
சுராவின் முன்னுரை
மலையாள எழுத்துலகில், குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்புகளை எழுதிப் புகழ் பெற்ற உறூப் (Uroob) எழுதிய ஒரு புதினத்தை ‘குஞ்ஞம்மாவும் நண்பர்களும்’ (Kunjammavum Nanbargalum) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். பொன்னானிக்கு அருகிலுள்ள பள்ளிப்புரம் கிராமத்தில், 1915-ஆம் ஆண்டு பிறந்த உறூப்பின் உண்மைப் பெயர் பி.சி.குட்டிகிருஷ்ணன்.
இளம் வயதிலேயே சமஸ்கிருதம் கற்ற உறூப் தென்னிந்தியா முழுவதும் எந்தவித லட்சியமும் இல்லாமல் அலைந்து திரிந்திருக்கிறார். பின்னர் கம்பவுண்டர், ஆசிரியர், குமாஸ்தா, பனியன் கம்பெனியின் சூப்பர்வைசர், ‘மங்களோதயம்’ மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் என்று பல வேலைகளையும் செய்திருக்கிறார். ‘ஆகாசவாணி’யில் ஸ்டாஃப் ஆர்ட்டிஸ்ட்டாகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் வந்த ‘குங்குமம்’, ‘மலையாள மனோரமா’ வார இதழ்களின் ஆசிரியராக ஆனார். கவிதைகள் எழுதினாலும், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவற்றை எழுதியதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ‘சுந்தரிகளும் சுந்தரன்மார்களும்’ என்ற உறூப்பின் புதினத்திற்கு தேசிய சாகித்ய அகாடெமி விருது (National Sahitya Academy Award) கிடைத்தது. தமிழில் அப்புதினம் மொழி பெயர்க்கப்பட்டு 70-களின் பிற்பகுதியிலேயே வந்திருக்கிறது. 40 நூல்களுக்குச் சொந்தக்காரரான உறூப் கதை, வசனம் எழுதிய, ‘நீலக்குயில்’ (Neelakkuyil) திரைப்படம் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்ற நற்பெயரைப் பெற்றது. ‘மலையாள மனோரமா’வின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, 1979-ஆம் ஆண்டில் உறூப் மரணத்தைத் தழுவினார். ஆனால் அவரது எழுத்து இறவா வரம் பெற்றது என்பதை இந்நாவலைப் படித்ததும் நீங்கள் நம்புவீர்கள்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
சேற்றை அள்ளி எறியும் பெண்
கிழக்கு திசையை நோக்கிச் செல்லும் மூன்றாவது பேருந்து போனவுடன், அச்சுதன் நம்பூதிரி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். நீண்ட நேரமாக அந்த மனிதர் அந்தக் கடையின் வாசலில் போடப்பட்டிருந்த கையொடிந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறார். மூக்கிற்குக் கீழே பேருந்துகள் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றில் பாய்ந்து ஏறலாம். வீட்டை அடையலாம். சுகமாக ஓய்வெடுக்கலாம்.
எனினும், அங்கு இருக்க வேண்டும் என்றுதான் நம்பூதிரிக்குத் தோன்றியது.
"நான் இனிமேலும் காத்திருக்க மாட்டேன். இந்த கோபாலன் நாயரைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, காற்று கடந்து போகும் வழியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருப்பது எவ்வளவோ மேலானது. இந்த மனிதன் காலையில் வீட்டை விட்டு வெளியேறி வந்தான்! இப்படியும் ஒரு பொறுப்பற்ற போக்கு இருக்குமா?'' - இப்படி பாதி தன்னிடமும் மீதி பாதியைத் தேநீர் கடைக்காரனிடமும் அவர் சொன்னார்.
"நீங்க இன்னைக்கு வர்றதா சொல்லியிருந்தீங்களா?''
தேநீர்க் கடைக்காரன் கேட்டான்.
"இல்லை. ஆனால், அவர் அறிவுள்ள மனிதர்தானே? சாதாரணமா யூகிக்க முடியாதா?''
"ஆமாம்.... ஆமாம்...'' - மேலும் ஒரு கண்ணாடி டம்ளர் தேநீரை முன்னால் கொண்டு வந்து வைத்துவிட்டு தேநீர் கடைக்காரன் சொன்னான்: "கோபாலன் நாயர் விஷயமே இப்படித்தான்... யாராவது அழைத்துக் கொண்டு போனால், காற்றில் சிக்கிய சருகைப்போல அவரோட நிலைமை ஆகிவிடும். பிறகு... ஒரு விஷயம்... அவரை வைத்துத்தானே பலரும் காரியங்களை சாதிக்கிறாங்க....!''
"இருந்தாலும் மனிதனுக்கு ஒரு... ஒரு இது இருக்கணும்''
அச்சுதன் நம்பூதிரி கண்ணாடி டம்ளரைக் கீழே வைத்துவிட்டு கோபமான குரலில் சொன்னார்:
"அடுத்த பேருந்தில் நான் புறப்படுகிறேன். அது நடக்கத்தான் போகுது!''
"அப்படியென்றால் நீங்க ஏதாவது முக்கிய விஷயமா...''
"விஷயம் எதுவும் இல்லை. இருந்தாலும் இப்படி நடந்திருக்கக் கூடாது அல்லவா?''
தேநீர் கடைக்காரன் தனக்கு வந்த சிரிப்பை சுவர் பக்கமாகத் திருப்பிவிட்டான். நம்பூதிரிக்கு என்ன குறை என்ற விஷயம் அவனுக்கு தெரியும். நன்கு பழகக்கூடியவரும் அன்பான மனமும் கொண்ட அவருக்கு வாழ்வதற்கு மனித வாசனை தேவைப்படுகிறது. மூன்றோ நான்கோ மணி நேரங்கள் கோபாலன் நாயருடன் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தால் கொஞ்சம் வலி குறைந்ததைப் போல நம்பூதிரிக்கு இருக்கும். ரேஷன் கடைகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து மூன்றாவது உலகப்போர் வரை உள்ள அரசியல் விஷயங்களைப் பற்றியும் கம்யூனிசத்திலிருந்து மனித அன்பு வரை உள்ள தத்துவ அறிவியல்களைப் பற்றியும் விவாதம் நடக்கும். அப்போது அவர்கள் சத்தம் போட்டுச் சிரிப்பார்கள். அந்த வகையில் பொதுமக்களை உயர்த்தக்கூடிய வழிகளைப் பற்றி தேநீர்க் கடையின் ஒரு மூலையில் வைத்து விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது, மீன் விற்பவனாகவோ- பள்ளி ஆசிரியராகவோ விவசாயியாகவோ இருக்கும் பொதுமக்கள் வந்து தேநீர் குடித்தவாறு மூலையில் நடந்து கொண்டிருக்கும் விவாதத்தைப் பார்த்துக் கொண்டே கடனுக்குக் கணக்கை எழுதிவிட்டு, அங்கிருந்து நடந்து செல்லும் காட்சி சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு அனுபவத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார் நம்பூதிரி என்ற விஷயம் தேநீர்க் கடைக்காரனுக்கு நன்றாகத் தெரியும். "அய்யா... நீங்க கவலைப்பட வேண்டாம். கோபாலன் நாயர் இப்போ வந்திடுவார்'' "யாருக்குத் தெரியும்?''
பீடி சுற்றுவது, அரசியல் பணி, தேங்காய் உரிப்பது, இலக்கியம், மீன் வியாபாரம் என்று பல தொழில்களிலும் ஈடுபட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அங்கு கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கோபாலன் நாயரை மட்டும் காணோம்.
"நான் புறப்படுகிறேன்'' - நம்பூதிரி குடையை எடுத்து கையிடுக்கில் வைத்தார். படியில் காலை வைத்தபோது, பின்னாலிருந்து ஒரு கேள்வி.
"புறப்பட்டாச்சா?''
திரும்பிப் பார்த்தார். கடைக்குள் கோபாலன் நாயர் நின்றிருந்தார். "எந்த வழியாக குதித்து வந்தீங்க?''
"பின் வாசல் வழியாக....''
"அப்படியா?''
"பின்னால் இருக்கும் கிணற்றின் கரையில் கால் கழுவலாம். பிறகு... கடன்காரர்களின் தொல்லைகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் அந்த காலத்தில் அங்கு வந்து வந்து, அது ஒரு பழக்கமாகவே ஆயிடுச்சு''
அப்படிக் கூறியவாறு கோபாலன் நாயர் பெஞ்சின் தலைப் பகுதியில் வந்து சாய்ந்து உட்கார்ந்தார். அவர் மிகவும் தளர்ந்து போய் காணப்பட்டார். கோபாலன் நாயருக்கு முப்பத்தாறு வயதுக்கு மேல் இருக்காது. எனினும், கடந்தகால கஷ்டங்கள் அவருடைய முகத்தில் அடையாளங்களை உண்டாக்கி விட்டிருக்கின்றன. அவர் மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவர். "இந்த பூமியில் நானும் வாழ்ந்து விட்டுப் போறேனே?" என்பதைப் போல அவர் இருப்பார். இந்த பூமியில் அப்படி வாழ்வதற்கு முடியுமா? அதனால் வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு செல்ல கோபாலன் நாயர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கஷ்டங்களுக்கு மத்தியில் அவருக்கு ஆறு பிள்ளைகளும் உண்டாகி விட்டார்கள். "நினைத்து அப்படியொரு காரியம் நடக்கவில்லை"- அதைப்பற்றி கோபாலன் நாயர் இப்படித்தான் கூறுவார். ஆறு பிள்ளைகள், ஒரு மனைவி, மனைவியின் தாய், இரண்டு காட்டுப் பூனைகள், எங்கிருந்தோ வந்து குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சொறிநாய்- இப்படி பன்னிரண்டு பேர்களின் வாழ்க்கையை அந்த ஒரு மனிதன் கஷ்டப்பட்டு தள்ளிக் கொண்டு போகவேண்டும். இதற்கிடையில் அந்தப் பகுதியின் பொது காரியங்கள் எல்லாவற்றிலும் ஒரு முக்கிய பங்கினையும் அவர் ஆற்ற வேண்டும். பொது காரியங்களில் ஈடுபடுவதைப் பற்றி கோபாலன் நாயர், "திட்டம் போட்டு நடப்பது இல்லை" என்று கூறுவார். அவர் மேலும் கூறுவார்: "தென்னை தலையில் விழுந்து மனிதர்கள் இறப்பது உண்டு. இதுதான் என்னுடைய விதி".
எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் கோபாலன் நாயர் ஒரே மாதிரிதான். நீண்ட காலம் காங்கிரஸ்காரராக இருந்த அவர் ஒருநாள் காலையில் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி விட்டார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் அவரைப்பற்றிக் கூறும்போது, எச்சிலை விழுங்கிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருப்பார். சோஷலிஸ்ட் இளைஞர்கள் அவரிடம் வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, கோபாலன் நாயர் இப்படிக் கூறுவார்: "எனக்கு இவை எதுவும் புரியவில்லை. மனிதர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறப்போ, இங்கே வாங்க. நான் அதைச் செய்றேன்!" கம்யூனிஸ்ட்டுகளும் இதுவரை கோபாலன் நாயரைப் பற்றி, அமெரிக்காவின் கால்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர், ட்ரூமானின் செருப்பை நக்கிக் கொண்டிருப்பவர் என்றெல்லாம் கூறியதில்லை. எல்லா நல்ல மனிதர்களையும் போல அவரைப் பற்றியும், அமைப்பைச் சேர்ந்தவர்களின் வலையில் போய் சிக்கிக் கொண்ட ஒரு நல்ல மனிதர் என்று கூறியிருக்கலாம்.
அதை ஒரு ஏசலாக கோபாலன் நாயர் எடுத்துக் கொள்ளவும் இல்லை. இப்படி வெவ்வேறு கட்சியில் இருப்பவர்களிடமும் மோசமான அபிப்ராயமில்லாத அந்த மனிதருக்கு தன்னைப் பற்றி பெரிய மதிப்பில்லை. "மொத்தத்தில் சிந்தித்துப் பார்க்கும்போது நான் ஒரு முடிவே இல்லாதவன் என்று தோன்றுகிறது" - இப்படி ஒரு சொந்த விமர்சனம் அடிக்கடி அவரிடமிருந்து புறப்படும். ஆனால் அதுவும் தவறான ஒன்று என்று அங்குள்ள பொதுமக்கள் கருத்து கூறுகிறார்கள்.
களைப்படைந்து போய் அந்த பெஞ்சின்மீது சாய்ந்து உட்கார்ந்திருந்த கோபாலன் நாயரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அச்சுதன் நம்பூதிரிக்கு இந்த தனிப்பட்ட விசேஷங்கள் ஒவ்வொன்றும் ஞாபகத்தில் வந்தன. அத்துடன் அந்த மனிதர்மீது ஒரு கனிவும் உண்டானது.
"என்ன, இன்னைக்கு சாப்பிடலையா?'' - நம்பூதிரி கேட்டார்.
"சாப்பிடுறேன். இன்றைக்கு காலையில் எழுந்து எதன் முகத்தில் விழித்தேனோ?''
"மனைவியின் முகத்திலா?'' - நம்பூதிரி.
"அப்படித்தான்னு நினைக்கிறேன். ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கோங்க. பெண்களின் முகத்தைப் பார்த்தால்... பார்த்தவன் மாட்டிக் கொண்டான் என்று அர்த்தம். அவனைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பவனும் மாட்டிக் கொண்டான் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.''
"மாட்டிக் கொள்வது என்றால்... எந்த அர்த்தத்தில்?''
"மாட்டிக் கொள்வதா? எங்கேயோ கிடக்கும் ஒரு ஆண் எங்கேயோ கிடக்கும் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்ததால் உண்டான சிக்கல்தான் இன்றைக்கு நடப்பவை அனைத்தும்...''
"நீங்க அதில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்களா?''
"எப்படி இருந்தாலும் அந்த ஒரு ரசனையாவது இருக்கே!''
"பிறகு....?''
"மன்னிக்கணும்.....'' - கோபாலன் நாயர் ஒரு காட்டெருமையின் தாகத்துடன் தேநீரை வேக வேகமாகக் குடித்துவிட்டு, கண்ணாடி டம்ளரை மேஜைமீது வைத்துவிட்டு, ஒரு பீடியைத் தேடி எடுத்துப் புகைத்தார்.
"ஹாவ்...! இப்போது எனக்கு நல்லதை எதிர்பார்க்கும் பழக்கம் உண்டாகியிருக்கு!''
"இன்றைக்கு என்ன நடந்தது?'' - நம்பூதிரி மீண்டும் கேட்டார்.
"இன்று காலையில் எழுந்தேன். சந்தோஷமான சில கனவுகளில் மூழ்கினேன். ஒரு பீடியைப் புகைத்துக் கொண்டே நான் படுக்கையில் சப்பணம் போட்டு உட்கார்ந்திருந்தேன். சமையலறையிலிருந்து பிள்ளைகள் தங்களின் தாயிடம் செய்யும் ஆர்ப்பாட்ட ஆரவாரங்களைத் தவிர, அப்போது எதுவும் என்னை அசைக்கவில்லை. தோசைதான் அங்கு பிரச்சினை. உணவு விஷயத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது ஒரு அவசியத் தேவைதான் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அப்படி இல்லாமல் வேறு என்ன செய்வது?''
"உண்மைதான்.... பிறகு?''
"அறையின் கதவு பாதி திறந்து கிடந்தது. அதன் வழியாக கதரால் மூடப்பட்டிருந்த ஒரு தொப்பை வயிறு உள்ளே வருகிறது!''
"வயிறா?''
"ஆமாம்... அதன் சொந்தக்காரரான கோவிந்தக் குறுப்பு அதற்குப் பின்னால் வருகிறார்.''
வழக்கம்போல நம்பூதிரி "உம்" கொட்டினார்.
"வழக்கம்போல நான் நினைத்தேன் - என்ன பிரச்சினையை வைத்துக் கொண்டு அவர் வருகிறாரோ என்று. ஆள் மிகவும் இறுக்கமாக இருந்தார். குடையை ஒரு மூலையில் சாய்த்து வைத்துவிட்டு, என் படுக்கையின் தலைப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். கால்மீது காலை வைத்துக் கொண்டு கண்ணாடியின் வழியாக என்னுடைய முகத்தையே பார்த்தார். பிறகு குண்டு வெடிப்பதைப் போல ஒரு கேள்வி!"
"டேய், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் உண்டாவது தவறான விஷயமா?"
அதற்கு என்ன பதில் கூறுவது? ஒரு அறிவு குறைவான பெண்ணுக்கு என்மீது காதல் உண்டாகிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் எனக்குத் திருமணமே நடந்தது. ஆறு பிள்ளைகள் பிறந்து விட்டார்கள். அதற்குப் பிறகு காதல் என்பது ஒரு பூர்ஷ்வாத்தனமான மனநிலை என்று கூறிவிட முடியுமா? ஆனால், ஆறு பிள்ளைகளின் அழுகைச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு நான் எல்லாவற்றையும் மறந்து போய் விட்டேன். காதல் என்பது ஒரு மெல்லிய ஞாபகமாக மட்டுமே இருக்கிறது.
"சொல்லுங்க.... தவறா?" - குறுப்பு விடுவதாக இல்லை. தவறா, சரியா என்று கூற இயலாது. எனினும் மனிதர்களிடம் இப்படி சில விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றன என்பதை நானும் ஒத்துக் கொண்டேன். அதைத் தடுப்பது சரியா என்று அதற்குப் பிறகு ஒரு கேள்வி. நான் இதுவரை ஒரு காதல் உறவையும் தடுத்ததில்லை. எனினும், அதிகாலை வேளையில் வந்து என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதற்கு அர்த்தம் என்ன என்று நான் கேட்கவில்லை. குறுப்பை எனக்கு நன்கு தெரியும் என்பதால் நான் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டேன்: "என்ன நடந்தது?" பொதுமக்களின் பிரச்சினைகளில் இருந்து நான் தினந்தோறும் விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கிறேன் என்று வழக்கம்போல என்னைப் பார்த்து குற்றச்சாட்டுகளை வீசி எறிந்தார்...''
"அப்படியென்றால் குறுப்பிற்கு காதல் சம்பந்தமாக ஏதாவது விஷயம்.....?'' - நம்பூதிரி கேட்டார்.
"அப்படி எதுவும் இல்லை. அவரின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பையன் இருக்கிறான். பேரு சாத்தப்பன். உயரம் குறைவான உடலையும் நீளமான நாக்கையும் கொண்டிருக்கும் ஒருவன். ஒரு மர்ம மனிதன் எழுந்து நடப்பதை போல குறுப்பின் வீடு இருக்கும் பகுதியில் அவன் திரிவதை நான் பார்த்திருக்கிறேன். விதைக்கும் காலத்தில் அவன் முறைப்படி வேலை செய்வான். அது இல்லாதபோது கோவிந்தக் குறுப்பின் நிலத்தில் இருக்கும் தேங்காய்களைத் திருடி விற்றுச் சாப்பிடுவான். சிறிய அளவில் திட்டி குறுப்பு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவார். உணவு விஷயமாச்சே! என்ன சொல்வது? இதற்கிடையில் சாத்தப்பன் ஒரு விஷயத்தில் மாட்டிக் கொண்டான். ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்து விட்டான்...'' - கோபாலன் நாயர் பீடித்துண்டை தெருவில் எறிந்து கொண்டே அச்சுதன் நம்பூதிரியைப் பார்த்தார்.
"உண்மையாகவா?''
"காதல் வந்திருச்சு...''
"சாத்தப்பனுக்கா?''
"ஆமாம்... பெண் திய்ய ஜாதியைச் சேர்ந்தவள். குஞ்ஞம்மான்னு பேரு. மாநிறம். சதைப் பிடிப்பான கன்னம். உளி போல கூர்மையான கண்கள். அவற்றை வைத்து திமிங்கிலத்தைப் பிடிக்கலாம் என்று தோன்றும். "போடா புல்லே" என்பதைப்போல அவளின் நடவடிக்கைகள் இருக்கும்.''
"நீங்க அவளைப் பார்த்திருக்கீங்களா?'' - நம்பூதிரி.
"ம்...''
அடக்கடவுளே என்பதைப்போல ஒரு பார்வையை வெளிப்படுத்திய நம்பூதிரி கேட்டார்: "இந்தக் காதல் எப்படி ஆரம்பமானது?''
"கோவிந்த குறுப்பு சொல்றாரு - நல்ல அடித்தளத்தைக் கொண்ட காதல் அது என்று. கடந்த நாற்று நடும் காலம். குஞ்ஞம்மா நாற்று நட்டுக் கொண்டிருக்கிறாள். சாத்தப்பன் நிலத்தைக் கொத்துகிறான். குஞ்ஞம்மாவின் கைவிரலில் ஒரு முள் குத்திவிட்டது.
நாற்றுக் கட்டை கீழே போட்டு விட்டு, விரலை இறுகப் பிடித்துக் கொண்டு, உதட்டைக் குவித்தவாறு குஞ்ஞம்மா சாத்தப்பனுக்கு அருகில் சென்று "இதைக் கொஞ்சம் பாருங்க" என்றாள்.
சாத்தப்பன் பார்த்தான். மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, இடுப்பில் சொருகி வைத்திருந்த தோலால் ஆன உறைக்குள் இருந்து கத்தியை அவன் எடுத்தான். "வேண்டாம்" என்று குஞ்ஞம்மா தடுத்தாலும், சாத்தப்பன் அதைப் பொருட்படுத்தவில்லை. கத்தியின் முனையையும் பெருவிரலின் நகத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டு, "முள்ளே... முள்ளே... தங்க முள்ளே..." என்று ஒரு பாட்டை முணுமுணுத்தவாறு விரலில் இருந்து அவன் முள்ளை வெளியே எடுத்தான். முள்ளை எடுக்கும் முயற்சியில் குஞ்ஞம்மா, சாத்தப்பன் இருவரின் கன்னங்களும் ஒன்றோடொன்று உரசின. நெருப்பு பற்றிவிட்டதைப்போல இருவரும் தங்களின் முகங்களை பின்னோக்கி இழுத்துக் கொண்டு ஒருவரையொருவர் கண்களால் பார்த்துக் கொண்டார்கள்.
அப்போது குஞ்ஞம்மாவின் விரலில் இருந்து சாத்தப்பனின் கால் நகத்தின்மீது இரத்தம் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருந்தது...
"பெண்ணின் ரத்தம் ஆணின் நகத்தின் மீது விழுந்தால் காதல் உண்டாகுமா?'' - நம்பூதிரி ஒரு புதிய கண்டுபிடிப்பைப் புரிந்து கொண்டதைப் போல கேட்டார்.
"உண்டாகும் என்றுதான் தோணுது...'' - கோபாலன் நாயர் ஒரு மெல்லிய சிரிப்புடன் கூறினார். பிறகு... சாத்தப்பன் வயலுக்கு வந்து விட்டால், அருகில் இருக்கும் நாவல் மரத்தைப் பார்த்து,
"தத்தித் தத்தி விளையாடும் மயிலே குயிலே
குஞ்ஞி பெண்ணே... குயிலே..."
என்று பாடுவான். அப்போது குஞ்ஞம்மா அவன்மீது சுமார் ஒரு ராத்தல் சேற்றை வாரி எறிவாள். "எனக்குப் பிடிச்சிருக்கு..." என்று சாத்தப்பன் கூறுவான்.
அதைக் கேட்டுக் கொண்டு நின்றிருக்கும் மற்ற பணி செய்யும் பெண்கள் சிரித்து ஆரவாரம் பண்ணுவார்கள்.
"இந்த சாத்தப்பன் பெண்களையும் பூனையையும் பார்த்துவிடக்கூடாது."
"பூனையைக் கொல்வேன்"- சாத்தப்பன் கூறுவான் : "பெண்களைக் கட்டுவேன்.''
"ஃபூ!" - குஞ்ஞம்மா வெட்கப்பட்டவாறு உதட்டைக் குவித்துக் கொண்டு, மேலும் கொஞ்சம் சேற்றை அள்ளி அவன் மீது எறிவாள். அப்போது சாத்தப்பன் சிரிப்பான்.
"எனக்கு பிடிச்சிருக்கு!"
நெல் விளைந்தது. அறுவடையும் முடிந்தது. சாத்தப்பனின் பாட்டுக்கு கருப்பொருளாக இருக்கும் அந்த நாவல் மரத்தில் சிவப்பு நிறத்தில் தளிர்கள் உண்டாகி முதிர்ந்து இலைகளாக ஆயின. குஞ்ஞம்மாவின் காதலும் வளர்ந்து பிரச்சினையாக ஆனது.''
"என்ன பிரச்சினை?'' - நம்பூதிரி கேட்டார்.
"அவர்கள் இரண்டு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.''
"இரண்டு பேரும் விவசாயத் தொழிலாளிகள்தானே?''
"உங்களுக்குப் புரியவில்லை. ஒரு திய்ய ஜாதியைச் சேர்ந்த பெண்ணுக்கு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த இளைஞன் மீது காதல் உண்டானால், அதற்கு நம் ஊரில் சில தண்டனைகள் இருக்கு. சிலரின் முதுகுகளைப் பிளப்பது, சிலரின் தலையில் காயம் உண்டாக்குவது.... இப்படிப் போகும். பொதுமக்களால் அதைப்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். சாத்தப்பன் மந்திர வேலைகள் செய்து பெண்ணை வசீகரித்துவிட்டான் என்றொரு பேச்சு. மந்திர வேலைகள் செய்யவில்லையென்றால், திய்ய ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு காதல் தோன்றுவதற்கு வழி இருக்கிறதா? கேளன் பங்கனிடமும், பங்கன் குஞ்ஞாப்புவிடமும் குஞ்ஞாப்பு மாதவியிடமும் கூறிக் கூறி அது ஊரெங்கும் பரவியது. குஞ்ஞம்மா பிரச்சினை எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட பேச்சுக்கான விஷயமாக ஆனபோது, பெண்ணின் தந்தை தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். அதன் விளைவாக நான்கு பிரம்புகள் ஒடியும்வரை பெண்ணை அவன் அடிக்கவும் செய்தான்.''
"அய்யோ.... பாவம்....'' - நம்பூதிரி இடையில் புகுந்து சொன்னார்: "அப்படியென்றால், சாத்தப்பன்....?''
"உறுதியுடன் நின்றான். அவன் சொன்னான்: "குஞ்ஞம்மாவை எனக்குப் பிடிச்சிருக்கு. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. அழகு பொருத்தமாகத்தான் இருக்கு. உயரமும் சரிதான். பிறகு என்ன பிரச்சினை?" என்று.
"அவனை யாரும் அடிக்கவில்லை. யாருக்கும் அதற்கான தைரியம் இல்லை" என்று கோவிந்தக்குறுப்பு சொன்னார். பெண்ணின் பக்கத்தைச் சேர்ந்த பெரியவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து யோசித்தார்கள். சீக்கிரமாக வேறொரு மனிதனுக்கு திருமணம் செய்து வைப்பதுதான் ஒரே மாற்று வழி. ஆனால், யார் கிடைப்பான்? இந்த அளவிற்கு கெட்ட பெயரை உண்டாக்கிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள யாராவது தயாராக இருப்பார்களா? ஒரு ஆணை கடைக் கண்களால் மட்டும் பார்த்த பெண்ணைக்கூட இதுவரை யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா?
கடைசியாக தேங்காய் பறிக்கும் சோயுண்ணியைக் கண்டுபிடித்தார்கள். அந்த தடிமாடன் யாரைத் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருந்தான். சிந்தனைக்கும் அவனுக்குமிடையே பெரிய உறவு இல்லை. பருமனான உடலையும் குறைவான அறிவையும் கொண்ட மனிதனாக சோயுண்ணி இருந்தான். ஒரு தேங்காயின் நார்களை உரிக்கிற அளவிற்கான முக்கியத்துவத்தைத்தான் அவன் திருமணம் செய்வதற்கும் தந்தான்.
"நான் கட்டிக்கிறேன்" - சோயுண்ணி சம்மதித்தான். இந்த விஷயம் நேற்று நடந்தது. இன்றைக்கு காலையில் சாத்தப்பனும் குஞ்ஞம்மாவும் சேர்ந்து இங்கே இருக்கிற ஆரிய சமாஜத்திற்குப் போயிருக்காங்க. அது ... ஒருவேளை... குறுப்பு சொன்னபடியாக இருக்கலாம்...''
"ஆரிய சமாஜத்தில் வைத்தா கல்யாணம் நடந்தது?'' - நம்பூதிரி ஆர்வத்துடன் கேட்டார்.
"கேளுங்க. இதற்கிடையில் பெண்ணின் ஆட்களும் ஆரிய சமாஜத்துக்கு தேடி வந்து விட்டார்கள். இப்படியெல்லாம் பிரச்சினைகள் உண்டான பிறகுதான் குறுப்பு அவை அனைத்தையும் இழுத்துக் கொண்டு என்னைத் தேடி வந்தார். "யார் யாரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்து கொள்ளட்டும். அதற்கு நாம ஏன் தொங்கி சாகணும்?" என்றெல்லாம் நான் குறுப்புவிடம் சொல்லிப் பார்த்தேன்.
விஷயத்தை ஆழமாகப் பார்க்காமல் நான் சிந்திக்கிறேன் என்று குறுப்பு சொல்லிவிட்டார். "குஞ்ஞம்மாவைத் திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால், சாத்தப்பனுக்கு வரும் விளைவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று குறுப்பு கேட்டார். பிரபஞ்சத்தின் ஆணிவேர் அசையப் போவதொன்றும் நடக்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், அதைக் கூற முடியுமா? நான் "புரியவில்லை" என்று சொன்னேன். "இரண்டு பேரும் சேர்ந்து இஸ்லாம் சபையைத் தேடி போய்விடுவார்கள். அந்த மதத்தில் சேர்ந்து விடுவார்கள்" என்றார் குறுப்பு. "என்ன இருந்தாலும் இந்த குஞ்ஞம்மா பிரச்சினை முடியவில்லையே" என்றேன் நான். "இதை கூறுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா?" என்று கோவிந்தக் குறுப்பு கேட்டார். எதற்காக வெட்கப்பட வேண்டும் என்று இப்போதும் எனக்குத் தெரியவில்லை. நான் அமைதியாக உட்கார்ந்து சிந்தித்துப் பார்த்தேன். என்னுடைய மூத்த அண்ணன் பதினேழு வருடங்களாக முஸ்லிம் மதத்தில் இருக்கிறார்.
பெண்ணைத் திருமணம் செய்து பிள்ளைகளும் பிறந்து விட்டார்கள். அந்த அண்ணிக்கு மற்ற அண்ணிகளிடமிருந்து இரண்டு வித்தியாசங்கள் இருக்கின்றன. அவங்க தலையில் துணி அணிவார்கள். பிறகு... என் சகோதரிகளிடம் விரோதமே இல்லை. "அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் போய் மனிதர்களைப் போல வாழ்ந்து கொள்ளட்டும்" என்று நான் சொல்லிப் பார்த்தேன். துவாலையை எடுத்து வியர்வையில் நனைந்திருந்த சந்தனப் பொட்டை ஒற்றியவாறு குறுப்பு சொன்னார் : "கல்யாணம் பண்ண வேறு வழியில்லாமல், மதம் மாறுவது சரியா?" என்று. குறுப்பின் வாதம் மேலும் நீண்டபோது, அவர் கூறுவதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்று எனக்கும் தோன்றியது. நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியேறினோம்.''
கோபாலன் நாயர் மேலும் ஒரு பீடியைப் பற்ற வைத்தார். "சொல்லுங்க... சொல்லுங்க...'' - நம்பூதிரி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
"இனிமேல்தான் குஞ்ஞம்மா பிரச்சினை குழப்பங்கள் நிறைந்ததாக ஆகிவிட்டது. நாங்கள் ஆரிய சமாஜத்தை அடைந்தபோது, அங்கு சிறியதொரு ஆட்களின் கூட்டம் நின்றிருந்தது. அவர்களின் முகத்தைப் பார்ப்பதற்கே என்னவோபோல இருந்தது. எனினும், யாரும் கோஷங்கள் எதுவும் போடவில்லை. சாத்தப்பன் வாசலிலேயே நின்றிருந்தான். எங்களைப் பார்த்ததும் அவன் ஓடி வந்து சொன்னான்: "குறுப்பு அய்யா, இந்த விஷயம் இப்போ பெரிசா ஆயிடுச்சு!" என்று. நாங்கள் உள்ளே சென்றோம். அங்கு ஆழமாக விவாதம் நடந்து கொண்டிருந்தது. பெண் சாத்தப்பனைத் தவிர வேறு யாரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதுதான் அவர்களுடைய வாதம். நாங்கள் நடுவர்கள் பொறுப்பை ஏற்றோம். கழுகுப் பார்வையுடன் பெண்ணைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சோயுண்ணியைச் சுட்டிக்காட்டியவாறு குறுப்பு கேட்டார்: "குஞ்ஞம்மா, இவனை திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா?"
பெண் வாயைத் திறக்கவில்லை.
"சொல்லுடீ..." - குஞ்ஞம்மாவின் தந்தை.
பேசவில்லை.
"சம்மதமா?" - கோவிந்தக்குறுப்பு.
அசையவில்லை.
இப்போது விஷயத்தைத் திறந்து கூறாமல் இருந்தால், பிரச்சினைகள் உண்டாகும் என்று நாங்கள் பலமுறை கூறிப் பார்த்தோம். அவள் உளியைப்போல கூர்மையான பார்வையை எங்களை நோக்கிப் பாய்ச்சியவாறு அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
"சொல்லுடீ..." - குஞ்ஞம்மாவின் தந்தை கேட்டார்: "சோயுண்ணி வேண்டாம் என்றால் வேண்டாம். இந்தக் கூட்டத்தில் இருக்கும் இளைஞர்களில் யாரை வேண்டும் என்றாலும் சொல்லு."
