
சுராவின் முன்னுரை
பி.பத்மராஜன் (P.Padmarajan) எழுதிய ‘நன்மைகளின் சூரியன்’ (Nanmaigalin Suriyan) நான் மொழிபெயர்த்த சிறந்த நூல்களில் ஒன்று.
1945-ஆம் ஆண்டில் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தில் பிறந்த பி.பத்மராஜன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய சிறந்த புதினங்கள் பல திரைப்படங்களாக வடிவமெடுத்திருக்கின்றன.
பத்மராஜனின் முதல் நாவலான ‘நட்சத்திரங்களே காவ’லுக்கு 1972-ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பரதன் இயக்கிய முதல் படமான ‘பிரயாண’த்திற்கு திரைக்கதை எழுதியவர் பத்மராஜன்தான். 1979-ஆம் ஆண்டில் பத்மராஜன் ‘பெருவழியம்பலம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘ஓரிடத்தொரு பயில்வான்’, ‘கள்ளன் பவித்ரன்’, ‘கூடெவிடெ?’, ‘திங்களாழ்ச்ச நல்ல திவசம்’, ‘நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்’, ‘தேசாடனக்கிளி கரயாரில்ல’, ‘அரப்பட்ட கெட்டிய கிராமத்தில்’, ‘தூவானத் தும்பிகள்’, ‘மூணாம் பக்கம்’, ‘அபரன்’, ‘இன்னலெ’, ‘ஞான் கந்தர்வன்’ ஆகிய திரைப்படங்களை பத்மராஜன் இயக்கினார். அனைத்துப் படங்களும் மிகச் சிறந்த படங்களே.
இவை தவிர, ‘தகர’, ‘சத்ரத்தில் ஒரு ராத்ரி’ போன்ற 18 திரைப்படங்களுக்கு பத்மராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். பல குறிப்பிடத்தக்க பரிசுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன.
‘நன்மைகளின் சூரியன்’ புதினத்தை மலையாளத்தில் படிக்கும்போதே, அதை தமிழில் மொழிபெயர்க்கத் தீர்மானித்துவிட்டேன். இப்புதினத்தின் கதாநாயகியான டயானாவை யாரால் மறக்க முடியும்?
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை. காலையில் கண் விழித்தபோது வெளியே மழை விழுந்து கொண்டிருந்தது. கடந்த இரவின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். மதியம் சற்று அது நின்றிருந்தது. மெல்லிய வெயில் தோல்வியடைந்த உணர்வுடன் நகர்ந்து வந்து இலைகளைக் காய வைப்பதை நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். கீழேயிருந்த புல்பரப்பில் பிரகாசங்கள் தெரிந்தன. மரங்கள் குளித்து முடித்து துவட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அப்போது மீண்டும் மழை வந்தது. நீர்த் துளிகள் மறைந்து விட்டிருந்த இலைகளின் வழியாக மீண்டும் நீர் வழிந்தது. என்னுடைய அறையின் கண்ணாடி சாளரத்தின் வழியாக மழை நீர் வாய்க்கால்கள் அவற்றின் ஓட்டத்தை மீண்டும் ஆரம்பித்திருந்தன. கதவுகளின் இடைவெளிகள் வழியாக பலமான மழைக்காற்று நுழைந்து வந்தது.
சாப்பிட்டு முடித்து மீண்டும் தூங்குவதற்காகப் படுத்தேன். மழையின் இசையைக் கேட்டுக் கொண்டே படுத்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமானது. மிகவும் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்ட ஒரு பாடலைக் கேட்கக்கூடிய சுகம் இருக்கும். நான் அதற்கு எனக்கென்று இருக்கும் ஒரு விளக்கத்தைக் கொடுத்தேன். பயங்கரமான காடுகளின் வழியாக தனியாக அலைந்து திரியும் ஒரு மரம் வெட்டுபவன். அவன் தான் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் ஒவ்வொரு முறை வெட்டிப் பார்க்கிறான். கோடரி மரத்தில் விழும்போது காடு முழுவதும் கேட்கும். அப்போது மிகவும் தூரத்தில் ஒரு ஆரவாரம் கேட்கிறது. மரக்கிளைகளுக்கு மத்தியில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், அவனுக்கு அந்த சத்தத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. குதிரைகளின் குளம்படிகள் உறுதியான தரையில் தாளலயத்துடன் பதிக்கும் சத்தம்- டுப், டுப், டுப்... சத்தம் நெருங்கி நெருங்கி வருகிறது. ஒரு கூட்டம் குதிரை வீரர்கள்... குதித்துக் கொண்டு வரும் அவர்களுக்கு மத்தியில், ஒரு குதிரை மேல் கட்டப்பட்ட நிலையில் ஒரு அழகான பெண்... அவளைப் பிடித்துக் கொண்டு இன்னொரு ஆளும் அந்த குதிரையின்மீது இருக்கிறான். அழகான இளம் பெண்ணின் வேதனைக் குரல் காடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பரிதாபமான முனகல் சத்தம். குதிரைகளின் குளம்படிகள் அதை மூடிக் கொண்டு உரத்து ஒலிக்கின்றன. கோபத்தை மரம் வெட்டுபவன் அடக்க முடியாமல் அருகில் இருந்த மரத்தை நோக்கி கோடரியை ஓங்குகிறான். மீண்டும் அந்த முனகல். மீண்டும் டுப், டுப்... அது அதே மாதிரி இடைவெளி விட்டு விட்டு ஒரு தனியான தாளத்தில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கண் விழித்தபோது மழை நின்று விட்டிருந்தது. நான் ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தேன். அந்த குதிரை வீரர்கள் எங்கு போனார்கள்? அழகான பெண் எங்கே? மழையின் இசை எங்கே? எதுவும் இல்லை. என்னைச் சுற்றிலும் அமைதி மட்டும்... எல்லாரும் போய்விட்டார்கள்.
மழை நிற்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? நான் ஆசைப்பட்டேன். பகலிலும் இரவிலும், இரவிலும் பகலிலும் நிற்காமல் பெய்திருந்தால் எப்படி இருக்கும்? மேகங்களின் கண்ணீர் பூமியில் விழும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு, அவற்றின் இசையைக் கேட்டுக் கொண்டு, மென்மையாக இருக்கும் மெத்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குப்புறப்படுத்திருக்க என்னால் முடிந்திருந்தால் எப்படி இருக்கும்?
சாளரத்தைத் திறந்து விட்டேன். வெளியே குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மரங்களுக்கு மேலே வானம் அஸ்தமனத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
என்னுடைய கண்கள் நிறைந்தன. இது எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. காரணமே இல்லாமல் பல வேளைகளில் நான் அழுவதுண்டு. யாராவது பார்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அப்பா அவ்வப்போது கூறுவார்: "பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாமலே பைத்தியம் இருக்கும். அப்போது காரணமே இல்லாமல் அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்கள். கதறி அழுவார்கள். அன்பு செலுத்துவார்கள். வெறுப்பார்கள். எல்லாவற்றையும் செய்வார்கள். அந்த வயது கடக்கும்போதுதான் தான் செய்தவை அனைத்தும் முட்டாள்தனமாக இருந்தன என்பதே அவர்களுக்குத் தெரியவரும்."
"அப்போது அவர்களுக்கு வருத்தம் தோன்றாதா அப்பா?" -நான் கேட்டேன்.
"கட்டாயம் வருத்தப்படுவார்கள். தாங்கள் நடந்து கொண்டதைப் பற்றி கொண்ட வெட்கத்தையும், வருத்தத்தில் உண்டான குற்ற உணர்வையும்தான் மற்றவர்கள் "அடக்கமும் ஒழுக்கமும்" என்று குறிப்பிடுகிறார்கள்."
"அப்படியென்றால் எனக்கு இன்னும் அந்தப் பருவம் தாண்டவில்லை. அப்படித்தானே?" -நான் கேட்டேன். எந்தச் சமயத்திலும் இந்த வயதைத் தாண்டவே கூடாது என்ற ஆழமான ஒரு பிரார்த்தனையும் எனக்குள் இருந்தது.
"இல்லை." அப்பா சொன்னார்: "உன்னிடம் அடக்கமும் ஒழுக்கமும் வந்துவிட்டால், பிறகு எனக்கு உன்னைப் பிடிக்காமல் போய்விடும். உன்னுடைய இந்தக் குறும்புத்தனங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பக்குவம் வந்துவிட்டால் நீ என்னிடமிருந்து விலகிப் போய்விடுவாய் அல்லவா?"
"இல்லை இல்லை... அப்பா... நான் எந்தக் காலத்திலும் உங்களை விட்டு விலகிப் போக மாட்டேன்." நான் அவருடைய தோளில் கையைச் சுற்றி வைத்துக் கொண்டு சொன்னேன். என்னுடைய கண்கள் நிறைந்திருந்தன.
எனக்கு இப்போதே அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அவர் வெளியே போயிருப்பார் என்ற விஷயம் ஏறக்குறைய எனக்குத் தெரியும். எனினும், நான் முடிந்தவரையில் வேகமாகப் படிகளில் இறங்கிக் கீழ்நோக்கி ஓடினேன். இல்லை. அப்பா போய்விட்டிருந்தார். அவருடைய காரைக் காணோம். ஷெட்டில், எனக்காக அவர் வாங்கித் தந்திருந்த வெள்ளை நிற ஃபியட் கார் மட்டும் நின்றிருந்தது.
எனக்கு என்மீதே வெறுப்பு தோன்றியது. இந்த அளவிற்கு அதிக நேரம் எதற்காக உறங்கினேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். தேவையில்லை. அதனால்தானே அப்பாவைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இனி அவர் திரும்பி வரும்போது, இரவில் அதிக நேரம் ஆகியிருக்கும். க்ளப்பிற்குத்தான் போயிருப்பார் என்றால், இன்று இனிமேல் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பே வேண்டாம். சீட்டு விளையாட்டு முடியும்போது நேரம் அதிகமாக ஆகிவிடும். ஒரு கையின் விரல்களை எண்ணிக் கணக்கிடக்கூடிய ஏதாவது ஒரு நேரம் அப்போது ஆகியிருக்கும்.
நான் வெறுமனே தோட்டத்தில் நடந்தேன். செடிகள் அனைத்தையும் மழை அழித்துவிட்டிருக்கிறது. பூக்கள் நிறத்தை இழந்தும் காம்பு ஒடிந்தும் கிடந்தன. இதழ்கள் அனைத்தும் உதிர்ந்து போன ஒரு மஞ்சள் நிற ரோஜா மலர் என்னை மிகவும் ஈர்த்தது. கீழே புல்வெளியில் மழை நீரின் உதைகள் விழுந்து கீழே விழுந்த பூக்களின் இதழ்கள்...
குனிந்து உட்கார்ந்து, இதழ்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து உள்ளங்கையில் வைத்தேன். ஒரு கூட்டம் பிஞ்சுக் குழந்தைகளின் இறந்த உடல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. எதுவும் செய்ய முடியாமல்- எந்தவித அசைவும் இல்லாமல் இறந்து கிடக்கும் சின்னஞ் சிறு குழந்தைகள்.
என்னால் கவலையை அடக்க முடியவில்லை. நான் அந்தப் பூக்களின் இதழ்களைக் கண்களில் ஒற்றினேன். அவற்றுக்கு வாசனையோ மென்மைத்தனமோ நீடித்திருக்கவில்லை. பாவம் என்று தோன்றியது. நான் அவற்றை முத்தமிட்டேன். அப்போது என்னுடைய கண்களில் இருந்து இரண்டு மூன்று கண்ணீர்த் துளிகள் அவற்றின் மீது உதிர்ந்து விழுந்தன. "மேரி வயோலா டயானா!" -பூக்களின் இதழ்கள் என்னிடம் கூறுவதை நான் கேட்டேன்: "சின்ன அழகியே! உன்னுடைய இரக்கத்திற்கு நன்றி... நன்றி...!"
"ரோஜா மலரின் பிள்ளைகளே..." நான் முணுமுணுத்தேன். அவை அனைத்தும் என்னுடைய வார்த்தைகளுக்காகக் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு இருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. அவற்றின் கவனம் வேறு எதை நோக்கியாவது திரும்புவதற்கு முன்னால் நான் வேகமாகச் சொன்னேன்: "நானும் உங்களைப் போல யாரும் இல்லாதவள்தான். அனாதைப் பிள்ளைதான். தாயும் தந்தையும் இல்லாதவள்தான். அப்பா என்னை எடுத்து வளர்க்காமல் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல மண்ணில் விழுந்து காணாமல் போயிருப்பேன்."
பூக்களின் இதழ்கள் தலையை ஆட்டிக் கொண்டு அன்புடன் புன்னகைத்தன. அவை என்னிடம் என்னவோ கூறத் தொடங்குவதாக இருந்தது. அப்போது உள்ளேயிருந்து ஆயா அழைப்பது கேட்டது: "டயானா.''
அந்த ரோஜா மலர்களை அங்கே விட்டுவிட்டுச் செல்வதற்கு எனக்கு மனமில்லை. ஆயா பார்ப்பதற்கு முன்னால் நான் அவற்றை ப்ளவுஸுக்குள் வைத்துக் கொண்டேன். தொடர்ந்து மழை காரணமாக பாதிப்படைந்திருந்த தோட்டத்தின் வழியாக ஆயாவை நோக்கி ஓடிச் சென்றேன். அவள் எனக்கு நேராக தேநீரை நீட்டினாள். என்னை அங்கு எல்லா இடங்களிலும் தேடியதாக அவள் புகார் சொன்னாள். புடவையை அணிந்து கொண்டு, வாசலைத் தாண்டிச் சென்றதற்கு சிறிய அளவில் திட்டவும் செய்தாள்.
எனக்கு ஆயாவைப் பிடிக்கும். ஆயா பாவம். என்னுடைய தலையில் மழைத்துளிகள் விழுந்துவிடப் போகிறதோ என்று அவள் பயப்படுகிறாள். காய்ச்சல் வந்துவிட்டால் அவளுக்குத்தான் கஷ்டம்.
முன்பு ஒரு முறை எனக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் வந்து விட்டால் மிகவும் சுவாரசியமாக இருக்கும். மூக்கில் இருந்து அடர்த்தியான நீர் வழிவதை நான் எந்தச் சமயத்திலும் துடைத்து நீக்குவது இல்லை. உதடுகளுக்கு மேலே யாரோ கிச்சுக் கிச்சு மூட்டுவதைப் போல தோன்றும். மூக்கைத் துடைப்பது என்பது ஆயாவின் வேலையாக இருந்தது. அவளுக்குத் தெரியாமல் நான் எங்காவது மறைவாக இருக்கும் மூலைக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, மூக்கில் இருந்து இறங்கும் தும்பிகளின் தொடலை அனுபவிக்கிறேன். சுவாசத்தின் போக்கை இப்படியும் அப்படியுமாக மாற்றி, அவற்றுக்கு அசைவை உண்டாக்குகிறேன். அப்போது மேலும் சுவாரசியம் தோன்றும். ஆனால், ஆயா விடமாட்டாள். அவள் எப்படியும் கண்டு பிடித்து, எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் சுத்தமான ஒரு கைக்குட்டையால் என்னுடைய செல்லக் குழந்தைகளைத் துடைத்துவிடுவாள். பிறகு கூறுவாள்: "ஏன் இப்படி நடந்து கொள்கிறாய், டயானா? சின்ன குழந்தையைப் போல..."
"நான் சின்ன குழந்தைதான்"- நான் கூறுவேன்.
"ஆமாம்... ஆமாம்..." -ஆயா கூறுவாள்: "உனக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டது. எல்லாரின் கண்களிலும் நீ வளர்ந்த பெண்ணாகத் தெரிகிறாய்."
அதைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவம்தான். தான் வளர்ந்திருக்கிறோம் என்பதையும், ஒரு பெண்ணாக தன்னை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் வேறொரு ஆள் கூறிக் கேள்விப்படும்போது, சந்தோஷப்படாதவளாக ஒரு பெண்கூட இருக்க மாட்டாள். ஆனால், சிறிது நேரம் கழித்து, தன்னை யாரும் சிறு பெண்ணாகப் பார்க்க மாட்டார்கள் என்று தெரியவரும்போது அவர்களுக்கு வருத்தமும் ஏமாற்றமும் தோன்றும். ஒரு ஆளுக்கு முன்பாவது சிறு குழந்தையாக ஆகாத எந்த ஒரு பெண்ணுக்கும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
காலியான காப்பி பாத்திரத்தை வாங்கிக் கொண்டு ஆயா கேட்டாள்: "நீ வெளியே போறியா?''
"இல்லை.''
"அப்படியென்றால் குளி. நீர் சூடாக இருக்கு.''
"வேண்டாம். நான் குளிக்கல.'' நான் சொன்னேன்: "எனக்கு குளிக்க வெறுப்பாக இருக்கு.''
"என்ன சொன்னே?'' ஆயா என்னைக் குளிக்க வைத்துவிட்டுத்தான் அடங்குவாள் என்று தோன்றியது.
அடுத்த நிமிடம் நான் சொன்னேன்: "குளிப்பதற்கு நேரம் இல்லை. வெளியே போகணும். ஒன்றிரண்டு தோழிகளைப் பார்க்கணும்.''
"பிறகு... வெளியே போகலைன்னு சொன்னே?'' ஆயா கேட்டாள்: "அது ஒரு பொய்.'' நான் அழகாகச் சிரித்தேன். ஆயாவும் என்னுடன் சேர்ந்து சிரிப்பதைப் பார்த்தேன்.
எனக்கு ஏராளமான சிரிப்புகளைத் தெரியும். மேலோட்டமான சிரிப்பு, வெறுக்கும் ஆளைப் பார்க்கும்போது அவனுக்கு மட்டுமே வெறுப்பைப் புரிய வைக்கும் உதடுகளைப் பிரிக்காத சிரிப்பு, சத்தம் உண்டாகும்படி வெளிப்படுத்தும் சிரிப்பு, தேடுகிற நேரத்தில் தோழிகள் கிடைக்கும்போது வாய் முழுவதையும் திறந்து ஆர்ப்பாட்டமாய் சிரிக்கும் சிரிப்பு, அப்பாவிற்காகத் தனிப்பட்ட முறையில் சிரிக்கும் சிரிப்பு, ஆயாவிற்காக வேறொன்று, பரிதாபச் சிரிப்பு, அழகான சிரிப்பு, பாசச் சிரிப்பு- இப்படி எவ்வளவோ சிரிப்புகள். இவை அனைத்தையும் நான் நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் பார்த்துப் பயன்படுத்துகிறேன்.
நான் ஒரு பாவம் என்று எனக்குத் தோன்றியது. என்னை நானே ஒரு புத்திசாலிப் பெண் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆடை அணிந்து காரில் கிளம்பும்போது நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: "மிஸ் மேரி வயோலா டயானா! நீ ஒரு முட்டாள். மற்ற ஆங்கிலோ இந்திய இளம் பெண்களைப் போல நீயும் ஒரு முட்டாள்தான். முட்டாள்களின் அரசி. மடைச்சி. சுத்தமே இல்லாதவள்!"
இந்த நகரத்தின் மழைக்கு, வேறு எந்த இடத்திலும் இல்லாத ஒரு தனித்தன்மை இருக்கிறது. என்னுடைய கருத்து சரியாக இருக்க வேண்டும் என்றில்லை. காரணம்- ஒவ்வொரு இடத்தில் பெய்யும் மழைக்கும் அதற்கே உரிய சிறப்புத் தன்மை இருக்கும். எனினும், இங்கு பெய்யும் மழை ஒரு உதவியைச் செய்கிறது. சாலை முழுவதையும் கழுவித் துடைத்து சுத்தம் செய்து விடுகிறது.
ஆட்கள் இல்லாத சாலைகளின் வழியாக நான் வெறுமனே காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். வானம் மீண்டும் வெடிப்பதற்குத் தயாராக இருப்பதைப் போல தோன்றியது. எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம். மழைக்கு பயந்ததால் இருக்க வேண்டும், தெருக்களில் ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள். அலுவலகத்தை விட்டுச் செல்பவர்களின் கூட்டம் முடிந்து விட்டிருந்தது.
