Logo

சிலையும் ராஜகுமாரியும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6779
silayum rajakumariyum

சுராவின் முன்னுரை

1945-ஆம் ஆண்டில் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த முதுகுளத்தில் பிறந்த பி.பத்மராஜன் (P.Padmarajan) மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவருடைய சிறந்த புதினங்கள் பல திரைப்படங்களாக வடிவமெடுத்திருக்கின்றன. பத்மராஜனின் முதல் நாவலான ‘நட்சத்திரங்களே காவ’லுக்கு 1972-ஆம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பரதன் இயக்கிய முதல் படமான ‘பிரயாண’த்திற்கு திரைக்கதை எழுதியவர் பத்மராஜன்தான்.

1979-ஆம் ஆண்டில் பத்மராஜன் ‘பெருவழியம்பலம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஓரிடத்தொரு பயில்வான், கள்ளன் பவித்ரன், கூடெவிடெ?, திங்களாழ்ச்ச நல்ல திவசம், நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள், தேசாடனக்கிளி கரயாரில்ல, அரப்பட்ட கெட்டிய கிராமத்தில், தூவானத் தும்பிகள், மூணாம் பக்கம், அபரன், இன்னலெ, ஞான் கந்தர்வன் ஆகிய திரைப்படங்களை பத்மராஜன் இயக்கினார். அனைத்துப் படங்களும் மிகச் சிறந்த படங்களே.

 இவை தவிர, தகர, சத்ரத்தில் ஒரு ராத்ரி போன்ற 18 திரைப்படங்களுக்கு பத்மராஜன் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். பல குறிப்பிடத்தக்க பரிசுகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன.

 ‘சிலையும் ராஜகுமாரியும்’ (Silaiyum Rajakumariyum) புதினத்தைப் படிக்கும்போது இப்படியும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து கதை எழுத முடியுமா என்ற வியப்பு அனைவரின் மனதிலும் ஏற்படும். நான் இதை மொழி பெயர்த்ததற்குக் காரணமும் அதுதான். 1991-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய பத்மராஜன் இன்றும் மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம், இத்தகைய சிறந்த இலக்கியப் படைப்புகளே.

 இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

 அன்புடன், 

சுரா(Sura)


1. தமாஷ் கோட்டை

து ஒரு மணல்வெளி. எவ்வளவோ பரப்பளவில் நீண்டு பரந்து கிடக்கும் அந்த மணல்காட்டின் எல்லைகளை மிகவும் சரியாகக் கண்டுபிடித்ததாகக் கூறக் கூடியவர்கள் அதிகம் இல்லை. வானத்தில் பயணம் செய்பவர்கள் பாலைவனத்தின் ஒரு எல்லை கடலில் போய் தொடுவதைப் பார்த்திருப்பார்கள். அதனால்தான் கடல் பின்வாங்கியபோது, வெளியே வந்த மணல் பரப்புதான் அது என்று நினைப்பதில் தவறே இல்லை.

வானத்தின் நீல நிறம் தெரியும் எல்லையற்ற வெண்மையில், ஆங்காங்கே தலையை நீட்டிக் கொண்டிருக்கும் கள்ளிச் செடிகள் மலர்களை விரிப்பதை நீக்கினால், எந்தவொரு தொந்தரவும் இல்லாத அந்தப் பரப்பிற்குக் குறுக்கே, கயிறு கட்டியதைப் போல போய்க் கொண்டிருக்கும் ஒரு கறுப்பு நிற சாலை இருக்கிறது. சாலையின் ஒரு பக்கத்தில் வெளி உலகமும் இன்னொரு பக்கத்தில் "ஃபன் போர்ட்" என்ற "தமாஷ் கோட்டை"யும் இருக்கிறது.

"தமாஷ் கோட்டை"யின் உரிமையாளர் ஒரு மார்வாடி குரூப். சரியாகக் கூறுவதாக இருந்தால் ஒரே ஒரு மார்வாடி. "தீருலால் அசோசியேட்ஸ்" என்று கூறும்போது, தீருலால் குடும்பம் என்றே அர்த்தம். இப்போதைய தீருலால்தான் இப்போது அதன் உரிமையாளர்.

தீருலால் குடும்பத்திற்கு பாலைவனத்தில் அந்த அளவிற்கு ஒரு இடம் எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. காதல் செயல்களில் ஈடுபடுவதற்காக வந்து, கடலில் பாதை இலக்கைத் தவறவிட்டு, காற்றிலும் புயலிலும் சிக்கிக் கொண்ட பரமேஸ்வரனையும் பார்வதியையும் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய ஒரு படகோட்டிக்கு, அதற்குக் கைம்மாறாகக் கடவுள் கடலை வற்ற வைத்து மணலாக ஆக்கி வரமாக அளித்தது தான் அந்தப் பாலைவனம் என்பதுதான் அதில் ஒரு கதை. அந்தப் படகோட்டி தீருலாலின் மூத்த முன்னோடியாக இருந்திருக்கலாம்.

அப்படியென்றால் பரமேஸ்வரன் தீருலாலின் தாத்தா வருவதற்கு முன்பே அதைச் செய்திருக்கலாமே என்று கேட்கும் சந்தேக மனிதர்களுக்காக இருக்கும் இன்னொரு கதை, புறம்போக்கு நிலத்தில், யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்காமல் கைப்பற்றி, காலப்போக்கில் அதைத் தன்னுடைய சொந்தப் பெயரில் எழுதி வைத்துக் கொண்ட இன்னொரு தைரியசாலியான தீருலாலின் அக்கிரமச் செயல்களுடன் தொடர்பு கொண்டு இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் மிகவும் வயதான மனிதர்களின் நினைவுகளில்கூட "தமாஷ் கோட்டை" கடந்து போய்விட்ட நாகரீகங்களுடனும் ஏமாற்று வேலைகளுடனும் தங்கி நின்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

"சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்" என்று குறிப்பிடப்படும் அந்த கோட்டையில் எல்லா காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள், கல்விச் சுற்றுலா வரும் மாணவர்கள் ஆகியோரின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆங்காங்கே சிறிய அளவில் பசுமையைப் பார்த்திருக்கும் கண்களுக்கு "கோட்டை" அளிக்கும் முதல் ஆச்சரியமே மரங்கள், இலைகள் ஆகியவற்றின் பச்சை நிறம்தான். அந்தப் பாலைவனத்தில் இந்த அளவிற்கு மரங்களையும் செடிகளையும் மலர்களையும் எப்படி நட்டு வளர்த்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்காத ஒரு பயணி கூட அங்கு வந்ததில்லை. அதற்காக அதன் உரிமையாளர் செலவழிக்கும் பணத்தின் கணக்கைக் கேட்டு வாய் பிளந்து நிற்காதவர்களும் யாருமில்லை. எவ்வளவோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடலில் இருந்து குழாய் வழியாக நீரைக் கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்ட பிறகு தான் அங்கு அது பயன்படுத்தப்படுகிறது. தினமும் லட்சக் கணக்கான ரூபாய் செலவழிக்கப்படும் ஒரு விஷயம் அது என்பதை நவீன அறிவியல் அறிஞர்கள் கூறி தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மணல் காட்டிற்கு மத்தியில், அந்தத் தீவில் இருக்கும் ஒரே சொத்துகள் அந்த "தமாஷ் கோட்டை"யும், பிறகு தீருலால் குடும்பத்திற்குச் சொந்தமான பூர்வீக வீடும் மட்டும்தான். மீதி அனைத்தும், நாம் எல்லாரும் வந்து போகின்றவர்கள்தான். நமக்கெல்லாம் அங்கு எவ்வளவோ தமாஷ்கள் தோன்றலாம் என்றாலும், உரிமையாளரைப் பொறுத்தவரையில் அது சிறிதும் தமாஷ் அல்ல. அவருக்கு அது மிகவும் சீரியஸான வியாபாரம். நுழைவு டிக்கெட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் வசூலில் மட்டுமே நல்ல தொகை கிடைக்கும். உள்ளே நுழைந்துவிட்டால், பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கான டிக்கெட்டுகள் வேறு இருக்கின்றன. தனித்தனி ஆச்சரியங்களை அனுபவித்து தெரிந்து கொள்வதற்கு, செலவு செய்யத் தயார் பண்ணிக் கொண்டு ஒரு கோடி ரூபாய்களைக் கொண்டு போனால், ஒரு பைசாவைக்கூட திரும்பக் கொண்டு வர முடியாது என்பது எல்லாருக்கும் நன்கு தெரிந்திருக்கும் ஒரு உண்மையாகும்.

மரங்களில் பல ஜாதிகளைச் சேர்ந்த குரங்குகள், பல நிறங்களைக் கொண்ட ஓணான்கள், அணில்கள், கிளிகள் என்று ஆரம்பித்து வானத்தில் பறக்கும் புகை வண்டி வரை அந்தக் கோட்டைக்குள் இருக்கின்றன. பெரிய எருமைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் இழுக்கும் வண்டிகளில் பயணம் செய்து நீங்கள் அந்தப் பிரதேசம் முழுவதையும் சுற்றிப் பார்க்கலாம். அவற்றைத் தவிர, வேறு எந்த வாகனங்களும் அதற்குள் நுழைய முடியாது. அப்படிப்பட்ட வண்டிகளில் நூறு பேர் வரை ஒன்றாகப் பயணம் செய்யக்கூடிய, யானை இழுக்கக்கூடிய வண்டி வரை இருக்கிறது. எருமை இழுக்கும் வண்டிகளில் ஒரே நேரத்தில் பத்து நபர்கள் வரை ஏறலாம். அவற்றில் கிராமத்து இசைக் கருவிகளின் இசையுடன், மண் வாசனை கொண்ட சில பாடல்களைப் பாடும் இளம் பெண்கள், உங்களுடைய உற்சாகத்திற்கு உஷ்ணமூட்டுவார்கள். பூ மரங்கள் மட்டும் இருக்கும் நடைபாதையும், காதலர்களுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட மூலையும், நவீனமான எதுவும் கிடைக்கக்கூடிய விசாலமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸும் நீச்சல் குளங்களும், நான்கு அடிகள் எடுத்து வைத்தால் முகத்தின் மீது நீரைப் பீய்ச்சி அடிக்கும் "கோபக்கார பால"மும், வேறு பல வகைப்பட்ட அற்புதங்களை வெளிப்படுத்தும் சிலைகளும், குட்டிகளை மேலே ஏற்றிக் கொண்டு ஊர்ந்து கொண்டிருக்கும் பெரிய ஆமைகளும், பல வகையான விளையாட்டுகளையும் அறிந்து வைத்திருக்கும் டால்ஃபின் மீன்களும், பணமுள்ளவர்கள் தங்கி சந்தோஷப்படுவதற்காக இருக்கும் சொர்க்கத்திற்கு நிகரான காட்டேஜ்களும், சூதாட்ட விளையாட்டு நடக்கும் இடங்களும், குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக விளையாட்டுகள் காட்டும் தடியர்களும் கோமாளிகளும் மேஜிக் செய்பவர்களும், எலக்ட்ரானிக் அற்புதங்களைக் காட்டும் நீர் ஊற்றுகளும், ஐஸ் ஸ்கேட்டிங் உள்ளடக்கிய விளையாட்டுக் கிடங்கும், தெளிவான ஆகாயமும் சந்திர மண்டலமும், சாய்வான பெஞ்சுகளும் - எல்லாம் சேர்ந்து "கோட்டை"க்கு வரும் ஒரு ஆளை ஆச்சரியப்படச் செய்யக் கூடிய எல்லா விஷயங்களும் அங்கு இருந்தன.


இப்படிப்பட்ட ஏராளமான அற்புதங்களின் மேற்கு எல்லையில் ஒரு ஹெலிபேட் இருந்தது. அதிகமாகப் பணம் வைத்திருப்பவர்கள் அங்கே இருந்து ஹெலிகாப்டரில் ஏறி, பதினேழு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இன்னும் மூன்று கிலோமீட்டர்கள் கடலுக்கு மேலே தாண்டி ஒரு தீவில் இறங்கலாம். அங்கு "பாரடைஸ் ஆன் ஐலாண்ட்" என்ற பெயரில் தீருலால் குடும்பத்திற்குச் சொந்தமான இன்னொரு பொழுதுபோக்கு மையமும் இருக்கிறது. நிறைய பணம் வைத்திருக்கும்

கோடீஸ்வரர்கள் மட்டுமே அங்கு போக முடியும். சென்றுவிட்டு வந்தவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட விஷயம் "தீவில் சொர்க்கம்"- சொர்க்கத்தில் சொர்க்கத்தைப் படைக்கிறது என்பதுதான். ஆண்களும் பெண்களும் முழு நிர்வாணமாக மட்டுமே நடக்க அனுமதிக்கும் "ந்யூட் பீச்"களும், "லைவ் ஷோக்கள்" உள்ள இரவு நேர க்ளப்களும் இருப்பதால் இருக்க வேண்டும் - சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு வரும் வசதி படைத்தவர்கள்தான் அந்தத் தீவிற்குச் சென்று தங்குவார்கள். பணத்தைத் தண்ணீரைப்போல செலவு செய்ய முடிந்தவர்களால் மட்டுமே தங்க முடியும் "தீவில் சொர்க்க"த்திற்குப் போவதாக இருந்தாலும் ஐந்து ரூபாய்க்கான நுழைவு டிக்கெட்டைக் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் போதுதான், தீருலாலின் வியாபாரத் திறமைகளின் ஆழத்தைப் பற்றி நாம் நினைக்கத் தொடங்கி விடுவோம். அதனால்தான் "கோட்டை" யின் பிரதான வாயிலின் முக்கியத்துவமும் சிந்தனைக்கான விஷயமாக ஆகிறது.

பிரதான நுழைவு வாயிலின் முக்கியத்துவத்தை வேறு யாரையும் விட தெரிந்து வைத்திருப்பவர் அதன் உரிமையாளராகத்தானே இருக்க முடியும்! அதனால்தான் "கோட்டை"யைத் தேடி வரும் எந்தவொரு விருந்தாளியையும் சிறிது நேரம் பிடித்து நிறுத்தக்கூடிய ஒரு தந்திரச் செயலை அங்கு ஏற்படுத்த அவர் திட்டமிட்டார். காரணம்- "கோட்டை"யின் ஏராளமான தமாஷ்களில் உங்களுடைய மனதை இழந்தாலும், திரும்பி வந்து பல வருடங்கள் கடந்த பிறகும், மறையாத நினைவு என்று எஞ்சி இருப்பது அந்த ஞாபகச் சின்னமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்தார். அத்துடன் அதைப் பார்ப்பதற்காகவாவது நீங்கள் மீண்டும் அங்கு திரும்பி வர வேண்டும் என்றும் அவர் நினைத்தார். அந்தக் கணக்கு கூட்டல்கள் தவறவில்லை. பிரதான வாயிலுக்குள் நுழைந்தால், யாருடைய கண்களாக இருந்தாலும் அவை முதலில் பதிவது, அந்த அற்புதச் சிலையின் மீதாகத்தான் இருக்கும்.

அசாதாரணமான உடலமைப்பைக் கொண்ட ஒரு துவாரபாலகன்! தலையில் சிவப்பு நிற தலைப்பாகை, நெற்றியில் சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவமான பொட்டு, முறுக்கி விடப்பட்ட அடர்த்தியான மீசை, தோளில் சிவப்பு நிறத்தில் துண்டு, இடுப்பில் சிவப்பு நிற சில்க் துணி, காதுகளிலும் கையிலும் இருக்கும் வெள்ளி வளையங்களும், கழுத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வைர மாலையும், இடுப்பில் வேட்டியின் மீது சுற்றப்பட்டிருக்கும் தங்க இடுப்புச் சங்கிலியும் சேர்ந்து அதற்கு ஒரு தனிப்பட்ட கம்பீரத்தையும் பிரகாசத்தையும் அளித்தன. கையில் ஆயுதமாக ஒரு நீளமான, ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஈட்டி இருந்தது.

அந்த ஈட்டிதான் சிலையிலேயே மறக்க முடியாத விஷயம். நீங்கள் உள்ளே செல்லும்போது, ஒரு பக்கமாகச் சாய்த்து இறுகப் பிடித்திருக்கும் ஈட்டி, திரும்பி வரும்போது உங்களைப் பார்த்து சுட்டிக் காட்டுவதைப் போல நிற்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? சென்ற மாதம் நீங்கள் வந்தபோது, தரையில் கிடக்கும் ஏதோ மிருகத்தையோ எதிரியையோ கொல்வதற்காக ஓங்கியதைப் போல இருந்த ஈட்டியின் முனைப்பகுதி, இந்தத் தடவை வரும்போது வானத்தில் பறப்பதற்குத் தயார் நிலையில் இருப்பதைப் போல கண்டால் எப்படி இருக்கும்?

நீங்கள் உண்மையாகவே ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த எல்க்ட்ரானிக்ஸ் யுகத்தில் இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் ஞாபகச் சின்னங்களாக எப்படி ஆகும் என்று கேள்வி கேட்கும் நாகரீக மனிதர்களுக்கு அது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருப்பது- உண்மையிலேயே சிலை, சிலை அல்ல என்பதும் அது ஒரு மனிதன்தான் என்பதும் தெரிய வரும்போதுதான்.

துவாரபாலகன் உயிருள்ள ஒரு மனிதன்தான் என்பது ஒரு ரகசியமே அல்ல. மாறாக, அங்கு பார்ப்பதற்காக வரும் சிறு குழந்தை களுக்குக்கூட அந்த விஷயம் நன்றாகத் தெரியும். அதுதான் அதன் விளம்பரமும் பெருமையும். "தமாஷ் கோட்டை"யின் நூற்றுக்கணக்கான காட்சிப் பொருட்களிலேயே மிகவும் புகழ் பெற்றது அந்த உயிருள்ள சிலைதான்.

துவாரபாலகனின் இந்தப் புகழை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக உரிமையாளர் அங்கு ஒரு போட்டியையே ஏற்படுத்தினார். சிலை வடிவத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனை சிரிக்க வைக்கவோ கவலைப்பட வைக்கவோ கோபப்பட வைக்கவோ- அவ்வளவு ஏன்- முகத்திலோ உடலிலோ ஏதாவதொரு அசைவைக்கூட உண்டாக்குபவர்களுக்கு "கோட்டை"க்குள் பயணித்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ஆயிரம் ரூபாய்களுக்கான டிக்கெட்டுகள் பரிசாக அளிக்கப்படும் என்பதுதான் அந்தப் போட்டி. அது தவிர, ஒரு இரவு வேளையில் "ஃபன் காட்டேஜி"ல் இலவசமாகத் தங்குவதற்கான வசதியும்.

பரிசு என்ற ஈர்ப்பு விஷயமும் இருந்ததால், சிலைக்கு முன்பு எப்போதும் ஆட்கள் கூடிய வண்ணம் இருந்தனர்.

சிறு குழந்தைகளும் மற்றவர்களும் அருகில் சென்று தொட்டுத் தொந்தரவுகள் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சிலையைச் சுற்றி சதுரமாக முள் கம்பிகளால் ஆன வேலி அமைக்கப்பட்டது. வெயிலும் மழையும் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்க அமைக்கப்பட்ட வட்ட வடிவமான மேற்கூரைக்குக் கீழே, சற்று உயரமாகக் கட்டப்பட்டிருந்த பீடத்தின் மீது நின்று கொண்டிருந்த அந்த சிலையில் ஏதாவது ஒரு அசைவை உண்டாக்க இன்று வரை யாராலும் முடியவில்லை.

வேறு சில சிலைகளுக்குக் கீழே சரஸ்வதி, விஷ்ணு, கிறிஸ்து, ஜடாயு என்று எழுதப்பட்டிருப்பதைப் போல, அந்தச் சிலையின் கால் பகுதியில் "துவாரபாலகன்" என்று எழுதப்பட்டிருந்தது.

"உயிருள்ள சிலை"யை விட தமாஷான விஷயம்- "சிலையைப் போன்றிருக்கும் உயிரை"ப் படைக்க முடியும் என்பது தீருலால் குடும்பத்திற்குத் தெரியும்.

2. துவாரபாலகன்

"தமாஷ் கோட்டை"யில் ஆண்களும் பெண்களுமாக மொத்தம் கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் வேலை செய்கிறார்கள். ஐந்து இலக்கங்கள் வரக்கூடிய சம்பளம் வாங்கும் ஜெனரல் மேனேஜர் முதல், நூறு ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் வரை அதில் இருந்தார்கள். அலுவலக ஸ்டாஃப், சமையலறை ஸ்டாஃப், தோட்டக்காரர்கள், சாலைப் பணியாளர்கள், பொறியியல் வல்லுனர்கள், டிரைவர்கள், செக்யூரிட்டி ஸ்டாஃப், எலக்ட்ரிஷியன்கள், பப்ளிக் ஸ்டாஃப், குஸ்திச் சண்டை போடுபவர்கள், கோமாளிகள், பெயிண்டர்கள், ஆசாரிகள், சேல்ஸ் பெண்கள், நடனமாடும் பெண்கள், பேரர்கள் என்று பல பிரிவுகளில் இருக்கும் அனைவரும் "கோட்டை"க்குள் இருக்கும் க்வார்ட்டர்ஸ்களிலேயே தங்கியிருந்தார்கள்.


ஆண்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தை ஊரில் இருக்கச் செய்துவிட்டு, இங்கு வந்து கிடப்பவர்கள். அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிகமான சம்பளம் என்ற ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்ததால், பொதுவாகவே எல்லாரும் எலும்பு ஒடிய வேலை செய்தார்கள். வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஒரு வகையான அடிமைகளைப் போல உழைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு "கோட்டை"யில் நடக்கும் தமாஷ்கள் எதுவும் தமாஷ்களாக தோன்றாது என்பது மட்டுமல்ல - தினந்தோறும் நடக்கக்கூடிய விஷயங்கள் என்பதால் பொதுவாகவே மிகவும் சலிப்பு அளிக்கக்கூடியவையாகவும் அவை இருந்தன. வேறு பொழுதுபோக்குக்கான வழிகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதாவது - அப்படியே இருந்தால்கூட, பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் கண்களைப் பதிய வைத்துக் கொண்டிருந்த அவர்களை ஈர்ப்பதற்கு அவற்றால் சிறிதுகூட முடியவில்லை என்பதே உண்மை. இடையில் சில காதல் திருமணங்கள் நடக்காமல் இல்லை. எனினும், அந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் எப்போதாவது ஒருமுறை, வருடங்கள் அதிகமாகி பிறந்த ஊர்களுக்குச் செல்லும்போது மட்டுமே நடத்த வேண்டும் என்று அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று வருடங்கள் கடக்கும்போது வரக்கூடிய அப்படிப்பட்ட விடுமுறைகளின்போது மட்டுமே அவர்கள் வெளி உலகத்தைப் பார்ப்பதிலும், சாதாரண மனிதரின் விளையாட்டுக்களிலும், செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் கவனத்தைச் செலுத்துவார்கள். அப்போது மட்டுமே அவர்களுக்கு அதற்கு அனுமதி இருந்தது. இல்லாவிட்டால், அவர்களால் முடியாது.

அதே நேரத்தில், அதிலிருந்து மாறுபட்டவனாக, எல்லா நாட்களும் வந்து போகக்கூடிய அனுமதி உள்ளவனாக ஒருவன் மட்டும் அங்கு வேலை பார்ப்பவர்கள் மத்தியில் இருந்தான். அது- அந்த துவாரபாலகனின் சிலைதான்.

ஆனால், அந்த விஷயம் அங்கு வேலை பார்ப்பவர்களில் ஒரு ஆளுக்குக்கூட தெரியாது. அதை அறிந்திருப்பவர்கள் தீருலாலும் சிலையும் மட்டுமே.

வேலை பார்ப்பவர்களில் வேறு ஒரு ஆளுக்குக்கூட தெரியாமல் இது எப்படி நடக்கிறது என்பதுதான் கேள்வி என்றால், அதற்கு பதில் - அவர்கள் யாருக்கும் இதைப்பற்றி தனிப்பட்ட ஆர்வமோ ஈடுபாடோ இல்லை என்பதுதான். மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் ஆமையும் விளையாடிக் கொண்டிருக்கும் டால்ஃபின் மீன்களும் வேலை நேரம் முடிந்த பிறகு என்ன செய்கின்றன என்று அவர்கள் விசாரிக்காததைப் போல, சிலையைப் பற்றியும் விசாரிப்பதில்லை.

அதே நேரத்தில், சிலை எங்கு போகிறது என்பதோ எங்கிருந்து வருகிறது என்பதோ தீருலாலுவிற்குக்கூட தெரியாது. ஆரம்பத்தில் திரும்பி வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. ஆனால், இயந்திரத்தின் இயல்புத் தன்மையுடன் அது வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, அவருக்கு அந்த கவலை இல்லாமல் போனது.

அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவில் எப்போதாவது அது கோட்டைக்குள் வந்துவிடும். ஒரு சைக்கிளில்தான் வரும். அந்த நேரத்தில் கேட்டில் பால்காரர்கள், பத்திரிகை போடுபவர்கள், க்யாஸ் கொண்டு வருபவர்கள், இரவு நேர விளையாட்டுக்களை முடித்துவிட்டுத் திரும்பி வருபவர்கள் ஆகியோரின் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும். பால்காரனின் அட்டைதான் சிலைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சைக்கிளுக்குப் பின்னால் அலுமினியத்தால் ஆன ஒரு பெரிய பால் பாத்திரம் தொங்கிக் கொண்டிருக்கும்.

ஏழு வருடங்களுக்கும் அதிகமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பழைய பால்காரனின் அட்டையை, மாறி மாறி வந்து கொண்டிருக்கும் செக்யூரிட்டிகள் சோதிக்கவே மாட்டார்கள். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் அறிமுகமோ, நட்போ அங்கு அனுமதிக்கப்படாததால், ஒருவரோடொருவர் தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் கூட, அவர்கள் எல்லாருக்கும் அந்த முகம் நன்கு தெரிந்தே இருந்தது.

கோட்டைக்குள் சிலைக்கு என்றே, சிலைக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒரு அறை இருக்கிறது. அதன் சாவியும் அதன் கையில்தான் இருக்கிறது. வேறு யாருக்கும் தெரியாமல் அறைக்குள் நுழைந்து சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு, அங்கு சலவை செய்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளில் ஒரு சட்டையை எடுத்து அணிந்து ஆடை மாற்றம் செய்து முடித்த பிறகு, அவனுடைய முகத்திற்கும் தோற்றத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு மாற்றம் வந்து சேரும். சுவரில் தேய்த்து மினுமினுப்பு உண்டாக்கப்பட்ட புதிய ஈட்டிகளில் ஒன்றைக் கையில் எடுத்தவுடன், அவன் மனரீதியாகவும் சிலையாக மாறிவிடுவான். சற்று முன்பு கேட்டின் வழியாக கடந்து வந்த பால்காரனின் முகத்துடன் அப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலைக்கும் அந்த முகத்திற்கும் எந்தவொரு தோற்ற ஒற்றுமையும் இருக்காது.

தோற்றத்தை மாற்றும் அறைக்குள்ளிருந்து போய் நிற்கும் பீடத்திற்குச் செல்லும் வழி பூமிக்கு அடியிலேயே செல்கிறது. அதன் சாவிகளும் சிலையின் கையிலேயே இருக்கும். இருள் நிறைந்த, சிறிது வழுக்கல் இருக்கக்கூடிய அந்த பூமிக்குக் கீழே இருக்கும் குகையின் நீளம் எவ்வளவு இருக்கும் என்று இந்த ஏழரை வருடங்களாக அதன் வழியாக தினமும் வந்து போய்க் கொண்டிருக்கும் சிலைக்குத் தெரியவே தெரியாது. பாதி வழியை அடையும்போது, மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும் என்ற விஷயம் தெரியுமாதலால், உள்ளே நுழைந்து விட்டால் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் அதற்குள் இருக்கும்போது உண்டாகும். அதற்கு மத்தியில் வழி, நேரம் ஆகியவற்றின் அளவைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

சிரமங்கள் நிறைந்த வழி பீடத்திற்குச் செல்லும் படிகளில் போய் முடியும்.

அந்த வகையில் சூரியன் உதயமாவதற்கு முன்பே பூமியைப் பிளந்து கொண்டு வருவதைப் போல சிலை அங்கு மேலே வருகிறது.

அங்கு பணியாற்றுபவர்களைப் பற்றி முன்பே கூறப்பட்டு விட்டதே! அதைப் பார்ப்பதற்கு அந்த நேரத்தில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

அது முடிந்து, சிலை முழுமையாக தன்னுடைய இடத்தில் போய் நின்ற பிறகு, ஆறு மணிக்கு மேல்தான் பார்வையாளர்களுக்கான நேரம்.

மாலை ஆறரை மணிவரை.

ஏழு மணியை நெருங்கியவுடன் சிலை தன்னுடைய வேலையிலிருந்து விடுபடும். இயல்பாகவே அந்த நேரத்திலும் அதைப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.

பிரயோஜனம் இருப்பதென்னவோ உண்மை. எனினும் தீருலால் சிலைக்காக நல்ல ஒரு தொகையை செலவழிக்கிறார் என்ற விஷயம் பகல் போல தெளிவாகத் தெரிந்தது. பூமிக்குக் கீழே இருக்கும் குகைக்கும் தினமும் மாறிமாறிப் பயன்படுத்தப்படும் ஈட்டிகளையும் ஆடைகளையும் தயார் பண்ணி வைப்பதற்காகவும் நிறைய செலவு பண்ணியாக வேண்டும்.


அந்தச் சம்பவத்தைப் பற்றிய ரகசியத்தைக் காப்பாற்றி வைப்பதில் இருக்கும் சிரமங்கள், நேரடியாகத் தலையிடுதல் என்ற விஷயங்கள் தனி. எது எப்படியோ படுக்கையறையில் வேறு யாருக்கும் தெரிவிக்காமல் ஒரு செடியையோ கிளியையோ வளர்ப்பதைப் போல, தனி கவனம் செலுத்தி தீருலால் சிலையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்.

எங்கிருந்து வருகிறது என்பதோ எங்கே போகிறது என்பதோ தெரியாததைப் போலவே தீருலாலுக்கு சிலையின் உண்மையான பெயரும் தெரியாது. அவர் அவனுக்கு சுப்பன் என்று பெயர் வைத்திருந்தார். நேரடியாகப் பார்ப்பதற்கோ, உரையாடுவதற்கோ உரிய சூழ்நிலை வராததால், அப்படி அழைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரவில்லை என்பதுதான் உண்மை.

சுப்பனுக்கும் தீருலாலுக்குமிடையே உள்ள உறவு ஆரம்பமானது சிறிய நாடகத்தைப் போன்ற சம்பவத்தின் மூலம்தான். அது அப்படித்தானே நடந்திருக்க முடியும்?

ஏழு... ஏழரை வருடங்களுக்கு முன்னால் "தமாஷ் கோட்டை"யில் "கோட்டை"யின் மதிப்பு என்று குறிப்பிட்டுக் கூறப்படும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் தொடக்க விழா நடக்கும் நாள்.

அப்போது "கோட்டை"க்குள் இலவசமாகவே நுழையலாம். எல்லா நிகழ்ச்சிகளுக்குள்ளும் நுழையலாம். அப்படி நுழைந்த கூட்டத்தில் ஒருவன்தான் சுப்பன்.

ஒரு மத்திய அமைச்சரும் ஒரு சூப்பர் திரைப்பட நட்சத்திரமும் ஒரு முன்னாள் மன்னரும் சேர்ந்து பல பிரிவுகளாகத் தொடங்கி வைத்த அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காகப் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.

மார்க்கெட்டிங் காம்ப்ளெக்ஸை மத்திய அமைச்சரும் இன்னொரு நடன காம்ப்ளெக்ஸை திரைப்பட நட்சத்திரமும் திறந்து வைக்கிறார்கள். கேட்டில் இருக்கும் துவாரபாலகனின் சிலையைத் திறந்து வைக்கும் பொறுப்பு முன்னாள் மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புகழ் பெற்ற ஒரு சிற்பியைத்தான் சிலையை செய்ய சொல்லிஇருந்தார்கள். தீருலாலின் ஜாடையில் இருக்கும் ஒரு துவார பாலகனின் தோற்றத்தை அவரும் சிற்பியும் கலந்து பேசி முடிவு செய்திருந்தார்கள்.

சிலை தயாரிப்பின் பல்வேறு தருணங்களிலும் தீருலால் நேரில் சென்று வேலையின் முன்னேற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். எனினும், சிலை திறப்பிற்கு முந்தைய நாள், வேலை முற்றிலும் முடிவடைந்த சிலையைப் பார்த்ததும் அவருக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.

சப்பை மூக்கையும் அளவுகள் தவறிப்போன தோள்களையும் கொண்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த வெங்கலத்தால் ஆன சிலையைப் பார்த்து அவருக்கு கடுமையான கோபம் வந்தது. கோபம் வந்தால் கண், மூக்கு எதையும் பார்க்காத குணத்தைக் கொண்ட மனிதரான தீருலால் முதலில் சிலையையும் பிறகு சிற்பியையும் தாக்க ஆரம்பித்தார். சிற்பி ஓடித் தப்பித்து விட்டார். அது முடியாது என்பதால் முகத்தில் பாதிப்பை ஏற்றுக் கொண்டு சிலை அங்கேயே நின்றிருந்தது.

அதன் உதட்டின் ஒரு பகுதியும் தாடை எலும்பு ஒடிந்தும் சுருங்கியும் பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு இருந்தது.

அதைப் பார்த்தபோதுதான் தீருலாலிற்கு மறுநாள் அதைத் திறக்கும் விழா இருப்பதே ஞாபகத்திற்கு வந்தது.

தான் செய்த முட்டாள்தனமான காரியத்தைப் பற்றி நினைத்துப் பார்த்த அந்த மனிதர் முழுமையாக ஒடிந்து போய்விட்டார். சற்று தோற்றத்தில் குறைபாடுகள் இருந்தாலும் முதலில் இருந்த சிலையையே திறந்து வைத்திருந்தால், அவமானம் உண்டாகாமலாவது இருக்கும் என்பதை நினைத்து, இனி என்ன, எப்படி என்று யோசித்துக் கொண்டு முற்றிலும் குழம்பிப் போய் இருந்த அந்த நேரத்தில்தான் தீருலாலிற்கு முன்னால் சுப்பன் வந்து நின்றான்.

முழு கோபமும் முடிவடைந்து, மனம் மிகவும் அமைதியாக இருந்ததால், அவரால் சுப்பனைப் பார்த்து கோபமாக எந்த வார்த்தைகளையும் கூற முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், அவன் கூறியது முழுவதையும் அவர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதிருந்தது.

இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால், அவனை அவர் விரட்டியடித்திருப்பார். காரணம் - தினமும் எண்ணற்ற நபர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் குறிப்பிடக்கூடிய அதே தேவையைத் தான் சுப்பனும் முதலாளிக்கு முன்னால் வைத்தான்.

ஒரு வேலை வேண்டும்.

தனக்கு சைக்கிளில் சில வேலைகளைக் காட்டத் தெரியும் என்றும், சிறுவர்கள் பூங்காவில் ஒரு வேலை தந்தால், குழந்தைகளை சந்தோஷப்படுத்த தன்னால் முடியும் என்றும் சுப்பன் சொன்னான். அவற்றுக்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறியபோது, அப்படியென்றால் முதலாளி கூறும் எந்த வேலையாக இருந்தாலும் செய்வதற்கு தான் தயார் என்று சுப்பன் அமைதியான குரலில் சொன்னான்.

கையற்ற நிலை, அவமானம் ஆகியவற்றின் உச்சத்தை அடையும் போது, மனிதனுக்கு தோன்றக்கூடிய வரண்ட சேடிஸத்தின் வெறுப்புடன், "அப்படியென்றால் உன்னால் ஒரு சிலையாக அரை மணி நேரம் நிற்க முடியுமா?" என்று தீருலால் கேட்க, எந்தவொரு தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் "நிற்கிறேன்" என்று சம்மதிக்க, அப்படியென்றால் நிற்குமாறு கூறி தீருலால் ஒரு போஸ் கொடுக்க, சுப்பன் அதே மாதிரி நிற்க, இன்னொரு பைத்தியக்காரன் என்று நினைத்து மறுநாளைய இக்கட்டான சூழ்நிலையை எப்படி சரி பண்ணுவது என்பதைப் பற்றி சிந்திப்பதற்காக தீருலால் எங்கோ போய்விட்டு, அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ கடந்த பிறகு அந்த வழியே சிறிதும் எதிர்பாராமல் கடந்து சென்றபோது, தான் கூறிய போஸில் அப்போதும் சிலையாக நின்று கொண்டிருந்த சுப்பனை அவர் பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்க, அதற்கு மேலும் பலமுறை நிற்க வைத்துப் பார்த்த பிறகு, மறுநாள் நடக்கும் தொடக்க விழாவின்போது சிலை திறந்து வைக்கப்பட்ட பிறகு, அரைமணி நேரம் சிலையாக நிற்பதற்கு சுப்பன் கேட்டுக்கொள்ளப் பட... மறுநாள் ஒரு ஆளுக்குக்கூட அது சிலை அல்ல... என்று தோன்றாத அளவிற்கு பனி உறைந்து போய் விட்டதைப் போல அசைவே இல்லாமல் நின்றிருந்த சுப்பன் தன்னுடைய பணியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த உறவு தொடங்கியது.


3. திறப்பு விழா

திகபட்சம் போனால் அரைமணி நேரம் என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட அந்த திறப்புவிழா ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வளவு நேரமும் தீருலால் அனுபவித்த மனப் போராட்டம் அவருக்கு மட்டுமே தெரியும். "தயவு செய்து என்னைத் தொடாதீர்கள்" என்று எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்ததால், நல்ல வேளை யாரும் தொடாமலே விழா நடந்தது. மன்னருடன் ஒரு கூட்டமே இருந்தது. அவருடைய அதிகாரப்பூர்வமான வைப்பாட்டியான அருந்ததி என்ற விஸ்வ மோகினியிலிருந்து படிப்படியாக கோமாளிகள் வரை உள்ள ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்ந்த எல்லாருக்கும் சிலையை மிகவும் பிடித்திருந்தது.

திறப்புவிழா முடிந்ததும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிலையுடன் நின்று தனித்தனியாகப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த காரணத்தினால்தான் காலதாமதம் உண்டானது. தன்னுடைய திட்டம் வெற்றி பெற்றது குறித்து மிகுந்த சந்தோஷம் தோன்றியது என்றாலும், எங்காவது இடையில் திருட்டுத்தனம் வெளிப்பட்டு, அதனால் உண்டாகக்கூடிய அவமானத்தையும் கெட்ட பெயரையும் நினைத்துப் பார்த்தபோது தீருலாலிற்கு அதிகமாகவே உள்பயம் உண்டானது. மின் விளக்குகளின் கண்களைக் கூசச் செய்யும் பிரகாசமும் காற்று வெளியில் காதுகளை அடைக்கச் செய்யும் இசையும் இயல்பாகப் பொங்கி ஓடிக் கொண்டிருந்த இனிய சூழ்நிலையும் - எல்லாம் சேர்ந்து சமநிலை தவறியதைப் போல நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தை அன்று அங்கிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு தீருலால் குடும்பம் மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.

ஆட்கள் ஒரு விதத்தில் போய் முடிந்தவுடன், சிலைக்கு சிறுசிறு சில்லறை வேலைகள் செய்ய வேண்டியதிருக்கிறது என்று கூறி அன்று திரை போட்டு விட்டார்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அந்த திரை விலகியபோது, அங்கு சில்லறை வேலைகள் முடிவடைந்த துவாரபாலகனின் சிலை இருந்தது. அது சுப்பன்தான்.

இந்த ஒரு மாதத்திற்கிடையில் தீருலாலுக்கும் சுப்பனுக்கும் இடையே சில கணக்குப் போடல்களும் கடுமையான சோதனைகளும் உறுதிமொழிகளும் நடந்தன. எல்லா நெருப்புத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று வந்த சுப்பனை, அவன் கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டுதான் அவர் நியமித்தார்.

மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில்தான் சிலையின் நியமனம் நடந்தது.

சுப்பன் கேட்ட சம்பளத்தைத் தருவதாக தீருலால் ஒப்புக் கொண்டார். அவன் செய்யும் வேலையின் கடுமையைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அது அப்படியொன்றும் பெரிய ஒரு தொகை அல்ல.

இரண்டாவது நிபந்தனை - தினமும் சுப்பன் போய் வர வேண்டும். சிலை பற்றிய ரகசியம் வெளியே தெரிந்துவிடப் போகிறது என்று கூறி அந்த விஷயத்தைப் பற்றி தீருலால் சிறிது நேரம் தயங்கிக் கொண்டு நின்றார். ஆனால், சுப்பனுக்கு தினமும் போயே ஆக வேண்டும். போய் வருவதில் இருக்கும் சிரமங்களை அவன் எப்படியும் சகித்துக் கொள்வான். தன்னுடைய சைக்கிளில் அவன் போய் வந்து கொள்வான். ஆனால், அவனுக்கு தினமும் போய் தன்னுடைய உறவினர்களையும் நண்பர்களையும் கட்டாயம் பார்த்தாக வேண்டும்.

