Logo

சோதனைக்கூடம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
Sodhanaikoodam

சுராவின் முன்னுரை

வீந்திரநாத் தாகூர் (Rabindrath Tagore) எழுதிய ‘Laboratory’ என்ற புதினத்தை ‘சோதனைக் கூடம்’ (Sodhanai Koodam) என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.  கவிதைகளில் முத்திரை பதித்த தாகூர் புதினம் எழுதுவதிலும் ஒரு திறமைசாலி என்பதை நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் உணரலாம்.

1861-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வசதி படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்த தாகூர் வழக்கமான கல்வியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

பல பள்ளிக் கூடங்களில் சேர்க்கப்பட்டாலும், அதில் அவர் விருப்பமில்லாமல் இருந்ததால், வீட்டிலேயே இருக்கச் செய்து படிக்க வைத்தார்கள்.

ஏழாவது வயதில் தாகூர் தன்னுடைய முதல் கவிதையை எழுதினார். பள்ளிக் கூடத்தில் படிப்பதற்குப் பதிலாக தாகூர் தன்னுடைய அண்ணனுடன் இங்கிலாந்திற்குச் சென்றார். அங்குள்ள பல்கலைக் கழகக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் படித்து விட்டு, இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். 1983-ல் திருமணம் நடந்தது. மாதுரிலதா, ரேணுகா என்ற இரு மகள்களைத் தொடர்ந்து ஒரு மகனும் பிறந்தான்.

1909-ல் தன்னுடைய ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறப்படும் ‘கீதாஞ்சலி’யை அவர் எழுத ஆரம்பித்தார். 1911-ஆம் ஆண்டு ‘ஜனகணமன’ எழுதினார். 1912-ஆம் ஆண்டு ஐரோப்பாவில் பயணம் செய்த தாகூர் புகழ் பெற்ற பல இலக்கியவாதிகளையும் சந்தித்துப் பேசினார். அதே ஆண்டு வில்லியம் பட்லர் யேட்ஸ், தாகூரின் ‘கீதாஞ்சலி’யை ஒரு மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்னால் அறிமுகப்படுத்தினார். மிகப் பெரிய இலக்கியவாதியான எஸ்ரா பவுண்ட் தனிப்பட்ட ஆர்வம் எடுத்து, ‘கீதாஞ்சலி’யின் ஆங்கில மொழி பெயர்ப்பை வெளியே கொண்டு வந்தார். வில்லியம் பட்லர் யேட்ஸ் அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார். 1913-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize) தாகூருக்கு அறிவிக்கப்பட்டது. 1921-ஆம் ஆண்டு தாகூர், விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை உருவாக்கினார். நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகையையும், தன்னுடைய நூல்கள் மூலம் வந்த வருமானத்தையும் தாகூர் விஸ்வபாரதிக்காக அர்ப்பணித்தார். உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கும் தாகூர் அங்கு பல சொற்பொழிவுகளையும் நடத்தி இருக்கிறார்.

1940-ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தாகூருக்கு இலக்கியத்திற்கான டாக்டர் பட்டத்தை அளித்தது. 1941, ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி தான் பிறந்து வளர்ந்த வீட்டிலேயே தாகூர் மரணத்தைத் தழுவினார்.

பள்ளிக்கூட நாட்களில் இருந்தே நான் மிகவும் விரும்பிப் படித்த ரவீந்திரநாத் தாகூரின் மிகச் சிறந்த ஒரு நூலை தமிழில் மொழி பெயர்க்க வாய்ப்பு கிடைத்ததை ஒரு பெருமைக்குரிய விஷயமாகவே நினைக்கிறேன். கனமான ஒரு கதைக் கருவை எவ்வளவு ஆழமாக தாகூர் புதினத்தில் கையாள்கிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர்மீது நமக்கு மிக உயர்ந்த மரியாதை உண்டாகிறது. இதில் வரும் சோஹினி, ரேபதி, நீலா, சவுதரி- அனைவரும் நம் உள்ளங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


ண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டம் வாங்கிய எஞ்ஜினியர் நந்தகிஷோர். ஒரு மாணவன் என்ற வகையில், அவன் மிகவும் திறமையானவனாக இருந்தான். அறிவாளி. பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்தே அவன் எல்லா தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறக் கூடியவனாக இருந்தான்.

அவன் மிகவும் அறிவு படைத்தவனாக இருந்தான். அவனுடைய தேவைகள் எல்லையற்றவையாக இருந்தாலும், அவற்றை அடையக் கூடிய வழிகள் வரையறைக்குள் இருப்பவையாகவே இருந்தன.


ரயில் பாலங்கள் கட்டக்கூடிய இரண்டு பெரிய திட்டங்களில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட திட்டங்களின் மூலம் தன்னுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும், செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும் அவனுக்கு முடிந்தது. ஆனால், அந்த மாதிரியான விஷயங்களை அவன் நிறைவேற்றிக் கொண்டது, முற்றிலும் நேர்மையான வழியில் தான் என்று கூறுவதற்கில்லை. அவன் அந்த விஷயத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி அள்ளினான். அப்போது மனசாட்சி அவனைக் குத்தவே இல்லை. லாப நஷ்டக் கணக்குகள், கம்பெனி என்று அழைக்கப்படும் உருவாக்கப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருந்தது. வேதனைகள் முழுவதையும் ஒரு தனி மனிதனின் கணக்கில் மட்டுமே கொண்டு போய் சேர்க்க முடிகிற ஒரு விஷயமல்ல அது.

தொழில் விஷயத்தில் ஆட்கள் அவனை ஜீனியஸ் என்று குறிப்பிட்டார்கள். அவனுடைய கணக்குக் கூட்டல்கள் அந்த அளவிற்கு சரியானவையாக இருந்தன. ஆனால், அவன் ஒரு சாதாரண வங்காளியாக இருந்ததால், கிடைக்க வேண்டிய வரவேற்போ கவனிப்போ அவனுக்கு கிடைக்கவில்லை. அவனைவிட திறமை குறைவாக இருந்த ஆங்கிலேயரான வெள்ளைக்காரர்கள் அவனுடைய மேலதிகாரிகளாக இருந்தார்கள். ஒரு கையை பேன்ட்டின் பாக்கெட்டிற்குள் நுழைத்துக்கொண்டு, கால்களைச் சற்று அகற்றி வைத்துக்கொண்டு, "ஹலோ மிஸ்டர் மல்லிக்" என்று கூறியவாறு நீண்டகாலமாக அறிமுகமானவர்களைப் போல அவர்கள் அவனுடைய முதுகை அன்புடன் தட்டினார்கள். அவனுக்கு அது சிறிதும் பிடிக்கவில்லை. அது வேறு காரணம் எதற்காகவும் இல்லை. வேலை செய்வது அவன். பணமும் பெயரும் கிடைப்பது வெள்ளைக்காரர்களுக்கு. அதனால் அவன் தனக்குக் கிடைக்கக்கூடிய பங்கைப் பற்றித் தனியாக இருக்கும்போது கணக்கு போட்டுப் பார்த்தான். கிடைக்காத பாகத்தை எப்படி உண்டாக்குவது என்ற விஷயத்தை அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.

எப்படியெல்லாமோ எவ்வளவோ பணத்தை உண்டாக்கினாலும், வளைந்த வழிகளில் பணத்தைச் சம்பாதித்தாலும், நந்த கிஷோர் எந்தச் சமயத்திலும் ஒரு பணக்காரனைப் போல வாழ்ந்ததில்லை. சிக்தர் பாறையின் சிறிய தெருவில், ஒன்றரை மாடியை மட்டும் கொண்டிருக்கும் சிறிய ஒரு வீட்டில்தான் அவன் வசித்தான். தொழிற்சாலையில் அணியக்கூடிய அழுக்கு படிந்த ஆடையை மாற்றுவதற்கு அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதைப்பற்றி யாராவது அவனைப் பார்த்துக் கிண்டல் பண்ணினால், அவன் "தொழிலாளி என்ற உயர்வான மனிதனின் சேவையைக் காட்டும் ஆடை... அதுதான் என்னுடைய உடலை மூடியிருக்கும் ஆடை'' என்று கூறுவான்.

ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அவன் பெரிய ஒரு கட்டிடத்தைக் கட்டினான். ஓய்வு நேரத்தில் அந்த ஆர்வத்தைத் தூண்டக்கூடிய செயலில் அந்த அளவிற்கு அவன் தன்னைக் கரைத்துக் கொண்டான். ஆட்கள் அதைப் பற்றித் தாறுமாறாக நிறைய பேசிக் கொண்டாலும், அவன் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இவ்வளவு பெரிய கட்டிடம் எப்படி உண்டானது? அவனுக்கு எங்கிருந்து அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைத்தது?

சில செயல்கள் மது அருந்தும் பழக்கத்தைப் போல வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயங்களாக ஆகி விடுவதுண்டு. மனிதர்கள் கூறக் கூடிய விஷயங்களைப் பற்றி சிலர் செவியே கொடுப்பதில்லை. ஆட்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கக்கூடிய மனநிலையில் நந்த கிஷோர் இருந்தான். அறிவியல் அவனுக்கு ஒரு பைத்தியம் பிடிக்கச் செய்யும் விஷயமாக இருந்தது. ஏதாவது அறிவியல் மாத இதழையோ அட்டவணையையோ பார்த்துவிட்டால் போதும்- அவன் அதன் பக்கங்களைப் புரட்டியவாறு ஆர்வத்துடன் நாற்காலியின் கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். ஜெர்மனியிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் அவன் விலை மதிப்புள்ள அறிவியல் கருவிகளை வரவழைத்தான். இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பல்கலைக் கழகங்களில்கூட அத்தகைய கருவிகள் இருக்காது. அறிவைத் தேடி அலைந்து திரிந்த அந்த விஞ்ஞானியை மிகவும் கவலை கொள்ளச் செய்த விஷயம் அதுதான். வசதி படைத்த நாடுகளின் அறிவு விருந்தில் மிச்சம் மீதியாக இருப்பதை மட்டுமே வைத்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய நிலையில், அவனுடைய வறுமையின் பிடியில் சிக்கிய இந்த நாடு இருந்தது. வெளிநாடுகளில் இருக்கும் மிக உயர்ந்த கருவிகளைப் பயன்படுத்த முடியாத நம்முடைய இளம் விஞ்ஞானிகள், வறண்டு காய்ந்து போன பாட நூல்களிலிருந்து பெற்ற அறிவு மட்டுமே சொத்தாக இருந்தது. "நமக்கு மூளைப் பஞ்சம் சிறிதும் இல்லை. பணத்திற்கு மட்டுமே பஞ்சம்'' என்று அவன் வெறித்தனமாகக் கூறுவதுண்டு. அறிவியலின் மிகப் பெரிய சாலையை நம்முடைய இளைஞர்களுக்கு முன்னால் திறந்துவிடுவது என்பதுதான் அவனுடைய முக்கியமான விருப்பமாக இருந்தது. விலை மதிப்புள்ள இயந்திரங்களையும் கருவிகளையும் சேர்க்கும்போதெல்லாம், உடன் பணியாற்றுபவர்களின் மனசாட்சி அவனை நோக்கித் திரும்பியது. அப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் ஆங்கிலேயரான அவனுடைய மேலதிகாரி அவனைக் காப்பாற்றினார். நந்த கிஷோரின் தொழில் திறமையைப் பற்றி அந்த மனிதருக்கு மிகவும் உயர்ந்த மதிப்பு இருந்தது. அதற்கும் மேலாக ரயில்வே சம்பந்தப்பட்ட பணம் எப்படியெல்லாம், எந்தெந்த வழிகளில் எல்லாம் புகுந்து எடுக்கப்படுகிறது என்ற விஷயமும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

வேலையை ராஜினாமா செய்வதற்கு நந்த கிஷோர் கட்டாயப் படுத்தப்பட்டான். மேலதிகாரியின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருந்ததால், ரயில்வே துறையிலிருந்து பழையனவாகிப் போன கருவிகளையும் இயந்திரங்களையும் குறைவான விலைக்கு வாங்குவதற்கும், அவற்றை வைத்து ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கும் அவனால் முடிந்தது. முதல் உலகப்போர் ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. சந்தையில் நல்ல விழிப்புணர்ச்சி நிலவிக் கொண்டிருந்த காலம். நந்த கிஷோரோ நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாமர்த்தியம் கொண்டவனாக இருந்தான். லாபம் அதிகமாக வரக்கூடிய புதிய புதிய வழிமுறைகளை அவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில்தான் அவனுக்கு இன்னொரு ஆசை உண்டானது.

சிறிது காலம் அவன் பஞ்சாபில் வியாபாரத்தை நடத்தினான். அங்கு அவனுக்கு ஒரு இளம் பெண்ணுடன் நட்பு கிடைத்தது. ஒருநாள் காலையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த நந்த கிஷோருக்கு முன்னால் இருபது வயது மதிக்கக் கூடிய ஒரு அழகான இளம் பெண் தன்னுடைய காக்ரா சோளி ஓசை உண்டாக்க, தைரியத்துடன் வந்து நின்று கொண்டிருந்தாள்.


பிரகாசித்துக் கொண்டிருந்த கண்களும் கத்தியின் முனையைப் போல கூர்மையான, புன்னகை அரும்பிக் கொண்டிருந்த உதடுகளும் அந்த இளம் பெண்ணிடம் இருந்தன. அவனுடைய கால்களுக்கு அருகில் நின்று கொண்டு அவள், "பாபுஜீ, கொஞ்ச நாட்களாகவே காலையில் இருந்து மாலை வரை நான் உங்களை கவனித்துக் கொண்டு வருகிறேன். உங்களைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டாகிறது'' என்றாள்.

"ஏன்? இந்தப் பகுதியில் இருக்கும் மிருகக் காட்சி சாலை இல்லையே என்று தோன்றுகிறதா?'' -நந்த கிஷோர் சிரித்துக்கொண்டே கேட்டான்.

"மிருகக் காட்சி சாலையைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பமெதுவும் எனக்கு இல்லை'' -அவள் சொன்னாள்: "கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட வேண்டிய உயிரினங்கள் அனைத்தும் வெளியில் அல்லவா இருக்கின்றன? அதனால் நான் உண்மையான மனிதர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.''

"சரி... யாரையாவது பார்த்தாயா?''

"இதோ... இங்கே ஒரு மனிதரைப் பார்த்தேன்'' -நந்த கிஷோரை நோக்கி விரலைச் சுட்டிக் காட்டியவாறு அவள் சொன்னாள்.

"நீ என்னிடம் என்ன நல்ல குணங்களைப் பார்த்துவிட்டாய்?'' -சிரித்துக் கொண்டே நந்தகிஷோர் கேட்டான்.

"யானைச் சங்கிலியைப் போன்ற தங்க மாலைகளையும் ரத்தினத்தால் ஆன மோதிரங்களையும் அணிந்திருக்கும் பெரிய பெரிய தொழிலதிபர்களெல்லாம் உங்களைச் சுற்றிச் சுற்றி வலம் வருவதை நான் பார்த்தேன். வர்த்தகத்தைப் பற்றி எதுவுமே தெரியாத அவர்களுக்கு மிகவும் எளிதாக ஏமாற்றக்கூடிய ஒரு அப்பாவி வங்காளி கிடைத்திருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய வலையில் விழக்கூடிய ஒரு அப்பாவியான பிராணியாக நீங்கள் இருப்பீர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்களுடைய எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாவதை நான் பார்த்தேன். உண்மையாகச் சொல்லப் போனால், அவர்கள் உங்களுடைய வலையில் விழுந்த செயல்தான் நடந்தது. அவர்களுக்கு அது எதுவும் புரியவில்லை. ஆனால், எனக்குப் புரிந்துவிட்டது.''

அவள் கூறியதைக் கேட்டதும், நந்தகிஷோர் திகைத்துப் போய்விட்டான். யாரோ ஒரு இளம் பெண்! ஆனால்,வெறும் ஒரு முட்டாள்தனமான இளம் பெண் அல்ல அவள்!

"என்னைப் பற்றி நான் எதுவுமே கூறவில்லை.'' அவள் சொன்னாள்: "நீங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். எங்களுடைய பகுதியில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு ஜோதிடர் இருக்கிறார். ஒருநாள் என்னுடைய பெயர் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் புகழ் பெறும் என்று என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து அவர் சொன்னார். என்னுடைய பிறந்த நட்சத்திரம் சாத்தானின் குணத்தைக் கொண்டதாக இருக்கிறதாம்.''

"உண்மையாகத்தான் இருக்கும்!'' -நந்த கிஷோர் வியப்புடன் சொன்னான்: "சாத்தானேதான்!''

"தெரிந்துகொள்ளுங்கள், பாபுஜீ... இந்த உலகத்திலேயே மிகவும் முக்கியமானது சாத்தானின் தோற்றம்'' -அவள் சொன்னாள்: "சில மனிதர்கள் சாத்தானைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். ஆனால், அவன் உண்மையிலேயே வரவேற்கப்படக்கூடியவனே. ஆனால், நம்முடைய கடவுள் இருக்கிறாரே! சாட்சாத் போலாநாத். அவர் எல்லா நேரங்களிலும் உறக்கத்திலேயே இருக்கிறார். இந்த உலகத்தைச் சரியான பாதையில் நடத்திக்கொண்டு செல்ல அவரால் முடியவில்லை. நம்முடைய ஆட்சியாளர்கள் இந்த உலகத்தை எந்த வகையில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். ஏதாவது தெய்வத்தன்மையான சக்தியால் அல்ல- அதற்கு மாறாக, பிசாசுத்தனமான சக்தியால் அவர்கள் உலகத்தை அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய குணத்தின்படி நடக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் அந்த வகையில் நின்று கொண்டிருக்க முடிகிறது. தங்களுடைய வார்த்தைகளில் இருந்து விலகிச் சென்றால், பிசாசுகள் அவர்களின் காதுகளைப் பிடித்து வெளியே தள்ளிவிடும்.''

நந்த கிஷோர் முற்றிலும் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவள் கூறிக்கொண்டேயிருந்தாள்: "பாபு, நான் கூறுவது எதையும் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், உங்களுக்கு பிசாசின் அருள் இருக்கிறது. அதனால், உங்களுக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. எத்தனையோ ஆண்களை நான் கவர்ந்திருக்கிறேன். ஆனால், அதே மாதிரி என்னை தோல்வியடையச் செய்யக்கூடிய ஒரு ஆணை நான் பார்த்திருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதீர்கள், பாபு. அப்படிச் செய்தால் அதனால் உண்டாகும் இழப்பு உங்களுக்குத்தான்.''

"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' -நந்த கிஷோர் சிரித்துக்கொண்டே கேட்டான்.

"என்னுடைய பாட்டி கடன் தொல்லை தாங்க முடியாமல், வீட்டை விற்கப் போகிறாள். நீங்கள் அந்தக் கடனைக் கொடுத்து முடிக்க வேண்டும்.''

"அவர்களுக்கு எவ்வளவு ரூபாய் கடனாக இருக்கிறது?''

"ஏழாயிரம் ரூபாய்.''

உறுதியாக முடிவு செய்துவிட்டதைப் போல வெளிப்பட்ட அவளுடைய தேவையைக் கேட்டதும், நந்த கிஷோருக்கு ஆச்சரியம்தான் உண்டானது. அவன் சொன்னான்: "சரி... நான் அதைக் கொடுத்து முடிக்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு?''

"பிறகு... நான் எந்தச் சமயத்திலும் உங்களை விட்டுப் போக மாட்டேன்.''

"நீ என்ன செய்வாய்?''

"என்னைத் தவிர, வேறு யாரும் உங்களை ஏமாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்துவேன்.''

நந்த கிஷோர் மீண்டும் சிரித்தான். "சரி... அதற்கும் சம்மதிக்கிறேன். இனிமேல் இந்த மோதிரத்தை உன்னுடைய விரலில் அணிந்து கொள்.''

தன்னுடைய மனம் என்ற உரைகல்லைப் பயன்படுத்தி அவன் விலை மதிப்புள்ள ஒரு உலோகத்தைக் கண்டு பிடித்திருக்கிறான். நிரந்தரமான செயல் வேகம் அந்த இளம் பெண்ணிடம் பளிச்சிடுவதை அவன் பார்த்தான். தன்னுடைய திறமையைப் பற்றி அவள் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள் என்பதை அவன் புரிந்துகொண்டான். வயதான அந்தப் பாட்டிக்கு ஏழாயிரம் ரூபாய் அளிப்பதற்கு நந்த கிஷோருக்கு எந்தவொரு தயக்கமும் தோன்றவில்லை.

அந்த இளம்பெண்ணின் பெயர் சோஹினி. ஒரு வட இந்திய இளம் பெண்ணிடம் இருக்கக் கூடிய எல்லாவிதமான வசீகரமும் திறமையும் அவளிடம் இருந்தன. இரக்கம் கொண்ட இதயங்களின் சந்தையில் விலை பேசி விளையாடுவதற்கு அவளுக்கு நேரம் இல்லாமலிருந்தது.

நந்த கிஷோர் அவளைச் சந்தித்தது, வளர்த்துக் கொண்டு வந்தது ஆகியவற்றிற்கான சூழ்நிலை மிகவும் புனிதமானதாகவோ தனிமை நிறைந்ததாகவோ இல்லை. ஆனால் பிடிவாத குணம் கொண்டவனாகவும் யாருக்கும் வளைந்து கொடுக்கக் கூடியவனாகவும் இல்லாத அந்த மனிதன் சமூகத்தின் வழி முறைகளுக்கோ சட்டங்களுக்கோ அடிபணிந்ததே இல்லை. அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானா என்று நண்பர்கள் அவனிடம் கேட்டார்கள். "அளவுக்கு மேலே திருமணம் செய்யவில்லை.'' -அவன் சொன்னான்: "சகித்துக் கொள்வதற்கு ஒரு எல்லை வைத்திருக்கிறேன்.'' தன்னுடைய விருப்பங்களுக்கேற்றபடி அவன் அவளை வழி நடத்திச் செல்ல முயற்சிப்பதைப் பார்த்து ஆட்கள் சிரித்தார்கள்."என்ன... அவளை ஒரு பேராசிரியராக ஆக்கும் நோக்கம் இருக்கிறதா?" என்று ஆட்கள் கேட்டதற்கு, "இல்லை...


அவளை ஒரு "பெண் நந்த கிஷோ''ராக மாற்ற வேண்டும். ஒரு சாதாரண இளம் பெண்ணால் அது முடியாத விஷயம்'' என்பது அவனுடைய பதிலாக இருந்தது. அப்படியில்லையென்றால், சில நேரங்களில் அவனுடைய பதில் இப்படி இருந்தது: "நான் வேறு வேறு ஜாதிகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்வதற்கு ஆதரவாளன் இல்லை.''

"இப்படிக் கூறுவதன் மூலம் நீங்கள் என்ன கூற நினைக்கிறீர்கள்?''

"கணவன் ஒரு எஞ்ஜினியராகவும் மனைவி வீட்டில் உட்கார்ந்து கொண்டு உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் சாதாரண பெண்ணாகவும் இருப்பது... சட்டப்படி அது அனுமதிக்கக் கூடியதல்ல. நான் எப்போதும் அப்படிப்பட்ட திருமணங்களைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் எங்களுடைய ஜாதிகளுக்கிடையே ஒற்றுமை உண்டாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒரு மனைவிதான் வேண்டுமென்றால், மனைவியும் கணவனும் ஒரே நம்பிக்கை கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.''

2

மொத்தத்தில் கழுத்தை இறுக்கிய ஒரு அறிவியல் சோதனைக்கு மத்தியில் எப்போதோ, நடுத்தர வயதில் இருந்தபோது நந்த கிஷோரின் மரணம் நடைபெற்றது. சோஹினி அவனுடைய காரியங்களை மிகவும் ஒழுங்காகச் செய்து முடித்தாள். அப்பாவியான விதவைகளை ஏமாற்றுவதை மட்டுமே பழக்கமாகக் கொண்டிருக்கும் கேவலமான மனிதர்கள் அவளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். மிகவும் நெருக்கமான ரத்த உறவு கொண்டவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள்கூட அவளுக்கு எதிராக வழக்கு போட்டார்கள். அதன்மூலம் சட்டத்தின் மிகவும் முக்கியமான பகுதிகளைக்கூட சோஹினி மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டம் தெரிந்தவர்களின் சமூகத்தில் அவள் பெண்ணுக்கே உரிய வசீகரத்தின் வலையை விரித்தாள். அந்த உலகத்தில் அவளுடைய திறமை மிகவும் கவனிக்கப்பட்டது. உறவுகளுடன் அவளுக்கு எந்தவொரு ஒட்டும் இல்லாமல் இருந்தது. ஒன்றிற்குப் பின்னால் ஒவ்வொன்று என்று அவள் வழக்குகளில் வெற்றி பெற்றாள். பொய்யான ஆதாரங்களை உண்டாக்கியதற்காக மிகவும் நெருக்கமான ரத்த உறவு கொண்ட ஒரு மனிதனை அவள் சிறைச்சாலைக்கு அனுப்பினாள்.

நீலிமா என்பது அவளுடைய மகளின் பெயர். நீலிமா என்ற பெயரை அவளே நீலா என்று மாற்றி வைத்துக் கொண்டாள். அடர்த்தியான நீல நிறத்தைக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் தாயும் தந்தையும் அவளுடைய நிறக் குறைவை மறைப்பதற்காக அந்தப் புனிதமான பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் என்று யாரும் நினைத்துக் கொள்ளக் கூடாது. அவள் மிகவும் பேரழகு படைத்தவளாக இருந்தாள். தங்களுடைய முன்னோடிகள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று அவளுடைய தாய் பெருமையுடன் கூறினாள்.

காஷ்மீரின் வெள்ளைத் தாமரையைப் போல அவளுடைய தோல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவளுடைய கண்கள் நீலத் தாமரையின் இதழ்களைப் போல இருந்தன. அவளுடைய தலைமுடி தவிட்டு நிறத்தில், பொன்னைப் போல மின்னிக் கொண்டிருந்தது.

