
சுராவின் முன்னுரை
சிறந்த மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான என்.மோகனன் (N.Mohanan) எழுதிய புதினத்தை ‘ஒரு நாள்’ (Oru Naal) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
1933-ஆம் ஆண்டில் பிறந்த மோகனன் மலையாள இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.
கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி, கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். பல சிறுகதைகளின் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரரான அவர், ‘இன்னத்தெ மழ’ என்ற புகழ்பெற்ற புதினத்தையும் எழுதியிருக்கிறார். பத்மராஜன் விருது, கேரள சாகித்ய அகாடெமி விருது (Kerala Sahitya Academy Award) போன்றவற்றைப் பெற்றவர்.
1999-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய என் மோகனனின் மிகச் சிறந்த புதினம் ‘ஒரு நாள்.’ தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகளைக் கொண்டே இந்தப் புதினத்தை அவர் எழுதியிருக்க வேண்டும். இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் பார்ப்பார்கள் என்பது நிச்சயம்!
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
மருத்துவமனையின் மாடியில் இருந்த அந்த அறையில் நோயால் பாதிக்கப்பட்டு படுத்திருந்த அவளைப் பார்த்துவிட்டு, நான் திரும்பி என் மனைவியின் அறைக்கு வந்தேன். தன்னுடைய சிகிச்சை முழுவதும் முடிவடைந்து, நாளை திரும்பிச் செல்வதில் உண்டான உற்சாகத்துடன் அவள் இருந்தாள். அவளிடம் சொன்னேன்:
“நீ என்னை அங்கு போகும்படி கூறியிருக்க வேண்டியதில்லை.''
அவள் கோபத்துடன் சொன்னாள்:
“நான் சொல்லி அனுப்பினேன்... அப்படித்தானே? அந்தப் பெண் மாடியிலிருக்கும் ஒரு அறையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறாள். வேண்டுமென்றால், ஆர்வம் இருக்கும் பட்சம் சற்று போய் பாருங்கள் என்று கூறினேன். அவ்வளவுதான். உங்களுடைய விருப்பப்படி பார்க்கச் சென்றுவிட்டு, இப்போது பழியை என்மீது சுமத்துகிறீர்களா? என்ன... பழைய தோழியைப் போய் பார்க்க முடிந்தது அல்லவா? வெளியே போகச் சொல்லிவிட்டாளா? என்ன நடந்தது?''
பதிலின் இறுதிப் பகுதி தெளிவில்லாமலிருந்தாலும், நான் கோபப்படவில்லை. அதற்கான எந்தவொரு மனநிலையும் இல்லை. மனதிற்குள்ளேயே கூறிக்கொள்வதைப்போல கூறினேன்:
“பெரிய நோய்களால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடப்பவர்கள் யாரையும் போய் பார்ப்பது என்பது சந்தோஷமான ஒரு விஷயம்தானே? குறிப்பாக இதற்கு முன்பு அறிமுகமானவர்களை...''
என் மனைவி அர்த்தத்துடன் மீண்டும் கேட்டாள்:
“வெறும் அறிமுகம்! அப்படித்தானே! போய் நீண்ட நேரமாகி விட்டதே! என்ன... பழைய கதைகள், நினைவுகள் எல்லாவற்றையும் பங்கு போட்டு, திரும்பவும் பழைய கல்லூரி மாணவனாக மாறிவிட்டீர்களா? எல்லாவற்றையும் திரும்பவும் தொடங்குவோம் என்று தோன்றுகிறதா?''
எதுவும் கூற வேண்டும் என்று தோன்றவில்லை. வேண்டுமென்றால், கேட்டிருக்கலாம்.
"நீ போய் பார்த்தாய். அறிமுகமாகிக் கொண்டாய். நிறைய பேசிக் கொண்டீர்கள். தேவையானதையும் தேவையில்லாதவற்றையும் கூறினாய்... கேட்டுக் கொண்டாய். இல்லையா? நல்ல சிநேகிதிகளாகப் பிரிந்து கொள்ளவும் செய்தீர்கள். இல்லையா?"
கேட்கவில்லை.
எதையும் கூறாமல் கேள்வி கேட்பதைப்போல அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
பழைய கல்லூரி இளைஞனாக ஆகிவிட்டேனா? நீ என்ன கேட்டாய். இது இயந்திரம் அல்லது மிருகம் சம்பந்தப்பட்ட விஷயமில்லையே! மனித உறவுகளின் சிக்கல்கள் நிறைந்த விஷயமாயிற்றே! அங்கு நாம் என்னவாக ஆக வேண்டும், யாராக ஆக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நாம் யார்? ஏதோ அடையாளம் தெரியாத சக்திகள் நம்மை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொன்றாக மாற்றி இருக்கச் செய்து கொண்டிருக்கின்றன. நாம் திட்டமிட்டிருக்காத ஒன்றைக் கூறி விடுகிறோம். செய்து விடுகிறோம். அதனால் உண்டாகக் கூடிய நல்ல விளைவுகளையும் மோசமான பாதிப்புகளையும் அனுபவிக்கவும் செய்கிறோம். சிந்தனைக்கும் செயலுக்கும் இங்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? அவளைப் போய் பார்க்க வேண்டும் என்று உனக்கு ஏன் தோன்றியது? உன்னையே அறியாமல் ஏன் நெருக்கம் தோன்றியது? ஒருவர்மீது ஒருவர் கொண்ட நம்பிக்கையில் ஏராளமான விஷயங்களை அவள் உன்னிடமும் நீ அவளிடமும் கூறிக்கொண்டதற்குக் காரணம் என்ன?
இறுதியாக, மிகவும் இறுதியாக, மெதுவாக, இரக்கமோ உள் மன ஏக்கமோ என் மனதிற்குள் உண்டான வேதனையோ... எல்லாம் கலந்த வார்த்தைகளில் கேட்டேன்.
“அவளுடைய நோய் என்ன என்பது உனக்குத் தெரியுமல்லவா?''
சிறிது பதைபதைப்புடன் என் மனைவி சொன்னாள்:
“புற்று நோய் என்று சந்தேகப்பட்டு யூட்டிரஸ் ஆப்ரேஷன் செய்தார்கள். எல்லாம் சரியாகிவிட்டது என்று நான் கேள்விப்பட்டேனே!''
விளக்கிக் கூற வேண்டிய சூழ்நிலை உண்டானது.
“அது மட்டும்தான் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏற்கெனவே மார்பகங்களில் ஒன்றை நீக்கிவிட்டார்கள். இப்போது இது இரண்டாவது முறை. நான் ஒரு பெண்ணாக இல்லாமல் போய்விட்டேன் என்று அவள் என்னிடம் சொன்னாள்.''
தொடர்ந்து கூறிய விஷயத்தை வேண்டுமென்றே கூறவில்லை. வேண்டாம். அதைக் கூறாமல் இருப்பதே நல்லது.
என் மனைவியின் முகம் மிகவும் வாடுவதையும், முன்பு கூறிய வார்த்தைகளிலும் அதைச் சொன்ன முறையிலும் பரிதாபப்படுவதைப் போன்ற உணர்ச்சி பரவியிருப்பதையும் பார்த்தேன். மிகவும் கவலை நிறைந்த வார்த்தைகளில் அவள் கூறினாள்:
“கஷ்டம்! எனக்குத் தெரியாதே! ஒவ்வொரு விதியின் தன்மை, ஒவ்வொருத்தருக்கும் கடவுள் அளிக்கும் சோதனைகள்...!''
கணவனின் முகத்தில் உண்டான நிற வேறுபாட்டையும் குண மாறுபாட்டையும் பார்த்துவிட்டு, விஷயத்தை மாற்றிக்கொண்டு கூறினாள்:
“மதிய நேரம் தாண்டிவிட்டது. சீக்கிரமா வீட்டிற்குச் சென்று உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுங்க. நாளைக்கு நாம திரும்பிச் செல்ல வேண்டுமல்லவா? நீண்ட தூரம் வண்டி ஓட்ட வேண்டுமே?''
அவள் கூறியது உண்மைதான். அப்போது செய்ய வேண்டிய மிகவும் நல்ல விஷயம் அதுதான். உணவு சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை. எங்கேயாவது சென்று ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து, என் மனதில் அமைதிச் சூழலை உண்டாக்க வேண்டும்.
இப்போது இரவு நேரம். இந்த பழைய பிரம்மாண்டமான கட்டிடத்தில், ஆள் நடமாட்டம் எப்போதும் இல்லாமலிருக்கும் மேல் மாடியில், கண்ணாடிச் சாளரங்கள் இருக்கும் சுவரோடு சேர்த்து போடப்பட்டிருக்கும் நாற்காலியில் நான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். வெளியே மின்மினிப் பூச்சிகள் பறந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. விட்டில் பூச்சிகள் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. மிகவும் அருகிலேயே இருந்த விசாலமான குளத்தில் படர்ந்திருந்த பாசிக்கூட்டத்திற்கு மத்தியில் தெரிந்த தெளிவான நீரில் மெல்லிய நிலவின் தோற்றம் தெரிந்தது. ஏதோ நீர்வாழ் பிராணிகள் அசைந்த காரணமாக இருக்க வேண்டும்- இடையில் அவ்வப்போது நீர்ப்பரப்பின் மேற்பகுதியில் சிறிய சிறிய வட்டங்கள் உண்டாகிக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் நிலவில் வளைந்து ஒடிந்த நிழலாட்டம் உண்டானது. மனதிலும் சலனங்களும் நிழலாட்டமும் நடந்து கொண்டுதானே இருந்தன.
ஜி. சங்கரக்குறுப்பின் கவிதை நூல் பாதியாக எங்கோ திறந்து என் கையிலும் மடியிலுமாகக் கிடந்தது. இன்று நான் அதை வேண்டுமென்றே திரும்பவும் வாசிப்பதற்காக எடுத்திருந்தேன். ஒரு மன நிம்மதிக்காக- அவளைப் பார்த்துவிட்டு வந்த பிறகு. ஒரு மரியாதைக்காக, ஒரு சடங்கிற்காக என்று மனதில் நினைத்துக் கொள்ள விரும்பினாலும், உள்ளுக்குள் விடாத வேதனையின் அறிகுறி மறைந்து கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. அதன் முணுமுணுப்பு இதயத் துடிப்பில் தெரிந்தது.
முன்பு எவ்வளவோ கவிதைகளை நாங்கள் ஒன்றாக அமர்ந்து வாசித்திருக்கிறோம்- ஆங்கிலத்திலும் மலையாளத்திலும். ஹெஸ்லி, கீட்ஸ், டைலன்தாமஸ், சங்ஙம்புழ, வைலோப்பிள்ளி, ஜி. சங்கரக் குறுப்பு, பி. பாஸ்கரன்... ஆனால், முதலில் தெரிந்து அறிமுகமான போது சிறிதும் எதிர்பாராமல் அவள் வாயில் இருந்து வந்து நான் கேட்டது ஜி. சங்கரக்குறுப்பின் வரிகளைத்தான்.
"உயரத்தையும் விஞ்சி உயரத்தில் இருக்கும்
பரந்து விரிந்த முடிவில்லா வானமே!
பரம்பொருளாய் புனிதமாய் ஒளிர்ந்திடும்
பேரழகு தத்துவமே வணக்கம்!
தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ!
அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!"
அதற்குப் பிறகும் குறுப்பு மாஸ்டரின் எப்படிப்பட்ட கவிதைகளையெல்லாம் ஒன்றாக உட்கார்ந்து வாசித்திருக்கிறோம். இன்று மீண்டும் நான் அதை எடுத்து முன்னால் வைத்தாலும், அவற்றை முழுமையாக வாசிக்க முடியவில்லை. எப்போதுமில்லாத வகையில் அவளைப் பற்றிய நினைவுகள் என்னை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன. வேதனை கொள்ளச் செய்கின்றன.
"தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ
அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!"
உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகலாம். திருமணமான மனிதன். சந்தோஷம் நிறைந்த ஒரு இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவன். எல்லாவற்றையும் தெரிந்து, புரிந்துகொண்டு, பொறுத்துக்கொண்டு, ஒத்துழைத்து, அன்பு செலுத்திக் கொண்டிருக்கும் மனைவியும், அன்பு நிறைந்த பிள்ளைகளும் உள்ளவன். ஒரு குழந்தைக்காவது அன்பான தாத்தாவாக இருப்பவன். இவனுக்கு வயதான காலத்தில், பழைய இளமைக்கால காதலின் பாதிப்பால் உண்டான செயல் மீண்டும் நடக்கிறதா? இதய நோயும் ஆஸ்துமாவும் எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும்- பாதிக்கக் கூடிய எந்தவொரு எதிர்பாராத நிமிடத்திலும் விடைபெற்றுக்கொள்ள வேண்டிய இந்த வயதான வேளையில்!
உண்மையைக் கூறட்டுமா? இதில் காதல் இல்லை. வழிபாடு இல்லை. விரக வேதனை இல்லை. ஆழமான எந்தவொரு உணர்ச்சி ஈர்ப்பும் இல்லை. எனினும், என்னிடம் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு வேறு ஏதோ இருக்கிறது என்ற உண்மையை மறுத்துக் கூறுவதற்கும் இல்லை. மனிதனுக்கு மனிதன்மீது தோன்றக்கூடியது என்றெல்லாம் கூறுவார்களே... அதைப்போல ஏதோ ஒன்று.
இப்போதிருக்கும் நிம்மதியும் அழகும் சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கைச் சூழலைவிட்டு, திரும்பிச் செல்லக்கூடிய ஒரு பயணம் எந்தவொரு நிமிடத்திலும், ஒரு காலத்திலும் எனக்கு நடக்காது. அதைச் செய்வதற்கு என்னைக் கட்டாயப்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ எந்தவொரு சக்தியாலும் முடியாது. அவளை என்றல்ல; வேறு யாரையும் இனி காதலிக்கவோ மோகம் கொள்ளவோ முடியாது. அதற்கு தேவையான உடல்ரீதியான- மனரீதியான தெம்பும் இல்லை. ஒரு காலத்தில் பிரியத்திற்குரியவளாக இருந்தாள் என்றாலும், அவள் மிகவும் பயங்கரமானவளாக வடிவமெடுத்தவளாயிற்றே! கவலையை அளித்த ஒரு அனுபவத்தின் தீராத விளைவாக இல்லாமல், அவமானச் சின்னமாக இல்லாமல், அவளை நினைத்துப் பார்த்ததே இல்லையே! எனினும், இப்போதைய நிலைமையைப் பார்த்தபோது, இவ்வளவு நாட்களுக்குப் பிறகும், காலம், அனுபவங்கள், நோய் ஆகியவற்றின் பாதிப்பால் பல மாறுதல்கள் உண்டாகிவிட்ட பிறகும், மாறாமல் இருக்கக்கூடிய ஏதோவொன்று... பழைய ஏதோ ஒன்று இன்னும் எஞ்சியிருக்கிறதோ? என்னுடைய நினைவிலும் புரிந்துகொண்ட விஷயங்களிலும், அப்படிப்பட்ட நிம்மதியற்ற தன்மை நிறைந்த ஈர்ப்பும் நெருக்கமும் கொண்ட ஒரு அடையாளம்கூட மனதில் தங்கி இருக்காமல் இருந்ததே! வேதனையையும் அழிவையும் மட்டுமே அளித்த ஏதோ ஒன்றின் கசப்பான விளைவாக மட்டும்தானே அவளைப் பற்றிய தெளிவில்லாத நினைவுகள்கூட இருந்தன!
ஆனால், இன்று நடந்த இந்த சந்திப்பின் கவலை நிறைந்த சூழல் காரணமாக, எல்லா விஷயங்களும் தலைகீழாக மாறிப் போய்விட்டதோ? தூக்கக் கலக்கத்தின் பாதிப்பில் எழும் அந்த பரிதாபமான தேம்பி அழும் சத்தம், எந்தச் சமயத்திலும் நிற்கவே செய்யாத ஒரு வலியின் ஆழமான வேதனையாக, எப்போதும் மனசாட்சியின் வெளிகளில் ஒலித்துக்கொண்டிருக்குமோ? அடங்காத ஒரு குற்றவுணர்வின் எச்சமாக என்னுடைய நினைவின் வாசலில் நீ இப்போதும் இருந்து கொண்டிருப்பாயோ?
முன்பு பிரியமாக இருந்தவளே! கூறு... அன்று உண்டான காயத்தில், வேதனையில், அவமானத்தில் கூறிவிட்ட கடுமையான வார்த்தைகள் பலவும் உன்னுடைய நிரந்தரமான சாபமாக ஆகிவிட்டன என்று நினைக்கிறாயா? மிகப் பெரிய நோயாக உன்னை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாயா? காயம்பட்ட அன்பின் ஆழங்களுக்குள்ளிருந்து உண்டான செயலற்றதும், தற்காலிகமானதுமான கோபத்தின் கூர்மையான முனைகளுக்கு இந்த அளவிற்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது என்று நீ நினைக்கிறாயா?
அப்படியென்றால், நான் கவலைப்படுகிறேன்.
நீண்ட காலத்திற்குப் பிறகு நான் மீண்டும் நினைக்கிறேன். நீ எப்போதும் கூறுவாய் அல்லவா?
ஒருநாள் நாம் சிறிதும் எதிர்பாராமல் சந்தித்தோம். இரண்டு இடங்களில் உள்ளவர்கள்... இரண்டு வேறுபட்ட வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்கள்... இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்... எனினும், ஒரு நாள், ஒருவரையொருவர் அடையாளம் புரிந்து கொண்டு காதலித்தோம். ஒருநாள் இனி நாம் எந்தச் சமயத்திலும் பிரிய முடியாத வாழ்க்கையில் ஒன்று சேருவோம். வானத்தின் தொலைவை நோக்கி விரலை நீட்டிக்கொண்டு நீ சொன்னாய்:
"அதோ பாருங்கள்... அதுதான் அஸ்வதி நட்சத்திரம். அதற்கு அருகில் இருப்பது சுக்கிர நட்சத்திரம். அவர்கள் கணவனும், மனைவியும். அதைத் தாண்டி தெரிகிற ஏழு நட்சத்திரங்களின் கூட்டம் இருக்கிறதே! அதுதான் சப்தரிஷிகள். அவர்கள் அந்த கணவன்- மனைவி இருவரையும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அஸ்வதியும் சுக்கிரனும் நாம்தான். அந்த ஆசீர்வாதம்... அதுதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது."
இப்போது உன்னைச் சந்திக்க வேண்டி வந்த இந்த துன்பம் நிறைந்த சூழ்நிலையில் நான் என்னையே அறியாமல் கேட்கிறேன்:
"இந்த துயரமான சூழ்நிலையிலா நாம் ஒன்று சேர வேண்டும்? உன்னுடைய- என்னுடைய நோயும் துன்பமும் அதிகமாக இருக்கக்கூடிய இந்த வாழ்க்கையின் இறுதி மாலையின் கவலை நிறைந்த நிமிடங்களில்...? பதிலே இல்லாத வேளைகளின் கொடூரமான பரிணாம கட்டங்களில்...? கலிகால கல்கியின் ஆரவாரங்களும் கோலாகலங்களும் மேகங்களின் மோதல்களும் பயமுறுத்திக் கொண்டு, கொடுமையான வேதனை நிறைந்த கடுமையான மழையைப் பெய்யச் செய்து கொண்டிருக்கும் இந்த கறுத்த இரவுப் பொழுதின் இறுதி யாமத்தில் அற்ப ஆயுளில் முடிவதற்காகவே வந்ததா அந்த ஒன்று சேரல்?"
ஒன்று சேர்வதும் பிரிவதும் எப்போதோ நடந்து முடிந்துவிட்டது என்று நம்பிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. முதலாவதின் இனிமையும் இரண்டாவதின் வருத்தமும் இரண்டாகவே இருக்கட்டும். முதலாவதை மட்டும் நாம் நினைத்துக் கொண்டிருந்தால் போதும்...
சக்கீ! உன்னுடைய உண்மையான பெயரை அழைப்பதற்கு விதி எனக்கு வாய்ப்பைத் தரவில்லை. வேண்டாம்... சக்கீ என்று மட்டுமே அழைத்துக் கொண்டிருந்த- அந்த பழைய காலத்தின் நினைவு மட்டுமே போதுமே நமக்கு சந்தோஷத்தையும் முக்தியையும் அளிப்பதற்கு? உனக்கு அது ஞாபகத்தில் இருக்கிறது அல்லவா?
இதோ, இப்போது சப்தரிஷிகளும் அஸ்வதியும் சுக்கிரனும், வேறு கோடானகோடி நட்சத்திரங்களும் இமை அசைக்காமல் நின்று கொண்டிருக்கும் வானப்பரப்பின் மேலே மின்மினிப் பூச்சிகளும் விட்டில் பூச்சிகளும் கண்களில் படுகிற மாதிரி பின்புலம் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த இரவுப் பொழுதின் தனிமையான சூழ்நிலையில், தனியாக இருக்கும் இந்த வீட்டின் தனித்துவமான பேரமைதியில் நான் நினைத்துப் பார்க்கிறேன்-
அந்த எல்லையற்ற நிலையில் வெறும் ஒன்று சேரல் மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது- அதுதான் தெய்வத்தின் முடிவு என்பதை முன்கூட்டியே நீ அறிந்திருந்தாயோ? எனக்கு அங்கு வந்து சேர்வதற்கும் ஒன்று சேர்வதற்கும் முடியவில்லை என்ற உண்மையையும் முன்கூட்டியே நீ தெரிந்திருந்தாயோ?
நம்முடைய அந்த முதல் சந்திப்பு வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்த ஒரு சம்பவமாக ஆகிவிட்டது! வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை உண்டாக்கிய அந்தச் சம்பவம்... இயல்பான குணத்தில் கூட மாற்றங்களை உண்டாக்கிய உன்னுடைய செயல்....
நான் நினைத்துப் பார்க்கிறேன்... நாம்... முன்பு... முன்பு... ஒரு காலத்தில்... ஒரு காலத்தில்...
வாழ்க்கையை மிகவும் பாதித்த ஒரு சம்பவம்? வாழ்க்கையில் திருப்பத்தையும் அடிப்படையான மாற்றத்தையும் உண்டாக்கிய ஒரு சம்பவத்தின் தொடர்ச்சி...?
அது என்ன? ஒரு சாதாரண மனித வாழ்க்கையில் பெரியதும் சிறியதுமான எப்படிப்பட்ட சம்பவங்களெல்லாம் நடைபெறுகின்றன? தற்காலிகமாகவோ தூரச் செயல்களாலோ உண்டான விளைவுகளுக்கும் விருப்பங்களுக்கும் விருப்பமின்மைகளுக்கும் காரணமாக இருந்து கொண்டு மனப்பூர்வமான பார்வையின் அடிப்படையில், அவை உண்டாக்கிய வினைகள் மற்றும் எதிர் வினைகளின் அடிப்படையில் நல்லவை என்றோ கெட்டவை என்றோ விமர்சிக்கப்படக்கூடிய சம்பவங்கள்... அவை இயல்பு வாழ்க்கையிலும் சூழல்களிலும் மனிதனின் உள்- வெளி சூழ்நிலைகளிலும் உண்டாக்கக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ள முடியாத மாற்றங்கள்... மனரீதியாகவும் குணரீதியாகவும் நிலவக்கூடிய சூழ்நிலைகளிலும் செயல்களிலும் அவை உண்டாக்கக்கூடிய ஆபத்தான காயங்கள் தரும் சந்தோஷங்களும் துயரங்களும்...
இந்தச் சம்பவங்களுக்கு உள்ளே வேறு பிரிவுகளோ உட்பிரிவுகளோ கூட இருக்கலாம். அதற்குக் காரணமாக இருப்பது- இயற்கை
சக்திகளோ, சமூகமோ, தனி நபரோ என்று இருக்கலாம். தனி நபர் என்னும்பட்சம், ஆணோ பெண்ணோ என்றும்...
சாதாரணமாக ஒரு மனிதனின் இயல்பான குணத்திலும் ரசனைகளிலும் தினசரி நடவடிக்கைகளிலும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையிலும் பாதிப்பு உண்டாக்க வேண்டுமென்றால், அந்த மாதிரியான ஒரு சம்பவம்- விருப்பங்களும் தனித்துவம் கொண்ட குணங்களும் வடிவமெடுப்பதும் தனித்தன்மை உண்டாகத் தொடங்குவதும் நடக்கக் கூடிய இளமைக் காலத்தின் ஆரம்ப காலங்களில் எங்கோ நடக்க வேண்டும்.
