Logo

வாழ்க்கை அழகானது- ஆனால்...

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5966
valkai alaganathu - aanal...

சுராவின் முன்னுரை

1961-ஆம் ஆண்டில் தகழி சிவசங்கரப் பிள்ளை (Thakzhi Sivasankara Pillai) எழுதிய புதினம் இது. தகழியின் படைப்பு என்றாலே அதில் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை. அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், துயரங்கள் – இவை அனைத்தும் மண் வாசனையுடன் இருக்கும். அந்த விஷயங்கள் இந்த புதினத்திலும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

பெண்ணை மையப் பாத்திரமாக வைத்து எழுதும்போது, அவள்மீது தகழி கொள்ளும் ஈடுபாட்டையும், அவளின் துன்பம் கண்டு அவர் மனம் வருந்துவதையும், அவளின் பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகுவதையும் புதினம் முழுக்க நம்மால் காண முடிகிறது. எத்தனையோ வருடங்கள் கடந்தோடிய பிறகும் தகழி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இவைதான்.

இந்நாவலின் நாயகியான கவுரியும், லாக் அப்பில் அவளுடைய ‘அக்கா’வாக வரும் குட்டியும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

புதினத்தின் இறுதிப் பகுதியைப் படித்தபோதும், மொழி பெயர்த்தபோதும் என் கண்கள் பனித்ததென்னவோ உண்மை. அதே நேரத்தில்- கவுரியை என் மனம் பெருமையுடன் நினைத்துப் பார்க்கவும் செய்தது. புதுமையான முடிவு... இக்கதையைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதை உணர்வீர்கள்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


லாக் அப் அறையின் இரும்புக் கம்பிகளாலான கதவுக்கு நேர் எதிரில் காவல் நிலையத்தின் வெளி வாசல் இருந்தது. லாக் அப் அறையின் கதவுக்கு அருகில் உட்கார்ந்திருந்தால், சாலையில் போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம். அவள் அந்த லாக் அப் அறைக்குள் வந்து பல வாரங்களாகிவிட்டன. அன்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அந்த சாலையின் வழியாக எவ்வளவு பேர் கிழக்கு நோக்கியும், எவ்வளவு பேர் மேற்கு நோக்கியும் போகிறார்கள் என்பதை கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

உண்மையாகச் சொல்லப்போனால், யாரையும் ஆச்சரியப்படச் செய்யும் ஒரு விஷயம் அது. அது தான் அவளுடைய நிலைமை.

வேறு எதுவும் செய்வதற்கு இல்லாமல், சிந்திப்பதற்கு எதுவும் இல்லாமல், ஒரு சுவாரசியத்திற்காக பாதையின் அருகில் உட்கார்ந்திருக்கும் போது பாதையின் வழியாக எவ்வளவு பேர் கடந்து போகிறார்கள் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். அது அந்த அளவிற்குத் தீவிரமான சிந்தனை இல்லாதவர்களுக்குத்தான் தோன்றும். ஆனால், கவுரியின் நிலைமை அதுவல்ல. அவள் அங்கு எப்படி வந்தாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவள் தன்னுடைய வாழ்க்கையையும் குழந்தைகளின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளைத் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு கடலுக்குள் குதித்தாள். கட்டு அவிழ்ந்து, குழந்தைகள் இறந்துவிட்டார்கள். அவளை அலை கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. அந்த இரவிலேயே மேலும் இரண்டு முறை அவள்

தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சி செய்தாள். தோல்விதான் கிடைத்தது! மறுநாள் காலையில் குழந்தைகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த நிலையில் கடற்கரையில் ஒதுங்கினார்கள். அப்படித்தான் அவள் லாக் அப் அறைக்குள் வந்தாள்.

எல்லாவற்றையும் இழந்துவிட்டு, அந்த இழப்புடனான வாழ்க்கையே வேண்டாம் என்று நினைத்தவள் அவள். அனைத்தையும் இழந்துவிட்டாள். ஆனால், வாழ்க்கை முடியவில்லை. அதற்கான முயற்சி தொடர்ந்தது. அதற்குப் பிறகு முயற்சிக்க முடியவில்லை. அதற்குள் லாக் அப் அறைக்குள் வந்து விட்டாள். அங்கு ஒரு நிம்மதி கிடைத்தது. போலீஸ்காரர்கள் வந்தவுடனேயே குற்றத்தை ஒப்புக் கொண்டதைப் பதிவு செய்துவிட்டார்கள். அப்போது, எந்த ஒன்றுக்காக முயற்சி செய்து தோல்வியடைந்தாளோ, அது நடக்கும் என்ற உறுதி உண்டானதைப் போல அவளுக்குத் தோன்றியது.

அவள் இறக்கலாம். இன்று இல்லாவிட்டால் நாளை- தூக்கில் தொங்கி இறக்கலாம். தான் இறந்தால் போதும் என்று அவள் கூறிய போது, தலைமை கான்ஸ்டபிள் வேலுப்பிள்ளை இப்படிக் கூறினார்:

"சரி... சகோதரி. உன்னால் இந்தக் கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் இறப்பதே நல்லது. அதனால்தான் இந்த வாக்கு மூலத்தை நீதிபதியிடம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம்!''

நீதிபதிக்கு முன்னால் தவறை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்து முடித்தவுடன், அவளுக்கு உண்மையாகவே ஒரு நிம்மதி உண்டானது.

சில நாட்கள் அவள் லாக் அப் அறையின் ஒரு மூலையில் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். சில நேரங்களில் அங்கேயே சுருண்டு படுத்திருப்பாள். பிறகு இரும்புக் கம்பிகளாலான வாசலுக்கு அருகில் வந்து உட்கார ஆரம்பித்தாள். இன்று பாதையின் வழியாகச்

செல்பவர்கள் எவ்வளவு பேர் என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்போம் என்று தோன்றியது. அந்த எண்ணம் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றுதானே?

ஒருவேளை, அது உயிரின் ஒரு தனிப்பட்ட குணமாக இருக்கலாம். மிகப் பெரிய சுமையைத் தாங்கிக் கொண்டு நீண்ட நேரம் இருப்பதற்கு உயிரால் முடியாது. மரண நாள் முடிவு செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு இடையில் அவ்வப்போது சாதாரண அறிவு தோன்றும். இல்லாவிட்டால் மரணம் வரை போக முடியாது. மனிதனுக்கு மரணத்தைப் பார்த்தால் பயம். மரணமடைவோம் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். எனினும், மனிதன் சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் ஏன் இருக்கிறான்? அதுதான் உயிரின் இயல்பு.

லாக் அப் அறையின் மூலையிலிருந்து இரும்புக் கம்பிகளாலான வாசலுக்கு அருகில் வந்து உட்கார்ந்தபோது, அவள் இரும்புக் கம்பிகளின் வழியாகப் பரந்த உலகத்தைப் பார்த்தாள். அந்தக் கூட்டத்தில் அவள் ஏற்கெனவே பார்த்திருப்பவர்களும் இருக்கலாம். அறிமுகமானவர்களும் நன்கு பழகியவர்களும்... அறிமுகமானவர்கள் எங்கு போகிறார்கள் என்பதை அவள் நினைத்துப் பார்க்கலாம். நன்கு பழகியவர்களிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைக்கலாம். அந்த வகையில் வாழ்க்கையுடன் மீண்டும் தொடர்பு கொண்டபோது, மனிதர்கள் அந்தச் சாலையின் வழியாக எதற்குப் போகிறார்கள் என்பதைப் பற்றி சிந்தித்திருக்கலாம். செய்வதற்கு எதுவும் இல்லாத காரணத்தால், கணக்கிட்டுப் பார்ப்போம் என்று தோன்றியது.

அவள் கணக்கிட ஆரம்பித்தாள். ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... பிறகு, நான்கு பேர் ஒன்றாக... பதினொன்று... பன்னிரண்டு! அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஏழுபேர் வீதம் இரண்டு கூட்டம்!

ஓ.... தவறுகிறது! இல்லை... சரி பண்ணினாள்.

அந்த லாக் அப் அறைக்குள் இரண்டு அறைகள் இருந்தன. ஒன்றில் பதினேழு திருட்டு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒருவனும் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவனும் இருக்கிறார்கள். இன்னொரு அறையில் கவுரி இருக்கிறாள். கவுரியின் அறையின் கதவுக்கு வெளியே போடப்பட்டிருந்த ஒரு ஸ்டூலில் கவுரிக்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய பெயர் காதராக்ஷி. காதராக்ஷி கண்காணிப்பாளனாக இருக்கும் சசிதரனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறாள்.

இன்ஸ்பெக்டரோ ஏட்டுக்களோ வேறு போலீஸ்காரர்களோ யாரும் அங்கே இல்லை. அலுவலக அறையில் ரைட்டரும் ஒரு போலீஸ்காரரும் மட்டும் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடக்கப்பட்ட ஒரு சிரிப்பு... காதராக்ஷிதான் சிரித்தாள். கிச்சுக்கிச்சு மூட்டப்பட்டு உண்டானதைப் போல இருந்தது. சசிதரன் என்னவோ சொன்னான்... கவுரி எண்ணிக் கொண்டிருந்தாள்.

"ஓ! என்ன இது?''

காதராக்ஷி கேட்டாள். உண்மையாகவே கவுரி அதைக் கேட்டிருப்பாள்.

ஒரு மனிதன் சாலையில் வெளி வாசலுக்கு அருகில் உள்ளே பார்த்தவாறு நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவன் எண்பத்து ஏழாவது ஆள். அவன் காவல் நிலையத்திற்குள் யாரையோ பார்க்க விரும்புகிறான். கவுரியின் கழுத்து சற்று நீண்டது. அந்த மனிதனை அவளுக்குத் தெரியும் போலத் தோன்றுகிறது. அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஈடுபாடு உள்ள மனிதனாக இருப்பானோ என்ற சந்தேகம்

உண்டானது. கவுரியின் எண்ணிக்கை தவறியது. கொஞ்சம் மனிதர்கள் கூட்டமாகக் கடந்து சென்றார்கள். அவளுடைய கவனமும் சிதறியது.

"எனக்கு விருப்பம்தான்... ஆனால்...''


அசரீரியைப் போல அந்த வார்த்தைகள் கவுரியின் காதுகளுக்குள் கேட்டன. அந்தப் பெண் கான்ஸ்டபிள் கூறிக் கொண்டிருக்கிறாள்.

காதராக்ஷி, தான் கூறியதை வேறு யாராவது- கவுரி உட்பட, கேட்டிருப்பார்களோ என்று பயந்தாள். முழங்கால்களை ஊன்றியவாறு கம்பிகளைப் பிடித்து நின்று கொண்டு கவுரி பார்க்கிறாள். சசிதரனிடம் காதராக்ஷி சைகை காட்டுகிறாள். என்ன கூற விரும்புகிறாள்? கவுரி கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் கூற விரும்புகிறாள்.

கவுரி தலையை நீட்டிக் கொண்டு பார்த்தாலும், அவளுடைய காதுகளுக்குள் அந்த வார்த்தைகள் கேட்டுக் கொண்டேயிருந்தன.

சாலையின் வழியாக நடந்து சென்ற மனிதன் திரும்பி வந்தான். அப்போதும் அவன் வெளிவாசல் வழியாக லாக் அப் அறையையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் யாரையோ பார்க்க விரும்புகிறான் என்பது உண்மை. அவன் மறைந்தான். மீண்டும் தோன்றினான். மேற்குப் பக்கமாக நடந்தான். இடத்தையும் நேரத்தையும் மறந்து விட்டு, கவுரி அவனை அழைத்தாள். சத்தம் உண்டாக்கவில்லை என்பது மட்டுமே விஷயம்.

சற்று நேரம் கடந்த பிறகு அவன் கிழக்கு நோக்கி நடந்தான். அதே மாதிரி மேற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் பல முறை அவன் நடந்தான். அவன் எதற்காக அப்படி நடக்கிறான்? உண்மையாகவே அவன் யாரையோ பார்க்க விரும்புகிறான். அப்படிப் பார்க்க விரும்பும் ஆள் யார்? கவுரிக்கு அது உறுதியாகத் தெரிந்தது. அது அவள்தான். தான் அவனைப் பார்த்துவிட்டோம் என்ற விஷயத்தைத் தெரிவிக்க

வேண்டும் போல கவுரிக்குத் தோன்றியது. எப்படித் தெரிவிப்பது? அவன் அவளைப் பார்ப்பதற்காக அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான்.

கவுரி எழுந்து நின்றாள். அவன் சாலையில் கிழக்கும் மேற்குமாக நடந்து கொண்டிருந்தான். இப்போது வெளிவாசலைத் தாண்டி அதிக தூரம் இங்குமங்குமாக நடக்கவில்லை. நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. உள்ளே வர வேண்டும். ஒரு ஆர்வம் அதில் வெளிப்பட்டது. அந்த நிலைக்கு அவன் வந்துவிட்டான். "எதற்கடா?" என்று காவல் நிலையத்திலிருந்து யாராவது கேட்டால், அவன் உள்ளே வந்துவிடுவான்.

அந்த நிமிடங்கள் கவுரியைப் பொறுத்தவரையிலும் ஆர்வமானவையாக இருந்தன. இந்த நிமிடம் வரை, தான் இரும்புக் கம்பிகளுக்கு உள்ளே இருக்கிறோம் என்ற எண்ணமே கவுரிக்குத் தோன்றியதில்லை. இப்போது அவள் பிணைப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாள்- முதல் முறையாக. அந்த கதவைத் திறந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அழைப்பதற்கான சுதந்திரம் அவளுக்கு இல்லை. "எனக்கு விருப்பம்தான்... ஆனால்...''- இந்த வார்த்தைகள் காதுகளுக்குள் அப்போதும் கேட்டுக் கொண்டேயிருந்தன. காதராக்ஷி இன்று சொன்னாள். சில வருடங்களுக்கு முன்னால் வெளி வாசலில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருக்கும் அந்த மனிதன், கவுரியின் காதுகளில் வந்து சேர வேண்டும் என்பதற்காக, யாரிடம் என்றில்லாமல் அந்த வார்த்தைகளைக் கூறியிருக்கிறான். அவள் குளித்து முடித்து போய்க் கொண்டிருந்தாள். பாதையின் அருகில் நின்று கொண்டு அவன் சொன்னான். அவள் கேட்டாள். பதிலெதுவும் சொல்லவில்லை.

"எனக்கு விருப்பம்தான். ஆனால்...''

அந்த வகையில் அவன் வந்திருக்கிறான்.

அன்பு வைத்திருக்கும் மனிதன் வந்திருக்கிறான். இன்றுவரையில் ஒருவர்கூட அந்த லாக் அப்பில் கவுரியைப் பார்ப்பதற்காக வந்ததில்லை. யாரும் வர வேண்டும் என்று அவள் ஆசைப்படவும் இல்லை. அது அவள் நினைக்கக்கூடிய விஷயமே இல்லை. அவளுக்கு வேண்டியவர்கள் என்று யாருமில்லை. கடந்த வாழ்க்கை துடைத்து அழிக்கப்பட்டு விட்டது. லாக் அப்பில் இருந்து தூக்குமரம் வரை ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை சம்பவங்கள் எதுவும் இல்லாதது. அதிகமான மனிதர்களுடன் பழகுவதற்கு வாய்ப்பே இல்லாதது.

அன்று குழந்தைகளின் இறந்த உடல்களைப் பார்த்தது சம்பந்தப்பட்ட பிண விசாரணை நடந்தபோது, அவளுடைய வீட்டைச் சுற்றி வசிப்பவர்கள் எல்லாரும் இருந்தார்கள். எல்லாரும் அவளை வெறுப்பதைப் போலத் தோன்றியது. அதைப் பார்த்து எந்தவொரு வருத்தமும் கவுரிக்குத் தோன்றவில்லை. அது மட்டுமல்ல- எதுவுமே தோன்றவில்லை. அந்த வகையில் பக்கத்து வீட்டுக்காரர்கள்கூட இல்லாதவளாக அவள் ஆகிவிட்டாள்.

கிருஷ்ணன் மட்டும் வந்திருந்தான். கவுரி அவனுடன் உள்ள உறவைப் பற்றிய வரலாற்றை நினைத்துப் பார்த்தாள். அவளுடைய கணவன் கோவிந்தனின் நெருங்கிய நண்பனாக கிருஷ்ணன் இருந்தான். அவர்கள் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்தே இருந்தார்கள். அவன் அவள்மீது கொண்ட காதலை மனதில் மறைத்து வைத்துக் கொண்டு அப்போது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. முதலில் அவளுக்கு சந்தேகம் தோன்றவில்லை. அந்தக் காதலை அவன் வெளிப்படுத்தியதாகவும் ஞாபகத்தில் இல்லை. ஆனால், பின்னால் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றும். ஒரு மனிதன் மனதிற்குள் காதலை மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்ததற்கு

அவள் பொறுப்பா? தெரிந்திருந்து, அவள் அதை ஆதரிக்கவில்லை. ஒருத்தி இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கும் நிலையில், அவளை இன்னொரு மனிதன் காதலிக்கிறான் என்ற விஷயம் தெரிய வரும்போது, மனதளவில் சலனமடையலாம். ஏனென்றால், அவளுடைய பெண்மையின் விலை அதிகமாகிறதே? அதுகூட கவுரியின் விஷயத்தில் நடக்கவில்லை. எனினும், கவுரியை அவளுடைய கணவன் சந்தேகப்பட்டான். அந்த சந்தேகம் அதிகரித்தது.

அந்தக் குடும்பத்தின் சந்தோஷமற்ற சூழ்நிலை அதிகமானது. அன்று தான் கிருஷ்ணன் சொன்னான்- "நான் காதலிக்கிறேன். ஆனால்...'' என்று. ஊர் முழுவதும் பேசப்படக்கூடிய விஷயமாக அது ஆனது. கோவிந்தன் ஊரை விட்டுக் கிளம்பினான். அதற்குப் பிறகு திரும்பி வரவேயில்லை. பிறகு, கிருஷ்ணனும் கண்களில் படவில்லை. அதற்குப் பிறகு பல விஷயங்களும் நடந்துவிட்டன. இப்போது கிருஷ்ணனைப் பார்க்கிறாள்.

இந்த உலகத்தில் அவள்மீது அன்பு வைத்திருக்கும் ஒரு மனிதன் இருக்கிறான். ஒரே ஒரு மனிதன். அவன்- கிருஷ்ணன். அவன் கூறியிருக்கிறான்:

"நான் காதலிக்கிறேன். ஆனால்...''

கவுரி காதராக்ஷியிடம் சொன்னாள்:

"ம்... ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா?''

காதராக்ஷி எழுந்து கதவிற்கு அருகில் சென்றாள். கவுரியிடம் உண்டான மாறுதல்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. அவளுடைய கண்களுக்கு இப்போது உயிரின் பிரகாசம் இருந்தது. அவள் அசைந்து கொண்டிருக்கிறாள். அந்த மாற்றம் திடீரென்று உண்டானது. காதராக்ஷி கேட்டாள்: "ம்... என்ன விஷயம்?''

கவுரியின் உதடுகளில் ஒரு புன்சிரிப்பின்- இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் ஒரு பிரகாசத்தின் வெளிப்பாடு பரவி இருப்பதைப் பார்த்தாள். அவளுக்கு சிரிப்பதற்கு ஒரு விஷயம் கிடைத்தது. கெஞ்சுகிற சாயல் குரலில் இருந்தது. அவள் சொன்னாள்: ""ஒரு விஷயத்தை நிறைவேற்றித் தரணும்!''

"என்ன அது?''

கண்காணிப்பாளர் சசிதரன் அருகில் வந்தான். அவன் கேட்டான்:

"அவளுக்கு என்ன வேண்டும்?''


காதராக்ஷிதான் பதில் சொன்னாள். காதராக்ஷி காதலி ஆயிற்றே!

"ம்... இப்போ தெரிஞ்சு என்ன ஆகப் போகுது?''

துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் அந்தக் காதலன் சொன்னான்:

"எனக்கு அதைத் தெரிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது!''

"ஆனால், இப்போ சொல்ல மாட்டேன்.''

தொடர்ந்து காதராக்க்ஷி கண்காணிப்பாளனின் உரிமையைக் கேள்வி கேட்கும்படி கவுரியிடம் சொன்னாள்.

"நீங்க இப்போ சொல்ல வேண்டாம். அதிகாரம் உள்ளவர்கள் அறிந்து கொள்ளட்டும்!''

சசிதரன் உண்மையான கண்காணிப்பாளனாக மாறி துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு அங்குமிங்குமாக நடந்தான்.

வெளியே இருந்த அந்த ஆணை சிறிது நேரத்திற்குக் காணவேயில்லை. அவன் போய் விட்டானோ? கவுரியின் உள் மன ஆர்வம் அதிகரித்தது.

அந்தப் பக்கத்தில் காதலனும் காதலியும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்:

"கொஞ்சம் வாங்களேன்... ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்.''

சசிதரன் அனுமதி அளித்தான்.

"அவளுக்கு என்ன வேணுமோ, அதைச் செய்து கொடு!''

தொடர்ந்து அவன் மீசையைத் தடவினான். காதராக்ஷி வாயை மூடிக் கொண்டு குனிந்தவாறு சொன்னாள்:

"உத்தரவு.''

அதற்குப் பிறகும் கிருஷ்ணன் வெளி வாசலில் தோன்றி மறைந்தான். காதராக்ஷி புடவைத் தலைப்பைக் கொண்டு முகத்தைத் துடைத்தாள். அதாவது- காதலியின் புன்சிரிப்பையும் முக சிரிப்பையும் துடைத்து மாற்றினாள்.

அவள் கவுரியிடம் கேட்டாள்:

"என்ன விஷயம்?''

கவுரி சொன்னாள்:

"எனக்கு ஒரு உதவியைச் செய்து தரணும். அந்த வெளி வாசலில் ஒரு மனிதர் நின்று கொண்டிருக்கிறார். அவரை நான் பார்க்கணும். அவ்வளவுதான்!''

காதராக்ஷி அந்த திசையில் பார்த்தாள். ஒரு மனிதன் சாலையில் அந்த திசையில் நடந்து கொண்டிருந்தான். அவன் வெளி வாசலுக்கு அருகில் வந்து ஒரு நிமிடம் நின்றான். பிறகு நடையைத் தொடர்ந்தான்.

கவுரி சொன்னாள்:

"அதோ அந்த ஆள்தான்.''

காதராக்ஷி கேட்டாள்:

"அந்த ஆள் உனக்கு என்ன வேணும்?''

கவுரி பதில் கூறவில்லை. அவன் அவளுக்கு யார்? அவளை இந்த நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு மூலகாரணமாக இருந்தவனா? அப்படிக் குறிப்பிடலாமா?

காதராக்ஷி கேள்வியை மீண்டும் கேட்டாள்:

"அந்த ஆள் யார்?''

"என்மீது விருப்பம் வைத்திருக்கும் ஒரு ஆள்!''

அந்த பதில் சற்று வெட்கத்துடன் இருந்தது.

வேதனையுடன் பெற்றெடுத்த குழந்தைகளை கடலில் வீசி எறிந்து கொன்று அதிக நாட்கள் ஆகவில்லை. உப்பு நீரில் மிதந்து வந்த அந்தப் பிள்ளைகளின் இறந்த உடல்கள் அழுகக்கூட இல்லை. அவளுடைய கழுத்தில் சுருக்கு விழுந்து உண்டான அடையாளம் மறையக்கூட இல்லை. அவள் குற்றத்தை ஒப்புக் கொண்ட கொலைகாரி. தூக்குக் கயிறு அவளை அழைக்கிறது. அவளுக்கு தான் விரும்பும் மனிதனைக் காண வேண்டும்!

