Logo

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6620
en thathavukku oru yanai irunthathu

சுராவின் முன்னுரை

வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) எழுதிய பல படைப்புகளை இதற்கு முன்பு நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவ்வரிசையில் நான் மொழிபெயர்த்திருக்கும் இன்னொரு மிகச் சிறந்த புதினம் ‘என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ (Enn Thaathaavukku oru yaanai irundhathu).

இதில் கதாநாயகியாக வரும் குஞ்ஞுபாத்தும்மாவையும், அவளுடைய அன்னையையும் யாரால் மறக்க முடியும்?

சாகாவரம் பெற்ற இந்த கதாபாத்திரங்களைப் படைத்த பஷீரைத்தான் நம்மால் மறக்க முடியுமா?

வறுமையிலும் பிரச்சினைகளிலும் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும், கடந்து சென்ற பொன்னான நாட்களையும், பழம் பெருமைகளையும் பேசிக் கொண்டு மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் மாந்தர்களை இப்போதுகூட நாம் தினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

1951-ஆம் ஆண்டில் பஷீர் எழுதிய இப்புதினம் எத்தனையோ வருடங்கள் கடந்தோடிய பிறகும், மக்களின் மனங்களில் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பஷீரின் அபாரமான கதை கூறும் திறமையும், வியக்கத்தக்க எழுத்தாற்றலும், ஆழமான அறிவும், கூர்மையான பார்வையும், விசாலமான உலக அனுபவங்களும்தான்.

குர் ஆனில் இடம் பெற்றிருக்கும் பல அற்புதமான விஷயங்களையும் இந்தக் கதை முழுக்க பொருத்தமான இடங்களில் கொண்டு வந்திருக்கிறார் பஷீர்.

குர் ஆனிலிருக்கும் மிகச் சிறந்த கருத்துகளையும் தத்துவங்களையும் இந்த அளவிற்கு பஷீரைத் தவிர, வேறு யாரும் தங்களின் புதினங்களின் மூலம் வெளிப்படுத்தி இருக்க வாய்ப்பில்லை.

அந்த பெருமகிழ்ச்சியுடன் இந்த நூலை உங்களுக்கு முன்னால் சமர்ப்பணம் செய்கிறேன்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


த்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததுபோல் இருக்கிறது. அதாவது- நான் சொல்ல வருவது என்னவென்றால் சிறு பிள்ளையாய் இருந்த காலம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு என்பதைத்தான். அதற்குப் பிறகு வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துவிட்டன. அவை எல்லாவற்றையும் ஒரு விளையாட்டு என்பது மாதிரியேதான் இப்போதும் குஞ்ஞு பாத்தும்மா நினைத்துப் பார்க்கிறாள். வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன என்பது சொல்லப்போனால் அவளுக்கே தெரிய வில்லை. உண்மையிலேயே அது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். எதுவும் யாரின் பிடியிலும் இல்லை அல்லவா? என்ன செய்வது? தேம்பி அழவேண்டும் போல் தோன்றும். இதயத்தைத் திறந்து குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வேண்டும்போலவும் இருக்கும். அழுவதைவிட சிரிப்பதுதானே நல்லது! அதை எண்ணி எண்ணி அவள் தனக்குத்தானே புன்னகைப்பாள்.

யாரையும் இந்த நிமிடம் வரை குஞ்ஞுபாத்தும்மா வேதனைப் படுத்தியதில்லை. ஒரு எறும்புக்குகூட அவள் கெடுதல் செய்ததில்லை என்று எங்கு வேண்டுமானாலும் சத்தியம் பண்ணி கூறலாம். ரப்புல் ஆலமீன் தம்புரானின் படைப்புகளில் ஒன்றைக்கூட அவள் இதுவரை வெறுத்ததில்லை. சிறு வயதிலிருந்தே எல்லா உயிரினங் கள்மீதும் அவளுக்கு விருப்பம் அதிகம்தான். அவள் முதன்முதலாக அன்பு வைத்தது ஒரு யானை மேல்தான். ஒருமுறைகூட அந்த யானையை அவள் பார்த்ததில்லை. இருந்தாலும் அதன்மீது அவள் அன்பு வைத்தாள். அதைப்பற்றி அவள் கேட்க நேர்ந்தது இப்படித்தான்:

அப்போது அவளுக்கு சுமார் ஏழு வயது இருக்கும். இல்லா விட்டால் எட்டு இருக்கும். அதற்குமேல் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் அவளுக்கு ஒரு கட்டுப்பாடு போடப்பட்டிருந்தது. கட்டுப்பாடு விதித்தது அவளின் தந்தை அல்ல. தாய். விஷயம் வேறொன்றுமில்லை. முஸ்லிம்களாக இருந்தாலும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடக் கூடாது- இதுதான் அவளுக்கு போடப்பட்டிருந்த கட்டுப்பாடு. சுருக்கமாக சொல்லப்போனால் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் அவள் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி கட்டுப்பாடு விதித்ததற்குக் காரணம் என்ன? உலக பிரசித்தி பெற்ற அந்த ரகசியத்தை அவளின் தாய் அவளிடம் கூறினாள்:

“என் தங்கம் குஞ்ஞுபாத்தும்மா... நீ யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாக்கும்! உன்னோட தாத்தாவுக்கு சொந்தமா ஒரு யானை இருந்தது. பெரிய ஒரு ஆண் யானை!”

“என் செல்ல யானையே!” என்று அன்று முதல் தினமும் தனக்குத் தானே, நூறு முறையாவது கூறிக்கொள்ள ஆரம்பித்தாள். யானை யுடன் விளையாடித்தான் குஞ்ஞுபாத்தும்மா வளர்ந்ததே. அதாவது- அந்த யானையைப் பற்றிய நினைவுடன் அவள் அந்த ஓடு வேய்ந்த பெரிய கட்டடத்தின் நடு முற்றத்தில் அமர்ந்து விளையாடுவாள். அவளின் கழுத்திலும், காதிலும், கையிலும், காலிலும் தங்க நகைகள் ஜொலித்துக் கொண்டிருக்கும். எப்போதும் அணிந்திருப்பது பட்டாடைதான். பட்டாலான முண்டும் பட்டாலான சட்டையும் அணிந்திருப்பாள். தலையில் நெசவு செய்த துணியைச் சுற்றியிருப்பாள்.

அவள் வெளுத்தவளாக இருந்தாலும், அவளிடம் கறுப்பாக ஒன்று இருக்கவே செய்தது. யாரிடமும் அதைச் சொல்லவில்லை என்றாலும், அவளுக்கு என்னவோ அது வேதனையைத் தரக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது. அவளின் கன்னத்தில் ஒரு சிறிய கறுப்பான மரு இருந்தது.

அது ஒரு அதிர்ஷ்ட மரு என்பதை குஞ்ஞுபாத்தும்மா தெரிந்து கொண்டதே அவளுக்கு பதினான்கு வயது நடக்கும்போதுதான். அப்போது அவளைத் திருமணம் செய்து கொள்ள ஏகப்பட்ட பேர் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னை யார் திருமணம் செய்யப்போவது என்ற விஷயமே அவளுக்குத் தெரியாது. யாராக இருந்தால் என்ன?

“அப்பா... நான் வெத்தலை சாப்பிடுவேன்.” குஞ்ஞுபாத்தும்மா மனதிற்குள் கூறிக்கொண்டாள். திருமணமாகாத ஒரு முஸ்லிம் பெண் வெற்றிலை போடக்கூடாது என்பது விதிமுறை. அல்லாவும் அல்லாவின் தூதரான முஹம்மது நபியும் இது விஷயமாக ஏதாவது கூறியிருக்கிறார்களா என்பதெல்லாம் குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. இருந்தாலும் நாட்டில் நிலவிக்கொண்டிருந்த சில விதிமுறைகளை வைத்து வெற்றிலை போடக்கூடாது- அவ்வளவு தான். பிற ஆண்கள் முன்னாலும் முஸ்லிம் பெண்கள் நடந்துபோகக் கூடாது. சின்ன பெண்ணாக இருந்த சமயத்தில் குஞ்ஞுபாத்தும்மா போயிருக்கிறாள். அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. பிற ஆண்களை அவள் பார்த்திருக்கிறாள் என்பது மட்டுமே உண்மை. அவர்களில் யாரைப் பற்றியும் இப்போது அவள் ஞாபகத் தில் இல்லை. அப்படியே ஞாபகத்தில் ஏதாவது இருந்தாலும், அதுகூட பெண்களைப் பற்றிய நினைவுகள் மட்டுமே.

“அவங்க எல்லாம் காஃப்ரிச்சிகள்.” அவர்களைப் பற்றி குஞ்ஞுபாத்தும்மாவிற்குச் சொல்லத் தெரிந்தது அவ்வளவுதான். உலகத்தில் இருப்பதே இரண்டு வர்க்கங்கள்தாம். இஸ்லாமும் காஃபிரும். பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் இறந்துபோன பிறகு காஃபிரெல்லாம் நரகத்திற்குப் போவார்கள். அவர்கள் அனைவரும் தப்பு செய்த கூட்டத்தைச்  சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள் அவர்களைப் பின்பற்றினால் நரகத்திற்குப் போவதைத் தவிர வேறு வழியே இல்லை. குஞ்ஞுபாத்தும்மா பார்த்த காஃப்ரிச்சிகள் பள்ளிக்கூட ஆசிரியைகளாக இருந்தனர். அவளின் தந்தை அவளை நதியில் குளிப்பாட்ட அழைத்துச் செல்லும் போதுதான் அவர்களை அவள் பார்த்தாள். நகரங்களில் இருந்து வந்திருக்கும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளையும் குஞ்ஞு பாத்தும்மா பார்த்திருக்கிறாள். அவர்கள் யாரிடமும் குஞ்ஞு பாத்தும்மாவிடம் இருந்த அளவிற்குத் தங்க நகைகள் இல்லை. பலரும் தன்னைப் பொறாமை மேலோங்கப் பார்ப்பதையும் அவள் அறியவே செய்தாள். அவளைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பெண் குழந்தை யாருடையது?” என்று கேட்பதையும் அவள் கேட்டிருக் கிறாள். அந்த மாதிரியான நேரங்களில் பயபக்தியுடன், மரியாதை யுடன் யாராவது சொல்வார்கள்:

“வட்டனடிமைக் காக்காவோட மகள்... குஞ்ஞுபாத்தும்மா. யானை மக்காரோட மகளோட மகள்...”

“நம்ம குஞ்ஞுதாச்சும்மாத்தாதோட மகளா?” என்றும் சிலர் சொல்வார்கள்.

“நீ கொஞ்சம் சிரி, குஞ்ஞுபாத்தும்மா...” என்று கூறியவாறு பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியைகள் அவளைச் சுற்றிலும் நின்றிருப்பார்கள். அவர்களை குஞ்ஞுபாத்தும்மாவிற்கும் மிகவும் பிடிக்கும். அவர்கள் காஃப்ரிச்சிகளாக இருந்தாலும், அவர்களிடம் நல்ல வாசனை இருந்தது. அவர்கள் எல்லாரும் ப்ளவுஸ் என்ற சட்டையை அணிந்திருந்தார்கள். அதற்கு உள்ளே பாடீஸ் என்றழைக்கப்படும் மெல்லிய உள்ளாடைகளையும் அணிந்திருந் தார்கள். பிறகு... அவர்கள் தலையில் பூ சூடியிருந்தார்கள். சிலர் குஞ்ஞு பாத்தும்மாவின் தலைமுடியில் பூக்களை அணிவிப்பார்கள். அவர்களில் சிலர் அவளின் கன்னத்தில் இருக்கும் கறுத்த மச்சத்தைக் கிள்ளி எடுப்பதைப்போல நடிப்பார்கள். அதனாலொன்றும் அவர்கள் மேல் அவளுக்கு ஈடுபாடு உண்டாகவில்லை. அவர்கள் அணிந்திருப்பதைப்போல புடவையும், ப்ளவுஸும், அதற்கு உள்ளே மெல்லிய பாடீஸும் தானும் அணிய வேண்டும் என்று ஆசைப் பட்டாள்.


தன்னுடைய தந்தையிடம் அவள் அதைச் சொல்லவும் செய்தாள். அவள் அப்படிச் சொன்னதைக் கேட்டு அந்த ஆசிரியைகள் சிரித்தார்கள். அவர்களில் ஒருத்தி சொன்னாள்:

“குஞ்ஞுபாத்தும்மா பெரிய பொம்பளையா வரட்டும்!”

பெரிய பெண்ணாக வேண்டும்! அவளுக்கு அப்படியொரு ஆசை பிறந்தது. பெரிய பெண்ணாக வேண்டும்!

“எப்ப உம்மா நான் பெரிய பொம்பளையா ஆவேன்?” அவள் தன் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

விஷயம் என்ன என்று அவளின் தாய் கேட்டபோது, உண்மையான விஷயம் என்னவென்பதை தாயிடம் குஞ்ஞு பாத்தும்மா கூறவும் செய்தாள். அவளின் தாய் அவளை பயமுறுத்தினாள்:

“என் குஞ்ஞுபாத்தும்மாவே! காஃப்ரிச்சிங்க நல்லவங்க இல்ல. அவுங்க செய்றதை நாம செய்யக்கூடாது. அவுங்களுக்கு எதிரா நாம நிற்கணும்...”

“உம்மா சொல்றது உண்மைதான் மகளே...” அவளின் தந்தை சொன்னார்: “நமக்கு அது தேவையே இல்லை...”

தேவையில்லை என்றால் தேவையில்லைதான்! அவளின் தந்தையின் வார்த்தைக்கு அந்த வீட்டில் எதிர் வார்த்தை என்ற ஒன்று இருக்கிறதா என்ன! இஸ்லாமில் கூறப்பட்டிருக்கும் விதி முறைகளைப் பின்பற்றியல்லவா வாழ்க்கை போய்க் கொண்டிருக் கிறது! வட்டனடிமைக் காக்கா என்ற பெயரைச் சொன்னாலே நம்மை யும் மீறி அன்பும் மரியாதையும் அரும்பும். ஊரில் முக்கியமான மனிதர் அவர். பள்ளிவாசலில் அவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஆள். நல்ல உயரமாக இருப்பார். தலை எப்போதும் “மினு மினு”வென்று பிரகாசமாக இருக்கும். தாடியையும் மீசையையும் விதிமுறையை அனுசரித்து அளவாக கத்தரியால் கத்தரித்து விட்டிருப்பார். மீசையின் இரு முனைகளும் கம்பீரமாக உயர்ந்து நின்றிருக்கும். எப்போதும் முண்டு மட்டுமே கட்டுவார். சற்று நீளம் அதிகமுள்ள துண்டை அசால்ட்டாக தோளில் இட்டிருப்பார். சில நேரங்களில் அதன் ஒரு நுனி தரையில் கிடந்து புரளும். அப்படி நேர்ந்தால், அவருக்கு பின்னால் நடந்து செல்லும் நபர் அதை பயபக்தியுடன் கையில் எடுத்து உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பார். அவளின் அப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது. உடலை நிமிர்த்தி மிகவும் கம்பீரமாக அவர் நடந்து போவார். அவளின் தந்தை கை, கால், முகம், வாய், தலை, காது எல்லாவற்றையும் தண்ணீரில் கழுவி சுத்தமாக்கிய பிறகுதான் கடவுளைத் தொழுவார். தெய்வம் எப்போதும் எந்த இடத்திலும் இருக்கும். உலகங்களான எல்லா உலகங்களிலும். அந்த தெய்வத்தை வணங்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும். ஐந்து நேரங்களில் ஒரு நேரம்கூட கடவுளைத் தொழாமல் இருக்க மாட்டார். ரம்ஸான் மாதத்தில் முப்பது நாட்களும் அவளின் தந்தை ஆகாரம், தண்ணீர் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நோன்பு இருப்பார். விதிமுறைகளை அப்படியே பின்பற்றுவார். அவளின் தந்தைக்கு ஹஜ் யாத்திரை போக வேண்டுமென்ற ஆசை இருக்கவே செய்தது. ஆனால், அது குஞ்ஞுபாத்தும்மாவின் திருமணத்திற்குப் பிறகு மட்டுமே சாத்தியமாகக்கூடியது.

திருமணக் காரியம் மிகவும் நெருங்கி வந்தது. வீட்டில் எப்போதும் விருந்துதான். கிட்டத்தட்ட எட்டு வெற்றிலைக் கட்டாவது கட்டாயம் வேண்டும். அவளின் தந்தை அப்படியொன்றும் அதிகமாக வெற்றிலை போடக்கூடியவர் இல்லை.

ஆனால், அவளின் தாய் நன்றாக வெற்றிலை போடக்கூடியவளே. அவளின் தாய்க்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் நூறு தளிர் வெற்றிலையாவது கட்டாயம் வேண்டும். வெற்றிலை போடுவதும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதும்தான் அவளின் அன்னைக்குப் பெரிய வேலையே. வெற்றிலைப் பெட்டிக்கு அருகில் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து, பட்டாலான ஆடைகளை அணிந்து, மெத்தைப் பாயில் அவளின் தாய் பந்தாவாக அமர்ந்திருப்பாள். நிலத்தில் கால் வைப்பதில்லை. மிதியடி இல்லாமல் அவளின் தாய் நடக்க மாட்டாள். தாத்தாவுக்குச் சொந்தமான யானையின் கொம்புகளைக் கொண்டு உண்டாக்கி யவைதான் அவள் தாயின் இரண்டு மிதியடிகளும். மிதியடிகள் எப்போதும் அவளுக்குப் பக்கத்திலேயே இருக்கும்.

வெற்றிலை போடுவதற்கும் அவளுடன் பேசிக் கொண்டிருப் பதற்கும் சதா நேரமும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவளின் தாய் பேசிக்கொண்டே இருப்பாள். பேசுவதற்கு ஒன்றும் பெரிதாக விஷயங்கள் இல்லை. ஒன்று- குஞ்ஞுபாத்தும்மா வைப் பற்றி ஏதாவது பேசுவாள். இல்லாவிட்டால் குஞ்ஞு பாத்தும்மாவின் தந்தையுடன் பிறந்த ஏழு அத்தைகளைப் பற்றி பேசுவாள். பெரும்பாலும் குஞ்ஞுபாத்தும்மாவின் கன்னத்தில் இருக்கும் கறுப்பு மருவைப் பற்றித்தான் அவளின் பேச்சு இருக்கும்.

“இதுதான் அதிர்ஷ்ட மருன்றது.” அவளின் தாய் கூறுவாள்: “என்ன இருந்தாலும் சும்மா இந்த மரு வந்திருக்குமா? யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாச்சே!” அதோடு விடாமல் அவள் தொடர்ந்து சொல்லுவாள்: “அஞ்சு பேரைப் பெத்தேன். கடைசியில என்கிட்ட படைச்சவன் தங்க வச்சது ஒண்ணே ஒண்ணைத்தான்.” அதற்குப் பிறகு குஞ்ஞுபாத்தும்மாவின் ஆபரணங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பாள்: “சொல்லு பெண்ணே... இந்த கல்யாணத்தை நல்ல முறையில நடத்தணுமா இல்லியா?” தொடர்ந்து கொஞ்சம் கோபம் கலக்க பேசுவாள்: “பிறகு... கல்யாணத்துக்கு இங்கே வாப்பாவோட ஆளுங்க வரலைன்னாகூட குஞ்ஞுபாத்தும்மாவோட கல்யாணம் நல்லாவே நடக்கும். என்ன இருந்தாலும் யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாச்சே!” விஷயம் எப்படியோ ஒரு முடிவுக்கு வருகிறபோது, ஏதாவது கூறும்படி அவளின் தாய் பெண்களில் ஒருத்தியிடம் கூறுவாள்:

“சொல்லு பெண்ணே!”

பெண்கள் கூறுவார்கள். இவ்வாறு பெண்களிடமிருந்து குஞ்ஞுபாத்தும்மா ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். அந்த விஷயம் குஞ்ஞுபாத்தும்மாவை மிகவும் கவலை கொள்ளச் செய்தது. அவள் அதைக் கேட்டு மன வருத்தம் கொண்டாள். சொல்லப் போனால் அந்தச் செய்தியைக் கேட்டு அவள் கோபப்பட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா கேட்டு வருத்தம் கொண்ட செய்தி இதுதான்:

பக்கத்திலும் அந்த ஊரிலும் உள்ள பெரும்பாலான வீடுகளில் நான்கும் ஐந்தும் வயதுடைய குழந்தைகள் இருந்தார்கள். ஒரு புதிய தலைமுறை இப்படி உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி குஞ்ஞுபாத்தும்மா ஒன்றும் கூறுவதற்கில்லை. ஆனால், அவர்களின் பெயர்கள்! அதைக்கேட்டுத்தான் குஞ்ஞுபாத்தும்மா மிகவும் கவலை கொண்டாள். வெறும் சுமை தூக்குபவர்கள், மீன் பிடிப்பவர்கள், சாதாரண பிச்சைக்காரர்கள்- இவை எல்லாம் எதற்கு- ஊரில் இருக்கும் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளிலும் ஒவ்வொரு குஞ்ஞுபாத்தும்மாக்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு அடிமைமார்கள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு குஞ்ஞுதாச்சும் மாக்களும் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மக்காருகளும் இல்லாமல் இல்லை.

எல்லா உலகங்களையும் படைத்த கடவுளே! என்ன செய்வது? வெட்கமும் மானமும் இருக்கும்பட்சம், அவர்களின் குழந்தை களுக்கு வேறு பெயர்கள் வைத்திருக்கக் கூடாதா? இருந்தாலும், குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஒரு உலக ரகசியம் அப்போதும் சரியாகப் புரியவில்லை. பணமும் புகழும் உள்ளவர்களின் பெயர்களை அவை இரண்டும் இல்லாதவர்கள் உபயோகிப்பார்கள்.


அது பொதுவாக ஊரில் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். பணக்காரர்களின் அல்லது பிரபலம் பெற்றவர்களின் பெயர்களை அவை இரண்டும் இல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் ஒன்றும் கிடையாது. அப்படியாவது செல்வமும் மதிப்பும் கிடைக்காதா என்ற எண்ணம்தான் காரணம்.

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு அது சரியான செயலாகத் தெரியவில்லை. காரணம் என்னவென்றால் உலகத்திலேயே அவள் ஒருத்தி மட்டுமே குஞ்ஞுபாத்தும்மா. அவளின் தந்தை உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு வட்டனடிமை! உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு குஞ்ஞுதாச்சும்மா அவளின் தாய்தான். அவளின் தாத்தாதான் உலகத்திலேயே இருக்கும் ஒரே ஒரு யானை மக்கார்!

விஷயம் இந்த விதத்தில் போய்க்கொண்டிருக்க, அவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தை குஞ்ஞுபாத்தும்மா எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. அவள் இந்த விஷயத்தை அங்கிருந்த எல்லாப் பெண்களும் கேட்கும்படி தன் தாயிடம் சொன்னாள்.  சொன்னதோடு நிற்காமல் கோபத்துடன், கவலையுடன் கேட்கவும் செய்தாள்:

“நம்ம பேரை அவங்க ஏன் பயன்படுத்தணும்?”

இதைக்கேட்டு அவளின் தாய் சிரித்தாள். இதைப்பற்றி மற்ற பெண்கள் என்ன நினைத்தார்கள் என்பது குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. அவளிள் தாய் சொன்னாள்:

“கல்யாணம் ஆகப்போற பெண்ணாச்சே! கவலைப்பட்டா நல்லதா?” என்று சொன்ன அவளின் தாய், “இங்க பாரு...” என்று கூறியவாறு அவள் கன்னத்தில் இருந்த கறுத்த மச்சத்தைத் தொட்டாள். அப்போது அவளுக்குப் புரிந்துவிட்டது. நான்கோ ஐந்தோ வயதுடைய எந்த ஏழை குஞ்ஞுபாத்தும்மாவிற்கும் கன்னத்தில் கறுப்பு மச்சம் இருப்பதாக அவள் இதுவரை கேட்டதில்லை. அவளின் தாய் இதைப்பற்றி மற்ற பெண்களிடம் கேட்க, அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். எப்படி கறுப்பு மச்சம் இல்லாமல் போனது?

அவளின் தாய் கேட்டாள்:

“அதோட நிறம் என்ன?”

கறுத்த மச்சத்தின் நிறம் கறுப்புதான். குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“கறுப்பு...”

அம்மா கேட்டாள்:

“உன் தாத்தா வளர்த்த யானையோட நிறம் என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா இதுவரை அந்த யானையைப் பார்த்தது இல்லையென்றாலும், அவள் நினைத்துப் பார்த்தாள். சாதாரணமாக யானையின் நிறம் கறுப்புதான். அவள் சொன்னாள்:

“கறுப்பு...”

அவளின் தாய் கேட்டாள்:

“உன்னோட நிறம் என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா நல்ல வெண்மை நிறம் கொண்டவளாயிற்றே! அவள் சொன்னாள்:

“வெள்ளை!”

அம்மா கேட்டாள்:

“வெளுத்த உன்னோட கன்னத்துல எப்படி கறுப்பு மச்சம் வந்துச்சு?”

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இப்போது விஷயம் புரிந்துவிட்டது. பழைய வரலாறு, செல்வம், சரித்திரத்தின் வெளிப்பாடு. சர்வ ரகசியங்களும் இதோ திறந்து கிடக்கின்றன. அவளுக்கு மகிழ்ச்சியும் பெருமையுமாக இருந்தது. கிரீடமும், செங்கோலும், சிம்மாசனமும், மகா சாம்ராஜ்ஜியங்களும் இருந்ததைப்போல் அவள் உணர்ந்தாள். அவள் சொன்னாள்:

“எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது!”

அவளின் தாய் மிதியடியைத் தொட்டவாறு சொன்னாள்:

“பெரிய ஒரு ஆண் யானை!”

2

ப்லீஸ் என்ற பகைவன்

குஞ்ஞுபாத்தும்மாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடந்துகொண்டிருந்தன. எல்லா வேலைகளும் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்க, அவள் இரண்டு விஷயங்களைக் கேட்க நேர்ந்தது.

தாத்தாவுக்குச் சொந்தமான அந்தப் பெரிய ஆண் யானை ஆறு பேரைக் கொன்றுவிட்டது. அதைக்கேட்டு உண்மையிலேயே அவளுக்கு வருத்தமாக இருந்தது. சொல்லப்போனால் யானைமேல் அவளுக்குக் கோபம் உண்டானது.

“அறிவே இல்லாத யானை!” என்று அவள் கூறவும் செய்தாள். அதற்காக அவளின் கோபம் அதிக நாட்கள் நீடித்து நிற்கவில்லை. யானை கொன்ற அந்த ஆறு பேரும் காஃப்ரிகளான யானைக் காரர்களாக இருந்தார்கள். அது ஒரே ஒரு முஸ்லிமைக்கூட கொல்லவில்லை. இஸ்லாமான யானைப் பாகர்கள் அதற்கு இருந்தார்களா என்ற விஷயம் குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. அவளின் தாய் சொன்னாள்:

“அது எவ்வளவு நல்ல யானை தெரியுமா?”

அவளின் தாத்தாவின் கையில் இருந்து பழமும், சர்க்கரையும் வாங்கி அந்த யானை சாப்பிடும். அவளின் தாய் சொன்னாள்:

“உன்னோட வாப்பா என்னைக் கல்யாணம் பண்ணினதே அந்த யானையோட முதுகுல ஏறித்தான்...”

ஆச்சரியம்! குஞ்ஞுபாத்தும்மா நினைத்தாள். அவளைத் திருமணம் செய்ய இருக்கிற இளைஞன்... ஏதாவதொரு யானைமேல் ஏறித்தான் வருவானோ?

தன்னை யாருக்கு... எதற்காக... கட்டிக்கொடுக்க வேண்டும்? அப்படியெல்லாம் குஞ்ஞுபாத்தும்மா நினைத்துப் பார்க்கவில்லை. அவளைத் திருமணம் செய்து கொடுத்த கையோடு அவளின் தந்தை மக்காவிற்கு ஹஜ் யாத்திரை கிளம்பி விடுவார். அது அரேபியாவில் இருக்கிறது. அங்கே இருக்கிற மக்கா என்ற புண்ணிய இடத்தில்தான் முஹம்மது நபி பிறந்தார். அங்கே அப என்ற புண்ணிய ஆராதனை செய்யக்கூடிய ஆலயம் இருக்கிறது. இந்த உலகத்திலேயே முதன்முதலாகத் தோன்றிய பள்ளி அதுதான். எத்தனையோ வருடங்களாக இருக்கும் பழமையான பள்ளி அது. அதைப் புதுப்பித்துக் கட்டியது இப்ராஹிம் நபிதான். குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை பள்ளி எதையும் கட்டியதில்லை. ஹஜ் யாத்திரைக்குப் போய்விட்டு வந்தபிறகு அவரை “ஹாஜி வட்டனடிமை” என்றோ “வட்டனடிமை ஹாஜி” என்றோ அழைக்கலாம். குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“உம்மா, நீங்களும் போறீங்களா?”

அவளின் தாய் கேட்டாள்:

“எங்கே?”

“ஹஜ்ஜிற்கு...”

அவளின் தாய் சொன்னாள்:

“போறேன்!”

அது ஒரு புதிய செய்தியாக இருந்தது. குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“அப்போ நானும் வருவேன்!”

தாய் சிரித்தாள். அவள் சொன்னாள்:

“அதை உன்னைக் கல்யாணம் பண்ணப்போறவன்கிட்ட சொல்லு!”

அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவள் எதுவும் பேசவில்லை. ஆனால், அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் யார்? இளைஞனா இல்லாவிட்டால் வயதான மனிதரா? கறுப்பாக இருக்கும்  ஆளா? இல்லாவிட்டால் வெள்ளையா? எதுவுமே அவளுக்குத் தெரியாது. யாரோ ஒரு ஆண் வரப்போகிறான். அது யார்?

பெண்ணாகப் பிறந்துவிட்டால் யாராவது ஒரு ஆணுக்குத் திருமணம் செய்து கொடுக்கத்தான் செய்வார்கள். முஹம்மது நபியின், அஸ்ஹாபிமாரின் காலம் முதற்கொண்டு இது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. அவர்களுக்கு முன்பும்கூட இதுதான் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு மனித குலத்தின் ஆரம்பத்தில் ஆதாம் நபி, ஏவாள் நபியைத் திருமணம் செய்தான். ஆதாம் நபிக்கும் ஏவாள் நபிக்கும் தாயும் தந்தையும் இல்லை. அதனால் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தது ரப்புல் ஆலமீன் தம்புரான்தான். ஆதாம் நபியும் ஏவாள் நபியும்தான் இன்று உலகத்தில் இருப்பவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் முதல் தாயும் தந்தையும். அவர்களுக்கு முன்பு மனிதர்கள் இருந்ததில்லை. ஆதாம் நபியும் ஏவாள் நபியும் எத்தனைக்கோடி வருடங்களுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தார்கள் போன்ற விஷயங்களெல்லாம் குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. ஆதாம் நபிக்குப் பின்னால் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான நபிகள் தோன்றிவிட்டார்கள்.


அவர்களில் இருபத்தைந்து தூதர்களின் பெயர்கள் மட்டுமே குர் ஆனில் கூறப்பட்டிருக்கிறது. பூமியில் உள்ள எல்லா வகை  மக்களைத் தேடியும் ஒவ்வொரு தூதரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு உபதேசம் செய்த அவர்கள்: நுஹ், இப்ராஹிம், தாவுத், மூஸா, ஈஸா, முஹம்மது...

முஹம்மது நபி கடைசி தூதர். இனி நபிகள் யாரும் உண்டாகப் போவதில்லை. முஹம்மது நபியுடன் எல்லாம் முடிந்துவிட்டது.

முஹம்மது நபியின் மூத்த மகளின் பெயர் ஃபாத்திமா. பாத்தும்மா என்றும் ஆட்கள் அழைப்பார்கள். ஃபாத்திமா பீவியை கலீஃபா அலிக்கு திருமணம் செய்து கொடுத்தார் முஹம்மது நபி.

அலி ஒரு மிகப்பெரிய வீரராகவும், சூரராகவும், தைரியசாலியாகவும் இருந்தார். துல்ஃபக்கார் என்ற பெயரில் அழைக்கப்படுகிற ஒரு வாள் அலியிடம் இருந்தது. ரப்புல் ஆலமீன் தம்புரான் கூறியபடி அலி அந்த வாளை கடலில் வீசி எறிந்தார். கடலில் இருந்த எல்லா மீன்களின் கழுத்தையும் அந்த வாள் அறுத்தது. அதனால்தான் மீனின் கழுத்து இரண்டு பக்கங்களிலும் அறுத்ததுபோல் இருப்பதற்கான காரணம். அன்று முதல்தான் இஸ்லாமியர்களுக்கு மீன் “ஹலால்” ஆனது. கலீஃபா அலிக்கு முன்பு பூமியில் இருந்த கடல்களில் செவிகள் உள்ள மீன்கள் இல்லையா என்ன? கடலில் வாளை எறியச் சொன்னது தெய்வம்தான் என்றல்லவா சொல்லப்படுகிறது? தெய்வம் இப்படியெல்லாம் சொல்லுமா? இது ஒரு ஐதீகமாக இருக்கலாம். எது உண்மை, எது பொய்? குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இதெல்லாம் தெரியாது. பள்ளி         வாசலில் நடக்கும் முஸ்லியாக்கன்களின் “வஅஸ்” என்ற இரவு பிரசங்கங்களில் அவள் கேட்ட விஷயங்களே இவை. இதெல்லாம் உண்மைதான் என்று அவளின் தாயும் சொன்னாள்.

குஞ்ஞுபாத்தும்மா எண்ணினாள்- தன்னைத் திருமணம் செய்ய வரும் இளைஞன் பெரிய “சுஜாஇ” ஆக இருப்பானோ என்று. அவளுக்கு என்ன தெரியும்? எதுவுமே தெரியாது. யாரிடம் இதைக் கேட்பாள்? இருப்பது ஒன்றே ஒன்றுதான். சொல்வதைக் கேட்பது, கொடுத்ததை ஏற்றுக்கொள்வது- இதுதான் முஸ்லிம் இளம் பெண்ணின் கடமை. இதைக் குஞ்ஞுபாத்தும்மா நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். இது விஷயமாக ரப்புல் ஆலமீன் தம்புரானும் அவரின் ரஸூலான முஹம்மது நபியும் என்ன சொல்லியிருக்கிறார்கள்? அர்த்தம் புரியவில்லை என்றாலும் அவள் குர்ஆன் ஓதியிருக்கிறாள். அவளின்  தந்தையும் தாயும் ஓதியிருக்கிறார்கள். அவளின் தாத்தாவான யானை மக்காரும் குர்ஆன் ஓதியிருக்கிறார். என்ன அதில் சொல்லப் பட்டிருக்கிறது என்று அவர்கள் யாருமே இதுவரை புரிந்து கொண்டதில்லை. உலகத்திலுள்ள கடல்களையெல்லாம் மையாக ஆக்கி- குர்ஆனின் அர்த்தத்தை எழுதுவதாக இருந்தால் ஒரு அத்தியாயத்திற்குப் பொருள் எழுதுவதற்கு முன்பே மாமரங்கள் எல்லாம் தீர்ந்து போகும். கடல்கள் அனைத்தும் வற்றிப்போகும். குர் ஆன் ஒரு பரிசுத்தமான நூல். அதில் எல்லாமே இருக்கிறது. அதை யாரும் எழுதவில்லை. ரப்புல் ஆலமீன் தம்புரான் தெய்வ தூதனான ஜிப்ரில் என்ற மலக்  வழியாக முஹம்மது நபியிடம் சொன்னதே குர்ஆன். நபிக்கு நாற்பது வயது ஆனபோது, மக்காவிற்கு அருகில் இருந்த மலையில் உள்ள ஹீரா என்ற குகையில் தியானத்தில் இருந்தபோதுதான் முதன்முதலாக ஜிப்ரில் என்ற தெய்வ தூதன் வந்து இதை அவரிடம் கூறுகிறான். படிக்க வேண்டும்- எழுதவும் வாசிக்கவும் படிக்க வேண்டும். அதுதான் குர்ஆனின் தொடக்கம். நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாமல் இருந்தது. இருந்தாலும் நபியின் தாய்  மொழியில்தான் குர்ஆன் இருந்தது. அதாவது அரபு. நபி தன்னைப் பின்பற்றியவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தார். ஒட்டகத்தின் வெண்மையான பாதத்திலும், ஈந்தப் பனையின் ஓலையிலும், தண்டிலும் அவற்றை அவர் எழுதி வைத்தார். அரேபியா என்றொரு நாடு இருக்கிறது என்பதை குஞ்ஞுபாத்தும்மா கேள்விப் பட்டிருக்கிறாள். அங்கே மக்கா, மதீனா என்ற இரண்டு புண்ணிய இடங்கள் இருக்கின்றன. மக்காவில் முஹம்மது நபி பிறந்தார். மரணமடைந்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் மதீனாவில். அங்கே முஹம்மது நபியின் கல்லறை இருக்கிறது. ஹஜ் யாத்திரைக்குச் செல்பவர்கள் அந்தக் கல்லறைக்குக் கட்டாயம் போவார்கள்.

குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தையும் தாயும் ஹஜ் யாத்திரைக்குச் செல்கிறபோது கட்டாயம்  மதீனாவிற்கும் போவார்கள். அவர்களுடன் தான் செல்வதற்கு தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் சம்மதிப்பானா என்று எண்ணிப் பார்த்தாள் குஞ்ஞுபாத்தும்மா. இரவிலும் பகலிலும் இதைப் பற்றிய ஒரே சிந்தனைதான் குஞ்ஞபாத்தும்மாவிற்கு. நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஒருநாள் தன் தந்தை அதிக கோபத்துடன் இருப்பதாக குஞ்ஞுபாத்தும்மா உணர்ந்தாள். அவள் தந்தையின் கண்கள் மிகவும் சிவந்து போயிருந்தன. அவர் சிரித்தார்.

“விளையாடுறாங்க.” அவளின் தந்தை சொன்னார்: “வட்டனடிமைக்கிட்ட விளையாடிப் பாக்குறாங்க. படைத்தவனின், முத் நபியின், நேர்ச்சைக்காரர்களின் உதவிகளோட வட்டனடிமைக் கிட்ட அவங்க பாடம் படிப்பாங்க!”

என்ன விஷயம் என்று அப்போது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு புரியவில்லை. ஒரு புதிய வழக்கு அவளின் தந்தை பெயரில் கொடுக்கப்பட்டது. பள்ளி சம்பந்தப்பட்ட விஷயம் அது. சமுதாயத்தின் தலைவர் ஆகவேண்டும்! இதுதான் பிரச்சினையே. பள்ளியின் நடப்புக் காரியங்களைப் பார்க்க  அவளின் தந்தைக்கு அதிகாரமில்லையாம்.

அப்படியென்றால் யாருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது? ஊரில் பெரிய மனிதராக இருப்பவர்தான் எங்கேயும் எப்போதும் பள்ளியின் முக்கிய பொறுப்பிலும் இருப்பார். ஊரில் பெரிய மனிதர் என்றால் அவரிடம் எப்போதும் பணம் இருக்க வேண்டும். குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தைதான் ஊரிலேயே பழமையான பணக்காரர். ஒன்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்கள் ஊரில் இருந்தால், பள்ளி பொறுப்பில் யார் இருப்பது என்பதற்கு போட்டி உண்டாக ஆரம்பிக்கும். அடிதடியும் கொலைகளும்கூட சில வேளைகளில் நடக்கும். பிறகு...? அது வழக்கில் போய் முடியும். நாட்கள் கணக்கில் அது நடக்கும். பள்ளி இருக்குமிடங்களில் எல்லாம் வழக்கும் கட்டாயம் இருக்கும். இவை எல்லாம் இப்லீஸ் என்ற பகைவனின் வேலைகள் என்பதை குஞ்ஞுபாத்தும்மா நன்றாகவே அறிவாள். இப்லீஸ் மட்டும் இல்லாமற் போயிருந்தால் உலகத்தில் எந்தவித குழப்பமும் நடக்காமலே இருந்திருக்கும். யார் இந்த இப்லீஸ் என்ற பகைவன்?

இப்லீஸ் என்ற பகைவனைப் பற்றி முதல் முறையாக குஞ்ஞுபாத்தும்மா கேட்டது பள்ளியில்தான். அன்று அவள் பள்ளி வாசலுக்கு தொழுவதற்காகப் போகவில்லை. முஸ்லிம் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து பள்ளிவாசலுக்குப் போய் தொழக்கூடாதே! அன்று  அவள் அங்கு சென்றது எப்போதும்போல “வஅஸ்” என்று சொல்லப்படும் இரவு பிரசங்கத்தைக் கேட்பதற்குத்தான். ஒரு முஸல்யார் “வஅஸ்” கூறிக்கொண்டிருந்தார். பள்ளிவாசலின் முன்னால் ஒரு பக்கத்தில் பந்தலொன்று இடப்பட்டிருந்தது. பெண்கள் அமர்வதற்காகத்தான். அங்கே அமர்ந்திருந்தால் எதையும் பார்க்க முடியாது.


அந்தப் பந்தலில் அமர்ந்திருந்தபோதுதான் குஞ்ஞுபாத்தும்மா சைத்தானான இப்லீஸ் என்ற பகைவனைப் பற்றி கேட்க நேர்ந்தது. முஸ்லிம்களின் பள்ளி வாசலில் நடக்கும் இரவு பிரசங்கங்களின் மூலம்தான் முஸ்லிம் சமுதாயம், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பெரும்பாலும் தெரிந்துகொள்வது. முஸல்யார் உரத்த குரலில் இப்லீஸைப் பற்றி முழங்கினார். அது முழுவதும் குஞ்ஞுபாத்தும்மாவிற்கு நன்றாகவே ஞாபகத்தில் இருக்கிறது.

இப்லீஸ் என்ற பகைவன் ஆரம்பத்தில் பிரசித்தி பெற்ற ஒரு மலக் ஆக இருந்தான். தேவதூதன். ரப்புல் ஆலமீன் தம்புரானின் திருச் சந்நிதியில், சொர்க்கத்தில் இருக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது.

பூமியும், மற்ற உலகங்களும் படைக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற சம்பவம் அது. கதை இப்படிப் போகிறது. எல்லாவற்றுக்கும் முன்பு அல்லாஹு முஹம்மது நபியின் ஒளிவைப் படைத்தார். இந்த விஷயம் எங்கே இருந்து கிடைத்தது? குர்ஆனில் இது இல்லை. முஸ்லியாக்கன்களிடம் இது பற்றி கேட்டதும் இல்லை. காதால் கேட்டதை நம்புவார்கள். எது எப்படியோ- ஒளிவின் படைப்பிற்குப் பிறகு எத்தனையோ கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. பிறகு பூமியையும் நட்சத்திரங்களையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தார். எல்லா பிரபஞ்சங்களை யும். முஹம்மது நபியின் ஒளிவின் மூன்று துளி வியர்வையில் இருந்து மற்ற உயிரினங்களைப் படைத்தார். அதில் உண்டான முதல் மனிதன்தான் ஆதாம் நபி.

முஹம்மது நபியின் ஒளிவு ஆதாம்  நபி வழியாக, கோடிக்கணக்கான தூதர்கள் மூலமாக நுஹ், இப்ராஹிம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்கள் வழியாக அப்துல்லாவின் முதுகைப்போய் அடைந்தது. அப்துல்லா, ஆமீனா ஆகியோரின் மகனாக முஹம்மது பிறந்தார் என்பது ஐதீகம். இந்த ஐதீகம் எப்படி உண்டானது? முஹம்மது நபிக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? பூமியில் மனிதப் பிறவி உண்டான பிறகு, கோடிக்கணக்கான தூதர்கள் உருவாகி இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் முஹம்மது நபி. “நான் உங்களைப்போல ஒரு மனிதன்- அவ்வளவுதான்” என்றே முஹம்மது நபி சொல்லியிருக்கிறார். அவருக்கென்று தனித்துவம் எதுவும் இல்லை. அப்படியென்றால் இந்த ஆதி சிருஷ்டியைப் பற்றிய ஐதீகம்...? இதை யாரிடம் போய் கேட்பது? முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புகிறார்கள். அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எந்தவித கேள்வியும் இல்லை. என்ன காதில் கேட்டார்களோ, அதை அவர்கள் நம்புகிறார்கள். குஞ்ஞுபாத்தும் மாவும், அவளின் தாயும், தந்தையும் அதை நம்புகிறார்கள்.

ஆதாமைப் படைத்துவிட்டு மற்ற எல்லா உயிரினங்களையும், கூட்டத்தில் இருந்த மலக், ஜின்னா ஆகியோரையும் பார்த்து ஆதாமை வணங்கும்படி சொன்னார். அதில் அந்த மலக் மட்டும் வணங்கவில்லை. காரணம்- மலக்குகளை படைத்தது நெருப்பால். மனிதனான ஆதாமைப் படைத்தது மண்ணைக்கொண்டு.

மண்ணைக்கொண்டு படைக்கப்பட்ட ஆதாமை நெருப்பை வைத்து படைக்கப்பட்ட மலக் வணங்குவது சரியா? இதுதான் அந்த மலக் தன் சார்பாக வாதிட்ட விஷயம். எது எப்படியோ- சரியாக அனுசரித்துப் போகவில்லை என்பதற்காக ரப்புல் ஆலமீன் தம்புரான் அந்த மலக்கைத் தண்டித்தார். சொர்க்கத்தை விட்டு அவன் வெளியேற்றப்பட்டான்.

அவன்தான் சைத்தானான இப்லீஸ்முன் என்ற பகைவன்.

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இப்லீஸைப் பற்றி வேறு சில விஷயங்களும் தெரியும்.

முன்பகையை மனதில் வைத்துக்கொண்டு அவன் ஆதி தாய்- தந்தையர்களான ஆதாம் நபியையும், ஏவாள் நபியையும் பூமியில் தவறான வழியில் போகும்படி முயற்சித்தான். அதற்குப் பிறகு எல்லா உயிரினங்களையும்- முக்கியமாக முஸ்லிம் மக்களை தவறான வழிகளில் கொண்டுபோய் காஃரிகளாக மாற்றி அவர்களை நரகத்திற்குப் போகும்படி செய்து கொண்டிருக்கிறான். அவன் பலவித வேடங்களிலும் திரிவான். எல்லா மொழிகளையும் பேசுவான். எந்த வடிவத்தை வேண்டுமானாலும் அவன் எடுப்பான். அவன் பக்கமும் ஆட்கள் இருக்க வேண்டும். அது மட்டுமே அவன் குறி. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இந்த விஷயம் குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை சொல்லி அவளுக்குத் தெரியும். முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியான வேஷம் இருக்கிறது அல்லவா? ஆண்களாக இருந்தால் கட்டியிருக்கும் வேஷ்டியை இடது பக்கம் வைத்து கட்ட வேண்டும். தலை மொட்டையடித்து இருக்க வேண்டும். வயலுக்கு வரப்பு இருப்பது மாதிரி தாடியை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மழித்து நிறுத்த வேண்டும். பெண்ணாக இருந்தால் காது குத்தி கம்மல் அணிய வேண்டும். முடியை வாரலாம். ஆனால், வகிடு எடுத்துப் பிரிக்கக் கூடாது.

இதற்கு எதிராக அப்போது ஒரு முஸ்லிம் இளைஞன் செயல்பட்டான். அவன் தலைமுடியை வளர்த்து, க்ராப் வெட்டி இருந்தான். அதை வகிடு எடுத்துப் பிரித்திருந்தான்.

குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை அந்த இளைஞனை அழைத்து நாவிதரைக்கொண்டு முடியை வெட்டச் செய்தார். எதற்காக? முடியைப் படைத்தது யார்? எதற்காக அது படைக்கப்பட்டது? யாரும் இதைக் கேட்கவில்லை. முடியை நீக்கிய பிறகு வட்டனடிமை சொன்னார்:

“வட்டனடிமையோட உயிர் இருக்கும்வரை படைச்சவனின், முத் நபியின் கட்டளையை மீறி இஸ்லாம் கட்டுப்பாட்டை யாராவது மீறி நடந்தா, வட்டனடிமையான நான் நிச்சயம் அதற்குச் சம்மதிக்க மாட்டேன்...”

சொல்ல வந்தது என்னவென்றால் முடியை வளர்த்து க்ராப் வெட்டியிருப்பது இப்லீஸின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. காஃப்ரிகள்! அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவன் தலையின்மீது ஏறி அமர்ந்திருக்கலாம். அதற்காகத்தான் குல்லா. குல்லா இல்லை என்றால், தலையைக் கட்டியிருந்தாலேபோதும். ஒன்றுமே இல்லையென்றாலும், தலையைக் கட்டுவது என்பது மதிப்பான ஒரு தோற்றத்தைத் தரும்; தகுதியைக் காட்டும்!

அதற்காக குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை குல்லா அணிவதோ தலையைத் துணியால் கட்டுவதோ கிடையாது. தொழுகை நடத்தும்போது மட்டும்  அவர் தலையைத் துணியால் மறைப்பார். மற்ற நேரங்களில் இப்லீஸ் அவளின் தந்தையின் தலையில் ஏறி இருப்பானா? இப்படிப்பட்ட சந்தேகமெல்லாம் தேவையே இல்லை.

வட்டனடிமைக்கு அருகில் வரும் அளவிற்கு இப்லீஸுக்கு தைரியம் இருக்கிறதா என்ன?

எது எப்படியோ- குஞ்ஞுபாத்தும்மா எப்போதும் தலையை மறைக்கவே செய்வாள். அவளின் தாயும் தலையை மறைப்பாள். தலையை வாரினால்கூட காஃப்ரிச்சிகளைப்போல வகிடு எடுத்து வாருவதில்லை.

முஸ்லியாக்கன்கள் இரவு பிரசங்கங்களில் சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொண்டு எல்லாரும் “நுண்ணிஃபத்தில்” வாழ்ந்து கொண்டிருந்தனர். யாரும் எதைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்ததில்லை. எழுதவும் தெரியாது. படிக்கவும் தெரியாது. நூல்கள் இருக்கின்றன. அது இருப்பது அரேபிய மொழியில். அரேபிய மொழி தெரிந்தவர்கள்தாம் முஸ்லியாக்கன்மார். அவர்கள் கூறுவதை நம்ப வேண்டும். அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் சொல்லித் தருவார்கள். அவர்கள் சொன்ன ஒரு விஷயத்தை குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை கூறினார். அது பசியைப் பற்றியது. அவர் சொன்னார்:


ஆதியில் படைப்பிற்குப் பிறகு எல்லா உயிரினங்களின் ஆத்மாக்களிடமும் அல்லாஹ் கேட்டார்:

“உங்களைப் படைச்சது யார்?”

எல்லாம் கூறின:

“எங்களை யாரும் படைக்கல...”

அல்லாஹ் எல்லாவற்றையும் தண்டித்தார். பல்வேறு விதங்களிலும் தண்டித்தார். பல வருடங்கள் தண்டித்தார்.

அதற்குப் பிறகும் அவை சம்மதிப்பதாக இல்லை.

கடைசியில் எல்லாவற்றிற்கும் ரப்புல் ஆலமீன் தம்புரான் பசி என்ற கொடும் தண்டனையைக் கொடுத்தார். அன்று முதல்தான் பசி என்ற ஒன்றே உண்டாகத் தொடங்கியது. அன்று பசி என்ற தண்டனையைத் தந்தவுடன், எல்லாம் சம்மதித்தன.

“அல்லாஹுதான் எங்களைப் படைச்சார்!”

அன்று அவை சம்மதித்ததை அல்லாஹ் ஒரு கல்லுக்குள் வைத்தார். இனி அந்தக் கல் “க்யாமம்” என்று சொல்லப்படும் கடைசி நாளன்று ஆத்மாக்களை ஆராயும்போது சாட்சியாக எடுக்கப்படும். அந்தக் கல்லின் பெயர்தான் ஹஜருல் அஸ்வத். அந்தக் கறுப்புக் கல் மக்காவிலுள்ள கஅபவில் இருக்கிறது. அது க அபவைச் சுற்றி வருகிறபோது எத்தனை முறை சுற்றியிருக்கிறோம் என்பதைக் காட்டும் வெறும் ஒரு அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் ஹஜ் யாத்திரைக்குப் போவோர் அந்தக் கல்லைத் தொட்டு முகத்தோடு சேர்த்து ஒற்றிக் கொள்ளத்தான் போகிறார்கள். குஞ்ஞுப்ôத்தும்மாவால் ஹஜ் யாத்திரைக்குப் போகவும், அந்தக் கல்லை ஒற்றிக்கொள்கிறார்கள் என்பதென்னவோ உண்மை. குஞ்ஞுபாத்தும்மாவின் தாயும் தந்தையும்கூட அதைத் தொட்டு முகத்தோடு ஒற்றிக்கொள்ளவும் முடியுமா? ஏதாவது குழப்பம் உண்டானால் அது இப்லீஸ் என்ற பகைவனின் வேலையாகத்தான் இருக்கும். தெய்வத்திற்கு பலம் பொருந்திய ஒரு எதிராளி! அவன் மனித குலத்தை கெட்ட பாதையை நோக்கி செலுத்துகிறான். அழிவை நோக்கி... அவன் அடிக்கடி குழப்பங்களை உண்டாக்கத் தான் செய்கிறான்.

“ரப்புல் ஆலமீன் தம்புரானே!” குஞ்ஞுபாத்தும்மா தொழுவாள்: “இப்லீஸ் என்ற கொடியவனின் பிடியில் இருந்து எங்களைக் காப்பாற்றணும்....!”

3

நான்... நான் என்று ஆணவமாகச் சொல்லிய

மன்னர்களும் மற்றவர்களும் எங்கே?

குஞ்ஞுபாத்தும்மா தன்னை அழகுபடுத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். கையிலும் காலிலும் மைலாஞ்சி இட்டு சிவப்பாக்கி- கண்களில் மை இட்டு கறுப்பாக்கி யாரையோ எதிர்பார்த்து அங்கே அமர்ந்திருக்கிறாள்.

“யார் வர்றது?”

முதலில் திருமணம் என்பது ஒரு விளையாட்டுபோலத்தான் அவளுக்குத் தோன்றியது. வெற்றிலை போட்டு உதடுகளைச் சிவப்பாக்கிக் கொண்டு “குடும்பஸ்தி” ஆகலாம். காதுகளில் தங்கத்தால் ஆன கம்மல் அணியலாம். தாய்- தந்தையுடன் சேர்ந்து ஹஜ் யாத்திரை போகலாம். ஆனால், அதற்கு... வரப்போகும் ஆண் சம்மதம் தர வேண்டுமே!

என்ன இருந்தாலும் திருமணம் செய்ய வரப்போகிற ஆண் யாரும் யானை மக்காரின் அன்பு மகளின் அன்பு மகளுக்கு இணையானவனாக இருக்கப் போவதில்லை. சிலருக்கு அவ்வளவு வசதி இருக்காது. சிலரின் குலம் அவ்வளவு மேன்மைப்பட்டதாக இருக்காது.

இப்படி நாட்கள் கடந்துக்கொண்டிருந்தன. குஞ்ஞுபாத்தும்மா விற்கு வயது ஏறிக்கொண்டே வந்தது. அப்போது அவளின் மனதில் ஒரு சிறிய ஆசை தோன்றியது. அது அப்படியொன்றும் பெரிய ஒரு விஷயமில்லை. அவளின் மனதில் ஒரு சின்ன மனக்குறைபோல அது இருந்தது. தன்னை மணக்கப்போகிற ஆணின் முகத்தை தான் முன்கூட்டியே ஒருமுறை பார்க்க வேண்டும். அது ஒன்றுதான் அவளின் மனதில் இருந்த ஆசை.

இருந்தாலும், தன் மனதில் இருந்த ஆசையை அவள் யாரிடமும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி பெரிய அளவில் ஏதாவது பிரச்சினை வந்துவிட்டால்...? முஸ்லிம் பெண்கள் மத்தியில் பொதுவாக நடைமுறையில் இல்லாத வழக்கம் அது. இருந்தாலும், அவள் மனதிற்குள் நாளுக்கு நாள் அந்த ஆசை வளர்ந்து கொண்டிருந்ததென்னவோ உண்மை. வெறுமனே அமர்ந்து மனதிற்குள் கனவு கண்டு கொண்டிருக்கலாமே தவிர, அவளால் என்ன செய்ய முடியும்? வீட்டில் ஐந்தாறு வேலைக்காரிகள் இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் ஒரே ஓசை மயமாகவே இருக்கும். அவ்வப்போது அவளின் தாயின் மிதியடி எழுப்பும் “க்டோ க்டோ” என்ற சத்தம் வேறு கேட்டுக் கொண்டே இருக்கும். வெளியே அவளின் தந்தையின் குரல். அங்கே நிறைய ஆண்கள் கூடியிருப்பார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள்?

அவளுக்குப் புரியக்கூடிய விஷயங்கள் அல்ல அவை. நீதிமன்றம், வக்கீல்கள், எதிர்சாட்சிகள், லஞ்சம்- இப்படி எவ்வளவோ விஷயங்கள் அங்கு பேசப்படும். சில நேரங்களில் அவளின் கல்யாண விஷயமும் பேசப்படும். அந்த மாதிரியான நேரங்களில் அவளின் ஒவ்வொரு அணுவும் அதைப்பற்றி விழிப்பாக இருந்து கேட்க முயற்சிக்கும். ஆனால், அவளால் அசையக்கூட முடியாது. குஞ்ஞுபாத்தும்மா அசைந்தால், அது உலகத்திற்கே தெரிய வரும். அதைப்பற்றி அவளுக்கே வெட்கமுண்டு. அவள் மூச்சுவிட்டால்கூட “க்லோ” என்று ஒலி உண்டாகும். நடந்தால்... பிறகு சொல்லவே வேண்டாம். “க்லோ! ச்லோ... ப்லோ...” என்று சத்தம் உண்டாக ஆரம்பித்துவிடும். இவ்வளவு நகைகள் உடம்பில் எதற்கு? இவற்றை யாருக்குக் காட்டுவதற்காக அவள் அணிந்திருக்கிறாள்? வேண்டுமென்றால் சில நகைகளை உடம்பிலிருந்து நீக்கி வைக்கலாம். ஆனால், பெண்ணைப் பார்க்க வருகிற பெண்கள் எப்போது வீடேறி வருவார்கள் என்பதைச் சொல்லவே முடியாது. தங்க நகைகள் குறைவாக இருப்பதைப் பார்த்தால், விஷயம் அவ்வளவுதான்.

வந்த பெண்கள் அனைவரும் தங்கத்தில் மூழ்கிப்போய் வந்தார்கள். எல்லாருமே குடும்பப் பெண்கள்தாம். என்ன கேள்விகளெல்லாம் அவர்கள் கேட்கிறார்கள்! சந்தேகங்கள்... சந்தேகங்கள்... சிலர் அவளின் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்கள். பற்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பார்க்கத்தான். உள் பற்கள் எதையும் புழு தின்றிருக்கிறதா என்பதையும் காணத்தான்.

அவளின் பற்களுக்கு எந்தவித கேடும் உண்டாகவில்லை. பற்கள் அனைத்தும் ஒழுங்காக- அழகாகவே இருக்கின்றன.

பிறகு சில பெண்களுக்கு குஞ்ஞுபாத்தும்மா முட்டாளா என்பது தெரியவேண்டும். இல்லாவிட்டால் அவள் அறிவாளியா என்பது தெரிய வேண்டும். அதற்காக அவர்கள் ஒவ்வொரு கேள்வியைக் கேட்பார்கள்.

“நம்மளைப் படைச்சது யார்?” ஒருத்தி கேட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“அல்லாஹ்!”

பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களையும் உயிரினங்களான எல்லா உயிரினங்களையும் படைத்தது அல்லாஹ்தானே!

“க்யாமத்தின் அடையாளங்கள் என்னென்ன?”

அதாவது- உலகம் முடிவதற்கான அடையாளங்கள் என்னென்ன என்பது இதன் அர்த்தம். இந்த உலகம் ஒருநாள் அழியும். அதை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு சில அடையாளங்கள் இருக்கின்றன. அதை குஞ்ஞுபாத்தும்மா விளக்கமாகக் கூறுவாள்... கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள். மேலே இருப்பவர்கள் கீழே போவார்கள். பொய்கள் பெருகும். தெய்வ நம்பிக்கை இல்லாமற் போகும். மதங்கள் இல்லாமற் போகும். தாய்- தந்தை சொல்வதைக் கேட்க மாட்டார்கள். குருக்களை வணங்க மாட்டார்கள். வயதானவர்களைக் கிண்டல் பண்ணுவார்கள்.


பெண்களுக்கு அடக்க ஒடுக்கம், நாணம் எதுவும் இல்லாமற் போகும். யாரையும் யாருக்கும் மதிக்கத் தோன்றாது. யாரையும் யாரும் நம்ப மாட்டார்கள். அன்பு என்ற ஒன்றே இல்லாமற் போகும். பகை பெருகும். வன்முறை அதிகரிக்கும். மன்னர்களும் ஆட்சி செய்பவர்களும் கொடூர குணம் கொண்ட மனிதர்களாக இருப்பார்கள். உலகத்தை அடக்கி ஆளும் மோகம் பெருகும். சர்வ நாசசக்தி படைத்த ஆயுதங்களை வைத்து பயங்கரமான போர்கள் நடக்கும்... அப்போதும் உலகம் அழியாது. இதை அழிக்க அல்லாஹுவால் மட்டுமே முடியும். க்யாமம் நெருங்குவதற்குச் சில வருடங்களுக்கு முன்பு மனிதர்களுக்கு மறதி என்ற நோய் உண்டாகும்... அப்போது ஒருநாள் சூரியன் உதித்தவுடன் மனிதர்கள் அவரவர்களின் வேலைகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு நிற்கிறபோது, திடீரென்று ஒரு உரத்த ஒலியை உலகமெங்கிலும் உள்ள மக்கள் கேட்பார்கள்.

“அடடா... இதென்ன ஒலி?” என்று அவர்கள் வியந்து நிற்பார்கள். அதுதான் உலக முடிவைக் காட்டும் “ஸூர்.”

இஸ்ராஃபீல் என்ற மலக்தான் அந்த ஒலியை உண்டாக்குவது. அந்த ஒலி வருவது ஒரு குழலின் மூலமாக. அந்தக் குழலில் உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களின் எண்ணிக்கையையும் அனுசரித்து துவாரங்கள் இருக்கும்... அந்த ஒலியைக் கேட்டதும் மனிதர்கள் ஒவ்வொரு திசைகளில் இருந்தும் வந்து ஒரு இடத்தில் கூடி கலக்கத்துடன் கேட்பார்கள்:

“இந்த ஒலி எங்கேயிருந்து வருது?”

அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இடி இடிப்பதைப் போல பெரிதாகும். உயிரினங்கள் பைத்தியம் பிடித்து அலையத் தொடங்கும். ஒலி மேலும் மேலும் பெரிதாகி ஒலிக்க ஆரம்பிக்கும். மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ஒவ்வொன்றாகவும் கூட்டம் கூட்டமாகவும் இறந்து கிடப்பார்கள். பூமி குலுங்கும். அது சிதறி வெடிக்கும். கடல்கள் பிளந்து நாட்டுக்குள் நீர் புக ஆரம்பிக்கும். மலைகளும், மலைச்சிகரங்களும் லட்சம் லட்சம் துண்டுகளாகச் சிதறும். கொடுங்காற்று உண்டாகி வீசும். உலகத்தில் நெருப்பு என்ற ஒன்று எங்கும் இல்லாமல் போகும். நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் குளிர்ந்து தகர்ந்து கரியாய் போகும். எல்லாம் அழியும். எல்லா கிரகங்களும் தகர்ந்து பொடிப் பொடியாகும். கடைசியில் ஒரே இருட்டு... ஒரே இருட்டு... இறுதியில் ரப்புல் ஆலமீன் தம்புரான் மட்டுமே இருப்பார். அப்போது அவர் சொல்லுவார்:

“நான் நானென்று அகங்காரத்துடன் சொல்லித் திரிந்த மன்னர்களும் மற்றவர்களும் எங்கே?”

இருட்டு... ஒரே இருட்டு...

இந்த விதத்தில் கோடிக்கணக்கான யுகங்கள் அவர் மட்டுமே இருப்பார்... மீண்டும் பூமியைப் படைப்பார். நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் உண்டாகும். எல்லா ஆத்மாக்களும் மீண்டும் உலகத்திற்குள் கொண்டு வரப்படும். பிறகு தண்டனை, அதிலிருந்து தப்பித்தல்... எல்லாவற்றையும் விளக்கமாக குஞ்ஞுபாத்தும்மா கூறுவாள். அவளுக்கு இந்த விஷயங்களெல்லாம் மனப்பாடமான மாதிரி.

இவ்வாறு கேள்விகள் கேட்பதும் அவளைச் சோதனை பண்ணி பார்ப்பதும் அவளைப் பார்க்க வருவதும்... மகனுக்காக அல்லது சகோதரனுக்காக!

அவளுக்கும் ஒரு தம்பி இருந்திருந்தால்...! ஒருநாள் அவளும் இதே போன்று சில வீடுகளுக்குள் நுழைந்து சில கேள்விகள் கேட்டு “பெரிய மனுஷி” ஆக நடந்து காட்டியிருக்கலாம். ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அவை எல்லாமே குஞ்ஞுபாத்தும்மாவிற்கு தெரியும். முழுமையான ஈடுபாட்டுடன் அவள் குர்ஆன் ஓதுவாள். குர்ஆன் அல்லாஹுவின் வார்த்தைகள்தானே! குர்ஆனைத் தொட வேண்டுமென்றால் உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஒன்று குளிக்கவேண்டும். இல்லாவிட்டால் “ஓஸு” எடுக்க வேண்டும். அதற்கு சில அரேபிய வாக்கியங்களைக் கூறியவாறு கைகள், வாய், மூக்கு, முகம், காதுகள், நெற்றி, பாதங்கள்- எல்லாவற்றையும்  மூன்று மூன்று முறைகள் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பிறகு... அவளுக்கு நிஸ்கரிக்கத் தெரியும். ஸுபஹ், ளுஹ்ர், அஸர், மக்ரிப், இசா- இப்படி ஐந்து முறை கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு முன்னால் நின்று கொண்டு தொழவேண்டும். இதுதவிர, “இஸ்லாம் காரியம்”, “ஈமான் காரியம்” எல்லாமே அவளுக்குத் தெரியும். அவளை இந்த விஷயத்தில் யாராலும் தோற்கடிக்க முடியாது. பெண் பார்க்க வந்தவர்களில் ஒரு பெண் கேட்டாள்:

“ஆயிஷா பீபின்றது யார்?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“முத்நபியோட பீடர்.”

முஹம்மது நபியின் மனைவிமார்களில் ஒருவர் ஆயிஷா பீபி.

“ஆயிஷா பீபிக்கு காது குத்தி இருந்துச்சா?”

“குத்தி இருந்துச்சு!”

“காதுல என்ன போட்டிருந்தாங்க?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“சொர்க்கத்துல இருந்து ஜிப்ரீல் (அனலஸ்ஸலாம்) முத்துச்சரம் கொண்டு வந்து ரஸூல் ஸல்லாஹு அலைஹி வஸல்லாமினோட கையில் கொடுத்து, முத்நபி அதை ஆயிஷா பீபியோட காதுல போட்டார்...”

அவளின் காதுகளில் முத்துச்சரம் எதுவும் அணிந்திருக்கவில்லை. இரண்டு காதுகளிலும் சேர்ந்து இருபத்தொரு தங்க வளையங்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றிலும் தங்கத்தாலான ஆல இலை போல இருபத்தொரு இலைகள். அவை காற்று படும்போது சிறிய ஓசையை எழுப்பி ஆடும்.

அவளின் காதுகளில் தங்கத்தாலான இரண்டு தக்கைகள் உண்டு. அதிலும் இரண்டு பொன்னாலான இலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். கழுத்தில் தங்க மாலை தவிர, தடிமனான ஒரு தங்க நெக்லெஸ் வேறு அழகு செய்யும். அவளின் தாயின் கழுத்தில் இருப்பது போன்ற தாலிக்கொடி இல்லை. அது திருமணத்திற்குப் பிறகே போடப்படும். அவளின் கைகளில் பொன்னாலான வளையல்கள் இருக்கின்றன. விரலில் மோதிரங்கள். அது அவளின் தந்தை அணிந்திருப்பதைப்போல அல்ல. இஸ்லாமியர்களான ஆண்கள் தனி தங்கத்தை உபயோகிக்கக்கூடாது.

குஞ்ஞுபாத்தும்மாவின் விரலில் இருக்கும் மோதிரம் கட்டித் தங்கத்தால் செய்யப்பட்டது. யானைக் கண்ணன் மோதிரம் அது. அவளின் இடுப்பில் பொன்னாலான ஆபரணம் உண்டு. அதில் ஏராளமான வேலைப்பாடுகள் இருக்கின்றன. பிறகு... அவளின் கால்களில் பொன்னாலான சிலம்பு இருக்கிறது. அதன் உட்பகுதி பொந்துபோல இருக்கும். அதற்குள் இருந்துதான் அவள் நடக்கும்போது ஓசை அதிகமாகக் கேட்கும். அதற்குள் என்ன இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. பொன் துகள்களோ, மண் துகள்களோ.... எதுவோ இருக்கின்றன.

அதுதான் நடக்கும்போது ஒருவித ஓசையை உண்டாக்குகிறது.

அவள் வெறுமனே அமர்ந்திருப்பாள். பசிக்காமலே சாப்பிடுவாள். உறக்கம் வராமலே படுத்திருப்பாள்.

அவள் அந்தப் பெரிய கட்டடத்தின் முற்றத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்கும் இரவு நேரங்களில் நின்று கொண்டிருப்பாள். மனதில் என்னவோ ஒரு கவலை அலைமோதிக் கொண்டிருக்கும். அந்தக் கவலைக்குக் காரணம் என்ன? குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. “நான் ஏன் கவலைப்பட வேண்டும்?” அவள் சில வேளைகளில் நினைத்துப் பார்ப்பாள். அவளிடம் வேண்டிய தெல்லாம் இருக்கின்றன.


இருந்தாலும் அவள் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் ஆகாயத்தையே பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பாள். அப்போது அவளின் தாய் அவளை உள்ளே அழைப்பாள். அங்கே அப்படி நின்று கொண்டிருக்கக் கூடாது! யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள்?

“ஆகாயத்துல யாரு உம்மா இருக்காங்க?”

அவளின் தாய் கூறுவாள்:

“இஃப்ரீத்தும், ஜின்னும், சைத்தானும்...”

ஆகாயத்தில் பறந்து போகிற ஏதாவது கண்ணுக்குத் தெரியாத உயிர் அவளைப் பார்த்துவிட்டால்...?

கண்ணால் காண்பதுபோல ஆகாயம் வெறுமனே இல்லை. மலக், ஜின்னு, இஃப்ரீத், சைத்தான்- இவை போதாதென்று இப்லீஸ் என்ற பகைவனும் ஆகாயத்தில் பறந்து திரிவார்கள். அப்படிப் போய்க் கொண்டிருக்கும்போது குஞ்ஞுபாத்தும்மாவை அவர்கள் பார்க்க நேர்ந்தால்- சிலர் மோகம் உண்டாகி அவளின் உடலுக்குள் புகுந்து கொள்வார்கள்.

