Logo

ராணுவ அதிகாரி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6558
ranuva athikari

சுராவின் முன்னுரை

ங்கில இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான டி.எச். லாரன்ஸ் (D.H. Lawrence) எழுதிய ‘The Prussian officer’ என்ற புதினத்தை ‘ராணுவ அதிகாரி’ (Raanuva Adhikari) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

மிகவும் வறுமை வாய்ப்பட்ட குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டவர். இவர் ஒரு மிகச் சிறந்த ஓவியரும்கூட.

1911-ஆம் ஆண்டில் லாரன்ஸின் முதல் நாவலான ‘The white Peacock’ வெளிவந்தது. முதல் நாவலே லாரன்ஸுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

1918-ல் லாரன்ஸின் ‘Rainbow’ என்ற நாவல் பிரசுரமானது. ஆண் – பெண் உறவுகள் பற்றி ஆபாசமான வர்ணனைகள் ஏராளமாக இருப்பதாகக் கூறி, அந்நூல் தடை செய்யப்பட்டது. அதன் ஆயிரக்கணக்கான பிரதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, நெருப்புக்கு இரையாக்கப்பட்டன.

1920-ஆம் ஆண்டில் லாரன்ஸ் ‘The Lost Girl’ என்ற நாவலை எழுதினார். லாரன்ஸின் புகழ்பெற்ற நாவல் ‘Lady Chatterley’s Lover’ 1928-ஆம் ஆண்டில் வெளியானது. போரில் காயம்பட்டு உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட கணவன் உயிருடன் இருக்க, அவனுடைய பணக்கார மனைவிக்கும் தோட்டக்காரனுக்குமிடையே உண்டாகும் காதலே அந்த நாவலின் மையக் கரு. அந்தப் புதினமும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. லாரன்ஸ் எழுதிய இறுதி நாவல் ‘The man who Died.’ 1929-ல் அது பிரசுரமானது.

டி.எச். லாரன்ஸ் தன்னுடைய எழுத்துகளின் மூலம் ‘கிளர்ச்சிக்காரர்’ என்ற பெயரைப் பெற்றவர். ஏற்கெனவே இருக்கக் கூடிய அமைப்புகளுக்கு எதிராகப் போராடக் கூடியவர் அவர். தன் மனதில் படுவதை, சிறிதுகூட அச்சமின்றி வெளியிடுவார். ‘ராணுவ அதிகாரி’யில் வரும் ‘ஆர்டர்லி’ கதாபாத்திரம் ஒரு உதாரணம்.

1930-ஆம் ஆண்டு மரணத்தைத் தழுவிய டி.எச்.லாரன்ஸ் காலத்தைக் கடந்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்குக் காரணங்கள் அவருடைய கிளர்ச்சி குணமும், மனதில் இருப்பதை துணிச்சலாக எழுதக் கூடிய நேர்மை குணமும்தான்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


சூரிய உதயத்திற்குப் பிறகு அவர்கள் முப்பது கிலோமீட்டர்களையும் தாண்டி விட்டிருந்தார்கள். அவர்கள் பயணம் செய்த வெளிறிப்போன- தகித்துக் கொண்டிருந்த வீதியில் இங்குமங்குமாக வளர்ந்து நின்றிருந்த மரக்கூட்டங்கள் சிறுசிறு நிழல்களைத் தந்து கொண்டிருந்த அதே நேரத்தில், கடுமையான வெயிலுடன் சேர்ந்து கொண்டும் இருந்தன. இரு பக்கங்களிலும் விசாலமாகவும் ஆழமாகவும் இருந்த அடிவாரம் வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

ஒளிர்ந்து கொண்டிருந்த வானத்திற்குக் கீழே ஒளிக் கீற்றுகள் இருண்டு, பச்சைப் பசேல் என காட்சியளித்த கேழ்வரகுச் செடிகளை வெளிறித் தெரியும்படி செய்து, முதிர்ச்சி அடைந்திராத இளம் மக்காச்சோளச் செடிகளையும், கறுத்த பைன் மரங்களையும் நிழலுருவில் தெரியும்படிச் செய்தன. அதே நேரத்தில், மலைத் தொடர்களுக்கு முன்னால், வெளிர் நீல நிறத்திலும் அசைவே இல்லாமலும் இருந்த மூடுபனி வெட்ட வெளியின் ஆழத்தில் சற்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்த ராணுவக் குழு கேழ்வரகு வயல்களுக்கு மத்தியிலும், அடிவாரங்களின் வழியாகவும், உயர்ந்த சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த பழ மரங்களுக்கு மத்தியிலும் அணிவகுப்பு செய்துகொண்டு மலைத்தொடர்களை நெருங்கிப் போய்க் கொண்டிருந்தது. ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்த- அடர்த்தியான பச்சை நிறத்தில் காட்சியளித்த கேழ்வரகுச் செடிகள் கடுமையான வெப்பத்தை விநியோகித்துக் கொண்டிருக்க, நேரம் செல்லச் செல்ல மலைத் தொடர்கள் நெருக்கத்தில் இருப்பதாகவும், கண்களுக்கு நன்கு தெரியக் கூடியதாகவும் ஆயின. ராணுவ வீரர்களின் பாதங்கள் சூடேறிப் போய் இருக்க, ஹெல்மெட்டின் வழியாக வியர்வை வழிந்து கொண்டிருக்க, தோளில் கிடந்த துணி வெப்பத்தை அளிப்பதற்கு பதிலாக குளிர்ச்சியான, ஊசி குத்துவதைப் போன்ற ஒரு உணர்ச்சி நிறைந்த அனுபவத்தைத் தந்து கொண்டிருந்தது.

முன்னால் காட்சியளித்த மலைத் தொடர்களை அவன் மிகவும் அமைதியாகப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்தான். பூமியிலிருந்து எழுந்துயர்ந்த பாதி மண்ணும் பாதி வெட்ட வெளியும் ஒன்றோடொன்று சேர்ந்து, மென்மையான மூடுபனிக் கூட்டங்களுக்கு மத்தியில் வெளிர் நீல நிறத்தில் இருந்த மலையின் உச்சிகள் தலையை உயர்த்திக் கொண்டு காட்சியளித்தன.

இப்போது அவனால் வேதனை இல்லாமல் நடக்க முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஒரு முறைகூட நொண்டிக் கொண்டு நடக்கக்கூடாது என்று அவன் முதலிலேயே தெளிவாகத் தீர்மானித்து வைத்திருந்தான். முதலில் சில எட்டுகள் எடுத்து வைத்தவுடனேயே, அவன் மிகவும் சிரமப்பட்டான். அவன் ஒரு மைல் தூரம் மூச்சைப் பிடித்துக்கொண்டு எப்படியோ நடந்து சமாளித்தான். அவனுடைய நெற்றியில் குளிர்ச்சியான வியர்வைத் துளிகள் அரும்பிவிட்டிருந்தன. ஆனால், அவன் அதைத் துடைத்துவிட்டு நடந்தான். மற்ற காயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை எவ்வளவோ சாதாரணம்! அவன் எழுந்து நிற்பதற்கு மத்தியில் கீழே கண்களை ஓட்டினான். தொடையின் அடிப்பகுதியில் ஆழமான காயங்கள்! காலையில் முதலடியை எடுத்து வைத்ததிலிருந்தே அதைப் பற்றிய புரிதல் அவனுக்கு இருந்தது. இந்த நிமிடம் வரை அவனுக்கு நெஞ்சில் கடுமையான ஒரு வெப்பமும், தாங்கிக் கொள்ள முடியாத வேதனையும் இருந்து கொண்டிருந்தது. தான் சுவாசிக்கும்போது சிறிதுகூட காற்று நெஞ்சுக்குள் நுழைவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். எனினும், அவன் அதை அலட்சியப் படுத்திவிட்டு, சாதாரண மனநிலையுடன் தன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

காலையில் காப்பி வாங்கியபோது, கேப்டனின் கை நடுங்கியது. அவருடைய ஆர்டர்லி மீண்டும் அதை கவனித்தான். சற்று முன்னால் இருந்த பண்ணை வீட்டிற்கு அருகிலிருந்து குதிரையின் மீதேறி பயணிக்கும் இளம் நீலநிற சீருடையை அணிந்த கேப்டனும், அவருடைய தலையிலிருந்த கவசமும், வாளுறையும், குதிரையின் பட்டுபோல பளபளத்துக் கொண்டிருந்த உரோமங்களுக்கு மத்தியில் வழிந்து கொண்டிருந்த வியர்வை நதிகளும் சேர்ந்து மிக உயர்ந்த ஒரு காட்சியை அளித்துக்கொண்டிருந்தன.

திடீரென்று குதிரையின் மீதேறிப் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த உருவத்துடன் தான் உறவு கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு ஆர்டர்லிக்கு உண்டானது. ஒரு நிழலைப்போல மிகவும் அமைதியாகத் தொடர்ந்து வரும் தவிர்க்க முடியாத விதியை மனதில் சபித்துக்கொண்டே அவன் பின்தொடர்ந்தான். தனக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் கூட்டத்தைப் பற்றியும், அந்தக் கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருக்கும் ஆர்டர்லியைப் பற்றியும் அதிகாரிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

தலையின் நடுப்பகுதியில் நரை விழுந்து கிட்டத்தட்ட நாற்பது வயது மதிக்கக் கூடிய- நல்ல உயரத்தைக் கொண்ட ஒரு மனிதராக அந்த கேப்டன் இருந்தார். திடமான உடலமைப்பைக் கொண்ட அவர் மேற்கு திசையில் மிகச் சிறந்த ஒரு குதிரைச் சவாரி செய்யக்கூடிய மனிதராகவும் இருந்தார். அவருடைய தோற்றமும் மிகவும் அழகாகவே இருந்தது. அவ்வப்போது குதிரையைத் தடவி விட வேண்டிய நிலையில் இருந்த ஆர்டர்லிக்கு அவருடைய வயிற்றுப் பகுதியில் மிகவும் அதிகமாகத் தெரிந்த சதையின் அளவையும் அழகையும் பார்த்து ஆச்சரியம் உண்டானது.

எஞ்சிய நேரத்தில் தன்னைப் பார்க்கும் நேரங்களில் மட்டுமே, ஆர்டர்லி அதிகாரியைப் பார்த்தான். அவன் மிகவும் அபூர்வமாகவே தன்னுடைய எஜமானின் முகத்தைப் பார்த்திருக்கிறான். அவன் அந்தப் பக்கம் பார்ப்பதேயில்லை. தவிட்டு நிறம் கலந்த செம்பட்டை நிறத்தில் இருந்த தலை முடியை அவர் ஒட்ட வெட்டிவிட்டிருந்தார். கொடூரத் தன்மை நிறைந்த வாய்ப்பகுதிக்கு மேலே இருந்த கிருதாவையும் அவர் ஒட்ட வெட்டி, அதை கவனம் செலுத்தி வைத்திருந்தார். மெலிந்து காணப்பட்ட கன்னங்களையும் அழகான முகத்தையும் கொண்டிருந்தார். முகத்தில் இருந்த ஆழமான சுருக்கங்கள், நெற்றியில் தெரிந்த பொறாமை கலந்த இறுக்கம் ஆகியவை அவருடைய வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படையாகக் காட்டின. இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், அந்த முகம் அழகாக இருக்கிறது என்றே கூறலாம். அழகான புருவங்களுக்குக் கீழே இருந்த அவருடைய இளம் நீல நிறக் கண்கள் உணர்ச்சியற்ற தன்மை கொண்ட பார்வையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

நல்ல பலசாலியாகவும், மிகுந்த பொறுமை குணம் கொண்ட ப்ரஷ்ய பிரபு வம்சத்தைச் சேர்ந்த ஒரு மனிதராகவும் கேப்டன் இருந்தார். ஆனால், அவருடைய தாயோ ஒரு போலெண்ட் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவள். சிறு வயதிலிருந்து சூதாட்ட விளையாட்டில் இருந்த அளவற்ற ஈடுபாடு காரணமாக, ராணுவத்தில் மிக உயர்ந்த பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்புகளை அவர் இழந்து விட்டிருந்தார். ஒரு காலாட்படையின் தலைவன் என்ற பதவியை மட்டும் அவர் தன்னிடம் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்குத் திருமணமாகவில்லை. அவருடைய பதவி அத்தகையதாக இருந்தது. ஒரு பெண்கூட திருமண வாழ்க்கையை நோக்கி அவரைக் கவர்ந்து இழுக்கவில்லை.


நேரத்தைச் செலவழிப்பதற்காக குதிரையின் மீதேறி சவாரி செய்வதுதான் அவருடைய பொழுதுபோக்கு விஷயமாக இருந்தது. சில நேரங்களில் அவர் தன்னுடைய குதிரைகளில் ஒன்றை குதிரைப் பந்தயத்தில் ஓடும்படி செய்வார். எஞ்சியுள்ள நேரத்தில் அவர் அதிகாரிகளுக்கென்றிருந்த க்ளப்பில் இருந்து கொண்டு நேரத்தைப் போக்குவார். அவ்வப்போது அவர் ஒரு காதலியுடனும் நேரத்தைப் பங்கு போடுவார். ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களுக்குப் பிறகு அவர் மேலும் இறுகிப் போன நெற்றியுடனும் கோபமும் எரிச்சலும் கொண்ட கண்களுடனும்தான் வேலைக்குள்ளேயே நுழைவார். ஆண்களுடன் அவர் அதிகமாகப் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. கோபம் வந்துவிட்டால், அதற்குப் பிறகு அவருடைய கொடுரத் தனமான நடவடிக்கைகளைப் பார்க்க வேண்டுமே! இப்படிப்பட்ட மனிதராக அவர் இருந்ததால், மனிதர்கள் எல்லாரும் அவரைப் பார்த்து மிகவும் அஞ்சினார்கள். ஆனால், அந்த அளவிற்கு பெரிய அளவில் வெறுப்பு எதுவும் அவர்களுக்கு அவர்மீது இல்லை. தவிர்க்க முடியாத ஒரு தொந்தரவாக அவர்கள் அவரை நினைத்தார்கள்.

ஆரம்பத்தில் அவர் தன்னுடைய ஆர்டர்லியிடம் மிகவும் குளிர்ச்சியாகத்தான் பழகினார். சிறிது அலட்சியமாகவும் நடந்துகொண்டார். சிரமமான நேரங்களில் அவர் எந்தவித பிரச்சினைகளையும் உண்டாக்கவும் முயற்சிக்கவில்லை. இந்த காரணங்களால், எப்படிப்பட்ட கட்டளைகளை அவர் இடுவார் என்பதையும் அதை எப்படிச் செயல்படுத்தினால் அவருக்குப் பிடிக்கும் என்பதையும் தவிர, அவரைப் பற்றி வேறு எந்த விஷயத்தையும் ஆர்டர்லியால் உறுதிபடக் கூற முடியாது. அந்த அளவுக்கு அது மிகவும் எளிதான விஷயமாக இருந்தது. பிறகு... காலப்போக்கில் எல்லா விஷயங்களும் மாற ஆரம்பித்தன.