எனக்கு அதிகமான உற்சாகம் தோன்றியது. ஆட்கள் அதிகமாக இருக்கும் சாலையின் வழியாகக் காரை ஓட்டிச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. இளைஞர்கள் வெறித்துப் பார்ப்பார்கள். மோட்டார் சைக்கிள்களில் செல்லும் கல்லூரி மாணவர்களில் சிலர் வெறுமனே காருக்குப் பின்னால் வருவார்கள். யாரும் இல்லாத இடத்தை அடையும்போது வேகத்தை அதிகரித்து காருக்கு அருகில் வந்து, "லிஃப்ட் தரமுடியுமா?" என்று கேட்பார்கள். சிலர் வெறுமனே மோசமான வார்த்தைகளை உதிர்ப்பார்கள். அந்த மாதிரியான விஷயங்கள் எனக்குப் பிடிக்காது.
இதைப் போன்ற பயணங்கள் மிகவும் சந்தோஷமானது. வீசியடிக்கும் குளிர்ந்த காற்று, இரவை நோக்கிச் சாயும் மாலை, முன்னால் இருக்கும் கண்ணாடிமீது பிடிவாதத்துடன் வந்து விழுந்து உடையும் பிராணிகள். மேலே இடிச் சத்தமும் மின்னலும். குளிர்ந்து போயிருக்கும் சாலையில் டயர் உரசும்போது எழும் தாளலயங்களுடன் உள்ள இசை. ஸ்பீடா மீட்டரில் மேலே மேலே போய்க் கொண்டிருக்கும் நீளமான ஊசி. இதயத்தில் அமைதி, குளிர்ச்சி.
சாலையின் அருகில் தனியாக, நடுங்கி நடுங்கி நின்று கொண்டிருக்கும் ஒரு பூமரத்திற்குக் கீழே நான் காரை நிறுத்தினேன். யாராவது பார்க்கிறார்களா என்று நான்கு பக்கங்களிலும் பார்த்தேன். யாருமில்லை. சற்று முன்பு கடந்து சென்ற ஒரு மோட்டார் சைக்கிள்காரன் அம்பைப் போல விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கிறான்.
நான் ப்ளவ்ஸுக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து வெப்பம் நிறைந்த புகையை முடிந்த வரையில் உள்நோக்கி இழுத்தபோது, நான் ஒரு திறமைசாலி என்ற எண்ணம் எனக்கு உண்டானது. எப்போதும் சிகெரட் பிடிப்பதில்லை. அப்பா பார்த்தால் திட்டுவார். உதடுகளின் நிறம் போய்விடுமாம். அப்பா தவிர்க்குமாறு கூறியிருக்கும் ஒரே விஷயம் இதுதான் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். அந்த ஒரே காரணத்திற்காக, அப்பாவுக்குத் தெரியாமல், இடையில் அவ்வப்போது ஒரு சிகரெட்டைப் புகைப்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தேன். இடக்கையின் விரல்களில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டே நான் முன்னோக்கிச் சென்றேன். எனக்கு என்மீது தோன்றிய மதிப்பின் ஆழம் கூடிக் கொண்டேயிருந்தது. தோழிகள் யாராவது இப்போது பார்த்திருந்தால்...? அவர்களுக்குப் பொறாமை தோன்றக்கூடிய ஒரு நபராக இப்போது நான் இருக்கிறேன்.
கார் ஓடிக் கொண்டே இருந்தது. கடந்து செல்லும் எல்லா முகங்களையும் நான் ஆராய்ந்து பார்த்தேன். இதற்கு முன்பு அறிமுகமாகியிருக்கும் ஒரு முகமாவது அந்தக் கூட்டத்தில் என்னைப் பார்த்திருந்தால் எப்படி இருக்கும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டேன்.
என்னைப் போன்ற ஒரு பெண்ணின் பிரார்த்தனையைக் காதுகளிலேயே வாங்கிக் கொள்ளாமல் இருக்க கடவுளால்கூட முடியவில்லை என்று தோன்றியது. காரணம்- ஒரு அறிமுகமான நபரின் முகத்தை நான் பார்த்துவிட்டேன்- சிராங்கோ. மருத்துவம் படிப்பதற்காக வந்திருக்கும் நீக்ரோ இளைஞன். அவசரமாக எங்கோ போய்க் கொண்டிருப்பதைப் போல தோன்றினான். ஈரமான மாலை நேர வெயில் பட்டு, கறுப்பான முகம் மினுமினுத்துக் கொண்டிருந்தது.
நான் காரை நிறுத்தினேன்.
"ஹலோ சிராங்கோ.''
"ஹலோ டயானா.'' சிராங்கோ அருகில் வந்தான். அப்போதுதான் நான் அவனுடன் இருந்த ஆளைப் பார்த்தேன்.
சிறிது நேரத்திற்கு என்னை நானே மறந்துபோய்விட்டேன். இந்த அளவிற்கு அழகான ஒரு இளைஞன் அவனுடன் இருக்கும்போது நான் எப்படி சிராங்கோவை மட்டும் பார்த்தேன்? இன்னொரு ஆளை எப்படிப் பார்க்காமல் இருக்க முடிந்தது?
ஆண்கள் எனக்கு அறிமுகமில்லாதவர்கள் அல்ல. எல்லா வகைப்பட்டவர்களையும் குணத்தைக் கொண்டவர்களையும் எனக்கு நெருக்கமாகத் தெரியும். அவர்களுடைய கண்களில் இருக்கும் பிரகாசத்தையும் மூக்கின் நீளத்தையும் புருவங்களின் கவனமற்ற தன்மையையும் நான் பல நேரங்களில் ரகசியமாக கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறேன். எனினும் எனக்கு இது ஒரு காட்சிதான். இந்த சிவப்பு நிறம், இந்த உயரம், கண்களின் அழகு, நீண்டு உயர்ந்து இருக்கும் மூக்கின் எடுப்பான தோற்றம், வெட்டப்பட்டிருக்கும் மீசையின் அடர்த்தி- இவை அனைத்தும் ஒரு இளம் பெண்ணின் கண்களுக்கு விருந்துதான்.
"மீட் மிஸ் டயானா.'' சிராங்கோ என்னை அறிமுகப்படுத்தினான்: "மிஸ் மேரி வயோலா டயானா.''
அவன் என்னை நோக்கிக் கையை நீட்டினான். அப்போது நான் அந்த உதடுகளை கவனித்தேன். அந்த உதடுகளில் ஏதோ கவலை இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. சிவப்பு வண்ணம் கொண்ட உதடுகள் கவலை நிறைந்த இரண்டு ஆன்மாக்களைப் போல ஒன்று இன்னொன்றின் மீது அழுத்திக் கொண்டிருக்கிறது. மெல்லிய புன்சிரிப்பில் அவற்றின் ஓரம் மனமில்லா மனதுடன் சற்று அசைந்து கொண்டிருந்தது.
"ஷம்ஸ்- என் - மஹாலி'' - சிராங்கோ அறிமுகப்படுத்தினான்: "லெபனானில் இருந்து வந்திருக்கிறார். இங்கு என்னுடன் சேர்ந்து படிக்கிறார்.''
"ஹௌ யூ?'' நான் கையை நீட்டி அவனுடைய கையைப் பிடித்தேன்.
"ஹௌ டு யூ டூ?''
மென்மையான கை விரல்கள் என்னுடைய கையை மூடியிருப்பதைப்போல எனக்கு தோன்றியது. அப்போதும் கண்கள் அந்த முகத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தன. இந்த அரேபிய இளைஞன் வாழ்க்கையில் முதல் தடவையாக என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறான். ஆணின் அழகு என்றால் என்ன என்று கற்றுத் தருகிறான்.
நேரம் கடந்து போவதைப் பற்றிய உணர்வு உண்டானதும் நான் கையை விட்டேன். எனினும், மனம் சம நிலைக்கு வரவில்லை.
சிராங்கோ கேட்டான்: "டயானா, எங்கே போறீங்க?''
"எங்கேயும் இல்லை. வெறுமனே...''
"நாங்களும் வெறுமனேதான் வெளியே வந்தோம்.''
சிராங்கோ சொன்னான்: "சோர்வைத் தரும் மாலைப் பொழுது...''
"அப்படியென்றால் வாங்க. நாம் வீட்டிற்குச் சென்று அமர்ந்து பேசுவோம்.''
கேட்டவுடன் வேறு எதுவும் கூறாமல் சிராங்கோ காருக்கு முன்னால் நடந்து வந்து, முன் பக்க கதவைத் திறந்து எனக்கு அருகில் உட்கார்ந்தான். தொடர்ந்து கையை நீட்டினான்.
"சிகரெட்?''
"ஸாரி...'' நான் சொன்னேன்: "என் கையில் வேறு சிகரெட் இல்லை.''
"ஹ... ஹ...'' சிராங்கோ குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். "எனக்குத் தெரியும்... யாருக்கும் தெரியாமல் புகை பிடிப்பது... அப்படித்தானே?'' தொடர்ந்து அவன் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
எனக்கு வெட்கமாக இருந்தது. என்னுடைய கண்களில் அது தெரிந்திருக்க வேண்டும். தலையை முன்னால் குனிந்து கொண்டு, நான் சத்தம் உண்டாக்காமல் சிரித்தேன். தலையை உயர்த்திப் பார்த்தபோது, அந்த இளைஞனின் முகத்திலும் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அச்சு அசலான அரேபியச் சிரிப்பு. நான் மனதில் நினைத்தேன்.
"நாம போவோம்'' -சிராங்கோ சொன்னான்: "ஷம்ஸுக்கு இப்படிப்பட்ட ஆட்களைப் பிடிக்காது.''
நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அங்கு என்ன தெரிகிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சிராங்கோ அந்த மனிதனுக்காகப் பேசியதை நான் சிறிதும் விரும்பவில்லை. கட்டுப்பாடற்ற சிந்தனை கொண்ட அந்த நீக்ரோ இளைஞனுக்கு என்மீது என்ன எண்ணம் இருக்கிறது என்பது எனக்கு கிட்டத்தட்ட தெரியும். ஒருமுறை வீட்டில் இருக்கும்போது முத்தம் தரக்கூட முயன்றிருக்கிறான். அவை நான் நினைத்துப் பார்ப்பதற்கு கூட விரும்பாத சம்பவங்களாக இருந்தன.
"அப்படியென்றால் நீங்கள் போகலாம்...''
ஷம்ஸ் சொன்னான். தொடர்ந்து நடக்க முயற்சித்தான்.
அது ஒரு இக்கட்டான நிமிடமாக இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட நிமிடம் ஒருமுறை மட்டுமே வரும் என்று தோன்றுகிறது. தன்னையே வேறு ஒருவரிடம் பார்க்க முடிகிற அபூர்வ அழகான நிமிடம்.
ஒரு பெண்ணால் எப்படி தன்னுடைய உருவத்தை இன்னொரு ஆளிடம் பார்க்க முடிகிறது? தன்னுடைய மன ஓட்டத்தை அதே மாதிரி வெளிப்படுத்தக்கூடிய இன்னொரு நபரைச் சந்திக்கும்போது மட்டுமே அவளுக்கு தன்னுடைய நண்பனைக் காண முடிகிறது. சிராங்கோவைப் போன்ற ஏராளமான நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய தனிமையைத் தவிர்ப்பதற்காக என்னைத் தேடி வருகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. தனிமை என்ற சிப்பிக்குள் அடைத்துக் கொண்டு இருப்பதற்கு விரும்பும் என்னை அவர்கள் யாரும் கண்டு பிடிக்கவில்லை. இந்த அரேபியனும் என்னைக் கண்டுபிடித்தானா என்ற விஷயத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனினும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகக் கூற முடியும். அவனும் என்னைப் போலவே, தன்னுடைய தனிமை என்ற சிப்பியின் ஓட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்க விரும்புகிறான் என்பதே அது.
எனக்கு அந்த இளைஞனிடம் போக வேண்டாம் என்று கூற வேண்டும் போல தோன்றியது. நடந்து செல்லும் அவனைச் சிறிது நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்த நான் அழைத்தேன்:
"ஷம்ஸ்!''
அவன் திரும்பி நின்றான். அந்த கறுத்த கண்களில் ஒரு கேள்வி நிழலிட்டு நின்றது.
"வாங்க...'' நான் சிராங்கோவிற்கு முன்னால் கையை நீட்டி, முன்பக்கக் கதவைத் திறந்து அழைத்தேன்: "வாங்க... நானே ஹாஸ்டலில் கொண்டு வந்து விடுகிறேன்.''
"வேண்டாம்'' என்று கூறி விடுவான் என்று பயந்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவனுடைய முகம் திடீரென்று மலர்வதை நான் கவனித்தேன். அகலமான எட்டுக்களுடன் காரை நோக்கி நடந்து கொண்டே அவன் சொன்னான்: "என்னுடைய மாலைப் பொழுது மிகவும் சோர்வு தரும் ஒன்றாக ஆகிவிடும் என்று நான் பயந்திருந்தேன்.''
பெண்களைவிட அதிகமான பொறாமை ஆண்களுக்குத்தான் இருக்கிறது. மிகப் பெரிய திறமைசாலிகள் என்பதைப் போல அவர்கள் நடந்து கொள்வார்கள். எனினும், தாங்கள் விருப்பப்படும் இளம் பெண் அதிகமான ஆர்வத்துடன் இன்னொரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்கள் அந்த இளம் பெண்ணிடமிருந்து அப்போது மனதளவில் விலகிச் சென்றிருப்பார்கள்.
இவை அனைத்தும் எனக்கு நன்கு தெரிந்த விஷயங்கள்தான். எனினும், சிராங்கோவின் முகத்தில் பொறாமை அடையாளம் போடுவதைப் பார்த்த பிறகும், எனக்கு ஷம்ஸின் முகத்திலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அவன் கூறுவது எதையும் நான் காதுகளிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அனைத்தும் புரிகின்றன என்பதைப் போல தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன். உரையாடலின் ஒவ்வொரு எல்லையை அடையும்போதும், ஷம்ஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் இதுவரை கேட்டவை எதுவும் தலைக்குள் நுழையவேயில்லை என்ற விஷயத்தையே நான் தெரிந்து கொண்டேன். அதை மறைப்பதற்காக நான் இடையில் அவ்வப்போது ஒரு முட்டாளைப் போல சிரித்துக் கொண்டிருந்தேன்.
ஷம்ஸ் பெரும்பாலும் சிரிக்கவில்லை. சிராங்கோ தன்னுடைய வழக்கமான பார்ட்டி நகைச்சுவைத் துணுக்குகளையும் இந்தியாவை அடைந்த பிறகு தனக்கு உண்டான சில சுவாரசியமான அனுபவங்களையும் கூறிக் கொண்டிருந்தான். என்னால் அவை எதையும் ரசிக்க முடியவில்லை. என்னுடைய கண்கள் இரண்டு நீளமான கண்களை நோக்கிப் பறந்து போய் விட்டிருந்தன. என்னுடைய இதயம் அறிமுகமில்லாத இன்னொரு இதயத்துடன் இதுவரை பேசியிராத ஏதோ ஒரு தனி மொழியில் உற்சாகத்துடன் உரையாடலை நடத்திக் கொண்டிருந்தது.
மாலை நேரம் தாண்டிவிட்டிருந்தது. தோட்டத்தில் விளக்குகள் குளிர்ச்சியான பிரகாசத்தைப் பரவச் செய்தன. அறைக்குள் மின்மினிப் பூச்சிகள் பறந்து வந்தன. அவை விளக்கைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. ஒரு மின்மினிப் பூச்சி ஷம்ஸின் சுருண்ட தலைமுடிக்குள் சிக்கிக் கொண்டு சிறகை அடித்தது. நான் அந்தச் சிறிய உயிரினத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் சிறகுகள் அந்த முகத்திற்குத் தனியான ஒரு பிரகாசத்தை அளித்ததைப் போல தோன்றியது.
என்னால் இந்த மின்மினிப் பூச்சியாக மாற முடிந்திருந்தால் எப்படி இருக்கும்? மனம் ஆசைப்பட்டது. அப்படியென்றால் நான் அந்த முகத்தைச் சுற்றிப் பறந்து விளையாடிக் கொண்டிருப்பேன். அபூர்வமான பிரகாசத்தை அளித்துக் கொண்டு, அந்த முடிச்சுருள்களுக்கு மத்தியில் மறைந்து விளையாடிக் கொண்டிருப்பேன். ஷம்ஸின் பொத்தான்களுக்கு நடுவில் நுழைந்து சென்று, ரோமம் படர்ந்த அந்த மார்பில் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருப்பேன்.
ஷம்ஸும் என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதில் என்னைப் பற்றிய சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும் என்று நான் நினைத்தேன்.
அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன். அந்த கண்களில் பிரகாசம் உண்டாக்குபவை, என்னைப் பற்றிய சிந்தனைகளாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.
சிராங்கோவிற்கு மிகவும் போரடித்து விட்டதைப் போல தோன்றியது. அவன் திடீரென்று எழுந்து கொண்டு சொன்னான்: "நாம போகலாம். இந்த அறை முழுவதும் இந்தப் பூச்சிகள் வந்து நிறைந்துவிடும்.''
"போக வேண்டாம்.'' - நான் மெதுவான குரலில் சொன்னேன்: "போய் விட்டால் நான் தனியாக இருக்க வேண்டியதிருக்கும்.'' இதைச் சொன்னபோது என்னுடைய கண்கள் ஷம்ஸின் முகத்தில் இருந்தன. அவனுக்கு நான் கூறியது புரிந்து விட்டதைப்போல தோன்றியது. அந்தக் கண்கள் ஒருமுறை இமைகளைத் தாழ்த்தின. தொடர்ந்து மலர்ந்தன.
"நான் போக மாட்டேன்" என்பதுதான் அப்படிக் கூறியதற்கு அர்த்தம் என்று எனக்கு தோன்றியது.
"ஸாரி... நான் போயே ஆக வேண்டும்.'' சிராங்கோ சொன்னான்: "எனக்கு ஏழரை மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் இருக்கு.''
அப்படிச் சொன்னது பொய் என்று எங்களுக்குப் புரிந்தது. திடீரென்று எனக்கு சிராங்கோமீது வெறுப்பு தோன்றியது. என்னிடமிருந்து ஷம்ஸை விலக்கிக் கொண்டு செல்வதற்காக அவன் ஏன் முயற்சிக்கிறான் என்பதற்கான காரணத்தை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய முயற்சி வீணான ஒன்று என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். இனி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு சக்தியாலும் விலக்கி வைக்க முடியாத அளவிற்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம் என்று சத்தம் போட்டுக் கூற வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது.
"ஓ... அப்படியென்றால் சிராங்கோ... நீங்க கிளம்புங்க'' நான் சொன்னேன்: "அப்பாயிண்மென்ட்டை தவற விட்டு விடக்கூடாது. ஷம்ஸ், உங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும் என்றில்லையே?''
"இல்லை.''
"தனியாக இருந்து எனக்கு போரடித்துவிட்டது. அப்பா வர்றப்போ, மிகவும் தாமதமாகிவிடும். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக்கூடாதா?'' - நான் கேட்டேன்.
"கட்டாயம் இருக்கிறேன். எனக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமே அது.''
"அப்படியென்றால் வாங்க நாம மொட்டை மாடியில் போய் இருப்போம்.'' தொடர்ந்து வேலைக்காரனை அழைத்தேன். "சங்கரா, மொட்டை மாடியில் இரண்டு நாற்காலிகளைக் கொண்டு போய்ப் போடு.''
சிராங்கோவின் முகத்தில் கோபமும் தோல்வியும் ஒன்றொடொன்று பிணைந்து வெளிப்படுவதை நான் பார்த்தேன். தடிமனான உதடுகள் சற்று துடித்துக் கொண்டிருந்தன.
"குட்நைட்... நான் போறேன்.'' சிராங்கோ நடக்க ஆரம்பித்தான்.
"குட்நைட்.'' நாங்கள் உரத்த குரலில் சொன்னோம். எங்கள் இருவரின் குரல்களிலும் சந்தோஷம் ஒரு வசந்த கிளியைப் போல சிறகடித்துக் கொண்டிருந்தது.
வில்ஃப்ரட் சிராங்கோ, உங்களுக்கு நன்றியும் புண்ணியமும். நீங்கள் என்னுடைய நன்மைகளின் சூரியனை எனக்கு அளித்தீர்கள். எவ்வளவோ இரவு வேளைகளில் நான் தேடிக் கொண்டிருந்த ஒரு மனிதனை நீங்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். என்னுடைய கைகளில் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் அறிவாளித் தனத்துடன் நடந்து சென்று விட்டீர்கள். எனக்கு வழிபடுவதற்கு ஒரு தெய்வம் கிடைத்துவிட்டது. தனிமையில் இருக்கும் குழந்தைக்கு உடன் விளையாடுவதற்கு ஒரு நண்பன் கிடைத்ததைப் போல, இன்று நான் சந்தோஷப்படுகிறேன்.
