Logo

மரணத்தின் சிறகுகள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6557
maranaththin-siragugal

     சுராவின் முன்னுரை

பிரபல மலையாளப் பத்திரிகையாளர் சி.என். கிருஷ்ணன்குட்டி (C.N. Krishnan Kutty) எழுதிய ‘ம்ருத்யோர்மா ஜ்யோதிர்கமய’ என்ற புதினத்தை ‘மரணத்தின் சிறகுகள்’ (Maranathin Siragugal) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

கயிறுமீது நடப்பதைப் போன்ற ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு, மிகவும் கவனமாக நாவலை எழுதியிருக்கும் கிருஷ்ணன்குட்டியைப் பாராட்டுகிறேன்.

மரணத்தை ‘காகம்’ வடிவில் கற்பனை பண்ணியிருக்கும் அவரின் புதிய நோக்கு எனக்குப் பிடித்திருந்தது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பார்கள். இந்தக் கதையின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம்கூட அதுதான். ஆசிரியராகப் பணியாற்றும் மகாதேவன், தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளைத் தொடர்ந்து, இறுதியாக நிகழும் சம்பவம் வரை யதார்த்தம் பொதிந்தவைதான்.

மகாதேவனைப் போன்ற மனிதர்களை நாம் நித்தமும் வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்! வாழ்க்கையில் இந்த கதாபாத்திரத்தைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தங்களை இதில் வரும் மகாதேவன் கதாபாத்திரத்தில் கண்ணாடியில் பார்ப்பதைப் போல பார்க்கலாம். இந்தப் புதினத்தைப் படிக்கும்போது, ஒரு வகையான குற்ற உணர்வுகூட அப்படிப்பட்டவர்களுக்கு மனதின் ஒரு மூலையில் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த புதினம் எழுதப்பட்டதன் நோக்கமும் அதுவாகத்தானே இருக்க வேண்டும்?

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


மொட்டை மாடியின் மீது சாய்ந்து நின்று கொண்டிருக்கும் வயதான மாமரம்.

அந்த மாமரம் ஒரு கொடை என்றுதான் கூறவேண்டும்.

சுட்டெரித்துக் கொண்டிருக்கும் வெயில் வேளையில்கூட மொட்டை  மாடியில் குளிர்ச்சியான காற்றும் நிழலும் இருக்கும். சாயங்கால நேரம்  வந்துவிட்டால், மாமரத்தின் பூக்களின் வாசனை கலந்த குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்துவிடும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், மொட்டை மாடியில் நடக்கவோ அமர்ந்திருக்கவோ தரையில் படுத்திருக்கவோ செய்யலாம்.

அதனால் மகா தேவன் மொட்டை மாடியைச் சுத்தமாக வைத்திருக்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் உடையவராக இருப்பார்.

மொட்டை மாடியில் இருக்கும் இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில்தான் மகாதேவன் வசிக்கிறார். ஒரு சிறிய குடும்பம் மிகவும் அழகாக வசிக்கக்கூடிய அளவிற்கு அந்த இடம் வசதியாக இருந்தது. அங்கு மகாதேவன் தனியாக வசிக்க ஆரம்பித்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன.

தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணையா என்ற பலசரக்கு வியாபாரிதான் அந்தக் கட்டடத்தின் உரிமையாளர். அவருடைய பெரிய குடும்பம் கீழே வசித்துக் கொண்டிருந்தது. மொட்டை மாடிக்குச் செல்லும் வழி பின்னால் இருந்ததால், மகாதேவனுக்கு கீழே இருக்கும் தளத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

மாதத்திற்கு ஒருமுறை வாடகையைக் கொடுப்பதற்காக அவர் கண்ணையாவைப் பார்ப்பார்.

கறுத்து தடித்த உதடுகளுக்கு மத்தியில் வெண்மையான பற்கள்  தெரியும்.

"சவுக்கியமா இருக்கீங்களா சார்?''

ஒரே கேள்வி.

"நல்ல சவுக்கியம்...'' ஒரே பதில். அவ்வளவுதான்.

மகாதேவன் தனியாக இருக்கும் ஆண் என்பதைத் தெரிந்துதான் மொட்டை மாடியில் இருக்கும் வீட்டை அவர் வாடகைக்குக் கொடுத்தார்.

நகரத்திலிருந்த ஒரு ஆங்கில மீடியம் பள்ளிக்கூடத்தில் மகாதேவன் வரலாறு ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருந்த இளம் வயதுப் பயணம் அந்த ஆங்கில மீடியம் பள்ளிக்கூடத்தில் போய் நின்றது. வாழ்வதற்கான வழி கிடைத்த காரணத்தால் அவர் வேறெங்கும் போகவில்லை. அங்கேயே இருந்துவிட்டார்.

மகாதேவன் வேலையில் சேரும்போது அந்தப் பள்ளிக்கூடம் அந்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பிறகு... அது வளர்ந்தது. இன்று நகரத்திலேயே நல்ல பெயரைப் பெற்றிருக்கும் மிகக் குறைவான பள்ளிக்கூடங்களில் முதலில் அது நின்று கொண்டிருக்கிறது.

ஆசிரியர் என்ற நிலையில் மகாதேவன் ஒரு மதிக்கப்படும் நிலையில் இருந்தார். தமிழர்களுக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கென்று ஒரு தனியான மரியாதை இருந்தது.

மகாதேவன் முற்றிலும் மாறுபட்ட குணங்களைக் கொண்டவராக இருந்தார். அவர் அதிகமாக யாருடனும் பேசுவதில்லை. ஓய்வு நேரங்களை மகாதேவன் வாசிப்பதிலும் திரைப்படங்களுக்குச் செல்வதிலும் செலவிடுவார். மகாதேவனை எல்லாருக்கும் பிடிக்கும். குறிப்பாக இளம் பெண்களுக்கு...

பள்ளிக்கூட சீருடைக்குள் திணறிக் கொண்டிருக்கும் இளமை மகாதேவனைப் பார்த்ததும் மூச்சு விடவே சிரமப்படும்.

ஆசிரியரான கிஷோர் கூறிய விஷயம் இது.

பதில் கூறவில்லை.... காரணம், அதுதான் உண்மை.

அந்தக் காலமெல்லாம் தாண்டிப் போய்விட்டது. அவர் நெற்றியில் கைவைத்து அமைதியாக ஆசீர்வதித்த எவ்வளவோ பேர் இன்று மிகவும் உயர்ந்த பதவிகளில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் சாதாரணமானதல்ல.

படிப்பு முடிந்து வெளியே செல்லும் எந்தவொரு மாணவனும் மகாதேவனை நினைத்துப் பார்க்காமல் இருக்க மாட்டான்.

தான் எங்காவது தவறு செய்து விட்டோமா?

எவ்வளவோ இடங்களில் பல முறை அப்படி நடந்திருக்கின்றன.

தவறு என்று கூற முடியுமா? முடியாது- வயதின் செயல். அப்படி இல்லாமல் வேறென்ன? ஆசிரியர் உதாரண புருஷனாக எல்லா விஷயங்களிலும் எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், எங்கெல்லாமோ அந்த விரதம் மீறப்பட்டது.

எலும்பும் சதையும் உணர்ச்சிகளும் கற்பனைகளும் கொண்ட ஒரு உண்மையான மனிதனால் எப்படி இயற்கையின் அழைப்பிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ள முடியும்?

சீருடை அணிந்த கன்னியாஸ்திரியிலிருந்து பருவ வயதிற்குள் காலடி எடுத்து வைக்கும் மாணவிகள் வரை அது நீள்கிறது.

யார் யாரையோ சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் கடினமாக முயற்சித்தார்.

கீழே விழவில்லை. ஆச்சரியப்படும் வகையில் தப்பித்துக் கொண்டார்.

ஆசிரியையாகப் பணியாற்றிய ருக்மிணி என்ற- தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அழகான பெண்மீது சற்று சாய்வதைப்போல இருந்தது. ஆனால், தப்பித்துக் கொண்டார்.

இன்று ருக்மிணி இல்லத்தரசியாகவும் ஆசிரியையாகவும் இருந்து கொண்டிருக்கிறாள்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தாய். மூத்த பையனுக்கு மகேஷ் என்று பெயரிட்டிருக்கிறாள்.

மகாதேவனின் ஞாபகமாகத்தான் அந்தப் பெயரை தான் வைத்ததாக ருக்மிணி கூறினாள்.

ஒருநாள் ருக்மிணி கூறியதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.

"ஆண்மை என்றால் என்ன என்பதை உணர்த்திய உங்களை நான் எப்படி மறப்பேன்? எந்தவொரு பெண்ணும்- உங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் எந்தச் சமயத்திலும் உங்களை மறக்க மாட்டார்கள். அது ஒரு நற்சான்றிதழோ?"

ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை பள்ளிக்கூடத்தில் தத்து எடுப்பது என்பது மகாதேவனின் ஒரு நிரந்தர கடமையாக இருந்தது. ப்ளஸ் டூ படிப்பதற்கான முழுச் செலவையும் அவரே ஏற்றுக்கொள்வார். வருமானம் சரியாக இல்லாத, படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் பிள்ளைகளைத்தான் அவர் தத்தெடுப்பார்.

எதிர்பாராத வகையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகளாக இருந்தார்கள்.

உயர்ந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெறக்கூடிய அவர்கள் அவருக்கு முன்னால் தங்களுடைய கன்னித் தன்மையைப் பணயம் வைக்க தயாராக வந்து நின்றிருக்கிறார்கள்.

ஒரு மென்மையான புன்சிரிப்புடன் அவர் அவர்களை மடக்கிப் போட்டுவிடுவார்.

பலரும் அழுதுகொண்டே விடை பெற்றுச் செல்வார்கள்.

ஒரு முத்தமாவது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் வந்தவர்கள் எவ்வளவு பேர்?

"செய்யக்கூடாது" என்று மனதிற்குள் யாரோ தடுத்ததைப்போல தோன்றியது.

நினைத்துப் பார்த்தபோது மகாதேவனுக்கு மனதிற்குள் சிரிப்பு உண்டானது. வேறு ஏதோ துறையில் போய் அவர் சேர்ந்திருக்க வேண்டியவர். இந்தத் துறைக்கு அவர் எப்படி வந்து சேர்ந்தார் என்பதற்காக காரணம் இன்று வரை அவருக்குத் தெரியாது.

காலத்தின் விளையாட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரபஞ்சத்தின் தீர்மானமாக இருக்க வேண்டும்.

பிறந்த ஊரிலிருந்து உணவு தேடி இந்த தமிழகத்திற்கு வந்ததும், ஆசிரியர் அங்கியை எடுத்து அணிந்ததும் எப்போதோ தீர்மானிக்கப்பட்ட ஒரு விதியின் செயல்தானே?

இன்று மகாதேவன் வாழ்க்கையின் இன்னொரு எல்லையில் நின்று கொண்டிருக்கிறார். நேற்றைய மகாதேவனிடமிருந்து எவ்வளவோ தூரம் தாண்டி வந்துவிட்டதைப் போன்ற ஒரு தோணல்...

சோர்வைத் தரும் ஒரு வழக்கமான ஞாயிற்றுக்கிழமையின் மங்கலான சாயங்கால வேளை. வழக்கம்போல கைலி அணிந்து, டீ-ஷர்ட் அணிந்து அறையைப் பூட்டிவிட்டு அவர் வெளியேறினார். சாலையைக் குறுக்காகக் கடந்தால், எதிரில் ஒரு தேநீர்கடை இருக்கிறது.


வடகரையைச் சேர்ந்த செயினுதீன் ஹாஜியின் தேநீர்க் கடை...

இங்கு வசிக்க வந்தபிறகு செயினுதீன் ஹாஜியின் கடையில்தான் அவர் தேநீர் பருகுகிறார். நல்ல கடினத் தன்மையுடன் பக்குவமாகத் தயாரிக்கப்படும் தேநீர்...

எதுவுமே கூற வேண்டாம்- எவ்வளவு கூட்டம் இருந்தாலும், அவருடைய தலையைப் பார்த்ததும் செயினுதீன் ஹாஜியின் குரல் உரத்து கேட்கும்.

"டேய்... சாருக்கு தேநீர்."