நல்ல உடல்நிலையைக் கொண்டவனும் சராசரி உயரத்தைக் கொண்டவனுமாக- இருபத்து இரண்டு வயதுள்ள ஒரு மனிதனாக ஆர்டர்லி இருந்தான். கறுத்த மென்மையான கிருதா வைத்திருந்த அவனுக்கு தடிமனான நல்ல பலம் கொண்ட உறுப்புகள் இருந்தன. இளமைக்கே உரிய ஏதோ ஒன்று, ஒரு துடிப்பு அவனிடம் எப்போதும் இருந்தது. கறுத்த- எந்தவித உணர்ச்சியும் இல்லாத அந்தக் கண்களுக்கு மேலே அடர்த்தியான- வெளிப்படையாகத் தெரியக்கூடிய புருவங்கள் இருந்தன. உணர்ச்சிகளின் கட்ளைகளுக்கு ஆட்பட்டு சிந்தனையின் மூலமாகச் செயல் படுவதில்லை என்பதையும், வெளியிலிருந்து இடப்படும் கட்டளைகளின்படி மட்டுமே வாழ்க்கையைப் பார்க்கிறோம் என்பதையும் அந்தக் கண்கள் சத்தம் போட்டுக் கூறிக்கொண்டிருந்தன.

காலப் போக்கில், புத்துணர்ச்சி நிறைந்தவனும் இளைஞனுமான தன்னுடைய வேலைக்காரனின் இருப்பைப் பற்றி அதிகாரி உணரத் தொடங்கினார். இளமையின் எதிர்பார்ப்பு, தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்காகக் காத்துக்கொண்டிருப்பதை அவரால் ஒதுக்கிவிட முடியவில்லை. ஒளியை இழந்து காணப்படும்- தன்னுடைய வயதைக் காட்டும்- பலமும் இறுகிப்போன தன்மையும் கொண்ட உடலுக்கு அது ஒரு புத்திளமையின் நெருப்பு ஜுவாலையைப் போல தோன்றியது. அந்த இளைஞனின் அசைவுகளில் குறிப்பிடத்தக்க ஏதோவொன்று... அதுதான் அந்த அதிகாரியிடம் அவனுடைய இருப்பைப் பற்றிய உணர்தலை உண்டாக்கியது. அது அந்த ப்ரஷ்யாக்காரரை பொறாமை கொள்ளச் செய்தது. தன்னுடைய வேலைக்காரனின் இருப்பு காரணமாக வாழ்க்கைக்குத் திரும்பி வருவதற்கு அவர் தயாராக இல்லை. வேண்டுமானால், வேலைக்காரனின் நடவடிக்கைகளில் மாறுதல்களை அவரால் உண்டாக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் இப்போது மிகவும் அபூர்வமாகவே தன்னுடைய ஆர்டர்லியின் முகத்தைப் பார்ப்பார். அவனைப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரி தன்னுடைய முகத்தை எப்போதும் திருப்பி வைத்துக்கொள்வார். எனினும், இளைஞனான படைவீரன் தன்னுடைய அறையில் நின்று கொண்டிருக்கும்போது, வயதில் மூத்த அவர் அவனைப் பார்ப்பார். நீலநிற சீருடைக்கு அடியில் இளமையை வெளிப்படுத்தக் கூடிய அழகான தோள்களை நோக்கி அவர் கண்களைத் திருப்புவார். கழுத்தின் மடிப்புகள் மீதும்! அது அவரை பொறாமை கொள்ளச் செய்யும். இளம் ராணுவ வீரனின் தவிட்டு நிறமும். உருவத்திற்கேற்ற அளவைக் கொண்ட கைகளால் ரொட்டித் துண்டையோ மது புட்டியையோ எடுப்பது, வயதில் மூத்த அவரின் குருதியில் கோபத்தை உண்டாக்கக்கூடிய அடையாளங்களை உண்டாக்கும். இளைஞன் அறிவில்லாதவன் அல்ல என்பது அதற்கு அர்த்தம். அதற்கும்மேலாக, கட்டுப்பாடே இல்லாத இளமை நிறைந்த ஒரு மிருகத்தின் செயல்களிலிருந்து வெளிப்பட்ட கண்மூடித்தனமான, நிச்சயமற்ற அசைவுகள்தான் அதிகாரியிடம் இந்த அளவுக்குப் பொறாமை எழும்படி செய்தன.

ஒருநாள், ஒரு மதுபுட்டி கவிழ்ந்து மேஜையின் விரிப்பில் ரத்தக் கறை படிந்தபோது, ஒரு சாப வார்த்தையுடன் அதிகாரி எழுந்தார். நெருப்புப் பொறி பறந்து கொண்டிருந்த நீல நிறக் கண்கள் பதற்றத்துடன் காணப்பட்ட இளைஞனின் பார்வையுடன் ஒரு நிமிடம் சந்தித்தன. இளம் ராணுவ வீரனுக்கு அது ஒரு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. அதற்கு முன்பு எதுவுமே நுழையாத அவனுடைய மனதிற்குள் ஏதோ ஒரு பொருள் ஆழத்தில்... ஆழத்தில்... நுழைந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது அவனுக்கு. அது அவனை மிகப் பெரிய ஆச்சரியத்திற்குள்ளும் ஏதோ புரியாத புதிருக்குள்ளும் கொண்டு போய் தள்ளிவிட்டது. அவனிடம் இயல்பாக இருக்கக்கூடிய முழுமைத் தன்மை அதன் மூலம் இல்லாமல் போனது. அதற்கு பதிலாக குழப்பங்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன. அதற்குப் பிறகு இரண்டு ஆண்களுக்குமிடையே புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு உணர்வு இடம்பிடித்து விட்டிருந்தது.

அதற்குப் பிறகு உண்மையிலேயே ஆர்டர்லிக்கு தன்னுடைய எஜமானைப் பார்ப்பது என்பதே அச்சப்படக்கூடிய ஒரு விஷயமாக ஆகிவிட்டது. அவனுடைய உள்மனம் உருக்கைப் போன்ற அந்த நீல நிறக் கண்களையும் ஆண்மைத்தனம் நிறைந்த புருவங்களையும் நினைத்துப் பார்த்தன. அவற்றை மீண்டும் பார்ப்பதையும் அவரைச் சந்திப்பதையும் அவன் தவிர்த்தான். சற்று பொறுமையுடன் அவன் மூன்று மாத காலம் காத்திருப்பதற்கு முடிவெடுத்தான். அதற்குள் நேரம் வந்துவிடும். கேப்டன் அருகில் இருப்பது அவனுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வை உண்டாக்கியது. ஒரு போர் வீரனுக்கே இருக்கக் கூடிய சீரான மனநிலையைக் கொண்டு வருவதற்கு அவன் முடிவு செய்தான்.

இந்த வேலையை அவன் தொடங்கி ஒரு வருடமாகிவிட்டது. மழை, வெயில் எதையும் பொருட்படுத்தாமல் அவன் கேப்டனுக்குச் சேவை செய்தான். அது அவனுக்கு எந்தவொரு வகையிலும் சிரமமான ஒன்றாக இல்லை.

ஆனால், அந்த இளம் ராணுவ வீரனின் இருப்பு அதிகாரியின் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் நுழைந்து, அவருடைய ஆண்மைத் தனத்திற்கு ஒரு பயமுறுத்தலாக ஆனது. எனினும், நீளமான கைகளைக் கொண்ட அவர் ஒரு மிடுக்கான மனிதராகவே இருந்தார். அவர் தன்னுடைய மனதிற்குள் இருக்கும் எண்ணங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதற்குத் தயாராகவும் இல்லை. முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த உணர்ச்சிகளை அவர் ஒரு மூலையில் ஒதுக்கி வைக்க நன்கு பழகிக் கொண்டிருந்தார்.


சில நேரங்களில் ராணுவ வீரர்களுக்கு முன்னால் ஒரு கோபம், ஒரு போர்- இவை உண்டாவதும் உண்டு. தான் எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறுவதற்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்ற உண்மையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். எனினும், சேவை என்ற விஷயத்திற்கு அவர் முன்னுரிமை தந்தார். அதே நேரத்தில் அந்த இளம் ராணுவ வீரன் தன்னுடைய உற்சாகத் தன்மையிலும் முழுமையான இயல்பு நிலையிலும் நம்பிக்கை வைத்திருந்தான். ஒவ்வொரு அசைவிலும் அவன் அதை வெளிப்படுத்தினான். சங்கிலியிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட மிருகங்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு இனிய உணர்ச்சியாக அது இருந்தது. அது அந்த அதிகாரியை மேலும் அதிகமாக பொறாமை கொள்ளச் செய்தது.

தன்னைத்தானே எவ்வளவு கட்டுப்படுத்திக் கொண்டாலும், தன்னுடைய ஆர்டர்லிமீது கொண்ட முரண்பாடான எண்ணத்தை கேப்டனால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. அவனை வெறுமனே விடுவதற்கும் அவருக்கு மனம் வரவில்லை. கட்டுப்படுத்த முடியாமல் எந்த அளவுக்கு நேரம் எடுக்குமோ, அந்த அளவுக்கு இருக்கக்கூடிய வேலைகளைச் செய்வதற்கு அவனுக்கு கேப்டன் கட்டளைகள் இட்டார். அவனை அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார். ஒரு இளம் ராணுவ வீரனைப் பார்த்து கோபப்பட்டு சத்தம் போட்டுக் கத்துவது என்பதையும் தன்னுடைய அதிகார தோரணையை வெளிப்படுத்துவது என்பதையும் அவர் வாடிக்கையாக்கி விட்டிருந்தார். அந்த மாதிரியான நேரங்களில் காதுகளை மூடிக்கொண்டு சிவந்து போன முகத்துடன் ஆரவாரம் அனைத்தும் முடிவதற்காக அந்த இளைஞன் காத்திருப்பான்.

அவனுடைய சிந்தனை மையங்களுக்குள் சத்தங்கள் எந்தச் சமயத்திலும் நுழைவதே இல்லை. தன்னுடைய எஜமானின் உணர்ச்சிகளுக்கு எதிராக தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தைரியம் கொண்டவனாக இருந்தான். ஆர்டர்லியின் கையின் இடது பெருவிரலில், காயத்தைச் சேர்த்து தைத்ததால் உண்டான நீளமான ஒரு அடையாளம் இருந்தது. இறுதியில் கேப்டனின் பொறுமை இல்லாமல் போனது. ஒருநாள் ஆர்டர்லி மேஜையைச் சரி செய்து போட்டுக் கொண்டிருக்கும்போது, அதிகாரி அவனுடைய பெருவிரலில் ஒரு பென்சிலை வைத்து அழுத்திக் கொண்டே கேட்டார்: "உனக்கு இது எப்படி வந்தது?''

இளைஞன் கண்களைச் சிமிட்டி, எச்சரிக்கையுடன் கூறினான்: "மரம் வெட்டும் கோடரியால்.... இங்கு இந்த ஹெர்ஹாப்மேனில் நடந்த விஷயம்...''

அதற்கு மேலும் விளக்கங்களைக் கேட்பதற்காக அதிகாரி காத்து நின்றிருந்தார். எதுவுமே கூறப்படவில்லை. ஆர்டர்லி தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகத் திரும்பினான். கேப்டனுக்கு கோபம் வந்தது. வேலைக்காரன் அவரைத் தவிர்த்தான். மறுநாள் அந்தப் பெருவிரலில் தன்னுடைய கவனத்தைச் செலுத்தாமல் இருப்பதற்கு, கேப்டன் தன் மனதின் ஓட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. அவருடைய ரத்தத்தின் வழியாக ஒரு நெருப்பு ஜுவாலை உயர்ந்து பரவிக் கொண்டிருந்தது.

தன்னுடைய வேலைக்காரன் மிகவும் சீக்கிரமே தன்னிடமிருந்து சென்று விடுவான் என்பதையும், மிகவும் சந்தோஷத்தில் திளைத்திருப்பான் என்பதையும் அவர் நன்கு அறிவார். எனினும்,அந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானிடமிருந்து எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு விலகியே இருந்தான். கேப்டனோ பைத்தியம் பிடித்தவரைப்போல வெறுப்புடன் இருந்தார். ராணுவ வீரன் அங்கு இல்லாத நேரத்தில், அவருக்கு சிறிதும் ஓய்வே இல்லாமலிருந்தது. ஆர்டர்லி அங்கு இருக்கும் போது, அவர் ஏமாற்றம் நிறைந்த கண்களைக் கொண்டு அவனைப் பார்த்தார். துடிப்பே இல்லாமலிருந்த இருண்டு காணப்பட்ட கண்களுக்கு மேலே இருந்த அந்த கறுத்த கண் இமைகளை அவர் மிகவும் வெறுத்தார். அழகான உறுப்புகளின் அசைவுகளையும் அவர் வெறுத்தார். எந்தவொரு ராணுவத்தின் சட்டத்தின் மூலமும் அவற்றை அசைவே இல்லாமல் ஆக்க முடியவில்லை. ஏசல்களையும் கிண்டல் கலந்த வார்த்தைகளையும் பயன்படுத்தி அவர் ஆண்களுக்கே உரிய குணத்தை வெளிப்படுத்தக் கூடியவராகவும் கொடூரமானவராகவும் மாறினார்.

"உன்னை எந்தக் கால்நடைகள் வளர்க்கின்றன? பேசும்போது உன்னால் நேராகப் பார்க்க முடியாதா? நான் பேசும்போது என் கண்களையே பார்.''

ராணுவ வீரன் தன்னுடைய கறுத்த கண்களை அவரை நோக்கிக் திருப்பினாலும், அவை எதையும் பார்க்கவில்லை. மெல்லிய ஏதோவொரு உணர்ச்சியைக் கண்களில் நிறைத்துக் கொண்டே அவன் தன்னுடைய உயர் அதிகாரியின் நீல நிறக் கண்களையே பார்த்தான்.

ஒருநாள் அதிகாரி தன்னுடைய கனமான ராணுவக் கையுறையை இளைஞனின் முகத்தில் வீசி எறிந்தார். ஒரு சூடத்தை நெருப்புக்குள் வீசி எறியும்போது உண்டாகக்கூடிய ஒரு பிரகாசத்தை அந்தச் சமயத்தில் அந்த கறுத்த விழிகளில் பார்க்க முடிந்தது என்ற மனசந்தோஷம் அவருக்கு உண்டானது. லேசான ஒரு முனகலுடனும் நடுக்கத்துடனும் அவர் சிரித்தார்.

ஆனால், இன்னும் இரண்டே மாதங்கள்தான் இருக்கின்றன. இளைஞன் ஏதோ உள்மனதிலிருந்து உண்டான கட்டளை என்பதைப் போல தன்னுடைய விஷயத்தில் மட்டுமே அக்கறை செலுத்தக் கூடியவனாக இருந்தான். தன்னுடைய உயர் அதிகாரி ஒரு மனிதனே அல்ல, தான் மிகுந்த அதிகாரங்கள் படைத்த ஒரு மனிதன் என்பதைப் போலவே அவனுடைய நடவடிக்கைகள் இருந்தன. தனிப்பட்ட முறையில் மோதல் என்பது ஒரு பக்கம் இருக்க, வெளிப்படையான கோபத்தைக்கூட தவிர்க்க வேண்டும் என்று அவனுடைய உள்மனம் கட்டளை இட்டது. ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும், அந்த கோபம் வெளிப்படவே செய்தது- அது மேலதிகாரியின் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு எதிராக இருந்தாலும். எனினும், அதை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்றே அவன் முயற்சி செய்தான். ராணுவத்திலிருந்து விலகி வந்தபோது, அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த அளவுக்கு நல்லவர்களாக இருந்தார்கள் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆனால் அதைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவன் தனிமையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான். இப்போதோ, ஏற்கெனவே தொடர்ந்து கொண்டிருக்கும் தனிமை உணர்வுக்கு மேலும் பலம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய நாட்களை இப்படியே செலவழித்துவிட வேண்டியது தான் என்று அவன் நினைத்தான். ஆனால், மேலதிகாரி வெறுப்படையக் கூடிய அளவுக்கு கொடூர குணம் கொண்ட மனிதராக மாறினார். அதைத் தொடர்ந்து இளைஞன் பயம் கொண்டவனாக ஆனான்.