குஞ்ஞம்மா மெதுவாக அசைந்து உட்கார்ந்தாள்.
நான் குறுப்பை வெளியே அழைத்து அந்த அறிவுரை சரிதானா என்று கேட்டேன். எனினும், முஸ்லிமாக ஆகவில்லையே என்பதுதான் கோவிந்த குறுப்பின் சமாதானமாக இருந்தது. முஸ்லிம் மதத்தில் சேர்வது என்பது நல்லதல்லவே! உள்ளே நுழைந்து குறுப்பு சொன்னார்: "சொல்லு..."
திடீரென்று, "எனக்கு இவர் போதும்" என்று அவள் சுட்டிக் காட்டினாள்.''
"யாரை?'' - அச்சுதன் நம்பூதிரி உற்சாகத்துடன் கேட்டார்.
"கோவிந்தக் குறுப்பை...''
"என்ன?''
"அத்துடன் காட்சியே மாறிவிட்டது. குறுப்பு சிரிக்கவில்லை. வெளியேறிவிட்டார். அவர் வழியில் நானும். நான் குறுப்பின் தோளில் தட்டி, "ஜலதோஷம் இருக்கிறதா" என்று கேட்டேன். "குஞ்ஞம்மா ஒரு பைத்தியம்" என்று அப்போது கோவிந்த குறுப்பு சொன்னார். இருக்கலாம். ஆனால், சாத்தப்பனை என்ன செய்வாள்? "குறுப்பு அய்யா நினைத்தால் ஒரு வழி உண்டாகும்" என்று சாத்தப்பன் சொன்னான். எல்லாரையும் திருப்திபடுத்துகிற மாதிரியான ஒரு "குறைந்தபட்ச செயல் திட்டத்தை"க் கண்டுபிடிக்க நான் நீண்ட நேரம் சிந்தித்தேன். கிடைக்கவில்லை. சாத்தப்பனிடம் என்ன சொல்வது? பேசாமல் நின்றேன்.
சிறிது நேரம் சென்றதும் குஞ்ஞம்மாவையும் அழைத்துக் கொண்டு சோயுண்ணி வெளியே போவதைப் பார்த்தேன். அவள் தலையை நிமிர்த்திக் கொண்டு நடந்து மறைந்தாள். சாத்தப்பன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். நாங்கள் அவனை ஒருவிதமாகக் கூறி அனுப்பினோம்.''
"பாவம்...'' -நம்பூதிரி நீண்ட பெருமூச்சை விட்டார்.
"நேரம் உச்சிப்பொழுது ஆகிவிட்டது. நல்ல பசி. நாங்கள் தேநீர்க் கடைக்குள் நுழைந்து கடலையையும் புட்டையும் சேர்த்து வயிறை நிறைத்தபோது, குறுப்பிற்கு ஒரு சந்தேகம் - குஞ்ஞம்மா தன்னை எதற்காக சுட்டிக் காட்டினாள் என்று. பெண்ணுக்கு ஆணிடம் காதல் தோன்றுவது தவறானதா என்று அப்போது கேட்கக்கூடாது. நான் எதையும் பேசவில்லை. குறுப்பும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் சென்றதும் நான் கடலையில் இருக்கும் சத்துக்களைப் பற்றியும் குறுப்பு புட்டின் சிறப்பை பற்றியும் பேசினோம். பிறகு பேசாமல் இருந்தோம். பிறகு உஷ்ணத்தைப் பற்றியும் சூரிய மண்டலத்தைப் பற்றியும் பிரம்மாண்ட பிரபஞ்சத்தைப் பற்றியும் பேசினோம். பிறகு அமைதி. அதைக் கிழித்தது கோவிந்தக் குறுப்புத்தான். "உண்மையிலேயே குஞ்ஞம்மாவுக்கு என் மீது விருப்பம் இருந்ததா?" - அவர் கேட்டார்.
அதற்கு நான் பதிலெதுவும் கூறவில்லை. எதற்குக் கூற வேண்டும்? "எது எப்படியோ, குஞ்ஞம்மா முஸ்லிமாக ஆக மாட்டாள் அல்லவா" என்று குறுப்பு சமாதானம் சொன்னார். விருப்பமில்லாத சோயுண்ணியிடமிருந்து அவள் ஓடிப்போய் முஸ்லீம் மதத்தைத் தழுவி விடுவாள் என்றும், வழியில் சாத்தப்பனும் அங்கு போய்ச் சேர்ந்து விடுவான் என்றும் நான் கூறினேன். அந்த சிந்தனை குறுப்பின் தலைக்குள் ஏறியது. "வாங்க..." என்று கூறியவாறு என்னை அழைத்துக் கொண்டு அவர் நடந்தார். எங்கு? நான் பின்பற்றி நடக்கக்கூடிய மனிதன் மட்டுமே. நான் அதைக் கேட்கக்கூடாது. இறுதியில் தேங்காய் உரிக்கும் சோயுண்ணியின் வீட்டிற்கு அருகில் போய்ச் சேர்ந்தோம். சோயுண்ணி அங்கு இல்லை. தேங்காய் உரிக்கப் போயிருந்தான். அப்போது குஞ்ஞம்மா இளம் வெயிலை ஏற்றுக் கொண்டு தலைமுடியை வாரியவாறு வாசலில் நின்றிருந்தாள். அவளுடைய கண்கள் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கவில்லை. குறுப்பைப் பார்த்ததும் முன்னோக்கி வந்தாள்.''
"வந்தாள்! அடடா...!'' - நம்பூதிரி இடையில் புகுந்து சொன்னார்.
"அது மட்டுமல்ல; மன்னிப்பு கேட்கவும் செய்தாள்.''
"எதற்கு?''
"பரபரப்பில் குறுப்பைச் சுட்டிக்காட்டியதற்காக.''
"சரி.... பிறகு?''
"அவள் அங்கு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று குறுப்பு வாழ்த்தியபோது, குஞ்ஞம்மா பெருமூச்சு விட்டு, கண்களில் நீரை நிறையச் செய்தாள்.''
"பிறகு?''
"நான்... நான் என்ன செய்தேன்னு தெரியல'' என்று கூறிவிட்டு அழுதாள்.
"சாத்தப்பனிடம் போகவேண்டும் போல இருக்கிறதா?"
"ஆமாம்...."
குறுப்பு என்னுடைய முகத்தையே பார்த்தார். நான் வானத்தைப் பார்த்தேன். "அப்படியென்றால்.... வா" என்று கூறி குறுப்பு முன்னால் நடந்தார். குஞ்ஞம்மா ஒரு நிமிடம்கூட யோசிக்கவில்லை. குறுப்பைப் பின்பற்றி நடந்தாள்.
"நடந்தாளா? புத்திசாலி! புத்திசாலி!'' - நம்பூதிரி உற்சாகத்துடன் சொன்னார்.
"தெருவின் ஓரம் வழியாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு குறுப்பும், இன்னொரு ஓரத்தின் வழியாக கீழே பார்த்துக் கொண்டே குஞ்ஞம்மாவும் நடந்தார்கள்.
அது ஒரு அருமையான காட்சியாக இருந்தது. நான் வாய்க்கு... போட மறந்துவிட்டேன்....'' கோபாலன் நாயர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
"சரி... இருக்கட்டும். இப்போ குஞ்ஞம்மா எங்கே இருக்கிறாள்?'' அச்சுதன் நம்பூதிரி பொறுமையை இழந்து கேட்டார்.
"சொல்றேன். சாத்தப்பனின் வாசல்படியை அடைந்ததும் குறுப்பு கேட்டார்: "குஞ்ஞம்மா, உண்மையிலேயே உனக்கு சாத்தப்பன் மீதா விருப்பம்?"
"ஆமாம்..."
"என்ன?"
"ஆமாம்."
"வேறு யார்மீதும் விருப்பமில்லையா?"
"இல்லை."
எதற்கு என்று தெரியவில்லை - குறுப்பு அவளையே வெறித்துப் பார்த்தார். பிறகு சொன்னார்: "அப்படியென்றால் போ! போய்த் தொலை!"
குஞ்ஞம்மா திகைத்துப் போய் நிற்பதைப் பார்க்காமலேயே அவர் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்தார். பாதையின் திருப்பத்தை அடைந்ததும், நான் அழைத்தேன்: "கோவிந்தக் குறுப்பு..."
"என்ன?"
"இனிமேலும் அவர்கள் இஸ்லாம் சபைக்குச் சென்றுவிட்டால்...?"
"எந்த சைத்தான் கோட்டைக்கும் போய்த் தொலையட்டும். நான் போகிறேன்."
அவர் சைக்கிளில் ஏறியதும், நான் அவரைப் பார்த்தேன். வியர்வையில் அந்த சந்தனப் பொட்டு முழுமையாக அழிந்து போய் விட்டிருந்தது. நான் இங்கே வந்து விட்டேன். இதுதான் கதை. மாட்டிய விஷயம் போதுமா?''
பாம் பாம் என்ற பேருந்தின் ஹாரன் சத்தம் கேட்டு கோபாலன் நாயர் சொன்னார்: "அதோ கிழக்கே போகும் பேருந்து. போங்க....''
"வேண்டாம்.''
"ஏன்?''
"நான் குஞ்ஞம்மாவைக் கொஞ்சம் பார்த்துவிட்டுத்தான் போவேன். அவளைத்தான் பார்க்க வேண்டும்.''
"ஆனால், இனிமேலும் ஆரிய சமாஜத்திற்கு நடக்க என்னால் முடியாது''- கோபாலன் நாயர் அமைதியான குரலில் ஞாபகப்படுத்தினார்.
"தேவைப்பட்டால் இஸ்லாம் சபைக்கும் போகணும்'' - அச்சுதன் நம்பூதிரியும் அமைதியான குரலில் சொன்னார்.
அவர்கள் தேநீர்க் கடைக்காரனுக்குக் கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்துவிட்டு வெளியேறி நடந்தார்கள்.
தாய் இல்லாத பிரஜை
மனைவி திருடு போனால் யாருக்கும் கோபம் வரும். குரங்குகளை உதவிக்கு அழைத்துக் கொண்டாவது திருடனுடன் போருக்குத் தயாராகவும் செய்வார்கள். சோயுண்ணி போருக்குத் தயாரானானா? இல்லாவிட்டால், அவன் அமைதி அமைப்பை உண்டாக்கினானா? சொல்கிறேன்.
குஞ்ஞம்மாவை வீட்டில் கொண்டு போய் இருக்கச் செய்துவிட்டு அவன் சொன்னான்: "இங்கேயே இரு.''
"ம்....'' - குஞ்ஞம்மா முனகினாள். முனகாமல் என்ன செய்வாள்? கணவனாயிற்றே! மழையில் நனைந்த சங்கு புஷ்பத்தைப் போல அவள் ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். சோயுண்ணி கழுகுப் பார்வையுடன் அவளையே வெறித்துப் பார்த்தான். உண்மையிலேயே இதுவரை அவன் குஞ்ஞம்மாவை முழுமையாக பார்க்கவேயில்லை. அவள் ஒரு பெண் என்று பொதுமக்கள் ஒப்புக் கொண்டு விட்டார்கள். பொதுமக்களின் வார்த்தைகளை நம்பாமல் இருக்க ஒரு நியாயமும் இல்லை. அதற்கு அப்பால் திருமணம் செய்து கொள்வதற்கு என்ன தகுதி வேண்டும்? அவளைப் பார்த்த போது சோயுண்ணிக்கும் தோன்றியது.
"பெண் தேவையில்லையே!"
ஆனால், தேங்காய் உரிக்கும் வேலையை அவன் நிறுத்தவில்லை. வருமானம் வரக்கூடிய வேலை அது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஆயிரத்தைநூறு தேங்காய்களை அவன் உரித்துத் தருவான். ஒரு தேங்காய்க்கு ஒரு பைசா கூலியாகக் கிடைத்தது. அந்த வகையில் ஏழு ரூபாய்களும் சில்லரைகளும் ஒரு நாளில் அவன் சம்பாதிப்பான். ஆனால் சோயுண்ணிக்கு ஒரே நாளில் இந்த சம்பாத்தியம் கிடைத்து விடவில்லை. அதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.
அவனை யார் பெற்றெடுத்தது என்பதை யாராலும் கூற முடியாது. யாராவது பெற்றெடுத்தார்களா? பிறப்பு- இறப்பு கணக்கில் அவனுடைய பெயர் இல்லை. அரசாங்கத்தின் கணக்கில் பெயரே இல்லாத ஒரு பிரஜையைப் பற்றி கோவிந்தக்குறுப்பு தனக்குள் இப்படி கூறிக்கொண்டார்: "ஒரு காலத்திலும் அவனுக்கு ஒரு தாய் இருந்ததில்லை.''
"உண்மைதான்...'' - கோபாலன் நாயர் ஒப்புக்கொண்டார். "இவ்வளவு பெரிய உடலை ஒரு தாய் பெற்றெடுக்க வாய்ப்பே இல்லை. தேரையின் பிறப்பைப் போல இவனுடைய பிறப்பும் இருந்திருக்கும். ஏதாவது மலை உடைந்தபோது, அதோடு சேர்ந்து இவனும் வந்திருப்பான். பிறகு... மனிதர்களின் கூட்டத்தில் சேர்ந்து நடந்து இதோ... இப்படி ஆயிட்டான்.''
இந்த வம்ச வரலாற்றை கோவிந்தக்குறுப்பு எதிர்க்கவில்லை. யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், தனக்கும் ஒரு தாய் இருந்தாள் என்று சோயுண்ணி கூறுகிறான். யார் நம்புவது?
இளம் வயதில் அவன் ஆற்றின் கரையில் வளர்ந்தான். அதில் வரும் படகோட்டிகள் எல்லாருக்கும் அவன் தன்னால் முடியக்கூடிய சேவைகளைச் செய்து கொடுப்பான். வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பது, பீடி புகைப்பதற்கு நெருப்பைக் கொண்டு வந்து கொடுப்பது - இப்படிப் பல உதவிகள். அவர்கள் அவனுக்கு ஏதாவது கொடுப்பார்கள். எதைக் கொடுத்தாலும் வாயை ஒரு மாதிரி வைத்து இளித்துக் கொண்டே அவன் கூறுவான்: "அது நல்லது.''
இப்படியே பகல்களும் இரவுகளும் கடந்து போய்க் கொண்டிருந்தபோது அவனும் வளர்ந்தான். ஆனால், வளர்ச்சி மிகவும் வேகமாக இருந்தது.
"இந்தப் பையன் ஒரு மாதிரி சிரிக்கிறதைப் பார்த்தீர்களா?'' - படகுக்காரர்கள் பல நேரங்களிலும் கூறுவார்கள். அந்த நேரங்களிலும் அவன் கோணல் வாயை விரித்துக் கொண்டு கூறுவான்: "அது நல்லது.''
இதற்கிடையில் கல்வி ரீதியாகவும் சோயுண்ணி வளர்ந்து விட்டிருந்தான். பரிசல் ஓட்டவும், படகைச் செலுத்தவும் அவன் கற்று வைத்திருந்தான். ஆனால், அந்த வாழ்க்கையில் நிலைத்து நிற்கவில்லை. மேலும் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தான். அந்தப் பகுதியில் முந்திரி மரங்கள் ஏராளமாக இருந்தன. அவை தானாகவே உண்டானவை. யாரும் அவற்றை ஒரு உற்பத்திப் பொருளாகவே எடுத்துக் கொள்ளவில்லை. சோயுண்ணி ஒரு அணிலைப் போல முந்திரி மரத்தின் கிளையிலிருந்து கிளைக்குத் தாவிச் செல்வான். இறங்கி வரும்போது மடி நிறைய முந்திரிப் பழங்கள் இருக்கும். வயிற்றுப் பகுதியிலும் முந்திரிப் பழங்களை வைத்திருப்பான். அவற்றை நேராகக் கொண்டுபோய் விற்பதற்கு முயல மாட்டான். அவற்றைப் பெருகச் செய்வான். விளையாடிப் பெருகச் செய்வான். ஆறு அங்குலப் பரப்பளவு கொண்ட ஒரு குழி. ஐந்தடி தூரத்தில் ஒரு கோடு! அந்த கோட்டிலிருந்து அந்த குழிக்குள் முந்திரிப் பழங்களை எறிய வேண்டும். சில பழங்கள் வெளியே சில பழங்கள் குழிக்குள். வெளியே விழுந்த பழங்களை வேறொரு பழத்தைக் கொண்டு எறிந்து சிதற வைக்க வேண்டியது எதிராளிகளின் பொறுப்பு. ஆனால், குழிக்குள் இருப்பவற்றையும் அடிக்கப்பட்டவையுமான எல்லா பழங்களையும் எறிபவன் எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் சம அளவில் பழத்தை எடுத்து விளையாட்டை ஆரம்பிப்பான்.
இந்த வியாபாரத்தில் ஈடுபட்டதிலிருந்து சோயுண்ணிக்கு ஒரே உற்சாகம்தான். அந்த கழுகுப் பார்வையைச் சாய்வாக வைத்துக் கொண்டு, மெதுவாக கையை உயர்த்தி சுவரில் ஒரு எறி எறிவான். டிம்! அந்த வகையில் பெருகி வரும் முந்திரிப் பருப்பை விற்றுக் காசாக்குவான். "உன் கையில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி இருக்கு!'' - மற்ற பிள்ளைகள் கூறுவார்கள்.
"அது நல்லது!'' - சோயுண்ணி குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பான். எனினும், அவன் விளையாட்டில் ஈடுபட்ட எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு பைசா வீதம் தானமாகக் கொடுப்பான். மறுநாளும் அவர்கள் முந்திரிப் பழங்களுடன் விளையாடுவதற்கு வர வேண்டுமே என்பதற்காக அல்ல - கருணை மனம் கொண்டுதான்.
ஆனால், வியாபாரத்தை அதிக நாட்கள் நடத்திக் கொண்டு போக முடியவில்லை. காலம் மாறி, எல்லாவற்றுக்கும் விலை அதிகமானது. உடைந்த பீங்கான் துண்டு, கோதுமை, புளியங்கொட்டை, கீரை, பாக்கு ஓடு, சோப்பு, புல் - எல்லாவற்றுக்கும் விலை. உரிமையாளர்கள் வவ்வால்களையும் சோயுண்ணியையும் முந்திரிக் காடுகளிலிருந்து விரட்டினார்கள். அவன் எதிர்ப்புக் குரல் எதுவும் எழுப்பாமல் வேறொரு இடத்தை நோக்கி நகர்ந்தான்.
எங்களுடைய பகுதியில் ஒரு கோடரியை தோளில் வைத்த கோலத்தில் சோயுண்ணியைப் பார்த்தோம். அவன் எல்லா வாசல்களையும் தேடிச் சென்று சொன்னான்:
"விறகு வெட்டனுமா?''
"வேண்டாம்'' என்று கூறும் வாசலில் இருந்து எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் நடந்தான். "ஆமாம்'' என்று சொன்ன இடத்தில் வேலை செய்தான். படிப்படியாக அவன் விறகு வெட்டுவது சம்பந்தமாக எல்லா தொழில் நுணுக்க அம்சங்களையும் தெரிந்து கொண்டான். எவ்வளவு பெரிய வெட்ட முடியாத மரத்தையும் அவனுக்கு முன்னால் கொண்டுபோய் போடலாம். அவனுடைய கோடரியைக் கண்டதும் அது விறகாக மாறிவிடும்.கூலி விஷயத்தில் பிரச்சினையே இல்லை. மனதில் நினைத்திருந்ததைவிட அதிகமாகக் கிடைத்தால் அந்தக் கழுகுக் கண்களில் ஒரு பிரகாசம் தெரியும். அத்துடன் ஒரு பாராட்டுச் சத்தமும் கேட்கும். "அது நல்லது!"
நல்ல வெயில் உள்ள ஒரு நாளன்று காலை வேளையில் அவன் ஆலிமுஸல்யாரின் வீட்டு வாசலுக்குச் சென்று அழைத்து கேட்டான்:
"விறகு வெட்டுறதுக்கு இருக்கா?''
"இருக்கு. வடக்குப் பக்கம் வா...'' உள்ளேயிருந்து குரல் வந்தது. சோயுண்ணி வடக்குப் பக்கம் சென்றான். அங்கு மாமரத்தின் தடிகள் மலையெனக் குவிந்து கிடந்தன. அவன் தன் வேலையை ஆரம்பித்தான். சாயங்காலம் ஆனபோது விறகு மலையென குவிந்திருந்தது. ஆலிமுஸல்யரின் மனைவி குஞ்ஞிப் பாத்தும்மா அதையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் தனக்குள் கூறினாள்:
"இவன் ஒரு மிகப்பெரிய திறமைசாலியாக இருக்கிறானே! இவனுடைய நெஞ்சில் பத்து பறை நெல்லை வைக்கலாம். கைமீதும் கால்மீதும் கூட வைக்கலாம். நல்ல பலம் கொண்ட இளம் வேலைக்காரன்."
சோயுண்ணி கோடரி மீது கையை வைத்துக் கொண்டு, மாலை நேர வெயிலை ஏற்றுக் கொண்டு, முழங்கையைச் சொறிந்தவாறு வாசலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான்.
"உன் பெயர் என்ன?'' - குஞ்ஞிப் பாத்தும்மா கேட்டாள்.
"சோயுண்ணி.''
"சரி.... உனக்கு இப்போ இதற்கு என்ன தரணும்?''
சோயுண்ணி முழங்கையை மேலும் ஒருமுறை சொறிந்தான். தலை முடியைக் கையால் வாரினான். தாடியைச் சற்றுத் தடவினான். பிறகு வெட்கத்துடன் அசையாமல் நின்றான்.
"சொல்லு...'' - குஞ்ஞிப் பாத்தும்மா அன்புடன் தொடர்ந்து கேட்டாள்: "என்ன வேணும்?''
சோயுண்ணி பேசவில்லை. இறுதியில் அவள் உள்ளே சென்று ஒன்றரை ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"உனக்கு திருப்தியா?''
"இது போதும்.''
"அப்படின்னா நாளைக்கும் வா. கீழே பார்க்காமல் சொல்லு. வர்றியா?''
"வர்றேன்''
சோயுண்ணி மறுநாளும் உரிய நேரத்திற்கு வந்தான். அதே மாதிரி மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் ஆலிமுஸல்யார் சோயுண்ணியைப் பார்த்தார். ஆலிமுஸல்யார் ஒரு இறை பக்தராகவும் தேங்காய் வியாபாரியாகவும் இருந்தார். வியாபாரத்தின் மூலம் நிறைய சம்பாதித்திருந்தார். முஸல்யாருக்கு ஓதக்கூடிய பள்ளிவாசலும் கித்தாப்பும் இல்லையென்றாலும்கூட, முஸல்யார் என்ற பெயர் அப்படியே தங்கி விட்டது. மேல் முகவரிகள் அவ்வளவு வேகமாக மாறிவிடாதே! காலை வேளையில் தொழுகையை முடித்து, ஒரு கடுப்பமான தேநீரையும் குடித்துவிட்டு முஸல்யார் வியாபாரம் நடக்கும் இடத்திற்குச் செல்வார். பிறகு இரவில்தான் திரும்பி வருவார். ஆறு நாட்களும் இது தொடர்ந்து நடக்கும். ஏழாம்நாள் வெள்ளிக்கிழமை. அன்று ஜுமா பிரிந்ததும், பிறகு வீட்டிற்கு வருவார். முஸல்யார் இஸ்லாம் சம்பந்தப்பட்ட காரியங்களிலும் ஈமான் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் முழுமையாக ஈடுபடுவார். சுன்னத் உள்ள எந்தவொரு காரியத்தையும் அவர் விட மாட்டார். ஐந்து முறை தொழுகை நடத்துவது, ஸக்காத் கொடுப்பது - எல்லாவற்றையும் முறைப்படி செய்வார். மக்காவுக்கும் மதீனாவிற்கும் ஒரு முறை போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒரு வெள்ளிக்கிழமை நாளன்றுதான் முஸல்யார் சோயுண்ணியைப் பார்த்தார். "கட்டுமரத்தைப் போல் இருக்கும் இவன் யார்?'' - அவர் தன் மனைவியிடம் கேட்டார்.
"அவன் திறமைசாலி!'' - குஞ்ஞிப் பாத்தும்மா சோயுண்ணியைப் பற்றிய கதையை விளக்கிச் சொன்னாள். பிறகு ஒரு வேண்டுகோளும்! "அவனை நாம விட்டுவிடக் கூடாது!''
"இவனை வச்சு என்னடி செய்யறது?''
"அவன் விறகு வெட்டும் வேலை இல்லாத சமயத்தில் தேங்காய் உரிக்கிற வேலையும் செய்வான். திட்டினாலும் அதைக் கேட்டுக் கொள்வான்!''
"யோசிப்போம்.''
முஸல்யார் யோசித்தார். அதன் விளைவாகத்தான் சோயுண்ணி தேங்காய் உரிக்கும் வேலை செய்பவனாக ஆனான். குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு அவனை மிகவும் பிடிக்கும். எவ்வளவு கடுமையான வேலையாக இருந்தாலும், அவள் சோயுண்ணியிடம் ஒப்படைப்பாள். அவனோ அவற்றை புல்லைப்போல நினைத்து செய்து முடித்துவிடுவான். அது தவிர, இன்னொரு வகையிலும் அவன் உதவியாக இருந்தான். குஞ்ஞிப் பாத்தும்மாவின் குடும்பத்தைப் பற்றிய அருமைகளையும் பெருமைகளையும் வெளியே பரப்புவதற்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. சோயுண்ணி அதற்கும் மிகவும் பொருத்தமான மனிதனாக இருந்தான். மாடி, மாளிகை, தேங்காய் கூடம், நெல் களஞ்சியம், சத்தமிடும் செருப்பு, வெள்ளிப்பிடி போட்ட பாத்திரம் - இப்படித் தன்னுடைய குடும்பத்தின் பெருமைகளை பற்றி அவளுக்குக் கூறுவதற்கு எவ்வளவோ இருந்தன. அவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருந்தவாறு விறகு வெட்டிக் கொண்டிருந்த சோயுண்ணி, ஒரு மூச்சு கூறி முடித்தால், மெதுவாக முனகுவான்.
"அது நல்லது!''
அப்போது, அந்தப் பெண் தன்னுடைய அழகைப்பற்றி கூறத் தொடங்குவாள்.
அந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதற்கு வாயைத் திறந்தால், பிறகு அதை மூட முடியுமா?
"இங்கே பாரு... என்னைத் திருமணம் செய்து கொண்டு வந்த காலத்தில் இந்தக் கன்னத்தில் ஒரு செண்பகப்பூவை வைத்தால் எது செண்பகப்பூ, எது கன்னம் என்றே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு அழகா இருக்கும் கன்னம்.'' - அவள் கூறியதென்னவோ உண்மைதான். ஒரு குழந்தையைப் பெற்றிருந்தாலும், இளமைக்கு எந்தவொரு குறைவும் உண்டாகவில்லை. செண்பக மலரின் வண்ணம் அவளை விட்டுப் போகவும் இல்லை. அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்று, கணவனிடம் தலாக் சொல்லிப் பிரிந்த பிறகுதான் ஆலிமுஸல்யார் அவளைத் திருமணம் செய்தார். முஸல்யாருக்கு அது நான்காவது திருமணம். இரண்டு பெண்களை முஸல்யார் உதறிவிட்டார். ஒரு பெண் முஸல்யாரை உதறிவிட்டாள். அந்த வகையில் மூன்று தலாக்குகள். குஞ்ஞிப் பாத்தும்மா வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை அவள் தலாக் கூறவில்லை.
"பெண் அழகாக இருந்தால், ஆண் சொல்லுகிற இடத்தில் நிற்பான்'' என்று குஞ்ஞிப் பாத்தும்மா அந்த விஷயத்தைப்பற்றிக் கூறுவாள். தொடர்ந்து அகலமான இடுப்புச் சங்கிலி ஆடுகிற அளவிற்கு குலுங்கிக் குலுங்கி அவள் சிரிப்பாள். அப்போது சோயுண்ணி கூறுவான்: "அது நல்லது!''
தேங்காய் உரிப்பதில் ஈடுபட்ட பிறகும் சோயுண்ணி ஆலிமுஸல்யாரின் வீட்டில் நிரந்தர வேலைக்காரனாகவே இருந்தான். விசேஷமாக என்ன பலகாரம் உண்டாக்கினாலும், குஞ்ஞிப் பாத்தும்மா அவற்றில் கொஞ்சத்தை சோயுண்ணிக்கும் எடுத்து வைப்பாள். "இந்தா.... சாப்பிடு...'' என்பாள். அவை அனைத்தையும் அவன் வாய்க்குள் போட்டு மெதுவாக அழுத்துவான். பிறகு அவை காணாமல் போகும்.
"உன்னுடைய வயிறு யானையின் வயிறைப் போன்றது'' என்று செல்லமாகக் கூறுகிற குரலில் கூறி, குஞ்ஞிப் பாத்தும்மா விழுந்து விழுந்து சிரிப்பாள். இப்படியே நாட்கள் கடந்தன. அப்போதுதான் ஆலிமுஸல்யார் ஹஜ்ஜிற்குச் சென்றார். நான்கு மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தார். அந்தக் காலம் முழுவதும் குடும்பத்தின் எல்லா காரியங்களிலும் குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு உதவியாக இருந்தவன். சோயுண்ணிதான். முஸல்யார் திரும்பி வந்தபோது, குஞ்ஞிப் பாத்தும்மா சொன்னாள்:
"அவன் ரொம்பவும் நல்லவன். ஏதாவது கொடுக்கணும்னு நினைச்சா, அவனுக்குக் கொடுக்கலாம். அவனை வைத்திருக்கிறது நல்லதுதான். திறமை உள்ளவனுக்குக் கொடுக்கலாம்னு அந்தக் காலத்துல இருந்தவர்கள் சொன்னது உண்மைதான்.''
"ஆனால்....'' ஆலிக்குட்டிஹாஜி ஹஜ்ஜிற்குப் போனதைத் தொடர்ந்து ஹாஜி மட்டுமல்ல - ஒரு குட்டியும் அவருடைய பெயருடன் சேர்ந்தது. ஒரு சிறப்பு வேண்டாமா? ஆழமாக யோசித்தார்.
"என்ன?''
"அவன் ஒரு காஃபராச்சே?''
"இருக்கட்டும். ஆனால், நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லாவற்றிலும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, நாம அவனை இதற்காக நம்பாமல் இருக்க முடியுமா?''
"ம்...''- மெதுவாக முனகினார். ஹாஜி தரை விரிப்பை மிதித்தவாறு நடந்து சென்றார்.
அதற்குப் பிறகு சிறப்பாகக் கூறும் அளவிற்கு எதுவும் செய்யவில்லையென்றாலும், சோயுண்ணி மீது ஹாஜிக்கு பெரிய அளவில் கருணை உண்டானது. அவனுக்குக் கொஞ்சம் "கண்ணும் ஒளியும்" வைக்க ஆரம்பித்தது. அவன் பணத்தைப் பத்திரம் பண்ணி வைக்க ஆரம்பித்தான். எண்ணுவதற்குத் தெரிந்து கொண்டான். அதைக் கற்றுத் தந்தது குஞ்ஞிப் பாத்தும்மாதான் என்று கோவிந்த குறுப்பு சொன்னார். உண்மையாக இருக்கலாம். குஞ்ஞிப் பாத்தும்மா நன்கு படித்த பெண். ஒன்பதாயிரம் வரை அவள் தவறு செய்யாமல் எண்ணுவாள். அதற்கு அப்பால் எண்ண வேண்டிய ஒரு தேவையும் அவளுக்கு உண்டாகவில்லை.
ஒருநாள் குஞ்ஞிப் பாத்தும்மா சோயுண்ணியிடம் கேட்டாள்: "உன் கையில் இப்போ எவ்வளவு காசு இருக்கு?''
அவன் தொகையைச் சொன்னான்.
"முட்டாளா இருக்கியே! இனிமேல் அதை வைத்து ஏதாவது பண்ண வேண்டாமா?''
அது ஒரு புத்திசாலித்தனமான விஷயமாக சோயுண்ணிக்கும் தோன்றியது. ஒரு நிலம் குத்தகைக்குக் கிடைத்தால் பரவாயில்லை என்று அவன் கோபாலன் நாயரிடம் சொன்னான்.
"விசாரிச்சுப் பார்க்கிறேன். முன்கூட்டியே தொகை கொடுக்க வேண்டியிருக்கும்.''
"கொடுக்கலாம்.''
"எவ்வளவு?''
"நானூறு.''
"சரி...''
இந்த உரையாடல் கோபாலன் நாயருக்குச் சிறிது திகைப்பை உண்டாக்காமல் இல்லை. ஒரு தேங்காய் உரிப்பவன் நானூறு ரூபாய் முன்தொகை கொடுத்துப் பொருளை வாங்குகிறான்! தானோ வாழ்க்கை வண்டியை நகர்த்தி எவ்வளவோ வருடங்களாகிவிட்டன! ஒரு தேங்காய் உரிப்பவனாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் அவர் மனதில் விரும்பத் தொடங்கிவிட்டார். ஆனால், மேல் முகவரி அவ்வளவு சீக்கிரம் மாறி விடாதே! இந்த உரையாடலைக் கேட்டதும் கோவிந்தக் குறுப்பும் திகைத்துப் போனார். "ஆச்சரியம்! இருந்தாலும்.... கோபாலன் நாயர்! அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். பாதிப்பு உண்டாகாத அளவிற்கு பணத்தைச் சரியாகப் பயன்படுத்தணும்.''
"சரிதான்....''