யார் அந்த உறவினர்களும் நண்பர்களும் என்ற கேள்விக்கு தெளிவான ஒரு பதில் வரவில்லை. வற்புறுத்திக் கேட்க ஆரம்பித்த போது, "முதலாளி, அது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமே அல்ல" என்று அவன் அறுத்து வெட்டிக் கூறிவிட்டான். அதனால்தான் அவனுடைய வீடு எங்கு இருக்கிறது என்பதை விசாரிப்பதற்கு அவருக்கு தைரியம் வரவில்லை. தினமும் போய் வருவது என்றால் மணல் வெளியில் எங்காவது இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். பெயரைக் கேட்டதற்கு, முதலாளி விரும்பக்கூடிய பெயரில் அழைக்கலாம் என்று அவன் அனுமதி தந்தான். அப்படித்தான் சுப்பன் என்ற பெயர் வந்து விழுந்தது.

சிலையின் மூன்றாவது நிபந்தனையைக் கேட்டதும் தீருலாலிற்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.

சிலைக்கு "தீவில் சொர்க்க"த்திற்கு ஒருமுறை போகவேண்டும். நுழைவு இலவசமாக ஆக்கியதற்கு மறுநாளில் இருந்து சுப்பன் கோட்டைக்குள்ளேதான் இருக்கிறான். இதற்கிடையில் யாரோ கூறி, அவன் சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொண்டான். என்றைக்காவது ஒருமுறை, ஒரே முறை அவனை அங்கு கொண்டு போய் காட்ட வேண்டும்.

அவனுடைய விருப்பத்தின் ஆழம் முதலாளியின் மனதில் பதிந்தது. இதுதான் அவனைப் பூட்டி வைப்பதற்கான விலங்கு என்பதை அனுபவங்கள் பல கொண்ட அவர் அந்த நிமிடமே மனதில் பதியவைத்துக் கொண்டார்.

"தீவில் சொர்க்க"த்திற்குப் போய் வருவதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை தீருலால் மிகைப்படுத்திக் கூறினார். ஹெலிகாப்டரில் இருக்கும் அனைத்து இருக்கைகளும் சில நட்சத்திரக் கோவில்களின் பூஜையைப் போல பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டவை என்றும், அதைப் பின்பற்றித்தான் ஒவ்வொரு விமானமும் மேலே பறக்கிறது என்றும், சுப்பனுக்கு அப்படிப்பட்ட ஒரு விருப்பம் இருக்கும் பட்சம், இப்போதே ஒரு பெரிய தொகையைச் செலுத்தி பெயரைப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும், "தமாஷ் கோட்டை"யில் எந்தவொரு சட்டமும் எந்தச் சமயத்திலும் தவறியதில்லை என்பதால், இப்போது அப்படிச் செய்தாலே மீண்டும் எவ்வளவோ வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும், அவர் அவனுக்குப் புரிய வைத்தார். பரவாயில்லை என்றும், தான் காத்திருக்க தயார் என்றும் அவன் அதற்கு பதில் சொன்னான்.

தன்னுடைய பிடி இறுக்கமாகிறது என்பதைக் கண்டவுடன், தீருலாலின் வர்த்தக மூளை மேலும் விழிப்படைந்து செயல்பட ஆரம்பித்தது. "சொர்க்க"த்திற்கு ஒருமுறை போய் வருவதற்கு ஆகும் பெரும் செலவைப் பற்றி அவர் விளக்கிக் கூற ஆரம்பித்தார். கணக்கைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டவுடன், கணக்கு விஷயத்தில் ராஜாவான தீருலால் தாறுமாறான கணக்குகளைச் சொல்லி அவனைக் குழப்பத்திற்குள்ளாக்கினார். சுப்பனைப் போன்ற ஒரு மனிதனுக்கு அங்கு போய் வருவதற்கான பணத்தை தயார் பண்ணுவது என்பது மிகவும் சிரமமான விஷயம் என்று அவர் இறுதியாகச் சொன்னார். அதற்குப் பிறகும், "பரவாயில்லை... நான் போயே ஆகவேண்டும்" என்ற நிலைப்பாட்டில் இருந்து சுப்பன் அணு அளவுகூட பின் வாங்கத் தயாராக இல்லை.

இறுதியாக கட்டணத்திலும் வேறு சில விஷயங்களிலும் நிர்வாகத்திற்குத் தெரியாமலே சில தகிடுதத்த வேலைகளும் இலவசங்களும் உண்டாக்கியவாறு ஒருநாள் "சிலை"யைத் தீவிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக தீருலால் உறுதியளித்தார். எனினும், ஒரு பெரிய தொகையை சுப்பன் கட்டியே ஆக வேண்டும். அதைச் சேர்த்து வைப்பதற்காக எல்லா மாதங்களிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலாளி தவறாமல் பிடித்து வைப்பார். தேவையான பணம் சேர்ந்தவுடன், அந்தத் தொகையைச் சேர்த்து சுப்பனிடம் அவர் தருவார்.

சுப்பனுக்கு சந்தோஷம் உண்டானது. சம்பளத்தில் முக்கால் பகுதியைப் பிடித்துக் கொள்வதற்கு அவன் அனுமதி தந்தான். காலையிலிருந்து இரவுவரை நீர்கூட பருகாத சிலைக்கு என்ன செலவு வரப் போகிறது என்று அவன் சர்வ சாதாரணமாகக் கேட்ட போது, அது சரிதான் என்பதை தீருலாலும் ஒப்புக்கொண்டார். அத்துடன் சுப்பன் தனி மனிதன் என்பதையும், குடும்பக் கடமைகள் எதுவும் இல்லாதவன் என்பதையும் அவர் சந்தோஷத்துடன் தெரிந்து கொண்டார்.


சம்பளம் வாங்குவதற்கு சுப்பன் எங்கும் போக வேண்டாம் என்று தீருலால் சொன்னார். எல்லா மாதங்களிலும் முதல் தேதியன்று காலையில் அறைக்கு வரும்போது, அன்று எடுத்துக் கொண்டு போக வேண்டிய ஈட்டியின்மேல் அது கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்.

எல்லா நிபந்தனைகளையும் இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு, சிலைக்கு பால்காரனின் அடையாள அட்டை தரப்பட்டது. அதில் பெயர்: எஸ். சுப்பன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் ஒரு வருடம் சுப்பன் சிலையாக மட்டும் நின்றால் போதும்.

ஒரு வருடம் முடிந்ததும், பெரிய விளம்பர ஆரவாரங்களுடன் தீருலால் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

ஏராளமான பயணிகளை ஒரு வருடம் முழுவதும் ஏமாற்றிக் கொண்டு சிலையாக நின்ற மாமனிதனைப் பார்ப்பதற்காக அந்த வருடம் வந்த பயணிகள் முழுவதும் திரும்பவும் வந்தார்கள். உலகெங்கிலும் உள்ள செய்தி ஊடகங்கள் "சிலை"க்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தார்கள்.

பதவி மாறுதலுக்கேற்றபடி சுப்பனுக்கு சம்பளத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மாறுதல் உண்டானது.

அந்த ரகசியத்தை எதற்காக வெளிப்படுத்த வேண்டும் என்று பதைபதைப்புடன் கேட்ட சுப்பனிடம், கடந்த ஒரு வருடம் கிட்டத்தட்ட பயிற்சியாக மட்டுமே இருந்தது என்றும், இப்போது மட்டுமே தனக்கு சுப்பன் மீது நம்பிக்கை வந்திருக்கிறது என்றும் தீருலால் சொன்னார்.

ஆனால், உண்மை அதுவல்ல.

4. வைரம்

"தமாஷ் கோட்டை"யின் எண்ணற்ற வித்தைகள் காட்டுபவர்களில் ஒருவன் வைரம். ஒருநாள் திடீரென்று அவன் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

கோட்டைக்கு வரும் பார்வையாளர்களுக்கு முன்னால் எடை தூக்குவது, அப்படிப்பட்ட சில கனமான பொருட்களை வைத்து வித்தைகள் காட்டுவது ஆகியவைதான் அதுவரை வேலைகளாக இருந்தன. மார்பின்மீது பலகையை வைத்து மோட்டார் சைக்கிள், ஜீப் ஆகியவற்றை ஓட்டுவது, தூக்க முடியாத எடையைத் தூக்குவது மட்டும் இல்லாமல் சிறு சிறு மந்திர வித்தைகளையும் அவன் செய்தான்.

எத்தனையோ வருடங்களாக அப்படிப்பட்ட வித்தைகளை அவன் செய்து காட்டிக் கொண்டிருந்தான். அதனால் சமீப காலமாக அவனுடைய உடல், மனம் இரண்டும் சோர்வடைந்து போயிருந்தன. இனிமேல் அந்த மனிதனால் பிரயோஜனமில்லை என்ற விஷயம் தீருலாலிற்குப் புரியத் தொடங்கியுடன், ஒருநாள் ஒரு வித்தைக்கு மத்தியில் எலும்பு முறிவு உண்டாகி சிகிச்சை முடிந்து திரும்பி வந்த வைரத்திடம், இனி தனக்கு அவனுடைய சேவை தேவையில்லை என்றும், அதுவரை வரவேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு விலகிப் போய் விடும்படியும் தீருலால் அறிவித்தார்.

மறுத்துப் பேசுவதற்கு எதுவும் இல்லாததால் வைரம் மிகுந்த கவலையையும் அவமானத்தையும் உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு கூறியதைப் போல செய்தான்.

வைரத்திற்கு போவதற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று கூறுவதற்கு யாரும் இல்லை. இளமையின் ஆரம்பத்தில் எப்போதோ அவன் கோட்டையில் வந்து சேர்ந்தான். அங்குள்ள இயந்திரத் தனத்தில் சிக்கிக் கொண்டு எடை தூக்குவது, மாயஜால வித்தைகள் செய்வது என்று ஈடுபட்டு காலம் போய்விட்டதால், நடுத்தர வயது தாண்டியும் அவன் திருமணத்தைப் பற்றியோ வேறு விஷயங்களைப் பற்றியோ நினைத்துப் பார்க்கவே இல்லை. பணம் சம்பாதிப்பதில் இருந்த வெறி விடுமுறை எடுத்து வேறு ஊர்களுக்குச் சென்று திருமணம் செய்வது என்ற விஷயத்தில் அவனை விலகி இருக்கச் செய்துவிட்டது.

அதனால் வேலையை விட்டு வெளியே வரும்போது, அவனுடைய கையில் இதர தொகை மற்றும் சம்பாத்தியம் என்று ஒரு நல்ல தொகை இருந்தது. அந்தப் பணத்தை வைத்து இனி என்ன செய்யலாம் என்று சிந்தித்தவாறு அவன் கோட்டைக்குள் இருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தான். வேலையை விட்டு விலகியிருந்தாலும், நான்கைந்து நாட்கள் கோட்டைக்கு உள்ளேயே இருக்க அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது.

வைரத்திற்கு மொத்தத்தில் தெரிந்திருந்தவை, சில உடல் வித்தைகள் மட்டுமே. படிப்பறிவு குறைவாக இருந்த அவனுக்கு தெரிந்திருந்த அந்த விளையாட்டுக்கள் மட்டுமே துணையாக இருந்தன. ஆனால், மக்களை நிறுத்திக் கட்டிப்போட வைக்கும் அளவிற்குத் திறமைகளைக் காட்டுவதற்கு, உடலில் பல இடங்களில் பல நேரங்களில் உண்டான காயங்களும் முறிவுகளும் அவனை அனுமதிக்கவில்லை. கூட்டத்தில் நின்று கொண்டு வித்தைகளைக் காட்டுவது அல்ல- தனியாக நின்று திறமைகளைக் காட்டுவது என்பதை நன்கு உணர்ந்திருந்தான் அவன். அதனால்தான், தனியாக நின்று வித்தைகளைக் காட்டக்கூடிய தன்னம்பிக்கை இல்லாமற் போயிருந்தது.

எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளைத் தலைக்குள் வைத்துக் கொண்டு முதல் இரண்டு மூன்று நாட்கள் ஒருவித மயக்க நிலையிலேயே அவன் இருந்தான் என்பதைத் தவிர, குறிப்பிட்டுக் கூறுகிற அளவிற்கு எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு வைரத்தால் முடியவில்லை. கையில் தேவையான அளவிற்குப் பணம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு எதையாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். எனினும், தனக்குத் துணையாகவும் ஆதரவாகவும் யாராவது தன்னுடன் இருந்தால் மட்டுமே காரியங்கள் ஒழுங்காக நடக்கும் என்று அவன் நினைத்தான்.

இவ்வளவு விஷயங்களையும் அமைதியாகச் சிந்தித்து முடிவு எடுப்பதற்கே அவனுக்கு இரண்டு நாட்கள் ஆனது. அப்போது உயர்வைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஒரு பாதையைக் கண்டு பிடித்துவிட்டோமே என்ற நிம்மதி உண்டானது.

திறமைசாலியான வைரம் யாருக்கும் சந்தேகம் தோன்றாத வகையில், நம்பிக்கைக்குரிய பல வித்தைகள் செய்பவர்களிடமும் தன்னுடன் வரமுடியுமா என்று விசாரித்துப் பார்த்தான். அதிகமான வாக்குறுதிகளை அளித்தும், யாரும் அவனுடன் வருவதற்குத் தயாராக இல்லை. கோட்டையில் வேலை தரும் பாதுகாப்பை விட்டுவிட்டு, முதுகெலும்பு ஒடிந்த வித்தை செய்யும் மனிதன் கூறும் நிச்சயமற்ற தன்மைக்குள் குதிப்பதற்கு அவர்கள் யாருக்கும் பைத்தியமொன்றும் இல்லையே!

எனினும், ஏமாற்றமடையாத அந்த மனிதன் தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்து கொண்டேயிருந்தான்.

நான்காவது நாள், கோட்டைக்குள் இனிமேல் தட்டுவதற்கு கதவுகள் எதுவும் மீதமில்லை என்ற சூழ்நிலை வந்தபோது, வைரத்தின் கண்ணில் சிலை பட்டது.

முன்பே வைரம் துவாரபாலகனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஒன்றிரண்டு முறை பார்க்கவும் செய்திருக்கிறான். கோட்டைக்குள் இருக்கும் மனிதர்களுக்கு அதற்குள் இருக்கும் அற்புதங்களைப் பார்த்து ஆச்சரியங்கள் எதுவும் இல்லாததால், வைரத்தின் மனதிலும் சிலை இடம் பிடிக்கவில்லை. ஆனால், இன்று எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, தூணையும் துரும்பையும் பிடித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் எதிர்பாராமல் அதைப் பார்த்ததும், அவனுடைய மனதில் பலவிதமான திட்டங்களும் நிகழ்ச்சிகளும் தோன்றிவர ஆரம்பித்தன.

ஒரு பிற்பகல் நேரத்தில்தான் வைரம் சிலைக்கு அருகில் போய் நின்றான். அதற்கு முன்னால் நின்றிருந்த மக்கள் கூட்டந்தான் அவனை அந்தப் பக்கமாக ஈர்த்தது.


முன்பு எப்போதோ கேள்விப்பட்டிருந்தாலும், இவ்வளவு மனிதர்களைப் பிடித்து நிறுத்தி ரசிக்க வைக்கும் இன்னொரு விஷயம் கோட்டைக்குள் இல்லவே இல்லை என்பதைப் புரிந்து கொண்டவுடன், வைரம் சற்று விலகி நின்று மக்கள் கூட்டத்தின் சேட்டைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் நின்றதும், வைரத்திற்குப் புதிய எண்ணங்கள் உண்டாயின.

சில மனிதர்கள் என்ன காட்டினாலும், அதைப் பார்ப்பதற்கு மனிதர்கள் இருப்பார்கள் என்பதைத் தவிர, சிலையாக நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனிடம் வேறு எந்தவொரு தகுதியும் இல்லை என்ற விஷயம் வைரத்திற்குப் புரிந்தது. அத்துடன் அப்படியொரு தகுதியே இல்லாத சிறப்பு கொண்ட மனிதர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட ஏதாவது திறமைகள் கொண்ட ஒரு ஆள் கிடைத்தால் மட்டுமே தன்னைப் போன்ற ஒரு மனிதன் இனிமேல் பிழைக்க முடியும் என்பதையும் அவன் சிந்தித்துத் தெரிந்து கொண்டான்.

பலரும் சிலையை சிரிக்க வைக்கவோ அசைய வைக்கவோ முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து ரூபாய் வீதம் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளின் முன்னிலையில் அந்தப் போட்டிகள் நடந்தன. சிலையை எந்த விதத்திலாவது அசையச் செய்ய வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்த ஒரு கிழவன், அதற்குப் பின்னால் பதுங்கிப் பதுங்கிச் சென்று வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்தைக் கொண்ட ஒரு பட்டாசை வெடிக்கச் செய்ததும், வெடிச் சத்தத்தைக் கேட்டு கிழவன் மயக்கமடைந்து விழுந்ததும், அங்கு குழுமியிருந்தவர்களுடன் வைரத்திடமும் சிரிப்பை வரவழைத்தன. சாயங்காலம் கடந்த பிறகும், வைரம் அந்தப் பகுதியிலேயே சுற்றிச்சுற்றி நின்று கொண்டிருந்தான். அப்படி நின்றதில் சிலையின் மதிப்பு என்ன என்பது அவனுடைய மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருந்தது.

பார்வையாளர்களின் நேரம் முடிந்து, இறுதிப் பார்வையாளனும் போன பிறகு, கோட்டையின் மணிக்கூண்டு ஆறரை மணியை அடித்தபோது, சிலைக்கு முன்னாலும் நான்கு பக்கங்களிலும் இருந்த தூண்களில் இருந்து அவிழ்ந்த திரைச் சீலைகள் கீழ் நோக்கி இறங்கி வந்து மறைத்து நின்றன. அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த விளக்குகளும் அணைந்தன.

மறைவுக்கு உள்ளே இருந்து சிலை வெளியேறி போவதைப் பார்க்க முடியும் என்ற எண்ணத்துடன், வைரம் திரைச்சீலையைச் சுற்றி இருந்த இருட்டில் கண்களைப் பதித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தான். பிறகு, அது ஒரு வீண் வேலை என்று அவனுக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பகுதிக்கு நடந்து செல்வதற்கோ, பரிசோதனை செய்து பார்ப்பதற்கோ அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. அப்படி எல்லையைக் கடந்து நடந்து கொண்டவர்கள் எல்லாரையும், அடையாளம் தெரியாத இடங்களில் இருந்து கொண்டு வந்த வெடிகுண்டுகளையோ மின்சாரத்தையோ பயன்படுத்திக் கொன்று தீர்த்த கதைகள் எத்தனையோ கோட்டைக்குள் உலாவிக் கொண்டிருந்தன.

ஒன்று, ஒன்றரை மணி நேரத்தை அந்த இருட்டில் கழித்துவிட்டு, எதிர்காலச் செயல்களைப் பற்றி சிந்தித்தவாறு வைரம் பிரதான வாயிலுக்கு வெளியே நடந்தான்.

கோட்டையைச் சுற்றி முடிவே இல்லாமல் மணல்வெளி விரிந்து கிடந்தது. அதற்கு மேலே நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது.

கேட்டில் அப்போது நல்ல கூட்டம் இருந்தது. திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், வேலை நேரம் முடிந்து சாயங்கால நேரத்தில் நடப்பதற்காக வெளியே செல்லும் வேலை செய்பவர்களின் குடும்பங்கள், இரவைக் கொண்டாடுவதற்காக வருபவர்களின் கார்கள் இவையெல்லாம் சேர்ந்து அங்கு ஒரே ஆரவாரமாக இருந்தது. அந்த ஆரவாரத்தில் அலட்சியமாகக் கண்களைப் பதித்தவாறு, "அந்தச் சிலை எங்கு போய் மறையும், ஒருவேளை- அங்கேயே இரவு வேளையிலும் இருந்து விடுமோ" என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே குழப்பமான மனதுடன் நின்றிருந்த வைரத்தின் கண்களில் சைக்கிளில் திரும்பிச் செல்லும் பால்காரனின் முகம் சிறிதும் எதிர்பாராமல் தென்பட்டது.

சாதாரணமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒன்று தான். ஒருவேளை, மூன்று நான்கு மணி நேரங்கள் தொடர்ந்து பார்த்த ஒரு முகத்தை சிறிய ஒரு இடைவெளிக்குப் பிறகு தோற்ற மாறுதலுடன் பார்த்ததால் அடையாளம் தெரிந்திருக்கலாம். இல்லாவிட்டால், வைரத்தின் கிரகநிலை மாறுதல் காரணமாகவும் இருக்கலாம்.

அழைத்து நிறுத்துவதற்கான நேரம் இல்லை. அதற்கு முன்பே சைக்கிள், மணல்வெளிக்கு நடுவில் ஓடிக்கொண்டிருந்த சாலையின் வெறுமையில் பறந்துவிட்டிருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் அந்த சைக்கிள் ஓடிக்கொண்டிருந்தது என்ற விஷயத்தை வைரம் கவனிக்காமல் இல்லை.

எது எப்படி இருந்தாலும் - ஒரு விஷயத்தில் வைரத்திற்கு சந்தேகம் இல்லாமலிருந்தது - சிலையின் முகம்தான் பால்காரனுக்கும்.

மறுநாள் அதிகாலைப் பரபரப்பிற்கு மத்தியில் பால்காரனின் முகம் மீண்டும் ஒருமுறை மின்னலைப்போல கடந்து செல்வதைப் பார்த்தவுடன் அந்த நம்பிக்கைக்கு உறுதி கிடைத்தது.

தன்னுடன் வேலை செய்த ஒரு பழைய நண்பனிடமிருந்து பொய் சொல்லி இரவலாக வாங்கிய சைக்கிளுடன், மறுநாள் சாயங்கால நேரத்தில் வைரம் கேட்டிற்கு வெளியே சாலையில் சற்று தள்ளி எதிர்பார்த்து நின்றிருந்தான்.

கணக்கு போட்டதைப் போலவே, சரியான நேரத்திற்கு பால்காரனின் சைக்கிள் வெளியே வந்தது. யாரையும் கவனிக்காமல், எதையும் பார்க்காமல் மணல் வெளியில் பயணித்துக் கொண்டிருந்த அவனுடைய வேகத்தைப் பற்றி முன்கூட்டியே நன்கு தெரிந்து வைத்திருந்ததால், வைரத்தாலும் அவனுக்கு நிகராகப் பயணிக்க முடிந்தது.

சாலையில் மக்களின் நடமாட்டம் சிறிதும் இல்லாமல் இருந்தது. அதனால் சிலை நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. பெரும்பாலும் அவன் எழுந்து நின்று கொண்டே மிதித்துக் கொண்டிருந்தான். ஒரு பழைய சைக்கிள் வித்தை செய்தவனாக இருந்தும்கூட, வைரத்தால் அந்த சைக்கிளுடன் போட்டி போடுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. காயம்பட்ட முழங்கால் மிகவும் பலமாக வலித்துக் கொண்டிருந்தது. எனினும், அந்த மனிதனின் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு அபூர்வ சந்தர்ப்பம் என்ற விஷயம் ஞாபகத்தில் இருந்ததால், அதை விட்டுக் கொடுக்க அவன் சிறிதும் தயாராக இல்லை.

மணல் வெளிக்கு நடுவில் போய்க்கொண்டிருந்த அந்த சாலைக்கு முடிவே இல்லாததைப்போல தோன்றியது. இடையில் ஒரே ஒருமுறை மட்டும், சுற்றுலா வந்த சிறுவர்களை ஏற்றிக்கொண்டு கோட்டையில் இருந்து திரும்பி வந்த ஒரு பேருந்து, அவர்களைக் கடந்து சென்றது.

தூரத்தில் இருக்கும் நகரம்தான் சிலையின் இலக்காக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய நிமிடத்தில் வைரத்திற்கு உற்சாகம் இல்லாமற் போனது. பொழுது விடிந்தாலும், அங்கு போய்ச் சேர முடியாது. அதுவரை நிறுத்தாமல் மிதித்துக்கொண்டு போவது என்பது தன்னால் முடியாத ஒரு காரியம் என்று அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது.


அதேசமயம் பொழுது புலர்வதற்குமுன் திரும்பி வர வேண்டும் என்பதால், சிலை அவ்வளவு தூரம் போவதற்கு வாய்ப்பில்லை என்றொரு சிறிய எண்ணம் மனதில் இருந்ததால்,

பின்வாங்கிப் போகாமல், களைப்பையும் தளர்ச்சியையும் மறந்துவிட்டு அவன் சைக்கிளை மிதிப்பதைத் தொடர்ந்தான்.

இரு பக்கங்களிலும் மணல் வெளியின் தன்மை மாறி வருவதை வைரம் பார்த்தான். ஆங்காங்கே கள்ளிச் செடிகளும் மணல் வெளிகளில் மட்டுமே இருக்கக்கூடிய சில விசேஷமான தாவரங்களும் வளர்ந்து நின்றிருந்தன. சுற்றி இருந்த இடங்களில் எங்கேயோ மனித வாழ்க்கை இருப்பதற்கான அடையாளங்கள் காற்றில் மணக்க ஆரம்பித்திருப்பதைப் போல தோன்றியது.

அப்படிப்பட்ட சாலையின் வழியாக நீண்ட நேரம் பயணித்து, ஒரு பக்கத்தில் இருந்த ஒற்றையடிப் பாதைக்குள் சைக்கிள் திரும்பியவுடன் வைரத்திற்கு நிம்மதி தோன்றியது. இனி அதிக தூரம் இருக்காது.

அந்த பாதை பயணம் செய்வதற்கு மேலும் சிரமமாக இருந்தது. தார் போட்ட சாலையில் இருந்த சிரமமற்ற தன்மையில் இருந்து தாறுமாறான மணல் காட்டிற்குள் நுழைந்தவுடன், நீளமாக இருந்த ஒரு பாதையை அவன் பார்த்தான். மனிதர்களும் ஒட்டகங்களும் நடந்துபோகக்கூடிய அந்த நடைபாதை, சமீபத்தில் எங்கோ மனித வாசனை இருக்கிறது என்பதை உறுதியாகச் சொன்னது. அதைப் பார்த்தவுடன் வைரத்திற்கு மனதில் சிறிது அமைதி உண்டானது.

பாதையின் ஓரத்தில் ஈச்ச மரங்களும் கள்ளிச் செடிகளும் வளர்ந்து நின்றிருந்த ஒரு இடத்தில், சிலை சைக்கிளை நிறுத்தியது. அதைப் பார்த்ததும் வைரமும் நின்றான்.

5. சிலையின் இரவு நேர விளையாட்டுகள்

ற்று தூரத்தில் மணலில் சில கறுத்த புள்ளிகள் தெரிந்தன. நிலவுடன் கண்கள் மேலும் பழக்கமானவுடன், அவர்கள் மனிதர்கள் தான் என்ற விஷயம் வைரத்திற்குப் புரிய ஆரம்பித்தது. கனமான கயிற்றால் வலை போன்ற ஏதோ ஒரு பொருளை நெய்து கொண்டிருந்த ஒரு கூட்டமாக அது இருந்தது. மணல்வெளியில் பல வகைப்பட்ட உயிரினங்களையும் வளைத்துப் பிடிக்கக்கூடிய ஒரு வலையை அவர்கள் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் வைரத்திற்கு புரிந்தது.

நாக்கையும் உதடுகளையும் வளைத்து ஒரு சீட்டியடிக்கும் சத்தத்தை உண்டாக்கியவாறு சிலை, அந்தக் கூட்டத்தை நோக்கி சைக்கிளை மிதித்துச் சென்றது. நிலவிக் கொண்டிருந்த அமைதியில் அந்தச் சத்தம் காதுகளைத் துளைத்தது.

அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை சந்தோஷ ஆரவாரத்துடன் வரவேற்பதை வைரம் பார்த்தான்.

ஒரு புதருக்குள் வைரம் தன்னுடைய சைக்கிளுடன் நுழைந்து சென்றான். மூச்சுவிடும் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அவன் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

பரபரப்பு அடங்கியதும் அவன் சிலையின் இன்னொரு முகத்தைப் பார்த்தான். அசையும் சுதந்திரத்தை ஒரு திருவிழாவைப் போல அது கொண்டாடுவதை வைரம் உணர்ந்தான்.

சிலை மிகவும் சுதந்திர நிலையில் இருந்தது. வலை நெய்து கொண்டிருந்த மனிதர்களின் கூட்டத்தில் சிலர் எழுந்து அதனுடைய சைக்கிளுக்குப் பின்னால் ஓடினார்கள். அவர்களுக்கும் பிடி கொடுக்காமல் வட்டம் சுற்றி சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்த போதும், அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் சத்தம் உண்டாக்கினார்கள். எல்லா சத்தங்களுக்கு மத்தியிலும் சிலையின் சத்தத்தைத் தனியாகப் பிரித்து எடுக்க வைரத்தால் முடிந்தது. அவனுடைய கூவல் சத்தத்திற்கும், குலுங்கிக் குலுங்கி சிரித்தலுக்கும், அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பதிலுக்கு ஏதாவது சத்தம் போடக்கூடிய அளவிற்கு ஏதோ ஒரு மந்திரத்தன்மை இருப்பதைப்போல வைரத்திற்குத் தோன்றியது. அந்த சத்தங்களின் பெரு வெள்ளத்தைக் கேட்டதால் இருக்கவேண்டும்- எங்கிருந்து என்பது தெரியவில்லை, மணல்வெளி குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொண்டு நிறைந்தது. வலை நெய்து கொண்டிருந்த ஆண்கள் அனைவரும், தங்களின் வேலைகளை நிறுத்திவிட்டு அவனைச் சுற்றி ஓடி நின்றவுடன், நிலவு வெளிச்சத்தில் ஒரு ஆரவாரிக்கும் மக்கள் கூட்டம் தெரிந்தது. அவர்களில் பலரும் நன்கு குடித்திருக்கிறார்கள் என்பதை வைரம் புரிந்து கொண்டான். பெரும் பாலானவர்களின் கைகளில் புட்டிகள் இருந்தன. அவர்களுடன் சேர்ந்து அவன் விளையாட ஆரம்பித்தவுடன், வைரமும் அதில் மூழ்கிவிட்டான். வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரின் கைகளில் அவன் ஒரு விளையாட்டு பொம்மையாக மாறினான். சைக்கிளில் பல வேலைகளையும் செய்து காட்டி, அவன் அவர்களை ரசிக்கச் செய்தான். நம்ப முடியாத அடக்கத்தையும் திறமையையும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவன் வெளிப்படுத்துகிறான் என்ற விஷயத்தை வைரம் குறிப்பாக கவனித்தான். சில இளம் பெண்கள் அவனைத் தொட்டுத் தடவ முயற்சி பண்ணினார்கள். ஆனால், அவர்களின் கைகளில் சிக்காமல், அவன் விலகிப் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை மிகவும் கூர்மையாக கவனித்த போது, வைரத்தால் புரிந்து கொள்ள முடிந்தது. பலரும் புட்டிகளை நீட்டினாலும், அவன் மது அருந்துவதில்லை என்ற உண்மையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

இடையில் சில முரட்டு மனிதர்களின் தாக்குதல்களும் உண்டாயின. ஆனால், அவை அனைத்தும் விளையாட்டுகள் என்பதையும், அப்படிப்பட்ட மோதல்களில் ஒருவரோடொருவர் கொண்ட கோபம், பகை ஆகியவற்றின் நிழல்கூட இல்லை என்பதையும் வைரம் தெரிந்து கொண்டான். பிடிவாதம் கொண்ட அப்படிப்பட்ட மோதல்களின்போது, இரண்டு பக்கங்களில் உள்ளவர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டு ஆண்களும் பெண்களும் பைத்தியம் பிடித்தவர்களைப் போல உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லா போட்டிகளிலும் அவன் தான் எதிரில் இருந்தவர்களைத் தரையில் விழ வைத்துக் கொண்டிருந்தான். தனியாகவும் கூட்டமாகவும் தன்னை எதிர்த்து வந்த எதிராளிகளை அவன் புல்லைப்போல தோல்வியடையச் செய்தான்.

ஒருமுறை அவர்களில் சில சிறுவர்கள் சேர்ந்து அவனை ஒரு குழிக்குள் கொண்டு போய் படுக்க வைத்து, மணலைப் போட்டு மூடினார்கள். அவனை அடக்கம் செய்த இடத்தில் பெண்கள் பூக்களையும் கண்ணீரையும் வைத்து அபிஷேகம் செய்தார்கள். இறந்தவனின் நல்ல குணங்களைக் கூறி அவர்கள் பேசி முடித்தவுடன், ஒரு வெடி குண்டு வெடித்ததைப் போல வானம் முழுவதிலும் மணலை வாரி எறிந்தவாறு பூமிக்குக் கீழேயிருந்து அவன் குதித்து மேலே வந்தான்.

இதற்கிடையில் நிலவு, பந்தங்கள் ஆகியவற்றின் வெளிச்ச வட்டத்திற்கு வெளியே- சில பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள் வந்து சேர்ந்திருப்பதை வைரம் பார்த்தான். இருட்டில் ஒவ்வொன்றாக அவை ஒளிரத் தொடங்கியதைப் பார்த்தபோது, முதலில் அவன் சற்று பயப்பட்டான். மணல்வெளியில் இருந்து வந்த குள்ள நரிகள்தான் அவை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான், அவனுக்கு நிம்மதியே உண்டானது. மனிதர்களின் ஆரவார சத்தங்களும், கூப்பாடுகளும் உயர்ந்து ஒலித்ததற்கேற்றாற் போல அவையும் சேர்ந்து ஊளையிட்டன.


சந்தோஷம் நிறைந்து நின்றிருந்த அவற்றின் ஊளைச் சத்தத்தைக் கேட்டபோது, அவையும் விளையாட்டுகளில் பங்கு பெற்றவையாக ஆகிவிட்டன என்பதைப்போல வைரத்திற்குத் தோன்றியது. ஆரவார சத்தங்கள் அதன் உச்ச நிலையை அடைந்திருந்த நிமிடங்களில், பார்வைக்கு அப்பால் இருக்கும் இடங்களில் இருந்து பாலைவனச் சிறுத்தைகள் கர்ஜிக்கும் சத்தத்தை அவன் தெளிவாகக் கேட்டான்.

எத்தனையோ முகங்கள் கண்களுக்கு முன்னால் கடந்து போனாலும், அங்கிருந்தவர்களில் இரண்டு பேரை மட்டும் வைரம்- குறிப்பாக கவனித்தான். அவர்களிடம் அவன் காட்டிய தனிப்பட்ட ஆர்வமும் பிரியமும், அவர்கள் அவன்மீது காட்டிய இரக்கம் கலந்த பாசமும்தான் அப்படியொரு கவனத்திற்கு வழி உண்டாக்கியது.

அவர்கள் ஒரு பெண்ணும் ஒரு ஆணும். பெண்ணுக்கு ஐம்பத்தைந்துக்கு மேல் வயது இருக்கும். ஆண் அவளுடைய கணவன்.

அவர்களுடைய முகம் மணல் வெளியின் காற்றுபட்டு சுருக்கங்கள் விழுந்து காணப்பட்டன. மூடியிருந்த கறுப்பு நிறக் கம்பளிமீது மண்ணும் தூசியும் படிந்திருந்தன. ஆணின் நரைத்த தாடியில் ஏதோ காட்டுச் செடியின் வேர்கள் ஒட்டி இருந்தன. பெண்ணின் பெரிய கண்களில் நிலவு பிரகாசித்தது. அவனுடைய ஆச்சரியப்பட வைக்கும் வித்தைகளுடன் சேர்ந்து, உண்மையும் பெருமையும் கலந்த உரத்த குரலில் சத்தம் போட்டுக் கைகளைத் தட்டிக் கொண்டு நின்றிருந்த அவர்கள்- சிலையின் தந்தையும் தாயுமாக இருக்கலாம் என்று வைரத்திற்கு சந்தேகம் உண்டானது.

அந்த விளையாட்டுகள் நடந்து கொண்டிருந்த இடத்திற்குள் காலடி எடுத்து வைத்து, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையை வரவழைக்க சிறிதும் தைரியம் தோன்றாததால், அவன் தன்னுடைய புதருக்குள் இருந்து அசையவே இல்லை.

அதிகாலைப் பொழுதின் ஆரம்பத்தை அறிவித்தவாறு, பாலைவனத்தின் தூரத்து மூலையில் சந்திரன் நிறத்தை மாற்றிக் கொண்டு, மஞ்சள் நிறம் மறைந்து சிவப்பு நிறத்திற்கு வந்ததும், தொடர்ந்து எரிக்கக்கூடிய நெருப்பு நிறத்தை எடுத்துப் பூசிக் கொண்டதும் மிகவும் வேகமாக நடந்தன.

அதை கவனித்ததால் இருக்க வேண்டும், சிலை உதட்டையும் நாக்கையும் வளைத்து வேறொரு விசேஷ சத்தத்தை உண்டாக்கியது. விளையாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடையாளம் அது என்று தோன்றியது. காதுகளைத் துளைக்கும் கூர்மையுடன் வெளியே கேட்ட அந்த சத்தத்தில், இனம்புரியாத கட்டளைக் குரல் கலந்திருந்தது. முதலில் ஓடியவை இருட்டில் தெரிந்த கண்கள்தான். உரத்த குரலில் கத்திக் கொண்டே விளையாட்டை நிறுத்திவிட்டுப் பிரிந்து செல்லும் சிறுவர்களைப்போல அவை பாலைவனத்தில் போய் மறைந்தன. அவற்றுக்குப் பின்னால் மக்கள் கூட்டமும் பிரிந்தது. கடைசி கடைசியாக பிரிந்து சென்றவர்களின் கூட்டத்தில் அந்த வயதான தம்பதிகளும் இருந்தார்கள்.

எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே, அவர்கள் எங்கு போய் மறைந்தார்கள் என்பதையும் வைரத்தால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

எல்லாரும் போனதும், மணல்வெளி முற்றிலும் யாரும் இல்லாமல் ஆனது. சிறிது நேரம் சந்திரனுக்கு நேராக வெறுமனே பார்த்து நின்றுவிட்டு, சிலை மணலில் கால்களை நீட்டிப் படுத்தது. அந்த மனிதன் அப்போதுதான் சற்று முதுகை நிமிர்த்திக்கொண்டு படுக்கிறான் என்பதை நினைத்தபோது வைரத்திற்கு சிலைமீது பயம் கலந்த ஈடுபாடு உண்டானது.

அந்த ஓய்வுப் பொழுது அதிக நேரம் நீடித்திருக்கவில்லை. சந்திரன் சிவப்பு நிறத் தட்டின் நிறத்தை மாற்றத் தொடங்கியதைப் பார்த்து, சிலை மீண்டும் வேகமாக எழுந்தது. இவ்வளவு நேரமும் அது உறங்கிக் கொண்டிருந்ததா, இல்லாவிட்டால் வெறுமனே கண்களை விழித்துக்கொண்டு படுத்திருந்ததா என்பதையே வைரத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் போய் பார்ப்பதற்கு தைரியமும் உண்டாகவில்லை.

முக்கியமான அன்றாடச் செயல்களை அது அங்கேயே நிறைவேற்றுவதைப் பார்த்த பிறகுதான் வைரத்திற்கு மீண்டும் தைரியம் திரும்ப வந்தது. எது எப்படி இருந்தாலும், இயற்கையிலேயே உள்ள அப்படிப்பட்ட தேவைகளை வெளிப்படுத்துவதால் அது ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும்!

அன்றாட செயல்பாடுகளைச் செய்து முடித்து, நட்சத்திரங்களின் திசையைப் பார்த்து நேரத்தைக் கணக்கிட்டு, மீண்டும் அது சைக்கிளில் ஏறிப் புறப்பட ஆரம்பித்தபோது, வெளியே வரலாமா உள்ளேயே இருந்து விடலாமா என்ற குழப்பமான மனதுடன் இருந்த வைரம், தான் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்து சிலையைச் சந்தித்தான்.

இதற்கு முன்னால் தனக்குத் தெரிந்திருந்த ஒரு மனிதனை அந்த ஆள் ஆரவாரமற்ற இடத்தில் பார்த்ததால் உண்டான திகைப்பு இயல்பாகவே சுப்பனுக்கு உண்டானது. எனினும் அவனுடைய முகத்தில் அப்படிப் பெரிய அளவில் மாறுதல் எதுவும் தெரியவில்லை.