பழமைத்தன்மை கொண்ட, சுதந்திர இயல்பு உள்ள, மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் இளம் ராணுவ வீரனுக்கு காதலியாக இருந்தாள். இருவரும் மிகவும் அமைதியாக ஒன்றாகச் சேர்ந்து நடப்பார்கள். உரையாடுவதற்காக அல்ல. அவளுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டு நடப்பதற்காகவும் உடல் ரீதியான தேவைக்காகவும்தான் அவன் அவளை வைத்திருந்தான். கேப்டனை மிகவும் எளிதாக ஒதுக்கி வைக்கக்கூடிய மனநிலையை அது அவனுக்கு அளித்தது. அவளோ வார்த்தைகளால் விளக்கிக் கூற முடியாத அளவுக்கு அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள்.


கேப்டன் இந்த விஷயத்தை தன்னுடைய மனக்கண்களால் பார்த்தார். அவர் பொறாமை காரணமாக பைத்தியம் பிடித்த மனிதரைப்போல ஆனார். எல்லா மாலை நேரங்களிலும் ஒரு நிமிடம்கூட அவனை ஓய்வு எடுப்பதற்கு அவர் அனுமதிப்பதில்லை. அந்த மாதிரியான நேரங்களில் அவனுடைய முகத்தில் கருமை படர்ந்து இருண்டுபோன தன்மை வெளியே தெரிவதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார். சில வேளைகளில் இருவருடைய கண்களும் ஒன்றோடொன்று சந்திப்பதும் உண்டு. இளைஞனின் கண்கள் ஒளி இழந்து, இருண்டு, உயிரற்றவையாகக் காணப்படும். வயதில் மூத்த மனிதரின் கண்கள் அமைதியற்ற தன்மை நிறைந்து அலட்சியத்தன்மை கொண்டவையாக இருக்கும்.

தன்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருக்கும் கடுமையான கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு உயர் அதிகாரி மிகவும் படாதபாடுபட்டார். தனக்கு அந்த ஆர்டர்லிமீது இருக்கும் உணர்வு, ஊர் சுற்றியும் முட்டாளுமான ஒரு வேலைக்காரன் காரணமாக இருக்கக் கூடியது என்பதுகூட அவருக்குத் தெரியாமலிருந்தது. அதனால், தன்னுடைய உள்மனதில் மேலோட்டமான நியாயங்களைக் கற்பித்துக் கொண்டு, எஞ்சிய விஷயங்களுடன் அவர் சர்வசாதாரணமாக முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தார். எனினும், இந்த விஷயங்கள் அவருடைய உடலுறுப்புகளை மிகவும் பாதித்தன. இறுதியில் அவர் ஒரு பெல்ட்டால் அந்த வேலைக்காரனின் முகத்தில் அடித்தார். வேதனையால் உண்டான கண்ணீருடன் அவன் நடுங்கிக் கொண்டே பின்னோக்கி நகர்ந்து நிற்பதையும் வாயில் குருதி நிறைந்து காணப்படுவதையும் பார்த்த அவருக்கு மிகுந்த சந்தோஷமும் கூச்சமும் கலந்த உற்சாகம் உண்டானது.

ஆனால், தான் எந்தவொரு நேரத்திலும் செய்திருக்கக் கூடாத ஒரு விஷயம் அது என்பதை அவர் தனக்குள் ஒப்புக்கொண்டார். அவனுடைய மனதிற்குள்ளும் கோபம் உண்டாகியிருக்கும். அவனுடைய உடலுறுப்புகள் தனித்தனியாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும். அவர் ஒரு பெண்ணுடன் சில நாட்கள் செலவழிப்பதற்காக அங்கிருந்து கிளம்பினார்.

அது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. உண்மையாகக் கூறப்போனால்- அவருக்கு அந்தப் பெண்ணே தேவையில்லை. எனினும், அவர் சில நாட்களை அவளுடன் செலவிட்டார். இறுதியில் பொறாமை கலந்த மனக்குழப்பம், வேதனை, துயரம் ஆகிய உணர்ச்சிகளுடன் அவர் திரும்பி வந்தார். சாயங்காலம் முழுவதும் ஓடித் திரிந்துவிட்டு அவர் நேராக இரவு உணவு சாப்பிடுவதற்காகத் திரும்பி வந்தார். அவருடைய ஆர்டர்லி வெளியே எங்கோ போய் விட்டிருந்தான். தன்னுடைய நீளமான அழகான கைகளை மேஜையின்மீது அசைவே இல்லாமல் வைத்திருந்த அவர் எந்தவித சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தார். தன்னுடைய முழு ரத்தமும் உறைந்துவிட்டதைப்போல அவருக்குத் தோன்றியது.

இறுதியில் அவருடைய வேலைக்காரன் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனுடைய சாதாரண, அழகான உடலுறுப்புகள், அழகான புருவங்கள், கறுத்த அடர்த்தியான தலைமுடி- இவை ஒவ்வொன்றையும் அவர் கூர்ந்து பார்த்தார். ஒரு வார காலத்தில் இளைஞனுக்கு பழைய பிரகாசம் திரும்பவும் கிடைத்து விட்டிருந்தது. அதிகாரியின் கைகள் துடித்தன. இளைஞன் மிகவும் அமைதியாக, எந்தவித அசைவும் இல்லாமல் நின்றிருந்தான்.

மிகவும் அமைதியாக அவர் உணவைச் சாப்பிட்டு முடித்தார். ஆனால், ஆர்டர்லியின் பொறுமை எல்லை கடந்தது. பாத்திரங்களை ஒன்றோடொன்று மோதச் செய்து, அவர் ஒரு சத்தத்தை உண்டாக்கினார்.

"உனக்கு அவசரமான வேலை இருக்கிறதா?'' வேலைக்காரனின் உற்சாகம் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு அதிகாரி கேட்டார். அவன் பதில் கூறவில்லை.

"நீ என்னுடைய கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறாயா?'' கேப்டன் கேட்டார்.

"ஆமாம், சார்...'' காலியான ராணுவ ப்ளேட்டுகளைக் கையில் பிடித்துக் கொண்டே எழுந்து நின்ற ஆர்டர்லி சொன்னான். கேப்டன் அவனுடைய பதிலை எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தார். அவனைப் பார்த்து கேப்டன் மீண்டும் கேட்டார்.

"உனக்கு அவசர வேலை இருக்கிறதா?''

"ஆமாம், சார்...'' இதுதான் பதிலாக இருந்தது. அவனுடைய மனதிற்குள் ஒரு மின்னல் கீற்று பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

"என்ன விஷயம்!''

"நான் வெளியே போகிறேன், சார்.''

"ஆனால், இன்று சாயங்காலம் எனக்கு நீ வேணும்.''

ஒரு நிமிட பேரமைதி. அதிகாரியின் முகம் பரபரப்பு நிறைந்த சலனமற்ற தன்மையுடன் இருந்தது.

"சரி, சார்...'' தொண்டையைச் சரி பண்ணிவிட்டு வேலைக்காரன் சொன்னான்.

"நாளைக்கு சாயங்காலமும் எனக்கு நீ வேணும். உண்மையாகக் கூறுவதாக இருந்தால்- போவதற்கு நான் அனுமதி தராதபட்சம், எல்லா மாலை நேரங்களிலும் உனக்கு வேலை இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்.''

சிறு மீசையும் தாடியும் இருந்த முகத்தின் பகுதி அசைவே இல்லாமல் இருந்தது.

"சரி சார்.'' ஒரு நிமிடம் உதடுகளை அசைத்து ஆர்டர்லி பதில் சொன்னான்.

அவன் மீண்டும் வாசல் கதவை நோக்கித் திரும்பினான்.

"நீ ஏன் காதுக்கு மத்தியில் ஒரு பென்சிலைச் சொருகி வைத்திருக்கிறாய்?''

ஆர்டர்லி சற்று தயங்கினான். பிறகு வழக்கம்போல பதில் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தான். அவன் கதவுக்கு வெளியே பாத்திரங்களை ஒரு குவியல்போல வைத்தான். காதுக்கு நடுவில் வைத்திருந்த பென்சிலை எடுத்து தன்னுடைய பாக்கெட்டிற்குள் வைத்தான். தன்னுடைய காதலியின் பிறந்தநாள் அட்டையில் அவன் ஒரு கவிதையை எழுதியிருந்தான். அதிகாரியின் கண்கள் நாட்டியமாடுவதைப்போல வெளியே துருத்திக் கொண்டு வந்தன. அவரிடம் சற்று பரபரப்பு நிறைந்த புன்னகை தவழ்ந்தது.

"நீ எதற்கு காதுக்கு நடுவில் பென்சிலை வைத்திருக்கிறாய்?'' அவர் கேட்டார்.

ஆர்டர்லி சாப்பாட்டுப் பாத்திரங்களை அடுக்கிப் பிடித்திருந்த கைகளுடன் நின்றிருந்தான். முகத்தில் ஒரு சிறிய புன்னகையுடனும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த தாடியுடனும் அவனுடைய எஜமான் பெரிய பச்சை நிற ஸ்டவ்விற்கு அருகில் நின்றிருந்தார். அவருடைய பார்வை பட்டவுடன், இளம் ராணுவ வீரனின் இதயம் திடீரென்று வெப்பமானது. தான் குருடனாகி விட்டதைப்போல அவன் உணர்ந்தான். பதில் கூறுவதற்கு பதிலாக அவன் வாசல் பக்கம் தன் கண்களைச் செலுத்தினான். சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கீழே வைப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்த அவன், பின்னால் கிடைத்த ஒரு அடியின் காரணமாக முன்னால் செலுத்தப்பட்டான். பாத்திரங்கள் நடைக்கல்லின்மீது சிதறி விழுந்தன. அவன் கைப்பிடிகள் இருந்த தூணை இறுகப் பற்றிக் கொண்டான். அவன் எழுந்து நிற்க முயற்சிக்க, தொடர்ந்து அடிகள் விழுந்து கொண்டே இருந்ததன் காரணமாக அவன் சில நிமிடங்கள் அந்தத் தூணையே பிடித்துக் கொண்டு படுத்திருந்தான். அவனுடைய மேலதிகாரி அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தார். வேலைக்காரி படிகளுக்கு கீழே நின்று கொண்டு மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தி, கீழே சிதறி விழுந்து கிடந்த பாத்திரங்களைக் கிண்டலாகப் பார்த்தாள்.


மேலதிகாரியின் மனநிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவர் ஒரு கண்ணாடி டம்ளரில் மதுவை ஊற்றி கையில் வைத்திருக்க, அதன் பெரும்பகுதி தரையில் கொட்டியது. எஞ்சி இருந்ததை பச்சை நிற ஸ்டவ்விற்கு அருகில் சாய்ந்து நின்று கொண்டு அவர் உறிஞ்சிக் குடித்தார். படிகளிலிருந்து கீழே விழுந்த பாத்திரங்களை வேலைக்காரன் பொறுக்கி எடுக்கும் சத்தத்தை அவர் கேட்டார். போதை பிடித்த நிலையில், வெளிறிப் போய் காணப்பட்ட அவர் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். வேலைக்காரன் மீண்டும் வந்தான். மொத்தத்தில் பைத்தியம் பிடித்த ஒரு மனிதராக- வேதனையைத் தாங்கிக் கொண்டு மேலும் கீழும் மூச்சுவிட்டுக் கொண்டே தன்னுடைய வேலைக்காரன்  வருவதைப் பார்த்து கேப்டனின் இதயம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.

"ஸ்கோணர்...'' அவர் அழைத்தார்.

அந்த ராணுவ வீரன் கால்களை ஒழுங்குபடுத்தி வைத்து நிற்பதற்குச் சற்று நேரமானது.

"சார்...''

பரிதாபமான நிலையில் அடர்த்தியான மீசையுடனும் கனமான புருவங்களுடனும் கறுத்த மார்பிளைப் போன்ற நெற்றியுடனும் இளைஞன் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான்.

"நான்... உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்.''

"ஆமாம், சார்.''

அதிகாரியின் குரல் அமிலத்தைப்போல உள்ளே நுழையும் விதத்தில் இருந்தது.

"நீ எதற்காக காதுக்கு நடுவில் ஒரு பென்சிலைச் சொருகி வைத்திருக்கிறாய்?''

இந்த முறையும் வேலைக்காரனின் இதயம் உஷ்ணமானது. அவனால் மூச்சுவிட முடியவில்லை. கறுத்து வேதனை தந்து கொண்டிருந்த கண்களுடன் அவன் அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். கேப்டனின் கண்களில் உயிரற்ற ஒரு மலர்ச்சி வெளிப்பட்டது. அவர் கால்களை உயர்த்தினார்.

"நான் அதை... மறந்து போய் விட்டேன். சார்...'' கறுத்த கண்களை அதிகாரியின் நீல நிறத்தில் நடனமாடிக் கொண்டிருந்த கண்களில் பதித்தான்.

"உனக்கு அதனால் என்ன லாபம்?''

வார்த்தைகளுக்காக தேடிக் கொண்டிருந்த இளைஞனின் மார்பு உயர்ந்து தாழ்வதை அவர் பார்த்தார்.

"நான் எழுதிக் கொண்டிருந்தேன்.''

"என்ன எழுதினாய்?''

மீண்டும் அந்த ராணுவ வீரன் மேலும் கீழும் பார்த்தான். அவன் மேலும் கீழும் மூச்சு விடுவது அதிகாரியின் காதுகளில் கேட்டது. நீல நிறக் கண்களில் மலர்ச்சி பரவியது. ராணுவ வீரன் தொண்டையைச் சரி செய்து கொண்டாலும், அவனால் பேச முடியவில்லை. திடீரென்று உண்டான ஜுவாலையைப்போல ஒரு புன்னகை அதிகாரியின் முகத்தில் பரவ, ஆர்டர்லியின் தொடையில் பலமான ஒரு அடியை அவர் அதே நேரத்தில் கொடுத்தார்.

இளைஞன் ஒரு பக்கமாக விலகி நின்றான். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கறுத்த கண்களைக் கொண்ட அவனுடைய முகம் உயிரற்றுக் காணப்பட்டது.

"ம்... சொல்லு...'' அதிகாரியின் உதடுகள் அசைந்தன.

ஆர்டர்லியின் நாக்கு வறண்டு போய்விட்டது. உதடுகளை ஈரப்படுத்துவதற்காக அவன் நாக்கைச் சுழற்றினான். தொண்டையைச் சரி செய்தான். அதிகாரி தன்னுடைய காலை உயர்த்தினார். ஆர்டர்லி மரக் கொம்பைப்போல நின்றிருந்தான்.

"கொஞ்சம் கவிதை... சார்...'' தெளிவற்ற, தடுமாற்றம் கலந்த அவனுடைய குரல் கேட்டது.

"கவிதையா? என்ன கவிதை?'' சந்தோஷமற்ற ஒரு புன்னகையுடன் கேப்டன் கேட்டார்.

மீண்டும் தொண்டையைச் சரி செய்யும் சத்தம் கேட்டது. மீண்டும் கேப்டனின் மனதில் சோர்வு உண்டானது. உடல்நலம் பாதிக்கப்பட்டவனைப் போல அவன் தளர்ந்துபோன கோலத்தில் காணப்பட்டான்.

"என் காதலிக்காக.. சார்...'' காய்ந்து வறண்டுபோன அசாதாரணமான குரல் கேட்டது.

"ஓஹோ!'' அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னார்: "அந்த மேஜையைத் துடைத்து சுத்தமாக்கு.''

