Logo

யானைவாரியும் தங்கச் சிலுவையும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6182
yanai-vaarium-thanga-siluvaium

டவுளின் அருள் சேர்த்துச் சொல்கிறேன். இந்த ஊரில் இரண்டு யானைகள். சாந்தங்கேரி மனை வகையைச் சேர்ந்தது. ஒன்றின் பெயர் கொச்சு நீலாண்டன். இன்னொன்றின் பெயர் பாருக்குட்டி. இரண்டு யானைகளுமே ஊரில் வாழும் மக்களின் அன்புக்குப் பாத்திரமானவை.

கொச்சு நீலாண்டன் பெரிய போக்கிரி. நிற்கும் போதே பந்தாவாக இருக்கும். பலமான இரண்டு நீண்ட வெள்ளைத் தந்தங்கள் முன் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கும். இரண்டு தந்தங்களின் நுனியும் ஊசிபோல் இருக்கும். உலகத்தில் நித்தமும் நடக்கும் செயல்களில் ஏதாவது அவனுக்குத் தொந்தரவு தருவது மாதிரி தோன்றிவிட்டால் அவ்வளவுதான்...

ஒரு யானைப் பாகனைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இந்த ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு சாத்தங்கேரி மனையின் தலைவரான கொச்சு நாராயணன் நம்பூதிரிப்பாடு, ஏகப்பட்ட யானைப் பாகன்களை எப்போதும் வீட்டில் "ஸ்டாக்" வைத்திருப்பார். கொச்சு நீலாண்டனுக்கு மட்டும் யானைப் பாகன்களாக எப்போதும் ஆறு பேர் இருப்பார்கள். இதில் வழுக்கைத் தலையைக் கொண்டவர்கள் யாருமில்லை. தலைமுடியைச் சுற்றிப் பிடித்து மரத்தில் ஓங்கி அடித்துதான் கொச்சு நீலாண்டன் இதற்கு முன்பு யானைப் பாகன்களைக் கொன்றிருக்கிறான். அதற்குப் பிறகு கூர்மையான தந்தங்களால் யானைப் பாகன்களைக் குத்தவும் செய்வான், படுகோபத்துடன். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் கோபத்துடனே இருப்பான். இந்த நாட்கள் ஊரில் ஒரு பெரிய கொண்டாட்டமாகவே இருக்கும்.

இதுவரை கொச்சு நீலாண்டன் பதினொரு யானைப் பாகன்களை மரங்களில் அடித்தும், தந்தத்தால் குத்தியும் கொன்றிருக்கிறான்.

பாருக்குட்டி இந்த மாதிரியில்லை. அவள் சாது. கொம்புகள் இல்லை. அவள் இதுவரை யாரையும் கொன்றதும் இல்லை; கொன்றுவிட்டு அட்டகாசமாக ஆர்ப்பரிக்கவும் இல்லை. இருக்கிற இடமே தெரியாது. அவளுக்குப் பெயருக்கு ஒரே ஒரு யானைப் பாகன்தான். அவனே இல்லை என்றால்கூட பிரச்சினை இல்லை. அந்த அளவுக்கு அமைதியான குணத்தைக் கொண்டவள் அவள். அவளை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொடலாம். ஆனால் வாலில் இருக்கும் ரோமத்தை இழுத்து வேதனைப்படுத்தக் கூடாது என்பது மட்டும்தான் அவளைப் பற்றிய விஷயம்.

2

கொச்சு நீலாண்டனை விரும்புவதையும், பாருக்குட்டியை வெறுப்பதையும் தன் அன்றாட பழக்கவழக்கமாய்க் கொண்ட ஒரு நபரும் அந்த ஊரில் இருந்தார். அவர் பெயர் யானைவாரி ராமன் நாயர். மாறாக பாருக்குட்டிமேல் அளவற்ற பிரியம் வைத்திருப்பதோடு நிற்காமல், அவளுக்கு வெல்ல உருண்டை, பழம் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதுடன், கொச்சு நீலாண்டனை வெறுக்காமல் இருக்கும் ஒரு மனிதரும் அந்த ஊரில் இருக்கவே செய்தார். அவர் தங்கச்சிலுவை தோமா.

இந்த உலகம் இதில் வாழும் எல்லாருக்குமே சொந்தமானது. சொந்தத்தில் பொருட்களை ஆளுமை செய்வது விரும்பத்தக்கது அல்ல. யாருடைய பொருளையும் யாரும் எடுக்கலாம். இப்படிப்பட்ட சமதர்மக் கொள்கையைக் கொண்டவர்கள் யானைவாரி ராமன் நாயரும், தங்கச்சிலுவை தோமாவும், அவர்களின் கூட்டத்தைச் சேர்ந்த மற்றவர்களும்.

யானைவாரியும் தங்கச்சிலுவையும் தோழர்கள். பல வருடங்களுக்கு முன்பு அம்முக்குட்டி என்ற பெயரைக் கொண்ட ஒரு மங்கை ராமன் நாயரைக் காதலிப்பதாகச் சொல்லி, கடைசியில் அவரை ஏமாற்றிவிட்டாள். அந்த நாள் முதல் இந்த நாள் வரை அதனாலேயே பெண் இனம் என்றாலே ராமன் நாயருக்கு ஒரு வெறுப்பு. இதற்கு நேர் எதிராக பெண்கள் என்றாலே பாசமும் மதிப்பும் கொண்ட மனிதர் தங்கச்சிலுவை தோமா.

சில நேரங்களில் ராமன் நாயர் எங்கிருந்தோ நான்கு அல்லது ஐந்தணா (ஒரு அணா- ஆறு பைசா. நாலணா அன்று கால் ரூபாய்) சம்பாதித்து, பழமும் வெல்லமும் வாங்குவார். அவற்றுடன் கொச்சு நீலாண்டனும் பாருக்குட்டியும் இருக்கிற இடத்திற்குப் போவார். பாருக்குட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே வெல்லத்தையும் பழத்தையும் கொச்சு நீலாண்டனுக்குக் கொடுப்பார். இதனால் பெரிதாக மன வேதனை அடையவில்லை என்றாலும், பாருக்குட்டி பெரிய குரலில் பிளிறுவாள். என்ன இருந்தாலும் பெண் அல்லவா? அப்போது யானைவாரி கூறுவார்.

"போடி கழுதை...''

இப்படிப்பட்ட நேரங்களில் தங்கச்சிலுவை தோமா கேட்பார்.

"யானைவாரி... உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?''

யானைவாரி மகா கோபக்காரர். நீண்ட மூக்கை உடையவர். அவர் கோபத்துடன் கூறுவார்:

"தங்கச்சிலுவையே... பேசாமல் போயிடு. இல்லாட்டி உன் மூக்கைச் சீவி உப்புல போட்டு புரட்டிடுவேன்.''

தங்கச்சிலுவை தோமா சமாதானப்பிரியர். அவர் பதிலுக்கு ஒன்றுமே கூறாமல் வெறுமனே இருப்பார்.

யானைவாரியும் தங்கச்சிலுவையும் முன்பு வெறும் ராமன் நாயராகவும் தோமாவாகவும் இருந்தவர்கள்தான். இவர்கள் இருவருக்கும் "யானைவாரி", "தங்கச்சிலுவை" என்ற அடைமொழிகளை யார் கொடுத்தது? இந்தக் கேள்வியை குறைந்தபட்சம் நூறு முறை இந்த சரித்திர எழுத்தாளர் இவர்கள் இருவரிடமும் கேட்டாகிவிட்டது. இறுதியில் இருவருமே இந்தப் பெயர்கள் வந்ததற்கான காரணத்தை ஆதாரப்பூர்வமாகக் கூறவும் செய்தார்கள். ஊரில் உள்ள எல்லாருக்கும் இந்தக் கதை தெரியும். சரித்திரம் படிக்கும் மாணவர்களுக்காக நான் அதை இங்கு விவரமாகக் கூறுகிறேன்.

கொச்சு நீலாண்டன் ஆறாவது யானைப் பாகனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே செய்யாதது மாதிரி வெறுமனே நடந்து கொண்டிருந்த காலம் அது.

அன்று ராமன் நாயர் வெறும் ராமன் நாயரும் தோமா வெறும் தோமாவும்தான். அவர்களின் அன்புக்குப் பாத்திரமான தோழர்களான தொரப்பன் அவரானும், டிரைவர் பப்புண்ணியும் அந்தக் காலத்தில் தீவட்டிக் கொள்ளை, வெளியில் இருந்து திறந்த வீட்டுக்குள் நுழைவது, வீட்டைக் கொள்ளை அடிப்பது போன்ற கலைகளில் மேல்படிப்பு கற்பதற்காக வெளிநாடுகளில் பயணம் செய்து கொண்டிருந்ததால், ஊரில் உண்டாகும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை ராமன் நாயரும் தோமாவும் அவர்களாகவே ஏற்றுக்கொண்டனர். அவர்களின் சீடர்கள் என்று வெறுமனே நடித்துக்கொண்டிருப்பவர்கள் மண்டு முத்தபா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ போன்றவர்கள்.

ஊரில் பெரிய பிக்-பாக்கெட் அடிப்பவன் நான்தான் என்ற பெயரைப் பெறுவதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தான் மண்டு முத்தபா.

கோழி பிடிப்பது, தேங்காய் திருடுவது, பாக்கு பறித்தல் போன்ற தொழில்களை இரவு நேரங்களில் செய்வதற்காக எட்டுக்காலி மம்மூஞ்ஞூ பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான்.

இம்மாதிரியான சிறு கலைகளில் ராமன் நாயரும் தோமாவும் ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை. இருந்தாலும் அவ்வப்போது சில ஆலோசனைகளை மட்டும் கூறுவார்கள். தனியுடைமைக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தவே அவர்கள் இருவருக்கும் எப்போதும் விருப்பம். அநீதியை எங்கு கண்டாலும் எதிர்ப்பது. தோமாவுக்கும் ராமன் நாயருக்கும் வேறு வேலைகள் ஒன்றும் கிடையாது. அப்படி இருக்கிறபோது எட்டுக் காலி மம்மூஞ்ஞூ ஓடி வந்து சொன்னான்.