சென்றவுடன் வைரம் சுப்பனின் கால்களில் விழுந்தான். அவனுக்குத் தெரியாமலே பின் தொடர்ந்து வந்ததற்காகவும், இரவில் நடைபெற்ற விளையாட்டுகள் முழுவதையும் மறைந்திருந்து பார்த்ததற்காகவும் மன்னிப்பு கேட்டான். தொடர்ந்து இதைப் போன்ற ஒரு வித்தை காட்டுபவனைத் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என்று கூறி அவன் சுப்பனைப் புகழ ஆரம்பித்தான். வாழ்நாள் முழுவதும் உடலால் ஆகக்கூடிய பலவிதப்பட்ட வித்தைகளைக் காட்டிய தனக்கு சுப்பனின் சிஷ்யனாகச் சேர்த்து மீண்டும் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு அவன் தன்னுடைய புகழுரைகளுக்கு இனிமை கூட்டினான்.

ஆனால், அந்தப் பாராட்டுரைகளுக்கோ கால் பிடித்தலுக்கோ சுப்பனிடம் எந்தவொரு மாறுதலையும் உண்டாக்க முடியவில்லை. அவன் உயர்ந்த நிலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயல்புடையவன் அல்ல என்று தான் கண்டுபிடித்த விஷயம் வைரத்தைப் பொறுத்த வரையில் பெரிய ஒரு உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருந்தது. புதிதாகப் பெற்ற தைரியத்தைப் பயன்படுத்தி, துவாரபாலகனும் சுப்பனும் ஒரே ஆள்தான் என்ற ரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டதை அவன் சுப்பனிடம் சொன்னான். அதற்கும் எதிர்பார்த்த மாதிரி அதிர்ச்சியோ, கோபமோ வரவில்லை. வேலை நேரத்திற்கு முன்பே கோட்டையை அடையவேண்டும் என்ற கடமை உணர்வு மட்டுமே அந்த நேரத்தில் சுப்பனிடம் இருந்தது.

ஆபத்து எதுவும் இல்லை என்ற விஷயம் உறுதியாகத் தெரிந்தவுடன் வைரம் தன்னுடைய தேவை என்ன என்பதை வெளியிட்டான். சுப்பனுக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். என்ன வசதிகள் வேண்டுமானாலும் செய்து தரலாம். தன்னுடன் வரவேண்டும். சுப்பனும் தன்னுடன் இருந்தால், இரண்டு பேரும் சேர்ந்து சுதந்திரமாக வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றும், அப்படிச் செய்தால் பணத்தை குவியச் செய்ய முடியும் என்றும் அவன் ஆதாரங்களுடன் விளக்கிச் சொன்னான்.

ஆனால், சுப்பனுக்கு அதில் சிறிதும் ஆர்வம் உண்டாகவில்லை. அவனைத் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக, தன் கையில் இருந்த பணம் முழுவதையும் அவன் வெளியே எடுத்துக் காட்டினான்.


பணத்தைப் பற்றி சுப்பன் சிந்திக்கவே வேண்டாம் என்றும், நல்ல விதத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தக்கூடிய பொருளாதார வசதியும் அனுபவமும் தனக்கு இருக்கிறது என்றும் கூறி, வரப்போகும் நல்ல காலத்தைப் பற்றிய பிரகாசமான பக்கங்களை எடுத்துச் சொல்லி அவன் மீண்டும் அவனைத் தன்னுடன் வருமாறு வற்புறுத்தினான்.

சுப்பன் சம்மதிக்கவில்லை. இப்போதிருக்கும் வேலையில் தான் முழுமையான திருப்தியுடன் இருப்பதாகவும், வேறொரு வேலையைப் பற்றி இப்போது சிந்திப்பதற்கில்லை என்றும் கூறிய அவன் சைக்கிளை உருட்டியவாறு நடந்தான். அதற்குப் பிறகும் தன்னை நோக்கி இழுக்கக்கூடிய வார்த்தைகளையும் ஆசைச் சொற்களையும் வெளியிட்டவாறு பின்னால் நடந்து சென்ற வைரத்திடம், இனியும் தன்னைப் பின் தொடர்ந்து வருவது ஆபத்தானது என்று சிறிது கோபத்துடன் அவன் சொன்னான்.

அப்போது மட்டுமே வைரம் தன்னுடைய முயற்சியிலிருந்து பின் வாங்கினான்.

சுப்பன் தன்னுடைய சைக்கிளில் ஏறி, பாலைவனத்தின் நடுவில் இருந்த சாலையின் வழியாக "தமாஷ் கோட்டை" இருக்கும் திசையை நோக்கி மிதித்துச் சென்றான்.

முந்தைய நாள் இருந்த சிரமங்கள் காரணமாக உடம்பு முழுவதும் வேதனையை அனுபவித்த வைரத்தால், அவனுக்கு நிகராக மிதித்துச் செல்வதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை.

தன் சைக்கிளை உருட்டிக் கொண்டு, சற்று வேதனை தந்து கொண்டிருந்த காலை இழுத்துக் கொண்டே அவன் தார்சாலையை அடைந்தபோது, சூரியன் உதயமாக ஆரம்பித்திருந்தது.

எப்போதும் உற்சாகமாக இருக்கக்கூடிய மனிதன் என்பதாலும், தற்போதைக்கு வேறு வழி எதுவும் தெரியாததாலும் வைரம் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. சுப்பன் கிடைக்கும் வரை தன்னுடைய முயற்சியைத் தொடர அவன் தீர்மானித்தான். என்றாவது ஒருநாள் சிலையின் மனம் அசையாமல் இருக்காது என்பதையும், அன்று முதல் தன்னுடைய நல்ல காலம் ஆரம்பமாகப் போகிறது என்பதையும் அவன் கணக்குப் போட்டுப் பார்த்து, தானும் சுப்பனும் ஒன்றாகச் சேர்ந்து நடத்தப் போகும் அற்புத நிகழ்ச்சியைப் பற்றி அவன் மனதில் பல திட்டங்களையும் போட்டான்.

வாரங்களும் மாதங்களும் கடந்த பிறகும் வைரம் கோட்டையில் இருக்கும் பகுதியை விடவில்லை. அங்கு வேலை பார்த்த ஆள் என்ற நிலையில் இருந்த வசதிகள் முழுமையாக இல்லாமல் போய் விட்ட பிறகும், அவன் அந்தப் பகுதியை விட்டுப் போகவில்லை. சில வேளைகளில் பார்வையாளர்களுடன் சேர்ந்து நுழைவுச் சீட்டு வாங்கி, அவனும் கோட்டைக்குள் நுழைந்தான். உள்ளே நுழைந்த பிறகும், வேறு எங்கும் போகாமல், சிலை இருக்கும் பகுதிகளில் மட்டுமே அவன் மறைந்து நின்று கொண்டிருந்தான். மக்கள் கூட்டம் குறையும்போது, கெஞ்சுகிற கண்களுடன் அவன் சிலையின் முன்னால் போய் நின்றான். பரிதாபம் வெளிப்படும் நடவடிக்கைகள் மூலமும் கண்களாலும் சிலையின் மனதில் அசைவு உண்டாக்க அவன் கடுமையாக முயற்சித்தான். ஆனால், சுப்பனின் முகத்திலோ நடத்தையிலோ ஏதாவது சலனத்தை உண்டாக்க வைரத்தால் முடியவில்லை. சிலைக்கு முன்னால் எப்போதும் யாராவது சேட்டைகளைச் செய்து கொண்டு நின்றிருப்பார்கள் என்பதால், வைரம் நின்றிருப்பதை வேறு யாரும் குறிப்பிட்டு கவனிக்கவும் இல்லை.

வைரத்திற்கு சுப்பன்மீது அந்த அளவிற்கு ஆழமான நம்பிக்கை உண்டானதற்கு காரணம், அவனுக்கு சுப்பனைப் பற்றி உண்டான கணக்கு கூட்டல்தான். பகல் முழுவதும் அசைவே இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு சுதந்திரமான அடுத்த நிமிடம் முதல் வந்து சேரும் வேகமும் பலமும் அவனை ஆச்சரியப்பட வைத்தது. அதுவரை இருந்த அசைவே இல்லாத தன்மையில் இருந்து உண்டான விடுதலையைக் கொண்டாடுவதைப் போல, முழுமையான பைத்தியக்கார நிலையில் அதற்குப் பிறகு இருந்த அதன் வேகமும் செயல்களும் இருந்தன. அந்த அசாதரண தன்மை தான் அடித்து அடித்து இறந்தாலும் சிலையின் அருகில் இருந்து போவதாக இல்லை என்ற தீர்மானத்தை எடுக்க வைரத்தைத் தூண்டியது.

தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ரகசியத்தை இன்னொரு ஆள் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற விஷயத்தில் அவன் மிகவும் தெளிவாக இருந்தான். அப்படித் தெரிந்து கொண்டால், தனக்கு வந்து சேர வேண்டிய பொன்னான சந்தர்ப்பத்தை மண்ணில் சாய்ந்து நின்றிருக்கும் வேறு யாராவது கொண்டு போய் விடுவார்கள் என்று அவன் பயப்பட்டான்.

ஆறேழு மாதங்கள் காத்திருந்த பிறகு, முழுமையாகப் பொறுமையை இழந்து, வைரம் சிலையை அபகரித்துக் கொண்டு போவதற்கு ஒரு திட்டம் வகுத்தான். வழியில் மறைந்து நின்று கொண்டு, வேலை முடிந்து திரும்பிச் செல்லும் சுப்பனை கடத்திக் கொண்டு போய்விட வேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கமாக இருந்தது. அதற்காகக் கத்தி, கயிறு ஆகியவற்றுடன் அவன் ஒரு இரவு நேரத்தில் ஆபத்தான முயற்சியை நடத்திப் பார்த்தான். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத உடல் பலத்தைக் கொண்ட சுப்பனிடமிருந்து ஒரு அடி கிடைத்து, எஞ்சியிருந்த ஒரு மூட்டும் ஒடிந்து போனது என்பதைத் தவிர, அந்தச் செயலால் வேறு விளைவு எதுவும் உண்டாகவில்லை.

அந்த சம்பவம் நடைபெற்ற மறுநாளும் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் வைரம் சிலைக்கு முன்னால் வந்து நின்றான். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, உயிரையே இழப்பதாக இருந்தாலும், தான் சிலையுடன் மட்டுமே போவதாக திட்டம் என்று அவன் மிரட்டல் கலந்து அழுது சொன்னான். தனக்கு சிலை மீது எந்த அளவிற்கு ஆழமான விருப்பம் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, அவன் முந்தின நாள் கடத்திக் கொண்டு போக செய்த முயற்சியைச் சொன்னான்.

அப்படியே ஒரு வருடம் கடந்துவிட்டது. எல்லா நாட்களிலும் சிலை வரும்போதும் போகும்போதும் கேட்டிற்கு வெளியே வைரம் காத்துக் கொண்டு நின்றிருப்பான். ஒருமுறைகூட சிலை அவனைப் பார்த்ததே இல்லை.

6. ராஜகுமாரி

மைதியும் அழகும் நிறைந்த நாட்கள்மீதான சாபம் என்பதைப் போலத்தானே கெட்ட நாட்கள் வந்து சேர்கின்றன! வேறு தொல்லைகள் எதுவும் இல்லாமல், அனைத்தும் சொந்தமான கணக்கு கூட்டல்களின்படி நடந்து கொண்டிருந்த தீருலாலின் நாட்களின்மீது கஷ்ட காலத்தின் காற்று வீச ஆரம்பித்தது- ஒருநாள் ஒரு இளம்பெண் அவருடைய அலுவலகத்திற்குள் நுழைந்த நிமிடத்திலிருந்துதான்.

முன்கூட்டியே கூறி உறுதிப்படுத்திய சந்திப்பு என்பதால், அவளுக்கு அதிக நேரம் வெளியே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை.

கம்பீரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த தீருலாலின் வரவேற்பறையில் வருபவர்களை ஆச்சரியப்பட வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருட்களில் ஒன்றின்மீதுகூட கண்களைப் பதிக்காமல், வந்து உட்கார்ந்தவுடன் அவள் விஷயத்தைச் சொன்னாள்.

ராஜகுமாரி வரப்போகிறாள். ஒரு பகல் வேளை மட்டுமே அங்கு செலவிடுவாள். ஒருவேளை இரவில் தீவிற்குச் செல்லலாம்.


தீருலாலைப் பொறுத்தவரையில் அந்த இளம்பெண் சொன்னது ஒரு சந்தோஷமான செய்தியே. அதனால் அவர் அப்போதே சிறப்பு விருந்தாளி வரும் தேதியை மேஜைமீது இருந்த டைரியில் குறித்து வைத்தார். அதைச் செய்யும்போதே, இவ்வளவு சாதாரணமான ஒரு விஷயத்திற்கு ராஜகுமாரி எதற்குத் தன்னுடைய சொந்த பி.ஏ.வை நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றொரு சந்தேகமும் தோன்றாமல் இல்லை. அவருடைய சந்தேகத்தைத் தெரிந்து கொண்டதைப் போல, பி.ஏ. நிமிர்ந்து உட்கார்ந்து வேறு விஷயங்களையும் கூறினாள்.

ராஜகுமாரி, அன்று பகல் வேளையில் சிறிது நேரம் கேட்டில் இருக்கும் சிலையுடன் செலவிடுவாள். சிலையுடன் போட்டி போடுவதை ஒரு சவாலைப் போல சந்திக்க வேண்டும் என்பது அவளுடைய நோக்கம். அசைவே இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனிடம் ஏதாவதொரு அசைவை உண்டாக்க வேண்டும் என்று அவள் பிடிவாதத்துடன் இருக்கிறாள்.

ராஜகுமாரியைப் பற்றி பயம் இருந்தாலும், தீருலாலுக்கு அந்த சவாலைப் பற்றி பயம் உண்டாகவில்லை. எவ்வளவோ பேர், எத்தனையோ பெரிய மனிதர்களும் பெரிய மனுஷிகளும் தலைகுப்புற கவிழ்ந்த இடத்தில்...

அத்துடன் இப்படிப்பட்ட நட்சத்திர சவால்கள் வரும்போது, அதனால் உண்டாகக்கூடிய பொருளாதார ஆதாயத்தைப் பற்றி அவர் நினைக்காமல் இல்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட சவால்களை மிகப்பெரிய விளம்பர ஆரவாரங்களுடன் அவர் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவார். போட்டி நடக்கும் நாளன்று வரும் விருந்தினரின் மதிப்பை அனுசரித்து மக்களின் கூட்டம் இருக்கும். போட்டியைப் பார்ப்பதற்கு தனிப்பட்ட முறையில் டிக்கெட் போட்டு பணம் சம்பாதித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. சிலைக்கும் ராஜகுமாரிக்கும் இடையே நடக்கும் போட்டி, உண்மையாகவே ஒரு பெரிய லாபத்தைத் தராமல் இருக்காது.

உண்மை அதுதான் என்றாலும், தீருலால் ராஜகுமாரியின் பி.ஏ.விடம் அதற்கு நேர்மாறாகக் கூறினார். சிலைக்கு நெருக்கமாகப் போக மற்ற பார்வையாளர்களை அனுமதிக்காத பட்சத்தில், அன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும், அது கோட்டையின் மொத்த வருமானத்தை கணிசமாக பாதிக்கும் என்றும் அவர் கணக்குகளையும் முன் அனுபவங்களையும் வைத்து கூறினார். அதனால் அந்த இழப்பிற்குப் பரிகாரமாக வேறொரு நல்ல தொகையை ராஜகுமாரி தர வேண்டியதிருக்கும் என்று அவர் பணிவான குரலில் சொன்னார்.

ராஜகுமாரிக்கு அது ஒரு பிரச்சினை அல்ல. ஒருவேளை ஒரு பார்வையாளரைக்கூட ராஜகுமாரி அனுமதிக்காத சந்தர்ப்பங்கள் கூட உண்டாகலாம். அந்த நாள் சிலை இருக்கும் பகுதி ராஜகுமாரிக்கு மட்டுமே உரிமையானதாக இருக்கும். நீதிபதிகளும், பிறகு... தேவைப் பட்டால் தீருலாலும் ஓரத்தில் நிற்கலாம். அதற்குத் தேவைப்படும் பணம் எவ்வளவு என்பது தெரிந்தால் அதையும்கூட முன்பணத்து டன் சேர்த்துக் கொடுக்க தயார்தான்.

அளவுக்கு மேல் ஆசைப்படும் தீருலால் சிறிது நேரம் கேல்குலேட்டரில் குத்திக் கொண்டும் தட்டிக் கொண்டும் இருந்துவிட்டு தனக்கு முன்னால் இருந்த தாளில் ஒரு பெரிய தொகையை எழுதி விட்டு, பி.ஏ.வின் முகத்தையே பார்த்தார். தொகையில் சற்று கண்களைப் பதித்தவாறு, அதைத் தருவதற்குத் தயார் என்று கூறுவதற்கு அவள் ஒரு நிமிடம்கூட எடுக்கவில்லை.

அப்போது அவள் மூன்றாவது நிபந்தனையை முன்வைத்தாள். போட்டியில் ராஜகுமாரி வெற்றி பெற்றால், இப்போதிருக்கும் லாபங்களுக்கும் விளம்பரங்களுக்கும் பதிலாக இன்னொரு தேவை முன்வைக்கப்பட்டது. ராஜகுமாரிக்கு "ஃபன் காட்டே"ஜில் தங்குவதும், தீவின் இரவுகளும் புதியவை அல்ல என்பதால், அப்படிப்பட்ட வசீகர அம்சங்களெல்லாம் தேவையில்லை என்று கூறப்பட்டது. அவற்றுக்கு பதிலாக அவளுக்குத் தேவை - சிலைதான். வெற்றி பெற்றால் ராஜகுமாரியுடன் போவதற்கு சிலையை அனுமதிக்க வேண்டும்.

இப்படி ஏதாவது ஒரு ஆபத்து இருக்கும் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்ததால், உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும், அதை தீருலால் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. கேலிச் சிரிப்புடன் அவர் அந்தப் புதிய சவாலைக் கேட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து முட்டாள்களிடம் கூறுவதைப்போல அது நடக்காத காரியம் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறவும் செய்தார். சிலை தன்னுடைய அசையா சொத்து என்றும், அசையா சொத்துக்களைப் பணயம் வைத்து சூது விளையாட தான் ஒரு யுதிஸ்டிரன் அல்ல என்றும், தன்னைப் பொறுத்தவரையில் இவை அனைத்தும் ஒரு விளையாட்டு என்றும், விளையாட்டுக்கு மத்தியில் இன்னொரு விளையாட்டு தேவையில்லை என்றும், அப்படி விளையாட ராஜகுமாரிக்கு நோக்கம் இருந்தால் அதற்கு வேறு யாரையாவது பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், தர்க்கங்களிலும் வாத, எதிர் வாதங்களிலும் குறிப்பிடத்தக்க அனுபவங்களைப் பெற்றிருந்த அந்த இளம்பெண் அப்படி விட்டுத் தருவதற்குத் தயாராக இல்லை. கோட்டையைப் பொறுத்த வரையில் பரிசு பற்றிய வாக்குறுதிகள் பெரிதாக இருந்தாலும், ராஜகுமாரியைப் பொறுத்த வரையில், அது எந்த அளவிற்கு மிகவும் சாதாரணமானது என்பதை அவள் சுட்டிக் காட்டினாள்.

அப்படிப்பட்ட ஒரு பிச்சைக்காசுக்கான விளையாட்டில் ஈடுபடுவது தன்னுடைய எஜமானிக்கு அவமானகரமான ஒரு விஷயம் என்று அவள் வெளிப்படையாகவே சொன்னாள். தனக்குச் சொந்தமான சிலைமீது அந்த அளவிற்கு ஆழமான நம்பிக்கை இருக்கும் பட்சம், இந்த புதிய சவாலைச் சந்திக்கத் தயாராவதுதான் ஒரு தொழிலதிபர் என்ற நிலையில் தீருலாலைப் பொறுத்தவரையில் புத்திசாலித்தனமான விஷயம் என்பதைச் சுட்டிக்காட்டவும் தைரியசாலியான அந்தப் பெண் தயங்கவில்லை.

தர்க்கங்களுக்கு எதிர் தர்க்கங்கள் கூறிக்கொண்டு தீருலாலும் உட்கார்ந்திருந்தார்.

ஒன்றோடொன்று நெருங்கி வராமல் வேறுவேறு துருவங்களில் உறுதியாக நின்றிருந்த அந்த வாத, எதிர்வாதங்களுக்கு முடிவு உண்டானது, பெண் புதிய ஒரு வாக்குறுதியை முன் வைத்தபோதுதான்.

சிலை தீருலாலின் சொந்த சொத்துக்களில் ஒன்று என்ற வாதத்தை ஒப்புக்கொண்டுதான் அவள் அந்த எண்ணத்தை முன் வைத்தாள். அசைக்க முடியாத பொருட்களில் ஒன்று என்றால், பொருளாதார அறிவியலின்படி உண்மையிலேயே ஒரு பொருள் என்ற வகையில் அதற்கு ஒரு விலை இருக்க வேண்டுமே! அப்படி இருந்தால், அந்த விலை என்னவென்று தீருலால் கூறவேண்டும். போட்டியில் தோல்வியைத் தழுவினால், அவ்வளவு தொகையையும் தீருலாலிற்குக் கொடுக்க ராஜகுமாரி தயாராகவே இருக்கிறாள்.

பேராசைப் பிடித்த தீருலாலுக்கு இந்தப் புதிய வாக்குறுதி எந்த அளவிற்கு குளிர்ச்சியைத் தந்தது என்பதைக் கூறுவது மிகவும் சிரமமான ஒரு விஷயம். எளிதில் கிடைக்கக்கூடிய பணத்தைப் பற்றிய ஆவலும், தன் பக்கம் இருந்த அசையாத நம்பிக்கை தந்த பின்பலமும் சேர்ந்தவுடன், தீருலால் அந்தத் தூண்டிலில் சிக்கிக் கொண்டார். மீண்டும் ஒருமுறை கேல்குலேட்டரில் தட்டி அவர் ஒரு புதிய தொகையை எழுதினார்.


அவள் அதற்கும் ஒப்புக் கொள்வாள் என்பதில் உறுதி இருந்ததால், அவள் ஏதாவது புதிதாகக் கூறுவதற்கு முன்னால், அவர் தன் பக்கத்தில் இருந்து மேலும் ஒரு காயை நகர்த்தினார். அவ்வளவு பணத்தையும் தந்தால்தான் சிலையைக் கொண்டு செல்ல முடியும். ஆனால், கொண்டு போனாலும், ஒரு நாள் கழித்துத் திரும்பவும் கொண்டு வரவேண்டும்.

ராஜகுமாரியின் பைத்தியக்காரத்தனம், ஒருவேளை ஒரு வெற்றி அறிவிப்பில் போய் முடிந்தாலும் முடியலாம் என்ற எண்ணமும் இருந்ததால்தான் அவர் அப்படியொரு நிபந்தனையை துணிச்சலாக முன்னால் வைத்தார்.

இளம்பெண் அதைக் கேட்டு மிகவும் கோபப்பட ஆரம்பித்தாள். மீண்டும் வாதங்களும் பதில்களும் தொடர்ந்தன. கேல்குலேட்டர் பல முறை செயல்பட்டன. சிலையால் தனக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கக்கூடிய வருமானத்தையும், இனி வரப்போகும் நாட்களில் கிடைக்கப் போகிற லாபத்தையும் மிகவும் சரியாகக் கணக்குப் போட்டு கூறி, அது இல்லாமல் போனால், தனக்கு ஒவ்வொரு நாளும் உண்டாகப் போகிற இழப்பைக் சுட்டிக்காட்டி அவர் விலை பேசினார். ஒரே நாளாக இருந்தாலும் கூட, அது அங்கிருந்து மறைந்தால், அந்த சிலையின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் இழக்க வேண்டியதிருக்கும் என்று அவர் வாதிட்டார். அதிக நாட்கள் அது அங்கு இல்லாமலிருந்தால், அந்த அளவிற்கு அதற்கும் அதன் மூலம் நிறுவனத்திற்கும் இருக்கும் மதிப்பில் குறைபாடு உண்டாகும் என்றார் அவர். இப்படியொரு அற்புதத்தை அங்கு கொண்டு வருவதற்கு தான் செலவழித்த மிகப்பெரிய தொகையையும் கணக்கில் எடுத்து, அதற்கும் விலை பேச வேண்டும் என்றார் அவர்.

அந்த வகையில் இறுதியாக நாட்களின் எண்ணிக்கையைப் பற்றிய தர்க்கத்தில் வந்து நின்றது.

வருடங்களில் இருந்து மாதங்களுக்கும், மாதங்களில் இருந்து வாரங்களுக்கும் இறங்கி வந்த அந்தக் கணக்கு மூன்று நாட்களில் வந்து முடிந்தது.

போட்டியில் ராஜகுமாரி வெற்றி பெற்றால், சிலையை மூன்று நாட்களுக்கு ராஜகுமாரி கொண்டு செல்வாள். நான்காவது நாள் காலையில் திரும்பவும் கொண்டு வருவாள். தோல்வியைச் சந்தித்தால், தீருலால் கூறிய தொகையைத் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவாள்.

தீருலாலிற்கு அந்த ஒப்பந்தம் பிடித்திருந்தது. ஜெனரல் மேனேஜரை வரவழைத்து, அது சம்பந்தப்பட்ட பேப்பர்களில் கையெழுத்துப் போடுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு, இளம் பெண்ணையும் உடன் அனுப்பி வைத்த பிறகுதான் அவருக்கு நிம்மதியே உண்டானது. அத்துடன் போட்டிக்கு ஏற்ற வகையில் பெரிய அளவில் விளம்பர ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்காக விளம்பரப் பிரிவினரை வரவழைத்து கூற வேண்டியவற்றைக் கூறினார்.

கோட்டையில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கும் நிறைய தமாஷான விஷயங்களில் ஒன்றாக, அந்த நேரத்தில் நடைபெற்ற அந்த சம்பவமும் கடந்து சென்றது. தீருலாலும் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து கோட்டைக்குள் இருந்த புல்வெளிகளுக்கு மத்தியில் காலை நேர சவாரியில் ஈடுபட்டிருந்த தீருலால், விளம்பரத்திற்காகத் தயார் பண்ணப்பட்டிருந்த ஆரம்ப சுவரொட்டிகளைப் பார்த்தார். எதிர்பார்த்த விஷயம்தான் என்றாலும், போட்டி ஒரு உண்மைச் செயலாகக் கண்களுக்கு முன் நின்று கொண்டிருப்பதைக் கற்பனை பண்ணியதைத் தொடர்ந்து, அவருடைய மனதிற்குள் இனம்புரியாத ஒரு மயக்கம் உண்டானது.

ராஜகுமாரியை நேரில் பலமுறை பார்த்திருந்தாலும், சுவரொட்டியில் இருந்த அவளுடைய உருவம் அவருக்கு ஒரு புதிய அச்சத்தைத் தந்தது. முன்பு ஏதோ வருடத்தில் உலக அழகிப் பட்டத்திற்காகப் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட அவளுடைய சிரிப்பில் இருந்த கவர்ச்சி, புகைப்படத்திற்குள்ளிருந்து கீழே இறங்கி வருவதைப்போல அவருக்குத் தோன்றியது. அவளுடைய சிரிப்பில் தன்னுடனான ஒரு சவால் நிறைந்திருப்பதையும் அவர் உணர்ந்தார்.

எதற்கும் தயங்காதவள் ராஜகுமாரி என்ற உண்மை, இதற்கு முந்தைய அனுபவங்களில் இருந்து தீருலாலுக்குத் தெரியும். அதுதான் அவருடைய குழப்பமான மன நிலைக்குக் காரணமாக இருந்தது.

சிலை அங்கு வந்த நாளிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பவள் ராஜகுமாரி என்ற விஷயம் தீருலாலிற்குத் தெரியும். அதன்மீது அவள் வைத்திருக்கும் ஈடுபாடு சிறிதும் மேலோட்டமானது அல்ல என்பதும் அவருக்குத் தெரியும்.

சிலையை அங்கு உருவாக்குவதற்கு முன்பே, தமாஷ் கோட்டையில் வந்து ராஜகுமாரி தங்கியிருக்கிறாள். கோடீஸ்வரரான மகாராஜாவின் அழகான வைப்பாட்டி என்ற நிலையில், அந்த இளம்பெண் அங்கு விரும்பி வரவேற்கப்பட்டவளாகவும் இருந்தாள். நடுத்தர வயதைக் கொண்ட மகாராஜாவுடன் பாடல்களைப் பாடிக் கொண்டும், அளவுக்கும் அதிகமாக மது அருந்திக் கொண்டும், விளையாடிக் கொண்டும் தங்கியிருந்த அந்த அழகின் சந்தோஷத்திற்குத் தேவையான எதையும் செய்து கொடுக்க தீருலால் அந்தச் சமயத்தில் கடமைப்பட்டிருந்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினால் மட்டுமே ராஜாவைத் தன்னால் விருந்தாளியாக அடைய முடியும் என்று புத்திசாலியான அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

சிலையைத் திறந்து வைப்பதற்கு மகாராஜாவை அழைத்தது தான் ஆபத்துக்கெல்லாம் காரணம். திறப்பு விழாவிற்கு வந்த ராஜாவுடன், "ஹெர் ஹைனஸ்" என்று தாழ்ந்த நிலையில் இருப்பவர்களும், "ராஜகுமாரி" என்று சாதாரண நிலையில் இருப்பவர்களும், "அருந்ததி" என்று ராஜாவும் அழைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணும் வந்திருந்தாள்.

சிலையாக ஆக்கி நிறுத்தியிருந்த சிலையையே அன்று அவள் பார்த்த பார்வையை தீருலால் இறுதி மூச்சு இருக்கும் வரை மறக்க மாட்டார். சிலை திறப்பு விழா நாளன்று உண்டான பல கவலைகளில் ஒன்றாக அருந்ததியின் விரிந்த கண்களில் இருந்த ஆச்சரியமும் சேர்ந்தது.

அன்று இரவு, தீவின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அருந்ததி தீருலாலை ரகசியமாகப் பிடித்து நிறுத்தினாள். துவார பாலகன் சிலை அல்ல என்றும், அது ஒரு மனிதன் என்ற உண்மை தனக்குத் தெரியும் என்றும் அவள் சொன்னாள். அப்போது சிரித்துக் கொண்டு நகர்ந்துவிட்டாலும், ராஜாவும் அவருடன் இருந்தவர்களும் திரும்பிச் சென்ற பிறகு, பல நாட்கள் அவளுடைய அந்த வார்த்தைகள், இனம் புரியாத ஒரு அச்சுறுத்தலைப் போல அவருடைய நினைவில் இருந்து கொண்டே இருந்தன. அதிகமாக மது அருந்தியதால், பெண் என்னவோ புலம்பியிருப்பாள் என்று நினைத்து அப்போதெல்லாம் அவர் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு மகாராஜாவும் வைப்பாட்டியும் திரும்பவும் வந்த நாளன்று, தன்னுடைய எண்ணம் தவறானது என்பதை தீருலால் உணர்ந்தார்.

அந்த முறை ராஜாவிற்கு முன்னால் இருந்து கொண்டே அவள் ஆவேசமாகப் பேசினாள். கேட்டில் நின்று கொண்டிருந்த மனிதன் கடந்த ஒரு வருட காலமும் அங்கேயே நின்று கொண்டிருக்கிற என்பதைத் தெரிந்து அவள் ஒரேயடியாகத் துள்ளினாள்.


அது ஒரு சிலை அல்ல என்பதையும், மனிதன்தான் என்பதைப் பற்றிய உண்மையையும் முழு உலகத்திற்கும் தான் கூறப் போவதாகவும் அவள் சொன்னாள்.

ராஜகுமாரி எப்போதும் மென்று கொண்டிருக்கும் இலையால் உண்டான மயக்கத்தில் அப்படித் தோன்றுகிறது என்றும், அது ஒரு சிலைதான் என்றும் கூறி நிலைமையைச் சரிகட்ட முயற்சித்த தீருலாலைப் பார்த்து அவள் பலமாக சத்தம் போட்டாள். அவள் அவரை மிகவும் கொடூரமானவர் என்றும் திருடன் என்றும் ஏமாற்றுப் பேர்வழி என்றும் மாறி மாறிச் சொன்னாள். தனக்கு அதிகாரம் இருந்தால், அந்த நிமிடமே தீருலாலை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவேன் என்றும் அவள் கர்ஜித்தாள்.

இறுதியில் சிலைக்கு உயிர் இருக்கிறது என்பதை அவர் ஒப்புக் கொள்ள வேண்டியதிருந்தது.

அப்படி ஒப்புக் கொண்டவுடன், அதை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று சொன்னாள் ராஜகுமாரி. அது அப்படி போக வேண்டியதில்லையென்றும், தன்னுடைய வேளையில் சந்தோஷம் கண்டு சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி ஊழியனின் தனிப்பட்ட வாழ்க்கையை ராஜகுமாரி அழிக்கிறாள் என்றும் அவர் ராஜாவிற்கு முன்னால் குற்றச்சாட்டு சொன்னார்.

ராஜா மிகவும் குழப்பத்திற்குள்ளானார். இறுதியில் மறுநாளே சிலை சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என்ற தீர்மானத்துடன், அன்றைய கூட்டம் பிரிந்தது.

அதற்குப் பிறகு நிலைமையைக் காப்பாற்றுவதற்குத் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்வதைத் தவிர தீருலாலிற்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது.

மறுநாள் ராஜகுமாரி கண் விழித்தபோது முதலில் கண்ட காட்சி - கேட்டில் நின்று கொண்டிருந்த சிலை மனிதன்தான் என்ற ரகசியத்தைத் தீருலால் கொண்டாட்டத்துடன் உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்ததுதான்.

7. போட்டி

ரண்டாவது படையெடுப்பிலும் தோல்வியைச் சந்தித்ததுடன், அருந்ததி தன்னுடைய பைத்தியக்காரத்தனமான போராட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டாள் என்றுதான் தீருலால் அதற்குப் பிறகு இவ்வளவு காலமும் மனதில் நினைத்திருந்தார்.

அதற்குப் பிறகும் ராஜகுமாரி கோட்டைக்குள் வந்து தங்கியிருக்கிறாள் என்றாலும், அவளும் தீருலாலும் ஒருவரையொருவர் கண்களுடன் கண் சந்தித்ததில்லை. ஆரம்பத்தில் ராஜாவின் வைப்பாட்டியாக வந்து கொண்டிருந்த ராஜகுமாரி, ஒரு அதிகாலை வேளையில் தன்னுடைய வைப்பாட்டி பதவியை விட்டெறிந்தாள். நடுத்தர வயதைத் தாண்டிய மகாராஜாவைத் தூக்கியெறிந்துவிட்டு, முழுமையான சுதந்திரம் கொண்ட பெண்ணாக ஆனபிறகும், "ராஜகுமாரி" என்ற அழைப்பும், பின்பற்றிச் செல்லும் கூட்டமும் அந்த அழகியை விடாமல் பின்தொடர்ந்தன. ராஜாவிடமிருந்து அபகரித்த அளவற்ற செல்வம் ராஜ வாழ்க்கையைத் தொடர அவளுக்கு உதவியது. விருப்பப்படும் வாழ்க்கையை வாழும் அந்தப் பேரழகி, இப்போதும் போதையைத் தரும் இலையை மெல்வது உண்டு என்ற விஷயத்தை உள்ளுக்குள் நடுக்கத்துடன் தீருலால் நினைத்துப் பார்த்தார். தன்னுடைய தந்திரத்திற்கு முன்னால் முழங்காலிட்டது காரணமாக இருக்க வேண்டும்- பிறகு கோட்டைக்கு வந்தபோது ஒருமுறைகூட அவள் துவாரபாலகனுக்கு அருகிலேயே செல்லவில்லை. அது அவருக்கு ஒரு பெரிய நிம்மதியான விஷயமாக இருந்தது. அந்த நிம்மதியைத்தான் அவள் இப்போது தட்டித் தகர்த்திருக்கிறாள்.

ராஜகுமாரி சிலையை அசைய வைப்பதற்காக வரும் செய்திக்கு, மிகப்பெரிய அளவில் விளம்பரத்தை கோட்டையின் விளம்பரப் பிரிவு செய்திருந்தது. மிகவும் சீக்கிரமே தூர இடங்களில்கூட அது ஒரு சுவாரசியமான பேச்சுக்கான விஷயமாக மாறியது. நிகழ்ச்சியைப் பற்றிய விஷய விவரங்களைக் கேட்டு, பல ஊர்களில் இருந்தும் வர ஆரம்பித்த தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டேயிருந்தன. பரிசு பற்றிய மாறுபட்ட தகவல் போட்டியைப் பற்றிய மதிப்பை ஒட்டு மொத்தமாக உயர்த்தியது. ராஜகுமாரி வரப்போகிறாள் என்பது இன்னொரு ஈர்ப்புக்குரிய விஷயமாக இருந்தது. அந்த அழகின் சின்னத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும் ஏராளமான பேர் அவளை நேரடியாகப் பார்க்கக் கூடிய அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்ததைத் தொடர்ந்து, அனுமதிச் சீட்டுக்களின் கட்டணம் திடீரென்று உயர்ந்தது. தீருலாலின் ரகசியமான பின்துணையுடன் திருட்டுத்தனமாகவும் டிக்கெட் விற்பனை நடைபெற்றது.

போட்டிக்கான நாள் நெருங்க நெருங்க தீருலாலின் மனதில் இருந்த அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வந்தது. ஒருவேளை ராஜகுமாரி வெற்றி பெற்றுவிட்டால், தனக்கு உண்டாகப் போகிற மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் அவமானத்தையும் நினைத்துப் பார்த்தபோது, இப்படியொரு ஒப்பந்தத்திற்கு சம்மதித்ததே முட்டாள்தனமான காரியம் என்று அவருக்குத் தோன்றியது.

போட்டி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு அதிகாலை நேரத்தில் அவர் சுப்பனின் அறைக்குச் சென்று காத்திருந்தார். சுப்பன் அன்றும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தான்.

தன்னைச் சுற்றி இப்படியொரு போட்டி நடக்கப் போகிறது என்ற விவரத்தை சுப்பன் விளம்பரங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர, அதற்கு அவன் அந்த அளவிற்கு முக்கியத்துவம் தந்ததாகத் தெரியவில்லை. எவ்வளவோ போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அதைப் போல இதுவும் ஒன்று.

ஆனால், விஷயத்தை மேலும் சற்று தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதையும், இந்த முறை கிடைக்கக் கூடிய பரிசு மாறுபட்டது என்பதையும் தீருலால் ஞாபகப்படுத்தினார். ராஜகுமாரி அந்தப் பரிசைத் தட்டிச் சென்றால், அதன் விளைவு மரணம்தான் என்று அவர் அவனுக்கு எச்சரித்தார். மந்திர வித்தைகளையும் பிசாசுக்களின் மந்திரங்களையும் தெரிந்திருக்கும் அவள், நரபலி கொடுப்பதற்காகத்தான் சிலையைத் தன்னுடன் கொண்டு செல்லப் போகிறாள் என்று தீருலால் சொன்னார். அதைக் கேட்டதும் சுப்பனுக்கு பயம் தோன்றியது. எந்தவொரு காரணத்தைக் கொண்டும் தான் அசையப் போவதில்லை என்று அவன் முதலாளிக்கு வாக்குறுதி அளித்தான். அவனுடைய வார்த்தைகள் உறுதியாக வந்ததைக் கேட்டவுடன், தீருலாலின் மனதில் முழுமையான நிம்மதி உண்டானது.

போட்டி நடப்பதற்கு முந்தைய நாளன்று சாயங்காலம் ராஜகுமாரியும் அவளுடைய ஆட்களும் அங்கு வந்து தங்க ஆரம்பித்தார்கள். காட்டேஜ்களில் நான்கைந்தை அவர்களுக்காகப் பதிவு செய்திருந்தார்கள்.

ராஜகுமாரியுடன் வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தார்கள். மெய்க்காப்பாளர்கள், மூட்டை தூக்குபவர்கள், துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று இருந்த நான்கைந்து ஆண்களை நீக்கிப் பார்த்தால், மற்றவர்கள் எல்லாரும் பார்ப்பதற்கு மிகவும் அழகான இளம்பெண்களாகவே இருந்தார்கள். போட்டி பற்றி தீர்மானிக்க வந்த இளம்பெண்தான் அந்தக் கூட்டத்தினரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கினாள்.

அவளை மட்டுமே தீருலால் பார்த்திருக்கிறார். மக்கள் கூட்டம் எங்கு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முறைகளைப் பற்றியும் அவள் தீருலாலுடன் மீண்டுமொருமுறை விவாதித்தாள்.