இரவு வேளையில், இருள் நிறைந்திருக்கும் அறையில், கட்டிலில் இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டு படுத்திருக்கும்போது, நான் எனக்குள் சொன்னேன்:
"வில்ஃப்ரட் சிராங்கோ, உங்களைப் பார்த்து நான் வெறுப்படையவும் பயப்படவும் செய்கிறேன். நீங்கள் என்னுடைய வாழ்க்கையை அமைதியற்றதாக ஏன் ஆக்கினீர்கள்? நேற்று வரை சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு இப்போது... இதோ... தூக்கமே வர மறுக்கிறது. இனிமேல் என்னால் தூங்க முடியாது. என்னுடைய அமைதியற்ற இரவுகள் ஆரம்பமாகத் தொடங்கியிருக்கின்றன. என்னுடைய மனம் இனிமேல் எந்தக் காலத்திலும் அமைதியானதாக இருக்காது. வெறுமையாக இருக்காது. சந்தோஷம் நிறைந்திருக்கும் இதயத்திற்கு இந்த அளவிற்கு கனம் இருக்கும் என்பதையே இப்போதுதான் நான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் எனக்கு ஷம்ஸை அறிமுகப் படுத்தியிருக்கவே வேண்டாம்."
அப்பா வரும்போதுகூட நான் தூங்கியிருக்கவில்லை. கேட்டில் காரின் ஹார்ன் சத்தம் கேட்பதையும் சங்கரன் ஓடிச் சென்று கேட்டைத் திறப்பதையும் ஷெட்டின் வாசற்கதவு பூட்டப்படுவதையும் கீழே அப்பாவின் படுக்கையறையில் விளக்கு எரிவதையும் அணைவதையும் நான் கவனித்துக் கொண்டே படுத்திருந்தேன். அப்பா க்ளப்பில் இருந்து திரும்பி வருவதை முன்பு எந்தச் சமயத்திலும் நான் கேட்டதே இல்லை. இப்போது... இதோ... முதல் தடவையாக நான் அதைக் கேட்கிறேன்.
இடைவெளி விட்டுப் பெய்வதும் பிறகு சிறிது நேரம் நிற்பதுமாக இருக்கும் மழை தோட்டத்தில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதை நான் கேட்டேன். மழை நின்றபோது, வாசலில் இருந்த மரங்களில் கிளிகள் கத்தின. என்னுடைய மனம், மழையின் இசைக்கு விளக்கம் கொடுப்பதற்கு முயற்சி செய்து பரிதாபப்படும் வகையில் தோல்வியைத் தழுவியது. ஒரே ஒரு இசைதான் என்னுடைய மனதிற்குள் இருந்தது. ஒரே ஒரு நாதம். ஒரே ஒரு தாளம். அதற்கு மழையுடன் தொடர்பு இல்லை. கடந்து சென்ற மாலை நேரத்தில் மழை இல்லாமலிருந்த ஏதோ ஒரு பொழுதில் அது ஆரம்பமானது. இப்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனி அது நிற்காது. மழைக்காலம் முடிந்த பிறகு வெயில் வரும். வசந்தங்களும் குளிர் காலங்களும் நடனமாடிக் கொண்டு கடந்து செல்லும். என்னுடைய இசை, எனக்கு மட்டுமே கேட்கக்கூடிய என்னுடைய இதயத்தின் இசை, அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும்- என்னுடைய மரணம் வரை- என்னுடைய இதயம் நெருப்பில் எரியும் வரை. நான் அந்தப் பாடலுக்கு ஒரு பெயர் வைக்கிறேன்: "நன்மைகளின் சூரியன்.
இரவில் மழை நின்ற பிறகு, ஓசை உண்டாக்காமல் நான் எழுந்தேன். எனக்கு உடனடியாக மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டும் போல இருந்தது. நானும் ஷம்ஸும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தில், வெறும் தரையில் போய் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டும்போல தோன்றியது. இருட்டின் காற்றுக்கும் என்னுடைய கவலை புரியும். அது என்னுடைய வேதனையை ஷம்ஸிடம் கொண்டு போய் சேர்க்கும்.
அசையாமல் ஒரு திருடியைப் போல நான் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறினேன். தரை ஈரமாக இருந்தது. தலைக்கு மேலே நனைந்த வானம் பரந்து விரிந்து கிடந்தது. மழை நின்று விட்டிருந்தும் ஒன்றோ இரண்டோ சிறு சிறு துளிகள் இடையில் அவ்வப்போது விழுந்து கொண்டுதான் இருந்தன. அவை என்னுடைய மூக்கிலும் காதுகளிலும் வந்து விழுந்து கொண்டிருந்தன. சாயங்காலம் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்று நின்றேன். இங்கு இருந்து கொண்டுதான் ஷம்ஸும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். தரை விரிப்பை ஒட்டி ஷம்ஸின் நாற்காலி போடப்பட்டிருந்த இடத்தில், வெறும் தரையில் உட்கார்ந்தேன். தரை ஈரமாக இருந்ததால் என்னுடைய ஆடைகளும் கொஞ்சம் ஈரமாயின. எனக்கு அப்போது அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. அப்போதும் ஷம்ஸ் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் போலவும், அவனுடைய கால்களை என்னுடைய மடியில் வைத்திருப்பதைப் போலவும் நான் மனதில் கற்பனை பண்ணினேன். எங்களுக்கு ஒருவரோடொருவர் கூறுவதற்கு எதுவும் இல்லாமலிருந்தது. எதுவும் பேசாமல் வெறுமனே கண்களைப் பார்த்துக் கொண்டு நாங்கள் உட்கார்ந்திருந்தோம். சாயங்காலமும் இதே மாதிரிதான் இருந்தது.
சாயங்காலம் மொட்டை மாடியை அடைந்தபோது எங்களுக்கு எப்படி உரையாடலைத் தொடங்குவது என்பது தெரியாமல் இருந்தது. சிராங்கோ சென்றவுடன் நாங்கள் தனியாகி விட்டோம். எனினும், அவன் இருந்தபோது ஏதாவது கூறுவதற்கு இருந்தது. இப்போது எங்களுக்கிடையே பேசுவதற்கு விஷயங்கள் இல்லாததைப் போல தோன்றியது.
நான் அந்த முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு அந்த கண்களை உற்றுப் பார்க்க பயமோ வெட்கமோ இல்லை. அவை என்னுடையவை. எனக்குச் சொந்தமானவை. இதயத்தின் இருப்பிடம்.
அவனுடைய முகத்திற்குப் பின்னால் ஜூன் மாத இரவு ஒரு தாமரை மலரைப் போல மலர்ந்து வந்து கொண்டிருந்தது. இடையில் அவ்வப்போது குளிர்ச்சியான காற்று அடித்தது. வானத்தில் நீண்ட நேரமான பிறகு ஒரு நட்சத்திரம் எரிந்து விழுந்தது.
"ஷம்ஸ்...'' நான் அழைத்தேன்.
"ம்...''
"ஷம்ஸ்...'' எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தது.
"என்ன?''
"ஷம்ஸ்...'' நான் பொறுமையை இழந்தேன். "ஏதாவது சொல்லுங்க.''
"எனக்கு கூறுவதற்கு எதுவும் இல்லை.'' ஷம்ஸ் தயங்கித் தயங்கி சொன்னான்: "நான் உன்னுடைய பெயரின் அழகைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். டயானா! டயானா! டயானா... மேரி வயோலா டயானா!''
"ஓ... அது ஒரு மோசமான பெயர்.''
"அப்படியல்ல. அது மனிதர்களின் பெயராகவே தோன்றவில்லை.''
"பிறகு?''
"ஒரு தேவதையின் பெயர் என்று தோன்றுகிறது. நீ தேவதையாகவே இருக்கலாம். யாருக்குத் தெரியும்?''
என்னுடைய இதயம் நின்றுவிட்டது. நான் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு கடல் எனக்குள் இரைச்சல் எழுப்பிக் கொண்டு நுழைவதைப் போல தோன்றியது. அர்த்தமே இல்லாத இந்த உரையாடல் எப்படி என்னுடைய இதயத்தில் இவ்வளவு பெரிய உணர்ச்சி சூறாவளியை உருவாக்கி விடுகிறது? உணர்ச்சியை மறைப் பதற்காக நான் சொன்னேன்: "ஷம்ஸ், உங்களின் பெயர்தான் அழகாக இருக்கு... ஷம்ஸ்- என்- மஹாலி!''
அவன் எதுவுமே கூறாமல் வெறுமனே சிரித்தான். நான் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதைப் போல திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தேன்: "ஷம்ஸ் - என் - மஹாலி, ஷம்ஸ் - என்- மஹாலி, ஷம்ஸ்- என்- மஹாலி!''
என்னுடைய சிறுபிள்ளைத்தனம் அவனிடம் ஆர்வத்தை உண்டாக்கியதைப் போல தோன்றியது. சற்று சிரித்துக் கொண்டே ஷம்ஸ் சொன்னான்: "அது ஒரு சாதாரண அரேபியப் பெயர்.''
"அதன் அர்த்தம் என்ன?'' நான் கேட்டேன்.
"நன்மைகளின் சூரியன்.''
தரை விரிப்பில் வைக்கப்பட்டிருந்த கட்டிலில் ஒரே ஒரு டாலியா மலர் மலர்ந்து இருந்தது. மெல்லிய காற்றில் அது ஷம்ஸின் தலைக்குப் பின்னால் மோதிக் கொண்டிருந்தது. சிவப்பு நிறத்தில் அந்த மலர் அப்படியே விடாமல், நிறுத்தாமல் மோதிக் கொண்டே இருக்கக்கூடாதா? நான் ஆசைப்பட்டேன். என்னுடைய நன்மைகளின் சூரியனை மலர்கள் தொழுவதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க எனக்கு எப்போதும் முடிந்தால் எப்படி இருக்கும்?
"மிகவும் பொருத்தமான பெயர்'' என்றேன் நான்.
"எதனால்?''
"ஷம்ஸ்... நீங்க நன்மைகளுக்கு மட்டுமே சூரியன்.''
"எல்லாரும் நன்மைகளுக்கு மட்டுமே சூரியன்கள்தான்.'' ஷம்ஸ் சொன்னான்.
"இந்த... நன்மை என்று கூறுவது எதை?''
என்னால் பதில் கூற முடியவில்லை. அதனால் நான் கேட்டேன்: "என்ன? எனக்கு சொல்லுங்க?''
டாலியா மலர் மீண்டும் அந்த முகத்தில் வந்து மோதியது.
ஷம்ஸ் நாற்காலியைச் சற்று நகர்த்திப் போட்டு அமர்ந்து கொண்டு சொன்னான்: "ஒரு மனிதனைப் பொறுத்த வரையில் நன்மை என்று கூறுவது, அவனுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய சுவையான விஷயங்கள்தான். இன்னொரு மனிதனின் பார்வையில் மது அருந்துவது ஒரு பாவமாக இருக்கும். எனினும், மதுவை விரும்பக்கூடிய ஒரு மனிதனுக்கு, மது அருந்துவது நன்மையின் ஒரு அடையாளமாக இருக்கும். அவன் தன்னுடைய மனசாட்சியைத் திருப்திப்படுத்தாமல் இருப்பதுதான் பாவம்.''
"எது பாவம்? ஸின்...?''
"பாவம் என்று கூறுவது விருப்பமின்மையை...''
"எப்படி?''
"விருப்பமில்லாத காரியங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால், அதுதான் பாவம். விருப்பப்படும் விஷயங்கள் எதையும் செய்ய முடியாமல், பயந்து பயந்து வாழக்கூடிய நிலைமையைத்தான் பாவம் என்று கூறுகிறேன்.''
நான் எதுவும் சொல்லவில்லை. ஷம்ஸ் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய இதயத்திற்குள் நுழைந்தது. அவை ஆயிரம் அர்த்தங்களைக் கொண்ட மிகப் பெரிய நூல்களாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
"எல்லாரும் நன்மைகளின் சூரியன்கள்தான்'' -ஷம்ஸ் சொன்னான்: "எல்லாரும்... பாவிகளும்கூட.''
நான் எதுவும் கூறாமல், தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன். என்னுடைய கண்களில் இருந்து எந்தவித காரணமும் இல்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் என்னால் அதை நிறுத்த முடியவில்லை. மெல்லிய இருட்டு சூழ்ந்திருந்ததால், ஷம்ஸ் அதைப் பார்க்கவில்லை.
பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை. அப்படியே எவ்வளவு நேரம் இருந்தோம் என்று தெரியவில்லை. இறுதியில் மழை பெய்ய, நாங்கள் மழையில் குளித்தோம். அதற்குப் பிறகும் நாங்கள் அசையவில்லை.
மழையின் குளிர்ச்சி, ஆடைகளுக்கு நடுவில் உள்நோக்கி வேகமாகப் பாய்வதைப் போலவும், முகத்தின் வழியாகவும் ஆயிரம் ஆறுகள் பாய்ந்தோடுவதைப் போலவும் நான் உணர்ந்தேன். இறுதியில், ஷம்ஸ் கேட்டான்: "நாம போக வேண்டாமா?''
"போகணும்.'' நான் சொன்னேன்.
"அப்படியென்றால் எழுந்திரு.'' அவன் எழுந்தான்.
நான் அசையவில்லை. என்னுடைய உடலுக்கு அசைவதற்கான சக்தி இல்லாமல் போய்விட்டதைப் போல தோன்றியது. நடப்பதற்குத் தெரியாத ஒரு சிறு குழந்தையைப் போல, செயலற்ற நிலையில் நான் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
"எழுந்திரு'' -ஷம்ஸ் மீண்டும் சொன்னான். அந்தக் குரல், பல மைல்களுக்கு அப்பால் இருந்து கேட்கிறது என்று எனக்குள் நம்பிக்கை கொள்ள நான் முயற்சித்தேன்.
"எழுந்திருக்கவில்லையா?'' மீண்டும் அந்த குரல்.
"எனக்கு சோம்பலாக இருக்கு.'' நான் சொன்னேன்.
திடீரென்று அவன் என்னுடைய கைகளை இறுகப் பற்றினான். என்னை சர்வசாதாரணமாகத் தூக்கி எழுந்திருக்கச் செய்தான். எங்கள் உடல்கள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்தன. எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் கண்களால் பார்த்துக் கொண்டு நாங்கள் நின்றிருந்தோம். மழைநீர் கண் இமைகளைப் பிடித்து இறங்கி கீழ் நோக்கி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகும் இமைகளைச் சேர்க்க எங்களால் முடியவில்லை.
கீழே, சாலையின் வழியாக பாரம் ஏற்றப்பட்ட ஒரு லாரி, பெரிய சத்தத்துடன் கடந்து சென்றது. அதன் சத்தம் உச்ச நிலையை அடைவது வரை நாங்கள் காத்து நின்றிருந்தோம். பிறகு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டோம்.
அவன் என்னை முத்தமிட்டானா, இல்லாவிட்டால் நான் அவனை முத்தமிட்டேனா என்று என்னால் இப்போது கூற முடியாது. ஒருவேளை, என்மீது பரவிக் கொண்டிருந்த கைகள் பலத்துடன், என்னைப் பிடித்து நெருக்கமாகக் கொண்டு சென்றிருக்கலாம். அதே நிமிடத்தில் நான் முன்னால் சாய்ந்து கொண்டு, கழுத்தைப் பின்னால் சாய்த்து, கைகளால் அவனுடைய முகத்தைப் பிடித்து என்னுடைய முகத்தை நோக்கி நெருங்கச் செய்திருக்கலாம்.
அவனுடைய உதடுகள் குளிர்ந்து போய் இருந்தன. எவ்வளவு நேரம் நாங்கள் அப்படியே நின்றிருந்தோம் என்று தெரியவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. முன்னால் பார்த்த டாலியா மலரின் தண்டு ஒடிந்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தபோது முதலில் கண்களில் பட்டது.
"நான் புறப்படுகிறேன் டயானா'' -அவன் நெருப்பில் கால் வைத்ததைப் போல விலகி நின்றுகொண்டு சொன்னான்.
தொடர்ந்து ஏதாவது சொல்ல முயல்வதற்கு முன்பே நடந்து மறையவும் செய்தான். நான் சுய உணர்வை இழந்து நாற்காலியில் விழுந்தேன். எவ்வளவு கட்டுப்படுத்தியும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. எதற்காக அழுகிறேன் என்பதைக்கூட நான் சிந்திக்கவில்லை. புடவையின் நுனியை வாய்க்குள் வைத்துக் கொண்டு, நான் சத்தத்தை அடக்க முயற்சித்தேன். அதற்குப் பிறகும் ஒரு மெல்லிய அழுகைச் சத்தம் கேட்கத்தான் செய்தது. ஓ... ஓ... என்னுடைய ஷம்ஸ்! ஷம்ஸ்... ஷம்ஸ்...
இப்போதும் அந்த டாலியா மலர் அதே இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் எழுந்தேன். என்னுடைய மடியில் இவ்வளவு நேரமாக இருந்தது என்று நான் கற்பனை பண்ணிக் கொண்டிருந்த ஷம்ஸின் கால்களை எடுத்து தள்ளி வைத்தேன். அந்த டாலியா மலரைக் கொய்து ஷம்ஸின் முடியில் வைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டானது.
நான் அந்த பூவைப் பிடுங்கி, அவனுடைய தலைப் பகுதிக்கு கொண்டு வந்து, தலை இருக்கிறது என்று கற்பனை பண்ணிய இடத்தில் வைத்தேன். என்னுடைய கையிலிருந்து பிடியை விட்டு, அந்த மலர் கீழே விழுந்தது. எனினும், என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஷம்ஸைப் பார்த்தேன். சுருண்டு கருமையான தலைமுடிக்கு மத்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் டாலியா மலரை நான் பார்த்தேன்.
அதே நிலையில் எவ்வளவு நேரம் நின்றேன்? மழைத்துளிகள் உடலில் விழுந்தபோதுதான் சுற்றுபுறத்தைப் பற்றிய புரிதலே உண்டானது. மீண்டும் மழை பெய்கிறது. நான் அந்த மலரை எடுத்து, மார்பில் சேர்த்து வைத்துக் கொண்டு படிகளில் இறங்கினேன். அந்த மலர்தான் ஷம்ஸ் என்று நான் கற்பனை பண்ணிக் கொண்டேன்.
அறைக்குள் வந்ததும் நான் படுக்கையறையின் விளக்கை "ஆன்" பண்ணினேன். மங்கலான வெளிச்சத்தில் நான் அந்த மலரைப் பார்த்தேன். இப்போது அது ஷம்ஸ் அல்ல என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
நான் அந்த டாலியா மலரை மேஜையின்மீது வைத்தேன். மாலை நேரத்தில் தோட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்த மஞ்சள் நிற ரோஜா மலரின் இதழ்கள் அங்கு இருந்தன. நான் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். இருந்தவற்றிலேயே நிறம் குறைவாக இருந்த சுருண்ட ஒரு இதழ்... அதுதான் நான். மேரி வயோலா டயானா. ஒரு மிகப் பெரிய பணக்காரரின் யாருமே இல்லாத வளர்ப்பு மகள்.
மேஜைமீது இருந்த டாலியா மலரின்மீது நான் அந்த ரோஜா மலரின் இதழ்களை வைத்தேன். என்னுடைய விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த மலரின் இதழ்கள் நான்தான் என்றும்; அந்த டாலியா மலர் ஷம்ஸ் என்றும் எனக்கு இப்போது முழுமையாகப் புரிந்தது. அவற்றை ஒன்றோடொன்று சேர்ப்பது என்று கூறும்போது...?
என்னுடைய உடல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தது. இதயம் "படபட" என்று துடித்தது. யாராவது பார்க்கிறார்களா என்று நான் நான்கு பக்கங்களிலும் பார்த்தேன். இல்லை. யாரும் இல்லை. ஒரு பெரிய குறும்புத்தனத்தை வெளிப்படுத்துவதைப் போல, பூவிதழை டாலியா மலரின் நடுவில் இணைத்து வைத்தேன். சிவந்து மலர்ந்திருந்த டாலியாவின் மத்தியில் அந்த சிறிய ரோஜா மலரின் இதழ்கள் ஐக்கியமாகி விட்டதைப் போல எனக்குத் தோன்றியது.