"விஷயம் தெரியுமா? நம்ம கொச்சு நீலாண்டன் யானைப் பாகனைக் கொன்னுட்டு போலீஸ்காரங்களைக் குத்த ஓடிக்கிட்டிருக்கு.''

போலீஸ்காரர்கள் என்றாலே ஊர் மக்களுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. போலீஸ்காரர்களையும் அரசாங்கத்தையும் மக்கள் விரோத சக்திகள் என்ற பெயரில்தான் ஊர் மக்கள் அழைத்தனர். போலீஸ்காரரைக் கொச்சு நீலாண்டன் ஓட ஓட விரட்டுவதிலோ, குத்திக் கொலை செய்வதிலோ நிச்சயம் ஊர் மக்கள் மத்தியில் எதிர்ப்பே கிடையாது. கொச்சு நீலாண்டனின் விருப்பமும் அதுதானே! மொத்தம் ஊரில் இருப்பதே இரண்டு போலீஸ்காரர்கள்தான். அவர்களைக் கொலை செய்ய வேண்டியது மக்களே விருப்பப்படும் ஒரு செயல்தான். கொச்சு நீலாண்டன் விருப்பப்படி செய்யட்டும்! ராமன் நாயரும் தோமாவும் அசையவில்லை.

எட்டுக்காலி மம்மூஞ்ஞூ கேட்டான்:

"நாம போக வேண்டாமா?''

தோமாவும் ராமன் நாயரும் ஒரே குரலில் ஒரே சமயத்தில் கூறினார்கள்:

"ஊஹும்.''

காதைக் கிழிக்கும் ஒலி. ஊரில் உள்ள நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குரைத்தன. மக்களின் கூக்குரல்கள். குழப்பமான பல ஒலிகள். கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. அப்போது ஒரு முக்கிய செய்தியுடன் மூச்சிரைக்க ஓடிவந்தான் மண்டு முத்தபா.

"போலீஸ்காரங்க சொல்றாங்க. நம்ம கொச்சு நீலாண்டனை வெடி வச்சுக் கொல்லப் போறாங்களாம்.''

இதைக்கேட்ட பிறகு ராமன் நாயரும் தோமாவும் உட்கார்ந்திருப்பார்களா? அவர்கள் சும்மா அசையாமல் உட்கார்ந்திருப்பதற்கு கல்லோ மரமோ அல்லவே! இரண்டு பேரும் எழுந்தார்கள்.

நான்கு பேரும் ஓடினார்கள்.

தொடர்ந்து மக்கள்.

ராமன் நாயரும் தோமாவும் தலைமை தாங்கி நடக்க, அவர்களைப் பின்தொடர்ந்தனர் மக்கள். போலீஸ்காரர்களுக்கு எதிராகவும், கொச்சு நீலாண்டனுக்கு ஆதரவாகவும் கோஷங்களை வேறு எழுப்பினர்.

"போலீஸாரின் சமூக விரோதப் போக்கு ஒழிக!''

"கொச்சு நீலாண்டன் ஜிந்தாபாத்.''

மக்கள் ஒரே கூட்டமாகக் கோஷமிட்டவாறு முன்னேறினர். அனைவரும் போலீஸ் ஸ்டேஷனைச் சுற்றி வளைத்தனர். போர் வெறிபிடித்து அலையும் அரசாங்கத்தின் சேவகர்களான போலீஸ்காரர்கள் மக்கள் கூட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே

நடுங்கிவிட்டனர். தோமாவும் ராமன் நாயரும் கோரிக்கைகள் வைத்தனர். கொச்சு நீலாண்டனை வெடி வைத்துக் கொல்லப்போவதாக எடுத்த முடிவை உடனடியாக போலீஸ் நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும். அதோடு நிற்காமல் மக்களிடம் மன்னிப்பு கேட்கவும் வேண்டும்.

"இல்லாவிட்டால்...?''

ராமன் நாயரும் தோமாவும் சொன்னார்கள்:

"போலீஸ்காரர்களின் மூக்கை அறுத்து உப்புல ஊறப்போட்டுருவோம்.''

அவ்வளவுதான். மக்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து கீழே இறங்கி வருவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போய்விட்டது போலீஸ்காரர்களுக்கு. கொச்சு நீலாண்டனை வெடி வைத்துக் கொல்வதாக எடுத்த தீர்மானத்தை வாபஸ் பெற்றதோடு, மக்களிடம் தாங்கள் அப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கவும் செய்தனர்.

இந்த விதத்தில் அந்த கொச்சு நீலாண்டன் போராட்டம் வெற்றி பெற்றது. பழம், வெல்ல உருண்டை ஆகியவற்றைக் கொடுத்து பாருக்குட்டியுடன், கொச்சு நீலாண்டனையும் நதியில் இறக்கி குளிப்பாட்டி அவர்களை மகிழ்ச்சியுறச் செய்தார்கள்.

அன்று சாத்தங்கேரி மனையின் தலைவரான கொச்சு நாராயணன் நம்பூதிரிப்பாடு ஊர் மக்களுக்கு ஒரு கஞ்சி விருந்து அளித்தார். அந்த விதத்தில் ஊருக்கு மீண்டும் சுகமும் அமைதியான சூழ்நிலையும் உண்டானது.

ஆனால், ராமன் நாயர், தோமா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ, மண்டு முத்தபா ஆகியோருக்கு எப்படி சுகம் கிடைக்கும்? தொழில் கைவசம் வைத்திருக்கிறார்கள். செய்வதற்கு மனதும் இருக்கிறது. இருந்தாலும்

வாய்ப்பு கிடைக்க வேண்டுமே! தொழில் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் தருகிற உதவிப் பணமும் அவர்களுக்குக் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழில் வாய்ப்பு அவர்களைத் தேடிவந்தது. சிறு வாய்ப்பு. சின்னஞ்சிறு வாய்ப்பு.

அந்தக் காலத்தில் மூன்று சீட்டு விளையாட்டுக்காரன் ஒற்றைக் கண்ணன் போக்கரின் மகள் சைனபாவுக்கு, சிறிய அளவில் வீட்டிலிருந்து செய்வது மாதிரி ஒரு வியாபாரம் இருந்தது. அப்பம், புட்டு, வேகவைத்த கடலை, முட்டை, கப்பைக் கிழங்கு, இடியாப்பம், நேந்திரம் பழம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விற்பதே அவள் வேலை. காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரைதான் வியாபாரம். மேலே கூறிய தின்பண்டங்களை கடனுக்கு வாங்கித் தின்னுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நபர்கள் ராமன் நாயர், தொரப்பன் அவரான், தோமா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ, டிரைவர் பப்புண்ணி, மண்டு முத்தபா ஆகியோர். இது ஒரு புறமிருக்க இன்னொரு விஷயம்- அக்காலத்தில் ஊரிலேயே பேரழகியாக இருந்த சைனபாவிற்கு படுமுட்டாளாக இருந்த முத்தபாவிடம் காதல் என்று சரித்திரம் சொல்கிறது. இது குறித்துத் தகுந்த பல ஆதாரங்களுடன் ராமன் நாயராலும் தோமாவாலும் நிரூபிக்க முடியும் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும். ஆதாரம் என்று வருகிறபோது முக்கியமாக அவர்கள் பளிச்சென்று எடுத்துக்காட்டுவது ஒரு உதாரணத்தை. அது சைனபா புட்டில் காட்டிய ஒரு ஜகஜ்ஜால கில்லாடித்தனத்தைதான். மண்டு முத்தபாவுக்குக் கொடுத்த புட்டில் அவித்த முட்டை உள்ளே வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டும் இது எப்படி வந்தது?

சரித்திர மாணவர்கள் கட்டாயம் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. நேர்மையான மனநிலை கொண்டவர்களுக்கு மனதில் வேதனை தரக்கூடிய விஷயமல்லவா இது! எல்லாருமே கடனுக்குதான்

சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் புட்டில் அவித்த முட்டை இல்லாமல் போக, மண்டு முத்தபாவின் புட்டில் மட்டும் அது எப்படி வந்தது?

"மோசமான இந்த சமூகவிரோதக் காரியத்திற்கு எதிராக நாம் ஏதாவது செய்தாக வேண்டும்'' என்றார் ராமன் நாயர். ஆனால் தோமா அதற்குச் சம்மதிக்கவில்லை. காரணம்- மற்ற எல்லாரையும் போல் சைனபாவுக்கு ராமன் நாயரும் தோமாவும் கொஞ்சம் பணம் தரவேண்டி இருக்கிறது. இந்தச் செய்தியை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் வாசலில் இருந்த பலகையொன்றில் எழுதி வைத்திருக்கிறாள் சைனபா. சுண்ணாம்பால் பெயரும் கரியால் காசும். நமது இந்த சரித்திரம் நடக்கிற காலத்தில் கீழே கூறப்பட்டிருக்கின்ற விதத்தில் இருந்தது ஊர்க்காரர்களின் கடன் பட்டியல்-

தொரப்பன்- 0 அணா

டய்வர்- 0 அணா

எட்டுக்காலி- 7 அணா

தோமா- 9 அணா

ராமன் நாயர்- 14 அணா

முத்தபா- 2 அணா

இந்தக் கணக்குகளைப் பார்க்கிறபோதே உங்களுக்கு ஒன்று புரியும். ஆனால் அதற்குப் பின்னால் மறைந்திருக்கிற ஒரு அநீதியைப் பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மண்டு முத்தபா குறைந்தபட்சம் நாற்பது அணாவாவது சைனபாவிற்குக் கடனாகத் தர வேண்டியதிருக்கும். இருந்தாலும் அவள் எழுதி வைத்திருக்கிறாள்

மண்டு முத்தபா வெறும் 2 அணாதான் தரவேண்டி இருக்கிறதென்று.


