
சுராவின் முன்னுரை
பி.பத்மராஜன் (P.Padmarajan) எழுதிய ‘தகர’ (Thakara) புதினத்தை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1978-ஆம் ஆண்டில் பி.பத்மராஜன் எழுதிய இக்கதை 1980-ஆம் ஆண்டு திரைப்படமாக மலையாளத்தில் வெளிவந்தது. பரதன் இயக்கியத்தில் உருவான அந்தப் படத்தில் ‘தகர’ என்ற கதாநாயகனின் பாத்திரத்திற்கு பிரதாப் போத்தன் உயிர் கொடுத்திருந்தார். பின்னர் அதே கதை தமிழில் பரதன் இயக்கத்தில் ‘ஆவாரம் பூ’வாக வெளிவந்தது.
தமிழில் வினீத் நடித்திருந்தார். இதைப் படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் தங்களின் இளம் வயது நாட்கள் கட்டாயம் நினைவிற்கு வரும்.
‘நட்சத்திரங்களே காவல்’ என்ற நாவலுக்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் பத்மராஜன், ‘பிரயாணம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாசிரியராக படவுலகிற்குள் நுழைந்தார். பல படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இயக்கிய படங்களையும் சேர்த்து 36 படங்களுக்கு திரைக்கதை அமைத்த பத்மராஜன் 1991-ஆம் ஆண்டில் நம்மிடமிருந்து விடைபெற்றார். அழியாத இலக்கியப் படைப்புக்களை உருவாக்கியவர் பத்மராஜன் என்பதற்கு ‘தகர’யும் சான்று.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா(Sura)
இளம் வயது காலத்தில் தகர என்னுடைய மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட என்னுடைய நண்பர்களின் பட்டியலில் அவனும் இருந்தான்.
தற்கொலை செய்து கொண்ட ஒரு நண்பன் என்று மட்டும் கூறினால், அது அவனைப் பற்றி எதுவுமே ஆகாது. தற்கொலையில் இறுதி முடிவைக் கண்டவர்களில் பெரும்பாலானவர்களின் முகங்களை காலம் எனக்குள்ளிருந்து அவ்வப்போது மறையச் செய்வதுண்டு. ஆனால், தகர எஞ்சி நின்று கொண்டிருக்கிறான். ஒவ்வொரு பருவத்தின்போதும் உயிர்ப்புடன் முளைத்துக் கொண்டிருக்கும் கிராமத்துச் செடியின் புத்துணர்ச்சியுடன்.
அவன் இறந்தபோது எங்கள் எல்லாருக்கும் மிகப் பெரிய கவலை உண்டானது. பள்ளிக்கூடச் சிறுவர்களான எங்களுக்கு அது ஒரு தாங்க முடியாத இடியாக இருந்தது. அன்று எங்கள் எல்லாருக்கும் மரணம் என்பது ஒரு அபூர்வமான அனுபவமாக இருந்ததால், சில நாட்களுக்கு அது ஒரு மனதை பாதிக்கக்கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. பள்ளிக்கூடம் விட்டுச் செல்லும்போதும், பள்ளிக்கு வரும்போதும் வழியில் நாங்கள் தகரயைப் பற்றி நினைத்துப் பார்த்தோம். பள்ளிக்கூடத்தின் இடைவேளை நேரங்களிலும், வெளி வாசலில் வேர்க்கடலை விற்பவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த போதும், எங்களுக்கு மத்தியில் அன்று உற்சாகமே இல்லை.
மறுநாள் எங்களில் பலர் தூங்க முடியாமல் இருந்ததைப் பற்றியும், தூக்கத்தில் தகரயை கனவு கண்டதைப் பற்றியும் உள்ள கதைகளை ரகசியமாக எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம். சில நாட்களுக்கு யாருக்கும் எந்த விஷயத்திலும் மனம் செல்லவேயில்லை. பிறகு... ஒவ்வொருவராக தகரயை மறந்து விட்டார்கள். மரணத்தின் அந்த எதிர்பாராத வருகை, வந்ததைப்போலவே பின்வாங்கிக் கொண்டும் சென்றது.
ஆனால், தகர அப்படி தூக்கில் தொங்கி இறந்தது சிறிதும் எதிர்பாராத ஒரு விஷயமாக இருக்கவில்லை. அவன் அப்படிச் செய்வான் என்று நான் ஏற்கெனவே நினைத்திருந்தேன். தூக்கில் தொங்கி இறப்பது என்பது அவனுடைய மிகப் பெரிய ஆசையாக இருந்தது என்ற விஷயம் எனக்குத் தெரியும்.
என்னைத் தவிர, தகரயின் அந்த ரகசிய ஆசை செல்லப்பன் ஆசாரிக்கு மட்டுமே தெரியும். அவன் அதைப் பற்றி எங்கள் இருவரிடமும் மட்டுமே கூறியிருக்கிறான். மிகுந்த சந்தோஷமும் கவலையும் வரக்கூடிய நாட்களில் அவன் எங்கள் இருவரிடமும் அதை பல தடவைகள் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான். ஒவ்வொரு முறை கூறும்போதும் அவன் எச்சரிப்பான்.
"நீங்க இரண்டு பேரையும் தவிர நான் மூனாவதா ஒரு ஆள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதே இல்லை... ஒரு ஆளிடமும் கூறக்கூடாது. சொன்னால் நான் தூக்குல தொங்கி இறந்திடுவேன்.''
நானும் செல்லப்பன் ஆசாரியும் அவன் சொன்னதைக் கேட்டு சிரிப்போம்.
செல்லப்பன் ஆசாரியின் காதில் இரண்டு நீலநிறக் கற்கள் பதிக்கப்பட்ட கடுக்கன்கள் இருந்தன. அவன்மீது எங்களுக்கு மதிப்பு இருந்ததற்குக் காரணமே அவைதான். எனக்கும் தகரவிற்கும். தகரயின் வாழ்க்கையின் இரண்டாவது ஆசையே அந்த நீலநிறக் கற்களால் ஆன கடுக்கனை அணிந்து கொண்டு ஒரு நாள் கடை வீதியில் உற்சாகமாக நடந்து திரிய வேண்டும் என்பதுதான்.
ஆனால், செல்லப்பன் ஆசாரி அதைக் கொடுக்கவில்லை. தருகிறேன்.... தருகிறேன் என்று கூறி, இறுதி வரை தகரவிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான். அவனைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. தகரயை எப்படி நம்புவது?
திருடிக்கொண்டு ஓடிவிடுவான் என்று நினைக்கவில்லை. தகரவிற்கு திருடுவதற்குத் தெரியாது. யாராவது வழியில் பார்த்து பாசத்துடன் கேட்டால், அவன் அதைக் கழற்றிக் கொடுத்து விடுவான். பிறகு கேட்டால் அதை யாருக்கு கழற்றிக் கொடுத்தோம் என்று அவனுக்கே ஞாபகத்தில் இருக்காது. தோண்டித் தோண்டி விசாரித்தாலும், முட்டாளைப்போல நின்று கொண்டு இளிப்பதற்கு மட்டுமே அவனுக்குத் தெரியும். கோபப்பட்டால், உரத்த குரலில் அழ ஆரம்பித்து விடுவான்.
நானும் செல்லப்பன் ஆசாரியும் பிறக்கும்போதே, கடை வீதியில் தகர முளைத்து விட்டிருந்தான். சந்தையின் ஆரவாரத்தையும் அசிங்கத்தையும் கேடு கெட்ட இரவுகளையும் தாண்டி, தகர அன்று எல்லா இடங்களிலும் எல்லாருக்குமாக ஓடித் திரிந்து கொண்டிருந்ததை நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். அன்று எனக்கு அவனைப் பார்த்தால் பயமாக இருக்கும். எச்சிலை ஒழுக விட்டுக்கொண்டு, அழுக்காகிப்போன காக்கி நிற அரைக்கால் சட்டையை மேலே இழுத்துப் போட்டுக்கொண்டு, புரிந்து கொள்ள முடியாத மொழியில் எல்லாரிடமும் பேசிக் கொண்டு நடக்கும் அவனுடைய பெரிய உருவம் அந்தக் காலத்தில் அச்சுறுத்தக் கூடிய கனவுகளுக்குள் வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
அதற்குப் பிறகு பள்ளிக்கூடச் சிறுவர்களாக ஆனவுடன் அந்த பயமெல்லாம் எங்களை விட்டுப் போய்விட்டது. தகர எங்களுக்கு நெருக்கமானவனாக ஆனான். தெளிவான அறிவு இல்லாத அந்த மனிதன்மீது ஒரு தடிமனான பொம்மை என்பதைப்போல நாங்கள் அன்பு செலுத்த ஆரம்பித்தோம். அவனுக்கும் அது மட்டுமே தேவைப்பட்டது.
என்னைவிட இரண்டு மூன்று வகுப்புகளுக்கு மேலே செல்லப்பன் ஆசாரி இருந்தான். எனக்கு மோசமான விஷயங்களைக் கற்றுத் தந்ததில் செல்லப்பன் ஆசாரிக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது. சாதாரண பேச்சுக்களுக்கு மத்தியில் செக்ஸ் விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பதில் அவனுக்குப் பெரிய திறமை இருந்தது.
பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வரை நான்கு மைல் தூரம் ஆள் அரவமற்ற ஒற்றையடிப்பாதையின் வழியாகத் திரும்பி வரும்போது, முற்றிலும் இயல்பான ஒரு உத்தியுடன் அவன் சிற்றின்ப விஷயத்தைப் பற்றிப் பேசினான். அந்தக் காலத்திலேயே அவனுக்கு எல்லா விஷயங்களும் நன்கு தெரிந்திருந்தன. தெரிந்தவற்றை பத்து மடங்கு கற்பனைக் கதைகள் சேர்த்து அவன் கேட்கும்படி செய்வான். வெறுமனே கதை விடுகிறான் என்ற நினைத்துக் கொண்டே நான் அவற்றைக் கேட்பதில் ஒரு ஆர்வத்தைக் காட்டினேன். அந்த பொய்க் கதைகளும், அவற்றில் இருந்த கற்பனை என்று யாருக்கும் புரியக்கூடிய சம்பவங்களும் அந்தக் காலத்தில் எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்ச்சியை உண்டாக்கின. இடையில் நாங்கள் ஏரியின் ஓரத்தில் இருந்த சிதிலமடைந்த பாலத்திற்குக் கீழே நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்போம். கால்பந்து விளையாடியதன் மூலம் அந்த வியர்வையின் நாற்றத்தைப் பெருமையுடன் வாசனை பிடித்தவாறு அவன் கூறும் கதைகள் என்னுடைய மூளைக்குள் எப்போதும் ஏதாவதொரு விதத்தில் புதுமையானவை என்பதைப் போல நுழைந்து கொண்டிருந்தன.
பல நேரங்களில் செல்லப்பன் ஆசாரியின் கதைகளுக்கு எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் சில ஒற்றுமைகள் இருந்தன. எல்லா கதைகளிலும் செல்லப்பன் ஆசாரியும் இருப்பான். ஒரு பெண்ணும் இருப்பாள்.