அவள் உள்ளே போவாள்.

மனிதர்களோ, மலைகளோ, ஜின்னோ யாராக இருந்தாலும் தன்னைப் பார்ப்பதைப்பற்றி அவளுக்கொன்றும் இல்லை. இருந்தாலும் அவளொரு முஸ்லிம் பெண்ணாயிற்றே!

அவள் ஒரு கைதியைப்போல் ஆகிவிட்டாள். காற்றும் வெளிச்சமும் அவளுக்குக் கிடையாது. அவள் மனதிற்குள் அழுதாள். ஆடைகள் அவளையும் மீறி அவிழ்கின்றன. அவள் என்னவெல்லாமோ கனவுகள் கண்டு தூக்கம் நீங்கி எழுந்து விடுகிறாள். அந்தக் கனவுகளை யாரிடமும் சொல்ல முடியாது. அவளின் ஒவ்வொரு அணுவையும் அந்தக் கனவுகள் சூடு பிடிக்கச் செய்கின்றன. இப்படி கனவுகள் கண்டே குஞ்ஞுபாத்தும்மா இருபத்தொரு வயதை அடைந்து விட்டாள். அப்போது அவளின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.

அவள் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் அவளின் தந்தை அவளிடமிருந்து வாங்கினார். அவளின் தாய்தான் அவை எல்லாவற்றையும் கழற்றியது. எல்லாவற்றையும் எடைபோட்டு விற்று வழக்கு நடத்தப்படுகிறது.

குஞ்ஞுபாத்தும்மாவின் காதுகளும், கழுத்தும், இடுப்பும், கைகளும், கால்களும் ஒன்றுமே இல்லாமல் ஆயின. எப்போது பார்த்தாலும் அவளின் தந்தையும், அவரைச் சுற்றியுள்ள கூட்டமும் நீதிமன்றமே கதி என்று இருந்தார்கள். வழக்கு நடந்துகொண்டே இருந்தது. கடைசியில் உடலையே நடுங்கச் செய்யும் அந்தத் தீர்ப்பும் கூறப்பட்டது. வழக்கு அவளின் தந்தைக்கு எதிராக முடிந்தது.

அவமானத்தையும், தோல்விகளையும் அவர்கள் சந்திக்க வேண்டிய நிலை உண்டானது. அவர்கள் போக வேண்டியதுதான்...

எங்கே?

ஒரு மாலை நேரம். அன்று சீக்கிரமே நிலவு உதித்து மேலே வந்தது.

பிறந்து வளர்ந்த வீட்டிடமிருந்து குஞ்ஞுபாத்தும்மா இறுதி விடை பெற்றாள். அவர்கள் புறப்பட்டார்கள். உயரமான, நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் அவளின் தந்தை முன்னால் நடக்க, தலையைக் குனிந்தவாறு அவளின் தாய் பின்னால் தொடர, எந்தவித உணர்ச்சியும் இல்லாமலே குஞ்ஞுபாத்தும்மா அவர்கள் பின்னால் நடந்தாள். மக்கள் அனைவரும் பார்க்க பொதுச் சாலையில் அவர்கள் இறங்கி பள்ளிவாசலைத் தாண்டி நதிக்கரையை அடைந்தார்கள்.

உலகத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால்... அவர்களின் இறந்த காலம், நிகழ்காலம்... எல்லாமே தகர்ந்துபோய் விட்டன. இருந்தாலும்... நிலவொளியில் நதியும் மணல் வெளியும் தெளிவாகத் தெரிந்தன... நீரில் ஆட்கள் குளித்துக்கொண்டிருந்தனர். மணல் பரப்பில் சிலர் கூட்டமாக அமர்ந்து சிரித்து மகிழ்ந்து உல்லாசமாக இருந்தனர். உலகத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், வட்டனடிமையின், அவர் மனைவியின், அவர் மகளின் வாழ்க்கைதான் மொத்தத்தில் தகர்ந்துபோய்விட்டது.

உலகத்திற்கு ஒன்றுமே நடக்கவில்லை.

குஞ்ஞுபாத்தும்மா தன் தாய், தந்தையை அடியொற்றி எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் நடந்து சென்றாள். அவளின் கால்கள் தளர்ந்தன. உடல் தளர்ந்தது. இருந்தாலும் அற்புதங்கள் நிறைந்த உலகம்... மக்கள் நடமாட்டமே இல்லாத சாலை.

நிலவொளியில் அவள் பின்னால் நடந்து சென்றாள். போகும் இடம் எது? இந்த இரவு முடியாதா?

4

ழைய இரண்டு மிதியடிகள்

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு எதற்கு என்று தெரியாமலே சந்தோஷம் உண்டானது. இந்த நிலைக்காக வருத்தப்படுவதா இல்லையா என்பதே புரியாமல் ஒரு மகிழ்ச்சி. நடந்திருப்பது ஒரு நடக்கக் கூடாத சம்பவம். இருந்தாலும் மக்களைக் காணலாம். சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். சூரிய வெளிச்சத்தில் நிற்கலாம். நிலவொளியில் நனையலாம், ஓடலாம், குதிக்கலாம், பாட்டு பாடலாம். பாட்டு எதுவுமே தெரியாது என்றாலும்- எல்லா விஷயங்களிலும் அவளுக்கு சுதந்திரம் இருக்கிறது. மலக், ஜின்னு, இஃப்ரீத், இன்ஸ்- யார்வேண்டுமானாலும் வரட்டுமே!

ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். யாருமே வரவில்லை! பணமில்லாதவர்களை யாருக்கு வேண்டும்?

அந்த விஷயத்தில் குஞ்ஞுபாத்தும்மாவால் ஆணித்தரமான முடிவுடன் இருக்க முடியவில்லை. பணமில்லையென்றாலும் அவளிடம் இளமை இருந்தது. அழகு இருந்தது. சில ஆண்கள் அவள் மீது விருப்பம் காட்டினார்கள். சிலர் அவளைப் பார்த்து கண்ணடிப்பார்கள். சிலர் நாணயங்களைக் காட்டுவார்கள்.

அது எதுவும் நல்லதிற்கில்லை என்பது அவளுக்குத் தெரியும். அழிவுப் பாதைக்கான அழைப்பு அது! அவர்களை என்ன செய்வது? அவள் யாருடைய பார்வையிலும் படாமல் புளிய மரத்தின் நிழலில் வந்து உட்கார்ந்திருப்பாள். அதுவும் இல்லாவிட்டால் தாமரைக் குளத்தின் அருகில் வந்து அமர்ந்திருப்பாள்.

குளத்தில் தண்ணீர் கடும் நீல நிறத்தில் இருக்கும். ஏராளமாக வெள்ளை, சிவப்பு நிறங்களில் தாமரைப் பூக்கள் மலர்ந்திருக்கும். நீரோடு சேர்ந்து பச்சை நிறத்தில் உள்ள அகலமான இலைகள் ஒளிர்ந்து கொண்டிருக்கும். மலர்ந்து நிற்கும் பூக்களை குளிர்ந்த காற்று தாலாட்டிக் கொண்டிருக்கும்.

அவள் அங்கேயே உட்கார்ந்திருப்பாள். முடிவற்ற ஆகாயம். பெரிய உலகம்.

வீடு பக்கத்திலேயே இருந்தது. அது வீடு என்று குஞ்ஞு பாத்தும்மாவுக்குத் தோன்றியதே இல்லை. தோலை நீக்கியது மாதிரி வெறும் செங்கல்லாலான பழைய ஒரு சிறு வீடு. இரண்டு அறைகளும் ஒரு அடுக்களையும் அதில் இருந்தன. வீட்டின்மேல் வைக்கோல் வேயப்பட்டிருந்தது. கூரையில் ஆங்காங்கே நெற்கள் முளைத்து பச்சையாக நின்றிருந்தன.

வீட்டுக்குள் பொருட்கள் அப்படியொன்றும் அதிகமாக இல்லை. இரண்டு மூன்று பாய்களும் தலையணைகளும் இருந்தன. எல்லாருடைய ஆடைகளையும் வைக்கக்கூடிய ஒரு பெட்டி. பிறகு... இரண்டு மூன்று மண்ணெண்ணெய் விளக்குகள்.

சமையலறையில் இரண்டு மூன்று மண் பாண்டங்களும், குழம்பு வைப்பதற்கான சில சட்டிகளும். உண்பதற்கும் கஞ்சி குடிப்பதற்கும் பயன்படுத்தப்படும் தொப்பி சட்டிகள்.

அந்தச் சிறிய அறைக்குள்தான் குடிக்கவோ, சாப்பிடவோ செய்ய வேண்டும்.

பழைய வீட்டிலிருந்து எதையும் கொண்டு வரவில்லை. வெறுங்கையோடுதான் அவர்கள் வந்ததே. இருந்தாலும் தாத்தாவுக்குச் சொந்தமான அந்தப் பெரிய ஆண் யானையின் கொம்பால் செய்யப்பட்ட இரண்டு மிதியடிகளையும் அவளின் தாய் எப்படியோ இங்கு கொண்டு வந்துவிட்டாள். வரும்போது தன் தாயின் கையில் அது இருந்ததா என்பதை குஞ்ஞுபாத்தும்மா கவனிக்கவில்லை.


அந்த மிதியடிகளைப் போட்டுக் கொண்டுதான் எப்போதும் குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் நடப்பாள். எப்போது பார்த்தாலும் அவள் “கலபலா” என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு வாய் நிறைய வெற்றிலை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அவளின் தந்தை வெற்றிலை போடுவதில்லை. திடீரென்று அவருக்கு நரைக்க ஆரம்பித்துவிட்டது. அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. எங்கு என்றில்லாமல் எங்கோ தூரத்தை நோக்கி அவரின் பார்வை இருந்து கொண்டே இருக்கும். நினைத்து அசை போடத்தான் எவ்வளவோ விஷயங்கள் இருக்குமே! பெரிய சாம்ராஜ்ஜியமே கையை விட்டுப்போன மாதிரி எத்தனைச் சம்பவங்கள்!

“அதெல்லாம் படைச்சவனோட, முத்நபியோட, நேர்ச்சக்காரோட விருப்பம்.” அவளின் தந்தை கூறுவார்: “ஒரு நேரம்கூட நான் தொழாம இருந்தது இல்ல. ஒரு நோன்பைக்கூட விட்டது இல்ல...”

பிறகு எப்படி இவ்வாறு நடந்தது? குஞ்ஞுபாத்தும்மாவிற்குப் புரிந்தது. ஒன்றுமே நடக்கவில்லை. இல்லாவிட்டால் சம்பவத்திற்குக் காரணகர்த்தா யார்?  தன் தந்தையைக் குற்றம் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. தன் தாயையும் அத்தைமார்களையும் மாமாமார்களையும் குற்றக்காரர்களாக அவள் நினைக்கவில்லை. பரிசுத்த நூலான குர்ஆனைத் தொட்டு கள்ள சாட்சி சொன்ன மனிதர்களையும் எப்படி குற்றக்காரர்கள் என்று சொல்ல முடியும்?  சொல்லப்போனால் மனிதர்கள் யாரிடமும் குஞ்ஞுபாத்தும்மா குற்றம் கண்டுபிடிக்க விரும்பவில்லை. உண்மையான குற்றவாளி சைத்தானான இப்லீஸ் என்ற பகைவன்தான்.

குஞ்ஞுபாத்தும்மா எப்போதும் தொழுவாள்:

“ரப்புல் ஆலமீன் தம்புரானே... இனியாவது எங்களை இப்லீஸ் என்ற பகைவன் செய்ற தொல்லைகள்ல இருந்து காப்பாற்று...”

இதைத்தவிர அவள் என்ன செய்ய முடியும்? இப்லீஸ் இப்படியொரு காரியத்தைச் செய்துவிட்டானே!

குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை தன் கைவசம் வைத்து அனுபவித்துக் கொண்டிருந்த தென்னந்தோப்புகளும், நெல் வயல்களும் அவருக்குச் சொந்தமானவை அல்ல. அந்தப் பெரிய வீடும், மற்ற சொத்துகளும் அவளின் தந்தைக்கும் அவரின் ஏழு சகோதரிகளுக்கும் சொந்தமானவை.

“ராத்திரிக்கு ராத்திரியே உம்மாவைக் காளை வண்டியிலே கச்சேரிக்குக் கொண்டு போயி எங்களோட அண்ணன் வட்டன டிமை, எங்களுக்குச் சேரவேண்டிய சொத்தையும் வாங்கிட்டார்” என்று ஏழு அத்தைமார்களும் ஒன்று சேர்ந்து அவளின் தந்தைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார்கள்.

“அது என்னோட உம்மா எனக்கு எழுதித் தந்தது” என்று குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை வாதிட்டார். வழக்கு பல வருடங்கள் நடந்து கொண்டே இருந்தது. இரண்டு பக்கங்களிலும் பணம் ஏராளமாக செலவு செய்யப்பட்டது. பெயர் பெற்ற வக்கீல்கள் வாதாடினர். இரண்டு பக்கத்தைச் சேர்ந்தவர்களும் வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு பள்ளி வாசலுக்கும் போய் நேர்ச்சைகள் செய்தார்கள். புண்ணிய ஆத்மாக்களின் கல்லறை களுக்குச் சென்று தொழுதார்கள். பணம் தந்தார்கள். பள்ளிவாசல் களில் கொடி குத்தலும், சந்தனக் குடமும் நடத்தினார்கள். இவை போதாதென்று இரண்டு பக்கங்களிலும் பெரிய மனிதர்கள் பலர் கள்ள சாட்சிகளாக வந்தனர். சொல்லப்போனால் வழக்கு வட்டனடிமைக்கு சாதகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஒரு குழப்பம் வருகிறது.

வட்டனடிமையின் தாய்க்கு பைத்தியம் இருந்தது! நிலையான புத்தியுடன் அவள் அதை எழுதித் தரவில்லை. இருந்தாலும், இறந்து மண்ணுக்குக் கீழே போய்விட்ட அந்தக் கிழவியை அழைத்து திரும்ப கொண்டு வந்து கூண்டில் ஏற்றி விளக்கம் கேட்க முடியுமா? சாட்சிகள் வந்தார்கள்.

“வட்டனடிமையோட அம்மாவுக்கு பைத்தியம்!”

அவர்கள் இவ்வாறு சொன்னார்கள். பைத்தியம் இருந்ததோ இல்லையோ- வட்டனடிமையின் தாய்க்குச் சொந்தமான சொத்தில் அவரின் சகோதரிகளுக்கும் உரிமை இருக்கிறது அல்லவா? பலவித குழப்பமான விஷயங்களைக் கொண்ட அந்த வழக்கைப் பற்றி குஞ்ஞுபாத்தும்மாவிற்கு பெரிய அளவில் ஆர்வம் எதுவும் இல்லை. எல்லாமே சைத்தானான இப்லீஸ் என்ற பகைவனின் வேலை என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும். எது எப்படியோ- வழக்கு அவளின் தந்தைக்கு எதிராக அமைந்துவிட்டது. பள்ளிவாசல் பொறுப்பேற்கும் வழக்கிற்காகவும், இந்த வழக்கிற்கும் செலவழித்த பணம் வகையில் கை வசம் இருந்த நிறைய நிலங்கள் கைவிட்டுப் போயின. அவருக்கு கடைசியில் மீதி இருந்தது வழியோரத்தில் இருந்த அந்தச் சிறு இடம் மட்டுமே.

அந்த இடத்தில் அந்தச் சிறிய வைக்கோல் வேய்ந்த வீடும், நான்கு பாக்கு மரங்களும், ஒன்பது தென்னை மரங்களும், ஒரு கிணறும், ஒரு புளிய மரமும், அதற்கருகில் ஒரு தாமரைக் குளமும் இருந்தன. அதை முதலில் பார்த்தபோது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. தாமரைக் குளத்தை வாழ்க்கை யிலேயே முதல் முறையாக அப்போதுதான் பார்க்கிறாள் அவள். வெள்ளையும் சிவப்புமாக நிறைய பூக்கள் அங்கு மலர்ந்திருந்தன. அவள் அவற்றை எண்ணிப் பார்ப்பாள். ஒரு பக்கத்திலிருந்து அவள் பூக்களை எண்ணிக் கொண்டிருக்கும்போது அவளை தாயோ- தந்தையோ எதற்காகவாவது அழைப்பார்கள். எப்போதும் அவள் அதை எண்ணி முடித்ததே இல்லை. இருந்தாலும் அவளுக்கு அந்தக் குளத்தை மிகவும் பிடித்திருந்தது. அதையும் மீறி அதன் அருகில் ஒரு பயங்கரம்... ஒரு குரூரத் தன்மை... இது வெளியே தெரியவில்லை.

அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அதற்குப் பிறகு அவள் குளிக்கச் செல்வது பக்கத்து நிலத்தில் இருந்த கிணற்றைத் தேடித்தான். அங்கே ஒரு கட்டடம் இருந்தது. அதில் யாரும் வசிக்கவில்லை. குளிக்க வருபவர்கள் சில நேரங்களில் அந்தக் கட்டடத்தில் சிறிது நேரம் இருப்பார்கள். அந்த மாதிரியான நேரங்களில் அவள் அங்கே போகமாட்டாள். அந்தக் கிணற்று நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதையொட்டி இருந்த நிலத்தில் நிறைய முல்லைச் செடிகள் இருந்தன. அதில் ஏகப்பட்ட மணமுள்ள வெண்மையான மலர்கள். அவள் அதை குனிந்து பொறுக்கி எடுப்பாள். தலையில் வைப்பது இல்லை.  முஸ்லிம் பெண்கள் பூவைத் தலையில் சூடலாமா என்பது அவளுக்குத் தெரியாது. இருந்தாலும், முல்லைப் பூவை அவளுக்குப் பிடித்திருந்தது. வெறுமனே அவள் அங்கே உட்கார்ந்து வாழை நாரில் முல்லைப் பூக்களை மாலையாகக் கட்டிக் கொண்டிருப்பாள். அங்கே உட்கார்ந்திருப்பதில் அவள் சுகம் கண்டாள். ஒருசிறு அசைவுகூட அங்கு இருக்காது. யாருமே வரமாட்டார்கள். முன்பக்கம் ஏறி இறங்கினால் சாலை. அதைத் தாண்டி நெல் வயல்கள். அதையும் தாண்டினால் தூரத்தில் நதி. அங்கே போய் குளிக்க வேண்டும் என்றால், ஒற்றையடிப் பாதை வழியே நடந்துபோக வேண்டும். திருமண வயதில்  இருக்கிற ஒரு முஸ்லிம் பெண் எப்படி ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்ல முடியும்? பிறகு... இப்போது குடியிருக்கிற இடத்தில் உள்ள கிணறு என்று எடுத்துக்கொண்டால் அங்கு எந்தவிதமான மறைவிடமும் இல்லை.


அதனால் ஒருநாள் குஞ்ஞுபாத்தும்மா நினைத்தாள்- தாமரைக் குளத்தில் குளிக்கலாம் என்று. யாரும் பார்க்கமாட்டார்கள். பிற்பகலைத் தாண்டியிருக்கும் நேரம். வெயில் “சுள்” என்று காய்ந்து கொண்டிருந்தது. அவள் ஒரு துண்டை கையில் எடுத்துக்கொண்டு போனாள். சட்டையை அவிழ்த்து புல்லின் மேல் இட்டாள். பிறகு... துண்டைக் கட்டிக் கொண்டு, முண்டை அவிழ்த்து சட்டையின்மேல் போட்டாள்.

மெதுவாக தண்ணீருக்குள் இறங்கினாள். மார்புவரை நீரில் மூழ்கினாள். இரண்டு மூன்று முறை நீருக்குள் மூழ்கிவிட்டு, உடலைத்  தேய்க்க ஆரம்பித்தாள். எதேச்சையாக தண்ணீரைப் பார்த்தபோது, சுருங்கிப்போய் நீளமாக இருந்த- தடிமனாக இல்லாத- கறுப்பான ஏதோ ஒன்று அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

“கடவுளே... அட்டை!”

குஞ்ஞுபாத்தும்மா வேகமாக கரைமேல் ஏறினாள். தொடையில் என்னவோ கறுப்பாக... பார்த்தபோது அவள் நடுங்கிவிட்டாள். உடல் “கிடு கிடு”வென்று ஆடியது. ஒரு அட்டை அவளின் தொடையைக் கடித்துக்கொண்டிருந்தது. இரண்டு தலைகளாலும்!

“உம்மா... உப்பா... ஓடி வாங்க. என்னைக் கடிச்சு கொல்லுது! ஓடி வாங்க... எல்லாரும் ஓடிவாங்க” என்று கத்தவேண்டும்போல் இருந்தது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு. ஆனால், அவள் சட்டையை இன்னும் போடாமல் இருந்தாள். முண்டையும் கட்டாமல் இருந்தாள். என்ன செய்வது?

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் விறைத்துப்போய் நின்றிருந்தாள். அட்டை கொஞ்சம் கொஞ்சமாக வீங்கிக் கொண்டி ருந்தது. அது ஒரு முனையை விட்டு தொங்கிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு என்னவோபோல் இருந்தது. இலேசாக அசைகிறபோது அது நிர்வாணமான தொடையில் உரசியது. ஹோ... அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். அட்டை ஒரு உருண்டையாகக் கீழே விழுந்தபோது, அவள் பயந்து நடுங்கி விட்டாள்.

தொடையில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவள் ஒரு கையால் நீரை எடுத்து ரத்தத்தைக் கழுவினாள்.

அட்டையை என்ன செய்வது?

அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. அதோடு அருவருப்பும். அதைக் கண்டபடி திட்ட வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. என்ன சொல்லித் திட்டுவது?

“இப்லீஸே! என் ரத்தம் முழுவதையும் நீ குடிச்சிட்டே!” என்று சொல்லியவாறு அவள் அதைக் கொல்ல நினைத்தாள். ஆனால், அவளால் அது முடியாது. அட்டையை அவளின் தாயும் தந்தையும் பார்ப்பார்கள். அட்டை ஆணா பெண்ணா என்பது அவளுக்குத் தெரியாது. மக்களும் பார்ப்பார்கள். அல்லாஹ் படைத்தது அந்த அட்டை. குஞ்ஞுபாத்தும்மாவைப் படைத்ததும் அல்லாஹுதான். அப்படியென்றால்... அதைக் கொல்லுவதற்கில்லை. கொல்வது பாவம். ஒரு உயிரைத் துன்புறுத்துவது கூடாது.

எது எப்படியோ... அட்டை போய்க்கொள்ளட்டும். அதன் வீட்டை நோக்கிச் செல்லட்டும். தப்பித்துப் போகட்டும். போ...

“அட்டையே... இனிமேல் நீ யாரையும் கடிச்சு ரத்தத்தைக் குடிக்கக்கூடாது. தெரியுதா? ரத்தத்தைக் குடிச்சியன்னா, நீ செத்துப் போன பிறகு  உன்னை கடவுள் நரகத்திற்கு அனுப்பிடுவாரு. பார்த்துக்கோ...” என்று சொன்ன அவள் அடுத்த நிமிடம் ஒரு கம்பை எடுத்து அதற்கு வலி எதுவும் உண்டாகாத வகையில் அதைத் தூக்கி தண்ணீருக்குள் விட்டாள். அது விழுவதற்காகக் காத்திருந்ததைப் போல, “கப்” என்றொரு சத்தத்துடன் பெரிய ஒரு விரால் மீன் அதை விழுங்கி முடித்தது.

குஞ்ஞுபாத்தும்மா பார்த்தபோது- ஒன்றல்ல- இரண்டு மீன்கள் இருந்தன. “புருஷனும் பொண்டாட்டியும்.” அவை மட்டுமல்ல- “குழந்தைகளும்” இருந்தன. சிவப்பு நிறத்தில் சிறு குஞ்சுகள்! நீல வண்ண நீரில் அவை சிவப்பாக மின்னின.

“நீ எதுக்கு இந்த அட்டையைச் சாப்பிட்ட, விரால் மீனே? பாவம் இல்லியா?”

மீனைப்பிடித்து மனிதர்கள் தின்பது பாவமான ஒரு செயலாக குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியவில்லை. அவள் அந்த விரால் மீன் குடும்பத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அன்பை வெளிப் படுத்தாத கண்கள். இரண்டு செவிகள் வழியேயும் நீர் போய்க்கொண்டிருந்தது.

அவற்றில் அந்தத் தடிமனான விரால் மீன் அவளையே பார்த்தது. குஞ்ஞுபாத்தும்மாவே கிடைத்தால்கூட அவளை “கப்” என்று அது விழுங்கவே செய்யும்.

அவள் ஆடைகளை அணிந்து, தலையை வாரி முடித்து தாமரைக் குளத்தையே வெறித்துப் பார்த்தாள்.

பூக்களெல்லாம் முன்பு இருந்தது மாதிரி வெள்ளையும் சிவப்புமாகத்தான்... ஆனால், அதற்குக் கீழே மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கிற அட்டைகளும், அட்டைகளை முழுதாக விழுங்குகிற விரால் மீன்களும் இருக்க- தாமரைப் பூக்கள் எந்தவித அழகும் இல்லாமல் அவளைப் பார்த்துக் கள்ளச்சிரிப்பு சிரிப்பது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவள் அப்படி நிற்கிறபோது வருகிறான் தாமரைக் குளத்தில் வசிக்கும் இன்னொருத்தன்!

ஒரு பெரிய தண்ணீர் பாம்புதான்! இல்லாவிட்டால் புளுவன் பாம்பா? அடிப்பாகம் வெண்மை நிறத்தில் இருந்தது. ஒரு தாமரை இலையில் உட்கார்ந்து கொண்டு தலையை நீருக்குள் நீட்டிக் கொண்டிருக்கிறது. திடீரென்று எதையோ அது பிடித்து, தலையை உயர்த்தியது. ஒரு அப்பாவி விரால் மீன்! அது அழவில்லை. கத்தவில்லை. வளைவதும் வாலை அசைப்பதுமாய் இருந்தது. அதை எந்தவித தயக்கமும் இல்லாமல் விழுங்கிவிட்டு அந்த பாம்பு முன்பு மாதிரி அசைவே இல்லாமல் கிடக்கிறது. அடுத்தது எங்கே?

குஞ்ஞுபாத்தும்மா உன்னிப்பாகப் பார்த்தபோது வேறு சிலரும் அவளுக்குத் தெரிந்தார்கள். ஆமை, கரிமீன், தவளை- உயிரினங்கள் எப்படிப் பலவிததிலும் இருக்கின்றன!

தாமரைப் பூக்கள் வெறுமனே சிரித்துக்கொண்டிருந்தன. மொத்தத்தில்- ஒரே நேரத்தில் அழகு, பயங்கரம் இரண்டுமே அந்த குளத்தில் கலந்திருந்தது.

அதற்குப் பிறகு குஞ்ஞுபாத்தும்மா தாமரைக் குளத்தைத் தேடிப் போகிறாள் என்றால், தன்னை விரும்பவும் பயமுறுத்தவும் செய்கிற ஒரு சினேகிதியை நாடிப்போவது மாதிரிதான்.

அவளுக்கு வேலை என்று எதுவும் இல்லை. வேலை எதுவும் செய்யலாம் என்றால், எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. முன்பு இல்லாத சுதந்திரம் அவளுக்கு இருக்கிறது. இந்த சுதந்திரத்தை தேவையில்லாமல் எதற்கு இழக்க வேண்டும்? உணவு தயாரிக்கிறேன் என்று போனால், அவளுக்கு நெருப்பு வைப்பது எப்படி என்பதுகூடத் தெரியாது. அவளின் தாய்க்கும் இதில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது.

அவளின் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு சாப்பாட்டுக்கு ஏதாவது கொண்டு வரவேண்டும். அதை அவர்தான் சமைக்கவும் செய்ய வேண்டும்.

“பொண்ணா பிறந்தா அடுப்ப பத்த வைக்கவாவது தெரிஞ்சிருக்கணும்...” அவளின் தந்தை சொல்லுவார்.

அதைக் கேட்கிறபோது குஞ்ஞுபாத்தும்மா நாணத்தால் சுருங்கிப் போவாள். ஆனால், தந்தை கூறுவது அவள் தாயிடம்தான். தாய் அவளின் பழைய மிதியடிகளைப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி, “க்டோ, ப்டோ” என்று நடந்தவாறே கூறுவாள்.

“நான் யானைமக்காரோட செல்ல மகளாக்கும்...”

அவளின் தந்தை எதுவுமே கூறமாட்டார்.


தாயின் கையில் தண்ணீரை மொண்டு ஊற்றவில்லை என்றால், தாய் சாப்பிடமாட்டாள். அப்படியே உட்கார்ந்திருப்பாள். அவள் தந்தை கோபத்துடன் பார்ப்பார். குஞ்ஞுபாத்தும்மா தாயின் கையில் தண்ணீரை ஊற்றுவாள். தாய் சொல்லுவாள்:

“உங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது. பெரிய ஒரு ஆண் யானை!”

அவளின் தந்தை எதுவுமே பேசமாட்டார். தாயின் பேச்சு அதிகமாக ஒரு எல்லையைத் தாண்டிப் போனால், அவர் மெதுவாகக் கூறுவார்:

“அடியே, உன் நாக்கை அடக்குறியா இல்லியா?”

தாய் கேட்பாள்:

“இல்லேன்னா மேல வந்து என்ன பாய்ஞ்சிடுவீங்களா? நான் யானை மக்காரோட செல்ல மகளாக்கும். எனக்கு லையினஸ் உண்டு!”

அவளின் தாய்க்கு என்ன பேசுவதற்கும் லைசன்ஸ் இருக்கிறது!

“என் பொன்னு அம்மாவே... கொஞ்சம் சும்மா இருக்கக்கூடாதா?” குஞ்ஞபாத்தும்மா சொல்லுவாள்.

“என்னைப் படைச்ச கடவுளே... நீதான் எல்லாத்துக்கும் காரணம்.” அவளின் தாய் கூறுவாள்.

“அப்படியானால் அப்பிராணி இப்லீஸ்ல குற்றவாளி!”

குஞ்ஞுபாத்தும்மா நினைத்துப் பார்த்து மனதிற்குள் புன்னகைப்பாள். இருந்தாலும், அவளால் அதிக நாட்கள் அப்படி புன்னகைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவளின் மனதிற்குள் பயம் நுழைய ஆரம்பித்தது. தன் தந்தை எப்போது தாயைக் கொல்லுவார்?

5

காற்று வீசியது; இலை விழவில்லை

மனிதர்கள் இப்படி ஆவதற்கான காரணம் என்ன? எவ்வளவு நேரம் உட்கார்ந்து  சிந்தித்துப் பார்த்தாலும் குஞ்ஞுபாத்தும்மா விற்கு புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் இது. ஒரு குறிப்பிட்ட வயது வந்தபிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்கக்கூட பிரியப்படாததற்கான காரணம் என்ன? உலகத்தில் உள்ள எல்லா தாய்- தந்தைகளும் இப்படித்தானா? ஒருவரை யொருவர் கடித்துக் கிழித்து விடுவதைப்போல் இப்படி ஏன் இவர்கள் இருக்கிறார்கள்? ஒருவருக்கொருவர் இனிமையான வார்த்தைகள் இல்லை. தேவையில்லாமல் கடுமையான வார்தை களைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வார்த்தைகளில் வன்முறை தான் கலந்திருக்கிறது. அவர்களுக்கிடையே சிறிதளவில்கூட அன்போ, பாசமோ கிடையாது. அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சில வேளைகளில் குஞ்ஞு பாத்தும்மாவிற்கு சிரிப்பு வரும். ஆனால், அவள் சிரிப்பதில்லை. வாழ்க்கை, ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறபோது சீராக இல்லை. தாறுமாறான பாதைகளில் போய்க்கொண்டிருக்கிறது. அது இப்படி ஆனதற்கான மூல காரணம் யார்? இப்படி அது போய்க் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? இதை யாரிடம் கேட்பது? அந்தந்த நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை. அணியும் ஆடைகள் விஷயத்தை எடுத்துக்கொண்டால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அணிந்திருக்கும் ஆடையையே மீண்டும் மீண்டும் அணிந்து... அதையே திரும்பத் திரும்ப சுத்தமாக்கி... எல்லாமே வண்ணம்போய்... இதற்கெல்லாம் யாரைக் குற்றம் சொல்லுவது?

இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்பதுதான். யாராலுமே கவனிக்கப் படாத மூன்று உயிர்கள்! நல்ல வசதியுடன் இருந்த காலத்தில் அவர் களைச் சுற்றி எத்தனை பேர் இருந்தார்கள்! ஊரில் இருந்த எல்லா ருமே ஏதாவதொரு விதத்தில் தாங்கள் இவர்களுக்குச் சொந்தம் என்பது மாதிரி பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லித் திரிவார்கள்.

“நான் உனக்கு மாமா” என்றோ “நான் உனக்கு சித்தப்பா” என்றோ சிலர் வந்து சொல்வார்கள்.

இப்போது அப்படிக் கூறுவதற்கு யாருமே இல்லை. இந்த அகன்ற பிரபஞ்சத்தில், அவர்கள் மூன்று பேர் மட்டும் தனி. ஆனால், இந்த மூன்று பேர்களுக்குள்... குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தையை தாய்க்கு பார்ப்பதற்கே பிடிக்கவில்லை. தொட்டதற்கெல்லாம் குற்றம்     சொல்லிக் கொண்டிருக்கிறாள். வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுகிறாள். அதுவும் மெதுவான குரலில் அல்ல. தெருவில் போவோர் வருவோர் எல்லாருக்கும் கேட்கும்படிதான். ஊரில் உள்ள அத்தனை பேரும் இதைக் கேட்டு கிண்டல் பண்ணுவார்கள். சிரிப்பார்கள். என்ன செய்வது? குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தைக்கு ஏதாவது புதிய பட்டப்பெயர் கண்டுபிடிப்பதிலேயே அவள் தாயின் மனம் எப்போதும் ஈடுபட்டிருக்கும். அப்படித்தான் “செம்மீன் அடிமை” என்றொரு பட்டப் பெயரை அவருக்கு அவளின் தாய் வைத்தாள்.

அவளின் தந்தை எந்தக் காலத்திலும் செம்மீன் வியாபாரம் செய்தது இல்லை. அதிகமாகப் பணம் முதலீடு தேவைப்படாத தொழில்களாகப் பார்த்துதான் அவர் எப்போதும் செய்வார். நடுவில் ஒருமுறை கருவாடு வியாபாரம் பண்ணிப் பார்த்தார். அந்த வியாபாரம் அவளின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. கருவாடு வியாபாரம் பண்ணும் அவரின் உடல்மேல் எப்போது பார்த்தாலும் பயங்கர நாற்றம் இருக்கும். அதோடு நிற்காமல் கருவாடு இருக்கும் பகுதி முழுவதும் அந்த நாற்றத்தின் ஆக்கிரமிப்பு இருக்கும். பறவை, மீன், சுறா, ஐலை, சாளை என்ற மத்தி- இப்படிப் பல கருவாடுகள். அவற்றை ஒரு கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு போய் அவளின் தந்தை எங்கோ தூரத்தில் இருக்கும் ஒரு சந்தையில் வைத்து விற்பார். ஊரில் பெரிய மனிதராக இருந்த வட்டனடிமை. கருவாடு விற்கும்போதுகூட, அவரின் நடவடிக்கையில் அந்த ராஜ களை தெரியவே செய்யும். வியாபாரம் முடிந்து திரும்பி வருகிறபோது, அரிசியும் குழம்பு வைப்பதற்கு மீனும் வாங்கிக் கொண்டு வருவார். முன்பு குஞ்ஞுபாத்தும்மா மீன் குழம்பு என்றால் விரும்பி சாப்பிடுவாள். மாமிசம் என்றாலும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். காலப்போக்கில் அவை இரண்டையும் சாப்பிடுவதை அவள் விட்டே விட்டாள். இப்போது அவள் சாப்பிடுவது காய்கறியை மட்டுமே.