ராஜகுமாரியுடன் வந்திருந்த அழகிகளுக்கு இரவில் தூக்கமே வரவில்லை. கோட்டைக்குள் இருந்த புல்வெளிகளிலும், மார்க்கெட்டிங் காம்ப்ளெக்ஸ்களிலும், எருமை வண்டியிலும் சத்தமும் பாடல்களும் எழுப்பிக் கொண்டு அவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் பலரும் நன்கு மது அருந்தக் கூடியவர்கள் என்பதை தீருலால் புரிந்து கொண்டார். ராஜகுமாரியை மட்டும் வெளியே எங்கும் பார்க்க முடியவில்லை.

அவளும் தன்னைப் போல நல்ல உற்சாகத்துடன் நின்று கொண்டிருப்பாள் என்று தீருலால் மனதில் கற்பனை பண்ணினார். இல்லாவிட்டால் போதை நிறைந்த இலையை மென்று கொண்டு படுத்திருப்பாளோ?

போட்டிக்கான நாள் வந்தது.

சிலையை மூடியிருந்த திரைச்சீலை விலகும்போதே ராஜகுமாரியும் இரண்டு தோழிகளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

முன்கூட்டியே பேசி உறுதிப்படுத்தியிருந்தபடி நீதிபதிகளும் அந்த நேரத்திற்கு அங்கு வந்து சேர்ந்தார்கள்.

தூக்கமில்லாததால், தீருலால் அதிகாலையிலிருந்தே அங்கு இருந்தார்.

சிலை தன்னுடைய முழுமையான கம்பீரத்துடன், உதித்து வந்து கொண்டிருந்த சூரியனுக்கு நேராகப் பார்வையைப் பதித்தவாறு நின்றிருந்தது. இன்று சாயங்காலம் வரை அது அங்கு நிற்கும். கண்களை அசைக்கப் போவதில்லை. சாதாரண நாட்களில் ஈட்டிக்கு இடையில் ஒரு இட மாறுதல் இருக்கும். இன்று அதுவும் இருக்கப் போவதில்லை. தீருலாலிற்கு அன்று முதல் முறையாக சிலையின் வேலையில் இருக்கும் கடுமை மனதில் தைத்தது. ராஜகுமாரியைத் தோற்கடித்து விரட்டி விட்டால், அவனுக்கு ஒரு சம்பள உயர்வு தரவேண்டும் என்று அவர் உள்ளுக்குள் கூறிக் கொண்டார்.

சலவை செய்யப்பட்ட ஆடைகளில் அதிகாலை நேரத்தில் ராஜகுமாரி பேரழகியாகத் தெரிந்தாள். ஆடைகளுக்கும் இளம் ரோஸ் நிறம் இருந்ததால், உடலுக்கும் ஆடைக்கும் மத்தியில் எங்கு எல்லை இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கே மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் உடலின் நெளிவுகளை முழுமையாகக் காட்டக்கூடிய சில கோணங்களில் அவள் முழுமையான நிர்வாணத்துடன் நிற்பதைப் போல நின்றிருந்தாள்.

சிலைக்கு மிகவும் அருகில் வரை போவதற்கு ராஜகுமாரிக்கு அனுமதி இருந்தது. தொடக்கூடாது- கண்டிப்பாக.

தோழிகள் தூரத்தில் விலகி நின்றிருந்தார்கள். ராஜகுமாரி அந்தப் பகுதியைச் சுற்றி நடந்தாள். இடையில் சில நேரங்களில் உட்கார்ந்தாள். சிலைக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லாமல், சற்று தூரத்தில் சுற்றிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் அசைவுகளில், அந்த நேரத்தில் இருந்தது அழகைவிட இயல்புத் தன்மைதான் என்று தீருலாலுக்குத் தோன்றியது. எந்த விதத்திலும் சிலையின் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பக்கூடிய ஒரு முதல் முயற்சி அவளுடைய அந்தச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தன்மையில் இருப்பதை அவர் வாசனை பிடித்தார்.

சிறிது நேரம் சுற்றி நடந்துவிட்டு, அவள் சிலைக்கு முன்னால் சற்று தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கம்பிகளால் ஆன ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள். ஊஞ்சலில் ஆடியவாறு அவள் சிலையையே பார்த்தாள். அவளுடைய உதடுகள், சூயிங்கத்தைப் போல ஏதோ ஒன்றைச் சுவைத்துக் கொண்டிருந்ததால், இடையில் அவள் சிறிதாக உடலை முறுக்கினாள். காலை நேரத்து கடல் காற்றில் ஊஞ்சலின் ஆட்டத்திற்கு ஏற்றாற்போல மெல்லிய ஆடை ஒட்டவும் மலரவும் செய்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம், ராஜகுமாரி அந்த ஊஞ்சலை விட்டு இறங்கவேயில்லை.

ஆரம்பத்தில் அவளிடம் இருந்த மலர்ச்சி, சிறிது நேரம் சென்றதும் இல்லாமற் போனது. ஊஞ்சலின் வேகமும் அதற்கேற்ற படி குறைந்தது. படிப்படியாக அது அசைவு இல்லாமல் ஆனது. ராஜகுமாரி சிலையின் முகத்திலேயே பார்வையைப் பதித்துக் கொண்டு இன்னொரு சிலையாக ஆகிவிட்டதைப் போல தீருலாலுக்கும், இதர நீதிபதிகளுக்கும் தோன்றியது.

அப்போதும் சூரியன் முழுமையாக உதித்திருக்கவில்லை. வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும், தீருலால் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். அவளுடைய கண்களில் ஈரம் இருந்தது. அது நிறையத் தொடங்குவதைப் போலவும், அவள் அதைக் கட்டுப்படுத்தி நிறுத்துவதைப் போலவும் அவருக்குத் தோன்றியது.

நீதிபதிகளும் அதை கவனித்துக் குறித்துக் கொண்டார்கள். போட்டியின் முடிவுடன் அப்படிப்பட்ட குறிப்பிடல்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லையென்றாலும், சிலைக்கு முன்னால் சோதித்துப் பார்த்த அம்மாதிரியான நடவடிக்கைகள் பற்றிய ஒரு அட்டவணையைத் தயார் பண்ணும்படி தீருலால் நீதிபதிகளுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தார். சிலையை ஏதாவதொரு வகையில் இழக்கக்கூடிய சூழ்நிலை உண்டானால், அந்தப் பட்டியலில் சற்று மாயம் கலந்து ஒரு புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற விஷயத்தில் கிருமியான அவருக்கு ஆழமான எண்ணம் இருந்தது.

முழுமையான வெளிச்சம் பரவுவது வரை, ராஜகுமாரி அதே இடத்தில் உட்கார்ந்திருந்தாள். அப்போது பார்வையாளர்களின் முதல் கூட்டம், எல்லை உண்டாக்கிக் கட்டப்பட்ட கம்பிகளால் ஆன வேலிக்கு அப்பால் வந்து நின்றது. கைகளைத் தட்டியும் சந்தோஷம் கலந்த சீட்டிகளை அடித்தும் அவர்கள் தங்களுடைய இருத்தலை வெளிப்படுத்தினார்கள். இயல்பாகவே இரண்டு பக்கங்களையும் உற்சாகப்படுத்த மக்கள் கூட்டத்தில் இரண்டு பிரிவுகள் உண்டாயின. அதிகமான ஆட்கள் சிலையின் பக்கம்தான் என்பதை தீருலால் கவனிக்காமல் இல்லை.

மேலும் சிறிது நேரம் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்து விட்டு, ராஜகுமாரி அவளுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.

மக்கள் கூட்டம் சத்தமும் ஆரவாரமும் எழுப்புவதால், ராஜகுமாரி எழுந்துபோய் விட்டாள் என்றும்; இனி சத்தங்கள் உண்டாக்கினால் எல்லாரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு கேட்டை அடைத்துவிடுவோம் என்றும் மைக் மூலமாக ஒரு பயமுறுத்தல் உண்டானது. இன்னொரு பிரிவில் இருப்பவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் நிறுவனத்தின் பெயரில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதற்காக ராஜகுமாரியின் பி.ஏ. கோபப்பட்டாள். அப்படியெதுவும் இல்லையாயினும் மக்கள் கூட்டம் இயல்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் ராஜகுமாரிக்கு அக்கறை இருக்கிறது என்றும் அவள் சொன்னாள். அவளுடைய வற்புறுத்தலுக்காக ஒரு திருத்தம் உண்டாக்கி அறிவிப்பு செய்யப்பட்டது.

குளியலும் காலை நேர உணவும் முடிந்து, புதிய ஆடைகள் அணிந்து ராஜகுமாரி திரும்பி வந்தாள். இந்த முறை நன்கு ஆடைகள் அணிந்த நான்கைந்து தோழிகள் அவளைச் சுற்றி இருந்தார்கள். காலையில் வந்த தோழிகளுடைய நடத்தையில் ஒருவகை விலகல் இருந்தது என்றால், இப்போது வந்திருக்கும் இளம் பெண்கள் கிட்டத்தட்ட சரிசமமாக ராஜகுமாரியிடம் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டு, காதுகளில் ரகசியம் கூறி, கட்டிப்பிடித்துக் கொண்டு, கிள்ளிவிட்டுக் கொண்டு, துருதுரு என்றிருக்கும் ஒரு கூட்டத்தின் அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்தினார்கள்.

அந்தக் கூட்டம் கிட்டதட்ட மதியம் வரை நீடித்தது. இடையில் ஒரே ஒரு முறை மட்டும் ராஜகுமாரி தன்னுடைய காட்டேஜ் வரை போய்விட்டு வந்தாள். அது போதை இலையை எடுப்பதற்காக இருக்க வேண்டும் என்று தீருலால் நினைத்தார்.


நேரம் செல்லச் செல்ல மேலும் அதிகமாக தோழிகள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

சிலைக்கு முன்னால் அவர்கள் எல்லா வகையான கிண்டல் வேலைகளையும் செய்தனர். ராஜகுமாரிதான் அவற்றுக்கெல்லாம் தலைமை தாங்கினாள். சில நேரங்களில் அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சிலையைச் சுற்றிலும் நின்று கொண்டு நீதிபதிகளுக்குக் கேட்காத அளவிற்கு மெதுவான குரலில் ரகசியம் பேசிக் கொண்டார்கள். ஆபாசம் கலந்த நகைச்சுவைகளாக அவை இருக்கவேண்டும் என்று, பெண்களின் கிச்சுக் கிச்சு மூட்டியதைப் போன்ற சிரிப்பைக் கேட்டதும் தீருலாலுக்குத் தோன்றியது. ராஜகுமாரி முகத்தாலும் உடலாலும் பலவிதப்பட்ட வசீகரங்களை வெளிப்படுத்தினாள். ஒருமுறை திடீரென்று தன்னுடைய பின்பாகத்திற்கு நடுவில் இருந்து ஒரு குரங்கின் வாலை இழுத்து எடுத்தபோது, நீதிபதிகள்கூட குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சிலையிடம் மட்டும் எந்தவொரு அசைவும் இல்லை.

சிலையிடம் அசைவை உண்டாக்குவதற்காக பல திட்டங்களையும் ராஜகுமாரி தயார் பண்ணிக் கொண்டு வந்திருந்தாள். அவை அனைத்தும் ஒன்றையொன்று மீறியதாக இருந்தது. ஒரு திகைப்பிலும் ஒரு புன்சிரிப்பிலும் ஏராளமான தந்திரங்களை அவள் மறைத்து வைத்திருக்கிறாள் என்பதை தீருலால் தெரிந்து கொண்டார். பல நேரங்களில் சிலையிடம் அசைவு உண்டானதோ என்று அவர் வெறுமனே பயப்பட்டார். வெளியே பார்வையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் தீருலாலுக்கு உற்சாகம் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. எனினும், சாயங்காலம் வந்தால் போதும் என்றிருந்தது அவருக்கு. அதுவரை இதே மாதிரியான நிலைமை தொடர்ந்தால், கைக்கு வரும் கனமான தொகையைப் பற்றிய நினைவு அவருடைய மனதைக் குளிரச் செய்தது. சிலைக்கு கிடைக்கப் போகிற புகழ் வேறு. அதன் தொப்பியில் இந்த புதிய இறகுக்கு அதிகமான மதிப்பு இருக்கும்.

போட்டியின் நிலைமையை அவ்வப்போது உலகத்திற்குத் தெரிவித்துக் கொண்டு டெலிபிரிண்டர்கள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. தீருலாலின், ஹோம் வீடியோ யூனிட்டைச் சேர்ந்தவர்களும், தூரத்தில் இருந்து வந்திருந்த ஒரு டெலிவிஷன் யூனிட்டும் நிகழ்ச்சிகளை அந்தந்த நேரத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். ராஜகுமாரியின் விருப்பங்களுக்கும் விருப்பமின்மைக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு செயல்பட அனுமதி இருந்தது. வெளியே போகும்படி கூறினால், அந்த நிமிடமே அவர்கள் வெளியே போய்விட வேண்டும்.

மதிய உணவிற்கான நேரம் வந்ததும், ராஜகுமாரியும் அவளுடன் இருந்தவர்களும் மீண்டும் காட்டேஜ்களை நோக்கிச் சென்றார்கள்.

சிலை அங்கேயே நின்றிருந்தது. கம்பிகளால் ஆன வேலிக்கு அப்பால் மக்கள் கூட்டம் சிலையை உற்சாகப்படுத்தும் விதத்தில், கோஷங்கள் போட்டார்கள்.

அதிகமான ஆட்கள் சிலையின் பக்கம் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதை தீருலால் கவனித்தார்.

உணவும் ஓய்வும் முடிந்து, புதிய ஆடைகளுடனும் அணிகலன்களுடனும் ராஜகுமாரியும் அவளைச் சுற்றியிருக்கும் கூட்டமும் திரும்பவும் வந்து சேர்ந்தார்கள்.

மதியத்திற்குப் பிறகு இருந்த செயல்களில் தீவிரமும் பிடிவாதமும் முன்னால் நின்றன. எப்படியும் தான் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற உறுதியான முடிவு அவளுடைய நடவடிக்கைகளில் வெளிப்பட்டதை தீருலாலால் உணர முடிந்தது. இடையில் சில நேரங்களில் அவள் சிலைக்கு மிகவும் அருகில் சென்று அதன் முகத்தைக் கூர்ந்து, நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அப்போது அவளுடைய கண்களில் ஒரு மந்திரவாதம் செய்யும் பெண்ணின் ஈடுபாடு பதிந்திருப்பதை தீருலால் உணர்ந்தார். சில நேரங்களில் சிலையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, அதே நேரத்தில் அது தெளிவாகப் பார்க்கக்கூடிய விதத்தில் போய் உட்கார்ந்து கொண்டு, அவள் பலவிதப்பட்ட சேட்டைகளையும் வெளிப்படுத்தினாள். தோழிகளும் அவளுடன் சேர்ந்து கொண்டு கேள்வி- பதில் பாணியில் சிலையைப் பற்றி ஒரு தமாஷ் நிறைந்த பாடலைப் பாடினார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலுக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து உரத்த சிரிப்பும் கைத்தட்டல்களும் பெரிய அளவில் எழுந்து ஒலித்தன. சிறிதும் எதிர்பாராத ஒரு கேள்வியில் மோதி பாடல் முடிந்த போது, மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து தீருலால்கூட தன்னை மறந்து சிரித்துவிட்டார்.

சிலை மட்டும் சிரிக்கவில்லை.

மாலை நேரத்தின் நிறம் பரவ ஆரம்பித்தவுடன், தீருலாலின் மனதில் சிறிது குளிர்ச்சி விழ ஆரம்பித்தது.

மனதில் வைத்திருந்த எல்லா தந்திர நடவடிக்கைகளையும் பயன்படுத்தி முடித்த களைப்பு அங்கு கூடியிருந்தவர்களிடம் தென்பட்டது. ராஜகுமாரியிடம் மட்டும் எந்தவொரு சோர்வும் தெரியவில்லை.

மாலை நேரத்திற்குச் சற்று முன்பு ராஜகுமாரி மட்டும் தனியாக ஒருமுறை காட்டேஜுக்குச் சென்றாள். அவள் தோல்வியடைந்து போய்விட்டாளோ என்று விசாரித்த தீருலாலுக்கு கடுமையான திட்டுதல் பி.ஏ. என்று கூறிக்கொண்ட அந்த பெண்ணிடமிருந்து கிடைத்தது. வழக்கமான நேரத்தில் திரைச்சீலை வந்து விழுவதற்கு முன்பே அப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்பதற்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது என்று கேட்ட அவள் குதித்துக் கடித்தாள்.

தோழிகள் தங்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் யார் முயற்சி செய்து சிலை அசைந்தாலும், தோல்வி தனக்குத்தான் என்ற விஷயத்தை தீருலால் நினைத்துப் பார்த்தார். ராஜகுமாரி அந்த இடத்தில் இல்லையென்று நினைத்து அது கவனக்குறைவாக இருந்துவிட்டால்?

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இருட்டு பரவ ஆரம்பித்தவுடன், கோட்டையில் இருந்த நூற்றுக்கணக்கான விளக்குகளும் பலவித வண்ணங்களில் கண்களைத் திறந்தன.

பி.ஏ. கேட்டுக் கொண்டபடி முழு மக்கள் கூட்டத்தையும் போகுமாறு கூறிவிட்டார்கள். டி.வி., வீடியோ யூனிட்டைச் சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டார்கள். நீதிபதிகளும் தீருலாலும் தவிர, அந்தப் பகுதியில் போட்டியில் பங்கு பெற்றவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

தோழிகளின் செயல்களிலும் அசைவுகளிலும் காம வெளிப்பாடுகள் கலந்திருக்கும் விஷயத்தை தீருலால் கவனித்தார். நீதிபதிகளில் சிலர் நெளிவதை அவர் பார்த்தார்.

பி.ஏ.வின் உத்தரவுப்படி, அந்தப் பகுதியில் இருந்த விளக்குகளில் இரண்டோ மூன்றோ தவிர, மீதி எல்லா விளக்குகளும் அணைந்தன. சிலையின் முகத்திற்கு அருகில் இருந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குறுக்காக ஒரு ஸ்பாட் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

அந்த ஸ்பாட் விளக்கின் வெளிச்சத்தை நோக்கி ராஜகுமாரி மீண்டும் ஒருமுறை திரும்பி வந்தாள்.

இப்போது அவள் குறைந்த அளவிலேயே ஆடை அணிந்திருந்தாள். அளவெடுத்தாற் போன்ற அவளுடைய உடலைக் கண்டபோது, தீருலாலுக்குக்கூட ஒரு மூச்சு நின்றது.

அழகான அசைவுகளுடன் அவள் சிலைக்கு மிகவும் அருகில் போய் நின்றாள். நீண்ட நேரம் அதனுடைய கண்கள் மீது தாகம் கலந்த ஒரு பார்வையை அனுப்பி நின்றுவிட்டு, மந்திரத்தைப் போன்ற குரலில் அவள் தன்னுடன் வரமுடியுமா என்று அதனிடம் கேட்டாள்.

சிலையிடம் இமை மூடல்கூட உண்டாகவில்லை.


அப்போது அவள் தான் "தீவின் சொர்க்க"த்தில் இரவு வேளையைச் செலவழிக்கப் போவதாகவும், தன்னுடன் வந்தால் தன்னைப் பொறுத்தவரையில், உண்மையான சொர்க்கம் கிடைத்ததற்குச் சமமான விஷயம் அது என்றும் அதனிடம் அவள் சொன்னாள்.

தீருலால் அதைக் கேட்டார். அன்று முதல் தடவையாக அவர் அதிர்ச்சியடைந்தார்.

"தீவின் சொர்க்கம்" சிலையின் மிகப்பெரிய மோகம் என்ற விஷயத்தை அவர் திடீரென்று நினைத்துப் பார்த்தார். அந்த ரகசியத்தை ஏதாவது ஒற்றர்கள் மூலம் அவள் தெரிந்து கொண்டிருப்பாளோ என்றுகூட ஒரு நிமிடம் அவர் பயந்தார். ஆனால், அந்த விஷயம் தன்னைத் தவிர, வேறு ஒரு ஆளுக்குக்கூட தெரியாது என்பதை நினைத்து அவர் அடுத்த நிமிடமே மனதை சமாதானப்படுத்திக் கொண்டார்.

தன்னுடைய புதிய ஆசை வார்த்தைகள் சிலையிடம் ஏதாவது அசைவுகளை உண்டாக்கும் என்று நினைத்திருக்க வேண்டும்- அவள் மீண்டும் அந்த அழைப்பைத் திரும்பச் சொன்னாள். இந்த முறை தன்னுடன் வந்தால், சிலைக்குக் கிடைக்கப் போகிற சுகபோகங்களைப் பற்றிய ஒரு குறிப்பும் அவளுடைய வார்த்தைகளில் இருந்தன.

சிலையிடம் அசைவு எதுவும் உண்டாகவில்லை.

இரண்டடிகள் பின்னால் விலகி நின்று கொண்டு, அவள் மீண்டும் சிலையையே வெறித்துப் பார்த்தாள். அது ஒரு தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான ஆரம்பம் என்று தீருலால் நினைத்தார்.

அவருடைய கணக்கு கூட்டல் சரியாகவே இருந்தது. மேலும் சிறிது நேரம் கருணையும் பரிதாபமும் வெளிப்படும் அந்தப் பார்வையுடன் நின்று கொண்டிருந்துவிட்டு, ராஜகுமாரி, திடீரென்று திரும்பி நடந்தாள்.

அவளுக்குப் பின்னால் தோழிகளும்.

போட்டியில் சிலை வெற்றி பெற்ற செய்தி கோட்டையிலும் வெளியிலும் சந்தோஷ ஆரவாரங்களுடன் கொண்டாடப்பட்டது.

கூறிய பணத்தைக் கட்டிவிட்டு, ராஜகுமாரியும் அவளுடைய கூட்டமும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். அவர்களில் சிலர் தீவிற்குச் சென்றார்கள். மன அமைதியை இழந்த ராஜகுமாரி அங்கு போகவில்லை. அவள் தூரத்தில் இருந்த நகரத்திற்கு திரும்பிச் செல்கிறாள் என்பதை பி.ஏ. கூறி, தீருலால் தெரிந்து கொண்டார்.

எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்ததன் ஆனந்தம். தீருலாலை பைத்தியம் பிடிக்கச் செய்தது. போட்டி முடிவடைந்தவுடன், பூமிக்குக் கீழே இருந்த குகையின் வாசலுக்குச் சென்று காத்திருந்து, சிலை வந்தவுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு அவர் தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். சிலைக்கு மறுநாளில் இருந்து நல்ல ஒரு சம்பள உயர்வு தரப்போகும் விஷயத்தை அவர் அங்கேயே வெளியிட்டார்.

அந்தச் செய்தியும் சிலையிடம் அசைவு எதையும் உண்டாக்கவில்லை.

வெற்றி பெற்ற மனிதனின் மன அமைதியுடன் தீருலால் அந்த இரவு தூங்கினார்.

ஆனால், அதிகாலையில் கண் விழித்தபோது முதலில் காதில் விழுந்த செய்தி - அவருடைய முழு அமைதியையும் கெடுக்கக் கூடியதாக இருந்தது.

சிலை இன்னும் வந்து சேரவில்லை.

இன்றுவரை ஒரு பாதிப்பையும் உண்டாக்காமல் மிகவும் சரியாக வந்து கொண்டிருந்த அது, இன்னும் தன்னுடைய இடத்திற்குத் திரும்பி வரவில்லை.

8. தண்டனை

திரைச்சீலை நீங்கியபோது, பீடத்தின்மீது வழக்கமான இடத்தில் சிலையைக் காணோம். இனி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்ற பணியாள் மீண்டும் திரைச்சீலையை இழுத்துவிட்டான்.

அலமாரியில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்த ஒரு தங்க நகை அங்கு இல்லாமல் போன அதிர்ச்சியுடன் அவன் அந்த விஷயத்தை தீருலாலிடம் போய் சொன்னான்.

தற்போதைக்கு தான் கூறுவதுவரை, திரைச்சீலை அங்கேயே இருக்கட்டும் என்று கூறி அந்த விஷயத்தை அத்துடன் முடித்துக்

கொண்டார் தீருலால். இந்த விஷயத்தை ஒரு ஆளிடமும் கூறக் கூடாது என்றும் அவர் அவனிடம் கடுமையான குரலில் கூறினார்.

அது எங்கு போயிருக்கும் என்று தீருலாலுக்கு ஒரு பிடியும் கிடைக்கவில்லை. ஒருவேளை ராஜகுமாரியின் அடியாட்கள் கடத்திக் கொண்டு போயிருப்பார்களோ என்பதுதான் அவருடைய கவலையாக இருந்தது. அப்படி இருந்தால் திரும்பக் கிடைக்காது. திரும்பி வர வேண்டும் என்று அது பிடிவாதம் பிடித்தால், அந்த மோசமான பெண் அதை இரக்கமே இல்லாமல் கொன்று விடுவாள் - அந்த அளவிற்கு அவளுக்கு அதன்மீது மோகம் இருக்கிறது என்பதை தீருலாலே நேரடியாகக் கண்டுணர்ந்திருக்கிறார்.

சுப்பன் தினந்தோறும் எங்கு போகிறான் என்ற விஷயத்தை ரகசியமாகத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது முட்டாள்தனமாக அமைந்துவிட்டது என்று அவருக்குத் தோன்றியது. பிறகு சிந்தித்துப் பார்த்தபோது, அதனால் பெரிய பிரயோஜனம் எதுவும் இல்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டார். அவனுக்கு மனம் என்ற ஒன்று இருந்தால் வருவான். வேலை செய்வான். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட ஒரு வேலையை ஒரு ஆளைப் பிடித்துக் கொண்டு வந்து செய்ய வைக்க முடியுமா?

தற்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்த தீருலால் சுப்பனின் அறைக்குச் சென்றார். அங்கு புதிதாக எதுவும் இல்லை.

வரிசையாக ஈட்டிகள், அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகள்... அன்று கொண்டு போக வேண்டிய ஈட்டி வரிசைக்கு முன்னால் உரிமையாளனை எதிர்பார்த்து அங்கு இருந்தது.

வழக்கத்திற்கு மாறாக என்று வேண்டுமென்றால் கூறக்கூடிய ஒரு விஷயத்தை தீருலால் கண்டுபிடித்தார். முந்தைய நாள் அணிந்திருந்த

ஆடைகளை அவிழ்த்து தரையில் அங்கேயும் இங்கேயுமாக சுப்பன் எறிந்திருந்தான். முந்தைய நாள் வைத்திருந்த ஈட்டி ஒரு மூலையில் இரண்டாக மிதித்து ஒடிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக அவிழ்த்து சுத்தம் செய்து மடித்து அந்தந்த இடங்களில் அடுக்கி வைத்துவிட்டுப் போகக்கூடிய பழக்கத்தைக் கொண்டவன் சுப்பன்.

அதற்கு அர்த்தம், முந்தைய நாள் இரவு ஆடைகளைக் கழற்றும்போது, அவன் கோபத்தில் இருந்திருக்கிறான் என்பதை தீருலால் புரிந்து கொண்டார்.

அந்தப் புரிதல் அவரைச் சோர்வடையச் செய்தது. மனதில் வெறுப்பு உண்டாகிப் போயிருந்தால், திரும்ப அவன் வருவது சிரமம்தான்.

ஒருவேளை, ராஜகுமாரியின் "தீவு"க்கான அழைப்புதான் அவனுடைய மனதைத் தடுமாறச் செய்துவிட்டதோ என்று தீருலால் சந்தேகப்பட்டார். அது இல்லாமல் வேறு காரணம் எதுவும் தெரியவில்லை. அப்படிப்பட்ட எதையும் கனவில்கூட நினைக்கவில்லையென்றாலும், குறிப்பிடத்தக்க ஒரு ஊதிய உயர்வைப் பற்றி அவனிடம் அவர் கூறவும் செய்திருக்கிறார். அப்படியென்றால் அதுவும் அல்ல விஷயம்.

இனி, ஒருவேளை அவன் வராவிட்டால், பீடத்தின் மீது வேறு எதைக் கொண்டுபோய் வைப்பது என்ற விஷயத்தை நோக்கி அவருடைய சிந்தனை படர ஆரம்பித்தபோது, அவரை ஆச்சரியப்படுத்திக் கொண்டு சுப்பன் அங்கு வந்தான்.


அவன் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டான். அவனுடைய கண்கள் தூக்கக் களைப்பில் இருந்தன. தாமதத்திற்கு என்ன காரணம் என்ற தீருலாலின் ஆர்வம் நிறைந்த கேள்விக்கு தாமதமாகிவிட்டது என்று ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு, அவன் ஆடைகளை மாற்ற ஆரம்பித்தான்.

அவன் ஆடைகள் மாற்றுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, தீருலாலின் இதயம் சந்தோஷத்தால் மேளம் அடித்துக் கொண்டிருந்தது. வருடக்கணக்காக நடந்து வரும் நிரந்தரமான, திரும்பத் திரும்பச் செய்யும் செயல் காரணமாக, விருப்பமில்லாவிட்டாலும் வேலை நடக்கும் இடத்திற்கு வந்து சேரும் இயந்திரமாக அவன் மாறிவிட்டிருக்கிறான் என்பதை அவர் புரிந்து கொண்டார். அந்தப் புதிய புரிதலின் அதிகாரத்துடன், தாமதமாக வந்ததற்காக அவர் அவனைத் திட்டினார். மேலும் அப்படி நடக்கக்கூடாது என்று எச்சரிக்கவும் செய்தார்.

தொடர்ந்து உண்டான உரையாடலில் இருந்து சுப்பனை அலட்டிக் கொண்டிருக்கும் பிரச்சினை, தீவிற்கு வரும்படி ராஜகுமாரி விடுத்த அழைப்புத்தான் என்பதை தீருலால் புரிந்து கொண்டார். அது சிரமமான காரியம் இல்லை என்றும், தான் அதற்கு பொறுப்பு என்றும் தீருலால் சொன்னபோது, உடனே அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று கூறி சுப்பன் குழந்தையைப் போல பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.

ஒருமுறை அங்கு அழைத்துக் கொண்டு போய்விட்டால், பிறகு அவனையும் வேலையையும் சேர்த்துக் கட்டிப் போடுவதற்கு வேறு கயிறுகள் எதுவும் இல்லை என்பது தெரிந்ததால், என்றைக்கு அழைத்துக் கொண்டு போவீர்கள் என்ற அவனுடைய கேள்விக்கு தீருலால் சரியான ஒரு பதிலைக் கூறவில்லை. அழைத்துப் போகிறேன் என்று மட்டும் கூறினார். தன்னுடைய பொறுப்பில் இருக்கும் இடம்தானே? அழைத்துக் கொண்டு போகலாம்.

பல விஷயங்களையும் சொல்லி அவனை ஈட்டியை எடுக்கும் படி அவர் செய்தார். மீதி காரியங்களை வேலை முடிந்த பிறகு பேசுவோம் என்று கூறியதற்கு, வேலை முடிந்தவுடன் என்றைக்கு தன்னை அழைத்துக் கொண்டு செல்வார் என்ற விஷயம் தனக்குத் தெரிய வேண்டும் என்று அவரிடம் நிபந்தனை விதித்தான். பிடிவாதம் ஆரம்பித்ததும் அவன் அதில் உறுதியாக இருக்கிறான் என்பதை தீருலால் புரிந்து கொண்டார். அதற்குப் பிறகும் அவனை வாதங்கள் புரிந்து நிறுத்திக் கொண்டிருந்தால், சிலை இல்லாமலிருக்கும் விஷயம் மேலும் கவனிக்கப்படும் என்பது தெரிந்திருந்ததால், இரவில் வரும் போது போகும் தேதியை அறிவிக்கிறேன் என்று கூறி, வேகமாகத் தோளைப் பிடித்துத் தள்ளி அவர் அவனை குகைக்குள் போகும்படி செய்தார்.

கட்டுப்பாடு இன்மை, கீழ்ப்படியாமை ஆகியவற்றை ஆயிரம் வகைகளில் இல்லாமற் செய்த பழக்கத்தைக் கொண்டவர் தீருலால்.

சிலைக்கு இப்போது தேவை சூடாக இரண்டு அடிகள் என்று அவருடைய மனம் முணுமுணுத்தது.

என்ன செய்தாலும் சுப்பனால் இனிமேல் இந்த வேலையை விட்டுப் போக முடியாது என்ற உறுதி தோன்றியதால் தீருலால் அப்படியொரு முடிவுக்கு வந்தார். சரியான நேரத்திற்கு வரத் தவறியதற்கு சட்டப்படி தரவேண்டிய அடி என்று கூறி அவற்றை அவனுக்குக் கொடுப்பதுதான் நல்லது என்று அவர் முடிவு செய்தார்.

அன்று இரவு வேலை முடிந்து திரும்பி வந்த சுப்பனை அவனுடைய அறையில் மறைந்திருந்த நான்கைந்து தடிமாடர்கள் சேர்ந்து கீழே விழச் செய்து கட்டிப் போட்டார்கள். கண்களையும் வாயையும் கட்டி அவனை அவர்கள் தண்டனை அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்

கண்களில் இருந்த கட்டினை அவிழ்த்தபோது, பல வகைப்பட்ட தண்டனைக் கருவிகள் இருக்கும் ஒரு அறையை சுப்பன் பார்த்தான். கருப்பு நிறச் சுவர்களைக் கொண்ட ஹாலின் ஒரு ஓரத்தில் தீருலால் இருப்பதை அவன் பார்த்தான்.

இருட்டில் யார் வாசிக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும், ஒரு தீர்ப்பு வார்த்தை உரக்க கேட்டது. வேலைக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததற்காக எஸ். சுப்பனுக்கு இரண்டு அடிகளும் ஒரு இரவு சிறை வாசமும் அளிக்கப்படுகின்றன என்பதுதான் அதன் சுருக்கம். தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டவுடன் தீருலால் முன்னால் வந்து ஒரு உயர்ந்த பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சாட்டையைக் கையில் எடுத்தார்.

அவர் அருகில் வந்தபோது, சுப்பனுக்கு என்னவோ சத்தம் போட்டுக் கூறவேண்டும் போல இருந்தது. வாய் மூடப்பட்டிருந்ததால், ஒரு முனகல் சத்தம் மட்டுமே வெளியே வந்தது. அவனுடைய கண்களையே பார்த்தவாறு தீருலால் சாட்டையை உயர்த்தி இரண்டு அடிகள் கொடுத்தார். கண்ணுக்குள் இறங்கிய குருதியும் எரிச்சலும் குறைய ஆரம்பித்தபோது, அவர் வாயில் இருந்த கட்டை அவிழ்த்தார். வேறு கட்டுக்களை அதிகாலையில் அவிழ்த்தால் போதும் என்று கூறி, அவனை கட்டிப்போட்ட தடியர்களை வெளியேற்றினார்.

தீருலால் மேலும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தார். கோட்டையில் இருக்கும் சட்டங்களை மீறுபவர்களுக்கு எப்போதும் இருக்கும் தண்டனைகள் மட்டுமே இவை என்றும், தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு நிர்வாகத்தின் செயல்பாட்டிற்குத் தலைவலி உண்டாக்காமல் இருந்திருந்தால், இவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்திருக்காது என்றும் அவர் அவனுக்கு மெதுவாகக் கூறிப் புரிய வைத்தார். என்றைக்காவது ஒருநாள் தான் அவனை தீவிற்கு அழைத்துப் போவதாகவும், அதற்கான நேரமும் பணமும் தயாராக இருக்கும்போது, தான் அவனிடம் சொல்வதாகவும் அவர் சொன்னார். அதிகாலை நேரத்தில் தடியர்கள் வந்து கண்களைக் கட்டி ஆடைகளை மாற்றும் அறைக்கு அழைத்துக் கொண்டு செல்லும்வரை, அங்கேயே இதே நிலையில் படுத்திருக்க வேண்டும் என்றும், பொழுது விடிந்தபிறகு ஆடைகளை மாற்றிவிட்டுப் பீடத்திற்குப் போய்விட வேண்டும் என்றும் கூறிவிட்டு தீருலால் ஹாலில் இருந்த இருட்டுக்குள் போய் மறைந்தார்.

சுப்பன் அதே நிலையில் படுத்திருந்தான். சாட்டையடிகள் விழுந்த இடத்தில் தோல் உரிந்திருந்தது. அங்கிருந்த தரையில் உரசும்போது, அவன் வேதனையால் நெளிந்தான். உரத்த குரலில் கதறினான். யாரையும் உதவிக்கு அழைப்பதில் அர்த்தமேயில்லை என்பது தெரிந்திருந்ததால், அவன் அதற்காக முயற்சிக்கவில்லை.

பலவகைப்பட்ட தண்டனை முறைகளையும் செயல்படுத்தும் விதத்தில் தண்டனைக் கருவிகள் அந்த அறையில் நிறைத்து வைக்கப்பட்டிருந்தன. கைத்துப்பாக்கி, ஸ்டென்கன், சாட்டை, தூக்குக் கயிறு, விஷம், கத்தி, வீச்சரிவாள், கில்லட்டின் என்று ஆரம்பித்து சாதாரண பிரம்பு வரை அங்கு இருந்தன. இருட்டில் அவற்றின் உருவங்கள் மிகவும் பயத்தை வரவழைக்கக் கூடியனவாக இருந்தன. அந்த அறையில் கிடந்து பலவகைப்பட்ட தண்டனை முறைகளையும் அனுபவித்தவர்கள், உயிரை விட்டவர்கள் ஆகியோரின் உரத்த ஓலங்கள் ஒரு அலறல் சத்தமாக வடிவமெடுத்து சுவர்களில் மோதி எதிரொலிப்பதைப்போல சுப்பனுக்குத் தோன்றியது.


வெளியே ஒரு நேரம் வந்தபோது விளக்குகளும் ஆரவாரங்களும் அணைந்தன. "தமாஷ் கோட்டை"யில் பணியாற்றுபவர்கள் தங்களின் அன்றாடச் செயல்களில் மூழ்கினார்கள். காட்டேஜ்கள் இருக்கும் பகுதியில் இருந்தோ டென்னிஸ் மைதானத்தின் மத்தியில் இருந்தோ ஒரு இரவுப் பறவை பாடுவது கேட்டது.

உடலில் இருந்த காயங்கள் உண்டாக்கிய வேதனையைக் கடித்துத் தாங்கிக் கொண்டும், இதை வைத்துக் கொண்டு அங்கு எப்படி வேலையில் தொடர்வது என்று கவலைப்பட்டுக் கொண்டும் சுப்பன் கட்டப்பட்ட கோலத்தில் நெளிந்து கொண்டு படுத்திருந்த போது, தண்டனை அறையின் தாழ்ப்பாளை திருட்டுக் கம்பியை நுழைத்துத் திறப்பதற்கு ஒரு கறுத்த உருவம் முயற்சித்துக் கொண்டிருந்தது. மிகவும் சிரமமாக இருந்த பூட்டின் துவாரத்திற்குள் கம்பியின் வேலையைப் பார்க்கும்போதே, அந்தக் கைகள் மிகவும் தேர்ந்தவை என்பது புரிந்தது.

வைரம்தான் அந்த உருவம். மற்ற பல வித்தைகளுடன் பூட்டை உடைப்பதும் அவனுடைய ஒரு பழைய வித்தையாக இருந்தது.

உள்ளே நுழைந்தவுடன் சத்தம் போடக்கூடாது என்று வைரம் உதட்டில் விரல்களை வைத்து எச்சரித்தான். தொடர்ந்து அவன் சுப்பனின் கட்டுக்களை ஒவ்வொன்றாக அறுத்து சுதந்திரமான மனிதனாக ஆக்கி விட்டு, அவன் சுப்பனிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் தன்னுடன் வரும்படி சைகையின் மூலம் கட்டளையிட்டான்.

அவனுக்குப் பின்னால் சுப்பன் நடந்தான். அவர்கள் தண்டனை அறைக்கு வெளியே வந்து, தூங்கிக் கொண்டிருந்த மரங்களின் நிழலையும் தூங்காத காவலாளிகளின் கண்களையும் ஏமாற்றிவிட்டு கோட்டைக்கு வெளியே வேகமாக வந்தார்கள்.

சிறிது தூரம் ஓடியதும், சாலையில் ஒரு இடத்தில், ஒரு முட்புதருக்குள் மறைத்து வைத்திருந்த சைக்கிளை வைரம் தேடி எடுத்தான். சுப்பனை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு அவன் மிதித்தான். எங்கு போகிறோம் என்ற கேள்வி சுப்பனிடமிருந்து வரவில்லை. கட்டுக்களில் இருந்தும் வேதனையில் இருந்தும் உண்டான விடுதலை எங்கு நோக்கிப் போனால் என்ன என்பது மாதிரி அவன் பேசாமல் இருந்தான். வைரம் மேல் மூச்சு கீழ் மூச்சு விட ஆரம்பித்ததும், அவன் வைரத்தை உட்கார வைத்துவிட்டு சைக்கிளை மிதித்தான். காப்பாற்றிய மனிதன்மீது இருந்த கருணையும் நன்றியும் அவனுக்கு மேலும் உற்சாகத்தைத் தருவதைப்போல வைரம் உணர்ந்தான்.