ஆனால், எனக்கு அந்தக் கதைகளின்மீது அதிக ஆர்வம் உண்டானதற்குக் காரணமே அவற்றில் இடம் பெற்ற பெண்களின் மாறுபட்ட தன்மைகள்தான். எனக்கும் நன்கு தெரிந்திருந்த பெண்களிடம் செல்லப்பன் ஆசாரிக்கு உண்டான ரகசிய அனுபவங்கள் என்ற முறையில், அந்தக் கதைகளில் என்னால் உடனடியாக இரண்டறக் கலக்க முடிந்தது.
எங்களுடைய அந்த ஆர்வத்தைத் தூண்டக் கூடிய சாயங்கால வேலைகளுக்குள் தகரயும் வந்து நுழைந்தான். அவனுக்குத் தேவையாக இருந்தது செல்லப்பன் ஆசாரியிடமிருந்த கடுக்கன்தான்.
கடுக்கனைத் தருவதாக செல்லப்பன் ஆசாரி சம்மதித்தான்.
"எப்போ தருவீங்க?''
"இப்போ... இந்த சொல்லிக் கொண்டு இருக்கும் விஷயத்தைக் கூறி முடித்தவுடன்...'' என்று கூறிக் கொண்டே செல்லப்பன் ஆசாரி மீண்டும் சொல்லிக் கொண்டிருந்த கதைக்குள் மூழ்கி விடுவான்.
அது ஒரு நல்ல கதையாக இருந்தது. நான் அதில் முழுமையாக மூழ்கிப்போய் விட்டேன். நான் தகரயை மறந்துவிட்டேன். என்னைப் போலவே தகரயும் கதையில் இரண்டறக் கரைந்து போய்விட்டான் என்பதையே கதை முடிந்து பார்த்தபோதுதான் தெரிந்து கொண்டேன்.
அவனுடைய பிளந்த வாயில் இருந்து எச்சில் வெளியே வழிந்து மணல் பரப்பில் விழுந்து கொண்டிருந்தது. அசாதாரணமான ஒரு பிரகாசம் அவனுடைய பெருமூச்சுகளுக்கு அடியில் தெரிவதை நாங்கள் பார்த்தோம்.
நானும் செல்லப்பன் ஆசாரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். எங்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தது. எங்களுடைய சிரிப்பைப் பார்த்து எதுவும் புரியாமல் இருந்த தகரயும் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சிரிப்பில் சேர்ந்து கொண்டான்.
"நாங்க என்ன சொன்னோம் என்று தெரியுமா?''
"எனக்குத் தெரியும்.'' அதைக் கூறும்போது தகரவிற்கு அளவுக்கும் அதிகமான வெட்கம் உண்டானது.
"என்ன தெரியும்?'' செல்லப்பன் ஆசாரி கேட்டான். ஒரு புதிய இரை கிடைத்த சந்தோஷம் அவனுக்கு உண்டானது.
தகர அந்தக் கேள்விக்கு பதில் கூறவில்லை. எனினும், ஆண்- பெண் உறவைப் பற்றி அவனுக்கு சில கருத்துகள் இருக்கின்றன என்ற சந்தேகம் அப்போது எங்களுக்கு உண்டானது. தெரியும் என்றோ, தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ... அப்படி ஏதோ ஒரு பருவம்.
எங்களுக்குத் தெரிந்திருந்த ஆங்கிலத்தில் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டோம். இந்த தகர பெண்ணுடன் சேர்ந்து படுத்திருக்கிறானா என்பதை விசாரித்துப் பார்க்க வேண்டும். விசாரித்துப் பார்த்தோம். தகர பெண்ணுடன் சேர்ந்து படுக்கவில்லை. அந்த விஷயத்தை அவன் உண்மையாகவே ஒப்புக்கொண்டு விட்டான். படுக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவனுக்கு இல்லாமலிருந்தது.
பொழுது சாயும் வரை தகர எங்களையே சுற்றிச் சுற்றி நின்று கொண்டிருந்தான். கிளம்பும் வேளையில் செல்லப்பன் ஆசாரி அவனை, ஒரு சிஷ்யனாக பட்டியலில் ஏற்றுக் கொண்டிருந்தான்.
தகரயை அப்படி ஒரு சிஷ்யனாக செல்லப்பன் ஆசாரி ஏற்றுக் கொண்ட விஷயத்தை ஆரம்பத்தில் நான் சிறிதும் விரும்பவில்லை. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. அது ஒரு கோணலான அறிவு என்பதை ஆரம்பத்திலேயே நான் தெரிந்து கொண்டேன். அதையும் தாண்டி மெல்லிய பொறாமையும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும் ஒரு உலகத்திற்குள் இன்னொரு மனிதனும் நுழையப் போகிறானா என்ற பயத்தில் உண்டான பொறாமை.
ஆனால், அது அப்படித்தான் நடந்தது. காலப்போக்கில் தகர எல்லா நாட்களிலும் எங்களுடன் பாலத்திற்குக் கீழேயோ வெறுமனே கிடந்த கோவில் நிலத்திலிருந்த மூங்கில் காட்டிலோ வேறு ஏதாவது இடத்திலோ பேசிக் கொண்டிருப்பது என்பது வழக்கமான செயலாக ஆனது. ஒவ்வொரு நாளும் என்னுடன் அவனுடைய அறிவின் எல்லைகளையும் விசாலப்படுத்தக் கூடிய பெரும் பொறுப்பை செல்லப்பன் ஆசாரி சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டான்.
அதைப் பார்த்தபோது எனக்கு கோபமோ வெறுப்போ உண்டாயின. முட்டாளான அந்த தடிமனான உருவம் அந்த புதிய உலகத்திற்குள் மிகவும் சீக்கிரமாகவே கவர்ந்து இழுக்கப்பட்டதைப் பார்த்ததும், மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. அது ஏதாவது ஆபத்தை வரவழைக்கும் என்று எனக்கு ஆரம்பத்திலேயே பயத்தை உண்டாக்கியது.
ஒருநாள் நான் அதை செல்லப்பன் ஆசாரியிடம் குறிப்பாக உணர்த்தவும் செய்தேன். அப்போது அவனுடைய எதிர்வினை ஒரு பெரிய சிரிப்பாக இருந்தது. கிண்டல் கலந்த ஒரு புன்னகை. தொடர்ந்து அவன் சொன்னான்: "நீ சரியான ஆள்... அவனைவிட பெரிய மடையன்!''
தகர எதுவும் செய்ய மாட்டான் என்று செல்லப்பன் ஆசாரி கூறினான். "தகர என்ன செய்வான்? அவன் இப்படி வாயைப் பிளந்து கொண்டு நடந்து திரிவான். அவனுடைய கையிடுக்கில் வளர்ந்து காட்சியளிக்கும் அந்த கறுத்த உரோமக் கூட்டம் இருக்கிறதே, அவை வெறும் வைக்கோல்கள். அவனுடைய சதைகள் இருக்கின்றனவே, அவற்றால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. பலகையைப்போல இறந்து போனவை அவை.''
"பிறகு என்னதான் உன் திட்டம்?'' நான் கோபத்துடன் கேட்டேன்.
"எனக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. அவன் தினமும் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டு எனக்குப் பின்னால் வந்தால், நான் பிறகு என்ன செய்வது? அடிச்சு விரட்டிவிட வேண்டுமா? அப்படியெல்லாம் என்னால் நடக்க முடியாது.''
"கல் பதித்த கடுக்கனைத் தர மாட்டேன்னு உறுதியாகச் சொல்லிவிட்டால் போதும்.''
"இப்போ அவனுக்குத் தேவை கல் பதித்த கடுக்கன் அல்ல.'' செல்லப்பன் ஆசாரி சொன்னான்:
"டேய், முட்டாள். இப்போதுதான் அவனுக்கு தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் உண்டாக ஆரம்பித்திருக்கிறது. சிலருக்கு அப்படித்தான். தகரயைப்போல முப்பது முப்பத்தைந்து வயதுகள் ஆனாலும், மரத்தைப்போல வளர்ந்திருப்பாங்க. அவ்வளவுதான். சில அப்படியே முட்டாளாகவே நின்றுவிடும். சிலவற்றிற்கு தாமதமாக விஷம் உள்ளே நுழையும்.''
"இந்த தகரவிற்குள் விஷத்தை ஏற்றி உனக்கு என்ன கிடைக்கப் போகுது?''
"எனக்கு எதுவும் கிடைக்கப் போறது இல்லை. இது ஒரு சுவாரசியமான விஷயமாக இல்லையாடா?''
ஆனால், வெறும் ஒரு சுவாரசியத்திற்காக செல்லப்பன் ஆசாரி தகரயைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை என்ற விஷயமே பின்னர்தான் எனக்குப் புரிய ஆரம்பித்தது. சோதனை செய்வதற்கு நல்ல ஒரு சீமைப் பன்றி கிடைத்திருக்கிறது என்பது புரிந்தவுடன் அவனுக்கு தகரமீது ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டானது.
செல்லப்பன் ஆசாரி கால்பந்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதற்கு மத்தியில் ஒரு சாயங்கால நேரத்தில் தகர என்னிடம் மெதுவான குரலில் கேட்டான்: "குழந்தை, நீ ஏதாவது பெண்ணுடன் படுத்திருக்கிறாயா?''
அவன் அந்தக் கேள்வியை மிகுந்த வெட்கத்துடன் கேட்டான். சிறு சிறு உரோமங்கள் வளர்ந்து நின்றிருந்த கன்னத்தில் ஒரு வளையத்தைப் போல சிவப்பு நிறம் பரவுவதை நான் கவனித்தேன்.
"ஒஹோ!'' நான் சொன்னேன்: "எனக்கு தோணும்போதெல்லாம் படுப்பதுண்டு.''
தகரயின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவனுடைய நாக்கு வாய்க்குள் வெறுமனே வட்டமடித்துச் சுற்றுவதையும் நெற்றி சுருங்குவதையும் கவனித்தவாறு செல்லப்பன் ஆசாரியின் பாணியில் நான் ஒரு கதையைக் கூற ஆரம்பித்தேன். எங்களுடைய வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ராதா அந்தக் கதையின் நாயகியாக இருந்தாள்.
ராதாவை தகர ஏற்கெனவே பார்த்திருக்கிறான். சந்தைக்கு மீன் வாங்குவதற்காகச் செல்லும் எல்லா பெண்களையும் தகரவிற்குத் தான் தெரியுமே!
எனக்கும் ராதாவுக்குமிடையே எப்படி உறவு உண்டானது என்பதைத் தெரிந்து கொள்வதில் தகர அளவுக்கும் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தினான். மிகவும் சாதாரணமாக நான் அந்தக் கதையை அவனிடம் கூறினேன்.
"ஒருநாள் அவளுடன் சேர்ந்து படுக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. எல்லாரும் தூங்கியவுடன், நான் எழுந்து சென்று அவளுடைய பாயில் போய் படுத்துக் கொண்டேன்.''
