
சுராவின் முன்னுரை
பிரேம்சந்த் (Prem Chand) இந்தியில் எழுதிய ‘மங்கள்சூத்ரா’ (Mangalsutra) என்ற புதினத்தை ‘தாலி’ (Thaali) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். இதுதான் பிரேம்சந்த்தின் இறுதி நாவல். 1880-ஆம் ஆண்டில் காசிக்கு அருகிலுள்ள லமாஹி என்ற கிராமத்தில் பிறந்த பிரேம்சந்த்தின் இயற்பெயர் தனபத் ராய்.
எட்டு வயதில் பெற்ற தாயை இழந்த பிரேம்சந்த், தன்னுடைய 17-ஆவது வயதில் தன் தந்தையையும் இழந்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டுப் படித்த அவர் இருபது வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். மகாத்மா காந்தி சொன்னார் என்பதற்காக அரசாங்க வேலையைத் துறந்த பிரேம்சந்த், பதிப்பாளராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் பின்னர் மாறினார். அவற்றில் பணத்தை இழந்து, கடன்காரராக ஆனார். படவுலகிற்குள் நுழைந்து கசப்பான அனுபவங்களையும் அவர் பெற்றிருக்கிறார். எனினும், பிரேம்சந்த் எழுதிய 300 சிறுகதைகளும், 15 புதினங்களும், மூன்று நாடகங்களும் அவருடைய பெருமையைக் காலமெல்லாம் கூறிக் கொண்டிருக்கும். இவரது இரண்டு நாவல்கள் சத்யஜித்ரே (Satyajith Ray) இயக்கத்தில் திரைப்படங்களாயின. (இவர் கதையைக் கொண்டு 1918-ல் வெளியான ‘சேவாசதன்’ படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி நாயகியாக நடித்தார்.) ‘உங்கள் வாழ்க்கையை ஏன் நீங்கள் எழுதக் கூடாது?’ என்று கேட்டதற்கு, ‘நான் கோடிக்கணக்கான சாதாரண ஆட்களில் ஒருவன். என்னைப் பற்றி எழுத என்ன இருக்கிறது?’ என்று கேட்ட எளிமையாளர். இந்தி, உருது ஆகிய இரு மொழிகளிலும் எழுதியவர். அதீத கற்பனை, புராணக் கதை என இயங்கிக் கொண்டிருந்த இந்தி எழுத்துலகில் யதார்த்த எழுத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் பிரேம்சந்த்.
பிரேம்சந்த்தின் இலக்கிய சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு அவரின் தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு 1936-ஆம் ஆண்டு மரணத்தைத் தழுவிய பிரேம்சந்த் எழுதிய ஒரு புதினத்தை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
மூத்த மகன் சந்தகுமாரனை வக்கீலாக ஆக்கி, இரண்டாவது மகன் சாதுகுமாரனை பி.ஏ. வரை படிக்க வைத்து, இளைய மகள் பங்கஜாவின் திருமணத்திற்காக மனைவியிடம் ஐயாயிரம் ரூபாய்களை ரொக்கமாகக் கொடுத்தபோது, தான் பூமியில் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விடுதலை அடைந்து விட்டதாகவும், எஞ்சிய வாழ்க்கையை கடவுளைப் பற்றிய நினைவுகளில் செலவழிக்க வேண்டியதுதான் என்றும் தேவகுமாரன் உணர்ந்தார்.
தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் இலக்கிய சேவைக்காக செலவழித்திருந்தாலும், சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டார் என்ற கெட்ட பெயருக்கும் ஆளாகிய அவர் பரந்த மனம் கொண்டவராக இருந்தார். அவரிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு ஏமாற்றம் அடைய வேண்டிய சூழ்நிலையே உண்டானதில்லை. சந்தோஷத்துடன் வாழ்வது என்பது இளமையின் வெறியாக இருந்தது. வாழ்க்கை முழுவதும் அதற்குக் குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ளவும் செய்தார். அதே நேரத்தில், இலக்கிய சேவை ஒன்றைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. இனி சம்பாத்தியம்? புகழ் என்ற ஒன்று கிடைத்துவிட்ட பிறகு, மனத் திருப்திக்கு வேறு என்ன வேண்டும்? சம்பாத்தியம் என்ற விஷயத்தில் அவருக்கு ஈடுபாடு ஒன்றும் கிடையாது.
ஒருவேளை, சூழ்நிலைகள் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தை அவரிடம் உண்டாக்கியிருக்கலாம். அதற்காக, சம்பாதிக்க முடியவில்லை என்பதில் அவருக்கு வருத்தமும் உண்டாகவில்லை. நேர்மையான முறையில் அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதையும் அவர் விரும்பியதில்லை. இலக்கிய அபிமானிகளிடம் சாதாரணமாகவே இருக்கக்கூடிய ஒரு தலை தூக்கல்- ஆணவம் என்று கூட கூறலாம்- அது அவரிடமும் இருந்தது. எவ்வளவோ பணக்காரர்களும் முக்கிய மனிதர்களும் தங்களுடைய இடத்திற்கு வந்தால் அந்த இலக்கியவாதியைப் பாராட்டவும், அவருடைய படைப்புகளுக்குப் பரிசுகள் அளிக்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் தேவகுமாரன் சுயமரியாதையைக் கைவிடுவதற்குத் தயாராக இல்லை. யாராவது அழைத்தாலும், நன்றி கூறிவிட்டு விலகிக் கொள்ளும் செயல்தான் எப்போதும் நடந்துகொண்டிருந்தது. அது மட்டுமல்ல; பணக்காரர்களும் பெரிய மனிதர்களும் இங்கு வந்து மரியாதை செலுத்த வேண்டும் என்பது நடக்கக்கூடிய காரியம் இல்லையென்றாலும், தேவகுமாரனின் விருப்பமாக இருந்தது. அறிவற்றவர்களான பல தெரிந்த மனிதர்களும் விவசாயத்திலோ வேறு ஏதாவது தொழில்களிலோ ஈடுபட்டு ஏராளமான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டும், நிலத்தை வாங்கிக் கொண்டும், புதிய கட்டிடங்களைக் கட்டிக் கொண்டும் இருப்பதைப் பார்க்கும்போது, சில வேளைகளில் தன்னுடைய நிலையை நினைத்துப் பார்த்து அவர் கவலைப்படுவது உண்டு. குறிப்பாக- தன்னுடைய மனைவி சைவ்யா குடும்பப் பிரச்சினைகளைக் கூறி கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும்போது. ஆனால், தன்னுடைய படைப்பை, பேனாவைக் கையில் எடுத்து எழுத உட்கார்ந்து விட்டால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு இலக்கிய சொர்க்கத்திற்குள் நுழைந்து விடுவார். தன்னைப் பற்றிய பெருமை கம்பீரமாக எழுந்து நிற்கும். களைப்பும் கவலையும் முடிவுக்கு வந்துவிடும்.
ஆனால், இப்போது சில நாட்களாக இலக்கிய உருவாக்கத்தின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது. இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் முன்பு இருந்த அளவிற்குத் தன்மீது பக்தி இல்லை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. அவர் மிகவும் கஷ்டப்பட்டு எழுதிய- தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் கலைத் தன்மையையும் முழுமையாக அவற்றில் நிறைத்து வைத்திருந்தார்- இரண்டு புத்தகங்களுக்குத் தேவையான அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பிரசுரமாகி வெளிவந்த அவருடைய புத்தகங்கள் இலக்கிய உலகில் மிகப்பெரிய புரட்சியையே உண்டாக்கின. ஒவ்வொரு பத்திரிகையிலும் அந்த புத்தகங்களைப் பற்றிய பெரிய விமர்சனங்கள் வெளிவந்தன. இலக்கிய அமைப்புக்கள் அவற்றை வரவேற்றுப் பாராட்டின.
இலக்கிய விமர்சகர்கள் அதில் இருக்கும் நல்ல விஷயங்களைக் கூறி வாழ்த்தினார்கள். அந்த நூல்கள் இப்போது தேவகுமாரனின் பார்வையில் அந்த அளவிற்கு மதிப்பு இல்லாமல் ஆகிவிட்டன. மிகைத்தன்மை கொண்ட உருவாக்கம், மேன்மைத் தன்மை அற்ற போலித்தனமான நடை ஆகிய விரும்பத்தகாத அம்சங்கள் அவற்றில் இருப்பதாகத் தோன்றின. எனினும் மக்களுக்கு அந்தப் புத்தகங்களைத்தான் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் புதிய நூல்களை எடுத்துக்கொண்டால், அவை அவர்களைப் பொறுத்த வரையில் அழைக்காமல் வந்திருக்கும் விருந்தாளிமீது கொண்டிருக்கும் எண்ணத்தைப் போல இருந்தது. இலக்கிய உலகம் ஒன்று சேர்ந்து எதிர்த்து நிற்பதைப் போல இருந்தது. ஓய்வு வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், இப்படி மிகவும் குறைவான வரவேற்பு கிடைத்த விஷயம் அவருடைய முடிவை மேலும் வேகப்படுத்தியது. இரண்டு நான்கு நண்பர்கள் ஆறுதல் கூற முயற்சித்தார்கள். நல்ல பசி இருக்கும்போது கிடைக்கக்கூடிய பொருட்களை ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். பசி அடங்கிவிட்டால் அதிக ருசியுடன் இருக்கும் உணவுப் பொருட்களைக்கூட வேண்டாம் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால், இந்த தத்துவ சிந்தனை அவருக்கு ஆறுதலைத் தரவில்லை. அவருடைய பார்வையில் ஒரு இலக்கியவாதி மக்களால் விரும்பப்படுகிறான் என்பதற்கு ஆதாரம், அவனுடைய புத்தகங்கள்மீது கொண்டிருக்கும் பசி அவற்றைப் படிப்பவர்களிடம் சிறிதும் குறையாமல் இருப்பதுதான். அந்தப் பசி இல்லாமல் இருந்தால், அதற்குப் பிறகு இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கி இருப்பதே நல்லது.
அதற்குப் பிறகு பங்கஜாவின் திருமணத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே தேவகுமாரனிடம் எஞ்சி இருந்தது. ஒரு புத்தகப் பதிப்பகத்திடமிருந்து ஏற்கெனவே வெளிவந்த இரண்டு புத்தகங்களுக்கு சன்மானமாக ஐயாயிரம் ரூபாய் கிடைத்ததும், அவர் அதை ஒரு கடவுளின் கொடையாக நினைத்து, எழுதுவதை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார். ஆனால், ஆறு மாதங்களாக உணர்கிறார்- வானப்பிரஸ்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகும், உறவுகளிடமிருந்து விடுபட முடியவில்லை என்பதை. சைவ்யாவின் ஆசைகளை அவர் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. சாதாரண ஆசைகளிலிருந்து எந்தச் சமயத்திலும் விலக முடியாத பெண்களின் கூட்டத்தைச் சேர்ந்தவளாக அவள் இருந்தாள். அவள் இப்போதும் குடும்பத்தை ஆட்சி செய்வதில் ஆவல் கொண்டவளாக இருந்தாள். ஆனால், கையில் பணமில்லாமல் இருக்கும்போது, அந்த ஆசை எப்படி நிறைவேறும்? நாற்பது வருட குடும்ப வாழ்க்கையில் தேவகுமாரனால் அவளுடைய ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும்போது, இனிமேல் அதற்காக முயற்சி செய்வது வீணான வேலையாக இருக்கும் என்பது அவருக்கே தெரியும். குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக சொத்துக்களை அழித்ததற்காக இந்தச் சூழ்நிலையிலும் தன் தந்தை மீது குற்றச்சாட்டுக்கள் கூறும் சந்தகுமாரனின் நடவடிக்கையைப் பார்த்து வருத்தம்தான் உண்டானது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பத்தாயிரம் ரூபாய்களுக்கு விற்ற நிலம் இப்போது இருந்திருந்தால், ஒரு வருடத்திற்குப் பத்தாயிரம் ரூபாய்களை லாபமாகத் தந்து கொண்டிருக்கும்.
பகல் நேரத்தில்கூட குள்ளநரிகள் ஊளையிட்டு விளையாடிக் கொண்டிருந்த அந்த வெற்று நிலம் இப்போது நகரத்திலேயே மிகவும் பரபரப்பான அங்காடியாக மாறி விட்டிருக்கிறது. அங்கு இப்போது ஒரு சதுர அடி நூறு ரூபாய் என்ற அளவில் நில வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. வளரக் கூடிய பாதையைத் தடுத்ததற்காக சந்தகுமாரனுக்குத் தன் தந்தையின்மீது கோபம் அதிக அளவில் வந்து கொண்டேயிருந்தது. தந்தை, மகன் இருவரின் நடவடிக்கைகளிலும்தான் என்ன ஒரு வேறுபாடு! தேவகுமாரனிடம் தேவைக்கானவைகூட இல்லை. எனினும், திறந்த கையுடன் இருந்தார். அழகியல் உணர்வால் அலங்கரிக்கப்பட்ட மனதிற்கு, பணத்தை வழிபடுவது என்பது வாழ்க்கையின் லட்சியமாக இருப்பதற்கு வழியே இல்லை. அவருக்குப் பணத்தின் மதிப்பு தெரியாமல் இல்லை. மக்கள் தொகையில் முக்கால் பகுதி பசியால் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கும் நாட்டில், ஒரு ஆளால் மிகவும் அதிகமாக சம்பாதித்து சேர்த்து வைக்க முடிகிறது என்றால்கூட, அதற்கு தார்மீக ரீதியாக உரிமை இல்லை என்ற எண்ணம் அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. ஆனால், சந்தகுமாரனின் பார்வையோ இப்படிப்பட்ட தார்மீகமான வரையறைகளைக் கிண்டல் பண்ணுவதாக இருந்தது. இடையில் தயக்கமே இல்லாமல் அதை எல்லாரும் கேட்கும்படி கூறவும் செய்தான். "உங்களுக்கு இலக்கியம் மட்டுமே போதும் என்றால், குடும்பத் தலைவனாக இருப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? உங்களுடைய வாழ்க்கையையும் நாசமாக்கிக் கொண்டு, எங்களுடைய வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டீர்கள். இப்போது துறவுக் கோலம் அணியப் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்க்கையில் எல்லா கடமைகளையும் செய்து முடித்தாகிவிட்டது என்பதுபோல!''
குளிர்காலம். காலையில் எட்டு மணி கடந்தது. பங்கஜா தேநீரையும் பலகாரங்களையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, அண்ணன்மார்களை அழைப்பதற்காகச் சென்றாள். சாதுகுமாரன் உடனடியாக வந்துவிட்டான். உயரத்துக்கேற்ற கம்பீரமும் அழகும் கொண்ட சரீரம். வெளுத்த நிறம். இனிமையாகப் பேசக்கூடிய குணத்தைக் கொண்ட இளைஞன். கிடைக்கக்கூடிய உணவை வயிறு நிறையும் அளவிற்கு சாப்பிடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது- இதுதான் இப்போதைய வாழ்க்கையின் லட்சியம்.
அன்னை கேட்டாள்: "சந்து எங்கே? தேநீர் ஆறிப்போயிடும். பிறகு பச்சைத் தண்ணியா இருக்குன்னு சொல்வான். அவனைக் கொஞ்சம் அழைச்சிட்டு வா சாது. அவனுக்கு சாப்பிடவும் தேநீர் குடிக்கவும் கூட நேரம் இல்லையே!''
சாது தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தான். சந்தகுமாரனிடம் பேசுவது என்பது அவனுக்கு உயிர் போகக் கூடிய அளவிற்கு சங்கடமான ஒரு விஷயமாக இருந்தது.
சிறிது நேரத்திற்குப் பிறகு சைவ்யா மீண்டும் சொன்னாள்: "அவனை ஏன் அழைச்சிட்டு வரல?''
சாது மெல்லிய குரலில் பதில் சொன்னான்: "வேண்டாம். கோபப்பட்டால் பிறகு இன்றைய நாள் அமைதி இல்லாமல் ஆகிவிடும்.''
இதற்கிடையில் சந்தகுமாரன் தானே வந்து சேர்ந்தான். பார்ப்பதற்கு தன் தம்பியைப் போலவே இருந்தான். தோற்றம் அந்த அளவிற்கு அழகு என்று கூறுவதற்கில்லை. முகத்தில் ஆணவத்தின் வெளிப்பாடு தெரிந்தது. அதே நேரத்தில் எதையோ மறைத்து வைத்திருப்பதைப் போலவும் இருந்தது. எந்தவொரு ஆடையையும் விரும்பாததைப் போல அவன் இருந்தான்.
பலகையில் அமர்ந்து தேநீரை வாய்க்குள் செலுத்தியவாறு மூக்கைச் சுருக்கிக் கொண்டு தன் தங்கையை அழைத்தான். "நீ ஏன் வரல பங்கஜா? புஷ்பா எங்கே? தேநீர் குடிப்பதும் உணவு சாப்பிடுவதும் எல்லாரும் சேர்ந்து இருக்குறப்போ நடக்கணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?''
சைவ்யா கோபத்துடன் சொன்னாள்: "நீங்க சாப்பிடுங்க. அவங்க பிறகு சாப்பிடுவாங்க. எல்லாரும் ஒண்ணா உட்கார இடமில்லையே!''
சந்தகுமாரன் ஒரு மடக்கு தேநீரைக் குடித்துவிட்டு சொன்னான்: "ஆமாம்... பழைய பழக்க வழக்கம்... வெட்கப்பட்டுக் கொண்டு சமையலறைக்குள் முடங்கி இருக்குற காலம் போயிடுச்சுன்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!''
சைவ்யா கிண்டல் பண்ணினாள்: "எல்லாரும் ஒண்ணா உட்காரலாம். சமையல் பண்றது யார்? பரிமாறுவது யார்? சமையல் செய்றதுக்கு ஒரு சமையல்காரனை வைக்கணும். பரிமாறுவதற்கும் ஒரு ஆளை வைக்கணும். அதற்குப் பிறகு அலங்காரம் பண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம்.''
"அப்படியென்றால் பெரியவர்கள் அதைச் செய்யக்கூடாதா? துறவுக் கோலம் போடமட்டும்தான் தெரியுமா?''
"அப்பா செய்ய வேண்டியதைச் செய்திட்டாரு. இனிமேல் பிள்ளைகள் செய்தால் போதும்.''
"முடியவில்லை என்றால் பிறகு எதற்கு எங்களைப் படிக்க வைத்தார்? எங்காவது காட்டு மூலைகளில் கொண்டு போயவிட்டிருக்கலாமே! நாங்கள் ஏதாவது விவசாயமோ கூலி வேலையோ செய்து வாழ்ந்திருப்போமே?''
"அப்போ நீங்கள் இந்த அறிவுரையைத் தர மாட்டீர்களே!''
சந்தகுமாரன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டே தேநீரைக் குடித்தான். கொஞ்சம் பலகாரங்களையும் சாப்பிட்டான். பிறகு சாதுகுமாரனிடம் கேட்டான்:
"உங்க டீம் எப்போ பம்பாய்க்கு செல்கிறது?''
சாதுகுமாரன் தலையைக் குனிந்து கொண்டே மெதுவான குரலில் பதில் சொன்னான்: "நாளை மறுநாள்''.
"சூட் தைத்தாகி விட்டதா?''
"என் பழைய சூட் இருக்கே?''
"சூட் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை. நாங்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் கால்களுடன்தான் விளையாடினோம். ஆனால், ஒரு அனைத்திந்திய குழுவில் விளையாடப் போகும்போது அதற்குரிய மதிப்புடன் இருக்க வேண்டும். வறுமையில் இருப்பதைப் போல போவதைவிட போகாமல் இருப்பதே நல்லது. அங்கு இந்த மிகப் பெரிய இலக்கியவாதியான தேவகுமாரனின் மகன் என்ற விஷயம் தெரிய வரும்போது மக்கள் மனதிற்குள் என்ன நினைப்பார்கள்?''
சாதுகுமாரன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. அமைதியாக உணவைச் சாப்பிட்டுவிட்டு, எழுந்து சென்றான். தன் தந்தையின் பொருளாதார நிலையைத் தெரிந்து வைத்திருப்பதால் அவன் அவரை சிரமத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை. புதிய சூட்தான் வேண்டும் என்று அண்ணன் நினைக்கும் பட்சம், அவரே அதைத் தைத்துக் கொடுக்கலாமே! எதற்காக தந்தைக்கு சிரமம் உண்டாக்க பாதை வெட்டுகிறார்?
சாது எழுந்து சென்றபோது, சைவ்யா மனக் கவலையுடன் சொன்னாள்: "இனிமேல் குடும்ப பிரச்சினைகள் எதுவும் தனக்கு இல்லை என்று சொல்லி அப்பா எல்லா பொறுப்புகளையும் உங்களிடம் ஒப்படைத்துவிட்ட பிறகு, அவரை எதற்காக கஷ்டப்படுத்த வேண்டும்? தன்னுடைய அறிவையும் திறமையையும் பயன்படுத்தி அவர் இவ்வளவு காலமா வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போய்விட்டார். இப்போ செய்ய முடியவில்லை என்பதற்காக- இல்லாவிட்டால் செய்தவற்றில் தவறு இருக்கிறது என்பதற்காக அவரைக் குறை கூறிப் பேசுவது என்பது உங்களுக்கு நல்லது அல்ல. நீங்கள் இப்படித் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தால், அவர் வீட்டை விட்டு வேறு எங்காவது போய் விடுவார் என்று நான் பயப்படுறேன்.
பணம் சம்பாதிக்க முடியவில்லையென்றாலும், எங்கு போனாலும் தலையில் ஏற்றி நடப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும் அல்லவா?''