அவளைத் திருமணம் செய்து அனுப்பி வைக்க வேண்டிய நேரம் வந்தபோது, ஜாதியோ மதமோ உயர்குலமோ எதையும் கணக்கில் எடுக்க வேண்டிய பிரச்சினை எழவில்லை. ஏதாவதொரு இதயத்தைக் கவர்வது என்ற வழிமுறைதான் அவளுக்கு முன்னால் இருந்தது. புனித நூல்களில் கூறப்படும் விஷயங்கள் அனைத்தையும் அவளுடைய சிந்தனைத் திறமை தாண்டிச் சென்றது. முன்னோர்களின் மூலம் ஏராளமான சொத்துகள் உள்ள, நவீன கல்வியைக் கற்றிருக்கும் ஒரு மார்வாடி பையன், காமதேவன் உண்டாக்கிய கண்ணுக்குத் தெரியாத அந்த வலையில் விழுந்தான். ஒரு நாள் நீலா பள்ளிக்கூடத்தின் வெளிவாசலில் கார் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்த போது, அந்தப் பையன் அவளைப் பார்க்க நேர்ந்தது. அதற்குப் பிறகு அந்தத் தெருவின் வழியாக அவன் பல முறை இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தான். இயல்பான பெண்களுக்கே இருக்கக்கூடிய உணர்வுகளைப் பின்தொடர்ந்து, அந்த இளம் பெண்ணும் சாதாரணமாக இருக்கக்கூடிய நேரத்தையும் தாண்டி அந்த வெளிவாசலில் நின்றிருந்தாள். அவளுடைய பார்வை மார்வாடி இளைஞனின் மீது மட்டுமல்ல- வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்பிள்ளைகளும் அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மார்வாடி இளைஞன் மட்டும் கண்களை மூடிக்கொண்டு, திரும்பிச் செல்ல முடியாத அளவிற்கு அவள் விரித்த வலையில் மாட்டிக் கொண்டான்.

சிவில் சட்டப்படி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சமூக சட்டங்கள் அவர்களை பாதிக்கவில்லை. ஆனால், அவர்களுடைய உறவு அதிக காலம் நீடித்து நிற்கவில்லை. மார்வாடி இளைஞனுக்கு விதி முதலில் மனைவியை அளித்தது. பிறகு, அந்த குடும்ப வாழ்க்கைக்கு மத்தியில் ஒரு நேர்கோட்டை வரைந்து, அவனுக்கு டைஃபாய்டு வரச் செய்தது. அதன் முடிவில் அவன் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை ஆனான்.

நல்லதும் கெட்டதுமான பல வகைப்பட்ட செயல்களின் மூலம் பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் இருந்து கொண்டிருந்தார்கள். மகளுடைய குழப்பமான சூழ்நிலையின் ஆழத்தை சோஹினியால் புரிந்து கொள்ள முடிந்தது. இதே இளம் வயதில் தனக்கு இருந்த ஆவேசத்தைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். மகளுடைய காரியத்தைப் பற்றி சிந்தித்தபோது, அவளுக்கு கடுமையான பதைபதைப்பு உண்டானது. கல்வியை அளித்து, அவள் நீலாவைச் சுற்றிலும் கனமான வேலிகளை உண்டாக்க முயற்சி செய்தாள். அவளுக்குக் கல்வி கற்றுத் தருபவர்களில் ஆசிரியர் தேவையே இல்லை என்று அவள் முடிவெடுத்தாள். அதற்குப் பதிலாக மகளுக்கு ட்யூஷன் மூலம் கற்றுத் தருவதற்காக அவள் ஒரு ஆசிரியையை ஏற்பாடு செய்தாள். நீலாவின் வசீகரமும் அவளை பாதித்தது. ஆண்கள் மத்தியில் அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வெறித்தனமான நெருப்பை எழச் செய்தது. நீலாவின் ரசிகர்கள் அந்தத் தெருவில் வட்டமிட்டு நடந்து கொண்டிருந்தார்கள் என்றாலும், அந்தக் கதவு என்னவோ மூடியேதான் கிடந்தது. நீலாவிடம் நட்பு உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மற்ற பெண்கள் அவளை தேநீர் பருகுவதற்கும் டென்னிஸ் விளையாடுவதற்கும் திரைப்படம் பார்ப்பதற்கும் அழைத்தார்கள். ஆனால், அந்த அழைப்புகள் எதுவும் செயல் வடிவத்திற்கு வரவில்லை. தேனின் வாசனை நிறைந்த காற்று ஏராளமான காதலர்களை ஈர்த்தது. ஆனால், அந்த பாவம் நிறைந்த காதலர்களுக்கு சோஹினியிடமிருந்து விஸா கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த இளம் பெண் சூழ்நிலை எதுவும் பொருந்தக்கூடிய விதத்தில் இல்லை என்பது தெரிந்தும், நல்ல ஒரு வாய்ப்பிற்காக சுற்றிலும் பார்த்தாள். பாடநூல் குழு அனுமதிக்காத பாட நூல்களை அவள் படித்தாள். ஓவியர்களுக்காக மட்டுமே உள்ளவை என்று ஒதுக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்து அவள் அவற்றைச் சேகரித்து வைத்தாள். இவை போன்ற விஷயங்கள் அவளுடைய புதிய ட்யூஷன் ஆசிரியைக்குப் பிடித்திருந்தன.


கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் இருந்து ஒருநாள் அவள் திரும்பி வந்தபோது, அழகான முகத்தில் அரும்பு மீசையை வைத்திருந்த, சிதறிப் பறந்து கொண்டிருந்த தலைமுடியைக் கொண்டிருந்த ஒரு இளைஞன் அவளுடைய காருக்குள் ஒரு கடிதத்தைச் சுருட்டி எறிந்தான். அந்தக் கடிதத்தை வாசித்தபோது அவளுடைய நரம்புகள் முறுக்கேறின. அவள் அந்தக் கடிதத்தை ரவிக்கைக்குள் மறைத்து வைத்தாள். ஆனால் அவளுடைய தாய் அதைக் கண்டுபிடித்து விட்டாள். உணவு எதுவும் தராமல் ஒரு நாள் முழுவதும் அவளுடைய தாய் அவளை ஒரு அறைக்குள் அடைத்து வைத்தாள்.

மரணத்தைத் தழுவிவிட்ட தன்னுடைய கணவனின் பெயரில் இருந்த ஸ்காலர்ஷிப்களை வாங்கிய மாணவர்களில்- தன்னுடைய மகளுக்குப் பொருத்தமான ஒரு பையனை சோஹினி தேடிக் கொண்டிருந்தாள். ஆனால், அவர்கள் எல்லாருக்கும் பெண்ணின் பணப் பெட்டியின் மீதுதான் கண்கள் இருந்தன. அவர்களில் ஒருவன் சோஹினியின் பெயரில் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தான்.

அந்த இளைஞனிடம் அவள் சொன்னாள்: "என்னுடைய தங்கமே! நீ எந்த அளவிற்கு அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருக்கின்றாய்! நீ என்னை ஆச்சரியப்பட வைக்கிறாயே! உன்னுடைய பட்டப் படிப்பு முடியப் போகிறது என்று நான் கேள்விப்பட்டேன். எனினும், நீ உன்னுடைய பூவையும் பிரசாதத்தையும் சிறிதுகூட பொருத்தமே இல்லாத ஒரு இடத்தில் கொண்டு போய் அர்ப்பணம் செய்கிறாயே! நீ மிகுந்த கவனத்துடன் வழிபாடு நடத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் நீ தேற முடியாது!''

சோஹினியின் கவனத்தை ஈர்த்த ஒரு நல்ல பையன் இருந்தான். அவளுடைய மகளுக்கு மிகவும் பொருத்தமானவனாக அவன் இருந்தான். ரேபதி பட்டாச்சார்யா என்பது அவனுடைய பெயர். அவனுக்கு டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் கிடைத்திருந்தது. அவனுடைய பல கட்டுரைகளும் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் பிரசுரமாகி, வெளிநாடுகளில் அவை வாசிக்கப்பட்டன.

3

ட்களுடன் பழகக்கூடிய விஷயத்தில் மிகுந்த திறமை கொண்டவளாக சோஹினி இருந்தாள். ரேபதி பட்டாச்சார்யாவின் பழைய கால ஆசிரியர் மன்மத சவுதரியை சோஹினி கவனித்தாள். தாமதிக்காமல் அவள் அவரை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள். அவள் அவரை தினமும் தேநீர் அருந்துவதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் அழைப்பது என்பதை ஒரு வாடிக்கையான விஷயமாக ஆக்கினாள். அவருக்கு மிகவும் பிடித்தமான ஆம்லெட்டையும் வறுத்த மாமிசத்தையும் அவள் தயார் பண்ணிக் கொடுத்தாள். இதற்கிடையில் ஒருநாள் அவள் ரேபதி பட்டாச்சார்யா பற்றிய விஷயத்தை எடுத்து விட்டாள். "உங்களை அவ்வவ்போது தேநீர் அருந்துவதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் நான் எதற்காக அழைக்கிறேன் என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள்''- சோஹினி கூறினாள்.

"அது எனக்கு எந்தச் சமயத்திலும் ஒரு சிரமமான விஷயமாக இல்லை. மிசஸ் மல்லிக்.''

"நாம் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளத்தான் இப்படியெல்லாம் செய்கிறோம் என்று ஆட்கள் நினைக்கிறார்கள்.''

"ஓகே மிசஸ் மல்லிக். என்னுடைய மனதில் இருப்பதை நான் திறந்து கூறட்டுமா? யாருடைய விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டாலும், நட்பின் அடையாளம் எப்போதும் தனியாக நின்று கொண்டிருக்கும். என்னைப் போன்ற ஒரு சாதாரண பேராசிரியருக்கு யாருக்காவது உதவியாக இருப்பது என்பது ஒரு சாதாரண வாய்ப்பு அல்ல. பாட நூல்களை விட்டு வெளியே வருவதற்கு நம்முடைய மூளைக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால் அது முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. நான் இதைக் கூறுவதைக் கேட்கும் போது, உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகும் என்று எனக்குத் தெரியும். நான் ஒரு பேராசிரியராக இருந்தாலும், எனக்கு நகைச்சுவை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அடுத்தமுறை என்னை தேநீர் பருகுவதற்கு அழைப்பதற்கு முன்னால், நீங்கள் இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்.''

"நான் அதைக் கவனித்திருக்கிறேன். எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. நான் எவ்வளவோ பேராசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். சிரிக்க வைக்க வேண்டுமென்றால் பேராசிரியர்களுக்கு டாக்டர்களின் உதவியைத் தேட வேண்டும்.''

"சரிதான்... நீங்கள் எங்களுடைய கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என்று கூட எனக்குத் தோன்றுகிறது. அதனால் இனிமேல் நம்முடைய மனதில் இருப்பதை ஒருவரோடொருவர் திறந்து கூறிக் கொள்ளலாம்.''

"என்னுடைய கணவரின் மிகப்பெரிய சந்தோஷம் அவருடைய சோதனைக் கூடம்தான். எனக்கு ஆண்பிள்ளைகள் இல்லை. அதனால் இந்த சோதனைக் கூடத்திற்கு பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக நான் ஒரு இளைஞனைத் தேடிக் கொண்டிருக்கிறேன். என் மனதில் இருக்கும் இளைஞன் ரேபதி பட்டாச்சார்யா.''

"அவன் அதற்குத் தகுதியான இளைஞன்தான். ஆனால், அவன் தேர்ந்தெடுத்திருக்கும் ஆராய்சிக்கான விஷயம் நிறைய பணச் செலவு வரக் கூடிய ஒன்று!''

"என்னிடம் நிறைய பணம் குவிந்து கிடைக்கிறது''- சோஹினி சொன்னாள்: "என்னுடைய வயதில் இருக்கும் விதவைகள் சொர்க்கத்தில் போய் சேர வேண்டும் என்பதற்காகப் பணத்தைக் கொடுத்து தெய்வங்களைத் திருப்திப்படுத்துவதற்கான வழிபாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட சடங்குகளில் நம்பிக்கை இல்லை.''

அதைக் கேட்டதும் சவுதரியின் கண்கள் மலர்ந்தன. "பிறகு நீங்கள் எதை நம்புகிறீர்கள்?''

"உண்மையான தகுதியைக் கொண்ட நல்ல ஒரு இளைஞனைக் கண்டுபிடித்துவிட்டால், அவனுடைய கடன்களையும் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதுதான் என்னுடைய கடவுள் நம்பிக்கை!''

"அடடா... என்ன உயர்வான எண்ணம்! கல் நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது! பெண்களுக்கு அறிவு இருக்கிறது என்று சில வேளைகளிலாவது ஆட்கள் கூறுகிறார்கள் என்றால், அது இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான். எனக்கு ஒரு சாதாரண அறிவியல் பட்டதாரியைத் தெரியும். ஒருநாள் குருவின் கால்களைத் தொட்டு வணங்கிய பிறகு, தன்னுடைய மூளையை பஞ்சைப்போல காற்றில் பறக்க வைக்க முடியும் என்பது மாதிரி அவன் காற்றில் தலை குப்புற விழுந்து இறந்தான். அந்த வகையில் நீங்கள் ரேபதிக்கு உங்களுடைய சோதனைக் கூடத்தின் பொறுப்பை அளிக்கப் போகிறீர்கள். ஆனால், அவனைச் சற்று தூரத்தில் நிற்க வைப்பதுதானே நல்லது?''

"தவறு செய்யக் கூடாது, சவுதரி. எது எப்படி இருந்தாலும் நான் ஒரு பெண்தானே! என்னுடைய கணவரின் வழிபாட்டு இடமாக அந்த சோதனைக் கூடம் இருந்தது! அந்தப் புனித இடத்தின் நெருப்புச் சுடரை அணையாமல் காப்பாற்றக்கூடிய ஒரு இளைஞனைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்தால் எந்த உலகத்தில் இருந்தாலும், அவருடைய ஆன்மாவிற்கு சாந்தி கிடைக்கும்.''

சவுதரி சொன்னார்: "கடவுளே... பேசத் தெரிந்திருக்கும் ஒரு பெண்ணை நான் இதோ சந்தித்திருக்கிறேன். இது சிறிதுகூட வெறுப்பைத் தரக்கூடிய குரல் அல்ல. ஆனால், ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


ரேபதியை அவனுடைய ஆராய்ச்சியின் இறுதிவரை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய்களையாவது நீங்கள் செலவழிக்க வேண்டியது இருக்கும்.''

"இப்போதும் என்னுடைய கையில் பணம் மீதம் இருக்கிறது.''

"ஆனால், நீங்கள் சந்தோஷப்படுத்த முயற்சிக்கும் சொர்க்கத்தில் இருக்கும் அந்த மனிதர் இவற்றையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுவாரா? இறந்த ஆன்மாக்கள் அவர்களுக்கு விருப்பமான யாருடைய கழுத்தையாவது போய் பிடித்துக் கொள்வார்கள் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.''

"நீங்கள் பத்திரிகை படிப்பதில்லையா? ஒரு மனிதன் இறக்கும் போது, அவனுடைய நல்ல விஷயங்களும் புண்ணிய செயல்களும் தனித்தனியாகப் பிரித்துப் பட்டியல் போடப்பட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கும். அந்த மனிதனின் மதிப்பிற்கு மேலே சிறிது நம்பிக்கையையும் சேர்த்து வைப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. எவ்வளவோ பணத்தைச் சம்பாதித்து மலையைப்போல சேர்த்து வைத்திருக்கும் மனிதன் நிறைய பாவங்களையும் சேர்த்து வைத்திருப்பான். அந்தப் பண மூட்டையைச் சற்று பிடித்துக் குலுக்கி பணத்தை வெளியே கொண்டு வரவோ, அந்தப் பாவச் சுமையைக் குறைக்கவோ முயற்சிக்காத மனைவிகள் பிறகு என்ன காரணத்திற்காக மனைவிகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்? பணம் நாசமாகப் போகட்டும். எனக்கு அதற்கான தேவை இல்லை!''

உணர்ச்சிவசப்பட்டு பேராசிரியர் எழுந்து நின்றார். "நான் என்ன கூறுவது? நாங்கள் சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுப்பவர்கள். வேறு பல சேர்க்கைகளும் அதில் இருந்தாலும், அது தனித் தங்கம் தான். நீங்கள் மறைந்து கிடக்கும் தங்கக் கட்டி... இறுதியாக இப்போது இதோ நான் உங்களைக் கண்டு பிடித்திருக்கிறேன். சொல்லுங்க... இப்போ நான் என்ன செய்ய வேண்டும்?''

"அந்த இளைஞனின் சம்மதத்தைப் பெற்றுத் தரவேண்டும்!''

"நான் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக இருக்காது. உங்களுடைய இந்த ஆசை வாக்குறுதியில் வேறு யாராக இருந்தாலும் மயங்கி விழுந்து விடுவார்கள்!''

"இந்த விஷயத்தில் அவனுடைய பக்கத்தில் எப்படிப்பட்ட தடைகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது?''

"ஜாதகப்படி இளம் வயதிலிருந்தே ஒரு பெண் கிரகம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சுய உணர்வும் இல்லாததைப் போல இடையில் அவ்வப்போது அது அவனுடைய பாதையில் வந்து தடுப்பதுண்டு.''

"அப்படி எதையும் சுற்றி வளைத்துக் கூறாதீர்கள். உண்மையிலேயே விஷயம் என்ன?''

"அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடாது மிசஸ் மல்லிக். மருமக்கத்தாய முறையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட உறவு முறையில் ஆணைவிட பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அந்த திராவிட நாகரீகத்தின் சிறிய ஒரு அலை வங்காளத்திலும் ஒரு காலத்தில் பரவியிருக்கிறது.''

"ஆனால், அந்தப் பொன்னான காலகட்டம் ஒரு பழைய கதை...'' - சோஹினி சொன்னாள்: "அது இப்போது சில மனங்களில் ஆழத்தில் வேரூன்றி அலைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும். ஆனால், அதன் கடிவாளம் இப்போதும் ஆண்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள்தான் எங்களுடைய காதுகளில் இனிய வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் கன்னத்தில் அடித்து தகர்ப்பதும் அவர்கள்தான்.''

"உங்களுடைய வார்த்தைகள் அபாரமாக இருக்கின்றன! ஆனால், உங்களைப் போன்ற பெண்கள் மருமக்கத்தாய முறையை மீண்டும் கொண்டு வந்தால், உங்களுடைய புடவைகளைப் பற்றிய ஒரு அட்டவணையைத் தயார் பண்ணித் தர எனக்குத் தயக்கம் இல்லை. எங்களுடைய கல்லூரியின் முதல்வரை உங்களுடைய வீட்டில் சோளம் அரைக்க விடுவதற்குக்கூட நான் தயாராக இருக்கிறேன். வங்காளிகளின் சமூகத்தில் மருமக்கத்தாய முறை வெளிப்படையாகத் தெரியவில்லை என்று மனவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது நம்முடைய குருதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. வேறு ஏதாவது வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் கவலையுடன் "அம்மா... அம்மா..." என்று அழைப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ரேபதியின் போதி மரத்திற்கு மிகவும் உயரத்தில், பயமுறுத்தக்கூடிய ஒரு பெண் உருவம் இருக்கிறது என்ற விஷயத்தை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்!''

"அவனுக்கு ஏதாவது இளம் பெண்ணுடன் காதல்...?''

"அப்படியென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவனுடைய மனதிற்குள் தைரியம் இருக்கிறது என்று அதற்கு அர்த்தம் உண்டாகி விடுமே? ஒரு இளம்பெண்மீது காதல் வயப்பட்டு சுய உணர்வை இழந்த ஒரு இளைஞன்- இந்த வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு அது ஒரு மோகமான விஷயமாயிற்றே! ஆனால், அதற்கு பதிலாக அவன் வயதான ஒரு பெண்ணின் ஜெப மாலையில் ஒரு மணியாக மட்டுமே எஞ்சி நிற்கிறான். அவனுடைய இளமையாலோ திறமையாலோ அறிவியல் அறிவாலோ- எந்தவொன்றாலும் அவனை அந்தப் பொருளின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு வர முடியவில்லை.''

"ஒருநாள் நான் அவனை தேநீர் பருகுவதற்காக அழைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்மைப் போன்ற புனிதமற்ற பிறவிகளுடன் இருந்து தேநீர் பருகுவதற்கு அவன் தயாராக இருப்பானா?''

"நாம் புனிதமானவர்கள் இல்லையா? அவன் அதற்குத் தயாராகவில்லையென்றால், நான் அவனை அடித்து உதைப்பேன். கடுமையாக உலுக்கி எடுத்து விடுவேன். அத்துடன் அவனிடம் எஞ்சியிருக்கும் பிராமணிய உணர்வின் இறுதியான தொடர்பற்ற விஷயமும் தெறித்துப் போய்விடும். இனி இன்னொரு விஷயம்... உங்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள் அல்லவா?''

"இருக்கிறாள்... அந்த ஊர் சுற்றிப் பெண் நல்ல அழகு கொண்டவளாகவும் இருக்கிறாள். அந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை!''

"ஓ... வேண்டாம். என்னைத் தவறாக நினைக்காதீர்கள். அழகு வாய்ந்த இளம் பெண்களுக்காகத்தான் நானே இருக்கிறேன். எனக்கு அது ஒரு நோயைப்போல. என்னால் அதை விட முடியவில்லை. ஆனால் ரேபதியின் உறவினர்கள் நகைச்சுவை உணர்வு இல்லாத பிரிவைச் சேர்ந்தவர்கள். உங்களுக்குத் தெரியுமா? பார்வையில் அவர்கள் நம்மை பயமுறுத்தி விடுவார்கள்!''

"பயப்பட வேண்டாம். எங்களுடைய ஜாதியைச் சேர்ந்த ஒரு பையனுடன் நான் அவளுடைய திருமணத்தை நிச்சயம் செய்து விட்டேன்!''

அது ஒரு மிகப் பெரிய பொய்யாக இருந்தது.

"நீங்கள் ஜாதி மாறித் திருமணம் செய்தீர்கள் அல்லவா?''

"ஆமாம்... அதன் மூலம் எனக்கு எவ்வளவோ ஆட்களுடன் போராட வேண்டிய சூழ்நிலை வந்திருக்கிறது. என்னுடைய சொத்தைப் பத்திரமாகக் காப்பாற்றுவதற்காக சட்டப்போர் நடத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டாகியிருக்கிறது. அதில் எப்படி வெற்றி பெற்றேன் என்பதை நான் யாரிடமும் கூறியதில்லை!''

"அதைப் பற்றி நான் சில விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களையும் உங்களுடைய எதிரியின் க்ளார்க்கையும் இணைத்து ஆட்கள் பல வதந்திகளையும் பரப்பிவிட்டிருந்தார்கள். இறுதியில் நீங்கள் வழக்கில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அந்த அப்பாவி மனிதன் தூக்கில் தொங்கி இறந்துவிட்டார்.''


"பல யுகங்களாக பெண்கள் எப்படி பிரச்சினைகளைக் கடந்து வாழ்ந்தார்கள்? பெண்களின் கபடம் நிறைந்த தந்திரங்களுக்கு சரியான திட்டங்கள் தேவைப்படுகின்றன- ஒரு போருக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்வதைப் போல. ஆனால், அதற்கு மேலே எது எப்படி இருந்தாலும் கபடம் நிறைந்த தேனைத் தடவ வேண்டுமே! அதுதான் ஒரு பெண்ணின் இயல்பான போர் நீதி!''

"அங்கு நீங்கள் மீண்டும் என்னைத் தவறாக நினைத்திருக்கிறீர்கள். நாங்கள் விஞ்ஞானிகள். நீதிபதிகள் அல்ல. இயற்கையின் போக்குகளை உணர்ச்சிவசப்படாமல் கூர்ந்து கவனிக்கிறோம். அந்த விளையாட்டின் பலன் அதன் இயல்பான வளர்ச்சிதான். உங்களுடைய விஷயத்தில் அதன் பலன் நீங்கள் எதிர்பார்த்ததுதான். அதன் பரிசு உங்களுக்கு உரியதுதான் என்று நான் கூறினேன் அல்லவா? நான் ஒரு பேராசிரியர்.... வெறும் ஒரு க்ளார்க் அல்ல என்ற வேறுபாடு என்னைக் காப்பாற்றுவதற்காக இருக்கிறது. புதன் சூரியனிடமிருந்து விலகிச் சென்றது அந்த கிரகத்திற்கு நல்லதாகி விட்டது. அது கணித அறிவியலின் ஒரு பகுதியும்கூட. அதில் நல்லதோ மோசமானதோ இல்லை. அப்படிப்பட்ட காரியங்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்.''

"நான் படித்திருக்கிறேன். கிரகங்கள் ஈர்ப்பு, விலகல் விதிகளைத் தானே பின்பற்றுகின்றன? எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் அது.''

"இன்னொன்றையும் நான் வெளிப்படையாகக் கூற விரும்புகிறேன். உங்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் மனதில் இன்னொரு கணக்குக் கூட்டலில் ஈடுபட்டிருந்தேன். கணக்கேதான். சிந்தித்துப் பாருங்கள். எனக்கு பத்து வயதுகளாவது குறைவாக இருந்திருந்தால், இப்போது நான் தேவையற்ற ஏடாகூடமான விஷயங்களில் போய் மாட்டிக் கொண்டிருந்திருப்பேன். ஒரே ஒரு வேறுபாட்டில் அங்கு மோதுவது இல்லாமற்போய்விட்டது. எனினும், எனக்குள் ஒரு காற்று மேலே எழுகிறது. சிந்தித்துப் பாருங்கள். உண்மையிலேயே இந்த படைப்பு என்பது கணித அறிவியலால் உண்டான விடுகதைதானே!''

"முழங்காலில் கையால் அடித்துக் கொண்டு சவுதரி உரத்த குரலில் சிரித்தார். எது எப்படியோ, ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள அவர் மறந்து விட்டிருந்தார்- தன்னைப் படைத்த கடவுளைக்கூட தோல்வியடையச் செய்வதைப் போல, அலங்காரம் செய்து கொள்வதற்காக சோஹினி இரண்டு மணி நேரத்தைச் செலவிட்டாள் என்ற விஷயத்தை.

4

றுநாள் பேராசிரியர் வந்தபோது சோஹினி எலும்பும் தோலுமாக இருந்த நாயைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.

"இந்தக் கேடுகெட்ட உயிரினத்தின்மீது நீங்கள் இந்த அளவிற்கு அக்கறை செலுத்துவது எதற்காக?'' -அவர் கேட்டார்.

"நான் இவனைக் காப்பாற்றினேன். அதனால்தான் இவனை நான் குளிப்பாட்டுகிறேன். ஒரு கார் விபத்தில் இவனுடைய கால் முறிந்துவிட்டது. அந்த முறிவைச் சரி பண்ணி நான் இவனை குணப்பத்தினேன். இப்போது இவனுடைய வாழ்க்கையில் எனக்கு ஒரு முக்கிய பங்கு கிடைத்து விட்டிருக்கிறது!''

"தினமும் இந்தப் பாழாய்ப் போன உயிரினத்தைப் பார்க்கும் போது உங்களுக்கு மனக் கவலை உண்டாவதில்லையா?''