மேஜைமீது இருந்த துண்டுத் தாளில் நான்கு என்று எழுதப் பட்டிருந்ததை அழித்து நான் ஐந்து என்று ஆக்கினேன். இன்று இரவில் ஐந்தாவது தடவையாக மழை பெய்து கொண்டிருந்தது. நான் உறங்காமல் படுத்திருந்தேன். ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் நான் அதைக் குறித்து வைத்தேன்.
கட்டிலில் வந்து படுத்தேன். ஆடைகள் நனைந்திருந்தன. எனினும், அதை மாற்றுவதற்கு சோம்பலாக இருந்தது. விளக்கை அணைக்காவிட்டால் சில நேரங்களில் ஆயா வந்து பார்ப்பாள் என்ற பயம் இருந்தாலும், நான் அதைச் செய்ய முயற்சிக்கவில்லை. இருட்டாகிவிட்டால் என்னால் அந்த மலர்களை எப்படிப் பார்க்க முடியும்? அவற்றைப் பார்க்காமல் என்னால் எப்படிப் படுத்திருக்க முடியும்?
மெத்தையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டே நான் மேஜையைப் பார்த்தேன். தூக்கம் என்ற விஷயத்தைப் பற்றி எனக்கு ஒரு நினைவே வரவில்லை. தலையணையை மார்புடன் சேர்த்து அழுத்தி வைத்துக் கொண்டு நான் படுத்திருந்தேன். என்னுடைய இதயம் அந்த தலையணையிடம் என்னவோ முணுமுணுப்பதைப் போல எனக்குத் தோன்றியது. மிகுந்த பாசத்துடன் நான் தலையணையின் மூலைப் பகுதியை முத்தமிட்டேன். "ஓ... என்னுடைய நன்மைகளின் சூரிய வடிவமே!" நான் தலையணையிடம் மெதுவான குரலில் சொன்னேன்: "நீங்கதான் கடவுள்!"
"நீ தேவதை" -தலையணை மெதுவான குரலில் கூறியது. தலையணை என்னைக் கட்டிப்பிடிப்பதைப் போல தோன்றியது. நான் அப்படியே படுத்துக் கொண்டு, மேஜை மேலே ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கும் மலர்களையே பார்த்தேன். நாங்கள்... நாங்கள்... ஒரு ஆள் இன்னொரு ஆள்மீது கலந்து விட்டிருந்தோம்.
வெட்கம் தோன்றியது. உணர்ச்சி வசப்பட்டேன். உடலெங்கும் ஆயிரம் நாக்குகள் ஊர்வதைப் போல தோன்றியது. நான் கண்களை மூடிக் கொண்டேன். மூடிய கண் இமைகளுக்குள் ஏராளமான சூரியன்கள் உதித்து மேலே வந்து கொண்டிருந்தன.
காலையில் நீண்ட நேரம் ஆனபோது ஆயா என்னைத் தட்டி எழுப்பினாள். எனக்கு சரியான தூக்கம் இல்லை. அவள் எதுவும் புரியாமல் அறை முழுவதையும் வெறித்துப் பார்ப்பதை நான் பார்த்தேன். மேஜைமீது மலரும் மலருக்குள் ஒட்டிக் கிடந்த சுருண்ட பூவிதழ்களையும் பார்த்தால் அவளுக்கு எதுவும் புரியாது. ஒன்று முதல் எட்டு வரை எண்களை எழுதி அழித்திருக்கும் துண்டுத்தாள் இருந்தது. என்னுடைய கதையைத்தான் கூறுகிறேன் என்று ஆயாவிற்குத் தெரியாது. மழையில் நனைந்த என்னுடைய ஆடைகள், எந்த நிலையில் இருக்கும் ஒரு பைத்தியக்காரத்தனத்தின் அடையாளங்கள் என்று அவளுக்குப் புரியாது. என்னுடைய உறங்காத கண்களும் உறக்கக் களை விழுந்திருந்த கன்னங்களும் எதன் அடையாளங்கள் என்று ஆயாவிற்கு எப்படிப் புரியும்?
எங்கோ என்னவோ பிரச்சினை இருக்கிறது என்று அவளுக்கு புரிந்திருப்பதைப் போல தோன்றியது. அவளுடைய முகத்தில் ஒரு தாங்கமுடியாத வெறுமை இருப்பதைப் பார்த்தேன். பதைபதைப்பால் உண்டான வெறுமை. காப்பியைக் கொடுத்துவிட்டு ஆயா வெளியே நடந்து செல்லும்போது நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். "இது என்னுடைய ரகசியம். என்னுடைய ஆனந்தம். சந்தோஷம். இதை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். மாட்டேன்... மாட்டேன்..."
ஒவ்வொரு அதிகாலை வேளைகளுக்கும் எப்படிப்பட்ட காற்றுகளெல்லாம் சொந்தமாக இருக்கின்றன?
பல நேரங்களில் நான் அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றிருக்கிறேன். ஒவ்வொரு காற்றுடன் சேர்ந்து ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த கிளிகளும் பறந்து வரும். முதலில் கிழக்கு திசையிலிருந்து சத்தம் உண்டாக்காமல் வீசும் மெல்லிய குளிர்ந்த காற்றில் சூரிய வெளிச்சமும் உணர்வும் கலந்து இருக்கின்றன. அது கடந்து செல்லும்போது மணல் துகள்கள் நடுங்குகின்றன. செடிகள் உறக்கத்தை நிறுத்துகின்றன. மனிதன் கண் விழிக்கிறான். அதன் இறுதியில் தோட்டத்தின் மூலையில் இருக்கும் குன்றிமணி மரத்தில், சிவப்பு நிற வாலைக் கொண்ட பறவை கத்திக் கொண்டே கண் விழிக்கிறது. தொடர்ந்து சிறகைச் சுத்தம் செய்துவிட்டுப் பறந்து செல்லும். பிறகு வரும் காற்றுக்கு குளிர்ச்சி அதிகமாகிறது. அதற்கு ஒரு மெல்லிய முனகல் சத்தம் இருக்கும். சாளரத்தின் திரைச் சீலைகள் மெதுவாக அப்போதுதான் அசையும். என்னுடைய அறை கண்விழிக்கிறது. அறைக்கு நேராக முன்னால் இருக்கும் மஞ்சள் நிற மலர்கள் கண் விழிக்கின்றன. தெளிவற்ற ஒரு சத்தத்தை தான் கடந்து செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் கேட்கும்படி செய்ய இந்தக் காற்றுக்கு முடிகிறது. அது சென்றவுடன், நாராயணக்கிளி கண் விழிக்கிறது. சத்தம் எழுப்பி உலகத்தை எழச் செய்து கொண்டே பறந்து வருகிறது.
இன்று அவை எதையும் கவனிக்க என்னால் முடியவில்லை. இந்த நனைந்த புலர்காலைப் பொழுதிலும் எனக்கு மிகவும் தெரிந்திருக்கும் சிறு சிறு பூச்சிகள் கடந்து போய்க் கொண்டிருக்கும். என்னுடைய தோழியான தங்கக்கிளி கண்விழித்து ஓசை உண்டாக்கிக் கொண்டிருக்கும். ஆனால், அவை எதுவும் எனக்குத் தெரியாது.
சாளரத்தின் அருகில் மிகவும் தூரத்தில் இருக்கும் மலைகளின் நிழல்களையே பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருக்கிறேன். என்னுடைய இதயம் எதற்காகவோ அழுகிறது. கையை விட்டுப் போய்விட்ட நிமிடங்கள் போகாமல் இருந்திருக்கக்கூடாதா என்ற மனக் கவலையுடன் நான் இருந்தேன்.
கண் விழித்தவுடன் முதலில் செய்ய வேண்டியது- நேராக அப்பாவிடம் செல்வதுதான் என்று இதுவரை நான் மனதில் திட்டம் போட்டு வைத்திருந்தேன். தொடர்ந்து ஷம்ஸுக்கும் எனக்குமிடையே உண்டான ஒரு நாள் உறவைப் பற்றிப் பேச வேண்டும். எங்களுடைய திருமணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அப்பா அதற்கு சம்மதம் அளிக்க வேண்டும். இப்படியெல்லாம்...
ஆனால், நான் மாயாஜாலக் கதைகளில் வரும் இளவரசி அல்ல என்பதும், அப்பாவிடம் அந்த ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு என்னால் முடியவே முடியாது என்பதும் இப்போது மட்டுமே புரிந்தது. அவருடைய முகத்தைப் பார்ப்பதற்குக்கூட எனக்கு வெட்கமாக இருந்தது. நேற்று இரவில் என்னுடைய உதடுகளில் பதிந்த துக்கம் நிறைந்த உதடுகளின் கதையை அவர் ஒரே பார்வையில் படித்துத் தெரிந்து கொள்ள மாட்டாரா என்று அச்சப்படுகிறேன்.
நான் சாளரத்தின் அருகிலேயே கட்டிலைப் போட்டு ஒரு தலையணையில் சாய்ந்து கொண்டு படுத்திருந்தேன். ஆயா உள்ளே வந்து, நான் ஏன் இவ்வளவு தாமதமான பிறகும் எழுந்திருக்காமல் படுத்த நிலையிலேயே படுத்துக் கிடக்கிறேன் என்று விசாரித்தாள். ஒன்றுமில்லை என்று பல தடவை கூறிய பிறகும், ஆயா அதை நம்பவில்லை.
இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், ஒரு பொய்யைச் சொல்லி இன்னொரு ஆளை நம்பச் செய்வதற்கு என்னால் கொஞ்சம்கூட இயலாது என்பதுதான் உண்மை.
சூரியன் தோட்டத்திற்குள் வந்தது. செடிகள் கண் விழிப்பதை நான் சோர்வடைந்த கண்களால் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன். தொடர்ந்து தோட்டக்காரன் தன்னுடைய ஊனமடைந்த காலால் நொண்டிக் கொண்டே நடந்து வந்து ஒரு செடியின் அடியில் உட்காருவதைப் பார்த்தேன்.
வெறுப்பைத் தரும் காட்சிகள். நான் இந்த வீட்டின் ஒரு உறுப்பினரே அல்ல என்று தோன்றிவிடுகிறது. வேறு ஏதோ உலகத்தில் வேறு ஏதோ ஒரு ஆளின் கட்டுப்பாட்டில் வாழும் ஒரு அதிர்ஷ்டசாலியான பெண் நான் என்று மனதில் தோன்றியது.
சொந்த வீட்டைப் பற்றி இந்த அளவிற்கு வெறுப்புடன் முன்பு எந்தச் சமயத்திலும் சிந்தித்ததில்லை என்பதை எண்ணியபோது குற்றஉணர்வு உண்டானது.
கேட்டைக் கடந்து அப்பாவின் கார் வெளியே சென்றது. இனி வரும்போது சாயங்காலம் ஆகிவிடும். எஸ்டேட்டில் என்னவோ வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபகாலமாக பெரும்பாலான நாட்களில் அப்பா மிகவும் சீக்கிரமாகவே போவதைப் பார்க்கலாம்.
கீழே இடைவெளியில்லாமல் தொலைபேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது காதில் விழுந்தது. ஆயா குளியலறையில் இருப்பாள். சங்கரன் சமையலறையில் இருப்பான். அவர்களில் யாராவது ஒருவர்தான் பொதுவாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறுவார்கள்.
எனக்கு எழுந்திருக்க வேண்டும் என்றே தோன்றவில்லை. அங்கே தொலைபேசி மணி அடிக்கட்டும். ஒருவேளை எஸ்டேட்டில் இருந்து சூப்பிரண்ட் அழைத்திருப்பார். அப்பா அங்கேதான் வந்து கொண்டிருக்கிறார் என்று மட்டும் கூறினால் போதும். அவர் தொலைபேசியை வைத்து விடுவார்.
நிறுத்தாமல் இருந்த தொலைபேசி அழைப்பைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு நேரமாக யார் அழைக்கிறார்கள்?
திடீரென்று அந்தத் தோணல் உண்டானது. ஒரு வேளை...
ஒருவேளை அழைப்பது ஷம்ஸாக இருந்தால்?
ஒரே நிமிடத்தில் நான் படிகளில் இறங்கிக் கீழே ஓடினேன். என்னுடைய இதயம் "படபட" என்று துடிப்பது காதில் விழுந்தது. தொலைபேசி இருக்கும் இடத்திற்கு அருகில் போன பிறகும், எனக்கு அதை எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என்னுடைய மூச்சு விடும் ஓசையை ஷம்ஸ் கேட்டால் என்ன நினைப்பான்? மேலும் கீழும் மூச்சு விடுவது நிற்கட்டும்.
ஆனால், அதே நிலையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்க முடியவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்துவிட்டு, யாரும் பேசவில்லை என்று ஷம்ஸ் தொலைபேசியைக் கீழே வைத்து விட்டால்...?
நான் தொலைபேசியை எடுத்தேன். "ஹலோ?''
அந்த முனையிலிருந்து ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது.
"டயானா?''
"ஆமாம்.''
"அருணா பேசுகிறேன்.''
எனக்கு ஏமாற்றம் உண்டானது. என்னுடைய மிகவும் நெருக்கமான தோழிதான் அழைக்கிறாள். எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் அழைத்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது.
"அங்கே என்ன பண்ணுறே?'' அருணா கேட்டாள்.
"ஒண்ணுமில்ல... இப்பத்தான் கண்விழிச்சேன்.''
"இவ்வளவு நேரமாகியுமா?'' அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். "என்ன... ஏதாவது பிரச்சினையா?''
நான் கவலை நிறைந்த சிரிப்பு சிரித்தேன். அருணா மிகவும் குறும்புத்தனமான குணத்தைக் கொண்டவள். என்ன சொன்னாலும் அவளுடைய அறிவு மேலும் வளைந்திருக்கும் வழியில்தான் பயணம் செய்யும்.
"இன்னைக்கு என்ன திட்டம்?''
நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை. வேணும்னா புக் ஸ்டாலுக்குப் போய் டெனிஸ் ராலின்ஸ் எழுதிய புதிய புத்தகங்கள் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.''
"சரி... நான் அங்கே வர்றேன். நேரத்தைச் செலவிடுவதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.''
அவள் தொலைபேசியைக் கீழே வைத்தாள். அவள்மீது எனக்கு பரிதாப உணர்ச்சி தோன்றியது. பாவம்! என்னைப் போலவே கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு வேறுபாடு இருக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை என்று நான் படிப்பை நிறுத்தினேன். அருணாவைப் பொறுத்தவரையில், அவள் படிப்பதற்கு ஆசைப்பட்டாள். ஆனால், அவளுக்கு கல்லூரிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உண்டானது. ஏதோ ஒரு நண்பனுடன் அவள் காதல் வயப்பட்டாள். அவர்கள் இருவரையும் ஒன்றாக ஒருநாள் திரை அரங்கில் இருக்கும்போது கல்லூரியில் படிக்கும் வேறு சில மாணவர்கள் பார்த்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அருணாவால் கல்லூரியின் படிகளில் ஏற முடியவில்லை. கேலியையும் கிண்டலையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது அவள் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.
அருணாவைப் போன்ற இளம்பெண்ணுக்கு இப்படி வெறுமனே உட்கார்ந்திருப்பது என்பது எந்த அளவிற்குத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவளைப் பொறுத்த வரையில் நேரத்தைக் கடத்துவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம்தான். ஆனால், என்னுடைய கதை அது அல்ல. நேரம் முன்னோக்கிப் போகக்கூடாது என்ற பிரார்த்தனை மட்டுமே என்னிடம் உள்ளது. ஒவ்வொரு நிமிடம் முடியும்போதும் நான் நேற்று இரவில் இருந்து எந்த அளவிற்கு விலகிச் செல்கிறேன் என்றும்; அதன் நினைவுகள் என்னுடைய அனுமதி இல்லாமல் மூளையில் மறைந்து கொண்டிருக்கின்றன என்றும் எனக்குத் தோன்றியது.
வாழ்க்கை அந்த ஒரே ஒரு நிமிடத்திலேயே துடித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தால்...! முன்னோக்கி நகராமல், அணை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நீரைப் போல, ஓடிக் கொண்டிராத வாழ்க்கை நன்மைகளின் சூரியனைச் சுற்றிப் பிணைக்கப்பட்டு இருந்தால்...!
அருணா வந்தபோது நான் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இன்று அவள் மிகவும் அழகாக இருந்தாள். இளம் நீல நிறத்தில் இருந்த புடவையை இறுக்கமாகச் சுற்றியிருந்தாள். அடர்த்தியான நீல நிற ப்ளவ்ஸில் ஆங்காங்கே அவளுடைய வியர்வை பட்டிருந்தது தெரிந்தது.
அருணாவின் சிரிப்பு ஒரு தனி வகையைச் சேர்ந்தது. இந்த அளவிற்கு வசீகரிக்கக்கூடிய விதத்தில் சிரிக்கக்கூடிய எந்தவொரு இளம்பெண்ணையும் நான் இதுவரையில் சந்தித்ததில்லை.
அவளுடைய மேல்வரிசையில் நடுவில் இருக்கும் இரண்டு பற்களுக்கு மற்ற பற்களைவிட சற்று நீளம் அதிகம். எனினும் சிறிதும் வெளியே அவை உந்திக் கொண்டு தெரியவில்லை. மற்ற பற்கள் அவற்றுக்கு பின்புலம் அமைப்பதற்காக மட்டுமே வரிசையில் இருப்பதைப் போல தோன்றும்.
"இன்னைக்கு நாம் பேருந்தில் சென்றால் போதும்'' -அருணா வந்தவுடன் சொன்னாள்.
"கார் இருக்கு!''
"வேண்டாம்... பேருந்து போதும்... அதுதான் சுவாரசியமானது!''
அவள் எதற்காக அப்படிக் கூறுகிறாள் என்று எனக்குத் தெரியும். அருணாவைப் பொறுத்தவரையில், நான் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இதுதான். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில், இளைஞர்களின் உடலில் உரசிக் கொண்டு நிற்பதில் அவளுக்கு விருப்பம் இருந்தது.
திரை அரங்கத்தில் இருக்கும்போதுகூட ஏதாவது கால்கள் பின்னால் இருந்து வந்து உரசினால், அவள் அந்தச் செயலை உற்சாகப்படுத்தவே செய்வாள். நான் பல நேரங்களில் இந்த விஷயத்தைச் சொல்லி அவளுடன் சண்டை போட்டிருக்கிறேன். அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள். அதனால் பெரிய இழப்பு ஒன்றும் உண்டாகிவிடப் போவதில்லையே என்று அவள் கூறுவாள்.
என்னைப் பொறுத்த வரையில், இந்தப் பேருந்துகளில் இருக்கும் கூட்டத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. முதலில் தயங்கித் தயங்கி... பிறகு... படிப்படியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின்னால் இருந்து உரசும் ஆணின் உடல் எனக்கும் தெரிந்ததுதான். எனினும், சற்று நேரம் கடக்கும்போது அவர்களுடைய வியர்வையின் நாற்றமும் வெளிப்படும் ஆண்மைத்தனமும் என்னிடம் முழுமையான வெறுப்பை உண்டாக்கும்.
அருணா நேராக ஒப்பனை அறைக்குள் சென்றாள். தோல் பைக்குள் இருந்து உதட்டுச் சாயத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை உதடுகளுக்கு மேல் அதைப் பூசினாள்.
இந்த இளம் பெண்ணுக்கு அழகு விஷயத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடு இருக்கிறது என்று பல நேரங்களிலும் நான் ஆச்சரியப் பட்டிருக்கிறேன். ஒரு வகையான பைத்தியக்காரத்தனமான வெறி.
திடீரென்று நான் ஷம்ஸைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். எந்தச் சமயத்திலும் தன்னுடைய அழகான தோற்றத்தைப் பற்றிய எண்ணத்துடன் அவன் இல்லவே இல்லை என்று தோன்றுகிறது. மிகவும் சாதாரணமான ஆடைகளும் ஹேர் ஸ்டைலும் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன.
எனக்கு எதையும் சாப்பிட வேண்டும் என்றே தோன்றவில்லை. மனம் ஷம்ஸால் நிறைந்திருக்கிறது. பசியே தோன்றவில்லை. இப்போது என்னுடைய நன்மைகளின் சூரியன் என்ன செய்து கொண்டிருப்பான்? கல்லூரிக்குச் சென்றிருப்பானோ? இல்லாவிட்டால் அதற்கான தயாரெடுப்பில் இருப்பானா?