சாலையில் ஆரவாரம் கேட்டது. தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான முரசிலிருந்து வந்த பைத்தியம் பிடிக்கச் செய்யும் சத்தம்...

ஓ... பிணம் வருகிறது. நிறைய ஆட்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த  பாடையுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். வழக்கமான காட்சிதான். இந்த சாலை முடிவடையும் இடத்தில் சுடுகாடு இருக்கிறது. சாலையில் மலர்களை அள்ளி எறிந்து கொண்டிருக்கிறார்கள். சர வெடிக்கு நெருப்பு வைக்கிறார்கள். சங்கு ஊதுகிறார்கள். சிலர் பிணத்திற்கு முன்னால் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் பார்க்கக் கூடிய சுப்பையனும் அவனுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களும்தான் பிணத்திற்கு முன்னால் நடனமாடியவாறு முன்னோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுச் சாராயத்தின் போதையில் தன்னையே மறந்து நடனமாடிக் கொண்டிருக்கும் சுப்பையனை அவருக்கு நன்கு தெரியும். கறுத்த, குள்ளமான உருவத்துடனும் தொப்பை விழுந்த வயிறுடனும் மிகவும் பணிவாக பகல் நேரங்களில் அவருக்கு முன்னால் வெற்றிலைக் கரை படிந்த பற்கள் முழுவதையும் வெளியே காட்டி சிரித்துக் கொண்டு நின்றிருக்கும் சுப்பையன்... ஒரு டம்ளர் சாராயத்திற்கான காசு... அது சுப்பையனுக்கு எப்போதும் பழகிப்போன விஷயம்.

சுற்றுப் பகுதியில் இருக்கும் ரிக்ஷாக்காரர்களுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் மலையாளியான ஆசிரியர்மீது மிகுந்த மதிப்பு இருந்தது.

யாருடைய அன்பையும் மிகவும் எளிதில் பெறுவதற்கு மகாதேவனால் முடிந்தது.

பிணம் கடந்து சென்ற பிறகுதான் அவர் தேநீர்க் கடைக்கு முன்னால் வந்தார். கடையில் செயினுதீன் ஹாஜி இல்லை. அவருடைய மகன் இருந்தான்.

"வாப்பா எங்கே போயிருக்கிறார்?''

"வாப்பா சொந்த ஊருக்குப் போயிருக்கிறார். உங்களிடம் சொல்லச் சொன்னார்.''

"ஊர்ல என்ன விசேஷம்?''

"திருமண விஷயமா...''

தேநீர் குடித்து முடித்து விட்டுத் திரும்பி வந்தார்.

மொட்டை மாடியை நோக்கி மெதுவாக ஏறினார். பகல் கிட்டத்தட்ட மேற்கு திசை நோக்கி நகர்ந்துவிட்டிருந்தது. கடல் காற்று வீச ஆரம்பித்திருந்தது. இந்த மிகப் பெரிய நகரத்தைத் தொட்டுக் கொண்டு கிடக்கும் கடலின் கருணைதான் இந்த சாயங்கால வேளையின் காற்று. எவ்வளவு கடுமையான வெப்பத்தையும் இல்லாமல் போகும்படி செய்வதன் காரணத்தால் நகரத்தில் உள்ளவர்களுக்கு அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம்தான்.

சுத்தமான மொட்டை மாடியின் ஓரச் சுவரில் வெறுமனே அவர் உட்கார்ந்தார்.

அங்கு அமர்ந்திருந்தால், நகரத்தின் ஒரு பகுதி முழுவதையும் பார்க்க முடியும்.

வயதான மாமரத்தின் கிளைகளில் ஏராளமான பறவைகள் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தன. மாமரத்தின் கிளையிலிருந்து ஒரு பெரிய காகம் மெதுவாகப் பறந்து ஓரச் சுவரின்மீது வந்து உட்கார்ந்தது.

கிட்டத்தட்ட மகாதேவனுக்கு அருகிலேயே பிண்டம் தின்னி காகம்...

இங்குள்ள காகங்களுக்கு மனிதர்கள்மீது அந்த அளவிற்கு பயமில்லை என்று தோன்றுகிறது. மகாதேவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். புகையை வெட்டவெளியில் ஊதினார்.

பிண்டம் தின்னி காகம் மெதுவாக நடந்து நடந்து மகாதேவனுக்கு மிகவும் அருகில் வந்தது. கையை நீட்டினால் தொடக் கூடிய அளவிற்கு நெருக்கமாக வந்த உட்கார்ந்தது. அட... இந்த காகத்திற்குச் சிறிதுகூட பயமில்லையா?

சற்று கையை நீட்டினார்.

காகம் பறந்து செல்லவில்லை. மேலும் சற்று முன்னோக்கி நகர்ந்து நின்றது.

அட... இது என்ன? இந்தக் காகத்திற்கு என்ன ஆனது?

"என்ன சார், நல்லா இருக்கீங்களா?''

சத்தத்தைக் கேட்டு மகாதேவன் தலையைத் திருப்பினார். இந்த நேரத்தில் யாராக இருக்கும்? அப்படி யாரும் வருவது வழக்கமில்லையே!

யாரும் இல்லை.

"ம்... இந்தப் பக்கம்... நானேதான்... வேறு யாருமே இல்லை, சார்.''

மீண்டும் குரல்... மகாதேவன் முகத்தைத் திருப்பிப் பார்த்தார்.

அங்கு காகம் மட்டுமே இருந்தது. காகம் தன் கால்களை உயர்த்தி தலையைத் தூக்கி மகாதேவனைப் பார்த்து உதடுகளை அசைத்தது.

மகாதேவனுக்கு ஆச்சரியம் உண்டானது. மீண்டும் குரல்.

"சார், நான்தான்...''

காகத்தின் உதடுகள் அசைந்தன.

காகம்தான் பேசிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை மகாதேவனை ஆச்சரியம் கொள்ளச் செய்தது. தாங்க முடியாத ஒரு பதைபதைப்பு... தனக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறதா? இல்லாவிட்டால், காகமேதான் பேசிக் கொண்டிருக்கிறதா?

"சார், பயப்பட வேண்டாம். நானேதான்... காகமான நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் நண்பர்களே... பயப்பட வேண்டாம்.'' ஆச்சரியத்தால் மகாதேவன் சிலையைப்போல ஒரு நிமிடம் நின்றுவிட்டார். தொடர்ந்து பேசும் நிலைக்கு வந்தார்.

"என்னால்... என்னால்...''

சத்தம் தொண்டைக்குள்ளேயே நின்றுவிட்டது.

"சிறிது கூட நம்ப முடியவில்லை... அப்படித்தானே? ஆனால், நம்புங்கள். காகமாகிய நான் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்....''

உறுதியாக தெரிந்துவிட்டது...

காகம்தான் பேசுகிறது அட.... என்ன இது? ஆச்சரியமாக இருக்கிறதே! மிகப் பெரிய இனிமைத்தன்மை அந்தக் குரலில் இல்லை. எனினும், பரவாயில்லை- நல்ல மிடுக்கான குரல்தான். உதடுகள் அசைவதும் சிறகுகள் எழுந்து நிற்பதும் தெரிந்தன.

"சில விஷயங்கள் அப்படித்தான்... நம்புவதற்கு சிறிது சிரமமாக இருக்கும். சற்று தாண்டிவிட்டால், அந்த நிலைமை மாறிவிடும். உங்களைப் போன்ற மனிதர்களுக்கும் எங்களைப் போன்ற பறவைகளுக்கும் அப்படித்தான்.''

"எனினும், இது... இது முற்றிலும் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இதற்கு முன்பு கேள்விப்படக்கூட இல்லாத ஒன்று... அதனால்தான்...''

மகாதேவன் ஒரு வகையில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்லி முடித்தார்.

"இதற்கு முன்பு நீங்கள் என்ன கேள்விப்பட்டிருக்கிறீர்களோ... அது முட்டாள்தனமானது. நீங்கள் கேட்காத- பார்க்காத எவ்வளவு விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பது தெரியுமா? அது இருக்கட்டும்.... எனக்கு பசி எடுக்கிறது... இங்கு எனக்கு தருவதற்கு என்ன இருக்கிறது?'' காகம் மென்மையான குரலில் கேட்டது.

"என்ன வேண்டும்? சொல்லு... என்ன சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறாய்?''

"மனிதர்கள் சாப்பிடுவது எதுவாக இருந்தாலும்... அவனுக்கு எது எது மிகவும் பிடிக்கிறதோ, சாதாரணமாக அதைத்தானே நாங்கள் சாப்பிடுகிறோம்! கிடைக்கக் கூடியதும் அதுதானே!''

"நான் இங்கு தனி மனிதனாக இருக்கிறேன். சமையல் எதுவும் செய்வதுமில்லை. அதனால்...''

மகாதேவன் முழுமை செய்வதற்கு முன்பே காகம் சொன்னது:

"இரவில் சைட் டிஷ்ஷாக இருக்கும் ஏதாவது இல்லாமல் இருக்காதே!''

மகாதேவன் அதிர்ச்சியடைந்து விட்டார். இரவில் சைட் டிஷ்... தான் சிறிது மது அருந்தக் கூடிய மனிதர் என்ற உண்மை வெளியுலகத்திற்குத் தெரியாத ஒன்று... காகத்தின் பார்வை அதைத் தெரிந்து வைத்திருக்கிறது. அதற்குப் பிறகு அவர் தாமதிக்கவில்லை. வேகமாக உள்ளே சென்று ப்ளாஸ்டிக் பாத்திரத்திலிருந்து நேற்று பேக்கரியிலிருந்து வாங்கிய மிக்ஸரை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்து ஓரச் சுவரில் காகத்திற்கு முன்னால் வைத்தார்.

காகம் அதையே பார்த்தது. மகாதேவன் காகத்தைப் பார்த்தார்.

காகத்தின் அழகான முகம் சந்தோஷத்தால் புத்துணர்ச்சி பெற்றதை மகாதேவன் பார்த்தார்.

காகம் ஸ்டீல் தட்டிலிருந்து மெதுவாகக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது. இதற்கிடையில் பேசவும் மறக்கவில்லை.

"தினமும் மது அருந்துவீர்களா மிஸ்டர் மகாதேவன்?''

"பெரும்பாலான நாட்களில்... ஏன்... கூடாதா?''

"அப்படியொன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால், எதைச் செய்யலாம் என்றும் எதைச் செய்யக் கூடாது என்றும் யார் சொல்லியிருக்கிறார்கள்?'' காகம் விடுவது மாதிரி இல்லை.

"அதனால்தான்- இரவு வேளையில் அமைதியான ஒரு உறக்கத்திற்காக நான் மது அருந்துவேன். உடல்நலத்திற்குக் கெடுதல் என்ற விஷயம் தெரிந்தேதான்...'' மகாதேவனின் குரலில் குற்ற உணர்வு.

"உடல்நலத்திற்குக் கெடுதல் என்று யார் சொன்னார்கள்? உங்களைப் போன்ற மனிதர்களில் சிலர் கூறி பரப்பிவிட்டிருக்கும் வெறும் கதைதானே அது? மது கெடுதலான விஷயமல்ல என்பதைத்  தெரிந்துகொள்ளுங்கள். எல்லா விஷயங்களும் ஒரு அளவைத் தாண்டக் கூடாது என்பதுதான் முக்கியம்...''

காகம் சொன்னது. கேட்பதற்கு நிம்மதியாக இருந்தது.

"உங்களைப் போன்ற மனிதர்கள் இப்படி பல விஷயங்களையும் பரப்பிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது எதுவுமே உண்மை அல்ல, நண்பரே.''

"எது உண்மை? எது உண்மையல்லாதது?''

விடவில்லை. தெரிந்துகொள்ள வேண்டுமே... உடனடியாக பதில் வந்தது.

"மனிதர்களான நீங்கள் இவ்வளவு காலமும் முயற்சி பண்ணிக்கொண்டிருப்பதும், கண்டுபிடிக்க முடியாததும் நடந்து கொண்டிருப்பது- அதைக் கண்டு பிடிப்பதற்குத்தானே?''

காகம் சிரித்தது.

சரிதானே? யாருக்குமே தெரியாத ஒரு உண்மை! இதற்கிடையில்  காகம் பாத்திரத்தில் இருந்தது முழுவதையும் தின்று முடித்துவிட்டது.