நான் மனதிற்குள் தேடிப் பார்க்கிறேன். ஞாபகங்களின் வழியாக இளமைக் காலத்தின் கடந்து சென்ற வழிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
பழைய திருவனந்தபுரம். கறுப்பு நிற கயிறைப்போல இருக்கும் பிரதான சாலை. கூட்டம் சிறிதும் இல்லை. ஒடுகலான சிவந்த மண் நிறைந்த சந்துகள். முரட்டுத் தனமான தரைகளும், அம்மன் கோவில்களும், சந்திப்புகளும் நிறைந்த சிறிய நகரம். மரங்களும் பெரிய மலைகளும் கடலும் ஏரிகளும் நிறைந்த ஒரு சிறிய அழகான இடம். அங்கிருக்கும் அந்த பழைய சிறுசிறு சந்துகள் எல்லாவற்றையும் இப்போதுகூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். அந்த ஒடுகலான சந்துகளின் வழியாக நடந்து நான் வெள்ளையம்பலத்தை அடைகிறேன். வெள்ளை நிறத்திலோ அல்லது வேறு ஏதோ நிறத்திலோ இருக்கக் கூடிய எந்தவொரு கோவிலுமே இல்லாத வெள்ளையம்பலம். அன்று அங்கிருந்த ஒரு ஆலமரத்திற்கு அடியில் குங்குமத்தைத் தேய்த்து சிவப்பாக்கி, செத்திப்பூ மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்த- யக்ஷி அம்மன் என்று அழைக்கப்பட்ட சற்று நீண்ட உருண்ட ஒரு அப்பிராணி பாறைக்கல் மட்டுமே கோவிலுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொருளாக இருந்தது. வயதான ஒரு பெண் அதைப் பேணிக் காத்துக் கொண்டும், அக்கறையுடன் கவனித்துக் கொண்டும், சுற்றிச் சுற்றி வந்து கொண்டும் இருந்தாள். பக்தர்கள் மிகவும் குறைவான அளவிலேயே இருந்தார்கள் என்பதுதான் ஞாபகம். அதற்கு அருகிலேயே, இப்போது இருப்பதைப்போலவே அப்போதும் இருந்த வாட்டர் ஒர்க்ஸ். அங்கு அழகும் எளிமையுமாக இருந்த பூங்கா. அதற்கு உள்ளே அமைதியாக நின்று கொண்டிருந்த அரிகு மரங்களின் அருமையான நிழல் தீவுகள். அந்த நிழல் பகுதிகளில் இருந்த சிமெண்ட்டில் செய்யப்பட்ட பெஞ்ச்களும் நாற்காலிகளும். அந்த நாற்காலிகளில் ஒன்றில் சிந்தனையும் ஆர்வமும் சந்தோஷமும் நிறைந்த முகத்துடன் முன்னால் பார்த்துக்கொண்டிருந்த அந்த மெலிந்த, இருபத்தொரு வயதைக் கொண்ட இளைஞனை நான் அடையாளம் கண்டுபிடிக்கிறேன்.
பல்கலைக்கழக கல்லூரியில் மலையாளம் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த மாணவன். என். மோகனன். அவனுக்கு முன்னால் இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் பதினெட்டு வயது மதிக்கக்கூடிய ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அதே கல்லூரியில் ஹானர்ஸ் வகுப்பில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. அவளுடைய பெயர்? ஓ! வேண்டாம். அதைக் கூறுவது சரியாக இருக்காது. அவளை அவள் என்று மட்டும் அறிந்து கொள்ளுங்கள். அவள் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சுக்குப் பின்னால் பத்து இருபதடிகளுக்குக் கீழே இருந்த மணல் பரப்பில் நான்கோ ஐந்தோ வயதைக் கொண்ட ஒரு அழகான சிறுமியும் ஆறேழு வயதைக் கொண்ட ஒரு சுறுசுறுப்பான சிறுவனும் ஓடி விளையாடி உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய- அந்த இளம்பெண்ணின் தம்பியும் தங்கையும்தான் அவர்கள். அவர்களை பூங்காவில் விளையாடுவதற்காக அழைத்துக் கொண்டு வருவதும், பத்திரமாகத் திரும்ப வீட்டிற்குக் கொண்டு போய் சேர்ப்பதும் என்ற பொய்யான காரணங்களுடன் அக்காவின் தினசரி மாலைநேரப் பயணங்கள் இருந்தன.
எதிர் பக்கத்திலிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் காதல்வயப்பட்ட கண்களுடன் அந்த இளம் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். காதல்வயப்பட்டு என்று கூறினால், ஈர்க்கப்பட்டு என்பதா அர்த்தம்? அப்படியென்றால், அப்படித்தான். எனினும், எனக்கு எனக்கென்றே இருக்கக்கூடிய சந்தேகம் இருக்கிறது. பதினெட்டிலிருந்து இருபத்தொன்று வயது வரை மட்டுமே இருக்கக்கூடிய என்று தெரிய வருகிற ஒருத்தியை இளம்பெண் என்று குறிப்பிடாமல் பெண் என்று அழைக்கலாமா? பெண் என்ற பிரிவில் அவள் சேர்வாளா? அருமையான இளமையின் முதல் கட்டத்தில் ஏதோ ஒரு இடத்தை அடைந்துவிட்டிருந்த அந்த இளைஞனை, தன்னுடைய அழகாலும் அறிவு வெளிப்பாட்டாலும் நன்னடத்தையாலும் தன்னையே அறியாமல் ஈர்ப்பு உண்டாக்கி விட்டிருக்கும் ஒரு இளம் பெண்தானே அவள்!
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டது அன்று முதல் முறையாக அல்ல. அங்கு ராமச்சந்திரன் அறிமுகப்படுத்திய பிறகு, எவ்வளவோ முறைகள் அதே இடத்தில்தான் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். கல்லூரியில் கூட்டத்தில் சேர்ந்து வேறு. ஆனால், அவள் கூறுகிறாள்- அவன் கல்லூரியின் தலைவனாகவும் கதைகள் எழுதக் கூடியவனுமாக இருந்த காரணத்தால் ஏற்கெனவே நன்கு தெரியும் என்றும், அந்த இடத்தில் அறிமுகமாவதற்கு முன்பே ராமச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்திருக்கிறான் என்றும். அப்போது அவன் பெரிய மிடுக்குத் தனத்தையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தி, சிரிப்பல்லாத ஒரு சிரிப்பை வெளிக்காட்டி, எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
முகத்தை நோக்கி சிறிதுகூட பார்க்காமல் திருவனந்தபுரத்திற்கே உரிய தனி குணத்தை அவன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அறிமுகப்படுத்தினான் என்று அவள் கூறிய சம்பவம் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது. தொடர்ந்து கூறிய விஷயங்கள் சரியாக இல்லையென்றாலும், நியூடெல்லியில் நடைபெறும் பல்கலைக் கழகங்களுக்கிடையிலான இளைஞர்கள் திருவிழாவில் பங்கு பெறுவதற்குச் செல்லும் கலைக் குழுவிற்கு மலையாள வகுப்பில் பயிற்சி தந்து கொண்டிருந்தார்கள். அந்த குழுவில் பாடகியாக அவள் இருந்திருக்கிறாள். அவளுடைய வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவனும் அவனுடைய நண்பனுமான ராமச்சந்திரனும் பாடகனாக அந்த குழுவில் இருந்தான். அவர்கள் பயிற்சி பெறுவதைப் பார்ப்பதற்காக கல்லூரி யூனியனின் பொறுப்பில் இருந்த அவன் பல வேளைகளிலும் அங்கு செல்வதுண்டு என்பதென்னவோ உண்மைதான். அப்படிப்பட்ட சமயங்களில் சற்று அதிகமாகவே மாணவிகள் இருந்த அந்த கூட்டத்தில் இந்த இளம்பெண்ணையும் ராமச்சந்திரன் அறிமுகப்படுத்தி வைத்திருக்கலாம். அன்று கம்யூனிசம் என்ற இனிய, அழகான நினைப்பு ஒன்றைத் தவிர வேறு எந்தவொரு மென்மையான விஷயங்களும் மனதில் இருக்கக்கூடாது என்று மிகவும் கறாராக கொள்கை வைத்துக் கொண்டிருந்த அவன் அவர்களைப் பொதுவாக பார்த்து பற்களைக் காட்டினானே தவிர, யாரையும் குறிப்பிட்டு கவனம் செலுத்திப் பார்க்கவில்லை என்பது மட்டும்தான் உண்மை. எனினும், சமூகச் செயல்பாட்டின் அடித்தளமான அந்த தீவிர அரசியல் கொள்கையை மீறக்கூடிய ஒரு கனவு வாழ்க்கையின் அடையாளங்களே அவை என்றும் அவன் தனி மனதில் நினைத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் உண்மை. அந்த வகையில் இலக்கியத்திலும் கலையிலும் தனக்கென்று சொந்தமான கோட்பாடுகளை உண்டாக்கி வைத்துக் கொண்டிருந்தான். அதனால், அவனுக்கு நண்பர்களாக கிடைத்தவர்களும் பொதுவாகவே அந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இன்று புகழ்பெற்ற ஓவியராக அறியப்படும் எ. ராமச்சந்திரன் அன்று ஒரு இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மாணவனாகவும் இசையை முறைப்படி கற்றுக்கொண்டிருந்த பாடகனாகவும் இருந்தான். அவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக ஆனதற்கு, இரண்டு பேரின் மனங்களிலும் இருந்த பொதுவான நட்புணர்வு மட்டுமே காரணமாக இருந்தது. இருவரும் காதல் வலையில் சிக்கியதும் ஒரே காலத்தில் நடைபெற்ற கவலைக்குரிய விஷயமாக இருந்தது. கதையிலும் கவிதையிலும் கலையிலும் நிம்மதியையும் விடுதலை உணர்வையும் அமைதியையும் தேடித் திரிந்து கொண்டிருந்த அவன், எப்போதும் ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனாகவே இருந்தான். கற்பனை பண்ணியவாறு அலைந்து கொண்டிருக்கும் மனிதன். கம்யூனிசமும் புரட்சியும் அன்று அவனுக்கு கற்பனையான கனவாகவும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகவும் தைரியத்தை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகவும் இருந்திருக்க வேண்டும். அந்த காரணத்தால்தான்- அன்று சட்ட விரோதமான கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் பிரிவில் இருந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் நிற- இன வேறுபாடு இல்லாத சமத்துவம் நிறைந்த அழகான உலகத்தைப் படைப்பதற்காக தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவன் முடிவு செய்தான். அன்று ஓலை வேய்ந்த குடிசையாக இருந்த திருவனந்தபுர நந்தவனம் போலீஸ் கேம்ப்பை நெருப்பு வைத்து எரித்த துணிச்சலான செயலில் பங்கு பெறுவதற்கு அவன் முடிவு செய்ததற்குக் காரணமும் அதுதான். மறைவிடங்களில் இருந்ததால், அன்று எல்லாரும் ரகசியமாக "ஆசான்’’ என்ற புனைப்பெயருடன் அழைத்துக் கொண்டிருந்த தோழர் கெ.வி. சுரேந்திரநாத், நகர கமிட்டியின் செயலாளர் என்ற முறையில் சற்று சர்வாதிகாரத் தன்மையுடனும் சற்று கடுமை கலந்தும் கறாராக தடுக்காமல் இருந்திருந்தால், அன்றைய மாணவர்கள் பிரிவின் தலைவனாக இருந்த தோழர் சன்னி செபாஸ்ட்டியனின் அறிவுரையின்படி தான் உட்பட அங்கிருந்த பெரும்பாலானவர்களும் அந்த நெருப்பிலோ அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளிலோ உயிரைப் போக்கி விட்டிருக்க வேண்டும் என்பதும் உண்மையாகவே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு விஷயம்தானே? ஏதோ ஒரு கொள்கையை, கற்பனை நிறைந்த கனவை மிகப் பெரிய வழிகாட்டியாக மனதில் நினைத்துக் கொண்டு நடந்து திரிந்த, நிரந்தர கனவுகள் நிறைந்த நாட்களாக அவை இருந்தன. இலக்கியத்திலும் கலையிலும் அன்று அதே மாதிரியான நிலைதான் நிலவிக்கொண்டிருந்தது.
தவிர்க்க முடியாத ஒரு தேவை. வயதுக்கே உரிய ஒரு நிர்பந்தம்.
அவன் பல வேளைகளில் சாயங்கால நேரங்களில் வாட்டர் ஒர்க்ஸில் இருக்கும் பூங்காவிற்குச் சென்று அமர்ந்து கொண்டிருப்பான். பெரும்பாலும் தனியாகவே. இல்லாவிட்டால் மிகவும் நெருங்கிய நண்பர்களான ராமச்சந்திரனுடனோ ஒ.என்.வி.யுடனோ சேர்ந்து. ராமச்சந்திரனும் ஒ.என்.வி.யும் இருந்தால், சாயங்கால வேளைகள் இசைமயமானதாகவோ, கவிதைமயமானதாகவோ ஆகிவிடும். இரண்டு பேராலும் மிகவும் அருமையாக கவிதைகள் கூற முடியும். அந்த கவிதை இன்பத்தில் மூழ்கிப்போய் நேரம் ஓடிக்கொண்டிருக்கும். தனியாக இருந்தால், கையிலிருக்கும் புத்தகத்தின் ஒன்றோ இரண்டோ பக்கங்களைப் புரட்டுவதுதான் தாமதம், அதற்குள் சொந்த கற்பனையில் மூழ்கி ஏதோ தூரத்திலிருக்கும் கனவு உலகங்களுக்குள் போய்விடுவான். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைகளில் இருந்து விடுதலை ஆகக் கூடிய பயணங்கள்... புனித யாத்திரைகள்...
இவ்வளவு சிறிய வயதில் அப்படியென்ன பிரச்சினைகள்? மிகவும் இரக்கப்படத்தக்க ஒரு இளமைக் காலத்தின் தாங்க முடியாத வேதனைகள்... வாலிபத்தின் கரிந்துபோன கனவுகள்... அவனுக்கென்றே இருந்த கவலைகள்... நிறைவேறாத ஆசைகள்... பதைபதைக்கச் செய்த இல்லாமைகள்... அன்பு என்ற ஒன்று இல்லாத வெறுமைகள்... கூட்டுக் குடும்பத்தில் இருந்தவர்களின் கூட்டத்திற்கு மத்தியில் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலைகள்...
பூங்காவின் சிவந்த மாலை நேரத்தின் கவலை நிறைந்த தனிமைச் சூழலில் நண்பர்களின் கவிதை கூறலிலோ, புத்தகத்தின் தாள்களைத் திறந்ததால் உணர்ந்த இனிய நினைவுகள் நிறைந்த பழைய சம்பவங்களிலோ தன்னுடைய சுமைகளை இறக்கி கண்களை மூடி அவன் படுத்திருந்தான்.
ஒருநாள், ஒரு சாயங்கால நேரத்தில் ஒ.என்.வி.யுடன் சேர்ந்து வாட்டர் ஒர்க்ஸ் பூங்காவில் அமர்ந்திருந்தபோது, எங்களுக்கு முன்னால் இருந்த மணல் பரப்பில் ஒரு சிறுமியும் அவளுடைய அண்ணன் என்று தோன்றக்கூடிய ஒரு சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நல்ல ஆர்வத்துடன் இருந்த சிறார்கள். நேரம் இருட்ட ஆரம்பித்த பிறகும், குழந்தைகள் விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், நாங்கள் அவர்களிடம் வீட்டையும் முகவரியையும் விசாரித்தோம். வீடு மிகவும் அருகிலேயே இருந்தது. யக்ஷி அம்மன் கோவில் இருந்த ஆலமரத்திற்குப் பின்னாலிருந்த பாதையில். அவர்களின் தந்தை திருவிதாங்கூர்- கொச்சி மாநிலங்களின் இணைப்பைத் தொடர்ந்து திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்து வந்த தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிறிது தூரமே இருந்தாலும், இருட்ட ஆரம்பித்திருந்த நேரத்தில், ஆள் அரவமில்லாமலிருந்த பாதையின் வழியாக குழந்தைகளைத் தனியே விட வேண்டாம் என்று நினைத்து நாங்கள் அவர்களை வீட்டின் வாசலில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்தோம்.
அது அவ்வளவு பெரிய ஒரு சம்பவம் இல்லையென்றாலும், அவர்களின் வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டோம். பிற்காலத்தில் அந்த குழந்தைகளின் அக்கா கூறித்தான் விஷயமே புரிந்தது. பிள்ளைகளை, குழந்தைகளை கடத்திக் கொண்டு செல்பவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் அப்படிப்பட்ட யாரோ இருக்கிறார்கள் என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் உறுதியாக நினைத்திருக்கிறார்கள். பிள்ளைகள்மீது பாசத்தை வெளிப்படுத்தி நெருக்கமாகப் பழகி அவர்களைக் கவர்ந்து, மெதுவாக கடத்திக் கொண்டு செல்வது... அதற்குப் பிறகு உடல் உறுப்புகளுக்குச் சேதங்கள் உண்டாக்கி, அவர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கி, பணம் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்துவது... அந்த குழந்தைகளின் அக்கா அதுதான் உண்மை என்று திடமாக நினைத்தாள். அப்படி இல்லாமல், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மீதுகூட நல்ல எண்ணமோ அணுகுமுறையோ இரக்கமோ உண்டாவதற்கு எந்தவொரு வழியும் இருப்பதாக அந்த கொச்சியைச் சேர்ந்த பெண்ணால் நினைக்க முடியவில்லை. அதனால்தான் அந்தக் குழந்தைகளைக் கடத்தும் நபர்களைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள். அதைத் தொடர்ந்துதான் இனிமேல் தினமும் குழந்தைகளுடன் சேர்ந்து பாதுகாக்கும் பெண்ணாக பூங்காவிற்குச் செல்லப் போகும் பொறுப்பை வலியச் சென்று அவள் ஏற்றுக் கொண்டாள். அயோக்கியர்கள் குழந்தைகளை வசீகரிப்பதற்கு இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறார்கள்! மீதி வேலையைத் தொடர்வதற்கு இனிமேலும் அவர்கள் வருவார்கள் அல்லவா? அப்போது அவர்களைப் பிடித்துவிட வேண்டும்- அதுதான் அவளுடைய திட்டமாக இருந்தது. தினமும் குழந்தைகளுடன் சேர்ந்து பூங்காவிற்கு வந்து, அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து விலகி இருந்து கொண்டு, புத்தகம் வாசிப்பதை போல காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு, சுற்றிலும் ஆராய்ந்து கொண்டிருப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். பல நாட்கள் தீவிரமாக முயற்சி செய்து பார்த்தும், எந்தவொரு பலனும் உண்டாகவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்துவிட்டிருந்த ஒரு நாளன்றுதான் நானும் ராமச்சந்திரனும் ஒன்றாகச் சேர்ந்து, மலர்ந்து படர்ந்த சிவப்பு பந்தல் அமைந்திருந்த ஒரு வாகை மரத்திற்கு அடியில் இருந்த சிமெண்ட் நாற்காலிகளில் போய் உட்கார்ந்தோம். குழந்தைகள் தங்களின் அக்காவின் அருகில் ஓடிச்சென்று, பழைய குழந்தை கடத்தல்காரர்களில் ஒருவனான என்னை விரலை நீட்டி சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். அவள் எழுந்து என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில், ராமச்சந்திரனின் பார்வையில் அவள் சிக்கிக் கொண்டாள் என்று நினைக்கிறேன். அவள் எழுந்து அவர்களின் அருகில் சென்றாள். நான் கையில் வைத்திருந்த கவிதை புத்தகத்தின் பக்கங்களுக்குள் நுழைந்தேன். ஜி. சங்கரக்குறுப்பின் புதிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு அது. கவர்ந்து இழுக்கக்கூடிய எழுத்துகள். நான் அதில் முழுமையாக மூழ்கி விட்டிருந்தேன். திடீரென்று அந்த கவிதை வரிகளுக்குள்ளிருந்து எழுந்து மேலே வந்த இனம் புரியாத வெளிச்சம் என்னை முழுமையாக ஆட்கொண்டது. என்னையே அறியாமல் குரலை உயர்த்திக் கொண்டு நான் வாசித்தேன்.
"உயரத்தையும் விஞ்சி உயரத்தில் இருக்கும்
பரந்து விரிந்த முடிவில்லா வானமே!
பரம்பொருளாய் புனிதமாய் ஒளிர்ந்திடும்
பேரழகு தத்துவமே வணக்கம்!
தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ!
அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!’’
அந்த மாய உலகத்தில் மூழ்கிப் போய்தான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். மனதிற்குள் ஒரு இனிய இசை முழங்கிக் கொண்டிருப்பதைப்போல நான் உணர்ந்தேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதைப்போல தோன்றியது. ராமச்சந்திரன் வரட்டும். அவனை உரத்த குரலில் வாசிக்கச் சொல்லி அதைக் கேட்க வேண்டும். வாசித்து அனுபவித்த ஒரு கவிதையை உணர்ச்சிகள் ததும்ப திரும்பவும் வாசிக்கச் சொல்லி கேட்கும்போது, அதில் நிறைந்திருக்கும் விலை மதிப்பற்ற நிமிடங்களைப்போல உலகத்தில் வேறு என்ன இருக்கிறது?
அப்போது ஒரு இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துக் கொண்டு ராமச்சந்திரன் வருகிறான். அவன் அறிமுகப்படுத்தினான்:
“உனக்கு தெரியவில்லையா? நம்ம கல்லூரியில்தான்... என் வகுப்பில்... நியூடில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் திருவிழாவில் என்னுடன் இருந்தாங்க...''
நான் பார்த்தேன். எங்கேயோ பார்த்து மறந்த முகம். சொன்னேன்:
“மகிழ்ச்சி. நான் இவனுக்கு மேல்வகுப்பில் படிக்கிறேன். மோகனன்...''
அழகான சிரிப்புடன் சொன்னாள்:
"எனக்குத் தெரியும். கதாசிரியரும் கல்லூரி யூனியன் தலைவருமாக இருப்பவர் அல்லவா? போதாதற்கு, இதற்கு முன்பு இதே ராமச்சந்திரன் கல்லூரியில் வைத்து அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறார்.''
நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன்.
அவள் என்னைத் தேற்றினாள்.
“மன்னரை எல்லாருக்கும் தெரியும். மன்னர் எல்லாரையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இல்லையே!''
அந்த சமாதான வார்த்தைகளிலும் கிண்டல் கலந்திருப்பதை உணர முடிந்தது. வெளிறிப் போன சிரிப்புடன் நான் அமைதியாக நின்றிருந்தேன். அப்போது அவளுடைய கையில் இருந்த புத்தகம் என் பார்வையில் பட்டது. மிகப் பெரிய கவிஞரான ஜி. சங்கரக் குறுப்பின் இனிமையான கவிதை நூல். உமர்கய்யாம் எழுதிய நூலின் மலையாள மொழிபெயர்ப்பு. எனக்கு வியப்பாக இருந்தது. கவிதை வாசிக்கக்கூடிய இளம் பெண்ணா? கவிதைகள் எழுதக் கூடிய பி. சுகந்தகுமாரியையும் பந்தளம் ராதாமணியையும் நான் அப்போது கல்லூரியில் பார்த்திருக்கிறேன். ஆனால், கவிதைகளை வாசிக்கக்கூடிய ஒரு இளம் பெண்... என் அறிமுக வட்டத்திற்குள் எந்த இடத்திலும் அப்படிப்பட்ட ஒருத்தியை நான் பார்த்ததில்லை. சிந்தித்துப் பார்த்தேன். ஸி.ஜெ. சுசீலா, எம்.ஜி. பவானி, கெ. சாரதாமணி, சாந்தகுமாரி, சாவித்திரி, ஆயிஷா பாயி, சாரா வர்க்கி... இல்லை... யாரும் கவிதை வாசித்து பார்த்ததில்லை. கவிதையைப் பற்றி உரையாடிக்கூட கேட்டதில்லை. கையில் கவிதை புத்தகத்துடன் நின்று கொண்டிருக்கும் இந்த இளம் பெண்ணைப் பார்த்ததும், உண்மையிலேயே ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். பிறகு நினைத்தேன்.
ஓ! வாசிப்பதற்காக அது இருக்காது. அது மட்டும் உண்மை. யாரிடமாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தந்தையோ அண்ணனோ, வேறு யாரோ அந்த புத்தகத்தைக் கொடுத்திருப்பார்கள். அப்படித்தான் ஏதாவது இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் மனதில் இருந்த இக்கட்டான நிலையை மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக அது இருந்ததே! அதனால் கையிலிருந்த அந்த புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டேன்:
“விலாச லஹரிதானே?''
அவளிடமிருந்து உடனடியாக பதில் வந்தது:
“ஆமாம்... ஜியின் மொழிபெயர்ப்பு நூல். மிகவும் அருமையாக இருக்கிறது. சங்ஙம்புழ, கெ.எம். பணிக்கர் ஆகியோரின் மொழிபெயர்ப்பைவிட மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.''
கடவுளே! ஆச்சரியம்தான். நான் என்ன கேள்விப்படுகிறேன்? பதினெட்டு வயதைத் தாண்டியிராத- முதல் வருட ஹானர்ஸ் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்!
நீளமாகவும் சிவந்தும் காணப்பட்ட முகத்தின் அழகும், வெளுத்த உடலின் தோற்றமும், இளமையின் வனப்பும், உற்சாகமும் மலர்ச்சியும் நிறைந்த நடவடிக்கைகளும் மனதிற்குள் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு கேட்டேன்:
“ஃபிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறீர்கள் அல்லவா?''
உடனடியாக பதில் வந்தது:
“பிறகு... விக்டோரியன் கவிதைகளை வாசிப்பதற்கு முன்னால் முடிந்த வரைக்கும் மற்ற மொழிகளில் உள்ள கவிதைகளை வாசித்துப் பார்க்கிறேன். ஃபிட்ஸ் ஜெரால்டின் மொழிபெயர்ப்பிலிருந்துதானே எல்லா மலையாள மொழிபெயர்ப்புகளும் உண்டாகியிருக்கின்றன!''
ஓ! விஷயம் அப்படிப் போகிறதா? விக்டோரியன் கவிதைகளைப் படிப்பதற்கான ஆயத்தம்! ஜி. குமாரபிள்ளை சாரும் அய்யப்ப பணிக்கர் சாரும் அல்லவா பாடம் சொல்லித்தருவார்கள்? இவற்றையெல்லாம் வாசித்துப் பார்க்கும்படி அவர்கள் யாராவது கூறியிருப்பார்கள்! விஷயம் அவ்வளவுதான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. தற்போதைக்கு மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன்.
அந்தப் பெண்ணிடம் இருக்கும் விஷயம் அவ்வளவுதான். எனினும், உயர்ந்த சிம்மாசனத்திலிருந்து கீழே எறிவதைப்போல, ஒரு அறிவுரையின் சாயலில் நான் சொன்னேன்:
“எம்.பி. அப்பனின் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது. "வாழ்க்கை திருவிழா"... அதையும்கூட வாசித்துப் பாருங்க...''