"இவனுடைய பார்வையைப் பார்த்துக் காப்பாற்றுவதற்காக நான் இவனை வளர்க்கவில்லை. மரணத்துடன் நேருக்கு நேராக நின்ற பிறகு, வாழ்க்கைக்கு அவன் திரும்பி வந்த முறையைத்தான் நான் பார்க்கிறேன். வாழக்கூடிய அவனுடைய உரிமையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மத நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஆட்டுக் குட்டியை காளிக்கு முன்னால் பிடித்து இழுத்துக் கொண்டு போய் நிறுத்த வேண்டிய கேடு கெட்ட செயல் எதுவும் எனக்கு இல்லை. கண் தெரியாத, ஊனமான கால்களைக் கொண்ட நாய்களுக்கும் முயல்களுக்கும் உங்களுடைய பயாலஜி லேப்பில் நான் ஒரு மருத்துவமனையை ஆரம்பிக்கப் போகிறேன்.''

"மிசஸ் மல்லிக்... உங்களை நெருக்கமாக அறிய அறிய எனக்கு ஆச்சரியம் உண்டாகிறது!''

"இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ளும்போது அதற்கும் மாற்றம் உண்டாகும். ரேபதி பாபுவைப் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்து கொண்டு வருவதாக நீங்கள் கூறினீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்.''

"நாங்கள் தூரத்து உறவினர்கள். அதனால் அவனுடைய குடும்பத்தைப் பற்றிய சில விஷயங்கள் எனக்குத் தெரியும். ரேபதி பிறந்தவுடன் அவனுடைய தாய் இறந்துவிட்டாள். தந்தையின் சகோதரிதான் அவனை எடுத்து வளர்த்தாள். அந்த அத்தை மிகவும் கண்டிப்பானவள். சிறிய ஒரு விஷயத்திற்குக்கூட அவள் அந்த வீட்டையே ஒரு வழி பண்ணி ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவாள். அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்குக்கூட அவள்மீது பயம் இல்லாமல் இல்லை. அத்தையின் போக்கு காரணமாக ரேபதிக்கு தைரியம் சிறிது கூட இல்லாமற் போனது. பள்ளிக் கூடத்திலிருந்து வருவதற்கு ஐந்து நிமிடங்கள் தாமதமானால், அதற்கு அவன் இருபத்து ஐந்து நிமிடங்கள் விளக்கம் கூற வேண்டும்.''

"அடக்கம் உண்டாக்குவதுதான் ஒரு ஆணின் பொறுப்பு என்றால், அன்பாக இருப்பதும் கொஞ்சுவதும் பெண்களின் வேலைகளாக இருக்கின்றன. இந்த காரியங்கள்தான் பெண், ஆண் தன்மைகளை நிலை நிறுத்துகின்றன என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்'' -சோஹினி கூறினாள்.

"பெண்கள் அன்னப் பறவையைப் போல துள்ளிக் கொண்டு நடக்கிறார்கள். அவர்கள் சலனமற்ற தன்மையுடன் இருப்பதில்லை. அவர்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குச் சாய்கிறார்கள். எனக்கு வருத்தம் இருக்கிறது மிஸஸ் மல்லிக்... ஆனால் இந்த விஷயத்திலும் சில ஆச்சரியங்கள் இருக்கின்றன. தலையை உயர்த்திக்கொண்டு நடக்ககூடிய பெண்களும் இல்லாமலில்லை. அதாவது...''

"அதிகமாகப் பேச வேண்டாம். இப்படிப்பட்ட பெண்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் சமீப காலமாக வளர்த்துக் கொண்ட ஒரு குணத்தைப் பற்றிக் கூறட்டுமா? "வயது குறைந்த இளைஞர்களை வலை வீசிப் பிடிப்பது" என்ற குணம். இல்லாவிட்டால் உங்களைப் போன்ற ஒரு மனிதரை இப்படி சிரமப்பட வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லையே!''

"இல்லை... அப்படிக் கூறாதீர்கள். உங்களுக்குத் தெரியுமா? நாளைய வகுப்புகளுக்கான ஆயத்தங்களைக்கூட ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய கடமைகளை மறந்துவிட்டு நான் முதல் முறையாக சந்தோஷப்படுவது இப்போதுதான்.''

"ஒருவேளை பெண் இனத்தின்மீது பொதுவாகவே உங்களுக்கு மென்மையான அணுகுமுறை இருக்கலாம்.''

"அசாத்தியம் இல்லாத ஒரு விஷயம். ஆனால், அங்கு சில வேறுபாடுகள் இருக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி நாம் வேறொரு நேரத்தில் பேசுவோம்!''

சோஹினி சிரித்துக் கொண்டே சொன்னாள்: "ஒருவேளை அப்படிப் பட்ட சூழ்நிலையே வராமல் போகலாம்... சரி... நீங்கள் இப்போது சொன்ன விஷயத்தை முழுமை செய்யுங்கள். ரேபதி பாபு திறமைசாலியாக ஆனது எப்படி?''

"அவன் அப்படி ஆவதற்கான எந்தவொரு சூழ்நிலையும் இல்லாமலிருந்தது. ஆராய்ச்சி சம்பந்தமாக அவன் ஏதாவது மலைப் பகுதிக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அவன் பத்ரிநாத்திற்குச் செல்லத் தீர்மானித்தான். நடுக்கமும் பயமும்! அவனுடைய அத்தையின் தாய் பல வருடங்களுக்கு முன்னால் பத்ரிநாத்திற்குப் போகும் பாதையில் தான் மரணத்தைத் தழுவினாள். அந்த நினைவை தூசி தட்டி எடுத்து அத்தை, "நான் உயிருடன் இருக்கும் வரை நீ மலையில் ஏறுவதற்குச் செல்லக் கூடாது. அந்தக் காலத்திலிருந்தே நான் பிரார்த்தனை செய்யும், மனதில் ஆசைப்படக்கூடிய விஷயங்களைக் கூறாமல் இருப்பதே நல்லது. நாம் அந்த விஷயத்தை விட்டு விடுவோம்" என்று கூறிவிட்டாள்.

"ஆனால், அத்தைகளை மட்டும் எதற்காக நாம் குறை சொல்ல வேண்டும்? அவர்களுடைய அருமை மருமகன்களுக்கு தைரியம் கிடையாதா என்ன?''

"நான் உங்களிடம் இதற்கு முன்பே சொல்லவில்லையா, மருமக்கத்தாயம் அவர்களுடைய ரத்தத்தில் ஊறிப்போய் விட்டிருக்கிறது என்று. அது அவர்களுடைய மூளையை பாதித்துவிட்டிருக்கிறது. அதனால் அவர்கள் எப்போதும் மாமா என்றுதான் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெட்கம் கெட்ட மொழி. அதுதான் முதல் காட்சி. பிறகு ஒரு சமயம் கேம்ப்ரிட்ஜுக்கு மேற்படிப்பிற்குப் போவதற்காக ரேபதிக்கு ஒரு ஸ்காலர்ஷிப் கிடைத்தபோது, அந்த அத்தை கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணி மீண்டும் தன்னை வெளிக்காட்டினாள். அவன் அங்கு சென்றால் ஏதாவதொரு வெள்ளைக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விடுவான் என்று அவள் பயந்தாள். அப்போது நான் கேட்டேன்- "அவன் அப்படிச் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன செய்வது?" என்று. "எல்லாம் நாசமாகி விடும். மனதில் நினைத்திருக்கும் அந்த பயம் அன்று ஒரு உண்மையாகிவிடும். அவன் வெளிநாட்டிற்குச் சென்றால் நான் தூக்கில் தொங்கி இறந்து விடுவேன்" என்று அவள் பயமுறுத்தினாள். ஒரு நாத்திகனாக இருந்ததால் தூக்கில் தொங்கி இறப்பதற்கான கயிற்றை உண்டாக்குவதற்கு எந்தக் கடவுளிடம் வேண்டிக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு அதை வாங்கிக் கொடுப்பதற்கும் என்னால் முடியவில்லை. முட்டாள், தைரியமில்லாதவன், ஊர் சுற்றி என்றெல்லாம் நான் ரேபதியைப் பார்த்து சத்தம் போட்டுச் சொன்னேன். அவ்வளவுதான். இப்போது ரேபு ஏதோ ஒரு மில்லில் எண்ணெய் ஆட்டும் வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான்.''

அதைக் கேட்டபோது சோஹினிக்கு சுவாரசியம் உண்டானது. "என்னுடைய மூளை சுவரில் மோதிச் சிதறுவதைப் போல எனக்குத் தோன்றுகிறது. ஒரு பெண் ரேபதியை கடலை நோக்கி பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். இனிமேல் வேறொரு பெண் அவனை கரைக்கு இழுத்துக் கொண்டு வருவாள். நான் உறுதியான குரலில் கூறுகிறேன்.''- அவள் சொன்னாள்.

"மேடம்... உண்மையைச் சொல்லட்டுமா? அப்படிப்பட்ட உயிரினத்தின் தலையைப் பிடித்து மூழ்க வைத்துக் கொல்லக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பிறவிகளின் வாலைப் பிடித்துத் தூக்கக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. நீங்கள் அதைப் பழகியபிறகு செய்வதுதான் நல்லது. ஒரு விஷயத்தைக் கேட்கட்டுமா? அறிவியல் மீது உங்களுக்கு இந்த அளவிற்கு அதிகமாக ஆர்வம் தோன்றுவதற்குக் காரணம் என்ன?''

"வாழ்நாள் முழுவதும் அறிவியல்மீது அளவற்ற ஈடுபாட்டை என்னுடைய கணவர் கொண்டிருந்தார். என்னுடைய கணவருக்கு அளவற்ற ஆர்வம் இரண்டே விஷயங்களில்தான் இருந்தன. பர்மா சுருட்டு மீதும், தன்னுடைய சோதனைக் கூடத்தின் மீதும். பல நேரங்களில் அவர் என்னை அந்த சுருட்டில் பற்ற வைத்து ஒரு பர்மாக்காரியாக ஆக்க முயற்சித்திருக்கிறார். ஆண்கள் அதை இயல்பற்ற ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்து நான் அதைத் தவிர்த்து விட்டேன். தன்னுடைய இரண்டாவது ஈடுபாட்டின் மீதும் அவர் என்னை ஆர்வம் கொள்ளச் செய்திருந்தார். பொதுவாக ஆண்கள் பெண்களின் வலையில் போய் சிக்கிக் கொள்வதுதானே வழக்கமாக நடக்கக் கூடியது? இங்கு அதற்கு மாறாக நடந்தது. இரவும் பகலும் எனக்கு அறிவியல் உண்மைகளைப் பற்றிய அறிவைச் சொல்லிக் கொடுத்து அவர் என்னை வலையில் சிக்க வைத்த காரியம்தான் நடந்தது. சவுதரி மசாய், மனைவியிடமிருந்து கணவனுக்குத் தன்னுடைய தவறுகளை மறைத்து வைக்கத் தெரியாது என்ற விஷயம் உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆனால், ஒரு விஷயத்தைக் கூறாமல் இருக்க முடியாது. அவருடைய தோற்றத்திலோ நடவடிக்கைகளிலோ சிறிதுகூட களங்கத்தைக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. மிகவும் அருகில் இருந்து பார்க்கும்போதுகூட அவர் எனக்கு ஒரு மகானாகவே தோன்றினார். சற்று தூரத்தில் நின்று பார்க்கும்போது அவர் அதைவிட பெரிய மகானாக இருப்பதைப் போல எனக்கு தோன்றியிருக்கிறது.''

"அவருடைய மிகப் பெரிய பலம் என்ன என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறது?''- சவுதரி கேட்டார்.

"நான் அதைக் கூற வேண்டுமா? அவருடைய மிகப் பெரிய அறிவு அல்ல- அறிவுமீது கொண்டிருந்த முழுமையான வழிபாடும் ஈடுபாடும்தான் அவருடைய மிகப் பெரிய பலம். அவரைச் சுற்றி எப்போதும் வழிபடக்கூடிய ஒரு சூழல் இருந்தது. எங்களைப் போன்ற பெண்களுக்கு வழிபடுவதற்கு பார்க்கக் கூடிய ஒரு பொருள் வேண்டும். அதனால்தான் அவருடைய சோதனைக்கூடம் என்னுடைய கடவுளாக ஆனது. சில நேரங்களில் அதற்கு உள்ளே விளக்கை ஏற்றி எரிய வைக்க வேண்டும், சந்தனத் திரியைப் புகையச் செய்ய வேண்டும், சங்கை முழங்கச் செய்ய வேண்டும், வாத்திய கோஷங்களை எழச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால், என்னுடைய கணவருக்கு அவை எதுவும் பிடிக்காமல் போய்விடுமோ என்று நான் பயந்தேன். அவர் இங்கு தினமும் வழிபாடு செய்து கொண்டிருந்த போது, அவர் கூறுவதைக் கேட்பதற்காக மட்டுமே கல்லூரி மாணவர்கள் நிறையப் பேர் வந்து குழுமியிருப்பார்கள். நானும் அவர்களுக்கு மத்தியில் போய் உட்காருவது வழக்கம்.''

"அந்த மாணவர்களுக்கு அவர் கூறுவதைக் கேட்க முடிந்ததா?''

"கவனித்துக் கேட்க முடிந்தவர்களை, நான் தனியாகக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். அவர்களில் முழுமையான சில சந்நியாசிகளை என்னால் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் சில புத்திசாலி இளைஞர்கள் அவர் கூறுவதை எழுதுவதைப் போல நடித்துக் கொண்டு மிகவும் அருகில் உட்கார்ந்தவாறு தங்களின் அழகுக் காதலிக்கு காதல் கடிதம் எழுதி தங்களுடைய ரசனையை வெளிப்படுத்துவார்கள்.''

"உங்களுக்கு அது பிடித்திருந்ததா?''

"உண்மையைச் சொல்லட்டுமா? அது எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய கணவர் வேலைக்குச் செல்வார். அப்போது காதலர்கள் அங்கு சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருப்பார்கள்.''


"நான் இதைக் கேட்பதற்காக தவறாக நினைக்கக் கூடாது. எனக்கு மனோதத்துவம் படிப்பதில் ஆர்வம் உண்டு. அவர்களுக்கு எப்போதாவது அதற்கான அதிர்ஷ்டம் அமைந்ததா?''

"நான் அதைக் கூறுவதற்கு விரும்பவில்லை. ஆனால், நான் ஒரு புனிதமான பெண் அல்ல. அவர்களில் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும். உண்மையாக சொல்லப்போனால் இப்போதும்கூட அவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு ஆசை எனக்குள் இருக்கிறது.''

"அவர்கள் சிறிது அதிகமான அளவில் இருந்தார்களோ?''

"இதயத்திற்கு ஆசை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ரத்தத்திற்கும் சதைக்கும் அடியில் இதயம் தன்னுடைய நெருப்பை எல்லா நேரங்களிலும் எரிய விட்டுக் கொண்டே இருக்கும். சிறிய அளவில் ஊதினால்கூட போதும், அது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிடும். என்னுடைய ஆரம்பம் மிகவும் அசிங்கமாகத்தான் இருந்தது. அதனால் ஆட்களுடன் வெளிப்படையாகப் பேசுவதில் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலிருந்தது. எங்களைப் போன்ற பெண்கள் வாழ்நாள் முழுவதும் சந்நியாசிகளாக வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. கபடத்தன்மையைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கும் மிகவும் கஷ்டமான வேலையை நாங்கள் தினமும் செய்து கொண்டிருக்கிறோம். திரௌபதிக்கும் குந்திக்கும் சீதையாகவும் சாவித்திரியாகவும் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகவில்லையா? சவுதரி மசாய், உங்களிடம் என்னால் அதைக் கூறாமல் இருக்க முடியாது. ஒரு விஷயத்தை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இளம் வயதிலிருந்தே சரி எது, தவறு எது என்பதை அடையாளம் கண்டுபிடிக்கக்கூடிய அறிவு எனக்கு இல்லை. எனக்கு ஒரு குரு இல்லை என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் திடீரென்று நான் மோசமான செயல்களில் போய் விழுந்தேன். அதில் நான் சிரமமே இல்லாமல் நீந்தினேன். எந்த ஒரு விஷயத்தாலும் என்னைப் பிடித்து மேலே கொண்டு வர முடியவில்லை. எது எப்படியோ, என்னுடைய கணவர் இறந்தவுடன் என்னுடைய கெட்ட செயல்களும் அவருடைய சிதையில் எரிந்து சாம்பலானது. நான் சேர்த்து வைத்திருந்த பாவச் செயல்களை நான் இப்போது ஒவ்வொன்றாக எரித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் புனித மனிதரின் நெருப்பு இப்போதும் இந்த சோதனைக் கூடத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.''

"அடடா! மிகுந்த தைரியத்துடன் நீங்கள் உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறீர்கள்!''

"உண்மையைக் கூறுவதைக் கேட்பதற்கு பொருத்தமான ஒரு மனிதரைச் சந்திக்கும்போது, அதைக் கூறுவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருக்கும். நீங்கள் வெளிப்படையான இயல்பைக் கொண்ட மனிதர்; புனிதமானவர்...''

"அப்போதைய அந்தக் காதல் கடிதங்களை எழுதிய இளைஞர்கள் இப்போதும் உங்களுடைய மனதில் முளைத்து நின்று கொண்டிருக்கிறார்களா?''

"அப்படித்தான் அவர்கள் என்னுடைய இதயத்தைப் புனிதமானதாக ஆக்கினார்கள். என்னுடைய செக் புத்தகத்தில் கண்களைப் பதித்துக் கொண்டு அவர்கள் என்னைச் சுற்றி குழுமியிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பெண்களால் தங்களுடைய மனதில் இருக்கும் மோகத்தைக் கடந்து வாழ முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த வகையில் என்மீது காதல் இருப்பதாகக் காட்டிக் கொண்டு என்னுடைய பணப் பெட்டிக்குள் நுழையலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். வறண்டு காய்ந்து போயிருந்த என்னுடைய பஞ்சாபி இதயத்திற்குள் எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லை என்று அவர்கள் கருதினார்கள். என்னுடைய சந்தோஷத்திற்காக சமூகத்தில் எல்லா வகையான சட்டங்களையும் காற்றில் பறக்கவிட என்னால் முடியும். ஆனால், என்னுடைய நம்பிக்கைகளுக்கு துரோகம் செய்ய என்னால் முடியாது. என்னுடைய சோதனைக் கூடத்திலிருந்து ஒரு பைசாவைக்கூட பெறுவதற்கு அவர்களால் முடியவில்லை. என்னுடைய இதயச்சுவரின் கருங்கற்களை வைத்துதான் என்னுடைய கோவில் வாசலை நான் பத்திரமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த கற்களை அகற்றக் கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை. என்னை வாழ்க்கையின் பங்காளியாகத் தேர்ந்தெடுத்த அந்த மனிதருக்கு தவறு உண்டாகவில்லை. அவருடைய நினைவுகளுக்கு முன்னால் நான் தலைகுனிந்து நிற்கிறேன். அந்தத் திருடர்களின் காதை அடித்துக் கிழிக்க முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றுகூட நான் ஆசைப்படுகிறேன்.''

போவதற்கு முன்னால் அவர் சோஹினியுடன் சேர்ந்து அந்த சோதனைக் கூடத்தைச் சுற்றிப் பார்த்தார். "பெண்மைத்தனம் அதிக அளவில் நிறைந்திருக்கும் அறிவு இங்கு சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிசாசுகளைச் சண்டியாக ஆக்கி வெளியேற்றப்பட்ட செயல்கள் நடந்திருக்கிறது.''- அவர் சொன்னார்.

"நீங்கள் விரும்பியபடி விளக்கம் அளிக்கலாம். அதைப் பற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை.'' - சோஹினி சொன்னாள்: "பெண்களின் அறிவுதான் கடவுளின் உண்மையான படைப்பு. நாங்கள் இளம் வயதில் எங்களுக்கு சக்தி இருந்தபோது, அது காட்டில் மறைந்திருந்தது. எங்களுடைய குருதி அமைதியாக ஆனபோது, அந்தப் பழமையான அன்னை கண்விழித்து எழுந்து நிற்கிறாள். ஆனால், அதற்கு முன்பே நான் இறந்து விடுவேன் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.''

"கவலைப்பட வேண்டாம்! மரணத்திற்கு முன்பே உங்களால் உங்களுடைய திறமைகள் முழுவதையும் வெளியே கொண்டு வர முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.''-பேராசிரியர் சவுதரி சொன்னார்.

5

ரைத்த தலைமுடியைக் கறுப்பாக ஆக்கி, சோஹினி ஒரு தாவரவியல் பூங்காவிற்குச் சென்றாள். நீலமும் பச்சையும் கலந்து கரையிட்ட- வெண்ணிற பனாரஸ் புடவையை அந்த பெண் அணிந்திருந்தாள். இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த சோளி அவளுடைய புடவைக்கு அடியில் தெரிந்தது. நெற்றியில் குங்குமம் வைத்திருந்தாள். மை தடவி கண்களைக் கறுப்பாக்கி விட்டிருந்தாள். தலைமுடியை மிகவும் சுதந்திரமாக்கி ஒரு ரிப்பனை வைத்துக் கட்டியிருந்தாள். கறுத்த தோலில் சிவப்பு வெல்வெட் இணைத்து உண்டாக்கப்பட்ட செருப்பை அவள் அணிந்திருந்தாள்.

ரேபதி வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளை செலவிடக் கூடிய மரங்களுக்கு மத்தியில்தான் சோஹினி அவனைப் பார்த்தாள். நெற்றியை அவனுடைய பாதங்களில் முத்தமிடும் வண்ணம் வைத்து வணங்கி, அவள் அவன்மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிக்காட்டினாள். அதிகமான பரபரப்புடன் ரேபதி வேகமாக எழுந்தான்.

சோஹினி சொன்னாள்: "மன்னிக்கணும்,குழந்தை. நீ ஒரு பிராமணன். நான் வெறும் ஷத்திரிய குலத்தில் பிறந்தவள். பேராசிரியர் சவுதரி என்னைப் பற்றி உன்னிடம் கூறியிருப்பார்!''

"ஆமாம்... ஆனால், உங்களுக்கு அமர்வதற்கு ஏற்ற ஒரு இடத்தை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.''

"இதோ... இங்கே ஒரு மென்மையான புல்வெளி இருக்கின்றதே! இதைவிட உட்காருவதற்கு சிறந்த இடம் எங்கு கிடைக்கும்? நான் இங்கே எதற்காக வந்திருக்கிறேன் என்பதை நினைத்து நீ ஆச்சரியப் பட்டிருக்கலாம். ஒரு சபதத்தை நிறைவேற்றுவதற்குத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உன்னைப்போல வேறொரு பிராமணனை என்னால் எங்கும் கண்டுபிடிக்க முடியாது!''

"என்னைப்போல ஒரு பிராமணனையா?'' ரேபதி ஆச்சரியத்துடன் கேட்டான்.


"உண்மையாகத்தான் கூறுகிறேன். காலகட்டத்திற்கு ஏற்றபடி அசாதாரணமான கல்வியறிவைப் பெறுபவன்தான் உண்மையான பிராமணன் என்று என்னுடைய குரு எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்.''

இப்போது ரேபதி முழுமையான பதைபதைப்பில் இருந்தான். "என்னுடைய தந்தை பூஜைக்கான விதிகளைப் பின்பற்றி வாழ்ந்த பிராமணர். ஆனால் எனக்கோ பூஜையோ மந்திரமோ தெரியாது.''

"உன்னால் அதை எப்படிக் கூற முடியும்? இந்த உலகத்தை கீழ்ப்படியச் செய்வதற்கான மந்திரங்களைத்தான் நீ எனக்கு கற்றுத் தந்திருக்கிறாய். ஒரு பெண்ணால் இப்படியெல்லாம் பேசுவதற்கு எப்படி முடிகிறது என்று நீ நினைக்கலாம். நல்ல ஒரு ஆணிடமிருந்துதான் நான் இவற்றையெல்லாம் கற்றுக் கொண்டேன். என்னுடைய கணவர் தான் அந்த ஆள். அவருடைய வழிபாட்டு ஆலயத்தைப் பார்க்க வருகிறேன் என்று தயவு செய்து எனக்கு நீ வாக்குறுதி அளிக்க வேண்டும்.''

"நாளை காலையில் நான் ஃப்ரீயாக இருப்பேன். அப்போது நான் அங்கே வருகிறேன்.''

"உனக்கு செடிகளுடனும் தாவரங்களுடனும் மிகுந்த பிரியம் இருக்கிறது என்ற விஷயம் எனக்குத் தெரியும். எனக்கு அதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. தாவரங்கள்மீது என்னுடைய கணவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரை பர்மாவை நோக்கி இழுத்தது. அப்போது நானும் அவருடன் பர்மாவிற்குச் சென்றேன்.''

அவள் தன் கணவனுடன் பர்மாவிற்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால், அது விஞ்ஞானத்தின்மீது கொண்ட ஆர்வத்தால் அல்ல. தன்னுடைய கற்பைப் பற்றிக் கொண்டிருந்த சந்தேகத்தைப்போல, அவளுக்கு தன் கணவனின் கற்பைப் பற்றியும் இருந்தது. அவனுடைய தலைமுடி வரை அவளுக்கு சந்தேகம் இருந்தது. ஒரு சமயம் உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்திருந்தபோது, நந்த கிஷோர் தன் மனைவியிடம் கூறினான்: "மரணமடைவதன் மூலம் கிடைக்கக்கூடிய ஒரே நன்மை- இனிமேல் உன்னுடைய பார்வையையும் கூர்மையான ஆராய்ச்சியையும் அனுபவிக்க வேண்டியதில்லை என்பதுதான்.''

"ஆனால், நானும் உங்களுடன் சேர்ந்து பர்மாவிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.''- சோஹினி சொன்னாள்.

"அய்யோ! கடவுளே! நீதான் காப்பாற்ற வேண்டும்.''- சிரித்துக் கொண்டே நந்த கிஷோர் சொன்னான்.

"நான் பர்மாவிலிருந்து ஒரு விசேஷமான விதையைக் கொண்டு வந்திருக்கிறேன்.'' -சோஹினி ரேபதியிடம் கூறினாள்: "கொஸக் தனியேங் என்று அவர்கள் அதற்கு பெயரிட்டிருக்கிறார்கள். அதில் உண்டாகக்கூடிய மலர்கள் மிகவும் அழகானவையாக இருக்கும். ஆனால், என்னால் அந்த மலர்களை அதை மாதிரி இருக்கும்படி செய்ய முடியவில்லை.''

வாழ்க்கையில் முதல் முறையாக தன் கணவனின் நூலகத்திலிருந்து அந்தப் பெயரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு அவள் முயற்சித்தாள். அந்தச் செடியை அவள் எந்தச் சமயத்திலும் பார்த்ததுகூட இல்லை. அந்த ஞானியான இளைஞனை வலையில் விழச் செய்வதற்காக அவள் நூலறிவு என்ற வடிவத்திலிருந்த ஒரு வலையை விரித்தாள்.