"க்ளிக்" என்ற சத்தம் ராணுவ வீரனின் தொண்டைக்குள்ளிருந்து வெளியே வந்தது. மீண்டும் "க்ளீக்" என்ற சத்தம். அது முடிந்தவுடன் பாதி செயற்கையாக வரவழைத்துக்கொண்ட குரலில், "சரி... சார்'' என்ற சத்தமும்..

இளைஞன் ஒரு வயதான மனிதனைப்போல பலவீனமான இதயத்துடன் நடந்து, அங்கிருந்து அகன்றான்.

தனிமையில் விடப்பட்ட அதிகாரி, சிந்தனைகளில் மூழ்கி விடாமலிருக்க முயற்சித்து, அங்கேயே உட்கார்ந்திருந்தார்.

எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம் என்று உள் மனம் அவருக்குக் கட்டளை இட்டது. அந்தச் சமயத்திலும் பலத்துடன் செயல்படுவதற்கான ஆவேசம் உண்டாக்கிய சந்தோஷம் அவருடைய மனதிற்குள் நிறைந்திருந்தது. தொடர்ந்து பலமான ஒரு எதிர்வினை, அச்சப்படக் கூடிய அளவுக்கு ஒரு மோதல்- அவருடைய மனதிற்குள் நடந்தன. எதிர்வினை ஆற்ற வேண்டும் என்ற ஒரு மனநிலை- ஒரு மணி நேரம் ஒன்றொடொன்று தொடர்பு இல்லாத மனப் போராட்டத்துடன் எந்தவிதமான அசைவும் இல்லாமல் அவர் அங்கேயே நின்றிருந்தார். எனினும், மனதின் நிலைமையை வெறுமையாக இருக்கும்படி செய்யக்கூடிய ஒரு மனசக்தியை அவர் பெற்றார். அதன் மூலம் மனதின் போராட்டங்களிலிருந்து தன்னை அவர் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. உள்ளே இருந்த கோபத்தின் மிகவும் மோசமான கட்டம் தாண்டுவது வரை அவர் அதே நிலையில் நின்றிருந்தார்.

அதற்குப் பிறகு அவர் மது அருந்தத் தொடங்கினார். சுய உணர்வு மறைய வேண்டும் என்பதற்காக மது அருந்தும் செயல்! தொடர்ந்து அவர் சுய உணர்வே இல்லாமல் படுத்துத் தூங்கிவிட்டார். காலையில் எழுந்தபோது, அவர் தன்னுடைய இயல்பான குணத்தின் அடித்தளம் வரை ஆராய்ந்து முடித்திருந்தார். அதே நேரத்தில் தன்னுடைய செயல்களால் உண்டான வருத்தத்தைத் தாண்டிச் செல்ல அவர் முயற்சித்தார். தன்னுடைய மனதை அதில் பதிக்காமல் அவர் போராடினார். தன்னுடைய உள்மனதின் கட்டளைகளால் அவர் அதை அழுத்தி இருக்கச் செய்தார். அவை அனைத்தும் உள்ளே சிந்திக்ககூடிய மனதின் செயலாக இருந்தது. மது அருந்தியதால் உண்டான பலவீனத்தில், தளர்ச்சியில், தான் வீழ்ந்து விட்டோம் என்ற எண்ணம் அவருக்கு உண்டானது. காரியங்கள் எல்லாவற்றையும் மங்கலான வெளிச்சத்தில், அடையாளம் தெரிந்து கொள்கிற விதத்தில் அவரால் பார்க்க முடிந்தது. மதுவின் போதையில் அவர் மனப்பூர்வமாக நினைத்துப் பார்க்காமல் இருக்க கடுமையாக முயற்சித்தார். ஆர்டர்லி பெட்காபியுடன் வந்தபோது, அந்த அதிகாலை வேளைக்கு முன்பு இருந்த குழப்பமான மனநிலையை அதிகாரியால் எண்ணிப் பார்க்க முடிந்தது. கடந்து சென்ற இரவில் நடைபெற்ற சம்பவத்தை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அப்படியொன்று நடைபெற்றதாக இப்போதுகூட அவர் ஒப்புகொள்வதற்குத் தயாராக இல்லை. தன்னுடைய தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றார். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் தான் ஈடுபடவே இல்லை.

ஆர்டர்லி சாயங்காலம் முழுவதும் தூக்கத்தில் நடப்பதைப் போல நடந்து கொண்டிருந்தான். உணர்ச்சிவசப்பட்ட அவன் சிறிது பீர் பருகினான். அது அந்த அளவுக்கு அதிகமாக இல்லை. மது அவனுக்குள் பழைய உணர்ச்சிகளைத் திரும்பவும் கொண்டு வந்து சேர்த்தது. அவனால் அவை எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


தனக்குள் இருக்கும் மனித குணத்தின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டதைப் போல அவன் மரத்துப்போய் அதே இடத்தில் நின்றிருந்தான். அவலட்சணமான தோற்றத்துடன் அவன் மெதுவாக நகர்ந்தான். எனினும், தனக்குக் கிடைத்த அடி, உதைகளைப் பற்றிய சிந்தனை அவனைப் பாடாய்ப்படுத்தியது. அறையில் இருக்கும்போது, பிறகும் அடியும் உதைகளும் கிடைக்கும் என்ற அச்சம் உண்டானதைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்த போது, அந்த இதயம் சூடாகிவிட்டது. அவன் ஒரு வெறுப்பின் எல்லையில் போய் நின்றான். சற்று வாய் விட்டு அழ வேண்டும் போல அவனுக்குத் தோன்றியது. பாதி திறந்த வாயுடன் ஒரு முட்டாளைப்போல அவன் தோன்றினான். தனக்குள் ஒரு வெறுமை தன்மை வந்து நிறைவதைப்போல அவன் உணர்ந்தான். வேதனையுடன் அவன் தன்னுடைய வேலையில் தட்டுத்தடுமாறி செயல்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மிகவும் சிரமப்பட்டு தன்னிடமிருந்து இல்லாமல் போன சக்தியைத் திரும்பவும் அடைவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் மிகவும் களைத்துப் போய்விட்டிருந்தான். இறுதியில் அவன் படுக்கையில் போய் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். தூக்கத்திற்கென்றே இருந்த ஒரு உயிரற்ற இரவு அவனுக்காக பாயை விரித்துப் போட்டது. கவலைகள் நிறைந்த சிந்தனைகளுக்கு மத்தியில் களைப்பு நுழைந்து வந்தது.

காலையில் செய்வதற்கு ஏராளமான வேலைகள் இருந்தன. ஆனால், ப்யூகில் ஊதப்படுவதற்கு முன்பே, அவன் தூக்கத்திலிருந்து கண்விழித்து எழுந்தான். மார்பில் வேதனை, தொண்டை வறட்சி, தாங்க முடியாத சிரமங்கள்- எல்லாம் சேர்ந்து அவனுடைய கண்களை நிராசை கலந்த ஒரு பரிதாப நிலைக்குக் கொண்டு சென்றன. சிந்தனைகளின் தேவையே இல்லாமல் விஷயங்கள் அவனுக்கு நன்கு புரிந்தன. ஊர் சுற்றக்கூடிய நேரம் வந்துவிட்டது என்று அவனுக்குத் தோன்றியது. அறையில் இருட்டின் இறுதி அடையாளங்களும் காணாமல் போயின. இனி தன்னுடைய கட்டுப் பாட்டில் இல்லாத இந்த உடலையும் இழுத்துக்கொண்டு வெளியே சென்றால் போதும். மிகவும் இளைஞனான அவனுக்கு மிகவும் குறைந்த அளவிலேயே பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் வந்தன. அது அவனிடம் பதைபதைப்பை உண்டாக்கியது. இரவு நேரம் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் ஆசைப்பட்டான். அப்படியென்றால் தான் இருட்டைத் தழுவிக்கொண்டு அசையாமல் படுத்திருக்கலாமே! ஆனால், பகல் வெளிச்சம் உள்ளே நுழைந்து வருவதை எதனாலும் தடுக்க முடியாதே! எழுந்து சென்று கேப்டனுக்கு காப்பி தயார் பண்ணித் தருவதையோ, குதிரையை அலங்கரிப்பதையோ தடுப்பதற்கு எதனாலும் முடியாது. எனினும், இவையெல்லாம் சிரமம் நிறைந்த விஷயங்கள்தான் என்று அவன் நினைத்தான். அதேபோல அவை எதுவும் தன்னை சுதந்திரமான மனிதனாகவும் ஆக்கப் போவதில்லை... தான் எழுந்து சென்று கேப்டனுக்குக் காப்பி தரவேண்டும்... தான் எந்த அளவுக்கு விருப்பமில்லாத மனிதனாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விஷயங்கள் என்பது ஒரு உண்மையாக நிலை பெற்று நின்று கொண்டுதான் இருக்கிறது.

இறுதியில் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயம் என்பதைப் போல, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு அவன் எழுந்தான். எனினும், தன்னுடைய மன வலிமையைக் கொண்டு ஒவ்வொரு அசைவுகளையும் அவற்றுக்குப் பின்னாலிருந்து அவன் பலம் செலுத்தி இயக்க வேண்டியதிருந்தது. தான் செயலற்றவன் என்பதையும் அனாதை என்பதையும் திகைத்துப் போய் நிற்பவன் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். தவிர்க்கமுடியாத வேதனையுடன் அவன் கட்டிலை இறுகப் பற்றிக் கொண்டான். தொடைகளைப் பார்த்த அவனால், கறுத்து தடித்த காயங்களை சதைப் பகுதியில் காண முடிந்தது. தான் சுய உணர்வு இல்லாதவனாக ஆவதற்கு தன்னுடைய விரல்களில் ஒன்றை அங்கு அழுத்தினால் போதும் என்பதையும் அவன் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தான். ஆனால், அப்படி ஆவதற்கு அவன் விரும்பவில்லை. வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்றும் அவன் விரும்பினான். எந்தச் சமயத்திலும் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது. இந்த விஷயம் தனக்கும் கேப்டனுக்கும் இடையே மட்டுமே இருக்கக் கூடிய ஒன்று. இந்த உலகத்தில் இப்போது மொத்தத்தில் இருப்பதே இரண்டு பேர்தான்- தானும் கேப்டனும்.

மெதுவாக, மிகவும் மெதுவாக அவன் எழுந்து ஆடைகளை எடுத்து அணிந்து நடப்பதற்கு வலிய முயற்சித்தான். தன்னுடைய கையில் இருக்கும் ஆடைகளைத் தவிர, வேறு எதுவும் தேவையில்லை. எனினும், அவன் எப்படியோ வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அந்த வேதனைகள்தான் அவனுடைய கட்டுப்பாடுகளை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தன. மேலும் துன்பங்கள் நிறைந்த பகுதி இனிமேலும் இருக்கின்றன. அவன் ட்ரேயைக் கையில் எடுத்துக்கொண்டு கேப்டனின் அறைக்குச் சென்றான். வெளிறிப்போய், முகத்தை உயர்த்திக் கொண்டு அதிகாரி நாற்காலிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். மேலதிகாரியை வணங்கும்போது ஆர்டர்லி தனக்கு உயிரே இல்லாமல் போய் விட்டதைப்போல உணர்ந்தான். தன்னுடைய சுய உணர்வற்ற தன்மைக்கு அடிபணிந்து, ஒரு நிமிடம் அவன் நின்றான். தொடர்ந்து தன்னுடைய பலத்தை மீண்டும் பெற்று, தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும்படி அனைத்தையும் கொண்டு வந்தான். அதே நேரத்தில் கேப்டன் ஒரு உண்மையற்ற நிலைக்குள்ளும் தெளிவற்ற தன்மைக்குள்ளும் போய் அடங்கிக் கொண்டார். இளைஞனான ராணுவ வீரனின் இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. அவன் இந்தச் சூழ்நிலைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தான். அதாவது- கேப்டன் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்பது மாதிரி. அதைத் தொடர்ந்து தான் மட்டுமே இருப்பதற்கு பலம் கொடுப்பதற்கான ஒரு சிந்தனையும் உதயமானது. ஆனால், காப்பி பாத்திரத்தை எடுக்கும்போது, நடுங்கிக் கொண்டிருந்த கேப்டனின் கையைப் பார்த்ததும், எல்லாமே நொறுங்கி சாம்பலாகி விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. அந்த நிமிடமே பல நூறு துண்டுகளாக தான் நொறுங்கி விழுவதைப்போல உணர்ந்து அவன் அங்கிருந்து நகர்ந்தான். கேப்டன் குதிரையின்மீது ஏறி உட்கார்ந்து கட்டளைகளைப் பிறப்பித்தார். அப்போது வேதனையிலிருந்து உண்டான நோய்த் தன்மையுடன் ரைஃபிலுடனும் தொங்கு பையுடனும் நின்று கொண்டிருந்த அவனுக்கு தான் எல்லாவற்றுக்கும் எதிராக கண்களை மூடிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. வறண்டு போன தொண்டைக்குள்ளிருந்து வெளியே வந்த ஆழமான ஒரு மனநிலை மட்டுமே மொத்தத்தில் ஒரே ஒரு விருப்பத்தை அவனிடம் உண்டாகும்படி செய்தது- தான் தப்பித்துவிட வேண்டும் என்ற விருப்பம்.


2

ரு தொண்டை வறண்டு போன நிலையுடன் அவன் தொடர்ந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். வானத்தின் மேகங்களுக்கு நடுவில் ஒளிர்ந்து கொண்டிருந்த பனி மூடிய சிகரங்களும், அதற்கு மத்தியில் வெள்ளை, பச்சை நிறங்கள் கலந்து வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்த பிரகாசமான நதிகளும், அவை கீழ் நோக்கி அடிவாரத்திற்குள் குதிப்பதும் அவனுக்கு மிகவும் சாதாரண விஷயங்களாகத் தோன்றின.

ஆனால், தாகத்தாலும் ஜுரம் பாதித்து விட்டிருப்பதாலும், தனக்கு எங்கே பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற எண்ணம் அவனுக்கு உண்டானது. எந்தவொரு குற்றச்சாட்டும் கூறாமல் அவன் முன்னோக்கிச் சென்றான். யாரிடமும் எதுவும் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. நதிக்கு மேலே நீரும் பனியும் பிரதிபலிப்பதைப்போல இரண்டு கடல் காகங்கள் இருந்தன. பசும்கேழ்வரகு சூரிய வெளிச்சத்துடன் கலக்கும்போது உண்டாகக்கூடிய ஒரு வகையான வாசனை காற்றில் பரவி விட்டிருந்தது. நிம்மதியற்ற உறக்கத்தைப்போல, அந்தப் பயணம் அந்த வகையில் தொடர்ந்து கொண்டிருந்தது.