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வாழ வேண்டும் என்ற ஆசை அவளிடம் உண்டாகி இருக்க வேண்டும்.

அந்த மனிதனை அழைத்துக் கொண்டு வருவது என்பது காதராக்ஷிக்கு அதிகாரம் உள்ள ஒரு விஷயம் அல்ல. அவன் அவளுக்கு பிரியமானவனாக இருக்கலாம். அவர்களை சந்திக்க வைத்தால் நல்லதுதான் என்று அவளும் நினைத்தாள்.

கவுரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்:

"எனக்கு அந்த மனிதரிடம் கேட்பதற்கு எவ்வளவோ கேள்விகள் இருக்கின்றன. கொஞ்சம் அழையுங்களேன்!''

அது இறுதி கெஞ்சலைப் போல இருந்தது. காதராக்ஷியால் மறுக்க முடியாது.

சிறிது நேரத்திற்கு காதராக்ஷி எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள். பிறகு அவள் வெளிவாசலை நோக்கி நடந்தாள். எங்கு போகிறாய் என்று கண்காணிப்பாளன் கேட்டான். காதராக்ஷி பேசவில்லை. கிருஷ்ணன் அங்கே நின்றிருந்தான். அவன் கவுரியைப் பார்ப்பதற்குத்தான் வந்திருந்தான்.

சசிதரனும் காதராக்ஷியும் சேர்ந்து பல விஷயங்களையும் கூறி, கிருஷ்ணனை முதலில் ரைட்டரின் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். ரைட்டர் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு அவர் சொன்னார்: "லாக் அப்பில் இருக்கும் ஆளைப் பார்ப்பதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை!''

ரைட்டருடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த கான்ஸ்டபிள், கிருஷ்ணனை அழைத்து அந்தப் பக்கமாகக் கொண்டு சென்றார். அது எதற்கு என்பது தெரிந்ததுதானே! கிருஷ்ணன் நேராக கவுரியின் அறை வாசலை நோக்கிச் சென்றான்.

2

சிறிது காலமாகவே அந்த காவல் நிலையத்தில் பணி செய்பவர்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு ஆள் தவறு செய்துவிட்டால், அவனுக்கு துரோகம் செய்வதற்கு இரண்டு பேர் முயற்சி செய்வதைப் பார்க்கலாம். ரைட்டருக்கும் வேலுப்பிள்ளைக்குமிடையே சரியான உறவு இல்லாமலிருந்தது. சசிதரனின் ஒரு பெரிய எதிரியே வர்க்கீஸ் என்ற கான்ஸ்டபிள்தான்.

அந்த வகையில் எல்லாருக்கும் எதிரிகள் இருந்தார்கள். கிருஷ்ணன் வந்ததையும் கவுரியைப் பார்த்ததையும் கிருஷ்ணனிடமிருந்து பத்து ரூபாய் பெற்று, அப்போது காவல் நிலையத்தில் இருந்தவர்கள் பிரித்தெடுத்ததையும் வர்க்கீஸ் தெரிந்து கொண்டான். வர்க்கீஸ் வேலுப்பிள்ளையின் ஆள். ரைட்டரை அடிப்பதற்கு ஒரு கொம்பு வேலுப்பிள்ளைக்குக் கிடைத்தது. வர்க்கீஸுக்கு சசிதரனை வேதனைப் படுத்துவதற்கும். வேலுப்பிள்ளையின் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கு அது. அது சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டு வேலுப்பிள்ளை வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு புதிய கதாபாத்திரம் வந்து தோன்றுகிறது. விசாரணை சமயத்தில் கிருஷ்ணன் என்ற ஒரு ஆள் இருக்கிறான் என்ற விஷயம் வேலுப் பிள்ளைக்குத் தெரியாமல் இருந்தது. இந்த கிருஷ்ணன் இனிமேலும் வழக்கைப் பற்றி சர்ச்சை செய்வதற்கும் தொந்தரவுகள் உண்டாக்குவதற்கும் வருவானோ என்பதுதான் வேலுப்பிள்ளையின் பயமாக இருந்தது.

எது எப்படி இருந்தாலும் ரைட்டரும் சசிதரனும் சேர்ந்து ஒரு மனிதனை, லாக் அப்பில் இருக்கும் கவுரி என்ற குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணைப் பார்ப்பதற்கு அனுமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகார பீடத்தில் போய்ச் சேர்ந்தது. அவர்களிடம் விளக்கம் கேட்டு விசாரணையும் உண்டானது.

மிகவும் ஆழமான ஒரு குற்றம் அது. வேலைகூட போனாலும் போகலாம். லஞ்சம் வாங்கினார்கள் என்றும் குற்றச்சாட்டு இருந்தது. டி.எஸ்.பி. ஒரு கண்டிப்பான ஆள். இன்ஸ்பெக்டர் எதிலும் பிடிப்பே இல்லாத ஒரு ஆள். காதராக்ஷி மாட்டிக் கொண்டு தவித்தாள். அவள் மூலம்தானே அந்த விபரீதமான செயலே நடந்தது! சசிதரனின் தொப்பி போனது மாதிரிதான் என்று வர்க்கீஸ் கூறிக் கொண்டு திரிந்தான்.

ரைட்டரும் சசிதரனும் கான்ஸ்டபிள் பப்புவும் கிருஷ்ணன் என்ற ஒரு ஆள் வரவே இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தெரிவித்திருந்தார்கள்.


அப்போது கவுரி, லாக்கப்பில் இருக்கும் ஆட்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள்தான் முக்கியமான ஆதாரங்களாக இருந்தன. சசிதரன், ரைட்டர் ஆகியோரின் விளக்கங்களைப் பற்றிய சுருக்கத்தைத் தெரிந்தவுடனேயே, வேலுப்பிள்ளை கவுரியைப் போய் பார்த்தார்.

கிருஷ்ணன் என்ற மனிதன் யார் என்று வேலுப்பிள்ளை கவுரியிடம் கேட்டார். அவள் வாயையே திறக்கவில்லை. அவளுடைய அடி முதல் முடி வரை பார்த்தபோது, ஒரு விஷயத்தை வேலுப் பிள்ளையால் உணர முடிந்தது. மரணத்தைத் தழுவினால் போதும் என்று முன்பு விரும்பிய கவுரி அல்ல அவள். அவளுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது.

வேலுப்பிள்ளை கேட்டார்.

"நீ வாழ வேண்டும் என்று விரும்புகிறாயா?''

ஆரம்ப நாட்களாக இருந்தால், அந்தக் கேள்விக்கு உடனடியாக பதில் கிடைத்திருக்கும்.

"இல்லை.''

இன்று "இல்லை" என்று கூற மாட்டாள். "ஆமாம்" என்றும் கூற மாட்டாள். வாழ முடியுமா என்று அவள் சந்தேகப்படுகிறாள். வாழ வேண்டும் என்ற ஆசை வாழ்வதற்கான சக்தியாக மாறியிருக்கவில்லை. அவ்வளவுதான். வேலுப்பிள்ளை அந்த வாழ வேண்டும் என்ற ஆசையை ஊதி விளையாட முயற்சித்தார்.

"நடந்தவையெல்லாம் நடந்து விட்டன. இனிமேல் அவற்றையெல்லாம் மறந்து விடு. அந்தக் குழந்தைகள் உடம்புக்கு முடியாமல் இறந்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்.''

கவுரியின் கண்கள் நிறைந்துவிட்டன. அவள் குழந்தைகளை நினைத்திருக்கலாம். வேலுப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"குழந்தைகளுக்கு பொதுவாக உடல்நலக்கேடு வருவதற்குக் காரணமே தாய்மார்களின் கவனக் குறைவுதான். அந்த வகையில் குழந்தைகள் இறந்துவிட்டால், தங்களால்தான் அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தாய்மார்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.''

அவளுடைய கண்களிலிருந்து ஒரு துளி நீர் அரும்பி விழுந்தது. அவர் தொடர்ந்து சொன்னார்:

"எல்லாம் விதிதான். யார் நினைத்தாலும், விதியின் போக்கை மாற்ற முடியாது. அந்தக் குழந்தைகளுக்குக் கிடைத்த வாழ்க்கையே அவ்வளவுதான். அந்த இடத்தில் அந்த வாழ்க்கை முடிய வேண்டும் என்று இருக்கிறது. நீ நினைத்திருந்தாலும், வேறு மாதிரி நடந்திருக்காது!''

கவுரியின் மனதிற்குள் நெருப்புப் பொறிகள் அணைய ஆரம்பித்தன. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதுதான் வேலுப்பிள்ளைக்குத் தேவை என்றுகூட இருக்கலாம். அவர் ஒரு போலீஸ்காரர். எப்படி ஆட்களை அணுகுவது என்பதைப் பற்றிய சில வழிமுறைகளும் தெரியும். எது எப்படி இருந்தாலும், அவள் மரத்துப் போன நிலையில் இருந்து சற்றுவிடுபட்டாள். சாதாரண பெண்கள் ஆறுதலாகக் கூறக் கூடிய விஷயங்களை அவர் கூறினார். அவளுடைய மனதைத் தேற்றுவதில் ஈடுபட்ட முதல் மனிதரே அவர்தான்.

வேலுப்பிள்ளை தொடர்ந்து சொன்னார்:

"நீ உன்னுடைய குழந்தைகள்மீது பாசம் வைக்காமல் இருந்தாயா என்ன? இல்லை. அன்றும் நீ அவர்களைத் தேய்த்து குளிப்பாட்டியதாகவும், பொட்டு வைத்துவிட்டதாகவும் கூறுகிறாய். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆவதை நீ மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு தானே இருந்தாய்? பிறகு ஏன் இப்படி நடந்தது?''

வேலுப்பிள்ளை ஒரு கேள்வியை அவளைப் பார்த்து எறியவில்லை. தன்னைப் பார்த்தே கேட்டுக் கொண்டார். பதிலும் கூறிக் கொண்டார்.

"விதி... விதியைத் தவிர வேறு என்ன? உன்னுடைய கைகளால் அது நடக்கணும்னு இருக்கு!''

கவுரி குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேலுப்பிள்ளை அவளைத் தேற்றினார்.

"நான் அழுவதற்காக இவை எதையும் கூறவில்லை. அழுவதால் பயனில்லை என்பதைச் சொல்ல வர்றேன்.''

தன்னுடைய திட்டம் வழி தவறி விட்டதோ என்று வேலுப்பிள்ளை பயந்தார். இனிமேலும் தான் இறந்தால் நல்லது என்று அவள் நினைக்கலாம். அவளுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாமற் போனால், நினைத்த காரியம் நடக்காமல் போய்விடும்.

வேலுப்பிள்ளைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால், திடீரென்று ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

"மறந்துவிடு. எல்லாவற்றையும் மறந்துவிடு. தெய்வம் அந்த அளவிற்குக் கருணை இல்லாதவன் இல்லை!''

இல்லை... அது மட்டும் போதாது. வேலுப்பிள்ளை விடவில்லை.

"உனக்கு வயது மிகவும் குறைவு. ஒரு நல்ல கணவன் கிடைக்காமல் போகமாட்டான்.''

அதிர்ஷ்டமே இல்லாமலிருந்த சில பெண்களுக்கு நல்ல காலம் வந்த கதையை வேலுப்பிள்ளை விளக்கிச் சொன்னார். கொலைகாரியான ஒரு பெண் விடுதலையான பிறகு நல்ல நிலைமைக்கு வந்தாள். ஒரு திருடியாக இருந்தவள் இன்று நல்ல இல்லத்தரசியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவர்களை வழக்கிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு வேலுப்பிள்ளை உதவவும் செய்திருக்கிறார்.

"மறந்து விடு... கவுரி, மறந்து விடு. நான் உன்னை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன். பாரு... இந்த தென்னையும் மாமரங்களும் வாழையும் உள்ள உலகம் எந்த அளவிற்கு அழகாக இருக்கிறது! இந்த உலகத்தைத் திட்டாதே. மனிதர்களும் நல்லவர்கள்தான்!''

தொடர்ந்து அவர் சொன்னார்:

"உனக்கு நல்லது வர்றதுக்குத்தான், இந்த கெட்டதே நடந்திருக்கு.''

வேலுப்பிள்ளை இறுதியாகச் சொன்னார்:

"நான் உன்னை தூக்கு மரத்தில் தொங்கவிடமாட்டேன். அது மட்டும் உண்மை.''

அன்று அந்த இடத்திலேயே நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று தோன்றவே, வேலுப்பிள்ளை நகர்ந்தார்.

வேலுப்பிள்ளையைப் போலவே வேலுப்பிள்ளையின் எதிரிகளும் கவுரியை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். கிருஷ்ணன் என்ற ஒரு மனிதன் இல்லவே இல்லை என்றும், அப்படிப்பட்ட ஒரு ஆள் தன்னைப் பார்ப்பதற்கு வரவே இல்லை

என்றும் அவள் வாக்குமூலம் கொடுக்க வேண்டும். அப்படியென்றால்தான் சசிதரன் தப்பிக்க முடியும்.

காதராக்ஷி தன்னுடைய காதல் கதையை எதையும் மறைக்காமல் கவுரியிடம் கூறினாள். கவுரி மிகவும் கவனித்து அதைக் கேட்டாள். புரிந்து கொண்டாள். அந்தக் காதல் கதையில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் இல்லை. எனினும், காதல் கதையைக் கேட்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாயிற்றே! அந்தக் காதல், நிறைவேறும் அதிர்ஷ்டம் இல்லாதது என்ற ஏமாற்றத்துடன் காதராக்ஷி கூறி நிறுத்தினாள்.

கவுரி கேட்டாள்:

"என்ன காரணம்?''

"நாங்க பணியில் இருக்குறப்போ திருமணம் செய்யக்கூடாது.''

கவுரி ஆர்வத்துடன் கேட்டாள்:

"அப்படின்னா...?''

"நாங்கள் எப்போதும் இப்படிக் காதலித்துக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் வேலையை விடணும்.''

கவுரி சொன்னாள்:

"அப்படின்னா, அந்த வேலையை உதறிவிட்டுடுங்க.''

காதராக்ஷி சொன்னாள்:

"நாங்கள் அதைப் பற்றி சிந்தித்தோம். என்னுடைய வேலையை ராஜினாமா பண்ணிட்டு, திருமணம் செஞ்சிக்கணும்னு...''

"பிறகு என்ன?''

"இப்போ இரண்டு பேருக்குமே வேலை இல்லாமற் போகிற நிலைமை!''

கவுரி மேலும் ஆர்வம் கொண்டவளாக ஆனாள். அன்று கவுரியைப் பார்ப்பதற்காக கிருஷ்ணனுக்கு வசதிகள் உண்டாக்கிக் கொடுத்ததிலிருந்து உள்ள கதை முழுவதையும் காதராக்ஷி விளக்கிச் சொன்னாள்.


விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. உண்மை தெரியவரும் பட்சம், வேலை போய்விடும். திடீரென்று கவுரியின் அறிவு தெளிந்துவிட்டதைப் போல தோன்றியது. அவள் கேட்டாள்:

"இங்கே யாருமே வரலைன்னு நான் சொல்லிவிட்டால்...?''

காதராக்ஷிக்கு அதுதான் தேவை. அவளுடைய முகம் பிரகாசமானது.

"நானே அதைச் சொல்லணும்னு நினைச்சேன். அதைச் சொல்றதுக்காகத்தான் வந்தேன்.''

கவுரி சொன்னாள்:

"நான் அப்படித்தான் சொல்வேன்.''

எனினும், முன்கூட்டியே ஒரு விஷயத்தை காதராக்ஷி கூற விரும்பினாள். ஏட்டு வேலுப்பிள்ளை வருவார். பயமுறுத்துவார்.

கவுரி சொன்னாள்:

"அது எப்படி இருந்தாலும், நான் உங்களை விட்டு விலகிப் போகமாட்டேன். எதற்கும் தயாராக இருக்குற என்னை எதுக்கு பயமுறுத்தணும்?''

வழக்கை நடத்திக் கொண்டு செல்வதில் கிருஷ்ணனுக்கு சசிதரனும் ரைட்டரும் உதவி செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதையும் காதராக்ஷி சொன்னாள். அப்படியென்றால், வழக்கிலிருந்து கவுரி தப்பித்து விடுவாள்.

கவுரி அதை அந்த அளவிற்குத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கிருஷ்ணன் வழக்கை நடத்துவான் என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. சசிதரன் உதவி செய்தாலும் இல்லாவிட்டாலும் சசிதரனையும் ரைட்டரையும் காதராக்ஷியையும் தான் கைவிடுவதாக இல்லை என்று மீண்டும் அவள் உறுதிபடுத்திக் கூறினாள்.

அடுத்து வேலுப்பிள்ளையின் வருகை. அந்த வழக்கிற்கு வடிவம் கொடுத்ததே அவர்தான். அவர் நினைத்தால் மட்டுமே அந்த வழக்கில் இருந்து அவளைக் காப்பாற்ற முடியும். தூக்குமரத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் ஏ.எஸ்.பி.க்கு முன்னால் அவர் கூறுவதைப் போல வாக்குமூலம் கொடுக்க வேண்டும். அதற்கு அவள் தயாராக இருக்கிறாளா என்பதுதான் கேள்வி.

கவுரி, கிருஷ்ணன் என்ற ஆள் வரவே இல்லையென்றும், அப்படிப்பட்ட ஒரு ஆளுடன் தான் பேசவே இல்லையென்றும் உறுதியான குரலில் கூறினாள். வேலுப்பிள்ளை பற்களைக் கடித்துக் கொண்டே கத்தினார்:

"உன்னை நான் தூக்குமரத்துல ஏத்துறேன்!''

அதற்குப் பிறகும் அவள் அசையவே இல்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாததால் அல்ல. வருவது வரட்டும் என்று முடிவாகத் தீர்மானித்துதான் அவள் சொன்னாள்.

ஏ.எஸ்.பி. வந்து வாக்குமூலத்தை வாங்கினார். கவுரி மிகவும் சரியாக வாக்குமூலம் தந்தாள். கிருஷ்ணன் என்ற ஒரு மனிதன் அவளுக்குத் தெரியவே தெரியாது. அப்படிப்பட்ட ஒரு மனிதன் அவளைப் பார்ப்பதற்கு வரவே இல்லை. லாக் அப்பில் இருந்தவர்கள் எல்லாரும் அப்படிப்பட்ட ஒரு விஷயம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்று வாக்குமூலம் தந்தார்கள்.

வேலுப்பிள்ளையின் பழி வாங்கும் உணர்ச்சி அதிகமானது. அது இயல்பான ஒன்றுதானே? அவர் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தார். மிகவும் தீவிரமாக அந்த வழக்கை நடத்துவது, கிருஷ்ணனைத் தேடிப் பிடித்து பிரச்சினையில் சிக்க வைப்பது- எல்லாவற்றையும் அவர் உறுதியாகத் தீர்மானித்தார். பழி வாங்கும் வெறி உண்டான மனிதரைப் போல அவர் கவுரியின் அறை வாசலில் போய் நின்று சொன்னார்:

"உன்னுடைய அவனை நீ எதிர்பார்த்திரு. நான் அவனுடைய எலும்பில் ஒன்றைக்கூட மிச்சம் வைக்க மாட்டேன். அவன் உனக்கு உதவுவதைப் பார்க்கத்தானே போறேன்!''

உண்மையிலேயே அந்த மிரட்டல் அவளை அச்சம் கொள்ளச் செய்தது. அந்த முரட்டு மனிதர் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ? கிருஷ்ணனை நினைத்து கவுரி பதைபதைப்படைந்தாள்.

ரைட்டரும் சசிதரனும் காதராக்ஷியும் அந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிட்டாலும், அவர்களை அங்கிருந்து இடம் மாற்றம் செய்தார்கள். அவள்மீது கனிவு கொண்ட யாருமே இப்போது ஸ்டேஷனில் இல்லை.

காதராக்ஷிக்கு பதிலாக ஒரு சிசிலி வந்தாள். ஒரு முரட்டுத்தனமான குணத்தைக் கொண்ட பெண். அழகற்ற முகத்தைக் கொண்டவள்... கண்களில் இரத்தமே இல்லாதவள்.

3

லாக் அப்பின் மூலையில் இருந்து இரும்புக் கம்பிகளாலான கதவுக்கு அருகில் வந்ததிலிருந்து கவுரியின் வாழ்க்கையில் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டேயிருந்தன. தூரத்தில் வயலில் இருந்த பெரிய மாமரத்தில் அமர்ந்து கொண்டு குயில் கூவியதும், பெண்குயில் பதிலுக்கு கூவியதும்... இப்படி வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாயின. பிறகு... என்னவெல்லாமோ நடந்துவிட்டன. காதராக்ஷியின் காதல்

கதை, கிருஷ்ணனின் வருகை, காவல் நிலையத்தின் போட்டா போட்டி, வேலுப்பிள்ளையின் மிரட்டல், ஏ.எஸ்.பி.யின் வாக்குமூலம் வாங்குதல்... அனைத்தும் சம்பவங்கள்தான். சம்பவங்கள் என்று கூறும்போது, ஆழமாக சிந்திக்கக் கூடியவையாக அவை இருந்தன. விருப்பங்களும் விருப்பமின்மையும் அந்த சிந்தனையில் வெளிப்பட்டன. உள்ளே மறைந்திருக்கும் உணர்ச்சிப் பெருக்கு இதயத்தை நெகிழச் செய்யவும் வைத்தது. மிகவும் ஆழமாக வாழ்ந்து கொண்டிருந்த நாட்களாக அவை இருந்தன.

தினமும் அதிகமாகிக் கொண்டிருந்த பகை உணர்ச்சியுடன் வேலுப்பிள்ளை பயமுறுத்திக் கொண்டிருந்தார். அது என்ன ஒரு கஷ்டமான விஷயம்! முன்பு அவள் இறக்க வேண்டும் என்று விரும்பினாள். பிறகு வாழ வேண்டும் என்ற ஆசை மொட்டு விட்டது. இப்போது வாடிக் கருகிக் கொண்டிருக்கிறது. அந்த பயமுறுத்தலின் பயம் அதுதான். இனி நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தவாறு லாக் அப் கதவுக்கு அருகில் அமர்ந்து வெளியே தெரியும் பசுமையான உலகத்தைப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். சில நேரங்களில் அவள் நீண்ட பெருமூச்சைவிடுவாள்.

எந்தவொரு உறவும் ஒட்டிக் கொண்டிருக்காமல் கவுரி லாக் அப்பிற்குள் வந்தாள். அவளுக்கென்று எவனும் இல்லை. அப்படி இருக்கும்போது கிருஷ்ணன் வந்து சேர்ந்தான். அவன் எதற்காக வந்தான்?

ஒருநாள் ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். கவுரியை விட சற்று வயதில் மூத்தவளாக இருந்தாள். அவளை கவுரி இருந்த அறைக்குள் கொண்டு வந்து அடைத்தார்கள். சில தீர்மானங்களும் தைரியமும் கொண்ட உயரம் குறைவான பருமனான பெண். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு பெண்மைத்தனமோ சிறைக்குள் நுழைந்து விட்டோமே என்ற பதைபதைப்போ தெரியவில்லை. கவுரியால் அவள் அருகில் சென்று அறிமுகமாகிக் கொள்ள முடியவில்லை.

சிறிது நேரத்திற்கு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பிறகு பேசிக் கொண்டார்கள். அந்தப் பெண் ஒரு நெருப்பு வைக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வந்திருக்கிறாள். இதற்கு முன்பும் ஒரு முறை இதே குற்றத்திற்கு அவள் தண்டனை அனுபவித்திருக்கிறாள். இந்த முறை நெருப்பு பற்ற வைத்த வீட்டிற்கே நெருப்பு வைத்ததற்காகத்தான் முன்பு சிறைக்குள் வந்திருந்தாள்.