ரேபதி அதில் விழுந்துவிட்டான்! "உங்களுக்கு அந்தச் செடியின் லத்தீன் மொழியில் இருக்கும் பெயர் தெரியுமா?''

"மிலெற்றியா.'' மிகவும் மெதுவான குரலில் சோஹினி சொன்னாள்.

அவள் தொடர்ந்து சொன்னாள்: "நம்முடைய பாரம்பரிய முறையில் இருக்கக்கூடிய ஒரு வகையான பாதுகாப்பு மையத்தை என்னுடைய கணவர் நடத்தவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை அவர் கண்களை மூடிக் கொண்டு நம்பினார். இயற்கையில் இருக்கும் அழகான பொருட்களை பெண்களால் தங்களுடைய மனதிற்குள் கொண்டு செல்ல முடிந்தால், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் அழகர்களாகவோ அழகிகளாகவோ இருப்பார்கள் என்பதுதான் அது. நீ அதை நம்புகிறாயா?''

நந்த கிஷோர் அத்தகைய ஒரு நம்பிக்கையை வைத்துக் கொண்டிருப்பவன் அல்ல என்ற விஷயத்தைக் கூற வேண்டியது இல்லையே!

"அந்த நம்பிக்கையை நிரூபிப்பதற்கான சான்றுகள் எதையும் நாங்கள் இதுவரை பார்த்ததில்லை.'' தலையைச் சொறிந்து கொண்டே அவன் சொன்னான்.

"ஆனால், என்னுடைய குடும்பத்திலேயே அதை நிரூபிக்கிற மாதிரி ஒரு சான்றை நான் பார்த்து விட்டேன்.''- சோஹினி சொன்னாள்: "என்னுடைய மகளுக்கு எங்கிருந்து இப்படியொரு அழகு கிடைத்தது? ஒரு இனிமையான வசந்தகால அழகுகளைப்போல- அவளைப் பார்க்கும்போது உனக்கு அது புரியும்.''

ரேபதிக்கு அவளைப் பார்ப்பதற்கு என்னவோபோல இருந்தது. நாடகத்தனமான எந்தவொரு அடையாளமும் அவனிடம் தங்கியிருக்கவில்லை.

சோஹினி பிராமணனான தன்னுடைய சமையல்காரனை ஒரு பூசாரியாக வேடம் அணிய வைத்தாள். அவனுடைய நெற்றியில் அருமையான சந்தனக் குறியையும், குடுமியில் செத்திப் பூவையும், பட்டாடைகளையும், சாயம் தேய்த்து மெருகு சேர்த்த பூணூலையும் அணிவித்து புரோகிதரின் மதிப்பைக் கூட்டினாள். "தாக்கூர்...'' சோஹினி அவனிடம் கூறினாள்: "நீங்க போயி நீலுவை அழைத்துக் கொண்டு வாங்க.''

வரவேற்பறைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும்படி சோஹினி தன் மகளிடம் கூறியிருந்தாள். ஒரு பூத்தட்டு நிறைய மலர்களுடன் அங்கு அவள் நுழைந்து வர வேண்டும். காலை நேர நிழலும் வெளிச்சமும் அவளுடைய தோற்றத்தை மேலும் அழகாக ஆக்கியது.

ரேபதியை தெளிவாகப் பார்ப்பதற்கு சோஹினி அந்த இடைப்பட்ட நேரத்தை மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டாள். அவனுடைய நிறம் கறுப்பு என்றாலும், சிவப்பு நிறம் கலந்த வெள்ளை நிறம் அவனுக்கு இருந்தது. அவனுடைய நெற்றி மிகவும் அகலமாக இருந்தது. தலைமுடியை மேல் நோக்கி கையால் நீவி ஒதுக்கிவிட்டிருந்தான். கண்கள் பெரியதாக இருந்தாலும், அவை மிகவும் பிரகாசமாக இருந்தன. உண்மையாகச் சொல்லப் போனால் அந்தக் கண்கள்தான் அவனிடம் இருக்கும் சிறந்த ஈர்ப்பு விஷயமாக இருந்தன. ஒரு இளம் பெண்ணின் முகத்தைப்போல மிகவும் மென்மையாகவும் வட்டமானதாகவும் அவனுடைய முகம் இருந்தது. ரேபதியைப் பற்றித் திரட்டிய விஷயங்களில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் சோஹினியை மிகவும் அதிகமாகக் கவர்ந்தது. இளம் வயதில் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் ரேபதியிடம் ஒரு வகையான உணர்ச்சி ததும்பும் பாசம் இருந்தது என்பதே அது. பக்குவமற்ற ஆண்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் அமைந்த வசீகரத்தன்மை இல்லாதவனாக அவன் இருந்தான்.

சோஹினிக்கு சற்று அலட்சியம் தோன்றியது. ஒரு இளம் பெண்ணின் இதயத்தில் இடம் பிடிப்பதற்கு ஆணுக்கு அழகு அவசியமான விஷயம் இல்லை என்று சோஹினிக்குத் தோன்றியது. அறிவும் புத்திசாலித்தனமும் சிறிதும் முக்கியமற்ற விஷயங்கள். அவனுடைய நரம்புகளிலிருந்தும் சதைகளிலிருந்தும் அடையாள அலையைப் போல வெளிப்படும் ஆண்மை என்னும் காந்த வளையம்தான் மிகவும் முக்கியமான விஷயம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத மோகம் நிறைந்த ஆண்மைத்தனம் அவற்றின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன.

சிறுவயதில் இருந்த தன்னுடைய செயல்பாடுகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். அவளைக் கவர்ந்த அல்லது அவள் கவர்ந்த ஆண் அழகானவனாகவோ நிறைய படித்தவனாகவோ உயர்ந்த குலத்தில் பிறந்தவனாகவோ இல்லை.


ஆனால், அவளுடைய மனதிலும் உடலிலும் நினைத்துப் பார்க்க முடியாத வசீகரத்தையும் வெப்பத்தையும் அவளுக்கே தெரியாமல் அள்ளித் தெளித்த ஒரு உருவம்... அந்த மனிதனிடம் இருந்த ஆண்மைத்தனம் அவளுடைய மனதை மிகவும் தொட்டது. தன்னுடைய மகளும் எதிர்ப்பு காட்ட முடியாத அந்த உணர்ச்சி மொழிக்கு அடிமையாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நினைத்தபோது அவளுக்கு சிறிதும் மன அமைதி உண்டாகவில்லை. இளமையின் இறுதி கட்டம்தான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தானது. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அந்தக் காலத்தில் அறிவை நோக்கிய தணியாத ஒரு தேடலில் இருந்தாள் அவள். ஆனால், சோஹினியின் மனம் அப்படிப்பட்ட பாடங்களுக்கு ஏற்ற விளை நிலமாக இல்லாமலிருந்தது. எல்லா பெண்களுக்கும் இப்படிப்பட்ட படிப்பு தரும் அறிவுமீது ஆர்வம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீலாவும் அந்த அளவிற்கு விழிப்புணர்வு கொண்டவளாக இருக்கவில்லை.

படிகளின் வழியாக நீலா மெதுவாக ஏறி வந்தாள். வெயில் கொழுந்துகள் அவளுடைய நெற்றியில் பரவி விழுந்திருந்தன. அவளுடைய தலை முடியில் விழுந்து அவை பிரகாசித்துக் கொண்டிருந்தன. புடவையில் இருந்த பொன் நிறத்தைக் கொண்ட தையல் வேலைப்பாடுகள் அந்த வெயில் கொழுந்துகள் பட்டு மின்னின. ரேபதி அவளை ஓரக் கண்களால் பார்த்தான். அடுத்த நிமிடமே அவன் தன் கண்களைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.

இளம் வயதிலிருந்தே அவனுக்கு கிடைத்திருந்த பயிற்சி அப்படிப்பட்டதாக இருந்தது. இதயம் கவர்ந்த, அழகான இளம் பெண்களைப் பார்ப்பதிலிருந்து அவனுடைய கண்களுக்கு அத்தையின் அச்சத்தை உண்டாக்கக்கூடிய விரல்கள் விலக்கு உண்டாக்கியிருந்தன. அதனால் அந்த வகையில் முதல் முறையாக அப்படிப்பட்ட ஒரு புண்ணிய தரிசனத்தின் நறுமணத்தை நுகர்வதற்கு வாய்ப்பு கிடைத்தபோது, அவசர அவசரமான ஒரு பார்வையை மட்டும் வெளிப்படுத்திவிட்டு அவன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதிருந்தது. அவனை மனதில் திட்டிக் கொண்டே சோஹினி அமைதியாக முணுமுணுத்தாள்: "பார்... பார்... நல்லா பார்!''

ரேபதி பதைபதைப்புடன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

"டாக்டர் ஆஃப் சயின்ஸ்... பார்... அவளுடைய புடவையின் நிறமும் அந்த இலைகளின் நிறமும் எந்த அளவிற்கு அழகாக ஒன்று சேர்கின்றன..." சோஹினி சொன்னாள்.

"அற்புதம்!''- ரேபதி சற்று சந்தேகத்துடன் சொன்னான்.

"ம்.... இவனால் பிரயோஜனமே இல்லை." சோஹினி தனக்குத் தானே கூறிக் கொண்டாள். தொடர்ந்து அவள் உரத்த குரலில் கேட்டாள்: "நீல நிறங்களுக்கு மத்தியில் தெரியும் இளம் மஞ்சள்... அது எந்தப் பூவை ஞாபகப்படுத்துகிறது?''

அந்த அளவிற்குப் பெரிய அளவில் உற்சாகம் கிடைத்தவுடன், ரேபதி அவளைக் கூர்ந்து கவனித்தான். "நான் மலரைப் பற்றி சிந்திக்கிறேன். ஆனால், அதன் இதழ்களின் நிறம் நீல நிறத்தில் அல்ல.... அதற்கு தவிட்டு நிறம் இருக்கிறது.'' அவன் சொன்னான்.

"அது என்ன பூ?''

"கமேலினா...'' ரேபதி சொன்னான்.

"ஓ யெஸ்... அதற்கு ஐந்து இதழ்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மஞ்சள்... மீதி நான்கும் கறுப்பு...''

ரேபதிக்கு ஆச்சரியம் உண்டானது. "பூக்களைப் பற்றி உங்களுக்கு இந்த அளவிற்கு அறிவு எப்படிக் கிடைத்தது?''

சோஹினி சிரித்தாள். "தெரிந்திருக்க முடியாதவை என்று எனக்கு தெரியும், குழந்தை. பூஜைக்குப் பயன்படுத்தக் கூடிய பூக்கள், நமக்கு எந்தவொரு காரணமும் இல்லாமல், எந்தவொரு அறிமுகமும் இல்லாமல் இருக்கும் அறிமுகமற்றவர்களைப் போன்றவை...''

நீலா மெதுவாக பூத்தட்டுடன் அங்கு வந்தாள். "வெட்கப்பட்டுக் கொண்டு நிற்காமல் உள்ளே வா. அவருடைய கால்களைத் தொட்டு வணங்கு...'' சோஹினி தன் மகளிடம் கூறினாள்.

"வேண்டாம்... கூடாது... கூடாது...''- மிகுந்த பதைபதைப்பு அடைந்ததைப்போல ரேபதி கத்தினான். அவன் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய பாதங்களைக் கண்டுபிடிப்பதற்கு அவள் தேடிப் பார்க்க வேண்டியதிருந்தது. அவள் தொட்டவுடன், ரேபதியின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவளுடைய பூத்தட்டில் அபூர்வமான ஆர்க்கிட்களும், ஒருதட்டு நிறைய இனிப்புப் பலகாரங்களும் இருந்தன. முந்திரிப் பருப்பைப் பயன்படுத்தி தயார் செய்த அபூர்வமான இனிப்புப் பலகாரமும், பிஸ்தாவும் தேங்காய்ப் பாலும் சேர்ந்து உண்டாக்கப்பட்ட இனிப்புப் பலகாரமும், ஆவி பறந்து கொண்டிருக்கும் வெண்ணெய்யும் அவற்றில் இருந்தன.

"இவை அனைத்தும் நீலா உண்டாக்கியவைதான்.'' சோஹினி சொன்னாள்.

அது முழுக்க முழுக்க பொய். அப்படிப்பட்ட சமையல் விஷயங்களில் நீலாவிற்கு ஆர்வமோ ஆற்றலோ இல்லவே இல்லை.

சோஹினி சொன்னாள்: "குழந்தை, நீ அதிலிருந்து கொஞ்சமாவது சாப்பிடணும். உனக்காக அவள் அதை கஷ்டப்பட்டு தயாரித்திருக்கிறாள்.''

உண்மையாகச் சொல்லப்போனால் புரா பஸாரில் நல்ல பெயரைப் பெற்றிருக்கும் ஒரு பேக்கரியிலிருந்து தனிப்பட்ட முறையில் ஆர்டர் செய்து கொண்டு வரப்பட்டவையே அவை.

"நான் இந்தச் சமயத்தில் எதுவும் சாப்பிடுவதில்லை. நீங்கள் சம்மதிப்பதாக இருந்தால், நான் இதை வீட்டிற்குக் கொண்டு செல்கிறேன்.'' ரேபதி கைகளைக் கூப்பியவாறு சொன்னான்.

"அது நல்ல விஷயம்.'' சோஹினி கூறினாள்.

"ஆட்களைக் கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பது என்ற விஷயத்திற்கு என்னுடைய கணவர் எப்போதும் எதிரானவர். மனிதர்கள் பெரிய பாம்புகள் அல்ல என்று அவர் கூறுவார்.'' சோஹினி கூறினாள். பெரிய ஒரு அடுக்குப் பாத்திரத்தை எடுத்து அந்தப் பலகாரங்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு அடுக்கிலும் அடுக்கி வைத்து விட்டு, அவள் அதை சேர்த்து மூடினாள். பூக்களைத் தட்டில் ஒழுங்காக வைத்து அவள் தன் மகளிடம் கூறினாள்: "அந்த பூக்களை ஒன்றாக மேலே வை!''

அந்த விஞ்ஞானியின் கண்கள் ஒரு கலையை நேசிக்கும் மனிதனின் ஆழம் நிறைந்த கண்களாக மாறின. அளவுகளும் எடைகளும் நிறைந்த அந்த மேலோட்டமான உலகத்திற்கு அப்பால் இருக்கும் வேறுபட்ட ஒரு உலகமாக அது இருந்தது. பல வகைப்பட்ட வண்ணங்களில் இருந்த அந்த மலர்களுக்கு மேலே நீலாவின் அழகான விரல்கள் தாளகதியில் நகர்ந்து கொண்டிருந்தன. ரேபதிக்கு அதிலிருந்து கண்களை விலக்கி எடுக்கவே முடியவில்லை. இடையில் அவ்வப்போது அவன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். பவளமும் இந்திர நீலமும் முத்தும் மரகதமும் பதிக்கப்பட்ட அழகான ஒரு மாலை அவளுடைய கூந்தலில் ஒரு வானவில்லைப் போல பரவிக் கிடந்தது. அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட சோளியின் அழகு வெளியே தெரிந்தது. இனிப்புப் பலகாரங்களை அடுக்கி வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சோஹினிக்கு அதிகமாக ஒரு மூன்றாவது கண்ணும் இருந்தது. தனக்கு முன்னால் மாயக் காட்சிகளை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய கணவனிடமிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் அவள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டிருந்தாள்.


இந்த சொந்தமான மேய்ச்சல் இடங்களைக் காப்பாற்றுவதற்கு கனமான வேலிகள் அமைப்பது என்பது இந்த அறிவு ஜீவிகளின் ஒரு வழக்கமான விஷயமாக இருந்தது என்பதே அது. சாதாரண பசுக்களால் அங்கு நுழைய முடியாது. எனினும், அப்படிப்பட்ட எல்லா வேலிகளுக்கும் ஒரே மாதிரியான உறுதித்தன்மை இருக்காது என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஆனால், அந்த கண்டுபிடிப்பு அவளை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை.

6

றுநாள் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று அவள் பேராசிரியரிடம் கூறினாள். "என்னுடைய சொந்த தேவைகளுக்காக நான் உங்களை வரவழைத்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் உங்களுடைய வேலைகள் தடைப்படுகின்றன என்று எனக்குத் தோன்றாமல் இல்லை.'' அவள் கூறினாள்.

"இடையில் அவ்வப்போது என்னை அழைப்பதில் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. அது ஏதாவது தேவைக்குத்தான் என்னும் பட்சம், எனக்கு அந்த விஷயத்தில் சந்தோஷமே. தேவைகள் எதுவும் இல்லாமல் என்னை அழைத்தாலும், எனக்கு சிறிதும் வருத்தம் இல்லை.''

"உங்களுக்குத் தெரியுமா? விலை மதிப்புள்ள இயந்திரங்களையும் கருவிகளையும் சேகரித்து வைப்பது என்னுடைய கணவருக்கு ஒரு விருப்பமான விஷயமாக இருந்தது. அடக்க முடியாத அந்த வெறியின் காரணமாக அவர் முதலாளிகளை ஏமாற்றினார். ஆசியாவிலேயே மிகச் சிறந்த சோதனைக்கூடம்- அதற்கான கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அவர். நானும் அந்த முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இவ்வளவு காலமும் என்னை உயிருடன் வாழ வைத்தது அந்த ஆசைதான். இல்லாவிட்டால் என்னுடைய தலை வெடித்துச் சிதறியிருக்கும். சவுதரி மஸாய், உங்களிடம் மட்டும்தான் இந்த விஷயங்கள் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுவதற்கு என்னால் முடிகிறது. என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயங்களை உங்களிடம் கூறுவதன் மூலம் ஒருவித நிம்மதியை என்னால் உணர முடிகிறது.''

"ஒரு முழுமையான மனிதனைக் காணும்போது நீங்கள் உண்மையை மறைத்து வைக்க வேண்டியதேயில்லை. அபத்த உண்மைகள்தான் எல்லா நேரங்களிலும் வெட்கக்கேடான விஷயங்களை உண்டாக்குகின்றன. எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு எல்லா விஷயங்களையும் முழுமையாகப் பார்க்கக் கூடிய ஒரு குணம் இருக்கிறது!''

"மனிதர்கள் வாழ்க்கையைப் பாதுகாப்பு உள்ளதாக ஆக்குவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள் என்று என்னுடைய கணவர் கூறுவதுண்டு. ஆனால், வாழ்க்கை அப்படி பாதுகாத்து வைத்திருக்கக் கூடிய ஒரு பொருள் அல்ல. அதனால் வாழ்க்கையின்மீது கொண்ட மோகத்தின் காரணமாக வாழ்க்கையைவிட விலை மதிப்பு உள்ள ஒரு பொருளைத் தேடி மனிதர்கள் பறந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பொருளைத்தான் அவர் இந்த சோதனைக் கூடத்தில் பார்த்தார். என்னால் இந்த சோதனைக் கூடத்தை நல்ல முறையில் காப்பாற்ற முடியவில்லையென்றால், அது அவரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். கணவனைக் கொன்ற மனைவியின் குற்ற உணர்வை அப்போது நான் உணர்வேன். இந்த சோதனைக் கூடத்தைக் காப்பாற்றுவதற்கு எனக்கு ஒரு ஆள் வேண்டும். அதனால்தான்... நான் ரேபதியைக் குறிவைத்தேன்.''

"நீங்கள் அப்படியொரு முயற்சியைச் செய்து பார்த்தீர்களா?''

"ஆமாம்... நான் அதில் வெற்றி பெறுவேன் என்றுதான் நினைத்தேன். ஆனால், அதனால் பிரயோஜனம் உண்டாவது மாதிரி தெரியவில்லை.''

"ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?''

"அவன் என்னிடம் நெருக்கத்தைக் காட்டுகிறான் என்ற விஷயம் தெரிந்தால் போதும், அந்த நிமிடமே அவனுடைய அத்தை அவனை அபகரித்துக் கொண்டு போய் விடுவாள். அவனை என்னுடைய மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக நான் ஒரு வலையை விரித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவள் நினைக்கலாம்.''

"அதில் என்ன பிரச்சினை இருக்கிறது? அது நல்ல விஷயம்தானே? ஆனால், மகளை வேறு ஜாதியைச் சேர்ந்தவனுக்குத் திருமணம் செய்து தர மாட்டேன் என்று நீங்கள் சொன்னீர்களே?''

"இந்த விஷயத்தில் நீங்கள் வைத்திருக்கும் எண்ணங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் நான் பொய் சொன்னேன். ஆமாம்... அவர்களுக்கிடையே திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால், நானும் ஆசையை விட்டெறிந்து விட்டேன்.''

"என்ன ஆச்சு?''

"என்னுடைய மகள் எந்த அளவிற்கு கழிக்கக்கூடியவளாக ஆவாள் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். தொட்டவை அனைத்தையும் அவள் தகர்த்து எறிவாள்.''

"ஆனால், அவள்... உங்களுடைய மகள்.''

"உண்மைதான். அதனால் எனக்கு அவளின் அகமும் புறமும் தெரியும்.''

"பெண்கள் ஆண்களின் ஆர்வத்திற்குரியவர்களாக ஆக முடியும்.'' பேராசிரியர் சொன்னார்: "அதை மறந்து விடாதீர்கள்!''

"எனக்குத் தெரியும். மாமிசத்தையும் மீனையும் சேர்த்து ஆட்கள் உணவு தயாரிப்பதில்லையா? ஆனால், அதையும் தாண்டி மதுவை நோக்கி நகர்ந்தால், அத்துடன் எல்லாம் ஒரு வழி ஆகி விடுகிறதே! குவளைக்கு வெளியே ததும்பி வழியத் தயாராக இருக்கும் மதுவாக ஆகி விடுகிறாள் என்னுடைய மகள்...''

"பிறகு... என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

"நான் என்னுடைய சோதனைக் கூடத்தை பொதுமக்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.''

"உங்களுடைய ஒரே ஒரு மகளை ஒதுக்கி வைத்து விட்டு...?''

"என்னுடைய மகளா? நான் சோதனைக் கூடத்தை அவளுக்குத் தந்தால், அவள் அதை எப்படிப்பட்ட பாதாளத்திற்குக் கொண்டு சென்று மூழ்கடிப்பாள் என்பது எனக்குத் தெரியாது. நான் ரேபதியை சோதனைக் கூடத்தின் அறக்கட்டளையின் தலைவராக ஆக்குவேன். அவனுடைய அத்தை ஒருவேளை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கலாம்.''

"பெண்கள் எதை எதிர்ப்பார்கள் என்பதைக் கூற முடிந்திருந்தால், நான் ஒரு ஆணாகப் பிறந்திருக்க மாட்டேன். ஆனால், ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு அவனை மருமகனாக ஆக்குவதற்கு விருப்பமில்லையென்றால், பிறகு எதற்கு நீங்கள் அவனை அறக்கட்டளையின் தலைவராக ஆக்க வேண்டும்?''

"நீங்கள் கூறுவது சரிதான்... இந்த இயந்திரக் கருவிகளால் என்ன பிரயோஜனம்? அந்தக் கருவிகளின் உயிர்நிலை பெற்று இருக்கச் செய்வதற்கு எங்களுக்கு ஒரு ஆள் வேண்டும். இன்னொரு விஷயமும் இருக்கிறது. என்னுடைய கணவரின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் எந்தவொரு புதிய கருவியையும் வாங்கவில்லை. பணமில்லாததால் அல்ல; தெளிவான திட்டம் இல்லாத காரணத்தால் அதை வாங்கவில்லை. ரேபதி காந்தத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவன் அத்துடன் தொடர்பு கொண்ட கருவிகளை வாங்கிக் கொள்ளட்டும். பணச் செலவைப் பற்றி அவன் கவலைப்பட வேண்டாம்.''

"நான் என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஆணாக இருந்திருந்தால் நான் உங்களை என்னுடைய தோளில் ஏற்றி நடனமாடி இருப்பேன். உங்களுடைய கணவர் ரெயில்வேயின் பணத்தைத் திருடினார்.


இரண்டு மனங்களுக்கு இடையே இந்த அளவிற்கு ஒற்றுமை இருப்பதை நான் பார்த்ததேயில்லை. நீங்கள் எதற்கு என்னுடைய அறிவுரைகளைத் தேடுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.''

"நீங்கள் மிகவும் நல்ல மனிதராக இருப்பதால்... அதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. எது சரி என்பதைச் சரியாகக் கூறுவதற்கு உங்களால் முடியும்.''

"நீங்கள் என்னை சிரிக்க வைக்கிறீர்கள். நான் என்ன தவறான விஷயங்களைக் கூறுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்களா? சரி.... நாம் விஷயத்திற்கு வருவோம். நாம் எல்லா பொருட்களையும் அடக்கிய ஒரு பட்டியலைத் தயார் பண்ண வேண்டும். ஒவ்வொன்றின் இப்போதைய விலையை எழுதி வைக்க வேண்டும். ஒரு நல்ல வக்கீலை வைத்து அவற்றின் உரிமைகளை உங்களுடைய பெயரில் எழுத வேண்டும். வேறு சட்ட ரீதியான காரியங்களையும் செய்து முடிக்க வேண்டும்.''

"தயவு செய்து அதற்கான பொறுப்பை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.''

"பெயருக்கு அப்படி இருக்கலாம். நீங்கள் கூறுவதைப்போல மட்டுமே நான் காரியங்களை ஆற்றுவேன். மொத்தத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஒரே ஒரு விஷயம்- இரண்டு முறை உங்களைப் பார்க்கலாம் என்பது மட்டும்தான். நான் எந்த கண்களால் உங்களைப் பார்க்கிறேன் என்பதைப் பற்றி உங்களுக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை.''

சோஹினி எழுந்து ஒரே தாவலில் பேராசிரியர் சவுதரியின் அருகில் வந்தாள். அவருடைய கழுத்தின் வழியாகக் கையை வளைத்து கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவள் சந்தோஷத்துடன் தன்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பினாள்.

"தெய்வமே! நான் என்னுடைய அழிவின் ஆரம்பத்தைப் பார்க்கிறேன்.''

"இதில் ஏதாவது ஆபத்து உண்டானால், நான் உங்கள் அருகில்கூட வரமாட்டேன். இனி இடையில் அவ்வப்போது உங்களுக்கு இந்த ரேஷன் கிடைக்கும்.''

"உறுதியாகவா?''

"உறுதியாக... அதற்கு எனக்கு தனியாக எந்தவொரு செலவும் இல்லை. உங்களுடைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இதைவிட அதிகமாக அப்படி எதையும் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.''

"காய்ந்து போன மரத்தை ஒரு மரம்கொத்தி கொத்துவதைப் போன்றது இது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சரி... நான் வக்கீலைப் பார்க்கப் போகிறேன்.''