அவளைப் பொறுத்தவரை வெட்கமோ மானமோ கிடையாது என்பதே உண்மை. ராமன் நாயர் சைனபாவை மனதிற்குள் "போடி கழுதை" என்று திட்டியவாறே நடந்து போனார்.

"அவித்த கோழிமுட்டை ஒழிக! பொய்க் கணக்குகள் ஒழிக!" என்று தனக்குள் ஆவேசத்துடன் கூறியவாறு நடந்து போனார் ராமன் நாயர். பெண்ணுலகத்திற்குக் கடன்பட்ட மனிதனாக எப்படி வாழ்வது. இந்த அழுகிப்போன அமைப்பை மாற்றியே ஆக வேண்டும். இதை எப்படி மாற்றுவது? இப்படிச் சிந்தித்தவாறு நடந்து கொண்டிருந்த நிமிடத்தில் ராமன் நாயருக்கு சிறிய ஒரு காண்ட்ராக்ட் கிடைத்தது. ஒரு தொழில் வாய்ப்பு. வெல்ல வியாபாரி. முட்டைக் கண்ணன் நந்துரு, ராமன் நாயரை அழைத்து ரகசியமாகத் திக்கித் திக்கிக் கூறினான்:

"ரா...ரா...ரா... ராமன் நாயரே!''

"என்னடா?''

"அ...அ...அஞ்சு ரூபா.''

ரகசியம் வேறொன்றுமில்லை. முட்டைக் கண்ணன் நந்துரு அந்த ஊரிலேயே படு கஞ்சன் என்ற பெயரைப் பெற்றவன். வீட்டு வேலைக்காரிக்கு மாசம் இரண்டணா (பன்னிரண்டு பைசா) சம்பளம் ஏன் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவளைத் திருமணம் செய்துகொண்டு மனைவியாகவே ஆக்கிக்கொண்ட மாமனிதன் அவன்! மனைவி என்று வருகிறபோது சம்பளம் தரவேண்டிய அவசியம் இல்லையே! முட்டைக் கண்ணன் நந்துரு வெல்ல வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், கொஞ்சம் நிலம் கைவசம் இருந்தது. விவசாயம் பண்ணுகிற நிலத்திற்கு சாணமும் சாம்பலும் மற்ற சத்துப்பொருட்களும் இடுவது பொதுவாக நல்லதல்லவா? ஊரில் பெரிய அளவில் விவசாயம் பண்ணிக் கொண்டிருந்த குன்னேத்தாழத்து

குட்டியாலி முதலாளி தன் நிலத்தில் போடுவதற்கென்று ஆற்றங்கரை ஓரத்தில் சாணம், சாம்பல் ஆகியவற்றை ஒரு குன்றுபோல் குவித்து வைத்திருந்தார். நல்ல கும்மிருட்டு. ஒரு மணி நேரம் செலவழித்தால் போதும். சாணத்தை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.

"எப்படியும் சாணத்தையும் சாம்பலையும் கொண்டு வந்திடணும்.''

சொன்னதோடு நிற்கவில்லை.

"இந்தாங்க அட்வான்ஸ்...'' என்று இரண்டு ரூபாயை ராமன் நாயரின் கையில் திணிக்கவும் செய்தான் முட்டைக் கண்ணன்.

அட்வான்ஸ் தொகையைக் கையில் வாங்கிக்கொண்டு ராமன் நாயர் நடக்கிறபோது, தோமாவும் எட்டுக்காலி மம்மூஞ்ஞூவும் மண்டு முத்தபாவும் ஒன்றாக நின்று பாருக்குட்டிக்கு வெல்ல உருண்டை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து ராமன் நாயருக்குக் கோபம் வராமல் இருக்குமா? தாங்க முடியாத அளவிற்கு அவருக்குக் கோபம் வந்தது. பந்தாவாக அழைத்தார்.

"அடே தோமா... இங்கே வா.''

தோமா என்ன அவ்வளவு இலேசுப்பட்ட ஆளா, கூப்பிட்டவுடன் ஓடி வருவதற்கு!

தோமா சொன்னார்:

"உன் அம்மாக்கிட்ட போய்ச் சொல்லு.''

தாய் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது? இதைக்கேட்டு கோபம் வராத ஆளும் உலகத்தில் இருக்கிறானா? ராமன் நாயருக்குச் சுரீர் என்று கோபம் வந்துவிட்டது. ராமன் நாயர் சொன்னார்.

"அம்மாவைப் பற்றியா நீ சொல்றே? இரு... உன் மூக்கை அறுத்து உப்புல ஊறப்போடுறேன்.''

தோமா கேட்டார்:

"உன்னோட எந்த அம்மாவை நான் சொன்னேன் தெரியுமா?"

அவர் சொன்னது சரிதான். மருந்துக்கு ஒரு அம்மாகூட இப்போது உயிரோடு கிடையாது. என்றாலும் ராமன் நாயர் சொன்னார்:

"இந்தத் தடவை உனக்கு மன்னிப்பு தர்றேன். போ...''

"நான் எங்கே போறது? என்மேல உனக்கு என்ன கோபம்?''

"நீ அவள்கூட குழைஞ்சு போயி பார்க்குறப்போ என் மனசுல கோபம் வந்ததென்னவோ உண்மை. இங்க பாரு... முப்பது அணா... உன் கணக்குல ஒன்பது அணா.. என் கணக்கு பதினாலு... எட்டுக்காலி கணக்குல ஏழு... போய் அந்த ஒற்றைக் கண்ணன்- ஐஸ் மங்கியோட மகளுக்கு அத்தனையும் கொடுத்துட்டு வா. வேலை நிறைய இருக்கு.''

ஓரணா காசு தர்மக் கணக்கில் முத்தபாவுக்குக் கொடுக்கப்பட்டது.

அன்று பாதி இரவு நேரம். நல்ல இருட்டு. மக்களில் பெரும்பாலோர்  உறங்கிவிட்டனர். உறங்காதவர்கள் ஏறிய ஒரு படகு ஆற்றங்கரை ஓரம் வந்தடைந்தது. அதில் ராமன் நாயர், தோமா, எட்டுக்காலி மம்மூஞ்ஞூ, மண்டு முத்தபா ஆகியோர் இருந்தனர். மண்டு முத்தபாவையும் எட்டுக்காலி மம்மூஞ்ஞையும் கொண்டு வந்தது ராமன் நாயரும் தோமாவும்தான். ஏற்றுக்கொண்ட தொழிலைச் செவ்வனே செய்யக்கூடிய ஆசாமிகள் என்பதால், இவர்கள் இருவரையும் பிரியப்பட்டு தங்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்தினர் ராமன் நாயரும் தோமாவும். வெள்ளம் பாய்ந்தோடி வரும் காலம். நீர் சீராக ஓடிக்கொண்டிருந்தது. மூன்று கூடைகள், ஒரு மண்வெட்டி, மூன்று

சுமைதூக்கும் நபர்கள். ஆனால் நல்ல கும்மிருட்டு. படகை எங்கே கட்டிப்போடுவது? கட்டுவது மாதிரி கம்போ மரமோ எதுவும் அருகில் இல்லை. எட்டுக்கால் மம்மூஞ்ஞூ படகு நதியின் ஓட்டத்தில் ஓடிப்போகாதபடி பார்த்தவாறு கையில் பிடித்தவாறு நின்றிருந்தான். தோமா இருளில் படகைக் கட்டிப்போட ஏதாவது கொம்பு கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருந்தார். நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்? நேரம் செல்வத்தைப்போல் மதிப்புள்ளதாயிற்றே! மண்வெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கையில் கூடைகளையும் தூக்கிக் கொண்டு ராமன் நாயரும் மண்டு முத்தபாவும் நடந்தனர். சூழ்ந்திருந்த இருட்டைவிட பயங்கர இருட்டாய் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த சாணத்திற்குப் பக்கத்தில் கூடையை வைத்துவிட்டு ராமன் நாயர் மண்வெட்டியால் ஓங்கி வெட்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். ஆகாயமும் பூமியும் நடுங்குகிற அளவிற்கு அந்தச் சாணமலை யானை எனப் பிளிறியவாறு எழுந்தது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு நாய்கள் ஒன்றுசேர்ந்து குரைத்தன. யானையின் பிளிறலையும் நாய்களின் சத்தத்தையும் கேட்டு ஊர் மக்கள் உறக்கம் நீங்கி எழுந்தனர். பயங்கர பிசாசாக ஆன மருதாய்தான் இரவு நேரத்தில் கூப்பாடு போடுகிறாள் என்று எண்ணிக்கொண்ட அவர்கள் பயத்தில் மீண்டும் போர்வையை இன்னும் கொஞ்சம் அதிகமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கினர். இது அத்தனையும் கண்சிமிட்டக் கூடிய நேரத்தில் நடந்துமுடிந்துவிட்டது. பயத்தில் நடுங்கிப்போன மண்டு முத்தபா தப்பித்துப்போகும் எண்ணத்தில் தன்னை மறந்து ஆற்றில் குதித்தான்.

(அதற்குப் பிறகு அவனை ஊர்மக்கள் பார்த்தது இரண்டு நாட்கள் சென்றபின்தான். ஆற்றில் நீந்தி நான்கைந்து மைல்தூரம் சென்ற பிறகுதான் கரையையே அவனால் காண முடிந்தது.) இந்தச் சம்பவம் நடந்து பத்து நிமிடங்கள் சென்றிருக்கும். "டேய்... டேய்'' என்று மெல்ல

அழைத்தவாறு நடந்துகொண்டிருந்தார் தோமா. அவர் குரலை ஒரு மரத்தின்மேல் அமர்ந்திருந்த ராமன் நாயர் கேட்டார்.

தோமா கேட்டார்.

"அங்க என்ன செய்யிறே?''

இது என்ன கேள்வி? ஒரு ஆள் பயந்து நடுங்கிப்போய் மரத்தில் ஏறி ஆபத்திலிருந்து தப்பித்திருக்கும் வேளையில், இப்படியொரு கேள்வியைக் கேட்டால் எப்படி இருக்கும்? ராமன் நாயர் சொன்னார்:


"பயமா இருந்துச்சானா நீயும் மரத்துல ஏறிக்கோ. லேசா எறும்பு கடி இருக்கு. இருந்தாலும் வா.''