தாமரைக் குளத்தில் விரால் அட்டையை விழுங்குவதைப் பார்த்த பிறகுதான் அவள் மீன் சாப்பிடுவதையே நிறுத்தினாள். அவளின் தந்தை மீன் வியாபாரத்தை நிறுத்திவிட்டு ஆட்டு மாமிசம் விற்பனை செய்ய ஆரம்பித்த பிறகு, அவள் அதைச் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டாள். அறுத்து தனியாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆட்டுத் தலையின் மூடாத அந்தக் கண்கள்... அதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அதைப் பார்க்கும்போது மனதில் இனம்புரியாத ஒரு சோகம் உண்டாகும். மீனோ மாமிசமோ- எதுவாக இருந்தாலும் அவற்றை வேக வைத்து சமையல் பண்ணி கொடுப்பதில் அவளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், அவள் உப்பு பார்க்கமாட்டாள் என்பதுதான் விஷயமே. ஒரு குறிப்பிட்ட அளவை மனதில் வைத்துக்கொண்டு அவள் அவற்றைச் சமைத்துத்தர நாளடைவில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டாள். அவளின் தந்தை பொழுது புலர்ந்ததும் எழுந்து பல் தேய்த்து காலை நேர தொழுகையான சுபஹ் முடிக்கிறபோது, அவள் ஒரு பாத்திரம் நிறைய பால் கலக்காத தேநீர் தயார் பண்ணி வைத்திருப்பாள். அவர் அதைக் குடித்து முடித்து “பிஸ்மீம்” சொல்லி கடவுளை மனதிற்குள் நினைத்தவாறே உடலை நேராக நிமிர்த்திக்கொண்டு நடந்துபோவார்.


கையில் கொஞ்சம் பணம் இருக்கும். தூரத்தில் எங்கோ இருக்கும் அந்தச் சந்தைக்குச் சென்று வாழைக் குலையோ, கிழங்கோ, சேனையோ, பாக்கோ, தேங்காயோ ஏதாவது வாங்கி விற்பதற்குத்தான்.

“செம்மீன் அடிமை பவுன் வாங்க போயாச்சாடி?” என்று கேட்டவாறுதான் அவளின் தாய் படுக்கையை விட்டே எழுந்திருப்பாள். பவுன்... முன்பு எவ்வளவோ பார்த்ததுதான். அவள் எழும்போது, காகங்கள் கரைந்துகொண்டிருக்கும். நேரம் வெளுத்து, வெயில் வர ஆரம்பித்திருக்கும். அவளின் தாய்க்கு கடவுள் மேல்கூட கோபம்தான். தொழுகை எதுவும் செய்வதே இல்லை. எதற்காகத் தொழ வேண்டும்?

“ஓ... எத்தனையோ முறை தொழுதாச்சு. இருந்தாலும் என்ன பிரயோஜனம்? அடியே, தண்ணியைச் சுட வச்சிட்டியா?”

தண்ணீர் சூடாகி தயாராக இருக்கும். குஞ்ஞுபாத்தும்மா சொல்வாள்:

“தண்ணீர் சூடு பண்ணி வச்சிருக்கேன்மா!”

சுடு நீர் இல்லையென்றால், அவளின் தாய் குளிக்க மாட்டாள். முன்பு நல்ல வசதியுடன் இருந்த காலத்தில் முழுக்க முழுக்க வென்னீரில்தானே அவள் குளித்தது! அதனால் ஒவ்வொரு நாளும் தவறாமல் குஞ்ஞுபாத்தும்மா அம்மாவிற்கு சுடு நீர் தயார் பண்ணி வைத்துவிடுவாள். இருந்தாலும், அதிலும் அவளின் தாய் குற்றம் கண்டு பிடிக்காமல் இருக்கமாட்டாள். ஒன்று- சூடு அதிகமாகிப் போய்விட்டது என்பாள். இல்லாவிட்டால் தண்ணீர் போதுமான அளவிற்கு சூடாகவில்லை என்பாள். குளித்து முடித்தால், அவளின் தாய் சலவை செய்யப்பட்ட ஆடையை அணிந்தாக வேண்டும். பாலும் சர்க்கரையும் போட்ட சுவையான தேநீர் அருந்தியாக வேண்டும். நெல் கலந்து செய்யப்பட்ட தடிமனான பத்திரி சாப்பிட்டே ஆக வேண்டும். ஆடைகளைப் பொறுத்தவரை தன்னுடைய தந்தையின், தாயின், தனது ஆடைகளை முதல் நாள் மாலை நேரத்திற்கு முன்பே உட்கார்ந்து தோய்த்து காயப் போட்டிருப்பாள். தாய் குளித்து முடித்தவுடன் அவளுடைய ஆடைகளை எடுத்து அவள் தந்துவிடுவாள். பிறகு... தேநீர், பலகாரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால்... பனம் சர்க்கரை கலந்த, பால் இல்லாத தேநீர் இருக்கும். தேநீரில் இனிப்புக்குப் பதிலாக உப்பு சேர்த்துக் குடிக்கலாம் என்பது குஞ்ஞுபாத்தும்மாவின் கண்டு பிடிப்பு. அவளின் தாய்க்கு இதெல்லாம் பிடிக்காது. வேறு எதுவும் இல்லாததால் “கெட்ட நேரத்துல பொறந்தவளே” என்று சொல்லியவாறு அதை அவள் குடிப்பாள். ஆரம்பத்தில் கையில் உள்ள சட்டியை மண்ணில் போட்டு உடைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் மண்சட்டி வாங்குவதற்கு பணத்திற்கு எங்கே போவது? அவளின் தந்தை ஒருநாள் சொன்னார்:

“இனிமேல் அவளுக்கு செரட்டையில கொடுத்தால் போதும்...”

அவளின் தாய் அன்று வாய்விட்டு அழுதுவிட்டாள். அவள் சொன்னாள்:

“மைதீனே... கடவுளே... உன் காதுல இது விழலியா? முத்நபியே... நீ இதைக் கேட்டியா? யானை மக்காரோட செல்ல மகளுக்கு செரட்டை போதுமாம்... சொல்றாரு!”

அதற்கும் குஞ்ஞுபாத்தும்மாவைத்தான் குறை சொல்லுவாள் அவளின் தாய்.

“நீ அதிர்ஷ்டமே இல்லாதவ. தோஷம் பிடிச்சவ. உன் கன்னத்துல இருக்குற மருதான் எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்!”

அவளின் கன்னத்தில் இருக்கும் அந்தக் கறுப்பு மருவைக் கிள்ளி வீசி எறிய முடியுமா?

இதைக் கேட்டதும் அவளின் தந்தையின் கண்கள் “ஜிவ்”வென்று சிவந்துவிடும். கடுமையான கோபத்துடன் மெதுவான குரலில், “அடியே குஞ்ஞுபாத்தும்மா!” என்று அழைப்பார். அந்த சத்தத்தில் ஒரு பயமுறுத்தல் இருக்கும். அவளின் தாய் எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பாள். தந்தை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டவுடன் அம்மா ஆரம்பித்துவிடுவாள்:

“கெட்ட நேரத்துல பொறந்தவளே! அதிர்ஷ்டம் இல்லாதவளே! பீடை பிடிச்சவளே! உன்னை பாம்பு கடிக்கப்போகுது! உன்னை எந்த நிமிஷத்துல பார்த்தேனோ...”

இந்த விதத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாள் அந்த பெற்ற தாய். வழியில் நடந்து செல்லும் சிறுவர்கள் கூக்குரலிட்டு அழைப்பார்கள். குஞ்ஞுபாத்தும்மா சொல்லுவாள்:

“அம்மா... கொஞ்சம் மெதுவா...”

“சத்தமா சொல்லுவேன்டி... எனக்கு லெயினஸ் இருக்குடி சத்தமா பேசுறதுக்கு...”

இப்படித்தான் ஒருநாள் அவளின் தாய் உரத்த குரலில் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் காதில் வாங்கிய அவளின் தந்தை வெறுமனே அமைதியாக இருக்கும்படி தன் மனைவியிடம் கூறினார். ஆனால், அவள் அதைக் காதில் வாங்கினால்தானே! அவளின் தந்தை மீண்டும் கூறினார். பிறகு கண்கள் சிவந்த அவர் எழுந்து சென்றார்...

அதைப் பார்த்து கேலியுடன் அவளின் தாய் சிரித்தாள். கிண்டலான குரலில் அவள் சொன்னாள்:

“செம்மீனடிமை யானை மக்காரோட செல்ல மகளை பயமுறுத்தலாம்னு பார்த்தா நடக்குமா?” என்று அவள் முழுமையாக சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் ஒரு பயங்கர சம்பவம் நடந்தது.

அவளின் தந்தையின் வலது கை அவளின் தாயின் சங்குப் பகுதியைப் பிடித்தது. தொண்டைப் பகுதியில் இருந்த அந்தக் கை வேகமாக இறுகியது. அவளின் தாய் கண்களால் வெறித்தாள். பற்களைக் கடித்தவாறு அவளின் தந்தை சொன்னார்:

“நீ செத்துத் தொலை!” மனைவியும் கணவணும்!

ஒரு சிறு குழந்தையைத் தூக்குவதுபோல அவளின் தந்தை அவள் தாயின் கழுத்தை ஒரே கையால் பிடித்துத் தூக்கினார். அப்படியே தூக்கிய வேகத்தில் “பொத்” என்று போட்டார். தாயின் மிதியடிகள் இரண்டையும் மிதித்து வெளியே தூக்கிப் போட்டார். அவளின் தாய் அசைவே இல்லாமல் கிடந்தாள்!

இவ்வளவு விஷயங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. குஞ்ஞுபாத்தும்மா என்ன செய்வதென்று தெரியாமல் சிலை என நின்றுவிட்டாள். உலகமெல்லாம் இருண்டு போய் விட்டதைப்போலவும், ஒரு மிகப்பெரிய ஆழமான குழிக்குள் தான் விழுந்து கிடப்பதைப்போலவும் அவள் உணர்ந்தாள்... தன் தாயை தன் தந்தை கொலை செய்துவிட்டார்! அவளுக்கு நாக்கே அசையவில்லை. ஓசையே இல்லாமல் அவள் நின்று அழுதாள்.

அவளின் தந்தை சொன்னார்:

“மகளே... அழாதே!”

குஞ்ஞுபாத்தும்மாவால் அழுகையை அடக்க முடியவில்லை. அவள் தேம்பித் தேம்பி அழுதாள். இதயமே வெடித்துப்போகிற மாதிரி வாய்விட்டு அழுதாள். ரப்புல் ஆலமீன்! பிரபஞ்சங்களைப் படைத்த கடவுளே! இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

அடிக்கடி வீட்டில் ஏதாவது அசம்பாவிதமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. உதவிக்கு யாருமே வரவில்லை. தான் மட்டும் தனியாகிவிட்டதுபோல் அவள் உணர்ந்தாள். அம்மாவே போய்விட்டாள்... கொஞ்ச நேரத்தில் அப்பாவின் கையில் விலங்குகளைப் போட்டு போலீஸ்காரர்கள் அவரைக் கொண்டு போகப் போகிறார்கள்!

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு உலகில் உதவிக்கு என்று யாரும் இல்லை.


அம்மாவின் உடல்... யாராவது வந்து அவள் தாயின் உடலைக் குளிப்பாட்டி புதிய ஆடையில் “கஃபன்” சுற்றி உடலை வைக்கும் கட்டிலான “சந்தோக்”கில் வைத்து, “லா இல்லலாஹ்! லா இலாஹ இல்லாஹ்” என்று கூட்டமாக நின்று உச்சரித்தவாறு அந்த உடலைச் சுமந்துகொண்டுபோய், பள்ளிவாசலின் உடலடக்கம் செய்யப்படும் இடத்தில் அவளின் தாயின் உடலை அடக்கம் செய்வார்கள். பிறகு...? அவள் தனியாகி விடுவாள். அவளால் எதையுமே சிந்திக்க முடியவில்லை. குஞ்ஞுபாத்தும்மாவிற்கு கண்களை அடைத்துக் கொண்டு வந்தது. அவளால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. அவள் வாய்விட்டு அழுதாள். யா இலாஹி! தெய்வமே!

“வாப்பா... இப்படி பண்ணிட்டீங்களே!”

“மகளே...” அவளின் தந்தை சொன்னார்: “அழாதே. நீ போயி வெளியே உட்காரு...”

குஞ்ஞுபாத்தும்மா வாசலுக்குப் போய் அங்கிருந்த தூணைப் பிடித்து நின்றுகொண்டிருந்தாள். ஓசையே உண்டாக்காமல் அவள் அழுதாள். மனம் முழுமையாக அமைதியை இழந்துவிட்டிருந்தது. அப்படி நின்றுகொண்டிருந்தபோது அவள் “ஹஜ்ரத்துல் முன்தஹா”வைப் பற்றி நினைத்துப் பார்த்தாள்.

அது சொர்க்கத்தில். ஹஜ்ரத்துல் முன்தஹா என்பது அந்தப் பெரிய மரத்தின் பெயர். அந்த மரத்திற்குக் கீழ்ப்பகுதியில் இருந்து மூன்று நதிகள் புறப்படுகின்றன. சொர்க்கத்திலிருந்து புறப்படும் நதிகள்- நைல், டைக்ரீஸ், யுஃப்ரட்டீஸ். இவற்றை யெல்லாம்  சொல்லி என்ன பிரயோஜனம்? மனதில் எண்ணிப் பார்க்கும்போது சுகமாகவே இருக்கிறது. எல்லா மதங்களிலுமே இத்தகைய கதைகள் இருக்கவே செய்கின்றன. பக்தர்களும் இந்தக் கதைகளை நம்பத்தான் செய்கிறார்கள். இந்தக் கதைகளை எல்லாம் அவள் பள்ளி வாசலில் நடக்கு “வ அஸ்” என்ற இரவுநேர பிரசங்கங் களில் கேட்டு மனதில் தங்க வைத்திருந்தாள். அந்த மரத்தின் இலைகளில் எல்லா உயிரினங்களின் பெயர்களும் இருக்கும். காற்று வீசுகிறபோது, அந்த இலைகளில் சில கீழே விழும். அப்படி விழும் இலைகளில் எழுதப்பட்டிருக்கும் பெயரைக் கொண்ட உயிர் மரணத்தைத் தழுவும். சில இலைகள் அதிக காலம் இருந்து பழுத்துப்போன பிறகுதான் கீழே விழும். சில இலைகள் பச்சை யாக இருக்கும்போதே விழும். சில இலைகள் ஆரம்ப               நிலையிலேயே விழுந்துவிடும். தன் தாயின் பெயர் எழுதப் பட்டிருக்கும் இலை... இப்படி அவள் நினைத்துக்கொண்டு நின்றிருந்த நிமிடத்தில் உள்ளேயிருந்த அவளின் தாயின் குரல் கேட்கிறது:

“என்னைப் படைச்ச கடவுளே!” அவளின் தாய்தான். “எனக்குன்னு யாரும் இல்லியா? மைதீனே! (மைதீன் என்பது முஹையதீன் அப்துல் காதர் ஜிலானி. இவர் ஒரு புண்ணிய புருஷர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார். இவரின் கல்லறை பாக்தாத்திலோ எங்கோ இருக்கிறது. இதைப்போல வேறு சிலரும் இருக்கிறார்கள். இவர்களால் ஏதாவது செய்ய முடியுமா? குர் ஆனில் அல்லாஹ் சொல்கிறார்: “நான் யாருடைய சிபாரிசையும் கேட்கக்கூடியவன் அல்ல”) எனக்குன்னு யாருமே இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மாவின் கவலையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவள் எண்ணினாள்:

காற்று வீசியது- இலை விழவில்லை.

குஞ்ஞுபாத்தும்மா வீட்டுக்குள் வந்தாள். அவளின் தாய் எழுந்து உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும், நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

“உம்மா... சும்மா இருக்கணும்...” என்று சொன்ன குஞ்ஞபாத்தும்மா தன் தாயின் அருகில் சென்றாள்.

அப்போது அவளின் தாய் என்னவோ முணுமுணுத்தாள். அது ஒரு பாட்டுபோல இருந்தது. அவளின் தாய் சொன்னாள்:

“தடவி விடுடி தடவு! மைதீனே தடவு. முத்நபியே தடவு! தடவி விடுடி தடவு!”

கடவுளின் தூதரான முஹம்மது நபிதான் முத்நபி!

எங்கே தடவுவது என்று குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் கேட்டாள்:

“எங்கே உம்மா தடவி விட...?”

அவளின் தாய் மெதுவான குரலில் சொன்னாள்:

“கையில, கால்ல...”

“நீ கொஞ்சம் தள்ளி நில்லு...” அவளின் தந்தை அருகில் சென்று அவளின் தாயைத் தடவினார். அவர் சொன்னார்:

“குஞ்ஞுபாத்தும்மா, நீ போயி வாசல்ல இரு...”

அவள் வாசலுக்குப் போனாள்.

உள்ளே அவர்களின் பேச்சு சத்தம் கேட்டது. இடையில் அவளின் தாய் கேட்டாள்.

“என்னைக் கொன்னுட்டு, வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தீங்களா?”

அதற்கு தன் தந்தை என்ன பதில் சொன்னார் என்பதை குஞ்ஞுபாத்தும்மா கேட்கவில்லை. அவள் முற்றத்தில் இறங்கி வெறுமனே இங்குமங்கும் நடந்தாள். அப்போது சற்று குர உயர்த்தி தன் தந்தை சொன்னது அவள் காதில் விழுந்தது.

“நாம எல்லாரும் இன்னைக்கு தௌபா செய்யணும்...”

செய்த தப்புக்கு ரப்புல் ஆலமீன் தம்புரானிடம் மன்னிப்பு கேட்பது. இனிமேல் தப்பு செய்யாமல் இருப்பது. அது நல்ல விஷயம்தான். ஆனால், அந்த வீட்டில் தௌபா இல்லை. பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் அது கட்டாயம் இருக்கும். அது இருப்பது அரபியில். அரபி, மலையாளத்தில் முஸ்லிம்கள் எழுதி அச்சடித்து வீட்டில் வைத்திருப்பார்கள். ஏதாவதொரு வீட்டில் இருந்து அவளின் தந்தை அதை வாங்கிக்கொண்டு வருவார்.

குஞ்ஞுபாத்தும்மா வாசலில் நடந்துகொண்டிருந்தபோது அவளின் தாயும் தந்தையும் அங்கு வந்தார்கள். அவளின் தாய் சொன்னாள்:

“எண்ணெய்யும், குழம்பும், இஞ்சியும் வேணும்!”

அவளின் தந்தை அதை மவுனமாகக் கேட்டவாறு குஞ்ஞுபாத்தும்மாவிடம் சொன்னார்:

“மகளே... உம்மாவுக்கு குளிக்கிறதுக்கு நீ கொஞ்சம் வென்னீர் தயார் பண்ணு...”

அவளின் தந்தை வெளியே புறப்பட்டார்.

குஞ்ஞுபாத்தும்மா தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருக்கும் போது, அவளின் தந்தை எங்கிருந்தோ எண்ணெய், குழம்பு, இஞ்சி ஆகியவற்றுடன் வந்தார். அவளின் தாய் அவற்றை உடலில் தேய்த்து குளிக்க ஆரம்பித்தபோது, அவளின் தந்தை புறப்பட்டார்.

குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“உம்மா, நான் போய் குளிக்கட்டுமா?”

அம்மா சரி என்றாள். அவள் துண்டையும், குளித்து முடித்தபிறகு அணிவதற்கான ஆடைகளையும், வாளியையும், கயிறையும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பினாள்.

அவளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்பது அப்போது அவளுக்குத் தெரியாது. அவளின் தாய் சொன்னாள்:

“தாமதமாகாம சீக்கிரமா வந்திடு, என்ன?”

அவள் சொன்னாள்:

“இல்ல... நான் சீக்கிரம் வந்திர்றேன்...”

அவள் நடந்தாள். அப்போது...? அவள் நினைத்துப் பார்த்தாள்: காற்று வீசியபோது, இலை விழுந்திருந்தால்...?

அவள் மனதிற்குள் தொழுதாள்:

“ரப்புல் ஆலமீன் தம்புரானே! காற்று வீசினாலும் எங்க யாரோட இலையும் கீழே விழக்கூடாது...!”


6

ரு குருவியின் அழுகை

குஞ்ஞுபாத்தும்மாவின் வீட்டு முற்றத்தில் ஒரு குருவி கத்தியது. அவள் அருகில் சென்று அதைப் பார்க்கவும் செய்தாள். இரண்டு குருவிகள் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குருவி வேதனை தாங்காமல் கத்தியது.

அந்தக் குருவிகள் எதற்காக சண்டை போட வேண்டும்? குஞ்ஞுபாத்தும்மா “ஷ்ஷு”, “பு”, “துர்ர்” என்று பலவித ஓசைகளையும் உண்டாக்கினாள். அப்போது அந்த இரண்டு குருவிகளும் பறந்து தூரத்தில்  ஓடின.

தாமரைக் குளத்தைத் தாண்டி இருந்த தென்னை மரத்தாலான  பாலத்தில் அவள் ஏறியபோது அந்த இரண்டு குருவிகளும் புளிய மரத்தில் இருந்தவாறு ஒன்றையொன்று மீண்டும் கொத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். கொத்தியதோடு மட்டுமல்ல; இரண்டு குருவிகளில் ஒன்று கத்தவும் செய்தது. பருந்து தூக்கிக் கொண்டு போகும் கோழிக்குஞ்சைப்போல, அந்தக் குருவி உதவிக்காக கெஞ்சியது. அதைப் பார்த்ததும் அவள் மனதில் கவலை உண்டானது. அவள் தன் கையில் இருந்த வாளியையும் கயிறையும் கீழே வைத்துவிட்டு ஓடினாள்.

“நீங்க ஏன் சண்டை போடுறீங்க? சும்மா இருக்க வேண்டியது தானே!” என்று அவள் சொன்னாள். குருவிகள் அதைக் கேட்டது மாதிரி தெரியவில்லை. பயங்கர கோபத்துடன் ஒன்றையொன்று கொத்துவதிலேயே குறியாய் இருந்தன. பார்ப்பதற்கு சிறிய பறவைகளாக அவை இருந்தாலும், அவற்றுக்குள் என்ன போராட்ட குணம்! சுதந்திரமாகப் பறந்து திரிகின்ற பறவைகள் சண்டை போடுவதை இப்போதுதான் அவள் முதல் முறையாகப் பார்க்கிறாள் என்று இல்லை. பருந்துகள், காகங்கள், மைனாக்கள் ஆகியவற்றின் கொத்துதலையும் சண்டைகளையும் அவள் பலமுறை இதற்கு முன்புகூட பார்த்திருக்கிறாள். இது கணவன்- மனைவி சண்டையா? கோழிகளுக்கு இடையே கொத்துதல் நடக்கிறபோது, ஒரு கோழியை யாராவது பிடித்து தூக்கிக்கொண்டு போவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் கொத்திக் கொத்தி ஒரு கோழியைச் சாகடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். குஞ்ஞுபாத்தும்மா மீண்டும் சொன்னாள்:

“சொன்னா கேட்க மாட்டீங்களா? உங்களால் சும்மா இருக்க முடியாதா? எதற்கு அதைப்போயி கொத்துறே?”

அந்தச் சண்டையில் ஒரு அணிலும் இடையில் தலையிட்டுக் கொண்டிருந்தது. அது புளிய மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு “துஸ்துஸ்” என்று சண்டையை விலக்கிக் கொண்டிருந்தது.

அணிலைப் பார்த்து குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“சொன்னா கேக்க மாட்டேங்குதா?”

பறவைகள் விஷயத்தில் பறவைகள் அல்லாதவர்கள் தேவையில்லாமல் தலையிடுவது நல்லதல்ல என்று உபதேசம் செய்வது மாதிரி ஒரு மரங்கொத்தி கத்தியது. தொடர்ந்து தென்னை மரத்தில் சிவப்பு நிறத்தில் உட்கார்ந்துகொண்டு “கடுகடு” என்று கொத்தி ஓசை உண்டாக்கியது. குருவிகள் பறந்துபோய் இன்னொரு மரத்தில் உட்கார்ந்துகொண்டு சண்டையைத் தொடர்ந்தன. கொத்து வாங்கிய குருவி பரிதாபமாகக் கத்தியவாறு கீழே கிடக்கும் சருகுகளின்மேல் போய்விழுந்தது. இரண்டு கைகளையும் விரித்து பூமியைக் கடைசி முறையாக ஆவேசத்துடன் கட்டிப் பிடிக்க முயலும் ஒரு மனிதனைப்போல அந்த அப்பிராணி குருவி அதன் இரண்டு சிறகுகளையும் விரித்தவாறு பூமிமேல் கவிழ்ந்து கிடந்தது.

“இங்க பாரு!” குஞ்ஞுபாத்தும்மா இதயத்தில் வேதனையுடன் சொன்னாள்: “இப்படியா நீ நடக்குறது!”

அவள் கரையோரமாக நடந்து சென்றாள். கீழே இறங்கிப்போய் பார்க்க ஒரு வசதியுமில்லை. குருவியின் உயிர் போயிருக்குமா? அதன் வாயில் ஒரு துளி தண்ணீரைவிட்டால், ஒருவேளை அது பிழைத்தாலும் பிழைத்துக்கொள்ளலாம். ஆனால், அதன் பெயர் எழுதப்பட்டிருக்கும் ஹஜ்ரத்துல் முன்தஹாவின் சிறிய இலை இதற்கு முன்பே கீழே விழுந்திந்திருக்குமோ? அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? அதில் எவ்வளவு இலைகள் இருக்கும்! எல்லா இலைகளும் ஒரே மாதிரி இருக்காது. எறும்பின் பெயர் எழுதப்பட்டிருக்கும் இலை மிகவும் சிறியதாக இருக்கும். அதைவிட பெரியதாக இருக்கும் குருவியின் பெயர் எழுதப்பட்டிருக் கும் இலை. யானையின் பெயர் எழுதப்பட்டிருக்கும் இலைதான் உலகத்திலேயே மிகப் பெரிதாக இருக்கும். குஞ்ஞுபாத்தும்மா கடலைப் பார்த்தது இல்லை. அதனால்தான் யானையைவிட பெரிதாக இருக்கும் திமிங்கிலத்தைப் பற்றி அவள் நினைக்காதது. அவளின் தாத்தாவுக்குச் சொந்தமான யானையின் பெயர் எழுதப்பட்ட இலை காய்ந்துபோய் ஹஜ்ரத்துல் முன்தஹாவின் அடியில் விழுந்து கிடக்கும். ஒரு வேளை அது பொடிப் பொடியாகி சொர்க்கத்தின் மண்ணோடு சேர்ந்து போயிருக்குமோ? சொர்க்கத்தில் மண் இருக்குமா என்று குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. அவள் அங்கு வளர்ந்திருந்த ஒரு சிறு செடியைப் பிடித்தவாறு மெதுவாக கீழே இறங்க முயற்சித்தாள். அப்போது அவள் மிதித்திருந்த கட்டை லேசாக நகர, பிடித்திருந்த செடியை விட்டு அவள் பிடி விலக, அடுத்த நிமிடம் அவள் கீழ் நோக்கி தடுமாறி விழுந்தாள்.

“என் ரப்பே!” என்று அழைத்தவாறுதான் அவள் கீழே விழுந்தாள்.  எங்கேயெல்லாமோ அவளுக்கு காயம் உண்டானது. கீறல் ஏற்பட்டது. இடது கையில் முட்டிக்குக் கீழே காயம் ஏற்பட்டது. ரத்தம் அங்கு வழிந்து கொண்டிருந்தது. அப்போது அது அவளுக்குத் தெரியாது. அவளுக்கு எரிச்சலும், தாகமும், மனக் கவலையும் ஒரே நேரத்தில் உண்டாயின. கீழே விழுந்த அவள் அந்தக் குருவியைக் கையில் எடுத்தாள்; எழுந்தாள். அதற்கு உயிர் போய்விட்டது என்பது மாதிரி அவளுக்குப் பட்டது. அதற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்துப் பார்த்தால் என்ன என்று நினைத்தாள். அப்போதுதான் தன் கை முட்டியில் குருதி வழிந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள்.

“உன்னால் என் கையில் காயம் பாரு” என்று சொல்லியவாறு தன் இடது கை விரலால் குருவியின் வாயைப் பிளந்து பார்த்தாள். வலது கை சுட்டு விரலில் ஒரு துளி ரத்தத்தை எடுத்து குருவியின் வாய்க்குள் வைத்தாள். பிறகு அதன் சிறகுகளைச் சரிப்படுத்தினாள். அதைத் திருப்பிப் பார்த்த அவள் அதன் வயிறைப் பார்த்தாள். “கடவுளே... பெண் குருவி” என்று அவள் தன்னை மறந்து கூறினாள். குருவியின் வயிற்றுப் பகுதி லேசான தோலாலாகி இருந்தது. அதன் வழியாகப் பார்த்தபோது இரண்டு சிறு முட்டைகள் உள்ளே இருப்பது தெளிவாகத் தெரிந்தது. தன் தந்தை, தாயைக் கழுத்தைப் பிடித்து நெறித்துக்கொல்ல முயன்றதைப்போல... அவள் கேட்டாள்.

“கணவன் குருவி மனைவி குருவியை எதற்கு கொத்திக் கொல்லப் பார்க்கணும்?”

அப்போது அந்தக் குருவியின் உயிர் போகவில்லை என்பது அவளுக்குத் தெரியவந்தது. அதன் கண்கள் இரண்டும் திறந்திருந்தன. கண்களின் வழியாக அவள் அதன் உயிரைப் பார்த்தாள். மெதுவாக அவள் எழுந்தாள். குளத்திற்கு வெளியே ஒரு இளைஞன் நின்று கொண்டிருப்பதை அவள் பார்க்கவில்லை. கரையில் ஏறுவது எப்படி என்று தெரியாமல் அவள் தவித்துக்கொண்டிருந்தாள். அப்படியே சிறிது தூரம் நடந்து சென்றால், வயலை அடையலாம். ஆனால், அப்படிப் போவது அவளுக்குச் சரியாகப் படவில்லை.


ஒற்றையடிப் பாதை வழியே நடக்க வேண்டியது வரும். அப்படியென்றால் எப்படிச் செல்வது? அவள் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது ஒரு சத்தம் கேட்டது. அவள் பயப்படவில்லை. ஆச்சரியப்பட்டு நின்றுவிட்டாள். யாரென்றே தெரியாத ஒரு ஆணின் குரல்:

“குருவிக்கு உயிர் இருக்கா?”

யார் அது? அவள் எதுவும் பேசவில்லை. பேசியது காதில் விழவில்லை என்று நினைத்துக் கொள்ளட்டும். என்ன தர்மசங்கடமான நிலை! அவள் முகத்தைக் குனிந்தவாறு தரையைப் பார்த்து நின்றிருந்தாள். காய்ந்துபோன இலைகளில் விழுந்து கிடந்த அவளின் ரத்தத்தைச் சுற்றிலும் சுமார் ஐநுறு எறும்புகள் இருந்து அதைக் குடித்துக்கொண்டிருந்தன.

“கரையில் ஏற முடியலியா?” மீண்டும் மேலே இருந்து குரல்.

கரையில் ஏறுவதற்கு பிரச்சினைதான். இருந்தாலும் என்ன சொல்வது? அவள் உண்மையைச் சொன்னாள்:

“ஆமா...”

“அப்படியா?”

“ஆமா...” அப்படிச் சொன்னது சரிதானா? உலகத்திற்கு இந்த விஷயம் தெரிந்தால் அது என்ன நினைக்கும்? திருமண வயதைத் தாண்டியிருக்கும் ஒரு முஸ்லிம் பெண். அவள் இதுவரை பார்த்திராத, பேசியிராத ஒரு ஆணுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அதை மனதில் நினைத்துப் பார்த்தபோது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு என்னவோபோல் இருந்தது. இப்படிப் பல விஷயங்களையும் போட்டு அவள் குழம்பிக் கொண்டிருந்தபோது, அவளுக்கு நேர் எதிரில் சில மரக்கட்டைகள் விழுவதை அவள் பார்த்தாள். அந்த ஆள் இறங்கி வருகிறான்... வெள்ளை வேஷ்டியும் வெள்ளை சட்டையும் அணிந்திருக்கும் ஒரு இளைஞன். இடது கை மணிக் கட்டில் தங்க நிறத்தில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது. முடியை ஸ்டைலாக “க்ராப்” செய்திருந்தான்.

அவளால் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது. அவன் அங்கு வளர்ந்திருந்த செடிகளைப் பிடித்தவாறு மெதுவாக இறங்கி வந்தான். அவள் விழுந்த மாதிரி அவனும் விழுந்து விடுவானோ? ரப்பே... பத்திரமா பார்த்துக்கணும்... மனதிற்குள் பதைபதைப்புடன் அவள் நின்றிருந்தாள்.

“இதுவரை நான் உன்னைப்போல ஒரு பெண்ணைப் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகா இருக்கே ஆமா, குருவியோட பேர் என்ன?” மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியவாறு அந்த இளைஞன் பேசினான். அரும்பு மீசையும் பிரகாசமான கண்களும் கொண்ட இளைஞன் அவன்.

அவள் அளவிற்கு அவன் வெளுத்த நிறத்தைக் கொண்டவன் என்று சொல்வதற்கில்லை. தன்னுடைய பெயரைத்தான் அவன் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்ட அவள் சொன்னாள்:

“குஞ்ஞுபாத்தும்மா...”

“பேரு குஞ்ஞுபாத்தும்மாவா?”

“ஆமா...”

 “பேரு நல்லா இருக்கே...” அந்த இளைஞன் சொன்னான்: “குஞ்ஞு பாத்தும்மாவோட ரத்தம்தானே இந்த இலைகளில் இருக்கிறது?”

“ஆமா...” என்று அவள் சொன்னபோது அவளின் முழங்கைக்குக் கீழே பயங்கரமாக வலித்தது. அவள் தன் கையைத் திருப்பிப் பார்த்தாள். கல்லோ குச்சியோ நன்றாக கீறிவிட்டிருந்தது. ரத்தம் அதில் வழிந்துகொண்டிருந்தது.

“எங்கே... பார்க்கட்டுமா?” அந்த இளைஞன் சொன்னான்: “கையை மேலே தூக்கு. அப்படின்னாத்தான் ரத்தம் கீழே விழாம இருக்கும்.”

பிறகு தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்த கைக் குட்டையை எடுத்த அந்த இளைஞன் அதை மூன்றாகக் கிழித்து, அவளின் காயம் இருந்த இடத்தைக் கட்டினான். தொடர்ந்து தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதில் இருந்து ஒரு சிகரெட்டை உருவினான். சிகரெட்டின் மேலிருந்த பேப்பரைக் கிழித்து புகையிலை முழுவதையும் வெளியேற்றி உள்ளங்கையில் கொட்டினான்.

“கையைக் கொஞ்சம் கீழே இறக்கு...” அவன் சொன்னான். அவள் தன் கையைக் கீழே இறக்கினாள். அவன் காயத்தில் புகையிலையை வைத்து மெதுவாக அழுத்தினான். தன்னுடைய மார்பகங்கள் எங்கே அவன் உடலைத் தொட்டுவிடப் போகிறதோ என்று பயந்த அவள் அது படாத மாதிரி இலேசாகத் தன்னை வளைத்து நின்றாள். அப்போதுதான் வருத்தம் தரக்கூடிய அந்த விஷயத்தை அவள் பார்த்தாள். அதைப் பார்த்தபோது அவள் மனதிற்கு என்னவோ போல் இருந்தது. அந்த இளைஞனின் இடது கையில் பெருவிரலைக் காணோம்! அது தனியாக வெட்டப்பட்டது மாதிரி.... அது எங்கே போனது? அவள் கேட்கவில்லை.