"நாளை இந்த வழியே வரணும்.''

"எதற்கு?''

"ரேபதியை மேலும் ஒருமுறை சரிகட்டுவதற்கு...''

"அப்படியே அந்த பேரம் பேசலில் என்னுடைய இதயம் நொறுங்கட்டும்.''

"உங்களுக்கு மட்டும்தான் இதயம் இருக்கிறதா?''

"இல்லை... உங்களுக்குச் சொந்தமானது எதுவும் எஞ்சி இருக்கிறதா?''

"இருக்கிறது. எவ்வளவோ எஞ்சி இருக்கின்றன.''

"அதை வைத்து எவ்வளவோ குரங்கு குணம் கொண்டவர்களை உங்களால் துள்ளி விளையாடச் செய்ய முடியும்.''

7

ப்போதும் உள்ளதைவிட இருபது நிமிடங்களுக்கு முன்பே மறுநாள் காலையில் ரேபதி சோதனைக் கூடத்திற்கு வந்துவிட்டான். சோஹினி அப்போது தயாராகி இருக்கவில்லை. சாதாரணமாக வீட்டில் அணிந்திருக்கக் கூடிய ஆடைகளுடன் சோஹினி அவசர அவசரமாக வெளியே வந்திருந்தாள். தான் அப்படி நடந்து கொண்டது மரியாதைக் கேடான விஷயம் என்பதைபோல அவனுக்குத் தோன்றியது.

"என்னுடைய கடிகாரத்தில் ஏதோ தகராறு இருப்பதைப்போல தோன்றுகிறது.'' அவன் சொன்னான்.

"சந்தேகமேயில்லை.'' சோஹினி சற்று கடுமையான குரலில் சொன்னாள்.

அந்தக் குரல் வந்தது வாசலுக்கு அருகிலிருந்து என்பதைப் புரிந்து கொண்டு அவன் தலையை உயர்த்திப் பார்த்தான். சாவியுடன் வந்த வேலைக்காரன் சுகன் அங்கு நின்றிருந்தான்.

"ஒரு கப் தேநீர் கொண்டு வரும்படி கூறட்டுமா?'' சோஹினி கேட்டாள்.

அதை ஏற்றுக் கொள்ளலாம் என்று ரேபதிக்குத் தோன்றியது. "சரி... கொண்டு வரச் சொல்லுங்க.'' அவன் சொன்னான்.

பாவம்... தேநீர் பருகும் பழக்கம் அவனுக்கு இல்லாமலிருந்தது. ஜலதோஷம் வரும்போது விளாம்பழத்தின் இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்த நீரை மட்டும் அவன் குடிப்பான். நீலாதான் அனேகமாக குடிநீரைக் கொண்டு வருவாள் என்ற மோகத்தின் காரணமாகத்தான் அவன் தேநீர் குடிப்பதற்குத் தயாரானான்.

"தேநீர் அடர்த்தியாக இருக்கலாமா?'' சோஹினி கேட்டாள்.

"அப்படித்தான் இருக்க வேண்டும்.'' சிறிதும் யோசிக்காமல் அவன் சொன்னான்.

அப்படிக் கூறுவது தன்னுடைய மிடுக்கை வெளிப்படுத்துவதைப் போன்ற ஒரு விஷயமாக இருக்கும் என்று அவன் நினைத்தான். தேநீர் வந்தது. தேநீர் மிகவும் அடர்த்தியாக இருந்தது. மையைப் போன்ற கறுப்பு நிறமும் வேப்பிலைகள் போட்டு கொதிக்க வைத்ததைப் போன்ற சிவப்பும் அதில் இருந்தது. அதைக் கொண்டு வந்தது முஸ்லிமாக இருந்த வேலைக்காரன். ரேபதியைச் சோதித்துப் பார்ப்பதற்காக அந்தக் காரியம் நடந்தது. அவனால் சிறிதும் தன்னுடைய எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. அப்படிப்பட்ட வெறுப்பை அளிக்கும் விஷயங்களை சோஹினி ஏற்றுக் கொள்ளவே மாட்டாள். "ஹேய் முபாரக்... நீ அந்த தேநீரை ஏன் மூடி வைக்வில்லை? இல்லாவிட்டால் அது குளிர்ந்துபோய் விடும்...'' அவள் கூறினாள்.

அவன் இருபது நிமிடங்களுக்கு முன்னால் வந்தது முஸ்லிம் வேலைக்காரனின் கையில் இருந்து தேநீரை வாங்கிப் பருகுவதற்காக அல்ல.

எவ்வளவு சிரமப்பட்டு அவன் அந்தக் கோப்பையை உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றான் என்ற விஷயம் தெய்வத்திற்கும் சோஹினிக்கும் மட்டுமே தெரியும். ஒரு பெண் என்ற நிலையில் சோஹினிக்கு அவன்மீது பரிதாபம் உண்டானது. அவள் அவனிடம் இப்படிச் சொன்னாள்: "அந்தக் கோப்பை அங்கேயே இருக்கட்டும். நான் அதில் கொஞ்சம் பாலை ஊற்றுகிறேன். சாப்பிடுவதற்கு கொஞ்சம் பழம் கொண்டு வர்றேன். நீ இன்று மிகவும் முன்னாடியே வந்து விட்டாய். அதனால் காலையில் எதுவும் சாப்பிட்டு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்ற விஷயம் எனக்கு உறுதியாகத் தெரியும்.''

அது உண்மைதான். தாவரவியல் பூங்காவில் இருந்தபோது கிடைத்ததைப் போன்ற ஒரு விருந்து திரும்பவும் கிடைக்கும் என்று அவன் மனம் எதிர்பார்த்திருந்தது. இது அதன் பக்கத்தில்கூட வராது. அவனுடைய நாக்கில் அந்த அடர்த்தியான தேநீரின் கசப்பு தங்கி நின்று கொண்டிருந்தது. நொறுங்கிப் போன கனவுகள் உண்டாக்கிய ஏமாற்றமான அனுபவம் அவனுடைய மனதில் இருந்தது.

அந்த நேரத்தில் பேராசிரியர் அங்கே நுழைந்து வந்தார். ரேபதியின் முதுகைத் தட்டியவாறு அவர் கேட்டார்: "உனக்கு என்ன ஆச்சு? நீ குளிர்ந்து மரத்துப்போய் உட்கார்ந்திருக்கிறாயே? நீ என்ன ஒரு சிறு குழந்தையைப் போல பால் குடித்துக் கொண்டிருக்கிறாய்? உன்னைச் சுற்றி சிறு குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மைகளா இருக்கின்றன? இங்கு சிவனும் பூதங்களும் தாண்டவம் ஆடினார்களா என்ன?''

"ம்... வாங்க... வாங்க.... நீங்க ஏன் ரேபதியைத் திட்டுறீங்க? எதுவுமே சாப்பிடாத வயிறுடன் அவன் வந்திருக்கிறான். இங்கே வர்றப்போ ஆள் முழுமையாக வெளிறிப் போய் இருந்தான்.''


"என் தங்கமே... இதோ இரண்டாவது அத்தை வந்தாச்சு. ஒருத்தி இவனுடைய ஒரு கன்னத்தில் கடிக்கும்போது இன்னொரு அத்தை இவனுடைய கன்னத்தில் முத்தமிடுகிறாள். அவர்கள் இருவருக்குமிடையில் சிக்கிக் கொண்டு இந்த அப்பிராணி ஈர மண்ணைப்போல உதிர்ந்துபோய் விடுவான். உங்களுக்கு அது தெரியுமல்லவா? கேட்காமலேயே நம்மைத் தேடி வரும் தனலட்சுமியின் வருகையை நாம் அந்த அளவிற்கு கவனிப்பதில்லை. ஆனால், தேடி நடப்பவர்கள் அவளைக் கைக்குள் போட்டுக் கொள்வார்கள். கேட்காமல் கிடைக்கக் கூடிய எதுவும் மிகப் பெரிய விஷயமே. எனினும், சொல்லுங்க மிசஸ்... மிசஸ் என்று கூறுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் உங்களை சோஹினி என்றுதான் அழைப்பேன்.''

"நான் ஏன் விருப்பப்படாமல் இருக்க வேண்டும்? என்னை சோஹினி என்றே அழையுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் என்னை சுகி என்றும் அழைக்கலாம். என்னுடைய காதுகளுக்கு இசையைப் போல இருக்கும்.''

"நான் ஒரு ரகசியத்தைக் கூறட்டுமா? உங்களின் பெயரை ஒட்டிய இன்னொரு வார்த்தை இருக்கிறது. மிகவும் அருமையான அர்த்தத்தைக் கொண்ட அந்த வார்த்தையை நான் நாள் முழுவதும் திரும்பத் திரும்ப கூறுவதுண்டு. இசைக் கருவியின் இசையைப் போல அது என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.''

"ரசாயன ஆராய்ச்சியைப் போல நீங்கள் வார்த்தைகளைச் சேர்க்கிற விதத்தில் சேர்க்கிறீர்கள். அதன் விளைவுதான் இதெல்லாம்.''

"சில ரசாயன பொருட்களை ஒன்று சேர்த்தால் அதன் விளைவு மரணமாக இருக்கும். அப்படிப்பட்ட பொருட்களை பெரும்பாலும் ஒன்று சேர்க்காமல் இருப்பதே நல்லது. அது உடனடியாகப் பற்றி எரிய ஆரம்பித்துவிடும்!''

அதைக் கூறி விட்டு தொடர்ந்து அவர் இதயத்திலிருந்து சிரித்தார்.

"இந்த இளைஞனுக்கு முன்னால் இதை விவாதிக்கக் கூடாது. வெடி மருந்து தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் ஒரு பயிற்சி பெறும் மனிதனாகக்கூட இவன் இல்லை. இவன் இப்போதும் அத்தையின் புடவை நுனியில் தொங்கிக் கொண்டிருப்பவன்தான்!''

ஒரு இளம் பெண்ணின் சாயலைக் கொண்ட ரேபதியின் முகம் சிவந்தது.

"சோஹினி, இன்று காலையில் நீங்கள் இவனுக்கு கஞ்சாவைக் கலக்கிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்க நினைத்திருந்தேன். இவன் ஏன் ஒரு மந்த புத்தி உள்ளவனைப் போல இருக்கிறான்?''

"அப்படி நடந்திருந்தால், அது அறியாமலேயே நடந்திருக்க வேண்டும்.''

"கமான் ரேபு! எழுந்திரு. பெண்களுடன் பழகும்போது நாக்கு குழையக் கூடாது. அது அவர்களுக்கு அதிகமான தைரியத்தைத் தந்துவிடும். அவர்கள் நோய் அணுக்களைப் போன்றவர்கள். மனித உடலின் பலவீனங்களை அவர்கள் எப்போதும் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். சிறிய அளவில் ஒரு ஓட்டை கிடைத்து விட்டால், அவர்கள் அதன் வழியாக உடலுக்குள் நுழைந்து விடுவார்கள். அத்துடன் நம்முடைய உடலில் வெப்பம் அதிகரிக்கும். அந்த விஷயத்தில் எனக்கு ஆணவத்துடன் பேச முடியும். அதனால் இந்த இளைஞர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை கூறுவதற்கு என்னால் முடியும். என்னைப் போன்ற ஆட்களிடமிருந்து அவர்கள் பலவற்றையும் கற்றுக் கொள்ளலாம். நாம் காயப்படுவதும் இப்படி வாழ்வதும் இந்தக் கதைகளைக் கூறுவதற்குத்தான். ரேபு, நீ என்னை நினைத்து பேசாமல் இருக்க வேண்டாம். பேசாமல் இருப்பவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். வா... நான் உனக்கு இங்கு இருக்கும் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறேன். அந்த இரண்டு கால்வனோ மீட்டர்களையும் பார்... மிகவும் புதிய மாடல்கள் அவை. இதோ இங்கு ஒரு வைர வேக்வம் பம்ப் இருக்கிறது. இதோ ஒரு மைக்ரோ ஃபோட்டோ மீட்டர். உன்னுடைய சோதனைகள் நல்ல முறையில் நடப்பதற்கு உதவக்கூடிய பொருட்கள் அல்ல இவை. ஒருமுறை நீ இங்கு வந்து உட்கார்ந்து விட்டால்... உன்னுடைய வழுக்கைத் தலை பேராசிரியர் இருக்கிறாரே! அவருடைய நடத்தையைப் பார்.

நான் யாரையும் பெயர் சொல்லிக் கூறவில்லை. நீ என்னுடைய சிஷ்யனாக ஆன நாளிலிருந்தே உன்னுடைய மூக்கின் நுனியில் பிரகாசமான ஒரு எதிர்காலம் தொங்கி ஆடிக் கொண்டிருக்கிறது என்று பலமுறை கூறவில்லையா? கவனக் குறைவால் நீ அந்த சந்தர்ப்பத்தைக் கோட்டைவிட்டு விடாதே. உன்னுடைய வாழ்க்கை வரலாற்றின் ஏதாவதொரு அத்தியாயத்தில் என்னுடைய பெயரை வெறுமனே கூறினால்கூட, எனக்கு அது பெரிய ஒரு பரிசு கிடைத்ததைப் போல இருக்கும்.''

அந்த இளம் விஞ்ஞானி மயக்கத்திலிருந்து மெதுவாகக் கண் விழித்தான். அவனுடைய கண்கள் பிரகாசமாக இருந்தன. அவனுடைய மனதிற்குள் மாறுதல் உண்டாகிவிட்டிருந்தது. பெருமையுடன் அவர்கள் அவனைப் பார்த்தார்கள். "உன்னைத் தெரிந்தவர்கள் அனைவரும் உனக்கு பெரிய வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அசாதாரணமான, ஆச்சரியமான ஒரு விஷயம். நோக்கங்கள் பெரியவையாக ஆகும்போது, தடைகள் மேலும் பலம் பெற்றவையாக ஆகின்றன. உள்ளேயும் வெளியேயும் தடைகள் மேலும் மேலும் பெருகி உண்டாகிக் கொண்டே இருக்கின்றன.'' சோஹினி தான் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்தினாள்.

பேராசிரியர் ரேபதியின் முதுகில் ஒருமுறை மெதுவாகத் தட்டினார். அந்த தட்டுதலின் பலத்தால் அவனுடைய உள்ளுணர்வு உற்சாகமடைந்தது. உரத்த குரலில் பேராசிரியர் சொன்னார்: "இங்கே பார் ரேபு, நாங்கள் கூறும் அந்த எதிர்காலம் இருக்கிறதே... அது யானையின்மீது ஏறிக் கொண்டு வரும். ஆனால், கஞ்சன் எப்போதும் மாட்டு வண்டியில்தான் வருவான். மாட்டு வண்டி எப்போதும் சேற்றில் புதைந்து விடும். சோஹினி, கேட்டீர்களா? சுகி, நீங்க கவலைப்படாதீங்க... நான் உன் முதுகில் அடிக்கப் போகிறேன். என்னிடம் மனதைத் திறந்து கூறு. நான் சொன்னது சரிதானே?''

"மிகவும் சரி.''

"அதை உன் டைரியில் எழுதணும்.''

"நான் எழுதுகிறேன்.''

"நான் கூறியதன் அர்த்தம் உனக்குப் புரிந்ததா?''

"ஆமாம் என்று தோன்றுகிறது!''

"ஞாபகத்தில் வைத்துக் கொள். மிகப் பெரிய மனிதன் என்றால், மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது என்று அர்த்தம். அது உன்னுடைய சொந்த சொத்தல்ல. இறுதி வரை நீ அதற்கு பதில் கூற வேண்டியது இருக்கும். சுகி, நீங்க இதைக் கேட்டீங்களா? என்னுடைய பேச்சு எப்படி இருக்கிறது?''

"மிகவும் நன்றாக இருக்கிறது. பழைய காலமாக இருந்திருந்தால், இதைக் கேட்ட உடனேயே அரசர் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாலையைக் கழற்றி உங்களுக்கு அணிவித்திருப்பார்.''

"அந்தக் காலமெல்லாம் போய் விட்டது. ஆனால்...''

"அந்த ஆனால் இப்போதும் இறந்து போய் விடவில்லை. நான் அதை மனதில் பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்.''

"கவலைப்பட வேண்டாம். என்னுடைய தீர்மானத்தை அசைக்க எந்த சக்தியாலும் முடியாது.'' ரேபதி சொன்னான்.


சோஹினியின் பாதங்களைத் தொடுவதற்காக அவன் குனிந்தான். சோஹினி வேக வேகமாக அவனைத் தடுத்தாள்.

"இவனுக்கு என்னை எந்த இடத்திலாவது பெருமைப்படுத்த வேண்டும் என்று தோன்றினால், அது அதற்கென்று இருக்க வேண்டிய இடத்திலேயே நடக்கட்டும்.'' நந்த கிஷோரின் அரை உருவம் இருந்த படத்தை சுட்டிக் காட்டியவாறு சோஹினி கூறினாள். ஒரு தட்டில் நிறைய பூக்களை இடம் பெறச் செய்து அதற்கு முன்னால் வைத்திருந்தார்கள். அதற்கு முன்னால் சாம்பிராணி எரிந்து கொண்டிருந்தது.

சோஹினி சொன்னாள்: "பாவிகளைக் காப்பாற்றக் கூடிய ஒரு தேவனைப் பற்றி நான் புராணங்களில் படித்திருக்கிறேன். ஆனால், பாவிகளைக் காப்பாற்றிய அந்த மனிதர் மகானாக இருந்தார். அதைச் செய்வதற்காக அவர் மிகவும் அதிகமாக இறங்க வேண்டியதிருந்தது. ஆனால், இறுதியில் என்னை எடுத்து உயர்த்தினார். என்னை தனக்கு அருகில் உட்கார வைக்க அவர் சம்மதிக்கவில்லை. அதனால், கால்களுக்கு அருகில் இருக்க சம்மதித்தார். பலவற்றையும் கற்றுக் கொள்வதன் மூலம் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்று அவர் எனக்குப் புரிய வைத்தார். வாழ்க்கையில் தான் தேடி எடுத்த விலை மதிப்புள்ள பொருட்களை மகள், அவளுடைய கணவன் ஆகியோர்மீது கொண்டிருக்கும் விலை மதிப்புள்ள மதிப்பின் பெயரில் அழித்துவிடக் கூடாது என்று அவர் கூறினார். நான் என்னுடைய சொர்க்கத்தை இங்கு நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன். என் உலகத்தின் சொர்க்கத்தையும்!''

"நீ கேட்டியா ரேபு?'' பேராசிரியர் சொன்னார்: "இதை ஒரு அறக்கட்டளையாக ஆக்கப் போகிறார்கள். நீதான் அதன் பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்கும்.''

ரேபதி அதற்கு மறுப்பு தெரிவிக்க முயன்றான். "அவ்வளவு பெரிய பெருமைக்கு நான் தகுதி உடையவனல்ல. அதைத் தாங்கிக் கொண்டு என்னால் நடக்க முடியாது.''

"உனக்கு முடியாதா?'' சோஹினி சொன்னாள்: "வெட்கக்கேடு... பக்குவம் வந்த ஒரு ஆண் பேசக்கூடிய விஷயமல்ல இது.''

"நான் எப்போதும் புத்தகங்களுக்கு மத்தியிலேயே இருந்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பொறுப்புகளில் நான் இதுவரை இருந்ததே இல்லை.'' ரேபதி சொன்னான்.

"முட்டைக்குள்ளிருந்து வெளியே வராமல் ஒரு வாத்துக் குஞ்சு நீந்துவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. உன்னுடைய விஷயத்தில் முட்டையின் ஓடு உடைய வேண்டும். அவ்வளவு தான்.'' சவுதரி சொன்னார்.

"நீ பயப்பட வேண்டாம். உனக்கு உதவுவதற்கு நான் அருகில் இருப்பேன்.'' சோஹினி சொன்னாள்.

ரேபதிக்கு நம்பிக்கை வந்தது. அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

பேராசிரியரிடம் சோஹினி சொன்னாள்: "இந்த பூமியில் பல வகையான முட்டாள்கள் இருக்கிறார்கள். ஆண்தான் அதற்கான மிகப் பெரிய உதாரணம். ஒருத்தனுக்கு பொறுப்பைத் தந்து பார்த்தால்தான் அவனுக்கு தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியும். முதல் மனிதனுக்கு ஒரு ஜோடி கைகள் கிடைத்தன. அவைதான் அவனை மனிதன் என்ற உயிரினமாக ஆக்கின. கைகளுக்கு பதிலாக கால்கள் அவனுக்கு முதலில் கொடுக்கப்பட்டிருந்தால், அவனுக்குப் பின்னால் ஒரு வாலும் முளைத்து விட்டிருக்கும். அதற்குப் பிறகு வாலை ஆட்டுவது மட்டுமே அவனுடைய வேலையாக இருந்திருக்கும். ரேபதிக்கு கைக்கு பதிலாக கால்தான் இருக்கிறது என்ற விஷயம் உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?''

"நான் அது சரியான விஷயம் என்று நினைக்கவில்லை. பெண்கள் வளர்க்கக்கூடிய பையனின் பால் பற்கள் கீழே விழுந்திருக்காது. இதை என்னுடைய துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் இங்கு இருக்கும்போது, நான் எதற்கு இன்னொரு ஆளைப் பற்றி நினைக்க வேண்டும்?''

"இதைக் கேட்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன். என்னிடம் என்ன நல்ல விஷயத்தை நீங்கள் பார்த்தீர்கள்?''

"உங்களுக்குச் சிறிதுகூட ஆதாயம் அடையும் எண்ணமே இல்லை.''

"அது மிகவும் அவமானத்தை அளிக்கக்கூடிய விஷயம்! அதாவது- தேவையான இடத்தில் நான் ஆதாயம் அடையும் எண்ணத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதல்லவா அதற்கு அர்த்தமாகிறது? உண்மையாகவே எனக்கு அப்படிப்பட்ட குணம் இருக்கிறது!''

சோஹினி அவருடைய கழுத்தில் கையைச் சுற்றி இரு கன்னங்களிலும் முத்தமிட்டு விட்டு, உடனடியாக விலகி நின்றாள்.

"சோஹினி, இதை எந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்வது?''

"உங்களிடமுள்ள கடனைத் தீர்க்க என்னால் முடியாது. அதனால் நான் இப்போது வட்டியை மட்டும் தந்திருக்கிறேன்.''

"முதல் நாளன்று ஒன்று தந்தீர்கள். இன்று இரண்டு... இனிமேல் இது இப்படி அதிகரித்துக் கொண்டே போகுமா?''

"நிச்சயமாக... கூட்டு வட்டியைப்போல இது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.''

8

வுதரி கூறினார்: "சோஹினி, உங்களுடைய இறுதிக் கடன்களைச் செய்யக்கூடிய புரோகிதராக நீங்கள் என்னை நியமித்திருக்கிறீர்களா என்ன? அது மிகப் பெரிய ஒரு பொறுப்பு. யாராலும் எந்தச் சமயத்திலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மனிதனை சந்தோஷம் கொள்ளச் செய்வது என்பது ஒரு பெரிய செயல்தான். அது ஒரு சாதாரண வழிபாடு அல்ல...''

"நீங்கள் ஒரு சாதாரண புரோகிதர் அல்ல. நீங்கள் கூறக்கூடிய விஷயம்தான் எப்போதும் செய்யக் கூடிய மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும். வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளையெல்லாம் நீங்கள் செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். இவ்வளவு நாட்களாக செய்தது அதுதான். இடையில் அவ்வவ்போது நான் ஒவ்வொரு பொருட்களையும் வாங்கினேன். ஏறிச் செல்லும் படிகளுக்குக் கீழே இருக்கும் அறையில் நான் அவை எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்கள் எல்லாரும் அந்தப் பொருட்களை பயன்படுத்தி திருப்தி அடைவார்கள்.''

பேராசிரியருடன் கீழே சென்ற சோஹினி அவர் அறிவியல் மாணாக்கர்களுக்காக சேகரித்து வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்தாள். பல வகைப்பட்ட கருவிகள், மாடல்கள், விலை மதிப்புள்ள புத்தகங்கள், நுண்பொருள் நோக்கிக்குத் தேவையான ஸ்லைடுகள், உயிரியல் சம்பந்தப்பட்ட சான்றுகள்... ஒவ்வொரு பரிசுப் பொருளுடனும் பெயரையும் முகவரியையும் எழுதி இணைத்துக் கட்டியிருந்தார். ஒவ்வொரு மாணவர்களுக்குமான உதவித் தொகை என்ற வகையில் இறுநூற்றைம்பது காசோலைகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சம்பந்தப்பட்ட எல்லா செலவுகளையும் ஒழுங்காக எழுதி வைத்திருந்தார். வசதி படைத்த பணக்காரர்களின் மரணத்துடன் தொடர்பு உள்ள இறுதி காரியங்களை நடத்தும்போது, வழக்கமான பிராமண விருந்து அளிப்பதற்குச் செலவிடுவதைவிட அதிகமான தொகையை அதற்காகச் செலவிட்டாலும், ஆர்ப்பாட்டம் என்று தோன்றாத அளவிற்கு அதை அவர் செய்தார்.

"புரோகிதருக்கான தட்சிணை எவ்வளவு? நீங்க அதைக் கூறவில்லையே?''

"உங்களுடைய முழுமையான திருப்திதான் என்னுடைய தட்சிணை.'' சோஹினி கூறினாள்: "அந்த க்ரோனோமீட்டரை நான் உங்களுக்கு மிகவும் அருகில் வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே! ஆராய்ச்சிக்காக என்னுடைய கணவர் ஜெர்மனியிலிருந்து அந்த கருவியை இறக்குமதி செய்திருந்தார்.''


"என்னால் இப்போது மனதில் இருக்கும் உணர்வை வெளிப்படுத்த முடியவில்லை.'' சவுதரி சொன்னார்: "வெற்று வார்த்தைகளைக் கொண்டு பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை. என்னுடைய புரோகிதச் செயல்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பு கிடைத்து விட்டிருக்கிறது.''

"இப்போதும் மறக்க முடியாத இன்னொரு ஆளும் உண்டு- எங்களுடைய இறந்துவிட்ட மணிக்கின் மனைவி!''

"யார் இந்த மணிக்?''