பதிலுக்கு காத்திருக்காமல் கையிலிருந்த புத்தகத்தை ராமச்சந்திரனிடம் நீட்டிக்கொண்டே சொன்னேன்.
“இங்கே பார்... இது மிகவும் அருமையா இருக்கு. நீ கொஞ்சம் வாசித்துப் பார்.''
அவன் புத்தகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு சொன்னான்:
“ஓ! ஜி மொழிபெயர்த்த புத்தகமா? Recently he is at his lyrical best. எனினும், இன்று இதை வாசிக்க வேண்டியவன் “நான் அல்ல''.
தன்னுடன் வந்து நின்றிருந்த இளம் பெண்ணைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான்.
“இன்று இந்த இளம்பெண் படிக்கட்டும். Sweet… extremely sweet voice. நீ அப்படியே உட்கார்ந்து விடுவாய். Stunned ஆகிவிடுவாய்...''
அந்த இளம் பெண் சற்று பதைபதைத்து விட்டதைப்போல தோன்றியது. முகம் அளவிற்கும் அதிகமாக சிவந்துபோய் காணப்பட்டது. சிவப்புநிற வாகை மலர்களில் மோதி கீழே விழுந்துகொண்டிருந்த சாயங்கால நேர வெளிச்சம் அந்த சிவப்பு நிறத்தை மேலும் அதிகமான பிரகாசத்துடன் திகழச் செய்தது. ராமச்சந்திரன் மிகவும் வற்புறுத்திய காரணத்தால், அவள் எங்களுக்கு முன்னால் இருந்த பெஞ்சின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு அந்த கவிதையை வாசித்தாள். ஏதோ ஆகாய தேவதையின் இனிமையான குரல் ஒலிப்பதைப்போல தோன்றியது. கவிதையை வாசித்து முடித்துவிட்ட பிறகும், அதன் அலையோசை காற்றில் இனிமையாக கேட்டுக்கொண்டே இருந்தது.
"தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ
அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!’’
கவிதைக்கே உரிய அழகும் இனிமையும் அதை வாசித்ததால் உண்டான இதய மலர்ச்சியும் மனதில் உற்சாகத்தை எழச்செய்தன. இனம் புரியாத உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து, நிமிடங்கள் செயலற்ற நிலையில் தளர்ந்துபோய்க் கிடந்தன.
“கடவுளே! நேரம் மிகவும் அதிகமாகிவிட்டதே!'' என்றோ வேறு என்னவோ கூறியவாறு அவள் குழந்தைகளின் அருகில் சென்று தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து வெளியே வேகமாக நடந்து சென்றாள். நான் உட்கார்ந்திருந்த நிலையைப் பார்த்து ராமச்சந்திரன் அர்த்தம் நிறைந்த சிரிப்புடன் கேட்டான்:
“உனக்கு என்னடா ஆச்சு?''
ஒரு நிமிட முழுமையான அமைதிக்குப் பிறகு, எதுவுமே இல்லை என்பதைப்போல சொன்னேன்.
“தூரத்தையும் தாண்டி தூரத்தில்... ஆச்சரியம்!''
சிரிப்பின் அளவையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்தும் முறையையும் அதிகரித்துக் கொண்டு ராமச்சந்திரன் அழுத்தமான குரலில் சொன்னான்:
“இல்லை... அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!''
அதற்குப் பிறகு பூங்காவிற்குச் செல்வது என்பதை வாடிக்கையான விஷயமாக ஆக்கினேன். பெரும்பாலும் நண்பர்களை விலக்கி விட்டு, தனியாகச் சென்று கொண்டிருந்தேன். அது ஏன் என்று புரிந்திருக்கும் அல்லவா? ஆமாம்... அதற்குத்தான். முடிந்தவரையில் தனியாக பார்ப்பதற்கு.. பேசுவதற்கு... குழந்தைகள் இருவரும் கீழே இருந்த மணல் பரப்பில் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு பாதுகாப்பிற்காக வரக்கூடிய அக்காவும் நானும் மேலே இருக்கும் ஆள் இல்லாத நடைபாதையின் ஓரத்தில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். மேலே வாகை மரத்தின் பச்சிலைப் பந்தலோ பூம்பந்தலோ மாறி மாறி காட்சியளித்துக் கொண்டிருக்கும். அவற்றுக்கு மத்தியில் நுழைந்து வரும் மாலை நேரத்து வெளிச்சத்தின் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறம்... சுற்றிலும் இருக்கும் பல வகைப்பட்ட செடிகளிலும் அவற்றின் பல வகையான மலர்களிலும் வண்ணங்கள் நிறைந்த தீப அலங்காரத்தை அது உண்டாக்கியது. அந்த சாயங்காலப் பொழுதின் அழகில் மூழ்கிப் போய் உட்கார்ந்து நாங்கள் உரையாடிக் கொண்டிருப்போம். எங்களுடைய சிறிய உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசினோம். எங்களைப் பற்றி மட்டும் பேசுவதற்கு மறந்து போய், பேசினோம். கவிதை, கதை, கலை- எல்லா விஷயங்களிலும் அவளுக்கு நல்ல அறிவு இருந்தது. ஒருநாள் கையில் அந்த வாரம் வெளிவந்திருந்த ஒரு வார இதழுடன் அவள் வந்தாள். அதில் என்னுடைய சற்று நீளமான ஒரு கதையின் முதல் பகுதி இருந்தது. அது பிரசுரமாகியிருந்த பக்கத்தில் விரலால் அடையாளம் வைத்தவாறு அவள் வந்தாள். வந்தவுடன் சொன்னாள்: “இது நன்றாக இருக்கிறது.''
நான் கிண்டலாகச் சொன்னேன்:
“ஏதாவதொரு பெண் நான் எழுதியது நன்றாக இருக்கிறது என்று கூறினால், அப்போதுதான் எழுதியது மோசமானது என்று தோன்றும் என்று ஸி.ஜெ. தாமஸ் கூறியிருக்கிறார்.''
அவள் அந்த நகைச்சுவையை சரியாக கவனிக்கவில்லை என்று தோன்றியது. முகத்தில் முதலில் இருந்த அதே சீரியஸ்தனம்தான் தொடர்ந்து காணப்பட்டது. பிறகு என்னையே கூர்ந்து பார்த்துவிட்டு கேட்டாள்:
“இது... இந்தக் கதை... உங்களின் சொந்த அனுபவமா?''
நான் அவளுடன் சேர்ந்து கொண்டேன்:
“இல்லை என்று கூறுவதற்கு இல்லை. அனுபவங்களும் அவற்றின் தொடர்ச்சிகளும் சாயல்களும் நமக்கே தெரியாமல் கலையில் வந்து சேர்ந்து கொள்கின்றன.''
அவள் அதைக் காதில் வாங்கினாளோ என்னவோ? அவள் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்தபோது, வேறு எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல இருந்தது. இறுதியில் மீண்டும் கேட்டாள்:
“கடைசியில், அந்த ஆளால் அவளையே திருமணம் செய்துகொள்ள முடிந்ததா?''
நான் சிரித்தேன்:
“கதை முழுவதும் முடியட்டும். அப்போது புரியும்.''
வழக்கத்தில் இல்லாத அமைதி அதற்குப் பிறகும் தொடர்ந்து நிலவியது. இறுதியில் தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல சொன்னாள்:
“இந்தக் கதை எனக்கு ஏதோ ஒரு பெரிய தைரியத்தைத் தருகிறது.''
நான் கேட்டேன்.
“எதற்கு? எதைச் செய்வதற்கான தைரியத்தை?''
அப்போது பின்வாங்கினாள்.
“இல்லை... தவறாகக் கூறிவிட்டேன். தைரியம் தரவில்லை. பயந்தைச் சற்று விலக்கியது...''
ஒரு விடுகதையின் முடிச்சைப் போட்டுவிட்டு அவள் போய்விட்டாள்.
இன்னொரு நாள்... முன்னால் குழந்தைகள் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். ஆலமரத்திற்குக் கீழே இருந்த யக்ஷி அம்மனை நெருங்கியபோது, அவள் அந்தப் பக்கம் பார்த்தவாறு கேட்டாள்:
“பாவம் யக்ஷி அம்மன்! இல்லாத பக்தனை எதிர்பார்த்து இப்படியே... இல்லையா?''
பதில் கூறுவதற்கு பதிலாக அந்தப் பக்கமும் கேள்வியையே தந்தேன்.
“இல்லாத பக்தனா? அப்படியென்றால், தினமும் குளிப்பாட்டி, குங்குமம் வைத்து, செத்தி மாலையைச்சூட்டி, துளசி இலைகளை அணிவித்து உட்கார வைப்பது யார்?''
சிறிது நேரம் வாய் திறக்கவில்லை. பிறகு சற்று பயந்துபோய் விட்டதைப்போல பலவீனமான குரலில் சொன்னாள்:
“நான்தான் இந்த யக்ஷி அம்மன் என்று சில நேரங்களில் தோன்றும்.''
எதிர்பார்த்திராத வார்த்தைகளாக இருந்ததால், முதலில் சற்று அதிர்ச்சியடைந்து விட்டேன்.
“இல்லாத பக்தனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் இந்த யக்ஷி என்று கூறுகிறீர்களா?''
அவளுக்கு மிகுந்த ஏமாற்றம் உண்டாகிவிட்டதைப்போல தோன்றியது.
“இல்லாத... எந்தச் சமயத்திலும் இல்லாத... இல்லையா?''
நான் உறுதியான குரலில் சொன்னேன்:
“இல்லாத... என்று கூறுகிறீர்களா? யார் சொன்னார்கள்? இருக்கிறானே? இப்போதே இருக்கிறானே? இதுவரை தெரிந்து கொள்ளவில்லையா? பார்த்ததில்லையா?''
யாருமே இல்லாத யக்ஷி அம்மன் இருக்கும் ஆலமரத்திற்கு முன்னால் இது நடக்கிறது. வெளிறிப் போன முகத்துடன் அவன் தலையைத் திருப்பி பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். திடீரென்று எங்கிருந்தோ கிடைத்த ஒரு உள் குரலின் சக்தியால் உந்தப்பட்ட நான், யக்ஷி அம்மனின் பாதங்களில் யாரோ அர்ப்பணித்திருந்த துளசி இலைகளில் ஒரு இலையை எடுத்து, பின்னால் நீண்டு கறுத்து அடர்த்தியாகத் தொங்கிக் கொண்டிருந்த அவளுடைய தலை முடியில் சொருகிவிட்டு சொன்னேன்:
“என் யக்ஷிக்கு... தருவதற்கு மலர் இல்லை. அதற்குப் பதிலாக மலரைப் போன்று மென்மையாக இருக்கும் இலை... துளசி இலை...''
அப்போது அப்படிச் செய்தாலும், அதை யாராவது பார்த்து விட்டிருப்பார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. அவளேகூட அதை எப்படி ஏற்றுக்கொள்வாள் என்ற பதைபதைப்பும் இருந்தது. அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். சுற்றுப்பகுதியில் யாருமே இல்லை. அவளுடைய முகத்திலும் முன்பிருந்த பதைபதைப்பு சிறிது கூட இல்லாமலிருந்தது. கையை பின்னால் நீட்டி அந்த துளசி இலையை தலைமுடிகளுக்குள்ளே இருந்து எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டாள். பிறகு தலையைக் குனிந்துகொண்டே அதை தீவிரமாக முகர்ந்து பார்த்தாள். தொடர்ந்து அந்த துளசி இலையை, பின்னால் தொங்கிக் கொண்டிருந்த அடர்த்தியான கூந்தலுக்குள் மறைத்து வைத்துவிட்டு எனக்கு நேர் எதிரில் நின்று கொண்டு சொன்னாள்:
“தேவியின் பிரசாதத்தை நீங்களே தந்தது என்னுடைய அதிர்ஷ்டம். மிகப் பெரிய அதிர்ஷ்டம்!”
அப்போது அந்த கறுத்த கண்களெனும் கடலலையில், அடி முதல் தலைவரை குளித்துப் புனிதமாகி, அந்த பார்வையெனும் காந்த சக்தியில் கரைந்து போய், நான் என்னை அடையாளம் தெரிந்துகொண்டேன்.
காதலி.
அவளுக்கும் அது புரிந்திருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட விஷயத்தைக் கூறுவதைப்போல, ரகசியத்தை மனம் திறந்து கூறுவதைப் போல கேட்டாள்:
“மோகனன், உங்களுடைய அம்மா ஒரு கதை எழுதியிருக்காங்க... ஞாபகத்தில் இருக்குதா?” "தேவியும் பக்தனும்...''
“ஆமாம்.''
“ஆனால், அதில் தேவியையும் அவளை வழிபடுபவனையும் ஒன்று சேர்ப்பதற்குத் தயாராக இல்லையே! இரண்டு பேருக்கும் இரண்டு வழிகள்... அப்படி இருக்கும்போது, இது... சம்மதிப்பாங்களா? இங்கேயும் இரண்டு பாதைகளில் செல்பவர்கள்தானே? இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்தானே?''
முதலில் கூறிய விஷயம் உரத்த குரலில் சிரிக்கக் கூடியதாக இருந்தது. தொடர்ந்து சொன்னேன்:
“பெண்ணே! அது லலிதாம்பிக அந்தர்ஜனத்தின் கதாபாத்திரங்கள் அல்லவா? இது அவங்களோட மகனும் அவனுடைய மணப்பெண்ணும் அல்லவா?''
அவளுடைய முகத்தில் வேண்டிய அளவிற்குப் பிரகாசம் உண்டாகவில்லை என்று தோன்றியது. அப்போது அதைப் பார்த்ததும், கேலி செய்ய வேண்டும்போல தோன்றியது.
“சற்று முன்பு நீ எதற்கு கணவனாக வரப்போகும் ஆளின் பெயரைச் சொன்னாய்? மோகனன் என்று... நம்பூதிரியின் மனைவி, தன்னுடைய கணவனின் பெயரைக் கூறக்கூடாது. கூறினால், கணவனுக்கு சாபம் உண்டாகும்.''
அவள் அதிர்ச்சியடைந்து விட்டதைப்போல தோன்றியது. பயத்துடன் கேட்டாள்:
“அப்படியா? சாபம் உண்டாகுமா? பிறகு... நான் என்ன சொல்லி அழைப்பேன்? சொல்லுங்க...''
சிரித்துக் கொண்டே, இரக்கத்துடன் நான் விளக்கிச் சொன்னேன்:
“அறியாமல் செய்தால் குற்றமில்லை. புரியுதா? இனிமேல் கூறினால்தான் சாபம் உண்டாகும். அதனால் இனிமேல் என்னை குஞ்ஞன்புவின் அப்பா என்று அழைத்தால் போதும்.''
எதுவும் புரியாமல் அவள் கேட்டாள்:
“குஞ்ஞன்புவின் அப்பாவா? குஞ்ஞன்பு என்பது யார்?''
நான் விளக்கிச் சொன்னேன்.
“நீ வடக்கன் பாடலைப் படித்திருக்கிறாய் அல்லவா? அதில் கூறப்பட்டிருக்கிறதே!
"குன்றில்மேல் இருக்கிறான் ஒருவன்; குஞ்ஞன்புவின் அப்பனோ வேறு யாரோ?"
குஞ்ஞன்பு என்று அந்தப் பாடலில் கூறப்பட்டிருப்பது- எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் மகன். புரியுதா? குஞ்ஞன்பு என்று நீ கூறப் போவது- உனக்கு பிறக்கப் போகும் மகனை. எப்படி? புரிந்துகொண்டாயா?''
அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. சந்தோஷமும் வெட்கமும் பதைபதைப்பும் உற்சாகமும்- இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவள் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தபோது, உண்மையாகவே அவளைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் போல எனக்குத் தோன்றியது. அந்த உள்ளங்கையில் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால், அப்படி எதையும் செய்யவில்லை. மாலை நேரத்தில் மங்கலான நிழல் வெளிச்சத்தில் இன்னொரு நிழலைப்போல நின்று கொண்டிருந்த அவளுடைய நாசியை நோக்கி- அந்த தேவியின் பிரசாதத்தை முகர்ந்து பார்த்த அந்த நாசியை நோக்கி, சற்று தொடுவதற்காக வலது கையின் சுட்டு விரலை மட்டும் மெதுவாக நீட்டினேன். தொட்டும் தொடவில்லை என்று தோன்றியபோது, அதைப் பின்னோக்கி இழுத்துக் கொண்டேன்.
"வேண்டாம்... இப்போது வேண்டாம்... அசுத்தப்படுத்தக் கூடாது... எப்போதோ... அன்று... அப்போது மட்டும் போதும்...”
அதற்குப் பிறகு ஒரு நாள் அவள் கேட்டாள்.
“அன்று ஏன் தொடவே இல்லை! இப்போ தொடுவீங்க... இப்போ தொடுவீங்கன்னு நினைச்சு நான் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தேனே!''
அவளுக்கும் என்னிடமிருந்த அதே விருப்பம் இருந்தது என்ற புரிதல் சந்தோஷத்தைத் தந்தது. எனினும், மனப்பக்குவம் இருப்பதைப்போல மிகவும் சிரமப்பட்டு பொய்யாகக் காட்டியவாறு சொன்னேன்:
“இருக்கட்டும். திருமண நாள் வரட்டும்.''
அந்தத் திருமண நாளை தள்ளி வைக்க வேண்டியதிருந்தது. தேர்வு முடிய வேண்டும். ஏதாவது வேலையைத் தேட வேண்டும். பிறகு... அவளுடைய தேர்வும் முடிய வேண்டுமே!
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஆறாம் ஆண்டு நான் எம்.ஏ.வில் பட்டம் பெற்றேன். இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பல்கலைக்கழகக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் வெங்கிடேஸ்வரனின் அன்பின் காரணமாகவும் செல்வாக்காலும் ஒரு தனியார் கல்லூரியின் ஆசிரியராக ஆனேன். வேலை கிடைத்தவுடன் முதலில் செய்த காரியம் காதலித்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்ற விஷயத்தை அவளுடைய தந்தைக்கு அறிவித்ததுதான். அதில் அவருக்கு சம்மதம்தான் என்றும் அவளுடைய தேர்வு முடிந்தவுடனே திருமணத்தை நடத்தலாம் என்றும் தகவல் கிடைத்ததுதான் தாமதம், உலகத்தையே காலுக்குக் கீழே கொண்டு வந்த அளவிற்கு உற்சாகம் உண்டானது. இரண்டு வருடங்கள் கடக்க வேண்டும். எனினும், பரவாயில்லை. மெதுவாக திட்டமிடலாம். தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள் நடந்து கொண்டிருந்தன. அனைத்து விருப்பங்களையும் ஆசைகளையும் கனவுகளையும் ஒருவரோடொருவர் வெளிப்படுத்திக் கொண்டும், கற்பனை பண்ணிக் கொண்டும் செயல்களை செயல்படுத்திக் கொண்டிருந்தோம். ஒருவரையொருவர் எந்த அளவிற்கு பிரிய முடியாதவர்களாக ஆகி விட்டிருக்கிறோம் என்ற உண்மை அந்த காலகட்டத்தில் இருவரையும் மேலும் புரிதல் கொண்டவர்களாக ஆக்கியது. அந்த காத்திருத்தலின் இறுதி நாட்களில் எதிர்பாராத வகையில் ஒரு மிகப் பெரிய அதிர்ஷ்டம் அதுவாகவே தேடி வந்தது. தேர்வின் முடிவுகள் தெரிந்தவுடன், நான் வேலை செய்து கொண்டிருந்த அதே தனியார் கல்லூரியிலேயே வேலை பார்ப்பதற்காக அவளும் வந்து சேர்ந்தாள். இனிமேல் சந்தோஷப் பெருக்கைப் பற்றி கூறவா வேண்டும்? அன்றைய தனியார் கல்லூரி ஆசிரியரின் நூற்று இருபத்தைந்து ரூபாய் சம்பளம் போதுமானதாக இல்லாமற் போயிருந்தால், நாங்கள் அன்றே ஒன்றாகச் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பித்திருப்போம் என்பதுதான் என்னுடைய எண்ணம். அது மட்டுமல்ல- மேலும் சிறிது காத்திருப்பதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒரு அரசாங்க வேலைக்கு பி.எஸ்ஸி.யில் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். அது கிடைத்து வேலையில் சேரும் பட்சம், விஷயம் மேலும் நல்லதாக இருக்குமே! ஆனால், அந்த வேலையில் சேர்வதற்கு நான் இடம் மாறிச் சென்றபோதுதான், மிகவும் கேவலமான அந்த சதிச் செயல் நடைபெற்றது. அவளுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும் சம்மதம்தான் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த என்னை எல்லா வகைகளிலும் ஏமாற்றிவிட்டு, அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் மிகவும் ரகசியமாக, வேறு திருமண ஆலோசனைகளுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மிகவும் ரகசியமாகவும் தீவிரமாகவும்.
பொட்டையும் பொடியையும் வாசனை பிடித்த அவள், உடனடியாக முறையான திருமண ஆலோசனையுடன் வீட்டிலிருப்பவர்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று கடிதம் எழுதினாள். அன்றே நான் போய் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். மகாகவி ஜி. சங்கரக்குறுப்பும் என்னுடைய மாமாவும் சேர்ந்து பெண் கேட்பதற்காகச் சென்றார்கள். குறுப்பு மாஸ்டரின் கவிதையில்தானே இந்தக் காதலே ஆரம்பமானது! அதனால் அதன் நல்ல முடிவுக்கு மாஸ்டரும் சேர்ந்து
சென்றது நல்ல ஒரு தீர்மானமும், சிறப்பான ஒரு விஷயமும் என்று நான் நினைத்தேன்.
ஆனால், அதிர்ஷ்டமில்லை என்று நினைக்கிறேன். மாஸ்டரும் மாமாவும் சென்றிருந்த நாள், அவள் தாயுடைய தந்தையின் எதிர்பாராத மரணம் நடைபெற்ற நாளாகிவிட்டது. திருமண விஷயமாக பேசச் சென்றவர்கள் மரணத்தைப் பற்றி விசாரிக்கச் சென்றவர்களாக மாறி, திரும்பி வந்தார்கள். வீட்டில் இருப்பவர்களின் துயரமும் மரணத்திற்குப் பின்னால் இருக்கக் கூடிய காரியங்களும் முடியட்டும். அதற்குப் பிறகு திருமண விஷயமாக சென்று பேசுவோம் என்று அவர்கள் எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், அவையெல்லாம் நடக்கும் வரை அவளுடைய வீட்டில் உள்ளவர்கள் காத்திருக்கவில்லை. அவர்கள் திருமண முடிவுடன் மிகவும் தூரத்தில் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவளை வேலையை ராஜினாமா பண்ண வைத்து, வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி செய்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து எங்களுக்கிடையே தொடர்பு கொள்வது மாதிரி எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாமலும் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் பார்த்து வைத்திருந்த புதிய மணமகன் என்னைவிட எப்படிப் பார்த்தாலும் பணவசதி படைத்த- வெளிநாட்டில் மிகப் பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த- அவர்களுடைய ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆளாக இருந்தான். இந்த அளவிற்கு நல்ல நிலையில் இருக்கும் ஒரு மனிதன் கிடைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில், இனிமேல் இவன் எதற்கு என்று அவர்கள் நினைத்திருக்கலாம். வெறும் ஒரு சாதாரண அரசாங்க வேலையில் இருக்கக் கூடிய இவனை? தங்களுடைய சொந்த மகள்மீது கொண்டிருக்கும் பாசத்தை அப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். நான் முழுமையாக நிலைகுலைந்து போனேன். அவளுடன் எப்படி தொடர்பு கொள்வது? இறுதியில் ஒரு வழியைக் கண்டு பிடித்தேன். அவளுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நெருங்கிய பழக்கம் கொண்ட வயதான ஒரு ஆசிரியை, திருமண விஷயமாக பேசுவதற்காக செல்வதைப் போல தந்திரமாகச் சென்று என்னுடைய கடிதத்தை அவளிடம் கொடுத்தார். கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது இதுதான்.
"இந்த ஆசிரியையை வழியனுப்ப வருவதைப்போல, வெளியே வாசற்படிகள் இருக்கும் இடத்திற்கு அவருடன் சேர்ந்து வா. வெளியில் எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கும் காரில் அவளுடன் மிகவும் வேகமாக ஏறிக்கொள். நான் அதில் உட்கார்ந்திருப்பேன்.
நாம் தனியாக ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்கான தன்னம்பிக்கை இருக்கிறது அல்லவா? மீதி விஷயங்கள் நேரில்.’’
ஆனால், வாசற்படிகள் வரை வரக்கூடிய தைரியம் அவளுக்கு இல்லாமற் போய்விட்டது. ஆசிரியையிடம் கூறியிருக்கிறாள்:
“உலகம் மிகவும் பெரியது. என்னைவிட எப்படிப் பார்த்தாலும் சிறந்தவளாகவும், அதிக அழகைக் கொண்டவளாகவும், நல்ல குணத்தைக் கொண்டவளாகவும் இருக்கக்கூடிய இளம்பெண் கிடைப்பாள் என்று மோகனனிடம் சொல்லுங்க.''
ஆசிரியை வேண்டுமென்றே கற்பனையாக ஒரு சிறிய மிரட்டலை வெளிப்படுத்தியிருக்கிறார்:
“மோகனனின் கையில் உன்னுடைய பல கடிதங்களும் புகைப்படங்களும் இருக்கின்றன அல்லவா? ஆண்கள் அல்லவா? இடது... வலது என்று பார்க்காமல் திருப்பி அடித்தால், உன் வாழ்க்கை நாசமாகிவிடுமே!''