சைவ்யா இதுவரை தன் கணவன்மீது வெறுப்பைக் காட்டவே செய்திருக்கிறாள். இந்த முறை அவர் பக்கம் நிற்பதைப் பார்த்து சந்தகுமாரனுக்கு சிரிப்பு வந்தது. அவன் சொன்னான்:
"அப்பாவின் நோக்கம் அதுவாகத்தான் இருந்தால், அதற்கு முன்பே நான் வீட்டை விட்டுப் போயிடுவேன். என்னால் இந்த சுமையைத் தலையில் ஏற்றி வைத்திருக்க முடியாது. இதை வைத்துக் கொண்டு நடப்பதற்கு அப்பா எனக்கு உதவ வேண்டும். அவருக்குத் தன்னுடைய சம்பாத்தியத்தைத் தாறுமாறாக செலவழிப்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், பூர்வீகச் சொத்தை அழிப்பதற்கு ஒரு அதிகாரமும் இல்லை. இதற்கு ஏதேனும் செய்தே ஆக வேண்டும். அந்த சொத்துகளை நாங்கள் திரும்பப் பெற வேண்டும். எனக்கும் கொஞ்சம் சட்டம் தெரியும். வக்கீல்களிடமும் மேஜிஸ்ட்ரேட்களிடமும் பேசியிருக்கிறேன். சொத்துக்களைத் திரும்பப் பெற முடியும். இங்கு நான் தெரிந்துகொள்ள வேண்டியது அப்பாவுக்குத் தேவை தன் பிள்ளைகளா, இல்லாவிட்டால் நேர்மையா? இவற்றில் அவருக்கு அதிக விருப்பம் எதில் என்பதைத்தான்.''
அதைக் கூறிவிட்டு பங்கஜாவிடம் வெற்றிலையை வாங்கிய அவன் தன்னுடைய அறைக்குள் சென்றான்.
சந்தகுமாரனின் மனைவி புஷ்பா. புஷ்பத்தைப் போலவே அழகான உடலமைப்பை அவள் கொண்டிருந்தாள். சிறிது கூச்சகுணம் கொண்டவளாக அவள் இருந்தாள். அதே நேரத்தில் அளவிற்கு அதிகமான தற்பெருமை கொண்டவளாகவும் இருந்தாள். சாதாரண விஷயத்திற்குக்கூட நாட்கணக்கில் கோபப்பட்டுக் கொண்டிருப்பாள். அவளுடைய கோபம்கூட ஒரு புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கும். யாரிடமும் எதுவும் கூறமாட்டாள். சண்டை போடுவதும் இல்லை. திட்டுவதும் இல்லை. வீட்டிலிருக்கும் வேலைகளை எப்போதும் போல செய்வாள்- மிகவும் அக்கறையுடன். யாருடன் கோபம் கொண்டிருக்கிறாளோ, அவர்களின் முகத்தையே பார்க்க மாட்டாள். சம்பந்தப்பட்ட நபர் கூறியபடி நடப்பாள். கேட்பதற்கு பதில் கூறுவாள். தேவைப்படுவதை எடுத்துக்கொடுப்பாள்- எல்லாம் முகத்தைப் பார்க்காமலே நடக்கும். இப்போது பல நாட்களாக சந்தகுமாரன் மீது கோபம் கொண்டிருக்கிறாள். பின்னால் திருப்பிக் கொண்ட கண்களுடன் அதன் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருந்தாள். சந்தகுமாரன் அன்புடன் கேட்டான்: "இன்றைக்கு சாயங்காலம் நடக்கப் போக வேண்டாமா?''
தலையைக் குனிந்துகொண்டு புஷ்பா பதில் சொன்னாள்: "உங்களின் விருப்பம் போல...''
"வர்றேல்ல?''
"நீங்கள் அழைத்தால் வராம இருக்க முடியுமா?''
"உனக்கு என்ன வேணும்?''
"எனக்கு எதுவும் வேண்டாம்.''
"பிறகு ஏன் கோபமா இருக்கே?''
"எதற்கும் இல்லை.''
"எதற்கும் இல்லையா? சரிதான்... சொல்ல வேண்டாம். ஆனால், இப்படி அமைதியா இருப்பதால் காரியம் நடக்காது.''
புஷ்பாவின் இந்தப் பிடிவாதக் கணை சந்தகுமாரனைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது. அவன் கோபப்பட்டு, சமாதானப்படுத்த முயன்றான். மன்னிப்பு கேட்பதற்கும் தயாராக இருந்தான். அப்படிப்பட்ட வார்த்தைகள் இனிமேல் வாயிலிருந்து வராது. ஆனால், அவளைக் கோபம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக அவன் கூறவில்லை. ஒரு உண்மையை வெளிப்படையாகக் கூறினான் என்பதுதான் விஷயம். ஆணை எதிர்பார்த்து வாழும் பெண் ஆணின் மேலாண்மைப் போக்கை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவன் ஒத்துக்கொண்டான். அந்த நேரத்தில் இந்த வாக்கியம் வாயிலிருந்து வந்திருக்கக்கூடாது. இனி கட்டாயம் கூறித்தான் ஆக வேண்டுமென்றால், நாசூக்காக அதைக் கூறியிருக்க வேண்டும். ஆனால், ஒரு பெண் தன்னுடைய உரிமைகளுக்காக ஆணுடன் போரிடும்போது, அவனுக்கு சரி நிகராகத் தான் இருக்க வேண்டும் என்று கேட்கும்போது, அவள் சில கடினமான சொற்களைக் கேட்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அந்த நேரத்திலும் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டிருப்பதால், எந்தவொரு காரியத்திலும் முடிவு எடுக்க முடியாமல் போய்விடும் என்ற உண்மையை புஷ்பாவிற்குப் புரியவைத்து, அவளை அதை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய வேண்டும் என்பதற்காக அவன் முயற்சித்தான். இந்த விஷயத்தில் இனி எந்தச் சமயத்திலும் விவாதம் உண்டாகாத அளவிற்கு வெற்றி பெற்றுக் கொடியைப் பறக்க விட வேண்டும் என்று அவன் விருப்பப்பட்டான். எவ்வளவோ புதிய புதிய யோசனைகளை அதற்காக அவன் தன் மனதில் நினைத்து வைத்திருந்தான். ஆனால், எதிரி கோட்டைக்குள் இருந்து வெளியே வராமல் ஆக்கிரமிப்பது எப்படி?
ஒரு வழி இருக்கிறது. எதிரியை வசியப்படுத்தி, உடன்பாடு உண்டாகப் போகிறது என்ற ஆசையில் நம்பிக்கை கொண்டு கோட்டைக்குள் இருந்து வெளியே வரச் செய்ய வேண்டும்.
அவன் புஷ்பாவின் தாடையைப் பிடித்துத் தனக்கு நேராகத் திருப்பியவாறு சொன்னான்: "என் வார்த்தைகள் உன்னை இந்த அளவிற்கு மனக்கஷ்டத்தை உண்டாக்குகிறது என்றால், நான் அதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஐந்தோ பத்தோ நாட்கள் என்னுடன் பேசாமல் இருக்கக்கூடிய சக்தியை தெய்வம் உனக்குத் தந்திருக்கிறது. ஆனால், எனக்கு அதற்கான சக்தியைத் தரவில்லை. நீ கோபப்படும்போது என்னுடைய நரம்புகளில் ரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. உனக்கு கிடைத்திருக்கும் சக்தியை எனக்குத் தந்த பிறகு, சரிசமத்திற்காகப் போராடினால், நான் உன்மீது குறை சொல்ல மாட்டேன். ஆனால், அப்படிச் செய்ய முடியவில்லையென்றால், இந்த அஸ்த்திரத்தை எனக்கு நேராக தொடுக்கக்கூடாது.''
புஷ்பா புன்னகைத்தாள். அவள் தன்னுடைய அஸ்த்திரத்தால் தன் கணவனைத் தோல்வியடையச் செய்திருக்கிறாள். அவன் பரிதாபமாக மன்னிப்பு கேட்டபோது, அவளுடைய மனம் இளகாமல் இருக்குமா?
ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதற்கு அடையாளமாக அவள் வெற்றிலையை எடுத்து சந்தகுமாரனிடம் தந்து கொண்டே சொன்னாள்: "இனி எந்தச் சமயத்திலும் அந்த வார்த்தைகள் வாய்க்குள்ளிருந்து வெளியே வரக்கூடாது. நான் உங்களைச் சார்ந்திருக்கிறேன் என்றால் நீங்கள் என்னைச் சார்ந்து இருக்கிறீர்கள். நான் உங்களுடைய வீட்டில் செய்யக்கூடிய வேலையை மற்றவர்களின் வீட்டில் செய்தால், என்னால் வாழ முடியும் இல்லையா? சொல்லுங்க.''
சந்தகுமாரன் கடுமையான பதில் வாயில் வந்ததைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான்: "நிச்சயமாக...''
"அப்போது நான் சம்பாதிப்பது எனக்குச் சொந்தமானதாக இருக்கும். இங்கு நான் உயிரை விட்டு வேலை செய்தாலும், ஒரு பொருள்மீதுகூட எனக்கு உரிமை இல்லை. நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் என்னை வீட்டை விட்டு விரட்டிவிடலாம்.'' "சொல்லு... சொல்லு... ஆனால், பதிலைக் கேட்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.''
"உங்கள் பக்கம் பதிலே இல்லை. கெட்ட பிடிவாதம் மட்டும்தான் இருக்கிறது. இங்கே கிடைக்கும் மரியாதை அங்கே இருக்காது என்று நீங்கள் சொல்வீர்கள். காப்பாத்துறதுக்கு யாரும் இல்லை, கவலைகளில் பங்கெடுக்க யாரும் இல்லை என்று கூறுவீர்கள்.
இப்படி எத்தனையோ விஷயங்களை உங்களால் கூற முடியும். ஆனால், மிஸ் பட்ளர் நிரந்தரக் கன்னியாக, மதிப்புடன் வாழ்வதை நான் பார்த்திருக்கிறேன். அவங்களோட சொந்த வாழ்க்கை எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியாது. ஒரு வேளை ஒரு இந்துக் குடும்பப் பெண்ணின் நெறிமுறைகளின்படி அவங்க வாழாம இருந்திருக்கலாம். ஆனால், எல்லாரும் அவங்களை மதிச்சாங்க. அவங்களுக்கு எந்தச் சமயத்திலும் பிழைப்பதற்கு ஒரு ஆணின் தேவை அவசியப்படாமலே இருந்தது.''
மிஸ் பட்ளரை சந்தகுமாரனுக்கு நன்கு தெரியும். அவள் நகரத்திலேயே பெயர் பெற்ற பெண் டாக்டராக இருந்தாள். புஷ்பாவின் வீட்டுடன் அவளுக்கு குடும்ப உறவைப் போன்ற ஒரு நெருக்கம் இருந்தது. புஷ்பாவின் தந்தையும் டாக்டராக இருந்தார். ஒரே தொழிலில் இருக்கும் நபர்களுக்கு இடையே நட்பு இருப்பது என்பது சாதாரணமான ஒரு விஷயம்தானே? புஷ்பா முன்வைத்த அறிக்கையைப் பற்றி பூசி, மெழுகுவதைப் போல எதையாவது கூற அவனால் முடியவில்லை. பேசாமல் அமைதியாக இருப்பது என்பதும் ஆண்மைக்கு ஏற்ற காரியமாக இருக்கவில்லை. தர்ம சங்கடமான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்ட அவன் சொன்னான்: "ஆனால், எல்லா பெண்களாலும் மிஸ் பட்ளராக ஆகிவிட முடியாது.''
புஷ்பாவிற்கு வெறி உண்டானது. "ஏன்? அவங்க படித்து டாக்டராக வேலை செய்யலாம் என்றால், என்னால் ஏன் முடியாது?''
"அவங்களோட சமுதாயத்திற்கும் நம்முடைய சமுதாயத்திற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது.''
"அதாவது- அவங்களோட சமுதாயத்தில் ஆண்கள் நிறைய படித்தவர்கள். நம்முடைய சமுதாயத்தில் ஆண்கள் விவரம் கெட்டவர்களாகவும் அறிவற்றவர்களுமாக இருக்கிறார்கள். குறிப்பாக- படித்தவர்கள்.''
"இதை ஏன் சொல்லவில்லை? அவர்களுடைய சமுதாயத்தில் பெண்களுக்கு மனவலிமை இருக்கிறது. தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது. ஆண்களை சமாதானப்படுத்தக் கூடிய கலை இருக்கிறது.''
"நாங்களும் அந்த பலத்தையும் கலையையும் அடைய விரும்புகிறோம். ஆனால், நீங்கள் எதற்காகவாவது சம்மதிக்க வேண்டாமா? கொள்கை, மரியாதை- இப்படி எப்படியெல்லாம் தந்திரங்களை எங்களை அழுத்தி வைப்பதற்கும் அடக்கி ஆட்சி செய்வதற்கும் இங்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்?''
விவாதம் மீண்டும் புஷ்பாவை கடுமைத் தன்மையை நோக்கித் தயார் பண்ணும் வழியில் போய்க் கொண்டிருப்பதை சந்தகுமாரன் பார்த்தான். அவன் அவளைக் கோபம் கொள்ளச் செய்வதற்காக அல்ல- சந்தோஷப்படுத்துவதற்காகத்தான் வந்திருக்கிறான்.
அதனால் சொன்னான்: "பரவாயில்லை. எல்லா குறைகளுக்கும் காரணம் ஆண்கள்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆண்கள் ஆட்சி செய்து ஆட்சி செய்து களைத்துப் போய் விட்டார்கள். இனி அவனுக்கு சற்று ஓய்வு வேண்டும். உங்களுக்குக் கீழே உட்கார்ந்து இந்தப் போட்டியில் இருந்து தப்பிக்கலாம் என்றால், அவன் சிம்மாசனத்தை விட்டுக் கொடுப்பதற்குத் தயாராகவே இருக்கிறான்.''
புஷ்பா புன்னகைத்தாள். "சரி... இன்றையில் இருந்து வீட்டிலேயே இருங்க.''
"மிகவும் சந்தோஷம். உடுத்துவதற்கு நல்ல ஆடைகள், பயணத்திற்கு வாகனங்கள்- எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டால் போதும். நீங்கள் கூறுவதைப் போல நடக்கலாம். உங்களுடைய விருப்பதற்கு எதிராக ஒரு வார்த்தை ஒலிக்காது.''
"பெண் ஆணைச் சார்ந்து இருப்பவள் என்றும், அடிமை வேலை செய்பவள் என்றும் இனிமேல் சொல்லக்கூடாது.''
"எந்தச் சமயத்திலும் கூறமாட்டேன். ஆனால், நிபந்தனை...''
"என்ன நிபந்தனை?''
"உங்களுடைய காதலுக்கு நான் மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும்.''
"இதே நிபந்தனை ஆண்களை வைத்து ஒத்துக்கொள்ளச் செய்ய பெண்களால் முடிந்திருக்கிறதா?''
"இது அவர்களுடைய பலவீனம். ஆண்கள்மீது அதிகாரம் செலுத்துவதற்காகத் தேவைப்படும் ஆயுதங்களையெல்லாம் தெய்வம் அவர்களுக்குத் தந்திருக்கிறது.''
சாயங்காலம் ஆன பிறகும் புஷ்பாவின் மனதிற்கு நிம்மதி உண்டாகவில்லை. சந்தகுமாரனின் குணம் அவளுக்குத் தெரியும். பெண்களை ஆளக்கூடிய ஆணின் கலாச்சாரம் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடாது. வெளியே கூறும்போது, சந்தகுமாரன் அவளுக்கு சரிநிகர் இடத்தைக் கொடுத்திருந்தான். ஆனால், அதில் ஒருவித கடமைப்பட்டிருத்தல் மறைந்திருந்தது. முக்கியமான விஷயங்களில் கடிவாளத்தைக் கைவிடுவதில்லை.
அவள் சொன்னாள்: "பெண்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தித் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவில்லை. ஆண்களை அவர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்குத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய திறமைகூட இல்லை.''
சந்தகுமாரன் அதை ஒத்துக்கொண்டான். "இதே கருத்து என் மனதிலும் எத்தனையோ தடவை தோன்றியிருக்கிறது. இதில் சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை. பெண் ஆணைக் காப்பாற்றியிருக்காவிட்டால், இன்று உலகம் முழுமையான இருட்டாக இருக்கும். அவளுடைய வாழ்க்கை, மொத்தத்தில் தவம், தியானம் ஆகியவை நிறைந்தவையாக இருக்கிறது.'' அவன் அவளிடம் தன் மனதில் இருப்பதைக் கூறினான். அவனுக்குத் தன்னுடைய பூர்வீகமான குடும்பச் சொத்தைத் திரும்பவும் பெற வேண்டும். புஷ்பா தன் தந்தையிடம் இதைக் குறிப்பாகச் சொன்னாள். மேலும் பத்தாயிரம் ரூபாய்களை வாங்கிக் கொடுத்தால், சந்தகுமாரன் இரண்டு லட்சம் மதிப்பு உள்ள சொத்துக்களைத் திரும்பப் பெற முடியும்- பத்தாயிரம் ரூபாய் மட்டும். அந்தப் பணம் இல்லாததால், இரண்டு லட்சம் மதிப்பு இருக்கக்கூடிய சொத்து கைவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
புஷ்பா சொன்னாள்: "அந்த சொத்தை விற்றாச்சே!''
சந்தகுமாரன் அதை மறுக்கும் விதத்தில் தலையை ஆட்டினான்: "விற்கவில்லை. பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக விலை வரக்கூடிய பூமியை வெறும் பத்தாயிரத்திற்கு! ஒரு அறிவுள்ள மனிதன் இப்படிப்பட்ட பாதகச் செயலில் ஈடுபடமாட்டான். அப்படி ஈடுபட்டிருந்தால், அவனுக்கு சுயஉணர்வு இல்லை என்று அர்த்தம். பெரியவருக்கு குடும்ப விஷயங்களில் கவனம் இல்லை. கற்பனை உலகத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். மோசமான ஒரு கூட்டம் அவரை ஏமாற்றி சொத்துகளை கைக்குள் போட்டுக்கொண்டார்கள். அந்த சொத்துகளைத் திரும்பப் பெறுவது என்பது என்னுடைய கடமை. நீங்கள் நினைத்தால், எல்லாம் நடக்கும். ஒரு பத்தாயிரம் ரூபாயைத் தயார் பண்ணித் தருவது என்பது டாக்டருக்கு ஒரு கஷ்டமான விஷயம் இல்லை!''
புஷ்பா ஒரு நிமிட நேரம் சிந்தனையில் மூழ்கினாள். பிறகு சந்தேகத்துடன் சொன்னாள்: "அப்பாவின் கையில் இவ்வளவு ரூபாய்களை வாங்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.''
"கொஞ்சம் சொல்லிப் பாரு.''
"எப்படி சொல்றது? எனக்கு அவருடைய நிலைமை தெரியாதா? வருமானமெல்லாம் இருக்கு. அதற்கு செலவும் இருக்கு. பீருவிற்கு ஒவ்வொரு மாதமும் ஐந்நூறு ரூபாய் இங்க்லாண்டிற்கு அனுப்பணும். திலோத்தமாவின் படிப்பிற்கு வேறு பணம் செலவாகிறது. சம்பாதிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. அப்பாவைக் கஷ்டப்படுத்த என்னால முடியாது.''
"நான் கடன்தான் கேட்கிறேன். இலவசமாக இல்லை.''
"இவ்வளவு நெருக்கமான உறவினர்களிடம் கடன் என்று சொன்னால் இலவசமில்லாமல் வேறு என்ன அர்த்தம்? நீங்கள் திருப்பித் தராவிட்டால் அப்பாவால் என்ன செய்ய முடியும்?
நீதிமன்றத்தில் ஏற முடியுமா? இது விஷயமா பேசுறதுக்கு ஆட்களை அழைக்க முடியுமா? ஆட்கள் கிண்டல் பண்ண மாட்டார்களா?''
சந்தகுமாரன் கறாரான குரலில் கேட்டான்: "நான் பணத்தைத் திருப்பித் தரமாட்டேன் என்று எப்படி முடிவு செய்தாய்?''
புஷ்பா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூற முடியும்? இனி வெற்றி பெற்று உங்களின் கையில் பணமும் வந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கு எவ்வளவோ நிலத்தின் உரிமையாளர்கள் கடனை அடைக்க முடியாதவர்கள் என்பதற்காகவா நீதிமன்றத்தின் படிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் தேவையில்லாத செலவுகளைச் செய்யாமல் மிச்சம் பிடித்து சம்பாதிப்பீர்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன். எனினும், கையில் ஒதுங்கிய பணத்தைக் கையை விட்டுப்போகாமல் பார்த்துக் கொள்வது என்பது மனிதனின் இயற்கை குணம்தான். தர்மம், நீதி ஆகியவற்றை மறந்துவிடுவது என்பது மனிதரின் சாதாரண பலவீனம்தான்.''
சந்தகுமாரன் புஷ்பாவை கோபத்துடன் பார்த்தான். புஷ்பா கூறியதில் இருந்த உண்மை அம்பைப் போல குத்தியது. அவனுடைய மனதிற்குள் மறைந்திருந்த திருடனை புஷ்பா பிடித்து முன்னால் நிறுத்தியிருந்தாள். அவன் மன அமைதியை இழந்து சொன்னான்: "மனிதனை நீ இந்த அளவிற்குக் கேவலமாகக் கருதுகிறாய் அல்லவா? உன்னுடைய இந்த மன ஓட்டத்தைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அதே நேரத்தில் கவலையும் உண்டாகிறது. இந்த நாசமாய்ப் போன காலத்திலும் சமூகத்தில் தர்ம நீதிகளுக்கு இடம் இருக்கிறது. இந்த உலகத்தில் தர்மமும் நீதியும் இல்லாமல் போய்விட்டால், அன்று சமூகமே எஞ்சி இருக்காது.''