"இன்னும் வேணுமா?'' கேட்டார்.

"போதும்... இதுவே தாராளம்... தரக்கூடிய பொருளின் அளவு அல்ல... தரக்கூடிய மனம்... அதுதான் முக்கியம். ம்... பிறகு... மிஸ்டர் மகாதேவன். உங்களுடைய இந்த தனிமையான வாழ்க்கையில் வெறுப்பு தோன்றவில்லையா?''

"இப்போது அது பழகிப் போய்விட்டது.''

"அது தேவையே இல்லை. அந்த கவுசல்யாவுடன் சேர்ந்து வாழ நினைத்தீர்கள். இல்லையா? பாவம்... எவ்வளவோ ஆசைப்பட்ட பெண் ஆச்சே?''

கவுசல்யா....

ஒரு அதிர்ச்சியுடன் மகாதேவன் காகத்தையே பார்த்தார்.

"கவுசல்யாவைத் தெரியுமா?''

"கவுசல்யாவை மட்டுமா? வேறு எதுதான் தெரியாமல் இருக்கிறது? நாம் இனியும் சந்திப்போம். வரட்டுமா?''

காகம் பறந்து சென்றுவிட்டது.

மகாதேவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்ட நிமிடங்களாக அவை இருந்தன. இந்த காகம் அவரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறது. திடீரென்று மனம் கவுசல்யா என்ற அழகான சினேகிதியைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியது.

பல வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் உள்ள கோவிலுக்கு கவுசல்யாவும் அவளுடைய அன்னையும் சகோதரனும் தன்னுடைய இறந்துபோன தந்தையின் சடங்குகளுக்காக வந்திருந்தார்கள். ஒரு முற்பிறவியின் உறவு திரும்பவும் தொடர்கிறது என்பதைப்போல திடீரென்று அவளுடன் அறிமுகமாகி, அறிமுகம் ஆழமாகவும் செய்தது.

ஒரே நாள் அறிமுகம். சடங்குகள் முடிந்து விடைபெறும் நேரத்தில் கவுசல்யாவின் தாய்தான் அதைச் சொன்னாள்.

"சார், வர முடிந்தால் ஒரு நாள் குடகிற்கு வாங்க. இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு, திரும்பி வரலாம்.''

அந்த அழைப்பை மனதில் எழுதி வைத்துக் கொண்டார்.

பிறகு கடிதங்களின் மூலமாக அந்த உறவு வளர்ந்தது.

ஒரு விடுமுறைக் காலத்தில், முன்கூட்டியே திட்டமிட்டிருந்தபடி குடகிற்குச் சென்றார். கவுசல்யாவின் பழமையான வீடு. காப்பித் தோட்டத்திற்கு மத்தியில் வீடு இருந்தது. மனம் இளகி ஒன்று சேர்ந்து போகக்கூடிய அழகான இயற்கையின் வனப்பு... அதைவிட சந்தோஷத்தை அளித்தன கவுசல்யாவும் அவளுடைய நடவடிக்கைகளும்...

ஆறேழு நாட்கள் தொடர்ந்த அந்த குடகு வாழ்க்கையில் கவுசல்யாவின் மனதைத் தொடுவதற்கும் அந்தப் பூவைப் போன்ற உடலின்  வெப்பத்தைத் தெரிந்து கொள்வதற்கும் முடிந்தது.

"நீங்கள் சென்னைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு செல்வீர்களா,  சார்?''

"அழைத்துக் கொண்டு போவதாக இருந்தால், வருவதற்குத் தயாராக இருக்கிறாயா?''

"ம்... சத்தியமாக... இந்த கழுத்தில் ஒரு சின்ன தாலி... அதுதான் வேணும். இந்த உலகத்தின் எந்த மூலையிலும் நான் உங்களுடன் இருப்பேன்.''

கவுசல்யாவின் பளிங்கு மணி சிந்தியதைப் போன்ற குரல் மனதில் அப்போது விழுந்து உடைந்தது.

பிடித்துவிட்டது. மிகவும் பிடித்துவிட்டது. அனுமதி பெறுவதற்கு அவருக்கு யாருமில்லையே! அப்படியே இருந்தாலும், அவர்களிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது? அவருடைய மாத வருமானத்தில் மட்டுமே கண்களைப் பதித்துக் கொண்டு இருப்பவர்கள் என்ன அனுமதியைத் தரப் போகிறார்கள்?

எனினும், எதுவும் கூறாமல் இருப்பது சரியாக இருக்காதே!

"நான் வருவேன். கவுசல்யாவை அழைப்பதற்கு நிச்சயமாக.''

வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார்.

ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. விதி என்று மனதிற்குள் சமாதானப்படுத்திக் கொண்டார். அந்த உறவு எப்படி முறிந்தது என்றே தெரியவில்லை. இதற்கிடையில் வேறொரு உறவு புதிதாக அரும்பியதும் அதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

காலப் போக்கில் கவுசல்யா என்ற சினேகிதி மனதிலிருந்து மறைந்தே போய்விட்டாள்...

இப்போது சரியாக எட்டு வருடங்கள் கடந்தோடிவிட்டன.

இதற்கிடையில் எத்தனையெத்தனை கவுசல்யாக்கள் அவருடைய வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள்.

இப்போது அதை ஒரு துடித்துக் கொண்டிருக்கும் நினைவாக மனதில் உலவ விட்டுவிட்டு, அந்த காகம் பறந்து சென்றுவிட்டது.

ச்சே! தாங்க முடியாத குற்ற உணர்வு உண்டானது.

அன்று உறங்கவே முடியவில்லை. மது அருந்தியும் தூக்கம் வந்து அணைத்துக் கொள்ளவில்லை. ஒரு தீர்மானத்துடன் புலர்காலைப் பொழுது விடிந்தது.

ஒரு வாரத்திற்கு விடுமுறை வாங்கினார். அந்தப் பயணம் குடகில் போய் நின்றது.

மகாதேவன் கவுசல்யாவின் வீட்டை அடைந்தார். ஒரு ஆச்சரிய மனிதனைப் பார்ப்பதைப்போல எல்லாரும் மகாதேவனைப் பார்த்தார்கள். அன்புக்கு எந்தவொரு குறைபாடும் இல்லாமலிருந்தது. கவுசல்யாவின் அன்னை அவரை வரவேற்று உட்கார வைத்தாள்.

"என்ன சார், உங்களைப் பார்த்தே பல நாட்கள் ஆயிடுச்சே! எங்கள் எல்லாரையும் மறந்து விட்டீர்கள் என்று நினைத்தோம்.''

"மன்னிச்சிருங்க... நான் கவுசல்யாவைப் பார்க்கணும்.''

யாரும் பதில் கூறவில்லை.

"கவுசல்யா எங்கே? கூப்பிடுங்க.''


"அவள் எங்கள் எல்லாரையும் விட்டுட்டு போய்விட்டாள், சார். ஆற்றில் குதித்து இறந்துவிட்டாள்... மூன்று வருடங்களாகி விட்டன.'' கவுசல்யாவின் அன்னையில் குரல் நடுங்கியது.

கவுசல்யாவின் தாய் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதை அவர் பார்த்தார்.

மனம் நொறுங்கிவிட்டது. அதற்குப் பிறகு அங்கு நிற்கவில்லை. திரும்பிவிட்டார். திருநெல்வேலிக்கு வந்தார். ஆற்றில் குளித்தார். கோவிலுக்குள் நுழைந்து கடவுளைத் தொழுதார்.

"மன்னிக்கணும்... மன்னிப்பு மட்டும்...''

வேண்டிக் கொள்வதற்கு அது மட்டுமே இருந்தது. தாங்க முடியாத ஒரு வேதனை மனதை ஆக்கிரமித்து விட்டிருந்தது.

அன்று வரை உணர்ந்திராத ஒரு ஆத்மார்த்தமான வேதனை மனதை ஆட்சி செய்தது.

திரும்பி வந்தார். மறுநாளும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. எதிர்பார்த்துக் காத்திருந்தார். வேறு யாரையும் அல்ல. காகத்தை தான். காகம் வராமல் போய் விடுமோ? வரும். வராமல் இருக்காது.

எதிர்பார்த்ததைப்போலவே காகம் வந்து சேர்ந்தது. மாமரத்தின் கிளையை விட்டு நேராக சாளரத்தில் வந்து உட்கார்ந்தது. அடுத்த நிமிடம் படுக்கையிலிருந்து எழுந்தார் மகாதேவன்.

"என்ன... அதற்குள் குடகிற்குச் சென்று திரும்பி வந்தாச்சா?''

"ஆமாம்... ஆனால், என்னால் கவுசல்யாவைப் பார்க்க முடியவில்லை.''

"முடியாதே! அதற்காக குடகுவரை போயிருக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னிடம் கேட்டிருந்தால் போதாதா?'' காகம் கேட்டது.

"தாங்க முடியாத குற்ற உணர்வு இருக்கிறது. நான்தான் காரணம்...''

"இல்லை... யாரும் யாருடைய மரணத்திற்கும் காரணமாக இருக்க முடியாது மகாதேவன். அது பிரபஞ்சத்தின் எழுதப்பட்ட விதி. நீங்கள் வெறுமனே அந்த வாழ்க்கையில் சற்று தொட்டுப் பார்த்தீர்கள். அவ்வளவுதான். ஆனால், அந்தப் பெண் உங்களை எத்தனையோ மடங்கு காதலித்தாள் என்பதென்னவோ உண்மை.''

"நான் கிடைக்காமல் போனதுதானே கவுசல்யா தற்கொலை செய்து  கொண்டதற்குக் காரணம்?''

"இல்லை... அவளுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அதுதான் காரணம். முடிவிற்கான வழி தற்கொலையாக இருந்தது. அவ்வளவுதான்.''

"என் மனதில் தாங்கிக் கொள்ள முடியாத குற்ற உணர்வு உண்டாகிறது.''

"அது மனிதர்களுக்கென்று இருக்கக்கூடிய ஒரு இயல்பான தன்மை. அவ்வளவுதான்.''

"வா... ஏதாவது சாப்பிட வேண்டாமா? உனக்காக நான் உணவு தயார் பண்ணி வைத்திருக்கிறேன்.''

"ஓ... இன்று எனக்கு பசி சிறிதுகூட இல்லை. நான் இன்னும் வருவேன், மிஸ்டர் மகாதேவன். வராமல் இருக்க முடியாதே!''

காகம் வேகமாக சிறகை அடித்துக்கொண்டு பறந்து சென்றது.

மகாதேவனுக்கு சிறிது கவலை உண்டானது.

ச்சே... காகம் அதிகமாகப் பேசவில்லை. என்ன ஆனது?

வழக்கமான வாழ்க்கையின் போக்கிற்கு மகாதேவன் மெதுவாக வந்து சேர்ந்தார். பகல் நேரத்தில் பள்ளிக்கூடம். அது முடிந்ததும், வீடு. வீட்டுக்கு வந்துவிட்டால், பிறகு காகத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பது.

காகம் சில நாட்களாக வரவே இல்லை.

காகத்திற்கும் தனக்குமிடையே நடைபெற்ற உரையாடலை மகாதேவன் வெளியே யாரிடமும் இதுவரை கூறவுமில்லை.

மற்றவர்கள் அதை நம்புவதற்கு வழியில்லை.

செய்னுதீன் ஹாஜியின் கடைத்திண்ணையில் தேநீர் பருகிக் கொண்டு நின்றிருந்தபோது, சுப்பையன் பணிவுடன் வந்து நின்றான்.

"என்ன சுப்பையாண்ணே... இன்னைக்கு சாவு எதுவும் இல்லையா?'' சிரித்துக் கொண்டே கேட்டார்.

"இல்லண்ணே... ஒரு வாரமாக சாவே இல்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு...'' சுப்பையன் தலையைச் சொறிந்தான்.

ஒரு ஐம்பது ரூபாயை சுப்பையனின் கையில் தந்தார். சுப்பையன் சிரித்துக்கொண்டே பணிவுடன் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நடந்தான். பாவம்.. யாராவது இறந்தால் மட்டுமே உணவுக்கு வழி கிடைக்கக்கூடிய வாழ்க்கை.

