. நான் அவனுடைய பேச்சில் மூழ்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். திரும்பி வந்த நிமிடத்திலேயே அவன் என்னைத் தேடி வருவானென்றும் நான் அவனைப் பொருட்படுத்தவில்லையென்றால், என் பாட்டியிடம் எல்லா விஷயங்களையும் கூறிவிடப் போவதாகவும் அவன் கூறினான். இப்போது அவன் திரும்பி வந்திருக்கிறான். எனக்குத் தெரியும். எனினும், அவன் என்னைத் தேடி வரவில்லை.... வரவில்லை.''

அவள் மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“கடவுளே! இதற்கு ஏதாவதொரு வழி இல்லையா?'' என்று கூறியவாறு நான் கடுமையான விரக்தியுடன் பெஞ்சிலிருந்து வேகமாக எழுந்தேன். “சொல்லுங்கள், நாஸ்தென்கா. ஒருவேளை, நான் போய் பார்த்தால், ஏதாவது பலன் இருக்குமா?''

“போகலாம் என்று தோன்றுகிறதா?'' திடீரென்று தலையை உயர்த்திக் கொண்டு அவள் கேட்டாள்.

“ஓ... இல்லை...'' அதிலிருந்த முட்டாள்தனத்தைப் புரிந்துகொண்டு நான் சொன்னேன்: “எனக்கு வேறொரு எண்ணம் தோன்றுகிறது. ஒரு கடிதம் எழுதினால் என்ன?''

“இல்லை. நான் எழுதத் தயாராக இல்லை. அப்படி யாரும் செய்ய மாட்டார்கள்.'' அவள் பிடிவாதமான குரலில் கூறினாள். ஆனால் அதே நேரத்தில் என்னுடைய கண்களைப் பார்க்காமல் இருப்பதில் கவனமாக இருந்து கொண்டு அவள் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஏன் முடியாது? ஏன் செய்ய மாட்டீர்கள்?'' என் கேள்வியில் ஆவேசம் வெளிப்பட நான் தொடர்ந்து சொன்னேன்: “ஆனால், அது ஒரு குறிப்பிடத்தக்க கடிதமாக இருக்க வேண்டும். அது எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை நம்பித்தான் எல்லா விஷயங்களும் இருக்கின்றன. ஹா... நாஸ்தென்கா. உண்மையே அதுதான். என்னை நம்புங்கள். நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். மேடம், நான் உங்களுக்கு எந்தவொரு அறிவுரையையும் கூறவில்லை. எல்லாவற்றையும் சரி பண்ண முடியும். அன்று முதல் அடியை எடுத்து வைத்தது நீங்கள்தானே? இன்று ஏன் முடியாது?''

“இல்லை... இல்லை... நான் சிறிதும் அடக்கமே இல்லாதவள் என்று தோன்றும்.''

“என் தங்க நாஸ்தென்கா...'' ஒரு புன்சிரிப்புடன் நான் இடையில் புகுந்து சொன்னேன்: “அப்படி எதுவும் தோன்றாது. அவன் வாக்குறுதி அளித்த நிலையில், உங்களுடைய உரிமை அது. அது மட்டுமல்ல- நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, அவன் வித்தியாசமான ஆள் என்று தெரிகிறது. அவனுடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மதிப்புள்ளதாகத் தோன்றுகிறது.'' என்னுடைய வார்த்தைகள் மற்றும் தூண்டுதலின் பலத்தில் பொறுப்புணர்வு கலந்த ஆவேசத்துடன் நான் தொடர்ந்து சொன்னேன்: “அவன் என்ன செய்தான்? அவன் உறுதிமொழி அளித்திருக்கிறான். என்றாவது திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், அது... மேடம், உங்களையல்லாமல் வேறு யாரையும் கிடையாது என்று கூறியிருக்கிறான்.


அதே நேரத்தில்- விருப்பப்படும்போது, கைகழுவி விட்டுப் போகக்கூடிய முழுமையான சுதந்திரத்தை உங்களுக்குத் தரவும் செய்திருக்கிறான். அதனால்... மேடம், நீங்கள் முதல் காலடியை எடுத்து வைப்பது முற்றிலும் நியாயமானது. மேடம், உங்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது. அவன் விஷயத்தில் உங்களுக்கு ஒரு லாபம் இருக்கிறது. அவனை உறுதிமொழியிலிருந்து விடுவிப்பதற்கு நீங்கள் இப்போது விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்...''

“சொல்லுங்கள்... நீங்கள் அதை எப்படி எழுதுவீர்கள்?''

“எதை?''

“அந்தக் கடிதத்தை...''

“நான் எழுதுவேன்... மதிப்பிற்குரிய நண்பரே...''

“மதிப்பிற்குரிய என்று வேண்டுமா?''

“நிச்சயமாக... ஏன்? எனக்குத் தெரியாது... ஒருவேளை...''

“பரவாயில்லை... மீதியைச் சொல்லுங்கள்.''

“மதிப்பிற்குரிய நண்பரே, மன்னிக்க வேண்டும். நான்... இல்லாவிட்டால் வேண்டாம். மேடம், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமொன்றுமில்லை. இந்த உண்மையே போதுமான அளவிற்கு நியாயமானதுதான். வெறுமனே இப்படி எழுதினால் போதும்:

நான்தான் எழுதுகிறேன். என் பொறுமையற்ற நிலையைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், சந்தோஷத்தின் எதிர்பார்ப்புகளுடன் ஒரு வருட காலம் முழுவதும் நான் காத்திருந்தேன். சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒருநாள்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது என்னுடைய குற்றமா? நீங்கள் திரும்பி வந்தீர்கள். உங்களுக்கு திருமணம் நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால், நான் கவலைப்படவோ உங்களைப் பற்றி வசைபாடவோ மாட்டேன் என்று இந்த கடிதத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். உங்களுடைய இதயம் என் பக்கம் இல்லாத காரணத்தால்தான் நான் உங்களைப் பற்றி வசைபாடவில்லை. என்னுடைய இயல்பு அது.

நீங்கள் மதிப்பிற்குரிய மனிதர். என்னுடைய இந்த எழுத்துகளைக் கொண்ட வரிகளை வாசிக்கும்போது நீங்கள் புன்னகை செய்யவோ கோபம் கொள்ளவோ மாட்டீர்கள். வழியைக் காட்டித் தருவதற்கோ அறிவுரை கூறுவதற்கோ யாருமில்லாத தனித்திருக்கும் ஒரு பெண் நான். தன்னுடைய இதயத்தை அடக்கி நிறுத்தி வைப்பதற்கு எந்தச் சமயத்திலும் இயலாத ஒருத்தி நான். அப்படிப்பட்ட ஒருத்திதான் இந்த வரிகளை எழுதுகிறாள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்ப்பீர்கள் அல்லவா? எனினும், ஒரே ஒரு நிமிடம் என்னுடைய மனதிற்குள் உண்டான சந்தேகத்திற்கு, மன்னிப்பு அளியுங்கள். உங்களை இந்த அளவிற்கு காதலித்து, இப்போதும் காதலித்துக் கொண்டிருக்கும் ஒருத்தியை மனதால்கூட வேதனைப்படுத்த உங்களால் முடியாது.''

“ஆமாம்... ஆமாம்... நான் நினைத்ததைப் போலவே இது இருக்கிறது.'' நாஸ்தென்கா கூறினாள். அவளுடைய கண்கள் சந்தோஷத்தால் ஒளிர்ந்து கொண்டிருந்தன. “நீங்கள் என்னுடைய சந்தேகங்களுக்கு முடிவு உண்டாக்கி விட்டீர்கள். உங்களை என்னிடம் தெய்வம்தான் அனுப்பி வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு நன்றி... நன்றி!''

“என்ன? தெய்வம் அனுப்பி வைத்ததா?'' அவளுடைய சந்தோஷம் நிறைந்த முகத்தை சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன்.

“ஆமாம்... வேறு எதற்காகவும் இல்லை என்பதால்... ஹா... நாஸ்தென்கா, உங்களுக்குத் தெரியுமா? சில நேரங்களில் நமக்கு சிலரிடம் நன்றி தோன்றுகிறது. அவர்கள் நம்முடன் ஒரே உலகத்தில் வாழ்கிற காரணத்தால் மட்டும்... நாம் அறிமுகமானவர்களாக ஆகிவிட்டதால்... இனியுள்ள வாழ்க்கை முழுவதும் நான் உங்களை நினைப்பேன் என்பதால்... நான் உங்களிடம் நன்றி உள்ளவன்.''

“நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... இனி நான் கூறப்போவதை கேளுங்கள். திரும்பி வந்தவுடன், விஷயத்தை என்னிடம் அறிவிப்பதற்காக என்னுடைய சில தெரிந்தவர்களிடம் கடிதத்தைக் கொடுப்பதாக அவன் கூறியிருந்தான். இதைப் பற்றி எதுவுமே தெரியாத நல்ல மனிதர்கள் அவர்கள். இனி... அதாவது... எழுத முடிய வில்லையென்றால்- எல்லா விஷயங்களையும் கடிதத்தில் கூறிவிட முடியாது அல்லவா? எங்களுடைய சந்திக்கும் இடமான இங்கு அதே நாளன்று சரியாக பத்து மணிக்கு வருவதாகவும் கூறியிருந்தான். அவன் திரும்பி வந்துவிட்டான் என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால், வந்து சேர்ந்து மூன்று நாட்கள் ஆகியும் அவன் இங்கு வரவோ, எனக்காக கடிதத்தைத் தரவோ இல்லை. பகல் நேரத்தில் என் பாட்டியின் அருகிலிருந்து வெளியே செல்ல என்னால் சிறிதும் முடியாது. அதனால், நீங்கள் நான் கூறிய நல்ல மனிதர்களிடம் நாளை சென்று என் கடிதத்தை ஒப்படைக்க முடியுமா? அவர்கள் அதை அவனிடம் சேர்த்துவிடுவார்கள். பதில் கிடைத்தால், நீங்களே பத்து மணிக்கு இங்கு அதைக் கொண்டு வரவேண்டும்.''

“ஆனால்... உங்களின் கடிதம்! ஆமாம்- கடிதம்... மேடம்,

முதலில் நீங்கள் கடிதத்தை எழுத வேண்டாமா? அப்படியென்றால் நாளை மறுநாளுக்கு முன்னால் பதிலை எதிர்பார்க்க வேண்டாம்.''

“கடிதம்...'' சிறிய ஒரு பதைபதைப்புடன் நாஸ்தென்கா சொன்னாள்: “கடிதம்...''

அவள் கூற வந்ததை முழுமையாக முடிக்கவில்லை. முதலில் அவள் திரும்பி நின்றாள். பிறகு அவளுடைய முகம் செம்பருத்திப் பூவைப் போல சிவந்தது. திடீரென்று என் கையில் கடிதத்தின் தொடலை உணர்ந்தேன். முன்பே எழுதித் தயார் செய்து மேலே முகவரி எழுதி ஒட்டி வைத்திருந்த ஒரு கடிதம் அதுவாக இருக்க வேண்டும் என்பது தெளிவானது. சந்தோஷமும் எளிமையும் நிறைந்த ஒரு நினைவின் சகல அம்சங்களும் என் மனதின் வழியாக கடந்து சென்றன.

“ரொ- ரொ, ஸீ- ஸீ, நா- நா...'' நான் ஆரம்பித்து வைத்தேன்.

“ரொஸீனா.'' நாங்கள் ஒன்றாக சேர்ந்து பாடினோம். சந்தோஷப் பெருக்கால் நான் அவளை இறுகக் கட்டிப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். அவளோ, முகம் முழுவதும் சிவக்க, கருமையான இமைகளில் சிறு முத்துக்களைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த கண்ணீருக்கு மத்தியில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

“நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! நான் வரட்டுமா!'' அவள் அவசரமான குரலில் சொன்னாள்: “இதோ கடிதம்... நீங்கள் இதைக் கொண்டு போய்  சேர்க்க வேண்டிய முகவரி மேலே எழுதப்பட்டிருக்கிறது. சரி... நாளை சந்திப்போம்.''

உற்சாகத்துடன் என்னுடைய கையைப் பிடித்து அழுத்தியவாறு, சற்று தலையை ஆட்டிவிட்டு அவள் அம்பைப்போல தன்னுடைய ஒற்றையடிப் பாதையின் வழியாக வேகமாக நடந்து சென்றாள். அவள் போவதையே பார்த்தவாறு நான் நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றிருந்தேன்.

"நாளை சந்திப்போம்! நாளை சந்திப்போம்!” அவள் கண்களுக்கு முன்னாலிருந்து மறைந்தவுடன், என்னுடைய மனதிற்குள் வேகமாக நுழைந்த சிந்தனை அதுவாகத்தான் இருந்தது.


மூன்றாவது இரவு

ன்று வெறுப்பைத் தரும் ஒரு மழை நாளாக இருந்தது. வெளிச்சத்திற்கான ஒரு அறிகுறிகூட இல்லை. இந்த நாளைப்போலவே இருக்கும் என்னுடைய தனிமை நிறைந்த முதிய காலம். வினோதமான சிந்தனைகள் என்னை நாலா பக்கங்களிலிருந்தும் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. தெளிவற்ற உணர்ச்சிகளும், துயரம் நிறைந்த பிரச்சினைகளும் என்னுடைய மனதிற்குள் வந்து நிறைந்து கொண்டிருந்தன.