கலந்து பேசினார்கள். இருவரும் சேர்ந்து அச்சுதன் நம்பூதிரியைத் தேடிச் சென்றார்கள். அவருடைய தாயாரின் வகையில் ஒரு சொத்து இருந்தது. நல்ல ஒரு வயல். பயன்படுத்தினால் ஏமாற்றாத மண். நம்பூதிரியின் சிபாரிசின் காரணமாக அது சோயுண்ணிக்கு குத்தகைக்குக் கிடைத்தது. ஒரு போக நிலம். நல்ல நீர்வசதி இருந்தது. அதற்கு அருகில் கோபாலன் நாயரின் சகோதரிக்குச் சொந்தமான நிலம் இருந்தது. அவளால் எந்தவொரு தொந்தரவும் இருக்கப் போவதில்லை.
"நீ பூனையின் மடியில் விழுந்திருக்கே!'' கோவிந்தக் குறுப்பு சொன்னார்: "இனிமேல் நீயும் மண்ணும் சேர்ந்து பார்த்துக்கோங்க!''
" சரி...'' - சோயுண்ணியும் சொன்னான். தொடர்ந்து விவசாயமும் ஆரம்பமானது. சிறிது சிறிதாக உயர்வு. வெறுமனே அல்ல. கடுமையாக உழைப்பான். நடவேண்டிய நேரத்தில் நடுவான். புல் பறிக்க வேண்டிய நேரத்தில் புல் பறிப்பான். உரம் சேர்ப்பான். ஆறு மைல் தூரத்தில் இருந்த மலைச் சரிவிற்குச் சென்று மரத்தை வெட்டி விறகுகளைக் கட்டாகக் கட்டி தலையில் வைத்து சுமந்து கொண்டு வருவான். அவன் வருவதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். பார்ப்பதற்கு மதம் பிடித்து வரும் யானையைப்போல இருப்பான். சோயுண்ணியின் நெற்பயிர் கம்பீரமாக நின்றிருந்தது.
"பாருங்க... கஷ்டப்பட்டு உழைப்பவனின் கையில் மண் கிடைத்தவுடன், நிலம் பலன் தர ஆரம்பித்துவிட்டது'' - குறுப்பு சொன்னார்.
"அறிவை விட அதிகமாகத் தேவைப்படுவது முழுமையான ஈடுபாடுதான். அப்படியென்றால்தான் எல்லாம் சரியாகும்'' - கோபாலன் நாயர் சொன்னார்.
பொழுது விடிவதற்கு முன்பே தலையில் ஒரு கட்டுடன் சோயுண்ணி வயலைத் தேடிச் செல்வான். அவன் திரும்பிவரும் போது எட்டு மணி ஆகிவிடும். பிறகு தேநீர் கடைக்குச் சென்று ஒரு நல்ல தீனியைத் தின்றுவிட்டு தேங்காய் உரிக்கும் இடத்திற்குச் செல்வான்.
ஒரே நிலையில் நின்று கொண்டு நான்கு மணிவரை தேங்காயை உரிப்பான். அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டான். ஒரு இயந்திரம்!
"இப்போ நீ பெரிய மனிதன் ஆயிட்டே. இல்லையா?'' - குஞ்ஞிப் பாத்தும்மா அவ்வப்போது சோயுண்ணியிடம் கேட்பாள்.
"இல்லை'' - என்று மட்டுமே அவன் அதற்கு பதில் சொன்னான்.
"உனக்கு இப்போ ஒரு பெண்ணைத் திருமணம் செய்யணும். அப்படித்தானே?''
"இல்லை.''
"ஆசை இருந்தால் சொல்லு.''
"இல்லை.''
அப்போது குஞ்ஞிப் பாத்தும்மா இடுப்புச் சங்கிலி அசைகிற அளவிற்கு குலுங்கிக் குலுங்கி சிரிப்பாள். தொடர்ந்து துணியை எடுத்து தலையில் இட்டு மூடியவாறு உள்ளே போய்விடுவாள்.
நிலைமை இப்படி இருக்கும்போது, சோயுண்ணியின் விவசாய நிலம் அதிகமானது. கோபாலன் நாயரின் சகோதரிதானே அருகில் உள்ள நிலத்தின் சொந்தக்காரி! அவருடைய கணவர் திடீரென்று இறந்துவிட்டார். இதயத்துடிப்பு நின்றுவிட்டதால் அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று கோபாலன் நாயர் சொன்னார். உண்மையிலேயே யாரோ அடித்துக் கொன்று விட்டார்கள் என்றுதான் பொதுமக்கள் பேசிக் கொண்டார்கள். எது எப்படியோ, மூன்று குழந்தைகளும் அம்முக்குட்டியம்மாவும் கஷ்டத்திற்குள்ளாகி விட்டார்கள். மூத்த மகளுக்கு பதினான்கு வயதாகிவிட்டது. அதற்குக் கீழே ஆறு, மூன்று வயதுகளைக் கொண்ட இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். யார் விவசாயத்தைப் பார்ப்பது? பதின்மூன்று உயிர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவது என்பது கோபாலன் நாயருக்கு இயலாத விஷயம். இறுதியில் கோவிந்தக் குறுப்பு சொன்னார்: "கோபாலன் நாயர், ஒரு வழி இருக்கு!''
"என்ன?''
"சோயுண்ணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள். இந்தப் பிள்ளைகளுக்கு கண்ணும் ஒளியும் வைப்பதுவரை அவன் பார்த்துக் கொள்ளட்டும். கிடைப்பதில் ஒரு பகுதியை இவர்களுக்கும் தரட்டும்.''
"சரிதான்.''
அந்த வகையில் அந்த நிலத்தையும் சோயுண்ணியிடம் ஒப்படைத்தார். முதலில் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. பிறகு, பிள்ளைகளின் கஷ்டங்களைப்பற்றி குறுப்பும் கோபாலன் நாயரும் சொல்லிப் புரிய வைத்ததும், ஒரு அறிவாளியைப் போல அவன் தலையை ஆட்டிக் கொண்டு சொன்னான்: "அது சரி.''
விவசாயமும் தொடங்கியது. விதை, உரம் ஆகியவற்றைக் கழித்து கிடைப்பதில் பெரும்பங்கை சோயுண்ணி அம்முக்குட்டியம்மாவிற்குத் தருவான்.
"கிடைப்பது எல்லாவற்றையும் இங்கே தந்துவிட்டால் உனக்கு சரியாக வருமா சோயுண்ணி? உனக்கு ஏதாவது இருக்க வேண்டாமா? கஷ்டப்பட்டு உழைப்பதற்கு....?'' - அம்முக்குட்டியம்மா அவனிடம் கேட்டாள். சோயுண்ணி ஒரு முட்டாளைப்போல அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டு கூறுவான்: "இது போதும்.''
இப்படியே மாதங்களும் வருடங்களும் கடந்தன. விவசாயம், தேநீர் கடையில் தீனி, தேங்காய் உரிப்பது, குஞ்ஞிப் பாத்தும்மாவின் அறிவுரை - இவை எதற்கும் ஒரு மாற்றமும் உண்டாகவில்லை. அவ்வப்போது குஞ்ஞிப் பாத்தும்மா அவனுக்கு அறிவுரை கூறுவாள்:
"நீ வேணும்னு நினைச்சா, ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ.''
"வேண்டாம்.''
எனினும், குஞ்ஞிப் பாத்தும்மா அந்த அறிவுரையைத் தொடர்ந்து கூறாமல் இல்லை.
"டேய், குடும்ப சகிதமா வாழணும்னா, பெண்ணைத் திருமணம் செய்யனும்!''
"உண்மைதான்.''
"இந்தா பாரு... ஆனால், கவனமா இருக்கணும். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கெட்டவர்களாக இருக்க மாட்டாங்க.''
"சரி...''
சோயுண்ணி தரகர்களைக் கண்டுபிடித்து பெண்ணைப் பற்றி விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்தான். அப்போதுதான் பல புதிய பிரச்சினைகளும் தலையைக் காட்டின. பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சில அடிப்படை ஆதாரங்கள் தேவைப்பட்டன. ஜாதகம் இருக்கிறதா? பிறந்த தேதி எதுவென்று தெரியவில்லை. அது இருக்கட்டும்.... பிறந்த குடும்பம் எது? உறவினர்கள் யார்? குலம் என்னவென்று பார்க்காமல் பெண்ணைத் தருவார்களா? சோயுண்ணி என்ன கூறுவான்?
அவன் தாடியைத் தடவிக் கொண்டு மேல் நோக்கிப் பார்த்தான். சிந்தித்தான். மேலே வானம்- கீழே பூமி வேறு எதுவும் இல்லை. இறுதியில் அவன் சொன்னான்: "அது வேண்டாம்.''
தரகர்கள் அதற்குப் பிறகும் வற்புறுத்திப் பார்த்தார்கள். அப்போதும் அவன் சொன்னான்: "அது வேண்டாம்.''
பிறகு விசாரித்தபோது, அவன் தலையில் துணியைக் கட்டிக் கொண்டு வயலுக்குள் இறங்கினான். தொடர்ந்து நிலத்தைக் கிளறத் தொடங்கினான். அந்த வகையில் திருமண ஆலோசனைகள் அழுத்தப்பட்டுக் கிடந்த சூழ்நிலையில்தான் குஞ்ஞம்மாவின் தந்தை அவனை நெருங்கிச் சொன்னார்- "இதோ ஒரு பெண்" என்று. ஜாதகமும் வேண்டாம். ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். சோயுண்ணி எல்லா விஷயங்களையும் அலசிப் பார்த்துவிட்டு மனதிற்குள் நினைத்தான் : "இது நல்லது.''
மறுநாளே அவன் குஞ்ஞிப் பாத்தும்மாவைத் தேடிச் சென்று அதைப் பற்றிப் பேசினான்.
"அவள் தடியா இருப்பாளா?''
"இல்லை.''
"படித்தவளா?''
"இல்லை.''
"விளையாட்டுத்தனமானவளா?''
"இல்லை.''
"ஆணவம் கொண்டவளா?''
"இல்லை.''
"தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவளா?''
"அது என்ன கேள்வி?''
"சரி... அப்படியென்றால் திருமணம் செய்து கொள்.''
அப்படித்தான் அவன் திருமணம் செய்து குஞ்ஞம்மாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். ஆனால், திரும்பி வந்தபோது, மனைவி திருடு போயிருக்கிறாள். கோபம் வராமல் இருக்குமா?
"இப்படியும் திருடர்கள் இருக்கிறார்களே!'' என்று மனதில் நினைத்துக் கொண்டான். ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் தன்னுடைய உரிமையைக் கேட்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் பசியுடன் இருந்து பிரயோஜனமில்லை. அதனால் முதலில் எதையாவது சாப்பிட வேண்டும். குஞ்ஞம்மா சோறும் குழம்பும் வைத்து அடைத்து வைத்திருக்கிறாள். அதை அவன் சுவைத்து சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்தவுடன் களைப்பு தோன்றியது. தூக்கமும் வந்தது. அவன் மேலே பார்த்து நீண்ட பெருமூச்சை விட்டான். பாய் விரித்துப் படுத்தான். ஐந்து நிமிடங்கள் கடந்ததும், உருளைக் கட்டை சுற்றுகிற சத்தத்தைப்போல குறட்டை ஒலி கேட்டது.
பொழுது புலரும் நேரத்தில் யாருக்கும் அறிவு தெளிவாக இருக்கும். நல்ல நல்ல சிந்தனைகளெல்லாம் தோன்றும். காலையில் எழுந்தவுடன், சோயுண்ணியும் கேட்டான்: "ச்சே... நம்ம மானத்தைக் கெடுத்து விட்டாளே!''
அதைத் தொடர்ந்து அவன் மிகவும் கவனமாக இருந்தான். அவன் காலை இழுத்து இழுத்து நடந்தான் - குஞ்ஞிப் பாத்தும்மா இருந்த இடத்திற்கு.
"என்ன, பொழுது விடியும் நேரத்தில் வந்து நிக்கிறே?''
"இது நல்லது இல்லை.''
"எது?''
சோயுண்ணி தன் மனதில் இருந்த கவலைகளைக் கூறினான். அவன் ஏமாற்றத்தைச் சந்தித்தவன். அவமானப்பட்டவன். இரக்க குணம் கொண்டவன். குஞ்ஞிப் பாத்தும்மா எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டாள். பிறகு சொன்னாள்:
"நீ சந்தோஷப் படணும்.''
"என்ன?''
"நீ தப்பிச்சிட்டேன்னு நினைச்சுக்கோ.
அவள் ஒரு மோசமான பெண்! யாரு? அந்த குஞ்ஞம்மா.... இல்லாவிட்டால் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன்கூட போவாளா? ஒரு பெண்ணுக்கு தூக்கம் வருமா? என் தங்கப் பையனே, எப்பவோ கடவுள் விதித்தது இது!''
குஞ்ஞிப் பாத்தும்மா இவை அனைத்தையும் கூறி முடித்ததும், சோயுண்ணிக்கு கண்ணில் நீர் நிறைந்துவிட்டது. அதைப் பார்த்ததும் குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு சிறிது வீர உணர்ச்சி உண்டானது.
"நீ கவலைப்பட வேண்டாம். இந்த குஞ்ஞிப் பாத்தும்மாவின் முன்னால் இப்படி நடக்கிறது என்றால், என் செல்ல மகள் கதீஜாவைப் போல உனக்கு நான் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணித் தருவேன். இவளைவிட சற்று மூத்த பெண் என்று வைத்துக் கொள்!''
அதைக் கேட்டதும் சோயுண்ணி கண்களைத் துடைத்துக் கொண்டு மெதுவாக நடந்தான். எனினும், அந்த கருடனின் பார்வைகளில் ஒரு மிகப்பெரிய கோபம் நிழலாடிக் கொண்டிருந்தது. "அவமானப்படுத்தி விட்டாளே!"
அவன் குடிசைக்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அப்போது பாவாக்குட்டி கையில் ஒரு புத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டு ஒரு பூனையின் பதுங்கலுடன் வந்தான்.
" என்ன சோயுண்ணி?''
"ஒண்ணுமில்ல....''
அவனுக்கு பாவாக்குட்டியை நன்கு தெரியும். சுமை சுமக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவனாகவும், புரட்சிவாதியாகவும், சொற்பொழிவாளனாகவும், நல்ல மனிதனாகவும் இருப்பவன் அவன் என்பதைப் புரிந்து வைத்திருந்தான்.
"அம்முக்குட்டியம்மாவிற்கு நிலத்தை விட்டுக் கொடுக்க முடிவு செய்துவிட்டாயா?'' - பாவாக்குட்டி கேட்டான்.
"ஆமாம்.... அவங்க மகளுக்கு ஒரு பக்குவம் வந்துவிட்டது. இனி பொண்ணு பார்த்துக் கொள்ளும்.''
"நீ ஒரு முட்டாள்.''
"ஏன்?''
"புதிய சட்டத்தைப் பற்றித் தெரியாதா? யார் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அது சொந்தம்.''
"இந்த நிலம் அம்முக்குட்டியம்மாவிற்குச் சொந்தமானது.''
"இல்லை. உனக்குச் சொந்தமானது.''
"இந்த அளவிற்கு ஊர் கெட்டுப் போச்சா? ஆள் இல்லாததால், அவங்க என்னிடம் ஒப்படைச்சாங்க.''
"அதுவல்ல விஷயம். முதலாளித்துவத்தை ஒழிக்கணும்.''
"எதற்கு?''
"அப்படியென்றால்தான் ஏழைகள் வாழ முடியும்.''
"அப்படியா? இருந்தாலும் அவங்களுக்குச் சொந்தமான நிலத்தை அவங்களிடம் தரவேண்டாமா?''
அதைக் கேட்டு பாவாக்குட்டி சிரித்தான். அந்த திண்ணையில் உட்கார்ந்து அரை மணிநேரம் நில உரிமையாளர், அதில் வேலை செய்பவன் இருவருக்குமிடையே இருக்கும் உறவைப் பற்றிப் பேசினான். எனினும், சோயுண்ணி அசையவில்லை. அவன் சொன்னான்: "அது பாவம்....''
"பாவமா?''
பாவாக்குட்டி சோயுண்ணியின் முகத்தை ஓரக் கண்களால் பார்த்துக் கொண்டே சொன்னான்: "இந்த அம்முக்குட்டியம்மாவின் அண்ணன் கோபாலன் நாயரும் கோவிந்தக் குறுப்பும் சேர்ந்து குஞ்ஞம்மாவின் விஷயத்தில் உன்னை அவமானப்பட வச்சிட்டாங்களே! அந்த நேரத்தில் பாவத்தைப் பற்றி அவங்க நினைத்தார்களா?''
சோயுண்ணி நிமிர்ந்து உட்கார்ந்தான். நீண்ட பெருமூச்சை விட்டான்.
அதைத் தொடர்ந்து ஒரு சொக்கப்பானை எரிவதைப்போல பாவாக்குட்டியின் பேச்சு ஒலித்துக் கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் கேட்டு முடித்ததும், சோயுண்ணி சொன்னான்: "முதலாளித்துவத்தை ஒழிக்கணும்!''
"அப்படியென்றால் நிலத்தை காலி பண்ணிதர வேண்டாம்.''
"நான் எந்தச் சமயத்திலும் காலி பண்ணித் தர மாட்டேன். யாருக்கும் தரமாட்டேன்.''
"அதுதான் செய்ய வேண்டியது. சட்டம் உண்டான பிறகும், அதை பயன்படுத்தவில்லையென்றால் நாம் முட்டாள்கள் என்றாகிவிடுவோம்.''
"முதலாளித்துவத்தை ஒழிக்கணும்!'' - சோயுண்ணி மீண்டும் சொன்னான். முகத்தை கடுமையாக வைத்திருந்தான். பாவாக்குட்டி அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அருகிலிருந்த தெருவிற்குள் திரும்பினான்.
முதலாளித்துவத்துடன் மட்டுமல்ல - உலகத்தில் உள்ள எல்லாவற்றின் மீதும் அப்போது சோயுண்ணிக்கு கோபம் இருந்தது. அதற்குள் செல்லும் எல்லா மனிதர்களும் மிகவும் மோசமானவர்கள் என்று அவன் நினைத்தான்.
தென்னையும் பலாவும் இப்படி வளர்வது தன்னை ஏமாற்றுவதற்குத்தான் என்று அவன் நினைத்தான். வேலியின்மீது இரண்டு கால்களையும் உயர்த்தி வைத்துக் கொண்டு காட்டுச் செடிகளை மென்று தின்னும் ஆடுகூட மிகவும் கேவலமானதாக அவனுக்குத் தோன்றியது.
"சோயுண்ணி....'' திடீரென்று பின்னால் இருந்து இனிமையான ஒரு குரல். சோயுண்ணி திரும்பிப் பார்த்தான். கோபாலன் நாயர் புன்சிரிப்பு தவழ நின்று கொண்டிருந்தார்.
"நான் ஒரு விஷயத்தைச் சொல்றதுக்காக வந்தேன்.''
"என்ன?''
"நிலத்தை அம்முக்குட்டிக்கு காலி பண்ணி கொடுத்துடலாம்னு முடிவு செய்திருக்கிறாய் அல்லவா? ஆனால், சோயுண்ணி...... இவ்வளவு காலமா அதைப் பார்த்துக் கொண்டதற்காக....''
"இல்லை....'' - சோயுண்ணி இடையில் புகுந்து சொன்னான்: "காலி பண்ண மாட்டேன்.''
"என்ன? அம்முக்குட்டி வேறு மாதிரி சொன்னாளே!''
"காலி பண்ணமாட்டேன்னு நான் சொல்றேன்!''
"என்ன? உடம்புக்கு ஏதாவது கேடு உண்டாயிடுச்சா?''
"ஒண்ணுமில்ல.''
"காரணம்?''
"முதலாளித்துவம் ஒழியணும்.''
"ஆனால், இப்போது ஒழிப்பது அந்த பிஞ்சு குழந்தைகளைத்தான். அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை.''
"முதலாளித்துவம் ஒழியணும். என்னை அவமானப்படுத்தியவர்கள் அழியணும்.''
"முதலாளித்துவம் ஒழியட்டும், சோயுண்ணி. குழந்தைகள் அழியணுமா?''
அதற்கு சோயுண்ணி பதில் கூறவில்லை. கோபாலன் நாயர் அதற்கு பிறகும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். உண்மையாகவே சோயுண்ணியின் அந்த மாறுபட்ட தன்மை கோபாலன் நாயரைச் சற்று பதைபதைக்கச் செய்ததென்னவோ உண்மை. அவனுக்கு என்ன ஆகிவிட்டது? குடும்பத்திற்கென்று வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பதே அந்த நிலம் மட்டும்தான் என்று அவர் சொன்னார். அது இல்லாமல் போய்விட்டால் அவர்கள் இப்போது தெருவில்தான் நிற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். சோயுண்ணிமீது கோபம் கொண்டு, நிலத்தைவிட்டுப் போகும்படி கூறவில்லை என்றார் அவர். எனினும், சோயுண்ணி அசையவில்லை. ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் அவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது.
"முதலாளித்துவம் ஒழியணும்!''
கோபாலன் நாயர் சுற்றிலும் கண்களை ஓட்டினார். பிறகு சிறிது நேரம் அவர் அமைதியாக நின்றார். இனிமேல் என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. அப்படியே நிமிடங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன.
இறுதியில் கோபாலன் நாயர்தான் மௌனத்தைக் கலைத்தார்.
"முதலாளித்துவம் ஒழியட்டும்! ஆனால், மனிதர்களுக்கிடையே இருக்கும் அன்பு அழிந்து போய்விடக் கூடாது. சோயுண்ணி, நிலத்தை நீ எடுத்துக்கோ. அந்த பிஞ்சு குழந்தைகள் பட்டினி கிடந்து சாவதைப் பார்க்க முடியாது. இதுவரை நீதானே அவர்களுக்கு உதவி செய்து வளர்த்திருக்கே! இனியும் பார்த்துக்கொள். நான் அவர்களை இங்கு கொண்டு வந்து விடுகிறேன்'' -இறுதி வார்த்தைகளைக் கூறியபோது கோபாலன் நாயரின் தொண்டை தடுமாறியது.
சோயுண்ணி கோபாலன் நாயரையே பார்த்தான். அந்தக் கழுகின் பார்வையில் ஒரு வேறுபாடு உண்டானது. எதுவும் புரியாததைப் போல நெற்றியைச் சுளித்துக்கொண்டு அவன் இறுதியில் சொன்னான்: "பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வர வேண்டாம்.''
"பிறகு நான் அவர்களைக் கொல்லணுமா?''
"கொல்ல வேண்டாம்.''
"பிறகு... ஆறு பிள்ளைகளைக் கொண்ட நான் என்ன செய்வது?''
"இருந்தாலும்...'' -சோயுண்ணி நிறுத்தினான்.
"என்ன? சொல்லு...''
"என்னை அவமானப்படுத்தவில்லையா?''
"யாரு?''
"நீங்களும் குறுப்பு அய்யாவும் சேர்ந்து, அந்தப் பெண்ணை தாழ்ந்த ஜாதிக்காரனுக்கு கொடுத்தீங்கள்ல?''
"நாங்களா? அவள்ல போனாள்? தடுத்து நிறுத்தினால், அது கிரிமினல் வழக்காக ஆகிவிடாதா? சோயுண்ணி, இந்த உதவிகளைச் செய்த உன்னை அவமானப்படுத்துறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?''
"அப்படியென்றால் தடுத்து நிறுத்தினால் கிரிமினலா ஆகிவிடுமா?''
"பிறகு ஆகாதா? போலீஸ் வரும்ல?''
"அப்படியா? என்னை அவமானப்படுத்தலையா?''
"இல்லை. சோயுண்ணி என்னை நம்பு.''
"அப்படியென்றால் காலி பண்ணித் தர்றேன். பிறகு பிள்ளைகள் யாரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டாம். இங்கே யார் பார்க்குறது?''
கோபாலன் நாயரின் கண்களின் ஓரங்கள் ஈரமாயின. அவர் சோயுண்ணியின் முகத்தையே சிறிது நேரம் பார்த்தார். அப்போது சோயுண்ணிக்கு எங்கோ வலிப்பதைப் போல இருந்தது. பிறகு இருவரும் எதுவும் பேசவில்லை. கோபாலன் நாயர் வெளியேறி நடந்தார். வழி முழுவதும் பல சிந்தனைகளும் அவரின் மனதில் அலைமோதிக்கொண்டிருந்தன. "சோயுண்ணி எதற்கு நிலத்தைத் திரும்பத் தந்தான்? சட்டம் அவனுக்கு உதவியாக இருக்கிறது. இன்னொரு கோணத்தில் பார்க்கப் போனால் நிலத்தைச் சட்டம் நடத்திக்கொண்டு போகவில்லையே! மனிதர்கள்தானே? எனினும், முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதானே? என்ன பளிங்கு போன்ற மனது! இவனை வேண்டாம் என்று ஒதுக்கினாளா அந்த குஞ்ஞம்மா? பெண்களுக்கு அறிவு இருக்கிறதா?"
கோபாலன் நாயர் மன அமைதி இல்லாமல் நடந்தார்.
வாழைக்குலை
உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கோஷம் எழுந்தபோது கோபாலன் நாயர் நினைத்தார். "சரிதான். ஆனால், நான் என்ன செய்வேன்? ஜிப்பாவின் இரண்டு பாக்கெட்டுகளிலும் இரண்டு பருத்திச் செடிகளை நட்டு வளர்க்கலாம். மூன்றாவதாக ஒரு செடியை எங்கு வைப்பது? கூலிக்கு வாங்கிய வீடு இருக்கும் நிலத்தில் அதன் உரிமையாளர் விவசாயம் செய்து கொண்டிருந்தார். பிறகு என்ன வழி? எனினும், கோபாலன் நாயர் எல்லாரிடமும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார். "உற்பத்தியை இல்லாமல் செய்யுங்கள் என்று கூறுவதைவிட அதிகமாக்குங்கள் என்று கூறுவது எவ்வளவோ நல்லதாயிற்றே!" -இதுதான் கோபாலன் நாயரின் கருத்து. இறுதியில், தன்னுடைய வீட்டிற்கு அருகில் மேற்குப் பக்கத்தில் கொஞ்சம் நிலம் காலியாகக் கிடப்பதை கோபாலன் நாயர் கண்டுபிடித்தார். அதில் நான்கில் ஒரு பகுதியில் ஒரு பாம்புப் புற்றும் சித்திரகூட கற்களும் இருந்தன. மீதி பாகத்தில் ஏதாவது செய்யலாம். கேட்டதற்கு நிலத்தின் சொந்தக்காரர் சம்மதித்தார்: "கோபாலன் நாயர்தானே? சரி..."
கோபாலன் நாயர் அங்கு நாற்பத்தியொரு நேந்திர வாழைகளை வைத்தார். அப்படிக் கூறினால் சரியாக இருக்காது. நாற்பது வாழைகளை வைத்தார். பிறகு ஒரு வாழையையும் வைத்தார். அந்த ஒரு வாழையின் சொந்தக்காரி வேறொரு ஆள்- மாதவியம்மா. மாதவியம்மா கோபாலன் நாயரின் மனைவி. மனைவியும் கணவருடன் சேர்ந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. நாற்பது வாழைக் கன்றுகளை நட்டாகிவிட்டது. அப்போது ஒரு சிறிய கன்று மீதமிருந்தது. கோபாலன் நாயர் தன் மனைவியிடம் சொன்னார்:
"இதை எடுத்து பிய்த்துப் போடு.''
அந்த வார்த்தை மாதவியம்மாவிற்குப் பிடிக்கவில்லை. அவளும் பிள்ளைகளும் சேர்ந்து ஒரு குழியைத் தோண்டினார்கள். அதில் அந்த வாழையை நட்டார்கள். அந்த வாழை மட்டும் தனியாக- வேறு ஒரு அணியாக நின்று கொண்டிருந்தது. அணி தெரியாத கோபாலன் நாயர் அதையும் கவனித்துப் பார்த்துக் கொண்டார். பக்கத்து இடங்களில் இருந்து இலை தழைகளைக் கொண்டு வந்து உரமிடுவார். சாம்பலையும் வாங்கி வந்து போடுவார். உரங்களைப் பற்றியும் வித்துக்களைப் பற்றியும் உள்ள நூல்களை கோபாலன் நாயர் வாசித்துப் பார்த்தார். பிறகு மனைவியிடம் சொன்னார்: "இதைத்தான் நான் சொன்னேன்- எனக்கு அறிவு இருக்குன்னு.''
"அப்படியா?''
"நாம போட்ட உரங்களைத்தான் இதிலும் போட்டிருக்காங்க. வாசித்துப் பாரு.''
அவர் புத்தகத்தைத் தன் மனைவியின் கையில் கொடுத்தார். அவள் அதைக் கொண்டு போய் குழந்தைக்காக சூடு பண்ணி வைத்திருந்த பாலை மூடி வைத்தாள். நல்ல பாதுகாப்பான மூடியாக அது இருந்தது.
வாழைக்கு புதிய கிளைகள் உண்டாயின. இலைகள் விரிந்தன. கோபாலன் நாயர் உரம் போடுதல், நீர் பாய்ச்சுதல் என்று மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மாதவியம்மாவின் வாழை மட்டும் ஒரு கிரகணம் பிடித்த குழந்தையைப் போல அப்படியே தூங்கிக் கொண்டு நின்றிருந்தது.
"இது சாதாரண பூவன்... அப்படித்தானே!'' - கோபாலன் நாயர் தன் மனைவியிடம் கேட்டார்.
"ஓ...! அந்த அளவிற்குச் சொல்ல வேண்டாம். வாழையின் பருமனையும் உயரத்தையும் பார்க்கக்கூடாது. குலையைத்தான் பார்க்கணும்.''
"ஆமாம்... ஆமாம்... முயலுக்கு கொம்பு வருவதைப் போல, இந்த வாழைக்கும் ஒரு பெரிய குலை வரும்.''
மாதவியம்மாவிற்கு கோபம் வந்தது. தன்னை ஆண்கள் அப்படி சாதாரணமாக நினைப்பதை அவள் விரும்பவில்லை. அந்தப் பெண் தன் குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்தாள். திரும்பி சமையலறையை நோக்கி நடந்தாள். போகும்போது "நாம் பார்ப்போம்" என்றொரு கூர்மையான அம்பை வேறு எறிந்தாள். கோபாலன் நாயர் கைப்பிடிச் சுவரின்மீது சாய்ந்து கொண்டு சிரித்தார்.
கோபாலன் நாயர் உரம் பற்றிய நூலில் கூறியிருந்ததைப் போல அனைத்தையும் செய்தார். ஒவ்வொரு வாழைக்கும் மூன்று ராத்தல், எட்டு அவுன்ஸ் வீதம் சாம்பல், ஐந்து ராத்தல் பசும் உரம் போட்டார். அப்படி இருக்கும்போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது. மாதவியம்மாவின் குள்ள வாழை தளதள என்று வளர்ந்து வந்து கொண்டிருந்தது. கோபாலன் நாயர் திகைத்துப் போய்விட்டார். அவர் சிந்தித்தார். "பெண்கள் செய்கிற வேலையைப் பார்த்தீங்களா?"
கோபாலன் நாயர் உரம் பற்றிய நூலை மீண்டும் படித்துப் பார்த்தார். அதற்குப் பிறகும் மாதவியம்மாவின் வாழை நன்றாக வளர்ந்து வருவதற்கான காரணம் அவருக்குப் புரியவில்லை. இறுதியில் அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்: "மாதவியின் பத்தினித் தன்மையால் இருக்கலாம்."
அப்படி இருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் காலையில் மேற்குப் பகுதியில் திறந்து கிடந்த சாளரத்தின் வழியாக கோபாலன் நாயர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அப்போது ஒரு முறத்தில் எதையோ வைத்துக்கொண்டு மாதவியம்மா வாழைத் தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
கோபாலன் நாயர் கூர்ந்து கவனித்தார். அந்த ஒதுக்கப்பட்ட வாழையின் அடியில் சாம்பல் நிறத்தில் ஒரு பொருளை அவள் போட்டாள்.
"அடடா! இதுதான் வித்தையா? பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிற வழியைப் பார்த்தீங்களா?" என்று அவர் நினைத்தார். கூறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?
அந்த வகையில் நாற்பதும், ஒன்றும் என்று இருந்த வாழைகள் பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. மாதவியம்மாவின் வாழையைப் பார்க்கும்போதெல்லாம் கோபாலன் நாயருக்கு மனதில் கவலை உண்டாகும். பெண்கள் அப்படி ஆண் இனத்தை தோற்கடிப்பதில் இருக்கும் கவலை. ஒரு வெறும் மனைவி நல்ல ஒரு கணவரைத் தோற்கடிப்பதா?
"வேகமாக வாழை குலை தள்ளுவது, ஒரு மோசமான குலையில் போய் முடியும்'' - கோபாலன் நாயர் தன் மனைவியிடம் கூறினார்.
"ம்...'' - ஒரு மெல்லிய சிரிப்புடன் மாதவியம்மா குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து சென்றாள்.
அடடா! அவள் சிறிதும் கலங்கவே இல்லையே! எப்படிக் கலங்குவாள்? அந்த அளவிற்கு நல்லதாக ஒரு வாழைகூட கோபாலன் நாயரின் வாழைத் தோப்பில் இல்லையே! பெண்கள் செயலில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் என்றும், அவள் தனிப்பட்ட முறையில் தன்னுடைய வாழைக்கு உரமிடுகிறாள் என்றும் அவர் பிரச்சாரம் செய்யலாம். அதனால் என்ன விளையப் போகிறது?
இறுதியில் வாழைகள் குலை தள்ளவும் காய்கள் காய்க்கவும் ஆரம்பித்தன. அந்தக் காட்சி ஒரு திருவிழாவைப் போல இருந்தது. தினமும் காலையில் எழுந்து தலையில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு கோபாலன் நாயர் வாழைத் தோட்டத்தை ஒருமுறை சுற்றி வருவார். அவை அனைத்தும் தன்னுடைய படைப்புகள் என்றொரு முகவெளிப்பாடு அவரிடமிருந்து உண்டாகும்.