அவன் தர்மநீதிகளின் உயர்வைப் பற்றி ஒரு தத்துவ ஞானியைப் போல நீண்ட நேரம் பேசினான்.
சில நேரங்களில் ஒரு வீட்டிற்குள் திருடன் நுழைந்துவிட்டால் எந்த அளவிற்கு ஆரவாரம் உண்டாகிறது? என்ன காரணம்? திருட்டு என்பது அசாதாரணமான ஒரு விஷயம். சமூகம் திருடர்களுடையதாக இருந்தால், யாராவது நேர்மையுடன் நடந்து கொள்வதும் அதே மாதிரி ஆரவாரம் நிறைந்த ஒன்றாக இருக்கும். சமீபகாலமாக நோய்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால், கூர்மையாக கவனித்தால் நூற்றில் ஒரு ஆளுக்கு மேல் நோயாளியாக ஆவதில்லை. நோய் ஒரு சாதாரண விஷயமாக இருந்தால், நல்ல உடல் நிலையைக் கொண்டவர்களின் எண்ணிக்கையைத்தான் எடுத்துக்காட்டாகக் கூற வேண்டும்- இப்படி இப்படி.
புஷ்பா வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் பதில் இருந்தது. ஆனால், அவள் சண்டையை அதிகரிக்க விரும்பவில்லை. அவள் பணத்திற்காகத் தன் தந்தையிடம் கேட்கக்கூடாது என்று மனதிற்குள் முடிவு செய்திருந்தாள். எந்தவொரு விவாதமும் வார்த்தையும் வெளியே வருவது பொருந்தக்கூடியதாக இல்லை.
சந்தகுமாரன் சொற்பொழிவை முடித்துக்கொண்டான். பதில் எதுவும் கிடைக்காததால் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் சொன்னான்: "என்ன யோசிக்கிறாய்? நான் உண்மையைத் தான் கூறுகிறேன். சீக்கிரமே பணத்தைத் திரும்ப தந்து விடுவேன்.''
புஷ்பா எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சொன்னாள்: "உங்களுக்கு கட்டாயம் என்றால், நேராகப் போய் கேட்டுக் கொள்ளுங்கள். என்னால் கேட்க முடியாது.''
சந்தகுமாரன் உதடுகளைக் கடித்தான். "இந்த சாதாரண விஷயத்தைக் கூட உன்னால் செய்ய முடியவில்லையென்றால் அதற்கு அர்த்தம், இந்த வீட்டில் எனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்பதுதான்.''
புஷ்பாவிற்கு கோபம் வந்துவிட்டது. "நீங்கள் என்னைத் திருமணம் செய்த நிமிடத்திலிருந்து எனக்கு உரிமை இருக்கிறது.''
சந்தகுமாரன் ஆணவத்துடன் சொன்னான்: "அப்படிப்பட்ட உரிமை கிடைத்ததைப் போலவே எளிதில் கையை விட்டுப் போகவும் செய்யும்.''
ஆரம்பத்திலேயே பயப்படக்கூடிய ஒரு சிந்தனையோட்டத்திற்குள் புஷ்பாவை யாரோ தள்ளி விட்டதைப் போல இருந்தது. அவள் அங்கு வந்து ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் சந்தகுமாரனின் குணமே தெரிந்தது. அவனுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் அவனுடைய தாளத்திற்கு ஆடக்கூடிய தாசியாக இருக்க வேண்டும். அவளுடைய தனித்துவத்தை அவனுடைய இருப்பிற்குள் கரைத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அவன் சிந்திப்பதையே அவள் சிந்திக்க வேண்டும். அவன் செய்வதையே அவள் செய்ய வேண்டும். அவளுடைய மன சந்தோஷத்திற்கு அங்கு எந்தவொரு இடமும் இல்லை. அவனுக்கு வாழும் உலகம், மேலுலகம் எல்லாமே பணம் மட்டும்தான். அவனுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை உண்டாவதே பணத்தை வைத்துதான். பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவனுடைய பார்வையில் மனைவிக்கோ மகனுக்கோ எந்தவொரு இடமும் இல்லை. ஒரு பீங்கான் தட்டு புஷ்பாவின் கையில் இருந்து விழுந்து உடைந்ததற்கு அவளுடைய காதைப்பிடித்து அவன் திருக ஆரம்பித்துவிட்டான். தரையில் மையைக் கொட்டிவிட்டாள் என்பதற்காக பங்கஜாவை முழு அறையையும் கழுவச் சொல்லி தண்டனை தந்தான். அவன் வைத்திருக்கும் பணத்தை புஷ்பா கையால் தொடமாட்டாள். அது சரிதான், பணம் சாதாரணமாக சம்பாதித்துச் சேர்க்கக் கூடிய பொருள் அல்ல என்று அவன் நினைத்தான். பணம் சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக இருப்பது என்பது அவனுடைய கொள்கை. தேவையில்லாமலோ, கவனக் குறைவாகவோ செலவு செய்வது அவனுக்குப் பிடிக்காது. தன்னைத் தவிர வேறு யார் மீதும் அவனுக்கு நம்பிக்கை கிடையாது. கடினமான மனத் தியாகம் செய்து புஷ்பா வாழ்க்கையுடன் சமரசம் செய்து கொண்டிருந்தாள். ஆனால், மீண்டும் மீண்டும் அங்கு அவளுக்கு உரிமை என்று கூற எதுவும் இல்லை என்றும், அவள் அங்கு ஒரு தாசியைப் போல இருக்க வேண்டியவள் என்றும் ஞாபகப்படுத்துவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது மாதிரியே அன்று அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு நாட்கணக்கில் சாப்பிடாமலும் நீர் பருகாமலும் அவள் வாழ்க்கையை ஓட்டினாள். எப்படியோ மனம் சற்று அமைதி அடைந்தபோது, இந்த புதிய காயம். இது அவளுடைய எஞ்சியிருந்த தைரியத்திற்கும் வரையறையை உண்டாக்கியது.
சந்தகுமாரன் அவளிடம் சவால் விட்டவாறு வெளியேறினான். அவள் அங்கேயே உட்கார்ந்து இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தாள். இந்த நிலையுடன் இப்படி வாழ முடியாது. பிறந்த வீட்டிற்குப் போனாலும் மன அமைதி கிடைக்காது என்று தெரியும், சந்தகுமாரன் முன் மாதிரி மனிதன் என்று அவளுடைய தந்தை நம்பிக் கொண்டிருக்கிறார். அவனிடமிருந்து பொருத்தமற்ற நடவடிக்கைகள் வெளிப்பட்டன என்று அவரை நம்ப வைப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். புஷ்பாவின் திருமணத்துடன் அவர் வாழ்க்கையில் ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றி முடித்துவிட்டார். அதை மீண்டும் எடுப்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இனி எந்தவித சிந்தனையும் இல்லாமல் உலகப் பயணம் செய்வதுதான் அவருடைய வாழ்க்கையின் ஆசையாக இருந்தது.
அதற்கான நேரம் நெருங்கி வந்துவிட்டது மாதிரிதான். மகன் இங்கிலாந்திலிருந்து திரும்பி வருவது, இளைய மகளின் திருமணத்தை முடிப்பது ஆகிய காரியங்கள் நடந்து முடிந்துவிட்டால் அவர் உலக உறவுகளில் இருந்து விடுதலை அடைந்துவிடுவார். புஷ்பா மீண்டும் அவருடைய தலையில் ஒரு சுமையாக உட்கார்ந்து, மிகப்பெரிய வாழ்க்கையின் ஆசைக்கு தடை உண்டாக்க விரும்பவில்லை. பிறகு அவளுக்கு வேறு ஒரு இடம் எங்கே இருக்கிறது? எங்கும் இல்லை. அப்படியென்றால் இந்த வீட்டிலேயே கிடந்து வாழ்க்கையின் முடிவு வரை அவமானத்தைச் சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமா?
சாதுகுமாரன் வந்து அருகில் உட்கார்ந்தான். புஷ்பா பரபரப்புடன் கேட்டாள்: "எப்போ பம்பாய்க்குப் போகணும்?''
சாது கூச்சத்துடன் சொன்னான்: "நாளைக்குப் போகணும். ஆனால், எனக்குப் போக வேண்டும் என்று தோன்றவில்லை. போறதுக்கும் வர்றதுக்கும் பணம் வேணும். வீட்டில் பணம் இல்லை. யாரையும் தொல்லைப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. பிறகு... பம்பாய்க்குப் போக வேண்டியதன் தேவைதான் என்ன? தொண்ணூறு சதவிகிதம் மனிதர்கள் பட்டினி கிடக்கும் நாட்டில், பத்தோ இருபதோ ஆட்கள் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துத் திரிவது முட்டாள்தனமான ஒரு விஷயம். நான் போக விரும்பவில்லை.''
புஷ்பா உற்சாகமூட்டினாள்: "அண்ணன் பணம் தருவாரே!''
சாது புன்னகைத்தான். "அண்ணன் தர மாட்டார். அப்பாவின் கழுத்தைப் பிடிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அப்பாவைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அண்ணனிடம் இதைச் சொல்லாதீங்க அண்ணி. நான் காலைப் பிடிக்கிறேன்.''
மைத்துனனின் இந்த எளிய, மென்மையான நடவடிக்கையைப் பார்த்து புஷ்பாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. படிப்பைத் தூக்கியெறிந்து விட்டு சத்தியாக்கிரக போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்து, இரண்டு முறை சிறைக்குச் சென்று, அங்கு சிறை அதிகாரிகளுடன் சண்டை போட்டதற்காக மூன்று மாதங்கள் இருட்டறைக்குள் கிடந்த பெருமைக்குரிய அந்த இருபத்து இரண்டு வயது இளைஞன், தன் அண்ணணுக்கு இந்த அளவிற்கு பயந்தான்- பூதம் என்பதைப் போல! அவள் கேலிக் குரலில் சொன்னாள்: "நான் சொல்வேன்.''
"அண்ணி, நீங்க சொல்ல மாட்டீங்க. அதற்கான தைரியம் உங்களுக்கு இல்லை.''
"அது எப்படித் தெரிந்தது?''
"முகத்தைப் பார்த்து. சொல்லப்போனால் இன்னொன்றுகூட சொல்றேன். இன்னைக்கு அண்ணன் என்னவோ சொல்லி சண்டை போட்டிருக்காரு.''
புஷ்பாவின் முகத்தில் நாணம்.
"முற்றிலும் தப்பு. அண்ணன் என்ன சொல்லியிருப்பார்?''
"சரிதான்... சத்தியம் செய்ய முடியுமா?''
"ஏன் சத்தியம் பண்ணணும்? நான் எதற்காவது சத்தியம் செய்திருப்பதைப் பார்த்திருக்கிறாயா?''
"அண்ணன் என்னவோ சொல்லியிருக்கார். அது மட்டும் உண்மை. இல்லாவிட்டால் அண்ணி, உங்க முகம் இந்த அளவிற்கு ஒளி குறைந்து இருப்பதற்குக் காரணம் என்ன? அண்ணனிடம் பேசுவதற்கு எனக்கு தைரியம் இல்லை. இல்லாவிட்டால் தேவையில்லாமல் பிணத்தைப் போட்டு ஏன் அடிக்க வேண்டும் என்று கேட்டிருப்பேன். விற்றுவிட்ட பொருட்களுக்காக அப்பாவைத் திட்டுவதும், நீதிமன்றம் ஏறுவதும் நல்லதாக எனக்குப் படவில்லை. உலகத்தில் ஏழைகளும் இருக்கிறார்கள் அல்லவா? இல்லாவிட்டால் எல்லாரும் வசதி படைத்தவர்களாக ஆகட்டும். அண்ணி, நான் மனம் திறந்து கூறுகிறேன். ஒரு பணக்காரனாக ஆக வேண்டும் என்ற விஷயத்தை நினைத்துப் பார்ப்பதற்குக்கூட எனக்கு பயமாக இருக்கிறது. என் மனதில் என்ன நடக்கும் என்று தெரியாது. இவ்வளவு அதிகமான வறுமையின் பிடியில் சிக்கிக் கிடப்பவர்களுக்கு மத்தியில் பணக்காரனாக ஆவது தனி சுயநலமாக எனக்குப் படுகிறது. என்னைப் போன்றவர்கள் பிச்சை எடுத்துத் திரியும்போது - நான் வெட்கப்படுறேன். நாம் இரண்டு நேரமும் நெய் புரட்டிய ரொட்டி சாப்பிடுறோம், பால் குடிக்கிறோம், முந்திரியும் ஆரஞ்சுப் பழமும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நூறில் தொண்ணூற்றொன்பது ஆட்கள் இந்தப் பொருட்களைப் பார்க்கக்கூட முடியாதவர்களாக இருக்கிறார்கள். நமக்கு என்ன தனிச்சிறப்பு இருக்கிறது? கொம்பும் தும்பிக்கையும் இருக்கிறதா என்ன?''
புஷ்பா இந்த விதமான சிந்தனை கொண்டவளாக இல்லாமலிருந்தாலும், சாதுவின் கள்ளங்கபடமற்ற உண்மைத் தன்மை மீது மரியாதை வைத்திருந்தாள். அவள் கேட்டாள்: "உனக்கு அந்த அளவிற்குப் படிப்பும் வாசிப்பும் இல்லையே! பிறகு... இப்படிப்பட்ட கருத்துகள் எங்கேயிருந்து தலைக்குள் நுழைந்தன?''
சாது எழுந்து கொண்டே சொன்னான்: "ஒருவேளை, நான் போன பிறவியில் பிச்சைக்காரனாக இருந்திருக்க வேண்டும்.''
புஷ்பா அவனுடைய கையைப் பிடித்து உட்கார வைத்துக் கொண்டே சொன்னாள்: "பாவம் என் தங்கை... உடுப்பதற்கும் அணிவதற்கும் ஏங்குவாளே!''
"நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்.''
"எங்கிருந்தாவது திருமண ஆலோசனை வர வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டு இருப்பே!''
"இல்லை, அண்ணி... நான் பொய் சொல்லவில்லை. திருமணம் செய்து கொள்வதைப் பற்றி சிந்திப்பதற்கே என்னால் முடியவில்லை. வாழ்க்கையை வைத்து உலகத்திற்கு ஏதாவது பயன் உண்டாக்கணும். இங்கு சேவை செய்வதற்கு ஆட்கள் தேவை என்ற நிலை இருக்க, கொஞ்ச ஆட்களாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும். இனி எப்போதாவது திருமணம் செய்துகொள்ளும் பட்சம், என்னுடன் வறுமையை அனுபவிக்கவும், என் வாழ்க்கையில் முழுமையான மனதுடன் பங்கு கொள்ளவும் தயார் நிலையில் இருப்பவளுமாக அவள் இருப்பாள்.''
புஷ்பா அந்த உறுதிமொழியை வெறுப்புடன் தள்ளிவிட்டாள். "முதலில் எல்லா இளைஞர்களும் இப்படிப்பட்ட கற்பனைகளை மனதில் வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால், கல்யாணத்திற்கு நாட்கள் தாமதமாகும்போது, உறுதியில் மாறுதல்கள் உண்டாக ஆரம்பிக்கும்.''
சாதுகுமாரனுக்கு கோபம் வந்துவிட்டது. "நான் அப்படிப்பட்ட இளைஞர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவன் இல்லை, அண்ணி!''
புஷ்பா கிண்டல் பண்ணினாள். "உன் மனதில் ஒரு இளம் காதலி இருப்பாள்.''
"நான் ஏதாவது சொன்னால் நீங்கள் கிண்டல் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள். அதனால்தான் நான் அருகில் வருவதில்லை.''
"சரி... உண்மையைச் சொல்லு. பங்கஜாவைப் போல ஒரு இளம் பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள மாட்டாயா?''
சாதுகுமாரன் எழுந்து நடந்தான். புஷ்பா தடுத்தாலும், அவன் கையிலிருந்து விடுவித்துக்கொண்டு அங்கிருந்து போயே விட்டான். கொள்கைப் பிடிப்பாளனும் சரளமாகப் பழகக் கூடியவனும் நல்ல குணங்களைக் கொண்டவனுமான அந்த இளைஞன் அங்கு வந்தது புஷ்பாவின் வாடிய மனதில் உற்சாகத்தை உண்டாக்கிவிட்டிருந்தது. அவனுடைய உள்மனம் கடினமானதாகவும் கம்பீரம் கொண்டதாகவும் இருந்தாலும், வெளியே மிகவும் எளிமையானவனாக இருந்தான். சந்தகுமாரனிடமிருந்து தன்னுடைய உரிமைகளை ஒவ்வொரு நிமிடமும் பாதுகாத்து வைக்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு இருந்தது. எந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு உண்டாகும் என்று நிச்சயம் இல்லாததால் அவள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியதிருந்தது.
சைவ்யா எந்த நேரத்திலும் அவளை அடக்கி ஆள்வதற்கு விருப்பத்துடன் இருந்தாள். அவள்தான் வீட்டின் தலைவி என்பதையும் வீட்டில் இருக்கும் எல்லாரும் இந்தத் தலைமைத் தன்மையை மதிக்க வேண்டுமென்பதையும் நிமிட நேரத்திற்குக்கூட யாரும் மறக்கவில்லை. தேவகுமாரன் எல்லா காரியங்களையும் சந்தகுமாரனிடம் ஒப்படைத்தபோது, உண்மையாகவே சைவ்யாவை சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கிவிட்டிருந்தார். கணவர் இல்லத்தின் நாயகனாக இருந்தபோதுதான் வீட்டின் நாயகியாக இருந்தோம் என்ற விஷயத்தை அவள் மறந்து விட்டாள். அவள் ஆசீர்வதிப்பதால் மட்டுமே வழிபடப்படும் ஒரு தேவியாக இப்போது இருக்கிறாள். மனதில் இருக்கும் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக எப்போதும் தன்னுடைய அதிகாரங்களை அவள் சோதித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். இந்தத் திருட்டுத்தனம் ஒரு நோயைப் போல மனதில் இடம் பிடித்திருந்தது. ஜீரண சக்தி குறையும்போது உணவுமீது ஈடுபாடு அதிகமாகும். புஷ்பாவிற்கு அவளிடம் பேசுவதற்கு பயமாக இருந்தது. அருகில் போவதற்கே தைரியம் இல்லாமலிருந்தது. இனி பங்கஜா! அவளுக்கு நோயே வேலை செய்வதுதான். ஓய்வு, விளையாட்டு எல்லாமே வேலைதான். குறை கூற அவள் படித்ததே இல்லை. தேவகுமாரனின் தனி குணம். யாராவது திட்டினால் தலையைக் குனிந்துகொண்டு கேட்பாள். மனதில் வருத்தமோ கோபமோ இருக்காது. அதிகாலையில் இருந்து இரவு பத்து பதினொன்று மணி வரை மூச்சு விடுவதற்குக்கூட நேரம் இருக்காது. யாருடைய சட்டையின் பொத்தான் விழுந்திருந்தாலும், பங்கஜா தைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருடைய ஆடைகளும் எங்கெங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்ற விஷயம் பங்கஜாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு வேலை செய்தும், அவள் வாசிப்பதற்கும் பொழுது போக்கு விஷயங்களுக்கும் நேரத்தை ஒதுக்குவாள். வீட்டிலிருக்கும் எல்லா தலையணைகளும் பங்கஜாவின் கலைத்திறமையைக் காட்டும். மேஜை விரிப்புகள், குஷன்கள், பெட்டி உறைகள்- எல்லாவற்றிலும் அவளுடைய கைத்திறமை நிறைந்து நின்றிருந்தன. பட்டிலும், வெள்ளைத் துணியிலும் பல வகைப்பட்ட பூக்கள், பறவைகள் ஆகியவற்றைப் படங்களாக ஆக்கி, சட்டம் போட்டு அவை முன்னறையின் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தன. இசையிலும் ஆர்வம் உண்டு. நன்றாக வீணை வாசிப்பாள். ஹார்மோனியம் சாதாரணமாகவே வாசிக்கத் தெரியும். ஆனால், மற்றவர்களுக்கு முன்னால் அவளுக்கு கூச்சம் அதிகம். இவற்றுடன் பள்ளிக்கும் செல்கிறாள். நல்ல மாணவிகளின் கூட்டத்தில் ஒருத்தி. பாடம் சொல்லித் தருவதற்காக மாதம் பதினைந்து ரூபாய் சம்பளமாகக் கிடைக்கிறது. அவளுக்கு புஷ்பாவிற்கு அருகில் அமர்ந்து விளையாட்டாகப் பேசிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. விளையாட்டாகப் பேசவும் தெரியாது. கேட்டால் புரிவதும் இல்லை. பதிலும் கூறுவதில்லை. புஷ்பாவிற்கு மனதிலிருக்கும் சுமையைக் குறைப்பதற்குக் கிடைத்திருப்பவன் சாது மட்டும்தான். அவளுடைய கணவனோ அதற்கு நேர்மாறாக, தன்னுடைய சுமையையும் சேர்த்து அவள்மீது சுமத்திக் கொண்டிருக்கிறான்.
சாது போனவுடன் புஷ்பா மீண்டும் அதே சிந்தனையில் மூழ்கினாள். இந்தச் சுமையை எப்படித் தாங்கிக் கொள்வது? அவளுடைய கணவன் அவள்மீது அதிகாரம் செலுத்துகிறான். எவ்வளவுதான் தொல்லைகள் தந்தாலும் அவளால் எங்கும் போக முடியாது. எதையும் பேச முடியாது என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆமாம்- அவன் நினைப்பது சரிதான். அவளுக்கு உயர்ந்த பொருட்கள் மீதுதான் விருப்பம். நல்ல உணவைச் சாப்பிட வேண்டும். சந்தோஷத்துடன் வாழ வேண்டும். அவள் சுகபோகங்களை வேண்டாம் என்று சொன்னால், தியாகம் பண்ணக் கற்றுக் கொண்டால், பிறகு அவள்மீது யார் அதிகாரம் செலுத்த முடியும்? பிறகு அவள் யாருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியதிருக்கும்?