"சோதனைக் கூடத்தில் பிரதான மெக்கானிக்காக அவர் இருந்தார். அழகான, திறமை வாய்ந்த கைகளை அவர் கொண்டிருந்தார். இயந்திரங்களை தலைமுடி அளவிற்குக்கூட சரி பண்ண அவரால் முடியும். இயந்திரங்களின் விஷயத்தில் அவருடைய மூளை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. என்னுடைய கணவர் அவரிடம் ஒரு நண்பரைப் போல பழகினார். அவரைக் காரில் ஏற்றிக் கொண்டு போய் அவர் பெரிய பெரிய தொழிற்சாலைகளையெல்லாம் பார்த்தார். ஆனால், அவர் ஒரு முழு குடிகாரராக இருந்தார். அவருடைய நிலையற்ற தன்மையைப் பார்க்கும் சோதனைக் கூடத்தில் வேலை பார்த்தவர்கள் அவரைக் கேவலமாக பார்த்தார்கள். அவர் உண்மையாகவே மிகச் சிறந்த திறமைசாலி. பயிற்சியால் மட்டும் பெற முடியாத திறமையைக் கொண்ட பேராற்றல் படைத்தவர் என்று என்னுடைய கணவர் கூறுவதுண்டு. மணிக் மீது அவர் முழுமையான அன்பு வைத்திருந்தார். அவர் என்ன காரணத்திற்காக என்மீது அன்பு செலுத்தினார் என்பதை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். அவர் என்னிடம் பார்த்த நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்களைவிட அதிகமாக இருந்தன. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் இப்போதும் முழு மனதுடன் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். வேறு யாரிடமிருந்தும் அவரால் எதிர்பார்க்க முடியாது. என்னுடைய பலவீனங்களைப் பொருட்படுத்தாமல் அவர் என்னுடைய பலத்தை மட்டும் ஏற்றுக் கொண்டார். அவர் என்னுடைய திறமைகளைக் காணாமல் இருந்திருந்தால், நான் எப்படிப்பட்ட இருளுக்குள் போய் சிக்கிக் கொண்டு விட்டிருப்பேன் என்பதை உங்களால் கற்பனை பண்ணி பார்க்க முடிகிறதா? நான் ஒரு தரம் தாழ்ந்த பெண். அதே நேரத்தில் எனக்கு சில நல்ல குணங்களும் இருக்கின்றன. அப்படி இல்லாமல் போயிருந்தால், அவரால் என்னை சகித்துக் கொண்டு இருந்திருக்க முடியுமா?''

"சோஹினி, உங்களுடன் அறிமுகமான நாளிலிருந்தே, நீங்கள் அசாதாரணமான தனித்தன்மை கொண்ட பெண் என்பதை நான் புரிந்து கொண்டேன். நீங்கள் ஒரு தரம் தாழ்ந்த பெண்ணாக இருந்திருந்தால், நீங்கள் இதுவரை செய்த உழைப்புகள் எதுவும் வெளியே வந்திருக்காது.''

"ஆட்கள் என்னைப் பற்றி எப்படி நினைத்தாலும், அந்த மனிதர் எனக்கு உண்டாக்கிக் கொடுத்த அங்கீகாரம்தான் நின்று கொண்டிருக்கிறது. அது இனிமேலும் நிலை பெற்று நிற்கும்.''

"கணவரின் பெயரைக் கேட்டவுடன் கரைந்து கரைந்து இல்லாமற் போகும் வெறும் ஒரு சாதாரண பெண்ணல்ல நீங்கள் என்பதை, உங்களைப் பற்றி மேலும் நெருக்கமாகத் தெரிந்து கொண்டபோது நான் புரிந்து கொண்டேன்.''

"இல்லை... நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. அவரிடம் நான் என்னுடைய சக்தியைக் கண்டடைந்தேன். முதல் நாளிலேயே அவர் ஒரு ஆண் என்பதை நான் புரிந்து கொண்டேன். நல்ல ஒரு மனைவியாக ஆவதற்காக முன்கூட்டியே எழுதித் தயார் பண்ணிய நாடகத்தை ஆடி முடிக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டாகவில்லை. என்னிடமிருக்கும் அந்த விலை மதிப்புள்ள ரத்தினங்களை அணிவதற்கு அவருக்கு மட்டுமே தகுதி இருந்தது என்பதை நான் பெருமையுடன் கூறுவேன்.''

அந்தச் சமயத்தில் நீலா அறைக்குள் வந்தாள். "எக்ஸ்யூஸ் மி, பேராசிரியர்...'' அவள் சொன்னாள்: "நான் என் அம்மாவிடம் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும்.''

"நிச்சயம் நீ சொல்லலாம். நான் சோதனைக் கூடத்திற்குச் செல்வதற்காக இருக்கிறேன். ரேபதி என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கிறேன்.''

"அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.'' நீலா சொன்னாள்: "அவருடைய வேலை முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக நான் இடையில் அவ்வப்போது சாளரத்தின் வழியாக உள்ளே எட்டிப் பார்ப்பதுண்டு. எல்லா நேரங்களிலும் அவருடைய தலை புத்தகத்தை நோக்கி குனிந்த வண்ணம் இருக்கும். குறிப்புகள் எழுதிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் திடீரென்று எதைப் பற்றியோ ஆழமாக சிந்திப்பதைப் போல அவர் பேனாவைக் கடிப்பதைப் பார்க்கலாம். சர் ஐஸக்கின் புவி ஈர்ப்பு விதி தகர்ந்துபோய் விடுமோ என்ற பயத்தின் காரணமாக நான் அங்கு நுழைய முடியாது. காந்த சக்தியைப் பற்றித்தான் அவர் பாடம் நடத்துகிறார் என்று என் தாய் யாரிடமோ கூறுவதைக் கேட்டேன். அதனால்தான் யாராவது... குறிப்பாக பெண்கள் அந்த வழியாகக் கடந்து செல்லும்போது அவருடைய ஊசி அசையத் தொடங்கி விடுகிறது.''

சவுதரி விழுந்து விழுந்து சிரித்தார். "சோதனைக் கூடம் நமக்கு உள்ளேயே இருக்கிறதே, குழந்தை! காந்த சக்தியைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு தொடர் திட்டம். அந்த ஊசியை அசைக்கக் கூடிய ஆட்கள்மீது கோபம் உண்டாவது இயல்பானதே. அது நம்முடைய திசையைப் பற்றிய அறிவைத் தலை கீழாகப் புரட்டிப் போடுகிறது. நான் புறப்படுகிறேன்.''

"எவ்வளவு காலத்திற்கு என்னை புடவை நுனியில் கட்டி வைத்திருக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறீர்கள், அம்மா?'' சவுதரி போனவுடன் நீலா தன் தாயிடம் கேட்டாள். "அது இனிமேல் அதிக காலம் நடக்காது. அம்மா, அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே நீங்கள் அந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டியதிருக்கும்.''

"என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?''

"இளம் பெண்களுக்கு உரிய மேற்படிப்பு திட்டத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா, அம்மா?'' நீலா கேட்டாள்: "நீங்கள் எவ்வளவோ பணத்தை அதற்காக நன்கொடையாக அளித்திருக்கிறீர்கள். அங்கு எனக்கு ஏதாவது செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை உண்டாக்கித் தரக்கூடாதா?''

"நீ ஒழுங்கான பாதையின் வழியாக முன்னோக்கிப் போக மாட்டாயா என்பதுதான் என்னுடைய குறையே.''

"எல்லா செயல்களையும் நிறுத்தி வைப்பதுதான் முன்னோக்கிப் போவதற்கான மிகச் சிறந்த வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அம்மா?''

"இல்லை... நிச்சயமாக இல்லை. எனக்கு அது புரிகிறது. அதுதான் என்னை அதிகமாக வேதனைப்பட வைக்கிறது.''

"என்னை தனியே சிரமப்பட வைக்காததற்கு என்ன காரணம்? அம்மா, கடைசியில் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். நான் இப்போது ஒரு சிறிய குழந்தை அல்ல. பொது இடம் என்றால் பலவகைப்பட்ட மனிதர்களும் வந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு இடம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.


அதனால் அந்த இடம் ஆபத்தானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நம்மை சந்தோஷம் கொள்ளச் செய்வதற்காக இந்த உலகம் தன்னுடைய அசைவுகளை நிறுத்திக் கொள்வதில்லை. ஆட்களுடன் நான் பழகுவதைத் தடுப்பதற்கு எந்த சட்டத்தைப் பயன்படுத்தினாலும் உங்களால் அது முடியாது, அம்மா.''

"எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும். பயம்- பயத்திற்கான காரணங்களை இல்லாமல் செய்யாது என்ற விஷயம் எனக்குத் தெரியும். அதற்கு அர்த்தம், நீ மேற்படிப்பு குழுவில் சேர விரும்புகிறாய் என்பதுதானே?''

"ஆமாம்.''

"நல்லது. ஆண்களாக இருக்கும் பேராசிரியர்கள் ஒவ்வொருவரையும் நீ சுற்றிச் சுற்றி வருவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீ ஒரு விஷயத்தைப் பற்றி எனக்கு உறுதிப்படுத்த வேண்டும். ரேபதியைத் தேடிப் போகமாட்டேன் என்று... எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நீ அந்த சோதனைக் கூடத்திற்குப் போகக்கூடாது!''

"அம்மா, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. உங்களுடைய ஐஸக் நியூட்டனிடம் சென்று பாருங்க. அந்த ஆள்மீது எனக்கு ஈடுபாடு இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றுகிறதா அம்மா? அதைவிட மரணம் மேலானது!''

பதைபதைப்பு உண்டாகும்போது ரேபதி எப்படி நெளிவான் என்பதை அவள் நடித்துக் காட்டினாள். "ஒரு ஆணிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.'' அவள் சொன்னாள்: "வயதிற்கு வந்த ஆணை கொஞ்சி வளர்க்கும் பெண்களுக்காக நீங்கள் அந்த ஆளைப் பாதுகாத்து வைத்திருங்கள். என்னைப் போன்றவர்களுக்கு ஏற்ற ஆண்மகன் அல்ல அவர்.''

"நீ ஆச்சரியப்படும் வகையில் பேசுகிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது. இவை எதுவும் நீ மனதைத் திறந்து கூறுபவை அல்ல என்று நான் சந்தேகப்படுகிறேன். அந்த ஆளைப் பற்றிய உன்னுடைய கருத்துகள் எப்படியிருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அந்த ஆளைப் பார்க்க முயற்சித்தால், நீ ஆபத்தில் மாட்டிக் கொள்வாய்!''

"உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் அந்த ஆளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒருநாள் நீங்கள் விரும்பினீர்கள், அம்மா. அது எதுவும் எனக்குப் புரியவில்லை என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அருகில் சென்றால், அவருடைய பிரகாசம் குறைந்து விடும் என்று நினைத்துத்தானே நீங்கள் என்னை அவருக்கு அருகில் போக விடாமல் வைத்திருக்கிறீர்கள்?''

"இங்கே பார் நீலா. நான் உன்னிடம் விஷயங்களை வெளிப்படையாகக் கூறுகிறேன். எது எப்படி இருந்தாலும், நீ அந்த ஆளைத் திருமணம் செய்யப் போவதில்லை.''

"அப்படியென்றால் மோத்தி நகரின் ராஜகுமாரனை நான் திருமணம் செய்து கொள்ளட்டுமா?''

"அப்படித்தான் நடக்கும் என்றால் நடக்கட்டும்.''

"அது மிகவும் வசதியான விஷயமாகவும் இருக்கும். அவருக்கு இப்போதே மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். அதனால் என்னுடைய சுமை குறையும். அவர் பெரும்பாலான நேரமும் மது அருந்தி இரவு விடுதிகளில் சுற்றிக் கொண்டிருப்பார். அதனால் எனக்கு நேரத்தைக் கழிப்பதற்கு சிரமமே இருக்காது.''

"நல்ல விஷயம். அந்த இலக்குடன் முன்னோக்கிச் செல். ஆனால், ரேபதியைத் திருமணம் செய்வதற்கு நான் உன்னை அனுமதிக்க மாட்டேன்.''

"ஐஸக் நியூட்டனை நான் மூளைச் சலவை செய்து விடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அம்மா?''

"அதைப் பற்றி நாம் விவாதம் செய்ய வேண்டாம். நான் கூறியதை நீ ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்.''

"இல்லை... அந்த ஆள் எனக்குப் பின்னால் எச்சிலை ஒழுக விட்டுக் கொண்டு வந்து விட்டால்....?''

"அப்படியென்றால் அவன் இந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டியதிருக்கும். நீ உன்னுடைய கையிலிருக்கும் பணத்தை எடுத்து அவனுக்குச் செலவிற்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். உன்னுடைய தந்தை சம்பாதித்த பணத்திலிருந்து ஒரு பைசாவைக்கூட பிறகு நான் அவனுக்குத் தரமாட்டேன்.''

"மிகவும் பயங்கரமாக இருக்கிறது! குட்பை, சர் ஐஸக்.''

இந்த நாடகத்தின் முக்கியமான காட்சி அன்று அங்கேயே முடிவுக்கு வந்தது.

9

"எல்லாம் மிகவும் அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது, சவுதரி மஸாய். என் மகள்தான் என்னைக் கவலைப்பட செய்து கொண்டிருக்கிறாள். அவள் எதற்காக தூண்டில் போட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.''

"அவளை நோக்கித் தூண்டில் போட்டிருப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' சவுதரி கேட்டார்: "அதுவும் கவலையை உண்டாக்கக் கூடிய ஒரு விஷயம்தானே? இந்த சோதனைக் கூடத்தை நடத்துவதற்காக உங்களுடைய கணவர் பெரிய ஒரு சம்பாத்தியத்தை உண்டாக்கி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற விஷயம் இந்த உலகம் முழுவதும் பரவி விட்டிருக்கிறது- ஆட்கள் அந்த செய்தியை ஒருவருக்கொருவர் கூறிக் கூறி. அந்த ஆண்கள் எல்லாரும் அந்த சாம்ராஜ்யத்தின் மீதும் ராஜகுமாரியின் மீதும் பார்வையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.''

"ராஜகுமாரி மிகவும் எளிதாகத் தூண்டிலில் சிக்கி விடுவாள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால், நான் உயிருடன் இருக்கும் காலம் வரைக்கும் இந்த சாம்ராஜ்யத்திற்குள் நுழைவதற்கு யாருக்கும் அவ்வளவு எளிதில் முடியாது.''

"ஆனால், முயற்சி செய்பவர்கள் சுற்றிலும் வந்து குழுமிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒருநாள் நான் நம்முடைய பேராசிரியர் மஜீம்தாரைச் சந்தித்தேன். நம் ராஜகுமாரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர் திரை அரங்கிற்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் வேறு எங்கோ பார்த்தார். பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி அவர் எல்லா நேரங்களிலும் பேசிக் கொண்டிருப்பார். இந்த நாட்டின் நன்மைகளைப் பற்றி அவர் பேசுவதைக் கேட்டால், நாம் ஆச்சரியப்பட்டுவிடுவோம். ஆனால், அவரின் தலை மறைந்தவுடன், தாய் நாட்டைப் பற்றி நான் உண்மையாகவே கவலைப்பட்டேன்.''

"சவுதரி மஸாய்... வாசல் கதவு திறக்கப்பட்டு விட்டது.''

"உண்மையாகவே அது திறக்கப்பட்டு விட்டது. அந்த அப்பிராணி பையன் தன்னுடைய அசையாத சொத்துகளைக் காப்பாற்றுவதற்கு சிரமப்பட வேண்டியதிருக்கும்.''

"அந்த மஜீம்தாரின் குடும்பத்தை ப்ளேக் நோய் பாதிக்கக் கூடாதா? எனக்கு ரேபதியைப் பற்றித்தான் பதைபதைப்பு...''

"இப்போது ஆபத்து எதுவும் இல்லை.'' சவுதரி சொன்னார்: "அவன் தன்னுடைய வேலையில் மூழ்கிப் போய் இருக்கிறான். அது மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.''

"ஆனால், அவனுடைய பிரச்சினை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா, சவுதரி மஸாய்? அறிவியலைப் பற்றிய விஷயம் என்னும் போது, அவன் ஒரு அறிவாளியாக இருக்கலாம். ஆனால், மருமக்கத்தாய விஷயம் என்னும்போது, அவனுடைய நிலை மிகவும் கீழே இருக்கிறது.''


"அது உண்மைதான். அவன் ஒருமுறைகூட தடுப்பு ஊசி குத்திக் கொண்டதில்லை. அவனுக்கு நோய் பாதித்தால், தப்பிப்பது மிகவும் சிரமமானது.''

"நீங்கள் எல்லா நாட்களிலும் இங்கு வந்து அவனுடைய ஆரோக்கியத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.''

"அவனுக்கு ஏதாவது நோய் பாதித்தால், அது எனக்கும் பரவும். இந்த வயதான காலத்தில் ஏதாவது நோய் வந்தால், அது என்னையும் கொண்டுபோய் விடும். ஒரு பெண்ணாக இருந்தாலும் உங்களால் நகைச்சுவையை ரசிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். தொற்று நோய்களின் உலகத்தை நான் கடந்து விட்டேன். எவ்வளவு நெருக்கமாகப் பழகினாலும், எனக்கு நோய் வராது. ஆனால், எனக்கு வேறொரு பிரச்சினை இருக்கிறது. நாளை மறுநாள் நான் குஜ்ரான்வாலாவிற்குச் செல்ல வேண்டும்.''

"அது இன்னொரு நகைச்சுவையா? தயவு செய்து இந்த அப்பிராணி பெண்ணை விடுங்க...''

"நான் இதை சீரியஸாகத்தான் கூறுகிறேன். டாக்டர் அமூல்யா ஆதி என்னுடைய ஒரு பழைய நண்பர். அவர் அங்கு பணியாற்றினார். அங்கு அவருக்கு நல்ல வேலை இருந்தது. கிடைத்த பணம் முழுவதிற்கும் அவர் அங்கு பூமியை வாங்கிக் குவித்தார். ஜன்னி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர் மரணத்தைத் தழுவினார். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளில் நான் தலையிடாமல் இருக்க முடியாது. அங்கு இருக்கும் சொத்து முழுவதையும் விற்றுவிட்டு அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டும். அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று எனக்குத் தெரியாது.''

"அதைப் பற்றி யாராலும் முன்கூட்டியே கூற முடியாது.''

"சோஹினி, இந்த உலகத்தில் நடைபெறும் காரியங்கள் எதிலும் நமக்கு எந்தவொரு பிடிமானமும் இல்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சந்திப்பது என்பதுதான் நம்மால் முடியக்கூடிய ஒரேயொரு காரியம். மனிதர்கள் விதிமீது நம்பிக்கை வைத்திருப்பதில் தவறே இல்லை என்று உங்களுக்குத் தெரியாதா? தவிர்க்க முடியாத காரியங்களில் ஒரு தலைமுடி அளவிற்குக்கூட வேறுபாட்டை உண்டாக்க முடியாது என்று எங்களைப் போன்ற விஞ்ஞானிகள் நம்புகிறோம். உங்களால் முடிந்த வரைக்கும் முடியக்கூடிய காரியங்களைச் செய்து முடியுங்கள். எதுவும் செய்ய முடியாத நிலை வரும்போது, எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.''

"மிகவும் நல்ல விஷயம். அதையொட்டி இனி நான் பயணிக்கப் போகிறேன்.''

"நான் ஏற்கெனவே சொன்ன மஜீம்தார் இருக்கிறாரே! அவர் அந்த அளவிற்கு ஆபத்தான நபரொன்றும் இல்லை. மற்றவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்கள் அவரை கூட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், அவருடைய கூட்டத்தில் இருக்கும் வேறு சில ஆட்களைப் பற்றி காதுகளில் விழுந்த செய்தி- அவர்கள் மிகவும் சாணக்கியத்தனமான குணம் கொண்டவர்கள் என்பது. நூறடி தூரத்தில் நின்றாலும், ஆபத்தை உண்டாக்கக்கூடிய திறமை உள்ளவர்கள். அவர்களின் கூட்டத்தில் பங்கு பிஹாரி என்றொரு வக்கீல் இருக்கிறார். அவருக்கு அருகில் செல்வது, ஒரு ஆக்டோபஸின் அருகில் செல்வதைப் போல ஆபத்தானது. வசதி படைத்த விதவைகளின் வெப்பம் நிறைந்த ரத்தம்தான் அப்படிப் பட்டவர்களுக்கு உணவு. அந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நடங்க... எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய பார்வையைப் பற்றி நினைத்துப் பாருங்கள்...''

"சவுதரி மஸாய், உங்களால் உங்களுடைய பார்வையை வைத்துக் கொண்டு நடக்க முடியும். ஆனால், என்னுடைய சோதனைக் கூடத்தில் யாராவது தொட்டு விளையாடினால், நான் உங்களுடைய தத்துவ விஞ்ஞானத்தையும் நீதியியலையும் காற்றில் பறக்க விட்டுவிடுவேன். உங்களுடைய அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் மறுப்பேன். நான் ஒரு பஞ்சாபிப் பெண். நன்றாக கத்தியைக் குத்தி இறக்குவதற்கு எனக்குத் தெரியும். யாரைக் கொல்வதற்கும் என்னால் முடியும். எதற்கு அதிகம்...? என்னுடைய மகளாக இருந்தாலும் மருமகனாக இருந்தாலும் ஒரே குத்தில் கொல்வதற்கு என்னால் முடியும்.''

புடவையின் மடிப்பகுதியில் அவள் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்தாள். ஒரே இழுப்பில் அவள் அந்த கத்தியை வெளியே எடுத்து, அதன் பிரகாசித்துக் கொண்டிருந்த தலைப் பகுதியை அவருக்கு முன்னால் காட்டினாள். "அவர் என்னை மாறுபட்டவளாகப் பார்த்தார். அன்பிற்காக கெஞ்சி அழுவதற்கு மட்டும் தெரிந்திருக்கும் ஒரு வங்காளப் பெண் அல்ல நான். அன்பிற்காக உயிரைக் கொடுப்பதற்கு என்னால் முடியும். அதேபோல உயிரை எடுப்பதற்கும். அந்த சோதனைக் கூடத்திற்கும் என்னுடைய இதயத்திற்கும் இடையில் நான் இந்தக் கத்தியை மறைத்து வைத்திருக்கிறேன்.''

"ஒரு காலத்தில் நான் கவிதை எழுதுவதுண்டு. இனிமேலும் கவிதை எழுதலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.'' சவுதரி சொன்னார்.

"நீங்கள் என்ன கவிதையை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய தத்துவ அறிவியல் இருக்கிறதே, அதைத் திரும்பவும் எடுத்துக் கொண்டு போங்க... என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததை நான் எந்தச் சமயத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் தனியாகப் போராடிக் கொள்வேன். "நான் வெற்றி பெறுவேன்... வெற்றி பெறுவேன்... வெற்றி பெறுவேன்" என்று பெருமையுடன் நான் கூறிக் கொண்டேயிருப்பேன்.''

"அடடா! நான் இதோ என்னுடைய தத்துவ விஞ்ஞானத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இந்த நிமிடத்திலிருந்து உங்களுடைய வெற்றி கோஷங்கள் கொண்ட பயணத்திற்கு இசையை உண்டாக்குபவன் நான். தற்போதைக்கு சிறிது நேரத்திற்கு நான் இங்கு இல்லை. ஆனால், உடனடியாக நான் திரும்பி வருவேன்.''

ஆச்சரியம் என்றுதான் கூற வேண்டும்- சோஹினியின் கண்கள் நீரால் நிறைந்தன. "நான் கூறுவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.'' அவள் சொன்னாள். அவள் சவுதரியின் கழுத்தில் கையை வைத்து சுற்றிப் பிடித்தாள். "இந்த உலகத்தில் ஒரு உறவும் நிரந்தரமில்லை. இந்த உறவும் வெறும் நிமிடங்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றுதான்.''

அப்படிக் கூறிவிட்டு அவள் தன்னுடைய பிடியை விட்டாள். அவள் அவருடைய கால்களில் விழுந்து கடவுளின் பெயர்களை முணுமுணுத்தாள்.

10

சூழ்நிலைகள்... அதாவது- சிச்சுவேஷன்ஸ் என்று பத்திரிகைகள் குறிப்பிடும் சம்பவங்கள் திடீர் திடீரென்றுதான் நடைபெறுகின்றன. அதுவும் அடுத்தடுத்து. வாழ்க்கைக் கதை அதன் கவலைகளையும் சந்தோஷத்தையும் சுமந்து கொண்டு முன்னோக்கிப் போவது ஒரு நிச்சயிக்கப்பட்ட வேகத்தில்தான். இறுதி அத்தியாயத்தை அடையும்போது, மோதல்... அதாவது- ஒருவரையொருவர் இடித்துக் கொள்வது எல்லாவற்றையும் நொறுக்கிச் சாம்பலாக்குகிறது. பிறகு... முழுமையான அமைதி. படைப்பாளி கதையை படிப்படியாக பகுதி பகுதியாக உண்டாக்குகிறார். பிறகு ஒரே நிமிடத்தில், ஒரே அடியில் எல்லாவற்றையும் நொறுக்கி சாம்பலாக்குகிறார்.

சோஹினியின் பாட்டி அம்பாலாவில் இருந்தாள். பாட்டி சோஹினிக்கு ஒரு தந்திச் செய்தியை அனுப்பி இருந்தாள். "நீ என்னைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தால் உடனே வா" என்பதுதான் அந்தச் செய்தி.

சோஹினிக்கு உயிருடன் இருக்கும் ஒரேயொரு உறவு பாட்டி மட்டும்தான். அந்தப் பாட்டியிடமிருந்துதான் நந்த கிஷோர் சோஹினியை வாங்கினான்.

"நீ என்னுடன் வர வேண்டும்.'' அம்மா நீலாவிடம் கூறினாள்.

"அது முடியாது.'' நீலா சொன்னாள்.

"ஏன் முடியாது?''

"என்னைப் பெருமைப்படுத்துவதற்காக அவர்கள் ஒரு விருந்து உண்டாக்க விரும்புகிறார்கள்.''

"யார் இந்த அவர்கள்?''

"விழிப்புணர்வு தேடுபவர்கள் இருக்கும் க்ளப்பின் உறுப்பினர்கள். பயப்பட வேண்டாம். அவர்கள் மிகச் சிறந்த மனிதர்கள். அந்த உறுப்பினர்களின் பட்டியலைப் படிங்க... மிகுந்த சிறப்புத் தன்மை கொண்ட மனிதர்கள்.''

"உன் நோக்கம் என்ன?''

"அதை விளக்கிக் கூறுவது எளிதான விஷயமல்ல. அந்த பெயரே உங்களுக்குத் தெளிவான அறிகுறிகளைத் தரவில்லையா? எல்லா வகையான அர்த்தங்களையும் அதற்குள் ஆழமாக மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆன்மிகம், இலக்கியம், கலை ஆகியவற்றின் அடையாளங்கள். அன்றொரு நாள் நபகுமார் பாபு அதற்கு அருமையான ஒரு விளக்கம் அளித்தார். அவர்கள் உங்களிடம் ஏதோ நன்கொடை கேட்டு வருவார்கள்.''