அதுவும் ஒரு காதல் கதைதான். அவள் இளம் வயதில் ஒருவனைக் காதலித்தாள். அவனும் காதலித்தான். அவர்கள் கணவன்- மனைவியாக வாழ்ந்தார்கள். திருமணம் நடக்கவில்லை. அதைப் பற்றி நினைக்கவில்லை. இருவரும் சேர்ந்து சிரமப்பட்டு எப்படியோ வாழ்க்கையை நடத்தினார்கள்.


அப்போது அந்த ஆண் பணம் உள்ளவளும் இளம் வயதைக் கொண்டவளுமான ஒருத்தியை ஜாதி முறைப்படி திருமணம் செய்து கொண்டான். குட்டி பிசாசாக மாறிவிட்டாள். அவனுடைய வீட்டிற்கு நெருப்பு வைத்தாள். குட்டி சிறைக்குள் கொண்டு வரப்பட்டாள். வெளியே வந்த அடுத்த நாளே மீண்டும் நெருப்பு வைத்தாள். அதைத் தொடர்ந்து வந்திருக்கிறாள். இது அவள் கூறிய கதைதான்.

குட்டி சொன்னாள்:

"நான் அப்படி இருக்க அவர்களை விடமாட்டேன். அது மட்டும் உண்மை.''

அதைக் கூறியபோது குட்டியின் முகம் கவனிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது. அவள் ஒரு அரக்கியைப் போல இருந்தாள். அவளுக்கு முன்னால் நிற்கும்போது பயமாக இருக்கும். யாரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, அந்த ஆள்தான் அவளுக்கு

முன்னால் நின்று கொண்டிருக்கிறான் என்று அவள் நினைப்பதைப் போல தோன்றும். கவுரி பயந்து போய்விட்டாள்.

குட்டி கவுரியிடம் கேட்டாள்:

"நீங்கள் என்ன செய்தீங்க?''

கவுரி சொன்னாள்:

"நான் என் குழந்தைகளைக் கொன்னுட்டேன்.''

குட்டி அதிர்ச்சியடைந்து விட்டாள். அவள் தன்னுடைய வட்டக் கண்களை உருட்டி கவுரியையே வெறித்துப் பார்த்தவாறு ஒரு சிலையைப் போல நின்று விட்டாள். முன்னால் ஒரு வினோதமான உயிர் உட்கார்ந்திருப்பதைப் போல தோன்றியது.

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், வாழ்க்கையில் முதல் முறையாக குழந்தைகளைக் கொன்ற தாயை குட்டி பார்க்கிறாள்.

அடக்க முடியாமல் குட்டி கேட்டாள்:

"அய்யோ... நீங்கள் ஏன் அதைச் செய்தீங்க?''

உணர்ச்சியற்ற நிலையில் கவுரி சொன்னாள்:

"அதைச் செய்துட்டேன்.''

பிறகு கவுரி தொடர்ந்து சொன்னாள்:

"அதற்குப் பிறகு நான் சாக முயற்சித்தேன். முடியல.''

குட்டிக்கு சிறிது நிம்மதி உண்டானதைப் போல இருந்தது. அவள் சற்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு குட்டி ஆர்வமானாள்.

அவள் கேட்டாள்:

"குழந்தைகளின் தந்தை அதைப் பற்றி விசாரிக்கலையா?''

ஒரே வார்த்தையில் பதில் கூறக்கூடிய கேள்வி அல்ல அது. அவன் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தவன்தான். ஆனால், உதறிவிட்டுப் போய்விட்டான். எல்லாவற்றையும் சேர்த்துக் கூறுவதற்கு கவுரியால் முடியாது.

பதில் கிடைக்காமல் போகவே, குட்டி இன்னொரு கேள்வியைக் கேட்டாள்.

"இல்லாட்டி... குழந்தைகள் உண்டான பிறகு, அந்த ஆள் வேறு பெண் யாரையாவது தேடிப் போயிட்டானா?''

குட்டி அதற்கு மேலும் ஏதோ கூற நினைத்தாள்.

"இந்த ஆண்கள் என்று கூறப்படுபவர்களே அப்படித்தான்.''

அதற்குப் பிறகும் பதில் கிடைக்காமல் போகவே, குட்டி ஒரு கேள்வியை நேரடியாகவே கேட்டாள்:

"இல்லாவிட்டால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை உண்டாகிவிட்டதா?''

அதற்கு உடனடியாக பதில் வந்தது.

"நான் நெறிமுறை எதையும் விடவில்லை. என்னுடைய கழுத்தில் தாலி கட்டியவனுக்கு நம்பிக்கைக்குரியவளாகத்தான் இருந்தேன்.''

சிறிது நேரம் சிந்தனையில் முழ்கி விட்டு, கவுரி சொன்னாள்:

"இன்னொரு ஆள் என்னை விரும்பினார். எனக்குத் தெரியாது. எனக்கு அந்த ஆள்மீது காதல் இல்லை. அந்த மனிதரின் மனதில் காதல் இருந்தது என்றால், அது என்னுடைய குற்றமா?''

"இல்லை'' என்று குட்டி சொன்னாள்.

"பிள்ளைகளின் அப்பா எங்களை விட்டுட்டுப் போய்விட்டார். நான் அவருக்காகக் காத்திருந்தேன். வரவில்லை. நானும் பிள்ளைகளும் யாருமே இல்லாதவர்களாக ஆகிவிட்டோம். அதற்கு மேலே முடியல அக்கா... வாழ முடியல. ஒரு துணை இல்லாமல் எப்படி வாழ முடியும்? நான் ஒரு தவறும் செய்யல...''

அந்தக் கதையில் எங்கேயோ ஒரு கண்ணி விட்டுப் போய் விட்டதைப் போல குட்டிக்குத் தோன்றியது. அவள் கேட்டாள்: "அந்த மனிதன் எங்கே?''

"அந்த மனிதர் என்னிடம் வாய்விட்டுப் பேசியதுகூட இல்லை. பிள்ளைகளின் தந்தை போன பிறகு அந்த ஆளை சமீபத்தில்தான் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்காக அந்த ஆள் இங்கே வந்தப்போ, என்னைப் பார்க்கவே பயப்பட்டதாக அவர் சொன்னார்.''

இவையெல்லாவற்றையும் கூறிய பிறகும், குட்டிக்கு கவுரிமீது மனப் பூர்வமாக பரிதாப உணர்ச்சி உண்டாகவில்லை. அவள் தற்கொலை செய்வதற்கு முயற்சித்தவளாக இருந்தாலும், பிள்ளைகளைக் கொன்றவள். ஆனால் அதிர்ஷ்டமே இல்லாத ஒருத்தி. அவள் இரக்கத்திற்கு உரியவள்தான். குட்டி இரக்கமே இல்லாமல் சொன்னாள்:

"நீங்கள் என்ன கூறினாலும், உங்களிடம் என்னவோ பிரச்சினை இருக்கு. அது மட்டும் உண்மை."

எனினும், அவர்கள் ஒன்றாக அந்த அறைக்குள் சில நாட்கள் இருந்தபோது, ஒருவரையொருவர் மேலும் அதிகமாகத் தெரிந்து கொண்டார்கள். அங்கு அவர்களுடைய விருப்பங்கள் ஒன்றாக இருந்தன. ஒருத்திக்கு இன்னொருத்தி ஆறுதல் கூறினாள்.

"உர்" என்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் சிசிலியும், கெட்டவரான வேலுப்பிள்ளையும் இரண்டு பேருக்கும் எதிரிகளாக இருந்தார்கள்.

குட்டியும் கவுரியும் பேசிக் கொண்டிருந்தபோது, சிசிலி முகத்தைச் சுளித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். சிசிலிக்கு அவர்கள்மீது வெறுப்பு. ஒருநாள் சிசிலி கேட்டாள்:

"இப்படி விடாமல் பேசிப் பேசி நாக்கு வலிக்கலையா?''

குட்டி பதில் சொன்னாள்:

"உங்களுக்கு கோபம் வருகிற அளவிற்கு நாங்கள் என்ன சொல்லிவிட்டோம்? உங்களுடைய விஷயம் எதையாவது பேசிட்டோமா?''

சிசிலிக்கு கோபம் வந்துவிட்டது. முழுமையான கோபத்துடன் அவள் சொன்னாள்:

"நீங்க யாரிடம் இப்படி வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கீங்கன்னு தெரியுதா?''

காதராக்ஷியை ஒரு ஆபத்தில் கொண்டு போய்விட்டுவிட்டதற்காக, சிசிலிக்கு இந்த அளவிற்குக் கோபம் வந்தது. எனினும், கவுரி ஒருத்தியை வெறுக்க கற்றுக் கொண்டாள். குட்டி அதைக் கற்றுக் கொடுத்தாள்.

சில நாட்களில் கவுரியின் வாழ்க்கை நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்பும் மூன்று நான்கு வாய்தாக்கள் வாங்கப்பட்டன. அன்றே குட்டியின் வழக்கும் வந்தது. முதலில் அழைத்ததே கவுரியின் வழக்குதான். அவள் கூண்டில் போய் நின்றாள். அப்போது நீதிமன்ற பிராசிக்யூஷன் தரப்பிற்கு ஒரு கட்டளை இடப்பட்டது.

"அடுத்த வாய்தாவில் வழக்கின் விசாரணை ஆரம்பமாக வேண்டும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் கஸ்டடியில் இருக்கிறாள்.''

ப்ராசிக்யூட்டர் அதற்கு ஆங்கிலத்தில் ஏதோ பதில் சொன்னார்.

வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த வழக்கு குட்டியின் வழக்காக இருந்தது. அந்த வழக்கிலும் நீதிமன்றம் பிராசிக்யூட்டரிடம் கட்டளையிட்டது.

"இந்த வழக்கிலும் அடுத்த விசாரணையின்போது சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும்.''

ப்ராசிக்யூட்டர் அதற்கு பதிலாக என்னவோ கூற ஆரம்பித்தபோது, குட்டி உரத்த குரலில் சொன்னாள்:

"தங்க எஜமானே! எனக்கு இந்த மொழி தெரியாது. மலையாளத்தில் சொல்லுங்க!''

ப்ராசிக்யூட்டர் என்ன கூறினார் என்பதை நீதிமன்றம் குட்டியிடம் கூறியது:


"அடுத்த விசாரணையின்போது சாட்சிகளை ஆஜர்படுத்துவதாக அவர் சொல்லியிருக்கார்.''

குட்டி அதற்குப் பிறகும் விடவில்லை.

"சாட்சிகளா? அது யார்?''

நீதிமன்றத்தை அவமதிப்பதைப் போல சிலருக்குத் தோன்றியது. அவள் புத்திசாலி என்று வேறு சிலர் கூறினார்கள். நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவரின் பக்கம் பார்த்துக் கேட்டது:

"பிரதியைக் கொடுத்துவிட்டார்களா?''

ப்ராசிக்யூட்டர் "கொடுத்துவிட்டேன்'' என்று கூறினார். குட்டி விடவில்லை.

"தரவில்லை... எஜமான், அது பொய். அப்படியே தந்தாலும் எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது.''

அந்த வழக்கிற்காக ப்ராசிக்யூட்டரிடம் பேசுவதற்காக வந்த ஹெட் கான்ஸ்டபிள் கண்களை உருட்டினார். குட்டி குற்றம் சாட்டினாள்.

"ஹெட் கான்ஸ்டபிள் கண்களை உருட்டி பயமுறுத்துகிறார்.''

நீதிபதி ஹெட் கான்ஸ்டபிளைப் பார்த்து எச்சரித்தார். தொடர்ந்து அவர் சொன்னார்:

"நீங்கள் குற்றம் செய்தவள் என்பதை நிரூபிப்பதற்காக சிலரை சாட்சிகளாக ஆக்கியிருக்கிறார்கள்.''

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண் இந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நன்கு தெரிந்திருப்பவள் என்பதை ப்ராசிக்யூட்டரும் நீதிமன்றத்திற்குக் கூறினார்.

அந்த சாட்சிகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று குட்டி நினைத்தாள். நீதிமன்றம் அந்தப் பெயர்களை வாசித்துக் கேட்கச் செய்தது. பதைபதைப்புடன் குட்டி சொன்னாள்:

"அவர்கள் எல்லாரும் திருடர்கள். அவருடைய ஆளுங்க...''

இவ்வளவு ஆனதும் நீதிமன்றம் தீவிர சூழ்நிலையை கடைப்பிடித்தது. நீதிபதி சொன்னார்:

"போதும்... அதை விசாரணை முடிஞ்ச பிறகு தீர்மானிப்போம்.''

அவர் வழக்கை ஒத்தி வைத்தார். குட்டி வெளியேறினாள்.

லாக்கப்பில் தனியாக இருந்தபோது, குட்டி கவுரியிடம் கேட்டாள்:

"என்ன... நீ பயந்துட்டியா?''

உண்மையாகவே கவுரி பயந்துதான் போனாள். குட்டி தொடர்ந்து சொன்னாள்:

"இந்த அளவுக்கு பயப்படுவதற்கு அவசியமே இல்லடி குழந்தை! நாம நம்ம விஷயத்தைச் சொல்லணும். எப்படிப்பட்ட ஆளுங்களெல்லாம் பொய் சாட்சி சொல்ல வருவாங்கன்ற விஷயம் தெரிய வேணாமா?''

கவுரி கேட்டாள்:

"இருந்தாலும், அதை எப்படி உங்களால கேட்க முடிந்தது, அக்கா?''

"நாம எதுக்குடி பயப்படணும்? மேலே வானம் கீழே பூமி.''

தன்னுடைய வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கவுரிக்கும் இருந்தது. அடுத்த விசாரணையின்போது நேரடியாகப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று குட்டி ஆலோசனை சொன்னாள். ஆனால், அது அவளால் முடியுமா?

4

சிதரனும் ரைட்டரும் இடம் மாற்றம் பெற்றுப் போவதற்கு முன்னால் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணனுக்குக் கிடைத்திருந்தன. அவர்கள் கொடுத்திருந்தார்கள். வழக்கில் கவுரியைக் காப்பாற்றக்கூடிய எல்லா உதவிகளையும் செய்து தருவதாக அவர்கள் கூறினார்கள். துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அவர்கள் இடம் மாறிப் போய்விட்டார்கள். எனினும், வழக்கில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் அவளிடம் கூறிப் புரிய வைத்திருந்தார்கள்.

முதலில் தயார் பண்ண வேண்டியது பணம்தான். கிருஷ்ணனுக்கு அவனுடைய ஊரில் பதினைந்து சென்ட் நிலம் இருந்தது. அதை எழுதிவிற்றான். நானூறு ரூபாய் கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டுதான் கிருஷ்ணன் களத்திலேயே கால் வைத்தான். குற்றப் பத்திரிகையில் பதினாறு சாட்சிகள் இருந்தார்கள். அவர்களைக் கைக்குள் போட வேண்டும். சாட்சிகளின் பெயர்களைப் பற்றிய விவரத்தை ரைட்டர் கொடுத்திருந்தார். மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை முடிந்ததும், வழக்கை செஷன்ஸுக்கு மாற்றுவார்கள். அப்போது அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து ஒரு வக்கீலை அவளுக்காக நியமிப்பார்கள். அந்த வக்கீலைப் பார்த்து தேவையான உதவிகளைச் செய்து தர வேண்டும். எல்லாவற்றையும் ரகசியமாகவும் செய்ய வேண்டும். ஏனென்றால் வேலுப்பிள்ளை கிருஷ்ணன்மீது திருட்டு வழக்கு சுமத்தியாவது பிரச்சினைகளை உண்டாக்க முயற்சி செய்வார். அவருக்கு அந்த அளவிற்கு பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சி இருந்தது. அதில் கட்டாயம் கவனம் செலுத்தியாக வேண்டும்.

கவுரியின் வீடு வண்டானத்தில் இருந்தது. அந்த பகுதி கிருஷ்ணனுக்கு நன்கு தெரிந்ததுதான். கவுரியின் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எல்லாருக்கும் அவனை நன்றாகத் தெரியும். கோவிந்தனுடன் சேர்ந்து அவன் சிறிது காலம் அந்த இடத்தில் வாழ்ந்திருக்கிறான். ஆனால், அங்கு செல்வதற்கும் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்ப்பதற்கும் கிருஷ்ணனுக்கு சற்று தயக்கம் இல்லாமல் இல்லை. கிருஷ்ணனால்தான் கோவிந்தன் கவுரியை விட்டுப்பிரிந்தான் என்று நினைப்பவர்கள் அங்கு இருந்தார்கள். ஒரு காலத்தில் அவனையும் கவுரியையும் இணைத்து வதந்தியும் அங்கு பரவிவிட்டிருந்தது. எந்தவொரு உண்மையும் இல்லாத கெட்ட வதந்தியாக அது இருந்தாலும், அங்கு போகாமல் இருக்க முடியாதே!

கவுரியின் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் இருந்த வீட்டில் இருக்கும் கார்த்தியாயனி வழக்கில் ஒரு சாட்சியாக இருந்தாள். கிருஷ்ணன்

முதலில் அங்குதான் சென்றான். கார்த்தியாயனியின் கணவன் அங்கு இருந்தான்.

எதிர்பார்த்திருந்ததைவிட கடுமையான கேள்வி கார்த்தியாயனியின் கணவனான பத்மநாபனிடமிருந்து வந்தது.

"கடித்த பாம்புதான் விஷத்தை இறக்க வேண்டும். ஆனால், அந்த சிறு குழந்தைகள் போயிட்டாங்க. நல்ல குழந்தைகள்! அவளைக் காப்பாற்றி நீ என்ன செய்யப் போகிறாய்?''

அதற்கு கிருஷ்ணனிடமிருந்து பதில் வந்தது.

"நான் திருமணம் செய்து கொள்வேன்.''

தொடர்ந்து தன்னுடைய நிரபராதித் தன்மையை வெளிப்படுத்துவதற்காக கிருஷ்ணன் முயன்றான். கவுரியைத் தான் காதலித்ததென்னவோ உண்மைதான். ஆனால், அவள் பதிலுக்கு காதலிக்கவில்லை. அவள் புனிதமான ஒரு மனைவியாக இருந்தாள். ஊரில் இருப்பவர்கள் பலவற்றையும் சொன்னார்கள். கோவிந்தன் தவறாக நினைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் உண்மை. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது.

பத்மநாபனும் நாணியின் கணவனும் (நாணி இன்னொரு சாட்சி) கிட்டுவும் அதை முழுமையாக நம்பினார்களா என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. எனினும், ஒரு விஷயத்தில் எல்லாருக்கும் அவனைப் பற்றி மதிப்பு உண்டானது. அவன் கவுரியைத் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்த விஷயமே அது.

அவள் நடக்கக் கூடாத வகையில் நடந்து கொண்ட அந்த நாளன்று ஊரில் உள்ள எல்லாருக்கும் ஒரு வெறுப்பு இருந்தது. ஆனால், பிறகு அவள்மீது பரிதாபம் உண்டானது. அவள் காப்பாற்றப்படுவதில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை. இப்போது அவர்களுக்கு ஒரு பயம் இருந்தது. நம்பிக்கையுடன் போலீஸ்காரர்கள் அவர்களை சாட்சிகளாக ஆக்கினார்கள். வேறு மாதிரி நடந்தால் போலீஸ்காரர்கள் கோபப்படமாட்டார்களா? யாருக்கும் தைரியம் வரவில்லை.

பத்மநாபன் கிருஷ்ணனிடம் சொன்னான்:

"நீங்கள் எங்களுக்காக ஒரு பைசாகூட செலவழிக்க வேண்டாம். ஆனால், ஒரு விஷயம். போலீஸ்காரர்கள் அத்துமீறி நடந்தால், உங்களால் தடுக்க முடியுமா?''

முடியும் என்று கூறுவதற்கு கிருஷ்ணனுக்கு தைரியமில்லை. அவனுடைய விஷயமே மிகவும் சிக்கலில் இருந்தது.


போலீஸ்காரர்களின் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாமல் இருப்பதற்காக தேவையான அளவிற்கு முயற்சிகளைச் செய்ய வேண்டியதிருந்தது.

பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சாட்சிகளைத் தவிர, கடல் பகுதியில் இரண்டு சாட்சிகள் இருந்தார்கள். இரண்டு மீனவர்கள். அவர்களில் குஞ்ஞூவாவா சொன்னான்:

"எனக்கு இருபத்தைந்து ரூபாய் தரணும். அப்படின்னா நீங்க சொல்றதைப் போல சொல்றேன்.''

குஞ்ஞூவாவாவிற்கு போலீஸ்காரர்கள் ஒரு பிரச்சினையே இல்லை. ஒரு ஏழைப் பெண்ணைத் தூக்குமரத்தில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கூறுவதுகூட பெரிய விஷயம் இல்லை. அவனுக்குப் பணம் வேண்டும்.

இன்னொரு சாட்சி கோன்னி. அவன் அப்போது அங்கு இல்லை. குஞ்ஞூவாவாவிற்கு பணம் கொடுப்பதாக அவன் ஒப்புக் கொண்டான். தற்போதைக்கு ஐந்து ரூபாய்களைக் கொடுத்தான். அவன் கோன்னியின் விஷயத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்.

போலீஸ்காரர்களைப் பற்றிய சாட்சிகளின் அச்சத்திற்குப் பரிகாரம் காண வேண்டும். அதற்கு எந்தவொரு வழியும் தெரியவில்லை. ஒரு நாள், யாரும் கூறாமலே கிருஷ்ணனின் மனதில் ஒரு வழி தோன்றியது. மனதில் தடுமாற்றம் உண்டாகும்போது, சில வேளைகளில் அப்படி நடக்கும் அல்லவா?

வண்டானத்தில் ஒரு பொதுநல சேவகர் இருந்தார். எல்லா பொது விஷயங்களிலும் அவரை முன்னால் பார்க்கலாம். சுரேந்திரன் என்பது பெயர். முதலாளி என்று அழைப்பார்கள். ஒரு சிறிய ஏற்றுமதி நிறுவனத்தையும் நடத்திக் கொண்டிருந்தார். தேங்காய் வெட்டும் இருந்தது. கொஞ்சம் நிலம் குத்தகைக்கும் கடனுக்கும் எடுக்கப்பட்டு கையில் இருந்தது. சுரேந்திரனை அணுகினால் காரியம் நடக்கும் என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது.

ஒரு சிறிய அன்பளிப்புடன் கிருஷ்ணன் சுரேந்திரனைப் போய் பார்த்தான். முறத்தைப் போல இருந்த ஏழெட்டு கறி மீன்கள்! அதை முன்னால் வைத்துவிட்டு வணங்கினான். சுரேந்திரனுக்கு கிருஷ்ணனைத் தெரியவில்லை. கிருஷ்ணன் எல்லா விஷயங்களையும் விளக்கி, எதையும் மறைக்காமல் சுரேந்திரனிடம் சொன்னான்.

துரதிர்ஷ்டசாலியும் அனாதையுமான கவுரிக்கு உதவுவதற்கு முன்னால் வந்து நின்றதற்காக சுரேந்திரன் கிருஷ்ணனைப் பாராட்டினார். அவனுடைய காதலின் ஆழத்தைப் புகழ்ந்தார். தொடர்ந்து சுரேந்திரன் கேட்டார்:

"என்னிடமிருந்து நீங்கள் என்ன உதவியை எதிர்பார்க்கிறீர்கள்?''

சாட்சிகள் தன்னிடம் கேட்ட விஷயங்களை கிருஷ்ணன் சுரேந்திரனிடம் கூறினான். தொடர்ந்து அவன் கூறி முடித்தான்.

"நீங்கள் நினைத்தால் அவள் காப்பாற்றப்பட்டு விடுவாள்.''