தோமா சொன்னார்:

"நான் ஒண்ணும் பயந்தாங்கொள்ளி இல்லை. சரி... இறங்கிக் கீழே வா.''

தோமா தைரியசாலி என்றால் ராமன் நாயரும் தைரியசாலிதான். மெதுவாக கீழே இறங்கிவந்த ராமன் நாயர் கேட்டார்:

"அந்தச் சத்தம் யாருடையது தோமா?''

தோமா கூறினார்:

"நம்ம பாருக்குட்டி போட்ட பிளிறல்தான்.''

"இதைக் கேட்டு யாருக்குத்தான் கோபம் வராது?"

ராமன் நாயர் கோபத்துடன் சொன்னார்:

"அந்த மடப்பய மகளோட சங்கை அறுத்துக் கொல்றேன்.''

தோமா சொன்னார்:

"நீ அவளை கூடையில வாரி எடுத்துட்டுப் போகலாம்னு நெனைச்சா சும்மா இருப்பாளா என்ன? பாவம்... அவள் ரொம்பவே பயந்துபோனாள்... மண்வெட்டியும் கூடைகளும் எங்கே?''

"பாருக்குட்டிக்குப் பக்கத்துல எங்கயாவது கிடக்கும். முத்தபா எங்கே?''

"அவன் உயிரைக் காப்பாத்திக்கறதுக்காக ஆத்துல குதிச்சிட்டான்.''

"எட்டுக்காலி எங்கே?'' ராமன் கேட்டதும் எங்கோ இருந்து ஓடி வந்தான் எட்டுக்காலி மம்மூஞ்ஞூ.

"விஷயம் தெரியுமா? அது நம்ம பாருக்குட்டி. அவள் நிற்கிற இடத்துக்கு கொஞ்ச தூரத்துல கொச்சு நீலாண்டனும் இருக்கான். ஆனா, அவன் வாயே திறக்கலை. பார்த்தீங்களா?''

தோமா சொன்னார்:

"ராமன் நாயரே, போய் எல்லா சாமான்களையும் எடுத்துட்டு வா.''

"நீ போயிட்டு வா. அவள்கூட எனக்கு உறவு சரியில்லைன்னு உனக்குத்தான் தெரியுமே!'' -ராமன் நாயர்.

தோமா மெல்ல பாருக்குட்டி இருந்த இடத்திற்குச் சென்றார்.

"பொன்னே... பாருக்குட்டி! அடியே என் கண்ணு.... தங்கம்... நான் உன்னை வெட்டி வாரி எடுத்துட்டுப் போக வந்த ராமன் நாயரில்லை. உன்னை உயிருக்குயிரா விரும்பும் தோமா. ஆமாண்டா கண்ணு. நான்தான். மண்வெட்டியையும், மற்ற சாமான்களையும் எடுத்துக்கிட்டாடா கண்ணு...?''

பாருக்குட்டியைச் சாந்தப்படுத்தும் வார்த்தைகளைத் தோமா அள்ளி வீசியபோது ராமன் நாயர் சொன்னார்:

"உன் அலங்கார வார்த்தைகளைத் தூக்கிப் போட்டுட்டு, சீக்கிரம் எல்லாத்தையும் எடுத்துட்டு வா. ஒரேயடியா ஐஸ் வைக்காதே!''

தோமா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. என்ன காரியத்திற்காக வந்தார்களோ அதை முறைப்படி செய்து முடித்து, படகைச் சாணத்தாலும் சாம்பலாலும் நிறைத்து, இடத்தை விட்டு அகன்றார்கள். இரவிலேயே முட்டைக் கண்ணன் நந்துருவை எழுப்பி, படகில் கொண்டு வந்த பொருளை அவனிடம் ஒப்படைத்தார்கள். அவன் தர வேண்டிய மீதித் தொகையான மூன்று ரூபாயைத் தந்தான். ராமன் நாயர் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது, பின்னால் யாரோ "யானைவாரி" என்று மெல்ல அழைத்தது ராமன் நாயர் காதில் விழுந்தது. யார் அப்படிக் கூப்பிட்டது? தோமாவா? எட்டுக்காலி நிச்சயம் இருக்காது. பிறகு யார்?

அசரீரி!

அமைதியாக சென்று அவர்கள் உறங்கினர்.

"யானைவாரி ராமன் நாயர்னு என்னை யாராவது கூப்பிடட்டும். கூப்பிடுற ஆளோட மூக்கை அறுத்து உப்புல ஊறப்போடுறேன்.'' யாரைப் பார்த்தாலும் இப்படிச் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார் ராமன் நாயர். அதற்குப் பிறகு யாருக்கு தைரியம் வரும் அப்படிக் கூப்பிட? இருந்தாலும் யாராவது அப்படிக் கூப்பிட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் நடந்து திரிந்தார் ராமன் நாயர். சைனபாவின் கடைமுன் இருந்த பலகையில் இப்படி ஒரு பெயரைப் பார்த்ததும் ராமன் நாயருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"யானைவாரி ராமன் நாயர்... 6 அணா."

என்ன செய்வது? மக்களின் போக்கு இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகிவிட்டதே! இப்படி எழுதிய சைனபாவை என்ன செய்வது?

கையில் 6 அணா இல்லை. இந்த லட்சணத்தில் அவளை எப்படிக் கண்டிப்பது? மவுனமாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது ராமன் நாயருக்கு. சிறிது நேரத்தில் ஊர் ஆட்கள் நிறைய பேர் வந்தார்கள். வெள்ளைக்கார அரசாங்கத்தின் இரண்டு போலீஸ்காரர்கள் வேறு. "யானைவாரி ராமன் நாயர்" என்று எழுதியிருப்பதைப் படித்ததோடு நிற்காமல், அதற்குப் பிறகு அவரை அந்தப் பெயரிலேயே கூப்பிடவும் ஆரம்பித்தார்கள். "யானைவாரி" என்ற பெயர் தனக்கு எப்படி வந்தது என்ற வரலாற்று உண்மையை ஒருநாள் இந்த சரித்திர எழுத்தாளனிடம் ராமன் நாயரே கூறியதால் இது தெரியவந்தது.

"யானைத் திருடன் ராமன் நாயர்னு கூப்பிடுறதுதான் எனக்குப் பிடிக்குது.'' ராமன்நாயர் ஆசையுடன் சொன்னார்.

அவர் ஆசைப்படுவது சரிதான். ஆனால் அவரை யாரும் அப்படி அழைக்கவில்லை. அரசாங்கத்தின் போலீஸ் புத்தகங்களிலும் ஜெயில் புத்தகங்களிலும் "யானைவாரி ராமன் நாயர்" என்ற பெயரே எழுதப்பட்டிருந்தது. அவருக்கு ஏதோ கௌரவப்பட்டம் கிடைத்த மாதிரியான சம்பவம் அது! ஐம்பது ரூபாய் ஒப்பந்தத்தில் ஒரு யானையைக் கடத்திக்கொண்டு போகக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த மகா சம்பவத்தைக் கூறுவதற்கு முன்பு தோமாவுக்கு "தங்கச் சிலுவை" என்ற அடைமொழி எப்படி வந்தது என்பதை இந்த சரித்திர எழுத்தாளன் இப்போது விவரிக்கப் போகிறான்.

3

ருநாள் தோமா காதில் ரகசியமாகக் கூறினார்:

"அடே யானைவாரி, தனித்தனியா இன்னைக்கு ராத்திரி எல்லாரும் பெரிய பள்ளி மைதானத்துக்கு வந்திடணும்.''

அவ்வளவுதான். எல்லாரும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர். இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். தனித்தனிப் பாதைகள் மூலம்

ஒவ்வொருவரும் வந்து பெரிய பள்ளி மைதானத்தில் ஒன்று சேர்ந்தனர். பதினோரு மைல் தூரத்தில் கிறிஸ்துவர்களுக்குச் சொந்தமான புராதனமான பெரிய பள்ளி மைதானத்தில் யானைவாரி ராமன் நாயர், தோமா, மண்டு முத்தபா, ஒற்றைக் கண்ணன் போக்கர், எட்டுக்காலி மம்மூஞ்ஞூ ஆகிய ஊர் பெரிய மனிதர்கள் ஒன்று கூடினர். அன்று அங்கு திருவிழா. பெரிய அளவில் மக்கள் கூட்டமும் கொண்டாட்டமும் அங்கு இருந்தது. வியாபாரம், தொட்டிலாட்டம், கயிறுமேல் நடத்தல், பட்டாசு போடுதல், மதப்பிரச்சாரம் எல்லாமே படுஜரூராக அங்கு நடந்து கொண்டிருந்தன. மூன்று சீட்டு விளையாட்டு, பிக்பாக்கெட் அடிப்பது, திருட்டு, வழிப்பறி போன்ற கலைகள் சர்வசாதாரணமாக அரங்கேறக்கூடிய நாள் அது.

அந்தப் பள்ளியில் பிரசித்தி பெற்ற தங்கச் சிலுவையை அன்று வெளியே கொண்டு வருவார்கள். கலப்படமே இல்லாத சுத்ததங்கத்தால் செய்யப்பட்ட சிலுவை அது. இந்த மாதிரியான தங்கச் சிலுவைகள் பூமியிலுள்ள புகழ் பெற்ற பல ஆயிரம் பள்ளிகளில் இருக்கின்றன. இந்தப் பெரிய பள்ளியில் மிகவும் பாதுகாப்பாக வைத்து இந்தத் தங்கச் சிலுவையைக் காப்பாற்றுகிறார்கள். பெட்டிக்குள் பெட்டி, பெட்டிக்குள் பெட்டி. எல்லாம் ஒரு அறைக்குள். தங்கச் சிலுவை இருக்கும் அறைக்குப் பக்கத்திலேயே பள்ளி ஃபாதரின் வசிப்பிடம்.