"ஆனால், எல்லா நன்கொடைகளையும் முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நல்ல ஒரு நன்கொடையை அவர்கள் சொந்தமாக்கிக் கொண்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். நீ முழுமையாக அவர்களுடைய கைகளில் சிக்கிவிட்டிருக்கிறாய். அது மட்டும் போதும். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது. எனக்குத் தேவையற்றது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. என்னிடமிருந்து அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காது.''

"அம்மா, உங்களுக்கு என்மீது ஏன் இந்த அளவிற்குக் கோபம்? அவர்கள் இந்த நாட்டிற்கு சுயநலமற்று சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள்.''

"அந்த மாதிரி விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதே நமக்கு நல்லது. நீ இப்போது சுதந்திரமானவள் என்று உன்னுடைய நண்பர்கள் கூறியிருப்பார்கள்.''

"அவர்கள் அப்படிச் சொன்னார்கள்.''

"என்னுடைய கணவர் வைத்துவிட்டுப் போன பணத்தை உன்னுடைய விருப்பப்படி நீ செலவழிக்கலாம் என்றும் அந்த சுயநலமில்லாதவர்கள் உனக்கு அறிவுரை கூறியிருப்பார்கள்.''

"எனக்கு அது தெரியும்.''

"உயிலில் மேலும் ஒரு வரியைச் சேர்க்க வேண்டும் என்று நீ ரகசியமாக முயற்சிக்கிறாய் என்று நான் கேள்விப்பட்டேன். உண்மைதானா?''

"அது உண்மைதான். பங்கு பாபுதான் என்னுடைய வக்கீல்.''

"அவர் உனக்கு மேலும் ஏதாவது அறிவுரை தருவதுண்டா? புதிய ஆசை வெளிச்சங்கள்...?''

நீலா எதுவும் பேசவில்லை.

"என்னுடைய எல்லைக்குள் எங்காவது நுழைந்தால் உன்னுடைய பங்கு பாபுவை நான் ஒரு வழி பண்ணி விடுவேன். சட்டப்படி என்னால் அதைச் செய்ய முடியவில்லையென்றால் நான் சட்டத்தை மீறுவேன். அம்பாலாவிலிருந்து நான் பெஸாவர் வழியேதான் திரும்பி வருகிறேன். சீக்கியர்களான நான்கு தடியர்கள் என்னுடைய சோதனைக் கூடத்திற்கு காவல் இருப்பார்கள். போவதற்கு முன்னால் நான் இன்னொரு விஷயத்தையும் உன்னிடம் கூறுகிறேன்- நான் ஒரு பஞ்சாபிப் பெண்.''

இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தவாறு அவன் சொன்னாள்: "இந்தக் கத்திக்கு என்னுடைய மகள் யாரென்றோ, அவளுடைய வக்கீல் யாரென்றோ அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாது. அதை மனதில் வைத்துக் கொள். ஏதாவது கணக்கு தீர்ப்பதற்கு இருந்தால், திரும்பி வந்த பிறகு நான் அதைத் தீர்த்துக் கொள்கிறேன்.''

11

சோதனைக் கூடத்தைச் சுற்றிலும் நிறைய இடம் வெறுமனே கிடந்தது. சத்த ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் தேவையற்ற ஆரவாரங்களில் இருந்தும் சோதனைக் கூடத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் அப்படி செய்யப்பட்டிருந்தது. அந்த அமைதி தவழும் சூழ்நிலை தன்னுடைய ஆராய்ச்சி செயல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு விஷயம் என்று ரேபதிக்குத் தோன்றியது. அதனால் இரவு நேரத்திலும் அவன் சோதனைக் கூடத்திற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

படிகளுக்குக் கீழே இருந்த கடிகாரத்தில் இரண்டு மணி அடித்தது. சிந்தனையில் மூழ்கியிருந்த ரேபதி சாளரத்தின் வழியாக இரவு நிறைந்திருந்த வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று சுவரில் ஒரு நிழல் அசைவதை அவன் பார்த்தான்.

அவன் திரும்பிப் பார்த்தபோது நீலா அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவள் பாவாடை அணிந்திருந்தாள். மெல்லிய பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்ட ஒரு ஷிம்மீஸ். அவன் நாற்காலியை விட்டு வேகமாக எழுந்திருக்க ஆரம்பித்தபோது, நீலா அவனுடைய மடியில் உட்கார்ந்து விட்டிருந்தாள். அவள் அவனை தன்னுடைய கைகளுக்குள் இருக்கும்படி செய்தாள். ரேபதியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவனுடைய நெஞ்சு வழக்கத்தைவிட அதிக வேகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. "இங்கேயிருந்து போ. தயவுசெய்து இந்த அறையை விட்டுப் போ...'' மூச்சுவிட முடியாததைப் போன்ற குரலில் அவன் சொன்னான்.

"ஏன்?'' அவள் கேட்டாள்.

"என்னால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை.'' ரேபதி சொன்னான்: "நீ ஏன் இங்கே வந்தாய்?''

நீலா அவனை தன் உடலுடன் மேலும் சற்று நெருக்கமாக இருக்கும்படிச் செய்தாள். "நீங்கள் ஏன் என்னைக் காதலிக்கவில்லை?'' அவள் கேட்டாள்.

"ம்... நான் உன்னை காதலிக்கிறேன்.'' ரேபதி சொன்னான்: "ஆனால், இப்போது நீ இங்கேயிருந்து போகணும்.''

திடீரென்று சீக்கியரான ஒரு காவல்காரன் அந்த அறைக்குள் நுழைந்து வந்தான். "உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சீக்கிரமா வெளியேறுங்க!'' அவன் சொன்னான்.

தனக்கே தெரியாமல் ரேபதி மின்சார மணியை அழுத்திக் கொண்டிருந்தான்.

அவன் ரேபதியின் பக்கம் திரும்பினான். "பாபுஜி, உங்களுடைய நம்பிக்கையை நீங்கள் இழந்து விடாதீர்கள்.''

நீலாவை மடியிலிருந்து தள்ளிவிட்டு, ரேபதி எழுந்தான். "நீங்க சீக்கிரமா போங்க. இல்லாவிட்டால் மேம் சாஹிபாவின் உத்தரவுப்படி நான் நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.'' அவன் நீலாவிற்கு முன்னெச்சரிக்கை விடுத்தான்.

இன்னொரு மொழியில் கூறுவதாக இருந்தால் அவன் அவளைப் பிடித்து வெளியேற்றுவான் என்று அர்த்தம். வெளியேற்றும் போது, நீலா அவனுக்கு நேராக இன்னொரு வார்த்தைகள் கொண்ட மாலையைத் தொடுக்க மறக்கவில்லை. "சர் ஐஸக் நியூட்டன்... நாளை நீங்கள் எங்களுடைய வீட்டிற்கு தேநீர் குடிப்பதற்காக வரவேண்டும். மாலை சரியாக 4.45 மணிக்கு. தெரியுதா? உங்களுக்கு சுய உணர்வு இல்லாமற் போய் விட்டதா?'' அவள் கேட்டாள்.

"நான் கேட்டேன்.'' சற்று நடுங்கிய குரலில் ரேபதி சொன்னான்.

நீலாவின் சதைப்பிடிப்பான உடல் அழகான ஒரு சிற்பத்தைப் போல அவளுடைய மெல்லிய பாவாடையின் வழியாக தெளிவாகத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்து அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர, ரேபதியால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.


நீலா அங்கிருந்து கிளம்பினாள். ரேபதி மேஜைக்கு மேலே தலையைச் சாய்த்துக் கொண்டு, ஒரு மூட்டையைப் போல கிடந்தான். அந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும் வசீகரம் அவனுடைய கற்பனைக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. ஒரு மின்சாரப் பெருக்கு அவனுடைய நரம்புகளின் வழியாக வேகமாகப் பாய்ந்தது. நாளை தேநீர் குடிப்பதற்காக அவளுடைய வீட்டிற்குப் போகக் கூடாது என்று கைகளைச் சுருட்டி வைத்துக் கொண்டு அவன் தனக்குள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான். அவன் தீவிரமாக முடிவை எடுப்பதற்கு விரும்பினான். ஆனால், வார்த்தைகள் அவனுடைய உதட்டிலிருந்து வெளியே வரவே இல்லை. "நான் போக மாட்டேன்... நான் போக மாட்டேன்... போக மாட்டேன்" என்று அவன் தனக்கு முன்னால் கிடந்த கையெழுத்து போடும் தாளில் எழுதினான். மேஜைமீது கிடந்த அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்ட கைக்குட்டை அவனுடைய பார்வையில் திடீரென்று பட்டது. அந்தக் கைக்குட்டையின் ஒரு மூலையில் நீலா என்று அழகாகத் தைக்கப்பட்டிருந்தது. அவன் அதை தன்னுடைய முகத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டான். அதன் நறுமணம் அவனுடைய மனதிற்குள் நுழைந்து பெருகி ஓட ஆரம்பித்தது. பைத்தியம் பிடித்துவிட்டிருப்பதைப் போன்ற ஒரு தோணல் அவனுடைய உடலெங்கும் பரவியது.

நீலா திரும்பவும் அறைக்கு வந்தாள். "எனக்கு ஒரு முக்கிய வேலை இருந்தது. ஆனால், நான் அதை மறந்து விட்டேன்.'' அவள் சொன்னாள்.

காவலாளி அவளைத் தடுக்க முயற்சித்தான். "பயப்பட வேண்டாம்.'' அவள் சொன்னாள்: "நான் எதையும் திருடுவதற்காக வரவில்லை. எனக்கு ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வேண்டும். நான் உங்களை "அவேக்கனர்ஸ் க்ளப்" பின் தலைவராக ஆக்க விரும்புகிறேன். நீங்கள் ஒரு புகழ் பெற்ற மனிதராயிற்றே!''

நெளிந்து கொண்டே ரேபதி எதிர்ப்பை வெளிப்படுத்தினான். "உங்களுடைய க்ளப்பைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.''

"நீங்கள் எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ப்ரஜேந்திர பாபுதான் எங்களுடைய க்ளப்பின் புரவலர் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.''

"ப்ரஜேந்திர பாபு யாரென்று எனக்குத் தெரியாது.''

"அவர் மெட்ரோபாலிட்டன் வங்கியின் இயக்குனர். நீங்கள் அதை மட்டும் தெரிந்திருந்தால் போதும். போதும் டியர்... இனி ஒரே ஒரு கையெழுத்து... ஒரு கையெழுத்தை மட்டும் போட்டால் போதும்.'' ரேபதியின் தோளில் கையை வைத்துக் கொண்டே அவனுடைய வலக்கையை எடுத்து உயர்த்தியவாறு அவள் சொன்னாள்: "இதோ... இங்கே கையெழுத்தைப் போடுங்க!''

கனவு காணும் ஒரு மனிதனைப் போல அவன் அவள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டான்.

நீலா அந்தத் தாளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தபோது, காவலாளி இடையில் புகுந்தான்: "அந்தத் தாளை நான் கொஞ்சம் பார்க்கணும்.''

"அதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குப் புரியாது.'' நீலா சொன்னாள்.

"எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியமில்லை.'' காவலாளி சொன்னான். அவன் அவளுடைய கையிலிருந்து அந்தத் தாளை வாங்கிக் கிழித்தெறிந்தான். "உங்களுக்கு ஏதாவது கையெழுத்து வேண்டுமென்றால், அதை இந்தக் கட்டிடத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கே வேண்டாம்.''

தன் மனதிற்குள் ரேபதி நிம்மதி பெருமூச்சு விட்டான். காவலாளி சொன்னான்: "வாங்க மேடம்... நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்.''

அவன் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

சிறிது நேரம் தாண்டிய பிறகு அந்த மனிதன் திரும்ப வந்தான். "நான் எல்லா கதவுகளையும் அடைத்து வைத்திருந்தேன். நீங்கள் அவங்களை உள்ளே வர வைத்து விட்டீர்கள். அப்படித்தானே?''

"என்னை இப்படி சந்தேகப்படுவதா? அவமானம்!'' திரும்பத் திரும்ப அவன் அதை மறுத்தான். "நான் கதவு எதையும் திறந்து விடவில்லை.''

"பிறகு... அவங்க எப்படி உள்ளே வந்தாங்க?''

ஆச்சரியத்தை உண்டாக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது அது. அந்த இளம் விஞ்ஞானி எல்லா கதவுகளையும் தெளிவாக ஆராய்ந்தான். ஆராய்ந்ததில் ஒரு அறையின் சாளரத்தின் தாழ்ப்பாள் கழன்று போய் இருப்பதை அவன் பார்த்தான். பகல் நேரத்தில் யாரோ அதைத் திறந்து விட்டிருக்க வேண்டும். ரேபதி அப்படிப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடிய ஆள் என்று காவலாளிக்குத் தோன்றவில்லை. அவன் ரேபதியை ஒரு அப்பாவி என்று மட்டுமே நினைத்தான். புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடப்பதற்கு மட்டுமே பலத்தைக் கொண்டிருக்கும் ஆள்... அவன் தன்னுடைய நெற்றியில் கையை வைத்து அழுத்தினான். "அட பெண்ணே! விதி உன்னை பிசாசாக ஆக்குகிறதே!"

இரவு முடிவடைவதற்கு இன்னும் சிறிது நேரம் மட்டுமே எஞ்சியிருந்தது. தேநீர் குடிப்பதற்குப் போகும் பிரச்சினையே இல்லை என்று ரேபதி திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

காகம் கரைய ஆரம்பித்திருந்தது. ரேபதி வீட்டிற்குத் திரும்பினான்.

12

றுநாள் நேரத்திற்கு வேறுபாடு எதுவும் உண்டாகவில்லை. சரியாக 4.45 மணிக்கு ரேபதி தேநீர் விருந்திற்கு வந்து விட்டான். வெறும் தேநீர் குடிப்பது மட்டுமே அங்கு இருக்கும் என்று அவன் நினைத்திருந்தான். வளர்ச்சியடைந்த நாகரீகத்தின் வேடதாரிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாமலிருந்தது. புதிதாக சலவை செய்து தேய்க்கப்பட்ட வேஷ்டியும் குர்தாவும் அவன் அணிந்திருந்தான். தோளில் ஒரு கதர் துண்டை அவன் அழகாக மடித்துப் போட்டிருந்தான். மிகவும் நவீன பாணி மனிதர்கள் பங்கெடுக்கும் ஒரு பார்ட்டி அது என்பதே அங்கு போன பிறகுதான் அவனுக்குப் புரிந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோ போல இருந்தது. யாரும் பார்க்காத மாதிரி ஒரு மூலையில் போய் உட்கார அவன் தீர்மானித்தான். அப்படி ஒரு மூலையில் அமர்வதற்கு முயற்சித்தபோது, "டாக்டர் பட்டாச்சார்யா அவர்களே! வருக. உங்களுடைய இருக்கை இங்கே இருக்கிறது!'' என்று கூறியவாறு ஆட்கள் அடங்கிய ஒரு கூட்டம் எழுந்து நின்றது.

நடுவில் இடப்பட்டிருந்த வெல்வெட் போட்டிருக்கும் ஒரு நாற்காலியில் யாரோ அவனை அமரச் செய்தார்கள். தான்தான் எல்லாரும் கவனிக்கக் கூடிய மைய கதாபாத்திரம் என்பதை அவன் புரிந்து கொண்டான். நீலா முன்னோக்கி நடந்து வந்து அவனுடைய கழுத்தில் ஒரு மலர் மாலையை அணிவித்து, நெற்றியில் சந்தனக் குறியைப் போட்டாள். அவன்தான் அவேக்கனர்ஸ் க்ளப்பின் தலைவராக ஆகவேண்டும் என்று ப்ரஜேந்திர பாபு கேட்டுக் கொண்டார். பங்கு பாபு அந்த வேண்டுகோளை வழிமொழிந்தார். அந்தத் தீர்மானத்தை வரவேற்று கைத்தட்டல்கள் பெரிதாக எழுந்தன.

டாக்டர் பட்டாச்சார்யாவின் சர்வதேச அளவில் உள்ள பெருமையைப் பற்றி எழுத்தாளரான ஹரிதாஸ் பாபு ஒரு சொற்பொழிவே செய்தார். ரேபதி பாபுவின் புகழ்பெற்ற காற்றில் அவேக்கனர்ஸ் க்ளப் என்ற கப்பலின் வேகம் அதிகரிக்கும். மேற்கு கடலின் பல்வேறு துறைமுகங்களிலும் அந்த கப்பல் நங்கூரமிடும்.

குறிப்பிட்ட சொற்பொழிவின் ஒரு வார்த்தைகூட விட்டுப் போய் விடக்கூடாது என்று விருந்தை ஏற்பாடு செய்தவர்கள் அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களின் காதுகளில் முணுமுணுத்தார்கள்.

ஆட்கள் ஒவ்வொருவராக உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் டாக்டர் பட்டாச்சார்யா நம் நாட்டின் நெற்றியில் திலகம் வைத்திருக்கிறார் என்று ஒரு சொற்பொழிவாளர் கருத்து தெரிவித்த போது, ரேபதியின் மனம் பெருமையால் நிறைந்தது. அந்த கலாச்சார உலகத்தில் தான் ஒரு மதிய நேர சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டு நிற்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவேக் கனர்ஸ் க்ளப்பைப் பற்றி தான் கேள்விப்பட்டிருந்த வதந்திகள் அனைத்தும் அடிப்படையே இல்லாதவை என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. ரேபதி பாபுவின் பெயர் நம்முடைய க்ளப்பிற்கு ஒரு மந்திரக் கயிற்றைப் போன்றது என்று ஹரிதாஸ் பாபு பேசியபோது, ரேபதியின் இதயம் பூரிப்படைந்தது. ஏற்கெனவே தன்னுடைய மனதில் நினைத்து வைத்திருந்த தவறான எண்ணங்களை அவன் ஓரத்தில் ஒதுக்கி வைத்தான். சிகரெட்டை உதட்டிலிருந்து எடுத்துவிட்டு, பெண்கள் அவனிடம் இனிமையாகப் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்கள்: "உங்களை சிரமத்திற்குள்ளாவதற்காக வருந்துகிறோம். எனினும் உங்களுடைய ஒரு ஆட்டோக்ராஃப் எங்களுக்கு வேண்டும்.''

இவ்வளவு காலமாக தான் கனவில் வாழ்ந்ததைப் போல ரேபதிக்குத் தோன்றியது. அந்த கனவுகளின் கூட்டிற்குள் இருந்து அவன் மெதுவாக ஒரு பட்டாம்பூச்சியாக வெளியே வந்து கொண்டிருந்தான்.

விருந்தினர் ஒவ்வொருவராக பிரிந்து போய்க் கொண்டிருந்தார்கள். ரேபதியின் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டே நீலா சொன்னாள்: "நீங்கள் உடனே இங்கேயிருந்து போனால் சரியாக இருக்காது.''

அவள் அவனுடைய நரம்புகளின் வழியாக போதையை உண்டாக்கும் மதுவைப் பரிமாறினாள். பகல் சாயத் தொடங்கியிருந்தது. சாயங்காலத்தின் பச்சை நிறத்தைக் கொண்ட நிழல்கள் அந்த புல் வெளியில் பரவியது.

அந்த புல்வெளியில் இருந்த பெஞ்சில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். "டாக்டர் பட்டாச்சார்யா, ஒரு ஆணான நீங்கள் ஏன் பெண்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?'' அவனுடைய கையைத் தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டு அவள் கேட்டாள்.

"பயமா? எந்தச் சமயத்திலும் இல்லை.'' ரேபதி மிகுந்த தன்னம்பிக்கையுடன் சொன்னான்.

"உங்களுக்கு என் தாயைப் பார்த்து பயமில்லையா?''

"நான் எதற்கு அவங்களுக்கு பயப்படணும்? நான் அவங்களை மதிக்கிறேன்.''

"என்னை?''

"உண்மையாக... உன்மீது எனக்கு நிறைய பயமிருக்கு!''

"அது நல்ல செய்தி. நீங்கள் என்னை எந்தச் சமயத்திலும் திருமணம் செய்ய முடியாது என்று என் தாய் சொல்றாங்க. அப்படியென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்.''

"நம்மைத் தடுக்கக்கூடிய எந்தவொன்றையும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்ன நடந்தாலும் நாம் திருமணம் செய்வோம்.''

அவனுடைய தோளில் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டே அவள் சொன்னாள்: "நான் எந்த அளவிற்கு உங்களை விரும்புகிறேன் என்று ஒருவேளை உங்களுக்குப் புரியாது.''

அவளுடைய தலையைத் தன்னுடைய மார்பின்மீது நெருக்கமாக வைத்துக் கொண்டு ரேபதி சொன்னான்: "உலகத்தில் இருக்கும் எந்தவொரு சக்தியாலும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க முடியாது.''

"ஜாதியைப் பற்றி என்ன கூறுவீர்கள்?''

"ஜாதிகள் ஒழியட்டும்!''

"அப்படியென்றால் நாளையே நீங்கள் பதிவாளரைப் பார்க்க வேண்டும்.''

"சரி... நான் நாளைக்கே செல்கிறேன்.'' ரேபதி ஆணுக்கே இருக்கக் கூடிய வீரத்தை வெளிக்காட்ட ஆரம்பித்திருந்தான்.

அதன் தொடர் செயல்கள் மிகவும் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

சோஹினியின் பாட்டிக்கு வாத நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் மரணப் படுக்கையில் இருந்தாள். தன்னுடைய இறுதி நிமிடம் வரை சோஹினி அங்கிருந்து புறப்படக்கூடாது என்று அவள் பிடிவாதம் பிடித்தாள். அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நீலா இரண்டு கைகளையும் நீட்டி வரவேற்றாள். இளமைக்கே உரிய ஆசைகள் முழுவதும் அவளிடமிருந்து அப்போதே கிளர்ந்து மேலே வர ஆரம்பித்தன.

நிறைய படித்த சுமையின் காரணமாக ரேபதியின் ஆண்தனத்திற்கு சோர்வு உண்டாகிவிட்டிருந்தது. அவன் அழகானவன் என்று நீலா நினைக்கவில்லை. ஆனால், ஒரு கணவன் என்ற வகையில் அவன் பாதுகாப்பிற்கான வழியாக இருப்பான். திருமணத்திற்குப் பிறகு அவள் மேலும் அதிகமான கட்டுப்பாடற்ற தன்மையுடன் தன்னுடைய செயல்களைத் தொடரலாம். அதை எதிர்க்கக்கூடிய சக்தி எதுவும் அவனுக்கு இல்லை. அதையும் தாண்டி, சோதனைக் கூடத்தின் சொத்துகள் அவளை அந்த அளவிற்கு வெறி கொள்ளச் செய்தது. சோதனைக் கூடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு ரேபதி அளவிற்கு பொருத்தமான ஆள் வேறு யாரும் இல்லையென்று அவளுடைய நண்பர்கள் கூறினார்கள். சோஹினி அவனை தன்னுடைய கையைவிட்டு விலகிச் செல்ல அனுமதிக்க மாட்டாள் என்று அறிவுப்பூர்வமாக சிந்திக்கக்கூடிய எல்லாரும் கருதினார்கள்.

அதே நேரத்தில் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று அவேக் கனர்ஸ் க்ளப்பின் தலைவராக தன் பெயரை அறிவிக்க அவன் பத்திரிகைகளுக்கு அனுமதி அளித்தான். "உங்களுக்கு பயமாக இருக்கிறதா?'' என்று நீலா அவனிடம் கேட்டதற்கு,"எனக்கு அது ஒரு பிரச்சினையே இல்லை'' என்று அவன் பதில் கூறினான்.

அவனுடைய ஆண்மைத்தனத்தைப் பற்றி சந்தேகத்தை வெளிப்படுத்தியவர்கள் எல்லாருடைய மனங்களில் இருந்தும் அப்படிப்பட்ட சந்தேகங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். "எட்டிங்டனும் நானும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள் நடத்தியிருக்கிறோம். ஒருநாள் நம்முடைய இடத்திற்கு நான் அவரை வரச் செய்வேன்.'' அவன் சொன்னான். க்ளப் உறுப்பினர்கள் "பிரமாதம்" என்று ஆரவாரித்தார்கள்.

ரேபதியின் முக்கிய வேலைகள் நின்று போய்விட்டிருந்தன. அவனுடைய ஆராய்ச்சியின் தொடர் ஓட்டம் தடைப்பட்டிருந்தது. நீலா வந்துவிட்டால் அவனுடைய மனதில் சலனம் உண்டாகிவிடும். அவனுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு திடீரென்று இரண்டு கைகளாலும் அவள் அவனுடைய கண்களை மூடுவாள். அவனுடைய நாற்காலியின் கைப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையால் அவள் அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பிடிப்பாள். அதனால் தன்னுடைய ஆராய்ச்சிக்கு உண்டாகக் கூடிய தடை தற்காலிகமானது என்றும், சற்றுக் கட்டுப்பாட்டை மீண்டும் கையில் எடுத்து விட்டால் பிரிந்த முனைகள் திரும்பவும் சேர ஆரம்பித்துவிடும் என்றும் அவன் நம்பினான். ஆனால், அவனுடைய அறிவு சாதாரண நிலைக்குத் திரும்பி வருவதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாமலிருந்தன.


அவனுடைய வேலைக்கு வந்து கொண்டிருந்த பிரச்சினைகள் இந்த உலகத்தை எந்தவொரு வகையிலும் பாதிக்கும் என்று நீலா நினைத்ததே இல்லை. அவை அனைத்தும் பெரிய ஒரு தமாஷான விஷயம் என்று மட்டுமே அவளுக்குத் தோன்றியது.

ஒவ்வொரு நாளும் அந்த நூல் மாலை ரேபதியை மேலும் மேலும் இறுகக் கட்டிக் கொண்டிருந்தது. அவனை ஒரு முழுமையான ஆணாக மாற்றுவதற்கு முடிவெடுத்து, அவேக்னர்ஸ் க்ளப் அவன் மீது வைத்திருந்த தங்களுடைய பிடியை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் பேசிக் கொண்டிருந்த புராதன மொழியை அவனால் இப்போதுகூட கூற முடியவில்லை. ஆனால், மிகவும் மோசமாக இருந்த அந்த மொழியைக் கேட்டபோது, அதை ரசித்து சிரிப்பதற்கு அவன் மிகவும் முயற்சி செய்து பார்த்தான். க்ளப்பைப் பொறுத்த வரையில் டாக்டர் பட்டாச்சார்யா ஒரு வினோதமான மனிதனாகவும், தமாஷான ஆளாகவும் ஆகிவிட்டிருந்தான்.