அப்போது அவள் கூறியிருக்கிறாள்:
“டீச்சர், எனக்குத் தெரிந்த அளவிற்கு உங்களுக்கு மோகனனைப் பற்றி தெரியாது. எந்தச் சமயத்திலும் எனக்கு எதிராக அவர் செயல்படமாட்டார். என்னை அந்த அளவிற்கு பிடிக்கும் என்ற விஷயம் எனக்குத் தெரியும்... எனக்கு அவர்மீதும் அந்த அளவிற்கு அன்பு இருக்கிறது. அப்பாவும் அம்மாவும் பெரியவர்களும் சேர்ந்து முடிவு செய்ததற்கு எதிராக இருப்பதற்கு என்னால் முடியாது என்ற விஷயத்தை மோகனனால் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.
எல்லா செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்று நான் தினமும் வேண்டிக் கொள்வேன் என்ற விஷயத்தை மோகனனிடம் சொல்லுங்க. என் மனவேதனை நிறைந்த வேண்டுதல்... பலன் கிடைக்காமல் இருக்காது... அது மட்டும் உண்மை.''
விளக்கிக் கூறியபோது, அந்த இறுதி வாக்கியத்தில் இருந்த அர்த்தத்தை நினைத்திருக்க வேண்டும். ஆசிரியை கிண்டலுடன் சிரித்தார்.
நான் முழுமையாகத் தளர்ந்து போய்விட்டேன். வழியில் இப்படியொரு திடீர் திருப்பத்தை மனதில் நினைத்திருக்கவே இல்லை. அந்த இரவு மிகவும் பயங்கரமானதாக இருந்தது. வாடகை அறையில் தனியாக உட்கார்ந்து அழுது, நேரத்தை வெளுக்கச் செய்தேன். முற்றிலும் தன்னந்தனி மனிதனாக இருக்கும்படி செய்துவிட்டுப் போய்விட்டாளே! தன்னுடைய சூழ்நிலையின் போக்கின்படி, அலைந்து திரிந்து கொண்டிருந்த சாதாரண அரசியல்வாதியாக இருந்த ஒரு இளைஞனை, அவள் தன்னுடைய செயல்கள் நிறைந்த உண்மையான உலகத்தைக் காட்டி வழிநடத்திச் சென்றாள். அவனுக்கு வாழ்க்கையில் இலக்கு இருக்கும்படி செய்தாள். மிக உயர்ந்த அர்ப்பணிப்புணர்வு கொண்ட உண்மைத் தன்மையுடன் வாழ்க்கையை நடத்தி, உலகத்தையும் உயிரினங்களையும் பிரபஞ்சத்தையும் நேசிப்பதற்கு கற்று தந்தாள். ஒரு எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற பெரிய லட்சியத்தை முன்னால் வெளிப்படையாக திறந்து வைத்தாள். என்னை நானே கண்டுபிடித்து உணர்ந்து கொள்ளும்படி செய்தாள். வேறு யாரும் எந்தச் சமயத்திலும் உடன் இருக்காத, மிகப் பெரிய துன்பங்களும் பிரச்சினைகளும் நிறைந்த அந்தத் தனிமைச் சூழலில், தான் நிச்சயம் உடன் இருப்பதாக உறுதி அளித்து சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தந்தாள். ஆனால் இப்போது... தனியாக இருக்கும்படி விட்டுவிட்டு... முற்றிலும் தனியனாக இருக்கச் செய்துவிட்டு...
புதிதாகக் கிடைத்த லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் மெதுவாக... மெதுவாக... அடித்தளத்தை பலமாக அமைத்து கட்டடத்தை உயர கட்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்... ஒரு வேலையை ஏற்றுக் கொண்டதுகூட அதற்குத்தான். ஆனால், இப்போது... தனியாக விட்டுவிட்டு... தனியே விட்டெறிந்து விட்டு...
வேதனை நிறைந்த உணர்ச்சிகளின் வெளியே தெரியாத பலவீனங்களும், பயங்கரத்தனங்களும் உள்ள ஒரு விடை பெற்றுக் கொள்ளலின் பரிதாப நிலை இல்லாமல் இருந்தது என்ற தற்காலிக ஆறுதல் மட்டுமே மிச்சம்.
பழைய கடிதங்களையும் பரிசுப் பொருட்களையும் திருப்பித் தந்து, என்னை மறந்துவிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தளர்ந்து போய் நின்று கொண்டிருப்பது... இல்லாவிட்டால் எதுவுமே பேசாமல், பேச இயலாமல், இடையில் அவ்வப்போது ஒருமுறை முகத்தைச் சற்று உயர்த்தி வைத்துக்கொண்டு, கண்களைக் கொண்டு அல்ல- கண்ணீரைக் கொண்டு என்பதைப்போல அமைதியாகப் பார்த்துக்கொண்டு, பெருமூச்சுகளுடன், செயலற்ற நிலையில், முழுமையான மவுன மொழியில் விடை பெறுவது...
அப்படியென்றால், அப்போது அறியாமல் அவளுடைய கையை அழுத்திப் பிடித்து, உடம்போடு சேர்த்து வைத்துக்கொள்ள மாட்டேனா? அறியாமல் அறைக்குள் நுழைந்து வரும் அவளை இறுக அணைத்துக் கொண்டு, "இல்லை... எந்தச் சமயத்திலும் விட்டுத் தரமாட்டேன்’’ என்று இந்த உலகத்தைப் பார்த்து ஆபத்து நிறைந்த சாகசத்துடன் சவால் விட மாட்டேனா?
இல்லையே... அப்படி நடக்கவில்லையே! எதுவுமே தேவைப்படவில்லயே! அப்படி நடக்கக்கூடிய சாத்தியங்களைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலையே வரவில்லையே!
மனதின் உட்பகுதியை திரும்பிப் பார்க்க முடியவில்லை. ரத்தமும் நீரும் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்த பரிதாபமான காட்சியாக அது இருந்தது.
எப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கக் கூடியவளாகவும் எப்போதும் தோன்றிக் கொண்டிருப்பவளாகவும் அவள் இருந்தாள் என்பதை வேதனையுடன் நினைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இறுதியில் முடிவெடுத்தேன்- ஒரு கடிதம் எழுதுவோம். இறுதியான கடிதம். சிறிது கனமும் மனக் கவலையும் ஒருவேளை இல்லாமற்போகலாம்...
அடித்தும் திருத்தியும் எழுதியும் சேர்த்தும் இறுதியாக அதை எழுதி முடித்தேன்- இறுதியான அந்த கடிதம்.
"இதுவரை அழைத்துக் கொண்டிருந்ததைப்போலவே தொடங்குகிறேன்: சக்கி!
நான் மிகவும் தளர்ந்து போய்விட்டேன். என்னை நானே ஆறுதல் படுத்திக்கொள்ள முயல்கிறேன். உன்னுடைய மனபயங்களின் போது நீ எப்போதும் திரும்பத் திரும்ப கூறுவதைப்போல அழிக்க முடியாத தலை எழுத்து, விதி, கடவுளின் தீர்மானம்... அப்படித்தானே? எனினும், நான் கேட்கிறேன். மற்றவர்களின் விருப்பத்திற்கேற்றபடி தான் நாம் வாழ வேண்டுமா? வேறு சிலருக்கு கவலையும் வேதனையும் தோன்றினாலும், நம் வாழ்க்கையை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றபடி நாமல்லவா தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்? நீ இதை எதற்காக மறக்கிறாய்? நீ எப்போதும் பயப்படக் கூடியவளாகவே இருந்துவிட்டாய். அந்த பய உணர்வுதான் உன்னை இப்படிச் செய்ய வைத்ததா? அந்த பய உணர்வை வெல்லக்கூடிய தைரியத்தையும் பலத்தையும் என்னுடைய காதலால் அளிக்க முடியவில்லை என்கிறாயா?
கவலையாக இருக்கிறது.
எனினும், பதைபதைப்போ விரோதமோ இல்லாமல் ஒரு விஷயத்தை மனம் திறந்து கூறுகிறேன். எந்த அளவிற்கு புண்ணியம் வாய்ந்ததாகவும் பூஜைக்கு உரியதாகவும் உள்ள ஒரு புனிதத் தன்மையும் அமைதியும் இனிமையும் நிறைந்ததாக நம்முடைய காதல் இருந்தது! எந்தச் சமயத்திலும் சந்திக்க வாய்ப்பில்லாதவர்களாக நாம் இருந்தோம்! இரண்டு தூரத்து கிராமிய சூழ்நிலைகள்... இரண்டு ஜாதிகளைச் சேர்ந்த மனிதர்கள்... எனினும், நாம் ஒருவரையொருவர் பார்த்தோம். காதலிக்க முடியும் என்று நமக்கு நாமே படித்தோம். அதன் மூலம் சொர்க்க சந்தோஷத்தின் உச்சத்தை அடையலாம் என்பதையும் தெரிந்து கொண்டோம். மதிப்பு, நற்செயல்கள், உதவும் குணம், சுயநலமற்ற தன்மை என்று எத்தனையோ தெரியாத பக்கங்களை அந்தக் காதல் எனக்கு தெரியச் செய்தது. என்னுடைய குணத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும், அணுகுமுறைகளுக்கும், நடந்துகொள்ளும் முறைகளுக்கும் அது அளித்த மதிக்கக்கூடிய பாதிப்பையும் கொடையையும் எந்தச் சமயத்திலும் மறக்கவே முடியாது. மண்ணில் அன்னியப்பட்டு நின்று கொண்டிருக்கும் ஒரு ஆணின் வாழும் காலத்தில் இது ஒரு அபூர்வ சொத்து என்பதை புரிந்துகொள்கிறேன். நன்றி.
என்றாவதொரு நாள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அன்றும் இதே நன்றி நிறைந்த அன்புடன் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கடுமையான முயற்சியாக இருக்கும். சிறிது கண்ணீர் கலந்த பார்வையாக இருந்தாலும், நீ மன்னிக்க வேண்டும். என் மனம் நிறைய அப்போது ஒரு வசந்த காலத்தின் நினைவுகளாக இருக்கும். எங்கோ ஏதோ ஒரு பூங்காவின் தனிமைச் சூழலில், சிவப்பு நிற மலர்களால் அகலமான பந்தல் அமைத்த கருணை மனம் கொண்ட வாகை மரத்திற்குக் கீழே இருக்கும் நிழலில், அப்பிராணி யக்ஷி அம்மனின் அசைவற்ற அமைதியான முன்னிலையில் நாம் ஒன்றாகச் செலவழித்த ஒரு மயக்கமான வசந்த காலத்தின் இதயத்தைத் தொடும் நினைவுகள்...
ஒன்று சேர்ந்து படித்தும், அன்பு நிறைந்த மிடுக்கான நினைவுகளுடன் வளர்ந்தும், பெரியவர்களான நாம் ஒன்று சேர்ந்து செலவழித்த விலை மதிப்பான நாட்கள்! ஒருவேளை அந்த நேரத்தில், மழைக் கால வானத்தின் வெறுமையாகக் காணப்படும் தூரப் பகுதிகளில் எங்கோ, எதிர்பாராமல் வந்து சேர்ந்த, கருகருவென்று போராடிக் கொண்டிருக்கும் மேகங்களுக்கிடையே உண்டான சண்டையால் எழும் சத்தத்தின் தாழ்வான முழக்கம் வந்து தொட்டு அழைத்ததைப் போல, உன்னுடைய மனதிலும் பழைய நினைவுகளின் வாசல் கதவு திறக்கக் கூடிய சூழ்நிலை வரலாம்.
உன்னையே அறியாமல் நீயும் அதே பழைய காதலுடன் திரும்பிப் பார்க்கவேண்டி வரலாம்.
என்னுடைய, உன்னுடைய பழைய காதல் நினைவுகள் காற்றில் பயணிக்கும்போது ஒன்றொடொன்று சந்தித்தன என்பதும் நடக்கக் கூடியதுதானே! அப்போது ஏதோ பழைய ஈர்ப்பின் கருணையால் அவை ஒன்றோடொன்று இறுக அணைத்துக்கொண்டால்...?
அந்த அணைப்பில் நம் இருவருக்கும் மட்டுமே சொந்தச் சொத்துகளாக இருக்கும் எத்தனையோ அனுபவங்கள் பச்சை மரங்களாக ஆவதையும், பலவிதப்பட்ட வண்ணங்களைக் கொண்ட மலர்களாக ஆவதையும், மனதை மயக்கக்கூடிய நறுமணமாக பரவுவதையும் நான் பார்க்கிறேன். நான் மிகவும் பதைபதைப்புடன் நின்றுவிடுகிறேன்.
நான் இனிமேலும், இப்போதும் உன்னைக் காதலிக்கிறேன், சக்கி!''
அந்தக் கடிதம் கிடைத்த பின்னராக இருக்க வேண்டும்- எதிர்பாராமல் அலுவலகத்தின் அறைக்குள் நுழைந்து வந்தாள்.
மதியத்தைத் தாண்டிய பரபரப்பு இல்லாத நேரமாக அது இருந்தது. ஏதோ உயிரற்ற கோப்பின் முகப்பில் இருந்த எழுத்துகளின் மீது கண்களை ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதைப் போல பொய்யாகக் காட்டிக் கொண்டு, என்னுடைய விதியின் விபரீதத்தைப் பற்றியும், தலையெழுத்தைப் பற்றியும், மனதில் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, உதவியாளர் தொலைபேசியில் சொன்னார்:
“ஒரு விசிட்டர் வந்திருக்காங்க.''
பார்வையாளருக்கான நேரமாக இல்லையென்றாலும், என்னுடைய அமைதிக்கு ஒரு தற்காலிகத் திரையைப் போட்டதைப் போல இருக்குமே என்று நினைத்துக் கொண்டே சொன்னேன்:
“சரி... வரட்டும்.''
தொடர்ந்து அறையின் பாதி கதவைத் திறந்து மூடும் சத்தத்தைக் கேட்டேன். வழக்கம்போல அரசாங்கத்தின் தேவைக்காக வரக்கூடியவர்கள் யாராவது இருப்பார்கள் என்ற நினைப்புடன், ஃபைலில் இருந்து தலையை உயர்த்தி அலட்சியமாகப் பார்த்து, திடீரென்று மீண்டும் பார்த்தேன். ஒரு நிமிட நேர அதிர்ச்சியடைந்த கவலை கண்களையும் மனதையும் பதைபதைக்கச் செய்தது. எந்த அளவிற்கு எதிர்பாராதது! அவள்! வெறுமையிலிருந்து வெடித்து விழுந்ததைப்போல அவள்! மெதுவாக எழுந்து நின்று, ஆச்சரியத்தை வெளிப்படுத்தி பெரிதாக்கிய விழிகளுடன் நோக்கி திகைப்புடன் நின்றிருந்தேன்.
இல்லை... எனக்கு தவறு நேரவில்லை. அவள்... அவளேதான்...
எல்லாம் முன்பு நடந்ததைப்போலத்தான். காதலன் தன்னுடைய முட்டாள்தனமான கற்பனையில் கண்டிருந்த எல்லாவிதமான குணங்களும் அழகும் நிறைந்து நிற்க, காலையில் வைத்த சந்தன அடையாளம்கூட நெற்றியில் இருந்தது. இயல்பாக எப்போதும் நடப்பதைப்போல இடையில் அவ்வப்போது செவியின் பின்பக்கமாக நீவி ஒதுக்கி விடக்கூடிய முடிச்சுருள்கள், கைவிரல்களை எதிர்பார்த்து இரண்டு கன்னங்களிலும் விழுந்துகிடந்தன. வெளியே இருந்த வெயிலின் வெப்பத்தின் கடுமை காரணமாக இருக்க வேண்டும்- கன்னங்கள் மேலும் சிவந்து காணப்பட்டன.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். நீண்ட நேரம் எங்களையே அறியாமல் கண்களை வேதனைப்படுத்திக் கொண்டு வெறுமனே நின்றிருந்தோம். திருமணம் செய்துகொள்ளப் போகும் இருபது வயதைக் கொண்ட அந்த இளம்பெண்ணும், இருபத்து மூன்று வயதைக் கொண்ட சோர்வடைந்து போன, அந்த நிராகரிக்கப்பட்ட காதலனும்.
அவனுக்கு எவ்வளவோ பதில்கள் கிடைக்க வேண்டியதிருந்தும், அவளுக்கு ஏராளமான விளக்கங்களும் நியாயங்களும் கூறுவதற்கு இருந்தும், ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ள முடியாமல் அதே இடத்தில் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். பிறகு ஏதோ ஒரு யுகத்தில் இனம் புரியாத உள்ளேயிருந்து வந்த ஒரு புரிதலின் காரணமாகவோ, குற்ற உணர்வு காரணமாகவோ அவளுடைய கண்கள் பின்வாங்கின.
ஆனால், முன்னால் அப்போது பேரமைதி முழுமையாக நிறைந்து நின்றிருந்தது என்ற விஷயம் தெரிந்தபோது மனதில் துயரம் அதிகமானது. இந்த பேரமைதியின் முழுமையை நேரடியாக சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் அவள் இல்லையே! ஏராளமான சிந்தனைகளுக்குப்பின், இறுதியாக அவள் இந்த இடத்தைத் தேடி வந்திருக்கிறாள்.
அவனுடைய எந்தவிதமான சலனமும் இல்லாத முகத்தின் சதைகளையும், உயிரற்றுக் காணப்பட்ட கண்களையும் பார்த்து அவள் பதைபதைத்துப் போனாள்.
ஒருவேளை யார் என்று அடையாளம் தெரியவில்லையோ? இல்லாவிட்டால் அப்படிக் காட்டிக் கொள்கிறானா?
திடீரென்று அவளுக்கு பயமும் பரிதாப உணர்ச்சியும் உண்டாயின. அப்படி உண்டாக வேண்டிய அவசியமில்லை. வந்திருக்க வேண்டியதில்லை. இந்த அலுவலக இடத்தையும் நேரத்தையும் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்திருக்கிறாள். வேறு எந்த இடமாக இருந்தாலும், சந்திக்க வேண்டிய மனப் பிரச்சினைகள் மிகவும் அதிகமாக இருக்கும். தவிர்க்கலாம். பதில் கூறாமல் இருக்கலாம். விளக்கங்கள் கூற வேண்டாம் என்று இருக்கலாம். பார்க்க வேண்டும் என்ற தீர்மானமும் கூற வேண்டியதைக் கூறக்கூடிய முறையில் கூறிப் புரிய வைக்க முடியும் என்ற ஆசையும் நடக்கும். மனசாட்சிக்கு சிறிதளவாவது நிம்மதி கிடைக்கும்.
ஆனால், இப்போது... இதோ இங்கே நினைத்ததைப்போல காரியங்கள் எதையும் கூற முடியவில்லை. மனதில் தயார் செய்து உறுதிப்படுத்தி வைத்திருந்த வார்த்தைகளின் பற்றாக்குறை தொல்லையைத் தருகிறது. அந்த வார்த்தைகள்கூட நாக்கின் நுனியில் வந்து நிற்க மாட்டேன் என்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இன்னொரு விஷயம் வேறு. முன்னால் இருக்கும் மேஜைக்குப் பின்னால் எழுந்து நின்றிருக்கும் சோர்வடைந்து காணப்படும் அந்த இளைஞன், சிறிது நாட்களுக்கு முன்பு வரை தனக்கு யாராக இருந்தான் என்பதையும் என்னவாக இருந்தான் என்பதையும் பற்றிய ஞாபகம், வயதிற்கு வந்திருக்கும் சூழலை அடைய மட்டும் செய்திருக்கும் அந்த இளம் பெண்ணின் இதயத்திற்குள் எங்கிருந்து என்று தெரியாமலே வேகமாக நுழைந்தது. முன்னால் இருந்த அந்த முகமும், முகவெளிப்பாடுகளும் அவளை மிகவும் ஆழத்தில் தொட்டு தளர்வடையச் செய்தது.
இல்லை... இதை இதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை நீடித்துக் கொண்டிருக்கச் செய்ய முடியாது. உறுதியுடன் எடுத்துக் கொண்டு வந்த அனைத்து முடிவுகளும் ஒரு வேளை இடிந்து நொறுங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அவளேகூட நிலை தடுமாறி விழலாம். அதை அனுமதிக்கக் கூடாது. வந்தது அதற்காக அல்லவே! எங்கிருந்தோ சிறிது தைரியத்தைப் பிடித்துக்கொண்டு வர முடிந்தது என்றாலும், கீழே பார்த்து- தரையில் இருந்த கற்களைப் பார்த்து மட்டுமே அவளால் கூற முடிந்தது:
“நான்... நான்... இது நான்தான்...''
"எந்த நான்?" என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயந்து நின்று கொண்டிருந்தபோது, முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் கண்களில் காணப்பட்ட நம்பிக்கையின்மையையும் விட்டெறிவதற்கு படாதபாடு பட்டுக்கொண்டு அவன் சொன்னான்:
“நீ... நீ... நீயேதான். இல்லையா?'' அந்த பதிலில் இருந்த எழுத்துகளுக்கு நடுவில் இருக்கும் இடைவெளிகளின் வழியாக வெளிப்பட்ட உணர்ச்சிகளும் அதை வெளிப்படுத்திய சத்தங்களும் அவளுடைய உள் மன பயங்களில் குழி தோண்டி மரங்களாக வளர்ந்து நின்றன. அவிழ்க்க முடியாத முடிச்சு கொண்ட கயிறின் வட்டங்களுக்குள் அவள் ஊசலாடினாள். ஒரு நொடி நேரம் மட்டுமே. பிறகு, அது ஆழத்தில் எங்கோ உள்ள ஒரு வேதனையாக மாறியது. வேதனை மனதிற்கு ஊற்றாக ஆனது. பழைய பதினெட்டு வயது கொண்ட கல்லூரி காதலியாக ஆனதைப்போல... பழைய கனவு காணும் பெண்ணாக ஆனதைப்போல...
இது எதிர்பார்த்தது அல்ல. அதற்காக அவள் வரவில்லை. அவள் ஒரு திருமணமாகப் போகும் பெண். இன்னொருவனுக்கு மனைவியாக ஆகப் போகிறவள்.
தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் கடுமையான முயற்சி அவளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் சோர்வு கொள்ளச் செய்துவிட்டிருந்தது. அதற்கு எதிராக வேண்டுமென்றே போராடிக் கொண்டு, தன்னையே அறியாமல் நிறைந்துவிட்ட கண்களை புடவை தலைப்பால் ஒற்றி, வெளிறிப் போன புன்னகையை சிரமப்பட்டு வரவழைத்து, அவள் பார்த்தாள்.
என்ன காரணத்தால் என்று தெரியவில்லை. அவனுடைய கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது. அந்த நிறைந்திருந்த கண்ணீரில் தன்னுடைய முகத்தைப் பார்ப்பதைப்போல... மிகுந்த அன்புடன் அவன் கூறியதைப் போல அவள் உணர்ந்தாள்.
“என்ன... என்ன... என்ன ஆச்சு உனக்கு? அழறியா, முட்டாள்! உட்காரு... இந்த நாற்காலியில் உட்காரு.''
முட்டாள் என்ற, அன்பிலும் உரிமையிலும் மூழ்கச் செய்திருந்த அந்த வார்த்தை, பழைய ஒருவரோடொருவர் கொண்டிருந்த காதலின் பாரிஜாத வாசனை கலந்து விட்டிருந்த தாலாட்டாக இருந்தாலும், கிடைக்காத அணைப்பின் ஞாபகமாக இருந்தாலும், தன்னை இழக்காமல் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என்ற பதைபதைப்பு நிறைந்த கடுமையான முயற்சியுடன் அவள் மெதுவாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். படிப்படியாக தன்னை அவள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள். எந்தவித சலனமும் இல்லாத முகமூடியை அணிந்துகொண்டாள்.
அந்தப் பக்கத்தில் இருந்த அவன் அப்போது அவளையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்னால் நம்ப முடியவில்லை. நீ... நீதான் இதுவான்னு என்னால் உறுதியாக நினைக்க முடியவில்லை. பழைய நீதானா? எல்லாம் பழைய மாதிரிதானா? இங்கே எப்படி வந்தாய்? இங்கு எதற்காக வந்தாய்?''
முகத்தையும் கண்களையும் மீண்டும் புடவைத் தலைப்பால் துடைத்துவிட்டு, தலைமுடியின் நுனிகளை செவியின் பின்பக்கமாய் ஒதுக்கிவிட்டு, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:
“மன்னிக்க வேண்டும். என்னையே அறியாமல் கண்கள் நிறைந்து விட்டன. அழுவதற்கோ அழ வைப்பதற்ககோ நான் வரவில்லை. நான் வரவேண்டியதிருந்தது. வராமல் இருக்க முடியாது. நேரில் சந்திக்க வேண்டும் என்பதும் பேச வேண்டும் என்பதும் அவசியமான விஷயங்களாக இருந்தன. இப்போது கேட்டீர்கள் அல்லவா- பழைய நீதானா என்று? அந்த பழைய நான்தான் இது என்றாலும், எல்லா விஷயங்களும் பழைய மாதிரியே அல்ல என்ற உண்மையைக் கூற வேண்டும் என்றும் நான் நினைத்தேன்.''
திடீரென்று என்ன காரணத்தாலோ அவன் இன்னொரு ஆளாக மாறினான். காயம் பட்ட நிகழ்கால மனிதனாக ஆகி, உறுதியான குரலில் குறுக்கே புகுந்து சொன்னான்:
“வேண்டாம். மேலும் கபடத்தனத்துடன் என்றால் வேண்டாம். நினைவிலாவது என்னுடைய பழையகால காதல் மிகவும் புனிதமானதாக இருக்கட்டும். காதலி, அப்பாவியானவளாகவும் கள்ளங்கபடமற்றவளாகவும் இருக்கட்டும். தயவு செய்து அவளை மோசமானவளாக ஆக்கக்கூடிய எதையும் கூறாமல் இரு. அவளைப் பற்றி களங்கப்படுத்துவது மாதிரி எதுவும் சொல்லாமல் இரு.''