மங்கலான நிலவு வெளிச்சமும் குளிர்ந்த காற்றும் இருந்த இரவு வேளையில் அந்த சைக்கிள் பயணம் அவர்களை நெருங்கச் செய்தது. ஒன்றிரண்டு மணி நேரங்கள் சிரமப்பட்டு மிதித்துக் கடந்த பிறகு, பின்தொடரப்படுவோமோ என்ற பயம் அவர்களை விட்டு முழுமையாக நீங்கியது. வேறு எதுவும் செய்வதற்கு இல்லாததால், எல்லா சக பயணிகளையும் போல அவர்களும் பேச ஆரம்பித்தார்கள்.

தன்னால் எப்படி சுப்பனைக் காப்பாற்ற முடிந்தது என்ற வியூகத்தை வைரம் சொன்னான்.

முந்தைய நாள் நடைபெற்ற போட்டி, அதில் பெற்ற வெற்றி எல்லாவற்றையும் வைரம் தெரிந்து கொண்டு நின்று கொண்டிருந்தான். கம்பிகளால் ஆன வேலிக்கு அப்பால் சிலைக்கு உற்சாகம் உண்டாகும் வண்ணம் கோஷம் போட்டவர்களின் முன் வரிசையில் வைரமும் நின்றிருந்தான். பொழுது புலரும் நேரத்தில் கேட்டில் நின்றிருந்தவர்கள் மத்தியில் பால்காரனின் முகத்தைக் காணவில்லை என்றதும், ஏதோ மிகப்பெரிய பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. இந்த விஷயத்தில் தீருலால் அனுபவித்த பதைபதைப்பை விட தான் அதிகமாகக் கவலைப்படுவதாக வைரத்திற்குத் தோன்றியது. இரண்டு மணி நேரங்கள் தாமதமாக பால்காரன் வந்து சேர்ந்ததையும், பிறகு மிகவும் தாமதமாக திரைச்சீலை விலகி சிலை தோன்றியதையும் வரப்போகும் ஆபத்திற்கான அறிகுறிகளாக அவன் நினைத்தான். அதனால் இரவு எதற்கும் முன்னால் போய் நிற்கும் வண்ணம் அவன் தன்னைத் தயார்பண்ணிக் கொண்டு நின்றிருந்தான். பால்காரன் திரும்பிப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதும், நீண்ட காலம் கோட்டையில் வாழ்ந்திருந்த வைரம், தண்டனை அறைக்கு நேராக காதுகளைத் தீட்டினான். பாதி இரவு வேளையில் அங்கிருந்து கேட்ட மெல்லிய அழுகைச் சத்தத்தில் அவன் சிலையின் குரலை அடையாளம் தெரிந்து கொண்டான்.

மீதி விஷயங்கள் அனைத்தும் வைரத்திற்கு சாதாரணமானவையாக இருந்தன.

தன்னைப் பொறுத்தவரையில் உயிருக்கும் மேலாக அன்பு செலுத்தி வழிபடும் சிலை வாங்கிய அடிகளும் வேதனையும் எந்த அளவிற்கு இதயத்தில் வலி உண்டாக்கக் கூடியவையாக இருந்தன என்பதை அவன் நிறைந்த கண்களுடனும் பதைபதைப்புடனும் விளக்கிச் சொன்னான்.

எதிர்பாராமல் தான் கட்டிப் போடப்பட்டதும், அதனால் உண்டான துன்பமும் சுப்பனின் மனதை மாற்றியிருந்தன. இனிமேலும் தீருலாலுக்குக் கீழே வேலை செய்வது என்பது இயலாத ஒரு விஷயம் என்று தோன்றிய நிமிடத்தில்தான் வைரம் தேவதூதனைப் போல தோன்றித் தன்னைக் காப்பாற்றி இருக்கிறான் என்று அவன் மனதைத் திறந்து சொன்னான். அதற்கு அவனுக்கு இதயம் நிறைய நன்றி இருந்தது. முன்பு பல நேரங்களில் வைரம் அழைத்தபோது, அவனுடன் போகாமல் இருந்ததற்காக இப்போது மனதில் வருத்தம் தோன்றுகிறது என்று அவன் சொன்னான். இந்த உதவிக்கு தான் என்றைக்கும் வைரத்திடம் கடமைப்பட்டிருப்பதாக அவன் கூறக் கேட்டபோது, வைரத்தின் மனம் குளிர்ந்தது.

அந்தப் பயணம், இரவில் இருந்து பொழுது புலரும் நேரத்திற்கும், பொழுது விடியும் நேரத்தில் இருந்து மதியத்திற்கும் நீண்டு போய்க் கொண்டிருந்தது. முக்கிய விஷயங்களுக்காகவும் ஓய்வு எடுப்பதற்கும் இடையில் அவர்கள் சைக்கிளை நிறுத்தினார்கள். ஒரு ஆள் சோர்வைச் சந்திக்கும்போது, இன்னொருவன் சைக்கிளை மிதித்தான். எல்லா வகைகளிலும் ஒரே மாதிரியாக இருந்த இரண்டு நண்பர்களுக்கிடையே பயணம் நீள நீள நட்பு உருவாகிக் கொண்டிருந்தது.

சாலையோரத்தில் இருந்த தேநீர்க் கடைகள் கண்களில் தென்பட்டபோது, அவர்கள் அங்கு நுழைந்து வயிறு நிறைய உணவு சாப்பிட்டார்கள். வைரத்தின் கையில் எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும் பணம் இருந்ததால், சுப்பனுக்கு ஆசை தீரும் வரையில் சாப்பிட முடிந்தது.

வெயில் போய் மாலை வந்தது. வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், வைரம் தான் முன்பு எப்போதும் கூறிக்கொண்டிருந்த தன்னுடைய வேண்டுகோளை முன் வைத்தான். நாம் ஒன்றாக வாழ்வோம். ஒன்றாக வேலை செய்து பணம் சம்பாதிப்போம் என்றான் அவன்.

அவனுக்கு அதிகமாக வாய் சவடால் அடிக்க வேண்டிய நிலைமை வரவில்லை. சுப்பன் அந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்றுக் கொண்டான்.

அன்று சாயங்காலம் கடந்ததும், அவர்களுடைய சைக்கிள் நகரத்தை அடைந்தது.


9. கோவிந்த் நாராயண்

கரத்தை அடைந்ததும், சுப்பனும் வைரமும் முதலில் செய்த காரியம் - நேராக சவரக் கடைக்குச் சென்று முடி வெட்டியதுதான். முடி வெட்டியவுடன், அவர்களுக்கு உண்டான உருவ வேறுபாடு ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது. குறிப்பாக சுப்பனிடம். அவன் வேறு ஒரு ஆளைப் போலத் தோன்றினான். அதைப் பார்த்ததும் வைரம் சிறிது பணத்தைச் செலவழித்து புதிய வகையான ஆடைகளையும் ஷுக்களையும் வாங்கிக் கொடுத்தான். பால்காரனைப் பார்த்தவர்களுக்கு சிலையைத் தெரியாமல் போனதைப் போல, சிலையையும் பால்காரனையும் பார்த்தவர்களுக்கு இந்த புதிய இளைஞனையும் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு சிரமமாகவே இருக்கும்.

புதைத்து வைத்திருந்த செல்வத்தை யாரோ கடத்திக் கொண்டுபோய் விட்டார்கள் என்று உறுதியாக நினைக்கும் தீருலால், அதற்குப் பின்னால் விசாரணையை அவிழ்த்துவிடுவார் என்பது மட்டும் நிச்சயம். அதனால் உருவமாறுதல் அவர்களுக்கு- குறிப்பாக சுப்பனுக்கு அவசியத் தேவை என்றானது.

வைரம் அவனுக்கு கோவிந்த் நாராயண் என்று பெயரிட்டான். அவனுடைய இறந்துபோன ஒரு தம்பியின் பெயர் அது. "கோவிந்த் பாயி" என்றோ "பாயி" என்றோ அழைப்பார்கள். அவன் சுப்பனை "மாஸ்டர்" என்று அழைப்பான்.

அந்த வகையில் புதிய பெயர்களுடனும் புதிய தோற்றங்களுடனும் அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார்கள்.

ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்கு என்னவெல்லாம் விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர்களுக்கிடையே சிந்தித்துப் பார்த்தார்கள். கொஞ்சம் சைக்கிள் வேலைகளும் தரையில் செய்யும் தலை கீழான வேலைகளும் கோவிந்த்துக்கு நன்கு தெரியும். வேறு எப்படிப்பட்ட வித்தைகளையும் கற்பித்தால் கற்றுக் கொள்ள அவன் தயாராக இருந்தான்.

செய்ய இயலும் இன்னொரு விஷயத்தை கோவிந்த் சற்று தயக்கத்துடன் சொன்னான். மிகவும் உயரத்திலிருந்து கீழே குதிப்பதற்கு அவனால் முடியும். உயரம் எவ்வளவு இருந்தாலும், தன்னால் குதிக்க முடியும் என்று அவன் தன்னம்பிக்கையுடன் சொன்னான்.

சோதித்துப் பார்ப்பதற்காக அன்று பகல் முழுவதும் கோவிந்தும் வைரமும் சேர்ந்து நகரத்தின் உயரமாக இருந்த பகுதிகளையும் உயரமான சுவர்களையும் தேடி அலைந்தார்கள். பழைய சுடுகாட்டைச் சுற்றி இருந்த இடிந்த சுவரில் மிகவும் உயரமான ஒரு பகுதியை அவர்கள் அதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆட்கள் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து கோவிந்த் அதன் மேலே இருந்து குதித்துக் காட்டினான். அவனுக்கு ஒரு ஆபத்தும் உண்டாகவில்லை என்ற விஷயம் வைரத்தை ஆச்சரியப்பட வைத்தது. சாதாரணமாக ஒரு மனிதனால் அவ்வளவு உயரத்திலிருந்து குதிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமே. அதையும்விட உயரத்திலிருந்து வேண்டுமானாலும் குதித்துக் காட்ட முடியும் என்று அவன் சொன்னபோது, வைரத்திற்கு அதிகமான சந்தோஷம் உண்டானது.

வேறு எதுவுமே இல்லையென்றாலும் இந்த ஒரே விஷயத்தை மட்டும் வைத்து கட்டாயம் ஒரு நிகழ்ச்சியை நடத்தி அசத்திவிட முடியும் என்று அவன் கணக்குப் போட்டான்.

எனினும், நேரம் போவதற்காக வேறு சில சிறிய வித்தைகளும் தேவை என்பதால் அவற்றையும் ஏற்பாடு பண்ணி விட்டு, அதற்குப் பிறகு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

சில சாதாரண கண்கட்டு வித்தைகளும் அவசியமான எடை தூக்கலும் சைக்கிள் வேலைகளும் இல்லாமல், நீண்ட நேரம் மக்களைப் பிடித்து நிறுத்தக்கூடிய அளவிற்கு தன் கையில் பெரிய விஷயம் எதுவும் இல்லையென்ற விஷயத்தை வைரம் மனம் திறந்து ஒப்புக்கொண்டான். கோவிந்த் பாயியின் வித்தை பலமும் இளமையின் மன தைரியமும் தடங்கலே இல்லாமல் வெளிப்பட்டால் மட்டுமே திட்டம் வெற்றி பெறும். ஒரு விஷயத்தில் வைரத்திற்கு நல்ல நம்பிக்கை இருந்தது. கோவிந்த் பாயி என்ன செய்தாலும், அதைப் பார்ப்பதற்கு ஆட்கள் கூடுவார்கள். எதுவும் செய்யாமல் நின்று கொண்டே இவ்வளவு பார்வையாளர்கள்! அப்படி இருக்கும்போது ஏதாவதொன்றைச் செய்தாலோ? மறுநாளே பழைய மைதானத்தின் ஒரு மூலையில் பயிற்சி ஆரம்பமானது. சிதிலமடைந்த நிலைமையில் இருந்த மைதானத்தில் ஆட்கள் முற்றிலும் இருப்பதில்லை. ஏதாவது சமூக விரோதிகளோ ஊர் சுற்றும் பசுக்களோ எப்போதாவது கடந்து வந்தால் உண்டு.

பயிற்சிக்குத் தேவையான கொஞ்சம் கம்பிகள், கயிறுகள், வளையங்கள், தூண்கள் ஆகியவற்றை வைரம் வாங்கியிருந்தான். அவற்றை அந்தந்த இடங்களில் கொண்டு போய் வைத்தான். சம்பிரதாயப்படி தட்சிணை வைத்து பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

தன்னுடைய சாதாரண நீண்டகால வித்தைகளடங்கிய வாழ்க்கைக்கு மத்தியில் பல சிறுவர்களுக்கும் பயிற்சி தந்திருக்கும் வைரம், சுப்பனை பயிற்சியின் ஆரம்பப் படிகளுக்கு கையைப் பிடித்து ஏற்றியதும், ஆச்சரியப்பட்டுத் துள்ளிக் குதித்து விட்டான்.

சுப்பனுக்கு எந்த விஷயத்திற்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சிக்கான அவசியமே இல்லை. எந்த வித்தையைக் கூறினாலும் அதை அப்படியே அவன் செய்வான். கம்பியைக் கட்டிவிட்டு, அதன்மீது நடக்கச் சொன்னால், ஒரு முறை முயற்சி பண்ணி பார்த்து விட்டு இரண்டாவது முறை அவன் அதில் நடந்தான். கையை ஊன்றி, தலை கீழாக நிற்கச் சொன்னால், அப்படியே நிற்பான். அதே கோணத்தில் நடக்கச் சொன்னால் நடப்பான்- எல்லாவற்றையும் முன் கூட்டியே படித்துத் தெரிந்துகொண்டிருப்பதைப் போல. ஒவ்வொரு வித்தையைச் செய்து காட்டும்போதும், "நீ இதை முன்பு செய்திருக்கிறாயா?" என்று வைரம் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இல்லை என்று எல்லாவற்றுக்கும் பதில் சொன்னான்.

கோவிந்தைப் பற்றி தான் முன்கூட்டியே தீர்மானித்திருந்தது தவறாக அமையவில்லை என்பதை அறிந்து அவன் தெய்வத்திற்கு நன்றி சொன்னான்.

மறுநாளே அவன் சர்க்கஸ்காரர்கள் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு மோட்டார் சைக்கிளை உண்டாக்கினான். முன்பு எந்தச் சமயத்திலும் மோட்டார் சைக்கிளில் ஏறியதில்லை என்று கூறினாலும், க்ளட்ச், கியர், ப்ரேக் ஆகியவற்றைக் காட்டி ஒரே ஒருமுறை தன்னுடன் உட்கார வைத்து ஓட்டினான். அவ்வளவுதான். கோவிந்த் அந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

பிறகு அதன்மீது வைரம் சொல்லிய எந்த வித்தையாக இருந்தாலும், அவன் செய்து காட்ட ஆரம்பித்தான்.

கையில் கிடைத்திருப்பது ஒரு சாதாரண மனிதப் பிறவி இல்லை என்ற வைரத்தின் முடிவு நாட்கள் செல்லச் செல்ல உறுதியாகிக் கொண்டேயிருந்தது. அதற்கேற்றபடி அவன் நிகழ்ச்சியின் செயல்பாட்டில் மேலும் முன்னேற்றங்களை உண்டாக்கினான்.

ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்த பிறகு, ஒரு நாள் மதிய நேரம் நகரத்தின் மூலையில் இருந்த மைதானத்தில் மறைத்து உண்டாக்கப்பட்ட கூடாரத்திற்குள் கோவிந்த் பாயியின் விளையாட்டு வெளிப்பாடுகள் ஆரம்பமாயின. கூடாரத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் கோவிந்த் பாயின் ஒரு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.


அனுமதிச் சீட்டு விற்பதற்கும் மற்ற காரியங்களைப் பார்ப்பதற்கும் வைரம் மட்டுமே இருந்தான். காட்சி நடக்கும்போது, இசையை ஒலிக்கச் செய்வதற்காக அந்த ஊரின் தேவாலயப் பகுதியிலிருந்து ஒரு பேண்ட் குழுவை அவன் வரச் செய்திருந்தான்.

ஆர்ப்பாட்டங்களும் அலங்காரங்களும் குறைவாக இருந்ததால் இருக்க வேண்டும்- முதல் காட்சிக்கு ஆட்கள் குறைவாகவே வந்திருந்தனர். எனினும், வந்தவர்களை ஆச்சரியப்பட வைத்து அனுப்பி வைக்க வைரத்தால் முடிந்தது. எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் கோவிந்த் பாயி செய்து காட்டிய வித்தைகளில் சிலவற்றைப் பார்த்து மக்கள் வாயைப் பிளந்தார்கள். தரையிலும் மோட்டார் சைக்கிளிலும் கம்பியிலும் செய்து காட்டிய வித்தைகளுக்குப் பிறகு இறுதி நிகழ்ச்சியாக கூடாரத்தின் மத்தியில் ஊன்றப்பட்டிருந்த- தென்னை மரத்தின் உயரத்தைக் கொண்ட தூணில் இருந்து வலை எதுவும் இல்லாமல் அவன் குதித்தவுடன் பார்வையாளர்களுக்கு முழுமையான திருப்தி உண்டானது. வைரத்தையும் கோவிந்த் பாயியையும் தனிப்பட்ட முறையில் பார்த்துப் பாராட்டிவிட்டுத்தான், அவர்கள் கூடாரத்தை விட்டே சென்றார்கள்.

அது ஒரு நல்ல காலத்தின் ஆரம்பமாக மட்டும் இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லா காட்சிகளுக்கும் அனுமதிச்சீட்டுக்கள் தீர்ந்து போயின. ஆட்களைத் திருப்திப்படுத்துவதற்காக தினமும் இரண்டு காட்சிகள் ஆக்கப்பட்டன. எனினும், கூட்டம் அதிகமாக வந்ததால், நெரிசலைக் குறைப்பதற்காக வைரம் நுழைவுச்சீட்டின் கட்டணத்தை உயர்த்திப் பார்த்தான். என்ன செய்தும் ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் முன்பே கூடாரத்திற்கு வெளியே மைதானத்தைச் சுற்றி வளைந்து செல்லும் நீளமான வரிசை தெரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏதாவது ஒரு புதிய வித்தையைக் காட்டிக் கொண்டிருந்ததால் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தார்கள்.

பலமாக வேரூன்றி விட்டது என்பது தெரிந்தவுடன், நகரத்தின் மையத்தில் இருந்த புதிய மைதானத்திற்கு மத்தியில் வைரம் ஆர்ப்பாட்டம் நிறைந்த புதிய பிரம்மாண்டமான கூடாரத்தை அமைத்தான். காட்சி நேரத்தை அதிகரிப்பதற்கும் மெருகு ஏற்றுவதற்கும் அவன் கம்பியில் நடக்கும் ஒரு வெள்ளாட்டையும் ஒரு குள்ளனான கோமாளியையும் ஜாஸ்மின் என்ற பெயரைக் கொண்ட ஒரு சர்க்கஸ்காரியையும் சேர்த்துக் கொண்டான். தினமும் புதிய வேலைகளைச் செய்து காட்டுவது தவிர, பார்வையாளர்களில் ஒருவர் கேட்கும் ஏதாவதொரு வித்தையையும் (மனிதர்களுக்கு முடியக் கூடியதாக இருந்தால்) செய்து காட்டும் கோவிந்த் பாயியின் புகழ், நகரத்து மக்களுக்கு மத்தியில் திடீரென்று பரவியது. அந்த வித்தைக்காரனைப் பற்றி, இல்லாத கொஞ்சம் அற்புதக் கதைகளும்கூட அத்துடன் பரவிக் கொண்டிருந்தன.

கோவிந்த், வைரம் ஆகியோரின் நல்ல நேரத்தின் சக்தியாக இருக்க வேண்டும்- நகரத்தில் இருந்த திரை அரங்குகளில் பணியாற்றும் தொழிலாளிகள் எல்லாரும் சேர்ந்து சமீபத்தில் ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். சேவைக்கான ஊதியம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த அந்த போராட்டம் திரை அரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் பிடிவாதம் காரணமாக கட்டுப்பாட்டை விட்டு நீடிக்கத் தொடங்கியது. வேறு பொழுதுபோக்கு விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், நகரத்து மனிதர்கள் கோவிந்த் நாராயணின் வித்தைகளைப் பார்ப்பதற்காகப் படையெடுத்தார்கள். விடுமுறை நாட்களில் காலையிலும் பிற்பகலிலும் மேலும் ஒவ்வொரு காட்சிகளை வைப்பதற்கு இந்த மக்கள் கூட்டத்தின் காரணமாக வைரம் நிர்ப்பந்திக்கப்பட்டான்.

பணம் கொட்டிக் கொட்டி அந்த கோடை காலம் முடிவடையும்போது கோவிந்தும் வைரமும் நல்ல ஒரு தொகையின் உரிமையாளர்களாக ஆனார்கள். பெரிய ஒரு பயணத்திற்கான திட்டங்கள் முழுவதையும் இதற்கிடையில் வைரம் வகுத்து வைத்திருந்தான். பயணத்திற்குத் தேவையான ட்ரக்குகளையும் வேறு வாகனங்களையும் மேலும் ஊழியர்களையும் அவன் ஏற்பாடு செய்தான். ஒரு தனிப்பட்ட மனிதனின் வித்தைகளின் பின்பலத்துடன் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்ததால், மற்ற சர்க்கஸ் நிறுவனங்களில் இருந்து மாறுபட்டு, ஆச்சரியப்படும் வகையில் வரவேற்பும் உற்சாகப்படுத்தலும் மற்ற நகரங்களில் இருந்து வைரத்திற்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

அதை ஆதாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, மழைக்காலம் தொடங்கியவுடன் அவர்கள் நகரத்திடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்கள்.

நகரங்களில் இருந்து நகரங்களுக்குப் படர்ந்த அந்தப் பயணம், கோவிந்தைப் பொறுத்த வரையில், முற்றிலும் உற்சாகத்தைத் தரும் ஒரு அனுபவமாக இருந்தது. வெளியுலகத்தின் பலவிதப்பட்ட வண்ணங்கள் ஒரு குழந்தையின் மனதில் பாதிப்பு உண்டாக்குவதைப் போல அவனுக்குள்ளும் வந்து பதிந்தன. காவி நிறம் கொண்ட நகரத்தின் கட்டிடங்களும், பயணத்தில் பார்த்த கிராமத்து தெருக்களும், ஒவ்வொரு இரவிலும் மாறி மாறி வரும் பார்வையாளர்களுடைய சந்தோஷம் நிறைந்த முகங்களும் எல்லாம் சேர்ந்து, அவனுடைய மனதின் வானத்தை அவனுக்கே தெரியாமல் ஆனந்தமயமாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றியெல்லாம் அதிகமாக நினைத்துப் பார்க்கும் பழக்கம் அவனுக்கு இல்லை என்பது வேறு விஷயம்.

கோவிந்தின் நேரமும் கவனமும் முழுமையாக புதிய வித்தைகளின்மீது இருந்தன. எப்போதும் புதியதை மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய கேடு கெட்ட நிலைமையை அவன் ஒரு சவாலைப் போல ஏற்றுக்கொண்டான். அதனால்தான் வைரத்தின் மனதில் மாபெரும் புதிய திட்டங்களுக்கு, அவன் தன்னுடைய உடலைக் கொண்டு தினமும் வடிவம் தந்து கொண்டிருந்தான். ஆணிகள் அடிக்கப்பட்ட பலகையைத் தன் உடலில் கவிழ்த்து வைத்து, பலகையின் மீது வைரத்தையோ ஜாஸ்மினையோ சில நேரங்களில் அவர்கள் இருவரையும் சேர்த்தோ நடக்க வைப்பது, உயரத்தில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் கம்பியிலிருந்து இரண்டு மூன்று முறை தலை கீழாகச் சுற்றி, கம்பியிலேயே திரும்பவும் வந்து நிற்பது, நெருப்புக் குண்டத்தில் நடப்பது, கண்களைக் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, தாங்கிக்கொள்வதற்கு வலை விரிக்காமல் ஆபத்து நிறைந்த ட்ரப்பீஸ் வேலைகள் செய்வது என்று ஆரம்பித்து, சாதாரண வித்தைகள் செய்பவர்கள் செய்து காட்டும் வேலைகள் பெரும்பாலானவற்றை மேலும் சற்று சிறப்பாக அவன் செய்து காட்டினான். கண்ணாடித் துண்டுகளையும் ஆணிகளையும் தின்னுவது, உயிருள்ள மீனை அப்படியே விழுங்குவது ஆகிய வித்தைகளையும் செய்வோமா என்று வைரம் கேட்டதற்கு அவன் அவற்றையும் செய்ய ஆரம்பித்தான். செலவு கழித்து கிடைத்த லாபத்தை அவர்கள் சமமாகப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட காரியங்களில் பெரிய ஈடுபாடு இல்லாமலிருந்த கோவிந்தை வைரம் ஏமாற்றவும் செய்தான்.

பணம் எளிதில் வந்து கொண்டிருந்தது, காலப்போக்கில் வைரத்தை மது அருந்தக் கூடியவனாகவும் பெண் பித்தனாகவும் ஆக்கியது. முன்பே ஜாஸ்மின் என்ற சர்க்கஸ்காரியை பல இரவுகளிலும் அவனுடைய அறையில் கோவிந்த் பார்த்திருக்கிறான். நகரங்கள் மாறுவதற்கேற்றபடி, ஜாஸ்மின் தவிர அவன் புதிய பெண்களையும் சேர்த்துக் கொள்வதுண்டு என்ற விஷயம் கோவிந்திற்குத் தெரியும்.


பல இரவுகளிலும் அவனுடைய அறையிலிருந்து வளையல் சத்தங்களும் ஆட்டக்காரிகளின் சலங்கைச் சத்தமும் உயர்ந்து அவனுடைய உறக்கத்தைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தன. அப்படிப்பட்ட ஒரு இரவில் இருட்டுக்குள் பதுங்கி வந்து இனிக்க இனிக்க பேச முயன்ற ஜாஸ்மினை அவன் வெளியே போகச் சொன்னான்.

சில நேரங்களில் வைரம் நீட்டினாலும், எந்தச் சமயத்திலும் மது கோவிந்தை கவர்ந்ததில்லை. மது உடல் நலத்திற்குக் கேடு என்பதால், வைரம் அந்தப் பாதையில் செல்ல அவனை உற்சாகப்படுத்தவும் இல்லை.

ரசிகைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் கோவிந்திற்கு நன்கு தெரியும். ஒரு முறை நிகழ்ச்சி நடத்திவிட்டுச் சென்ற நகரங்களில் இருந்து மென்மையான காதல் கடிதங்கள் பின் தொடர்ந்து வருவது என்பது அவனுக்கு வழக்கமான ஒரு விஷயமாக ஆனது. உயரமாக இருக்கும் தூணிலோ ட்ரப்பீஸிலோ இருந்து கொண்டு மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது, அழகான தோற்றத்தைக் கொண்ட இளம் பெண்கள் அவனுக்கு நேராக முத்தங்களை அனுப்பினார்கள். புதிய ஒரு நகரத்தை அடையும்போது, ஹோட்டல்களின் ரிஷப்ஸனில், வந்தால் சற்று அழைக்கும்படி கொடுக்கப்பட்டிருக்கும் ரசிகைகளின் தொலைபேசி எண்கள் அவனை வரவேற்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று.

ஆனால், கோவிந்திற்கு அவர்கள் யாரிடமும் ஒரு ஈடுபாடும் உண்டாகவில்லை. அவனுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு உருவம் இருந்தது- அது ராஜகுமாரியின் உருவம்தான்.

10. கால வெள்ளம்

வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே, தன்னுடைய ஆச்சரியமான திறமை வெளிப்பாடுகளுக்கு மத்தியில் கோவிந்திற்குத் தவறு நேர்ந்தது. அதற்குக் காரணம்- ராஜகுமாரி. சிலை திறப்பு விழா நாளன்று அந்தச் சம்பவம் நடந்தது. கோவிந்துக்கும் ராஜகுமாரிக்கும் தவிர மூன்றாவதாக ஒரு ஆளுக்கு அந்த விஷயம் தெரியாது.

ராஜா திரைச்சீலையை விலக்கியபோது, கைத்தட்டல்கள், ஃப்ளாஷ் விளக்குகளின் வெளிச்சம் ஆகியவற்றிற்கு மத்தியில் அவள் சிலையின் கண்களையே பார்த்தாள். மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அசாதாரணமான அழகுடனும் ஆடை அணிகலன்களுடனும் நின்றிருந்த அந்த அழகு தேவதை நெருப்புக் கனலைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்தாள்.

தான் சிலை என்றும் சிலைக்கு அசைவு இல்லை என்றும் ஒவ்வொரு நிமிடமும் கூறிக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு இனம் புரியாத நிமிடத்தில் ராஜகுமாரி அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ நகர்ந்தபோது தன்னை அறியாமல் கண்களை அசைத்து விட்டான்.

அதை ராஜகுமாரி பார்த்துவிட்டாள். ராஜகுமாரி மட்டும். அவளுடைய கண்களில் அப்போது திடீரென்று தோன்றிய ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கோவிந்த் வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் மறக்க மாட்டான். ஒருவரையொருவர் கண்களால் பார்த்துக் கொண்டு நின்றிருந்த அவ்வளவு நேரமும் அவனுக்கு முழுமையாக அசையும் சக்தி இல்லாமல் போயிருந்தது. வேண்டுமென்று நினைத்தால்கூட அசைய முடியாத நிலைமை!

அவள் தன்னை மனிதன் என்று கண்டுபிடித்துவிட்டாள் என்ற உண்மை... அந்த நேரத்தில் பதைபதைப்புதான் உண்டாக வேண்டும். ஆனால், கோவிந்திற்கு அந்த நேரத்தில் பயமெதுவும் தோன்றவில்லை. அதற்கு மாறாக தன்னை அறிந்து கொண்ட ஒரு உயிராவது கூட்டத்தில் இருக்கிறதே என்ற மன நிம்மதி அவனுக்கு உண்டானது.

சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை முதலில் வெளியிட்டவள் அருந்ததிதான். அவளுடைய எந்த விருப்பத்திற்கும் கோவில் காளையைப் போல தலையை ஆட்டும் ராஜா அதற்கும் அந்த நிமிடத்திலேயே அனுமதி தந்தார். புகைப்படம் எடுக்கும்போது சிலையின் தோளில் கையை வைத்து நிற்கட்டுமா என்று அவள் குறும்புத்தனமாகக் கேள்வி கேட்டதற்கு தீருலால் "தயவு செய்து என்னைத் தொடாதீர்கள்" என்று எழுதப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைச் சுட்டிக்காட்டினார். அதைக் கேட்டபோது சுப்பனுக்கு உண்மையாகவே விபரீத ஆசை உண்டானது.

முதல் ஒரு வருடத்திற்குப் பிறகு, சிலைக்கு மனிதனின் உருவம் வந்து சேர்ந்ததற்குப் பின்னணியிலும் அவள் இருப்பாள் என்று கோவிந்திற்கு சந்தேகம் தோன்றியது.

அதற்குக் காரணம்- அதற்கு முந்தைய நாள் அவள் கோட்டைக்கு வந்திருந்தாள். அன்றும் அவள் நீண்ட நேரம் சிலையின் கண்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

ராஜகுமாரியுடன் போட்டி உண்டான நாளன்று கோவிந்த் அனுபவித்த மனப் போராட்டம் சாதாரணமானது அல்ல. ஒரு பகல் வேளை முழுவதும் அவளைப் பார்த்துக்கொண்டு நிற்கலாம் என்ற சந்தோஷம் மனதில் இருந்தாலும், தோல்வி அடைந்தால் மூன்று நாட்கள் அவளுடன் இருக்கலாம் என்ற ஆசையையும் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லையென்றாலும் கூட, அவளுடைய ஒவ்வொரு சேட்டைகளுக்கும் ஏற்றபடி தன்னுடைய ஒவ்வொரு உறுப்புக்களும் எல்லா நேரங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற விஷயம் கோவிந்துக்கு நன்கு தெரியும். அவளுக்கும் அது புரிந்திருந்தது என்று தோன்றியது. மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், முழு நிர்வாணக் கோலத்தில் இருப்பதைப் போல நின்று கொண்டு, உதடுகளை மிகவும் அருகில் வைத்துக்கொண்டு "தீவின் சொர்க்க"த்திற்கு அழைத்தபோது, எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து விட்டு அவளுடன் இறங்கி ஓட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அப்படிச் செய்தால் அது தன்னுடைய தொழிலுக்குச் செய்யக்கூடிய வஞ்சனையாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்ததால், ஒரு வகையில் அந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்துக்கொண்டான். எல்லாம் முடிந்து பிரியும் நேரத்தில், அவள் பார்த்த பார்வையையும் அவனால் மறக்க முடியவில்லை.

அந்த இரவு வேளையில், கோவிந்த் மிகவும் மன அமைதி இல்லாதவனாக இருந்தான். போட்டியை முடித்துவிட்டு, திரைச்சீலை வந்து மூடியதும், கோவிந்த் தன்னுடைய குகையைத் தேடி ஓடினான். மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் வழியாக ஓடும்போது அவன் வாய்விட்டு அழுதான். ஆடைகளை மாற்றும் அறையை அடைந்து எப்படியோ ஆடைகளை அவிழ்த்து எறிந்தான். ஈட்டியை மிதித்து ஒடித்த பிறகுதான் அவனுக்கு சிறிதளவிலாவது நிம்மதி உண்டானது. மீண்டும் ஒருமுறை அந்த அறையில் கால் வைக்கக்கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டுதான் அவன் அந்த அறையை விட்டே வெளியேறினான்.

அந்த இரவில் கோவிந்திற்கு எல்லா கட்டுப்பாடுகளும் இல்லாமற் போயின. கையில் வந்து சிக்கிய பொன்னான சந்தர்ப்பத்தை விட்டெறிந்த மனக்கவலையை எப்படிப் போக்குவது என்று தெரியாமல் அவனுக்குப் பைத்தியம் பிடித்தது. கண்ணில் பட்டதையெல்லாம் தள்ளி உடைத்தும், தடுத்துப் பிடிக்க வந்தவர்களையெல்லாம் அடித்து விரட்டி விட்டும், மணல் வெளியில் அவன் ஒரு கொலைவெறி கொண்ட நடனமே ஆடிவிட்டான். மதம் பிடித்து நின்ற அவனைப் பார்த்து, ஓநாய்கள்கூட ஓடி மறைந்தன.


அணை உடைந்து ஓடிய அந்த இரவுக்குப் பிறகு, மீண்டும் கோட்டைக்கே திரும்பிப் போக வேண்டும் என்று முடிவு எடுத்ததற்குக் காரணம், அங்கு இருந்தால் மட்டுமே மீண்டும் எப்போதாவது ராஜகுமாரியைப் பார்க்க முடியும் என்ற ஆசை மனதில் உண்டானதுதான். என்றைக்காவது ஒரு நாள் அவள் தன்னைத் தேடி வராமல் இருக்க மாட்டாள் என்று அவனுக்கு எப்படியோ ஒரு நம்பிக்கை தோன்றியிருந்தது.

சிறிதும் யோசிக்காமல் கோட்டையை விட்டு ஓடிப்போனால், ஒரே ஒரு கவலைதான் கோவிந்தனுக்கு இருந்தது. மீண்டும் ஒருமுறை அவளைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இழக்க வேண்டியதிருக்கும். அப்படியே எங்கேயாவது வைத்துப் பார்த்தாலும் அவளுக்கு அடையாளம் தெரியப்போவதில்லை. இனி அடையாளம் கண்டு கொண்டால்கூட, அவளுடைய அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் அவனுக்கு சந்தேகம் இருந்தது. சிலையைக் காதலித்த பெண் இப்போதைய வித்தைக்காரனைக் காதலிக்க வேண்டும் என்றில்லை. நிரந்தரமாக இழந்துவிட்ட ஒரு உறவாக அது ஆகிவிட்டதோ என்று நாட்கள் செல்லச் செல்ல அவனுக்கு சந்தேகம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அந்த திருட்டு அழகி கால வெள்ளத்தில் தன்னை மறந்துவிட்டிருப்பாள் என்றும், அவளை மீண்டும் சந்திக்க முடியும் என்பது வெறும் ஒரு வீண் கனவு மட்டுமே என்றும் அவன் பயப்பட்டான்.

ஆனால், கோவிந்தின் அச்சத்திற்கு இடமே இல்லை. பார்த்து மறந்து போன ஆயிரம் முகங்களில் ஒன்றாக கோவிந்தை நினைப்பதற்கு ராஜகுமாரியால் முடியவில்லை. சிலைக்குள் உயிர் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட நிமிடத்திலிருந்து ஆரம்பமான பதைபதைப்பு கலந்த வழிபாடு அவளிடமிருந்து எந்தச் சமயத்திலும் விட்டுப் போகவில்லை. அதை எப்படியாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை ஒரு மிகப் பெரிய ஆசையாக அவளுடைய மனதிற்குள் வளர்ந்து கொண்டிருந்தது. சிலையைப் பற்றிய ரகசியத்தை வெளியே சொன்னால், அதை அடைந்துவிடலாம் என்று தோன்றியதால்தான் முதல் முறை அவள் அந்த வழியில் ஒரு முயற்சி செய்து பார்த்தாள். ஆனால், புத்திசாலியான தீருலாலுக்கு முன்னால் அவளுக்கு முழங்காலை மடக்க வேண்டிய நிலை வந்தது. பிறகு இரண்டு மூன்று முறை கோட்டைக்குச் சென்றபோதெல்லாம், மிகவும் தூரத்தில் தள்ளி நின்று அவள் அதையே கவனித்துக் கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் பெருவிரலில் இருந்து மேலே ஏறும் இனம் புரியாத ஒரு வகையான உணர்வு அவளை முழுமையாக ஆட்கொள்ளும். அசையாமல் இருக்கும் அந்தக் கண்களின் பரப்பையே பார்த்துக்கொண்டு நிற்கும்போது தன்னுடைய உடலின் வழியாக யாரோ மின்சாரத்தைப் பாயச் செய்வதைப் போல அவளுக்குத் தோன்றும். பூமியில் வேறு எதன்மீதும் குறிப்பிட்டுக் கூறும்படி வழிபாடோ மதிப்போ இல்லாத ஆணவக்காரியான தான், சிலைக்கு முன்னால் வந்து நிற்கும்போது மட்டும் சிறியதாகி விடுகிறோம் என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

வேறு எவற்றையெல்லாமோ அடைந்தாலும், சிலையையும் தனக்குச் சொந்தமாக ஆக்கவில்லையென்றால், தன்னுடைய வாழ்க்கை முழுமையடையாது என்று அவளுக்குத் தோன்றியது. அதனால்தான் ஆறேழு வருடத் தயார் நிலைகளுக்கும் சோதனைகளுக்கும் பிறகு சிலையின் சவாலைச் சந்திக்க அருந்ததி தீர்மானித்தாள்.

போட்டி முடிந்து இரண்டாவது நாள் சிலை அங்கிருந்து காணாமற்போன தகவலை அவள் தூதர்கள் மூலம் அறிந்திருந்தாள். மேலும் விசாரித்துப் பார்த்ததில், அது எங்கே இருக்கிறது என்ற விஷயம் தீருலாலுக்குக் கூட தெரியாது என்ற உண்மை அவளுக்குத் தெரிய வந்தது. ஒருநாள் அவரை தொலைபேசியில் அழைத்து, சிலையை விட்டுத் தந்தால் ஒரு பெரிய தொகையை அதற்கு பதிலாகக் கொடுக்கிறேன் என்றுகூட அவள் வாக்குறுதி தந்து பார்த்தாள். கேட்டால் அதிர்ச்சியளிக்கக்கூடிய தொகையாக இருந்தாலும், அவள் காரணமாகத்தான் தனக்கு சிலை காணாமல் போய்விட்டது என்று குற்றம் சாட்டி, அவர் அவளை மோசமான வார்த்தைகளால் திட்டினார். விலை பேசுவதற்கு அவருக்கு எந்தவொரு ஆர்வமும் உண்டாகவில்லை.

அதற்குப் பிறகு இருந்த அருந்ததியின் ஊர் சுற்றல்களுக்கு ஒரு இலக்கு இருந்தது. ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எதைப் பார்த்தாலும், கேட்டாலும், அங்கு போய் பறந்து விழக்கூடிய அவளுடைய இயல்பு, அப்படிப்பட்ட தேடலுக்கு எல்லா விதங்களிலும் பயனுள்ளதாக இருந்தது. பொதுச்சாலைகளிலும் நகரத்தின் மத்தியிலும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் சிலைகளுக்கு முன்னால் அவளுடைய பயணத்தின் வேகம் நின்றது. தொடர்ந்து ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும், என்றைக்காவது ஒருநாள் அது தன் கையில் வந்து சேராமல் இருக்காது என்றொரு ஆழமான நம்பிக்கை அவளுடைய மனதில் உறுதியாக பதிந்து விட்டிருந்தது. தன்னுடைய மனதிற்குள் இனி எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆண்மீது கொண்டிருக்கும் மோகம் அந்த சிலைமீதுதான் என்று, அவள் மிகவும் நெருக்கமானவர்கள் என்று கூறும் ஒன்றிரண்டு காதலர்களிடம் கூறியிருக்கிறாள். அவளுடைய மனதைத் தெரிந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அவர்கள்கூட அதுவும் அவளுடைய பொய்களில் ஒன்று என்றே எண்ணினார்கள்.