அடுத்த நிமிடம் நான் எழுந்து கையைக் கழுவி விட்டு, தொலைபேசிக்கு அருகில் சென்றேன். நேற்று, தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலின் தொலைபேசி எண்ணை ஷம்ஸ் என்னிடம் கூறியிருந்தான்.
அந்த நான்கு எண்களும் இதயத்தில் ஆணியடித்து பதிந்து விட்டதைப் போல தெளிவாக இருந்தன.
"யார் வேணும்?''
"ஷம்ஸ்- என்- மஹாலி. லெபனானில் இருந்து...''
"புரியுது...'' -அந்தப் பக்கத்திலிருந்து பதில் வந்தது.
"அறையில் இருக்கிறாரா என்று பார்க்கிறேன்''.
நான் எந்தவித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தேன். எந்த நொடியிலும் தொலைபேசியின் இன்னொரு மூலையில் இருந்து ஷம்ஸின் குரல் என்னுடைய காதுகளில் வந்து விழும். நாங்கள் இருவரும் வேறு யாரும் கேட்காமல் நேரடியாகக் காதுகளுக்குள் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.
அவனுடைய உதடுகள் என்னுடைய காதிற்கு சற்று மேலே இருப்பதைப் போலவும், பேசும்போது மூச்சு என்னுடைய காதில் வந்து மோதும் என்றும் எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பு என் மனதைத் தளர்வடையச் செய்தது. ஒரு பெரிய உணர்ச்சி வசப்படல் என்னுடைய முழு உடம்பையும் வந்து ஆக்கிரமித்தது. அப்போது அந்த முனையில் இருந்து கேட்டது: "ஷம்ஸ்...''
நான் ஷாக் அடித்ததைப் போல நின்றுவிட்டேன். நான் என்ன கூறுவேன்? எதுவும் இல்லை. பிறகு, ஏன் அழைத்தேன்? எனக்கே தெளிவாகத் தெரியவில்லை.
"யார்?'' -மீண்டும் ஷம்ஸின் குரல்.
"நான்தான்... டயானா.''
"ஹலோ...'' ஷம்ஸ் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். "நான் அங்கு அழைக்கலாம் என்றிருந்தேன். ஒரு முறை அழைக்கவும் செய்தேன். அப்போது எங்கேஜ்ட் ஆக இருந்தது.''
"ஓ... அப்போது என்னுடைய ஒரு தோழி அழைத்திருந்தாள். அருணா. நாங்கள் வெளியே போகலாம் என்றிருந்தோம்.''
"எங்கே? இவ்வளவு காலையில்?''
"எங்கும் இல்லை. வெறுமனே... பொழுது போக வேண்டாமா?''
"அப்படின்னா நேராக இங்கே வாங்க.''
"அய்யோ... வேண்டாம்...'' நான் சொன்னேன்: "ஆண் பிள்ளைகள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கா அழைக்கிறீங்க?''
"பிறகு, நான் வேறு எங்கு அழைப்பேன்?''
ஷம்ஸ் சிரித்தான்.
கேட்க வேண்டும் என்று இருந்தது: "எதனால் என்னை வாழ்க்கைக்கு அழைக்கக் கூடாது?"
ஆனால், எதுவும் கூற முடியவில்லை. நான் திடீரென்று சுய உணர்விற்கு வந்ததைப் போல சொன்னேன்:
"வைக்கட்டுமா?''
"நில்லு...'' -ஷம்ஸ் தடுத்தான். "எப்போ பார்க்கலாம்?''
"இப்போ... உடனடியாக..." என்று கூற இதயம் துடித்தது. அப்படிக் கூறினால் என்னுடைய மனதை ஷம்ஸ் படித்து விடுவான் என்ற பயம் உண்டானதால் நான் சொன்னேன்: "சாயங்காலம் வர்றீங்களா?''
"கட்டாயமா... நான் போரடிக்கவில்லையே?''
எதுவும் கூற முடியாமல் நான் சிரித்தேன். எனக்கு எப்படி உரையாடலைத் தொடர்வது என்று எந்தவொரு நிச்சயமும் இல்லாமல் போய்விட்டது. அதனால் பதைபதைப்புடன் நான் சொன்னேன்:
"சரி... சாயங்காலம் வரணும்!''
பிறகு நான் தொலைபேசியைக் கீழே வைத்தேன். திரும்பிப் பார்த்தபோது, மிகவும் அருகில் அருணா புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய அழகான இரண்டு பற்களை வெளியே காட்டிக்கொண்ட குறும்புச் சிரிப்பு.
"யார் அது?'' -அருணா எடை போட்டதைப் போல கேட்டாள்.
"என்னுடைய ஒரு நண்பன்.''
"அது புரியுது. யாருன்னு கேட்டேன்?''
திடீரென்று உண்டான வெட்க ஓட்டத்தில் நான் முழுமையாக சிவந்து போய்விட்டேன். அதை மறைப்பதற்காக நான் சொன்னேன்:
"உனக்கு ஏற்ற ஒரு ஆளை நான் பார்த்து வைத்திருக்கிறேன். மிகவும் பொருத்தமாக இருப்பான்.''
"ஓஹோ! அப்படின்னா இப்போ எனக்காகத்தான் அழைச்சியா?''
"ம்... பிறகு வேறு யாருக்கு? எனக்காகவா?''
என்னுடைய குரல் நடுங்கியதை அருணா கவனித்துவிட்டாள் என்று தோன்றியது. காரணம்- ஒருமுறை காணாமல் போன புன்சிரிப்பு மீண்டும் மலர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.
வெட்கத்தை மறைப்பதற்காக, நான் நேராக ட்ரஸ்ஸிங் அறையை நோக்கி ஓடினேன்.
தோட்டத்தின் எல்லைகளில் ஒதுங்கி ஒரு ஈரக்காற்று துடித்துக் கொண்டு நின்றிருந்தது. முன்னிரவுப் பொழுது சாயங்காலத்தைப் பின்னால் தள்ளிக் கொண்டு எங்களைச் சுற்றிலும் வந்து விழுந்து களைப்புடன் மயங்கியது.
நாங்கள் குன்றிமணி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தோம். நனைந்திருந்த புல் பரப்பில் இதற்கு முன்பு தெரிந்திராத சத்தங்களை வெளிப்படுத்திக் கொண்டு சிறுசிறு பூச்சிகள்... தோட்டத்திலும் வெளியிலும் இருந்த மரங்களில் குளிரைத் தாங்க முடியாமல் இடையில் அவ்வப்போது புகார் கூறிக் கொண்டிருந்த கிளிகள்... காற்றில் மழைத்துளிகளின் கவலை...
எனக்கு என்ன கூற வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை. இனம் புரியாத வெட்கத்தின் காரணமாக உடலும் மனமும் களைத்துப் போன ஒரு முட்டாளாக நான் இப்போது இருந்தேன்.
ஷம்ஸ் ஒரு சிவப்பு நிற ஸ்லாக் சட்டையும் தவிட்டு நிறத்தைக் கொண்ட பேண்ட்டையும் அணிந்திருந்தான். முன்பு பார்த்ததைவிட மிகவும் அதிகமான சிந்தனையும் வேதனையும் முகத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.
நான் கேட்டேன்: "ஷம்ஸ்! என்னை எதற்காக காதலிக்கிறீங்க?''
மாலை நேரம் தேம்பி அழுவதைப் போல தோன்றியது. ஒரு வாசனை இல்லாத காற்று. கவலை இல்லாத விதவையைப் போல, ஷம்ஸின் ஆடைகளில் குளிர் பரவியது.
"எனக்கு உறுதியாகத் தெரியவில்லை'' -ஷம்ஸ் சொன்னான்: "காதல் இருக்கிறதா என்று கேட்டால், எனக்குத் தெளிவான பதில் இல்லை.''
"எனக்கும் தெரியாது.''
அவன் மீண்டும் அமைதியாக ஆகிவிட்டான். நான் அந்த முகத்தையே ஆர்வத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷம்ஸ் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னை உணர்ச்சிவசப்படச் செய்ய முடியும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த நனைந்த மாலை நேரம்... கிச்சுக்கிச்சு மூட்டல்... புல் பரப்பில் இருந்து மேல் நோக்கி வரும் குளிர்... இவை அனைத்தும் என்னை வேறொரு ஆளாக மாற்றி விட்டிருக்கின்றன.
ஷம்ஸ் தரையிலிருந்து ஒரு குன்றிமணியைப் பொறுக்கி எடுத்து, இரண்டு விரல்களுக்கு மத்தியில் இறுக வைத்துக் கொண்டிருந்தான். எனக்கு அந்த சிவப்பு நிற அழகு குன்றிமணி மீது மதிப்பும் அத்துடன் பொறாமையும் தோன்றின. தொடர்ந்து என்னை நானே திருத்திக் கொண்டேன்.
இந்த ஒரு குன்றிமணிக்கு என்ன ஒரு தனித்தன்மை இருக்கிறது? எதுவுமே இல்லை. எங்களைச் சுற்றிலும் பச்சைப் புல் பரப்பில் இங்குமங்குமாக சிதறித் தெறித்துக் கிடக்கும் ஆயிரம் குன்றிமணிகளைப் போல இன்னொன்று. அவ்வளவுதான்.
ஷம்ஸ் தன்னுடைய கையில் இருந்த குன்றிமணியை என்னிடம் நீட்டிக்காட்டிக் கொண்டே சொன்னான்: "இந்தச் சிறிய அளவில் இருக்கும் காய்க்குள் நூறு யானைகளை வைக்கக்கூடிய சிற்பியைப் பற்றி உனக்கு என்ன தோணுது, டயானா?''
நான் பதில் கூறாமல் குன்றிமணியைக் கையில் எடுத்தேன்.
ஷம்ஸ் தொடர்ந்து சொன்னான்: "அது நடக்கக் கூடியதுதான் என்று நேரில் பார்ப்பது வரையில் நான் நம்பவில்லை. காதலைப் பற்றியும் கிட்டத்தட்ட இதே மாதிரியான அனுபவம்தான். இத்தனை வருடங்களாகக் கேட்டவை அனைத்தும் உண்மைதான் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது.''
"எப்படி?'' -நான் கேட்டேன்.
"காதலும் ஒரு குன்றிமணியைப் போலத்தான். பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஒரு சிவப்பு நிற முத்து. ஆனால், அதற்குள் ஆயிரம் உணர்ச்சிகள். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உள்ள உண்மையான பைத்தியக்காரத்தனங்கள், முட்டாள்தனங்கள், கண்ணீர் கடல்கள், வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்புகள், வேதனைகள்- இவை அனைத்தும் மறைந்து கிடக்கின்றன என்பதை இப்போதுதான் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.''
நாங்கள் மீண்டும் அமைதியானவர்களாக ஆனோம். மிகவும் தூரத்தில், நதிக்கு மேலே இருந்த பாலத்தின் வழியாக ஒரு புகைவண்டி ஓசை எழுப்பியவாறு கடந்து போய்க் கொண்டிருந்தது. அதன் சத்தம் குறைந்து குறைந்து, இறுதியில் நாத பிரம்மத்திலிருந்து வரும் ஒரு ஓசையாக மட்டும் என்று மாறியபோது ஷம்ஸ் மெதுவான குரலில் சொன்னான்: "நான் நேற்று தூங்கவேயில்லை.''
அதைச் சொன்னபோது அவன் தலை குனிந்திருந்தான். பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு வெட்கம் அந்தக் கழுத்தில் பரவி விட்டிருப்பதை நான் கவனித்தேன்.
ஷம்ஸ் நேற்று தூங்கவில்லை. இது நான் எதிர்பார்த்திராத ஒன்று என்று கூறுவதற்கில்லை. காரணம்- நேற்று இரவில் நான் அனுபவித்த மன வேதனைகளையும் குழப்பங்களையும் ஒரு குறைந்த அளவிலாவது அவனும் அனுபவித்திருப்பான் என்று எனக்கு எப்படியோ உறுதியாகத் தெரிந்திருந்தது.
"நான் புறப்படட்டுமா?'' -அவன் எழுந்தான்.
"உட்காருங்க'' -என்னால் கட்டாயப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. "இன்னும் கொஞ்ச நேரம் உட்காருங்க.''
"எதற்கு?''
"போய்விட்டால்... போய்விட்டால்... எனக்கு கவலை வந்திடும்.''
"எப்போதாவது போகாமல் இருக்க முடியாதே?'' ஷம்ஸ் சிரித்தான். அவனுடைய குரலில் என்னைக் குறித்து கொண்ட இரக்கம் வெளிப்பட்டது.
"உண்மைதான்'' -நான் முணுமுணுத்தேன். "ஆனால், என்னால் விடத் தோன்றவேயில்லை.''
என்னுடைய கண்களில், எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை- கண்ணீர் வந்து நிறைந்தது. கண்களின் அடிப்பகுதியில் சற்று நேரம் தங்கியிருந்துவிட்டு, அது மெதுவாகக் கீழ் நோக்கி வழிந்தது.
ஷம்ஸ், கேட்டை நோக்கி நடந்து கொண்டே சொன்னான்: "தாமதமானால் ஹாஸ்டலில் பிரச்சினை வரும். நான் நாளைக்கு வர்றேன்.''
நானும் அவனுடன் சேர்ந்து எழுந்தேன். இல்லை... எனக்கு அவனைப் பிடித்து நிறுத்துவதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அதைச் செய்ய என்னால் முடிந்திருந்தால், அந்த இடுப்பைச் சுற்றிப் பிடித்து இழுத்து, அந்த உடலை என்னை நோக்கி இணைத்திருப்பேன். இந்தப் புல் பரப்பும் தூங்கிக் கொண்டிருக்கும் குன்றிமணிகளும் இன்று இரவு முழுவதும், ஆழமான இன்பத்தின் அடிமைகளாக ஆகிவிட்டிருப்பார்கள்.
"காலையில் நான் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.'' வெளி வாசல் கதவை நெருங்கியபோது, ஷம்ஸ் சொன்னான். தொடர்ந்து சாலையில் கால் வைத்து, "நல்ல இரவு'' கூறிவிட்டு, நனைந்து உறங்கிக் கொண்டிருந்த விளக்குக் கால்களுக்கு அடியில் நேராக நடந்து சென்றான். இறுதியாக, வளைவில் திரும்பி மறைந்தும் போனான்.
நான் கேட்டிலேயே சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன். இதயம் தாழ்ந்த அளவில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது.
பாலைவனத்திற்கு மத்தியில் சிக்கிக் கொண்ட, தனிமைப்பட்டு விட்ட, பயணம் செய்யும் பெண்ணாக நான்...
யாருமே இல்லாத தீவில் மாட்டிக்கொண்ட நடனப் பெண்ணின் கவலை... இப்போது நான் அனுபவிக்கும் வேதனை.
என்னுடைய கைக்குள் ஒரு குன்றிமணி கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டு இருந்தது. அவனிடமிருந்து நான் வாங்கிய அழகான செல்வம்... அது என்னுடைய உயிராக ஆகிவிட்டது. அவனுடைய கைவிரல்களுக்குள் சிக்கிய அதிர்ஷ்டத்தைப் பெற்ற அழகுப் பொருள் அது.
நான் ஏங்கினேன். எனக்குக் கிடைக்காத உயர்ந்த செல்வங்களைச் சொந்தத்தில் வைத்திருக்கும் ஒரு உயிரற்ற பொருள்.
நான் அதையே நீண்ட நேரம் பொறாமை கலந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். தொடர்ந்து மரக்கிளைகளில் காற்றின் இரைச்சல் சத்தம் அதிகமாவதையும், இரவு கோள்கள் மழையைத் தங்களுடைய படுக்கையறைக்கு ரகசியமான மொழியில் அழைத்து வரவழைப்பதையும் கேட்டதும் அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடந்தேன்.
வெளியே இரவு உறங்கிக் கொண்டிருந்தது. இடையில் அவ்வப்போது மழையின் குறும்புத்தனமான கைகள் நீண்டுகொண்டு வந்து கிச்சுக்கிச்சு மூட்டும்போது மட்டும் அது சற்று அசைந்து கொண்டிருந்தது. இரவைத் தட்டி எழுப்பும் மழையின் முத்தத்தைக் கேட்டேன். கண் விழித்து எழும் இரவின் வெப்ப மூச்சுகளைக் கேட்டேன். இரவு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தது.
எனக்குத் தூக்கம் வரவில்லை. சாளரத்தின் அருகில், வெளியே இருட்டைப் பார்த்துக்கொண்டு, தவித்துக்கொண்டிருக்கும் இதயத்துடன் நான் நிற்கிறேன். என்னுடைய கையில் இருந்த குன்றி மணி, என்னுடைய நன்மைகளின் சூரியனைப் பற்றி எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
நான் அந்தக் குன்றிமணியின்மீது முத்தமிட்டேன். அப்போது ஷம்ஸின் நீளமான சிவப்பு விரலின் வாசனை என்னுடைய மூளையில் வந்து நிறைவதைப் போல எனக்குத் தோன்றியது. ஆழமான ஒரு ஞாபகத்தைப் போல, இந்தக் குன்றிமணி என்னை சோர்வடையச் செய்கிறது. நான் இதை ஒரு தங்கத்தால் ஆன பெட்டிக்குள் வைத்து, விலை மதிப்புமிக்க காதல் பரிசைப் போல, இறுதி மூச்சு வரை பத்திரப்படுத்தி வைப்பேன்.
நிமிடங்கள் பைத்தியக்காரத்தனத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. பைத்தியக்காரத்தனத்தின் ஆழம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. எனக்கு என்ன காரணத்தாலோ அவசரம் தோன்றியது. அனாவசியமான சிந்தனைகள் மனதை நிறைக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டே நான் அவற்றை உற்சாகப்படுத்தினேன்.
ஷம்ஸின் விரல்களுக்கு மத்தியில் இருந்து தவித்துக் கொண்டிருந்த இந்த சிவப்பு அழகு, என்னுடைய உடலின் ஒரு பகுதிதான் என்று தோன்றியது. நான் அதை எடுத்து, என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிய தெளிவான அறிவே இல்லாமல் ரவிக்கைக்குள், ப்ரேஸியருக்குள் வைத்தேன். என்னுடைய உடலில் இருந்து எப்படியோ பிரிந்து சென்ற உடலின் ஒரு பகுதி, சுற்றித் திரிந்துவிட்டு, அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்துவிட்டுத் திரும்பி வந்து அதன் ஆரம்ப இடத்தை அடைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.
என்னுடைய ஆடைகளுக்குள் இரண்டு விரல்கள் எதற்கோ தேடி ஊர்கின்றன என்றும்; என்னுடைய உடல் சுகமான ஏதோ சுய உணர்வற்ற பகுதியில் விழுந்து கிடக்கிறது என்றும் நான் எனக்குள் கூறி நம்ப வைக்க முயற்சித்தேன். அத்துடன் தாகமெடுத்து உறங்கிய இதயம் கண்விழித்து ஒரே மூச்சில் தாக நீர் முழுவதையும் வேகமாகக் குடித்து, மீண்டும் உறக்கத்தில் மூழ்கிவிட்டது.
திரும்பவும் கட்டிலில் வந்து படுத்து சந்தோஷத்தால் தேம்பித் தேம்பி அழுதபோது, வெளியே மூன்றாவது ஜாமத்தின் மழை, துளித் துளியாக வந்து விழுந்து கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில், இரவில் எனக்கு மட்டும் புரியக்கூடிய மொழியில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்- பொழுது புலரும் வரை.
திரை அரங்கத்தின் மங்கலான வெளிச்சம், செயற்கையாகக் குளிர வைக்கப்பட்ட காற்றில் தொங்கிப் பிடித்து நின்று கொண்டிருந்தது. என்னுடைய உடல் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியே மழை பெய்யும் போதாவது, இவர்கள் ஏர் கூலரை நிறுத்தக் கூடாதா? "மிகவும் குளிர்ச்சியா இருக்கு'' -நான் சொன்னேன்.
"உண்மைதான். நாம் போனால் என்ன?'' -அருணா கேட்டாள்.
ஷம்ஸ் அபூர்வமாக மட்டுமே வெளியே காட்டக்கூடிய ஒரு தனித்துவ சிரிப்பைச் சிரித்தான். உலகத்தில் இருக்கும் மற்றவர்கள் எல்லாரும் வெறும் முட்டாள்கள் என்று அழைத்துக் கூறும் ஒரு சிரிப்பு ஷம்ஸிடம் இருக்கிறது. முதலில் நான் அதை அந்த அளவிற்கு கவனிக்கவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிரிப்பும் ஷம்ஸின் வேறு பல சிறப்பு குணங்களுடன் என்னுடைய கவனத்தில் பட்டது.