மாலை நேரத்தில் புஷ்பா ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். இருபது இருபத்தைந்து குழந்தைகளும் பெண்களும் கூட்டமாகச் சேர்ந்து ஒரே குரலில் பாட்டு பாடியவாறு போய்க் கொண்டிருந்தார்கள். யாருடைய உடலிலும் தேவையான ஆடைகள்கூட இல்லை. தலையிலும் முகத்திலும் அழுக்கு படிந்திருந்தது. மாதக் கணக்காக எண்ணெய் தேய்க்காததைப் போல் தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் கல்லையும் சுண்ணாம்பையும் சுமந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரும் தொழிலாளர்கள் அவர்கள். பகல் முழுவதும் வெயிலால் சுட்டெரிக்கப்பட்ட நிலையில் இருப்பார்கள். முதலாளியின் பயமுறுத்தலையும் தட்டுதல்களையும் சகித்துக் கொள்ள வேண்டியதிருக்கும். ஒரு வேளை, உச்சிப் பொழுதில் ஒரு பிடி வறுத்த கடலை மட்டுமே உணவாக இருக்கலாம். எனினும், என்ன மனத் திருப்தி என்ன சுதந்திர உணர்வு! அவர்களுடைய மனத் திருப்தி, விடுதலை உணர்வு ஆகியவற்றின் ரகசியம் என்னவாக இருக்கும்?
பயப்படுவதால் மட்டும் மக்கள் சிலரை மதிப்பது உண்டு. அந்த வகையில் மதிக்கப்படும் ஒரு மனிதனாக சின்ஹா இருந்தான். நேரில் பார்க்கும்போது எல்லாரும் பாராட்டுவார்கள். நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். பின்னால் திரும்பினால் முணுமுணுப்பார்கள். கெட்டவன், கடித்தால் விஷம் இறங்காத ஜாதி. அவனுடைய வேலை வழக்கை உண்டாக்குவது. கவிஞன் தன் கற்பனையிலிருந்து முழுமையான காவியத்தைப் படைப்பதைப் போல, சின்ஹா கற்பனையைப் பயன்படுத்தி வழக்குகளைப் படைத்தெடுப்பான். அவன் ஏன் கவிஞனாக ஆகவில்லை? கவிஞனாக ஆகியிருந்தால், இலக்கியத்திற்கு மிகப் பெரிய சொத்தாக ஆகியிருப்பான் என்றாலும், அவனால் எதையும் அடைந்திருக்க முடியாது. சட்டத்தைப் படித்ததால் அவனுக்கு எல்லா வகைப்பட்ட திறமைகளும் கிடைத்திருந்தன. ஆடம்பரப் பொருட்கள் நிறைந்த மாளிகையில் வாழ்ந்து கொண்டிருந்தான். பெரிய பெரிய பணக்காரர்கள், பதவியில் இருக்கும் அதிகாரிகள் ஆகியோரின் நட்பு இருந்தது. பெயரும் பெருமையும் கிடைத்திருந்தன. பேனா முனையில் வழக்கிற்கு உயிர் கொடுக்கக்கூடிய வார்த்தைப் பயன்படுத்தல்... கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பதைப் போன்ற சம்பவங்களையும் சந்தர்ப்பங்களையும் அவனே உருவாக்குவான். பெரிய பெரிய கூர்மையான அறிவு கொண்டவர்கள்கூட அவனுடைய நிலையை அடைய முடியாது. கற்பனை என்று நினைத்துப் பார்க்க முடியாதவையாகவும் இருக்கும். அவன் சந்தகுமாரனின் நண்பனாக இருந்தான். இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். சந்தகுமாரனின் மனதில் ஒரு எண்ணம் உதயமானது. அதற்கு சின்ஹா நிறமும் வடிவமும் தந்து உயிருள்ள பொம்மையாக ஆக்கி எழுந்து நிற்க வைத்தான். இன்று வழக்கை நீதிமன்றத்தில் கொடுக்க முடிவு செய்திருக்கிறான்.
மணி ஒன்பது. கட்சிக்காரர்களும் வக்கீல்களும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சின்ஹா தன்னுடைய பெரிய அறையில் இருந்த மேஜைமீது கால்களை நீட்டி வைத்தவாறு நாற்காலியில் சாய்ந்திருந்தான். வெளுத்த, பளபளப்பான மனிதன். உயரமான, மெலிந்த சரீரம். நீளமான தலை முடியை பின்பக்கத்தில் இழுத்துக் கட்டியிருக்கிறான். தடிமனான மீசை. மூக்கின் மேல் கண்ணாடி. உதட்டில் சிகரெட். முகத்தில் சந்தோஷத்தின் பிரகாசம்.
கண்களில் பெருமை. ஒரு பெரிய பணக்காரனின் தன்மை. சந்தகுமாரன் நீளமான கைகளைக் கொண்ட சட்டையும் உரோமத்தால் ஆன தொப்பியும் அணிந்து சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
சின்ஹா அவனைத் தேற்றினான். "நீங்க தேவையில்லாமல் பயப்படுறீங்க. நான் உறுதியான குரலில் கூறுகிறேன். நமக்குத்தான் வெற்றி. பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்றுமே பண்ண முடியாத ஒப்பந்தங்களை ரத்து செய்ய வைத்த நூறு நூறு உதாரணங்கள் இருக்கின்றன. உறுதியான சாட்சி இருக்க வேண்டும். பிறகு காரியம் எளிதில் நடந்துவிடும்.''
சந்தகுமாரன் கவலை நிறைந்த சூழ்நிலையில் இருந்தான். "ஆனால், அப்பாவை சம்மதிக்க வைக்கணுமே! அவருடைய சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காது.''
"அவரை நேரடியாக அழைத்துக்கொண்டு வர வேண்டியது உங்களுடைய வேலை.''
"ஆனால், அவரை நேரடியாக அழைத்துக்கொண்டு வருவது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.''
"அப்படியென்றால் அதற்கும் மாற்று வழி இருக்கு. அவருடைய சிந்தனை ஆற்றலில் பிரச்சினை இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் காட்ட வேண்டும்.''
"அதை ஆதாரத்துடன் காட்டுவது என்பது எளிதான விஷயம் இல்லை. பெரிய நூல்களை எழுதியிருக்கிறார். மிகப் பெரிய மனிதர்களின் கூட்டத்தில் தலைவராக நினைக்கப்படுகிறார். நகரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் அவருடைய அறிவாற்றலைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஒருவரின் மூளையில் பிரச்சினை இருக்கிறது என்று எப்படி ஆதாரத்துடன் கேட்க முடியும்?''
சின்ஹா தன்னம்பிக்கை நிறைந்த குரலில் சொன்னான். "அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். புத்தகம் எழுதும் விஷயம் வேறு. அறிவும் சுய உணர்வும் சீரான அளவில் இருப்பது வேறு. நான் கூறுகிறேன். இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் கிறுக்கர்கள். ஒருவகை பைத்தியக்காரர்கள். மற்றவர்களின் பாராட்டிற்காக மட்டுமே இவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சுய உணர்வு கொண்டவர்களாக இருந்திருந்தால், புத்தகம் எழுதுவதற்காக உட்கார்ந்திருக்காமல் தூண்டில் போடவோ தரகர் வேலை செய்யவோ போயிருப்பார்கள். ஏனென்றால், செய்யும் வேலைக்குப் பணம் கிடைக்கும். தூக்கம் இல்லாமை, ஜீரணமாகாத தன்மை, சயரோகம்- இவைதான் புத்தகம் எழுதுபவனுக்குக் கிடைக்கும் சன்மானம். நீங்கள் பணத்தைத் தயார் பண்ணுங்கள். மீதி விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். ஆமாம்... இன்றைக்கு சாயங்காலமே க்ளப்பிற்குச் செல்ல வேண்டும். இப்போதே போட்டி ஆரம்பமாகிவிட்டது. திப்பியைப் பிடிப்பதற்கு வலை வீச வேண்டும். அவள் சப் ஜட்ஜின் ஒரே மகள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவளை கைக்குள் போட முடிந்தால், உங்களுடைய காரியம் வெற்றி பெற்றுவிட்டது மாதிரிதான். திப்பியின் வார்த்தைகளை சப் ஜட்ஜ் எந்தச் சமயத்திலும் மறுக்க மாட்டார். எனக்கு இந்த விஷயத்தில் உங்களைவிட திறமை இருக்கிறது. ஆனால், நான் இப்போது ஒரு கொலை வழக்கைப் பற்றி வாதாடிக் கொண்டிருக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் சிவில் சர்ஜன் மிஸ்டர் கம்மத்தின் வெள்ளை நிறத்தைக் கொண்ட மகள் சமீபத்தில் என்னுடைய காதலியாக ஆகியிருக்கிறாள். சிவில் சர்ஜனுக்கு என்மீது இருக்கும் ஆர்வத்தைப் பற்றிக் கூறுவதற்கில்லை. அந்தப் பிசாசைத் திருமணம் செய்து கொள்வதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை. தடிமனான உதடுகள், சப்பிப் போன மார்பகங்கள். எனினும், தன்னை விட அழகானவர்கள் உலகத்திலேயே இல்லை என்பதைப் போல நடந்து கொள்வாள். பெண்களுக்குத் தங்களுடைய அழகு விஷயத்தில் இந்த மாதிரி ஆணவம் எங்கிருந்து உண்டாகிறது என்பதை இதுவரை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அழகாக இருப்பவர்கள் ஆணவமாக நடந்து கொள்வதைக்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், சிலருடைய தோற்றத்தைப் பார்க்கும்போது வாந்தியே வந்துவிடும். அவர்கள்தான் தங்களை வானுலகத்து தேவதைகள் என்பதாக நினைத்து நடந்து கொள்கிறார்கள். அவளுக்குப் பின்னால் காதலித்துக் கொண்டு நடப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம். ஆனால், மிகப் பெரிய தொகை கையில் கிடைக்கக்கூடிய காரியம். தவம் இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. திப்பியை எடுத்துக் கொண்டால், உண்மையிலேயே அவள் ஒரு வானுலகத்து தேவதைதான். அவ்வளவு எளிதாக அவள் கையில் கிடைக்கக் கூடியவளும் இல்லை. எல்லா வகையான திறமைகளையும் காட்ட வேண்டியது இருக்கும்.''
"இந்தக் கலையை நான் நன்றாகப் படித்திருக்கிறேன்.''
"அப்படியென்றால், இன்றைக்கு சாயங்காலம் க்ளப்பிற்கு வந்திருங்க.''
"நிச்சயமா.''
"பணத்தையும் தயார் பண்ணனும்.''
"அது இல்லாமல் முடியாதே!''
இப்படி சின்ஹாவும் சந்தகுமாரனும் சேர்ந்து கோட்டையை வளைப்பதற்கான வேலையை ஆரம்பித்தார்கள். சந்தகுமாரன் அந்த அளவிற்கு ரசிகனோ ஆடம்பரப் பிரியனோ அல்ல. ஆனால், நடிப்பதற்குத் தெரியும். அழகான தோற்றத்தைக் கொண்டவனாக இருந்தான். இனிமையாகப் பேசுவான். வெளுத்த நிறம், தடிமனான உடல், புன்னகை தவழும் உதடுகள், புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் முகம். சூட் அணிந்து வாக்கிங் ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டே நடக்கும்போது, யாருடைய கண்களிலாவது பட்டு விடுவான். டென்னிஸ், ப்ரிஜ் போன்ற நாகரீக விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தான். திப்பியுடன் நெருக்கமாவதற்கு அவனுக்குத் தாமதம் ஆகாது. திப்பி பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தாள். பெருமையும் அறிவும் கொண்டவள். என்ன கேட்டாலும், உடனடியாக பதில் கூறுவாள். தானே படிக்கும் பழக்கம் குறைவு. மிகவும் குறைவாகவே படிப்பாள். ஆனால், உலகத்தின் நிலைமையைப் புரிந்து வைத்திருந்தாள். தன்னுடைய வெளியுலக அறிவிற்கு மெருகு சேர்த்து உயர்வான தோற்றத்தைத் தர அவளால் முடியும். எந்த விஷயம் கிடைத்தாலும், ஆழமான அறிவியல் சித்தாந்தமாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி ஏதாவது ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவாள். எப்படிப்பட்ட பெரிய விஷயத்தைப் பற்றியும் எளிமையான மொழியில் உரையாடக்கூடிய திறமை அவளுக்கு இருந்தது. நடந்துகொள்ளும் முறைகளில் சிறிதளவு மரியாதைக் குறைவு உண்டானாலும், அதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவளுடைய வீட்டில் ஒரு வேலைக்காரனோ ஒரு வேலைக்காரியோ நிரந்தரமாக வேலை செய்ய முடியாது. மற்றவர்களை இரக்கமே இல்லாமல் விமர்சிப்பது என்றால் அவளுக்கு ஆனந்தமாக இருக்கும். யாராவது ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ மோசமான செயலோ தேவையில்லாத நடவடிக்கையோ இருப்பதைப் பார்த்தால், உதடுகளையோ புருவங்களையோ பயன்படுத்தி அவள் அதற்கு எதிரான தன்னுடைய மன நிலையை வெளிப்படுத்துவாள். பெண்களின் கூட்டத்தில் அவளுடைய பார்வை அவர்களுடைய ஆடைகளிலும், நகைகள் மீதும் இருக்கும். ஆண்களின் கூட்டத்தில் அவர்களுடைய மனத்தூய்மையின்மீது அவளுடைய பார்வை இருக்கும். தன்னுடைய அழகான தோற்றத்தைப் பற்றி அவளுக்கு நல்ல எண்ணம் உண்டு. இருப்பதிலேயே நல்ல உடைகளை அணிந்து அதற்கு அவள் மேலும் அழகு சேர்ப்பாள். நகைகளை அணிய பெரிய அளவில் ஆர்வம் இல்லையென்றாலும், தன்னுடைய அழகுப் பொருட்கள் இருக்கும் பெட்டியில் அவை பிரகாசிப்பதைப் பார்த்து சந்தோஷப்படுவது உண்டு.
ஒரே நாளில் பல தடவை அவள் புதிய புதிய ஆடைகளை எடுத்து அணிவாள். ஆனால், ஆண்களை வசீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதுகூட இல்லை. தன்னுடைய அழகான தோற்றத்தின்மீது அவளுக்கு ஒரு பெருமை இருந்தது. அவ்வளவுதான்.
அதே நேரத்தில் திப்பி அந்த அளவிற்கு தாராளமாகப் பழகக் கூடிய குணத்தைக் கொண்டவளாகவும் இல்லை. இளைஞர்களின் காதல் வார்த்தைகளுக்கு அவள் பதிலே சொல்லாமல் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருப்பாள். அந்த அலங்கார வார்த்தைகளுக்கு, சாதாரண முறையில் அமைந்த அழகைப் பற்றிய புகழ்ச்சி வார்த்தைகள் என்பதைத் தாண்டி எந்தவொரு மதிப்பும் இருப்பதாக அவள் நினைக்கவில்லை. இளைஞர்கள் உற்சாகப்படுத்துதல் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள். ஆனால், சந்தகுமாரனின் நடத்தையில் ஏதோ ரகசியம் இருக்கிறது என்பதை அவள் உள்ளுணர்வு மூலம் உணர்ந்தாள். மற்ற இளைஞர்களிடம் அவள் பார்த்திருந்த நட்புணர்வு இல்லாமையும் அடக்கமின்மையும் அவனிடம் சிறிதுகூட இல்லாமலிருந்தது. சந்தகுமாரனின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கட்டுப்பாடு இருந்தது. கூர்மையான கவனம் இருந்தது. அதனால் அவள் அவனைப் படிக்கவும், அவனுடைய மனதில் இருக்கும் ரகசியங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்தாள். சந்தகுமாரனின் பொறுமையும் சிந்தனையும் அவனை திப்பியை நோக்கி இழுக்கச் செய்தன. அவன் அவளுக்கு முன்னால் பொருத்தமில்லாத திருமணத்தின் ஒரு தியாகியாக தன்னைக் காட்டிக் கொண்டபோது, அவளுக்குப் பரிதாபம் உண்டானது. புஷ்பாவின் அழகான தோற்றத்தைப் பற்றி அவன் தன் நோக்கத்திற்கு உதவும் வகையில் பாராட்டிப் பேசினான். திப்பிக்கு முன்னால் அவள் ஒன்றுமே இல்லை என்றும் சொன்னான். புஷ்பாவின் அறிவில்லாமையைப் பற்றியும், நாகரீகத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பதைப் பற்றியும் குறைபட்டுக் கொண்டான். அவை, புஷ்பாவைச் சந்தித்தால், சந்தகுமாரனுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தை திப்பியிடம் உண்டாக்கின.
ஒரு நாள் அவள் சந்தகுமாரனிடம் கேட்டாள்: "நீங்கள் அவளை விட்டு வரக்கூடாதா?''
சந்தகுமாரன் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினான்: "எப்படி விட்டு வர முடியும் மிஸ் திரிவேணி? சமுதாயத்தில் வாழுறப்போ சமுதாயத்தின் நடைமுறைகளை அனுசரிக்க வேண்டியதிருக்கும். பிறகு... புஷ்பா நிரபராதி. அவள் தன்னளவில் இப்படி ஆகிவிட்டாள். தெய்வம் அல்லது சூழ்நிலைகள் அவளை இப்படி ஆக்கிவிட்டன.
"தவில் கழுத்தில் விழுந்துவிட்டது என்பதற்காக அதை அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்மீது எனக்கு இரக்கமே உண்டாவதில்லை. அந்தத் தவிலை கழுத்திலிருந்து எடுத்து ஆற்றில் எறிய வேண்டும் என்று நான் கூறுகிறேன். எனக்கு முடியுமானால், நானே அதை எடுத்து எறிவேன்.''
சந்தகுமாரன் தன்னுடைய தந்திரம் பலிப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டான். "ஆனால், அவளுடைய நிலை என்ன ஆவது?'' என்று அவன் கேட்டான். திப்பி அவனைத் தேற்றினாள்: "நீங்கள் ஏன் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்? பிறந்த வீட்டிற்குப் போவாள். ஏதாவது வேலை செய்து வாழ்வாள். இல்லாவிட்டால் தனக்குப் பொருத்தமான யாரையாவது கண்டுபிடித்துத் திருமணம் செய்துகொள்வாள்.''
சந்தகுமாரன் விழுந்து விழுந்து சிரித்தான். "திப்பி, உங்களுக்கு கற்பனை, உண்மை இவற்றுக்கு இடையில் இருக்கும் வித்தியாசம் கூட புரியவில்லை. என்ன முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க?''
மிகுந்த கவலையுடன் கூறுவதைப் போல அவன் தொடர்ந்து சொன்னான்: "இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சினை, மிஸ் திரிவேணி. புஷ்பாவின் நடத்தையால் ஒவ்வொரு நாளும் என்னுடைய ரத்தம் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நான் என்னை நானே கழுத்தை அறுத்துக் கொண்டாலும், சமூக நீதியால் எதுவும் சொல்ல முடியாது. இந்தச் சூழ்நிலையில், வெளியேற்றுவது நடக்காத விஷயம். இனி வெளியேற்ற வேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இப்படியொரு குற்றச்சாட்டைக் கூற வேண்டும்- நம்பிக்கை மோசம். ஆனால், புஷ்பாவிடம் வேறு எந்த கெட்ட பழக்கங்கள் இருந்தாலும், இந்த கெட்ட விஷயத்தைச் சொல்லிக் குறை கூறவே முடியாது.''
மாலை நேரம் ஆனது. திப்பி வேலைக்காரனை அழைத்து தோட்டத்தில் வட்ட வடிவத்தில் இருந்த முற்றத்தில் நாற்காலிகளைப் போடச் சொல்லிவிட்டு வெளியே வந்தாள். வேலைக்காரன் நாற்காலிகளைப் போட்டுவிட்டுப் போக ஆரம்பித்தபோது, திப்பி திட்டினாள்: "நாற்காலிகளை ஏன் துடைக்கவில்லை? தூசி படிந்திருப்பதைப் பார்ப்பதற்கு கண்கள் இல்லையா? எவ்வளவு சொன்னாலும் உனக்கு ஞாபகமே இல்லை. தப்பு செய்யக்கூடாது என்பது ஞாபகத்திலேயே இல்லை.''
வேலைக்காரன் நாற்காலிகளைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு மீண்டும் போகத் தொடங்கினான்.
திப்பி அதற்குப் பிறகும் திட்டினாள்: "நீ இப்படி எங்கே ஓடுறே? மேஜையைப் போட்டாயா? தேநீரை மேஜை இல்லாமல் உன் தலையில் வைத்தா பருகுவது?''
அவள் வேலைக்காரனின் இரண்டு காதுகளையும் பிடித்துத் திருகி, ஒரு அடி கொடுத்தவாறு சொன்னாள்: "கிழட்டுக் கழுதை. முழுமையான முட்டாள். தலைக்கு உள்ளே சாணம்தான் நிறைக்கப்பட்டிருக்கு.''