"இந்த குலையில் எவ்வளவு காய்கள் இருக்கின்றன என்று தெரியுமா?''
"இருபது...'' - மனைவியின் பதில்.
"உனக்கு கூட்டுக் கணக்கு தெரியாது. முப்பத்து ஆறு.''
"ம்...''
"இன்னொன்றில் நாற்பத்தொண்ணு. இந்த குலையில் நாற்பத்து மூணு'' - இப்படி வெற்றி பெருமிதத்துடன் அவர் ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி, தன் மனைவிக்கு விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார். இறுதியில், "உன்னுடைய செல்ல பூவன் வாழை ஏன் குலை தள்ளவில்லை?'' என்றொரு கேள்வியையும் கேட்டார்.
"குலை தள்ளும்.''
"பதினேழு காய்கள் வரை உண்டாகலாம்'' - ஒரு நிபுணரைப் போல சொன்னார்.
"பார்க்கலாம்.''
பார்த்தார்கள். வாழை குலை தள்ளியது. குலை விரிந்தது. ஐம்பத்தாறு காய்கள்!
"என்ன?'' - கோபாலன் நாயர் வானத்தைப் பார்த்தார். இனி என்ன சொல்வது?
"ம்... என்ன? இது சாதாரண பூவன் வாழையா?'' -மனைவி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு, குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.
"அங்கேயே நில்லு...'' -கோபாலன் நாயர் சொன்னார்.
"வேண்டாம்'' -மனைவி நடந்தாள்.
"நிற்கச் சொன்னேன்.''
"வேண்டாம்.''
"நான் இந்த வாழையை இப்போ வெட்டி துண்டு துண்டாக ஆக்கிடுவேன்.''
"என் கடவுள்களே?'' -அவள் நின்றாள்.
"என்ன?''
"நீ ஒன்றைப் புரிந்து கொண்டாயா? அதிகம் காய்கள் இருக்கும் குலை அல்ல நல்ல குலை. காய் அளவில் பெரியதாக இருக்காது. ஒவ்வொரு காயும் இதோ, உன் விரல் அளவிற்குத்தான் இருக்கும்.''
"ம்...'' -மனைவி பதிலெதுவும் கூறாமல் நடந்து சென்றாள். இறுதியில் அந்த எதிர்பார்ப்பும் தவறானதாக ஆனது. பெரிய அளவில் இருந்த ஐம்பத்தாறு நேந்திரங் காய்கள்! கோபாலன் நாயர் தன்னுடைய கவலையை யாரிடம் போய் கூறுவார்?
"ம்... இது பெண்களின் காலம்!'' என்று தனக்குத்தானே அவர் கூறிக்கொண்டார். பிறகு வாழை மரங்களையே பார்க்காமல் அவர் உட்கார்ந்திருந்தார்.
கோபாலன் நாயர் காலையில் எழுந்து செல்வார். சாயங்காலம் வீட்டிற்கு வந்த பிறகு, மாதவியம்மாவிற்குத் தெரியாமல் வாழைத் தோட்டத்திற்குச் சிறிது நேரம் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வருவார். தனக்கு அந்த விஷயத்தில் அப்படியொன்றும் ஆர்வம் இல்லை என்பது மாதிரி அவர் காட்டிக் கொள்வார். அப்படியே வாரங்கள் கடந்தன.
நல்ல நிலவொளி நிறைந்த ஒரு இரவு நேரம். சாளரத்தின் வழியாக உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அறையின் ஒரு மூலையில் போர்த்திப் படுக்க வைத்திருந்த சிறு குழந்தையின் முகத்தில் கொஞ்சம் நிலவு வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. கோபாலன் நாயரும் மாதவியம்மாவும் அந்தக் குழந்தையின் முகத்தையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். இறுதியில் இருவரும் படுக்க ஆரம்பித்தார்கள். அப்போது மனைவி கணவனிடம் கேட்டாள்:
"அப்படின்னா...?''
"என்ன?''
"உங்களுக்கு நேந்திரங் காயைத் துண்டு துண்டாக வெட்டி அவியல் வைத்தால் பிடிக்கும்ல?''
"இல்லை'' - கோபாலன் நாயர் சுவரைப் பார்த்துத் திரும்பிப் படுத்தார்.
"வறுத்தால் பிடிக்குமா?''
"இல்லை.''
"பிறகு... எப்படி வைத்தால் பிடிக்கும்?''
"எப்படி வைத்தாலும் பிடிக்காது.''
"அப்படியென்றால் இவற்றை எதற்கு வளர்க்க வேண்டும்?''
"கொஞ்சம் உறங்க விடுறியா?''
"விடுறேன். ஆனால்...''
"என்ன?''
"ஒரு விஷயம்... நாளைக்கு ஒரு குலை காயை வெட்டிக் கூட்டு வைக்கணும். கொஞ்ச நாட்களாகவே குழந்தைகள் மிகவும் ஆர்வமாக இருக்க ஆரம்பிச்சிட்டாங்க.''
"உன் செல்ல பூவன் வாழை இருக்குது இல்லே... ஐம்பத்தாறு யானைக் கொம்புகள் கொண்டது... அதை வெட்டி முதல்ல கூட்டு வை.''
"அய்யோ! அதை நான் வேறொரு விஷயத்தை மனதில் வைத்து விட்டு வைத்திருக்கிறேன்.''
"என் வாழைக்குலை சம்பந்தமாக நானும் சிலவற்றை மனதில் நினைத்து வைத்திருக்கிறேன்.''
அதற்குப் பிறகு என்ன கூற வேண்டும் என்று மாதவியம்மாவிற்குத் தெரியவில்லை. அவள் தலையணையில் முகத்தை வைத்துக்கொண்டு படுத்தாள். சிறிது நேரம் சென்றதும் கோபாலன் நாயரின் காதில் "ஆஹ், ஆஹ், ஆஹ்!" என்றொரு அழுகைச் சத்தம் ஒலித்தது.
"என்ன அழுறியா?''
சத்தமில்லை.
"அழுறியா என்ன?''
மீண்டும் ஆஹ்... ஆஹ்... ஆஹ்...!
அவர் பார்த்தார். சதைப் பிடிப்பான அந்தக் கன்னத்தில் பட்டு நிலவு நன்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆறு குழந்தைகளின் தாய் படுத்து அழுது கொண்டிருந்தாள். ஏழாவது குழந்தை வயிற்றில் இருந்தது. கோபாலன் நாயரின் இதயம் வேதனைப்பட்டது. அவர் மென்மையான குரலில் சொன்னார்:
"என்ன வேணும் மாதவி?''
"நான்... நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான்.''
அத்துடன் காட்சி மாறியது. அப்போது அழும் நிலையில் இருந்தவர் கோபாலன் நாயர்தான்.
"எல்லா நேந்திரங் காய்களையும் வெட்டிக்கோ. நமக்கிடையே என்னுடைய, உன்னுடையன்னு ஏதாவது இருக்கா?''
மாதவி நீண்ட பெருமூச்சை விட்டவாறு முகத்தைத் துடைத்துக் கொண்டாள். அவள் அமைதியாக உறங்கினாள்.
மறுநாள் முதல் கோபாலன் நாயரின் தோட்டத்தில் காய் வெட்டுவதும், அவியல் வைப்பதும் ஆரம்பித்தன. அப்போதும் மாதவியம்மாவின் "செல்ல பூவன்" அப்படியேதான் நின்று கொண்டிருந்தது. அது முதிர்ந்தது. அதற்குப் பிறகும் மாதவியம்மா குலையை வெட்டவில்லை.
"இன்னும் எதற்காக அதை நிறுத்தி வச்சிருக்கே?'' - கோபாலன் நாயர் கேட்டார்.
"அங்கேயே நிற்கட்டும். ஒரு தேவை இருக்கு.''
குழந்தைகள் யாருடைய பிறந்த நாளிற்காவது வைக்கக்கூடிய ஒரு பழக்கூட்டை மனதில் வைத்துக்கொண்டு அந்த வாழைக் காய்களை விட்டு வைத்திருக்கிறாள் என்று தன் மனதிற்குள் கோபாலன் நாயர் நினைத்து மெல்லிய புன்னகையைத் தவழவிட்டார். குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்து இனிப்பைச் சாப்பிடுகிற அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தபோது கோபால் நாயருக்கு தன்னுடைய மனைவியைப் பாராட்ட வேண்டும் போல இருந்தது. "மாதவி அறிவு உள்ளவள். தெரியுதா?"
அப்படியே மேலும் இரண்டு நாட்கள் கடந்தன. மூன்றாவது நாள் காலையில் எழுந்தவுடன் வீடு முழுவதும் ஒரே ஆரவாரம். மனைவியின் ஆரவாரத்தைக் கேட்டுத்தான் அவர் கண்விழித்தார்.
"அவன் தொலைந்து போவான். அவனுக்கு பகவதி கொடுப்பாள். அவள் சக்தி இல்லாத தாய் இல்லை. ரத்தம் கக்கி இறப்பான்'' என்று ஒரே ஆரவாரம்.
கோபாலன் நாயர் சுற்றிலும் பார்த்தார். மனிதர்கள் ரத்த வாந்தி எடுத்து இறப்பது என்பது எப்படிப் பார்த்தாலும் நல்ல ஒரு விஷயம் இல்லையே! அதனால் அவர் எழுந்து சென்று கேட்டார்: "என்ன மாதவி?''
"என்ன மாதவி! கேட்பதற்கு வெட்கமாக இல்லையா? ஒரு ஆண் இருக்கும் வீடுதானே இது?''
"ஒரு வீர சிங்கம் என்று சொல். சரி... என்ன நடந்தது?''
"வாழை குலை எங்கே?''
"என்ன?''
"என்னுடைய வாழைக்குலை?''
"எங்கே போயிடுச்சு?''
"எங்கே போயிடுச்சு? போய் பாருங்க.''
கோபாலன் நாயர் போய் பார்த்தார். சொத்து முழுவதையும் இழந்த ஒரு பணக்காரரைப் போல வாழை மொட்டையாக நின்றிருந்தது. அப்போது உலகத்திலுள்ள எல்லா வாழைகளையும் வெட்டித் துண்டுத் துண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் கோபாலன் நாயருக்கு உண்டானது. எனினும், ஒரு வாழை மட்டையைக்கூட அறுத்தெறியாமல் அவர் திரும்பிச் சென்று, திண்ணையில் காலின் மேல் காலைப் போட்டு உட்கார்ந்தார்.
கரும்பனைக் காட்டிற்குள் காற்று நுழைந்ததைப் போல சமையலறைப் பகுதியிலிருந்து அப்போதும் ஆரவாரம் வந்து கொண்டேயிருந்தது: "மனிதர்களாக இருந்தால் மதிப்புடன் இருக்க வேண்டும்.''
"இருக்க வேண்டும்'' -கோபாலன் நாயரும் சொன்னார்: "யாருடையதையோ திருடி சாப்பிடுவது மரியாதையான செயல் அல்ல.''
"இப்படி உட்கார்ந்திருப்பதற்குக் காரணம் என்ன?''
"பிறகு?''
"ஓ'' இந்த அளவிற்கு சுரணையே இல்லாம ஆயிட்டீங்களா?''
"அதிகாலை வேளையில் ஒரு டம்ளர் தேநீர் அருந்தாமல் யாருக்கு சூடு பிடிக்கும்?''
மனைவி ஒரு வார்த்தைகூட பதில் கூறாமல் சமையலறையை நோக்கி நடந்தாள். கோபாலன் நாயர் சம்பவங்களை அலசிப் பார்த்தார்.
"அப்படியென்றால் அதுதான் நிலைமை. அப்படித்தானே? செல்ல பூவன் குலை காணாமல் போயிடுச்சு. எந்த திருட்டுப்பயல் இதைச் செய்திருப்பான்? அவனுக்கு நன்கு திருடத் தெரிந்திருக்கு. ஐம்பத்தாறு காய்கள்! பாதியை விற்று அரிசி வாங்கலாம். பாதியைத் துண்டுத் துண்டாக வெட்டி அவியல் செய்யலாம். அந்தக் குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மனைவியும் கணவனும் மூன்று பிள்ளைகளும்... நேற்று அவர்கள் நல்லா சாப்பிட்டிருப்பாங்க... நாசமா போறவங்க..."
"இந்தாங்க தேநீர். சீக்கிரமா குடிச்சிட்டு இதைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க... போங்க...'' - மனைவி தேநீரை முன்னால் வைத்துவிட்டு சொன்னாள்.
"யாரிடம் விசாரிப்பது?''
"நீங்க ஒரு ஆம்பளையா?''
"அப்படித்தான் பொதுமக்கள் சொல்றாங்க. நானும் அதை நம்பிக்கொண்டிருக்கிறேன்.''
மனைவிக்கு கோபம் மேலும் அதிகமாக வந்தது. "இங்க பாருங்க. இந்த வாழைக் குலையைப் பற்றி ஒரு ஆதாரம் கிடைப்பது வரை, நான் இனிமேல் நாக்கு நுனியில் நீர்கூட பட விடமாட்டேன்'' - மாதவியம்மா குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு மிதித்து நடந்து சென்றாள்.
நிலைமை மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகிவிட்டது. மாதவியம்மா உணவு சாப்பிடாமல் இருக்கும் விஷயத்தை கோபாலன் நாயர் விரும்பவில்லை. அதனால் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு அவர் புறப்பட்டார். அறுவடை முடிந்த நெல் வயல்களில் வளைந்து வளைந்து செல்லும் காலடிப் பாதைகள் வழியாக அவர் நடந்தார். அப்போது அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
"உணவு சாப்பிட மாட்டாளாம். சாப்பிட வேண்டாம். யாருக்கு நட்டம்? இருந்தாலும் திருடிய பயல் என்னுடைய வாழையில் இருந்து இரண்டு குலையை வெட்டியிருக்கக் கூடாதா? அப்படியென்றால் காலையில் எழுந்து நான் குதிரைக்குட்டியைப் போல இப்படி ஓடி வந்திருக்க வேண்டாமே! மனம் போனபடி திருடினால் பெரிய கஷ்டம்தான்..."
கோபாலன் நாயர் வேகமாக நடந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். தானிய அறையின் மூடப்பட்டிருந்த கதவைத் தட்டினார்.
"யார் அது?'' -உள்ளேயிருந்து.
"நான்தான்.''
கதவைத் திறந்ததும், கதரில் மூடப்பட்டிருந்த பெரிய தொப்பை வயிறு வெளியே வந்தது. கோவிந்தக் குறுப்பு ஆச்சரியத்துடன் கேட்டார்:
"இவ்வளவு அதிகாலையில்...?''
எந்தவொரு நலம் விசாரிப்புகளுக்கும் நின்று கொண்டிருக்காமல் கோபாலன் நாயர் எடுத்தவுடன் கேட்டார்:
"என்ன குறுப்பு, நீங்கள் ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்து என்ன பிரயோஜனம்?''
அப்போது குறுப்பு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வரவில்லை. பிறகுதான் ராஜினாமா செய்துவிட்டு அரசியல் வேலைகளில் அவர் இறங்கினார்.
"என்ன பிரயோஜனம் என்று கேட்கிறேன்...'' - கோபாலன் நாயர் கடுமையான குரலில் கேட்கிறார். என்ன பதில் கூறுவது?
"எனக்கே தெரியாத விஷயங்களை என்னிடம் கேட்டால் எப்படி கோபாலன் நாயர்? சரி... உட்காருங்க. எது எப்படி இருந்தாலும் வழி பிறக்கும்'' - குறுப்பு அமைதியான குரலில் கண்களைச் சிமிட்டிக் கொண்டு சொன்னார்.
"ஊரில் நடக்குறது எதையாவது நீங்கள் தெரிந்து கொள்கிறீர்களா?''
"என்ன நடந்தது?''
"நான்கு நேந்திரம் வாழை வைக்கக்கூட வழி இல்லாமல் இருக்கிறது. இப்படியும் ஒரு காலம் இருக்குமா?''
"இந்த பீடியைக் கொஞ்சம் புகைங்க...'' என்று சிரித்துக்கொண்டே குறுப்பு சொன்னார். கோபாலன் நாயர் பீடி புகைத்துக் கொண்டிருக்கும்போது, குறுப்பு கேட்டார்:
"நேந்திரம் வாழைக்கு என்ன ஆச்சு?''
"திருடிட்டாங்க.''
"அப்படியா?''
கோபாலன் நாயர் கதை முழுவதையும் விளக்கிக் கூறியவுடன் கோவிந்தக் குறுப்பு சொன்னார்: "இது கொஞ்சம் கொடுமையான விஷயம்தான். போர் காலத்தில் இந்த மாதிரியான சிறிய சிறிய திருட்டுக்காரியங்கள் இருந்ததில்லை.
வாழைக் குலையை வெட்டி விற்பதைவிட மனிதர்களைக் கொல்வதற்குச் சென்றால் அப்போது பணம் கிடைத்தது. அப்போது இந்தத் திருடர்கள் அதற்குப் போனார்கள்.''
"நேந்திரம் வாழைக் குலையைச் சாப்பிட வேண்டும் என்பதற்காக இனிமேல் போரை உண்டாக்க முடியுமா? இதற்கு என்ன வழி?''
"என்ன வழி?''
இரண்டு பேரும் சிந்தித்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தேடிச் சென்றார்கள். குறுப்பு மரியாதைக்குரிய மனிதராக இருந்ததால், இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இறுதியில் சொன்னார்: "வழி உண்டாக்கலாம். ஆதாரத்தைக் கண்டுபிடிக்காமல் விடக்கூடாது. நடங்க. நான் சொல்றேன்.''
அந்த வகையில் சாயங்காலம் மூன்று மணிக்கு வீட்டிற்கு வந்தார் கோபாலன் நாயர். சோறு, குழம்பு ஆகியவற்றைக் கொண்டு வந்து பரிமாறிவிட்டு, மாதவியம்மா கனிவுடன் கேட்டாள்: "களைப்படைஞ்சிட்டீங்களா?''
"ம்... பிறகு? நீ சாப்பிட்டுட்டியா?''
"இந்த மூணு வரை பட்டினி கிடக்கிறேன்.''
பெண்களுடைய உறுதிக்கு ஏதாவது அடிப்படை இருக்குமோ என்று கோபாலன் நாயர் சிந்தித்துப் பார்த்தார்.
"பிறகு? ஏதாவது துப்பு கிடைத்ததா?''
"ஆண்கள் போனால் எல்லாம் சரியாயிடும். நீ அந்தக் குழம்பைக் கொஞ்சம் ஊற்று. பிறகு... ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சுக்கோ. நான் ஒரு ஆம்பளை...!''
அப்படிப்பட்ட விஷயங்களில் சந்தேகமெதுவும் இல்லாத மாதவியம்மா கேட்டாள்: "என்ன ஆச்சு?''
"இன்ஸ்பெக்டர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். துப்பு கிடைக்காமல் இருக்காது. இப்போதிருக்கும் இன்ஸ்பெக்டர் யார் என்று தெரியுமா? கோபம் கொண்ட புலி... கோபம் கொண்ட புலி...! ஆளைப் பிடித்துவிட்டால், அடி உதைகளும் விழும். நல்லா வாங்கட்டும். உதை அப்படி விழுறப்போ, வாந்தி எடுப்பான். அதில் உன்னுடைய நேந்திரம் வாழையும் இருக்கும். அது இருக்கும்...''
"அடி, உதையிலா?'' - மனைவி கேட்டாள்.
"அடிச்சா, எல்லாம் ஜாம் ஆயிடாதா?''
"அதெல்லாம் தேவையில்லை. பிள்ளைகள் இருக்குற ஆளா இருந்தால், அது ஒரு சாபமாக ஆயிடும்.''
"சாகணும்.''
"அய்யோ... கொல்ல வேண்டாம்.''
"கொல்லணும். திருடி சாப்பிட்டிருக்கிறான்ல! எலியை அடிச்சுக் கொல்றதைப் போல கொல்லணும்''.
"பாவமாச்சே!''
"புண்ணியமான காரியம். வெறி பிடிச்ச நாயை அடிச்சுக் கொல்றதைப் போல! ம்... காட்டுறேன்!''
கோபாலன் நாயர் எழுந்து கையைக் கழுவினார். மூன்று நாட்கள் கடந்தன. ஒவ்வொரு நாளும் படுக்கும் நேரத்தில் மாதவியம்மா கேட்பாள்:
"அடிப்பீங்களா?''
"அடிச்சு உறுப்புகளைச் செயல்பட விடாமல் செய்துவிடுவேன்'' - கோபாலன் நாயர் கூறுவார்.
நான்காவது நாள் காலையில் ஒரு சிறுவன் வந்து கோவிந்தக் குறுப்பிடம் உடனடியாக வரும்படி சொன்னான். கோபாலன் நாயர் குடையைக் கையிடுக்குள் இறுக்கியவாறு நடந்தார்.
"என்ன குறுப்பு?'' - கோபாலன் நாயர் வாசலில் கால் வைத்தவாறு கேட்டார்.
"அங்கே பாருங்க'' -குறுப்பு முற்றத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கு குஞ்ஞம்மா நின்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். கோபாலன் நாயரைப் பார்த்ததும் அழுகையின் அளவு கூடியது.
"என்ன, சாத்தப்பன் அடிச்சிட்டானா?'' - கோபாலன் நாயர்.
"சாத்தப்பனை அடிச்சிட்டாங்க.''
"யாரு?''
"போலீஸ்''
"எதற்கு?''
"வாழைக் குலையைத் திருடியதற்கு...''
கோபாலன் நாயர் அதிர்ச்சியடைந்துவிட்டார். அவர் தாடையில் கையை வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார். அப்போது குஞ்ஞம்மா தேம்பித் தேம்பி அழுதவாறு ஒவ்வொன்றையும் கூற ஆரம்பித்தாள்.
"அய்யா... ஒரு அறிவு கெட்ட விஷயம் நடந்திருச்சு. நீங்கள்தான் காப்பாற்றணும்... அவர் அப்படிப்பட்ட ஒரு ஆள் இல்லை.''
"இல்லை.. அரிச்சந்திரன்தான்'' - குறுப்பு இடையில் புகுந்து சொன்னார்: "காட்டுத் திருடன்.''
"அய்யோ... அப்படிச் சொல்லாதீங்க. உயிர் துடிச்சப்போ செய்தது அது'' -குஞ்ஞம்மா அழுதவாறு சொன்னாள்.
"உயிர் துடித்தால், திருடவா செய்வாங்க. ஏதாவது வேலை செய்யல்ல போவாங்க?'' -குறுப்பு கேட்டார்.
குஞ்ஞம்மா மேலும் அதிகமாக அழுதவாறு சொன்னாள்: "சரிதான்... வேலை கிடைக்கல... தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் திருமணம் செய்த பெண்ணுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க. அவருக்கும் வேலை கிடைக்கல. திய்ய ஜாதியைச் சேர்ந்தவளைக் கல்யாணம் பண்ணினவனுக்கு இங்கே வேலை இல்லைன்னு எல்லாரும் சொல்றாங்க. என்ன செய்யிறது?''
"அப்படின்னா ஏன் கல்யாணம் பண்ணனும்?''
"குறுப்பு அய்யா, அன்னைக்கு நீங்க சொல்லித்தானே நடந்தது.''
கோபாலன் நாயர் சிரித்துவிட்டார்: "அது உண்மைதான். குறுப்பு, இப்போ இதற்கு என்ன செய்றது? சாத்தப்பன் எங்கே?''
"ஸ்டேஷனில் இருக்கிறார். அங்கு கிடந்து அடிவாங்கி சாக வேண்டியதிருக்கு.''
"சாகணும்'' - கோபாலன் நாயரும் ஒப்புக்கொண்டார். ஆனால், குஞ்ஞம்மா?
குறுப்பு எதுவும் பேசவில்லை.
"எனக்கு அதுவல்ல... என்னுடைய...'' -குஞ்ஞம்மா நிறுத்தினாள்.
"உன்னுடைய... என்ன...? சொல்லு...'' -கோபாலன் நாயர் கேட்டார்.
"என் வயிற்றில் ஒரு உயிர் இருக்கிறதே என்பதை நினைத்துதான்...''
கோபாலன் நாயர் தனக்கு உண்டான ஒரு சிறிய அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தார். தன் மனைவியின் வயிற்றிலும் ஒரு சிறிய உயிர் இருப்பதைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்தார். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்... மூன்று நாட்கள் பட்டினி கிடப்பதாகச் சொன்னாள். இரண்டு உயிர்கள் பட்டினியில்!
"வாங்க... குறுப்பு'' -கோபாலன் நாயர் குடையை எடுத்துக் கையிடுக்கில் வைத்துக்கொண்டே குஞ்ஞம்மாவிடம் சொன்னார்.
"நீ இங்கே நின்று கொண்டு கவலைப்பட வேண்டாம். வழி உண்டாக்கலாம்.''
இரண்டு பேரும் சேர்ந்து இன்ஸ்பெக்டரிடம் சென்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள்.
"அவனை விட்டுடுங்க.''
"பாவம்!'' - கோபாலன் நாயர்.
"பாவம், புண்ணியம் எதற்கும் இங்கு இடமில்லை. திருடு திருடுதான்.''
கோபாலன் நாயர் குறுப்பின் முகத்தை கெஞ்சுகிற பாவனையில் பார்த்தார். குறுப்பு சிறிது நேரம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டவுடன், "ம்... சரி..''. என்று ஒரு முனகல் சத்தம் வந்தது. சாத்தப்பன் வெளியே வந்தான்.
"எனக்கு ஒரு அறிவுக்கேடு வந்துவிட்டது குறுப்பு அய்யா'' - சாத்தப்பன் கால்களைப் பிடிக்க முயன்றான்.
"போடா... இந்த வருடமும் நான் வாழை நடுவேன். அப்போது திருடுவதற்கு ஒருத்தன் வேண்டாமா?'' - கோபாலன் நாயர் வெறுப்புடன் சொன்னார். அங்கிருந்து கிளம்பும்போது கோவிந்தக் குறுப்பு சொன்னார்:
"கோபாலன் நாயர், அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் இந்த சாத்தப்பன் மாட்டிக்கொண்டான்.''
"உண்மைதான். ஆண் பெண்ணின் முகத்தைப் பார்க்கலாமா?''
கோபாலன் நாயர் மிகவும் களைத்துப் போய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். எனினும், குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிற்கு சாதனைகள் புரிந்திருப்பதைப் பற்றி அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை அவருக்கு ஆறுதலாக இருந்தது. உண்மையாகப் பார்க்கப்போனால், மனதில் இருந்த பலம் உடம்பிற்கு இருக்கிறதா என்றும் கோபாலன் நாயர் அப்போது சந்தேகப்படாமல் இல்லை.
மனைவி குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வாசலில் நின்றிருந்தாள். கருணை வெளிப்படும் ஒரு பார்வையுடன் மாதவியம்மா கேட்டாள்:
"என்ன விசேஷம்?''
"திருடனைப் பிடித்தாகிவிட்டது.''
"அடிச்சு உடல் உறுப்புகளைச் செயல்படாமல் செய்தாச்சா?''
"இல்லை.''
"அப்படியா?''
"ஆண் இரக்கப்பட வேண்டியவன். புரிஞ்சுக்கோ.''
"அது சரிதான்... அப்படியென்றால் ஆள் யார்?''
"சாத்தப்பன்''.
"குஞ்ஞம்மாவின் சாத்தப்பனா?''
"ஆமாம்...''
"டேய் திருட்டுப் பயலே... அடிச்சு உடல் உறுப்புகளைச் செயல்பட விடாமல் செய்திருக்கணும். தெரியுதா? குஞ்ஞம்மாவை ஏமாற்றினான். இப்போ நம்மளையும் ஏமாற்றியிருக்கிறான்.''
"குஞ்ஞம்மாவுக்கு என்ன ஆச்சு?''
"தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் திய்ய ஜாதியைச் சேர்ந்தவளைக் கல்யாணம் பண்றதுன்றது ஏமாற்றுகிற விஷயம்தானே?''
"குஞ்ஞம்மா எதைக் கண்டு ஏமாந்து போனாள்?''
"வாய்க்கு வந்த சர்க்கரை வார்த்தைகளையெல்லாம் சொல்றப்போ, என்ன இருந்தாலும் பெண் மனதுதானே...!''
"பனிநீர் மலர்... ஃபூ... அவள் அவனை ஏமாற்றினாள் என்று சொல்லு. சொல்லு... உன்னுடைய இந்த நாக்கால் ஒரு முறை சொல்லு...'' - கோபாலன் நாயரின் பிடிவாதத்தைப் பார்க்கும்போது, மாதவியம்மா அப்படி ஒரு முறை கூறிவிட்டால், உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்பதைப் போல தோன்றும். மாதவியம்மாவாச்சே, பேசுவாளா?
அவள் வேறு ஒரு கேள்வியைக் கேட்டாள்: "அப்படியென்றால் நம்முடைய நேந்திர வாழைக் காய்கள் போனது போனதுதான்... அப்படித்தானே?''
"அடித்தால்தானே, வாந்தி எடுப்பான். அடிக்கவில்லை.''
மாதவியம்மா சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தாள். அவள் என்ன சிந்தித்திருப்பாள்? யாருக்குத் தெரியும்?
"நீ என்ன சிந்திக்கிறாய்?'' -ஆதாம் ஏவாளிடம் கேட்ட அதே கேள்வியை, அதே பலத்துடன் கோபாலன் நாயர் கேட்டார்.
"ஒண்ணுமில்லை... இருந்தாலும், இரண்டு ரூபாய்களாவது தரவேண்டாமா?''
"யாருக்கு?''
"தேவங்கரை பகவதிக்கு...''
"எதற்கு?''
"நான் அந்த குலையை தேவங்கரை பகவதிக்கு நேர்ச்சையாகக் கொடுக்கிறதா வேண்டிக்கொண்டிருக்கிறேன்.''
கோபாலன் நாயர் கோபத்துடன் மாதவியம்மாவைப் பார்த்து சொன்னார்:
"பகவதி இனி சாத்தப்பனின் வயிற்றுக்குள் போய்க் கொள்ளட்டும். ஐம்பத்தாறு காய்களைத் தின்ற வயிறு அல்லவா? அமர்வதற்கும் படுப்பதற்கும் இடம் இருக்கும்.''
"அடடா! அப்படியெல்லாம் எதுவும் பேசாதீங்க. கோபம் கொண்ட கடவுள்! நாளைக்கு இரண்டு ரூபாய் தரணும்.''
"மாதவி, நீ பேசாம இரு'' என்று கூறியவாறு கோபாலன் நாயர் கைகளையும் கால்களையும் நீட்டிக் கொண்டு திண்ணையில் மல்லாக்க படுத்தார். மாதவியம்மா குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு சமையலறையை நோக்கிச் சென்றாள்.
கோபாலன் நாயருக்கு முழு உலகத்தின் மீதும் கோபம் வந்தது. குறிப்பாக பெண்கள் மீது. அந்த பகவதியும் பெண்தானே? தொட்டால் ஏமாற்றிவிடுவாள். பெண் தொட்டால் நேந்திரம் வாழைகூட உருப்படாமல் போய்விடும். ஒரு நரியைப் பெண் தொட்டால், உடனே அது காட்டுப் பூனையாக வாலை ஆட்டிக்கொண்டு நிற்பதைப் பார்க்கலாம். இப்படி மனதால் திட்டிக்கொண்டே கோபாலன் நாயர் படுத்திருந்தார்.
"களைப்பாக இருக்கும்ல... இதைக் குடிங்க'' என்று கூறியவாறு மாதவியம்மா ஒரு டம்ளர் காபியை நீட்டினாள். அவர் காபியைக் குடித்தார். ஒரு பீடியைப் பற்ற வைத்துப் புகைத்தார். அப்போது இடுப்பில் வைத்திருந்த குழந்தையை நீட்டிக் காட்டிக் கொண்டே மாதவியம்மா கேட்டாள்.
"இந்தப் பெண்ணுக்கு மேல் காய்ச்சல் இருக்குமோ? கொஞ்சம் தொட்டு பாருங்க.''
"ஆமாம்... கொஞ்சம் சூடு இருக்கு.''
"நமக்கு ஒரு கஷ்ட காலம்.''
"ஆமாம்.''
"மனதில் சந்தோஷம் இல்லை.''
"இல்லை.''
"போனதெல்லாம் போயிடுச்சுல்ல! அந்த வழிபாட்டையும் சேர்த்து நீங்க கொடுத்திடுங்க. இரண்டு ரூபாய்கள்தானே? அதனால குழந்தைகளுக்கு ஒரு கெடுதலும் வர வேண்டாம்.''
கோபாலன் நாயர் அமைதியாக இருந்தார்.
"இந்த பெண்ணின் காய்ச்சலைப் பார்க்குறப்போ...'' - மாதவியம்மா ஏதோ சொல்ல வந்தாள்.
கோபாலன் நாயர் இடுப்பில் சொருகி வைத்திருந்த பொட்டலத்தை அவிழ்த்து ஆறு கால் ரூபாய்கள், மூன்று இரண்டனா நாணயங்கள், இரண்டு ஒரு அணா நாணயங்கள் ஆகியவற்றை எடுத்து திண்ணை மீது வைத்துவிட்டு சொன்னார்: "மாதவி, எடுத்துக்கோ.''