ஒரு சிரமமான விஷயத்தைச் சந்திப்பதைப் போல சுரேந்திரன் சிந்தனையில் மூழ்கினார். எதுவுமே கூற முடியாத இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டதைப் போல காட்டிக் கொண்டார். அவர் சொன்னார்:

"நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொள்ளும் விஷயம் ஒரு அதர்மம் நிறைந்தது. ஆனால், ஒரு உயிர் தப்பிக்கிறது. இது ஒரு தர்மசங்கடமான விஷயமாச்சே!''

கிருஷ்ணனுக்கு அழுத்தமாகக் கூறுவதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது. கவுரி விடுதலையாகி வெளியே வந்தால், தங்கத்தைப் போல அவளைப் பார்த்துக் கொள்ள தான் தயாராக இருப்பதாக அவன் சொன்னான்.

முதலாளி சொன்னார்:

"உங்கள்மீது நான் கொண்டிருக்கும் மதிப்பே அதுதான்!''

முதலாளி கைவிடமாட்டார் என்பதை கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.

சுரேந்திரன் முதலாளி கேட்டார்:

"ஒரு கொலை வழக்கை நடத்தும் அளவிற்கு உங்களிடம் பணம் இருக்கிறதா?''

அதைப் பற்றிய உண்மை நிலையை கிருஷ்ணன் சொன்னான்.

சுரேந்திரன் சிறிது நேரம் சிந்தித்தார். அவர் ஒரு திட்டத்தைத் தீட்டுவதைப் போலத் தோன்றியது. சில விஷயங்களை வெளிப்படையாகக் கூறாமல் இருக்க முடியாது என்பதைப் போல அவர் சொன்னார்:

"நான் சில ரகசியங்களை உங்களிடம் கூறுகிறேன். இப்போது இந்த காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரிலிருந்து எல்லாருக்கும் என்மீது அன்பு இருக்கிறது. நான் அதை மறைக்கவில்லை. எந்த விஷயமாக இருந்தாலும், அவர்கள் என்னுடைய கருத்தைக் கேட்பார்கள். அதெல்லாம் எதற்குத் தெரியுமா? அவர்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும். அதற்காகத் தான். இவ்வளவு இருந்தாலும் அவர்களை நம்ப முடியாது.''

கிருஷ்ணன் ஆர்வத்துடன் சொன்னான்:

"நீங்கள் நினைத்தால் நடக்கும். உங்களை விட்டு அவர்கள் நிற்க மாட்டார்கள்.''

சுரேந்திரன் ஒரு சிரிப்பு சிரித்தார்.

"அது உங்களுடைய எண்ணம்.''

சுரேந்திரன் தொடர்ந்து சொன்னார்:

"பிறகு... ஏன் இப்படி இருக்கிறார்கள் தெரியுமா? இல்ல... சொல்றேன். இவர்கள் பெரிய சூரர்கள், வீரர்கள் என்றெல்லாம் தோன்றும். ஆனால், வறுமையில் இருப்பவர்கள், எதுவும் கிடைக்காதவர்கள். எப்போதும் கஷ்டங்களும் தரித்திரமும்தான்... என்னை எப்போதும் உலுக்கக்கூடிய விஷயங்கள் அவை. ஏதாவது காரியம் தேடி வந்தால் நான் ஏதாவது செய்வேன். அதனால்தான் இப்படியெல்லாம் நடக்க வேண்டி இருக்கிறது.'' இவ்வளவையும் சொன்னவுடன், தானும் தேவையானதைச் செய்வதற்குத் தயார்தான் என்று கிருஷ்ணன் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவன் கூறவில்லை. அதற்கான வசதி அவனிடம் இல்லை. கிருஷ்ணன் அவரிடம் எதுவும் கூறாமல் இருக்கவே, சுரேந்திரன் அவனைப் பார்த்துக் கேட்டார்:

"காரியத்தைச் சரி பண்ணிடலாம். அவர்களுக்கு ஏதாவது கொடுப்பதற்கு நீங்கள் தயாரா?''

எதுவும் கூற முடியாமல் கிருஷ்ணன் தயங்கியவாறு நின்றான். "இயலாது" என்றும் கூற முடியாது. "சரி" என்றும் கூற முடியாது.

சுரேந்திரன் சற்று கறாராகக் கூறினார்.

"நீங்களாக இருப்பதால் தற்போதைக்கு நூறு ரூபாய் கொண்டு வந்து தாருங்கள். இல்லாவிட்டால் நான் விலகிக் கொள்கிறேன்.''

நூறு ரூபாய்! கணக்கில் அப்படியொரு விஷயம் வரும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும், இந்த அளவிற்கு ஆன நிலையில் அது தேவைதான். கொடுக்காவிட்டால் விபரீதம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

அன்றே கிருஷ்ணன் சுரேந்திரனிடம் நூறு ரூபாய்களைக் கொடுத்தான்.

பணத்தை வாங்கிக் கொண்டு சுரேந்திரன் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்கில்லை. ஒரு நல்ல விருந்து ஏற்பாடு செய்து வேலுப்பிள்ளையையும் வர்க்கீஸையும் அழைத்தார். கிருஷ்ணன் அன்பளிப்பாகக் கொண்டு வந்து தந்த கறி மீன்- அந்த விருந்தின் ஒரு முக்கிய விஷயமாக இருந்தது. விருந்து ஒரு கட்டத்தை அடைந்ததும், சுரேந்திரன் தான் கூற வேண்டிய காரியத்தை வெளிப்படையாகக் கூறினார். அதைக் கேட்டதும் வேலுப்பிள்ளை ஆளே மாறிவிட்டார்.

"முதலாளி, அதை விட்டுட்டு எதை வேண்டுமானாலும் சொல்லுங்க. நான் நிறைவேற்றித் தர்றேன். அவள் அந்த அளவிற்குப் போக்கிரி. அவள் தூக்குமரத்துல ஏறியே ஆகணும்.''

தொடர்ந்து வேலுப்பிள்ளை, ரைட்டருடன் உள்ள அந்த மோதல் பற்றிய கதையை விளக்கிச் சொன்னார்.

"அவள் என்னைச் சின்ன குழந்தைன்னு நினைச்சிட்டா. நான் அவளைக் காப்பாற்றியிருக்கலாம். இனிமேல் மாட்டேன்.''

தொடர்ந்து சுரேந்திரனிடம் வேலுப்பிள்ளை ஒரு எச்சரிக்கை விடுத்தார்.

"இந்த விஷயத்தில் தலையிடாதீங்க. நமக்குள் இருக்கும் உறவு பாதிக்கும்.''


சுரேந்திரன் ஏமாற்றமடையவில்லை. விருந்து மேலும் சற்று கடந்து போய்க் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் ஒரு இருபத்தைந்து ரூபாயை வேலுப்பிள்ளையின் பாக்கெட்டிற்குள் நுழைத்தார். வர்க்கீஸுக்கு ஒரு ஐந்து ரூபாய். வேலுப்பிள்ளை சம்மதிக்கவில்லை. கவுரியின் வழக்கிற்காக என்றால், சாப்பிட்டவை அனைத்தையும் அங்கேயே வாந்தி எடுத்துவிட்டுப் போகத் தயார் என்று வேலுப்பிள்ளை கூறினார்.

இனிமேலும் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருப்பதால் பலன் ஏதும் இல்லை என்று சுரேந்திரனுக்கு புரிந்தது. அவர் அந்த விஷயத்தில் இருந்து விலகிக் கொண்டுவிட்டதாகக் கூறினார். வேலுப்பிள்ளைக்கு அதைக் கேட்டு சந்தோஷம் உண்டானது. வேலுப்பிள்ளை ஒரு விட்டுக்கொடுத்தலுக்குத் தயாராக இருந்தார்.

"அவன் இருக்கானே... அவளைக் காப்பாற்றுவதற்காக இருப்பவன்.... அவனுடைய பெயர் என்ன? கிருஷ்ணன்... அவனை நான் தூக்குறதுக்கு முடிவு பண்ணியிருந்தேன். முதலாளி, நீங்க தலையிட்டதால் அவனை நான் விடுறேன். ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்லிடுங்க... மேலும் தொந்தரவு கொடுத்தால், நான் ஆளே மாறிடுவேன்.''

முதலாளி எல்லா விவரங்களையும் கிருஷ்ணனிடம் கூறவில்லை. ஹெட் கான்ஸ்டபிள் அந்த அளவிற்கு நெருங்கி வரவில்லை என்பதை மட்டும் கூறினார். கிருஷ்ணன்மீது கொண்ட பகை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உறுதியான குரலில் கூறினார்.

அந்த வகையில் சுரேந்திரன் முதலாளிக்கு, எது எப்படி இருந்தாலும், ஐம்பது ரூபாய்களுக்கும் அதிகமாகக் கிடைத்தது.

5

றுநாள் காலையில் கவுரி சந்திக்க வேண்டியதிருந்தது- வேலுப்பிள்ளையின் மிரட்டலைத்தான்.

"உன்னுடைய நாட்களை எண்ணிக் கொள்.''

சிறிது நேரம் கடந்ததும் ப்ராசிக்யூட்டர் வந்தார். சற்று நேரம் ஆனதும் வர்க்கீஸுடன் கவுரியின் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த கார்த்தியாயனியும் நாணியும் கிட்டுவும் வெளிவாசலைக் கடந்து வருவதை கவுரி பார்த்தாள். அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்று கவுரிக்குத் தெரியாது. அப்போது குட்டி சொன்னாள்:

"அவர்கள் சாட்சிகளாக இருக்க வேண்டும்.''

சாட்சிகளா? அவர்களுக்கு கவுரி எந்தவொரு தவறும் இழைத்ததில்லை. அது மட்டுமல்ல- அவர்கள்மீது அவள் நிறைய அன்பும் பாசமும் வைத்திருந்தாள். அவர்களுடன் சற்று பேசியிருக்கலாம் என்று கவுரிக்குத் தோன்றியது. கதவிற்கு அருகில் எழுந்து நின்று கவுரி சைகை காட்டினாள். அவர்கள் அதைப் பார்த்தார்களோ என்னவோ?

நாணி அவளைப் பார்த்தாள். அவள் கவுரியை நோக்கி நடப்பதற்குத் தயாரானாள். அப்போது வேலுப்பிள்ளை சத்தம் போட்டுக் கத்தினார்:

"எங்கேடீ?''

நாணி முன்னால் வைத்த காலைப் பின்னால் வைத்தாள். ப்ராசிக்யூட்டர் இருந்த அறைக்குள் அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

குட்டி சொன்னாள்:

"பொய் சொல்ல கற்றுத் தருவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு போகிறார்கள்.''

கவுரி வியப்புடன் கேட்டாள்:

"எதற்கு?''

"உன்னை தூக்குல தொங்க விடுறதுக்கு...''

"அதற்கு நான் அவர்களுக்கு ஒரு துரோகமும் செய்யலையே!''

குட்டி சொன்னாள்:

"அது அப்படித்தான்... ஒரு துரோகமும் செய்ய வேண்டாம். என்னுடைய கடந்த வழக்கில், நான் ஒரு நூறு நன்மைகளைச் செய்தவர்கள் பச்சைப் பொய்யைச் சொன்னார்கள்.''

கவுரி கிருஷ்ணனை நினைத்தாள். இப்போதிருந்துதான் கிருஷ்ணனின் உதவி தேவைப்படுகிறது. அன்று வந்து போனதற்குப் பிறகு கிருஷ்ணனைக் காணவே இல்லை. அவன் வாழ்க்கைமீது ஆசையை உண்டாக்கிவிட்டுப் போய் விட்டானா? அவன் எதற்காக லாக் அப்பிற்கு வந்தான்? இது இன்னொரு துரோகமாக இருக்குமோ?

தெரிந்து கொள்ள வேண்டியவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு சாட்சிகள் மூவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அப்போது கார்த்தியாயனிக்கும் நாணிக்கும் அவளைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதைப் போல தோன்றியது. ஆனால், வர்க்கீஸ் அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டான்.

வேலுப்பிள்ளை கூறியது உண்மையாக இருக்கலாம். அவள் இப்போது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருக்கலாம். முன்பு கவுரிக்கு இந்த விஷயத்தில் வருத்தம் என்ற ஒன்று இல்லாமலிருந்தது. இப்போது மனதில் வேதனை உண்டானது.

பதினோரு மணிக்கு அவளையும் குட்டியையும் நீதிமன்றத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். நீதிமன்றப் பகுதியில் எங்கேயாவது கிருஷ்ணன் இருக்கிறானா என்று பார்த்தாள். இல்லை.

குட்டி கேட்டாள்:

"நீ யாரைத் தேடுகிறாய்? அந்த ஆளையா?''

கவுரி சொன்னாள்:

"ஆமாம்.... இன்றைக்கு விசாரணை என்ற விஷயம் தெரியாமல் இருக்கலாம்.''

குட்டி நம்பிக்கையே இல்லாமல் சொன்னாள்:

"முட்டாள் பெண்ணே! நீ அப்படியே நம்பிக் கொண்டு இரு. அந்த ஆள் வரப் போறது இல்லை. இந்த ஆம்பளைகளே இப்படித்தான்.'' அப்படியென்றால், அவள் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான் என்று நினைத்த மனிதனும் அவளைக் கைகழுவி விட்டானா? அவன் வழக்கிற்காக எதுவும் செய்யவில்லையா?

ஆனால், குட்டி அவளுக்கு தைரியம் சொன்னாள்:

"நமக்கு யாரும் உதவி செய்வார்கள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். நாம்தான் நம்முடைய காரியங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.''

நீதிமன்றத்தில் கவுரியின் வழக்குதான் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை அழைத்தார்கள். கவுரி குற்றவாளிக் கூண்டில் போய் நின்றாள். சாட்சிகளில் கிட்டுவைத்தான் முதலில் கூண்டில் ஏற்றினார்கள். கிட்டுவை சத்தியம் பண்ணச் சொன்னார்கள். கவுரியின் காதுகள் இறுக மூடிக் கொண்டன.

ப்ராசிக்யூட்டர் எழுந்து நின்று, "இந்த கூண்டில் நின்று கொண்டிருக்கும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணைத் தெரியுமா?'' என்று கேட்டார். "தெரியும்'' என்று கிட்டு சொன்னான். தொடர்ந்து அவன் வாக்கு மூலம் தந்தான். அந்த குறிப்பிட்ட நாளன்று கிட்டு கடல் பகுதிக்குப் போயிருந்தான். ஒரு லுங்கியில் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்ட இரண்டு குழந்தைகளின் இறந்த உடல்கள் கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதை அவன் பார்த்தான். அந்தக் குழந்தைகள் கவுரியின் குழந்தைகள். கவுரியின் வீட்டிற்கு அருகில்தான் கிட்டு வசிக்கிறான். கடற்கரையில் பார்த்த விஷயத்தை அவன் போலீஸிடம் போய் சொன்னான். போலீஸ்காரர்கள் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டார்கள். அந்த லுங்கியைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் அந்த கைலியை அவன் அடையாளம் காட்டினான். கவுரியின் வீட்டில் அவன் அதைப் பார்த்திருக்கிறான். அவனுடைய வாக்குமூலம் அந்த வகையில் இருந்தது.

அதில் பொய் எதுவும் இருப்பதாக கவுரிக்குத் தோன்றவில்லை. எனினும், அது அவளுக்கு எதிரான வாக்குமூலம்தான். சந்தேகமே இல்லை. அதைக் கூறாமல் இருந்திருந்தால் அவளுக்கு நல்லதாக இருந்திருக்கும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர் சாட்சிகளிடம் ஏதாவது கேட்பதற்கு இருக்கிறதா என்று நீதிமன்றம் கேட்டது. உண்மையாகச் சொல்லப்போனால் ஏராளமான கேள்விகளை கிட்டுவிடம் அவளுக்குக் கேட்க வேண்டும் போல இருந்தது. எப்படிப்பட்ட கேள்விகள்? அவள் உதவி செய்தவள்தானே?


அவளை தூக்குமரத்தில் ஏற வைப்பதன் மூலம் அவனுக்கு என்ன பிரயோஜனம் கிடைக்கப் போகிறது? இவையெல்லாம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளாக இருந்தன. வெளியே கவுரி பார்க்கக்கூடிய வகையில் குட்டி அமர்ந்திருந்தாள். குட்டி கண்களாலும் கைகளாலும் சைகை காட்டிக் கொண்டிருந்தாள். கேள்வி கேட்க வேண்டும் என்று

கூறுகிறாள். எதுவும் செய்யாமல் கவுரி நின்று கொண்டிருந்தாள். அதற்குள் நீதிமன்றம் சாட்சியைக் கீழே இறக்கி விட்டது.

அடுத்த சாட்சி கார்த்தியாயனி. கார்த்தியாயனி கூண்டில் ஏறினாள். கவுரியை நன்கு தெரியும் என்றும், அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள் என்றும், அவர்கள் இப்போது இல்லை என்றும், கோவிந்தன் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் எங்கேயோ போய்விட்டான் என்றும், அதற்குப் பிறகு குழந்தைகளைக் கொல்லப் போவதாக பலமுறை கவுரி தன்னிடம் கூறியிருக்கிறாள் என்றும் கார்த்தியாயனி கூறினாள். அவளும் லுங்கியை அடையாளம் காட்டினாள். அந்த லுங்கியை கவுரியின் வீட்டில் அவள் பார்த்திருக்கிறாள்.

"அது பொய்! முழுவதும் பொய்!''

நீதிமன்றம் கேட்டது:

"அது இருக்கட்டும். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நீங்கள் சாட்சியிடம் கேட்பதற்கு ஏதாவது இருக்கிறதா?''

கவுரி குட்டியின் முகத்தைப் பார்த்தாள். குட்டி சைகை காட்டினாள். கவுரி கூறினாள்:

"நீங்க இப்படிப் பொய் சொல்லக்கூடாது. தெய்வம் கேட்கும்.''

நீதிமன்றம் தலையிட்டது.

"இது கேள்வி அல்ல. கேட்பதற்கு ஏதாவது இருந்தால் கேட்கணும்.''

சட்டப்படி கேட்பதற்கு கவுரிக்குத் தெரியுமா?

அடுத்து நாணியைக் கூண்டில் நிற்க வைத்தார்கள். கார்த்தியாயனியைப் போல நாணியும் கவுரி அருகில்தான் வசித்தாள் என்றும், கவுரியின் கணவன் கோபித்துக் கொண்டு போய்விட்டான் என்றும் கூறினாள்.

அவள் லுங்கியை அடையாளம் காட்டினாள். அத்துடன் கவுரி தூக்கில் தொங்கி இறப்பதற்கு முயற்சித்தபோது பயன்படுத்திய கயிறு தன்னுடைய பசுவைக் கட்டியிருந்தது என்றும் வாக்குமூலம் கொடுத்தாள். அந்தக் கயிறையும் அடையாளம் காட்டினாள். கவுரியின் பிள்ளைகள் மரணமடைந்து விட்டார்கள் என்றும் சொன்னாள். நாணியின் வாக்குமூலத்தில் ஒரு ஒழுங்கோ வரிசையோ இல்லாமல் இருந்தது. நாணிக்கு கூறக்கூடிய ஒரு விருப்பம் இருக்கிறதா என்று சந்தேகம் தோன்றும் ஒவ்வொரு விஷயத்தையும், மூன்று நான்கு கேள்விகள் கேட்டு சற்று சிரமப்பட்டுத்தான் ப்ராசிக்யூட்டர் அவளைக் கூறவே வைத்தார். இந்த தயக்கம் எதற்கு என்று ப்ராசிக்யூட்டர் பின்னால் நின்று கொண்டிருந்த வேலுப்பிள்ளையிடம் பல முறை கேட்டார்.

ப்ராசிக்யூட்டர் நாணியிடம் கேட்டார்:

"கோவிந்தன் போன பிறகு உங்களிடம் கவுரி தன் குழந்தைகளைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறாளா?''

நாணி பதில் சொன்னாள்:

"குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.''

ப்ராசிக்யூட்டர் ஹெட்கான்ஸ்டபிளைப் பார்த்தார்.

ப்ராசிக்யூட்டர் தெளிவாகக் கேட்டார்:

"குழந்தைகளைக் கொல்லப் போகிறேன் என்று கவுரி கூறினாளா?''

நாணி "இல்லை'' என்று உறுதியான குரலில் கூறினாள்.

ப்ராசிக்யூட்டர் இன்னொரு கேள்வியைக் கேட்டார்:

"அந்தக் குழந்தைகளைக் கொல்வதற்கு தீர்மானித்திருக்கிறேன் என்று, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கவுரி உங்களிடம் பலமுறைகூறியிருக்கிறார் அல்லவா?''

நாணி பதைபதைப்பில் இருந்தாள். அவளால் பேச முடியவில்லை. நீதிமன்றத்திற்குத் தெரியாமல் வேலுப்பிள்ளை அவளைப் பார்த்தார். பதில் கூறும்படி நீதிமன்றம் கட்டளையிட்டது. நாணி வியர்வையில் நனைந்து கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒரு கேள்வியை ப்ராசிக்யூட்டர் கேட்டார்:

"குழந்தைகளைக் கொல்ல முடிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கவுரி உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறாள் என்று நீங்கள் விசாரணைக்கு வந்திருந்த போலீஸ்காரரிடம் கூறியிருக்கிறீர்கள் அல்லவா?''

அதற்கும் பதில் இல்லை. சாட்சி எதிர்பாகத்தில் சேர்ந்துவிட்டதாக அறிவித்தவாறு ப்ராசிக்யூட்டர் குறுக்குக் கேள்விகள் கேட்டார். அவர் கேட்டார்:

"கவுரிக்கும் உங்களுக்கும் இடையே அன்பான உறவு இருக்கிறதா?''

"ஆமாம்.''

"இந்த வழக்கில் கவுரி தண்டிக்கப்படுவது உங்களுக்கு கவலை தரக்கூடிய ஒரு விஷயமா?''

"ஆமாம்.''

நாணியும் தன்னைக் கை கழுவிவிட்டதாக கவுரி நினைத்தாள். வருவது வரட்டும் என்ற நிலையில் அவள் இருந்தாள்.

கவுரியின் வழக்கு அந்த வகையில் அன்று முடிவடைந்தது. குட்டியின் வழக்கில் சாட்சி இல்லை.

திரும்பவும் லாக் அப்பிற்கு வந்தபோது கழுத்தில் கயிறு இறுகுவதைப் போல மூச்சு விடுவதற்கு கவுரி சிரமப்பட்டாள். சாட்சிகளைப் பற்றி குட்டி சொன்னாள்:

"அது அவர்களின் குற்றமல்ல. இந்த முரட்டுத்தனமான போலீஸ்காரர்களுக்கு பயந்துதான் அவங்க அப்படி நடந்துக்கிட்டாங்க. நாணின்னு சொல்லப்படுபவள் நடுங்கியதைப் பார்த்தாயா?''

அப்போது கண்கள் சிவக்க, மீசையை முறுக்கிக் கொண்டே பழி வாங்கும் மனிதனைப் போல வேலுப்பிள்ளை அங்கு வந்தார். அவர் பற்களைக் கடித்துக் கொண்டே சொன்னார்:

"உன்னுடைய கிருஷ்ணன் சில வேலைகளைச் செய்திருக்கிறான். நான் அவனுடைய எலும்புகளில் ஒன்றைக்கூட கொடுப்பதாக இல்லை.''

தொடர்ந்து அவர் சொன்னார்:

"உன்னை தூக்குமரத்தில் தொங்கவிடாவிட்டால்...''

குட்டிக்கு அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் கூறி முடிப்பதற்கு முன்னால் அவள் இடையில் புகுந்து சொன்னாள்:

"அவளிடம் இந்த அளவிற்குப் பழி வாங்கும் உணர்ச்சி வருவதற்கு, உங்களுக்கு அவள் என்ன செய்துவிட்டாள் எஜமான்?''