மேடான சாலைக்கு அருகில் உயரம் குறைவாகவும் விசாலமாகவும் இருந்த பழைய சாமான்கள் வைக்கப்படும் கட்டடத்தில் பீப்பாய்களில் நீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. ராணுவ வீரர்கள் நீர் பருகுவதற்காக அங்கு வந்து கூடினார்கள். அவர்கள் தலைக் கவசங்களை தங்களின் தலைகளிலிருந்து எடுத்தார்கள். அவர்களுடைய ஈரமான தலை முடிகளிலிருந்து ஆவி வந்து கொண்டிருந்தது. குதிரையின்மீது அமர்ந்திருந்த கேப்டன் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய தலைக் கவசம் பிரகாசித்துக்கொண்டும் பயங்கரமாக இருந்த கண்களில் ஒரு இருண்ட நிழலை உண்டாக்கிக் கொண்டும் இருந்தாலும், அந்த கீழ்தாடியும் கிருதாவும் மீசையும் சூரிய வெளிச்சத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய ஆர்டர்லியைப் பார்த்தார். குதிரையின்மீது அவர் அமர்ந்திருக்க, கீழே ஆர்டர்லி நடந்து செல்ல வேண்டும். அந்த விஷயம் அவனிடம் எந்தவொரு அச்சத்தையும் உண்டாக்கவில்லை. வெறுமையாக்கப்பட்ட ஒரு பீரங்கியைப்போல தான் ஆகிவிட்டதாக அவன் உணர்ந்தான். தான் எதுவுமே இல்லாத ஒரு பொருள் என்றும் சூரிய வெளிச்சத்திற்குக் கீழே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிழல் என்றும் அவன் தன்னைப் பற்றி நினைத்தான். கேப்டன் தனக்கு மிகவும் அருகிலேயே இருந்ததால், தாகம் இருந்தாலும், அவனால் நீர் அருந்த முடியவில்லை. ஈரமான தலை முடியைக் கோதி விடுவதற்காக அவன் தன்னுடைய தலைக் கவசத்தைக்கூட எடுக்கவில்லை. கேப்டனின் நிழலில் இருக்க வேண்டும் என்பதே அவனுடைய விருப்பமாக இருந்தது. சுயஉணர்வு நிலைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு சிறிதும் உண்டாகவில்லை. அப்போது அதிகாரி குதிரையின் வயிற்றுப் பகுதியில் மிதிப்பதை அவன் பார்த்தான். கேப்டன் குதிரையில் பயணித்துப் போய்க் கொண்டிருந்தார். இனி வெறுமைக்குள் தன்னுடைய விருப்பப்படி அவன் நுழைந்து கொள்ள வேண்டியதுதான்.

அந்த தகித்துக் கொண்டிருந்த பிரகாசமான அதிகாலை வேளையில் உற்சாகமான ஒரு சூழ்நிலையை தனக்கு அளிப்பதற்கு எதனாலும் முடியாது என்பதாக அவன் உணர்ந்தான். அவற்றுக்கு மத்தியில் ஒரு பிளவு- ஒரு வெற்றிடம்- அதை அவனால் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் மதிக்கக்கூடிய நிலையிலும், அனைத்து அதிகாரங்கள் கொண்டவராகவும் கேப்டன் இருந்தார். ஆர்டர்லியின் உடம்பு முழுவதும் ஒரு உற்சாகமான மின்னல் பரவியது. கேப்டன் தன்னுடைய வாழ்க்கையில் பலம் படைத்தவராகவும் மதிக்கக் கூடியவராகவும் இருந்த நிலையில், தான் வெறும் ஒரு நிழலைப் போன்று வெறுமையாக... மீண்டும் ஒரு மின்னல் உடலெங்கும் பரவி அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. எனினும், அவனுடைய இதயத் துடிப்பிற்கு அதிக பலம் கிடைத்ததைப்போல இருந்தது.

திரும்பி வரும் பயணத்தை இலக்காகக் கொண்டு அந்த ராணுவப் பிரிவு மலையின் வளைவில் திரும்பியது. கீழே மரக் கூட்டங்களுக்கு மத்தியில் பழைய பொருட்கள் வைக்கப்படும் அறையிலிருந்து மணியடிக்கும் சத்தம் கேட்டது. இடைவெளி இல்லாமல் வளர்ந்திருந்த புற்பரப்பில், வெற்றுப் பாதங்களுடன் நடந்து போய்க் கொண்டிருந்த விவசாய வேலை செய்பவர்கள் தங்களின் தோள்களில் அரிவாள்களைத் தொங்கவிட்டவாறு வேலையை நிறுத்திவிட்டு திரும்பி வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். தன்னுடன் அவர்களுக்கு எந்தவொரு உறவும் இல்லாததைப்போல அவன் உணர்ந்தான். அவர்கள் ஏதோ கனவில் நடந்துகொண்டிருப்பவர்கள் என்பதாக அவனுக்குத் தோன்றியது. தான் ஏதோ ஒரு கறுத்த கனவில் சிக்கிக் கொண்டுவிட்டதைப்போலவும் அவன் உணர்ந்தான். அது ஒரு குறிப்பிடத்தக்க தோணலாக இருந்தது. அதாவது- எல்லாருக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு. ஆனால், தான் மட்டும் ஒரு உணர்வு, சிந்திப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் இயலக்கூடிய ஒரு இடைவெளி.

ராணுவ வீரர்கள் பிரகாசித்துக் கொண்டிருந்த மலைத் தொடர்களை நோக்கி அமைதியாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச் செல்ல, அவனுடைய தலை மெதுவாக தாள லயத்துடன் சுற்ற ஆரம்பித்தது. சில நேரங்களில் அவனுடைய கண்களுக்கு முன்னால் ஒரே இருட்டாக இருந்தது- வெளிறிப் போன, இனம்புரியாத நிழல்கள்! ஒரு புகைக்கண்ணாடியின் வழியாக பார்ப்பதைப் போலதான் இந்த உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். தன்னுடைய தலைக்குள் ஒரு வேதனையை அவன் அனுபவித்தான்.

சுற்றுப்புறம் நறுமணம் நிறைந்ததாக இருந்தது. ஒரு இலைகூட அசையவில்லை. அழகான பச்சை இலைகள் அவற்றின் பலவீனங்களைப் பரவவிட, இறுதியில் காற்று பச்சை நிறத்தால் நிறைந்து கொண்டிருந்தது. சுத்தமான தேன், தேனீக்கள் ஆகியவற்றின் வாசனையைப்போல, புல்லின் வாசனையும் அங்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டிருந்தது. தொடர்ந்து மெல்லிய- ஆனால், பலமான ஒரு வாசனை காற்றில் கலந்திருந்தது. அவர்கள் பீச் மரக் கூட்டங்களுக்கு அருகில் வந்து சேர்ந்திருந்தார்கள். பிறகு வினோதமான ஒரு கடகடா சத்தமும், அதைத் தொடர்ந்து மனதை வெறுக்கச் செய்யும் மூச்சை அடைக்கக் கூடிய ஒரு மணம்... அவர்கள் ஒரு கூட்டம் செம்மறி ஆடுகளைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். கறுத்த கால்சட்டை அணிந்த ஒரு சிறுவன் ஒரு மரக் கொம்பைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான். வெயிலின் இந்தத் தகிப்பில் செம்மறியாடுகள் எதற்காகக் கூட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும்? ஆர்டர்லி அந்தச் சிறுவனைப் பார்த்தாலும், அவன் ஆர்டர்லியைப் பார்க்கவில்லை.

இறுதியில் எல்லாரும் நின்றுவிட்டார்கள். முக்கோணமாக இருந்த ஒரு அறையில் அவர்கள் ரைஃபில்களை அடுக்கி வைத்தார்கள். தங்களைச் சுற்றி வட்டமாக தோலாலான பைகளைப் பரவலாக இருக்கும்படி வைத்தார்கள். பிறகு சிறிது நேரத்திற்கு கூட்டம் பிரிந்தது. அவர்கள் மலையின் சரிவில் உயரமாக இருந்த ஒரு புல் மேட்டில் போய் உட்கார்ந்தார்கள்.

மீண்டும் கடகடா சத்தம்!

ராணுவ வீரர்கள் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு பல விஷயங்களைப் பற்றியும் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். எனினும், அவர்கள் நல்ல மன நிலையுடன் இருந்தார்கள். இருபது கிலோமீட்டர்களுக்கு அப்பால் நீல நிற மலைகள் தலையை உயர்த்திக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவர்கள் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தார்கள். மலைத் தொடர்களுக்கு மத்தியில் ஒரு நீல நிற மடிப்பு தெரிந்தது.


அதைத் தாண்டி மலையின் அடிவாரத்தில் விசாலமாகவும் வெளிறிப் போயும் காணப்பட்ட நதி, மஞ்சள் நிறமும் சாம்பல் நிறமும் கலந்த மீன் கூட்டங்களுக்கும் கறுத்த பைன் மரக்காடுகளுக்கும் நடுவில் நீண்டு பரவி ஓடிக் கொண்டிருந்தது. நதி மலையின் அடிவாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. ஒரு மைல் தாண்டி, யாரோ ஒரு பெரிய மிதவையை இயக்கியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். அது ஒரு வினோதமான நிலப்பகுதி. இன்னும் சற்று அருகில், பீச் மரங்களின் வரிசைகளின் முடிவில் சிவப்பு நிற மேற் கூரையையும், வெள்ளை நிறத்தில் அடித்தரையையும், சதுரமான சாளரங்களையும் கொண்ட ஒரு கட்டடம் தெரிந்தது. நீண்ட வரிசைகளாக கேழ்வரகு, சீமைப்புல், வெளிறிய பச்சை நிறத்தில் காணப்பட்ட சோளச் செடிகள் ஆகியவை வளர்ந்து நின்றிருந்தன. ஆர்டர்லியின் கால்களுக்குக் கீழே, மேட்டிற்குக் கீழே இருந்த கறுத்த சதுப்பு நிலத்தில் வட்ட வடிவத்திலிருந்த மலர்கள் சுவாசத்தை அடக்கிக்கொண்டு மெல்லிய தண்டுகளில் இருந்தன. அவற்றின் நறுமணம் காற்றில் கலந்து விட்டிருந்தது. தான் கண்களை மூடி தூக்கத்திற்குள் விழுந்து கொண்டிருக்கிறோமோ என்று அவன் நினைத்தான்.

திடீரென்று தன்னுடைய கண்களுக்கு முன்னாலிருந்த வண்ண மயமான இடத்தை நோக்கி ஏதோ நகர்ந்து வருவதை அவன் பார்த்தான். இளம் நீல நிறமும் அடர்த்தியான சிவப்பு நிறமும் கலந்த கேப்டனின் உருவம் மலைப்பரப்பிற்கு இணையாக தானிய வயல்களின் வழியாக சாதாரண வேகத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கொடி அடையாளங்கள் நன்கு தெரிந்தன. ஆணவமும் நிச்சயமற்ற தன்மையும் நிறைந்த குதிரையின்மீது சவாரி செய்யும் கேப்டனின் உருவம் வந்து கொண்டிருந்தது. வேகமாகவும் பிரகாசமாகவும் தெளிவாகவும் தெரிந்த அந்த உருவத்தின்மீது அந்தச் சூரியனின் முழு ஒளியும் விழுந்திருந்தது. அதை நீக்கி விட்டுப் பார்த்தால், பிறகு அங்கு நிலவிக் கொண்டிருந்தது அழகும் பிரகாசமும் நிறைந்த நிழல் மட்டுமே. அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், இளம் ராணுவ வீரன் உற்றுப் பார்த்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தான். குதிரையோட்டத்தின் வேகம் குறைந்து, இறுதியாக நெடுங்குத்தாக இருந்த பாதையை அடைந்தபோது, அந்த ஆர்டர்லியின் மனதிலும் உடலிலும் தாங்க முடியாத மின்னல் கீற்றுகள் உண்டாயின. அவன் காத்துக் கொண்டிருந்தான். பலமான ஒரு நெருப்பு குண்டத்தை தலையின் பின் பகுதியில் கட்டித் தொங்கவிட்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. கைகளை மெதுவாக அசைத்தபோது, அவை நடுங்கின. இதற்கிடையில் குதிரைமீது ஏறி அமர்ந்திருந்த அதிகாரி மெதுவாகவும், மிடுக்குடனும் அருகில் வந்து கொண்டிருந்தார். ஆர்டர்லியின் மனம் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. குதிரையின்மீது கேப்டன் நிம்மதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அவனுடைய மனதிற்குள் மீண்டும் ஒரு மின்னல் கீற்று பாய்ந்து சென்றது.

இளம் நீல நிறமும் அடர்த்தியான சிவப்பு நிறமும் கலந்த தலைக் கவசங்கள் மலைத் தொடர்களுக்கு அருகில் சிதறிச் சிதறி நின்று கொண்டிருப்பதை கேப்டன் பார்த்தார். அது அவரை சந்தோஷம் கொள்ளச் செய்தது. கட்டளைக் குரலும் அவரை சந்தோஷப்படுத்தியது. அந்தக் கூட்டத்தில், எப்போதும் இருக்கக் கூடிய பணிவுடன் தன்னுடைய ஆர்டர்லியும் நின்று கொண்டிருப்பதை அவர் பார்த்தார். அதிகாரி பாதத்தை ஊன்றிக் கொண்டு மெதுவாக எழுந்து நின்று பார்த்தார். இளம் ராணுவ வீரன் அமைதி நிலவிக் கொண்டிருந்த தன்னுடைய முகத்தை குனிய வைத்துக் கொண்டிருந்தான். கேப்டன் இருக்கையில் நிம்மதியாக உட்கார்ந்தார். குதிரை நடக்க ஆரம்பித்தது. மனிதர்கள், வியர்வை, தூசி ஆகியவற்றின் வாசனை கலந்த வெட்டவெளியை நோக்கி அவர் கடந்து சென்றார். அது அவருக்கு நன்கு பழகிவிட்ட ஒரு விஷயமாக இருந்தது. லெஃப்டினன்டுடன் குசலங்கள் விசாரித்து முடித்து அவர் சில அடிகள் மேலே ஏறி, ஆட்களின் கூட்டத்தில் எதுவுமே இல்லாமல் நின்று கொண்டிருந்த தன்னுடைய ஆர்டர்லியையே பார்த்துக்கொண்டு நின்றார்.

அந்த இளம் ராணுவ வீரனின் இதயம் ஒரு நெருப்புக் குண்டத்தைப் போல உள்ளே எரிந்து கொண்டிருந்தது. அவன் மிகவும் சிரமப்பட்டு மூச்சுவிட்டான். மலைச்சரிவைப் பார்த்த அதிகாரி, மூன்று இளைஞர்களான ராணுவ வீரர்கள் (அவர்களுக்கு மத்தியில் ஒரு பாத்திரத்தில் நீர்) சூரியனின் கதிர்கள் விழுந்து கொண்டிருந்த பச்சை நிற வயலுக்கு எதிரில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். மரத்திற்குக் கீழே மேஜையைப் போட்டு, அதில் மிகவும் பரபரப்பானவரும் பலசாலியுமான ஒரு லெஃப்டினன்ட் உட்கார்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்தார். அவர் தன்னுடைய ஆர்டர்லியை அழைத்தார். கட்டளைக் குரல் கேட்டதும் இளம் ராணுவ வீரனின் தொண்டைக்குள் ஒரு நெருப்பு ஜுவாலை பரவியது. அவன் பார்க்கும் சக்தியை இழந்தவனைப் போல அடித்துப் பிடித்து எழுந்தான். அதிகாரியின் கீழே நின்று கொண்டு அவன் மரியாதை செலுத்தினான். அவன் மேலே பார்க்கவில்லை. கேப்டனின் குரலில் ஒரு பதற்றம் இருந்தது.

"சத்திரத்திற்குச் சென்று எனக்காக... எடுத்துக் கொண்டு வா...'' அதிகாரி கட்டளை இட்டார். "சீக்கிரமா... சீக்கிரமா...'' அவர் சொன்னார்.

