Logo

புகழின் நிமிடங்கள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6560
pugalin nimidangal

ரே நேரத்தில் போராளியாகவும் எழுத்தாளராகவும் இருந்து ஆச்சரியப்பட வைக்கும் மனிதர் ந்குகி வா தியான்கோ. இவர் 1938-ஆம் ஆண்டில் கென்யாவில் உள்ள லிமுரு என்ற இடத்தில் பிறந்தவர். அரசாங்கத்திற்கு எதிராக கொரில்லா போர் முறைகளைக் கையாண்டிருக்கும் தியான்கோ, பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், சிறையில் இருக்கும்போதும் தொடர்ந்து எழுதி, சிறையில் தள்ளியவர்களைத் திகைக்க வைத்திருக்கிறார்.

கிகுயு மொழியின் ஆழத்தையும் அழகையும் தன்னுடைய எழுத்துகளில் கொண்டு வந்த தியான்கோவை கென்யாவின் மார்க்வெஸ் என்று கூறலாம்.

1964-ல் இவரின் முதல் புதினமான "Weep Not Child" பிரசுரமானது. 1967-ல்  "A Grain of Wheat", 1977-ல் "Petals of Blood", 1980-ல் "Devil on the Cross"  ஆகிய புதினங்கள் வெளிவந்திருக்கின்றன.

"Devil on the Cross" சிறையில் இருக்கும்போது ந்குகி எழுதிய நாவல். ஆப்ரிக்காவின் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை தன் படைப்புகளின் மூலம் உலகத்திற்குக் காட்டிக்கொண்டிருக்கும் தியான்கோ, இப்போது இருப்பது அமெரிக்காவில்... நியூயார்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.


வாஞ்சிந்த என்பதுதான் அவளுடைய பெயர். ஆனால், பியாட்ரீஸ்  என்ற கிறிஸ்துவ பெயர்தான் அவளுக்கு மிகவும் பிடித்த பெயராக இருந்தது. அந்தப் பெயர் மிகவும் புனிதத் தன்மை கொண்டதாகவும் அழகானதாகவும் இருந்தது. மோசமானதாக இல்லை. ஆனால், அவள் அந்த அளவுக்கு அழகானவள் இல்லை. கறுத்த நிறம்; பொருத்தமான அளவுக்கு சதைப்பிடிப்பு கொண்ட சரீரமாக இருந்தாலும், அந்த அளவுக்கு உற்சாகமான இயல்பைக் கொண்டவளாக அவள் இல்லை. ஆண்கள் தங்களுடைய ரகசிய வாழ்க்கையை பீர் பாத்திரங்களிலும் நுரைகளிலும் மூழ்கடிப்பதற்காக வரும் மது விடுதிகளில்தான் அவள் வேலை செய்தாள். ஒருவேளை மது விடுதியின் உரிமையாளரோ பொறுமையற்ற வாடிக்கையாளரோ பியாட்ரீஸ் என்ற பெயரைச் சொல்லி அழைத்தால் தவிர, யாரும் அவள்மீது கவனம் செலுத்துவதேயில்லை. அந்த சமயத்தில் மனிதர்கள் அழகான அந்தப் பெயரின் சொந்தக்காரியைப் பார்ப்பதற்காக எதிர்பார்ப்புடன் தலையை உயர்த்திப் பார்ப்பார்கள். ஆனால், அங்கு யாரும் இல்லாமல் போகும்பட்சம், அவர்கள் தங்களுடைய கீழ்த்தரமான தமாஷ்களிலும் குலுங்கல் சிரிப்புகளிலும் பரிமாறும் பெண்களிடம் சரச விளையாட்டுகள் புரிவதிலும் திரும்பிச் சென்றுவிடுவார்கள்.

பறந்து கொண்டிருக்கும்போதே காயம்பட்ட பறவையாக அவள் இருந்தாள். பல நேரங்களிலும் கீழே இறங்குவதற்காக முயற்சி செய்து பார்த்தாள். பிராண்டிப் பிராண்டி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தைத் தேடிச் சென்றாள். அதனால்தான் அவளை அலாஸ்காவிலும் பாரடைஸிலும் தோமிலும் உள்ள மது விடுதிகளில் பல நேரங்களில் பார்க்க முடிந்தது. வாடிக்கையாளர்களை வளைத்துப் போட அவளால் முடியவில்லை என்பதை மது விடுதியின் உரிமையாளர் தெரிந்துகொள்ள நேரும்போதுதான் அந்த விஷயமே வெளியே தெரிய வரும். முன்னறிவிப்போ சம்பளமோ இல்லாமலே அவள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவாள். அடுத்த மது விடுதியைத் தேடி அவள் தடுமாறித் தடுமாறி அலைவாள். அங்கு ஏற்கெனவே சந்தித்த காட்சிகளின் வேதனைப்படுத்தும் அரங்கேற்றங்களைப் பார்த்து அவள் தளர்ந்து போய்விடுவாள். அவளைவிட மோசமாக இருக்கும் இளம் பெண்கள்கூட பார் மூடப்படும் வேளைகளில் போட்டி போட்டுக் கொண்டு சில வாடிக்கையாளர்களை அடைவதை பியாட்ரீஸ் பார்ப்பாள். "என்னிடம் இல்லாதது என்ன இவர்களிடம் இருக்கிறது?" தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அவள் வேதனைப் படுவாள். வெறுப்பைவிட அன்பையும் மோகத்தையும் வெளிப்படுத்தக்கூடிய- வெற்றுச் சிரிப்புகளும் சாபங்களும் நிறைந்த- வாடிக்கையாளர்கள் சில பொருட்களுடன் வரக்கூடிய- தானும் முக்கிய நபராக இருக்கும் ஒரு மது விடுதியை அவள் கனவு கண்டாள்.

அவள் லிமுரு நகரத்தை விட்டு, சுற்றிலும் மலையைப்போல உயர்ந்து கொண்டிருந்த சிறிய நகரங்களில் அலைந்து கொண்டிருந்தாள். அங்காரிகயிலும், காமிரித்தோவிலும், ரிரோனிலும்... ஏன்- டிக்குனுவில்கூட அவள் வேலை செய்தாள். ஆனால், எல்லா இடங்களிலும் ஒரே கதைதான் நடந்தது. ஆமாம்.... எப்போதாவது ஒரு வாடிக்கையாளர் கிடைப்பார். ஆனால், விரும்பக்கூடிய அளவுக்கு யாரும் அவளைப் பொருட்படுத்தியதில்லை. அவளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கும் யாரும் முயற்சி செய்யவில்லை. எல்லா நேரங்களிலும் பாக்கெட் காலியாக இருக்கும் ஒரு வாடிக்கையாளரின் இறுதி அடைக்கலமாக அவள் இருந்தாள். ஆனால், சம்பள நாளின் ஆரம்பத்திலோ அதற்கடுத்த இரவு வேளையிலோ அதே வாடிக்கையாளர் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, அழகிகளுக்காக முழு பணத்தையும் செலவழிப்பான்.

அவள் இப்படிப்பட்ட செய்திகளை மிகவும் வெறுத்தாள். ஒவ்வொரு இளம் பெண்ணிடமும் அவள் தன்னுடைய எதிரியைப் பார்த்தாள். எல்லாரின் முன்னாலும் அவள் வெறுப்பு கலந்த முகமூடியை அணிந்தாள். முக்கியமாக அவளுடைய காயத்திற்குள் ஆழமாக இறங்கிச் சென்ற முள் ந்யாகுத்திதான். தடிமனான உடலமைப்பைக் கொண்டவளாக இருந்தாலும், எப்போதும் ஆண்கள் ந்யாகுத்தி வீட்டின் வாசலிலேயே நின்றிருப்பார்கள். அவள் ஆண்களிடம் போராடினாள். அவளை சந்தோஷப் படுத்துவதற்காக அவர்கள் கொண்டு வரும் பொருட்களை உரிமையாகப் பிடுங்கி வாங்குவாள். ஆணவம் நிறைந்தவளாகவும், விரசமானவளாகவும், அடக்கம் இல்லாதவளுமாகவும் இருந்தாள் ந்யாகுத்தி. கறுத்த உதடுகளையும் வெறுமை நிறைந்த கண்களையும் கொண்ட அந்த சாகசங்கள் நிறைந்த பெண்ணின் அலட்சியத்தாலோ ஏசுதலாலோ உண்டான கோபங்களையும் வேதனைப்படுத்தும் வார்த்தைகளையும் அவளுடன் ஒட்டி நின்று கொண்டு ஆண்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில்கூட நிலையாக இல்லாமல் ந்யாகுத்தி ஒரு பொம்மையைப்போல செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய செயல் பியாட்ரீஸிடமிருந்து மாறுபட்டதாக இருந்தது. மாறுதல்களுக்கும் உற்சாகங்களுக்கும் ந்யாகுத்தி எப்போதும் தாகம் கொண்டவளாக இருந்தாள். புதிய முகங்களை- புதிய பிரதேசங்களை தனக்குக் கீழே கொண்டு வருவதற்காக... ந்யாகுத்தியின் நிழலைக்கூட பியாட்ரீஸ் வெறுத்தாள். பாரின் ஆழமான உலகத்திற்குள் முழுமையாக மூழ்கிப் போய், அதனால் அசாதாரணமாகத் தோன்றக் கூடிய- அப்படி ஆக வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட ஒரு இளம் பெண்ணை பியாட்ரீஸ் ந்யாகுத்தியில் கண்டாள். ஆனால், போகக்கூடிய இடங்கள் எல்லாவற்றிலும் ந்யாகுத்தியின் நீளமான நிழல் அவளை இடைவிடாமல் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

லிமிருவிலிருந்து சிரி மாவட்டத்திலிருந்த இல்மார்க்கிற்கு அவள் சென்றாள். ஒரு காலத்தில் இல்மார்க் பேய்கள் நடமாடும் கிராமமாக இருந்தது. ஆனால், இப்போது அங்கு வரலாற்றுப் பெண்ணான ந்யான்கென்ஸோவின் மூலமாக வாழ்க்கையில் உயர்வு உண்டானது. அவளுக்காக பாப் பாடகர்களின் கூட்டங்கள் புகழ்ந்து பாடின.