தங்கச் சிலுவை அன்று வெளியே கொண்டு வரப்பட்டது. கண்குளிர பக்தர்கள் கூட்டம் அதைப் பார்த்து வணங்கியது. திருநாள் முடிந்தது. எல்லாரும் அவரவர் இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள். பகட்டான திருவிழாவையும் வாணவேடிக்கைகளையும் கூட தோமா மறந்துவிட்டார். பெரிய ஒரு பிரச்சினை தோமாவைப் போட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. தங்கச் சிலுவை- மரச் சிலுவை! தோமாவுக்கு உண்ண விருப்பமில்லை. உறக்கம் வரவில்லை.

மொத்தத்தில் இனம் புரியாத ஒரு குழப்பநிலை அவரை ஆட்கொண்டுவிட்டிருந்தது.

தோமாவுக்கு என்ன ஆயிற்று?

யானைவாரி கேட்டார். ஒற்றைக் கண்ணன் கேட்டான். மண்டு கேட்டான். எட்டுக்காலி கேட்டான். ஊர் மக்கள் பலரும் கேட்டார்கள். ஊரில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள்கூட கேட்டனர்.

தோமா எல்லாரிடமும் கூறினார்:

"எனக்கு ஒண்ணுமில்லை...''

அதற்காக ஒன்றுமே இல்லை என்று கூறிவிட முடியாது. இருக்கவே செய்தது. உண்மையான கிறிஸ்துவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி அது. கர்த்தாவான இயேசு கிறிஸ்துவை அறைந்தது மரச் சிலுவையிலா, தங்கச் சிலுவையிலா?

நிச்சயம் கவனம் செலுத்தி ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒரு பெரிய பிரச்சினைதான் இது. எதற்கு நேரத்தை வீண் செய்ய வேண்டும்? நண்பர்களிடம்கூட ஒரு வார்த்தை கூறாமல் இருட்டிலேயே அந்த இடத்தைவிட்டு கர்மமே கண் என நினைத்து நகர்ந்து மறைந்தார் தோமா.

நாட்கள் கடந்தோடியது. ஒன்பது நாட்கள் பல இடங்களிலும் அலைந்து ஆராய்ந்து பார்த்தபிறகு, தோமா ஒரு முடிவுக்கு வந்தார். அன்று சரியாக இரண்டரை மணிக்குத் தோமாவை ஒரு போலீஸ்காரன் கைது செய்து லாக்-அப்பில் அடைக்கிறான். என்ன காரணம்? சந்தேகப்படக்கூடிய நிலையில் தோமாவைப் பார்த்த போலீஸ்காரன் அவரை ஒரு பயங்கர கேடி என்று நினைத்துக் காவல் நிலையத்திற்குக் கொண்டுவந்துவிடுகிறான். நமக்குத்தான் தெரிந்த விஷயமாயிற்றே- போலீஸ்காரர்களுக்குத் தெருவில் யாரைப் பார்த்தாலும் சந்தேகம்தான்.

பழைய போலீஸ்காரர்கள் உண்மையிலேயே மிகவும் நல்லவர்கள். அவர்களுக்குச் சட்டதிட்டங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும். தோமாவைக் கைது செய்தது ஒரு புதிய போலீஸ்காரன். பழைய போலீஸ்காரராக இருந்தால் சாதாரண ஒரு குற்றத்திற்காக நிச்சயம் தோமாவைக் கைது செய்திருக்கமாட்டார்.

சரி போகட்டும்... தோமாவை லாக்-அப்பில் போட்டு பத்தொன்பது நாட்கள் ஆகிவிட்டன. இருபதாம் நாள் இரவு. நல்ல காற்றும் மழையும் இருந்ததால் உள்ளே பயங்கர குளிர். ஒழுங்காகச் சாப்பிட்டு இருப்பவர்கள் என்றால், போர்வையை இழுத்து மூடி அமைதியாகத் தூங்கலாம். கொஞ்சம் இடியும் மின்னலும்கூட இருந்தது. இரண்டு மணி கழிந்தது. தோமா உறங்கவில்லை. அன்று காவலுக்காகப் போடப்பட்டிருந்த ஆள் 1627-ஆம் எண்ணைக் கொண்ட பழைய மனிதனான பளுங்கன் கொச்சு குஞ்ஞூ ஒரு பீடியைக் கொளுத்தி, இரும்புக்கம்பி இடைவெளி வழியே உள்ளே இருந்த தோமாவுக்குக் கொடுத்தார். தொடர்ந்து வாழ்க்கையில் தனது சோகச் சம்பவங்கள் சிலவற்றைக் கடுமையான துக்கத்துடன் தோமாவிடம் கூறத்தொடங்கினார் குஞ்ஞூ.

"எல்லாம் கடவுள் சித்தம்.. பென்ஷன் வாங்க இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்கு. கல்யாணம் பண்ணிக் கொடுக்க ஏழு மகள்கள் வரிசையா நிக்கிறாங்க. மூத்த பொண்ணுக்கு இருபத்தேழு வயசாச்சு.''

தோமா கேட்டார்:

"சம்பாத்தியம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா?''

"சொத்து... தோமா, இருக்குற வீட்டுக்கு வாடகைப் பணம் அஞ்சரை ரூபா தர வேண்டி இருக்கு. ரொம்ப நாள் பாக்கி இது. பொண்டாட்டி பக்கவாதம் பிடிச்சு படுத்த படுக்கையாகெடக்கா. அதுதான் நான் சொன்னேனே, கடவுளோட சித்தம் இப்படி இருக்குன்னு...''

தோமா ஒன்றும் பதில் கூறவில்லை. சிறிது நேரம் சென்ற பிறகு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு மெதுவான குரலில் தோமா சொன்னார்:

"கொஞ்சம் பக்கத்துல வா.''

பளுங்கன் கொச்சு குஞ்ஞூ அருகில் வந்து நின்றார்.

தோமா மெதுவான குரலில் சொன்னார்:

"ரெண்டு மணிநேரம் என்னை வெளியே திறந்துவிட முடியுமா? விட்டா ஒரு காரியம் நானே செய்யறேன்.''

அவ்வளவுதான்- நடுங்கிவிட்டார் பளுங்கன் கொச்சு குஞ்ஞூ. வெளியேவிடுவது என்பது சாதாரண ஒரு விஷயமா என்ன? ஆனால் சொன்னது தோமாவாயிற்றே! பளுங்கன் கேட்டார்:

"தோமா, என்னை நீ ஏமாத்திட மாட்டியே! பென்ஷன் போயிடும். பெண்டாட்டியும் குழந்தைகளும்... தோமா, நீ என்னை கம்பி எண்ண வச்சிரமாட்டேயில்ல...?''

"அப்படியெல்லாம் செய்வேனாடா! இதுவே ஒரு புது போலீஸ்காரனா இருந்தா இப்படி எல்லாம் செய்ய நடுங்குவானா?''

இவ்வளவு ஏன் சொல்ல வேண்டும்? புதிய போலீஸ்காரர்களை விட பழைய போலீஸ்காரருக்குத்தான் துணிச்சலும் தைரியமும் அதிகம். பளுங்கன் கொச்சு குஞ்ஞூ மற்ற லாக்-அப் அறைகளில் போய்ப் பார்த்தார். எல்லாரும் நன்றாகக் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தனர். வெளியே சென்று பார்த்தார்.

அங்கு இரண்டு புதிய போலீஸ்காரர்கள் வாய்பிளந்து தூங்கிக் கொண்டிருந்தனர். மயான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இருந்தாலும் பளுங்கன் கொச்சு குஞ்ஞூ மனதில் சிறிது ஊசலாட்டம் இருக்கவே செய்தது.

"தோமா இன்ஸ்பெக்டர் யார் தெரியும்ல... சிறுத்தை மாத்தன். அதைத் தெரிஞ்சுக்கோ!''

போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் பயங்கரமான ஒரு ஆள். தயவு தாட்சண்யம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார். கைதிகளும் சரி... போலீஸ்காரர்களும் சரி... சிறுத்தை மாத்தன் பெயரைக் கேட்டாலே நடுங்கிப் போவார்கள் என்பதே உண்மை.

தோமா சொன்னார்:

"நீ ஏன்டா வீணா பயப்படுறே?''

"கடவுளே! தோமாவுக்கு நீதான் நல்ல புத்தியைக் கொடுக்கணும்.''

கடவுளைப் பிரார்த்தனை செய்தவாறே பளுங்கன் கொச்சு குஞ்ஞூ சந்தடியில்லாமல் லாக்-அப்பின் பூட்டைத் திறந்தார். தொடர்ந்து மெல்ல கதவைத் திறந்துவிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் வெளியேறிய தோமா, மழை பெய்துகொண்டிருந்த இரவுப்பொழுதில் மறைந்தே போனார்.

நேரம் சிறிது சென்ற பிறகு பளுங்கன் கொச்சு குஞ்ஞூவிற்கு ஒரு பதட்டமே உண்டாகிவிட்டது. எப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்திருக்கிறோம் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தார். எத்தனையோ வருட போலீஸ் வேலை. அதற்காக அரசாங்கம் தருகிற பென்ஷன் பணத்தை இவ்வளவு சீக்கிரம் தொலைக்கும் வழியில் இறங்கியாகிவிட்டது! தோமா நிச்சயம் ஏமாற்றத்தான் போகிறார். மனைவியும் குழந்தைகளும் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னே... பளுங்கனால் இனியும் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மெல்ல எழுந்தார். வெளியே ஒரே இடி முழக்கம், மின்னல் வெட்டு, தொடர் மழை. பளுங்கன் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாய் நடந்தார். நடக்கக்கூடாதது நடக்கப்போகிறது! வெளியே தூங்கிக் கொண்டிருந்த

புதிய போலீஸ்காரர்கள் என்னவோ தூக்கத்தில் உளறிக்கொண்டிருந்தார்கள். அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.