ஆனால், அவற்றுக்கு ஒரு தெளிவை அளிக்கக்கூடிய சக்தியோ விருப்பமோ எனக்கு என்ன காரணத்தாலோ இல்லாமலிருந்தது. இதற்கெல்லாம் ஒரு பரிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு நான் தயாராக இல்லை.

நாங்கள் ஒருவரையொருவர் இன்று இரவு பார்ப்பதாக இல்லை. நேற்று இரவு நாங்கள் விடை பெற்றுக்கொண்டு பிரிந்தபோது, வானத்தில் கரிய மேகங்கள் ஒன்று சேரத் தொடங்கியிருந்தன. ஒரு மூடுபனி பரவத் தொடங்கியிருந்தது. நாளைய காலநிலை மோசமாக இருக்கும் என்று நான் கூறியபோது, அவள் பதிலெதுவும் கூறவில்லை. அவள் தான் ஏமாற்றம் அடைவதை விரும்பவில்லை. அவளைப் பொறுத்தவரையில், அவளுடைய சந்தோஷத்தின்மீது நிழல் உண்டாக்க சிறிய ஒரு கரிய மேகம்கூட இல்லாமல், பிரகாசமும் அழகும் நிறைந்த ஒரு நாளாக இருக்கும் அது.

“மழை பெய்தால் நாம் சந்திக்க முடியாது.'' அப்போது அவள் கூறினாள்: “நான் வரமாட்டேன்.''

இன்று மழை பெய்த விஷயத்தை அவள் கவனித்திருக்க மாட்டாள் என்று நான் நினைத்தேன். ஆனால், அவள் வரவில்லை.

நேற்று இரவு எங்களுடைய மூன்றாவது சந்திப்பு நடைபெற்றது. எங்களுடைய மூன்றாவது வெளுத்த இரவு...

ஆனந்தமும் உற்சாகமும் ஒரு ஆளுக்கு எந்த அளவிற்கு அழகை அளிக்கும் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

இதயத்தில் காதல் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கிறது. மனதிற்குள் இருக்கும் காதல் முழுவதையும் இன்னொரு இதயத்திற்குள் பொழியச் செய்வதற்கு ஆசை உண்டாகிறது. சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களையும் சந்தோஷம் நிறைந்த- வாய் திறந்த சிரிப்புடன் பேச வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. சந்தோஷம் என்பது எந்த அளவிற்கு அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒரு விஷயமாக இருக்கிறது! நேற்று இரவு அவளுடைய வார்த்தைகளில் எந்த அளவிற்கு அன்பு கலந்திருந்தது? அவளுடைய இதயத்தில் எந்த அளவிற்கு ஒரு கனிவு நிறைந்து விட்டிருந்தது! எந்த அளவிற்கு இனிமையாக அவள் என்னிடம் பேசினாள்! எந்த அளவிற்கு பரந்த மனதுடன் என்னுடைய உணர்ச்சிகளை மதித்தாள்! எந்த அளவிற்கு இனிமையான குரலில் அவள் எனக்கு ஆசையையும் புத்துணர்ச்சியையும் அளித்தாள்! எப்படிப்பட்ட ஒரு அழகான பிரபஞ்சத்தை அவளுடைய சந்தோஷம் நிறைந்த ஆவேசம் படைத்து விட்டது! நான்... நான் நினைத்தேன்- அது உண்மை என்று. நான் நினைத்தேன்- அவள்...

கடவுளே! எனக்கு எப்படி அப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றியது! அனைத்தும் இன்னொரு ஆளைச் சேர்ந்ததாக இருந்து, எனக்கென்று எதுவுமே இல்லாத சூழ்நிலையில், அவளுடைய அன்பும் ஆர்வமும் சினேகமும்- ஆமாம்... என்மீது உள்ள சினேகம்கூட- வெளியூரிலிருந்து  வந்திருக்கும் மனிதனை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்பதில் உண்டான சந்தோஷம் மட்டுமே இருக்கும்போது, அந்த சந்தோஷத்தை நானும் சேர்ந்து பங்கிடக் கூடிய முயற்சி மட்டும் இருக்கும்போது, நான் எப்படி இந்த அளவிற்கு குருடனாகி விட்டேன்? காரணம்- அவன் வராமல் போய், எங்களுடைய காத்திருத்தல் பயனற்ற விஷயமாக ஆனபோது, அவளுடைய முகம் வாடிப்போய்விட்டது. அவள் பயம் நிறைந்தவளாகவும் கோழையாகவும் ஆனாள். அவளுடைய அசைவுகளும் வார்த்தைகளும் முன்பு இருந்ததைப்போல இனிமையானதாகவோ உற்சாகமுள்ளதாகவோ இல்லை. வினோதம் என்றுதான் கூறவேண்டும்- என்மீது அவள் கொண்டிருக்கும் ஈடுபாடு அதைத் தொடர்ந்து அதிகமானது. தான் ஆசைப்பட்டதும், நிறைவேறாது என்று சிந்திப்பதற்கு பயப்படக்கூடியதும் எதுவோ அதை என்மீது பலமாகப் பொழியச் செய்வதற்கு அவளுக்குள் ஒரு தூண்டுதல் உண்டானதைப் போல தோன்றியது. என்னுடைய நாஸ்தென்கா மிகவும் பயந்துபோயும் பதைபதைப்பு அடைந்தும் காணப்பட்டாள். நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதை இறுதியில் புரிந்துகொண்டு, அவள் என் பலவீனமான இதயத்திடம் இரக்கம் காட்டுவதைப்போல உணர்ந்தேன். நாம் கவலையில் மூழ்கும்போது, மற்றவர்களின் துயரத்தை மேலும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. நமக்குள் அப்போது உணர்ச்சி அழிவதில்லை. மேலும் பலம் கொண்டதாக அது ஆகிறது.

மீண்டும் சந்திப்பு நேரப்போகும் சந்தர்ப்பத்திற்காக ஆர்வம் நிறைந்த இதயத்துடன் நான் அவளின் அருகில் சென்றேன். எனக்கு இப்போது என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி எந்தவொரு முன்னறிவிப்பும் அந்தச் சமயத்தில் என்னிடம் இல்லை. இந்த அளவிற்கு எதிர்பாராத ஒரு முடிவு உண்டாகும் என்பதற்காக எந்தவொரு முன் அறிகுறியும் இல்லாமலிருந்தது. அவனுடைய முகம் சந்தோஷத்தில் ஒளிர்ந்து காணப்பட்டது. அவள் அவளுடைய பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவன்தான் அவளுக்கான பதில். அவன் வரவேண்டும். அவளுடைய அழைப்பைக் கேட்டு ஓடி வரவேண்டும். நான் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவள் அங்கு வந்துவிட்டிருந்தாள். முதலில் அவளுக்கு எல்லா விஷயங்களும் ரசிக்கக் கூடியவையாக இருந்தன. நான் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு அவள் சிரித்தாள். என்னுடைய இதயத்திற்குள் இருப்பதை வெளியே கூற வேண்டும் என்று தோன்றினாலும், நான் கூறவில்லை.

“எனக்கு இந்த அளவிற்கு சந்தோஷம் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?'' அவள் கேட்டாள்: “உங்களிடம் எனக்கு இந்த அளவிற்கு சந்தோஷம் தோன்றியதற்குக் காரணம்...? இன்று எனக்கு உங்களிடம் இந்த அளவிற்கு சினேகம் தோன்றுவதற்குக் காரணம்...?''

“இல்லை... தெரியாது...'' என்ன? -நான் இதயம் துடிக்க கேட்டேன்.

“நீங்கள் என்மீது காதல் கொள்ளாமல் இருக்கும் காரணத்தால் தான் எனக்கு உங்களிடம் இந்த அளவிற்கு அதிகமான சினேகம் தோன்றியிருக்கிறது. உங்களின் இடத்தில் வேறு யாராக இருந்தாலும், என்னைத் தொந்தரவு செய்து பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு செய்திருப்பார்கள். கவலைக்குள்ளாகி நீண்ட பெரு மூச்சை விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் எந்த அளவிற்கு நல்லவர்?''

இவ்வளவையும் கூறியவாறு அவள் என்னுடைய கையை பலமாக அழுத்தினாள். நான் வேதனையால் உரக்க கத்தவில்லை. அவ்வளவுதான். அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

“எந்த அளவிற்கு சினேகிதனாக நீங்கள் இருக்கிறீர்கள்?'' ஒரு நிமிடத்திற்குப் பிறகு முழுமையான மிடுக்குடன் அவள் சொன்னாள்: “தெய்வம்தான் உங்களை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறது. இப்போது நீங்கள் என்னுடன் இல்லாமலிருந்தால், எனக்கு என்ன நடந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எந்தளவிற்கு சுயநலமற்ற மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள்! எந்த அளவிற்கு பெருந்தன்மை கொண்டதாக இருக்கிறது நீங்கள் என்மீது கொண்டிருக்கும் சினேகம்! என்னுடைய திருமணத்திற்குப் பிறகும் நாம் நெருங்கிய நண்பர்களாக இருப்போம். உடன்பிறந்தவர்களாக இருந்து பெறும் சிறப்பைவிட மேலானது நெருங்கிய நண்பர்களாக இருப்பதுதான். கிட்டத்தட்ட அவனளவிற்கு உங்களையும் நான் சினேகிப்பேன்.''

ஒரு நிமிட நேரத்திற்கு எனக்கு பலமான வருத்தம் உண்டானது. ஆனால், சிரிப்புடன் கலந்த ஒரு உணர்ச்சி என் இதயத்தைக் கிச்சுக்கிச்சு மூட்டிக்கொண்டிருந்தது.


“மேடம், நீங்கள் ஒரு வகையான குழப்பநிலையில் இருக்கிறீர்கள்.'' நான் சொன்னேன்: “மிகவும் பயந்துபோய் விட்டிருக்கிறீர்கள். அவன் வரமாட்டான் என்பதுதான் உங்களுடைய எண்ணம்.''

“தெய்வமே! இல்லை... இல்லை...'' அவள் சொன்னாள்: “இந்த அளவிற்கு சந்தோஷம் கொண்டவளாக நான் இல்லாமல் போயிருந்தால், ஒருவேளை நான் உங்களுடைய குற்றம் சுமத்தலையும் நம்பிக்கையில்லாத தன்மையையும் கேட்டு குலுங்கிக் குலுங்கி அழுதிருப்பேன். ஆனால், நீண்ட நாட்கள் சிந்திக்கக் கூடிய நிலையை நீங்கள் எனக்கு தந்து விட்டிருக்கிறீர்கள். எனினும், அதைப் பற்றி நான் பின்னால் சிந்தித்துக் கொள்கிறேன். இப்போது நான் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறேன். நீங்கள் கூறியது உண்மைதான்.  ஆமாம்... உண்மைதான். நான் என்ன காரணத்தாலோ மொத்தத்தில் சுருங்கிவிட்டிருக்கிறேன். மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடன் இருப்பதாலோ என்னவோ, என்னுடைய உணர்ச்சிகள் திடீரென்று பாதிக்கப்படுகின்றன. ஆனால்... நம்முடைய உணர்ச்சிகளை நாம் விலகி நிற்கச் செய்ய முடியும்!''

காலடிச் சத்தத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம். இருட்டிற்குள்ளிருந்து ஒரு மனிதன் எங்களை நோக்கி நடந்து வந்தான். நாங்கள் இருவரும் உறைந்து போய் நின்றிருந்தோம். அவள் உரத்த குரலில் சத்தம் போட முயற்சித்தாள். நான் அவளுடைய பிடியை விட்டு, விலகிச் செல்லத் தொடங்கினேன். ஆனால், எங்களுக்கு தவறு நேர்ந்துவிட்டது. அது அவன் அல்ல.

“ஏன் இந்த அளவிற்கு பயம்? ஏன் கையிலிருந்த பிடியை விட்டீர்கள்?'' என்று கேட்டவாறு அவள் மீண்டும் கையை நீட்டினாள். “ஏன் கூடாது? நாம் ஒன்றாகவே சேர்ந்து அவனைப் பார்க்கலாம். நாம் எந்த அளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவன் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.''

“நாம் எந்த அளவிற்கு ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறோமா?'' நான் ஆவேசத்துடன் கூறினேன். “ஹா... நாஸ்தென்கா... நாஸ்தென்கா?'' நான் மனதிற்குள் நினைத்தேன்: "எந்த அளவிற்கு ஆழமான அர்த்தம் அந்த ஒரு வார்த்தைக்குள் இருக்கிறது? இதைப் போன்ற அன்பு மனதை நெரித்து, இதயத்திற்குள் குளிர்ச்சியைப் பரவச் செய்யும் உன்னுடைய கை குளிர்ச்சியாக இருக்கும்போது, என் கை நெருப்பைப்போல தகிக்கிறது. ஹா... நாஸ்தென்கா! நீ இந்த அளவிற்கு குருடாகிப் போய் விட்டாயா? சந்தோஷத்தில் திளைப்பவர்கள் சில சூழ்நிலைகளில் எந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக ஆகி விடுகிறார்கள்? ஆனால், உன்னைப் பார்த்து என்னால் எந்தச் சமயத்திலும் கோபப்பட இயலாது."