பேன் கடி
குடும்பம் இரண்டாகப் பிரிந்தது. இரண்டு பிரிவாகப் பிரிந்ததால் போரும் ஆரம்பமானது. திறந்த போரல்ல. மறைமுகப் போர். ஒரு பக்கத்தில் குஞ்ஞம்மா. இன்னொரு பக்கம் சாத்தப்பன். அந்தப் புதுமணத் தம்பதிகள் அவ்வளவு சீக்கிரமாக இரண்டு பகுதிகளாகப் பிரிந்ததைப் பற்றி உலகம் பதைபதைப்பு அடையவில்லை. அதற்குக் காரணம்- உலகத்திற்கு அது தெரியாது. மறைமுகமான போர் நடவடிக்கைகள் பல நேரங்களில் பொதுமக்களுக்குத் தெரியவே தெரியாதே! இந்தப் போருக்குக் காரணம் என்னவாக இருக்கும்?
திருமணம் முடிந்ததும் சாத்தப்பனும் குஞ்ஞம்மாவும் ஈயும் சர்க்கரையும் போல இருந்தார்கள். குஞ்ஞம்மாவைப் பிரிந்து இருக்கும்போது சாத்தப்பனுக்கு எதையோ இழந்ததைப் போல இருந்தது. அவன் அவளுடைய கண்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான். அவற்றில் ஏதோ சிலவற்றை அவன் பார்த்தான். ஆனால், ஒரு உணர்வும் வெளிப்படையாகத் தெரியவில்லை. எல்லாம் வரும் வேகத்திலேயே மறைந்து போய்க் கொண்டிருந்தது. சாத்தப்பன் நினைத்தான் -"பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?" என்று. யாருக்குத் தெரியும்? எனினும், அந்த தெரிந்து கொள்ள முடியாத ரகசியங்கள் அவனை மேலும் பைத்தியம் பிடிக்கச் செய்தன.
"என்ன, எதுவும் பேசாம இருக்கீங்க?'' -குஞ்ஞம்மா கேட்டாள்.
"என்னால் பேச முடியவில்லை, என் குஞ்ஞம்மா சோத்தியாரே.''
"என்ன சொன்னீங்க?''
"சிரிப்பு வந்தால் பேசக்கூடாது, குஞ்ஞம்மா சோத்தியார்.''
"ஏன் அப்படி அழைக்கிறீங்க?''
"என்ன இருந்தாலும், நீங்க உயர்ந்த ஜாதியாச்சே! என்னால தம்புராட்டி என்று அழைக்க முடியல.''
"தம்புராட்டி என்று அழைக்க வேண்டும்னு நான் சொன்னேனா?''
"பிறகு?''
"பெயரைச் சொல்லி அழைத்தால் போதாதா?''
"அந்தக் கதையை மட்டும் சொல்லாதே.''
"நான் அதைக் கேட்க விரும்பல.''
"அப்படிச் சொல்லக்கூடாது.''
"விருப்பம் இல்லாததால்தான், நீங்க அப்படி அழைக்கிறீங்க.''
"என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதால், உயர்ந்த ஜாதி உயர்ந்த ஜாதியா இல்லாமப் போயிடுமா குஞ்ஞம்மா சோத்தியார்?''
அதற்கு என்ன பதில் கூறுவது என்று குஞ்ஞம்மாவிற்குத் தெரியவில்லை. முக்கியமான விஷயமாச்சே! மனிதர்கள் ஜாதியை மனதில் வைத்துக்கொண்டு மரியாதை கொடுத்து அழைப்பது, திட்டுவதற்கா? அந்த வகையில் தோற்றுப்போன குஞ்ஞம்மா அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. போரில் வெற்றி பெற்றவர்களின் கட்டளைகளை தோற்றவர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா? அவள் குஞ்ஞம்மா சோத்தியாராக இருக்க ஒப்புக்கொண்டாள்.
அப்போதும் சாத்தப்பனுக்கு ஒரு சந்தேகம். தனக்குக் கீழ்ப்படிந்து நடக்க அவளுக்குத் தயக்கமாக இருக்குமோ? ஒரு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு எப்படிப் பார்த்தாலும் ஒரு சோத்திக்கு தயக்கமாகத்தான் இருக்கும்.
ஆனால் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு அறிகுறியும் இல்லை. எனினும், வெறுமனே ஒரு சந்தேகம். குஞ்ஞம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் சாத்தப்பன் கூர்ந்து கவனித்தான். அவள் தன்னை மீறி நடக்கிறாளோ? ச்சே... அப்படி எதுவும் இல்லை.
"எனக்கு வெறுமனே தோணுது" - இறுதியில் சாத்தப்பன் சமாதானப்படுத்திக் கொண்டான். "கல்யாணம் ஆகிவிட்டால், எல்லா உயர்ந்த ஜாதிப் பெண்களும் இப்படி ஆகிவிடுவார்கள்."
குஞ்ஞம்மா வந்து சேர்ந்தவுடன், குடிசையில் பல மாறுதல்களும் உண்டாயின. அவள் வந்து நுழைந்தபோது, என்ன நிலைமை இருந்தது? ஒரு மூலையில் சாம்பலில் இருந்து மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு அடுப்பு. அந்த அடுப்பின் முன்பகுதியில் ஆங்காங்கே விரிசல் விழுந்திருந்தது. இங்குமங்குமாக விறகுக் கட்டைகள் சிதறிக் கிடந்தன. உடைந்ததும் உடையாதவையுமான பதினொரு சட்டிகள் வாசலில் இருந்து சமையலறை வரை இடம் பிடித்திருந்தன. விரிசல் விழுந்திருந்த தரை. ஓரம் பிய்ந்து போயிருந்த ஓலைப்பாய். ஒரு கிழிந்த போர்வை. மீன் பற்களும் செதில்களும் கிடந்து நாறிக் கொண்டிருந்த வாசல். மொத்தத்தில் அந்த இடம் மிகவும் மோசமாக இருந்தது.
குஞ்ஞம்மா எல்லாவற்றையும் பார்த்தாள். "இதுதான் நிலைமையா?" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே உள்ளே வந்தாள். அத்துடன் அந்த வீட்டிற்கு வசந்தம் பிறந்தது.
ஒரே நாளில் அவை அனைத்தும் நடந்தன. சாத்தப்பன் வெளியே போய்விட்டுத் திரும்பி வந்தபோது சாயங்காலம் ஆகிவிட்டது. அப்போது தரை முழுவதும் கறுத்து மினுமினுத்துக் கொண்டிருந்தது. அடுப்புகள் சரி செய்யப்பட்டிருந்தன. சாம்பலின் ஒரு சிறு துகள்கூட வீட்டிற்குள் இல்லை. விறகுக் கட்டைகள் அடுப்பிற்கு மேலே கட்டி உண்டாக்கப்பட்டிருந்த ஒரு பரணின்மீது இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. சிறிது நேரம் சென்றவுடன் ஒரு மரக்கொம்பின்மீது பொருத்தப்பட்டிருந்த ஒரு மண் பாத்திரம் பற்ற வைக்கப்பட்டது. சாத்தப்பன் எல்லாவற்றையும் பார்த்தான். "குஞ்ஞம்மா சோத்தியார், ஒரு பளிங்கைப்போல இருக்கு! பளிங்கு!'' என்றான் அவன்.
"என்ன புரியுதா?'' குஞ்ஞம்மா கேட்டாள்.
"எனக்கு கொஞ்சம் புரியுது'' - சாத்தப்பன் பதில் சொன்னான். தொடர்ந்து ஒருமுறை வாய்விட்டுச் சிரிக்கவும் செய்தான்.
அந்த வகையில் கனவுகளும் யதார்த்தங்களும் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு பறந்து விளையாடின. இதற்கிடையில் பட்டினியும் தாகமும் திருட்டு வழக்கும் லாக்கப் வாசமும் உண்டாயின. எனினும், அவையெல்லாம் அவர்களை மேலும் நெருக்கம் கொள்ளவே செய்தன. கோவிந்தக் குறுப்பு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். நீண்டகாலம் அந்த தாம்பத்திய வாழ்க்கை பொருந்திப் போகாது என்று குறுப்பு நம்பினார். குஞ்ஞம்மா மென்மையான மனதைக் கொண்ட ஒரு மனிதப் பிறவியாக இருந்தாள். அவளால் சிந்திக்க முடியும். சாத்தப்பனோ? ஒரு முரட்டுத்தனமான திருடன்! குஞ்ஞம்மா அந்த வழியாக நடந்து செல்லும்போது கோவிந்தக் குறுப்பு மனதிற்குள் நினைத்தார்:
"இவளுடைய தலைவிதி!''
ஆனால் குஞ்ஞம்மா அப்படி நினைக்கிறாளா? தெரியாது. தொடர்ந்து நடந்த சம்பவங்களைப் பற்றி குஞ்ஞம்மாவின் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கோவிந்தக் குறுப்பிற்கு ஒரு ஆசை - வெறுமனே ஒரு ஆசை. எனினும், ஒரு பெண்ணிடம் அவளுடைய கணவனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதைக் கேட்கலாமா? என்ன சொல்கிறாள் என்பதை சிரமப்பட்டுக் கேட்கலாம். அதனால் பிரயோஜனமில்லை.
"எனக்கு சந்தேகம் இல்லை'' - கோவிந்தக் குறுப்பு கோபாலன் நாயரின் தோளில் தட்டிக் கொண்டு சொன்னார்.
"என்ன?''
"இந்த தாம்பத்திய வாழ்க்கை நீடித்து நிற்காது!''
"ஏன்?''
"கலாச்சார வித்தியாசம்... இரண்டு கலாச்சாரங்களாச்சே!''
"இரண்டு மனிதப் பிறவிகள்தானே காதலிக்கிறார்கள், குறுப்பு?''
"அவளால் இவனை ஏற்றுக்கொள்ள முடியுமா?''
"என்ன இருந்தாலும் பெண் அல்லவா? தலைமுடி, கணவன், குழந்தைகள் - இவை எதுவும் தேவையில்லை என்று ஒரு பெண்ணும் நினைக்க மாட்டாள். குறுப்பு. அதனால் அவர்கள் பேன்கடியையும், காதலையும், பிரசவ வலியையும் தாங்கிக் கொள்வார்கள்'' - கோபாலன் நாயர் முழுமையான உறுதியுடன் சொல்லிப் புரிய வைத்தபோது, கோவிந்தக் குறுப்பு கண்ணாடி வழியாகப் பார்த்தார். தொடர்ந்து முணுமுணுத்தார்: "ம்... பார்ப்போம்!''
"பார்ப்போம்...''
அவர்கள் ஒவ்வொரு வழியில் பிரிந்து சென்றதும் கோவிந்தக் குறுப்பு மனதிற்குள் சிந்தித்தார் : "இறுதியில் கோபாலன் நாயர் சொன்னதுதான் சரியானது என்று வருமோ? குஞ்ஞம்மாவும் சாத்தப்பனும் ஒருவரை ஒருவர் எந்தச் சமயத்திலும் பிரிய மாட்டார்கள் என்ற நிலை வருமா? அப்படியென்றால்... அப்படியென்றால் என்ன? "எனக்கு ஒரு சுக்கும் இல்லை'' என்று உரத்த குரலில் கூறியவாறு குறுப்பு நடந்தார்.
ஆபத்துகள் மனிதர்களைத் தேடிப் பிடிக்கும் சில சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கடன்காரனுக்கு பயந்து ஒற்றைவழிப் பாதையில் திரும்பியபோது வாரண்டுடன் வரும் சிப்பாயைச் சந்திக்க நேர்ந்தால் நிலைமை எப்படி இருக்கும்? கோவிந்தக் குறுப்பிற்கும் அது நேர்ந்தது! அவருக்கு அப்போது குஞ்ஞம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கவில்லை. எனினும், பார்த்தார். கோபாலன் நாயரை அனுப்பிவிட்டு சிறிது தூரம்கூட நடந்திருக்க மாட்டார் - அவருக்கு முன்னால் குஞ்ஞம்மா நின்றிருந்தாள். உள்ளேயும் குஞ்ஞம்மா நிறைந்து நின்றிருந்தாள். வெளியிலும் குஞ்ஞம்மா! தலையில் இரண்டு புதிய பாத்திரங்களையும், அதற்கு மேலே ஒரு சிறிய துடைப்பத்தையும், கையில் ஒரு மண்ணெண்ணெய் புட்டியையும் அவள் வைத்திருந்தாள். அவளுடைய அந்த தோற்றத்தைப் பார்த்ததும் குறுப்பிற்கும் கடுமையான கோபம் வந்தது. பாழாய்ப் போனவள்! சாத்தப்பனின் குடிசையை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வெளியே மெல்லிய புன்சிரிப்பைத் தவழவிட்டார்.
"என்ன குஞ்ஞம்மா, இப்போது மண் சட்டி வியாபாரம் நடக்குதா?''
"இல்லை குறுப்பு அய்யா... ஒரு தொழிலும் இல்லை. எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை!''
"யாருக்கு? சாத்தப்பனுக்கா?'' - குறுப்பு பற்களைக் கடிக்காமலே கேட்டார்.
"ஆமாம்.''
"அவன் திருடப் போகலாமே!''
"ஒருமுறை ஒரு புத்திக்கேடு வந்திடுச்சு, குறுப்பு அய்யா. அந்த மாதிரி வராதவங்க யார் இருக்காங்க?''
"இதெல்லாம் நடந்து முடிஞ்சதும், நீ அவனை ஏற்றுக் கொள்கிறாயே?''
"என்ன அப்படிச் சொல்றீங்க குறுப்பு அய்யா? கை விலங்கும் சங்கிலியும் ஆண்களுக்காக இருப்பதுதானே? அவர் ஒரு ஆண்தானே?''
"ஓ... ஆண்!'' - என்று கூறிவிட்டு குறுப்பு வேகமாக நடந்து போனபோது, குஞ்ஞம்மா திகைத்துப் போய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"குறுப்பு அய்யா, உங்களுக்கு என்ன கேடு?''
குஞ்ஞம்மா திரும்பவும் நடந்தாள். பொழுது இருட்டுவதற்குள் வீட்டை அடைய வேண்டும்.
ஆண் ஒருவன் வந்து நுழையக்கூடிய வீட்டில் சாயங்கால நேரத்தில் விளக்கு வைக்காமல் இருக்கலாமா?
குடிசையை அடைந்தபோது, மாலை நேரம் மயங்கிவிட்டிருந்தது. அவள் பாத்திரங்களையும் துடைப்பத்தையும் தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, ஓலையால் ஆன கதவைத் திறந்தாள். அப்போது உள்ளேயிருந்து ஒரு ஓசை! குஞ்ஞம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள்.
"யார் அது?'' - அவள் பதறுகிற குரலில் கேட்டாள். பதில் இல்லை. அவளுடைய இதயத்திற்குள் இடிச்சத்தமும் மின்னல்களும் கடந்து சென்றன. பலவித எண்ணங்கள். மனிதனா? சைத்தானா? இந்த அளவிற்கு இருட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் சைத்தான்கள் வெளியேறி வருமா? அப்படியில்லையென்றால் மனிதர்களா? அதுதான் அவளை அதிகமாக பயமுறுத்தியது. இரும்பு மனிதன் சோயுண்ணியின் உருவம் குஞ்ஞம்மாவின் இதயத்திற்குள் ஒருமுறை வேகமாகக் கடந்து சென்றது.
"யார் அது என்று கேட்டேன்ல?'' - மீண்டும் கேட்டாள். ஒரு நிமிடம் காத்திருந்தாள். பதில் இல்லை. குஞ்ஞம்மாவிற்கு பயம் அதிகமானது. அத்துடன் அவளுடைய நாக்கு அசைய ஆரம்பித்தது.
"சாயங்கால நேரத்தில் குடிசையில் யாரும் இல்லாத வேளையில், குடிசைக்குள் வந்து ஒளிஞ்சு இருக்குறது எந்த நாணம் இல்லாதவன் என்று கேட்கிறேன்...!''
ஒரு நிமிடம் எதிர்பார்த்தாள். அசைவு இல்லை.
"நாக்கு செத்துப் போச்சா? எந்த அறிவு கெட்டவனாக இருந்தாலும் சரி... இந்த கட்டிலைப் பார்த்து ஆசைப்பட வேண்டாம். என் கையில் துடைப்பம் இருக்கு. ம்... நல்லா சிந்திச்சுப் பார்க்கணும்.''
அவள் துடைப்பத்தை எடுத்து ஆயுதமாகத் தூக்கிப் பிடித்தாள். பள்ளத்தில் மறைந்திருக்கும் ஒரு போர்வீரனின் எச்சரிக்கையுடன் நின்றாள். அப்போது வீட்டின் உள்ளேயிருந்து ஓசை மேலும் ஒருமுறை கேட்டது. குஞ்ஞம்மா துடைப்பத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றவாறு மீண்டும் சொன்னாள்:
"அங்கே மறைந்து இருக்க வேண்டாம்... வேண்டாம்... இன்னைக்கு மானம் போறதுக்கான வழி... கோபம் வந்தால் நான் ரெண்டும் கெட்டவள். நான் கேட்க வேண்டிய பெயரையெல்லாம் கேட்டவள். ஞாபகத்தில் இருக்கட்டும்!''
குஞ்ஞம்மா காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு பார்த்தாள். ஏதாவது பதில் வருகிறதா? அவளுடைய மூளை மிகவும் வேகமான செயல்பட்டது. என்ன வழி? மூச்சுகூட விடாமல் துடைப்பத்தைப் பிடித்திருந்தாள். குடிசைக்குள் நுழைந்தவுடன் பிடித்துவிடலாம் என்று அவள் நினைத்தாள். அதுவரை உள்ளேயே இருக்கட்டும். ஆனால், உள்ளே சென்ற பிறகுதான் விளக்கைப் பற்ற வைக்க வேண்டும். அப்போது அவள் மீண்டும் கூறிப் பார்த்தாள்.
"இங்கே இருக்கும் ஆம்பளை வெளியில்தான் நின்று கொண்டிருக்கிறார். நான் ஒருமுறை கத்தினால், பிறகு இங்கே குத்தும் கொலையும்தான் நடக்கும். தேவையில்லாமல் ரத்தத்தைச் சிந்த வைக்க வேண்டாம் என்று நினைத்து சொல்றேன். ம்... வெளியே வா...''
குடிசைக்குள்ளிருந்து ஒரு பெரபெர சத்தம் கேட்டது. தன்னுடைய திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை குஞ்ஞம்மா புரிந்து கொண்டாள். அவள் தொடர்ந்து சொன்னாள்: "அந்த ஓலைகளை அகற்ற வேண்டாம். நேர் வழியிலேயே போகலாம். இப்போ ஒண்ணும் செய்ய மாட்டேன். இனி யாராவது குடிசைக்குள் நுழைந்து நாணம் கெட்டு ஒளிஞ்சிருந்தால்... அவ்வளவுதான்...''
பிறகு எந்தவொரு அசைவும் உண்டாகவில்லை. குஞ்ஞம்மா பலவற்றையும் சொல்லி பார்த்தாள். கெட்ட வார்த்தைகளைக்கூட கூறிப் பார்த்தாள். பிரயோஜனமில்லை. அவளுடைய திட்டுதல் அதிகமாகி உச்சநிலையை அடைந்தபோது, பக்கத்து வீட்டில் இருக்கும் உண்ணுலிக் கிழவி நடுங்கும் கையில் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு வந்து கேட்டாள்:
"என்னடி குஞ்ஞம்மா, நீ யாரை இப்படித் திட்டிக்கொண்டு இருக்கே?''
"பாருங்க... குடிசைக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறதை...''
"என்ன?'' - கிழவி விளக்குடன் உள்ளே நுழைந்தாள். கிழவிகளுக்கு சைத்தானைப் பார்த்து பயம் இல்லையே! நெற்றியில் கையை வைத்துக் கொண்டு, விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொண்டு கிழவி சுற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னாள்: "அடியே இங்கு மனித வாடையே இல்லை!''
குஞ்ஞம்மாவும் உள்ளே நுழைந்து அலசிப் பார்த்தாள். குடிசை வெறுமனே கிடந்தது. சட்டிகள் அடுக்கி வைக்கப்பட்ட மாதிரியே இருந்தன. பரணுக்குக் கேடு எதுவும் இல்லை. நீர் இருந்த பாத்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே இருந்தது. சுருட்டி வைக்கப்பட்ட பாய் மூலையிலேயே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. குஞ்ஞம்மா அந்த பாய் சுருளைச் சற்று தட்டிவிட்டுப் பார்த்தாள். அதற்கு உள்ளே மனிதன் இல்லை! "என்ன கதை?'' என்ற அர்த்தத்தில் உண்ணுலிக் கிழவியும் குஞ்ஞம்மாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அப்படி நிற்கும்போது மீண்டும் பெர பெர என்ற சத்தம்! அதிர்ந்து போனார்கள். இடப் பக்கத்தில் இருந்த ஓலையால் ஆன சுவர் அசைந்தது. விளக்கைத் தூக்கி வைத்துக் கொண்டு பார்த்தார்கள். வெளுத்து தடித்த அழகான ஒரு பூனை அங்கே நின்று கொண்டிருந்தது.
"அது ஒரு பூனை. தெரியுதா?'' - கிழவி சொன்னதும், குஞ்ஞம்மாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது. "நீ ஒரு முட்டாள்'' என்று கூறியவாறு கிழவி வெளியே போக ஆரம்பித்தாள்.
"நான் இந்த விளக்கைக் கொஞ்சம் பற்ற வைத்துக் கொள்ளட்டுமா?'' - குஞ்ஞம்மா மண்ணெண்ணெய் விளக்கை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே தொடர்ந்து சொன்னாள்: "உண்ணுலி அம்மா, இங்கே நான் சொன்னதையெல்லாம் கேட்டீங்களா?''
"யாரோ புலம்புகிறார்கள் என்று நினைத்தேன்.''
"நான் அந்த அளவிற்கு எதுவும் சொல்லல... அப்படித்தானே?''
"இல்ல.''
கிழவி வெளியேறினாள். குஞ்ஞம்மா விளக்கை எடுத்து அந்தப் பூனையைப் பார்த்தாள். நல்ல அழகான பூனை. ஆனால், அதை அங்கு குடியேற விட்டால் பிரச்சினையாகிவிடும். சட்டி பானை எதையும் விட்டு வைக்காது. அதனால் அவள் அதை வெளியே போடுவதற்காக தூக்கினாள். எனினும், வயிற்றில் கையை வைத்தபோது ஏதோ கனமாக தெரிந்தது. கீழே வைத்துவிட்டு, சோதித்துப் பார்த்தாள். அது கர்ப்பமாக இருந்தது. ஒரு நிமிடம் குஞ்ஞம்மா அந்த பூனையையே பார்த்துக் கொண்டு நின்றாள். ஒரு உயிருக்குள் பிறக்கும் உயிர்கள். தன்னுடைய வயிற்றை ஒருமுறை கடைக்கண்களால் பார்த்துப் பெருமூச்சு விட்டவாறு, மூடி வைத்திருந்த பானையைத் திறந்து, கஞ்சியில் இருந்து சோற்றை அதன் முன்னால் எடுத்து வைத்துவிட்டு சொன்னாள்: "சாப்பிடு மகளே... பாவம்!''
பூனை ஆர்வத்துடன் அதைச் சாப்பிட்டது. அவள் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சாப்பிடும்போது, அதன் வயிற்றிலிருந்து சில அசைவுகள் கேட்டன.
அப்படி நின்று கொண்டிருக்கும்போது வாசலில் உரலை எடுத்து தரையில் குத்துவதைப் போல சத்தங்கள் கேட்டன. குஞ்ஞம்மாவின் முகம் மலர்ந்தது. சாத்தப்பன் வந்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு தெரியும்.
வெளியில் இருந்த இருட்டு பெற்றதைப்போல அவன் குடிசைக்குள் வந்தான்.
"ஏதாவது குடிச்சியா?'' - சாத்தப்பன் கேட்டான்.
"இல்லை. குடிக்கலாம்!''
"எனக்கு வேண்டாம். நீ குடி!''
"நான் விரதம் இருக்கேன்.''
"அப்படின்னா யாருக்கும் வேண்டாம்!''
இரண்டடி முன்னோக்கி வந்தபோதுதான், சாத்தப்பன் பூனையைப் பார்த்தான்.
"அய்யோ! கடவுளே! இந்தப் பூனை எங்கிருந்து வந்தது? வெளியே விரட்டி விடு!''
சாத்தப்பன் மரக் கொம்பையும் வேல் கம்பையும் எடுப்பதற்காக நடந்தான். அப்போது குஞ்ஞம்மா வந்து தடுத்தாள்.
"வேண்டாம்... என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?''
"எனக்கு பைத்தியம் பிடிக்கலை. இந்தப் பூனையைப் பார்க்க நான் விரும்பல!''
அவன் சொன்னது உண்மைதான். சாத்தப்பனுக்கு இந்த உலகத்திலேயே நிரந்தரமாக ஏதாவது வெறுப்பு எதன் மீதாவது இருக்கிறதா என்றால் அது பூனை மீதுதான். சிறுவயதாக அவன் இருக்கும்போதே அந்தப்பகை ஆரம்பமாகிவிட்டது. அதற்குக் காரணம் இருக்கிறது. சாத்தப்பனுக்கு நான்கோ ஐந்தோ வயது நடக்கும்போது, வீட்டில் நான்கு பூனைகள் இருந்தன. அவற்றில் ஒன்று- ஒரு காட்டுப் பூனை- அவனை பலமாகப் பிராண்டி காயம் உண்டாக்கிவிட்டது. அப்போது ஆரம்பித்தது இந்தப் பூனை எதிர்ப்பு. அதற்குப் பிறகு, தன்னுடைய எதிர்பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் பூனைகளுடன் பல நேரங்களில் அவன் போர் செய்திருக்கிறான். ஒன்பது பூனைகளை அவன் கொன்றிருக்கிறான். உலக்கையால் அடித்து, கட்டித் தொங்க விட்டிருக்கிறான். ஒரு பூனையை மட்டும் ஈட்டியால் குத்தி கொன்றிருக்கிறான். அந்த விஷயத்தில் சாத்தப்பன் முழுமையான பிடிவாதக்காரனாக இருந்தான். வாழ்க்கையை நடத்துவதே பூனையைக் கொல்வதற்குத்தான் என்பதைப்போல அவனுக்குத் தோன்றும். பூனை மனித இனத்தின் நிரந்தர எதிரி என்பான் அவன்.
அப்படிப்பட்ட சாத்தப்பனின் குடிசைக்குள் அதோ ஒரு பூனை நின்று சோறு சாப்பிடுகிறது! கடந்தகால வெறுப்பு முழுவதும் அவனுக்குள்ளிருந்து வெளிப்பட்டது.
"அந்த உலக்கையை எடு. அவனை சரி பண்ணிட்டு...''
"அய்யோ! அவன் அல்ல; அவள்...''
"அவள் பெற்றெடுப்பாள். அதற்குப் பிறகு அவன் உண்டாவான்!''
சாத்தப்பன் கண்களை உருட்டியவாறு, எல்லா விஷயங்களும் தெரிந்தவனைப்போல சொன்னான்.
"அய்யோ... கொன்னுடாதீங்க... பாவம் உண்டாகும்!''
"எனக்கு பாவம் உண்டாகாது. நல்லது நடக்கும். கொல்வேன்!''
அதைக் கூறிவிட்டு சாத்தப்பன் அடுப்பு ஊதும் குழாயைத் தேடி எடுத்தான். குஞ்ஞம்மா அதை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
"என்னை விடு, குஞ்ஞம்மா சோத்தியார்!''
"வேண்டாம்.''
"நான் கொல்வேன்.''
"செய்யக்கூடாது!''
"செய்வேன்.''
"எனக்காகவாவது...''
"அந்த கதையைச் சொல்லக்கூடாது!''
"இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு! முட்டாள்தனமா நடக்குறீங்களே! இது மனித வடிவத்தில் பிறந்தவர்கள் செய்யக்கூடிய ஒரு காரியமா? பூனையைத் தொடக்கூடாது. நான் சொல்றேன்...''- குஞ்ஞம்மா கொஞ்சம் கோபத்துடன் சொன்னாள். சாத்தப்பன் அடுப்பு ஊதும் குழாயைக் கையில் பிடித்துக் கொண்டு வெறித்துப் பார்த்தான். பூனையோ, இந்த போர்க்களத்திலிருந்து விலகி ஓடியது.
"உனக்கு அறிவு இல்லையா?'' - வெறி பிடித்த சாத்தப்பன் கேட்டான்.
"சொல்லித் தந்தா தெரிஞ்சிக்கிறேன்!''
"இங்க பாரு... பிறகு...''
"என்ன?''
"என் கைகள் அரிக்கின்றன!''
"ஓ... எனக்கு பயமொண்ணும் இல்லை.''
"என்ன? பயமில்லைன்றியா?''
மனைவிக்கு கணவனிடம் பயமில்லை என்று கூறுகிறாள்! சாத்தப்பனால் அந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. பெண்ணைத் திருமணம் செய்வதே பயப்படுவதற்கு ஒரு ஆள் இருக்கிறது என்பதற்காகத்தான் என்று அவன் புரிந்து வைத்திருக்கிறான். அவனுடைய குடிசையில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அதற்கு முன்பு நடந்ததில்லை. சக்கி கோர்ம்மனைப் பார்த்து பயந்திருக்கிறாள். வெளுக்கனைப் பார்த்து நீலி பயந்திருக்கிறாள். எனினும், மென்மையான ஒரு பெண் முகத்தை நோக்கி சிறிதுகூட பயமில்லை என்று கூறுவதைக் கேட்டீர்களா? அந்த வார்த்தைகளைக் கூறியதற்கு அடிப்படை என்ன? அவள் சோத்தியார்... எதை வேண்டுமானாலும் கூறலாம். அந்த ஆணவ எண்ணத்தை சாத்தப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் உரத்த குரலில் கத்தியவாறு கேட்டான்.
"பயப்படுவியா?''
"எதற்கு?''
"பயப்படுவியான்னு கேட்கிறேன்.''
"எதற்கு?''
"கல்யாணம் பண்ணினவனுக்கு பயப்படுவியான்னு கேட்கிறேன்.''
"கல்யாணம் பண்ணினவனுக்கு பயப்படணுமா?''
"கடவுள் மேல் சத்தியமா, பூனையை நான் கொல்வேன்.''
"கொல்லக்கூடாது.''
"கொல்வேன்.''
"கொல்லக் கூடாதுன்னு சொல்றேன்.''"உயர்ந்த ஜாதின்றதை வச்சுக்கிட்டு பூனையைக் கொல்லக் கூடாதுன்னு சொல்லக்கூடாது.''
"நான் அதை வளர்ப்பேன்.''
பெண் சண்டை போடுகிறாள். தன்னைத் திருமணம் செய்தவனிடம் கொஞ்சம் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணமில்லை! தன்னை காயப்படுத்திய பூனையை அவள் வளர்க்கப் போகிறாளாம். சிறிதளவு அறிவு இருந்தால்கூட அப்படிக் கூறுவாளா? உயர்ந்த ஜாதி என்பதால் அவளுக்கு சிறிதும் பயமில்லை. ஒன்பது பூனைகளைக் கொன்றபோது, யாரும் வந்து கையைப் பிடிக்கவில்லை. ஆனால், இப்போது ஒரு பெண் வந்து தடுக்கிறாள்.
"நான் இங்கேயிருந்து போயிடுவேன்'' - சாத்தப்பன் சொன்னான்.
"போங்க.''
"போவேன்.''
"தாராளமா...''
"தெய்வங்கள்மீது சத்தியம் பண்ணிச் சொல்றேன், நான் போயிடுவேன்.''
"போக மாட்டீங்க.''
"அப்படின்னா... பாரு. என்மேல விருப்பம் இல்லாதவளுடைய வீட்டில் நான் இருக்க மாட்டேன்'' - சாத்தப்பன் அதைக் கூறிவிட்டு, வெளியேறினான்.
"நில்லுங்க...'' - குஞ்ஞம்மா உரத்த குரலில் சொன்னாள்.
"வேண்டாம்... பூனையை வளர்த்துக்கோ.''
"நில்லுங்க... நில்லுங்க... சொல்றதைக் கேளுங்க'' - குஞ்ஞம்மா நீட்டி நீட்டிச் சொன்னாள். ஆனால், சாத்தப்பன் திரும்பி வரவில்லை. உரலில் குத்தும்போது தரையை இடிக்கிற மாதிரியான சத்தம் அகன்று அகன்று போவதை அவள் கேட்டாள். குஞ்ஞம்மா உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதாள். நடுங்கிக் கொண்டே எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் ஜூவாலை அங்கு வெளிச்சத்தின் அலைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.
சாத்தப்பன் அந்த இருட்டைக் கிழித்துக் கொண்டு கத்தினான். அவன் இடப் பக்கமோ வலப் பக்கமோ பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான். ஒரு சூறாவளியைப்போல மிகவும் வேகமாக அவனுடைய நடை இருந்தது. இந்த உலகத்தில் நீதியும் நேர்மையும் இல்லை என்று அவன் நினைத்தான். எல்லாரும் சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பூனையைக் கொல்வதற்குக்கூட யாரும் அனுமதிக்க மறுக்கிறார்கள். வழி முழுவதும் அவன் முணு முணுத்துக் கொண்டே இருந்தான். "எல்லாரும் சொன்னார்கள் - ஜாதிக்காரனும் ஜாதியில்லாதவனும் சேரக்கூடாது, சேரக்கூடாதுன்னு. இருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டேன். கணவனின் பலம் கிடைத்துவிட்டது. அவள் உயர்ந்த ஜாதின்னா, அவளுடைய வீட்டில் வச்சிக்கணும்.''
சாத்தப்பன் கோவிந்தக் குறுப்பின் வீட்டிற்குச் சென்றான். குறுப்பு இரவு உணவு சாப்பிட்டு முடித்து கையைக் கழுவிக் கொண்டிருந்தபோது, வாசல் படியின் அருகில் ஒரு அசைவுச் சத்தம் கேட்டது.
"யார் அது?''