போட்டிருக்கும் யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு, எங்கேயாவது ஓடிப்போய்விட்டால் என்ன? சரி... எங்கே போவது? வயது அதிகமாகிவிட்டது. இனி செய்வதற்கு என்ன இருக்கிறது?

"கடவுளே... என்னை சதி செஞ்சிராதே!'

இப்படிப் பிரார்த்தனை செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. பொழுது புலர ஆரம்பித்துவிட்டதைப் பளுங்கன் உணர்ந்தார். எல்லாமே ஒரே குழப்பமாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. ஆனால் எதுவுமே குழப்பமாக இல்லை. ஒன்றரை மணி நேரம் சென்றிருக்கும். மழையில் நனைந்த கோலத்துடன் தோமா உள்ளே வந்தார். வந்த வேகத்தில் லாக்-அப் கதவைத் திறந்து உள்ளே போனார்.

"பளுங்கா... பூட்டிக்கோ.''

இப்படிச் சொன்ன தோமா கட்டியிருந்த வேஷ்டியைக் கழற்றிப் பிழிந்து தலையையும் உடம்பையும் துவட்டத் தொடங்கினார்.

பளுங்கன் கொச்சு குஞ்ஞூ லாக்-அப்பை இழுத்துப் பூட்டினார். தலையில் கை வைத்தவாறு மெல்ல கீழே அமர்ந்தார்.

"இதைக் கொண்டுபோய் விற்றுப் பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணிவை. பொண்டாட்டிக்கு மருந்து வாங்கிக்கொடு.''

தோமா இரும்புக் கம்பிகளின் இடைவெளியில் ஒரு பொட்டலத்தை நீட்டினார். பளுங்கன் அதை வாங்கினார். நல்ல கனமாக இருந்தது. பளுங்கன் அதைத் திறந்து பார்த்தார். ஆறு அங்குல நீளமும் முக்கால் அங்குல பருமனும் ஒன்றரை அங்குல அகலமும் உள்ள ஒரு

தங்கக்கட்டி உள்ளே இருந்தது. எங்கோ ஒடித்து தனியே  எடுத்து வந்த மாதிரியான தோற்றம்.

"நான் உறங்கட்டுமா?''

தோமா உறங்க ஆரம்பித்தார்.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும். நாடு முழுவதும் பரபரப்பான ஒரு செய்தி. பெரிய பள்ளியில் இருந்த தங்கச் சிலுவை திருடு போய்விட்டது.

பிஷப் வந்தார். ஃபாதர் வந்தார். பள்ளியில் பணியாற்றும் அலுவலர்கள் வந்தார்கள். சாதாரண ஊழியர்கள் வந்தார்கள். இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் முன் எல்லாருமே வந்து நின்றார்கள். சிறுத்தை மாத்தனின் மஞ்சள் நிறம் கொண்ட விழிகள் மின்னின.

சிறுத்தையைப்போல மாத்தன் உறுமினார்:

"ம்...யார்னு கண்டுபிடிக்கறேன்.''

முன்பு குற்றம் செய்தவர்கள், குற்றமே செய்யாதவர்கள், குற்றம் செய்யப்போகிறவர்கள் - இப்படி நூற்றுக் கணக்கில் ஆட்கள் ஸ்டேஷனுக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அடித்தல், இடித்தல், பாதத்தை நெருப்பு வைத்துச் சுடுதல், மிதித்தல், அறைதல், நகக்கண்ணில் ஊசியை ஏற்றுதல், பிறப்பு உறுப்பில் பழைய துணியைச் சுற்றி எண்ணெய் புரட்டி தீ வைத்தல்... இப்படி பல கொடுமைகள்! தோமா நடக்கும் செயல்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அழுவதையும் புலம்புவதையும் கதறுவதையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். யாருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. நாட்கள் ஒவ்வொன்றாக நீங்கிக்கொண்டிருந்தன. புதிய குற்றவாளிகள் சிலரைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அதே கொடுமைகள் தொடர்ந்தன.

செத்துப்போனால்கூட பரவாயில்லை என்று ஒருவருமே குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

இப்படி நிலைமை இருக்கிறபோதே, ஒரு புதிய குற்றவாளிகள் கூட்டம் ஸ்டேஷனுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒற்றைக் கண்ணன் போக்கர், மண்டு முத்தபா, யானைவாரி ராமன் நாயர், எட்டுக்காலி மம்மூஞ்ஞூ- இவர்களே அந்தக் கூட்டம். தோமா அவர்களைப் பார்த்தார். தோமா அவர்களைத் தெரிந்தது மாதிரி காட்டிக்கொள்ளவில்லை. ஒரு பெஞ்சின் முன் அவர்கள் அமர வைக்கப்பட்டார்கள். எல்லாரையும் நாக்கை நீட்டி பெஞ்சின்மேல் இருக்கும்படி வைக்கச் சொன்னார் சிறுத்தை மாத்தன். அவர் சொன்னபடி அவர்களும் செய்தார்கள். இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் ஒரு சுத்தியலையும் நான்கு ஆணிகளையும் எடுத்துக் கொண்டு வந்தார்.

"நான் இப்போ உங்க நாலு பேரோட நாக்கையும் இழுத்து வச்சு பெஞ்சில ஆணியாலே அடிக்கப்போறேன். அதுக்கு முன்னாடி சொல்லிடுங்க, தங்கச் சிலுவை எங்கே?''

யாரும் ஒன்றுமே பேசவில்லை. அவர்கள் யாருக்கும் தெரியாதே தங்கச் சிலுவை எங்கே இருக்கிறதென்று!

இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் யானைவாரி ராமன் நாயரின் நாக்கை பெஞ்சோடு சேர்த்து வைத்து ஆணியால் அடிக்கவில்லை. அதற்கு முன்பே துள்ளி எழுந்த தோமா லாக்-அப்பின் கம்பிகளைப் பிடித்து இழுத்தவாறு உரத்த குரலில் சத்தமிட்டார்.

""தங்கச் சிலுவை எங்கே போச்சுன்னு இவங்க யாருக்கும் தெரியாது.''

இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் சுத்தியைக் கையில் பிடித்தவாறு தோமாவின் அருகே வந்தார். சிறுத்தையைப்போல் பயங்கரமான ஒரு

பார்வை பார்த்தார். சிறுத்தையைப்போல் கடுமையான குரலில் கேட்டார்:

"உனக்குத் தெரியுமா?''

தோமா சொன்னார்:

"தெரியும். அய்யாகிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்.''

லாக்-அப் திறக்கப்பட்டது. தோமாவை இன்ஸ்பெக்டர் அறைக்குக் கொண்டு சென்றார்கள்.

"ம்...''

தோமா கூறினார்:

"நான்தான் தங்கச் சிலுவையைத் திருடியது.''

"நீயா? திருட்டு நடக்கிறப்போ நீ இங்கே லாக்-அப்பில் இல்ல கிடந்தே!''

தோமா சொன்னார்:

"அய்யா விருப்பப்படுற அளவுக்கு என்னை அடிக்கலாம். கொல்லலாம். ஆனா அவனுக்கு வயசாயிருச்சு. கருணை காட்டணும். பொண்டாட்டிக்குப் பக்கவாதம். கல்யாணம் பண்ணிக்கொடுக்க ஏழு மகள்கள் இருக்காங்க.''

இன்ஸ்பெக்டர் கூறினார்.

"நீ என்ன சொல்றேன்னே எனக்குப் புரியல.''

தோமா அவருக்குப் புரிய வைத்தார். எல்லாவற்றையும் தெரிய வைத்தார். போலீஸ் ஸ்டேஷனில் கிழக்குப் பக்கத்தில் இருந்த ஆலமரத்தின் அருகில் மண்ணில் புதைத்து வைத்திருந்த மீதி

சிலுவையை எடுத்துக் கொடுத்தார். பளுங்கன் கொச்சு குஞ்ஞூ தன் கையில் இருந்த எஞ்சிய சிலுவையைக் கொடுத்தார்.

தோமாவைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் கேட்டார்:

"ஒரு உண்மையான கிறிஸ்துவனான நீ ஏன் இந்த பயங்கர பாவச் செயலை செய்தே? தங்கக் சிலுவையை நீ ஏன் திருடினே?''

தோமா சொன்னார்:

"அய்யா! வேணும்னா என் நாக்குல ஆணி அடிச்சுக்குங்க. கர்த்தாவான இயேசு கிறிஸ்துவை அறைஞ்சது மரச் சிலுவையில தான். பள்ளிக்கு எதுக்கு தங்கச் சிலுவை?''

தோமா இப்படிச் சொன்னதும் உண்மையிலேயே ஆடிப்போனார் சிறுத்தை மாத்தன். பூமியில் உள்ள எத்தனையோ கோடி கிறிஸ்துவர்கள் சின்ன வயதிலிருந்தே கேட்டு மனதில் வைத்திருக்கும் நம்பிக்கை இது. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்குக்கூட உண்மை வரலாறு என்னவென்று தெரியும். எல்லாருக்கும் நன்கு தெரிந்த விஷயம் இயேசுவை அறைந்தது மரத்தாலான சிலுவையில்தான். தோமா திருடனாக இருந்தாலும் அவருக்கு அது நன்றாகவே தெரியும். அவர் செய்தது தவறா சரியா? பென்ஷன் வாங்கப்போகிற நேர்மையான பெரியவர் போலீஸ்காரனான பளுங்கன் கொச்சு குஞ்ஞூ சிக்கலில் மாட்டியிருக்கிறார். திருமணம் செய்துகொடுக்க ஏழு பெண் குழந்தைகள் வரிசையில் நிற்கிறார்கள். பெண்களின் தாயார் பக்கவாதம் பீடித்துப் படுக்கையில் கிடக்கிறாள். பரிதாபகரமான கிறிஸ்துவர்கள்! உதவிக்கு ஒருவர்கூட கிடையாது. தோமாவின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தார். பள்ளிக்கு எதற்குத் தங்கச் சிலுவை?