"இல்மார்க்கிற்காக நான் நைரோபியை விட்டுப் புறப்பட்டபோது சிறிதுகூட எனக்குத் தெரியாது இந்த அற்புத இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு செல்வேன் என்று."


இளைஞர்களான மூத்தவ்யவும் முச்சுன்காவும் அவளுக்காக நடனம் ஆடிக்கொண்டே இப்படிப் பாடினார்கள். அதைத் தொடர்ந்து இளைஞர்கள் தங்களுடைய அடைக்கலமாகவும் நீரூற்றாகவும் தேடி வரும் கனவு நகரமாக இல்மார்க் வளர்ந்தது.

பழமையான கதைகளையும் நடனப் பாடல்களையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இல்மார்க் லிமிருவிடமிருந்து சிறிதும் வேறுபட்டதாக இல்லை என்று பியாட்ரீஸ் மெதுவாகத் தெரிந்து கொண்டாள். ஒரே மாதிரியான கதைகளே திரும்பத் திரும்ப நடந்து அவளைச் சூழ்ந்தன.

அவள் பல உத்திகளையும் பின்பற்றிப் பார்த்தாள். ஆடைகள்... பிரகாசிக்கக் கூடிய ஆடைகளை அணிவதற்கான சூழ்நிலையை உண்டாக்க அவளால் அங்கும் முடியவில்லை. சம்பளம் வாங்கக் கூடிய காதலனோ, வீட்டு அலவன்ஸோ இல்லாமல், எழுபத்தைந்து ஷில்லிங் அவளுக்கு எப்படி போதுமானதாக இருக்கும்? அந்த நேரத்தில்தான் இல்மார்க்கிற்கு "அம்பி" வந்தது. இதுதான் தான் தேடிக் கொண்டிருந்த பதில்- பியாட்ரீஸ் நினைத்தாள். தன்னைவிட கறுத்த இளம் பெண்கள் கேவலமான பாவங்கள் முழுவதையும் அம்பியைத் தேய்த்து அழகான நட்சத்திரங்களாக மாற்றுவதையும் அவள் பார்த்தாள். ஆண்கள் அவர்களைப் பார்த்து தங்களுடைய "அப்போது பிறந்த" காதலிகளைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பயங்கரமான பிறவிகள். எடை போட்டுப் பார்க்கும் நிமிடங்களில் அவள் சிந்தித்தாள். அவர்கள் எப்போதும் அழகை அதிகரித்துக் காட்டக்கூடிய பொருட்களுக்கு எதிராக மிகுந்த கோபத்துடன் பேசுவார்கள். அம்பிக்கு எதிராக... விக்குகளுக்கு எதிராக... சவுரி முடிக்கு எதிராக. ஆனால், அம்பியைத் தேய்த்து வெளுப்பாக ஆக்கிய தோலைக் கொண்ட- வெளிநாட்டினரின் கூந்தலை நகலெடுத்து, அதே மாதிரியான விக் வைத்திருக்கும் பெண்களுக்குப் பின்னால் பாய்ந்தோடிக் கொண்டிருப்பார்கள். கறுத்தவர்கள் வெறுக்கப்படுவதற்கு மூல காரணம் என்ன என்பதை ஆராய்ந்து கண்டு பிறப்பதற்கு அவள் முயற்சி செய்யவில்லை. ஒரு பழிவாங்கும் எண்ணத்துடன் அவள் அம்பியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய கறுத்த வெட்கக் கேடுகளை அவள் தேய்த்து மறைத்தாள். ஆனால், நிறைய அம்பி வாங்குவதற்கு அவளால் முடியவில்லை. முகத்திலும் கைகளிலும் மட்டும் தேய்த்தாள். அதனால் அப்போதும் அவளுடைய கால்களும் கழுத்தும் கறுப்பு நிறத்தில்தான் இருந்தன. அது மட்டுமல்ல; எளிதில் எட்டாத முகத்தின் சில பகுதிகள்- செவிகளின் பின்பகுதியும் கண் இமைகளுக்கு மேல் பகுதியும் வெட்கக்கேடு, குழப்பமான நிலை ஆகியவற்றின் நிரந்தர உறைவிடங்களாக இருந்தன.

பிறகு எப்போதோ வந்து சேர்ந்த செழிப்பான நிமிடங்களுக்கு முந்தைய கொடூரமான மானக்கேட்டின் நேரமாக அதை அவள் எண்ணினாள். பியாட்ரீஸ், இல்மார்க்கில் இருந்த ஸ்டார் லைட் பாரில் வேலை செய்து கொண்டிருந்தாள். வளையல்கள் அணிந்த கைகளுடனும் காதில் வளையங்களுடனும் கவுன்டருக்குப் பின்னால் நின்று கொண்டு ந்யாகுத்தி வேலை செய்தாள்.

தவறாமல் தேவாலயத்திற்கு செல்லக்கூடிய- கடன்கள் அனைத்தையும் தவறாமல் மீட்டக்கூடிய ஒரு உண்மையான கிறிஸ்துவராக பாரின் உரிமையாளர் இருந்தார். தொப்பை விழுந்த வயிறு, நரைத்த தலைமுடி, மென்மையான பேச்சு. இல்மார்க்கில் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர், கடுமையான உழைப்பாளி... கடை மூடப்படும்  வரை அவர் பாரிலேயே தங்கினார். சரியாகக் கூறுவதாக இருந்தால், ந்யாகுத்தி போகும் வரை. வேறு எந்தவொரு பெண்ணின்மீதும் அவருடைய பார்வை பதிவதில்லை. அவர் எப்போதும் ந்யாகுத்தியைச் சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்தார். எந்தவொரு கனிவும் கிடைக்காமலே அவர் அவளுக்கு ரகசியமாக பரிசுப் பொருட்களை அளித்தார்- ஆசையுடன் நாளையைப் பற்றிய கனவுகளுடன். அங்கு ந்யாகுத்திக்கென்று தனியாக ஒரு அறை இருந்தது. வேலை செய்ய வேண்டும் என்று தனக்கு தோன்றும் போது மட்டும் அவள் கண் விழிப்பாள். ஆனால், பியாட்ரீஸும் மற்ற இளம் பெண்களும் அதிகாலை ஐந்து மணிக்கு கண்விழித்து லாட்ஜில் இருப்பவர்களுக்கு காப்பி தயார் பண்ணுவார்கள். பாரையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்வார்கள். இரண்டு மணிக்கு சிறிய ஒரு ஓய்வுக்காகச் செல்லும் வரை பாரில் வேலை செய்தார்கள். நுரைத்துக் கொண்டிருக்கும் பீரையும் புன்சிரிப்பையும் நள்ளிரவு நேரம் வரை, இன்னும் சொல்லப்போனால்- அதிகமான டஸ்க்கேர்ஸுக்கும் பில்ஸ்டேர்ஸுக்கும் தாகம் தணியும் வரை பரிமாறுவதற்காக அவர்கள் ஐந்து மணிக்கு மீண்டும் வந்தார்கள். அவளுக்கு வெறுப்பு உண்டாகக் கூடிய அளவுக்கு எதுவும் உண்டாகவில்லையென்றாலும், இளம் பெண்கள் லாட்ஜிலேயே உறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவளை அவ்வப்போது அமைதியற்றவளாக ஆக்கியது. சில வேளைகளில் அவர்கள் வேலைக்கு தாமதமாகச் செல்வார்கள். அதை உரிமையாளர் பேசும்போது சுட்டிக் காட்டுவார். ஆனால், உண்மையிலேயே கூறுவதாக இருந்தால். அவர்களுடைய உடல்களைக் காட்டி லாட்ஜுக்கு அதிகமான ஆட்களைக் கவர்ந்து இழுப்பது என்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தது. ஆனால், பெரும்பாலான இளம் பெண்கள் காவலாளிக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, பரிமாறும் பெண்ணாகக் காட்டிக் கொள்ளாமல், சுதந்திர உணர்வுடன் தங்களுடைய வழக்கமான காதலர்களையோ, தற்காலிகமான காதலர்களையோ சந்திப்பதற்காக ந்யாகுத்தியின் தலைமையில் வெளியே சென்றார்கள். ஆனால், பியாட்ரீஸ் மட்டும் எப்போதும் லாட்ஜிலேயே தூங்கிக் கொண்டிருப்பாள். எப்போதாவது வரக்கூடிய இரவுக் காதலர்கள் அவளுடன் சில நிமிடங்களை மட்டுமே செலவழிப்பார்கள். ந்யாகுத்தி நிராகரித்தபோது ஒரு இரவு நேரத்தில் பாரின் உரிமையாளர் பியாட்ரீஸைத் தேடி வந்தார். அவர் அவளுடைய வேலையில் தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து அதே பழைய வெறுப்புடன் அவளைப் புகழ்ந்தார். அவர் அவளை கட்டிப் பிடித்தார். தொப்பை விழுந்த வயிறையும் நரை விழுந்த தலை முடியையும் கொண்டிருந்த அவர் அவளுடன் போராட்டம் நடத்தினார். அவளுக்கு அவர்மீது கடுமையான வெறுப்பு உண்டானது. ந்யாகுத்தி நிராகரித்த ஒரு மனிதரை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது; அவளால் அது முடியாது. "என் கர்த்தாவே, என்னிடம் இல்லாதது எது ந்யாகுத்தியிடம் இருக்கிறது?" அவள் தனக்குள் அழுதாள். அவர் அவளுக்கு முன்னால் அவமானப்பட்டு நின்று கொண்டிருந்தார். அவளிடம் அவர் கெஞ்சினார். பரிசுப் பொருட்கள் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவளை எதுவும் ஈர்க்கவில்லை. அந்த இரவு நேரத்தில் முதன்முறையாக அவள் சட்டத்தை மீறி நடந்தாள். சாளரத்தின் வழியாக அவள் வெளியே குதித்து இன்னொரு லாட்ஜுக்குள் அடைக்கலம் தேடிக் கொண்டாள். அவள் ஆறு மணிக்குத் தான் திரும்பி வந்தாள். எல்லாருக்கும் முன்னால் வைத்து லாட்ஜின் உரிமையாளர் அவளை வேலையை விட்டு வெளியே அனுப்பிய போது, பியாட்ரீஸ் தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