இறுதியில் என்னால் என்னுடைய உணர்ச்சிகளை அடக்கி வைக்க முடியவில்லை.

“நாஸ்தென்கா...'' நான் சொன்னேன்: “இன்று முழுவதும் நான் எப்படி இருக்கிறேன் என்பது தெரியுமா?''

“இல்லை... என்ன? சீக்கிரமாகச் சொல்லுங்கள்... “இதுவரை ஏன் எதுவுமே கூறாமல் இருந்தீர்கள்?''

“நாஸ்தென்கா... முதலிலேயே நான் உங்களுடைய எல்லா வேண்டுகோள்களையும் நிறைவேற்றினேன். உங்களின் நல்ல சினேகிதர்களைத் தேடிச் சென்று கடிதத்தைக் கொடுத்தேன். பிறகு... பிறகு... வீட்டுக்கு வந்து படுத்து உறங்கினேன்.''

“அவ்வளவுதானா?'' சிரித்துக் கொண்டே அவள் இடையில் புகுந்து கேட்டாள்:

“மொத்தத்தில் அவ்வளவுதான் என்று கூறலாம்...'' நான் வருத்தத்துடன் கூறினேன்.

இனம்புரியாத கண்ணீர் என் கண்களில் ததும்பி நிற்க ஆரம்பித்திருந்தது. “நம்முடைய சந்திப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நான் கண் விழித்தேன். ஆனால், உறங்கியதாக எனக்குத் தோன்றவே இல்லை. காரியம் என்னவென்று சரியாக எனக்குப் புரியவில்லை. நான் உங்களிடம் கூறுவதற்காகவும் என்னைப் பொறுத்தவரையில் நேரம் நின்றுவிட்டதைப்போல தோன்றியது என்றும், அந்த நிமிடத்திலிருந்து இனி என்றென்றைக்கும் ஒரேயொரு  உணர்ச்சி மட்டுமே, ஒரேயொரு ஒட்டுதல் மட்டுமே எனக்குள் எஞ்சியிருக்கும் என்பதையும், என்னைப் பொறுத்த வரையில் வாழ்க்கை அசைவே இல்லாமல் ஆகிவிட்டதைப் போன்ற அந்த ஒரு நிமிடம் என்றென்றைக்கும் நிலைபெற்று நின்று கொண்டிருக்கும் என்ற விஷயத்தையும் உங்களிடம் நான் கூறுவதற்காகவும்... அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். கண்விழித்தபோது, முன்பு எப்போதோ நன்கு பழக்கமான ஒரு ராகத்தை நினைத்துப் பார்ப்பதைப்போல தோன்றியது. எங்கேயோ வைத்து ஒருமுறை கேட்டு விட்டு, பிறகு மறந்து போய்விட்ட இனிமையான ஒரு ராகம், இவ்வளவு காலமாக என்னுடைய இதயத்திற்குள்ளிருந்து தகர்த்துக் கொண்டு வெளியே வருவதற்காக துடித்துக்கொண்டிருந்தது என்பதையும் இப்போது கூறுவதற்காகத் தான் நான் வந்ததே...''

“தெய்வமே! தெய்வமே!'' நாஸ்தென்கா இடையில் புகுந்து சொன்னாள்: "நீங்க என்னவெல்லாம் சொல்கிறீர்கள்! எனக்கு ஒரு வார்த்தையைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை.''

“ஹா... நாஸ்தென்கா! இந்த வினோதமான உணர்வை உங்களையும் அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய விருப்பம் எனக்கு இருந்தது.'' நான் மென்மையான குரலில் கூற ஆரம்பித்தேன். எனினும், மனதிலிருக்கும் ஆசையின் ஒரு மெல்லிய கீற்று அதில் அடங்கியிருந்தது.

“நிறுத்துங்கள்... இதற்குமேல் பேச வேண்டாம்.''-அவள் சொன்னாள். சில நொடிகளில் அவள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டாள். புத்திசாலி!

அந்த நிமிடத்தில் அவள் எப்போதையும்விட உரையாடலில் அதிக விருப்பம் கொண்டவளாகவும் சந்தோஷம் நிறைந்தவளாகவும் அழகானவளாகவும் காணப்பட்டாள். அவள் என் கையைப் பிடித்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். என்னையும் சிரிக்க வைக்க முயற்சித்தாள். பதைபதைப்பிற்கு மத்தியில் என்னுடைய வாயிலிருந்து வெளியே வந்த ஒவ்வொரு வார்த்தையும் அவளுடைய நீண்ட குலுங்கல் சிரிப்பிற்குக் காரணமாக இருந்தது. எனக்கு கோபம் வர ஆரம்பித்தது. திடீரென்று அவளுடைய உரையாடல் கவர்ச்சித் தன்மை கொண்டதாக ஆனது.

“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா?'' அவள் சொன்னாள்: “உங்களுக்கு என்மீது காதல் உண்டாகாததில், எனக்கு கொஞ்சம் கோபம் உண்டு. பெண் இதயத்தின் விடுகதைக்கு பதில் கண்டு பிடிப்பதற்கு இனி சற்று முயற்சி பண்ணிப் பாருங்கள். ஆனால், ஹே... பிடிவாதக்கார மனிதா! எதையும் மறைத்து வைக்காமல் பேசுவதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். நான் உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுகிறேன். என் தலைக்குள்ளிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களையும் பரிமாறுகிறேன்.''

“கேளுங்கள் மணி பதினொன்று அடிக்கிறதோ?'' தூரத்திலிருந்த நகரத்தின் கோபுரத்திலிருந்து தாளத்தில் ஒலித்த மணிச் சத்தத்தைக் கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டே நான் கேட்டேன். அவளுடைய சிரிப்பு திடீரென்று நின்றது. அமைதியாக அவள் மணியடிப்பதை எண்ணத் தொடங்கினாள்.

“ஆமாம்... பதினொன்று...'' இயல்பான, மென்மையான குரலில் அவள் சிரமப்பட்டுக் கூறினாள்.

அவளை பயப்படச் செய்ததற்காகவும், அவளை மணிச் சத்தத்தை எண்ணச் செய்ததற்காகவும் எனக்குள் அப்போது வருத்தம் உண்டானது. என்னை திடீரென்று துரோக குணம் ஆட்கொண்டதற்காக என்னை நானே திட்டிக் கொண்டேன்.


அவளுடைய பரிதாபமான நிலையைப் பார்த்து நான் கவலைப்பட்டேன். என்னுடைய பாவச் செயலுக்கு என்ன பரிகாரம் செய்வது என்பதைப் பற்றி எனக்கு எந்த ஒரு தீர்மானமும் இல்லாமலிருந்தது. நான் அவளுக்கு ஆறுதல் கூற முயன்றேன். அவளுக்காக சாக்குப் போக்குகள் கண்டுபிடிப்பதற்கும், அவன் வராமல் போனதற்குப் பொருத்தமான ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்பதை நிறுவுவதற்கும் ஆரம்பித்தேன். இதைப்போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் நாஸ்தென்காவைப்போல இந்த அளவிற்கு எளிதாக வேறு யாரையும் புரிய வைப்பது இயலாத விஷயம்.

அதாவது- இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் எப்படிப்பட்ட சமாதான வார்த்தைகளுக்கும் மகிழ்ச்சியுடன் காது கொடுப்பதற்கு யாரும் தயாராக இருப்பார்கள் என்றும், சிறிய ஒரு தில்லுமுல்லு வேலையைக்கூட கண்டுபிடிக்க நேர்ந்தால், தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள் என்றும் கூறுவதுதான் மேலும் சரியாக இருக்கும்.

“சிந்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.'' கூறிக்கொண்டிருந்த விஷயத்தில் முன்பு இருந்ததைவிட அதிகமான ஆவேசத்துடனும், என்னுடைய வார்த்தைகளின் வியக்கத்தக்க புத்திசாலிதனத்தில் பெருமைப்பட்டுக்கொண்டும் நான் சொன்னேன்: “அவன் வந்து பார்ப்பதற்கு வாய்ப்பில்லை, நாஸ்தென்கா. மேடம், என்னை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். என் மனம் முழுவதையும் ஒரேயடியாக துவம்சம் செய்து விட்டீர்கள். அதனால் நேரத்தைப் பற்றி நான் மொத்தத்தில் குழம்பிப்போய் இருக்கிறேன். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். அந்தக் கடிதம் அவனுக்கு இப்போதும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு வர இயலவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவன் பதில் எழுதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அது நாளைக்கு முன்பு கிடைக்காது. நான் நாளை முடிந்த வரைக்கும் காலையில் சென்று, அதை வாங்கிக் கொண்டு வந்து, அந்த நிமிடமே உங்களுக்கு விவரம் என்னவென்று தெரிவிக்கிறேன். நமக்கே தெரியாமல் நடைபெறக் கூடிய ஓராயிரம் விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் கடிதம் போய்ச் சேரும் நேரத்தில் அவன் அங்கு இல்லாமல் போய் விட்டிருந்தால்? ஒருவேளை, அவன் அதை இதுவரை வாசிக்காமலே இருந்திருப்பான்! எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.''

“உண்மை... உண்மை...'' நாஸ்தென்கா சொன்னாள்: “நான் அதை நினைத்துப் பார்க்கவில்லை. சரிதான்... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.'' என்னுடைய கருத்துடன் முழுமையாக இணைந்து வருவதைப்போல அவள் தொடர்ந்தாள். ஆனால், இனம்புரியாத ஏதோ மாறுபட்ட சிந்தனை அவளுடைய குரலில் இயல்பாகவே கலந்திருந்தது. “நீங்கள்... நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று கூறுகிறேன்.'' அவள் சொன்னாள்: “நாளை முடிந்த வரைக்கும் சீக்கிரம் அங்கு செல்ல வேண்டும். பதில் இருக்கும்பட்சம், உடனடியாக எனக்கு விவரத்தை அறிவிக்க வேண்டும். நான் எங்கே தங்கியிருக்கிறேன் என்பது தெரியும் அல்லவா?'' அவள் மீண்டும் மேல் முகவரியைக் கூறினாள்.

அதைக் கூறி முடித்தவுடன், அவள் என்னை நோக்கி எதற்கு என்றே தெரியாமல் பாசத்தைக் கொட்ட ஆரம்பித்தாள். அவன் கூறியவை அனைத்தையும் அவள் கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. ஆனால், நேரடியாக ஒரு கேள்வியைக் கேட்டபோது, அவள் பதில் கூறாமல் பதுங்கிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். நான் அவளுடைய கண்களையே பார்த்தேன். ஆமாம் அதேதான். அவள் அழுது கொண்டிருந்தாள்.

“அய்யோ... என்ன இது? சிறு குழந்தைகளைப்போல அழத் தொடங்கக் கூடாது. என்ன ஒரு குழந்தைத்தனமான விஷயம் இது! பரவாயில்லை....''

அவள் புன்னகையை வரவழைத்துக் கொள்வதற்கும் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் முயற்சி செய்தாள். ஆனால், அவளுடைய தாடைப் பகுதி நடுங்கியது. மார்புப்பகுதி உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்தது.

“நான் உங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்.'' சிறிது நேர அமைதிக்குப் பிறகு அவள் சொன்னாள்: “நீங்கள் எந்த அளவிற்கு நல்ல மனிதராக இருக்கிறீர்கள்! கல் மனம் கொண்டவளாக இருந்தால் மட்டுமே, எனக்கு அதை உணராமல் இருக்க முடியும். சற்று முன்பு என் மனதிற்குள் என்ன தோன்றியது தெரியுமா? நான் உங்கள் இரண்டு பேரையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவன் ஏன்... நீங்களாக இல்லை? ஏன் உங்களைப்போல இல்லை? எனக்கு அதிகமான காதல் அவன் மீதுதான் என்றாலும், அவனைவிட நீங்கள்தான் உயர்ந்தவர்.''

நான் பதிலெதுவும் கூறவில்லை. நான் ஏதாவது கூறுவேன் என்று அவள் எதிர்பார்ப்பதைப்போல தோன்றியது.

“நான் அவனை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டும். நெருக்கமாகத் தெரிந்துகொள்ளாமல் இருக்க வேண்டும். எனக்கு அவன்மீது எப்போதும் பயம் இருந்து வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அவன் எப்போதும் கடுமையான முகத்துடனே இருப்பான். ஏதோ ஆழமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் போல தோன்றும். ஆனால், அது பார்க்கும்போது மட்டுமே என்ற விஷயம் எனக்குத் தெரியும். அவனுடைய இதயத்தில் என் இதயத்தில் இருப்பதைவிட அதிகமான அன்பு இருக்கிறது. நான் மூட்டையுடன் போய் நின்றபோது, அவர் என்னைப் பார்த்த பார்வையை நான் நினைத்துப் பார்க்கிறேன். எனினும், எனக்கு அவன்மீது சிறிது அதிகமான ஈடுபாடு இருக்கிறது என்று தோன்றுகிறது. அப்படியென்றால் நாங்கள் ஒரே நிலையில் இல்லை என்று வருகிறது. இல்லையா?''