வயதான வேலைக்காரன் நீண்ட காலமாக அங்கு சேவகனாக இருக்கிறான். எஜமானி அவனை அன்புடன் வைத்திருந்தாள். அவள் மரணத்தைத் தழுவிய பிறகு, குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு ஆசைகள் எதுவும் இல்லாததால், வேறு எங்காவது சென்றால் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் சம்பளத்தில் வேலைக்கு வைக்க ஆட்கள் இருந்தாலும், எஜமானிமீது வைத்திருந்த மரியாதை காரணமாக எதிர்ப்பையும் அவமானத்தையும் தாங்கிக்கொண்டு அவன் அங்கேயே இருந்து கொண்டிருக்கிறான். சப் ஜட்ஜும் அவனை வாய்க்கு வந்தபடி திட்டுவார். ஆனால், அந்தத் திட்டுதலை நினைத்து அவன் கவலைப்பட்டதில்லை. அவர் வயதில் சம நிலையைக் கொண்டவர். ஆனால், திரிவேணியை அவன் இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து திரிந்தவன். அந்தத் திப்பிதான் இப்போது திட்டவும் அடிக்கவும் செய்கிறாள். அதனால் அவனுடைய உடலுக்கு உண்டானதை விட எவ்வளவோ அதிகமான காயம் மனதிற்குத்தான் உண்டாகியிருக்கிறது.
அவன் இதற்கு முன்பு இரண்டு வீடுகளில் வேலை செய்திருக்கிறான். இரண்டு இடங்களிலும் பிள்ளைகளும் மருமக்களுமான பெண்கள் இருந்தார்கள். அவர்கள் அவனை நல்ல முறையில் நடத்தினார்கள்.
மருமக்கள் வெட்கப்பட்டுக் கொண்டு அவனுக்கு நேராக வரவே மாட்டார்கள். அவன் ஏதாவது தவறு செய்திருந்தால்கூட, அவர்கள் அதை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வார்கள். அவனுடைய எஜமானி நல்ல குணநலம் கொண்ட பெண்ணாக இருந்தாள். அவள் எந்தச் சமயத்திலும் அவனுக்கு எதிராகக் கூறியதே இல்லை. எஜமானன் ஏதாவது சொன்னால், அவள் அவன் பக்கம் நின்று கொண்டு வாதாடுவாள். இந்தப் பெண் பிள்ளை வயது வேறுபாட்டைக்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறாள். படிப்பதால் விவேகம் உண்டாகும் என்று ஆட்கள் கூறுகிறார்கள். இதுதான் விவேகமா? அவனுடைய மனதில் புரட்சி எண்ணம் உண்டானது.
இந்த அவமானத்தை ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? தன்னுடைய சொந்த மகளைவிட வயது குறைவான அந்த இளம் பெண்ணின் கையால் முகத்தில் ஏன் அடி வாங்க வேண்டும்? தான் சம்பாதித்த சொத்தைவிட சற்றும் குறையாத மதிப்பு வயதிற்கும் இருக்கிறது. அவன் அதன்மீது வைத்திருக்கும் பிரியத்தைத் தன்னுடைய உரிமையாகக் கருதுகிறான். அந்த இடத்திற்கு அவமானம் உண்டாகும்போது, உயிர் ஸ்தானத்தில் அடி விழுந்ததைப் போல உணர்கிறான்.
குரா தேநீர் மேஜையைக் கொண்டு வந்து போட்டான். ஆனால், கண்களில் புரட்சிக்கொடி பறந்து கொண்டிருந்தது.
திப்பி சொன்னாள்: "போய் பைராவிடம் இரண்டு கோப்பை தேநீர் கொண்டு வரும்படி சொல்லு''.
குரா போய் பைராவிடம் விஷயத்தைக் கூறிவிட்டு, தன்னுடைய தனிமையான அறைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டு போதும் என்று தோன்றுகிறவரை அழுதான். இப்போது, எஜமானி உயிருடன் இருந்திருந்தால், இந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகியிருக்குமா?
பைரா தேநீரை மேஜைமீது கொண்டு வந்து வைத்தான். திப்பி ஒரு கோப்பையை எடுத்து சந்தகுமாரனிடம் நீட்டி, விளையாட்டாகக் கூறுவதைப் போல கூறினாள்: "இப்போது புரிந்துவிட்டது. பெண்கள் பதிவிரதைகளாக இருப்பதைப் போல, ஆண்கள் பத்தினி விரதர்களாக இருக்கிறார்கள்.''
சந்தகுமாரன் ஒரு மடக்கு குடித்துவிட்டுச் சொன்னான்: "சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், நான் அப்படி வேடம் தரிக்கவாவது செய்கிறேன்.''
"நான் இதை பலவீனம் என்று கூறுவேன். பிரியமானவள் என்று கூறும்போது இதயத்திற்குப் பிரியப்பட்டவளாக இருக்கணும். வெளியே காட்டுவதற்காக அல்ல. நான் திருமணத்தைக் காதல் உறவாகத்தான் பார்க்கிறேன். தார்மீகமான உறவு... அதாவது- சம்பிரதாயமான உறவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.''
"அப்போதும் ஆண்கள்தான் எதிர்க்கப்படுகிறார்கள்.''
திப்பி அதிர்ச்சியடைந்தாள். இது ஜாதிப் பிரச்சினையாக மாறுகிறது.
இப்போது அவள் தன் ஜாதியின் பக்கம் நின்று பேச வேண்டியதிருக்கிறது. "அப்படியென்றால் எல்லா ஆண்களும் தேவர்கள் என்று நான் கூற வேண்டும் என்று எதிர்பார்த்தா புறப்பட்டு வந்திருக்கிறீர்கள்? நீங்களும் இந்த தர்ம உணர்வை வெளிப்படுத்துவது இதயத்திலிருந்து அல்ல. உலகம் எங்கே எதிர்த்து நின்று விடுமோ என்று பயந்துதான்... நான் இதை தர்ம உணர்வு என்று கூற மாட்டேன். தேளின் வால் பகுதியைப் பிய்த்து எறிந்து விட்டு, அதை வீரமே இல்லாததாக ஆக்கலாம். ஆனால், தேள்களின் விஷ வீரியத்தை அழிக்க முடியாது.''
சந்தகுமாரன் தோல்வியை ஒப்புக்கொண்டவாறு கேட்டான்: "பெரும்பான்மையான பெண்களின் பதிவிரதைத் தன்மையும் உலகத்தின் எதிர்ப்பிற்கு பயந்து இருப்பதுதான் என்று நானும் சொன்னால், உங்களால் என்ன பதில் கூற முடியும்?''
திப்பி கோப்பையை மேஜைமீது வைத்துக்கொண்டே சொன்னாள்: "நான் அதை எந்தச் சமயத்திலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.''
"எதனால்?''
"இதனால்தான். ஆண்கள் பெண்களுக்கு வேறொரு வழியை உண்டாக்கி வைக்கவில்லை. பதிவிரதைத் தன்மையை அவர்களுடைய மனதிற்குள் செலுத்தி நிறைத்து வைத்து, பெண்களுடைய தனித்துவத்தையே அழித்துவிட்டார்கள். அவர்களால் ஆண்களைச் சார்ந்து மட்டுமே வாழ முடியும். அவர்களுக்கு சுதந்திரமான இருப்பே இல்லை. திருமணமாகாத ஆண்கள் மன அமைதியுடன் உணவு சாப்பிடுகிறார்கள், விளையாடுகிறார்கள், மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு நடக்கிறார்கள். திருமணமாகாத பெண் அழுகிறாள், கூப்பாடு போடுகிறாள். உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டமே இல்லாத பிறவி தான்தான் என்று அழுகிறாள். இவை அனைத்தும் ஆண்களின் குற்றம். நீங்களும் புஷ்பாவை விடுவதாக இல்லையே! - கைதியை விடுவிக்க விரும்பாத ஆணாக இருப்பதால்!''
சந்தகுமாரன் மெதுவான குரலில் சொன்னான்: "நீங்கள் என்னைப் பற்றி சிறிதும் பொருத்தமற்றுப் பேசுகிறீர்கள். நான் புஷ்பாவை விட்டுப் பிரியாமல் இருப்பதற்குக் காரணம்- அவளுடைய வாழ்க்கையை அழிக்க விரும்பாததால்தான். நான் இன்று அவளை வேண்டாம் என்று ஒதுக்கினால், ஒரு வேளை நீங்களும் என்னை ஒதுக்குவதற்கு மற்றவர்களுடன் சேர்வீர்கள்.''
திப்பி புன்னகையை வெளிப்படுத்தினாள். "என்னைப் பற்றி பயப்பட வேண்டாம்.''
சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் கம்பீரமான குரலில் சொன்னாள்: "ஆனால், உங்களுடைய சிரமங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும்.''
"உங்களிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எனக்கு மனதில் நிம்மதியாக இருக்கிறது. உண்மையிலேயே நான் உங்களின் இரக்கத்திற்குப் பொருத்தமானவனே. ஒரு வேளை, என்றைக்காவது எனக்கு அதற்கான தேவை இருக்கலாம்.''
"உங்கள்மீது எனக்குப் பரிதாபம் தோன்றுகிறது. எப்படியாவது நாங்கள் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு சூழ்நிலையை உண்டாக்க முடியுமா? ஒருவேளை, என்னால் அவளை ஒழுங்கான வழிக்குக் கொண்டு வர முடியும்.''
இந்த அறிவிப்பு இதயத்தில் காயம் உண்டாக்கிவிட்டதைப் போல சந்தகுமாரனின் முகம் கோணலானது.
"அவளை நேரான வழிக்குக் கொண்டு வருவது மிகவும் சிரமமான விஷயம், மிஸ் திரிவேணி. மாறாக, அவள் உங்களை எதிர்த்துப் பேசுவாள். தேவையில்லாத விஷயங்களை கற்பனை பண்ணிக் கூறுவாள். பிறகு... எனக்கு வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.''
திப்பியின் துணிச்சலான முடிவுக்கு சூடு பிடித்தது. "அப்படியென்றால் நான் கட்டாயம் அவளைப் பார்ப்பேன்.''
"அப்படியென்றால் இங்கும் எனக்கு முன்னால் நீங்கள் கதவை அடைப்பீர்கள்.''
"ஏன் அப்படிச் சொல்றீங்க?''
"நீங்கள் அவள் பக்கம் நின்று பேசினால், அவள் உங்களுடைய இரக்கத்தைப் பெற்றுவிடுவாள்.''
"அப்படியென்றால் நான் ஒரே பக்கத்தில் நின்று கொண்டு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்களா?''
"எனக்கு உங்களுடைய ஈவும் இரக்கமும் இருந்தால் போதும். என்னுடைய மனநிலையை உங்களிடம் சொல்லி இதயச் சுமையைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் இங்கு வந்து போகிறேன் என்ற விஷயம் தெரிந்தால் அவள் ஒரு புதிய கதையை உண்டாக்குவாள்.''
திப்பி அவனைப் பார்த்துக் கிண்டல் பண்ணினாள்: "அப்படியென்றால், நீங்கள் அந்த அளவிற்கு பயந்தாங்கொள்ளியா? பயப்பட வேண்டியது நான்தான்.''
சந்தகுமாரன் மேலும் அமைதியான குரலில் சொன்னான்: "நான் உங்களை நினைத்துதான் பயப்படுறேன். என்னை நினைத்து அல்ல.''
திப்பி தன்னுடைய அச்சமின்மையை வெளிப்படுத்தினாள்: "வேண்டாம்... நீங்கள் என்னை நினைத்து பயப்பட வேண்டாம். எனக்கு கொஞ்சம்கூட பயம் இல்லை.''
"நான் உயிருடன் இருக்கும்போது என்னால் ஒரு தவறான எண்ணம் உங்கள்மீது உண்டாவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.''
"எனக்கு கற்பனை பண்ணுவது பிடிக்காது என்று உங்களுக்குத் தெரியாதா?''
"இது கற்பனை அல்ல. உண்மையான மனநிலை''.
"நான் உண்மைத் தன்மை கொண்ட இளைஞர்களை மிகவும் குறைவாகவே கண்டிருக்கிறேன்.''
"உலகத்தில் எல்லா வகைப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.''
"பெரும்பாலானவர்கள் வேட்டையாடும் இனத்தவர்கள்தான். பெண்களில் விலை மாதர்கள்தான் வேட்டையாடுபவர்கள். ஆண்கள் இங்கிருந்து அங்கு வரை வேட்டையாடுபவர்கள்தான்.''
"அப்படி அல்ல. தவறான எண்ணங்கள் வேண்டிய அளவிற்கு இருக்கின்றன.''
"பெண் அழகைப் பார்ப்பதில்லை. ஆண்கள் அழகில் விழுவார்கள். அதனால்தான் அவனை நம்ப முடியாது. என் வீட்டிற்கு எத்தனையோ அழகை வழிபடுபவர்கள் வருகிறார்கள். ஒருவேளை, இந்த நேரத்தில் கூட யாராவது வரலாம். நான் அழகிதான். இதில் ஆணவத்திற்கு இடமே இல்லை. ஆனால், அழகு என்ற காரணத்தைக் கூறி யாரும் என்னை விரும்புவதை நான் விரும்பவில்லை.''
சந்தகுமாரன் அதிர்ச்சியடைந்துவிட்டான். "என்னை அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நினைக்கவில்லை அல்லவா?''
திப்பி ஆர்வத்துடன் சொன்னாள்: "நான் உங்களை எனக்கு விருப்பமானவர்களின் கூட்டத்தில் நினைத்ததே இல்லை.''
சந்தகுமாரன் அவமானமாக உணர்ந்தான். "இது என்னுடைய துரதிர்ஷ்டம்.''
"நீங்கள் இதயத்தைத் திறந்து பேசுவதில்லை. உங்களுடைய மனதைப் புரிந்துகொள்ள முடியாததைப் போல நான் உணர்கிறேன். நீங்கள் எப்போதும் திரையைப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கூட்டத்தில் இருக்கிறீர்கள்.''
"இதேதான் உங்களைப் பற்றி நான் நினைப்பதும்...''
"என்னிடம் ரகசியம் எதுவும் இல்லை. நான் மனம் திறந்து கூறுகிறேன். என்னுடைய இதயத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடிய ஆணை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆமாம்... காதல் உணர்வு எனக்குள் மிகவும் ஆழத்தில் இருக்கிறது. ஆழமுள்ள நீரில் மூழ்கத் தெரிந்தவனுக்கே அது கிடைக்கும். அதற்குத் தேவையான வெறியை உங்களிடம் நான் பார்க்கவில்லை. நான் இதுவரை வாழ்க்கையின் ஒளிமயமான பக்கத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன். இனி தியாகமும் வேதனைகளும் நிறைந்த இருட்டான பக்கத்தையும் பார்க்க வேண்டும். ஒருவேளை, அந்த வாழ்க்கையில் எனக்கு மிக சீக்கிரமே வெறுப்பு தோன்றலாம். ஆனால், ஏதோ ஒருவகைப்பட்ட அடிமைத் தனம்- எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பதாக இருந்தாலும்- அதாவது சட்டப்படியான வஞ்சனை அல்லது வியாபாரத்தைச் சொல்லி நடத்தப்படும் கொள்ளையை, வாழ்க்கையின் அடிப்படையாக வைப்பதை என் மனசாட்சி ஒத்துக்கொள்ளாது. தியாகம், கடுமையான முயற்சி ஆகியவை கொண்ட வாழ்க்கைதான் எனக்கு உயர்வானதாகத் தோன்றுகிறது. இன்று நாடு, சமுதாயம் ஆகியவற்றின் மோசமான நிலையைப் பார்த்து பரிதாபப்படாமல் இருக்க பைத்தியம் பிடித்தவர்களால் மட்டுமே முடியும். சில நேரங்களில் எனக்கு என் மீதே வெறுப்பு தோன்றுகிறது. பாபுஜிக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தன் சிறிய குடும்பத்திற்காக மட்டும் வாங்குவதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஒரு தொழிலும் இல்லாத நான் இந்த அளவிற்கு வசதிகளுடன் சந்தோஷத்துடன் வாழ்வதற்கு என்ன உரிமை இருக்கிறது? இவை எல்லாவற்றையும் புரிந்து கொண்டிருந்தும், செயல்படக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லை. இந்த சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கை என்னைச் செயல்பட முடியாதவளாக ஆக்கிவிட்டிருக்கிறது. என்னுடைய நடத்தையில் செல்வச் செழிப்பு எந்த அளவிற்கு வெளிப்படுகிறது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் புறப்பட்டவுடனே முழுமை செய்யப்படவில்லையென்றால், நான் பைத்தியமாகிவிடுவேன். அறிவால் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் விலக்கப்பட வேண்டியது என்று சொன்னாலும், மதுவை விலக்க முடியாத குடிகாரனின் நிலைமையில் நான் இருக்கிறேன். அவனுடையதைப் போலவே என்னுடைய மனமும் செயல்பட முடியாமல் போயிருக்கிறது.''
திப்பியின் முகத்தில் குழப்பங்கள் தெரிந்தன. அவளுடன் இதயத்தைத் திறந்து பேசுவதற்கு அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவள் இரக்கத்துடன் கேட்பதற்கு பதிலாக கிண்டல் பண்ண முயற்சிப்பாள் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது. ஆனால், அந்தச் சமயத்தில் அவளுடைய இதயத்தின் சத்தம்தான் கேட்பதைப் போல தோன்றியது. அவளுடைய கண்கள் நனைந்திருந்தன. முகத்தில் ஒரு அமைதியான கம்பீரமும் அழகும் பரவிவிட்டிருந்தன. கட்டுப்பாடு தன்னை விட்டு விலகிச் செல்வதை சந்தகுமாரன் உணர்ந்தான். ஒரு பிச்சைக்காரன் நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, பிச்சை போடும் மனிதனின் மனநிலையைப் புரிந்துகொண்டு மனதில் உள்ளதைக் கூற முயற்சிக்காததைப்போல அது இருந்தது.
அவன் சொன்னான்: "என்னுடைய சிந்தனையும் இதே மாதிரிதான் இருக்கிறது. அப்படியென்றால் நான் நினைத்ததைவிட எவ்வளவோ அதிகமாக உங்களை நெருங்கி விட்டிருக்கிறேன்.''
திப்பியின் முகம் மலர்ந்தது. "நீங்கள் என்னிடம் இதுவரை இதைச் சொல்லவில்லை.''
"நீங்களும் இப்போது மட்டும்தான் மனம் திறந்து கூறியிருக்கிறீர்கள்.''
"நான் பயப்படுறேன். மக்கள் இப்படிச் சொல்லுவார்கள்- "நீங்கள் இந்த அளவிற்கு மதிப்புடன் வாழ்ந்துவிட்டு, இந்த வகையில் காரியங்களைப் பேசுகிறீர்களே" என்பார்கள். செல்வச் செழிப்பைக் காட்டக்கூடிய என்னுடைய பழக்க வழக்கங்களை விட்டு விலகிச் செல்வதற்கு ஏதாவது வழிமுறைகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்திப் பார்க்க நான் தயாராகவே இருக்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி உள்ள புத்தகங்கள் ஏதாவது கையில் இருந்தால் எனக்குத் தாருங்கள்.''
சந்தகுமாரன் இயல்பான குரலில் சொன்னான்: "நான் உங்களுடைய சிஷ்யனாக ஆக ஆரம்பித்துவிட்டேன்.''
அவன் அர்த்தத்துடன் அவளைப் பார்த்தான்.
திப்பி கண்களைத் தாழ்த்தவில்லை. அவனுடைய கையைப் பிடித்தவாறு சொன்னாள்: "நீங்கள் விளையாட்டுத்தனமாக ஆக்கி விட்டீர்கள். சிரமங்களைச் சந்திப்பதற்கு உரிய தைரியம் கொண்டவளாக என்னை ஆக்க வேண்டும். ஒரு பெண்ணாக ஆகிவிட்டதற்காக நான் என்னை நானே குறை கூறிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் என்னுடைய மனம் இந்த அளவிற்கு பலவீனமாக ஆகியிருக்காது.''
அந்த நேரத்தில் அவளுக்கு சந்தகுமாரனிடமிருந்து மறைத்து வைப்பதற்கு எதுவுமே இல்லாததைப் போலவும், விலக்கி வைப்பதற்கு எதுவுமே இல்லாததைப் போலவும் தோன்றியது.
சந்தகுமாரன் கம்பீரமான குரலில் சொன்னான்: "பெண்களுக்கு ஆண்களைவிட தைரியம் இருக்கிறது, மிஸ் திரிவேணி.''
"சரிதான்... முடியுமென்றால் இந்த உலகத்தின் போக்குகளில் ஒரு மாறுதல் உண்டாக்க உங்களுக்கு விருப்பமில்லையா?''
சுத்தமான மனதிற்குள்ளிருந்து புறப்பட்டு வந்த அந்தக் கேள்விக்கு கற்பனை செய்து பதில் கூறியபோது சந்தகுமாரனின் குரல் நடுங்கியது. "எதுவும் கேட்க வேண்டாம். மனிதன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு, நிம்மதியாக இருக்கிறான்.''
"பெரும்பாலான இரவு வேளைகளில் நான் இந்த பிரச்சினையைப் பற்றி சிந்தித்தவாறே படுத்து உறங்கியிருக்கிறேன். இதையே தான் கனவு காண்கிறேன். இந்த உலகத்தில் உள்ளவர்கள் எந்த அளவிற்கு சுயநலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். சமூகம் முழுவதையும் வழி நடத்திச் செல்ல வேண்டிய சட்டங்கள், குறைந்த அளவில் இருக்கும் சில மனிதர்களின் சுயநலத்திற்காக வளைத்து நொறுக்கப்படுகின்றன.''
சந்தகுமாரனின் முகம் இருண்டது: "அதற்கான நேரம் வருகிறது.''
அவன் எழுந்து நின்றான். மூச்சு விடுவதற்கு அவன் சிரமப்படுவதைப் போலத் தோன்றியது. அவனுடைய கபடம் நிறைந்த மனம் அந்தக் கள்ளங்கபடமற்ற சூழ்நிலையில் தன்னுடைய பலவீனத்தை உணர்ந்து கிழிந்து போவதைப் போல தோன்றியது. தர்ம சிந்தனை கொண்ட மனதில் அதர்ம சித்தனைகள் நுழைந்தாலும், அதனால் அங்கு இருக்க முடியாததைப் போல இருந்தது.