தோமா சொன்னது சரிதான்.


இன்ஸ்பெக்டர் சிறுத்தை மாத்தன் பிஷப்பை அழைத்தார். ஃபாதரை அழைத்தார். அலுவலர்களை அழைத்தார். ஊழியர்களை அழைத்தார். தங்கச் சிலுவையைத் திரும்பத் தந்தார். எல்லா விஷயங்களையும் சொன்னார். வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் பளுங்கன் கொச்சு குஞ்ஞூவிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். அவரின் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். தங்கச் சிலுவைக்காகப் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்த மனிதர்களுக்கு ஆளுக்கு ஐந்து ரூபாயும், வேஷ்டியும் துண்டும் கொடுக்க வேண்டும்.

அவர் கூறியபடியே அவர்கள் செய்தார்கள். பளுங்கனின் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். பளுங்கனுக்கு ஒரு நல்ல வேலையும் பார்த்துக் கொடுத்தார்கள். கொடுமைகள் அனுபவித்த ஆட்களுக்கு தலா ஐந்து ரூபாயும் வேஷ்டியும் துண்டும் தரப்பட்டன. இந்த வகையில் எல்லா விஷயங்களும் நல்ல முறையில் மகிழ்ச்சியான விதத்தில் நடந்து முடிந்தன. தோமாவுக்கு ஒன்றரை மாத சிறைத் தண்டனை மட்டும் அளிக்கப்பட்டது.

சிறைத் தண்டனை முடிந்து ஊர் திரும்பிய தோமாவுக்கு ஏற்கெனவே நடந்த விஷயங்கள் அனைத்தையும் தெளிவாக அறிந்திருந்த ஊர் மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். அதோடு நிற்காமல் ஒரு பண முடிப்பை வேறு பரிசாகக் கொடுத்தார்கள். நோட்டுமாலையும் போடப்பட்டது. ஊர் பெரிய மனிதர்களான சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த கொச்சு நாராயணன் நம்பூதிரிப்பாடு, அவரின் தம்பி சங்கரன் நம்பூதிரிப்பாடு, சந்தனத்தரை இல்லத்தைச் சேர்ந்த வாசு கைமள், கரியில் பத்ரோஸ் மாப்பிள்ளை, முட்டைக் கண்ணன் நந்துரு, குன்னேத்தாழத்து குட்டியாலி முதலாளி ஆகியோர் தாராளமாக நன்கொடை கொடுத்தார்கள் என்ற உண்மையை இந்த சரித்திர எழுத்தாளன் வெளிப்படுத்துவதில் மனப்பூர்வமான சந்தோஷமுண்டு. தோமா அன்று ஒரு குலை வாழைப்பழமும் இரண்டு

ராத்தல் சர்க்கரையும் வாங்கி பாருக்குட்டிக்கும் கொச்சு நீலாண்டனுக்கும் கொடுத்தார். தோமா இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஊரில் முக்கியமான ஒரு நபராகிவிட்டார். ஊரில் அவர் ஒரு வீரர் என்று மக்களால் மதிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் யானைவாரி ராமன் நாயர் தோமாவைப் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டார். தோமாவை ஒரு பெண் காதலிக்கிறாள். கொச்சு திரேசா என்பது அவள் பெயர். அவள் வயது பதினெட்டு. அழகி. பளுங்கன் கொச்சு குஞ்ஞூவின் கடைசி மகள்- இதுதான் ராமன் நாயர் கேள்விப்பட்ட விஷயம்.

இந்த விஷயம் யானைவாரி ராமன் நாயருக்கு எப்படித் தெரிந்தது தெரியுமா? ஒருநாள் சைனபாவின் கடை முன் இருந்த பலகையில் "தங்கச் சிலுவை தோமா- 3 ரூபாய் 6 அணா" என்று எழுதப்பட்டிருந்ததை யானைவாரி பார்த்தார். அதன் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. தோமாவின் கையில் பணம் இருக்கிறது. பிறகு எதற்குக் கடன் வாங்க வேண்டும்? தோமாவைப் பார்த்து விசாரிக்க வழியே இல்லை. அவரை நேரில் பார்த்துப் பல  நாட்களாகிவிட்டன. யானைவாரி கேட்டார்.

"தோமா காசு எதுவும் தர வேண்டியதில்லையே!''

சைனபா சொன்னாள்:

"நாலஞ்சு நாளா தங்கச் சிலுவையைப் பார்க்க கொச்சு திரேசா...''

"கொச்சு திரேசாவா? யார் அது?''

ஒற்றைக் கண்ணன் போக்கர் சொன்னான்:

"அது நம்ம பளுங்கனோட கடைசி மகள். இவ்வளவு தூரம் நடந்து களைச்சுப்போயி வந்தா. தங்கச் சிலுவை தோமா கணக்குல புட்டும் பழமும் கருப்பட்டி காப்பியும் அவளுக்குக் கொடுத்திருக்கு.''

அக்கிரமம்! அக்கிரமம்! நேரிலேயே ஒரு காட்சியைப் பார்த்து விட்டார் யானைவாரி. கொச்சு திரேசாவும் தங்கச் சிலுவை தோமாவும் ஆற்றங்கரையோரம் அமர்ந்து தங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த அநீதிக்கெதிராக என்ன செய்வது?

யானைவாரி நடந்து போய் பந்தாவாகக் கேட்டார்:

"அடே தங்கச் சிலுவை!''

"என்ன?''

"ஒரு ரெண்டுரூபா இங்க எடு.''

தங்கச் சிலுவை தோமா ஒரு வார்த்தைகூட எதற்கு என்று கேட்காமல் பணத்தை எடுத்துக் கொடுத்தார். யானைவாரி ராமன் நாயர் கொச்சு திரேசாவை எரிச்சலுடன் ஒருமுறை வெறித்துப் பார்த்தார். தொடர்ந்து பழமும் சர்க்கரையும் வாங்கிக் கொண்டு போய் பாருக்குட்டியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே கொச்சு நீலாண்டனுக்குக் கொடுத்தார். பெண்களின் பிரதிநிதி ஆயிற்றே பாருக்குட்டி!

பாருக்குட்டி ஆர்வத்துடன் தும்பிக்கையை நீட்டியபோது, "போடி கழுதை'' என்று வெறுப்புடன் கத்தினார் ராமன் நாயர். இது நடந்து சிறிது நாட்களில் யானைவாரிக்கு, யானையைக் கடத்திப் போகும் வேலை வாய்ப்பு கிடைத்தது. பாருக்குட்டிக்கு அவர் செய்த துரோகத்திற்கு இயற்கை தந்த பரிசு அது.

ஊரில் எல்லா கெட்ட விஷயங்களும் தெரிந்த ஆள் சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரிப்பாடு! அவருக்குத் தெரியாத கெட்ட சமாசாரங்கள் உலகத்தில் மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும். அவர் சொன்னார்:

"யானைவாரி யானையைக் கடத்தவே இல்லை. சுத்த பொய் அது.''

யானைவாரியின் பதில் கூற்று இது:

"நீங்கள் சொல்லித்தானே நாங்கள் யானையையே கடத்தினோம். இல்லாட்டி தங்கச் சிலுவைக்கிட்ட கேளுங்க. சொல்லப்போனால் இந்த விஷயத்தில் நீங்கள் 40 ரூபா எங்களுக்குத் தர வேண்டியதிருக்கு.''

இந்த வழக்கு இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சரித்திர எழுத்தாளனுக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் இதுதான். அதைக் கூறுவதற்கு முன்பு இன்னொரு விஷயம். போலீஸ்காரனாயிருந்த பளுங்கன் கொச்சு குஞ்ஞூ என்ற- பள்ளியில் மணியடிக்கும் மனிதனின் மணியடி சத்தம்... பள்ளியில் மணியடிக்கும் சத்தத்தைக் கேட்கிறபோது ஆட்கள் நினைப்பார்கள்: தங்கச் சிலுவை... தங்கச் சிலுவை தோமா... பள்ளிக்கு எதற்குத் தங்கச் சிலுவை?

யானைவாரி ராமன் நாயருக்கும், தங்கச் சிலுவை தோமாவுக்கும் கிடைத்திருப்பது மிகமிக அபூர்வமாகக் கிடைக்கக்கூடிய ஒரு தொழில் வாய்ப்பு.

யானையைக் கடத்துவது!

அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்? அந்தக் கதையைத்தான் இப்போது நான் கூறப்போகிறேன், கவனமாகக் கேளுங்கள்.

4

யானைக் கடத்தல் ஒரு மகத்தான கலை ஆகிவிட்டது! இந்த நம்பிக்கையை மனதில் ஆழமாக வைத்துக்கொண்டு வாழ்பவர்கள் தான் அந்த ஊரில் முக்கிய அறிவாளிகள். யானையை எப்படிக் கடத்துவது? தங்கம், பணம், பெண் போன்றவற்றைக் கடத்துவது போல் இதைச் செய்ய முடியாது. சரித்திர மாணவர்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக யானைக் கடத்தல் என்ற கலையைப் பற்றி இங்கு விவரமாகச் சொல்கிறேன்.

யானைவாரி ராமன் நாயர், தங்கச் சிலுவை தோமா சொல்வது என்ன தெரியுமா? யானைக் கடத்தல் பெரிய ஒரு கலை ஒன்றும் கிடையாது. அதற்குத் தேவை- துணிச்சல்! அது இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு உண்டாயிருக்க வேண்டும்.


டயலாக், குறைந்தது மூன்றாவது கைவசம் இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கிறபோதே இந்த முழக்கங்களும் கேட்க வேண்டும். நட யானை... செற்றி யானை... டத்தி யானை...

இந்த முழக்கங்களைச் சரித்திர மாணவர்கள் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.