தன்னைச் சுற்றிலும் உள்ள ஆர்வமான உலகத்தில் ஒரு இலை அசைந்தால்கூட ராஜகுமாரிக்கு அது தெரிந்துவிடும். அதனால் இயற்கையாகவே கோவிந்த் என்ற அற்புதத்தையும் அவனுடைய வித்தைகளையும் பற்றி அவளும் கேள்விப்பட்டாள். பத்திரிகை விளம்பரங்களிலும் நிறம் மாறிய சுவரொட்டிகளிலும் அந்த முகத்தைப் பார்த்திருந்தாலும், அது எந்தச் சமயத்திலும் தன்னுடைய சிலையாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றவே இல்லை. அந்த அளவிற்கு நம்ப முடியாத உருவ மாற்றத்தில் மாறிப் போயிருந்தான் கோவிந்த். மழைச்சாரல் விழுந்து கொண்டிருந்த ஏதோ நகரத்தில், மிகவும் வெறுப்பைத் தந்து கொண்டிருந்த ஒரு சாயங்கால நேரத்தில், ராஜகுமாரி கோவிந்தின் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகச் சென்றாள்.

சாதாரணமாக இந்த மாதிரியான வித்தை செய்பவர்கள், உடல் பயிற்சியாளர்கள் ஆகியோர்மீது வெறுப்பு கலந்த ஒரு எண்ணத்தை அவள் கொண்டிருந்தாள். வெறுமனே வளைந்தும் பிரிந்தும் குனிந்தும் தலையால் நின்றும் நல்ல ஒரு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள்மீது அவளுக்கு சொல்லப்போனால் பரிதாபம்கூட இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் வழிய நின்று கொண்டிருக்கும் குஸ்திக்காரர்களையும், காருடன் சேர்ந்து எரிந்து அணையும் காரோட்டும் வீரர்களையும் பார்க்கும்போது, அவளுடைய கண்களில் கோபம் கலந்த கண்ணீர் எப்போதும் வரும். மனிதர்களால் இயலாத வித்தைகளைச் செய்து காட்டும் சில மனிதர்களும், மனிதனின் அறிவையும் அசைவையும் வெளிப்படுத்தும் சில பிராணிகளும் சேர்ந்து செய்யும் விளையாட்டு என்றுதான் அவள் சர்க்கஸைப் பற்றி கருத்து வைத்திருந்தாள். அதனால்தான் அந்த அளவிற்குப் பெரிய ஒரு ஆர்வமின்றி அவள் கோவிந்தின் வித்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அரீனாவின் மங்கலான வெளிச்சத்தில் ஒரு ஆண் உடல் எதையெதையோ காட்டிக் கொண்டிருக்கிறது என்றுதான் அவள் புரிந்து கொண்டிருந்தாள்.


சிறிய நகரத்தில் நடக்கும் சிறிய நிகழ்ச்சியாக இருந்ததால், தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல், சாதாரண பெண்ணின் தோற்றத்தில் ராஜகுமாரி வந்திருந்தாள். அதன் காரணமாக அவள் மீது யாருடைய தனிப்பட்ட கவனமும் விழவில்லை. அவளுடன் பி.ஏ. என்று அழைக்கப்படும் அந்த இளம் பெண் மட்டுமே இருந்தாள்.

ட்ரப்பீஸிலும் மோட்டார் பைக்கிலும் ஜீப்பிலும் அவன் வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றில்கூட ராஜகுமாரியின் கவனம் செல்லவில்லை. அவற்றையும் அவற்றைத் தாண்டியும் உள்ள என்னென்னவோ உடல் வித்தைகளை எங்கெல்லாமோ ராஜகுமாரி பார்த்திருக்கிறாள்.

ஒவ்வொரு வித்தைக்கும் பார்வையாளர்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இடையில் வேறு சில சிறிய வேலைகளுடன் சர்க்கஸில் இருக்கும் கோமாளிகளும் அழகியும் அங்கு வந்தபோது, பார்வையாளர்கள் கோவிந்திற்காக சத்தம் போடுவதை அவள் கவனித்தாள்.

அவன் நெருப்பிற்கு மத்தியில் நடக்க ஆரம்பித்தபோதுதான், ராஜகுமாரி உண்மையாகவே அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

நெருப்பு ஜுவாலைகளின் பிரகாசத்தில், அந்த முகத்தில், ராஜகுமாரி தன்னுடைய சிலையை அடையாளம் தெரிந்து கொண்டாள். அத்துடன் நிரந்தரமாக இழந்துவிட்டோம் என்று பயந்திருந்த இனம் புரியாத அந்த தனித்துவமான மயக்கம் அவளுடைய கைகளையும் கால்களையும் பலம் இழக்கச் செய்தது.

தன்னுடைய கண்டுபிடிப்பால் உண்டான அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் காட்சி முடியும் வரை அங்கேயே இருந்தாள். அடையாளம் கண்டுபிடித்த பிறகு இருந்த அவனுடைய வித்தைகளில் அவள் முழுமையாகக் கலந்துவிட்டவளாக ஆனாள். அவன் வைக்கும் ஆபத்து நிறைந்த சுவடுகள் அவளுடைய சுவாச முறையைத் தவறச் செய்தது. தனக்கு பைத்தியக்காரத்தனமாக எதுவும் தோன்றவில்லை என்று தன்னைத்தானே தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, அடிக்கொருத்தரம் எதையும் பார்க்காமல் அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஒவ்வொரு வித்தையும் முடிய முடிய தன்னுடைய முடிவு மேலும் மேலும் சரியாகிக் கொண்டு வருவதைப் பார்த்து, அவள் சந்தோஷத்தால் உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள். இறுதி வித்தை - உயரத்திலிருந்து குதிப்பது. நிகழ்ச்சியில் நட்சத்திர வித்தை அது என்பதால், வைரம் அந்த வித்தைக்கு நல்ல தொகையைச் செலவழித்திருந்தான்.

அதற்கான ஏற்பாடுகளாக நிகழ்ச்சி நடைபெறும் பந்தலின் மேற்கூரையின் நடுப்பகுதியை சற்று அகலமாக இருக்கும் வண்ணம் நான்கு பக்கங்களிலும் இழுத்துவிட்டு, மேற்கூரையையும் தாண்டி வானத்தை நோக்கிச் செல்லும் ஒரு உலோகத் தூண், பெரிய ஸ்பிரிங்குகள் மூலம் நிமிரத் தொங்கியது. ஒன்றோ இரண்டோ தென்னை மரங்களின் உயரத்தை அடைந்த அது, அங்கேயே தலையை உயர்த்தி நின்றது. சமமான நிலையில் அமைக்கப்பட்டிருந்த இன்னொரு அலுமினியத்தால் ஆன ஏணியைப் பிடித்துக் கொண்டு கோவிந்த் அதன் உச்சிக்கு ஏறிச் சென்றான்.

சிறிது தூரம் ஏறியவுடன், அவன் சிறு புள்ளியைப் போல ஆனான். பார்வையாளர்கள் மூச்சை அடக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முற்றிலும் காணாமல் போனான். தொடர்ந்து தூணின் நுனியில் ஒரு விளக்கு எரிந்தபோது, கோவிந்த் அங்கு நின்றிருந்தான்.

அந்த உயரத்திலிருந்துதான் அவன் குதிக்கப் போகிறான் என்பதை நினைத்தபோது, யாரும் கைகளைத் தட்டவில்லை.

அவ்வளவு உயரத்திலிருந்து கோவிந்த் இதுவரை குதித்ததில்லை என்று அறிவித்து விளம்பரப் பிரிவு அந்த வித்தைக்கு தனிப்பட்ட பெருமையை அளித்துக் கொண்டிருந்தது. இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள் பதைபதைப்பையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கச் செய்யும் இசையை ஒலிக்கச் செய்தார்கள்.

குதிப்பதற்கான நேரம் வந்ததும், இசை திடீரென்று நின்றது. தூணின் உச்சியில் இருந்த சிறிய புள்ளியின்மீது நிறங்கள் மாறி மாறி விழுந்தன. அதன் நுனியில் நிறங்களின் விளையாட்டு நின்று  பிரகாசமாகத் தெரிந்தபோது, கோவிந்த் கைகளைக் காற்றில் பரவவிட்டவாறு குதித்தான்.

வானத்திலிருந்து தலைக்குப்புற பறந்து கீழே வந்து கொண்டிருக்கும் ஒரு கிளியைப் போல அப்போது அவன் இருந்தான். இடையில் அவன் பார்வையாளர்களை சந்தோஷப்படுத்துவதற்காக காற்றில் பல்டி அடிப்பதையும் மெதுவாக வருவதையும் இதயம் துடிக்க ராஜகுமாரி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

சாதாரணமாக அந்த நேரத்தில்தான் கோவிந்த் அன்று வந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்ப்பான். உயரத்திலிருந்து அந்தக் காட்சியைப் பார்க்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். எல்லா கழுத்துகளும் மேல் நோக்கி வளைந்து, எல்லா முகங்களும் உயரத்தை நோக்கித் திரும்பி இருக்கும் அந்த நிமிடங்களில் அவனுக்கு மிகுந்த தன்னம்பிக்கை தோன்றுவது உண்டு.

அப்படிப் பரவலாக பார்ப்பதற்கு மத்தியில் அவன் ராஜ குமாரியையும் பார்த்தான்.

ஒரு பல்டி அடிப்பதற்கு மத்தியில் எப்போதோதான் அவளுடைய முகம் அவனுடைய நினைவில் வந்து விழுந்தது. ஆனால் அது அவள்தான் என்று சந்தேகமே இல்லாமல் அவனுக்குத் தெரிந்தது.

கோவிந்த் இறுதியாக தரையில் வந்து நின்றதும், அது இறுதி நிகழ்ச்சி என்பதைத் தெரிந்திருந்த மக்கள் கூட்டம் ஆரவாரத்துடனும் கைத்தட்டல்களுடனும் எழுந்து நின்றது. அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் அவனால் ராஜகுமாரியைப் பார்க்க முடியவில்லை.

மீண்டுமொருமுறை அவள் காணாமல் போகிறாளோ என்ற சிந்தனை அவனைப் பொறுத்தவரை வேதனையுடன் தோன்றியது. அதனால் எப்போதும் இருப்பதற்கு மாறாக அவன் அங்கேயே நின்று கொண்டு மக்களின் பாராட்டை வாங்கிக் கொண்டிருக்கும் சாக்கில், அவளை அவன் தேடினான். ஆனால், அப்போது அவள் போய்விட்டிருந்தாள்.

அன்று ஓய்வு எடுப்பதற்காகத் தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பிப் போகத் தொடங்கிய கோவிந்த்தைச் சூழ்ந்த அழகிகளில் ஒருத்தியாக அருந்ததியின் பி.ஏ.வும் இருந்தாள்.

ஆரவாரத்திற்கு மத்தியில், புத்திசாலியான அவள், அவனுடைய ஹோட்டல் அறை, தொலைபேசி எண் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டாள்.

11. கோவிந்தும் ராஜகுமாரியும்

ன்று இரவு ஹோட்டல் அறைக்குத் திரும்பி வந்த கோவிந்திற்கு சிறிதும் அமைதியாக இருக்க முடியவில்லை. வந்தவுடன் ஆடைகளை மாற்றினான். அவன் சிறிது நேரம் மல்லாந்து படுத்து சிந்தித்தான். ராஜகுமாரிக்கு தன்னை யார் என்று தெரியவில்லை என்றும், தெரிந்திருந்தால் அவள் ஓடி வந்திருப்பாள் என்றும் அவனுக்கு வெறுமனே தோன்றியது. இப்போது அவள் இந்த நகரத்தில் எங்கேயாவது இருப்பாள் என்பதை நினைத்தபோது கையில் வந்து சிக்கிய இந்த சந்தர்ப்பத்தை வீணாக்கி விடாமல், எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளைக் கண்டுபிடிப்பதற்கான வழியைப் பற்றிச் சிந்திப்பதுதான் இப்போது செய்ய வேண்டிய விஷயம் என்று அவனுக்குத் தோன்றியது. தொடர்ந்து நேரத்தை வீணாக்காமல் புதிய ஆடைகளை எடுத்து அணிந்து, கம்பெனிக்குச் சொந்தமான ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அவன் தெருக்களை நோக்கிப் புறப்பட்டான்.  


அந்தத் தேடல் கிட்டத்தட்ட நகரத்தின் எல்லா முக்கியமான தெருக்களிலும் நீண்டது. ஆட்கள் கூடும் இடங்களிலும் உடலமைப்பில் ஒற்றுமையுடன் இருப்பவர்கள் போகும்போதும் அவன் வாகனத்தை நிறுத்திக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

வித்தை செய்பவனின் வண்ண ஆடைகளை அவிழ்த்தெறிந்து விட்டு சாதாரண ஆடைகளில் இருந்ததால், அதிகமாக யாரும் அவனை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. சில நேரங்களில் லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யும் சில பையன்களும் அதே மாதிரியான அதிர்ஷ்டத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்களும் ஆளை அடையாளம் தெரிந்து கொண்டு, அவனைப் பார்த்து கையை அசைத்தார்கள். மிகப் பெரிய ஹோட்டல்களையும், நவநாகரீகமான பணக்காரர்கள் மட்டும் இருக்கக்கூடிய இதர இரவு க்ளப்களையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் அவன் குறிப்பாக கவனித்தான். விலை அதிகமான கார்களுக்கு உள்ளேயும் காற்றில் கலந்திருக்கும் வாசனை தைலத்திலும் அவன் அவளைத் தேடினான்.

பாதி இரவு ஆகியும், கோவிந்தால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போது அவன் வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு வாகனங்கள் போவதற்கு சிரமமாக இருக்கும் ஒற்றையடிப் பாதைகள் வழியாக தேடலைத் தொடர்ந்தான். அழுக்கு நிறைந்த சேரி தெருக்களிலும் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் விலைமாதர்களும் மட்டுமே நடக்கும் சிறு வழிகளிலும் அவன் அவளைத் தேடினான்.

நிலவு மறைந்தபோது, மனம் தளர்ந்த அவன் தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பினான். மீண்டும் ஒருமுறை ராஜகுமாரி கை நழுவிப் போய்விட்டாள் என்ற நினைப்பு அவனை முழுமையாக சோர்வடையச் செய்திருந்தது.

தூக்கம் வராததால், அவன் சிறிது நேரம் அறைக்குள்ளேயே அங்குமிங்குமாக நடந்தான். பிறகு அதிகமான வெப்பமும் புழுக்கமும் தோன்றியதால், அறைக்கு வெளியே வந்தான். வராந்தாவில் சிறிது நேரம் உலவினான். எனினும், வெப்பத்தைத் தாங்க முடியாமல் லிஃப்ட் மூலம் அவன் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு வந்தான்.

கோவிந்தின் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அடுத்த அறையின் பாதியாகத் திறந்து வைத்திருந்த கதவின் வழியாக ராஜகுமாரி கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவனை ஏதோ முக்கியமான பிரச்சினை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாளே தவிர, அதற்குக் காரணம் தான்தான் என்பதை நினைக்க அவளால் முடியவில்லை. தன்னை அடையாளம் தெரிந்து கொண்டால் அவனுடைய நடவடிக்கை என்ன மாதிரியாக இருக்கும் என்பதைப் பற்றி தீர்மானிக்க முடியாத அவள், அதனால்தான் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு ஜிப்ஸியின் ஆடைகளை அணிந்து கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

பதினாறு மாடிகளைக் கொண்ட அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் மேல்மாடி, சாதாரணமாக இருப்பதைவிட அகலமாக இருந்தது. அங்கேயிருந்து தூங்கிக் கொண்டிருக்கும் நகரத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. கீழே, தூரத்தில் அவ்வப்போது தெரு நாய்கள் ஊளையிட்டதைத் தவிர வேறு சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவிற்கு உயரத்தில் இருந்ததால், வீசியடித்த காற்றிற்கு - எலும்புகளை நடுங்கச் செய்யும் அளவிற்குக் குளிர்ச்சி இருந்தது. எனினும் அவளுக்கு குளிர்ச்சி எதுவும் தோன்றவில்லை.

எதிர்பாராமல் ஒரு இளம்பெண்ணை அந்த நேரத்தில் மாடியில் சந்தித்த கோவிந்த், முதலில் பதைபதைப்பு அடைந்தான். நிலவு மறைந்ததாலும், விளக்குகள் அணைந்துவிட்டதாலும், மிகவும் அருகில் வந்த பிறகும் அவனுக்கு அவளுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. அப்படியே பார்த்தாலும், திடீரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சில சிறுசிறு கை வண்ணங்களை ராஜகுமாரி தன்னுடைய முகத்தில் பயன்படுத்தியிருந்தாள். யார் என்ற அவனுடைய கேள்விக்கு தான் பல நாடுகளைச் சுற்றிப் பயணம் செய்யும் ஒரு ஜிப்ஸி பெண் என்றும், முகம், கை ரேகைகள் ஆகியவற்றைப் பார்த்து ஒரு ஆளின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிக் கூற தன்னால் முடியுமென்றும் அவள் சொன்னாள். அவனை இப்போது துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை தீர வழியைக் கூற அனுமதித்தால், தான் அதற்கு பதில் சொல்லத் தயார் என்றும் அவள் பணிவுடன் கூறினாள்.

அவள் அதைக் கூறிக் கொண்டிருக்கும்போது, அவளுடைய குரல் அவனுக்குள் நுழைந்து சென்றது. சிலை திறப்பு விழாவின் போது கேட்ட உரத்த சிரிப்புச் சத்தமும், போட்டி நாளன்று ஒரு பகல் முழுவதும் காதுகளில் வந்து விழுந்த உரையாடல்களும், தமாஷ்களும், பாட்டுகளும்... இவை அனைத்தும் சிறிதும் வற்றாமல் உள்ளுக்குள்ளேயே தங்கி நின்றிருந்த அவனுக்கு, அந்தக் குரலைக் கேட்டவுடன் ஆள் யார் என்று தெரிந்துவிட்டது. சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, கேள்வி கேட்பதற்காக அவளுடைய கைகளை பலமாகப் பிடித்து இழுத்தான். சுவரின் அருகில் தள்ளி நிற்கச் செய்தான். பதினாறு நிலைகளுக்குக் கீழேயிருந்து மேலே வந்த வெளிச்சத்தில் அவன் அந்த முகத்தை ஆராய்ந்தான்.

அது தன்னுடைய ராஜகுமாரிதான் என்பதைப் புரிந்து கொண்ட நிமிடத்தில், அவனுக்குள் ஒரு புத்துணர்ச்சி கடந்து சென்றது. மூடிக்கிடந்த கவலை, கொடுமையான நிராசை ஆகியவற்றை மூடியிருந்தவை ஒவ்வொன்றாக விலகி, தன்னுடைய மனதைத் தானே கண்டு கொண்டிருப்பதாகவும், அப்படிப் பார்க்கும்போது அங்கு நிறங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அவன் உணர்ந்தான். அவனுடைய முகத்தில் புதிதாக மலர்ந்த சந்தோஷத்தைப் பார்க்க முடியாததால், பயந்து போயிருந்த அருந்ததி, தான் ராஜகுமாரிதான் என்பதை நடுங்கிக் கொண்டே ஒப்புக் கொண்டாள். சிலைமீது தான் வைத்திருந்த வழிபாடும் மோகமும் எவ்வளவு அதிகம் என்பது அவனுக்கும் தெரியுமே என்று அவள் நிறைந்த கண்களுடன் கேட்டாள். இப்போது கோவிந்தின் அசைவு கொண்ட புதிய வடிவத்தையும் பார்த்தவுடன், அந்த விருப்பத்திற்கு எல்லைகளே இல்லாமல் ஆகியிருக்கின்றன என்று அவள் கூறினாள். சமீப காலம் முழுவதும் அவனுக்காக எந்த அளவிற்கு அலைந்து திரிந்தாள் என்பதை அவள் விளக்கிச் சொன்னாள். கோவிந்த் அவளுக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்றும், அவன் கிடைக்கவில்லையென்றால், உயிரை விடக்கூட அவளுக்குத் தயக்கமில்லையென்றும் மனம் திறந்து பேசும் இயல்பைக் கொண்ட அருந்ததி உறுதியான குரலில் கூறினாள். இந்த நிமிடமே தன்னுடன் வந்துவிடும்படி அவள் அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். கோவிந்தைப் போன்ற அசாதாரண சிறப்புத் திறமைகள் கொண்ட ஒரு மனிதனை சாதாரண மனிதர்கள் பார்க்கக்கூட செய்யக்கூடாது என்று அவள் வாதிட்டாள். அப்படிப்பட்ட ஒரு விசேஷ பிறவியை காட்சிப் பொருளாக்கி மாற்றுவது அல்ல, மாறாக- கடவுளுக்கு நிகராக வைத்து பூஜை செய்து பத்திரப்படுத்த வேண்டும் என்று அவள் ஆதாரங்கள் சகிதமாக சமர்ப்பித்தாள். தன்னுடைய வார்த்தைகளுக்கேற்றபடி அவனிடம் மாறுதல் உண்டாக ஆரம்பித்திருக்கும் விஷயத்தைப் புரிந்து கொண்ட அவள், எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன், அவனைக் கட்டிப்பிடித்து, ஒரு நம்பிக்கையின் நிறைவைப்போல அவனை அழுத்தி முத்தமிட்டாள்.


கோவிந்தின் வாழ்க்கையில் முதல் கட்டிப்பிடித்தலும் முதல் முத்தமும் அதுதான். அதுவரை வெப்பமாக தகித்துக் கொண்டு வேதனையைத் தந்து கொண்டிருந்த உஷ்ணம் திடீரென்று அவனை விட்டு விலகியது. வீசிக் கொண்டிருந்த காற்றின் குளிர்ச்சியைப் பற்றி அப்போது முதல் முறையாக அவன் உணர்ந்தான். குளிரில் இருந்து விடுதலை பெறுவதற்கு இருக்கும் ஒரேயொரு வழி, அவளுடைய அணைப்புதான் என்பதை உணர்ந்த அவன், அதன் மீது மேலும் விருப்பம் கொண்டான்.

கீழே தூரத்தில் தெரு நாய்களின் ஊளைச் சத்தத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு ஃபயர் எஞ்ஜினின் மணியடிக்கும் சத்தம் கடந்து சென்ற போதுதான் அவர்கள் அந்த அணைப்பில் இருந்து விடுபட்டார்கள். நெருப்பு இயந்திரம் ஹோட்டலுக்கு முன்னால் இருந்த சாலை வழியாக பயமுறுத்தும் வகையில் மணியடித்துக் கொண்டு பாய்ந்து சென்றது. எங்கேயோ நெருப்பு பற்றியிருக்கிறது என்று ராஜகுமாரி சொன்னாள். தன்னை அவளுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று கோவிந்த் ராஜகுமாரியிடம் கேட்டுக் கொண்டான். தொடர்ந்து நேரத்தை வீண் செய்யாமல் பொழுது புலரும் நேரத்திலேயே அவர்கள் அந்த நகரத்தைவிட்டு அகன்றார்கள். கோவிந்தின் வாழ்க்கையில் இரண்டாவது பகுதி என்று கூறக்கூடிய அந்த நீண்ட பயணங்கள் முதல் பகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.

வைரம் புதிய புதிய திசைகளில் அழைத்துக் கொண்டு சென்றது மற்றவர்களிடம் அவனைக் காட்டுவதற்கு என்றால், ராஜகுமாரி முடிந்த வரையில் வேறு யாருக்கும் காட்டாமல் ரகசியமாக அவனை மனதில் வைத்துக் கொண்டு அலைந்தாள். மீண்டும் யாராவது வந்து தட்டிப் பறித்துக் கொண்டு போகும் அளவிற்கு தகுதி கொண்ட ஒரு விலை மதிப்பற்ற பொக்கிஷம் தன் கையில் கிடைத்திருக்கிறது என்று அவள் நம்பினாள். அதனால்தான் அவள் மிகவும் கவனத்துடன் இருந்தாள்.

ராஜகுமாரிக்கு பூமியில் பல இடங்களிலும் தங்கக்கூடிய இடங்கள் இருந்தன. அவளைப் போலவே அவையும் வினோத தன்மைகள் கொண்டவையாக இருந்தன. பனியிலும் மலையிலும் நகரங்களிலும் நீர் நிலைகளிலும் என்று பரந்து கிடந்த அவை எல்லாவற்றையும் ஒருமுறை பயணம் சென்று பார்க்க வேண்டுமென்றால், அதற்கு ஒரு பெரிய கால அளவு வேண்டும்.

அவளுடைய ஒவ்வொரு தங்கும் இடமும் அவனைப் பொறுத்தவரையில் அற்புதங்களாக இருந்தன. அவளுடன் இருக்கும் ஒவ்வொரு இரவும் அவனுக்கு மறக்க முடியாத நினைவுகளாக இருந்தன.

கோவிந்தின் முகம் பல நாட்களாக பலரும் பார்த்திருப்பதால், அவனுக்கு நல்ல ஒரு உருவ மாற்றத்தை அவள் தந்திருந்தாள். உருவ வேறுபாடுகளுக்கு ஏற்றபடி ஆச்சரியப்படும் வகையில் மாறக்கூடிய அவனுடைய முகத்தின் மெழுகுத் தன்மையின் காரணமாக, இப்போது அவன் முற்றிலும் புதிய ஒரு மனிதனைப் போல தோன்றினான். எதிர்பாராமல் சில இடங்களில் சந்திக்க நேரும் அரிதான சில நண்பர்களிடம் கோவிந்த் ஒரு ராஜகுமாரன் என்று அவள் கூறினாள். அவனுடைய குழந்தைத் தனம் கொண்ட புதிய முகத்தைப் பார்த்த அவர்கள் அதை நம்பவும் செய்தார்கள்.

ஒரு தங்கும் இடத்தில் இருந்து இன்னொரு தங்கும் இடத்திற்கு உள்ள அவர்களின் இடமாறுதல் முடிந்த வரையில் இரவு நேரங்களில்தான் நடந்தது. அப்படி நடக்கும் நீண்ட பயணங்களில் அவன் ஒரு குழந்தையைப் போல அவளுடைய மடியில் தலையை வைத்து உறங்கினான்.

வாழ்க்கையில் முதன் முறையாகக் காதல் என்ற ஒன்று கிடைத்தவுடன், கோவிந்த் முற்றிலும் உற்சாகம் கொண்ட மனிதனாக மாறினான். அடைய முடியாத ஏக்கங்கள் எல்லா நேரங்களிலும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அவனுடைய மனதில் சந்தோஷம் கலந்த ஒரு அமைதி வந்து நிறைந்தது. ராஜகுமாரி இல்லாமல் எப்போதாவது மட்டும் கிடைக்கக்கூடிய தனிமையான நேரங்களில், அவனை துன்பப்படுத்திக் கொண்டிருந்த வேதனை தாங்கிக் கொள்ளக்கூடியதைத் தாண்டி இருந்தது. அந்த அளவிற்கு அவள் அவனை வணங்கி வழிபட்டாள். அவனுடைய எந்த விருப்பத்தையும் உடனடியாக நிறைவேற்றித் தரும் ஒரு தாசியாக அவள் மாறினாள். தன்மீது கோவிந்திற்கு இருப்பது கரை கடந்த காதல் என்பதைப் புரிந்து கொண்ட நிமிடத்திலிருந்து தான் உலகத்தைக் கையில் பிடித்துவிட்டோம் என்ற எண்ணம் அவளுக்கு உண்டாகிவிட்டது. உடல் ரீதியான ஆச்சரியங்களின் சின்னமான அவனைப் பொறுத்தவரையில் தான் பல நேரங்களில் மேலும் ஒரு ஆச்சரியமாக மாறியிருக்கிறோம் என்று அவளுக்குத் தெரியும். புத்திசாலியான அருந்ததி அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்நேரமும் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவோ ரகசியமாக வைத்திருக்கப் பார்த்தாலும், ராஜகுமாரியின் இருப்பை முழுமையாக மறைந்து வைக்க மிகவும் சிரமமாக இருந்தது. அரிதான சில சந்தர்ப்பங்களில், எப்படியோ வாசனை பிடித்துக் கொண்டு, சில பழைய நண்பர்கள் ராஜகுமாரியைப் பார்ப்பதற்காக வந்தார்கள். அப்படி வரும் விருந்தாளிகளை இனிய முகத்துடன் வரவேற்கும் விஷயத்தில் அருந்ததி பாராமுகம் எதுவும் காட்டவில்லை. அவனுக்கு முன்னால் இருந்துகொண்டே அவர்களில் சிலர் அவளுடைய தோளில் கை வைத்தாலும், அவள் அதை எடுத்து நீக்கவோ தான் ஒரு உத்தமி என்று நடிக்கவோ இல்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கோவிந்திற்கும் குறிப்பிட்டுக் கூறும் வகையில் ஏதாவது வெறுப்போ அதிர்ச்சியோ உண்டாகவும் இல்லை. தோலுக்கு வெளியே அப்படி நடந்து கொண்டாலும், அவர்கள் அங்கிருந்து போவதுதான் தனக்கு நல்லது என்பது மாதிரி அவள் பேசவோ நடக்கவோ செய்வாள். அவளுடைய மனதைப் படிப்பதில் திறமைசாலிகள் என்று தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டு வந்த பலரும், முடிந்தவரையில் அவளுக்கு ஒரு தொந்தரவாக இருக்காமல் விலகிப்போய் விடுவார்கள்.

எப்போதாவது உண்டாகக்கூடிய அப்படிப்பட்ட சந்திப்புக்களின் போது கோவிந்தை ராஜகுமாரி அடக்க முடியாத பெருமையுடன் அறிமுகப்படுத்தினாள். அவளுக்கு அந்த விஷயத்தில் உண்மையான ஒரு கர்வம்கூட இருந்தது. கோடீஸ்வரர்களான அந்த முட்டாள்கள் தவம் இருந்தால்கூட இப்படிப்பட்ட வெகுமதி கிடைக்காது என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. கோவிந்திடம் சிறிது மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட ஒன்றிரண்டு மனிதர்களிடம், போதை இலையைச் சுவைத்துக் கொண்டே அவள் அந்த விஷயத்தை வெளிப்படையாகக் கூறவும் செய்தாள்.

பொதுவாகவே கர்வம் கொண்ட பெண்ணாக அவள் நடந்து கொண்டாலும், புதிய ஒரு ஆணைப் பிடித்திருக்கும் ராஜகுமாரியின் இந்த ஆணவச் செயல் இயற்கையாகவே பழைய நண்பர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை.

ஒருநாள் ஒரு இடத்தில் ஒரு சம்பவம் உண்டானது. கோவிந்தைப் பற்றியுள்ள அவளுடைய புகழ்ச்சி சொற்களில் வெறுப்பு உண்டான ஒரு நண்பன், அவனைப் பற்றி மோசமாகப் பேசினான்.


அதைக் கேட்டு கோபமடைந்த ராஜகுமாரி அவனிடம் சண்டை போட்டு வெளியேறிப் போகும்படி சொன்னாள். அவமானத்தைச் சந்தித்த அவன், வெளியே போவதற்கு பதிலாக அவளைக் கட்டிப்பிடிக்க ஆரம்பித்தான். முரட்டுத்தனமான அந்த மனிதனின் கையில் சிக்கி அவள் நெளிந்து உரத்த குரலில் சத்தம் போட்டும், கோவிந்திடம் குறிப்பிட்டுக் கூறும் வகையில் எந்தவொரு பின் விளைவும் உண்டாகவில்லை. அவன் இருக்கும்போது, மற்ற நண்பர்களுடைய தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டும் தொட்டு உரசிக் கொண்டும் அவள் நடந்து கொள்ளும்போதெல்லாம் சாதாரண அமைதி கலந்த பார்வையுடன் அவன் இருந்தான். இது விளையாட்டு அல்ல என்றும், எதிரியை அடித்து விரட்டி தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவள் அழுது கெஞ்சிக் கேட்டபோது மட்டுமே அவன் அந்த இருப்பில் இருந்து அசைந்தான். எழுந்து அவள் கூறியபடியெல்லாம் அவன் நடந்தான். அவனுடைய ஒரு அடியை வாங்கிக் கொண்டு வந்த மனிதனின் தோள் எலும்பு நொறுங்கவும், இன்னொரு அடிபட்டு கழுத்து சிறிது பின் பக்கமாகத் திரும்பவும் செய்தது. பயந்துபோன ராஜகுமாரி போதும் என்று கூறுவது வரை அந்த அரக்கத்தனமான சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்த மனிதன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி மறைந்தான். நிறைந்த கண்களுடன் அவள் ஓடிச் சென்று அவனுடைய கால்களில் விழுந்து அழுதாள்.

ஆனால், அந்த சம்பவத்திலிருந்து ராஜகுமாரி ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டாள்.

தானே நினைத்து எதையாவது செய்வது என்பது கோவிந்திற்கு மிகவும் சிரமமான விஷயம் என்பதே அது. அதே நேரத்தில் எப்படிப்பட்ட கட்டளையையும் தலைமேல் வைத்துக்கொண்டு செயல்படுவதற்கு, அவனுக்கு எந்தவொரு கஷ்டமும் இல்லை.

12. அற்புத பொம்மை

ந்த புதிய புரிதல் ராஜகுமாரியைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும் கவலையையும் தந்தன.

அளவுக்கும் அதிகமாகப் பழகுவது விலகலுக்கு வழி வகுக்கும் என்ற பழமொழி இருந்தாலும், கோவிந்திற்கும் ராஜகுமாரிக்கும் இடையே இருந்த உறவில் அது முற்றிலும் அர்த்தமற்றதாக இருந்தது. அவர்கள் அதிகமாக நெருங்க நெருங்க, அவர்களுக்கிடையே அதிகமான புரிதல் உண்டானது. அறிந்துகொள்ள அறிந்து கொள்ள, முடிவே இல்லாத அட்சய சுரங்கங்களாக அவர்கள் இருவரும் இருந்தார்கள். தினமும் புதிதாக ஏதாவது அவர்கள் ஒருவரோடொருவர் பேசுவதற்கு இருந்துகொண்டே இருந்தது.

கோவிந்தின் அசாதாரணமான வித்தைகள் அனைத்தும் அவன் எங்கோயிருந்து கற்றுக் கொண்டவை என்று நினைத்திருந்த ராஜகுமாரிக்கு அப்படி இல்லை என்ற எண்ணத்தை உண்டாக்க அன்றைய அந்த மோதல் வழிவகுத்தது. அவள் தேவை என்று சொன்னபோது மட்டும் அவனுடைய எதிர்ப்பு சக்தி எழுந்ததும், அவள் சொன்னவுடன் அவனுடைய செயல் நின்றதும் அவளுடைய மனம் ஒரு வேதனை தரும் கைகாட்டிப் பலகையாக மாறியது. எதைச் செய்யவேண்டும் என்று சொன்னாலும், அதே மாதிரி செய்யும் திறமை கொண்ட ஒரு அற்புதம்தான் கோவிந்த் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவள் மட்டுமே தெரிந்திருந்த சில முடிவுகள் அப்படி நினைத்தது சரி என்பதைத் தெளிவுபடுத்தின. முடியாதது என்று அவளுக்குத் தோன்றிய விஷயங்களில் அவனுடைய உடல் சர்வ சாதாரணமாக செயல்படுவதை மிகுந்த சந்தோஷத்துடன் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். புகழ் பெற்ற நடன மங்கையாகவும் இருந்த அவளுடன் சேர்ந்து அவன் ஒரு விளையாட்டு வீரனின் உடற்பயிற்சியைப் போல நடனமாடினான். சொன்னால் அவனால் செய்ய முடியாததாக எதுவும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட அவள் கனவில் கண்ட எல்லாவற்றையும் அவன் மூலமாக நிறைவேற்றினாள். நிற்கும்போதே மறைந்து போகும்படி சொன்னால், அவன் அப்படிச் செய்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அவள் அதை மட்டும் கூறவில்லை. எது எப்படி இருந்தாலும், இந்தப் புதிய வெளிச்சம் அவளுடைய நாட்களுக்கு அதிகமான உயிர்ப்பையும் உணர்ச்சியையும் அளித்தன. அதே நேரத்தில் ராஜகுமாரி கவலையிலும் இருந்தாள். கோவிந்திடம் ரகசியமாக மறைந்திருக்கும் இந்த அற்புத சக்திதான் அவனுடைய பலவீனமும் என்ற புரிதல்தான் அவளைக் கவலையில் மூழ்கச் செய்தது. மற்றவர்களின் விருப்பத்திற்கேற்றபடி செயல்படும் ஒரு அற்புத பொம்மையாக அவன் இருக்கிறான் என்ற நினைப்பு மனதில் ஆழமாகத் தங்கிவிடாமல் இருக்க அவள் தெய்வத்திடம் வேண்டினாள். அதற்குக் காரணம் - வேறு எந்தப் பெண்ணையும் விட அவள் அவனுக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் அடிமைத்தனத்தை விரும்பினாள். வாழ்நாள் முழுவதும் ஆண் இனத்திற்கு கட்டளை பிறப்பித்தும், அதைப் பின்பற்ற வைத்துப் பார்த்தும் பழகிப்போன அவளிடம், அப்படியொரு விருப்பம் தலைதூக்கி நின்றது மிகவும் இயல்பாகவே உண்டான ஒன்றுதான். கடவுளுக்கு நிகராக வணங்கி வழிபடும் ஒரு மனிதனை திடீரென்று ஒருநாள் அடிமையாக ஆக்கிப் பார்ப்பதற்கு அருந்ததியின் மனதிற்கு சக்தி இல்லாமல் இருந்தது என்பதுதான் உண்மை.

மனதின் அடித்தளத்தில் எங்கோ அப்படியொரு வீழ்ச்சி உண்டாகியிருந்தாலும், ராஜகுமாரியின் நடவடிக்கைகளிலோ வார்த்தைகளிலோ அதன் பிரதிபலிப்பு எதுவும் வெளிப்படவில்லை. புதிய உயரங்களை நோக்கி அவனையும் அழைத்துக் கொண்டு பறப்பதற்கு அவள் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு உள்ளே சந்தோஷத்தைத் தவிர வேறு எந்த உணர்வும் வந்து நிறைய அவள் சம்மதிக்கவில்லை.

அவன் தூங்கிக் கொண்டிருக்கும்போது மட்டுமே, அவளுக்கு அவன்மீது பரிதாபம் தோன்றியது. அப்போது அவள் அவனுடைய கால்களில் முகத்தை வைத்துக் கொண்டு சத்தம் உண்டாக்காமல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

ராஜகுமாரி போதை இலையைத் தின்னும் விஷயத்தைத் தெரிந்திருந்தாலும், அவன் அதை எதிர்த்துச் சொன்னதில்லை. அதில் குறிப்பிட்டு எதையும் பார்த்ததாகவும் அவனுக்குத் தோன்றியதில்லை. பலவகைப்பட்ட போதைகளுக்கு மத்தியிலும் நடந்து கொண்டிருந்தது அவர்களுடைய பயணங்கள் என்றாலும் கோவிந்த் எல்லா நேரங்களிலும் எல்லா போதைப் பொருட்களுக்கும் கெட்ட பழக்கங்களுக்கும் விலகி இருக்கக்கூடியவனாகவே இருந்தான். அது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.

சந்தோஷமான விஷயங்கள் வெறுப்பு உண்டாகிற அளவிற்குத் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பதாக ஆனவுடன், அவர்கள் இடையில் காடுகளைத் தேடிச் சென்றார்கள். மாதங்கள் அதிகமாகும் அப்படிப்பட்ட பயண வேளைகளில் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று பி.ஏ.விற்குக்கூட தெரியாமலிருந்தது.

காடு அவர்களுக்குப் புதிய சுதந்திரத்தையும் புதிய அனுபவங்களையும் தந்தது. இயற்கையின் பரப்பை அடையும்போது, கோவிந்த் மேலும் உற்சாகமடைவதை அவள் கவனித்தாள். காட்டு மிருகங்கள் சத்தங்கள் உண்டாக்கும்போது, அவற்றைப் போலவே சத்தம் போடுவதில் அவனுக்கு மிகுந்த உற்சாகம் இருந்தது. வேகமாக ஓடும் மான்களையும் முயல்களையும் அவன் ஓடிப் பிடித்தான். எட்டாத மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த கூட்டிலிருந்து வெப்பம் நிறைந்த காட்டுத் தேனை எடுத்து அவன் அவளுடைய மார்பகங்களில் தேய்த்தான்.