"அவள் சத்தம் போட்டுக் கத்தலையா?''
"இல்லை...'' வெற்றி பெற்றவனின் புன்னகையுடன் நான் சொன்னேன்: "எந்தவொரு பெண்ணும் கத்த மாட்டாள்.''
"அது ஏன் அப்படி?''
"அது அப்படித்தான்...''
அன்று பாலத்திற்குக் கீழே நண்பர்கள் பிரிந்து சென்ற பிறகு, நான் அந்த விஷயத்தை செல்லப்பன் ஆசாரியிடம் சொன்னேன். செல்லப்பன் ஆசாரி என்னைப் பாராட்டினான். எனினும், நான் தகரயிடம் கூறியது உண்மையான ஒன்றா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு அவன் மறக்கவில்லை. அது என்னுடைய ஒரு ஆசை மட்டும் என்பதைக் கூறியவுடன், அவன் என்னைக் கிண்டல் பண்ணினான்.
"எது எப்படியோ, தகரவிற்கு பச்சை பிடித்துக் கொண்டிருக்கிறது.'' செல்லப்பன் ஆசாரி உறுதியாகச் சொன்னான்: "அவனை வைத்து நாம் இனி ஏதாவது செய்ய வேண்டும். வெறுமனே இப்படி விட்டுக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது.''
கூறுவதற்கு எளிதாக இருந்தாலும், அது மிகவும் சிரமமான ஒரு வேலையாக இருந்தது. நாங்கள் அவனை சிறிய அளவில் இருந்த
புத்தகங்களை வாசித்துக் கேட்கச் செய்தோம். உடலுறவு, நிர்வாணக் கோலத்தில் இருந்த பெண்கள் சம்பந்தப்பட்ட படங்கள் இருந்த புத்தகத்தை அவனுக்கு பார்ப்பதற்காகக் கொடுத்தோம். ஒருநாள் கோவில் குளத்தின் இதமான குளிர்ச்சியில் இருக்கும்போது செல்லப்பன் ஆசாரி அவனுக்கு "கையடிப்பது" எப்படி என்பதை செய்து காட்டினான். வெட்கப்பட்டுக் கொண்டு ஓடிவிட்டான் என்றாலும், மறுநாள் அவன் அதை செய்து பார்த்திருக்கிறான் என்பதை நாங்கள் எப்படியோ தெரிந்து கொண்டோம். செல்லப்பன் ஆசாரியைப் பொறுத்த வரையில் அது ஒரு மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.
"நான் தகரவிற்கு ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன்.'' ஒரு நாள் செல்லப்பன் ஆசாரி சொன்னான்.
"யார்...? யார்?...'' நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
"அதெல்லாம் தயாரா இருக்கு...'' நீண்ட நேரம் வற்புறுத்தி வற்புறுத்தி கேட்ட பிறகுதான் அவன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினான்.
"சுபாஷிணி...''
எனக்கு செல்லப்பன் ஆசாரிமீது அளவுக்கு மீறிய மதிப்பு தோன்றிய ஒரு நிமிடமாக அது இருந்தது. அதற்குக் காரணம்- அதைவிட அறிவுப்பூர்வமான ஒரு தேர்ந்தெடுத்தல் எங்களுடைய ஊரில் அப்போது சாத்தியமில்லை.
எனக்கும் செல்லப்பன் ஆசாரிக்கும் சற்று மேலே இருந்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மத்தியில் சுபாஷிணி அப்போதைய மிகப் பெரிய கொண்டாட்டமாக இருந்தாள். அவளின் பெயரைச் சொல்லி அவர்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் உண்டாகிக் கொண்டிருந்த ஒரு காலமாக அது இருந்தது. நினைத்த நேரமெல்லாம் அவளுடைய தந்தை மாது கிழவன் என்ற சுய உணர்வு இல்லாதவன் பிள்ளைகளைப் பிடித்து அடிப்பதும் மிதிப்பதுமாக இருந்தான். ஒருநாள் ஒரு பையனைக் குத்திய கதையும் உண்டு.
எங்களுடைய ஊரில் அன்று ஒரே ஒரு பொலிகாளையே இருந்தது. அந்த புகழ் பெற்ற உடலுறவு கொள்ளும் காளையின் சொந்தக்காரன் என்ற நிலையில், மாது எல்லாருக்கும் தெரிந்தவனாக இருந்தான். மதிய நேரம் தாண்டியவுடன், காளையை ஓய்வெடுக்கச் செய்துவிட்டு, மரவள்ளிக் கிழங்கு வியாபாரத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு பயங்கரமான மனிதன்... எல்லா நேரங்களிலும் சாராயத்தைக் குடித்துக் கொண்டு நடந்து திரிவான்.
மாதுவின் தந்தைக்கும் பொலிகாளையுடன் நடந்து திரிவதுதான் வேலையாக இருந்தது. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டிருந்த அந்த புகழ் பெற்ற விஷயத்தைப் பற்றி சாராயத்தைக் குடித்துவிட்டு, மாது கிழவன் தெரு முனையில் வந்து நின்று கொண்டு சொற்பொழிவு ஆற்றுவான். யாராவது எதிர்த்துப் பேச முயன்றால், அவர்களை அடிப்பான். அவனுக்குக் கீழே பொலிகாளைகள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. ஊரெங்கும் மேய்ந்து திரிந்து கொண்டிருந்த மாட்டினத்தை தன் விருப்பப்படி உடலுறவு கொண்டு மாது கிழவனுக்குச் சொந்தமான காளைகள் உலாவிக் கொண்டிருந்தன. அவனுடன் வாழ்வதற்காக வந்த பெண் பயந்தோடி விட்டாள். அந்த வருகையில் ஒரு மகள் கிடைத்தாள். அவளை அவன் விட்டுத் தரவில்லை. தன்னுடன் பிடித்து இருக்கும்படி செய்து கொண்டான்.
சுபாஷிணி!
சுபாஷிணி நல்ல பெண்ணாக இருந்தாள். ஊரில் அவளை எல்லாருக்கும் பிடித்திருந்தது. பொலிகாளைகளின் ஆர்ப்பாட்டமான உலகப் பின்னணியில் வளர்ந்த அந்த சதைப்பிடிப்பான இளமை ஊர்க்காரர்களிடம் போதையை ஏற்றி விட்டிருந்தது.
ஆண் பிள்ளைகளிடம் கிண்டல் கலந்து பேசவும் சிரிக்கவும் செய்தாலும், எல்லையைக் கடந்து செயல்பட முயன்றால், சுபாஷிணி அவர்களை விரட்டியடித்து விடுவாள். தன்னால் விலக்க முடியாத சூழ்நிலை உண்டானால், தன் தந்தையிடம் விஷயத்தைக் கூறுவாள். தன் பெயரைச் சொல்லி எப்போதாவது அடியும் சண்டையும் உண்டாகும்படி செய்வதில் சந்தோஷப்படக் கூடிய ஒரு குணத்தைக் கொண்டவள் அவள்.
தகரவிற்கு சுபாஷிணியுடன் நெருங்கிப் பழகுவதற்கான சாத்தியம் இருந்தது என்பதுதான் அவளைத் தேர்ந்தெடுப்பதற்கான இன்னொரு காரணமாக இருந்தது.
மாது கிழவன் மதியத்திற்குப் பிறகு மரவள்ளிக் கிழங்கு பிடுங்குவதற்காக ஊரெங்கும் சுற்றி அலைந்து திரியும்போது, அதைச் சுமப்பதற்காக தகரயை அழைத்துச் செல்வதுண்டு. சிறிய மரவள்ளிக் கட்டாக இருந்தால், மாது சுமப்பான். பெரியதாக இருந்தால், தகரயோ அல்லது அதைப்போல வேறு யாராவது சிலரோ சுமப்பார்கள். தகரயாக இருந்தால், அவன் கூலி எதுவும் கேட்கப் போவது இல்லையே!
சந்தையிலும் சாயங்கால வேளையில் தகர மாதுவின் மரவள்ளிக் கிழங்கு வியாபாரத்தின்போது வாசனை பிடித்துக் கொண்டு நின்றிருப்பான்.
தந்தை அதிகமாகக் குடித்துவிட்ட நாளாக இருந்தால், மகளும் இருப்பாள். எடை போடுவதற்கும் கணக்கு கூறுவதற்கும்.
சுபாஷிணியுடன் அவளுடைய தந்தைக்கு முன்னால்கூட மிகவும் நெருக்கமாகப் பழகக் கூடிய மனிதனாக தகர இருந்தான்.
செல்லப்பன் ஆசாரியின் புத்திசாலித்தனத்தை நினைத்து மதிப்பு தோன்றியது என்றாலும், எனக்கு பயம் உண்டானது. தகரயும் சுபாஷினியும் மாது கிழவனும் சேர்ந்து செல்லப்பன் ஆசாரியின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்கிறார்கள் என்ற விஷயம் என்ன காரணத்தாலோ எனக்குப் பிடிக்கவில்லை.
"செல்லப்பன் ஆசாரி...'' நான் சொன்னேன்: "இது பிரச்சினைக்குள்ளாகப் போகிறது, செல்லப்பன் ஆசாரி.''
பிரச்சினை எதுவும் வராது என்று கூறினான் செல்லப்பன் ஆசாரி.
"தகர விவரமே இல்லாதவன். சரியான அறிவு இல்லாதவன். அவன் ஏதாவது பைத்தியக்காரத்தனமாக நடப்பான். அதை அவள் தன் தந்தையிடம் கூறப் போகிறாள்.''
"அப்படியெல்லாம் நடக்காது கண்ணு.'' செல்லப்பன் ஆசாரி என்னைச் சமாதானப்படுத்தினான். "தகர என்ன செய்தாலும், அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள். செய்வது தகர அல்லவா?''
"தகர எதை வேணும்னாலும் செய்யலாமா?''
"செய்யலாம். அதுதானே அவனுக்கு சௌகரியமான விஷயம்?''
தகர எதைச் செய்தாலும் யாரும் அதைச் சிறிதும் கவனிப்பதே இல்லை என்ற விஷயம், இரண்டு மூன்று நாட்கள் மரவள்ளிக் கிழங்கு வியாபாரத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றிருந்த போது எனக்கும் புரிந்தது. ஒன்றையும் இரண்டையும் கூறிக் கொண்டு அவர்கள் மாது கிழவனுக்கு முன்னால் கோபித்துக் கொள்வதையும் முனகிக் கொண்டிருப்பதையும் நான் பொறாமையுடன் பார்த்தேன்.
செல்லப்பன் ஆசாரியிடம் நான் விஷயத்தைச் சொன்னேன். அவன் தன்னுடைய கிண்டல் கலந்த சிரிப்பைச் சிரித்தான். எனக்கு அந்த நீலக்கல் பதித்த கடுக்கன்மீது வெறுப்பு தோன்றியது.