“இல்லை, நாஸ்தென்கா... இல்லை...'' நான் சொன்னேன்: “உலகத்தில் உள்ள வேறு எதன்மீதும்- உங்கள்மீது கூட- அவன்மீது கொண்டிருக்கும் அளவிற்கு அன்பு உங்களுக்கு இல்லை என்பதுதான் அதன் அர்த்தம்.''

“அது உண்மையாக இருக்கலாம்.'' அந்த கள்ளங்கபடமற்ற இதயத்தைக் கொண்டிருக்கும் பெண் ஒப்புக் கொண்டாள்: “ஆனால், இப்போது என்ன தோன்றுகிறது என்பதைக் கூறட்டுமா? இதற்கு அவனுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை. நான் சாதாரணமாக கூறுகிறேன். எனக்கு இது தோன்ற ஆரம்பித்து, அதிக காலம் ஆகிவிட்டது. நாம் எல்லாரும் ஏன் உடன்பிறப்புகளைப் போல வாழக் கூடாது? மிகவும் நல்ல மனிதர்கள்கூட மற்றவர்களிடமிருந்து ஏதோ ஒன்றை யாருக்கும் தெரியாமல் ஏன் மறைத்து வைப்பதைப்போல தோன்றுகிறது? மனதிற்குள் இருப்பது எதுவாக இருந்தாலும், அதுதான் கூற விரும்புவது என்றால், ஏன் வார்த்தைகளாக அதை வெளியிடக் கூடாது? ஆனால், மனதிற்குள் மிகவும் பிரமாதமாக இருப்பதைப் போல நடிப்பதில்தான் எல்லாரும் முயற்சியைச் செலுத்துகிறார்கள். மனதில் இருக்கும் உணர்வுகளை அந்தந்த நேரத்தில் வெளிப்படுத்துவது, அவற்றிற்கு தீங்கு செய்வது என்று அவர்கள் பயப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.''

“ஹா... நாஸ்தென்கா! மேடம், நீங்கள் கூறுவது உண்மைதான் .ஆனால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.'' அந்த நிமிடத்தில் என்னுடைய உணர்ச்சிகளை முன்பைவிட அதிகமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு நான் சொன்னேன்.


“இல்லை... இல்லை...'' உணர்ச்சிவசப்பட்டு அவள் சொன்னாள்: “நீங்கள் மற்றவர்களைப்போல அல்ல. என் மனதிற்குள் இருப்பதை உங்களிடம் எப்படிக் கூறுவது என்பதைப் பற்றி நானே தெளிவான தீர்மானம் இல்லாமல் இருக்கிறேன். ஆனால், எனக்குத் தோன்றுகிறது... நீங்கள்... உதாரணத்திற்கு கூறுகிறேன்... நீங்கள் இப்போது எனக்காக ஏதோ ஒன்றை தியாகம் செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.'' என்னை நோக்கி பார்வையைச் செலுத்திக் கொண்டே அவள் மென்மையான குரலில் தொடர்ந்து சொன்னாள்.''

“நான் உங்களிடம் இப்படிக் கூறுவதற்காக மன்னிக்க வேண்டும். நான் ஒரு சிறு பெண்... இன்னும் உலகத்தைத் தெரிந்துகொள்ளவில்லை. எப்படி விஷயங்களைக் கூறுவது என்பதுகூட சில நேரங்களில் தெரியாமல் போய் விடுகிறது.'' மறைத்து பத்திரப்படுத்தி வைத்திருந்த ஏதோ உணர்ச்சிகளால் அவளுடைய குரல் நடுங்கியது. அதை ஒரு புன்னகையால் மறைப்பதற்கு அவள் முயற்சித்தாள். “ஆனால், உங்கள் மீது எனக்கிருக்கும் அளவற்ற நன்றியைக் கூறுவதற்குத்தான்- இவை அனைத்தையும் நான் உணர்கிறேன் என்பதைக் கூற வேண்டும் என்று நான் விரும்பினேன். இதற்கு நீங்கள் சந்தோஷத்தால் உயரலாம். நேற்று நீங்கள் உங்களுடைய கனவு காணும் மனிதனைப் பற்றி பலவற்றையும் கூறினீர்கள் அல்லவா? அது எதுவுமே உண்மை இல்லை. அதாவது- அதற்கு உங்களுடன் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. நீங்கள் சந்தோஷத்தை அடைந்து வருகிறீர்கள். இப்போது நீங்கள் உங்களைப் பற்றிக் கூறிய, விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஏதாவதொரு காலத்தில் நீங்கள் யாரையாவது காதலிக்க நேர்ந்தால், உங்களுக்கு அவளுடன் சேர்த்து, அனைத்து சுகங்களும் செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். அவளுக்காக வாழ்த்துவதற்கு எதுவுமே இல்லை. காரணம்- உங்களுடன் அவள் ஆனந்தம் நிறைந்தவளாக இருப்பாள். எனக்குத் தெரியும். நான் ஒரு பெண்தானே! நான் கூறுவதை நம்ப வேண்டும்.''

அவள் அமைதியாக இருந்தாள். என் கையை அன்பு மேலோங்க பிடித்து அழுத்திக்கொண்டே, அவள் மெதுவாக சொன்னாள்: “நேரம் அதிகமாயிடுச்சு...''

“நாளை வருவேன்.'' உண்மைத் தன்மையை வெளிக்காட்டிக் கொள்வதைப்போல நான் அழுத்தமான குரலில் சொன்னேன்.

“ஆமாம்...'' அவள் உற்சாகத்துடன் கூறினாள்: “இப்போது எனக்கு புரிந்துவிட்டது. அவன் நாளைக்குத்தான் வருவான். நான் புறப்படட்டுமா? நாளை சந்திப்போம். மழை பெய்தால், நான் வர மாட்டேன். ஆனால், நாளை மறுநாள் நான் வருவேன். கட்டாயம் எது எப்படி இருந்தாலும் வருவேன். நீங்களும் வராமல் இருக்கக் கூடாது. நீங்கள் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். நான் எல்லாவற்றையும் கூறுகிறேன்.''

விடை பெறும் நேரத்தில் அவள் எனக்குத் தன் கையைத் தந்து கொண்டே, கூர்மையான ஒரு பார்வையுடன் சொன்னாள்:

“நாம் இன்றிலிருந்து எப்போதும் ஒன்றாக இருப்போம். இல்லையா?''

ஹா... நாஸ்தென்கா! நாஸ்தென்கா! இப்போது நான் அனுபவிக்கும் தனிமையுணர்வை நீ தெரிந்துகொண்டிருந்தால்...!

கடிகாரத்தில் ஒன்பது அடித்தபோது என்னால் அறையில் இருக்க முடியவில்லை. நான் ஆடைகளை மாற்றிக்கொண்டு, மழையைப் பொருட்படுத்தாமல் வெளியேறினேன். நான் அங்கு சென்று எங்களுடைய பெஞ்சில் உட்கார்ந்தேன். அவளுடைய ஒற்றையடிப் பாதையில் சென்றுவிட்டு, நான் கூச்சத்துடன் திரும்பி வந்துவிட்டேன். அவளுடைய சாளரங்களை நோக்கி சற்றுகூட பார்க்கவில்லை. அவளுடைய வீட்டை அடைவதற்கு முன்பே நான் திரும்பி நடந்தேன். முன்பு எப்போதும் அனுபவித்திராத கடுமையான ஏமாற்றத்துடன் நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். நனைந்து வெறுத்துப்போன தாங்க முடியாத நாள் அது! காலநிலை இந்த அளவிற்கு மோசமாக இல்லாமலிருந்தால், நான் இரவு முழுவதும் அங்கே அலைந்து கொண்டிருந்திருப்பேன்...

ஆனால், நாளை! நாளை வரை காத்திருப்போம்... நாளை அவள் என்னிடம் எல்லாவற்றையும் கூறுவாள்.

இன்று கடிதம் எதுவுமில்லை. ஆனால், கடிதத்தைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் இப்போது சேர்ந்து விட்டார்கள்.

நான்காவது இரவு

டவுளே! எப்படி அது நடந்தது? என்ன ஒரு இறுதி முடிவு!

நான் ஒன்பது மணிக்கு போய்ச் சேர்ந்தேன். அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சற்று தூரத்தில் செல்லும்போதே, நான் அவளைப் பார்த்துவிட்டேன். முதல் இரவில் நின்றதைப்போலவே, நான் கைப்பிடியில் சாய்ந்து நின்றேன். என் காலடிச் சத்தத்தை அவள் கேட்கவில்லை.

“நாஸ்தென்கா!'' என்னுடைய மனதிலிருந்த பதைபதைப்பை ஒரு வகையில் அடக்கிக் கொண்டே நான் அழைத்தேன்.

அவள் உடனடியாகத் தலையைத் திருப்பினாள்.

“எங்கே?'' அவள் சொன்னாள்: “சீக்கிரமா தாங்க.''

நான் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன்.

“சொல்லுங்கள்... கடிதம் எங்கே? கடிதத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் அல்லவா?'' ஒரு கையைக் கம்பியில் வைத்தவாறு அவள் மீண்டும் கேட்டாள்.

“இல்லை... கடிதம் இல்லை...'' நான் மெதுவான குரலில் சொன்னேன்.

“அவனை இன்னும் பார்க்கவில்லையா?''

அவளுடைய முகம் வெளிறிவிட்டது. அவள் என்னையே நீண்ட நேரம் வெறித்துப் பார்த்தாள். அவளுடைய இறுதி ஆசையையும் நான் நொறுக்கிவிட்டிருக்கிறேன்.

“சரி... அவனுக்கு அதுதான் விருப்பமென்றால், அப்படியே இருக்கட்டும்.'' தடுமாறிய குரலில் அவள் இறுதியாகக் கூறினாள்: “என்னை இந்த நிலைக்குக் கொண்டு வருவதுதான் விருப்பமென்றால், அப்படியே நடக்கட்டும்.''

அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். என் முகத்தைப் பார்க்க விரும்பினாலும், அதை அவளால் செய்ய முடியவில்லை. மேலும் சிறிது நேரம் தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கி வைப்பதற்கு அவள் படாதபாடுபட்டாள். தொடர்ந்து... திடீரென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, கம்பியில் சாய்ந்து நின்றவாறு அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“வேண்டாம்.... வேண்டாம்...'' நான் சொன்னேன். ஆனால், அவளைச் சிறிது நேரம் பார்த்தேனே தவிர, அதற்குமேல் எதையும் கூறுவதற்கு என்னால் முடியவில்லை. போதாததற்கு, கூறுவதற்கு என்ன இருக்கிறது?

“என்னைச் சமாதானப்படுத்த வேண்டாம்.'' கண்ணீருக்கு மத்தியில் அவள் சொன்னாள்: “அவனைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம். அவன் வருவான் என்று கூற வேண்டாம். இந்த அளவிற்கு கொடூரத்தன்மையுடன் மனிதத்தன்மையே இல்லாமல் என்னை கை கழுவி விடவில்லை என்று கூற வேண்டாம். ஆனால், இது எதற்கு? ஏன்? என்னுடைய அந்த கடிதத்தில், அந்த நாசமாய்ப்போன கடிதத்தில், எதுவுமே இல்லை... அப்படித்தானே?''

பதைபதைப்பு காரணமாக அவளால் தொடர்ந்து பேச முடியவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த என்னுடைய இதயம் தகித்தது.

“எந்த அளவிற்கு இரக்கம் இல்லாத மனிதனாக அவன் இருக்கிறான்! எவ்வளவு கொடூர குணம் கொண்டவனாக இருக்கிறான்!'' அவள் மீண்டும் கூற ஆரம்பித்தாள்: “ஒரு வரிகூட இல்லை. என்னை வேண்டாம் என்று கைகழுவி விட்டேன் என்றுகூட எழுதியிருக்கலாம்.


மூன்று நாட்களாக ஒரு வரிகூட இல்லை. அவனைக் காதலிக்கிறேன் என்ற ஒரே ஒரு குற்றத்தைச் செய்த ஒரு ஆதரவற்ற அப்பிராணிப் பெண்ணை ஏமாற்றுவதற்கும் தண்டிப்பதற்கும் அவனுக்கு எவ்வளவு சாதாரணமாக முடிகிறது! ஹா... இந்த மூன்று நாட்களில் நான் எந்தெந்த விஷயங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறேன்! கடவுளே! என் கடவுளே! முதல் முறை நான்தான் அவனைத் தேடிச் சென்றேன் என்பதை, முழங்காலிட்டு அமர்ந்து அவனுக்கு முன்னால் குலுங்கிக் குலுங்கி அழுதேன் என்பதை, காதலுக்காக, ஒரு துளி அன்புக்காக அவனிடம் கெஞ்சினேன் என்பதை... நினைக்கும்போது அவை அனைத்தும் முடிந்துவிட்டன! இதை கேளுங்கள்...''அவள் என்னை நோக்கித் திரும்பினாள். அவளுடைய கரிய விழிகள் ஒளிர்ந்தன.'' “இல்லை... அப்படி இல்லை. அப்படி இருக்க வாய்ப்பில்லை. நம் இரண்டு பேரில் ஒரு ஆளுக்கு தவறு நேர்ந்துவிட்டது. ஒருவேளை, அவனுக்கு என்னுடைய கடிதம் இப்போதும் கிடைக்காமல் போய்விட்டிருக்குமா? அவனுக்கு அதைப் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் போய்விட்டிருந்தால்...? காரணம்- கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு என்னிடம் கூறுங்கள். நீங்களே தீர்மானியுங்கள்... எனக்கு விளக்கிக் கூறுங்கள். ஏனென்றால், எனக்குப் புரியவில்லை. அவன் என்னிடம் நடந்துகொண்டதைப் போல இந்த அளவிற்குக் கொடூரமாக, இந்த அளவிற்கு கண்ணில் ரத்தம் இல்லாமல், ஒரு ஆளால் யாரிடமாவது நடக்க முடியுமா? ஒரு வார்த்தைகூட இல்லை. கேடு கெட்டவர்களில் கேடு கெட்டவர் மீதுகூட இதைவிட அதிகமாக இரக்கம் காட்டுவார்கள். ஒருவேளை, அவன் என்னைப் பற்றி ஏதாவது கேள்விபட்டிருப்பானோ? யாராவது என்னைப் பற்றி ஏதாவது பொய்யைக் கூறிவிட்டிருப்பார்களோ?'' இந்த இறுதிக் கேள்வியை அவன் என்னை நோக்கி திரும்பிப் பார்த்துக்கொண்டே கேட்டாள்: “உங்களுக்கு என்ன தோன்றுகிறது?''