ஒரு மாத காலம் அவள் வேலை இல்லாமல், மற்ற இளம் பெண்களின் நிறங்கள் மாறிக் கொண்டிருக்கும் ஆச்சரியத்துடன் அவர்களுடைய அறைகளில் மாறி மாறி இருந்து கொண்டிருந்தாள்.


இல்மார்க்கை விட்டு இன்னொரு இடத்திற்குச் சென்று எல்லா விஷயங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவளுக்கு மனம் வரவில்லை. அலைந்து அலைந்து அவள் தளர்ந்து போய் விட்டாள். அவள் அம்பி தேய்ப்பதை நிறுத்திவிட்டாள். பணம் முழுவதும் செலவாகிவிட்டது. கண்ணாடியில் அவளுக்கு மிகவும் அதிகமான வயது தெரிந்தது. கொடுப்பினைகளில் இருந்து அவள் வழி தவறிப் போய் விட்டிருக்கிறாள். காதலர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் தன்னுடைய சரீரத்திற்கு விலை கூறுவதற்கும் அவளுக்கு மிகுந்த பயம் தோன்றியது. ஒரு ஆணோ, பல ஆண்களோ தன்னைப் பொருட்படுத்தும் கௌரவமுள்ள ஒரு வேலைக்காக அவள் ஏங்கினாள்.

ஒரு ஆணுக்காக மட்டும் படுக்கையைப் பங்கு போட்டுக் கொள்ளலாம். ஒரு வீட்டுக்காக... ஒரு குழந்தைக்காக... ஆனால், பரிமாறுபவர்களிடமிருந்து வேறு விஷயங்களை எதிர்பார்ப்பவர்களை அவளுடைய தேவை அதிர்ச்சியடையச் செய்தது. இரவு நேரத்தில் இருண்ட நிமிடங்களில் அவள் அழுது கொண்டிருந்தாள். கிராமத்திலிருந்த தன்னுடைய வீட்டைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். அந்த நிமிடங்களில் நாயேரியில் இருக்கும் தன்னுடைய தாயின் கிராமம் பூமியிலேயே மிகவும் அழகான இடமாக அவளுக்குத் தோன்றியது. விவசாயிகளான தாயுடனும் தந்தையுடனும் கனவுகளையும் நினைவுகளையும் ஆழமான அமைதியின் குளிர்ச்சியையும் நட்புகளையும் பங்கு போட்டுக் கொண்டு அவள் அங்கு வாழலாம். வீட்டுக்கு திரும்பிச் சென்று அவர்களைப் பார்க்க வேண்டும் என்று அவள் ஏங்கினாள். ஆனால் எதுவுமே இல்லாத கைகளுடன் எப்படி திரும்பிச் செல்வது? கிராமம் நினைவில் ஒரு மங்கலான ஓவியத்தைப் போல இருந்தது. பாரில் அவளுடைய வாழ்க்கை அறிமுகமில்லாத மனிதர்களின் தேவையற்ற ஆரவாரங்களுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருந்தது... கருணையிலிருந்தும் வரங்களில் இருந்தும் நழுவி நழுவி- எந்தக் காலத்திலும் மண்ணுடனும் காற்றுடனும் விளைச்சலுடனும் நிலவுடனும் சேர்ந்து நிற்காத தலைமுறையின் பகுதியாக அவள் இருந்தாள். இருண்ட வேலியில் படர்ந்திருக்கும் கொடிகளின் முணுமுணுப்புகளும் வானத்தைத் தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கும் டுமுடு மலைத் தொடர்களும் அவளுக்காக இருப்பதல்ல. நிலவின் நிழலில் நடைபெற்ற நடனங்களும் காதல்களும் அவளுக்காக நடக்கவில்லை. அழகானவளாக இருந்தும், லிமிருவிலிருந்து பணக்காரர்களின் வைப்பாட்டியாக வாழ்ந்த, அன்னையின் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்களைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். இறுதியில் தற்கொலையின் குளிர்ச்சியான கரங்களில் நிம்மதி தேடிய...  வாழ்க்கையின் இனம்புரியாத ஆழங்களைவிட, இந்தத் தலைமுறை மரணத்தின் இடுக்குகளில் அபயம் தேடுகிறது. எத்தனை எத்தனை திருமணமாகாத அன்னைகள் தங்களுடைய குழந்தைகளைக் கழிப்பறையில் எறிந்து விட்டிருக்கிறார்கள்! பெண் குழந்தைகளின் மரணம் இப்போது தமாஷாக எண்ணக்கூடிய ஒரு விஷயமாகி விட்டிருக்கிறது. "அவள் வேதனையே இல்லாமல், மரணத்தை நோக்கிப் போகிறாள்." அவர்கள் தமாஷாக கூறினார்கள். தொடர்ந்து, பியாட்ரீஸின் சிந்தனை மரணத்தை நோக்கிச் செல்லும் பயணத்தைப் பற்றியதாக இருந்தது. ஆனால், அது அவளால் முடியாது.

அவள் அன்புக்காக ஏங்கினாள்.

அவள் வாழ்க்கைக்காக ஆசைப்பட்டாள்.