வருவதைப் பற்றியும் வராமல் போவதைப் பற்றியும் உள்ள புரிதல் இல்லாமைதானே தகரயின் மிகப்பெரிய சொத்து! அந்தத் தகுதியை வைத்துக் கொண்டு அவன் சுபாஷிணியின்மீது பார்வையைப் பதித்துக் கொண்டு முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தை படிப்படியாக நாங்கள் புரிந்து கொண்டோம். ஒவ்வொரு சிறிய சிறிய அசைவைக்கூட செல்லப்பன் ஆசாரி அப்போது வாசனை பிடித்து தெரிந்து கொண்டு, தேவைப்பட்ட போது அதற்குரிய மாற்று மருந்தைக் கூறிக் கொண்டும் இருந்தான்.
ஒருநாள் சாயங்காலம் இடிந்துபோய்க் கிடந்த களத்தில் இருந்தபோது, செல்லப்பன் ஆசாரி திடீரென்று என்னிடம் சொன்னான்: "இன்றைக்கு தகர வந்தவுடன் நீ போயிடணும் கண்ணு.''
"அது ஏன் செல்லப்பன் ஆசாரி?'' எனக்கு முகத்தில் ஒரு அடி விழுந்ததைப்போல இருந்தது. தாங்க முடியாத அளவிற்கு வருத்தம் உண்டானது.
"அது அப்படித்தான்.'' செல்லப்பன் ஆசாரி சொன்னான்: "அவனிடம் நான் தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தைக் கூற வேண்டியதிருக்கிறது.''
"தனிப்பட்ட முறையில் அப்படி என்ன விஷயம்?''
"அதனால்தானே தனிப்பட்ட விஷயம்னு சொன்னேன்!'' செல்லப்பன் ஆசாரி என்னையே அறுத்து வெட்டுவதைப்போல பார்த்தான். நான் எழுந்தேன்.
"அப்படியென்றால் நான் இப்போதே போய் விடுகிறேன். தகர வருவது வரை நான் எதற்கு உனக்குத் துணையாக இருக்க வேண்டும்?''
அன்று எனக்கு தூக்கமே வரவில்லை. செல்லப்பன் ஆசாரி தகரயிடம் தனிப்பட்ட முறையில் என்ன ரகசியத்தைக் கூறியிருப்பான்? ஏதாவது ஆபத்து நிறைந்த ஒரு காயை அவன் யாருக்கும் தெரியாமல் நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும்.
மறுநாள் மதியம் சாப்பாட்டிற்காக விட்டபோது செல்லப்பன் ஆசாரி எனக்கு அருகில் வந்தான். காலையில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம் என்றாலும், நான் அவனைப் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. பெண் விஷயமாக இருந்தால், அது அவனுடைய கையில் இருக்கும்.
"என்ன உர்ருன்னு முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய், கண்ணு?''
குளத்தில் சோற்றுப் பாத்திரத்தைக் கழுவிக் கொண்டு நின்றிருந்தபோது, செல்லப்பன் ஆசாரி எனக்கு அருகில் வந்தான்.
எனக்கு தாங்க முடியாத அளவிற்கு கோபம் வந்தது. அவனுடைய குரலில் கிண்டல் கலந்திருப்பதைப்போல எனக்குத் தோன்றியது. "போடா...'' நான் குளத்திற்குள் நீரைத் துப்பியவாறு மேலே ஏறி நடந்தேன்.
ஆனால், செல்லப்பன் ஆசாரி எனக்குப் பின்னால் வந்தான். யாருமே இல்லாத, தாத்தாவும் பாட்டியும் வசிக்கும் குடிசை இருந்த நிலத்தில் இருந்த இலஞ்சி மரத்திற்குக் கீழே இலஞ்சிப் பழத்தைப் பொறுக்குவதற்காக நான் சென்றபோது, அவன் எனக்குப் பின்னால் வந்தான். அவன் ஏதோ தீவிரமாக என்னிடம் கூற நினைக்கிறான் என்பது அவனுடைய முகத்தை கவனித்தபோது எனக்குத் தோன்றியது. ஏதோ மிகப் பெரிய விஷயத்தைக் கூற நினைப்பதைப்போல...
அதனால் நான் மதிப்பை அதிகரித்தேன். அவன் ஏதோ கேட்டது காதில் விழாததைப்போல காட்டிக் கொண்டு நான் அந்த இடத்திலிருந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். அவன் என்னைத் தடுத்தான்.
"நில்லு கண்ணு...'' அவன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். "நமக்குள் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வேண்டியதிருக்கிறது.''
"அப்படி இப்போது தோண ஆரம்பிச்சிடுச்சா?''
"ஆரம்பிச்சிடுச்சு.''
அவன் எனக்கு முன்னால் சிறியவனாக ஆனான்.
"தகரயிடம் அப்படி என்ன ரகசியமாகச் சொன்னாய்?''
செல்லப்பன் ஆசாரி பதில் கூறவில்லை.
"என்ன செல்லப்பன் ஆசாரி?'' அவனுடைய தயக்கத்தைப் பார்த்து எனக்கு கோபம் வந்தது. "ஏதாவது பிரச்சினை உண்டாகியிருக்குமோ?''
"இருக்கும்...'' அவன் சொன்னான்.
அன்று காலையில் ஏதாவது பிரச்சினை உண்டாகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று செல்லப்பன் ஆசாரி சொன்னான். மாது கிழவன் அதிகாலை வேளையில் பொலிகாளையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போயிருப்பான். சுபாஷிணி மட்டுமே தனியாக இருந்த வீட்டிற்குள் தகர சென்றிருப்பான். அவன் அவளுடன் உடலுறவு கொள்ள முயற்சித்திருப்பான். எந்த அளவிற்கு வேண்டுமானாலும் பலத்தைப் பயன்படுத்தும்படி செல்லப்பன் ஆசாரி அவனிடம் கூறியிருக்கிறான்.
மதியத்திற்குப் பிறகு இருந்த வகுப்புகளில் உட்கார்ந்திருந்தபோது, என் மனம் அடித்துக் கொண்டேயிருந்தது. புரிந்து கொள்ள முடியாத ஒரு இரைச்சல் காதில் வந்து விழுந்து கொண்டிருப்பதைப் போல இருந்தது. கரும்பலகையில் எதை எழுதினாலும், அவை அனைத்தும் வெள்ளை நிற பூஜ்யங்களாக மாறிக் கொண்டிருந்த ஒரு மதிய நேரம்.
பள்ளிக்கூடத்தில் மணி அடித்தவுடன் நாங்கள் ஓடிச் சென்று தெருவின் சந்திப்பில் பார்த்தோம். அங்கு அந்த நேரத்தில் தகர இல்லை. அவன் அப்போது அங்கு இருந்திருக்க வேண்டும்.
எங்களுடைய முகம் வாடின.
அன்று செல்லப்பன் ஆசாரி விளையாடுவதற்கு வரவில்லை. வழியில் நாங்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எங்களுடைய சிந்தனை முழுவதும் தகரவிற்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றியே இருந்தது. ஆனால், தகரவிற்கு எதுவும் நடந்திருக்கவில்லை.
வாய்க்கால் காய்ந்த மணல் பரப்பைத் தாண்டியிருந்த புதருக்கு அருகில் தகர எங்களை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். எங்களைப் பார்த்து விஷயத்தைக் கூறப்போகும் அவசரத்தில் அவன் இருந்தான்.
நாங்கள் ஓடி அருகில் போய் நின்றோம். தகர சந்தோஷத்தில் வெடிக்கும் நிலையில் இருந்தான். எனக்கு தூக்கில் தொங்கி இறக்க வேண்டும்போல இருந்தது. அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் விஷயத்தைச் சொன்னான். ஒரு ஆளிடம்கூட கூற மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் சுபாஷிணி அவனைப் போகவே விட்டிருக்கிறாள். "எனினும், உங்க இரண்டு பேரிடமும் நான் அதைக் கூறுகிறேன்.'' அவன் சொன்னான்.
நாங்கள் வாய்களைப் பிளந்து கொண்டு நின்று கொண்டிருந்தோம். சுபாஷிணி அவனுக்கு சந்தோஷத்துடன் தன்னைக் கொடுத்தாள் என்று தகர சொன்னான். "ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தாலும், இறுதியில் அவள் என் தோளைக் கடித்து காயப்படுத்தி விட்டாள்.''
எங்களுக்கு அதை நம்புவதற்கு விருப்பமில்லை. தகர கூறுவது பொய்யாக இருக்கலாம். செல்லப்பன் ஆசாரியும் நானும் அவனிடம் கூறுவதைப்போன்ற ஒரு பொய்யான கதையைத்தான் அவனும் கூறுகிறான் என்று நாங்கள் சமாதானப்படுத்திக் கொண்டோம்.
ஆனால், தகர நெஞ்சில் அடித்து சத்தியம் செய்தான். "உண்மை தான். நான் சொல்றது உண்மை. சந்தேகம் இருந்தால், நாளைக்கு நீங்களே வந்து பார்த்துக் கொள்ளுங்கள்.''
மறுநாள் நாங்கள் இருவரும் காலையில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை.
யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டும் பதுங்கிக் கொண்டும் சுபாஷிணியின் வீட்டிற்குச் சென்று மறைந்து இருந்தவாறு பார்த்தோம். அங்கு தகர இருந்தான்.
தகர கூறியது உண்மைதான்.
அந்த முறை எங்களுடைய ஊரின் எள் வயல்களில் மிகவும் அதிகமான வறட்சி உண்டாகிவிட்டிருந்தது. அங்குமிங்குமாக ஒவ்வொரு எள் நாற்றுகள் காய்ந்து விறைத்துக் கொண்டு நின்றிருந்தன. உரிய நேரத்தில் மழை பெய்யாததால், பலரும் எள் நடுவதற்கே போகவில்லை.
ஆனால், எல்லா வயல்களிலும் களைகள் அந்தப் பகுதியில் முளைத்து நின்றிருந்தன. பல வகைப்பட்ட மலர்களையும் மலரச் செய்து கொண்டு பல இனத்தைச் சேர்ந்த களைகள் எல்லா இடங்களிலும் ஆடிக் கொண்டு நின்றிருந்தன. இயற்கைகூட தகரயின் பக்கம்தான். நின்று கொண்டிருக்கிறது என்று ஒருநாள் செல்லப்பன் ஆசாரி கவலையுடன் என்னிடம் சொன்னான்.
"இல்லாவிட்டால் இப்படியொரு அதிர்ஷ்டம் வாய்க்குமா?'' அவன் கேட்டான்: "இந்த அரைவேக்காட்டு எமனுக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்தைப் பாரேன்...''
எங்கள் இருவருக்கும் எங்களின் மீதே கோபம் கலந்த வெறுப்பு உண்டானது.