திப்பி தன் விருப்பத்தைச் சொன்னாள்: "இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக் கூடாதா?''
"இன்றைக்கு நான் புறப்படுகிறேன். இனி எப்போதாவது வருவேன்.''
"எப்போது வருவீர்கள்?''
"சீக்கீரமே வருவேன்.''
"என்னால் உங்களுடைய வாழ்க்கையை சந்தோஷம் நிறைந்ததாக ஆக்க முடிந்தால்...!''
சந்தகுமாரன் வராந்தாவை விட்டு குதித்து இறங்கி வேகமாக வாசலுக்கு வெளியே நடந்தான். திப்பி வராந்தாவில் அவனைக் காதல் உணர்வுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் கடுமையானவளாக இருந்தாள். கர்வம் கொண்டவளாக இருந்தாள். ஊசலாட்டம் கொண்டவளாக இருந்தாள். சாமர்த்தியம் உள்ளவளாக இருந்தாள். யாரையும் புரிந்துகொள்ளாதவளாக இருந்தாள். யாராலும் ஏமாற்ற முடியாதவளாக இருந்தாள். ஆனால், விலைமாதர்களின் சுயநல ஆர்வங்களுக்கு மத்தியில் பக்தி குணம் இருப்பதைப் போல, அவளுடைய மனதிலும் சந்தேகங்களுக்கு மத்தியில் ஒரு அழகான நம்பிக்கை மறைந்திருந்தது. அதைத் தொடக்கூடிய கலையை அறிந்தவனால் அவளைக் குரங்கு விளையாட்டு விளையாடச் செய்ய முடியும். அந்த அழகான பக்கத்தைத் தொட்டவுடன் அவள் நம்பக் கூடியவளாகவும், கபடமே இல்லாதவளாகவும், மென்மையான மனதைக் கொண்டவளாகவும், கோழைத்தனமான சிறுமியாகவும் மாறிவிடுவாள்.
இன்று சிறிதும் எதிர்பாராமல் சந்தகுமாரனுக்கு அந்த பீடம் கிடைத்திருக்கிறது. இப்போது எங்கு வேண்டுமென்றாலும், அவளை அழைத்துக்கொண்டு செல்லலாம். ஒரு மெஸ்மரிஸத்தால் ஈர்க்கப்பட்டவளைப் போல அவள் சந்தகுமாரனிடம் எந்தவொரு குற்றத்தையும் பார்க்கவில்லை. அதிர்ஷ்டமில்லாத புஷ்பா இந்த சத்தியவானான கணவனின் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டாளே! அவனுக்கு எப்போதும் உற்சாகத்தை அளித்துக்கொண்டு பின்னாலேயே இருக்கக்கூடிய ஒரு சினேகிதிதான் வேண்டும். அவனுடைய வாழ்க்கைக்கு ராகுவாக ஆகி, சமூகத்திற்கு எந்த அளவிற்கு செய்யக்கூடாதவற்றையெல்லாம் புஷ்பா செய்து கொண்டிருக்கிறாள்! இவ்வளவு நடந்த பிறகும் அவளைக் கழுத்தில் கட்டிக்கொண்டு நடந்து திரியும் சந்தகுமாரன் ஒரு தெய்வப் பிறவிதான். அவனுக்கு இவள் எப்படிப்பட்ட சேவைகளையெல்லாம் செய்ய வேண்டும்? அவனுடைய வாழ்க்கையை எப்படி சந்தோஷம் நிறைந்ததாக ஆக்குவது?
சந்தகுமாரன் திப்பியிடமிருந்து வெளியேறிய பிறகு, அவனுடைய இதயம் ஆகாயத்தில் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் தேவியிடமிருந்து வரம் கிடைக்குமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஏதோ அதிர்ஷ்டம் அனுமதித்திருக்கிறது. இல்லாவிட்டால் எவ்வளவோ பெரிய ஆட்களையெல்லாம் சுட்டு விரலால் தூக்கி எறியக் கூடியவளுக்கு அவன்மீது இந்த அளவிற்கு விருப்பம் உண்டாவதற்குக் காரணம்? இனிமேலும் தாமதிக்கக்கூடாது. திப்பி எப்போது மாறுவாள் என்று யாருக்குத் தெரியும்? இரண்டோ நான்கோ சந்திப்புகளுக்கு மத்தியில் காரியத்தைச் சாதிக்க வேண்டும். திப்பி அவனை செயலில் முன்னோக்கிப் போகும்படி உற்சாகப்படுத்துவாள். அவன் பின்னோக்கிச் செல்வான். அங்கு மோதல் உண்டாகும்.
அவன் நேராக மிஸ்டர் சின்ஹாவின் வீட்டை அடைந்தான்.
நேரம் மாலை ஆகிவிட்டிருந்தது. பனி பொழிய ஆரம்பித்திருந்தது. மிஸ்டர் சின்ஹா அழகுபடுத்திக் கொண்டு எங்கேயோ போவதற்குத் தயாராக இருந்தான். பார்த்தவுடன் கேட்டான்: "எங்கேயிருந்து?''
"அங்கேயிருந்துதான். காரியம் வெற்றி...''
"உண்மையாகவா?''
"ஆமாம்... சத்தியமா... அவளை மந்திரக் கோலால் மயக்கின மாதிரி ஆயிடுச்சு.''
"இனி என்ன? வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட மாதிரிதான். இன்றைக்கே அப்பாவிடம் போய் கூறுங்கள்.''
"என்னுடன் நீங்களும் வரணும்''.
"சரி... நானும் வருகிறேன். ஆனால், நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த மிஸ் கம்மத் என்னை உண்மையிலேயே காதலனாக அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். நானோ வெறுமனே நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் அவளைக் காதலிக்கிறேன் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். சமீபத்தில் பார்த்திருக்கிறீர்களா? கர்வத்துடன் பூமியில் நடந்து கொண்டிருக்கிறாள். ஆனால், ஒரு விஷயம். பெண் அறிவாளி. எந்த நேரத்தில் நான் கை விட்டுப்போய் விடுவேன் என்ற பயம் அவளுக்கு இருக்கிறது. அதனால் என்னை மிகவும் அதிகமாக மதிக்கிறாள். தவறாமல் அழகுபடுத்திக்கொண்டு இயற்கை உண்டாக்கிவிட்டிருக்கும் குறைகளை முடிந்தவரைக்கும் சரிபண்ணிக் கொண்டிருக்கிறாள். இனி நல்ல ஒரு தொகை கிடைப்பதாக இருந்தால், திருமணம் செய்து கொள்வதற்கு என்ன எதிர்ப்பு இருக்கிறது?''
சந்தகுமாரனுக்கு ஆச்சரியம் உண்டானது. "நீங்கள் அவளுடைய அழகின்மையைப் பார்த்து வெறுப்புடன் இருந்தீர்களே!''
"ஆமாம்... இப்போதும் அப்படித்தான். ஆனால், பணம் சம்பந்தப்பட்ட விஷயம் இருக்கிறதே! இருபதோ இருபத்தைந்தோ ஆயிரங்கள் கையில் கிடைத்தால்! ஆனால் திருமணமாகிவிட்டது என்று நினைத்து என்னை விலைக்கு வாங்க முடியாது.''
மறுநாள் இரண்டு நண்பர்களும் சேர்ந்து தேவகுமாரனுக்கு முன்னால் மனதில் இருக்கும் விஷயங்களைக் கொட்டினார்கள். தேவகுமாரனால் சிறிது நேரம் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அவர் அமைதியான, களங்கமற்ற, அச்சமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர். கலைஞனிடம் இருக்கக்கூடிய தற்பெருமைதான் எப்போதும் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கிறது. அவர் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார். கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். பட்டினிகூட கிடந்திருக்கிறார். ஆனால், எந்தச் சமயத்திலும் ஆன்மாவைக் களங்கப்படுத்தக்கூடிய ஒரு செயலையும் செய்ததில்லை. வாழ்க்கையில் எந்தவொரு நிமிடத்திலும் நீதிமன்றத்தின் படிகளில்கூட கால்களை வைத்ததில்லை.
அவர் சொன்னார்: "எனக்கு வருத்தமாக இருக்கிறது. உங்களால் இதை என்னிடம் எப்படிக் கூற முடிந்தது? இப்படிப்பட்ட கேவலமான சிந்தனை உங்களுடைய மனதில் நுழைந்திருக்கிறதே என்பதை நினைத்துதான் நான் அதிகமாகக் கவலைப்படுகிறேன்.''
சந்தகுமாரன் சற்று கோபத்துடன் சொன்னான்: "தேவை எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்பது இயற்கையின் முதல் சட்டம். அப்பா, அன்றைக்கு நீங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு கொடுத்த சொத்துகள் இன்று இரண்டு லட்சத்திற்குக் குறையாத விலை மதிப்பு உள்ளவை.''
"இரண்டு லட்சம் அல்ல. பத்து லட்சமாக இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் இது துரோகம் சம்பந்தப்பட்டது. கொஞ்சம் பணத்திற்காக ஆன்மாவிற்கு துரோகம் செய்ய முடியாது.''
நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தார்கள். எந்த அளவிற்குப் பழமையான வாதம்! ஆன்மா என்ற பொருள் எங்கே இருக்கிறது? உலகம் முழுவதும் துரோகத்தின் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும்போது, ஆன்மா எங்கே இருக்கிறது? நூறு ரூபாய் கடனாகக் கொடுத்து ஆயிரம் ரூபாய்களை வசூல் செய்வது அதர்மம் அல்ல! அரை உயிரை வைத்துக் கொண்டிருப்பவர்களும், பட்டினியில் உழன்று கொண்டிருப்பவர்களுமான ஒரு லட்சம் தொழிலாளர்களின் சம்பாத்தியத்தை வைத்து ஒரு முதலாளி சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது அதர்மம் அல்ல! ஒரு பழைய தாளில் இருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய முயல்வது மட்டும் எப்படி அதர்மம் என்றாகிவிடும்?
சந்தகுமாரன் கறாரான குரலில் சொன்னான்: "அப்பா, இது ஆன்மாவிற்கு துரோகம் செய்யும் செயல் என்று கூறுவதாக இருந்தால், துரோகம் செய்யத்தான் வேண்டும். அதை விட்டால் வேறு வழியில்லை. இந்த ஒரு கோணத்தில் மட்டும் இந்த விஷயத்தை ஏன் பார்க்க வேண்டும்?
சமூகத்திற்குக் கெடுதல் உண்டாக்காமல் இருப்பது தர்மம். சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பது அதர்மம். இந்த விஷயத்தில் சமூகத்திற்கு என்ன கெடுதல் உண்டாகிறது? கூற முடியுமா?''
தேவகுமாரன் கவனத்துடன் சொன்னார்: "சமூகம் அதன் மரியாதைகளில்தான் நின்று கொண்டிருக்கிறது. அந்த மரியாதைகளை மீறினால், சமூகமே முடிவுக்கு வந்துவிடும்.''
இரு பக்கங்களில் இருந்தும் நியாய வாதங்கள் ஆரம்பமாயின. தேவகுமாரன் உலக மரியாதைகள், தர்ம உறவுகள் ஆகியவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாதம் செய்தாலும், அந்த இரண்டு இளைஞர்களின் புத்திசாலித்தனமான சிந்தனைகளுக்கு முன்னால் அவர் தோற்றுப் போய்விட்டார். அவர் தன்னுடைய நரைத்த தாடியைத் தடவிக் கொண்டும், வழுக்கைத் தலையைச் சொறிந்து கொண்டும் கூறிய அறிவுரை வார்த்தைகளை அந்த இளைஞர்கள் மிகவும் சாதாரணமாகத் தூக்கி எறிந்தார்கள்.
சின்ஹா தைரியமான குரலில் சொன்னான்: "பாபுஜி, நீங்கள் எந்தக் காலத்து விஷயங்களைக் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. சட்டத்தைப் பயன்படுத்தி நாம் அடைய வேண்டியதை அடையத்தான் வேண்டும். சட்டத்தின் பிரிவுகளின் நோக்கமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். பணம் கடனாகத் தருபவர்களிடமிருந்து ஜமீந்தார்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் சட்டங்கள் உண்டாக்கியதையும், அதன் மூலம் எவ்வளவோ பூமி ஜமீந்தார்களுக்கு திரும்பக் கிடைத்ததையும் நீங்களே சமீபத்தில் பார்த்தீர்கள் அல்லவா? அதை அதர்மம் என்று கூறுவீர்களா? இந்த சட்டத்தின் பலத்தைக் கொண்டு அவனவனுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்பது தான் உலக வழக்கு. எனக்கு கொடுப்பதற்கோ வாங்குவதற்கோ எதுவும் இல்லை. எனக்கு இதில் சுயநலமும் இல்லை. சந்தகுமாரன் என்னுடைய நண்பர். இந்த உறவை வைத்து நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... சம்மதிக்கவோ மறுக்கவோ உங்களுக்கு உரிமை இருக்கிறது!''
தேவகுமாரனுக்கு வேறு வழியே இல்லாமல் ஆகிவிட்டது. "அப்படியென்றால் நான் என்ன செய்ய வேண்டுமென்று கூறுகிறீர்கள்?''
"எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் செய்வதற்கு எதிராக நிற்காமல் இருந்தால் போதும்.''
"என்னால் சத்தியத்தின் கழுத்தை நெறிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.''
சந்தகுமாரன் கண்களைத் துறுத்திக் கொண்டு ஆவேசத்துடன் சொன்னான்: "அப்படியென்றால்... பிறகு... என் கழுத்து நெறிவதைப் பாருங்க.''
சின்ஹா சந்தகுமாரனைத் தேற்றினான். "எதற்கு தேவையில்லாதவற்றையெல்லாம் பேசுகிறீர்கள்? பாபுஜிக்கு இரண்டு நான்கு நாட்கள் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுங்க. நீங்கள் இதுவரை ஒரு குழந்தையின் தந்தையாக ஆகவில்லை. தந்தைக்கு மகன் எந்த அளவிற்குப் பிரியமானவன் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாது. அப்பா இப்போது எவ்வளவு எதிர்த்தாலும், வழக்கு தொடுக்கும் போது என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். நம்முடைய வாதம் இப்படி இருக்கும்... அந்த ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரத்தில் அவருடைய புத்தியும் சுயஉணர்வும் ஒழுங்காக இல்லை. இப்போது கூட சில நேரங்களில் பைத்தியத்திற்கான அறிகுறி தெரிவது உண்டு. இந்தியாவைப்போல உள்ள ஒரு வெப்பம் நிறைந்த நாட்டில் இந்த நோய் ஏராளமான மனிதர்களுக்கு இருக்கிறது. அவருக்கும் அது பாதித்திருந்தால், ஆச்சரியப்படுவதற்கில்லை. நாம் சிவில் சர்ஜன் மூலம் இதற்கு ஆதாரங்கள் கொடுப்போம்.''
தேவகுமாரன் மறுத்தார். "உயிருடன் இருக்கும்போது நான் சதிவேலையை ஒப்புக்கொள்ளவே மாட்டேன். எந்த நிமிடத்திலும் சம்மதிக்க மாட்டேன். ஆழமாக யோசித்தும் உரிய சந்தர்ப்பத்திலும் தான் நான் செய்திருக்கிறேன். அந்த விஷயத்தில் சிறிது கூட எனக்கு வருத்தம் இல்லை. நீங்கள் இப்படியொரு வழக்கு தொடுத்தால் அதற்கு மிகவும் அதிகமான எதிர்ப்பு என்னிடமிருந்துதான் உண்டாகும். நான் கூறிக்கொள்கிறேன்.''
அவர் கோபத்துடன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தார்.
சந்தகுமாரனும் எழுந்து பயமுறுத்தினான்: "அப்படியென்றால் நானும் சவால் விடுகிறேன். அப்பா, நீங்கள் என்னைக் காப்பாற்ற தயாராக இருக்கிறீர்களா? இல்லாவிட்டால் தர்மத்தை மட்டுமே காப்பாற்றுவதாக இருந்தால், பிறகு என்னுடைய முகத்தையே பார்க்க முடியாது.''
"எனக்கு மனைவியையும் பிள்ளைகளையும்விட தர்மத்தின் மீதுதான் விருப்பம்.''
சின்ஹா சந்தகுமாரனுக்கு வழிமுறைகளைச் சொல்லித் தந்தான்: "நீங்கள் வழக்கு போடுங்கள். அப்பாவுக்கு புத்தி கலங்கிவிட்டது. இனி என்ன செய்வார் என்று தெரியாது. அவரை அடைத்துப் போட வேண்டும்.''
தேவகுமாரன் கையைச் சுட்டியவாறு கோபக்குரலில் கேட்டார்: "நான் பைத்தியமா?''
"ஆமாம்... பைத்தியம்தான். அப்பா, உங்களுக்கு சுயஉணர்வு இல்லை. இப்படிக் கூறுவது பைத்தியங்கள் மட்டும்தான். பைத்தியக்காரன் என்பவன் யாரையோ கடிப்பதற்காக ஓடுபவன் மட்டுமல்ல- சாதாரண மனிதன் செய்வதற்கு எதிராகச் செய்பவன்கூட பைத்தியம்தான்.''
"உங்கள் இரண்டு பேருக்குகூடத்தான் பைத்தியம் பிடிச்சிருக்கு.''
"அதை டாக்டர் முடிவு செய்வார்.''
"நான் பத்து இருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான மேடைகளில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறேன். இது பைத்தியக்காரன் செய்யக்கூடிய வேலையா?''
"ஆமாம்... இது உண்மையாகவே தலையில் பிரச்சினை வந்தவர்கள் செய்யக்கூடிய வேலைதான். நாளையே இந்த வீட்டில் சங்கிலி அணிவித்து அடைத்துப் போட்டிருப்பதைப் பார்க்கலாம்.''
"நீங்கள் என் வீட்டை விட்டு வெளியே போங்க. இல்லாவிட்டால் நான் சுட்டுடுவேன்.''
"முற்றிலும் பைத்தியக்காரர்களின் பயமுறுத்தல். சந்தகுமாரன், அந்த வழக்கில் இதையும் எழுதிக் கொள்ள வேண்டும். இவருடைய துப்பாக்கியைப் பிடுங்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.''
இரண்டு நண்பர்களும் எழுந்து நின்றார்கள். தேவகுமாரன் எந்தச் சமயத்திலும் சட்டத்தின் வலையில் விழுந்ததே இல்லை. பதிப்பாளர்களும் புத்தக வியாபாரிகளும் அவரைப் பல முறை ஏமாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவர் ஒரு முறைகூட சட்டத்தைச் சரண் அடைந்ததே இல்லை. தான் நன்றாக இருந்தால் உலகமும் நன்றாக இருக்கும். இதுதான் அவருடைய வாழ்க்கை முறை. எப்போதும் இதே நீதியைத்தான் அவர் பின்பற்றி வந்திருக்கிறார். அதே நேரத்தில், பயப்படக்கூடியவரோ கீழ்ப்படியக் கூடியவரோ அல்ல. குறிப்பாக சித்தாந்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு சமரசம் செய்து போகவே தெரியாது. உலகம் தலைகீழாகப் புரண்டாலும், இந்த கூட்டுச் சதியில் பங்காளியாக ஆகப் போவதில்லை. ஆனால், இதெல்லாம் உண்மையிலேயே அவரைப் பைத்தியக்காரனாகக் காட்டுவதற்கு உதவுமா? சின்ஹா கடுமையாக பயமுறுத்தியதைச் சாதாரணமாக விட்டுவிட முடியாது. அவன் இப்படிப்பட்ட சதிச் செயல்கள் செய்வதில் அனுபவங்கள் நிறைந்தவன். டாக்டர்களை உதவிக்கு வைத்துக்கொண்டு உண்மையிலேயே அவர் பைத்தியக்காரன்தான் என்பதை ஆதாரத்துடன் அவன் காட்டுவான். அதுதான் நடக்கப் போவது. அவருடைய சுயமரியாதை உரத்த குரலில் கர்ஜித்தது- இல்லை. உண்மையற்ற ஒன்றுக்குத் துணை போக மாட்டேன். அதற்காக எதைச் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தாலும்... டாக்டர்களும் குருடர்களா என்ன? அவர்களிடம் சிலவற்றைக் கேட்பார்கள். பேசுவார்கள். இல்லாவிட்டால் பேனாவை எடுத்து அவர்கள் பைத்தியம் என்று எழுதுவார்கள். அவருடைய அறிவுக்கும் சுயஉணர்விற்கும் எந்தவொரு குழப்பமும் உண்டாகக்கூடிய பிரச்சினை இல்லை... ச்சீ...
இந்த பிள்ளைகள் கூறுவதை நம்ப வேண்டுமா? அவருக்கு தன்னுடைய நடத்தையில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்தி சூரிய ஒளியைப் போல தெளிவாக இருந்தது. இந்த இளைஞர்களின் பயமுறுத்தலுக்கு அடிபணியக் கூடாது.
ஆனால், சந்தகுமாரனுக்கு இப்படியொரு மன ஓட்டம் எப்படி உண்டானது என்ற சிந்தனை அவருடைய இதயத்தைக் கசக்கிவிட்டிருந்தது. தன் தந்தையைப் பற்றி நினைத்துப் பார்த்தார். எந்த அளவிற்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவராகவும் நேர்மை யானவராகவும் அவர் இருந்தார். மாமனார் வக்கீலாக இருந்தார். சரி... ஆனால், தர்மத்தின்படி நடந்தார். அவருடைய தந்தை தான் மட்டும் தனியே சம்பாதித்து வீட்டுச் செலவு முழுவதையும் பார்த்துக்கொண்டார். ஐந்து சகோதரர்களையும் தன்னுடைய பிள்ளைகளையும் நல்ல முறையில் பார்த்துக்கொண்டார். தன்னுடைய பிள்ளைகளிடம் எந்தவிதத்திலும் பாகுபாடுடன் நடந்து கொண்டதே இல்லை. அண்ணன் உணவு உண்ணாமல் அவர் உணவு சாப்பிட மாட்டார். இப்படிப்பட்ட ஒரு வம்சத்தில் சந்தகுமாரனைப் போல ஒரு வஞ்சகன் எப்படி வந்து சேர்ந்தான்? தான் தன்னுடைய நெறியில் இருந்து வழி மாறிப் போனதாக ஒரு சம்பவத்தை எவ்வளவு நினைத்தும் அவரால் ஞாபகப்படுத்திப் பார்க்கவே முடியவில்லை.