இல்மார்க்கில் புதிதாக ஒரு பார் திறக்கப்பட்டது. லாட்ஜும் உணவு விடுதியும் உள்ள ஒரு "ட்ரீ டாப் பார்". என்ன காரணத்திற்காக அதை "ட்ரீ டாப்பார்" என்று அழைக்கிறார்கள் என்று பியாட்ரீஸுக்குப் புரியவில்லை. கீழே உணவு சாப்பிடும் இடமும், மேலே மது அருந்தும் இடமும், மீதி இடத்தில் சில நிமிடங்களோ ஒரு இரவு வேளையோ தங்கக் கூடியவர்களுக்கான அறைகளும் இருந்தன. இப்போது அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்- ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்க அதிகாரிதான் அதன் உரிமையாளராக இருந்தார். கென்யாவில் இருக்கும் முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் வர்த்தக மையங்களையும் வியாபாரங்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய பணக்காரராக அவர் இருந்தார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் அனைவரும் அவருடைய பாருக்கு வந்தார்கள். விலை மதிப்புள்ள கார்களில் வந்து சேரும் பணமூட்டைகள். சீருடை அணிந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஓட்டுநர்களை காத்திருக்க வைக்கும் புகழ்பெற்ற மனிதர்கள். பெரிய மனிதர்களை வணங்குவதற்காக பணக்காரர்களாக அல்லாதவரும் வருவதுண்டு. அவர்களுடைய முக்கிய விஷயமே அரசியல்தான். பிறகு... தொழில்... மற்றவர்களைப் பற்றி மோசமான வார்த்தைகளில் பேசுவது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக அங்கு நடைபெற்றது. "உங்களுக்குத்  தெரியாதா? அந்த ஆளுக்கு பணியில் உயர்வு கிடைத்தது. உண்மையா? அவளை வேண்டாமென்று விலக்கிவிட்டார். பொதுப் பணத்தை அபகரித்து... நீங்கள் எந்த அளவுக்கு முட்டாள் தெரியுமா? அந்த அளவுக்கு திறமையானவர் இல்லை." அவர்கள் விவாதிப்பார்கள். சண்டை போடுவார்கள். முஷ்டியைச் சுருட்டி, ஒருவரோடொருவர் அடித்துக் கொள்வார்கள்- குறிப்பாக தேர்தல் நேரங்களில். லுவோ இனம்தான்- அதிகாரங்கள், அகங்காரங்கள் நிறைந்த தந்த கோபுரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த பல்கலைக்கழக மாணவர்கள்தான் கென்யாவின் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் காரணமாக இருப்பவர்கள் என்ற ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே அவர்கள் ஒரே கருத்தைக் கொண்டவராக இருந்தார்கள்.

பிறகு... அவர்கள் விமர்சிப்பார்கள்- "வளர்ச்சியின் பெரும்பகுதி க்யாம்புவிற்குத்தான் கிடைக்கிறது. நைரோபியின் முழு வர்த்தகத்தையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சிரி மாவட்டத்திற்குள்கூட அவர்கள் பலவந்தமாக உள்ளே நுழைகிறார்கள். அந்த ஆப்பிரிக்கன் தொழிலாளிகள்- குறிப்பாக வயல்களில் வேலை செய்பவர்கள் சோம்பேறிகளாகவும் பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்." தொடர்ந்து ஒவ்வொருவரும் புகழ்ச்சியுரைகளில் இறங்குவார்கள். இல்லாவிட்டால்- பாராட்டு மழைகளைப் பொழிவார்கள். புகழ்ச்சியுரைகள், பொங்கி வழியும் மது வகைகள் ஆகியவற்றின் நிமிடங்களுக்கு மத்தியில் ஒருவர், பாரில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாருக்கும் திரும்பத் திரும்ப மது வாங்கிக் கொடுப்பார். இல்மார்க்கில் ஏழையாக இருப்பவர்கள்கூட புதிய பணக்காரர்களின் அடைக்கலமாக இருக்கும் இல்மார்க்கில் உணவு சாப்பிடுவதற்காக வந்து சேர்வார்கள்.

அங்கு பியாட்ரீஸுக்கு ஒரு துப்புரவு செய்யும் பெண்ணின் வேலை கிடைத்தது. குறுகிய சமயத்திற்குள்ளேயே அவள் பெரிய பணக்காரர்களை நெருக்கமாகத் தெரிந்து கொண்டாள். முன்பே கேட்டுக் கொண்டவர்களுக்காக, படுக்கையைத் தயார் பண்ணி வைத்தாள். ஏழைகள் பணக்காரர்களுக்கு முன்னால் பெரிய மனிதர்களாக நடக்க முயற்சிப்பதை அவள் பார்த்தாள். ஆனால், விதி அவளை அங்கும் வேட்டையாடியது. மற்ற மது விடுதிகளில் இருந்து "ட்ரீ டாப்"பிற்கு இளம் பெண்கள் கூட்டமாக வந்து சேர்ந்தார்கள். இல்மார்க்கிலும் லிமிருவிலும் அவளுக்கு நன்கு அறிமுகமான இளம் பெண்கள்... அவர்கள் பணக்காரர்களிடம் மிகவும் எளிதாக ஒட்டிக் கொள்வார்கள். பல காதலர்களுடனும் அவர்கள் ரகசியமாக சல்லாபம் நடத்திக் கொண்டிருந்தார்கள். பணக்காரர்கள், ஏழைகள் எல்லாரின் கண்களையும் பார்த்துக் கொண்டே கவுன்டரில் ந்யாகுத்தி உட்கார்ந்திருந்தாள். அவள் தன்னுடைய மலர்ந்த கண்கள், வளையல்கள் அணிந்த கைகள், காதில் அணிந்த வளையங்கள் ஆகியவற்றுடன் வெறுமை நிறைந்த நிமிடங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தாள்.


பெருக்கிச் சுத்தம் செய்யும் பெண்ணாக மட்டும் இருந்த பியாட்ரீஸை யாரும் பொருட்படுத்தவேயில்லை. அதிர்ஷ்டம் வாய்க்கப்பட்ட இளம் பெண்கள் அவளை பரிதாபமாகப் பார்த்தார்கள்.

பியாட்ரீஸ் வாழ்க்கையை கனவுகளைக் கொண்டு சந்தித்தாள். அவள் தயார் பண்ணிய சுத்தமான விரிப்புகள் மெல்லிய முனகல்களுக்குள் ஒதுங்கிய ஐந்து நிமிட போராட்டங்களுக்கு சாட்சியாக இருந்தன. தொடர்ந்து கார்களையும் ஓட்டுநர்களையும் பார்த்துப் பார்த்து அவள் சாளரத்திற்கு அருகில் நின்று கொண்டிருப்பாள். காரின் நம்பர் பிளேட்களின் மூலமும் ஓட்டுநர்களின் சீருடைகளை வைத்தும் அவளுக்கு இப்போது உரிமையாளர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். மெர்ஸிடஸ் ஸ்போர்ட்ஸ் காரில் ஏறி தன்னைத் தேடி வரக்கூடிய காதலர்களைப் பற்றி அவள் கனவு கண்டாள். அவர்களுடன் கையைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு, பெரிய கீழ்ப்பகுதியைக் கொண்ட செருப்பை அணிந்துகொண்டு, வேகமான காலடிகளுடன் நைரோபியிலும் மொம்பஸாவிலும் இருக்கும் தெருக்களின் வழியாக நடந்துசெல்வதை அவள் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தாள். "அன்பானவனே, நீ எனக்கு அவை எல்லாவற்றையும் வாங்கித் தருவாயா?" -ஒரு கண்ணாடிக்கு முன்னால் திடீரென்று போய் நின்று கொண்டு அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள். "அது என்ன பொருள்?" -அவன் கோபத்துடன் கேட்டான். "அன்பானவனே, அந்தக் காலுறைகள் கிழியாமலும், துவாரங்கள் இல்லாமலும் இருக்கக்கூடிய சில காலுறைகளுக்குச் சொந்தக்காரியாக ஆவது தன்னுடைய வெற்றிக்கு தேவைப்படக் கூடிய ஒன்று என்று அவள் கருதினாள். அவளுக்கு இனிமேல் கிழிந்ததைத் தைக்க வேண்டிய சூழ்நிலை வராது. எந்தக் காலத்திலும்... எந்தக் காலத்திலும்... எந்தக் காலத்திலும்... உங்களுக்கு புரிகிறதா? எந்தக் காலத்திலும்... எந்தக் காலத்திலும்... இனிமேல் பல நிறங்களைக் கொண்ட விக்குகளுக்குச் சொந்தக்காரியாக ஆக வேண்டும்... தங்க நிறத்தில் இருக்கும் விக்குகள்... இருண்டதும் கறுத்ததுமான... சிவந்த அஃப்ரோ விக்குகள்... உலகத்திலிருக்கும் விக்குகள் அனைத்தையும் சொந்தமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்படியென்றால்தான் உலகம் முழுவதும் ஒரேயொரு பியாட்ரீஸுக்காக ஹலேலுய்யா பாட முடியும். பெருக்கி சுத்தம் செய்யும் ஒரு பெண்ணுக்கு ஐந்து நிமிட தற்காலிகக் காதல் பெரிதாகக் தெரிவதில்லை. நிலவில் நனைந்த நிர்வாண உடலைக் கொண்டு காம உணர்ச்சியால் ஆண்களைக் கிளர்ந்தெழச் செய்த வான்குமகேரியின் வம்சத்தில் வந்தவளுக்கு... ஆண் தன்மையற்ற காதலர்களுடன் சேர்ந்து களியாட்டங்கள் ஆடியிருக்கிறாள் என்று புகழப்படும் ந்யான்ஸென்டோவின் மகளுக்கு... எனினும், இந்த நிமிடங்களில் புத்துணர்ச்சி தோன்றியது. அசைவற்ற பிணத்திலிருந்து பியாட்ரீஸ் தட்டி எழுப்பப்பட்டாள்."