"அடியேன்தான்.''
"சாத்தப்பனா? என்னடா? திருடுவதற்கு நேரம் பார்க்குறியா?''
சாத்தப்பன் குலுங்கிக் குலுங்கி அழுதான். அது குறுப்பைச் சற்று பதைபதைக்கச் செய்யாமல் இல்லை. அவர் வாசலுக்கு வந்தார். சாத்தப்பன் ஒரு குழந்தையைப் போல நகத்தைக் கடித்து கொண்டு நின்றவாறு அழுது கொண்டிருந்தான். அவனுக்கும் அழுகைக்குமிடையே ஏதாவது தொடர்பு இருக்கும் என்று அதுவரை கோவிந்தக் குறுப்பு நினைக்கவில்லை.
"என்னடா சாத்தப்பா? வீட்டில் ஏதாவது...''
சாத்தப்பன் தேம்பித் தேம்பி அழுது கொண்டே கதையை விளக்கிக் கூறினான். இறுதியில் இப்படி முடித்தான்: "அவள் உயர்ந்த ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு ஆண் அல்லவா? கணவன் அல்லவா?''
அவன் கூறியது நியாயமானதுதான். எனினும் குறுப்பு சொன்னார்: "டேய் சாத்தப்பா... அவள் உனக்கு பொருத்தமாக இருக்க மாட்டாள் என்று அன்னைக்கே நான் சொன்னேன்ல? இப்போ கோவேறு கழுதையைப் போல நின்று கொண்டு அழுது என்ன பிரயோஜனம்? சரி... அது இருக்கட்டும். இனி வழக்கு, கூட்டம் எதுவும் உண்டாக்க வேண்டாம். அவளுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி சரி பண்ணப் பாரு.''
"அந்தக் கதையைச் சொல்லாதீங்க, குறுப்பு அய்யா. எனக்கு அவள் வேண்டாம்.''
அதைச் சொன்னதும், குறுப்பிற்கு ஒரு சிரிப்பு. ஒரு சந்தோஷம்.
"பரவாயில்லைடா சாத்தப்பா.''
"எனக்கு அந்தப் பெண் வேண்டாம்னு சொல்றேன். அவள் அறிவு இல்லாதவள்.''
குறுப்பிற்கு அந்த எதிர்ப்பு அதிகமான சந்தோஷத்தை அளித்தது. எனினும், அவர் சொன்னார்: "பெண்தானேடா... அப்படியெல்லாம் இருக்கத்தானே செய்யும்.''
"காலை எடுத்து நான் அந்தக் குடிசையில வைக்க மாட்டேன். பெண் பெண் என்று நினைத்துக் கொண்டு மானத்தை விட முடியாது.''
சிறிது நேரம் குறுப்பு சிந்தித்தார். பிறகு கேட்டார்: "இப்போ என்ன செய்யணும்னு நினைக்கிறே?''
"அடியேன் இந்த தொழுவத்தின் வாசலிலேயே படுத்துக் கொள்கிறேன்.''
"ம்... '' - குறுப்பு முனகினார்: "அங்கே காலி சாக்கு இருக்கும். அதை எடுத்து விரிச்சிக்கோ.''
"சரி...''
குறுப்பு உள்ளே வந்து சட்டையை எடுத்து அணிந்து கொண்டு விளக்கைப் பற்ற வைத்து, வெளியே வந்து நடந்தார். பலவிதப்பட்ட சிந்தனைகளும் அந்த மனதில் கிடந்து தலையைத் தூக்கிக் கொண்டிருந்தன. என்னவெல்லாம் எண்ணங்கள்? யாருக்குத் தெரியும்?
விளக்கைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வரப்புகள் வழியாக வேகமாக குறுப்பு நடந்தார். அப்படியே அந்த நடை கோபாலன் நாயரின் வீட்டு வாசலில் போய் முடிந்தது. குறுப்பு வாசலில் கால் வைத்துக் கொண்டு சொன்னார்: "பார்க்கலாம்... நாம் பார்க்கலாம், கோபாலன் நாயர்!"
"குறுப்பா? விசேஷம்?''
"இப்போ நான் சொன்ன இடத்திற்கு வந்தாச்சா?''
"என்ன?''
"குஞ்ஞம்மாவுக்கும் சாத்தப்பனுக்கும் இடையில் தகராறு...''
"தகராறா?'' - அந்தக் கேள்வியைக் கேட்டது, குழந்தையைத் தோளில் படுக்க வைத்துக் கொண்டு தெற்கும் வடக்குமாக நடந்து கொண்டிருந்த மாதவியம்மா.
"போர் நடந்து கொண்டிருக்கு'' - குறுப்பு சொன்னார்.
"இறுதியில் வெடிச்சு பிரிஞ்சிட்டாங்க.''
"பிரிந்து விட்டார்களா?'' - மாதவியம்மா திரும்பி நின்று கேட்டாள்.
"சாத்தப்பன் இப்போ என் வீட்டுத் தொழுவத்தின் திண்ணையில் படுத்திருக்கான்.''
"இப்போதா?''
"நான்தான் சொன்னேன்ல- கலாச்சார வித்தியாசம் சிறியதல்ல என்று.''
கோபாலன் நாயர் தாடையையும் மூக்கையும் தடவியவாறு ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னார்:
"சுவாரசியமா இருக்கு, குறுப்பு.''
"நல்ல சுவாரசியம்ல! பாவம்...!'' - மாதவியம்மா இடையில் புகுந்து சொன்னாள்.
"சரிதான்... அந்த சாத்தப்பன் பாவம்தான்'' - கோபாலன் நாயரும் சொன்னார்.
"அவன் அல்ல. அவள்... அந்த தடிமாடனுக்கு என்ன?'' - மாதவியம்மா.
"நடக்கட்டும் குறுப்பு. எதற்கும் பயப்பட வேண்டாம்'' என்று கூறியவாறு கோபாலன் நாயர் கண்ணைச் சிமிட்டினார்.
"எனக்கென்ன பயம்?'' - குறுப்பு கோபத்துடன் தொடர்ந்து சொன்னார்: "நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் இருப்பதைப் போல தோன்றும். திருடர்கள்... போய்த் தொலையட்டும்.''
"தொலையட்டும்..'' - கோபாலன் நாயரும் திரும்பக் கூறினார்.
"அய்யோ... தொலைய வேண்டாம்'' - மாதவியம்மா இடையில் புகுந்து சொன்னாள்: "சொல்லி கிண்டல் பண்ண வேண்டாம்.''
"தொலையணும். நேந்திரம் வாழையைத் திருடினான்ல?'' - குறுப்பு இடையில் புகுந்து சொன்னார்.
"ஆனால்...'' - கோபாலன் நாயர் தாடையையும் மூக்கையும் மேலும் ஒருமுறை தடவினார். "எதுவும் நடக்கப் போவதில்லை, குறுப்பு. இது ஒரு பேன்கடி. இதுக்காக தலை முடியைப் பிடுங்கப் போறது இல்லை.''
"உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு.''
"ஆனால், இந்தப் பைத்தியக்காரத்தனம் எல்லா கணவர்களுக்கும் இருப்பதுதான்...''
இப்படி அவர்கள் பல விஷயங்களையும் விவாதித்து ஒரு முடிவுக்கும் வராமலே பிரிந்தார்கள். குறுப்பு போக ஆரம்பித்தபோது கோபாலன் நாயர் கேட்டார்:
"குறுப்பு, எதற்காக வந்தீங்க?''
"சும்மாதான்...''
அவர் லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு பிடிவாதத்துடன் நடந்தார். அந்த தொப்பை வயிறு குலுங்கியது.
குறுப்பு வீட்டிற்குச் சென்றதும் முதலில் போய் பார்த்தது தொழுவத்திற்கு அருகில்தான். அங்கு புற்கள் வைக்கப்படும் திண்ணையின்மீது இரண்டு கோணிகள் விரிக்கப்பட்டிருந்தன. வேறு எதுவுமில்லை. சாத்தப்பன் எங்கே?
"டேய் சாத்தப்பா...'' - குறுப்பு உரத்த குரலில் அழைத்தார்.
ஒரே அமைதி.
"டேய் சாத்தப்பா.''
சத்தமில்லை.
"டேய் நாசமா போறவனே! டேய் திருடா!''
இல்லை. ஒரு சத்தமோ அசைவோ இல்லை. குறுப்பிற்கு கடுமையான கோபம் வந்தது! "கழுதை! போய் தொலையட்டும்" என்று கூறியவாறு தானிய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டு படுத்தார். எனினும், அவர் உறங்கவில்லை.
சாத்தப்பன் எங்கு போனான்? அவன் அந்த புற்கள் வைக்கப்படும் திண்ணையில் படுத்து வானத்தில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் பல விஷயங்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான். குஞ்ஞம்மாவைப் பற்றி எதற்கு நினைக்க வேண்டும்? அவளைத்தான் விட்டுவிட்டு வந்தாகிவிட்டதே! அவன் எங்கோ தூரத்தில் பரந்து கிடக்கும் நெல் வயல்களைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கூலி வேலை பார்த்த நாட்களைப் பற்றி எண்ணிப் பார்த்தான். அறுவடை காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தான். ஆனால், அங்கு எல்லா இடங்களிலும் அந்த மூதேவி இருந்தாள்- அந்த குஞ்ஞம்மாச் சோத்தியார்!
"கடவுள் சத்தியமா உண்மை. நான் இனி ஒருத்தியைக் கல்யாணம் பண்ண மாட்டேன்'' - அவன் நினைத்துப் பார்த்தான். அங்கும் குஞ்ஞம்மாச் சோத்தியார் இருந்தாள்!
"அந்த பூனையைக் கொல்லணும்'' என்று உரத்த குரலில் கூறியவாறு அவன் எழுந்து நடந்தான்.
குடிசையிலிருந்து வெளியே வந்த அதே வேகத்தில் குடிசையை நோக்கி நடந்தான். அவன் ஓலையால் ஆன கதவின் அருகில் சென்று நின்று கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். அப்போதும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவன் அழுத்தமான கால் வைப்புகளுடன் ஓலையின் ஓட்டைகள் வழியாகப் பார்த்தான். உள்ளே, நடுவில் குஞ்ஞம்மா கையில் தலையை வைத்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ஆஹ்! ஆஹ்! ஆஹ்! என்ற தேம்பும் சத்தம். "அழட்டும். தேம்பித் தேம்பி அழணும். அவள் சோத்தியாராச்சே! ம்..." என்று மனதில் நினைத்துக் கொண்டே சாத்தப்பன் அங்கேயே நின்றிருந்தான்.
காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது. மங்கலான நிலவு குஞ்ஞம்மாவைப் போலவே கவலையுடன் நின்றிருந்தது. சாத்தப்பனின் இதயத்தில் இருப்பதைப்போல நிழல்கள் தெளிவில்லாமல் அசைந்தன.
சாத்தப்பன் மீண்டும் பார்த்தான். குஞ்ஞம்மா தலையை மெல்ல தூக்கினாள். அந்தக் கண்கள் கலங்கியிருந்தன. அழுது அழுது முகம் வீங்கிவிட்டிருந்தது. சுருங்கிய தாமரை மலரைப் போல அந்த முகம் இருந்தது. சாத்தப்பன் மேலும் ஒரு நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவனுடைய இதயம் கலங்கிவிட்டது.
குஞ்ஞம்மாதான் அழுதுகொண்டிருந்தாள். அவள் எந்த அளவிற்கு சேற்றை வாரி மேலே எறிந்தவள்!
அதற்குப் பிறகு தாமதிக்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே வந்தான். பதைபதைப்புடன் நின்று கொண்டிருந்த குஞ்ஞம்மாவையே அவன் வெறித்துப் பார்த்தான். "ஓ! என் குஞ்ஞம்மாச்சோத்தியார்.... அழக்கூடாது!''
அப்போது அவள் உரத்த குரலில் அழுதாள். அழாதே என்று கணவன் கூறும்போது, ஒரு பெண்ணால் அழாமல் இருக்க முடியுமா? சாத்தப்பனும் கண் கலங்கிவிட்டான். அந்த இரண்டு கண்களின் நீரிலும் சேர்ந்து நேரம் கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு மனங்கள் ஆடிக் குலுங்கி சரியாகிக் கொண்டிருக்கின்றன.
"கொஞ்சம் கஞ்சி குடிங்க...'' - குஞ்ஞம்மா கஞ்சியைப் பரிமாறினாள். சாத்தப்பன் குடித்தான். எல்லாம் முடிந்து பாயை விரித்தபோது கேட்டான்: "ஏன் பூனையைக் கொல்லக்கூடாதுன்னு சொன்னே?''
குஞ்ஞம்மா நகத்தைத் தடவிக் கொண்டே கீழே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"என்ன?''
"ஒரு கர்ப்பம் உள்ள பெண்ணால் கர்ப்பமாக இருக்கும் பூனையைக் கொல்ல முடியுமா?''
"கர்ப்பம் இருக்குதா?''
"ம்... ம்...'' - ஒரு புன் சிரிப்பை வெளிப்படுத்தியவாறு குஞ்ஞம்மா கீழே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"இப்போதுதானே சொல்றே! கொல்ல மாட்டேன். சொன்ன பிறகுதான் விஷயம் தெரியுது.''
அவள் புன்சிரிப்பைத் தவழ விட்டாள்.
"இங்கு பூனையை வளர்க்கலாமா?''
"பூனைதான் போயிடுச்சே!''
குஞ்ஞம்மா மெதுவாக மூலைக்குச் சென்று ஒரு பிரம்புக் கூடையை எடுத்துத் தூக்கினாள். அப்போது ஒரு சப்தம். ங்யாவ்... ங்யாவ்...
வெள்ளைப் பூனை!
"வளர்க்கலாமா?'' - குஞ்ஞம்மா கேட்டாள். சாத்தப்பன் எதிர்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டே சொன்னான்:
"நீ பூனையை வளர்க்கலாம்.''
அந்த வகையில் சாத்தப்பன் அந்தப் போரில் வெற்றி பெற்றான்.
காம்பு பழுக்காத வெற்றிலை
குஞ்ஞிப் பாத்தும்மாவின் மகள் கதீஜாவிற்கு பத்தொன்பது வயது ஆனது. அவளுக்கு ஒன்பது வயது நடந்தபோது வாப்பா "தலாக்" கூறிவிட்டார். தலாக் கூறியதற்கான காரணங்களைப் பற்றியெல்லாம் அவளுக்குத் தெரியாது. உம்மாவிற்கும் வாப்பாவிற்குமிடையே சிறுசிறு பிரச்சினைகள் உண்டானதாக அவளுக்கு ஞாபகத்தில் இருக்கிறது. "நீங்க ஒரு ஆணா?'' என்று உம்மா பல நேரங்களில் வாப்பாவிடம் கேட்டிருக்கிறாள். "ஆமாண்டி.. ஆமாண்டி...'' என்று வாப்பா வாதம் செய்திருக்கிறார். ஆனால், உம்மா எந்தச் சமயத்திலும் அதை ஒப்புக் கொண்டதில்லை. வாப்பா ரங்கூனுக்குச் சென்று கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்துதான் உம்மாவைத் திருமணம் செய்தார் என்று கதீஜா கேள்விப்பட்டிருக்கிறாள். அந்த அளவிற்குப் பணம் இல்லாமலிருந்தாலும், ரங்கூனிற்குப் போகாமல் இருந்திருந்தாலும் உம்மாவை அவர் திருமணம் செய்திருக்கவே முடியாது. உம்மாவின் குடும்பம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. அங்கு பல விஷயங்கள் இருந்தன. - பெரியவீடு, காம்பவுண்ட் சுவர், தொழுவம், தேங்காய்கள் பாதுகாக்கப்படும் இடம், நெல் அறை,தொழும் அறை... இவை எல்லாம் வாப்பாவின் வீட்டில் இல்லை. பெரிய ஒரு தொழுவம்கூட இல்லை. எனினும், அவரால் தன்னைத் திருமணம் செய்ய முடிந்தது. "நிஸீப்"பால்தான் என்று குஞ்ஞிப் பாத்தும்மா தன் மகளிடம் கூறிப் புரிய வைத்திருக்கிறாள்.
தனியாக இருக்கும்போது கதீஜா நினைப்பாள்: "நிஸீப்" இருந்தால் ராஜகுமாரியைக்கூட திருமணம் செய்யலாமே? ஒரு ஏழை ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்த கதையை அவளுடைய பெரிய உம்மா சிறு வயதில் அவளிடம் கூறியிருக்கிறாள். அந்தக் கோணத்தில் காரியங்களைப் பற்றி அவள் ஆழமாக சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். "வாப்பாவைத் திருமணம் செய்தது உம்மாவின் நல்ல குணத்தால்தான். தெரியுதா?"
அதனால் வாப்பா தலாக் சொன்னபோது கதீஜா அந்த அளவிற்கு வருத்தப்படவில்லை. எனினும் கேட்டாள்:
"உம்மா, வாப்பா போயிட்டாரா?''
"போகட்டும்டி... உனக்கு உம்மா இல்லையா? மனித குணம் இல்லாத மனிதன்...''
அதற்குப் பிறகு கதீஜா எதுவும் கூறவில்லை. ஆனால் குஞ்ஞிப் பாத்தும்மா பலவிஷயங்களையும் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தாள். ஒருமுறை நிமிர்ந்தால் அவ்வளவு சீக்கிரம் மடங்கக் கூடியதல்ல அது. இறுதியில் ஒரு அறிவுரையும்... " என் செல்ல மகளே! ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சுக்கோ.''
"என்ன உம்மா?"
"பெரியவளா ஆகுறப்போ நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. ஆனால், ஒரு ரங்கூன்காரனை மட்டும் கல்யாணம் பண்ணிக்காதே!''
அந்த வார்த்தைகளை கதீஜா மனதில் வைத்துக் கொண்டாள். வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் ஒரு ரங்கூன்காரனைக் காதலிக்கச் கூடிய சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்று அவள் வேண்டிக் கொண்டாள்.
கதீஜா படித்திருக்கிறாள். எழுத்துப் பலகையுடன் அவள் நிறைய நாட்கள் குர்ஆன் கற்றுத் தரப்படும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருக்கிறாள். பள்ளி வாழ்க்கை மோசமாக இருந்ததில்லை. முஸல் யாரோ குஞ்ஞிப் பாத்தும்மாவிடம் சொன்னார்: "திறமையான பெண்!''
"என் மகளாச்சே! யாரு இந்த கதீஜா'' என்று அந்தத் தாய் பதில் சொன்னாள். ஆனால், குர்ஆன் கற்றுத் தரப்படும் பள்ளிக்கூடத்தில் இருந்த ஒரு சிறிய சட்டம்தான் அவளுடைய படிப்பை நிறுத்திவிட்டது. மிகப் பெரிய சம்பவங்கள் பல நேரங்களிலும் சாதாரண விஷயங்களில் இருந்துதான் உருவாகும். நடந்தது இதுதான். குர்ஆன் படிப்பை முடித்துவிட்டுப் போகும்போது வழக்கமாக எல்லா மாணவர்களும் ஒரு அடியை வாங்கிக் கொண்டு போக வேண்டும். குற்றம் எதுவும் செய்ததற்காக அல்ல. அன்பிற்குரிய சீடர்களாயிற்றே! இனி மறுநாள் வரும்போதுதானே அடிக்க முடியும் என்பதை நினைத்துத்தான் அது நடந்து கொண்டிருந்தது.
பிள்ளைகள் வரிசையாக நின்றிருப்பார்கள். முதலில் அடி வாங்கியவன் முதலில் போய்விடலாம். ஒருநாள் வரிசையில் ஆரவாரம். முஸல்யாருக்கு கோபம் வந்துவிட்டது. அப்போதுதான் கதீஜா மருதாணி போட்டு இரண்டு மடங்கு சிவப்பாக்கிய கையை நீட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள். ச்ளீம்.. - ஒரு அடி. கதீஜா நெளிந்தாள். ஆனால். அழவில்லை. அழுதால், அதை நிறுத்தும்வரை அடி கிடைக்கும். அந்தக் கண்கள் நீரால் நிறைந்தது. அது மார்பின்மீது துளித்துளியாக விழுந்தது. மற்ற பிள்ளைகள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். குர்ஆன் படிப்பதை நிறுத்திவிட்டு போகும்போது கிடைக்கக்கூடிய அடி, உரிமையுடன் கொடுக்கப்படும் ஒன்று மட்டுமே என்பதும், அதை அந்த அளவிற்குப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஒருவரையொருவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டே, அடி வாங்கினார்கள். "எல்லா மொய்லாக்கன்மார்களையும் சைத்தான் பிடிக்கட்டும்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, அழுத்தி மிதித்தவாறு அவள் நடந்து சென்றாள். கதீஜாவின் சிவந்த உள்ளங்கையில் ஒரு நீலக்கோடு! விஷயம் தெரிந்ததும் தன் மகளின் கையைத் தடவிக் கொண்டே குஞ்ஞிப் பாத்தும்மா சொன்னாள்: "குர்ஆன் படித்தது போதும். உன்னை இப்போ மொயல்யாராக ஆக்க நினைக்கவில்லையே?''
அத்துடன் கதீஜாவின் படிப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. எனினும், அவளுக்கு கணக்கு கூட்டுவதற்கும் கழிப்பதற்கும் தெரியும். அதை அவளுடைய உம்மாவே கற்றுத் தந்தாள். ஒன்பதாயிரம் வரை தவறு நேராமல் எண்ணுவதற்குக் கற்றுக் கொண்டாள். ஒன்றிரண்டு வருடங்கள் கடந்த பிறகு, கதீஜாவிற்கு ஒரு ஆசை. “உம்மா, நான் பள்ளிக்கூடத்திற்குப் போகட்டுமா?''
"வேண்டாம். அந்தப் படிப்பு நமக்கு வேண்டாம், மகளே!''
"ஆங்கிலம் படிக்கலாம், உம்மா. நம்முடைய மரியாக் குட்டி ஆங்கிலம் படிப்பதைக் கேட்டால்...''
"வேண்டாம்.''
"ஏன்?''
"அடியே! ஹுரிங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த புனித நூலில் கூறப்பட்டிருக்கிறது?''
உண்மைதான். சொர்க்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று ஒரு புனித நூலிலும் எழுதப்பட்டிருப்பதாக ஒரு பண்டிதர்கூட கூறிக் கேள்விப்பட்டதில்லை. அந்த வகையில் அந்த ஆசையை அவள் துறந்துவிட்டாள். அதற்குப் பிறகு கதீஜாவிற்கு இரண்டு ஆசைகளே இருந்தன.
ஒன்று - பல நிறங்களில் இருக்கும் கண்ணாடி வளையல்களை கை நிறைய அணிந்திருக்க வேண்டும் என்பது. இரண்டு - கொஞ்சம் முல்லைப்பூ எண்ணெய்யைத் தேய்க்க வேண்டும் என்பது. இரண்டையும் அவளுடைய உம்மா வாங்கிக் கொடுத்தாள். கண்ணாடி வளையல்கள் உடையவும், முல்லைப்பூ எண்ணெய் இருக்கும் புட்டிகள் காலியாகவும் ஆகியிருப்பதற்கிடையில் காலம் போய்க்
கொண்டிருந்தது. பலவும் தகர்ந்து கொண்டிருந்தன. வெளிச்சுவரையும் நெல் அறையையும் இடித்து விற்றார்கள். தேங்காய் வைத்திருந்த இடத்தை இடிக்க ஆரம்பித்தார்கள். தொழுகை நடத்தும் அறை சிதிலமடைய ஆரம்பித்தது. இவை அனைத்தும் எப்படி நடந்தன? அந்த வீட்டில் இருந்த மூன்று ஆண்களும் மிகுந்த ஆணவம் கொண்டவர்கள். அதாவது- போக்கிரிகள். குஞ்ஞிப் பாத்தும்மாவின் வீட்டு வாசல்படிகளின் அருகில் செடிகளுக்கு மத்தியில் ஒரு குளம் இருக்கும். குளத்தில் மீன்கள் உண்டு. குளம் பக்கத்து வீட்டுக்காரனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், மீன்களைப் பிடிப்பது என்னவோ குஞ்ஞிப் பாத்தும்மாவின் சகோதரர்கள்தான். அவர்களிடம் அப்படி செய்யக் கூடாது என்று கூறுவதற்கு ஒரு நாக்குகூட எழவில்லை. அப்படியே அந்த மீன்கள் அவர்களுடைய உரிமையாக ஆனது. இதற்கிடையில் குளத்தின் உரிமையாளர் யார் என்பதில் சில மாறுதல்கள் வந்தன. புதிய உரிமையாளர் மீன்கள் மீது அதிக விருப்பம் கொண்டவனாக இருந்தான். அவன் விடுவானா? குஞ்ஞிப் பாத்தும்மாவின் சகோதரர்கள் விட்டுத் தருவார்களா? உரிமையாளர் மீன்களைப் பிடிப்பதற்காக இறங்கியபோது, மூத்த அண்ணனான அவறான் மீசையைத் திருகியவாறு கேட்டான்: "எங்கே போறீங்க?'' அந்தக் கேள்வி இரண்டு பக்கங்களைச் சேர்ந்தவர்களையும் நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றது. சிவில் வழக்கும் அத்துடன் சேர்க்கப்பட்ட சில கிரிமினல் வழக்குகளும் நடந்தன. மூன்று நீதி மன்றங்களில் ஏறி வழக்காடினார்கள். பணம் போனாலும், மானத்தை விட முடியுமா? அநியாயமும், பத்திரிகையும், சாட்சி சம்மன்களும், இஞ்சங்ஷனும், விசாரணையும் நிறுத்தி வைத்தாலும் - நான்தான் சொன்னேனே, அது ஒரு சூறாவளியாக இருந்தது. அந்த சூறாவளியில் பலவும் பறந்து போய்விட்டன. நிலங்கள், நகைகள், பெரிய பெரிய பாத்திரங்கள், வெளிச்சுவர், நெல் அறை - இப்படிப் பலவும். அதற்குப் பிறகும் அவறான் வழக்கு கட்டுகளைக் கையிடுக்கில் இருந்து எடுக்கவில்லை. எப்படி எடுக்க முடியும்? அவன் ஒரு மரியாதைக்குரிய குடும்பத்து மனிதனாக இருந்தான். இறுதியில் குளம் உரிமையாளருக்குச் சொந்தம் என்றும், மீன்கள் அவறானுக்கு உரிமையானது என்றும் தீர்ப்பு வந்தது. வரலாற்றுப் புகழ் கொண்ட அந்த வழக்கைப் பற்றி குஞ்ஞிப் பாத்தும்மா, "என் சகோதரர்கள் மானத்தை அடைந்துவிட்டார்கள்" என்று கூறுவாள். உரிமையாளர் அந்தக் குளத்தை அடியோடு இல்லாமல் செய்து தென்னங்கன்றுகளை அங்கு கொண்டு வந்து நட்டான். எனினும், குளம் இருந்திருந்தால், மீன்களின் உரிமையை வைத்திருப்பவன் அவறான்தான். அத்துடன் குஞ்ஞிப் பாத்தும்மாவின் குடும்பத்தில் சில மாறுதல்கள் வந்தன. பசியாக இருந்த நாய்க்கும், நனைந்த தோலுக்கும் - திருமணம் அப்படி நடந்தது. அப்போது கதீஜாவிற்கு பதினான்கு வயது நடந்து கொண்டிருந்தது. ஆலிமுஸல்யாருக்கு வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் அந்தத் திருமணம் நடந்தது. அதனால் குஞ்ஞிப் பாத்தும்மா அவருடன் சேர்ந்து போக வேண்டும். கதீஜா? அது ஒரு பிரச்சினையாக இருந்தது. "அவள் இங்கேயே இருக்கட்டும்" - குஞ்ஞிப் பாத்தும்மாவின் அக்கா சொன்னாள். தலை நரைத்த அந்தப் பெண்ணின் வார்த்தைகள் மதிக்கப்பட்டன. கதீஜா வீட்டிலேயே இருந்தாள். எனினும், குஞ்ஞிப் பாத்தும்மா அவ்வப்போது தன் மகளைப் பார்ப்பதற்காக வருவாள். நெய்யப்பம், தேன்குழல், பொரித்த கோழி என்று கொண்டு வருவாள். சில நேரங்களில் சேனைக்கிழங்கு, சட்டை, தலையில் அணியும் துணி ஆகியவற்றைக் கொண்டு வருவாள். "என் செல்ல மகளே. நீ உம்மாவின் பெயரைக் கெடுத்துவிடக்கூடாது. என் மகளான நீ அதை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நீ நல்லா இருப்பே'' என்று ஆசிர்வதித்துவிட்டு அவள் புறப்பட ஆரம்பிக்கும்போது கதீஜா கேட்பாள்:
"உம்மா நீங்க இனிமேல் எப்போ வருவீங்க?''
"சீக்கிரமா.''
இப்படி உம்மா போயும் வந்தும் இருப்பதற்கு இடையில்தான் மகளுக்கு பத்தொன்பது வயதுகள் ஆயின. குஞ்ஞிப் பாத்தும்மா பதைபதைத்துப் போய்விட்டாள். அன்னைமார்கள் எப்போதும் பதைபதைக்கத்தானே செய்வார்கள்! காதலர்களும். இனிமேல் மகளை இப்படித் தனியாக விடலாமா?
அடித்து நிறைக்கப்பட்ட வாணவெடியையும், இளமை நிறைந்த பெண்ணையும் கையில் இருந்து மிகவும் கவனமாக விட வேண்டும் என்று அந்தப் பெண் நினைத்தாள். பிறகு, அவள் எங்கு போய் சேருவாள் என்று யாருக்குத் தெரியும்? எனினும் கதீஜாவை திடீரென்று அழைத்துக் கொண்டு சென்றால், ஆலிக்குட்டி ஹாஜி என்ன நினைப்பார்? ஏதாவது கூறிவிட்டால், அது தன்னுடைய குடும்பத்திற்கு ஒரு அவமானமான விஷயமாக ஆகிவிடாதா? ஹாஜியாரிடம் கூறி மயக்கி, அதற்குப் பிறகு அழைத்துக் கொண்டு போவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தாள். இன்னும் சொல்லப் போனால் - அது ஒரு பழைய குடும்பம். உலகத்தில் இருப்பவர்கள் எல்லாருக்கும் அவர்களைக் கண்டால் பயம். "ஈ பறந்து போய் விடாது" என்று குஞ்ஞிப் பாத்தும்மா கூறுவாள். எனினும், மனதில் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. கதீஜா ஒரு இளம் அழகியாக இருந்தாள். அவள் தன்னுடைய இன்னொரு வார்ப்பு என்று குஞ்ஞிப் பாத்தும்மா நினைத்தாள். "இந்த செண்பகப் பூவின் நிறத்தையும், கனவு காணும் கண்களையும், அரிசி மணியைப் போன்ற பற்களையும் பார்க்குறப்போ...''
"என்ன உம்மா?''- கதீஜா அவளுடைய காதில் முல்லைப் பூக்களைக் குலுக்கி வாசனையைப் பரவ விட்டுக் கொண்டே கேட்டாள்:
"என்னன்னா கேட்குறே? கொஞ்ச காலத்திற்கு முன்னால் நான் கண்ணாடியில் பார்த்தப்போ பார்த்தது உன்னைத்தான் கதீஜா''
அந்த வார்த்தைகளைக் கேட்டதும், எதற்கு என்று தெரியவில்லை- தலைத் துணியின் ஓரத்தைப் பற்றியவாறு கதீஜா கீழே பார்த்துக் கொண்டு நின்றாள். அந்தக் கண்களில் என்னவோ பரவிப் பரவி போய்க்கொண்டிருந்தது.
"என் மகளே, நீ கவனமாக இருக்கணும்''- உம்மா எச்சரித்தாள்.
"ஏன் உம்மா?''
"முடி வளர்த்தால் கண்ட இடங்களிலெல்லாம் அதைப் பறக்கவிட்டுக் கொண்டு நடக்கும் காலம் இது!''
"அதற்கு?''
"யாருடைய பார்வையிலும் பட்டுவிடக்கூடாது.''
"ம்...'' -அப்போதும் அந்த அகன்ற கண்களில் என்னவோ பறந்து கொண்டிருந்தது.
தலை முடியை வளர்த்து, க்ராப் வெட்டி, அரும்பு மீசையுடன் நடந்து கொண்டிருக்கும் எல்லா முஸ்லிம் இளைஞர்கள் மீதும் குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு வெறுப்பு இருந்தது. அப்படிப்பட்ட அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய கணவரான ஆலிக்குட்டி ஹாஜி ஒரு உதாரண புருஷனாக இருக்கிறார் என்று அந்த பெண் இரத்தினம் நம்பிக் கொண்டிருந்தாள். நவநாகரீகமான, படித்த இளைஞர்கள் கடந்து செல்லும்போது, தாடையில் கையை வைத்துக் கொண்டு உலகத்தைப் பார்த்துக் கூறுவதைப் போல அவள் சொன்னாள்:
"நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அஸ்ராஃபீல் பெரியவரின் கொம்பு எடுப்பதற்காகக் கிடக்கிறது.''
உலகத்தின் முடிவைக் குறிக்கும் தேவதூதனின் ஓசை காதில் விழுந்ததைப் போல சிறிது நேரம் அவள் திகைத்துப் போய் நின்றாள். இறுதியில் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். அவள் வாய் முணுமுணுத்தது: "மாலிக்கல் ஜப்பாராய தம்புரானே...''
அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு தப்பிப்பதற்கு இருந்த ஒரே வழி - குஞ்ஞிப் பாத்தும்மாவின் குடும்பத்தைப் பற்றி சிறிது நேரம் புகழ்ந்து பேசுவதுதான். எனினும் அவள் ஒரு மன்னிப்பு கொடுக்கும் குரலில் முணுமுணுப்பாள்: "முடி வளர்த்தவனாக இருந்தாலும், நல்லவன்.''