ஒருநாள் அவன் ஒரு காட்டருவியில் குளித்துக் கொண்டு படுத்திருந்தான். ஒரு கூட்டம் வெள்ளை நிற மீன்கள் தங்களுடைய பிரகாசித்துக் கொண்டிருந்த வயிற்றுப் பகுதியையும் தொப்புளையும் காட்டிக் கொண்டு நீரின் மேற்பகுதியில் மிதந்து போய்க் கொண்டிருப்பதை ராஜகுமாரி பார்த்தாள். அவளுக்கு அவற்றின் மீது பொறாமை உண்டானது. தன்னையும் அழைத்துக் கொண்டு நீரின் மேற்பரப்பில் மிதந்து போக முடியுமா என்று அவள் அவனிடம் கேட்டாள். முதலில் அவனுக்கு கேள்வி புரியவில்லை. எப்படி மிதந்து போவது என்று அவனுக்குத் தெரியாமல் இருந்தது. அப்போது அவள் அவனைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்து கரையில் நின்று கொண்டு, அங்கிருந்த ஒரு ஓட்டின் துண்டை எடுத்து நீரின் மேற்பகுதியில் மிதந்து போகும்படி எறிந்து அவனுக்குக் காட்டினாள். விஷயத்தைப் புரிந்து கொண்ட அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு கரையின் வழியாக வேகமாக ஓடிச் சென்று நீரில் குதித்தான். நீரின் மேற்பகுதியில் ஒரு கண்ணாடித்துண்டைப் போல அவர்கள் மிதக்க ஆரம்பித்தபோது, சந்தோஷத்தை அடக்க முடியாமல் ராஜகுமாரி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவ்வப்போது நீரின் மூலையைத் தொட்டுக் கொண்டும், அங்கேயிருந்து மேலே வந்து மிதந்தும் அவர்கள் அந்தக் காட்டுச் சோலையின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தார்கள். எல்லா நேரங்களிலும் நடப்பதைப்போல, அவள் போதும் என்று கூறும் வரையில் அந்த இன்பச் செயல் தொடர்ந்து கொண்டிருந்தது.

காட்டில் அவர்களுடைய உணவு இயற்கையான காட்டுக் கனிகளும் காட்டு மிருகங்களும்தான். அவள் சுட்டிக் காட்டும் பழங்களையும் மிருகங்களையும் விறகையும் அவன் அடைந்து கொண்டு வந்து கொடுத்தான். நல்ல ஒரு சமையல் செய்யும் திறமை வாய்ந்த பெண்ணாகவும் இருந்த அவள் தயாரித்த சுவையான உணவு, அவர்கள் இருவரும் வாழ்க்கையில் சாப்பிட்டதிலேயே மிகவும் சிறந்ததாக இருந்தது.

ஒருநாள் ஒரு ஆற்றின் கரையில் இருந்த புல்வெளியில் படுத்திருந்தபோது, நீரின் மேற்பரப்பில் அசாதாரணமான அளவில் இருந்த ஒரு ஆமை தலையை நீட்டி அவர்களையே பார்த்துக் கொண்டு நிற்க ஆரம்பித்தது. அது நிற்பது தனக்குத் தொந்தரவாக இருக்கிறதென்றும், அதனால் அதைப் பிடித்துக்கொண்டு வந்து தர வேண்டுமென்றும் அவள் அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். கேட்ட அந்த நிமிடமே அவன் ஆற்றுக்குள் குதித்து, அதற்குள் மூழ்கிவிட்டிருந்த ஆமைக்குப் பின்னால் மூழ்க ஆரம்பித்தான். நீண்ட நேரம் ஆகியும் அவன் மேலே வராமற்போனதும், அவள் மிகுந்த பதைபதைப்பிற்கு ஆளாகிவிட்டாள். ஆமை வேண்டாமென்றும் மேலே வரவேண்டுமென்றும் அவள் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூறிக்கொண்டே பைத்தியம் பிடித்தவளைப் போல அவள் நதிக்கரையின் வழியாக ஓடிக்கொண்டிருந்தாள். அவளுடைய கெஞ்சல்களுக்கு பயன் எதுவும் உண்டாகவில்லையென்றாலும், இரண்டு மணி நேரம் கடந்த பிறகு நதியின் மத்தியில் அவன் மேலே வந்தான். அவனுடைய கையில் அந்த பெரிய ஆமையும் இருந்தது. அப்போது அவள் அனுபவித்த நிம்மதியும் சந்தோஷமும் அளவுக்கும் மீறியதாக இருந்தது. எட்டிப் பார்க்க வந்ததற்கு வாலில் ஒரு சிறிய கிள்ளு மட்டும் கொடுத்துவிட்டு, அவள் அந்த திருட்டுப் பிராணியை ஆற்றுக்குள்ளேயே போட்டுவிட்டாள்.

தொந்தரவு கொடுக்க வந்த கொடூர உயிரினங்களை அவன் வெறும் கைகளுடன் சந்தித்தான். அவனை எதிர்த்து நிற்பதற்கு அவற்றுக்கு சிறிதும் பலம் இல்லை. தோல்வியடைந்து ஓடுவதற்குத் தயாராக இல்லாமல் போராடி வீழ்ந்த ஒரு புலியை அவன் ஒருமுறை நெறித்துக் கொன்றான்.

கொடூரமான காற்றும் காட்டு மழையும் எதுவும் செய்ய முடியாத அவன் எல்லா அர்த்தங்களிலும் அவளுக்குப் பாதுகாப்பாளனாக இருந்தான்.

காடு சோர்வைத் தரும்போது, அவர்கள் ஊருக்குள் திரும்பினார்கள். வாழ்க்கையின் பலவிதப்பட்ட சுகபோகங்களையும் வேண்டிய அளவிற்கு அனுபவித்தாலும், கோவிந்தின் மனதிற்குள் ஒரு விருப்பம் மட்டும் அணையாமல் இருந்து கொண்டே இருக்கிறது என்பது ராஜகுமாரிக்குத் தெரியும்.

காடுகளில் இருந்தபோதும், நகரத்தின் தெருக்களில் பயணித்தபோதும் அந்த சிந்தனை அவனை விடாமல் பின் தொடர்வது அதிகமாகி, மன நிம்மதி இல்லாத நிலையில் மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது... "தீவின் சொர்க்க"த்திற்குச் செல்ல வேண்டும் என்ற அந்த பழைய ஆசை, காலம் எவ்வளவு ஆனாலும், வலிமை குறையாமல் அவனைப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

காரணம் என்ன என்று ராஜகுமாரிக்குக்கூட தெரியவில்லையென்றாலும், அவளுக்கு அவனை அங்கு அழைத்துக்கொண்டு செல்வதற்குத் தயக்கமாக இருந்தது.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பவற்றைவிட மிக உயர்ந்ததாகவோ நினைவில் நிற்கக்கூடியதாகவோ எதுவும் தீவில் இல்லை என்று அவனுக்கு மெதுவாகக் கூறிப் புரிய வைக்க முயற்சி செய்தாள். புத்திசாலியான தீருலாலின் இன்னொரு வர்த்தக ஏமாற்று வேலை மட்டுமே தீவு என்றும், இப்போது கோவிந்திற்கு அது முற்றிலும் வெறுப்பைத் தரக்கூடிய இடமாகவே தோன்றும் என்றும் காரணங்களுடன் அவள் கூறினாள்.

எவ்வளவுதான் சொன்னாலும், கோவிந்தின் விருப்பத்திற்கும் முடிவுக்கும் மாற்றம் சிறிதும் உண்டாகவில்லை. புதிய புதிய காட்சிகளிலும் சம்பவங்களிலும் மனதைப் பதியவைத்து அவனுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு செல்வதில் அவள் எப்போதும் மனதைச் செலவழித்தாள். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒரு குழந்தையைப் போல அவற்றில் மூழ்கி விட்டிருந்தாலும், அதற்குப் பிறகு வரும் இடைவெளிகளில் காரணமே இல்லாமல் அவன் அமைதியாக உட்கார்ந்திருப்பதை ராஜகுமாரி கவனித்தாள். "தீவின் சொர்க்க"த்திற்குப் போகவேண்டும் என்ற அவனுடைய பிடிவாதம் முற்றிலும் குழந்தைத்தனம் நிறைந்ததாக இருந்தது.

சில நேரங்களில் அவர்கள் அதைக் கூறி சிறிதாக சண்டைகூட போட்டார்கள். ஆனால், அவனுடைய கோபத்தை மாற்றுவது என்பது அவளைப் பொறுத்தவரையில், சாதாரணமான விஷயமாக இருந்ததால் அப்படிப்பட்ட கவலைப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் நிமிட நேரங்களில் மாறக்கூடியதாக இருந்தன.

அத்துடன் இன்னொரு சந்தேகமும் ராஜகுமாரிக்கு இருந்தது. தீவிற்கு அழைத்துக் கொண்டு போனபிறகு, இப்போது அவனுக்கு தன்மீது இருக்கும் ஆர்வத்திற்கு கேடு விளையுமோ என்பதுதான் அவளுடைய பயமாக இருந்தது. இந்த விஷயத்தில் தீருலாலின் பதைபதைப்புக்கு நிகரான உணர்ச்சிப் போராட்டம்தான் ராஜகுமாரிக்கும் இருந்தது.

அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் வேறு பல பொய்களைக் கூறி, அவள் அவனுடைய வழியை மறிக்க முயற்சித்தாள். கோட்டைக்குள் சென்ற பிறகு, தீருலாலுக்கு எப்படியாவது விஷயம் தெரிந்தால் இருவருக்கும் முடிவு அங்குதான் இருக்கும் என்று கூறி அவள் அவனை பயமுறுத்தினாள். அதைப் பற்றி அவனுக்கு பயம் சிறிதும் இல்லை என்று தெரிந்தவுடன், தீருலால் அவனைப் பிடித்துக் கொண்டு போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று அவள் சொல்லிப் பார்த்தாள்.


அதையும் அவன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனக்கு அங்கு போக வேண்டும் என்ற விருப்பத்தை நாட்கள் அதிகமாக அதிகமாக தினமும் ஒருமுறை அவன் வெளிப்படுத்துவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக ஆகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் போகலாமே என்ற அவளுடைய சமாதானத்திற்கு அவன் சிறிதுகூட விலை கொடுக்கவில்லை. மிகவும் முன்கூட்டியே இருக்கைக்கு முன்பதிவு செய்தால் மட்டுமே தூர எதிர்காலத்திலாவது அங்கு செல்ல முடியும் என்ற அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, அவள் கிண்டலுடன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அத்துடன் தீவு அவனுக்குள் எந்த அளவிற்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒரு கனவாக இருக்கிறது என்பதை அறிந்து உள்ளுக்குள் நடுங்கவும் செய்தாள்.

நீண்டு நீண்டு செல்லும் பயணங்களிலும் இணைச் சேரல்களின் போதும் அவ்வப்போது "தீவின் சொர்க்கம்" சிறிய சிறிய சண்டைகளுக்கும் கவலைகளுக்கும் காரணமாக அமைந்தது.

பல முறை சென்றிருப்பதால் ராஜகுமாரிக்கு தீவைப் பற்றி பெரிய மதிப்பெதுவும் இல்லை. அதுவரை பார்க்காத எதையும் அவன் அங்கு சென்றால் காணப்போவதில்லை என்பதையும், அங்குள்ள விளையாட்டுக்களில் மனதை இழந்து, அவன் அங்கேயே நின்றுவிடப் போவதில்லை என்பதையும், தீருலாலுக்குத் தெரியாமல் அங்கே போய் வருவது என்பது அந்த அளவிற்கு சிரமமான ஒரு விஷயம் இல்லை என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். எனினும், கோவிந்தை அங்கு அழைத்துக் கொண்டு போவதைப் பற்றி நினைக்கும்போது, எண்ணிப்பார்க்க முடியாத ஏதோ ஒரு வகை பயம் அவளை வந்து ஆட்கொண்டது. கடந்துபோன ஏதோ ஒரு நிமிடத்தில் அவனுக்குள் நுழைந்துவிட்ட அந்த ஆசையின் பொறி அவனைப் பொறுத்தவரையில் முக்கியமானது என்ற எண்ணம்தான் அவளை அமைதி இல்லாமல் ஆக்கியது. இதே தூண்டிலில் மாட்டித்தான் தீருலாலும் வைரமும் அவனைத் தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்பதை அவள் புரிந்திருந்தாள். தானும் அதை அதே நிலையில் இருக்க வைத்து நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பதை விட, அவனை தீவிற்கு அழைத்துக் கொண்டு சென்றால், ஒருவேளை கையில் இருக்கும் தூண்டிலை வீசி எறிவதற்கு நிகராக அது ஆகிவிடாதா என்றும் அவளுக்கு கவலை உண்டானது.

தீவை அடைந்தவுடன் கோவிந்தின் எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டு விடுகின்றன என்ற எண்ணத்துடன் இருந்த ராஜகுமாரியின் இன்னொரு பயம், அத்துடன் அவனுடைய திறமைகள் அனைத்தும் இல்லாமல் போய்விடுமோ என்பதுதான்.

எனினும், கோவிந்தின் வற்புறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. குழந்தைத்தனமான பிடிவாதத்துடன் அவ்வப்போது அவன் தன்னுடைய ஆசையைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான்.

வேண்டுமென்றால் தன்னுடைய மாயாஜாலங்களில் சிக்க வைத்து, அப்படியே எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவனை அவனுடைய சிணுங்கல்களைப் பற்றி ஞாபகப்படுத்தாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டு திரிய ராஜகுமாரியால் முடியும். அப்படிச் செய்ய அவளுடைய மனம் அனுமதிக்கவில்லை.

அழைத்துக் கொண்டு போகவில்லையென்றால் அது அவனுக்குச் செய்கிற ஒரு துரோகமாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விருப்பங்களைத் தான் அவனுக்கு முன்னால் வாரி வீசியிருந்தும், அவற்றையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறானே தவிர, தன்னிடம் அவன் இதுவரை மொத்தத்திலேயே இந்த ஒரே ஆசையை மட்டுமே வெளியிட்டிருக்கிறான் என்ற விஷயமும் அவளுடைய மனதில் ஒரு முள்ளாகத் தைத்து, ஒரே நேரத்தில் இன்னொரு உள் வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

தீவுதான் அவனுடைய மிகப்பெரிய இலட்சியம் என்பது தெரிந்தபோதே அவன் எந்த அளவிற்கு குழந்தைத்தனத்துடன் இருக்கிறான் என்று அவளுக்குத் தோன்றியது.

அவன் அந்த ஆசையை மேலும் மேலும் வற்புறுத்திக் கூறக் கூற, அவளுடைய மனதில் இருந்த அவனுடைய உருவத்திற்கு அவளுக்கே தெரியாமல் சிறிது சிறிதாக சிதைவு உண்டாகிக் கொண்டிருந்தது. வீழ்ச்சி மிகவும் வேதனையான விஷயமாகத் தோன்றியதால், மனம் அந்த வழியில் திரும்பத் தொடங்குகிறது என்பதை அறிந்த போதெல்லாம் அவள் போதை இலைகளில் நிம்மதி தேடுவதுதான் எப்போதும் நடந்து கொண்டிருப்பது.

ஒரு இரவு நேரத்தில் நிலவு வெளிச்சம் இருந்த ஒரு பழத்தோட்டத்திற்கு மத்தியில் இருக்கும்போது, தீவிற்குச் செல்ல வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை கோவிந்த் அவளிடம் மீண்டும் கூறினான். அவனுடைய வார்த்தைகளில் புரள ஆரம்பித்திருந்த விரக்தியுணர்வின் வெளிப்பாடு அவளுடைய கண்களில் ஈரத்தை உண்டாக்கியது. நிலவு மறைந்த பிறகு, அழைத்துக் கொண்டு போவதாக நிறைந்த கண்களுடன் ராஜகுமாரி வாக்குறுதி அளித்தாள். நிலவு மறைந்தவுடன், கோவிந்தும் ராஜகுமாரியும் "தீவின் சொர்க்க"த்திற்குப் புறப்பட்டார்கள்.

13. தீவின் சொர்க்கம்

கோவிந்த் தவறாக நினைத்ததைப் போல "தீவு"க்குச் செல்ல வேண்டுமென்றால், பல வருடங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய தேவை எதுவும் இல்லை. பண வசதி படைத்த மனிதர்கள் எப்போது வேண்டுமானாலும் போய் தங்களின் விருப்பப்படி தங்கிவிட்டு வரக்கூடிய ஒரு இடமாக "தீவின் சொர்க்கம்" இருந்தது. பி.ஏ.விடம் "தமாஷ் கோட்டை"க்கு நுழைவுச் சீட்டும் தீவிற்கு ஹெலிகாப்டரில் இருக்கைகளும் பொய்யான பெயர்களில் திருட்டுத்தனமாகப் பதிவு செய்யும்படி கூற வேண்டியதிருந்தது- ராஜகுமாரி அங்கு செல்வதற்காக.

கோட்டைக்குச் செல்லும் கார் பயணத்திற்கு மத்தியில் அருந்ததி மிகவும் கவலையில் இருந்தாள். இது தாங்கள் இருவரும் சேர்ந்து செல்லும் இறுதிப் பயணமாக இருக்குமென்று, காரணம் எதுவும் இல்லாமல் அவளுடைய மனம் கூறிக்கொண்டிருந்தது. காரணமே இல்லாமல் அந்த பயம் எப்படி உண்டானது என்று அவளுக்குக்கூட தெரியாது. எனினும், என்னவோ கையைவிட்டுப் போகப் போகிறது என்பதற்கு முன்னோடியைப்போல, ராஜகுமாரியின் மனம் நிறைய கெட்ட சிந்தனைகளின் கார்மேகங்கள் நிரந்தரமாக வந்து நிறைந்து கொண்டிருந்தன.

ஆனால், அப்படிப்பட்ட சிந்தனைகள் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கோவிந்திற்கு முன்னால் அவள் முழுமையான சந்தோஷம் கொண்ட பெண்ணாக நடந்து கொண்டாள். தன்னுடைய பக்கத்திலிருந்து ஏதாவது தவறுகள் நேர்ந்து, அவனுடைய மனம் வேதனைப்படுவதை அவளால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

கோவிந்த் எப்போதையும்விட சந்தோஷம் கொண்டவனாக காணப்பட்டான். ஒரு நீண்டகாலக் கனவு நிறைவேறப் போகிறது என்பதற்கான சந்தோஷ அடையாளங்கள் அவனுடைய சிரிப்பிலும் பேச்சிலும் வெளிப்பட்டன.

தீருலால் கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீண்டும் ஆள்மாறாட்டம் செய்தார்கள். புதிய ஆடைகளிலும் தோற்றத்திலும் கோவிந்தை ஒரு ஆளுக்குக்கூட அடையாளம் தெரியாது. அருந்ததியோ ஒரு பர்தாவிற்குள் இருந்தாள்.

ஒரு சாயங்கால நேரத்தில் அவர்கள் "தமாஷ் கோட்டை"யை அடைந்தார்கள். கோட்டையின் சூழலுக்கு எங்கேயோ ஒரு குறைவு உண்டாகி இருப்பதைப்போல ராஜகுமாரிக்கு வெறுமனே தோன்றியது.


யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, மாலை நேரத்தில் மேல் நோக்கி எழுந்த ஒரு ஹெலிகாப்டரில் அவர்கள் தீவிற்குப் பயணத்தைத் திருப்பினார்கள்.

மணல் வெளி கடலில் சென்று முடியும் இடத்தில் சூரியன் மறைவதை அவர்கள் வானத்திலிருந்து பார்த்தார்கள். அந்தக் காட்சியைச் சுட்டிக்காட்டி உற்சாகம் உண்டானவளைப் போல அவள் சந்தோஷ சத்தங்களை எழுப்பினாலும், அவளோடு சேர்ந்து ஓசை உண்டாக்காமல் அவன் வெறுமனே சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கோட்டையின் சுற்றுப்புறங்களை அடைந்ததிலிருந்து அவனுடைய நடவடிக்கைகளில் ஏதோ ஒரு விபரீதத்தை வாசனைப் பிடித்த அவளுக்கு அதற்கான காரணத்தையும் கிட்டதட்ட யூகிக்க முடிந்தது.

முன்பு சிலை நின்றிருந்த இடத்தில் இப்போது ஒரு உயரமான காங்கிரீட் தூணை தீருலால் அமைத்திருந்தார். அதன் உயரம், எடை எதையும் மிகவும் சரியாகக் கூற முடியாத அளவிற்கு அந்த பிரம்மாண்டமான தூணை வடித்திருந்தவர் உலகப் புகழ் பெற்ற ஒரு சிற்பி. கோட்டைக்குள்ளே செல்வதற்கு அமைக்கப்பட்ட ஒரு விளம்பரத் தூணைப் போல வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அந்த காங்கிரீட் படைப்பையே கோவிந்த் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை ராஜகுமாரி கவனித்தாள். கேட்டிற்கு அப்பால், சிலை நின்றிருந்த பகுதியில் நின்றுகொண்டு இமைக்காத பார்வையுடன் இருந்த அவலட்சண மனிதனைப் பார்த்தபோதும், அவனுடைய முகம் இருண்டதை அவள் பார்த்தாள். அது வைரம்தான் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவளுக்கும் சிரமமாக இல்லை. புதிய காங்கிரீட் தூணும், வைரத்தின் பசித்து அலைந்து கொண்டிருந்த கண்களும் அவனுடைய உற்சாகத்தைச் சற்றுக் குறைத்திருக்கின்றன என்ற அவளுடைய கணக்கு கூட்டல் கிட்டத்தட்ட சரியாகவே இருந்தது.

இரவில் அவர்கள் தீவில் பறந்து வந்து இறங்கினார்கள். கடற்கரையில், கடலைப் பார்த்தவாறு நின்றிருந்த பிரம்மாண்டமான ஹோட்டல் காம்ப்ளெக்ஸில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அற்புதமான அறையில் அவர்கள் உறங்கினார்கள்.

உறங்கிக் கண்விழித்து தீவின் காட்சிகளைப் பார்க்கத் தொடங்கியவுடன், முந்தைய நாளின் மௌனம் முழுமையாக கோவிந்தை விட்டு நீங்கிச் சென்றதைப் பார்த்து அருந்ததிக்கு மனதில் நிம்மதி உண்டானது.

"தமாஷ் கோட்டை"யின் சிறப்புக் காட்சிகள் இதற்கு முன்பு முற்றிலும் "ஒன்றுமே இல்லை" என்று கூறக்கூடிய அளவிற்கு உயர்ந்த விஷயங்களை தீருலால் தீவில் உண்டாக்கிவிட்டிருந்தார். கடலுக்கு நடுவில் தனியாக இருக்கும் ஒரு சிறிய தீவில்தான் தாங்கள் இருக்கிறோம் என்ற தோணல் அங்கு வந்திருப்பவர்களின் மனதில் எப்போதும் நிறைந்திருக்கத்தக்க விதத்தில்தான் பொதுவாக அங்குள்ள எல்லா விஷயங்களும் இருந்தன. மறைவோ கட்டுப்பாடோ இல்லாத சூழலில் சிந்தனை தவறிய பயணிகள் தடுமாறி நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களாக இருந்தார்கள். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதிகம் யாரையும் அப்படி ஒருவரையொருவர் சந்திக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை தீருலால் அங்கு திறமையாகச் செய்திருந்தார்.

தீவைச் சுற்றியிருந்த கடலுக்கு ஆழம் மிகவும் குறைவு. அதனால் அலைகளுக்கு அசுரத்தனம் சிறிதும் இல்லாமலிருந்தது. ஏரியில் இருக்கும் நீர் வளையங்களைப்போலவே கோவிந்திற்கு அவை தோன்றின. அடித்தளம் வரை பார்க்க முடிகிற கண்ணாடி போல தெளிவாக இருந்த அந்த நீரில், எப்போதும் யாராவது வண்ண மீன்களுடன் சேர்ந்து நீந்திக் கொண்டிருந்தார்கள். கடலில் சுற்றியடிப்பதற்கான பல வகைப்பட்ட நீர் வாகனங்களும் சிறிய கப்பல்களும் விருப்பம்போல இருந்ததால், பயணிகள் பலரும் கரையை விட அதிகமான நேரத்தைக் கடலில்தான் செலவிட்டார்கள். அவர்கள் எழுப்பும் உற்சாகம் நிறைந்த சத்தங்களும் இனிமையான இசையும் காற்றில் எப்போதும் நிறைந்திருந்தன.

கடல், கோவிந்திற்குள் இனம் புரியாத சந்தோஷத்தைக் கொண்டு வந்து நிறைக்கும் விஷயத்தை ராஜகுமாரி கவனித்தாள். பாய் கட்டப்பட்ட படகில் அவன் அவளை உட்கார வைத்து கடலுக்குள் செலுத்திச் சென்றான். கடலில் பயணம் செய்யும்போது, அது உள்ளே இழுப்பதும் சிறு சிறு சுழல்களும் அவனைப் பொறுத்த வரையில் சிறு குழந்தைகளின் விளையாட்டுக்களாக மட்டுமே இருந்தன.

தென்னை மரங்கள் தவிர, தீவில் இருந்த தாவரங்கள் அனைத்தும் சேர்ந்து அருமையான ஒரு சிறு காட்டினை அங்கு உருவாக்கிவிட்டிருந்தன. பலவிதப்பட்ட வண்ணங்களைக் கொண்ட இலைகள் உள்ள ஒரு இனம் சிறிய ஜாதி மரங்களைக் கூட்டமாக வளர்த்து நிறுத்தி அப்படிப்பட்ட காடுகள் உண்டாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு வாசனைக் கொண்ட அந்த இலைகளின் சரியான பெயரோ இனமோ யாருக்கும் தெரியவில்லை. பலரும் அவற்றைப் பல பெயர்களில் அழைத்தார்கள். நிலவின் காலமாக இருந்ததால், அந்த வெளிச்சத்திற்கு மத்தியில் காற்று வீசும் இரவுகள் இதயத்தை மகிழ்ச்சிப்படுத்தின.

"தீவின் சொர்க்கம்" கோவிந்தின் மனதில் நினைத்திருந்த அளவிற்கு உயர்ந்ததாக இருந்திருக்குமா என்று அவள் பயப்பட்டாள்.

எந்த புதிய இடத்திற்குச் சென்று தங்கினாலும் அவனுக்குள் இருக்கும் ஆசைகள் முதல் முறையாக எழுவதைப்போலவே இதுவும் இருக்கும் என்று சமாதானப்படுத்திக் கொள்ள அவள் முயற்சித்தாள். நாட்கள் கடந்து செல்லச் செல்ல, அவனுக்குள் இருக்கும் ஆர்வம் சற்று குறைந்து குளிரத் தொடங்குமென்றும், ஒருநாள் திரும்பிப் போக அழைக்கும்போது, முன்பு எப்போதும் நடந்துகொண்டதைப்போல அவன் அவளுடன் சேர்ந்து புறப்படத் தயாராக இருப்பான் என்றும் அவள் நம்பினாள்.

ஆனால், அவளுடைய கணக்கு கூட்டல்கள் தவறு என்பதாகக் காட்டிக் கொண்டு, புதிய ஒரு ஆர்வம் அவனை வந்து ஆட்கொண்டது.

தீவின் தெற்கு மூலையில் ஷிப்யார்டையும் தாண்டிச் சென்றால், பவளப் புற்றுகளின் உலகம்தான். வெயில் வரும்போது எண்ணற்ற நிறங்கள் ஒளிர ஆரம்பிக்கும் அந்த பகுதி கோவிந்திற்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கு நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு இரவு வேளையில் அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த ஒரு புதரின் மறைவில் உட்கார்ந்து கொண்டு கடலைப் பற்றிய அவனுடைய சந்தேகங்களுக்கு அவள் பதில்களைக் கூறிக் கொண்டிருந்தாள்.

கடலுக்கு அடியில் போனால் பார்க்க முடிகிற காட்சிகளைப் பற்றியுள்ள அவளுடைய திறமையான தகவல்களைக் கேட்ட அவன், அங்கு வரை சென்று வர வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிட்டான்.

அனுமதித்தால் அங்கு போய் விடுவான் என்று உறுதியாகத் தெரிந்ததால், முதலில் அவள் அந்த ஆசைக்கு சம்மதிக்கவில்லை. கடலுக்குக் கீழே போனால் உண்டாகக்கூடிய ஆபத்துக்களைப் பற்றிக் கூறி அவள் அவனை பயமுறுத்தப் பார்த்தாள். எல்லா முயற்சிகளும் வீணானபோது, வற்புறுத்தலைத் தாங்க முடியாமல் அவள் அவனை ஒரு முறை மட்டும் போய் வருவதற்கு சம்மதித்தாள்.


கடலில் மூழ்கத் தொடங்குவதற்கு முன்னால் அவள் அவனிடம் எப்போது திரும்பி வருவான் என்று கேட்டாள். அதற்கு பதிலாக சூரியன் உதயமாவதற்கு முன்னால் எது எப்படி இருந்தாலும் தான்

அங்கு வந்து விடுவதாகக் கூறிவிட்டு, அவன் வேகமாகக் கடலுக்கு அடியில் சென்றான்.

தெளிந்த நீர்ப்பரப்பில் அவனை சிறிது தூரம் வரை அவளால் பார்க்க முடிந்தது.

அந்தக் காத்திருத்தல் அவன் கூறியதைப் போல, பொழுது புலரும் வரை நீண்டது. ஆமையைப் பிடிப்பதற்காகச் சென்ற கதை ஞாபகத்தில் இருந்ததால், அவளுக்கு அவனைப் பற்றி அந்த விதத்திலுள்ள பயமான எண்ணங்கள் எதுவும் உண்டாகவில்லை. எனினும், தன்னை விட்டுப் பிரிந்து அவன் இவ்வளவு நேரம் இருக்க முடிகிறதே என்பதை நினைத்து அவளுடைய கண்கள் நிறைந்தன. சூரியனுடன் அவனும் கடலில் உதித்து வந்தபோதுதான் அந்தக் கொடுமையான இரவுக்கு முடிவு உண்டானது.

மறுநாள் பகல் முழுவதும் அவனுக்கு கடலின் உட்பகுதியைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பதற்கே நேரம் இருந்தது. பல்வேறு நிறங்களிலும் வடிவங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும் மீன் கூட்டங்களைப் பற்றியும் கடல் தாவரங்களைப் பற்றியும் உயிரினங்களைப் பற்றியும் அவன் மிகுந்த ஆர்வத்துடன் அவளுக்கு விளக்கிச் சொன்னான். பல அளவுகளிலும் இருந்த கடல்வாழ் உயிரினங்களுடன் உண்டான பல வகைப்பட்ட தமாஷான சம்பவங்களை அவன் கூறினான். தீவிலிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு மூலையின் கடல் பகுதியைச் சுட்டிக் காட்டி, அந்தப் பகுதியில் தான் ஒரு கூட்டம் நீர்க் கன்னிகளைப் பார்த்ததாக அவன் சொன்னதும், அவளுக்குத் தன்னை அறியாமல் ஒரு பொறாமை உண்டானது. அளவெடுத்தாற்போல் இருந்த அந்த அழகிகளில் சிலர் அருகில் வந்து தன்னைத் தொட்டுப் பார்த்த கதையை அவன் கூறத் தொடங்கியபோது, வேறு எதையோ கூறி அவள் விஷயத்தை மாற்றினாள்.

அந்த அழகிகளால் சிறிதுகூட அவனைக் கவர்வதற்கு முடியாது என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்ள அவள் முயன்றாள்.           மறக்க விரும்பிய ஒரு அனுபவம் மீண்டும் திரும்ப வருவதைப் போல மறுநாள் இரவிலும் நிலவு உதித்தபோது அவன் கடலுக்குப் போவதற்கான தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டான். அது நிலை கொள்ளாத தன்மையாக அவனிடம் படர ஆரம்பிக்கும் என்று உறுதியாக நினைத்த ராஜகுமாரி, வேறு வழியில்லாமல் அன்றும் அதற்கு அனுமதி கொடுத்தாள்.

அந்த முறையும் இரவு முடிந்த பிறகே அவன் திரும்பி வந்தான். இந்த முறை அவனுடைய கை நிறைய கடலுக்கடியிலிருந்து சேகரித்த முத்துக்களும் பவளங்களும் இருந்தன. அவற்றில் சில விலை மதிக்க முடியாதவை என்பதை அவள் உணர்ந்தாள்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுவாக சந்தோஷப்பட வேண்டிய ராஜகுமாரிக்கு இப்போது அதில் குறிப்பாக மகிழ்ச்சி எதுவும் உண்டாகவில்லை. ஏற்கெனவே சற்று சோர்வு உண்டாகியிருந்த அவளுடைய மனதை, கடலுக்கு அடியில் இருக்கும் உலகத்தின்மீது அவன் காட்டும் மோகம் மேலும் அதிகமான வெறுப்பை உண்டாக்கியது. பார்த்த காட்சிகளைப் பற்றி அவன் தன்னையே மறந்து விளக்கி கூறும்போது, ஒட்டாத மனதுடன் அவள் அவற்றை "உம்" கொட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.

கடலின் அழைப்பை கோவிந்தைப் பொறுத்தவரையில் தற்காலிகமாக கண்டு கொள்ளாமல் இருப்பது சிரமமானது என்பதை அவள் உணர்ந்தது, அன்று பிற்பகலில் இருந்தே அவன் மீண்டும் அங்கு போக வேண்டும் என்று கூற ஆரம்பித்தபோதுதான். அவனைப் பிரிந்திருப்பதில் இருக்கும் கஷ்டத்தை நினைத்து அவள் அதை எதிர்த்தாள். பகல் வேளைகளில் கடலுக்கு அடியில் தீருலாலின் கடலுக்குக் கீழே பயணம் செய்யும் வாகனங்கள் பரிசோதனைக்காக ரோந்து சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், அவர்கள் எப்படியாவது பிடித்துக்கொண்டு போனால், இரண்டு பேரின் திருட்டுத்தனமும் வெளியே வந்துவிடும் என்றும் கூறி, மாலை வரை அவள் அவனைப் பிடித்து நிறுத்தினாள். நிலவு வந்தவுடன், அவன் மீண்டும் கடலுக்குள் போய் மறைந்துவிட்டான்.

கடலுக்கு அடியில் உள்ள பகுதியின்மீது கொண்ட இந்த மோகம் அடங்காமல் அவன் தீவை விட்டுப் போகப் போவதில்லை என்பதும், ஒரு வேளை இதன் மூலம்தான் தான் அவனை இழக்கப் போகிறோம் என்பதும் அருந்ததிக்குத் தெரிந்தது. அந்தத் தோணல் அவளை வேதனை கொள்ளச் செய்தது.

மறுநாள் பகலில் அவர்கள் ஒரு கடற்கரை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

பயணிகளுக்கு கிட்டத்தட்ட நிர்வாணமாக மட்டுமே இருக்க அனுமதியுள்ள புகழ் பெற்ற கடற்கரை அது. யாரும் யாரையும் கவனிக்காமல் இன்பச் செயல்களில் ஈடுபட்டிருந்த அந்தப் பகுதியில் இசை, ஒலிபெருக்கி ஆகியவற்றின் ஒரு வகையான தொல்லை எதுவும் இல்லாததால், எல்லா நேரங்களிலும் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. எல்லாரும் தங்களுடைய செயல்களில் மட்டுமே மூழ்கியிருந்த அந்த கடற்கரையில் வீசிய காற்றிற்கு அதனால் ஒரு மென்மைத் தன்மை வந்து சேர்ந்திருந்தது. இரண்டு மூன்று நாட்களாக துன்பப்படுத்திக் கொண்டிருந்த கவலைகளை மறைத்துக்கொண்டு, சாதாரண விஷயங்களைக் கூறி அவனை சந்தோஷப்படுத்த முயற்சித்தவாறு ராஜகுமாரி அவனுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் "உம்" கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாலும், அவனுடைய சிந்தனையும் நினைப்பும் வேறு ஏதோ உலகத்தில்தான் இருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

கடற்கரையில் கடல் காகங்கள் சத்தம் போட்டவாறு பறந்தன.

எதிரில் நடந்து வந்த மூன்றாவது மனிதர் அவர்களை கவனிக்க ஆரம்பித்த விஷயத்தை கோவிந்தோ ராஜகுமாரியோ அந்த நேரத்தில் அறிந்திருக்கவில்லை.

கடற்கரையில் காய்ந்து கொண்டிருந்த வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சூரிய கண்ணாடி அணிந்திருந்த அந்த மனிதர், அவர்கள் அருகில் வந்ததும், வழியை மறிப்பதைப் போல முன்னால் வந்து உறுதியுடன் நின்றார்.

அப்போதுதான் அவர்கள் அவரைப் பார்த்தார்கள். அவர்கள் இருவரையும் காலிலிருந்து தலைவரை பார்த்து, ஆச்சரியப்பட்டு, அனைத்து சக்திகளையும் இழந்துவிட்டதைப் போல நின்றிருந்த அந்த மனிதர்- தீருலால்தான்.


14. பிரிவு

தீருலாலை அப்படி அப்போது அங்கே சந்தித்த விஷயம், ராஜகுமாரியைப் பொறுத்த வரையில் சிறிதுகூட எதிர்பார்க்காத ஒன்று என்று கூறுவதற்கில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் இப்படிப்பட்ட ஒரு சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் இங்கே இருக்கும்போது நடக்கலாம் என்று நாட்கள் நீண்டு கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவளுக்குத் தோன்ற தொடங்கியிருந்ததுதான். அதனால்தான் அவளுக்கு பயமோ அதிர்ச்சியோ எதுவும் உண்டாகவில்லை. பயம் என்றால் என்னவென்று தெரியாததால், கோவிந்திடமும் குறிப்பிட்டுக் கூறும் வகையில் உணர்ச்சி வேறுபாடு தெரியவில்லை.

தீருலாலும் அவர்களிடமிருந்து பயத்தையும் அழுகையையும் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. அவர் அவனுடைய முகத்தையும் பிறகு கண்களையும் நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். பல வருடங்களாகப் பார்த்திருந்த அந்தக் கண்கள் தன்னுடைய சிலைக்குச் சொந்தமானவைதான் என்பதை அறிந்துகொள்வதற்கு அவருக்கு சிரமமாக இல்லை. தெரிந்து கொண்டதைவிட ஒரு வகையான சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்வது தான் அவரைப் பொறுத்த வரையில் அந்தப் பார்வைக்கு அர்த்தம். சிலையை விட்டுக் கண்களை எடுத்த அவர் ராஜகுமாரியைப் பார்த்தார். முகத்தில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றங்கள் வரவழைக்கக் கூடிய ராஜகுமாரியை முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிப்பதற்கு யாருக்கும் சிரமமான விஷயம் என்பதால், தீருலாலுக்கும் அது அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை. ஆனால், ஞாபக சக்தி விஷயத்தில் தேர்ந்த மனிதரான அவருக்கு அவளுடைய உடலமைப்பைக் கண்டவுடன், அது ராஜகுமாரிதான் என்ற உறுதியான முடிவு கிடைத்துவிட்டது.

எதிர்பாராமல் சந்தித்த பழைய நண்பர்களைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அழைக்கும் வீட்டுச் சொந்தக்காரரைப் போல இருந்தன, தீருலாலின் அதற்குப் பிறகு இருந்த நடவடிக்கைகள். மிகுந்த சந்தோஷத்தின் அணை உடைந்து பெருக்கெடுத்து ஓடியது. அவர் சிலையின் கால்களில் விழுந்து வணங்கினார். தான் செய்த எல்லா தவறுகளையும் மன்னிக்க வேண்டுமென்றும், சிலையை எதிர்பாராமல் சந்தித்த இந்த நாள், தன்னைப் பொறுத்த வரையில் இன்னொரு முக்கியமான திருப்புமுனை கொண்டது என்றும், வீழ்ச்சியில் இருந்த தன்னுடைய வாழ்க்கை என்ற கொடி இன்று முதல் மீண்டும் மலர்களை மலரச் செய்ய போகிறது என்றும் பலமுறை கடவுளை அழைத்துக்கொண்டிருப்பதற்கு மத்தியில் விளக்கிச் சொன்னார். ராஜகுமாரியைப் பார்த்தும் வணங்குதலும் மன்னிப்பு கேட்டலும் நன்றி கூறலும் நடந்தன. ஏதோ கெட்டவர்களான அரக்கர்கள் திருடிக்கொண்டு சென்ற சிலையை அங்கிருந்து யாரோ காப்பாற்றிக் கொண்டு போனார்கள் என்று தான் கேள்விப்பட்டிருந்தாலும், அந்த நல்ல செயலைச் செய்தது ராஜகுமாரிதான் என்ற விஷயம் இதுவரை தனக்குத் தெரியாது என்று கூறிய அவர் அவருடைய தைரியத்தையும், அளவற்ற இரக்க குணத்தையும், இதர நல்ல விஷயங்களையும் பெருக்கிப் பெருக்கி வாழ்த்தினார். அவர்கள் வந்ததால், தன்னுடைய தீவு புனிதமாகியிருக்கிறது என்றும் கூறி, இன்று முதல் ஒன்றிரண்டு நாட்களாவது தன்னுடைய விருந்தாளிகளாக அவர்கள் அங்கு இருக்க வேண்டுமென்றும் அவர் கெஞ்சி கேட்டுக் கொண்டார். முந்தியவர்களில் முந்தியவர்கள் மட்டும், தீருலாலின் நேரடியான தெரிதலுடனும் சம்மதத்துடனும் தங்கக்கூடிய, வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் விருந்தினர் மாளிகைக்கு மாறிப் போய் தங்க வேண்டும் என்ற அவருடைய வேண்டுகோள் அவர்களிடம் குறிப்பிட்டுக் கூறும் வகையில் அச்ச சிந்தனைகள் எதையும் உண்டாக்கவில்லை.