அடுத்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு சாயங்கால வேளையில் காகம் மகாதேவனைத் தேடி வந்தது.

மகாதேவனுக்கு காகத்திடம் தாங்க முடியாத மன வருத்தம் உண்டானது.

"என்ன... இவ்வளவு நாட்களாக பார்க்கவே முடியவில்லையே! என்னை மறந்தாச்சா?''

"இல்லை... இல்லை... உங்களை எப்படி மறக்க முடியும்? அப்படி மறந்துவிட்டால், பிறகு எங்களுக்கும் என்ன வாழ்க்கை இருக்கிறது? மறதி என்ற ஒன்று மனிதர்களுக்குத்தான். அவன் பல நேரங்களிலும் பலவற்றையும் மறந்துவிடுகிறான். மறக்க முயற்சிக்கிறான். சரிதானா?''

"ஆமாம்... அது சரிதான்...''

திடீரென்று மகாதேவன் அறைக்குள் நுழைந்து முன்கூட்டியே தயார் பண்ணி வைத்திருந்த சிறிது சாதத்தையும் சிக்கன் குழம்பையும் பாத்திரத்தில் கொண்டு வந்து ஓரச் சுவரில் வைத்தார்.

"சாப்பிடு. எவ்வளவோ நாட்களாயிடுச்சே! இங்கே ஏதாவது சாப்பிட்டு...''

காகம் சற்று புன்னகைத்தது. பிறகு பாத்திரத்திலிருந்த சாதத்தைக் கொத்தித் தின்றது.

"சொந்த ஊருக்குப் போகலையா மிஸ்டர் மகாதேவன்?''

காகம் கேட்டது.

"அங்கே எனக்கு யாருமில்லையே! பிறகு போய் என்ன செய்றது?''

"எனினும் சொந்த ஊர் என்ற ஒரு எண்ணம் வேண்டாமா?''

"அந்த எண்ணம் இல்லாமல் இல்லை. பல நேரங்களில் போய்க் கொண்டிருந்த குடும்ப வீடு இன்று இல்லை. அண்ணன் இடித்து, புதிதாகக் கட்டியிருக்கிறார்.''

"காலம் மாறும்போது மனிதனும் மாறுவான் அல்லவா? மிஸ்டர் மகாதேவன், உங்களின் அடுத்த திட்டம் என்ன? ஒரு லட்சியம் வேண்டாமா?''

"இதுவரை எனக்கு அப்படி எந்தவொரு லட்சியமும் இல்லை.''

"நல்லது.... மனதில் அமைதி இருக்கிறது அல்லவா? மிகப் பெரிய மாளிகையைக் கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும் என்ற ஆசைகள் இல்லாமல் இருப்பதே மிகவும் நல்லது...'' காகம் சொன்னது.

"வேலை செய்ய இயலாமல் போகும் வரை இங்கேயே இருக்கணும். அதைத் தாண்டிவிட்டால்... பிறகு, எது எழுதப்பட்டிருக்கிறதோ, அது...''

மகாதேவன் சொன்னார்.

"அது சரி... நல்ல முடிவுதான்...''

இதற்கிடையில் காகம் உணவைக் கொத்தி சாப்பிட்டு முடித்துவிட்டிருந்தது.

"ஆனால், ஒரு விஷயம்... நீங்கள் நினைப்பதைப்போல அது அந்த அளவிற்கு எளிதான ஒன்றல்ல. உறவுகள் ஒவ்வொன்றாக மீண்டும் பிறப்பெடுத்து வரவிருக்கும் சூழ்நிலையில் எங்கு... எப்படி... ஒரு முழுமையான முடிவை அடைய முடியும்?''

அந்தக் கேள்வியை வீசி எறிந்துவிட்டு காகம் பறந்து சென்றுவிட்டது.

அந்தக் காகம் திரும்பவும் குழப்பத்தை உண்டாக்கிவிட்டுப் போய்விட்டதே...!

இனி எந்த உறவு மீண்டும் பிறப்பெடுத்து வரப்போகிறது?

தெரியவில்லை. உறவுகளில் இருந்து... உறவுகளில் இருந்து... எப்படி விடுதலை பெறுவது?

திடீரென்று காலடிச் சத்தம் கேட்டு பின்னால் திரும்பிப் பார்த்தார். மகாதேவன் அதிர்ச்சியடைந்து விட்டார்.

ஒரு தேவதையைப்போல கவுசல்யா கண்களுக்கு முன்னால் நின்றிருந்தாள்.

"சார், நீங்கள் என்னைத் தேடி வந்தீர்கள் அல்லவா? ஆனால், தாமதமாகிவிட்டது.... மிகவும் தாமதமாகிவிட்டது. நான் எவ்வளவோ நாட்கள் காத்திருந்தேன். ஆனால் நீங்கள் வரவில்லை. வருவீர்கள் என்ற நம்பிக்கை முற்றிலும் இல்லாமல் போய்விட்ட பிறகுதான் நான் விடை பெற்றுக் கொண்டேன்.

சார், நீங்கள் மிகவும் கவலையில் இருக்கிறீர்கள் என்ற செய்தியை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. இனி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம் சார்? அனைத்தும் முடித்துவிட்டனவே!''

கவுசல்யா நின்று கொண்டு சிரித்தாள்.

தான் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

கனவா? இல்லாவிட்டால் உண்மையையா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. கவுசல்யா எப்போதோ இறந்துவிட்டாள்.

அவள் நடந்து அருகில் வந்தாள். அருமையான நறுமணம் காற்றில் பரவி விட்டிருந்தது. அது ஆன்மாவுக்குள் ஆழமாக இறங்கிச் செல்வதைப் போல இருந்தது.

பயம் உண்டாகி பின்னோக்கி ஓட வேண்டும் என்று நினைத்தார்.

"சார், பயப்பட வேண்டாம். நான் எதுவும் செய்ய மாட்டேன். அது என்னால் முடியாது. உடல் இல்லாத என்னால் என்ன செய்ய முடியும்? ஆனால், இப்போதுகூட நான் உங்களைக் காதலிக்கிறேன்... வழிபடுகிறேன்... விரும்புகிறேன்...''

அடுத்த நிமிடம் கவுசல்யா மறைந்து போய்விட்டாள்.

மகாதேவனின் தொண்டை வறண்டு போனது.

நீருக்காக ஏங்கினார். உள்ளே சென்று கூஜாவிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்துப் பருகிவிட்டு, படுக்கையில் சாய்ந்தார்.

2

ழக்கமான நடைமுறை தவறிவிட்டது.

மறுநாள் மகாதேவனால் எழுந்திருக்க முடியவில்லை.

காய்ச்சல் அடித்தது. கடுமையான காய்ச்சல்...

பொதுவாக சாதாரண உடல்நலக் கேடுகள் எதுவும் மகாதேவனைத் தீண்டுவதே இல்லை.

அன்று முழுவதும் மகாதேவன் படுக்கையிலேயே படுத்திருந்தார். பள்ளிக்கூடத்திற்கு தகவலைத் தெரியப்படுத்தினார்.

சாயங்கால நேரம் வந்தபோது, பள்ளிக்கூடத்திலிருந்து உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வந்தார்கள். பலமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மகாதேவனை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முயற்சித்தார்கள். மகாதேவன் "வேண்டாம்" என்று அதைத் தடுத்துவிட்டார்.

"பரவாயில்லை... ஒருநாள் போகட்டும்.''

அதற்குப் பிறகு யாரும் வற்புறுத்தவில்லை. சாயங்காலம் சாளரத்தின் சட்டத்தில் பறந்து வந்து உட்கார்ந்திருந்த காகத்தைப் பார்த்து மகாதேவன் எழுந்திருக்க முயற்சித்தார்.

"வேண்டாம்... படுத்திருங்க, மிஸ்டர் மகாதேவன். காய்ச்சல் ஆச்சே!''

"காய்ச்சல் என்றால் கடுமையான காய்ச்சல்... இதற்கு முன்பு எனக்கு இப்படி வந்ததே இல்லை.''

"காய்ச்சல் என்பது ஒரு நோயே அல்ல. ஆனால், நோயின் முன்னோடியாகவும் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது... பயப்பட வேண்டாம். இந்தக் காய்ச்சல் சரியாகிவிடும்.''

காகம் சற்று சிரித்தது. தொடர்ந்து தனியான ஒரு குரலில் அழுதது... அறை முழுவதும் ஒரு வெப்பம் பரவுவதைப்போல- தன்னுடைய உடலிலிருந்து ஏதோ ஆவி மேலே எழுவதைப்போல மகாதேவன் உணர்ந்தார்.

"இப்போது நிம்மதி உண்டாகிறதா?'' காகம் கேட்டது.

"ம்... எனக்குள்ளிருந்து ஏதோ கிளம்பிச் செல்வதைப்போல... ஒரு விஷயத்தைக் கூற வேண்டும் என்று நினைத்தேன். நான் நேற்று...''

கூறி முடிப்பதற்கு முன்பே காகம் கேட்டது:

"கவுசல்யாவைப் பார்த்தீர்கள் இல்லையா? பொருட்படுத்த வேண்டாம். அவள் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அப்பிராணிப் பெண்...''

"அகாலத்தில் மரணத்தைத் தழுவுபவர்களின் ஆன்மா அலைந்து திரிவதுண்டா?'' கேள்வியைக் கேட்டு காகம் சற்று புன்னகைத்தது.

"அதற்கு நான் பதில் கூற வேண்டுமா? நானே பார்த்தேனே!''

அதற்கு பிறகு காகம் அங்கு இருக்கவில்லை. பறந்து சென்று விட்டது.

மறுநாள் மகாதேவன் பழைய நிலைமைக்குத் திரும்பினார். காய்ச்சல் பாதித்ததற்கான எந்தவொரு அடையாளமும் இல்லை. மேலும் புத்துணர்ச்சி பெற்றவரைப்போல தோன்றினார். குளித்து முடித்து ஆடைகளை அணியும் நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தத்தைக் கேட்டு, உடனடியாகச் சென்று கதவைத் திறந்தார்.

கண்களை நம்ப முடியவில்லை.

வகுப்பறையில் திறமைசாலியான மாணவியான உமா... மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவி.

அவள் தனியாக வந்திருந்தாள்.

பள்ளிக்கூட சீருடைக்குள் வெடித்துச் சிதறுவதற்காக தயார் நிலையில் துடித்துக் கொண்டிருக்கும் இளமை... கண்களில் மின்னிக் கொண்டிருக்கும் நெருப்பு ஜுவாலை.

"என்ன உமா, என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய்?''

"சார், உங்களுக்கு உடல் நலமில்லை என்று கேள்விபட்டேன். நேற்று வகுப்பில் நீங்கள் இல்லாதது மிகுந்த பொறுமையைத் தந்தது. சார், நீங்கள் இல்லாவிட்டால் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்றே தோன்றவில்லை. சார், உங்களுக்கு இப்போ எப்படியிருக்கு?''

"எனக்கு சொல்லிக் கொள்கிற அளவிற்கு உடல்நலக் கேடு எதுவுமில்லை. நான்... இதோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உமா, உனக்கு எப்படி முகவரி கிடைத்தது?''

"எனக்கு முன்பே தெரியும் சார், நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள் என்று. சார், இப்போ காய்ச்சல் இருக்கிறதா?''

அவள் உரிமையுடன் மகாதேவனின் அருகில் வந்து, அவருடைய நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள்.

"ம்... காய்ச்சல் இல்லை. நல்லதாப் போச்சு. நான் மிகவும் கவலைப்பட்டுவிட்டேன்.''

உமாவின் குரலில் கவலையின் சாயல்...

"உமா, புறப்படு. நான் அங்கு வருகிறேன்.''

"சார், நான் உங்களுடன் சேர்ந்து வர்றேன்.''

"வேண்டாம் உமா... எப்போதும் உள்ள வழக்கத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது. நீ புறப்படு...''

உமாவின் முகம் சிவப்பதை அவர் பார்த்தார். அவள் மகாதேவனின் உடலுக்கு மிகவும் அருகில் நின்றிருந்தாள்.

ஆசிரியர் சற்று இறுகப் பிடித்து அணைத்துக் கொள்ள மாட்டாரா என்ற அவள் ஆசைப்பட்டாள்.