“பாருங்கள், நாஸ்தென்கா. நான் நாளைக்குச் சென்று உங்களுக்காக அவனிடம் பேசுகிறேன்.''

“அதற்குப் பிறகு?''

“நான் அவனிடம் எல்லா விஷயங்களையும் கேட்கிறேன். எல்லா விஷயங்களையும் கூறுகிறேன்.”

“அதற்கடுத்து...?''

“மேடம், நீங்கள் அவனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். முடியாது என்று கூறி விடாதீர்கள் நாஸ்தென்கா. அப்படி கூறி விடாதீர்கள். அவன் உங்களின் இந்தச் செயலை மதிப்பான். அதற்கு நான் பொறுப்பு. அவன் எல்லா விஷயங்களையும் புரிந்துகொள்வான். பிறகு...''

“வேண்டாம், நண்பரே... வேண்டாம்.'' அவள் இடையில் புகுந்து சொன்னாள்: “போதும்! என்னிடமிருந்து ஒரு வார்த்தைகூட- ஒரு வரி கூட இனி வராது. போதும்! எனக்கு அவனை யார் என்று தெரியாது. நான் அவனைக் காதலிக்கவில்லை. நான் அவனை மறந்துவிடுவேன்.'' அவளுக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.

“வேண்டாம்... உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இதோ... இங்கே உட்காருங்கள், நாஸ்தென்கா!'' அவளைப் பிடித்து பெஞ்சில் உட்கார வைத்துக் கொண்டே நான் சொன்னேன்.

“நான் கட்டுப்பாட்டைக் கைவிட்டுவிடவில்லையே! கவலைப்பட வேண்டாம். இது பரவாயில்லை.... வெறும் கண்ணீர் மட்டும்தான் இருக்கிறது. அது வற்றிவிடும். நான் ஆற்றுக்குள் குதித்தோ வேறு விதத்திலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று நினைத்தீர்களா?''

என்னுடைய இதயம் பலமான குழப்பத்திற்கு ஆளானது. பேசுவதற்கு விரும்பினாலும், என்னுடைய நாவிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை.

“சொல்லுங்கள்...'' என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டே அவள் சொன்னாள்: “நீங்கள் இந்த மாதிரி நடந்தீர்களா? உண்மையா? உங்களைத் தேடி தானாகவே வந்தவளை நீங்கள் கை கழுவிவிட்டீர்களா? அவளுடைய எதுவுமே தெரியாத முட்டாள் தனமான இதயத்தின்மீது நீங்கள் கொண்டிருந்த வெறுப்பையும் கோபத்தையும் அவளுடைய முகத்தின்மீது எறிந்தீர்கள். அப்படித்தானே? நீங்கள் அவளை உங்களின் பாதுகாப்பிற்குள் ஒதுக்க நினைத்தீர்கள் அல்லவா? அவள் தனிமைச் சூழலில் இருப்பவள் என்பதும், அது எப்படி ஆரம்பமானது என்ற விஷயம் அவளுக்கே உண்மையில் தெரியாது என்பதும், உங்கள்மீது கொண்டிருக்கும் காதலிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது என்பதும், குற்றம் அவளுடையது அல்ல என்பதும், அவள் தவறு செய்தவள் அல்ல என்பதும், அவள் எந்தவொரு தவறையும் செய்ததில்லை என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும் அல்லவா? கடவுளே! என் கடவுளே!'' “நாஸ்தென்கா!'' என்னுடைய உணர்ச்சிகளை அடக்குவதற்கு முடியாமல் நான் கூறினேன்: “நாஸ்தென்கா! நீங்கள் என்னைத் தண்டிக்கிறீர்கள். என் இதயத்தை அடித்து நொறுக்குகிறீர்கள். என்னைக் கொல்கிறீர்கள். இனிமேல் என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் கூறியே ஆக வேண்டும்! என் இதயத்தில் நிறைந்திருக்கும் எல்லாவற்றையும் வெளியே சொல்வதைத் தவிர, வேறு வழியில்லை.''

இவ்வளவையும் கூறியவாறு நான் பெஞ்சிலிருந்து எழுந்தேன். அவள் என் கையைப் பிடித்து என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“விஷயம் என்ன?” அவள் இறுதியாகக் கேட்டாள்.

“நாஸ்தென்கா...'' நான் வருவது வரட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே சொன்னேன்: “கேளுங்கள்... நாஸ்தென்கா! இப்போது நான் கூறப்போவது அறிவுகெட்டத்தனமான, கேவலமான ஒரு கனவு என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. முழுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை. அது எந்தச் சமயத்திலும் நிறைவேறவே செய்யாது என்பது எனக்குத் தெரியும். எனினும், இனிமேல் என்னால் பேசாமல் இருக்க முடியாது. உங்களை இந்த அளவிற்கு கவலைக்குள்ளாக்கியது எதுவோ, அதன் பெயரில் எனக்கு முன்கூட்டியே மன்னிப்பு தரவேண்டும் என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.''

“ஆனால், விஷயம் என்ன?'' அவள் கேட்டாள். கண்ணீர் வற்றிப் போயிருந்த அவளுடைய கண்கள் ஆர்வம் மற்றும் நினைவுகள் அடங்கிய ஒரு வினோதமான பிரகாசத்துடன் என் முகத்தில் பதிந்தன. “விஷயம் என்ன என்று கூறுங்கள்.''

“பலன் இல்லை என்று தெரியும். எனினும், கூறுகிறேன்- நான் உங்களைக் காதலிக்கிறேன், நாஸ்தென்கா. ஆமாம்... நான் எல்லாவற்றையும் கூறி முடித்துவிட்டேன்.'' ஏமாற்றத்துடன் கையை வீசிக்கொண்டே நான் சொன்னேன்: “இனிமேல் இதுவரை பேசிக்கொண்டிருந்ததைப்போல உங்களால் என்னுடன் பேச முடியுமா என்பதையும், நான் கூறப்போகும் விஷயத்தை காது கொடுத்துக் கேட்க முடியுமா என்பதையும் குறித்து முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்.''

“ஏன் முடியாது?'' நாஸ்தென்கா இடையில் புகுந்து சொன்னாள்: “அதனாலென்ன? உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்ற விஷயம் எனக்கு எப்போதும் தெரியும். ஆனால், உங்களுக்கு என்மீது இருக்கும் அன்பு இப்படிப்பட்டது அல்ல, வேறொரு வகையைச் சேர்ந்தது என்று நான் நினைத்திருந்தேன். கஷ்டம்! கஷ்டம்!''

“முதலில் அப்படித்தான் இருந்தது நாஸ்தென்கா! ஆனால், இப்போது... மூட்டையுடன் அவனைத் தேடிச் சென்றபோது உங்களுக்கு என்ன தோன்றியதோ அதேதான் எனக்கு இப்போது தோன்றுகிறது. அதைவிட கஷ்டம்...! காரணம்- அவன் வேறு யாரையும் காதலிக்கவில்லை. நீங்கள் காதலிக்கிறீர்கள்!''


“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால், நான் கேட்கட்டுமா? எதற்காக... இல்லாவிட்டால்... எதற்காக என்றல்ல... ஏன்... நீங்கள் இவ்வளவு சீக்கிரம்... கடவுளே! நான் எந்த அளவிற்கு முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கிறேன்! ஆனால், நீங்கள்...''

நாஸ்தென்கா முற்றிலும் சோர்வடைந்து விட்டாள். அவளுடைய கன்னங்கள் ரத்தமயமாக ஆயின. அவள் அமைதியாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் நாஸ்தென்கா? நான் என்ன செய்ய வேண்டும்? நான்தான் தவறு செய்தவன். நான் மோசடி செய்தேன். ஆனால், அது சரி அல்ல, நாஸ்தென்கா. நான் குற்றவாளி அல்ல. நான் அதை உணர்கிறேன். என்னால் அதைக் கேட்க முடிகிறது. காரணம்- நான் செய்தது சரிதான் என்று என் இதயம் என்னிடம் கூறுகிறது. உங்களுக்கு துரோகம் செய்யவோ உங்களை ஏமாற்றவோ என்னால் எந்தச் சமயத்திலும் முடியாது. நான் உங்களின் நண்பனாக இருந்தேன். ஆமாம்... இப்போதும் நண்பன்தான். நான் நம்பிக்கை மோசம் செய்தது இல்லை. என் முகத்தின் வழியாக வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைப் பார்த்தீர்களா, நாஸ்தென்கா? அது வழியட்டும்... வழியட்டும்.... அது துரோகம் எதையும் செய்யவில்லையே! அது வற்றி விடும், நாஸ்தென்கா...''

“உட்காருங்கள்... உட்காருங்கள்...'' என்று கூறியவாறு அவள் என்னை அருகில் பிடித்து உட்கார வைத்தாள்: “கஷ்டம்! கஷ்டம்!''

“இல்லை நாஸ்தென்கா. நான் உட்காரவில்லை. இனிமேல் இங்கு இருக்க என்னால் முடியாது. இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம். கூறவேண்டிய அனைத்தையும் கூறிவிட்டு நான் போய் விடுகிறேன். என்னுடைய காதலைப் பற்றி நீங்கள் எந்தச் சமயத்திலும் அறிந்திருக்கவில்லை என்பதைக் கூறவே நான் விரும்புகிறேன். நான் என்னுடைய ரகசியத்தை பத்திரப்படுத்தி காப்பாற்றிக் கொண்டிருந்தேன். இதைப் போன்ற ஒரு நேரத்தில் என்னுடைய சுயநலத்தின் காரணமாக உங்களை தண்டிப்பதைப் பற்றி நான் எந்தச் சமயத்திலும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், இதற்குமேல் தாங்குவதற்கு என்னால் முடியாது. நீங்கள்தான் அதைப் பற்றி பேச ஆரம்பித்தீர்கள். அது உங்களின் தவறு. நீங்கள்தான் எல்லாவற்றுக்கும் குற்றவாளி. நானல்ல.... என்னை அடித்து விரட்ட உங்களால் முடியாது.''

“ஆனால், நான் உங்களை அடித்து விரட்ட மாட்டேனே!'' நாஸ்தென்கா சொன்னாள். பாவம்... அவள் தன்னுடைய பதை பதைப்பை மறைத்து வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

“மேடம், என்னை நீங்கள் அடித்து விரட்ட மாட்டீர்களா? உண்மையாகவா? நானே உங்களுக்கு முன்னாலிருந்து ஓடிவிடலாம் என்று நினைத்தேன். நான் போய்விடுகிறேன். ஆனால், அதற்கு முன்னால், கூற வேண்டியவை அனைத்தையும் நான் கூறுவேன். காரணம்- நீங்கள் சற்று முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, என்னை நானே அடக்கிக் கொள்ள முடியவில்லை. மேடம், உங்களை (மேடம், இதைக் கூறுவதற்காக மன்னிக்க வேண்டும், நாஸ்தென்கா) கைகழுவி விட்டுவிடுவேன் என்றும், உங்களின் காதலை நிராகரித்து விடுவேன் என்றும் சிந்தித்து, நீங்கள் அழுது தண்டனை அனுபவித்தபோது, என் இதயத்தில் உங்கள்மீது எந்த அளவிற்கு காதல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும் நாஸ்தென்கா. நான் அதை உணர்ந்திருக்கிறேன். என்னுடைய இந்தக் காதலைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்ய முடியாதே என்பதை நினைத்தபோது என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. பேசாமல் இருக்க முடியவில்லை. நாஸ்தென்கா, பேசியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உண்டானது.''

“ஆமாம்... பேசுங்கள். இதைப்போல இன்னும் பேசுங்கள்.'' அடக்கமுடியாத ஒரு உணர்ச்சியுடன் நாஸ்தென்கா சொன்னாள்: “நான் இப்படிக் கூறுவது உங்களுக்கு வினோதமாக தோன்றலாம். ஆனால் பேசுவீர்கள்... நான் பின்னால் கூறுகிறேன். எல்லாவற்றையும் கூறுகிறேன்.''