வேலுப்பிள்ளை குட்டியின் பக்கம் திரும்பினார்.

"கேட்பதற்கு நீ யாருடீ?''

அதிர்ச்சியே அடையாமல் குட்டி சொன்னாள்:

"பார்த்ததைக் கேட்கிறேன். அங்கே... குழந்தைகளை அவள் சுமந்து பெற்றாள். அவள் கொன்றாள். அதற்கு உங்களுக்கு இந்த அளவிற்குப் பகை உணர்ச்சி எதற்கு எஜமான்?''

வேலுப்பிள்ளை சற்று தயங்கினார். குட்டியின் நியாயமான பேச்சு அது. குழந்தைகள் சமூகத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதும் தாய்க்கு கொல்வதற்கு உரிமை இல்லை என்றும் அவளுக்குத் தெரியாது.

வேலுப்பிள்ளை சொன்னார்:

"நீ ஒரு பெரிய வக்கீலாடீ?''

"அப்படியொண்ணும் இல்லை. விஷயத்தைச் சொன்னேன்!''

அதற்குமேல் அங்கு நின்று கொண்டு பேச வேண்டாம் என்று வேலுப்பிள்ளைக்குத் தோன்றியது. அவர் அங்கிருந்து புறப்பட்டார். ஆனால், எதுவும் பேசாமல் போனால் நன்றாக இருக்காது என்று நினைத்து அவர் சொன்னார்:

"ச்சீ... பேசாம இருடீ...''

சூடான பதில் வந்தது.

"பேசினால் என்ன செய்வீங்க?''

வெறுப்புடன் குட்டி தொடர்ந்து சொன்னாள்:

"எங்களை என்ன செய்ய முடியும்?''

வேலுப்பிள்ளை போனவுடன், கவுரி குட்டியிடம் சொன்னாள்:

"கிருஷ்ணன் என்னவோ செய்து கொண்டிருக்கிறார். இல்லையா அக்கா?''

குட்டி எதுவும் பேசவில்லை. அவள் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.

சிறிது நேரம் கடந்ததும், கவுரி சொன்னாள்:

"அந்த ஹெட்கான்ஸ்டபிளின் பழிவாங்கும் உணர்ச்சிக்குக் காரணம் என்னவென்று தெரியுமா?''

"தெரியும்'' என்று குட்டி சொன்னாள்.

"அந்தப் பெண் போலீஸுக்கும் அங்கே இருந்த ரகசியக்காரருக்கும் சாதகமாக நீ வாக்குமூலம் கொடுத்ததுனாலதானே?''


கவுரி சொன்னாள்:

"ஆமாம்... அவர்களுக்கு எதிராக வாக்குமூலம் தந்தால், என்னை இந்த வழக்கிலிருந்து காப்பாற்றுவதாக இந்த ஹெட்கான்ஸ்டபிள் சொன்னார்.''

ஒரு நிமிடம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, கவுரி தொடர்ந்து சொன்னாள்:

"அப்படிச் செய்திருக்கலாம். அப்படியென்றால் இந்த ஹெட்கான்ஸ்டபிள் காப்பாற்றியிருப்பார்.''

நம்பிக்கை இல்லாத குட்டி சொன்னாள்:

"அப்படி நினைக்க வேண்டாம். இவன்களுக்கு நேர்மை, ஒழுக்கம் கிடையாது. பிறகு இன்னொரு விஷயம். இந்த ஆளை நம்பி நிற்பதே நல்லது. ஒண்ணுமே இல்லைன்னா, இவரோட காலைப் பிடிச்சுக்கலாம்.''

அதையேதான் கவுரியும் நினைத்தாள். கவுரி சொன்னாள்:

"என்னாலதானே அவர்களுக்குப் பிரச்சினையே வந்தது என்று நினைத்தேன். அவங்க உதவி செய்றதா சொன்னாங்க.''

"அவங்கவங்க வழியில போயிட்டாங்கள்ல.''

"போயிட்டாங்க.''

"நீ ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சுக்கிட்டா போதும். அவங்க எங்க வேணும்னாலும் போய் தொலையட்டும். அதுதான் வேண்டியது. அதுதான் நல்லது.''

"ஆமாம்... இருந்தாலும் எனக்கு அது தோணல.''

குட்டி சொன்னாள்:

"இனிமேல் போன அறிவு திரும்பவும் கிடைக்குமா? உனக்கு ஏதோ ஒரு தெய்வ சாபம் இருக்கு. நீ உன்னுடைய கழுத்தில் தாலி கட்டியவனை வேதனைப்பட வைத்துவிட்டாய்.''

6

சிறிதும் எதிர்பாராமல் கிருஷ்ணன் குஞ்ஞூ பணிக்கனைச் சந்தித்ததும் அறிமுகமானதும் நடந்தது. புன்னப்புரை மைதானத்தில் ஒருநாள் மதிய வேளையில் வெயிலையும் வெப்பத்தையும் தாங்க முடியாமல் கிருஷ்ணன் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தான். அப்போது அங்கு குஞ்ஞூ பணிக்கனும் இருந்தான். அவர்களுக்குள் அறிமுகம் இல்லை. எனினும், பேசினார்கள். அந்த உரையாடல் வழக்கு விஷயத்திலும் போய்ச் சேர்ந்தது.

வழக்கு நடத்துவதுதான் குஞ்ஞூ பணிக்கனின் தொழில். இப்போது அறுபது வயது இருக்கும். பதினாறு வயதிலிருந்து தொழிலை ஆரம்பித்துவிட்டான். கொஞ்சம் அதிகமாகவே சொத்துகள் இருந்தன. எல்லாம் போய்விட்டன. இப்போது வழக்கு நடத்துவதுதான் முக்கிய வேலையாகிவிட்டது. அந்த ஊரில் உள்ள எல்லா வழக்குகளிலும் ஒரு பக்கத்தில் குஞ்ஞூ பணிக்கன் இருப்பான்.

கவுரியின் வழக்கில் அன்றுவரை நடந்த காரியங்கள் எல்லாவற்றையும் குஞ்ஞூ பணிக்கன் கேட்டுத் தெரிந்து கொண்டான். அங்கேயே கிருஷ்ணனிடமிருந்து தாள்களை வாங்கிப் படித்துப் பார்த்தான். ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்த கிருஷ்ணனிடம் குஞ்ஞூ பணிக்கன் சொன்னான்:

"நீங்கள் வீணாகக் கொஞ்சம் பணத்தை செலவழிச்சிட்டீங்க.''

கிருஷ்ணனுக்கு அந்த எண்ணம் இருந்தது. போனது போகட்டும் என்று குஞ்ஞூ பணிக்கனும் கூறினான். இனிமேல் இருக்கும் விஷயங்களைப் பார்ப்போம் என்று முடிவெடுத்தார்கள். குஞ்ஞூ பணிக்கன் ஆரம்பத்திலிருந்தே ஒரு விஷயத்தைக் கேட்க வேண்டும் என்று நினைத்தான். கையில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த முறை உண்மையிலேயே இருந்ததைவிட நூறு ரூபாயைக் குறைத்துச் சொன்னான்.

குஞ்ஞூ பணிக்கன் "இயலாது" என்பதைப் போல இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டி தன் கருத்தை வெளியிட்டான்.

"அதை வைத்து எதுவுமே செய்ய முடியாதே!''

கிருஷ்ணன் பரிதாபமாகச் சொன்னான்:

"என் கையில் மொத்தம் இருப்பதே அதுதான்.''

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு குஞ்ஞூ பணிக்கன் சொன்னான்:

"பார்ப்போம்... ஏழையின் காரியமும் நடக்க வேண்டும் அல்லவா?''

இன்னும் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை மிகவும் தீவிரமாக குஞ்ஞூ பணிக்கன் சொன்னான்: "ஒரு வக்கீலை ஏற்பாடு செய்ய வேண்டும்.'' அவன் சொன்னான்: "இப்படிப்பட்ட விஷயங்களை

நமக்காக நடத்துவதற்கு நான்கு கைகளைக் கொண்ட ஆடை அணிந்த திறமைசாலிகள் இங்கு இருக்கிறார்கள். அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும். கண்களில் தெரிகிறவனை விட்டுட்டு, பெரிய ஆளாகக் காட்டிக் கொண்டு திரிபவனைத் தேடி நீ போயிட்டே. அதுதான் தப்பு. அது தேவையே இல்லை.''

கிருஷ்ணன், குஞ்ஞூ பணிக்கனின் அறிவுரைப்படி எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பதாகச் சொன்னான். எந்த விதத்திலாவது அந்த வழக்கில் கவுரியைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.

குஞ்ஞூ பணிக்கனுக்கு வக்கீல்களை நன்கு தெரியும். தொப்பை விழுந்த ஒரு வக்கீல் இருந்தார். அங்கு போகலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

குஞ்ஞூ பணிக்கனை வக்கீல் "பெரியவரே" என்று அழைத்தார். கிருஷ்ணனிடமிருந்த தாள்களை வாங்கிப் பார்த்துவிட்டு வக்கீல் கேட்டார்:

"ஓ... அந்தக் குழந்தைகளைக் கொன்ற வழக்கு... அப்படித்தானே? கஷ்டமான விஷயம்... போன விசாரணையின்போது ப்ராசிக்யூட்டரும் போலீஸ்காரர்களும் சேர்ந்து என்ன காரியமெல்லாம் செய்தார்கள் தெரியுமா?''

குஞ்ஞூ பணிக்கன் சொன்னான்:

"கேட்கக் கூடியவர்களும் கேள்விகளும் இல்லாதபோது அப்படித்தானே நடக்கும்...?''

வக்கீல் அது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். தொடர்ந்து கடந்த விசாரணையின்போது நடந்ததைப் பற்றிக் கூறினார்:

"சாட்சிகள் கூறுவதற்குத் தயங்கினார்கள். அப்போது பயமுறுத்தி சொல்லவச்சாங்க. உண்மையாகச் சொல்லப்போனால் ப்ராசிக்யூட்டரும் எதைச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து சொல்ல வைத்தார். அந்த அநீதியைத் தடுப்பதற்கு அங்கு யார் இருக்கிறார்கள்?''

விஷயம் புரிகிறதா என்பதைப் போல குஞ்ஞூ பணிக்கன் கிருஷ்ணனைப் பார்த்தான். வக்கீல் தொடர்ந்து சொன்னார்:

"குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்காக அங்கு யாராவது இருந்திருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். எனினும், ஒரு பெண்ணிடமிருந்து போலீஸுக்கு நினைக்கிற அளவிற்குப் பலன்கள் கிடைக்காது.''

குஞ்ஞூ பணிக்கனிடம் கிருஷ்ணன் தைரியமாக இப்போது கூறலாம். கிருஷ்ணனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. குஞ்ஞூ பணிக்கன் வக்கீலிடம் கேட்டான்:

"அதற்கு இப்போ என்ன செய்வது?''

"மனு கொடுக்க வேண்டும்.''

குஞ்ஞூ பணிக்கன் கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தான். தேவையானதைச் செய்ய வேண்டும் என்பதை கிருஷ்ணனும் ஒப்புக் கொண்டான்.

எல்லா ஆதாரங்களையும் பிரதி எடுக்க வேண்டும். மனு கொடுக்க வேண்டும். எல்லா விசாரணைக்கும் வக்கீலுக்குப் பணம் தர வேண்டும். இவையெல்லாம்தான் செலவுகள். வக்கீல் குமாஸ்தாவை அழைத்து மனுவையும் விண்ணப்பங்களையும் தயார் பண்ணும்படி கூறினார். அன்று மொத்தம் இருபத்தைந்து ரூபாய் கொடுக்க வேண்டும். கிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து விட்டான். அதுவும் பயனில்லாமல் போய்விடுமோ என்று பயந்தான். எனினும், அந்தப் பணத்தை அவன்

குஞ்ஞூ பணிக்கனிடம் கொடுத்தான். வக்கீலுக்குக் கொடுத்தது, பிரதிகளுக்கு செலவிட்டது, குமாஸ்தாவிற்கு கொடுத்தது எல்லாமே குஞ்ஞூ பணிக்கன்தான். அப்போது கிருஷ்ணன் அருகில் இல்லை. ஒரு சிறிய ஊழல் நடந்திருக்குமோ என்று கிருஷ்ணன் சந்தேகப்பட்டான். அன்று விடைபெறும் நேரத்தில் குஞ்ஞூ பணிக்கன் ஐந்து ரூபாய் கேட்டான். மனமில்லா மனதுடன் அதையும் கொடுத்தான். எனினும், வழக்கிற்காக ஏதோ பயன்படுகிற மாதிரி செய்திருக்கிறோம் என்று கிருஷ்ணனுக்கு ஒரு நிம்மதி உண்டானது.

அது உண்மையும்கூட. அடுத்த விசாரணையின்போது கவுரிக்காக ஒரு வக்கீல் ஆஜரானார்.


விசாரணை நடக்கும்போது ப்ராசிக்யூட்டருக்கும் அந்த வக்கீலுக்கும் இடையே வெப்பம் நிறைந்த வாதமும் எதிர்வாதமும் நடந்தன. கவுரியின் உயிருக்கு விலை மதிப்பு வந்தது. அது போலீஸ்காரர்கள் தங்கள் விருப்பம்போல கையாளக் கூடிய ஒன்றல்ல. கேட்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய விஷயமாயிற்றே! அன்று முக்கிய சாட்சிகள் யாரும் இல்லை.

குட்டியின் வழக்கிற்கு அன்றும் சாட்சிகள் இல்லை. அன்றும் அவள் தன்னுடைய சில கவலைகளைக் கூறினாள். அதற்கும் மேலாக லாக் அப்பில் வாழும் வாழ்க்கையைப் பற்றிய குற்றச்சாட்டுகளையும் கூறினாள். படுப்பதற்கு பாய் இல்லை. அணிவதற்கு ஆடை இல்லை. இப்படி பல...

அன்று லாக் அப்பை அடைந்தபோது நிம்மதி தரக்கூடிய ஒரு எளிய மனநிலை கவுரிக்கு உண்டாகிவிட்டிருந்தது. அத்துடன் ஒரு சந்தோஷமும். அவளை விசாரிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை எவ்வளவு வருடங்களாக இல்லாமல் போயிருக்கிறது? சிறைக்கு வருவதற்கு முன்பு மட்டுமல்ல; எவ்வளவு காலமாக யாருமே இல்லாத ஒருத்தியாக அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! அனாதையான சூழ்நிலைதானே இப்படியெல்லாம் அவளை ஆக்கிவிட்டிருக்கிறது!

அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து குட்டி கேட்டாள்:

"ஒரு நிம்மதி... அப்படித்தானே கவுரி?''

"ஆமாம் அக்கா!''

சிறிது நேரம் கழித்து கவுரி சொன்னாள்:

"இனி தூக்குமரத்தில் தொங்க வேண்டிய நிலை வந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம்.'' அது உண்மைதான். குறிப்பாக கவுரியின் விஷயத்தில். அவளுக்கு எப்போதும் காப்பாற்றுவதற்கு ஒரு ஆள் வேண்டும். இல்லாவிட்டால் வாழ முடியாது. தூக்கு மரத்தில் தொங்கும்போது, பின்னாலிருந்து மெதுவாகவாவது ஒரு ஆள் பிடிப்பதற்கு இருந்தால், அது நிம்மதி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும். மனதிற்கு தைரியம் தரக்கூடிய ஒரு காரியமாக இருக்கும். தூக்குமரத்தின் அடியை அடைவது வரையிலாவது சந்தோஷம் இருக்கும். நிம்மதி இருக்கும். இப்போது கழுத்தில் சுருக்கு விழும் நேரத்தில் அவள் இறக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அதற்காக முயற்சித்த ஒரு மனிதன் இருக்கிறான். முன்பு? யாரும் ஞாபகத்தில் இல்லை. எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. உலகத்திலிருந்து விடை பெறும் போது ஒரு ஆளைப் பார்த்துப் பார்த்து விடை பெற்றுக் கொள்வது, அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் அரும்பி அரும்பி விழுவதைப் பார்ப்பது... இவையெல்லாம் நிம்மதி அளிக்கக் கூடிய விஷயங்களாக இருந்தன. பிறந்து வளர்ந்து வாழ்ந்ததற்கான அர்த்தமும் அதுதானே? ஒரு ஆள் வாழ்ந்து, யாரும் அன்பு செலுத்தவில்லை, யார் மீதும் அன்பு செலுத்தவில்லை என்றால், அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? கவுரி அன்பு செலுத்தியவள். ஒரு அனாதையாக இருந்தவள் அல்லவா? தாயாக இருப்பதற்கு

அர்த்தம் அன்பு செலுத்துவதும் அன்பு செலுத்தப்படுவதும்தானே? இப்போது அவளுக்கு ஒரு மனிதன் இருக்கிறான் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், அவள் அன்பு செலுத்திய ஒரு மனிதன் இருந்தான். அந்த ஆண்தான் அவளைத் தாங்கிக் கொள்ளக் கூடியவனாக இருந்தான்.

அவளுடைய கழுத்தில் தாலி கட்டியவன்! அவனைச் சார்ந்து இருப்பதற்கு அவள் பழகிவிட்டிருந்தாள். அவளால் அவனை மறக்க முடியாது.

கவுரி சொன்னாள்:

"நான் குழந்தைகளின் அப்பாமீது அன்பு வைத்திருந்தேன்.''

குட்டி கேட்டாள்:

"அப்படின்னா அந்த ஆள் உன்மீது அன்பு வைக்கவில்லையா?''

அவன் அன்பு செலுத்தவில்லை என்று கவுரியால் கூற முடியாது. அவன் உண்மையிலேயே கவுரிமீது பாசம் வைத்திருந்தான். குட்டி கேட்டாள்:

"நீ இப்போ அந்த ஆளை ஏன் நினைச்சே?''

"நான் அவரை நினைச்சுப் பார்த்தேன்.''

ஒருவேளை, கோவிந்தன் செய்ய வேண்டியதை கிருஷ்ணன் செய்வதைப் பார்த்தபோது கோவிந்தனை அவள் நினைத்திருக்க வேண்டும்.

கவுரி தொடர்ந்து சொன்னாள்:

"அந்த மனிதர் என்மீது அன்பு வைத்திருந்தார்.''

"யாருடீ?''

"கிருஷ்ணன் அண்ணன்... எனக்கு அந்த விஷயம் தெரியாது. எனக்கு அவர்மீது விருப்பம் இருந்தது இல்லை. நான் அப்படிப் படித்தவளும் அல்ல!''

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு கவுரி சொன்னாள்:

"பாவம்... எவ்வளவோ கஷ்டப்படுறாரு...''

ஒரு பக்கம் கிருஷ்ணன், இன்னொரு பக்கம் கோவிந்தன்- நடுவில் கிடந்து கவுரி கஷ்டப்படுவதைப் போல தோன்றியது. அது குட்டிக்குப் புரிந்தது.

சாதாரணமான குரலில் கவுரி சொன்னாள்:

"பாவம்... பூமியில் இருக்கிறாரோ என்னவோ!''

உணர்ச்சியே இல்லாமல் குட்டி கேட்டாள்:

"யார்? உன்னுடைய குழந்தைகளின் தந்தையா?''

"ஆமாம்... என்னுடன் சத்தம் போட்டு பேசியது இல்லை. என் மேலே மண்படும்படிவிட்டதில்லை. நான் நீர் குடிக்க நேரம் தவறி விட்டால், பிறகு... பைத்தியம் பிடிச்ச மாதிரிதான். சில நேரங்கள்ல என்னையே பார்த்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருப்பார்.''

குட்டி சிறிய ஒரு வக்கிர புத்தியுடன் கேட்டாள்:

"கிருஷ்ணனும் அதே மாதிரி பார்த்துப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருப்பான் என்று நீ சமீபத்தில் சொன்னாய் அல்லவா?''

கள்ளங்கபடமில்லாமல் கவுரி சொன்னாள்:

"ம்... ஆனால் அது எனக்குத் தெரியாது.''

மனதில் நிழலாடிக் கொண்டிருந்த ஒரு கேள்வி. ஆனால், அது சாதாரணமாக இருக்கக்கூடியதுதான். குட்டி கேட்டாள்:

"இனி இரண்டு பேரும் வந்துவிட்டால், நீ என்ன செய்வாய்?''

கவுரி நடுங்கிவிட்டாள். அதை அவள் சிந்திக்கவே இல்லை. கோவிந்தன் வருவது... கிருஷ்ணன் இவை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அவளைக் காப்பாற்றுவது... கவுரியின் இதயத்திற்குள் நெருப்பு விழுந்ததைப் போல இருந்தது.

"அதைவிட தூக்கு மரத்திலேயே ஏறிடலாம்''- கவுரி இயல்பாகக் கூறினாள்.

குட்டி இடையில் புகுந்து கூறினாள்:

"நீ என்ன சொன்னாலும், என்னால் எல்லாவற்றையும் நம்ப முடியாது. நீ ஒரு திருடி.''

பரிதாபமான குரலில் கவுரி சொன்னாள்: "இல்லை அக்கா!''

"அப்படியா? வேண்டாம்.''

7

குஞ்ஞூவாவாவும் கோன்னியும் சலவை செய்யும் பரமுவும்தான் முக்கிய சாட்சிகள். அந்த மூன்று சாட்சிகளையும் கைக்குள் போட வேண்டும் என்று வக்கீல் கறாரான குரலில் கூறினார். கிருஷ்ணனும் குஞ்ஞூ பணிக்கனும் கடுமையாக முயற்சி செய்தார்கள். அது முடியக்கூடிய விஷயமாக இருந்தது. போலீஸ்காரர்களுக்கு முதுகில் விழுந்த ஒரு அடியாக இருந்தது.

சம்பவம் நடைபெற்ற நாளன்று இரவு வேளையில் கடலின் அருகில் கவுரியையும் குழந்தைகளையும் பார்த்ததாகவும், அவர்கள் நேராக கடலை நோக்கிச் சென்றார்கள் என்றும், கடலில் குதிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரியாது என்றும் குஞ்ஞூவாவாவும் கோன்னியும்

வாக்குமூலம் தர வேண்டும். ஆனால், இருவரும் அன்று கவுரியைப் பார்க்கவே இல்லை என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். லுங்கியின் சலவை அடையாளத்தைக் கண்டு பிடிப்பதற்குத்தான் பரமுவை சாட்சியாக வைத்திருந்தார்கள்.


அவன் தான் இட்ட சலவை அடையாளமல்ல அது என்று சொன்னான். அந்த மூன்று சாட்சிகளையும் ப்ராசிக்யூட்டர் எதிர் விசாரணை நடத்தினார்.

கிருஷ்ணனின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. குஞ்ஞூ பணிக்கனுக்கு அன்று சிறிது உயரம் அதிகமானது. அவன் கொஞ்சம் அதிகமாக வளர்ந்தான். உண்மையாகவே அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டிய ஒன்றுதான்.

குட்டி மனதில் பொறாமையை வைத்துக் கொண்டு கவுரியிடம் சொன்னாள்:

"இனி தூக்கு மரத்தில் ஏற வேண்டியது இல்லையே!''

கவுரி அந்த வார்த்தைகளை நம்பினாள். குட்டியின் குரலில் இருந்த பொறாமையை அவள் தெரிந்திருக்கவில்லை.