எவ்வளவோ நாட்களாக இருக்கும் ஒரு ஆசை...

இல்லை... எதுவும் உண்டாகவில்லை... இவர் என்ன மனிதன்! மனம் கல்லால் படைக்கப்பட்டிருக்குமோ?

உமா போய்விட்டாள். சிறிது நேரம் கழித்து மகாதேவன் பள்ளிக் கூடத்திற்குச் சென்றார். உடன் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு ஆச்சரியம் உண்டானது.

நேற்று பார்த்த காட்சி மிகவும் பயங்கரமாக இருந்ததே! இன்று... இதோ... மகாதேவன் புன்னகை ததும்பும் முகத்துடன் வந்து நின்று கொண்டிருக்கிறார்.

வகுப்பில் உமாவின் பிரகாசமான கண்கள் தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன என்ற விஷயம் மகாதேவனுக்குத் தெரிந்தாலும், அதில் அவர் கவனம் செலுத்தவில்லை. உமா மட்டுமல்ல- வேறு பல மாணவிகளும் அப்படித்தானே! அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தினமும் பார்க்கக் கூடிய ஆண் உருவம்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் மனதில் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுப்பதுண்டு. அது ஒரு உண்மையும்கூட. வெளியே கூற விரும்பாத மாணவிகளின் மிகவும் ஆழமான ஒரு மாறுபட்ட உணர்வு...

ஆசிரியர் என்ற ஒரு சுவர்- அவர்களுக்கு நடுவில் மீற முடியாத அளவிற்கு உயர்ந்து நின்று கொண்டிருக்கிறதே?

பல நேரங்களில் அந்தச் சுவர் மீறப்பட்டிருக்கிறது.

கடந்த சில கல்வி ஆண்டுகளில் இறுதி நாட்களுக்கு மத்தியில்.

மேற்படிப்பிற்காகச் சென்றிருக்கும் இளம் பெண்களில் பலரும்.

ரஞ்சனி, ரஜிதா, சீதா, க்ளாரா, மாலினி- இப்படி நீள்கிறது பட்டியல். உலகத்திற்குத் தெரியாத அந்த ரகசியம் அவர்களுக்குள் மரணம் வரை இனிமையான ஒரு அனுபவமாக இருந்து கொண்டிருக்கும்.


மனதில் அறிவின் தீபத்தை எரிய வைத்த ஆசிரியரே உடலிலும் இன்னொரு அறிவின் கதவைத் திறந்துவிட்டார். அதாவது கையைப் பிடித்து நடத்திச் சென்றார்.

மகாதேவன் இப்போது அதிலிருந்து மிகவும் மாறிவிட்டிருக்கிறார். மனம் அந்த கட்டத்தையே ஒதுக்கிவிட்டதைப்போல தோன்றியது.

சாயங்காலம் செயினுதீன் ஷாஜியின் தேநீர்க் கடையின் வாசலில் தேநீர் அருந்திக் கொண்டு நின்றிருந்தபோது வழக்கம்போல ஒரு பிண ஊர்வலம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். மிகவும் குறைவான சிலர் மட்டுமே அந்த ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தார்கள். முன்னால் மரண நடனம் ஆடக்கூடிய சுப்பையனைக் காணவில்லை.

செயினுதீன் ஹாஜி சொன்னார்.

"சார், நம்முடைய சுப்பையன் இறந்துவிட்டான். அவனுடைய பிணம்தான் வந்து கொண்டிருக்கிறது.''

"கையில் இருந்த குவளை நழுவிக் கிழே விழுந்து உடைந்துவிட்டது."

மகாதேவன் மரத்துப் போன மனதுடன், குனிந்த தலையுடன் நடந்தார்.

"நான் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?'' மகாதேவன் காகத்திடம் கேட்டார்.

காகம் சற்று புன்னகைத்துக் கொண்டே பதில் சொன்னது:

"எதற்கு? நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள் என்று நினைக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்... அதற்குப் பிறகுதானே பிராயச்சித்தம்...''

"என் மாணவிகளுடன் நான்...''

"ஓ... அந்த விஷயமா? அது ஒரு பாவச் செயலா? நீங்கள் என்ற ஆணுக்கு முன்னால் அவர்கள் வெறும் பெண் பிள்ளைகள். ஆசிரியர் என்ற திரையை நீங்கள் நீக்கி விட்டால், பிறகு என்ன இருக்கிறது? ஆணுக்கு முன்னால் அடிபணிவது என்ற பிறவி விதி மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது.''

"எனினும், குரு என்ற என்னுடைய தகுதிக்கு உகந்ததா அது என்ற விஷயம்தான் என்னை கவலைப்படச் செய்கிறது.''

"பாருங்கள், மகாதேவன். ஆணின் அண்மைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வயதில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு முன்னால், பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டு அமைதியான மனநிலையுடன் அவர்களின் மனங்களுக்குள் அறிவைப் பரிமாறும் போது, அவர்களுக்கே தெரியாமல் அந்த மனிதனின் உருவமும் இதயத்திற்குள் நுழைந்துவிடும். முதலில் வழிபாடு- பிறகு விருப்பம் அப்போது இயற்கையின் இயல்புத்தன்மை உண்டாகிவிட்டிருக்கும். மகாதேவன், நீங்கள் அழகான தோற்றத்தைக் கொண்டவர். நல்ல உடல் நலத்துடன் இருப்பவர். உங்களுடைய திறமையான வாக்கு சாதுரியமும் ஒன்று சேரும்போது உங்களை யார் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள்? உங்களைப்போன்ற மனிதர்களுக்கு மத்தியில் சில தவறான எண்ணங்கள் இருக்கின்றன...''

"சமூக அடிப்படையிலான ஆச்சாரங்களும் சடங்குகளும் சமூகத்தில் இருப்பதை தவறு என்று எப்படிக் கூறமுடியும்?''

"கூற வேண்டும் என்று இல்லையே! மனிதர்கள் உண்டாக்கி வைக்கும் சமூக அடிப்படையிலான கட்டுப்பாடுகள் மனித சமுதாயத்திற்கு தவிர்க்க முடியாத ஒன்று. மீற முடியாததும்கூட... மிகவும் குறைவான சந்தர்ப்பங்களில் மட்டுமே சில விஷயங்கள் மீறப்படுகின்றன...''

"நான் அந்தத் தவறைத்தான் செய்திருக்கிறேன்.''

"அது தவறு என்று எண்ணத்தை மனதிலிருந்து முதலில் மாற்றுங்கள். ஒரு மனிதனின்... ஆணின்- பெண்ணின்- தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வெளியே தெரியாத ஏராளமான உண்மைகள் இருக்கும்...''

"அதை ஒப்புக் கொள்கிறேன்.''

"பாருங்கள், மகாதேவன். தாகம் என்று வருபவர்களுக்கு நீர் தராமல் இருப்பதுதான் தவறு... புரிந்துகொள்ளுங்கள்.''

காகம் வேகமாகப் பறந்து சென்றுவிட்டது.

அவரை குழப்பமான ஒரு நிலைமையில் கொண்டுபோய் விட்டுவிட்டு காகம் பறந்து சென்றுவிட்டது. ச்சே!

மறுநாள் பள்ளிக்கூட நூல் நிலையத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாரிக்கு அருகில் நின்றிருந்த மகாதேவனை இரண்டு கைகள் இறுக அணைத்தன.

அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தபோது அது யார் என்று தெரிந்துவிட்டது.

உமா...!

ரோஜா மலர்களுக்கு இணையான அதரங்கள் அழுத்தி முத்தமிட்ட விஷயம் அவருக்கே தெரியாமல் நடந்துவிட்டதோ? ஒரு சாகசச் செயலின் இறுதியில் அவள் ஓடிமறைந்து விட்டாள். மேலும் கீழும் மூச்சு விட்டுக்கொண்டே பயத்துடன் மகாதேவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார்.

3

சுப்பையனையும் மரணம் அழைத்துக்கொண்டு சென்று விட்டது.

இனி இந்தத் தெருவின் வழியாக மரண நடனத்திற்குத் தலைமை தாங்கி சுப்பையன் என்ற கறுத்த மனிதன் வரமாட்டான்.

நினைத்துப் பார்த்தபோது மெல்லிய வேதனை உண்டானது.

மரணம் எந்த அளவிற்கு கில்லாடித்தனமாக ஒவ்வொருவரையும் அழைத்துக்கொண்டு செல்கிறது.

உமா, தான் துணிச்சலான பெண் என்பதைக் காட்டிவிட்டாள்.

அன்று அவள் உரிய நேரத்தில் மகாதேவனின் வீட்டுக்கு வந்தாள்.

முதலில் அறிவுரை சொல்லிப் பார்த்தார். அவள் கேட்கவில்லை.

"நான் எதையாவது ஆசைப்பட்டால், அதை கட்டாயம் அடைந்தே தீருவேன். இல்லாவிட்டால் என் கையிலிருக்கும் நரம்பை அறுத்து என்னை நானே முடித்துக்கொள்வேன். என்ன சொல்றீங்க?''

அந்தக் கேள்விக்கு முன்னால் மகாதேவனால் எந்த பதிலையும் கூற முடியவில்லை. கீழ்ப்படிவதைத் தவிர, அவருக்கு வேறு வழியில்லை.

மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இறுதி கணத்திற்கு மத்தியில் உமாவின் சிதறிய குரல் காதில் விழுந்தது.

"நான் முழுமையடைந்து விட்டேன். இதை நான் மரணம் வரை மறக்க மாட்டேன். இது என்னுடைய ஒரு உரிமையாக இருந்தது... என்னை வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால், நீங்கள் எப்போதும் என் மனதிற்குள் இருப்பீர்கள்.''

மீண்டும் ஒருமுறை முத்தமிட்டுவிட்டு, உமா விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

தாங்க முடியாத ஒரு குற்ற உணர்வுடன் படுத்திருந்தபோது, சாளரத்தின் அருகில் காகம் வந்து அமர்ந்தது.

"இல்லை... வெற்றி பெற்றது நீங்களா அவளா?''

மகாதேவன் அந்தக் கேள்வியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து திரும்பினார். தன்னை சிக்கலில் தள்ளிவிட்ட காகம் மீண்டும் வந்து உட்கார்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறது.

"இல்லை... இரண்டு பேருமே தோல்வியடைந்து விட்டோம். இல்லையா?''

"இல்லை... ஒரு செயல்... அது முடிவடைந்துவிட்டது. அவ்வளவுதான்....''

அதைக் கூறிவிட்டு காகம் சிரித்தது.

நன்கு பழுத்த மாம்பழத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து ஓரச்சுவரின்மீது கொண்டு வந்து வைத்தார். காகம் பறந்து அதற்கு அருகில் வந்தது. ருசியுடன் கொத்தித் தின்றது.

"மாம்பழம் நல்லா இருக்கு..''

"தயார் பண்ணி வைத்து இரண்டு நாட்களாகிவிட்டன. எங்கு போயிருந்தாய்?''

"சார், எனக்கும் எவ்வளவோ பொறுப்புகள் இருக்கின்றனவே!''

காகத்தின் முகத்தில் வெளிப்பட்ட கடமை உணர்ச்சியை மகாதேவன் பார்த்தார்.

"எல்லா நாட்களிலும் சற்று வந்து போகக் கூடாதா?''

"நிரந்தரமான ஒரு நட்பு எனக்கு கிடையாது. தேவைப்படும் இடத்திற்கு மட்டும்தான் நான் வருவேன், சார்.''

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு மத்தியில் காகம் சொன்னது.


காகத்திற்கும் மகாதேவனுக்குமிடையே உள்ள உறவு பலமானதாக ஆனது. சாயங்கால நேரங்களில் மட்டுமே வந்து கொண்டிருந்த காகம் காலை நேரங்களிலும் வர ஆரம்பித்தவுடன், மகாதேவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏதோ ஒரு நல்ல நண்பன் அருகில் இருப்பதைப் போல மகாதேவன் உணர ஆரம்பித்தார்.

தனியாக வாழும் வாழ்க்கைக்கு ஒரு முடிவு உண்டாக்கினால் என்ன என்று தோன்றியது.