“உங்களுக்கு என்னிடம் இரக்க உணர்ச்சி இருக்கிறது, நாஸ்தென்கா. வெறும் இரக்க உணர்ச்சி மட்டும். என்னுடைய சிறிய தோழி! எது எப்படி இருந்தாலும், நடந்தது நடந்துவிட்டது. சொல்லி முடித்ததை திரும்பவும் பெறமுடியாதே! இப்போது உங்களுக்கு எல்லா விஷயங்களும் தெரியும். அதனால் நாம் இங்கேயிருந்து ஆரம்பிப்போம். சரி... இப்போது எல்லா விஷயங்களும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், தயவு செய்து நான் கூறப்போகும் விஷயங்கள் முழுவதையும் கேளுங்கள். நீங்கள் அழுது கொண்டு அங்கு அமர்ந்திருந்தபோது, நான் நினைத்தேன். (நான் என்ன நினைத்தேன்... என்பதைச் சற்று கூறட்டுமா?) நான் நினைத்தேன்... (முற்றிலும் சாத்தியமே இல்லாத ஒன்று அது, நாஸ்தென்கா) நான் நினைத்தேன்... மேடம்... மேடம்... ஒரு வகையான உணர்ச்சியற்ற முறையில்... அவனைக் காதலிக்கக் கூடாது என்று... அப்படியென்றால்- நேற்று இரவிலும் நேற்றைக்கு முந்தைய நாள் இரவிலும் நான் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நாஸ்தென்கா. உங்களுக்கு என்மீது காதல் தோன்றுவதற்கு, நான் ஏதாவதொன்றைச் செய்வேன். கட்டாயம் செய்வேன். என்மீது உண்மையாகவே அன்பு வைத்திருப்பதாக நீங்கள் என்னிடம் கூறினீர்கள் அல்லவா, நாஸ்தென்கா? நீங்களே என்னிடம் அதைக் கூறினீர்கள். பிறகு... ஓ... நான் கூற வேண்டியவை முழுவதையும் கூறி முடித்துவிட்டேன். என்று தோன்றுகிறது. நீங்கள் என்னைக் காதலித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மட்டுமே என்னால் இப்போது கூற முடியும். அதிகமாக ஒன்றுமில்லை. கேளுங்கள். அன்பு தோழியே! என்ன கூறினாலும் நீங்கள் என்னுடைய தோழிதானே! நான் வெறும் சாதாரண மனிதன். ஏழையான ஒரு மிகச் சாதாரண மனிதன். ஆனால் விஷயம் அதுவல்ல. (நான் இப்படி ஒழுங்கோ முறையோ இல்லாமல் கூறுவதற்குக் காரணம் என்னுடைய கூச்சம்தான், நாஸ்தென்கா). எனக்கு யாரென்று தெரியாத அந்த மனிதனிடம் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்றாலும், இதற்கு மேலும் இருக்கும் என்றாலும், நான் உங்களைக் காதலிப்பேன். என்னுடைய காதலின் சுமை உங்களுக்கு எந்த வகையிலும் தெரியாத அளவிற்கு காதலிப்பேன். என்றென்றைக்கும் உங்களுக்குச் சொந்தம் என்று ஆகிவிட்டிருக்கும் நன்றியுணர்வும், ஆழமான உணர்ச்சிகளும் நிறைந்த ஒரு இதயம் உங்களுக்கு அருகில் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பது மட்டுமே உங்களுக்குத் தெரியும். நீங்கள் உணர்வீர்கள். ஹா... நாஸ்தென்கா! நாஸ்தென்கா! நீங்கள் எனக்கு என்ன செய்திருக்கிறீர்கள்?''

“தயவு செய்து அழாமல் இருங்கள். அழக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம்.'' வேகமாக பெஞ்சிலிருந்து எழுந்தவாறு நாஸ்தென்கா சொன்னாள். “வாருங்கள்... எழுந்திருங்கள். என்னுடன் வாருங்கள். அழுதது போதும். நிறுத்துங்கள்.'' அவள் தன்னுடைய துவாலையை எடுத்து என்னுடைய கண்ணீரைத் துடைத்தாள். “வாருங்கள்... உங்களிடம் கூறுவதற்கு என்னிடம் ஏதாவது இருக்கும். அவன் என்னைக் கைவிட்டுவிட்டான். என்னை மறந்து விட்டிருக்கிறான். நான் அவனை இப்போதும் காதலிக்கிறேன்.


(உங்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை...) ஆனால், நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா? உதாரணத்திற்குச் சொல்கிறேன். உங்களைக் காதலிக்க என்னால் முடிந்தால்... அதாவது- எனக்கு... ஹா... என் நண்பரே! உங்களுடைய காதலை நோக்கி கேலியாக சிரித்துக் கொண்டு நான் உங்களை வேதனைப்படுத்தியதை நினைக்கும்போது... என்னைக் காதலிக்காததற்கு நான் உங்களைப் பாராட்டியதை நினைக்கும்போது... ஹா... நான் இந்த விஷயத்தை முன்கூட்டியே ஏன் பார்க்கவில்லை? நான் என்ன ஒரு முட்டாள்தனமான பெண்ணாக இருந்திருக்கிறேன்! சரி... நான் தீர்மானித்து விட்டேன்... நான் உங்களிடம் எல்லாவற்றையும் கூறுகிறேன்.''

“வரட்டுமா, நாஸ்தென்கா. உங்களை நிம்மதியாக இருக்கும்படி விட்டுவிட்டு, நான் செல்கிறேன். நான் உங்களைத் தண்டிக்கிறேன். என்னைக் கிண்டல் பண்ணிவிட்டோமோ என்பதை நினைத்து உங்களுடைய மனசாட்சி வேதனைப்பட ஆரம்பித்திருக்கிறது. நான் அதை விரும்பவில்லை. சிறிதுகூட விரும்பவில்லை. அது இல்லாமலே, உங்களுக்குத் தேவையான அளவிற்கு கவலைகள் தாங்குவதற்கு இருக்கின்றன... என்னுடைய தவறு நாஸ்தென்கா. நான் புறப்படட்டுமா?”

“நில்லுங்கள்... நான் கூறுவதைக் கேளுங்கள்... நீங்கள் சற்று காத்திருக்க முடியுமா?''

“காத்திருக்க முடியுமா என்றா கேட்கிறீர்கள்? எதற்காக?''

“நான் அவனைக் காதலிக்கிறேன். ஆனால், அது மாறிவிடும். மாறியே ஆகவேண்டும். மாறாமல் இருக்க வழியில்லை. இப்போதே மாறிக் கொண்டிருக்கிறது. நான் அதை உணர்கிறேன். ஒருவேளை, இந்த இரவிலேயே மறைந்துபோய் விடாது என்பதை யார் கண்டது? காரணம்- நான் அவனை வெறுக்கிறேன். காரணம்- அவன் என்னிடம் மிகவும் வெறுக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கிறான். நீங்களோ என்னுடன் சேர்ந்து கண்ணீர் சிந்தினீர்கள். என்னைக் காதலிக்கிறீர்கள். அதனால்தான் அவன் செய்தது மாதிரி இல்லாமல் நீங்கள் என்னைக் கைவிடாமல் இருக்கிறீர்கள். அவன் என்னை எந்தச் சமயத்திலும் காதலிக்கவில்லை. அது மட்டுமல்ல- நான் உங்களைக் காதலிக்கிறேன்.... உண்மை! நீங்கள் என்னைக் காதலிப்பதைப்போலவே நான் உங்களையும் காதலிக்கிறேன். நான் இந்த விஷயத்தை உங்களிடம் முன்பே கூறியிருக்கிறேன். கூறியிருக்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும். நான் உங்களைக் காதலிப்பதற்குக் காரணம் நீங்கள் அவனைவிட நல்ல மனிதராக இருப்பதால்தான்... நீங்கள் மேலும் மரியாதைக்குரியவராக இருப்பதால்தான். நீங்கள்...''

பாவம் நாஸ்தென்கா! அதிகமான உணர்ச்சிகளின் உந்துதலால் அவளால் பேச்சைத் தொடர முடியவில்லை. அவள் என்னுடைய தோளிலும், பிறகு மார்பின்மீதும் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு அடக்க முடியாத துக்கத்தால் குலுங்கிக் குலுங்கி அழுதாள். நான் அவளுக்கு ஆறுதல் கூறவும் சமாதானப்படுத்தவும் முயன்றேன். ஆனால், வழிந்து கொண்டிருந்த கண்ணீர் அருவியை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. என்னுடைய கையை அழுத்திக் கொண்டே அவள் அழுகைக்கு மத்தியில் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தாள்: “ஒரு நிமிடம்... ஒரு நிமிடம்... நான் இப்போது நிறுத்தி விடுகிறேன். நான் ஒரு விஷயத்தைக் கூறட்டுமா? இந்த கண்ணீரில் எந்தவொரு விஷயமும் இல்லை. கவலை காரணமாக மட்டுமே நான் அழுகிறேன். அது இப்போது மாறிவிடும்.'' இறுதியில் அவளுடைய அழுகை நின்றது. அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். நான் பேச முயற்சித்தபோது அவள் தடுத்தாள். நாங்கள் இருவரும் அமைதியாக இருந்தோம். இறுதியில் சமநிலையைத் திரும்ப அடைந்துகொண்டு, அவள் கூற ஆரம்பித்தாள்.

“என் அறிவு இந்த அளவிற்கு சபலம் கொண்டதாகவும் நிலையற்றதாகவும் ஆகிவிட்டதே என்று நீங்கள் தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.''

அவளுடைய குரல் களைத்துப் போயும் மிகவும் மென்மையாகவும் இருந்தது. எனினும், அதில் திடீரென்று வெளிப்பட்ட விசேஷமான தொனி என் இதயத்திற்குள் ஆழமாக இறங்கி சுகமான ஒரு வேதனையை அளித்தது. “எனக்கு இவ்வளவு எளிதாகவும் வேகமாகவும் மறக்கவோ ஏமாற்றவோ முடியும் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். நான் அவனை ஒரு வருடம் முழுவதும் காதலித்தேன். நான் எந்தச் சமயத்திலும்- மனதால்கூட அவனை ஏமாற்றியதில்லை என்பதை கடவுளின்மீது சத்தியம் பண்ணி கூறுகிறேன். அவன் என்னுடைய உண்மைத் தன்மையை காலால் போட்டு மிதித்தான். என்னைக் கேலிப் பொருளாக நினைத்தான். நடக்கட்டும்! அவன் என்னை வேதனைப்படுத்தினான். என்னுடைய காதலை துச்சமாக நினைத்தான். நான்... நான் அவனைக் காதலிக்கவில்லை. மிகப் பெரிய மனதைக் கொண்டவரும் பரந்த இதயத்தை உடையவருமான ஒரு மனிதரை மட்டுமே என்னால் காதலிக்க முடியும். காரணம்- நானே அப்படிப்பட்ட ஒருத்திதான். என்னைப் பெறும் அளவிற்கு அவன் தகுதி கொண்டவன் அல்ல. சரி... அப்படியே நடக்கட்டும். அவன் திட்டம் போட்டு நடந்திருக்கிறான். அவனுடைய தனி நிறத்தைப் புரிந்துகொண்டு நான் ஏமாற்றமடைவது இதற்கும் பின்னர் என்றால், இதைவிட எவ்வளவோ மடங்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், யார் பார்த்தார்கள், என் இரக்க குணம் கொண்ட நண்பரே?'' என் கை விரல்களை அழுத்திக் கொண்டே அவள் தொடர்ந்து சொன்னாள்: “என்னுடைய இந்தக் காதல், வவ்வாலாக இல்லை என்பதும், ஒரு பைத்தியக்காரத்தனமாக இல்லை என்பதும் யாருக்குத் தெரியும்? ஒருவேளை, என் பாட்டியின் கண் பார்வையிலிருந்து எந்தச் சமயத்திலும் விலகிச் செல்வதற்கு சம்மதிக்காததால் தோன்றிய குறும்புத்தனமும் முட்டாள்தனமும் இதற்கெல்லாம் ஆரம்ப காரணங்களாக இருக்க வேண்டும். ஒருவேளை, அவனை அல்ல- வேறொரு ஆளைத்தான் நான் காதலித்திருக்க வேண்டும். அவனிடமிருந்து வேறுபட்ட ஆளை... என்னிடம்... இரக்கம் காட்டுகிற ஒரு ஆளை... என்னிடம்... வேண்டாம் நாம் பேச்சை நிறுத்துவோம்.'' மனக்கவலையால் மூச்சைவிட சிரமப்பட்ட நாஸ்தென்கா திடீரென்று பேசிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தினாள். “நான் கூற வந்தது இவ்வளவுதான். அதாவது- நான் அவனைக் காதலிக்கிறேன். (அல்ல- காதலித்தேன்). எனினும், நீங்கள் மேலும் ஒருமுறை கூறுவதாக இருந்தால்- என் இதயத்திலிருந்து அந்த காதலை அடித்து விரட்டுவது மட்டும் உங்களின் நோக்கம் என்று உங்களுக்குத் தோன்றுவதாக இருந்தால்- என்னை தனிமையில் இருப்பவளாகவும் கவலை நிறைந்தவளாகவும் ஆதரவற்றவளாகவும் என்னுடைய விதியின் மீது எறிவதற்கு உங்களுக்கு விருப்பமில்லையென்றால் இப்போது செய்வதைப்போல எப்போதும்  என்னைக் காதலிக்க நீங்கள் விருப்பம் உள்ளவராக இருந்தால்- என்னுடைய நன்றியுணர்ச்சி... என் காதல் நீங்கள் கொண்டிருக்கும் காதலுக்கு இணையாக இருக்கும் என்பதை நான் சத்தியம் செய்து கூறுகிறேன். இனி நீங்கள் என்னுடைய கையைப் பற்றிக் கொள்வீர்களா?''