சட்டத்தைப் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் மூளையின் ஓரத்தில் ஒரு சந்தேகம் நிழலாடிக் கொண்டிருந்தது. அது அவளுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளும் செயல்தான். அவள் சொன்னாள்:

"அன்று எனக்கு ஒரு சுய உணர்வே இல்லை. எனக்கென்று யாருமில்லை. ஒரு மனிதரும். அப்போது அந்த மகாபாவி ஹெட்கான்ஸ்டபிள் என்னைக் காப்பாற்றுவதாகச் சொல்லி வந்தார். அவர் ஒரு மிகப் பெரிய பாவிதான். அவர் அழக்கூட செய்தார். பிறகு நான் நீதிமன்றத்தில் கூற வேண்டிய வாக்குமூலத்தைச் சொல்லிக் கொடுத்தார். அன்று எனக்கு இறந்தால் போதும் என்றிருந்தது. நான் அவர் சொன்ன மாதிரியே வாக்குமூலம் கொடுத்தேன்.''

குட்டி கேட்டாள்:

"குஞ்ஞூவாவாவிடம் போலீஸ்காரர்கள் கேட்டது மாதிரியா நீ வாக்குமூலம் தந்தாய்?''

"ஆமாம்... அவர்களை கடலின் அருகில் பார்த்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தேன்.''

சாதாரண அறிவு அதிகமாக உள்ள குட்டி அறிவுரை கூறினாள்:

"நீ ஆலப்புழை நீதிமன்றத்துக்குப் போகுறப்போ போலீஸ்காரர்கள் கூறித்தான் அப்படி வாக்குமூலம் கொடுத்தேன் என்று சொல்லணும்.''

அப்படிக் கூறலாமா என்று கவுரிக்கு சந்தேகம் உண்டானது.

குட்டி சொன்னாள்:

"சொல்லலாம். அதுதான் உண்மையான வாக்குமூலம்.''

"அங்கே போய் சொல்லணுமா?''

"இல்லை... விசாரணை முடிஞ்ச பிறகு, நீதிமன்றம் கேட்கும்.''

வாழ வேண்டும் என்ற ஆசை அதிகரித்த நிலையில் கவுரி சொன்னாள்:

"எனக்கு எதுவும் தெரியாது. நான் என்ன சொல்வேனோ, எனக்கே புரியல. ஆலப்புழைக்குப் போறப்போ நீங்க என்கூட இருந்தால் நல்லா இருக்கும் அக்கா.''

இப்போது கவுரியின் பதைபதைப்பே வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்கு எதிரான விஷயங்களைப் பற்றிதான். அன்று அப்படிச் சொன்னது தப்பாகப் போய்விட்டது. அந்த குற்றத்தை ஒப்புக்கொள்ளும் செயல் மட்டும் நடந்திருக்காவிட்டால், எல்லா விஷயங்களும் சரியாகிவிட்டிருக்கும். நீதி மன்றத்தில் அளிக்கக்கூடிய வாக்குமூலம்தான் இனி இருக்கக்கூடிய ஒரே தப்பிக்கும் வழி.

வேலுப்பிள்ளையின் பகை உணர்ச்சி அதிகமானது. சாட்சிகள் மூன்று பேரும் ஏமாற்றிவிட்ட பிறகு, அப்படி இருக்கக் கூடியது இயல்பான ஒன்றுதானே! அவர்கள் வாக்குமூலம் தந்த அதே நாளின் மாலை வேளையில் அவர்களைப் பிடிப்பதற்காக ஒரு முயற்சி நடந்தது. ஆனால், முடியவில்லை. குஞ்ஞூவாவா மீதுதான் அதிகமான பகை உணர்வு இருந்தது.

நான்கைந்து நாட்கள் கடந்த பிறகு குஞ்ஞூவாவாவைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். என்ன காரணத்திற்காக என்று தெரியவில்லை. கவுரி பார்த்துக் கொண்டிருக்க, வேலுப்பிள்ளை அவனை அடித்தார். நிலைகுலைந்து போய் அவன் தூரத்தில் போய் விழுந்தான். கவுரி "அய்யோ" என்று இடம், காலம் எல்லாவற்றையும் மறந்து உரத்த குரலில் கத்திவிட்டாள். வேலுப்பிள்ளை அவள் இருந்த பக்கம் திரும்பினார்.

"இது மட்டுமில்லைடீ... நீ இன்னைக்கு கேளு!''

அது உண்மைதான். அன்று இரவு பக்கத்து அறையில் இருந்து அடி, உதை விழும் சத்தமும் கூப்பாடும் கேட்டுக் கொண்டேயிருந்தன. தாங்கிக் கொள்ள முடியாத கவலையுடன் கவுரி குட்டியிடம் கூறினாள்:

"இதைவிட காப்பாற்றாமலேயே இருக்கலாம், அக்கா!''

பற்களைக் கடித்துக் கொண்டே அவள் வேலுப்பிள்ளையை மனதிற்குள் திட்டினாள். குஞ்ஞூவாவாவின் ஒவ்வொரு கூப்பாடும் அவளுடைய நெஞ்சைத் தகர்த்துக் கொண்டிருந்தது. பாவம்... அவன் இந்த தண்டனையை எதற்காக அனுபவிக்கிறான்? குட்டியால் எதுவும் பேச முடியவில்லை.

குட்டி கேட்டாள்:

"உண்மையிலேயே நீ குஞ்ஞூவாவாவை அன்று பார்த்தியா?''

"இல்லை அக்கா. அவர் சொன்னது உண்மை. போலீஸ்காரர்கள் பொய் சொல்லியிருக்காங்க!''

குட்டி எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது கவுரியின் கவனத்தில்பட்டது. அது என்ன ஒரு இருத்தல்! அந்தப் பக்கத்தில் ஒரு மனிதனை உதைத்துக் கொல்கிறார்கள். அதுவும் கவுரிக்கு உதவியதற்காக. குட்டிக்கு ஒரு கவலையும் இல்லை. குட்டிமீது கவுரிக்கு ஒரு வெறுப்பு தோன்றியது. போதாக்குறைக்கு பேசாமல் இருந்த குட்டி போலீஸ்காரர்களுக்கு ஆதரவாக சொன்னாள்:

"ஒரு கொடுமையான கொலைச் செயல் என்று வைத்துக் கொள். போலீஸ்காரர்கள் சாட்சிகளை வைத்திருக்கிறார்கள். அந்த சாட்சிகள் புரண்டால், கொலை செய்த நபர்கள் தப்பி விடுவார்களா இல்லையா? அப்போது மாறக்கூடிய சாட்சிகளை ஒரு வகையில் அடித்து உதைக்கத்தான் வேண்டும்.''

அதற்கு அர்த்தம் குஞ்ஞூவாவாவை அடித்து உதைக்க வேண்டும் என்பதுதான்!

கவுரி கோபத்துடன் கேட்டாள்:

"அக்கா, உங்க வழக்கில் உங்களுக்கு சாதகமாக ஒரு சாட்சி சொன்னால், அந்த ஆளையும் அடித்து உதைக்கணுமா?''

குட்டி பதிலெதுவும் சொல்லவில்லை.

வேறு யாருடனும் இருப்பதைவிட கவுரிக்கு குஞ்ஞூவாவாவுடன் உறவு உண்டானது. மேலும் ஒரு கயிறு மூலம் அவன் அவளை வாழ்க்கையுடன் பிணைத்துவிட்டான். அவள் என்றென்றும் குஞ்ஞூவாவாவிற்கு கடமைப்பட்டிருக்கிறாள்.

அந்த லாக் அப்பிற்குள் குஞ்ஞூவாவாவும் மற்ற சாட்சிகளும் கவுரிக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுத்த பிறகு , கவுரிக்கும் குட்டிக்கும் இடையே இருந்த உறவில் ஏதோ ஒரு மாறுதல் உண்டானது. அது லாக் அப். மனித குணத்தின் மாறுதல்களும் முட்களும் மிகவும் எளிதில் வெளிப்படக்கூடிய இடம் அது. ஒரு ஆளின் இயற்கையான குணம் லாக் அப்பில் தெரியும். குட்டி ஒரு தனிப்பட்ட குணத்தைக் கொண்டவளாயிற்றே! விருப்பமும் விருப்ப மின்மையும் கருணையும் பகையும் அன்பும் கோபமும் அவளைப் பொறுத்தவரையில் உச்சத்தில் மிகவும் பலமாக இருக்கும். அன்பு செலுத்துவதாக இருந்தால், அளவிற்கும் அதிகமாக அன்பு செலுத்துவாள். வெறுத்தால், அதுவும் அளவிற்கு அதிகமாகத்தான். காதலன் மீது அன்பு செலுத்தினாள். அது எல்லையே இல்லாத காதலாக இருந்தது. வெறுத்தாள். விளைவு- ஒருமுறை அல்ல. இரண்டுமுறை வீட்டிற்கு நெருப்பு வைத்தாள். இனிமேலும் நிம்மதியாக இருக்க விடப்போவதில்லை என்று சபதம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் வாழ்க்கையின்மீது காதல் கொண்டிருந்தவள். வெறுத்தபோது வாழ்க்கையைப் பந்தாடுவது என்ற நிலை அவளிடம் உண்டானது. அவள் பயம் கொண்டவளாக இருந்தாள். பயம் என்ற ஒன்று இல்லாமற் போனபோது, அச்சமின்மை அவளிடம் அளவுக்கு அதிகமாகக் குடிகொண்டுவிட்டது.


அப்படிப்பட்ட குணத்தைக் கொண்ட ஒருத்தியும் அப்பிராணியான- பலவீனமான இன்னொருத்தியும் சேர்ந்து அந்த லாக் அப்பில் இருந்தார்கள். கவுரி பயம் கொண்டவளாக இருந்தாள். தனித்து இருப்பதற்கும் இயலாதவள். யாருடைய பாதுகாப்பிலோதான் அவளால் வாழ முடியும்; அவளால் அன்பு செலுத்த முடியும். ஆனால், வெறுக்க முடியாது. விருப்பமும் விருப்பமின்மையும் எல்லையைக் கடந்து இருக்காது. அவளுடைய உணர்ச்சிகள் பெருகிப் போய் இருப்பதில்லை. எந்தச் சமயத்திலும் கவுரி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்ததில்லை. தூக்கு மரத்தை நோக்கிச் செல்லும்போது பலவீனமான அவளால் அந்த

நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவதற்கு முடியவில்லை. அதற்கான மனபலம் அவளுக்கு இல்லை. வேறு யாருடைய மன பலத்திலாவது அவள் நீந்திச் செல்வாள். அப்படிப்பட்ட இரண்டு பெண்கள் லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இருவரின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளும் வேறுபட்டவையாக இருந்தன.

குஞ்ஞூவாவாவை கருணையே இல்லாமல் கொடுமைப்படுத்தியதன் காரணமாக உண்டான நடுக்கம் கவுரியைப் பொறுத்த வரையில் மிகப் பெரியதாக இருந்தது. குட்டியை அது பாதிக்கவேயில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பல நேரங்களில் குட்டி போலீஸ்காரர்களின் கஷ்டங்களைப் பற்றிக் கூறுவது உண்டு. அவர்கள் தங்களுக்காகவா கஷ்டப்படுகிறார்கள்? மனிதனை மனிதன் கொல்லக் கூடாது, இன்னொருவனின் பொருளைத் திருடக்கூடாது- அதற்காகத்தான் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பேச்சைக் கேட்டுக் கேட்டு சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு முறை கவுரி கேட்டாள்:

"அப்படியென்றால்... அக்கா உங்களைப் பிடித்து வைத்திருப்பதும் சரிதானே?''

குட்டி சொன்னாள்:

"ஆமாம்... சரியில்லாமல் வேறென்ன?''

சிறிது நேரம் கழித்து குட்டி தொடர்ந்து சொன்னாள்:

"நான் இரண்டு மாதிரியும் இருக்கக்கூடியவள். ஒருமுறை சிறைக்குள் வந்தேன். சிறையை விட்டு வெளியே போன நான்காவது நாள் மீண்டும் வந்தேன். இன்னும் வெளியே போனாலும், பிறகும் வருவேன்.''

மேலும் சிறிது நேரம் கடந்ததும், மனதில் பொறாமையை வைத்துக் கொண்டிருப்பதைப் போல குட்டி மீண்டும் சொன்னாள்:

"சிறைக்குள் வந்துவிட்டு வெளியே போக வேண்டும் என்பதற்காக நான் தவம் இருக்கவில்லை!''

அது பொறாமையா? கவுரி தப்பித்துவிட்டதால் உண்டான பொறாமை. கவுரியைப் பற்றி விசாரிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதால் உண்டான பொறாமை. கவுரி காப்பாற்றப்பட்டுவிடுவாள் என்ற விஷயம் உறுதியாகத் தெரிந்தவுடன் உண்டான பொறாமை. அப்படி நினைப்பது நியாயமான ஒன்றே அல்ல. குட்டி வெளியே வந்துவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு சிறைக்குள் வரவில்லை. அப்படியென்றால் கவுரி காப்பாற்றப்படுவதில் பொறாமைப்படுவதற்கு அவசியமே இல்லை. எது எப்படி இருந்தாலும் தேவையில்லை. ஒரு பரிதாப உணர்ச்சி இல்லாமை சில நேரங்களில் வெளிப்பட்டது. கவுரியிடம் வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருந்தபோது அவள்மீது குட்டிக்கு பரிதாப உணர்ச்சி இருந்தது.

இப்போது கவுரியிடம் மலர்ச்சி இருந்தது. அப்படி இருப்பது இயல்பான ஒன்றுதானே? வாழ வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அப்போது சிரிக்க முடியும். சில தமாஷான விஷயங்களைக் கூறி அவள் சிரிப்பதுண்டு. லாக் அப்பில் பல நாட்களாக அவள் இருந்து கொண்டிருந்தாலும், அங்கு மூட்டைப் பூச்சியும் கரையானும் அதிகமாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டையே இப்போதுதான் கூறுகிறாள். இரவில் படுத்து உறங்க முடியவில்லை! கொஞ்சம் பெருக்கிச் சுத்தம் செய்தால் சற்று நிம்மதியாக இருக்கும். சில நாட்களாகவே அவளிடம் இந்தக் குற்றச்சாட்டு இருந்தது. குட்டி அதற்கு எந்த பதிலும் கூறுவதில்லை.

ஒருநாள் அவள் குட்டியிடம் சொன்னாள்:

"ஒரு துடைப்பம் கேட்கலாமா அக்கா?''

குட்டி சொன்னாள்:

"என்னால முடியாது. நீ கேட்டால் என்ன?''

தொடர்ந்து குட்டி சொன்னாள்:

"என்னை மூட்டைப் பூச்சி கடி ஒண்ணும் பண்ணிடாது!''

கவுரி கேட்டாள்:

"அக்கா, அப்படி ஏன் சொல்றீங்க?''

"அது அப்படித்தான். நான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வந்தவள். சுகமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே வந்திருக்கக் கூடாது.''

குட்டி கடுமையான குரலில் பேசினாள். அப்படி கடுமையாகவும் கோபமாகவும் இருக்கும் அளவிற்கு கவுரி எதுவுமே செய்ததில்லை. கவுரியின் கண்கள் கண்ணீரால் நிறைந்துவிட்டது. அவள் எதுவும் பேசவில்லை.

அந்த சிறைவாழ் உயிர்களின் விருப்பங்கள் ஒன்றுதான். எனினும், அங்கு பொறாமையும் கிண்டலும் இருந்தன. கவுரி துடைப்பம் கேட்கவில்லை. இரவில் கண் விழித்து கவுரி தன் உடலைச் சொறிவதையும் தடவிப் பார்ப்பதையும் குட்டி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அது குட்டிக்கு ஒரு சுவாரசியமான விஷயமாக இருந்தது. அவளும் சொறிந்து கொண்டிருந்தாள்.

குட்டி சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கும்போது கவுரி பரிதாபப்படுவாள். குட்டியின் அரவணைப்பில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருத்தியைப் போல கேட்பாள்:

"அக்கா, ஏன் கோபமா இருக்கீங்க? நான் பாவம் இல்லையா?''

"எனக்கு யார் மீதும் கோபம் இல்லை.''

அதை உண்மையிலேயே ஒரு கோபத்துடனே கூறுவாள்.

லாக் அப்பில் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் குளிக்கலாம். தினமும் காலைக் கடன்களுக்காக அழைத்துச் செல்லப்படும் போது, குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று கவுரி குட்டியிடம் கெஞ்சியவாறு சொன்னாள்.

முன்பு உண்டான எல்லா அனுபவங்களையும் மறந்துவிட்டுத்தான் அப்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்வாள். எல்லா விஷயங்களையும் கவுரி வெகு சீக்கிரமே மறந்துவிடுவாள். குட்டி அவளுடைய பாதுகாவலாளி.

ஒருநாள் கால்களைப் பிடித்துக் கொண்டு கவுரி குட்டியிடம் சொன்னாள்:

"கொஞ்சம் கேளுங்க அக்கா!''

அன்று கோபிக்கவில்லை.

"ஏன் தினமும் குளிக்கணும்? நான் அப்படியெல்லாம் குளிக்க விரும்பவில்லை. நான் தினமும் குளித்து பொட்டு வைத்து இருந்தவள்தான்!''

அந்தப் பெண்ணின் ஏமாற்றத்தை கவுரியால் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தவள் அவள். இனிமேல் குளிக்க வேண்டாம் என்ற நிலையை அடைந்திருப்பவள் அவள். பரிதாப உணர்ச்சி மேலிட கவுரி குட்டியின் கண்ணீரைத் துடைத்தாள். அதைத் தவிர அப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. குட்டி தொண்டை தடுமாற கவுரியை ஆசீர்வதித்தாள்.

"தங்கச்சி, குளி... அழகுபடுத்திக் கொண்டு இரு. நீ ஒருவனை எதிர்பார்த்து இருக்கலாம்.''

கவுரி சொன்னாள்:

"அக்கா, அந்த அண்ணன் இடையில் நடந்த தவறை மறந்துவிட்டு உங்களை நாடி வந்தால்...?''

நடக்காத விஷயம் என்பதைப் போல இப்படியும் அப்படியுமாக குட்டி தலையை ஆட்டினாள். அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள். கவுரியும் அழுதாள். எப்படித் தேற்றுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.


8

ன்றிரண்டு வாய்தாக்களில் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முதல்கட்ட விசாரணை முடிவடைந்துவிடும். பிறகு வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். அத்துடன் அவளை ஆலப்புழை சப் ஜெயிலுக்கு மாற்றுவார்கள். என்ன காரணத்தாலோ என்னவோ குட்டியின் வழக்கில் இவ்வளவு நாட்கள் ஆகியும் சாட்சி விசாரணையே ஆரம்பமாகவில்லை. ஒவ்வொரு வாய்தாக்களும் நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தன. குட்டி எல்லா வாய்தாவின்போதும் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தாள். எதிர்தரப்பு போலீஸைக் கைக்குள் போட்டுக் கொண்டு எந்தவொரு காரணமும் இல்லாமல் வழக்கை இழுத்தடிப்பதாக அவள் குற்றம் சாட்டினாள். ஆனால், ஒரு அசைவும் இல்லை. சில நாட்கள் தாண்டி விட்டால் கவுரி போய்விடுவாள். பிறகு குட்டி தனியாகி விடுவாள்.

மழைக்காலம். நிற்காமல் நாட்கணக்கில் மழை பெய்து கொண்டே இருந்தது. பலமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது. இரும்புக் கம்பிகளால் ஆன கதவின் வழியாக வெளியே தெரிந்து கொண்டிருந்த உலகம் குளிரில் விறைத்துப் போய்விட்டிருந்தது. வெறும் தரையில் தான் குட்டியும் கவுரியும் படுத்திருந்தார்கள். கோடை காலத்தில் லாக் அப்பிற்குள் புழுங்குவதைப் போல மழைக்காலத்தில் நடுங்க வைக்கும் குளிர் இருந்தது. ஒரு கிழிந்த பாய்கூட இல்லை. ஆளுக்கொரு முண்டு மட்டுமே இருந்தது. அந்தக் குளிரில் எப்படி இருக்க முடியும்?

இரத்தம் மரத்துப் போனது. தோல் சுருங்கிப் போனது. தாடையும் பற்களும் நடுங்கின. வெப்பம் எங்கே கிடைக்கும்? உடலுக்கு ஒரு குணம் உண்டு. சதையும் சதையும் சேர்ந்து, உடலும் உடலும் ஒன்று சேர்ந்தால் வெப்பம் உண்டாகும். அடுத்தடுத்து படுத்திருக்கும் கவுரியும் குட்டியும் ஒன்றாகச் சேர்ந்தார்கள். குட்டி கவுரியையும் கவுரி குட்டியை நெருங்கி நகர்ந்து சேர்ந்தார்கள்.

வெளியே மரத்துப் போகச் செய்யும் காற்று சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழை என்னவோ புலம்பிக் கொண்டிருந்தது. இரண்டு முண்டுகளையும் ஒன்றின்மீது ஒன்றைப் போட்டு இரண்டு பேரும் போர்த்திக் கொண்டார்கள். அப்படி ஒவ்வொருவரும் இரண்டு முண்டுகளைப் போர்த்தியிருந்தார்கள். சதை சதையுடன் சேர்ந்தது. அது போதாது என்று நெருங்கிச் சேர்ந்தது. அதற்குப் பிறகும் போதாது என்று இன்னும் நெருக்கமாகச் சேர்ந்தது. அப்படியும் போதும் என்று தோன்றவில்லை. குட்டியின் கை கவுரியைச் சுற்றி வளைத்தது. கவுரியின் கை குட்டியை வளைத்தது. அனைத்து பலங்களையும் பயன்படுத்தி குட்டி கவுரியையும் கவுரி குட்டியையும் அவரவர்களின் உடலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்கள். அப்படி அணைத்துக் கொண்டே நீண்ட நேரம் படுத்திருக்க முடியுமா? கவுரியின் கை குட்டியின் முதுகைத் தடவியவாறு கீழ்நோக்கிப் பயணித்தது. ஒரு சிலிர்ப்புடன் குட்டி கவுரியின் பின் பகுதியை கையால் வளைத்தாள். மீண்டும் அவர்கள் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். பற்களைக் கடித்துக் கொண்டே குட்டி என்னவோ சொன்னாள். கவுரி அவள் கூறியதற்கு சம்மதித்தாள்.

வெப்பம் இருந்தது. ரத்தத்திற்கு வெப்பம் இருந்தது. அன்புடன் செல்லப் பெயர்களைக் கூறி யாரோ யாரையோ அழைக்கிறார்கள். அழைப்பது கேட்கிறது. யாரோ யாரையோ கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்கள். அழுத்தமான தொடர்ந்துள்ள முத்தங்களின் சத்தம் காதுகளில் விழுந்தது. இறுக்கமான அணைப்பின் சத்தமும். யாரோ எல்லையற்ற தன்மைக்குள் இரண்டறக் கலக்கிறார்கள்.

இரவு முழுவதும் மழை எதையோ மறைக்க முயல்வதைப் போல ஆரவாரித்துப் பெய்து கொண்டேயிருந்தது. பொழுது புலர்ந்த பிறகு தான் குட்டியும் கவுரியும் கண் விழித்தார்கள். இருவரும் பதை பதைப்புடன் தங்களின் முண்டுகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக எழுந்தார்கள். கண்காணிப்பாளனோ வேறு யாருமோ தாங்கள் படுத்திருந்ததைப் பார்த்திருப்பார்களோ என்பது அவர்களின் பயமாக இருந்தது. அந்த அளவிற்கு சுகமாக- ஆழமாக அந்த லாக் அப்பிற்குள் வந்த பிறகு இரண்டு பேரும் உறங்கியதேயில்லை.

குட்டிக்கும் கவுரிக்கும் இடையே தனிப்பட்ட ஒரு நெருக்கம் உண்டானது. காலையில் குட்டிக்கு கொடுத்த இரண்டு இட்லிகளில், ஒன்றை மட்டுமே அவள் சாப்பிட்டாள். ஒன்றை கவுரிக்கு கொடுத்துவிட்டாள். அவளுக்கு தன்னுடைய பங்கே போதும் என்று இருந்தது. எனினும், குட்டி சம்மதிக்கவில்லை. குட்டி கவுரியின் தலை முடியை வாரிக் கட்டிவிட்டாள்.