முகத்தில் அடித்ததைப்போல அந்த வார்த்தைகள் இருந்தன. கூற நினைத்தது எதையும் கூற ஆரம்பிக்கவே முடியாத அளவிற்கு பலத்த அடியை அது கொடுத்தது. தன்னுடைய கடமையையும் சுமையையும் பொறுப்பையும் உணர்த்த வேண்டும் என்று நினைத்தாள். அவை உண்டாக்கிவிட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்று நினைத்தாள். அதை அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்றாலும், புரிந்துகொள்வான் என்று அவள் நினைத்திருந்தாள். இப்போது இனிமேல்... இனிமேல் என்ன கூறுவது? இறுதியில் தொண்டை அடைக்க கூறினாள்:
“நான் அறிந்திருந்த அன்பு மனம் கொண்ட, இரக்க குணம் கொண்ட ஒரு மனிதரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்தேன். என்னுடைய கவலை, வேதனை, காயங்கள் இவை ஒவ்வொன்றையும் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் முடியக்கூடிய அன்புமயமான ஒரு மனிதரை... இரக்க மனம் கொண்ட ஒருவரை...''
அவன் அவளை தலையிலிருந்து கால்வரை வெறித்துப் பார்த்தான். வெளிறி வெளுத்துப்போய் உயிரற்ற சிரிப்பின் இரக்கமற்ற பகை உணர்வுடன் கேட்டான்:
“சொல்லு... உன்னுடைய கவலைகளை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? வேதனைகள் எந்த ஆழத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்றன? காயங்களை எந்த ஆடையால் மூடி மறைத்து வைத்திருக்கிறாய்? நான் கொஞ்சம் பார்க்கட்டுமா? தெரிந்து கொள்ளட்டுமா? இரக்க மனம் கொண்டவனாகவும் அன்பு மயமானவனாகவும் ஆகட்டுமா?''
அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவளால் பேச முடியவில்லை. இந்த ஒரு முகத்தை அவள் பார்த்ததே இல்லை. இந்த சத்தத்தை அவள் கேட்டதே இல்லை.
மெதுவாக அவன் அமைதியான நிலையைக் கொண்டு வந்தான். போலித்தனமான அன்பு நிறைந்த, கோபத்தில் தோய்ந்த பதைபதைப்பு நிறைந்த வார்த்தைகளை பல்லாங்குழியில் இருக்கும் குன்றிமணிகளைப் போல எண்ணிப் பொறுக்கி சிதறவிட்டு நிறைத்தான்.
“கறுத்த கண்களுக்குள்ளேயோ, செவிக்குப் பின்னால் ஒதுக்கி விடக் கூடிய கூந்தல் சுருளிலோ, அப்படி ஒதுக்கி விடும் விரல் நுனிகளிலோ, இளமையின் சுறுசுறுப்பிலோ, வாசற்படியில் வந்து கால் வைத்துக்கொண்டிருக்கும் புதிய உறவுகளின் செல்வச் செழிப்புகளிலோ... இவற்றில் எங்கே நீ சொன்ன வேதனைகளும் கவலைகளும் காயங்களும் இருக்கின்றன? உனக்கு மட்டுமே கடவுள் தந்திருக்கும் இந்த சாபங்கள்?''
அதன் இறுதிப் பகுதியை மட்டுமே காதில் கேட்டதைப்போல பதில் வந்தது.
“எனக்கு மட்டுமே அல்ல என்ற விஷயம் எனக்குத் தெரியும். என்னை காதலித்த இன்னொரு அதிர்ஷ்டமற்ற மனிதரும் இந்தக் கடவுளின் விதிக்கும் சாபத்திற்கும் பலியாகி விட்டிருக்கிறார் என்பதும் தெரியும்.''
அவனுடைய வார்த்தைகளில் கிண்டலும் வெறுப்பும் கலந்திருந்தன.
“சமாதானம்! ஆறுதல்! இன்னொருவனையும் நாசமாக்க முடிந்தது அல்லவா? கடவுளின் விதி! சாபம்! சந்தோஷம்.
எது எப்படியோ அவை அனைத்தும் இப்போது முடிந்துபோன கதைகளாச்சே! சொல்லு... இங்கே இப்போது எதற்காக வந்தாய்? எந்தச் சமயத்திலும் வெளியே வரமுடியாது என்று கேள்விப்பட்டிருந்த வீட்டுக் காவலில் இருந்து எப்படி உன்னுடைய விருப்பப்படி வெளியே வர முடிந்தது?''
இனியாவது விளக்கிக் கூற முடியும் என்ற முழுமையான விருப்பத்துடன் அவள் மெதுவான குரலில் ஆரம்பித்தாள்:
“எதற்காக வந்திருக்கிறேன் என்பதை நான்தான் கூறி விட்டேனே! பார்ப்பதற்கு, பேசுவதற்கு, மனதிலிருக்கும் சுமையை சிறிதளவாவது இல்லாமற் செய்வதற்கு... என் திருமண விஷயமாச்சே! சில நண்பர்களை நேரில் போய் அழைக்க வேண்டும் என்று கூறிவிட்டு வெளியே வந்திருக்கிறேன். தங்கை லட்சுமியும் உடன் வந்திருக்கிறாள். வெளியில் இருக்கிறாள்.''
போலித்தனமான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பொய்யான சிரிப்புடன் அவன் கேட்டான்:
“ஓஹோ! உன்னுடைய திருமணமா? என்றைக்கு? அந்த அதிர்ஷ்டசாலியான மணமகன் யார்?''
கேள்வியில் கலந்திருந்த கிண்டலும் வெறுப்பும் குத்தலும் தெளிவாகத் தெரிந்தாலும், பரிதாபமான குரலில் அவள் திருமணம் நடைபெறும் நாளையும் மணமகனுடைய பெயரையும் கூறினாள். முழுவதையும் கூறி முடிப்பதற்கு முன்பே, அவன் இடையே புகுந்து சொன்னான்:
“அந்த மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிக்கு என்னுடைய வாழ்த்துகளைக் கூறு.''
அவளுடைய கையில் இருந்த தாளாலான உறையைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டான்:
“கையில் இருப்பது திருமண அழைப்பிதழ்கள்... இல்லையா? ஹாய்... என்னை பழைய நண்பர்களில் ஒருவனாக நினைத்து ஒரு அழைப்பிதழை எனக்குத் தா... ப்ளீஸ்... என்னுடைய பெயர் என். மோகனன். ஒரு உறையில் பெயரை எழுதி, ஒரு அழைப்பிதழை எனக்கும் தா... ப்ளீஸ்... இவ்வளவு பெரிய ஒரு ஆள் அழைத்திருப்பதாக எனக்கும் தெரியட்டும்...''
அந்த வார்த்தைகளில் கலந்திருந்த கோபம் தெளிவாக விளங்கியது. இனி இங்கே நேரத்தை வீண் செய்யக் கூடாது. அவள் ஒரு நிமிடத்தைக்கூட கடத்தாமல், எழுந்து நின்றாள். தாங்க முடியாத கவலையும் காயமும் கலந்த வார்த்தைகளில் கூறினாள்:
“தேவையில்லை மோகன். இந்த அளவிற்கு கொடூரத்தனம் தேவையில்லை. முன்பு அன்பு செலுத்திய பெண்ணாச்சே என்ற கருணையாவது காட்டக் கூடாதா?''
அதே வேதனையும் காயமும் கலந்த வார்த்தைகளிலேயே திருப்பி அடித்தான்:
“அதைத்தான் நானும் கூற விரும்புகிறேன். இவ்வளவு கொடூரத்தனம் தேவையில்லை. முன்பு காதலித்த ஆளாச்சே என்ற இரக்கத்தையாவது காட்ட வேண்டும்.''
எந்த சமயத்திலும் திறக்கப்படாத கதவில் தலையை வைத்து மோதிக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் அவளுக்குப் புரிந்துவிட்டது. இனியும் இங்கே நின்று கொண்டிருந்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. வெளியே நடந்தாள். அவன் காதில் விழுகிற மாதிரி மெதுவான குரலில் கூறிக்கொண்டே நடந்தாள்.
“வேணும்... எனக்கு இது வேணும்...
ஒரு மன்னிப்பு எந்த சமயத்திலும்
கிடைக்காத வாழ்க்கை! சபிக்கப்பட்ட
வாழ்க்கை! யாருக்கும்
தேவையில்லாத வாழ்க்கை!''
அவன் எதுவும் பேசாமல், உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான்; கேட்டான்.
அவள் போய்விட்டிருந்தாள். அறையின் பாதி கதவுகள் ஒன்றோடொன்று மோதி உரசும் கரகர சத்தம் சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு, அந்த சலனமும் சத்தமும் நின்றுவிட்டன. அவன் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான்.
ஒரு காலகட்டம் முடிவடைந்துவிட்டிருந்தது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு மனப் போராட்டம் அதிகமானது. ஒரு நிம்மதியும் இல்லாத நிலை. இறுதியில் ஒரு நீண்ட யாத்திரைக்கான தீர்மானத்தை எடுத்தான்.
ராமச்சந்திரன் சாந்தி நிகேதனில் ஓவியக்கலை படித்துக் கொண்டிருந்தான். முதலில் அங்கு செல்லலாம் என்று திட்டமிட்டான். இந்த சம்பவத்தின் ஆரம்பத்திலும் அவன் இருந்தான் அல்லவா? அது மட்டுமல்ல- ஒரு வகையில் பார்க்கப் போனால் ஒரு முறை அல்ல. இரண்டு முறை அறிமுகப்படுத்தி வைத்து, இந்த விஷயத்திற்கு ஆரம்பத்தை உண்டாக்கியதே அவன் தானே! அப்போது ஞாபகம் வந்தது- ராமச்சந்திரன் சாந்தி நிகேதனுக்குச் செல்வதற்கு காரணமாக இருந்தவளே அவள்தான். மலையாளம் ஹானர்ஸில் தேர்ச்சி பெற்று, எப்போதும் தன்னுடைய துறை என்று மனதில் நினைத்திருந்த ஓவியக் கலையைக் கற்பதற்காக, சாந்தி நிகேதனுக்குள் நுழைய அனுமதி கிடைத்தும் செல்வதற்கு வழியில்லாமல், பொருளாதார ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தளர்ந்து போயிருந்த அவனுக்கு தன்னுடைய தந்தையின் உத்தியோகத்தின் உதவியுடன் ஒரு ஸ்காலர்ஷிப்பை ஏற்படுத்திக் கொடுத்து உதவியாக இருந்தவளும் அவள்தான். அதைப் பற்றி ராமச்சந்திரன் அன்று அப்படி கூறினான்:
“உன்னை அறிமுகப்படுத்தி வைத்ததற்காக உன்னுடைய மனைவி என்னுடைய கல்வி நிலையத்தில் செய்த நன்றியின் வெளிப்பாடு... உன்னுடைய அரசாங்கத்தின் மொழியில் கூறுவதாக இருந்தால், கைக்கூலி...''
அவன் கூறிய ஒரு வார்த்தையை மட்டுமே அன்று கவனித்துக் கேட்டான்.
மனைவி! உன்னுடைய மனைவி!
பிரார்த்தனை செய்தான். கடவுளே! நல்ல நேரத்தில், நல்ல நாக்கிலிருந்து இந்த வார்த்தைகள் வருகின்றன.
ஒருநாள் அவள் கூறியதும் ஞாபகத்தில் வந்தது. எண்ணெய் தேய்க்காத கூந்தலை அள்ளி முடித்து, கசங்கி குலைந்து காணப்பட்ட புடவையை வாரி இழுத்துச் சுற்றி, மிகவும் அலட்சியமாக பூங்காவிற்கு வந்த ஒரு விடுமுறை நாள்... வீட்டின் சமையலறையிலிருந்து நேராக வருவதைப்போல இருந்த அந்த வருகையைப் பார்த்துவிட்டு கேட்டான்:
“என்ன பாட்டி விசேஷம்?''
தன்னுடைய தோற்றத்தையும், பிறகு கேள்வி கேட்டவனின் முகத்தையும் பார்த்து வெட்கம் தோய்ந்த மெதுவான குரலில் சொன்னாள்:
“ஆடைகளும் அழகும் எப்படி இருந்தாலும், முதலில் மனைவியாகவும் பிறகு அம்மாவாகவும் ஆனபிறகு பாட்டியாக ஆனால் போதும்.''
அதற்குப் பிறகு ஒருநாள் வீட்டிலிருந்து அவள் கொண்டு வந்த ஏதோ பலகாரப் பொட்டலத்தை நீட்டியபோது, ஒருவேளை அசைவ சமாச்சாரங்கள் ஏதாவது கலந்ததாக இருக்குமோ என்ற பயத்தில் சுத்த சைவ உணவைச் சாப்பிடக் கூடியவனான அவன் வேண்டாம் என்று கூறி, விளையாட்டாக இருப்பதைப்போல காட்டிக் கொண்டு, உறுதியான குரலில் கூறினான்:
“வேண்டாம்... குழந்தை, வேண்டாம். இப்போது வயிறு ஃபுல்லாக இருக்கிறது. அது மட்டுமல்ல- தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தயார் பண்ணிய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது இல்லை. அசுத்தமாகிவிடும்.''
அப்போது திருப்பி அடித்தாள்:
“பெரிய சுத்தம் அது இது என்று காட்டினால், உங்களை நான் மாதத்திற்கு மூன்று நாட்கள் பட்டினி போடுவேன். தெரியுதா?''
அந்த வார்த்தைகளில் இருந்த நெருக்கமும் மன உறவும், வேதனை கலந்த தேம்பல்களாக மாறி மூச்சை அடைக்கச் செய்தன.
அப்போது சிறிதும் எதிர்பாராமல் வாசற்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று திறந்தபோது, எந்தச் சமயத்திலும் பார்த்திராத ஒரு மனிதன் நின்றிருந்தான். சிறிதும் அறிமுகமில்லாதவன். இளைஞன். அழகன்.
அவனுடைய முகம் மிகுந்த கவலையில் இருந்தது. பதைபதைப்புடன் இருந்தது. பதறுகிற குரலில், சிதறிய வார்த்தைகளில், அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நான் கெ.எஸ்.கெ. மேனன். பெர்ஷியாவில் வேலை... இங்கு... இங்கு... உங்களைச் சற்று பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் சார்.''
திகைப்புடன் கேட்டேன்:
“என்னையா?''
அவன் கூறுவதற்கு மிகவும் சிரமப்பட்டான். மூச்சை அடைப்பதைப் போல இருந்தது.
“ஆமாம்... சார், உங்களைப் பார்ப்பதற்கு, பேசுவதற்கு... எப்படி கூற ஆரம்பிப்பது என்றோ பேசுவது என்றோ எனக்குத் தெரியவில்லை.''
அவனிடம் என்ன கூறுவது என்றோ, எப்படிக் கூறுவது என்றோ எனக்கும் தெரியவில்லை. எனினும், என்னுடைய அறைக்குள் வந்து நுழைந்திருக்கும் விருந்தாளி ஆயிற்றே! நாற்காலியைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னான்:
“உட்காருங்க... ப்ளீஸ்... உட்காருங்க.'' என்னுடைய பரபரப்பைப் பார்த்துவிட்டு, மேலும் பதைபதைப்பு அடைந்து நாற்காலியில் போய் உட்கார்ந்தான். தொடர்ந்து தடுமாறிய குரலில் கூறினான்:
“நான் பெர்ஷியாவில் வேலை பார்க்கும் இடத்திலிருந்து ஊருக்கு வந்திருக்கிறேன். திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். வீட்டில் உள்ளவர்கள் பேசி பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறார்கள். புகைப்படத்தைப் பார்த்த நானும் ஒப்புக் கொண்டேன். நாளும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், ஊருக்கு வந்தவுடன் ஊரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்- அந்தப் பெண்ணும் நீங்களும் ஒருவரையொருவர் விரும்புகிறீர்கள் என்று. வீட்டிலுள்ளவர்கள் கட்டாயப்படுத்தி திருமணத்தைச் செய்து வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.''
அவன் பெண்ணின் பெயரையும் இல்லத்தின் பெயரையும் அப்பா, அம்மா ஆகியோரின் பெயர்களையும் கூறினான். தொடர்ந்து மீண்டும் கேட்டான்:
“சொல்லுங்க... சரிதானா?''
ஒரு நிமிட நேரத்திற்கு எதுவும் கூறவில்லை. இந்தப் பதை பதைப்பில் இருக்கும் இளைஞன்! அழகான தோற்றத்தைக் கொண்டவனும் யாருக்கும் முதல் பார்வையிலேயே விருப்பத்தை உண்டாக்கக் கூடியவனுமான இளைஞன்! திறந்த நடவடிக்கைகள் கொண்ட- அசாதாரணமான உண்மைத்தன்மையையும் கள்ளங்கபடமற்ற குணத்தையும் கொண்டு திகைப்படையச் செய்ததுடன் ஈர்க்கவும் செய்திருக்கும் இந்த இளைஞன்! அவன் தொடர்ந்து சொன்னான்:
“நான் ஊருக்கு வந்த பிறகுதான் இந்த செய்தியைப் படிப்படியாகத் தெரிந்து கொண்டேன்- நீங்களும் அந்தப் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புகிறீர்கள் என்ற விஷயத்தை. குத்திக் குத்திக் கேட்டும், இரண்டு வீட்டைச் சேர்ந்தவர்களும் பதில் கூறாமல் விலகிச் செல்கிறார்கள். கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விஷயமாச்சே! என்னால் விலகிச் செல்ல முடியாதே! அதனால் வந்தேன்... சார், நீங்கள் ஏன் எதுவுமே பேசாமல் இப்படி இருக்கிறீர்கள்? புரிகிறதா? என்னைப் புரிகிறதா? சொல்வதை நம்புகிறீர்கள் அல்லவா?''
முழுமையாக முடிப்பதற்கு முன்னால், இடையில் புகுந்து கையை நீட்டிக்கொண்டு நான் சொன்னேன்:
“வாழ்த்துகள், மிஸ்டர் மேனன். புரிந்துவிட்டன. எல்லா விஷயங்களும் புரிந்துவிட்டன. வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திருமணத்திற்காக வந்திருக்கிற மிஸ்டர் மேனன்... அப்படித்தானே? புரிந்துவிட்டது...''
வாழ்த்துகளை ஏற்றுக்கொள்வதற்கு கையை நீட்டாமல், அவன் கூறிக்கொண்டிருந்ததன் மீதிப் பகுதிக்குள் நுழைந்தான்.
“உண்மையைச் சொல்லுங்க சார். உங்களுக்கிடையே விருப்பம் இருக்கிறது என்றால், இதோ... இந்த நிமிடமே... நான் விலகிக் கொள்கிறேன். இதே முகூர்த்தத்தில் உங்களுடைய திருமணம் நடக்கட்டும்.''
வருகை உண்டாக்கிய பதைபதைப்பையே தாண்டக்கூடிய ஆச்சரியமும் திகைப்பும் வியப்பும் நிறைந்த வார்த்தைகள்!
சமநிலையை மீண்டும் அடைவதற்காக சிறிது நேரம் எடுத்துக்கொண்டேன். அபாரமான மனப்பக்குவத்தை சிரமப்பட்டு கொண்டு வந்த போலித்தனத்துடன் கூறினேன்:
“நீங்கள் கேள்விப்பட்டது சரியானது அல்ல. எங்களுக்கிடையே என்ற வார்த்தையில் "இடையே" என்று கூறியதில் உண்மை இல்லை.''
ஆர்வத்துடன் முகம் முன்னோக்கி வந்தது.
“அப்படின்னா!''
அமைதியாக நான் சொன்னேன்:
“எனக்கு அந்தப் பெண்ணின்மீது மட்டுமே... அப்படி சில வேளைகளில் சில முட்டாள்களுக்கு உண்டாகுமல்லவா?''
அவனுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை என்று தோன்றியது.
“உண்மையைச் சொல்லுங்க சார். யாரையும் காயம் உண்டாக்க வேண்டும் என்றோ வேதனைப்படச் செய்ய வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. யாராவது கவலைப்பட்டோ வருத்தப்பட்டோ அளிக்கும் கருணையோ இரக்கமோ எனக்கு தேவையே இல்லை. நெருங்கிய நண்பனிடம் கூறுவதைப்போல என்னிடம் மனதைத் திறந்து சொல்லுங்க, சார். ப்ளீஸ்... இது எப்படி? பிறகு... இது இப்படி?''
உணர்ச்சியற்று விளக்கக் கூடிய வார்த்தைகளைக் கொண்டு கூறினேன்:
“தெளிவாகத் தெரிய வேண்டும். அப்படித்தானே? என்மீது விருப்பம் இல்லாததால் இப்படி நடந்துவிட்டது. நான் ஒரு முட்டாள்தனமான உலகத்தில் இருந்துவிட்டேன். மடையன்...''
அதற்குப் பிறகும் முழுமையான நம்பிக்கை வராததைப்போல அவன் என்னுடைய முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு... திடீரென்று எழுந்து விடை பெறுவதற்கு அனுமதி கேட்டான்.
“நான் புறப்படட்டுமா?''
உட்காரும்படி கூறுவதற்கு விஷயமெதுவும் இல்லையே! அவனுடன் சேர்ந்து வாடகைக் காரை நோக்கி நானும் நடந்தேன். வழியில் மேலும் ஒருமுறை அவன் கேட்டான்:
“சார், நீங்க சொன்னது உண்மைதானே?'' முகத்தில் தெரிந்த ஆர்வமும் கள்ளங்கபடமற்ற தன்மையும் அன்பும் யாரையும் அமைதியானவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்கக் கூடியவையாக இருந்தன. ஒரு தம்பியிடம் உண்டாவதைப் போன்ற வாஞ்சையும் உரிமையும் தோன்றின.
“உண்மையாக இல்லாமற் போனாலும்கூட, நீங்கள் காட்டக் கூடிய இந்தப் பெருந்தன்மையை நான் ஏற்றுக்கொள்ள முடியுமா? இரக்கப்பட்டு, யாராவது தரக்கூடிய பிச்சையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களா இவை? சொல்லுங்க... என்னுடைய ஆண்மையையும் தனித்துவத்தையும் குணத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு தனிப்பட்ட துயர அனுபவமல்லவா இது? அது மட்டுமல்ல- A girl who can’t stand the test of time… இல்லாவிட்டால் வேண்டாம்.Excuse me... நான் தேவையில்லாமல் sentimental ஆகிறேன். வேண்டாம்... வேண்டாம்... நான் சுற்றி வளைத்துப் பேசவில்லை. நான் முதலில் கூறியது உண்மைதான். ஒரு தலைப்பட்சம்தான். ஒரு கோமாளித்தனம்...''
காரின் கதவைத் திறந்து, உள்ளே ஏறத் தொடங்கிய பிறகு, திடீரென்று எதையோ நினைத்ததைப் போல அவன் திரும்பி வந்து, என்னை இறுகக்கட்டிப் பிடித்துக்கொண்டான். பிறகு சொன்னான்:
“எனக்கு எல்லா விஷயங்களும் புரிகின்றன. I am Sorry…Extremely Sorry… சார், என்னை மன்னிச்சிடுங்க.''
பதைபதைப்புடன் வார்த்தைகள் வந்தன. எப்படியோ அவற்றைக் கூறி முடித்தான். பதில் எதுவும் கூறுவதற்கு வாய்ப்பு தராமல், அவன் ஓடி காருக்குள் ஏறி கதவை அடைத்து, மீண்டும் இன்னொரு முறை அந்த முகத்தை நேரடியாகப் பார்ப்பதற்கு சந்தர்ப்பத்தைத் தரவில்லை. வேண்டுமென்றே அதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், பக்கவாட்டில் பார்த்தேன். அவன் அழுதுகொண்டிருந்தான்.
கார் முன்னோக்கி நகர்ந்த பிறகும், அவன் திரும்பிப் பார்க்கவில்லை. வெளியே கையை நீட்டி சற்று வெறுமனேயாவது அதை வீசுவான் என்று நினைத்ததும் நடக்கவில்லை.
இல்லை... எதுவுமே நடக்கவில்லை. பாவம்! நல்ல மனிதன். அந்த கார் சென்ற வழியையே பார்த்தேன். பிரார்த்தனை செய்வதைப்போல முணுமுணுத்தேன்:
“சுபமஸ்து... all the best.''
அதற்குப் பின்னால் தூசி படிந்த முப்பத்தொன்பது வருடங்கள் அந்த வழியே கடந்து சென்றன...
பழைய விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து நான் வாழ்க்கையின் அன்றாடச் செயல்களில் மூழ்கினேன். சிறிதும் எதிர்பாராமல் என்றுதான் கூற வேண்டும்- அந்த பழைய கால சிநேகிதியின் ஊரிலேயே நான் திருமணம் செய்தேன். வீட்டில் உள்ளவர்களின் தீர்மானத்தில் நடைபெற்ற வெறும் ஒரு சாதாரண திருமணம். திருமணத்திற்கு முன்னால் பழைய காதலைப் பற்றிக் கூறியிருந்தும், பழைய தோழி தந்திருந்த கடிதங்களையும் பரிசுப்பொருட்களையும் காட்டிய பிறகும், என்னை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்த ஒரு நல்ல மனதைக் கொண்டவளாக மணமகள் இருந்தாள். கால ஓட்டத்தில் நான் தந்தையாக ஆனேன். தாத்தாவாக ஆனேன். சமீபத்தில் ஒருநாள் வயதான தன்னுடைய தந்தை, தாயுடன் சில நாட்கள் போய் தங்கியிருந்து விட்டு வரலாம் என்று ஊருக்குச் சென்றிருந்த என் மனைவி, அங்கிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள்:
“பழைய ஒரு மூட்டுவலி இருக்கிறது அல்லவா? Arthritic. அது மீண்டும் வந்து மிகவும் தொல்லையைத் தந்து கொண்டிருக்கிறது. நான் இங்கிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். பதைபதைப்பு அடைவதற்கு எதுவுமில்லை. நானே அழைக்கிறேன் என்பதே அதற்கு சான்றாக போதும்! இரண்டு நாட்களுக்குள் போகலாம் என்று டாக்டர் கூறியிருக்கிறார். இங்கு வந்தபிறகு நல்ல நிம்மதி இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவுமில்லை என்பதை திரும்பவும் ஞாபகப்படுத்துகிறேன்.''