“நாஸ்தென்கா!'' பதைபதைப்பு நிறைந்த தடுமாறிய குரலில் நான் அழைத்தேன்: “நாஸ்தென்கா! என் நாஸ்தென்கா...''


“போதும்... போதும்... நிறுத்துங்கள்...'' அவள் தொண்டை அடைக்க சொன்னாள்: “எல்லா விஷயங்களையும் கூறி முடித்து விட்டேன். இல்லையா? நீங்கள் சந்தோஷத்தில் இருக்கிறீர்கள். நானும் சந்தோஷத்தில் திளைத்திருக்கிறேன். அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட இதற்குமேல் பேச வேண்டாம். இப்போது வேண்டாம். தயவு செய்து...! கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு வேறு ஏதாவது பேசுங்கள்...''

“ஆமாம்... நாஸ்தென்கா. அதேதான். இதைப் பற்றி பேசியது போதும். இப்போது நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். நான்... ஆமாம்... நாஸ்தென்கா, நாம் வேறு எதைப் பற்றியாவது பேசுவோம். நாம் வேறொரு விஷயத்தை சீக்கிரமாகக் கண்டுபிடிக்கலாம். நான் தயாராக இருக்கிறேன்.''

நாங்கள் பேசுவதற்கு எந்தவொரு விஷயமும் தெரியவில்லை. நாங்கள் சிரித்துக் கொண்டோம். அழுதோம். அர்த்தமற்றதும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததுமான எவ்வளவோ வார்த்தைகளைக் கூறினோம். நதிக்கரையின் வழியாக இங்குமங்குமாக நடந்தோம். திடீரென்று திரும்பி நடந்து தெருவை குறுக்காகக் கடந்தோம். அங்கு நின்றுவிட்டு திரும்பவும் தெருவைக் குறுக்காகக் கடந்து நதியை நோக்கி நடந்தோம். நாங்கள் இரண்டு குழந்தைகளைப்போல ஆகிவிட்டோம்.

“இன்று நான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால், நாளை...'' நான் சொன்னேன்: “நான் ஏழை என்ற விஷயம் தெரியுமல்லவா, நாஸ்தென்கா? எனக்கு மொத்தத்திலேயே ஒரு வருடத்திற்கு  கிடைப்பது ஆயிரத்து இருநூறு ரூபிள்கள்தான். ஆனால், அது பரவாயில்லை.''

“ச்சே... பரவாயில்லை. போதவில்லையென்றால், என் பாட்டியின் பென்ஷன் பணம் இருக்கிறதே! அவள் நமக்கு ஒரு சுமையாக இருக்க மாட்டாள். நாம் பாட்டியையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.''

“ஆமாம்... பாட்டியையும் பார்த்துக் கொள்ள வேண்டும்... ஆனால், மத்ரயோனா இருக்கிறாள்...''

“சரிதான்... எங்களுடைய ஃப்யோக்லாவும்...''

“மத்ரயோனா ஒரு நல்ல பெண். மூளை இல்லை என்பது மட்டும் தான் பிரச்சினை... கொஞ்சம்கூட மூளை இல்லை நாஸ்தென்கா. ஆனால், அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.''

“பரவாயில்லை.... அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இருந்து கொள்ளட்டும். ஆனால், நீங்கள் நாளைக்கே எங்களுடைய வீட்டுக்கு வசிப்பதற்கு வந்துவிட வேண்டும்.''

“என்ன சொல்கிறீர்கள்? உங்களுடைய வீட்டுக்கா? சரி... அப்படியே நடக்கட்டும். எனக்கு சம்மதம்தான்...''

“ஆமாம்... நீங்கள் எங்களுடன் வந்து தங்கிக் கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒரு மாடி அறை இருக்கிறது. அது இப்போது காலியாகக் கிடக்கிறது. ஒரு உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த வயதான பெண் தங்கியிருந்தாள். ஆனால், அவள் அங்கிருந்து சென்று விட்டாள். ஒரு இளைஞனுக்கு வாடகைக்கு அதைத் தரவேண்டும் என்பது என்னுடைய பாட்டியின் விருப்பம். "இளைஞன்தான் வேண்டும் என்று கட்டாயமாக இருப்பதற்கு காரணம் என்ன பாட்டி?'' என்று நான் கேட்டதற்கு அவள் சொன்னாள்: "எனக்கு வயதாகிவிட்டது. அதுதான் காரணம்... உனக்கு நான் இளைஞனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கற்பனை பண்ணிக் கொள்ளாதே நாஸ்தென்கா!” அதுதான் அவளுடைய நோக்கம் என்பதை அப்போதே நான் புரிந்துகொண்டேன்.

“ஹா... நாஸ்தென்கா!''

நாங்கள் இருவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தோம்.

“நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?'' அவள் விசாரித்தாள்: “நான் அதைக் கேட்பதற்கு மறந்து விட்டேன்.''

“அதோ... அங்கே... பாலத்தைத் தாண்டி... பரான்னிக்கோவ்வின் வீட்டில்...''

“அது ஒரு சிறிய கட்டடம்... இல்லையா?''

“ஆமாம்... ஒரு சிறிய கட்டடம்தான்.''

“ஆ... எனக்குத் தெரியும். நல்ல ஒரு வீடு. எனினும் அந்த வீட்டை விட்டு வெளியேறி முடிந்தவரை சீக்கிரம் எங்களுடைய வீட்டுக்கு மாறி வந்து விடுங்கள்.''

“நாளைக்கே, நாஸ்தென்கா... பொழுது புலர்ந்தவுடன்... கொஞ்சம் வாடகை பாக்கி இருக்கிறது. ஆனால் பரவாயில்லை. எனக்கு இன்னும் சில நாட்களில் சம்பளம் கிடைக்கும்.''

“நான் ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? நான் ட்யூஷன் எடுக்கிறேன். அதாவது- முதலில் படிக்க கற்றுக்கொண்டு, அதற்குப் பிறகு படிக்க கற்றுத் தருவேன்.''

“மிகவும் நல்லது... போதவில்லையென்றால், எனக்கு வெகுச் சீக்கிரமே போனஸ் கிடைக்கும். நாஸ்தென்கா.''

“அப்படியென்றால் நாளை நீங்கள் என் வீட்டுக்கு தங்க வந்து விடுவீர்கள்...''

“வந்து விடுவேன். அதற்குப் பிறகு நாம் செவில்லியில் நாவிதன் பார்ப்பதற்குச் செல்ல வேண்டும். அது விரைவில் திரும்பவும் நடக்க இருக்கிறது.''

“சரி... போகலாம்.'' நாஸ்தென்கா ஒரு புன்சிரிப்புடன் சொன்னாள்: “ஆனால், நாம் வேறு ஏதாவது நிகழ்ச்சிக்கும் போக வேண்டும் என்பதில்தான் எனக்கு விருப்பம் அதிகம்.''

“சரி... அப்படியென்றால் வேறு ஏதாவது நிகழ்ச்சிக்குச் செல்வோம். உண்மையாகவே அதுதான் நல்லது. மன்னிக்க வேண்டும். நான் நினைத்துப் பார்க்கவில்லை.''

இவ்வகையில் பேசிக்கொண்டே நாங்கள் மூடுபனி படர்ந்த வண்ணம், இலக்கே இல்லாமல் அலைந்து திரிந்தோம். எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எங்களுக்கே தெரியவில்லை. நாங்கள் எங்கேயாவது ஒரு இடத்திற்கு வந்து நின்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். மீண்டும் நடப்போம். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். மீண்டும் சிரிப்போம். மீண்டும் அழுவோம். வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று திடீரென்று நாஸ்தென்கா கூறுவாள். அவளைத் தடுப்பதற்கு நான் முயற்சிக்கவில்லை. எனினும், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து விடுகிறேன் என்று நான் கூறுவேன். நாங்கள் திரும்புவோம். ஆனால், ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்- கால்மணி நேரம் தாண்டியவுடன், நாங்கள் மீண்டும் நதிக்கரையிருக்கும் பழைய பெஞ்சில் உட்கார்ந்திருப்போம். சில நேரங்களில் அவள் திடீரென்று பெருமூச்சு விடுவாள். அவளுடைய கண்களில் மீண்டும் கண்ணீர் பளிச்சிடும். என்னுடைய மனம் அடித்துக் கொள்ளும். ரத்தம் உறையும். ஆனால், அடுத்த நொடியே அவள் கையைப் பிடித்து அழுத்தி, என்னைப் பிடித்து இழுத்து எழுந்திருக்கச் செய்வாள். நாங்கள் மீண்டும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே நடப்போம்.

“எனக்கு வீட்டிற்குச் செல்வதற்கு நேரமாகி விட்டது. இந்த முறை உண்மையாகவே நேரமாகிவிட்டது. நேரம் மிகவும் அதிகமாகி விட்டது.'' நாஸ்தென்கா இறுதியாக கூறினாள்: “நாம் குழந்தையைப் போல நடக்க ஆரம்பித்து நீண்ட நேரமாகிவிட்டது.''

“சரிதான். நாஸ்தென்கா... ஆனால், இனிமேல் என்னால் தூங்க முடியாது. நான் வீட்டிற்குப் போவதாக இல்லை.''

“எனக்கும் தூங்க முடியும் என்று தோன்றவில்லை. எனினும், தயவுசெய்து என்னை வீட்டுக்குக் கொண்டு போய் சேருங்கள்.''

“நிச்சயமாக...''

“ஆனால், இந்த முறை நாம் உண்மையிலேயே வீட்டுக்குச் செல்ல வேண்டும்.''

“நிச்சயமாகப் போவோம்.''

“சத்தியம் செய்கிறீர்களா? காரணம்- எப்போது ஆனாலும் நான் வீட்டுக்குப் போயே ஆகவேண்டும் என்ற விஷயம் தெரியுமல்லவா?''


“சத்தியம் பண்ணுகிறேன்.'' நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்: “சரி... அப்படியென்றால் வாருங்கள்.''

“போகலாம்.''

“பாருங்கள், நாஸ்தென்கா. வானத்தைப் பாருங்கள். நாளை அழகான ஒரு நாளாக இருக்கும். சந்திரனின் ஒளியைப் பாருங்கள். வானத்தில்  என்ன ஒரு நீல நிறம் என்பதைப் பாருங்கள். அதோ... அந்த மஞ்சள் நிற மேகம் நிலவின்மீது நகர்ந்து செல்வதைப் பார்த்தீர்களா? இல்லை... அது அந்தப் பக்கம் கடந்து சென்று விட்டது. அதோ... இப்போது பாருங்கள்....''

ஆனால், நாஸ்தென்கா மேகத்தைப் பார்க்கவில்லை. அவள் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் எந்தவித அசைவும் இல்லாமல், மிகவும் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவள் என்னுடைய உடலின் மீது கூச்சத்துடன் சாய்வதையும், என்னுடைய கைக்குள் அவளுடைய கை நடுங்கிக் கொண்டிருப்பதையும் நான் உணர்ந்தேன். நான் அவளையே பார்த்தேன். அவள் என்னுடைய கையின் மீது மேலும் சிறிது சாய்ந்தாள்.

ஒரு இளைஞன் எங்களைக் கடந்து சென்றான். திடீரென்று நின்று எங்களையே வெறித்துப் பார்த்துவிட்டு அவன் தன்னுடைய நடையைத் தொடர்ந்தான். என்னுடைய மனம் அடித்துக் கொண்டது.

“நாஸ்தென்கா...'' நான் மெதுவான குரலில் சொன்னேன்: அது யார், நாஸ்தென்கா?''

“அவன்தான்...'' முன்பு இருந்ததைவிட அதிகமாக என்னோடு ஒட்டிக்கொண்டு, முன்பு இருந்ததைவிட அதிக உற்சாகத்துடன் அவள் மெதுவான குரலில் சொன்னாள். என்னுடைய கால்கள் சோர்வடைவதைப்போல உணர்ந்தேன்.

“நாஸ்தென்கா! நாஸ்தென்கா! நீயா?'' நாங்கள் பின்னாலிருந்து அந்தக் குரலைக் கேட்டோம். அந்த நிமிடமே இளைஞன் எங்களை நோக்கி சில காலடிகளை எடுத்து வைத்தான்.