நான் நடுவில் உட்கார்ந்திருந்தேன். என்னுடைய இடப் பக்கத்தில் ஷம்ஸும் வலப் பக்கத்தில் அருணாவும் உட்கார்ந்திருந்தார்கள்.
காலையில் காட்சிக்கு வரும்போதே அருணாவிடம் நான் விஷயத்தைக் கூறியிருந்தேன். அவள் என்னைப் பாராட்ட மட்டும் செய்தாள். திரை அரங்கத்தை அடைந்து, திரைப்படம் ஆரம்பமான பிறகு ஷம்ஸ் வரவில்லை என்றபோது எனக்கு கவலை உண்டாக ஆரம்பித்தது. அவமானப்பட்டு விட்டதைப் போல நான் உணர்ந்தேன். என்னுடைய வார்த்தைகளுக்கு அவன் தரும் விலை எவ்வளவோ குறைவு என்று எனக்குத் தோன்றியது. ஆனால், சற்று நேரம் தாண்டியவுடன், வாசல் திரைச்சீலைகளை விலக்கிக் கொண்டு ஷம்ஸ் நிற்பதை நான் பார்த்தேன். அவனுடைய கண்கள் இருக்கைகளில் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், முதலில் அழைக்க வேண்டாம் என்று தோன்றியது. சற்று நேரம் நின்று பார்க்கட்டுமே! இவ்வளவு நேரமாக நான் இங்கு காத்திருந்ததைப் பற்றி சிறிதுகூட அவன் நினைத்துப் பார்க்கவில்லையே!
அருணா ஷம்ஸை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அதனால் வாசலில் வந்து நின்று கொண்டிருந்த இளைஞனைப் பற்றி அவள் கவனமே செலுத்தவில்லை.
ஆனால், என்னால் அப்படி இருக்க முடியாதே! நான் உரத்த குரலில் அழைத்தேன்: "ஷம்ஸ்...''
அவன் என்னைப் பார்த்தான். நான் கைக்குட்டையை உயர்த்திக் காட்டினேன். இருட்டில் தட்டுத்தடுமாறி வந்து ஷம்ஸ் என்னுடைய இடப் பக்கத்தில் உட்கார்ந்தான்.
நான் அருணாவை அறிமுகப்படுத்தினேன்: "அருணா... ஷம்ஸ்''.
அருணா புன்னகைத்துக் கொண்டே கையை நீட்டினாள். என்னுடைய இதயத்தில் முன்னால் அவர்களுடைய கைகள் ஒன்றோடொன்று இறுகப் பிடிப்பதைக் கண்டதும் ஏதோவொன்று உள்ளே நொறுங்குவதைப் போல தோன்றியது.
அந்த உணர்விற்குப் பெயர் என்ன?
பொறாமை? அப்படித்தான் இருக்க வேண்டும்.
"என்ன செய்றீங்க?'' -ஷம்ஸ் கேட்டான்.
அருணா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். "திரைப்படம் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.''
ஷம்ஸ் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டான். எனக்கு சிரிப்பு வரவில்லை. எனினும், செயற்கையாக வரவழைக்கப்பட்ட ஒரு சிரிப்பை வெளிப்படுத்தி நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அருணாவை என்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டு வந்தது முட்டாள்தனமாக ஆகிவிட்டதே என்ற தோணல் அந்த நிமிடத்தில் ஆரம்பிக்கவும் செய்தது.
திரைச்சீலையில் ஏதோ படங்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. பழைய படம். திரை அரங்கில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள்.
சாதாரணமாக எந்தத் திரைப்படமாக இருந்தாலும், நான் அப்படத்துடன் இரண்டறக் கலந்து விடுவேன். என்னையே அறியாமல் கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் போய் மூழ்கி விடுவேன். பிறகு, படம் முடிவது வரை என்னால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. ஆனால், இன்று வாழ்க்கையில் முதல் தடவையாக திரைச்சீலையில் தோன்றி மறைந்து கொண்டிருப்பவை வெறும் படங்கள்தான் என்றும்; நிழல் வடிவங்களைப் போல உண்மையற்றவைதான் என்றும் நான் புரிந்துகொள்கிறேன். அதற்குக் காரணம்- என்னுடைய இதயம் அங்கு எங்கும் இல்லை. வேறு ஏதோ ஒற்றையடிப் பாதைகளின் வழியாக அது பயணித்துக் கொண்டிருந்தது.
ஷம்ஸ் ரகசியமாக என்னுடைய காதுக்கு அருகில் உதட்டை நெருக்கமாக வைத்துக்கொண்டு கேட்டான்: "தோழியையும் ஏன் அழைச்சிட்டு வந்தே?''
"என்ன?'' -அதைக் கேட்டபோது காரணமே இல்லாமல் சந்தோஷம் என்னுடைய இதயத்தில் நிறைந்து நின்றது.
"தேவையில்லை.''
சந்தோஷத்தை மறைத்துக்கொண்டு, பொய்யான வருத்தத்துடன் நான் சொன்னேன்: "அருணா என்னுடைய தோழி. அவள் இல்லாமல் எனக்கு எந்தவொரு விஷயமும் இல்லை.''
"என்ன செய்றாங்க? படிக்கிறாங்களா?''
"இல்லை... படிப்பை நிறுத்திவிட்டாள்.'' என்னுடைய இதயத்தில் உண்டான சந்தோஷம் என்ற ஈ சிறகுகள் சோர்வடைந்து தரையில் வந்து விழுவதை நான் பார்த்தேன்.
"நீங்கள் உறவினர்களா?'' -ஷம்ஸ் மீண்டும் கேட்டான்.
"இல்லை, அருணாவின் தந்தை பெரிய காண்ட்ராக்டர். ஒரு மேனன்'' -நான் மெதுவான குரலில் சொன்னேன். எங்களுடைய உரையாடலை அருணா கேட்கக் கூடாது என்று கட்டாயமாக நான் நினைத்தேன்.
நான் ஓரக் கண்களால் அருணாவைப் பார்த்தேன். அவள் திரைச் சீலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள்; பாவம்!
என்னுடைய தோளில் ஷம்ஸின் கை மெதுவாக வந்து விழுந்தது. உடல் தளர்வதைப் போல தோன்றியது. அந்த தளர்ச்சியில், ஷம்ஸின் கைகள் கூறியபடி நடப்பதைப் போல நான் மெதுவாக அந்த மார்பின் மீது சாய்ந்து உட்கார்ந்தேன்.
"இந்த ஏர் கூலரைக் கொஞ்சம் ஆஃப் பண்ணியிருந்தால்...'' -பதைபதைப்பை மறைத்துக் கொண்டு நான் சொன்னேன்.
"உண்மைதான்'' -ஷம்ஸ் சொன்னான். தொடர்ந்து மெதுவாக என்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருப்பி உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். எனக்கு பதிலுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. எனினும், அதற்கு முடியவில்லை. ஒவ்வொரு சதையும் சுகமான சோர்வில் ஆழ்ந்துவிட்டிருந்தது.
என்னுடைய உதடுகளை என்னிடமே திருப்பித் தரும்போது ஷம்ஸ் மெதுவான குரலில் சொன்னான்: "நான் காதலிக்கிறேன்.''
"இப்போ சந்தேகமில்லையா?'' -நான் கேட்டேன்.
"சிறிதும் இல்லை.''
அதற்கு மேல் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றவில்லை. வாழ்க்கையின் இறுதி லட்சியத்தை அடைந்துவிட்ட ஒரு திருப்தியான எண்ணத்துடன் நான் அவனுடைய தோளில் சாய்ந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினேன். இனி அடைவதற்கு எதுவும் இல்லை. என்னுடைய மனம் மெதுவான குரலில் சொன்னது: "நீ உன்னுடைய நன்மைகளின் சூரியனை அடைந்து விட்டிருக்கிறாய். கடந்து சென்ற நிமிடம் வரை ஒரு அனாதையாக மட்டுமே இருந்த நீ இப்போது அதுவல்ல.''
இடைவேளை விட்டபோது அருணா சொன்னாள்: "மிகவும் போரடிக்கிற திரைப்படமாக இருக்கிறதே, டயானா?''
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நான் இந்தத் திரைப்படத்தைப் பற்றி என்ன கருத்து கூறுவேன்?
"என்ன தோன்றியது?'' -அவள் ஷம்ஸிடம் கேட்டாள்.
அவனும் என்னைப் போலவே பதில் எதுவும் இல்லாமல் தத்தளிப்பதை நான் பார்த்தேன். பிறகு அவன் சொன்னான்.
"உண்மைதான். மிகவும் போர்தான்...''
அருணா மீண்டும் என்னை நோக்கித் திரும்பினாள்: "டயானா, உனக்கு என்ன தோன்றியது?''
"மோசமாக இருக்கு'' -நான் பொய் சொன்னேன். "அப்படியென்றால் நாம புறப்படுவோம். எனக்கு ரொம்பவும் தலை வலிக்குது.'' அவள் கூறியது பொய் என்றும்; என்மீது கொண்ட அதிகமான பொறாமையால் மட்டுமே அப்படிக் கூறினாள் என்றும் எனக்கு நன்கு தெரிந்தது.
"உட்காரு. அடுத்த பாதியையும் பார்த்து விடுவோம்- எப்படி இருக்கிறது என்று.''
"வேண்டாம். நான் அதற்குத் தயாராக இல்லை'' -அருணா சொன்னாள்: "அடுத்த பாதி இன்னும் மோசமாக இருக்கும். இதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க என்னால் முடியாது.''
அவள் அர்த்தம் வைத்துக்கொண்டு பேசுகிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய தோழி என்னைப் பற்றி இப்படிக் கூறி விட்டாளே என்று நான் வருத்தப்பட்டேன். எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
"நீங்கள் இரண்டு பேரும் வரவில்லையென்றால், வேண்டாம் நான் புறப்படுகிறேன்.''
"எப்படிப் போவாய்?'' -நான் கேட்டேன். என்னுடைய காரில்தான் அருணாவும் வந்திருந்தாள்.
"வாடகைக் கார் கிடைக்குமே!'' -அவள் எழுந்து விட்டாள்.
"அய்யோ... அது வேண்டாம்... நானே கொண்டு வந்துவிடுகிறேன்.''
"வேண்டாம்'' -அருணா நடக்க ஆரம்பித்தாள்.
நான் ஷம்ஸின் முகத்தையே பார்த்தேன். அவன் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தான்.
"அருணா எல்லாவற்றையும் பார்த்துவிட்டாள் என்று தோன்றுகிறது'' -நான் குரலை அடக்கிக் கொண்டு மெதுவான குரலில் சொன்னேன்.
"இனி எந்தவித காரணத்தைக் கொண்டும் நாம இருக்க வேண்டாம்'' -ஷம்ஸ் சொன்னான்.
"அடுத்த முறை வரும்போதாவது தோழிகளை அழைத்துக்கொண்டு வராமல் இருக்கணும்.''
நான் எழுந்தேன்: "அருணா...'' அருணா கதவை நெருங்கியிருந்தாள். அவள் திரும்பி நின்று ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்தாள்.
"நானும் வர்றேன்'' -நான் சொன்னேன். திரும்பவும் அவளுடைய வீட்டை அடையும் வரை நாங்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தனக்குத் தாங்க முடியாத அளவிற்குத் தலைவலி இருக்கிறது என்றும்; மதியத்திற்குப் பின்னால் தொலைபேசியில் பேசுவதாகவும் சொன்ன அருணா தன் வீட்டிற்குள் சென்றாள்.
போகும் வழியில், கடற்கரையில், யாருமே இல்லாத, காற்று நிறைந்த சாலையை அடைந்ததும் நான் காரை நிறுத்தினேன். ஸ்டியரிங் வீலின் மீது தலையை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதேன்.
"எனக்கு அருணா ஃபோன் பண்ணினாங்க'' -ஒரு சாதாரண சம்பவத்தைக் கூறுவதைப் போல அவன் சொன்னான்.
"எப்போ?'' -நான் கேட்டேன்.
"நேற்று.''
"எதற்கு?''
"மன்னிப்பு கேட்குறதுக்காக...''
"ஏன்?''
"அன்னைக்கு திரை அரங்கில் இருக்குறப்போ அப்படி நடந்து கொண்டதற்காக.''
அதிர்ச்சியடைந்து விட்டேன். அருணா! அவள் மன்னிப்பு கேட்க வேண்டியது ஷம்ஸிடம் இல்லையே! அதற்குப் பிறகு என்னிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. பிறகு... இப்போது?
"நீ ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே?'' -ஷம்ஸ் கேட்டான்.
"ஒண்ணுமில்ல...'' -நான் அதற்கு மேல் பேச விரும்பவில்லை.
நாங்கள் மீண்டும் ஈரமான மணலின்மீது நடக்க ஆரம்பித்தோம். கடலுக்கு மேலே மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு மது அருந்திய மனிதனைப் போல சாரல் மழை இடையில் அவ்வப்போது கரையிலும் விழுந்து கொண்டிருந்தது.
என்னுடைய ஸ்கர்ட் முழுமையாக நனைந்துவிட்டிருந்தது. ஷம்ஸின் வற்புறுத்தல் காரணமாகத்தான் புடவைக்கு பதிலாக இதை எடுத்து அணிந்துகொண்டு வந்திருந்தேன். எந்தச் சமயத்திலும் எனக்கு இது பிடிக்கவே பிடிக்காது.
கடற்கரையில் யாரும் இல்லை. குளிக்கும் இடத்தில் இரண்டு வெள்ளைக்காரிகள் குளிக்கும் ஆடைகள் மட்டும் அணிந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உடம்பைப் பார்ப்பதற்காக மழைச்சாரலில் நனைந்தவாறு சில ஊர் சுற்றிச் சிறுவர்கள் நின்றிருந்தார்கள்.
"இவர்களைப் பார்க்குறப்போ...'' -ஷம்ஸ் அந்தச் சிறுவர்களைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்: "நான் செபாஸ்டியனை நினைக்கிறேன்.''
"எந்த செபாஸ்டியன்?''
"டென்னஸ்ஸி வில்லியம்ஸின் ஸடன்லி லாஸ்ட் ஸம்மரை வாசிக்கலையா? அதில் ஒரு கவிஞன் வருவான்- மனதில் அமைதி இல்லாமல்...''
ஷம்ஸ் அந்த கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். நான் இந்த மாதிரியான புத்தகங்கள் எதையும் வாசிப்பதில்லை. டெனீஸ் ராபின்ஸோ ரூபி எம். ஏயேர்ஸோ ஹரால்ட் ராபின்ஸோ எனக்குப் புரியும். மற்ற எதுவும்...
"நானும் அதைப் போல கவலையில் இருப்பவன். என்னுடைய பலத்தின்மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஏதாவதொரு இளம் பெண் சிறிதளவு மனதைக் கவர்ந்துவிட்டால் நான் அவளுடைய அடிமையாக ஆகிவிடுவேனோ என்று எனக்கு பயம் வந்துவிடும்.''
கடலில் இருந்து ஒரு குளிர்ச்சியான காற்று கடந்து வந்தது. நாங்கள் நடந்து கொண்டிருந்த கரையின் வழியாக காற்றின் குளிர்ச்சி பாய்ந்து செல்வதைப் பார்த்தேன். ஒரு நனைந்த மதிய வேளை. அதனால் தென்னை மரங்களுக்கு மேலே சூரியனின் வெளிச்சம் தங்கி இருந்தது.
"மழை பலமா வருது'' -ஷம்ஸ் சொன்னான்.
"பலமா வரட்டும்.''
"நாம நனைந்து குளித்து விடுவோம்.''
"நனையட்டும்.''
"காய்ச்சல் வரும்.''
"வரட்டும்.''
"பிறகு... இறந்துவிட்டால்...?''
"இறந்து விட்டுப் போவோம்'' -நான் திடீரென்று ஷம்ஸின் கைகளைப் பற்றி நிறுத்திவிட்டு, அந்த முகத்தையே பார்த்தேன்.
நனைந்த சுருண்ட முடிகள் நெற்றியில் சிதறிக் கிடந்தன. மூக்கின் நுனியில் ஒரு மழைத்துளி கீழே விழாமல் தொங்கி, நடுங்கிக் கொண்டு நின்றிருந்தது.
ஆள் அரவமற்ற கடற்கரை. மதிய நேரத்தின் வெப்பத்தை உணராத உப்புக் காற்று. தொடர்ந்து பெய்துகொண்டு இரைச்சலிடும் மழை.
நான் அந்த மார்பின்மீது சாய்ந்தேன். என்னுடைய முகத்தை அந்த சட்டையின்மீது வைத்தேன். ஷம்ஸ் ஒரு முறை என்னுடைய முகத்தைப் பிடித்து உயர்த்த முயற்சித்தான். ஆனால், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தால்...! ஒரு முத்தம் இதற்கு ஒரு முடிவாக இல்லாமல் இருக்கட்டும்!
அப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. உணவு இல்லாமல், தூக்கம் இல்லாமல், அசைவு இல்லாமல் ஏதோ சிற்பியின் கண்ணுக்குத் தெரியாத கை வண்ணத்தைப் போல ஒருவரையொருவர் இறுகக் கட்டியணைத்துக் கொண்டு கற்பனைக்கு எட்டாத காலம் வரைக்கும் இப்படியே நின்று கொண்டிருக்க இயலுமானால்...! இரைச்சலிடும் அலைகளாலும் அடித்து போய்க் கொண்டிருக்கும் காற்றாலும் எதுவும் செய்ய முடியாத அசைவே இல்லாத ஒரே ஒரு சிலையைப் போல-என்னுடைய கண்ணில் ஒரு துளி கண்ணீர் அரும்பி திரண்டு நின்றது. கீழே விழ சம்மதிக்காமல், கன்னத்திற்குச் சற்று மேலே அது நின்றிருந்தது.
நான் ஒரு விரலை உயர்த்தி அந்த கண்ணீர்த் துளியைத் தொட்டு உடைத்தேன்.
"ஏன் அழறே?'' -ஷம்ஸ் கேட்டான்.
"ஒண்ணுமில்ல...''
"அது பொய்.''
"ஆமாம்.''
"என்ன?''
"பொய்.''
"பிறகு ஏன்னு சொல்லு.''
"ஒண்ணுமில்ல...'' -அப்படி தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்று தோன்றியபோது, நான் சொன்னேன்: "என்னைக் காதலிக்கவில்லை.''
"யார்?'' -ஷம்ஸ் கேட்டான்.
"யாரும்.''
"பிறகு நான் யாரைக் காதலிக்கிறேன்?''
"அருணாவை...'' -என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்பது அந்த நிமிடத்திலிருந்து தெரிந்தது.
அவன் என்னுடைய குற்றச்சாட்டை மறுக்க முயற்சிக்கவில்லை. எதுவும் கூறாமல் என்னுடைய கழுத்திற்கு மேலே விரலை வைத்தவாறு, கடலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
"என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.'' -நான் சொன்னேன். அறியாமல் வந்து போன வார்த்தைகள். எந்தச் சமயத்திலும் மனப்பூர்வமாக நான் கூற நினைத்த வார்த்தைகள் அல்ல அவை.
அதற்கு ஷம்ஸ் எந்த பதிலும் கூறவில்லை.
"என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?'' - அறிவின் பிடியை விட்டு வெளியே பாய்ந்து வந்த ஒரு கேள்வி.
"எனக்குத் தெரியாது.''
"என்னை ஏமாற்றுகிறீர்களா?''
"எனக்குத் தெரியாது.''
நான் அவன்மீது மேலும் அழுத்தமாக சாய்ந்தேன். "என்னைக் காதலிக்கிறீர்களா?''
"ம்...'' -ஷம்ஸ் மெதுவான குரலில் சொன்னான்: "ம்...''
எனக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. மலரைப் போன்ற மென்மையான அந்த இதயத்தை நான் வேதனைப்பட வைத்துவிட்டேன் என்று தோன்றியது. எதையும் கேட்டிருக்க வேண்டியதில்லை. திருமணப் பிரச்சினையை எழுப்பியிருக்க வேண்டியதே இல்லை.
"நான் வேதனைப்படுத்தி விட்டேனா?'' -அதைக் கேட்டபோது என்னுடைய கண்கள் நிறைந்து வழிந்தன. ஷம்ஸ் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நான் மார்பின்மீது முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டேன்.
"எந்தச் சமயத்திலும் இல்லை.''