இரண்டு மூன்று நாட்களாகவே அந்த எண்ணம் தோன்ற ஆரம்பித்திருந்தது.

ஆனால், எப்படி? மிகவும் தாமதமாகிவிட்டதே!

எது எப்படி இருந்தாலும், காகத்திடம் சற்று கலந்து பேச வேண்டும் என்று நினைத்தார்.

அன்று சாயங்காலம் காகம் வந்தவுடன், மகாதேவன் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு காகம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது.

"இப்போது இப்படித் தோன்றுவதற்குக் காரணம் என்ன?''

"அது தெரியாது... இந்த தனிமைக்கு ஒரு முடிவு உண்டாக்கினால் என்ன என்று ஆசைப்பட்டேன்.''

"தனிமையில் இருப்பதில் வெறுப்புணர்வு ஆரம்பித்துவிட்டதா?''

"உண்மையாகவே கூறுவதாக இருந்தால்- வெறுப்பு உண்டாகிவிட்டது. வாழ்க்கையில் நிரந்தரமான ஒரு துணை... அது இப்போது தோன்ற ஆரம்பித்திருக்கும் ஒரு விருப்பம்...''

"இந்த வாழ்க்கையை ஒரு பெண்ணுக்கு முன்னால் பணயம் வைக்கத் தீர்மானித்து விட்டீர்களா? மனைவி- குழந்தைகள்- குடும்பம்- வீடு-  வாழ்க்கை வசதிகள்... அந்த வகையில் ஒரு மீள் பயணம்... இல்லையா?''

"நான் அதிகமாக ஒன்றும் சிந்திக்கவில்லை. ஒரு துணை வேண்டும் என்று மட்டும் நினைத்தேன். அவ்வளவுதான்...''

"ஒன்றாக இருப்பது இரண்டாக ஆகும். பிறகு... இந்த இரண்டும் சேர்ந்து மூன்றாவதாக ஒன்று- நான்காவது- ஐந்தாவது... அப்படியே பெரிதாக ஆகும் ஒரு சமூகம்...''

"அந்த அளவிற்கு உள்ளே நுழைந்து நான் சிந்திக்கவில்லை.''

"தாமதமாகவில்லை. இன்னும் நடக்க வேண்டியதிருக்கிறது... ஆனால்...'' காகம் முழுமை செய்யவில்லை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தது.

"ஏன் முழுமையாகக் கூறவில்லை?''

"யாராலும் எதையும் முழுமை செய்ய முடியாதே சார்...!'' காகம் திடீரென்று பறந்து சென்றுவிட்டது.

தன்னுடைய விருப்பம் காகத்திற்குப் பிடிக்கவில்லையோ? கூறியே இருக்க வேண்டியதில்லை.

இறுதியில் கூறியதன் அர்த்தம் என்ன? யாராலும் எதையும் முழுமை செய்ய முடியாது என்று கூறியதே? அது ஒரு உண்மைதானே?

இரவு நீண்ட நேரம் ஆன பிறகும், மகாதேவனுக்கு  தூக்கமே வரவில்லை.

மெல்லிய ஒரு காலடிச் சத்தம்-

தாழம்பூவின் மென்மையான நறுமணம்...

சுவருக்கு அருகில்... மிகவும் அருகில்- அந்த கால் கொலுசின் சிணுங்கல் சத்தம். யாரோ வந்து நிற்பதை மகாதேவன் உணர்ந்தார்.

"தூக்கம் வரலையா?''

கேள்வியைக் கேட்டு மகாதேவன் முகத்தைத் திருப்பினார்.

கவுசல்யா...!

ம்... என்ன இது!

மீண்டும் இதோ கவுசல்யா வந்து நின்று கொண்டிருக்கிறாள்.

"ஏன் தூங்கவில்லை?''

அவளுடைய கேள்வி மகாதேவனை பாடாய்ப் படுத்தியது. அவள் மீண்டும் வந்திருக்கிறாள்.

அவளுடைய நோக்கம் என்ன?

"நீ... நீ... எதற்கு வந்தாய்?''

"வரவேண்டுமென்று தோன்றியது... வந்தேன்... அவ்வளவுதான்.''

"என்னை நிம்மதியாக வாழவிட மாட்டாய்... நீ...''

"நிம்மதியாக வாழ்ந்த என்னை நீங்கள்தானே நாசம் பண்ணினீங்க?''

மகாதேவன் உண்மையிலேயே பைத்தியம் பிடித்தவரைப்போல ஆகிவிட்டார்.

"நான் என்ன செய்தேன்? நீ என்ன சொல்றே?''

"ஆணின் வாசனையே தெரியாமலிருந்த என்னை நீங்கள் முழுசா நாசம் பண்ணினீங்களா இல்லையா?''

"கவுசல்யா, வேண்டுமென்றே நான் அதைச் செய்யவில்லை... எப்படிப்பட்ட பிராயச்சித்தத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன்.''

"எனக்குத் தேவை ஒரே ஒரு பிராயச்சித்தம்தான்.''

"என்ன? சொல்லு...''

"நீங்கள் எனக்குச் சொந்தமானவர். இன்னொரு பெண்ணுக்குச் சொந்தமானவராக நீங்கள் ஆவதை நான் விரும்பவில்லை. அனுமதிக்கவும் மாட்டேன்.''

மகாதேவன் அதிர்ச்சியடைந்து விட்டார். ஒரு காற்று வீசியது. பலமான காற்று. கவுசல்யாவின் உருவம் அந்த காற்றில் கரைந்து எங்கோ போய்விட்டது.

4

றுநாள் பள்ளிக் கூடத்திற்குச் சென்றபோது அங்கு ஒரு திருமண பத்திரிகை காத்திருந்தது. பள்ளிக்கூடத்தில் படித்த ரேஷ்மா கவுசிக்கின் திருமண அழைப்பிதழ்.

ரேஷ்மா கவுசிக்...

உயரமான- மெலிந்த- அழகான இளம்பெண்!

இறுதித் தேர்விற்கு முந்தைய நாள் அவருடன் ஒரு முழு இரவையும் பங்கிட்ட அழகான பெண்!

அன்று அவள் கூறியது ஒரு இடி முழக்கத்தைப்போல இப்போதும் அவருடைய மனதில் நிறைந்து நின்று கொண்டிருக்கிறது.

"சார், உங்களுடன் நான் இருக்கும் இந்த இனிய நாள் என்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலை மதிப்புள்ள ஒரு நாள். நான் எந்தச் சமயத்திலும் இதை மறக்க மாட்டேன். எந்தக் காலத்திலும்...''

ரேஷ்மாவின் திருமணம்...

மணமகன் ஐ.ஏ.எஸ். படித்திருப்பவன். ரேஷ்மாவும் ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

ஐந்தாவது நாள் ரேஷ்மாவின் திருமணம்.

நகரத்திலேயே மிகப்பெரிய திருமண மண்டபமான ராணி சேஷ மகாலில் திருமணமும் வரவேற்பும்.

பள்ளியிலிருந்து ஆசிரியர்களின் ஒரு கூட்டம் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. மகாதேவனும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து போகத் தீர்மானித்தார்.

வீட்டுக்கு வந்தபோது காகம் ஓரச் சுவரில் காத்திருந்தது.

"இல்லை... இன்று சீக்கிரமே வந்தாச்சே?''

வந்து சேர்ந்தவுடன் மகாதேவன் கேட்டார்.

"முன்கூட்டியே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கவுசல்யா வந்திருந்தாள்... இல்லையா? அவள் என்ன சொன்னாள்?''

ஓ...! கவுசல்யாவைப் பற்றிய தகவலை காகம் தெரிந்து கொண்டிருக்கிறது.

"ம்... வந்திருந்தாள். அவளுக்கு கிடைக்காத வாழ்க்கையை வேறொருத்திக்கு கொடுப்பதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னாள்.''

"அப்படியா? அப்படிச் சொன்னாளா?''

"ஆமாம்.... அவள் பிடிவாதமாக இருக்கிறாள்.''

"சார், நீங்க என்ன தீர்மானிச்சீங்க?''

"தீர்மானிப்பதற்கு என்ன இருக்கிறது? இனியொரு பிரச்சினையில் சிக்கிக் கொள்வதற்கு நான் தயாராக இல்லை. வேண்டாம்... வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலைக்கு நான் வந்துவிட்டேன்.''

"அந்த அளவிற்கு கடுமையான தீர்மானம் வேண்டுமா, சார்?''

"வேறு என்ன செய்வது?''

"பெண்ணின் மனம் அப்படித்தான் இருக்கும். தனக்கு கிடைக்கவில்லையென்றால், வேறொருத்திக்கு அது கிடைக்கக் கூடாது என்று முயற்சி செய்வாள்.''

"அவள் மரணமடைந்து விட்டாளே? பிறகு என்ன செய்வது?''

"ஆனால், அவளுடைய ஆன்மா மரணமடையவில்லையே!''

காகத்தின் அந்த வார்த்தையைக் கேட்டு மகாதேவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார்.

5

வாணி சேஷ மஹாலில் மிகவும் அருமையாக அலங்கரிக்கப் பட்டிருந்த மண்டபம்!

உடம்பு முழுவதும் நகைகளை அணிந்த கோலத்துடன் ரேஷ்மா நின்றிருந்தாள். காதுகளைக் கிழிக்கக்கூடிய அளவிற்கு வாத்திய இசை... அவருக்கு மிகவும் அருகில் மணமகன். நல்ல தோற்றத்தைக் கொண்ட அழகான இளைஞன்... திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் பரிசுப் பொருட்களுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக வரிசையில் நின்றிருந்தார்கள். பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து மகாதேவனும் நின்றிருந்தார்.


ஒவ்வொருவராக மணமக்களை வாழ்த்திவிட்டு நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

மகாதேவனும் ரேஷ்மாவுக்கு அருகில் வந்தார்.

அவருடைய முகத்தை சற்று பார்த்தார்.

ரேஷ்மாவின் முகத்தில் மெல்லிய ஒரு புன்னகை மட்டும் தவழ்ந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. தெரிந்ததாகவும் காட்டிக் கொள்ளவில்லை. இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்து விட்டுத் திரும்பி வந்துவிட்டார். ரேஷ்மாவிடம் எந்தவொரு சலனமும் இல்லை.

அதுதான் பெண்... புத்திசாலி!

சாயங்காலம் வழக்கம்போல காகம் வந்தது.

"திருமணத்திற்குச் சென்றிருந்தீர்கள். இல்லையா?''

"ஆமாம்... போயிருந்தேன். எப்படித் தெரியும்?''

"தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே! மணப்பெண் பார்த்துவிட்டு, ஏதாவது சொன்னாளா?''

"எதுவும் சொல்லவில்லை. என்னைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.''

"அதுதான் பெண்...''

"என்ன இருந்தாலும் அவள் பயங்கரமான ஒருத்திதான்!''

"இல்லை... முன்பு நடைபெற்றது வயதால் உண்டான சபலத்தால்... இப்போது நடைபெற்றது பிறவியின் விளைவால்...! சார், அதை புரிந்துகொள்வதற்கு உங்களால் முடியவில்லை. அவ்வளவுதான்...''

பதில் கூறுவதற்கு மகாதேவனால் முடியவில்லை. விஷயம் எந்த அளவிற்கு சரியானதாக இருக்கிறது?

"ஏதாவது சாப்பிடணுமா?''

மகாதேவன் கேட்டார்.

"வேண்டாம்... கொஞ்சம்கூட பசியில்லை. வராமலிருந்தால், நீங்கள் வேதனைப்படுவீர்களே என்று நினைத்து வந்தேன். சரி... வரட்டுமா? நாளை பார்க்கலாம்.''

காகம் சிறகை விரித்துக்கொண்டு பறந்து சென்றது.

காகமாக இருந்தாலும், அது கூறியதுதான் எவ்வளவு உண்மை!

ஆனால், கவுசல்யாவும் பெண்தானே?

பதில் கிடைக்காத கேள்வி...