அவன் கேட்டான்:

“வலிக்குதா?”

“இல்ல...”

“கொஞ்சம்கூட வலிக்கலியா?”

“இலேசா...”

“அப்படியா? பரவாயில்ல... கையை தண்ணியில நனைக்கக் கூடாது. ரெண்டு மூணு நாட்கள் ஆயிடுச்சுன்னா, காயம் ஆறிப் போய்விடும்...” என்று கூறியவாறு அந்த இளைஞன் காயத்தை கைக்குட்டையால் இறுகக் கட்டினான். பிறகு ஒரு சிகரெட்டைக் கொளுத்தி ஊதியவாறு அவன் கேட்டான்- புன்னகை தவழ...

“குஞ்ஞுபாத்தும்மா, நீ மேல எப்படி ஏறி வருவே?”

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு எப்படி மேலே ஏறுவதென்றே தெரியவில்லை. அதற்காக அவளிடம் பதைபதைப்போ பயமோ எதுவும் இருக்கவில்லை. பயங்கரமான குளிர் இருக்கிறபோது நெருப்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பதைப்போல... அப்படித்தான் அவளுக்குத் தோன்றியது.

“குருவியைப் பார்க்கலாமா?”

அவள் கையைத் திறந்தாள். குருவி நன்றியோ, அன்போ- எதையோ ஒன்றை வெளிப்படுத்துவது மாதிரி ஒரு சிறு ஓசையை எழுப்பியவாறு மேல் நோக்கி பறந்து சென்றது.

“குஞ்ஞுஞபாத்தும்மா, உன்னால பறக்க முடியுமா?”

“முடியாது...”

“அப்படின்னா... நாம சிறகு உண்டாக்கலாம்” என்று சொல்லியவாறு அந்த இளைஞன் குஞ்ஞுபாத்தும்மாவின் வலது கையைப் பிடித்தவாறு மேலே ஏறினான். “பயப்படாதே. ஒழுங்காக நடந்து வா” என்று அவ்வப்போது சொன்னான். எந்தவித சிரமமும் இல்லாமல் எப்படி தன்னால் மேலே ஏற முடிந்தது என்று அவள் ஆச்சரியப்பட்டாள். ஒரு விதத்தில் பார்த்தால் அவளுக்கு அது வியப்பான ஒன்றாகவே பட்டது. அவர்கள் மேலே அடைந்தவுடன் அவன், “குஞ்ஞுபாத்தும்மா... நீ இனி போகலாம்” என்று சொல்லியவாறு சிரித்துக்கொண்டே ஓடி மறைந்தான்.

குஞ்ஞுபாத்தும்மா கனவில் நடப்பது மாதிரி நடந்தாள். அவளின் ஒவ்வொரு அணுவும் இனிமையான ஒரு அனுபவத்துடன் இயங்குவது மாதிரி அவளுக்குத் தோன்றியது. அவளின் மனம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி இருந்தது.

அவள் வாளியையும் கயிறையும் துணிகளையும் எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த இடத்தின் மேல் ஏறி கிணற்றங்கரையை நோக்கி நடந்தாள். குளிப்பதற்கு முன்பு அவள் கொஞ்சம் அதிகமாகவே முல்லை மலர்களை எடுத்து ஒரு இலையில் கட்டினாள். பிறகு தன் ஆடைகளை அவிழ்த்தாள். துண்டை எடுத்துக் கட்டினாள். கட்டியிருந்த முண்டை அவிழ்த்து வைத்தாள். கூந்தலை அவிழ்த்தாள். பிறகு வாளியை கிணற்றுக்குள் இறக்கினாள். அது நீரைத் தொட்டபோது சற்று நேரத்திற்கு முன்பு பார்த்த அந்த இளைஞனை அவள் நினைத்துப் பார்த்தாள். “கையை தண்ணியில நனைக்கக்கூடாது” என்று அவன் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்தில் வந்தன. அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.


அவள் அப்படியே வாளியையும் கயிறையும் கிணற்றோடு விட்டுவிட்டு, வேகமாக தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டு மார்பை மறைத்தவாறு குனிந்து உட்கார்ந்தாள். என்ன காரணம்? அந்த இளைஞன் அந்த நிலத்தின் கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தான்.

“ஓ... குஞ்ஞுபாத்தும்மா... குளிக்கிறியா?” அவன் சொன்னான்: “நீ குளிக்கிறது எனக்குத் தெரியாது. எனக்கு கொஞ்சம் தண்ணி வேணும். நான் இப்பவே போயிடுறேன். ஒரு டம்ளர் தண்ணி தர முடியுமா?”

குஞ்ஞுபாத்தும்மா மெதுவான குரலில் சொன்னாள்:

“வாளியும் கயிறும் கிணற்றுக்குள்ளே போயிடுச்சு...”

“என்ன, வாளியும் கயிறும்..?”

“கிணற்றுக்குள்ளே போயிடுச்சு...”

அந்த இளைஞன் சிரித்துக்கொண்டே கிணற்றுக்குள் பார்த்தான்.

“இனி எப்படி குளிப்பே?” அவன் கேட்டான். குஞ்ஞுபாத்தும்மா பதில் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தாள். வாளியும் கயிறும் இல்லாமல் விட்டுக்குச் சென்றால் அவளின் தாய் நிச்சயம் திட்டுவாள்.

அந்த ஆள் வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு கிணற்றுக்குள் இறங்கி, வாளியையும் கயிறையும் எடுத்துக்கொண்டு வந்தான். ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து நீரை மொண்டு கொண்டு போகும் வழியில் அவன் சொன்னான்:

“குஞ்ஞுபாத்தும்மா... நீ குளி. ஆனா, காயத்துல தண்ணி படாம பாத்துக்கோ...”

அந்த இளைஞன் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்தான். அவள் சட்டையையும் முண்டையும் எடுத்து அணிந்து வாளியையும் கயிறையும் துண்டையும் எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி மெதுவாக நடந்தாள். வீட்டுக்குப் போய் நீர் மொண்டு உடம்பின் மேல் ஊற்றிக் குளித்தாள். அந்த இளைஞனை அப்போது அவள் நினைத்தாள். வெட்கத்தாலோ என்னவோ, உடலும் முகமும் என்னவோ போல் இருந்தது. அந்த மனிதன் யார்? அந்த வீட்டுக்கு அவன் எப்படி வந்தான்?

அன்று இரவு அவள் எதுவும் சாப்பிடவில்லை. கேட்டதற்கு அவள் சொன்னாள்: “எனக்கு வேண்டாம்!” அவளின் தந்தை என்ன காரணம் என்று கேட்டதற்கு அவள் சொன்னாள்: “என் தொண்டையில் வலி இருக்கு...”

எல்லாரும் அமர்ந்து இரவின் அமைதிக்கு மத்தியில் செய்த “தௌபா”வுக்கு நடுவில் யாரென்றே தெரியாத அந்த இளைஞனை அவள் நினைத்துப் பார்த்தாள். தௌபா செய்கிறபோது இரவு வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது. மண்ணெண்ணெய் விளக்கின் முன் அமர்ந்து கித்தாபு பார்த்தவாறு அவளின் தந்தைதான் தௌபா சொன்னார். “பிரபஞ்சங்களான எல்லா உயிர்களையும் படைத்த... உயிரினங்களான எல்லா உயிர்களையும் படைத்த... கண்ணுக்குத் தெரியாத கருணையின் வடிவமான உன்முன் மூன்று உயிர்கள் இரவின் அமைதியில் அமர்ந்து தொழுகிறோம்...” அவளின் தந்தை சொல்லச் சொல்ல அவளின் தாயும் அவளும் அதை பக்தியுடன் திரும்பச் சொன்னார்கள். ஒரே வாக்கியத்தை மூன்று குரல்களில் மூன்று பேரும் சொன்னார்கள். மூன்று உயிர்களும் ரப்புல் ஆலமீன் தம்புரானிடம் மன்னிப்பு கேட்டன.

அவளின் தந்தை பக்தியுடன் சொன்னார்:

“எங்களின் கடவுளே... நாங்க எல்லாரும் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறோம். நாங்க செஞ்ச சின்னச் சின்ன தப்புக்கெல்லாம், பெரிய தப்புக்கெல்லாம், வெளியில் செய்த தப்புக்கெல்லாம், யாருக்குமே தெரியாமல் செய்த தப்புக்கெல்லாம் வருத்தப்பட்டு பயந்து நாங்க தௌபா செய்றோம். கடவுளே... நீதான் எங்களை மன்னிச்சு காப்பாத்தணும்.” இப்படி ஆரம்பித்தும், இனிமேல் தவறே செய்ய மாட்டோம் என்றும், கல்பினை ஒஸுவாஸாக்குகின்ற இப்லீஸ் என்ற பகைவனின் தொந்தரவில் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டும், எல்லாரையும் கடைசியில் ஃபிர்தௌஸ் என்ற சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றும், நபியின் திருக்கல்யாணத்தை தங்களின் இரண்டு கண்களாலும் காணச்செய்ய வேண்டும் என்றும், அதில் கலந்துகொள்ள தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் தம்புரானைக் கேட்டுக்கொண்டு பக்திப் பரவசம் மேலோங்க “ஆமீன்” என்று சொல்லி முடித்தார் அவர். (புண்ணியம் செய்த ஆத்மாக் களெல்லாம் கடைசியில் படைத்தவனை நேரில் பார்க்கலாம் என்று சொல்லப்படுவதுண்டு. எத்தனையோ கடவுளின் தூதர்களில் முஹம்மது நபிக்கு மட்டும் சொர்க்கத்தில் திருமணம்! இந்தத் திருமணச் செய்தி எங்கிருந்து வந்தது? பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் உலகம் இதை நம்புகிறது; நம்பி வருகிறது. இதைக் கேள்வி கேட்டவர்களும் இருந்தார்கள். இப்போதும் கேள்வி கேட்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.)

அதற்குப் பிறகு அவளின் தாய் கொஞ்ச நாட்களுக்கு பிரச்சினைகள் எதையும் ஏற்படுத்தவில்லை. “தவம் செய்து பெற்ற மகள்” என்று அன்புடன் அவள் கூறினாலும், அவளின் தாய் மீண்டும் மாறத் தொடங்கினாள். கண்டபடி பேச ஆரம்பித்தாள். சண்டை போட்டாள். அவளின் தந்தையை வாய்க்கு வந்தபடி திட்டினாள். தன் தந்தைக்கு கோபத்தை வரவழைக்க வேண்டு மென்பதற்காகவே குஞ்ஞுபாத்தும்மாவைப் பற்றி ஏதாவது குறை சொல்லிப் பேசுவாள் அவளின் தாய். அதற்கு அவள் ஏதாவது பதில் சொன்னால், அவளின் தாய் கூறுவாள்:

“அதனாலதாண்டி உன்னை யாருமே இதுவரை கல்யாணம் பண்ண வராம இருக்காங்க. நீ ஒரு அதிர்ஷ்டக்கட்டை அதனாலதான் இப்படியே இருக்கே. என்னை பதினாலு வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. இப்போ உனக்கு இருபத்திரெண்டு வயசு நடக்குது. இருபத்திரெண்டு!”

அவளின் தந்தை கூறுவார்:

“நீ இப்போ சும்மா இருக்குறியா இல்லியா? கடவுளோட கருணை இருந்தா இவ கல்யாணம் இந்த வருஷமே நடக்கும். நான் மாப்பிள்ளை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.”

“ஆமாமா... இவளைக் கெட்டுறதுக்கு வரப் போறான்...”

அவளின் தாயின் கருத்து என்னவென்றால் குஞ்ஞுபாத்தும்மா வைத் திருமணம் செய்ய ஒரு ஆண்கூட வரமாட்டான் என்பதுதான்!

“எதைப் பார்த்து அவள் வருவான்?”

ஒன்றுமே இல்லை. வரதட்சிணை  என்று தர ஏதாவது இருக்கிறதா? தங்க நகைகளோ, ஆடைகளோ சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்கின்றனவா?

அவளின் தந்தை கூறுவார்:

“யாராவது வருவாங்க...”

யார் வருவது? இதயத்தை வாட்டக்கூடிய ஒரு விஷயம்தான் அது. ம்... யார் வந்தால் என்ன? வீட்டில் நல்ல ஒரு சூழ்நிலை இல்லை. எப்போது பார்த்தாலும் திட்டுதல்களும், சாபங்களும்தான்... குஞ்ஞுபாத்தும்மாவின் தாயைப் பொறுத்தவரை, எல்லா விஷயங்களைப் பற்றியும் அவள் கருத்து சொல்ல வேண்டும். இருப்பவற்றை எதிர்க்க வேண்டும். ஊரில் எது நடந்தாலும், அவளின் தாயுடன் அதைப் பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால், யாரும் ஆலோசிக்க மாட்டார்கள். அவளின் தாய் உட்கார்ந்து எல்லாரைப் பற்றியும் கண்டபடி பேச ஆரம்பிப்பாள். பாதையில் நடந்து போகும் சிறுவர்கள் அவளின் தாயைக் கிண்டல் பண்ணி சிரிப்பார்கள். விளைவு- அவளின் தந்தை சிறுவர்களைப் பார்த்து சத்தம் போடுவார். சில வேளைகளில் தாயின் அந்தப் பழைய மிதியடிகள் வெளியிலே பறக்கும்! அந்தச் சிறுவர்களின் தந்தைகள், தாத்தாக்கள்- எல்லாரையும் வாய்க்கு வந்தபடி அவள் பேசுவாள்.


எல்லாரையும் கண்டபடி பேசுவதற்கு அவளுக்கு லைசன்ஸ் இருக்கவே செய்கிறது. பள்ளிவாசல் நிர்வாக விஷயத்தில் தனக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்கிறாள் அவளின் தாய். பள்ளிவாசலில் “கத்திபி”னையோ  “முக்ரி”யையோ மாற்ற வேண்டுமென்றால் அதற்கு அவளின் தாயின் அனுமதியைப் பெற்றாக வேண்டுமாம். ஆனால், யாருமே அவளைக் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. தான் இழந்துவிட்ட பழமையான பெருமைகளை மனதிற்குள் நினைத்துக்கொண்டு எல்லாரையும் அவள் வாய்க்கு வந்தபடி திட்டுவாள்.

அவளின் தந்தை கூறுவார்:

“நீ கொஞ்சம் சும்மா இருக்கக்கூடாதா?”

“சும்மா இருக்கலைன்னா... செம்மீன் அடிமை மூக்கை அறுத்தெறிஞ்சிடுவாரா?”

“அடியே!” அவளின் தந்தை உரத்த குரலில் சத்தமிட்டவாறு தன் மனைவியை முறைப்பார்.

குஞ்ஞுபாத்தும்மா அதைப் பார்த்து நடுங்கிப்போய் உட்கார்ந்திருப்பாள். என்ன நடக்கப் போகிறதோ? அவள் மெதுவான குரலில் அழைப்பாள்:

“வாப்பா...!”

அவளின் தந்தை அவளை கவலையுடன் பார்ப்பார். அடுத்த நிமிடம்  எதுவுமே பேசாமல் வெளியே இறங்கி நடப்பார். வீடு அமைதியாக இருக்க வேண்டும் அல்லவா?

தாயும் தந்தையும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஏன் இப்படி அடிக்கடி நடக்கிறது? அவள் மனதில் வருத்தம் மேலோங்க உட்கார்ந்து விடுவாள். அந்த இளைஞனைப் பற்றி அவள் நினைத்துப் பார்ப்பாள். அவனைக் காணவே காணோமே? எங்கே போயிருப்பான்? அவன் எங்கிருந்து வந்தான்? அவனுடைய பெயர் என்ன? அவன் என்ன ஜாதி? எதுவுமே அவளுக்குத் தெரியாது. வாழ்க்கையில் அவள் சந்தித்த முதல் நல்ல மனிதன் அவன். அந்த முகம், அந்தச் சிரிப்பு, கையில் இல்லாத அந்த விரல்... என்ன காரணத்தாலோ கையில் இல்லாத அந்த விரலைப் பற்றி அவள் அடிக்கொரு தரம் எண்ணுவாள். யாருமே இல்லாத அந்த வீடு, கிணற்றங்கரையில் பூத்து நிறைந்திருக்கும் முல்லை மலர்கள்... அதைத் தவிர விரிந்து கிடக்கும் அந்த நிலத்தில் சொல்லுகிற மாதிரி ஒன்றுமே இல்லை. காய்ந்து போயிருக்கும் புற்கள் மட்டுமே... யாரென்றே தெரியாத அந்த இளைஞன் கட்டிவிட்ட துணியை அவள் அவிழ்த்தாள். காயம் நன்றாக உலர்ந்துவிட்டிருந்தது.

எல்லாமே பழைய சம்பவங்களின் வெறும் நினைவுபோல் ஆனது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, அந்த நிலத்தையும் வீட்டையும் யாரோ விலைக்கு வாங்கி இருப்பதாக அவளுக்குத் தகவல் வந்தது. யாராக இருக்கும்? இரண்டு மூன்று நாட்களில் அவனுக்கு அது யார் என்று தெரிந்துவிட்டது. எங்கோ தூரத்தில் இருந்து இங்கு வந்தவர்கள் அவர்கள். அங்கேயே நிரந்தரமாக வசிப்பது என்ற முடிவுடன் அவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் மூன்று பேர் காஃப்ரிகள்தாம். ஒரு வயதான ஆண், ஒரு வயதான பெண், பிறகு... படித்த ஒரு காஃப்ரிச்சி!

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு கவலையாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சிலை என அவள் நின்றிருந்தாள். உண்மையிலேயே அவள் ஒரு அதிர்ஷ்டக்கட்டைதான். மனதில் கோபம் உண்டாக அவள் கடவுளிடம் கூறுவாள்:

“ரப்புல் ஆலமீன்! பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களையும் படைத்தவனே!” இதயம் அடைக்க அவள் அப்படியே நின்றிருப்பாள்.

அவளின் நிலை என்ன?

எதிர்காலம் எப்படி இருக்கும்?

7

ள்ள புத்தூஸ்

ஒரு நாள் மதிய நேரத்தில் பக்கத்துவீட்டு காஃப்ரிச்சி தாமரைக் குளத்திற்கு பக்கத்தில் நின்று புடவையையும் ப்ளவுஸையும் அவிழ்த்து வைப்பதை குஞ்ஞுபாத்தும்மா பார்த்தாள்.

அந்த இளம்பெண் பாடீஸுடனும் பாவாடையுடனும் நின்றிருந்தாள்.

“ஓ... சட்டைக்குள் இன்னொரு சட்டை... முண்டுக்குள்... ஓ...” குஞ்ஞுபாத்தும்மா மனதிற்குள் நினைத்தாள். அப்போது அவள் மனதிற்குள் ஒரு கவலை உண்டானது.

கடவுளே! அந்தப் பெண் குளிக்கப் போகிறாள்! அட்டை கடித்து கொல்லப் போகிறது!

குஞ்ஞுபாத்தும்மா இறங்கி ஓடினாள். அவளின் கூந்தல் காற்றில் அவிழ்ந்தது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவள் ஓடினாள். “குளிக்காததே குளிக்காதே” என்று கூறியவாறு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அந்த இளம் பெண் இருக்குமிடத்தை நோக்கி அவள் ஓடினாள்.

அந்த இளம் பெண் எந்தவித பதட்டமும் இல்லாமல் கேட்டாள்:

“ஏன் குளிக்கக்கூடாது குளிக்கக்கூடாதுன்ற?”

குஞ்ஞுபாத்தும்மா ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தாள். அட்டை அவளைக் கடித்து நன்றாகக் கொல்லட்டும்! அவள் பதைபதைப்பு கொஞ்சமும் இன்றி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். என்ன துணிச்சல் அவளுக்கு! குஞ்ஞுபாத்தும்மா மனதிற்குள் எண்ணினாள். காஃப்ரிச்சிகள் எல்லாம் இப்படித்தான்!

அப்போது பழைய நினைவுகள் அவள் மனதில் வலம் வந்தன. பல வருடங்களுக்கு முன்பு அவள் சிறு குழந்தையாக இருந்தபோது அவளின் தந்தை அவளைக் குளிப்பாட்டுவதற்காக ஆற்றுக்குக் கொண்டு சென்ற நாட்களை அவள் எண்ணிப் பார்த்தாள். அப்போது காஃப்ரிச்சிகள் எல்லாம் அவளிடம் மிகவும் அன்புடனும், பாசத்துடனுமே நடந்திருக்கின்றனர். இவளும் அவர்களைப்போல பேச முடியும். சொல்லப்போனால் அவர்களைவிட இவள் படித்தவள். குஞ்ஞுபாத்தும்மா விரால் மீனைப் பார்ப்பதற்காக தாமரைக் குளத்தை நோக்கி நடந்தாள்.

“ஓ... முடி எவ்வளவு  அழகா இருக்கு!” அந்த இளம்பெண் சொன்னாள்: “ஓ... கறுப்பு மரு... உண்மையிலேயே அழகிதான்!” என்று சொல்லியவாறு, அவள் ப்ளவுஸை எடுத்து அணிந்தாள். புடவையைச் சுற்றியவாறு அவள் குஞ்ஞுபாத்தும்மாவின் அருகில் வந்தாள். பந்தாவான குரலில் கேட்டாள்:

“சுந்தரி... இந்த தாமரைக் குளத்துல குளிக்கிறதுக்கு மக்களுக்கு ஏதாவது கட்டுப்பாடுகள் இருக்கா என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“என் பேரு ஒண்ணும் துன்னரி இல்ல...”

“துன்னரியா?” அந்தப் பென் சிரித்தாள்: “முட்டாளே... சுந்தரின்னு சொன்னேன்... சரி... உன் பேர் என்ன?”

“குஞ்ஞுபாத்தும்மா!”

“அடடா... என்ன அழகான பேரு! முஹம்மது நபி ஸெல்லல் லாஹு அலைஹிஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமாவோட... சரி... அது  இருக்கட்டும். இந்தத் தாமரைக் குளத்துல குளிக்கக் கூடாதா என்ன?”

“அட்டை கடிக்கும்!”

“ஆண் அட்டையா? பெண் அட்டையா?”

“ஆண் அட்டை- பெண் அட்டை ரெண்டுமே இருந்துச்சு. ஒரு அட்டை என்னைக் கடிச்சு ரத்தத்தை முழுசா குடிச்சிருச்சு.” குஞ்ஞுபாத்தும்மா தொடர்ந்தாள்: “என் ரத்தம் முழுசையும் குடிச்சு வீங்கிப் போயிருந்த அட்டையை விரால் மீன் லபக்னு முழுங்கிடுச்சு... இதுல தண்ணி பாம்பு, ஆமை எல்லாமே இருக்கு..” அதற்குப் பிறகு தன்னை அட்டை எப்படிக் கடித்தது என்பதை விலாவாரியாக விவரிக்க  ஆரம்பித்தாள் குஞ்ஞுபாத்தும்மா. வீங்கிப்போன அட்டை எப்படி தொடையில் தொங்கிக் கொண்டிருந்தது என்பதை அவள் சொன்னபோது, அந்தப் பெண் உண்மையிலேயே நடுங்கிப்போய் கண்களால் உற்றுப் பார்த்தாள். “ப்போ...” என்று உண்மையாகவே நடுங்குவது மாதிரி ஒருவித ஓசையை அவள் உண்டாக்கினாள்.


“நானாக இருந்திருந்தா...” அந்தப் பெண் சொன்னாள்: “ஒரே கத்தா கத்தி எல்லா ஆளுங்களையும் இங்கே வர வச்சிருப்பேன். பயந்துபோய் அப்படியே மயங்கி கீழே விழுந்திருப்பேன்.”

குஞ்ஞுபாத்தும்மா அப்படி கத்தவில்லையே- மயங்கிக் கீழே விழாவில்லையே... அதைப் பற்றி எண்ணியபோது அவளுக்குப் பெருமையாகக்கூட இருந்தது. அவள் புளிய மரத்தடியை நோக்கி நடந்தாள். நன்றாகப் பழுத்த ஒரு புளியம் பழம் கீழே கிடந்தது. அவள் அதை எடுத்தாள். அதன் தோலை நீக்கிவிட்டு, பழத்தை வாய்க்குள் வைத்து சுவைத்தாள்.

அந்தப் பெண் அவளருகில் வந்து, “என்ன, புளியம் பழமா சாப்பிடுறே?” என்று கேட்டாள்.

“ஆமா...” என்றாள். புளியம்பழம் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்குமா? குஞ்ஞுபாத்தும்மாவிற்கு சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் அவள் கேட்டாள்:

“வேணுமா?”

“கொஞ்சம்போல தா” என்று அவள் சொன்னபோது அவளின் வாயில் எச்சில் ஊறியிருப்பதை குஞ்ஞுபாத்தும்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. குஞ்ஞுபாத்தும்மா பெரிய ஒரு துண்டு பழத்தை அந்தப் பெண்ணின் கையில் தந்தாள். அவள் அந்தப் பழத்தை வாங்கி சுவைத்தாள். சாதாரணமாக பெண்கள் புளியம் பழத்தைச் சுவைப்பது  மாதிரி அவள் அதைச் சுவைக்கவில்லை. கண்களைக் குறுக்கிக் கொள்ளவோ, முகத்தை ஒரு மாதிரி சுருக்கவோ அவள் செய்யவில்லை.

அந்த காஃப்ரிச்சி பழத்தை வாங்கிய வேகத்தில் விழுங்கினாள்.

குஞ்ஞுபாத்தும்மா வியப்புடன் அவளைப் பார்த்து சொன்னாள்:

“இப்படி விழுங்கக்கூடாது...”

“விழுங்கினா என்ன?”

“வயித்துல அது அப்படியே கிடக்கும். வலி உண்டாகும்.”

அந்தப் பெண் சொன்னாள்:

“என் வயிற்றுக்குள் கருங்கல்லே போனாக்கூட அது ஜீரணமாயிடும். என் அனுபவத்துல நான் சொல்றேன்.”

குஞ்ஞுபாத்தும்மா மேலும் ஒரு துண்டு புளியம் பழத்தை அவள் கையில் தந்துவிட்டு, கேட்டாள்:

“அப்ப உன் வயசு என்ன?”

“பதினேழு...”

“எனக்கு...” குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்: “உம்மா சொல்றாங்க எனக்கு இருபத்துரெண்டு வயசுன்னு...”

“உன் அப்பா என்ன சொல்றாரு?”

குஞ்ஞுபாத்தும்மா எதுவுமே சொல்லாமல் வெறுமனே நின்றிருந்தாள்.

“என்ன புத்தூஸே... ஒண்ணுமே பேசாம நின்னுக்கிட்டு இருக்கே!”

“என்னை எதுக்கு புத்தூஸ்னு கூப்பிடுற?”

“புத்தூஸே... உன்னை நான் எதுக்காக அப்படி கூப்பிட்டேன் தெரியுமா? எனக்கே அது தெரியாது. பெண்மணிகளான எல்லா பெண்மணிகளையுமே கள்ள புத்தூஸ்னு கூப்பிடுறதுதான் சரி... அதனால என்னோட இக்காக்கா... அதாவது அண்ணன் என்னை கள்ள புத்தூஸ்னுதான் கூப்பிடுவாரு...”

இக்காக்கா! நபி (ஸ...ஆ...)... காஃப்ரிச்சி என்ன இப்படியெல்லாம் சொல்கிறாள்.

“அப்ப நான் புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, பெண்ணோட பட்டப்பெயர்தான் கள்ள புத்தூஸ்ன்றது. பிறகு... என்னோட அண்ணன் என்னை “லுட்டாப்பி”ன்னும் கூப்பிடுவாரு...”

“உன் அண்ணனோட பேரென்ன?”

“நிஸார் அஹமத்...”

“நிஸார் அஹமத்... உன் பேரு?”

அவள் பந்தாவான குரலில் சொன்னாள்:

“ஆயிஷா...”

“நீ என்ன ஜாதி?”

அவள் சொன்னாள்:

“முஸ்லிம்!”

யாரப்புல் ஆலமீன்! குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“எங்களை மாதிரியா?”

“இல்ல... நாங்க அசல் முஸ்லிம்கள்...”

அசல் முஸ்லிம்கள்! இரண்டு காதுகளிலும் துளை போட்டு கம்மல் அணியவில்லை. அணிந்திருப்பது புடவையும் ப்ளவுஸ் என்ற சட்டையும். அதற்குக் கீழே ஒரு துண்டு பாடீஸ்...

“உன் பேர் என்னன்னு சொன்னே?”

“ஆயிஷா... வேணும்னா ஆயிஷா பீபின்னோ பேகம் ஆயிஷான்னோ கூப்பிடலாம். ஆயிஷா பானுன்னும் கூப்பிடலாம். காலேஜ்ல என்னை ஆயிஷா பீபின்னு கூப்பிடுவாங்க. நான் சொன்னேன்ல- அண்ணன் என்னை அழைக்கிறது “லுட்டாப்பி”ன்னு- “கள்ள புத்தூஸ்”னும் என்னைக் கூப்பிடலாம்...”

ஆயிஷா! முஹம்மது நபியின் “வீடரின்” பெயர் அது! ரப்பே!

குஞ்ஞுபாத்தும்மா வியப்புடன் அவளைப் பார்த்தாள். இவர்கள் என்ன முஸ்லிம்? குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“அந்த முகத்துல முடி இல்லாத, தலையில மட்டும் முடி இருக்குற  ஆள்...?”

ஆயிஷா சொன்னாள்- குஞ்ஞுபாத்தும்மாவைக் கிண்டல் பண்ணுகிற மாதிரி.

“என்னோட வாப்பா... புடவை கட்டியிருந்தது என்னோட உம்மா...” தொடர்ந்து ஆயிஷா கேட்டாள்:

“அந்த உயரமான ஆளு உன்னோட வாப்பாபா?”

“ஆமா.”

“ராத்திரியும் பகலும் கலபலான்னு சத்தம் போட்டுக்கிட்டு இருக்கிறது...?”

“உம்மா.”

ஆயிஷா கேட்டாள்:

“அவங்க ஏன் இவ்வளவு சத்தம் போட்டு பேசுறாங்க? பக்கத்து வீட்டுல இருக்குறவங்க எப்படி தூங்குவாங்க? முஸ்லிம் பெண்கள் அடக்க ஒடுக்கமே இல்லாமல் இப்படி மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்குறது மாதிரி இருக்குறது நல்லதா?”

குஞ்ஞுபாத்தும்மா எதுவுமே பேசவில்லை.

ஆயிஷா கேட்டாள்:

“உன்னோட உம்மா எதுக்கு எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்குற தண்ணி இல்லாத அந்தச் சின்ன ஓடையில வந்து மலம் கழிக்கிறாங்க?”

“அது வந்து... லாத்திரி நேரத்துல நாங்க பாதை ஓரத்துல இருப்போம். பகல் நேரம்னா...”

“சரிதான்... மக்கள் நடந்து போற பாதையோரத்தை கக்கூஸா பயன்படுத்துறது நல்லதா? இந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாருமே இப்படிப் பாதையோரத்துலதானா?”

குஞ்ஞபாத்தும்மா சொன்னாள்:

“ஆமா...”

“வீடுகள்ல கக்கூஸ் உண்டாக்கினா என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா எதுவுமே பேசாமல் இருந்தாள்.

ஆயிஷா சொன்னாள்:

“பிறகு... லாத்ரின்னு சொல்லக்கூடாது. ராத்ரின்னு சொல்லணும்...”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“ராத்ரி...” பிறகு குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்: “உங்க வீடு எங்கே இருக்கு?”

“உங்களோட வீடு எங்கே இருக்குன்னு நீ கேட்கணும். சரி... அப்படியே நீ கேக்குறேன்னு வச்சுக்குவோம். அப்போ நான் என்ன பதில் சொல்லணும்? உண்மையைத்தானே சொல்லணும்! எங்களுக்குன்னு சொந்தத்துல ஒரு வீடும் இல்ல. அதாவது நகரத்துல எங்களுக்கு ஒரு வீடு இருக்கு. அதை இப்போ அடமானம் வச்சிருக்கோம். அதுலதான் நாங்க இருந்தோம். அங்கே பல வகைப்பட்ட ஒட்டு மா, ஒட்டு கொய்யா... இப்படி எத்தனையோ காய்கள்... மரங்கள்... பூச்செடிகள்... கொடிகள்...”

தொடர்ந்து தன்னுடைய வீட்டை அவள் வர்ணிக்க ஆரம்பித்துவிட்டாள்: “ஓடு போடப்பட்ட ஒரு இரண்டு மாடி கட்டடம். அதைச் சுற்றிலும் மஞ்சள் நிறத்துல வெளிச்சுவர். வீட்டோட கேட். நீல வண்ணம் அடிச்சது. வீட்ல இருக்குற ஒவ்வொரு அறையிலும் மின் விளக்குகள் இருக்கும். பிறகு... எங்ககிட்ட ரேடியோவும் இருக்கு...”

“அப்படின்னா என்ன?” என்று குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள். மீதி எல்லாம் அவளுக்குப் புரிந்தது. பொத்தானை அழுத்தினால் “பளிச்” என்று எரியக்கூடிய மின்சார விளக்கை அவள் பார்த்திருக்கிறாள். ரேடியோ என்றால் என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை.

ஆயிஷா சொன்னாள்:

“அது ஒரு பெட்டி. அதுல எத்தனையோ பாட்டுகளையும், பேச்சுகளையும் கேட்கலாம். இப்படி பல நாடுகள்ல இருந்தும் வர்ற பாட்டுகளையும் நாம கேட்கலாம்.”

“மக்கால இருந்து கேட்கலாமா?”

ஆயிஷா சொன்னாள்:


“அரேபியா, துர்க்கி, இரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, ஆப்ரிக்கா, மதராஸ், ஜெர்மனி, அமெரிக்கா, சிங்கப்பூர், டெல்லி, கராச்சி, லாகூர், மைசூர், இங்க்லாண்ட், கெய்ரோ, ஆஸ்திரேலியா, கல்கத்தா, சிலோன்.. இப்படி உலகத்துல இருக்குற எவ்வளவோ இடங்கள்ல இருந்து கேட்கலாம்...”

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு இப்போதுகூட ரேடியோவைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும், அந்தப் பெண் கொஞ்சம் வசதியானவள் என்பது தெரிந்துவிட்டது. அவள் ஆயிஷாவைப் பார்த்துக்கேட்டாள்:

“உங்க வீட்ல புளிய மரம் இருக்கா?”

“இல்ல...”

“அப்படியா? புளியம்பழம் எவ்வளவு முக்கியம்?” குஞ்ஞபாத்தும்மா கேட்டாள்:

“கள்ள புத்தூஸே... உங்க வீட்ல யானை இருந்துச்சா?”

“இல்ல...”

குஞ்ஞபாத்தும்மா பந்தாவான குரலில் சொன்னாள்:

“எங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்துச்சு... பெரிய ஒரு ஆண் யானை!”

ஆயிஷா ஆர்வத்துடன் சொன்னாள்:

“எங்க தாத்தாக்கிட்ட ஒரு மாட்டு வண்டி இருந்துச்சு. அவர் அதுல கூலிக்கு சாமான்களை ஏற்றிக்கிட்டு போயி கடைகள்லயும் வீடுகள்லயும் போடுவாரு. அதுல கிடைக்கிற பணத்தை வச்சு எங்க வாப்பாவை அவர் எம்.ஏ. வரை படிக்க வச்சாரு. ஆமா... அந்தப் பெரிய ஆண் யானை இப்போ எங்கே இருக்கு?”