தகர எங்களிடமிருந்து மனப்பூர்வமாக விலகிச் செல்வதற்கு முயற்சிக்கவில்லையென்றாலும், அவன் எங்களிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்று எங்களுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. முதல் தடவையாகக் கிடைத்திருக்கும் பெண் இருக்கும் திசையை நோக்கிய அவனுடைய பயணம், ஒரு வகையில் பார்க்கப்போனால் மிகவும் வேகமாகவே நடந்து கொண்டிருந்தது. சுபாஷிணியைத் தவிர வேறு விருப்பங்கள் எல்லாம் தகரயைப் பொறுத்த வரை குறைந்து கொண்டே வந்தன. யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் உண்டாகாத வகையில், விஷயங்களை நடத்திக் கொண்டு செல்வதில் அந்தப் பெண் ஒரு கை தேர்ந்த பெண்ணாக இருந்தாள். தகரயும் படிப்படியாக எங்களிடமிருந்து ஒவ்வொன்றையும் மறைத்து வைக்க ஆரம்பித்தான்.
எங்களுக்கு கடுமையான பொறாமை உண்டானது. தகரவிற்கும் சுபாஷிணிக்குமிடையே இருந்த அந்த ஆச்சரியப்படத்தக்க உடலுறவு ரகசியம் எங்கள் இருவருக்குள்ளும் இருந்து கொண்டு தலையைத் தூக்கிக் கொண்டும் கஷ்டப்படச் செய்வதும் ஒரு அனுபவமாக இருந்தது.
பிறகு... இன்னொரு பயங்கரமான சந்தேகமும் எங்களுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தகர, தகரயாக இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறானோ?
காமம் பற்றிய புரிதல் உண்டானதைத் தொடர்ந்து அவனிடமிருந்த மந்த நிலை மாறி விட்டிருக்கிறது என்பதை ஒருநாள் செல்லப்பன் ஆசாரி கூர்ந்த கவனித்துக் கூறினான்.
தகர பொதுவாகவே ஒரு வெட்க குணம் கொண்ட மனிதன் என்பதுதான் உண்மை. அவனுடைய விரிந்த சதைகளில் ஊரில் பெரும்பாலானவர்களுக்கு இல்லாத ஒரு ஆண்மைத்தனம் மறைந்து கிடக்கிறது என்பதும், அதில்தான் சுபாஷிணியைப் போன்ற ஒரு முள் உள்ள மலர் சிக்கி மாட்டிக் கொண்டுவிட்டது என்பதும் எங்களுக்குப் புரிந்தது.
பொறாமை எங்களுடைய மன அமைதியைக் கெடுத்தது. பாலத்திற்குக் கீழே மாலை நேரங்களில் இன்னொரு நிறம் விழுந்தது. திடீரென்று செல்லப்பன் ஆசாரியின் கதைகள் நின்று போயின. தீவிரத்தனம், குற்றம் சாற்றுதல் ஆகியவை கலந்த ஒரு அமைதித் தன்மை மாலை நேரத்துடன் வந்து சேர்ந்தது.
"இந்த தேவையற்ற விளையாட்டை தகரயை வைத்து செய்ய வேண்டாம் என்று நான் அன்றைக்கே சொன்னேன்ல செல்லப்பன் ஆசாரி?'' தினமும் நான் அவனிடம் சண்டை போட்டேன்.
அவனுடைய நீலநிறக் கடுக்கனின் பிரகாசம் எப்போதோ எனக்கு முன்னால் மறைந்து விட்டிருந்தது.
ஒருநாள் வழியில் சுபாஷிணியைப் பார்த்ததும், நான் மெதுவான குரலில் சொன்னேன்.
"ம்... விஷயம் தெரியும்.''
அவள் அதைக் கேட்டு வேகமாகத் திரும்பி வந்தாள்.
"ம்... என்ன தெரியும்?''
ஒதுங்கிச் செல்வதற்கு என்னை அவள் விடவில்லை. பிடித்து நிறுத்தி, விஷயத்தைக் கூறிய பிறகுதான் விட்டாள்.
"பாதையில் போகும் பெண் பிள்ளைகளிடம் எதையாவது பேசணும்னு நீ ஏன் வர்றே, பையா?'' அவள் நின்று கொண்டு கோபத்துடன் கேட்டாள்.
அப்போது நான் விஷயங்களைத் தீவிரமாகப் பார்க்கும் ஒரு மனிதனாக மாறிக்கொண்டு சொன்னேன்:
"இல்லை சுபாஷினி... சிலர் இங்குமங்குமாக நின்று கொண்டு கிண்டல் பண்ணி பேச ஆரம்பிச்சிருக்காங்க. அந்த தகர அறிவே இல்லாதவன். தகர யாரிடமும் எதையும் கூறக் கூடியவன்.''
அவள் ஒரேயடியாக நொறுங்கி விழுவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
அவள் என்னுடைய முகத்தை மூடிக்கொண்டு சொன்னாள்: "ஃப! வாய்க்கு வந்தபடியெல்லாம் எதையாவது பேசிக் கொண்டிருந்தால்... அவ்வளவுதான். யார் என்னன்னுகூட நான் பார்க்க மாட்டேன். என் வாயில் இருக்குறதைக் கேட்டுக் கொண்டு போக வேண்டியதிருக்கும்.'' பிறகு அவள் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் கூற ஆரம்பித்தாள். "பையா, இப்போது என்னிடம் இதைச் சொன்னதோடு இருக்கட்டும். இதற்கு மேலே எதையாவது எங்காவது கேட்க நேர்ந்தால், சின்னப் பையா, நான் உன்னையும் பிடிப்பேன். உன்னுடன் நடந்து திரியிற அந்த ஆசாரி பையனையும் பிடிப்பேன். இரண்டு பேரும் ஒரு நாள் என் தந்தையின் கத்திக்கு இரையாக வேண்டியதுதான்.''
அவள் அதைக் கூறிவிட்டு மார்பை விரித்துக் கொண்டு நடந்து சென்றாள். நான் நின்று நடுங்கிக் கொண்டிருந்தேன்.
அந்த மோதலைப் பற்றிக் கேட்டவுடன், செல்லப்பன் ஆசாரி என்னை நிறைய திட்டினான். அவனிடம் கேட்காமல் சுபாஷிணியின் அருகில் அப்படி ஒரு வளைந்த பாதையில் நடந்து சென்றது ஆபத்தான விஷயமாக ஆகிவிட்டது என்று எனக்கும் தோன்றியது.
"எது எப்படியோ, சொன்னது சொன்னதுதான். அதனால் இனிமேல் யார் எப்படிப்பட்ட பிரச்சினைகளை உண்டாக்கினாலும், நான் அதைத் தாங்கிக் கொள்வேன்.'' நான் உறுதியான குரலில் கூறியவுடன் அவன் அமைதியாகி விட்டான்.
ஆனால், சுபாஷிணியின் அந்த துணிச்சலான செயலிலிருந்து முக்கியமான வேறு சில விஷயங்களும் எங்களுடைய சிந்தனையில் கிடைத்தன. அவற்றில் பெரும்பாலானவை எங்களுக்கு அமைதியற்ற தன்மையை உண்டாக்கிய புரிதல்களாக இருந்தன.
அந்தப் புரிதல் எங்களை சோர்வடையச் செய்தது. எங்களுடைய உற்சாகமும் விஷயங்களின்மீது கொண்டிருக்கும் பொதுவான ஈடுபாடும் திடீரென்று குறைந்தன. செல்லப்பன் ஆசாரிக்கு கால்பந்து விளையாட்டின்மீது திடீரென்று வெறுப்பு உண்டானது.
சில நேரங்களில் நாங்கள் மாலை நேர சந்தைக்குச் சென்று, தகரயும் சுபாஷிணியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மறைந்து நின்று கொண்டு பார்ப்போம். என்னையோ செல்லப்பன் ஆசாரியையோ பார்த்தவுடன் அவர்கள் இருவரும் தங்களுடைய நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் உள்ளவர்களாக மாறுவதை நாங்கள் அறிந்தோம்.
மாது கிழவன் வியாபாரத்திற்கு மத்தியில் சாராயக் கடைக்குப் போய்விட்டு வருவான். அந்த இடைவெளி நேரங்களில் தகர திடீரென்று ஒரு பெரிய கணக்குப் பிள்ளையைப்போல முழுமையான ஈடுபாட்டுடன் வியாபாரம் செய்ய முயற்சிப்பதை நாங்கள் கவனித்தோம்.
மாதுவிற்கு முன்னால் அவன் ஒரு புதிய அடிமையாக இருந்தான். ஒரு மருமகனின் பொறுப்புணர்வை வெளிப்படுத்த தகர முயற்சித்துக் கொண்டிருந்தான். சுபாஷிணி அவனுடைய பரபரப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.
அதைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- செல்லப்பன் ஆசாரிக்கு பொறுமையே இல்லாமற் போனது.
சாயங்காலம் பயங்கரமாக பற்களைக் கடித்துக் கொண்டே செல்லப்பன் ஆசாரி என்னிடம் சொன்னான்: "நான் இதை நாசம் பண்ணியே ஆகணும்னு தோணுது.''
"எப்படி?'' அதை அழித்து ஒழிப்பதில் எனக்கும் விருப்பம் இருந்தது.
"மாதுவிடம் நான் சொல்லப் போறேன்.''
"அந்த ஆளு உன்னையும் குத்துவார். தகரயையும் குத்துவார்.'' நான் பயத்துடன் சொன்னேன். "தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் போக வேண்டாம் செல்லப்பன் ஆசாரி...''
வெளியே அப்படிக் கூறினாலும், மாது கிழவனிடம் போய் கூறுவதாக இருந்தால் கூறட்டுமே என்றுதான் நான் நினைத்தேன்.
மறுநாள் செல்லப்பன் ஆசாரி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை.
எங்கோ ஆபத்து உள்ளதைப்போல எனக்குத் தோன்றியது.
அன்று சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டுச் செல்லும்போது, சந்தையில் கூட்டமாக ஆட்கள் நின்றிருப்பதைப் பார்த்தேன்.
ஓடிச் சென்று பார்த்தபோது தகரயை மாது கிழவன் அடித்துக் கொண்டிருந்தான். அந்தத் தாக்குதலின் பயங்கரத் தன்மையைப் பார்த்தவாறு எதுவும் செய்ய முடியாமல் ஆண்களின் ஒரு பெரிய கூட்டம் திகைத்துப் போய் நின்றிருந்தது.
தகர அடி வாங்கி விழுந்து கிடந்தான். அவனுடைய முகத்திலும் தோளிலும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மரவள்ளிக் கிழங்கை எடை போட்டுப் பார்க்கும் தராசைக் கொண்டு மாது அவனுடைய தலையின் பின்பக்கம் எண்களை எண்ணிக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அடி விழுந்தபோதும் ரத்தம் பீய்ச்சிக் கொண்டிருந்தது.
தகர சுய உணர்வற்ற நிலையில் சத்தம் போட்டுக் கத்தியவாறு இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டிருந்தான்.
அடிகளை வாங்கி தகர சுய உணர்வு இல்லாமல் கீழே விழுவதைப் பார்க்கும் வரையில் நான் நின்று கொண்டிருக்கவில்லை. அதற்கு முன்பே ஓடிவிட்டேன். மாது கிழவனின் முரட்டுத்தனமான முகம் இரவு முழுவதும் என் உறக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது. மறுநாளிலிருந்து யாரும் தகரயை எங்கும் பார்க்கவில்லை.