அதற்குப் பிறகுதான் அவள் அவனை கவனித்தாள். ஆனால், அவன் அவளுடைய கனவில் கண்ட காதலனிடமிருந்து வேறுபட்டவனாக இருந்தான். ஒரு சனிக்கிழமை மதிய நேரத்தில் தன்னுடைய பெரிய லாரியை ஓட்டிக் கொண்டு அவன் வந்தான். கார்களுக்கு மத்தியில் மிகவும் கவனமெடுத்து அவன் லாரியைக் கொண்டு வந்து நிறுத்தினான். அதை ஒரு லாரி என்று கூற முடியாது... மினுமினுத்துக் கொண்டிருக்கும் க்ரீம் ஃப்ரேமைக் கொண்ட ஒரு காரைப்போல அது இருந்தது. ஒரு லூஸான நரைத்த சூட்டை அவன் அணிந்திருந்தான். அதற்கு மேலே ஒரு காக்கி மிலிட்டரி ஓவர் கோட்டையும்... அவன் ஓவர் கோட்டை அவிழ்த்து மிகுந்த கவனத்துடன் மடித்து, வண்டியின் முன் இருக்கையில் வைத்தான். கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு, வெளியிலிருந்த தூசியைத் தட்டி விட்டான். பிறகு... வண்டியை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். "ட்ரீ டாப்"பில் ஏறுவதற்கு முன்னால் அவன் திரும்பி நின்று இறுதியாக ஒருமுறை பார்வையை ஒட்டினான். "ட்ரீ டாப்"பில் ஒரு மூலையில் போய் அவன் உட்கார்ந்தான். அதிகார தோரணையுடன் தூக்கலான குரலில் ஒரு கென்யனுக்கு ஆர்டர் கொடுத்தான். ருசி பார்த்துப் பருகிக் கொண்டே, யாராவது அறிமுகமானவர்கள் இருக்கிறார்களா என்று எதிர்பார்த்து சுற்றிலும் தேடினான். அங்கு அமர்ந்திருந்த ஒரு வசதி படைத்த மனிதனை அவன் அடையாளம் தெரிந்து கொண்டான். அறிமுகமாகியிருந்த அந்த மனிதனுக்கு ஒரு வாட் 69 வாங்கித் தருவதாகக் கூறினான். உணர்ச்சியே இல்லாத ஒரு தலையாட்டலுடனும், அதிகாரம் நிறைந்த புன்சிரிப்புடனும் அந்த வாக்குறுதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஒரு உரையாடலின் மூலம் தன்னுடைய இரக்க குணத்தைத் தொடரத் தொடங்கிய போது, லாரிக்காரன் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு விட்டான். அவன் தன்னுடைய உரையாடலில் முழுமையாக இறங்கி விட்டான். ஆனால், அது சிறிது நேரத்திற்கு மட்டுமே. அதற்குப் பிறகும் அவன் பேசுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தது, அங்கிருந்த மற்றவர்களிடம் கோபத்தை எழச் செய்தது. மிகவும் பரிதாபப்படக்கூடிய- தமாஷான விஷயங்களில் பங்கு பெறுவதற்காக அவன் முயற்சித்தது. மிகவும் உரத்த குரலில் அவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனை அங்கே உட்கார வைத்துவிட்டு, பணக்காரர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

சாயங்காலம் ஆனதும், அவன் எழுந்து சில கசங்கிய நோட்டுகளை எடுத்து எண்ணி கவுன்டருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ந்யாகுத்தியிடம் நாட்டியமாடிக் கொண்டே கொடுத்தான். ஆட்கள் முணுமுணுத்தார்கள்.... முனகினார்கள்... சிலர் கேலியாகச் சிரித்தார்கள். இந்த நாட்டியமும் அவனுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவில்லை. வாடகைக்கு எடுத்த ஏழாம் நம்பர் அறைக்கு அவன் தடுமாறிய காலடிகளுடன் நடந்தான். பியாட்ரீஸ் சாவிகளை எடுத்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள். அவளைப் பார்த்ததும், அவனுடைய எல்லா ஆர்வங்களும் காணாமல் போயின.

அதற்குப் பிறகு அவனுடைய வருகை ஒரு தொடர் விஷயமாக ஆனது. சனிக்கிழமைகளில் பணக்காரர்கள் இடம் பிடித்து உட்கார்ந்திருந்த ஐந்து மணிக்கு அவன் வந்தான். பணம் கொடுக்கும் போது இருந்த, நாட்டியத்தைத் தவிர, அவனுடைய அனைத்து செயல்களும் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால், அவன் எப்போதும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்தான். எப்போதும் வழக்கம்போல உட்காரும் மூலையில் போய் உட்காருவான். ஏழாம் நம்பரைக் கொண்ட அறையையே வாடகைக்கு எடுப்பான். அவனுடைய வருகையை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அதைப் பற்றித் தெரியாமலே அவள் அறையைச் சுத்தம் செய்து வைத்தாள். இடையில் அவ்வப்போது வசதி படைத்த பணக்காரர்களால் கேவலமாக அவமானப்படுத்தப்பட்ட பிறகு, பியாட்ரீஸை நிற்குமாறு கூறி, அவன் அவளிடம் பேசிக் கொண்டிருந்தான். சில நேரங்களில் அவளுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்க்கை என்பது ஒரு போராட்டமாக இருந்தது. கல்வி கற்பது என்பது ஆசையாக இருந்தாலும், பள்ளிக்கூடத்திற்குச் சென்றதில்லை. அவனுக்கு எந்தச் சமயத்திலும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அவனுடைய தந்தை ஐரோப்பிய குடியேற்றப் பகுதியில் குடியேறிய ஒரு மனிதர். அந்தக் காலனி நாட்களில் அதற்கு எவ்வளவோ அர்த்தங்கள் இருந்தன-


வெளுத்த பேய்க்கும் அவனுடைய குழந்தைகளுக்காகவும்- ஒரு ஆணும் அவனுடைய பிள்ளைகளும் வியர்வை, கடுமையான உழைப்பு ஆகியவை நிறைந்த துயரமான எதிர்காலத்தை நோக்கி அடித்து அழுத்தப்பட்டார்கள். அவன் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றான். மற்றவர்களுடன் சேர்த்து அவனையும் சிறையில் அடைந்தார்கள். சிறைக்குள்ளிருந்து வெளியே வந்தது, முன்பு அவனுடைய தாய் முதன்முறையாக உலகிற்கு அனுப்பி விட்டதைப்போல இருந்தது. மொத்தத்தில சுற்றிலும் சூழ்ந்து கொண்டிருந்த வெறுமை மட்டும். உயர்ந்த பதவிகளில் நியமிக்கப்பட உதவக்கூடிய கல்வியைப் பெறுவதற்கு தன்னால் இயலாது என்பதை சுதந்திரத்திற்குப் பிறகு அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவனாக பணியாற்றினான். பிறகு... ஒரு கசாப்புக்காரன்.. ரிஃப்ட் அடிவாரத்திலிருந்தும் சிரி மாவட்டத்திலிருந்தும் நைரோபிக்கு காய்கறிகளையும் உருளைக்கிழங்கையும் ஏற்றிக்கொண்டு செல்லும் ஒரு சரக்கு கொண்டு செல்லும் மனிதனாக மெதுவாக வளர்ந்தான். தன்னுடைய வளர்ச்சியைப் பற்றி அவன் பெருமைப்பட்டான். செல்வச் செழிப்பு நிறைந்த உலகத்திற்கு சாதகமான படிகளைக் கடந்து போய்ச் சேர்ந்த மற்றவர்களை அவன் வெறுத்தான். தனக்கு எந்தச் சமயத்திலும் கிடைக்காமல் போய்விட்ட கல்வியைப் பற்றி மனதில் கவலைப்பட்டு புலம்பினான். தன்னுடைய குழந்தைகளுக்கு கிடைக்கப் போகிற கல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். தொடர்ந்து பணத்தை மிகுந்த கவனத்துடன் எண்ணி தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு, பியாட்ரீஸைப் போகும்படி கூறினான். இடையில் அவளுக்கு பீர் வாங்கிக் கொடுத்தாலும், ஆண்களின் பணத்தைத் தின்னும் பெண்களை அவன் சந்தேகப்பட்டான். அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஒரு இரவு நேரத்தில் அவளுடன் சேர்ந்து உறங்கிவிட்டு, மறுநாள்  அவளுக்கு இருபது ஷில்லிங் நோட்டை அவன் பிதுக்கி எடுத்துக் கொடுத்தான். ஏற்கெனவே அனுபவித்த ஒரு குற்ற உணர்வுடன் அவள் பணத்தை வாங்கினாள். அடுத்து வந்த வாரங்களிலும் அதுவேதான் திரும்பத் திரும்ப நடந்தது. உதவுகிற மாதிரி இருந்தாலும், பணம் அவளிடம் சந்தோஷத்தை உண்டாக்கவில்லை. ஒரு மூட்டை முட்டைக்கோஸுக்கோ ஒரு மூட்டை உருளைக் கிழங்குக்கோ பணம் தருவதைப்போல அவன் அவளுடைய சரீரத்திற்கு பணம் தந்தான். கேட்டுக் கொண்டிருந்தவள் என்ற வகையில் அவளுடைய சேவைக்கு, அவனுடைய குறைகளை வாங்கிக்கொண்ட பெட்டி என்ற நிலையில், ஒரு இரவு வேளையின் சுமை தாங்கி என்ற முறையில்... அவளுக்கு ஒரு பவுண்ட் பணமாவது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவனுடைய ஆணவத்தைப் பார்த்து, விஷயங்கள் மாறாத வழக்கமான கதைகளைக் கேட்டு அவள் மிகவும் வெறுப்படைந்தாள். ஆனால், அவனுடைய மனதின் அடித்தளங்களில் எங்கோ இனம்புரியாத ஏதோவொன்று இருக்கிறது என்பதை அவள் தெரிந்துகொண்டாள். ஒரு நெருப்புக் கொழுந்து... ஒரு வித்து... மலர ஆரம்பித்திருக்கும் ஒரு மொட்டு... அவள் அவனுடைய வருகைக்காக காத்திருந்தாள். யாரிடமாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்- தன்னை அறிந்திருக்கும் ஏதாவதொரு மனிதப் பிறவியில் நம்பிக்கை வைப்பதற்கு.