“அது மரணமடைஞ்சிடுச்சு...” அது முஸ்லிம் யானையாக இருந்ததால் மரணமடைந்துவிட்டது என்றோ மவுத்தாகிவிட்டது என்றோதான் கூற வேண்டும். முஸ்லிம் இறக்கும்போது

“மரணமடைந்துவிட்டார்” என்றும் காஃபிர் இறக்கும்போது, “செத்துவிட்டார்” என்றும் சொல்ல வேண்டும்.

ஆயிஷா கேட்டாள்:

“அது செத்துப் போச்சா?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“மரணமடைஞ்சிடுச்சு. அது நாலு காஃப்ரிகளைக் கொன்னுச்சு...”

“வெறும் நாலு பேரையா? முஸ்லிம்கள்ல எவ்வளவு பேரைக் கொன்னுச்சு?”

“ஒரு ஆளைக்கூடக் கொல்லல. அது ஒரு முஸ்லிம் யானை...”

“நீ சொல்றது உண்மையா இருந்தா...” ஆயிஷா சிரித்தவாறே கூறினாள்: “சொர்க்கத்துல அந்த ஆண் யானைக்கு கல், பொன், முத்து, மாணிக்கத்தாலான நாலு வீடுகள் கிடைக்கணுமே!”

அவள் சொல்ல வருவது என்னவென்றால் இந்த உலகத்தில் புண்ணியம் செய்தவர்களுக்கு மேல் உலகத்தில் பல சுக சௌகரியங்கள் கிடைக்கும். ஐதீகத்தில் கூறப்பட்டிருப்பதன்படி பார்த்தால் காஃப்ரியைக் கொல்வதுகூட ஒரு புண்ணியச் செயலே!

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்.

“நாங்க ரொம்பவும் வசதியா இருந்தோம்.”

“அதெல்லாம் எங்கே போச்சு?”

“போச்சு...” அவ்வளவுதான் அவளால் சொல்ல முடிந்தது.

“உங்க வாப்பாவுக்கு என்ன வேலை?”

“வியாபாரம்.”

“என்ன வியாபாரம்?”

“நினைக்கிறது எல்லாம்தான்...”

“வாப்பாவோட பேரு?”

“வட்டனடிமை!”

“உம்மாவோட பேரு?”

“குஞ்ஞுதாச்சும்மா...”

ஆயிஷா சொன்னாள்:

“என்னோட வாப்பா காலேஜ்ல பேராசிரியர். பேரு ஸைனுல் ஆபிதீன். உம்மாவோட பேரு ஹாஜறா பீவி. அண்ணனோட பேரு நிஸார் அஹமது. அவர் ஒரு கவிஞர். அவர் நிறைய கவிதைகள் எழுதியிருக்காரு. பூக்கள், காய்கள், கிழங்குகள், மரங்கள்- எல்லாவற்றைப் பற்றியும் அவர் கவிதைகள் எழுதுவார்!”

இப்படி ஆயிஷாவிற்கு நிஸார் அஹமதுவைப் பற்றி ஏராளமாக சொல்வதற்கு இருந்தன. அவள் தொடர்ந்தாள்: “பிரபஞ்சங்கûயும், அதில் இந்த பூமியையும், பூமியில் தற்போது இருப்பவைகளையும், இருக்கப் போவதையும்- எல்லாவற்றையும் அவர் ரொம்பவும் விரும்புவார். சொல்லப்போனால் மிகவும் நல்ல- அதே நேரத்துல பயங்கரமான ஒரு மனிதரும்கூட அவர்...”

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு அவள் கூறியதில் அப்படியொன்றும் ஆர்வம் எதுவும் உண்டாகவில்லை. குறிப்பாக அந்தப் பெயர்கள்... ஸைனுல் ஆபிதீன், நிஸார் அஹமது... இந்தப் பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக அவளுக்குத் தோன்றவில்லை. மக்கார், அடிமை, அந்து, கொச்சுபரோ, குட்டி, கொச்சுண்ணி, குட்டியாலி, பாவா குஞ்ஞாலு, பக்கரு, குஞ்ஞு, மைதின், அவரான், பரீத், பரீக்குட்டி, பாவக்கண்ணு, ஸைதாலி, சேக்கு, மயிது, பீரான், குஞ்ஞிகொச்சு, அத்தில்- இப்படிப் பல பெயர்களை அவள் கேள்விபட்டிருக்கிறாள். ஆனால், நிஸார் அஹமது..! சிவந்துபோய் கூர்மையாகப் பார்க்கும் கண்களையும் நன்றாக முறுக்கிவிடப்பட்ட மீசையையும், நெஞ்சு முழுக்க கறுப்பு முடிகளையும், தடிமனான தேகத்தையும், நல்ல உயரத்தையும் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அவள் கற்பனை செய்து பார்த்தாள். அவள் கேட்டாள்:

“உன் அண்ணன் எப்போ இங்கே வருவாரு?”

“நாளைக்கு இல்லாட்டி நாளை மறுநாள்... அது எப்படியோ, உன் உம்மாக்கிட்ட இப்பவே சொல்லி வச்சிடு... எங்க முன்னாடி வந்து உட்கார்ந்து மலம் இருக்கக்கூடாதுன்னு, நாற்றம் அடிக்கும்ல? அண்ணன் வந்துட்டா, பிறகு பெரிய சண்டையே வந்திடும்...”

குஞ்ஞுபாத்தும்மா அவள் சொன்னதைக் கேட்டு நடுங்கினாள். தன் தாயிடம் அவள் எப்படி இதைச் சொல்லுவாள்? எப்படி சொல்லாமல் இருப்பாள்? அவள் தன் மனதிற்குள் தொழுதாள். “கடவுளே... துட்டாப்பியோட அண்ணன் வரக்கூடாது. வந்தா பெரிய சண்டை வந்திடும்.”

அந்த பயங்கர மனிதன்!

ஆயிஷா கேட்டாள்:

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“எனக்கு இன்னும் ஆகல. துட்டாப்பி, உனக்கு ஆயிடுச்சா?”

“கள்ள புத்தூஸே.. லுட்டாப்பின்னு சொல்லு. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. பி.ஏ. பாஸான பிறகுதான் கல்யாணம். என்னோட அண்ணனுக்கு கல்யாணமான பின்னாடிதான் எனக்குக் கல்யாணம். அவருக்குப் பொருத்தமா இருக்குற மாதிரி ஒரு பொண்ணு இதுவரை கிடைக்கல. எத்தனையோ சம்பந்தம் வந்துச்சு. நான்தான் சொன்னேன்ல- அவரு ஒரு சுத்தம் பாக்குற ஆளுன்னு. பொண்ணு மட்டுமல்ல- வீடும் ரொம்ப சுத்தமா இருக்கணும்னு  நினைக்கக்கூடிய ஆளு அவர். அவருக்காகப் பேசிக்கிட்டு இருந்த பி.ஏ. படிச்ச ஒரு பொண்ணோட வீட்டுக்கு ஒரு முறை அவர் போயிருந்தாரு. அவருக்குக் குடிக்க தண்ணி தந்த டம்ளர்ல மீன் நாற்றம் வந்திருக்கு. அதனால அந்தத் திருமண பந்தமே நடக்காமப் போச்சு!”

குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“துட்டாப்பி, உன்னோட அண்ணன் மீன் சாப்பிட மாட்டாரா?”

“அவர் பொதுவா காய்கறி சாப்பிடுற ஆளுதான். சில நேரங்கள்ல மாமிசமோ மீனோ சாப்பிடுறது உண்டு. அப்படிச் சாப்பிட்டா, கையை சோப்பு போட்டு கழுவுவாரு. அந்த வீச்சம் வீட்ல இருக்கக் கூடாதுன்றதுல ரொம்பவும் பிடிவாதமா இருப்பாரு. நான்தான் சொன்னேன்ல- அவர் எல்லா விஷயங்கள்லயும் சுத்தம் பார்க்கக்கூடிய  ஆளுன்னு. முஸ்லிம் என்றாலே சுத்தம் என்றும் அர்த்தம் இருக்குன்னு அவர் அடிக்கடி சொல்வாரு. அதோட நின்னா பரவாயில்ல... தான் கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு இப்படித்தான் இருக்கணும்னு சில எண்ணங்கள் அவர்கிட்ட இருக்கு. அவள் சவரம் செய்ய தெரிஞ்சவளா இருக்கணும். நடனம் ஆடத் தெரிஞ்சிருக்கணும். துணி துவைக்க தெரிஞ்சிருக்கணும். இசை, ஓவியம், இலக்கியம், குழந்தை வளர்ப்பு- இவை எல்லாவற்றையும் அவள் தெரிஞ்சிருக்கணும்.


அதாவது, பிரியாணி, பத்தரியும் மாமிசமும், நெய்சோறு, பரோட்டா, இஷ்டு, சாம்பார், அவியல், பாயசம் இப்படி பல உலகத்திலுள்ள எல்லா சாப்பாட்டு விஷயங்களையும் செய்யத் தெரிஞ்சவளா அவள் இருக்கணும். இதுக்கு மேல வேற சில விஷயங்களும் தெரிஞ்சு வச்சிருக்கணும். வேலி கட்ட, மண் சுமக்க, செடிகளுக்கும் மரக்கன்றுக்கும் தேவையான உரம் போட... இது எல்லாத்தையும்கூட தெரிஞ்சு வச்சிருக்கணும். இப்படிப்பட்ட எல்லா விஷயங்களையும் தெரிஞ்ச ஒரு பெண்ணைக் கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எங்க வாப்பாவும் உம்மாவும் சொல்லிட்டாங்க!”

இவ்வளவையும் கேட்டபிறகு, குஞ்ஞுபாத்தும்மாவின் மனதில் நிஸார் அஹமது மேலும் பயங்கரமான ஒரு மனிதனாகத் தெரிந்தான். அவன்மீது அவளுக்குக் கோபம் உண்டானது. ஆயிஷா மீதும்தான். அண்ணன் அதைச் சொன்னான்... இதைச் சொன்னான்னு... பெரிய அண்ணன்!

ஆயிஷா தொடர்ந்தாள்:

“என் அண்ணனைப்போல ஒரு ஆளை... கேக்குறியா? ஒருநாள் ராத்திரி அண்ணன் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து என்னவோ படிச்சிக்கிட்டு இருக்காரு. அவரோட கை மேஜையோட ட்ராயர் பக்கத்துல இருந்ததை நான் கவனிக்கல. அது தெரியாம நான் ட்ராயரை வேகமாக அடைச்சிட்டேன். அவ்வளவுதான்... என்னவோ நொறுங்குற மாதிரி இருந்துச்சு. என்னன்னு பார்த்தா... எனக்கு மயக்கமே வந்திடும்போல இருந்துச்சு. என் அண்ணனோட இடது கை சுண்டுவிரல் சிதைஞ்சு போயிருந்துச்சு...”

இதைக் கேட்டதும் குஞ்ஞுபாத்தும்மா ஒரு மாதிரி உடம்பை சிலிர்த்துக் கொண்டாள். அவள் சொன்னாள்:

“பிறகு...?”

ஆயிஷா சொன்னாள்:

“அண்ணன் அசையவே இல்ல. மீசையை வெட்டுற சின்ன கத்திரியை என்னை எடுத்துட்டு வரச்சொன்னாரு. நான் கத்திரியைக் கொண்டு போனேன். அந்தக் கத்திரியாலே அண்ணன் சிதைஞ்சு போன விரலை வெட்டி எடுத்தாரு...” இவ்வளவையும் சொன்ன ஆயிஷா கூறினாள்:

“நான் போறேன்... நான் இருக்கிற இடத்துக்கு வர்றியா?”

குஞ்ஞுபாத்தும்மாவின் காதில் அது விழவே இல்லை. அவள் சிலை என நின்றிருந்தாள்.

ஆயிஷா மீண்டும் கேட்டாள்:

“வர்றியா?”

“எங்கே.”

“கள்ள புத்தூஸே... எங்க வீட்டுக்கு...”

“நான் உம்மாக்கிட்ட கேட்டுட்டு வர்றேன்.”

அவள் வீட்டுக்குப் போய் தன் தாயிடம் சொன்னாள்.

“உம்மா... அங்கே இருக்குறவங்க முஸ்லிம்கள்தான். நான் அங்கே போய் வரட்டா?”

“போடி...” -அவளின் தாய் சொன்னாள்:

“முஸ்லிமாம் முஸ்லிம்... அவங்க காஃப்ரிகள்...”

“இல்ல உம்மா...” அவள் சொன்னாள்: “முஸ்லிம்கள்தான்... அங்கே பாருங்க. அங்கே இருக்குற ஆயிஷா நம்ம புளியமரத்துக்குக் கீழே நின்னுக்கிட்டு இருக்கா...”

குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் பார்த்தாள். புடவை உடுத்தியிருக்கிறாள். காது குத்தவில்லை.

அவளின் தாய் சொன்னாள்:

“மைதீனே... அவங்க முஸ்லிமா?”

“ஆமா உம்மா... மெதுவா சொல்லுங்க. அவங்க வீட்டுக்கு நான் போயிட்டு வரட்டா?”

“நீ நம்ம வீட்டைவிட்டு இப்போ வெளியே போறதா இருந்தா, நீ என் மகளே இல்ல... அதோட போயிட வேண்டியதுதான்...”

குஞ்ஞபாத்தும்மா வெளியே சென்று ஆயிஷாவிடம் சொன்னாள்:

“நான் நாளைக்கு வர்றேன்...”

“இன்னைக்கு என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“கொஞ்சம் வேலை இருக்கு. தண்ணி எடுக்கணும். நான் நாளைக்கு வர்றப்போ, பழுத்த புளியம்பழம் கொண்டு வர்றேன்...”

ஆயிஷா போனாள்.

அன்று இரவு நீண்ட நேரமாகியும் குஞ்ஞுபாத்தும்மாவிற்கு தூக்கமே வரவில்லை. ஆயிஷாவின் அண்ணனை வர வைக்கக் கூடாது என்று அவள் ஏற்கெனவே கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாள். இப்போது அதை மாற்றி அவள் எப்படிச் சொல்ல முடியும்?

கடைசியில் அவள் மனதில் வேதனையுடன் தொழுதாள்:

“என்னைப் படைச்ச கடவுளே... துட்டாப்பியோட அண்ணன்...”

8

ள்ள சாட்சி சொல்ல மாட்டேன்

பெரிய ஆண் யானையை சொந்தத்தில் வைத்திருந்த யானை மக்காரின் செல்ல மகளான குஞ்ஞுதாச்சும்மா தீர்க்கமான குரலில் சொன்னாள்:

“அவங்க முஸ்லிம்கள் இல்ல. யானை மக்காரோட செல்ல மகளான நான் சொல்றேன்... அவங்க முஸ்லிம்கள் இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மா தன் தந்தையின் முகத்தைப் பார்ப்பாள். அவர் எதுவுமே பேச மாட்டார்.

அவளின் தாய் தொடர்வாள்:

“க்யாமம் நெருங்கிடுச்சுன்றதுக்கான அடையாளம் தெரியுதா?”

உலகம் முடியப் போவதற்கான அடையாளம்தான் ஆயிஷாவும் அவளின் தந்தையும் தாயும்!

“அந்தப் பொம்பளை தலையில் பூ வச்சிருக்கா- பூ!”

ஆயிஷாவின் தாய் கூந்தலில் பூ சூடியிருக்கிறாள். அது இஸ்லாமிற்குப் பொருந்துமா?

“பிறகு... அந்தப் பெண்ணைப் பார்த்தியா? முடியை ரெண்டு வால் மாதிரி ஆக்கி தோள் வழியா நெஞ்சுல படுற மாதிரி போட்டிருக்கா!”

ஆயிஷா தன் தலை முடியால் பல ஜால வித்தைகளும் செய்வாள். அவள் பெரிய கிறுக்கி என்றுதான் சொல்ல வேண்டும். ஓடுவாள். குதிப்பாள். நடனமாடுவாள். பாட்டு பாடுவாள். ஒருநாள் தாமரைக் குளத்தின் அருகில் நின்று அவள் பக்திவயப்பட்டு ஒரு பாட்டு பாடினாள். அவள் தெய்வத்திடம் என்னவோ வேண்டிக்கொண்டி ருக்கிறாள் என்றுதான் குஞ்ஞுபாத்தும்மா நினைத்தாள். அதற்குப் பிறகு அவள் நினைத்தாள்- அந்தப் பாட்டு ஏதாவது “பைத்” ஆக இருக்கும். இல்லாவிட்டால் “கெஸ்” ஆக இருக்கும் என்று. அது எந்த வகைப்பாட்டு என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடிய வில்லை. அவளும் பக்தியுடன் தன்னுடைய இரண்டு கைகளையும் மேல் நோக்கி உயர்த்தினாள். “ஆமீன்!” என்று வாய்திறந்து சொல்லவும் செய்தாள். ஆயிஷா சிரிக்கவில்லை. இருமுவதைப் போல என்னவோ செய்தாள். ஆனால், அவள் சிரிப்பை அடக்குவதற்காகத்தான் அப்படிச் செய்கிறாள் என்பதைப் பின்னர்தான் குஞ்ஞுபாத்தும்மாவுக்கே புரிந்தது. அவள் கேட்டாள்:

“நீ என்ன செய்றே?”

ஆயிஷா சொன்னாள்:

“என்கிட்ட இதற்கெல்லாம் அர்த்தம் கேட்காதே. நான் ஒண்ணுமே தெரியாதவள். அந்த மகான் வர்றப்போ நீயே கேட்டுக்கோ. அவர்தான் இது எல்லாத்துக்குக் காரணம். இது என்ன மொழின்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எங்க காலேஜ்ல பெண்கள் ஊர்வலம் வர்றப்போ உரத்த குரல்ல பாடுறதுக்காக அவர் உண்டாக்குனதுதான் இது. நாங்க காலேஜ்ல ஊர்வலம் போறப்போ இதைப் பாடவும் செய்தோம்...”

“துட்டாப்பி, நீ பாடினப்போ நான் “ஆமீன்” சொன்னேன்!”

“நான் பார்த்தேன்...”

“அப்படி நான் செஞ்சது தப்பா?”

 

“கள்ள புத்தூஸே... அது நல்லதுதான்... கெட்டது ஒண்ணும் கிடையாது!”

“அப்படின்னா இன்னொரு முறை பாடு. கேட்க நல்லா இருக்கு!”

“அப்படின்னா பக்தியோட நீ இருக்கணும். மனசுல இருக்குற எல்லா எண்ணங்களையும் ஒரு மூலையில இறக்கி வைக்கணும். மனசு சுத்தமா இருக்கணும். ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சுக்கோ. கொடிகளைக் கைகள்ல பிடிச்சுக்கிட்டு காலேஜ் பெண்கள் நடந்து போற ஒரு பெரிய ஊர்வலத்தில் அவங்க- அதாவது நாங்க- கம்பீரமா பாடிக்கிட்டுப் போறதை மனசுல கற்பனை பண்ணிப்பாரு...”


“கற்பனை பண்ணிக்கிட்டேன்!”

“சரி... இப்போ கேளு...” அவள் பாடினாள்:

“ஹோ... ஹோ... ஹோ...

குத்தினி ஹாலிட்ட வித்தாப்போ

சஞ்சினி பாலிக்க லுட்டாபி

ஹாலித்த மாணிக்க லிஞ்ஞல்லோ

சங்கர பாஹ்ன துலிபி

ஹுஞ்சினி ஹீலத்த ஹுத்தாலோ

ஃபானத்த லாக்கிடி ஜிம்பாலோ

ஹா... ஹா... ஹோ...!”

தொடர்ந்து ஆயிஷா சொன்னாள்:

“நான் இப்போ சொல்வது எல்லாம் சரின்னு நான் சொல்லல. சில வார்த்தைகள் விட்டுப் போயிருக்குன்னு எனக்குள்ளேயே ஒரு சந்தேகம் இருக்கு. இதுல ஏதாவது விட்டுப் போயிருந்தா, அவர் நம்மளை உதைப்பாரு!”

குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“துட்டாப்பி, உன் அண்ணனுக்கு இது எப்படித் தெரியும்?”

“அவருக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்னு கேக்குறியா? சரிதான்... அவர் இங்கே வந்த உடனே என்னைக் கூப்பிடுவாரு: “லுட்டாப்பி! இங்கே வா. இந்தக் கோட்டுக்கு உள்ளே நில்லு!” அப்படின்னுவாரு. நான் அவர் வரைஞ்ச கோட்டுக்கு உள்ளே நிற்பேன். அப்போ அண்ணன் சொல்வாரு: “பாடு...” அவர் சொன்னபடி நான் பாடலைன்னா, என்னைத் துண்டு துண்டா போட்டுடுவாரு. ரெண்டாயிரம் துண்டா அறுத்து ரெண்டாயிரம் கிளிகளுக்கு இரையா போட்டுவாரு. அதற்குப் பிறகு அந்தக் கிளிகளை எல்லாம் அண்ணன் வெட்டிக் கொல்வாரு. பிறகு... அவற்றைப் பொரிச்சு சாப்பிடுவாரு...”

“அறுத்து சாப்பிட வேண்டாமா?”

பிஸ்மி சொல்லி அறுத்து துண்டு துண்டாக ஆக்கி அதற்குப் பிறகுதான் அதைச் சாப்பிட வேண்டும்!

“புத்தூஸே!” ஆயிஷா  சொன்னாள். “என்னைப்போல உள்ள ஒரு நல்ல பொண்ணைக் கொல்ற விஷயத்தைப் பற்றி நான் பேசிக்கிட்டு இருக்கேன். முஸ்ஹஃப் சொல்றவனுக்கு ஒஸு வேண்டுமா என்ன?”

வேதநூலான குர்ஆனைத் திருட வேண்டுமென்றால் உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா என்ன? இப்படிப் பல விஷயங்களை ஆயிஷா கூறுவாள். சில நேரங்களில் சில பத்திரிகைகளைக் கொண்டு வருவாள். அவற்றில் வந்திருக்கும் பயமுறுத்தக்கூடிய செய்திகளை அவள் குஞ்ஞுபாத்தும்மாவிற்கு வாசித்துக் காட்டுவாள். அந்தத் தாளில் அந்த அளவிற்கு பயங்கரமான சம்பவம் இருக்கிறது என்பதை குஞ்ஞுபார்த்தும்மா வால் நம்பவே முடியாமல், அப்படியே சிலை என நின்றுவிடுவாள். ஆயிஷா அந்த இடத்தை சுட்டிக்காட்டி மீண்டும் ஒருமுறை படிப்பாள். குஞ்ஞுபாத்தும்மா அதை ஆச்சரியத்துடன் பார்ப்ப தோடு, அதைக் கூறவும் செய்வாள். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஆயிஷா கேட்டாள்:

“குஞ்ஞுபாத்தும்மா, உன்னை ஏன் படி.க்க வைக்காம விட்டுட்டாங்க? உங்க வீட்லதான் ஏராளமான சொத்து இருந்துச்சில்ல...?”

சரிதான். ஏராளமாக சொத்து இருந்தது உண்மைதான். முஸ்லிம் கட்டாயம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அப்போது ஒரு பிரச்சினையும் இல்லை. அன்று எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால்... இன்று ஆயிஷாவைவிட குஞ்ஞுபாத்தும்மா அறிவு உள்ளவளாக இருந்திருப்பாள்... எல்லா விஷயங்களிலும் இன்று இருப்பதைவிட ஒரு மிகப்பெரிய மாற்றம் இருந்திருக்கும். அவளின் தந்தையும் தாயும்  அவளை ஏன் படிக்க வைக்கவில்லை?அவர்கள் ஏன் எழுதவும் படிக்கவும் கற்றிருக்கவில்லை? ஆண் யானை சொந்தத்தில் வைத்திருந்த யானை மக்கார் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாரா? பாமரத்தனமான தலைமுறைகள்!

அன்று இரவு அவள் அதை நினைத்துப் பார்த்தாள். என்ன காரணத்தால் அவளை அவர்கள் கல்வி கற்கச் செய்யவில்லை? பாயில் படுத்தவாறு, இருட்டுக்கு மத்தியில் அவள் தன் தந்தையிடம் கேட்டாள்.

“ஏன் வாப்பா, என்னை நீங்க படிக்க வைக்கல?”

அவளின் தந்தை ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டார். அவ்வளவு தான். அவளின் தாய் சொன்னாள்:

“எழுத படிக்க வச்சு உன்னை காஃபர் ஆக்காதது ஏன்னு நீ கேக்குறியா?”

எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால்... அறிவு உண்டாயிருந்தால்... முஸ்லிமாக வாழ முடியாது! இது சரியான விஷயமா? படிக்க வேண்டும்! இந்த வாக்கியம்தானே குர்ஆனில் முதலில் வந்தது!

சிந்திக்கக் கூடாதா? மறுநாள் குஞ்ஞுபாத்தும்மா ஆயிஷாவிடம் கேட்டாள். ஆயிஷா அதைக் கேட்டுச் சிரித்தாள்! அறிவில்லாமை யால் இப்படி ஒரு கேள்வி... அறிவில்லாமை வளர்ந்து கொண்டிருக் கிறது- அறிவு வளர்வதைப்போலவே! வளர்த்தால் வேண்டியது, வேண்டாதது எல்லாம் வளரத்தான் செய்யும். ஆயிஷா சொன்னாள்:

“இங்க பார்... முஸ்லிம்களுக்கு அறிவு கட்டாயம் இருக்கணும். அறிவில்லாதவங்க ஹம்கிங்கள்!”

இஸ்லாம் முட்டாள்தனமான கழுதையா? இல்லை என்பது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும்... அவள் கேட்டாள்:

“காஃப்ரிகளுக்கு நேர்மாறா நடக்க வேண்டாமா?”

காஃப்ரிகளுக்கு நேர் எதிராக நடக்க வேண்டும்!

“உண்மைதான்.” ஆயிஷா சொன்னாள்: “காஃபர் கால்களால் நடக்குறப்போ முஸ்லிம் தலையால் நடக்கணும். காஃபர் குளிக்கிறாங்க. பல் விளக்குறாங்க. அதனால முஸ்லிம் குளிக்கக் கூடாது. பல் தேய்க்கக்கூடாது. காஃபர் வாயால் சாப்பிடுறதால், முஸ்லிம்...”

“சும்மா இரு துட்டாப்பி...” குஞ்ஞுபாத்தும்மா பதைபதைப்புடன் சொன்னாள்: “ஏன் இப்படியெல்லாம் சொல்ற?”

“புத்தூஸே... கள்ள புத்தூஸே... அல்லாஹுவும் முஹம்மது நபியும் சொல்வதில் இந்த “நேர் எதிரா” நடக்குறது இல்லவே இல்லை...”

குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்:

“ஆரம்பத்துல அல்லாஹு யாரைப் படைச்சாரு?”

“தெரியாது...” ஆயிஷா சொன்னாள்: “மனிதர்கள்னா ஆதாம் நபியையும் ஏவாள் பீபியையும்...”

“முஹம்மது நபியை இல்லியா?”

“இது யார் சொன்னது? குர் ஆன்ல சொல்லப்பட்டிருக்குறது என்ன தெரியுமா? ஆதாம் நபியைத்தான் முதல்ல படைச்சதா சொல்லப்பட்டிருக்கு. நாம அதைத்தான் நம்பணும். காதால கேட்ட கதைகளையெல்லாம்- கண்டபடி கற்பனை பண்ணி சொல்றதை யெல்லாம் நாம நம்பிக்கிட்டு இருக்கக்கூடாது. முஸ்லிமாக வாழணும். நல்ல மனிதனா இருக்கணும். சுத்தமான மனிதனா இருக்கணும். ஆரோக்கியம் உள்ள ஆளா இருக்கணும். வாழ்க்கை யில் அழகுணர்வு இருக்கணும். மற்றவர்களைத் துன்புறுத்தக்கூடாது. பகை, வன்முறை- இவற்றைத் தவிர்க்கணும். உண்மையான மனிதனா நடக்கணும். பிரபஞ்சங்களைப் படைத்த அல்லாஹுவை முழுமையா நம்பணும். அல்லாஹுவின் தூதனான நபியை நம்பணும். மனிதர்களுக்கு ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்பதையும், தெய்வ தூதர்கள் இருக்கிறார்கள் என்பதையும்... இப்படிப் பல விஷயங்கள் இருக்கு... தீமை தரும் விஷயங்களுக்கு நேர்எதிரா நிற்கணும். இதை உண்மையா செய்றவங்கதான் முஸ்லிம்கள். கருணையை அடிப்படையாகக் கொண்ட மதம் இஸ்லாம். கள்ள புத்தூஸ்... இனிமேலும் உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”

“துட்டாப்பி, முஸ்லிம்கள் பூ...”

“ஏன்? கூடாதா? ஏன், பூ வச்சா கருகிப் போவாங்களா? கள்ள புத்தூஸே... கண்ணும் மூக்கும் இருக்குறவங்களுக்காக உள்ளதுதான் பூக்கள். முஸ்லிம்களும் பூக்களை முகர்ந்து பார்க்கலாம். தலையில் சூடலாம். இதற்குமேல் ஏதாவது தகவல் வேணும்னா என்னோட அண்ணன் வந்து சொல்வாரு!”


ஆனால், நிஸார் அஹமது வந்த உடன், குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை அவன் தலையை வெட்டுவதற்கு பெரிய அரிவாளைக் கையில் எடுத்தார். அதற்குக் காரணம் அவளின் தாய்தான்.

நிஸார் அஹமது வரும்போதே ஒரு பெரிய காடு சகிதமாகத்தான் வந்தான். எங்கேயிருந்து அவ்வளவு விஷயங்களையும் கொண்டு வந்தான் என்பதைத்தான் குஞ்ஞுபாத்தும்மாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவன் கொண்டு வந்ததில் பெரும்பாலானவை பழங்கள் தருகிற சிறு மரங்கள்... பிறகு... ஏராளமான தென்னங்கன்றுகள். வெறுமனே கிடந்த அந்த வெட்ட வெளி கண நேரத்தில் ஒரு வனமாக மாறியது. மரங்களை வரிசையாக அவன் நட்டான்.

அன்று முழுவதும் அங்கு ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது. நிஸார் அஹம்மது, அவன் தந்தை, பிறகு- ஆயிஷா. இவ்வளவு பேரும் ஒன்று சேர்ந்து வெயிலில் வேலை செய்வதைப் பார்த்தபோது குஞ்ஞுபாத்தும்மாவிற்கே ஆச்சரியமாக இருந்தது.

“உம்மா... அங்கே பார்த்தீங்களா?” தன் தாயை குஞ்ஞுபாத்தும்மா அழைத்தாள். அவள் தன் மிதியடிகளைப் போட்டுக்கொண்டு “க்டோ” “ப்டோ” என்று சத்தம் உண்டாக, வாசலில் வந்து நின்றாள். அவள் சொன்னாள்:

“இவங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?” என்று கூறியவாறு அவள் உள்ளே சென்றாள். அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக குஞ்ஞுபாத்தும்மாவுக்குத் தோன்றவில்லை. அவர்களைப் பார்த்து அவளுக்கு வியப்புத்தான் உண்டானது. நிலத்தில் வேலை செய்கிற முஸ்லிம்களை அவள் பார்த்ததில்லை. முஸ்லிம்களுக்குக் கூறப்பட்டிருப்பது வியாபாரம் என்பதுதான் அவளுக்குத் தெரியும். பிறகு- முக்கிய தேவைக்காக எதையாவது வெட்டுவதாகவோ கிளறுவதாகவோ இருந்தால், அதைப் பொதுவாக வேலைக்காரர்கள்தான் செய்வார்கள். அப்படி இல்லாமல் முஸ்லிமே நேரடியாக நிலத்தில் வேலை செய்வது என்பது... அவள் அதை முதல் முறையாக அப்போதுதான் பார்க்கிறாள்.

அவளுக்கு மனதிற்குள் ஒரு கவலை. அவர்களின் நிலம் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் வெறுமனே கிடக்கிறது. பலவற்றையும் அங்கு நட்டு வளர்க்கும் அளவிற்கு அங்கு நிறையவே இடம் இருக்கிறது. அவளுக்கும் ஒரு சகோதரன் இருந்திருந்தால்! ஆனால், அவளால் என்ன செய்ய முடியும்? நிஸார் அஹமது வருவதை யொட்டி அவள் சில காரியங்களைச் செய்திருந்தாள். நிலத்தில் இருந்த குப்பை கூளங்களையெல்லாம் அள்ளிக்கூட்டி நெருப்பு வைத்தாள். சமையலறை வாசலில் இருந்த மீன் செதில்களை ஒன்று கூட்டி வெளியே கொண்டு போய்போட்டாள். வீட்டிற்குள் இருந்த தூசுகளைப் பெருக்கி சுத்தமாக்கினாள். வீட்டின்முன் தொங்கிக் கொண்டிருந்த பழைய துணிகளையெல்லாம் எடுத்து நெருப்பு வைத்து எரித்தாள். இது எல்லாம் முடிந்து, தன்னையும் அவள் அழகுபடுத்தினாள். அவளின் இந்த ஆர்ப்பாட்டங்களையெல்லாம் பார்த்த அவளின் தாய் சொன்னாள்:

“என்னடி... என்னவெல்லாமோ பண்ணிக்கிட்டு இருக்கே?”

“கையில் காயம் ஆறிடுச்சா?” குஞ்ஞுபாத்துமாவைப் பார்த்ததும் நிஸார் அகமது கேட்ட முதல் கேள்வி இதுதான்.

“ஆறிடுச்சு...”

-குஞ்ஞுஞபாத்தும்மா சொன்னாள். இருந்தாலும், இவ்வளவு நாட்களாகியும் அதை அவன் ஞாபகத்தில் வைத்திருக்கிறானே! உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். குஞ்ஞுபாத்தும் மாவிற்கு இனம் புரியாத ஒரு உணர்வு மனதிற்குள் உண்டானது. அது நிஸார் அஹமது இரண்டாவது முறையாக வருவதற்கு முன்பா அல்லது பின்பா என்பது பற்றி அவளுக்கே சரிவர சொல்லத் தெரியவில்லை. அதனால் நிஸார் அஹமது “எப்போது” சொன்னான் என்று அவளால் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை.  என்ன சொன்னான் என்பதை மட்டும் தெளிவாக அவளால் ஞாபகப் படுத்திக் கூற முடிந்தது. என்ன செய்தான் என்பதுகூட ஞாபகத்தில் இருந்தது.

நிஸார் அஹமது குஞ்ஞுபாத்தும்மாவின் வீட்டில் ஒரு கழிவறை உண்டாக்கினான். பன்னிரண்டு அடி நீளத்தில், நாலடி அகலத்தில், அரை ஆள் உயரத்தில் ஒரு குழி. அதை வெட்டியது நிஸார் அஹமதுதான். என்ன என்பது தெரியாததால், குஞ்ஞுபாத்தும்மா வின்  தந்தைக்கு இந்த விஷயத்தில்  ஒரு உதவியும் செய்ய முடிய வில்லை. அந்தக் கழிவறை வீட்டில் இருந்து சற்று தூரத்தில் நிலத்தின் ஒரு மூலையில் இருந்ததால், அங்கிருந்து அவளின் தந்தையும் நிஸார் அஹமதுவும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை இங்கிருந்த அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. நிஸார் அஹமது வெயிலில் நின்று வியர்வை வழிய வேலை செய்துகொண்டிருந்தான். அப்போது அவளின் தந்தை வந்து சொன்னார்:

“மகளே... கொஞ்சம் தண்ணி கொடு. அவன் குடிக்கத்தான்!”