யானைக் கடத்தல் என்ற கலைக்கு உகந்த நேரம் இரவுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. நடு இரவு நேரம் என்றால் இன்னும் பொருத்தமானது. நிலவு வெளிச்சம் இருக்க வேண்டும் என்ற அவசியம் ஒன்றுமில்லை. சுத்தமான நாட்டு வெளிச்சம் போதும். யானையின் ஒரு காலைச் சங்கலியால் சுற்றி மரத்தோடு சேர்த்துத் தானே கட்டிப்போட்டிருப்பார்கள்! ஒரு சிறு மரம். அதில்தான் சோரக் கண்ணன், உண்டகக் கரும்பன், தூசிக்கொம்பன், தடிமாடன் ஆகிய யானைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். லேசாக சங்கிலியை நீக்கினால் போதும்; யானை விடுதலை ஆகிவிடும்.

"நட யானை... செற்றி யானை... டத்தி யானை."

ஆனால், இந்தக் காரியத்தில் ஈடுபடும் மனிதனின் மணம்.. புதிய ஆள் என்றால் யானை தும்பிக்கையால் தூக்கி எடுத்து நிலத்தில் புரட்டி வளைத்து வளைத்து அடிக்கும். பிறகு என்ன? காரியத்தில் ஈடுபடும் மனிதன் வீரசொர்க்கத்தைப் போய் அடைய வேண்டியது தான். அதாவது வீரசொர்க்கம் அடையத் தயாராக இருக்கும் மனிதனுக்கு மரணச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து வைக்க வேண்டியதுதான். இதை எல்லாம் சரித்திர மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பழைய மனிதர்களை மறப்பது

நல்லதல்ல. யானைவாரி ராமன் நாயரும் தங்கச் சிலுவை தோமாவும் யானைக் கடத்தல் என்ற விஷயத்தில் வெற்றி வீரர்களானது எப்படி?

சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த இரண்டு தலைவர்களுக்குள்ளும் உறவு சரிவர இல்லாதிருந்த காலம். சொல்லப்போனால் எந்தக் காலத்திலுமே சீரான உறவு அவர்களுக்குள் இருந்ததில்லை. அண்ணனுக்கு நல்ல பாடம் சொல்லித்தர வேண்டும் என்று தம்பி பல நேரங்களில் பல ஏடாகூடமான செயல்களில் ஈடுபடுவதுண்டு. நெல்லை அறுவடை செய்து விற்பது, மரத்தை வெட்டி விற்பது, இவற்றுடன் ஒரு யானையையும் விற்று விடுவது என்று தம்பி தீர்மானித்திருக்கிறார். யானையைக் கடத்திக்கொண்டு போய் ஆற்றின் மறுகரையில் இருக்கும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும்.

யானைவாரி ராமன் நாயர் இந்தத் தொழிலைச் செய்வதற்காக ஐம்பது ரூபாய் சம்பளம் பேசி, பத்து ரூபாய் முன்பணமும் வாங்கிக் கொண்டார். பிறகு அவர் நான்கைந்து நாட்களாக இரவு நேரங்களில் பழமும் சர்க்கரையும் வாங்கி பாருக்குட்டிக்குக் கொடுத்தார். இதன்மூலம் அவள் மனதைச் சரிப்படுத்துவதாக எண்ணம். இடையில் கொச்சு நீலாண்டனுக்கும் தருவார். அவன் மனம் வேதனைப்படக்கூடாது அல்லவா? அவனிடம் பிரியத்துடன் ராமன் நாயர் சொல்வார்:

"கொச்சு நீலாண்டா, நான் பாருக்குட்டிக்கு இதெல்லாம் தர்றது பாசத்தினால் எல்லாம் கிடையாது. ரகசியம் என்னன்னு உனக்குத் தெரியும்ல? அவளை நாங்க கடத்திக்கொண்டு போய் காட்டுல விடப்போறோம்.''

இதைக் கூறிவிட்டுப் பாருக்குட்டியைத் தடவ ஆரம்பிப்பார்.

"டத்தி யானை... செற்றி யானை...''

இப்படி வசனங்களை தாராளமாக உருவிவிடுவார். கொஞ்சம் நெருங்கி வந்தால், பாருக்குட்டிமீது கொண்டிருந்த பகை கிட்டத்தட்ட தீர்ந்த மாதிரிதான். சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் யானைவாரி கேட்டார்:

"டேய் தங்கச் சிலுவை! கொச்சு நீலாண்டனைக் கடத்துவதாக நாம் ஒப்பந்தம் போட்டிருந்தால்...''

தங்கச் சிலுவை கேட்டார்:

"நிச்சயம் நாம அதை ஒத்துக்கொண்டிருக்க மாட்டோம். இது மட்டும் உண்மை.''

யானைவாரி சொன்னார்:

"கொச்சு நீலாண்டனைக் கடத்துற அளவுக்கு நாம வளரலையே!''

தங்கச் சிலுவை கூறினார்:

"அதை நெனைச்சுப் பார்த்தா குடலே நடுங்குது. வயிறைக் கலக்குது.''

"எனக்கு மட்டும் என்ன?''

எப்படியோ பாருக்குட்டியைக் கடத்த இருவரும் தீர்மானித்து விட்டனர். நல்ல இருட்டும் சிறிது மழையும் உள்ள ஒரு இரவு. நாட்டு வெளிச்சம் கொஞ்சம்கூட இல்லை. பழக்குலையைக் கையில் ஏந்தியபடி தங்கச் சிலுவை தோமா முன்னால் போனார். யானைவாரி யானையைக் கட்டியிருந்த சங்கிலியை நீக்கினார். தங்கச் சிலுவை தோமா வேகமாக நடந்தார். மெதுவான குரலில் யானைவாரி சொன்னார்:

"நட யானை...''

யானை கொஞ்சம் வேகமாக நடந்தது. சாதாரண நடை அல்ல. எவ்வித தயக்கமும் இல்லாத நடை. தங்கச் சிலுவை தோமா ஒரு ஆற்றில் இறங்கினார். யானை அவரைப் பின்தொடர்ந்தது. ஆறு இருந்த பக்கம்

இருள் கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்போது தான் யானைவாரிக்கே தெரிந்தது- அவ்வளவுதான். ஆடிப்பேனார். கொச்சு நீலாண்டன்! ஊசிக்கொம்பன்! சிவந்த கண்ணன்! பயங்கரன்! போக்கிரி! ஏகப்பட்ட யானைப் பாகர்களைக் கொன்ற அந்தக் கொம்புகள் இரண்டும் இருட்டில் வெள்ளையாய் தெரிந்தன. யானைவாரியின் வாயில் நீர் வற்றிவிட்டது. தொண்டையும் உதடுகளும் உலர்ந்துவிட்டன. யானைவாரி பயம் மேலோங்க மெதுவாகச் சொன்னார்:

"தங்கச் சிலுவையே, திரும்பிப் பார்க்காதே. ஆள்மாறாட்டம் ஆயிடுச்சு. கொச்சு நீலாண்டனைக் கடத்திட்டோம்.''

தங்கச் சிலுவை தோமாவிற்கு எல்லா விஷயங்களும் புரிந்து விட்டன.  கொச்சு நீலாண்டனையா கடத்தி இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது ஒருநிமிடம் மயக்கம் வருவது மாதிரி இருந்தது. தங்கச் சிலுவை தோமா ஆலோசித்தார்- தானும் யானைவாரி ராமன் நாயரும் இன்னும் சிறிது நேரத்தில் யானையால் கொல்லப்படப்போவது உறுதி என்று மனதில்பட்டது. தங்கச் சிலுவை தோமா மனதில் நடுக்கம் உண்டாகக் கேட்டார்:

"என்ன செய்யலாம்?''

"பழக்குலையை அவனுக்குக் கொடுத்துவிட்டு... தண்ணியில முங்கிடு... வலது பக்கம் போகணும்... உன் பின்னாடி நானும் வந்திடுவேன்.''

தொடர்ந்து இரண்டு பேரும் நீரில் மூழ்கி, மூச்சுவிட முடியாமல் உயிரைப் பணயம் வைத்து நீந்தி நீந்தி பிழைத்துக் கரையை அடைந்தார்கள். இரண்டு பேரும் கட்டிப்பிடித்தவாறு கிடுகிடுவென  நடுங்கியவாறு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கொச்சு நீலாண்டன் ஆற்றில் நீரை எடுத்து குளித்து ரசித்துக் கொண்டிருந்தான். பழம் முழுவதையும் தின்று தீர்த்துவிட்டான். எமகாதகப் பயல்!

நண்பர்கள் இருவரும் உயிரற்ற சவம்போல் நடந்து சென்று, இருப்பிடத்தை அடைந்து, பயங்கரமான கனவுகள் கண்டபடி உறங்கினார்கள்.

கொச்சு நீலாண்டன் மறுநாள் காலையில் சாத்தங்கேரி மனைக்கு திரும்பிவந்துவிட்டது என்றும், சங்கரன் நம்பூதிரிபாடைக் குத்துவதற்கு ஓடினான் என்றும் பலரும் சொன்னதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது இந்தச் சரித்திர எழுத்தாளனுக்குத் தெரியாது.

எது எப்படியோ, கொச்சு நீலாண்டன் வீட்டை அடைந்து விட்டான். யானைப் பாகர்கள் அவனைக் கஷ்டப்பட்டு கட்டிப் போட்டார்கள். அந்த அளவில் மகிழ்ச்சியே.

யானைவாரிக்கும் தங்கச் சிலுவைக்கும் ஒரு வார காலம் வயிற்றுப்போக்காகவே இருந்தது. எல்லாம் குணமாகி வாழ்க்கை மீண்டும் சகஜநிலைக்கு வந்தபிறகு நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்து யானைவாரி சொன்னார்:

"அடே, தங்கச் சிலுவை!''

"என்னடா யானைவாரி?''

"நாம கடத்தினது அந்த கேடுகெட்ட பாருக்குட்டியாக இருந்தா, இப்போ நாம் உயிரோட இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. யானையாகவே இருந்தாலும்- பாருக்குட்டி ஒரு பெண்தான்! அவளைக் கடத்தியிருந்தா நமக்கு எவ்வளவு மரியாதைக்குறைவு!''

மங்களம்.

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.