இந்த கெட்ட பெயரை எப்படிப் பொறுத்துக் கொள்வார்? தன் சொந்த வீட்டில் வெளிச்சம் உண்டாக்க முடியாதபோது, அவருடைய முழு வாழ்க்கையும் வீணாகிவிட்டது. மிகவும் நெருக்கமாக இருப்பவர்களையே மனிதர்களாக ஆக்க முடியவில்லையென்றால், பிறகு அந்த வாழ்க்கை முழுவதும் படைத்த இலக்கிய முயற்சிகளால் யாருக்கு நல்லது நடந்தது? இனி இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், பிறகு அவர் எப்படி ஒரு ஆளின் முகத்தைப் பார்ப்பார்? தேவகுமாரன் பணத்தைச் சம்பாதிக்கவில்லை. ஆனால், புகழைச் சம்பாதித்திருக்கிறார். அதுவும் கையை விட்டுப் போகப் போகிறதா என்ன? அவருடைய மன சந்தோஷத்திற்கு அதுவாவது எஞ்சியிருக்கக் கூடாதா? இப்படிப்பட்ட மனவேதனை எந்த சமயத்திலும் உண்டானதில்லை.
சைவ்யாவிடம் கூறி அவளையும் எதற்கு வேதனை அடையும்படி செய்ய வேண்டும்? அவளுடைய மென்மையான இதயத்தில் காயம் உண்டாக்க வேண்டுமா? அவர் எல்லாவற்றையும் தானே தாங்கிக் கொள்வார். இனி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? வாழ்க்கை என்பது அனுபவங்களின் சேர்க்கை. இதுவும் ஒரு அனுபவம்தான். சற்று இந்த பாதையிலும் நடக்க வேண்டியதுதான்.
இந்த சிந்தனை வந்ததும் அவருடைய இதயச்சுமை குறைந்தது. வீட்டிற்குள் சென்று பங்கஜாவிடம் தேநீர் உண்டாக்கும்படி சொன்னார்.
சைவ்யா கேட்டாள்: "சந்தகுமாரன் என்ன சொன்னான்?''
அவர் இயல்பான புன்சிரிப்புடன் சொன்னார்: "ஒண்ணுமில்ல... அந்த பழைய பைத்தியம்தான்.''
"நீங்கள் சம்மதிக்கவில்லையே?''
தேவகுமாரன் தன் மனைவியின் ஒரே மன ஓட்டத்தை அனுபவித்தார்.
"எந்தச் சமயத்திலும் சம்மதிக்க மாட்டேன்.''
"இவனுடைய தலையில் இந்தப் பிசாசு எப்படி ஏறியது?''
"சமூக கலாச்சாரம். வேறு என்ன?''
"இவனுடைய கலாச்சாரம் ஏன் இப்படி ஆனது? சாது இருக்கிறான். பங்கஜா இருக்கிறாள். உலகத்தில் தர்மம் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டதா என்ன?''
"பெரும்பாலானவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான்.''
அன்றிலிருந்து தேவகுமாரன் நடக்கக்கூட போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். இரவும் பகலும் வீட்டிற்குள்ளேயே யாருடைய முகத்தையும் பார்க்காமலே மறைந்திருந்தார். எல்லா வகைப்பட்ட களங்கமும் அவருடைய நெற்றியிலேயே பதிந்திருப்பதைப் போல... ஊரில் நிலையும் விலையும் உள்ள எல்லாரும் அவருடைய நண்பர்களாக இருந்தார்கள். அனைவரும் அவருடைய மதிப்பான நிலையை உணர்ந்திருந்தார்கள். வழக்கு போடப்பட்டால் கூட அவர்கள் எதுவும் கூற மாட்டார்கள். ஆனால், அவருடைய மனதிற்குள் திருடன் நுழைந்துவிட்டதைப் போல இருந்தது. தனக்கு வேண்டியவர்களின் நன்மை, தீமைகளுக்கு பொறுப்பு தன் தலையில் இருப்பதாக அவர் பெருமையுடன் நினைத்துக் கொண்டிருந்தார். சென்ற சூரிய கிரகணத்தின்போது, சாதுகுமாரன் நீர் நிறைந்த ஆற்றில் குதித்து மூழ்கிவிட்ட ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றிய போது, தேவகுமாரன் வேறு எந்த சூழ்நிலையையும்விட அதிகமாக மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது. தன்னுடைய தலை மேலும் உயர்வதைப் போல அவர் உணர்ந்தார். இனி மக்கள் சந்தகுமாரனை கற்பனை கலந்து விமர்சிக்கும்போது, அவர் எப்படி அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்?
இப்படியே ஒரு மாதம் கழிந்தது. சந்தகுமாரன் வழக்கை நீதிமன்றத்தில் கொடுக்கவில்லை. சிவில் சர்ஜனுடனும் மிஸ்டர் மாலிக்குடனும் தொடர்பு கொள்ள வேண்டியதிருந்தது. ஆதாரங்கள் தயார் பண்ண வேண்டியதிருந்தது. அந்த ஏற்பாடுகளில் நாட்கள் அப்படியே கடந்து போய்க் கொண்டிருந்தன. பணம் தயார் பண்ண வேண்டுமே! தேவகுமாரன் ஒத்துழைக்கும் பட்சம், மிகப்பெரிய அந்தத் தடையும் இல்லாமற் போய்விடும். ஆனால், அவருடைய எதிர்ப்பு, பிரச்சினையை மேலும் சிரமம் உள்ளதாக ஆக்கிவிட்டிருந்தது. சந்தகுமாரன் இடையில் விரக்தி அடைந்து காணப்பட்டான். என்ன செய்ய வேண்டுமென்று அவனுக்கே தெரியவில்லை. நண்பர்கள் இருவரும் தேவகுமாரனை நினைத்து பற்களைக் கடித்தார்கள்.
சந்தகுமாரன் சொன்னான்: "இந்த மனிதனைத் துப்பாக்கியால் சுட வேண்டும் போல இருக்கிறது. இவர் என்னுடைய அப்பா அல்ல.. எதிரி!''
சின்ஹா அவனைத் தேற்றினான்: "என்னுடைய மனதை எடுத்துக்கொண்டால்... நண்பரே, அவர்மீது எனக்கு மரியாதை உண்டாகிறது. சுயநலத்திற்காக மனிதர்கள் மிகவும் கேவலமான காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால், தியாக எண்ணம் கொண்டவர்கள், நேர்மை குணம் கொண்டவர்கள் ஆகியோரைப் பற்றி உள்ள மதிப்பு மனதில் இருக்கும். உங்களுக்கு அவரைப் பற்றி ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை. சத்தியத்திற்காக எந்த கஷ்டத்தையும் பொறுத்துக்கொள்ள தயாராக இருக்கும் மனிதரை வழிபாடு செய்து பூஜிக்க வேண்டும்.''
"இப்படிப்பட்ட வார்த்தைகள் மூலம் என்னுடைய மனதை வேதனைப்படுத்தாதீர்கள் மிஸ்டர் சின்ஹா. நீங்கள் நினைத்திருந்தால் இந்த பெரிய மனிதர் இப்போது பைத்தியக்காரர்கள் மருத்துவமனையில் இருந்திருப்பார். உங்களுடைய மனம் இந்த அளவிற்கு பலவீனமாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.''
"அவரை மனநல மருத்துவமனையில் சேர்ப்பது என்பது நீங்கள் நினைப்பதைப் போல அந்த அளவிற்கு எளிய ஒரு விஷயம் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. நாம் தெளிவுபடுத்த வேண்டியது- ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரத்தில் அவருக்கு சுயஉணர்வு இல்லை என்பதைத்தான். அதற்கு ஆதாரம் வேண்டும். அவர் இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் காட்டுவதற்கு டாக்டர் வேண்டும். மிஸ்டர் கம்மத்தும் அதை எழுதுவதற்குத் தயாராக இல்லை.''
பண்டிதர் தேவகுமாரனை பயமுறுத்தி வீழ்த்திவிட முடியாது. ஆனால், நியாய வாதத்திற்கு முன்னால் அவருடைய தலை தானே தாழ்ந்துவிடும்.
அவர் அந்த இக்கட்டான நிலையைப் பற்றித்தான் சமீப நாட்களில் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். உலகத்தில் இந்த மோசமான நிலை எப்படி வந்தது? தர்மம், பண்பாடு ஆகியவற்றை வைத்துக்கொண்டு எந்த ஒரு இடத்திற்கும் போக முடியவில்லை. எப்படிப்பட்ட வாதங்களைச் செய்தாலும், பலன் இல்லாமற் போகிறது. உலகம் முழுவதும் ஒரே ஆன்மா என்றால் இந்த வித்தியாசம் எதற்கு? என்ன காரணத்தால் ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் மிகவும் கடினமாக உழைத்தும், பட்டினி கிடந்து சாகிறான். இன்னொரு மனிதன் கை, கால்களை அசைக்காமல் பூமெத்தையில் படுத்து உறங்குகிறான்? இது ஒரே ஆன்மாவா இல்லாவிட்டால் பயங்கரமான இருள் நிறைந்த ஆன்மாவா? அறிவு பதில் கூறுகிறது: இங்கு அனைவரும் சுதந்திரமானவர்கள். அனைவருக்கும் தங்களுடைய பலம், முயற்சி ஆகியவற்றை அனுசரித்து உயர்வதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் மனம் கேட்கிறது: அனைவருக்கும் சரி நிகரான சந்தர்ப்பம் எங்கே இருக்கிறது? சந்தை கூடியிருக்கிறது. யார் வேண்டுமென்றாலும், அங்கிருந்து அவரவர்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கலாம். ஆனால், வாங்குவது கையில் பணம் இருப்பவர்கள் மட்டுமே. அனைவரின் கையிலும் பணம் இல்லையென்றால், எல்லாருக்கும் சரிநிகர் உரிமை என்று கூறப்படுவதற்கு அர்த்தம் என்ன? இப்படிப்பட்ட ஒரு மனக்குழப்பம் அவருடைய வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் உண்டானதில்லை. அவருடைய "இலக்கிய அறிவு''க்கு இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்தோஷம் கிடைப்பது நடக்காத விஷயம். தனிப்பட்ட முறையில் இறுதி முடிவை எடுக்கச் செய்யும் இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை அவருக்கு முன்னால் இதுவரை வந்ததில்லை. இந்த நேரத்தில், தினந்தோறும் பாதையில் கல் கிடப்பதைப் பார்த்து ஒதுங்கி நடக்கும் ஒரு மனிதனின் நிலையில் அவர் இருந்தார். இரவில் எவ்வளவு மனிதர்கள் கல்லில் தட்டி விழுவார்கள்! எவ்வளவு ஆட்களின் கையும் காலும் ஒடியும்! அதைப் பற்றி சிந்தனை உண்டாவதில்லை. ஆனால், ஒரு நாள் இரவு வேளையில் தானே கல்லில் தட்டி விழுந்து காயம் உண்டாகும்போது, அந்தக் காரியம் நடக்காமல் இருப்பதற்கு என்ன வழி என்று உள்மனம் கட்டளை போட, தடைகளைப் பாதையில் இருந்து நீக்குவதற்கு அவன் தயாராகிறான். தேவகுமாரனுக்கு இப்போது குழப்பம் உண்டாகியிருக்கிறது. நீதி எங்கே இருக்கிறது? ஒரு ஏழை ஏதாவதொரு வயலில் இருந்து நான்கு கதிர்களை அறுத்து பசியைப் போக்கினால், சட்டம் அவனுக்கு தண்டனையை அளிக்கும். ஒரு வசதி படைத்தவன் பட்டப்பகலில் கொள்ளையடித்தால், அவனுக்கு பரிசு கிடைக்கும். சில மனிதர்கள் பல வகைப்பட்ட ஆயுதங்களை எடுத்து, பலவீனமானவர்களாகவும் எதுவுமே செய்ய இல்லாதவர்களாகவும் இருக்கும் தொழிலாளிகளை பயமுறுத்தவும், அடிமைப்படுத்தவும் செய்கிறார்கள். அபராதம், வட்டி என்று கூறி அவர்களை ஏமாற்றுகிறார்கள். பெரிய அளவில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேட்டையாடுவதிலும் ஈடுபட்டு பணத்தைக் கண்டபடி வாரி இறைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இதுதான் நீதியா? இதுவா கடவுள் படைத்த உலகம்?
ஆமாம்... தேவர்கள் எப்போதும் இருப்பார்கள். எப்போதும் இருந்திருக்கிறார்கள். அவர் இப்போது உலகம் நீதி தர்மங்களை அனுசரித்து நடந்து கொண்டிருப்பதாக கண்டு கொண்டிருக்கிறார். உயிரை விட்டால் இந்த உலகத்தை விட்டுப் போகலாம். ஆனால், நீங்கள் தேவன் என்று கூறுவீர்களா? இல்லை... கோழை என்று கூறுவீர்கள். சுயநலவாதி என்று கூறுவீர்கள். நீதியைப் பின்பற்றியும், அதற்காக உயிரை விடவும் செய்பவன்தான் தேவத்தன்மை கொண்டவன். அறிந்து கொண்டே அறியவில்லை என்று தர்மத்தை விட்டுத் தவறி நடக்கிறான். அவன் குருடன், மூடன். ஒரு விதத்திலும் தேவனாகப் போவதில்லை. இனி தேவனாக வேடம் போடுவதில் என்ன அர்த்தம்? தேவர்கள்தான் பக்தி, அதிர்ஷ்டம் ஆகியவை பற்றிய கதைகளைப் பரப்பி இந்த அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். மனிதர்கள் இந்த அநீதிகளை இதற்குள் முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் அல்லது அப்படிப்பட்ட சமூகத்தை அழித்திருந்தால், இப்படி வாழ்ந்து கொண்டிருப்பதை விட எவ்வளவோ நன்றாக வாழ்ந்திருக்கலாம். அது மட்டுமல்ல- மனிதர்களில் மனிதனாக வேண்டும். இம்சை செய்யும் உயிர்களுக்கு மத்தியில் அவற்றுடன் போராடுவதற்கு ஆயுதத்தை எடுக்க வேண்டும். அவற்றின் பிடிக்குள் சிக்கிக்கொள்வது கோழைத்தனமாகும். இப்போதிருக்கும் இந்த மிகப் பெரிய மனிதர்களும் மன்னர்களும் தங்களுடைய முன்னோடிகள் கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த சொத்துகளைத் தாறுமாறாகச் செலவழித்து சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அந்த சொத்துகளை விற்றது என்பது அப்படிப்பட்ட ஒரு செயல்தானே? பைத்தியக்காரத்தனத்தின் வெளிப்பாடுதானே? பெற்றோர்களுக்குப் பிண்டம் வைப்பதற்காக கயாவிற்குப் போனதும், இங்கே திரும்பி வந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டதும் தேவைதானா? இரவு வேளைகளில் கூட்டமாகச் சேர்ந்து பாட்டுச் கச்சேரி நடத்தியதும், நாடக சங்கம் உண்டாக்கி ஆயிரக்கணக்கான ரூபாய்களை அதற்காகச் செலவு செய்ததும் தவிர்த்திருக்க முடியாத ஒன்றா என்ன? அவை அனைத்தும் முழுமையான பைத்திக்காரத்தனம்தான். தன் பிள்ளைகளைப் பற்றிய சிந்தனை அவருக்கு எதனால் இல்லாமற் போனது? அவர் வெறுமனே கிடைத்த சொத்தைக் காற்றில் பறக்கவிட்டார் என்றால், பிள்ளைகள் வெறுமனே கிடைக்கக்கூடிய சொத்தை அனுபவிக்கக் கூடாதா? அவரால் இளமையின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால், பிள்ளைகள் தவம் செய்ய வேண்டும் என்று இருக்கிறதா என்ன?
இறுதியில் அவருடைய எண்ணங்களுக்கு இந்த சிந்தனை சமாதானத்தை உண்டாக்கியது. இந்த அநீதி நிறைந்த உலகத்தில் தர்ம அதர்ம சிந்தனை என்பதே தவறானது. அது தற்கொலைக்கு நிகரானது. சூதாட்டத்தில் ஈடுபட்டோ, மற்றவர்களின் பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்திப் பொருள் சேர்ப்பதோ, சட்டப்போரைப் பயன்படுத்தி தடுக்கப்படக்கூடியதே. அவர் கடனுக்குப் பணம் தருபவனிடம் கடன்காரராக ஆனார் என்பதென்னவோ உண்மை. அந்தப் பொருட்களை நல்ல விலைக்கு விற்றுக் கடனை அடைத்து, மீதியை வைத்துக்கொள்ளலாம். சட்டம் கடன்காரர்களிடம் இப்படியொரு நீதியுடனாவது செயல்படுகிறதே. கடன்காரர்கள் சட்டத்தின் பலம் என்ன என்பதைப் பார்த்து கடன் கொடுத்தவர்களிடமிருந்து பொருட்களை மீட்க முயற்சிப்பதை அதர்மம் என்று குற்றம் சாட்டுவதற்கில்லை. இந்த முடிவுடன் அவர் நீதி நூல்களின் ஒவ்வொரு பிரிவையும் படித்துப் பார்த்து விஷயத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டார். இனி ஊசலாட்டம் இல்லை. இதனால் அவர் பின்பற்றி வரும் பண்பாட்டிற்குக் குறை உண்டாகி இருக்கலாம். ஆனால், அவர் ஒரு புதிய வாழ்க்கைக்கான மந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ச்சியுடன் இருந்தார். மனதைத் திறந்து சொன்னார்: "நீங்கள் என்னுடைய சொத்துகளைத் திருப்பித் தரவில்லையென்றால், பிள்ளைகள் வழக்கு போடுவார்கள்.''
கிரிதரதாசன் புதிய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதன். ஆங்கிலத்தில் நிபுணன். சட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவன்.
அரசியலில் பங்கெடுப்பதுண்டு. கம்பெனிகளில் ஷேர் எடுப்பான். மார்க்கெட் உயர்வது தெரிந்தால், உடனடியாக விற்றுவிடுவான். ஒரு சர்க்கரை ஆலையை அவனே சொந்தத்தில் நடத்திக் கொண்டிருந்தான். வியாபாரம் முழுவதும் ஆங்கில பாணியில்தான். அவனுடைய தந்தை மக்குலால் சேட் இதே மாதிரிதான் இருந்தார். ஆனால், பூஜை, பாராயணம், தானம், தட்சிணை ஆகியவற்றால் பிராயச் சித்தம் செய்திருந்தார். கிரிதரதாசன் முழுமையான லௌகீகவாதியாக இருந்தான். ஒவ்வொரு காரியத்தையும் வர்த்தக சட்டத்தை அனுசரித்தே செய்வான். பணியாட்களின் சம்பளத்தை முதல் தேதியன்றே கொடுத்துவிடுவான். இடையில் யாருக்காவது தேவை என்று வந்தால், வட்டிக்குப் பணம் தருவான். மக்குலால் வருடம் முடிந்தாலும், சம்பளம் தர மாட்டார். ஆனால், பணியாட்களுக்குக் கடன் தருவார். இறுதியில் கணக்கு பார்க்கும்போது, அங்கு போவதற்கு பதிலாக இங்கு வரவேண்டியதிருக்கும். வருடத்தில் நான்கு முறை மக்குலால் அரசாங்க அதிகாரிகளைப் பார்ப்பதற்காகப் போவதுண்டு. அவர்களுக்கு மலர்க்கொத்து தருவார். செருப்பைக் கழற்றி வெளியே வைத்துவிட்டு, அறைக்குள் நுழைந்து கைகளைக் கூப்பிக்கொண்டு நிற்பார். திரும்பி வரும் நேரத்தில் அலுவலகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இரண்டு, நான்கு என்று அவரவர்களின் தரத்திற்கேற்ப பரிசளிப்பார். கிரிதரதாசன் நகராட்சி கமிஷனராக இருந்தான். சூட்டும் ஷூக்களும் அணிந்து அதிகாரிகளைப் பார்ப்பதற்காகச் செல்வான். முறைப்படி நடந்து கொள்வான். ஆண்டு கொண்டாட்டங்களுக்கு லஞ்சம் எப்போதும் போல கொடுக்கப்படும்- அதுவும் கணக்கிற்கும் அதிகமாகப் புகழ் பாடுபவர்களுக்கு. தன்னுடைய உரிமைகளுக்காகப் படை திரட்டவும் போராடுவதற்கும் தெரியும். அவனை ஏமாற்றுவது என்பது நடக்கக்கூடிய விஷயமல்ல.