குஞ்ஞுபாத்தும்மா உள்ளே போனாள். சோப் துண்டை எடுத்து  இரண்டு பாத்திரங்களைக் கழுவினாள். பிறகு அதை முகர்ந்து பார்த்தாள். ஏதாவது நாற்றம் வருகிறதா என்று பார்த்தாள். அப்படி எதுவும் வரவில்லை. அவள் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள். அவளின் தந்தை அதை வாங்கிக்கொண்டு போனார். தண்ணீரைக் குடிப்பதற்கு முன்பு நிஸார் அஹமது அந்தப் பாத்திரத்தை மூக்கிற்கு அருகில் வைத்துப் பார்த்த பிறகுதான், நீரையே குடித்தான். அப்படி அவன் செய்தான் என்பதை குஞ்ஞு பாத்தும்மாவால் சந்தோஷத்துடன் சத்தியம் பண்ணி சொல்ல முடியும்.

கழிவறை வேலைகள் முற்றிலும் முடிவடைந்த உடன், குஞ்ஞுபாத்தும்மா போய் அதைப் பார்த்தாள். ஒரு சிறு வேலிக்குள் ஒரு குழி. அதன் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பலகைகள்- பாலம் மாதிரி போடப்பட்டிருந்தன. ஒரு மூலையில் நிறைய மண் குவிக்கப்பட்டிருந்தது. அதனருகில்  ஒரு சிரட்டை வைக்கப்பட்டி ருந்தது. “மலம் இருந்து முடிச்சவுடனே, மண்ணைப் போட்டு மூடணும். அதற்குத்தான் இந்தச் சிரட்டை.” ஆயிஷா சொன்னாள். “காலப்போக்குல இந்தக் குழி மூடப்பட்டுடும். அதற்குப்பிறகு புதுசா இன்னொரு குழி உண்டாக்கணும்!”

“இந்த விஷயம் நமக்கு ஆரம்பத்துல தெரியலியே!” அவளின் தந்தை சொன்னார்: “இப்படி எல்லா வீட்டுலயும் இருந்துச்சுன்னா, ஒரு நாற்றமும் இருக்காது!”

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவளின் தந்தைக்கு நிஸார் அஹமதுவை ரொம்பவும் பிடித்துப் போனது.  அத்துடன் சந்தேகங் களும் அதிகமாயின. நூறு கேள்விகளாவது அவனைப் பார்த்து கேட்க வேண்டும் என்று அவர் நினைத்தார். க்யாமம் மிகவும்  நெருங்கிவிட்டது அல்லவா? மக்கள் இந்த அளவிற்கு ஆணவம் கொண்டவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

நிஸார் அஹமது சொன்னான்:

“எனக்குத் தெரியாது. பிறந்தால் ஒருநாள் நாம இறக்கப் போறவங்க என்பது மட்டும் நமக்குத் தெரியும். நானும் சாகப் போறவன்தான். நீங்களும் ஒருநாள் மரணமடையப் போறவர்தான். எல்லாருமே சாகப் போறவங்கதான். எல்லா ஆத்மாக்களுக்கும் மரணத்தின் ருசி என்னன்னு தெரியும். இதுதான் குர்ஆன்ல இருக்கு. இதைப்போல இந்த உலகமும் ஒருநாள் அழியும். அதனால் என்ன? அழியிறப்போ அழியட்டும். அதுவரையில் மகிழ்ச்சியோட வாழணும். மக்களுக்கு இதைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இல்லாததுனாலதான் ஆணவக்காரர்களும் அக்கிரமக்காரர்களுமா அவர்கள் மாறிக்கிட்டு இருக்காங்க.


பொறாமையும் பகையும் எல்லார்கிட்டயும் இருக்கா என்ன? நல்ல பாதைக்கு அவங்களைத் திருப்பி விடறதுக்கு ஆள் வேணும். பிறகு... மற்றவர்கள் கெட்ட வர்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அவங்களை நல்லவங்களா மாற்ற நாம முயற்சிக்கணும்!”

அப்போது அவளின் தந்தைக்கு இன்னொரு சந்தேகம்.

“நல்ல பாம்பைத் திருத்த முடியுமா?”

“ஏன்?”

“அந்த மாதிரி விஷமுள்ள மனிதர்களும் இருக்கத்தான் செய்யிறாங்க. குள்ளநரி, புலி, குரங்கு- இந்த மிருகங்களோட குணத் தைக் கொண்ட மனிதர்களையும் நாம பார்க்கத்தானே செய்றோம்!”

“அந்த மிருகங்களைக்கூட மனிதன் தான் சொல்றபடி நடக்குற மாதிரி கொண்டு வந்திடுறானே!”

“இருந்தாலும்...?”

பிறகு அவர்கள் இரண்டு பேரும் எதுவுமே பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்து விடுவார்கள்.

ஒருநாள் அவளின் தாய் கேட்டாள்:

“அயம்மது... இந்தக் காட்டை எதுக்காக உண்டாக்கியிருக்கே?”

குஞ்ஞுபாத்தும்மா வாசல் கதவின் மறைவில் நின்று கொண்டு மனதிற்குள் சொன்னாள். “அயம்மது அல்ல... நிஸார் அஹம்மது...”

நிஸார் அஹமது சொன்னான்:

“இது ஒண்ணும் காடு இல்லியே! ரெண்டு மூணு வருடங்கள்ல உங்க எல்லாருக்கும் நல்ல மாம்பழம், கொய்யா, பலா, சப்போட்டா எல்லாம் இந்த மரங்கள் கொடுக்கும்...”

அவளின் தாய் கேட்டாள்:

“அயம்மது, உன்னோட உம்மா ஏன் இங்கே வரல?”

ஆயிஷா சொன்னாள்:

“உம்மாவுக்கு பயம்... அன்னைக்கு நடந்த சண்டைக்குப் பிறகு...”

எல்லாரும் அதை நினைத்து நினைத்து சிரித்தார்கள்.

அது நிஸார் அஹமது வந்த மறுநாளோ என்னவோ நடந்தது. அவன் வந்துவிட்டான் என்பது தெரிந்ததும் குஞ்ஞுபாத்தும்மா விற்கு பயம், சந்தோஷம் இரண்டுமே உண்டானது. முன்பு ஏற்கெனவே இருந்த தொண்டை வலி மேலும் அதிகமாகியது. அதோடு நிற்கவில்லை. சாப்பாட்டில் ருசி இல்லை என்பது மாதிரி இருந்தது அவளுக்கு. அவள் மிகவும் களைப்படைந்ததுபோல் இருந்தாள்... அப்படி அவள் இருக்கும்போதுதான் அது நடந்தது.

நிஸார் அஹமதும் ஆயிஷாவும் சேர்ந்து மரங்களுக்கும் மற்ற செடிகளுக்கும் நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.

அதைப்பற்றி கூர்மையாக கவனிக்காமல், அதேசமயம் சாதாரணமாக பார்த்தவாறு வாசலில் புல் பறித்தவாறு குஞ்ஞுபாத்தும்மா அமர்ந்திருந்தாள். நேரம் எவ்வளவு ஓடியது என்றே அவளுக்குத் தெரியாது. சூரியன் புளிய மரத்திற்கு நேர் மேலே இருந்தான். வழக்கம்போல மலம் கழிக்கப்போன அவளின் தாய் குளத்தைவிட்டு  மேலே கரைக்கு ஏறினாள்.

நிஸார் அஹமது அழைத்தான்:

“கொஞ்சம் நில்லுங்க... ஒண்ணு சொல்லட்டுமா?”

அவளின் தாய் திரும்பி நின்றாள்.

நிஸார் அஹமது விஷயத்தைச் சொன்னான். அவர்களுக்கு முன்னால் இருந்து மலம் கழிப்பது நல்லது அல்ல. அது நாற்றமடிக்கும் ஒரு செயல் என்றான்.

அவளின் தாய் கேட்டாள்:

“நீ யார்கிட்ட இப்போ பேசுறேன்னு உனக்குத் தெரியுமா?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“உம்மா... நீங்க போங்க...”

அவளின் தாய் நிஸார் அஹமதுவைப் பார்த்துக் கேட்டாள்:

“நீ எங்களை என்ன செய்வே?”

நிஸார் அஹமது சிரித்தான்.

அவளின் தாய் கோபத்துடன் கேட்டாள்:

“பொம்பளைங்கக்கிட்ட வேணும்னே சண்டை இழுக்கிறியா?”

அவளின் தந்தை வந்தபோது, தாய் சொன்னாள்: “நாசம்  போயிட்டேன். மைதினே... நாசம் போயிட்டேன்...”

“என்ன விஷயம்?”

“ஒளிஞ்சிருந்து பார்த்தான். நான் அந்தக் குளத்தைவிட்டு வர்றப்போ ஒளிஞ்சிருந்து பார்த்தான். மைதினே... நான் நாசம் போயிட்டேன்...”

“யாரு பார்த்தது?” அவளின் தந்தையின் கண்கள் சிவந்தன.

அவளின் தாய் சொன்னாள்:

“அவன்!”

“எவன்?” அவளின் தந்தை அரிவாளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தார். “கழுத்தை நான் வெட்டிடுவேன். எவன் அவன்?”

“பக்கத்துல புதுசா வந்திருக்கிற பையன்” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சலாம் இட்டவாறு வாசலில் வந்து நின்றான் நிஸார் அஹமது.

அவளின் தந்தை அவன் தலைமுடியையும் கட்டியிருக்கும் வேஷ்டியையும் பார்த்தார். இருந்தாலும் கடுமையான கோபத்துடன் சொன்னார்:

“வ அலைக்கு முஸ்ஸலாம்!”

நிஸார் அஹமது சொன்னான்:

“நாங்க உங்களுக்குப் பக்கத்துல வசிக்க வந்திருக்கோம். வாப்பா, உம்மா, என்னோட சகோதரி, பிறகு நான்...”

“நீங்க முஸ்லிமா?”

“ஆமா...”

“என்ன முஸ்லிம்?”

“மத சம்பந்தமா நாம பிறகு பேசுவோம். நாங்க யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். இந்துக்கள்கூட வச்சுக்கங்க. இல்லாட்டி கிறிஸ்துவர்கள்னுகூட வச்சுக்கங்க. எதுவா இருந்தாலும்,  எங்களோட மூக்குக்குப் பக்கத்துல வந்து இருந்து...”

“இருந்தா ஒளிஞ்சிருந்து பார்ப்பியா?”

“வாப்பா...” குஞ்ஞுபாத்தும்மா உள்ளே இருந்து கூப்பிட்டாள்: “வாப்பா...”

“என்ன மகனே?”

“உம்மா சொன்னது...” என்று குஞ்ஞுபாத்தும்மா கூறி முடிப்பதற்கு முன்பே அவளின் தாய் அவளின் வாயைக் கையால் மூடினாள்:

“என்னடி.... என் மானத்தை வாங்கலாம்னு  பாக்குறியா? நான் உன்னோட உம்மா... யானை மக்காரோட செல்ல மகள்...”

குஞ்ஞுபாத்தும்மா தாயின் கையை தன் கையால் விலக்கினாள்.

“உம்மா பொய் சொல்லுறாங்க...” அவள் உரத்த குரலில் சொன்னாள்.

“அய்யய்யோ... மைதினே... நான் இவளைப் பெற்றவளாச்சே!”

“என்ன நடந்துச்சு மகளே?” அவளின் தந்தை வீட்டுக்குள் வந்தார்.

“என்னால பொய் சொல்ல முடியாது.” குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்: “உம்மா பொய் சொல்றாங்க!”

“குஞ்ஞுபாத்தும்மா!” அவளின் தாய் சொன்னாள்: “உங்க தாத்தாவுக்கு ஒரு யானை இருந்துச்சு- பெரிய ஒரு ஆண் யானை...”

“இருந்தாலும் நான் கள்ள சாட்சி சொல்ல மாட்டேன்!”

“என்ன மகளே!” -அவளின் தந்தை கேட்டார்.

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“உம்மா  பொய் சொல்றாங்க. பக்கத்து வீட்ல இருக்குறவங்க உம்மாவைக் கூப்பிட்டாங்க. எங்க மூக்குக்குப் பக்கத்துல வந்து இருந்து மலம் கழிக்கிறது நல்லதான்னு கேட்டாங்க. அதைக் கேட்டு உம்மாவுக்குக் கோபம் வந்திடுச்சு. இதுதான் உண்மையிலேயே நடந்தது!”

அவளின் தாய் சொன்னாள்:

“எனக்குன்னு யாருமே இல்ல... குஞ்ஞுபாத்தும்மா, உன்னை நான் துண்டு துண்டா ஆக்குறேன்... என்னைக் கொன்னுடுங்க... மைதீனே... எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல...”

அவளின் தாய் அழுதவாறே தரையில் உட்கார்ந்தாள். அவளின் தந்தை வெளியே சென்றார். நிஸார் அஹமதுவிடம் அவர் சொன்னார்:

“நாங்க ஏழைங்க. இப்ப என்ன செய்யணும்?”

நிஸார் அஹமது சொன்னான்:

“நாங்களும் ஏழைங்கதான். எங்களுக்கும் சொந்தம்னு சொல்ல ஒரு இடமும் இல்ல. நகரத்துல நாங்க இருந்தது வாடகை வீட்டில்தான். இப்போத்தான் நாங்க இடம் வாங்கியிருக்கோம். எனக்கு விவசாயத்துல ரொம்பவும் ஆர்வம்!”

அவளின் தந்தை சொன்னார்:

“நாங்க இருக்குற இந்த வீடும் நிலமும் எங்களுக்குச் சொந்தமானதுதான்.


இருந்தாலும் எங்களுக்கு ஒரு வழியும் தெரியல. பாரு... இந்த நிலத்துல ஏதாவது மரம் அது இதுன்னு இருக்கா? இந்த ஊர்ல பெரும்பாலான ஆளுங்க சாயங்காலம் இருட்டின பிறகுதான் கக்கூஸுக்கே போவாங்க. ஒற்றையடிப் பாதையோரத்துல தான் என் பொண்டாட்டியும் மகளும் மலம் கழிக்கிறது... சொல்லப் போனால் நாங்க முன்னாடி கொஞ்சம் வசதியா இருந்தவங்க. எங்களைப் பார்த்தா எழுந்து நின்னவங்க இப்ப யாரும் எந்திருச்சு நிற்கிறது இல்ல. அவங்களுக்கு மத்தியில் என் பொண்டாட்டியும் மகளும் ஒற்றையடிப் பாதையில் போய் உட்கார்ந்து மலம் கழிச்சா நல்லவா இருக்கும்?”

நிஸார் அஹமது சொன்னான்:

“ஆளுங்க நடக்குற பாதையில் மலம் இருக்குறதோ மூத்திரம் பெய்யறதோ நல்ல விஷயமா? சொல்லுங்க. ஆளுங்க நடந்து போக வேண்டாமா? அதை அசுத்தம் செய்யலாமா? அந்த இடம் முழுவதும் ஒரே நாற்றமா இருந்தா எப்படி இருக்கும்?”

“அப்ப எங்க மாதிரி ஆளுங்க என்னதான் பண்றது?”

“அதனாலதான் சொல்றேன். வீட்லயே கக்கூஸ் உண்டாக்கணும். இதற்கு பெருசா பணம் ஒண்ணும் தேவையில்லை. கொஞ்சம் ஓலைகள் வேணும். அஞ்சாறு மூங்கில்கள் வேணும். கொஞ்சம் கயிறு. ஒரு மண்வெட்டியை வச்சோ தும்பாவை வச்சோ ஒரு மணி நேரம் வேலை செஞ்சா போதும். ஒரு வருஷத்துக்கு நாம கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. மனிதர்கள் ஏன் இதைச் செய்யாம இருக்காங்க? பெரிய நகரம்னா இடம் இல்லைன்னு சொல்லலாம். இங்க அப்படியொரு பிரச்சினையே இல்லியே! அழகான கிராமம். சுத்தமான தண்ணீர் வர்ற பெரிய ஆறு. இங்கே முஸ்லிம், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் எல்லாருமே மலம் கழிக்கிறது ஆற்றுக்குப் பக்கத்திலேயே. குடிக்கவும், குளிக்கவும் பயன்படுற தண்ணீரை அசுத்தமாக்கினா எப்படி? நான் எவ்வளவோ இடங்களுக்குப் போய் வந்த ஆளு. அழகான கடற்கரை. வெண்மை நிறத்தில் மணல் பரந்து கிடக்கும். கால்களை கீழே வைக்க முடியாது. பெண்ணும் ஆணும் எல்லாருமே மலம் இருக்குறதும், மூத்திரம் பெய்றதும் அங்கேதான். எங்கே பார்த்தாலும் ஒரே நாற்றமா இருக்கும்! மனிதர்கள் ஏன் இப்படி இருக்காங்க? மற்றவர்களுக்குக் கெடுதலும் தொந்தரவும் தராம அவங்களால வாழ முடியும்ல? இப்படி இருந்தா பாதையில நாம எப்படி நடக்க முடியும்? கக்கூஸ் உண்டாக்கணும். அதற்கு ஏகப்பட்ட இடம் இருக்கு. நான் சொல்றது மாதிரி செய்றீங்களா? ஏழெட்டு மூங்கில்களும் கயிறும் ஒரு மண்வெட்டியும் கொஞ்சும் ஓலைகளும் கொண்டுவர முடியுமா?”

“அது ஒரு பிரச்சினையில்லை...”

“அப்படின்னா அதைக் கொண்டு வந்துட்டு என்னைக் கூப்பிடுங்க!”

நிஸார் அஹமது வீட்டுக்குப் போனான். குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை சாமான்களைக் கொண்டு வருவதற்காக கிளம்பினார். அப்போது அவளின் தாய் குஞ்ஞுபாத்தும்மாவைப் பார்த்து சொன்னாள்:

“நீ என் மகளே இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மா எந்த பதிலும் கூறவில்லை. அவளின் தாய் சொன்னாள்:

“உன்னை நான் பெறவே இல்ல...”

குஞ்ஞுபாத்தும்மா பேசாமல் இருந்தாள்.

அவளின் தாய் சொன்னாள்:

“அடியே... உன் வாயில என்ன வச்சிருக்கே?”

குஞ்ஞுபாத்தும்மா வாயே திறக்கவில்லை

அவளின் தாய் கேட்டாள்:

“நீ என்கிட்ட பேசினா, உன் கையில வளையல் உருவி கீழே விழுந்திடுமா என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“என் கையில வளையலே இல்ல!”

அவளின் தாய் கேட்டாள்:

“இருந்தாலும் உனக்கு யார் பெரிசு? உன் உம்மாவா அவனா?”

குஞ்ஞுபாத்தும்மா பதில் எதுவும் கூறவில்லை.

அவளின் தாய் சொன்னாள்:

“இப்போ செம்மீனடிமையோட தைரியம்லாம் எங்கே போச்சு? நடந்ததைப் பார்த்தியா? அவன் ரெண்டு வார்த்தை பேசின உடனே, செம்மீனடிமை அவனுக்குப் பின்பாட்டு பாட ஆரம்பிச்சிட்டாரு. ஓலையும் மூங்கில்களும் எதற்கு? கல்லறை கட்டவா?”

இறந்தவர்களை அடக்கம் செய்த பிறகு, அந்த இடத்திற்கு மேலே சிறிய ஒரு கொட்டகை அமைத்து, ஒரு மாதகாலம் இரண்டு பேர் இரவிலும் பகலிலும் அமர்ந்து குர்ஆன் படிப்பார்கள். மறைந்த மனிதரின் ஆத்மா மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக. அதற்காகவா ஓலையும் மூங்கிலும் கயிறும்? இதுதான் குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் மனதிற்குள் நினைத்த விஷயம்!

குஞ்ஞுபாத்தும்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அவளின் தாய் கேட்டாள்:

“நீ அவனுக்குச் சாதகமா சாட்சி சொன்னதற்குக் காரணம்?”

குஞ்ஞுபாத்தும்மா அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

“உன் தாயோட மானம் உனக்குப் பெரிசா தெரியல...”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“நான் பொய் சாட்சி சொல்ல மாட்டேன்!”

“சொன்னா என்னடி? உன் கழுத்துல இருந்து மாலை கீழே விழுந்திடுமா?”

“என் கழுத்துல மாலை எதுவும் இல்ல...”

“அப்ப நீ சொல்றதுக்கு என்ன?”

“வாப்பா அருவாவை வச்சு அவர் கழுத்தை வெட்டியிருந் தார்னா...”

“நமக்கென்ன? அவன் செத்துப் போவான்...”

“வாப்பாவை போலீஸ்காரங்க பிடிச்சிட்டுப்போய் அடிச்சு கொன்னிருந்தாங்கன்னா...?”

அவன் தாய் சில நிமிடங்களுக்கு எதுவுமே பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “கடவுளே... இவ சொல்றது உண்மைதான்” என்று சொல்லிய அவள் குஞ்ஞுபாத்தும்மாவின் அருகில் வந்தாள்.

“என் அருமை மகளே... நீ நம்ம குடும்பத்தைக் காப்பாத்திட்டே! என் மகளே... உனக்கு என்ன குறை சொல்லு... ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“என் நெஞ்செல்லாம் ஒரே வலி உம்மா...”

“கடவுளே... ஏதாவது இஃப்ரீத்தோ ஜின்னோ என் மகள் மேல் ஏறிடுச்சா என்ன?”

கண்ணுக்குத் தெரியாத அந்த உயிர்களுக்குக்கூட ஆசை என்ற ஒன்று உண்டாகலாம் அல்லவா?

9

ன் இதய வேதனை

தனக்கு என்ன குறை என்பதை குஞ்ஞுபாத்தும்மாவாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அவளின் தந்தை பள்ளி வாசலில் கத்தீபிடம் மந்திரிக்கப்பட்ட ஒரு கயிறைக் கொண்டு வந்து அவள் கழுத்தில் கட்டினார். அது போதாதென்று முஸ்லிம்களிடம் சாதாரணமாக காணப்படும் ஒரு சின்ன சூட்கேஸைப்போல ஒன்று அவளின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அவளிடம் குடிகொண்டிருக்கும் “இஃப்ரீத்” அவளைவிட்டு போவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் ஆயிஷா வந்து சொன்னாள்- நிஸார் அஹமது சொன்னதாக. அது குஞ்ஞுபாத்தும்மாவிற்கு பெரிய விஷயமாகத் தோன்றியது. அவளின் ஒவ்வொரு அணுவும் ஆயிஷா சொன்னதை கவனமாகக் கேட்டது. ஆனால், ஆயிஷா சொன்ன விஷயத்தைக் கேட்டபோது, அவள் வேண்டுமென்றே தன்னிடம் விளையாடுகிறாள் என்று குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தோன்றியது. அவள் சொன்னாள்:

“போ துட்டாப்பி!”

ஆயிஷா சொன்னாள்:

“எந்த சைத்தானும் ஓடிடும். ஜின்னும் போகும். பிறகு... இஃப்ரீத் விஷயத்தைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வெறுமனே அதைக் கழுத்துல தொங்க விட்டுக்கிட்டு நடந்தா போதும். அண்ணனோட பெரிய பெட்டியிலதான் அது இருக்கு. என்ன, கொண்டு வரட்டுமா?”


குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“கள்ள புத்தூஸே, பேசாம இரு!”

அதே நேரத்தில் அவள் மனதில் கவலையும் உண்டானது.

ஆயிஷா கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு?”

“எனக்கு நெஞ்சு வலி.”

அவளுக்கு இதற்கு முன்பு இப்படியொரு நிலை வந்ததில்லை. அவளுக்கே என்னவோபோல இருந்தது. தனியே இருந்து அழத்தோன்றும். அப்போதே சிரிக்க வேண்டும் போலவும் இருக்கும். அழுவதைவிட அவளுக்கு சிரித்துக்கொண்டிருப்பதுதான் ரொம்பவும் பிடிக்கும். சிரிப்பு என்றால் உரத்த குரலில் அல்ல- எதையாவது நினைத்து புன்னகைப்பது. அப்போது விக்கி அழ வேண்டும்போலவும் இருக்கும். நிஸார் அஹமது தன்னைப் பார்க்கிறபோது, “என்னை ஏன் பாக்குறீங்க?” என்று கேட்டால் என்ன என்று நினைத்தாள். ஆனால், அதற்குப் பிறகு நிஸார் அஹமது தன்னை ஏறிட்டுப் பார்க்காமலே இருந்துவிட்டால்...? அவன் இதுவரை அவளை அப்படி பார்த்ததில்லை. அவளை அவன் பார்க்க வேண்டுமென்று அவள் நினைத்தாள். அவன் தன்னைப் பார்க்கக்கூடிய இடமாகப் பார்த்து அவள் போய் நிற்பாள். “நான் சுள்ளிவிறகு பொறுக்குறதுக்காக இங்கே வந்தேன்” என்று அவள் சொல்லுவாள். ஏதாவது காரணத்தை உண்டாக்கிக்கொண்டு அவள் பக்கத்து வீட்டைத் தேடிப் போவாள். “தீ” ஒரு முக்கிய காரணமாக இருக்கும். இல்லாவிட்டால் “உப்பு”. அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறாள் -ஆயிஷா. அவள் என்ன காரணத்தைச் சொல்லி அங்கு போனாலும், அவள் போகும் நேரத்தில் நிஸார் அஹமது அங்கு இருக்க மாட்டான். ஒன்று அவன் முற்றத்தைச் சுத்தம் செய்து கொண்டிருப்பான். இல்லாவிட்டால் மரங்களுக்கு நீர் விட்டுக்கொண்டிருப்பான். முற்றத்தில் பொன் என மணல் விரிக்கப்பட்டிருக்கும். அதைச் சுற்றிலும் நிறைய பூச்செடிகள் வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் முடிந்தால் ஏதாவது படிக்க உட்கார்ந்து விடுவான். “இவர் என்ன படிக்கிறார்?” அவள் தனக்குத்தானே கேட்டுக்கொள்வாள்.

ஒருநாள் குஞ்ஞுபாத்தும்மா பார்த்தபோது, ஒரு மரத்திற்குக் கீழே நிஸார் அஹமது படுத்திருந்தான்- சாய்வு நாற்காலியில். அவன் மடியில் ஒரு புத்தகம் இருந்தது.

அவளின் இதயம் சுகமான வெப்பத்துடன் உருகிக் கொண்டிருந்தது. நிஸார் அஹமதுவின் கண்கள் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. மேற்கில் வானம் பல வண்ணங்களைக் கொண்டிருந்தது. பறந்து போய்க் கொண்டிருந்த பறவைகள்மேல் சிவப்பு வண்ணம் தெரிந்தது.

அவள் நிலை கொள்ளாமல் இருந்தாள். அவள் வெள்ளை ஆடைகளை எடுத்து அணிந்தாள். நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருந்ததால், அந்த வெள்ளை ஆடைகள் அவளின் உடம்பை “சிக்” என பிடித்தது. தலையில் மென்மையான துணி இருந்தது. தான் இந்த அளவிற்கு கவனம் எடுத்து ஆடை அணிந்தது எதற்கு என்று அவளுக்கே தெரியவில்லை. கண்ணாடி முன் நின்று தன்னையே அவள் நீண்ட நேரம் பார்த்தாள். கண்களில் மெல்லிய ஒரு நீல நிறம் தெரிந்தது. கன்னத்தில் இருந்து கறுப்பு மரு பொட்டு வைத்ததைப்போல “பளிச்” என தெரிந்தது. தன் பெரிய விழிகளால் தன்னை அவள் பார்த்தாள். அவள் புன்னகைத்தாள். அவளுக்கு அழுகை வந்தது. அவள் சிரித்தாள்.

முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அவள் பக்கத்து வீட்டை நோக்கிப் போனாள். அவளின் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

நிஸார் அஹமதுவின் பார்வை அவள்மீது பதிந்தது. அந்தப் பார்வையில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.

அவள் தீ வாங்கினாள். ஆயிஷாவுடனோ அவளின் தாயுடனோ பேசுவதற்காக குஞ்ஞுபாத்தும்மா அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. போன வேகத்தில் அவள் திரும்பிவந்தாள்.

திரும்பி வந்தபோது நிஸார் அஹமது அவளை அழைத்தான்:

“ஓயி!”

அவன் குரல் அவள் மனதில் மின்னல் பாய்ந்ததைப்போல ஒரு உணர்வை உண்டாக்கியது. அதற்குமேல் அவளால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. அவள் அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள். அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. பயம் தோன்ற ஆரம்பித்தது. மனதில் ஒரு பதைபதைப்பு உண்டானது. அதே நேரத்தில் மனம் சந்தோஷமாக இருப்பது மாதிரியும் தோன்றியது... எல்லா வகை உணர்வுகளுடனும் அவள் அவனைப் பார்த்தாள்.

நிஸார் அஹமது எழுந்து நின்றான்.

“எனக்கு எப்பவும் நீ வேணும்” என்று கூறியவாறு அவளிடமிருந்து தீக்கொள்ளியை அவன் வாங்கி, அதை வைத்து சிகரெட் பற்ற வைத்தான்.

“குஞ்ஞுபாத்தும்மா...” -நிஸார் அஹமது சொன்னான்: “நம்ம அந்த குருவி இல்லே... அது என் பக்கத்துல வந்து குஞ்ஞுபாத்தும்மா நல்லா இருக்காளான்னு கேட்டது. நான் சொன்னேன்: “ஏதோ இஃப்ரீத்தை விரட்டுறதுக்காக அவள் கழுத்துல ஒரு சூட்கேஸை தொங்கவிட்டுக் கொண்டு திரியிறா”ன்னு.”

“சரி... தீயைக் கொடுங்க...”

“குஞ்ஞுபாத்தும்மா...”

“ம்...”

“உனக்கென்ன ஆச்சு?”

“நெஞ்சு வலி.”

“அதற்கு கழுத்துல கட்டினா போதுமா?”

“சரி... தீயைக் கொடுங்க...”

“உனக்கு எழுத படிக்கத் தெரியாதா?”

“நான் படிக்கல...”

“நாளை முதல் ஆயிஷாகிட்ட படிப்பு சொல்லித் தரச்சொல். சொல்லுவியா?”

“துட்டாப்பி என்னைப் பார்த்து கிண்டல் பண்ணும்!”

“லுட்டாப்பி உன்னைக் கேலி பண்ணினா, நான் அவளை ரெண்டாயிரம் துண்டா ஆக்கி...”

“வேண்டாம். துட்டாப்பியை ஒண்ணும் செய்ய வேண்டாம். சரி... தீயைக் கொடுங்க!”

“லுட்டாப்பிகிட்ட நான் சொல்றேன். போதுமா?”

அவனிடமிருந்து நெருப்பை அவள் வாங்கினாள். அவளுக்கு வேகமாக ஓட வேண்டும்போல் இருந்தது. இருந்தாலும் மெதுவாகவே நடந்து சென்றாள். உலகமே ஒரு புது வெளிச்சத்தில் மூழ்கி இருப்பதைப்போல் அவள் உணர்ந்தாள். உலகத்தில் உள்ள எல்லா பொருட்களுக்குமே முன்பிருந்ததைவிட அழகு கூடிவிட்டிருப்பதைப்போல அவள் மனதிற்குப்பட்டது. அவளுக்கு எல்லாவற்றின் மேலும் அதிக வாஞ்சை உண்டானது. ஒரு எறும்பு அவளைக் கடித்தபோது வேதனையுடன் அவள் எறும்பைப் பார்த்துச் சொன்னாள்:

“நீ என்னைக் கடிச்ச மாதிரிதானே எல்லாரையும் கடிச்சிக்கிட்டு இருக்கே!” அவள் அதை எடுத்து கீழே போட்டாள். அவளுக்கு இரவு மிகவும் அழகானதாகத் தோன்றியது. அவளின் தந்தையும் தாயும் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளுக்கு தூக்கமே வரவில்லை. அவள் நிஸார் அஹமதுவை மனதிற்குள் நினைத்து புன்னகைத்தாள். மனம் ஒரே பரபரப்புடன் இருந்தது. தலையணையைக் கிள்ளினாள். “வலிக்குதா?” அந்தக் கேள்வியை அவள் நினைத்தபோது அவள் கண்களில் நீர் நிறைந்தது. அடுத்த நிமிடம் அவள் புன்னகைத்தாள். அப்படியே அவள் உறங்கியும் போனாள். தூக்கத்தில் நிஸார் அஹமதுவைக் கனவில் கண்டாள். அவர்கள் இருவரும் ஒன்றாகக் கனவில் நடந்தார்கள்.

மறுநாள் பிற்பகல் நேரத்தில் சாப்பிட்டு முடித்து முற்றத்தில் குஞ்ஞுபாத்தும்மா நின்று கொண்டிருந்தபோது, ஆயிஷா கையில் பெரிய ஒரு பிரம்பையும் கையிடுக்கில் ஒன்றிரண்டு புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு வந்து பந்தாவான குரலில் குஞ்ஞுபாத்தும்மாவை அழைத்தாள்.


எதற்காக அவள் தன்னை அழைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள் குஞ்ஞுபாத்தும்மா. புளிய மரத்தடிக்கு அவளை அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி பிரம்பால் ஆயிஷா ஒரு வட்டம் வரைந்தாள்.

“வட்டத்துக்கு  நடுவுல நில்...” அவள் கட்டளையிட்டாள்.

“என்ன துட்டாப்பி?” என்று கேட்டவாறு குஞ்ஞுபாத்தும்மா அந்த வட்டத்திற்குள் நின்றாள்.

“வலது கையை நீட்டு.” ஆயிஷா மீண்டும் கட்டளையிட்டாள்.

“என்னை அடிக்கப்போறியா?”

“நீட்டு...”

குஞ்ஞுபாத்தும்மா கையை நீட்டினாள். ஆயிஷா அவள் கையில் ஒரு பென்சிலையும் ஒரு நோட்டு புத்தகத்தையும் ஒரு சிறுவர்களுக்கான புத்தகத்தையும் கொடுத்தாள்.

“நான் இன்னைக்கு முதல் உன்னோட குரு...” ஆயிஷா சொன்னாள்.

குஞ்ஞுபாத்தும்மா சிரித்தாள்.

ஆயிஷா சொன்னாள்:

“எனக்கு தெரியாத எந்த ரகசியமும் என்னோட சிஷ்யைக்குள் இருக்கக்கூடாது. எல்லா விஷயங்களையும் மனசைத் திறந்து சொல்லிடணும். அதற்குப் பிறகுதான் படிப்பு எல்லாம்.... என்னோட சகோதரன் என்று சொல்லப்படுகிற அந்தப் பெரிய மனிதனுக்கும் உனக்கும் இடையே... அப்படி என்ன?”

“சும்மா இரு துட்டாப்பி!”

“வாயைத் திறந்து உண்மையைச் சொல்றியா இல்லியா? இல்லாட்டி உதை வேணுமா? கள்ள புத்தூஸ்... உன்னை நான் நாலாயிரம் துண்டா அறுத்துப் போடப்போறேன்... உண்மையைச் சொல்லு...”

“போ துட்டாப்பி...”

“உண்மையைச் சொல்லு!”

“என்ன?”

“உனக்கும் என்னோட அண்ணனுக்குமிடையே அப்படியென்ன உறவு?”

குஞ்ஞுபாத்தும்மாவை அடிக்கப் போவதைப்போல அவள் பாவனை காட்டினாள்.

“சும்மா இரு துட்டாப்பி...”

ஆயிஷா சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பிறகு கேட்டாள்:

“குஞ்ஞுபாத்தும்மா, உனக்கு நடனம் ஆட தெரியுமா?”

அது என்னவென்றே அவளுக்குத் தெரியாது என்பதே உண்மை.

“எனக்குத் தெரியாது.” அவள் சொன்னாள்.

“சவரம், துணி துவைத்தல், சமையல், ஓவியம்- இது எதுவாவது உனக்குத் தெரியுமா?”

“சும்மா இரு துட்டாப்பி... எனக்கு இதெல்லாம் தெரியாது. எனக்கு இதெல்லாத்தையும் சொல்லி தர்றியா துட்டாப்பி?”

“அப்படின்னா... நான் சொல்றதை நீ கேட்கணும். ஆண்களைப் போன்ற கள்ள புத்தூஸ்கள் இந்த உலகத்துல வேற யாருமே கிடையாது!”