முந்தைய நாள் இரவு ஒரு ரத்தக் களத்தில் அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தேன். யாரும் சென்று அவனுக்கு நீர் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சற்று தூரத்தில் ரத்தம் புரண்ட தராசுடன் மாது காவல் காத்துக் கொண்டிருந்தான்.
தகரவிற்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி ஊரில் பல கதைகளும் பரவிக் கொண்டிருந்தன. அவன் இறந்து போயிருக்கலாம் என்ற கதைக்குத்தான் அதிகமாக நம்பகத்தன்மை இருந்தது. அது அல்ல. அவனை யாரோ இழுத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்றும் சிலர் கூறினார்கள். எது எப்படியிருந்தாலும், யாரும் அவனைப் பற்றித் தீவிரமாக விசாரிக்க முயற்சிக்கவில்லை. மாதுமீது எல்லாருக்கும் பயம் இருந்தது. தொடர்ந்து தகரயைப் பற்றி காவல்துறையிடம் புகார் செய்தும், அதற்குரிய விசேஷம் எதுவும் உண்டாகவில்லை என்பதையும் எல்லாரும் தெரிந்து கொண்டிருந்தார்கள்.
ஒன்றிரண்டு நாட்களுக்கு இப்படிப்பட்ட பதைபதைப்புகளும் விசாரணைகளும் நிலவிக் கொண்டிருந்தன. மாது மீண்டும் தெருவின் முனையில் ரத்தம் தோய்ந்த தராசுடன் தோன்றினான். தன்னுடன் அவன் சுபாஷிணியை அழைத்துக்கொண்டு வரவில்லை.
அன்று இரவு சுபாஷிணியையும் மாது அடித்து ஒரு வழி பண்ணிவிட்டான் என்ற செய்தி காதில் விழுந்தது. அவனுடைய உரத்த சத்தமும் அவளுடைய அழுகைச் சத்தமும் தன்னுடைய வீடு வரை கேட்டன என்று வயலின் அக்கரையில் வசிக்கும் சதீசன் கூறியபோது, பள்ளிக்கூட மாணவர்களான நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம்.
தகர காணாமல் போய் ஒரு வார காலம் ஆனதும், அவன் இறந்து போயிருக்கலாம் என்று எல்லாருக்கும் தோன்றியது.
என்னுடைய மனதில் அது ஒரு மிகப் பெரிய காயமாக ஆகிவிட்டது. தகர அந்த மாதிரி இறந்து போயிருக்க மாட்டான் என்று எனக்குள் நானே நம்ப முயற்சித்தேன். இறப்பதாக இருந்தால், தகர தூக்கில் தொங்கித்தான் சாவான் என்று என்ன காரணத்தாலோ உறுதியாக எண்ணினேன்.
செல்லப்பன் ஆசாரியிடம் நான் எதுவும் பேசுவதே இல்லை.
அவனுடைய நீலநிற கல் பதித்த கடுக்கனைப் பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது.
இடையில் ஒருமுறை சுபாஷிணியைப் பார்த்தேன். பழைய விளையாட்டுத்தனமும் நடவடிக்கையும் அவளிடம் முற்றிலும் இல்லாமற் போயிருந்தன. என்னை தூரத்தில் பார்த்ததும், அவள் முகத்தை மேலும் "உம்"மென்று வைத்துக்கொண்டாள்.
இப்போது அவளுடன் பேசுவதால் சண்டை எதுவும் உண்டாகப் போவதில்லை என்ற தைரியம் எனக்கு உண்டானது. "அன்று நான் சொன்னப்போ என்னை அடிச்சுக் கொல்ல வந்தீங்க அல்லவா?'' நான் அர்த்தத்துடன் சொன்னேன்: "அதற்குப் பிறகு... இப்போ என்ன ஆச்சு?''
அவள் எதுவும் பேசவில்லை.
எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
"இப்படி ஏதாவது நடக்கும் என்று அன்றே எனக்குத் தோன்றியது.'' நான் அவளின் பக்கமாக மாறினேன். என்னுடைய அந்த திருட்டுத்தனம் அவளுக்குப் பிடிக்கவில்லை.
"இங்க பார்... குழந்தை...'' அவள் கடுமையான குரலில் கூறினாள்: "என்னிடம் விளையாட வர வேண்டாம்.''
எனக்கு கோபம் வந்தது.
"விளையாட்டு இப்போ வினை ஆயிடுச்சுல்ல?''
"என்ன நடந்தது?''
"அந்த தகரயை அடிச்சுக் கொன்னாச்சுல்ல?''
"யாரு?''
"உங்களோட அப்பா...''
"ஆ... எனக்குத் தெரியாது.'' அவள் எதுவுமே தெரியாதவளைப் போல நின்று கொண்டு சொன்னாள். "என் தந்தை அந்த மாதிரி பலரையும் அடிச்சுக் கொல்லுவார். அதைப் பற்றி கேட்பதற்கு தைரியம் இருக்கா?''
"உங்களையும் அடிச்சு காயப்படுத்தினார் அல்லவா?''
"எதற்கு?''
"இங்கே பாருங்க... முகத்தைப் பார்த்துப் பொய் சொல்லக் கூடாது.'' நான் கடுமையான குரலில் சொன்னேன்.
"பையா... பொய் சொல்றது உன் வீட்டுல இருக்குற யாராவது இருக்கும்.'' சுபாஷிணி கோபத்தில் வெடித்தாள். என் திகைப்பைப் பார்த்து அவள் தன் குரலைச் சற்று வேறு மாதிரி மாற்றினாள்.
"என் உடல்ல என் தந்தை இன்று வரை ஒரு மண்ணை எடுத்துக் கூட போட்டது இல்லை.''
அவளுக்குப் பொய் கூறுவதற்கு எந்தவொரு தயக்கமும் இல்லை என்ற விஷயம் தெரிந்திருந்ததால், அதற்குப் பிறகு நான் அந்த இடத்தில் நிற்கவில்லை.
ஆனால், ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. சுபாஷிணி தகரயை அந்த அளவிற்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தகரையைக் கை கழுவி விடுவது என்பது அவளைப் பொறுத்தவரையில் பெரிய சிரமமான ஒரு விஷயமாக இருக்கவில்லை.
ஒரு நாள் மேற்கு திசையிலிருந்து மீன் கொண்டு வந்த முஸ்லிம்கள் கூறி, தகர கடல் பகுதியில் இருக்கிறான் என்ற விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
அவன் இறக்கவில்லை என்ற செய்தி தெரிந்ததும், எல்லாருக்கும் ஒரு மன அமைதி உண்டானது. குறிப்பாக எங்களைப் போன்ற பள்ளிக்கூட மாணவர்களுக்கு. நாங்கள் அதை ஒரு பெரிய சந்தோஷச் செய்தியைப்போல கேட்டோம்.
தகர இறக்கவில்லை.
அவன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் கடற்கரைப் பகுதியில் தோன்றினான்.
அடி வாங்கியதன் துன்பம் இருந்தது. எனினும், பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. தேவையற்ற விஷயங்களைப் பொறுக்கி வெளியே போடுவதிலும், வலையை இழுப்பதில் உதவி செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, சாப்பிடுவதற்கு அவன் வழி தேடிக் கொண்டிருந்தான்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சுற்றுலா செல்வதைப்போல மேற்கு கரைக்குச் சென்றால் என்ன என்று சிந்தித்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமையை அதற்காக ஒதுக்கி வைக்க வேண்டும். கடற்கரைக்குச் சென்று தகரவிற்கு மாலை அணிவிக்க வேண்டும் என்றெல்லாம் சில தீர்மானங்கள் எடுத்து சிரித்துக் கொண்டே பிரிந்து சென்றோம்.
எதுவும் நடைபெறவில்லை. யாரும் தகரயைத் தேடிச் செல்லவில்லை. தகர இந்தப் பக்கம் வருவான் என்று எல்லாரும் நம்பினார்கள்.
ஆனால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, மேற்கு கரைக்குச் செல்லாமல் இருக்க என்னால் முடியவில்லை. உடன் படிக்கும் நண்பனின் வீட்டில் புத்தகம் வாங்கப் போகிறேன் என்றோ வேறு ஏதோ ஒரு பொய்யையோ வீட்டில் கூறி விட்டு, நான் மேற்கு கரைக்குச் சென்றேன்.
கடற்கரையில் படகை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நின்றிருந்தபோது, நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். எனக்கும் தகரவிற்குமிடையே என்ன உறவு?
அன்று தகரயைப் பார்க்கச் சென்றதற்கு வெறும் குற்ற உணர்வு மட்டுமே காரணம் இல்லை. உண்மையாகக் கூறப்போனால்- வெளிப்படையான ஆர்வத்தைத் தாண்டி எனக்கும் தகரவிற்குமிடையே வேறு ஏதோவொன்று இருக்கிறது என்ற உண்மையே அன்றுதான் எனக்குத் தெரிய வந்தது.
படகு வந்து சேர்ந்தபோது, இன்னொரு ஆளும் பயணிகளின் கூட்டத்தில் இருந்தான். செல்லப்பன் ஆசாரி...
என்னைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி உண்டானதைப்போல தோன்றியது. படகில் நாங்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எதுவும் பேசாத இரண்டு விரோதிகளைப்போல நாங்கள் சற்று இடைவெளி விட்டு விலகி உட்கார்ந்திருந்தோம்.
நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஏரியில் நீர் நீல நிறத்தில் இருந்தது. நானும் செல்லப்பன் ஆசாரியும் அசைந்து கொண்டிருந்த நீரில் அவன் உருவத்தை நானும் என் உருவத்தை அவனும் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எங்களுக்கிடையே இருந்த சண்டைக்குத் தளர்ச்சி உண்டானது. என்ன காரணத்தாலோ எனக்கு அவனைப் பார்க்கும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. (தனக்கும் அதேதான் தோன்றியது என்று பின்னர் அவன் என்னிடம் கூறியிருக்கிறான்.)
படித்துறையில் போய் இறங்கிய பிறகும் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் எங்கே செல்கிறோம் என்ற விஷயம் இரண்டு பேருக்கும் நன்றாகத் தெரியுமே! பிறகு எதற்கு கேட்க வேண்டும்?
நான் வேகமாக நடக்க ஆரம்பித்தபோது, அவன் வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்துக் கொண்டான்.
கடற்கரையில் தகர இருந்தான். கரையில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகின் நிழலில் அவன் கடலைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தான்.
கேள்விப் பட்டதைப் போல தகர அந்த அளவிற்குத் தளர்ந்து போன நிலையில் காணப்படவில்லை. தலையில் இரண்டு மூன்று இடங்களில் முடியை முற்றிலுமாக வெட்டி பஞ்சு வைக்கப்பட்டிருக்க, அது உலர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது.