6

மீபகாலமாக மது அருந்துவது சற்று அதிகமாகி விட்டதோ என்ற தோணல் மகாதேவனின் மனதில் உண்டானது. புகை பிடிப்பதும். வாழ்க்கையில் ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்ததைப்போல இருந்தது. குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி எந்த விஷயங்களும் நடக்காத பகல்களும் இரவுகளும்... மொத்தத்தில் உண்டாகிவிட்டிருப்பது மனிதர்களிடம் சிறிதும் பழக்கம் கொண்டிராத காகத்துடன் கொண்டிருக்கும் நட்பு. பிறகு கவுசல்யாவின் கனவு வருகை.

இரண்டும் இரண்டு வகையானவை.

ஒன்று யதார்த்தமென்றால், இன்னொன்று கற்பனை.

ஒரு சராசரி பள்ளிக்கூட ஆசிரியருக்கு சாதாரணமாக உண்டாகக்கூடிய வழக்கமான வளர்ச்சியோ தளர்ச்சியோதான் மகாதேவனின் வாழ்க்கையிலும் நடைபெற்றிருக்கிறது.

நிரந்தரமான வருமானம்- நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை- பகலில் பள்ளிக்கூடத்தில்- இரவில் வீட்டில். ஆசிரியர் என்ற பொய் முகத்தை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

அந்த சங்கிலியிலிருந்து ஒரு விடுதலையைப் பெற வேண்டுமென்று பலமுறை நினைத்திருக்கிறார். ஆனால், முடியவில்லை.

இனி இயலும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.

தனியார் பள்ளிக்கூடமாக இருந்தாலும், ஒரு எல்லையைத் தாண்டிவிட்டால் "பென்ஷன்" என்ற கிரீடத்தை தலையில் அணிந்து, பள்ளிக்கூடத்தின் படிகளில் இறங்க வேண்டியதிருக்கும் என்பது மட்டும் உண்மை.

அதற்குப் பிறகு பென்ஷன் வாங்கக் கூடிய ஆசிரியர்...

வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிணத்தின் அனுபவம்...

மொத்தத்தில்- வெறுப்பு உண்டாகிறது.

மாணவர்களின் குறும்புத் தனங்கள் நிறைந்த கண்களிலிருந்து விடை பெற்றுவிட்டு, நான்கு சுவர்களுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டு இருக்க வேண்டிய ஒரு நிலைமை...

தனக்கு மட்டுமே உண்டாகியிருக்கும் ஒரு நிலையா அது?

எல்லாருக்குமே இறுதியில் நடக்கப்போவது இதுதானே?

முதுமை, முதுமைக்கென்றே இருக்கக் கூடிய சிரமங்கள்... மற்றவர்களின் உதவி இல்லாமல் வாழமுடியாத நிலை- இறுதியாக எலும்புக் கூட்டிலிருந்து ஒருநாள் உயிர் விடை பெற்றுக் கொள்வது- கடைசியாக உயிர் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தாங்கிக் கொள்ள முடியாத காத்திருத்தல்...!

குறிப்பாக- தனி மனிதனாக!

சொல்லப்போனால்- விருப்பம் எதுவுமே இல்லையென்றால் பிறகு எதற்கு இந்த வண்டியை இப்படி கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும்?

மனதிற்குள்ளிருந்து யாரோ கேட்பதைப்போல இருந்தது.

பிரபஞ்சத்தில் சாதாரணமாக இருக்கக் கூடிய இந்தக் குழப்பமான சூழ்நிலையில் தனியாக ஒரு தீர்மானத்தை யாரால் எடுக்க முடியும்?

ஆனால், மகாதேவனுக்கு வெறுப்பு உண்டானது.

அந்த வெறுப்பிலிருந்து விடுதலை பெறுவதற்காக கண்டுபிடித்த எளிய வழிதான் மது அருந்தும் பழக்கமா?

"என்ன சார், ஆழமான சிந்தனையில் மூழ்கியிருப்பதைப் போல தோன்றுகிறதே?''

சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

ஆசிரியர்களுக்கான அறையில்தான் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதே மகாதேவனுக்கு அப்போதுதான் தெரிந்தது.

சாவித்திரி டீச்சர்!

வேதியியல் ஆசிரியை!

அவரைப்போலவே தனிமையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட அப்பிராணி ஆசிரியை! அவளுடைய கணவர் வாகன விபத்தில் மரணத்தைத் தழுவிவிட்டார். இளமை இன்னும் விலகிச் சென்றிராத  சாவித்திரி டீச்சர் மிகவும் சீக்கிரமே வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் ஒத்துப்போகக் கூடிய பெண்ணாகி விட்டிருந்தாள்.

அவளுடைய கணவர் மரணமடைந்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் இன்னும் பெரியவர்களாக ஆகவில்லை. உயர்நிலைப் பள்ளிக்கூடத்தை அடைவதற்கு இன்னும் வருடங்கள் இருக்கின்றன. இளமை ததும்பிக் கொண்டு நின்றிருக்கும்போது, கணவனை இழக்கும் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? பல நேரங்களிலும் சாவித்திரி டீச்சரைப் பார்க்கும்போது இரக்கம் தோன்றியிருக்கிறது.

எதுவும் கேட்டதில்லை.

அங்கு- இரக்கத்திற்கு முன்னால் முகத்தைத் தருவதற்கு என்ன காரணத்தாலோ சாவித்திரி டீச்சர் முயற்சிக்கவில்லை.

அவளுக்கு முன்னால் இரண்டு குழந்தைகள் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலை.

"சார், நீங்கள் ஏதோ ஆழமான சிந்தனையில் இருப்பதைப் போல தோன்றுகிறதே!''

சாவித்திரி டீச்சரின் கேள்வி மனதில் வந்து மோதியது.

"என்ன சிந்தனை டீச்சர்? எல்லாமே வெறுத்துப் போய்விட்டது.... உண்மை...''

"ஏன் அப்படிச் சொல்றீங்க, சார்?''

"தெரியல டீச்சர்.''

"உங்களைப் போன்ற ஆண்கள்... குறிப்பாக- பொறுப்புகள் எதுவும் இல்லாத நிலை. மகாதேவன் சார், நீங்கள் வாழ்க்கையை எப்போதும் சந்தோஷம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளக் கூடாதா?''

அந்தக் கேள்விக்கான அர்த்தம் என்ன என்று மகாதேவனுக்குத் தெரியவில்லை.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிலேயே மலையாளிகளாக இருப்பவர்கள் மகாதேவனும் சாவித்திரி டீச்சரும்தான். சாவித்திரி டீச்சர் தலச்சேரியைச் சேர்ந்தவள். குடும்பம் இங்கு வந்து குடியேறியது.

அவளுடைய கணவர் மரணமடைந்த பிறகு, இரண்டாம் திருமணத்திற்காக குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்திக் கூறியும், டீச்சர் அதற்கு சம்மதிக்கவில்லை என்ற விஷயத்தை அவர் தெரிந்துகொண்டார். எதுவும் கேட்கவில்லை. இரக்கத்தைக் காட்ட வேண்டும் என்றும் நினைக்கவில்லை. யார் பார்த்தாலும் ஆசைப்படக் கூடிய உடல் அழகைக் கொண்ட டீச்சருக்கு முன்னால் இப்போதும் ஒரு இளமையின் மிச்சம் மீதி தலையை நீட்டிக் கொண்டு காணப்பட்டாலும், அவள் அந்த வழியை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம்- தன்னுடைய கணவர்மீது வைத்த பாசமா? இல்லாவிட்டால் குழந்தைகள்மீது அளவற்ற அன்பா?


எல்லாவற்றையும் தாண்டி பெண் என்ற ஒருத்தி இருக்கிறாளே... சாவித்திரி டீச்சருக்குள் இருக்கும் பெண் எங்கு போனாள்?

ஆணின் வெப்பத்தை அறிந்திருக்கும் பெண்...

பிரசவ வேதனை தெரிந்திருக்கும் பெண்....

தாய்மையின் மதிப்பை அறிந்திருக்கும் பெண்...

விரகத்தின் வலியை உணர்ந்திருக்கும் பெண்...

சாவித்திரி டீச்சர் இப்போதும் சந்தோஷத்துடன்தான் இருக்கிறாள். ஒரு முறை பார்த்தாலே அதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு விதவை என்று எந்தச் சமயத்திலும் தெரிந்து கொள்ளப்படாமலே அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு அற்புதப் பெண்ணாக...

"சார், வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும். நானும் பல முறை என்னைப் பற்றி சிந்தித்திருக்கிறேன். ஒரு முடிவிற்கும் வரமுடியவில்லை.''

என்ன பதில் கூறுவது?

தனக்கு அது முடியாதே என்பதை மகாதேவன் நினைத்துப் பார்த்தார்.

டீச்சரின் மனதில் என்ன இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் கேட்டார்:

"டீச்சர், உங்களுக்கு எப்போதாவது இந்த வாழ்க்கைமீது வெறுப்பு தோன்றியிருக்கிறதா?''

சாவித்திரி டீச்சரின் முகத்தில் இருந்த பிரகாசம் திடீரென்று குறைந்ததைப் போல தோன்றியது.

ஒரு நிமிட சிந்தனைக்குப் பிறகு டீச்சர் கூறினாள்:

"தோன்றாமல் இல்லை... ஆனால், வேறு வழியில்லையே! இரண்டு குழந்தைகள்... அவர்களுக்கு முன்னால் நான் சோர்ந்து போய்விடக் கூடாது. இன்னொரு வாழ்க்கைக்கு மனம் தயாராகக் கூடாது என்ற விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சார், இரண்டு விஷயங்களையும் நான் நினைத்துப் பார்க்க வேண்டும்.''

சரிதானே! சாவித்திரி டீச்சர் எந்த அளவிற்கு சரியாகக் கூறுகிறாள்!

அவளுக்கு வாழ்க்கை வெறுக்கக் கூடிய ஒன்றாகிவிட்டால், பிஞ்சு குழந்தைகள் அனாதைகளாகிவிடுவார்கள். இன்னொரு வாழ்க்கைக்கு முயற்சி செய்தாலும், நிலைமை அதுதானே? எந்த அளவிற்கு அறிவுபூர்வமாக அவள் வாழ்க்கையைச் சந்திக்கிறாள்.

சிறிது நேரம் கழித்து சாவித்திரி டீச்சர் இப்படிக் கூறினாள்:

"ஆனால், இப்போது மனதில் ஒரு மாறுபட்ட எண்ணம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது, சார். ஒரு கைத்தாங்கல் தேவைதானே என்ற தோணல்... இனி தனியாக இருக்க முடியாத நிலைமை...''

அதைக் கூறும்போது சாவித்திரி டீச்சரின் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியதைப்போல இருந்தது.

அதற்குப் பிறகு சாவித்திரி டீச்சர் அங்கு நிற்கவில்லை. வகுப்பறையை நோக்கிச் சென்றுவிட்டாள். ஏதாவது ஒரு பதில் கூறலாம் என்று முயற்சிப்பதற்கு முன்பே, கண்ணால் ஒரு அம்பை இதயத்திற்குள் எறிந்து விட்டு சாவித்திரி டீச்சர் சென்ற திசையையே மகாதேவன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

ஒரு பொருத்தமான உடலமைப்பைக் கொண்ட சாவித்திரி டீச்சரின் உருவம் மனதில் எங்கோ இருப்பதைப்போல அவருக்குத் தோன்றியது. ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு உடல்... மனதிற்குள்ளும் அது மலர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கும்...

மகாதேவன் சாரின் மனம் அலை பாய்ந்தது.  

யாரோ பிடித்து ஆட்டுவதைப் போல தோன்றியது.

7

ன்று ஞாயிற்றுக்கிழமை...

பகல் முழுவதும் இங்கேயே இருக்க வேண்டும்.

சலவை நிலையத்திலிருந்து பையன் சலவை செய்த துணிகளுடன் வந்தான். சலவை செய்ய வேண்டிய துணிகளை வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

திடீரென்று காகத்தின் சிறகடிப்பு சத்தம் கேட்டது.

உண்மையாகவே அவர் காகத்தின் அண்மையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்ன சார், ஆழமான சிந்தனையில் இருக்கீறீர்கள்போல இருக்கிறதே?'' காகம் வந்து உட்கார்ந்தவுடன் கேட்டது.

"ஆமாம்... உண்மைதான்... சற்று பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.''