“சும்மா இரு துட்டாப்பி... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.” குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஆயிஷாவின் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட ஒரு விஷயம் கிடைத்தது. இரண்டு மூன்று எறும்புகள் ஒரு செத்துப்போன ஈயை புல்லோடு சேர்த்து இழுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தன. குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“துட்டாப்பி... இப்போ ஹஜ்ரத்துல் முந்தஹாவோட ஒரு சின்ன இலை கீழே விழுந்திருக்கும்... தெரியுதா?”

ஆயிஷா சொன்னாள்:

“நாம எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருந்தோம்! குஞ்ஞுபாத்தும்மா, நீ எழுத படிக்கணுமா?”

“படிக்கணும்!”

“சரி... அப்போ நான் கேட்கிற கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லணும். என் அண்ணனை எப்போ உனக்குத் தெரியும்?”

“எனக்கு எழுதப் படிக்க சொல்லித் தா, துட்டாப்பி!”

“குஞ்ஞுபாத்தும்மா, என்னைத்தானே முதல்ல உனக்கு பிடிச்சது?”

“இல்ல... துட்டாப்பி...” குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“என்ன?” ஆயிஷா வியப்பு மேலோங்கக் கேட்டாள்: “என்னை இல்லியா?”

“இல்ல...”

“அப்ப நீயே சொல்லு!”

“நான் உங்க கிணற்றின் கரையில குளிக்கிறதுக்காக வந்தேன். அப்போ துட்டாப்பி, நீங்க யாரும் இங்கே வரல. ஒருநாள், ஒரு ஆண் குருவி பெண் குருவியை கொத்தி கொல்லப் பார்த்துச்சு. அப்போ பெண் குருவி ஓடையில விழுந்திடுச்சு. அதைப் பார்க்கப் போன நானும் வாய்க்கால்ல ஓடைக்குள்ளே விழுந்துட்டேன். என் கையில நல்லா கீறிடுச்சு. ரத்தம் ஒழுகிக்கிட்டு இருக்கு. நான் கொஞ்சம் என்னோட ரத்தத்தை எடுத்து பெண் குருவி வாயில வச்சேன். அதோட வயிற்றுல ரெண்டு முட்டைகள் இருந்துச்சு. அப்ப வர்றாரு துட்டாப்பி, உன்னோட அண்ணன்...”

“என் அண்ணனா?”

“துட்டாப்பி... அப்ப நீ அங்கே இருந்தே. உன் அண்ணன் கீழே இறங்கி வந்தாரு. என் கையில இருந்த காயத்தைக் கட்டினாரு. என்னைக் கரையில ஏற வச்சாரு. குளிக்கிறப்போ காயத்துல தண்ணி பட்டுடக்கூடாதுன்னு சொன்னாரு...”

“அதற்குப்பிறகு குருவியோட நிலைமை என்ன ஆச்சு?”

“பறந்து அதோட வீட்டுக்கு ஓடிடுச்சு.”

“ஓ... இதுதான் விஷயமா?” ஆயிஷா சொன்னாள்: “ஆண்கள் என்று சொல்லப்படுகிற கள்ள புத்தூஸ்களைப் பற்றி...”

“சும்மா இரு துட்டாப்பி. அப்படியெல்லாம் சொல்லலாமா?”

“இனிமேல் நான் சொன்னா நீ என்னை அடிச்சே கொன்னுடுவே. அதுவும் நடக்கத்தான் போகுது. “ஆயிஷா பீவிக்கு இப்படியொரு நிலைமையா”ன்னு உலகம் பேசத்தான் போகுது...”

“என்ன சொல்ற துட்டாப்பி?”

“நான் பாடம் சொல்லித் தரப்போறேன். கவனமா கேளு...”

ஆயிஷா நிலத்தில் “ப” என்று எழுதினாள்.

“கவனமா பாரு. இந்த எழுத்து அந்த புத்தகத்துல இருக்கான்னு பாரு” என்று சொன்ன அவள் புல்மேல் மல்லாக்க படுத்தாள்.

குஞ்ஞுபாத்தும்மா புத்தகம் முழுக்க பார்த்தாள். அந்த எழுத்தையே காணவில்லை. கடைசியில் அவள் அதைப் புத்தகத்திற்கு வெளியே கண்டுபிடித்தாள்.

ஆயிஷா எழுந்தாள்.

“அதுதான் “ப”- எங்கே சொல்லு?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“ப!”

“ “ப”ன்னு ஆரம்பிக்கிற ஒரு வார்த்தை சொல்லு...”

“பழி...”

“புத்தூஸே! கள்ள புத்தூஸே! பழி இல்ல... வழின்னு சொல்லணும்...”

“வழி...”

“இதுல எங்கே “ப” இருக்கு?”

“இல்ல...”

“அப்படின்னா யோசிச்சு இன்னொரு வார்த்தை சொல்லு.”

“பயிதனங்கா...”

“வழுதனங்கான்னு சொல்லணும்...”

குஞ்ஞுபாத்தும்மா இப்படித்தான் எழுத படிக்க ஆரம்பித்தாள்.

இரவும் பகலும் அவள் இதற்காக கஷ்டப்பட்டாள். தன் தந்தையிடமும், தாயிடமும் அவள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. தன் தாய்க்கு இது தெரிந்தால், அவள் தன்னைக் கண்டபடி திட்டுவாள் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். அவளின் தாய் தீவிரமான தொழுகையில் ஈடுபட்டாள். பெரிய பிரார்த்தனைதான். தொழுகை இருக்கும் பாயைவிட்டு அவள் எழுந்திருக்கவே இல்லை. அங்கே இருந்தவாறே வீட்டுக் காரியங்களை அவள் விசாரிப்பாள். குஞ்ஞுபாத்தும்மா சமையலறை யிலிருந்தும் படுக்கும் பாயில் இருந்தவாறும்கூட படித்தாள். அவளுக்கு எப்போது பார்த்தாலும் சந்தேகம் வரும். அப்போது பக்கத்து வீட்டைத் தேடிப் போவாள். மொத்தத்தில் அவளிடம் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி தென்படும். ஒருநாள் ஆயிஷாவின் தாய் ஏதோ ஒரு குருவியைப் பற்றி அவளிடம் கேட்டாள்:

அதைக் கேட்டதும் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது!

“வெட்கப்படுறதைப் பார்த்தீங்களா?” ஆயிஷா சொன்னாள்.

அப்போது அவளுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ஆயிஷாவின் தாய் சிரித்தவாறு குஞ்ஞுபாத்தும்மாவின் தலையைத் தடவினாள்.

“நீ தலைமுடி வார்றது இல்லயா?” ஆயிஷாவின் தாய் கேட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:


“உம்மா சொல்வாங்க, தலையை வாரினா காஃப்ரிச்சியா ஆயிடுவோம்னு...”

அதைக் கேட்டு ஆயிஷாவின் தாய் சிரித்தாள். அவள் ஒரு சீப்பை எடுத்து குஞ்ஞுபாத்தும்மாவின் தலை முடியை வாரி வகிடு எடுத்து பிரித்தாள். குஞ்ஞுபாத்தும்மாவின் முகம் இப்போது மேலும் அழகாகத் தோன்றியது. ஆயிஷாவின் தாய் அவளின் முடியை அழகாகக் கட்டிவிட்டாள்.

ஆயிஷா முல்லைப் பூக்களைப் பொறுக்கிக்கொண்டு வந்து குஞ்ஞுபாத்தும்மாவின் கூந்தலில் வைத்தாள்.

“தலையில இப்லீஸ் ஏறிடுமா?” குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்.

“போய் குருவிகிட்ட கேளு!”

“போ துட்டாப்பி...”

அவள் வெட்கப்பட்டாள். சந்தோஷப்பட்டாள். வீட்டுக்குச் சென்றாள். அவளின் தாய் அவளைப் பார்த்து கேட்டாள்:

“என்னடி... உன் தலையில என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா பதில் எதுவும் சொல்லவில்லை.

அவளின் தாய் எழுந்து வந்து அவளின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கூந்தலில் இருந்த பூக்களை வீசி எறிந்தாள்.

“அவங்க செய்றதையெல்லாம் நீ செய்யணும்னு  அவசியம் இல்ல. அந்தப் பெண்ணோட தாத்தா ஒரு மாட்டு வண்டி ஓட்டுற ஆளு. தெரியுதா? நீ யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாக்கும்! உன்னோட தாத்தாவுக்கு சொந்தத்துல ஒரு யானை இருந்துச்சு. பெரிய ஒரு ஆண் யானை!”

குஞ்ஞுபாத்தும்மா ஒன்றுமே பேசவில்லை. அன்றே அவள் வேறொரு செய்தியையும் அறிந்தாள். அவளின் திருமணம் விரைவில் நடக்கப் போகிறது! அவளின் தந்தை மணமகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

அந்தச் செய்தியைக் கேட்டு அவள் நடுங்கினாள். அவளின் வாயில் நீர் வற்றியது. அவள் முகம் வெளிறியது. என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே சிலை என நின்றுவிட்டாள்.

அவளின் தாய் சொன்னாள்:

“என்னோட உத்தரவு இல்லாம நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது!”

அவளுக்கு கண்களும், காதுகளும் அடைத்துக்கொண்டு விட்டதுபோல் இருந்தது. “யா ரப்புல் ஆலமீன்...” என்று கூறியவாறு அவள் மயக்கமடைந்து கீழே விழுந்தாள்.

“மைதீனே! முத்நபியே! என் செல்ல மகளுக்கு என்ன ஆனது?” என்று கூறியவாறு அவளின் தாய் எழுந்தாள். அவளின் தந்தை வந்தார். தண்ணீர் தெளித்தல்! காற்று வீசல்! மொத்தத்தில்- ஒரே பரபரப்பு!

குஞ்ஞுபாத்தும்மா கண்களைத் திறந்தாள். மெல்ல எழுந்தாள். தன் தந்தையையும், தாயையும் உற்றுப் பார்த்தாள். அவளிடம் கேட்காமலே, அவளின் கருத்தைத் தெரிந்துகொள்ளாமலே அவளுக்கு அவர்கள் ஒரு கணவனைப் பார்த்திருக்கிறார்கள்!

“மகளே, குஞ்ஞுபாத்தும்மா...” -அவளின் தந்தை அழைத்தார்.

அவள் பேசவில்லை.

அவளின் தாய் கேட்டாள்:

“என் செல்ல மகளுக்கு என்ன ஆச்சு?”

குஞ்ஞுபாத்தும்மா வாய் திறக்கவில்லை.

“மைதீனே... ஏதாவது சைத்தானின் வேலையாக இருக்கும்!” அவளின் தாய் சொன்னாள்.

அதைக் கேட்டு குஞ்ஞுபாத்தும்மா விழுந்து விழுந்து சிரித்தாள். தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள். பிறகு அவள் அழுதாள். நிறுத்தாமல் இதய வேதனையுடன் அவள் அழுதாள். இரவு நெடுநேரம் ஆகியும் உலகமெல்லாம் உறங்கிய பிறகும்கூட அவள் தன் அழுகையை நிறுத்தவே இல்லை.

அவள் படுத்தவாறே ஜன்னல் வழியே பார்த்தாள்.

மிகப்பெரிய கறுப்பு வண்ண எட்டுக்கால் பூச்சியின் வலையில் சிக்கிக் கொண்டு ஒளிர்ந்து கொண்டிருப்பவைதானோ இந்த கோடிக்கணக்கான நட்சத்திரங்களும்!

10

னவுகளின் காலம்

பகல் வருகிறது. இரவு வருகிறது. எதைப் பற்றியும் குஞ்ஞுபாத்தும்மாவால் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் சரியாக சாப்பிடுவதில்லை. ஒழுங்காகத் தூங்குவதில்லை. எல்லாமே அவளைப் பொறுத்தவரை ஒரு கனவுபோல இருக்கிறது. யாரெல்லாமோ வருகிறார்கள். என்னென்ன கேள்விகளையோ அவளைப் பார்த்துக் கேட்கிறார்கள். அவள் விழித்திருக்கிறாளா? இல்லாவிட்டால் உறங்கிக்கொண்டிருக்கிறாளா? ஆயிஷாவோ வேறு யாரோ ஏதோ கேட்டார்கள். திரும்பத் திரும்ப கேட்டார்கள். அவளும் அதற்கு பதில் கூறவே செய்தாள். பிறகும் அதே கேள்வியை அவளைப் பார்த்துக் கேட்டார்கள். அவள் அதற்கு இதயத்தில் வேதனை உண்டாக உரத்த குரலில் சொன்னாள்:

“துட்டாப்பி... என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுக்கப் போறாங்க!”

தொடர்ந்து கண்ணீர். கண்ணீரின் கடல். அவள் அதில் மூழ்கிப் போயிருந்தாள். இருண்டுபோன உலகத்தின் எல்லையில் நிற்கிறபோது திடீரென்று நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அது சூரிய உதயம்தான். ஆனால், காகங்களின் சத்தங்கள் இல்லை. கிளிகள் அசையவே இல்லை. ஆட்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவளின் தந்தையும் தாயும்தான். பிறகு... அவர்களுடன் யாரோ இருக்கிறார்கள். அது சூரிய உதயமல்ல. முற்றத்தில் இருக்கும் குழியில் தீக்கட்டைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அதைச் சுற்றி மண் சட்டிகளில் சிறிய திரிகள் எரிந்துகொண்டிருக்கின்றன. குஞ்ஞுபாத்தும்மாவை அதற்கு அருகில் ஒரு பலகையில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவளுக்குப் பக்கத்தில் கையில் ஒரு பிரம்புடன் ஒரு மனிதன் நின்றிருக்கிறார்.

சைத்தானை “விரட்டும்” முஸ்லியார் அவர்!

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு வாழ்க்கையிலேயே முதல் முறையாக கோபம் வந்தது. பயங்கரமான கோபம். ஒரு யானையைப்போல பிளிற வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஒரு புலியைப்போல உறும வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. எழுந்து பாய்ந்து எல்லாரையும் கடித்து நார் நாராக்க வேண்டும்.

அவள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். நல்ல ஒரு வாசனை அங்கு வந்தது. முஸ்லியார் தலையில் கைவைத்து எதையோ தீயில் போடுகிறார். அங்கு பத்தியும், சந்தனமும் இருந்தன. முஸ்லியார் “ஸுஹ், ஃபல, ஹல” என்று ஏதோ மந்திரிக்கிறார். சைத்தானை விரட்டுகிறார். இஃப்ரீத், ஜின், ருஹானி இப்படி பல சைத்தான்களையும் விரட்டியடித்த புகழ் பெற்ற பிரம்பு அது!

அதை வைத்து அவளை அவர் அடிப்பார். தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு அவள் உடம்பிலும் தொடையிலும் அவர் அடிப்பார். அப்படிச் செய்தால்தான் சைத்தான் ஓடுவான்! அதற்குப் பிறகும் சைத்தான் ஓடவில்லையென்றால், மிளகாயை அரைத்து கண்ணில் தேய்ப்பார். தீக்கட்டையை உள்ளங்கையில் வைப்பார். அப்போது தோல் கரியும். மூளையில் இருந்து உள்ளங்கால் வரை பயங்கர வேதனை இருக்கும். ஓ... வேதனை உண்டாகட்டும்! அவளின் தாயும் தந்தையும் அவள் வேதனையை அனுபவிக்கட்டும் என்றுதானே அனுமதித்திருக்கிறார்கள்.

“வாப்பா, என்னை அடிக்கக்கூடாதுன்னு சொல்லுங்க!”

முஸ்லியார் ஒன்றுமே பேசவில்லை. அவளின் தந்தையும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவளின் தாயும்கூட வாயைத் திறக்கவில்லை.

“துட்டாப்பி, என்னை அடிக்கப் போறாங்கன்னு சொல்லு.” அவள் மனதிற்குள் கூறினாள். யாரிடம் சொல்லச் சொல்லி அவள் ஆயிஷாவிடம் கூறுகிறாள்?

“யார்னு சொல்லு...” முஸ்லியார் கட்டளை இட்டார்: “புகுந்திருக்கிறது யார்னு சொல்லு...”

யாராவது புகுந்திருந்தால் யார் என்று சொல்லலாம். அப்படி யாராவது புகுந்திருக்கிறார்களா என்ன?


முஸ்லியார் மீண்டும் கேட்டார். மூன்றாவது  முறை பிரம்புதான் கேட்டது. அதற்குப் பிறகு அவளுக்கு எதைப் பற்றியும் ஞாபகத்தில் இல்லை. முஸ்லியார் பத்து முறையோ பன்னிரண்டு முறையோ அடித்தார். அவள் அழுதாள். வாய்விட்டு அழுதாள். பிரம்பைப் பிடுங்கி அவள் ஒடித்தாள். ஒடித்த பிரம்பை தீக்குள் போட்டு எரித்தாள். எங்காவது அவளுக்கு ஓடிப்போக வேண்டும்போல் இருந்தது. ஆனால், அவள் ஓடவில்லை. எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்குப் பக்கத்தில்  நிஸார் அஹமது நின்றிருந்தான்.

நிஸார் அஹமது அவளைப் பிடித்து தூக்கினானா? இல்லா விட்டால் நிஸார் அஹமதுவின் அருகில் அவள் ஓடிச் சென்றாளா?

நிஸார் அஹமதுதான் அவளைத் தாங்கிப்பிடித்து வராந்தாவில் ஏறி வீட்டுக்குள் கொண்டு வந்து பாயில் படுக்க வைத்தான். அவள் கண்களைத் திறந்து பார்த்தபோது நல்ல பகல் நேரமாகிவிட்டி ருந்தது.

பாய்க்குப் பக்கத்தில் ஆயிஷா உட்கார்ந்திருந்தாள். ஆயிஷாவின் தாயும் இருந்தாள்.

குஞ்ஞுபாத்தும்மாவின் தாய் எதையோ அரைத்துக்கொண்டு வந்து நெற்றியில் பூசினாள். அதைப் பூசிய பிறகு மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. அவளின் மூக்கிலிருந்து வெளியே வந்த காற்று மிகவும் வெப்பமாக இருந்தது. அது தீயாக இருக்குமோ!

அவளின் தந்தை அந்த அறைக்குள் வந்தார். ஆயிஷாவும் அவளின் தாயும் எழுந்து நின்றார்கள்.

“மகளே, கஞ்சி சாப்பிடுறியா?”

ஒன்றுமே வேண்டாம். பசி, தாகம் எதுவுமே இல்லை!

“என் மகள் ஒழுங்காக சாப்பிட்டு எவ்வளவு நாட்களாயிடுச்சு!” அவளின் தந்தை கவலையுடன் சொன்னார். எதற்காக அவர் கவலைப்பட வேண்டும்? அவள் இறக்கப்போகிறாள்.  காற்று வீசத் தொடங்கியது. இலை இப்போது கீழே விழும். உண்மையாகவே காற்று பலமாக வீசுகிறது. இலைகள் பறக்கின்றன. மரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. மரணத்தின் காற்றாக இருக்கலாம். மரணத்தின் தூதன் வந்து சேர்ந்து விட்டானா? உலகம் முடியப் போகிறது. இஸ்ராஃபீல் என்ற மலக் ஸுர் என்ற குழலை ஊதத்  தொடங்கியிருக்கலாம். இறுதி நாள் நெருங்கிவிட்டது. மரங்கள் அடியோடு பெயர்ந்து கீழே விழுகின்றன. மலைகள் குலுங்கி தகர்ந்து பொடிப் பொடியாகின்றன.. பூமியே ஒன்றும் இல்லாமல் ஆகப் போகிறதா என்ன?

மழை பெய்து கொண்டிருக்கிறது. புது மண்ணின் வாசனையை உணர முடிகிறது. ஆட்கள் என்னென்னவோ பேசிக்கொண்டு சிரித்தவாறே போகிறார்கள். நல்ல பகல் நேரம். பருந்தின் ஓசை கேட்கிறது. அதைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அது ஆகாயத்தில் தன் சிறகுகளை விரித்துக் கொண்டு எந்தவிதமான அசைவும் இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறது. அறைக்குள் இரவு- பகல் எதையும் உணர முடியவில்லை. அவள் அசையாமல் கிடந்தாள். உடலில் பயங்கர வேதனை இருந்தது. யாரோ அவளை கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டதுபோல் இருந்தது. பத்தாயிரம் துண்டுகளாக தன்னை வெட்டிப் போட்டு விட்டதைப்போல் அவள் உணர்ந்தாள். கிளிகளுக்கு அவளை இரையாகப் போட தீர்மானித்திருக்கலாம். கிளிகள் அப்படி போடப்படும் துண்டுகளைக் கொத்தி விழுங்கி கூட்டம் கூட்டமாகப் பறந்து போகும். பிறகு...?

“குஞ்ஞுபாத்தும்மா...” யாரோ அழைக்கிறார்கள். யாராக இருக்கும்? அவள் கண்களைத் திறந்தாள். அப்போது அவளின் இதயமே ஆடிப்போனது. நிஸார் அஹமதுவின் தந்தை! அவர் வந்து அறையில் நின்றுகொண்டிருந்தார். அவர் சொன்னார்:

“அறைக்குள் காற்றும் வெளிச்சமும் வரணும். அந்த ஜன்னலை ஏன் அடைச்சு வச்சிருக்கீங்க?”

அவர் ஜன்னலைத் திறந்தார். காற்றும் வெளிச்சமும் அறைக்குள் வந்தது. வெளிச்சத்திற்கு ஒரு வெளிச்சம்!

“குஞ்ஞுபாத்தும்மா.” அவர் மீண்டும் அழைத்தார். “ம்...” அவள் சொன்னாள். ஆனால், சத்தம் வெளியே வந்தால்தானே! அவர் வாசலுக்குச் சென்று அவளின் தந்தையிடம் என்னவோ கூறிக்கொண்டிருந்தார். என்ன கூறுகிறார்? அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. கண்களைத் திறந்தபடி அவளால் படுத்திருக்க முடியவில்லை. உறக்கம் இல்லாமல் படுத்துக் கிடப்பதைவிட உறங்குவது எவ்வளவோமேல். உறக்கம் என்பது ஒரு கறுத்த கடலைப்போல. அவள் அதோடு இணைந்து சங்கமமாக முயன்றாள்.   அதுவும் முடியவில்லை.  வெளிச்சம்! எங்கேயாவது ஒரு பிடிப்பு இருக்க வேண்டும். எந்தப் பற்றுதலும் இல்லாமல் வாழ்க்கையில் எப்படி வாழ முடியும்? அவளொரு மரத்தைப்போல, பூமியில் வேர் வீட்டு நின்று கொண்டிருக்கிறாள். பூமியெங்கும் வேர்கள்தான். கை, கால்கள் எல்லாம் மரத்தின் உச்சிகள். ஏராளமான இலைகளும், பூக்களும் உண்டாகத் தொடங்கி யிருக்கின்றன. இரண்டு பறவைகள் கூடு கட்டப் போகின்றன. அது எந்தப் பறவைகள்?

“குஞ்ஞுபாத்தும்மா...” யாரோ அவளை அசைத்து எழுப்பினார்கள். யார் அது? எங்கேயோ முன்பு கேட்டிருக்கும் குரல்தான். இலேசான களைப்புடன் அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். யார் அது? ஓ... நிஸார் அஹமது.

“குஞ்ஞுபாத்தும்மா!” நிஸார் அஹமது அழைத்தான்.

தொடர்ந்து அவன் சொன்னான்: “நீ எந்திரிச்சு முதல்ல இதைக் குடி. கசப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் இனிப்பா இருக்குறதா நினைச்சுக்கோ. ருசிச்சு பார்க்க வேண்டாம்...”

மருந்து வேண்டாமென்று சொல்ல வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. அதற்கு முன்பு நிஸார் அஹமது அவளை தலையைப் பிடித்துத் தாங்கினான். அவளை அவன் எழுந்திருக்கச் செய்தான். வெண்மைநிற கிண்ணத்தில் ஏதோ கறுப்பாக இருக்கும் ஒரு திரவத்தை அவள் வாயில் ஊற்றி, அவளைக் குடிக்கச் செய்தான். அதற்குப் பிறகு அவன் என்னென்னவோ சொன்னான். அதற்குப் பதில் சொல்லலாம் என்று அவள் பார்த்தால், அப்போது நிஸார் அஹமதுவை அங்கு காணோம். அவளின் தாய் குருணை அரிசியால் உண்டாக்கப்பட்ட கஞ்சியைக் கொண்டுவந்து அவளைக் குடிக்க வைத்தாள். அவளின் தாய் கேட்டாள்:

“ஆயிஷாவோட உம்மா கட்டுறது மாதிரி உனக்கு தலைமுடியைக் கட்டணுமா?”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“நான் சாகப்போறேன்!”

அவளின் தாய் சொன்னாள்:

“என் செல்ல மகளே... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உன் கல்யாண விஷயமெல்லாம் முடிவு செஞ்சாச்சு!”

குஞ்ஞுபாத்தும்மா சொன்னாள்:

“நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நான் சாகப்போறேன்!”

அப்போது சிரித்தவாறு உள்ளே வந்தாள் ஆயிஷா. அவள் கேட்டாள்:

“மருந்து  இனிப்பா இருந்துச்சா?”

“போ துட்டாப்பி...”

“கள்ள புத்தூஸ் ஒரு ஆளு மருந்து கொடுத்தா மட்டும்தான் குடிப்பா...”

“சும்மா இரு துட்டாப்பி...” என்று சொல்லியவாறு அவள் படுத்துக் கிடந்தாள். இதயம் முழுக்க தேன் தடவியதுபோல் இருந்தது. மொத்தத்தில் அவள் சந்தோஷமயமாக மாறிவிட்டிருந் தாள். அவளுக்கு ருசி தோன்றியது. பசியும் தாகமும் உண்டாயின. யாருடைய உதவியும் இல்லாமல் அவளால் எழுந்திருக்க முடிந்தது. மெதுவாக நடக்கவும் செய்தாள். இப்படி இருக்கும்போது ஒருநாள் ஆயிஷா சொன்னாள்:

“கள்ள புத்தூஸ்... உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறது யார்னு தெரியுமா?”

“சும்மா இரு துட்டாப்பி...!”


இங்க பாரு... யார்னு உனக்குத் தெரியுமா?”

11

புதிய தலைமுறை பேசுகிறது

குஞ்ஞுபாத்தும்மாவை நிஸார் அஹமது திருமணம் செய்தது ஒரு இரவு வேளையில்தான். அன்று பகல் நான்கு மணிக்கு ஒரு இனிமையான சம்பவம் நடந்தது.

திருமணம் செய்விப்பதற்காக பள்ளி வாசல் கத்தீபை அழைப்பதற்காக குஞ்ஞுபாத்தும்மாவின் தந்தை சென்றிருந்தார். ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகளுக்கும் திருமணக் காரியத்தை அறிவித்திருந்தாலும், யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. விருந்தோ வேறு வகையான கொண்டாட்டங்களோ எதுவுமே இல்லை. எதுவுமே தேவையில்லை என்று திட்டவட்டமாக நிஸார் அஹமதுவின் தாயும் தந்தையும் கூறிவிட்டார்கள். வேண்டுமென்றே பெரிய விருந்துகள் நடத்தி கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து ஏழையாகிப்போன முஸ்லிம் குடும்பங்கள் எத்தனையோ! அதை நினைத்துப் பார்ப்பது நல்லது. ஏழெட்டு பேருக்கு நெய் சோறு தயாராகிக் கொண்டிருந்தது. புதுப்பெண்ணிற் குத் தேவையான புதிய ஆடைகளை அவர்கள்தான் வாங்கியிருந் தார்கள். இது எதுவுமே குஞ்ஞுபாத்தும்மாவிற்குத் தெரியாது. குளித்து முடித்தபிறகு, அவளை அங்கு செல்லும்படி சொன்னாள் ஆயிஷா. குளித்து முடித்ததும், ஆயிஷாவே வந்து அவளை அழைத்துக்கொண்டு போனாள்.

உள்ளே போகும்போது இருந்த குஞ்ஞுபாத்தும்மா அல்ல வெளியே வந்தது. அவள் பாவாடை அணிந்திருந்தாள். பாடீஸ் அணிந்திருந்தாள். ப்ளவுஸ் அணிந்திருந்தாள். பச்சை புடவை அணிந்திருந்தாள். முடி அழகாக வாரப்பட்டிருந்தது. அதில் பூ வேறு வைத்திருந்தாள். புடவையின் ஒரு தலைப்பால், தலையை மறைத்திருந்தாள். அதற்கும் மேலாக அவள் செருப்புகள் வேறு அணிந்திருந்தாள். நூறு முறையாவது அறைக்குள் இங்குமங்குமாய் நடக்கவிட்டிருப்பார்கள். நன்றாக அவள் நடந்த பிறகுதான் அவளை வீட்டுக்கே அனுப்பினார்கள்.

நிஸார் அஹமது சொன்னான்:

“குனியக்கூடாது. முழுசா நிமிர்ந்து, தைரியசாலி மாதிரி நடந்து போகணும்...”

அப்படி நடந்துதான் குஞ்ஞுபாத்தும்மா வீட்டுக்கு வந்தாள்.

அவள் அழகு தேவதையென ஜொலித்தாள். அவளின் கன்னத்தில் இருந்து கறுப்பு மரு மின்னியது. அவள் நடந்து செல்வதை வழியில் நின்றிருந்த சிறுவர்- சிறுமிகள் பார்த்தார்கள். அவளின் தாய் மிதியடிகளைப் போட்டுக்கொண்டு முற்றத்தில் நின்றிருந்தாள். அங்கு ஏதோ கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் குஞ்ஞுபாத்தும்மாவால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னவோ அங்கு பேச்சு கேட்டது. என்ன பேசுகிறார்கள் என்பதை அவளால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளின் தாய் சிறுவர்- சிறுமிகளைப் பார்த்து கேட்டாள்:

“என்ன பிள்ளைங்களா?”

சிறுவர்- சிறுமிகளாக நின்றிருந்த குஞ்ஞுபாத்தும்மாக்களும், குஞ்ஞுதாச்சும்மாக்களும், அடிமைகளும், மக்கார்களும் சொன்னார்கள்:

“குளுகுளு...”

அவளின் தாய் புதிய தலைமுறையைப் பார்த்து கேட்டாள்:

“பிள்ளைங்களா, என்ன சொல்றீங்க?”

பிள்ளைகள் சொன்னார்கள்:

“லுல்லுலு!”

அவளின் தாய்க்கு இதைக் கேட்டதும் கோபம் வர ஆரம்பித்தது. அவள் சொன்னாள்:

“உங்களைப் பாம்பு கடிக்கப் போகுது...”

“மெம்மம்மே!”

“பன்றிகளே!”

“பெப்பப்பே!”

அவளின் தாய் சொன்னாள்:

“நான் உலக்கையை எடுத்து அடிக்கப் போறேன்!”

குஞ்ஞுபாத்தும்மா தூரத்தில் வரும்போதே சொன்னாள்:

“உம்மா, பேசாம இருங்க. நீங்க பாட்டுக்கு ஏதாவது சொல்லி, அவங்களோட வாப்பாங்க சண்டைக்கு வந்துடப் போறாங்க!”

“வரட்டும்டி...” அவளின் தாய் ஊரே கேட்கிற மாதிரி உரத்த குரலில் சொன்னாள்: “உன்னை அவங்க எல்லாரும் வந்து பார்க்கட்டும். யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளை அவுங்க தான் வந்து பார்க்கட்டுமே! உன் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்துச்சு... பெரிய ஒரு ஆண் யானை!”

“அது ஒரு குழி யானை.” மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த முகத்தையும், சொறி பிடித்த கைகளையும் கொண்ட ஒரு கறுப்பான ஒரு முழம் உயரமே உள்ள ஒரு அடிமை சொன்னான்:

“குழி யானை குழி யானை!”

அதை குஞ்ஞுதாச்சும்மாவால் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? பெரிய ஒரு வரலாற்றின் பெருமையைத் தகர்த்து உடைப்பது என்றால்... சூரபராக்கிரமசாலியான யானை மக்கார் சாஹிப்பிற்குச் சொந்தமானதும், தைரியசாலியும் நான்கு காஃப்ரிகளைக் கொன்றவனும், கம்பீரமான தோற்றத்தைக் கொண்டவனுமான அந்தப் பெரிய ஆண் யானையை- முற்றத்தில் சுவரோடு சேர்ந்து மண்ணில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் “குழி யானை” என்ற சின்னஞ்சிறு வண்டுடன் ஒரு சிறுவன் ஒப்பிட்டுப் பேசுவது என்றால்...?

“கடவுளே!” குஞ்ஞுதாச்சும்மா நெஞ்சில் அடித்தவாறு சொன்னாள்: “வாய்க்கு வந்தபடி பேசுற இந்தப் பிள்ளைங்களோட தலையை நீ நொறுக்கக் கூடாதா?”

அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்தச் சிறுவர்- சிறுமிகளின் தலைகள் உடைந்து நொறுங்கவில்லை. இடிந்து விழவில்லை. பாம்பும் அவர்களைக் கடிக்கவில்லை. ஒன்றுமே நடக்கவில்லை. அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கூவினார்கள்.

“யானை மக்காரோட பெரிய ஆண் யானை... ஒரு குழி யானை! குழி யானை!”

குஞ்ஞுதாச்சும்மாவிற்கு தலை சுற்றியது மாதிரி இருந்தது. மூச்சுவிடவே சிரமப்பட்டாள். அந்தச் சில நிமிடங்களில் வாழ்க்கை முழுவதும் அவளுக்கு முன்னால் கடந்து போனது. எல்லா பெருமைகளும்... இரண்டு கைகளையும் தலையில் வைத்தவாறு அவள் உட்கார்ந்துவிட்டாள்.

குஞ்ஞுபாத்தும்மா தன் தாயின் அருகில் வந்தாள். சிறுவர்- சிறுமிகளைப் பார்த்து அவள் கேட்டாள்:

“என்ன பிள்ளைங்களா?”

பிள்ளைகள் சொன்னார்கள்:

“ஞ்ஞு! ஞ்ஞு!”

“என்ன?”

“பெப்பப்பே!”

“என்ன சொல்றீங்க?”

பிள்ளைகள் சொன்னார்கள்.

“குழி யானை! குழி யானை!”

“என்ன குழி யானை?” குஞ்ஞுபாத்தும்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் நினைத்தது என்னவென்றால் இந்தச் சிறுவர்களில் யாராவது குழி யானையைப் பிடித்து தன் தாயின் காதில் விட்டிருப்பார்கள் என்றுதான். அவள் தன் தாயின் அருகில் அமர்ந்தவாறு கேட்டாள்:

“என்ன உம்மா?”

அவளின் தாய் எதுவுமே பேசவில்லை. என்ன பேசுவாள்? பழைய சரித்திரங்கள் எல்லாமே எரிந்து தூள் தூளாகிப் போய்விட்டனவே! இனி எதற்காக வாழ வேண்டும்?

குஞ்ஞுபாத்தும்மா மீண்டும் கேட்டாள். அழகுப் பதுமை என தன் முன் நின்றிருக்கும் குஞ்ஞுபாத்தும்மாவைப் பார்த்தாள். நல்ல மனிதனான நிஸார் அஹமதுவை நினைத்துப் பார்த்தாள். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி கடவுளின் அருளுடன் அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ரப்புல் ஆலமீன் தம்புரான் எல்லாவற்றையும் சரியான பாதையில் நடத்திச் செல்வார். சரித்திரம்... சரித்திரம்தான்... கடைசியில் அவளின் தாய் கண்ணீருடன் விக்கிய குரலில் குஞ்ஞுபாத்தும்மாவிடம் சொன்னாள்:

“உன் தாத்தாவோட... பெரிய ஆண் யானை... ஒரு குழி யானை! குழி யானை!”

மங்களம்

சுபம்

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.