என்னையும் செல்லப்பன் ஆசாரியையும் முன்னாலும் பின்னாலுமாகப் பார்த்தது தகரவிற்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கியது. அவன் வாய்பிளந்த சிரிப்புடன் ஓடி வந்து எங்களைத் தொட்டுக் கொண்டும் பிடித்துக் கொண்டும் நின்றுகொண்டு பல விஷயங்களையும் பேச ஆரம்பித்தான்.
அவனுக்கு எங்களின்மீது கோபம் இருக்கும் என்று நினைத்திருந்த எங்களுக்கு அவனுடைய அந்த நடத்தை மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்கியது.
தகரவிற்கு நல்ல ஞாபகசக்தி இல்லாமல் இருந்தது. அவன் எப்படி மேற்கு கரைக்கு வந்து சேர்ந்தான் என்பதைப் பற்றி கேள்விப்பட்ட விஷயம் மட்டுமே எங்களிடம் இருந்தது.
நள்ளிரவு நேரத்தில் ஒரு உடலைப் படகில் ஏற்றிக் கடத்தி, சாராயம் குடித்த நிலையில் வந்த படகோட்டி விஸ்வம்பரன்தான் தகரயை இழுத்து அந்தக் கரைக்குக் கொண்டு வந்திருக்கிறான். தர்மத்திற்கு நடத்தப்படும் மருத்துவமனையில் அவனைக் கொண்டுபோய் சேர்த்து விட்டு அவன் போய்விட்டான்.
அதற்குப் பின் இரண்டு மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் தகரவிற்கு சுய உணர்வே வந்திருக்கிறது. சுய உணர்வு மீண்டும் கிடைத்த இரண்டு மூன்று நாட்கள்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியாதவையாக இருந்திருக்கின்றன. யாரும் கேள்வி கேட்பதற்கும் கூறுவதற்கும் இல்லாமல் வேதனை தந்து கொண்டிருந்த காயங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த ஈக்களை நசுக்கிக் கொன்று படுத்துக் கிடந்த அந்த நாட்களில் அவன் ஒரு தீர்மானத்தை எடுத்தான்.
அந்தத் தீர்மானத்தை தகர எங்களிடம் கூறினான்.
அவன் மீண்டும் சந்தைக்கு வருவான். வந்து மாதுவைக் குத்திக் கொலை செய்வான். நானும் செல்லப்பன் ஆசாரியும் அதைக் கேட்டு மனதிற்குள் நடுங்கினாலும், வெளியே சிரிப்பை வெளிப்படுத்தினோம்.
"வேண்டாம்... தகர...'' நாங்கள் சிரித்துக் கொண்டே கூறினோம்.
"மாதுவைக் குத்திக் கொலை செய்துவிட்டு நீ என்ன செய்வாய்?''
"அதற்குப் பிறகு நான் சுபாஷிணியைக் கல்யாணம் செய்து கொள்வேன்.'' தகர கூறினான். அவர்கள் சந்தோஷத்துடன் வாழ்வார்கள். எந்தவொரு தொந்தரவும் இல்லாமல். நாங்கள் சிரித்தோம்.
அன்று பகல் முழுவதும் நானும் செல்லப்பன் ஆசாரியும் கடற்கரையிலேயே இருந்தோம். தகரயை விட்டுப் பிரிந்து செல்வதற்கு எங்களுக்கு தயக்கமாக இருந்தது. போக ஆரம்பித்தபோதெல்லாம் அவன் எங்களைத் தடுத்தான்.
தகரயின் தீர்மானங்களை அசைப்பதற்கு நானும் செல்லப்பன் ஆசாரியும் எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால், நாங்கள் அதில் வெற்றி பெற்றோம் என்று தோன்றவில்லை.
தகர சில விஷயங்களைப் பற்றி முடிவுகள் எடுத்து வைத்திருந்தான்.
"சுபாஷிணி திருமணம் செய்து கொள்வதற்கு ஒப்புக்கொள்ள வில்லையென்றால்...?'' நான் கேட்டேன்.
"அவள் அதற்குச் சம்மதிப்பாள்.'' தகர தன்னம்பிக்கையுடன் கூறினான்.
"தகர, அவளுக்கு உன்மீது அந்த அளவிற்கு விருப்பமொண்ணும் இல்லை.'' நான் சொன்னேன். அவனுடைய முகத்தில் ஒரு இருள் விழுவதைப் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் நான் மேலும் சொன்னேன்: "எங்களுக்கிடையே பேசினோம். மாதுவின் அடிகளுக்கு பயந்து, அவள் தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டாள்.'' ஆனால், தகரயிடம் எந்தவொரு உணர்ச்சி மாறுதலும் உண்டாகவில்லை. சுபாஷிணியும் தானும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் எப்படியோ உண்டாகிவிட்டிருக்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதிலிருந்து அவனை அசைப்பதற்கு யாராலும் முடியாது.
"குழந்தை... என்னை சும்மா பயமுறுத்துறதுக்காக நீ சொல்றே!'' தகர என்னுடைய தீவிரத்தன்மை முழுவதையும் தன்னுடைய சந்தோஷத்தால் கழுவி முடித்து விட்டான். "ஒண்ணுமில்ல... அவள் சம்மதிப்பாள்.'' அவன் சொன்னான்.
தகர எங்களுக்கு கடற்கரையில் வளர்ந்திருந்த தென்னை மரங்களிலிருந்து தொடை அளவு இருந்த இளநீரைப் பறித்துத் தந்தான். எங்களை எப்படி சந்தோஷப்படச் செய்வது என்று தெரியமாலிருந்த பதைபதைப்பில் அவன் இருந்தான். கடற்கரையில் இருந்த அருமையான காற்றிலும் இளநீரின் மெல்லிய உப்புச் சுவையிலும் நாங்கள் தகரயின் நட்பை உணர்ந்து கொண்டோம்.
பரந்து கிடந்த அந்தக் கடற்கரை தகரவிற்கு சொந்தமானதைப் போல ஆகத் தொடங்கியிருந்தது. அவனை எல்லாரும் அங்கும் தகர என்றே அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். அவன் எங்களை ஒரு ஆள் ஆரவமற்ற இடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் உட்கார வைத்தான். சூரியன் மறைவதைக் காட்டினான். அப்போது நாங்கள் எல்லாரும் சிவப்பு நிறத்தில் இருந்தோம்.
சிவப்பு நிறம் மறைய ஆரம்பித்தவுடன் செல்லப்பன் ஆசாரி திடீரென்று தகரயிடம் சொன்னான்: "தகர, உனக்கு இந்த அடிகள் விழுந்ததற்குக் காரணமே நான்தான்.'' தகர எதுவும் பேசவில்லை.
"நான்தான் மாதுவிடம் உன்னைப் பற்றிச் சொன்னேன்.'' செல்லப்பன் ஆசாரி சொன்னான். அவன் அதைக் கூற வேண்டும் என்பதற்காக மட்டுமே மேற்கு திசை கடற்கரைக்கு வந்திருக்கிறான் என்ற விஷயம் எனக்கு அப்போது புரிந்து விட்டது. ஆனால், அதை தகர அந்த அளவிற்குப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாது தெரிந்து கொண்டு விட்டான் என்பதையோ மாதுவிடம் கூறப்பட்டிருக்கிறது என்பதையோ பெரிதாக அவன் நினைக்கவில்லை. எது எப்படியோ அது தெரியப் போகிற ஒன்றுதான் என்ற ஒரு தன்மையுடன் அவன் இருந்தான்.
ஆனால், அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டவுடன் மாது அவனைக் கொல்வதற்காகப் பாய்ந்தான் என்பதை நினைத்துதான் அவன் வருத்தப்பட்டான். அதற்கு அர்த்தம்- மாது உயிருடன் இருக்கும் போது சுபாஷிணி அவனுக்கு இல்லை என்பதுதானே?
"அவனை நான் கொல்வேன்.'' தகர இடையில் அவ்வப்போது கோபம் கலந்த குரலில் சொன்னான்.
படகுத் துறை வரை அவன் எங்களைப் பயணம் அனுப்பி வைப்பதற்காக வந்தான். படகு வருவதற்குச் சற்று முன்பு தகர இன்னொரு விஷயத்தையும் எங்களிடம் கூறினான். தான் ஒரு கத்தியை விலைக்கு வாங்கிய பிறகே கிழக்குக் கரைக்கு வரப் போவதாக அவன் கூறினான். அதற்கான காசை இப்போது தயார் பண்ணிக் கொண்டிருக்கிறானாம்.
"கத்தி வாங்கினவுடன் வருவேன். பார்ப்போம்.''
திரும்பி வந்தபோது நானும் செல்லப்பன் ஆசாரியும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்களுக்கிடையே அப்போது சண்டை சிறிதும் இல்லை.
மேற்குக் கரையில் தகர கத்தி வாங்குவதற்காக காசு தயார் பண்ணிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயத்தை நானும் செல்லப்பன் ஆசாரியும் யாரிடமும் கூறவில்லை. எனினும், எல்லாரும் அதைத் தெரிந்து கொண்டார்கள்.
தகர யாரிடமும் அதைக் கூறிக் கொண்டிருந்தான். மேற்கிலிருந்து வந்த முஸ்லிம்கள் மாது கிழவனிடம் அந்த விஷயத்தை ஒரு தமாஷ் என்பதைப்போல கூறினார்கள்: "அவன் இங்கே தன்னுடைய கத்தியை எடுத்துக்கொண்டு வரட்டும்!'' மாது கிழவன் சந்தையில் நின்றவாறு கூறினான்: "இங்கு நான் அவனுடைய பிணத்தைத் துண்டு துண்டாக்க நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் கத்தியைத் தர்றேன். அவனை இங்கே கொஞ்சம் வரச் சொல்லுங்க.''
அறிவை இழந்து தகர ஏமாளித்தனமாக இந்தக் கரைப் பக்கம் வந்து விடக்கூடாது என்று அவனிடம் கூறும்படி ஊர்க்காரர்கள் மீன்காரிகளிடம் கூறி அனுப்பினார்கள்.
அவர்கள் அதை அங்கு சென்று கூறினார்களோ இல்லையோ- எது எப்படி இருந்தாலும் தகர வரவில்லை.
அவன் வர மாட்டான் என்று எங்களைப் போன்ற பள்ளிக்கூட மாணவர்கள் பலரும் உறுதியான குரலில் கூறினோம். தகர வரப் போவதில்லை. அவன் இனிமேல் அங்கேயே இருந்து விடுவான். இப்போது அவன் நம்மையும் அந்தப் பெண்ணையும் மறந்து விட்டிருப்பான். தகரதானே?
ஆனால், தகர வருவான் என்ற விஷயம் எனக்கும் செல்லப்பன் ஆசாரிக்கும் நன்கு தெரிந்திருந்தது.
பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிச் செல்லும்போது சிதிலமடைந்த பாலத்திற்கு அடியில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் அந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தோம். தகர மாதுவிடம் மோதினால் உண்டாகக் கூடிய நல்லது கெட்டதுகளைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம்.
அந்த ஆராய்ச்சி ஒரே மாதிரி கவலைகள் நிறைந்தவையாக இருந்தன.