அவர்களுடைய மனதை மாறச் செய்வதற்காக தன்னுடைய விருந்தினர் மாளிகையின் சிறப்பு அம்சங்களை தீருலால் அடுத்தடுத்து கூறத் தொடங்கினார். பதினேழு மாடிகளைக் கொண்ட அந்த உயரமான கட்டிடத்தில் மொத்தமே பதினேழு பேர்தான் தங்கியிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். ஒவ்வொரு மாடியும் ஒவ்வொரு ஆளுக்கு. தன்னுடன் வந்து அந்த இடத்தைப் பார்த்துவிட்டால், பிறகு அவர்கள் அங்கேயே தங்குமிடத்தை மாற்றிக் கொள்வார்கள் என்று அவர் உறுதியான குரலில் சொன்னார். அங்குள்ள ஜன்னல்கள் வழியாக தெரியும் அற்புதக் காட்சிகளைப் பற்றிக் கூறி அவர் அவர்களுடைய மனதை மாற்றுவதற்கு முயற்சித்தார்.

ஆனால், தீருலாலின் புத்திசாலித்தனத்தைப் பற்றி தன்னுடைய சொந்த அனுபவங்களின் மூலம் நன்கு தெரிந்திருக்கும் ராஜகுமாரி அவருடைய வேண்டுகோளை ஒரேயடியாக நிராகரித்து விட்டாள். இப்போது தங்கியிருக்கும் ஹோட்டல் காம்ப்ளெக்ஸே சொர்க்கத்திற்கு நிகராக இருக்கிறது என்றும், அங்கிருந்து இனியொரு மாறுதலை தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறி அவள் அந்த திசையை நோக்கி இருந்த அவருடைய உற்சாகத்தை அணைத்துவிட்டாள். என்றாலும்கூட, தீருலாலின் சொந்த விருந்தாளிகள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய வேறு சில வசதிகளை விருப்பம் போல அனுபவித்துக் கொள்ள தயார் என்றும் அவள் சொன்னாள்.

நட்புணர்வுடன் நடந்த அந்த சந்திப்பு, போவதற்கு முன்னால் ஒரு நாளாவது தீருலாலின் வானத்தை முத்தமிடும் விருந்தினர் மாளிகையில் அவருடைய விருந்தாளிகளாக காலை நேர உணவிற்கோ இரவு உணவிற்கோ அவர்கள் வர வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.

தீருலால் அவர்களுக்கு முன்னால் பரிமாறிய வார்த்தை விருந்தில் ஒரு விஷயம் மட்டும் உண்மை. சிலையுடன் உள்ளது ராஜகுமாரிதான் என்ற விஷயம் அவருக்கு நேரில் பார்த்தபோது மட்டுமே தெரிந்தது.

முகத்தைப் பார்த்து அருந்ததியை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு முற்றிலும் வேறு மாதிரி தெரியும் வண்ணம் அவள் தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்கி வைத்திருந்தாள். இப்போது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். பிறந்த மேனியுடன் பார்க்க முடிந்ததால் மட்டுமே, உடலின் வளைவுகளை வைத்து, ஆளை அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தபோது, முன்பு சிலைக்கும் ராஜகுமாரிக்கும் இடையே போட்டி நடைபெற்ற நாளன்று சாயங்கால நேரத்தில், இறுதியான ஜால வேலையாக தன்னுடைய உடலை வேண்டுமென்ற அளவிற்கு வெளியே காட்டிக் கொண்டு இறங்கி வந்த அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது எந்த அளவிற்குப் பயனுள்ள ஒன்றாக ஆகிவிட்டது என்பதை நினைத்து தீருலால் மகிழ்ச்சியடைந்தார்.

சொந்தத்தில் ரேடார்களும் க்ளோஸ் சர்க்யூட் ஏற்பாடுகளும் வேறு தொலைத்தொடர்பு சாதனங்களும் வைத்திருந்தாலும், அவர்கள் தீவிற்குள் வந்து இரண்டு நாட்கள் கடந்த பிறகுதான் கால் முதல் தலை வரை பரபரப்புடன் தீருலால் அந்தச் செய்தியை அறிந்தார். வேறு யாரும் கூறி அல்ல; நேரடியாகப் பார்த்து தெரிந்து கொண்ட விஷயமது.

தீவில் தங்கியிருப்பவர்களின் ஒவ்வொரு அசைவையும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டக்கூடிய அளவிற்கு வசதிகள் இருந்ததால் மட்டுமே அவரால் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. என்றோ எங்கோ தன்னுடைய அறிவில்லாமையால் கையை விட்டுப்போன சிலை, ஒரு அழகியுடன் சேர்ந்து தன்னுடைய தீவின் சொர்க்கத்தில் வந்து தங்கியிருக்கும் காட்சியை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனினும், மனதில் பதிந்திருந்த சிலையின் கண்கள் வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பிய தீருலாலிற்கு மிகவும் அருகில் பார்த்ததும், ஆள் அதுதான் என்பது புரிந்துவிட்டது.

வெளியே கூறினால் பூகம்பமே உண்டாகிவிடும் என்று உறுதியாகத் தெரிந்ததால், அவர் அந்த விஷயத்தை ஒரு ஆளிடமும் வாய் திறக்கவில்லை.

சிலை, அதன் சினேகிதி இருவரின் அனைத்து நடவடிக்கைகளையும் எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருந்த தீருலாலிற்கு அவர்களுக்கிடையே நடப்பவை ஒவ்வொன்றையும் பார்க்க முடிந்தது.


அவனுடைய கடல் பயணம் அவளை மிகவும் வேதனை கொள்ளச் செய்கிறது என்பதையும் ஒவ்வொரு நாள் கடக்கும்போதும் அவர்களுக்கிடையே இருக்கும் நெருக்கத்திற்கு எங்கேயோ விரிசல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் கூர்மையான அறிவு கொண்ட அவர் புரிந்து கொண்டார். அந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மாறாக அடிப்பதற்கும் கொல்வதற்கும் நின்று கொண்டிருக்கக் கூடாது என்று அவர் தீர்மானித்தார். எது எப்படி இருந்தாலும், தன்னுடைய அனுமதியோ அறிவோ இல்லாமல் இனி அவர்கள் தீவை விட்டுப் போக முடியாது என்று முட்டாளான அவர் உறுதியாக நம்பினார். அதனால்தான் மெதுவாகக் காயை நகர்த்தினால் போதும் என்று அவர் நினைத்தார்.

தீருலால் தங்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார் என்பது தெரிந்ததிலிருந்து அருந்ததிக்கு எவ்வளவு சீக்கிரம் இந்த இடத்தைவிட்டு போகிறோமோ, அந்த அளவிற்கு நல்லது என்றாகிவிட்டது. இனி இங்கு செலவிடும் ஒவ்வொரு நாளும் ஆபத்து நிறைந்ததாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. கோவிந்த் தன்னுடன் இருப்பதால், ஒரு எதிரியாலும் தங்களை எதுவும் செய்ய முடியாது என்று உறுதியாகத் தெரிந்திருந்தாலும், வேறு ஏதோ வகைப்பட்ட ஆபத்தின் அறிகுறியாக அவள் அந்த மனிதருடன் உண்டான மறு சந்திப்பைக் கருதினாள்.

ஆனால், கோவிந்திடம் திரும்பிச் செல்வதற்கு சிறிதுகூட வேகம் தெரியவில்லை. புதிய அறிவுகளையும் பவளங்களையும் கடந்து வரும் இரவுகள் அவனைப் பைத்தியம் பிடிக்கச் செய்தன. கட்டாயப்படுத்திக் கூறினால், அவன் உடனே வந்துவிடுவான் என்பது தெரிந்திருந்தும்கூட, அப்படிச் செய்ய ராஜகுமாரிக்கு மனம் வரவில்லை. முதல் காரணம் - அவனுடைய சந்தோஷத்தை குத்திக் கெடுக்க அவளால் முடியாது. போதாதற்கு, அவன் தன் கையை விட்டுப் போகப் போகிறான் என்றொரு தோணல் இதற்கிடையில் அவளுடைய மனதிற்குள் வேரோடி விட்டிருந்தது.

அந்த பயத்திற்கு முற்றிலும் காரணம் இல்லாமல் இல்லை என்பதையும் கூறியாக வேண்டும்.

சிலை திறப்பு விழா நாளன்று அவனை முதல் முறையாக அடையாளம் கண்டு கொண்ட நிமிடத்தில் அனுபவித்த மறக்க முடியாத இனிய நினைவை தாண்டுவதற்கு அதற்குப்பிறகு அவன் உண்டாக்கிய இனிய நினைவுகளால் முடியவில்லை என்பதுதான் உண்மை. அதிகமாகத் தெரியத் தெரிய, அவனிடம் முதலில் தோன்றிய வழிபாடும் பைத்தியமும் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டு வந்திருக்கிறது என்ற உண்மை அவளுக்காவது உள்ளுக்குள் தெரிந்திருந்தது. கடலின் அடிப்பகுதியைப் பார்ப்பதற்காகப் போனால், அதற்கு முடிவே இருக்காது என்பதை உறுதியாகத் தெரிந்திருந்த ராஜகுமாரிக்கு, அதனால்தான் அவனுடைய நீண்டு நீண்டு போகும் இல்லாத நிமிடங்கள், வரப்போகும் தவிர்க்க முடியாத பிரிவிற்கான அறிகுறியாகத் தோன்றினால், அது இயல்பான ஒன்றே.

இரண்டு பேரும் சேர்ந்திருந்த இரவுகள் மிகவும் கவலைப்படக் கூடியதாக இருந்தன. அவை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதை அறிந்த ராஜகுமாரியின் மனதில், பலவிதப்பட்ட அச்சம் நிறைந்த சிந்தனைகளும் குடியேற ஆரம்பித்தன. தனியாக இருக்கும் இரவு வேளைகளில் தான் தூக்கி எறியப்பட்டுவிட்டவள் என்ற தோணல் அவளை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. அவன் இல்லாமலும் தனக்கு இரவைக் கழிக்க முடிகிறது என்ற புரிதல் அவளை ஆச்சரியப்பட வைத்தது. அத்துடன் என்றோ ஓட ஆரம்பித்த விரிசலுக்கான வேர்களுக்கு அசாதாரணமான வேகத்தில் பலம் உண்டாவதையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜகுமாரியின் உள்மனதைப் படித்துக் கொண்டிருந்த தீருலால், அவன் இல்லாத அவளுடைய தனிமையான வேளைகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அந்த வழியில் காய்களை நகர்த்தினார்.

நிலவு ஒளிர ஆரம்பித்த இரவுகள் ஒன்றில் கோவிந்த் கடலுக்குப் போயிருக்கும் நேரம் பார்த்து தீருலால் ராஜகுமாரியைத் தேடி வந்தார்.

புத்திசாலியான அவளிடம் நிறைய வாய்சவடால் அடிப்பதால் பிரயோஜனமில்லை என்பது தெரிந்திருந்ததால், மரியாதை வார்த்தைகளுக்கும் நலம் விசாரிப்புகளுக்கும் பிறகு அவர் தான் வந்த நோக்கத்தை வெளியிட்டார்.

அவருக்கு ராஜகுமாரி சிலையைத் திருப்பித் தரவேண்டும். எந்தவொரு உரிமைகளும் கோராமல் முற்றிலும் ஒரு வேண்டுகோள் வடிவத்திலேயே அவர் அந்த தேவையை வெளியிட்டார்.

தன்னுடைய அனைத்து புகழ்களுக்கும் செல்வங்களுக்கும் சிலைதான் காரணம் என்றும், அது தனக்கு இல்லாமற் போனவுடன் தன்னுடைய நிறுவனத்திற்கு மதிப்பு குறைந்துவிட்டது என்றும் அவர் பரிதாபம் வெளிப்படும் குரலில் அவளிடம் சொன்னார். ராஜகுமாரியின் கையிலிருந்து இனியொரு ஆளின் கைக்கு அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்பு பெரிதானது என்றும், அதற்கான நேரம் வந்துவிட்டது என்று தனக்கு தோன்றுகிறது என்றும், அப்படி ஏதாவது நடப்பதற்கு முன்னால் அதை தன்னுடைய கையில் திருப்பித் தந்தால் பத்திரமாகத் தான் காப்பாற்றிக் கொள்வதாகவும், தன்னுடைய கையில் இருப்பது ராஜகுமாரியின் கையில் இருப்பதற்கு சமமானதே என்றும், எப்போது வேண்டுமானாலும் அவள் அவனை வந்து பார்க்கவோ தன் விருப்பப்படி அழைத்துக் கொண்டு செல்லவோ செய்யலாம் என்றும் அவர் உண்மை வழியும் முக வெளிப்பாட்டுடன் அவளிடம் சொன்னார்.

ராஜகுமாரி பதிலெதுவும் கூறாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

எதிர்பார்த்ததைப்போல வார்த்தைகளை உதிர்க்கவோ கோபத்தை வெளிப்படுத்தவோ அவள் செய்யவில்லை என்பதைக் கண்டதும், மற்றவர்களின் இதயத்தைப் படிக்கக்கூடிய தீருலால் அடுத்த அடியை எடுத்து வைத்தார்.

சிலையை தனக்கு விட்டுத் தந்தால், அதற்குப் பரிசாக அவர் ஒரு பெரிய தொகையைத் தருவதாகக் கூறினார். அதைக் கேட்டு அவளுடைய இமை கூட அசையவில்லை என்பதைப் பார்த்த அவர், தொகையின் அளவைச் சிறிது சிறிதாகக் கூட்டினார். எனினும், அவளிடம் சலனம் எதுவும் இல்லாமலிருப்பதைப் பார்த்ததும்- அதுவரை தருவதாக வாக்களித்த கோடிகள் இல்லாமல், "தீவின் சொர்க்க"த்தையும் ராஜகுமாரிக்கு விட்டுத் தருவதாகக் கூறினார். விலைமதிக்க முடியாத மிகப்பெரிய சொத்தான தீவை விட்டுத் தருவது தன்னுடைய இதயத்தின் ஒரு பகுதியைப் பறித்து கொடுப்பதற்குச் சமமானது என்றாலும் தான் அதைச் செய்வதற்குக் காரணம், சிலை தனக்கு எந்த அளவிற்குப் பிரியமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்குத்தான் என்று தீருலால் சொன்னார்.

அப்போது நேரம் வெளுக்க ஆரம்பித்தது.

அவருடைய பரிதாபமான புலம்பல்கள் முழுவதையும் மிகவும் கவனமாக கேட்ட ராஜகுமாரி, தனக்கு அவருடைய மனதைப் படிக்க முடிகிறது என்றும் அவருடைய பரிதாபமான நிலையை உணர முடிகிறது என்றும் ஒப்புக் கொண்டாள். அவருடைய வேண்டுகோளுக்கான பதிலை அடுத்த நிலவு வரும்போது கூறுவதாக அவள் வாக்கு கொடுத்தாள்.

அந்தப் பகல் முழுவதும் ராஜகுமாரியின் மனம் குழப்பத்திலேயே இருந்தது. பலவிதப்பட்ட சிந்தனைகளும் அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தன. ஏற்கெனவே பிரச்சினைகள் நிறைந்திருந்த அவளுடைய மனதில் தீருலாலின் அளவுக்கு மீறிய வாக்குறுதிகள் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஆகிவிட்டது.


இன்னொரு ஆளின் கைக்கு அவன் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற தீருலாலின் வார்த்தை ஒரு இடியைப் போல அவளுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தன.

அழகிகளான நீர்கன்னிகளைப் பற்றி ஏற்கெனவே அச்சம் நிறைந்த எண்ணங்களுடன் இருந்த ராஜகுமாரிக்கு, அப்படி ஏதாவது நடந்து அவன் நிரந்தரமாக தன்னிடமிருந்து கடலின் அடிப்பகுதிக்குப் போய்விடுவான் என்பதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அவளுக்கு சக்தி இல்லாமலிருந்தது.

எந்த விதத்திலும், அவனை தீருலாலின் கையில் ஒப்படைப்பதுதான் மிகவும் சரியான செயலாக இருக்கும் என்ற ஒரு தீர்மானத்திற்குத்தான் நீண்ட நேரம் சிந்தித்த பிறகு அவள் வந்தாள். முதலில் பார்த்த மனிதர் என்ற நிலையில், அவருக்கு அதன்மீது சிறிது உரிமைகூட இருக்கிறது என்று தவித்துக் கொண்டிருந்த அவளுடைய மனம் ஒரு நியாயத்தையும் கண்டுபிடித்தது.

ஒரு இறுதி முயற்சி என்ற நிலையில் அவள் கோவிந்திடம் திரும்பிச் செல்வதைப் பற்றி ஒரு முறை கூறிப் பார்த்தாள். இதற்குப் பிறகு வேறு என்ன என்பது மாதிரி ஆனந்தத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்த அவனுக்கு அந்த விஷயத்தைக் கேட்பதற்குக் கூட ஆர்வம் இல்லாமலிருந்தது. வர இருக்கும் எவ்வளவோ காலத்திற்கு இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதைப் போல அவனுடைய நடந்து கொள்ளும் முறையும் நடவடிக்கைகளும் இருந்தன.

அன்று இரவு, மீண்டும் தீருலால் வந்தபோது ஒன்றிரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தான் கோவிந்தை விட்டுத் தருவதற்குத் தயார் என்று ராஜகுமாரி சொன்னாள்.

அவனை மீண்டும் ஒரு காட்சிப் பொருளாகப் பயன்படுத்த கூடாது என்பதுதான் முதல் நிபந்தனை. தன்னுடைய கடந்த காலம் முழுவதும் முட்டாள்தனம் நிறைந்ததாக இருந்தது என்றும், அனுபவ அறிவை அடைந்திருக்கும் தன்னிடமிருந்து இனியும் அப்படிப்பட்ட முட்டாள்தனங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் தீருலால் சொன்னார். ராஜகுமாரி கூறவில்லையென்றாலும், இனி அவனை பொன்னைப் போல பார்த்துக் கொள்ள தான் திட்டமிட்டிருப்பதாக அவர் மனம் திறந்து சொன்னார். கடவுளுக்கு நிகரான அந்த அற்புதத்தை அதற்கு இருக்கும் மதிப்புக்கேற்ற வண்ணம் வணங்கி வழிபடுவதற்கு தான் திட்டமிட்டிருப்பதாகவும், அது சம்பந்தமான விஷயங்களை ராஜகுமாரியிடமும் கலந்து ஆலோசித்த பிறகே செயல்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

தனக்கு விருப்பம் இருக்கும்போது வந்து பார்ப்பதற்கும், தோன்றும்போது அழைத்துக் கொண்டு போவதற்கும் அனுமதி வேண்டும் என்பதுதான் ராஜகுமாரியின் இரண்டாவது நிபந்தனையாக இருந்தது. அதற்கு முழுமையான சம்மதம் அளிக்க தீருலால் மிகுந்த சந்தோஷத்துடன் இருந்தார்.

கோவிந்திற்கு பதிலாக எதுவும், ஒரு சல்லி காசுகூட வாங்குவதாக இல்லை என்று ராஜகுமாரி சொன்னாள். அதைக் கேட்டு பேராசை பிடித்த தீருலால் வாயைப் பிளந்தார்.

ஆனால், தனக்கு கொடுப்பதாக இருந்த தீவை தனக்கு பதிலாக கோவிந்திற்குத் தரவேண்டும் என்று அவள் கூறினாள். தீவு அவனுக்குச் சொந்தமானதாக ஆகும் பட்சம், தீருலாலுக்கு உரிமையாளர் என்ற தகுதியோ அதிகாரமோ இல்லாமல் போவதால், அங்கு நடைபெறும் சுற்றுலாப் பயண வர்த்தகத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும் என்றும், பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம்கூட இங்கு பறந்து வந்து இறங்கக் கூடாது என்றும் அவள் கண்டிப்பான குரலில் சொன்னாள்.

தீவை இழப்பதற்குத் தயாராக இருந்த தீருலால் அந்த நிபந்தனையையும் ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் இரவு, தீருலாலின் விருந்தினர் மாளிகையில் விருந்தில் சந்திக்கலாம் என்றும், அங்கு இருக்கும்போது கோவிந்தை கை மாற்றம் செய்யலாம் என்றும் முடிவு செய்து அவர்கள் பிரியும்போது, பொழுது புலர்ந்தது.

15. இரவு விருந்து

றுநாள் பகல் முழுவதும், ராஜகுமாரியின் மனம் அலைகள் இல்லாத கடலைப் போல அமைதியாக இருந்தது.

எத்தனையோ நண்பர்களைப் பார்த்தவளாக இருந்தாலும், பிரிவு தரும் வேதனையை முதன்முறையாக ராஜகுமாரி உணர்ந்தாள். அதனால்தான் வேதனையின் உச்சத்தை அடையும்போது உள்ள விரக்தி அவளை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. பிரிய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அறியும்போது உண்டான வேதனை, பிரிவதற்கு முடிவெடுத்த பிறகு தோன்றவில்லை.

கோவிந்திற்குத் தெரியாமல் பி.ஏ.வை தொலைபேசியில் அழைத்து, தான் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்பதால், உடனடியாக கோட்டையிலிருந்து திரும்பிச் செல்வதற்கான கார் ஏற்பாடு செய்து நிறுத்தும்படி அவள் கட்டளையிட்டாள்.

அன்று முதல் முறையாக போதை இலை அவளுக்கு கசப்பதைப் போல தோன்றியது. வெளியே மாற்றம் எதுவும் உண்டானதைப் போல காட்டிக் கொள்ளவில்லையென்றாலும், கடந்தகால நினைவுகள் அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தன. மீண்டும் தேவை என்று தோன்றும்போது, அவனை வந்து பார்க்கலாம் என்ற உறுதி இருந்தாலும், அவனுடன் சேர்ந்து அனுபவித்த பலவிதப்பட்ட இனிய செயல்கள் இனி எந்தச் சமயத்திலும் உண்டாகப் போவதில்லை என்று அவளுக்கு நிச்சயமாக தெரியும். அவனைவிட்டுப் பிரிந்த பிறகு உள்ள தன்னுடைய முதல் சில நாட்கள் நிச்சயமாக கவலைகள் நிறைந்தவையாக இருக்கும் என்று அவளுக்கு இப்போதே நன்கு தெரியும்.

அன்று சாயங்காலம் மஞ்சள் நிறத்தில் இருந்த ஒரு புதருக்குள் படுத்திருக்கும்போது, அவள் அவனிடம் இரவில் நடக்க இருக்கும் விருந்தைப் பற்றிக் கூறினாள். அவன் மறுத்துப் பேச ஆரம்பித்தவுடன், தான் தீருலாலுக்கு வாக்கு கொடுத்துவிட்டதாகவும், போகவில்லையென்றால் நன்றாக இருக்காது என்றும் அவள் விளக்கிச் சொன்னாள். அப்போது அவன் நிலவு மேலே வருவதைப் பற்றி ஞாபகப்படுத்தி, இன்று பௌர்ணமி என்று கூறினான். "இன்றல்ல, நாளைக்குத்தான் பௌர்ணமி" என்று கூறி அவள் அவனைத் திருத்தினாள். நிலவு மேலே வரும்போது இரவு உணவை முடித்துவிட்டு திரும்பி வந்துவிடலாம் என்றும், அதற்குப் பிறகு கடலின் அடிப்பகுதிக்குச் செல்லலாம் என்றும் சொன்னதும் அவன் முழுமையாக அடங்கினான். அப்படி இல்லாமல் வற்புறுத்தி சொன்னால், அவன் உடனடியாகப் புறப்பட்டுவிடுவான் என்பதை உறுதியாகத் தெரிந்திருந்த ராஜகுமாரிக்கு, அவனை அழைத்துக் கொண்டு போவதைப் பற்றி பெரிய ஆர்வம் எதுவும் இல்லை.

பலவற்றையும் பேசிக்கொண்டு படுத்திருக்கும்போது, அவள் தன்னையா? தீவையா? இரண்டில் அவனுக்கு அதிக விருப்பம் யார் மீது? என்று அவனிடம் கேட்டாள். மிகவும் இக்கட்டான ஒரு கேள்வியாக இருந்ததால், வேறு எதையோ நினைத்துக் கொண்டு படுத்திருந்த அவன் "தீவை" என்று தன்னையே அறியாமல் பதில் சொன்னான். ஆனால், அடுத்த நிமிடமே ராஜகுமாரியைத்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று திருத்திக் கூற அவன் மறக்கவில்லை.

அதற்குப் பிறகு ராஜகுமாரி நீண்ட நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன்னையும் உடன் அழைத்துக்கொண்டு இதே நிலையில் மறைந்துவிடத் தயாரா என்று அவனிடம் கேட்டாள்.


இரண்டு பேரும் சேர்ந்து மறைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தனியாக மறைவது என்றால், பார்க்கலாம் என்று அவன் சொன்ன போது, அவள் பதைபதைப்பு உண்டாகி அவனை அதிலிருந்து விலக்கினாள்.

தீருலாலின் விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் அவர்களுடைய பயணம் அவர் அனுப்பித் தந்த பெரிய அரண்மனையில் நடந்தது. காரின் பின்னிருக்கையில் ஒரு அறையில் இருக்கும் எல்லா நவநாகரீக வசதிகளும் கிடைத்தன. கிட்டத்தட்ட ஒரு அறை அளவிற்கு அது பெரிதாக இருந்தது. ஓட்டுனருக்கோ முன் இருக்கையில் இருக்கும் வேறு யாருக்குமோ அங்கு நடப்பது எதையும் பார்க்கவோ கேட்கவோ முடியாது.

கண்ணாடிக்கு அப்பால் உதிக்க ஆரம்பித்திருந்த சந்திரனிலேயே கோவிந்தின் முழு கவனமும் இருந்தது.

அவனுடைய அந்த இருப்பைப் பார்த்ததும் அருந்ததியின் மனதிற்குள் இரக்கம் பெருகியது. அவளுக்கே தெரியாமல் ஒரு அழுகைச் சத்தம் வெளியே வந்தது.

அன்று வரை அவள் அழுவதைப் பார்த்திராத அவன் முற்றிலும் பதைபதைத்துப் போய்விட்டான்.

எதற்கு அழ வேண்டும் என்று கேட்டதற்கு, ஒன்றுமில்லை என்று கூறி அவள் ஒதுங்கினாள். பிறகு அழுகையை முழுமையாகக் கட்டுப்படுத்தி நிறுத்திவிட்டு, மாறுபட்ட ஒரு குரலில் இன்றைக்கு இரவு தான் அவனிடம் ஒரு விஷயத்தைக் கட்டளையிடப் போவதாகவும், அதற்கு அவனுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் அதன்படி நடந்தால் போதும் என்றும் அவள் கூறினாள். கட்டளை இட்டால் அதன்படி நடக்கக் கூடிய அப்பாவித்தனம் அவனிடமிருப்பது தெரியும் என்பதால், தான் அதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடித்திருப்பதாக அவள் சொன்னாள். தனக்கும் தீருலாலுக்குமிடையே நடக்கும் உரையாடலை கவனித்துக் கேட்க வேண்டுமென்றும், நீண்டு கொண்டிருக்கும் உரையாடலின் போக்குகளைப் புரிந்து கொண்டு தனக்கென்று சொந்தமான முடிவை எடுக்க வேண்டுமென்றும் அவள் கேட்டுக்கொண்டாள். அந்த வகையில் கோவிந்த் எடுக்கும் தீர்மானத்திற்கும் தன்னுடைய முடிவிற்குமிடையே மாறுபாடு இருந்தால், அந்த விவரத்தை அவளிடம் கூறுவதற்கான ஒரு வழிமுறையையும் அவள் கண்டுபிடித்து வைத்திருந்தாள்.

தீருலாலுடன் நடத்தும் உரையாடலின் இறுதியில் தனக்கு தன்னுடைய தீர்மானத்தைக் கூற வேண்டியதுவருமென்றும், அப்படிச் செய்வதற்கு முன்னால் அவன் முன்பு ஒருமுறை அவளுடைய விரலில் அணிவித்த மோதிரத்தால் தான் மேஜை மீது மூன்று முறை குட்டுவேன் என்றும், பொருத்தமற்றதாக ஏதாவது தோன்றினால் அந்த நேரத்தில், தனக்கு அதைத் தெரியப்படுத்தினால் போதும் என்றும் கூறி அவள் அவனை சமாதானப்படுத்தினாள். அதற்கு மேல் ஏதாவது கூறுவதற்கு முன்னால் அவர்கள் விருந்தினர் மாளிகையை அடைந்தார்கள்.

வானத்தை முத்தமிடும் மாளிகைக்குக் கீழே, அவர்களை எதிர்பார்த்து தீருலால் நின்றிருந்தார். ஒரு ஆளுக்கும் தெரியக்கூடாது என்று அவள் கறாராகக் கூறியிருந்ததால், வரவேற்பு முற்றிலும் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமலிருந்தது.

பதினேழாவது மாடியில் தீருலால் அவர்களுக்காக இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார். பரிமாறுவதற்குக்கூட ஒரு ஆளையும் அங்கு நிறுத்தாமல், அவள் கூறியவற்றையெல்லாம் அதேபோல செய்த முழு திருப்தியுடன் இருந்த தீருலால் அவர்களை உபசரித்து உட்கார வைத்தார்.

கோவிந்துடன் சேர்ந்து அமர்வதற்கு தீருலாலிற்கு தயக்கமாக இருந்தது. அவன் உட்காருவதற்காக அங்கிருந்த மற்ற இருக்கைகளில் இருந்து சற்று உயர்ந்த ஒரு விசேஷமான இருக்கையையே அவர் தயார் பண்ணி வைத்திருந்தார்.

கடலில் இருந்து வந்த காற்று, ஹாலெங்கும் சுற்றியடித்தது. அது பட்டு ஜன்னல் திரைச்சீலைகளும் மெழுகுவர்த்திகளும் எப்போதும் நடுங்கிக் கொண்டிருந்தன.

தீருலாலும் அருந்ததியும் மட்டும் கண்ணாடிக் குவளைகளை உயர்த்தினார்கள்.

மிகவும் சிறப்பாக இருந்த விருந்து பாதி நிலையை அடைந்தபோது, கடலின் மீது சந்திரனின் கதிர்கள் விழ ஆரம்பிப்பதை ராஜகுமாரி பார்த்தாள். அப்போது அவள் திடீரென்று விஷயத்தை மாற்றிக்கொண்டு, காரியத்திற்கு வந்தாள்.

அவள் கூற வேண்டியவற்றையெல்லாம் முந்தைய நாளே கூறி முடித்துவிட்டாள். எனினும், ஒரு உறுதிப்படுத்தலுக்காக அவை முழுவதையும் அவள் மீண்டுமொரு முறை திரும்பச் சொன்னாள். "தீவின் சொர்க்க"த்தின் முழு உரிமை கொண்டவன் கோவிந்த்தான் என்றும் தீருலாலோ தானோகூட இனிமேல் அங்கு நுழைய வேண்டுமென்றால், அவனுடைய அனுமதியை வாங்கியிருக்க வேண்டுமென்றும் அவள் உறுதியான குரலில் சொன்னாள்.

அவன் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும், கேட்கக் கேட்க அவனுக்கு விஷயம் புரியும் என்பதையும், அப்படிப் புரியப் புரிய அவன் பதைபதைப்பு அடைவான் என்பதையும் தெரிந்துகொண்டு, அவனுடைய முகத்தை ஒருமுறைகூட பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே அவள் மோதிர விரலால் மூன்று முறை மேஜை மீது குட்டினாள்.

தொடர்ந்து உண்டான மழை பெய்து நின்ற மாதிரியான அமைதிக்கு நீளம் வைக்க ஆரம்பிக்கிறோம் என்பது தெரியாமல் அருந்ததி அவனுடைய முகத்தை தன்னையே அறியாமல் பார்த்தாள்.

அவளுடைய அந்தப் பார்வைக்காக அவன் காத்திருந்ததைப் போல இருந்தது.

காடுகளில் இருக்கும்போது மட்டுமே அவனிடமிருந்து வெளியேறிக் கேட்ட உரத்த ஒரு கர்ஜனையுடன் கோவிந்த் மெதுவாக எழுந்தான். அவனுடைய கர்ஜனை தீவு முழுவதும் முழங்குவதைப் போலவும், அவனுடைய உருவம் வானத்தைத் தொடும் அளவிற்கு வளரக் கூடிய முயற்சியில் வீங்கி வெடிக்க ஆரம்பிப்பதைப் போலவும் அவளுக்குத் தோன்றியது. சொந்தமாக ஒரு முடிவு எடுக்க முடியாமல் பதைபதைப்பும் கடமையுணர்ச்சியும் ஏமாற்றமும் சேர்ந்து அவனை ஒட்டுமொத்தமாக சிதற வைத்து நிறுத்தியிருக்கின்றன என்று அவனுடைய எத்தனையோ முகங்களைப் பார்த்திருக்கும் அவளுக்குத் தோன்றியது. அவனை அவனுடைய இயல்பான வளர்ச்சி நிலையில் இருந்து தடுத்து நிறுத்த முயற்சிப்பது அர்த்தமற்ற செயல் என்பதை அறிந்திருந்த அவள் அதனால்தான், ஒரு வகையிலும் தலையிட முயற்சிக்காமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

நிலவு வெளிச்சத்தில் ஒளிரும் பற்களுடன் முன்னால் குதித்த அவன், அதற்குள் பதைபதைத்துப்போய் செயலற்று நின்றிருந்த தீருலாலை அப்படியே தூக்கி எடுத்து வானத்தைத் தொடும் அளவிற்கு உயர்த்தி தரையில் அடித்தான். அடியின் பாதிப்பால் அவருடைய தலை வெடித்துச் சிதறியது. ரத்தம் தெறிப்பதைப் பார்த்த பிறகும், உணர்ச்சியற்று அங்கேயே நின்றிருந்த ராஜகுமாரிதான் அவனுடைய அடுத்த இலக்கு. காதுகளைப் பிளக்கும் ஒரு அலறலுடன் அவளையும் தரையில் அடித்துக் கொல்வதற்காக அவன் தூக்கி உயர்த்தினான் என்றாலும், அவளுடைய முகத்தில் பயமோ கூப்பாடோ இல்லாமலிருந்ததைப் பார்த்து இடையில் ஒரு குழப்பம் உண்டானதைப் போல அவன் அந்த முயற்சியைச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டான். அவளுடைய தலை காலுக்குக் கீழே சிதறி, அதைப் பார்ப்பதற்குத் தயங்கியதால் இருக்க வேண்டும்- கீழே எறிந்து கொல்ல தீர்மானித்து அவன் அவளை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான்.


ராஜகுமாரிக்கு அந்த நேரத்தில் எந்தவொரு அச்சம் கலந்த கலக்கங்களும் உண்டாகவில்லை என்பதுதான் உண்மை. அவனுடைய கைகளால் உண்டாகும் இறுதி முடிவு அவளுக்கு ஒரு இறுதி முடிவாகத் தோன்றவேயில்லை. அதனால்தான் அவளுடைய முகத்தில் அந்த இறுதி நிமிடத்திலும் தெய்வீகமான ஒரு புன்னகை மட்டுமே மலர்ந்து தெரிந்தது. மொட்டை மாடியில் பதினாறு மாடிகளுக்குக் கீழே இருந்து மேலே வந்த வெளிச்சத்தில் அவளுடைய முகத்தைப் பார்த்ததும் அவனுடைய கைகள் அடுத்த நிமிடம் தயங்கி, என்ன செய்வது என்று தெரியாத திகைப்புடன் அவளை சுதந்திரமாக ஆக்கின. தொடர்ந்து சங்கு ஒலிப்பதைப் போன்ற ஒரு உரத்த ஓசையை எழுப்பியவாறு அவன் மொட்டை மாடியிலிருந்து பதினாறு மாடிகளுக்குக் கீழே விழுந்தான். அவனுடைய சத்தம் ஆழங்களில் எங்கோ போய் ஒலித்து நின்றதைக் கேட்டதும், ராஜகுமாரி மயக்கமடைந்து விழுந்துவிட்டாள்.

ஆனால், திடீரென்று உண்டான அந்த மயக்கத்தைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு அவள் எழுந்தாள். நடப்பதற்கு சக்தி கிடைத்தது என்பதை அறிந்த நிமிடம், அவள் பதினாறு மாடிகளின் படிகளிலும் இறங்கி கீழே ஓடினாள்.

அங்கு, புல் பரப்பில், வெளிச்சம் குறைவாக இருந்த ஒரு பகுதியில் கோவிந்த் கிடந்தான். அவனுடைய உடல் குப்புறக் கிடந்தது.

ஒரு உரத்த அலறல் சத்தத்துடன் ராஜகுமாரி அவனுடைய உடலின்மீது விழுந்தாள். அவனுடன் சேர்ந்து மரணத்தைத் தழுவ வேண்டும் என்ற தீவிர பிரார்த்தனையுடன்தான் அவள் அப்படிச் செய்தாள். ஆனால், அவளை திகைக்க வைத்துக் கொண்டு, யார் தன் மீது வந்து விழுந்தது என்பதை அறிவதற்காக என்பதைப் போல கோவிந்த் தலையைத் திருப்பிப் பார்த்தான்.

அவன் இறக்கவில்லை. இறக்கவில்லை என்பது மட்டுமல்ல- அவனுக்கு ஒரு காயமும் உண்டாகவில்லை. மரக்கிளைகளில் எங்கோ மோதி, கிளை ஒடிந்து, ஆங்காங்கே கொஞ்சம் ரத்தம் கசிந்திருந்தது. அவ்வளவுதான்.

அவளை அடையாளம் தெரிந்ததும், அவன் மீண்டும் மண்ணுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவன் அப்படியே படுத்தவாறு அழுது கொண்டிருக்கிறான் என்பதை ராஜகுமாரி தெரிந்துகொண்டாள்.

அவனுக்கு அழவும் முடியும் என்று அப்போது முதல் முறையாக ராஜகுமாரிக்குத் தெரிய வந்தது.

அவனுடைய அழுகை நிற்பதற்காக காத்துக்கொண்டு, முன்பு பல நேரங்களிலும் செய்ததைப் போல, அவனுடைய கால்களில் முகத்தை வைத்துக்கொண்டு அவள் படுத்தாள். அழுகைச் சத்தம் குறைந்தாலும், அவனுடைய மனம் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

நிலவு மறைய ஆரம்பித்தபோது, அவனை அமைதி வந்து மூடத் தொடங்குவதைப் போல அவளுக்குத் தோன்றியது. தூங்கியதைப் போல நடித்துக்கொண்டு படுத்திருந்த அவளைத் தொந்தரவு செய்யாமல், அவளுடைய கைகளில் இருந்து தன்னுடைய கால்களைப் பிரித்து எடுத்து அவன் எழுந்து நின்றான். அவனுடைய பார்வை தூரத்தில், பார்வைக்கு அப்பால் இருக்கும் எங்கோ போய் பதிவதை அவள் தெளிவாகப் பார்த்தாள். அங்கேயே பார்வையைப் பதிய வைத்துக்கொண்டு, மூன்று அடி முன்னால் வைத்து அவன் ஒரு இடத்தில் நின்றான்.

அங்கேயிருந்து பிறகு அவன் அசையவே இல்லை. அருந்ததியின் கண்ணீருக்கோ கூப்பாடுகளுக்கோ மன்னிப்பு கேட்டல்களுக்கோ அவனிடம் அசைவு எதையும் உண்டாக்க முடியவில்லை.

காலம் எவ்வளவோ கடந்தோடிய பிறகும், கடல் எவ்வளவோ கோபப்பட்டு எழுந்த பிறகும் அந்த சிலை அங்கேயே நின்றிருந்தது- நிரந்தரமாக. உப்புக்காற்று அடித்து அவனுக்கு காலப்போக்கில் பாசி பிடித்தது. அவனுடைய பார்வை சென்று மோதிய இடத்தில், வெளியே தள்ளிக் கொண்டிருந்த ஓரப்பகுதி கடலில், அவனை ஒரு முறை பார்ப்பதற்காக ஆர்வத்துடன், அவ்வப்போது நீர்க் கன்னிகள் தலையை உயர்த்திக் கொண்டிருந்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.