எது எப்படி இருந்தாலும் - கதீஜா அப்படிப்பட்ட இளைஞர்களின் வலையில் பட்டுவிடக் கூடாது.
அதற்கான முன் ஏற்பாடுகளை அவள் செய்து வைத்தாள். ஆனால், ஆபத்துகள் எந்த வழியில் கடந்து வரும் என்று யாரால் கூற முடியும்? அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் மாலை மயங்கி விட்டிருந்தது. சிறிதளவு நிலவு வெளிச்சம் இருந்தது. "நான் கொஞ்சம் சிரிக்கட்டுமா?'' என்று பிரபஞ்சம் விசாரிப்பதைப் போல தோன்றும். "எங்களுக்கு வழி காட்டு" என்று பிரார்த்தித்தவாறு வேலிக்குள் வந்து நின்ற கோழிகளைப் பிடித்து கூடைக்குள் போட்டுக் கொண்டிருந்தாள் கதீஜா. திடீரென்று பின்னாலிருந்து ஒரு காலடிச் சத்தத்தைக் கேட்டு அவள் திரும்பி பார்த்தாள்.
"படைத்த கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு சத்தம் போடாம இருப்பியா?'' என்று சொல்லிக் கொண்டே ஒரு இளைஞன் அவளுக்கு முன்னால் வந்து நின்றான். சத்தம் போடுவதற்கு திறந்த வாயை மூடாமல் அவள் நின்றாள். "காப்பாற்றணும்... கொஞ்ச நேரம்தான் இங்கே இருப்பேன். ஒரு தொந்தரவும் வராது. அதோ... அந்த தேங்காய்கள் இருக்கும் அறையில் இருந்து கொள்கிறேன்.''
அடடா! மனிதனின் மொழியில்தான் அவன் பேசினான். ஜின்னோ மல்க்கோ சைத்தானோ அல்ல. கதீஜாவுக்குப் புரிந்தது. மூச்சு விடவும் கண் இமைகளை அசைக்கவும் முடிந்தது. பறந்து கொண்டிருந்த முடி, அரைக்கை சட்டை, உயரம் இல்லாத சரீரம் - ஒரு இளைஞன் அல்லவா?
"நான் கொஞ்ச நேரம் கழிச்சுப் போயிடுவேன்'' - அவன் மீண்டும் கெஞ்சுகிற குரலில் தொடர்ந்து சொன்னான். "முட்டாளே! வெளியே போ" என்று கூறத்தான் கதீஜா நினைத்தாள். ஆனால், நாக்கு அசையவில்லை. அவள் அமைதியாக நின்றிருந்தாள். கூட்டிற்கு அருகில் இருந்த கோழிகள் மட்டும் அவ்வப்போது சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன: க்லக்...க்லக்...க்லக்...
"ம்...'' - கதீஜா மெதுவான குரலில் முனகினாள். அந்த இளைஞன் தேங்காய் அறையின் இருட்டிற்குள் நுழைந்தான். அங்கே பயந்து போய் பறந்து கொண்டிருந்த வவ்வால்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
உஷ்ணமான நிமிடங்கள். கதீஜா கைகள் நடுங்க கோழிகளைப் பிடித்துக் கூடைக்குள் போட்டாள். ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு - எல்லாம் முடிந்தன. அங்கு நிற்க வேண்டுமா, போக வேண்டுமா? காதுகளைத் தீட்டிக் கொண்டு பார்த்தாள். ஒரு அசைவும் இல்லை. தூரத்தில் சில சொறி நாய்களின் குரைக்கும் சத்தம் மட்டும் கேட்டது. என்ன நடந்தது? சிந்திப்பதற்கு சூழ்நிலை கிடைப்பதற்கு முன்பே எல்லாம் மிகவும் வேகமாக நடந்து விட்டன. அவன் யார்? திருடனா? கொலைகாரனா? ஒரே குழப்பமாக இருந்தது. முழு பிரபஞ்சமும் அசைவற்ற தன்மையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறதோ? இல்லை. மெல்லிய காற்று, பாம்பின் சீறலைப்போல அவளுடைய காதுகளில் வந்து மோதிக் கொண்டிருந்தது.
கதீஜா இதயம் வேதனைப்பட பிரார்த்தித்தாள்: "ரப்பல் ஆலமீனாய தம்புரானே...''
திடீரென்று வழியில் இருந்து ஒரு ஆரவாரம் கேட்டது. கனமான குரல்கள் பேசுகின்றன. "குதித்து விட்டானா?''
"திருடன்!''
"நழுவிப் போயிட்டான்...''
"மண்ணுக்குள் ஊசி நுழைந்ததைப் போல...''
"கிழக்குப் பக்கமா போனான்?''
அந்த சப்தங்கள் விலகி விலகிச் சென்று கேட்காமல் போயின. கதீஜா பெருமூச்சு விட்டவாறு சுற்றிலும் பார்த்தாள்.
விசாலமான உலகம் மிகவும் அமைதியாக இருந்தது. அப்படியென்றால் முழுமையான அமைதியா? இடிக்கப்பட்டிருந்த அந்த தேங்காய்கள் போய்விழும் இடத்திற்கு அருகில் அவள் கண்களை ஓட்டினாள். அப்படியே நின்றாள். ஐந்து நிமிடங்கள். அந்த இளைஞன் பதுங்கியவாறு வெளியே வந்து சொன்னான்: "மிகவும் நன்றி!''
"போங்க.''
"தெரியும். குஞ்ஞிப் பாத்தும்மாவின் மகள்தானே?''
"நீங்க?''
"பாவாக்குட்டி.''
"என்ன?''
"பயந்தாச்சா?''
"இல்லை...'' - பயந்து கொண்டே சொன்னாள்.
"வரட்டுமா. நரிகள் போயிடுச்சு.''
"ம்...''
பாவாக்குட்டி நிழல்களுக்கு மத்தியில் நடந்து வயல்களை நோக்கி நடந்து போவதை கதீஜா பார்த்தாள். பிறகு அவனைப் பார்க்கவில்லை. தாங்க முடியாத பயம். அவள் உள்ளே வந்து கதவை அழுத்தி அடைத்துவிட்டு, தாழ்ப்பாளைப் போட்டாள்.
அன்று தனிமையில் உட்கார்ந்து அவள் பலவற்றையும் சிந்தித்துப் பார்த்தாள். அவன்தான் பாவாக்குட்டியா? அவனைப் பற்றி அவள் முன்பே கேள்விப்பட்டிருக்கிறாள். முதலில் கேள்விப்பட்டது, பீடித் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது. அப்போது அவன் கடுமையான சொற்பொழிவுகளைச் செய்திருக்கிறான். பாவாக்குட்டியைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளை கதீஜா கேள்விப்பட்டிருந்தாள். "தைரியமானவன்- நல்லவன்- கொஞ்சம் படித்தவன்- அவன் சொற்பொழிவாற்றும் போது அவனிடமிருந்து கண்களை எடுக்கத் தோன்றாது" - இப்படிச் சில. அதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. சைத்தான் பிடித்தவன்- படைத்தவனைப் பற்றிய தேடல் இல்லை- பள்ளிவாசலுக்குள் நுழைவதில்லை- தொழுகை நடத்துவதில்லை- மனிதர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பவன். இவற்றில் எது உண்மையானது? தூக்கம் வரும்வரை கதீஜா சிந்தித்துப் பார்த்தாள். ஒரு முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை. அதாவது - உண்மையைத் தெரிந்தவர்கள் எவ்வளவு குறைவானவர்களாக இருக்கிறார்கள்!
அன்று இரவு கதீஜா பயங்கரமான கனவுகளைக் கண்டாள். ஈட்டியின் நுனியில் குத்தப்பட்ட தலைகள்... வானத்தின் விளிம்பு வரை வளைந்து நெளிந்து செல்லும் குடல் மாலைகள்... அதிலிருந்து அடர்த்தியான ரத்தம் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருக்கிறது. அந்த ரத்த ஆறு ஒரு மலைச்சரிவில் போய் விழுந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு சிவப்பு வெளிச்சம் பரவியிருக்கிறது. ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் தடிமனான மரங்களில் மனிதர்கள் கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த மனிதர்களின் மார்புகளில் இருந்து தோலை உரித்து விட்டிருக்கிறார்கள். ரத்தம் வழியும் பச்சை மாமிசம் பிதுங்கிக் கொண்டு நின்றிருந்தது. சுற்றிலும் ஈட்டிகளும் மண்வெட்டியும் கத்தியும் வைத்திருக்கும் மனிதர்கள் உரத்த குரலில் சத்தம் போட்டவாறு நடனமாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கால்களில் மருதாணி போட்டதைப்போல ரத்தம் தோய்ந்திருந்தது. அந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு இளைஞன்- அது பாவாக் குட்டிதான்.
கதீஜா அதிர்ந்துபோய் எழுந்தபோது, வெயில் சாளரத்தின் வழியாகச் சிரித்துக் கொண்டே கடந்து வந்து கொண்டிருந்தது. "பயப்பட வேண்டாம்... நான் இங்கே இருக்கேன்" என்று வெளிச்சம் கூறுவதைப் போலத் தோன்றியது. "அடடா! என் கடவுளே!" என்று கூறியவாறு கதீஜா சமையலறையை நோக்கித் தளர்ந்த நடையுடன் சென்றாள்.
பாவாக்குட்டியின்மீது கதீஜாவிற்கு பயமும் காதலும் சேர்ந்து கலந்த ஒரு மனநிலை தோன்றியது. அந்த அறிமுகம் எப்படிப் புதுப்பிக்கப்பட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தெரியாது. ஜின்னுகளுக்கும் மலிக்குகளுக்கும் தெரியாது. அவர்கள் அனைவரும் பூமிக்கு மேலே பயணிப்பவர்கள் ஆயிற்றே! பாவாக்குட்டி அந்த சமயங்களில் பூமிக்கு அடியில் பயணித்துக் கொண்டிருந்தான். மேலே போலீஸ்காரர்கள் இருந்தார்கள். மெதுவாக, அந்தப் பழைய தேங்காய்கள் போடப்படும் இடத்திற்கு அருகில் நின்று கொண்டு இரவு வேளையில் சில அழுத்தப்பட்ட உரையாடல்கள் நடந்தன.
"ஏன் இப்படித் திரியிறீங்க?''
"போராட்டமாச்சே!''
"யாருடன்?''
"அரசாங்கத்துடன்!''
"எதற்காக?''
"பிற்போக்கு சக்திகளை அழிக்கணும்.''
"எதற்கு?''
"சமத்துவம் கொண்ட ஒரு அழகான உலகத்தைப் படைக்க வேண்டும்.''
"அதனால்தான் இந்த இருட்டில் நடந்து போறீங்களா?''
"ஆமாம்...''
"எங்கே படைக்கப் போறீங்க?''
"இந்த நாடு முழுவதும்.''
"புத்திசாலி! என் கடவுளே! அது திடீரென்று வருமா?''
"இல்லை!''
"அப்படியா? எனக்குத் தெரியலையே!''
"முழுமையான சுய உணர்வுடன் பார்க்க வேண்டும்.''
"பிறகு... மனிதர்களில் எல்லாரும் சுய உணர்வு இல்லாமலா நடக்கிறார்கள்? இந்த நிலத்திலும் அந்த நிலத்திலும் பள்ளிவாசல் இருக்கும் இடத்திலும் இதுவரை எதுவும் உருவாக்கப்பட வில்லையே!''
"மெதுவாகப் பார்க்கலாம். ஒரு புதிய உலகம் உருவாகி வருகிறது!''
"அப்படியென்றால், இறுதி நாள் கடந்துவிட்டதா? எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அப்படி படைப்பது பகல் வேளையில் இருந்தால்தானே வசதியாக இருக்கும்? நல்ல காரியத்தைச் செய்யறப்போ, நாட்டில் இருப்பவர்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்வார்களே!''
"பிற்போக்கு எண்ணம் கொண்ட மோசமான சக்திகளை அனுமதிக்க மாட்டோம்.''
"அவர்கள் யார்? நம் நாட்டில் இருக்கிறார்களா?''
"எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ரஷ்யாவில் மட்டும் இல்லை.''
"இங்கே, இப்போ யார் இருக்காங்க?''
"இங்கும் இருக்கிறார்கள்.''
"இரவு வேளையில் நிலத்தில் நிற்கிறப்போ திடீரென்று தோன்றுவார்களா?''
"இல்லை. அவர்களுடைய மையம் அமெரிக்காதான்.''
"அது சீமைக்கு அப்பால்தானே இருக்கு?''
"ஆமாம்...''
"அதற்கு இங்கே எதற்கு ஒளிஞ்சு திரியணும்?''
"அதைப் பற்றிக் கொஞ்சம் படிக்கணும்.''
"உண்மையாக இருக்கலாம். பசிக்கலயா?''
"இல்லை. நான் உணவு சாப்பிட்டுட்டேன்.''
சிறிது நேரத்திற்கு ஒரே அமைதி. இருட்டு மேலும் அதிகமாகிக் கொண்டிருந்தது. அருகில் நின்றிருப்பவர்களால்கூட ஒருவரின் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியவில்லை. அப்போது ஒரு கேள்வி...
"கொல்லுவீங்களா?''
"யாரை?''
"மனிதர்களை...?''
"கொல்ல வேண்டியது வந்தால் கொல்வேன். அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அடிப்பேன்.''
"மனிதர்களை?''
"ஆமாம்...''
"அடிப்பதால் மனிதர்கள் நன்றாக ஆவார்கள் என்றால், அரசாங்கம் உங்களை இப்போ எவ்வளவு அடிச்சிருக்கு! ஆனால், நீங்கள் மாறவே இல்லையே!''
"ஆனால், நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் சக்தி.''
"வளரும் சக்தி மற்றவர்களை அடிக்கணுமா?''
"போராட்டம்தான் வாழ்க்கை.''
"என்னவோ? கஷ்டங்களும் பிரச்சினைகளும் இல்லாமல் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்குத்தானே இந்த வேலைகள் எல்லாம்?''
"ஆமாம்...''
பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு. சிறிது நேரத்திற்கு உரையாடல் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் அவள் கேட்டாள்:
"நான் வர்றேன். பெரிய உம்மா கூப்பிடுவாங்க.''
நிழல்கள்தான் பேசிக் கொண்டிருந்தன. அதனால் தெளிவில்லாமல் இருக்கும். எனினும் சில நாட்களில் சுவரில் காது முளைக்கும். அப்படிப்பட்ட ஒரு செவி பெரிய உம்மாவின் அறைக்குள் நுழைந்தது. அத்துடன் ஒரு சூறாவளியும் ஆரம்பமானது.
மறுநாள் பத்து மணிக்கு குஞ்ஞிப் பாத்தும்மா குடையை வைத்துக் கொண்டு கையை வீசி வீசி தன்னுடைய வீட்டிற்கு வந்தாள். வந்து நுழைந்தவுடனே குடையை ஒரு மூலையில் எறிந்து விட்டு உள்ளே வந்து கேட்டாள்:
"எங்கே அவள்?''
"உம்மா, நீங்க வந்திட்டீங்களா?'' - கதீஜா அருகில் வந்து நின்றதுதான் தாமதம், குஞ்ஞிப் பாத்தும்மா அவளுடைய இரண்டு கன்னங்களிலும் ஐந்து விரல்களையும் பதித்துவிட்டு நின்று மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு கேட்டாள்: "இனி மனம் போனபடி நடப்பியா? நடப்பியா? சொல்லு...''
"என் உம்மா...'' - கதீஜா கன்னத்தைத் தடவிக்கொண்டே குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
"என்னை உம்மான்ணு கூப்பிடாதே. என் பெயரைக் கெடுக்க முடிவு பண்ணிட்டேல்ல?''
"உம்மா, என்ன சொல்றீங்க?''
"நான் சொல்ல விரும்பல'' என்று தொடங்கி குஞ்ஞிப் பாத்தும்மா இருபது நிமிடங்கள் பேசினாள். பல வகையான கதைகளும் வெளியே வந்தன. உயிரின் தோற்றத்திலிருந்து பூகம்பம் வரை உள்ள உலக விஷயங்களும் அந்தச் சிறிய சொற்பொழிவில் அடங்கியிருந்தன. இறுதியில் ஒரு கேள்வியும்.
"சொல்லு... இது உண்மையா?''
"ஆமாம்...''
"இப்பவே புறப்படணும். என்கூட வர்றியா?''
"வேண்டாம் உம்மா.''
"வேண்டாமா? என் மகளாக இருந்தால், இப்போ புறப்படணும். புறப்படுவேல்ல?''
"புறப்படலாம்.''
அன்று முதல் கதீஜா உம்மாவுடன் இருக்க ஆரம்பித்தாள். குஞ்ஞிப் பாத்தும்மாவின் கண் பார்வையிலிருந்து விலகிச் செல்வதற்கு அவளுக்கு சுதந்திரம் இல்லாமலிருந்தது. கதீஜா சாளரத்தின் கம்பிகளைப் பிடித்து நின்று கொண்டு வானத்தைப் பார்த்துக் கனவு கண்டு கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, குஞ்ஞிப் பாத்தும்மா கூறுவாள்:
"எதற்கு கனவு கண்டு கொண்டு இருக்கிறே? நீ கனவு காண்பது எதுவும் என்னுடன் இருக்கிறப்போ நடக்காது.''
கதீஜாவிற்கு அது புரிந்துவிட்டிருந்தது. எனினும், குஞ்ஞிப் பாத்தும்மாவால் முக்கியமான அந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அவள் குறுக்கு வழியில் சில யோசனைகள் செய்து பார்த்தாள். அப்போதுதான் ஆபத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லா வீடுகளின் தனியறையிலும் கதீஜாவைப் பற்றி சில முணுமுணுப்புக்கள் இருந்தன. ஒரு பெண் அவளிடம் தெளிவாகவே கேட்டாள். அதுவும் சிறிது கிண்டல் கலந்த குரலில்... "உங்களுடைய மகள் கம்யூனிசத்தில் சேரப் போகிறாள் என்று கேள்விப்பட்டேன். உண்மையா?''
அப்போது தன் மகளைக் கொல்ல வேண்டும் போல குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு இருந்தது. எனினும் கொல்லவில்லை. காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என்று நம்பிக்கையுடன் அவள் அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தாள். ஆனால், நாட்களும் மாதங்களும் கடந்து போன பிறகும், ஒரு ஓசையும் அசைவும் இல்லாமல் இருக்கவே, அவள் ஆலிக்குட்டி ஹாஜியிடம் சொன்னாள்: "கதீஜாவின் விஷயத்தை என்ன செய்வது?''
"அவளுக்கு என்ன?''
"கல்யாணம் பண்ணி அனுப்ப வேண்டாமா?''
"அந்த பாவாக்குட்டி சிறு வயது பையனாச்சே! அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தால், சரியாக இருக்குமா?''
தலைத் துணியை இழுத்து தலையில் இட்டவாறு, துணியைச் சற்று விலக்கி கூர்ந்து ஒருமுறை பார்த்துவிட்டு குஞ்ஞிப் பாத்தும்மா கேட்டாள்:
"நீங்க மக்காவிற்கும் மதீனாவிற்கும் போனவர்தானே?''
"ஆமாம்.''
"நீங்க போனதும் நான் போகாததும் சரியாகிவிடும்.''
"என்ன சொல்ற?''
"அவன் வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவன்தானே?''
"யார் சொன்னாங்க?''
"அவங்களோட புத்தகமும் முஸ்லிம்களின் நூலும் வேறானதுதானே? பாவாக்குட்டி உண்மையிலேயே வேறு ஒரு மதத்தைச் சேர்ந்தவன்தானே?''
"அதெல்லாம் வெறுமனே சொல்லப்படுவது. அவன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன்தான்.''
"இருந்தாலும் அறிவு கெட்டவன்.''
"அது உண்மைதான். கொஞ்சம் கோபக்காரன்.''
"அப்படியென்றால்? திறமை உள்ள புதிய மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணினாலும், காம்பு பழுக்காத வெற்றிலையைப் போட்டாலும்... அதன் சுகமே வேறுதான். என்ன?''
"ம்... யோசிக்கிறேன்.'' - ஹாஜி அதைக் கூறிவிட்டு வியாபாரம் நடக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டார். குஞ்ஞிப் பாத்தும்மாவின் இதயத்தில் ஒரே போராட்டமாக இருந்தது. தலைமுடி வளர்த்த இளைஞனாக இருந்தாலும், அந்தச் சமயத்தில் அவள் ஏற்றுக் கொள்ளவே செய்வாள். சிந்தனைகளால் கனமாகிவிட்ட தலை. குஞ்ஞிப் பாத்தும்மா வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வடக்குப் பக்கம் இருந்த திண்ணைக்குச் சென்றாள். அங்கு, திண்ணையின் ஓரத்தில் தூணில் சாய்ந்து கொண்டு முழங்காலைச் சொறிந்து கொண்டு சோயுண்ணி உட்கார்ந்திருந்தான். குஞ்ஞிப் பாத்தும்மா மலர சிரித்துக் கொண்டே கேட்டாள்.
"நீ இரண்டு மாதங்களாக எங்கே போயிருந்தாய்?''
சோயுண்ணி கவலையுடன் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
"உனக்கு என்ன ஆச்சு?'' - குஞ்ஞிப் பாத்தும்மா இரக்கத்துடன் கேட்டாள்.
"ம்... ம்... '' - அவன் தலையை ஆட்டினான்.
"இருந்தாலும்...'' குஞ்ஞிப் பாத்தும்மா குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்: "குஞ்ஞம்மாவோடு சேர்ந்து வாழமுடியாத கவலையா?''
"எனக்கு அவள் வேண்டாம்.''
"பிறகு... பெண்ணோடு வாழணும்னு ஆசை வந்தால், கட்டிக் கொள்ள வேண்டியதுதான்.''
"அதுவல்ல... கஞ்சி வைத்துத் தந்து கொண்டிருந்த மாதவிக் கிழவி இறந்திடுச்சு... கஞ்சி வைத்துத் தர ஆள் இல்லை.''
"உண்மையாகவா? அப்படியென்றால் உனக்கு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ண முடியுமா?''
"எங்கேயிருந்து?''
அது ஒரு சிந்திக்க வேண்டிய விஷயமாக இருந்தது. எங்கேயிருந்து? இந்த பரந்த உலகத்தில் ஏராளமான பெண்களும் ஆண்களும் திருமணமே ஆகாமல் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், பெண்ணுக்கு ஒரு ஆண் இல்லை. ஆணுக்கு ஒரு பெண் இல்லை. குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு முழு உலகத்தின் மீதும் வெறுப்பு உண்டானது. அவள் வெற்றிலையில் சுண்ணாம்பைத் தேய்த்துக் கொண்டே நிலவும் நிலைமைகளைக் கேட்டறிந்தாள்.
"உனக்கு இப்போ எவ்வளவு நெல் கிடைக்கும்?''
"கடந்த அறுவடையில் இறுநூற்று பதினொரு பறை கிடைச்சுது.''
"குத்தகை போக...?''
"இல்லை. குத்தகையாக தொண்ணூற்று ஆறு பறை கொடுக்கணும்.''
"அப்படியென்றால்... நூற்று பதினைந்து... சரி... கையில் பணம் எவ்வளவு இருக்கு?''
"ஐந்நூறு ரூபாய்களும் ஒரு சீட்டும் இருக்கு.''
"சீட்டின் மதிப்பு?''
"இருநூறு.''
"எழுநூறு... ம்... உனக்கு இப்போ வயது என்ன?''
"தெரியாது.''
"சுமார்...''
"தெரியாது.''
"முப்பதுதானே?''
"ஆமாம்...''
"அப்படியென்றால்...'' - குஞ்ஞிப் பாத்தும்மா குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்: "உனக்கு இஸ்லாமாக ஆக பிரச்சினை இருக்குதா?''
சோயுண்ணி எதுவும் பேசவில்லை. குஞ்ஞிப் பாத்தும்மா கீழே போட்ட வெற்றிலையின் காம்பினை எடுத்துத் தரையில் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
"பிரச்சினை இருந்தால் வேண்டாம்.''
"இல்லை''
"உண்மையாகவா?''
"ஆமாம்...''
"அப்படின்னா, வழி உண்டாக்கிடுவோம்.''
குஞ்ஞிப் பாத்தும்மா இடையில் கட்டியிருந்த சங்கிலி எழுந்து இறங்கும் அளவிற்கு பெருமூச்சு விட்டுக் கொண்டு அழைத்தாள்: "கதீஜா...''
"என்ன உம்மா...?'' - உள்ளேயிருந்து ஒரு கிளியின் குரல்.
"இங்கே கொஞ்சம் வெற்றிலை எடுத்துட்டு வா. காம்பு பழுக்காததா பார்த்து எடுத்துக் கொண்டு வரணும்.''
"சரி உம்மா.''
சோயுண்ணி குஞ்ஞிப் பாத்தும்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதில் பல காட்சிகளும் பாய்ந்து பாய்ந்து போய்க் கொண்டிருந்தன. குஞ்ஞம்மாவும் சாத்தப்பனும் கோவிந்தக் குறுப்பும் கோபாலன் நாயரும் ஆரிய சமாஜமும் - எல்லாம். குஞ்ஞிப் பாத்தும்மா மீண்டும் அழைத்து சொன்னாள்: "காம்பு பழுக்காத வெற்றிலைதான் வேணும். உனக்கு கேட்கிறதா?''
"கேட்குது...''
ஒரு பிறப்பு
வெயில் இல்லை. மழையும் இல்லை. ஒரே மங்கலாக இருந்தது. பிரபஞ்சம் ஒரு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறது. கோவிந்தக் குறுப்பு தானிய அறையின் திண்ணையில் உட்கார்ந்து உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மழை பெய்யுமா? இல்லை. வெயில் இருக்குமா? உறுதியாகக் கூற முடியாது. பிரபஞ்சத்திற்கும் ஒரே நிலை இல்லை என்று குறுப்பிற்குத் தோன்றியது. சூரிய கதிர்கள் புன்னகையைத் தவழ விட்டு நின்று கொண்டிருக்கும்போது நாம் கூறுவோம்: "என் அழகான பிரபஞ்சமே!" என்று. அதைக் கூறி முடிப்பதற்கு முன்பே, காட்சி மாறி விடும். சூரியன் மேகங்களுக்கு மத்தியில் போய் மறைந்துவிடும். பிரபஞ்சத்தின் நிலைமை இப்படி நம்பிக்கையில்லாமல் இருக்கும்போது, அதன் படைப்பான மனிதனை எப்படி நம்ப முடியும்?
கோவிந்தக் குறுப்பு ஐந்து முறை இந்தக் கேள்வியைத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். எப்படி கேட்காமல் இருப்பார்? வாழ்க்கையின் அனுபவங்கள்தான் அவரை உட்கார வைத்து சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பே, சோயுண்ணியைப் பற்றி யாராவது ஒரு மோசமான வார்த்தையைச் சொன்னால் அதை கோவிந்தக் குறுப்பால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. குறுப்பு சாதாரணமாகவே அவனை "மடையா" என்று தான் அழைப்பார். ஆனால், "நல்லவனே" என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வார். தனிப்பட்ட முறையில் தன்னால் முடியக்கூடிய உதவிகளையெல்லாம் அவனுக்குச் செய்வார்.
சோயுண்ணி குஞ்ஞிப் பாத்தும்மாவின் சிஷ்யனாக ஆன பிறகும் அந்த உதவிகள் தொடர்ந்திருக்கின்றன. எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு, இறுதியில் அவருக்கே ஏமாற்றம் உண்டாகி விட்டதே? ஒரு நாள் காலையில் பார்க்கும்போது சோயுண்ணி அப்துல் ரஹிமானாகி நின்று கொண்டிருக்கிறான். அவன் திருடிவிட்டு சிறைக்குப் போய்விட்டான் என்று கேள்விப்பட்டால், குறுப்பு அதிர்ச்சியடைய மாட்டார். "மடையனுக்கு திருடத் தெரியாது" என்று நினைத்துக் கொண்டு அவனை விடுதலை செய்வதற்குத் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்துவார். அடிதடி ரகளை பண்ணினான் என்று வந்தால், சோயுண்ணியின் வீர சாகசங்களைப் பற்றி, அருகிலிருந்த தேநீர் கடையின் பெஞ்சின் மீது உட்கார்ந்து கொண்டு ஒரு சிறிய சொற்பொழிவே நடத்துவார். ஆனால், ஏமாற்றிவிட்டானே! இஸ்லாம் மதத்தில் சேர்ந்துவிட்டானே! அதை நினைத்தபோது, குறுப்பிற்கு கோபம் அதிகமானது. இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை மதம் மாறச் செய்வதைப் பற்றி எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா? ஆனால், ஒருத்தனும் எதிர்க்கவில்லை. உலகம் மோசமானதாக ஆகிவிட்டது. குறுப்பிற்கு இந்த முழு உலகத்தின் மீதும் வெறுப்பும் கோபமும் உண்டாயின. வெறுப்பும் கோபமும் வரும்போது, அது உலகத்தின் மீது முழுமையாகத்தானே? அப்துல் ரஹிமானை குறுப்பு இதுவரை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. எனினும், அவனுடைய புதிய உருவம் மனதிற்குள் நிழலிட்டிருந்தது. புள்ளிகள் போட்ட வேட்டி, வளர்த்து கத்தரித்த தாடி, தொப்பி- வேண்டாம்... பார்க்க வேண்டாம். இனிமேல் அழிக்கத்தான் வேண்டும். குறுப்பு மெதுவான குரலில் கூறினார்: "மடையன்... மடையன்... மடையன்.'' அப்போதும் பிரபஞ்சம் மங்கலாகத்தான் நின்று கொண்டிருந்தது. செடி கொடிகளுக்கு எந்தவொரு மாறுபாடும் உண்டாகவில்லை. ஒரு பல்லி மட்டும் எதிர்காலத்தை வாழ்த்தியவாறு, தானிய அறையின் உத்தரத்தை நோக்கி ஓடியது.
"என்ன குறுப்பு, சிந்தனையில் மூழ்கியிருக்கீங்க?'' -பின்னாலிருந்து ஒரு கேள்வி. திரும்பிப் பார்த்தார். கோபாலன் நாயரும் அச்சுதன் நம்பூதிரியும் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
"உட்காருங்க'' என்று கம்பீரமாக கூறிய குறுப்பு, ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு, ஒரு பீடியை கோபாலன் நாயரிடம் கொடுத்தார். நம்பூதிரியோ, தன் கையிடுக்கில் இருந்து ஒரு கட்டு தாள்களை எடுத்து முன்னால் வைத்தார். ஒரு கோழி முட்டையைத் தரையில் வைப்பதைப் போன்ற மென்மைத் தன்மையுடன் நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.
"என்ன ஒரு சிந்தனை?'' - நம்பூதிரிதான் ஆரம்பித்தார். குறுப்பு பேசவில்லை. மீண்டும் கேள்வி. மீண்டும் அமைதி. மூன்றாவது தடவையாகக் கேட்டபோது, குறுப்பு கண்ணாடியைக் கொஞ்சம் சரி செய்தார். பிறகு சொன்னார்:
"நீங்கள் எல்லாம் இருக்கும்போது இந்த நாடு சரியாக ஆகாது.''
"இல்லை'' - கோபாலன் நாயர் ஒப்புக்கொண்டார். "ஐந்தாறு பிள்ளைகளைப் பெற்றெடுப்பது, பணம் எதுவும் கையில் இல்லாமல் இருப்பது- இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்குறப்போ, நாடு சரியாக ஆகாது, குறுப்பு. சரியாக ஆகாது.''
"தமாஷாகப் பேசுவதை நிறுத்துங்க.'' - குறுப்பு கடுமையான மன நிலையில் இருந்தார்.
"இப்போ கூறியதைப் போன்ற ஆழமான விஷயங்களை மிகவும் குறைவாகவே நான் என்னுடைய வாழ்க்கையில் கூறியிருக்கிறேன். எல்லா நாட்களிலும் இதைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. சில நாட்கள் மட்டும் எனக்கு அறிவு உண்டாகும். மற்ற நாட்களில் அது இருப்பதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறேன்.''
"இன்று அறிவு உள்ள நாள்... அப்படித்தானே?'' - நம்பூதிரி சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கேட்டார்.
"ஆமாம்...'' - கோபாலன் நாயர் அமைதியான குரலில் தொடர்ந்து சொன்னார்: "சில நாட்களில் எனக்கு தற்கொலை செய்தால் என்ன என்று தோன்றும்.''
"அப்படியென்றால் ஊரில் இருந்து சுமை நீங்கியது'' - குறுப்பு சற்று பிடிவாதத்துடன் சொன்னார்.
"ஆனால், நம்முடைய கவலை என்னவென்றால், நல்ல நான்கு பிரி கயிறு கிடைக்கவில்லை. நம்முடைய கயிறு தொழில் அழிந்து கொண்டிருக்கிறது. இல்லையா குறுப்பு? இல்லாவிட்டால் இந்த குஞ்ஞம்மாவைப் போல உள்ளவர்கள் திரிக்கும் கயிறுக்கு அந்த அளவிற்குத்தான் உறுதி இருக்கும்.''
"குஞ்ஞம்மா இப்போது கயிறு திரிக்கும் வேலைக்கெல்லாம் போவதில்லை.'' -குறுப்பு அதை கோபத்துடன் கூறினார்.
"ஏன்?''
"கர்ப்பமாக இருக்கிறாள் அல்லவா?''
"எத்தனை மாதங்களாகி விட்டன?''
-அச்சுதன் நம்பூதிரி பதைபதைப்புடன் கேட்டார்.
"பத்து... இன்னொரு வகையில் பார்த்தால் இதையெல்லாம் என்னிடம் கேட்க வேண்டிய அர்த்தம் என்ன? சாத்தப்பனிடம் போய்க் கேளுங்கள்.''