பதைபதைப்பு அடைவதற்கு எதுவுமில்லை என்று கூறினாலும், சற்று கலக்கத்துடன்தான் நான் சென்றேன். இல்லாவிட்டால் மருத்துவமனையில் சேர்த்திருக்க மாட்டார்களே!
நவீன வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனை அது. என் மனைவி கூறியதும் சரிதான். உடல்நலக்கேடு சற்று குறைந்து விட்டிருந்தது. பெரும்பாலும் நாளை திரும்பிச் செல்லலாம். அவள் பதைபதைப்புடன் கேட்டாள்:
“வழக்கம்போல பரிதவிச்சிட்டீங்க... அப்படித்தானே.''
நான் கிண்டல் பண்ணினேன்:
“மனைவி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற விஷயத்தைத் தெரிந்து, பதைபதைப்பு அடையாமல் இருக்கும் கணவனையா உனக்குப் பிடிக்கும்?''
அவள் சிரித்தாள். அவ்வளவுதான். பிறகு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சிரிப்பைத் தொடர்ந்து கொண்டே, குரலைத் தாழ்த்தி ஒரு ரகசியத்தைக் கூற முயற்சிப்பதைப்போல, மெதுவான குரலில் கேட்டாள்:
“நான் ஒரு ரகசியத்தைக் கூறட்டுமா? இனியும் பதைபதைப்பு அடைவீர்களா?''
என்ன கூற இருக்கிறாள் என்பதைப் பற்றி ஒரு அறிகுறியும் கிடைக்காமல் நான் கேட்டேன்:
“ரகசியமா? பதைபதைப்பா? எதற்கு?''
முன்னாலிருந்த ரகசிய வெளிப்பாட்டைச் சிறிதும் விடாமலே சொன்னாள்:
“சரி... கேளுங்க. இந்த மருத்துவமனையின் உரிமையாளரும் சீஃப் டாக்டருமாக இருப்பவர் மிஸ்டர் ரவி மேனன்.''
நான் கிண்டல் பண்ணினேன்:
“பதைபதைப்பு அடையக் கூடிய ரகசியம் அதுவா? இப்படிப்பட்ட ஒரு மருத்துவமனையை கட்டும்போது, யாராவது ஒரு மனிதர் அந்த பொறுப்புகளை ஏற்றுத்தானே ஆக வேண்டும்?''
அவள் சிரிப்பை நிறுத்தவேயில்லை.
“முழுவதையும் கேளுங்க. இந்த டாக்டர் ரவி மேனன்... உங்களுடைய பழைய கல்லூரி கால காதலி இருக்கிறாளே... உலக அழகி என்று தூக்கத்தில்கூட நீங்கள் சத்தம் போட்டுக் கூறும் அந்த ஊர்வசி! அந்த பெண்ணின் அருமை மகன்தான் இந்த இளமையும் அழகும் கொண்ட டாக்டர்...''
வார்த்தைகளுக்கு நடுவில் குத்தலும் கிண்டலும் கலந்திருந்தாலும், உண்மையிலேயே அது ஒரு செய்தியாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனினும், இதில் பதைபதைப்பு அடைவதற்கு என்ன இருக்கிறது? அவளிடம் நான் எதையாவது கூறுவதற்கு முன்னால், ஓரக் கண்களில் விளையாட்டுத் தனத்தை வெளிப்படுத்தியவாறு அவள் தொடர்ந்து சொன்னாள்:
“பழைய காதலியும் இங்கே நோயாளியாகப் படுத்திருக்கிறாள். இதற்கு நேராக மேல் மாடியில். அறை எண் பதினான்கில்.''
பதைபதைப்பு இல்லை என்று கூறுவதற்கில்லை. கேட்டேன்:
“உனக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்? அவளுக்கு என்ன உடல் நலக்கேடு?''
என் மனைவி விளக்கிக் கூறினாள்:
“டாக்டர் ரவி மேனன் கூறித்தான் விஷயமே தெரியும். இங்கே தந்த முகவரியைப் பார்த்து, நான் உங்களுடைய மனைவி என்பதைத் தெரிந்துகொண்டு என்னைப் பார்ப்பதற்காக வந்தார். நீங்கள் அவருடைய தாயுடன் சேர்ந்து படித்திருக்கிறீர்கள் என்றும், மிகவும் நெருங்கிய நண்பர் என்றும், தன்னுடைய தாய் இந்த விஷயங்களைக் கூறியிருக்கிறாள் என்றும் சொன்னார். ஒரு அறுவை சிகிச்சை முடிவடைந்து, மேல் மாடியில் அவள் படுத்திருக்கிறார் என்று சொன்னதும் டாக்டர் ரவி மேனன்தான்.''
ஆர்வத்தை வெளிப்படுத்தினாலும், பதைபதைப்பு அடையப் போகிற குணத்தைக் கொண்ட ஒரு பெண் அல்ல என்ற விஷயம் தெரிந்திருந்தாலும், சாதாரணமான பெருந்தன்மையுடன் நடந்து கொள்வாள் என்பது தெரிந்திருந்தாலும் எந்தச் சலனமும் இல்லாததைப் போல காட்டிக்கொண்டு, வெறுமனே ஏதோ கேட்கிறோம் என்பதைப் போல கேட்டேன்:
“என்ன அறுவை சிகிச்சை?''
எல்லாவற்றையும் புரிந்துகொண்டதைப்போல, சமாதானம் கூறுகிற மாதிரி அவள் சொன்னாள்:
“யூட்டரைன் கேன்சர் என்று சந்தேகப்பட்டிருக்கிறார்கள்... எது எப்படியோ- ஆபரேஷன் முழுமையான வெற்றியுடன் அமைந்துவிட்டது என்றும், இனி எந்தவித பிரச்சினையும் இல்லை என்றும் டாக்டரே கூறினார். நேர் மாடியில்தானே... சற்று போய் பாருங்க. மிகவும் நெருங்கிய நண்பர் என்று கூறினீர்களே! பார்ப்பதற்கு ஆர்வமில்லாமல் இருக்காது.''
வார்த்தைகளுக்கு நடுவில் கள்ளங்கபடமற்ற தன்மை என்று தோன்றக் கூடிய குத்தலையும் கிண்டலையும் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கூறுவதற்காக, சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பிறகு மனதைத் திறந்து கேட்டேன்:
“பிறகு குத்தலான வார்த்தைகளைக் கூறுவதற்கும், கிண்டல் பண்ணுவதற்கும்தானே!''
அவள் சமாதானப்படுத்தினாள்:
“எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு பார்ப்பதற்கு ஆர்வம் உண்டாகும் என்ற விஷயம் எனக்கு தெரியும். அது நான் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் நடக்காமல் இருக்காதே. பிறகு... நான் சொல்லித்தான் பழைய பெண்ணைப் பார்ப்பதற்காக போனீர்கள் என்று வந்தால் எனக்குத்தானே க்ரெடிட்?''
சந்தோஷத்துடன் சொன்னேன்:
“Thanks.You are really wonderful''. மேலே செல்லும் படிகளில் நடக்க ஆரம்பிக்கும்போது, அவள் திருப்பி அடித்தாள்:
“நான் மட்டுமல்ல... இன்னும் எவ்வளவோ ஆட்கள் wonderful தான்... பல வகைகளில்...''
அந்த வார்த்தைகளில் இருந்த சுவாரசியம் மனதில் உண்டாக்கிய சந்தோஷத்துடன், திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே நான் படிகளில் ஏறினேன்.
மேலே இருந்த தளத்தை அடைந்ததும், சற்று நின்று மெதுவாக அறையைக் கண்டுபிடித்து, சிறிது நேரம் அமைதியாக நின்று ஓய்வு எடுக்க வேண்டும். சிறிதளவு மனரீதியாக தயாராகிக்கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் யார்? எத்தனை வருடங்கள் கடந்து சென்றாலும் யார்?
ஒருவரையொருவர் எப்படி சந்தித்துக் கொள்வது? எதுவுமே வேண்டியதில்லை. மேல் தளத்தை அடைந்ததும், படிகளின் பக்கவாட்டு கைப்பிடியைப் பிடித்து நின்றுகொண்டு, தலையை உயர்த்தி பதினான்காம் எண் அறை எங்கே இருக்கிறது என்று கண்களால் தேடினேன். அதைக் கண்டுபிடித்து ஒரு நொடி நேரம்கூட ஆகவில்லை- அதற்கு முன்பு அதே அறைக்குள்ளிருந்து ஒரு மனிதன் வெளியேறி வந்து கொண்டிருந்தான். முதல் லிஃப்டை நோக்கி நடந்து கொண்டிருந்த அந்த மனிதன் என்னைப் பார்த்திருக்க வேண்டும்- நேராகத் திரும்பி நடந்து வந்தான். முன்னால் வந்து வழியைத் தடுத்துக்கொண்டு நின்று, ஆச்சரியம் நிறைந்த கண்களுடன் கேட்டான்:
“மிஸ்டர். மோகனன்தானே?''
அந்த மனிதர் யார் என்று தெரியாமலே “ஆமாம்...'' என்று கூறினாலும், உடனடியாக ஞாபகம் வந்தது.
முன்பு பெர்ஷியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞன்! மணமகன்! இப்போது நெற்றியின் இரு பக்கங்களிலும் மெல்ல மெல்ல ஏறி வந்துகொண்டிருந்த வழுக்கை... எஞ்சியிருந்த தலை முடியில் சாம்பல் நிறம்... வேறு மாறுதல்கள் எதுவும் இல்லை. காலம் அந்த அழகில் கை வைக்கவே இல்லை. இப்போதும் அழகன்! மிடுக்கான தோற்றத்தைக் கொண்டவன்! கையை இறுகப் பற்றிக் கொண்டே சொன்னேன்:
“ஹலோ... புரிந்துவிட்டது... புரிந்துவிட்டது... மிஸ்டர் மேனன்... காலம் எவ்வளவு ஆயிடுச்சு! இப்போதும் நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?''
அவன் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டே சொன்னான்:
“நாம் ஒருவரையொருவர் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லையென்றால், உலகத்தில் பிறகு யார்தான் சார் அடையாளம் கண்டுபிடிப்பார்கள்?''
அறியாமலே ஒருவரையொருவர் வேதனைப்படுத்திக் கொண்ட இரண்டு சுத்தமான ஆன்மாக்கள் என்றோ அல்லது வேறு எதுவோ அந்த வார்த்தைகளில் ஆழமான சோக நாதங்களை உண்டாக்கிக் கொண்டு இருந்தனவோ? இல்லை என்றுதான் தோன்றியது. ஏனென்றால், அந்த அளவிற்கு வெள்ளமென பாய்ந்து வந்து கொண்டிருந்த வார்த்தைகளில் சந்தோஷம் ததும்பிக் கொண்டிருந்தது. வார்த்தைகள் மழை என பொழிந்து கொண்டிருந்தன.
“சார், உங்களுக்கு அப்படியொன்றும் பெரிய அளவில் மாற்றமெதுவும் உண்டாகவில்லை. அப்படி உண்டாகியிருந்தால், என்னால் கண்டுபிடித்துவிட முடியும். வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் இடையில் அவ்வப்போது ஓவியங்களைப் பார்ப்பதுண்டு. சார், உங்களுடைய கதை வந்திருக்கிறது என்று தெரிந்தால், எங்கிருந்தாவது என் மனைவி அதை வாங்கிக்கொண்டு வந்து விடுவாள். சார், இங்கு... இந்த மருத்துவமனைக்கு நீங்கள் வருவீர்கள் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய மிஸஸ் இங்கு சிகிச்சைக்காக வந்திருக்கிறாங்க என்று ரவி சொன்னான். இப்போ பரவாயில்லை... இல்லையா? நான் பார்த்தது இல்லை. என்ன கூறிச் சென்று அறிமுகமாவது? அழைத்துக்கொண்டு போவதற்கு முன்னால், என்னைச் சற்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.''
மிகுந்த பதைபதைப்பில் இருந்தேன் நான். எனினும், சொன்னேன்:
“மிஸஸுக்கு உடல்நலம் எவ்வளவோ பரவாயில்லை.''
அதற்குமேல் அதிகமாக எதுவும் பேச வேண்டிய சூழ்நிலை வரவில்லை. அவன் எதிர்பார்க்கவும் இல்லை என்று தோன்றியது. கவலை நிறைந்த உரிமையுடன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்- என்னைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று, அந்த பதினான்காம் எண் அறைக்குள் நுழைத்து, அங்கேயிருந்த கட்டிலில் தளர்ந்த போய் படுத்திருந்த தன்னுடைய மனைவியிடம் கூறினான்:
“பாரும்மா... நம்மைப் பார்ப்பதற்காக இன்றைக்கு ஒரு வி.ஐ.பி. விருந்தாளி வந்திருக்கிறார்.''
திரும்பி என்னிடம் சொன்னான்:
“உட்காருங்க சார்... நான் இதோ வந்து விடுகிறேன். வீட்டுக்குப் போய் இந்த அம்மாவுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு இதோ வந்துவிடுகிறேன். நான் அதற்காக கிளம்புறப்போதான் உங்களைப் பார்த்தேன். பிறகு... ஒரு விஷயம். இவள் இப்போ ஒரு மாத்திரை சாப்பிட்டிருக்கிறாள். கொஞ்சம் தூங்க வைக்கக் கூடியது. எனினும், தூங்க விட வேண்டாம். மதிய உணவு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கினால் போதும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்.''
வார்த்தைகளின் அதே அவசரத்துடன் அவன் சென்றான். போகிற போக்கில் மீண்டும் அழைத்துச் சொன்னான்:
“சார், நீங்க நான் வந்த பிறகுதான் போகணும். நிச்சயமா...''
சிறு குழந்தைகளிடம் இருப்பதைப் போன்ற நடத்தை! என்ன ஒரு கள்ளங்கபடமற்ற தன்மை! திகைத்துப்போய் நின்றுவிட்டேன்.
எதையுமே பார்க்க முடியவில்லை. வெளியே வெளிச்சத்திலிருந்து உள்ளே சற்று மங்கலாக இருந்த அறைக்குள் வந்ததால் உண்டான இருண்ட பார்வை மட்டுமல்ல- எத்தனையோ வருடங்களுக்கு அப்பால் எங்கோயிருந்து வந்திருக்கும் ஏதோ ஒரு துடித்து நின்று கொண்டிருந்த மறையாத உணர்ச்சி எல்லா உறுப்புகளின் இயக்கங்களையும் மனவோட்டங்களையும் கனவுகளையும் கவலைகளையும் ஒரே நிமிடத்தில் செயல்பட விடாமல் செய்து விட்டதைப்போல தோன்றியது. என்னை நானே சுற்றுவதைப் போல உணர்ந்தேன். கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்றேன். பிறகு... உள்ளே எங்கோ நிலவு உதித்ததைப்போல இருந்தது. சிறிது சிறிதாக அனைத்தும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன.
மருத்துவமனையின் அறை. நீல நிற சாளரத்தின் திரைச்சீலைகள். நீல நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்த மேஜையின்மீது மருந்து புட்டிகள். டெட்டாலின் கடும் வாசனை.
இறுதியில் அதையும் அடையாளம் தெரிந்துகொண்டேன். அறையின் நடுமத்தியில் இருந்த சீலிங் ஃபேனுக்குக் கீழே போடப்பட்டிருந்த கட்டிலில் வெள்ளை நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் வெள்ளைப் போர்வையால் பாதி மறைக்கப்பட்டிருந்த உடல். நெற்றியில் ஒன்றோ இரண்டோ கோடுகள். எப்போதும் இருக்கக்கூடிய சந்தனக்கீற்று இப்போதும் மறையாமல் இருந்தது. கண்களைச் சுற்றி கறுப்பான நிழல் பகுதி. எனினும், அதே பழைய கண்கள்தான். ஆமாம்... காந்த சக்தி இருக்கிறதா என்ன? வேண்டாம்... அது எதையும் சிந்திக்க வேண்டாம்.
எதுவுமே பேசாமல் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருப்பதைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவள் சொன்னாள்:
“பார்க்க வேண்டாம். இப்போ உண்மையாகவே பாட்டிதான்... காலம் எவ்வளவோ ஆயிடுச்சு அல்லவா? அந்த மாறுதல் இருக்கும்... ஆளே மாறி விட்டிருப்பேன்.''
முகத்தையே- வயதும் பிரசவங்களும் உடல்நலக்கேடுகளும் மருந்தும் சேர்ந்து முத்திரைகளைப் பதித்து விட்டிருந்தாலும், இப்போதும் பழைய அழகிற்கு எந்தவொரு குறைவும் உண்டாக்காமல் இருக்கும்- அந்த முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். நினைவு என்னும் சுவர் அலமாரிக்குள்ளே இருந்து தூசி தட்டி துடைத்தெடுத்து வைத்ததாக இருந்தாலும், உள்ளே எப்போதும் புதிதாகவே இருந்த ஓவியம்...
"மாறுதல் இருக்கும். ஆளே மாறி விட்டிருப்பேன்!"
கூற வேண்டுமென்று நினைத்தேன்:
"மாறுதல் இல்லை பெண்ணே! ஆள் மாறியது சமீபகாலத்திற்கு இடையில் அல்லவே! முன்பொரு நாள்... அன்று... அன்று... அன்றல்லவா?"
ஆனால், கூறவில்லை. தூக்கத்தில் உளறுவதைப்போல கேட்டேன்:
“பாட்டி... இல்லையா?''
அவள் சொன்னாள்:
“ஆமாம்... ஒன்றுக்கு அல்ல. நான்கு பெற்றெடுத்ததில் மூன்றுக்குச் சொந்தமான ஆறு பேரக்குழந்தைகளுக்கு... நாலாவதாக பிறந்தவள் மகள். அவள் நியூயார்க்கில் இருக்கிறாள். திருமணம் ஆகவில்லை. மெடிஸினில் போஸ்ட் க்ராஜுவேஷன் முடிந்த பிறகுதான் திருமணம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாள். அவள்... பார்வதி- அவளுடைய குழந்தையையும் பார்த்துவிட்டுத்தான் இடத்தை காலி பண்ணுவது என்ற ஆசை இருக்கிறது. நடக்குமோ என்னவோ? முடிவு கடவுளுக்குத்தான் தெரியும்.''
பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் வளர்க்கக் கூடிய எந்த சாதாரண இல்லத்தரசியும் கூறக்கூடிய வார்த்தைகள். ஆனால், இறுதியாகக் கூறியது எதுவும் காதில் விழவில்லை. ஒரே ஒரு வார்த்தைதான் உள்ளே கேட்டது:
பாட்டி!
அந்த வார்த்தை உள்ளே இருந்த ஏராளமான கதவுகளையும் ஒன்றுக்குப் பிறகு இன்னொன்றாய் திறந்துவிட்டது. வாகை மரத்தின் சிவப்பு நிற மலர்கள் விரிந்து நின்றிருந்த- பரந்த வானத்தின் சிவப்பு நிறம் சாளரத்தின் வழியே தெரிந்தது. அந்த வாகை மரத்திற்குக் கீழே ஏதோ ஒரு பழைய கால வசந்தத்தின் வாடிய கற்பனை அழகைப் போல ஒரு இளம்பெண் நின்றிருந்தாள். அவள் வெட்கத்துடன் கூறிக்கொண்டிருந்தாள்:
“பாருங்க, மோகனன்! எனக்கு பல முறைகள் வாந்தியும் தலை சுற்றலும் உண்டாகும்படி செய்யாதீங்க. இரண்டு முறைகள் போதும்... தெரியுதா?''
இப்போது என்ன சொன்னாள்? பாட்டி... நான்கு பிள்ளைகளில் மூன்று பேருக்குச் சொந்தமான ஆறு பேர்களின்...
ஏதாவது பதில் கூற வேண்டுமே! என்ன கூறுவது? முன்பு கூறிக் கூறி முடிவடையாத ஆர்வம்... இப்போது... பல வருடங்களுக்குப் பிறகு எதிரெதிரே உட்கார்ந்திருக்கும்போது, மனதில் ஆசைப்பட்டும் ஆசைப்பட்டும் வார்த்தைகள் இல்லாமல்... செயலற்ற தன்மை... பேரமைதி.
இந்த பேரமைதியை எப்படி இல்லாமற் செய்வது? இந்த உரையாடலின் அறுபட்ட இணைக்கும் கண்ணிகளை எப்படி ஒன்று சேர்த்து சீர் பண்ணுவது?
சிரமப்பட வேண்டிய சூழ்நிலை வரவில்லை. அவள் மீண்டும் கேட்டாள்:
“என் பிள்ளைகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க வேண்டாமா? என்னுடைய உடல்நலக் கேட்டையொட்டி பார்வதியைத் தவிர எல்லாரும் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரம் கடந்தால் இங்கே வந்துவிடுவார்கள். பார்க்கலாம். மூத்த வயதில் உள்ள பலருக்கும் பிரபல கதாசிரியரான உங்களைத் தெரியும். உங்களின் ரசிகர்கள் சந்திப்பதற்காகவும் அறிமுகமாக நேர்ந்ததற்காகவும் சந்தோஷப்படுவார்கள்.''
அவன் சிரிக்க முயற்சித்தான். முன்பு தாயின் ரசிகத்தன்மையை சொந்தமாக்கிக் கொள்வதற்காக முயற்சித்ததால் உண்டான வேதனை, அவனையே அறியாமல் அந்த சிரிக்கும் முயற்சியில் கரியைத் தோய்த்து விட்டிருந்தது. ஏதோ கடந்தகாலத்தை நோக்கிக் கொண்டிருப்பதைப் போல சொன்னான்:
“வேண்டாம்... பிள்ளைகளைப் பார்க்க வேண்டாம். பழைய குழந்தைக் கடத்தல் விஷயத்தில் இன்னும் ஏதாவது எஞ்சி இருந்தால், ஆபத்தமான விஷயமாக ஆகிவிடும். எனக்கு இருக்கிறது என்று வேறு சிலர் மனதில் நினைத்திருந்த அந்த கெட்ட குணத்தின் மூலம் வாழ்க்கையில் எவ்வளவோ பெரிய பாதிப்புகள் உண்டாகிவிட்டன. நடக்கக் கூடாத பல விஷயங்கள் நடந்துவிட்டன. மிகவும் வேதனைகளைத் தந்த இழப்புகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியது வந்தது. இனியும் அப்படிப்பட்ட ஒன்று வேண்டாம். அதற்கான உடல்நலம் இல்லை. ஆயுளும் இல்லை. முடியாது... வயதான காலத்தில் எல்லாவற்றையும் இன்னொரு முறை தாங்கிக்கொள்ள முடியாது.''
அந்த வார்த்தைகள் அவளுடைய மனதிற்குள் எங்கோ நுழைந்து மிகவும் தளர்வடையச் செய்ததைப்போல தோன்றியது. ஆனால், தளர சம்மதிக்காமல் கேட்டாள்:
“உண்மையைச் சொல்லு. அன்று எனக்கு சிறிய ஒரு தவறுதானே நடந்தது? குழந்தைகளைக் கடத்திச் செல்வதற்காக வந்தேன் என்று தவறாகக் கூறிவிட்டேன் என்றல்லவா கூறினாய்? உண்மையாகவே எதைக் திருடினேன்? அதையும்விட விலை மதிப்புள்ள ஒன்றை. இதயம். குழந்தைகளின் இதயத்தை அல்ல. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வந்த அவர்களைவிட மூத்த பெண்ணின் இதயத்தை. ஒரு வாழ்க்கைக் காலம் முழுவதும் அந்தப் பெண் இதயமே இல்லாமல் அலைந்து திரிந்தாள். இன்றும்... இப்போதும் அது திரும்ப கிடைக்கவில்லை.''
தழுதழுத்த குரலில் திருப்பிக் கேட்க முடிந்தது. எனினும், தார்மிக சக்தியின் துணையுடன் கேட்டான்:
“சொல்லு... இவ்வளவு காலம் ஆயிடுச்சுல்ல? இனிமேலாவது உன்னுடைய உள் மனதைப் பார்த்து சொல்லு. அது ஒரு தலைப்பட்சமான திருட்டா? திருட்டுத்தானா? ஒருவரோடொருவர் இரண்டறக் கலந்து அறியாமலே ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டது அல்லவா?''
ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் அவள் சொன்னாள்:
“ஆமாம்... அதுதான் நடந்தது. அதே புனிதத் தன்மையுடன் நாம் அதை பத்திரமாகக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறோம் அல்லவா? போதாதா? கடவுளின் ஆசீர்வாதத்திற்கு வேறு என்ன வேண்டும்?''
பதில் கூறுவதற்கு எதுவுமே இல்லை. வேண்டுமென்றால் கூறலாம். "நான் கடவுள் அல்ல. பக்தன் அல்ல. வெறும் சாதாரணமான ஒரு மனிதன்.’’
அவனுடைய முகத்தில் தெரிந்த இனம் புரியாத பரிதாபத் தன்மையைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவள் நினைவுபடுத்தினாள்:
“முன்பு என்ன எழுதி அனுப்பியிருந்தீர்கள் என்பது ஞாபகத்தில் இருக்கிறதா? இறுதியாக எழுதிய அந்தக் கடிதத்தில்? நான் ஞாபகப்படுத்திக் கூறட்டுமா?