இறுதி வார்த்தையைத் தொடர்ந்து அந்த அதிகாரியின் வயிற்றில் ஒரு மின்னல் வெட்டு உண்டானது. தன்னுடைய சக்தியைத் திரும்பவும் பெற்றுவிட்டதைப்போல அவன் உணர்ந்தான். ஆனால், அவன் இயந்திரத்தனமான பணிவுடன் கிட்டத்தட்ட ஒரு கரடியைப்போல கீழ் நோக்கி வேகமாக ஒரு ஓட்டம் ஓடினான். அவனுடைய ட்ரவுசர்கள் ராணுவ பூட்களில் பட்டு உரசின. இந்தக் கண்மூடித்தனமான அடிபணியும் செயலை அதிகாரி கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால், ஆர்டர்லியின் உடல் மட்டுமே பணிவு கொண்டதாகவும் இயந்திரத்தனமானதாகவும் உத்தரவுகளைப் பின்பற்றிக் கொண்டும் இருந்தது. மனதிற்குள் அந்த இளம் வாழ்வின் அனைத்து சக்திகளும் படிப்படியாக ஒரே இடத்தில் சேர்ந்து சேகரிக்கப்பட்டு மாற ஆரம்பித்திருந்தன. அவன் தன்னுடைய கடமையைச் செய்வதற்காக திரும்பவும் மலையின் மேலே வேகமாக ஏறினான். நடக்கும்போது தலையில் வேதனை உண்டானதால், தன்னையே அறியாமல் அவனுடைய உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இதயத்தின் அடித்தளத்தில் அவன், அவனாகவே இருந்தான். சாதுவான அவனேதான்! துண்டுத் துண்டாக பிய்த்து எறிய இயலாத அவனேதான்!

கேப்டன் காட்டுப் பகுதியை நோக்கி கடந்து சென்றார். ஆர்டர்லி உற்சாகமும் பயங்கரத்தன்மையும் ராணுவ வீரர்களின் வாசனையும் நிறைந்த காட்டுப் பகுதியின் வழியாக தட்டுத் தடுமாறி நடந்தான். அவனுடைய மனதிற்குள் இப்போது வினோதமான ஒரு தைரியம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது.


கேப்டன் தான் மனதில் நினைத்திருந்ததைவிட குறைவான ஒரு யதார்த்தம் என்பதாக அவன் உணர்ந்தான். அவன் காட்டின் பசுமையான நுழைவாயிலை நெருங்கினான். அங்கு பாதி உடலை நிழலில் இருக்கும்படி செய்து, குதிரை நின்று கொண்டிருப்பதையும் சூரியனின் வெளிச்சமும் இலைகளின் நிழல்களும் அதன் சாம்பல் நிறத்திலிருந்த உடலில் பாய்ந்தோடி விளையாடிக் கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான். சமீபத்தில் மரங்கள் வெட்டப்பட்ட ஒரு திறந்த இடம் அங்கு இருந்தது. அங்கு பொன் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த பசுமைக்கு மத்தியில்- சூரிய வெளிச்சத்தின் உன்னதத்தில் நீல நிறமும் மஞ்சள் நிறமும் உள்ள இரண்டு உருவங்கள் நின்றிருந்தன. அவற்றில் மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்த பகுதிகள் தெளிவாகத் தெரிந்தன. கேப்டன் லெஃப்டினன்ட்டிடம் உரையாடலை ஆரம்பித்தார்.

நிர்வாணமாகவும் சாம்பல் நிறத்தில் தோலைக் கொண்டதாகவும் உள்ள உடல்கள் படுத்துக் கிடப்பதைபோல, தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்த அந்த வெட்ட வெளியில் மரங்களின் பெரிய உச்சிகள் விழுந்து கிடந்தன. அதற்கு அருகில் ஆர்டர்லி நின்றிருந்தான். வெளிச்சம் சிதறிக் கிடப்பதைப்போல மர இலைகள் தரையை ஒளிமயமாக ஆக்கிவிட்டிருந்தன. வெட்டப்பட்ட மரங்களின் முரட்டுத்தனமான பகுதிகள் அழகான தலைகளுடன் ஆங்காங்கே கிடந்தன. அதைத் தாண்டி, அழகான ஒரு பீச் மரத்தின் சூரிய ஒளிபட்ட பசுமையான பகுதி தெரிந்தது.

"அப்படியென்றால், நான் இனிமேல் முன்னோக்கிப் போகலாம்.''

கேப்டன் கூறுவதை ஆர்டர்லி கவனித்தான். லெஃப்டினன்ட் மரியாதை செலுத்திவிட்டு, குதிரையை செலுத்திக் கொண்டு சென்றார். அவனும் முன்னோக்கி நகர்ந்தான். அதிகாரியின் அருகில் நடந்தபோது, அவனுடைய வயிற்றுப் பகுதியில் பலமான ஒரு மின்னல் கீற்று பாய்ந்து சென்றது.

சுமாராக தடித்துக் காணப்பட்ட இளம் ராணுவ வீரனின் உருவம் முன்னோக்கி கால் தடுமாறிப் போய்க் கொண்டிருப்பதை கேப்டன் பார்த்தார். அவருடைய நரம்புகளில் உஷ்ணம் ஏறியது. இதோ... தன்னுடன் போட்டி போடக்கூடிய ஒரு மனிதன்! குனிந்த தலையுடன் நின்றிருந்த அவன் வேகமாக வந்து நின்றிருந்த அந்த மிடுக்கான மனிதருக்கு முன்னால் கீழ்ப்படிந்தான்.

ஆர்டர்லி குனிந்து உணவை ஒரு முக்காலியில் வைத்தான். பிரகாசித்துக் கொண்டிருந்த சூரியனின் ஒளியை ஏற்ற நிர்வாண கரங்களை கேப்டன் கூர்ந்து பார்த்தார். அந்த இளம் ராணுவ வீரனிடம் உரையாட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தாலும், அதற்கு முடியவில்லை. வேலைக்காரன் தன்னுடைய தொடையில் அடித்து ஒரு புட்டியின் கார்க்கைத் திறந்து   அதிலிருந்த பீரை ஒரு மக்கிற்குள் ஊற்றினான். அவன் தலையைக் குனிந்த வண்ணம் இருந்தான். கேப்டன் அந்த மக்கை வாங்கினார்.

"சூடு!...'' அவர் தனக்குத் தானே கூறிக்கொள்வதைப்போல சொன்னார்.

ஆர்டர்லியின் இதயத்திற்குள்ளிருந்து நெருப்பு ஜுவாலை வெளியே வந்தது. கிட்டத்தட்ட அது அவனை மூச்சுவிட முடியாமல் செய்வதைப் போல தோன்றியது.

"ஆமாம்... சார்.'' அவன் பற்களைக் கடித்துக் கொண்டே சொன்னான்.

கேப்டன் பீர் குடிக்கும் சத்தத்தை அவன் கேட்டான். அவன் தன்னுடைய முஷ்டிகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்ததால், கைகளில் அதன் வேதனை தெரிந்தது. அத்துடன் பாத்திரத்தின் மூடி அடைக்கப்படும் சத்தமும் கேட்டது. அவன் தலையை உயர்த்திப் பார்த்தான். கேப்டன் தன்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவர் திடீரென்று பார்வைகளை தூரத்தில் செலுத்தினார். தொடர்ந்து அதிகாரி குனிவதையும் மரத்திற்குக் கீழே இருந்து ஒரு ரொட்டித் துண்டை பொறுக்கி எடுப்பதையும் அவன் பார்த்தான். தனக்கு முன்னால் குனிந்து கொண்டிருக்கும் உடலைப் பார்த்த அந்த இளம் ராணுவ வீரனின் உடம்பெங்கும் ஒரு மின்னல் மீண்டும் பாய்ந்தது. அவனுடைய கைகள் நடுங்கின. அவன் தூரத்தை நோக்கிப் பார்த்தான். தன்னுடைய அதிகாரி பதைபதைப்புக்குள்ளாகி இருக்கிறார் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ரொட்டி பிய்க்கப்பட்ட நிலையில் கீழே விழுந்தது. அந்த இரண்டு ஆண்களும் அசையாமல் மூச்சை அடக்கிக் கொண்டு நின்றிருந்தார்கள். எஜமான் மிகவும் சிரமப்பட்டு ரொட்டியைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார்.

ஆர்டர்லி அந்த மக்கின் ஓரம், கைப்பிடியில் அழுத்திக் கொண்டிருந்த வெளுத்த கை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு மனிதனைப்போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அது மேலே வந்தது. இளைஞனின் பார்வையும் அதோடு சேர்ந்து உயர்ந்தது. வயதில் மூத்த அதிகாரியின் சக்தி படைத்த தொண்டை, பீரின் நுரைகளுக்குத் தகுந்தாற்போல உருண்டு விளையாடிக் கொண்டிருப்பதும், தாடையின் செயல்பாடும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அந்த இளைஞனின் கைகளை அழுத்தக்கூடிய அதே உள் மனதின் கட்டளை அவற்றை சுதந்திரமாக இருக்கும்படி செய்தது. பலமான ஒரு ஜுவாலையால் அது இரண்டு துண்டுகளாக ஆகி விட்டதைப்போல அவன் குதித்தான்.

அதே நிமிடத்தில் மரத்தின் வேரில் தட்டி, அதிகாரி ஒரு சத்தத்துடன்  கூர்மையாக இருந்த ஒரு பெரிய வேரில் போய் விழுந்தார். கையிலிருந்த பாத்திரம், சிதறிக் கீழே விழுந்தது. ஒரு நிமிடத்திற்குள் பணிவான குணத்தையும் ஆத்மார்த்தமான முக வெளிப்பாட்டையும், பற்களின் வரிசைகளுக்கு மத்தியில் நெருக்கமாக இருக்கும் கீழுதட்டைக் கொண்ட முகத்தையும் கொண்ட ஆர்டர்லி தன்னுடைய காலால், அதிகாரியின் நெஞ்சில் அழுத்தினான். அவருடைய கீழ்த் தாடையை பலத்தைப் பயன்படுத்தி பின்னோக்கி வரச் செய்து மரத்தடியின் இன்னொரு முனைக்குக் கொண்டு சென்றான். நிம்மதி தரக்கூடிய ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், கைகள் சுதந்திரமாக்கப்பட்ட சந்தோஷத்திலும் அவன் இந்தத் தாக்குதலை நிகழ்த்தினான். தொடர்ந்து உள்ளங்கையின் கீழ்ப்பகுதியைப் பயன்படுத்தி, முழு சக்தியையும் ஒன்று சேர்த்து அவன் கீழ்த்தாடையைத் தாக்கினான். தாடி முடிகளால் சற்று முரட்டுத்தனமாகத் தோன்றிய அந்தக் கீழ்த்தாடை தன்னுடைய கைகளுக்குள் சிக்கிக் கிடப்பதை நினைத்து அவன் ஒரு தனிப்பட்ட சந்தோஷத்தை அனுபவித்தான். ஒரு நிமிட நேரம்கூட அவன் ஒய்வு எடுக்கவில்லை. ரத்தம் பலமாக தன்னுடைய கையில் பாய்ந்து ஒழுகக் கூடிய வகையில் அதிகமான பலத்தைப் பயன்படுத்தி அவன் அந்த மனிதரை பின்னோக்கி நகர்த்தி அழுத்தினான். இறுதியில் "க்ளிக்" என்றொரு சத்தத்தையும் நெரித்து அடங்குவதால் உண்டான ஒரு சந்தோஷத்தையும் தன்னுடைய கைகளில் அவனால் உணரமுடிந்தது. தன்னுடைய தலை நீராவியாக ஆகிவிட்டதைப் போல அவனுக்குத் தோன்றியது. இனம்புரியாத நடுக்கங்கள் அதிகாரியின் உடம்பெங்கும் உண்டாயின. அது அந்த இளம் ராணுவ வீரனை அச்சம் கொள்ளச் செய்து பதைபதைப்பு அடையும்படி செய்தது. எனினும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவன் தனிப்பட்ட சந்தோஷம் அடைந்தான்.


கீழ்த் தாடையில் இவ்வாறு தாக்குவது, தன்னுடைய பலம் கொண்ட இளமையான கால்களால் தாக்க அவருடைய நெஞ்சு அடங்கிப் போனது, தலை கீழாகக் கிடக்கும் அந்த உடலின் விளையாட்டுகளை தன்னுடைய கைகளைக் கொண்டு தெரிந்துகொள்வது- இவை அனைத்தும் அவனை ஆனந்தம் கொள்ளச் செய்தன.

ஆனால், அது அதே மாதிரி தொடர்ந்தது. அதிகாரியின் நாசியை அவனால் பார்க்க முடிந்தாலும், கண்களை தன்னுடைய விழிகளால் பார்க்க அவனால் முடியவில்லை. முழு உதடுகளையும் வெளியே தள்ளிக்கொண்டு எந்த அளவுக்கு வினோதமாக இருந்தது அந்த வாய்! அதேபோலதான் அதற்கு மேலே விலகி நின்று கொண்டிருந்த மீசையும்! திடீரென்று ஒரு அதிர்ச்சியுடன் அவன் பார்த்தபோது, நாசித் துவாரங்கள் படிப்படியாக ரத்த அபிஷேகத்துடன் இருப்பதை அவன் பார்த்தான். அந்த ரத்த ஆறு சற்று தயங்கி நின்று விட்டு முகத்திலும் கண்களிலும் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

அது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கவும் திகைக்க வைக்கவும் செய்தது. அவன் மெதுவாக எழுந்தான். நீண்டு நிமிர்ந்து நெளிந்த அந்த உடல் அசைவே இல்லாமல் ஆனது. அவன் எழுந்து நின்று மிகவும் அமைதியாக அதையே பார்த்தான். தன்னைத் தட்டவும் உதைக்கவும் செய்ததைவிட, இப்போது அது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. அந்த கண்களைப் பார்ப்பதற்கு அவனுக்கே பயமாக இருந்தது. அவை மிகவும் பயங்கரமாக இருந்தன. கண்ணின் வெளுத்த பகுதி மட்டுமே வெளியே தெரிந்தது. அதில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இந்த காட்சியைப் பார்த்த ஆர்டர்லியின் முகம் பயத்தில் என்னவோபோல ஆனது. சரி... அது அப்படி ஆகிவிட்டது! இதயத்திற்குள் அவனுக்கு முழுமையான சந்தோஷம் உண்டானது. அவன் அந்த அளவுக்கு கேப்டனின் முகத்தின்மீது வெறுப்பு கொண்டிருந்தான். இப்போது அது முடிவுக்கு வந்திருக்கிறது. ஆர்டர்லிக்கு உள் மனதில் மிகப் பெரிய நிம்மதி உண்டானது. அது அப்படி முடிய வேண்டிய ஒன்றுதான். ஆனால், இந்த நீளமான ராணுவ அதிகாரியின் உடல் மரத்தடியின்மீது விழுந்து கிடப்பதையும் நன்கு இருந்த விரல்கள் சுருண்டு கிடப்பதையும் அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த உடலை எங்காவது மறைத்து வைக்க வேண்டும் என்று அவன் விரும்பினான்.

திடீரென்று அவன் தட்டுத் தடுமாறி எழுந்து அந்த உடலை அழகான பலகையின் பளபளப்பான பகுதியைப் பார்த்து படுக்கை வசத்தில் கிடத்தினான். ரத்தம் நிறைந்த முகம் பார்ப்பதற்கு பயத்தை வரவழைத்தது. அவன் அதை தலைக்கவசத்தைக் கொண்டு மறைத்தான். தொடர்ந்து அவன் ஒவ்வொரு உறுப்புகளையும் சரியாக இருக்கும்படி செய்தான். பிறகு சீருடையிலிருந்து ஒட்டிக் கொண்டிருந்த இலைகளை எடுத்தான். அந்த வகையில் அது நிழலுக்குக் கீழே எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தது. மரப்பலகைக்கு நடுவில் இருந்த ஒரு சிறிய துவாரத்தின் வழியாக சூரிய ஒளியின் ஒரு கீற்று அந்த மார்பின்மீது வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆர்டர்லி சில நிமிடங்களுக்கு அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான். தன்னுடைய வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவன் தெரிந்துகொண்டான்.