ரேபதி பல நேரங்களிலும் பொறாமைப்படக்கூடிய ஆளாக ஆனான். வங்கி இயக்குனர் புகைத்துக் கொண்டிருந்த சுருட்டிலிருந்து நீலா பல வேளைகளில் தன்னுடைய சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். ரேபதிக்கு எந்தச் சமயத்திலும் அதை உட்கொள்ள முடியவில்லை. சிகரெட் புகை உள்ளே போனபோது அவனுடைய தலை சுற்றியது. நீலா அப்படிச் செய்வதைப் பார்த்தபோது அவனுக்கு மேலும் மேலும் என்னவோ போல இருந்தது. அது மட்டுமில்லாமல், ஒருவரையொருவர் பிடிப்பதும் இழுப்பதும் கட்டியணைத்துக் கொள்வதும்.... அவனால் அவற்றைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. எனினும், வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்க மட்டுமே அவனுக்கு முடிந்தது. நீலா கூறுவாள்: "அது என்னுடைய உடல் மட்டும்தானே! அது எந்தச் சமயத்திலும் நம்முடைய உறவின் பகுதி அல்ல. உள்ளே இருக்கும் காதல்தானே உண்மையான காதல்? அதை அப்படி வெளியே காட்ட முடியாது.'' அவள் ரேபதியின் கைகளை அழுத்திப் பிடிப்பாள். மற்ற ஆண்கள் அனைவரும் அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்று அப்போது அவனுக்குத் தோன்றும். வெளியே இருக்கும் ஓட்டை மட்டும்தான் அவர்கள் பார்த்தார்கள். உள்ளே இருக்கும் முழுமையான விதையை அவர்கள் பார்க்கவில்லை. சோதனைக் கூடத்தின் வாசலுக்கு முன்னால் இருபத்து நான்கு மணி நேரமும் சீக்கியர்கள் காவல் நின்றார்கள். உள்ளே வேலை முழுமையடையாமல் கிடந்தது. அதற்குள் யாரும் இல்லை.

13

ரவேற்பறையின் ஸோஃபாவில் கால்களை வைத்துக் கொண்டு குஷனில் சாய்ந்து படுத்தவாறு நீலா ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். நீலாவின் கால் பகுதியில் சிறு சிறு எழுத்துகளில் எழுதப்பட்ட ஒரு கட்டுத் தாள்களுடன் ரேபதி உட்கார்ந்திருந்தான்.

"பயங்கரமான மொழி.'' தலையைக் குலுக்கிக் கொண்டே ரேபதி சொன்னான்: "இதை வாசித்தபோது நான் திகைத்துப் போய் விட்டேன்.''

"உத்தியைப் பற்றிக் கூற நீங்கள் என்ன மிகப் பெரிய உத்தி வல்லுனரா? இது உங்களுடைய ரசாயன ஃபார்முலா இல்லை. வெறுமனே ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டிருக்காமல் அதை மனப்பாடமாக ஆக்கப் பாருங்கள். இதை யார் எழுதியது என்று உங்களுக்குத் தெரியுமா? புகழ்பெற்ற இலக்கியவாதி ப்ரமரஞ்சன் பாபு.''

"நீளமான வார்த்தைகளும், அசாதாரணமான பொருட்களும்...? என்னால் இதை எந்தக் காலத்திலும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது.''

"அதில் என்ன கஷ்டம் இருக்கிறது? உங்களுக்கு இதை பல முறை உரத்த குரலில் வாசித்து வாசித்து எனக்கு அவை அனைத்தும் மனப் பாடமாகி விட்டது. என்னுடைய மிகப்பெரிய மதிப்புமிக்க வாழ்க்கையின் நிமிடங்களில் ஒன்று என்று கூறுகிற விதத்தில் அவேக்னர்ஸ் க்ளப் எனக்கு இந்தப் பெருமை தரும் நிகழ்ச்சி மூலம் அளிக்கிறது. அழகான புல்வெளியில் மலர்களால் உண்டாக்கப்பட்ட மேடையில் உங்களுக்கு அருகில் நான் இருப்பேன். நான் இதை தெளிவாக உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்.''

"எனக்கு வங்காள இலக்கியத்துடன் அந்த அளவிற்கு உறவு எதுவும் இல்லை. ஆனால், இவை எதுவும் என்னை கிண்டல் பண்ணும் அளவிற்கு இருக்கக்கூடிய தமாஷான விஷயம் அல்ல என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எளிமையான ஆங்கிலத்தில் இதை ஏன் கூறக்கூடாது? டியர் ஃப்ரண்ட்ஸ், அலௌ மீ டூ ஆஃபர் யூ மை ஹார்ட்டியஸ்ட் தேங்க்ஸ் ஃபார் தி ஆனர் யூ ஹேவ் கன்ஃபெர்ட் அப்பான் மி அன் பிஹாஃப் ஆஃப் தி அவேக்னர்ஸ் க்ளப்- தி க்ரேட்டஸ்ட் அவேக்னர்ஸ் க்ளப்... என்றெல்லாம் ஒன்றோ இரண்டோ வார்த்தைகள். அவ்வளவு போதும்.''

"எந்தக் காலத்திலும் இல்லை. நீங்கள் வங்காள மொழியில் பேசுவதைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. உதாரணத்திற்கு "கடந்த கால உறவுகளின் அறுந்த சங்கிலித் துண்டுகள் சிதறிக் கிடக்கும் பாதையின் வழியாக சுதந்திரத்தின் ரதத்தை இழுத்துச் செல்லும் வங்காளத்தின் இளம் தலைமுறையே!" என்ற பகுதியை அழகு சிறிதும் குறையாமல் ஆங்கிலத்தில் கொண்டு வர உங்களால் முடியுமா? உங்களைப் போன்ற ஒரு இளம் விஞ்ஞானியின் உதடுகளிலிருந்து இந்த வார்த்தைகள் உதிரும்போது இளைஞர்கள் அனைவரும் தலையை உயர்த்திப் பாம்புகளைப் போல நடனம் ஆட ஆரம்பிப்பார்கள். இதோ... இன்னும் நேரம் நிறைய இருக்கிறது. அதைப் படிப்பதற்கு நான் உங்களுக்கு உதவுவேன்.''

தடித்த, நல்ல உயரத்தைக் கொண்ட, ஆங்கிலேயரைப் போல ஆடை அணிந்த வங்கியின் மேனேஜர் ப்ரஜேந்திர ஹால்தார் படிகளில் அழுத்தி மிதித்தவாறு அங்கே வந்தார். "இது சகித்துக் கொள்ள முடியாத ஒன்றுதான்.'' அவர் சொன்னார்: "நான் வரும் போதெல்லாம் நீங்கள் நீலாவின் பிடியில் இருப்பீர்கள். இவளை எங்களிடமிருந்து விலகி இருக்கும்படி செய்யும் ஒரு முள்வேலியாக நிற்பதுதான் உங்களுடைய விதி.''

ரேபதி கெஞ்சுகிற குரலில் சொன்னான்: "ஒரு முக்கிய வேலையுடன் தொடர்பு கொண்டுதான் நான் இங்கு...''

"உண்மையாகவே உங்களுக்கு வேலை இருக்கும். இன்று நீங்கள் க்ளப் உறுப்பினர்களை அழைத்திருக்கும் விஷயம் தெரியும். அதனால் தான் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் அரை மணிநேரம் இங்கே செலவிடலாம் என்று நினைத்து நான் இந்தப் பக்கமாக வந்தேன். நீங்கள் வேறு ஏதாவது முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பீர்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், நான் இங்கு என்ன கண்டேன்? நீங்கள் இங்கே இறுகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். அருமை! வேறு வேலை எதுவும் இல்லையென்றால், நீங்கள் இங்கே ஓய்வெடுக்கிறீர்கள். ஏதாவது வேலை இருந்தால், அப்போதும் உங்களை இங்கே பார்க்கலாம். வேலை செய்யும் இளைஞர்களால் எப்படி இப்படி பெண்களின் அடிமைகளாக இருக்க முடிகிறது? நீலா, இது நியாயமா?''


"மிகுந்த தன்னம்பிக்கையுடன் உண்மையை வெளியே கொண்டு வர முடியவில்லை என்பதுதான் டாக்டர் பட்டாச்சார்யாவின் பிரச்சினையே.'' நீலா சொன்னாள்: "இவர் ஏதாவது வேலையின் காரணமாக இங்கே வரவில்லை. சுத்த முட்டாள்தனம். இவரால் என்னை விட்டு இருக்க முடியவில்லை. அதனால்தான் இவர் இங்கே வந்திருக்கிறார். அதுதான் உண்மை. கேட்பதற்கு சுவாரசியமான உண்மை. என்மீது கொண்டிருக்கும் முழுமையான மோகத்தின் காரணமாக இவர் என்னுடைய நேரம் முழுவதையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். அங்குதான் இவருடைய ஆண்மைத்தனம் இருக்கிறது. இவருடைய அசாதாரணமான கிராமத்து பழக்கவழக்கங்களுக்கு முன்னால் நீங்கள் எல்லாரும் தோற்றுப் போகிறீர்கள்.''

"அப்படியென்றால் சரி... நாங்கள் எங்களுடைய சக்தி முழுவதையும் வெளிப்படுத்துகிறோம். இன்று முதல் அவேக்னர்ஸ் க்ளப்பின் உறுப்பினர்கள் பெண்களை பலத்தைப் பயன்படுத்தி அடிமையாக்குவதைப் பழகப் போகிறார்கள். புராணகாலத்தை நாங்கள் திரும்பவும் கொண்டு வருவோம்.''

"இது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.'' நீலா சொன்னாள்: "ஆக்கிரமிப்பு" என்ற வார்த்தை "அடிபணிதல்" என்ற வார்த்தையைவிட மிகவும் இனிமையாக இருக்கிறது. ஆனால், நீங்கள் அதை எப்படி செயல்படுத்துவீர்கள்?''

"இல்லை... அதை நான் நேரில் காட்ட வேண்டும் என்றா நீ கூறுகிறாய்?'' ஹால்தார் கேட்டார்.

"இப்போதே?''

"இதோ... இப்போதே காட்டுகிறேன்.''

அவர் அவளைக் கைகளில் வாரி எடுத்தார். கிளுகிளுப்பு அடைந்து குலுங்கிச் சிரித்த நீலா அவருடைய உடலுடன் ஒட்டிக் கொண்டாள்.

ரேபதியின் முகம் கோபத்தால் கறுத்தது. ஆனால், அந்தச் செயலைத் தடுப்பதற்கோ ஏற்றுக் கொள்வதற்கோ உள்ள ஆற்றல் அவனுக்கு இல்லாமலிருந்தது. அவனுக்கு ஹால்தாரின்மீது இருப்பதைவிட நீலாவின் மீதுதான் அதிகமான கோபம் உண்டானது. அவள் எதற்காக இப்படிப்பட்ட காதல் சேட்டைகளை உற்சாகப்படுத்துகிறாள்?

"கார் ரெடி...'' ஹல்தார் சொன்னார்: "நான் உன்னை டயமண்ட் ஹார்பருக்கு அழைத்துக் கொண்டு செல்கிறேன். டின்னர் பார்ட்டிக்கு முன்னால் உன்னை திரும்பவும் கொண்டு வந்து விடுவேன். எனக்கு வங்கியில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அது அங்கே இருக்கட்டும். பாவம்... டாக்டர் பட்டாச்சார்யா எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வேலையைச் செய்யட்டும். உன்னைப்போல வேலைக்குத் தடையாக இருப்பவர்களை அகற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் சரியான விஷயம். அவர் இதற்காக என்னிடம் நன்றியுள்ளவராக இருப்பார்.''

அவருடைய கையிலிருந்து விலகி வர நீலா முயற்சிக்கவில்லை என்ற விஷயத்தை ரேபதி கவனித்தான். காதல் வயப்பட்டு இறுகப் பிடித்துக் கொண்டு அவள் அவருடைய நெஞ்சில் சாய்ந்து கிடந்தாள். "பயப்பட வேண்டாம் விஞ்ஞானி சார்...'' வெளியேறுவதற்கு மத்தியில் அவள் உரத்த குரலில் சொன்னாள்: "ஆக்கிரமிப்பு பற்றிய ஒரு ரிகர்சல் மட்டுமே இது. நான் இலங்கைக்கு எதுவும் போகவில்லை. டின்னருக்கான நேரம் ஆகும்போது திரும்பி வருவேன்.''

அவன் தன் கையில் வைத்திருந்த தாள்களைத் துண்டுத் துண்டாகக் கிழித்தான். ஹால்தாரின் உடல் பலமும், காரியங்களை அடையக்கூடிய முறையும் ரேபதியின் பண்டிதத் திறமையை முற்றிலும் சர்வ சாதாரணமான பொருளாக மாற்றிவிட்டிருந்தன.

மிகவும் புகழ் பெற்ற ஒரு ரெஸ்ட்டாரண்டில்தான் அன்று சாயங்கால டின்னருக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். ரேபதி பட்டாச்சார்யாதான் அன்று முக்கிய விருந்தாளி. அவனுக்கு மிகவும் அருகில் நீலா உட்கார்ந்திருந்தாள். பெயர் பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரம் பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். டோஸ்ட் கூறுவதற்காக பங்கு பிஹாரி எழுந்து நின்றார். ரேபதியைப் பற்றிய புகழ் மாலைகளுடன் சேர்த்து நீலாவின் புகழையும் அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வெறும் சாதாரண பெண்களல்ல என்பதைக் காட்டுவதற்காக, யாருடனோ கொண்ட கோபத்தைத் தீர்ப்பதைப்போல அங்கு குழுமியிருந்த பெண்கள் சிகரெட்டை இழுத்துப் புகைத்துக் கொண்டிருந்தனர். தாராளமாக இருப்பதைப் போன்ற முகமூடியை அணிந்து கொண்டு, நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்கள் இளம் வயது பையன்களை அந்தப் பந்தயத்தில் தோற்கடித்தே ஆவது என்பதைப் போல ஆடிக் குழைந்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய நிலையிலிருந்து தவறி, கைகயையும் விரலையும் காட்டி அவர்கள் உரத்த குரலில் உரையாடிக் கொண்டும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டும் இருந்தார்கள்.

திடீரென்று சோஹினி அந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு குழுமியிருந்தவர்களுக்கு மத்தியில் பேரமைதி நிலவியது. "எனக்கு இவரைத் தெரியவில்லை. டாக்டர் பட்டாச்சார்யாதானே இது?'' சோஹினி ரேபதியிடம் கேட்டாள்: "ஏதோ தேவைக்காக பணம் வேண்டும் என்று கூறி எனக்குக் கடிதம் எழுதியிருந்தாய் அல்லவா? அதற்கு பதிலாக கடந்த வெள்ளிக்கிழமை நான் உனக்குப் பணம் அனுப்பினேன். உனக்குப் பணம் சம்பந்தமாக எந்தவொரு குறைவும் இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ உடனடியாக என்னுடன் வரவேண்டும். சோதனைக் கூடத்திலிருக்கும் ஒவ்வொரு பொருளின் ஸ்டாக்கையும் இப்போதே எடுக்க வேண்டும்.''

"நீங்கள் என்மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறீர்களா?''

"இதுவரை நான் உன்னை நம்பாமல் இருந்ததில்லை. ஆனால், உனக்கு வெட்கம் என்ற ஒன்று இருந்தால் "நம்பிக்கை" என்ற சொல்லை இனி எந்தச் சமயத்திலும் பயன்படுத்தாதே!''

ரேபதி எழுந்திருக்க முயற்சித்தான். நீலா அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்து கீழே உட்கார வைத்தாள். "நண்பர்களிடம் வரச்சொல்லி, அவர்கள் வந்திருக்கிறார்கள்.'' அவள் சொன்னாள்: "முதலில் அவர்கள் போகட்டும். அதற்குப் பிறகு மட்டுமே நீங்கள் போனால் போதும்.''

அவள் சொன்ன வார்த்தைகளில் கூர்மையான முள் இருந்தது. சர் ஐஸக் அவளுடைய அன்னையின் விருப்பத்திற்குரிய மனிதனாக இருந்தான். இதைவிட அதிகமாக ஒரு நபரை அவள் நம்பியதே இல்லை. அதனால்தான் சோதனைக் கூடத்தின் பொறுப்பை ஒப்படைப்பதற்கு வேறு யாரையும் விட ரேபதிதான் சிறந்தவன் என்று அவள் தீர்மானித்தாள். அந்த காயத்திற்கு எரிச்சல் உண்டாக்குவதைப் போல நீலா தன்னுடைய நெருப்பு வார்த்தைகளைத் தொடர்ந்தாள்: "அம்மா, இன்று இரவு இங்கு எத்தனை ஆட்களை நாங்கள் அழைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? அறுபத்தைந்து பேர்களை. எல்லாரும் இங்கு இருக்க முடியாததால் பாதி பேர் அடுத்த அறையில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்கிறீர்கள் அல்லவா? குடித்தாலும் குடிக்கவில்லையென்றாலும் இருபத்தைந்து ரூபாய். காலி டம்ளர்கள் எஞ்சி இருக்கும்போது நிறைய பணம் வேண்டும். அந்தப் பணத்திற்கான கணக்கைக் கேட்டால் எல்லாரின் முகமும் வெளிறிப் போய்விடும்.''

அந்த நாகரீக மனிதனின் தாராள குணத்தைப் பார்த்ததும், வங்கி இயக்குனரின் கண்கள் பிரகாசமாயின. அவர் சொன்னார்: "அந்த திரைப்பட நடிகைக்கு அவர் எவ்வளவு பணம் தந்தார் என்று தெரியுமா? இந்த ஒரே ஒரு இரவுக்கு நானூறு ரூபாய்.''

உயிருடன் முதுகு ஒடிந்த ஒரு விரால் மீனைப்போல ரேபதியின் இதயம் துடித்தது. அவனுடைய வாய் வறண்டது. அவனால் எதையும் பேச முடியவில்லை.

"இன்றைய கொண்டாட்டத்திற்கான நோக்கம் என்ன?'' சோஹினி கேட்டாள்.

"ம்... அது உங்களுக்கு தெரியாதா? அசோசியேட்டட் ப்ரஸ்ஸில் அந்த செய்தி வந்திருக்கிறது. இவர் இப்போது அவேக்னர்ஸ் க்ளப்பின் தலைவர். வாழ்நாள் உறுப்பினராக இருப்பதற்காக இவர் தன் வசதிக்கேற்ப நானூறு ரூபாய் தருவார்.''

"அது நீண்ட காலம் நீடித்து நிற்காது.''

ரேபதியின் இதயத்திற்குள் ஒரு நீராவி இயந்திரம் தரையைக் குலுக்கிக் கொண்டு வேகமாகச் சென்றது.

"அப்படியென்றால் உன்னால் எழுந்திருக்க முடியவில்லை. அப்படித்தானே?'' சோஹினி கேட்டாள்.

ரேபதி நீலாவைப் பார்த்தான். அவளுடைய வளைந்த புருவங்கள் அவனுடைய தன்மானத்தைத் தொட்டு எழுப்பின. "இங்கு இவ்வளவு அதிகம் ஆட்கள் இருக்கும்போது, நான் எப்படி...'' அவன் திக்கித் திக்கி சொன்னான்.

"சரி... நான் இங்கேயே காத்திருக்கிறேன்.'' சோஹினி சொன்னாள்.

"அது நடக்காத விஷயம், அம்மா.'' நீலா சொன்னாள்: "நாங்கள் சில ரகசியங்களைப் பற்றி விவாதிக்க வேண்டியதிருக்கிறது. அந்தச் சமயத்தில் நீங்கள் இங்கே இருக்கக்கூடாது.''

"நீலா, விளையாட்டுகள் விஷயத்தில் நீ ஒரு ஆரம்பக்காரி மட்டுமே. அதில் உன்னால் என்னைத் தோற்கடிக்க முடியாது. நீங்கள் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறீர்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியாது என்றா நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த ஒரே காரணத்திற்காக இன்று இரவு முழுவதும் நான் இங்கேயே இருப்பேன்.''

"நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்? உங்களிடம் யார் இவற்றையெல்லாம் சொன்னது?''

"புதிய புதிய பொய்களைக் கண்டுபிடிப்பது, பொந்தில் இருக்கும் பாம்பைப் பிடிப்பதைப் போன்றது. உனக்கு அங்கு மூன்று வக்கீல்கள் இருக்கிறார்கள். சோதனைக் கூடத்தின் பெயரைச் சொல்லி ஏதாவது பணத்தை ஏமாற்றி எடுக்க முடியுமா என்று அவர்கள் எல்லாரும் எப்படி எப்படியோ முயற்சித்துப் பார்த்தார்கள். அப்படித்தானே நடந்தது நீலு?''

"அது உண்மைதான். ஒரு தந்தை எவ்வளவோ பணத்தையும் சொத்தையும் மீதி வைத்து விட்டுப் போகிறார். அவருடைய மகளுக்கு அதில் எந்தவொரு பங்கும் இல்லை. இது முற்றிலும் எங்கும் நடக்காத  ஒரு விஷயம் அல்லவா? அதனால்தான் இந்த விஷயத்தில் எல்லாரும் சந்தேகப்படுகிறார்கள்.''

சோஹினி எழுந்து நின்றாள். "சந்தேகப்படுவதற்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.'' அவள் சொன்னாள்: "உன் தந்தை யார்? யாருடைய சொத்தில் நீ உரிமை கேட்கிறாய்? அப்படிப்பட்ட ஒரு மனிதரின் மகள் என்று கூறுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா?''

நீலா வேகமாக எழுந்தாள்: "அம்மா, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

"உண்மையைச் சொல்கிறேன். வேறு என்ன? அவரிடம் ரகசியம் எதுவும் இல்லை. அவருக்கு அனைத்தும் தெரியும். என்னிடமிருந்து அவர் எதிர்பார்த்தவை அனைத்தும் அவருக்கு கிடைத்தன. எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அது கிடைக்கும். வேறு எதுவும் அவருக்குத் தேவையில்லை.''

வழக்கறிஞர் கோஷ் இடையில் புகுந்து கேட்டார்: "உங்களுடைய இந்த வெறும் வார்த்தைகள் எதுவும் அதற்கான சான்றாக இருக்காது.''

"அதைப் பற்றி அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதனால் அவர் அதை ஒரு ஆதாரமாக ஆக்கி பதிவு செய்தார்.''

"பங்கு! நேரமாகிறது. இனி ஏன் நாம் இங்கு காவல் காத்துக் கொண்டு இருக்க வேண்டும்? நாம் புறப்படுவோம்!''

பெஷாவரில் இருந்து வந்திருந்த அந்த காவலாளியின் மரியாதைக்குறைவான வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்த அறுபத்தைந்து பேருக்கும் வெளியே செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கை உண்டானது.

அந்தச் சமயத்தில் ஒரு சூட்கேஸுடன் சவுதரி அங்கு வந்தார். "உங்களுடைய தந்தி கிடைத்ததும், நான் வேக வேகமாகப் புறப்பட்டேன். ரேபி பேபி, என்ன இது? உன் முகம் என்ன எண்ணெய் தேய்த்த தாளைப்போல இருக்கிறதே? குழந்தை, உன்னுடைய பால்புட்டி எங்கே?''

"இதோ... அதைக் கொடுக்கும் ஆள் இங்கே இருக்கிறாள்.'' நீலாவைச் சுட்டிக் காட்டியவாறு சோஹினி சொன்னாள்.

"ஹோ... என் தங்கமே! அப்படியென்றால், நீதானா பால்காரி?''

"அவள் ஒரு பால்காரனைத் தேடிக் கொண்டிருக்கிறாள். பாருங்க... அதுதான் அவளுடைய சுரங்கம்.''

"எது எப்படி இருந்தாலும், அது நம்முடைய ரேபியாக இருக்காது. அது மட்டும் உறுதி.''

"இந்த முறை என் மகள் என்னுடைய சோதனைக் கூடத்தைக் காப்பாற்றி விட்டாள். ஆனால், இந்த ஆளை முழுமையாகப் புரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. நான் இந்த சோதனைக் கூடத்தை ஒரு தொழுவமாக ஆக்கிவிட்டிருக்கிறேன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். மேலும் சற்று இப்படி முன்னோக்கிப் போயிருந்தால், இந்த சோதனைக் கூடம் ஒரு சாணக்குழியாகவும் ஆகிவிட்டிருக்கும்.''

"எது எப்படியோ, இந்த எதுவுமே தெரியாத பையனைக் கண்டு பிடித்தது நீங்கள்தான். அதனால் இந்த அப்பிராணியின் பொறுப்பை நீங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'' பேராசிரியர் சொன்னார்: "அறிவைத் தவிர வேறு எல்லா விஷயங்களிலும் இவன் கொடுத்து வைத்தவன்தான். ஆனால், நீங்கள் உடனிருந்தால், யாராலும் அதன் குறைபாட்டை புரிந்து கொள்ள முடியாது. முட்டாள்களான ஆண்களை மூக்கைக் கொண்டு தரையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளைப் படிக்க வைப்பது என்பது எவ்வளவு எளிதான விஷயம்!''

"சர் ஐஸக் நியூட்டன், நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?'' நீலா கேட்டாள்: "திருமண பதிவாளருக்கு நீங்கள் கடிதம் கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா? அதைத் திரும்ப வாங்க வேண்டும் என்று உங்களுக்கு இப்போது தோன்றுகிறதா?''

"எந்தக் காலத்திலும் இல்லை.'' மார்பின்மீது ஊதிக்கொண்டே அவன் சொன்னான்.

"அப்படியென்றால் அந்த திருமணம் வெறும் சந்தர்ப்பத்திற்காக என்று இருக்காது.''

"இல்லை... அது நடக்கும்... நடக்கும்.''

"ஆனால், சோதனைக் கூடத்திலிருந்து மிகவும் தூரத்திலிருக்கும் ஒரு இடத்தில்...'' சோஹினி சொன்னாள்.

"மை டியர் நீலு...'' பேராசிரியர் சொன்னார்: "இவன் ஒரு படு முட்டாள். அதற்காக எதற்கும் லாயக்கில்லாதவன் என்றில்லை. அந்த பாதி உறக்கத்திலிருந்து இவன் வெளியே வர்றப்போ, இவனுடன் இருப்பது சிரமமான ஒரு விஷயமாக இருக்காது.''

"சர் ஐஸக்... நீங்கள் மேலும் ஒரு நல்ல தையல்காரனைத் தேடுவது நல்லது. இல்லாவிட்டால், உங்களுடைய கண்களுக்கு முன்பே, நான் என்னுடைய முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.''

திடீரென்று அந்தச் சுவரில் ஒரு நிழல் தோன்றியது. ரேபதி பட்டாச்சார்யாவின் அத்தை அவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.

"ரேபி, என்னுடன் வா.'' அவள் கட்டளையிட்டாள்.

மிகவும் தளர்ந்து போன ஒரு மனிதனைப்போல அவன் மெதுவாக... மிகவும் மெதுவாக தன் அத்தையின் பின்னால் நடந்தான். ஒருமுறைகூட அவன் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.