எதிர்காலத்தில் எங்கேயாவது மீண்டும் பார்க்க நேர்ந்தால், காதலுடன் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முயற்சியாக இருக்கும். -இல்லையா? அப்படித்தானே எழுதியிருந்தீர்கள்? அதற்குப் பிறகு இப்போது என்ன, எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்களா? அந்த காதல் எங்கே போனது? அதற்குப் பின்னாலிருந்த வசந்தகாலத்தின் நினைவுகள்?''
யார் பார்த்தாலும் அழுகை மட்டுமே என்று கூறுவதைப் போன்ற புன்சிரிப்பைத்தான் நான் மிகவும் சிரமப்பட்டு வெளிப்படுத்தினேன். அந்த அவலட்சணமான அடையாளங்கள் முகத்தில் பரவலாகத் தெரிந்தன.
என்னுடைய இயலாமையைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவளுடைய முகம் இரக்கப்படுவதைப்போல ஆனது. அப்போது அவள் சொன்னாள்:
“இங்கே வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். என்ன, நின்று கொண்டே இருக்கிறீர்கள்? உட்காருங்க... ப்ளீஸ்...''
ப்ளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டு அவளுக்கு அருகிலேயே உட்கார்ந்தேன். கற்பனை பண்ணிய கனவுகளையும் நினைத்துப் பார்க்க முடியாத பலவீனங்களையும் உணர்ச்சிகளின் வெறித்தனங்களையும் குடைந்து விட்டெறிந்து, படிப்படியாக சுய உணர்வின் இயற்கைத் தன்மையான தனி காட்டுவாழ் மனிதனின் இயல்பு குணத்தை மீட்டெடுத்திருக்க வேண்டும். அதனால் கேட்டேன்.
“வருவேன் என்று தெரியும்... இல்லையா? பெரிய நோயால் பாதிக்கப்பட்டு இப்படி படுத்திருப்பதைப் பார்த்து, பழைய வேதனைகளை மறந்து சந்தோஷப்படுவதற்கு... பழைய பகையையும் வெறுப்பையும் புகைத்து மூச்சை அடைப்பதற்கு... அப்படித்தானே?''
உறுதியான தன்னம்பிக்கை நிறைந்த குரலில் பதில் வந்தது:
“அதற்கான ஆற்றல் நான் காதலித்த ஒரு ஆளுக்கு எந்தச் சமயத்திலும் இல்லை என்ற விஷயம் எனக்குத் தெரியாதா?''
உள்ளே இருக்கும் கோபம் தெரியாமல் நான் கூறினேன்:
“நான் அன்பு செலுத்திய ஒரு ஆள்! வெறும் ஆள்! இல்லையா? இவ்வளவு வயசாயிடுச்சுல்ல? இரண்டு தலைமுறைகளை வளர்த் தெடுத்த பாட்டியாகி விட்டாய் அல்லவா? சொந்த மனசாட்சியுடன் இனி சத்தியம் பண்ணி கூறக்கூடாதா? காதலித்த ஒரு ஆளாம். பலரில் ஒரு ஆள் என்று கூறுகிறாயா? காதலித்ததைப் போல நடித்து விளையாடிய, ஏமாற்றிய என்ற கேவலமான அந்த உண்மையை வேறு யாரும் கேட்காதவாறு உனக்குள்ளேயே சொல்லிப் பழகிக் கொள். ஒருவேளை... காலப்போக்கில் கேட்டுக் கேட்டு பழகிவிட்ட பிறகு, உன்னுடைய மனசாட்சி மன்னிப்பு அளிக்கலாம்.''
தளர்ந்து நிலைகுலைய ஆரம்பித்த அவளுடைய கண்கள் ஈரமாயின. மிகவும் சிரமப்பட்டு மெதுவான குரலில் கேட்டாள். கண்ணீர்த் துளிகள் விழுவதைப்போல கேட்டாள்:
“இப்படி கூறியது... மோகனன், நீங்களா? எனக்குத் தெரிந்த உங்களால் இதைக் கூற முடியாது. அது மட்டும் உண்மை. உண்மையைச் சொல்லுங்க. இப்போது சொன்ன விஷயங்கள் நம்பக் கூடியவையா? அப்படியென்றால், பிறகு எப்படி... எதற்காக இங்கே வரவேண்டும் என்று தோன்றியது? என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது? இந்த அளவிற்கு கேவலமான ஒரு பூச்சிக்கு முன்னால் எதற்காக வந்து நிற்கிறீர்கள்?''
முடிந்த வரையில் உணர்ச்சியற்ற தன்மையை வரவழைத்துக்கொண்டு விளக்கிச் சொன்னேன்:
“சிறிதும் எதிர்பாராமல் இங்கே வந்தபோது ஒரு பழைய கால சிநேகிதி இந்த மருத்துவமனைக்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்திருக்கிறாள் என்ற விஷயத்தைத் தெரிந்து, சுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மனிதர்களுக்கே உரிய இயல்பான தூண்டுதல் காரணமாக மட்டுமே வந்தவன் நான். என்னுடைய பழைய கால வாழ்க்கை நிலைகளுக்கும் காயங்கள் நிறைந்த உணர்வுகளுக்கும் நிகழ்கால நிலைமைகளுக்கும் அமைதியற்ற சூழலுக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அந்த பழைய கால கவலைகள் அனைத்தும் எப்போதோ மரணமடைந்துவிட்டன. முன்பு காதலித்த ஒரு தெரிந்த பெண்ணின் உடல்நலம் குறித்து விசாரிக்கிறேன். அவ்வளவுதான். இங்கே கேவலமான பூச்சியோ சொர்க்க தேவதையோ யாருமில்லை.''
வார்த்தைகளில் இருந்த உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த காரணத்தால் இருக்க வேண்டும்- அதேபோல பதில் கூற முயற்சித்தாள்:
“ஒரு பழைய கால சிநேகிதி... அப்படித்தானே? எங்கோ காதலித்த ஒரு பழைய தெரிந்த பெண்! எது எப்படி இருந்தாலும், காதல் காதலாக இருந்தது அல்லவா? காதலிப்பது என்பது எப்போதும் தன்னுடைய உணர்ச்சியை இன்னொரு ஆளுக்கு கீழ்ப்படியச் செய்யும் உள் மனப்போக்கு என்றாலும், விரும்பக் கூடிய ஒரு பலவீனம் அல்லவா? அறிந்தே செய்யும் கீழ்ப்படிதல் என்ற வீழ்ச்சிதானே? அந்த வீழ்ச்சியிலும் பலவீனத்திலும் சிக்கிக்கொண்ட ஒரு ஆளுக்கு, அந்த ஆள் வேறு வகையில் பிறப்பு உறவுகளுடனும் கடமைகளுடனும் அன்பு செலுத்தக்கூடியவர்கள் முன்னாலும் இதேபோல வீழ்ச்சிகளும் பலவீனங்களும் உண்டாகக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்பது தெரியாதா? பிறவி தொடர்புகளுக்கு முன்னால் கேடு கெட்ட நிலையில் இருக்கும் அந்த கீழ்ப்படிதல் எப்படி ஏமாற்றுதலாக ஆகும்? குடும்பத்தின் சூழ்நிலைகள், வாழ்க்கையின் நிலைகள் ஆகியவற்றின் பலவீனமான உணர்ச்சிச் சூழல்களில் அதை வெறும் ஒரு செயலற்ற நிலையாகப் பார்க்கக்கூடிய கண் ஏன் இல்லாமற் போனது? எல்லா கதாபாத்திரங்களிடமும் ஒரே மாதிரி நீதி காட்ட வேண்டிய ஒரு கதாசிரியருக்காவது அது இருந்திருக்க வேண்டாமா?''
உணர்ச்சியே இல்லாமல் திருப்பி அடித்தேன்:
“ஒரு கதாசிரியருக்கு வாழ்க்கையும் கதையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற இந்த புதிய தத்துவப் பாடம் நன்றாகத்தான் இருக்கிறது. எப்படிப்பட்ட கொலைச் செயலையும் நியாயப்படுத்தக் கூடிய இந்த தார்மீகப் பார்வை நன்றாகவே இருக்கிறது. என்னுடைய பழைய கால சிநேகிதி எந்த அளவிற்கு வளர்ந்து விட்டிருக்கிறாள்! பெரியவளாக ஆகியிருக்கிறாள்! நல்லது! சந்தோஷம்!''
அழுவதைப்போல இருந்தது பதில்:
“நான் எதையும் நியாயப்படுத்தவில்லை. அதற்குத் தகுதியானவள் இல்லை என்ற விஷயமும் எனக்குத் தெரியும். வேண்டிய வயதும் பக்குவமும் மனபலமும் இல்லாமலிருந்த ஒரு இளம் பெண்ணின் பழைய கால இக்கட்டான நிலையை ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான். அந்த குறைபாடுகள்... அவை உண்டாக்கிய பாதிப்புகள்... எழுத்துப் பிழைகள்... அவை எதையும் மறக்கவில்லை. எனினும்...''
முடிந்து போய்விட்ட விஷயங்கள் என்று நினைத்திருந்த பழைய கவலைகளை அந்த முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளும் வார்த்தைகளும் தட்டி எழுப்பக் கூடியவையாக இருந்தன. தளர்ந்து போன உணர்ச்சிகள் நிறைந்த பலவீனமான வார்த்தைகளின் மூலம் விளக்கினேன்:
“இல்லை... நான் இவை எதையும் கூறுவதற்காக வரவில்லை. கூறிக்கூறி வழி தவறிச் சென்றுவிட்டது. குழப்பம் உண்டாகிவிட்டது. நான் வருவேன் என்று எப்படி தெரிந்துகொண்டாய், எப்படி எதிர்பார்த்தாய் என்று கேட்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்தேன். முன்பே வேண்டாம் என்று விட்டெறிந்து விட்டு... இல்லை... வேண்டாம்... நான் எதையும் கேட்கவில்லை. எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பவுமில்லை. அனுபவிக்க வேண்டியவை அனைத்தையும் என்னை...''
அவள் இடையில் புகுந்து சொன்னாள்:
“எதிர்பார்த்தேன் என்று இங்கு யாரும் கூறவில்லையே! இல்லை... நான் எந்தச் சமயத்திலும் எதிர்பார்த்ததில்லை. எதிர்பார்ப்பதற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்று எனக்குத் தெரியும். எதிர்பார்க்காமல் இருப்பதற்கு நானே கற்றுக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்கிடையில்தான் உங்களின் மனைவி இங்கே வந்தாங்க...''
அதிர்ச்சியடைந்து விட்டேன்:
“யார்? மனைவியா? யாருடைய மனைவி?''
அவள் தொடர்ந்து சொன்னாள்:
“உங்களுடைய மனைவி... இங்கு சிகிச்சைக்காக வந்திருக்காங்கள்ல... அவங்க... கீழே உள்ள தளத்தில்... ஏன்... அவங்க இங்கே வரக்கூடாதா? வந்தாங்க... வந்தபோது இரண்டு நாட்களில் தன் கணவர் வருவார் என்று சொன்னாங்க.''
அதிர்ச்சியடைந்து நின்றேன்.
“அவள் எதற்கு இங்கே வந்தாள்?''
“தன்னுடைய கணவரை அந்தக் காலத்தில் வசீகரித்து கெட்ட மனிதனாக ஆக்குவதற்கு முயற்சித்த - நல்ல குணமில்லாத பெண்ணைச் சற்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்திருக்கலாம். பாவம்... மூட்டுவலியின் வேதனையுடன் இந்த படிகளில் ஏற முடியாமல் ஏறி வந்தாங்க.''
“அதற்குப் பிறகு?''
“நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் பற்றி என்னவெல்லாம் கூறி வைத்திருக்கிறீர்கள்? இப்போது கூறியதைப்போல எதுவும் இல்லையே! எல்லாவற்றையும் கற்பனை பண்ணி... உண்டாக்கி... இல்லையா?''
நான் தொடர்ந்து சொன்னேன்:
“கற்பனை பண்ணியும் அதை உருவாக்கியும்தான் கதையைக் கூற வேண்டும் என்று என்னிடம் எப்போது யார் கூறியிருக்கிறார்கள்?''
“அது கதைதானே? உண்மை இல்லையே!''
அவளுடைய தூக்கக் கலக்கம் வந்து விட்டிருந்த கண்களையே பார்த்துக்கொண்டு சொன்னேன்:
“வாழ்க்கையில் இருக்கும் உண்மைகள்தான் சற்று தாண்டும் போது கதைகளாக ஆகின்றன என்று நான் கூற வேண்டுமா? நமக்கிடையே இருந்த உண்மைகளையும் கதைகளாக நினைத்துக் கொள்ள வேண்டிய காலம் எப்போதோ கடந்து சென்றுவிட்டது என்ற உண்மையையும் நான் ஞாபகப்படுத்த வேண்டுமா? என்னுடைய மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நான் அதை மட்டுமே செய்திருக்கிறேன். கதைகளை கதைகளாகக் கூறுவது...''
அதற்கு பதில் வரவில்லை. ஏதோ தூரத்தில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதைப்போல பேசினாள்:
“மோகனன், உங்களுடைய மகளை முன்பு ஒருமுறை ஒரு திருமணம் நடைபெற்ற இடத்தில் வைத்துப் பார்த்தேன்.''
இடையில் புகுந்து கோபம் இருப்பதைப்போல காட்டிக் கொண்டு சொன்னேன்:
“மோகனனா? எத்தனை முறை இதையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருக்கிறாய்? மோகனன்! மோகனன்! எதுவுமே இல்லையென்றாலும் நான் வயதில் மூத்த ஆள் அல்லவா? பெயரைக் கூறலாமா?''
எதையோ நினைத்து கவலை தோய்ந்த சிரிப்புடன் தொடர்ந்து சொன்னாள்:
“உண்மைதான்... அப்படி கூறியிருக்கக் கூடாது. ஞாபகம் இருக்கிறது... குஞ்ஞன்புவின் அப்பா... இல்லையா? அப்படித்தானே?''
கவலையுடன் நான் திருத்தினேன்:
“இல்லை... அப்படி இல்லை.. அன்று நான் சொன்னது தவறாகிவிட்டது. குஞ்ஞன்பு பிறக்கவே இல்லை. அவன் கோபித்துக் கொண்டு போய்விட்டான். அம்மா வேறு பக்கம் போய்விட்டாள் என்று கூறி, பிறப்பதற்கு சம்மதிக்கவில்லை. இப்போது வேறு ஒரு மகளும் மகனும் மட்டும் இருக்கிறார்கள். குஞ்ஞன்பு இல்லை.''
அவள் உறக்கம், கவலை ஆகியவற்றின் போராட்டத்தில் இருக்கிறாள் என்று தோன்றியது.
“மகள்! திருடி! ஒன்றுமே தெரியாததைப்போல அன்று... அந்த திருமணம் நடைபெற்ற இடத்தில் வைத்து அறிமுகமானாள். பிறகு... தலையிலிருந்து கால் வரை வெறித்துப் பார்த்து நின்று கொண்டு என்னை வெட்கப்படும்படி செய்தாள். இன்னும் கொஞ்சம் சிறு குழந்தையாக இருந்திருந்தால், நான் வாரி எடுத்து அந்தக் கண்களில் முத்தம் கொடுத்திருப்பேன். அந்தக் கண்களைப் பார்த்தபோதே புரிந்துவிட்டது... முன்பு பார்த்த கண்கள் என்று...''
நான் சொன்னேன்:
“அதற்குப் பிறகு அவள் பெரிய ரசிகையாக ஆகி அல்லவா திரும்பி வந்தாள்? வீட்டிற்கு வந்து தன் தாயிடம் கூறுவதைக் கேட்டேன். "அப்பாவின் அழகுணர்வு முன்பும் மிகவும் அருமையாக இருந்திருக்கிறது என்பதற்கான சான்றைப் பார்த்தேன்” என்று கூறிக்கொண்டிருந்தாள்.''
தன்னுடைய அழகைப் பற்றிய அந்த சிறந்த பாராட்டை ரசிக்கவில்லையென்றாலும், கவனிக்கவே இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக கிண்டலாக சொன்னாள்:
“அப்பாவின் மகள்தானே? வாயில் நாக்கு குறைந்தால்தானே ஆச்சரியம்?''
தொடர்ந்து கேட்டாள்:
“மகன் நியூயார்க்கில்... இல்லையா?''
ஆச்சரியத்துடன் பார்த்தேன். பாவம்... என் மகனைப் பற்றி எதற்கு தெரிந்துகொள்ள வேண்டும்? எப்படி தெரிந்துகொண்டாள்? அந்த சந்தேகத்தைப் புரிந்து கொண்டதைப்போல் விளக்கினாள்:
“என் மகள் பார்வதி நியூயார்க்கில்தானே இருக்கிறாள்? அவள் சொல்லி, தெரிந்து கொண்டேன். அவளுடைய மிகவும் நெருங்கிய நண்பனாம்.''
அதிர்ச்சியுடன் கேட்டேன்:
மிகவும் நெருங்கிய நண்பன்! ஏதோ பிறந்து வளர்ந்து நடந்த பாதையில் உண்டான நினைக்க முடியாத பயம் வார்த்தைகளாக வந்தன:
“உண்மையாகவா? மிகவும் நெருங்கிய நண்பனா? அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே! ஏதாவது வெள்ளைக்காரப் பெண் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கு அழைத்தால்கூட சொல்பவனாயிற்றே! உண்மையாக இருந்தால், கஷ்டம்தான். தேவையில்லை. அடுத்த தலைமுறைக்கு பரவுகிற பழைய சாபம்...''
அவள் முழுமையான அமைதியுடன் இருந்தாள். சமாதானப் படுத்துவதைப்போல அவள் கூறினாள்:
“பயப்பட வேண்டாம். அவர்கள் நெருங்கினாலும் ஆபத்து எதுவும் உண்டாகவில்லை. பார்வதி அவளுடைய தாயைப்போல கோழை அல்ல. அவளுக்கு விருப்பமுள்ளதை மன தைரியத்துடன் செய்வதற்கு அவளுக்குத் தெரியும்.''
நான் சொன்னேன்:
“ஆனால், எனக்கு பயமாக இருக்கிறது. பார்வதி அவளுடைய அன்னையைப்போல இல்லாவிட்டால், என்னுடைய மகனும் தன்னுடைய தந்தையைப்போல இல்லை. தனக்கு விருப்பமானதை மன துணிச்சலுடன் அவனும் செய்வான். கடந்த காலத்தின் கோழைத்தனங்களை வஞ்சனையாகவும், அந்த வஞ்சனையைப் புரிந்துகொள்ளாமல் அதற்குப் பின்னாலும் பின்னாலும் குவியலாகக் குவியும் கோழைத்தனத்தை முழுமையான முட்டாள்தனமாகவும் நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன் அவன். அவனிடம் பழிக்குப் பழி என்ற ரத்தம் வந்து சேர்ந்துவிடக் கூடாதே என்ற பயம் எனக்கு இருக்கிறது.''
அவளுக்கு எந்தவொரு அதிர்ச்சியும் உண்டானதாகத் தெரியவில்லை.
“பிறக்காமல் போன குஞ்ஞன்புவின் தந்தையின் மகன்தானே அவன்? அவன் அப்படிப்பட்ட ஒருவனாக எந்தச் சமயத்திலும் ஆக மாட்டான். விரும்பினாலும் முயற்சித்தாலும் முடியாது. இங்கே பாருங்க... எனக்கு ஒரு கனவு இருக்கிறது. மிகவும் அழகான ஒரு கற்பனை... சிந்தனை... அது உண்மையாக நடக்காமல் போகாது. பாருங்க... நம்முடைய இந்த பிள்ளைகள்... நம்மால் முடியாததை அவர்கள் அடைவார்கள். அது மட்டும் உண்மை. அப்போது கோபமெல்லாம் விலகி, குஞ்ஞன்பு திரும்பி வருவான். அவன் நம்முடைய பேரனாகப் பிறப்பான். நாம் அனுபவித்த கவலைகள் அனைத்தையும் அவனுடைய பிஞ்சு கன்னங்களின் புன்சிரிப்பு அழித்துவிடும். அவனைக் கொஞ்சுவதற்கு காலம் நமக்கு ஆயுளைத் தரும்.''
தன்னுடைய உள்மனதில் மென்மையாகவும் பலவீனமாகவும் இருக்கும் ஆசைகளின்- பிறவி கிடைக்காத குழந்தையின் கன்னங்களில் முத்தம் பதித்து, அந்தப் பிஞ்சு கண்களை அவள் திறக்கச் செய்து கொண்டிருக்கிறாளே! வெளிச்சத்தின் மெல்லிய கீற்றுகளின் நிழல் ரேகைகூட கூச்சத்தை உண்டாக்கக்கூடிய சின்னஞ்சிறு கண்கள்... காலமென்னும் அடர்த்தியான இருள் படர்ந்த குன்றின் மேலே எங்கோ ஒரு பந்தத்தின் வெளிச்சம்... குஞ்ஞன்புவின் தாத்தாவா வேறு யாராவதா?
அவளிடம் என்ன கூறுவது?
அனைத்தையும் சமர்ப்பணம் செய்த ஒரு பழைய கால காதலின் முழு அடிப்படையாகவும் இருந்த அந்த பாழாய்ப் போன நிழலிடம்...? வாடி கீழே விழுந்துவிட்ட அந்த பழைய சூரியகாந்தியிடம்?
எதுவும் கூறுவதற்கில்லை.
அவள் பதிலெதையும் கேட்க விரும்பவில்லை என்று தோன்றியது. ஏனென்றால், மீண்டும் கேட்டாள்:
“அன்று நான் சொன்னது எந்த அளவிற்கு உண்மையாகிவிட்டது. இல்லையா? உண்மையைச் சொல்லுங்க. உங்களின் மனைவி என்னைவிட எந்த அளவிற்கு சிறந்தவள்! எந்த அளவிற்கு பொருத்தமானவள்! வாழ்க்கையும் எவ்வளவு சந்தோஷமாகவும் இனிமையாகவும் அமைந்துவிட்டது. இல்லையா? உண்மையைச் சொல்லுங்க...''
மிகுந்த கவலையை உண்டாக்கக் கூடிய கேள்வியாக அது இருந்தது. எனினும், சொன்னேன்:
“ஒன்றுக்கு பதிலாக இன்னொன்று இல்லை. பெண்ணே! எதுவும் எப்போதும் சரியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. முன்பு நீ கூறுவாய் அல்லவா...? உலகம் மிகவும் பரந்தது என்று... அப்படியா? அப்படி இல்லையே! அது உருண்டு கொண்டே இருக்கிறதே! அதனால்தானே நாம் ஆரம்பமான இடத்திற்கே திரும்பவும் வந்து சேர்ந்திருக்கிறோம். இப்போது பலவீனமான உடல் உறுப்புகளையும், நிறைவேறாத ஆசைகளையும் கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். மரணத்தை நெருங்கியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களாக ஆகிவிட்டோம். எதற்குமே லாயக்கற்றவர்களாக ஆகிவிட்டோம். இங்கு இளமைக் காலத்தில் பார்த்த சிவப்பு நிற வாகை மலர்கள் இல்லை. நம்பிக்கைக்கான தைரியத்தை அளிக்கும் அப்பிராணியான யக்ஷி இல்லை. எதற்கும் தைரியம் இல்லாத... நம்மீதே நம்பிக்கை இல்லாத... அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கும் நாம் மட்டும்...
கடந்த காலத்தின் ஏதோ பூங்காவின் சிமெண்ட் பெஞ்சில் அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்று தோன்றியது. இப்போது உறங்கிவிடும் என்று தோன்றிய கண் இமைகளை பாதியாகத் திறந்து வைத்துக்கொண்டு அந்த பழைய கால நினைவுகளுடன் கேட்டாள்:
“பழைய அந்த கதையின் நாயகனால் இறுதியில் அவளையே திருமணம் செய்துகொள்ள முடிந்ததா?''
திருப்பிக் கேட்டேன்:
“கதையை வாசித்து அதில் வாழவும் செய்த உனக்குத் தெரியாதா?''
உறக்கத்தின் பாசி படர்ந்த தரையில் தடுமாறிக் கீழே விழ இருந்த வார்த்தைகளில் பதில் வந்தது:
“எனினும், கதாசிரியரின் பேனா முனைதானே சர்வ சக்தி படைத்தது? எந்த நிமிடத்திலும் திருத்தி எழுதலாமே! சந்தோஷ முடிவாக ஆக்கிக் கொள்ளலாமே! யாரையும் அழ வைக்காமல் இருக்கலாமே!''
மருந்தின் கடுமையான விளைவாலோ, அவளிடம் இருந்த களைப்பின் விளைவாலோ அல்லது இரண்டும் சேர்ந்து உண்டாக்கிய செயலற்ற தன்மையாலோ- என்ன காரணத்தால் என்று தெரியவில்லை- கண்கள் உறக்கத்தை நோக்கி சொருகிச் சொருகிப் போய்க் கொண்டிருந்தன. கண்களைத் திறந்து வைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு, இமைகளை மூடி... மூடி... திறந்து கொண்டு, மிகமிக பலவீனமான குரலில் இருந்தது அவளுடைய வேண்டுகோள்.
அந்த கவலை நிறைந்த முகத்தைப் பார்த்தபோது, பழைய வாகை மரத்திற்குக் கீழே இருந்த இளம்பெண் எனக்குத் தோன்றினாள். ஆர்வம் நிறைந்த முகத்துடன்- முகத்தில் விழுந்த மாலை நேர ùளிச்சத்தின் பொன் நிறத்துடன். அந்த இளம்பெண்ணிடம்தான் பதில் சொன்னேன்:
“ஒரு கட்டத்தைத் தாண்டியவுடன், கதாசிரியரிடமிருந்து கதாபாத்திரங்கள் கதைகளைப் பிடித்துப் பறித்துக்கொள்கிறார்கள். தங்களுடைய இருப்பையும் தனித்துவத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்களுக்குத் தோன்றுவதை அவர்கள் செய்துகொள்கிறார்கள். பேசுகிறார்கள். சில கதைகள் சோகத்தில் முடியும். சில கதைகள் நகைச்சுவையில் முடியும். இங்கு கதாசிரியர் அமைதியான சாட்சியாக நின்று கொண்டிருக்க கட்டாயப்படுத்தப்படுகிறான்.''