ஒரு நாள் பள்ளிக்கூடம் விட்டபோது, எங்கள் பள்ளிக்கூட மாணவர்களின் காதுகளில் தகர சந்தைக்கு வந்திருக்கும் செய்தி வந்து விழுந்தது.
மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிச் சென்று பார்த்தபோது-
சந்தையில் தகர இருந்தான்.
நாங்கள் சென்றபோது அங்கு ஏராளமான ஆண்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். அவனிடம் நெருங்கக் கூடிய தைரியம் யாருக்குமில்லை.
மாது கிழவன் எப்போதும் மரவள்ளிக் கிழங்கை எடை போட்டுத் தரும் தென்னை மரத்திற்குக் கீழே, ஒரு நீளமான பிச்சாத்தி கக்தியுடன் தகர காவல் காத்துக் கொண்டு நின்றிருந்தான்.
பள்ளிக்கூட மாணவர்களான நாங்களும் வந்து சேர்ந்தால், மக்கள் கூட்டம் பெரிதாக ஆனது. தகர யாரையும் கவனிக்கவில்லை. அவனுடைய பார்வை சாலையின் எதிர்பக்கத்தில் இருந்தது.
மதிய நேரம் தாண்டியதும் படகில் கடந்து அங்கு வந்திருக்கிறான் என்று ஊர்க்காரர்கள் கூறினார்கள். இதற்கு முன்பு அவர்கள் பார்த்துப் பழகிய தகரயாக அவன் இருக்கவில்லை. அவனுடைய கையில் கத்தி இருந்தது. அவன் கொல்வதற்காக வந்திருப்பவன் என்ற விஷயம் தெரிந்ததும், ஆட்கள் மறைந்து நின்று கொண்டிருந்தார்கள்.
படகுத் துறையிலிருந்து அவனுடைய அசைவுகளை தூரத்தில் நின்று கொண்டு பார்த்தவாறு ஏராளமான மனிதர்கள் கூடியிருந்தார்கள்.
தகர வந்திருக்கும் விஷயத்தை மாது கிழவனும் தெரிந்து கொண்டிருக்கிறான் என்று யாரோ சொன்னார்கள். எங்கேயோ மரவள்ளிக் கிழங்கு பிடுங்க வைத்துக் கொண்டு அவன் நின்று கொண்டிருக்கிறான். அந்த வேலை முடிந்தவுடன் நேராக தகர இருக்கும் இடத்திற்குத் தான் வருவதாக அவன் செய்தி கூறி அனுப்பியிருந்தான். இன்று தகரயை ஒரு வழி பண்ணி விட்டுத்தான் வியாபாரத்தையே ஆரம்பிக்கப் போகிறானாம்.
நாங்கள் மூச்சை அடக்கிக் கொண்டு என்ன நடக்கப் போகிறதோ என்பதை எதிர்பார்த்து நின்றிருந்தோம். எல்லாருடைய கவனமும் சாலையின் எதிர் பக்கத்தில் இருந்தது.
விஷயத்தின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொண்டவுடன், பல மாணவர்கள் பயந்து ஓடி விட்டார்கள். அதற்குப் பிறகும் மறைந்து நின்றவர்களை வயதில் மூத்த பெரியவர்கள் விரட்டி விட்டார்கள்.
என்னாலும் செல்லப்பன் ஆசாரியாலும் மற்றவர்களைப்போல ஓடிப் போக முடியவில்லை. நாங்கள் யாருக்கும் தெரியாமல் பதுங்கிக் கொண்டு நின்றிருந்தோம்.
அப்படி நின்று கொண்டிருந்தபோது தகர என்ன செய்யப் போகிறான் என்பதைப் பற்றி எனக்குத் தெளிவான ஒரு கருத்து மனதிற்குள் உண்டானது. அதே மாதிரி அது நடக்கவும் செய்தது.
மாது கிழவன் தராசும் மரவள்ளிக் கிழங்கு சுமக்கும் புதிய அடிமையுமாக அங்கு காட்சியளித்தான்.
தகர நிற்கும் கோலத்தைப் பார்த்து விட்டு பையன் கூடையை வைத்து விட்டு ஓடி விட்டான். மாது கிழவன் தராசுடன் தகரயின் அருகில் வந்தான். எதுவுமே கூறாமல் தகர மாது கிழவனை ஒரே குத்தாகக் குத்தினான்.
தகர குத்தி, மாது கிழவன் நிலத்தில் விழுந்து துடிப்பதை யாராலும் நம்ப முடியவில்லை. அவர்கள் அதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
அந்த அதிர்ச்சியில் தகர ஓடி விட்டான்.
நாங்களும் எங்களுடைய வழியில் ஓடினோம்.
எங்களுடைய ஊரைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் நடுங்க வைத்த ஒன்றாக இருந்தது அன்றைய மாலை வேளை.
ஊரைச் சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து மாதுவை கைவண்டியில் படுக்க வைத்து நகரத்திலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
சாயங்காலம் இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவர்கள் தகரயைத் தேடி அலைந்து பலரையும் விரட்டினார்கள்.
தகர எங்கு போனான் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது.
மாது இறந்து விட்டான் என்று சாயங்காலம் யாரோ ஒரு பொய்யான தகவலை வெளியே பரப்பிவிட்டார்கள். ஆனால், அது வெறுமனே சொல்லப்பட்டது என்பது பின்னர் தெரிந்தது. மாதுவிற்கு ஒரே ஒரு குத்துதான் விழுந்தது. அதுவும் இறக்கக் கூடிய அளவிற்கு உள்ள குத்து அல்ல. இரண்டோ மூன்றோ நாட்களுக்குள் அவன் வெளியே வருவான். தகரயைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கவில்லையென்றால், இனிமேலும் ஊரில் அதிகமான பிரச்சினைகள் உண்டாகும் என்று ஊர்க்காரர்கள் முடிவு செய்தார்கள். அவன் முழு பைத்தியக்காரனாக மாறி விட்டிருந்தான்.
ஆனால், எனக்கும் செல்லப்பன் ஆசாரிக்கும் வேறு மாதிரி தோன்றியது.
தகர, தகரயாக இல்லாமற் போகும் செயலைத்தான் செய்திருக்கிறான் என்பதாக எங்களுக்குத் தோன்றியது.
சாயங்காலம் பிரிவதற்கு முன்னால் நான் செல்லப்பன் ஆசாரியிடம் தகர எங்கே போய் ஒளிந்திருப்பான் என்று கேட்டேன். அதற்கு அவனிடமிருந்து தெளிவான பதில் வரவில்லை. முன்பே கூறியதைப்போல அவன் சுபாஷிணியைத் தேடிச் சென்றிருப்பானோ?
சுபாஷிணியைப் பார்ப்பதற்கு தகர முயற்சி செய்வான் என்பதில் நாங்கள் இருவரும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம்.
இரவில் எனக்குத் தூக்கமே வரவில்லை. தகர சுபாஷிணியைப் போய் பார்த்திருப்பான். அவள் அவனைக் கை கழுவி விட்டிருப்பாள். அந்தச் சமயத்தில் அவன் அவளையும் குத்தியிருப்பானா? அப்படிப்பட்ட ஒரு அறிகுறி அன்று கடற்கரையில் நடைபெற்ற உரையாடலுக்கு மத்தியில் வெளிப்பட்டதோ என்று நான் பயப்பட்டேன்.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியில் நான் வேண்டுமென்றே சுபாஷிணியின் வீடு இருக்கும் நிலத்தின் வழியாக வந்தேன்.
சுபாஷிணி அங்கு இருந்தாள்.
அவன் மிகவும் பதைபதைத்துப் போய் காணப்பட்டாள். கலங்கிய கண்களையும் பயந்து போன பார்வையையும் என்னிடமிருந்து மறைத்து வைக்க வேண்டும் என்பதில் அவள் அக்கறை செலுத்தவில்லை. முந்தைய நாள் போலீஸ்காரர்கள் வந்து அவளையும் மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்ற தகவலை அப்போது அவளுடன் இருந்த பக்கத்து வீட்டுக் கிழவி கூறினாள்.
கிழவி அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ விலகிச் சென்றபோது, நான் சுபாஷிணியிடம் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டேன்: "தகர வந்தானா?''
அவள் பயத்துடன் தலையை ஆட்டினாள்.
"நீங்கள்தான் சொல்லி அனுப்பினீங்களா?'' அவள் கேட்டாள்.
நான் ஆமாம் என்றோ இல்லை என்றோ கூறவில்லை. என்னையும் செல்லப்பன் ஆசாரியையும் பார்த்து அவள் அளவுக்கும் அதிகமாக பயப்படுகிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த பயமும் நல்லதுதான் என்று தோன்றவும் செய்தது.
"வந்து என்ன சொன்னான்?''
அவளுடைய கேள்வியை ஒதுக்கிவிட்டு நான் கேட்டேன்.
சுபாஷிணி எதுவும் பேசவில்லை.
"திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று சொன்னானா?''
அவள் ஒரு புதிய அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். பிறகு உயிரற்ற ஒரு பார்வையுடன் தலையை ஆட்டினாள்.
"அதற்குப் பிறகு என்ன சொன்னான்?''
"எனக்கு பயமாக இருக்கு. இதற்குமேல் என்னைப் பார்க்க வர வேண்டாம் என்று நான் சொன்னேன்.''
அவள் அப்படிக் கூறியிருக்க வேண்டியதில்லை என்று எனக்குத் தோன்றியது.
"பிறகு தகர எங்கே போனான்?''
"ஓடிப் போயாச்சு...'' அவள் சொன்னாள்.
தகர தூக்கில் தொங்கிய செய்தி மதியம் பள்ளிக்கூடம் விட்டபோதுதான் தெரிய வந்தது.
வற்றிப் போய் கிடந்த வாய்க்காலுக்கு குறுக்கே இருந்த சிதிலமடைந்த பாலத்திற்குக் கீழே அவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு பள்ளிக்கூட மாணவர்களான எங்களில் பெரும்பாலானவர்கள் ஓடினார்கள்.
நானும் செல்லப்பன் ஆசாரியும் போகவில்லை.
அன்று மதியத்திற்குப் பின்னால் வகுப்புகளில் மாணவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். தகர இறந்த தகவல் தெரிந்து ஆசிரியர்களிடமும் உற்சாகம் இல்லாமல் போயிருந்தது.
சாயங்காலம் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்தபோது, போலீஸ் வந்து பிணத்தை அவிழ்த்துக் கொண்டு போய் விட்டிருந்தார்கள்.
பாலத்தை நெருங்கியபோது எங்களுடைய இதயத் துடிப்புகள் எங்களுக்கு தெளிவாகக் கேட்டன.
நாங்கள் அங்கு நிற்கவில்லை. கீழேயிருந்த மணல் பரப்பில் ஏராளமான காலடிச் சுவடுகள் பதிந்து கிடப்பதை பயத்துடன் மறைந்திருந்து பார்த்துவிட்டுப் போவதற்கு மட்டுமே எங்களுக்கு தைரியம் இருந்தது.