"கேட்க வேண்டியது அவனிடம்தான்'' - கோபாலன் நாயர் ஒப்புக்கொண்டார். "ஆனால், அவர்கள் இப்போது எப்படி வாழ்கிறார்கள், குறுப்பு?''
"திருடுவான்'' - குறுப்பு கோபத்துடன் சொன்னார். "என்னுடைய தேங்காய்கள் இருக்கின்றன அல்லவா? பிறகு... அவனுக்கு என்ன கவலை? இங்குதான் வேலை என்றொரு பெயர் வேறு.''
"தொழில் மோசம் இல்லை'' - நம்பூதிரி அமைதியான குரலில் கூறினார்: "நம்முடைய காலத்தில் லாபம் தரும் ஒரு தொழில் திருடுவதுதான். அது தனியாகவும் கூட்டத்துடனும் இருக்கலாம். இரண்டும் லாபத்தைத் தரக்கூடியதுதான்.''
கோபாலன் நாயர் சிரித்தார். கோவிந்தக் குறுப்பு அப்போதும் கம்பீரத்தை விடாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தார். பீடியை இழுத்துப் புகையை விட்டுக்கொண்டிருந்தார். புகைச் சுருள்கள் கனவுகளைப் போல காற்று வெளியில் தெளிவற்ற பல உருவங்களை வரைந்து கொண்டும் அழித்துக் கொண்டும் இருந்தன.
"நாங்க ஒரு விஷயத்திற்காகத்தான் வந்தோம்'' - நம்பூதிரி மெதுவான குரலில் ஆரம்பித்தார்.
"என்ன?'' - குறுப்பு கேட்டார்.
"இதோ பாருங்க'' - அச்சுதன் நம்பூதிரி தாளை எடுத்து நீட்டினார். கோவிந்தக் குறுப்பு வாங்கிப் பார்த்தார். சில பிறப்புச் சான்றிதழ்கள். எல்லாவற்றின் மீதும் வைலட் நிற பென்சிலால் "இந்த சொத்தின் எல்லா உரிமைகளும் நங்ஙேலி அந்தர்ஜனத்திற்குச் சொந்தமானவை" என்று எழுதப்பட்டிருந்தது. உண்மையிலேயே எல்லா சொத்துகளுக்கும் சொந்தக்காரி நங்ஙேலி அந்தர்ஜனம்தான். எனினும், மனைவியின் பெயர் இப்படி எழுதி வைக்கப்பட்டதற்காக நம்பூதிரி கவலைப்பட்டார். பழைய காலத்தில் நம்பூதிரிகள் தங்களின் மனைவிகளாக இருக்கும் அந்தர்ஜனங்களை ஆவணப் பலகையால் அடித்துக் கொண்டும், காதுகளை இழுத்து காயம் உண்டாக்கிக் கொண்டும், சூடு வைத்து துன்பம் தந்து கொண்டும் இருந்தார்கள். அவற்றையெல்லாம் நினைக்கும்போது அச்சுதன் நம்பூதிரிக்கு இதயத்தில் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக வரும். சான்றிதழ்களின் மீது மேலும் ஒரு விஷயத்தை எழுதுவார். உரிமை "நங்ஙேலி அந்தர்ஜனத்தின் கணவருக்குத்தான்" என்று.
கோவிந்தக்குறுப்பு சான்றிதழ்கள் அனைத்தையும் இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். பிறகு கேட்டார்: "இதெல்லாம் எதற்கு?''
"இந்த சொத்துகளைக் காட்டி, கொஞ்சம் பணம் கடனாகக் கிடைக்க வேண்டும். ஏதாவது வழி இருக்குதா?'' -கோபாலன் நாயர் கேட்டார்.
"போங்க... கேளுங்க...'' -சான்றிதழ்களை மேஜைமீது வைத்துவிட்டு குறுப்பு சொன்னார்.
"யாரிடம்?''
"அப்துல் ரஹிமானிடம். அவனை நீங்கள் எல்லாரும் சேர்ந்து பெரிய பணக்காரனாக ஆக்கிட்டீங்கள்ல! பணக்காரனா ஆக்கியதற்கான விளைவை இப்போ பார்த்தீங்கள்ல!''
"பார்த்தோம்'' - கோபாலன் நாயர்தான் பதில் சொன்னார். "அவனும் அவனுடைய மனைவியும் கஞ்சி குடிக்கலாம்.''
"இருந்தாலும், அந்த கதீஜாவைப் பார்த்தால் பட்டினி போட வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை'' -நம்பூதிரியும் ஒப்புக் கொண்டார். கோவிந்தக் குறுப்பு இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். "இதைப் பேசுறதுக்கு உங்களுக்கே வெட்கமாக இல்லையா? உங்களுக்கு எது இருந்தாலும் சரிதான். எப்படி இருந்தாலும் சரிதான். நான் அப்படிப் பழகவில்லை. இனிமேல் பழகிக்கொள்வதும் கஷ்டம்'' - கோவிந்தக் குறுப்பு வியர்வையில் கரைந்து கொண்டிருந்த சந்தனப் பொட்டை ஒற்றிக்கொண்டே தொடர்ந்து சொன்னார்:
"நம்ம எல்லாரையும் அந்த மடையன் முட்டாள்களா ஆக்கிட்டானே!''
"அவன் என்ன செய்தான்.''
"தொப்பி அணிந்துவிட்டான்.''
"பனி விழாமல் இருக்கலாமே!'' - கோபாலன் நாயர் அமைதியான குரலில் சொன்னார். "மனித சமுதாயம் ஆடைகள் அணிவதில் அவ்வப்போது பல மாறுதல்களையும் உண்டாக்கி இருக்கிறது. இல்லையா, நம்பூதிரி அய்யா?''
"ஆமாம்...''
பச்சிலைகள், மரத்தோல்கள், மிருகங்களின் ரோமம், பருத்தித் துணி, பட்டாடைகள்- இப்படி ஆடைகளில் வந்த மாற்றங்கள், பிறகு முறைகளில் வந்த மாறுதல்கள்- இவற்றைப் பற்றியெல்லாம் பத்து நிமிடங்கள் நீடித்துக் கொண்டிருந்த ஒரு சொற்பொழிவை கோபாலன் நாயர் செய்தார். வெறும் வரலாற்று விவரிப்பு. நம்பூதிரிக்கு மிகவும் பிடித்திருந்தது. புரட்சி வெற்றி பெறட்டும் என்று கூறிவிடலாமா என்றுகூட அவர் சிந்தித்தார். எனினும், கூறவில்லை.
"நீங்கள் இன்றைக்கு என்னை ஒரு வழி பண்ண வேண்டும் என்றே வந்தீர்களா?'' - கோவிந்தக் குறுப்பு கேட்டார்.
"இல்லை'' - நம்பூதிரி சொன்னார்: "எங்கிருந்தாவது கொஞ்சம் பணம் உண்டாக்கணும். வீட்டு வேலை பாதியில் நின்று கொண்டிருக்கிறது. ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுத்துவிடலாம்.''
"அப்துல் ரஹிமானிடம் கேட்க வேண்டும்.''
"அவன் தொப்பி அணிந்தால் நாம என்ன செய்றது?''
"சரி பண்ணணும்'' - கோவிந்தக் குறுப்பு சிறிது அமைதியாக ஆனார். "அவன் கைவசம் இருக்கும் நிலம் நம்பூதிரி அய்யா, உங்களுடைய தாய் வழியில் வந்தது. அதை வாங்கி ஏதாவது இந்துக்களுக்குக் கொடுத்து விட வேண்டும். என்ன?''
"நல்லது'' - கோபாலன் நாயர் மூக்கையும் தாடையையும் தடவினார். "இனி அவனும் தொப்பி அணிந்தால், வேறொரு ஆளுக்கு வாங்கிக் கொடுத்துவிடலாம் அல்லவா? சான்றிதழ்கள் அதிகமாகட்டும்.''
கோவிந்தக் குறுப்பிற்கு அதிகமான கோபம் வந்தது. அதனால் அவர் அமைதியாக இருந்தார். கோபாலன் நாயரும் பேசாமல் இருந்தார். நம்பூதிரியும். ஒன்றோடொன்று கலந்த நிமிடங்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன. கோபாலன் நாயர் பாக்கெட்டைத் தடவி பீடியை எடுத்து கோவிந்தக் குறுப்பிற்குக் கொடுத்தார். தானும் ஒன்றைப் புகைத்தார். அப்படியே புகையைவிட்டவாறு எல்லாரும் பிரபஞ்சத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் அது மங்கலாகவே இருந்தது. சில வெள்ளை மேகங்கள் சுருண்டு, மடிந்து, நெளிந்து, நிமிர்ந்து படுத்து மறைந்து கொண்டிருந்தன. மரங்கள் அசையவில்லை. செடிகள் அசையவில்லை. புற்களும் அசையவில்லை. எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தன.
"குறுப்பு அய்யா'' -வாசலில் இருந்து ஒரு அழைப்பு. அங்கு சாத்தப்பன் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக்கொண்டு நின்றிருந்தான்.
"என்ன சாத்தப்பா?'' - குறுப்பு கேட்டார்.
"பிரசவம்...''
"என்ன?''
"பிரசவம்... குடிசையில் பிரசவம்...''
"ஓஹோ! பெற்று விட்டாளா?''
"இல்லை. நேற்று காலையில் தொடங்கியது. இப்போதும் பிரசவம் ஆகவில்லை.''
"அதற்குப் பிறகு எதுவும் செய்யலையா?''
"மந்திரச் செயல் செய்து பார்த்தாச்சு. குழந்தை உள்ளே நெளிஞ்சுக்கிட்டு இருக்கு.''
"டாக்டரிடம் காட்ட வேண்டியதுதானே?'' -நம்பூதிரி கேட்டார்.
"அவளை இப்போ என்ன செய்யிறது? எனக்கு எதுவும் தெரியாது, குறுப்பு அய்யா.''
காட்சி மாறியது. கோபாலன் நாயரின் முகத்தில் ஒரு மிடுக்கு- குறுப்பின் முகத்திலும். நம்பூதிரியும் திகைத்துப் போய்விட்டார்.
"என்ன செய்யணும், கோபாலன் நாயர்?''
"அதைத்தான் நானும் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன் குறுப்பு.''
"ஏதாவது செய்யாமல் இருக்க முடியுமா?'' - நம்பூதிரி.
"இரண்டு நாட்கள் ஆயிடுச்சே!''
"ஒரு காரியம் செய்யட்டுமா, குறுப்பு. மருத்துவமனைக்குக் கொண்டு போனால் என்ன?''
"சரி. சாத்தப்பா. அவளை மருத்துவமனைக்குக் கொண்டு போகலாம்.''
"அய்யோ குறுப்பு அய்யா... அவளை சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டாம்.''
"பிறகு... அவளைக் கொல்லணும்னா நினைக்கிறே?''
"சிகிச்சைக்குப் போனால், அவளை வெட்டி அறுப்பாங்க...''
"முட்டாள்! இப்படியெல்லாம் யார் உன்னிடம் சொன்னது? ம்... நானும் வர்றேன்.''
"நாங்களும் வர்றோம்'' - கோபாலன் நாயரும் சொன்னார்.
"எப்படி குறுப்பு அய்யா, அவளைக் கொண்டு போவது? நடக்கவே முடியாதே!''
அது ஒரு பிரச்சினையாக இருந்தது. மருத்துவமனை மூன்றரை மைல் தூரத்தில் இருந்தது. படகுத் துறையில் இருந்து மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை அடைய இரண்டு மணி நேரம் ஆகும். அதுவரை எப்படிப் போய்ச் சேர்வது? "ஒரு கட்டில் கிடைத்தால் நல்லது'' - கோபாலன் நாயர் தன் கருத்தைச் சொன்னார்.
"கட்டில் எங்கே இருக்கு?'' - குறுப்பு கேட்டார்.
ஆலிக்குட்டி ஹாஜியின் வீட்டில் ஒரு கட்டில் இருக்கிறது என்ற கதையை கோபாலன் நாயர் கேட்டிருக்கிறார்.
"ஆனால், அதைத் தருவாரா?'' - குறுப்பிற்கு ஒரு சந்தேகம்.
"மனிதர்கள்தானே? தராமல் இருப்பார்களா?'' என்று அச்சுதன் நம்பூதிரி சொன்னார். எனினும் குறுப்பிற்கு நம்பிக்கை வரவில்லை. இறுதியில், தான் போய் கேட்கப் போவதாக கோபாலன் நாயர் சொன்னார். நம்பூதிரியும் கோபாலன் நாயரும் குடையையும் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அப்போது கோவிந்தக் குறுப்பு தன்னுடைய தொப்பை விழுந்த வயிற்றைத் தடவி விட்டவாறு சாத்தப்பனிடம் சொன்னார்: "சாத்தப்பா, சீக்கிரமா ஏற்பாடு பண்ணு.''
உண்மையிலேயே குஞ்ஞிப் பாத்தும்மாவிடம் சென்று கேட்பதற்கு கோபாலன் நாயருக்கும் சிறிது பயமில்லாமல் இல்லை. அந்த நாக்கு ஏதாவதொரு இடத்தில் படத்தை விரித்தது என்றால், கோபாலன் நாயரும் அச்சுதன் நம்பூதிரியும் காற்றில் சருகைப் போல பறந்து விடுவார்கள். எனினும், சந்தர்ப்பம் அப்படிப்பட்டதாயிற்றே! எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்துக்கொண்டே அவர்கள் வெளியேறினார்கள். "நம்பூதிரி! அந்த உம்மா வாய்க்கு வந்தபடி ஏதாவது பேசினால் நான் என்னைப் பற்றி அல்ல - நம்பூதிரியைப் பற்றித்தான் கவலைப்படுறேன் என்று நடிப்பேன்.''
"நான் உங்களைப் பற்றிக் கவலைப்படுறதா சொல்வேன்.''
கோபாலன் நாயர் ஆலிக்குட்டி ஹாஜியின் வீட்டு வாசலில் கால் வைத்தபோது, அங்கு யாரும் இல்லை. அவர் மெதுவாக இருமினார்.
"யார் அது?'' - உள்ளேயிருந்து ஒரு கேள்வி.
"நான்.''
வாசலில் தொங்க விடப்பட்டிருந்த திரைச்சீலையின் வழியாக குஞ்ஞிப் பாத்தும்மாவின் தலை தெரிந்தது. "ஆ... நாயரா? என்ன நாயர்?''
அடடா! அமைதியாகத்தான் பேசுகிறாள். கோபாலன் நாயர் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சின்மீது உட்கார்ந்தார். நம்பூதிரியும். மெதுவாக நலம் விசாரிப்புகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் பிறகு விஷயம் கூறப்பட்டது.
அந்தக் கட்டிலை யாராவது கேட்டு வந்தால், அது குஞ்ஞிப் பாத்தும்மாவிற்கு பிடித்திருந்தது. அந்தப் பகுதியில் அவளிடம் மட்டுமே அந்த கட்டில் இருக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், அது குஞ்ஞிப் பாத்தும்மாவின் சொந்த சொத்து. ஆலிக் குட்டி ஹாஜிக்கு அதன் மீது எந்த உரிமையும் இல்லை. அவள் தன்னுடைய வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தது அது.
அந்தக் கட்டிலைப் பற்றி ஏராளமான கதைகள் இருந்தன. முத்தாப்பனின் வாப்பாதான் அதை உருவாக்கினார். அதன் சிவப்பு நிறத் துணிகள் சீனப் பட்டால் உண்டாக்கப்பட்டவை. அலங்காரத் தொங்கல்கள் ஏழு கடல்களுக்கு அப்பால் தயாரிக்கப்பட்ட ஜரிகைகளைக் கொண்டு உண்டாக்கப்பட்டவை. முத்தாப்பா அதில் ஏறி முஸ்லிம் மதத் தலைவரைப் பார்ப்பதற்காக குண்டோட்டி வரை போயிருக்கிறார். பிறகு நிறைய பேர் பல முறை அதில் ஏறி பல இடங்களுக்கும் போயிருக்கிறார்கள். "இந்த உலகத்தில் மக்காவிற்கும் மதினாவிற்கும் மட்டுமே இந்தக் கட்டில் போக வேண்டியதிருக்கிறது'' என்று குஞ்ஞிப் பாத்தும்மா கூறுவாள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். கட்டிலைக் கடனாகக் கேட்பதற்கு செல்பவர்கள் இந்தக் கதை முழுவதையும் அமர்ந்து கேட்க வேண்டும். அதுதான் சம்பளம். கோபாலன் நாயரின் முன்பும் குஞ்ஞிப் பாத்தும்மா இந்தக் கட்டை அவிழ்த்தாள். பொறுமையுடன் அதைக் கேட்காமல் இருக்க முடியுமா?
"எவ்வளவு புதிய மாப்பிள்ளைகள் இந்தக் கட்டிலில் ஏறி வந்திருக்கிறார்கள் என்று தெரியுமா? அன்று இதன் சத்தம் ஒரு மைல் தூரம் வரை கேட்கும். சில நேரங்களில் இரண்டு மைல் தூரம்கூட கேட்கும். அந்த அளவுக்கு கம்பீரமானது இது!''
"உம்மா, பெருமைப் பேச்சை நிறுத்தி விட்டு, அந்தக் கட்டிலைக் கொடுத்து விடுங்க. ஒரு பெண் பிரசவ வலி எடுத்து நிற்கிறப்போ, உங்க பெருமைப் பேச்சு...'' - உள்ளே இருந்து கதீஜா ஞாபகப்படுத்தினாள். "ஓ.. என்கிட்ட சொல்லாதே. நானும் பிள்ளை பெற்றவள்தான்'' -உள்ளே பார்த்துக்கொண்டு குஞ்ஞிப் பாத்தும்மா சொன்னாள். "உன்னோட புதிய மாப்பிள்ளையிடம் அதைக் கழற்றி கொடுக்கும்படி சொல்லு...''
அந்தக் கட்டளை அப்துல் ரஹிமான் என்ற சோயுண்ணியை வெளியே கொண்டு வந்தது. கோபாலன் நாயரும் நம்பூதிரியும் அவனையே பார்த்தார்கள். தலையில் அவன் ஒரு தொப்பியை அணிந்திருந்தான். அவ்வளவுதான். அதுவும் ஒரு துருக்கி தொப்பி. ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். நலம் விசாரித்துக் கொண்டார்கள். எதுவும் நடந்ததாக யாரும் காட்டிக் கொள்ளவில்லை. சோயுண்ணி என்ற அப்துல் ரஹிமானுக்கு மனம் நிம்மதியாக இருந்தது. அவன் கட்டிலை உத்தரத்திலிருந்து கழற்றி கீழே இறக்கினான். அதன் பட்டுத் துணிகளில் இருந்து தூசியும் மூட்டைப் பூச்சிகளும் சிறு உயிரினங்களும் அந்தப் பெரிய சரீரத்தின் ஏதோ சில பகுதிகளின் மீது விழுந்தன.
"வர்றீயா?'' - கோபாலன் நாயர் அவனிடம் கேட்டார்.
"இல்லை'' -அப்துல் ரஹிமான் சொன்னான்.
"போங்க...'' - உள்ளேயிருந்து ஒரு கிளியின் குரல். "மனிதர்கள் இயலுமானால், தங்களால் முடியக்கூடிய உதவிகளைச் செய்யணும்னு நினைக்கணும்.''
"அவங்க விஷயத்தைச் சொன்னாங்க'' - நம்பூதிரி தாளம் தட்டினார். அதைக் கேட்டு சந்தோஷப்பட்ட குஞ்ஞிப் பாத்தும்மா இப்படிச் சொன்னாள். "அது என் மகள், நம்பூதிரி அய்யா.''
"புரியுது''.
அப்துல் ரஹிமான் அதற்குப் பிறகும் தயங்கிக் கொண்டு குஞ்ஞிப் பாத்தும்மாவின் முகத்தையே பார்த்தான்.
"போயிட்டு வா. பிள்ளை பெறுவதற்கு இருக்குறப்போ, பிறகு போக வேண்டாமா?''
அந்த வகையில் மூன்று பேரும் சேர்ந்து கட்டில், மரக்கொம்புகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார்கள். மரக் கொம்புகளை அப்துல் ரஹிமான் சுமந்தான். எல்லாரும் அமைதியாக நடந்தார்கள். கோபாலன் நாயரின் தலைக்கு உள்ளே பற்பல காட்சிகளும் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. மனிதனின் இருப்பைப் பற்றிய சிந்தனைகள்!
முடியாத, முடிக்கவே இயலாத கவலைகளும் இருக்கின்றனவா? விலகிப் போவதைவிட நெருங்குவதில்தானே மனிதனுக்கு ஆசை அதிகம்? எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இதயத்தின் ஆழமான தளங்களில் இருந்து ஒரு இளகிய ஆட்டம்.
அந்த சமயத்தில் உலக அமைதிக்கான விருதை அப்துல் ரஹிமானுக்குத்தான் அளிக்க வேண்டும் என்றுகூட கோபாலன் நாயர் நினைத்தார். அவர் தனக்குள் கூறிக்கொண்டார். "அவன் ஒரு மனிதன்... சாதாரண மனிதன்!''
சாத்தப்பனின் குடிசை வாசலை அடைந்தார்கள். அங்கு ஒரு குடையின்மீது கோவிந்தக் குறுப்பு சாய்ந்து கொண்டு நின்றிருந்தார். சாத்தப்பன் விரலை மடக்கிக்கொண்டும் நீட்டிக்கொண்டும் அலட்சியமாக எங்கோ தூரத்தில் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். உள்ளேயிருந்து முனகல்கள், முணுமுணுப்புகள், பெருமூச்சுடன் வந்த தேம்பல்கள்... ஒரு மனித மனதின் துன்பமான வேளையின் வேதனைகள்!
"போகலாமா?'' - கோபாலன் நாயர் கேட்டார்.
"ம்...''
"கட்டிலை மாட்ட வேண்டாமா? யார் தூக்குவது?'' - நம்பூதிரிதான் அந்த பிரச்சினையைக் கிளப்பினார். சாத்தப்பன் அங்கு இருந்தான். கடந்தவற்றையெல்லாம் மறந்துவிட்டு குஞ்ஞம்மாவின் தந்தையும் அங்கு வந்து சேர்ந்தான். மாற்றிப் பிடிப்பதற்கு மேலும் இரண்டு ஆட்கள் இல்லாமல் புறப்பட முடியாது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த உண்ணுலிக் கிழவியின் மகன் தன்னுடைய சேவையை உறுதிப்படுத்தினான். "இன்னொரு ஆளும் இருந்தால்...!'' - குறுப்பு விரும்பினார். "அங்கே கிளம்பிடலாம். அதுதான் நல்லது'' -சொன்னது அப்துல் ரஹிமான்.
இதற்கிடையில் கட்டில் மாட்டப்பட்டு முடிந்தது. குஞ்ஞம்மாவை எடுத்துக்கொண்டு வந்து படுக்கவும் வைத்துவிட்டார்கள். அவள் அப்போதும் முனகிக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருந்தாள். அந்த முன்னால் தள்ளிய வயிறு சற்று குறைந்திருந்ததைப் போலத் தோன்றியது. நம்பூதிரி கண்களைத் திருப்பிக் கொண்டார்.
சாத்தப்பனும் உண்ணுலிக் கிழவியின் மகனும் சேர்ந்து மரக்கொம்பைத் தாங்கி, முன்னோக்கி நடந்தார்கள்.
ஹோம்... ஹிம்... ஹோம்... ஹிம்...
ஹோம்... ஹிம்... ஹோம்... ஹிம்...
கட்டில் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எல்லாரும் அமைதியாகப் பின்னால் நடந்தார்கள். ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஒவ்வொரு வகையான உணர்ச்சிகள்... எல்லா முகங்களும் கனமாக இருந்தன. அப்துல் ரஹிமான் மட்டும் கை வீசி கை வீசி நடந்தான். அவ்வப்போது தன்னுடைய தொப்பியை எடுத்து மேலே தூக்கி, வியர்வையைத் துடைத்துவிட்டு அங்கேயே வைத்தான். வேலியின் அருகில் பெண்கள் வந்து வந்து பார்த்தார்கள். என்னவோ முணுமுணுத்தார்கள். அந்தக் கூட்டத்தில் மாதவியம்மாவும் இருந்தாள். அவள் கோபாலன் நாயரிடம் கேட்டாள். "எங்கே போறீங்க?'' "மருத்துவமனைக்கு.''
"குஞ்ஞம்மாதானே?''
"ஆமாம்...''
"என் கடவுள்களே!''
"பேசாமல் போங்க'' - கோபாலன் நாயர் வேகமாக நடந்தார். கட்டில் நகர்ந்து கொண்டிருந்தது.
ஹோம்... ஹீம்... ஹோம்... ஹீம்...
ஹோம்... ஹீம்... ஹோம்... ஹீம்...
"கொஞ்சம் நில்லுங்க'' - உண்ணுலிக் கிழவியின் மகன் சொன்னான். அவன் தளர்ந்து விட்டிருந்தான்.
"நான் மாற்றிப் பிடிக்கிறேன்'' - அப்துல் ரஹிமான் முன்னால் வந்தான். கோபாலன் நாயரும் கோவிந்தக் குறுப்பும் ஒருவரையொருவர் பார்த்தார்கள். ஒரு தலைப் பகுதியில் சாத்தப்பன், இன்னொரு தலைப்பகுதியில் அப்துல் ரஹ்மான். நடுவில் முனகிக்கொண்டிருக்கும் குஞ்ஞம்மா. அப்படியே அந்தக் கட்டில் முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மீண்டும் நம்பூதிரி குறுப்பின் முகத்தைப் பார்த்தார். குறுப்பு கோபாலன் நாயரின் முகத்தையும். கோபாலன் நாயர் சொன்னார். "அவன் மனிதன்... சாதாரண மனிதன்...!''
கட்டில் முனகி முனகி முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பிரபஞ்சம் அப்போது மங்கலாக நின்றிருந்தது. வானத்திலிருந்து சில முனகல்களும் முணுமுணுப்புகளும் கேட்டன. ஆனால், ஒளி எதுவும் விழவில்லை. "இனி முனக வேண்டாம்.'' -அந்த ஆணையைக் கொடுத்தவர் கோபாலன் நாயர்தான். முனகல் நின்றது. கட்டில் அமைதியாக நகர்ந்தது.
"என்ன?'' -குறுப்பு பதைபதைப்புடன் கேட்டார்.
"பள்ளி வாசலுக்கு முன்னால் வந்திருக்குல்ல!''
"அவ்வளவுதானா? துடைப்பம், கூடை, முறம் என்று கோஷங்கள் போட்டவாறு ஒருத்தன் போறதைப் பாருங்க. அப்போது?''
"குறுப்பு, அறிவுப்பூர்வமாகப் பேசுவதற்கு இது நேரமல்ல. அறிவுப்பூர்வமான வாதம் தொடர்ந்தால் கோவிலும் பள்ளி வாசலும் உண்டாகவில்லை என்றும் வரும். கட்டில் முனகுவதை விட முக்கியமானது குஞ்ஞம்மா அமைதியாகப் பிரசவம் ஆவதுதான்."
குறுப்பிற்கு அப்படியொன்றைக் கூற வேண்டும் என்று தோன்றியது. அது சற்று விவேகமற்றதாகத் தெரிந்தது. அவர் தோளைக் குலுக்கிக் கொண்டு அமைதியாக நடந்தார்.
கட்டிலை இறக்கி குஞ்ஞம்மாவை மருத்துவமனையின் அறைக்குள் கொண்டு போய்ப் படுக்க வைத்துவிட்டுத் திரும்பி வந்தபோது அப்துல் ரஹிமான் நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தான். முத்து மணிகளைப் போல அவை உதிர்ந்து விழுவதை கோவிந்தக் குறுப்பு பார்த்தார். அத்துடன் அவருடைய இதயத்தில் ஒரு ஊசிக் குத்தலும் ஆரம்பமானது. "பாவம், எவ்வளவு நல்ல மனிதன்!''
டாக்டர் வந்தார். சோதித்துப் பார்த்தார். ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்றார். பதைபதைப்பான சூழ்நிலை. யாரும் பேசவில்லை. மூச்சு விடவில்லை. ஊசி விழுந்தால் கேட்கலாம்.
காற்று வெளியில் கார்மேகங்கள் தோளோடு தோள் சேர்ந்து உரசி, மோதி, தலைகுப்புற விழுந்தன. தொடர்ந்து இரண்டு இடிச் சத்தங்கள்... குறுப்பும் கோபாலன் நாயரும் அதிர்ச்சியடைந்தார்கள். சாத்தப்பன் மருத்துவமனையின் திண்ணையில் போய் சுருண்டு உட்கார்ந்திருந்தான். அச்சுதன் நம்பூதிரி அவ்வப்போது கைகடிகாரத்தைப் பார்த்தார். முள் நகரும்போது இதயத்தில் ஒரு துடிப்பு!
ஒரு மெல்லிய காற்று வீசியது. சர சர என்று மழைத்துளிகள் உதிர்ந்தன. திடீரென்று ஆபரேஷன் தியேட்டரின் கதவைத் திறந்து கொண்டு மிட் வைஃப் வெளியே வந்தாள்.
"என்ன?'' - கோபாலன் நாயர் கண்களால் கூர்ந்து பார்த்துக் கொண்டு கேட்டார். அந்தப் பெண் புன்னகை ததும்ப அவரை ஒருமுறை பார்த் தாள். பிறகு மெதுவான குரலில் சொன்னாள். "ஆண் குழந்தை!''
"அவள்...? குஞ்ஞம்மாச் சோத்தியார்?'' -அப்துல் ரஹிமானும் சாத்தப்பனும் முன்னாலும் பின்னாலுமாக பதைபதைப்பைக் காட்டினார்கள்.
"விசேஷமாக ஒண்ணுமில்லை'' -மிட் வைஃப் மீண்டும் புன்னகையைத் தவழவிட்டாள்.
எல்லாரும் வாசல் திண்ணையின் ஓரத்திற்குச் சென்று அமர்ந்தார்கள்.
"ஹாவ்...''
"சிவனே!''
"படைத்தவனே!''
அந்த நேரத்து சிந்தனைகள் அமைதியாக ஒரே தாளலயத்தில் ஓடிக்கொண்டிருந்தன. சாத்தப்பனின் இதயத்தில் ஒரு துணித்தொட்டில் ஆடிக்கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. கோவிந்தக் குறுப்பு "வீரா வீராடா குமாரா'' என்று முனகிக் கொண்டே தன்னுடைய தொப்பை வயிறை ஒரே மாதிரி தடவிக் கொண்டிருந்தார். பலமாக முறுக்கிக் கொண்டிருந்தவை அனைத்தும் அவிழ்ந்துவிட்டன. ஒரு சுமை இறங்கிவிட்டது. அப்படி இருக்கும்போது அதோ... ஒரு புதிய உயிரின் அழுகைச் சத்தம் வருகிறது. "கிள்ளே... கிள்ளே... கிள்ளே...''
அந்த அழுகைச் சத்தம் வானத்தின் விளிம்பு வரை போய் மோதவில்லை. எனினும், கோபாலன் நாயருக்கு அப்படித் தோன்றியது.
"அது நல்லது!'' என்று கூறிச் சிரித்துக் கொண்டே அப்துல் ரஹிமான் எழுந்து நடந்தான்.
"நில்... நாங்களும் வர்றோம்'' -குறுப்பு அழைத்துச் சொன்னார்.
"நான் போறேன்'' -அந்த பெரிய சரீரம் மழைச் சாரல்களுக்கு மத்தியில் அப்படியே நகர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. எல்லாரும் திகைத்துப் போய் அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
அப்துல் ரஹிமான் ஒரு பாதையில் மறைந்தவுடன் குறுப்பு ஒரு நீண்ட பெருமூச்சைவிட்டார். "இவன் யார்?''
"ஒரு சாதாரண மனிதன்!'' - கோபாலன் நாயர் திடீரென்று பதில் சொன்னார். பிறகு யாரும் எதுவும் சொல்லவில்லை. குழந்தையின் அழுகைச் சத்தம் மேலும் சற்று உரத்துக் கேட்டது. மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. நீர்த் துளிகள் மருத்துவமனையின் வாசலில் பிஞ்சு குழந்தைகளைப் போல தாவி விளையாடிக் கொண்டிருந்தன.
"போகலாமா?''
"சரி...''
சிறிது பணம் கொடுத்து சாத்தப்பனை அங்கே இருக்குமாறு கூறிவிட்டு, அந்த மூன்று நண்பர்களும் இரண்டு குடைகளில் அப்படியே நடந்து செல்லும்போது குறுப்பிற்கொரு சந்தேகம்: "குழந்தை யாருடைய சாயலில் இருக்கும்? சாத்தப்பனின் சாயலில் இருக்குமா? குஞ்ஞம்மாவின் சாயலிலா?''
"என்னுடைய சாயலில் இருக்காது. அது மட்டும் உறுதி'' - நம்பூதிரி மெதுவான குரலில் சொன்னார். கோபாலன் நாயர் மிடுக்கான குரலில் சொன்னார். "நம்பூதிரி, சான்றிதழ்கள் கட்டு நனையாமல் பத்திரமாக வைத்திருங்கள்.''
நம்பூதிரி பதைபதைத்து, கையிடுக்குள் இருந்து தாள்களின் கட்டை எடுத்துப் பார்த்தார். வைலட் பென்சிலால் ஆன எழுத்துக்கள் மழைச்சாரல் பட்டு அழிந்தன. நங்ஙேலி அந்தர்ஜனத்தின் மீதுதான்! நம்பூதிரிக்கு சந்தோஷம் உண்டானது.
அந்த நண்பர்கள் சேற்றில் கால்களை ஊன்றாமல், தாவித் தாவி முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.