குட்டி சொன்னாள்:

"இந்த தலைமுடி அவ்வளவும் உதிர்ந்திருச்சே!''

"குளிக்காமலும் எண்ணெய் தேய்க்காமலும் இருந்ததுதான் காரணம். எனக்கு எவ்வளவோ தலைமுடிகள் இருந்தன!''

மதியம் உணவு சாப்பிட்டு முடித்த பிறகு, கவுரி குட்டியின் மடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்துத் தூங்கினாள். குட்டி அசையவே இல்லை. ஒரு அன்னை குழந்தையை மடியில் வைத்திருப்பதைப் போல அவள் உட்கார்ந்திருந்தாள். பறந்து வந்து முகத்தில் அமர முயற்சித்த ஈயை அவள் விரட்டிக் கொண்டிருந்தாள். ஒரு திருப்தி!

கவுரிக்கு அரவணைப்பு தேவைப்பட்டது. அவளைவிட தைரியம் கொண்ட யாராவது அவளை அரவணைப்பதற்குத் தேவைப்பட்டார்கள். படர்ந்து ஏறுவதற்கு கொம்பு ஏதாவது இருக்காதா என்று தேடும் சில கொடிகள் இல்லையா? அவற்றைப் போல, அவளால் மட்டுமே வாழ முடியாது. அந்த அளவிற்கு சுகமாக பாதுகாப்பு இருக்கிறது என்ற உணர்வுடன் எந்தச் சமயத்திலும் அவள் தூங்கியதில்லை. ஆழமான தூக்கம்! அந்த உறக்கத்தில் நடுங்கிக் கண் விழிக்கவில்லை. கெட்ட கனவுகள் காணவில்லை. கண் விழித்து பயந்து நடுங்கவில்லை.

முகத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்த குட்டியின் முகம் மெதுவாகத் தாழ்ந்தது. கவுரி, குட்டி இருவரின் முகங்களும் ஒரு முத்தத்தில் இணைந்தன. கவுரி கண் விழித்தாள். அவளுடைய தலையை குட்டி மடியில் தாழ்த்தினாள். குட்டி கவுரியை வருடினாள். முத்தமிட்டாள்.

அடுத்த விசாரணையின்போது குட்டியின் வழக்கில் ஒரு சாட்சி ஆஜரானான். அன்று குட்டியின் கெட்ட எண்ணம் கொண்ட மருமகனும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தான். குட்டி அவனைக் காட்டிக் கொடுத்தாள்.

போலீஸ்காரர்களுக்கு உதவியாக இருப்பதற்குத்தான் அவன் வந்திருந்தான். அந்த சாட்சியை அவன்தான் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். குட்டி இருந்த இடத்திற்கு அவன் வரவில்லை. அவர்களுடன் இருந்த ஒரு போலீஸ்காரர் கையை நீட்டி அவனை அழைத்தார். அவன் வரவில்லை. அப்போது குட்டி போலீஸ்காரர் ளிடம் சொன்னாள்: "நான் இருக்கிற பக்கம் அவன் வருவானா? சரிதான்... அவனுக்கு நிறையவே பயம் இருக்கு!''

அன்று குட்டி நீதிமன்றத்தில் சில ஆர்ப்பாட்டங்களைச் செய்து, சாட்சிகளிடம் சில கேள்விகளைக் கேட்டாள். கொஞ்சம் குற்றச்சாட்டுகளையும் கூறினாள்.

திரும்பி லாக் அப்பிற்கு வந்தபோது, குட்டி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டமே இல்லாதவள் அவள்தான். நீளமான சில வருடங்களின் வரலாற்றை குட்டி நினைவுபடுத்திப் பார்த்தாள்.


தொடர்ந்து சில சம்பவங்களை அவள் கூற ஆரம்பித்தாள். ஒரு சாதாரண காதல் கதையாக மட்டுமே அது இருந்தது. அவளுடைய பெண்மைத்தனத்தை மேலே எழுப்பியது அந்த ஆண்தான். குட்டியை அவன் கிச்சுக் கிச்சு மூட்டியது, அவளை மடியில் படுக்க வைத்துக் கொஞ்சியது... இப்படிக் கூறுவதற்கு எவ்வளவோ காட்சிகள் இருந்தன!

கவுரி அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மனதிற்குள் இருந்த அந்த உணர்ச்சிப் பெருக்கு சற்று அடங்கி, அறிவு வேலை செய்ய ஆரம்பித்தபோது குட்டி சொன்னாள்:

"அந்த மனிதனுக்கு எப்போதும் நிம்மதியற்ற தன்மையை உண்டாக்குகிற ஒரு பிசாசாகவே நான் ஆகிவிட்டேன் என்பதை நினைக்கிறப்போத்தான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கு. ஒரு காலத்தில் நான் அந்த ஆளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தவள்தான்!''

கவுரி சொன்னாள்:

"அக்கா, அப்படின்னா அந்தப் பழிவாங்கும் குணத்தை விட்டுடுங்க.''

அந்தக் கணமே குட்டியின் போக்கு மாறியது. அவள் மீண்டும் பிசாசாக மாறினாள். அவள் பற்களைக் கடித்துக் கொண்டு உரத்த குரலில் கத்தினாள்:

"இல்லை... இல்லை... அவளை நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன்.''

குட்டியின் பழி வாங்கும் உணர்ச்சி அவனுடைய மனைவியாக ஆகியிருக்கும் பெண்ணின்மீது திரும்பிவிட்டிருந்தது.

அன்று முழுவதும் அந்தப் பெண்கள் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு அந்த அளவிற்கு இடைவெளி இல்லாத உரையாடல் நடந்ததில்லை. அது இதயத்தைத் திறந்த உரையாடலாக இருந்தது. இனிமேல் அவர்கள் ஒருவரோடொருவர் மறைத்து வைப்பதற்கு எதுவும் இல்லை. அந்த வகையில் அவர்கள் எதிர்காலத்தை நோக்கிக் கடந்து சென்றார்கள்.

கவுரிக்கு எதிர்காலம் இருந்தது. தூக்குமரத்தில் ஏற வேண்டியதில்லை என்ற நிலை வந்தபோது, எதிர்காலம் என்ற ஒன்று உண்டாகிவிட்டது. அவள் எதிர்பார்த்து இருக்கலாம். கடந்த காலத்தை மறக்கலாம். மறப்பாள். ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். குட்டி சொன்னாள்:

"உன்னுடைய சிரமமான காலம் முடிந்துவிட்டது. நல்ல காலம் ஆரம்பமாகிறது. பெரிய மழையும் இடியும் முடிந்து விட்டன. எல்லாம் தெளிந்து கொண்டிருக்கிறது. எனக்கோ?''

அந்த ஒளி குறைந்த பிரகாசத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய பலமான எதிர்பார்ப்பிலும் ஒரு பயம் மனதின் மூலையில் கிடந்து தலையை நீட்டிக் கொண்டிருந்தது. எல்லாம் சரிதான். பெருமழையும் இடி மின்னலும் கடந்து சென்று விட்டன. அனைத்தும் தெளிவாகிக் கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு மூலையில் ஒரு கரிய மேகத்துண்டு கண்களில் தெரிந்தது. அது மறையாமல் அப்படியே இருந்தது. குட்டி கூறிய எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கவுரி கேட்டாள்:

"என் கழுத்தில் தாலி கட்டிய மனிதர் வந்துவிட்டால்...?''

அந்தக் கணத்திலேயே அவள் தொடர்ந்து சொன்னாள்:

"என் மனதில் எப்போதும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கிறது. அக்கா, சமீபத்தில் நீங்கள் சொன்ன அந்த நாளில் இருந்து எனக்கும் அதைப் பற்றித்தான் நினைப்பு. நான் விளையாடுறேன். சிரிக்கிறேன். எல்லாம் செய்கிறேன். ஆனால், ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கு!''

குட்டி அவளைத் தேற்றினாள்:

"ஓ... அந்த ஆளு வர மாட்டார். அந்த ஆளு அப்படியே போன மாதிரிதான்.''

"இல்லை... வந்துவிட்டால்...? அந்த பாவம் மனிதன் எவ்வளவோ சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கஷ்டங்களையெல்லாம் அவர் எதற்காகத் தாங்கிக் கொண்டிருக்கிறார்?''

குட்டி கேட்டாள்:

"அந்த ஆளு உன்னிடம் ஏதாவது கேட்டிருக்கிறாரா?''

லாக் அப்பிற்குள் அவன் வந்து பார்த்த பிறகு தங்களுக்கிடையே பேசிக் கொண்ட விஷயத்தை விளக்கமாக கவுரி குட்டியிடம் கூறினாள். அவன் கவுரிமீது அன்பு வைத்திருக்கிறான். அதனால்தான் வந்திருப்பதாக அவன் சொன்னான். அவள் என்றென்றும் அவனுக்குச் சொந்தமானவளாக இருக்க வேண்டுமென்று அவன் கேட்கவில்லை. அவள் தூக்குமரத்தில் ஏறுவதை கிருஷ்ணனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னால் முடிந்தவரைக்கும் அவன் செய்வான். நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட கவுரி எதையும் சிந்திக்க முடியாதவளைப் போல கேட்டாள்:

"அதற்கு என்ன அர்த்தம் அக்கா?''

"எதற்கு?''

"அப்படிச் சொன்னதற்கு அர்த்தம்... நான் அவரோட மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாரா?'' குட்டிக்கு சந்தேகம் எதுவும் இல்லை.

"அதேதான்... பிறகு வேறு என்ன? ஒருத்தன் அன்பு வைத்திருக்கிறான். இந்த அளவிற்குக் கஷ்டப்படுகிறான். பிறகு இவையெல்லாம் எதற்கு?''

அது உண்மைதான். அதுவாகத்தான் இருக்கும்.

குட்டி வெளிப்படையாக மனதைத் திறந்து ஒரு கேள்வியைக் கேட்டாள்:

"உனக்கு அந்த ஆளுடன் வாழ்வதற்கு விருப்பமா, விருப்பமில்லையா?''

அப்படி அவள் நினைக்கவில்லை. கவுரிக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்திருந்தது. அவன் அவள்மீது அன்பு வைத்திருக்கிறான். அவன் அவளைக் காப்பாற்றுவான். அது அவளுக்கு அவசியம்தான். எந்தவொரு பயமும் தேவையில்லை. குட்டி சொன்னாள்:

"அப்படின்னா நீ அந்த ஆளுடன் வாழணும்.''

கவுரிக்கு இன்னொரு தர்மசங்கடமான நிலை இருந்தது. "இருந்தாலும்... என் கழுத்தில் தாலி கட்டியவர் வந்துவிட்டால் நான் எப்படி முகத்தைப் பார்ப்பேன்?''

கருணையே இல்லாமல் குட்டி சொன்னாள்:

"அந்த ஆளு செத்துப் போயிருப்பாரு.''

இன்னொரு பயங்கரமான சம்பவத்தைச் சந்திப்பதைப் போல குட்டி நடுங்கினாள்:

"இல்லை அக்கா... அவர் வருவார்.''

அந்த விஷயத்தில் பெரிய அளவில் குட்டிக்கு நம்பிக்கை இல்லை.

கவுரி பயந்தாள்.

"அவர் வந்து கையைப் பிடித்தால்...? அதற்கான உரிமை அந்த மனிதருக்கு இல்லையா? கழுத்தில் தாலி கட்டியவனுக்கு?''

குட்டி தைரியத்துடன் கூறினாள்:

"நீ அந்தக் கையை தட்டிவிட்டுடணும். இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தேன்னு கேட்கணும். உனக்கு அந்த ஆளோட முகத்தைப் பார்த்துக் கேட்பதற்கு விஷயங்கள் இல்லையா?'' நினைத்து நினைத்துக் கேட்பதற்கு விஷயங்கள் இருந்தன.

குட்டி தொடர்ந்து சொன்னாள்:

"நானாக இருந்தால் அதைத்தான் செய்வேன்.''

ஒரு முடிவை அடைவதற்காக நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்த அந்தச் சிந்தனையில் ஒரு விஷயம் மறக்கப்பட்டுவிட்டதைப் போலவோ வெளியே வீசி எறியப்பட்டுவிட்டதைப் போலவோ தோன்றியது. கவுரி வாழ்க்கையில் தவறு செய்தவள் அல்ல. குட்டியும் தவறு இழைத்தவள் அல்ல. கணவனைத் தவிர, இன்னொரு ஆணைப் பற்றி நினைத்துப் பார்த்தது கூட இல்லை. கழுத்தில் தாலியைக் கட்டியிருப்பதால் உரிமையைக் கொண்ட ஆண் வந்தால் என்ன செய்வது என்பதை நினைத்துத்தான் கவுரி பயப்பட்டாள். கணவன் என்ற ஒருவன் இருக்க, இன்னொரு ஆணை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை நினைத்து அல்ல. இப்போது கவுரிக்கு அந்த மனசாட்சியின் உறுத்தல் இல்லை.


கிருஷ்ணன் என்ற புல் கொடியை எட்டிப் பிடித்தபோது, அவனைக் கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை அவள் நினைத்திருந்தாளோ என்னவோ? ஒரு புதிய ஆணுடன் பழகும் சந்தோஷம் அந்த உறவில் இருந்ததில்லை. அவனுடன் இருந்த உறவைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்ததும் இல்லை. ஒரு முடிவை எடுக்கலாம் என்ற கட்டத்தை அடைந்தபோது மனைவியாக இருந்த அவளுக்கு கற்பைப் பற்றிய மனசாட்சியின் உறுத்தல் இல்லாமல் போய்விட்டதா? குட்டியும் மனைவியாக இருந்தவள்தான். அவளைப் பொறுத்த வரையில் இனிமேல் அவளுடைய கணவன் தன்னைத் தேடி வருவான் என்ற எதிர்பார்ப்பு இல்லை. அவளுடைய எதிர்காலம் என்ன? எதுவுமே இல்லை. அவளால் ஒரு முடிவையும் எடுக்க முடியாது. அந்த வழக்கை முடிப்பது, சிறைக்குச் செல்வது, பிறகும் திரும்பி வருவது, மூன்றாவது முறையாக அவன் வசிக்கும் வீட்டிற்கு நெருப்பு வைப்பது, மீண்டும் சிறைக்குச் செல்வது- இவற்றைத் தவிர என்ன நடந்தது? எதுவுமே இல்லை. இப்படியே எத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்? அவளுக்கு எதிர்பார்ப்பதற்கு எதுவும் இல்லை. ஆசைப்படுவதற்கு வழியே இல்லை. சிந்திப்பதும் இல்லை. சிரமப்பட்டு ஒரு காரியத்தைப் பற்றி ஒரு தீர்மானத்திற்கு வரலாம். இனிமேலும் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டுமா? அவனை அவனுடைய போக்கிற்கு போக விடக் கூடாதா? அவனுடன் கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்ச்சிக்கான வேகம் குறைந்து விட்டால், அப்படியொரு சிந்தனை உண்டாகும். குட்டிக்கு வாழ்க்கையில் ஒரு இலக்கு இருந்தது. அந்த மனிதனுக்கு நிம்மதியைத் தராமல் இருப்பது! கவுரிக்கு கற்பைப் பற்றிய மனச்சாட்சியின் உறுத்தல் இல்லாமல் போனதிலிருந்து, குட்டியின் பழிவாங்கும் உணர்ச்சிக்கும் வேகம் குறைந்தது.

ஒருவேளை, கற்புள்ள குட்டிக்குத்தான் பலமான பழிவாங்கும் உணர்ச்சி இருந்திருக்க வேண்டும். கற்பு உள்ள கவுரிக்கென்றே இருந்திருக்க வேண்டும் கணவனின் அன்பு. குட்டிக்கும் கவுரிக்கும் கற்பு இழக்கப்பட்டுவிட்டதா? அவர்கள் இன்னொரு ஆணைத் தொட்டதில்லையே! ஒரு பெண்ணின் கற்பு இல்லாமல் போவதற்கு ஆணின் தொடல் அவசியமில்லாமல் இருக்கலாம்.

9

வுரியின் வழக்கு செஸன்ஸ் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. மறுநாள் அவளை ஆலப்புழைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அது அப்படியே நீடித்துக் கொண்டிருக்கிறது.

அவர்கள் பிரிகிறார்கள். இனி பார்க்க முடியுமா என்று எப்படித் தெரியும்? குட்டியின் வழக்கும் மாற்றப்பட்டு அவள் ஆலப்புழை சப்- ஜெயிலுக்குப் போகும்போது, அங்கு கவுரி இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். வழக்கு முடிந்து விட்டது என்றும் ஆகலாம். கவுரிக்கு கடுங்காவல் தண்டனை கிடைத்தால், ஒருவேளை மத்திய சிறைச்சாலையில் இருக்கும்போது பார்க்க முடிந்தது என்றும் வரலாம். அனைத்தும் நிச்சயமாகக் கூற முடியாதவை.

லாக் அப் வாழ்க்கையை குட்டியால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? சென்ற முறை மாதக் கணக்கில் அவள் தனியாளாக நாட்களைச் செலவழித்தாள். அந்த சுமை அவளுக்குத் தெரியவே இல்லை. இப்போது அப்படி இல்லை. உண்மையாகவே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவுரியின் விஷயத்திலும் அதுதான் நிலைமையாக இருந்தது. அந்த லாக் அப் அறைக்குள்ளேயே குட்டியுடன் சேர்ந்து, குட்டியின் அரவணைப்பில் வசிப்பதுதான் சந்தோஷமானதாக அவளுக்குப்பட்டது. பிரிய வேண்டும் என்ற நிலை வந்தபோது அந்தப் பிரிதல் தாங்கிக் கொள்ள முடியாததாக அவளுக்குத் தோன்றியது.

குட்டி ஏமாற்றத்தின் அடித்தட்டில் நின்று கொண்டு சொன்னாள்:

"வழக்கில் தனியாவிட்டுட்டு நீ அங்கே போயிடுவே. உன்னைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருப்பார்கள். நீ என்னை அப்படியே மறந்திடுவே...''

நெஞ்சம் வெடிக்கிற குரலில் கவுரி சொன்னாள்:

"அப்படிச் சொல்லாதீங்க, அக்கா. நான் மறக்க மாட்டேன்!''

ஒரு நீண்ட பெருமூச்சைவிட்டுக் கொண்டே குட்டி சொன்னாள்:

"எனக்கு இப்போ நினைப்பதற்கு இருக்கிற ஒரே ஆள் நீ மட்டும்தான். நீ மட்டும்...''

"எனக்கும்தான்'' -கவுரி சொன்னாள். ஆனால், அது உண்மையல்ல என்று அவளுக்குத் தெரியும்.

குட்டி சொன்னாள்:

"உனக்கு நினைத்துப் பார்ப்பதற்கு எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கிருஷ்ணன் அண்ணன், கோவிந்தன், குஞ்ஞூவாவா... இப்படி எவ்வளவோ பேர்! நீ என்னை மாதிரியா? எனக்கு யார் இருக்காங்க? நீ மட்டும்தான்...''

சிறிது நேரம் கழித்து குட்டி சொன்னாள்:

"இனிமேலும் நீ மாறிய ஒருத்தியாகத்தான் வெளியே போவாய். அப்போ நீ என்னை மறந்து விடுவாய்.''

கவுரிக்கு அதைப் பற்றிக் கூறுவதற்கு இருந்தது. உண்மையாகவே அவளுடைய எதிர்காலம் நிச்சயமற்ற ஒன்றுதானே? எனினும், அவளுக்கு எதிர்பார்ப்பதற்கு வழி வகைகள் இருக்கின்றன.

கவுரி சொன்னாள்:

"அக்கா, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு என்கூட வந்திடுங்க. நாம ஒன்றாக சேர்ந்து இருப்போம்!''

அதை மறுக்கிற மாதிரி இப்படியும் அப்படியுமாக குட்டி தலையை ஆட்டினாள்.

அதுதான் அவர்களுடைய லாக் அப்பில் செலவிடும் இறுதி இரவு. அன்று அவர்கள் தூங்கவேயில்லை. அவர்கள் அன்பு செலுத்தியவர்கள். இனிமேல் என்று பார்ப்போம் என்பதைப் பற்றி உறுதியாகத் தெரியாதவர்கள். பார்க்காமலேயே போகலாம் என்ற நிலையும் வரலாம். செல்லப் பெயர்களால் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும், கட்டிப்பிடித்துக் கொண்டும் ரத்தம் சூடாகியும், அழுததன் மூலம் ரத்தம் குளிர்ந்தும்- இப்படியே அந்த இரவு முடிந்தது. மறுநாள் காலையில் அந்த இரும்புக் கம்பிகளால் ஆன கதவு கவுரிக்காகத் திறந்தது. அவள் போவதை கண்களில் கண்ணீர் நிறைய குட்டி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். கவுரியும் அழுதாள். அவள் பல முறை திரும்பிப் பார்த்தாள். கவுரி கண்களை விட்டு மறைந்ததும், குட்டி அறையின் மூலையில் போய் உட்கார்ந்து சிறிது நேரம் வாய்விட்டு அழுதாள்.

மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணையில் கிருஷ்ணனின் கையில் இருந்த பணம் முழுவதும் செலவழிந்துவிட்டது. செஸன்ஸ் நீதிமன்ற விசாரணைக்குப் பணம் தயார் பண்ண வேண்டும். அதற்கு எந்தவொரு வழியும் தெரியவில்லை. பணம் செலவானதும் குஞ்ஞூ பணிக்கன் பிரிந்து போய்விட்டான். இப்போது அவன் இப்படிக் கூறுகிறான்:

"வெட்கம் கெட்ட வேலைக்கு நான் தயாராக இல்லை. பணம் இல்லாமல் போனால், வெட்கக் கேடு. அதற்கு என்னைத் தேடி வர வேண்டாம்!''

கிருஷ்ணன் தன்னுடைய அலைச்சல்களையும் சிரமங்களையும் பற்றிக் கூறினான். உதவி செய்வதற்கு இன்னொரு ஆள் இல்லை. அனைத்தும் உண்மை. குஞ்ஞூ பணிக்கன் கூறியதைக் கேட்கவில்லை. இறுதியில் ஒருநாள் குஞ்ஞூ பணிக்கன் அவனிடம் கோபத்துடன் சொன்னான்:

"நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போடா. மனிதனை தேவையில்லாமல் அலைக்கழிக்காதே!''


கிருஷ்ணன் பணத்தைத் தயார் பண்ணுவதற்கு பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தான். சிறிது சிறிதாக சில நண்பர்களிடம் கடன் வாங்குவது- அந்த முயற்சி நிறைவேறவில்லை. ஒரே தொகையைக் கடனாகக் கேட்கிற மாதிரி ஒரு ஆளையும் அவனுக்குத் தெரியாது. கிருஷ்ணன் பதைபதைப்புடன் இங்குமங்குமாக அலைந்து கொண்டிருந்தான். அந்தச் சூழ்நிலையில் கிருஷ்ணனின் மனதில் ஒரு வழி தோன்றியது. சுரேந்திரன் முதலாளிக்கு நூறு ரூபாய் கொடுத்திருந்தான். அவர் கூறியதைப் போல எதையும் செய்யவில்லை. வழக்கில் அவர் மூலம் எந்தவொரு பயனும் உண்டாகவில்லை. அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டால் என்ன? அடுத்த நிமிடம் அவன் அந்த முடிவிற்குத்தான் வந்தான். கேட்பது மட்டுமல்ல; வாங்கியே தீருவது என்ற முடிவுக்கும் அவன் வந்தான்.