"அதைப் புரிந்து கொண்டுதான் நான் இங்கே வந்திருக்கிறேன். சாவித்திரி டீச்சருக்கு ஒரு கை கொடுத்தால் என்ன என்றொரு விருப்பம் இல்லாமலில்லை. அப்படித்தானே?''

கேள்வியைக் கேட்டு மகாதேவன் ஆச்சரியப்பட்டார்.

"முற்றிலும் சரி. எப்படித் தெரிந்தது?''

"அதைத் தெரிந்துகொள்வதுதானே என்னுடைய வேலையே.''

"அந்த விருப்பம் எப்படி? தவறாக ஆகிவிடுமா?''

"அப்படியே இல்லையென்றாலும் சரி எது, தவறு எது என்பதை யாரால் முடிவு செய்ய முடியும்? அவை இரண்டுமே மனிதர்களாகிய நீங்கள் படைத்த ஒன்றுதானே? யாரோ உண்டாக்கி வைத்த சில விஷயங்கள்...''

"என்னுடைய கேள்விக்கு பதில் வரவில்லை.''

"சார், பதில் உங்களின் கேள்வியிலேயே இருக்கிறதே!''

மகாதேவனுக்கு எதுவுமே புரியவில்லை.

"விருப்பம் தவறான ஒன்றாக ஆகிவிடுமோ என்பதுதானே கேள்வி! விருப்பத்திற்கு எது சரி, எது தவறு... அது உங்களிடம் மட்டுமே உண்டாகக் கூடிய ஒரு நிலைதானே? அதற்கு உருவம் கொடுக்கும்போதுதானே சரியும் தவறும் பிறப்பெடுக்கின்றன!''

ஹோ... என்ன தத்துவம் நிறைந்திருக்கிறது காகத்தின் வார்த்தைகளில்!

வெறுமனே ஏதோ கேட்டுவிட்டார்.

அது ஒரு புலிவாலைப்போல ஆகிவிட்டதோ?

"அவளுடைய கணவரின் மரணம் இயற்கையின் தீர்மானம்... சார், நீங்கள் தனியாக வாழவேண்டும் என்ற தீர்மானத்தைப் போன்றதுதான். அதுவும் இல்லை என்கிறீர்களா?''

காகம் மகாதேவனின் முகத்தையே பார்த்தது.

"நான் அந்த அளவிற்கு நுழைந்துபோய் சிந்தித்துப் பார்த்ததில்லை. சாவித்திரி டீச்சர் என்னிடம் எந்தவொரு சலனத்தையும் உண்டாக்கவில்லை. வெறுமனே அவள் ஏதோ சொன்னபோது, நான் ஆழமாக சிந்தித்துப் பார்த்தேன். அவ்வளவுதான்.''

ஒரு சரியான பதிலை அவர் எதிர்பார்த்தார்.

காகம் எல்லாவற்றிலும் ஏறி, குறுக்கே நின்றது.

ம்... என்ன இருந்தாலும் காகம்தானே? வெறுமனே இருக்க வேண்டியதுதான்....

"சாயங்காலம் நீங்கள் ஃப்ரீயா இருப்பீர்களா?''

காகம் கேட்டது.

"சாயங்காலம் என்ன... இன்று முழுவதுமே ஃப்ரீதான். என்ன விசேஷம்?''

"சிறப்பாக ஒன்றுமில்லை... வெறுமனே கேட்டேன். அவ்வளவுதான் சார். என்னுடைய வருகையும் பேச்சும் உங்களுக்கு வெறுப்பு உண்டாக்கத் தொடங்கிவிட்டன இல்லையா?''

"இல்லை... இல்லை... அதை ஒரு ஆசீர்வாதம் என்றே நான் பார்க்கிறேன்.''

"எது எப்படி இருந்தாலும், ஒரு தோணல் மனதில் இருக்கத்தானே செய்கிறது! உங்களுடைய சிந்தனைகளுக்கெல்லாம் குறுக்கே நின்று கொண்டிருக்கிறேன் என்று...

அதிர்ச்சியடைந்தார்.

மனதில் இப்போதுதான் அப்படித் தோன்றியது.

காகத்திற்கு ஞானக்கண் ஏதாவது இருக்கிறதோ!

"மற்றவர்களின் மனங்களில் உள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்ளக் கூடிய சில சிறப்புத் திறமைகள் எங்களுக்கு இருக்கின்றன. என்ன செய்வது? அது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது.''

காகம் மென்மையான குரலில் சிரித்தது.

"ஒரு சந்தேகம் கேட்கட்டுமா?''

"கேட்கலாமே!''

"என்னைத் தேடி வந்ததற்குக் காரணம் என்ன? மற்ற மனிதர்களுடன் உங்களுடைய இனத்தைச் சேர்ந்தவங்கள் இப்படிப் பழகுவதில்லையே?''

"இல்லை என்று யார் சொன்னது? இந்த பூமியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதும், மரணத்திற்குப் பிறகும் தொடர்புள்ள ஒரே இனம் நாங்கள் மட்டும்தானே?''

"அது சரிதான்... அப்படிப்பட்ட நம்பிக்கை இருப்பது இந்தியாவில் மட்டும்தானே?''

"இருக்கலாம்... இந்தியாவில்தானே எங்களுடைய இனம் அதிகமாக இருக்கின்றன!''

மகாதேவன் சார் மெல்லிய ஒரு புன்னகையை வெளிப்படுத்தினார்.


"வெளிப்படையான சில காரணங்கள் இல்லாமல் நாங்கள் யாரையும் நெருங்குவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.''

அதைக் கூறிவிட்டு காகம் சென்றுவிட்டது.

காகம் கூறியது உண்மைதான்...

இந்துக்களில் மரணத்திற்குப் பிறகு நடக்கக் கூடிய சடங்குகளையொட்டி தயாரித்து வைக்கப்படும் சோற்றை உண்ண வருபவை காகங்கள்தானே! காகம் சாதத்தைச் சாப்பிடாமலிருந்தால், இறந்தவர்கள் திருப்தியடையாதவர்கள் என்பதுதானே சாஸ்திரம்?

இங்கு வந்து கொண்டிருக்கும் காகம் உண்மையிலேயே இறந்தவர்களுக்காகப் படைக்கப்படும் பிண்டத்தைச் சாப்பிடும் காகமேதான்!

சற்று அதிகமான அறிவைக் கொண்ட காகம் அண்ணன் என்று வேண்டுமானால் கூறலாம். எது எப்படி இருந்தாலும், காகம் சாதாரண காகம் அல்ல என்பது மட்டும் உண்மை.

தன்னையே அந்த காகம் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?

தெரியவில்லை... தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரயோஜனமில்லை.

கேட்டால், கடித்தால் வெடிக்காத சில கேள்விகளை அவரைப் பார்த்து அது கேட்கும்.

அன்றைய நிம்மதி முழுவதும் போய்விடும்.

அன்று இரவு மகாதேவனுக்கு தூக்கமே இல்லாமல் போனது.

ஒரே ஒரு உருவம் மனதில்... சாவித்திரி டீச்சர்!

ச்சே... தேவையே இல்லை... வெறுமனே சாவித்திரி டீச்சரைப் பற்றி சிந்தித்துவிட்டார்.

ஒரு கைத்தாங்கலை எதிர்பார்க்கும் சாவித்திரி டீச்சர்.

பாவம்... இனி அவளால் தனியாக வாழமுடியாது. வெறுப்பு தோன்றியிருக்கிறது. அவருக்குத் தோன்றியதைப் போலவே...

எப்போதோ தூங்கியபோது, கதவு திறக்கப்படும் சத்தம்...

திடீரென்று கண்களைத் திறந்தார்.

பணிவுடன் நின்றிருந்தான் சுப்பையன்.

"என்ன, பையாண்ணே... இந்த நேரத்தில்?''

"சும்மா... அய்யாவைப் பார்க்கலாம்னு வந்தேன்.''

பாவம் சுப்பையன்... சற்று போதைக்கான வழியைத் தேடி வந்திருக்க வேண்டும். திடீரென்று சுப்பையன் மறைந்துவிட்டான்.

மெல்லிய ஒரு அழுகைச் சத்தம் காதில் விழுந்தது.

கவுசல்யாவின் நறுமணம் அறைக்குள் நிறைந்தது. ஒரு காலடிச் சத்தம். கொலுசின் சிணுங்கல்...

கவுசல்யாவின் மெல்லிய குரல்...

"சாவித்திரி டீச்சருக்கு வாழ்க்கை தரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் சம்மதிக்க மாட்டேன்... சம்மதிக்க மாட்டேன்...''

அதிர்ச்சியடைந்து கண் விழித்தார்.

அறை இருளில் மூழ்கி இருந்தது. ச்சே... என்ன இது? மரணமடைந்து விட்ட சுப்பையனும் கவுசல்யாவும்...

தூக்கம் இல்லாமல் போய்விட்டது. மெதுவாக வெளியே வந்தார். நிலவு வெளிச்சத்தில் மூழ்கி நின்றிருக்கும் வயதான மாமரமும் மொட்டை மாடியும்...

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஊதியவாறு இங்குமங்குமாக நடந்தார்.

திடீரென்று ஒரு பிரகாசம் அங்கு முழுவதும் நிறைவதைப்போல இருந்தது. ஒரு சிறகடிக்கும் சத்தம்... அடுத்த நிமிடம் காகம் பறந்து வந்தது.

சார்... தூங்கவில்லை. இல்லையா? அவை சம்மதிக்கவில்லை. அவற்றால் மிகவும் சிரமமாக இருக்கிறது.''

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் கனவு மட்டும்...''

"கனவு வாழ்வின் நிழல்தானே, சார்?''

"அது என்னவோ- எனக்குத் தெரியாது. இந்த நள்ளிரவு நேரத்தில் வந்ததற்குக் காரணம்...?''

சார், உங்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது... பாதுகாப்புடன் கொண்டு போய் சேர்ப்பது என்பதுதானே என்னுடைய கடமையே.''

"கடமையா?''

"ஆமாம்... சார், நீங்கள் ஒரு பயணத்திற்குத் தயாராக இருக்கிறீர்களா?''

"எங்கு?''

"எங்காக இருந்தால் என்ன? வேறு தடைகள் எதுவும் இல்லையே?''

"எனக்கு என்ன தடை?''

"அப்படியென்றால் என்னுடன் வாங்க.''

"அது எப்படி? என்னால் பறக்க முடியாதே!''

"அந்தக் கவலை வேண்டாம்... உங்களுக்கும் சிறகு முளைக்கும்... வருவதற்குத் தயாரா?''

"உண்மையாகவே நான் தயார்.''

"அப்படியென்றால் இரண்டு கைகளையும் உயர்த்துங்கள்.''

காகம் கூறியது. மகாதேவன் சார் இரண்டு கைகளையும் இரு பக்கங்களிலும் உயர்த்தினார். உயர்த்தி... தாழ்த்தி... உயர்த்தி... தாழ்த்தி... ஒரு விசேஷமான சத்தம் உரக்க கேட்டது. காகங்களின் சத்தம் அது.

"என்னுடன் சேர்ந்து பறங்க, சார்.''

காகம் மகாதேவனுக்கு முன்னால் வந்து நின்றது.

மகாதேவன் தன் கைகளை காற்றில் உயர்த்தி, தாழ்த்தினார்.

மகாதேவன் சார் காற்றில் உயர்ந்தார். எடையே இல்லாமல் போனது. உடல் சிறிதாகி, சார் பறந்து கொண்டிருந்தார்... அவருடன் சேர்ந்து இன்னொரு காகம்... பின்னால் இன்னொன்று... ஒன்று... இரண்டு... பத்து... நூறு... அவர்கள் அந்த வகையில் பறந்து காற்றில் மிதந்தார்கள். ஆயிரமாயிரம் காகங்கள் கூட்டமாக... ஒரே ஒரு குரல் மட்டும்... காகங்களின் ஒன்று சேர்ந்த குரல்... சத்தம் நிறைந்த எல்லையற்ற திசையை நோக்கி அந்த காகங்களின் கூட்டம் மகாதேவன் சாருடன் பறந்து உயர்ந்து காற்றில் கரைந்து போனது.

அப்போது-

ஒரு புலர்காலைப்பொழுது கிழக்குக் கடலுக்கு மேலே உதித்து மேலே வந்து கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.