கிரிதரதாசன் தேவகுமாரனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டான். அவன் அவர்மீது மிகப் பெரிய மரியாதை வைத்திருந்தான். அவருடைய பெரும்பாலான புத்தகங்களைப் படித்திருந்தான். அவருடைய எல்லா நூல்களையும் தன்னுடைய புத்தக அலமாரியில் சேர்த்து வைத்திருந்தான். இந்தி மொழி மீது அவனுக்கு அப்படியொரு ஆர்வம். இந்தி பிரச்சார சபைக்கு பல தடவை நல்ல தொகைகளை நன்கொடையாக அளித்திருக்கிறான். பூசாரிகள், புரோகிதர்கள் ஆகியோர்களின் பெயரைக் கேட்டாலே அவனுக்கு கோபம் வந்துவிடும். கேவலமான விஷயங்களுக்கு தானம் அளிக்கும் போக்கைக் கண்டித்து அவன் ஒரு அறிக்கையைக்கூட அச்சடித்து வெளியிட்டிருந்தான். சுதந்திரமான சிந்தனையை வெளியிடுவதில் அவன் நகரத்தில் நல்ல ஒரு பெயரைப் பெற்றிருந்தான். மக்குலால் மிகவும் பருமனாக இருந்ததால், உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து எழுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கிரிதரதாசன் நல்ல உடல் நலம் கொண்ட மனிதனாக இருந்தான். நகரத்திலிருந்த உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லும் முக்கிய மனிதன் என்பது மட்டுமல்ல- நல்ல குதிரை சவாரி செய்பவனும், குறி தவறாமல் சுடக்கூடிய வேட்டைக்காரனாகவும் அவன் இருந்தான்.
சிறிது நேரம் அவன் தேவகுமாரனின் முகத்தையே பார்த்து திகைப்பில் மூழ்கிவிட்டான். அவருடைய எண்ணம்தான் என்ன? புரியவில்லை. பிறகு, நினைத்துப் பார்த்தான்- பாவம்... பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார். அதனால் சிந்திக்கும் திறனை இழந்திருப்பார். அதனால்தான் வழக்கத்தில் இல்லாததைப் போல பேசுகிறார். தேவகுமாரனின் முகத்தில் தெரிந்த வெற்றி உணர்ச்சி அவனுடைய இந்த எண்ணத்தை பலமாக்கியது.
தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடியை அவன் மூக்கிலிருந்து எடுத்து மேஜைமீது வைத்துவிட்டு, தமாஷாகப் பேசுவதைப் போல குசலம் விசாரித்தான்: "என்ன விசேஷம்? சொல்லுங்க. வீட்டில் எல்லாரும் நலம்தானே?''
தடுமாறும் குரலில் தேவகுமாரன் பதில் சொன்னார்: "ஆமாம்... ஆமாம். உங்களுடைய கருணை!''
"மூத்த மகன் வக்கீல் பணிக்கு போகிறார் அல்லவா?''
"போகிறான்.''
"ஆனால், வழக்கு எதுவும் கிடைக்காது. உங்களுடைய புத்தகங்களுக்கும் சமீப காலமாக விற்பனை குறைவாக இருக்கும். உங்களைப் போன்ற சரஸ்வதியின் மகன்களை ஆதரிக்க ஆட்கள் இல்லை. நாட்டின் துரதிர்ஷ்டம் இது. நீங்கள் ஐரோப்பாவில் இருந்திருந்தால் இப்போது பல லட்சங்களுக்குச் சொந்தக்காரராக இருந்திப்பீர்கள்.''
"நான் லட்சுமியை வணங்குபவன் அல்ல என்ற விஷயம் சேட்ஜி, உங்களுக்குத் தெரியுமல்லவா?''
"பணத்திற்கு சிரமப்படலாம். என்ன வேண்டுமென்று சொன்னால், நான் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். உங்களைப் போன்ற புகழ் பெற்ற மனிதர்கள் நண்பர்களாக இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். உங்களுக்காக எதையாவது செய்வது நான் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமே.''
தேவகுமாரன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பணிவின் அடையாளமாக மாறி விடுவார். பக்தியும் பாராட்டையும் வைத்து ஒரு மனிதன் அவருடைய எல்லாவற்றையும் கைக்குள் கொண்டு வந்து விடலாம். ஒரு லட்சாதிபதி, போதாததற்கு- இலக்கிய ரசிகன்- அவன் இந்த அளவிற்குப் பாராட்டும்போது அவருடைய பூமியைப் பற்றியோ கொடுக்கல்- வாங்கலைப் பற்றியோ பேசுவது அவருக்கு வெட்கமாகத் தோன்றியது.
"என்னை அதற்குத் தகுதியுள்ளவனாக நினைப்பது உங்களுடைய பெரிய மனதைக் காட்டுகிறது.''
"எனக்குப் புரியவில்லை- முன்பு எந்த சொத்தைப் பற்றி நீங்கள் சொன்னீர்கள்?''
தேவகுமாரனுக்கு கூச்சமாக இருந்தது:
"ஆமாம்... சேட்ஜி என்னை வைத்து எழுத வைத்தது...''
"சரி... அந்த விஷயத்தில் புதிதாக என்ன இருக்கிறது?''
"அதன் பெயரில் பிள்ளைகள் வழக்கு தொடுக்கப் போகிறார்களாம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால், நான் சொன்னதைக் கேட்கவில்லை. அதனால்தான் நான் இங்கே வந்தேன். ஏதாவது கொடுத்து வாங்கிப் பிரச்சினையை முடிக்கணும். நீதிமன்றத்திற்கு எதற்குப் போக வேண்டும்? தேவையில்லாமல் இரண்டு பக்கமும் சிரமங்கள் உண்டாகும்.''
இரக்கமும் புத்திசாலித்தனமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்த கிரிதரதாசனின் முகம் தீவிரமானது. தலையின் மென்மையான மெத்தையில் மறைத்து வைத்திருந்த நகங்கள் இந்தச் சூழ்நிலை வந்ததும் பயங்கர வடிவம் எடுத்து வெளியே வந்தன. கோபத்தைக் கடித்து அழுத்திக் கொண்டு அவன் சொன்னான்: "நீங்கள் எனக்கு அறிவுரை கூற இங்கு வரை நடந்து சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. உங்களுடைய பிள்ளைகளுக்குத்தான் அறிவுரை கூறியிருக்க வேண்டும்.''
"நான் அவர்களுக்கு வேண்டிய அளவிற்கு அறிவுரை கூறிவிட்டேன்.''
"அப்படியென்றால் போய் அமைதியாக இருங்க. எனக்கு என்னுடைய உரிமைகளுக்காகப் போராடத் தெரியும். சட்டத்தின் வெப்பம் அவர்களுடைய தலையில் பட்டிருந்தால், அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது.''
அந்த நேரத்தில் தேவகுமாரனால் தன் இலக்கியத்தனமான பணிவினாலும் அடங்கியிருக்க முடியவில்லை. போர் பற்றிய செய்தியை ஏற்றுக்கொண்டு சொன்னார். "அந்த சொத்துகளுக்கு இப்போது இரண்டு லட்சத்திற்கும் குறையாமல் விலை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.''
"இரண்டு லட்சம் அல்ல. பத்து லட்சமாகவே இருந்தாலும், உங்களுக்கு இனிமேல் அதில் என்ன உரிமை இருக்கிறது?''
"அதற்காக எனக்கு இருபதாயிரம் ரூபாய்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.''
"உங்களுக்கு சட்டம் தெரியுமல்லவா- இதுவரை நீதிமன்றத்திற்குப் போனதில்லை என்றாலும்...? விற்றுவிட்ட பொருளுக்கு என்ன விலை கொடுத்தாலும், திரும்பக் கிடைக்கப் போவதில்லை.
அப்படியொரு புதிய சட்டம் வந்தால், பிறகு நகரத்தில் கடனாகப் பணம் தர ஆள் இருக்காது.''
சிறிது நேரம் வாதமும் எதிர்வாதமும் நடந்தன. சண்டை போடும் நாய்களைப் போல இரண்டு மரியாதைக்குரிய மனிதர்களும் முரண்டு பிடித்தும், குரைத்தும், பற்களைக் கடித்தும், சொறிந்து கொண்டும் குதித்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் பெரிய சண்டையாக மாறியது.
கிரிதரதாசன் கோபக்குரலில் சொன்னான்: "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.''
தேவகுமாரன் வாக்கிங் ஸ்டிக்கைக் கையில் எடுத்து நீட்டியவாறு சொன்னார்: "உங்களுடைய சுயநலம் என்ற வயிறு இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நானும் நினைக்கவில்லை.''
"நீங்கள் உங்களின் அழிவிற்கு குழி வெட்டுகிறீர்கள்.''
"பயமில்லை.''
தேவகுமாரன் அங்கிருந்து வெளியேறியபோது குளிர்கால இரவில் மரத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த பனியிலும் உடல் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. வெற்றி பெற்றுவிட்ட சந்தோஷம் இந்த அளவிற்கு முன்பு எப்போதும் உண்டானதில்லை. விவாதத்தில் பலரையும் தோல்வியடையச் செய்திருக்கிறார். ஆனால், இந்த வெற்றி வாழ்க்கையில் புதிய ஒரு வெளிச்சம். புதிய ஒரு சக்தியின் உதயம்.
அதே இரவு வேளையில் சின்ஹாவும் சந்தகுமாரனும் தேவகுமாரனை மேலும் ஒரு முறை வற்புறுத்த முடிவெடுத்தார்கள்.
இருவரும் வந்தபோது தேவகுமாரன் குற்றம்சாட்டும் குரலில் சொன்னார்: "இன்னும் நீங்கள் வழக்கை ஃபைல் பண்ணவில்லையே! வெறுமனே ஏன் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?''
விரக்தியால் வறண்டு போயிருந்த சந்தகுமாரனின் மனதில் சந்தோஷத்தின் கடுமையான காற்று வீச ஆரம்பித்தது. அவன் இதுவரை நம்பிக்கை கொண்டிராத தெய்வம் உண்மையிலேயே எங்காவது இருக்கிறதோ? தெய்வீகமான ஒரு சக்தி இருக்கிறது. அது மட்டும் உண்மை. பிச்சை கேட்டு வந்தபோது, வரம் கிடைத்திருக்கிறது.
அவன் சொன்னான்: "அப்பா, உங்களுடைய அனுமதிக்காகக் காத்திருந்தோம்.''
"நான் சந்தோஷத்துடன் சம்மதிக்கிறேன். என்னுடைய எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு உண்டு.''
அவர் கிரிதரதாசனுடன் நடந்த உரையாடலை விளக்கிச் சொன்னார்.
சின்ஹா புகழ்ந்து சொன்னான்: "உங்களுடைய ஆசீர்வாதம் இருந்தால், நாங்கள் வெற்றி பெற்றுவிட்ட மாதிரிதான். அந்த ஆளுக்கு பணத்தின் பலம் இருக்கலாம். ஆனால், இங்கேயும் காரியங்களைப் பார்ப்பதற்கு திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.''
சந்தகுமாரன் பாதி வழியைக் கடந்துவிட்டதைப் போல சந்தோஷப்பட்டான்: "அப்பா மனசுல தைக்கிற மாதிரி பதில் கொடுத்திருக்கிறார்.''
சின்ஹா கயிறை மேலும் முறுக்கினான். "இப்படிப்பட்ட சேட்மார்களை சுட்டு விரலில் இங்கே நிறுத்தத் தெரியும்.''
சந்தகுமாரன் கனவு காண ஆரம்பித்தான். "இங்கேயே நம் இருவருக்கும் பங்களா கட்ட வேண்டும் நண்பரே''.
"இங்கே எதற்கு? சிவில் லைன்ஸில் கட்ட வேண்டும்.''
"சுமார் எவ்வளவு நாட்களுக்குள் தீர்ப்பு வரும்?''
"ஆறு மாதங்களுக்குள்.''
"அப்பாவின் பெயரில் சரஸ்வதி கோவில் கட்டணும்.''
ஆனால், பிரச்சினை மீண்டும் தலையெடுத்தது. பணத்தை எங்கேயிருந்து உண்டாக்குவது? தேவகுமாரன் எதுவுமே இல்லாமல் இருந்தார். எந்தச் சமயத்திலும் அவர் பணத்தை வழிபட்டதே இல்லை. சம்பாதிக்கக் கூடிய அளவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. ஏதாவது மாதத்தில் ஒரு ஐம்பது ரூபாயை மீதப்படுத்தினால், அடுத்த மாதத்தில் அதையும் தாண்டி செலவாகும். புத்தகங்களின் பதிப்புரிமையை விற்று ஒரு ஐயாயிரம் ரூபாய் ஒரே நேரத்தில் கிடைத்தது. அதை பங்கஜாவின் திருமணத்திற்காக பத்திரமாக வைத்திருக்கிறார். இப்போது ஒரு தொகை ஒரே நேரத்தில் கிடைக்க எந்தவொரு வழியும் இல்லை. சந்தகுமாரன் வீட்டுச் செலவைப் பார்த்துக்கொள்வான் என்றும், தான் நிம்மதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டோ சுற்றுலாப் பயணம் போய்க் கொண்டோ இருக்கலாம் என்றும் மனதில் நினைத்திருந்தார். ஆனால், இவ்வளவு பெரிய ஒரு மனக்கோட்டையைக் கட்டி, இனி அடங்கி எப்படி இருக்க முடியும்? அவருடைய வாசகர்கள் வேண்டிய அளவிற்கு இருக்கிறார்கள். இரண்டு, நான்கு மன்னர்களும் அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். அவர் தங்களுடைய இல்லங்களுக்கு வர வேண்டுமென்றும், தங்களுடைய ஆர்வம் நிறைவேற்றப்படுவதற்கு சந்தர்ப்பம் தர வேண்டும் என்றும் நீண்ட காலமாகவே விருப்பப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். ஆனால், இதுவரை அரசவைகளில் கால் வைத்திராத தேவகுமாரன் தன்னுடைய ரசிகர்களிடமும் நண்பர்களிடமும் பொருளாதார சிக்கல்களைப் பற்றிப் புலம்பவோ, வாயைத் திறந்து உதவி கேட்கவோ ஆரம்பித்தால்...? சுயமரியாதை ஏதோ சுடுகாட்டு பூமியில் கைவிட்டுப் போவதைப் போல தோன்றியது.
வெகு சீக்கிரமே உரிய சூழ்நிலை வெளியே இருந்து வந்தது. தேவகுமாரனின் அறுபதாவது வயதைக் கொண்டாட வேண்டுமென்றும், இலக்கிய வாசகர்களின் சார்பாக ஒரு பணமுடிப்பு பரிசாகத் தரப்பட வேண்டும் என்றும் ரசிகர்களில் ஒரு ஆள் அறிக்கை வெளியிட்டான். வாழ்க்கையில் நாற்பது வருடங்கள் இலக்கிய சேவைக்காக அர்ப்பணித்த மிகப் பெரிய மனிதர், இந்த வயதான காலத்திலும் பொருளாதார கஷ்டங்களில் இருந்து விடுதலை அடையவில்லை என்பது கவலைப்படக் கூடியதும், வெட்கப்படக்கூடியதுமான ஒரு விஷயமாகும். இலக்கியம் வெறுமனே அப்படி வளராது. இலக்கிய சேவை செய்பவர்களை வேண்டிய அளவிற்கு மரியாதை செய்ய நாம் படிக்கவில்லையென்றால், இலக்கியம் வளரவே செய்யாது. பத்திரிகைகள் இந்த அறிக்கையை முழுமையாக உற்சாகப்படுத்தின. முன்பு தேவகுமாரனுக்கு நேராக இலக்கிய ரீதியாக பாராமுகம் காட்டிக் கொண்டிருந்தவர்கள்கூட இந்த சந்தர்ப்பத்தில் ஈடுபாட்டைக் காட்ட ஆரம்பித்தார்கள். காரியங்கள் முன்னோக்கிச் செல்வதற்காக ஒரு செயற்குழு உண்டானது. அரச வம்சத்தைச் சேர்ந்த முக்கிய மனிதர் ஒருவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மிஸ்டர் சின்ஹா எந்தச் சமயத்திலும் தேவகுமாரனின் புத்தகம் எதையும் வாசித்ததில்லை. அவனும் அந்த அமைப்பில் முக்கிய பங்கு வகித்தான். மிஸ் கம்மத்தும் மிஸ் மாலிக்கும் பின்னால் இருந்து துணை செய்வதற்கு வந்தார்கள். பெண்கள்- ஆண்களுக்குப் பின்னால் இருந்தால் போதுமே! நாள் நிச்சயிக்கப்பட்டது. நகரத்தில் இருக்கும் இன்டர்மீடியட் கல்லூரியில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின.
இறுதியில் அந்த நாளும் வந்து சேர்ந்தது. இன்று மாலையில் கொண்டாட்டம் உச்ச நிலையை அடையப் போகிறது. தூர திசைகளில் இருந்துகூட இலக்கிய அன்பர்கள் வந்திருக்கிறார்கள். ஸாராப்பைச் சேர்ந்த குமார் சாஹிப்தான் பணமுடிப்பு அளிக்க இருக்கிறார். எதிர்பார்த்ததைவிட அதிகமான ஆட்கள் கூடியிருக்கிறார்கள். சொற்பொழிவு, பாட்டுக் கச்சேரி, நாடகம், நடன நிகழ்ச்சிகள், கவி அரங்கம், நட்பு விருந்து- எல்லாம் இருக்கின்றன. நகரத்தின் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. படித்தவர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கிய நிகழ்ச்சி. தலைமை தாங்குபவர் ராஜா சாஹிப்தான்.
தேவகுமாரனுக்கு கொண்டாட்டங்களென்றாலே வெறுப்புதான். கொண்டாட்டங்களில் அவர் பங்கெடுப்பதே இல்லை. ஆனால், இன்று கொண்டாட்டத்தின் கதாநாயகனாக அவரே இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய நேரம் நெருங்க நெருங்க மனதில் ஒரு வகையான குற்ற உணர்வு நிழல் பரப்ப ஆரம்பித்தது.
பணமுடிப்பை நீட்டும்போது, கை நீட்டி வாங்கும் காட்சி எவ்வளவு வெட்கப்படக்கூடியதாக இருக்கும்! எந்தச் சமயத்திலும் பணத்திற்காக கையை நீட்டாத மனிதர் இந்த இறுதி நேரத்தில் தானம் பெறுவது என்பது...! இது தானமேதான்! வேறெதுவும் இல்லை. சிறிது நேரத்திற்கு அவருடைய சுயமரியாதை வெட்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் பணமுடிப்பு கிடைத்தால், அதை அதே இடத்தில் வைத்து ஏதாவதொரு பொது நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்து விடுவதுதான் சரியானது என்று அவருக்குத் தோன்றியது. இதுதான் அவருடைய வாழ்க்கையின் லட்சியத்திற்குப் பொருத்தமானதாகவும் இருக்கும். மக்கள் அவரிடமிருந்து எதிர்பார்ப்பதுகூட இதுவாகத்தான் இருக்கும். இதுதான் மகத்துவமான செயலாகவும் இருக்கும். பந்தலை அடைந்தபோது முகத்தில் சந்தோஷத்தின் வெளிப்பாடே இல்லை. சற்று கோபமாக இருப்பதைப் போல தோன்றியது. நல்ல பெயர் என்ற கயிறு ஒரு பக்கம் அவரை இழுத்தது. பணத் தேவை இன்னொரு பக்கம் இழுத்தது. இது தானம் அல்ல என்றும்; ஒரு உரிமை என்றும் மனதிற்கு எப்படிப் புரிய வைப்பது? மக்கள் கேலி செய்வார்கள். இறுதியில் பணத்தின்மீது தாவி விழுந்து விட்டார் என்று பழி சொல்வார்கள். அவருடைய வாழ்க்கை அறிவுப் பூர்வமானதாக இருந்தது. அறிவு, நீதியை இறுகப் பிடித்துக்கொண்டு செயல்பட்டது. நீதியைக் கைவிடாமல் இருந்தால், பிறகு வேறெதையும் கவனிக்க வேண்டியதே இல்லை.
வரவேற்புரை முடிந்தது. வாழ்த்துப் பாடல் முடிந்தது. தேவகுமாரனின் பெருமையைப் பற்றி புகழும் பாராட்டு சொற்பொழிவுகள் ஆரம்பமாயின. ஆனால், தாங்க முடியாத தலைவலியால் சிரமப்படும் ஒரு மனிதனின் நிலையில் இருந்தார் தேவகுமாரன். இந்த நேரத்தில் வேதனைக்கான மருந்துதான் அவருக்குத் தேவை. எதுவும் சந்தோஷம் தருவதாகத் தெரியவில்லை. அனைவரும் வித்துவான்கள். ஆனால், அவர்களுடைய கண்டுபிடிப்பு எவ்வளவு பொய்யானவை! எவ்வளவு கனம் குறைந்தவையாக அவை இருக்கின்றன. அவருடைய எண்ணங்களை யாருமே புரிந்து கொள்ளாததைப் போல தோன்றியது. கைத்தட்டல்களும் புகழ்ச்சிப் பாடல்களும் குருட்டு பக்தியைக் காட்டும் தாள வாத்தியங்களைப் போல ஒலித்தன. ஒரு ஆளும் அவரைப் புரிந்து கொள்ளவில்லை. நாற்பது வருடங்கள் எப்படிப்பட்ட ஒரு உள்கட்டளை அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது! எப்படிப்பட்ட ஒரு ஒளி அவரிடம் சற்றும் குறையாமல் தங்கி நின்றிருந்தது!
திடீரென்று ஒரு பிடி கிடைத்தது. அவருடைய சிந்தனை வயப்பட்ட வெளிறிய முகத்தில் மெல்லிய பிரகாசம் தோன்றியது. இது தானம் அல்ல- இதுவரை உள்ள வருமானத்திலிருந்து மீதப் படுத்திய ப்ராவிடன்ட் ஃபண்ட். அரசாங்கப் பணி செய்பவர்களுக்கு பென்ஷன் கிடைப்பது தானமா என்ன? அவர் மக்களுக்குச் சேவை செய்திருக்கிறார்- சரீரத்தாலும் மனதாலும். விலை மதிக்க முடியாத சேவை. பென்ஷன் பெறுவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
ராஜா சாஹிப் பணமுடிப்பைப் பரிசாக அளித்தபோது, தேவகுமாரனின் முகத்தில் வெற்றியின் போதை தெரிந்தது. சந்தோஷத்தின் அடையாளம் அது.