அது ஒரு பொய் என்று எனக்குத் தோன்றியது.
"மன்னித்துவிடுங்கள்'' -நான் மெதுவான குரலில் சொன்னேன்.
"எதற்கு?''
கேள்வியை வேண்டுமென்றே சட்டை பண்ணவில்லை. "எனக்கு எவ்வளவோ சொல்றதுக்கு இருக்கு.'' அதைச் சொன்னபோது எந்தவொரு காரணமும் இல்லாமல் நான் தேம்பித் தேம்பி அழுதேன். "இப்போது என்ன?''
"இப்போ... இப்போ... எனக்கு எதுவும் சொல்ல வரல...''
"சொல்லு.''
"இல்ல...''
"என்ன?''
"ஒரு நாள் முழுவதும் நான் சொல்லணும்.''
"எப்போது வேணும்னாலும் சொல்லலாம்.'' -அவன் புன்னகைத்ததைப் போல தோன்றியது. "எனக்கு விடுமுறை நாளாக இருந்தால், மிகவும் நல்லது.''
"விளையாட்டை விடுங்க.'' -நான் திடீரென்று அவனிடமிருந்து விலகி கடலைப் பார்த்துக் கொண்டு நின்றேன். இவ்வளவு நேரமும் என்னுடைய மார்பில் குளிர்ச்சி இல்லாமல் இருந்தது. இப்போது குளிர்ச்சியான கடல் காற்று ஆவேசத்துடன் வந்து மார்பில் மோதியது. குளிர்ந்து நடுங்கிப் போய்விட்டேன்.
ஷம்ஸ் சற்று நகர்ந்து, மணலின் மேற்பகுதியில் இருந்த குளிர்ச்சியைக் காலால் நீக்கிவிட்டு அங்கு உட்கார்ந்தான். நான் மேலும் சற்று கடலில் இறங்கி நின்றேன்.
காற்று என்னுடைய ஸ்கர்ட்டின் முன்பகுதியில் குறும்புத்தனத்தைக் காட்டியது. தலைமுடிக்கு நடுவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போல தோன்றியது. முகத்தின்மீது ஈரமான உப்புச்சுவை கொண்ட காற்றும் மழைத்துளிகளும் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தன.
சிறிதுகூட வெட்கம் தோன்றவில்லை. வேறு யாரும் இல்லையே! என்னுடைய நன்மைகளின் சூரியன் மட்டும்தானே பார்த்துக் கொண்டிருக்கிறான்! பரவாயில்லை.
எனக்கு எல்லாவற்றையும் மறந்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல தோன்றியது. சந்தோஷம் ஒரு வண்ண பலூனைப் போல என் மனதிற்குள் மூச்சை அடைக்கும் அளவிற்கு நின்று கொண்டிருந்தது. சந்தோஷத்தின் எல்லையில் பாதங்களில் வந்து முத்தமிடும் அலைகளின் நீரை கை நிறைய அள்ளி நான் முகத்தில் தெளித்தேன். உப்புச் சுவை கொண்ட நீர் உதடுகள் வழியாக உள்ளே சென்றபோது, ஒரு சிறு குழந்தையைப் போல நாக்கை நீட்டி நான் அதை விரும்பிக் குடித்தேன்.
நான் பைத்தியக்காரியா?
ஆமாம்... ஆமாம்... ஆமாம்.
என்னுடைய நன்மைகளின் சூரியனின் உருவத்தை நானே அலங்கோலப்படுத்திவிட்டேன்.
எதற்காக நான் திருமண விஷயத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தேன்? எந்தவொரு தேவையும் இல்லை. எனினும், என்னுடைய கட்டுப்பாட்டின் எல்லா எல்லைகளையும் தாண்டி, நான் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, அந்தப் பிரச்சினை வெளியே பாய்ந்து வந்துவிட்டது. அந்த நிமிடம் வரை அந்த ஒரு சிந்தனை என்னுடைய மனதில் இருந்ததில்லை என்று நான் சத்தியம் செய்கிறேன். அதற்குப் பிறகும் திருமணம் பற்றிய சிந்தனை என்னுடைய மனதில் இல்லை. எனினும், எப்படியோ தேவையே இல்லாத அந்த ஒரு பிரச்சினையைப் பிடித்து வெளியே கொண்டு வர என்னால் முடிந்திருக்கிறது.
எனக்கு என்னைப் பற்றியே எந்தவொரு மதிப்பும் இல்லாமற் போய்விட்டது.
ஏராளமான திருமண ஆலோசனைகளை அப்பா எனக்காகக் கொண்டு வந்தார். தாங்க முடியாத நிலை வந்தபோது நான் அப்பாவிடம், "எனக்கு ஐந்து வருடங்கள் கடந்த பிறகு திருமணம் செய்தால் போதும்" என்று கூறினேன். காரணம் என்ன என்று கேட்டதற்கு, "எனக்கு உங்களைப் பிரிந்து போவதற்கு முடியவில்லை" என்று அவரிடம் சொன்னேன். ஆனால், உண்மை அது அல்ல. நான் விளையாடித் திரிய நினைத்தேன். எந்தவொரு ஆணுக்கும் அடிமையாக ஆகாமல், சுதந்திரமாக- அழகும் உற்சாகமும் இல்லாமற் போவது வரை அப்படியே சந்தோஷம் நிறைந்த இதயத்துடன் சுகமாக வாழ்வது- இதுதான் என்னுடைய மனம்.
பிறகு- இப்போது எப்படி நானே திருமண விஷயத்தை ஷம்ஸிடம் சொன்னேன்? "என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டபோது, என்னுடைய மனதில் எந்த சைத்தான் வந்து புகுந்தது?
என்ன நடந்ததோ... எனக்குத் தெரியாது.
ஷம்ஸ் அதற்குப் பிறகும் பல தடவை வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் அப்பாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தான். அவ்வளவு நேரமும் எதுவும் கூறாமல், எனக்கு தெய்வம் ஒதுக்கி வைத்த நேரம் முழுவதும் வீணாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு, நான் அப்பாவின் நாற்காலியின் கையில் அமர்ந்திருந்தேன். அதற்குப் பிறகு அப்பா இல்லாத சந்தர்ப்பமாகப் பார்த்து மட்டுமே நான் ஷம்ஸை வரவழைத்தேன்.
நான் செய்து கொண்டிருப்பது தவறா? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. என்னுடைய கால்கள் தடுமாறுகின்றனவா? ஒரு தாய் இல்லாமலிருப்பதன் கவலையை இப்போது முதல் முறையாக நான் உணர்கிறேன். அம்மா இருந்திருந்தால் தேவையே இல்லாமல் வைக்கும் ஒவ்வொரு எட்டும் என்னைத் திட்டும். ஆயா ஷம்ஸைப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. ஒரு முறை மட்டும் "மிகவும் நல்ல இளைஞன்'' என்று கருத்துக் கூறினாள்.
இரவு நேரங்களில் நான் பல தடவை அழுதிருக்கிறேன். எல்லாரும் தூங்கிய பிறகுகூட, தூங்க முடியாமல், படுக்கையில் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டு படுத்திருப்பது என்பது சிறிதும் புதுமையே இல்லாத ஒரு அனுபவமாக மாறியது.
தெய்வமே, நான் பல நேரங்களில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு அமைதியாகப் பிரார்த்தனை செய்தேன். எனக்கு வேறு யாரிடமும் குற்றத்தை ஒப்புக்கொண்டு கூறுவதற்கு இல்லை. அம்மா இல்லை. அப்பா இல்லை. அண்ணனும் அக்காவும் இல்லை. எல்லாம் நீ மட்டுமே. நான் வேறு எதுவும் செய்யவில்லையே! செய்தால் நீ தடை விதிப்பாயா? எப்படி வேண்டுமானாலும் தடை போடலாம். நேரில் வந்து கூறுவதற்கு முடியவில்லை. அதனால், தவறு செய்தால் என்னுடைய கண்களில் பார்க்கும் சக்தியை இல்லாமல் செய்துவிடு. எப்படியாவது தவறு என்ற ஆழமான குழியில் விழாமல் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்.
தவறு செய்தேன் என்று எனக்கு எந்தச் சமயத்திலும் நம்பிக்கை வரவில்லை. காரணம்- என்னுடைய கன்னித் தன்மையை நான் இப்போது பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். ஒரு ஆணின் அணைப்பில் இருந்ததாலோ, ஒரு ஆண் முத்தமிட்டதாலோ மட்டுமே ஒரு இளம்பெண் கன்னித்தன்மை இல்லாதவளாக ஆகிவிடுவாளா?
எனக்கே பதில் தெரியாத ஏராளமான கேள்விகளில் ஒன்றாக அது இருந்தது.
"நான் தொல்லை கொடுக்கிறேனா?'' -வில்ஃப்ரட் சிராங்கோ கேட்டான்.
"எந்தச் சமயத்திலும் இல்லை. எந்தச் சமயத்திலும் இல்லை.'' நான் பதைபதைப்புடன் சொன்னேன். "சமீப காலமாக ஏன் இந்தப் பக்கம் வரவில்லை?''
"நான் எதற்கு வரவேண்டும்?''
சிராங்கோவின் குரலில் ஏமாற்றம் துடித்து நின்று கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.
"என்னுடைய வருகையை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், டயானா.''
"அப்படி எதுவும் இல்லை.'' நான் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு பதில் கூறினேன். இதுவரை தோன்றியிராத ஒரு வகையான பயம் எனக்கு இப்போது சிராங்கோவிடம் தோன்றுகிறது. அவன்தான் அழைக்கிறான் என்ற விஷயம் தெரிந்திருந்தால், நான் எந்தச் சமயத்திலும் தொலைபேசியை எடுத்திருக்க மாட்டேன்.
"ஷம்ஸ் வருவதில்லையா?''
"ம்...''
"இன்றைக்கு வந்திருந்தானா?''
அவனுடைய கேள்வி எனக்குப் பிடிக்கவில்லை. எனினும், ஒரு காரணமும் இல்லாமல் அவனை ஏன் வெறுப்படையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் பதில் சொன்னேன்:
"இல்லை...''
"நேற்று?''
"இல்லை...''
"இங்கே வந்து சில நாட்கள் ஆகிவிட்டனவோ?''
"ம்...''
தொலைபேசியில் அந்த முனையில் நீண்ட நேரம் உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. நான் பயந்து நடுங்கிக் கொண்டே ஒரு பெரிய பாம்பினைப் பிடிக்கும் அதே வெறுப்புடன் தொலைபேசியை அழுத்திப் பிடித்தேன்.
"என்ன? ஏன் சிரிக்கிறீங்க?''
சிராங்கோ சிரமப்பட்டு சிரிப்பை நிறுத்தினான்.
"அவனுக்கு புதிய சினேகிதி கிடைத்திருக்கும் விஷயம் தெரியாதா?''
எனக்கு எதுவும் கூறத் தோன்றவில்லை.
"புதிய சினேகிதி யார்?'' உணர்ச்சியே இல்லாத குரலில் கேட்டேன்.
"உங்களுடைய பழைய தோழி.''
நான் முகத்தில் அடி விழுந்ததைப் போல அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன். பெருவிரலில் இருந்து தலைமுடி வரை நெருப்பு பற்றி எரிவதைப் போல உணர்ந்தேன்.
எனக்கு பேச்சே வரவில்லை. நாக்கிற்கு செயல்படும் சக்தி இல்லாமற் போய்விட்டது. உடலில் உயிருடன் இருந்த ஒரே ஒரு உறுப்பு காது மட்டும்தான் என்று தோன்றியது. என்னால் எல்லாவற்றையும் கேட்க முடிந்தது. கேட்கக்கூடிய சக்தி மட்டுமே இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் ஒரே வரப்பிரசாதம்.
நான் ரிஸீவரை மேலும் அழுத்திப் பிடித்தேன்.
"ஹாஸ்டலில் இதேதான் பேச்சு.'' சிராங்கோ குரூரமான சந்தோஷத்துடன் தொடர்ந்து சொன்னான்: "அவள் ஒன்றிரண்டு தடவை ஷம்ஸின் அறைக்கு வந்திருந்தாள். இப்போது வார்டன் வரக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்.''
என்னால் அதற்கு மேல் ஒரு நிமிடம்கூட நிற்க முடியாது என்று தோன்றியது. என்ன செய்வது என்றுகூட தெளிவாகத் தெரியாமல் நான் ரிஸீவரை கிரேடில் மோதுகிற மாதிரி வைத்தேன்.
ஒரு நிமிடம் அதே நிலையில் நின்றுவிட்டு மீண்டும் தொலைபேசியை எடுத்து காதில் வைத்துப் பார்த்தேன். இல்லை... சிராங்கோவிடம் மன்னிப்பு கேட்பதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
எனினும்...
எனினும்... அருணா?
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.
ஷம்ஸைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களுக்குத் தோன்றவில்லை.
பல நேரங்களில் தொலைபேசியின் அருகில் சென்று சற்று அழைத்தால் என்ன என்று நினைத்துவிட்டு, பிறகு அது தேவை இல்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
அப்படி இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று ஷம்ஸ் வருவான் என்றும்; என்னை இறுகக் கட்டிப் பிடிப்பான் என்றும் நான் மனதிற்குள் ஆசைப்பட்டேன். ஏழு வருடங்களின் கனத்தைக் கொண்ட ஒரு வாரம் கடந்து செல்ல, வாழ்க்கை மீண்டும் சாதாரண நிலையை அடைந்துவிட்டது என்று எனக்குள் நானே நம்பிக்கை கொண்டிருந்தபோது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.
என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியாது. எனக்கு ஷம்ஸைப் பார்த்தே ஆக வேண்டும். என்னுடைய தனிமையை இல்லாமற் செய்வதற்கு இருக்கும் ஒரே ஒரு நண்பன் அவன் மட்டுமே. வேறு எதுவும் வேண்டாம். வாரத்தில் ஒரு நாளாவது என்னுடன் சிறிது நேரம் அவன் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.
ஒரு நாள் பிரதான சாலையில் வெறுமனே காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, அருணாவின் காரில் ஷம்ஸ் இருப்பதைப் பார்த்தேன். சிறிது நேரம் வண்டியைப் பின்னால் விட ஆரம்பித்தவுடன், எனக்கு அதை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று தோன்றியது. முழுமையான வெறி பிடித்த வேகத்துடன் நான் அதைச் செய்யவும் செய்தேன். அதே வேகத்திலேயே நீண்ட நேரம் காரை ஓட்டி விட்டுத் திரும்பிப் பார்த்தபோது, அருணாவின் காரைக் காணவே காணோம்.
அவள் வளைவில் திரும்பி வேறொரு பாதையில் போயிருக்க வேண்டும். என்னுடைய கார் கடந்து போவதைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துப் புன்னகைத்திருப்பார்கள்.
என்ன ஒரு கோமாளித்தனமான செயலை நான் செய்திருக்கிறேன் என்பதை நினைத்தபோது தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு தோன்றியது.
எந்த வகையிலும் என்னால் அருணாவுடன் போட்டி போட முடியாது. அழகிலும் பணத்திலும் நகைச்சுவை உணர்விலும் உரையாடலிலும் அவள் என்னைவிட எவ்வளவோ தூரம் முன்னால் இருந்தாள்.
என்னால் உரிமை கொண்டாட முடிந்தது ஒரே ஒரு விஷயம்தான்- புனிதம். மனதின், உடலின் புனிதம். அதை எந்தச் சமயத்திலும் அவள் உரிமை கொண்டாடவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
ஆனால், அது யாருக்கு வேண்டும்?
குளிக்காமலும் சரியான நேரத்தில் சாப்பிடாமலும் சிறிது நாட்கள் கடந்து சென்றன. ஆயாவிற்கு தினமும் பதைபதைப்பும் மனக் கவலையுமாக இருந்தது. ஒரு நாள் அப்பா என்னிடம் காரணம் என்ன என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஒன்றுமில்லை என்று பதில் கூறினேன்.
நான் கூறியதுதான் உண்மை. கூறுகிற அளவிற்கு என்ன நடந்துவிட்டது? எதுவும் இல்லை. இன்னொரு ஆள் கேட்க நேர்ந்தால், இதில் பிரச்சினை இருக்கிறது என்று தோன்றவே தோன்றாது என்பதை உறுதியாக நான் கூறுவேன். என்னைக் காதலிக்காத ஒரு ஆணை நான் காதலித்திருக்கிறேன்.
முட்டாள்களான வேறு எத்தனையோ இளம் பெண்களைப் போல நானும் இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இரண்டாவது முறையாக சிந்தித்துப் பார்க்கும்போது, ஷம்ஸிற்கு என்மீது காதல் இல்லை என்பதை நம்புவதற்கு சிரமமாக இருந்தது. அந்த இதயத்தின் இனிமையான பல நேரங்களும் என்னுடைய ஆடைகளுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும்போது நானும் சேர்ந்து பங்கு போட்டு அனுபவித்திருக்கிறேன்.
எங்கோ ஏதோ தகராறு இருக்கிறது. அப்படியென்றால், அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு என்னால் முடியவில்லை. அங்குதான் என்னுடைய தோல்வியே இருக்கிறது. அதைக் கண்டு பிடித்துவிட்டால், என்னுடைய கவலைகள் அனைத்தும் போய் விடும் என்பதும்; நான் மீண்டும் பழைய நானாக மாறி விடுவேன் என்பதும் உறுதியாகத் தெரிந்தது.
ஒரு சாயங்கால வேளையில் நான் தோட்டத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். மழைக் காலத்தின் முடிவு நெருங்கியிருந்தது. தோட்டத்தின் இன்னொரு மூலையில், பரந்து விரிந்திருந்த புல் பரப்பில் என்னைப் போலவே தனிமையாக இருந்த ஒரு பறவை அமர்ந்து அழுது கொண்டிருந்தது.
ஷம்ஸ்... என்னுடைய இதயம் தேம்பி அழுதது. என்னைக் காப்பாற்றுங்கள். என்னை மீண்டும் பழைய நானாக ஆக்குங்கள். நீங்கள் சேதப்படுத்திய என்னுடைய பழைய ஓவியத்தை எனக்கே திருப்பித் தந்துவிடுங்கள்.
ஆனால், அது எளிதான விஷயம் அல்ல என்பதும்; நான் மட்டுமே நினைத்தால் அது நடக்கக் கூடியது அல்ல என்பதும் அந்த கிளியின் அழுகைச் சத்தத்தைக் கேட்டபோதுதான் எனக்கே புரிந்தது.
பாவம்... அது தனிமையில் உட்கார்ந்து கொண்டு எவ்வளவு நாட்களாக அழுது கொண்டிருக்கிறது! பல சாயங்கால வேளைகளிலும் நான் அதைக் கேட்டிருக்கிறேன். ஒருவேளை, ஏதாவது ஆண் கிளியை அழைத்துக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் தனிமையில் இருக்கும் வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகி, தானே உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கலாம்.
நான் எழுந்து அதை நோக்கி நடந்து சென்றேன். நான் அருகில் சென்ற பிறகும் அது அசையவே இல்லை. தனிமையில் இருக்கும் ஒரு இதயம்... என்னை மாதிரியே தனிமையின் மூச்சுவிட முடியாத நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னொரு இதயத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது.
புல் பரப்பில் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டு நான் குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு கேட்டேன்: "ஏன் அழறே?''
கிளி அழுவதை நிறுத்திவிட்டு, என்னைப் பார்த்தது. பிறகு அது குதித்துக் குதித்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தது.
"கவலையா?'' நான் கேட்டேன்.
"ஆமாம்...'' கிளி பதில் சொன்னது. பிறகு சிறகை விரித்துக் கொண்டு அது பறந்து சென்றுவிட்டது.
உயரத்தில் உயரத்தில் பறந்து செல்லும் அந்தப் பறவையை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய கவலைகள் அனைத்தும் ஓடி மறைந்து கொண்டிருந்தன. கவலை என்பது எந்த அளவிற்குப் பெரிய, எந்த அளவிற்கு நல்ல ஒரு உணர்ச்சியாக இருக்கின்றது!
ஜோடியைப் பிரிந்ததால் உண்டான துக்கம் ஒரு துக்கமா? துக்கம்தான் என்று தோன்றுவது வெறும் தவறான எண்ணம் மட்டும்தானே? உண்மையிலேயே துக்கம் இருந்தால் உடலுக்கும் மனதிற்கும் ஒரே நேரத்தில் சோர்வு உண்டாகுமல்லவா? துக்கம்தான் என்று என்னிடம் பொய் சொன்ன பறவை, எந்தவொரு கவலையும் இல்லாமல் சிறகுகளை வீசிக் கொண்டு பறந்து உயர்ந்து செல்கிறது.