உயர்ந்த நிலையை அடைவதற்காக தாங்கிக் கொள்ள வேண்டியிருந்த சிரமங்கள் நிறைந்த வழக்கமான கதைகளை திடீரென்று ஒதுக்கிவிட்டு, ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் அவள் அதை அடைந்தாள். அதை எப்படிச் செய்தோம் என்று அவளுக்கே தெரியவில்லை. வெளியே மழை பெய்து கொண்டிருந்தது காரணமாக இருக்க வேண்டும். இரும்புக் கம்பிகளில் மழையின் மென்மையான ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. மழையின் தாள கதியில் இருந்த ஓசை, புத்துணர்ச்சியும் மந்தத் தன்மையும் கொண்ட ஒரு அலட்சிய உணர்வை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. அவன் அவள் கூறுவதைக் கேட்பதற்குத் தயாரானான். த்யேரியாவைச் சேர்ந்த கராற்றினாவிலிருந்து அவள் வந்திருந்தாள். பிரிட்டிஷ் பட்டாளக்காரர்கள் அவளுடைய இரண்டு சகோதரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். இன்னொரு ஆள் சிறையில் கிடந்து இறந்துவிட்டான். அவள் மட்டும் இறுதியில் எஞ்சினாள். வறுமையின் பிடியில் சிக்கியவர்களாக இருந்தாலும், அவளுடைய பெற்றோர்கள் தங்களுக்கென்று இருந்த சிறு நிலத்தில் சிரமப்பட்டு வேலை செய்து ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் அவளுடைய ஃபீஸைக் கட்டினார்கள். முதலில் சிறிது காலம் மிகவும் சிரமப்பட்டாள். ஏழாம் வருடம் சற்று நிம்மதி உண்டானது. உயர்ந்த கிரேடு எதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அரசாங்க பள்ளிக்கூடத்திற்கு அழைக்கப்பட்ட தன்னுடைய அதே தகுதிகளைக் கொண்ட சிலரை அவளுக்குத் தெரியும். சொந்தக்காரர்களின் வசதி படைத்த சூழ்நிலைகளால் நல்ல பள்ளிக்கூடங்களில் போய்ச் சேர்ந்த வேறு சிலரையும் தெரியும். ஆனால், தாங்கக் கூடிய ஃபீஸைக் கொண்ட ஒரு பள்ளிக்கூடத்திற்கு அவளை மட்டும் யாரும் அழைக்கவில்லை. ஹாரம்பி பள்ளிக்கூடத்தின் கல்விக் கட்டணம் அவளுடைய பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர்வதற்கு அவளால் முடியவில்லை. அவள் வீட்டிலேயே இருந்துவிட்டாள். விவசாயம் செய்வதிலும், வீட்டு வேலைகள் செய்வதிலும் அவள் அவர்களுக்கு உதவினாள். அது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. காரணம்- கடந்த ஆறு வருடங்களாக அவள் தன்னுடைய பெற்றோரிடமிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு வாழ்க்கையை அல்லவா வாழ்ந்தாள்? கிராமத்து நாட்கள் இருள் நிறைந்ததாக இருந்தன. இடையில் அவ்வப்போது கராற்றினாவுக்கும் ந்யேரிக்கும் சென்று அவள் வேலை தேடிக் கொண்டிருந்தாள். "உனக்கு என்ன வேலை வேண்டும்? உனக்கு என்ன தெரியும்? டைப் அடிக்க தெரியுமா? ஷாட் ஹேண்ட் தெரியுமா?" -அலுவலகங்களில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான கேள்விகள். அவள் ஏமாற்றத்திற்குள்ளானாள். ந்யேரியில்தான் அவள் அவனைப் பார்த்தாள்- கறுப்பு நிற சூட்டும் சன் க்ளாஸும் அணிந்த நல்ல தோற்றத்தைக் கொண்ட ஒரு இளைஞன். ஒரு கடையில் நின்று கொண்டு அவன் ஃபான்டா குடித்துக் கொண்டிருந்தான். கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்த முகத்தையும் அவளுடைய பரிதாபமான நிலையையும் அவன் பார்த்தான். அவளிடம் உரையாடினான். அவன் நைரோபிலிருந்து வந்திருந்தான். வேலை தேடி விசாரிப்பது என்பது மிகவும் எளிதான வேலை. பெரிய நகரங்களில் வேலைக்கு எந்தவொரு பஞ்சமும் இல்லை. அவனால் உண்மையாகவே உதவ முடியும். அங்கு பயணம் செய்வது என்றால்...? சந்தோஷமான விஷயம்தான். அவனுக்கு க்ரீம் நிறத்தைக் கொண்ட ஒரு கார் சொந்தத்தில் இருந்தது. விடியும் நேரத்தைப் பற்றிய சந்தோஷமான எதிர்பார்ப்புகள் இருந்ததால், அந்த பயணம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அவர்கள் நைரோபியை அடைந்தார்கள். அவன் அவளை ஒரு டெரஸ் பாருக்கு அழைத்துச் சென்றான். பீர் பருகிக் கொண்டே அவர்கள் நைரோபியைப் பற்றி உரையாடினார்கள். நியான் விளக்கின் ஒளியில் குளித்துக் கொண்டிருந்த நகரத்தை அவளால் சாளரத்தின் வழியாகப் பார்க்க முடிந்தது. இங்குதான் எதிர்பார்ப்புகள்- அவள் நினைத்தாள்.


விடிகாலைப் பொழுது அவளுடைய வேதனைகளை இலேசாக்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக அந்த இரவு அவனுக்கு உரியதாக ஆனது. அவள் ஆழமான உறக்கத்திற்குள் மூழ்கிப் போய்விட்டாள். காலையில் கண் விழித்தபோது, க்ரீம் நிறத்தைக் கொண்ட காரில் அந்த மனிதன் அங்கு இல்லை. அதற்குப் பிறகு அவள் அவனை எந்தச் சமயத்திலும் பார்க்கவேயில்லை. இப்படித்தான் அவள் பரிமாறும் பெண்ணின் வாழ்க்கையை ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய பெற்றோரைப் பார்த்து ஒன்றரை வருடங்களாகிவிட்டன. பியாட்ரீஸ் அழுதுவிட்டாள்- மன ஏக்கங்கள் அதிகமாக நிறைந்த தேம்பல்கள்... அவமானங்களும், தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த வேதனைகளும் அவளுடைய மனதில் ஆழமான காயங்களை உண்டாக்கி விட்டிருந்தன. மது விடுதி கலாச்சாரத்தில் பங்கு பெறுவதற்கு எந்தக் காலத்திலும் அவளால் முடியாது. தன்னுடைய பாதையில் எங்காவது நல்ல விளைவின் நிறங்கள் மலரும் என்ற நம்பிக்கையுடன் அவள் இருந்தாள். ஆனால், அவள் தூண்டிலில் சிக்க வைக்கப்பட்டிருந்தாள். அவளுக்குத் தெரிந்த ஒரேயொரு வாழ்க்கை அதுதான். எனினும், அந்த வாழ்க்கையின் சட்டங்களையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு அவள் தயாராகவே இல்லை. அவள் தளர்ந்து போய்விட்டாள். விம்மல்களுடன் சேர்ந்து கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. திடீரென்று ஒரு ஏமாற்றத்தின் கரங்கள் அவளைச் சூழ்ந்தன. அவளுடைய விம்மல் சத்தங்கள் அங்கு நின்றுவிட்டன. அந்த மனிதன் தூங்கிவிட்டிருந்தான். அவனுடைய குறட்டைச் சத்தம் மிகவும் பயங்கரமானதாகவும் இடைவெளி இல்லாததாகவும் இருந்தது.