தொடர்ந்து அந்த நேரத்தில் லெஃப்டினன்ட் மிகப்பெரிய சத்தத்தில், காட்டுக்கு வெளியில் இருந்த தன்னுடைய ஆட்களிடம் நதிக்கு கீழே இருக்கும் பாலத்தை எதிரிகள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், இந்த விதத்தில் அவர்கள் ஒரு ஆக்கிரமிப்பிற்குத் தயாராக வேண்டும் என்றும் விளக்கிக் கூறுவது காதில் விழுந்தது. விஷயங்களைச் சரியானபடி செயல்படுத்துவதில் அவர் அந்த அளவுக்கு திறமைசாலியாக இல்லை. இதை எப்போதும் கேட்டுக்கேட்டு பழகிப் போன ஆர்டர்லிக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெறுப்பு தோன்றியது. எல்லா விஷயங்களையும் லெஃப்டினன்ட் முதலிலிருந்து திரும்பவும் கூறத் தொடங்கியபோது, அவன் தன்னுடைய காதுகளை முழுமையாக மூடிக்கொண்டான்.

தான் உடனடியாக அந்த இடத்தைவிட்டுக் கிளம்பியே ஆக வேண்டும் என்ற விஷயம் அவனுக்கு நன்கு தெரியும். அவன் எழுந்து நின்றான். சூரிய வெளிச்சத்தில் இலைகள் பிரகாசித்துக் கொண்டிருந்தது அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தரையில் கிடந்த மரப்பட்டைகள் வெள்ளை நிறத்தில் ஜொலித்தன. அவனைப் பொறுத்த வரையில் உலகத்திற்கு ஒரு மாறுதல் உண்டாகி இருக்கிறது. ஆனால், எஞ்சி இருப்பவைக்கு அது எதுவும் உண்டாகவில்லை. எல்லாம் அதே மாதிரிதான் இருந்தன.

அவன் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை; அவ்வளவுதான். அவனைப் பொறுத்த வரையில் திரும்பிப் போக முடியாது. பீர் பாத்திரத்தையும் புட்டியையும் திரும்ப எடுத்துக்கொண்டு செல்வது என்பது அவனுடைய பொறுப்பாக இருந்தது. அவன் அதைச் செய்ய முடியாது. அப்போதும் லெஃப்டினன்ட் கம்பீரமான குரலில் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார். அவன் போயே ஆக வேண்டும்! இல்லாவிட்டால் அவர்கள் அவனை ஒரு வழி பண்ணி விடுவார்கள். இப்போது யாருடனும் பழகுவது என்பது அவனைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

அவன் விரல்களை கண்களுக்கு மேலே ஓடவிட்டு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிவதற்கு முயற்சித்தான். வழியில் குதிரை நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் அதை நெருங்கி, அதன்மீது ஏறினான். குதிரையின்மீது ஏறி உட்காருவதற்கு அவன் மிகவும் சிரமப்பட்டான். மரக் கூட்டங்களுக்கு மத்தியில் பாய்ந்து சென்றபோது, அவனுக்கு வேதனை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருப்பது தெரிந்தது. அவன் எதையும் கவனிக்கவில்லை. ஆனால், மற்றவர்களிடமிருந்து தனியாகப் பிரிந்து சென்று விடுவோம் என்ற சிந்தனைதான் அவனுக்கு கவலையை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்தப் பாதையின் வழியாக வெளியிலிருக்கும் பகுதிக்குப் போய்விடலாம். காட்டின் எல்லையில் அவன் குதிரையை நிறுத்திவிட்டு, சுற்றி இருந்த இடங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அந்த விசாலமான அடி வாரத்தில் சூரிய வெளிச்சம் நன்கு விழுந்து கொண்டிருந்த இடத்தில் ராணுவ வீரர்கள் சிறிய ஒரு அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஒரு மனிதன் சிறுசிறு உயிரினங்களை காளைகளின் உடல்களிலிருந்து அடித்து விரட்டிக் கொண்டிருந்தான். சூரிய ஒளியில் கிராமமும் வெள்ளை நிற கோபுரத்தைக் கொண்ட தேவாலயமும் சிறிதாகத் தெரிந்தன. இதற்கு மேல் அவன் அந்த கிராமத்தின் யாருமல்ல. ஒரு வெளி மனிதனைப் போல அவன் எல்லைக்கு அப்பால் இருட்டில் உட்கார்ந்திருந்தான். அன்றாட வாழ்க்கையை விட்டு அவன் தெரியாத ஒரு இடத்திற்குப் போய்விட்டான். இனி அவன் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நிலை அவனுக்கு இல்லை.

சூரிய வெளிச்சம் விழுந்து கொண்டிருந்த அடிவாரத்திலிருந்து திரும்பிய அவன் காட்டுக்குள் குதிரையைச் செலுத்தினான்.


மரத் தடிகள் முதிர்ச்சி அடைந்து சலனங்களே இல்லாத மனிதர்களைப் போல நின்று கொண்டிருந்தன என்பதல்லாமல், குதிரையில் சவாரி செய்து வந்து கொண்டிருந்தவனான அவனை கவனிக்கவே இல்லை. சூரிய வெளிச்சம், நிழல் ஆகியவற்றின் பகுதியாக ஒரு புறா நிறம் மங்கலான சோலையின் வழியாக வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மரங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த பச்சை நிற பொந்துகள் இருந்தன. பிறகு... இருண்ட... குளிர்ச்சியான பைன் மரங்களும்! வேதனையின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவனுடைய தலைக்குள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ரத்த ஓட்டம் நடைபெற்றதால், அவன் மீண்டும் பதைபதைப்பிற்கு ஆளானான். தன்னுடைய வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் அவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதில்லை. அதற்குக் காரணமாக அளவற்ற சோர்வு நிலையும் இழப்பு உணர்வும் அவனைச் சுற்றி வளைத்தன.

தன்னுடைய வேதனையையும், பலமற்ற நிலையையும் பார்த்து ஆச்சரியப்பட்ட அவன் குதிரையிலிருந்து இறங்கும்போது, கீழே விழுந்துவிட்டான். நிலை குலைந்த குதிரை நின்றிருந்த இடத்தை விட்டு நகர்ந்தது. அவன் கடிவாளத்தை அசைத்து அதை அங்கிருந்து ஓடச் செய்தான். உலகப் பொருட்களுடன் கொண்டிருந்த அவனுடைய இறுதி உறவாக அது இருந்தது.

எந்தவொரு சிரமமும் இல்லாமல் வெறுமனே மல்லாக்கப் படுத்திருக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பமாக இருந்தது. மரங்களுக்கு மத்தியில் தட்டுத் தடுமாறி, அத்தி மரங்களும் பைன் மரங்களும் ஏராளமாக வளர்ந்து நின்றிருந்த- அசைவே இல்லாமலிருந்த ஒரு சரிவை அவன் அடைந்தான். உடனடியாக அவன் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கே தெரியாமல் சுயஉணர்வு கொண்ட மனம் ஓடி வந்தது. நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒரு நாடித் துடிப்பு அவனிடம் அலையடித்துக் கொண்டிருந்தது. பூமி முழுவதும் அது சத்தம் போட்டு ஒலிப்பதைப்போல இருந்தது. வெப்பக் காற்றில் அவன் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தான். எனினும், அந்த அளவுக்கு வேகமாகவும் பலமாகவும் இனம்புரியாத ஒரு ஜுர பாதிப்பிற்குள் அவன் மறைந்து கொண்டான்.

3

வன் ஒரு அதிர்ச்சியுடன் கண் விழித்தான்.

அவனுடைய வாய் வறண்டு போய் விட்டிருந்தது. இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருந்தது. அவனுக்கு எழுந்து நிற்பதற்கான சக்தி கிடைக்கவில்லை. அவனுடைய இதயம் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. தான் எங்கே இருக்கிறோம்? பார்க்கிலா? இல்லா விட்டால் வீட்டிலா? சுற்றிலும் இருக்கக் கூடிய மரங்கள், பச்சை இலைகள், சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தரையின் அசைவற்ற சூரியனின் ஒளிக்கீற்றுகள்- இவை எல்லாவற்றையும் பார்ப்பதற்கு அவன் ஒரு முயற்சி செய்தான். தான் பார்த்த அனைத்தும் உண்மைதான் என்று அவனுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்று உள்ளுக்குள் இருந்து மோதிக் கொண்டிருக்கிறது; தட்டுகிறது!

சுயஉணர்வு கொண்ட மனதிற்குள் செல்வதற்காக அவன் கடுமையாக முயற்சி செய்தான். பிறகு, ஓய்வெடுத்தான். மீண்டும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டான். நேரம் செல்லச் செல்ல சுற்றுப்புறத்திற்கும் தனக்குமிடையே இருக்கக் கூடிய உறவை அவனால் தெரிந்துகொள்ள முடிந்தது. அவன் அதை புரிந்து கொண்டான். மிகப் பெரிய பயம் நிறைந்த அலை அவனுடைய இதயத்திற்குள் பாய்ந்து சென்றது. யாரோ அடிக்கிறார்கள். தலைக்கு மேலே மிகப் பெரியதாகவும், இருண்டதாகவும் இருக்கக்கூடிய ஒரு தேவதாரு மரத்தின் கிளையை அவனால் பார்க்க முடிந்தது. திடீரென்று இருள் வந்து நிறைந்தது. எனினும், தான் கண்களை மூடிக் கொண்டோம் என்பதை அவன் நம்பவில்லை. அது உண்மைதான். அவன் அப்படிச் செய்யவில்லை. இருட்டிலிருந்து மெதுவாகப் பார்வை கிடைக்க ஆரம்பித்தது. ஏதோவொன்று மனதிற்குள் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று அவன் தான் வெறுத்துக் கொண்டிருந்த தன்னுடைய கேப்டனின் ரத்த அபிஷேகம் செய்யப்பட்ட முகத்தைப் பார்த்தான். பயத்துடன் அவன் தானே நிமிர்ந்து நின்றான். பயம் அவனுடைய நரம்புகளில் படர்ந்து கொண்டிருந்தது. கேப்டன் இறந்துவிட்டார் என்ற விஷயம் மனதிற்குள் அவனுக்கு நன்கு தெரிந்தது. ஆனால், பயம் அவனுடைய மனதை அடக்கியது. பயத்தின் காரணமாக இறந்த நாயைப்போல அவன் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்துக் கிடந்தான். அவன் சுய உணர்வற்ற நிலைக்குள் சென்றான்.

அவன் மீண்டும் கண்களைத் திறந்து பார்த்தபோது மரத்தடியின் வழியாக ஏதோவென்று ஊர்ந்து ஏறுவதைப்போல அவனுக்குத் தோன்றியது. அது ஒரு சிறிய பறவை. தலைக்கு மேலே இருந்து கொண்டு அந்தப் பறவை சீட்டியடித்துக் கொண்டிருந்தது- "டாப் டாப் டாப்". அந்தச் சிறிய மரம் கொத்திப் பறவை அதன் அலகைப் பயன்படுத்தி ஒரு சிறிய சுத்தியலால் கொத்துவதைப்போல மரத்தில் கொத்திக் கொண்டிருந்தது. அவன் அதை ஆர்வத்துடன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். நகர்வதைப்போல அது தன்னுடைய இடத்தை மாற்றியது. பிறகு ஒரு எலியைப் போல நிர்வாணமான கிளைகளுக்கு மத்தியில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. அவன் தலையை உயர்த்தினான். தலை மிகவும் கனமாக இருப்பதைப்போல அவன் உணர்ந்தான். திடீரென்று பறவை மேலே ஏறிச் சென்றது அவனுக்குள் ஒரு கோபம் நிறைந்த மின்னல் கீற்றைப் பரவச் செய்தது. தன்னுடைய வெள்ளை நிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த கால்களை ஒரு நிமிடம் பளிச்சிட வைத்துக் கொண்டும், தன் சிறிய தலையை வேகமாக குலுக்கிக் கொண்டும் அந்தச் சிறிய பறவை, எந்தவிதமான அசைவுமில்லாமலிருந்த சூரிய வெளிச்சத்திற்குக் குறுக்காக இருந்த நிழலை நோக்கிப் பாய்ந்து சென்று ஓடி மறைந்தது. சிறகுகளின் ஓரத்தில் வெள்ளை நிறத்துடனும் சுறுசுறுப்புடனும் சுத்தமான சரீரத்துடனும் அது எந்த அளவுக்கு அழகாக இருக்கிறது? அந்த மாதிரியான மரம் கொத்திகள் நிறைய இருந்தன. அவை மிகவும் அழகு படைத்தவையாக இருந்தன. ஆனால், அவை வேகமாக ஏறிச் செல்லக் கூடியவையாகவும் பீச் மரங்களுக்கிடையே இங்குமங்குமாக ஓடித் திரியக்கூடிய பைத்தியம் பிடித்த எலிகளைப் போலவும் இருந்தன.

மீண்டும் அவன் களைத்துப்போய் படுத்துக் கிடந்தான். அவனுடைய சுய உணர்வு மண்டலம் செயல்படாமல் நின்று விட்டது. சிறிய, நகர்ந்து கொண்டிருந்த பறவைகள் அவனுடைய மனதில் பயத்தை உண்டாக்கின. தன்னுடைய உடலில் இருக்கும் முழு ரத்தமும் தலைக்குள் நுழைவதைப்போல அவனுக்குத் தோன்றியது. ஆனால், அவனால் சிறிதுகூட அசைய முடியவில்லை.

களைப்புடன் இன்னொரு வேதனையும் சேர்ந்து ஆக்கிரமிக்க, அவன் சிறிது நேரத்தில் எழுந்தான். தலையில் வேதனையும், நோயால் உண்டான பயமும், அசைவு இல்லாமல்போன நிலையும் அவனுக்கு உண்டாயின. தன்னுடைய வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் அவன் நோய்வாய்ப்பட்டவனாக இருந்ததில்லை. தான் எங்கு இருக்கிறோம் என்ற உணர்வும் அவனை விட்டுப் போய்விட்டது.


ஒருவேளை, தனக்கு சூரியனால் பாதிப்பு உண்டாகிவிட்டிருக்குமோ என்று அவன் நினைத்தான். இல்லாவிட்டால் பிறகு எதற்கு கேப்டனை தான் நிரந்தரமாக நிசப்தத்தில் கொண்டு போய் மூழ்கடிக்க வேண்டும்? அது சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது- இல்லை- சிறிது நேரத்திற்கு முன்பு நடந்தது அது. அவனுடைய முகத்தில் ரத்தம் நிறைந்து நின்றது. அந்தக் கண்கள் மேலே திரும்பின. எப்படியோ அவை அனைத்தும் சரியாகி விட்டிருக்கின்றன! அதுதான் அவனுடைய பதிலாக இருந்தது. ஆனால், இப்போது அவன் அதையெல்லாம் தாண்டி விட்டிருக்கிறான். இங்கு அவன் இதற்கு முன்பு இருந்ததில்லை. அது வாழ்வாக இருந்ததா? இல்லாவிட்டால், இல்லையா? அவன் தனியாக இருந்தான். மற்றவர்கள் எல்லாரும் பிரகாசமான விசாலமான ஒரு பகுதியில் இருந்தார்கள். அவன் மட்டும் வெளியே! நகரம், கிராமம் அனைத்தும் நல்ல பிரகாசத்துடன் இருந்தன! இங்கோ, எல்லாவற்றுக்கும், ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு இருத்தல் தன்மை இருக்கிறது. ஆனால், ஏதாவதொரு நாள் அந்த மற்றவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அவர்கள் அவனைத்தாண்டிச் சென்றுவிட்டார்கள். முன்பு தந்தையும் தாயும் காதலியும் இருந்தார்கள். அதனால் என்ன? இது ஒரு திறந்த பூமி.