"திருடி" - மேகங்களில் சிறகை அசைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பறவையிடம் நான் சொன்னேன்: "என்னிடம் பொய் சொல்லிவிட்டாய் அல்லவா? இங்கே வா. நான் உன் மூக்கை அறுக்கிறேன்."
பறவை அப்போதும் அழுதது. அதைக் கேட்டபோது எனக்கு சிரிக்கத்தான் தோன்றியது.
நான் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே எழுந்தேன். கடந்து சென்ற நாட்களில் என்னை பாதித்திருந்தது வெறும் ஒரு பைத்தியக்காரத்தனம் மட்டுமே என்பதையும்; நான் இப்போது மீண்டும் பழைய நானாகவே இருக்கிறேன் என்பதையும் திடீரென்று புரிந்து கொண்டேன்.
வீட்டை நோக்கி சுறுசுறுப்புடன் ஓடும்போது என்னுடைய உதடுகள் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
பனித்துகள்கள் அள்ளி நிறைக்கப்பட்ட புலர்காலைப் பொழுது. நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நேற்று இரவு சுகமாக உறங்கினேன் என்ற தகவலை அந்த பனித்துளிகளிடம் கூற வேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால், அதைக் கூறுவதற்கு தயார் பண்ணிக் கொண்டு வந்தபோது, அவை அனைத்தும் எங்கோ மறைந்து போய் விட்டன.
ஆயா காப்பியுடன் வந்தபோது, நான் வழக்கத்திற்கு மாறாக சிரித்தேன். ஆரவாரம் செய்தேன். ஆயாவைப் பிடித்துக் கட்டிலில் உட்காரவைத்து, அவளையே காப்பி பாத்திரத்தைப் பிடிக்கச் செய்து காப்பியைப் பருகினேன்.
"நேற்று சுகமாக உறங்கினாய் என்று தோன்றுகிறது.'' ஆயா சொன்னாள்.
"ம்...''
"கடந்த சில நாட்களாக உனக்கு என்ன ஆனது, குழந்தை?''
"ஒண்ணுமில்ல...'' நான் சிரித்தேன்.
"நாங்க எல்லாரும் ரொம்பவும் பயந்துட்டோம்.''
"எதற்கு?''
"குழந்தை, உனக்கே தெரியாமல் நான் பல இரவு வேளைகளிலும் இந்த அறையில் வந்து பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒண்ணு நீ அழுது கொண்டிருப்பாய். இல்லாவிட்டால் சாளரத்தின் அருகில் போய் நின்று கொண்டு என்னவோ சிந்தித்துக் கொண்டிருப்பாய். உனக்கு என்ன ஆச்சு என்று நான் பதைபதைத்துக் கொண்டிருந்தேன்.''
நான் ஆயாவின் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். அவளுடைய மென்மையான வயிற்றின்மீது முகத்தை வைத்துப் படுத்துக் கொண்டே நான் சொன்னேன்:
"பைத்தியம் பிடித்திருந்தது.''
ஆயா எதுவும் கூறாமல் சிறிது நேரம் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் என்னுடைய தலை முடியிலும் வெளியேயும் வருடிக் கொண்டிருந்தன.
"இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்கள் நல்லதுதான்.'' ஆயா சொன்னாள். அவளுடைய குரல் அழுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. "ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமை அடைவது இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களால்தான். இவை எதுவும் இல்லாவிட்டால், பிறகு அவர்கள் வாழ்வதில் பெரிய அர்த்தமே இல்லை.''
நான் அவளுடைய மடியில் மல்லார்ந்து படுத்துக் கொண்டு ஒரு கதை கேட்கும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நல்ல ஆயா. என்னுடைய நல்ல நல்ல ஆயா.
வெளியே வெயில் அதிகரித்துக் கொண்டிருந்தது. சாளரத்தின் வழியாக வானத்தின் ஒரு நீல நிறப் பகுதியைப் பார்க்க முடிந்தது. அங்கு இரண்டு பருந்துகள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தன.
"எழுந்து குளி.'' ஆயா சொன்னாள்: "இன்றைக்கு தேவாலயத்துக்கு செல்ல வேண்டாமா?''
அப்போதுதான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற விஷயமே எனக்குத் தெரிய வந்தது. கடந்த சில ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தேவாலயத்திற்குச் செல்லவே இல்லை. அப்பா அழைக்கும் போதெல்லாம் நான் ஏதாவது பொய்யைக் கூறிவிட்டு தப்பித்துக் கொள்வேன்.
"அப்பா போய் விட்டாரா?'' நான் கேட்டேன்.
"இல்லை. காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.''
"அப்படியென்றால் நானும் வருகிறேன் என்று சொல்றீங்களா?''
"சரி... சீக்கிரம் தயாராகு...''
ஆயா வெளியேறினாள். எனக்கு ஏதாவது தோழியை அழைக்க வேண்டும் போல இருந்தது. இப்போது நான் யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். ஷம்ஸுடன் கூட எந்தவொரு நடுக்கமும் இல்லாத குரலில் பேச முடியும் என்ற தைரியம் எனக்கு இப்போது இருக்கிறது.''
படிகளில் இறங்கிக் கீழே இருக்கும் அறைக்குள் சென்றேன். தொலைபேசிக்கு அருகில் சென்ற பிறகுதான் யாரை அழைப்பது என்ற விஷயத்தைப் பற்றிய சந்தேகமே தோன்றியது. ஷம்ஸ்? சிராங்கோ? ஜாஸ்மின்? கிரிஜா? விமலா? அருணா?
அருணா.
அருணா கேட்டாள்: "யாரு பேசுறது?''
"யார் என்று தோணுது?'' குரலை மிகவும் கம்பீரமாக ஆக்குவதற்கு எனக்கு எந்தவொரு சிரமமும் இருந்ததாகத் தெரியவில்லை.
"டயானா?'' அருணாவின் குரல் பதைபதைப்புடன் கேட்பதைப் போல இருந்தது.
நான் உரத்த குரலில் -மிகவும் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். ஒரு நிமிடம்.
நான் தொலைபேசியை மேஜையின்மீது வைத்துவிட்டு, கதவை நோக்கி நடந்தேன். கதவை அடைத்து, தாழ்ப்பாள் போட்ட பிறகும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தேன்.
இன்னொரு முனையில் அருணாவின் பதைபதைப்பு ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அவளுடைய முகம் தாளின் நிறத்தில் இருக்கும். அதில் எனக்கு குரூரமான ஒரு திருப்தியும் சந்தோஷமும் தோன்றின.
"அருணா...'' நான் மீண்டும் தொலைபேசியை எடுத்தேன். தொடர்ந்து அவள் எதுவும் கூறத் தொடங்குவதற்கு முன்பு அவளை அழைத்துக் கேட்டேன்: "என்னுடைய காதலர் நலமாக இருக்கிறாரா?''
"வாட் டூ யூ மீன்?'' அருணாவின் குரலில் பதைபதைப்பு இருந்தது.
"என்னுடைய காதலரை நீ தட்டிப் பறித்துவிட்டாய் அல்லவா? அவர் எப்படி இருக்கிறார் என்று நான் கேட்கிறேன்.''
அந்த முனையிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.
"அருணா, இது பாவம் இல்லையா? இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கக் கூடிய செயலை நீ செய்து விட்டாயே?''
"டயானா, நீ எந்த அளவிற்கு முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்?''
"எதுவும் முட்டாள்தனமில்லை.''
"ஷம்ஸ் என்னைக் காதலித்தது என்னுடைய குற்றமா?''
"இல்லை.... உன்னுடைய சாமர்த்தியம் மட்டுமே.''
அவள் நீண்ட பெருமூச்சை விடுவது காதில் விழுந்தது. நான் சீண்டிக் கொண்டு சிரித்தேன். "அந்த ஆளை இனிமேல் எனக்கு நீ விட்டுத்தர மாட்டாயா?''
"நான் தொலைபேசியை வைக்கப் போகிறேன்.''
"அதற்கு முன்பே... இதோ...'' -நான் தொலைபேசியைக் கீழே வைத்தேன். தொடர்ந்து மேஜையின்மீது தலையை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் சிரித்தேன்.
பாவம் அருணா.
அவள் நான் கடந்து சென்ற பாதையின் வழியாகப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறாள். அவ்வளவுதான். இனி கடந்து செல்வதற்கு எவ்வளவோ காலம் இருக்கிறது. அவளுடைய மனம் இப்போது ஒரு போராட்டக்களமாக இருக்கும். கடுமையான போர் அங்கு நடந்து கொண்டிருக்கும். இனி அது அமைதியாக ஆவதுவரை எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்கள் எல்லாம் அவளை ஆட்சி செய்யப் போகின்றனவோ!
திடீரென்று எனக்கு அருணாமீது பரிதாபம் தோன்றியது.
தேவாலயத்திலிருந்து திரும்பி வரும்போது வழியில் ஷம்ஸைப் பார்த்தேன். தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பாவை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு, நான் அப்போதே காரை எடுத்துக் கொண்டு போனேன். என்னுடைய கணக்கு தவறவில்லை. நான் மனதில் நினைத்த இடத்தை அடைந்தபோது, அவன் பேருந்திற்காக காத்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தேன்.
காரை ப்ரேக் போட்டு நிறுத்தினேன். ஷம்ஸ் என்னைப் பார்த்தான். அந்த முகத்தில் பதைபதைப்பு ஓடிப் பரவுவதைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.
"ஹலோ...'' நான் கேட்டேன்: "காலை காட்சிக்கா?''
"இல்லை.'' ஷம்ஸ் சொன்னான்:"அப்படி குறிப்பா ஒரு இடத்திற்கும் இல்லை.''
"அப்படின்னா ஏறுங்க.'' நான் சொன்னேன்: "எனக்கு தனியா காரை ஓட்டுவதற்கு மிகவும் போராக இருக்கு!''
சற்று நேரம் தயங்கியவாறு நின்றிருந்த ஷம்ஸ் முன் இருக்கையில் ஏறினான்.
நாங்கள் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கார் மிகவும் வேகமாக வளைவுகளையும் திருப்பங்களையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. நகரத்தின் எல்லையைத் தாண்டி ஓட ஆரம்பித்தபோது ஷம்ஸ் கேட்டான்: "எங்கே?''
"அப்படி இலக்கு எதுவும் இல்லை.''
மீண்டும் நாங்கள் எதுவும் பேசவில்லை. கார் அதன் உச்ச வேகத்தை அடைந்தபோது நான் திடீரென்று கேட்டேன்: "புதிய காதல் எப்படி இருக்கு?''
அவன் உடனடியாக பதில் கூறவில்லை. கண்ணாடியில் விரலால் என்னவோ வரைய மட்டும் செய்து கொண்டிருந்தான்.
நான் மீண்டும் கேட்டேன்: "அருணாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். இல்லையா?''
"அப்படித்தான் தோணுது.''
ஏரியின் கரையில் இருந்த சாலையின் வழியாக கார் ஓடிக் கொண்டிருந்தது. வானம் தெளிவாக இருந்தது. மெல்லிய வெயில் கண்ணாடியின் வழியாகக் கடந்து வந்து முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது.
ஆட்கள் யாரும் இல்லாத ஒரு பகுதியை அடைந்ததும், நான் காரை நிறுத்தினேன்.
"நாம் கொஞ்ச நேரம் உட்காருவோம்.''
"எதற்கு?''
"என்னைப் பார்த்து பயமா?'' கதவைத் திறந்து வெளியே இறங்கியவாறு சிரித்துக் கொண்டே கேட்டேன்.
"அப்படியொண்ணும் இல்லை.'' ஷம்ஸ் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியில் இறங்கினான்.
ஏரியில் இங்குமங்குமாகப் படகுகள் கடந்து போய்க் கொண்டிருந்தன. மூழ்கித் தேடி சிப்பிகளைப் பொறுக்கும் சிறுவர்கள் இடையில் அவ்வப்போது நீர்ப்பரப்பில் தலையை உயர்த்தினார்கள். மீண்டும் ஆழங்களுக்குள் போய் மறைந்து கொண்டார்கள்.
"இங்கு உட்காருவோம்.'' நீரில் சாய்ந்து கிடக்கும் கிளைகளுடன் நின்று கொண்டிருக்கும் ஒரு வயதான மரத்தின் அடிப்பகுதியை அடைந்தவுடன் நான் சொன்னேன்.
ஷம்ஸ் குறிப்பிட்டு எதுவும் கூறாமல், ஒரு பெரிய கல்லின்மீது போய் உட்கார்ந்தான். நான் சற்று தூரத்தில் நீரை நோக்கிக் கட்டி விடப்பட்டிருந்த இடிந்த கல்லாலான படிகளில் உட்கார்ந்தேன்.
"எனக்கு ஒரு சந்தேகம் கேட்பதற்கு இருக்கு.'' நான் திடீரென்று கேட்டேன்: "நாம் ஒருவரையொருவர் காதலித்தோமா?''
"ம்...'' ஷம்ஸ் கீழே பார்ப்பதைப் பார்த்தேன்.
"நீங்கள் எந்தச் சமயத்திலும் தெளிவான பதில் தராத கேள்வியாக இது இருந்தது. இப்போதாவது இப்படியொரு பதில் கூற வேண்டும் என்று தோன்றியதே! நன்றி.'' நான் வெறுமனே சிரித்தேன்.
ஷம்ஸின் முகம் மலர்ந்தது.
"என்னிடம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று தோன்றியிருக்கிறதா, ஷம்ஸ்?''
"ம்...''
"அப்படியென்றால் அந்த மாதிரி நினைக்க வேண்டாம். நான் இப்போதும் பழைய நான்தான்.''
ஷம்ஸ் என்னுடைய முகத்தையே ஒருமுறை பார்த்தான். மீண்டும் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
"ஒரே ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு இப்போது இருக்கிறது. என்னுடைய கன்னித் தன்மையை நீங்க பாழாக்கிட்டீங்க.''
"நான்?'' ஷம்ஸ் அடி விழுந்ததைப் போல அதிர்ச்சியடைவதைப் பார்த்தேன். "ஆமாம்... என்னுடைய இதயத்தின் கன்னித் தன்மை. உடலின் புனிதத் தன்மையில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. ஆனால், என்னுடைய மனம் இருக்கிறதே! அது இனி எந்தக் காலத்திலும் புனிதத் தன்மைக்கு உரிமை கொண்டாட முடியாது. எனக்கு வருத்தமாக இருக்கு!''
ஏரியில் அலைந்து கொண்டிருந்த ஒரு படகில் இருந்து ஒரு படகோட்டி சற்று தூரத்தில் இருந்த இன்னொரு படகைப் பார்த்து என்னவோ உரத்த குரலில் கூறுவது காதில் விழுந்தது.
வாழ்க்கை. நான் அந்த கறுத்த உருவத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டே நினைத்தேன் - எந்த அளவிற்கு துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை! வேறு எந்தக் கவலைகளும் இல்லாத மனிதன் வெறும் சுவாரசியத்திற்காக தானே கண்டுபிடிக்கும் ஒரு நீர்க்குமிழி மட்டும்தானே காதல் தோல்வி என்பது. ஆசைகள் வெறும் ஏமாற்றங்களாக ஆகும்போது, அவற்றின் நொறுங்கலில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
"நாம போக வேண்டாமா?'' ஷம்ஸ் கேட்டான்.
எனக்கு அந்த இளைஞனைப் பற்றி மெல்லிய கிண்டல் தோன்றியது. முட்டாள்... என்னை ஏமாற்றிவிட்டோம் என்று தவறாக நினைத்துக் கொண்டு இவ்வளவு காலமாக நடந்து திரிந்திருக்க வேண்டும்.
"போகத்தான் வேண்டும். முன்பு எனக்கு ஒரு பரிசு தந்தது ஞாபகத்தில் இருக்கிறதா?''
"பரிசு...'' ஷம்ஸ் கேட்டான்: "நான் அப்படியெதுவும் தரவில்லையே!''
"அது சரிதான். ஆனால், விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷத்தைப் போல நான் இதை இவ்வளவு காலமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.''
நான் அந்த பழைய குன்றிமணியை ஷம்ஸிடம் நீட்டினேன்: "இதோ... திரும்பவும் வாங்கிக்கோங்க.''
"எனக்கு வேண்டாம்.'' ஷம்ஸ் சொன்னான்: "நான் இதைத் தந்தபோது, இப்படி எதையும் மனதில் நினைக்கவில்லை.''
"உண்மைதான். பல நேரங்களில் பெண்கள்தான் அதிக முட்டாள்தனங்களை நினைக்கிறார்கள்.''
நான் அந்த குன்றிமணியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எப்படிப்பட்ட உணர்ச்சிகளையெல்லாம் உண்டாக்கிவிட்ட ஒரு திருடன் இது! இப்போது உண்மையான வெளிச்சத்தில் ஒரு தவறு செய்தவனைப் போல அது குறுகிப் போய் இருக்கிறது.
நான் குலுங்கிக் குலுங்கி சிரித்தேன்.
"என்ன? ஏன் சிரிக்கிறே?''
"என்னைப் பற்றி நினைத்து... உங்களைப் பற்றி நினைத்து... காதலைப் பற்றி நினைத்து... உலகம் முழுவதும் இருக்கும் காதலிகளையும் காதலர்களையும் பற்றி நினைத்து... நாம எந்த அளவிற்கு முட்டாள்களாக இருக்கிறோம்!''
ஷம்ஸ் நெளிந்து கொண்டே எழுந்தான்.
"நம்முடன், நம்முடைய வயதுடன், வாழ்க்கையின் இந்த காலகட்டத்துடன்... எனக்கு இப்போது காதல் இருக்கிறது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், எனக்கு இப்போது காதல் இருப்பது, காதல் என்ற உணர்வின்மீது மட்டுமே. இப்போது அனுபவித்த அதே வேதனைகளுடன் இனி எந்தச் சமயத்திலும் அதை அனுபவிக்க என்னால் முடியாதே என்பது மட்டும்தான் என்னுடைய இப்போதைய உணர்வாக இருக்கிறது.''
நாங்கள் காரை நோக்கி நடந்தோம். ஏரியில் இருந்து வீசிய குளிர்ச்சியான காற்றில், புடவையின் தலைப்பு ஒரு கொடியைப் போல பறந்து கொண்டிருந்தது.
"அப்படியென்றால் உங்களுக்கு இது திரும்பவும் வேண்டாமா?'' நான் குன்றிமணியை ஷம்ஸை நோக்கி நீட்டிக் காட்டினேன்.
"வேண்டாம். அதை வீசி எறி டயானா.''
அவனுடைய பதைபதைப்பைப் பார்த்தபோது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த ஆண்கள் எந்த அளவிற்கு பாவங்களாக இருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்த்தேன்.
நான் அந்த குன்றிமணியை நீருக்குள் வீசி எறிந்தேன். நீல நிற நீரில், அந்த சிவப்பு நிறக் குன்றிமணி சுற்றியவாறு கீழ் நோக்கிப் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். ஒரு கன்னிப் பெண்ணின் இதயம் எங்கோ ஆழங்களில் போய் மறைந்துவிட்டது என்று தோன்றியது.
கண்களில் நீர் நிறைந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. என்னுடைய முட்டாள்தனங்கள் நிறைந்த காலம் முடிந்திருக்கிறது. அந்த வயதின் தழும்பை மட்டுமே நான் இப்போது நீரில் எறிந்திருக்கிறேன்.
ஒருவேளை, சிப்பி பொறுக்கும் ஏதாவது மீனவ சிறுவனுக்கு அந்த குன்றிமணி கிடைக்கும். நான் வெறுமனே சிந்தித்தேன். அவன் அதை விலை மதிப்பற்ற ஒரு கொடையைப் போல தன்னுடைய காதலிக்குப் பரிசாகக் கொடுப்பான். அந்தப் பெண், கனவுகளின் முத்தைப் போல பத்திரமாக வைத்துக் கொஞ்சுவாள். அதன் அர்த்தமற்ற தன்மை புரிய வரும்போது, அவளும் அதை வீசி எறிவாள். அந்த சக்கரம் அப்படியே திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருக்கும்.
உள்ளுக்குள் மெல்லிய ஒரு சிரிப்பு சிறிய அலைகளை மலரச் செய்து, விரிந்து வந்து கொண்டிருந்தது.