கடவுளே? ஒரு நடுக்கத்துடன் இருந்த அவளுடைய சத்தத்தையும் என் கைக்குள்ளிருந்து அவனை நோக்கி நடந்த அவளுடைய ஓட்டத்தையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அடி வாங்கி நிலைகுலைந்துபோன நான் அதையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். அவளோ, அவனுக்கு கையைக் கொடுக்கவில்லை. அவனுடைய கைகளுக்கு உள்ளே சிக்கிக் கொள்ளவில்லை. அதற்கு முன்பே திடீரென்று என்னை நோக்கித் திரும்பி மின்னல் வேகத்தில், காற்றின் வேகத்தில் என் அருகில் வந்தாள். நான் சமநிலையை மீண்டும் அடைவதற்கு முன்பே, என் கழுத்தில் தன் கையைச் சுற்றி உணர்ச்சிவசப்பட்டு என்னை அழுத்தி முத்தமிட்டாள். பிறகு, ஒரு வார்த்தைகூட பேசாமல், அவள் மீண்டும் அவனை நோக்கிப் பறந்து சென்றாள். அவனுடைய கையைப் பிடித்தவாறு நடந்து சென்றாள்.

அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் நான் அதே இடத்தில் நின்றிருந்தேன்... இறுதியில் அவர்கள் கண்களுக்கு முன்னாலிருந்து மறைந்துவிட்டார்கள்.

புலர்காலைப் பொழுது

புலர்காலைப் பொழுது என்னுடைய இரவுகளின் இறுதியை உணர்த்தியது. மிகவும் அமைதி நிறைந்த ஒரு நாளாக அது இருந்தது. நிற்காமல் பெய்து கொண்டிருந்த மழை என்னுடைய சாளரத்தின் கண்ணாடியில் சோகத்துடன் மோதிக் கொண்டிருந்தது. என்னுடைய சிறிய அறையில் இருள் நிறைந்திருந்தது. வானம் மூடிக்கொண்டிருந்தது. எனக்கு தலை வலித்தது; தலை சுற்றியது.

என் கை, கால்களின் வழியாக ஜுரம் பாய்ந்து கொண்டிருந்தது.

“இதோ... உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது, சார். தபால்காரன் கொண்டு வந்து தந்தான்.'' எனக்கு அருகில் வந்து நின்று கொண்டு மத்ரயோனா சொன்னாள்.

“கடிதமா? யார் எழுதியது?'' என்று கேட்டுக்கொண்டே நான் நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்தேன்.

“எனக்கு எப்படித் தெரியும், சார். திறந்து பாருங்கள். ஒருவேளை, யாருடைய கடிதம் என்று அதில் எழுதப்பட்டிருக்கும்.''

நான் கடிதத்தைப் பிரித்தேன். அவளுடைய கடிதம்தான்.

என்னை மன்னித்து விடுங்கள். மன்னித்து விடுங்கள். (நாஸ்தென்கா எழுதியிருக்கிறேன்). நான் உங்களுக்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து மன்னிப்பு கேட்கிறேன். நான் என்னையும் உங்களையும் ஏமாற்றிவிட்டேன். அது ஒரு கனவாக இருந்தது. ஒரு மாயத் தோற்றமாக இருந்தது. உங்களை நினைத்து இப்போது என்னுடைய இதயம் எந்த அளவிற்கு வேதனைப்படுகிறது தெரியுமா? என்னை மன்னித்துவிடுங்கள்.... மன்னித்துவிடுங்கள்!

என்மீது கடுமையான தீர்ப்பை எழுதி விடாதீர்கள். காரணம்- உங்கள்மீது நான் கொண்டிருந்த எண்ணத்தில் எந்தவொரு மாறுதலும் இல்லை. எனக்கு உங்கள்மீது காதல் இருக்கிறது என்று நான் சொன்னேன். எனக்கு காதல் இருக்கத்தான் செய்கிறது. காதலையும் தாண்டி இருக்கிறது. கடவுளே! ஒரே நேரத்தில் உங்கள் இரண்டு பேரையும் என்னால் காதலிக்க முடிந்திருந்தால்...! நீங்கள் அவனாக இருந்தால்...!

"அவன் நீங்களாக இருந்தால்...!'' அந்த வார்த்தைகள் என்னுடைய மனதில் தோன்றி மறைந்தது. நாஸ்தென்கா, நான் உங்களுடைய வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்.

நான் உங்களுக்காக இப்போது எதைத்தான் செய்ய மாட்டேன்! கடவுள் சாட்சியாக இது சத்தியம்! நீங்கள் கவலையில் மூழ்கிய மனிதராகவும், பாதிக்கப்பட்டவராகவும் இருக்கிறீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். நான் உங்களை வேதனைப்பட வைத்துவிட்டேன். ஆனால், அன்பு கொண்ட ஒரு ஆள் செய்யும் எந்தத் தவறும் வெகு சீக்கிரமே மன்னிக்கப்பட்டுவிடும் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே! உங்களுக்கு உண்மையிலேயே என்மீது அன்பு இருக்கிறது.

நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த அன்புக்கு நன்றி கூறுகிறேன். காரணம்- தூக்கத்திலிருந்து கண் விழித்து நீண்ட நேரம் ஆனபிறகும் தங்கி நிற்கும் ஒரு இனிய கனவைப்போல அது என்னுடைய நினைவில் பதிந்து கிடக்கிறது. நட்புணர்வு நிறைந்த உண்மைத் தன்மையுடன் நீங்கள் உங்களுடைய இதயத்தை எனக்கு முன்னால் திறந்து காட்டி, நான் காட்டிய என்னுடைய சிதிலமடைந்த இதயத்தின் காயத்தை குணப்படுத்தி, மீண்டும் துடிக்கச் செய்வதற்காக மிகப் பெரிய மனதுடன் அதைக் கைப்பற்றவும் செய்த அந்த இனிய நிமிடத்தை நான் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருப்பேன். உங்களைப் பற்றிய என்னுடைய நினைவு, நிரந்தரமான நன்றியுணர்ச்சி நிறைந்த கவசத்தை அணிந்திருக்கும். என்னுடைய இதயத்திலிருந்து எந்தச் சமயத்திலும் மறைந்து விடாமல் இருக்கும் ஒரு உணர்ச்சி அது. நான் அந்த நினைவை பத்திரப்படுத்திக் காப்பாற்றுவேன். அதன்மீது எப்போதும் அக்கறை கொண்டவளாக இருப்பேன். அதை ஏமாற்ற மாட்டேன். என்னுடைய இதயத்தை ஏமாற்ற மாட்டேன். அது உறுதியானது. நேற்று இரவு எவ்வளவு வேகமாக அது அதன் உண்மையான உரிமையாளரைத் தேடிப் பறந்து சென்றது!

நாம் ஒருவரையொருவர் காண்போம். நீங்கள் எங்களை வந்து பார்க்க வேண்டும். எங்களைக் கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் எப்போதும் என்னுடைய நண்பராக இருப்பீர்கள். என்னுடைய சகோதரனாக இருப்பீர்கள். என்னைப் பார்க்கும்போது நீங்கள் கையைத் தருவீர்கள் அல்லவா? நீங்கள் எனக்கு கையை நீட்டுவீர்கள். என்னை மன்னித்துவிட்டீர்கள்.


இல்லையா? நீங்கள் என் மீது முன்பு மாதிரியே அன்பு வைத்திருக்கிறீர்கள். இல்லையா?

தயவு செய்து என்மீது அன்பு வைத்திருங்கள். என்னை கைவிட்டு விடாதீர்கள். காரணம்- இந்த நிமிடத்தில் நான் உங்கள்மீது அந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறேன். உங்களுடைய அன்பிற்கு தகுதியுடையவளாக இருப்பதற்கு நான் ஆசைப்படுகிறேன்.... என் அன்பு நண்பரே! நான் அவனை அடுத்த வாரம் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்.

என்மீது கொண்ட காதலால்தான் அவன் திரும்பி வந்தான். அவன் என்னை சிறிதுகூட மறக்கவில்லை. நான் அவனைப் பற்றி எழுதுவதால், நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், அவனுடன் சேர்ந்து உங்களைத் தேடி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அவன்மீது அன்பு செலுத்த மறுக்க மாட்டீர்கள். அப்படித்தானே?

உங்களுடைய நாஸ்தென்காவிற்கு மன்னிப்பை அளியுங்கள். இவளை நினைவில் வைத்திருங்கள். அன்பு செலுத்துங்கள்.

-நாஸ்தென்கா

நான் அந்தக் கடிதத்தை பல முறை திரும்பத் திரும்ப வாசித்தேன். நான் குலுங்கிக் குலுங்கி அழவேண்டும் என்று விரும்பினேன். இறுதியில் கடிதம் என்னுடைய விரல்களுக்கு நடுவிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. நான் கையால் முகத்தைப் பொத்திக் கொண்டேன்.

“மகனே... மகனே...'' மத்ரயோனா அழைத்தான்.

“என்ன?''

“பார்.... நான் காய்ந்த இலைகளையெல்லாம் பெருக்கி விட்டேன். இப்போது ஒரு திருமண விருந்திற்கோ உபசரிப்பிற்கோ சரியாக இருக்கும்- அப்படி ஒரு எண்ணம் இருந்தால். அந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறது.''

நான் மத்ரயோனாவையே பார்த்தேன். இப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பும் உள்ள ஒரு "இளம் கிழவி”யாக அவள் இருந்தாள். ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை -திடீரென்று எனக்குத் தோன்றியது.... கூன் விழுந்த, கண்கள் மங்கலாகிப்போன, முகம் நிறைய சுருக்கங்கள் விழுந்த ஒரு வயதான கிழவி அவள் என்று. என்ன காரணம் என்று தெரியவில்லை திடீரென்று எனக்குத் தோன்றியது. என்னுடைய அறைக்கும் மத்ரயோனாவைப்போல முதுமை வந்துவிட்டது என்று. மாடியும் சுவர்களும் அழுக்கு படிந்தும் அனைத்தும் இருண்டும் சிலந்தி வலைகள் நிறைந்தும் காணப்பட்டன. என்ன காரணம் என்று தெரிய வில்லை- சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தபோது, எதிர்ப்பக்கம் இருந்த வீடு இடிந்து கீழே விழும் நிலையில் இருப்பதைப் போலவும், தூண்களிலிருந்து பூச்சு உதிர்ந்து விழுந்து கொண்டிருப்பதைப்போலவும், சுவர்களுக்கு மேலே இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் கரி படிந்து விரிசலுடன் இருக்கின்றன என்பதாகவும், அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்ட சுவர்களில் பல நிறுத்திலுள்ள அடையாளங்கள் தெரிவதாகவும் எனக்குத் தோன்றியது.

என் கண்களுக்கு முன்னால் அனைத்தும் மீண்டும் களையிழந்தவை போல காணப்பட்டதற்குக் காரணம், ஒருவேளை... சிறிதும் எதிர்பாராமல் எட்டிப் பார்த்த சூரியன் தொடர்ந்து கரிய மேகங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டதால் இருக்கலாம். இல்லாவிட்டால் ஒருவேளை, இனி இருக்கக் கூடிய வாழ்க்கை முழுவதும் எனக்கு முன்னால் ஊமையாகவும் சோகங்கள் நிறைந்ததாகவும் இருப்பதைப் பார்த்ததால் இருக்க வேண்டும். சரியாக பதினைந்து வருடங்கள் கடக்கும்போது நான் எப்படி இருப்பேன் என்று நான் கற்பனை பண்ணிப் பார்த்தேன். வயது அதிகரித்திருந்தாலும் சிறிதுகூட அறிவு அதிகரித்திராத இதே மத்ரயோனாவுடன் இதே அறையில் இதே தனிமைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிழவன்...

ஆனால், நாஸ்தென்கா, நான் எந்தச் சமயத்திலும் அனுபவிக்க நேர்ந்த அநீதிகளை நினைத்து மனம் புண்படுவதில்லை. உன்னுடைய கள்ளங்கபடமற்ற அளவற்ற சந்தோஷத்தில் கவலையின் நிழலைப் பரவச் செய்வது, வருத்தங்களாலும் எதிர்ப்புகளாலும் உன்னுடைய இதயத்தை துக்கத்தில் ஆழ்த்துவது, ஆனந்தம் நிறைந்திருக்கும் நிமிடத்தில் மனசாட்சியின் கூர்மையான அம்புகளை எய்து அதைக் காயப்படுத்தி அது வேதனையுடன் துடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உண்டாக்குவது, திருமண மேடைக்கு அவனுடன் நடந்து செல்லும்போது உன்னுடைய கறுத்த கூந்தலில் பின்னி சேர்க்கப்பட்டிருக்கும் அந்த அழகான மலர்களின் ஒன்றையாவது கசக்கி நசுக்குவது- இல்லை... நாஸ்தென்கா. நான் அந்தக் காரியத்தை எந்த சமயத்திலும் செய்யமாட்டேன். எந்த சமயத்திலும் உன்னுடைய மனம் எப்போதும் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் இருக்கட்டும்! உன் இனிய வாழ்க்கை துன்பத்தின் நிழல் படாமல் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கட்டும், தனிமையும், நன்றியுணர்ச்சியும் நிறைந்த இன்னொரு இதயத்திற்கு நீ அளித்த ஆனந்தமும் புனிதத் தன்மையும் நிறைந்த அந்த ஒரு நிமிடத்திற்கு, நீ எப்போதும் அனைத்தும் கொண்டவளாய் இருப்பாயாக!

கடவுளே! பேரானந்தம் நிறைந்த ஒரு முழு நிமிடம்! ஒரு ஆயுள் காலத்திற்கு அது போதாதா...?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.