அவன் எழுந்தான். ஏதோ ஒரு ஆரவாரம். அது ஒரு அழகான சாம்பல் நிறத்தைக் கொண்ட அணில். சிவப்பு நிற வாலைச் சுழற்றிக் கொண்டு அது ஓடிக்கொண்டிருந்தது.

அது ஓடிக்கொண்டும், உட்கார்ந்து கொண்டு வாலைச் சுழற்றிக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டும் இருந்தது. தனக்குள் சந்தோஷமடைந்து கொண்டு திரும்பவும் வெளியேறிச் சென்றது. மிகவும் வேகமாக அது இன்னொரு அணிலின் உடலின்மீது பாய்ந்து ஏறியது. அவை ஒன்றோடொன்று கட்டிப்பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டே பெரிய அளவில் ஆசையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ராணுவ வீரனுக்கு அவற்றுடன் பேச வேண்டும்போல இருந்தது. ஆனால், அவனுடைய தொண்டைக்குள்ளிருந்து முரட்டுத்தனமான ஒரு குரல் மட்டுமே வெளியே வந்து கொண்டிருந்தது. அணில்கள் ஓடிப்போய்விட்டன. அவை மரங்களின் மீது தாவி ஏறின. அவற்றில் ஒன்று பாதி தூரம் ஏறிய பிறகு, தன்னை ஒளிந்து கொண்டு பார்ப்பதை அவன் பார்த்தான். பயத்தின் அடையாளங்கள் தனக்குள் பரவி விட்டிருந்தாலும், தன்னுடைய சுய உணர்வுநிலை நிலைபெற்று இருக்கும் வரையில், அது அவனுக்குள் சந்தோஷத்தை உண்டாக்கிக் கொண்டு தான் இருந்தது. மரத்தில் பாதி தூரத்தில் இருந்துகொண்டு அது அப்போதும் அவனையே தன்னுடைய கூர்மையான முகத்தைக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நகங்கள் இருந்த கைகளை மரத்தின் தோலில் இறுகப் பற்றிக் கொண்டும், வெள்ளை நிற மார்புப் பகுதியை அதோடு சேர்த்து வைத்துக் கொண்டும் அது இருந்தது. பதைபதைப்பு அடைந்து அவன் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தான்.

விலகிப் போய்க் கொண்டிருந்த கால்களை ஒழுங்கு பண்ணிக் கொண்டு அவன் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தான். எதையோ (சிறிது நீருக்காக) தேடிக்கொண்டு அவன் நடந்து கொண்டிருந்தான். நீர் இல்லாததால் தன்னுடைய மூளை உஷ்ணமாகிவிட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவன் முன்னோக்கி நடந்தான். பிறகு எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. நடப்பதற்கு இடையிலேயே அவன் சுய உணர்வை இழந்து விட்டான். எனினும், வாயைத் திறந்து வைத்துக் கொண்டு மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டே அவன் முன்னோக்கி நடந்து செல்ல முயற்சித்தான்.

மங்கலான ஆச்சரியத்துடன் அவன் கண்களைத் திறந்து உலகத்தை மீண்டும் பார்த்தான். அவையெல்லாம் என்ன என்பதைப் பற்றி அவன் சிறிதுகூட ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சிக்கவில்லை. அங்கேயே சுற்றிலும் அடர்த்தியாக இருந்த பொன்னொளியையும் உயரமாக சாம்பல் நிறத்திலும் மஞ்சள் நிறம் கலந்ததாகவும் இருந்த மரங்களையும் பார்த்தான். தூரத்தில் இருள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வந்து கொண்டிருந்தது. தான் எங்கேயோ வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற ஒரு சுய உணர்வு அவனுக்குள் உண்டானது. அவன் யதார்த்தத்திற்கு மத்தியில், சொல்லப்போனால்- "தமஸ்" நிலையின் அடித்தட்டில் இருந்தான். அதே நேரத்தில், அவனுடைய மூளைக்குள் அந்த உள் தாகம் இருந்து கொண்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மனதில் ஒரு மென்மைத்தனம் உண்டானது. ஏதோ ஒரு புதுமையை தான் அனுபவித்ததுதான் அதற்குக் காரணமாக இருக்குமென்று அவன் நினைத்தான். வெளியே இடி முழக்கம் உரத்துக் கேட்டது. தான் சராசரி வேகத்தில் நடக்கிறோம் என்பதாகவும் வெகுசீக்கிரமே நல்லது நடக்கும் என்றும் அவன் நினைத்தான். ஒருவேளை- மூளையின் வெப்பத்தைக் குறைப்பதற்கு நீர் கிடைக்கலாம்.

திடீரென்று அவன் பயம் காரணமாக அசைவே இல்லாமல் ஆனான். தனக்குக் கிடைக்கப் போகிற நிம்மதிக்கும் தனக்கும் நடுவில் பொன் நிறத்தைக் கொண்ட மின்னல் கீற்று (சில கறுத்த மரத்தடிகள் மட்டும்) தோன்றுவதை அவன் பார்த்தான். பொன் நிறத்தைக் கொண்ட பச்சை சில்க் பகுதிகளை விரித்துக் கொண்டு பாதி பருவத்தில் இருந்த கோதுமைக் கதிர்கள் பிரகாசித்தவாறு நின்று கொண்டிருந்தன. தலையை மூடியிருக்கும் ஆடைக்கு பதிலாக கறுப்பு நிறத்தைக் கொண்ட ஒரு ஆடையை தலை வழியாக மூடிக்கொண்டு, பெரிய பாவாடையை அணிந்த ஒரு பெண் நிழலைப்போல ஒளிர்ந்து கொண்டிருக்கும் பச்சை நிற தானியக் கதிர்களுக்கு நடுவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முழுமையான ஒளிக்குள் நுழைவதைப் போல ஒரு கட்டில் அங்கு இருந்தது. அதன் ஒரு பக்கம் நன்கு வெளிறிப் போய் நீல நிறத்திலும், இன்னொரு பக்கம் கறுப்பு நிறத்திலும் இருந்தது. மிகவும் அருகில் பொன்னொளியில் குளித்து நின்று கொண்டிருக்கும் தேவாலயம் இருந்தது. அந்தப் பெண் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டிருந்தாள். அவளுடன் உரையாடக் கூடிய எந்தவொரு மொழியும் அவனுக்குத் தெரியாமல் இருந்தது. வெளியே நன்கு தெரியக் கூடிய ஒரு உண்மையாக அது இருந்தது. அவனுக்குத் தெரியாமல் அவள் அவனைப் பார்ப்பாள். தொடர்ந்து அவள் உண்டாக்கும் புரிந்து கொள்ள முடியாத குரல்கள் அவனை என்னவோ செய்யும். அவள் மறு பகுதிக்கு குறுக்கே நடந்து செல்ல பார்த்தாள். அவன் ஒரு மரத்திற்கு எதிரே நின்றிருந்தான்.

தொடர்ந்து இறுதியாக கீழே நீண்டு கிடந்த பழ மரங்களின் தோட்டத்தை நோக்கி கண்களை ஓட்டியபோது, அதன் பரந்த வெளியில் இருள் பரவுவதையும், தூரத்தில் இருந்த அற்புதமான வெளிச்சத்தில்- அந்த அளவுக்கு தூரத்தில் இல்லாத ஒளிர்ந்து கொண்டிருக்கும் மலைவரிசைகளையும் அவன் பார்த்தான்.


மிகவும் அருகிலிருந்த- அழகாகவும் சாம்பல் நிறத்திலும் தோன்றிய மலைப்பகுதிக்குப் பின்னால் பொன்னொளியில் குளித்து வெளிறிப் போன மலைத்தொடர்கள் பனியால் மூடப்பட்டு மிகவும் சுத்தமான மென்மையான பொன்னைப்போல காட்சி அளித்தன. முற்றிலும் அசைவே இல்லாமல் வானத்தின் தாதுவில் கழுவப்பட்டு சுத்தமாகி இருப்பதைப்போல அவை இருந்தன. தங்களுடைய பேரமைதியில் அவை பிரகாசத்தைப் பரவச் செய்து கொண்டிருந்தன. சந்தோஷத்துடன் அவன் அங்கே நின்று கொண்டு அதைப் பார்த்தான். பொன் நிறம் கலந்த பிரகாசமான பனியின் ஒளியைப்போல, தனக்குள் இருக்கும் தாகம் தன்னைக் கடுமையாக பாதித்துவிட்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு அவன் அவை ஒவ்வொன்றையும் கண்களை விரித்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். அதைத் தொடர்ந்து அனைத்தும் வெறுமைக்குள் போய் மறைந்தன.

இரவில் இடி, மின்னல் ஆகியவற்றின் பிரகாசத்தின் மூலம், ஆகாயத்திற்கு நிரந்தரமாக ஒரு அருமையான நிறம் கிடைத்தது.

அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்திருக்க வேண்டும். பல நிமிடங்கள் இந்த உலகம் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தது. வயலில் பச்சை நிறத்தில் ஒரு பிரகாசமும், இருட்டில் நின்று கொண்டிருந்த மரங்களும், வெளுத்த ஆகாயத்தில் கறுத்த மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்தும்... தொடர்ந்து ஒரு திரையைப்போல இருள் இரவை முழுவதுமாக வளைத்தது. இருள் சூழ்ந்த ஒரு உலகம்- அந்த இருட்டிலிருந்து வெளியே பாய்ந்து வருவதற்கு அதற்கு முடியவில்லை. கறுத்த மேகக் கூட்டங்கள் பூமியை நோக்கி இறங்கி வருவதற்கு தயார் நிலையில், தலைக்கு மேலே திரண்டு நின்றிருந்தன. பரிசுத்தமான இருட்டுக்குள் நிமிட நேரங்களுக்கு எடுத்து எறியப்பட்ட ஒரு பிணத்தின் நிழலாக இந்த உலகம் மாறியது. பிறகு அது பூரணத்துவத்துடன் மிகப் பெரியதாகத் திரும்பி வந்தது.

சாதாரண ஜுரமும், உஷ்ணமும் அவனுடைய உள்ளுக்குள் ஆக்கிரமித்து விட்டிருந்தது. (இரவைப்போல மூளை திறந்து மூடுகிறது). சில நேரங்களில் பயத்தால் உண்டான நடுக்கங்களுடன் ஒரு மரத்தைச் சுற்றிச் சுற்றி, தன்னுடைய பெரிய கண்களால் அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். தொடர்ந்து அணி வகுப்பு செய்ததையும், சூரியதாபம் ரத்தத்தை பாதித்ததால் உண்டான குழப்பங்களையும் தவிர, கேப்டனின்மீது கொண்ட வெறுப்பையும் அதனால் உண்டான ஆவேசத்தையும் அவன் நினைத்துப் பார்த்தான். அதே நேரத்தில், வேதனையிலிருந்து பிறந்த, வேதனைக்குள் கரைந்த நிம்மதியை அவன் மீண்டும் பெற்றான்.

பொழுது புலர்ந்தவுடன், அவன் தீர்மானத்துடன் எழுந்தான். அப்போது மிகுந்த தாகத்தின் விளைவு அவனுடைய மூளையை பாதித்தது. சூரியன் அவனுடைய முகத்தில் அடிக்க, பனித் துளிகளில் ஈரமான ஆடைகளிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. பேய் பிடித்தவனைப்போல அவன் எழுந்தான். அங்கு, அவனுக்கு முன்னால் நிரந்தரமான, குளிர்ந்த, கம்பீரமான மலைத் தொடர்கள், அதிகாலை ஆகாயத்தின் ஒளியுடன் சேர்ந்து காட்சியளித்தன... அவனுக்கு அவை தேவைப்பட்டன. அவை அவனுக்கு மட்டும் வேண்டும். தன்னை விட்டுப் பிரிந்து அவற்றுடன் போய் இரண்டறக் கலக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். வெண்மையாகவும், மென்மையாகவும் இருந்த பனித் துளிகளுடன் இருந்த அவை எந்தவித சலனமும் இல்லாமலும் எளிதானதாகவும் இருந்தன. உரத்த முனகல்களுடன், அவன் எந்தவிதமான சலனமும் இல்லாமல் நின்றிருந்தான். அந்தக் கைகள் நெளிந்து கொண்டும், ஒன்றையொன்று பிடித்துக் கொண்டும் இருந்தன. அவன் புற்பரப்பில் ஜுரம் பாதித்த மனிதனைப்போல நெளிந்து கொண்டு படுத்திருந்தான்.

குழப்பங்கள் நிறைந்த ஒருவகையான கனவில் மூழ்கிய அவன் அசையாமல் படுத்திருந்தான். தாகம் தன்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டதாக அவன் உணர்ந்தான். தொடர்ந்து தன்னுடைய மனதின் உண்மைத் தன்மையின்மீது அவனுக்கு வேதனை உண்டானது. பிறகு இன்னொரு விஷயம். அதாவது- அவனுடைய உடலின் தவிப்பு! பல தனிப்பட்ட காரணங்களால் அவன் பிரிக்கப்பட்டு கிடக்கிறான். இனி அவை அனைத்தும் எல்லையற்ற வெறுமையின் ஆழத்திற்குள் போய் மறைந்து விடும். அவற்றுக்கிடையே ஆச்சரியப்படக் கூடிய ஏதோ வேதனை நிறைந்த உறவு இருந்தது. ஆனால், அவை ஒன்றை விட்டு ஒன்று விலகி விலகிப் போய்க் கொண்டிருக்கின்றன.

மீண்டும் அவனுடைய சுய உணர்வு மண்டலம் சொன்னதைத் திரும்பச் சொன்னது. அவன் இடுப்பில் கையை வைத்து எழுந்து நின்று பிரகாசித்துக் கொண்டிருந்த மலைத் தொடர்களையே வெறித்துப் பார்த்தான். பூமிக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஆச்சரியப்படும் வகையில் அவை வரிசை வரிசையாக சலனமே இல்லாமல் நின்றிருந்தன. கண்களில் கறுப்பு தோன்றும்வரை அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான். அழகும் பரிசுத்தமும் நிறைந்த கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்த அந்த மலைகளின் காட்சி தனக்கு நிரந்தரமாக இல்லாமல் போய்விட்டதாக அவன் உணர்ந்தான்.

4

மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு, ராணுவ வீரர்கள் அவனைக் கண்டு பிடித்தார்கள். அவன் தன்னுடைய தலையைக் கையின்மீது வைத்து, கறுத்த தலைமுடியை சூரியனுக்குக்கீழே வைத்துப் படுத்திருந்தான்.

ஆனால், அவனுக்கு அப்போதும் உயிர் இருந்தது.

திறந்த வாயைப் பார்த்த இளம் ராணுவ வீரர்கள் பயத்துடன் அவனை கீழே படுக்க வைத்தார்கள்.

பார்வையை மீண்டும் பெறாமலே, இரவில் அவன் மருத்துவமனையில் மரணமடைந்தான்.

டாக்டர்கள் இறந்த உடலின் கால்களிலும் உடலின் பின் பகுதியிலும் காயங்கள் இருப்பதைப் பார்த்தார்கள். அவர்கள் அமைதி காத்தார்கள்.

பிணவறையில் இரண்டு இறந்த உடல்களும் ஒன்றாகக் கிடந்தன. ஒன்று வெளுத்ததாகவும் மெலிந்ததாகவும் இருந்தாலும், நன்றாக ஓய்வு எடுப்பதைப்போல தோன்றியது. இளமையும் பலமும் கொண்ட இன்னொரு இறந்த உடல் படுத்திருப்பதைப் பார்த்தால், அது எந்த நேரத்திலும் ஆழமான உறக்கத்திலிருந்து எழுந்து வந்து, மீண்டும் வாழ்வுக்குள் நுழைந்து விடும் என்பதைப்போல தோன்றியது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.