தூக்கத்தில் உளறுவதைப்போல பதில் வந்தது. நிறுத்தியும் நீட்டியும் இழுத்தும் பறக்கச் செய்தும்...
“அப்படியென்றால், நான் கூறட்டுமா? நான் வாசித்ததும் வாழ்ந்ததுமான அந்தக் கதை சோகமயமானது என்று சிலர் சொன்னார்கள். வேறு சிலர் "காதல் கதை’’ என்றார்கள். வேறு சிலர் "காமெடி’’ என்று குறிப்பிட்டார்கள். அனைத்தும் சேர்ந்த ஒன்று அது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நாயகனை நாசமாக்கிய அதன் நாயகி இப்போது இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிவடைந்து, உறுப்புகளில் பாதிப்பு உண்டாகி, பெண்ணாகவே இல்லாமல் ஆகி படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். கடவுள் அவளுக்கு சாபமிட்டுவிட்டார். ஒரு மார்பகமும் கர்ப்பப்பையும் அரித்துப் போய்விட்டன. விதி அவளுக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டது. இனி எந்தவொரு பிறவியிலும் அவளால் ஒரு பெண்ணாகப் பிறக்க முடியாது. எந்தவொரு கதையிலும் நாயகியாக யாராலும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. யாரையும் மோசம் பண்ணவும் முடியாது. முன்பு கெஞ்சி கெஞ்சி கேட்டும், மன்னிப்பு தரவில்லை அல்லவா? இப்போது கேட்க மாட்டேன். கிடைத்தாலும், இனி பயனுமில்லை.''
மிகுந்த தடுமாற்றத்துடன் தொடர்ந்து சொன்னாள்:
“அன்று மோசம் பண்ணிவிட்டுப் போகத் தோன்றியது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது இல்லையா? இல்லாவிட்டால் என் பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட கதிதான் கிடைத்திருக்கு மல்லவா? அந்த பாவம் மனிதனைப்போல மருத்துவமனையிலிருந்து மருத்துவமனைக்குப் பின் தொடர்ந்து இந்த நரக வேதனை முழுவதையும் அனுபவிக்க வேண்டியதிருந்திருக்குமே!''
அதிர்ச்சியடைந்து கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். திறந்து கிடந்த சாளரத்தின் வழியாக வெளியே எங்கோ பார்த்துக்கொண்டு, தனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாத யாருடைய காரியத்தையோ கேட்டுக்கொண்டிருப்பதைப்போல அந்தச் செயல் இருந்தது. ஆனால், வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவிற்கு மனதிற்கு வெறுமை பரவி விட்டிருந்தது. அப்படி உட்கார்ந்து கொண்டிருந்ததில், கேட்டுக்கொண்டிருந்த பேச்சு நின்று போனதும் அமைதி நிலவிக் கொண்டிருந்ததும் தெரியவேயில்லை. தூரத்தில் எங்கோ மலர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஒரு வாகை மரத்தின் சிவப்பு பந்தலுக்குக் கீழே எப்போதோ மலர்ந்து போய் விட்டிருந்த ஒரு வெளுத்த, சுறுசுறுப்பான இளம்பெண்ணை மனம் தேடிக் கொண்டிருந்தது. அந்த செயலின் இறுதியில் ஏமாற்றமடைந்து திரும்பி வந்து முன்னால் பார்த்தபோது, அவள் கண்களை மூடிப் படுத்திருந்தாள். ஒருவரோடொருவர் எதுவுமே பேசிக்கொள்ளாமல், அவள் கண்களை மூடிப் படுத்திருந்தாள். அந்த முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு அவன் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதிற்குள் சூறாவளியும் கடலின் இரைச்சல் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன.
இதில் எங்கே தவறு நேர்ந்தது? எங்கு சரியாக நடந்தது? தவறு, சரி ஆகியவற்றின் வேறுபாடுகளை யார் முடிவு செய்வது? அதற்கான பின்விளைவையும் பிராயச்சித்தத்தையும் அளிப்பது யார்?
ஒரு பெரிய போராட்டத்திற்குப் பிறகு உணர்ச்சி பொங்க அழைத்தேன்:
“சக்கீ!''
காதல் வயப்பட்டிருந்த உணர்ச்சிமயமான காலங்களில், கடிதங்களில் அவளை அழைத்திருந்த செல்லப் பெயர் அது. அவள் அதைப் பற்றி ஒருமுறை எழுதவும் செய்திருக்கிறாள்.
“எப்போதும் என்னை சக்கீ என்று மட்டும்தானே அழைத்திருக்கிறீர்கள்? எனக்கு அது மிகவும் விருப்பமான பெயராக இருந்தாலும், எந்தச் சமயத்திலும் என்னுடைய உண்மையான பெயரைச் சொல்லி என்னை அழைத்ததே இல்லையே! அப்படி அழைத்துக் கேட்பதற்கு எவ்வளவு ஆசையாக இருக்கிறது தெரியுமா? நான் அறிமுகமான புதிதில் ஒரே ஒருமுறை பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறீர்கள். சார், அது என்று என்று ஞாபகத்தில் இருக்கிறதா?''
அந்த ஞாபகத்தில் பலத்தால் மீண்டும் அழைத்தேன்:
“சக்கீ!''
அவள் எதையும் கேட்டதாகத் தோன்றவில்லை. உறங்கி விட்டாள் என்று தோன்றியது.
உறக்கத்தின் அடர்த்தியான ஆழத்தை நோக்கி இறங்கி இறங்கி போய்க் கொண்டிருப்பதைப்போல.... மூச்சுவிடும் போது வந்த சீரான ஓசை ஒரு உறக்கப் பாடலின் அல்ல- பழமையான ஒரு பாடலின் இசையைப் போல இருந்தது.
அந்த முகத்தின் அமைதித் தன்மையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அந்த நாசி, அந்த பழைய பதினெட்டு வயது கொண்ட இளம்பெண்ணின் நாசியைப்போலவே வெளுத்து, சிவந்து, உயர்ந்து... முன்பு சற்று தொட வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஏங்கி, சுட்டு விரலை நீட்டிய.... வேண்டாம்.... எண்ண வேண்டாம்... வேண்டாம்....
திடீரென்று தாங்க முடியாத ஒரு அதிர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு, அழுத்தப்பட்ட தேம்பலின் நடுங்கிக் கொண்டிருக்கும் சத்தம்... பார்த்தபோது, அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக் கொண்டு அங்கிருக்க முடியவில்லை. மீண்டும் அழைத்தேன்:
“சக்கீ! சக்கீ! சற்று கண்களைத் திற. நான் கூறவேண்டிய ஒண்ணைக் கேளு...''
ஆனால், அவள் அசையவில்லை. வாய் திறந்து பேசவில்லை. உறக்கத்திலேயே அந்த தேம்பல் சத்தம் வந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. படிப்படியாக அந்த அழுகைச் சத்தம் இல்லாமற் போனது. இடையில் அவ்வப்போது மட்டும் கேட்டுக் கொண்டிருந்த பெருமுச்சுகள்.... இறுதியில் பாதி மட்டுமாக ஆன அந்த மார்பகத்தின் நடுக்கங்கள்... பிறகு... பிறகு... அதுவும் இல்லாமற் போனது.
சிறிது நேரம் அந்த அழகான முகத்தைப் பார்த்து ஆறுதலடைந்து கொண்டிருந்தேன். பிரார்த்தித்தேன்.
“ஒரு பழைய நண்பனின் எந்தக் காலத்திலும் முடிவடையாத அன்பு, ஒரு தாலாட்டுப் பாடலாக உன்னை ஆசீர்வதிக்கட்டும்...''
மெதுவாக எழுந்தேன். குனிந்து, அந்த உடலில் தெரியாமல் விரலின் நுனிகூட பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கொண்டே, அந்த போர்வையின்மீது இருந்த மடிப்பைப் பிடித்து உயர்த்தி, கழுத்து வரை இருக்கும் வண்ணம் சரி பண்ணி விட்டேன். அதற்குப் பிறகு ஒரு நிமிட நேரம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். ஏதோ ஆகாயத்து தேவதை பாடுவது காதில் விழுந்தது.
"தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ!
அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!"
ஓசை எதுவும் உண்டாக்காமல் வெளியே வந்தேன். அந்த அழுகைச் சத்தம் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ துயரத்தின் வெளிப்பாட்டைப்போல... படிகளின் வழியாக கீழே பாதி வந்தபோது, கையில் ஒரு பையுடன் மேனன் மேல்நோக்கி வந்து கொண்டிருந்தான். பார்த்ததும், பரபரப்பு கலந்த முழுமையான உரிமையுடன் கேட்டான்:
“சார், போறீங்களா? நான் வந்த பிறகுதான் போவேன் என்று ஒத்துக் கொண்டீர்களே?''
விளக்கிச் சொன்னேன்.
“கொடுத்திருந்த மருந்து சற்று கனமானது என்று தோன்றுகிறதே! நான் சொல்லும்போதே, உறக்கம் ஆரம்பமாகிவிட்டிருந்தது. பேசிக் கொண்டிருப்பதற்கு இடையிலேயே தூங்கியாச்சு... அதனாலதான் நான் புறப்பட்டுட்டேன்...''
அவன் அதை எதிர்பார்த்ததைப்போல தோன்றியது.
“சாப்பிட்ட ஒரு மருந்தின் ஸைட் எஃபெக்ட் உறக்கம்தான். எனினும், சார் உங்களுடன் பேசிக் கொண்டிருந்தால் தூங்க மாட்டாள் என்றும், மதிய உணவு சாப்பிட்டு முடித்தபிறகு, அதை மாற்றலாம் என்றும் நான் நினைத்திருந்தேன். பரவாயில்லை... இனி உறங்கி எழுந்திருப்பதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்... சார், உங்களைப் போவதற்கு முன்பு பார்க்கலாம் அல்லவா?''
நான் சொன்னேன்:
“நிச்சயமாக பார்க்கலாம்.''
மேல்நோக்கி நான்கைந்து படிகள் ஏறி நடந்து விட்டு, பின்னால் திரும்பி, எனக்கு அருகில் வந்து சிரித்துக் கொண்டே அவன் சொன்னான்:
“சார், முன்பு முதல் முறையாகப் பார்க்கும் ஒரு அறிமுகமில்லாத மனிதனாக இருந்தும், என்னிடம் கருணை காட்டி ஒரு பொய்யைச் சொன்னீர்கள். உங்களுடைய மனதை வேதனைப்பட வைத்து, என்னை சமாதானப்படுத்துவதற்காக பொய்யைச் சொன்னீர்கள்.''
பதைபதைப்புடனும் கவலையுடனும் நான் தடுமாறிய குரலில் கேட்டேன்:
“நானா? உங்களிடமா? பொய்யா?''
அந்த இதயத்திலிருந்து வரும் சிரிப்பின் இனிமையுடன் சொன்னான்:
“ஆ! அதே நீங்கள்தான்... ஒரு பொய் ஞாபகத்தில் இருக்கிறதா? அன்று சொன்னீர்கள் அல்லவா? ஒருதலைப்பட்சம் என்றோ என்னவோ... அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு சொன்ன பொய் அல்லவா? அவள்... என்னுடைய மனைவி எல்லா விஷயங்களையும் என்னிடம் கூறிவிட்டாளே!''
இப்போது நான் அவனை இறுகக் கட்டிக் கொண்டேன். என்னையே அறியாமல் கட்டிப்பிடித்து விட்டேன்.
மெதுவான குரலில் சொன்னான்:
“Great... great... really great''.
அங்கு... அந்த மருத்துவமனையின் படிகளில் இருந்து இறங்கி, இவை அனைத்தையும் கதைகளாக மாறுவதற்கு முன்னால் குறித்து வைக்கவேண்டும் என்பதற்காக நான் ஓடி வந்தேன். ஆனால், என்ன செய்யட்டும்? இந்த விஷயங்கள் பெரும்பாலும் பழையவையே. அதனால்தான் சிறிதளவு மட்டுமே சிந்திக்கக் கூடிய, சிறு உலகத்தை மட்டுமே பார்க்கக்கூடிய, எதையும் பார்க்க மறுக்கும் சிறிய மனிதர்கள் வாழும் நம்முடைய உலகத்திற்குள்ளேயே அவை கதைகளாக மாற ஆரம்பிக்கின்றன. கதாபாத்திரங்கள் கதையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்கள். என்னையும் இன்னொரு கதாபாத்திரமாக அவர்கள் ஆக்குவதற்கு முன்னால், நான் விலகி நிற்கிறேன். நான் வெறும் ஒரு கதாசிரியர் மட்டுமே.
ஒரு சாதாரண குடும்பத்தில், சாதாரண கல்வியைப் பெற்று, வெறும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன்... என்னுடைய சிந்தனையோ செயலோ எதுவும் புனிதமானதோ உயர்ந்ததோ அல்ல. பொறாமைப்படுகிற மாதிரி என்னிடம் எதுவுமில்லை. மரணத்துடனோ அதற்கு முன்போ நானும் மறக்கப்பட்டு விடுவேன். அதைப் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை. விதியின், கடவுளின் குரூரத்தைப் பற்றி புகாரோ பதைபதைப்போ இல்லை. சத்தியமாக.
ஆனால், வாலிபத்தின் இளமையான எண்ணங்கள் உண்டாக்கிய ரசனைகளின், உணர்வுகளின் சங்கமத்தில் நான் ஒரு இளம் பெண்ணையும் அவளின் மூலம் வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் நேசிக்க ஆரம்பித்தேன். அதிகமாக... அதிகமாக... நேசித்தேன். அது ஒரு கொடை என்றும், அதே அளவில் அந்த நேசிப்பு திரும்பவும் கிடைத்திருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன். ஏனென்றால், அதிலிருந்து எனக்கு மிகவும் அருமையான கனவுகளும் கற்பனைகளும், வெவ்வேறு வகையான சிந்தனைகளும், தனிப்பட்ட சந்தோஷங்கள் நிறைந்த இனிய கொண்டாட்டங்களும் கிடைத்தன. கஷ்டம்! பல வேளைகளில் பெரும் வேதனை நிறைந்த பெருமழைகளும் கிடைத்தன. அதில் கவலை தோன்றவில்லை. அதன் சங்கமம்தானே அதன் உண்மையே.
அவற்றை எழுத்துகள் என்னும் கடவுளின் வடிவத்தில் வரைய நான் விரும்பியிருக்கிறேன். வாசிப்பு என்ற தேவாலயத்தில் கதையின் களத்தை எழுதி நடையில் வைக்க கடுமையாக முயற்சித்திருக்கிறேன்.
இந்தக் களத்தின் கோடுகளுக்குள் விழுந்து கிடக்கும் நிம்மதி யின்மையின், அச்சத்தின், சந்தோஷ வெளிப்பாடுகளின், ஆறுதல்களின் வர்ணஜாலம்.
அவை என்னுடைய உள் மனதின் வாடிய பகுதிகளிலிருந்து கீழே விழுந்து சிதறி பரவிக் கிடக்கும் சிந்தனைச் சிதறல்கள்....
என்னுடைய தனிமை வேதனைகள் நிறைந்த இந்த உணர்வுகள் உங்களுடைய இதய ஓசைகளின் இரண்டறக் கலக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படுகிறேன்.
இதில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் என்னுடைய வாழ்க்கையில் உண்டாக்கிய திருப்பங்களையும் பாதிப்புகளையும் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.
நாற்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னால், என்னுடைய வாலிபப் பருவத்தின் ஆரம்பகால கனவுகளில் சிலிர்ப்புடன் வந்து நின்ற இளம் பெண்! நீ எதேச்சையாக இதை வாசித்து, உன்னை அடையாளம் தெரிந்து கொண்டால், என்னை மன்னித்து விடு. இதை எழுத வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு உண்டானபோது, நீ உட்பட யாரும் உன்னை, இதில் அடையாளம் காணக் கூடாது என்று நான் மனப்பூர்வமாக உறுதியாக நினைத்தேன். என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு கவனித்து, ஒவ்வொரு வார்த்தையையும் வரியையும் எச்சரிக்கையாக எழுதினேன். எனினும், அடையாளம் கண்டுகொள்ள - உனக்கு மட்டுமாவது - முடிந்தால் என்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்க வேண்டும்.
வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தை உண்டாக்கிய, மிகவும் அதிகமாக ஆட்சி செய்த ஆளைப் பற்றி, சம்பவத்தைப் பற்றி எழுத வேண்டிய சூழ்நிலை வரும்போது இதைத் தவிர நான் வேறு எதை எழுதுவது?
உன்னை இதிலிருந்து நான் எப்படி விலக்கி வைக்க முடியும்? மறக்க முடியும்?
வாசகர்களை எப்படி ஏமாற்றுவது? வஞ்சிப்பது?
என்னையே எப்படி ஏமாற்றுவது? மோசம் செய்வது?
இந்தப் பெரிய உலகத்தில் மிகவும் சாதாரண சிறிய உயிர்களேயான மட்டுமான நம்முடைய காதல் தோல்விகளின் வாடாத இந்த மலர்கள், வழியோரத்தில் இருக்கும் இந்த வேலிக்கும் கீழே கிடக்கட்டும். வண்ண அழகு இல்லை. இனிமை இல்லை. வாசனை இல்லை.
வேறு யாரும் இதை அடையாளம் காணமாட்டார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். எனினும், இவையும் மலர்களாக இருந்தன என்று காலம் சாட்சியாக இருந்து கூறுமல்லவா?
இளமையின் ஆரம்ப காலத்தில் நம்முடைய கனவுகளையும் ஆசைகளையும் விருப்ப சிந்தனைகளையும் உயிரின் ஒளியைக்கூட சமர்ப்பணம் செய்து, என்னுடைய குருதியையும் நீரையும் கொடுத்து விதைத்து நனைத்து வளர்த்து உண்டாக்கிய மலர்கள்! வரலாற்றின் பாதையோரத்தில் அவை அனாதையாக அங்கு கிடக்கும்போது கூட, ஒரு காலத்தில் அது நமக்கு எந்த அளவிற்கு விருப்பத்திற்குரியதாக இருந்தது என்ற உண்மை என்னவொரு ஆறுதலாக இருக்கிறது! இல்லையா?
முன்பு ஒரு காலத்தில், ஒரு விஜயதசமியின் குளிர்ச்சியான அதிகாலைப் பொழுதில், கன்னியாகுமரியில் இருக்கும் தேவியின் ஆலயத்தில் எதோச்சையாக சந்தித்தபோது, உதயசூரியன் தூரத்தில் எங்கோ, பரந்து விரிந்த கடலின் கண்களால் பார்க்க முடியாத தொலைவில், தலையை உயர்த்திக் கொண்டிருந்தபோது, அந்த இளம் குளிரின் நடுக்கத்தில் நான் நின்று கொண்டிருந்தபோது, என்னையே அறியாமல் ரிக் வேதத்திலிருந்து இரண்டு வரிகளைக் கூறியதை நீ நினைத்துப் பார்க்கிறாயா? அதிகாலைப் பொழுதின் துடிப்பைப் பற்றி- சூரிய பிரகாசத்தைப் பற்றி உள்ள இரண்டு வரிகள். அதைக் கேட்டவுடன் நீ சொன்னாய்:
“இந்த சமஸ்கிருதத்தையெல்லாம் நான் கேட்க விரும்பவில்லை. எதுவுமே புரியாமல் கேட்டு என்ன பிரயோசனம்?'' அர்த்தம் தெரியாமலே உபநயனத்திற்கும் சமாவர்த்தனத்திற்கும் இடையில் உள்ள பிரம்மச்சர்ய விரத காலத்தில் உச்சரிப்பு சுத்தமில்லாமல் ஓதி அளித்ததாக இருந்தாலும், பிற்காலத்தில் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை நான் வாசித்திருக்கிறேன். நினைவில் அது இருந்ததால், நான் அதைக் கூறினேன்:
"IN LOVE THOU MADEST THE DAWN GLOW
IN LOVE THOU MADEST THE SUN SHINE.’’
உனக்கு அது மிகவும் பிடித்திருந்தது என்று தோன்றியது. ஏதோ புதிய அர்த்தம் கொண்ட பிரபஞ்சத்தையும் லட்சியத்தையும் கண்டதைப் போல அந்த நொடியே உன்னுடைய முகம் சிவந்து விட்டது.
கண்கள் ஒளிமயமாக ஆனது. அந்தக் கண்களில் காதலின் அடையாளங்கள் அலையடிப்பதை நான் பார்த்தேன். உன்னுடைய தம்பியும் தங்கையும் வேறு யாரோ ஒரு ஆளும் உன்னுடன் இல்லாமலிருந்தால், நான் உன்னுடன் சேர்ந்து நின்று கொண்டு வேறொரு சுலோகத்தை செவியில் முணுமுணுத்திருப்பேன்.
“உயர் வாகைதன் மலர்
உன் மேனிக்குத்தான் அன்பே!”
‘’அந்த பழைய வாகை மரத்தைப்போல நீயும் அடியிலிருந்து மேலே வரை தளிர்த்து, பூத்து நின்று கொண்டிருந்தாய் அல்லவா? அந்த ரிக்வேத சுலோகத்தை எத்தனை முறைகள் நீ என்னைத் திரும்பத் திரும்ப கூற வைத்திருக்கிறாய்? இறுதியில் நீயே மனப்பாடமாக ஆக்கிக் கொள்ளும் வரை... இல்லையா? பிறகு... பல நாட்களில், பல சந்தர்ப்பங்களில் நீ புதிய அர்த்தங்களுடன் அதைக் கூறி கேட்கச் செய்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அது உண்டாக்கிய காதலின் நறுமணம் இதோ... இப்போதும்.... இங்கே...
வாகை மரத்தின் வாடி காய்ந்த இலைகளாக காலம் உதிர்த்து விழுந்து கொண்டிருக்கும் முதுமையடைந்த இந்த காலம்போன காலத்தில், ஒரு பழைய இளமைக் கால பைத்தியக்காரனின் வலிப்பு ஓலத்தைப் போல நான் அந்த சுலோகத்தை மீண்டும் கூறட்டுமா?
"IN LOVE THOU MADEST THE DAWN GLOW
IN LOVE THOU MADEST THE SUN SHINE.’’
எவ்வளவு குறைவான நாட்கள்தான் என்றாலும், அது ஒரு உண்மையாக இருந்தது அல்லவா? உண்மையின் அழகு. அழகின் திருவிழா. திருவிழாவின் ஆன்மிக உற்சாகம்...
பழைய அர்த்தங்கள் இல்லையென்றாலும், அந்த தெளிவான உச்சரிப்பு குறைந்து போய் விட்டிருந்தாலும், என்னுடைய வயதான வார்த்தைகளின் பலவீனத்தில் ஸ்வரம், ராகம், தாளம் ஆகியவை இல்லாமல் போய் விட்டிருந்தாலும், இதற்குப் பின்னால் முன்பு இருந்த காதலையும் உண்மைத் தன்மையையும் நீ இப்போதும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். உன்னுடைய முகம் சிவந்து பிரகாசமாவதையும் கண்கள் ஒளிர்வதையும் இதோ... இப்போதுகூட என்னால் பார்க்க முடிகிறது. அந்த கறுகறுப்பான கண்களின் ஆழங்களில் உள்ளே இருக்கும் கண்ணீர்த் துளிகளில், எந்தக் காலத்திலும் வாடாத மலர்களின் வண்ணங்கள் இருக்கின்றன என்று நம்புவதற்கு நான் ஆசைப்படுகிறேன். மரணமடையாத இளமையின், அழியாத காதலின் எல்லையற்ற நீண்ட பயணத்தில் அவை அர்ச்சனைப் பூக்களாக ஆகட்டும் என்று பிரார்த்திக்கவும் செய்கிறேன். இந்தப் பிரார்த்தனை வேளையில் ஏதோ பழைய பக்தி நூலில் இருந்த வரிகள் எனக்கு முன்னால் வந்து நிற்கின்றன.
நான் அவளுக்கு வெயில் வெளிச்சத்தின் புடவையை அணிவித்தேன். பூக்களின் அழகையும் அளித்தேன். ஆகாயத்தின் நீல வெளியாகவும் அடர்ந்த காட்டின் பச்சை மரங்களுக்கு மத்தியிலும் அவளுடன் சுற்றித் திரிந்தேன். கிளிகள் என்னுடைய காதல் பாடலைப் பாடி, கேட்கச் செய்தன.
பிறகும், அவள் அறியவில்லை. ஆழக்கடலைவிட ஆழமானதாக இருந்தது என்னுடைய காதல். மிகப்பெரிய ஆசையைவிட பெரியதாக இருந்தது என்னுடைய விருப்பம்.
அதற்குப் பிறகும் அவள் தெரிந்து கொள்ளவில்லையே! இப்போது வயதான காலத்தில், பிரபஞ்சத்தின் இறுதியில் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கும் இந்தப் பெரும் மழை என்னுடைய கண்ணீராக ஆகிறது என்ற உண்மையை மட்டும் அவள் அறிந்து கொள்வாளா? ஹா! கஷ்டம்!
I HAVE LOVED
THEE
WITH AN
EVERLASTING
LOVE
(JEREMIAM 31: 3)
எனக்கு காதலைக் கற்றுத் தந்த, காதலால் சந்தோஷப்படுத்திய பழைய இளம்பெண்ணே! உனக்கு எப்போதும் நல்லது நடக்கட்டும்.