அசாதாரணமான ஒரு வெறுமை ஆக்கிரமித்துவிட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். வெறுப்பு கலந்த கசப்பான நீர் அவளுக்குள் அரும்பியது. அந்தத் தோல்வியைப் பார்த்து உரத்த குரலில் அழ வேண்டும்போல அவளுக்குத் தோன்றியது. தன்னிடம் கொடூரமாக நடந்து கொண்ட- குறைகளைப் பார்த்து கிண்டல் செய்து சிரித்த பல ஆண்களை அவள் பார்த்திருக்கிறாள்- அவை அனைத்தையும் அவள் அமைதியாக ஏற்றுக்கொண்டாள். "ஆனால் இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. கர்த்தரே... இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒவ்வொரு வாரமும் இந்த மனிதர்தானே சுமை முழுவதையும் என்மீது கொண்டு வந்து ஏற்றி வைத்தது?" அவன் அவளுடைய வேலைக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியும். மது புட்டிகள் மூலமும் பணத்தின் மூலமும் உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். ஆனால், இந்த அளவுக்கு கொடூரத்தன்மை... அவளுடைய இதய வேதனைகள் அவனுக்கு தாலாட்டுப் பாடலாக இருந்திருக்கின்றன. திடீரென்று அவளுக்குள் என்னவோ தோன்றி மறைந்தது. ஒன்றரை வருடங்களாக அவளுக்குள் இருந்த ஒட்டுமொத்த கோபங்களும் அவமானங்களுக்கு எதிரான ஒட்டுமொத்த வெறுப்புகளும் அந்த மனிதனுக்கு எதிராகத் திரும்பின.

தொடர்ந்து அவள் செய்த செயல்கள் அனைத்தும் நன்கு பழகிய ஒரு பெண்ணைப்போல இருந்தன.

அவள் அவனுடைய கண்களைத் தொட்டுப் பார்த்தாள். அவன் ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவனுடைய வறண்டு போயிருந்த கண்கள் உயிரற்றுப் போய் குழி விழுந்து காணப்பட்டன. அவனுடைய தலையை உயர்த்தி, அடியிலிருந்து தலையணையை எடுத்து அவள் ஆராய்ந்து பார்த்தாள். பணத்தை வெளியே எடுத்து ஐந்து நோட்டுகளை எண்ணி தன்னுடைய பிரேஸியருக்குள் சொருகினாள்.

ஏழாம் நம்பர் அறையை விட்டு மெதுவாக அவள் வெளியே வந்தாள். அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் போகக் கூடிய இடத்திற்கு அவள் செல்லவில்லை. அவனுடைய குறட்டைச் சத்தம் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையில் இருப்பதற்கும் அவளால் முடியாது. ந்யாகுத்தியின் அறையை நோக்கி தான் நடந்து செல்வதாக அவளுக்குத் தோன்றியது. பியாட்ரீஸ் கதவைத் தட்டினாள். முதலில் பதில் எதுவும் வரவில்லை. தொடர்ந்து ந்யாகுத்தியின் உறக்கம் கலந்த குரல் மழைக்கு மத்தியில் சத்தமாக கேட்டது.

"யார் அது?''

"நான்தான்... கொஞ்சம் திற.''

"யார்?''

"பியாட்ரீஸ்...''

"இந்த இரவு நேரத்திலா?''

"தயவு செய்து...''

விளக்குகள் எரிந்தன. கதவுகள் திறக்கப்பட்டன. அவள் உள்ளே நுழைந்தாள். பியாட்ரீஸூம் ந்யாகுத்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். ந்யாகுத்தி மிகவும் அழகான ஒரு இரவு உடையை அணிந்திருந்தாள்.

"பியாட்ரீஸ்... அங்கே என்ன பிரச்சினை?''

இரக்கம் கலந்த குரலில் இறுதியில் ந்யாகுத்தி கேட்டாள்.

"நான் மிகவும் தளர்ந்து போய் இருக்கிறேன். நான் இங்கே கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டுமா? பிறகு... ந்யாகுத்தி, உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்...''

அவளுடைய குரலில் அப்போது உறுதியும் அழுத்தமும் இருந்தன.

"பிறகு... என்ன நடந்தது?''

"உன்னிடம் நான் ஒரே ஒரு விஷயத்தைக் கேட்கணும்னு நினைக்கிறேன், ந்யாகுத்தி.''

அப்போது அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள். தொடர்ந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர்கள் இருவரும் கட்டிலில் போய் உட்கார்ந்தார்கள்.

"ந்யாகுத்தி, நீ ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தாய்?''

பியாட்ரீஸ் கேட்டாள். மவுனம் நிறைந்த இன்னொரு நிமிடம். ந்யாகுத்தி சிந்தித்துக் கொண்டிருந்தாள். பியாட்ரீஸ் பதிலுக்காக காத்திருந்தாள். இறுதியில் வெளியே வந்த ந்யாகுத்தியின் குரலில் நடுக்கம் இருந்தது.

"அது ஒரு நீளமான கதை, பியாட்ரீஸ். என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் பெரிய பணக்காரர்களாகவும் உண்மையான கிறிஸ்துவர்களுமாக இருந்தார்கள். நாங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகளில் வாழ்ந்தோம். வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து நடக்கக்கூடாது... அவர்களுடைய சடங்குகளில் பங்கு பெறக்கூடாது... எதை, எப்போது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்குக்கூட சட்டங்கள்... நடக்கும்போது ஒரு கிறிஸ்துவப் பெண்ணைப்போல நடக்க வேண்டும். ஆண் பிள்ளைகளைப் பார்க்கவே கூடாது. கட்டுப்பாடுகள்... கட்டுப்பாடுகள்... எங்கு பார்த்தாலும் கட்டுப்பாடுகள்... ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வீட்டுக்குச் செல்வதற்கு பதிலாக, நானும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து ஓடி வந்துவிட்டோம்.

நான் வீட்டுக்குச் சென்று நான்கு வருடங்களாகி விட்டன.''

பேரமைதி நிலவிய ஒரு நிமிடம். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.

"இன்னொரு கேள்வியைக் கேட்கணும், ந்யாகுத்தி, நீ இதற்கு பதில் கூற வேண்டும் என்றில்லை. நீ என்னை வெறுக்கிறாய்... என்னை ஒதுக்குகிறாய் என்று எனக்கு எப்போதும் தோன்றுகிறது, ந்யாகுத்தி:''

"இல்லை... இல்லை பியாட்ரீஸ். எந்தச் சமயத்திலும் உன்னை நான் வெறுத்ததே இல்லை. எந்தக் காலத்திலும் நான் யாரையும் ஒதுக்கியதில்லை. எனக்கு அந்த விஷயத்தில் ஆர்வமும் இல்லை. ஆண்கள்கூட என்னை அசைத்ததில்லை. எனினும், நிமிட நேர சந்தோஷத்துக்காக நான் ஆசைப்படுகிறேன். என்னை நானாக ஆக்கும்... வழி தவறிய கண்களின் ஆறுதல் எனக்குத் தேவைப்படுகிறது. ஆனால், நீ... நீ... இவற்றை எல்லாம்விட மேலானவள். என்னிடம் இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது... என்னிடம் இல்லாத என்னவோ உன்னிடம் இருக்கிறது, பியாட்ரீஸ்...''


கண்ணீரை அடக்குவதற்கு பியாட்ரீஸ் மிகவும் சிரமப்பட்டாள்.