சுரேந்திரன் ஒரு சிரிப்புடன் கிருஷ்ணனிடம் குசலம் விசாரித்தார்.

"என்ன, காரியங்களெல்லாம் நடந்தன அல்லவா? சாட்சிகள் எல்லாரும் உங்களுக்கு சாதகமாகத்தானே எழுதியிருக்காங்க! நான் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறேன். நல்லது. உண்மையான அன்பு நல்ல முடிவைத்தான் தரும்!''

சுரேந்திரன் கூறியவை அனைத்தையும் மறுக்க வேண்டுமென்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. அவ்வளவு விஷயங்களையும் ஒரே நேரத்தில் கூறியதால் ஒவ்வொன்றுக்கும் பதில் கூற முடியவில்லை. கிருஷ்ணன் எல்லாவற்றிற்கும் சேர்த்து பதிலாகப் பணத்தைக் கேட்டான்.

"முதலாளி, நீங்க யாரிடமும் சொல்லவும் இல்லை. எதுவும் செய்யவும் இல்லை. என்னுடைய பணத்தைத் திருப்பித் தாங்க.''

அது சிறிதும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. சிறிது நேரம் அதிர்ச்சியடைந்ததைப் போல் அந்த கிராமத்தின் முக்கிய மனிதர் நின்றுவிட்டார். அடுத்த நிமிடம் அவர் சுய உணர்விற்கு வந்தார். அவர் மிடுக்கான குரலில் கேட்டார்:

"நீ என்னடா சொன்னே? எதுவும் செய்யலைன்னா சொன்னே?''

கிருஷ்ணனும் விடவில்லை.

"ஆமாம்... இல்லைன்னுதான் சொன்னேன்.''

சுரேந்திரன் கோபமான குரலில் சொன்னார்:

"உன்னுடைய எலும்பு மிஞ்சி இருப்பதும், நீ இன்றைக்கு உயிருடன் இருப்பதும் எதனால் தெரியுமா? நன்றி கெட்டவனே! போலீஸ்காரர்கள் உன்னை வேட்டையாட இருந்தார்கள்.''

கிருஷ்ணன் தன்னுடைய விஷயத்தைச் சொன்னான்:

"முதலாளி, சாட்சிகள் ஒரு ஆளையாவது அழைத்து நீங்க ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அதற்குத்தான் நான் பணம் தந்தேன். அந்தப் பணத்தைத் திரும்பத்தரணும். இனிமேல் வழக்கை நடத்துவதற்குப் பணம் இல்லை.''

"நீ பணத்தை வாங்கிக் கொண்டு போன மாதிரிதான்.''

"வாங்காமல் நான் போக மாட்டேன். என்னால போக முடியாது.''

அந்த அளவிற்கு கூறக் கூடிய தைரியம் கிருஷ்ணனுக்கு உண்டானது.

அவன் என்னவோ முடிவு செய்துவிட்டு வந்திருக்கிறான் என்று சுரேந்திரனுக்குத் தோன்றியது. அது ஒரு இக்கட்டான சூழ்நிலையாக மாறாமல் இருப்பதற்கான வழி திடீரென்று அவருடைய மனதில் தோன்றியது. அவர் சொன்னார்:

"சரி... உன்னுடைய பணத்தைத் திருப்பித் தர்றேன். உனக்காக கொஞ்சம் செலவாயிருக்கு. போலீஸ்காரர்களிடமிருந்து தொந்தரவுகள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதை நான் என் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. இப்போ இங்கே பணம் இல்லை. உன்னுடைய வழக்கு என்றைக்கு விசாரணைக்கு வருகிறது?''

"தேதி முடிவாகவில்லை.''

"ஒரு பத்து நாட்கள் கழித்து வா. பணத்தைத் தர்றேன்.''

கிருஷ்ணன் உடனடியாக எதுவும் பேசவில்லை. சுரேந்திரன் தொடர்ந்து கேட்டார்:

"என்ன சரியா?''

கிருஷ்ணன் ஒப்புக் கொண்டான்.

"சரி...''

அப்போது நூறு ரூபாய் தயாராகிவிட்டது என்ற ஒரு எண்ணத்துடன் கிருஷ்ணன் புறப்பட்டான். திரும்பிச் செல்லும் கிருஷ்ணனைப் பார்த்து சுரேந்திரன் மெதுவாகத் தலையை ஆட்டினார். அவர் என்னவோ முடிவு செய்திருப்பதைப் போல தோன்றியது.

சில நாட்கள் கடந்த பிறகு நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஒரு இளம் வக்கீல் சப் ஜெயிலுக்குச் சென்று கவுரியைப் பார்த்தார். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்தச் சந்திப்பு நடந்தது. அவரை நீதிமன்றத்திலிருந்து அவளுக்காக வாதாடுவதற்காக நியமித்திருந்தார்கள். வழக்கு விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, அவர் அவளிடம் கேட்டார்:

"உங்களுக்கு வேண்டிய யாரோ வெளியே இருப்பதாகத் தெரிகிறதே! அந்த ஆள் இப்போ இல்லையா?''

அப்போதுதான் கிருஷ்ணன் வக்கீலைப் பார்க்கவே இல்லை என்பதும் செஸன்ஸுக்கு வழக்கு வந்த பிறகு அவன் எதுவுமே செய்யவில்லை என்பதும் கவுரிக்குத் தெரிய வந்தது. கிருஷ்ணன் கைகழுவி விட்டானா? இல்லாவிட்டால் இயலாமல் போயிருக்குமோ?

கவுரி பரிதாபமான குரலில் சொன்னாள்:

"நான் யாருமே இல்லாத ஒருத்தி!''

அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்தது. வக்கீல் கேட்டார்:

"பிறகு... ஒரு கிருஷ்ணன் உதவிக்கு இருந்ததாக ரெக்கார்டில் இருக்கிறதே!''

அப்போது குட்டி இல்லாமல் போனதை கவுரி உணர்ந்தாள். குட்டி இருந்திருந்தால், எல்லாவற்றையும் அவள் கூறியிருப்பாள். கிருஷ்ணன் யார் என்று அவள் எப்படிக் கூறுவாள்? அவன் யார்?

வக்கீல் தொடர்ந்து கேட்டார்:

"சாட்சிகளைப் பற்றியும் பிற விஷயங்களைப் பற்றியும் விளக்கிக் கூறுவதற்கு இப்போது யாருமே இல்லை. அந்த கிருஷ்ணன் என்ற ஆள் வருவாரா?''

நிறைந்த கண்களுடன் கவுரி சொன்னாள்:

"என்னை நீங்க இந்த வழக்கிலிருந்து காப்பாற்றணும்.''

அதற்குமேல் அவளுக்குக் கூறுவதற்கு எதுவும் இல்லை. அந்த விஷயத்தை அதற்கு மேல் மனதைத் தொடும் விதத்தில் கூறுவதற்கு அவளால் இயலாது.

மீண்டும் கவுரி விதியை நம்பிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனைப் பற்றிய பதைபதைப்பு இன்னொரு விஷயமாக ஆகி அவளை கவலை கொள்ளச் செய்தது.

பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு ஆபத்தில் போய் மாட்டிக்கொண்டான். சுரேந்திரனிடமிருந்து நூறு ரூபாய் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்தான். அது மட்டும் போதாது. மேலும் ஒரு முந்நூறு ரூபாய் தயார் பண்ண வேண்டும் என்று குஞ்ஞூ பணிக்கன் கூறினான். அவ்வளவு பணம் கட்டாயம் வேண்டும். அது இல்லாமல் வேறு எந்த சிந்தனையும் மனதில் இல்லை. அதனால் கிருஷ்ணன் ஒரு வகையில் பைத்தியம் பிடித்தவனைப் போல ஆனான். மனம் முழுக்க பிரச்சினைகளுடன் சங்ஙனா சேரியில் பொருத்தமற்ற நேரத்தில் சந்தேகப்படும் விதத்தில் ஒரு வங்கி இருந்த பகுதியில் நடந்து திரிந்த அவனை போலீஸ்காரர்கள் பார்த்தார்கள். அங்கே எதற்காக நிற்கிறான் என்று இன்னொருவர் தெரிந்து கொள்ளும் அளவிற்குப் பதில் கூற கிருஷ்ணனால் முடியவில்லை. போலீஸ் சட்டத்தைப் பின்பற்றி போலீஸ்காரர்கள் ஒரு வழக்கு பதிவு செய்தார்கள். அங்கு சட்டப் பிரிவின்படி கடுங்காவல் தண்டனை கட்டாயம் உண்டு. அதன்மூலம் கிருஷ்ணன் சிறைக்குக் கொண்டு போகப்பட்டான். இந்த விஷயங்கள் எதுவும் கவுரிக்குத் தெரியாது.


10

செஸன்ஸில் வழக்கு விசாரணைக்கு ஆரம்பமானது. எல்லா கட்சிகளும் போலீஸின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இப்போது வெளியே கவுரிக்காக செயல்படுவதற்கு யாரும் இல்லை. போலீஸ்காரர்களுக்கு எந்தவொரு தொல்லையும் இல்லை. கார்த்தியாயனியும் நாணுவும் கிட்டுவும் வாக்குமூலம் கொடுக்க ஆரம்பித்தார்கள். கவுரியின் வக்கீல் எதிர் விசாரணை செய்தார். சாட்சிகள் கொடுக்கும் வாக்குமூலத்தின் பகுதியால் தனக்கு ஏதாவது பயன் இருக்கிறதா என்று கவுரிக்குத் தெரியாது. கவுரிக்கு எதுவுமே

புரியவில்லை. அவளுக்குப் புரியக்கூடிய வகையில் விளக்கிக் கூறுவதற்கு ஆள் இல்லை. குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கு எதிராக வாக்குமூலம் தர வேண்டுமென்று குட்டி கூறியிருந்தாள். எப்படி வாக்குமூலம் தருவது என்று தெரியவில்லை. அது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டதிலிருந்து சுமை உண்டாகத் தொடங்கியது. அந்த சுமை ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டிருந்தது. இப்போது அவளால் தாங்க முடியவில்லை. வாழ்வாளா இல்லையா என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் அவள் என்ன செய்ய வேண்டும், அவள் எதைச் செய்யக் கூடாது என்று தெளிவாகத் தெரியவில்லை. கண்ணாடி அணிந்து நான்கு கைகளைக் கொண்ட கறுப்பு நிற கோட் அணிந்து அங்கு உட்கார்ந்திருக்கும் மனிதரின் பேனாவின் முனையில்தான் அவளுடைய வாழ்க்கை இருக்கிறது. அந்த நீதிபதிக்கு அவளைப் பற்றி என்ன கருத்து இருக்குமோ? அவளுடைய வாழ்க்கைக்காக ஒரு கயிறு பிடித்து இழுக்கும் செயல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களும் அரசாங்க வக்கீலும் சேர்ந்து ஒரு பக்கம் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவளை பூமியை நோக்கி இழுப்பதற்கு முயற்சிக்கும் விஷயத்தில்தான் பலப்பரீட்சை நடக்கிறது என்று அவளுக்குத் தோன்றியது.

அவளைக் கொல்வதால் போலீஸ்காரர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? குட்டியை எப்போதும் கவுரி நினைத்துப் பார்ப்பாள். அவளுடைய அக்கா அருகில் இருந்திருந்தால் என்ன ஒரு நிம்மதி கிடைத்திருக்கும்! அப்படி இருந்திருந்தால், எப்படி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்திருப்பாள். ஒவ்வொருவரின் வாக்குமூலத்தாலும் என்ன கெடுதல் இருக்கும், என்ன நன்மை இருக்கும் என்பதையெல்லாம் கூறியிருப்பாள்.

உண்மையாகவே இந்த சிரமங்களை அவளால் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியும்.

ஒருநாள் மதியம் நீதிமன்றம் காப்பிக்காக பிரிந்த நேரத்தில் கவுரி நீதிமன்றத்தின் வாசலில் உட்கார்ந்திருந்தாள். நான்கு பக்கங்களிலும் நான்கு போலீஸ்காரர்கள் காவலுக்கு நின்றிருந்தார்கள். சற்று தூரத்தில் இரண்டு மூன்று வக்கீல் குமாஸ்தாக்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் அவளுடைய வக்கீலின் குமாஸ்தாவாக இருந்தான்.

ஒரு குமாஸ்தா சொன்னான்:

"இன்று நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிட்டது என்று தோன்றுகிறது!''

இரண்டாவது குமாஸ்தாவிற்கும் அப்படித்தான் தோன்றியது. கவுரியின் வக்கீலின் குமாஸ்தா சொன்னான்:

"அது... நாங்கள் எப்படியும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணைக் காப்பாற்றி விடுவோம்.''

நான்காவது ஆள் கேட்டான்:

"முழுமையாகவா? அது கொஞ்சம் கஷ்டம்!''

கவுரியின் வக்கீலின் குமாஸ்தா சொன்னான்:

"அதை நீ பார்க்கத்தானே போகிறாய்?''

முதல் குமாஸ்தா சொன்னான்:

"உன் வக்கீல் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்திருப்பாருன்னு தோணுது!''

இரண்டாவது ஆள் சொன்னான்:

"வக்கீல் கொஞ்ச வயது ஆள்தானே! முதன்முதலா கிடைச்சிருக்குற கொலை வழக்கு. சில நேரங்கள்ல நீதிபதி ஒரு கண்ணை மூடிக் கொள்ளலாம்...''

கவுரியின் வக்கீலின் குமாஸ்தா கேட்டான்:

"நல்ல முறையில் படித்து வழக்கு விசாரணையை நடத்துகிறாரா, இல்லையா?''

குமாஸ்தாக்கள் யாருக்கும் அந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இல்லை. எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால், ஒரு விஷயம்... குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்கு வெளியிலிருந்து உதவுவதற்கு ஆளே இல்லை.

வழக்கைப் பற்றி முதல் முறையாக கேட்ட அந்த கருத்து மொத்தத்தில் சந்தோஷம் அளிக்கக்கூடியதாக இருந்தது. நீதிபதி அவளுடைய பக்கம் சாய்ந்துவிட்டார். அவளை எப்படியும் காப்பாற்றிவிடுவோம் என்று வக்கீலின் குமாஸ்தா உறுதியான குரலில் கூறுகிறான். அதற்குப்பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவள் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு கேட்பாள்- எங்கிருந்தாவது அவளுடைய வழக்கைப் பற்றிய கருத்து காதுகளில் விழுகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. பிறகு ஒன்றிரண்டு முறை சிலர் கூறுவதைக் கேட்டாள். இளம் வயது வக்கீல்களுக்கிடையே உரையாடியபோது குற்றத்தை ஒப்புக் கொண்டதைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அன்று குற்ற ஒப்புதலை எழுதிய மேஜிஸ்ட்ரேட்டை விசாரணை செய்த நாள்.

குஞ்ஞூவாவாவும் கோன்னியும் பரமுவும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய விசாரணையும் நீண்ட நேரம் நீடித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நாளன்று விசாரித்தார்கள். பெரிய அளவில் வாதங்களும் எதிர் வாதங்களும் நடைபெற்றன. அவளுடைய வக்கீலுக்கு

உதவுவதற்காக மூன்று நான்கு வக்கீல்கள் அந்த நாட்களில் இருந்தார்கள். நீதிமன்றத்தில் நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். கவுரியின் வழக்கிற்கு முக்கியத்துவம் வந்து சேர்ந்தது. நீதிமன்றத்தின் சாய்வுநிலை எந்தப் பக்கம் என்பதை அவளால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த சாட்சிகளின் வாக்குமூலம் எந்த விதத்தில் இருக்கின்றன என்பது அவளுக்குத் தெரியவில்லை. முன்பு அவர்கள் அவளுக்குச் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தார்கள். இன்று எப்படி வாக்குமூலம் கொடுத்தார்கள்? ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. யாரிடம் கேட்பது?

இந்த அளவிற்கு பதைபதைப்பு இருக்குமென்றால், வாழ வேண்டும் என்ற ஆசையையே வளர்த்திருக்க வேண்டியதில்லை. வாழ்க்கைக்கு கொடுக்கக்கூடிய விலை சற்று அதிகம் என்று தோன்றியது. அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த அளவிற்கு நீடித்துக் கொண்டிருக்கும் மூச்சு விட முடியாத நிலை உண்மையாகவே தூக்குக் கயிறால் இருக்கப் போவதில்லை.

இரண்டு நான்கு நாட்களுக்குப் பிறகு அவளுடைய வாக்குமூலம் நீதிமன்றத்தில் எடுக்கப்பட இருக்கிறது. முந்தைய நாள் வக்கீல் அவளை சப் ஜெயிலில் போய்ப் பார்த்தார். அவர் சில கேள்விகளைக் கேட்டு, பதில்களைச் சொல்லிக் கொடுத்தார். அவளுக்குப் புரிந்ததா என்று முயற்சித்தபோது, முழுவதும் தவறுவதைப் போல தோன்றியது. மீண்டும் முயற்சித்தார். சரியாக வரவில்லை. மனதில் வெறுப்பு உண்டாகி, அவர் சொன்னார்:

"இப்படி நடந்தால் காரியம் பிரச்சினைக்குள்ளாகிவிடும். நீங்களே உங்களுக்கு ஆபத்தை வரவழைத்துக் கொள்ளப் போகிறீர்கள்!''

கவுரி பரிதாபமான குரலில் சொன்னாள்:

"எனக்கு எதுவும் தெரியாது. ஞாபகம் இல்லாமல் போகிறது. எஜமான் நீங்க என்னைக் காப்பாற்றணும்!''

"நீங்க சரியா வாக்குமூலம் கொடுக்கலைன்னா, நான் உங்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?''

மீண்டும் அவர் சொல்லிக் கொடுத்தார். அது பலன் தந்ததா இல்லையா என்று சோதித்துப் பார்க்க முயற்சிக்கவில்லை.


கவுரியின் வாக்குமூலத்தை வாங்கும் நாளன்று வக்கீலுக்குத்தான் பதைபதைப்பாக இருந்தது. அவளுக்காக ஒரு வழக்கை அவர் உண்டாக்கிக் கொண்டு வந்தார். அது உண்மைதான் என்று அவள்தான் கூற வேண்டும். அனைத்தும் இப்போது அவளை நம்பியிருந்தன. அவளுடைய இதயம் டக்டக்கென்று அடித்துக் கொண்டிருந்தது.

வாக்குமூலம் வாங்க ஆரம்பித்தார்கள். நீதிமன்றம் கேட்டது:

"குற்றம் சாட்டிய பக்கத்தின் இரண்டாவது சாட்சியான கார்த்தியாயனி, நீங்கள் குழந்தைகளைக் கொல்ல முடிவு செய்திருப்பதாக அவளிடம் பல முறை கூறியதாக வாக்குமூலத்தில் கூறியிருக்கிறாள். அதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?''

ஆத்திரப்படாமல் கவுரி பதில் கூறினாள்: "அது பொய்!''

அடடா! வக்கீலுக்கு நிம்மதி வந்தது.

தொடர்ந்து அவள் ஒழுங்காக வாக்குமூலம் தந்தாள். போலீஸின் தூண்டுதலால்தான் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அவள் கூறினாள். அப்போதைய சூழ்நிலையில் ஹெட்கான்ஸ்டபிள் வேலுப்பிள்ளை அவளை அப்படிக் கூற வைத்ததாகச் சொன்னாள். எந்தவொரு இடத்திலும் குழப்பம் இல்லை. மிகவும் அருமையாக அவள் வாக்குமூலம் அளித்தாள். அந்த அளவிற்கு வக்கீல் ஆசைப்படவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை.

மறுநாள் வழக்கு பற்றிய வாதம் நடந்தது. இரண்டு பக்கங்களைச் சேர்ந்தவர்களும் வாதம் செய்தார்கள். அவளுக்கு வாதங்கள் புரியவில்லை. அதற்கடுத்த நாளுக்கு மறுநாள் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றுதான் தீர்ப்பு!

சரியாக பதினொரு மணிக்கு நீதிமன்றம் அவளுடைய வழக்கிற்காக அழைத்தது. கவுரி கூண்டில் ஏறி நின்றாள். அவள் தன்னுடைய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறாள். ஒரு நிமிட நேரத்தில், கடந்து சென்ற வாழ்க்கை முழுவதையும் அவள் நினைத்துப் பார்த்தாள். தந்தையையும் தாயையும் அவள் ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அவளுடைய திருமணம், முதல் கர்ப்பம், பிரசவ வேதனை, கிருஷ்ணன் வாழ்க்கையில் முதன் முதலாக நுழைந்த நாள்- இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தாள்.

ஆனால், அந்த வாழ்க்கையின் முடிவை எழுதக் கூடிய நாளாக இது இருக்கலாம். கூப்பிய கைகளுடன் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு அவள் தயாரானாள். அந்த நிலையில் ஒரு காட்சி அவளுடைய நினைவில் மறையாமல் எஞ்சி நின்றது. லுங்கியில் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் ஒருவரோடொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் அவளுடைய குழந்தைகள் கிடக்கும் காட்சி! அலையின் நுரை அவர்களுடைய உடல்களில் பட்டு குமிழ்களாக வெடித்துக் கொண்டிருந்தன. ஓ! "அம்மா..." "அம்மா..." என்று அழைப்பதைப் போல தோன்றியது. அவளுக்கு தன்னுடைய பிள்ளைகளுடன் போய் சேர்ந்தால் போதும்!

உண்மையிலேயே அந்தக் காட்சியை இல்லாமல் செய்வதற்கு ஒரு முயற்சியே நடந்தது. அந்தப் போராட்டம் நீண்டு நீண்டு போய்க் கொண்டிருந்தது. நீதிபதி தீர்ப்பைப் படிப்பது அவளுடைய காதுகளில் விழவில்லை. அவளுடைய காதுகளுக்குள் கடற்கரையில் சீட்டி அடித்துக் கொண்டிருந்த காற்றும், குழந்தைகளின் அழுகைச் சத்தமும்

சேர்ந்து ஒலித்தன. "அம்மா..."என்று அவர்கள் அழைக்கிறார்கள். மூத்த குழந்தை "அம்மா... கொன்னுடாதீங்க..." என்றும் கூறியது.

அனைத்தும் நிசப்தம்! போலீஸ்காரர்கள் குற்றவாளிக் கூண்டின் கதவைத் திறந்தார்கள். அவள் வெளியே வந்தாள். போலீஸ்காரர்கள் அவளுடன் செல்லவில்லை. அவள் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தாள். அவள் விருப்பப்படும் இடத்திற்குச் செல்லலாம்.

நீதிமன்ற அறையின் வாசலை விட்டு வெளியே வந்ததும், கவுரி அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாள். அந்த வாசலின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் அனைத்தும் தகர்ந்து போய்விட்ட ஆண்கள்! அவள் அவர்களை யார் என்று தெரிந்து கொண்டாள். ஒருவன்- அவளுடைய கழுத்தில் தாலி கட்டிய கோவிந்தன். இன்னொருவன்- அவள் முன்பு எப்போதோ ஒருநாள் குளித்து முடித்துச் செல்லும்போது, "நான் காதலிக்கிறேன். ஆனால்..." என்று பாதையின் ஓரத்தில் நின்று கொண்டு கூறிய கிருஷ்ணன். அவர்கள் அவள்மீது பாய்ந்து விழுவதற்காக நிற்கவில்லை. அதற்கான மன தைரியமும் உடல் பலமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் நொறுங்கிப் போனவர்கள். அவள் யாரைப் பார்க்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள். இருவருமே மன்னிப்பு கேட்கும் மனநிலையுடன்தான் இருக்கிறார்கள்.

கவுரி முன்னோக்கி நடந்தாள். சாலையில் இறங்கி நடந்தாள். அவள் திரும்பிப் பார்க்கவே இல்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.