நைரோபிக்குச் செல்லும் ஒரு பேருந்தில் மறுநாள் காலையில் அவள் ஏறினாள். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, அவள் பஜார் தெருவின் வழியாக நடந்தாள். பிறகு அரசாங்க தெருவில் ஹுசன் சுலைமான் தெருவிற்கு அருகில் இருந்த ஒரு கடையில் அவள் சில காலுறைகளை வாங்கினாள். அவற்றில் ஒரு ஜோடியை அணிந்தாள். ஒரு புதிய ஆடையையும் வாங்கி அணிந்தாள். பேட்டா காலனி கடைக்குள் நுழைந்து, பெரிய கீழ்ப்பகுதியைக் கொண்ட ஒரு செருப்பு வாங்கினாள். தேய்ந்து போயிருந்த பழைய செருப்பைத் தூக்கியெறிந்து விட்டு புதிய செருப்பை அணிந்தாள். காதில் வளையங்களை அணிந்தாள். கண்ணாடியில் அவள் தன்னுடைய புதிய உருவத்தைப் பார்த்தாள். திடீரென்று வாழ்க்கையில் அன்று வரை அனுபவித்தே இராத ஒரு கடுமையான பசியை அவள் உணர்ந்தாள். மோத்தி மஹாலுக்கு முன்னால் தயங்கி நின்றாள். பிறகு... நடந்து ஃப்ரான்ஸேக்குள் நுழைந்தாள். ஆண்களின் பார்வை அவளை நோக்கித் திரும்புவதற்கு போதுமான ஒரு பிரகாசம் அவளின் கண்களில் தெரிந்தன. அது அவளை உணர்ச்சிவசப்படச் செய்தது. மூலையிலிருந்த ஒரு மேஜையில் போய் உட்கார்ந்து, அவள் இந்தியன் உணவிற்கு ஆர்டர் கொடுத்தாள். ஒரு மனிதன் தன்னுடைய மேஜையிலிருந்து எழுந்து, அவளுடன் வந்து சேர்ந்து கொண்டான். அவள் அந்த மனிதனைப் பார்த்தாள். அவனுடைய கண்கள் நன்கு பிரகாசித்துக் கொண்டிருந்தன. கறுப்பு நிறத்தில் சூட் அணிந்திருந்த அவனுடைய கண்கள் மிகவும் ஆர்வத்துடன் உரையாடிக் கொண்டிருந்தன. மது வாங்கிக் கொடுத்து அவளுடன் உரையாடலில் ஈடுபடுவதற்கு அவன் முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவன் மேஜைக்கு அடியில் அவளுடைய முழங்காலைத் தொட்டான். பிறகு... மேல் நோக்கி... மேல் நோக்கி... தொடை வரை... அவள் அதற்கு அவனை அனுமதித்தாள். பிறகு... திடீரென்று அவள் தன்னுடைய முழுமையாக சாப்பிடாத உணவையும் தொட்டுப் பார்க்காத மதுவையும் பொருட்படுத்தாமல், வெளியேறி நடந்தாள். அவன் பின் தொடர்ந்து வருவதை திரும்பிப் பார்க்காமலே அவள் தெரிந்துகொண்டாள். சிறிது தூரத்திற்கு அவன் அவளைப் பின்தொடர்ந்தான். சிரிப்பு வந்தாலும், ஒரு முறைகூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்கு நம்பிக்கை விட்டுப் போய்விட்டது. அவனை ஒதுக்கிவிட்டு, அவள் ஒரு கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். திரும்பிச் செல்லும்போது, இல்மார்க்கிற்குச் செல்லும் பேருந்தில், ஆண்கள் அவளுக்கு இருப்பிடம் அளித்தார்கள். ஒரு உரிமை என்பதைப் போல அவள் அதை ஏற்றுக்கொண்டாள்.

ட்ரீ டாப் பாரில் அவள் நேராக கவுன்டரை நோக்கிச் சென்றாள். பணக்காரர்களின் வழக்கமான ஆரவாரங்கள் சுற்றிலும் பலமாக கேட்டுக்கொண்டிருந்தன. அவளுடைய வருகையைக் கண்டதும், சிறிது நேரத்திற்கு அவர்களுடைய உரையாடல்கள் நின்றுபோய்விட்டன. அவர்களுடைய ஆபாசம் நிறைந்த கண்கள் அவளைப் பின் தொடர்ந்து பயணித்தன. இளம்பெண்கள் அவளையே வெறித்துப் பார்த்தார்கள். ந்யாகுத்தியால்கூட தன்னுடைய சொந்த வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. அவர்கள் எல்லாருக்கும் பியாட்ரீஸ் மது வாங்கிக் கொடுத்தாள். மேனேஜர் ஆர்வத்துடன் அவளுக்கு அருகில் வந்து ஒரு உரையாடல் நடத்துவதற்கு முயற்சித்தான். அவள் எதற்காக வேலையை விட்டாள்? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? கவுன்டரில் ந்யாகுத்திக்கு உதவியாக இருந்து கொண்டு வேலை செய்வதற்கு அவள் தயாரா? ஒரு பரிமாறும் பெண் ஒரு குறிப்புடன் வந்தாள். தங்களுடைய மேஜையில் பங்குகொள்ள அவள் தயாராக இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு பணக்காரன் விரும்புகிறான். அந்த இரவு வேளையில் அவள் சுதந்திரமாக இருக்கிறாளா என்ற ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு ஏராளமான கடிதங்கள் அவளைத் தேடி வந்தன. நைரோபிக்கு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பயணமாவது... ஆனால், கவுன்டரை விட்டு பியாட்ரீஸ் அசையவே இல்லை. அவர்கள் அளித்த குளிர்பானங்களை ஒரு உரிமையைப் போல அவள் அனுபவித்தாள். புதிய தைரியமும் நம்பிக்கையும் அவளிடம் வந்து சேர்ந்தன.

அவள் ஒரு ஷில்லிங் எடுத்து க்ராமஃபோனின் நீளமான ஊசிக்கு அருகில் போட்டாள். ராபின்ஸன் மவான்கியின் "ஹன்யுவா மஷாம்பானி" என்ற பாடல் சத்தமாகக் கேட்க ஆரம்பித்தது. நகரத்திலிருக்கும் பெண்களிலிருந்து வேறுபட்டு, வயல்வெளிகளில் வேலை செய்யும் ஒதுக்கப்பட்ட பெண்களுக்காக அவன் பாடினான். தொடர்ந்து அவள் ஒரு காமரூவையும், டிகெயையும் பாடச் செய்தாள். ஆண்கள் அவளுடன் சேர்ந்து நடனமாட விரும்பினாலும், பியாட்ரீஸ் அவர்களைச் சட்டை செய்யாமல் இருந்தாள். ஆனால், தன்னை நோக்கி இருந்த அவர்களுடைய காம வெளிப்பாடுகளை அவள் முழுமையாக ரசித்தாள். இன்னொரு பாடலின் இசையுடன் சேர்ந்து அவள் தன்னுடைய இடுப்பை அசைத்தாள். அவளுடைய சரீரம் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமலிருந்தது. அவள் சுதந்திரமானவளாக இருந்தாள். அவள் உணர்ச்சிகளையும் சந்தோஷங்களையும் முழுமையாக ருசித்து சுவைத்தாள்.

ஆறு மணி ஆனபோது அந்த லாரிக்காரன் திடீரென்று பாருக்கு இரைச்சலுடன் வந்தான். அப்போது அவன் தன்னுடைய மிலிட்டரி ஓவர்கோட்டை அணிந்திருந்தான். அவனுக்குப் பின்னால் ஒரு போலீஸ்காரன் நின்றிருந்தான். அவர்கள் சுற்றிலும் பார்த்தார்கள். எல்லாரின் கண்களும் அவனை நோக்கிச் சென்றன. பியாட்ரீஸ்  தன்னுடைய நடனத்தில் மூழ்கிவிட்டிருந்தாள். க்ராமஃபோனில் தன்னுடைய சந்தோஷம் நிறைந்த நிமிடங்களில் மூழ்கிப்போயிருந்த இளம்பெண்ணைப் பார்த்தபோது, முதலில் அவனுக்கு அவள்தான் பியாட்ரீஸ் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவன் வெறி பிடித்தவனைப்போல கத்தினான். "அதோ... அவள்தான் அந்தப் பெண்... திருடி... திருடி...''

மனிதர்கள் தாங்கள் உட்கார்ந்திருந்த இடங்களுக்குச் சிதறினார்கள். போலீஸ்காரன் விலங்கை மாட்டியபோது, பியாட்ரீஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாசல் கதவிற்கு அருகில் சென்றபோது மட்டும் அவள் தலையைத் திரும்பி, நாக்கை நீட்டி துப்பினாள். பிறகு... போலீஸ்காரனுக்குப் பின்னால் வெளியேறி நடந்தாள்.

பாரில் எந்தவித சத்தமும் இல்லாத பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. ரத்தமே சிந்தாமல், அருமையாக நடந்து முடிந்த கொள்ளையைப் பற்றி யாரோ சொன்ன தமாஷ், சிரிப்பலைகளாக மாறியது. அவர்கள் அவளைப் பற்றி பேசினார்கள். அவளுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என்று சிலர் கூறினார்கள். "இந்த மாதிரியான பெண்களைப் பற்றி" சிலர் வெறுப்புடன் பேசினார்கள். "எல்லா வகையான சொத்து திருட்டுகளுக்கும் மரண தண்டனை அளிக்கக் கூடாதா?" சிலர் குற்றச்செயல்கள் அதிகமாக நடந்தது கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.

மெதுவாக, லாரிக்காரன் நாயகன் இடத்திற்கு உயர்ந்தான். பலர் பல வகையான கேள்விகளுடன் அவனைச் சூழ்ந்தார்கள். கதை முழுவதையும் கூறும்படி அவர்கள் அவனிடம் கேட்டுக்கொண்டார்கள். சிலர் அவனுக்கு மது வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களுடைய கவனம் நிறைந்த பேரமைதி அங்கீகரித்ததை வெளிப்படுத்தக்கூடிய சிரிப்பாக மாறியது. சொத்துகளுக்கு எதிராக அடக்கப்பட்ட வன்முறை, தற்காலிகமாவது அவர்களை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக மாற்றியது. அன்று முதல்முறையாக அந்த மனிதனின் கதையைக் கேட்பதற்கு அவர்கள் தயாரானார்கள்.

ஆனால், கவுன்டருக்குப் பின்னால் ந்யாகுத்தி அழுதுகொண்டிருந்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.